[] 1. Cover 2. Table of contents புது வெள்ளம் (சங்கநூற் காட்சிகள் ) புது வெள்ளம் (சங்கநூற் காட்சிகள் )   கி.வா.ஜகந்நாதன்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/puthu_vellam மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc Acknowledgements: Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work and to Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2022. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website https://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. முகவுரை கடைச் சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப் பத்து நூறு செய்யுட்களை உடையது. நூறு பாடல்களும் சேர மன்னர்களின் சிறப்பை விரித்து உரைப்பவை. ஒவ்வொரு சேர மன்னன் மேலும் பத்துப் பத்தாகப் பத்துச் சேர மன்னரைப் பற்றிப் பாடியமையால் பதிற்றுப் பத்து என்று பெயர் வந்தது. ஒவ்வொரு பத்தையும் ஒவ்வொரு புலவர் பாடி யிருக்கிறார். இப்போது இந்த நூலில் முதற் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. மற்றத் தொகை நூல் களுக்கு அமைந்ததுபோல இதற்கும் தனியே கடவுள் வாழ்த்து ஒன்று இருந்திருக்க வேண்டும். அதுவும் இப் போது கிடைக்கவில்லை. இப்போதுள்ள பாடல்களில் இரண்டாம் பத்தை இமய வரம்பன் நெடுஞ் சேரலாதனைப் பாராட்டிக் குமட்டூர்க் கண்ணனார் பாடி யிருக்கிறார். மூன்றாம் பத்தில் பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடியுள்ளார். நான்காம் பத்து, களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் புகழை வைத்துக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது. ஐந்தாம் பத்து, கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவனைப் பரணர் பாடியது. ஆறாம் பத்து, ஆடு கோட்பாட்டுச் சேரலா தனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடிய பாடல்கள் அடங்கியது. ஏழாம் பத்து, செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது. எட்டாம் பத்து, பெருஞ் சேரலிரும்பொறையின் புகழை வைத்து அரிசில் கிழார் பாடிய பத்துப் பாடல்களாலாகியது. ஒன்பதாம் பத்து, குடக்கோ இளஞ் சேரலிரும் பொறையைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது. இந்த நூலை யார் தொகுத்தார் . யார் தொகுக்கச் செய்தார் என்ற செய்தி கிடைக்கவில்லை. இதற்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது சற்று விரிவான குறிப்புரையாக இருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் பின்பும் அந்தப் பாட்டின் வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றைக் குறித்திருக்கிடும் கள். பாடல் முழுவதும் புறப்பொருட் செய்திகள் அடங் கியவை. புறநானூறும், பதிற்றுப் பத்துமே எட்டுத் தொகை யில் புறப்பொருளமைதி உள்ளவை. பதிற்றுப் பத்தில் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு புறத் துறையில் அவர் திருக்கிறது. வண்ணம் என்பது பாட்டின் சந்தம் அல்லது மெட்டைக் குறிப்பது. தூக்கு என்றது தாளம். ஒவ்வொரு பாட்டிலும் சுவையுள்ளதாக அமைந்த தொடர் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதையே அந்தப் பாட்டின் பெயராக அமைத்திருக்கிறார்கள். ஆகவே, பதிற்றுப் பத்தில் வரும் நூறு பாடல்களுக்கும் நூறு பெயர்கள் உண்டு. பத்துப் பாட்டில் மலைபடுகடாம் என்ற நூலுக்குப் பெயர் வந்தது இந்த முறை பற்றியே யாகும். “மலைபடுகடாம் மாதிரத் தியம்ப” என்று அந்தப் பாட்டின் இடையில் வந்த தொடரே பாட்டுக்குப் பெயராயிற்று. ஒவ்வொரு பத்துக்கும் பின்பு ஒவ்வொரு பதிகம் இருக் கிறது. முதலில் செய்யுளாகத் தொடங்கி அந்தப் பத்தில் கூறப்பெறும் சேரனுடைய செயல்களைத் தொகுத்துக் கூறி, பிறகு உரைநடையில் இன்னாரை இன்னார் பாடியது என்று அமைத்து, பத்துப் பாடல்களின் பெயர்களைக் காட்டி புலவர் பாடிப் பெற்ற பரிசில் இன்னதென்பதையும், சோ மன்னன் இத்தனை ஆண்டுகள் அரசாண்டான் என்பதையும் சொல்லி முடிக்கும் முறையில் ஒவ்வொரு பதிகமும் அமைந்திருக்கிறது. இரண்டாம் பத்தின் பதிகம் வருமாறு: மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சோற்கு வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்றமகன் அமைவரல் அருவி இமையம் விற்பொறிந்து இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு பேரிசை மரபின் ஆரியர் வணக்கி நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து நெய்தலைப் பெய்து கையிற் கொளிஇ அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறல் மூதூர்த் தந்து பிறர்க்கு உதவி அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூரக் கண்ணனார் யாடினார் பத்துப் பாட்டு. அவைதாம் புண்ணுமிழ் குருதி, மறம் வீங்கு பல்புகழ் , தக்க நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை கூந்தல் விறலியர் , வளன்று பைதிரம் , அட்டுமலர் மார்பன். இவை பாட்டிடன் பதிகம். பாடிப் பெற்ற பரியில் : உம்பற் காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக்கோ. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு விற்றிருந்தான். இப்படியே மற்றப் பதிகங்களும் உள்ளன. இந்தப் பதிகங்கள் நூலில் வரும் பாடல்களைப் பாடினவர்களால் பாடப்பெற்றவை அல்ல. பாடல்களைத் தொகுத்த புலவர் பாடியவையும் அல்ல ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பன உரையில்லாத மூலப் பிரதிகளிலெல்லாம் இருத்தலின் அவை உரையாசிரியரால் எழுதப்பட்டன அல்ல என்பதும், நூலாசிரியர்களாலோ தொகுத்தாராலோ எழுதப்பட்டன என்பதும், பதிகங்கள் உரைப்பிரதிகளில் மாத்திரம் காணப்படுதலின் அவற்றை இயற்றினோர் நூலாசிரியரோ தொகுத்தோரோ அல்லர் என்பதும் தெரிகின்றன. ஆயினும் பதிகங்களில் உள்ள சரித்திரச் செய்திகளையும் பாடிப் பெற்ற பரிசிலைப் பற்றிய குறிப்பையும் நோக்கும் போது இவற்றை இயற்றி னோர் சேர அரசர்களுடைய வரலாற்றையும் பாடினோரைப் பற்றிய செய்திகளையும் நன்கறிந்தவரென்று புலப்படு கின்றது. இப்பதிகங்கள் ஆசிரியர் நச்சினார்க்கினியராலும் அடியார்க்கு நல்லாராலும் தத்தம் உரைகளில் எடுத்தாளப் பெறுகின்றன என்று டாக்டர் ஐயரவர்கள் எழுதியுள்ளவை இங்கே தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளாகும். சேர அரசர்களுடைய ஆட்சித் திறமை, ஈகைச் சிறப்பு. வீரச் செயல்கள் முதலியவற்றை இந்நூலில் உள்ள பாடல்கள் புலப்படுத்துகின்றன. சரித்திரக் குறிப்புக்கள் அடங்கியது. ஆதலின் சேர நாட்டின் சரித்திரத்துக்குக் கருவியாக இருக்கும் நூல்களுக்குள் இது மிகவும் முக்கிய மானது. இந்தப் புத்தகத்தில் எட்டுப் பாடல்களுக்குரிய விளக் கங்களைக் காணலாம். இப்போது கிடைக்கும் எட்டுப் பத்துக் களில் ஒவ்வொரு பத்திலிருந்தும் ஒவ்வொரு பாடலை எடுத் துச் சேர்த்திருக்கிறேன். ஆதலின் எட்டுச் சேர மன்னர் களைப் பற்றி எட்டுப் புலவர்கள் பாடிய எட்டுப் பாடல்கள் இந்தப் புத்தகத்தில் விளக்கப் பெறுகின்றன. இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் கடம்பைக் கடிமர மாக உடைய மன்னர்களை வென்றது. இமயம் வரை சென்று மன்னர்களை வென்றது ஆகிய செய்திகள் முதற் பாட்டில் வருகின்றன. பல்யானைச் செல்கெழு குட்டுவன் தன் படைத்தலைவர் களை நாட்டுப் பகுதிகளுக்கு அதிகாரிகளாக்கி நாடு காவல் புரியச் செய்த செய்தியை இரண்டாவது பாடல் சொல்கிறது. செங்குட்டுவன் கடலிடையே தீவுகளில் இருந்த பகை வர்களை அழித்துக் கடல் பிறக்கு ஓட்டியவன் என்ற சிறப்பைப் பெற்ற வரலாற்றை நான்காம் பாட்டால் அறியலாம். சேர மன்னர்களின் வெற்றிச் சிறப்பைப் பல வகையிலே புலவர்கள் பாடுகிறார்கள். பகைவர்களுடைய அரண் களை முற்றுகையிட்டு அவற்றை அழித்தலும், அங்குள்ள மறவர்களைச் சிறை பிடித்துக் கொண்டு வருதலும், பகை வர்களின் காவல் மரத்தை வெட்டுதலும், வெட்டிய அந்த மரத்தைக்கொண்டு முரசை இயற்றச் செய்தலும், பகைவர் களின் நாடுகளில் தீ மூட்டி எரித்தலும், அவ்வாறு எரியும்போது உண்டாகும் புகையால் சேர மன்னருடைய மாலை வாடுதலும், மார்பிலே பூசிய சந்தனம் உலருதலும், போரில் வீரர்கள் பகைவர்களுடைய யானையை எறிந்து தம் வீரத்தைக் காட்டுதலும், அவ்வாறு எறியப் பெற்ற யானைகளின் உடல்களால் போர்க்களத்தில் நாற்றம் உண் டாதலும், வீரர்களைப் புறங்காட்டி ஓடச் செய்து அரசர்களை வீழச் செய்தலும், பகைவர்களைக் கொல்வதனால் களத்தில் இரத்தம் பாய்ந்து அருகில் உள்ள கழியிலே கலந்து அதன் நிறத்தை மாற்றிச் சிவப்பாக்குதலும், அரசருடைய பனை மாலையிலும் கழலிலும் படும்படி அவ்விரத்தம் சிதறுதலும், பகைவர் மிக்கதுன்பத்தை அடைதலும், சேரர் வெற்றி பெற்று அதனால் வீரர்களுடன் துணங்கைக் கூத்தாடலும், வெற்றி பெற்ற பிறகு பாசறையில் அதனைக் கொண்டாடுதலும், புறங் காட்டி ஓடுபவர்களைக் கொல்லாது விடுதலும் ஆகிய செய்தி களை இதில் உள்ள பாடல்கள் தெரிவிக்கின்றன. கடலுக் குள் சென்று செய்யும் கடற்போரைப் பற்றிய செய்தியும் இரண்டு பாடல்களில் வருகின்றன. சேரர்களின் வெற்றிக்குக் காரணமாக இருப்பது அவருடைய படையின் திறல். நால்வகைப் படைகளையும் பற்றிய செய்திகளை இந்தப் பாடல்களில் காணலாம். பண் அமைந்த தேர்களை ஒரு புலவர் காட்டுகிறார். போர்க் களத்தில் பட்ட வீரர்களின் பிணங்களின் மேலும் யானை குதிரை ஆகியவற்றின் உடலங்களின் மீதும் அவை உருள்கின்றன. அப்படி உருண்டாலும் அவற்றின் சக்கரங்கள் தேய்வ தில்லை. ‘மீபிணத் துருண்ட தேயா ஆழி’ என்று புலவர் சொல்கிறார். சேரன் படையிலுள்ள யானைகளை எண்ண முடியாது என்று ஒரு புலவர் சொல்கிறார். கொங்கு நாட்டில் உள்ள ஆநிரைகளைப் போல அவை கூட்டம் கூட்டமாக இருக்கின் றனவாம். அவை கட்டுத் தறிகளிலே கட்டினால் அடங்குவ தில்லை. குத்துக் கோல்களை முறித்து விடுகின்றன. வானத் திலே பறக்கும் பருந்தின் நிழல் தரையின் மேல் தெரிந்தால் அந்த நிழலைச் சாடுகின்றன. சேரமானுடைய பட்டத்து யானையை ஒரு பாட்டில் பார்க்கிறோம். சேரமான் அதன் மேல் ஏறி உலா வருவது, முருகக் கடவுள் தன்னுடைய பிணிமுகம் என்னும் யானையின் மேல் வருவதுபோல இருக்கிறதாம். அந்த யானை குற்றம் சிறிதும் இல்லாமல் - எல்லா இலக்கணங்களும் அமைந்தது. கொம்பிலே வலிமையுள்ளது. நெற்றிப் பட்டமும் அம்பாரியும் பெற்று விளங்குவது. ‘குதிரைப் படையை எண்ணிப் பார்ப்பது இயலாத செயல்’ என்று ஒரு புலவர் சொல்கிறார். மறவர்கள் எத்தகைய பகைவர்களையும் நேரே நின்று போர் செய்து வெற்றி காணும் திறத்தினர்கள். யானையை வேலால் எறிந்து கொல்கிறார்கள். அவர்கள் விடும் அம்பு மிக்க வேகமாகச் சென்று இலக்கை அடிக்கின்றன. அதனால், கதழ் தொடை மறவர்’ என்று அவர்களை ஒரு புலவர் பாராட்டுகிறார். அவர்கள் எந்த இடையூறு வந்தாலும் முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டார்கள்; புறங்காட்டி ஓடாத உறுதியை உடையவர்கள். அவர்களுடைய பழைய வெற்றிகளை அவர்கள் காலிலே அணிந்திருக்கும் வீரக் கழல்கள் தெரிவிக்கின்றன. கடற் போரைப் பற்றிய செய்திகளால் போர் செய்வ தற்கு ஏற்ற வகையில் கப்பல்கள் அக் காலத்தில் இருந் திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. உன்னம் என்ற மரத்தைக் கொண்டு அரசனுடைய வெற்றி தோல்வி களை உணர்ந்து கொள்ளும் வழக்கம் பழைய காலத்தில் இருந்தது. பகைவர் நாட்டில் உன்ன மரம் வாடினால் அவர்கள் தோல்வி அடைவார்க ளென்றும், அது தளிர்த் தால் அவர்கள் வெற்றி அடைவார்களென்றும் நினைப் பார்களாம். இப்படிப் பார்க்கும் நிமித்தத்தை உன்ன நிலை என்று கூறுவர். ஓர் அரசன் தன் பகைவர் நாட்டு உன்ன மரம் கரியும் படியாக வெற்றி பெறுகிறானாம். அதனால் அவனை, ‘’உன்னத்துப் பகைவன்’’ என்று ஒரு புலவர் சொல்கிறார் . சேர மன்னர்களின் ஈகையின் பெருமையையும் பல வகையாகப் புலவர்கள் பாடுகிறார்கள். பகைவரை வென்று அவர்கள் நாட்டிலே பெற்ற பண்டங்களைத் தமக்கு என்று வைத்துக் கொள்ளாமல் பரிசிலர்களுக்கு வாரி வழங்குகிறார் கள் அம்மன்னர்கள். பாணர்களுக்குப் பரிசில் பல தருவ தோடு பொற்றாமரையைச் சூட்டுகிறார்கள். விறலி முத்து மாலையும் அணிகலமும் பெறுகிறாள். சேரருடைய புகழைப் பாடுவதில் போதிய வன்மையில்லாத இளைஞர்கள் கூடச் சேரன் ஒருவனிடம் பரிசிலைப் பெறுகிறார்கள். ‘’இவர் களுடைய பாடல் வேறு இடங்களில் ஏறாதவை. இருந்தாலும் இதைப் பாடிக் கை நீட்டும் இளைஞர்களுக்கு இவன் வசப்பட்டவனாகித் தான் கடற் போரில் ஈட்டிய பொருளைத் தருகிறானே!’’ என்று அந்த ஈகையைக் கண்டவர்கள் பாராட்டுகிறார்கள். இரவலர் படும் துன்பத்தைக் கண்டு அஞ்சுவது மன்னர் இயல்பு. தம் மனைவிமாரின் ஊடலைக் கண்டு அஞ்சுவதைக் காட்டிலும் இரவலர் புன்கண்ணைக் கண்டு மிகுதியாக அஞ்சுவார்களாம். செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடும் கபிலர் அம் மன்னனுடைய இயல்புகளாகக் கூறும் செய்திகள் மிகச் சிறந்தவை. ஈயும் வள்ளலது உயர்ந்த மன நிலையை அவர் நுட்பமாக உணர்ந்து சொல்கிறார். தான் பகைவரை வென்று பெற்ற பொருள்களை அரசன் வழங்குகிறான். அந்தப் பொருள்கள் மதிப்பிலே பெரியவை. அவற்றைக் கொடுக்கிறான். கொடுத்த பிறகு . " இவற்றை நாம் வைத்துக் கொள்ளாமல் கொடுத்து விட்டோமே!’ என்று நினைத்து வருந்த மாட்டானாம். ‘’இவ்வளவு கொடுத்து விட்டோமே!’ என்ற எண்ணமும் கொள்வதில்லை. கொடுப்பது எப்போதும் உயர்ந்த செயல் . ‘’மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று’ என்று வள்ளுவர் சொன்னார். ஆதலின் கொடுக்கும் பொழுது, நாம் கொடுக்கிறோம் என்ற பெருமிதம் ஒருவனுக்கு உண்டாவது இயற்கை. இல்லை யெனில், நம்மால் கொடுக்க முடிந்ததே என்ற உவகையை யாவது அடையலாம். ஆனால் சேரன் அத்தகைய நினைப் பையே கொள்வதில்லையாம். எத்தனை தடவை ஈந்தாலும், “நாம் கொடுத்தோம்; நம் பிறவியும் பொருளும் பயன் பெற்றன” என்ற மகிழ்ச்சியே அவனுக்கு இருப்ப தில்லையாம். கொடுக்குந்தோறும் அவனுடைய வள்ளன்மை இம்மி யளவும் குறைவதில்லை. ஒரு முறை பெற்றவனே பல முறை வந்தாலும் புதிதாக வந்தவனுக்கு வழங்குவது போலவே வழங்குவான். முன்பு பெற்றவன் என்ற காரணத்தால் பின்பும் வந்தவனுக்கு இல்லை யென்பதும், குறையக் கொடுத்தலும் அவனிடம் இல்லை. அவனுடைய பெருவண்மை ஒவ்வொரு தடவையிலும் குன்றாமல் விளங்குகிறது. இந்த மூன்று இயல்புகளையும் கபிலர் சுருக்கமாகப் பாடுகிறார். ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்; ஈத்தொறும் மாவள் ளியனே. இந்தச் சொற்கள் அட்சர லட்சம் பெறும் என்று சொல்லவேண்டும். இந்த முறையில் கொடுப்பவர்கள் இருப் பார்களா என்ற ஆராய்ச்சியில் நாம் இப்போது புக வேண்டாம். கொடுப்பவனுடைய உள்ளப் பான்மை இப்படி இருக்க வேண்டும் என்று நுணுகி ஆராய்ந்து சொன்னானே புலவன் , அவனுடைய அற்புதமான உணர்ச்சியையும் கற்பனையையும் நாம் பாராட்டலாம் அல்லவா? அதில் நமக்கு லோபத்தனம் வேண்டாமே! அரசர்களிடம் பரிசில் பெறும் இரவலர்கள் யார்? உடம்பால் உழைக்கத் தொழில் கிடைக்காமல், சோறு காணாமல் பிச்சை வாங்கித் திரியும் மக்கள் அல்ல. தாம் பெற்றதைத் தங்களைச் சார்ந்தாருக்கும் பிறருக்கும் அப்பொழுதப்பொழுது கொடுத்து விட்டு வறுமையை வேண்டுமென்றே வரவேற்கும் கலைஞர்களையே இரவலர்க ளாகக் காண்கிறோம். ஏடும், யாழும் அணியாக ஏந்தும் கைகளிலே வேறு பொருள்களை ஏந்துவது சுமையென்று அவர்கள் எண்ணினார்கள் போலும்! மன்னர்கள் ஈட்டிய பொருளை எந்தச் சமயத்திலும் பெறலாம் என்ற துணிவு கலைஞர்களுக்கு இருந்தமையால் அவர்கள் எவ்வளவு பெற்றாலும் அவ்வளவையும் உதறி விட்டு அடுத்த நாள் தாமும் தம் புலமையும் வறுமையுமாக நின்றார்கள். புலவர்களுடைய பெருமிதத்தை ஒரு பாட்டிலே காண் கிறோம். கபிலர் என்னும் புலவர் பெருமான் பாடிய பாட்டு அது. " பாரி என்னும் வள்ளல் என்னுடைய தலைவன். அவன் இறந்துவிட்டான். அவனிடம் இருந்த குணங்கள் உன்னிடம் உள்ளன என்று கேள்வியுற்றேன். பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். இங்கே வந்து பரிசில் பெற்றுப் போகலாம் என்று வரவில்லை. அதற்காக உன்னை அளவுக்கு மிஞ்சிப் புகழவும் வரவில்லை. உண்மையைச் சொல்வேன்’ என்று சேர மன்னனைப் பார்த்து அவர் பேசுகிறார். பாணர்கள் யாழ் வாசித்துப் பாடுகிறார்கள். பேர் யாழ் என்ற ஒரு வகை யாழை ஒரு பாட்டிலே காண்கிறோம். பல காலமாக வாசித்து வாசித்துப் பழக்கப் பட்ட யாழிலே பாணர்கள் இசை கூட்டிப் பாடுகிறார்கள். அவர்களுடைய குரலோடு அந்த யாழின் இசை ஒன்றுபட்டு இசைக்கின்றது. பாலைப் பண்ணைப் பாடுகிறார்கள். தழிஞ்சித் துறையில் அமைந்த பாட்டைப் பாடுகிறார்கள். அவர்கள் கையிலுள்ள யாழ்தான் எப்படிப் பேசுகிறது! பாணர்களின் ஏவல் களுக்கு அடங்கி அவர்கள் பணிக்கும் வண்ணம் அது ஒலிக்கிறது. சுரஸ்தானங்கள் அவர்கள் நினைத்தபடி யெல்லாம் பேசுகின்றன. அதனால், ’’பணி தொடை நரம்பின் விரல்கவர் பேரியாழ்" என்று புலவர் அந்த யாழைப் பாராட்டுகிறார். சிலர் முழவு வாசிக்கிறார்கள். அந்த முழவில் ஒரு பக்கத்தில் ஒரு வகை மண் பூசியிருக்கிறார்கள். பல கால மாக வாசிக்காமல் இருந்தால் அந்த மண் கெட்டுப் போய் விடுகிறது. ஆடிப்பாடும் விறலியை மூன்று பாடல்களில் காண்கிறோம். பலவளைகளைச் சிறு பெண்ணாக இருந்தபோது அணிந்திருந்த அவள் இப்போது ஆடவேண்டி யிருப்பதால் சில வளைகளையே அணிந்திருக்கிறாள். அவள் சில சமயங் களில் அபிநயம் பிடித்து ஆடுகிறாள். சில சமயங்களில் ஆடாமல் பாடுகிறாள். சேரனுடைய வேலைப் புகழ்ந்து பாடு கிறாள். அபிநயம் பிடிக்கும் தன் கைகளால் மிருதங்கத் துக்கு ஏற்றபடி தாளம் போடுகிறாள். அவள் கை அபிநயம் பிடிக்கும் போது தொழிற் கையாக இருக்கும். இப்போது அபிநயத்தில் ஈடுபடாமல் இருப்பதால் வெண் கை’ என்று புலவரால் சொல்லப் பெறுகிறது. பாடினி என்றும், விறலி யென்றும் அவளை விளிக்கிறார்கள். விறலியைப் பார்த்து. "இன்னாரிடம் சென்றால் பரிசு பெறலாம்’ என்ற முறையில் சொல்வதாக அமையும் பாடலுக்கு விறலியாற்றுப்படை என்று பெயர். புறப்பொருளில் வரும் துறைகளில் அதுவும் ஒன்று. இந்தப் புத்தகத்தில் இரண்டு விறலியாற்றுப் படைகள் இருக்கின்றன. நாட்டு மக்களை இன்பவாழ்வு வாழும்படியாகச் செய்து காவல் புரிவது மன்னர் கடமை. சேரர்களின் ஆட்சிமுறை யைப் பற்றிய சில செய்திகளை இந்தப் பாடல்களில் பெற லாம். சேரநாடு மலைவளம் சிறந்த நாடு. அருவிகளாலும் ஆறுகளாலும் நீர்வளம் பெற்ற நாடு. சேரநாட்டு மரிலாலே தோன்றி மேல் கடலிலே சென்று சேரும் பேராற்றை ஒரு புலவர் வர்ணிக்கிறார். கோடையில் வெப்பம் மிகுதியாக அருவிகள் வற்றிப்போனாலும் அந்த ஆற்றில் வெள்ளம் வருமாம். புது வெள்ளம் வரும்போது தழைகளை யெல்லாம் அடித்துக் கொண்டு வேகமாக வருகிறது. அதைப் பார்த் தால் வறுமை என்னும் பகைவனைச் சாடுவதற்கு வீரர்கள் தழைமாலை சூடி ஆரவாரத்தோடு வருவதுபோல இருக் கிறது. சந்தனத்தையும் அகிலையும் அடித்துக்கொண்டு நுங்கும் நுரையுமாகச் செம்புனல் வருகிறது. காம்பை நிலத்தில் பாய்ந்து செழிக்க வைக்கிறது. நல்ல புலங்களி லெல்லாம் பாய்ந்து வளத்தை அதிகப்படுத்துகிறது. இத்தகைய மலைவளமும் நீர்வளமும் இருத்தலால் நாடு செல்வமுடையதாக விளங்குகிறது. இயற்கை வளம் இருப் பினும் ஆட்சிமுறை நன்றாக அமைந்தால்தான் அது மக் களுக்குப் பயன்படும். சேர அரசர் நாடுகாவலைத் திறம்பட ஆற்றினார்கள். மக்களுக்கு மூன்று வகையான பகைகள் உண்டு. அகப்பகை இரண்டு; புறப்பகை ஒன்று. பசியும் பிணியும் அகப்பகைகள் ; வேற்று நாட்டுப் பகைவர் புறப்பகை. தக்கவண்ணம் நீர்வளம் நிலவளத்தைப் பெருகச் செய்து அரசன் ஆட்சி புரிந்தால் அகப்பகைகளாகிய இரண்டும் ஒழிந்துவிடும். அவற்றை அழிப்பதையே உயர்ந்த வெற்றியாகச் சேரர் கருதினர். அடுத்தது பகைவரை வெல்லும் வெற்றி. ஓர் அரசன் தன் நாட்டுக் குடிமக்களை வறுமையாலும் பசியாலும் நடுங்காமல் காப்பாற்றினான். அதனால் அவன் மக்களுடைய அன்புக்குப் பாத்திரமானான். பகைவர்களோடு செய்த போர்களில் வெற்றி மேல் வெற்றி பெற்றான். குடி மக்களின் நடுக்கத்தைப் போக்கியதுதான் அவன் பெற்ற முதல் வெற்றி. அதுவே பின் பெற்ற வெற்றி களுக்கெல்லாம் ஆதாரமாக அமைந்தது. அதனால் அந்தச் செயலை , “துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி” என்று ஒரு புலவர் பாராட்டுகிறார். ஓர் அரசன் தன் படைவீரர்களை நாட்டின் அதிகாரி களாக்கி அந்த அந்தப் பகுதிகளைப் பாதுகாக்கும்படி செய் தான். ஆக்க வேலைகளில் முழு மனத்தோடு ஈடுபட்ட அந்த வீரர்கள் போரையே மறந்துவிட்டார்கள். அம்பையும் வில்லையும் மறந்தார்கள். இப்படிச் செய்து அரசன் நாட்டைப் புரந்தமையால் நாடு முழுவதும் விளைவு முட்டுறாமல் திருமகள் விலாசம் பெருகியது. குடிமக்களுக்கு எந்த விதமான துன் பமும் இல்லை; பகைவரால் உண்டாகும் கொடுமையும் இல்லை. தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டவர்களைச் சிறிதும் தீங்கின்றிப் பாதுகாப்பதையே தன் லட்சியமாகக் கொண் டிருந்தான் மன்னன். குடிமக்கள் வருத்தமின்றி வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்க்கையைப் பேரெழில் வாழ்க்கை என்று ஒரு புலவர் சிறப் பிக்கிறார். அவர்கள் வாழும் ஊர்களில் துயரமே இல்லை. “புலம்பா உறையுள்” என்று அவற்றைப் பாடுகிறார் புலவர். நல்ல விளைச்சலும் அரசாட்சியும் இருக்கும் போது குடி மக்களுக்கு என்ன குறை? ஆற்றிலே புது வெள்ளம் வரும் போது அவர்கள் அதிலே நீந்தியும் ஆடியும் விழா அயர் கிறார்கள். பேய்க்கரும்பினால் தெப்பம் கட்டி அதைச் செலுத்தி மகிழ்கிறார்கள். அந்த விழா ஒரே ஆரவாரமாக இருக்கிறது. வேனிற்காலத்தில் பூம் பொழிலில் தங்கி இன் புறுகிறார்கள். தாம் மட்டும் நுகரும் இயல்பு அவர்களிடம் இல்லை. சுற்றத்தாரோடு உண்டு இனிது நுகரும் செல்வர் களாகக் குடிமக்கள் வாழ்கிறார்கள். சேர அரசர்கள் பகையை அழித்து வெல்லும் வெந்திறல் வேந்தர்களாக இருக்கிறார்கள். மார்பிலே தங்கள் அடையாள மாலையாகிய பனைமாலையை அணிகிறார்கள். வேறு மாலை களையும் புனைகிறார்கள். மார்பிலே சந்தனம் பூசிக் கொள் கிறார்கள். அந்த மார்பில் அழகான கோடுகள் இயல்பாக அமைந்திருக்கின்றன. காலிலே பெரிய கழலை அணிகிறார் கள். அவர்கள் ஓலக்கத்தில் ஆடலும் பாடலும் நிகழ் கின்றன. இனிய பான வகைகளை நுகர்கிறார்கள். அவர்கள் வணங்கா ஆண்மையை உடையவர்கள். நிரம்பின அறிவும் பெரியோர் சொற்களைக் கேட்டு அடங்கும் இயல்பும் பேராசையற்ற தன்மையும் உடையவர்கள். பல மனைவியரை மணந்து கொள்ளும் முடிமன்னர் சேரர். அவருடைய மனைவியர் நிரம்பின அறிவுடையோர். நல்ல