[] பிரபலங்கள் வாழ்விலே தஞ்சை வெ.கோபாலன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை பிரபலங்கள் வாழ்விலே Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.. This book was produced using PressBooks.com. Contents - பிரபலங்கள் வாழ்விலே - 1. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - 2. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் - 3. என்.சி.வசந்தகோகிலம் - 4. பி.யு.சின்னப்பா - 5. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் - 6. டி.ஆர்.சுந்தரம் - 7. டி.ஆர்.மகாலிங்கம் - 8. டி.கே.எஸ் சகோதரர்கள் - 9. 'இலங்கேஸ்வரன்' ஆர்.எஸ்.மனோகர் - 10. எம்.எம்.தண்டபாணி தேசிகர் - 11. டி.எம்.செளந்தரராஜன். - 12. கொத்தமங்கலம் சுப்பு - 13. மானம் காத்த மாவீரன் வாஞ்சிநாதன் - 14. ஆளவந்தார் கொலை வழக்கு - 15. லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. - 16. எம்.எல்.வசந்தகுமாரி - 17. தமிழுக்குக் கதி மகாகவி பாரதி. - 18. ஊத்துக்காடு வேங்கட கவி - 19. கோபாலகிருஷ்ண பாரதியார் - 20. அப்சல்கான் - 21. அருணாசல கவிராயர் - 22. பாரதிதாசன் - 23. எம்.கே.தியாகராஜ பாகவதர் - 24. அப்பூதியடிகள். - 25. சுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று! - 26. கவியோகி சுத்தானந்த பாரதியார் - 27. தியாகராஜ சுவாமிகள் வரலாறு - 28. வேதநாயக சாஸ்திரியார்   - 29. சிவகங்கை மருது பாண்டியர் - 30. பூலித்தேவன் - 31. விந்தன் - 32. கரிச்சான்குஞ்சு - 33. ராஜாஜி   - 34. ராஜாஜியும் காமராஜரும் - 35. காந்திஜிக்கு ராஜாஜியின் நட்பு - 36. ஆலத்தூர் சகோதரர்கள் - 37. கவி காளமேகம் - 38. ஆர். வெங்கட்ராமன் - ஆசிரியரை பற்றி - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 1 பிரபலங்கள் வாழ்விலே   [பிரபலங்கள் வாழ்விலே] பிரபலங்கள் வாழ்விலே   தஞ்சை வெ.கோபாலன் privarsh@gmail.com   அட்டைப் பட மூலம் - https://www.flickr.com/photos/90412460@N00/8375033780/in/faves-96102265@N04/ அட்டைப் பட வடிவமைப்பு – ஜெயேந்திரன்  - vsr.jayendran@gmail.com மின்னூலாக்கம் – ஜெயேந்திரன்  - vsr.jayendran@gmail.com உரிமை - Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License. [pressbooks.com] 1 கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் [] [] கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்றவுடன், என்னடா இது! ஒரு திரைப்பட நகைச்சுவை நடிகரைப் பற்றியதல்லவா இந்தக் கட்டுரை என்று இளைஞர் சமுதாயத்தைச் சார்ந்த யாராவது சிலர் கேட்டுவிடலாம். ஆகையால் எடுத்த எடுப்பிலேயே, ஒரு விஷயத்தை அனைவருக்கும் தெளிவு படுத்த விரும்புகிறேன். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சாதாரண சினிமா நடிகர் மட்டும் அல்ல! அவருடைய பன்முகப் பெருமைகள் அதிகம். அவரையும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போல ஒரு சிரிக்க வைக்கும் நடிகராக எண்ணிவிடாதீர்கள். அவரும் சிரிக்க வைத்தவர்தான்; அதோடு மக்களைச் சிந்திக்க வைத்தவர். ‘உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைய’ ஓடோடிச் சென்று உதவி புரிந்த வள்ளல். துன்பத்திலும் தன் இயல்பான நகைச்சுவையை இழக்காத மன உறுதி படைத்தவர். முந்தைய தலைமுறைக் கலைஞர்தான் என்றாலும் இவரைப் பற்றி ஓரளவாவது இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று உலகம் மிகச் சுருங்கி இருக்கிறது. அன்று, தான் இருக்கும் ஊர்தான் ஒருவனுக்கு எல்லாம். சென்னைக்குச் சென்று வரவேண்டுமானால் கூட அது அன்று பலருக்குக் கைகூடும் காரியமாக இருந்ததில்லை. நாகர்கோயிலுக்கு அருகில் ஒழுகினசேரி எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்து, இளம் வயதில் வறுமையில் கஷ்டப்பட்டு, நாடகக் கம்பெனியில் சேர்ந்து, இயற்கையாக இறைவன் அவருக்கு அளித்திருந்த அளவற்ற திறமையினால் முன்னுக்கு வந்து, வாழ்க்கைப் பாதையில் பல மேடு பள்ளங்களைத் தாண்டி, இன்ப துன்பங்களைத் தாங்கி முதுமை அடையாமலே காலமாகிப் போன ஒரு மாணிக்கம் அவர். அவரைப் பற்றி சில விவரங்களை இப்போது பார்க்கலாம். [] முதல் பாராவில் சொன்னபடி நாகர்கோயில் அருகிலுள்ள ஒழுகினசேரி அவருடைய ஊர். தந்தையார் சுடலைமுத்துப் பிள்ளை, தாயார் இசக்கி அம்மாள். இவர்களுடைய மூத்த மகன் தான் தமிழகத்தில் புகழின் உச்சியில் இருந்த என்.எஸ்.கே. எனும் என்.எஸ்.கிருஷ்ணன். இவர் படித்தது என்னவோ நான்காம் வகுப்புதான். தமிழும் மலையாளமும் இவருக்கு நன்கு தெரியும். தந்தைக்கு பெயருக்கு ஒரு வேலை இருந்தது. தாயார் ஒரு குடும்பத் தலைவிதான். மேல் வருமானத்துக்காக இவர் ஒரு சோற்றுக்கடை வைத்து நடத்தி வந்தார். மிக ஏழ்மையான குடும்பம். கிருஷ்ணன் நாடகக் கொட்டகைக்குச் சென்று அங்கு சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்போதெல்லாம் சினிமா கொட்டகைகள் கிடையாது. எல்லா ஊர்களிலும் நாடகம் போட் ஒரு கொட்டகை இருக்கும். 1924இல் கிருஷ்ணனின் தந்தை தன் மகனை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றார். அந்தக் காலத்தில் பல ஊர்களில் பாய்ஸ் நாடகக் குழுக்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலும் சிறுவர்கள்தான் நடித்து வந்தனர். அவர்களுக்குப் பகலில் ஒரு வாத்தியார் பாடம் எடுத்து கதை, வசனங்கள் என்று சொல்லிக் கொடுப்பார்கள். பாடத் தெரிந்த பையன்களுக்கு கிராக்கி அதிகம். அப்படியொரு நாடகக் கம்பெனியில் கிருஷ்ணன் சேர்ந்தார். அங்கு பின்னாளில் பிரபல நகைச்சுவை நடிகராம இருந்த டி.எஸ்.துரைராஜ் என்பவரும் இருந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். [] பிரபல நாடக, சினிமா நடிகரும், தேசியவாதியுமான டி.கே.சண்முகம் அவர்கள் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை நடத்தி வந்தார். டி.கே.எஸ். அண்டு பிரதர்ஸ் என்று இவர்கள் பிரபலமானார்கள். அவருடைய நாடகக் குழுவின் என்.எஸ்.கிருஷ்ணன் சேர்ந்தார். அங்கு என்.எஸ்.கே. சகலகலா வல்லவனாக விளங்கினார். எந்த நடிகராவது இல்லையென்றால், அவருடைய பாத்திரத்தை ஏற்று நடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். பல ஊர்களிலும் நாடகங்கள் நடித்து வந்த இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி இவர் நடித்த முதல் தமிழ்ப்படம் ‘சதி லீலாவதி’ எனும் படம். எம்.ஜி.ஆர். அவர்களும் அந்தப் படித்தில்தான் முதன்முதலாக நடித்துப் புகழ்பெற்று, சினிமாத் துறையின் உச்சிக்குச் சென்றார். திரைப்படங்களில் நடித்தாலும் என்.எஸ்.கே. அவர்களுக்கு நாடகம்தான் முக்கியம். இவர் ஒரு முறை புனே நகருக்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது உடன்வந்த ஒரு நடிகையின் நட்பு கிடைத்தது. அவர்தான் டி.ஏ.மதுரம். இவர் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். புனேயில் இருந்த நாளிலேயே இவ்விருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்பாகவே என்.எஸ்.கே. 1931இல் நாகம்மை எனும் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். டி.ஏ.மதுரம் இரண்டாம் மனைவி. அதன்பின் மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாகவும் திருமணம் செய்து கொண்டார். [] நாகம்மைக்கு கோலப்பன் எனும் மகனும் டி.ஏ.மதுரத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. வேம்புவுக்கு ஆறு குழந்தைகள், நான்கு மகன்கள், இரண்டு பெண்கள். மதுரத்தைத் திருமணம் செய்து கொண்ட பிறகு இவ்விருவரும் சேர்ந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்கத் தொடங்கினர். இவர்களுக்கு நல்ல புகழ் கிடைத்து வந்தது. ஓடாத படங்களில் கூட கிருஷ்ணன் மதுரை ஜோடியின் நகைச்சுவைக் காட்சிகளை ஓட்டி வெற்றி பெற்ற படங்களும் உண்டு. இவருடைய நகைச்சுவைக் குழுவில் பல நடிகர்கள் சேர்ந்து கொண்டார்கள். புளிமூட்டை ராமசாமி, சி.எஸ்.பாண்டியன், (குலதெய்வம்) ராஜகோபால், கவிஞர் சுப்பு ஆறுமுகம் போன்றோர் இவருடன் இருந்தவர்கள். இவருடைய மூளையில் உதயமாகி திரையில் உலாவந்து பிரபலமான சில நிகழ்ச்சிகள் உண்டு. அவை “கிந்தனார் காலக்ஷேபம்”, “ஐம்பது அறுபது” நாடகம் போன்றவற்றைச் சொல்லலாம். இவருடைய பாடல்கள், நாடகங்கள் இவற்றில் புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்துக்கள் இருக்கும். ஆகையால் இவரை உரிமை கொண்டாடி பல அரசியல் கட்சிகளும் முயன்றாலும், இவர் திராவிட இயக்கத்தின் பால் இருப்பதைப் போன்ற ஒரு நிலைமையை உருவாக்கி யிருந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்களிடம் இவருக்கு இருந்த நெருக்கமும் அந்த நிலைமையை உறுதி செய்வதாக இருந்தது. [] “நல்லதம்பி”, “பணம்”, “மணமகள்” போன்ற இவருடைய படங்கள் அன்றைய நாளில் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்தின. இந்தச் சூழ்நிலையில் தான் சென்னையில் 1944இல் “இந்துநேசன்” பத்திரிகை ஆசிரியர் லக்ஷ்மிகாந்தன் கொலைசெய்யப்பட்ட வழக்கில் இவரும் அன்றைய காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் கோவை திருப்பட முதலாளி, இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைதாகினர். சென்னையில் வழக்கு நடந்து முடிந்து என்.எஸ்.கே., பாகவதர் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தமிழ் நாடே அழுதது. இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்தனர். முடிவில் 1946இல் இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். [] விடுதலைக்குப் பின் என்.எஸ்.கிருஷ்ணன் சோர்ந்துவிடவில்லை. புதிய நட்புகள், ஆதரவாளர்கள், திரைப்படத் துறையில் புதிய சிந்தனை, புதிய வளர்ச்சி இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு என்.எஸ்.கே. தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டார். சமூகப் படங்களை எடுத்து வெளியிட்டார். நன்றாக சம்பாதித்தார், நன்றாகவும் தான தர்மங்களைச் செய்து, பிறருக்கு உதவிகள் செய்து அவற்றை நல்ல முறையில் செலவிடவும் செய்தார். தன் கையில் இருப்பதை அப்படியே தானம் செய்துவிடும் நல்ல பண்பு அவரிடம் இருந்தது. அவரால் பயனடைந்தவர்கள் ஏராளம். அவருக்கு வயிற்றில் ஒரு கட்டி வந்து தொல்லை கொடுத்தது. சென்னை பொது மருத்துவ மனையில் சேர்ந்து வைத்தியம் செய்து கொண்டும் பலன் இல்லாமல் 1957 ஆகஸ்ட் 30ஆம் நாள் என்.எஸ்.கிருஷ்ணன் இப்பூவுலக வாழ்வை நீத்து புகழுடம்பு எய்தினார். காலங்கள் மாறினாலும், திரைப்படத் துறையில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், வாழ்விலும் தொழிலிலும் இவர் ஓர் உன்னதமான மனிதனாக வாழ்ந்ததினால் என்றும் இவர் புகழுடம்பு பெற்று வாழ்ந்து வருகிறார். வாழ்க கலைவாணர் என்.எஸ்.கே. புகழ்! 2 திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் [] திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு நடந்த குடமுழுக்கு விழாக்களும், அறுபடை வீடு கொண்ட ஆறுமுகனையும், வள்ளி தெய்வானை சமேத அந்த சுப்பிரமணிய சுவாமியையும், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழையும், இராமாயணம், கந்தபுராணம் ஆகிய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிச்சயம் நினைவுக்கு வரும். இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாவிட்டாலும் இதற்கு முந்தைய தலைமுறையினர் அவரை மறந்துவிட முடியாத அளவுக்கு அனைவர் மங்களிலும் குடிகொண்டவர். யார் மாதிரியும் இல்லாமல் தனக்கென்று ஒரு பேச்சு வழக்கைக் கையாண்டு, பேச்சுக்கிடையே பாடலையும் ராகத்தோடு பாடி மக்கள் மனம் கவர்ந்தவர். அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகள், தொடர் சொற்பொழிவுகள் நடக்கிறதென்றால் அந்த ஊர் திருவிழாக் கோலம் பூணுவதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவருடைய தொண்டு, அவருடைய சொற்பொழிவுகள், அவர் நடத்தியிருக்கிற ஆலய குடமுழுக்கு வைபவங்கள் ஆகியவை மறக்கக் கூடியவைகளா? இப்போது அந்த மகான் பற்றிய வரலாற்றைச் சிறிது பார்க்கலாமே. [] திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்று இவர் அழைக்கப்பட்டாலும் சுருக்கமால ‘வாரியார் சுவாமி’ என்றால் சிறு பிள்ளைக்கும் தெரியுமளவுக்கு அவர் பிரபலமானவர். அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்பது இந்த மகான் அவதரித்த ஊர். காங்கேயன் என்பது முருகப்பெருமானின் திருநாமம். அவன் பெயர்கொண்ட ஊரில் அந்த முருகனுக்குச் சேவை செய்வதற்கென்று ஒரு அடியாரைப் பிறக்க வைத்தான் போலும். இவ்வூர் வேலூரிலிருந்து சுமார் ஐந்து மைல் தூரத்தில் உள்ள சின்னஞ்சிறு ஊர். காஞ்சி, வேலூர் ஆகிய பகுதிகளை அந்த நாளில் தொண்டை மண்டலம் என அழைப்பார்கள். தொண்டைமண்டலம் சான்றோர் உடைத்து என்ற பழமொழியும் பழக்கத்தில் இருந்தது. அது போலவே பல சான்றோர்களை நாட்டுக்கு அளித்த தொண்டை மண்டலத்தில் வாரியார் சுவாமிகள் அவதரித்தார். அவர் இந்த நாட்டில் ஆன்மீகம் தழைக்க அவதரித்த நாள் 1906 ஆகஸ்ட் 25. இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார் பரம்பரையில் வந்த மல்லையதாச பாகவதர் என்பவரின் மகவாகப் பிறந்தவர் வாரியார் சுவாமிகள். அந்தக் காலத்தில் இறைவனுடைய புகழ்பாடும் புராண இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தவர் மல்லையதாச பாகவதர். இவர் செய்த புண்ணியம், இவர் உச்சரித்த இறைவனின் நாமங்களினால் உண்டான புண்ணியம் ஒரு உத்தமச் செல்வனை மகனாகப் பெற்றார். முருகனின் பெருமை பாடும் அருணகிரியின் திருப்புகழின் பால் இவருக்கு இருந்த அசாத்திய புலமையும், ஆர்வமும் இவர் திருப்புகழைப் பரப்பும் நோக்கில் திருப்புகழ் சபாக்களை அமைத்து அங்கெல்லாம் திருப்புகழ் பஜனைகளையும், திருப்புகழ் விரிவுரைகளையும் நிகழ்த்த ஏற்பாடு செய்து வந்தார். சந்தக்கவியான திருப்புகழைப் பாடுவோர் நாவும், கேட்போர் மனமும் இனிமையிலும் ஆழ்ந்த பக்தியிலும் ஆழ்த்திவிடும். அந்த அரிய பணியை மிகச்சிறப்பாக இவர் செய்து வந்த காரணத்தாலோ என்னவோ, அவரது பணியைத் தொடருவதற்கென்று ஒரு மாணிக்கத்தைப் பிள்ளையாகப் பெற்றெடுத்தார். [] வாரியாரைப் பெற்றெடுத்த மணிவயிறு படைத்த அம்மையாரின் பெயர் கனகவல்லி அம்மையார். ‘பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை’யாகப் பாரில் புகழ்பெற்று விளங்கியப் புனிதத் தாயாக விளங்கினார் இந்த அம்மையார். தொண்டைமண்டல சிவனடியார் வம்சத்தில் வந்த இந்த தம்பதியரின் பதினோரு குழந்தைகளில் வாரியார் சுவாமிகள் நான்காவது பிள்ளையாக அவதரித்தவர். பெரியோர்களுடைய அனுக்கிரகம் இந்தக் குடும்பத்துக்கு இருந்த காரணத்தால் இப்படியொரு தெய்வீக மகனை ஈன்றெடுக்கும் பாக்கியம் இந்தத் தம்பதியினருக்குக் கிடைத்தது. [] இந்தக் காலம் போல அன்று பள்ளிக்கூடம் என்று ஒரு அமைப்புக்குள் மட்டும் கல்வியை அடைத்து வைக்கவில்லை. பெரும்பாலும் குடும்ப சூழ்நிலையிலேயே குழந்தைகள் நல்ல கல்வியறிவை பெற முடிந்திருக்கிறது. அந்த வகையில் வாரியார் சுவாமிகள் பள்ளிக்கூடம் எதிலும் சென்று படிக்கவில்லையாயினும், இயற்கையாய் அமைந்த அருள் நிறைந்த அறிவும், பெரியோர்களின் சகவாசமும், உபதேசங்களும் அவரை ஒரு மேதையாக உருவாக்க உதவின. இவருடைய தந்தையே இவருக்கு ஞானகுருவாக இருந்த இவருக்குத் தேவையான கல்வியை, இலக்கியம், இலக்கணம், இசை, வீணை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார். தந்தையே இவருக்கு முழுமுதல் ஆசானாக விளங்கினார். இவரது மூன்று வயது முதல் எழுதவும் படிக்கவும், அரிய புராண, இலக்கிய கதைகள் முதலியவற்றைக் கற்கவும் தொடங்கினார். [] தமிழ் இலக்கிய இலக்கண புலமையை மிக இளம் வயதில் கற்றுப் புலமை பெற்றதனால் மற்றவர்களுக்கு கைவராத பாடல் இயற்றும் ஆற்றலை, அதிலும் மிகவும் சிரமமான வெண்பா பாடும் ஆற்றலை இவர் பெற்றிருந்தார். பனிரெண்டு வயது ஆவதற்குள் இவர் படித்த அரிய பெரிய சிறந்த நூல்களை மனப்பாடமாகச் சொல்லவும், பேசவும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். கர்நாடக மாநிலத்தில் வீரசைவர்கள் உண்டு. இவர்கள் ‘லிங்கம்கட்டி’ என்றும் பிறரால் அழைக்கப்படுவர். இவர்கள் சிவலிங்கத்தைக் கழுத்தில் அணியும் பழக்கமுடையவர்கள். ருத்ராட்சம், சிவலிங்கம் இவைகளை அணிந்த இவர்கள் போல கிருபானந்த வாரியார் சுவாமிகளும் கழுத்தில் ருத்ராட்சம், சிவலிங்கம் அணியத் தொடங்கினார். திருவண்ணாமலையில் அப்போதிருந்த பாணபத்திரர் மடத்தில் இவர் சடாக்ஷர மந்திர உபதேசத்தைப் பெற்று சிவலிங்கம் அணியத் தொடங்கினார். [] இவருக்கு அமைந்த குருமார்களின் பெயர்களையும் எண்ணிக்கையையும் கவனித்தால் இவருக்குக் கிடைத்திருக்கும் பேறு எத்தகையது என்பதை உணர முடியும். திருப்புகழ் சுவாமிகள், பழனி ஈசான சிவாச்சார்ய சுவாமிகள் போன்ற பெரியோர்களின் ஆசி இவருக்கு இருந்தது. வீணை இசையை இவர் பழுதற கற்றிருந்ததால், இவருடைய இசைச் சொற்பொழிவுகளில் இவரால் எல்லா பாடல்களையும் ராகத்தோடு பாடமுடிந்தது. கந்த சஷ்டி கவசம் எனும் அரிய பக்தி பனுவலைப் பாடிய பாம்பன் சுவாமிகளை இவர் தரிசித்தார். அவருடைய அனுக்கிரகமும் இவருக்குக் கிட்டியது. மதுரையில் திருப்புகழ் சுவாமிகள் என்று புகழ்பெற்றிருந்தவர் [] மதுரையில் திருப்புகழைப் பரப்புவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தார். வாரியார் சுவாமிகள் அங்கு சிலகாலம் திருப்புகழ் பயிற்சி பெற்றார். அந்த அமைப்பை நடத்தி வந்த திருப்புகழ் சுவாமிகள் எனும் பிரம்மஸ்ரீ லோகநாத ஐயர் என்பவர் இவருக்கு ஆசி கூறி எல்லா கலைகளும் இவருக்குத் தானே வந்து சேரும் என ஆசீர்வதித்து அனுப்பினார். அந்த குருநாதரிடம் திருப்புகழ் கற்றதாலும், அவருடைய ஆசி கிடைத்ததாலும், அவருக்குத் தனது குரு தட்சிணையாக அவரது குடும்பத்தைப் பல ஆண்டுகள் ஆதரித்து வந்தார் சுவாமிகள். [] அமிர்தலட்சுமி எனும் அம்மையாரை இவர் தன்னுடைய 19ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய சொந்த மாமன் மகள்தான் இந்த அம்மையார். இந்த தம்பதியரின் ஆன்மீகப் பயணத்துக்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ இவர்களுக்குப் பிள்ளைப் பேறு எதுவும் இல்லை. அறுபடை வீடுகொண்ட ஆறுமுகனுக்குத் தொண்டு செய்யும் விதத்தில் இவர் 1936இல் “திருப்புகழ் அமிர்தம்” எனும் மாத சஞ்சிகையொன்றைத் தொடங்கி சுமார் 37 ஆண்டுகள் தொய்வின்றி நடத்தினார். திருப்புகழைப் பரப்புவதும், அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம், அவை சம்பந்தப்பட்ட கதைகள், நீதிகள் இவற்றை இலக்கிய நயத்தோடு பரப்பி வந்தது இந்தப் பத்திரிகை. மற்ற பல பெரியோர்களின் கதைகளும் கட்டுரைகளும் இதில் இடம்பெற்றிருந்தன. இவருடைய வாழ்க்கைப் பயணம் முழுவதும் திருமுருகனின் பெருமையை உலக்குக்கு அறிவிக்கவும், அவனது திருப்புகழை மக்களின் மனங்களில் பதியும் படி சொற்பொழிவுகள் ஆற்றுவதுமாகவே கழிந்தது. திருப்புகழ் மட்டுமின்றி இதர தமிழ் இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஞானமும், நல்ல ஞாபக சக்தியும் இருந்த படியால் இவரால் பேசமுடியாத தலைப்புகளே இல்லை எனலாம். ஆன்மீகம், பக்தி, நல்வழி இவற்றுக்காகப் பாடுபட்டவர்கள் இவரைப் போல் வேறு யாரும் இருந்திருப்பார்களா என்று தெரியவில்லை. நல்லொழுக்கம், நேரம் தவறாமை, கடமைகளை முறைப்படி செய்தல் என்பவை இவரிடம் இருந்த பண்புகள். தினமும் ஸ்நானம் செய்து இறைவனுக்கு முறையாகப் பூஜைகளைச் செய்தபின்தான் உணவு உண்பது என்பது இவருடைய வழக்கம். இவருடைய வாழ்நாளில் ஸ்நானம் பண்ணாத பூனை செய்யாத நாள் ஒன்றுகூட இருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு அதில் மிகவும் கவனத்தோடு இருந்திருக்கிறார். இந்த ஆன்மீகத் தொண்டருக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்? ஏதோ இருந்திருக்கிறது போலும். திருமுருகனின் சித்தம் அப்படி இருந்திருக்கிறது. முரட்டு முருக பக்தனான திரைப்பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவருக்கு வாரியார் சுவாமிகளை மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஏதோவொரு வகையில் இவருடைய சம்பந்தம் இல்லாமல் அவர் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை. அவருடைய அன்பினால் இவரும் அவருடைய சில படங்களில் தோன்றும்படியாயிற்று. இவருடைய கதா காலக்ஷேபமும் சில படங்களில் இடம்பெற்றன. அதற்கு முன்பேகூட திரைப்பட உறவு இவருக்கு இருந்திருக்கிறது. எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்துப் புகழ்பெற்ற “சிவகவி” படத்துக்குத் திரைக்கதை எழுதியவர் வாரியார் சுவாமிகள். [] என் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் தாயுமானவர் வாக்கை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்தவர் வாரியார் சுவாமிகள். பூமியில் மனிதராய்ப் பிறந்த அனைவரும் மற்றவர்களைத் தங்களைப் போலவே எண்ணத் தொடங்கிவிட்டால், அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டால் போர் ஏது, பூசல் ஏது என்பது இவரது சித்தாந்தம். ஆதலாம் அன்பு செய்வீர் உலகத்தீரே என்பது இவரது அறைகூவல். நிறைவாழ்வு வாழ்ந்த திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்துத் திருமுருகன் திருவடியை அடைந்தார். [] தனது வாழ்நாளில் இவர் ஆற்றியுள்ள பணி எண்ணிலடங்காதது. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் மார்க்கத்தில் திருப்பராய்த்துறை எனுமிடத்தில் பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய இராமகிருஷ்ண குடில் எனும் அமைப்புக்கு இவர் பல ஆண்டுகள் நன்கொடை வசூல் செய்து கொடுத்து வந்திருக்கிறார். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்துவரும் இந்த அமைப்பு இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் வாரியார் சுவாமிகள்தான். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார். இவர் பிறந்த காங்கேயநல்லூரில் இவர் பல கல்வி ஸ்தாபனங்களைத் தொடங்கி இன்று இவருடைய பெயரால் மேல் நிலைப் பள்ளிகள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நிறுவியிருப்பதைக் காணலாம். சின்னஞ்சிறு சிறுமியாக இவரிடம் சிஷ்யையாக வந்து ஒட்டிக்கொண்ட மங்கையர்க்கரசி எனும் பெண் இன்று வாரியார் சுவாமிகளின் பெயரை நிலைநாட்டிக் கொண்டு மிகச்சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளராகத் திகழ்ந்து வருகிறார். திருப்புகழ், கம்பராமாயணம், வில்லி பாரதம், கந்த புராணம் போன்ற அனைத்து புராண இதிகாச இலக்கியங்களையும் வாரியார் எப்படி தங்கு தடையின்றி எந்தக் குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் பாடல்களைக் கொட்டி சொற்பொழிவாற்றுவாரோ அப்படியே அவரது மாணவியும் செய்து வருவது திகைக்க வைக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. வயலூர் முருகன் கோயில், மோகனூர் அருணகிரி அறச்சாலை, வடலூர், காஞ்சி ஏகாரம்பரநாதர் ஆலய சுற்றுச் சுவர், சமயபுரம் ஆலயம், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் போன்ற பல ஆலயங்கள் இவரால் பயன்பெற்றிருக்கின்றன. இவருடைய நினைவாக இவர் பிறந்த ஊரான காங்கேயநல்லூரில் இவர் பிறந்த வீடு நினைவு இல்லமாக விளங்குகிறது. இவரது தொண்டுக்காக ஏராளமான விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றல் இவருக்குப் புகழ் இருக்கிறதோ இல்லையோ, இவரால் அந்த விருதுகளுக்குப் புகழ் ஏற்பட்டிருக்கிறது. [] தமிழ் உள்ளளவும், தமிழர் உள்ளளவும் ஆன்மீகமும், பக்தியும் இந்த மண்ணில் உள்ள வரையிலும் இவரது புகழும் நிலைத்திருக்கும். வாழ்க திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் புகழ்!   3 என்.சி.வசந்தகோகிலம் [] என்.சி.வசந்தகோகிலம் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் ஒரு இனிய குரலுக்குச் சொந்தக்கார பாடகி ஒருவர் இருந்தார். அவர்தான் என்.சி.வசந்தகோகிலம் என்ற புகழ்பெற்ற பாடகி. நாகப்பட்டினம் சந்திரசேகர வசந்தகோகிலம் என்பது இவரது முழுப்பெயர். இன்னிசை பாடி புகழ் பெற்ற காரணத்தால் அவருக்கு இந்தப் பெயரை இட்டார்களோ என்னவோ தெரியவில்லை பிறந்தபோது இவருக்கு இட்ட பெயர் காமாக்ஷி. பிறந்த ஊர் இப்போதைய கேரள மாநிலத்தில் கொச்சி சமஸ்தானத்துக்குட்பட்ட இரிஞ்சாலக்குடா எனும் ஊர். அவர் இந்த பூமியில் வாழ்ந்த ஆண்டுகள் மிகக் குறைவு. இளம் வயதில், தனது 32ஆம் வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்துவிட்ட இந்தப் பாடகி முழு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் புகழின் உச்சிக்கே சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. [] இவர் பிறந்தது 1919ஆம் ஆண்டில். காலமானது 1951 நவம்பர் 8ஆம் தேதி. கர்நாடக சங்கீதத்தில் பெரும் புகழ் பெற்றது மட்டுமல்ல, திரைப்படங்களிலும் அந்த நாளில் பாடி நடித்தும் புகழ் பெற்றார். கர்நாடக சங்கீதத்தில் பாடல்களைப் பாடி மக்களின் மனங்களைக் கவர்ந்தவர். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய சுத்தானந்த பாரதியாரின் பாடல்களையும் இவர் பாடி பிரபலப் படுத்தியிருக்கிறார். கேரளத்தில் பிறந்த இவர் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலிருந்த நாகைப்பட்டினத்துக்குக் குடிபெயர்ந்தார். இவர்கள் குடும்பம் நாகை வந்த பிறகு காமாக்ஷியை சங்கீதம் கற்றுக்கொள்ள கோபால ஐயர் என்பவரிடம் அனுப்பி வைத்தனர். இந்த கோபால ஐயர் ஹரிகதை வித்வான்களுக்குப் பக்க வாத்தியம் வாசித்து வந்தவர். 1936இல், இவரது 17ஆவது வயதில் இவர் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. அதற்குள் இவர் கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததால், சென்னை சென்றவுடன் பல இடங்களில் கச்சேரி செய்ய அழைக்கப்பட்டார். இவருடைய இனிய குரலும், அழகிய தோற்றமும், இவர் பாடும் கச்சேரிகளுக்கு மக்கள் வெள்ளம் போல் வரத் தொடங்கினர். இவர் கச்சேரி எங்கு நடந்தாலும் சென்னையில் பல இசை ரசிகர்கள் அங்கு கூடத் தொடங்கினர். சென்னையிலிருந்த பிரபலமான சபாக்களிலெல்லாம் இவரது இசைக் கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1938இல் சென்னை மியூசிக் அகாதமியின் ஆண்டு விழாவில் இவர் வாய்ப்பாட்டுக்காக முதல் பரிசினைப் பெற்றார். அந்த விழாவுக்குத் தலைமை தாங்கியவர் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார். வசந்தகோகிலத்துக்குத் தேனினும் இனிய குரல். நல்ல சுருதியோடு கூடிய பாடும் திறமை. பாட்டிலுள்ள நவரசங்களும் குரலில் வரும்படி பாடும் திறன். சரியான உச்சரிப்பு. எந்த ஸ்தாயியிலும் சிரமமின்றி பாடும் அசாதாரண குரல் வளம், இவை அனைத்தும் வசந்தகோகிலத்தை புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லத் தொடங்கியது. பொதுவாக தெலுங்கு மொழியிலும், சம்ஸ்கிருத மொழியிலும் அமைந்த பாடல்களையே பிரபலமான வித்வான்கள் பாடிவந்த நிலையில் வசந்தகோகிலம் தமிழில் அமைந்த பல அருமையான கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப் படுத்தத் தொடங்கினார். இவருடைய கச்சேரி என்றால் அதிக அளவிலான தமிழ்ப் பாடல்களைக் கேட்க முடியும் என்றே பல ரசிகர்கள் வந்து கூடுவார்கள். சென்னை தமிழிசைச் சங்கம் நடத்தும் இசை விழாவில் இவருக்குத் தவறாமல் வாய்ப்பு கொடுத்து வந்தார்கள். தமிழிசை இயக்கம் உச்ச கட்டத்தில் இருந்த அந்த நாட்களில் தமிழில் சாகித்தியங்களை அதிகம் பாடும் இவருக்கு அதிக வரவேற்பு இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுத்து கலைஞர்களை அழைக்கும் பல சபாக்களில் இவர் சென்று பாடியிருக்கிறார். திருவையாற்றிலும் வேறு இடங்களிலும் நடைபெற்ற சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா இசை நிகழ்ச்சிகளிலும் இவர் தொடர்ந்து பல ஆண்டுகள் கலந்து கொண்டிருக்கிறார். திருவையாற்றுக்கு விடாமல் தொடர்ந்து 1942 முதல் 1951 வரை வந்து பங்கு பெற்றிருக்கிறார். அவருடைய காலத்தில் சங்கீத உலகில் கொடிகட்டிப் பறந்த ஒரு சில வித்வான்களில் வசந்தகோகிலமும் ஒருவர். இவருடைய இனிய குரலால் ஈர்க்கப்பட்டு இசைத்தட்டு கம்பெனிகள் இவரது பாடல்களைக் கொண்ட இசைத்தட்டுகளை அதிக அளவில் விற்பனை செய்தார்கள். கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல், தனிப்பாடல்கள் கொண்ட இசைத்தட்டுக்களும் வெளியாகின. இவருடைய இன்னிசைக்காக இவருக்கு “மதுரகீதவாணி” எனும் விருதினை வழங்கி கெளரவித்தார்கள். இந்த விருதை இவருக்கு வழங்கியவர் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத வித்வான் டைகர் வரதாச்சாரியார் ஆவார். இவர் பாடி வெளியான பாடல்கள் அனேகம். இன்றும்கூட அந்தப் பாடல் பெயரைச் சொன்னால் கேட்கத் துடிக்கும் இசைப் பிரியர்கள் ஏராளம். அவர் பாடி புகழ் பெற்ற சில பாடல்கள்:– “ஏன் பள்ளி கொண்டீரையா?”, “தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா?”, “நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி?”, “மகாலக்ஷ்மி ஜகன்மாதா”, “ஆனந்த நடனம் ஆடினார்”, “ஆசை கொண்டேன் வண்டே”, “தித்திக்கும் செந்தமிழால்”, “அந்த நாள் இனி வருமோ?”, “வருவானோ வனக்குயிலே?”, “ஆடு ராட்டே”, “சரஸதள நயனா”, “இந்த வரம் தருவாய்”, “நீ தயராதா”, [] இப்படிப் பல பாடல்கள் பிரபலமானவை. சினிமா பாடல்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. சினிமாவில் இவர் பாடி வெளியானவை அத்தனையும் புகழ்பெற்று விட்டன. அந்தப் பாடல்களை அந்தக் காலத்தில் முணுமுணுக்காதவர்களே இருக்கமுடியாது. தமிழ்நாட்டு சினிமாத் துறையில் இவரும் இவரது பாடல்களும் புகழ் பெற்று விளங்கியது. இவரது புகழ் பெற்ற சினிமா பாடல்கள் சில:- “எப்போ வருவாரோ, எந்தன் கலி தீர”, “இன்பம் இன்பம் ஜகமெங்கும்”, மகாகவி பாரதியின் “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்”, “குழலோசை கேட்குதம்மா”, “கலைவாணி அருள் புரிவாய்”, “ஆனந்தம் அளவில்லா மிக ஆனந்தம்”, “இதுவென்ன வேதனை?”, “கதிரவன் உதயம் கண்டு கமலங்கள் முகம் மலரும்”, “கண்ணா வா மணிவண்ணா வா”, “எனது மனம் துள்ளி விளையாடுதே”, “எனது உயிர் நாதன் இருதயம் நொந்து என்னைப் பிரிந்தான்”, “சுந்தரானந்த வைகுந்த முகுந்தா”, “புவி மேது தவ ஞானியே உயர் புகழ் மேவும் பெரியோர் தன்பால்”, “பொய்தவழும் மாயப்புவி வாழ்வு”, “பொறுமைக் கடலாகிய பூமாதேவி” இப்படி பல பாடல்களைச் சொல்லலாம். இசை உலகம் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் இவர் நடித்தார் என்பதைக் கண்டோமல்லவா. 1940இல் “சந்திரகுப்த சாணக்கியா” எனும் படத்தில் இவர் இளவரசி சாயா தேவியாக நடித்தார். தொடர்ந்து அதே ஆண்டில் “வேணுகானம்”, 1942இல் “கங்காவதார்”, 1944இல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த “ஹரிதாஸ்”, 1946இல் ஹொன்னப்ப பாகவதர் நடித்த “வால்மீகி”, “குண்டலகேசி” ஆகிய படங்களில் நடித்தார். 1950இல் இவருடைய கடைசி படமான “கிருஷ்ண விஜயம்” வெளியாகியது. இவர் காலமாகி இப்போது அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டபடியால் இவருடைய பாடல்கள் அதிகம் கிடைப்பதில்லை. எங்கோ ஒரு சில பாடல்கள் கிடைத்தாலும் அவற்றைப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவருடைய சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருக்கவில்லை. இவரை மணந்து கொண்டவர் இவரது இசை வாழ்க்கையை அவ்வளவாக வரவேற்கவில்லை. இந்த இணை பிரிந்தது. பிறகு இவர் திரைப்படத் துறையைச் சேர்ந்த C.K.சதாசிவம் என்பவரை மணந்து கொண்டு வாழ்ந்தார். இவரது இளம் வயதில், தமிழ்நாட்டு இசை உலகின் துரதிர்ஷ்டம் இவருக்குக் காசநோய் பற்றிக் கொண்டது. 1951இல் இவரது முப்பத்திரெண்டாவது வயதில் சென்னை கோபாலபுரத்தில் இருந்த இவரது இல்லத்தில் இவர் காலமானார். இந்த இளம் குயிலின் தேன் குரல் இசையுலகத்தில் என்றும் நிறைந்திருக்கும். வாழ்க வசந்த கோகிலம் புகழ்! 4 பி.யு.சின்னப்பா [] பி.யு.சின்னப்பா பி.யு.சின்னப்பா எனும் நடிகரைப் பற்றி இந்த தலைமுறை இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் இவரும் பல படங்களில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றவர். இந்தக் கால கதாநாயகனைப் போல இளமை, அழகு போன்றவை அந்தக் கால நடிகர்களுக்குக் குறிப்பாக நாடகத் துறையிலிருந்து வந்து பாடி, நடித்துப் புகழ்பெற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் பி.யு.சின்னப்பா ஒரு திறமையான நடிகராகத் திகழ்ந்தவர். இவருடைய ஊர் புதுக்கோட்டை. தந்தை உலகநாத பிள்ளை தாய் மீனாட்சி. இவர் 1916 மே மாதம் 5ம் தேதி பிறந்தார்.அப்போதெல்லாம் சினிமா ஏது? நாடகங்கள்தான். இவரது தந்தையும் ஒரு நாடக நடிகர் அதனால் சின்னப்பா இயல்பாக நடிகனாக ஆகிவிட்டார். ஐந்து வயதில் நடிக்கத் தொடங்கிய சின்னப்பா, நன்றாகப் பாடுவார். கர்நாடக சங்கீதம் இவர் அருமையாப் பாடக் கேட்க வேண்டும். “நாத தனு மனுசம்” என்கிற பாடலை இவர் அதே ராகத்தில் “காதல் கனி ரசமே” என்று பாடிய பிறகு ஒரிஜினல் பாட்டுக்கு மவுசு வந்து சேர்ந்தது. [] புதுக்கோட்டையில் கோபாலகிருஷ்ண பாகவதர் என்பவர் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடி வந்தார். அங்கு பஜனைகள் அடிக்கடி நடக்கும். சின்னப்பாவும் புதுக்கோட்டையில் பஜனைப் பாடல்களைப் பாடி வந்திருக்கிறார். இளம் வயதில் நாடகத்துக்கு வந்துவிட்டதால் இவர் பள்ளியில் அதிகம் படிக்கவில்லை. இவர் நாடகக் கம்பெனியில் சேர்ந்தாரே தவிர இவருக்கு அங்கு ஒன்றும் பிரமாதமான முக்கியத்துவம் கிடைத்துவிடவில்லை. மீனலோசனி வித்வ பால சபாவில் இவர் சேர்ந்து நடித்தார். அந்த கம்பெனியில் டி.கே.