[] 1. Cover 2. Table of contents புகழின் விலை புகழின் விலை   நிர்மலா ராகவன்   nirurag@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/pugazhin_vilai மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc புகழின் விலை “குழந்தையின் முகம் பௌர்ணமி சந்திரன்மாதிரி எவ்வளவு அழகா, உருண்டையா இருக்கு!” என்று பார்த்தவர்களெல்லாரும் பிரமிக்க, அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்கையில், பிறந்ததிலிருந்தே பிறரது பாராட்டுக்காகவே நான் வளர்க்கப்பட்டேன் என்றுதான் தோன்றுகிறது. நான்கு வயதிலேயே கேட்ட பாடல்களை அப்படியே பாடிக் காட்டுவேனாம். குரல் வேறு இனிமையாக இருந்து தொலைத்ததா, முறையாக இசை பயில அனுப்பினார் என் தந்தை. எல்லாம் அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல்தான். “இப்போ எதுக்கு பாட்டும் கூத்தும்? படிச்சு, ஒரு டிகிரி வாங்கறமாதிரி ஆகுமா?” என்று அப்பா சொல்லிப் பார்த்தாராம். அவரே என்னிடம் ஒருமுறை கூறியிருக்கிறார். “டி.வியில இப்போல்லாம் பாட்டுப் போட்டி வெக்கறாங்க, சின்னக் குழந்தைகளுக்குக்கூட. இவளுக்கு இருக்கிற குரலுக்கும் சங்கீத ஞானத்துக்கும்! பரிசு என்ன தெரியுமா?” என்று சவால் விட்டாள் அம்மா. அப்போதே, தங்கள் பெண் அப்படி ஒரு போட்டியில் வெற்றி பெற்று, பல லட்சம் பெறுமான வீடு தங்களுக்குச் சொந்தமாகப்போகிறது என்ற கனவில் ஆழ்ந்தார்கள் இருவரும். பத்து வயதில் எனக்கு இதெல்லாம் புரியவில்லை. வித விதமான ஆடைகள் அணிய முடிகிறதே, போட்டிக்கு முன்னாலும், முடிந்த பிறகும் எல்லாரும் கொஞ்சுகிறார்களே என்று கர்வமாக இருந்தது. பள்ளிக்கூடத்திலும் நான் போட்டியின் இறுதிச்சுற்றை அடைந்துவிட்டதைப் பெருமையுடன் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்கள். எல்லா ஆசிரியைகளும் மாணவிகளும் கைதட்டினதை மறக்க முடியுமா! “பூர்ணிமாவைப் பாட்டுக் கிளாசிலே சேர்க்கணும்னு நான் சொன்னப்போ என்னமோ யோசிச்சீங்களே! இப்போ பாத்தீங்களா?” எனக்குப் பரிசாகக் கிடைத்த அபார்ட்மெண்டுக்குள் நுழையும்போது அம்மா அப்பாவை இடித்துக் கேட்டாள். அப்பா அசட்டுச்சிரிப்புச் சிரித்தார், தன் தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல். அதற்குப்பின், எல்லாமே அம்மாவின் விருப்பப்படிதான் நடந்தது. இசைத்துறையில் முன்னணியில் இருந்த ஜகதாம்பாளிடம் என்னை அனுப்பினார்கள். மேடைக் கச்சேரி செய்யும்போதெல்லாம் நானும் என் குருவிற்குச் சற்றுப் பின்னால் அமர்ந்து, முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல், உடலும் அசையாமல் தாளம் போடுவேன். அது பாவாடை- சட்டை மட்டும் அணிந்திருந்த பருவம். உடன் பாடும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கவில்லை. பள்ளி விடுமுறை நாட்களில், அவர்கள் வீட்டிலேயே தங்குவேன். பாடும்போது, டீச்சருக்கு அடிக்கடி இருமல் வரும். “ஜகதா மாமி! தண்ணி கொண்டு வரட்டுமா?” என்னைப் பார்த்து ஆதுரத்துடன் சிரித்தாள் மாமி. தானே எழுந்து உள்ளே போய், ஒரு கிளாஸ் நிறைய ஏதோ மருந்தை ஊற்றிக் கொண்டுவந்தார்கள். சிறிது குடித்ததும், குரலில் மீண்டும் இனிமை. வீடு திரும்பியதும், அப்பாவிடம் சொன்னேன், “ஜகதா மாமிக்கு உடம்பு சரியில்லேப்பா. ரொம்ப இருமறாங்க. அடிக்கடி மருந்து குடிக்கறாங்க. கிளாஸிலே!” அப்பாவின் முகத்தில் கவலையின் ரேகை. ‘அப்பா, நல்ல அப்பா! டீச்சர் நல்லா இருக்கணும்னு எவ்வளவு அக்கறை!’ என்று நான் நினைத்துக்கொண்டேன். “நான் கச்சேரிக்காக ஒரு மாசம் வெளியூருக்குப் போறேன், பூர்ணிமா. பாட்டு கிளாஸ் கிடையாது. நீ தினமும் பிராக்டீஸ் பண்ணணும். என்ன?” ‘பாடு! பாடு! இல்லாட்டி, சாரீரம் பேசாது!’ என்று காலை நான்கு மணிக்கே என்னை எழுப்பி, ஓயாமல் விரட்டும் அம்மாவைவிட எனக்கு மாமியைத்தான் பிடிக்கும். ஒரு மாதம் மாமியைப் பார்க்க முடியாதா! அழுகை வந்தது. “அதெல்லாம் அவ பாடுவா. நான் பாத்துக்கறேன்,” என்று அம்மா அதிகாரமாகக் கூறியபோது என் அழுகை பலத்தது. இந்த அழுகை எனக்காக. சாயங்கால வேளைகளில் மற்ற குழந்தைகள் எல்லாரும் சிரித்து விளையாட, நான் மட்டும் மணிக்கணக்கில் பாடியாக வேண்டும். கைதிகளுக்குக் காவல் இருப்பதுபோல் அம்மா அருகிலேயே உட்கார்ந்திருப்பாள். எப்போதாவது, அம்மா கடைகண்ணிகளுக்குப் போயிருக்கும்போது, ‘தப்பித்தோம்’ என்று நானும் விளையாட ஓடுவேன். ஒரு முறை, என்னைக் கையும் களவுமாகப் பிடித்ததோடு நிற்கவில்லை அம்மா. என்னுடன் விளையாடிய மற்ற சிறுமிகளை மிரட்டினாள், “இனிமே நீங்க அவளோட விளையாடினா, தெரியும் சேதி!” என்று. ஒரு நீண்ட பிரசங்கம் தொடர்ந்தது. “இன்னும் கொஞ்ச வருஷத்திலே பூர்ணிமா பெரிய, பெரிய சபாக்களில கச்சேரி செய்யப்போறா, அவ டீச்சர்மாதிரி. அகல ஜரிகைபோட்ட பெரிய பட்டுப்புடைவை கட்டிக்கிட்டு, தலை நிறைய பூவோட! ஒவ்வொரு கச்சேரிக்கும் புதுசு புதுசா புடவை கட்டுவா. ஒங்களைப்போல விளையாட்டிலே நேரத்தை வீணடிச்சா, அதெல்லாம் கிடைக்குமா?” எனக்கும் அந்தக் கனவு பிடித்துத்தான் இருந்தது. அதையும் மீறி, எப்போதாவது விளையாடப் போனால், “எங்ககூட நீ விளையாடினா, ஒங்கம்மா எங்களைத்தான் திட்டுவாங்க. வேணாம்பா,” என்று என்னை ஒதுக்கிவிடுவார்கள். அப்போதெல்லாம் எனக்கு அம்மாவின்மேல் ஆத்திரமாக இருக்கும். ஆனால், அது நிலைக்காது. அம்மாவின் முயற்சி இல்லாவிட்டால், பன்னிரண்டு வயதுக்குள் சினிமாவில் பின்னணி பாடச் சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா? ஆரம்பத்தில் சற்று கஷ்டமாகத்தான் இருந்தது. “என்னம்மா, இப்படி அழுத்தி, அழுத்திப் பாடறே? இது மேடைக் கச்சேரி இல்லே. பாட்டுன்னா என்னான்னே தெரியாதவங்களும் ரசிக்க வேணாமா? மேலாகப் பாடு,” என்று நான் கற்ற பாணியை மாற்றினார்கள் இசை அமைப்பாளர்கள். ஜகதா மாமிக்கு இசையைப்பற்றித் தெரிந்த அளவு இவர்களுக்குத் தெரிந்திருக்குமா? அம்மாவிடம் என் சந்தேகத்தைத் தெரிவித்தேன். “அவங்க சொல்றபடிதான் பாடிட்டுப் போயேன்!” என்று வழிகாட்டினாள். “யாருக்கு நிறைய பணம் கிடைச்சிருக்கு? யோசிச்சுப்பாரு!” ஒரு நாளைக்கு நான்கு இடங்களில் என் குரலைப் பதிவு செய்தபோது, அம்மாவுக்கு நன்றி சொல்லத் தோன்றியது. இப்போதெல்லாம் நான் ஜகதா மாமியிடம் பாட்டு கற்கப் போவதில்லை. தெரிந்தவரை போதும். மாமியின் வழியில் பாடினால், சினிமா வாய்ப்புப் போய்விடும் என்ற பயம் வேறு உள்ளூர இருந்தது. மாமிக்கே இப்போது கச்சேரிகள் குறைந்துவிட்டன. ரொம்ப இருமலாம். சில வருடங்களுக்குப்பின், மாமியின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்று கேள்விப்பட்டு, மரியாதைக்காகப் பார்க்கப் போனேன். “வாடி!” என்று வாயார வரவேற்றாள் மாமி. “ரொம்ப பெரிய மனுஷியாகிட்டேபோல! ரேடியோவிலும், டிவியிலும் எப்பவும் ஒன் குரல்தான்!” குரலில் பொறாமை இல்லை – என் சக பின்னணிப் பாடகர்களைப்போல. உண்மையான மகிழ்ச்சியும் பெருமையும் தொனித்தன. நான் சூள் கொட்டினேன். “ஒங்கப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே?” “துபாய், மலேசியா, சிங்கப்பூர்னு மேடையில பாட கூட்டிட்டுப் போறாங்க, மாமி. எனக்குத் துணை போகணும்னு அப்பா வேலையை விட்டுட்டார். ஆனா..,” நிறுத்தினேன். “ஒங்கம்மாவுக்குத்தான் நீ பிரபலமான பாடகியாகணும்னு ரொம்ப ஆசை”. மெள்ளக் கூறினேன். “அம்மா போய் அஞ்சு வருஷமாயிடுச்சு, மாமி”. “அடடா! சின்ன வயசுதானே அவங்களுக்கு! என்ன ஆச்சு?” “போயிட்டாங்க. அவ்வளவுதான். எப்படிச் செத்தா என்ன?” கடுமையாக வந்த என் குரல் மாமிக்கு மட்டுமல்ல, எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தினமும் நான் குற்ற உணர்வால் வெந்துபோவது என்னுடன் இருக்கட்டும். எனக்காகத்தானே அம்மா தன்னைத்தானே மாய்த்துக்கொண்டாள்! நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் வயது அப்போது. எனக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்க வழிசெய்வதாக அம்மாவிடம் ஆசைகாட்டிய ஒரு பாடலாசிரியர் முதலில் மரியாதையாகத்தான் நடந்துகொண்டானாம். தனிமையில் அவனைப்பற்றி விளக்கிவிட்டு, “அவன் பக்கமே தலைவெச்சுக்கூடப் படுக்காதே, பூர்ணிமா!” என்று அழுதபடி, ஆணித்தரமாக அறிவு புகட்டிய அம்மா மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. கட்டிலின் கீழ் காலியான தூக்க மாத்திரைப் புட்டி. வெளியில் விஷயம் பரவுவதற்குள் அம்மாவின் இறுதிக்கடனை முடித்தார் அப்பா. அம்மா அழுததன் காரணம் பிறகுதான் புரிந்தது எனக்கு. அம்மா அவனுக்கு இணங்கி நடந்திருக்க வேண்டும். இறுதியில், கணவருக்குத் துரோகம் செய்துவிட்டோமே என்று குமைந்து, சாவை நாடியிருக்கிறாள். ஒரு விம்மல் வெளிப்பட்டது என்னிடமிருந்து. “என்ன, பூர்ணிமா? நீ இப்படி வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தா எப்படி? இன்னிக்கு நீ பேரும் புகழுமா இருக்கிறதைப் பாத்து அம்மா எங்கேயிருந்தாலும் சந்தோஷமாத்தான் இருக்கப்போறாங்க!” மாமியின் பேச்சு எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அப்பாவுடன் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அம்மா பின்தங்கியதன் ரகசியம் புரிந்தது. ‘ஏம்பா அம்மாவும் நம்பகூட வீட்டுக்கு வரதில்ல?’ என்று அப்பாவைக் கேட்டபோதெல்லாம், ‘யாராவது கொண்டு விட்டுடுவாங்க,’ என்பார் அப்பா, அலட்சியமாக. அவர் என்று அம்மாவை மீறியிருக்கிறார்! பேச்சை மாற்ற, “மாமி. எனக்கும் ஒங்கமாதிரி அடிக்கடி இருமல் வருது,” என்று ஏதோ சொன்னேன். “நான்தான் குடிச்சுச் சீரழிஞ்சு போனேன். நீயாவது ஒடம்பைப் பாத்துக்க, பூர்ணிமா. ஒங்கிட்ட இருக்கிறது அபூர்வமான வித்தை. சாமி குடுத்த வரம்,” என்று ஏதேதோ சொன்னார்கள் ஜகதா மாமி. எனக்கு ஒன்றுதான் புரிந்தது. அம்மாவை அழித்த இந்தப் பாட்டு எனக்கு வேண்டாம். இனி கோயில்களில்தான் பாடப்போகிறேன். இறைவன் கொடுத்ததை அவனுக்கே அர்ப்பணம் செய்யப்போகிறேன். அதற்கு முன்னால், நான் செய்யவேண்டிய முக்கியமான வேலை ஒன்று பாக்கி இருக்கிறது. அம்மாவுக்கு அவன் செய்த கொடுமையை எனக்கே செய்ததாகக் கூறி, “மீ டூ” என்று, நாடறிய அவன் பெயரை நாறடிக்கப்போகிறேன். கோந்து ஸார் கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து, கோய்ந்து, கோந்து என்று மறுவிவிட்டது. பெயர்தான் கோந்தே தவிர, இந்த கோந்து எவருடனும் ஒட்டமாட்டார். அதனால் அவரைக் காக்காய்பிடிப்பது கடினம். இந்தத் தகுதிதான் அவருடைய தொழிலுக்குச் சௌகரியமாக இருந்தது. பாடகிகளோ, நாட்டியமணிகளோ கலை விமர்சகரான அவரைத் தம் இல்லங்களுக்கு விருந்துக்கு அழைத்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஜரிகை வேஷ்டி, மனைவிக்கு பட்டுப்புடவை என்று தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பது என்றெல்லாம் பலவாறாக முயன்றும், அவர்களால் எந்தப் பட்டமும் பெற முடியவில்லை. அதற்கு இயற்கையிலேயே அமைந்த ஞானமும், கடினமான உழைப்பும் வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தார்கள். அதனால் கோந்துமேல் ஆத்திரம்தான் எழுந்தது. “போன வாரம் பொண்டாட்டி சமேதரா நம்ப வீட்டுக்கு வந்து, மனுஷன் பாயசத்தையே உறிஞ்சு, உறிஞ்சுக் குடிச்சாரே! அந்த நன்றிகூட இல்லாம, எப்படி என் பாட்டைக் கிழி கிழின்னு கிழிச்சிருக்கார்!” என்று வீட்டாரிடம் சொல்லி மாய்ந்துபோவார்கள். “என்னமோ, நக்கீரன் பரம்பரையில் வந்தமாதிரிதான்! கண்ணிலே விளக்கெண்ணையும், காதிலே நல்லெண்ணையும் போட்டுக்கொண்டு, ‘எங்கேடா தப்பு கண்டுபிடிக்கலாம்?’ என்று உட்கார்ந்திருப்பார்,” என்று பிற கலைஞர்களுடன் எவ்வளவுதான் பேசினாலும், அவர்களுடைய மனம் ஆறாது. அடுத்த முறை, முன்வரிசையில் பேப்பர், பேனாவுடன் அவரைப் பார்த்தால் நடுக்கம் வந்துவிடும். அவரோ, எங்கோ வேடிக்கை பார்ப்பதுபோல் அலட்சியமாக உட்கார்ந்திருப்பார். இதனாலேயே, அவரது கலை விமரிசனங்களை தொடர்ந்து வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் சாமண்ணா, ‘கோந்து ஸார் எழுதினால் நம்பலாம்,’ என்று எல்லாரிடமும் பெருமையாகச் சொல்வார். அந்த காட்டமான படைப்புகளைப் படிப்பதற்கென்றே பலரும் அப்பத்திரிகையை வாங்கினார்களே! ஆனால் மனைவி பொன்னம்மாவுக்கு அவரது போக்கு கவலையைத்தான் அளித்தது. ஒரு முறை, “நீங்க இப்படி எல்லாரையும் கண்டபடி தாக்கி எழுதறது நன்னாவே இல்லே. மத்தவா சாபம் நம்பளை சும்மா விடாது,” என்று மெல்ல ஆரம்பித்தாள். “போடி, அசடு. நான் செய்யறது சாமி காரியம். சரஸ்வதி தேவியும், ராக, ஸ்வர தேவதைகளும் இந்த ஞானசூனியங்களால் கஷ்டப்பட விடலாமோ?” என்று அவள் வாயை அடைத்தார். கோந்து ஸார் அபூர்வமாக எந்தக் கலைஞரையாவது புகழ்ந்து எழுதினால், அந்தப் பாடகரின் மதிப்பும், அத்துடன் ரேட்டும், உயர்ந்துவிடும். விவரம் தெரியாத ஒரு சிலர், “நாளைக்கு என் கச்சேரி நடக்கிறது, மாமா. நீங்க அவசியம் வந்து அதைப்பத்தி நாலு வார்த்தை நல்லதா எழுதணும்,” என்று வேண்டுகோள் விடுப்பார்கள். “நல்லதுன்னு இப்பவே எப்படி தீர்மானிக்க முடியும்? நான் எப்படி எழுதுவேன்னு ஒங்களுக்குத் தெரியும்தானே?” கேட்டவர் மிரண்டுபோவார். இவரைப்போய் அழைக்க நம் புத்தி போனதே என்று நொந்துகொள்வார். கெஞ்சுவதுபோல், “பரவாயில்ல. சும்மா வாங்கோ!” என்பார். “அப்படின்னா என்ன? எழுத வேண்டாமா?” கோந்து சிரிப்பார். ஒரு முறை, ‘கவர்ச்சி’ என்ற பெயரில் அரைகுறையாக உடுத்துக்கொண்டு ஒரு சினிமா நடிகை ‘பரதநாட்டியம்’ ஆடுவதாக இருந்தது. பத்திரிகைகள் அந்த நிகழ்ச்சியைப்பற்றி முதலிலேயே நிறைய எழுதிக் குவிக்க, சாமண்ணா சும்மா இருப்பாரா? கோந்து ஸாரை அங்கு அனுப்பினார். விமரிசனம் ஒரே வாக்கியத்துடன் ஆரம்பித்து முடிந்தது: ‘நாட்டில் துணிப் பஞ்சமா?’ இன்னொரு நாட்டிய நிகழ்ச்சியைப்பற்றிய அவருடைய கருத்து: ‘மேடை அலங்காரத்துக்குச் செலுத்திய கவனத்தில் ஒரு சிறு பகுதியையாவது நாட்டியத்தில் காட்டியிருக்கலாம்’. அடுத்த முறை, அவரைப் பார்த்துவிட்டு, அந்த நாட்டியக்கலைஞர் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனார். இப்படிப்பட்டவரிடம் எப்போது பேசினால் காரியம் ஆகும் என்று புரிந்து வைத்திருந்த பொன்னம்மா, இரவில் படுத்துப் பல நிமிடங்கள் கழிந்தபின், மெள்ள ஆரம்பித்தாள், “என் சிநேகிதி தர்மாம்பா இல்லே? அவ மாட்டுப்பொண் இந்த சனிக்கிழமை ஆடறாளாம். ஏதோ சின்ன எடத்திலேதான்னு சொன்னா. நீங்கதான் எழுதணும்னு ரொம்ப ஆசைப்படறா!” என்று. “அதுக்கென்ன! போய் பாத்தாப்போச்சு!” என்று ‘குஷி மூடில்’ ஒத்துக்கொண்டார் கணவரும். “அவளே நாலு பேருக்குச் சொல்லித்தராளாம்!” என்று இழுத்தாள் பொன்னம்மா. “அதான் சரின்னு சொன்னேனே! காது விழலியா ஒனக்கு? மனுஷன் ஒடம்பு ஓய்ஞ்சுபோய் தூங்கறச்சே, என்ன தொணதொணன்னு!” என்று எரிந்து விழுந்தார். அவள் பயந்து வாயை மூடிக்கொண்டாள். நாட்டியமணி கண்ணுக்குக்கீழ் நிறைய மை தீட்டியிருந்ததில் அழகாகவே இருந்தாள். “பரவாயில்லே. ஒடம்பு ஒத்தாப்போல இருக்கு. ரெண்டு குழந்தை பெத்திருக்காளாமே” என்று மனைவி காதில் மட்டும் விழும்படி முணுமுணுத்தார் கோந்து. பிறகு, ஏதோ சந்தேகம் எழ, “நல்ல கலரா இருக்கா இல்லே?” என்று கேட்டார். “பாத்தா தெரியலியா? தர்மாம்பா ஆனமட்டும் தடுத்துப்பாத்தா. அவ பிள்ளை கேக்கலே. இந்த ஹோ ஹெங்கைக் கல்யாணம் பண்ணிண்டான்,” என்று கூடிய தகவல் தந்தாள். ஹோ ஹெங் ஆட ஆரம்பித்ததும், கோந்துவின் கண்கள் அவள் கால்களில் பதிந்தன. ‘தாளகதிக்குச் சரியா ஆடமாட்டாளோ ஒருத்தி? இந்த லட்சணத்திலே, ஒண்ணும் தெரியாத மத்த குழந்தைகளுக்குச் சொல்லி வேற கொடுக்கறாளாமா?’ என்று அவர் மனம் கொதித்தது. தர்மாம்பாவின் புதல்வன் ஓட்டமும் நடையுமாக அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டான். “நேத்திக்கு ராத்திரி அவளுக்கு நல்ல ஜூரம்,” என்றான், மன்னிப்புக் கேட்கும் தொனியில். தலையை ஒருமுறை மேலும் கீழும் ஆட்டினார் கோந்து ஸார், அதை அங்கீகரிக்கும் வகையில். ‘இவர் என்ன எழுதிவிடப்போகிறாரோ!’ என்ற பயம் அவன் குரலில் கேட்டது அவருக்குப் புரியாதா! “என்ன இப்படி எழுதியிருக்கேள்!” அதிசயப்பட்டுக் கேட்ட மனைவியைப் பார்த்து லேசாகச் சிரித்தார் கோந்து. “இது நம்ப கலை. அவ, பாவம், பாஷை தெரியாத சீனப்பொண்ணு. சின்னச் சின்ன குழந்தைகளையும் வெச்சுண்டு, இவ்வளவு தூரம் கத்துக்க எத்தனை மெனக்கெட்டிருப்பா! ஏதோ, தனக்குத் தெரிஞ்சதை நாலுபேருக்கு உண்மையா சொல்லியும் குடுக்கறா! அதைப் பாராட்ட வேண்டாமா?” என் ஒன்றுவிட்ட அக்காள் பாகம் 1 என் பெரியப்பா பெண் விசாலி என் தந்தை சாயலாகவே இருந்ததைப்பற்றி நான் அதிகம் யோசித்ததில்லை – பாமா அதைக் கிளறியவரை. அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா ஆகியவர்களால்தான் ஒருவரின் முகச்சாடை வருகிறது என்று படித்திருக்கிறேன். சித்தப்பா? அமெரிக்காவில், ஒரு வெள்ளைக்காரத் தம்பதிகளுக்கு கறுப்பாக பெண்குழந்தை பிறந்ததாமே! ஆறு தலைமுறைகள் கழிந்த பின்னரும் அப்படி நடக்க வாய்ப்பிருக்குமாம். அதுமாதிரி இருக்கக்கூடாதா, என்ன! பாமாவும் என் பெரியம்மா பெண்தான். ஊர்வம்பு அவளுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. ஆனால், என்றாவது ஒரு நாள் என் குடும்பத்தைப்பற்றியே அப்படி ஒரு குண்டைப் போடுவாள் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை. “ஒன்னோட அக்கா, தங்கைக்கெல்லாம் நீ வீடு வித்த காசை பங்குபோட்டுக் குடுக்கணும், இல்லியாடா?” என்று ஆரம்பித்தாள் பாமா. அப்பா பரம கஞ்சன். அண்மையில்தான் இறந்துபோனார். ‘அம்மாவைத் திட்டமுடியவில்லை. அதனால், என் பொண்ணுக்கு காமாட்சிங்கிற அம்மாவோட பேரைச் சுருக்கி வெச்சிருக்கேன்,’ என்று அடிக்கடி, சிரிக்காமல், கூறுவார். காமு அவருக்கு ரொம்ப செல்லம். அவளைத் திட்டி நான் பார்த்ததே இல்லை. நான்தான் அடி வாங்குவேன். ஒன்றும் இல்லாததற்கெல்லாம். அந்த அப்பா இறந்ததும்தான் தெரிந்தது அவருடைய பிசுநாரித்தனத்திற்கான காரணம். என் பெயரில் இரண்டு வீடுகள் வாங்கிப்போட்டிருந்தார். உயிருடன் இருந்தபோது மகனிடம் காட்டாத அன்புக்கு எப்படி ஈடு செய்யலாம் என்றோ? நான் அப்படி நினைக்கவில்லை. நான்தானே அவருடைய அந்திம காலக்கடன்களைச் செய்தாக வேண்டும்! அதைத் தவிர, நான் உயிரோடு இருக்கும்வரை அவருக்காக வருடாந்திர திவசம் வேறு கொடுத்தாகவேண்டும். அவருடைய ஆத்மா அப்போதுதான் சாந்தி அடையுமாம். இனி அவர் எப்படிப் போனால் எனக்கென்ன? அந்த மனிதருடைய சொத்து மட்டும் எனக்கெதற்கு என்ற வீம்பு எழுந்தது எனக்குள். அப்போதுதான், இப்படி ஒரு கேள்வி! “காமு ஒருத்திதானே என்னோட தங்கை? ’அக்கா தங்கைக்கெல்லாம்’னு சொல்றியே!” என்றேன், எனக்குள் கிளர்ந்த எரிச்சலைக் கேலியாக மாற்றி. “போடா அசடு! ஒனக்கு வெளுத்ததெல்லாம் பால்!” என்று முகத்தைச் சுளித்தாள் பாமா. “விசாலி எங்கம்மாவுக்குப் பிறந்த பொண்ணுதான். ஆனா, எங்கப்பா அவ அப்பா இல்லே!” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டாள். “என்ன சொல்றே?” என்றேன் குழம்பியவனாக. விதவையாகி, தாய்வீட்டுக்கே வந்தபின், பாமாவுக்கு வேறு பொழுதுபோக்கே கிடையாது என்றுதான் நினைக்கத் தோன்றியது. எந்த சினிமா நடிகை திருமணம் ஆகாமலேயே தாயாகி இருக்கிறாள் என்பதுபோன்ற அதிமுக்கியமான சமாசாரங்கள் அவளுக்கு அத்துப்படி. ‘யார், என்ன பண்ணறான்னு ஓயாம வம்புக்கு அலைஞ்சா இப்படித்தான் மூளை குழம்பிப்போகும்,’ என்று பாமாவிடம் சுடச்சுடச் சொல்ல வந்ததை அடக்கிக்கொண்டேன். “நீயே யோசி!” என்றாள். அதன்பின் நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. என்னைக் குழப்பியதோடு தான் வந்த காரியம் முடிந்துவிட்டதென்ற திருப்தியுடன் போனாள் பாமா. இதற்கென்றே வந்திருக்கிறாள், தடிச்சி! யோசிக்க ஆரம்பித்தேன். பாமா சொல்வதில் உண்மை இருந்தால், விசாலி என் சொந்த அக்கா. ஆனால், வேறு அம்மாவுக்கு, குறிப்பாக என் பெரியம்மாவுக்கு, பிறந்தவள். அப்படியானால் அவளுடைய அப்பா? புரிந்துகொள்ளவே புரியாத அளவுக்கு அதுவரை இறுகியிருந்த பல முடிச்சுகள் இப்போது அவிழ்கிறமாதிரி இருந்தது. ஒரு முறை, அப்பா என்னை தபாலாபீசுக்கு அனுப்பினார். “அப்படியே எனக்கு ஒரு இன்லண்டு கவர் வாங்கிண்டு வாடா, குழந்தை,” என்றாள் பாட்டி. அடுத்த இரண்டு நாட்களும் அப்பா என்னைத் துளைத்தெடுத்தார்: “பாட்டிகிட்ட கேட்டு அந்த கவருக்கான காசை வாங்கிக் குடுத்துடு!” அப்பா வேலை நிமித்தம் ஊர் ஊராகப் போவார். அதனால் நானும், தங்கை காமுவும் பாட்டி வீட்டில் வளர்ந்தோம். எங்களுக்கான செலவுக்கு அப்பா காசு கொடுத்திருக்கமாட்டார். பாட்டிக்குத்தான் தாத்தாவின் பென்ஷன் வந்துகொண்டிருந்ததே என்று அவர் எண்ணம் போயிருக்கும்! கருமி வேறு எப்படி யோசிப்பார்! தன் குழந்தைகளை அன்புடன் பார்த்துக்கொள்ளும் ஒருத்திக்கு, அதுவும் சொந்த அம்மாவுக்கு, அரை ரூபாய்கூடப் பெறாத ஒரு கவர் வாங்கிக்கொடுக்க அப்பாவுக்கு ஏன் மனம் இல்லாமல் போயிற்று? இதற்கெல்லாமா கணக்கு பார்ப்பார்கள்? அப்படி என்ன பணத்தாசை? எனக்கு வந்த கோபத்தில், பள்ளிக்கூடத்தில் நோட்டுப் புத்தகம் வாங்கவென்று அப்பா கொடுத்த காசை, “பாட்டி குடுக்கச் சொன்னாப்பா,” என்று அப்பாவிடமே திருப்பிக் கொடுத்தேன். இந்த மனம் இருக்கிறதே, சில சமயம், ஏன் பழைய குப்பைகளை எல்லாம் தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கிறது என்ற எரிச்சல் அதன்மேல் எழுகிறது. நானும் விசாலியும் ஒரே வயதுதான். அவள் என்னைவிடச் சில மாதங்களே பெரியவள். எங்களுக்கு ஐந்து வயதிருக்கும். அந்தப் பிசாசு என்னைக் கடித்துவிட்டது. பதிலுக்கு, நான் விசாலியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டேன். என் கன்னத்தின் கீழ்ப்பகுதியில் ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. வலியால் நான் கத்தவில்லை, அழவுமில்லை. ‘சாண்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை!’ என்று பாட்டி அடிக்கடி என் மன உறுதியைப் புகழ்வாளே! அது பொய்ப்பிக்க விடலாமா? எங்கிருந்தோ, அப்பா விரைந்து வந்தார். எதுவும் கேட்காது, என்னை அவர் இடுப்பிலிருந்த பெல்டைக் கழற்றி அடித்தார். கை ஓயும்வரை. “அம்மா இல்லாத குழந்தைடா!” என்று பாட்டி தடுத்திருக்காவிட்டால் அன்று நான் யமலோகம் போயிருப்பேன். இன்றும், முகச்சவரம் பண்ணிக்கொள்ளும்போது, அந்த தழும்பைத் தொடாது பண்ணிக்கொள்ள வேண்டிய நிலை. இல்லாவிட்டால், ரத்தம் கொட்டும். அப்பாவிடம் அடிவாங்கிய நாளுக்கு ஒரு நினைவுச்சின்னம். அதன்பின், விசாலி என்னுடன் சண்டை போடவேயில்லை. பெரியமனுஷிமாதிரி நடந்துகொண்டாள். முன்பெல்லாம் அவளுடைய இந்த மாற்றம் எனக்கு வேடிக்கையாகப் பட்டது. “என்னடி, விசாலி? பத்ரகாளியா இருந்தவ எப்படி இந்தமாதிரி சாந்த சொரூபியா மாறினே?” என்று கேட்டுச் சிரிப்பேன். இப்போது சிரிப்பு வரவில்லை. பெரியம்மா அந்த வயதிலேயே அவளிடம் சொல்லியிருப்பாளோ, ‘அவன் ஒன் சொந்தத் தம்பி, டீ!’ என்று? பாகம் 2 அதன்பின், ‘அப்பாவுக்கு ஏனோ என்னைப் பிடிக்கவில்லையே!’ என்ற வருத்தத்தில் அவர் மனதை எப்படிக் கவரலாம் என்று யோசித்தேன். புத்தகப் புழுவாகவே மாறினேன். ஆனால், என்னைப் பார்த்தாலே அப்பா முகத்தில் இருக்கும் சிரிப்பு மறைந்துபோய்விடும். காமுதான் அப்பா பெண்ணாயிற்றே! அவளும் என்னை மதித்ததில்லை. புத்தகங்கள் மனிதர்களைவிட எவ்வளவோ தேவலாம் என்று தோன்றிப்போக, கூடியவரை தனிமையை நாடினேன். பதின்ம வயதில், எனக்கு எல்லாவற்றிலும் சிரத்தை தொலைந்தது. “இப்போல்லாம் சரியாவே சாப்பிடறதில்லே. ஒனக்கு என்னடா வந்திருக்கு?” என்று உருகிய பாட்டியும் மறைந்தபின், ‘எனக்கு யாருமே இல்லை!’ என்ற கசப்பான நிதரிசனம் எழுந்தது. அவ்வப்போது, விசாலி வருவாள், ‘சித்தப்பா!’ என்று கொஞ்சியபடி. அவளை விட்டுவிட்டுப் போக பாமா மட்டும் வருவாள். ஆனால், தங்கமாட்டாள், ‘வீட்டை யார் பாத்துக்கறது?’ என்ற சாக்குடன். அப்படி ஒரு நாள். “டேய்! இதைப் பாரேன்!” என்று ஒரு புத்தகத்தைக் காட்டியபடி, கட்டிலில் உட்கார்ந்திருந்த விசாலி சற்று நகர்ந்துகொண்டாள். “இப்படி ஒக்காரு, வா!” இரவில் தூக்கத்தைக் கெடவைக்கிற – பெண்கள் சம்பந்தமான – கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன, குழந்தை எப்படி உருவாகிறது என்றெல்லாம் மண்டையைக் குடைந்துகொண்டிருந்த வயது அப்போது. அந்தப் புத்தகத்தைப் பார்த்து இருவரும் சிரித்துக்கொண்டிருந்தோம். எங்கள் சுவாரசியத்தில் அப்பா வந்ததைக் கவனிக்கவில்லை. பொறியில் மாட்டிக்கொண்டு செத்த எலியைத் தூக்கிப்போடுவதுபோல், என் காதைப் பிடித்து, தரதரவென்று வெளியே இழுத்துப் போனார். அவர் தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளை என்பதால் அன்று அடிக்கவில்லை. அடித்திருக்கலாம். “இனிமே எந்தப் பொண்ணு பக்கத்திலேயாவது இப்படி இளிச்சுண்டு ஒக்காருவியா?” என்று பலவாறாக, அவர் வாயிலிருந்து வெளியே வந்த வார்த்தைகளைக் கேட்டால் எவருக்கும் கூசிப்போகும். எனக்கு உயிரே போவதுபோல் இருந்தது. எல்லாவற்றிற்கும் காரணமாக இருந்த விசாலியையோ அப்பா எதுவும் கேட்கவில்லை. அவள்தான், கால் தடுக்கி, அவிழ்ந்த தாவணியைக் கையில் பிடித்தபடி ஓடிவிட்டாளே! அன்றுதான் கடைசியாக நான் அப்பாவுடன் பேசியது. அப்பா எதிரில் நின்றது. விசாலி வருவதும் நின்றுபோயிற்று. அப்பாவின் சொத்துக்கு நான்தான் ஒரே ஆண் வாரிசு. அதனால்தான் இந்த ஆட்டம் ஆடுகிறாரோ? (காமுவின் கல்யாணத்தின்போது தங்கநகை, ரொக்கம் என்று செலவழித்துவிடுவார். வரதட்சணை வாங்குவது சட்ட விரோதம் என்று பெயர்தான். ஆண்பிள்ளையைப் பெற்றவர்கள் எப்படியோ கறந்துவிடுவார்கள்). சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்ற உறுதியோடு, மீண்டும் படிப்பில் அக்கறை செலுத்தினேன். அன்று, ‘கூடப்பிறந்தவளுடன் என்ன சல்லாபம்?’ என்று வெளிப்படையாகக் கண்டிக்க முடியவில்லை அப்பாவால். தன் கையாலாகாத்தனத்தால்தான் அவ்வளவு ஆத்திரம் என்று இப்போதுதானே புரிகிறது! கல்யாணமானதும், விசாலிக்கு வாடகை வீடு சுலபமாகக் கிடைக்கவில்லை. மாடியில் குடியிருந்தவர்களை அப்பா விரட்டாத குறையாக அனுப்பிவிட, அங்கு விசாலியும், அவள் கணவரும் குடிபுகுந்தார்கள். “எத்தனை நாளுக்குத்தான் இப்படி ஒண்டிக்கட்டையா இருப்பே?” விசாலி கரிசனப்பட்டாள். அசுவாரசியமாகச் சூள்கொட்டினேன். இனிமே எந்தப் பொண்ணு பக்கத்திலேயாவது ஒக்காருவியா? அப்பாவின் குரல் என்னைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருந்ததை அவளிடம் சொல்லியிருக்க முடியுமா? அடுத்த பல நாட்கள் அலுவலகத்தில் மும்முரமான வேலை. ஆனால், என் மனம் என்னவோ ஓயவில்லை. விசாலியிடம் அப்பா வாடகை எதுவும் வாங்கவில்லை என்று எனக்குத் தெரியும். அப்போது அதைப்பற்றிப் பெரிதாக எண்ணத் தோன்றவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கிறேன் – நாலணா பெறாத கவருக்கான காசை அம்மாவிடமிருந்து வாங்கிக்கொடு என்று நச்சரித்தவர் எப்படி தாராளத் தர்மப்பிரபுவாக மாறினார்? தன்னைப் பெற்றவளைவிட விசாலி என்ன, அவ்வளவு நெருக்கமான உறவா? அப்படித்தான் இருக்கவேண்டும். யாரைக் கேட்பது? “அம்மா! யார் வந்திருக்கா, பாரு!” பாமா கலகலப்பாக வரவேற்றாள். பெரியம்மாவை எப்போதோ ஒருமுறை ஒரு கல்யாணத்தில் பார்த்ததுதான். அப்போது நெற்றியில் குங்குமப்பொட்டு இருந்ததாக ஞாபகம். பெண் குழந்தைகளுக்குப் பிறந்ததிலிருந்தே நெற்றியில் பொட்டு வைக்கிறார்கள். குழந்தை எவ்வளவு அவலட்சணமாக இருந்தாலும், பிறர் கண் பட்டுவிடுமோ என்ற பயம்! தன் குஞ்சு பொன்குஞ்சு என்று காக்கை மட்டும் நினைக்காது போலும்! வாழ்வில் நடுவில் கணவன் என்று ஒருவன் வருவான். அவன் மறைந்ததும், அவனுடன் பொட்டும் மறைந்துவிட வேண்டுமாம். இது என்ன நியாயம்? விதவையான பெண் தன்னை அலங்கரித்துக்கொண்டால், அவளுடைய அழகைப் பார்த்து எவனாவது சொக்கிவிட்டால் என்ன செய்வது என்று எவனோ ஆணாதிக்கக்காரன் வகுத்த சதி இது. மனைவியை இழந்தவனுக்கு இப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. பல தடவை இந்த பாரபட்சத்தைப்பற்றி யோசித்திருக்கிறேன். ‘நான் செத்தால், நீ பொட்டும் பூவும் வெச்சுக்கோ,’ என்ற என் மனைவியிடம் அழுத்தமாகச் சொல்லவேண்டும். அந்த எண்ணம் எழுந்தபோதே சிரிப்பு வந்தது. இன்னும் கல்யாணமே ஆகவில்லை, பண்ணிக்கொள்ளும் ஆசையும் எழவில்லை. மனைவி மட்டும் எங்கிருந்து வந்தாள்? பெரியம்மா அடையாளம் தெரியாத அளவுக்கு வற்றலாக ஆகியிருந்தாள். சிமெண்டுத் தரையில், சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தவள் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மன்னிப்புக் கோரும் வகையில் பாமா லேசாகச் சிரித்தாள். “அம்மாவுக்கு எதிலேயும் பிடிப்பு கிடையாது. ஒரே இடத்திலே ஒக்காந்து, செவத்தைப் பாத்துண்டு இருப்பா,” என்று தாய் அங்கிருப்பதையே மறந்தவள்போல் கூறிவிட்டு, “நீ உள்ளே வா!” என்று வரவேற்றாள். “ஏன் இப்படி..?” பாமா அசுவாரசியமாகச் சூள்கொட்டினாள். “ஒனக்குத் தெரியாதா?” என்று கேட்டுவிட்டு, “நீ வந்தாத்தானே?” என்று தானே பதிலும் சொல்லிக்கொண்டாள். “அப்பா போனதிலிருந்தே இப்படித்தான். எனக்கு அப்போ பதிமூணு வயசு. அன்னியிலேருந்து வீட்டு நிர்வாகம் என் கையிலேதான்!” பாமா சாவி கொடுத்த கடிகாரம். பேச ஆரம்பித்தால் ஓயமாட்டாள். “விசாலி பிறந்தப்புறம் எங்கேயோ தொலைஞ்சு போயிட்டார் அப்பா. ராணுவத்தில சேர்ந்திருக்காருன்னு தகவல் கிடைச்சுது. நிஜமோ, பொய்யோ! அம்மா காத்துக் காத்துப் பாத்தா. அப்புறம்தான்..,” நெற்றிப்பொட்டை அழிப்பதுபோல் ஒரு சைகை. “யாரோ குரு சொன்னாராம், அவர் இனிமே திரும்பி வரமாட்டார்னு!” அதன்பின் அவள் சொன்னதெல்லாம் சரியாகக் காதில் விழவில்லை. சற்றுப் பொறுத்து பாமா கூறினாள், “யாரோ தப்பு பண்றா. அதுக்கு எங்கப்பா தண்டனை அனுபவிக்கணும்னு அவர் தலையெழுத்து!” என்று பெருமூச்செறிந்தவள், “எங்காத்துக்காரர் போனதும் நல்லதுக்குத்தான்னு நினைச்சுக்கறேன். இல்லாட்டா, அம்மாவை யார் பாத்துப்பா?” என்று முடித்தாள். பாகம் 3 நான் தேடி வந்தது கிடைத்துவிட்டதென்று தோன்றியது. புறப்பட்டேன். “வராதவன் வந்திருக்கே. ரெண்டு நாள் தங்கிட்டுப் போகமாட்டியோ? எனக்கும் பொழுது போனாப்போல இருக்கும்!” என்றாள் பாமா உபசாரமாக. “செடிக்கெல்லாம் தண்ணி விடணும். வாடிப்போயிடும்”. “பிள்ளை இல்லாக் குறை போக, செடி வளக்கறயாக்கும்! என்னமோ, போ!’ என்று சலித்துக்கொண்டாள்.”யாரோட சாபமோ, நம்ப ரெண்டு குடும்பமும் இப்படி ஆயிடுத்து. காமுவுக்கோ குழந்தையே இல்லே. டெஸ்ட்யூப் பேபியாமே, அதையெல்லாம்கூடப் பண்ணிப் பாத்துட்டா. எந்த பிரயோசனமும் இல்லே. அவளுக்கும் நாப்பது வயசு ஆகப்போறது. இனிமே எங்கே!" என்று பெருமூச்செறிந்தாள். “விசாலிக்கு ஒரே பிள்ளை. அதுக்கும் வியாதி. சின்ன வயசில எப்படிடா டயாபடீஸ் வரும்?” நீட்டி முழக்கினாள் பாமா. பாமாவும் அவள் வம்புப்பேச்சும்! நான் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருந்தால் இவளுக்கென்ன? யாருக்குக் குழந்தை பிறக்கவில்லை, ஏன் இன்னும் கருத்தரிக்கவில்லை என்று யோசித்தே காலம் தள்ளுகிறாள் போலிருக்கிறது. அங்கிருந்து கிளம்பியதும், விடுதலை கிடைத்துவிட்டதுபோல் ஓர் உணர்வு உண்டாயிற்று. வாசலிலேயே வரவேற்றாள் விசாலி. “எங்கடா போயிட்டே, ரெண்டு நாளா? ஒன்னைப் பாக்கலாம்னு வந்தேன். செடியெல்லாம் வாடிப்போயிருந்தது. கிணத்திலே தண்ணி இறைச்சு, வாளி வாளியா கொண்டுவந்து விட்டேன்,” மூச்சு இறைக்கப் பேசினாள். இப்போது சொந்த வீட்டுக்குப் போய்விட்டாள். “ஒங்கம்மாவைப் பாத்துட்டு வரேன்,” என்றேன் சுருக்கமாக. குரல் என் ஏமாற்றத்தைக் காட்டிக்கொடுத்தால், அதை அவள் கவனித்ததாகத் தெரியவில்லை. “சொல்லியிருந்தா நானும் ஒன்கூட வந்திருப்பேனே!” என்றவளைக் கவனிக்காது நான் உள்ளே நடந்தேன். அடுத்து என்ன செய்வது என்று வரும் வழியிலேயே தீர்மானித்திருந்தேன். எனக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் தோட்டத்தில்தான் இருப்பேன். பச்சைப்பசேலென்று செடிகளையும், வண்ண வண்ணமாகப் பூக்களையும் பார்த்தால் ஏற்படும் புத்துணர்வு பரண்மேல் ஏறினால் கிடைக்குமா? அதனால் பரணைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று தோன்றியதேயில்லை. விசாலி புறப்பட்டுப் போனதும், முதல் வேலையாக ஏணிமேல் ஏறி பரணுக்குப் போனேன். ஒரே ஒரு புகைப்பட ஆல்பம் கிடைத்தது, ‘எந்த நிமிடமும் உதிர்ந்துவிடுவேன்!’ என்று என்னைப் பயமுறுத்தியபடி. தூசி தட்டி, கவனமாகப் புரட்டினேன். விசாலி! அவளுக்கு அப்போது மூன்று வயதிருக்கலாம். அப்பாவின் மடியில் ஒன்று. அப்பா அவளைத் தூக்கிப்போட்டுப் பிடிப்பதுபோல் இன்னொன்று. அவளுடைய சிரிப்பைவிட அப்பா முகத்திலிருந்த பேரானந்தம்! எனக்கும் அதே வயதுதானே அப்போது? என்னை அப்பா தூக்கிக் கொஞ்சியதாக ஞாபகமே இல்லையே! என்னைப் பிடிக்காமல் போக நான் அப்படி என்ன தவறு செய்தேன்? காற்றைவிட வேகமாக ஓடியது என் எண்ணம். அண்ணாவின் குழந்தைமேல் அத்தனை பாசமா? ஒரு வேளை, தன் சாயலாகவே இருக்கிறாள் என்றோ? என்னால் நம்ப முடியவில்லை. அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் சாயலில் துளிக்கூட ஒற்றுமை கிடையாது. விசாலியின் வீட்டில் பெரிதாக மாட்டியிருந்த புகைப்படத்தில் பார்த்திருக்கிறேனே! ஒருவேளை, உம்மணாமூஞ்சி பெரியம்மா சிறுவயதில் கலகலப்பாக இருந்தாளோ? எப்படி நடந்தது இந்த அசிங்கம்? பெரியம்மா இணங்கித்தான் இருக்கவேண்டுமா, என்ன? ஒரு வேளை, அப்பாதான்..! செய்தாலும் செய்திருப்பார். அவருடைய முரட்டுத்தனம் என்னைவிட நன்றாக வேறு யாருக்குத் தெரியும்? தான் செய்த தவற்றால் அப்பாவுக்கு ஆண் இனத்தின்மேலேயே வெறுப்பு ஏற்பட்டிருக்கவேண்டும். அதற்குப் பலி நான். என் மனக்குட்டை குழம்பியது. இனிமேல் பாமா எது சொன்னாலும் நம்பக்கூடாது என்று முடிவெடுத்தேன். நம்பாமல் எப்படி இருப்பது? ஆல்பத்தை தூக்கியெறியாத குறையாக கீழே போட்டேன். அதிலிருந்து தூசி பறந்தது. அம்மாவுக்கு இவர்களுடைய கள்ள உறவு தெரியுமோ? ராத்திரி தூக்கம் வரவில்லை. எதற்கும் இன்னொருமுறை நன்றாகத் தேடிப்பார்க்கலாம் என்று தோன்றியது. தெருவில் ஸ்கூட்டர் சப்தமும், பேச்சுக்குரல்களும் கேட்டன. விடிந்துவிட்டது! ஓடாத குறையாக, கொசுக்கடியையும் பாராட்டாது, கொல்லைப்புறத்திற்குப் போனேன். அன்றலர்ந்த மல்லிகையும், நைட் குவீன் என்று இரவில் மலரும் வெள்ளைநிறப் பூக்களும் பரப்பிய நறுமணம் என் மூக்கில் ஏறவில்லை. ஏணியை மீண்டும் உள்ளே தூக்கிவந்தபோது, ‘என்ன கனம் கனக்கிறது, சனியன்!’ என்று, காரணமில்லாமல் அதைத் திட்டினேன். பரணுக்குள்ளே ஒரு மூலையில் கட்டுக்கட்டாக புத்தகங்கள். குறுக்கேயும் நெடுக்கேயும் சணல் கயிறு போட்டு இறுகக் கட்டியிருந்தது. எல்லாம் இன்றுவரை பிரபலமாக இருக்கும் ஒரு தமிழ் பத்திரிகை. எனக்குத் தெரிந்து, அப்பா ஆங்கில தினசரியைத்தவிர வேறு எதையும் படித்ததில்லை. இந்தக் குப்பையை எல்லாம் அம்மாதான் படித்திருக்கவேண்டும். படிக்க அவ்வளவு ஆசையா? அப்போதுதான், என்னைப் பெற்றவளைப்பற்றி எதுவுமே தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் ஏற்பட்டது. இதைத் தூக்கிப் போடவேண்டும் என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை? ‘ஏதோ விஷயம் இருக்கிறது,’ என்று அந்தப் புத்தகக்கட்டை அலக்காகத் தூக்கிக் கீழே போட்டேன். தூசி பறந்தது. தும்மியபடி, சணலை அறுத்தேன். பத்திரிகைகள் தேதிவாரியாக அடுக்கப்பட்டு இருந்தன. நான் பிறந்த வருடம் வெளிவந்தவை அவை என்று மேலேயிருந்த அட்டை காட்டியது. அலட்சியமாக ஒரு முறை புரட்டினேன். முக்கியமானதாக எதுவும் தெரியவில்லை. அம்மாவின் நினைவாக அப்படியே வைத்திருப்பார்களோ? அப்போது எழுந்த அடுக்குத்தும்மல் மேற்கொண்டு துப்பறியும் ஆசையை வென்றது. ‘காலை வேளையில், இது என்ன வேண்டாத வேலை!’ என்று என்னையே திட்டிக்கொண்டேன். ஒரு மனைவி இருந்திருந்தால் அவளும் இப்படித்தான் வசைபாடி இருப்பாள் என்று தோன்ற, அந்த குழப்பத்திலும் சிரிப்பு எழுந்தது. ஒவ்வாமையை நீக்க நான் அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் மருந்தை எடுக்க அலமாரியைத் திறந்தேன். பாக்கெட் காலி! எரிச்சலுடன், இருபத்துநான்கு மணி நேரமும் திறந்திருக்கும் மருந்துக்கடையை நோக்கிப்போனேன். மருந்து நாக்கில் பட்டவுடனேயே தும்மல், மூக்கில் புழு நுழைவதுபோலிருந்த வேதனை எல்லாம் நின்றுபோயிற்று. மீண்டும், பாமா, விசாலி, அப்பா, பெரியம்மா எல்லாரும் வரிசையாக நினைவில் எழுந்தார்கள். ‘நம் எண்ணங்களை ஒரேயடியாகக் குலைக்கவும் ஏதாவது மருந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று தோன்ற, தலையில் அடித்துக்கொண்டேன். இந்த இழவுக்காகத்தான் பலரும் குடிக்கிறார்கள். ஆனால், ஒரு கோப்பை மதுவால் மூளையிலுள்ள செல்களில் பத்து லட்சம் அழிந்துவிடுமாமே! அப்பாவின் அன்பைப் பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சிறு வயதில் கஷ்டப்பட்டுப் படித்து வளர்த்துக்கொண்ட மூளையை அழிப்பதாவது! அப்பா-விசாலியின் உறவுபற்றிய உண்மை தெரியும்வரை நிம்மதி கிடைக்காது என்று புரிந்தது. பற்களைக் கடித்தபடி ஒரு பத்திரிகையைக் கையில் எடுத்தேன். பொருளடக்கம் என்ற பகுதியில், ஒரு கதையின்கீழ் சிவப்பு மையால் கோடிடப்பட்டு இருந்தது. அப்படி என்னதான் இருக்கிறது அதில்? பக்கங்களை வேகமாகப் புரட்டி, கதையைப் படிக்க ஆரம்பித்தேன். ‘எனக்கு இரு மாமன் மகன்கள்,’ என்று ஆரம்பித்திருந்தது கதை. பாகம் 4 ‘இது என்ன நடை, நான்காவது பாட புத்தகத்தில், ’அரசனுக்கு ஒரே ஒரு மகள்!’ என்று எழுதியிருப்பதுபோல! இப்படி எழுதினால், இன்று குப்பையில் போட்டுவிடுவார் பத்திரிகை ஆசிரியர்!’ என்று உதட்டைச் சுழித்துக்கொண்டு, அடுத்த பத்திரிகையைக் கையில் எடுத்தேன். அதே தலைப்பில் மற்றொரு கதை! அப்போதுதான் புரிந்தது அது தொடர்கதை என்று. ‘எனக்கு இளையவனான பரமுவைத்தான் பிடிக்கும். எப்போதும் என்னைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான். பெரியவன் முசுடு! என்னைக் கிள்ளி அழவைத்துவிட்டு, ஓடுவான்’. ஏதோ சந்தேகம் தட்ட, கதை எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். பூரணி. அம்மா பெயர் அன்னம் என்று தெரியும். முழுப்பெயர் அன்னபூரணியாக இருக்கலாம். நடை சகிக்காவிட்டாலும், தொடர்ந்து படித்தேன். அம்மா எழுதிய கதை ஆயிற்றே! ’நாங்கள் பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டில் சந்தித்துக்கொள்வோம். அப்போதெல்லாம் ஒரே அமர்க்களம்தான். ‘நான் தாவணி போட்டுக்கொள்ள ஆரம்பித்ததும், நானும் பரமுவும் ஒன்றாகச் சினிமா பாட்டு பாடுவோம். அவன் வேண்டுமென்றே அபஸ்வரமாகப் பாடுவான். அப்போதுதானே என்னைச் சிரிக்கவைக்க முடியும்?’ அதற்குமேல் என்னால் படிக்க முடியவில்லை. புத்தகத்தைக் கீழே எறிந்துவிட்டு, யோசிக்க ஆரம்பித்தேன். பெரியம்மா அப்பாவுக்கு உறவுமுறைதான் என்று தெரியும். அப்படியானால், அப்பாதான் பரமுவா? அவர் சிரித்தே நான் பார்த்ததில்லையே! அடியிலிருந்த புத்தகத்தை எடுத்தேன். அந்த தொடர்கதையைக் காணோம். முடிந்திருக்கும். ஆனால், ‘வாசகர் கடிதம்’ என்ற தலைப்பு என் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில், அதே சிவப்பு நிறக்கோடு, அடியில். ஒரு வேசிதான் இம்மாதிரியான கதைகளை எழுதுவாள். அண்ணனை மணந்துகொண்டுவிட்டு, தம்பியுடன் கள்ளக்காதலா? சீச்சீ! ஆபாசம்! தான் கெட்டது போதாதென்று, படிக்கிறவர்கள் மனதையும் கெடுக்கவேபோல் எழுதியிருக்கிறாள். அந்தப் புத்தகத்தினுள்ளேயிருந்து ஏதோ தினசரியிலிருந்து கிழிக்கப்பட்ட ஒரு துண்டுக்காகிதம் விழுந்தது. “எழுத்தாளினி திருமதி அன்னபூரணி கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும்போது, தவறி உள்ளே விழுந்து மரணமடைந்தார்”. அம்மா ஏதோ விபத்தில் உயிரிழந்ததாகப் பாட்டி சொல்லி இருக்கிறாள். விவரங்களுக்காக நான் துருவியபோது, ஒரேயடியாக அழ ஆரம்பிக்க, நான் அதற்குப்பின் அந்தப் பேச்சையே எடுத்ததில்லை. ‘செத்தவர்கள் எப்படிப் போனால் என்ன? போய்விட்டார்கள். அவ்வளவுதான்!’ என்று நினைத்து, சமாதானப்படுத்திக்கொண்டேன் அப்போது. இப்போதோ, அம்மாவைப்பற்றிக் கண்டபடி எழுதியிருந்தவன்மேல் ஆத்திரம் எழுந்தது. ஆனால், அந்தக் கடிதத்தில் பொதிந்திருந்த பொருள் என்னை யோசிக்கவைத்தது. பெற்ற அம்மா வெவ்வேறாக இருந்தாலும், நானும் விசாலியும் ஒரே அப்பாவுக்குப் பிறந்தவர்கள்! கணவர் தனக்குச் செய்த துரோகத்தைத் தாளமுடியாது, எழுத்துமூலம் ஒரு வடிகாலைத் தேடியிருக்கிறாள் அம்மா. துரதிர்ஷ்டவசமாக, ஒரு பெண் கதை எழுதினால், அது அவளுடைய கதையாகத்தான் இருக்கும் என்று நம்புகிற உலகத்தில் நாம் வாழ வேண்டியிருக்கிறது. பலரும் அம்மாவைச் சந்தேகக்கண்ணோடு பார்த்திருப்பார்கள். அவமானம் தாங்காது, அம்மா கிணற்றில் குதித்துத் தற்கொலை பண்ணிக் கொண்டிருக்கவேண்டும். ‘விபத்து’ என்று குடும்பத்தார் சமாளித்திருப்பார்கள். ‘அம்மா! கதை எழுதி, பெயரும் புகழும் கிடைக்கும் என்று யோசித்தாயோ? அது உன் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிட்டதே!’ முதன்முறையாக, நான் பார்த்தேயிராத அம்மாவுக்காக அழுதேன். எங்கோ மணியோசை கேட்டது. “ஏண்டா? எத்தனை நேரமா கூப்பிடறது?” மிரட்டலாக வந்தது பாமாவின் குரல். “விசாலிக்கு அபார்ஷன் ஆயிடுத்தாம். அவ மாசமா இருந்ததே யாருக்கும் தெரியாது,” என்று தெரிவித்தவளின் குரலில் வருத்தம் ஒலித்தது. “உடனே ரத்தம் கொடுக்கணுமாம். நீ போ!” “உங்க ரத்தம் இவங்களுக்குச் சேராது,” என்று மருத்துவர் கூறியபோது தெரியவில்லை, இனி எவர் ரத்தம் கொடுத்தாலும் பலனில்லை என்ற நிலைக்கு விசாலி போய்விடுவாள் என்று. அவளுடன் சேர்ந்து விளையாடிய நாட்கள் எல்லாம் நினைவில் எழுந்தன. ரத்தபந்தம் என்பது இதுதானா? என் செடிகளுக்காக கிணற்றில் தண்ணீர் இறைத்ததால் இப்படி ஆகியிருக்குமோ? அப்பா விட்டுப்போனவற்றில் ஒரு வீட்டை விசாலிக்குக் கொடுத்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன். காலம் கடந்தபின். காரியத்திற்கு பாமா வந்தாள். “நீ சொன்னதை ரொம்ப யோசிச்சேன், பாமா. விசாலிக்கு ஏன் என் ரத்தம் ஒத்துப்போகலே?” என்று கேட்டபோது அவள் சிரித்தாள். “நீ அவளோட சொந்த அண்ணாவா, என்ன?” ‘என்ன குழப்புகிறாள் இவள்?’ “நீதானே சொன்னே?” என்று இழுத்தேன். “அட அசடு!” என்று பெரிதாகச் சிரித்தாள் பாமா. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் எங்களை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். “நான் ஒன்கிட்ட சொன்ன அன்னிக்குத் தேதி என்ன, தெரியுமா? ஏப்ரல் ஒண்ணு!” அப்படியே அவள் கழுத்தை நெரிக்கவேண்டும்போல ஆத்திரம் எழுந்தது. ‘குடும்பத்தில் ஒரு சாவு போதும்!’ என்று அடக்கிக்கொண்டேன். என்னை முட்டாளாக்கிப் பார்த்ததில் இவளுக்கு அவ்வளவு ஆனந்தமா? கோபத்தினூடே, உண்மை தெரிந்த நிம்மதி. உரக்கச் சிரிக்கவேண்டும்போல் இருந்தது. பாமாவோ அழ ஆரம்பித்தாள், ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு. ’ என்னிக்கோ இவனோட அப்பா செய்த தப்புக்கு இந்த அப்பாவிமேல் பழிதீர்த்துக்க நினைச்சேனே! பாவம், தனியா இருந்துண்டு, ஓயாம படிச்சுப் படிச்சு, ஏற்கெனவே அரைப்பைத்தியம் மாதிரி இருக்கான்!’ அழுகையினூடே சற்றுச் சிரிப்பும் வந்தது அவளுக்கு. ‘நல்ல வேளை, நான் நடந்ததை அவன்கிட்டே சொன்னபோது, அது ஏப்ரல் மாசம்! தேதி ஒண்ணோ, என்னமோ, யார் கண்டது!’ மறக்க முடியாதுதான்! “முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு! இன்னும் என்ன, அவனைப்பத்திப் பேச்சு?” சாருவின் குரலில் எரிச்சலும், பொறாமையும் கலந்திருந்தன. மகளுக்கு என்ன பதில் கூறுவது! தம்பி நான்கு வயதாக இருந்தபோது, அவன் தாயின் மடியில் அமர்ந்ததைப் பார்த்து, “என்னடா, நீ இன்னும் சின்னக் குழந்தையா?” என்று கேலி செய்தவள்தானே! அதன்பின், ஏதோ தவறு செய்பவன்போல், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அக்கா அருகில் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, தாயின் மடியில் வந்து மெல்ல அமர்வான் கடைக்குட்டி பாபு. ‘எனக்கு இந்தப் பாக்கியம் அதிக நாள் நிலைக்காது!’ என்று அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அம்மாவின் – மடியில் இல்லை – பக்கத்தில்கூட யார் அமர்ந்தாலும், “என் அம்மா!” என்று சண்டை போடுவானா? அந்த நினைப்பு எழுந்தபோதே, அவ்வளவு துக்கத்திலும் சிரிப்பு வந்தது சாந்தாவுக்கு. ஒரு முறை, அவளுடைய கணவர் அவள் பக்கத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்தார். வீம்புடன், “என் அம்மா!” என்று சொந்தம் கொண்டாடியபடி, அவரைத் தள்ள முயற்சித்தான் பாபு. அவரும் விடாப்பிடியாக, “என் ஒய்ஃப்!” என்றபோது, அர்த்தம் புரியாது, அவனும் அதே வார்த்தைகளைத் திருப்பிச்சொல்ல, எப்படிச் சிரித்தாள் சாந்தா! இரு ஆண்களும் மாறி மாறி அவளது அண்மைக்காக போட்டி போட்டார்கள். “அவன்தான் குழந்தை! ஒண்ணும் புரியல. நீங்க எதுக்கு அவனுக்குச் சரியா சண்டை போட்டு, அழவிடறேள்!” என்று கணவரை விரட்டியடித்தது மறக்கக்கூடியதா! அப்பாவை எப்படி எதிர்ப்பது என்று புரியாது, பெரிதாக அழ ஆரம்பித்திருந்தான் பாபு. அக்காவாக இருந்தால் கடிக்கலாம். அப்பாவைக் கடிக்கவோ, அடிக்கவோ முடியாதே! அப்பாவும் ஒரு பையனாக இருந்தவராம். அம்மாதான் சொல்லி இருக்கிறாளே! ‘நானும் அப்பாமாதிரி பெரியவனாப் போவேனா? அப்போ எனக்கும் மீசை இருக்குமா?’ என்று தினமும் நச்சரிப்பானே! தான் அதை அனுபவிக்கவே போவதில்லை என்று உணர்ந்துவிட்டதால், அவனுக்குள் எழுந்த இனம்புரியாத தாபம்தான் அப்படி வெளிப்பட்டது என்பது காலம் கடந்தபின்தான் புரிந்தது. “அம்மா! எனக்கு ஏன் மீசை இல்லை?” “நீ பெரியவனாப் போனதும் முளைக்கும்,” என்ற அவள் சமாதானம் அவனுக்குப் புரியவில்லை. வீட்டுக்கு யாராவது நண்பர் வந்தால், பின்னாலிருந்து அவருடைய அடர்த்தியான மீசையைப் பிடித்து இழுத்துவிட்டு, “இது என்னோடது!” என்று அடம்பிடித்தபோது, மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதற்குத் திட்டு வாங்கினான். விடாப்பிடியாக, அவன் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தியபோதுதான் சாந்தாவுக்குப் புரிந்தது, ‘தான் எப்போது பெரியவனாக ஆவது, எப்போது மீசை முளைப்பது!’ என்று அவன் அயர்ந்திருப்பது. புருவம் தீட்டும் பென்சிலால் பாபுவின் மேலுதட்டில் ஒரு சிறு கோடு இழுத்தாள். “இதோ! மீசை!” கண்ணாடியில் தன்னழகை ரசித்ததோடு நிற்கவில்லை பாபு. நண்பர்களுக்கும் காட்டவேண்டாமா! தெருவிற்கு ஓடினான். அவனைவிடச் சற்று பெரியவர்களான பையன்கள் பலமாகச் சிரித்தபோது பெருமையாக இருந்தது. “மீசை ஜோரா இருக்கே!” ஒரு சிறுவன் தன் விரலால் அதை அழுத்தித் துடைத்து அழிக்க முயற்சிக்க, அவர்கள் சிரிப்பு பலத்தது. கண்களில் நீர் பெருக, தாயிடம் கூறி அழ ஓடி வந்தபோது..! யமன் எருமை மாட்டின்மேல் ஏறி வருகிறானோ, என்னவோ, பாபுவுக்கு எதிரில் வேகமாக வந்த கார்தான் யமனாக ஆயிற்று. அத்தனை துக்கத்திலும் சாந்தாவுக்கு ஓர் ஆறுதல். ஏக்கம் இல்லாமல் அவனை அனுப்பிவிட்டோம்! ‘ஆண்மையின் அடையாளமாக மீசை முளைப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைய நான் இருக்கமாட்டேன்!’ என்று பாபுவுக்குச் சொல்லத் தெரியவில்லை. அதனால்தான் அவ்வளவு ஏங்கியிருக்கிறான்! மகளுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது பிறந்த அருமைக் குழந்தை! பல வருடங்கள் ஆகியும், தன் பக்கத்தில் அவன் இருக்கிறானா என்று தன்னிச்சையாகத் தடவிப்பார்த்து, வெற்றிடத்தை உணர்ந்து, வெறித்த பார்வையுடன் உட்கார்ந்திருப்பாள் சாந்தா. தாயின் துக்கம் அதீதமாகப்பட்டது சாருவுக்கு. அவளுக்குப் புரியவில்லை பெற்றவளின் வேதனை. ‘என்னமோ, ஒலகத்திலே யாருமே சாகாத மாதிரிதான்!’ என்று முகத்தைச் சுழித்துக்கொண்டாள். எப்படியாவது, தாயின் முகத்தில் மீண்டும் சிரிப்பைக் கொண்டுவர வேண்டும் என்று வெறியுடன் படிப்பில், விளையாட்டில், இன்னும் தான் ஈடுபட்ட எல்லாக் காரியங்களிலும் சிறந்தாள். அவள் முயற்சிகளெல்லாம் பலனளிக்காதபோது, ஏமாற்றம்தான் வந்தது. அது கோபமாக மாறியது. “நான் எல்லாத்திலேயும் ஜெயிக்கிறேனேம்மா. அதுக்காகவாவது நீ சந்தோஷப்படக்கூடாதா?” என்றுகூடக் கெஞ்சிப்பார்த்தாள். பதிலுக்கு, ஒரு வரண்ட புன்னகைதான் சாந்தாவிடமிருந்து கிடைத்தது. “எந்த துக்கமும் ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் நிலைப்பதில்லை”. எவனோ ஒரு முட்டாள்தான் அப்படிச் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு. அவனும் ஒரு பெண்ணாக இருந்து, தன் உடலின் ஒரு பாகமாக நீண்ட காலம் தங்கியிருந்ததை இழந்தால் இப்படிப் பேசியிருக்கமாட்டான். கையோ, காலோ, அல்லது வேறு எந்த அங்கமோ போனால் கதறுகிறார்களே! இன்னொரு உயிர்! அதற்கு மதிப்பே கிடையாதா? சாந்தாவின் பேச்சு குறைந்தது. ஓயாது வேலை செய்து, தன் வேதனையை மறக்க முயன்றாள். மகளுக்கு மணமாகி, பேரக்குழந்தைகளுடன் பழகும்போது, ’இப்படித்தானே பாபுவும்..!" என்ற நினைப்பே மேலோங்கியது. அவர்களுக்கு அருமையான மாமா ஒருவன் இருந்ததைக் கதை கதையாகச் சொன்னாள். அப்போது, என்றோ மறைந்துவிட்ட மகன் தன்னுடன் இருப்பதைப்போல் மகிழ்ச்சி எழுந்தது. அதுவும் பொறுக்கவில்லை சாருவிற்கு. தாயின் ஏகமனமான அன்புக்காக இன்னும் அவனுடன் போட்டி போட வேண்டியிருக்கிறதே! “முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு! இன்னும் என்ன, அவனைப்பத்திப் பேச்சு?” என்று எரிந்து விழுந்தாள். ‘நான் இருக்கப்போறது இன்னும் அஞ்சு வருஷமோ, பத்து வருஷமோ! அதுவரைக்கும் பாபுவை என்கூடவே வெச்சுக்கறேனே!’ என்று கூறத் தோன்றியதை அடக்கிக்கொண்டாள் சாந்தா. ‘சொன்னால் இவள் புரிந்துகொள்ளப்போகிறாளா, என்ன!’ என்ற அலட்சியம் எழுந்தது. அத்தாயை அத்தனை காலம் காத்திருக்க விடவில்லை கோவிட் தொற்றுநோய். “கடைசியாக ஒருமுறை அம்மா முகத்தைப் பார்க்கக்கூட எனக்குக் கொடுத்துவைக்கவில்லையே! அனாதையாக மருத்துவ மனையில் கிடந்து போய்விட்டாளே!” ஊரடங்குச் சட்டத்தால் வீட்டைவிட்டு நகரமுடியாத சாரு கதறினாள். மகனுடன் மீண்டும் சேர்ந்த ஆனந்தத்தில் அந்த முகத்தில் தங்கியிருந்த புன்னகையைக் கண்டிருந்தால் என்ன நினைத்திருப்பாளோ! கொல்லப்போறேன்! “நான் இந்தக் கறுப்புப் பூனையைக் கொல்லாம விடப்போறதில்லே!” தனக்குள் பேசிக்கொள்வதாக நினைத்து, உரக்கவே சொன்னார் மாத்ருபூதம். இடுப்பில் குழந்தையுடன், தோட்டத்தில் மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த கவிதாவின் காதுகளிலும் மாமனாரின் வார்த்தைகள் விழுந்தன. முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டாள். வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தவர் அருகில் பூனை எதுவும் நின்றிருக்கவில்லை. கடந்தவாரம் அவரிடம் வாங்கிய உதைகளை அந்த கறுப்புப் பூனை மறக்கவில்லையோ, என்னவோ! அன்று மாலை, அது அவர்கள் வீட்டின் வெளியே, தெரு ஓரமாக அசுத்தப்படுத்தியது. சும்மா இருப்பாரா, மா.பூதம்! அவசரமாக வெளியே ஓடி, அதை உதைத்தார். திரும்பத் திரும்ப. பயந்தோடிய பிராணியைப் பார்த்த கவிதா, “பாவம்பா! வாயில்லா ஜீவன்! அதுக்கு என்ன தெரியும்?” என்று மன்றாடியபோது, “நீ சும்மா இரு. நாம்ப வெளியே போறபோது, பூனை குறுக்கே வந்தா, கெட்ட சகுனம்! இது கறுப்பு வேற!” என்று அவளை அடக்கினார். அவள் பிறந்தகத்தில், இரண்டு பூனைகள் துள்ளி விளையாடும். அவள் தரையில் படுத்துக்கொள்ள, அவள்மேல் ஏறும் ஒரு குட்டி. அவள் தன் தலையை பக்கவாட்டில் ஆட்ட, அதுவும் அப்படியே செய்ததைப் பார்ப்பதில் அவளுக்கு ஆனந்தம் பெருகும். ‘பாடும்மா!’ என்று அவள் ஒவ்வொரு ஸ்வரமாகச் சொல்லிக்கொடுக்க, ‘ஸ்வர சுத்தம் இதுகிட்டதான் கத்துக்கணும்!’ என்று அவள் பெருமையாகச் சொல்லும் அளவுக்கு, இனிமையான குரலில் அப்படியே திரும்பப் பாடும் இன்னொன்று. “இதுக்கு என்ன பேர் வெச்சிருக்கே? ஜிஞ்சர்னு (ginger) கூப்பிடலாமா? அந்தக் கலராத்தானே இருக்கு?” என்று அவளுடைய அண்ணன் விளையாட்டாகக் கேட்க, கவிதா அதிர்ந்தாள். “ஐயோ, வேண்டாம்பா. ’டீ, கவி! இஞ்சியை நறுக்குடி’ன்னு அம்மா என்னைக் கூப்பிடறபோதெல்லாம் மனசு பக்கு பக்குங்கும்! இதைச் செல்லக்குட்டின்னு கூப்பிடப்போறேன்!” என்றாள் தீர்மானமாக. ‘ரொம்ப ஆசாரமா இல்லாத வீடா ஒனக்கு மாப்பிள்ளை பாக்கணும். ’பூனைக்கு வேற ஆகாரம் போடணுமா! தண்டச்செலவு!’ன்னு மாமியார் நொடிப்பா’ என்று அம்மா ஆதங்கப்பட்டாள். மாமியார் இல்லாத வீடே அவளுக்குக் கிடைத்தது. தனி வீடு. அதில் எல்லா சௌகரியங்களும் இருந்தன. ஆனால், வந்த சில நாட்களுக்குள், மாமனார், “அது என்ன, ஒங்காத்திலே ரெண்டு பூனை துள்ளி விளையாடறது? அங்கே சாப்பிடவே பிடிக்கலே. எனக்குப் பூனை, நாயெல்லாம் கண்டாலே வெறுப்பு!” என்று அடுக்கிக்கொண்டே போக, அவளுக்கு அழுகைதான் வந்தது. தன் அருமைப் பூனைகளைப் பரிந்து எதுவும் சொல்ல முடியவில்லை. ‘வாழ்க்கைப்பட்டுப் போற இடத்திலே எல்லாரிடமும் மரியாதையாக, அடக்க ஒடுக்கமா இருக்கணும்!’ என்று அனுதினமும் கூறிய தாயின் அறிவுரையைக் கேட்டு வளர்ந்தவளாயிற்றே! தாயைப் பார்க்கப் போனபோது, “ஒன் செல்லக்குட்டி ஒன்னைத் தேடறது, கவி. மூலை முடுக்கெல்லாம் மோந்து பாக்கறது! நீ எப்பவும் ஒக்காந்து படிப்பியே, அந்த நாற்காலியைவிட்டு நகர்றதே கிடையாது!” என்று அடுக்கியபோது, மீண்டும் அழுகைதான் வந்தது கவிதாவுக்கு. அவளைப் பார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டது குட்டி – அதிவேகமாக வீட்டு வாசலிலிருந்து பின்புறம்வரை ஓடி, ஓடி. இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் கிழவருக்குப் புரியுமா? இல்லை, காது கொடுத்துத்தான் கேட்பாரா? எப்படிச் சொல்வது? நோய்த்தொற்று காரணமாக வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் நிலையாலோ, நண்பர்களுடன் அரசியலையும், ’சினிமாக்காரி’களையும் உரத்த குரலில் அலச முடியவில்லையே என்ற எரிச்சலாலோ, அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது என்றுதான் கவிதாவுக்குத் தோன்றியது. இப்போதுதான் ஐந்தில் ஒருவர் அப்படி ஆகிவிட்டாராமே! இந்தவரை, மனிதர் தன் குடும்பத்தினரிடம் வன்முறையைக் காட்டவில்லையே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்! தன் பேத்தியிடம் உயிராக இருந்தவருக்கு மற்ற இனங்களின் குட்டிகளிடம் அன்பு வைக்கமுடியவில்லையே! கவிதாவுக்குப் புரியத்தான் இல்லை. ஒரு நாள், தன் பின்னங்காலைத் தரையில் பதிக்கமுடியாது, அந்தப் பூனை நொண்டி நடந்ததைப் பார்த்தபோது பரிதாபம் மேலிட்டது. மாமனார் டிவியில் மூழ்கி இருந்த தைரியத்தில், காம்பவுண்டுக் கதவைத் திறந்தாள். பூனைகளுக்கு இனிப்பு ஆகாது என்று, உப்பு பிஸ்கோத்து ஒன்றைப் போட்டாள். பலரிடமும் அந்தப் பூனை பிரம்படியும், உதையும் வாங்கியிருக்கும் என்ற எண்ணமே அவளால் தாங்க முடியாததாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்களிலும், ஆகாரத்தை எதிர்பார்த்து, அங்கு வந்தது அந்தக் குட்டி. ஏதோ திருட்டுத்தனம் செய்வதுபோல், அவளும் அதன் பசியைப் போக்கினாள். இரு கால்களிடையை அது சுற்றிச் சுற்றி வந்தபோது, அதன் அன்பும், நன்றி உணர்வும் அவளுக்குப் புரிந்தது. ஆனால், பயமும் எழுந்தது. மெல்லிய குரலில், “போயிடு. உதை வாங்காதே!” என்று எச்சரித்தாள். “நான் பாப்பாவுக்குப் பால் குடுக்கணும்,” என்று பொதுவாகக் கூறிவிட்டு, கதவைத் தாளிட்டாள். “குழந்தை எங்கேப்பா?” ‘போட்ட படத்தையே போடறான்! அபூர்வமா ஒரு புதுப்படம்! அதை சுவாரசியமாப் பாக்கறபோது இதென்ன தொணதொணப்பு!’ என்றெழுந்த எரிச்சலால் வந்தது பதில் கேள்வி: “என்னைக் கேட்டா?” தவழும் குழந்தை! அப்படி எங்கே போயிருக்கும்? பதைபதைப்புடன், வீட்டில் ஒவ்வொரு அறையாகத் தேட ஆரம்பித்தாள் கவிதா. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்திருக்குமோ? குளியலறை, கழிப்பறையிலும் நுழைந்து எட்டிப்பார்த்தாள். பூனை வாசலிலிருந்து கத்தியது. “நீ அதுக்கு ஆகாரம் ஏதாவது போட்டியா?” “இல்லேப்பா”. மனமறிந்து பொய் சொன்னாள். “போடாதே. அப்புறம் இதான் நம்ப வீடுன்னு இங்கேயே தங்கிடும்!” இடைவிடாமல், மீண்டும் கத்திய சத்தம் கேட்க, “அந்த சனியனை இன்னிக்குக் கொல்லாம விடப்போறதில்லே,” என்று சபதம் போட்டுவிட்டு, தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு வாசல்புறம் போனார் கிழவர். தான் பெற்ற குழந்தையைக் காணோம் என்ற கலவர உணர்வு சற்றே மறைய, ஒரு கொலையைத் தடுக்க அவரைத் தொடர்ந்து வாசலுக்கு விரைந்தாள் கவிதா. “இங்கே பாரேன்!” வீட்டின் வெளிப்புறத்தில் அகலமும், ஆழமுமான சாக்கடை. அதற்குள், விழிகள் விரிய, குழந்தை! அழவும் பயந்து, அசையாமல் உட்கார்ந்திருந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்த பூனை மீண்டும் கத்தியது. “இந்தப் பூனை பலே கில்லாடி! நம்பளைக் கூப்பிடத்தான் அந்தக் கத்து கத்தியிருக்கு! நல்லவேளை, இன்னிக்கு மழை பெய்யலே!” மழை பெய்யும்போது, வெள்ளமாக ஓடும் தண்ணீரில் குழந்தை அடித்துக்கொண்டு போயிருக்கும் என்ற நினைப்பே இருவருக்கும் அதிர்ச்சி அளித்தது. “நீ இரு. நான் குழந்தையை வெளியே எடுக்கறேன்!” எப்போதும், கால் வலி, இடுப்பு வலி என்று வியாதி கொண்டாடும் கிழவர், அருமைப் பேத்தியைக் காப்பாற்ற சாக்கடைக்குள் இறங்கினார். “குழந்தையை டாக்டர்கிட்ட அழைச்சிண்டு போ. மூஞ்சி, ஒடம்பெல்லாம் சிராய்ச்சிருக்கு. ஒரே ரத்தம்!” என்று கரிசனப்பட்டவர், “அப்படியே அந்தப் பூனைக்கு ஏதாவது ஆகாரம் வாங்கிண்டு வா. பாவம், வாயில்லா ஜீவன்!” என்றார். சுவரில் வீசிய பந்து கதிரவன். அது பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயரில்லை. ஆனால், எழுத்துத்துறையில் கம்பீரமாக இருக்கவேண்டாமா என்று யோசித்து, அவர் தானே தன்னை நாமகரணம் செய்துகொண்டார். முதலில் வருந்திய பெற்றோரும், அவர் ஒரு தினசரியின் ஞாயிறு பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றபின், ‘எல்லாம் அந்தப் பெயரோட ராசி! சும்மாவா? சூரியனில்ல!’ என்று பெருமைபேச ஆரம்பித்தார்கள். அண்ணனுக்கு அந்தப் பெயரால்தான் வாழ்க்கையில் முன்னேற முடிந்தது என்று நம்பிய கதிரவனுடைய தம்பி பகலவனாக மாறினார் “எதுக்கு அவசரமா வரச்சொன்னே?” என்று கேட்ட அண்ணனிடம் அழமாட்டாக்குறையாகச் சொல்ல ஆரம்பித்தார் பகலவன். “நான் பத்திரிகை ஆரம்பிச்சப்போ நீங்கதானே சொன்னீங்க, ’நம்ப மக்களுக்கு நிறைய சினிமா செய்தி குடுடா. படம் பாத்துக்கிட்டிருந்தா, அவங்களுக்குச் சோறு தண்ணிகூட வேணாம்’னு?” “அதுக்கென்ன இப்போ? பத்திரிகை நல்லாத்தானே ஓடுது?” “இப்போ, ஆறு மாசமா, ரொம்ப நஷ்டம். எல்லாம் அந்த தாமரை பத்திரிகையால வந்த வினை!” பொருமினார் தம்பி. “காலேஜில படிச்சுக்குடுத்தவன் எவனோ ஆரம்பிச்சிருக்கானாம்!” அவர் குரலில் ஏளனம். “வேலையத்த வேலை! அவன் போடற குப்பையையெல்லாம் யார் படிப்பாங்க!” அண்ணன்-தம்பி இருவரும் மலேசிய ரப்பர் தோட்டப்புறங்களில் வளர்ந்தவர்கள். தமிழில் ஆரம்பக்கல்வி கற்றதோடு சரி. மெத்தப் படித்தவர்களைக் கண்டால் உள்ளுர பயம், வெளியில் அலட்சியம். “நானும் அப்படித்தான் நினைச்சு சும்மா இருந்துட்டேன். இப்போ, அவன் போடற கதைங்க, விஷயங்களெல்லாம் சுவாரசியமா இருக்கு, நாலு விஷயம் தெரிஞ்சுக்கலாம்னு எல்லாரும் அதைத்தான் வாங்கிப் படிக்கறாங்க. நம்ப பத்திரிகை கடைங்கள்லே அப்படியே தொங்கிட்டுக்கிடக்கு!” கதிரவன் யோசனையில் ஆழ்ந்தார். சிறிது பொறுத்து, “அந்த ரோசாவோ, என்ன எழவோ, விக்காம செய்துட்டா?” “தாமரை!” என்று மெல்லிய குரலில் திருத்திய பகலவன், “வாங்கறவங்க கையைப் பிடிச்சு தடுக்கவா முடியும்?” என்றார் நிராசையுடன். “எதை எப்படிச் செய்யணும்கிறதை எங்கிட்ட விடு!” அடுத்த வாரமே கதிரவனுடைய தினசரியில் வெளியாகியிருந்தது அச்செய்தி: “நமது சகோதரரான ஞாயிறு பத்திரிகை ஆசிரியர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அன்னாரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதை ஒட்டி, இன்று மாலை நாம் ஏற்பாடு செய்திருக்கும் இரங்கல் கூட்டத்திற்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்”. ஞானி (உண்மைப்பெயரில்லை) அதிர்ந்தேபோனான். பதினாறு வயதில், நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் ஆசையுடன் தலைநகருக்கு வந்திருந்தவன் அவன். திசை தெரியாது விழித்துக்கொண்டிருந்தவனை, “தமிழில எழுதப் படிக்கத் தெரியும்தானே? எங்கிட்ட வேலைக்கு சேர்ந்துக்க,” என்றவாறு அடைக்கலம் கொடுத்தார் கதிரவன். அவரைத் தன் தெய்வமாகவே அவன் மதித்து நடந்துகொண்டதில் வியப்பேதுமில்லை. இப்போதோ, சுயதலத்திற்காக வன்முறையைப் பயன்படுத்தியிருந்த அவருடைய போக்கு அவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. “என்னங்க ஐயா, இப்படிச் செய்துட்டீங்களே!” என்று குழம்பியவனிடம், “நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, எதுவும் தப்பில்ல,” சினிமா வசனத்தை எடுத்துக்கூறினார் கதிரவன். “அந்த நாலு பேத்தில நாம்பளும் ஒத்தங்க!” குருவின் இந்த உபதேசத்தால், ஒரு வழியாக உலகம் புரிவதுபோல் இருந்தது ஞானிக்கு. அதன்பின் ‘தாமரை’ முடங்கிப்போக, வாசகர்கள் மீண்டும் திரைப்படச் செய்திகளுக்கும், அரைகுறை ஆடை அணிந்த நடிகைகளின் படங்களுக்கும் தாவினர். “நீங்க மந்திரியா இருக்கவேண்டியவங்கண்ணா!” என்று நன்றிப்பெருக்குடன் பகலவன் கூறியபோது, ஞானியும் அதை ஆமோதித்துத் தலையாட்டினான். தம்பியின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. “வியாபாரம் படுத்துப்போச்சுண்ணே. எல்லாப் பயலுவளும் ஹேண்ட்போன் வெச்சிருக்கானுங்க!” தான் வெளியிட்ட செய்திகள் கையிலேயே கிடைத்துவிட்டதால் யாரும் தன் பத்திரிகையை வாங்கப் பிரியப்படவில்லை என்ற கோபம் பகலவனது குரலில் வெளிப்பட்டது. “பேசாம, அதை மூடிட்டு, எங்கிட்ட சேர்ந்துக்க,” என்று ஆறுதல் கூறினார் கதிரவன். “அந்தப் பய ஞானிக்கு ஒழுங்கா தமிழ் எழுதத் தெரியல. நான் திரும்ப எல்லாத்தையும் திருத்தி எழுத வேண்டியிருக்கு! ஆனா, நாய்மாதிரி என் பின்னாலேயே வரான், பாவம்!” அதைக் கேட்டுவிட்ட ஞானியின் மனம் கொதித்தது.  நாயா?! இருபது வருடங்கள்! எத்தனை முறை வயிற்றைக் காயப்போட்டு, மாடாக உழைத்தோம்! “தம்பி, டேய்! இப்பல்லாம் என் ஒடம்பு முந்திமாதிரி இல்ல. வயிறு என்னமோ பலூன்கணக்கா உப்பிக்கிட்டே போகுது,” என்று முனகினார் கதிரவன். “டாக்டர் என்ன சொல்றாரு?” “குடியைக் குறைச்சுங்கங்கிறாரு. நான் என்னிக்குடா அந்தக் கருமத்தைத் தொட்டிருக்கேன்?” நடந்தால் வயிறு குறையுமோ என்ற நப்பாசையுடன் ஒருநாள் சாயங்காலம் உலவப்போனார் கதிரவன். திரும்பும் வழியில் ஓரடிகூட எடுத்துவைக்க முடியாமல் போக, டாக்ஸி ஒன்றை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டார். அந்த வாகன ஓட்டியான மலாய்க்காரர் தன் பயணியின் முகத்தில் தெரிந்த வேதனையையும் அவருடைய பருத்த வயிற்றையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார். “இஞ்சே (INCHE – ஐயா)! ஒங்களுக்கு எதிரி யாராவது இருக்காங்களா?” “நான் பெரிய சம்பளக்காரனில்ல. எனக்கு எதிரிங்க யாரு இருக்கப்போறாங்க?” என்று அசிரத்தையாகச் சொன்னாலும், சொல்லத்தெரியாத பயம் எழுந்தது. “ஒங்களுக்கு யாரோ செய்வினை செஞ்சிருக்காங்க – போமோகிட்ட போய்!” அழுத்தந்திருத்தமாக வந்தது குரல். போமோ (BOMOH)! அவரைப்பற்றித் தான் அறிந்ததையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டார் கதிரவன். கிராமப்புற மருத்துவர் என்று அறியப்பட்ட மலாய் மாந்திரீகர். மருத்துவர் என்ற பெயருக்கு ஏற்றபடி, வருகிறவர்களின் நோய்களைக் குணப்படுத்துவார். அத்துடன் நில்லாது, அவர்களுக்கு வேண்டாதவர்களுக்கு நோய்களையோ, ஏன், மரணத்தையோகூட உண்டாக்கும் வலிமை படைத்தவர். ஒருவரது தலைமுடியை வைத்துக்கொண்டே அவருக்குத் தீமை விளைவிக்க முடியும் என்பதால்தானே, அழகுநிலையத்திற்குப் போகும் மலாய்ப்பெண்கள் வெட்டப்பட்ட தங்கள் தலைமுடியில் ஓரிழைகூட விடாது சேகரித்துக்கொண்டு வந்து, பூமிக்கு அடியில் புதைத்துவிடுகிறார்கள்! ஒருமுறை, போமோ ஒருவரைப் பேட்டி கண்டபோது, “ஒருத்தர் மூளை கலங்கச்செய்ய அவர் வீட்டு வெளியில இருக்கிற கதவிலே நூத்துக்கணக்கான பாம்புங்க நெளியறமாதிரி பிரமை உண்டாக்க எங்களுக்குப் படிச்சுக்குடுத்திருக்காங்க!” என்று கதிரவனிடம் ரகசியக்குரலில் கூறினார். “செவத்திலே எறியற பந்து திரும்பி நம்பமேலேயே வந்து விழறமாதிரி, கெட்டது பண்ணினாலும் அப்படித்தான், இல்லீங்களா? அதனால, நான் அந்த பக்கமே போறதில்லே”. பக்கத்திலிருந்தவரின் உணர்ச்சிகளைக் கவனிக்காது, தன் அறிவைப் பறைசாற்றிக்கொள்வதுபோல், காரோட்டி தன்பாட்டில் பேசிக்கொண்டேபோனார்: “நமக்குப் பிடிக்காத ஒருத்தர் சாக, அவர் வயிறு பெருத்துக்கிட்டே போகச் செய்வாங்க. அதுக்குப் பேரு..”. “எப்படி மாத்தறது?” ஈனஸ்வரத்தில் கேட்டார் கதிரவன். “கஷ்டம். சூனியம் போட்டவரால மட்டும்தான் அது முடியும். யாருன்னு எங்கே போய் தேடறது!” தான் மரணத்தின் வாயிலில் இருக்கிறோம் என்று சந்தேகமறப் புரிந்தவுடன், எதிலும் பற்று இல்லாது போயிற்று கதிரவனுக்கு. அவர் படுத்த படுக்கையாக இருந்தபோது, தான் விடாது, சுவரில் பந்து எறிவதுபோலவும், அது திரும்பி வந்து தன்னையே தாக்குவதுபோலும் தோன்றிக்கொண்டே இருக்க, தம்பி, தாமரை என்று பிதற்ற ஆரம்பித்தார். கூடை நிறைய பழங்களுடன் அவரைப் பார்க்க வந்த ஞானியின் உடலில் புதிய மெருகு ஏறியிருப்பது அவ்வளவு கலங்கிய நிலையிலும் அவர் கண்களுக்குத் தப்பவில்லை. “நீங்க இருந்த எடத்திலே என்னைப் போட்டிருக்காங்க. எல்லாம் ஒங்க ஆசிதான்! சீக்கிரமே ஒடம்பு நல்லாகி, வந்துடுங்க ஐயா!” என்ற அவனுடைய போலிப்பணிவும் கரிசனமும் நன்றாகவே புரிந்தது. விரைவிலேயே, ‘எனது ஆசான்’ என்ற தலைப்பின்கீழ் அவரது மரணச்செய்தியை ஒரு பக்கத்தில் வெளியிட்டிருந்தான் ஞானி. கூடவே, ஒரு கண்ணீர்க்கவிதை வேறு! அவரது அகால மரணத்திற்கு, ‘மாரடைப்பு, குடிப்பழக்கம், மன இறுக்கம்’ என்று ஏதேதோ காரணங்கள் கற்பிக்கப்பட்டன. ஆனால், கதிரவனுக்கு மட்டும் தெரிந்திருந்தது குருத்துரோகம் செய்தது யாரென்று. ‘நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, எதுவும் தப்பில்ல. அந்த நாலு பேத்தில நாம்பளும் ஒத்தங்க!’ என்று அவனுக்குப் போதித்ததே அவர்தானே! அதனால்தான், இறக்கும் தறுவாயில் அவர் இதழில் ஒரு சிறு புன்னகை நெளிந்திருந்ததோ? நிகழ்கால ரிஷ்யசிருங்கர் வயது ஏறிக்கொண்டே போனால், பலருக்கும் கவலை வந்துவிடும். நரைக்குச் சாயம் பூசலாம். ஆனால், தொங்கும் கன்னம், உடலின் பாதி எடையைத் தாங்கியிருக்கும் பருத்த வயிறு இவற்றை எப்படி மறைப்பது? கிட்டு பிறரிடமிருந்து சற்று வித்தியாசமானவர். இருபது வயதிலிருந்தே, தனக்கு எப்போது முதுமை வரும் என்று காத்திருந்த பேர்வழி அவர். அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர் வளர்ந்த விதம் அப்படி. ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாடி வீட்டிலிருந்த பூமாவுடன் பாண்டி விளையாடினார். அவள் அவரைவிட இரண்டு வயது சிறியவள். அதனால், ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கை. அதுதான் முதலும் கடைசியுமாக அவர் பெண்களுடன் விளையாடியது. “இனிமே, பொட்டைமாதிரி, பொண்களோட விளையாடுவியா?” என்று அப்பா கிச்சாமி பிரம்பால் விளாசியது ஜன்மத்தில் மறக்குமா! கல்லூரியில் படிக்க அனுப்பினால், கண்ட பையன்களுடன் சேர்ந்து மகன் இன்னும் கெட்டுவிடுவான் என்று, தான் லட்சக்கணக்கான ரூபாயைச் சேமித்து வைத்திருந்த வங்கியில் வேலை கிடைக்கச் செய்தார். சிபாரிசு இருந்ததால், கிட்டுவின் கல்வித் தகுதியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. “வேலைக்குப் போற எடத்திலே பெண்கள் வராளாடா, கொழந்தே?” என்று கவலைப்பட்டாள் பாட்டி. அங்கு பெண்கள் அதிகமாக வரவில்லை. அப்படியே வந்தாலும், கணவன்மார்களை உரசியபடிதான். தனியாக வந்தவர்களோ, தம் செல்வச்செழிப்பைக் காட்டிக்கொள்ளவென உடலை வளர்த்திருந்தார்கள். இந்த விவரத்தையெல்லாம் சற்று குறையுடன் தெரிவித்தார் கிட்டு. “அதுவும் நல்லதுக்குதான்!” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள் பாட்டி. “நீ ரிஷ்யசிருங்கர்மாதிரி!” எப்போதோ, பாட்டியுடன் கோயிலுக்குப் போனபோது, ராமாயணக் கதாகாலட்சேபத்தில் கேட்ட கதை கிட்டுவின் நினைவில் எழுந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன், ஒரு முனிவர் தேவலோக மங்கையான ஊர்வசியால் கவரப்பட்டதால் பிறந்த மகன் ரிஷ்யசிருங்கர். மகனும் தன்னைப்போல் சீரழிந்து போகக்கூடாது என்ற ‘நல்ல’ எண்ணத்துடன், பெண்வாடையே இல்லாது அவனை வளர்த்தார். பிரம்மச்சரியம் ரிஷ்யசிருங்கருக்கு அபாரசக்தியைக் கொடுத்தது. மழையே காணாது, வரண்டிருந்த நாட்டுக்குள் அவன் நுழைந்தவுடனேயே மாரி பொழிந்தது. அக்கதையை நினைவுகூர்ந்த சேஷனின் பிரம்மச்சரியமும் அதனால் எழுந்த பெருமையும் நீடிக்கவில்லை. “கிச்சாமி! பத்தொம்போது வயசிலேயும் ஒனக்கு கல்யாணமாகலியேன்னு நான் வேண்டாத தெய்வமில்லே. அந்த கோயிலில் இருக்கே, பிள்ளையார் விக்கிரகம்! அது நான் வாங்கிக் குடுத்ததுதான் – ஒனக்கு சீக்கிரமே கல்யாணம் நிச்சயமாகணும்னு வேண்டிண்டு!” என்று ஆரம்பித்த கிச்சாமியின் தாய், மகன் பொறுப்பில்லாது இருந்ததை மறைமுகமாகக் கண்டித்தாள். பேரனுக்கு மீசை முளைத்து பத்து வருஷம் ஆகிவிட்டதே, அவனுக்குப் பொருத்தமான எல்லா நல்ல பெண்களுக்கும் சீக்கிரமே கல்யாணம் ஆகிவிடுமே என்று அவள் பயந்தது யாருக்குப் புரியும்! அத்துடன், மகனுக்கும், பேரனுக்கும் எத்தனை காலம்தான் அவளால் வடித்துக்கொட்ட முடியும்! மருமகள் புண்ணியவதி! இந்தக் கவலையெல்லாம் இல்லாமல், போய் சேர்ந்துவிட்டாள்! கிச்சாமிக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. முதலிலேயே தனக்கு அந்த யோசனை வராமல் போயிற்றே என்று நொந்துகொண்டார். தினமும் சாயங்கால டிபனுக்கு அரிசி உப்புமா செய்யத்தான் வயதான அம்மாவுக்கு சக்தி இருந்தது. கண் சரியாகத் தெரியாமல், உப்பை அள்ளிப் போட்டுவிடுவாள். அவள் மனம் நோகக்கூடாதே என்று அவர் சாப்பிட்டுவைப்பார். “ரொம்ப படிச்ச பொண்ணு வேண்டம்டா. சமையல்னா என்னன்னே தெரியாம வளர்த்திருப்பா. அடக்கமா, வீட்டு வேலை செய்யற பொண்ணா பாரு,” என்று அறிவுரை கூறினாள் தாய். முதலில் பார்த்த பெண் பள்ளி இறுதிப் பரீட்சையை மூன்று முறை எழுதியும், பாசாகவில்லை என்ற விவரமே அவளுக்குச் சாதகமாக அமைந்தது. எலுமிச்சை நிறம், கையில் அடங்காத கூந்தல், விதம் விதமாகக் கோலம் போடுவாள், முக்கியமாக, வீட்டில் அவள் சமையல்தான் என்ற பிற அம்சங்கள் பாட்டிக்கு மிகவும் பிடித்துப்போக, கிட்டு பூரணியை மணந்தார். அவளுடன் என்ன பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை. ஒரு முறை, அவளே வலியக் கேட்டாள்: “நான் நன்னா சமைக்கிறேனா?” “ம்!” என்று ஒரே வார்த்தையில் பதில் வந்தது. “ஒங்களுக்கு என் சமையல் பிடிச்சிருக்கோ?” உத்தியோகத்தில் படிப்படியாக உயர்ந்திருந்த கிட்டுவுக்கு எரிச்சலாக இருந்தது. அசமஞ்சம்! பேச விஷயங்களா இல்லை! சேஷனுக்கு எழுபது வயதாகியபோது, சுதந்திரமாக உணர்ந்தார். அப்பா இல்லை, பாட்டி இல்லை. அவரை மணந்த புண்ணியவதியும் சுமங்கலியாகவே போய்விட்டாள். பெண்களுடன் பழக இனி ஒரு தடையுமில்லை! ‘விடுதலை! விடுதலை!’ என்று உரக்கப் பாடவேண்டும்போல் இருந்தது. இளம்பெண்களை அவருக்குப் பிடிப்பதில்லை. ‘மாமா’, ‘அங்கிள்,’ என்றெல்லாம் அழைத்து, வயதை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள், கழுதைகள்! நிறைய யோசனைகளுக்குப்பின், முகநூலில் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். பெரும்பாலும், வயது முதிர்ந்தவர்கள்தாம் அதில் பங்குபெறுவார்களாமே! ‘மணமானவன்’ என்றெழுதினால் கௌரவமாக இருக்கும். மனைவி இருக்கிறாளா, இல்லையா என்று யார் ஆராயப்போகிறார்கள்! வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன். வயது.. அங்கேதான் சற்று தடுக்கியது. 60 என்று எழுதிவிட்டு, ஏதோ யோசித்தவராக, கூட இரண்டைச் சேர்த்தார். அடுத்த பிரச்னை: எப்படி சிநேகிதிகளைத் தேடுவது? அடுத்த சில நாட்களில், எல்லா படைப்புகளையும் படித்தார். நாள் முழுவதும் அதற்காகவே – இனிமையாக – செலவழிந்தது. ஒரு பெண்மணியின் எழுத்து அவரைக் கவர்ந்தது. பயம் சிறிதுமின்றி, பல விஷயங்களைத் தொட்டு, தன் கருத்துகளை வெளியிட்டாள். முக்கியமாக, சமையல் குறிப்புகளைப் பகிரவில்லை. தான் தேடிய புத்திசாலிப்பெண் இவள்தான் தனக்குத் தோழியாக இருக்கத் தகுதி உள்ளவள் என்று குதூகலித்தார் கிட்டு. அவள் எழுதிய ஒரு கட்டுரைக்கு, ‘லைக்’ போட்டார். பாராட்டாக, ஒருசில வரிகள். பதிலுக்கு, அவளும் ‘நன்றி’ என்று ஒரே வார்த்தையில் தெரிவிக்க, கிட்டுவுக்குத் தலைகால் புரியவில்லை. அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது! தனிமரமாக இருப்பவளாக இருக்கும். அதனால்தான் அவ்வளவு சுதந்திர உணர்வு! அடுத்தடுத்து, பல முறை இவர் பாராட்ட, அவளும் சளைக்காது, அதே வார்த்தையில் பதிலளித்தாள். அடுத்து அவளை நெருங்க நாம் என்ன செய்யலாம் என்று யோசித்த கிட்டு, தன் பாராட்டில், ‘டார்லிங்’ என்று அவளைக் குறிப்பிடலாமா என்று யோசித்தார். முதலில் ரஞ்சனி என்ற அவள் பெயரைச் சுருக்கினாலே போதும், போகப் போகப் பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து, ‘டியர் ரஞ்சி!’ என்று ஆரம்பித்து, அவளுடைய துணிச்சலும், அறிவும் தன்னை எவ்வளவுதூரம் கவர்ந்திருக்கிறது என்று கவிதைபோல் எழுதினார். அடுத்தமுறை அவளிடமிருந்து வந்த பதில் எப்போதையும்விட சற்று நீண்டிருந்தது. ‘எல்லாப் பெண்களும் மோசம்!’ என்ற முடிவுக்கு கிட்டு வரக் காரணமாக இருந்த அந்த வரி: “முதலில், மரியாதை கற்றுக்கொள்ளுங்கள்!” தைப்பூசத்துக்குப் போகணும் போன வருடமே பத்துமலைக்குப் போய் முருகனைத் தரிசிக்க முடியவில்லையே என்று பெரிய குறை சின்னசாமிக்கு. பல ஆண்டுகளுக்குமுன்பு ரப்பர் தோட்டப்புறத்தில் வாழ்ந்தபோது லோரிக்காரனுக்கு முப்பது வெள்ளி கொடுத்து, ’கோலும்பூ’ருக்கு வந்து தரிசனம் செய்ததுடன் சரி. அப்போது, கடவுளையே நேரில் பார்த்ததுபோன்று அடைந்த மகிழ்ச்சியை இந்த ஜன்மத்தில் மறக்க முடியுமா! ஏனோ, அதன்பின் அந்த பாக்கியம் கைகூடவில்லை. செல்வம் தன்னுடன் வரும்படி அழைத்தபோது, மனைவி போனால் என்ன, நினைத்தபோதெல்லாம் பத்துமலை தரிசனம் கிடைக்குமே என்ற நப்பாசையுடன் மகன் வீட்டில் தங்க ஒத்துக்கொண்டார். தொற்றுநோய் அவருடைய ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டது. ஏதோ ஊசியாம், குத்திக்கொண்டால் நோய் அண்டாதாம் என்று பலருடன் உட்கார்ந்து, ஊசி போட்டுக்கொண்டார். அன்று இரவெல்லாம் தலைவலியும், காய்ச்சலும் அவரைப் படுத்த, ‘சாமி குத்தம்! இதோ இருக்கு பத்துமலை! ஆனா, போக முடியல்லியே!’ என்று காரணம் கற்பித்துக்கொண்டார். இந்தப் புது வருடத்தில், ‘பக்தர்கள் போகலாம்!’ என்று அரசாங்கமே அனுமதித்தது. சின்னசாமியின் குதூகலம் அதிக நேரம் நீடிக்கவில்லை. “ரெண்டுவாட்டி ஊசி குத்திக்கிட்டவங்கதான் போக முடியும்பா,” என்று செல்வம் விளக்கினான், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு. இரண்டாவது வாய்ப்பு வந்தபோது, “நல்லா இருக்கிறபோதே ஊசி குத்தினா, திரும்பவும் காய்ச்சலும், தலைவலியும் வந்து தொலைக்கும். எதுக்குடா வீண் வம்பு!” என்று போக மறுத்துவிட்டார். அவரைப்போல் வயதானவர்களிடம் பேசிப் பயனில்லை என்று மகனும் வற்புறுத்தவில்லை. ஆனால், கடந்த இரு வாரங்களாக, எதையோ பறிகொடுத்தவர்போல் காணப்பட்ட தந்தையைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. காலமெல்லாம் ஓடாக உழைத்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டவர்! அவருடைய இந்த சின்ன ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாவிட்டால், தான் என்ன மகன்! “வா, செல்வம்! ஒடம்புக்கு என்ன?” என்று வரவேற்றான் மணிவண்ணன். “நல்லாத்தான் இருக்கேன். அப்பா தைப்பூசத்துக்குப் போகணும்னு ரொம்ப ஆசைப்படறாருடா,” என்று இழுத்தான் செல்வம். “கூட்டிட்டுப் போறது!” என்றான் பால்ய நண்பன். “அதுக்குத்தான் ஒன்னைப் பாக்க வந்தேன்”. “பத்துமலைக்கு எப்பவும் லட்சக்கணக்கானபேர் வருவாங்க. இந்த வருசம், ஒரே சமயத்திலே ஆறாயிரம் பேர்தான் உள்ளே போகலாமாம். எனக்கோ கும்பலே ஆகாது. ஒனக்குத் தெரியாதா!” என்று கழன்றுகொள்ளப்பார்த்தான் மணி. “அதில்லேடா..,” என்று இழுத்த செல்வம், “நீ டாக்டர்தானே! இரண்டாவது ஊசியும் போட்டாச்சு அப்படின்னு ஒரு சர்டிபிகேட் குடுத்தா..!” முதலில் அதிர்ந்த நண்பன், ஒரு புண்ணிய காரியத்துக்காகத்தானே செய்யப்போகிறோம் என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டான். “எத்தனை?” என்று செல்வம் கேட்டபோது, “சரிதான் போடா,” என்று செல்லமாக விரட்டினாலும், ‘காசு பாக்க இது சின்னாங்கான (சுலபமான) வழியா இருக்கே!’ என்ற எண்ணமும் எழாமலில்லை. ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்துவிடலாமே! குறுக்கு வழியில் போக மனிதர்களுக்கா பஞ்சம்! செல்வத்தின் அப்பாவைப்போல் எத்தனைபேர் இருப்பார்கள்! ஆளுக்கு நானூறோ, ஐநூறோ விதித்தால், ஒரே மாதத்தில்.. என்று அவன் மூளை கணக்குப்போட ஆரம்பித்தது. தைப்பூசத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. எல்லா தினசரிகளின் முதல் பக்கத்திலும், ‘டாக்டரின் மோசடி’ என்ற பெரிய தலைப்பு. முகத்தைச் சட்டையால் மூடியபடி டாக்டர் மணிவண்ணன். முருகனைத் தரிசித்துவிட்ட பெருமகிழ்ச்சியிலிருந்தார் சின்னசாமி. “என்னப்பா? இப்படி தொண்டைக்கட்டும், இருமலுமா இருக்கீங்களே! டாக்டர்கிட்ட கூட்டிப்போறேன், வாங்க,” என்ற மகனிடம், “எனக்கு ஒண்ணுமில்லேடா,” என்று மறுத்தார். அப்போது அவருக்குத் தெரியவில்லை, தான் யாரிடமிருந்தோ ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட நோயைத் தானும் பரப்பிவிட்டோம் என்ற உண்மை. நிர்மலா ராகவன் […] இந்தியாவில் பிறந்து வளர்ந்த இருமொழி எழுத்தாளர்.   ஓய்வு பெற்ற பௌதிக ஆசிரியை. 1967 தொடக்கம் மலேசியா வில்  தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், கலை விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகளை அலசி, தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டிருக்கிறார். வெளியிட்ட சிறுகதைத்தொகுப்பு: ஏணி நூற்றுக்கும் மேற்பட்ட பரதநாட்டியத்திற்கான பாடல்களை கர்னாடக இசைப்பாணியில் எழுதி, பாடிப் பதிவு செய்துள்ளார். பரிசில்களும், விருதுகளும் - “சிறுகதைச் செம்மல்” விருது (1991) - “சிறந்த பெண் எழுத்தாளர்” விருது (1993) - சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006) - ஆஸ்ட்ரோ, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் போட்டிகளில் மூன்று முறை பரிசு பெற்றிருக்கிறார். - மின்னூல்கள்: தமிழ் – 27, ஆங்கிலம் – 6 (Amazon Kindle, Amazon paperback) FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.