புகழைப் பெற்றோர் . அழகுடையவர்கள். மக்கட் பேறாகிய செல்வத்திற் குறைவில்லாதவர்கள். அந்த மக்களை "இளந்துணைப் புதல்வர்’’ என்று போற்றுகிறார் ஒரு புலவர். தம்மைப் பெற்றவர்களுக்கு இம்மையிலும் மறுமை யிலும் துணையாக உதவுபவர்கள் என்ற குறிப்பை அந்தத் தொடர் புலப்படுத்துகிறது. நல்ல நாடும், மலையும், ஆறும், நாடுகாவல் புரியும் மறவரும், பேரெழில் வாழ்க்கையையுடைய குடிமக்களும், பலபொருளும், மனைவியரும், மக்களும், நாற்படையும். தம்மைப் பாராட்டும் புலவரும், பாடி ஆடி இன்புறுத்தும் பாணரும் ; விறலியரும் அமைந்த சேர மன்னர்களுடைய செல்வச் சிறப்பை எல்லோரும் பாராட்டுவது வியப்பன்று. அதைப் பலர் புகழ் செல்வம் என்று புலவர் பாராட்டுகிறார். உண்மையைச் சொல்லும் சான்றோர் மன்னர் புகழைக் கூறுகின்றனர். அம் மன்னர்களின் புகழ் ‘வான்றோய் நல்லிசை’யாக நிலவுகிறது. உலகம் உள்ளளவும் இருக்கும் புகழ் அது. ’நின் வளன் வாழ்க’’ என்றும், ‘நின் வாழ்க்கை வாழ்க’’ என்றும், ’’நின் பெயர் வாழ்க" என்றும் வாழ்த்து கிறார்கள் புலவர்கள். மன்னன் வாழ்ந்தால் உலகம் வாழும் என்று சொல்கிறார்கள். ஆற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்து கிறார்கள். மன்னருடைய புகழைப் புலவர் வெளியிடும் முறை அழகாக இருக்கிறது. நேரே அவரைப் பார்த்துச் சொல்வது ஒருவகை. பிறரை நோக்கிச் சொல்வது ஒருவகை முன்னாலே சொன்னது முன்னிலைப் பரவல் என்றும் பின்னாலே உள்ளது படர்க்கைப் பரவல் என்றும் பெயர் பெறும். இதில் உள்ள எட்டுப் பாடல்களில் முன்னிலைப் பரவலாக அமைந்தவை ஐந்து. விறலியை நோக்கிச் சொல் வனவாக இருப்பவை இரண்டு (5,8); வழிப் போக்கர்களைப் பார்த்துக் கூறுவதாக அமைந்தது ஒன்று (7) கபிலர் ஒரு பாட்டில் பாரியைப் பற்றிச் சொல்கிறார். அங்கே , அவனுடைய மலையில் பலாப்பழங்கள் பழுத்துத் தேன் சொரிந்ததையும், அவனுடைய மாளிகை ஓவியம் போலக் காட்சியளித்ததையும் சொல்கிறார். அவனுடைய மனைவியின் அழகையும் இல்லுரிமையையும் நினைக்கிறார். அவன் பெரு விரலையுடையவனென்றும், உன்னத்துப் பகைவ னென்றும், புலரா ஈகையை உடையவனென்றும் கூறுகிறார். அவன் இறந்தான் என்பதை, வாராச் சேட்புலம் படர்ந்தோன்’’ என்று உணர்த்தி வருந்துகிறார். அவன் இறந்தமையால் முழவுமண் புலர்ந்தது; இரவலர் இனைந்தனர். பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்துக் கிடைக்கவில்லை. ஆனாலும் இப்போது கிடைக்கும் பாடல்களில் 11-ஆம் பாட்டே முதலில் இருக்கிறது. அதில் முதலில் முருகனைப் பற்றிய செய்திகள் வருகின்றன. கடவுளை நேர் முகமாக வாழ்த்தும் வாழ்த்துப் பாடல் கிடைக்காவிட்டாலும், நூலைப் படிக்க எடுத்தவுடன், ‘சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல் வேளின்’ செய்தி முதலில் இருப்பதைக் காணும் போது, கடவுள் வாழ்த்து இல்லாமையால் உண் டாகும் வருத்தம் ஓரளவு நீங்கி ஆறுதல் அடைய முடிகிறது. அந்தப் பகுதியில், முருகன் கடலிலே சூரனைச் சங்காரம் செய்த திருவிளையாடல் வருகிறது. சூரனுக்கும் பிறருக்கும் காப்பாக ஒரு மாமரம் இருந்த தென்பது அக்காலத்தில் வழங்கிய வரலாறு. ’’அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும், சூருடைய முழுமுதல் தடிந்த" தாகப் பாட்டுச் சொல்கிறது. முருகவேள் யானை யூர்ந்து வருவதையும் அந்தப் பாடலில் புலவர் கூறுகிறார். இதில் உள்ள எட்டுப் பாடல்களில் வந்த துறைகள் வரு மாறு: இயன்மொழி வாழ்த்து, உழிஞை யரவம், காட்சி வாழ்த்து, செந்துறைப் பாடாண் பாட்டு, நாடு வாழ்த்து. விறலியாற்றுப் படை. இந்தப் பாடல்களுக்கு அமைந்த பழைய பெயர்கள் : புண் உமிழ் குருதி, உருத்துவரு மலிர் நிறை , வலம்படு வென்றி, பேரெழில் வாழ்க்கை , சில் வளை விறலி , புலாஅம் பாசறை, வென்றாடு துணங்கை, வெண் டலைச் செம்புனல். பதிற்றுப்பத்தைக் கண்டு பிடித்து மூலத்தையும் உரை யையும் நன்கு ஆராய்ந்து பயன்படும் குறிப்புக்களையும் சேர்த்து அச்சிட்டுத் தமிழ் நாட்டுக்கு வழங்கியவர்கள் என் னுடைய ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தியாய பாக்டர் ஐயரவர்கள். முதல் முதலாக அந்நூல் 1904 ஆம் ஆண்டில் வெளியாயிற்று. அதன் மூன்றாம் பதிப்பு வெளியாகும் போது (1941) உடனிருந்து ஏவல் புரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சங்க நூல் காட்சிகள் என்னும் புத்தக வரிசையில் இது ஏழாவது புத்தகம். பரிபாடற் செய்யுள் விளக்கம் அமைந்த “தமிழ் வையை” என்னும் புத்தகம் இனி வெளியாகும். முருகன் திருவருள் துணையிருந்து நிறைவேற்ற வேண்டும். மயிலாப்பூர், 17-12-52 கி. வா. ஜகந்நாதன் செல்வம் கண்டோம்! வஞ்சி மா நகரம் சேரர்களுடைய தலை நகர். நெடுஞ்சேரலாதன் அந் நகரில் இருந்து அரசு செய்து வந்தான். அவனுடைய வெற்றிச் சிறப்புக்கு இமய மலையே அடையாளமாக நின்றது. இமயத்தை நோக்கிப் படையுடன் புறப்பட்ட போது வட நாட்டில் உள்ள ஆரிய மன்னர் பலர் அவனை எதிர்த்தார்கள். அவர்களை யெல்லாம் வென்று இமயம் சென்று அம் மலையில் தன்னுடைய கொடியாகிய வில்லைப் பொறித்து விட்டு வந்தான். அவனுடைய வீரமும் புகழும் இமய மலையளவும் சென்றமையால் அவனை யாவரும் இமயவரம்பன் என்று சிறப்பித்துச் சொன்னார்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று அந்தச் சிறப்புப் பெயரோடு சேர்ந்து அவனுடைய இயற் பெயர் வழங்கலாயிற்று. அவனுடைய ஈகைச் சிறப்பையும், நாடு காவலின் உயர்வையும், வீரப் பெருமையையும் புலவர்கள் பாராட்டிப் பாடினார்கள். குமட்டூர் என்ற ஊரில் வாழ்ந்த அந்தணப் புலவராகிய கண்ணனூர் என்பவர் அந்த மன்னனைப் பத்துப் பாடல்களால் பாடினார். பதிற்றுப் பத்தில் இரண்டாவது பத்தாக அவை இருக்கின்றன. அந்தப் பத்தின் முதல் பாட்டில் அவனுடைய வெற்றி யைப் பாராட்டிப் பாடினார் புலவர். புலவர் வஞ்சி மா நகருக்கு ஒரு நாள் வந்தார். அன்று மன்னன் தன் வெற்றியைக் கொண்டாடும் நாள்; அவன் தன் பட்டத்து யானையில் அமர்ந்து உலா வரும் நாள். அவனுடைய வெற்றித் திருவின் விளக்கம் அந்த உலாவில் நன்றாக வெளியாயிற்று. பல நாடுகளிலிருந்து சேரமானுக்குக் கப்பம் செலுத்தும் மன்னர்கள் வந்திருந்தார்கள். சில ஊர்களைத் தம்முடைய ஆட்சியிலே வைத்துக்கொண்டு வாழ்ந்த வேளிர் பலர் வந்திருந்தார்கள். இப்போது ஐமீன்தார் என்று சொல்லும் சிற்றரசர்களையே அக் காலத்தில் வேளிர் என்று சொன்னார்கள். அவ்வாறு வந்த மன்னர்களும் வேளிர்களும் தங்கள் தங்கள் ஊர்களி லிருந்து பல பண்டங்களைக் கையுறையாகக் கொண்டு வந்தார்கள். உலாவின் சிறப்புக்குரிய பல பொருள்களை அவர்கள் கொண்டு வந்து அளித்தார்கள். வஞ்சி மா நகர மக்கள் மாத்திரமன்றி மற்ற ஊர்களிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் இந்தத் திருவுலாவைப் பார்க்க மனிதர்கள் வந்திருந்தார்கள். அன்று வஞ்சி மா நகரம், அதுகாறும் கண்டிராத பெரிய திருவிழாக் கோலம் கொண்டிருந்தது. புலவரும் பாணரும் கூத்தரும் வந்து குழுமியிருந்தார்கள். வடமொழி வாணரும் வந்தார்கள் அரசனுடைய உலா மிகச் சிறப்பாக இருந்தது. பட்டத்து யானையின் மேல் அரசன் அமர்ந்திருந்தான். அவன் அருகில் ஒரு மன்னன் குடை நிழற்ற, இரண்டு சிற்றரசர்கள் கவரி வீச, வேறு மன்னர்கள் கைகட்டிய படியே தரையில் நடந்து வர, இன்னிசைக் கருவிகள் ஒலிக்க, முரசு முழங்க, இந்தக் காட்சியைக் காணும் மக்கள் ஆரவாரம் செய்யச் சேரமான் திருவுலா வந்தான். அப்போது அவனுடைய தோற்றத்தைக் கண்டார் குமட்டூர்க் கண்ணனார் . அவனுடைய வீரத்தையும், அவன் போர்களில் வெற்றி பெற்ற செய்தியையும் நன்கு அறிந்தவர் அவர். அவற்றை இப்போது சிறிதே நினைத்துப் பார்த்தார். அவனுடைய வீரச் செயலும் தோற்றமும் அவருக்கு முருகவேளினுடைய நினைவை உண்டாக்கின. ‘முருகக் கடவுளின் வீரச் செயல்களைப் போலவே இந்த அரசனுடைய வீரச் செயல்கள் இருக்கின்றன. யானையின் மேல் இவன் வீற்றிருக்கும் அழகும் அப்பெருமான் யானையின் மேல் எழுந்தருள்வது போலக் கண் கொள்ளாக் காட்சி யாகவே இருக்கிறது’ என்று அவர் எண்ணம் படர்ந்தது. இந்த எண்ணம் பின்னும் வளர்ந்து வளர்ந்து புலவருடைய உள்ளத்திலே நிரம்பியது. அதன் பயனாக அவர் ஒரு பாடலைப் பாடினார். முருகன் விறல் அலைகள் கொந்தளித்து மோதி எழும்பி அடிக் கின்றன. மலைபோல எழும்பிக் கரையிலே வந்து மோதுகையில் பிசிர் பிசிராக உடைந்து சிதறுகின்றன. அப்படி அலைகள் எழுந்து உடையும்படியாகக் கடுமை யான காற்று வீசுகிறது. அது பாய்ந்து வீசி அடித் தலினால் சலனத்தையுடைய கரிய நீரில் அலைகள் எழுகின்றன. ஆழ் கடலாதலின் பெரிய பெரிய அலைகளாக எழுகின்றன. கடலிலே நீர் குறைவதுண்டா ? அது நிரம்பி நிறைந்த சூலையுடையது போல இருக் கிறது. கடலின் பரப்புக்கு அளவேது? அது செறிந்த நீர்ப் பரப்பை உடைய பெரிய கடல். எங்கும் பரந்து ஒரே நீர் மயமாகக் கிடக்கும் கடலிலே வளி பாய்ந்து அடுவதனாலே மலையைப் போன்ற அலைகள் எழுந்து கரையிலே மோதித் தாம நீர்த்திவலைகளாக உடைகின்றன ; திவலைகள் கூட அல்ல; பிசிர் பிசிராகப் பனித் தூவலைப் போலச் சிதறு கின்றன. அந்தக் கடலுக்குள்ளே சூரனுடைய உயிர் நிலை யாகிய மாமரம் தலை கீழாக நின்றது. சூரனே அதற்குள் புகுந்து கொண்டிருந்தான். எல்லோருக்கும் வருத்தத்தைத் தரும் அசுரர்கள் தவம் செய்தார்கள். சூரனும் தவம் இயற்றினான். அதன் பயனாக அவர் களுக்கு ஒரு மாமரம் கிடைத்தது. அவுணர் குலத் தலைவனுக்குப் பாதுகாப்பாக அந்த மாமரம் நின்றது. அது கடலுக்குள்ளே இருந்ததால் கண்ணுக்குத் தெரியாது என்று அவுணர் நினைத்தனர். முருகனு டைய வேல் அந்தக் கடல் நீரையெல்லாம் சுவறச் செய்து மாவின் அடி மரத்தைப் பிளந்துவிட்டது. அமரர்களுக்கெல்லாம் சூரன் மிக்க துன்பத்தை உண்டாக்கினான். அவனை அடக்க வழி தெரியாமல் அவர்கள் திண்டாடினார்கள். முருகனிடம் முறை யிட்டார்கள். வளி அலைகளை அடுவதனால் பிசிராக உடையும் நளியிரும் பரப்பையுடைய மாக்கடலில் சூரனுக்குரிய மாவின் அடியை அப்பெருமான் தடிந்து சூரனை அழித்தான். அதனால் தேவர்கள் விடுதலை பெற்றனர். பிறரால் செயற்கரும் செயலைச் செய்த மையால் முருகனுக்குப் பேரிசை உண்டாயிற்று. சூரனைக் கொல்ல வேண்டுமென்ற கடுஞ்சினத்தோடு சென்றான் முருகன். அவன் வெற்றி பெற்றான். அப்படி வெற்றி பெற்ற மிடுக்கோடு முருகவேள் தன் களிற்றின் மேல் ஊர்ந்து வந்தான். அமரர்கள் அப் பெருமானுடைய பவனியைக் கண்டு களித்தனர். கடுஞ்சின விறல் வேள் களிற்றின் மேல் ஊர்ந்தது போல இருந்தது, சேரலாதன் யானையின் மேல் உலாப் போந்த காட்சி. வரைமருள் புணரி வான்பிசிர் உடைய வளிபாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ்சூல் நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் 5 கடுஞ்சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு. மலையை ஒத்த அலைகள் தூய துளித்துளியாக உடையும்படி காற்றானது வீசிச் சிதைத்த, அசைகின்ற கரிய நிறைந்த கருப்பமாகிய நீரையுடைய செறிந்த கரிய பரப்பை உடைய பெரிய கடலை அணுகி, துன்பத்தைச் செய்தலை யுடைய அசுரர்கள் தமக்குப் பாதுகாப்பாகக் கூட்டி வைத்த சூரனுடைய (மாவின்) அடி மரத்தைப் பிளந்து பெரிய புகழையும் கடுமையான கோபத்தையும் வெற்றி மிடுக்கையு முடைய முருகன் யானையை ஊர்ந்து வந்தாற்போல. [மருள் : உவம உருபு ; வரையோ என்று மருள்வதற் குரிய என்றும் சொல்லலாம். புணரி - அலை. வான்பிசிர் - தூயதுளி . பிசிர் உடைய - பிசிராக உடைய. அட்ட - சிதறிய. துளங்கு - அசையும். கமஞ்சூல் - நிறைந்த கருப்பமாகிய நீர் ; கம - நிறைவு. ‘நிறைந்த நீர் ; சூல்போறலாற் சூலெனப் பட்டது’ என்பது பழைய உரை. நளி - செறிவு; தண்மை யுமாம். இரும்பரப்பு - கரிய பரப்பு . முன்னி - நினைந்து சென்று. அணங்கு - வருத்துதல். ஏமம் புணர்க்கும் - பாது காப்பாக அமைத்து வைத்த. சூர் - சூரன். முழு முதல் - அடிமரம். தடிந்த - பிளந்த. இசை - புகழ். விறல் - வெற்றி மிடுக்கு. வேள் - முருகன். ஊர்ந்தாங்கு - ஊர்ந்தது போல.] முருகன் திருவிளையாடல்களைப் பற்றிய வரலாறு கள் காலத்துக்குக் காலம் வேறுபட்டு வழங்கும். கந்த புராணம் சூரபன்மனே மாமரமாகி நின்றான் என்று சொல்கிறது. பழங்காலத்தில் இந்த மாமரம் சூரனுக்குப் பாதுகாப்பாக இருந்ததென்று ஒரு வரலாறு வழங்கி வந்தது. சூரவன் மாத் தனக்கு அரணாகவுடைய மாவின் முதல் என்றவாறு’ என்று பழைய உரைகாரர் எழுதுவார். திருமுருகாற்றுப்படையின் உரையில் ஓரிடத் தில், அவுணரெல்லாம் தம்முடனே எதிர்ந்தார் வலி யிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரங் கொண்டிருந்து சாதித்ததொரு மாவை வெட்டினான் என்றவாறு’ என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார். கடம்பு தடிந்த வெற்றி முருகன் கடலிடையே மாமரத்தைத் தடிந்ததைப் போலச் சேரலாதனும் கடலிடையே ஒரு மரத்தை வெட்டினான். பழங் காலத்தில் அரசர்கள் தம்முடைய தலை நகரில் ஏதேனும் ஒரு மரத்தை வைத்துப் பாது காத்து வருவார்கள். அதற்குக் காவல் மரம் என்றும் கடிமரம் என்றும் பெயர் வழங்கும். அரசருக்குரிய சின்னங்களைக் காவல் புரிவது போல அந்த மரத்தையும் காவல் செய்வார்கள். பகைவரை வென்ற அரசன் அவர்களுடைய காவல் மரத்தை வெட்டி அதைக் கொண்டு முரசம் செய்வது வழக்கம். சேரநாட்டுக்கு மேற்கே கடலிடையே உள்ள சில தீவுகளைக் கடம்பர் என்ற மன்னர் ஆண்டு வந்தனர். அவர்களுடைய காவல் மரம் கடம்பு. அவர் களின் மேல் நெடுஞ்சேரலாதன் படையெடுத்துச் சென்று வென்றான். குமட்டூர்க் கண்ணனார் அந்த வெற்றியைப் பாடுகிறார். பெரும்படையோடு சேரலாதன் கடம்பருடன் போர் செய்யச் சென்றான். தீவாயினும் தலை நகரில் அரண்களை அமைத்திருந்தனர். அந்த அரண்களை அழித்தான். எளிதிலே அழிக்க முடியுமா? பகை மன்னருடைய படை வீரர்கள் எதிரிட்டுப் போர் செய் தார்கள். எதிர்த்துக் குறுக்கிட்டவரை வேலாலே குத்திப் போர் செய்தனர் சேரமான் படைவீரர் . அப் படிக் குத்திக் குருதி தோய்ந்தமையால் வேலின் நுனி சிவந்திருந்தது; செவ்வாய் எஃகம் (வேல்), விலங்கு கிறவர்களை (தடுக்கிறவர்களை) யெல்லாம் குத்திக் கிழித்து அவர்களுடைய மார்பைத் திறந்தது. பகை வரால் ஊறுபடாத அரிய மார்பினை உடையவர்கள் அவர்கள். அந்த மார்பைத் திறந்தது வேல்; அங்கே புண் உண்டாகிவிட்டது. வலிமை பெற்ற உடம்பு ஆதலின் திறந்த புண்ணின் வழியே குருதி ஊற்றுப் போலப் பொங்கி வந்தது. பல வீரர்களுடைய மார்பு பிளந்து வரும் குருதி வெள்ளம் கீழே ஆறுபோலப் பாய்ந்தது. கடலிலிருந்து உட்புகுந்திருக்கும் உப்பங் கழிகளில் அந்த இரத்த ஆறு போய்க் கலந்தது. இயற் கையாக நீலமணியின் நிறத்தைப் போன்ற நீல நிற முடைய நீரைப் பெற்றவை கழிகள். அவற்றிலே செக்கச் சிவந்த குருதி வெள்ளம் பாயவே, அந்த நீர் நிறம் மாறிச் சிவந்த குங்குமக் குழம்பு போல ஆகி விட்டது. குங்குமக் குழம்பை மனலக் கலவை என் பார்கள். செவ்வாய் எஃகம் மார்பைப் பிளந்த புண்கள் உமிழ்ந்த குருதி யினாலே மணிநிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து மனலக் கலவை போல ஆகும்படி கடம்ப மன்னருடைய மதில்களைச் சேர மன்னன் அழித்தான். ஒருவகையிலே வெற்றி கிடைத்து விட்டால் வீரர் களுக்குப் பின்னும் ஊக்கம் மிகுதியாகும். மதிலை அழித்த பின்பு சேரனுக்கு ஊக்கம் அதிகமாகிவிட்டது. வலிமை யிலே அவனுக்குக் குறைவு ஏது? முரண் (வலி) மிகு சிறப்பை உடையவன் அவன். அந்தச் சிறப்பினாலே பின்னும் உயர்ந்த எழுச்சியை உடையவனாகிப் பகை மன்னருடைய காவல் மரத்தை அழிக்கப் புகுந்தான். அந்த மரத்தைப் பல வீரர்கள் சூழ்ந்து மொய்த்துக் காவல் புரிந்தனர். மதிலை வென்றதைவிட இது அரிய செயல் அன்று என்று முதலில் தோன்றியது. ஆனால் இங்கே தம் உயிர் போனாலும் கடிமரத்துக்கு ஊறுபாடு நேரவிடாமல் மிக்க வலிமையுடைய வீரர்கள் படைகளுடன் காவல் புரிந்தனர். மரம் நன்ருகத் திரண்டு வளர்ந்திருந்தது. அதில் மலர்கள் நிறையப் பூத்திருந்தன. அந்தத் திரள் பூங் கடம்பு அதுகாறும் அதனையுடைய மன்னர் வாழ்வு மலர்ந்தது போல மலர்ந்திருந்தது. இப்போது அது குலையப் போகிறது. கடம்ப மரத்தை வெட்டும்படி வீரர்களை ஏவினான் சேரன். அவர்கள் காவலையுடைய அதன் அடிமரத்தை வெட்டினார்கள். வடிவேற் பெருமான் கடலிடையே மாமரம் தடிந்தான். சேரன் கடலிடையே இருந்த நகரில் கடம்பைத் தடிந்தான். கடம்பர்களின் காவல் மரத்தைத் தடிந்த வெற்றி எளிய தன்று; மிகப் பெரிது. ஆதலின் அதற்கு அடை யாளம் வேண்டாமா? வெட்டின மரத்தைத் தன் நாட்டுக்கு எடுத்துச் சென்று அதைக் கடைந்து முரசின் குடமாக அமைத்து மேலே தோல் போர்த்து வைத்துக் கொண்டான். அந்த முரசு முழங்கி னாலும் வெற்றி முழக்கமே முழங்கும். முழங்காமல் இருந்தாலும் கடம்பு தடிந்த வெற்றிக்கு அடையாள மாக விளங்கும். இவ்வாறு போரிலே வெற்றி பெறுகின்றவன் சேரன்; வெல்போர்ச் சேரலாதன். அவனுடைய அரண் மனையில் நாள்தோறும் சிறு விருந்தும் பெரு விருந்தும் நடைபெறும். இனிய நறவை உண்பார்கள். பன்னாடையால் அரித்த கள்ளை உண்டு வெற்றியைக் கொண்டாடுவார்கள். அவன் மார்பில் சந்தனம் மணக்கும். மலை நாட்டையுடைய மன்னனுக்குச் சந்தனத்துக்குப் பஞ்சமா? அதை மார்பு நிறையப் பூசியிருப்பான். அரசனுடைய வீரம் எவ்வளவு சிறப்பாக இருந் தாலும், ஊக்கம் உயர்ந்ததாக இருப்பினும் அவன் கருத்தை நிறைவேற்றும் படை வேண்டும். எந்தப் போரானாலும் இளைக்காத படையாக இருக்க வேண்டும். சேரமானுக்கு அத்தகைய சிறந்த படை இருந்தது. எத்தகைய போரானாலும் பகைவர்களை அட்டுத் தம் வீரத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் திரண்ட படை அது; போர் அடு தானை. இயற்கையான ஊக்கமும், கள்ளை நுகர்ந்ததனால் உண்டாகும் செயற்கையான கிளர்ச்சியும், அகன்று மலர்ந்து சந்தனம் பூசி விளங்கும் மார்பும், போரை அடுகின்ற தானையும் உடைய சேரலாதனை நேரே விளித்துப் பாடுகிறார் புலவர். செவ்வாய் எஃகம் விலங்கு நர் அறுப்ப அருநிறம் திறந்த புண் உமிழ் குருதியின் மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து மனாலக் கலவை போல , அரண் கொன்று,         10 முரண்மிகு சிறப்பின் உயர்ந்த மக்கலை, பலர்மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய், வென்று எறி முழங்குபனை செய்த, வெல்போர் நார் அரி நறவின், ஆர மார்பிற்         15 போர் அடு தானைச் சேரலாத! முன்பே பலரைக் குத்திச் சிவந்த நுனியையுடைய வேல் இடைப் புகுந்து தடுப்பவரைக் கிழிக்க , அரிய மார்பு பிளந்த புண்ணால் வெளியிடப்பெறும் இரத்தத்தால் நீல மணியைப் போன்ற கரிய கழியின் நீரினது நிறம் மாறிக் குங்குமக் குழம்பைப் போலச் செந்நிறத்தைப் பெற , மதில் களை அழித்து, வலிமை மிக்க பெருமையோடு உயர்வான முயற்சியை உடையையாகி, பலர் சூழ்ந்து பாதுகாத்த பூக் களையுடைய திரண்ட கடம்ப மரத்தின் காவலையுடைய அடிப் பகுதியைத் துண்டாக்கும்படி ஏவி, அந்தத் துண்டு களால் வெற்றி கொண்டு முழங்கும் முரசத்தைச் செய்த, வெல்லுகின்ற போரையும், பன்னாடையால் வடிகட்டப் பெறும் கள்ளையும், சந்தனத்தை அணிந்த மார்பையும், போரில் பகைவரை அழிக்கின்ற படையையும் உடைய சேரலாதனே! [வாய் - முனை. எ . கம் - வேல் . விலங்குநர் - தடுப்பவர். அறுப்ப - கிழிக்க. நிறம் - மார்பு. திறந்த - பிளந்த. குருதி யின் - இரத்தத்தாலே. இருங்கழிநீர் - கரிய கழியில் உள்ள நீர். பெயர்ந்து - மாறி. மனாலக்கலவை - குங்குமக்குழம்பு ; சாதிலிங்கக் குழம்பு என்றும் சொல்லலாம். முரண் - வலிமை. ஊக்கலை - முயற்சியை உடையை ஆகி . மொசிந்து - மொய்த்து. ஓம்பிய - காப்பாற்றிய திரள் - பருத்த. கடி - காவல் . முழுமுதல் - அடிமரம். துமிய - துண்டு படும்படி யாக. ஏஎய் - ஏவி. எறி - அடிக்கின்ற. பணை - முரசு. நார் அரி - பன்னாடையால் வடிகட்டுகின்ற. நறவு - கள். கள்ளில் பல வகை உண்டு. மனத்துக்கு உற்சாகத்தை ஊட் டும் பலவகைப் பானங்களையும் மதுவென்றும் கள் என்றும் வழங்குவது பழைய மரபு. வெறியூட்டும் கள்ளை மாத்திரம் இப்போது கள் என்று சொல்கிறோம். அரசர்களும் செல் வர்களும் மற்ற மக்களும் ஊக்கம் பெறும் பொருட்டுப் பரு கும் பானம் என்றே இங்கே கொள்ள வேண்டும். வெறி யூட்டும் கள்ளாக இருந்தால் அதற்கு ஏற்றவகையில் புலவர் கள் அதைச் சொல்வார்கள். நறவின் - நறவினையுடைய. ஆரம் - சந்தனம் ; முத்து என்றும் சொல்லலாம். போர் அடு - போரில் பகைவரை அடுகின்ற. தானை - சேனை. ] கடம்ப மரத்தை வெட்டி முரசு செய்த இந்தச் செய்தியை இப் புலவர் வேறு ஒரு பாட்டிலும் சொல்லி யிருக்கிறார். “கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பணை” என்று பதிற்றுப்பத்தின் பதினேழாவது பாட்டில் வருகிறது. முருகனைப் போலக் கடலிடை நின்ற கடி மரம் தடிந்த வெற்றியை உடையவன் சேரன் என்பதைச் சொன்ன புலவர், அம் மன்னன், கடுஞ்சின விறல் வேள் களிற்றை ஊர்ந்தது போல யானையின் மேல் ஊர்வலம் வந்ததைப் பாடுகிறார். யானை உலா சேரலாதன் யானையின் மேல் வருகிறான். அந்த யானை தான் எத்தனை அழகாக இருக்கிறது! அதற்கு அலங்காரம் செய்திருக்கிறார்கள். மலர் மாலையையும் மணியையும் புனைந்து அழகு செய்திருக்கின்றனர். அந்த மாலை மார்பளவும் வந்து தொங்குகிறது. வாடாமல் புதுமை மணத்தோடு விளங்கும் பைந்தார் அது. யானையின் நெற்றியிலே பட்டம் மின்னுகிறது. அதன் கொம்பு கிம்புரியுடன் விளங்குகிறது. பகை வருடைய மதில்களைத் தன் கொம்புகளால் மோதும் விரலையுடையது சேரலாதன் யானை. அதன் மருப் யிலே வெற்றிக்கதை எழுதியிருக்கிறது. அது வெற்றி யினாற் சிறந்த கொம்பு; வலன் உயர் மருப்பு. யானைக்கு இலக்கணம் உண்டு. ஏழடி உயரம் இருந்தால் நல்ல யானை. அதன் உறுப்புக்கள் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்ற வரையறை இருக்கிறது. யானையின் இலக்கணத்தைச் சொல்லும் கஜ சாஸ்திரம் என்று ஒரு நூல் வடமொழியில் இருக்கிறது. முன்பு தமிழிலும் இந்தது. அதில் யானையின் உடலுக்குரிய குணத் தையும் குற்றத்தையும் விரிவாகக் காணலாம். படை யிலே சேர்த்துக் கொள்ளும் யானையையே ஆராய்ந்து, தகுதியுடையதா என்று தெரிந்து எடுப்பார்கள். அரசனுடைய பட்டத்து யானை என்றால் எல்லா இலக் கணங்களும் பொருந்தியதாக இருக்க வேண்டும்; சிறிதளவு கூடக் குற்றம் இல்லாமல் இருக்கவேண்டும். சேரமானுடைய யானை குற்றமொன்றும் இல்லாதது பழி தீர் யானை. அதன் கழுத்தைப் பொன்னாடையால் புனைந்திருக்கிறார்கள். பொன்னால் தவிசிட்டிருக்கிறார் கள். பொன்னாலே அணி செய்த யானையின் கழுத்தின் மேல் சேரலாதன் அமர்ந்து பவனி வருகிறான். அப் போது அவனைப் பார்ப்பவர்களுக்கு அவனுடைய செல்வ மிகுதி நன்றாக விளங்கும். யாவரும் அந்தச் செல்வத்தைப் போற்றிப் புகழ்கிறார்கள். பலர் புகழ் செல்வம் அது. சேரமானுடைய ஊர்வலத்தில் அவனு டைய செல்வ நிலையைக் கண்டு குமட்டூர்க் கண்ண னாரும் அவரைப் போன்ற புலவர்களும் களித்தனர். அந்தக் காட்சி அவர்கள் கண்ணுக்கு இனிமையாக இருந்தது. இனிதாகப் பார்த்தார்கள். ’’சேரலாதனே யானையின் மேல் அமர்ந்த கோலத்தில் உன் செல்வத்தை இனிதாகக் கண்டோம்" என்று புலவர் பாடுகிறார். மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும் வலன் உயர் மருப்பிற் பழிதீர் யானைப் பொலன் அணி எருத்தம் மேல் கொண்டு பொலிந்தநின் பலர்புகழ் செல்வம் இனி துகண் டிகுமே.         