எஸ். சகோதாரர்களும் அப்போது நடித்து வந்தனர். அந்தக் கம்பெனியில் முக்கியத்துவம் கிடைக்காததால் சின்னப்பா புதுக்கோட்டைக்கு அப்போது வந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி எனும் நாடகக் கம்பெனியில் நடிக்கச் சேர்ந்தார். அப்போது அவருக்குக் கிடைத்து வந்த சம்பளம் மாதம் 15 ரூபாய். இவருக்கு நன்றாகப் பாட வரும். ஒரு முறை இவர் தனிமையில் அமர்ந்து கொண்டு பாடிய பாட்டைக் கேட்ட அவருடைய கம்பெனி முதலாளி பாடியது யார் என்று விசாரித்து இவருக்கு முக்கிய வேஷங்கள் கொடுத்து சம்பளத்தையும் ஐந்து மடங்கு உயர்த்திக் கொடுத்தார். அவர் வேலை செய்த கம்பெனியில் பின்னாளில் புகழ் பெற்ற எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சக்ரபாணி, நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் போன்றவர்களும் நடித்து வந்தனர். சின்னப்பா நடிப்பதுடன் பாடவும் செய்ததாலும், இவருடைய பாட்டுக்கள் மிக நன்றாக இருந்ததாலும் இவருக்கு நல புகழ் கிடைத்தது. இவருடைய கம்பெனி சென்னையில் முகாமிட்டு பல மாதங்கள் நாடகங்களை நடத்தியது. அப்போது இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, இவரது பாட்டுக்களுக்கும் மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். [] நாடகக் கம்பெனியில் நடிகர்களுக்கு வேலைக்கோ அல்லது வருமானத்துக்கோ எந்த உத்தரவாதமும் கிடையாது. நினைத்தால் வெளியேற வேண்டியிருக்கும். அந்தவொரு நிலை வருமுன்பாக சின்னப்பா கம்பெனியை விட்டு நீங்கி சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். அதன் பிறகு ஸ்பெஷல் நாடகம் என்று அவ்வப்போது யாராவது வந்து அவர்கள் நாடகங்களில் நடிக்கக் கேட்டுக் கொண்டால், அதில் போய் நடித்துவிட்டு சம்பளம் வாங்கிக் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் இவர் கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்றுக் கொண்டார். இதற்காக ஏற்ற ஆசிரியர்களை நியமித்துக் கொண்டார். கர்நாடக சங்கீதம் கற்பது மிகவும் சிரமமான காரியம். இவர் மிகுந்த அக்கறையோடு முறையாகக் கற்றுக் கொண்டார். இவரை நடிகர் என்று சொல்வதைவிட சங்கீத வித்வான் என்று சொல்லுமளவுக்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றார். கலை வந்து சேர்ந்த அளவுக்கு இவருக்கு நிதி வந்து சேரவில்லை. வருமானம் இல்லாமல் கஷ்டப்படத் தொடங்கினார். நடிப்பு ஒரு பக்கம், சங்கீதம் ஒரு பக்கம் இவற்றோடு உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் சேர்ந்து இவர் சிலம்பம், கத்திச் சண்டை போன்றவற்றையும் கற்று திறமை பெற்றார். அதில் இவர் சிறப்புப் பயிற்சியாக சுருள் கத்தி என்பதை எடுத்துச் சுற்றும் கலையில் தேர்ந்து விளங்கினார். [] இப்படி எதிலும் நிரந்தரமில்லாத நிலையில் கந்தசாமி முதலியார் (நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார்) இருந்த ஒரு கம்பெனியில் சேர்ந்து கொண்டார். இந்தக் குழு ரங்கூன் சென்றது. பர்மாவில் இருந்த ரங்கூனில் தமிழர்கள் நிறைய இருந்தனர். இவர்களுடைய நாடகங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் அங்கு நடித்த காலத்தில் இவரோடு எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர். சந்தானலட்சுமி, பி.எஸ்.சிவபாக்கியம், எம்.ஆர்.சாமிநாதன், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோரும் நடித்துக் கொண்டிருந்தனர். அங்கு சுமார் ஆறுமாத காலம் இவர்களுடைய நாடகங்கள் நடந்தன. தொடர்ந்து இவர் இலங்கை சென்று அங்கும் பல ஊர்களில் நாடகம் நடத்திவுட்டுத் திரும்பினார். இவர் நடித்த நாடகம் ஒன்றைப் பார்த்த ஜுபிடர் பிக்சர்சார் இவரைத் தங்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படம் சந்திரகாந்தா. அதில் இவர் ஓர் இளவரசனாக நடித்து நல்ல பெயர் வாங்கினார். இது வெளியான வருடம் 1936. அந்தப் படத்தில் இவருடைய பெயரை சின்னச்சாமி என்றுதான் போட்டிருந்தார்கள். அதன் பிறகுதான் அவருடைய பெயர் சின்னப்பா என்று மாறியது. சந்திரகாந்தா படத்தைத் தொடர்ந்து இவருக்குப் பட வாய்ப்புக்கள் வந்தன. பஞ்சாப் கேசரி, ராஜமோகன், அனாதைப் பெண், யயாதி, மாத்ருபூமி ஆகிய படங்களில் நடித்தார். இவையெல்லாம் மிகச் சுமாராகத்தான் ஓடின. அதன் பின் பட வாய்ப்புக்கள் இல்லாமல் வருந்தியிருந்த நேரத்தில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் இவரைப் பார்த்தார். அவர் தயாரிக்கவிருந்த உத்தமபுத்திரன் எனும் படத்துக்கு சின்னப்பாவை ஏற்பாடு செய்தார். அந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைக் கொடுத்தது. சின்னப்பாவின் புகழும் உச்சத்துக்குப் போனது. அதே படத்தை பிறகு சிவாஜி கணேசனைக் கொண்டு நடிக்க வைத்து வெளியாகி வெற்றி பெற்றதும் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம். [] சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் 1940இல் வெளிவந்தது. அதில் சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்துத் தூள் கிளப்பினார். இந்த வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இவர் தயாளன், தர்மவீரன், பிருதிவிராஜன், மனோன்மணி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் மனோன்மணி சுந்தரம் பிள்ளை எழுதிய கதை. இதில் சின்னப்பாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. மக்களின் பாராட்டுதல்களையும் அதிகம் பெற்றார். நம் காலத்தில் ரஜினி, கமல் என்று இருப்பதைப் போலவும், சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று இருந்ததைப் போலவும், இவர் காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா என்று இரு பெரிய நடிகர்கள் கோலோச்சி வந்தார்கள். முந்தைய நடிகர்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில்லை, ஆனால் இவரும் எம்.கே.டியும் அப்படி இல்லாமல் எதிரிகளைப் போல இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பிருதிவி ராஜன் படத்தில் சின்னப்பாவுக்கு ஹீரோயின் ஏ.சகுந்தலா. இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் இவர்கள் இருவரும் கணவன் மனைவி ஆயினர். இவர்கள் திருமணம் 5-7-1944 அன்று நடைபெற்றது. சினிமாக்காரர்கள் வழக்கப்படி திருட்டுத் தனமாக இல்லாமல் ஊரறிய பிரபலமாக நடந்தது இந்தத் திருமணம். தொடர்ந்து இவர் ஆரியமாலா, கண்ணகி போன்ற படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். இந்தப் படங்கள் மூலம் இவர் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார். கண்ணகியைத் தொடர்ந்து குபேரகுசேலா, ஹரிச்சந்திரா, ஜகதலப்பிரதாபன், மஹாமாயா போன்ற படங்களில் நடித்தார். இவை நன்றாக ஒடி வசூலைக் கொடுத்தன. [] இவருடைய பாடல்கள் இசைத்தட்டுக்களாகவும் வந்தன. வானொலியிலும் ஒரு முறை பாடினார், ஆனால் அதனால் வருமானம் இல்லாததால் விட்டுவிட்டார். தொடர்ந்து இவர் பங்கஜவல்லி, துளசிஜலந்தா, விகடயோகி, கிருஷ்ணபக்தி ஆகிய படங்களில் நடித்தார். மங்கையர்க்கரசி என்று ஒரு படம். அதில் இவருக்கு மூன்று வேடங்கள். அந்தப் படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதில் வந்த பாடல்களுக் ஹிட் ஆகி மக்கள் மத்தியில் பாடப்பெற்றன. வனசுந்தரி என்றொரு படம், அதற்கடுத்து ரத்னகுமார், சுதர்சன் ஆகிய படங்களும் வெளியாகின. இதில் சுதர்சன் சின்னப்பா இறந்த பிறகு வெளியாகியது. [] மக்களின் அபிமானத்தைப் பெற்று மக்கள் கலைஞராகத் திகழ்ந்த பி.யு.சின்னப்பா 23-9-1951 அன்று தனது முப்பத்தைந்தாவது வயதில் காலமானார். இவருக்கு ஒரு மகன் உண்டு. அவர் பெயர் பி.யு.சி.ராஜாபகதூர். அவரும் ஒரே ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தொடர்ந்து ஒரு சில படங்கள் இவருக்குக் கிடைத்தாலும் தந்தையைப் போல இவர் பிரகாசிக்க முடியவில்லை. தமிழகம் தந்த பல கலைஞர்களில் பி.யு.சின்னப்பாவும் ஒருவர். வாழ்க அவரது புகழ்! 5 ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் [] ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் [] குழலூதும் இரட்டைக் குழந்தைகள் எனும் டிரேட் மார்க் அந்தக் கால மனிதர்களுக்கு நல்ல அறிமுகம். இன்று மக்கள் மறந்திருக்கலாம். ஆம்! சென்னை அண்ணாசாலையில் அன்றைய மவுண்ட் ரோடில் இப்போது ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்படும் இடத்தில் நுங்கம்பாக்கம் திருப்பத்தில் அமைந்திருந்தது இந்த சினிமா ஸ்டுடியோ. அதன் அதிபர் எஸ்.எஸ்.வாசன். சுப்ரமணியம் ஸ்ரீநிவாசன் என்பதன் சுருக்கம் இது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மிக பிரமாண்டமான ‘சந்திரலேகா’, ‘ஒளவையார்’ போன்ற படங்களை எடுத்து இந்தியாவின் சிசில் பி டெமிலி என்று பெயர் வாங்கிய இந்த திரைப்படத் தயாரிப்பாளர் பன்முகத் திறமை மிக்கவர். இவர் எடுத்த எந்தவொரு படமும் சோடை போகவில்லை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் புகழ் பெற்றது. ஜெமினி ஸ்டுடியோ அவ்வப்போது படம் எடுக்கக் கூடுகின்ற கம்பெனி போல அல்ல. அது ஒரு நிரந்தர ஸ்தாபனம். இங்கு ஊழியர்கள், டெக்னீஷியன்கள் போன்றவர்கள் நிரந்தரமாகப் பணியாற்றினார்கள். கதைக்கு என்று ஒரு இலாகா. அதில் பணிபுரிந்தவர்களும் உலகப் புகழ் பெற்றனர். கொத்தமங்கலம் சுப்பு, வேப்பத்தூர் கிட்டு போன்றவர்களை உலகுக்குக் காட்டிய ஸ்தாபனம் ஜெமினி. இதன் முதலாளி எஸ்.எஸ்.வாசன் திரைப்பட தயாரிப்பாளர், சினிமா ஸ்டுடியோ அதிபர், பத்திரிகை முதலாளி, சினிமா இயக்குனர், எழுத்தாளர், தொழிலதிபர் போன்ற பல நிலைகளில் பிரபலமானவர். இவரைப் பற்றி தெரிந்து கொள்வோமே!  [] எஸ்.எஸ்.வாசன் 1903ஆம் வருஷம் மார்ச் 10இல் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். தஞ்சை மாவட்டம் என்றதும் அதிலும் நெல்வயல்கள் சூழ்ந்த திருத்துறைப்பூண்டி என்றதும் இவர் ஏதோ ஒரு நிலப்பிரபுவின் குடும்பத்தில் பிறந்தவரோ என்று திகைக்க வேண்டாம். மிகச்சாதாரண நடுத்தர பிராமண குடும்பத்தில் பிறந்தவர்தான் இவர். மிக இளம் வயதில் தந்தை காலமான பிறகு இவர் தனது தாயுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு படிப்பையும் தொடர்ந்து கொண்டு குடும்ப வருமானத்துக்கும் பாடுபட்டுக் கொண்டிருந்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில் படிக்கவும் வாழ்க்கையில் முன்னேற வழிவகைகளைக் கண்டறியவும் இவர் முயன்று வந்தார். அப்படி முயன்ற நிலையில் விளம்பரம் செய்வது அந்த விளம்பரத்தை ஒரு முறையோடும், பிறர் மெச்சும்படியும் செய்து வந்தார். உழைப்பும், புதிய சிந்தனைகளும் இவருக்கு வாழ்க்கைக்கு பல வழிகளைக் காட்டிய போதும், இவர் மனதுக்குப் பிடித்த மாதிரியும் அதே நேரம் வருமானம் கிடைக்கும்படியாகவும் புதிய தொழில்களைச் செய்யத் தொடங்கினார். மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு யாரிடமாவது ஊழியம் பார்க்க இவர் சுதந்திர மனம் இடங்கொடுக்கவில்லை. எனவே இவர் கவனம் முழுவதும் ஆதாயம் தரும் புதிய துறை நாடி அலைந்து கொண்டிருந்தது. [] அந்த நேரத்தில் ஒரு தமிழ்ப் பத்திரிகை நடத்த முடியாமல் நொடித்துக் கொண்டிருந்தது. அது இவரது கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் பத்திரிகையின் பெயர் ‘ஆனந்த விகடன்’. அதை இவர் வாங்கி அதற்கு புது ரத்தம் பாய்ச்சி, புதிய வடிவம் கொடுத்து மக்கள் விரும்பும் வகையில் அதன் உள்ளடக்கங்களைத் தயார் செய்து வெளியிடத் தொடங்கினார். புதியனவற்றை விரும்பும் மக்கள் அதிகம் இருந்த சென்னை நகரமும், தமிழ் சமுதாயமும் இவரது முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இவரது தொழில் வளரத் தொடங்கியது. ‘ஆனந்த விகடன்’ எனும் பெயர் தமிழர் குடும்பங்களில் அனைவராலும் பேசப்படும் பெயராகவும், அனைவரும் படிக்க வேண்டிய தரமுள்ள பத்திரிகையாகவும் வாசன் அவர்களின் முயற்சியால் மாறியிருந்தது. இன்றும் அது வெளிவந்து கொண்டிருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறத்கு, அல்ல அல்ல தனது 87 வயதிலும் பறந்து கொண்டிருக்கிறது என்பதிலிருந்து இதற்கு எப்படிப்பட்ட அஸ்திவாரம் போடப்பட்டிருக்க வேண்டுமென்பதை யூகித்துக் கொள்ளலாம். [] ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் சிறப்பு அதில் வெளியிடப்பட்டு வந்த குறுக்கெழுத்துப் போட்டி. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கென்றே வாராவாரம் இந்த பத்திரிகையின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் ‘ஆனந்த விகடனில்’ குடும்பப் பாங்கான, உணர்வு பூர்வமான கதைகள் வெளியாகி வந்தன. போதாக் குறைக்கு அதில் கல்கி ஆசிரியராக இருந்து வரலாற்று நவீனங்களை எழுதவும் தொடங்கினார். பார்த்திபன் கனவு, தியாகபூமி போன்ற தொடர்களும் அதில் வெளியாகி புகழ் பெற்றன. இன்னொரு புதுமை, இவர் பத்திரிகையில் கதை வெளியாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அந்தக் கதை திரைப்படமாகவும் தயாராகிக் கொண்டிருந்தது. அந்தத் திரைப்பட புகைப்படங்கள் பத்திரிகையில் கதையோடு வெளியாகியும் வந்த புதுமை முதன் முறையாக வாசன் அறிமுகப் படுத்தினார். அந்தக் கதைதான் தியாகபூமி. இதில் பாபநாசம் சிவன் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்து வந்தார். அதில் நடித்த பெண்குழந்தை ஒன்று, பெயர் சரோஜா, மிகச் சுட்டியாக நடித்தது. அந்தக் காலத்தில் பிறந்த பல பெண் குழந்தைகளுக்கு சரோஜா என்று பெயர் இட்ட வரலாறும் அதன் பெருமையும் வாசன் அவர்களைச் சேரும். [] வாசன் அவர்களே ஒரு நல்ல எழுத்தாளர். இவர் எழுதிய கதைதான் சதிலீலாவதி. அது 1936இல் திரைப்படமாகத் தயாரிக்கப் பட்டது. பல சிறுகதைகளையும் வாசன் எழுதினார். திரைப்படத் துறையில் ஈடுபட்டு இவர் பட விநியோகம் செய்யும் கம்பெனியையும் தொடங்கினார். அதன் பெயர் மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பொரேஷன் என்பது. என்ன? கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? ஆம், தமிழ் நாட்டில் புகழ் பெற்ற பட விநியோக நிறுவனம் அது. இந்த கால கட்டத்தில் சென்னையில் ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் ஏராளமான பொருட் சேதம். அந்தக் காலத்தில் காப்பீடு என்பதெல்லாம் தெரியாத நிலையில் அதன் நிர்வாகிகளுக்கு பெருத்த நஷ்டம். அப்படி எரிந்து கிடந்த இடத்தை, வாசன் விலை பேசி வாங்கிக்கொண்டு அங்கு தனது சினிமா கம்பெனியை படப்பிடிப்புக்காகத் தொடங்கினார். அதுதான் புகழ்பெற்ற ஜெமினி ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோ நிறுவப்பட்ட பிறகு தொடர்ந்த இவர் பல படங்களை அங்கு எடுத்தார். தமிழில் மங்கம்மா சபதம் என்று ஒரு படம். அதில் வைஜயந்திமாலாவின் தாயார் கதாநாயகி, ரஞ்சன் என்பவர் கதாநாயகன். 1943இல் வெளியான இந்தப் படம் மிக நன்றாக ஓடியது. அடுத்து 1945இல் கண்ணம்மா என் காதலி என்றொரு படம், 1947இல் மிஸ் மாலினி என்றொரு நகைச்சுவைப் படம், 1949இல் புகழ்மிக்க நடிகர் எம்.கே.ராதா இரட்டை வேடமிட்டு நடிக்க ஸ்டண்ட் சோமு என்பவர் உடன் நடிக்க இந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தில் ஒரு எம்.கே.ராதா நல்லவராகவும் மற்றொரு ராதா வில்லனாகவும் நடிக்க வேண்டும். இரு வேறு பாத்திரங்களையும் மிகத் திறமையாக ராதா நடித்தாரா அல்லது வாசன் நடிக்க வைத்தாரா என்று வியக்கும் வண்ணம் அமைந்திருந்தது அந்தப் படம். இரும்புத்திரை என்றொரு படம். தொழிலாளர்களின் பிரச்சினையை வைத்து எடுக்கப்பட்ட படம். இதுவும் வெற்றிகரமாக ஓடிய படம். ஜெமினி படம் என்றால் தரமானது, ஹாலிவுட் படத்துக்கு நிகரானது என்ற எண்ணம் மக்கள் உள்ளங்களில் பதிந்தது. [] வாசன் ஒரு தேசியவாதி. காங்கிரஸ் இயக்கத்தின் பால் ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர். இன்றைய தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் வாசன் அவர்களால் கொடுக்கப்பட்ட இடம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948இல் இவர் இந்தியாவின் சிசில் பி டெமிலி என்று பெயர் பெற காரணமான “சந்திரலேகா”வை எடுத்தார். ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் இவர் படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமிழ் மட்டுமென்றால் பார்க்கும் மக்கள் தொகை குறைவாக இருக்கும். பிற மொழிகளிலும் என்றால், அதிலும் இந்தியிலும் எடுத்தால் பார்வையாளர் எண்ணிக்கை மிக அதிகமாகும் என்பது அவரது எண்ணம். அந்த சந்திரலேகாவும் அதன் பின்னர் எடுத்த ஒளவையாரும் இன்று பார்த்தால் கூட இப்படியும் ஒரு படம் எடுக்க முடியுமா என்று மக்கள் வியந்து போவர். சந்திரலேகாவில் ரஞ்சன் வில்லன். அவனுக்கு எதிரில் ஒரு டிரம் டான்ஸ். வரிசையாக பல டிரம்கள் வைக்கப்பட்டு அதில் நடனமாதர்கள் ஆடுவர். டி.ஆர்.ராஜகுமாரி ஒரு டிரம் மீது ஏறி ஆடுவார். ரஞ்சன் முகம் முதலில் மகிழ்ச்சியோடும், அந்த டிரம் உள்ளேயிருந்து எதிரி வீரர்கள் வெளிவரும் கட்டத்தில் அவர் முகத்தில் ஏற்படும் பயம், கோபம் இவற்றை அற்புதமாகக் காட்டுவார். அந்த டிரம் டான்ஸ் போல இன்று வரை யாரும் எடுத்ததில்லை என்கின்றனர். அந்த நாளில் அப்படியொரு செட்டிங்ஸ், நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா? [] சந்திரலேகா தமிழ் இந்தி மட்டுமல்ல ஆங்கில சப் டைட்டிலுடன் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. தமிழனின் பெருமை உலகெங்கும் பரவக் காரணமாக இருந்தவர் எஸ்.எஸ்.வாசன். நகைச்சுவை எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் எழுதிய கதை 1952இல் மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் வெளியானது. ஒரு சிப்பன்சி குரங்கை வைத்து எடுக்கப்பட்ட இன்சானியத் எனும் இந்திப் படம் 1955இல் வெளிவந்தது. 1958இல் ராஜ்திலக் என்ற படம் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் மீது இவருக்கிருந்த தொடர்பு காரணமாக ஜவஹர்லால் நேரு போன்றோருடைய நட்பும் இவருக்குக் கிடைத்தது. தமிழ் நாடு காங்கிரசிலும் இவருக்கு நெருக்கமானவர்கள் பலர் இருந்தனர். காமராஜ் அவர்களுடன் இவருக்கு நல்ல நட்பு இருந்தது. இவர் நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்து பணியாற்றியிருக்கிறார். மத்திய அரசின் கெளரவ விருதான பத்ம பூஷன் விருது இவருக்கு 1969இல் அளித்து கெளரவிக்கப்பட்டது. [] ஆனந்த விகடன் பத்திரிகை எழுத்துத் துறையிலும் ஏராளமான சாதனைகளைப் படைத்தது. ஆனந்தவிகடனில் மோதிரக் கதைகளை எழுதியபின் தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் மிகவும் பிரபலமானார். ஆனந்தவிகடனில் ஜெமினி கதை இலாகாவில் பணியாற்றிய கொத்தமங்கலம் சுப்பு கலைமணி என்ற பெயரில் எழுதி வெளியான தொடர்கதைதான் ‘தில்லானா மோகனாம்பாள்’. அது திரைப்படமாகவும் வந்து மிகவும் பெரும் வெற்றி பெற்றது. இது குறித்து வெளிவந்த செய்தியொன்று சுவாரசியமானது. ‘தில்லானா மோகனாம்பாளை’ திரைப்படமாக எடுக்க விரும்பி பிரபல டைரக்டர் ஏ.பி.நாகராஜன் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் சென்று அனுமதி கேட்டார். அதற்கு வாசன் அவர்கள் தானே அதை எடுக்க விரும்பியதாகவும், பின்னர் சில காரணங்களால் எடுக்க முடியவில்லை என்றும், அதை ஏ.பி.நாகராஜன் எடுப்பதற்கு தனக்கு முழுச் சம்மதம் என்றும் தெரிவித்தார். உடனே ஏ.பி.நாகராஜன் ஒரு தொகையை வாசன் அவர்களிடம் கொடுத்தார். அவரும் அதை வாங்கிக் கொண்டு போய் உள்ளே வைத்தார். மறுநாள் ஏ.பி.நாகராஜன், வாசன் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டோம், அப்போது ஜெமினி கதை இலாகா எல்லாம் மூடப்பட்டுவிட்டது. கலைமணி என்கிற கொத்தமங்கலம் சுப்பு வீட்டில்தான் இருப்பார். அவரிடமும் ஒரு வார்த்தை மரியாதைக்காகச் சொல்லி அனுமதி வாங்க வேண்டுமென்று அவர் வீட்டுக்குச் சென்றார். அவரும் மகிழ்ச்சியோடு அனுமதி வழங்கி ஆசியும் வழங்கினார். அப்போது அவரிடமும் ஒரு தொகையைக் கொடுக்க ஏ.பி.நாகராஜன் முயன்றார். உடனே சுப்பு அவர்கள் அவர்களைச் சற்று இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு உறையைக் கொண்டு வந்தார். அது என்ன என்று நாகராஜன் கேட்க, நீங்கள் இங்கு வருவதற்கு முன்னமேயே முதலாளி வாசன் அவர்கள் இந்தத் தொகையை நீங்கள் கொடுத்ததாக என்னிடம் கொடுத்தனுப்பி விட்டார் என்றார். ஏ.பி.நாகராஜனுக்கு வாசனைப் போற்றுவதா, கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டுவதா என்றே தெரியவில்லை. [] கொத்தமங்கலம் சுப்பு ஆனந்தவிகடனில் எழுதிய நெடுங்கதைகளில் ராவ்பகதூர் சிங்காரம், மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற கதைகளும் பெரும் புகழ் பெற்றன. பின்னர் ஜெமினி ஸ்டுடியோ மூடப்பட்டது. ஆனந்தவிகடனை அவரது மகன் பாலன் நடத்தத் தொடங்கினார். பெரும் புகழ் பெற்ற எஸ்.எஸ்.வாசன் 1969இல் காலமானார்.   6 டி.ஆர்.சுந்தரம் [] [] மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி டி.ஆர்.சுந்தரம் என்ற பெயரை முந்தைய தலைமுறையினர் நன்கு அறிந்திருப்பார்கள். அங்கு தயாரான சில படங்களின் பெயர்களைச் சொன்னால் இன்றைய இளைஞர்களும் தெரிந்து கொள்வார்கள். தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடத்தை நிறுவியவர்களுள் டி.ஆர்.சுந்தரம் ஒருவர். மாடர்ன் தியேட்டர்ஸ் எனும் பெயரில் சேலத்தில் உருவாக்கப்பட்டது இது. சென்னை போன்ற பெரிய நகரங்களை விட்டு முதன் முதலாக வெளி நகரம் ஒன்றில் உருவானது இது. அந்த நாட்களில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ முழு மூச்சில் இயங்கிக் கொண்டிருந்த நாட்களில் ஆண்டுக்கு மூன்று படங்களாவது இங்கு உருவாகிக் கொண்டிருந்தன. தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிப்படங்களும் இங்கு உருவாகின. தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், சிங்களம் போன்ற மொழிகளில். முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு. அந்தப் படம்தான் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்”. இதில் எம்.ஜி.ஆர்., பி.பானுமதி நடித்தனர். டி.ஆர்.சுந்தரத்தின் முழுப்பெயர் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் என்பது. பார்ப்பதற்கு ஐரோப்பியர் போல உடை அலங்காரம் எல்லாம் இருந்தாலும் அசல் பச்சைத் தமிழர் இவர். இவர் பிறந்தது 1907இல். பெரிய செல்வந்தர் வீட்டுப் பிள்ளை. குடும்பத்தாருக்கு வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைத்து வந்தது. இவர் இங்கிலாந்து சென்று டெக்ஸ்டைல் பொறியியல் படிப்பு படித்தார். இந்தியா திரும்பியபின் தனது குடும்ப வியாபாரத்தில் ஈடுபட்டாலும் திரைப்படத் துறை இவரது கவனத்தை ஈர்த்தது. இந்தத் துறையில் காலடி வைக்க ஒரு துணைவர் வேண்டியிருந்தது. எஸ்.எஸ்.வேலாயுதம் பிள்ளை என்பவருடன் கூட்டுச் சேர்ந்து ஏஞ்சல் பிக்சர்ஸ் எனும் திரைப்படக் கம்பெனியை சேலத்தில் துவக்கினார். அந்தக் காலத்தில் தமிழ்ப் படங்கள் வட இந்திய நகரங்களுக்குச் சென்றுதான் படப்பிடிப்பு நடத்துவார்கள். பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களுக்குப் போய் படம் எடுப்பார்கள். இவர்களும் கல்கத்தா நகரம் சென்று இரண்டு படங்களை எடுத்தார்கள். இவ்விரண்டு படங்களும் கொடுத்த லாபத்தில் சேலத்தில் ஒரு சொந்தமான ஸ்டுடியோவை நிர்மாணித்தார்கள். சினிமா அறிமுகமாகிய தொடக்க காலம் என்பதால் அது என்ன கதை, என்ன படம் என்றெல்லாம் பார்க்காமல் மக்கள் அவற்றைப் பார்க்கத் துடித்ததால் இவர்களுக்கு லாபம் கிட்டியிருந்தது. சேலத்தில் அவர்கள் துவக்கிய ஸ்டுடியோதான் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ. முதன் முதலாக இவர்கள் சொந்த ஸ்டுடியோவில் எடுத்த தமிழ்ப் படம் 1937இல் சதி அகல்யா என்பது. அதற்கடுத்த ஆண்டு முதல் மலையாளப் படம் எடுத்தார்கள். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவை டி.ஆர்.சுந்தரம் ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் ஒரு தொழிற்சாலையைப் போல நடத்தலானார். சினிமாவுக்கு உரிய ஏனோ தானோ வேலைகள், கால தாமதம், சத்தம் இவைகளெல்லாம் காணமுடியாத இடம் அது. அங்கு சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். அவர்களுடைய குறிக்கோள் மக்கள் விரும்பிப் பார்த்து மகிழும்படியான பொழுதுபோக்குப் படங்களைத் தரமாகக் கொடுக்க வேண்டுமென்பதுதான். திரைப்படம் மூலமாகப் பிரச்சாரம் செய்வது, சமூக சீர்திறுத்தம் இப்படிப்பட்ட எண்ணங்கள் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை. சினிமா என்பது மக்களை மகிழ்விக்க வந்த ஒரு சாதனம், அதில் பொழுதுபோக்கும், மகிழ்ச்சியும்தான் இருக்க வேண்டும், தேவையில்லாத மற்ற பிரச்சினைகள் அதற்குள் தலையிடாத வண்ணம் சாமர்த்தியமாக, ஜாக்கிரதையாக டி.ஆர்.சுந்தரம் அவற்றை நிறைவேற்றி வந்தார். இங்கு நடிக்க வந்தவர்களும் ஒரு கம்பெனி பணியாளர்களைப் போல சரியான நேரத்துக்கு வருவது, கட்டுப்பாட்டோடு பணியாற்றுவது, வீண் வம்பு, விவகாரம் இவற்றில் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது என்று இருந்தார்கள். நடிகர், நடிகைகள் காண்ட்ராக்ட் முறையில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். அங்கு சேர்ந்து அறிமுகமாகி, பிரபலமானவர்கள் பட்டியல் பெரிது. அவர்களில் எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலி தேவி இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவருக்கு ஒரு அமெரிக்க இயக்குனர் அமைந்தார். அவரது பெயர் எல்லிஸ் ஆர்.டங்கன். ஆங்கிலம் பேசும் ஒரு அமெரிக்கர் தமிழில் படம் எடுக்க டைரக்ட் செய்தது ஓர் அதிசயமாகக் கருதப்பட்டது. டி.ஆர்.எஸ். தயாரிப்பில், எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய படம் என்றால் அதற்கு ஒரு மரியாதை, வரவேற்பு இருந்து வந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களை வைத்து 1950இல் ஒரு படம் எடுத்தார்கள். அதுதான் ‘மந்திரிகுமாரி’. இந்தப் படத்தில் எஸ்.ஏ.நடராஜன் எனும் வில்லன் கதாநாயகியை அழைத்துக் கொண்டு ஒரு மலைமேல் ஏறி அவளைக் கீழே தள்ள ஏற்பாடு செய்து விட்டுப் பாட்டுப் பாடிக் கொண்டு போவார். அந்தப் பாடல் இன்று வரை ஹிட்டாக இருந்து வருகிறது. திருச்சி லோகநாதன் பாடிய “வாராய், நீ வாராய்” எனும் அந்தப் பாடலை விரும்பாதார் யார்? அதில் எம்.ஜி.ஆர். அவர்களின் வாளெடுத்துப் போர் புரியும் அழகு மக்களால் ரசிக்கப்பட்டது. அந்தப் படத்தின் வசனங்கள் புதுமை, வேகம், விறுவிறுப்பு கொண்டு சிறப்பாக விளங்கியது. மாடர்ன் தியேட்டர்ஸ் பல வெற்றிப் படங்களை எடுத்தார்கள். 1944இல் பர்மா ராணி, 1946இல் சுலோச்சனா, 1948இல் ஆதித்தன் கனவு, 1949இல் மாயாவதி, 1950இல் எம்.என்.நம்பியார் நடித்து வெளியான துப்பறியும் கதை திகம்பர சாமியார், 1951இல் சர்வாதிகாரி, 1952ல் வளையாபதி, 1960இல் பாக்தாத் திருடன், முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும். இவர் எடுத்த சில படங்கள் விவரம் வருமாறு: தட்ச யக்ஞம், கம்பர், தாயுமானவர், மாணிக்கவாசகர், உத்தமபுத்திரன், பக்த கெளரி, தயாளன், மனோன்மணி, செளசெள, பர்மா ராணி, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆதித்தன் கனவு, திகம்பர சாமியார், மந்திரிகுமாரி, பொன்முடி, சர்வாதிகாரி, தாய் உள்ளம், திரும்பிப்பார், இல்லறஜோதி, சுகம் எங்கே?, கதாநாயகி, மகேஸ்வரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாசவலை, ஆரவல்லி, பெற்ற மகளை விற்ற அன்னை, தலைகொடுத்தான் தம்பி, வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், குமுதம், கொஞ்சும் குமரி, அம்மா எங்கே?, வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், எதிரிகள் ஜாக்கிரதை, காதலித்தால் போதுமா, நான்கு கில்லாடிகள், சி.ஐ.டி.சங்கர், ஜஸ்டிஸ் விஸ்வநாதன், கருந்தேள் கண்ணாயிரம் இப்படிப் பல படங்கள் உண்டு. இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தைச் சித்தரிக்கும் பர்மா ராணி, தமிழிலக்கியத்தில் புகழ்பெற்ற வளையாபதி, இவற்றோடு சிறுவர்களுக்கான கதை அலிபாபா இவற்றை மிகவும் சுவாரசியமாக ரசிக்கும்படி படம் எடுத்திருந்தார்கள். ஆர்.எஸ்.மனோகரை வைத்து கைதி கண்ணாயிரம் போன்ற படங்களை எடுத்திருக்கிறார்கள். ஜெய்சங்கரை வைத்து பல 007 மாதிரியான படங்களையும் எடுத்திருக்கிறார். இவர்கள் எடுத்த மொத்த படங்களின் பட்டியல் அந்த ஸ்டுடியோவின் வாயிலில் பெரிய விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள். கவிஞர் கண்ணதாசன் போன்றவர்கள் தொடக்க காலத்தில் இங்குதான் தங்கி பாடல்கள் எழுதிவந்தனர். 1963இல் டி.ஆர்.சுந்தரம் காலமானார். இப்போது சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் ஒரு திருமண மண்டபமாக மாறியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஸ்டுடியோவினால் சேலத்தின் பெருமை நாடெங்கும் பரவியிருந்தது. 7 டி.ஆர்.மகாலிங்கம் [] டி.ஆர்.மகாலிங்கம் பழைய நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பாவைப் போல பாடக்கூடியவரும், நாற்பது ஐம்பது களில் திரைப்படத் துறையில் நடிகராவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம் பற்றி தெரிந்து கொள்வோமா? பாடவும் நடிக்கவும் தெரிந்த சிலரில் டி.ஆர்.மகாலிங்கம் முக்கியமானவர். மிக அருமையான குரல் வளம், நல்ல பிருகாவுடன் பாடக்கூடிய திறமை, அழகு இவ்வளவும் ஒருங்கே அமைந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம். ஏவிஎம் நிறுவனம் எடுத்த வேதாள உலகம், ஸ்ரீ வள்ளி முதலான படங்களின் வெற்றிக்கு இவருடைய பாடல்களும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.மாலையிட்ட மங்கை, சிவகங்கைச் சீமை, ராஜராஜசோழன் போன்ற படங்களிலும் இவருடைய இசை இன்று வரை ஜீவனோடு பாடப்பட்டுக் கொண்டிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். செந்தமிழ் தேன்மொழியாள் போன்ற இறவா புகழுடைய பாடல்கள் இவருடையவை. மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த மகாலிங்கம் இளம் வயதிலேயே நடிப்பிலும், பாட்டிலும் ஆர்வமுடையவராக இருந்தார். அந்தக் கால வழக்கப்படி சிறுவர்களை வைத்து நாடகம் நடத்தும் கம்பெனிகளிலும், தனியாக நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் ஸ்பெஷல் நாடகங்கள் போன்றவற்றிலும் இவர் கலந்துகொண்டு நடித்து வந்தார். இவருடைய பாட்டுக்காகவே இவரை நாடகங்களில் பாடச் சொல்லிக் கேட்பதில் மக்களுக்கு அதிக விருப்பம். அப்படி இவர் நாடகங்களில் நடித்த நாட்களிலேயே பிரபல பாடகர் எஸ்.சி.கிருஷ்ணன் இவருடைய தோழராக இருந்திருக்கிறார். கிருஷ்ணனுக்கு தனிச்சிறப்பு மிக்க கட்டைக் குரல். அந்தக் குரலோடு இவர் திரைப்படங்களில் பாடிய பாடல்கள் குறிப்பாக நகைச்சுவை நடிகர்களான கே.ஏ.தங்கவேலு போன்றவர்களுக்குப் பாடிய பாடல்கள் நல்ல வரவேற்பப் பெற்றன. அந்தக் காலத்தில் இப்போது போன்ற ஒலி அமைப்புகள் கிடையாது என்பதால் பாடுபவர்கள் கூட்டத்தின் கடைசியில் உட்கார்ந்திருப்பவருக்குக் கூட கேட்கும்படி உரத்த குரலில் பாடவேண்டும். அதனால்தான் இந்தப் பாடகர்கள் உச்ச ஸ்தாயியில் மிக சுலபமாகப் போய் பாடுவதை நாம் கவனிக்க வேண்டும். இப்போதெல்லாம் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்பது போல மெல்லிய குரலில் பாடினாலும், ஒலிவாங்கி அதனை மிக துல்லியமாக பதிவு செய்து விடுகிறது. அப்போது நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் ஒலி அமைப்புகள் எதுவும் இல்லாமல் கூட்டத்தின் சந்தடிகளையும் மீறி, திருவிழா என்றால் அங்கு நடக்கும் மேள தாள சத்தங்களையும் தாண்டி பாடினால்தான் மக்கள் காதுகளுக்கும் போகும், பாராட்டுக்களும் கிடைக்கும். இப்படிப் பாடுவதனால் இவர்களுடைய உடல் சக்தி குறையவும், அதனால் கிட்டப்பா போன்ற பெரிய நாடக நடிகர்/பாடகர்கள் இளமையில் மாண்டு போவதும் சகஜமாக இருந்து வந்தது. இளம் வயதிலேயே மிக அருமையாகப் பாடிவந்த டி.ஆர்.மகாலிங்கம் கிட்டப்பா போல பாடுகிறார் என்று பெயர் வாங்கிவிட்டார். இந்த நாட்டின் நாடகக் கலைக்கும் இசைத்துறைக்கும் பெருத்த நஷ்டம் கிட்டப்பாவின் இறப்பு. அவர் தனது 28ஆம் வயதில் காலமாகிவிட்டார். அவருடைய இடத்தைப் பூர்த்தி செய்ய டி.ஆர்.மகாலிங்கம் வந்து விட்டார். இவருடைய 14ஆம் வயதில் 1937இல் ஸ்ரீ கிருஷ்ணன் பற்றிய ஓர் திரைப்படத்தில் “நந்தகுமார்’ என்ற பெயரில் உருவான படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தை உருவாக்கியவர் காரைக்குடி ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அவர்கள். அப்போது அவர் காரைக்குடியில் சினிமா ஸ்டுடியோ வைத்து படங்களை எடுத்து வந்தார். ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் இளம் வயது லீலைகளை எடுத்துக் கூறும் ஓர் அற்புதமான நூல். அதில் கிருஷ்ணன் சிறு பிள்ளை காலத்தில் நடந்தவற்றை எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் அலுக்காது. அப்படி அந்தக் கதை சிறுவயது கிருஷ்ணன் பற்றியது என்பதால் சிறுவனான டி.ஆர்.மகாலிங்கத்தை அந்தப் படத்தில் நடிக்க வைத்தார் செட்டியார் அவர்கள். மேலும் சிறுவன் மிகச்சிறப்பாகப் பாடக்கூடியவன். அந்தப் படம் ஒன்றும் வெற்றிப் படமாக அமையவில்லை. இருந்தாலும் அதில் வந்த பாடல்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றன. அடுத்து செட்டியார் எடுத்த படம் ஸ்ரீ வள்ளி. அந்தப் படத்தில் மகாலிங்கம்தான் கதாநாயகன். ஸ்ரீ வள்ளி நாடகங்களில் விளம்பரம் செய்யும்போது முருகன் தானாகவும், கிழவனாகவும், வேட்டுவனாகவும் வரும் காட்சிகள் இருப்பதால் அந்தந்த நடிகரின் பெயருக்கு முன்னால் இன்னார் வேலன், வேடன், விருத்தனாக நடிக்கும் என்று எழுதுவார்கள். ஏ.வி.எம். ஸ்ரீ வள்ளி படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், அப்படி வேலன், வேடன், விருத்தனாக வந்து பாடி நடித்தார். அந்தப் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? இன்றைய புகழ்பெற்ற நடிகை லக்ஷ்மியின் தாயார். அந்தப் படத்தில் மகாலிங்கத்துக்கு நல்ல பெயர் வந்தது. அது முதல் அவருக்கு ஏறு முகம்தான். பல படங்கள் வந்தன. அவற்றில் நடித்தார். செல்வம் சேர்ந்தது. வழக்கம் போல சொந்தத்தில் படம் எடுத்தார். மோகனசுந்தரம் என்ற படத்தில் நடித்த எஸ்.வரலக்ஷ்மியுடன் இவர் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். . அதில் ஓரளவுக்கு இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. சில காலம் சினிமாத் துறையிலிருந்து ஒதுங்கி இருந்த இவரை மறுபடி சினிமாவுக்குக் கண்ணதாசன் கொண்டு வந்தார். பின்னர் ஏ.பி.நாகராஜன் வாய்ப்புக்கள் கொடுத்தார். அவருடைய திருவிளையாடல், ராஜராஜசோழன், அகத்தியர் போன்ற படங்களில் இவருக்கு பாட வாய்ப்புகள் கிடைத்தன. டி.ஆர்.மகாலிங்கம் நடித்து வெளியான படங்களின் பட்டியலும் பெரியதுதான். அவை:- [] நந்தகுமார், ஸ்ரீ வள்ளி, நந்தனார், மனோன்மணி, வேதாள உலகம், சின்னதுரை, தெருப்பாடகன், திருநீலகண்டர், விளையாட்டு பொம்மை, மோகனசுந்தரம், மச்சரேகை, நாம் இருவர், பவளக்கொடி, ஆதித்தன் கனவு, ஞானசெளந்தரி, ரத்தினபுரி இளவரசி, லைலா மஜ்னு, வேலைக்காரன், தயாளன், ஆட வந்த தெய்வம், இதய கீதம், அபலை அஞ்சுகம், மணிமேகலை, அமுதவல்லி, திருவிளையாடல், ராஜராஜசோழன், அகத்தியர், திருமலை தெய்வம், கவலை இல்லாத மனிதன், பண்ணையார் மகள், மாலையிட்ட மங்கை போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடிய படங்கள். மகாலிங்கம் புகழும் செல்வமும் ஓங்கி சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர். திரைப்பட உலகின் தவிர்க்கமுடியாத ஒரு தீங்கு சிலருக்கு வீழ்ச்சியும் ஏற்படத்தான் செய்யும். அப்படி நல்ல நிலையிலிருந்த டி.ஆர்.மகாலிங்கம், காலமானபோது அப்படியொன்றும் செல்வத்தின் சிறப்போடு இறக்கவில்லை. என்றாலும் மக்களால் மறக்கமுடியாத மனிதராக, இனிமையான பாடல்களுக்குச் சொந்தக் காரராக மக்களின் அன்புக்கு உகந்தவராக இருந்து மறைந்தார். வாழ்க அவர் புகழ்! 8 டி.கே.எஸ் சகோதரர்கள் [] டி.கே.எஸ் சகோதரர்கள் தமிழ் நாட்டில் நாடக உலகில் சிறந்து விளங்கிய குழுக்கள் ஏராளம். முந்தைய தலைமுறையில் நாட்டில் அதிக அளவில் நாடகக் குழுக்கள் இருந்தன. சினிமாவின் தாக்கம் சிறிது சிறிதாக நாடகக் கலை கிட்டத்தட்ட அழிந்துவிட்டதென்றே சொல்லலாம். அப்படிப்பட்ட தலை சிறந்த நாடகக் குழுக்களில் டி.கே.எஸ்.சகோதரர்களின் குழு மிகச் சிறப்பான நாடகக் குழு. இந்தக் குழுவில் சேர்ந்து நடித்து பிரபலமான கலைஞர்கள் ஏராளம். இன்றைய தலை சிறந்த கலைஞராக விளங்கும் கமலஹாசன் இந்தக்குழுவில் உருவானவர்தான் என்பது ஆச்சரியமான செய்தியாகக் கூட இருக்கலாம். டி.கே.எஸ் சகோதரர்கள் என்பது டி.கே.சங்கரன், டி.கே.முத்துசாமி, டி.கே.சண்முகம், டி.கே.பகவதி ஆகிய சகோதரர்களைக் குறிக்கும். இவர்கள் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த டி.எஸ்.கண்ணுச்சாமி பிள்ளை என்பவரின் பிள்ளைகள். இந்தச் சகோதரர்களில் சங்கரன், முத்துசாமி, சண்முகம் ஆகியோர் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்தில் நாடக உலகுக்கு வழிகாட்டியாக ஆசானாக விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகள் நடத்தி வந்த நாடகக் குழுவில் சேர்ந்தார்கள். சங்கரதாஸ் சுவாமிகள் நடத்தி வந்த நாடகக் கம்பெனியின் பெயரைச் சொல்லவே நீண்ட நேரம் பிடிக்கும், அவ்வளவு பெரிய நீளமான பெயர். “தத்துவ மீனலோசனி வித்யா பால சபா” என்பது அந்தப் பெயர். இம்மூவரும் இந்த நாடகக் கம்பெனியில்தான் முதன் முதலாகச் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர். இந்தச் சிறுவர்களின் திறமை சுவாமிகளின் நாடகக் கம்பெனிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. திறமை மிக்க இந்த பிள்ளைகள் கிடைத்ததும் ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகளுடைய அதிர்ஷ்டம் என்றுகூட சொல்லலாம். பல கதைகள் நாடகங்களாகப் போடப்பட்டன. சங்கரதாஸ் சுவாமிகளே பல நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றவும் செய்தார். அப்படியொரு நாடகத்தில் இந்த மூன்று சகோதரர்களும் ஒரே காட்சியில் மேடையில் தோன்றி நடித்த போது பொது மக்களின் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றனர். [] சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பெனியிலிருந்து விலகி பின்னர் எம்.கே.ராதா எனும் பிரபலமான நடிகரின் தந்தையாரான கந்தசாமி முதலியார் நடத்தி வந்த நாடகக் கம்பெனியிலும், கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவர் நடத்திய கம்பெனியிலும் நடிக்கத் தொடங்கினர். இப்படி அந்தக் காலத்தில் நாடகக் கம்பெனிகளை நடத்தி வந்த பெரியோர்களெல்லாம் நன்கு படித்த புலவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்து வந்திருக்கின்றனர். இப்படி பல நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்த நல்ல பெயர் வாங்கிய சகோதரர்கள் பிறகு 1925இல் தங்களுக்கென்று ஒரு தனி நாடகக் குழுவை ஏற்படுத்திக் கொண்டனர். அதன் பெயர் மதுரை பால சண்முகானந்த சபா என்பது. இது போன்ற நாடகக் குழுவில் சேரும் சிறுவர்களுக்கு அதுவே கலைகளை போதிக்கும் பள்ளிக்கூடமாகப் பயன்பட்டிருக்கிறது. நாடகக் குழுவில் சேர்ந்ததும் இவர்களுக்கு நன்கு பேசப் பயிற்சி தரப்படும். மேடையில் கூச்சமின்றி, பேசவும் பாடவும் தெரிந்திருக்க வேண்டும். பாடத் தெரிந்தவர்களுக்கு பாட்டுச் சொல்லித் தரப்பட்டு பாட்டுப் பாடவும் வாய்ப்புகள் தரப்படும். வாய்ப்பாட்டு தவிர இசைக் கருவிகளையும் வாசிக்கத் தகுந்த பயிற்சி தரப்படும். இந்தக் குழுக்கள் தங்களிடம் சேர்ந்த சிறுவர்களை வைத்து ஒரு முழு நேர நாடக நடிகப் பள்ளியாகவே நடத்தி வந்தார்கள். இந்தக் குழுக்கள் ஒரு ஊருக்குச் சென்றால் அங்கு நாடகம் நடத்துவதற்கு கொட்டகை வாடகைக்கு எடுப்பது முதல், நடிகர்கள் தங்குவதற்கு வீடு, அங்கு சமைப்பது, உணவு உண்ண ஏற்பாடு செய்வது, அந்த வீட்டிலேயே நாடக ஒத்திகை பார்ப்பது, பாட்டுக்கள் பாடிப் பழகுவது போன்ற வேலைகளையும் முழு நேரமாகச் செய்து வருவார்கள். இவர்களுக்கு வாத்தியார் என்பவர் ஒருவர் உண்டு. இவர் மிகக் கடுமையாக வேலை வாங்கி சுமாரான நடிகனைக்கூட சிறந்த நடிகனாக ஆக்கும் அனுபவம் வாய்ந்தவராக இருப்பார். நமக்குத் தெரிந்து ‘யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை’ என்பவரைப் பற்றி சொல்லுவார்கள். சிவாஜி கணேசன் போன்றவர்கள் நடித்து வந்த காலத்தில் நாடக வாத்தியாராக இருந்தவர் இவர். [] ஒரு ஊருக்குப் போனால் ஒரு நாடகத்தை ஒரு சில நாட்கள் நடத்துவார்கள். அதற்கு வசூல் குறையத் தொடங்கியதும் புதிய நாடகம் அர்ங்கேறும். இப்படி பல நாடகங்களை ஒரே ஊரில் நடத்தி விட்டு அந்த ஊரைவிட்டுப் போக சில மாதங்கள் கூட ஆகுமாம். இப்படி இந்த டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகம் ஊர் ஊராகச் சென்று நடக்கத் தொடங்கியது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் நாடகங்கள் புராண, இதிகாச, சரித்திர நாடகங்களாகத்தான் இருக்கும். முதன் முதலில் டி.கே.எஸ். சகோதரர்கள் ஒரு சமூக நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்கள். அதன் பெயர் “குமாஸ்தாவின் பெண்”. இது 1937இல் நடந்தது. இதனை எழுதியது சகோதரர்களில் ஒருவரான முத்துசாமி. இந்தக் கதை பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. இந்த நாடகத்தின் வெற்றியின் அடிப்படையில் டி.கே.எஸ்.சகோதரர்கள் பின்னர் பல சமூக நாடகங்களை அரங்கேற்றத் தொடங்கினார்கள். தொழிலாளர்களின் கஷ்டங்கள், உழைப்பின் பெருமை, நேர்மையும் வாய்மையும் தரும் உயர்வு இவையெல்லாம் இவர்களின் நாடகங்களில் சொல்லப்பட்ட மையக் கருத்துக்கள். இவர்கள் நாடக மேடையில் தொங்கும் திரைச்சீலையில் எழுதப்பட்ட வாசகம் “உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்” என்பது. இது பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகள் தங்கள் சங்கத்தின் கோஷமாகப் பயன்படுத்தினர். இவர்கள் மேடையேற்றி வெற்றிபெற்ற பல நாடகங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை பல. அவை ‘ரத்தபாசம்’, ‘மனிதன்’, ‘அந்தமான் கைதி’, ‘உயிரோவியம்’, ‘கள்வனின் காதலி’, ‘ஒளவையார்’, ‘ராஜராஜசோழன்’ இவைகளெல்லாம் பெரும்பாலும் தமிழ் நாட்டின் பெரிய நகரங்களிலெல்லாம் நடைபெற்றன. அது தவிர சென்னை போன்ற பெரு நகரங்களில் நடைபெறும் பொருட்காட்சி போன்ற இடங்களிலெல்லாம் இவர்களது நாடகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. பெரிய புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய கதைகளையெல்லாம் இவர்கள் நாடகமாகத் தயாரித்து வந்தனர். சில நாடகங்கள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன. ரத்தபாசம், அந்தமான் கைதி, கள்வனின் காதலி, ஒளவையார், ராஜராஜசோழன் போன்றவை அப்படி வந்த கதைகள்தான். இதில் ராஜராஜசோழன் கதை ‘காதல்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அரு.ராமநாதன் எழுதியது. ரத்தபாசம் இந்தியிலும் எடுக்கப்பட்டது. அதில் கிஷோர் குமார் தமிழில் டி.கே.சண்முகம் நடித்த பாத்திரத்தில் நடித்தார். இவர்கள் ஒவ்வொருவரையும் அண்ணாச்சி என்றுதான் மக்கள் அன்போடு குறிப்பிடுவார்கள். நல்ல தோற்றம், கெளரவமான வாழ்க்கை, நேர்மை, நேரம் தவறாமை, தமிழ்ப்பற்றி இவைகளெல்லாம் இந்த சகோதரர்களின் குணங்கள். இதில் ஒளவையாராக டி.கே.சண்முகம் பெண் வேடமிட்டு நடிப்பதைப் பார்த்தவர்கள் இவர் ஒரு ஆண் என்பதை நம்பவே மாட்டார்கள். ராஜராஜ சோழனில், அந்த சோழ மன்னனை அவன் நாட்களில் பார்க்காதவர்கள் அதில் மன்னனாக நடித்த பகவதியின் கம்பீரத்தைப் பார்த்து அந்த சோழ மன்னனைப் பார்த்த உணர்வினை அடைவார்கள். அமரர் கல்கியின் கதை கள்வனின் காதலி. எம்.ஜி.ஆர். நடித்து வெளியான படம் அந்தமான் கைதி. நாடகக் கலையின் வளர்ச்சிக்கும் புதுமைகளைப் புகுத்தும் ஆர்வத்துக்கும், புதிய நடிகர்களை உருவாக்குவதற்கும் இந்த நாடகக் குழு பெரிதும் பாடுபட்டிருக்கிறது. 1942இல் இவர்கள் நாடகக் கலைக்கென்று அறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்களை அழைத்து ஒரு மாநாட்டை நடத்தினார்கள். டி.கே.சண்முகம் தமிழ், தமிழிலக்கியங்கள் இவற்றின் மீதிருந்த பற்றினால் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தில் சேர்ந்து அதன் பொருளாளராகவும் இருந்திருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் டி.கே.எஸ். மேடையில் தோன்றும் போது, பளிச்சென்று அவர் அணிந்திருக்கும் கதர் உடையும் கழுத்தைச் சுற்றி அணிந்திருக்கும் அங்கவஸ்திரமும், படிய வாரிய தலையும், நெற்றியில் திருநீறும் குங்குமமும் ஒரு தெய்வீகக் களையும் மேதா விலாசத்தைக் காட்டுவதாகவும் இருக்கும். மக்கள் அவரை ஒரு சாதாரண நடிகராகப் பார்க்கவில்லை. தலை சிறந்த இலக்கிய வாதியாக, அரசியல் தலைவராக, பின்பற்ற வேண்டிய நற்குணங்களைக் கொண்ட ஒரு வழிகாட்டியாகத்தான் கருதி போற்றி வந்தார்கள். தமிழ் நாட்டுக்குப் பெருமை சேர்த்த சிலரில் டி.கே.சண்முகமும் ஒருவர் என்றால் மிகையல்ல. பின்னாளில் 1950க்குப் பிறகு இவர்கள் நாடகக் குழுவின் பெயர் டி.கே.எஸ்.நாடக சபா என்று மாற்றப்பட்டது. இந்த நாட்களில் தங்கள் குழுவைச் சேர்ந்த நடிகர்களை ஒன்றாக வைத்து நடிக்க வைக்கும் முறையிலிருந்து சற்று மாறி வெளியிலிருந்த பல திறமைசாலிகளைத் தங்கள் நாடகங்களில் நடிக்க வாய்ப்புகளை வழங்கி, தரமான நாடகங்களைக் கொடுத்து வந்தார்கள். பின்னாளில் திரைப்படத் துறையில் புகழ்பெற்று விளங்கிய பலர் இவருடைய நாடகக் குழுவில் நடித்து வாழ்விலும், தொழிலிலும் உயர்ந்தவர்கள். சிலரது பெயர்களைச் சொன்னால் உங்களுக்கு விளங்கும். என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சுப்பையா, டி.என்.சிவதாணு, ஏ.பி.நாகராஜன், டி.வி.நாராயணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், வாழ்க்கை என்ற ஏவிஎம் படத்தில் நடித்துப் புகழ்பெற்ற எம்.எஸ்.திரெளபதி, எம்.என்.ராஜம், இப்போதைய தலைசிறந்த நடிகர் கமலஹாசன் போன்றோர் இவர்கள். ஆண்களே மேடைகளில் பெண் வேடமிட்டு நடிக்கும் பழக்கத்தை மாற்றி பெண் நடிகைகளை மேடையேற்றிய பெருமையும் டி.கே.எஸ்.நாடகக் குழுவினருக்குத்தான் உண்டு. தமிழ்நாடு மட்டுமல்லாமல், வட இந்தியாவின் பெரு நகரங்களிலும், இலங்கை மலேசியா போன்ற இடங்களிலும் இவர்கள் நாடகங்கள் நடைபெற்றன. சுதந்திர இந்தியாவில் பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்ற நாடகங்களை நடத்திய இந்தக் குழு பின்னர் கலைக்கப்பட்டது. நாடகக் கலை உள்ள மட்டும் இந்தக் குழுவினரின் பெயர் நிலைத்திருக்கும். 9 'இலங்கேஸ்வரன்' ஆர்.எஸ்.மனோகர் [] ‘இலங்கேஸ்வரன்’ ஆர்.எஸ்.மனோகர். தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பல வில்லன் நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா போன்றொர். இவர்களில் மறக்க முடியாத ஒரு நடிகர் ஆர்.எஸ்.மனோகர்.இவர் நேரடியாகத் திரைக்கு வந்தவரல்ல. மத்திய அரசு இலாகா வொன்றில் பணியாற்றிக்கொண்டே, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த இவர் திறமை இவரை திரையிலும் கொண்டு வந்து நிறுத்தியது. பிறகு முழு நேர நாடக நடிப்பை மேற்கொண்ட பிறகு மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்பை நிர்மாணித்து மக்களை பிரமிப்படைய வைத்தவர். இவருடைய பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்த வரலாறு உண்டு. ‘இலங்கேஸ்வரன்’ எனும் நாடகத்தில் இராவணனாக நடித்துப் புகழ் பெற்றதா இவர் பெயருக்கு முன்பு இலங்கேஸ்வரன் ஒட்டிக்கொண்டு விட்டது. பழைய புராண, வரலாற்று நாடகங்கள்தான் பெரும்பாலும் இவர் மேடையேற்றி வந்தார். [] சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1950ஆம் வருடத்தில் சென்னையில் பிரபலமான வழக்குரைஞராகவும், அமெச்சூர் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவருமான வி.சி.கோபாலரத்தினம் என்பவருடைய குழுவில் பங்கு பெற்று இவர் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தார். ஆர்.எஸ்.மனோகர் நாடக உலகுக்கு வருவதற்கு முன்பாக இங்கு பல ஜாம்பவான்கள் நாடக மேடைகளில் வெற்றிக்கொடி நாட்டி வந்திருக்கின்றனர். குறிப்பாக நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், கந்தசாமி முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்ற பல பிரபல குழுக்கள் நாடக உலகில் இருந்தன. திரையுலகில் நுழந்த போது மனோகர் கதாநாயகனாகவும் பின்னர் குறிப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் வில்லனாகவும் இவர் பரிமளித்திருக்கிறார். 1950 தொடங்கி சுமார் ஐம்பது ஆண்டுகள் இவர் திரை உலகையும் நாடக உலகையும் ஆக்கிரமித்து வந்திருக்கிறார். இவர் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை சுமார் முன்னூறுக்கும் மேல் இருக்கலாம். இவருடைய நாடகங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு இவர் நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் வரிசையில் 1959இல் வெளியான “வண்ணக்கிளி”, 1960இல் வெளிவந்த “கைதி கண்ணாயிரம்”, 1962இல் “கொஞ்சும் சலங்கை”, போன்ற படங்களைச் சொல்லலாம். [] 1925ஆம் ஆண்டில் ஜுன் 29இல் பிறந்தவர் ஆர்.எஸ்.மனோகர். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூர். தந்தையார் சுப்பிரமணிய ஐயர். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றினார். மனோகரின் இயற்பெயர் ஆர்.எஸ்.லக்ஷ்மிநரசிம்ஹன் என்பது. இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆர்வமும் கொண்டிருந்தார். பட்டப்படிப்பை முடித்தவுடன் அஞ்சல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். வேலைக்குப் போய்க்கொண்டே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணி பக்கம் வேலைக்குப் போகும் இளைஞர்களும், படிக்கும் இளைஞர்களும் ஏராளமானோர் ஒன்றாக இடம் பிடித்து விடுதிகளில் சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வந்தனர். சில ஓட்டல் மொட்டை மாடிகளில் கீற்று வேய்ந்த கொட்டகை அமைத்து அதில் பத்து பன்னிரெண்டு பேர்வரை ஒன்றாகத் தங்கியிருப்பர். அப்படிப்பட்ட இளைஞர் குழுவோடு தங்கியிருந்த இவர் பல நாடகங்களில் பங்கு கொண்டு வந்தார். தோட்டக்கார விஸ்வநாதன் என்பவருடைய ஒரு நாடகக் குழு. அதில்தான் இவர் அதிகம் பங்கு பெறலானார். அந்த காலகட்டத்தில் ஏ.டி.கிருஷ்ணசாமி எனும் சினிமா இயக்குனர் “ராஜாம்பாள்” எனும் படத்தை எடுக்கத் தொடங்கினார். அப்போதெல்லாம் தமிழில் துப்பறியும் கதைகளை சிலர் எழுதிவந்தனர். அவர்களில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், ஆரணி குப்புசாமி முதலியார். ஜே.ஆர்.ரங்கராஜு போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்த ஜே.ஆர்.ரங்கராஜு எழுதிய கதைதான் இந்த ‘ராஜாம்பாள்’. இந்தப் படத்துக்குப் புது முகங்களைத் தேடி அலைந்த இதன் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரின் கண்களில் லக்ஷ்மிநரசிம்ஹன் அகப்பட்டார். மனோகர் எனும் நாமகரணமிட்டு இவர் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது ஒரு துப்பறியும் கதை. இதில் புகழ்பெற்ற வீணை பாலச்சந்தர்தான் வில்லன். பி.கே.சரஸ்வதி கதாநாயகி. மனோகர் கதாநாயகன். [] இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் ராம்நாத் தாய் உள்ளம் என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். இது 1952இல். இதில் நாகையா, எம்.வி.ராஜம்மா, மாதுரி தேவி, சந்திரபாபு போன்றவர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் ஒரு புதுமுகவும் அறிமுகமாகி பின்னர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தையும் ஒருவர் பிடித்தார். அவர்தான் ஜெமினி கணேசன். அந்தக் காலத்தில் அழகும் இளமையும் ஒருசேர அமைந்த ஒரு கதாநாயகனாக ஜெமினி திகழ்ந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்தார் என்பது நினைவு. தமிழ்த் திரையுலகில் சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். இவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இவர்கள் அத்தனை பேரோடும் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றார் மனோகர். ஒன்று எம்.என்.நம்பியார் வில்லனாக இருப்பார், இல்லாவிட்டால் ஆர்.எஸ்.மனோகர் இப்படித்தான் அன்றைய தமிழ்ப்படங்கள் இருந்தன. சினிமாவில் புகழ் கிடைத்து வந்த போதும் உடன் பிறந்த நாடகத்தின் மீதான ஈர்ப்பு இவரை விடவில்லை. தொடர்ந்து நாடகங்களில் நடிக்க சொந்தமாக ஒரு நாடகக் குழுவை அமைத்தார். அதுதான் நேஷணல் தியேட்டர்ஸ் என்கிற குழு. தமிழ்நாட்டில் அப்போதெல்லாம் கோடை விடுமுறைக் காலங்களில் பெரிய ஊர்களில் எல்லாம் கண்காட்சி, பொருட்காட்சி என்ற பெயரில் திருவிழா நடக்கும். அதில் தினசரி நாடகங்கள் உண்டு. பெரிய நாடகக் கம்பெனிகள் வந்து நாடகங்களைப் போடுவார்கள். அப்படி சேலத்தில் நடந்த பொருட்காட்சியொன்றில் இவர் நடத்திய நாடகத்தை அப்போது சேலத்தில் இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமாக் கம்பெனி அதிபர் டி.ஆர்.சுந்தரம் பார்க்க நேர்ந்தது. அவருக்கு இவரது தோற்றம், பேச்சு, உச்சரிப்பு, நடிப்பு அத்தனையும் பிடித்துப் போய்விட்டது. விடுவாரா, இழுத்துத் தன் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் போட்டுக் கொண்டார். தொடர்ந்து இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் கம்பெனி நடிகர் போலவே கிட்டத்தட்ட 18 படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்து வந்த காலத்தில் ஆர்.எஸ்.மனோகரும் டி.ஆர்.சுந்தரம் அவர்களின் குடும்ப உறுப்பினரைப் போலவே கெளரவமாக நடத்தப்பட்டார். இதனால் டைரக்டர் சுந்தரம் அவர்களிடம் மனோகர் மிகவும் மரியாதையோடும், பணிவோடும் நடந்து கொண்டார். 18க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோகர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1963இல் கொஞ்சும் குமரியில் நடித்துக் கொண்டிருக்கும் போது டி.ஆர்.சுந்தரம் காலமானார். [] திரைப்பட வாழ்க்கைதான் இப்படியென்றால் மனோகரின் நாடக வாழ்க்கை இன்னும் சுவாரசியமானது. இவருடைய அத்தனை நாடகங்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றவை. இவருடைய நாடகங்களின் ஸ்பெஷாலிடி என்னவென்றால் பிரம்மாண்டமான செட். சினிமாவைப் போலவே திகைக்க வைக்கக்கூடிய செட்டுகளைத் தயாரித்து நடிக்கும் போது பார்ப்பவர்களுக்கு ஒரு சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி விடுவார். ஒரேயொரு நெருடலான விஷயம் என்னவென்றால் இவர் பொதுவாக மக்கள் வில்லனாகக் கருதும் கதாபாத்திரத்தை ஹீரோவாக ஆக்கி நாடகங்களைப் போடுவார். இவருடைய லங்கேஸ்வரன் போன்ற நாடகங்கள் அதற்கு சாட்சியம் கூறும். சாணக்கிய சபதமும் அப்படிப்பட்டதுதான். சிசுபாலன், காடகமுத்தரையன் போன்ற இன்னும் சில நாடகங்களையும் குறிப்பிடலாம். பொதுவாக நாடகத்தில் நடிப்பவர்கள் பட்டதாரிகளாக இருப்பதில்லை. அந்த வழக்கத்தை மாற்றியவர் ஆர்.எஸ்.மனோகர். நிறைய படித்துப் புதுப்புது நாடகங்களை மக்களுக்குக் கொடுத்து வந்தார். பல இடங்களில் நல்ல காரியங்களுக்கு நிதி வசூல் செய்வதற்காக தனது நாடகங்களை நடத்தி நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறார். சிக்கலான புராண நாடகங்களையும் தனது பாணியில் மிக எளிமையாக மக்கள் மனங்களில் பதியும்படி கதை, காட்சிகளை அமைத்து நாடகங்களை நடத்தி வெற்றி காண்பார். நடிகர்கள் குறித்தெல்லாம் அவ்வப்போது கிசுகிசுக்கள் என்றெல்லாம் அந்தக் காலத்தில் பேசப்பட்டாலும் எந்தவித பிரச்சினைகளிலும் அகப்படாமல், துல்லியமான தூய வாழ்க்கையை மேற்கொண்டவர் மனோகர். இவருடைய நாடகங்களில் லங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் திருநாவுக்கரசர் போன்ற பல புராண நாடகங்களைக் குறிப்பிடலாம். ஒரு முறை நாடக அரங்கு ஒன்றில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் ஊனம் ஏற்பட்டு கடைசி காலங்களில் சற்று கால் தாங்கியே நடந்து வந்தார். அந்த நிலையிலும் இவர் நாடகங்களில் நடிக்க விருப்பம் கொண்டிருந்தார். இதய நோயின் தாக்கத்தால் தனது 80ஆம் வதில் 2006 ஜனவரி மாதம் 10ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவர் நடித்து வெளியான படங்கள் 300 இருக்கும். அவை எல்லாவற்றையும் சொல்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் என்பதால் அந்த படங்களின் பெயரை யெல்லாம் வெளியிட முடியவில்லை. வாழ்க ஆர்.எஸ்.மனோகர் புகழ்! 10 எம்.எம்.தண்டபாணி தேசிகர் [] எம்.எம்.தண்டபாணி தேசிகர் தமிழிசை உலகிலும், திரைப்படங்கள் மூலம் அழியாத புகழ் வாய்ந்த பல தமிழ்ப் பாடல்களைப் பாடியும் புகழ் பெற்று விளங்கியவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள். மதுரை முத்தையா தண்டபாணி தேசிகர் என்பது இவருடைய முழுப் பெயர். இவருடைய பன்முகப் பெருமைகள் தமிழிசை, திரைப்படங்கள், பாடலாசிரியர் போன்ற பல வகைகளிலும் வெளிப்பட்டு மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர். இவருடைய பாடல்களைப் பாடாத தமிழ் இசை மேடைகளே இல்லையெனலாம். “தாமரைப் பூத்த தடாகமடி” என்கிற பாட்டைப் பாடிய இவரை ஒரு காலத்தில் தமிழிசை மேடைகளில் நினைவுகூராதவர்களே இல்லை.தஞ்சை மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள திருச்செங்காட்டாங்குடி என்பது இவர் பிறந்த ஊர். இந்த ஊரின் பெயரைச் சொன்னதும் பிள்ளைக் கறி சமைத்த சிறுத்தொண்டரின் நினைவு வரவேண்டுமே! கல்கியின் “சிவகாமியின் சபதம்” நெடுங்கதையில் பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவன் வாதாபி மீது படையெடுத்து முற்றுகையிட்ட போது, அவன் படையில் தளபதியாக இருந்த சிறுத்தொண்டர் அந்தக் கோட்டை வாயிலில் இருந்த ஒரு விநாயகரை வேண்டிக் கொண்டு அந்த சிலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து தன் சொந்த கிராமமான திருச்செங்காட்டாங்குடியில் பிரதிஷ்டை செய்ததாக எழுதுகிறார். இன்றும் அவ்வூர் சிவன் கோயில் பிரகாரத்தில் வாதாபி கணபதியின் சந்நிதி இருப்பதைப் பார்க்கலாம். 1908 ஆகஸ்ட் 27இல் இவர் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் முத்தையா தேசிகர். ஆலயங்களில் தேவாரம் பாடுபவர்கள் இவர்கள். இவருடைய கணக்கிலடங்கா தமிழ்ப் பாடல்கள் குறித்தும், இவர் நடித்த திரைப்படங்கள் குறித்தும் “ராண்டார்கை” எனும் எழுத்தாளர் எழுதி வைத்திருக்கிறார். [] தேவார இசை பாடும் குடும்பமாதலால் இவர் முதன்முதலில் தேவாரப் பாடல்களில்தான் பயிற்சி பெற்றார். இவருடைய தந்தையார்தான் இவருக்கு முதல் குரு. இவருடைய இளமைப் பருவத்தில் சட்டையப்ப நாயனக்காரர் என்பவரிடமும் இவரது இசைப் பயிற்சி நடந்தது. மாணிக்க தேசிகர் என்பவரிடமும் பிறகு கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை எனும் புகழ்பெற்ற வயலின் வித்வானிடமும் இசை பயின்றார். தன்னுடைய இருபதாவது வயதில் கச்சேரி செய்யத் தொடங்கிய இவரை அந்த நாள் இசை மேதைகள் பலரும் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். தேசிகருடைய பாட்டு என்றால் இவரது அழுத்தமான சாரீரமும், சுருதி பிசகாமல் பாடும் திறமையும் தமிழிசையில் தனி ஆர்வம் கொண்டு இவர் பாடும் தமிழ்ப்பாடல்களுக்கு இவர் பால் ஈர்ப்பும், இவர் இசையில் ஆர்வமும் ஏற்படும். இவருடைய தோற்றம், இசை ஆகியவை இவரை திரையுலகில் கொண்டு போய்ச் சேர்த்தது. நந்தனார் எனும் திரைப்படத்தில் திருநாளைப்போவாராக (நந்தனார்) நடித்தார். [] திருமிழிசை ஆழ்வார், வல்லாள மகராஜன், பட்டினத்தார் ஆகிய படங்கள் இவரது பெருமைக்குச் சான்றாகும். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இசைக் கல்லூரியின் முதல்வராக இவர் பதினைந்து ஆண்டுகள் சிறப்பாகப் பணி புரிந்திருக்கிறார். அங்கு பணியாற்றிய காலத்தில் இவர் “தமிழ்ப் பாமாலை” எனும் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இவர் பாடிய ஏராளமான தமிழ்ப் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. அவை அனைத்தையும் பட்டியலிடுவது என்பது சிரமமான காரியம் என்றாலும் ஓரிரெண்டை இங்கு குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும். அவை “தாமரைப் பூத்த தடாகமடி”, “ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி”, “இன்பக் கனா ஒன்று கண்டேன்”, “தூது நீ சொல்லிவாராய்”, “பிறவா வரம் தாரும்”, “வருகலாமோ”, “சிவலோக நாதனைக் கண்டு”, “என்னப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா”, “ஐயே! மெத்தக் கடினம்” இவை போன்ற பாடல்களைச் சொல்லலாம். தமிழகத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், ராஜாஜி, கல்கி, ரசிகமணி போன்றோர் தமிழிசை இயக்கத்துக்காகப் பாடுபட்டவர்கள். அப்படிப்பட்ட ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய இவர் தமிழிசைக்காக அரும்பாடு பட்டிருக்கிறார். 1940களில் தமிழிசை இயக்கம் தமிழ் நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது எனலாம். அப்போது தமிழ்ப் பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பல பாடகர்களில் தேசிகரும் ஒருவர். [] அந்த காலகட்டத்தில் கர்நாடக இசை உலகில் தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கும் சற்குரு ஸ்ரீதியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, புரந்தரதாசர் போன்றவர்களின் கீர்த்தனைகள்தான் அதிகம் பாடப்பட்டு வந்தன. முந்தைய இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் கச்சேரியின் நிறைவில் துக்கடாக்கள் என்ற பெயரில் மட்டுமே பாடப்பட்டன. தமிழிசை இயக்கத்தின் பலனாக இசை மேடைகளில் தமிழ்ப் பாடல்களும் முக்கியமாகப் பாடப்பட்டன. மகாகவி பாரதியார், கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகள், முத்துத்தாண்டவர், பாபநாசம் சிவன் ஆகியோரின் பாடல்கள் தமிழிசைக்கு உதவியாக இருந்தன. [] இவருடைய இசைப் பணிகளுக்கிடையே திரைப்படங்களிலும் நடித்தார் அல்லவா? 1935இல் இவர் “பட்டினத்தார்” எனும் படத்தில் நடித்தார். 1937இல் “வல்லாள மகாராஜா” எனும் படத்திலும் 1938இல் “தாயுமானவர்” படத்திலும் 1939இல் “மாணிக்கவாசகர்” படத்திலும், 1942இல் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் எடுத்த “நந்தனார்” படத்திலும் 1948இல் “திருமழிசை ஆழ்வார்” எனும் படத்திலும் நடித்தார். இவருடைய படங்கள் அனைத்திலும் இவருடைய பாடல்கள் சிறப்பம்சமாகத் திகழ்ந்து. தமிழிசையிலும் திரைப்படங்களிலும், இசை ரசிகர் உள்ளங்களிலும் சிறப்பான இடத்தைப் பெற்ற எம்.எம்.தண்டபாணி தேசிகர் 26-6-1972 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க தண்டபாணி தேசிகர் புகழ்! 11 டி.எம்.செளந்தரராஜன். [TMS (Main)] டி.எம்.செளந்தரராஜன். நம் காலத்தில் வாழ்ந்து கொண்டு செயற்கரிய சாதனைகளை செய்து முடித்துவிட்டுத் தனக்கு பின்னால் தான் கொடிகட்டிப் பறந்த துறையில் புதிதாகப் பற்பல புதிய சாதனையாளர்கள் வளர்ந்து வருவதைப் பார்த்து மகிழ்ந்து, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் கூடும் இடங்களில் அந்த இளைய தலைமுறையை மகிழ்ச்சியோடு, மலர்ந்த முகத்தோடு உளமாற வாழ்த்திக் கொண்டிருக்கும் ஒருவரை நாம் எப்படி எழுதாமல் விட முடியும். வாழ்ந்து கொண்டிருக்கும் சாதனையாளர்களை எழுதுவதில்லை என்றுதான் முடிவெடுத்திருந்தேன். ஆனால், இவரைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. [] அவர்தான் டி.எம்.செளந்தரராஜன். அடடா! இவர் பாடாத பாடல்களா, பக்திப் பாடல்கள், தனிப்பாடல்கள், சினிமாவில் டூயட் பாடல்கள், எத்தனை விதமான குரல்கள். பாடத்தான் பாடலாம், அதிலும் எந்த நடிகருக்காகப் பாடுகிறாரோ அந்த நடிகரின் குரலைப் போலத் தன் குரலை மாற்றிப் பாடும் திறமையை என்னவென்று சொல்வது. திரைப்படங்களில் எம்.ஜி.ஆருக்கு என்றால் அவரைப் போன்ற குரல், சிவாஜிக்கு என்றால் அவருடைய குரல் எப்படி முடிந்தது இவரால்? 1957 என்று நினைக்கிறேன். திருச்சிராப்பள்ளியில் பிரம்மச்சாரிகள் வசிக்கும் ஒரு லாட்ஜ் அறையில் தங்கி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தேன். என் லாட்ஜின் கீழ் தளத்தில் வானொலி நிலையத்தில் வயலின் வித்வானாகப் பணியாற்றிக் கொண்டிருந்த திருகோகர்ணம் உலகநாதப் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். அவர் ஒரு நாள் என்னையும் எங்கள் லாட்ஜில் இருந்த சில நண்பர்களையும் அகில இந்திய வானொலி நிலையத்தில் அன்று மாலை நடக்க விருக்கும் ஒரு இசை நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். அப்படி யார்தான் பாடுகிறார்கள் போய்க் கேட்டுத்தான் பார்ப்போமே, அதிலும் நம் லாட்ஜ் நண்பர் கூப்பிடுகிறார் என்று போனோம். அவர் சொன்னார் தூக்குத் தூக்கி போன்ற படங்களில், பாடிப் புகழ் பெற்றிருக்கும் டி.எம்.செளந்தரராஜன் என்பவர் பாடுகிறார் என்றார். நாங்கள் ஐந்தாறு பேர் அன்று மாலை வானொலி நிலையத்துக்குச் சென்றோம். பிளாசா தியேட்டருக்கு அருகில் இருந்தது வானொலி நிலையம். அங்கிருந்து மிக அருகில்தான் எங்கள் லாட்ஜ். நிலையத்தின் இயக்குனர் அறைக்கு வெளியே நின்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நண்பர் சொன்னார், அது என்னய்யா குரல், “ஏறாத மலைதனிலே” என்ற பாட்டு ‘தூக்குத் தூக்கி’யில். இதுவரை அப்படியொருவர் பாடி நான் கேட்டதில்லை என்றார். ஆமாம் “பெண்களை நம்பாதே, கண்களே பெண்களை நம்பாதே’ என்றொரு பாட்டு. உச்ச ஸ்தாயியில் பாடப்பட்ட அந்தப் பாட்டுக்கள் எங்களை திகைக்க வைத்தன. [] அப்போது அந்தப் பாடகரை நாங்கள் பார்த்ததும் இல்லை, அவருக்கு என்ன வயதிருக்கும் என்பதெல்லாம் தெரிந்திருக்கவும் இல்லை. எங்கள் வழக்கப்படி ‘அவன்’ ‘இவன்’ என்றெல்லாம் அவரைக் குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் வாயிலிருந்த வெற்றிலைப் பாக்கை துப்புவதற்காக வெளியில் வந்து ஒரு குவளை நீரைக் கொண்டு வாயைக் கழுவிக் கொண்டிருந்தார். நாங்கள் பேசுவதையெல்லாம் அவர் கேட்டுக் கொண்டிருந்து விட்டுப் பின் எங்களைப் பார்த்து ஒரு மோகனச் சிரிப்பு சிரித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார். பின்னர் நேரமாகிவிட்டது கச்சேரி நடக்கும் திறந்த வெளி அரங்குக்குச் சென்றோம். கச்சேரி தொடங்கும் நேரம். பாடகர் வந்து அமர்ந்தார். பார்த்தால் தாம்பூலத்தைத் துப்பிய அந்த மனிதர்தான் வந்து அமர்ந்தார். எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவர்தான் டி.எம்.எஸ். என்று தெரியாமலே அவரைப் பற்றி அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசியும், அவர் சிரித்துக் கொண்டு போய்விட்டாரே. அவரது குணத்தைத் தெரிந்து கொள்ள வேறு நிகழ்ச்சி தேவையா என்ன? வட இந்தியாவில் பல பாடகர்கள். அன்றைய இளைஞர்கள் கேட்டு மகிழ்ந்து பாராட்டிக் கொண்டிருந்தார்கள். திருச்சி கெயிட்டி தியேட்டர் அப்போது இந்திப் படங்களை மட்டும்தான் திரையிடும். அங்கு சென்று எல்லா படங்களையும் பார்ப்போம். எங்களுக்கு இந்தி தெரியாது. ஏதோ அருகில் இருப்பவன் கதை சொன்னால் கேட்போம். பாட்டுக்களை ரசிப்போம். அவ்வளவுதான். அடே அப்பா அங்கு பார்த்த இந்திப் படங்கள்தான் எத்தனை. அத்தனையும் யாருக்காக? முகமது ரஃபி, முகேஷ், லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார், மன்னா டே, போன்றவர்களின் பாடல்களுக்காகத்தான். அப்படி அன்றைய ரசிகர்கள் இந்தி பாடல்களில் திளைத்துக் கிடந்தவர்களைத் தமிழ்ப் பாடல்களைக் கேட்டு கிறுகிறுக்க வைத்த குரல் டி.எம்.செளந்தரராஜனுடையது. ‘வணங்காமுடி’ என்றொரு படம். அதில் டி.எம்.எஸ்.சும் பாடியிருக்கிறார். சீர்காழி கோவிந்தராஜனும் பாடியிருக்கிறார். இப்படியொரு போட்டி. தமிழ்த் திரைப் பாடல்கள் அகில இந்திய அளவில் புகழ்பெறத் தொடங்கியது இவர்களுடைய காலத்தில்தான் என்றால் மிகையன்று. முதலில் இவர் பாடிய பாடல்கள் எம்.கே.தியாகராஜ பாகவதரை நினைவு படுத்துபவை போலத்தான் தோன்றியது. பிறகு இவர் குரலை எப்படியும் மாற்றி, யாருக்கும் பொருந்தும்படி பாடத் தொடங்கி இவருக்கென்று ஒரு முத்திரையைப் படைத்தார் டி.எம்.எஸ். இவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் மக்களுக்கு ஆதர்சமாக விளங்க வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக் கொண்டு அவரைப் பற்றிய ஒரு சில விவரங்களை இங்கு பார்க்கலாம். டி.எம்.