20 மார்பிலே நிறைந்து தொங்கிய புதிய தார். நெற்றி யிலே பட்டம், இவற்றோடு விளங்குகின்ற, வெற்றியினால் உயர்ந்த கொம்பையுடைய , குற்றங்கள் நீங்கிய யானையின், பொன்னால் அலங்கரிக்கப் பெற்ற கழுத்தின் மேலே அமர்ந்து விளங்கிய நின்னுடைய , பலரும் புகழும் செல்வச் சிறப்பை, இனிதாக யாம் கண்டோம். பைந்தார் : இங்கே பசுமை , புதுமையைக் குறித்தது. ஓடை - நெற்றிப் பட்டம். வலன் - வெற்றி. பழி - குற்றம். பொலன் அணி - பொன்னாலே புனைந்த; பொன் என்ற சொல்லே பொலன் என்று ஆயிற்று. எருத்தம் – கழுத்து. பொலிந்த - விளங்கிய . கண்டிகும் - கண்டோம். மற்றப் புலவர்களும் ஊர்வலத்தைக் கண்டு களித்தமையால் கண் டோம் என்று பன்மையாற் சொன்னார் . ] இமயமும் குமரியும் கடம்பர்களை வென்ற சிறப்பையும் களிறூர்ந்த சிறப்பையும் பாராட்டிய புலவர் சேரலாதன் பெற்ற வெற்றிகளில் தலைமை பெற்றதை இனிச் சொல்ல வருகிறார். இமயத்தளவும் சென்று, இடையிலே எதிரிட்ட மன்னர்களை வென்ற பெருமையினால் தான் நெடுஞ்சேரலாதன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆனான். அந்த வெற்றியைச் சொல்லாமல் இருக்க லாமா? அதைச் சொல்லாவிட்டால் சேரலாதனுடைய வெற்றிப் புகழ் முற்றுப் பெறாது. ஆதலின் இந்தப் பாட்டை நிறைவுறுத்த வந்த புலவர் , சேர மன்ன னுடைய வெற்றிகளில் சிகரமாக நிற்கும் அதனைப் பாட்டுக்குச் சிகரமாக வைத்து முடிக்கிறார். சேரமானுடைய வீரத்துக்கு இமயமும் குமரியுமே எல்லைகள். வடக்கே ஓங்கி உயர்ந்த இமயத்தில் அவன் புலியைப் பொறித்து வந்தவன். இமயத்துக்கு அவனோடு சென்று வந்த வீரர்கள் அந்த அரிய செயலைப் பற்றிச் சொல்வதைப் பலவர் கேட்டிருக்கிறார். இமயக் காட்சியை அவர்கள் விரித்துக் கூறக் கேட்டவர் கண்ணனார். அச் செய்திகள் இப்போது நினைவுக்கு வருகின்றன. இமயத்தின் புகழ் மிகப் பெரிது. உலகத்தில் உள்ள மலைகளிலெல்லாம் பெரியது அது; சிவபெருமா னுக்குரிய கைலாயத்தைத் தன்பாலுடையது. அதன் பெருமையைப் பல நாட்டுப் புலவர்களும் பல மொழிப் புலவர்களும் பாடியிருக்கிறார்கள். அதன் இசை மிகப் பெரிது; பேரிசை இமயம் அது. அங்கே உள்ள மரம், விலங்கு, மக்கள் இவர்களைப் பற்றி அந்த வீரர்கள் சொன்னவை நினைவுக்கு வருகின்றன. மலைச் சாரல்களில் முள்ளு முருங்கை மரங்கள் அடர்ந்திருக்கின்றன. அவற்றினிடையே கவரிமான் கள் உறங்குகின்றன. அந்த உறக்கத்தில் அவை கனவு காண்கின்றன. நல்ல புல்லை உண்டு, அருவி நீரை உண்பதில் அவற்றிற்கு விருப்பம் அதிகம். விருப்பமான பொருள்களைக் கனவிலே காண்பது இயற்கை. ஆகையால் கவரி மான்கள் பரந்து விளங் கும் அருவியையும் நரந்தப் புல் படர்ந்த வெளியையும் கனவிலே காண்கின்றன. முனிவர்கள் இமயமலைப் பகுதியிலே வாழ்கிறார் கள். கவரிமான் அவர்களின் அன்பினாலே வளர்பவை. இமயத்தை வடக்கு எல்லையாகக் கொண்டு. தெற்கே உள்ள கன்னியாகுமரியைத் தெற்கெல்லையாக உடையது பாரத நாடு. ’’தென்குமரி வடபெருங்கல்" என்று இந்த நாட்டின் எல்லையைப் பிற புலவர்களும் சொல்வார்கள். இமய முதல் குமரி வரையில் பரந்த பாரத நாட்டில் வாழும் மனிதர்கள் உள்ளப் பண்பால் ஒத்த வர்கள். உடையும், உணவும், உரையும் வேறு வேறாக இருந்தாலும் உள்ளப் பண்பு ஒன்றுதான். சால்பு, சான்றாண்மை, பண்பாடு (culture) என்று சொல்லும் இயல்பு பாரத நாடு முழுவதுக்கும் ஒன்றுதான். தமிழ் நாட்டு மன்னர்கள் பாரத நாடு முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆளுவதையே தங்கள் லட்சியத்தின் முடிவாக எண்ணினர். அதற்கு அப்பால் சென்று நாடு பிடிக்கும் ஆசை அவர்களுக்கு இல்லை. நெடுஞ்சேரலாதனும் பாரத நாடு முழுவதும் தன் ஆணையில் நிற்க விரும்பினான். முனிவர் வாழும் இமயம் முதல் தென்னங் குமரி வரையில் பரந்து கிடக் கும் பாரத நாட்டில் இடையிலே உள்ள மன்னர்களில் தன் ஆணைக்கு அடங்காமல் மிஞ்சி எதிர்த்தவர் களை யெல்லாம் அவன் அடக்கினான். அவர்களுடைய வீரம் முழுவதும் ஒழிய, எதிர் நின்று போரிட்டு வென்றான். அதனால் அவன் வெற்றிப் புகழ் இமயத் தையும் குமரியையும் எல்லையாகக் கொண்டு நிரம்பியது. இந்தத் திக்விஜயத்தைப் புலவர் பாடிப் பாட்டை நிறைவு செய்தார். கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் தென்னங் குமரியொடு ஆயிடை மன்மீக் கூறு நர் மறம் தபக் கடந்தே .         25 [முள்ளு முருங்கைமரம் நெருங்கிய மலைப் பக்கத்தில் துயிலும் கவரிமான், பரவி விளங்கும் அருவியோடு நரந்தப் புல்லைக் கனவிலே காணும், முனிவர் நெருங்கி வாழ்வதும் பெரும் புகழை உடையதுமாகிய இமயம், தென்றிசையிலே யுள்ள அழகிய கன்னியாகுமரி, - அவற்றினிடையே உள்ள மன்னர்களில் தன் சொல்லுக்கு மேற்பட்டுக் கூறிய பகை மன்னர்களின் வீரம் கெடும்படி எதிர் நின்று போரிட்டு வென்று. கடந்து. யானை மேல் கொண்டு பொலிந்த என்று முன்னே உள்ளவற்றோடு இணைத்துப் பொருள் செய்ய வேண்டும். கவிர் - முள்ளு முருங்கை. இங்கே அந்த மரத்தின் இனமாகிய பலாச மரத்தைச் சொன்னதாகக் கொள்வது பொருத்தமாக இருக்கும். பலாசம் என்பது புரசமரம் என்று வழங்குகிறது. ததை - செறிந்த. சிலம்பு - மலைப் பக்கம். கவரி - கவரிமான். நரந்தம் - நரந்தப் புல். இது கவரி மானுக்கு விருப்பமான உணவு. “நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி” (132) என்று புறநானூற்றில் வருகிறது. கனவும் - கனவு காணும். ஆரியர் - முனிவர் . துவன்றிய - நெருங்கி வாழும். இசை - புகழ். ஆயிடை - அவற்றின் இடையிலே . மன் - மன்னர்களில் . மீக்கூறுநர் - தன் சொல்லுக்கு மேலே மிடுக் குப்படப் பேசுவோர் . மறம் - வீரம். தப - கெடும்படி. கடந்து - வஞ்சியாது எதிர் நின்று கொன்று.] இமயமலையின் மேல் பல முனிவர்கள் ஆசிரமம் அமைத்துக்கொண்டு தவம் புரிந்து வருவதை வேறு புலவர்களும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய ஆசிரமங்களுக்கு அருகே பல வகை மான்கள் அச்ச மின்றித் துயிலும் காட்சியை அவர்கள் காட்டுகிறார்கள், ‘கவிர்ததை சிலம்பில் துஞ்சும் என்றது, ஆண்டு உறையும் ஆரியர் ஆணையானே, முருக் கென்னும் முள்ளுடை மரமும்’‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா’’ என்று சிறப்பிக்கப் பட்ட தன் மயிர்க்கும் வருத்தம் செய்யாமையால், அக் கவிர் செறிந்த சிலம்பின் கண்ணே இனிதாக உறங்கும்’ என்று எழுதுவர் பழைய உரையாசிரியர். குமட்டூர்க் கண்ணனார் பாட்டைத் தொடங்கும் போதே முருகனுடைய வீரச் செயலை நினைத்துப் பிறகே சேரனை நினைக்கிறார். தாம் பாடிய பத்துப் பாட்டுக்குத் தனியே கடவுள் வணக்கம் பாடாவிட் டாலும், எடுத்தவுடன் ஆறு அடிகளால் ஆறுமுகப் பெருமானுடைய வீரச் சிறப்பைப் பாடினார். அப்பால் சேரலாதனுக்கு அப் பெருமானை ஒப் பாக்கி அவன் கடம்பறுத்ததையும், யானையின் மேல் உலா வந்ததையும், இமயமளவும் தன் வெற்றிச் சிறப் பைப் பரப்பியதையும் பாடினார். பாட்டு முழுவதும் வருமாறு: வரைமருள் புணரி வான் பிசிர் உடைய வளிபாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ்சூல் நளி இரும் பரப்பின் மாக்கடல் முன்னி அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்         5 கடுஞ்சின விறல் வேள் களிறு ஊர்ந் தாங்குச் செவ்வாய் ஏஃகம் விலங்குநர் அறுப்ப அருநிறம் திறந்த புண் உமிழ் குருதியின் மணி நிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து மனாலக் கலவை போல அரண் கொன்று         10 முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை பலர்மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்று எறி முழங்குபனை செய்த வெல்போர் நார்அரி நறவின் ஆர மார்பிற்         15 போர் அடு தானைச் சேர லாத மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும் வலன் உயர் மருப்பிற் பழிதீர் யானைப் பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின் பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே,         20 கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் தென்னங் குமரியொடு ஆயிடை மன்மீக் கூறு நர் மறந்தயக் கடந்தே.         25 [சேரலாத, வேள் களிறு ஊர்ந்தாங்கு, மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்து, யானை எருத்தம் மேல் கொண்டு பொலிந்த நின் செல்வம் கண்டிகும் என்று இணைத்துப் பொருள் கொள்ள வேண்டும். "சேரனுக்கு முருகக் கடவுளை உவமை கூற வந்த புலவர், கடலிற் சென்று கடிமரம் தடிதலும் களிறூர்தலும் ஆகிய பொதுத் தொழில்களை இருவர்க்கும் சார்த்தி உரைத்தனர்’ என்று ஐயரவர்கள் எழுதியிருக்கிறார்கள். . பதிற்றுப்பத்தில் உள்ள ஒவ்வொரு பாட்டுக்கும் உரிய துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றைத் தனியே பாட்டிற்குப் பின் குறித்திருக்கிறார்கள். இந்தப் பாட்டுக்கு உரியன வருமாறு: துறை – செந்துறைப் பாடாண் பாட்டு.         வண்ணம் - ஒழுகு வண்ணம். தூக்கு - செந்தூக்கு.         பெயர் - புண் உமிழ் குருதி. துறை: இது புறப்பொருளைச் சொல்லும் பாட்டு; ஆதலின் புறப் பொருளுக்குரிய திணையும் துறையும் அமைந்தது. ஒருவரைப் புகழ்வதைப் பாடாண் திணை என்று புலவர் கூறுவர். இந்தப் பாட்டு, பாடாண் திணையைச் சார்ந்தது. அதில் செந்துறை யென்பது மக்களைப் பாடுவது. ‘செந்துறையாவது விகார வகை யான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது, உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல்.’ (தொல்காப்பியம், புறத்திணை இயல், 27, நச்சினார்க்கினியர் உரை.) சேரமானுடைய வெற்றிப் புகழை நடந்தபடியே பாடியமையால் இது செந்துறை யாயிற்று. வண்ணம் : எழுத்துக்களின் அமைதியாலும் சொற் களின் இணைப்பாலும் அமையும் ஓசை வகைக்கு வண்ணம் என்று பெயர். பிற் காலத்தில் சந்தம் என்று சொல்வார்கள். இசைப் பாடல்களில் மெட்டு என்று சொல்லும் உறுப்பைப் போன்றது இது. பல வகை உறுப்புக்களை யுடைய பாட்டுக்கள் சில உண்டு. கலிப்பா முதலியன அவை. அவற்றைச் சொல்லும் போது நடு நடுவிலே நிறுத்தி மெட்டை மாற்ற வேண்டும். ஆசிரியப் பாவாகிய இதில் அப்படி மாற்ற வேண்டிய அவசியமே இன்றித் தொடர்ந்து படித்துக் கொண்டு செல்லும்படி அமைந்தமையால், இது ஒழுகு வண்ணம் ஆயிற்று. அற்று அற்றுச் செல்லாமல் ஒழுகிய ஓசையாற் செல்வது இது. (தொல்காப்பியம், செய்யுள் இயல், 226.) தூக்கு : பாட்டுக்குத் தாளம் உண்டு. தூக்கு என்றது தாளத்தை. ஆசிரியப்பாவில் வேறு அடிகள் விரவாமல் ஆசிரிய அடிகளே வந்தால் அதில் அமையும் தூக்கு, செந்தூக்கு. இப் பாட்டு, செந்தூக்கைப் பெற்றது. பெயர் : ஒவ்வொரு பாட்டிலும் சிறப்புடையதாகக் கருதிய ஒரு தொடரை அந்தப் பாட்டின் பெயராக அமைத்திருக்கிறார்கள். இந்தப் பாட்டின் எட்டாவது அடியில் வரும் ‘புண் உமிழ் குருதி’ என்ற தொடரையே இதன் பெயராக வைத்துள்ளார்கள். அதற்குரிய காரணத்தை, அருநிறந் திறந்த என முன்வந்த அடைச் சிறப்பானும், மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து மனாலக் கலவை போல எனப் பின் வந்த அடைச்சிறப்பானும் இதற்குப் புண்ணுமிழ் குருதி என்று பெயராயிற்று’ என்று பழைய உரையாசிரியர் குறிப்பிடுகிறார். இந்தப் பாட்டைப் படிக்கும் போது, கழியில் குருதி வெள்ளம் சென்று கலந்து அதில் உள்ள நீரின் நிறத்தை மாற்றிச் செக்கச் செவேலென்று குங்குமக் குழம்பு கரைத்தாற்போன்ற தோற்றத்தோடு விளங்கும்படி செய்யும் காட்சி அகக் கண்ணில் தோன்று கிறது. ஆதலின் இதற்கு அந்தத் தொடரையே வைத்தார்கள் போலும்! இது பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தின் முதற் பாட்டு; நூலில் 21-ஆம் பாட்டு. ’இதனாற் சொல்லியது, அவன் வெற்றிச் செல்வச் சிறப்பு என்பது பழைய ஆசிரியர் கூறும் கருத்து. இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுக்குப் பின் அவனுடைய தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பவன் சேர நாட்டில் செங்கோல் ஓச்சி வந்தான். அவன் போர் பல செய்து வென்றாலும் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்ற விருப்பம் உடை யவன். அரசச் செல்வத்தால் பிறருக்கு நன்மை உண்டாகும் படி செய்பவன். உலகம் நிலையாதது என்றும் இறைவனுடைய அருளைப் பெறுவதே மக்கட் பிறப்பின் பயன் என்றும் உணர்ந்தவன். அவன் காலத்தில் நாட்டில் அமைதி பரவியது. புலவர்கள் அவனைப் பாடிப் பாராட்டினர். கௌதமனார் என்ற புலவர் அவனைப் பத்துப் பாடல்களால் புகழ்ந்தார். பதிற்றுப் பத்தில் மூன்றாம் பத்தாக அவை அமைந்துள்ளன. கௌதமனார் அகப் பொருளில் பாலைத் திணையைப் பாடுவதில் வல்லவர். அதனால் பாலைக் கௌதமனார் என்று அவரைச் சிறப்பித்துச் சொல்வார்கள். போர் வீரர்களுக்கு எப்போதும் போர் இருந்து கொண்டே இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். போர் என்ற சொல்லைக் கேட்டாலே அவர்களுடைய தோள் பூரிக்கும். அவர்களுக்கெல்லாம் நாட்டை ஆளும் ஆட்சியிலே பொறுப்பான வேலைகளைக் கொடுத்து, போரில் வெளியாகும் அவர்களுடைய ஆற்றலை நாட் டைக் காக்கும் திறத்தில் பயன்படச் செய்தான். பகைவரை அழிக்கும் செயலில் முன் நிற்கும் அவர்களை நாட்டின் வளப்பத்தை மிகுதியாக்கும் செயலில் ஈடுபடுத் தினான். எங்கும் திருமகள் விலாசம் நிறைந்திருந்தது. பேராறு என்ற ஆற்றில் நீர்வளம் மலிந்திருந்தது. இவற்றை யெல்லாம் கௌதமனார் பாடுகிறார். சேர நாடு விரிந்தது. அது செல்வம் நிரம்பி விளங்குகிறது. அதற்குக் காரணம் சேர மன்ன னுடைய அரசாட்சி. அவனுடைய படையில் பல வீரர்கள் இருந்தார்கள். போரில் பகை மன்னரை வெல்லும் ஆற்றலுடையவர்கள் அவர்கள் ; பெரிய வெற்றியை உடையவர்களாக இருந்த மன்னர்கள் முன்பெல்லாம் சேரனுக்குப் பகைவராக வந்து எதிர்த் தார்களானால் அவர்களைப் புறங்காணும் திறலினர். படையில் சிறப்பான பகுதி யானைப்படை. பகைவ ருடைய படையில் பசிய கண்ணையுடைய யானைகள் எவ்வளவு இருந்தாலும் அவற்றின் வரிசையை, ஒரே கூட்டமாக நிற்கும் அணியை, வேலாற் பொருது அழிக்கும் பெருந்திறலை உடையவர்கள் சேரனுடைய மறவர்கள் ; தம்முடைய வலிமையை யெல்லாம் செலுத்தி வேலை எறிந்து வெற்றி கொள்பவர்கள். யானையை எறிந்து கொல்லும் வீரமே சிறந்த வீரம். "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’’ என்று ஒரு தாய் சொல்வதாக ஒரு பாடல் உண்டு. இந்த மறவர், பெருவிரலையுடைய பகைவரது பைங்கண் யானை ஒன்றி நிற்கும் நிரை (வரிசை) அழியும்படியாகத் தம் உரத்தைப் புலப்படுத்தி வேலால் எறியும் வீரம் உடையவர். அப்படி யானையை வேலால் எறியவே, யானை மேலிருந்து பெருகும் இரத்தம் அவர் காலிலே பட்டுக் கறையாக நிற்கும். இரத்தக் கறையையுடைய அடிக்கு மேலே காலில் வீரக்கழலை அணிந்திருக்கி றார்கள். அவர்கள் மிக்க கடுமையானவர்கள் ; பெரிய வீரர்கள்; கடுமா மறவர். அவர்களுடைய தோள் வலியை அளவிட முடியுமா? அம்புகளைத் தொடுத்து விட்டால் அவை மிக்க வேகமாகச் சென்று குறியைத் தாக்கும். இப்போது அந்த வீரர்கள் வில்லையும் அம்பையும் தொடுவதில்லை. வேகமாகச் செல்லும்படி அம்பு தொடுத்தலை அடியோடு மறந்து விட்டார்கள். போர் இருந்தால் தானே அம்பு தொடுக்க வேண்டும்? சேர மன்னனுடைய செங்கோல் ஆட்சியில் போரே இல்லை. அந்த மறவர்கள் முன்பு வெளிப்படுத்திய வீரம் மற்ற மன்னர்களுடைய நினைவில் இருப்பதனால் அவர்கள் சேர அரசனோடு போர் செய்ய இப்போதும் அஞ்சி னார்கள். மறவர் வில் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும், அவர்கள் சேர நாட்டில் இருக்கிறார்கள் என்ற நினைவு ஒன்றே பகைவர்களுக்கு அச்சத்தைத் தந்தது. அவர் களும் போர் செய்தலை மறந்து, சேரனுக்குத் திறை யளக்கும் மன்னர்களாகி வாழ்ந்தனர். போர் இல்லாதது மாத்திரமா? மறவர்களைப் போருக்கு மாத்திரம் பயன் படுத்திக்கொண்டு மற்றக் காலங்களில் அவர்களுடைய தோள் தினவு எடுக்கும்படி சும்மா இருக்கச் செய்வதனால் பயன் இல்லை என்று எண்ணினான் சேரன். அவர்களுக்கு வேறு வேலை கொடுத்தான். போர் இல்லாமையாலும் வேறு செயல் களில் ஈடுபட்டதனாலும் அவர்கள் அம்பு தொடுத்தலை மறந்து போனார்கள். அப்படிச் சேரமான் கொடுத்த வேலை என்ன? சேர அரசு முழுவதையும் காக்கும் உரிமையும் கடமையும் கொண்ட சேரமான் அந்தக் கடுமா மறவருக்கும் நாடு காவலாகிய தொழிலை அளித் தான். அங்கங்கே மறவர் தலைவரை அதிகாரியாக நிறுவி நாட்டைக் காக்கச் செய்தான். அவர்கள் பெரு மிதத்தோடு அந்த வேலையைச் செய்து வந்தார்கள். அந்த வேலை அவர்களுக்கு உகந்ததாக இருந்தது. இல்லையானால் அவர்கள் கடமைக்காக வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் உள்ளத்துக்குள் எப்போதும் வில் லும் அம்புமே குடிகொண்டிருக்கும். இப்பொழுதோ அவர்கள் மேற்கொண்ட வேலை அவர்களுக்கே மகிழ்ச்சியை அளித்ததனால் அவர்கள் அம்பை விடு வதையே மறந்துபோனார்கள். அவர்கள் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட நாடுகளில் யாதொரு குறையும் வராமல் காவல் புரிந்து வந்தார்கள். உடம் பின் ஒவ்வோருறுப்பும் வளம் பெற்றால் உடம்பு முழு வதும் வளம் பெறுவது போல, நாட்டின் பகுதிகளைக் கடுமா மறவர் காவல் செய்ததனால் நாடு முழுவதும் வளப்பமான வாழ்வைப் பெற்றது. சேரமானும் நாட்டின் நன்மைக்கு உரியவற்றை ஆராய்ந்து செய்து வந்தான். மனிதர்களுடைய நல் வாழ்வுக்கு இன்றியமையாதது உணவு. சேரனுடைய ஆட்சியில் வயல்கள் நன்றாக விளைந்தன. விளைவ முட்டுறவே இல்லை. ’சேர நாடு மக்கள் இன்ப வாழ்வு நடத்தும் இடம் ; துன்பம் என்பதே இல்லாத உறையுள் என்ற புகழ் எங்கும் பரவியது. பகையாலும் பசியாலும் பிணியாலும் துன்பம் அடையாமல் மக்கள் மேன் மேலும் வளம் பெற்று வாழ்ந்தார்கள். அவ்வாறு சேரமான் நாடுகாவலாகிய தன் தொழிலை ஆற்றினான். பகைவர் செய்யும் கொடுமை அந்த நாட்டில் இல்லை. அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கி அலறும் ஒலக் குரல் இல்லை. வெம்மையால் விளைந்த ஆரவாரம் இல்லை. ஆனால் வேறு ஒரு வகையான பூசல் (ஆர வாரம்) உண்டு. இந்த ஆரவாரம், பகைவர் வந்தால் அவரைக் கண்டு செய்யும் முழக்கத்தைப் போல ஒரு கால் தோற்றலாம். ஆனால் அந்த முழக்கம் அச்சத் தால் எழுவது; இந்த ஆரவாரம் மகிழ்ச்சியால் எழுவது. சேர நாட்டுக்கு வளப்பம் தரும் ஆறுகளில் பேராறு தலைமையானது. அந்த நாட்டில் உள்ள ஆறு களில் அதுவே பெரிதாதலின் அதற்குப் பேராறு என்ற பெயர் வந்தது. அது எப்போதும் நீர் அருமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு ; ஜீவ நதி. கதிரவன் வெப்பம் அதிகமாகிக் கோடை நீண்டால் மலைகளின் வளப்பம் குறையும்; பசுமை குறையும். பச்சைப் பசே லென்று இருந்த அழகிய தோற்றம் மாறிப் பொலி வழிந்து வெறிச்சென்று இருக்கும்; புல்லென்றிருக்கும். நல்ல காலத்தில் அருவிகள் தத்திக் குதித்து நிலப் பரப்பை அடைந்து ஓடும். ஆனால் கோடை நீடிய காலத்தில் அவை வற்றிப் போய்விடும். மலைகளில் அருவிகளே இரா. அப்படி ஒரு பஞ்சகாலம் வந்தாலும் சேர நாட்டுக்குக் கவலை இல்லை. வறட்சி மிக்க அந்தக் காலத்திலும் பேராறு வற்றாமல் வளம் பெருக்கும். அதுவும் மலையிலிருந்து வருவதுதான். புனல் மிகுதி யாகப் பெற்றுத் தரையிலே இறங்கியவுடன் அதைக் கரையிட்டு அணைத்து நாட்டினர் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். கரைகளினூடே இறங்கி ஓடும் பேராறு அகன்ற இடத்தை உடையது. தரையில் வந்தவுடன், உரிய பருவம் வந்தவுடன் விளையாட்டை யெல்லாம் விட்டு விட்டு இல்லறம் செய்யப் புகும் மங்கை போல , மலையிலே துள்ளிக் குதித்து வந்த ஆறு கரைக்குள் அடங்கி நாட்டிற்கு வளம் உண்டாக்கு கிறது. மண் வளத்தால் சிறப்புப் பெற்ற அகன்ற வயல்களிலே பாய்கிறது. அப்படிப் பாய்வதனால் இயல் பாகவே நில வளம் பெற்ற அவ் வயல்கள் நீர் வளமும் பெற்று மேலும் மேலும் நல்ல விளைச்சலை உதவு கின்றன. விளைவின்றி வெடித்துக் கிடந்த கரம்பை நில மெல்லாம் வளம் பெறுகின்றன. வெடித்த பிளப்புகளில் நீர் பாய்ந்து நிறைகிறது. பேராற்றில் புதிய வெள்ளம் வருகிறது. சீருடைய வியன்புலங்களிலே பாய்ந்து அவற்றின் வளப்பத்தை மிகுதியாக்கும் பொருட்டு வருகிறது. போர் செய்யப் புகுவார் தழைகளைச் சூடி வேகமாக ஆரவாரத்தோடு கண் சிவப்பேற வருவது போலப் புது வெள்ளம் வருகிறது. தழைகளும் பூங் கொத்துக்களும் அதன் மேல் மிதக்கின்றன. புது வெள்ள நீர் செங்கலங்கலாக இருக்கும் அல்லவா? அது கண் சிவந்த படை வீரரை நினைப்பூட்டுகிறது. அது வரும்போது ஓசை உண்டாகிறது. அதைக் கண்ட உழவரும் புது நீரில் விளையாட எண்ணிய மக்களும் பறை கொட்டியும் வாயால் கூவியும் ஆரவாரம் செய்கிறார்கள். எல்லாம் சேர்ந்து பெரிய பூசலாகக் கேட்கின்றன. அந்தப் பூசலல் லாமல் வேறு பூசலை அகன்ற இடத்தையுடைய சேர நாட்டிலே காண முடியாது. சேரனைப் பார்த்து, ‘’நீ அரசு காவல் தொழிலைத் தக்கபடி செய்வதனாலே , உன் நாட்டில் பேராற்றுப் புது வெள்ளத்தின் பூசல் அல்லாமல் வேறு பூசல் இல்லை; கொடுமை இல்லை. நின் நாடு செல்வச் சிறப்பை உடையது’’ என்று பாடுகிறார் பாலைக் கௌதமனார் . திருஉடைத் தம்ம பெருவிறற் பகைவர் பைங்கண் யானைப் புணர்நிரை துமிய உரம் துரந்து எறிந்த கறை அடிக் கழற்காற் கடுமா மறவர் கதழ் தொடை மறப்ப இளை இனிது தந்து, விளைவுமுட் டுறாது         5 புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின் விடு நிலக் கரம்பை விடர் அளை நிறையக் கோடை நீடக் குன்றம் புல்லென அருவி அற்ற பெருவறற் காலையும் நிவந்து கரை இழிதரும் நனந்தலைப் பேரியாற்றுச்         10 சீருடை வியன்புலம் வாய்பரந்து மிக இயர் உவலை சூடி உருத்துவரு மலிர்நிறைச் செந்நீர்ப் பூசல் அல்லது வெம்மை அரிது நின் அகன்றலை நாடே. [ செல்வச் சிறப்பை உடையது : முன்பு பெரிய வெற்றியை உடைய பகைவர்களின் பசிய கண்ணையுடைய யானைகளது கூடிய அணிவகுப்பு அழிந்து ஒழியும்படியாகத் தம்முடைய வலிமையைச் செலுத்தி வேலால் எறிந்த, இரத்தக் கறையை உடைய அடிகளையும் வீரக் கழலை அணிந்த காலையும் உடைய , கோபம் மிக்க பெரிய வீரர்கள், வேகமாக அம்பு தொடுப்பதை மறந்துவிடும்படி அவர்களுக்கு நாடு காவலை இனிதாக வழங்கி, வயல்களில் நெல் முதலிய வற்றின் விளைவு தடைப்படாமல், வருத்தமில்லாத மக்கள் வாழும் இடங்களில் நீ காவல் தொழிலைச் செய்வதனால், கோடைக்காலம் நீடித்து நிற்க அதனால் குன்றுகள் பொலி வழிய அருவிகள் இல்லையான பெரிய பஞ்ச காலத்திலும், நீர் மிக்குக் கரையினிடையே வந்து இறங்கும் பரந்த இடத்தை யுடைய பேராற்றில், விளைவின்றி விடப்பட்ட கரம்பை நிலங் களில் வெடிப்பும் பள்ளமும் நிறைய மண் வளத்தால் சிறப்புடைய அகன்ற வயல்களினிடத்தே பாய்ந்து அவற்றின் விளைவை மிகுதிப்படுத்தும் பொருட்டுத் தழைகளை ’மேலிட்டுக் கொண்டு தோற்றத்தை உடையதாகி வரும் வெள்ளத்தின் செந்நிறம் பெற்ற நீரின் ஆரவாரத்தையன்றி, பகைவரால் உண்டாகும் கொடுமை இல்லாதது, நின் அகன்ற இடத்தையுடைய நாடு. ‘நீ தொழில் ஆற்றலின் , நின் அகன்றலை நாடு வெம்மை அரிது; திருவுடைத்தம்ம!’ என்று முடிவு செய்யவேண்டும். திரு - வளப்பம், செல்வம், திருமகள் விலாசம். அம்மா வியப்பைக் குறிக்கும் இடைச் சொல். விறல் - வெற்றி. பைங் கண் - பசுமையான கண்; இங்கே பசுமை சிறுமையைக் குறித்தது; சிறிய குழந்தையைப் பச்சைக் குழந்தை என்று சொல்வது போன்றது. புணர்தல் - கூடுதல். நிரை - வரிசை துமிய - வெட்டுண்டு அழிய. உரம் துரந்து - தம் முழு வலிமை யையும் செலுத்தி. கறை - இரத்தக் கறை. மறவர் - வீரம். கதழ் - விரையும். தொடை - தொடுத்தல்; இங்கே அம்பைத் தொடுத்தல். இளை - காவல் . முட்டு - தடை. புலம்பா - புலம் புதல் இல்லாத; வருந்தாத. உறையுள் - மக்கள் இருப்பிடம். தொழிலென்றது இங்கே நாடு காவல் தொழிலை. விடுநிலம் - பயிர் செய்யாமல் விட்ட நிலம். கரம்பை - தரிசு நிலம். விடர் - பிளப்பு . அளை - பொந்துக்கள். புல்லென - பொலிவழிய. வறன் - வறட்சி; வற்ற்காலை - மழையற்ற பஞ்ச காலம். நிவந்து - நீர் உயர்ந்து. இழிதரும் - இறங்கி வரும். நனந்தலை - அகன்ற இடத்தையுடைய. வியன்புலம் - அகன்ற வயல். வாய் - இடத்தில் . மிகீ இயர் - மிகுதியாகச் செய்யும் பொருட்டு ; மிகுதியென்றது விளைவு மிகுதியை. அளை நிறைய , வாய் பரந்து மிகீஇயர் என்று கூட்ட வேண்டும். உவலை - தழை. உருத்து - தோற்றத்தைப் பெற்று கோபித்து என்று மற்றொரு பொருள் தோற்றியது. மலிர் நிறை - வெள்ளம் . பேர்யாற்றில் மிக இயர் வரும் மலிர்நிறை என்று கூட்டுக. பூசல் - ஆரவாரம். வெம்மை - கொடுமை. அகன்றலை - அகன்ற இடத்தை உடைய .. ] இதற்குரிய துறை முதலியன வருமாறு: துறை - நாடு வாழ்த்து.         வண்ணம் - ஒழுகு வண்ணம். தூக்கு - செந்தூக்கு.         பெயர் - உருத்துவரு மலிர் நிறை. சேரமானுடைய நாடு வெம்மை அரிதென்றும், திருவுடைத் தென்றும் கூறியமையால் இது நாடு வாழ்த்தாயிற்று. ஒழுகு வண்ணம், செந்தூக்கு என்ப வற்றின் இயல்பை முந்திய பாடலின் விளக்கத்திலே காணலாம். புது வெள்ளம் போர் செய்வாரைப் போல வருவ தாக வருணித்து அதை ‘உருத்துவரு மலிர்நிறை’ கன்று சொன்னமையால் அத் தொடரே இந்தப் பாட்டுக்குரிய பெயராயிற்று. ‘இதனாற் சொல்லியது நாடு காத்தற் சிறப்புக் கூறியவா றாயிற்று’ என்று பழைய உரையாசிரியர் இதன் கருத்தை எடுத்துரைத்தார். இது பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தில் எட்டாவது பாட்டு. ------------------------------------------------------------------------ 1. இதன் விரிவை ‘இமயமும் குமரியும்’ என்ற கட்டுரையில் காணலாம்.↩︎ வெற்றி மேல் வெற்றி காப்பியாறு என்ற ஊரிலே பிறந்தவர் காப்பியனார் என்ற புலவர்; வஞ்சிமா நகரத்தில் அரசு செலுத்திய சேர மன்னனைக் கண்டு அவன் வெற்றிச் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் குணச் சிறப்பையும் அறிந்தார். அந்தச் சேர அரசன் முடிசூடியது இயற்கையான முறையில் அன்று. பகைவர் அறியாதபடி முடிசூட்டிக் கொண்டான் போலும்! அதனால் வழிவழி வந்த சேர மன்னருடைய முடி அவனுடைய முடிசூட்டுக் காலத் தில் கிடைக்கவில்லை. தலையில் அணியும் கண்ணியும் கிடைக்கவில்லை. ஆனால் உரிய காலத்தில் முடிசூட வேண்டும் என்ற தீர்மானத்தால் நாரால் ஒரு முடி செய்யச் செய்து அணிந்தான். களங்காயினால் சிறிய மாலை கோக்கச் செய்து அதையே கண்ணியாக அணிந்தான். முடிசூடிய பின் தன் வீரப் பெருமை யாலே பகைவர்களை அழித்து யாவரும் போற்றும் வண்ணம் வஞ்சிமா நகரில் இருந்து ஆட்சி புரிந்தான். மிக்க துணிவோடு குறித்த காலத்தில், நாரால் செய்த முடியையும் களங்காய்க் கண்ணியையும் அணிந்து செங்கோல் ஏற்றமையினால், அவனை யாவரும் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்று வழங்கலாயினர். அவனுடைய இயற் பெயரைச் சொல்பவர்களே இல்லாமற் போயினர். புலவர்களும் இயற் பெயரை மறந்து சிறப்புப் பெயரையே பாவில் அமைத்துப் புகழ்ந்தனர். இன்று அம் மன்னனுடைய இயல்பான பெயர் இன்னதென்று தெரிந்துகொள்ள முடியவில்லை. களங்காய்க் கண்ணி நார்முடிச் சோல் என்ற சிறப்புப் பெயரே நமக்குத் தெரியவருகிறது. காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் புகழ்ந்து பத்துப் பாட்டுக்களைப் பாடினார். அந்தப் பத்துப் பாட்டும் அந்தாதியாக அமைந்திருக்கின்றன. ஒரு பாட்டின் முடிவில் உள்ள தொடரையோ சொல்லையோ அடுத்த பாட்டின் தொடக்கமாக அமைத்துப் புலவர் பாடியிருக்கிறார். இந்தப் பத்துப் பாட்டுக்களும் பதிற்றுப்பத்தின் நான்காவது பத்தாக இருக்கின்றன. அந்தப் பத்தில் உள்ள ஏழாவது பாட்டைச் சற்றுப் பார்ப்போம். சேரன் பகைவர்களை வென்று அவர்களுடைய நாட்டுச் செல்வத்தைக் கவர்ந்து வந்தான். தன்னு டைய வீரத்தைப் புலப்படுத்துவது ஒன்றுதான் அவன் விரும்பிய பயன். ஆதலின் அந்த நாடுகளிலே கிடைத்த செல்வத்தை அவன் தனக்கு என்று வைத் துக் கொள்ளவில்லை. அவற்றைப் புலவருக்கும் பாண ருக்கும் கூத்தருக்கும் வழங்கினான். போரிலே வெற்றி உண்டாவதற்குத் துணையாக நின்ற படை வீரர்களுக்கு வழங்கினான். ஆதலின் அவன் போர் செய்ததனால் துன்பம் அடைந்தவர்கள் பகைவர்கள் மட்டுமே. மற்ற யாவரும் இன்பம் அடைந்தார்கள். அவன் தன் செல்வத்தைப் பிறருக்குப் பயன் படுத்துவதையே விரும்புகிறவன். அவனுடைய வீரமும் ஈகையும் நல்லியல்புகளும் பெரியோர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்தன. அவர்கள் அவனை நீடு வாழ வேண்டுமென்று வாழ்த்தினார்கள். அவன் செல்வம் வளர வேண்டுமென்று வாழ்த்தினார்கள். அவர்களே வாழ்த்தும் போது புலவர்கள் வாழ்த்து வதற்குக் கேட்கவேண்டுமா? ‘நின் செல்வம் வாழ்க! நின் வாழ்வு வாழ்க!’’ என்று புலவர்களும் வாழ்த்தினார்கள். காப்பியாற்றுக் காப்பியனாரும் , ‘’வாழ்க நின் வளனே! வாழ்க நின் வாழ்க்கை !’’ என்று வாழ்த்தினார். அவன் வாழ்வது அவனுக்காக மட்டும் அன்று. அவன் வாழ்ந்தால் உலகம் வாழும். உயர்ந்தோர் வாழ்வார்கள். நல்லிசைச் சான்றோர் வாழ்வார்கள். பாணரும் பொருநரும் கூத்தரும் விறலியரும் வாழ் வார்கள். அவ்வளவு பேரையும் தனித்தனியே வாழ்க என்று வாழ்த்துவதைவிடச் சேரன் வாழ்க என்று வாழ்த்தினால் போதும். அவன் எல்லோருக்கும் இன்ப வாழ்வை அளிப்பான். அவன் புகழை ஏத்தும் பெரியோர்கள், அவடை டைய உள்ளம் குளிரவேண்டு மென்ற எண்ணத்தால் வாழ்த்தவில்லை. அவர்கள் உண்மையையே சொல்ப வர்கள். ஒரு பயன் கருதி ஒன்றைப் பலவாக்கிப் புனைந்து கூறுகிறவர்களும் அல்ல. எப்போதும் வாய்மையையே மொழியும் வாயை உடையவர்கள். வாய் (வாய்மை) மொழி வாயர் சேரன் புகழைச் சொல்லி ஏத்துவதைப் புலவர் காப்பியனார் கேட்டிருக்கிறார். சேர மன்னனால் குடிமக்களில் யாருக்கும் தீங்கு நேராது. ஆனாலும் அவனால் மிகுதியான துன்பத்தை அடைபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பகைவர்கள். அவர்களோடு பொருது அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றுதலும், அவர்கள் நாட்டில் உள்ள பொருள் களைத் தன்னுடையன ஆக்கிக் கொள்ளுதலும் ஆகிய காரியங்களைச் சேரமான் செய்வதனால் பகைவர் களுக்குத் துன்பமல்லாமல் இன்பமா விளையும்? பகைவரிடமிருந்து பெற்ற பொருள்களைத் தனக் கெனப் பாதுகாத்து வைத்துக்கொள்பவன் அல்ல அச் சேரமான். மக்களுக்குத் தங்கள் கலைகளால் மகிழ்ச் சியை உண்டாக்கும் பாணர், பொருநர், விறலியர், கூத்தர் என்பவர்களுக்கு நல்ல அணிகலங்களைக் கணக்கின்றி வழங்குவான்; வாரி வாரி வீசுவான். மகிழ்ச்சியை உண்டாக்கும் நகைவர்களாகிய பாணர் முதலியோர் அவற்றை நிரம்பப் பெற்று இன்புறு வார்கள். கல்வியாலும் கேள்வியாலும் சிறந்தவன் சோ மன்னன். பல நற்குணங்களுக்கு இருப்பிடமானவன். பகைவர்களை மிடுக்குடன் பொருது வெற்றி காண்ப வனானாலும் பெரியோர்களிடத்தில் பணிந்து நடப் பவன். பெருஞ் செல்வம் படைத்தவர்களுக்குப் பணி வென்னும் செல்வம் பின்னும் உயர்வைக் கொடுப்பது. சேர மன்னன் அந்தப் பணிவுச் செல்வத்தை மிகுதி யாகப் பெற்றிருந்தான். அன்றியும், அவனுக்குப் பேராசை இல்லை. உலக இன்பங்களையெல்லாம் நுகர வேண்டும் என்ற ஆவலும் இல்லை. ஓரளவுக்குப் புலனடக்கம் உள்ளவனாகவே விளங்கினான். ஆன்று அவிந்து அடங்கிய சான்றோன் அவன். அவனிடத்தில் தகாத தீய குணம் ஒன்றும் இல்லை. குற்றம் தீர்ந்த தலைவனாக இருந்தான்; செயிர் (குற்றம்) தீர் செம்மல் என்று புலவர் வாழ்த்தும் பெருமையை உடையவன் நார்முடிச் சேரல். நார்முடிச் சோலுக்கு வெற்றிமேல் வெற்றி உண்டாயிற்று. அதற்குக் காரணம் அவன் முதலிலே பெற்ற வெற்றி. அந்த வெற்றி, பிற மன்னரோடு பொருது வென்ற வெற்றி அன்று; தன் நாட்டிலே பெற்ற வெற்றி. நாட்டிலே இருந்த பகையை அழித்து முதலில் வெற்றி கொண்டான். அந்தப் பகையால் குடி மக்கள் நடுங்கினார்கள். ஆம்; வறுமையும் பிணி யும் வந்தால் குடிகள் துளங்குவது இயல்புதானே? தான் முடி சூடியவுடனே நார்முடிச் சேரல் செய்த முதல் வேலை, நாட்டில் வறுமையும் பிணியும் இல்லாமல் ஒழித்ததே. நாட்டை வளம் படுத்தி மக்களுக்குத் தக்க உணவும் உடையும் இருப்பிடமும் போதிய அளவுக்குக் கிடைக்கும்படி செய்தான். அதனால் வறுமை நீங்கியது; பசி இல்லையாயிற்று; பிணியும் ஒழிந்தது. நாட்டில் வாழ்ந்த குடி மக்கள் துளக்கம் நீங்கினர். அதற்கு முன் திருத்தமின்றி இன்னல் அடைந்த அவர்கள் வாழ்வு திருந்திய வாழ்வாயிற்று. மிக முயன்று, துளங்கு குடியைத் திருத்திய செயல் எளிதிலே நடப்பது அன்று. அதன் பொருட்டு அவன் எவ்வளவோ வகையில் ஆராய்ந்து ஆவன செய்தான். வறுமையோடும் பிணியோடும் அவன் பெரும் போர் செய்தான் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அந்தப் போரில் அவன் வெற்றி பெற்றான். நாட்டு மக்கள் வளவாழ்வு உடையவர்களானால் அதைக் காட் டிலும் அரசனுக்குப் பலம் வேறு என்ன வேண்டும்? அவன் படை கூட்ட எண்ணினான். நடுக்கமடைந்து சாம்பிய தங்களை உயர்ந்த வாழ்வு அடையச் செய்த மன்னனுக்காக உயிரையும் கொடுக்க முன் வந்தனர் குடி மக்கள். பின்னாலே சேர மன்னன் செய்த போரில் வெற்றி உண்டாவதற்கு நாட்டு மக்கள் நன்றியறி வுடன் திரள் திரளாகப் படையில் சேர்ந்ததே காரணம். அவர்கள் அப்படிச் சேர்வதற்குச் சேர மன்னன் வறுமையையும் பிணியையும் அடியோடு அழித்துத் துளங்கு குடி திருத்திய வென்றியே காரணம். ஆகவே அந்த முதல் வென்றி பின்னாலே பல வென்றிகளை உண்டாக்கும் வித்தாக இருந்தது. வெற்றியை வென்றி யென்றும் வலம் என்றும் சொல்வர். அந்த முதல் வென்றி பல வலங்களை உண்டாகும்படி செய்த தனால் அதனை வலம்படு வென்றி என்று சொல்வது எவ் வளவு பொருத்தமாக இருக்கும்! இந்த முதல் வெற்றியால் சேர மன்னனது புகழ் வானளவும் உயர்ந்தது. அந்தப் புகழ் உலகம் உள்ள ளவும் நிலை நிற்கும் என்றே தோன்றியது. உலகத் தில் மக்கள் உயிர்த்து வாழும் வரைக்கும் அந்தப் புகழும் உயிரோடு இருக்கும். முதல் வெற்றிக்குப் பின் அந்த வலிமையைக் கொண்டு குடி மக்களின் மூன்றாவது பகையை வெல்லத் தொடங்கினான் சேரன். பசி, பிணி என்னும் அகப்பகைகள் இரண்டை வென்று புறப்பகையாகிய மன்னர்களை வெல்லப் புறப்பட்டான். சேரருக்கு உரியது பனை மாலை. கரிய பெரிய பனந் தோட்டால் அமைந்தது அது. அந்த அடை யாள மாலையை அணிந்து கொண்டான். பெருமையை யுடைய வீரக் கழலைக் காலில் புனைந்து கொண்டான். அங்கங்கே பெரிய உறுதியான மதில்களை உடையவர் களாக வாழ்ந்தனர் பகைவர் . பல காலமாக அந்த மதில்கள் யாதோர் ஊறும் இன்றி நிலைபெற்று நின்றன. அதுகாறும் அழிவின்றி யிருந்த மதில்கள் என்ற எண்ணத்தால் அவற்றை உடைய பகை மன்னர்களுக்குச் செருக்கு அதிகமாயிற்று. நார்முடிச் சேரல் அந்த எயில்களை முற்றுகையிட்டு அழித்தான். மதில்களில் வாழ்ந்த மறவர்களைச் சிறைப் பிடித்துக் கொணர்ந்தான். பல இடங்களில் இவ்வாறு மதில்களை எறிந்து பகை மன்னரையும் அவர் வீரரையும் சிறைப் படுத்தினமையால், எஞ்சி யிருந்தவர்கள் அடங்கிப் போயினர். எவ்வளவு காலமாக மன்னும் எயிலாக இருந்தாலும் இவனிடம் வாலாட்ட முடியாது’ என்று தெளிந்தனர். துளங்குகுடி திருத்திய வெற்றிக்குப் பின் சேரமான் பெற்ற வெற்றிகளால் பகையே இல்லாமல் போயிற்று. பண்டைக் காலந் தொட்டுச் சேர மன்னர் குலம் இருந்து வருகிறது. சேரர்களுடைய ஆட்சி இடையறாது சிறந்து நிற்பதனால் சேர நாட்டில் வாழ்பவர்கள் மன்னர்களின் குடை நிழலில் சிறப் புற்று விளங்கினார்கள். தொன்று தொட்டு நிலையாக வாழும் பழங்குடி மக்களுக்கு நார்முடிச் சோல் நிழலில் வாழும்போது, எல்லா விதமான கொடுமைகளும் அழிந்தன. தன் நிழலிலே வாழ்பவருக்குக் கொடுமை கள் அறும்படியாகப் பகைவரை அழித்துக் குடிமக்களை நல்ல இன்ப வாழ்வில் நிலைபெறச் செய்த உயர்ந்த கொள்கையை உடையவன் சேரமான். அதுவே அவனுடைய இலட்சியம். இந்த இலட்சியத்தினின்றும் அவன் என்றும் மாறுபடுவது இல்லை; கோடுவது இல்லை. இந்த இலட்சியம் அவனுடைய கோடாக் கொள்கை. முன்னே சொன்ன வறுமை, பிணி என்பவற் றைப் போக்கிய வலம்படு வென்றியும், பின்னே சொன்ன கோடாக் கொள்கையும் சாமான்யமானவை அல்ல; மிகப் பெரியவை. அவற்றை மிகுதியாக, மிகப் பெரியனவாக உடையவன் சேரன் ; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியையும், தன் நிழல் வாழ் நர்க்குக் கொடுமை அற வைத்த கோடாக் கொள்கை யையும் நன்று பெரிது உடையவன். இத்தகைய வெந்திறல் வேந்தன் வாழ்ந்தால் அவன் சுற்றம் வாழும் என்று சொல்வது பெருமையா? அவனைச் சார்ந்தோர் வாழ்வார் என்று சொல்வது தான் பெருமையா? அவன் நாட்டிலுள்ளார் வாழ்வார் என்று கூறுவது கூடப் பெருமையாகாது. அவன் வாழ்ந்தால் உலகத்தோரே வாழ்வார்கள். ஆதலின் உலகத்தோர் வாழ்வதற்காகவேனும் அவன் வாழ வேண்டும். இவற்றையெல்லாம் எண்ணிய காப்பியாற்றுக் காப்பியனார், "குற்றந் தீர்ந்த செம்மலே! வெந்திறல் வேந்தே! உலகத்தோர் பொருட்டு நின் வளன் வாழ்க! நின் வாழ் நாள் வாழ்க!’’ என்று பாடுகிறார். வாழ்க நின் வளனே, நின்னுடை வாழ்க்கை! வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்தப் பகைவர் ஆரப் பழங்கண் அருளி நகைவர் ஆர நன்கலம் சிதறி ஆன்று அவிந்து அடங்கிய செயிர்தீர் செம்மால்         5 வான்தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்பத் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் மாயிரும் புடையல் மாக்கழல் புனைந்து மன்எயில் எறிந்து மறவர்த் தரீஇத் தொல் நிலைச் சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்குக்         10 கோடு அற வைத்த கோடாக் கொள்கையும் நன்று பெரிது உடையையால் நீயே; வெந்திறல் வேந்தே! இவ் வுலகத் தோர்க்கே. [நின் செல்வமும் நின்னுடைய வாழ்நாளும் வாழ்வன ஆகுக! உண்மையையே சொல்லும் வாயையுடைய பெரிய வர்கள் நீன்னுடைய புகழைக் கூறிப் பாராட்ட, பகைவர்கள் நிரம்பப் பெறும்படி துன்பத்தைக் கொடுத்து, பிறர் மகிழ்ச்சி அடையும்படி செய்யும் பாணர் முதலிய கலைஞர் நிரம்பப் பெற்று மகிழும்படி நல்ல அணிகலங்களைக் கணக்கின்றி வீசி, நல்ல குணங்களெல்லாம் அமைந்து நல்லோர்களிடம் பணிந்து புலனடக்கம் பெற்ற குற்றம் இல்லாத தலைவனே! வானளவும் உயர்ந்த நல்ல புகழானது உலகம் உள்ளளவும் வாழ, நடுங்கிய குடிமக்களை வள் வாழ்வு பெறும்படி செய்த, மேன்மேலும் பல வெற்றிகளை உண்டாக்கும் வெற்றியையும், கரிய பெரிய பனந்தோட்டாலான மாலையையும் பெரிய வீரக் கழலையும் அணிந்து கொண்டு, பல காலமாக ஊறுபாடின்றி நிலை பெற்ற பகைவர்களுடைய மதில்களைத் தாக்கி அழித்து, அங்கே இருந்த வீரர்களைச் சிறைப் பிடித்துக் கொணர்ந்து, பழங்கால முதற்கொண்டு நிலைபெற்ற சிறப்போடு நின் குடை நிழலில் வாழும் மக்களுக்குப் பகைவரால் நேரும் கொடுமைகள் அறும்படியாக அவர்களை வைத்த மாறுபடாத இலட்சியத்தையும் நீ மிகப் பெரிய அளவிலே உடையவனாக இருக்கிறாய், பகைவருக்கு வெம்மையாக அமைந்த வலிமையை உடைய வேந்தனே ! இவ்வுலகத்தாரின் பொருட்டு. ‘இவ்வுலகத்தோர்க்கு வாழ்க நின் வளனே, நின்னுடை வாழ்க்கை’ என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். வளன் - செல்வம். வாழ்க்கை - இங்கே வாழ்நாள் ; ஆயுள். வாய்மொழி - உண்மையை இயம்புகின்ற. ஆர - நிறையப் பெற. பழங்கண் - துன்பம். நகைவர் - மகிழ்ச்சியைத் தரும் கலைஞர் : நகை - மகிழ்ச்சி. நன்கலம் - நல்ல ஆபர ணங்களை. ஆன்று - அமைந்து. அவிந்து - பணிந்து. செயிர் - குற்றம். செம்மால் - தலைவனே. உலகமொடு உயிர்ப்ப - உலகம் இருக்குமளவும் அதனோடு சேர்ந்து வாழ ஆதாரமாகிய உலகம் அழியப் புகழும் அழியுமாதலின் உலகமொ டுயிர்ப்ப என்றார் என்பது ஐயரவர்கள் உரை. உயிர்ப்ப - வாழ. துளங்கு குடி - வறுமையாலும் பிணி யாலும் நடுங்கிய குடிமக்கள். திருத்திய - குறை நீங்கிய வாழ்வு பெறும்படி செய்த. வலம்படு வென்றி - பல வெற்றி கள் உண்டாவதற்குக் காரணமான வெற்றி; ‘மேன்மேலும் பல போர்வென்றி படுதற்கு அடியாகிய வென்றி யென்ற வாறு என்பது பழைய உரை. மா - பெரிய. இரும் - கரிய. புடையல் - பனை மாலை. மன் - நிலைபெற்ற. எயில் - மதில். எறிந்து - தாக்கி மறவர் - வீரர். தரீஇ - கொணர்ந்து ; சிறைப்படுத்தத் தன் நாட்டுக்குக் கொண்டு வந்து. தொல் நிலைச் சிறப்பு - பழமையான காலமுதல் நிலையாக இருத்த லாகிய சிறப்பையுடைய; ’பதியெழு அறியாப் பழங்குடி’’ என்று பிறரும் கூறுவர். நிழல் - ஆட்சி; குடை நிழல் என்று கூறுவது மரபு. வாழ்நர் - வாழ்பவர். கோடு - கொடுமை. கோடா - மாறுபடாத. கொள்கை - இலட்சியம். நன்று பெரிதும் - மிக அதிகமாக . வெந்திறல் - வெம்மையை யுடைய ஆற்றல் ; பகைவருக்கு வெம்மையாக இருத்தலின் வெந்திறல் என்றார்.] ‘இதனாற் சொல்லியது, அவற்குள்ள குணங்களை யெல்லாம் எடுத்துப் புகழ்ந்து அவன் செல்வத்தையும் அவனையும் வாழ்த்தியவாறாயிற்று’ என்பர் பழைய உரையாசிரியர். இதன் துறை முதலியன வருமாறு: துறை - செந்துறைப் பாடாண் பாட்டு,         வண்ணம் - ஒழுகு வண்ணம். தூக்கு - செந்தூக்கு.         பெயர் - வலம்படு வென்றி. தன் நாட்டுக் குடிமக்களுக்கு நடுக்கத்தை உண் டாக்கிய வறுமை முதலியவற்றைப் பகையாக வைத்து அவற்றை நீக்கிய செயலை முதல் வெற்றியாகக் கூறி, அது பின்வரும் வெற்றி மேல் வெற்றிக்கெல்லாம் அடிப் படை என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் வலம்படு வென்றி என்று சிறப்பித்தார் புலவர். இத் தொடர் ஆழ்ந்த கருத்தை உடையதாக இருத்தலால் இதுவே இப் பாட்டுக்குப் பெயராயிற்று. பனித்துறைப் பரதவன் செங்குட்டுவன் சேரர் குலத்தோன்றல்களில் செங்குட்டுவன் தனிச் சிறப்புடையவன். வடநாட்டுக்குச் சென்று தன்னை எதிர்த்த மன்னர்களை வென்று இமயத்தி லிருந்து கல் கொணர்ந்து பத்தினித் தெய்வமாகிய கண்ணகியின் திருவுருவத்தை அதில் அமைக்கச் செய்து கோயிலெடுத்துப் புகழ் பெற்றவன். நல்லிசைப் புலவர்களுடைய பாராட்டைப் பெற்றவன். சிலப்பதி காரத்தில் உள்ள வஞ்சிக் காண்டம் முழுவதும் அவனு டைய பெருமையை விரிவாகச் சொல்கிறது. மேல் கடலின் நடுவே சில தீவுகளில் சிற்றரசர் சிலர் ஆட்சி புரிந்து வந்தார்கள். அடிக்கடி அவர் களால் சேர நாட்டினருக்குத் துன்பம் உண்டாயிற்று. அவர்களுடைய குறும்பை அடக்கித் தன் ஆணைக்குள் வைக்க வேண்டுமென்று செங்குட்டுவன் எண்ணினான். கடலிடையே இருந்த தீவுகளாதலின் அந்தக் கடலையே இயற்கையான அரணாகக் கொண்டு அச்சமின்றி வாழ்ந் தார்கள் அவர்கள். கடலைத் தாண்டிப் படையுடன் வந்து தம்மை எதிர்ப்பவர் யார் என்ற தைரியம் அவர் களுக்கு. அதனால் அடுத்தடுத்துத் தங்கள் குறும்புத் தனத்தைக் காட்டி வந்தனர். செங்குட்டுவன் கடலிடையே வாழ்ந்த அவர்கள் மிடுக்கை ஒடுக்க உறுதி பூண்டான். பல படைவீரர்கள் ஏறிச் செல்வதற்குரிய கப்பல்களைக் கட்டினான். கடல் எவ்வளவு கொந்தளித்தாலும் கலங்காமற் செல்லும் உறுதியான மரக்கலங்களை இயற்றச் செய்தான். எல்லாவற்றையும் ஆயத்தம் செய்து கொண்டு கடலின் மேற் சென்றான். கடலிடையே வாழ்ந்த பகை மன்னர்களுக்கு வேறு சிறப்பான பலம் இல்லை. கடலே பெரிய பலமாக உதவியது. கடலின் அலைகளையும் ஆழத்தையும் வெல்லும் கடற்படை உடையவர் அவர்களை எளிதில் வென்றுவிடலாம். உண்மையில் அந்த வெற்றி அவர் களை வென்ற வெற்றி ஆகாது; கடலையே வென்ற வெற்றியாக முடியும். கடல் தானே கடப்பதற்கு அரிய தாய் அந்தப் பகைவர்களுக்கு அரணாய் இருந்தது? செங்குட்டுவன் படையுடனும் படைக் கலங் களுடனும் மரக்கலங்களுடனும் சென்று கடலிடையே வாழும் பகைவரொடு பொருதான்; பொருது வென் றான். அங்கிருந்த சிறு மன்னர்களை அழித்தான். அந்த மன்னர்களை அவன் அழித்தது பெருவிறலாகாது. அவர்கள் நிலப் பகுதியில் வாழ்ந்திருந்தால் கண நேரம் அவர்கள் நின்றிருக்க மாட்டார்கள். ஆகவே, அவர்களை வென்ற வெற்றி இது என்று சொல்வது செங்குட்டுவனது போர்த்திறலுக்கு ஏற்புடையது அன்று. ஆனாலும் பல காலமாக மக்களுக்குத் தீங்கு விளைவித்து வந்த பகைவர் கூட்டத்தை மிக்க முயற்சியை மேற்கொண்டு அழிக்க வேண்டி யிருந்தது உண்மைதானே? கடலை வெல்ல வேண்டி யிருந்தது தான் அதற்குக் காரணம். செங்குட்டுவன் கடலை வென்றான். கடலின் ஆழத்தையும் பரப்பையும் அலை யையும் கண்டு அஞ்சாமல் அவை தன் பின்னே செல்ல, கடலில் முன்னேறிப் பகைவரை வென்றான். கடல் அவனுக்குத் தடையாக நிற்கவில்லை. அது புறங்காட்டி ஓடும் பகைவனைப் போலச் செங்குட்டுவனது மரக் கலங்கள் செல்ல வழிவிட்டது. ஆதலின் கடலைப் பிறக்கிடும்படி ஓட்டினவன் என்ற சிறப்பைச் சேரன் பெற்றான். கடலை வென்றது தான் இந்தப் போரின் தனிச் சிறப்பு ஆதலின், இந்தப் போர் முடிந்தவுடன் செங்குட்டுவனைப் புலவர்கள் ‘கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன்’ என்று பாராட்டத் தொடங்கினார்கள். செங்குட்டுவனது ஆணைக்கும் ஆற்றலுக்கும் கடலே பணிந்து புறங்காட்டியதாகப் புகழ்ந்து பாடினார்கள். இத்தகைய புகழையுடைய சேரன் செங்குட்டுவ னிடம் பரணர் வந்தார். சில நாட்கள் தங்கினார். சேர மானுடைய வெற்றிச் சிறப்பைப் பலர் கூறக் கேட்டுக் களித்தார். அவனுடைய ஈகைச் சிறப்பைத் தாமே நேரில் கண்டு களித்தார். மன்னனைப் பாராட்டிப் பத்துப் பாடல்கள் பாடினார். இந்தப் பத்தும் பதிற்றுப் யத்தில் ஐந்தாம் பத்தாக இருக்கின்றன. கெடலரும் பல்புகழ் செங்குட்டுவன் திருவோலக்கத்தில் வீற்றிருந் தான். அவன் புகழ் பாரத நாடு முழுவதும் பரவி யிருந்தது. ஆதலின் பல நாடுகளிலிருந்து அவனைப் பார்க்கும் பொருட்டு மக்கள் வந்திருந்தார்கள். தமிழ் நாட்டில் உள்ள சோழ பாண்டிய மண்டலங்களிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். பழுத்த மரத்தை நாடி வரும் பறவைகளைப் போலப் பல புலவர்கள் வந்தார்கள். யாழிசையால் கல் மனத்தையும் கரைத்து இன்புறுத்தும் பாணர் பலர் வந்திருந்தனர். அழகாலும் ஆடலாலும் பாடலாலும் மகிழ்ச்சியை உண்டாக்கும் விறலியரும் வந்திருந்தனர் . ஆடலும் பாடலும் நிகழ்ந்தன. இன்னிசையிலே மயங்கி நின்ற பிற நாட்டார், ‘’என்ன பாட்டு ! என்ன பாட்டு!’’ என்று வியந்து பாராட்டினர். விறலியருடைய ஆடலைக் கண்டு இன்பக் கடலில் மூழ்கினர். ஆடலும் பாடலும் ஒருவகையாக நிறைவேறின. செங்குட்டுவன் கலைத்திறம் நிரம்பிய பாணருக்கும் விறலியருக்கும் நிறையப் பரிசில்களை வழங்கினான். நன்றாக உருக்கிய பசும் பொன்னாற் செய்த தாமரை மலர்களைப் பாணர்களுக்குச் சூட்டினான். இப்படிச் செய்வது அந்தக் கால வழக்கம். இப்போது பொற் பதக்கம் பெறுவதுபோல அப்போது பாணர் பொற்றா மரைப் பூவைப் பெற்றார்கள். பொன்னும் மணியும் ஆடையுமாகிய பரிசில்களையும் பெற்றார்கள். ஆனால் அவற்றை எப்போதும் வெளிப்படையாக வைத்துக் கொள்ள இயலாது. பொற்றாமரைப் பூவை மாத்திரம் எப்போதும் அணிந்து கொண்டே இருக்கலாம். பார்க் கிறவர்களுக்குப் பாணருடைய இசைத் திறமையையும், வள்ளலின் கொடையையும் நினைவுறுத்தும் அடை யாளமாக அது விளங்கியது. செங்குட்டுவன் பாணர்களுக்கும் விறலியருக்கும் பொன் கொடுத்தான் ; பொருள் கொடுத்தான்; ஆடை கொடுத்தான் ; யானை கொடுத்தான். அவற்றோடு நில்லாமல் பாணருக்குப் பைம்பொன்னால் ஆன தாமரையைச் சூட்டினான். ஆடலில் வல்ல விறலியர்க்கு முத்து மாலையைப் பரிசளித்தான். செங்குட்டுவன் அவைக் களத்தில் ஆடுவதென்றாலே அவர்களுக்கு அளவற்ற ஆர்வம். கலையின் நுட்பங்களை உணர்ந்து சுவைக்கிறவர்களைக் கண்டால் கலைஞர்களுக்கு ஊக்கம் உண்டாவது இயல்பு. செங்குட்டுவனுடைய திருவோலக்கத்தில் விறலியர் மிக நன்றாக ஆடினார்கள். அப்போது அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பியது. அது முகத்தில் மலர்ச்சியைத் தந்தது. நெற்றியைப் பார்த்தாலே அந்த விளக்கம் தெரிந்தது. இயல்பாகவே விளக் கத்தையுடைய நுதல் பின்னும் பொலிவு பெற்று விளங் கியது; ஒண்ணுதலாக இருந்தது. அங்கே ஆடிய ஒண்ணுதல் விறலியருக்கு அரசன் ஆரம் பூட்டினான். அவன் கடல் பிறக்கு ஓட்டியவனாதலால், கடலிலே உண்டாகும் முத்து அவனுக்கு அருமை அல்லவே! விறலியர் எத்தனை பேர் வந்தாலும் ஆரம் வழங்கும் செல்வம் அவனிடம் உண்டு . கலைஞர்களைப் புரக்கும் வள்ளலினுடைய புகழ் மேலும் மேலும் வளரும்; பல இடங்களில் பரவும்; என்றும் கெடாமல் நிலவும். ஆதலின் சேரன் செங் குட்டுவனுக்கு அமைந்த புகழ் கெடலரும் புகழ். கலை நுகர் திறம், ஈகை, வீரம், ஆட்சிமுறை முதலிய பல திறத்திலும் அவன் புகழைப் பெற்றான். ஆதலின் அவன் பெற்றது ஒரு புகழ் அன்று; பல புகழ்; அதுவும் கெடலரும் பல்புகழ். அந்தப் புகழ் என்றும் நிலை நிற் கும்படி மேலும் மேலும் புகழுக்குரிய செயல்களைச் சேரமான் செய்து கொண்டே வந்தான். இவற்றைப் பரணர் கண்டும் கேட்டும் உணர்ந்தார். கடல் வெற்றி சேரமான் கடல்பிறக் கோட்டிய வெற்றியைச் சிலர் புலவரிடம் எடுத்துக் கூறினர். ‘எத்தனையோ காலமாக அந்தச் சிற்றரசர்கள் குறும்பு பண்ணிக்கொண்டே இருந்தார்கள். கடலுக் குள்ளே சென்று அவர்களை அடக்க யாரும் துணிய வில்லை’’ என்றார் ஒரு பெரியவர் . ‘’அப்படியா ! அந்த அரசர்களுக்குப் படைப் பலம் மிகுதியோ?’’ என்று கேட்டார் பரணர். "அவர்களுக்கு வேறு பலம் ஒன்றும் இல்லை. கடல் தான் பலமாக இருந்தது; படையாக இருந்தது; அரணாக இருந்தது. நம் மன்னன் நீரிலே புகுந்தான். கடலொடு போராடினான்; வென்றான்.’’ ‘’அப்படியானால் நம் மன்னர்பிரானைப் பரதவன் என்று சொல்லலாம் போலிருக்கிறதே!’’ என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார் பரணர். ‘’என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? மீன் பிடிக்கும் பரதவரைப் போன்றவன் என்று சொல்வது மன்னர் பிரானுக்கு இழுக்காவது இருக்கட்டும்; சொல்பவர் களுக்கே இழுக்கல்லவோ?’’ "சொல்வதில் என்ன தவறு? மற்றவர்களெல்லாம் கடலின் ஆழத்தையும் பரப்பையும் கண்டு அஞ்சி நடுங்குவார்கள்; நீரிலே புகமாட்டார்கள். பரதவர் சிறிதேனும் அஞ்சாமல் தம்முடைய படகுகளுடன் கடலிடையே புகுவார்கள். கடல் அலைகளை வீசிக் கொந்தளித்தாலும் கடலொடு போராடிச் சென்று மீன் வேட்டையாடி வருவார்கள். அவர்கள் கைக்கொண்டு வருவது மீனாக இருந்தாலும், அஞ்சாமல் கடந்து வருவது கடல் அல்லவா?’’ "அது சரிதான். ஆனால்………’’ "சேரர்பிரான் பொருது வென்ற பகைவர்கள் வேறு பலம் இல்லாதவர்கள். மீன்களைப் போன்றவர்கள். அவர்களை வென்றதைவிடக் கடலை வென்றது தானே பெரிய காரியம் என்று சொல்கிறீர்கள்?’’ ‘’ஆம்.’’ ‘’ஆகவே, கடலின் ஆழத்தைக் கண்டு அஞ்சாமல், குளிர்ந்த அதன் துறைகளிலே வாழ்க்கை நடத்தும் உரிமையையுடைய பரதவரைப் போன்றவன் என்று மன்னனைச் சொல்லலாம் அல்லவா?’’ "சொல்லலாம். புலவர்கள் எப்படிச் சொன்னாலும் அழகாக இருக்கும்.’’ "நீரிலே புக்குக் கடலொடு உழந்த (முயன்று போராடிய) பனித்துறைப் பரதவ ! என்று செங்குட்டுவன் புகழை நான் பாடலாமென்று நினைக்கிறேன்.’’ ‘’பாடுங்கள். இதுவும் பாடுங்கள்; இன்னும் | பாடுங்கள்’’ என்றார் அந்தப் பெரியார். பாடத்தானே வந்திருக்கிறார் பரணர்? வணங்கிய சாயல் மற்றொரு நாள். சேர மன்னனைத் தேடிக்கொண்டு நல்ல கட்டிளங் காளையர் பலர் வந்திருக்கிறார்கள். எல்லோரும் தங்கள் தங்கள் தொழிலிலே சிறந்து நிற்பவர்கள்; பாணர்கள் பாடியதைக் கேட்டு அவர்களுக்குப் பல பரிசில்களைச் செங்குட்டுவன் தந்ததைப் பார்த்தவர்கள். அந்த இளையர் ஒரே கூட்டமாக, நாமும் நமக்குத் தெரிந்த பாட்டைப் பாடிப் பரிசில் பெறுவோம்’’ என்று எண்ணி வந்திருக்கிறார்கள். அவர்கள் சேரமானுடைய புகழை அமைத்துப் பாட்டுப் பாடுகிறார்கள். பாணர்கள் பாடிய பாடல் எங்கே? இந்தப் பாட்டு எங்கே? வேறு இடமாக இருந்தால் அவர்களைப் பாட விடுவார்களா? அவர்கள் பாடும் பாடல்களைக் கொள்வார்களா? அவை கொள்ளாப் பாடல். இங்கே சேரமான் அந்தப் பாடல் களைக் கேட்கிறான். பிற இடங்களில் கொள்ளாப் பாடல் இங்கே எள்ளாப் பாடலாக இருக்கிறது. அந்த இளையர், கூட்டமாக வந்து பாடிக் கையை நீட்டுகிறார்கள்; வரிசையாக நின்று நீட்டுகிறார்கள். எல்லாம் வன்மை பெற்ற கைகள்; ஒரே மாதிரி உள்ள கைகள்; ஒன்றுக்கு ஒன்று நேர் ஆன கைகள். அவர்களைப் பார்த்து மகிழ்கிறான் செங்குட்டுவன் ‘நம்மிடத்தில் இவர்களுக்கு எத்தனை அன்பு!’ என்று உவகை பூக்கிறான். அவர்களுக்கும் பரிசில் வழங்கு கிறான். பகைவருக்கு முன் வணங்காத பேராண் மையை உடையவன், சிறந்த கலைஞர்களின் அற்புதமான பாடலைக் கேட்டு அவற்றின் சிறப்பை உணர்ந்து பாராட்டுகிறவன், இப்போது எளியவனாக, மென்மையை உடையவனாக இருக்கிறான். இளையர் விருப்பத்தை அறிந்து அவர் பாடலை நன் றென்று கேட்கிறான். அவர்களுக்கு வளைந்து கொடுக்கிறான். இந்த வணங்கும் சாயல் - எளிய வனாக வளைந்து கொடுக்கும் மென்மை - புலவர்களுக்கு வியப்பைக் கொடுக்கிறது. ‘நேற்றுத்தானே பாணர் களின் உயர் தரமான இசையிலே இன்புற்றுப் பரிசு கொடுத்தான்? இன்று இந்தக் கொள்ளாப் பாடலுக்குக் கொடுக்கிறானே!’ என்று வியக்கிறார்கள். கடல் பிறக் கோட்டிப் பெற்ற பண்டங்களை யெல்லாம் இப்போது இந்த இளையருக்கு வாரி வாரி வீசுகிறான். ஆண்டு நீரிலே பெற்ற தாரத்தை (பண்டத்தை), ஈண்டு இவர் கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈகின்றான். அந்தப் பண்டங்களைப் பெறுவது எவ்வளவு அரிது! மற்ற அரசர்களால் நினைக்கவும் முடியுமா? செங் குட்டுவன் ஒருவனால் தான் அது முடிந்தது. அவ்வாறு பெறற்கரிய பண்டங்களை இவர்களுடைய சாமானிய மான பாடலுக்கு எளிதிலே வீசுகிறானே!’ என்று சிலர் எண்ணினார்கள். "உங்கள் பாட்டுத் தரம் போதாது என்று சொல்ல இவனுக்கு வாய் இல்லையோ?’’ ‘’அரிதிற் பெற்ற பண்டங்களைக் கொடுக்க மாட்டேன் என்ற வார்த்தைகள் இவன் வாயிலிருந்து வருவதில்லையோ?’’ "உங்கள் பாடல் கொள்ளத் தகாதவை, உங்க ளுக்குக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல இவன் வாய் நடுங்குமோ? நாமாக இருந்தால் ஒரு கணத்தில் சொல்லி விடுவோமே!’’ ‘’அந்த வார்த்தைகளைச் சொல்லுவதற்கு இவன் கற்றுக் கொள்ளவில்லை. இவனுடைய வாய்க்கு அந்தத் தன்மை இல்லை. ஈயென்று இரப்பவர்க்கு ஈயக் கற்றுக்கொண்டான். இந்த இளையர்கள் பாடுவதைக் கேட்டு நாம் அவர் பாடல் கொள்ளாப் பாடல் என்று சொல்கிறோம். அரசன் காதில் அந்தப் பாடல் விழுகிறதோ, இல்லையோ, தெரியாது. ஆனால் அவர் கள் வரிசையாகக் கை நீட்டுகிறார்களே, அந்த நேர்கை நிரை (வரிசையாக இருப்பதைக் கண்ட பிறகும் மன்னர் பிரானால் சும்மா இருக்க முடியுமா? ஈ என்று கேட்ப தற்கு முன்பே குறிப்பறிந்து கொடுக்கக் கற்றவன் இவன். ஈயென்று கேட்ட பிறகு மறுக்கக் கல்லாத வாக்கை உடையவன். இரப்பவருக்கு வேறு காரணங் கூறி, இல்லையென்று சொல்லக் கல்லாத இயல்பு இவன் வாய்க்குரிய தன்மை .’’ ‘’அவற்றை யெல்லாம் கல்லாத வாய்மையன் (வாயின் தன்மையைப் பெற்றவன்) இவன் என்பதை அறிய அறிய வியப்பாக இருக்கிறது.’’ ‘’எத்தனை வணக்கத்தோடு இனிய சொற்களைக் கூறிக் கொடுக்கிறான் ! பகைவர் முன் நிமிர்ந்து நிற்கும் இப் பெருமான், வலியவர்க் கெல்லாம் வலியவனாக வன்மை படைத்த இக் குரிசில், வணங்கிய சாயலை (மென்மையை) உடையவனாக இப்போது இருப்பது, கண்டாரும் நம்பமுடியாத வியப்பு அல்லவா?’’ ‘’ஆனாலும் பகைவர் முன் இவன் வணங்கா ஆண்மையை உடையவன் தான்.’’ இப்படிப் புலவர்கள் தமக்கு உண்டான வியப் பினால் ஒருவர்க்கு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு இவர் கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் இவன் என்று வியந்தார்கள். இப்படி அவனுடைய வணங்கிய காயலை நினைத்த போது, அவனது வணங்கா ஆண்மையும் நினைவுக்கு வந்தது. அதைப் பற்றியும் பரணர் கேள்வி யுற்றிருக்கிறார். பல்பொறி மார்பு மார்பிலே அழகிய மணமுள்ள மாலையை அணிவது மன்னர்களின் இயல்பு. சேரமானும் மாலையை அணிந் திருந்தான். கவின் பெற்ற மாலை அது. மாலை வாடுவது சிறப்பன்று. அதைத் தீய நிமித்தமென்று சொல்வதுண்டு. ஆனால் சோமானுடைய மாலையில் உள்ள பூக்களின் இதழ்கள் வாடிய துண்டு. அந்த வாட்டம் அவனுடைய சிறப்பையே எடுத்துக் காட்டியது. அவன் மார்பிலே பூசியிருந்த சந்தனம் உலர்ந்து பொருக்குத் தட்டியது; அதுவும் அவனுடைய பெருமைக்கு அடையாளமாயிற்று. எப்பொழுது? பகைவர்களுடைய நாட்டின் மேல் சேரமான் படை யெடுத்தான். பகைவர்களைக் கொன்றான். அவர்களு டைய நாட்டில் எரிமூட்டினான். அதனால் நாற்றிசையும் உள்ள ஊர்கள் எரிந்தன. எங்கே பார்த்தாலும் புகை மண்டியது. அந்தப் புகையைக் கண்ட சேரன் படை வீரருடைய உள்ளங்களில் உவகை மண்டியது. பகை வர்களுடைய முனைகளைச் சுட்ட நெருப்பு மேலும் மேலும் பரந்து எரிந்ததனால் புகை பரந்தது. அந்தப் புகை பட்டுச் சேரமானுடைய மாலையில் உள்ள இதழின் கவின் அழிந்தது. இவ்வாறு சேரனுடைய மாலை மங்கினாலும் அது அவனது விறல் விளங் கியதைக் காட்டியது. அப்போதுதான் சேரமானுடைய மார்பிலே பூசிய சந்தனம் புலர்ந்தது. வாடிய மாலையும் புலர்ந்த சாந்துமாக அவன் நின்றாலும் வெற்றித் திருவோடு நின்றான். மார்பிலே புதிதாக அணிந்த மாலையும் பூசிய சந்தனமும் வேறு பட்டாலும் அவனு டைய மார்பின் இயற்கை யெழில் வேறுபடவில்லை. அங்கே சாமுத்திரிகா லட்சணத்தின்படி மூன்று இரேகைகள் இருந்தன. அவை விளக்கமாகவே இருந் தன. கவினழிந்த மாலையும் புலர்ந்த சாந்தும் கொண் டிருந்தாலும் அவன் மார்பில் என்றும் பொலிவோடு கவினழியாமல் பல்பொறிகள் இருந்தன. பேரெழில் வாழ்க்கை சேர நாட்டு வளப்பத்தையும் மக்களுடைய இன்ப வாழ்க்கையையும் கண்டு களிக்கும் வாய்ப்பும் பரண ருக்குக் கிடைத்தது. அந்த நாட்டின் ஆறுகளையும் மலைகளையும் பொழில்களையும் பார்த்து இன்புற்றார். அந்த ஆறுகளில் பேராறு என்பது சேரநாட்டு மலை யிலே தோன்றி மேல் கடலிலே விழுகிறது. அதன் தோற்றமும் சங்கமமும் சேர நாட்டுக்குள்ளே இருக் கின்றன. சேரனுடைய மலையிலே பிறந்து அவனு டைய கடலிலே சென்று கலக்கிறது அது. பேராற்றில் புது வெள்ளம் வரும்போது மக்க ளுக்கு மகிழ்ச்சியும் பெருக்கெடுத்துப் பொங்கும். புனல் மலிந்த வெள்ள நாட்களில் நீர்விழா அங்கங்கே நடை பெறும். புனலாட்டு நிகழும். ஆடவரும் மகளிரும் நீராடி மகிழ்வார்கள். மலிபுனல் கண்டு நிகழ்தரும் நீர்விழா விலே சேரநாட்டு மக்கள் ஒன்றுகூடி ஆடி விருந்துண்டு களி சிறந்து வாழ்வதைப் பரணர் கண்டார். வேனிற் காலத்தில் மக்கள் பொழில்களிலே புகுந்து தங்கி இன்ப விளையாட்டு அயர்வதையும் புலவர் பார்த்திருக்கிறார். புதுப் புனலில் விளையாடிய போது அந்தக் காட்சியின் சிறப்பு ஒரு விதமாகத் தோற்றியது. வெப்பம் மிக்க வேனிலில் பச்சைப் பசேலென்று தழைத்துப் பரவிய பூம்பொழிலிலே தங்கித் தென்றலின் இனிமையையும், மலரின் மணத்தையும் நுகரும் போது அந்தக் காட்சி ஒரு வகையில் சிறப்புடையதாக இருந்தது. எல்லாம் அழகிய காட்சிகள். அவர்களு டைய வாழ்க்கையே மிக்க அழகுடையது. நீர் விளை யாட்டில் அவர்கள் பலவண்ண நீர்களைக் குழாய்களைக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் வீசி விளையாடினார்கள். பூம்பொழிலில் இன்பம் நுகர்ந்தபோது இன்னிசையை எழுப்பி அந்த இசை வெள்ளத்திலே மூழ்கித் திளைத்தார்கள். இப்படியாகக் கலைப் பண்பு நிறைந்த அவர் களுடைய வாழ்க்கை பேரெழில் வாழ்க்கையாகச் சிறப்புற்று விளங்கியது. நாட்டு மக்களின் செல்வ வளத்தைப்பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இம்மையிலே சொர்க்க போகத்தைப் பெறுகிறவர்கள் அவர்கள். அறுசுவை உணவை உண்டும், நுகர்ச்சிக்குரிய பொருள்களை இனிதாக நுகர்ந்தும் வாழ்ந்தார்கள். தாமே நுகரும் சிறுமை அவர்களிடம் இல்லை. விரும்பி வருகின்ற சுற்றத்தாரோடு விருந்துண்டும் பிற இன்பங்களை நுகரச் செய்து நுகர்ந்தும் தங்கள் செல்வத்தைப் பயன்படுத்தினார்கள். தாமே நுகரும் இன்பத்தினும் சுற்றத்தாரோடு சேர்ந்து நுகரும் இன்பம் பன்மடங்கு மிகுதியானது. அதுவே வழக்கமாய்ப் போன அவர் களுக்குச் சுற்றத்தாரின்றி நுகரும் இன்பம் இன்ப மாகவே தோற்றுவதில்லை சுற்றத்தோடு உண்டு இனிது நுகரும் கூட்டத் தினரைப் புலவர் கண்டு மகிழ்ந்தார். இனிய புனலை யுடைய ஆற்றங் கரைகளில் அவர்கள் ஆடி மகிழ்ந்த தைப் பார்த்தார். சேரநாட்டுக்கு உரிய காஞ்சி என்ற ஆற்றையும் கண்டார். அதன் துறைகள் மக்கள் பலர் நீராடும் பெருந் துறைகளாக இருந்தன. வாழ்த்து இப்படிப் பல வகையில் அறிந்த செய்திகளை யெல்லாம் நெஞ்சமாகிய கொள்கலத்தில் சேமித்து வைத்துக்கொண்ட பரணர் இப்போது பாடலானார். இழிவாகச் சொல்வது போலச் சொல்லிச் சோனைப் புகழ்ந்து வாழ்த்த நினைத்தார். பனித்துறைப் பரதவ என்றார்; அதனால் அவன் கடல் பிறக்கோட்டிய வெற்றியைப் பாராட்டினார். கல்லா வாய்மையன் என்றும் , வணங்கிய சாயலை உடையவன் என்றும் சொன்னார். அவை வாய்மை கல்லாதவன், வணங்கும் மெல்லியன் என்று முதலில் தாழ்வாகத் தோற்றினாலும், இரப்ப வருக்கு ஈதலை மறுப்பதைக் கல்லாதவன் என்றும் அவர்களுக்கு எளியவனாக இருப்பவன் என்றும் பொருள் பட்டு அவனுடைய ஈகைச் சிறப்பைப் புலப் படுத்தின. இதழ் கவின் அழிந்த மாலையும், சாந்து புலர் மார்பும் உடையவன் என்றார்; அவற்றை மாத்திரம் நோக்கினால் இழிவாகத் தோற்றும்; பகைவர் நாட்டை எரித்த புகையினால் மாலையும் சாந்தும் அப்படி ஆயின என்று கூறியதனால் அவனுடைய வீரத்தின் சிறப்புப் புலப்பட்டது. ‘’இவ்வளவு சிறப்பையுடைய நின் பெயர், காஞ்சியம் பெருந்துறை மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழியரோ!’’ என்று வாழ்த்தினார். பெயர் வாழ்க என்று வாழ்த்தினாலும் அவன் வாழ்க என்பது தான் அவர் கருத்து. பன்மைக்கு வான் மீனையும் ஆற்று மணலையும் சொல்வது புலவர் மரபு. எந்த அரசரை வாழ்த்துகிறார்களோ, அவர்களுக்குரிய ஆற்றின் மணலைச் சொல்வது சிறப்பு. இங்கே சேரனுடைய நாட்டிலுள்ள காஞ்சி யாற்றின் மணலைப் பரணர் சொல்லி, அதைக் காட்டிலும் பல காலம் வாழ்க என்று வாழ்த்தினார். ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அர்ஜுனன் மனைவிகளை எண்ண முடியாது’ என்று இக் காலத்தில் ஒரு பழமொழி வழங்குகிறது. ஆற்று மணல் அளவு கடந்தது என்பதை அப் பழமொழி தெரிவிக்கிறது அல்லவா? பாட்டு மிக அழகாக நிறைவேறியது. பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி, ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிக், கெடல் அரும் பல்புகழ் நிலைஇ , நீர்புக்குக் கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ! ’ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு இவர்         5 கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் இவன்’ எனத், தத்தம் கைவல் இளையர் நேர்கை நிரைப்ப, வணங்கிய சாயல் , வணங்கா ஆண்மை, முனைசுடு கனை எரி எரித்தலின், பெரிதும்         10 இதழ்கவின் அழிந்த மாலையொடு , சாந்து புலர் பல்பொறி மார்ப நின் பெயர்வாழியரோ! நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவிற் பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை,         15 மேவரு சுற்றமொடு உண்டு இனிது நுகரும் தீம்புனல் ஆயம் ஆடும் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே. [பசிய பொன்னாலான தாமரைப் பூவைப் பாணருக்குச் சூட்டியும், விளக்கத்தையுடைய நெற்றியைப் பெற்ற விறலி யருக்கு முத்து மாலையைப் பூட்டியும் கெடுதல் இல்லாத பல வகைப் புகழ்களை நிலை நிறுத்தி, நீரிடையே புகுந்து கடலோடு வருந்திப் போராடிய குளிர்ந்த துறையையுடைய பரதவனைப் போன்றோய்! ‘’அங்கே கடலிடையே பெற்ற பண்டங்களை, இங்கே யாரும் விரும்பிக் கொள்ளாத இவருடைய பாட் டுக்காக எளிதிலே கொடுக்கும், ஈகையை யன்றி அதற்கெதிராக ஒன்றையும் சொல்லக் கல்லாத வாயின் தன்மையை உடையவன் இவன்’’ என்று கண்டோர் கூறும் படியாக, தம் தம் கையினாலே தொழில் செய்வதில் வன்மையையுடைய இளைஞர் தம்முடைய ஒத்த கைகளை வரிசையாக நீட்ட, அவருக்கு எளியனாகிக் கொடுக்க வளைந்த மென்மையையும் பகைவருக்கு வணங்காத வீரத்தையும் உடைய, பகைவரோடு போர் செய்யும் முனைகளில் உள்ள அவர் நாடுகளைச் சுட இட்ட மிக்க நெருப்பு எரித்தலினால் மிகவும் இதழ்கள் அழகு அழிந்த மாலையோடு சந்தனம் உலருகின்ற பல வரிகளை உடைய மார்பையுடையவனே! நின்னுடைய பெயர் வாழ்வதாகுக, நின்னுடைய மலையிலே பிறந்து நினக்குரிய மேல் கடலிலே சென்று சேரும் ஆற்றில் மிக்க புனல் வரும்போது நிகழ்கின்ற இனிய நீர் விழாவையும், வேனிற் காலத்தில் சோலைகளிலே தங்கி இன்புறும் பெரிய அழகையுடைய வாழ்க்கையையும் உடைய , விருப்பத்தைக் கொண்ட சுற்றத்தாரோடு விருந்துண்டு போகங்களை இனிதாக அனுபவிக்கும் மக்கட் கூட்டத்தார் இனிய நீரில் ஆடுதற்கு இடமாகிய காஞ்சிமா நதியின் பெரிய துறையிலே உள்ள மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் ! பாணருக்குத் தாமரை சூட்டி, விறலியருக்கு ஆரம் பூட்டி, புகழ் நிலைஇ, உழந்த பரதவ! பாடற்கு ஈயும் வாய்மையன் இவன் என, நிரைப்ப, வணங்கிய சாயலையும் ஆண்மையையும் உடைய பல்பொறி மார்ப! நின் பெயர், மணலினும் பல வாழியரோ ! - என்று பொருத்திக்கொள்ள வேண்டும். 1. பாணர்ச் சூட்டி - பாணருக்குச் சூட்டி, சூட்டுதல் - தலையில் அணிதல். 2. ஒண்மை - விளக்கம். விறலியர் - பாட்டுப் பாடி ஆடும் மகளிர் ; பாணருடைய மனைவிமார் பாடினி என்றும் சொல்வதுண்டு. ஆரம் - முத்துமாலை. பூட்டி - பூணச் செய்து . 3. கெடல் அரும் - கெடுதல் அற்ற அருமை இன்மையைச் சுட்டியது. ஈகை, வீரம், ஆட்சி முறை என்று பலதிறத்திற் புகழ்பெற்றவனாதலின் பல் புகழ் என்றார். நிலைஇ - நிற்கச் செய்து. 4. உழந்த - வருந்திய, இங்கே போர் செய்ததைச் சுட்டியது. உழப்பு என்ற சொல் வருந்தி முயலுதலைக் குறிப்பது. அதுவே இக்காலத்தில் உழைப்பு என வழங்குகிறது. பனி - குளிர்ச்சி. பரதவர் என்பது நெய்தல் நிலத்து மக்களின் பெயர். பரதவ என்றதனாற் சொல்லியது, அக்கடலின் உழத்தல் தொழிலொப்புமைபற்றி அக் கடல் துறை வாழும் நுளையற்குப் பெயராகிய பரதவன் என்னும் பெயரான் இழித்துக் கூறினான் போலக் குறிப்பான் உயர்த்து வென்றி கூறினானாகக் கொள்க’ என்பது பழைய உரையாசிரியர் கூறும் நயம். 5. நீர்ப்பெற்ற - நீரிலே பெற்ற. தாரம் - பண்டம். 6. கொள்ளாப் பாடல் - பிறர் ஏற்றுக் கொள்ளாத பாடல் ; மனங் கொள்ளாப் பாடல் என்பர் பழைய உரைகாரர். 7. கல்லா வாய்மையன் - மறுத்துக் கூறு வதைக் கல்லாமையாகிய வாயின் தன்மையை உடையவன் கொடுத்தற்றொழிலை யன்றிப் பிற தொழிலைக் கல்லாத வாய்மையை உடையவன் என்பது ஐயரவர்கள் குறிப்புரை. என - என்று கண்டோர் கூறும்படியாக. என, வணங்கிய சாயல் என்று கூட்ட வேண்டும். 8. கைவல் இளையர் - தொழிலிலே வன்மையைப் பெற்ற இளைஞர் : கை - தொழில்; ஆகுபெயர். நேர் கை - ஒத்த கைகள். நிரைப்ப - வரிசையாக நீட்ட. 9. வணங்கிய - வன்மையற்று நெகிழ்ந்த . சாயல் - மென்மை. 10. முனை - போர்க்களம். கனை எரி - மிகுதியான நெருப்பு. எரித்தலின் - சுட்டு அழித்தலால், 11. கவின் அழகு. சாந்து - சந்தனம், புலர்தல் - உலர்தல். 12. பொறி மார்புக்கு அழகைத் தரும் வரிகள். மூன்று வரிகள் மார்பில் இருத்தல் நல்ல இலக்கணம் என்று சொல்வார்கள். ’அம் பகட்டு மார்பிற் , செம்பொறி வாங்கிய (திருமருகாற்றுப்படை, 104-5) என்று நக்கீரரும், ’வரையகல் மார்பிடை வரியும் மூன்றுள" (சீவகசிந்தாமணி, 1462) என்று திருத்தக்க தேவரும் கூறியிருக்கின்றனர். 13. மண்டும் - வேகமாகச் செல்லும். 14. மலிபுனல் - ஆற்றிலே மிகுதியாக உள்ள புது நீர். மலிபுனல் என்பதே ஆற்றுக்குப் பெயராயிற்று என்பர், பழைய உரைகாரர் தீ நீர் - இனிமையையுடைய நீர். 15. வதி - தங்கும். பொழிலிலே வதியும் வேனிலையுடைய வாழ்க்கை . 16. மேவரு - மேவுதல் வரும்; மேவுதல் - விரும்புதல். ‘இனிது நுகரு மென்றது, சுற்றத்தோடு உண்டலே யன்றிச் செல்வ முடையார் அச்செல்வத்தாற் கொள்ளும் பயன்கள் எல்லாம் கொள்ளும் என்றவாறு’ என்பது பழைய உரை. 