எஸ். மதுரையில் 1923 மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறந்தார். தமிழ் நாட்டில் சில ஊர்களில் அதிகம் வசிக்கும் செளராஷ்டிர இனத்தில் பிறந்தார் இவர். மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் போன்றோர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். செளராஷ்டிர பிரிவின் வழக்கப்படி இவரது முழுப் பெயர் துகல்வா மீனாட்சி ஐயங்கார் செளந்தரராஜன் என்பது. தந்தையார் மீனாட்சி ஐயங்கார், தாயார் வேங்கடம்மாள். [] பிறக்கும் போதே இசையோடு பிறந்தவரோ என்னவோ, இவர் மிக இளம் வயதிலேயே பாடத் தொடங்கி விட்டார். ஏழு வயதில் இவர் பிரமாதமாகப் பாடுவதைக் கேட்டு அண்டை அயலார் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். அந்த நாட்களில் திரையுலகில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்றோர் பாடி நடித்துக் கொண்டிருந்தார்கள் அல்லவா? அவர்களைப் போலத் தானும் பாட வேண்டுமென்பது இவரது அவா. கர்நாடக சங்கீதம் பயின்றால்தான் பாடல்களை முறையாகப் பாடமுடியும் என்பதால் இவர் படித்துக் கொண்டிருந்த செளராஷ்டிரா பள்ளிக்கூடத்திலேயே இவர் கர்நாடக இசையைப் பயிலத் தொடங்கினார். பள்ளிக்கூடம் மற்றும் பொதுவிடங்களிலும் பல இசைப் போட்டிகளில் இவர் கலந்து கொண்டார். பல நேரங்களில் இவர் பாடுவதைத் தெருவில் போவோர் வருவோர் கேட்கும் போது பாகவதர்தான் பாடுகிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அச்சு அசலாக அப்படியே பாடி வந்தார். பாகவதரிடமே போய் இவர் பாடிக் காட்ட, அவரும் இவருக்குச் சில உபதேசங்களைச் செய்து அனுப்பினார், இவருடைய முன்னேற்றத்துக்காக. திரைப் படங்களில் பாடுவதற்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அவற்றை இவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறத் தொடங்கினார். மிக உறுதியான, கனமான, சுகமான ஒரு குரல், முறையான உச்சரிப்பு, தமிழ்த் திரையுலகத்துக்குக் கிடைத்தது சினிமா ரசிகர்கள் செய்த பாக்கியம் என்றே கூறலாம். 1946இல் இவரது திருமணம் நடைபெற்றது. இவருக்கு 3 மகன்கள் 3 மகள்கள். 1946 தொடங்கி இவர் சினிமாவில் பாடத் தொடங்கி விட்டார். ‘கிருஷ்ண விஜயம்’ எனும் படம் 1946இல் இவர் பாடி வெளிவந்தது. அதன் இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. தொடர்ந்து இவர் பாடாத தமிழ்ப் படமே இல்லையெனும் அளவுக்கு இவரது பாடல்கள் இடம்பெறலாயின. கோவை ராயல் டாக்கீசில் மாதம் ரூ.50 சம்பளத்துக்குப் பாடத் தொடங்கிய டி.எம்.எஸ். பின்னர் புகழின் உச்சிக்குச் சென்றபோது சம்பாதித்ததை யார் கணக்கிட முடியும். இவர் எத்தனை நடிகர்களுக்குப் பாடல்களைப் பாடியிருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, ராஜேந்திரன், ஜெய் சங்கர், ஏ.வி.எம்.ராஜன், முத்துராமன், நாகேஷ் இப்படி எத்தனையோ பேர். இவர் பாட்டைப் பாடுவதுபோல சிவாஜி நடிக்கும் போது அவரது வாயசைப்பு திகைக்க வைக்கும். இவர் சில படங்களில் நடித்தார். அருணகிரிநாதர் போன்ற படங்களில் இவர் பாடி நடித்தபோது இந்த நடிகருக்குச் சிவாஜி பாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தினார். இவர் பாடிய பாடல்களைப் பட்டியலிட முடியுமா? அப்படியானால் எத்தனைப் பாடல்களைப் பாடியிருப்பார். உத்தேசமாக 10,500க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், 2500க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்கள். இவர் பெற்ற விருதுகளை மட்டும் தனியாக எழுதலாம், அத்தனை விருதுகள், அத்தனை கலைமாமணி விருதுகள், தேசிய விருதுகள். இப்படிப்பட்ட ஒரு மனிதரைப் பெற தமிழ்நாடு நெடுங்காலம் தவம் செய்திருக்க வேண்டும். இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் ஏராளம். இவருக்கு மிகவும் நெருக்கமான விஸ்வநாதன் (இராமமூர்த்தி), கவிஞர் கண்ணதாசன் இவர்கள் வாயிலாக வெளிவந்த செய்திகள் படிக்கச் சுவாரசியமானவை. இருந்தாலும் இப்போதைக்கு இவரைப் பற்றி இதுமட்டும் போதும். பிறகு மிக விரிவாகப் பார்க்கலாம். வாழ்க டி.எம்.செளந்தரராஜன் புகழ்! அவர் வாழ்க நீடூழி!! 12 கொத்தமங்கலம் சுப்பு [Kothamangalam subbu (1)] கொத்தமங்கலம் சுப்பு இந்த ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் மூவரில் கொத்தமங்கலம் சுப்புவும் ஒருவர். பன்முகத் திறமை படைத்த கொத்தமங்கலம் சுப்பு திரைப்படத் துறையில் மட்டுமல்லாமல், எழுத்தாளராக, பாடலாசிரியராக, திரைக்கதை வசனம் எழுதுபவராக, நடிகராக, இயக்குனராக, பத்திரிகையாளராக, வில்லுப்பாட்டுக் குழுவின் தலைவராக இப்படிப் பல துறைகளிலும் சிறந்து விளங்கிய மேதை. இவருடைய பெருமைக்கு ஒரே ஒரு சாம்பிள் இவர் எழுதிய “தில்லானா மோகனாம்பாள்” எனும் கதை. அது பின்னர் திரைப்படமாக வந்து தமிழ்நாட்டையே பிரமிக்க வைத்தது. அதில் சிக்கில் சண்முகசுந்தரமாக சிவாஜி கணேசனும், மோகனாம்பாளாக பத்மினியும் வந்து அந்தந்த கதா பாத்திரங்களாக வாழ்ந்து காட்டினார்கள். அவர்கள் தவிர நாகேஷ் சவடால் வைத்தியாகவும், பாலையா, சாரங்கபாணி போன்றோரும் உயிரோட்டமுள்ள பாத்திரங்களாக நடித்து அந்தக் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் மிக பிரம்மாண்டமான படங்களை கலை நயத்தோடும், சிறப்பாகவும் எடுத்துப் பெருமை பெற்ற ‘ஜெமினி’ படத்தயாரிப்பு நிறுவனத்தில் அதன் ஸ்தாபகர் எஸ்.எஸ்.வாசனுக்கு அடுத்தபடியான நிலையில் இருந்து பணியாற்றி பெருமை சேர்த்தவர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள். அங்கு ஜெமினி பட இலாகாவிலும், வாசன் அவர்கள் நடத்திய ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதும் எழுத்தாளராகவும், ஜெமினி படங்களில் நடிக்கும் நடிகராகவும் இப்படிப் பல துறைகளிலும் பிரகாசித்தவர் சுப்பு. இத்தனைப் புகழுக்கும் காரணமான கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்பிரமணியன். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல் எனும் கிராமத்தில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை மகாலிங்க ஐயர் தாயார் கங்கம்மாள். இவர் 1910 நவம்பர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார். இளம் வயதில் இவர் தாயாரை இழந்துவிட்டார். கிராமத்தில் இவர் எட்டாம் வகுப்புவரைதான் படிக்க முடிந்தது. இளம் வயதில் தனது உறவுக்காரப் பெண்ணை மணந்துகொண்டு கொத்தமங்கலத்தில் ஒரு மரக்கடையில் பணிபுரிந்தார். வியாபாரத்தில் இவரது மனம் ஈடுபடாமல் நாடகம், நடிப்பு, பாட்டு இயற்றுதல், பாடுதல் என்று இவருடைய கவனம் திசை திரும்பியது. காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரில் நடந்து கொண்டிருந்த ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து இவர் நடித்தார். அந்தக் காலத்தில் “ஹனுமான்” என்ற பெயரில் ஒரு பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் சுப்பு எழுதினார். அப்போதுதான் தமிழில் திரைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார்கள். முதன்முதலாக பம்பாயில் எடுக்கப்பட்ட “பட்டினத்தார்” எனும் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் இவருக்குச் சென்னையிலும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. “மைனர் ராஜாமணி”, “அநாதைப் பெண்” போன்ற படங்களி, சிறு பாத்திரங்களில் நடித்தார். அதில் எல்லாம் இவருடைய பெயர் சுப்பிரமணியன் என்றுதான் இருந்தது. 1939இல் திருநீலகண்டர் எனும் படத்தில் நடிக்கும் போதுதான் இவருடைய பெயர் கொத்தமங்கலம் சுப்புவானது. கொத்தமங்கலம் சீனு என்று ஒருவர் திரைப்படத் துறையில் இருந்தவர். அவர்தான் இவரை டைரக்டர் கே.சுப்பிரமணியத்திடம் அறிமுகம் செய்து வைத்தவர். அவருடைய படமான “பக்த சேதாவிலும்”, “கச்சதேவயானி” எனும் படத்திலும் இவர் நடித்தார். 1941இல் டைரக்டர் சுப்பிரமணியம் மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு விற்ற போது கொத்தமங்கலம் சுப்புவும் ஜெமினிக்குள் நுழைந்தார். அப்போது இவருக்கு ஊதியம் மாதம் 300 ரூபாய். ஜெமினியில் இவரது முக்கியத்துவம் வளர்ந்துகொண்டே வந்தது. ஜெமினி கதை இலாகாவில் இவர் ஒரு முக்கியமான நபர். சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களில் இவரது பங்கு மிக முக்கியமானது. ஜெமினியில் இவர் ஒரு நடிகராக மட்டுமல்ல, இயக்குனராக, கதை வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக இப்படி பல அவதாரங்களை எடுத்தார். இவர் அங்கு நான்கு படங்களை இயக்கினார், ஏழு படங்களுக்கு திரைக்கதை எழுதினார், சுமார் பத்து படங்களுக்கு வசனம் எழுதினார், இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்களை எழுதினார். இவரது வாழ்க்கையில் திரைப்பட இயக்குனராக சாதனை புரிந்தது என்பது ஒளவையார் எனும் படத்தின் மூலம்தான். மொத்தத்தில் இவர் உதவி இயக்குனராக இருபது படங்களுக்கும், 18 படங்களில் நடித்தும் இருக்கிறார். ஒளவையார் படத்தில் புகழ்பெற்ற நாடக நடிகையாக இருந்த கே.பி.சுந்தராம்பாள் ஒளவையாராக நடித்தார். பிரபல ஹாலிவுட் கம்பெனியாரின் படங்களைப் போல பிரம்மாண்டமான செட்டுகள் போட்டு ஜெமினி தயாரித்தது இந்தப் படம். இதில் யானைக் கூட்டம் திரண்டு வந்து கோட்டையை முற்றுகையிட்டு உடைப்பதாக ஒரு காட்சி. இன்றுகூட அதுபோன்ற ஒரு காட்சியைப் படமாக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அப்படிப்பட்ட அருமையான காட்சி அந்தக் காலத்தில். நினத்தாலே பிரமிக்க வைக்கிறது. இந்தப் படத்தில் கொத்தமங்கலம் சுப்புவே ஒரு சிறு பாத்திரத்தில் நடித்திருப்பார். இவரது வாழ்க்கையிலும் மனைவியாக அமைந்த சுந்தரிபாய் இவரது மனைவியாக அந்தப் படத்தில் நடிப்பார். அந்தக் காட்சி இலக்கியத் தரம் வாய்ந்தது. ஒளவையார் ஊர் ஊராக அலைந்து திரிந்து வந்த காலத்தில் ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவனைப் பார்க்கிறார். அந்த விவசாயிதான் கொத்தமங்கலம் சுப்பு. அவரிடம் ஒளவையார் தனக்குப் பசிக்கிறது சிறிது உணவு கொடு என்கிறாள். அந்த விவசாயிக்கு இந்தப் பாட்டிக்கு உணவு அளிப்பதில் சம்மதம் தான். ஆனால் அவருடைய மனைவி ஒரு அடங்காப்பிடாரி. அவளை எப்படிச் சமாதானப் படுத்தி இந்தப் பாட்டிக்கு உணவளிப்பது. இருந்தாலும் முயன்றுவிடலாம் என்று விவசாயி ஒளவைப் பாட்டியை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்குச் செல்கிறான். ஒளவையை வாயில் திண்ணையில் உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று தன் மனைவிக்கு தலை வாரி, பேன் எடுத்து அவள் நல்ல மனநிலையில் இருக்கும் நேரம் பார்த்து நம் வீட்டுக்கு உணவருந்த ஒரு விருந்தாளியை அழைத்து வந்திருப்பதாகச் சொல்கிறார். அவ்வளவுதான். அந்தப் பெண் அடங்காப்பிடாரி ஆடினாள், குதித்தாள், பாத்திரங்களைப் போட்டு உருட்டினாள். அத்தனையையும் தாங்கிக் கொண்டு அவன் ஒளவைக்கு எப்படியாவது உணவு கொடுத்தால் போதும் என்று கெஞ்சுகிறான். இறுதியில் அவள் சற்று மனமிரங்கி வேண்டா வெறுப்பாக ஒரு இலையைக் கொண்டு வந்து வீசிவிட்டு அதில் சோற்றை ஆத்திரத்துடன் இட்டு ஒளவையைச் சாப்பிடச் சொல்கிறாள். ஒளவைப் பாட்டியின் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா? மெல்லச் சிரித்து உணவு உட்கொள்ளாமல் எழுந்து கொள்கிறாள். அந்த விவசாயியைப் பார்த்துப் பரிதாபப்பட்டு கணவனுக்கு அடங்கிய நல்ல மனைவியாக இருந்தால் சம்சாரம் செய்யலாம், சற்றே ஏறுமாறாக இருப்பாளேயானால் கூறாமல் சந்நியாசம் கொள் என்று ஒரு பாட்டைப் பாடிவிட்டுப் போய்விடுவாள். இந்தக் காட்சியில் சுப்புவும், சுந்தரிபாயும், ஒளவையாக கே.பி.சுந்தராம்பாள் அவர்களும் நடித்த காட்சி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாது. இந்தப் படம் தவிர கொத்தமங்கலம் சுப்பு கண்ணம்மா என் காதலி எனும் படத்தையும் இயக்கினார். அதிலும் சுந்தரிபாய் நடித்தார். இவருடைய முதல் மனைவி சொந்தக்காரப் பெண் என்பதைப் பார்த்தோம் அல்லவா, திரைத்துறைக்கு வந்ததும் அங்கு நடித்துக் கொண்டிருந்த சுந்தரிபாயை இவர் இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டிருந்தார். மிஸ் மாலினி என்றொரு படம். அதில் சுப்புதான் கதாநாயகன். இந்தப் படம்தான் இந்தியில் மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இது ஒரு நகைச்சுவைப் படம். ஆர்.கே.நாராயண் எனும் புகழ்மிக்க எழுத்தாளரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்தப் படம். தாசி அபரஞ்சி என்றொரு படம். இதிலும் சுப்புவும் சுந்தரிபாயும் நடித்திருக்கின்றனர். ஜெமினி படங்கள் தவிர இவர் திருநீலகண்டர் எனும் படத்திலும் பாவ மன்னிப்பு படத்திலும் கூட நடித்திருக்கிறார். ஆனந்த விகடன் பத்திரிகையில் இவர் ஒரு முக்கிய எழுத்தாளர். இவர் பல கதைகள், நாவல்கள் எழுதியிருந்த போதிலும் இவருடைய “தில்லானா மோகனாம்பாள்” இவரை புகழின் உச்சிக்கே அழைத்துச் சென்று விட்டது. அது தவிர இவர் எழுதிய “மோட்டார் சுந்தரம்பிள்ளை”, “ராவ்பகதூர் சிங்காரம்”, “பந்தநல்லூர் பாமா”, “பொன்னிவனத்துப் பூங்குயில்”, “மிஸ் ராதா”, “மஞ்சுவிரட்டு” (சிறு கதைத் தொகுப்பு) போன்ற கதைகளையும் எழுதினார். இவற்றில் சில திரைப்படமாகவும் வந்தன. தில்லானா மோகனாம்பாள் கதைக்காத கொத்தமங்கலம் சுப்புவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இந்தக் கதைகளையெல்லாம் இவர் கலைமணி என்ற பெயரில் எழுதினார். இவருடைய நகைச்சுவை உணர்வும், எழுதும் திறமையும் இவருக்கு பெயரும் புகழும் கிடைக்கக் காரணமாயின. இவர் எழுதி வில்லுப்பாட்டாகப் பாடிய “காந்திமகான் கதை” பெரும் வரவேற்பைப் பெற்றது. மகாத்மா காந்திஜியின் வரலாற்றை கிராமப்புற பாணியில் பாடல்களாக அமைத்துப் பாடப்பெற்ற இந்த கதையைக் கேட்டு மகிழாதவர்கள் இல்லை. இந்தக் கதையை நடத்திக் கொண்டிருக்கும்போதே உணர்ச்சிவசப்பட்டு சுப்பு சில இடங்களில் கண்ணீர் விட்டு அழுததும் உண்டு. இவருடைய மனைவி சுந்தரி பாய் மிகவும் திறமை வாய்ந்த நடிகை. வில்லியாகவும், குடும்பத் தலைவியாகவும் இவர் பல படங்களில் தூள் கிளப்பியிருக்கிறார். பிரபல எழுத்தாளர் த.ஜெயகாந்தனின் “அக்னிப் பிரவேசத்தில்” கதாநாயகியின் தாயாராக மிக யதார்த்தமாகத் தன் நடிப்பின் மூலம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். பழைய ஜெமினி படங்களில் இவர் ஒரு நிரந்தர நடிகை. இவர் வாழ்க்கையில் இவரே மிகவும் அனுபவித்துப் பாடி மக்கள் கவனத்தைக் கவர்ந்தது “காந்திமகான் கதை” எனும் வில்லுப்பாட்டு. பாட்டையும் இவரே எழுதி, வில்லுப்பாட்டாகவும் இவரே பாடிவந்தார். நாட்டுப்புற இசைவடிவத்தில் அமைந்த இந்த வில்லுப்பாட்டு காந்தி மகானின் வாழ்க்கையை விவரிக்கக்கூடியது. இவருக்கு நாட்டுப்புற இசை வடிவம் மிகவும் கைவந்த கலை. தென் தமிழ்நாட்டில் பிரபலமாக விளங்கிய வில்லுப்பாட்டுக் கலை மூலம் இவர் பல அரிய வரலாறுகளை மக்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறார். இவருடைய மனைவியும் திரைப்பட நடிகையுமான சுந்தரிபாய் மிக சாமர்த்தியமான நளினமான நடிப்புக்குப் பெயர் பெற்றவர். இவர் ஏற்றுக்கொண்ட பாத்திரங்கள் மிக எதார்த்தமாக இருக்கும். கண்ணம்மா என் காதலி, சுமதி என் சுந்தரி, சந்திரலேகா, பாமா ருக்மிணி, ஒளவையார் ஆகிய படங்களில் இவரது நடிப்பு தூள் கிளப்பியதை அனைவரும் அறிவர். இந்த 2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ கொத்தமங்கலம் சுப்புவின் பிறந்த நூற்றாண்டு. சென்னையில் இவரது குடும்பத்தார் இவருக்கு மிகச் சிறப்பாக ஒரு விழா எடுத்து இவரது நினைவுகளைப் போற்றியிருக்கின்றனர். இவர் பாடல்கள் எழுதிய படங்களின் வரிசை: 1939 அதிர்ஷ்டம், 1940 பக்தசேதா, 1941 மதனகாமராஜன், 1942, நந்தனார் (பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோரின் பாடல்களும் இடம்பெற்றன), 1943 மங்கம்மா சபதம், 1944 தாசி அபரஞ்சி, 1945 கண்ணம்மா என் காதலி, 1947 மிஸ் மாலினி, 1948 ஞானசெளந்தரி, சந்திரலேகா, சக்ரதாரி, 1949 அபூர்வ சகோதரர்கள், 1951, சம்சாரம், அண்ணி, 1952, மூன்று பிள்ளைகள், 1953 ஓளவையார், 1955 வள்ளியின் செல்வன்,1958 வஞ்சிக்கோட்டை வாலிபன், 1960 இரும்புத்திரை, கைராசி, கலத்தூர் கண்ணம்மா, தெய்வப்பிறவி, 1961, தாயில்லாப்பிள்ளை, எல்லாம் உனக்காக, 1964 நீங்காத நினைவு, பழனி, 1965 என்னதான் முடிவு?, 1966, மோட்டார் சுந்தரம் பிள்ளை. இவர் 15-2-1974இல் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார். இவரது நகைச்சுவையையும், பாடல்களையும் கேட்க தேவலோகத்தார் மிகவும் ஆவலாக இருந்திருக்க வேண்டும். 1960இல் ஜெமினி அதிபர் வாசன் படங்கள் எடுப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்த பிறகு ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதுவதோடு நிறுத்திக் கொண்டார். அந்த காலகட்டத்தில்தான் இவரது அமரத்துவம் வாய்ந்த கதைகள் அதில் வெளிவந்தன. 1967இல் இவருக்கு கலைசிகாமணி (இப்போது அதுதான் “கலைமாமணி” விருதாக வழங்கப்படுகிறது) விருது பெற்றார். 1971இல் பத்மஸ்ரீ விருது வாங்கினார். 1974ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி கொத்தமங்கலம் சுப்பு புகழுடம்பு எய்தினார். 13 மானம் காத்த மாவீரன் வாஞ்சிநாதன் [] மானம் காத்த மாவீரன் வாஞ்சிநாதன் 1911ஆம் வருடம் ஜூன் மாதம் 17ஆம் நாள். தமிழகத்தின் தென்கோடியில் மணியாச்சி ரயில் நிலையத்தில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்ட தினம். அந்த நிகழ்ச்சிக்காக நினைவில் வைத்திருக்க வேண்டிய நாள் அல்ல இது. அந்த ஆஷைச் சுட்டுக் கொன்ற வீர வாஞ்சி தன்னையும் மாய்த்துக் கொண்டு இந்த பூமியை சிவப்பாக்கித் தன் தியாகத்தை மண்ணில் இரத்தத்தால் எழுதிய நாள் இது. அதனால் இந்த நாளை நினைவில் வைத்திருக்க வேண்டும்.என் நண்பர் பேராசிரியர் தேவராஜ் கோயம்பத்தூரிலிருந்து நேற்று மாலை (16-6-2011) தொலைபேசியில் பேசினார். வீரவாஞ்சியின் தியாக நாளான ஜூன் 17இல் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருக்கிறது. அதற்குத் தானும் முன்னாள் மாவட்ட கலெக்டரும் தியாகி எல்.கிருஷ்ணசாமி பாரதி அவர்களின் புதல்வனும், தானே சுதந்திரப் போரில் ஈடுபட்டுச் சிறைசென்ற தியாகியுமான கி.லட்சுமிகாந்தன் பாரதி, I.A.S. அவர்களுடன் அங்கு செல்வதாகக் குறிப்பிட்டார். அந்த வீர புருஷனுடைய தியாகம் இந்த மண்ணில் நடைபெற்று நூறு ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது. ஆனால், அந்தத் தியாகத்தின் விலை நம் மக்களுக்குத் தெரிந்திருக்கிறதா? இந்த நாடு அந்த வீரமகனுக்கு உரிய மரியாதையைச் செய்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மையான பதில். என்ன செய்வது? பொய்யும், போலியும், வெளிச்சம் போட்டு நாட்டைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்க எப்போதோ, நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது மரியாதைக்குரிய தலைவரான தூத்துக்குடி வழக்கறிஞர் ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சிறைவாசத்துக்குக் காரணமாக இருந்தவனும், அவர் சிறையில் கல்லுடைக்கவும், செக்கிழுக்கவும் வைக்கக் காரணமாக இருந்த ஆஷ் துரையை பழிவாங்கி இந்தியரின் குறிப்பாகத் தமிழனின் மானத்தைக் காக்க, அந்த ஆஷின் உயிரை மட்டுமல்ல, தன் உயிரையும் ஆஹூதியாகக் கொடுத்த நாள் என்பதை இந்த நாடே ஒன்று சேர்ந்து நினைவுகூர்ந்திருக்க வேண்டாமா?இன்றாவது நமது இளைய தலைமுறை அந்த வீர இளைஞனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? தமிழகத்தில் எத்தனையோ நாளிதழ்கள் வெளியாகின்றன. எனக்குத் தெரிந்து “தினமணி” நாளிதழ்தான், தான் ஒரு தேசிய நாளிதழ் என்பதை நிலைநிறுத்தி இன்றைய இதழில் “வீர வாஞ்சிநாதன்” எனும் கட்டுரையைப் பிரசுரித்து அவனுக்கு மரியாதை செய்திருக்கிறது. “தினமணி”க்கும் அதன் ஆசிரியருக்கும் தலை வணங்குவோம். மா.வீரபாண்டியன் என்பவர் எழுதிய அந்தக் கட்டுரையின் கடைசி பாராவில் குறிப்பிட்டுள்ள செய்திதான் மிக முக்கியமானது. அதில்:–”சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய மாணவ சமுதாயம் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து வகுப்புகளிலும் பாடத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய மண்ணில் சிந்திய ரத்தத்தின் வலிமையை மாணவ சமுதாயம் அறிய முடியும்”இந்த வரிகள்தான் நம்முடைய இந்தக் கட்டுரையின் நோக்கமும் ஆகும். வீர வாஞ்சியின் நினைவாக, நம்முடைய மற்றொரு வலைப்பூவான www.tamilnaduthyagigal.blogspot.com என்கிற வலைப்பூவில் நாம் ஏற்கனவே வெளியிட்டிருக்கிற வீர வாஞ்சியின் வாழ்க்கைக் குறிப்பை மீண்டும் இந்த கட்டுரையிலும் கொடுக்க ஆசைப் படுகிறேன். இதோ அந்த கட்டுரை: வீர வாஞ்சி [] [] தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன் உலக நாடுகளில் பல வன்முறைப் புரட்சிகளின் மூலம்தான் விடுதலையடைந்திருக்கின்றன. பிரெஞ்சு புரட்சியில் மாண்ட உயிர்கள் எத்தனை? ரஷ்யப் புரட்சியில் மாண்டவர்கள் எத்தனை பேர்? அமெரிக்க உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? இப்படி உலகம் முழுவதும் போர் மூலமாகத்தான் சுதந்திரம் பெற்றிருக்கின்றனர். இந்தியாவில் மட்டும்தான் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டம், சத்தியாக்கிரகம் மூலம் நெடுநாள் போராட்டத்துக்குப் பிறகு சுதந்திரத்தைக் காணமுடிந்தது. காந்தியடிகளின் இந்தப் போரை “கத்தியின்றி, ரத்தமின்றி” நடந்த போராக எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஆங்கிலேயர்களின் ரத்தத்தை சிந்த வைக்காமல், அடிபட்டு, உதைபட்டு, துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு நம் இந்திய ரத்தத்தைச் சிந்தி இந்த சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை மறுக்கமுடியாது. அதுதான் அகிம்சை வழி. மகாத்மா காந்தியடிகள் இந்திய அரசியலில் ஆழங்கால் படுவதற்கு முன்பு பால கங்காதர திலகர் காலத்தில் இந்த அகிம்சை வழியெல்லாம் நடைமுறையில் இல்லை. அதுமட்டுமல்லாமல் எந்த வழியிலாவது ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தியாவிலிருந்து விரட்டிவிட வேண்டுமென்கிற துடிப்புதான் நம் மக்கள் உள்ளங்களில் இருந்த கருத்து. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாஞ்சிநாதன் எனும் தேசபக்த இளைஞன், கொடுமைக்காரனும், இந்தியர்களை புழுவிலும் கேவலமாகக் கருதக்கூடியவனும், தேசபக்த சிங்கம் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்குக் கிடைத்த கொடிய தண்டனைக்குக் காரணமாக இருந்தவனுமான ஆஷ் என்பவனை சுட்டுக் கொன்றான் என்பது எந்த வகையில் நாம் எடுத்துக் கொள்வது. இது தேசபக்தியின் வெளிப்பாடா இல்லையா, இது தவறு என்று சொல்வதற்கு, இதற்கு மாற்று வழி ஏதேனும் அந்த காலகட்டத்தில் இருந்ததா? இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் கண்ட பிறகுதான் இந்த வீர இளைஞனின் தியாகத்தை மதிப்பிட வேண்டும். சரித்திர காலத்தில் ஒரு நாட்டுப் படையும், எதிரி நாட்டுப் படையும் நேருக்கு நேர் போரிட்டுக் கொண்டார்கள். அதில் இரு தரப்பிலும் வீரர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதையெல்லாம் கொலையாகக் கருதுவதில்லை. அதுமட்டுமல்லாமல் கொடியவர்களும், சர்வாதிகாரிகளும் கொலை செய்யப்பட்ட வரலாறு நமக்கு நிறையவே கிடைக்கின்றன. இத்தாலியில் ஃபாசிஸ்ட் தலைவன் முசோலினியும் அவனோடு பல ஃபாசிஸ்ட்டுகளும் மிலான் நகரில் கொல்லப்பட்டு ஒரு பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தனர். அப்படிச் செய்தவர்கள் இத்தாலி தேசபக்தர்களாகக் கருதப்பட்டார்களேயன்றி கொலைகாரர்களாக அல்ல. அவர்களுக்கு முன்பாக அதே இத்தாலியில் மாஜினியும் வன்முறை அரசியல் நடத்தியவர்தான். கொடுங்கோன்மை கட்டுக்கடங்காமல் போகிறபோது ‘வன்முறை’யும் ஒரு ஆயுதமாகப் பயன்பட்டிருக்கிறது என்ற கோணத்தில் இந்த வீர வாஞ்சியின் வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்க்கலாம். தாங்கமுடியாத தருணத்தில் வன்முறையில் ஈடுபடும் தேசபக்தர்கள் எத்தகைய தியாகங்களைப் புரிகிறார்கள். அவையெல்லாம் அவர்களது சொந்த நலனுக்காகவா, நாட்டின் நலன் கருதியா? தன்னை அழித்துக் கொண்டு இந்த நாடு நல்ல நிலை அடையவேண்டுமென்று அவர்கள் செய்த தியாகங்களுக்கு அளவுகோல் உண்டா? சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு வெள்ளைக்கார சார்ஜெண்ட் சாண்டர்ஸ் என்பான் அடித்த அடியின் காரணமாகப் பாஞ்சால சிங்கம் லாலா லஜபதி ராய் இறந்து போனார். அன்று லாகூர் பல்கலைக் கழக மாணவர்களாக இருந்த ஷாகீத் பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் அந்த வெறிபிடித்த வெள்ளையனைச் சுட்டுக் கொன்றனர். அது கொலையா? தேசபக்தனின் பழிவாங்கும் செயலா? 24 வயதில் அந்த இளைஞர்கள் நாட்டுக்காகத் தமது இன்னுயிரை நீத்த செயலை என்னவென்று சொல்லலாம்? குதிராம் போஸ், மதன்லால் திங்க்ரா போன்ற மாவீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது யார் பொருட்டு? இதையெல்லாம் நம் மனதில் கொண்ட பிறகே வீரன் வாஞ்சிநாதனின் செயலை எடைபோட வேண்டும். வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியார், பொருட்களை விற்கவும் வாங்கவும் என்று வந்த வேலையை விட்டு இங்கு நாடுபிடிக்கும் வேலையில் இறங்கினர். அவர்களது சூழ்ச்சிக்கு இரையான ராஜ்யங்கள் எத்தனை எத்தனை? வாரிசு இல்லாமல் ஒரு அரசன் இறந்தால் அந்த ராஜ்ஜியத்தைத் தங்களதாக எடுத்துக் கொண்டது பிரிட்டிஷ் சூழ்ச்சி. ராஜ்யத்தை நல்லபடி நடத்துவதாகவும், தகுந்த பாதுகாப்புக் கொடுப்பதாகவும் உத்தரவாதமளித்துப் பிடுங்கிக் கொண்ட ராஜ்யங்கள் எத்தனை? இந்தியர்கள் ஏமாளிகள் இவர்கள் தொடைகளில் திரித்த வரையில் லாபம் என்று கருதியது வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்திய கம்பெனி. அதில் ஆளவந்தவர்கள் ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் ஈவு இரக்கமற்ற முரடர்கள். இந்தியர்களை மனிதர்களாகவே நினைக்கத் தெரியாதவர்கள். இந்தப் பின்னணியில் வாஞ்சியின் வரலாற்றைப் பார்ப்போம். அமைதியாகவும், வெள்ளையனின் அடக்குமுறைக்குக் கட்டுப்பட்டும் தென்னகம் முழுவதும் வாய்பேசாத மெளனிகளாக இருந்த சமயம் உரக்கக் குரல் கொடுத்த தேசிய வாதிகள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா மற்றும் அவர்களோடு தோளோடு தோள் நின்ற மாடசாமி போன்ற வீரர் பெருமக்கள். இவர்களைக் கைது செய்து பொய்யான வழக்கில் சிக்க வைத்து இந்த வீரப்பெருமக்களைச் சிறைச்சாலைக்குள் கொண்டு வந்து அடைத்த பின் பிரச்சினை ஒன்றும் இருக்காது என்று இருமாந்திருந்த வெள்ளை ஆதிக்கமும், அதன் பிரதிநிதியாகத் திருநெல்வேலி ஆக்டிங் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பானும் எதிர்பாராத அதிர்ச்சிக்கு உள்ளான சம்பவம் ஒன்று மணியாச்சி ரயில் சந்திப்பில் நடந்தது. ஆம்! 1911ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி காலை 10-40 மணிக்கு மணியாச்சி சந்திப்பில் அந்த சம்பவம் நடந்தது.17-6-1911 கலெக்டர் ஆஷ் அவனது மனைவி ஆகியோர் கொடைக்கானலில் படிக்கும் தங்களது பிள்ளைகளைப் பார்ப்பதற்காக நெல்லை பாலம் ரயில் நிலையத்தில் காலை 9-30 மணிக்குக் கிளம்பினார்கள். அவர்கள் பயணம் செய்த ரயில் மனியாச்சியில் நின்றது. அங்கு தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலுக்காக இருவரும் முதல் வகுப்புப் பெட்டியில் காத்திருந்தார்கள். அந்த நேரத்தில் அந்த ரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டு வந்த வண்டியை விட்டு இறங்கி ஆஷ் இருந்த முதல் வகுப்புப் பெட்டிக்குள் ஏறினார். வாஞ்சியைப் பார்த்த ஆஷ் பதறினான், யார் நீ என்று கத்தினான். உடனே தன் கைத்துப்பாக்கியால் ஆஷை நோக்கிச் சுட்டார். குண்டு அவன் மார்பில் பாய்ந்தது. அந்த நிலையிலும் ஆஷ் தன்னைச் சுட்டவனைப் பிடிக்க முயன்றான். அவன் மனைவி அதைத் தடுத்து விட்டாள். ஆஷைச் சுட்டுவிட்டு பெட்டியை விட்டுக் கீழே இறங்கிய வாஞ்சிநாதனைப் பிடிக்க சிலர் முயன்றனர். அவர்களை உதறித் தள்ளிவிட்டு அருகிலிருந்த கழிப்பறைக்குள் சென்றுவிட்டார் வாஞ்சி. உள்ளே நுழைய பயந்துகொண்டு ஒரு மணி நேரம் நின்றவர்கள் கழிப்பறையிலிருந்து குண்டு வெடித்த சப்தம் கேட்டு உள்ளே போய் பார்த்தார்கள். அங்கே வாஞ்சி தனது கைத் துப்பாக்கியைத் தன் வாயினுள் சுட்டுக்கொண்டு இறந்து வீழ்ந்து கிடந்தார். குண்டடிபட்டுக் காயமடைந்த ஆஷ் திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லும் வழியில் கங்கைகொண்டான் எனுமிடத்தில் இறந்து போனார். கழிப்பறையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து கிடந்த வாஞ்சிநாதன் உடலைப் போலீசார் சோதனையிட்டனர். அவர் காட்டிலாகாவில் வேலை பார்த்தவராதலால் உறுதியான துணியால் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்தார். ஒரு பையில் தமிழில் எழுதப்பட்டு, தமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்திடப்பட்ட தேதியில்லாத ஒரு கடிதம் இருந்தது. அவர் அணிந்திருந்த கோட்டில் ஒரு மணிபர்சும், ராணி விக்டோரியாவின் படமும், இரண்டாம் வகுப்பு ரயில்வே டிக்கட் ஒன்று, ஐந்து அணா நாணயங்கள் இவை இருந்தன. யார் இந்த வாஞ்சி? அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட செங்கோட்டையில் கோயில் மணியமாக இருந்த ரகுபதி ஐயர் என்பவரின் மகன். இவருக்கு நான்கு சகோதரிகள், இரண்டு ஆண் பிள்ளைகளில் இவர் இளையவர். இவர் செங்கோட்டையில் ஆரம்பக் கல்வி பயின்றார். திருவனந்தபுரம் மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.படித்தார். தனது 23ஆம் வயதில் முன்னீர்ப்பள்ளம் சீதாராமையரின் மகள் பொன்னம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். அங்கிருந்து பரோடா சமஸ்தானத்துக்குச் சென்று மரவேலை செய்யும் தொழில்துறைப் படிப்பைப் படித்துத் தேறினார். பிறகு புனலூரில் காட்டிலாகாவில் பாரஸ்ட் கார்டாக வேலைக்குச் சேர்ந்தார். அந்த காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டில் பாரதமாதா சங்கம் என்றொரு இயக்கம் வேகமாக வளர்ந்து வந்தது. இதனை நிறுவியவர் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி என்பார். இவர் சீர்காழியை அடுத்த எருக்கூர் கிராமத்தில் பிறந்தவர். தேசபக்தியின் காரணமாக வெள்ளை அரசுக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் எதிராக ஒரு மாபெரும் புரட்சி செய்ய எண்ணி வங்கத்திலிருந்து வந்திருந்த சில புரட்சிக்காரர்களின் தீர்மானப்படி பாரதமாதா சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. நீலகண்டனுக்கு ஏற்கனவே புதுச்சேரியில் வந்து தங்கியிருந்த வ.வெ.சு.ஐயரின் தொடர்பு இருந்தது. இந்த பாரதமாதா சங்கம் என்பது ஒரு ரகசிய இயக்கம். இதில் உறுப்பினர்களாக இருப்போர் ரகசியமாக ஒன்று கூடி, காளியின் படத்திற்கு முன்னால் குங்குமம் கலந்த தண்ணீரை வெள்ளையரின் குருதி என்று எண்ணிக் குடிப்பர். கத்தியால் தங்கல் கை விரல்களில் கீறிக்கொண்டு அந்த ரத்தத்தால் ஒரு வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வர். என்ன ஆபத்து நேர்ந்தாலும், சங்கத்தைப் பற்றிய ரகசியங்களை வெளியாருக்குச் சொல்வதில்லை, எதிர்பாராத ஆபத்து எதுவும் ஏற்பட்டால் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வேண்டும். எப்படியும் ரகசியம் வெளிவரக்கூடாது என்றெல்லாம் இந்தச் சங்கத்தின் நிபந்தனைகள் ஆகும். வாஞ்சிநாதன் நீலகண்ட பிரம்மச்சாரியோடு நேர்ந்த ஏதோ மனவருத்தத்தால் அவரை ஒதுக்கிவிட்டு புதுச்சேரியிலிருந்த வ.வெ.சு.ஐயரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். செங்கோட்டையிலிருந்து புதுச்சேரி சென்று அங்கு ஐயரைச் சந்தித்தார். அப்போது ஐயர் சிலருக்குத் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை அளித்து வந்தார். அதில் வாஞ்சிநாதனும் சேர்ந்து கொண்டு துப்பாக்கிச் சுடும் பயிற்சியைப் பெற்றார். வாஞ்சிநாதன் ஆஷ் என்பானைக் கொல்ல ஏன் முடிவெடுத்தார்? தூத்துக்குடியில் 1906இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனியை அழித்து ஒழிப்பதற்கு இடைவிடாமல் பாடுபட்டவன் அப்போது தூத்துக்குடியில் சப் கலெக்டராக இருந்த இந்த ஆஷ் என்பான். அங்கு இவன் இருந்த காலத்தில் இவன் செய்த அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. நாடு போற்றும் சிதம்பரம் பிள்ளையை அவமதித்தான். அவர் மீது பொய் வழக்குகளைப் போட்டான். இவரை ஒழிப்பதுதான் தனது வாழ்க்கை லட்சியம் என்பது போல நடந்து கொண்டான்.குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளைக்காரர்கள் குள்ளிப்பதற்காக அங்கு இந்தியர்கள் யாரும் நீராடக்கூடாது என்று உத்தரவு போட்டான் ஆஷ். வ.உ.சிதம்பரம் பிள்ளை இரண்டு தீவாந்தர தண்டனை பெறக் காரணமாக இருந்தவனும், உத்தமத் தலைவராக இருந்த சுப்பிரமனிய சிவாவை அவரது தகுதியறியாமல் அவமானப் படுத்திய இந்த அன்னியனை இனியும் உலாவ விடக்கூடாது என்று முடிவெடுத்தார் வாஞ்சி. ரகசியக் கூட்டத்தில் சீட்டுக் குலுக்கிப் போட்டு பாரதமாதா சங்கத்தினர் வாஞ்சியின் பெயர் வரவே இந்தப் பணியை முடிக்க வாஞ்சியை ரத்தத்தால் வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தனர். வாஞ்சியும் திட்டமிட்டபடி ஆஷையும் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டார். வாஞ்சியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கிலக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்ன? “ஆங்கிலச் சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசத்தின் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தித் தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருவோவிந்தன், அர்ஜுனன் ஆகியோர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் எருது மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சயனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் கால் வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.” இந்தக் கொலை நாடு முழுவதும் பரபரப்பை ஊட்டியது. எங்கு பார்த்தாலும் போலீசின் அத்து மீறல், கெடுபிடி. புனலூரில் ஒரு வக்கீல் தான் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். செங்கோட்டையில் வாஞ்சிநாதனுக்கு நெருங்கியவர்கள் வீடுகள் போலீசாரால் சூறையாடப்பட்டன. கைதுக்குத் தப்பி தலைமறைவானார் மாடசாமி என்பார். தர்மராஜ ஐயர் வீடு சூறையாடப்பட்டவுடன் சித்திரவதைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார்.23 வயதே ஆன வாஞ்சிநாதனின் இளம் மனைவி பொன்னம்மாள், பருவமடைந்த நாள் முதலே விதவையானாள். தேசபக்தனை மணந்து கொண்டால் என்ன கிடைக்கும் என்பதை அவள் உலகுக்கு அறிவிப்பது போல எல்லாம் நடந்தன. இந்த வழக்கில் மாடசாமி தப்பிப் போய்விட்டாலும், அழகப்ப பிள்ளை, தென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சாவடி அருணாசலம் பிள்ளை எனும் மாணவர் கல்லூரி விடுதியிலேயே கைது செய்யப்பட்டார். இவர்கள் தவிர இந்த வழக்குக்காக தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை, வக்கீல் குமாஸ்தா சோமசுந்தரம் பிள்ளை, சுந்தரபாண்டியபுரம் சோமசுந்தரம் ஐயர் ஆகியோரும் கைதானார்கள். இவர்களில் சிலர் அப்ரூவர்களாக ஆனார்கள். புதுச்சேரியில் இருந்த போது மாடசாமி மூலம் வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொல்லப் போகிறான் என்ற செய்தி கேட்டதும், இதுபோன்ற தனிப்பட்ட கொலைகளில் நம்பிக்கை இல்லாத, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு புரட்சி செய்ய ஒரு இயக்கத்தை நடத்தி வந்த நீலகண்ட பிரம்மச்சாரி, பழி தன் மீது விழுந்துவிடும் என்பதால் தப்பிக் காசி நகருக்குச் சென்று விட்டார். ஆனால் விதி அவரை அங்கு சென்னை மாகாண ரகசியப் போலீசார் உருவில் துரத்திக் கொண்டு சென்றது. அவர் அங்கிருந்து கல்கத்தா சென்று விட்டார். ஆனால் காசியில் இவருக்கு அடைக்கலம் கொடுத்த செட்டியாரை போலீஸ் துன்புறுத்தியது. தன்னைக் கைது செய்ய போலீசார் அலைகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் நீலகண்ட பிரம்மச்சாரி கல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சரணடைந்தார். அங்கிருந்து அவர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். இவரை நீதிபதியின் முன்பு கொண்டு வந்து நிறுத்தியபோது விலங்கிடப்பட்டுக் கொண்டு வரப்பட்டார். இவரது தேஜசைப் பார்த்த நீதிபதி, இவரது விலங்குகளை நீக்கச் சொல்லி உத்தரவிட்டார். பின்னாளில் ஓம்கார் சுவாமிகளாக நீலகண்ட பிரம்மச்சாரி கர்நாடக மாநிலம் நந்தி மலையடிவாரத்தில் வசித்த காலம் வரை அந்த நீதிபதி இவருடைய சீடனாக விளங்கி வந்தார். ஆஷ் கொலை வழக்கு நீண்ட நாட்கள் நடைபெற்றது. இறுதியில் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், கிருஷ்ணாபுரம் சங்கரகிருஷ்ணன் 4 ஆண்டுகள், ஆலப்புழை ஹரிஹர ஐயர் 3 ஆண்டுகள், தூத்துக்குடி முத்துக்குமாரசாமி பிள்ளை, சுப்பையா பிள்ளை, செங்கோட்டை ஜெகநாத ஐயங்கார், புனலூர் பாபு பிள்ளை, செங்கோட்டை பிச்சுமணி ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் சிலர், சாவடி அருணாசலம் பிள்ளை, கஸ்பா அழகப்ப பிள்ளை, எட்டயபுரம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் விடுதலையானார்கள். ஒருக்கால் வாஞ்சி உயிரை விடாமல் இருந்திருந்தால் அவருக்கு பிரிட்டிஷ் அரசு தூக்குத் தண்டனை விதித்திருக்கும். இவர்கள் கையால் மாண்டு போவதைவிட தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதையே அந்த மாவீரன் விரும்பி ஏற்றுக் கொண்டான். இத்தோடு இந்த வழக்கின் போக்கு நின்று போய்விடவில்லை. இந்த தண்டனையெல்லாம் கொடுத்து முடித்த பிறகும், வீர சாவர்க்கருக்கு இதில் பங்கு உண்டா என்று போலீசுக்கு மூக்கில் வியர்த்தது. அவரையும் விசாரணை செய்தனர். இன்றும் கூட ஆஷ் கொலை எங்கு எவரால் திட்டமிடப்பட்டது என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. வாஞ்சி புதுச்சேரி சென்று வ.வெ.சு.ஐயரைச் சந்தித்தது அறிந்து போலீஸ் ஐயரை மாட்டிவைக்க தன்னால் ஆனமட்டும் முயன்று பார்த்தது. அதற்குச் சாதகமாக எந்த சாட்சியும் கிடைக்கவில்லை, ஐயரின் மீது வழக்குப் போட முடியவில்லை. தேசபக்த சிங்கங்கள் இதற்கு முன்பு பல தடவை முயன்றனர், சில வெற்றி பெற்றன, சில தோல்வியில் முடிந்தன. குதிராம் போஸ் முயன்றதில் இரு பெண்கள்தான் மாண்டனர். மதன்லால் திங்க்ரா யாரைக் கொல்ல திட்டமிட்டாரோ, அவர் தப்பிவிட, மற்றொரு குற்றவாளியான கர்சானைத் தாக்கியது. ஆனால் மணியாச்சியில் வாஞ்சிநாதன் வைத்த குறி தப்பவில்லை. இதனை வெறும் கொலையாகப் பார்ப்பதை விட ஒரு தேசபக்தன் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கொள்வதுதான் சரியாக இருக்கும். காரணம், அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனியின் பானர்மன் எனும் ஆங்கில தளபதி வீரபாண்டிய கட்டபொம்மனைக் கயத்தாற்றில் தூக்கிலிட்டான். நூறு ஆண்டுகள் கழித்து அதே நெல்லை மண்ணில் வீரவாஞ்சி அதற்குப் பழிவாங்கிவிட்டான் என்றுதான் கொள்ள வேண்டும். வாஞ்சிநாதன் இந்தச் செயலைச் செய்த மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அவன் பெயரை வைக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் உறுப்பினர் குமரி அனந்தன் அவர்கள் பாடுபட்டு, இறுதியில் மணியாச்சி என்ற பெயரோடு வாஞ்சியின் பெயரையும் சேர்த்திடச் செய்தமைக்கு அவருக்கு தேசபக்தர்கள் நன்றிக்கடன் பட்டவர்களாகிறார்கள். வாழ்க வீர வாஞ்சியின் புகழ்! [] இனி வரும் ஆண்டுகளிலாவது இந்த வீர இளைஞனின் நினைவு நாளில், நம் நாட்டு தேசிய சிந்தனையுள்ள தேசபக்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் கூடி இந்த நாட்டின் சுதந்திரத்துக்குத் தங்கள் இன்னுயிரைக் கொடுத்த வீரர்களை நினைவுகூர்வதோடு, இனி வரும் காலத்தில் தேசவிரோத, ஊழல் கூட்டத்தை அடியோடு ஒழிக்க சபதம் ஏற்போம். மகாகவியின் வார்த்தைப்படி இந்த சுதந்திரத்தை “தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?” என்ற கேள்வி எழுப்பி, இந்த நாட்டைக் காக்க உறுதி ஏற்போம். வந்தேமாதரம்! ஜெய்ஹிந்த்!! 14 ஆளவந்தார் கொலை வழக்கு 1950களில் தமிழ் நாட்டை உலுக்கிய ஒரு கொலை வழக்கு “ஆளவந்தார் கொலை வழக்கு”. ஆளவந்தார் என்பவர் யார் என்பதைப் பார்ப்போம். சென்னை ஆவடியில் ராணுவ இலாகாவில் பணியாற்றியவர் இவர். கோமுட்டி செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர். இவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள். இவர்கள் பொதுவாக வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். மாறாக இந்த ஆளவந்தார் என்பவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1939லிருந்து 1945 வரை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இவர் ராணுவத்தில் இருந்திருக்கிறார். யுத்தம் முடிந்து ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வந்த பிறகு ஏதாவது தொழில் செய்து பிழைக்கக் கருதி அப்போது அறிமுகமாகியிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார். இப்போது வேண்டுமானால் தொட்டதெற்கெல்லாம் பிளாஸ்டிக் பொருட்கள் என்றாகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் முதன் முதலாக அறிமுகமான காலத்தில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரும்புப் பொருட்கள் போல கனமும் இல்லை, காகிதம் போல மெல்லியதாகவும், தூக்கிச் செல்ல இலகுவாகவும் இருந்தது. விைலையும் அதிகமில்லை. இந்தப் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையைத் தொடங்கினார் ஆளவந்தார். அப்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை (சைனா பஜார்) பகுதியில் ஜெம் அண்டு கோ எனும் பேனா கம்பெனி இருந்தது. அந்த கடையின் வாயிலில் சிறிய இடமொன்றை இவர் வாடகைக்குப் பிடித்துக் கொண்டார். வியாபாரி என்றால் ஒரே பொருளில் மட்டுமா கவனம் செலுத்துவார்கள். எளிதில் லாபம் கிடைக்கும் மற்ற பல தொழில்களையும் நாடுவார்கள். இவரும் மாதத் தவணை முறையில் புடவைகளை விற்கத் தொடங்கினார். இப்போதெல்லாம் தவணை முறை வியாபாரம் பழகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் அது புதிது. அறிமுகமான புதிதில் ஒரு சிறு தொகை கொடுத்து ஒரு பொருளை வாங்கிக் கொண்டு மாதத் தவணையில் மீதியைக் கொடுப்பது வாங்குவோருக்கும் சுலபமாக இருந்ததால் இந்த முறைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதால் கிடைத்த ஓய்வூதியம் தவிர, வியாபாரத்தில் கிடைத்த வருமானம் இதில் அமைதியாக வாழ்ந்திருக்கலாம். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். இவ்வளவு நல்ல சூழ்நிலையில் இவரிடம் இருந்த ஒரு மிக மோசமான, பெரும்பாலான ஆண்களை அழிக்கும் ஒரு பழக்கம் பெண்கள் சகவாசம், அது இவரிடம் அதிகமாகவே இருந்தது. தனது ஆண்மையில் இவருக்கு அதீதமான பெருமை. தன் திறமைக்காகவே தன்னிடம் பல பெண்கள் வந்து விழுவதாக நினைத்துக் கொண்டார். இந்த ஒரு தீயபழக்கம் போதாதென்று போதைப் பொருள் பழக்கமும் இருந்தது. இந்த நிலையில் ஒரு நாள் இரவு……. ஆளவந்தாரின் மனைவி தன் கணவன் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று கவலையுடன் அவர் கடை இருக்கும் சைனா பஜார் ஜெம் அண்டு கோவுக்குச் சென்று விசாரித்தார். அங்கு அவர் இல்லை. அங்கிருந்தவர்கள் சொன்ன விஷயம், அவர் ராயபுரத்தில் தனக்குத் தெரிந்த ஒருவரைப் பார்க்க போனவர் அப்புறம் திரும்ப வரவேயில்லை என்ற பதில்தான். ராயபுரத்தில் இவர் யாரைப் பார்க்கப் போனார்? மனைவிக்குக் கவலை. மேலும் விசாரித்ததில் தேவகி என்ற பெண்ணைப் பார்க்கப் போனார் என்று சொன்னார்கள். யார் அந்த தேவகி? கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் இந்த தேவகி. அழகும் இளமையும் கொஞ்சி விளையாடும் பருவம் அவளுக்கு. கல்லூரியில் படித்தவள், நன்றாக உடை உடுத்தி கெளரவமாகத் தோற்றமளிப்பாள். தான் சமூக சேவகர் என்று மற்றவர்களிடம் சொல்லி வந்தார். இவர் ஒரு முறை ஜெம் அண்டு கோவுக்கு பேனா வாங்க வந்தபோது அங்கு ஆளவந்தாரைச் சந்தித்து நண்பர்கள் ஆனார்கள். அப்படித் தொடங்கிய நட்பு நாட்பட நாட்பட இன்ப உறவாக மாறியது. பெண்களோடு தொடர்புடைய ஆளவந்தாருக்கு இந்தப் பெண் நூறோடு நூற்றியொன்றுதான். இதை ஆளவந்தார் ஒரு பெருமையாகவே நினைத்துக் கொள்வதோடு தெரிந்தவர்களிடம் தன்னுடைய சாதனைகளைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்வதும் உண்டு. இவருடைய இந்தப் பெண்ணாசை காரணமாகவே இவர் புடவை விற்பனையில் ஈடுபட்டார். அப்போதுதானே பெண்களின் தொடர்பு கிடைத்துக் கொண்டேயிருக்கும். ஹாஸ்டலில் தங்கிப் படிப்போர், வேலைக்குப் போவோர், நர்சுகள் போன்றவர்கள்தான் இவரிடம் புடவை வாங்கும் வாடிக்கையாளர்கள். இவர்கள் தவிர பொழுது போகாமல் கடைகளைச் சுற்றி வரும் குடும்பப் பெண்களும் இதில் அடங்குவர். தவணைப் பணம் பலராலும் ஒவ்வொரு மாதமும் ஒழுங்காகக் கொடுக்க முடியாது. அதனால் இவர் ஒரு சலுகையை அறிவித்தார். மாதத் தவணை கொடுக்க இயலாமல் போனால் பரவாயில்லை, தன்னோடு அந்தரங்கமாக இருக்க அழைப்பார். வருபவர்களை அழைத்துக் கொண்டு அதே பகுதியில் இருந்த ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்குவார்கள். பெரும்பாலும் அங்கு பொய்யான பெயர்களையே கொடுத்துவிட்டுத் தங்குவார். கதை இப்படிப் போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் ஆளவந்தார் காணாமல் போனார், அவர் மனைவி ஜெம் அண்டு கோவுக்கு வந்து அவரைத் தேடத் தொடங்கினார். இந்த நிலையில் அந்த அம்மையாரை விட்டுவிட்டு நாம் இப்போது வேறு இடத்துக்குப் போவோம். ஒரு நாள் காலையில் சென்னை ராயபுரம் கடற்கரையில் ஒரு தலை கரை ஒதுங்கியது. ஆளவந்தாரைத் தேடி அலைந்து கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் இதனைக் கேள்விப்பட்டு ஓடிப் போய்ப் பார்த்தார். அடையாளம் தெரியவில்லை. ஒரு சில நாட்கள் கழிந்து சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் போட் மெயில் எனும் விரைவு ரயிலில் மானாமதுரை ரயில் நிலையத்தில் ஒரு டிரங்க் பெட்டி வந்து சேர்ந்தது. அதில் தலை இல்லாத ஒரு முண்டம் அடைக்கப்பட்டிருந்தது. போலீசுக்கு மானாமதுரை உடலும், ராயபுரம் கடற்கரை தலையும் ஒருங்கிணைக்க வெகு நேரம் ஆகவில்லை. ஒருவழியாக ஆள் அடையாளம் தெரிந்தது. அந்த உடல் ஆளவந்தாருடையதுதான் என்பது நிச்சயமானது. இறந்து போனது ஆளவந்தார் என்பது தெரிந்ததும் அவரைப் பற்றியும் அவருடைய தொடர்புகள் பற்றியும் போலீஸ் தீவிரமாக விசாரித்த போது அவருடைய பெண்கள் தொடர்பும் தெரிய வந்தது. உடனே அவருக்குத் தொடர்பு இருந்த பெண்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் குடும்பத்தினரும் விசாரணைக்குள் வந்தனர். அப்படி விசாரிக்கும் போதுதான் இந்த ஆள் எப்படிப்பட்ட பெண் பித்தன் என்பதும் இவனுக்கு எத்தனை பெண்களுடன் தொடர்பு என்பதெல்லாம் தெரிய வந்தது. இப்படி ஆளவந்தாரின் பெண் தொடர்புகளை யெல்லாம் விசாரித்து வரும்போது தேவகி என்ற மலையாளத்துப் பெண்ணுடனான தொடர்பும் தெரிய வந்தது. உடனே அந்தப் பெண்ணையும், அவள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது தேவகி மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடாகியிருப்பதும், அந்தச் செய்தி ஆளவந்தாருக்கும் தெரிந்தது என்பதும் தெளிவானது. ஆனால் இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது, தேவகியுடனான தன்னுடைய தொடர்பு நின்றுவிடக்கூடாது, அதற்கு இடையூறாக வரவிருக்கும் இந்தத் திருமணம் எப்படியாவது நிற்க வேண்டுமென ஆளவந்தாருக்கு வெறி. தேவகியிடம் தங்கள் இருவருக்குமிடையே உள்ள உறவை வெளியிட்டுவிடுவேன். திருமணத்தைத் தடுத்து நிறுத்தி விடுவேன் என்றெல்லாம் சொல்லி மிரட்டி வந்திருக்கிறார். இவனுடைய தொல்லை பொறுக்க முடியாமல் எங்கே இந்த ஆள் திருமணத்துக்குப் பின் தொல்லை கொடுத்துவிடுவானோ என்று முன்கூட்டியே மேனனிடம் தன்னுடைய விஷயத்தையெல்லாம் தேவகி சொல்லிவிட்டாள். உண்மைகளைக் கக்கிவிட்டாள். உடனே அந்த வருங்கால கணவன் மேனன் ஒரு முடிவுக்கு வந்தார். இந்த ஆள் உயிருடன் இருந்தால்தானே உனக்கு இதுபோன்ற தொல்லைகளைக் கொடுத்து வருவான், இவனை ஒரு வழிபண்ணி தீர்த்துக்கட்டிவிட்டால்? இந்த யோசனை இருவருக்கும் பிடித்திருந்தது. தேவகிக்கும் இதில் சம்மதமே. உடனே திட்டம் தயாரிக்கப்பட்டது. தேவகி ஆளவந்தாரிடம் நைச்சியமாகப் பேசி ஆசை வார்த்தைகள் சொல்லி மெதுவாக அவளுடைய இருப்பிடத்துக்கு அழைத்து வரவேண்டியது. அப்படி அவன் வந்து இவர்கள் வலையில் தானாக சிக்கிக் கொள்ளும்போது மீதி விஷயங்களை முடித்துவிட வேண்டியது. இதுதான் அவர்களது திட்டம். என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், திறமைசாலியாக இருந்தாலும் பெண்பித்து என்று இருந்துவிட்டால், ஒரு பெண்ணின் புன்னகையில், அவளது இனிக்கும் பேச்சில் மயங்கி அவள் இழுத்த இழுப்புக்கு போகாத ஆண்களே இருக்க முடியாது. அதிலும் ஆளவந்தார் போன்ற மிகக் கேவலமான பெண்பித்தனைப் பற்றி கேட்க வேண்டுமா? தேவகி ஆசையோடு கூப்பிட்டதும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அவள் பின் போனான். அங்கு போனதும் அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும். அங்கு மேனன் மற்ற விஷயங்களைக் கச்சிதமாக முடித்து விட்டான். கொன்றபின் ஆளவந்தாரின் தலையை மட்டும் தனியாக வெட்டியெடுத்து வங்கக் கடலில் வீசிவிட்டார்கள். கடலுக்குள் போடப்பட்ட தலையை மீன்கள் விட்டுவைக்கவா போகின்றன என்கிற தைரியம் அவர்களுக்கு. ஆனால் என்ன துரதிர்ஷ்டம், அந்தத் தலை முழுமையாக கரை ஒதுங்கி இவர்களைக் காட்டிக் கொடுக்க வாய்ப்பளித்து விட்டது. தலையில்லாத முண்டத்தை எப்படி அடையாளம் காண்பார்கள், அதிலும் அந்தத் தலை நானூறு ஐனூறு மைல்களுக்கு அப்பால் போய்ச்சேர்ந்து விட்டால், உடனே தலையற்ற அவனுடைய முண்டம் ஒரு டிரங்க் பெட்டியில் வைத்து பூட்டப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஏற்றப்பட்டது. இருவரும் மன நிம்மதியோடு வீடு திரும்பி விட்டார்கள், தலை கடலிலும், முண்டம் ரயிலிலும் போய்விட்டது என்ற மனத் திருப்தியுடன். இவ்வளவும் ஆன பிறகு இங்கு இருப்பதும் ஆபத்து என்று எண்ணி அவ்விருவரும் பம்பாய்க்கு ரயிலேறிவிட்டார்கள். ஆனால் பாவம், இவர்கள் ஒன்று நினைக்க இறைவன் வேறொன்று நினைத்து விட்டான். தலையும் கிடைத்தது, முண்டமும் கிடைத்தது, இரண்டும் ஒரே ஆளுடையது என்பதும் தெரிந்தது. அந்த நாளில் தமிழக போலீஸ் மகா திறமைசாலிகளைக் கொண்டது. ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரானது. விடுவார்களா, கண்டுபிடித்து விட்டார்கள். தோண்டித் துருவி, ஆளவந்தாரின் தொடர்புகளை மோப்பம் பிடித்துக் கொண்டு போய் தேவகியிடம் போய் நின்றது. ராயபுரத்தில் தேவகியைத் தேடினால், அவர்கள்தான் ஓடிவிட்டார்களே. மறுபடியும் தேடுதல் வேட்டை, மேனனும் தேவகியும் போலீசின் பிடியில் சிக்கினார்கள். சென்னையில் வழக்கு நடந்தது. அப்போதெல்லாம் நம் நாட்டில் இதுபோன்ற வழக்குகளில் ஜூரிகள் இருப்பார்கள். அவர்கள் வழக்கின் போக்கை உன்னிப்பாகக் கவனித்து வருவார்கள். அவ்வப்போது அவர்களுக்கு நீதிபதிகளும் சில விளக்கங்களை அளிப்பார்கள். வழக்கின் முடிவில் ஜூரிகள் இவர்களைக் குற்றவாளிகள் என்று தங்கள் அபிப்பிராயத்தை நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழ்பெற்ற ஏ.எஸ்.பி.அய்யர். இந்த வழக்கை முழுமையாக கவனித்து, குற்றவாளிகள் இருவரின் வரலாற்றையும், கொலையுண்ட ஆளவந்தாரின் நடவடிக்கை, ஒழுக்கம் இவற்றையும் மிகத் துல்லியமாகக் கணித்து ஆளவந்தாரினால் மேனனும் தேவகியும் பட்ட தொல்லைகள், மனவருத்தம், திருமணத்தை நடத்த விடாமல் அவன் செய்த மிரட்டல்கள் இவற்றையெல்லாம் அவர் கவனமாகப் பரிசீலித்தார். இறுதியில் அவருடைய அனுதாபம் தேவகியின் மீதும், மேனன் மீதும் ஏற்பட்டது. ஆளவந்தார் என்பவன் ஒரு சமூக விரோதி அவன் கொலையுண்டதை கொலை என்பதை விட அவனுடைய அடாவடித்தனத்துக்காகக் கொடுக்கப்பட்ட தண்டனை என்றும் முடிவு செய்தார். ஆகவே அவ்விருவருக்கும் ஒரு சில ஆண்டுகள் தண்டனை மட்டும் கொடுத்துத் தீர்ப்பு கூறினார். அவர்களும் சில ஆண்டுகள் சிறையில் இருந்த பின் வெளியே வந்து திருமணம் செய்துகொண்டு கேரளாவுக்குச் சென்று விட்டனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீதிபதியின் கருணையை நினைத்து அவரை வாழ்த்தியிருப்பார்கள். கேரளாவில் ஏதோ தொழிலில் ஈடுபட்டு நல்ல வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொண்டார்கள். இந்த வழக்கு குறித்து பிரபல எழுத்தாளர் ராண்டார்கை என்பவர் மிக விரிவாக எழுதியிருக்கிறார். 15 லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. [] தமிழகத்தைக் குலுக்கிய சில கொலை வழக்குகளில் லட்சுமிகாந்தன் கொலைவழக்கும் ஒன்று. காரணம் கொல்லப்பட்டவன் அல்ல, குற்றவாளியாகக் கூண்டில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டவர்கள் தான் அந்தப் பரபரப்புக்குக் காரணம். அவர்கள்தான் புகழின் உச்சியில் இருந்த திரைப்பட நடிகர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர். 1944ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை 1947 வரை வழக்கு நடந்து முடிவும் வந்தது. [] இதன் விவரங்களைச் சிறிது இப்போது பார்ப்போம். அந்த காலகட்டத்தில் மஞ்சள் பத்திரிகைகள் மலிந்திருந்தன. அதில் ஒன்று இந்துநேசன் எனும் பத்திரிகை. இதனை நடத்தி வந்தவன் லட்சுமி காந்தன். இந்த ஆளுக்கு அப்போதைய பிரபலமான மனிதர்களின் அந்தரங்கங்களைப் பத்திரிகையில் பிரசுரம் செய்து, அல்லது செய்வதாக மிரட்டி பணம் பிடுங்குவது. இது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருந்தமையால் இந்த லட்சுமிகாந்தன் காட்டில் நல்ல மழை. [] ஒரு நாள் புரசவாக்கம் வேப்பேரி பகுதியில் கை ரிக்ஷாவொன்றில் பயணம் வந்த லட்சுமிகாந்தனை வழிமறித்து சிலர் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டனர். 1944 நவம்பர் 7ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காயத்தோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட லட்சுமிகாந்தன் மறுநாள் கலை சென்னை பொது மருத்துவமனையில் இறந்து போனான். இந்த வழக்கு குறித்து விசாரித்த தமிழ்நாடு போலீசார் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரைக் கைது செய்தனர். வழக்கின் விவரம் என்னவென்றால் சென்னை அப்போது மஞ்சள் பத்திரிகைகளின் சொர்க்க லோகமாக இருந்து வந்தது. லட்சுமிகாந்தனின் ‘இந்துநேசன்’ எனும் பத்திரிகை பிரபலமானவர்களைப் பற்றி தாறுமாறாக எழுதியும், எழுதுவதாக அச்சுறுத்தியும் பணம் பிடுங்கி வந்தது. இதற்கு முன் இந்த ஆள் ‘சினிமா தூது’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தான். இந்த ஆளின் பத்திரிகைகளில் சினிமா நடிகர்கள் பற்றிய சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதி வந்தான். மக்களும் இதுபோன்ற வம்புகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டினர். நல்ல வியாபாரம். இப்படி இவர் எழுதி வருவதால் சில பிரபலங்களின் பெயர் சமூகத்தில் கெட்டுப்போய் விட்டது. தங்களைப் பற்றி எழுதிவிடக் கூடாதே என்பதற்காக மற்ற நடிக நடிகையர் அதிகமான பணத்தைக் கொடுத்து இதுபோன்றவர்களை வாயைக் கட்டிப் போட்டிருந்தனர். [] இந்த வகையில் மஞ்சள் பத்திரிகையாளர்களின் காட்டில் நல்ல மழை. இது போன்ற பிளாக் மெயில் பத்திரிகைகளுக்கு எதிராக எம்.கே.தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும், டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடுவும் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஆர்தர் ஆஸ்வால்டு ஜேம்ஸ் ஹோப் என்பவரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் இதுபோன்ற மஞ்சள் பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்ட லைசன்சை திரும்பப் பெற வலியுறுத்தியிருந்தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று கவர்னர் பத்திரிகையின் லைசன்சை கேன்சல் செய்துவிட்டார். [] வேறு பல முயற்சிகள் செய்து பத்திரிகையை வெளிக்கொணர லட்சுமிகாந்தன் முயன்றும் ஒன்றும் முடியவில்லை. சினிமா தூது பத்திரிகையைத்தானே மூடும்படி ஆனது. புதிதாக ‘இந்துநேசன்’ என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி நடத்தத் தொடங்கினான் லட்சுமிகாந்தன். முந்தைய பாணியிலேயே இதிலும் கட்டுரைகள், தனிநபர் விமர்சனங்கள், இழிவு படுத்தும் செய்திகள் வெளிவந்தன. அதிலும் இவன் எம்.கே.டி., என்.எஸ்.கே. மற்றும் பல திரைப்பட நடிக நடிகைகள் குறித்தெல்லாம் கேவலமான செய்திகளை வெளியிட்டு வந்தான். இதில் அவனுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. சொந்தத்தில் ஒரு அச்சகம் கூட வாங்கிவிட்டான். [] இந்த வழக்கு பற்றியும் இதுபோன்ற பல பரபரப்பான வழக்குகள் குறித்தும் பிரபல ராண்டார்கை என்பவர் எழுதியிருக்கிறார். அதன்படி இந்த லட்சுமிகாந்தன் இளம் பருவத்தில் ஒரு வக்கீலாக விரும்பினானாம். அவன் ஏழ்மை நிலைமை அவன் மனோரதம் நிறைவேறவில்லை. அதனால் இவன் ஒரு புரோக்கராம இயங்கி வந்தான். வக்கீலுக்கு ஆள் பிடிப்பது, பொய்சாட்சி சொல்வது, பொய்யான ஆவணங்களைத் தயாரிப்பது போன்ற நிழல் நடவடிக்கைகளை செய்து வந்தான். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்றபடி ஒரு நாள் மாட்டிக் கொண்டு சிறை சென்றான். அங்கு அவன் தப்பிக்க முயன்று மாட்டிக் கொண்டு ஏழு ஆண்டு சிறைதண்டனை பெற்றான். ராஜமுந்திரி ஜெயிலில் இவனது வாசம். மறுபடியும் தப்பிக்க முயன்றானாம். மறுபடியும் மாட்டிக்கொண்டு அந்தமான் தீவுக்கு அனுப்பப் பட்டானாம். இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஜப்பானிய படை மெல்ல மெல்லா கிழக்காசிய பகுதிகளைப் பிடித்து முன்னேறி வந்தது. பர்மாவை நெருங்கி அந்தமான் தீவையும் அது பிடித்துக் கொண்டது. அப்போது லட்சுமிகாந்தன் விடுதலையாகி தமிழ்நாடு திரும்பி பிழைப்புக்கு வழி தேடலானான். இனி அவன் கொலையுண்ட நிகழ்ச்சிக்கு வருவோம். [] 1944 நவம்பர் 7 லட்சுமிகாந்தன் தன் வக்கீல் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றான். அவர் இருப்பது வெப்பேரி. அங்கிருந்து புரசவாக்கத்திலிருந்த தன் வீட்டுக்கு ஒரு ரிக்ஷாவில் திரும்பி வரும்போது சிலர் அந்த ரிக்ஷாவை வழிமறித்து அவனைத் தாக்கிக் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். புரசவாக்கம் தாணா தெரு அருகில் இந்த நிகழ்ச்சி நடந்தது. குத்துப்பட்டு காயத்துடன் விழுந்து கிடந்த லட்சுமிகாந்தன் மெல்ல எழுந்து தட்டுத்தடுமாறி வெப்பேரிக்குச் சென்று மறுபடியும் தன் வக்கீலைப் பார்த்து நடந்ததை விவரித்தான். அவர் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பகுதிகளில் அப்போது ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் வசித்து வந்தனர். அப்படியொரு ஆங்கிலோ இந்திய இளைஞன் இவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான். வழியில் ரிக்ஷாவை நிறுத்தச் சொல்லிவிட்டு லட்சுமிகாந்தன் வெப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் கொடுக்க விரும்பினான். அப்போது கூடவந்த ஆங்கிலோ இந்திய இளைஞன் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான். ரத்தம் அதிகம் வெளியேறவும் ஓய்ந்து போன லட்சுமிகாந்தன் ரிக்ஷாவில் உட்கார்ந்தபடி நடந்தவற்றைச் சொல்ல போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நம்பியார் என்பவர் ஒரு காகிதத்தில் அவற்றைக் குறித்துக் கொண்டார். ஜெனரல் ஆஸ்பத்திரியில் அவன் சேர்ந்தான். அங்கு அவனுடைய ரத்தப் போக்கு நிற்கவில்லை. டாக்டர்கள் பரிசோதனை செய்து வந்த போதும் மறுநாள் விடியற்காலை 4.15க்கு அவன் உயிர் பிரிந்தது. [] முன்பே குறிப்பிட்டபடி பிரபலங்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. தீர்ப்பில் பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் தண்டிக்கப்பட்டனர். ஸ்ரீராமுலு நாயுடு விடுதலையானார். இருவருக்கும் தீவந்தர தண்டனை கிடைத்தது. உடனே அவ்விருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். அதன் முடிவு தெரிய காலதாமதமானதால் இவர்கள் அதற்குள் இரண்டரை வருடங்கள் சிறையில் கழித்தனர். கடைசியில் பிரிவி கவுன்சில் இவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஒரு அரக்கன் மாண்டு போனான், இருபெரும் நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் சிறையிலிருக்கும்படி நேர்ந்துவிட்டது. இதனால் தமிழ்த் திரையுலகமே பல மாற்றங்களுக்கு உட்பட்டுவிட்டது. 16 எம்.எல்.வசந்தகுமாரி [] எம்.எல்.வசந்தகுமாரி தன்னுடைய தனித்தன்மை வாய்ந்த குரல் இனிமையாலும், கர்நாடக சங்கீத உலகிலும், திரையிசையிலும் தனி முத்திரை பதித்தத் தலை சிறந்த பாடகியருள் எம்.எல்.வசந்தகுமாரியும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது. இவர் பாடி புகழின் உச்சிக்குச் சென்ற பாடல்கள் எண்ணற்றவை. இந்த இசை மேதை தனக்குப் பின் ஒரு திறமை மிக்க சீடர்களை உருவாக்கிவிட்டு அவர்கள் இன்று கர்னாடக இசையுலகில் தலை சிறந்து விளங்குவதற்கு இவர் காரணமாக இருந்திருக்கிறார். இந்த அரிய பாடகியைப் பற்றிய சில விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். எம்.எல்.வி. என்று அறியப்பெற்ற எம்.எல்.வசந்தகுமாரி ‘மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி’ என்பதன் சுருக்கம். 1928 ஜூலை 3ஆம் நாள் பிறந்தவர் இவர். தமிழ் மொழி மட்டுமல்லாமல் வேறு பல மொழித் திரைப் படங்களிலும் இவருடைய பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவருடைய காலத்தில்தான் சங்கீத உலகில் தலை சிறந்த மேதைகளான எம்.எஸ்.சுப்புலட்சுமியும் டி.கே.பட்டம்மாளும் சிறந்து விளங்கி வந்தனர். அவ்வப்போது மூவர் சில துறைகளில் சிறந்து விளங்க்கும் மரபு நம் நாட்டில் இருந்து வருகிறது. கர்னாடக இசைக்கு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி, தமிழிசைக்கு முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் போன்றோரைச் சொல்லலாம். அதுபோல இவர் காலத்தில் எம்.எஸ்., டி.கே.பி., எம்.எல்.வி. ஆகியோரைச் சொல்லலாம். பிரபல சங்கீத வித்வான் ஜி.என்.பாலசுப்பிரமணியன் அவர்களிடம் சங்கீதம் பயின்றவர் இவர். மிகவும் இளம் வயதில் “சங்கீத கலாநிதி” விருதினைப் பெற்ற கலைஞர் இவர். [] அப்போதைய திரை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த ஜி.இராமனாதன் அவர்களுக்கு எம்.எல்.வி.யின் குரல் மிகவும் பிடிக்கும். ஆகவே அவர் இசை அமைத்த திரைப்படங்களில் எம்.எல்.வியின் பாடல் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. பல பாடல்களை இவர் ஜி.ராமனாதன் இசையில் பாடியிருக்கிறார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் தவிர, முத்துசாமி தீட்சிதர் பாடல்களோடு புரந்தரதாசரின் பாடல்களையும் பிரபலப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. புரந்தர தாசரின் பாடல்கள் தமிழகத்தில் அதிகமாகப் பரவ இவரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். அவருடைய “பாரோ கிருஷ்ணையா” போன்ற பாடல்கள் அடங்கும். இவர் பல சிஷ்யைகளைத் தயார் செய்திருக்கிறார். அதில் குறிப்பிடத் தக்கவர்கள் திருமதி சுதாரகுநாதனைச் சொல்லலாம். தன்னுடைய மகளான பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீவித்யாவும் இவரிடம் இசை பயின்றவர்தான். வயலின் இசை மேதையான கன்னியாகுமாரி இவருக்குப் பலகாலம் பக்க வாத்தியம் வாசித்தவர் என்கிற பெருமையைப் பெற்றவர். புகழ்பெற்ற இசைப் பாரம்பரியம் உள்ளவர் எம்.எல்.வி. இவருடைய தந்தையார் அய்யாசாமி ஐயர் மிகச் சிறந்த பாடகர். தாயார் லலிதாங்கியும் இசைக் கலையில் புகழ் பெற்றவர். சென்னையில் ஒரு கான்வெண்டில் கல்வி கற்று வந்த சமயத்தில் இவருடைய இனிய குரலையும், பாடும் திறமையையும் கண்டு குரு ஜி.என்.பாலசுப்பிரமணியன் இவரை ஒரு சிறந்த இசைக் கலைஞராக ஆக்க முடிவு செய்தார். குடும்பமும் இசைத் துறையில் ஈடுபட்டிருந்த காரணத்தால் எம்.எல்.வி. இசையைத் தன் வாழ்க்கைக்கு முக்கியமான துறையாக ஏற்றுக் கொண்டார். [] [] எம்.எல்.வி. தன் 12ஆவது வயதிலேயே தனியாக கச்சேரிகளைச் செய்யத் தொடங்கினார். முதலில் தன் தாயாருடன் பாடிவந்த இவர் பின்னர் தனியாகப் பாடத் துவங்கினார். இசைத் துறையில் நுழைந்து சில ஆண்டுகளுக்குள் இவர் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து விட்டார். இவர் இசைக் கச்சேரிகளைக் கேட்க ரசிகர் மானிலம் முழுவதும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இவருடைய தாயார் புரந்தரதாசரின் சாகித்தியங்களை நன்கு அறிந்தவராதலால் அவரிடமிருந்து இவரும் அவற்றைக் கற்றுக் கொண்டு சிறப்பாகப் பாடத் தொடங்கினார். முன்பே குறிப்பிட்டபடி திரையிசைத் துறை இவரை விட்டுவைக்கவில்லை. 1946 முதல் திரையிசையில் பாடிவந்தாலும் முதன்முதலாக “மணமகள்” எனும் படத்தில் 1951இல் இவர் பாடிய “எல்லாம் இன்பமயம்” எனும் பாடலும், மகாகவி பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே” எனும் பாடலும் இவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. பாரதியார் இந்தப் பாடலுக்கு வேறு ராகத்தில் அமைத்திருந்தாலும் இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் மற்றொரு ராகத்தில் பாடிய இந்தப் பாடல்தான் இன்றும் பாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. 1952இல் தாய் உள்ளம் எனும் படத்தில் பாடிய “கொஞ்சும் புறாவே” எனும் பாடல், ஓர் இரவில் பாடிய “ஐயா சாமி” எனும் பாடல் போன்ற எண்ணற்ற பாடல்கள் இவருக்கு பெருமை சேர்த்தன. [] ராஜாஜி அவர்கள் இவருக்கும் விகடம் கிருஷ்ணமூர்த்திக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்தார். சிறப்பாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு சங்கரராமன், ஸ்ரீவித்யா எனும் இரு குழந்தைகள். ஸ்ரீ வித்யா சங்கீதத்திலும் சிறந்து விளங்கினார். ஆனாலும் திரைத்துறையில் ஈடுபட விரும்பி இவர் ஒரு சிறந்த நடிகையாக ஆகி பரிணமித்தார் என்பது அனைவரும் அறிவர். புரந்தரதாசரின் சாகித்தியங்களை ஆய்வு செய்து இவர் மைசூர் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டத்தைப் பெற்றார். மத்திய அரசின் “பத்ம பூஷன்’ விருதையும், “சங்கீத கலாநிதி” விருதையும் பெற்றார். 1990இல் இவர் இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார். வாழ்க எம்.எல்.வசந்தகுமாரி புகழ்! 