17. தீம் புனலில் உள்ள ஆயம். ஆயம் - மக்களின் கூட்டம். விழவையும், வாழ்க்கையையும் உடைய ஆயம், நுகரும் ஆயம் என்று இணைத்துப் பொருள் செய்ய வேண்டும். . இப்பாட்டின் துறை முதலியன வருமாறு. துறை - இயன்மொழி வாழ்த்து.         வண்ணம் - ஒழுகு வண்ணம். தூக்கு - செந்தூக்கு.         பெயர் - பேரெழில் வாழ்க்கை . சேரமானுடைய இயல்புகளைப் புகழ்ந்து பாராட்டினமையால் இது, ‘இயன் மொழி வாழ்த்து’ ஆயிற்று. சேர நாட்டில் வாழ்பவர்களின் வளப்பமான வாழ்வைக் கண்டு, ‘இது மிக அழகியது’ என்று பாராட்டினமையால் ‘பேரெழில் வாழ்க்கை’ என்ற தொடரே இப் பாட்டுக்குப் பெயராக அமைந்தது. ‘இதனால் சொல்லியது, அவனை நீடு வாழ்கவென வாழ்த்தியவா றாயிற்று’ என்பது பழைய உரைகாரர் கூறும் கருத்து. இது பதிற்றுப் பத்தில் 48-ஆவது பாட்டு. புரவலர் கோமான் சேரநாட்டு வளநகர்களில் சிறந்தது வஞ்சி. அதுவே அந்நாட்டின் தலைநகரம். அதனை யன்றி வேறு சிறந்த செல்வ வளம் உள்ள நகரங்கள் பல அந் நாட்டில் இருந்தன. மேல் கடற்கரையில் தொண்டி யென்ற நகரம் ஒன்று இருந்தது. அங்கே கப்பல் வியாபாரம் நன்கு நடைபெற்றது. வேதம் வல்ல நான் மறையாளர் பலர் அந் நகரில் வாழ்ந்து வந்தனர். சேர மன்னனுடைய செல்வச் சிறப்பைக் கண்டு அவனுடைய பகைவர் பொறாமை கொண்டனர். அவனோடு பொருது தம்முடைய வீரத்தைப் புலப்படுத் துவதற்கு ஏற்ற துணிவு அவர்களுக்கு இல்லை. சேர நாட்டுக்குள்ளே புகுந்து வஞ்சிமா நகரை முற்றுகை யிடவோ , வேறு வகையில் சேர மன்னனை எதிர்க்கவோ அவர்கள் நடுங்கினார்கள். ஆயினும் எப்படியாவது அவனுடைய ஆற்றலைக் குலைக்க வேண்டுமென்ற ஆவல் மட்டும் அவர்களுக்கு அடங்கவே இல்லை. நேர் நின்று போரிடும் நேர்மை அவர்களிடம் இல்லை. ஆகவே ஏதேனும் வஞ்சனை செய்து போர் மூட்டலாம் என்று பலர் கூடி ஆராய்ந்தனர். சேரனை அவன் நாட்டிலே சென்று போரிட்டு வெல்வது என்பது இந்திரனாலும் எண்ண இயலாத செயல். அவனைத் தம்முடைய நாட்டுக்கு வருவித்து எதிர்த்து நிற்கலாம் என்று துணிந்தனர். அதற்கு என்ன வழி? பல நாட்கள் சிந்தித்தனர். தொண்டிமா நகரத்தில் மறையவர்கள் பெரிய வேள்வி ஒன்றை இயற்றுவதற்கு ஏற்பாடு செய் தார்கள். இந்தச் செய்தி பகைவர் காதுக்கு எட்டியது. அந்த வேள்வி நடைபெறாமல் தடுத்தால் சேர மன்னன் சினம் மூண்டு பொர வருவான் என்ற எண்ணம் அவர் களுக்கு உண்டாயிற்று. ‘யாக பசுக்களாகிய ஆடுகளை ஒருவரும் அறியாமல் அடித்துக் கொண்டு வந்து தண்டகாரணியமாகிய காட்டுக்குள் வைத்துவிட்டால், எப்படியாவது அவற்றை விடுவித்துக் கொண்டு செல்லச் சேரமான் முயற்சி செய்வான்; தண்டகாரணி யத்துக்கு அவன் படையுடன் வந்தால் அவனை மடக்கிக் கொள்ளலாம்’ என்று ஒருவாறு முடிவு செய் தனர். நாய்கள் பல சேர்ந்து யானையை மடக்கத் திட்டம் போட்ட கதையாக முடியும் இது என்பதை அவர்கள் உணரவில்லை. வேள்விக்கு வேண்டிய ஏற்பாடுகள் தொண்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதற்குரிய பண்டங் களையெல்லாம் தொகுத்தார்கள். ஒரு நாள் காலையில் எழுந்து பார்க்கும் போது யாகத்துக்காக வந்த மலையாடு களைக் காணவில்லை. இரவோடு இரவாக யாரோ திருடர்கள் அவற்றைத் திருடிச் சென்றுவிட்டார்கள் என்று தெரிந்தது . பகைவர்கள் அனுப்பிய ஏவலர்களே இந்தக் காரியத்தைச் செய்தார்கள் என்றும், ஆடுகள் தண்டகாரணியத்தில் இருக்கின்றன என்றும் தெரிய வந்தது. சேரன் இதனை உணர்ந்தான். தூங்கும் புலியை இடறிவிட்டதுபோ லாயிற்று இது. உடனே தன் படைகளுடன் தண்டகாரணியத்தை நோக்கிப் படையெடுத்தான். இதைத்தான் பகைவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். தண்டகாரணியத்தினிடையே சேர மன்னனை அவர்கள் எதிர்த்தார்கள். பகைவர் பலராக இருந்தாலும் சேரமானுடைய வீரத்துக்கு முன் அவர்கள் எம்மாத்திரம்? சேர மன்னன் அவர்களை வென்று தண்டகாரணியத்திற்குள் புகுந்து அங்கிருந்த ஆடு களைக் கைப்பற்றி மீண்டான். தொண்டியில் வேள்வி இனிதே நிறைவேறியது. அதை நிறைவேற்றிய அந்தணர்களுக்குப் பல ஆக்களையும் ஊரையும் அரசன் வழங்கினான். சிறைப்பட்ட ஆடுகளை மீட்டும் கைக் கொள்வதற்காகப் பகைவருடன் போர் செய்து வென்றமையால் இந்தச் சேர மன்னனுக்கு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயர் வழங்கத் தொடங்கியது. ஆட்டைக் கொள்ளும் பெருமையை யுடைய சேர மன்னன் என்பது அந்தத் தொடரின் பொருள். பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தாக அமைந்திருக்கும் பத்துப் பாடல்களும் ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைப் பற்றியவை. அவற்றைப் பாடியவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற பெண் புலவர். அந்தப் பத்தில் ஏழாவது பாட்டு விறலி யாற்றுப்படை என்னும் துறையில் அமைந்திருக்கிறது. விறலி என்பவள் ஆடல் பாடலில் சிறந்தவள். விறல் என்பது பாவம். பாடும் பாட்டிலே வரும் பாவத்தைத் தன்னுடைய ஆடலால் வெளிப்படுத்துகிறவளாதலின் அவளுக்கு விறலி என்ற பெயர் வந்தது. பாணனுக்கு மனைவியாதலின் பாணிச்சி என்றும் பாடினி என்றும் விறலியைச் சொல்வதுண்டு. பாணன் யாழ் வாசித்துப் பாட அதற்கு ஏற்ப ஆடும் திறமையைப் பெற்றவள் விறலி. ஒரு விறலியைப் பார்த்து, ‘’சேரமான் இத்தகை யவன்; அவனைப் போய்ப் பார்த்துப் பாடிப் பரிசில் பெற்று வருவோம்’’ என்று சொல்வது போல இந்தப் பாட்டு அமைந்திருக்கிறது. சேர மன்னனிடம் செல்ல வழிகாட்டுவது ஆதலின் இது ஆற்றுப்படைப் பாட்டு; விறலிக்கு வழி காட்டுவதனால் விறலி யாற்றுப்படை ஆயிற்று. போர்க்களத்திற்கு அருகில் பாடி வீட்டில் சேர மன்னன் தங்கியிருக்கிறான். அவனை எதிர்த்த பகைவர்கள் வலிமை மிக உடையவர்கள்; போர் செய்யப் புறப்படுகையில் முன்வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்று சபதம் செய்து புறப்பட்டவர்கள்; புறங் காட்டி ஓடுவதைக் காட்டிலும் உயிர் விடுவதே சால நன்று என்ற விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள். அவர்களுடைய துணிவே அவர்களுக்குப் பூணைப்போல இருக்கிறது. நெஞ்சுக்கு அணியாக இருப்பது திண்மை. நெஞ்சம் திண்ணியராக இருப்பவர்கள் எண்ணியவற்றை எண்ணியவாறே பெறுவர். ‘நாம் புறங்காட்டி ஓடக் கூடாது’ என்ற விரதத்தையே தம் நெஞ்சிலே பூண்டவர்கள் பகைவர்கள். ஓடாப் பூட்கையை (விரதம்) உடைய மறவர்கள் நிரம்பிய படை, பகைவர் படை. படை வீரர்களுடைய இயல்பே அதுவானால் படைத் தலைவர்களுடைய மனத் திண்மையைச் சொல்ல வேண்டுமா? அத்தகைய மறவரின் வலிமை, போர்வீரம், மிடல் மற்றவர்களோடு பொரும்போது வெற்றியை உண்டாக்கும். ஆனால் அந்த மிடல் ஆடு கோட் பாட்டுச் சேரலாதனிடத்தில் பலிக்கவில்லை. அவன் அவர்களுடைய மிடலெல்லாம் அடியோடு கெடும்படி போர் செய்தான். பனைமாலையை அணிந்து வீரக்கழலைப் புனைந்து போர்க்களத்திலே புகுந்தான் அவன். கடுமையாகப் போர் நடந்தது. பிளிறி ஆரவாரித்து வரும் களிற்றை வேலாலே குத்தினர் சிலர். எதிர்த்த மறவரை வாளால் வெட்டினர் சிலர். அம்பினாலே பலர் உடலைத் துளைத் தனர். வேலாற் குத்தியபோது குத்திய புண்ணி லிருந்து குபீர் குபீர் என்று குருதி கொப்புளித்தது. வாளால் வெட்டிய போது சலார் சலார் என்று. இரத்தத் துளி நெடுந்தூரம் தெறித்தது. சேர மன்ன னுடைய பெரிய பனை மாலையிலே அந்த இரத்தத் துளிகள் படிந்தன. அவனுடைய பெருமைக்கு அடையாளமாகிய வீரக் கழலிலே இரத்தக் கறை படிந்தது. அதனால் கழல் சிவந்து தோன்றியது. அவனுடைய இரும்பனம் புடையலும் (பனந்தோட்டாற் செய்த மாலை), வான் கழலும் மிடல் அழிந்து உடல் துணிந்து வீழும் மறவருடைய குருதி துளிப்பதனால் சிவந்தன. மேகம் மழைத் தூவலைத் தூவியது போலப் போர்க்களத்தில் குருதித் தூவல் இருந்தது. எங்கே பார்த்தாலும் வெட்டுப்பட்ட உடம்புக்கள். அதற்கு முன் வீரரென்றும், மறவரென்றும் பெயர் சொல்லும்படி உயிருடனும் ஊக்கத்துடனும் உலவிய அவ்வுடல்கள் இப்போது உடல் என்று சொல்லவும் தகுதியின்றித் துண்டு துண்டாகி ஊன்குவையென்று சொல்லும்படி குவிந்தன. ஊன்குவையுள்ள இடத்தில் புலால் நாற்றம் வீசுவது இயல்புதானே? ஆகவே அங்கே குருதித் தூவலும் புலவு நாற்றமும் படர்ந்தன. அத்தகைய களத்திலே ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் இப்போது இருக்கிறான். முன்பு பெற்ற வெற்றிகளை அவன் மாலையும் கழலும் காட்ட, இப்போது பெற்ற வெற்றியை அவற்றிலே படிந்து செந்நிறம் ஊட்டிய குருதி காட்ட, அவன் வெற்றி மிடுக்கோடு விளங்குகிறான். வெற்றியினால் உண்டாகும் உவகைக்கு எல்லை உண்டோ ? படை வீரர்கள் குதித்துக் கூத்தாடுகின்றனர். அந்தக் கூத்தில் சேரமானும் கலந்து கொள்கிறான். கைகளைக் கொட்டி ஆடும் ஆட்டத் துக்குத் துணங்கை என்று பெயர். போர்க்களத்தில் வெற்றிபெற்ற பெருமகிழ்ச்சியால் வீரரும் மன்னனும் துணங்கை யாடுகிறார்கள். துணங்கை ஆடுவதற்குக் காரணம் சேர மன்னன் பெற்ற வெற்றி; வலம் (வெற்றி) பட்டதால் (உண்டாகியதால்) துணங்கையாடிக் களிக்கும் நிலை வந்தது. "துணங்கை ஆடிய வலம்படு சேரமான் ஆகிய ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் போர்க்களத்தில் இருக் கிறான். அவனைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம்’’ என்று விறலியை நோக்கி நச்செள்ளையார் சொல்கிறார். “போர்க்களமா! அங்கே நாம் போக முடியுமா?” "நன்றாகப் போகலாம். வெற்றிக் களிப்புடன் துணங்கையாடிக் கொண்டிருக்கும் நிலையிலே சென்று பார்த்தால் சேரனுடைய வீரச் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் நன்றாக அறிந்து கொள்ளலாம்.’’ ‘’அவன் அரண்மனையில் திருவோலக்கத்தில் வீற்றிருக்கும்போது கண்டு களிக்கலாமே!’’ ‘’அப்படிக் காணுவதை எப்போது வேண்டு மானாலும் செய்யலாம். மற்றச் சமயங்களில் பகைவரைப் புறங்காணும் வீரத்தைப் பிறர் கூற நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சேர மன்னனுடைய வாழ்வில் அடிக்கடி போர் நிகழ்வதில்லை. ஏனெனில் அவனை எதிர்க்கும் பைத்தியக்காரர்கள் உலகத்தில் அதிகமாக இல்லை. பல ஆண்டுகளாக அவன் வீரம் உலகம் புகழும் சிறப்புடையதாக விளங்குகிறது. ஆனாலும் யாருக்காவது போதாத காலம் வந்தால் குறும்பு செய்யத் தலைப்படுகிறார்கள். அப்போது சேரனுடைய தினவெடுத்த தோள்கள் பூரிக்கின்றன. பகைவர்களை அடியோடு கருவறுத்து விடுகிறான். அத்தகைய நிகழ்ச்சி மிக மிக அருமையாகவே நிகழும்.’’ ‘’அப்படியானால் அவன் இருக்கும் களத்துக்குச் செல்ல நல்ல வழி இருக்கிறதா?’’ "மெத்தென்ற வழி உண்டு. அதில் நடந்து செல்லலாம். மெல்லிய வழியில் மெல்ல மெல்ல நடந்து செல்லலாம். குறுக அடி வைத்து நடந்து போகலாம்.’’ ‘’போர் நடக்கும் இடத்தில் சென்றால் தீங்கு ஒன்றும் இல்லையா?’’ ‘’போர் இப்போது நடக்கவில்லையே. போர் முடிவு பெற்றது. போரில் வெற்றி பெற்ற மிடுக்கோடு மன்னன் பாடி வீட்டில் வீற்றிருப்பான். அந்தக் கோலத்திலே அவனைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். போவோமா?’’ ‘’அங்கே போய் என்ன செய்வது?’’ "உனக்கு நான் இதைச் சொல்ல வேண்டுமா? நீ இன்னும் இளங்குழந்தையா? கை நிறைய வளையல்களை அணிந்துகொண்ட சிறு பெண்ணாக இருந்த நீ இப்போது சில வளைகளை மாத்திரம் புனைந்திருக்கிறாயே; ஏன்?’’ ‘’ஆடும் போது வளைகள் உடைந்துவிடும். ஆதலின் சில வளைகளை அணிந்திருக்கிறேன். அது பற்றி இப்போதென்ன கவலை?’’ ‘’சில வளைகளை அணிந்த விறலியாகிய உனக்கு, நீ எதற்காக அப்படி அணிந்தாய் என்று தெரியும்போது, துணங்கையாடிய வெற்றியையுடைய அரசன் முன்னே சென்றால் இன்னது செய்யவேண்டுமென்று தெரியவில்லையா?’’ "ஓ ஓ! ஆட வேண்டுமென்று சொல்கிறீர்களோ! போர்க்களத்தில் ஆடல் பாடல் பொருத்தமாகுமா?’’ ‘’இப்போது நாம் செல்லப் போவது போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் களம் அன்று; போர் முடிந்த களம்; மன்னன் வீரரோடு துணங்கையாடும் களம். அந்த ஆட்டம் நிகழும்போது உன் ஆடல் நிகழக் கூடாதா? அங்கே போய் நீ ஆட வேண்டு மென்று எனக்கு விருப்பமாக இருக்கிறது; செல்வோமா?’’ ‘’நாம் மாத்திரமா போவது?’’ "இல்லை, இல்லை. உன்னுடைய ஆடலுக்கேற்பப் பாடும் பாணர்களையும் அழைத்துக் கொண்டு தான் போக வேண்டும். சேர மன்னனைக் கண்டு வரப் போகிறோம் என்று பாணரிடம் சொன்னால், நான் நீ என்று ஆயிரம் பேர் முந்துவார்கள்.’’ "அங்கே போனால் எவ்வகையான பாடல்களைப் பாடவேண்டும்?’’ ‘’தழிஞ்சித் துறைப் பாடல்களைப் பாடவேண்டும்.’’ ‘’அந்தத் துறை எதைச் சொல்வது?’’ ‘’மன்னர் பிரானுடைய கருணையையும் தூய வீரத் தையும் புலப்படுத்தும் துறை அது. தன்னை எதிர்த்த மறவர்களைக் கொன்று குவிக்கும் பேராற்றல் உடை யவன் சேரர் பிரான். இந்த வீரம் சிறப்புடையது தான். இதைக் காட்டிலும் சிறப்பான வீரம் ஒன்று உண்டு. புறமுதுகிட்டவரையும் அஞ்சினவரையும் கொல்லாமல் விடும் வீரம் மிகமிகச் சிறந்தது. தோல்வி யுற்றுப் புறங்காட்டும் வீரர் முதுகிலே வேல் ஓச்சாத தறுகண்மையைப் பாடும் பாட்டே தழிஞ்சித்துறைப் பாட்டு. பகைவரை அழிக்கும் வீரத்தைக் காட்டிலும் புறங்காட்டினோரைக் கொல்லாத வீரம் பெரிது. இல்லையானால் போரானது விலங்கினங்கள் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு சாவது போன்ற தாகிவிடும். அறப்போர் என்று போரைச் சிறப்பிப்பது சான்றோர் மரபு. தழிஞ்சித் துறையால் சொல்லப் பெறும் நிகழ்ச் சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் போரிடையே நிகழ் வதனால் தான் போர் அறத்தின் வழி நடப்பது என்று சொல்கிறார்கள். ஆதலின் அந்தத் தழிஞ்சியைப் பாட வேண்டும்.’’ "என்ன பண்ணிற் பாடலாம்?’’ ‘’பாணர்களை அழைத்துச் சென்று பாலைப் பண்ணிலே தழிஞ்சிப் பாட்டைப் பாடச் சொல்ல வேண்டும். பாணர் கையில் தான் யாழ் இருக்கிறதே! அவர்கள் நரம்புகளை யெல்லாம் நன்றாகத் தொடுத்துக் கட்டியிருக்கிறார்கள். அவர்கள் எப்படி யெல்லாம் மனத்திலே நினைக்கிறார்களோ, அப்படியெல்லாம் அந்த நரம்புகள் பேசுகின்றன. அவர்கள் விருப்பப்படி பணிந்து நடக்கும் ஏவலரைப் போல அவை ஒலிக் கின்றன. நரம்புக் கட்டாகிய தொடை அவர்கள் ஏவலின்படி நடப்பதால் அதைப் பணி தொடை என்று சொல்லலாம்.’’ ‘’யாழ் நரம்புக் கட்டு நன்றாக அமைந்தாற் போதுமா?’’ ‘’போதாது தான். அதை வாசிக்கின்றவர்களுக்குக் கலைத்திறமை வேண்டும். பல காலம் பயின்ற பழக்கம் வேண்டும். அவர்களுடைய விரல் பல்காற் பயின்று பயின்று யாழில் இன்ப இசையை எழுப்பும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அந்த யாழோடு தம் குரலை இணைத்து இன்னிசையை எழுப்பித் தழிஞ்சி பாடினால் எத்தனை இனிமையாக இருக்கும் ! பாலைப் பண்ணுக்கு ஏற்றபடி சுருதி கூட்டி நரம்புகளை மீட்டிக் குரலோடு புணர்ந்த இன்னிசையாலே தழிஞ்சி பாடுவதற்கு ஏற்ற பெரிய யாழைப் பாணர் வைத்திருக்கின்றனர். அவர் களோடு போகலாம்.’’ ‘’போர்க்களத்திற்கு ஏன் வந்தீர்கள் என்று சேரமான் கேட்கமாட்டானா?’’ ‘’நம்மைப் போன்ற கலைஞர்களைப் பாதுகாப் பதையே முதற் கடமையாகக் கொண்டவன் அல்லவா அவன்? பரிசிலர்களைக் கண்டால் அன்புடன் வர வேற்று அளவளாவும் இயல்புடையவன். அவன் கலைஞர்களை வலிந்து வருவித்து அவர்களுக்கு விருந்து அருத்திப் பரிசில் வழங்கும் புகழைத் தமிழ் நாட்டார் முழுவதும் அறிவார்களே. குடிமக்களைப் புரத்தலால் புரவலன் என்ற பெயர் மன்னனுக்கு அமைந்தது. சேர மன்னன் குடிமக்களைப் புரப்பதன்றி இரவலராகிய கலைஞர்களைப் புரப்பதைத் தானே விரும்பி ஏற்றுக் கொள்பவன்.’’ ‘’அவன் வாழ்க! மனைவி மக்களுடன் நீடூழி வாழ்வானாக!’’ ‘’மனைவி மக்கள் வாழ்க என்று நீ வாழ்த்தியவுடன் எனக்கு ஒரு நினைவு வருகிறது. அவனுக்கு மனைவியும் மக்களும் இருக்கிறார்கள். எல்லாச் செல்வங் களையும் பெற்ற சேர மன்னன் மக்கட் செல்வத்தையும் பெற்றிருக்கிறான். இளம்புதல்வர்கள் வருங்காலத் துக்கு அருந்துணையல்லவா? இளந்துணைப் புதல்வராகிய நல்ல வளத்தைப் பயந்த மகளிர் அவனுடைய தேவிமார். சிலம்பணிந்த காலும் அடக்கத்தை அணிந்த நெஞ்ச மும் உடையவர்கள் அவர்கள். கற்பிலே சிறந்தவர்கள். அறிவு நிரம்பியவர்கள். அவர்களுடைய புகழை நல்லிசைச் சான்றோர்கள் சேரனுடைய புகழோடு சேர்த்து வைத்துப் பாடுவார்கள். அந்த இசை எங்கும் பரந்து தோன்றும். அவர்கள் நெற்றியிலே திருமகள் விலாசம் கொஞ்சி நடமிடும். ஒண்ணுதல் மகளிராகிய அவர்கள் சேரன் வாழ்விலே மங்கலம் பெருக வாழ்கிறார்கள். அந்த வாழ்வுக்கு நன்கலமாக, துணையாக, வளமாக இளம் புதல்வரைப் பயந்து சிறந்து விளங்குகிறார்கள்.’’ "கலைஞர்களைப் பாதுகாத்துக் குடிமக்களைக் காவல் செய்து வருவதனால் அறம் நிரம்பியவன் என்று தெரிகின்றது. பகைவரை வென்று பொருள் பெறுதலால் பொருளாலே குறைவில்லாதவன் என்பதையும் உணர்கிறேன். மனைவிமாரும் மக்களும் நிரம்பினமையின் இன்பவாழ்விலும் ஏற்றம் பெற்றவனென்று தெரிந்து கொண்டேன்.’’ ‘’இன்பவாழ்வின் சிறப்பெல்லாம் மன்னன்பால் உண்டு. ஊடலும் கூடலுமாகிய காதல் வாழ்வு குடிமக்களுக்கு மாத்திரமா? மன்னனும் அந்த வாழ்வில் இன்புறுகிறான்.’’ "ஊடலா?’’ "ஆம்! ஊடல் இல்லாமல் இன்பவாழ்வு கருக்காயைப் போன்றதல்லவா? அரசனுடைய வாழ்க்கையில் மகளிர் ஊடுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் நேரும். ஆயினும் அவர்களுடைய ஊடலை அவன் நீட்டிக்க விடமாட்டான். பகைவருக்கும் அஞ்சாத மன்னன் மகளிர் ஊடலால் கண் சிவந்து பார்க்கும் பார்வைக்கு அஞ்சுவான். அவர்களின் துனி (ஊடல்) யைக் கண்டு அஞ்சுவதை யன்றி வேறு அச்சத்தை அவன் அறியான்……… ஏன்? மற்றொன்றுக்கும் அஞ்சுவான். மகளிர் ஊடல் கண்டு அஞ்சுவதைக் காட்டிலும் மிகுதியாக அதற்கு அஞ்சுவான்.’’ ‘’அது என்ன? மன்னனுடைய பெரும் புகழை யெல்லாம் சொல்லிவிட்டு இப்போது அவனுடைய குறைகளைச் சொல்ல வருகிறீர்களோ?’’ ‘’குறை அன்று. மகளிர் துனித்த (ஊடிய) கண்ணைக் கண்டு அஞ்சுவான் என்று சொன்னேன். அப்படிச் சொல்வது அவனுக்கு இழிவாகுமா? அவனுடைய இன்ப வாழ்க்கையின் சிறப்பையல்லவா அது எடுத்துக் காட்டுகிறது? அதுபோல இந்த அச்சமும் அவனுடைய மாட்சியைத் தெரிவிப்பதே யாகும்.’’ ‘’அப்படி உயர்வு தரும் அச்சம் என்று எதைச் சொல்கிறீர்கள்?’’ ‘’பகைவரை அஞ்சாமல் அவர் மிடல் தபும்படியாகச் செய்யும் சேரமான், மகளிர் துனித்த கண்ணைக் கண்டு அஞ்சுவதைக் காட்டிலும் இரவலருடைய துன்பத்தைக் கண்டால் மிக அஞ்சி நடுங்குவான். நம்மைப் போன்ற பரிசிலர்களின் வயிறு வாடாமல், முகம் வாடாமல், உள்ளம் வாடாமல் இருக்கச் செய்பவன் அவன். குழந்தையின் வாடிய முகம் கண்டால் தாய் எப்படி வருந்துவாளோ, அப்படி இரவலர்களுடைய புன் கண்ணை (துன்பத்தைக்) கண்டு அஞ்சி வருந்துவான். அதனால் தான் நாம் அவனைச் சென்று கண்டு வரலாம் என்று சொன்னேன். அத்தகைய வள்ளலை வேறு எங்கே காணப்போகிறோம்?’’ "இரவலருக்கு ஏற்ற புரவலரிற் சிறந்தவன் அவ னென்று உணர்ந்தேன். நம்மை எதிர்கொண்டு புரக்கும் கோமானைக் கண்டு வருவதற்குத் தடை என்ன? உடனே புறப்பட வேண்டியது தான்.’’ விறலியை நோக்கிக் கூறுவதாக அமைந்திருக்கிறது பாட்டு. ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்ப குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே, துணங்கை ஆடிய வலம்படு கோமான்; மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச்         5 செல்லா மோதில், சில்வளை விறலி? பாணர் கையது பணிதொடை நரம்பின் விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக் குரல்புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி, இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த         10 வளங்கெழு குடைச்சூல் , அடங்கிய கொள்கை, ஆன்ற அறிவின், தோன்றிய நல் இசை, ஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சும் புரவுஎதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே.         15 புறங் காட்டி ஓடாத உறுதியையுடைய பகை வீரரது வலிமை கெட, பெரிய பனந்தோட்டாலாகிய மாலையோடு பெருமையையுடைய வீரக் கழல் சிவக்கும்படியாக இரத்தத்தைச் சிதறுகின்ற, புலால் நாற்றத்தையுடைய போர்க்களத்தில் இருக்கிறான், வெற்றி பெற்ற களிப்பினால் துணங்கைக் கூத்தை ஆடிய அரசன்; மெத்தென்ற வழியில் சிறிய அடிகளை வைத்து நடந்து போவோமா? சில வளைகளை அணிந்த விறலியே! பாணர் கையில் உள்ளதாகிய, ஏவல் கேட்பது போல நினைத்ததை ஒலிக்கும் கட்டினையுடைய நரம்பினையுடையதும், விரலால் வாசித்துப் பழகியதுமாகிய பெரிய யாழிலே பாலைப் பண்ணை அமைத்து, தம் குரலோடு ஒன்றி இசைக்கின்ற இனிய இசையிலே தழிஞ்சி என்னும் துறைக்கு உரிய பாடலைப் பாடி, இளமையையுடைய, பிற்காலத்தில் துணையாக உதவும் புதல்வராகிய நல்ல செல்வத் தைப் பெற்ற, அழகு மிக்க சிலம்பையும், அடக்கமான கற்பையும், நிரம்பிய அறிவையும், விளக்கமாகத் தோன்றிய நல்ல புகழையும், ஒளியையுடைய நெற்றியையும் உடைய தேவிமார் ஊடலால் சிவந்த கண்ணைக் கண்டு அஞ்சுவதைக் காட்டிலும், பரிசிலர்களுடைய துன்பத்தைக் கண்டு மிகுதியாக அஞ்சும், அவரைப் பாதுகாப்பதைத் தானே வலிய ஏற்றுக் கொள்ளும் இயல்பையுடைய அவனைக் கண்டு வருவதற்கு. ’கோமான் (4) புலவுக்களத்தோன் (3); பாலை பண்ணி (8), தழிஞ்சி பாடி (9), எதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கு (15), செல்லாமோ? (6) என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். 1, பூட்கை - மேற்கொண்ட உறுதி. மிடல் - வலிமை. தப - கெட. 2. இரும் பனம் புடையல் - பெரிய பனந் தோட்டு மாலை. வான்கழல் - பெருமையையுடைய கழல். 3. பனிற்றும் - சிதறும்; தூவும். புலவு - புலால் நாற்றம். 4. துணங்கை : பேய் ஆடும் துணங்கை யென்றும் வீரர் ஆடும் துணங்கை யென்றும் மகளிர் ஆடும் துணங்கை யென்றும் பலவகை உண்டு. இது வீரர் ஆடுவது. இரண்டு கைகளையும் விலாப் பக்கத்தில் முடக்கி யடிப்பது துணங் கைக் கூத்து என்பர். ‘’பழுப்புடை இருகை முடக்கி அடிக்கத் துடக்கிய நடையது துணங்கை யாகும்’ என்பது இதன் இலக்கணம். வலம்படு - வெற்றி தோற்றிய ; படுதல் - உண்டாதல். 5. மெல்லிய - மென்மையான; மெத்தென்ற. வகுந்து - வழி. சீறடி - சிறு அடி. ஒதுங்கி - நடந்து. 6. செல்லாமோ - செல்வோமா. ‘செல்லுவாமோ என்பதன் மரூஉ’(ஐயரவர்கள்) தில் : விருப்பத்தைத் தெரிவிக்கும் இடைச்சொல். சில்வளை விறலி - சிலவாகிய வளைகளை அணிந்த விறலி, பல் வளையிடுவது பெதும்பைப் பருவத்ததாதலின், அஃதின்றிச் சில்வளையிடும் பருவத்தாளென அவள் ஆடல் முதலிய துறைக்கு உரியளாதல் கூறியவாறு’ என்பது பழைய உரை. 7. பணி - பணியும்; ஏவல் செய்யும்; உள்ளம் நினைத்த படி விரல் மீட்டியவுடன் ஒலிக்கும். தொடை - நரம்புக் கட்டு. நரம்பு என்பது சுரத்துக்கும் பெயர். 