17 தமிழுக்குக் கதி மகாகவி பாரதி. [] [] தமிழுக்குக் கதி மகாகவி பாரதி. தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் மேம்படுத்துவதற்காக அவ்வப்போது தோன்றி செயற்கரிய சாதனைகளைச் செய்து முடித்த சான்றோர்கள் பலரை நம் வரலாற்றில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட மேலோர்களின் நினைவு மக்கள் மனதிலிருந்து நீங்கா வகையில் பாடுபட்ட பலரில் இருபதாம் நூற்றாண்டில் நம் கண்முன்னால் வாழ்ந்து மறைந்தவர் மகாகவி பாரதி. மிகப்பெரிய ஆங்கில சாம்ராஜ்யத்தை எதிர்த்து சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகள் பாடுபட்டு இந்திய சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த சுதந்திர தாகம் மிகப் பெரிய அளவில் தோன்றிய காலத்தில் அந்தச் சுதந்திரப் பயிரை கண்ணீரால் அல்ல, செந்நீரால் வளர்த்துக் காத்த பெருமை மகாகவிக்கு உண்டு. பாரதியே அடிக்கடிப் போற்றிப் பாடுகின்ற கம்பனை, வள்ளுவரை, இளங்கோவை அடியொற்றி இந்த மண் செய்த புண்ணியத்தால் இங்கு வந்து தோன்றியவன் பாரதி. தமிழுக்குக் கதியெனத் திகழும் இந்த மூன்று கவிஞர்களைத் தவிர ஒளவையாரையும் தன் கட்டுரைகளில் மேன்மை படுத்தியிருக்கிறான் பாரதி. கவிநயத்துக்கு ஒரு கம்பன், வாழ்வியல் நீதிக்கு ஒரு திருவள்ளுவர், காப்பியச் சுவைக்கு ஒரு இளங்கோ என்றால், சின்னஞ்சிறு சிறார்களை நல்வழிப்படுத்தி இந்த நாட்டின் நல்ல மைந்தர்களாக ஆக்கும் பணியை ஒளவையார் போலச் செய்தவர் யாருமில்லை. அந்தப் பெண்பால் புலவர் பாடிய பல நல்வழிப் பாடல்களும், நீதிநெறிச் செய்யுள்களும் செய்த பணி தொடர பாரதியும் குழந்தைகளுக்கென்று பாடலை இயற்றியது போற்றத் தக்கது. குழந்தைகளுக்கு அவன் முதன் முதலாகக் கூறிய அறிவுரை “அச்சம் தவிர்” என்பது. அதைத் தொடர்ந்து தனது புதிய ஆத்திசூடியில் அவன் கொடுத்திருக்கும் அறிவுரை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் ஏற்று நடைமுறைப் படுத்திக் கொள்ள வேண்டிய அருமையான வரிகள். தன் கட்டுரையொன்றில் பாரதி கூறுகின்றான், இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று அங்குள்ள மக்களிடம், நீங்கள் உங்கள் செல்வங்கள் அனைத்தையும் இழக்கிறீர்களா, அல்லது கவி ஷேக்ஸ்பியரை இழக்கிறீர்களா என்று கேட்டல், நாங்கள் எங்கள் நாட்டுச் செல்வங்கள் அனைத்தையும் இழப்பதாக இருந்தாலும், எங்கள் கவிஞர் ஷேக்ஸ்பியரை இழக்க மாட்டோம் என்று சொல்வார்களாம். அதுபோல என்னிடம் நீங்கள் தமிழ்நாட்டுச் செல்வங்களை இழக்கிறீர்களா அல்லது ஒளவையாரை இழக்கத் தயாரா என்றால், எதை இழந்தாலும் எங்கள் ஒளவையை இழக்க மாட்டோம் என்று எழுதுகிறார். நாமும் எதை இழந்தாலும் பாரதியையும் அவன் கவிதைகளையும் இழக்கத் தயாராக இல்லை. எல்லோரும் மகாகவி பாரதியை ஒரு தேசியக் கவி என்கிறார்கள். அவன் வாழ்ந்த காலம் அப்படிப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு அடிமைப் பட்டுக் கிடந்த இந்த நாட்டில் சுதந்திரப் பயிர் துளிர்விட்டு எழத் தொடங்கிய காலம் அவன் வாழ்ந்த காலம். ஆகவே இயற்கைக் கவிஞனான பாரதிக்கு இந்திய சுதந்திரத்தின் பால் ஈடுபாடு ஏற்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் சுதந்திர தாகத்துக்கும் மேலாக அவன் உள்ளத்தை வாட்டி எடுத்த நிலைமை வேறொன்று உண்டு. அது இந்த நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைமை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அடிமை இந்தியாவில் வாழ்ந்த மக்கள் நிலைமை எப்படி இருந்தது. நாம் இப்போது கற்பனை செய்தோ அல்லது பாரதியின் கவிதைகள் மூலமாகவோதான் அறிந்து கொள்ள முடியும். அவ்வளவு பிற்போக்கான நிலைமை அப்போது. இந்த மக்களை வைத்துக் கொண்டு இந்த மண்ணின் சுதந்திரத்துக்கு எப்படிப் போராட முடியும். என்று இவர்கள் தலை நிமிர்ந்து நிற்கப் போகிறார்கள். என்று இவர்கள் தங்களையும் தங்கள் முன்னோர்களின் பெருமைகளையும் உணர்ந்து தலை நிமிர்ந்து நிற்கப் போகிறார்கள். அவன் நெஞ்சு பொறுக்கவில்லை. சுற்றிலும் நிலவிய சூழ்நிலையால் அவன் பாதிக்கப்படவில்லை. வீறுகொண்டு எழுந்தான். இவர்களைத் தூக்கி நிறுத்தித் தங்கள் பழம் பெருமையை உணரச் செய்து மற்ற எவர்க்கும் நாங்கள் தாழ்ந்தவர் இல்லை என்ற உணர்வினை ஏற்படுத்த அயராது பாடுபட்டான். விளவு ஒன்றும் அவ்வளவு நம்பிக்கையைக் கொடுப்பதாக இல்லை, எனினும் அவன் தளர்ந்து போகவில்லை. மக்கள் நெஞ்சில் பதியும்படியான தனது கூர் அம்பு போன்ற சொற்களை வீசி அவர்களைத் தட்டி எழுப்பப் பார்த்தான். அவன் வாயால் அதனைக் கேட்போம். பாரத ஜனங்களின் தற்கால நிலை என்ற தலைப்பிட்டு அவன் பாடும் கவிதை இது. “நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்” நம் மக்கள், நம் நாடு, நம் பாரம்பரியம், நம் பெருமை என்றெல்லாம் மார்தட்டிய பாரதிக்கு அப்படியென்ன குறை நேர்ந்தது. இந்த மக்கள் அப்படி என்னதான் செய்து விட்டார்கள். எப்படி நடந்து கொண்டார்கள். இவர்கள் அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே. எந்தப் புறம் திரும்பினாலும் பேய், பூதம் என்ற அச்சம். மந்திரம், மாந்திரீகம் என்கிற அச்சம். தெருவோடு போகும் ஒரு சிப்பாயைக் கண்டு அச்சம், ஊர்ச்சேவகன் வருவது கண்டு அச்சம், துப்பாக்கியோடு எவனாவது போனால் அவனைக் கண்டு அச்சம், ஆடம்பரமாக ஆடையணிந்து செல்பவனைக் கண்டு அச்சம், எப்போதும் எவரிடத்தும் கைகட்டி வாய்புதைத்து நிற்பார், பூனைகளைப் போல ஏங்கி நிற்கும் குணம். இப்படி மக்கள் அச்சமெனும் பேய்க்கு பயந்து கொண்டிருந்தால் எப்போது சுதந்திரம் எப்போது மக்களாட்சி என்ற நிலை அன்று இருந்ததை பாரதி சுட்டிக் காட்டுகிறார். இப்படிப்பட்ட மக்களைக் கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே என்று சொல்லி, இவர்களிடம் பிரிவினைகள் கொஞ்சமோ அவை ஒரு கோடி என்றால் அது அதிகமோ? ஒருவன் அஞ்சு தலைப் பாம்பொன்று கண்டேன் என்பான் அதை மறுத்து மகன் இல்லையில்லை ஆறுதலை என்று சொல்லிவிட்டல் போதும் மனம் வெறுத்துச் சண்டையிட்டுப் பிரிந்து போவார். இப்படி மக்களைப் பற்றியே சிந்தித்து அவர்கள் முன்னேற்றத்துக்காக கவி வடித்த மாபெரும் கவி பாரதி. இவனைத் தேசிய கவி என்கின்றனர். ‘தேசியம்’ என்பது யார் ஒருவருக்கும் சொந்தமானது அல்ல. தேசியம் என்பது ஒரு தேசத்துக்குள் அடங்கிய அனைவரையும், அனைத்துக் கொள்கைகளையும் உள்ளடக்கியது. எனவேதான் நம்முள்ளே புதைந்து கிடக்கும் பெருமைகளைப் பாடிய அதே நேரத்தில் சிறுமைகளையும் சாடி அவற்றினை நீக்கிக் கொள்ள அறிவுறுத்துகிறான். பாரதியை ஒரு தனிமனிதனாகப் பார்க்ககூடாது. அவனை ஒரு பெரிய இயக்கமாகப் பார்க்க வேண்டும். வள்ளலார் வாக்குப்படி “வாழையடி வாழையென வந்தத் திருக்கூட்ட” மரபில் வந்த கவிஞரில் பாரதியும் ஒருவன். கண்ணன் கீதையில் கூறியபடி “தருமம் குன்றி அதர்மம் தலைதூக்கி நிற்கும் போதெல்லாம் நான் அவதரிப்பேன்” என்று கூறியபடி, இந்தியரின் வாழ்வு குன்றி தலைகுனிந்து நின்ற நிலையில் பாரதி என்கிற விடிவெள்ளி தோன்றினான். ஆங்கில ஏகாதிபத்திய ஆதிக்கச் சக்தியால் இங்கு மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கமும், மனிதர் நோக மனிதர் பார்க்கும் கொடுமையும் தலை தூக்கி நின்ற காலத்தில் அதை அழித்து சத்தியத்தை நிலைநாட்டி “மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் கொடுமை இனி உண்டோ?” என்று உலகத்துக்கு எச்சரிக்கை விடுத்தவன் பாரதி. கீதையின் வாக்குப்படி அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்ட வந்த கவிஞன் பாரதி. பாரத தேசத்தில் முதன் முதலாக தேசிய உணர்வு ஏற்பட்ட நேரத்தில் அதைக் கண்டு பரமானந்தம் கொண்டு பாரதி எழுதுகிறான்:- “நாட்டில் ஓர் புதிய ஆதர்சம், கிளர்ச்சி, ஓர் தர்மம், ஓர் மார்க்கம் தோன்றுமானால், மேன்மக்களின் நெஞ்சனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர்போல் அவற்றை நோக்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்தில் பாரத நாட்டில் சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய “தேசபக்தி” என்ற நவீன மார்க்கம் தோன்றியது” என்று சுதந்திர எண்ணம் தோன்றியதைப் போற்றி எழுதுகிறான். தன் பிறவியின் நோக்கம் என்ன என்பதையும் ஒரு கவிதையில் அவர் சொல்கிறார். அவர் சொல்வது:- “புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துத் தமிழ் மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும் வசை என்னால் கழிந்த தன்றே!” எட்டயபுரம் மன்னருக்கு எழுதிய மடலில் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் பாங்கு இது. அது சரி, தமிழ் மொழிக்குப் புகழ் சேர்க்கப் பிறந்த கவி யென்றால் நீங்கள் புதுமையாக என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு அல்லவா? அதற்கும் அவன் விடை சொல்லுகின்றான். “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொல் புதிது, சோதி மிக்க நவகவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை” தன்னுடையது என்பது அவன் வாக்கு. பாரதிக்கு முன்பு தமிழிலே சுவை மிக்க கவிதைகள் இல்லையா, பொருட் செறிந்த கவிதைகள் இல்லையா என்ற கேள்விக்கு “இருந்தன” என்பதுதான் விடை. நம் இலக்கியங்களில் உள்ள பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்கணக்கு எனும் தொகை நூல்களோடு, ஐம்பெரும் காப்பியங்கள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் இவை தவிர பரணி, உலா, பிள்ளைத் தமிழ் இவைகளும் ஏராளமாக இருந்தன. ஆனால் இவற்றிலெல்லாம் சுவை பழையது, சொல் பழையது, பொருள் பழையது, வளமும் பழையது. புதிய சொற்கள், புதிய எழுச்சி, தூண்டுதல், தன்னைத்தானே உணரச் செய்யும் ஆற்றல் மிக்க புதுயுக எழுச்சிக் கவிதைகள் பாரதியினுடையது. பாரதியாருக்கு முன்னோடியாக தாயுமானவரையும், வள்லலார் இராமலிங்க அடிகளாரையும் சொல்லலாம். எளிய கவிதைகள், எளிய நடை, புதிய சந்தம் இப்படி பாரதிக்கு இவர்கள் வழிகாட்டியாக இருந்தனர். நம்மிடையே மதங்கள் பல. ஆயினும் எல்லா மதங்களும் போதிப்பது சன்மார்க்கம் மட்டுமே. பேதங்களை மனிதன் தானே உண்டாக்கிக் கொண்டான். பிறவியில் பேதங்கள் ஏது? “பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்கிற புதிய மதத்தைத் தோற்றுவித்தான். ஷண்மத ஸ்தாபனம் நடந்த இந்த நாட்டில் எந்தவொரு கடவுளரையும் குறிப்பிடாமல் இந்த நாட்டைப் பிறந்த பொன்னாட்டை இறைவனாக மதிக்கக் கற்றுக் கொடுத்தவன் பாரதி. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் பண்டைய தமிழினத்தின் மனிதாபிமானக் கொள்கையின் தொடர்ச்சி இது. மனிதாபிமானத்தின் தொடர்ச்சியே “தேசாபிமானம்” என்கிற தேசபக்தி. என் நாடு, என் மக்கள், எங்கள் வளம் இவற்றைப் பற்றிய பெருமிதம் எல்லோருக்கும் வேண்டும். அதனைத்தான் “பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு” என்று பாரதியை மார்தட்ட வைத்தது. அப்படி தேசபக்தி இல்லாமல் தாயகத்தின் பெருமைகளை அன்னியரின் காலடியில் போட்டுவிட்டு பரதேசிகளின் முன்பு சுதேசி உணர்வின்றி கிடக்கும், வெள்ளைக்காரர்களிடம் அடிமைத் தொழில் புரிந்து, அவனிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலை பற்றி “மறவன் பாட்டு” எனும் பாடலில் “மண் வெட்டிக் கூலி தின்னலாச்சே, எங்கள் வாள் வலியும் தோள் வலியும் போச்சே” என்று சொல்லிவிட்டு அன்னியருக்குச் சேவகம் செய்து வயிறு வளர்க்கும் அடிமைகளைப் பார்த்துச் சொல்லுகின்றான் “சீ! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” என்று. இந்த நிலைமை மாறாதா? விடிவெள்ளி தோன்றாதா? என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஒரு புதிய கோணங்கியின் குரல் கேட்கிறது. அவன் என்ன சொல்லுக்கிறான். நள்ளிரவு முடிந்து பகல் தோன்றும் அறிகுறிகள் தெரியும் வேளையில் அவன் குரல் கூறும் சொற்கள் மனதுக்கு ஆறுதல் தருகிறது. இதோ அவன் சொல்லுகிறான்:- “நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது தரித்திரம் போகுது; செல்வம் பெருகுது படிப்பு வளருது; பாவம் தொலையுது படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான், ஐயோவென்று போவான்.” இப்படி நல்ல குறி சொல்லிக் கொண்டு வந்த அந்த கோணங்கி நமக்கு உற்சாகம் பெருகும்படியான சொற்களைத் தொடர்ந்து சொல்லுகிறான். ” ………………………….. வியாபாரம் பெருகுது தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான் சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது எந்திரம் பெருகுது; தந்திரம் வளருது” இந்தப் பெருமையெல்லாம் நமக்குக் கிட்ட வெண்டுமென்றால் சும்மா இருந்தால் கிடைத்து விடுமா? சோம்பித் திரிந்தால் வந்து விடுமா? நிச்சயம் கிடைக்காது. அந்த நிலையை நாம் அடைந்திட உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும். அப்படிப் பாடுபட்டால் “சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது எட்டு லட்சுமியும் ஏறி வளருது பயம் தொலையுது, பாவம் தொலையுது சாத்திரம் வளருது; சாதி குறையுது நேத்திரம் திறக்குது; நியாயம் தெரியுது” அப்படியானால் பழைய பழக்க வழக்கங்கள் தொலைந்து போகும். புதிய வாழ்க்கை கிடைத்திடப் போகுது. அந்த மாற்றம் ஏற்பட எத்தனை நாட்கள், எத்தனை காலம் ஆகும்? இந்த கவலை நியாயம்தானே? மாற்றங்கள் சிறுகச் சிறுகக் கிடைத்தால் வெகு காலம் ஆகுமே. நாம் நம்மை உணர்ந்து கொண்டோம். பழமை எனும் இருட்டறையிலிருந்து புதிய வெளிச்சத்துக்கு வரும்போது இருள் பிரிந்து வெளிச்சம் வருவது போல மெல்ல மெல்ல வரக்கூடாது. பின் எப்படி வர வேண்டும். இருள் நிறைந்த அறையின் மின்சார விளக்கின் சுவிட்சைப் போட்டவுடன் பளிச்சென்று வரும் வெளிச்சத்தைப் போல வரவேண்டும். அதன் பெயர்தான் புரட்சி. ரஷ்யாவில் ட்சார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து லெனின் செய்த புரட்சி பாரதிக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். அந்தப் புரட்சியை பாரதி வானளாவப் புகழ்ந்தான். “ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி” என்றான். அப்படி ஆகாவென்று நம் வாழ்க்கையில் ஓர் புரட்சி ஏற்படுமா? ஆம், ஏற்படப் போகிறது என்கிறான். எப்படி? “பழைய பைத்தியம் படீலென்று தெளியுது வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது சொல்லடீ சக்தி, மலையாள பகவதி தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது” என்று நமது பழமை படீலென்று வெடித்துச் சிதறி புதிய மாற்றங்கள் உடனடியாக ஏற்படப் போகின்றன என்று நமக்கு நம்பிக்கை ஊட்டியவன் பாரதி. இந்தக் கவிதைகளெல்லாம் நம் வாழ்க்கையோடு ஒட்டியிருப்பதால் இதை கவிநயத்துக்காக அல்ல, வாழ்க்கையின் வழிகாட்டும் நம்பிக்கை ஒளியாகப் பார்க்க வேண்டும். அடிமைத் தளையிலிருந்து விடுபட்ட மக்கள் சும்மா இருந்தால் சுகம் கிட்டுமா? கிட்டாது. பின் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அவனே பதிலையும் சொல்கிறான். நாட்டின் தொழில் வளத்தைப் பெருக்குங்கள். எதற்கும் அயல்நாட்டை எதிர்பார்க்கும் நிலைமையை மாற்றுங்கள். “இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே எந்திரங்கள் வகுத்திடுவீரே கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே கடலில் மூகி நன் முத்தெடுப்பீரே அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரம தேவன் கலை இங்கு நீரே!” என்று நம்மை ஊக்குவிக்கிறான். புதிய பாரதம் படைக்கப் புரப்படுங்கள் என்று நம்மை அவசரப்படுத்துகிறான். எதற்கும் அயலாரை அண்டி நின்ற நமது நிலைமை மாறி தன்னிறைவு அடைந்த பின் நம்மைப் போல பிந்தங்கியவர்களுக்கு நாம் உதவ வேண்டும். பிறருக்கு வழிகாட்ட வேண்டும். இதைச் சும்மா வார்த்தைக்காகச் சொல்லவில்லை அவன் திரும்பத் திரும்ப பலமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறான். எப்படி? “எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற் களிக்கும் – ஆம் இந்தியா உலகிற் களிக்கும் – ஆம், ஆம் இந்தியா உலகிற் களிக்கும்” அவ்வளவு நம்பிக்கை, இந்த மண் மீது, இந்த மண்ணின் மைந்தர்கள் மீது.வெற்றி பெற்றால் துள்ளிக் குதிப்பதும், வீழ்ந்து விட்டால் துவண்டு போவதும் மனித இயல்பு. ஆனால் இந்த இயல்பு மானுடரின் வாழ்வு உயரப் பயன்படுமா என்றால் பயன்படாது. வெற்றியும் தோல்வியும் வீரருக்கழகு. வெற்றியினால் உன்மத்தனாகாமல், தோல்வியினால் துவண்டு போகாமல் வாழும் நிலையை அமர நிலை என்கிறான். முதல் உலக யுத்தம் வந்தது. ஜெர்மனி சின்னஞ்சிறு நாடான பெல்ஜியத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் அபகரித்துக் கொள்கிறது. இங்கு பெல்ஜியம் வெகு சுலபத்தில் வீழ்ந்து விடவில்லை. தங்கள் நாட்டுக்காக அந்த மக்கள் தங்கள் இன்னுயிர் ஈந்து மண்ணோடு மண்ணாக மடிய நேரிடினும் மானத்தைக் காப்போம் என்று போராடி உயிர் நீத்தனர். இந்த நிகழ்ச்சி பாரதியின் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தியது.வீரம் செறிந்த அந்த பெல்ஜிய மக்களைப் பாராட்டுகிறான். “அறத்தினால் வீழ்ந்து விட்டாய் அன்னியன் வலியனாகி மறத்தினால் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்யாய் முறத்தினால் புலியைத் தாக்கி மொய்வரைக் குறப்பெண் போல திறத்டினால் எளியயாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்” இந்தச் செய்தியைச் சொல்லும் போது பெல்ஜியம் அடைந்த வீழ்ச்சியை “அறத்தினால் வீழ்ந்தாய்” என்கிறார். “திறத்தினால் எளியையாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்” எனும்போது உன் வீழ்ச்சி, உன் தோல்வி, வீழ்ச்சியுமல்ல, தோல்வியுமல்ல ஏனென்றால் போர்க்களத்தில் நீ “உருளுக தலைகள், ஓங்குக மானம் என்று எதிர்த்து நின்றாய்” என்கிறார். தோல்வியடைந்தது பெரிதல்ல. எதிரி வலிமையானவன் என்றாலும் அவனை எதிர்த்து நின்று நான் அழிந்தாலும், மானம் நிலைத்து நிற்கும் என்று போரிட்டாயே அதற்காகத் தலை வணங்குகிறேன் என்கிறார். இது பெல்ஜியத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுக்கும் பாரதி வழங்கும் பாராட்டுரை அதுவேயாகும்.தமிழர்கள் உலக நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேறி விட்டனர். அப்படி அவர்கள் குடியேறிய இடங்களிலெல்லாம் அவர்கள் பாலையும் தேனையும் பருகிடவில்லை. கருடுமுரடான வாழ்க்கை; அடிமைச் சங்கிலியால் பிணிக்கப்பட்ட வாழ்க்கை. நித்திய கண்டமாக இருந்த அவர்கள் வாழ்வைக் கண்டு பாரதி கண்கலங்கினார். கடல் கடந்து வாழும் தமிழ்ப் பெண்களின் துயரம் அவரை மீளாத் துயரில் ஆழ்த்தியது.”பிஜித் தீவில் தமிழ்ப் பெண்கள் படும் தொல்லைகள்” குறித்த அவரது பாடலைப் படித்துக் கண்ணீர் சிந்தாதார் யார் இருக்க முடியும்? பாரதியாரோடு வ.வெ.சு.ஐயர், மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோர் பேசிக்கொண்டிருந்த போது பாரதி சொன்னார்: “நம் தமிழ்நாட்டுப் பெண்கள் பிஜித் தீவில் படும் கஷ்டங்களைப் பற்றி யாரோ ஒருவர் பேசிய ஆங்கிலப் பேச்சை என்னை மொழிபெயர்க்கச் சொன்னார்கள். அதனைக் கவிதையாகத் தந்திருக்கிறேன்” என்றார். பாட்டுக்கு என்ன பெயர் வைத்தீர்கள் என்றார் வ.வெ.சு.ஐயர். பிஜித் தீவில் உள்ள ஏராளமான கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யத்தான் இந்தியர்கள் அங்கே சென்றார்கள். ஆகையால் அந்தப் பாடலுக்குக் “கரும்புத் தோட்டம்” என்று பெயர் வைத்தேன் என்றார் பாரதி.எங்கே அந்தப் பாடலைப் பாடுங்கள் என்றனர் ஐயர். பாரதியார் பாடினார், கேட்டவர்கள் கண்கள் கண்ணீர் சிந்தின. அது என்ன விவரம் என்று பாரதியாரிடம் கேட்டபோது சொன்னார். சென்னையில் தொழிலாளர் வசிக்கும் பகுதியொன்றில் கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு மனைவி தன் குழந்தையுடன் வீட்டுக் கதவைத் தாளிட்டுவிட்டு உள்ளே வந்தாள். அப்போது ஒரு ஆள் அவசரமாக ஓடிவந்து அவளது கணவன் விபத்தில் அடிபட்டுவிட்டான் சீக்கிரம் வா என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான்அப்படிச் சென்றவன் நேராகத் துறைமுகத்துக்குச் சென்று அங்கு நின்று கொண்டிருந்த கப்பலில் அவளை ஏறச் சொன்னான். என்னை ஏன் இங்கு அழைத்து வந்தாய். என் கணவர் எங்கே என்றாள் அவள். இங்கு ஒரு வேலையாக வந்தபோதுதான் விபத்து என்று சொல்லி அவளை அங்கு அழைத்துச் சென்றான். அவள் கப்பலுக்குள் ஏறியதும் கப்பல் நகரத் தொடங்கியது. அவள் அலறி அழத் தொடங்கினாள். சுற்றிலும் அவளைப் போல் அபலைப் பெண்கள் பலர் இருந்தார்கள். அவர்களும் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களை நீங்களெல்லாம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னார்கள், ‘பெண்ணே, நாமெல்லாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். நம்மையெல்லாம் அடிமைகளாக்கி விட்டார்கள். பிஜித்தீவில் இருக்கும் ஆண்களுடைய சுகத்திற்காக நாம் நாசம் செய்யப்பட்டு விட்டோம் என்றார்கள். இப்படி பாரதி சொல்லிக் கொண்டிருக்கையில் வ.வெ.சு.ஐயர் கேட்டார், அந்த கணவன் விஷயம் என்ன ஆயிற்று என்று. பாரதி சொன்னார், அந்தக் கணவன் வீடு திரும்பிய போது அங்கு ஒரு துண்டுச் சீட்டில் அவன் மனைவி எழுதியதைப் போல ‘உன் ஏழ்மைத் தனத்தில் என்னால் இருக்க முடியவில்லை. நான் பெரிய பதவியை அடையப் போகிறேன், என்னை மறந்து விடு’ என்றிருந்ததாம். அதையும் இந்தக் கொடுமையைச் செய்த பாவிகள் செய்திருந்தார்கள். இந்த செய்தியைக் கேட்ட மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரி அழத் தொடங்கினாள். வ.வெ.சு.ஐயர் சொன்னார், பெரியவர்களாகிய நம்மாலேயே இந்தத் துயரச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையே, இவள் என்ன செய்வாள் பாவம் சின்னப் பெண் என்றார். யதுகிரியைத் தேற்றும் பொருட்டு பாரதி சொன்னார், ‘அம்மா யதுகிரி நீ பயப்படாதே. நான் பாடியிருக்கிற இந்தப் பாட்டால், காளி அந்தப் பெண்களின் அடிமைத்தனம் விலகிப் போகும்படி செய்வாள், நான் அவளிடம் முறையிட்டிருக்கிறேன்’ என்றார். அந்தப் பாடலில் வரும் வரிகளைப் பாருங்கள்:- “கரும்புத் தோட்டத்திலே – ஆ! கரும்புத் தோட்டத்திலேகரும்புத் தோட்டத்தில் அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்து கின்றனரே – ஹிந்து மாதர் தம் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய் சுருங்கு கின்றனரே – அவர் துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு மருந்திதற் கில்லையோ – செக்கு மாடுகள் போலுழைத் தேங்குகின்றனரேபெண்னென்று சொல்லிடிலோ – ஒரு பேயும் இரங்கும் என்பார் தெய்வமே எண்ண மிரங்காதோ – அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும் மண்ணிற் கலந்திடுமோ – தெற்கு மாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே – தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் அந்த நாட்டை நினைப்பாரோ – எந்த நாள் இனிப்போய் அதைப் பார்ப்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ – அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே – துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ – அவர் விம்மி அழவும் திறங்கெட்டு போயினரே நெஞ்சம் குமுறுகின்றார் – கற்பு நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப் பஞ்சை மகளிரெல்லாம் – துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமும் இல்லாதே – அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினிலே மிஞ்ச விடலாமோ? ஹே! வீர கராளி! சாமுண்டி காளி!! பாடலை முடிக்கும் போது அந்த வீரமாகாளியிடம் முறையிட்டு முடித்து விடுகிறார். நம்மால் இனி ஆவது ஒன்றுமில்லை. எந்த ஆதரவும் இல்லாமல் அந்த பேதைப் பெண்கள் கண்ணற்ற அந்தத் தீவினில் படும் கொடுமையை எண்ணி எண்ணி அவர் மனம் அரற்றியிருக்கிறார். அந்தப் பெண்கள் விம்மி அழும் விதத்தை அவர் எத்தனை ‘விம்மி விம்மி’ என்று குறிப்பிடுவதைக் கவனியுங்கள். தூங்கிக் கிடந்த சமுதாயத்தை தட்டி எழுப்ப நினைத்தவன் பாரதி. எனவேதான் அவன் தாலாட்டு என்று எதையும் பாடி வைக்கவில்லை. தமிழ்நாட்டில் மற்ற கவிஞர்களெல்லாம் தாலாட்டுப் பாடி குழந்தைகளைத் தூங்க வைத்தனர். ஆனால் இங்கு குழந்தைகள் கூட தூங்கக்கூடாது, விழித்தெழ வேண்டும் என நினைத்தவன் பாரதி. பாரதி காலத்துப் புலவர்கள் பலரும் தாலாட்டுப் பாடினர். கவிமணி பாடுகிறார்: “கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு, ஆராரோ ஆராரோ, ஆரிவரோ, ஆராரோ” என்றும் பாவேந்தர் பாடுகிறார்: “சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார் செய்கைக்கு, நாணி உறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு” என்றும் பாவேந்தரின் மற்றொரு தாலாட்டு: “மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின் பெருக்கே, என் செந்தமிழே கண்ணுறங்கு” நாமக்கல்லார் பாடியது: “சீராரும் காவேரி தேவி திருவருளால் வாராமல் வந்துத்த மாமணியே கண்ணுறங்கு” என்று இப்படி பலரும் பாடியிருக்கையில் பாரதி மட்டும் “பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி” என்று பாரத அன்னையைத் துயில் எழுப்பிப் பாடுவதை மட்டும்தான் நாம் காண முடிகிறது. ஆக, தமிழரை விழித்திருக்கச் சொன்னான் பாரதி. மொழிப்பற்று: சமூகத்தின் பால் அவனுக்கிருந்த அக்கறையைப் போலவே மொழியின் பாலும் அவன் அதிக அக்கறை காட்டினான். தமிழ்மொழி உலக மொழி என்பது பாரதியின் கருத்து. தமிழ் மொழி “உயர் ஆரியத்திற்கு நிகர்” என்றும் “தமிழ்ச்சாதி ஆரியக் குடும்பத்திலே தலைக் குழந்தை” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதிலிருந்து, இந்திய மொழிகளில் தமிழ் மொழிதான் தலைமொழி என்பது பாரதியின் உறுதியான முடிவு. அதோடு மட்டுமல்ல, ஒருநாள் தமிழ் மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தலைமை ஏற்கும் என்பது அவன் துணிபு. அவன் கட்டுரையில் காணப்படும் சில வரிகள் இதோ: “எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. அது பற்றியே தமிழைப் போல வலிமையும், திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமே இல்லை என்கிறேன். இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளி உலகத்திலே பரவாமலிருப்பதை நான் அறிவேன். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலகம் முழுவதும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள்” எவ்வளவு தீர்க்கமான, உறுதியான பிரகடனம் இது. தமிழ் மொழி வாழ்த்து என்ற பாடலில் அவன் சொல்லும் கருத்து வியப்பைத் தருகிறது. தமிழ் மொழி வானம் எவைகளையெல்லாம் பார்க்க, அறிந்து கொள்ள முடியுமோ அவ்வளவையும் அறிந்த மொழியாம். “வானம் அளந்த தனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே! வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே! ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழியவே!” இங்கு வானம் என்ற சொல் உலகைக் குறிக்கும் சொல் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தனது பாரதி நினைவுச் சொற்பொழிவுகளில் கூறியிருக்கிறார். பழையன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்க முடியாத மாற்றங்கள். பழைய பாரதத்தைப் பார்த்துப் போ போ என்று சொன்ன பாரதி புதிய பாரதத்தை வா வா என்று வரவேற்பதைக் காண்கிறோம். பழைய தீமைகள் அடியோடு பொசுங்கிப் போக, புதிய பாரதம் இளைய பாரதத்தவரால் உருவாகும் என்பது அவரது கணிப்பு. தமிழ் மொழியின் பாரம்பரியப் பெருமையும், இலக்கியத் திறனும் ஆதிக்கச் சக்திகளால் ஒளியிழந்து கிடந்த நிலையில் தமிழின் பெருமையைத் தூசி தட்டி வெளி உலகு கண்டு வியக்கும் வண்ணம் ஒளிரச் செய்கிறார் பாரதி. அவரது இந்தச் செயலுக்கு கம்பனின் காப்பியத்தில் ஒரு ஒப்புமையைக் காட்டலாம். இரண்ய வதைப் படலத்தில் இரண்யனை வதைக்க நரசிங்கம் அவதாரம் செய்து சீற்றங்கொண்டு சிரிக்கிறதாம். அதை கம்பன் வாக்கால் சொல்லுவதானால்”திசை திறந்தது, அண்டம் கீறச் சிரித்தது அச்செங்கண் சீயம்” திசைகள் பிளந்து கொண்டனவாம். அண்டம் அதிர அதிலிருந்து கண்கள் சிவக்கப் புறப்பட்டது சீற்றம் கொண்ட அந்தச் சிங்கம்” என்கிறது கம்பனின் காவியம்.அதனைப் போல தமிழ் மொழிக்கு ஓர் தாழ்வு ஏற்படுமானால் அதனை முறியடித்து தமிழின் பெருமையை நிலைநாட்ட பாரதி எனும் சிங்கம் சீயமென உருவெடுத்தது எனலாம்.பாரதியாரின் “ஸ்வதேச கீதங்கள்” எனும் தலைப்பில் வெளியான பாடல்களில் முதல் பாடல் “வந்தே மாதரம் என்போம்” என்பது. இந்தப் பாடலில் வரும் வரிகளில் “ஜாதி மதங்களைப் பாரோம் – உயர் ஜன்மம் இத்தேசத்திலே எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே – அன்றிவேறு குலத்தின ராயினும் ஒன்றே.” என்று பிரகடனப் படுத்தியதோடு “இங்கு எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று தனது பிரகடனத்தை நிறைவு செய்கிறார்.பாரதி தன்னைப் பிறரிடமிருந்து பிரித்துத் தான் இயற்றும் கவிதைகள் புதியவை என்று கூறப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று அவர் தமிழில் பல புதிய சொற்களை உருவாக்கி எழுதிக் காட்டியிருக்கிறார். தமிழின் வளர்ச்சி இதுபோன்ற செயல்களில்தான் இருக்கிறது. ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்குப் புதிய சொற்களை படைத்துக் காட்டினார். சான்றாக ‘விடுதலை’ என்ற சொல் ஆன்மீகத்தில் ‘முக்தி’ அல்லது ‘வீடுபேறு’ எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பாரதியும் ஒரு கட்டுரையில் ‘வீடு’ எனும் சொல்லுக்கு ‘விடுதலை’ என்பது பொருள் என்று எழுதுகிறார். அவரே இந்திய சுதந்திரத்தைச் சுட்டும் சொல்லாக விடுதலையைப் பயன்படுத்தினார். சமுதாயத்தில் அழுத்தப் பட்டோரின் உயர்வினையும் ‘விடுதலை’ எனும் பொருளில் ‘பெண் விடுதலை’ என்றெல்லாம் எழுதுகிறார். அப்போது ரஷ்யாவில் உதயமான கம்யூனிச, சோஷலிச இயக்கத்தை சமதர்மம், சமத்துவம், பொதுவுடமை எனும் சொற்களால் குறிப்பிட்டு எழுதுகிறார். குயில் பாட்டில் குயிலின் இசையைக் கேட்கும் கவிஞர் அதன் சுவை பற்றி எழுதும் போது ‘தீயின் சுவை’ என்கிறார்.’மெம்பர்’ எனும் சொல்லுக்கு என்ன தமிழ்ச்சொல் என பாரதிக்கு ஓர் ஐயப்பாடு. அப்போது அதற்கெல்லாம் தமிழ்ச்சொல்லை யாரும் பயன்படுத்தவில்லை ஆகையால் அதற்கு நேரான தமிழ்ச்சொல் கண்டுபிடிக்க முயல்கிறார். அவரே கூறுவது இது:-”‘மெம்பர்’ என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ‘அவயவி’ என்பது சரியான வார்த்தை இல்லை. ‘அங்கத்தான்’ கட்டி வராது. ‘சபிகள்’ சரியான பதந்தான் ஆனால் பொது ஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டு பிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன். “உறுப்பாளி” ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக ‘மெம்பர்’ என்றே எழுதிவிட்டேன். இன்னும் ஆர, அமர, யோசித்துச் சரியான பதங்கள் கண்டு பிடித்து மற்றொரு முறை சொல்லுகிறேன்.”பாரதி தமிழின் உயர்வுக்காகச் சில கனவுகள் கண்டான். அவற்றை ஓரளவு வரிசைப்படுத்தியிருக்கிறேன். அந்த கனவுகள் கைப்படுமா? மக்கள்தான் சொல்ல வேண்டும். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்” “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.” “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி மனத்திற் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல் நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட செயல் வேண்டும் கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே!””நோவு வேண்டேன்; நூறாண்டு வேண்டினேன் அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன் உடைமை வேண்டேன், உன் துணை வேண்டினேன் வேண்டாதது அனைத்தும் நீக்கி வேண்டியது அனைத்தும் அருள்வது உன் கடனே!” “எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ண வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா” “மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும்” “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் தெய்வம் துணை செய்ய வேண்டும் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று – இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் – பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்” பாரதி கண்ட கனவுகள் மெய்ப்படுமா என்பது மக்கள் எங்ஙனம் அவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.நிறைவாக பாரதியின் “எங்கள் மதம்” எனும் தலைப்பில் ‘உயிர் பெற்ற தமிழர் பாட்டு” எனும் பாட்டிலிருந்து சில வரிகளைத் தருகிறேன். “மனிதரில் ஆயிரம் சாதி – என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை” என்று சொல்லிவிட்டு”ஒன்றுண்டு மானிடச் சாதி – பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார் இன்று படுத்தது நாளை – உயர்ந்து ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும்”.”நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் – இந்த நாட்டினில் இல்லை, குணம் நல்லதாயின் எந்தக் குலத்தின ரேனும் – உணர் வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.” இப்படிச் சொல்லிவிட்டு யார் மேற் குலத்தார் எனும் வினாவுக்கு விடைதரும் பாங்கில் அவன் சொல்லும் செய்தி என்ன தெரியுமா? “வையகம் காப்பவரேனும் – சிறு வாழைப் பழக்கடை வைப்பவரேனும் பொய் அகலத் தொழில் செய்தே – பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்” என்கிறான். எது யோகம்? “ஊருக்குழைத்திடல் யோகம். நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம், போருக்கு நின்றிடும் போதும், உளம் பொங்கல் இல்லாத அமைதிதான் மெய்ஞானம்”. பகவத் கீதை சொல்லும் கருத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டான் பாரதி. தான் மற்றவர்களைப் போல சாதாரண மனிதன் இல்லை. பசி வந்தால் வயிற்றுக்கு இட்டு, பிணி வந்தால் நொந்து போய் படுக்கையில் படுத்து, காலன் வந்து அழைக்கையில் இறந்து போகும் சாதாரண மனிதனா நான்? இல்லை இல்லை. பின்பு நான் யார் தெரியுமா?” கேட்கிறான் பாரதி. அதற்கான பதிலை அவன் வாக்கால் கேட்போம். “தேடிச் சோறு நிதம் தின்று – பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு பின் என்னதான் செய்வாய்? சொல்லுகிறான். “நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான் அதற்கடுத்து ராமானுஜனும் போனான் சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான் பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான் பார் மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்!” இது எப்படி சாத்தியமாகும்? நீ மட்டும் சாகாமல் இருப்பது எப்படி? “கேளீர்! நாணத்தை கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் மிச்சத்தைப் பின் சொல்வேன்; சினத்தை முன்னே வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை” என்று நமக்கெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்.பாரதியின் பல்வேறு பரிணாமங்களையும் முழுமையாக நாம் கண்டு கொள்ளாவிட்டாலும் அவனை ஆங்காங்கே தொட்டுச் சென்றிருக்கிறோம். இந்த சமூகத்தின் மீதும், மொழியின் மீதும், தேசத்தின் மீதும் அவன் கொண்டிருந்த காதலை ஓரளவுக்குப் பார்த்தோம். பாரதியை இனியும் தொடர்ந்து தேடுவோம். வாழ்க பாரதி புகழ். 18 ஊத்துக்காடு வேங்கட கவி [] ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் ஊத்துக்காடு வேங்கட கவியென்று புகழ்பெற்ற ஊத்துக்காடு வெங்கடசுப்பையருடைய காலம் 1700 முதல் 1765 வரை என்று தெரிகிறது. மிகச் சரியான வரலாறு எழுதி வைக்கப்படாமையல் சில விவரங்கள் பரம்பரையாகவும், உறவினர்கள் மூலமும் தெரிய வருகின்றன. இவர் தமிழ் ஆவணி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. இவருடைய தந்தையார் இராமச்சந்திர வாதூலர், தாயார் கமலநயனி அம்மாள். தந்தையார் பெயரோடு ஒட்டியிருக்கிற சொல்லிலிருந்து இவர் வாதூல கோத்திரத்தில் உதித்தவராக இருக்கலாம். இவருக்கு ஒரு மூத்த சகோதரர் உண்டு. அவர் பெயர் காட்டு கிருஷ்ணையர் என்பது. இவர் தஞ்சாவூரை            ஆண்ட மராத்திய மன்னனான பிரதாபசிம்ஹ மகாராஜாவிடம் ஆஸ்தான பாடகராக இருந்திருக்கிறார். இவர் மன்னார்குடியில் பிறந்தவர் என்றாலும் பாபநாசத்தை அடுத்த ஆவூர் அருகிலுள்ள ஊத்துக்காடு எனும் கிராமத்தில்தான் வளர்ந்தார். இவ்வூருக்கு அருகில்தான் பாகவதமேளாவுக்குப் பெயர்போன மிலட்டூர் எனும் ஊரும், புகழ் வாய்ந்த கர்ப்பரக்ஷாம்பிகா சமேத முல்லைவனநாதர் எழுந்தருளியிருக்கும் திருக்கருகாவூர் எனும் கிராமமும் அமைந்திருக்கின்றன. பொதுவாக குழந்தை பிறப்பது தாயாருடைய பெற்றோர்கள் இருக்கும் ஊரில் என்பதால், இவருடைய தாயார் ஊர் மன்னார்குடியாகவும் தந்தையார் ஊர் ஊத்துக்காடு எனவும் இருக்கலாம். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் உத்தமதானபுரத்தில் பிறந்தார் என்று புத்தகங்களில் எழுதிவருகிறார்கள். உண்மையில் அவர் பிறந்த ஊர் ஆடுதுறை அருகிலுள்ள சூரியமூலை எனும் கிராமம், அது அவரது தாயார் ஊர். தந்தையார் வாழ்ந்த ஊர் உத்தமதானபுரம். இது பாபநாசம் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இதுபோல சில தவறுகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. ஊத்துக்காடு அருகில் உள்ள மிலட்டூர் கிராமம் நாயக்க மன்னர்கள் காலத்தில் இங்கு அறிமுகமான தெலுங்கில் கவிதையும், உரைநடையுமாக அமைந்த ‘பாகவதமேளா’ எனும் நாட்டிய நாடகங்களுக்குப் பெயர் போனது. இன்றும்கூட ஒவ்வோராண்டும் இங்கும் வேறு சில ஊர்களிலும் இந்த பாகவதமேளா எனும் நாட்டிய நாடகங்கள் நடந்து வருவதை அறிவீர்கள். இதில் ஆண்களே பெண்வேடமிட்டு பாடி, ஆடி நடிப்பார்கள். வசனம் பெரும்பாலும் தெலுங்கில்தான் இருக்கும். இந்த ஆண்டில்தான் மிலட்டூரில் தமிழில் “கீதோபதேசம்” எனும் பெயரில் தமிழில் நாட்டிய நாடகம் அரங்கேறியது. [] இந்த சூழ்நிலையில் வளர்ந்த காரணத்தால் வேங்கடசுப்பையர் இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கலைகளில் ஆர்வமும், திறமையும் உடையவராக விளங்கினார். ராஜா பாகவதர் என்று ஒருவர் அப்போது இருந்தார். இவரை பூரனூர் நடேச பாகவதர் என்றும் குறிப்பிடுவார்கள். இவருடைய பாடல்கள் முதலியன வேங்கடசுப்பையருக்குப் பிடிக்கும். அவற்றைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டினார். கிருஷ்ண யோகி என்றொருவர் இருந்தார். நல்ல திறமைசாலி. அவரிடம் இசை, நாட்டியம் இவற்றைக் கற்றுக்க்கொள்ள இவர் விரும்பினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஆகையால் இவர் சரியான குருநாதர் அமையாமல் ஊத்துக்காடு கிராமத்திலிருந்த ஆலயத்தில் இறைவன் சந்நிதியின் முன்பாக அமர்ந்து தானாகவே பாடத் தொடங்கினார். நீங்கள் ஊத்துக்காடு வந்து அந்த கிருஷ்ணன் ஆலயத்தை ஒரு முறை பார்க்க வேண்டும். அங்கு கருவறையில் அமைந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம், காளிங்கனை வதம் செய்யும் பாலகிருஷ்ணன் வடிவத்தில் அமைந்திருக்கும். காளிங்கன் எனும் பாம்பு படமெடுத்து ஸ்ரீ கிருஷ்ணனோடு போரிடும்போது, அதனை அது வாழும் சுனையிலேயே எதிர்த்து போரிட்டு அடக்கி, அதன் படமெடுத்த தலைமீது நின்று ஆடி, அதன் கொட்டத்தை அடக்கிய காட்சியில், காளிங்கன் தலைமீது நிற்கும் கோலமும், ஒரு கையால் காளிங்கனின் வாலின் நுனியைப் பிடித்திருப்பது போலவும் அந்த அழகிய உருவம் காணப்படுகிறது. இதில் ஓர் அற்புதம் என்னவென்றால், அந்த சிலையில் காளிங்கன் தலைமீது கிருஷ்ணனின் கால் படுவது போல தோன்றினாலும், காலுக்கும் காளிங்கன் தலைக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி, கண்ணுக்குத் தெரியாத இடைவெளி உண்டு. அதன் மூலம் ஒரு காகிதத்தை விட்டு அப்புறம் எடுத்துவிடலாம். [] அப்படிப்பட்ட அற்புத அமைப்பு உள்ள சிலை அது. அந்த கிருஷ்ணன் அனுக்கிரகம் தான் வேங்கடசுப்பையர் வேங்கடகவியானார். இவருடைய வரலாற்றைக் கூறுபவர்கள், அவர் அந்த கிருஷ்ணன் சந்நிதியில் பாடும் போது, அவர் முன்பு ஸ்ரீ கிருஷ்ண பகவான் தோன்றி அருள் புரிந்ததாகக் கூறுவார்கள். வேங்கடகவி அரிய பல பாடல்களை ஸ்ரீ கிருஷ்ணன் மீது பாடிச் சென்றிருக்கிறார். இன்று அவருடைய பாடல்களைப் பாடாத பாடகர்கள் உண்டா? ‘அலைபாயுதே’, ‘ஆடாது அசங்காது வா கண்ணா’, ‘குழலூதி மனமெல்லாம்’, ‘யார் என்ன சொன்னாலும்’, ‘விஷமக்காரக் கண்ணன்’ போன்ற பிரபலமான பாடல்களை இயற்றியவர் வேங்கடகவிதான். இன்னும் பல பாடல்கள் வெளிவராமலே இருக்கின்றன. இவர் 60 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். வேறு சிலர் 80 அல்லது 90 வயது வரை வாழ்ந்தார் என்றும் சொல்கிறார்கள். எது சரி? எது எப்படியோ அழியாத பல அற்புத பாடல்களைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்பது போதாதா என்ன? இவருடைய பாடல்கள் 200, 250 ஆண்டுகளைத் தாண்டி இன்னமும் உயிர்ப்போடு பாடப்படுகிறது என்பதே பெரிய சாதனை அல்லவா? புனிதமும், புலமையும், ஆத்மார்த்தமான பக்தியும், ஈடுபாடும்தான் இந்த சாதனைக்குக் காரணமாக இருந்திருக்கிறது என்றால் மிகையல்ல. [] இவருக்கு சீடர்கள் யாரும் இருந்தார்களா? தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் அந்த சிஷ்ய பரம்பரையினரால் பாடப்பட்டு இன்று அந்த மகானுடைய வாரிசுகள் யார் என்பதும் தெரிந்திருக்குமே. யார் செய்த புண்ணியமோ, தமிழகத்தில் சிறப்பாக சோழ நாட்டில் செழித்து வளர்ந்த நாதஸ்வரக் கலையும், அந்தக் கலைஞர்களும் வேங்கடகவியின் பாடல்களை உயிர்ப்போடு வைத்திருந்திருக்கிறார்கள். குறிப்பாக ருத்ரபசுபதி எனும் நாதஸ்வர வித்வான் பற்றி சொல்லுகிறார்கள். வேங்கடகவியின் தமையனார் காட்டு கிருஷ்ணையர் சில பாடல்களை எழுதி வைத்திருந்ததாகவும், அது கைமாறி நாதஸ்வர வித்வான் ருத்ரபசுபதிக்குக் கிடைத்து அவர் அந்தப் பாடல்களைத் தன் நாதஸ்வரத்தில் பாடி பிரபலப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். [] வேங்கடகவியின் தமையனார் காட்டு கிருஷ்ணையருக்கு மூன்று புதல்விகள். இவர்களும், இவர்களுக்குப் பின் அவர்களது வாரிசுகளும் இந்தப் பாடல்களைப் போற்றி பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிருஷ்ண சாஸ்திரியார் என்பவர். இவர் காட்டு கிருஷ்ணையரின் மகள் வழிப் பேத்தியின் கணவர். இவர் ஒரு இசைக் கலைஞர். இவருக்குப் பல சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவரது இயற்பெயர் என்னவோ தெரியாது, ஆனால் தன் பெயரை ‘குட்டி கவி’ என்று வைத்துக் கொண்டார். பெரிய கவி என்பது வேங்கடகவியாம். மற்றொருவர் பெயர் கணபதி முனி. இவர்கள் வேங்கடகவியின் பாடல்களை அதிகம் பாடத் தொடங்கினர். இந்தப் பாடல்களை பிரபல ஹரிகதா வித்வான் ராஜு சாஸ்திரிகள் என்பவர் கேட்க நேர்ந்தது. இந்தப் பாடல்களின் வசீகரத்தில் மெய்மறந்த சாஸ்திரியார் இந்தப் பாடல்களைத் தன் உபந்யாசத்தில் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார். [] இப்படி இந்தப் பாடல்கள் வாழையடி வாழையாக இசை உலகில், ஹரிகதா உலகில், பாகவத உலகில் பரவத் தொடங்கி எங்கும் எதிலும் இவர் பாடல்கள் கேட்கும்படியான நிலைமை உருவானது. வேங்கடகவி எத்தனை பாடல்கள் இயற்றினாரோ, எத்தனை பாடல்கள் கிடைத்தனவோ, எத்தனைப் பாடல்கள் மறைந்து போனதோ தெரியவில்லை. இப்படி வேங்கடகவியின் பாடல்களைப் பிரபலப்படுத்தியவர்களின் வரிசையில் நம்மால் மறக்கமுடியாதவரும், மிக முக்கியமானவருமான நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரை மறக்கமுடியாது. இவரால்தான் இன்று அப்பாடல்கள் பிரபலமாக இருக்கிறது என்று சொன்னால் அதை மறுக்கமுடியாது. இவர் சமீக காலத்தில், நம் காலத்தில் வாழ்ந்து நாடெங்கும் ஹரிகதா காலக்ஷேபங்களை நடத்தி வந்தவர். வேங்கடகவியின் பல பாடல்களை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டவர். இவர் பாடி மக்களை மயக்கிய “காளிங்கநர்த்தனம்” மக்களால் மறக்கமுடியுமா? ‘கிருஷ்ண கானம்” எனும் பெயரில் அவர் செய்து வந்த ஹரிகதாவும், அதன் ஒலிப்பதிவு நாடாக்களும் தமிழ் நாட்டையே உலுக்கியது என்றுகூட சொல்லலாம். எங்கோ தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமமான ஊத்துக்காட்டில், எந்த வசதிகளும் இல்லாத நாளில் அரிய, உயரிய பாடல்களை இயற்றிச் சென்ற வேங்கடகவியின் பாடல்கள் இந்த நவீன யுகத்தில் தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரத்தில் மியூசிக் அகாதமி, நாரதகான சபா போன்ற இசையின் உயர் பீடங்களில் ஒலித்திருக்கிறது என்பது நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது. நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் ஹரிகதா கச்சேரிகள், ஒலி நாடாக்கள், அச்சிட்டு வெளியிட்ட நூல்கள் இவைகள் வாயிலாக வேங்கடகவி தமிழர்களின் உணர்வில், உயிரில், கரங்களில் என்றும் நிலைத்திருக்கும்படியாக நேர்ந்தது. வேங்கடகவியின் பாடல்களில் அமைந்துள்ள தாளக்கட்டு, இசை வடிவம், உணர்ச்சிப் பிழம்பாக வர்ணிக்கும் மொழி ஜாலம், அவருடைய தமிழ், சமஸ்கிருத மொழி ஞானம் போன்ற பல விஷயங்கள் இன்றும் வியந்து போற்றி பாராட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட பெரியவர்களின் வரலாறுகள், சில நூறு ஆண்டுகளே ஆனதென்றாலும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியதுதான். அவரது பாடல்களை எடுத்து, ஆய்வு செய்து அதன் அழகை, ஆழத்தை, இனிமையைப் பலர் வெளியிட்டிருந்தாலும், அவர் வாழ்க்கைச் சரிதத்தை முழுமையாக வெளியிடமுடியவில்லையே என்கிற ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. இல்லையா? [] இவை சில பிரபலமான பாடல்கள். ‘அசைந்தாடும்’ சிம்மேந்திரமத்யம ராகம் ‘அலைபாயுதே’ கானடா ராகம் ‘ஆடாது அசங்காது வா’ மத்யமாவதி ராகம் ‘அபாலபாலா’ கேதாரம் ‘ஆடும்வரை அவர் ஆடட்டும்’ ஹுசேனி ராகம் ‘என்ன புண்ணியம்’ ரீதிகெளளை ராகம் ‘குழலூதி’ காம்போஜி ராகம் ‘மணிநூபுர’ நீலாம்பரி ‘மதனாங்க மோகனா’ கமாஸ் ராகம் ‘மதுர மதுர’ அடாணா ராகம் ‘மரகத மணிமய’ ஆரபி ராகம் ‘முன்செய்த தவப்பயன்’ ரேவகுப்தி ‘நாத முரளி கான’ கல்யாணி ‘என்ன தவம்’ கமாஸ் ராகம் ‘நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்’ ஸ்ரீ ரஞ்சனி ‘பால்வடியும் முகம்’ நடகுறிஞ்சி ‘பார்வை ஒன்றே போதுமே’ சுருட்டி ‘ஸ்வாகதம் கிருஷ்ணா’ மோகன ராகம் ‘தாயே யசோதா’ தோடி ராகம் ‘வரமொன்று’ சண்முகப்பிரியா ராகம் ‘வேணுகான ரமணா’ தோடி ராகம் ‘வந்ததும் போனதும்’ பிலஹரி ராகம் ‘யாரென்ன சொன்னாலும்’ மணிரங்கு ராகம் 19 கோபாலகிருஷ்ண பாரதியார் [] கோபாலகிருஷ்ண பாரதியார் (1811 – 1896) கர்நாடக இசையுலகில் தமிழிசைக்கு முன்னவர்களாகக் கருதப்படுபவர்களில் கோபாலகிருஷ்ண பாரதியாரும் ஒருவர். இவர் பல தமிழ் சாகித்தியங்களை இயற்றியிருந்தாலும், கதாகாலக்ஷேபத்துக்காக இவர் இயற்றிய “நந்தனார் சரித்திரம்” புகழ்பெற்று விட்டது. கர்நாடக சங்கீத உலகின் மிகப்புகழ் பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சமகால வாக்யேயக்காரர் இவர். மாயூரத்தில் வாழ்ந்து வந்த கோபாலகிருஷ்ண பாரதியார், திருவையாற்றுக்குச் சென்று ஸ்ரீ தியாகராஜரை தரிசனம் செய்து, அங்கு அவருக்காக “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா” எனும் ஆபோகி ராகக் கீர்த்தனையை இயற்றிப் பாடிக்காட்டினார். [] இவர் மாயூரத்தில் வாழ்ந்த காலத்தில் அங்கு இருந்த திருசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் படிக்க அங்கு சென்றிருந்த தமிழ்த்தாத்தா என்று பின்னாளில் புகழ்பெற்ற உ.வே.சாமிநாத ஐயர் சிறிது நாட்கள் இவரிடம் சங்கீதம் பயின்றிருக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதியார் நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம் எனும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் ராமசுவாமி சாஸ்திரி. அவரும் ஒரு சிறந்த கர்நாடக சங்கீத வித்வான். மாயூரத்தில் வாழ்ந்த ஒரு ஆசிரியரிடம் இவர் அத்வைத சித்தாந்தத்தையும் யோக சாஸ்திரத்தையும் கற்றார். இவர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமலேயே, துறவறமும் ஏற்றுக் கொள்ளாமல் ஒரு சந்நியாசியைப் போல வாழ்க்கை நடத்தினார். இவர் குடும்பமே ஒரு சங்கீத குடும்பன் என்பதால் மிக இளவயது முதலே இவருக்கு சங்கீதம் இயற்கையாகவே வந்தது. அதனால் சிறிது வழிகாட்டியவுடன் இவர் சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற முடிந்தது. தன்னுடைய சங்கீத ஞானத்தை வளர்த்துக் கொள்வதற்காக இவர் பல பெரிய சங்கீத வித்வான்களின் கச்சேரிகளைக் கேட்கத் தொடங்கினார். தானாகவே நன்கு பாடவும், புதிய பாடல்களை இயற்றவும் தொடங்கினார். இவரது பாடல்களில் அத்வைத சித்தாந்தக் கருத்துக்கள் மேலோங்கியிருக்கும். மகாகவி பாரதியார் தனது ‘சங்கீத விஷயம்’ எனும் கட்டுரையில் சொல்லியிருக்கிறபடி, புதிதாகப் பலர் சிறந்த பாடல்களை இயற்றிப் பாட முயற்சிக்க வேண்டும், பழைய பாடல்களையே பாடிக் கொண்டிருக்கக்கூடாது. பாட்டன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்கக்கூடாது என்பதற்கேற்ப இவரே புதிய சாகித்யங்களை இயற்றிப் பாடியதை பலரும் வரவேற்றார்கள். [] அவருடைய காலத்திலேயே பல சங்கீத வித்வான்கள் இவருடைய பாடல்களை கச்சேரிகளிலும், பெரிய ஜமீந்தார்கள் சபைகளிலும் பாடிவந்திருக்கிறார்கள். சங்கீத வித்வான்கள் தங்களுக்குப் புதிதாக இன்ன கருத்துக்களோடு பாடல்கள் வேண்டுமென்று கேட்டால் அதற்கேற்றார்போல பாடல்களை இயற்றிக் கொடுத்தார். பெரிய பெரிய வாக்யேயக்காரர்களின் கிருதிகளில் அவரவருடைய பெயரை முத்திரையாகச் சேர்த்திருப்பதைக் காணலாம். அதுபோலவே கோபாலகிருஷ்ண பாரதியும் தன்னுடைய பாடலின் வரிகளில் தன்னுடைய பெயரையும் சேர்த்துப் பாடியிருப்பதைக் கவனிக்கலாம். இப்போது போல திரைப்படங்கள் எல்லாம் இல்லாத நாட்களில் பல கதைகளை பாடல்கள் மூலம், பாட்டிடையிட்ட கதைகளாகச் சொல்வது வழக்கம். அந்த முறைக்கு ஏற்றார்போல இவர் பாடல்களையும் கதைகளையும் இயற்றி பாடிவந்தார். அந்த வகையில்தான் இவர் பெரிய புராணத்தில் உள்ள “திருநாளைப்போவார்” சரித்திரத்தை சிறிது மாற்றி, சில புதிய பாத்திரங்களைச் சேர்த்து “நந்தனார் சரித்திரம்” எனும் பெயரில் எழுதினார். [] இந்த நந்தன் என்பவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். தில்லை நடராஜன் மீது அளப்பரிய பக்தி கொண்டவர். இவர் ஓர் விவசாயி. விவசாய வேலைகளை முடித்துவிட்டு தில்லை சென்று நடராஜனை தரிசிக்க விரும்பினார். அலை ஓய்ந்து கடலில் ஸ்நானம் செய்வது போல, இவருக்கு வேலை விட்டபாடில்லை. இவர் தில்லை சென்று தரிசிக்கும்போது நந்தி மறைக்க, இவர் தரிசனத்துக்காக நந்தி விலகி வழிவிட்டது, இவர் ஜோதியில் கலந்தார் என்பது அந்தக் கதை. இந்தக் கதையில் மறையவர் என்று ஓர் பாத்திரத்தைப் படைத்து, அந்த மறையவர் நந்தனை தில்லை செல்லாதபடி வேலைவாங்கியதாகவும் கோபாலகிருஷ்ண பாரதி நந்தன் சரித்திரத்தில் எழுதினார். பின்னர் இவர் கற்பனையாக எழுதிய இந்தப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு இந்த வரலாற்றை ஜாதிப் பிரச்சினையாகவும் சிலர் ஆக்கிவிட்டனர். இவருடைய பாடல்களும் கருத்தும் கேட்க இனிமையாக இருந்த போதிலும் அவற்றில் இலக்கண பிழைகள் மண்டிக் கிடப்பதாக திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கருத்துக் கூறியிருக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதியின் பல பாடல்கள் பிரசித்தி பெற்றிருந்தாலும் இந்த நந்தன் சரித்திரம் மட்டும் இவருக்குப் பெருமை தேடிக் கொடுத்தது. அதற்குக் காரணம் அப்போது தமிழ் நாட்டில் மராட்டிய மன்னர்கள் அறிமுகம் செய்து வைத்த கதாகாலக்ஷேப முறைதான். தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர் என்பவர் இந்தக் கலையில் தலை சிறந்து விளங்கினார். அவர் நந்தன் சரித்திரத்தை கதாகாலக்ஷேபமாகச் செய்து ஊர் ஊராகப் பாடிப் பிரபலப் படுத்தினார். [] கோபாலகிருஷ்ண பாரதியின் புகழும் வளர்ந்தது. இந்த கதாகாலக்ஷேபத்தின் மூலம் இந்தக் கதை நாடகமாக நடிக்கப்பட்டது. பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதில் பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், அண்ணாமலை பல்கலைக்கழக தமிழிசைக் கல்லூரியின் முதல்வராக இருந்தவருமான திரு எம்.எம்.தண்டபாணி தேசிகர் நந்தனாராக வந்து பாடல்களைப் பாடி அவற்றுக்கு அமரத்தன்மை அளித்தார். ஒரு மனிதன் வாழ்ந்தான், எதோ சாதனைகளைச் செய்தான் என்பதோடு மட்டுமல்லாமல் என்றும் நிலைத்திருக்கும்படியான இதுபோன்ற செயலைச் செய்ததன் மூலம் கோபாலகிருஷ்ண பாரதியார் இசைத் துறையில் இன்றும் போற்றப்படுகிறார். குறிப்பு:- கோபாலகிருஷ்ண பாரதியார் பற்றிய இந்தக் கட்டுரையைப் படித்த அன்பர் ஒருவர், பெரிய புராணத்தின்படி நந்தனாரின் முடிவு எப்படி ஆயிற்று என்ற வினாவை எழுப்பியிருந்தார். அவருக்கு எழுதிய பதிலை கீழே கொடுத்திருக்கிறேன். அதில் அறிஞர் ஆறுமுக நாவலர் எழுதியுள்ள ‘பெரிய புராணம் வசன காவியம்’ எனும் நூலில் கண்டுள்ளபடி ‘திருநாளைப்போவார்’ சரித்திரத்தின் முடிவைக் கொடுத்திருக்கிறேன். நம்முடைய புராண வரலாறுகளில் அந்த நாள் செய்திகள் இன்றைக்குப் பொறுத்தமுடையதாக இருக்குமா என்பதை பலரும் கவனிப்பதில்லை. அன்று நாயன்மார்கள் பலருக்கு சிவபெருமான் கட்சி அளித்ததாகப் படிக்கிறோம். இன்று ஏன் அவர் காட்சி தருவதில்லை என்ற கேள்வியும் அறிவு பூர்வமானதாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். குலோத்துங்க சோழன் காலம் தமிழகத்தில் சோழ நாட்டின் பொற்காலம். நாடு செழித்து, செல்வத்தில் மக்கள் திளைத்தனர். மக்கள் ஜீவகசிந்தாமணி போன்ற இன்ப நூல்களைப் படித்து நேரத்தை வீணடித்தனர். மன்னன் சேக்கிழார் பெருமானிடம் கேட்டுக் கொண்டான், மக்களை நல்வழிப்படுத்த நல்ல நூல்களைப் படிக்க வைக்கமுடியாதா என்று. அவர் சொன்னார், மக்கள் கதைகளை, அதிலும் இன்பம் பயக்கும் கதைகளைக் கேட்க மனம் கொண்டிருக்கின்றனர் என்று. நீங்களும் கதை மூலமாக நல்ல அறவுரைகளைத் தரலாமே என்றான் மன்னன். பெரிய புராணம் பிறந்தது. இது வரலாற்றுப் பின்னணியில் சில மிகைப்படுத்தப்பட்ட கற்பனை கலந்தது என்பது பொதுவான கருத்து. அந்த வகையில் நந்தனார் தில்லை ஆலயத்தில் சிவனை தரிசித்து ஜோதியில் கலந்துவிட்டதாகப் புராணம் கூறினாலும், பிற்காலத்தில் இதனை சாதிப் பிரச்சனையாக்கி நந்தன் எனும் தாழ்த்தப்பட்டவரை மேல்சாதி மக்கள் தீக்கு இரையாக்கிவிட்டனர் என்று கூறலாயினர். வள்ளலார் ராமலிங்கசுவாமிகள் தனது அறையைத் தாளிட்டுக் கொண்டு தியானத்தில் இருக்கும் சமயம் ஜோதியில் கலந்துவிட்டதாக வரலாறு. அங்கும் அவர் எரிக்கப்பட்டதாக பிற்கால மக்கள் பேசலாயினர். ஆகவே, நாம் முடிவை எப்படி எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோமோ அப்படி எடுத்துக் கொள்வது நல்லது.  எனினும் ஆறுமுக நாவலர் எழுதியுள்ள பெரியபுராண கதைகளின் படி நந்தனாரின் முடிவு இதோ. “நந்தனார் ஒரு நாள் சிதம்பர தரிசனம் பண்ண வேண்டும் என்கிற அளவிறந்த ஆசையினாலே தன் ஊரை விட்டுப் புறப்பட்டு சிதம்பரத்தின் எல்லையை அடைந்து மதில்வாயிலில் புகுந்து அங்குள்ள அந்தணர்களுடைய வீடுகளிலே ஓமம் செய்யப் படுதலைக் கண்டு பயந்து அங்கே நின்று வணங்கி அந்த எல்லையை வலம் செய்து கொண்டு போனார். இப்படி செய்துகொண்டிருந்த திருநாளைப் போவார், “இந்த இழிந்த பிறப்பு சபாநாயகரைப் போய்த் தரிசிக்க தடை செய்கின்றதே” என்று துக்கத்தோடு நித்திரை செய்தார். சபாநாயகர் (நடராஜப் பெருமான்) அவருடைய வருத்தத்தை நீக்கி அருள் செய்ய திருவுள்ளங்கொண்டு அவருக்குச் சொப்பனத்தில் தோன்றி “நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து அந்தணர்களோடும் நம்முடைய சந்நிதானத்திற்கு வருவாயாக!” என்று அருளிச் செய்து தில்லைவாழ் அந்தணர்க்கும் சொப்பனத்தில் தோன்றி அந்தத் திருநாளைப்போவார் பொருட்டு நெருப்பை வளர்க்கும்படி ஆணையிட்டு மறைந்தருளினார்.  தில்லைவாழ் அந்தணர்கள் எல்லோரும் விழித்தெழுந்து கோயில் வாயிலில் வந்து கூடி, சபாநாயகர் ஆணையிட்டபடி செய்வோம் என்று சொல்லி திருநாளைப் போவாரிடத்தில் சென்று “அய்யரே! சபாநாயகருடைய கட்டளையாலே இப்பொழுது உம் பொருட்டு அக்கினி வளர்க்கும்படி வந்தோம்” என்றார்கள். திருநாளைப்போவார் அதைக் கேட்டு “அடியேன் பிழைத்தேன்” என்று சொல்லி வணங்கினார். அந்தணர்கள் தென் மதில் சுவர் அருகில் கோபுர வாயிலுக்கு முன்பு ஒரு குழியிலே அக்னி வளர்த்து அதைத் திருநாளைப் போவாருக்கு போய்த் தெரிவித்தார்கள். அவரும் அந்த நெருப்புக் குழியை அடைந்து சபாநாயகருடைய திருவடிகளை மனத்தில் தியானித்து அதனை வலம் வந்து கும்பிட்டுக்கொண்டு அதன் உள்ளே புகுந்தார்.  அப்படி புகுந்த நாயனார் பழைய தேகத்தை ஒழித்துப் புண்ணியமாகிய அந்தண முனிவடிவம் கொண்டு சடைமுடியோடு எழுந்தார். அதுகண்டு தில்லைவாழ் அந்தணர்களும் மற்ற சிவபக்தர்களும் களிப்படைந்தார்கள். திருநாளைப் போவார் அவர்களோடு கோபுரத்தை அணுகி அதை வணங்கி எழுந்து உள்ளே போய்க் கனகசபையை அடைந்தார். அவரை, பின் அங்கே ந்ன்ற அந்தணர் முதலான பேர்கள் யாவரும் காணாமையால் ஆச்சரியம் கொண்டு தொத்திரம் செய்தனர். சபாநாயகர் திருநாளைப்போவாருக்குத் தம்முடைய திருப்பாதங்களைத் தந்தருளினார்.” “செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டர் திருத்தொகை கூறும். 20 அப்சல்கான் [] அப்சல்கான் மராட்டிய போன்ஸ்லே வம்சத்தில் வந்த ஷாஜி பிஜப்பூர் சுல்தானுக்குப் பல விதங்களிலும் உதவி அந்த ராஜ்யம் வலுவாக இருக்க பெரும் உதவி புரிந்திருக்கிறார். தட்சிண பிரதேசத்தில் பிஜப்பூர் சுல்தான் அலியடில்ஷா என்பவருக்கும் அகமதுநகரை ஆண்ட நிஜாம் பாட்ஷாவுக்கும் அடிக்கடி யுத்தம் ஏற்பட்டு நீ பெரியவனா நான் பெரியவனா என்று மோதிக்கொண்டனர். இதில் டில்லி சக்கரவர்த்தியின் உதவியையும் நிஜாம் பெற்று வந்தார். போன்ஸ்லே வம்சத்தில் மாளோஜி என்றொரு ராஜா. இவருக்கு 1594 மார்ச் மாதம் 13ம் தேதி ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் ஷாஜி என்று அழைக்கப்பட்ட மாவீரர்.ஷாஜிக்கு ஐந்து வயதானபோது கோலாப்பூர் ராஜாவுக்கும் அகமதுநகர் நிஜாம்ஷாவுக்கும் ஒரு யுத்தம் ஏற்பட்டது. அந்த யுத்தத்திற்கு ஷாஜியின் தந்தை மாளோஜியை நிஜாம் பெரும்படையுடன் அனுப்பியிருந்தார். அந்தப் போரில் மாளோஜி தீரத்துடன் போராடியும் எதிரிகளால் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இறந்துபோன மாளோஜிக்கு இரண்டு புதல்வர்கள். முதல் மகன் முன்பே சொன்னவாறு ஷாஜி, இரண்டாவது சரபோஜி. தந்தையை இழந்த இந்த இரு சிறுவர்களும் அவர்களுடைய சிற்றப்பனான விட்டோஜி என்பவனிடம் வளர்ந்தார்கள். [] வயது வந்த பின் ஷாஜி மோத்தேராம் என்பவருடைய மகளாகிய துக்காபாயி எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1620ல் ஷாஜி நிஜாம் தனக்கு அளித்த பிரதேசத்தைச் சுயேச்சையாக ஆள ஆரம்பித்தார். அந்த ராஜ்யம்தான் சதாரா. ஷாஜி சதாராவை ஆண்டுவந்த காலத்தில் தேவகிரி யாதவ அரச மரபில் யாதவராஜா எனப்படும் லகோஜி ஜாதவ் ராவ் என்பவர் 10,000 குதிரைப்படைக்குத் தலைவராக இருந்தார். அந்த யாதவராஜாவுக்கு ஒரு மகள். அவர்தான் புகழ்பெற்ற வீரன் சிவாஜியைப் பெற்ற பாக்கியசாலி ஜீஜாபாய். இந்த பெண்ணை ஷாஜி இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். [] அதன் பிறகு ராஜ்ஜியத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்ததின் பலனாக ஷாஜி பிஜப்பூர் சுல்தான் படைகளும், ஷாஜியின் படைகளும் நிஜாம்ஷா மீது படையெடுத்தனர். அந்தப் போரில் நிஜாம் தோற்றுப் போனார். ஷாஜியின் வீரத்துக்கு வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியின் காரணமாக அலியடில்ஷா ஷாஜிக்கு மேலும் சில பிரதேசங்களை ஜாகீர் செய்து கொடுத்தார். இப்போது ஷாஜி அசைக்கமுடியாத வெற்றி வீரனாகத் திகழ்ந்தார். பிஜப்பூர் சுல்தானின் கரங்களை வலுப்படுத்திய ஷாஜி விஜயதுர்க்கம் எனும் விஜயபுரத்தில் தன் மனைவிகளோடு குடும்பம் நடத்தினார். அப்போது ஜீஜாபாய்க்கு 1619 அக்ஷய வருஷம் முதல் மகன் சாம்பாஜி பிறந்தார். இந்த காலகட்டத்தில் டில்லி பாதுஷா ஜஹாங்கீர், 1628ல் தரியாகான் எனும் தளபதியை முகலாய பெரும் சேனையொன்றுடன் நிஜாம் மீது படையெடுக்க அனுப்பிவைத்தார். நிஜாம்ஷா அப்போது தனக்கு எதிராக இருந்த ஷாஜியை ரகசியமாக அழைத்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். இப்போது முகலாய படையை எதிர்ப்பதற்கு ஷாஜியை அனுப்பினார் நிஜாம். அந்த நேரத்தில் ஜீஜாபாய் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்குச் சில வீரர்களைத் துணையாக வைத்துவிட்டு ஷாஜி பெரும் படையுடன் போருக்குப் புறப்பட்டார். போரில் தரியாகானின் படை தோற்றது. வெற்றிவீரனாக ஷாஜி சிவனார் கோட்டைக்குத் திரும்பிய போது ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. அது 1627ம் வருஷம் ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஜீஜாபாயிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது என்பதுதான் அந்தச் செய்தி. தனக்குப் போரில் வெற்றியும், அதே நேரத்தில் ஓர் ஆண் மகவையும் கொடுத்த அன்னை பவானியை வணங்கினார் ஷாஜி. அந்தக் குழந்தைதான் சத்ரபதி சிவாஜி என்று பின்னர் புகழ்பெற்ற மாவீரன். [] சதாராவுக்குத் திரும்பி தங்கியிருந்த போது ஷாஜிராஜாவின் முதல் மனைவியான துக்காபாயிக்கு ஏகோஜி எனும் மகன் பிறந்தான். இந்த ஏகோஜிதான் பிறகு தஞ்சைக்கு வந்து நாயக்க மன்னர்களிடமிருந்த தஞ்சாவூர் ராஜ்யத்தைத் தன்வசப்படுத்தி பல ஆண்டுகள் ஆட்சி புரிந்த பெருமைக்குரியவன். இவன் பெரியவனான பிறகு பெங்களூர் வந்து கோட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார். ஷாஜியின் மகன் சிவாஜி புனாவில் இருந்தார். அங்கு அவர் தாதாஜி பந்த் என்பவரிடம் கல்வி பயின்றார். சிவாஜிக்கு 12 வயது ஆனது. அந்த வயதிலேயே அவன் மகா வீரனாக விளங்கினான். ஷாஜியின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்த சிவாஜி, முதல் மனைவியின் மகன் ஏகோஜியைவிட வயதில் மூத்தவர். சிவாஜி சதாராவுக்குத் திரும்பி அங்கிருந்த 12 சிறிய கோட்டைகளைப் பிடித்து ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். ஷாஜி ராஜாவும் சுல்தான்களிடம் விடை பெற்றுக்கொண்டு சதாராவுக்கு வந்து தன் மனைவிகள், மக்களுடன் வாழலானார். புனாவுக்கு அருகில் புரந்தர் என்றொரு கோட்டை. அது சிவாஜி வசம் இருந்தது. இதை அவர் 1648ல் கைப்பற்றியிருந்தார். அப்போது சிவாஜி தன் துணைவர்களிடம் தன் தந்தை ஷாஜி பற்றி சொல்லும் போது, இவர் சுல்தான்கள் இருவரிடமும் நட்பு வைத்திருந்தார், ஆனாலும் இவரால் அவர்கள் பல வெற்றியை அடைந்தும், இருவரும் இவரை எதிரியாகவே எண்ணி வருகின்றனர் என்றார். அந்த காரணம் தொட்டே அவ்விரு சுல்தான்களும் நம்மை அமைதியாக இந்த சதாராவை ஆளவிடமாட்டார்கள். ஆகையால் இவ்விரு சுல்தான்களையும் முதலில் ஒழித்த பிறகுதான் நாம் அமைதியாக இருக்க முடியும் என்றார். அவரது அமைச்சர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர். [] முதலில் தனது கோட்டையை எவரும் எளிதில் நுழையமுடியாத மலைப் பிரதேசத்தில் கட்டிக்கொண்டார். பிரதாப்கோட்டைக்கு அருகில் செயவலிநகரம் என்பதுதான் அந்தப் பிரதேசம். பல கணவாய்களையும், உயரமான மலைச்சரிவுகளையும் தாண்டித்தான் அந்தப் பிரதேசத்தை அணுகமுடியும். அப்படிப்பட்ட இடத்தில் சிவாஜி தனது குலதெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டு கோட்டையைக் கட்டினார். ஒரு விஜயதசமியன்று சதாராவிலிருந்து புறப்பட்டு சிவாஜி மகாராஜா காடு மலைகளைத் தாண்டி, மேற்குக் கடற்கரைப் பிரதேசத்தில் தான் கட்டிய புதிய கோட்டையில் குடியேறினார். வழியில் ராய்கிரி கோட்டையைப் பிடித்து அதற்கு ராய்கட் எனும் பெயர் சூட்டித் தன் வசம் எடுத்துக் கொண்டார். ராய்கிரி கோட்டைக்குச் சொந்தக்காரராக இருந்த இருவரில் சத்திரராஜா என்பவன் தப்பிப் பிழைத்து பிஜப்பூர் சுல்தான் அலியடில்ஷா IIவிடம் சென்று சிவாஜிக்கு எதிராகப் புகார் செய்தான். சிவாஜியை ஒழிக்காவிட்டால் அவன் கை ஓங்கிவிடும், நாமெல்லாம் அழிந்து போவோம் என்றான். அதற்காக சுல்தான் தனது 12 வாசீர்களை வரவழைத்து ஆலோசனை செய்தான். அவர்களில் அப்சல்கான் எனும் வாசீர் மகாவீரன். இவனுக்கு அப்துல்லா படாரி என்று பெயர். இவன் காலம் சென்ற முகமது ஷாவுக்கும், அவனது சமையல்காரியாக இருந்தவளுக்கும் பிறந்த மகன். அவனை அழைத்து சுல்தான் சொன்னார், “நீ போய் பெரிய படையை அழைத்துக் கொண்டு அந்த சிவாஜியை எப்படியாவது உயிரோடு பிடித்துக் கொண்டு வரவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அவன் நம்மை ஒழித்து விடுவான்” என்று உசுப்பேத்தி விட்டான். அதன்படியே அந்த அப்சல்கானும் படை, கொடி, திரவியம், வீரமிக்க வசீர்கள் ஆகியோடு சிவாஜியை ஒழிக்கப் பயணமானான். [] அப்போது சிவாஜி புனாவுக்கு வந்திருப்பதாகச் செய்தி வந்தது. அப்சல்கானிடம் சுல்தான் சொன்னார், உன்னால் சிவாஜியை அவன் ஊரில் இருக்கும்போது அடையாளம் காண்பது கடினம். அவன் இப்போது பூனா வந்திருக்கிறான். அவன் அங்கிருந்து புறப்படும் முன்பாக நாம் போய் வழியிலுள்ள பிரதாபகிரி கோட்டை, சாவிக்கோட்டை, பண்டரிபுரம் இவற்றைப் பிடித்துக் கொண்டால் அவனை எளிதில் மடக்கிப் பிடித்து விடலாம் என்றான். அப்சல்கானும் அதன்படி திட்டமிட்டு கிளம்பினான். அப்போது அவனுக்குப் பல அபசகுனங்கள் ஏற்பட்டனவாம். பட்டத்து யானை இறந்தது. இவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அப்சல்கான் சிவாஜியைப் பிடிக்கப் புறப்பட்டான். புனாவில் இருந்த சிவாஜிக்குக் கனவில் அவரது குலதெய்வமான ஸ்ரீ ஜெகதாம்பா துளஜா பவானி தோன்றி உனக்கு ஆபத்து நெருங்கி வருகிறது. உடனே புனாவைவிட்டுப் புறப்படு என்றது. அந்தக் கணமே சிவாஜி எழுந்து அன்னையை வணங்கிவிட்டு புறப்பட்டார். வழிநெடுக இருந்த கோட்டைகளை வலுப்படுத்திவிட்டு வரும் அப்சல்கான் படைகளை எதிர்க்க ஏற்பாடுகள் செய்துவிட்டு வேகமாகச் சென்று விட்டார். போகும்போது எல்லா கோட்டைத் தலைவர்களுக்கும் ஒரு செய்தி சொல்லிச் சென்றார். அது, அப்சல்கான் என்பவன் பெரும் படையோடு வருகிறான். உங்கள் படைகளையெல்லாம் காட்டில் மறைத்து வைத்துவிட்டு அவனை அன்போடு வரவேற்பதுபோல் வரவேற்று அனுப்பி வையுங்கள். அவன் நமது கோட்டையை அடைந்தவுடன் ஒரு நாகரா ஒலி கேட்கும். அப்போது காட்டில் ஒளிந்திருக்கும் உங்கள் படைகளை வெளிவரட்டும். அப்சல்கானோ அல்லது அவன் படைவீரன் எவனாவதோ உயிரோடு திரும்பக்கூடாது என்று உத்தரவிட்டார். அதன்படியே அப்சல்கான் பண்டரிபுரம் வழியாகப் போனான். வழியில் பண்டரிபுரம் கோயிலில் இருந்த பாண்டுரங்கணின் உருவத்தை உடைத்தெறிய எண்ணினான். ஆனால் அந்தப் பாண்டுரங்கன் அவன் கண்களில் படவில்லை. அந்த நீசனின் கைகளில் அகப்படாமல் அவர் எங்கு போயிருந்தாரோ தெரியவில்லை. பண்டரிபுரத்தைத் தாண்டி அவன் படைகள் துளஜாபுரம் சென்றபோது அங்கு கோயில் கொண்டிருந்த ஸ்ரீ துளஜா பவானியும் அந்த கொடியவனின் பார்வையில் சிக்கவில்லை. சிக்னாபூரில் சம்பு மகாதேவருக்கு இடையூறு செய்ய நினைத்தான், அங்கிருந்த மராட்டிய வீரர்கள் அவனை முறியடித்து அனுப்பி விட்டார்கள். [] அப்சல்கான் பாலி எனும் கோட்டைக்கு வந்தான். அங்கு கிருஷ்ணாஜி பண்டிதர் எனப்படும் பண்டாஜி கோபிநாத்தை சிவாஜியிடம் ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினான். அதில் சிவாஜி அலியடில்ஷாவுக்கு எதிராக செயல்பட்டு கட்டியுள்ள புதிய கோட்டைகளைக் கைவிட்டு, சதாரா வந்து சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். இது பற்றி சமாதானமாக நாம் பேசலாம் என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான். கிருஷ்ணாஜி பண்டிதர் சிவாஜி ராஜாவிடம் சென்றார். சாமர்த்தியமாகப் பேசி சிவாஜி அப்சல்கானைச் சந்திக்க சம்மதிக்க வைத்தார். சிவாஜி ராஜாவும் அவனை நம்புவதைப் போல பாசாங்கு செய்து அவனை வரவழைத்தார். அங்கு ஜெயவல்லிபுரம் சாவளி என்கிற பெரிய மைதானம், அதைச் சுற்றி அடர்ந்த காடுகள், அந்த இடத்துக்கு அப்சல்கானை அழைத்து வாருங்கள். உட்கார்ந்து சமாதானமாகப் பேசலாம் என்று சொல்லி அனுப்பினார். கிருஷ்ணாஜி பண்டிதனும் அதை அப்படியே போய் அப்சல்கானிடம் சொன்னான். அங்கு அப்சல்கானைச் சுற்றி இருந்தவர்கள் சொன்னார்கள், சிவாஜியை அவ்வளவு எளிதாக நம்பிவிட வேண்டாம் என்று. அப்போது வழிநெடுக இருந்த பாதைகளை அடைக்கச் செய்தார் சிவாஜி. கணவாய்களை மூடிவிட்டார். எக்காரணம் பற்றியும் அந்த அப்சல்கான் தப்பி ஓடிவிடக்கூடது என்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டார். அப்படி யாராவது தப்பி வந்தால் கொன்றுவிடும்படி கட்டளையிட்டார். [Sivaji & Afsalkhan] இதையொன்றையும் அறியாத அப்சல்கான் மமதையோடு சிவாஜியைக் காண வந்து சேர்ந்தான். அப்போது ஒரு செய்தி சிவாஜியை எட்டியது. சிவாஜியைக் கொல்ல அப்சல்கான் வருகிறான் என்ற செய்தி கேட்டு வழியில் அவனோடு போரிட்ட சிவாஜியின் அண்ணன் சம்பாஜி போரில் இறந்து போனார் என்பதுதான் அந்தச் செய்தி. இதனால் சிவாஜியின் ஆத்திரம் அப்சல்கான் மீது அதிகமாகியது. ஆறு வீரர்கள் பின் தொடர அப்சல்கான் ஒரு பல்லக்கில் ஏறிக்கொண்டு சிவாஜி ஏற்பாடு செய்திருந்த நாட்டியத்தைப் பார்க்க வந்தான். சிவாஜியும் நான்கு வீரர்களோடு வந்து சேர்ந்தார். இருவருக்கும் பேச்சு வார்த்தை தொடங்கியது. திடீரென்று அப்சல்கான் எழுந்து சிவாஜியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மடியிலிருந்த கத்தியை எடுத்து சிவாஜியின் வயிற்றில் ஓங்கி இரண்டு மூன்று முறை குத்தினான். நல்ல காலம் சிவாஜி ராஜா அங்கிக்கு உட்புறமாக கவசம் அணிந்திருந்தார். கத்தி உடலில் இறங்கவில்லை. [] உடனே சிவாஜி ராஜா வலது கையால் தன் பிச்சுவாயை ஓங்கிக் கொண்டே, இடது கையால் இரும்பினால் ஆன புலிநகம் போன்ற ஆயுதத்தால் அவன் வயிற்றில் ஓங்கி அடித்துக் கையால் இழுத்தார். அவன் வயிறு கிழிந்து குடல் சரிந்து விழுந்தான். எனினும், அவன் தனது மேல் அங்கியினால் சரிந்த குடலை எடுத்து வயிற்றில் வைத்துக் கட்டிக்கொண்டு சிவாஜியை மீண்டும் தாக்க வந்தான். சிவாஜியும் தன் கேடயத்தால் அவன் கத்தி தன்மேல் படாமல் தடுத்துக் கொண்டு தன்னுடைய பெரிய வாளால், அவன் இடது தோள் தொடங்கி வலது விலாவரையில் ஓங்கி வெட்டி அவனை இரு துண்டாக ஆக்கினார். விகாரி வருஷம் மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் வியாழக்கிழமை நண்பகலில் இது நடந்தது என்று மெக்கன்சி சுவடிகள் கூறுகின்றன. அப்சல்கான் வெட்டுண்டு விழுந்ததும், அவனுடைய வாளை கிருஷ்ணாஜி பண்டிதன் எடுத்துக் கொண்டு சிவாஜி ராஜாவைத் தாக்க முனைந்தான். அப்போது ராஜா சொன்னார்:- “ஓய்! பண்டிதரே, நீரோ பிராமணன். ஒரு பிராமணனைக் கொல்வது எனக்கு தர்மமல்ல. நாம் பிராமணர்களின் பாததூளியை பூஜை செய்து வருபவன். நமக்கு குரு, தெய்வம் எல்லாம் பிராமணர்களானபடியால், கையிலிருக்கும் கத்தியைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிடும். போவதற்கு வழிகளை சீர்செய்து தர ஏற்பாடு செய்கிறேன். இல்லாவிட்டல் இங்கேயே தங்குவதானால் நான் எல்லா வசதிகளும் செய்து தரச் சொல்லுகிறேன்” என்று அன்போடு நிதானமாகச் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார். [] இவ்வளவு சொன்ன பிறகும் அந்த கிருஷ்ணாஜி பண்டிதன் தன் கத்தியை எடுத்துக் கொண்டு அவரை வெட்டத் துரத்தினான். அவரோ இவனை லட்சியமே செய்யாமல் திரும்பிக்கூட பார்க்காமல் போய்க்கொண்டிருந்தார். அப்போது இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி ராஜாவின் ஊழியன் கிஸ்மத்கான் என்பவன் கிருஷ்ணாஜியை ஒரே வெட்டாக வெட்டி வீழ்த்தி விட்டான். சிவாஜி ராஜா நாகராவை ஒலிக்கச் செய்தார். அந்த ஒலி கேட்டதும் ஆங்காங்கே காடுகளில் ஒளிந்திருந்த மராட்டிய படைகள் வெளியே வந்து அப்சல்கானுடன் வந்த படைவீரர்கள் ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் வேட்டையாடிக் கொன்றனர். அவன் கொண்டு வந்த யானை, குதிரை அனைத்தையும் சிறைப்பிடித்தனர். தங்கள் செய்கைக்கு வருந்திய படைத்தளபதிகளை மன்னித்து அவர்களுக்கு உயிர்பிச்சையும், பரிசுகளும் அளித்துத் திருப்பி அனுப்பி வைத்தார் சிவாஜி ராஜா. 