8. விரல்கவர் - விரலால் தடவி வாசிக்கப் பெறும். விரல் கவர் யாழ் என்றதனாற் பயன், வாசித்துக் கைவந்த யாழ் என்றவாறு (பழைய உரை.) பேரியாழ் - பேர் யாழ்: பெரிய யாழ், இதனையுடைய பாணர் பெரும்பாணர். பண்ணி - சுருதி சேர்த்து அமைத்து. 6. குரல் - சாரீரம். தழிஞ்சி - தோல்வி யுற்றோர் புறங்காட்டும்போது அவர் முதுகில் படை ஏவா திருத்தல்; ’’ அழிகுநர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக், கழிதறு கண்மை காதலித்து உரைத்தன்று’’ (புறப்பொருள் வெண்பாமாலை, 55) என்பது இத்துறையின் இலக்கணம். இராவணன் முதல் நாள் போரில் தன் படைகளை இழந்து வெறுங்கையனாக நின்றபோது இராமபிரான் அவன் மேல் அம்பை விடாமல், “இன்று போய் நாளை வா” என்று சொன்னது இத் துறையின் பாற் படும், 8. இம்மையில் முதுமைக் காலத்துக் காத்தலாலும், மறுமையில் தாம் செய்யும் பிதுர்க் கடன் முதலியவற்றால் நன்மை எய்தச் செய்தலாலும் புதல்வரைத் துணையென்றார். புதல்வராகிய நல்ல வளம். வளம் - செல்வம் ; "தம்பொருள் என்பதம் மக்கள்’’ என்று திருக்குறளிலும் வருகின்றது. பயந்த - பெற்ற. 11. வளம் கெழு - அழகு பொருந்திய குடைச்சூல் - சிலம்பு . புடைத்து உள்ளே பரலையுடையதாக இருப்பதனால் இப்பெயர் பெற்றது. அடங்கிய கொள்கை - அடக்கமான கற்பு: கொள்கை - கற்பு . கற்பில், ஆறிய கற்பு அல்லது அறக் கற்பென்றும், சிறிய கற்பு அல்லது மறக்கற் பென்றும் இருவகை உண்டு. கண்ணகியின் கற்பு , சீறிய கற்பு. அடங்கிய கொள்கை என்றது அறக் கற்பை. 12. ஆன்ற - நிரம்பிய. தோன்றிய - விளக்கமாக உள்ள . இசை - புகழ். 13. துனித்தல் - ஊடலால் சினங்கொள்ளுதல். 14. இரவலர் - பரிசில் பெற வருவோர் ; புலவர் . பாணர், விறலியர், கூத்தர் ஆகியவர். புன்கண் - துன்பம். 15. புரவு - காப்பாற்றுதல். எதிர் கொள்பவன் - ஏற்றுக் கொள்பவன். கண்டனம் வரற்கு - கண்டுவர ; கண்டனம்: முற்றெச்சம்.. இப்பாட்டின் துறை முதலியன வருமாறு : துறை - விறலியாற்றுப்படை.         வண்ணம் - ஒழுகு வண்ணம். தூக்கு - செந்தூக்கு.         பெயர் - சில்வளை விறலி. விறலியைப் பார்த்து, "போய் வரலாமா?’’ என்று கூறி வழி காட்டினமையால் விறலியாற்றுப்படை ஆயிற்று. ------------------------------------------------------------------------ 1. துணங்கை தூங்க" (56) என்று திருமுருகாற்றுப்படையில் வரும் பகுதிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் இந்தச் சூத்திரத்தை மேற்கோளாகக் காட்டுகிறார். ↩︎ பாசறை ஓலக்கம் நல்லிசைச் சான்றோராகிய புலவர்களுக்குள் கபிலருக்கு உள்ள பெருமை வேறு எந்தப் புலவருக்கும் இல்லை. அவரைப் பிற புலவர்கள் தம்முடைய பாட்டிலே வைத்துப் பாராட்டி யிருக்கிறார்கள். சங்க காலத்து நூல்களிலே மூன்று வரிசைகள் உண்டு. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பவை அவை. அந்த மூன்று வரிசைகளிலும் கபிலருடைய பாடல்கள் இருக்கின்றன. கபிலர் பாரியின் அவைக்களப் புலவராக இருந்தார். பறம்பு நாட்டுக்குத் தலைவனாக விளங்கினவன் வேள் பாரி. கபிலருக்கும் பாரிக்கும் இருந்த நட்பு மிகச் சிறந்தது. பாரி இறந்தான். அவனுடைய பிரிவாற்றாமல் கபிலர் மிக வருந்தினார். ‘அவனைப் போன்ற வள்ளலை இனி எங்கே காணப்போகிறோம்’ என்று ஏங்கினார். புலவர் பலர் சேர நாட்டுக்குச் சென்று வந்த போது அங்குள்ள சேர மன்னன் ஈகையிற் சிறந்தவ னென்றும், உயர் குணங்கள் நிறைந்தவனென்றும் சொன்னார்கள். சேரமானுடைய புகழைச் சொல்லச் சொல்ல, உலகிலிருந்து ஈகை அடியோடு ஒழிந்து போகவில்லை என்ற ஆறுதல் கபிலருக்கு உண்டாயிற்று. ‘இனிமேல் பாரியை நாம் பார்க்கப் போவதில்லை. திரும்பி வாராத மேல் உலகத்துக்கு அவன் பாசறை ஓலக்கம் போய்விட்டான். அவனை நினைந்து நினைந்து ஏங்கிக் கொண்டிருப்பதைவிட, அவனைப் போன்ற வள்ளல் என்று சொல்கிறார்களே, அந்தச் சேரமானைப் போய்ப் பார்த்து வரலாம்’ என்ற யோசனை அவருக்கு உண்டாயிற்று. “பாரி வாழ்ந்திருந்த காலத்தில் வேறு யாரிடமும் சென்று கை நீட்டாமல் வாழ்ந்தோம். இப்போது வேறு ஒரு மன்னனிடம் சென்று பரிசில் பெறுவதா?” என்று மற்றோர் எண்ணம் எழுந்தது. “நாம் பரிசில் பெறுவதற்காகப் போகவேண்டாம். இத்தனை பேர் அவனுடைய கொடையைப் பாராட்டிப் பேசும்போது நாமும் சென்று அதனைப் பார்த்து வாழ்த்திவிட்டு வரலாமே ! அதில் இழுக்கு ஒன்றும் இல்லையே! பாரியைப் பாராமல் வெறிச்சென்றிருக்கும் கண்களுக்கு அவனைப் பார்த்தாவது ஆறுதல் உண்டா கட்டும். பாரியின் ஈகையைப் பாட வழி இல்லாமல் அடைத்துப்போன நாக்கு, அவன் உண்மையிலே ஈகைத்தன்மை உடையவனாகத் தோன்றினால் சில பாடல்களைப் பாடட்டுமே. இதனால் நம்மிடம் உள்ளது யாதும் குறையாது. ஆதலால் கட்டாயம் போய் வரவேண்டும்” என்று தீர்மானித்தார். புறப்பட்டு விட்டார். அப்போது சேரமான் செல்வக் கடுங்கோ வாழி யாதன் ஒரு போரில் வெற்றி பெற்றிருந்தான். இன்னும் களத்திலிருந்து வஞ்சிமா நகருக்கு வந்து சேரவில்லை. போர்க்களத்தைச் சார்ந்த பாசறையிலே வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தான். கபிலர் நேரே அந்தப் பாசறைக்கே போனார். போர்க்களத்தின் வழியே சென்றார். போர்க்களம் முழுவதும் ஒரே பிணக்காடு. யானைகளின் உடம்புகள் குன்றுகளைப் போல நெடுகக் கிடந்தன. வாளினால் வெட்டுண்டும் வேலினாற் குத்துண்டும் சிதைந்த உறுப்புக்களுடன் அவை கிடந்தன. இந்தப் பிண நாற்றம் காத தூரம் வீசியது. மெல்லப் பாசறையை வந்து அடைந்தார் கபிலர் பல கூடாரங்கள் அங்கே இருந்தன. பாசறைக்குள்ளே புகுந்தார். எந்தத் திக்கை நோக்கினாலும் ஆரவாரமாக இருந்தது. ஒள் வாளினாலே வெட்டுண்ட களிறுகளின் புலால் நாற்றம் வீசுகின்ற பாசறை-யானாலும் உள்ளே புகுந்தால் ஏதோ விழா நடக்கின்ற சிறிய ஊரைப்போல இருந்தது. வெளியிலே போர்க்களத்தைப் பார்த்தபோது, எத்தனை படைகள் படப்படப் புடனும் வேகத்துடனும் சினத்துடனும் முட்டியும் மோதியும் போராடியிருக்க வேண்டும் என்று தோன் றியது. அத்தனை படபடப்போடு போர் செய்த வீரர்களே இப்போது பாசறையில் உள்ள தங்கள் கூடாரங்களில் சிறிதும் பரபரப்பின்றிப் பாடியும் சிரித்தும் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். படை வீரர்கள் தங்கியிருந்த இடங்களைத் தாண்டிச் சென்றார். சில படைத் தலைவர்களுடைய இருக்கைகள் இடையே இருந்தன. அவை சற்றுப் பெரியவைகளாக இருந்தன. அவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டே போனார். எல்லாவற்றையும் விடப் பெரிய கூடாரம் - படவீடு - ஒன்று பாசறையின் நடுவிலே இருந்தது. அதன் மேல் பெரிய விற்கொடி பறந்தது. அதுதான் அரசன் தங்கியிருக்கும் இடமாக இருக்க வேண்டும் என்று புலவர் ஊகித்தார். அதனை அணுகும் போது உள்ளே பாட்டொலி கேட்டது. கபிலர் மெல்ல அந்தக் கூடாரத்துள் நுழைந்தார். சேர அரசன் உயர்ந்த ஆதனத்தில் வீற்றிருந்தான். அருகிலே படைத் தலைவர்களும் அமைச்சர்களும் அமர்ந்திருந்தார்கள். வீரர்கள் சிலர் சற்று எட்டி நின்று கொண்டிருந்தார்கள். யாரோ பாணன் யாழை மீட்டிப் பாடிக்கொண்டிருந்தான். போர்க் களத்தில் புலால் நாற்றம் வீசும் பாசறையிலே சேரன் இருப்பதாகவே தோன்றவில்லை. அங்கிருந்த அலங்காரங்களும் அமைதியும் உவகையும் மணமும் போர்க்களத்தினிடையே இருக்கிறோம் என்ற நினைவே உண்டாகாமல் செய்து விட்டன. அரசன் இயல்பாகத் தன் அரண்மனையில் கொலு வீற்றிருப்பது போன்ற தோற்றமாக இருந்தது அது. அவர் அப்போது பாரியின் ஓலக்கத்தை நினைத்துக் கொண்டார். ஒரு நாள் அவனைத் தேடிக்கொண்டு ஒரு விறலி வந்தாள். ஆடல் பாடலில் வல்லவள் அவள். அவள் அன்று ஆடவில்லை. பாரியின் முன் பாடினாள். முழவு முழங்கியது. மிருதங்க ஒலிக்கு ஏற்பக் கையால் தாளம் போட்டாள் அவள். அந்தக் கையால் அவள் முத்திரைகளைக் காட்டி ஆடும் ஆற்றல் உள்ளவள். முத்திரை காட்டும் கையைத் தொழிற்கை என்று சொல்வார்கள். அன்று அந்தப் பாடினி தொழிற்கையைக் காட்டவில்லை. தன் எழிற் கையை, வெறுங் கையை, காட்டினாள். பாரியினது வேலைப் பாடினாள். நிலவைப் போல வெள்ளொளி வீசும் வேல் என்று பாடினாள். நிலா எங்கும் பரந்து ஒளிர்வது போல வேலின் புகழ் எங்கும் பரவியிருக்கிற தென்று பாடினாள். இப்படி நிலவின் அன்ன வெள்வேலைப் பாடிய பாடினி அமைதியாக இருந்து தன் வெண்கையை முழவிற்கு ஏற்பத் தாளம் போட்டு வீசினாள். ஆடவில்லை. அன்று நடந்த விழாவை , பாடினியின் வெண்கை விழாவை, இப்போது கபிலர் நினைத்துப் பார்த்தார். இங்கும் ஆரவாரம் இருந்தாலும் அமைதியாக இருப்பதை உணர்ந்தார். கபிலரைக் கண்டவுடன் அரசனுடன் இருந்தவர்களில் ஒருவர் அவரை வரவேற்றார். அங்கே இருந்தவர்களில் யாரும் அவரை முன்பு கண்டதில்லை. ‘’தாங்கள் யார்?’’ என்று வரவேற்றவர் கேட்டார். ‘’கபிலன் என்று என்னைச் சொல்வார்கள்" என்றார் புலவர். “ஆ! பொய்யா வாய் மொழிக் கபிலரா!’’ அந்தப் படைத் தலைவர் வியப்பில் ஆழ்ந்தார். கபிலரை நேரிலே பாராவிட்டாலும் அவர் புலமையைப் பற்றிய புகழ் எங்கும் பரந்திருந்தது. அதனால் தான் அவர் திடுக்கிட்டார். உடனே அவரை அரசனுக்கு அருகே அழைத்துச் சென்று,”புலவர் பெருமான் கபிலர்’’ என்றார். அரசன் எழுந்து நின்றான். ‘’அமர வேண்டும், அமர வேண்டும்’’ என்று உயர்ந்த ஆதனம் ஒன்றைக் காட்டினான். கபிலர் அமர்ந்தார். "தங்களைக் காணும் பேறு இன்று மிக அருமையாகக் கிடைத்தது. போரில் வெற்றி பெற்றேன். அதனால் யாவரும் விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இன்று அதைவிடப் பெரிய விழாவாகி விட்டது. தங்களுடைய வரவால் நான் பெறற்கரிய பேறு பெற்றேன். இவ்வளவு காலமாகத் தங்களுடைய புகழைக் கேட்டிருக்கிறேன். எத்தனையோ புலவர்கள் வஞ்சி மா நகரத்துக்கு வந்திருக்கிறார்கள். தாங்கள் ஒருமுறை யேனும் வந்ததில்லை. அரண்மனையில் பலரும் கூடிய அவைக்களத்தில் தங்களுக்கு உரிய மதிப்பை அளித்துப் பாராட்டும் பாக்கியத்தை இதுவரையில் நான் பெறவில்லை. தாங்கள் எப்போதும் அருகிலே இருக்கும் படியான பேறு பெற்ற பாரி குறு நில மன்னன் ஆனாலும் அவனுடைய பெருமை மிகப் பெரிது. தங்கள் வருகையை முன்பே தெரிவித்து, வஞ்சி மாநகரத்தினர் தங்களை வரவேற்று வாழ்த்திப் பெருமை கொள்ளும்படி வந்திருக்கலாமே!’’ சேரமான் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தார் கபிலர். பாரியைப் பற்றிய எண்ணந்தான் அவருக்கு உண்டாயிற்று. சேரமானும் அவனைப் பற்றிச் சொன்னான் அல்லவா? அந்தப் பாரி உயிரோடு இருந்தால் அவர் இங்கே வந்திருப்பாரா? பாரி முடியுடைய மன்னன் அல்லன் ; சிறிய நாட்டை உடையவன் தான். ஆயினும் அவன் நாடு, மலையைச் சார்ந்த பறம்பு நாடு, எவ்வளவு வளம் பொருந்திய தாக இருந்தது ! அங்கே உள்ள பலா மரங்கள் நன்றாக வளர்ந்து பழுத்து நின்றன. யார் வேண்டுமானாலும் அதைத் தின்று பசியாறலாமே. உழவர் உழுது பயிர் இடாத விளைவு அது. அந்தப் பழம் கனிந்து வெடித்திருக்கும். உள்ளிருக்கும் செஞ்சுளை வெளியிலே தெரியும். பலாப் பழத்துக்குப் புண் வந்தது போல இருக்கும். பிளந்து வெடித்த புண்ணிலிருந்து தேன் அரித்து விழும். வாடைக்காற்று வீசும்போது அந்தத் தேன் சிதறும் பழத்தையும் தேனையும் உண்டு அருவி நீரைப் பருகினால் பசி இருக்குமிடம் தெரியாமல் போய் விடுமே. பாரி பெருவிரலை யுடையவனாதலின் அவனோடு பொர லரிது என்று முடியுடை மன்னரும் அஞ்சினர். அவனுக்கு வஞ்சி மாநகரத்தைப் போன்ற பெரிய இராசதானி இல்லை. பெரிய அரண்மனையும் இல்லை. ஆனாலும் அவன் மாளிகை அழகாகவே இருந்தது. அந்த நல் இல்லிலே அற்புதமான சிற்ப வேலைப்பாடு கள் அமைந்திருந்தன. ஒவ்வொரு பகுதியும் அழகுடன் விளங்கியது. அந்த இல்லத்தை முற்றும் பார்த்தால் ஒரு முழுச் சித்திரம் போல, பல வண்ண க் கலப்புடன் பல உருவங்களுடன் இணைந்து இசைந்து அமைந்த ஓவியம் போல இருந்தது; ஓவத்து அன்ன வினைபுனை நல் இல். அந்த இல்லிலே தனியே அந்தப்புரமென்று ஒன்று இல்லை. பலரை மணம் செய்து கொள்ளும் முடி மன்னர்களுக்கு மனைவிமார் பலர் இருப்பார்கள். மந்தையை அடைக்கும் பட்டி போல அந்தப்புரம் அவர்களுக்கு வேண்டும். பாரி கற்புடைய மனைவி ஒருத்தியோடு இல்வாழ்க்கை நடத்தினான். அவன் பறம்பு நாட்டுக்குத் தலைவன். அவளோ ஓவத்தன்ன தொழிற் சிறப்புடைய நல் இல்லுக்குத் தலைவி. அவள் அழகு உலகம் பெறுவதாயிற்றே ! கொல்லி மலையிலே ஒரு பாவை இருக்கிறதென்றும் அது தன் அழகாலே எல்லோரையும் மயக்கி மூர்ச்சை போடும்படி செய்துவிடு மென்றும் சொல்லுவார்கள். இங்கே பறம்பு மலையில் வளரும் பாவை போலப் பாரியின் இல்லக் கிழத்தி விளங்கினாள். கொல்லிப் பாவை பிறர் உயிர் கவரும் பொல்லாத பாவை. இவளோ நல்லவள். பாவையன்ன நல்லோளுக்குக் கணவன் பாரி. இவற்றை எல்லாம் கபிலர் நினைத்தார். பாரியின் வீரத்தையும் எண்ணினார். உன்னம் என்பது ஒரு மரம். இப்போது மலையாளத்தில் இலவ மரத்தை உன்ன மென்று சொல்கிறார்கள். அந்த மரத்தைக் கொண்டு பழங்காலத்தில் நிமித்தம் பார்த்தார்கள். ஓர் அரசன் போர்க்குப் புறம்படும்போது அவன் வெற்றி பெறுவானானால் அந்த மரம் தளிர்த்துப் பூத்து நிற்கும். அவன் தோல்வியுறுவானாயின் அது இலை கருகி வாடி விடுமாம். அந்த மரத்தைக் கண்டு நிமித்தம் பார்ப்பதை உன்ன நிலை என்று சொல்வார்கள். உன்ன மரத்தின் கால் பொலிவற்றிருக்கும். அதன் பூ, பொன்னின் நிறம் உடையது. இலை சிறிதாக இருக்கும். பொன்னின் அன்ன பூவையும் சிறிய இலையையும் உடைய புன் கால் உன்னத்தைப் பாரியின் பகை நாட்டிலுள்ளார் நிமித்தம் அறியப் பார்த்தால் அந்த மரம் வாடி விடும். பாரி தன் பகைவருடைய உன்ன மரத்துக்கும் பகைவனாக இருந்தான். பகைவர் குலம் கெடுவதை அவர் நாட்டு உன்னமரம் வாடிக் காட்டியது. ஆதலின் அவனை உன்னந்துப் பகைவன் என்று புலவர் பாடினர். கபிலர் பாரியினது நாட்டை நினைத்தார். அவர் உள்ளம், அங்குள்ள மலையையும் பலா மரத்தையும் அதிலே பழுத்த பழத்தையும் அதில் உள்ள வெடிப் பாகிய புண்ணையும் அதன் வழியே அரித்து ஒழுகும் தேனையும் அதனைச் சிதறும் வடகாற்றையும் ஒரு முறை கண்டு வந்தது. அப்பால் பாரியின் இல்லத்துக்குள் புகுந்து அவன் மனைவியைப் பார்த்தது. அவனுடைய பகைவர் நாட்டிலே கரிந்து கிடக்கும் உன்ன மரத்தைச் சுற்றி வந்தது. இவ்வளவையும் நினைப்பதற்குக் காரண மான தலைவன் யாரோ அவனையே இப்போது காண லுற்றது. பாரி கபிலருடைய அகக் கண்ணின் முன் நின்றான். அவனுடைய மலர்ந்த மார்பைக் கண்டார். அதில் பூசிப் புலர்ந்த சந்தனமும் தெரிந்தது. மார்பிலே பூசின சாந்தம் ஈரமற்றுப் புலர்ந்தாலும் அவன் உள்ளத்திலே ஈரம் என்றும் புலர்வதே இல்லை. அந்த ஈரத்தின் விளைவே அவனுடைய ஈகை. அவன் உயிர்விடும் வரையில் அவன் ஈகை புலரவில்லை. புலரா ஈகையை உடைய மகா தாதா அவன் ; மா வண் பாரி! நினைவுலகத்திலிருந்து உண்மையுலகத்துக்கு வந் தார் கபிலர். ‘இப்போது பாரி இல்லையே!’ என்ற நினைவு வந்தபோது அவர் கண் ஈரமாகியது. கண்ணைத் துடைத்துக்கொண்டார். சேரமான், கபிலர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக் கிறார் என்பதை உணர்ந்து கொண்டான். "தாங்கள் ஏன் ஒன்றும் பேசாமல் இருக்கிறீர் கள்? என்னால் விரைவாகச் செய்ய வேண்டிய ஏவல் ஏதேனும் உண்டானால் தெரிவியுங்கள் ; நிறைவேற்று கிறேன். தாங்கள் இந்த நிலையில் என்னை வந்து சந்திப்பதற்குத் தக்க காரணம் இருக்கவேண்டும். தங் களைத் தக்கபடி உபசரிக்கும் வசதிகள் இங்கே இல்லை. தங்களைக் காணவில்லையே என்ற குறை நெடு நாட் களாக இருந்தது. அந்தக் குறை இப்போது, நீங்கியது.’’ ’’ அரசர் பிரானே!’’ கபிலர் பேசலானார். ’’ நான் இதற்கு முன் இங்கே வந்தவன் அல்லன் என்பது உண்மைதான். எந்த இடத்துக்கும் நான் போகவில்லை. ஒரு கணங்கூட எம் கோவைப் பிரிய மனம் இல்லாமல் உடன் உறைந்தேன். அதனால் வேறு இடங்களுக்குப் போக வேண்டும் என்ற எண்ணமே உண்டாகவில்லை.’’ ’’ வேளாக இருந்தாலும் பாரியினுடைய பாக் கியமே பாக்கியம்!’’ என்று சேரன் இடையிலே சொன்னான். ‘’ஆம்; எம் கோ , வேள் தான் ; சிற்றரசன் தான். ஆனாலும் அவன் நாடு பலாப் பழம் விளைவது ; அவன் வீடு ஓவியம் போன்றது ; அவன் மனைவி கொல்லிப் பாவை போன்றவள் ; அவன் பெருவிரலை உடையவன் ; உன்னத்துப் பகைவன்.’’ "அவன் வீரத்தை நான் கேட்டிருக்கிறேன்.’’ ’’ அவன் வீரத்தைவிட ஈகை மிகப் பெரியது. என்றும் புலராத ஈகையை உடையவன்.’’ "இல்லையானால் கலைஞர்கள் அத்தனை அன்புடை யவர்களாக இருப்பார்களா?’’ "ஆம்; கலைஞர்களிடத்திலும் புலவர்களிடத்தி லும் அவனுக்கு இருந்த அன்பு பெரிதுதான். அவனுடைய சிறிய நாட்டைத் தேடி அவர்கள் வந்தார் கள்; அவன் கொடுப்பதைப் பெற்று அளவிறந்த இன்பம் அடைந்தார்கள். ஆனால் இன்றோ -!’’ சற்றுக் கபிலர் மௌனமானார். மறுபடியும் பேசத் தொடங்கினார். ‘’அவனிடம் வந்து பரிசில் பெற்ற கலைஞர் களுக்கு வேறு இடம் செல்ல மனம் இல்லை. அவனைப் போல இனி யார் இருக்கிறார்கள் என்று ஏங்கிக் கிடக் கிறார்கள். முழவு வாசிக்கிறவர்கள் முழவை மறந்தார் கள். அதில் பூசியிருக்கும் மார்ச்சனை உலர்ந்து கிடக் கிறது. பரிசிலர்கள், தம்மைப் பாதுகாக்கும் புரவலனைக் காணாமல் வருந்தி நைந்து வாடுகிறார்கள். திரும்பி வாராத தூரத்தில் உள்ள இடத்துக்கு அவன் போய் விட்டான்.’’ ’’ மறுபடியும் அவன் வந்து பிறப்பான் ’’ என்று சேர மன்னன் ஆறுதல் கூறினான். ‘’இல்லை ; வரமாட்டான். அவனுக்கு இனிப் பிறவி இல்லை. புண்ணியம் செய்தோர் புகும் துறக்க மாக இருந்தால் புண்ணியப் பயன் இருக்கும் வரையில் தேவராக வாழ்வார் ; அப்பால் மீட்டும் இங்கே பிறப் பார் . எம் கோ புண்ணியத்தையும் பிறருக்கு ஈயும் பெரு வண்மையோன். ஆதலின் தேவலோகத்துக்கும் மேற்பட்ட முத்திப் புலத்தை அடைந்து விட்டான். வானோர்க்கும் உயர்ந்த உலகத்துக்குப் போனவர் திரும்புவதில்லை. பாரியும் வாராச் சேட் புலம் படர்ந்தான்.’’ ‘’அவன் பெருமையைத் தாங்கள்’ உணர்ந்த அளவுக்கு நான் அறிய முடியுமா?’’ "அவன் போய் விட்டான். அவனைப்போல யாரும் உலகத்தில் இல்லை யென்று நானும் எண்ணியிருந்தேன். அதனால் இதுகாறும் இங்கே வரவில்லை. இப் போது வந்தேன். எனக்குப் பரிசில் கொடுத்த கோ இறந்தான் , நீ அளிப்பாயாக என்று இரக்கும் பொருட்டு நான் வரவில்லை. நான் உள்ளதை உள்ள படி பேசுகிறவன். அளவு கடந்து, உண்மையை மீறி, பேசமாட்டேன்; எஞ்சிக் கூறேன்.’’ ‘’அதனை நான் அறிய மாட்டேனா?’’ "அறிந்திருப்பீர்கள்; மற்றவர்களுக்கும் தெரியட்டு மென்று சொல்கிறேன். நான் இங்கே வந்தது எதற்காக என்று சொல்கிறேன். மன்னர்பிரானைப் பற்றி என்னிடம் பேசினவர்கள் சில செய்திகளைச் சொன்னார்கள் …’’ ‘’என்ன சொன்னார்கள்?’’ என்று ஆவலோடு கேட்டான் மன்னன். ‘’பாரியைப் போன்றவர்களை இனி எங்கே பார்க்கப் போகிறேன் என்று அலமந்திருந்த என்னிடம் எம்பெருமானுடைய ஈகைச் சிறப்பை அந்தப் புலவர் கள் சொன்னார்கள். ’சேரர் பெருமான் வரையறை யின்றி ஈயும் தன்மை உடையவர். அளவுக்கு மிஞ்சிக் கொடுக்கிறவர்’ என்று சொன்னார்கள் . அது மாத்திரம் அல்ல. அப்படி ஈந்த பிறகு, ஐயோ கொடுத்து விட்டோமே என்று அது பற்றிச் சிறிதும் நினைந்து வருந்துவதில்லை. யாருக்கு என்ன கொடுத்தோம், ஏன் கொடுத்தோம் என்பதைச் சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை’ என்றார்கள். அதைக் கேட்டு என் காது குளிர்ந்தது; ‘ஈந்தது பற்றி இரங்கார்’ என்று புலவர் கூறியது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பினேன். புலவர்கள் அதற்கு மேலும் சொன்னார்கள். கொடுக்கக் கொடுக்கப் பெற்றுக்கொள்வது இரவலர் இயல்பு. கொடுத்ததனால் உவகை அடைவது கொடையாளர் இயல்பு. இங்கே எம்பெருமான் பெற்ற செல்வத்தைப் பிறருக்கு அளிப்பதற்காகவே பாதுகாத்து வைத்திருப்பது போல இருக்கிறது என்கிறார்கள். நாம் கொடுக்கிறோம் என்ற பெருமிதமோ, அதனால் மகிழ்ச்சியோ இல்லாமல் இடைவிடாது ஈவதிலே தலை சிறந்து நிற்பதைக் கேள்வியுற்றேன். ‘ஈயுந்தோறும் மகிழ்ச்சி அடைவதில்லை’ என்ற சொற்கள் என் உள்ளத்தைக் குளிரச் செய்தன. இதோடும் புலவர்கள் நிற்கவில்லை. ஒருமுறை ஒருவன் வந்து பொருள் பெற்றுச் சென்று, மீட்டும் அவனே வந்தால், இப்போது தானே பெற்றுச் சென்றாய்?’ என்று கேட்பதில்லையாம். இரு முறை அல்ல, பன் முறையும் வந்தாலும் இல்லை யென்று உரைப்ப தில்லையாம். அப்படிச் சொன்னால் அந்த அளவில் லோபத்தனம் வந்துவிடுமே என்ற எண்ணம் போலும் ! ஒவ்வொரு முறை வரும்போதும் புதிதாக வருபவ னுக்கு அளிப்பது போல வள்ளன்மையிலே சிறிதும் குன்றாது வழங்கும் சிறப்பைக் கேள்விற்றேன். ‘ஈயுந் தோறும் பெரு வண்மையை யுடையவர்; மா வள்ளியர்’ என்று சொன்னார்கள். அதைக் கேட்டு என் உயிரே குளிர்ந்து விட்டது. ஈந்ததற்கு இரங்காத இயல்பினால், கொடுக்கும் பொருளைப் பற்றிச் சிந்திப்பதில்லை என அறிந்தேன். ஈயுந்தோறும் மகிழாமையால், கொடுக்கும் தம்மைப்பற்றிய எண்ணமே எழுவதில்லை எனத் தெரிந்து கொண்டேன். ஈயுந்தோறும் மாவள்ளியர் என்றமையால், கொடுக்கப் பெறும் இரவலரைப் பற்றியும் ஆராய்வதில்லை என்று உணர்ந்தேன். பயிர் விளையப் பொழியும் மாரி இத்தனை பெய்தோம் என்று எண்ணுவதில்லை; நாம் பெய்தோம் என்று நினைப்ப தில்லை; இன்ன இடத்திலே முன்பு பெய்திருக்கிறோம் என்று ஒழிவதில்லை. எம்பெருமானுடைய கொடைக்கு அதைத்தான் உவமை கூறவேண்டும். “இவ்வாறு என் காதும் கருத்தும் உயிரும் குளிர அரசர் பிரானுடைய புகழ் எட்டியது. பாரியை நினைப் பூட்டும் பெருமான் ஒருவர் இருக்கிறார் போலும் என்று எண்ணினேன். அவரைப் பாராமல் இருப்பது தவறு என்று தோன்றியது. அதனால் புறப்பட்டு வந்தேன். எம்பெருமானுடைய புகழைக் கேட்டு வந்தேன். எனக்கு இங்கிருந்து அழைப்பு ஒன்றும் வராவிட்டாலும் அந்த நல் இசை அழைத்து வந்தது. ‘பொருள் வேண்டும். அளிக்க’ என இரப்பதற்கு வரவில்லை; உண்மை யல்லாதவற்றை அளவுக்கு மிஞ்சிக் கூறிப் புனைந்துரைக்கவும் வரவில்லை. பாரியின் கொடையைக் கண்டு குளிர்ந்த என் விழிகள் அத்தகைய காட்சியைக் காணாமல் அலமந்தன. இங்கே அவனைப் போன்ற வள்ளல் இருப்பது தெரிந்து, பார்த்து மகிழலாம் என்று வந்தேன். அவ்வளவுதான்.” புலவர் தம் பேச்சை முடித்தார். அவர் பேச்சில் உணர்ச்சி இருந்தது; ஆர்வம் இருந்தது; புலமை இருந்தது. சேர அரசன் அவற்றைக் கேட்டுக் கேட்டு உள்ளம் குளிர்ந்தான். வஞ்சிமா நகருக்குச் சென்று இருக்கும்படி தக்க துணையுடன் கபிலரை அனுப்பினான். தானும் போர்க் களத்திலிருந்து தன் இராசதானி நகரம் சென்றான். புலவர் பெருமானுக்குத் தன் ஆசை தீர உபசாரம் செய்தான். கபிலர் அங்கே சில காலம் இருந்தார். செல்வக் கடுங்கோ வாழியாதனை இன்றமிழ்ப் பாடல்களால் பாடினார் புலவர். அவர் பாடிய பாடல் களில் பத்துப் பாடல்கள் ஒரு தொகுதியாகப் பதிற்றுப் பத்தின் ஏழாம் பத்தாக அமைந்திருக்கின்றன. அதன் முதற் பாட்டு, அவர் சேர மன்னனைப் பாசறையிற் கண்டபோது சொல்லியவற்றை உள்ளடக்கியது. பலாஅம் பழுத்த பசும்புண் அரியல் வாடை துரக்கும் நாடு கெழு பெருவிறல் ஓவத்து அன்ன வினைபுனை நல்இல் பாவை அன்ன நல்லோள் கணவன், பொன்னின் அன்ன பூவிற் சிறியிலைப்         5 புன்கால் உன்னத்துப் பகைவன், எம்கோ, புலர்ந்த சாந்திற் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி, முழவுமண் புலர, இரவலர் இனைய வாராச் சேட்புலம் படர்ந்தோன்; அளிக்கென         10 இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்; “ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்; ஈத்தொறும் மாவள் ளியன்” என நுவலும் நின் நல் இசை தர, வந் திசினே ; ஒள்வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை,         15 நிலவின் அன்ன வெள்வேல் பாடினி முழவிற் போக்கிய வெண்கை விழவின் அன்ன நின் கலிமகி ழானே. பலாமரத்தில் பழுத்த பழத்தின் பசிய புண்ணைப் போலப் பிளந்த பிளப்பிலிருந்து அரித்து விழுகின்ற தேனை வடகாற்று வீசிச் சிதறும் நாட்டைப் பொருந்திய பெரிய வெற்றி மிடுக்கை யுடையவன்; ஓவியத்தைப் போன்ற நுட்பமான வேலைப்பாடுகளைப் புனைந்த நல்ல இல்லிலே தலைவியாக உள்ள கொல்லிப் பாவையைப் போன்ற அழகை யுடைய நல்லவளுக்குக் கணவன் : பொன்னைப் போன்ற நிறமுள்ள பூவையும் சிறிய இலையையும் பொலிவற்ற அடி மரத்தையும் உடைய (பகைவர் நாட்டு) உன்ன மரத்துக்குப் பகைவன்; எம்முடைய தலைவன் ; பூசி உலர்ந்த சந்தனத்தை யும் என்றும் வற்றாத ஈகையையும் விரிந்த மார்பையும் உடைய பெரிய வண்மையையுடைய பாரி , முழவானது தன் மேல் பூசிய மார்ச்சனை கவனிப்பாரின்றி உலாவும் புலவரும் பாணரும் விறலியரும் கூத்தருமாகிய இரவலர் வருந்தவும், சென்றால் திரும்பி வாராத தூரத்திலுள்ள முத்தியாகிய இடத்துக்குச் சென்று விட்டான். “எனக்குக் கொடுத்துப் பாது காக்க வேண்டும்’’ என்று சொல்லி இரக்கும் பொருட்டு நான் வரவில்லை; அளவுக்கு மிஞ்சிப் புனைந்துரை கூறமாட்டேன்;”கொடுத்தது பற்றி வருந்தமாட்டான். கொடுக்கும் தோறும் மகிழமாட்டான் ; கொடுக்கும் ஒவ்வொரு தடவையும் பெரிய வண்மையை உடையவன்’’ என்று கலைஞர் சொல்லும் நின் னுடைய நல்ல புகழ் என்னை அழைத்துவர நான் வந்தேன், விளக்கமான வாளினால் வெட்டப்பட்ட வலிமையையுடைய களிறுகளின் புலால் நாற்றம் வீசும் பாசறையில், (அமைதி யான காலத்தில்) நிலவைப் போன்ற வெள்ளிய வேலைப் பாடும் மகள் மிருதங்கத்தின் தாளத்தோடு விசிய எழிற் கையையுடைய விழாவைப் போன்ற நின் ஆரவாரமும் மகிழ்ச்சியும் உள்ள திருவோலக்கத்தின் கண்ணே. நின் கலிமகிழான் வந்திசின் என்று கூட்டுக. பெரு விறல், கணவன், பகைவன், கோ , பாரி படர்ந்தோன்; அளிக்கென வாரேன்; கூறேன்; நின் இசை தர , கலிமகிழான் வந்திசின் என்று கூட்டுக. 1. பலா அம் பழுத்த - பலாமரத்தில் பழுந்த; பலா அப் பழுத்த என்பது செய்யுள் விகாரத்தால் பலா அம் பருத்த என நின்றது. பலாப்பழம் கனிந்து வெடித்த வெடிப்பைப் புண் என்பது மரபு: “கலைதொடு பெரும்பழம் முன்கூர்ந்து ஊறலின்” (மலைபடுகடாம். 292) என்பதைக் காண்க . அரியல் - அரித்து விழும் தேன் ; ’அப்பழத்தினின்றும் பிரிந்து அரித்து விழுகிற தேன் (பழைய உரை). 2. வாடை - குளிர் காற்று வடக்கேயிருந்து வீசுவது. துரக்கும் - செலுத்தும்; இங்கே வீசிச் சிதறும் என்று கொள்ள வேண்டும். நாடு - பறம்பு நாடு. கெழு - பொருந்திய. பெருவிறல் - பெரிய விரலை உடையவன். 3. ஓவம் - ஓவியம். வினை நுண்ணிய வேலைப் பாடு. புனை " அணிந்த. 4. பாவை - பதுமை; இங்கே கொல்லிப் பாவை. 5. சிறியிலை : சிறிய இலை என்பதன் விகாரம். 6. புன்கால் - பொலிவற்ற அடிமரம். பகைவர் நாட்டில் உள்ள உன்ன மரம் பாரியினது வெற்றியினால் கரிந்து போதலின் உன்னத்துப் பகைவன் என்றார். 6. முழவு - மிருதங்கம். ஒரு பக்கத்தில் கறுப்பாகத் தடவும் பொருளை மார்ச்சனை என்பார்கள், பழங் காலத்தில் ஒருவகை மண்ணைத் தடவியதனால் அதற்கு மண் என்ற பெயரே அமைந்தது. இரவலர் - பரிசிலர். இனைய - வருந்த. 7. வாரா - திரும்பி வாராத. சேண் - தூரம். புலம் - இடம். படர்ந்தோன் - போனான். அளிக்க என என்பது தொகுத்தல் விகாரத்தால் அளிக்கென என்று வந்தது; கொடுப்பாயாக என்று ; பாதுகாப்பாயாக என்று எனவும் சொல்லலாம். 8. இரக்கு - இரப்பேன்; முற்றெச்சம்; இரப்பேனாகி என்று பொருள் கொள்ள வேண்டும். எஞ்சி – உண்மையை மீறி ; எஞ்சிக் கூறேன் என்றது, உண்மையின் எல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன் என்றவாறு (பழைய உரை.) 9. ஈத்தது - ஈந்ததற்காக. ‘ஈத்தொறும் மகிழான் என்றது. ஈயுந்தோறெல்லாம் தான் அயலா யிருத்தலல்லது, ஈயா நின்றோம் என்று ஒரு மகிழ்ச்சி உடைய னல்லன் என்றவாறு’ (பழைய உரை.) 10. ஈத்தொறும் மாவள்ளியன் - கொடுக்குந்தோறும் ஒருகாலைக்கு ஒருகால் பெரிய வண்மையை உடையவன். ஒருகாற் பெற்றவரே மீட்டும் வந்தா லும் அவரளவில் லோபி யாகாமல் மேலும் மேலும் ஈபவன். 11. தர - கொணர ; அழைத்து வர, வந்திசின் - வந்தேன். ஒள் வாள் - ஒள்ளிய வாளால் வெட்டப் பெற்ற. 12. உரவுக் களிறு - வலிமையையுடைய ஆண் யானை கள். களிறு என்றது இங்கே யானையின் பிணங்களை . களிற்றையுடைய பாசறை, புலா அம் பாசறை என்று தனித் தனியே கூட்ட வேண்டும். புலாஅம் - புலால் நாற்றம் வீசும். பாசறை - பாடி. ‘வீரரெல்லாம் போர் செய்து புண்பட்ட மிகுதியாற் புலால் நாறுகின்ற பாசறை’ (பழைய உரை.) 13. வெள் வேல் பாடினி - வெள்ளிய வேலைப் பாடும் விறலி. 14. முழவின் - மிருதங்கத்தோடு அதன் தாளத்துக்கு இசைய். போக்கிய - வீசும். வெண்கை - வெறும் கையைப் பெற்ற. ஆடும் விறலி தன் கைகளால் முத்திரைகளைக் காட்டி ஆடாமல் வெறுமனே தாளம் போட அமைவதால் வெண் கை என்றார். ’வெண் கை என்றது பொருள்களை அவிநயிக்கும் தொழிற்கை யல்லாத, வெறுமனே தாளத் திற்கு இசைய் விடும் எழிற் கையினை (பழைய உரை.) 15. விழவின் அன்ன - விழாவைப் போன்ற. கலிமகிழான் - ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் உடைய ஓலக்கத்தில், துறை - காட்சி வாழ்த்து.         வண்ணம் - ஒழுகு வண்ணம். தூக்கு - செந்தூக்கு.         பெயர் - புலாஅம் பாசறை. கண்ட காட்சியை வருணித்தலின் காட்சி வாழ்த் தாயிற்று. புலால் நாற்றம் வீசும் பாசறையை வருணித்து அங்கே ஓலக்கம் நிகழ்வதாகக் கூறின மையின் ‘புலாஅம் பாசறை’ என்ற பெயர் இப் பாடலுக்கு அமைந்தது. பதிற்றுப்பத்தில் இது 61-ஆவது பாட்டு. ------------------------------------------------------------------------ 1. ‘ஓடா உடல்வேந் தடுக்கிய உன்ன நிலையும்’’ (தொல் காப்பியம், புறத்திணை இயல், 15) என்பது துறை. வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன், " வேந்தற்கு நீ வென்றி கொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வல்" எனப் பரவுதலும், ‘’எம் வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு பொதுளுக’’ எனவும், "பகை வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு படுவதாக’’ எனவும் நிமித்தம் கோடலும் என இருவகைத் தெய்வத் தன்மை அஃதுடைமையான், ‘’அடுக்கிய உன்ன நிலையும்" என்றார்’ என்பது நச்சினார்க்கினியர் உரை.↩︎ யானைப் படை பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரன் செல்வக் கடுங்கோவாழியாதனுக்கு மகன். தகடூர் என்ற இடத்தில் அதிகமானோடு பொருது வென்றவன். இவனை அரிசில் கிழார் பத்துப் பாடல்களால் புகழ்ந்திருக்கிறார். பதிற்றுப் பத்தின் எட்டாம் பத்தாக அவை அமைந்திருக்கின்றன. புலவர், சேரமானுடைய படைகளைப் பார்த்து விட்டுச் செல்கிறார். போகும் வழியில் யாரோ புதிய மனிதர்கள் போய்க்கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் புலவரைப் பார்த்து, "இந்தச் சேரமன்னன் கணக்கிறந்த படைகளை உடையவனென்று சொல்லிக் கொள்கிறார்களே ! எத்தனை படை இருக்கும்?’’ என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு விடை கூறுவது போல ஒரு பாட்டு அமைந்திருக்கிறது. சேரமான் தகடூரை வென்ற செய்தி எங்கும் பரவி யிருக்கிறது. அந்தப் போர் பல நாட்கள் நடந்ததென்பதைப் பிற நாட்டு மக்களும் தெரிந்து கொண்டிருந்தார்கள். அதற்கு ஏற்றபடி மிகுதியான படைப் பலம் சோனுக்கு உண்டு என்று அவர்கள் எண்ணினார்கள். அரிசில் கிழாரைக் கேள்வி கேட்டவர்கள் சேர நாட்டுக்குப் புதியவர்கள் ; வழிப்போக்கர்கள். ‘’சினத்தோடு போர் செய்த பெருஞ்சேரல் இரும்பொறை எத்தனை படைகளை வைத்திருக்கிறானோ?’’ என்று கேட்டார்கள். அரிசில்கிழார் எண்ணியா பார்த்திருக்கிறார்? எண்ணித்தான் முடியுமா? யானைப் படை, தேர்ப் படை, குதிரைப் படை , வீரர் படை என உள்ள அவற்றைத் தனித் தனியே எண்ணிப் பார்ப்பது எளிதான செயல் அல்ல. “பல காலம் போரில் ஈடுபட்டு வெற்றியைக் கண்டவர்கள் எல்லாம் இந்த அரசன் முன்னே தோல்வி அடைந்து வீழ்ந்தார்களாமே” என்று ஆறு செல்வம்பலர் (வழியிலே சென்ற புதியவர்கள்) கேட் டனர். "அது உண்மைதான்.’’ "பகைவரைச் சார்ந்த வீரர்களில் இறந்தவர்கள் போக எஞ்சினவர்கள் புறங்காட்டி ஓடவும், எதிர்த்து நின்ற அரசர்கள் இறந்து படவும் கொன்று, அந்த வெற்றி மிடுக்கினால் கைகளை வீசித் துணங்கைக் கூத்தை ஆடிய வீர மன்னர்கள் இருந்தார்கள். பகைவரை வென்று ஆடிய துணங்கைப் பெருமை யெல்லாம் பொறையனுக்கு முன்னால் அழிந்தனவாம்.’’ புலவர் தலையை அசைத்தார். ‘’அத்தகைய பகைவர்களுடைய பிணத்தின் மேலே அவன் படையிலுள்ள தேர்கள் சென்றன. அவற்றின் மேல் உருண்டாலும் சக்கரங்கள் தேயவில்லை. போருக்கு ஏற்ற அலங்காரங்கள் அமைந்த, உறுதியான தேர்கள் யானைப் படை அவை. அவற்றை எண்ணிக் கணக்கிட முடியாது’’ என்றார். "குதிரைக் கணக்கையாவது சொல்லக் கூடாதா?’’ "அது இன்னும் அதிகமாயிற்றே! அதை எப்படிச் சொல்வது?’’ "மறவர்கள் எத்தனை பேர்?’’ "தேர்களைக் காட்டிலும் குதிரைகள் அதிகம் ; குதிரைகளைக் காட்டிலும் ஆண்மையையுடைய வீரர்கள் மிகுதி. தேர்களையே எண்ணமுடியாதபோது மாவும் மாக்களும் எண்ணும் ஆற்றல் எனக்கு எது? எண்ணுதற்கு அருமையாக இருப்பதனால் நான் எண்ண வில்லை.’’ "படைக்குச் சிறப்பாக இருப்பது யானைப் படை அல்லவா? சேரனது யானைப் படையின் கணக்கையாவது சொல்வீர்களா?’’ ஆவூர் கிழார் இம்முறையும் முடியாதென்று கை விரிக்க விரும்பவில்லை. "முதலில் அந்த யானைகளின் இயல்பைச் சொல்கிறேன் ; கேளுங்கள். அந்த யானைகளைக் கட்டுத் தறியிலே கட்டி வைக்க முடியாது. கந்திலே கட்டினால் அவை நிற்பதில்லை. குத்துக் கோல்களை ஒடித்து விடும். யானைகள் தம் நிழலைத் தாமே பார்த்துக் கோபித்துச் சீறும் என்பார்கள். உயர உயரப் பறக்கும் பருந்தின் நிழல் பூமியிலே படுகிறது. தரையிலே படும் அந்த நிழலைக் கண்டும் சீறிச் சாடுபவை அவை ; அப்படியானால் அந்த யானைகளின் கோபத்துக்கு வேறு அளவு வேண்டுமா?’’ "யானைகளின் தொகையைப் பற்றி ஒன்றும் சொல்ல இயலாதா?’’ “சொல்கிறேன் ; உவமையினால் புலப்படுத்தப் பார்க்கிறேன். நீங்கள் கொங்கு நாட்டுக்குப் போயிருக்கிறீர்களா?” "போயிருக்கிறோமே! அங்குள்ள மக்கள் எத்தனை முயற்சி உடையவர்கள் ! மேட்டு நிலத்தில், சரளைக்கல் மேட்டில், கிணறு வெட்டி ஈரத்தைக் காண எவ்வளவு பாடுபடுகிறார்கள்!’’ "அது சரிதான். அவர்கள் வளர்க்கும் பசு மாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா?’’ "பாராமல் என்ன? கொங்கர் ஆவினம் வளர்க்கும் அருமையைக் கண்டு கண்டு வியப்படைந்திருக்கிறோம்.’’ “எத்தனை மாடுகளைக் கண்டிருப்பீர்கள்?” என்று புலவர் கேட்டார். ‘’ஒவ்வோர் ஊரிலும் பல ஆநிரைகளைக் கண்டு களித்தோம். சில ஊர்களில் ஆயிரக் கணக்காக இருக்கின்றன.’’ ’’கொங்கு நாட்டிலுள்ள ஆவினம் முழுவதையும் ஓரிடத்தில் தொகுத்து ஓட்டுகிறார்-களென்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்தக் கூட்டம் போவது எப்படி இருக்கும் ? "கொங்கு நாட்டுப் பசு மாடுகள் எல்லாம் ஒன்று கூடினால், அம்மம்மா ! அதை அளவெடுப்பது மனிதர்களால் முடிகிற காரியமா?’’ "சேரனுடைய யானைப் படைக்கு உபமானம் சொல்லப் போனால், கொங்கர் ஆக் கூட்டம் பரவிச் செல்வது போல அவை செல்லும் என்று ஒருவாறு சொல்லலாம். அந்தப் படையை ஒன்று இரண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தால் என்றைக்கு எண்ணி முடிவு கட்ட… முடியும்?’’ புலவர் கூறிய விடையைப் பின் வரும் பாட்டுச் சொல்கிறது. ’’எனைப் பெரும் படையனோ, சினப்போர்ப் பொறை யன்?" என்றனிர் ஆயின், ஆறுசெல் வம்பலர் ! மன்பதை பெயர், அரசு களத்து ஒழியக் கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை மீபிணத்து உருண்ட தேயா ஆழியிற்         5 பண் அமை தேரும் மாவும் மாக்களும் எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே; கந்து கோள் யாது, காழ்பல முருக்கி, உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடிச் சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்         10 ஆபரந் தன்ன செலவிற்பல் யானை காண்பல், அவன் தானை யானே. வழியிலே செல்லும் புதிய வழிப்போக்கர்களே! "சினத்தையுடைய போரிலே வல்ல சேரன் எவ்வளவு பெரிய படையை உடையவனோ?’’ என்றீர்களானால் -, போர் செய்த மக்கள் ஓடவும் அரசர்கள் போர்க்களத்தில் இறந்து படவும் கொன்று அந்த வெற்றி மிடுக்கினால் கைகளை விசி, வென்று ஆடுகின்ற துணங்கையை உடையவர்கள் இப்போது சேரனோடு போர் செய்து பிணமாக, அந்தப் பிணங்களின் மேலே உருண்ட தேயாத சக்கரங்களையுடைய அலங்காரம் அமைந்த தேர்களும், குதிரைகளும், வீரர்களும் எண்ணுதற்கு அருமையாக இருத்தலினால் நான் எண்ணிய தில்லை; கட்டுத்தறியிலே கட்டப்படுத்தலுக்கு உட்படாமல், குத்துக் கோல் பலவற்றை ஒடித்து, மேலே பறக்கும் பருந்தினது தரையிலே விழும் நிழலை மோதி, உயர்வை யுடைய சரளைக் கல்லையுடைய மேட்டு நிலத்தில் கிணறு வெட்டி ஈரம் காண அமைந்த குந்தாலி முதலிய கருவிகளை உடைய கொங்கர்களுடைய ஆக்கள் பரவிச் சென்றது போன்ற செல்லுதலையுடைய பல யானைகளை அவனுடைய படையிலே காண்பேன். வம்பலிர், என்றனிர் ஆயின் எண்ணின்றோ இலன்; ஈயாது, முருக்கி, சாடிச் செலவையுடைய யானை காண்பல் என்று சேர்த்துத் தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டும். 1. எனை - எவ்வளவு, பொறையன் - சேரன். 2. ஆறு வழியில். வம்பலிர் - வம்பலரே புதியவர்களே; வம்பு - புதுமை. 3. மன்பதை - மனிதர் கூட்டம் ; இங்கே வீரர்களின் கூட்டம். பெயர் - புறங்காட்டி ஓட. அரசு - அரசர்கள். களத்து ஒழிய - போர்க்களத்தில் இறந்துபட. 4. தோள் ஓச்சிய - கையை வீசி ஆடிய . வென்றாடு துணங்கை - வென்ற களிப்பினாலே ஆடும் துணங்கைக் கூத்து. 5. மீபிணத்து - பிணங்களின் மேல்; பிணத்து மீ என்றது மாறி நின்றது. துணங்கையையுடைய பிணம்; என்றது முன்னே பகைவரை வென்று துணங்கை யாடியவர்கள் இப்போது பிணமானார்கள் என்பதைப் புலப்படுத்தியது. ஆழியின் - உருளைகளையுடைய. 6. பண் - பண்ணுதல், அலங்காரம் செய்தல், ஆயத்தம் செய்தல். மாவும் - குதிரை களும். மாக்களும் - காலாட்களும். 7. எண்ணின்று இலன் - எண்ணிற்று இலன் என்பது விகாரமாகி வந்தது. எண்ணியது இலன், நான் எண்ணவில்லை யென்பது பொருள். 6. கந்து - கட்டுத்தறி. கோள் ஈயாது - கொள்ளுவதற்கு உட்படாமல் கட்டுத்தறியால் கட்ட வசப்படுவதில்லை என்ற படி. காழ் - குந்துக்கோல் ; அங்குசம் வேறு. யானையின் மேல் உள்ள பாகன் அங்குசத்தை வைத்திருப்பான். யானைக்கு அருகே செல்பவர்கள் குத்துக் கோலை வைத் திருப்பார்கள். குத்துக் கொலை முட்கோல் என்றும் சொல்வ துண்டு. முருக்கி - ஒடித்து. 7. உகக்கும் - உயர்ந்து பறக்கும். பருந்தினது நிழல், நிலத்தில் விழும் நிழல். சாடி - மோதி. 8. சேண் - உயரம். பரல் - பருக்கைக் கல்; சரளை. முரம்பு - மேட்டு நிலம். ஈர்ம்படை - ஈரத்தை உண்டாக்கும் கருவிகள், கிணறு வெட்டுவதற்குரிய கருவிகள். கொங்கர் - கொங்கு நாட்டில் உள்ளோர் . "பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச் , சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல்’’ என்று இவர் அகழ்ந்த கிணறுகளைச் சொல்வர் (பதிற்றுப் பத்து 22 : 12-3.) 11. பரந்தன்ன - பரந்தது போன்ற. செலவின் செல்லுதலையுடைய . முருக்கிச் சாடிச் செல்லுதலையுடைய யானை என்று சேர்க்க வேண்டும். 12. காண்பல் - பார்ப் பேன். தானையான் - சேனையில். ஏ - அசை. துறை - உழிஞை அரவம்.         வண்ணம் - ஒழுத வண்ணம். தூக்கு - செந்தூக்கு.         பெயர் - வென்றாடு துணங்கை. உழிஞையரவம் என்றது உழிஞைத்திணையைச் சார்ந்த துறை. ஓர் அரசன் பகையரசனது மதிலை முற்றுகையிடும் பொருட்டுப் புறப்பட்ட ஆரவாரத்தைச் சொல்வது. அப்போது யானைப்படைகள் முன்னே சென்று மதிற் கதவை முட்டித் திறக்கும். அதற்காகப் போகும் யானைகளைப் பார்த்ததை நினைத்துச் சொல் வதனால் இத்துறை யாயிற்று. ‘வென்றாடு துணங்கைப் பிணம் என்றது, ஊர்களிலே ஆடும் துணங்கையன்றி, களங்களிலே வென்றாடின துணங்கையையுடைய பிணம் என்றவாறு. இச் சிறப்பானே இதற்கு வென்றாடு துணங்கை என்று பெயராயிற்று’ என்று எழுதுவர் பழைய உரைகாரர். இது பதிற்றுப்பத்தில் 77-ஆவது பாட்டு. உயிர் காக்கும் கரும்பு இளஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனது புகழைச் சொல்லும் பத்துப் பாடல்கள் பதிற்றுப் பத்தின் எட்டாம் பத்தாக உள்ளன. அவற்றைப் பாடினவர் பெருங்குன்றூர் கிழார் என்பவர். அந்தப் பத்தில் ஏழாவது பாட்டு விறலியாற்றுப் படை ; ஒரு விறலியைப் பார்த்துச் சொல்வதாக அமைந்தது. ஆற்றில் புது வெள்ளம் வருகிறது. வெகு வேகமாகக் கடலை நோக்கி ஓடுகிறது ஆறு. கடல் தெளிந்திருக்கிறது. கடலைக் கலக்குவார் யார்? ஆனால் ஆற்றுப் புனலோ சிவப்பாக இருக்கிறது. நுங்கும் நுரையுமாகப் புது நீர் வருகிறது. செம்புனலி னிடையே வெளுப்பாக நுரை இருக்கிறது. தலையிலே கட்டும் முண்டாசைப்போல் அங்கங்கே நுரை தெரிகிறது. இந்தப் புனலுக்கு முண்டாசு கட்டின தலைகள் பல உண்டோ ? சிவந்த மேனியும் வெண்டலையும் உடையதாக ஆறு விளங்குகிறது. இந்த வெண்டலைச் செம்புனலில் ஊரினர் விளையாடுகிறார்கள். தெப்பக் கட்டையைப் போட்டு அதைப் பற்றிக்கொண்டு ஆற்றுக்கு நடுவிலே நீந்திச் செல்கிறார்கள் ; ஆற்றின் வேகத்தோடு போகிறார்கள். சில இளைஞர்கள் ஆற்றிலே மிதக்கும்படி ஒரு புணையைக் கட்டுகிறார்கள். பேய்க் கரும்பை வெட்டி அவற்றை ஒன்றோடு ஒன்று கட்டிப் பெரிய தெப்பத்தைப் போல அமைக்கிறார்கள். அதை நீரில் விட்டால் நன்றாக மிதக்கிறது. நீர்த் தெய்வத்தை வணங்கி நாலைந்து பேராக அந்தக் கருப்பந் தெப்பத்தில் ஏறுகிறார்கள். கையிலே மூங்கிலை வைத்துக்கொண்டு தள்ளுகிறார்கள். ஆற்றின் நடுவிலே அந்தத் தெப்பம் போகிறது. அதோ, அதோ! ஏதோ தலை தெரிகிறது. யாரோ நீரில் மூழ்கி மூழ்கி எழுகிறார். ஆழம் அறியாமல் காலைவிட்ட பேர்வழிபோலும்! தெப்பத்தில் இருப்பவர்கள், உயிர் ஊசலாடும் அந்த மனிதரைக் கண்டார்கள். இவர்கள் கோலை நீட்ட அவர் அதைப் பிடித்துத் தெப்பத்தில் ஏற, ஆற்றோடு போக இருந்த ஓருயிர் பிழைத்தது. அவர் உயிரைத் தெப்பம் காப்பாற்றியது; கரும்பு காப்பாற்றியது. விறலியே ! வறுமையைப் போக்கிக் காப்பாற்றுவார் இல்லாமல் நீ வாடுகிறாயே. நான் சொல்லும் வள்ளலிடம் போ. நல்ல அணிகலத்தைப் பெறுவாய். அணிகலம் மாத்திரமா? உன் ஆயுள் முழுவதும் உன்னைக் காப்பாற்றும் கடமையை அவன் மேற்கொள்வான். வேலை ஏந்தும் மறவர்கள் பலரையுடைய தன் படைச் செருக்கால் வெற்றி பெற்றவன் அவன் ; பகைவர் நாட்டுப் பொருள்களைக் கொணர்ந்து தன்னைச் சார்ந்தாருக்கு வாரி வாரி வீசுபவன் ; பாதுகாப்பதில் வல்லவன் ; அளி மிக உடையவன். அவனுடைய அருளியல்பை எப்படி விளக்குவேன் ! உயிர் போய்க் கொண்டிருக்கும் உடம்புக்கு உணவூட்டிக் காப்பாற்றுகிறவன் என்று சொல்லலாமா ? சந்தனத்தையும் அகிலையும் சுமந்துகொண்டு, பொங்குகின்ற நுரையையும் தாங்கித் தெளிந்த கடலை நோக்கிச் செல்லும் ஆற்றின் வெண்டலைச் செம்புனலைப் பார்த்திருக்கிறாயா? அந்தப் புனலின் வழியே செலுத்துகின்ற கரும்பைப் பார்த்திருப்பாயே! கருப்பந் தெப்பத்தைத்-தான் சொல்கிறேன். அது சில சமயங்களில், நீரில் மூழ்கி உயிருக்கு மன்றாடும் மக்களைக் காப்பாற்றிய நிகழ்ச்சிகளை நீ பார்த்ததுண்டா? கேட்டதாவது உண்டா ? அந்தக் கருப்பந் தெப்பம் விளையாடுவதற்கு உரிய கருவியாக இருப்பது மாத்திரமன்றி, உயிரைக் காக்கும் துணையாகவும் உதவுவது போல, பொறையன் கலைஞர்களின் கலைத் திறமையைக் கண்டு கொண்டாடிப் பாராட்டுவான்; அவர்களை வறுமையால் வாடாமற் காப்பாற்றுவான். ஆதலின் அவனிடம் செல். இவ்வாறு பெருங்குன்றூர் கிழார் பாடினார். சென்மோ பாடினி! நன்கலம் பெறுகுவை; சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து தெண்கடல் முன்னிய வெண்டலைச் செம்புனல் ஓய்யும் நீர்வழிக் கரும்பினும் பல்வேற் பொறையன் வல்லனால் அளியே. விறலியே! நீ செல்வாயாக; சென்றால் நல்ல அணிகலத்தை நீ பெறுவாய்; பல வேற்படைகளையுடைய இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன், சந்தனத்தையும் அகிலோடு பொங்கும் நுரையையும் சுமந்து கொண்டு தெளிவான கடலை நோக்கிச் செல்லும் வெள்ளிய தலையை உடைய சிவந்த புது வெள்ளத்தில் நீர் வழியே தள்ளும் கருப்பந்தெப்பத்தைக் காட்டிலும், அளித்தலில் வல்லவன். 1. சென்மோ - போவாயாக; மோ : முன்னிலை அசை. பாடினி - விறலி. கலம் - ஆபரணம். 2. சந்தம் – சந்தனம். பூழில் - அகில். 2. தெண்கடல் - தெளிவையுடைய கடல். முன்னிய - நோக்கிச் சென்ற . நுரை இருத்தலினால் வெண்டலை என்றார் . 3. ஒய்யும் - செலுத்தும். நீர்வழி ஓய்யும் என்று சேர்க்க வேண்டும். கரும்பு - கருப்பந் தெப்பம்; ஆருபெயர். கரும்பென்றது பேய்க் கரும்பை. 4. பல் வேல் - பல வேலேந்திய வீரரையுடைய படைகள். ஆல் : அசை. அளி - பாது காக்கும் இயல்பு : உயிர் காக்கும் அருள். துறை - விறலியாற்றுப்படை         வண்ணம் - ஒழுகு வண்ணம். தூக்கு - செந்தூக்கு.         பெயர் - வெண்டலைச் செம்புனல். நுரையுடன் வந்த புது வெள்ளத்தை வெள்ளிய தலையையும் சிவந்த மேனியையும் உடையாரைப் போல ‘வெண்டலைச் செம்புனல்’ எனச் சிறப்பித்ததனால் இதற்கு அப் பெயர் வந்தது. ‘வெண்டலைச் செம்புன லென முரண்படக் கூறியவாற்றாலும், முன் நின்ற அடைச் சிறப்பானும் இதற்கு வெண்டலைச் செம்புனல் என்று பெயராயிற்று’ என்பர் பழைய உரைகாரர். நிறங்களில் ஒன்றினின்றும் ஒன்று மாறுபட்ட, வெண்மையையும் செம்மையையும் ஒரு சேர வைத்து வெண்டலைச் செம்புனலென்று சொன்னதையே, முரண் என்று அவர் சுட்டினார். முரண் என்பது செய்யுளில் அமையும் தொடைகளில் ஒன்று; விரோதம் என்னும் அணியாகவும் அதனைச் சொல்வார்கள். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.