21 அருணாசல கவிராயர் [] அருணாசல கவிராயர் (1711 – 1779)  அருணாசல கவிராயர் அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள தில்லையாடி எனும் கிராமத்தில் வாழ்ந்த நல்லதம்பிப் பிள்ளை வள்ளியம்மாள் தம்பதியரின் நான்காவது மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் சமண மதத்தவராயினும் பின்னர் சைவத்துக்கு மாறியவர், அப்பர் சுவாமிகளைப் போல. குழந்தை அருணாசலத்துக்கு ஐந்தாவது வயதில் அட்சராப்பியாசம் செய்து வைத்து கல்வி பயல அனுப்பப்பட்டார். அதில் சிறப்பம்சம் என்னவென்றால் அருணாசலம் தனது ஐந்தாவது வயதில், ஐந்தாவது மாதத்தில் ஐந்தாம் தேதியில் கல்வியைத் தொடங்கினார். பாரம்பரிய முறையில் கற்பிக்கப்பட்ட கல்வி அவருடைய பன்னிரெண்டாம் வயது வரை தொடர்ந்தது. காரணம் அப்போது அவருடைய தந்தையார் காலமாகிவிட்டார். [] தந்தையின் மறைவையொட்டி கல்வி நின்று போனது அருணாசலருக்கு மட்டுமல்ல, மகாகவி பாரதி உள்ளிட்ட பலருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதைத்தான் பழைய பாடலொன்று சொல்லும்: “தந்தையோடு கல்வி போம், தாயோடு அறுசுவை உண்டி போம்” என்று. இவர் அருகிலிருந்த தருமபுர ஆதீனத்துக்குச் சென்று தனது நின்று போன கல்வியைத் தொடர்ந்தார். அங்கு அவர் தமிழ் கிரந்தங்களும், ஆகம சாஸ்திரமும் படித்து வந்ததோடு சம்ஸ்கிருத மொழியையும் கற்றார். கல்வி கேள்விகளில் நல்ல தேர்ச்சி பெற்று சிறப்பாக விளங்கிய இவருக்கு பதினெட்டு வயதானபோது, சிலர் இவரை மடத்துக்குத் தலைவராகக்கூட வாய்ப்பிருக்கிறதாகச் சொல்லி வைத்தார்கள். ஆனால் அருணாசலரோ துறவு வாழ்க்கை வாழ்ந்து மடத்துக்கு அதிபராக ஆவதினும் தான் ஒரு கிரஹஸ்தானகவே விரும்பினார். அவர் படித்த திருவள்ளுவரின் திருக்குறளும், கம்பராமாயணமும் அப்படியிருப்பதைத்தான் அவருக்குப் போதித்ததாகக் கருதினார். பதிமூன்று வயது வரை தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் பழுதற கற்றுக் கொண்டார். திருமணம் செய்து கொண்ட அருணாசலருக்கு ஒரு நகைக்கடை (காசுக்கடை) வைத்து வியாபாரம் செய்யப் பணித்தனர். அவர் கடையில் வியாபார நிமித்தம் செலவிடும் நேரம் போக அதிக நேரம் கிடைத்தமையால் இவர் அங்கு இருந்து கொண்டே நாலாயிர திவ்ய பிரபந்தம், திருமுறைகள், வேத ஆகம சாஸ்திரங்கள் போன்ற சமயம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் படித்து வரலானார். [] அவர் படித்த இலக்கியங்களிலும், திருக்குறள் போன்ற அற நூல்களிலும் காணப்படும் வாழ்க்கை நெறிமுறைகளையும் பண்புகளையும் கம்பனுடைய காவியத்தில் இராமபிரானிடம் இருப்பதை கண்டுகொண்டார். இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த நிகழ்ச்சி, இவர் புதுச்சேரிக்கு தன்னுடைய நகைக்கடைக்காக தங்கம் வாங்க வந்தபோது சந்தித்த இருபெரும் இசை மேதைகளின் மூலம் அமைந்தது. அந்த இருவரின் பெயர்கள் ஒருவர் வெங்கட்டராம ஐயர் மற்றவர் கோதண்டராம ஐயர். இவர்கள் இருவரும் சீர்காழியை அடுத்த சட்டனாதபுரத்தைச் சேர்ந்தவர்கள். ஊரிலிருந்து கிளம்பி புதுச்சேரி செல்லும் வழியில் சீர்காழியில் இவர் தருமபுர மடத்துக் கிளையில் தங்க நேர்ந்தது. அந்த சீர்காழி மடத்தில் தலைவராக இருந்தவர் முன்பு அருணாசலருடன் படித்த சிதம்பரம் பிள்ளை என்பவர். அவர் “கட்டளை மாலை” என்ற பாமாலையை இயற்றியிருந்தார். அவருக்குத் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்காழி குறித்த ஒரு பாடலை இயற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருக்கு இருந்த வேலை பளுவின் காரணமாக அது முடியாமலிருந்தது. பாட்டில் தொடக்க அடி மட்டும்தான் எழுதியிருந்தார், மேற்கொண்டு எழுத நேரமில்லை. அந்த நேரம் பார்த்து அருணாசலர் அங்கு வந்தபடியால், அவரிடம் இந்த சீர்காழி பாமாலையைப் பூர்த்தி செய்து தர வேண்டினார். அருணாசலரும் அதற்கு ஒப்புக்கொண்டு புதுச்சேரி வந்து சேர்ந்தவுடன் ஒரே இரவில் அந்த பாமாலையை எழுதி பூர்த்தி செய்து ஒரு தூதுவர் மூலம் சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுத்து அனுப்பிவிட்டார். [] சிதம்பரம் பிள்ளைக்கு ஒரே ஆச்சரியம். படித்துப் பார்த்துவிட்டு இத்தனை சிறப்பாக எழுதியிருக்கிறாரே, இவரது புலமைதான் என்னே என்று வியந்து போனார். உடனே அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டார். எப்படியாவது அருணாசலரைத் தன்னுடன் சீர்காழியில் தங்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து தில்லையாடியிலிருந்து அவரது குடும்பத்தை சீர்காழிக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்துவிட்டார். புதுச்சேரியிலிருந்து திரும்பி வரும் வழியில் சீர்காழி வந்த அருணாசலருக்கு ஒரே திகைப்பு. இது என்ன, நம் குடும்பத்தையே தில்லையாடியிலிருந்து கொண்டு வந்து சீர்காழியில் குடியமர்த்தி விட்டாரே, சரி இனிமேல் இங்கேயே இருந்துவிட வேண்டியதுதான் என்று அங்கேயே தங்கிவிட்டார். அதுமுதல்தான் அவர் சீர்காழி அருணாசல கவிராயர் என்றழைக்கப்பட்டார். புதுச்சேரியில் அருணாசலர் சந்தித்த இரு சங்கீத வித்வான்களான வெங்கட்டராம ஐயரும், கோதண்டராம ஐயரும் சீர்காழியில் வசித்து வந்த அருணாசலரைச் சந்தித்து கம்பராமாயணத்தில் சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வதறாக வந்தனர். அப்போது கம்பராமாயணம் அதன் நயங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கையில் அவர்கள் சொன்னார்கள், “நீங்கள் கம்பராமாயணத்தை ஒரு நாட்டிய இசை நாடகமாக ஏன் ஆக்கக்கூடாது. கவிதைகளை நீங்கள் இயற்றுங்கள், நாங்கள் அவற்றுக்கு ராகம், தாளம் இவற்றை அமைத்து இசை நாடகமாக ஆக்க உதவி செய்கிறோம்” என்றனர். [] இந்த யோசனை அருணாசலருக்கு மிகவும் பிடித்திருந்தது. கம்பனுடைய காப்பியச் சுவையில் ஏற்கனவே மனம் கவரப்பட்டிருந்த நிலையில், அதை மேலும் மேலும் படித்து அனுபவிக்க வேண்டுமென்கிற அவா இருந்ததால், அதை ஒரு இசை நாடகமாக வடிக்கலாம் என்று நண்பர்கள் சொன்ன யோசனை இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கம்பனின் கவி நயமிக்க பாடல்களும், பால பாரதியின் சந்த விருத்தங்களும் மனதில் ஏற்படுத்தியிருந்த தாக்கம் இவரை இராம நாடக கீர்த்தனைகளை இயற்ற தூண்டுகோலாக அமைந்தன. அப்படி அவர் இயற்றும் இராம நாடக கீர்த்தனைகள் பண்டிதர்களுக்கு அல்லாமல், பாமர மக்களும் பாடி மகிழ்ந்து, நாடகமாக நடிக்கப் பயன்படும் என்று எண்ணினார். இராம நாடக கீர்த்தனைகளை இவர் முதலிலிருந்து தொடங்குவதற்கு பதிலாக, முதன் முதலில் யுத்த காண்டத்தில் வரும் “அடடா வெளியே புறப்படடா” எனும் பாட்டை எழுதி, நண்பர்களிடம் கொடுத்து இசை அமைக்கச் செய்து அதனை சென்னையில் பாடச் செய்தார். அங்கு அந்தப் பாட்டு மிகவும் பிரபலமானது. சென்னையிலிருந்து திரும்பும் வழியில் இசைக் கலைஞர்களான நண்பர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில், இராம காவியத்தை முழுவதையும் பாட்டுகள் இயற்றி பூர்த்தி செய்யத் தொடங்கினார். அப்படி தோன்றியதுதான் அருணாசல கவிராயரின் “இராம நாடக கீர்த்தனைகள்”. மிகச் சாதாரணமான புழக்கத்திலுள்ள சொற்களைப் போட்டு, பழக்கத்திலிருக்கும் பழமொழி களைச் சேர்த்து அவர் இயற்றிய அந்த எளிமையான பாட்டுக்கள் நல்ல இசையோடு செர்ந்து, கேட்போர் நெஞ்சங்களையும், படித்த மற்றும் பாமரர்களையும் மிகவும் கவர்ந்தன. கவிராயரின் “இராம நாடக கீர்த்தனைகள்” பூர்த்தியானபின் அருணாசலருக்கு ஒரு ஆசை. முன்பு கம்ப நாட்டாழ்வார் தனது கம்ப ராமாயணத்தை திருவரங்கத்தில் கொண்டு போய் அரங்கேற்றம் செய்தாராமே, அது போல நாமும் அங்கே கொண்டு போய் நமது நாடகத்தை அரங்கேற்றினால் என்ன என்று எண்ணமிட்டார். அதோடு, அங்கு அரங்கேற்றம் செய்தால் கம்பன் செய்தது போல நாமும் மற்ற தெய்வங்கள் மீது தோடயங்களை இயற்றிப் பாடலாம் என்று எண்ணினார். கம்பனின் காப்பியத்தைத்தானே இவர் எளிய தமிழில் நாடகப் பாடல்களாக ஆக்கியிருக்கிறார், ஆகையால் கம்பனின் பாதையில் செல்வதையே இவரும் விரும்பினார். அந்த எண்ணத்தில் உருவானதுதான் “ஏன் பள்ளிகொண்டீர் ஐயா, ஸ்ரீ ரங்கனாதா” எனும் மோகன ராக கீர்த்தனை. பின்னாளில் பரத நாட்டியக் கலைஞர்கள் இந்தப் பாடலை எடுத்துக் கொண்டு அபினயம் பிடித்து இந்தப் பாடலுக்கும், ஆடலுக்கும் பெருமை சேர்த்தனர் என்பது வரலாறு சொல்லும் செய்தி. இந்தப் பாடலுக்கு ஆடும் போது நாட்டியக் கலைஞர்கள் தங்கள் திறமை முழுவதையும் வெளிப்படும் வண்ணம் பாவம் காட்டி ஆடுவதை நாம் இன்றும் ரசித்துக்கொண்டு வருகிறோம். அவர் காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் துளஜாஜி மகாராஜா ஆவார். அப்போது தஞ்சாவூர் மராட்டிய அரசுக்கும், அரசர் குடும்பத்துக்கும் சூழ்நிலை சரியில்லாமலிருந்த காரணத்தால், இந்த நாடகத்தின் அரங்கேற்றம் துளஜாஜி ராஜா முன்னிலையில் நடத்த முடியாமல் போனது. எனவே அருணாசல கவிராயர் புதுச்சேரி சென்று அங்கு துபாஷாக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளையைச் சந்தித்துப் பேசினார். அவர் சென்னையில் அப்போது இருந்த வள்ளலும், கலை ஆர்வலருமான மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார். [] மணலி முத்துகிருஷ்ண முதலியார் நல்ல கலா ரசிகர் என்பதால் அருணாசல கவிராயரின் சில பாட்டுக்களை வித்வான்கள் பாடக் கேட்டிருக்கிறார். அவருக்கு அவை மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட சூழ் நிலையில் இப்போது அந்த பாடல்களை இயற்றிய ஆசிரியரே நேரில் வந்திருக்கிறார், அதிலும் இராமாயண நாட்டிய நாடகத்துக்கான எல்லா பாடல்களோடும் வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதற்கிடையே தஞ்சையில் மன்னன் துளஜாவுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தது. எனவே அருணாசல கவிராயர் முதலில் இராம நாடகத்தை மன்னனுக்கு முன்னதாக நடத்தினார். அதன் பின் புதுவை சென்று ஆனந்தரங்கம் பிள்ளையின் முன்னிலையிலும் நடத்தினார். அப்போது பிள்ளையுடன் வேறு பல செல்வந்தர்களும் இருந்து ரசித்துப் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் அருணாசல கவிராயருக்கு அரும் பெரும் விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களை அளித்து கெளரவித்தனர். இந்த “இராம நாடக கீர்த்தனைகள் ” மட்டுமே அவருக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்திருந்தது என்றாலும், அவர் மேலும் பல நல்ல பாடல்களை இயற்றியிருக்கிறார். அவரது படைப்புக்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை: “அஜோமுகி நாடகம்”, “அனுமார் பிள்ளைத்தமிழ்”, “சீர்காழி ஸ்தலபுராணம்”, “சீர்காழி கோவை” என்பவை சில. 22 பாரதிதாசன் [] பாரதிதாசன் புதுச்சேரியில் வாழ்ந்த செல்வந்தர் குடும்பத்தில் கனகசபை முதலியார், லக்ஷ்மி அம்மாள் எனும் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம். தொடக்கக் கல்வியிலிருந்து தமிழிலக்கியம், இலக்கணம், சைவ சித்தாந்தம் வேதாந்தம் ஆகியவற்றைச் சிறந்த அறிஞர்களிடம் கற்று புலமை பெற்றார். மகாகவி பாரதியாரின் அறிமுகம் இவருக்கு 1909இல் கிடைத்தது. முதல் சந்திப்பிலேயே மகாகவியை இவர் தனது குருநாதராக வரித்துக் கொண்டார். கல்லூரி படிப்புக்குப் பிறகு காரைக்கால் பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இந்திய சுதந்திரப் போரில் இவர் ஈடுபட்டு இந்தியாவில் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், புதுச்சேரி பகுதியை ஆண்டுவந்த பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகவும் தனது பேச்சு, எழுத்துக்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார். இவருடைய இந்த எழுத்துக்களுக்காக பிரெஞ்சு ஆட்சியாளர்கள் இவரை சிறையில் அடைத்தனர். பிற்காலத்தில் இவர் பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய கருத்துக்களால் கவரப்பட்டு அவருடைய அத்தியந்த சீடரானார். அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் இவர் ஒரு தூணாக இருந்து செயல்பட்டார். அதன்பின் சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கமாக உருவெடுத்த பிறகும் இவர் அதிலும் தீவிரமாக ஈடுபட்டார். திராவிட இயக்கத்தார் இவரை பாவேந்தர் என பெயரிட்டுப் பெருமைப் படுத்தினர். சென்னையில் நடைபெற்ற நாத்திகர்கள் மகாநாடொன்றில் தன்னையொரு “நாத்திகன்” எனப் பிரகடனப் படுத்திக் கொண்டு பெருமைப் பட்டார். இவருடைய இந்த கருத்துக்களாலும், பாரதியாரை ஒரு பிராமண சமூகத்தில் பிறந்தவர் என்பதற்காக அவரை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாமலும், அவருக்குப் போட்டியாளரைப் போல திராவிட இயக்கத்தார் இவரைப் போற்றிப் பெருமைப் படுத்தத் தொடங்கினர். ஆனாலும், பாரதிதாசனோ, தன்னுடைய சுப்புரத்தினம் எனும் பெயரை பாரதிதாசன் என்று வைத்துக் கொண்டு தன்னுடைய குரு பக்தியை வெளிப்படுத்தியும், பாரதியை யார் குறை சொன்னாலும், இவர் ஏற்றுக் கொள்ளாததோடு, பாரதியாரின் சீடன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றும் பெருமையோடு குறிப்பிட்டார். 1950இல் “தினத்தந்தி” பத்திரிகையில் இவர் தன் குரு நாதரின் பெருமையையும், தான் அவரது தாசன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இவர் காலத்தில் அறிஞர் அண்ணாவின் கருத்துக்களோடு ஒத்துப் போய் பல மேடைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். எம்.ஜி.ஆருடனும் இவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. 1954இல் இவர் புதுச்சேரி சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் இவர் சென்னை மருத்துவ மனையொன்றில் காலமாகும் வரை தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இவரது பாடல்கள் பாரதியாரின் அடியொற்றிய அறிவுபூர்வமான எழுத்துக்களாக இன்றும் திகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பாரதியை இவர் பெயர் சொல்லி எழுதுவதோ பேசுவதோ கிடையாது. “ஐயர்” என்றும் “குருநாதர்” என்றே குறிப்பிட்டிருக்கிறார். இவர் “புதுவை கலைமகள்”, “தேசோபகாரி”, “தேசபக்தன்” போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். பெரியாரின் பக்தர் என்பதால் இவர் பிராமண எதிர்ப்பில் ஊறித்திளைத்தவர் ஆகையால் இவரது எழுத்துக்களில் பிராமண எதிர்ப்பு என்பது வெளிப்படையாகக் காணப்படும். தமிழர்களுக்குள் ‘தமிழ் இனம்’ என்றும் ‘ஆரிய இனம்’ என்றும் இனம் பிரித்துப் பார்த்து பிராமணர் பிராமணரல்லாதாரைக் குறிப்பிட்டு வந்ததை கவனிக்கலாம். இவருக்கு “புரட்சிக் கவிஞர்” எனும் பட்டத்தை பெரியார் ஈ.வே.ரா. அளித்தார். இவரது அமைதி ஊமை எனும் நாடகத்துக்கு விருது கிடைத்தது. ‘பிரிராந்தையார்’ எனும் நூலுக்கு இவரது காலத்துக்குப் பிறகு 1970இல் சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. []   23 எம்.கே.தியாகராஜ பாகவதர் [] ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (எம்.கே.தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு இது. அவருடைய விழா சில இடங்களில் கொண்டாடப்பட்டது, என்றாலும் அவருடைய புகழுக்கு அது போதுமானதல்ல. அவருடைய இசை இன்றும் அந்தக்கால பெரியவர்களுடைய மனங்களைக் கவர்ந்தது.) சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு மக்களைத் தனது இன்னிசையால் வசியம் செய்து வைத்திருந்த ஒருவர்; அன்றைய திரையுலக சூப்பர் ஸ்டாராக சுமார் பத்து ஆண்டுகள் வலம் வந்த நடிகர்; தன்னுடைய இனிய குரலால் பாடி பெண்களை மயங்கடித்த அழகர் இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம் இவரைப் பற்றி. அவர்தான் எம்.கே.டி. என்று நாடு அறிந்த மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர். “மன்மத லீலையை வென்றார் உண்டோ?” எனும் அந்த இனிய குரலைச் சற்று நினைத்துப் பாருங்கள். அவர் பாட அதற்கு டி.ஆர்.ராஜகுமாரி அபினயம் பிடிக்க இன்றைய பெரிசுகள், அன்றைய வாலிபர்கள் மயங்கித்தான் போய்க் கிடந்தனர். “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி”, “சிவபெருமான் கிருபை வேண்டும்”, “அப்பனை பாடும் வாயால்” இப்படி எத்தனையோ பாடல்கள். அன்று பாகவதர் நடித்தப் படங்களைப் பார்த்து விட்டு இந்தப் பாடல்களை முணுமுணுக்காத வாயே இல்லையெனலாம். இப்படிப்பட்ட பல பெருமைகளுக்கெல்லாம் உரியவரான எம்.கே.தியாகராஜ பாகவருடைய நூற்றாண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி நிறைவடைகிறது. பாகவதர் பிறந்தது 3-1-1909 அன்று. பாகவதர் பொற்கொல்லர் வம்சத்தில் வந்தவர். வசதி குறைந்த மிகச் சாதாரண குடும்பம் பாகவதருடைய குடும்பம். பிள்ளை படிக்கட்டுமென்று பெற்றோர் இவரை பள்ளிக்கு அனுப்பினர்; ஆனால் அவருக்கு இசையில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. இவர் பாடுவதைக் கேட்டவர்கள் திகைத்துப் போய் அவருடைய தந்தையாரிடம் சொல்லி, பையனுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுங்கள், நல்ல பாடகனாக வருவான் என்றனர். பிள்ளைக்குப் படிப்புதான் ஏறவில்லையே, நகை செய்யும் பட்டறையிலாவது பணிபுரியட்டுமென்று கொண்டு போய் விட்டார். அங்கு ஏராளமான கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. இது என்ன நமது நகை செய்யும் வேலைக்கு இத்தனை கிராக்கியா என்று வியந்து போய்ப் பார்த்தால் அங்கு பையன் பாட, கூட்டம் ரசித்துக் கொண்டிருந்தது. சரி இவன் படிப்புக்கும் லாயக்கில்லை, குலத்தொழிலுக்கும் லாயக்கில்லை பாட்டுதான் இவனுக்கு என்று அன்றை நாளில் ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டு, அமெச்சூர் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த எஃப்.ஜி.நடேச அய்யரிடம் கொண்டு போய் விட்டார். அப்போதெல்லாம் நாடகங்கள் நடிப்பதற்கென்று பல பாய்ஸ் நாடகக் குழுக்கள் இருந்தன. பல பெரிய பெரிய நடிகர்களெல்லாம் அந்த பாய்ஸ் கம்பெனியிலிருந்து வந்தவர்கள்தான். [] அந்த காலகட்டத்தில்தான் நகரத்தார் குடும்பத்தில் வந்த லட்சுமணன் செட்டியார் என்பவரும் ஆர்.எம்.அழகப்பச் செட்டியார் அவர்களும் பின்னாளில் புகழ்பெற்று விளங்கிய சினிமாப்பட இயக்குனர் கே.சுப்பிரமணியம் அவர்களும் “பவளக்கொடி” என்ற நாடகத்தைப் பார்க்கப் போனார்கள். அந்த நாடகத்தில் அர்ஜுனனாக வேடமிட்டு நடித்த சிறுவனின் பாட்டு இவர்களுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. நாட்டுக்கோட்டையார்களுக்கு இந்தப் பையனை வைத்து ஒரு சினிமாப் படம் எடுத்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. விளைவு பாகவதர் நடித்து வெளியான படம் அவரது முதல் படமான “பவளக்கொடி”. இது 1934இல் வெளிவந்தது. அப்போது தொடங்கியதுதான் பாகவதரின் திரையுலகப் பயணம். சுமார் பத்து வருடங்கள் ஒரே ஏறுமுகம் தான். பாகவதரின் இரண்டாவது படம் 1935இல் வெளிவந்தது “நவீன சாரங்கதாரா” என்ற பெயரில். இதையும் இயக்கியவர் கே.சுப்பிரமணியம் தான். 1936இல் “சத்தியசீலன்” என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்து பாகவதர் வெளியிட்டார். 1937இல் “சிந்தாமணி” என்ற படம் வெளியானது. தொடர்ந்து ஒரு வருடம் ஓடி சாதனை புரிந்த படம் “சிந்தாமணி”. இந்தப் படத்தின் “மாயப் பிரபஞ்சத்தில்” பாடலும் “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி” எனும் பாடலும் வெகுவாகப் பிரபலமடைந்து அனைவரும் பாடத் தொடங்கிவிட்டனர். எங்கேயாவது ஒரு திரைப்படத்தைத் தொடர்ந்து பல மாதங்கள் ஓட்டி அதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு மற்றொரு சினிமா அரங்கம் கட்டியதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், அப்படிப்பட்ட நிகழ்ச்சி மதுரையில் நடந்தது. ராயல் டாக்கீசில் ஓடி வெற்றிபெற்ற “சிந்தாமணி” படத்தால் கிடைத்த லாபத்தைக் கொண்டு மதுரையில் “சிந்தாமணி” என்றொரு சினிமா அரங்கம் கட்டப்பட்டது வியப்பிற்குரியது. அதே ஆண்டில் பிரபலமான தமிழ்நாட்டுக் காதல் கதையான அம்பிகாபதி – அமராவதி கதை படமாக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் ஒரு அமெரிக்கர். தமிழ் தெரியாத ஒருவர் தமிழ்ப் புலவன் ஒருவனுடைய காதல் கதையைப் படமாக்கினார். இந்தப் படமும் ஓகோவென்று ஓடி வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் படத்தில் அம்பிகாபதியாக நடித்த பாகவதரும், அமராவதியாக நடித்த சந்தானலட்சுமியும் மிக நெருக்கமாக காதல் காட்சிகளில் நடித்ததை அந்தக்கால ஆசாரசீலர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பாவம்! அவர்கள் இன்றைய படங்களைப் பார்க்க நேர்ந்தால் என்ன சொல்வார்களோ? [] முதன்முதலில் பாகவதர் 1934இல் நடிக்கத் தொடங்கிய “பவளக்கொடி”யைத் தொடர்ந்து அவர் மொத்தம் 14 படங்களில் நடித்திருக்கிறார். 1934இல் பவளக்கொடி, 1935இல் சாரங்கதரா,1936இல் சத்தியசீலன், 1937இல் அம்பிகாபதி, சிந்தாமணி, 1939இல் திருநீலகண்டர், 1941இல் அசோக்குமார், 1944இல் ஹரிதாஸ் கடைசியாக அமரகவி, ராஜமுக்தி, சியாமளா, சிவகாமி, சிவகவி ஆகிய படங்கலிலும் நடித்தார். இவற்றில் “ஹரிதாஸ்” படம் சென்னை பிராட்வே சினிமா தியேட்டரில் தொடர்ந்து மூன்று தீபாவளியைத் தாண்டி 114 வாரங்கள் ஓடியது, இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக இருந்து வருகிறது. இந்தப் படத்தில் ஒரு வெள்ளைப் புரவியில் பாகவதர் “வாழ்விலோர் திருநாள்” என்று பாடிக்கொண்டு வரும்போது, வழியில் தண்ணீர்க்குடத்துடன் வருகின்ற பெண்கள் குடம் கீழே விழுவதுகூட தெரியாமல் இவரைப் பார்த்துக் காதல்வசப்படும் காட்சிகள் திரையுலகத்துக்கு அப்போது ஒரு புதுமை. அது திரைப்படங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்கூட பாகவதருக்கு ஏற்பட்ட அனுபவங்கள். பாகவதரின் நாடக காலங்களிலேயே இசையமைப்பாளர் ஜி.ராமநாத ஐயர் இவரோடு நெருக்கமான நட்பு பூண்டிருந்தார். பாபநாசம் சிவன் எனும் பாட்டு வாத்தியார் சென்னையில் குடியேறியிருந்த காலத்தில் மைலாப்பூரில் மார்கழி பஜனைகளைப் பாடிக்கொண்டு மாடவீதிகளில் வலம் வருவது வழக்கம். அவரது பாடல்கள் இயற்றும் திறமை, இசை ஞானம் இவைகளைக் கண்டு பாகவதர் தன்னுடைய படங்களுக்குப் முதலில் பாடல்கள் இயற்றி இசை அமைக்கவும், பின்னர் ஜி.ராமநாத ஐயர், கே.வி.மகாதேவான், சி.என்.பாண்டுரங்கன் ஆகியோர் இசை அமைப்பில் பாடல்களை எழுதவும் ஏற்பாடு செய்து கொண்டார். பாகவதர் பாட்டு என்றால் அதனை எழுதியவர் பாபநாசம் சிவன் என்று ஆயிற்று. அந்த காலகட்டத்தில் இந்த கூட்டணி வெளிக்கொண்டு வந்த பாடல்கள் அனைத்தும் அமரத்துவம் வாய்ந்ததாக இருந்தன. இயற்கையிலேயே பாகவதருக்கு அமைந்திருந்த இசை ஞானத்தை சாஸ்திரிய வழியில் உயர்த்திக் கொள்வதற்காக அப்போது மிகப் பிரபலமான கர்நாடக இசை மேதைகளாக திருச்சியில் இருந்த ஆலத்தூர் சகோதரர்களிடம் இவர் சங்கீதம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இன்னொரு சுவையான செய்தி, பிரபல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் அவர்கள் பாடல்களைப் பாட குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் பாகவதர். அவரைப் போலவே அப்படியே பாடி தன்னை வெளி உலகத்துக்கு அறிமுகம் செய்து கொண்டார் டி.எம்.எஸ். [] டி.எம்.செளந்தரராஜனின் ஆரம்ப காலப் பாடல்கள் அப்படியே பாகவதர் பாடுவது போலவே இருக்கும். அவரே ஒரு பேட்டியில் சொல்லும்போது வீட்டில் உட்கார்ந்துகொண்டு பாகவதரின் பாடல்களை இவர் உரத்த குரலில் பாடும்போது, அக்கம்பக்கத்தார் பாகவதர்தான் பாடுகிறாரோ என்று பார்ப்பார்களாம். அது போலவே பாகவதர் பாடிய அதே பாடல்களின் வரிகளை டி.எம்.எஸ். தன்னுடைய திரைப்படங்கள் சிலவற்றில் அவர் போலவே பாடியிருப்பதை கவனித்திருப்பீர்கள். ‘சிந்தாமணி’யில் பாகவதர் பாடியிருக்கிற ‘ராதே உனது கோபம் ஆகாதடி” எனும் பாடலை வேறொரு படத்தில் டி.எம்.எஸ்.பாடியிருக்கிறார். தூக்குத்தூக்கி போன்ற படங்களில் டி.எம்.எஸ். பாகவதர் போலவே பாடியிருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். திருநீலகண்டர் எனும் படமும் பாகவதர் பாடல்களால் சிறப்புப் பெற்றது. அவரது பழைய பாடல்களின் இசைவடிவங்கள் பிற்கால படங்கள் சிலவற்றிலும் பின்பற்றப்பட்டிருப்பதை கவனிக்கலாம். திருநீலகண்டரில் “தீனகருணா கரனே நடராஜா” எனும் பாடல் வடிவில் பின்னாளில் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரனில் “ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா” என்ற பாடலாக வெளிவந்தது. பாகவதரின் “சிவபெருமான் கிருபை வேண்டும்” என்ற பாடல் டி.எம்.எஸ்.குரலில் “மங்களமாய் வாழ வேண்டும்” என்று வெளிவந்தது. கர்நாடக இசைக் கலைஞர்கள் சிலர் முதலில் பாகவதரின் பாடல்களை, அவை கர்நாடக இசை ராகங்களில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மனம் வராமல் இருந்தனர். பிறகு மிகப் பிரபலமடைந்த சில பாடல்களைக் கேட்ட பிறகு அவர்கள் கூட பாகவதரின் கர்நாடக இசையை ஏற்றுக் கொண்டார்களாம். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் கவர்னர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாகவதர் போருக்கு ஆதரவாக நிதிதேடி பல கச்சேரிகளைச் செய்து பிரிட்டிஷ் அரசுக்கு உதவியிருந்தார். அதனைப் போற்றும் விதத்தில் பிரிட்டிஷ் அரசும், சென்னை ஆங்கில கவர்னராக இருந்த ஜேம்ஸ் ஹோப் என்பவர் இவருக்கு “திவான் பகதூர்” எனும் விருதைக் கொடுக்க விரும்பினார். ஆனால் பாகவதர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். பாகவதர் நல்ல அழகான தோற்றம் கொண்டவர். பொன்னிறம் என்பார்களே அந்த நிறத்தை அவரிடம் பார்க்கலாம். அவரது சிகை அலங்காரம் பார்த்து பலர் அதே போல வைத்துக் கொண்டனர். அதற்கு அந்த நாட்களில் “பாகவதர் கிராப்” என்றே பெயர். பாகவதரின் படங்கள் சிலவற்றில் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோர் நடித்தனர். திரையுலகில் இந்தப் பெயர்கள் உச்ச கட்டத்தில் இருந்த நாளில் ஒரு சோக நிகழ்ச்சி பாகவதருக்கும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் ஏற்பட்டது. அந்த காலத்தில் பிரபலமானவர்களின் அந்தரங்க வாழ்க்கையை பத்திரிகைகளில் பிரசுரித்து அவப்பெயரை ஏற்படுத்தி வர சில பத்திரிகைகள் உருவாகின. அதில் லட்சுமிகாந்தன் என்பவர் நடத்திய “இந்துநேசன்” எனும் மஞ்சள் பத்திரிகை பிரபலமானது. இந்தப் பத்திரிகையில் பல பிரபலமானவர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகைகள் இவர்களைப் பற்றிய அந்தரங்கச் செய்திகளைப் பிரசுரிப்பது, அப்படிப் பிரசுரம் செய்யாமலிருக்க இவர்களிடம் பணம் பிடுங்குவது போன்ற செயல்களைச் செய்து வந்தார்கள். அப்படி “இந்துநேசன்” பத்திரிகை திரையுலகில் பிரபலமாக இருந்த பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களையும் பற்றி கேவலமாக எழுதிவந்தது. அப்படியொருநாள் சென்னை புரசவாக்கத்தில் தாணா தெருவில் கைரிக்ஷாவில் பயணம் செய்து வந்து லட்சுமிகாந்தனை சிலர் வழிமறித்துக் குத்திக் கொன்றுவிட்டனர். இது அந்த நாளில் மிக பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த கொலை வழக்கில் சம்பந்தம் இருக்கிறது என்று சொல்லி பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகழின் உச்சத்தில் இருந்த இவர்களுக்கு நேர்ந்த இந்த நிலைமையைக் கண்டு தமிழகமே நிலைகுலைந்து போயிற்று. அப்போது பாகவதருக்குப் பல புதிய படங்கள் ஒப்பந்தமாகியிருந்தன. அவைகள் எல்லாம் நின்று போயின. புதிய படங்களுக்கு முன்பணம் கொடுத்த படமுதலாளிகள் தவித்துப் போயினர். தங்கள் முன்பணத்தைத் திரும்பப் பெருவதில் கவனமாக இருந்தனர். பாகவதர் மொத்தம் 30 மாதங்கள் சிறையில் அடைபட்டுக் கிடந்தார். அந்த காலகட்டத்தில் அவர் பட்ட மனவேதனை, படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பணத்தை எப்படியும் திரும்ப கொடுத்துவிட வேண்டும் என்கிற நாணயம் அதனால் ஏற்பட்ட மனக்கவலை இவற்றால் அவரது உடல்நிலை கெட்டது. நீரிழிவு வியாதியால் அவதிப்படத் தொடங்கினார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோருக்காக அன்றைய மிகப்பெரிய வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். நாயுடுவுக்காக பிரபலமான கே.எம்.முன்ஷி ஆஜரானார். நாயுடு விடுவிக்கப்பட்டார். மற்ற இருவரும் தண்டிக்கப்பட்டனர். இவர்கள் அப்போது லண்டனில் இருந்த மேல்முறையீட்டு நீதிமன்றமான பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்தனர். இவர்களுக்கு பல பிரபலமானவர்களின் ஆதரவும் கிடைத்தது. இருவரும் இறுதியாக விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான பிறகு பாகவதரும் என்.எஸ்.கேயும் மறுவாழ்வு பெற முயற்சி செய்தனர். திராவிட இயக்கத்தார் இவர்களைத் தங்கள் பக்கம் அழைத்துக்கொள்ள விரும்பினர். என்.எஸ்.கே ஒப்புக்கொண்டு அவர்கள் இயக்கத்தோடு தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார், மறுவாழ்வும் பெற்றார். ஆனால் பாகவதரோ, தான் இறைபக்தி உள்ளவர் என்றும் தனக்கு இதெல்லாம் சரியாக வராது என்றும் ஒதுங்கிக் கொண்டார். விடுதலையான பாகவதர் திரும்ப அதே பழைய நிலைமையை அடையமுடியவில்லை. நாணயமும் நேர்மையும் தனது தர்மமாகக் கடைப்பிடித்த காரணத்தால் அவரது சொத்துக்கள் கரைந்தன. திருச்சியில் கண்டோன்மெண்ட் பகுதியில் ராணுவ ரெக்ரூட்மெண்ட் அலுவலகத்துக்கு எதிரில் பாகவதர் பங்களா என்ற பேருந்து நிறுத்தம் உண்டு. அங்கு இருந்த அவரது மாளிகை திரைப்படங்களில் வரும் அரண்மனை போல காட்சி தந்தது. பின்னாளில் அந்த மாளிகை இடிக்கப்பட்டு அங்கு இப்போது ஒரு பெரிய ஓட்டல் வந்துவிட்டது. பழைய நினைவுகளோடு அந்த இடத்தைப் பார்ப்பவர்களுக்குக் கண்களில் நீர் அரும்புவதைத் தடுக்கமுடியாது. அத்தனை சொத்துக்களும் கரைந்ததோடு, பாகவதரின் கண்பார்வையும் குறையத் தொடங்கியது. எளிமையான வாழ்க்கையைத் தொடங்கி, அவரது தோற்றம், இசைத்திறமை இவற்றால் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்த பாகவதர் தனது இறுதி நாட்களில் வறுமையின் கோரப்பிடிகளில் சிக்கிக் கொண்டு தவித்தார். தயாள சிந்தையும், பிறருக்கு உதவும் நல்ல குணமும், கடவுள் நம்பிக்கையும் அதிகம் இருந்த பாகவதருக்கு இப்படி ஒரு சோதனை நேரந்ததை தமிழகம் கண்ணீர் சிந்தி கவனித்தது. சமயபுரதுக்கும் தஞ்சை புன்னைநல்லூர் மரியம்மனுக்கும் நேர்த்திக்கடன் செய்து அந்த சந்நிதிகளில் தவம் இருந்தார் பாகவதர். என்ன செய்து என்ன? அவர் செய்த நற்செயல்கள் அவருக்குக் கைகொடுக்கவில்லை. தனது 50 வயதில் 1959ஆம் வருடம் நவம்பர் முதல் தேதி பாகவதர் இறைவனடி சேர்ந்தார். 24 அப்பூதியடிகள். அப்பூதி அடிகள் வரலாறு பொன்னி நதி வளம் பெருக்கும் சோழ வளநாட்டில் காவிரியின் வடகரையில் திருவையாற்றுக்குக் கிழக்கே மூன்று கல் தொலைவில் அமைந்துள்ள புண்ணியத் தலம் திங்களூர். இங்கு அறம் செழிக்க நற்செயல்கள் பல புரிந்து வாழ்ந்த அந்தண குலத்தோர் அப்பூதி அடிகள். இவர் பாவங்கள் அனைத்தையும் நீக்கியவர்; புண்ணியங்கள் அனைத்தையுமே தாங்கியவர். அத்தகையவர் திருமணம் செய்து கொண்டு திங்களூரில் தனது மனையாளொடும் வாழ்ந்து வந்தார். இந்த அந்தணக் குலத் தோன்றல் சிவ பக்தியில் ஆழ்ந்து திளைத்தவர். அடுத்தவர் துன்பம் தாங்காத உள்ளம் படைத்த இவர் ஓர் புண்ணியமூர்த்தி. அப்பர் சுவாமிகள் மீதுற்ற பக்தி இப்படி அறனும், வளமும் செழிக்க அற்புதமான இல்லற வாழ்க்கை வாழ்ந்து வந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசரைப் பற்றி கேள்வியுற்றார். இவரை அப்பர் என்றும் மக்கள் போற்றி வந்தார்களல்லவா? அத்தகைய மகா புண்ணியவானைக் கண்ணார தரிசிக்கவும், மனதார வணங்கி அவர்தம் ஆசியினைப் பெற்றிடவும் அனுதினமும் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்த பக்தி ரசம், அப்பர் மேல் அவர் கொண்ட காதல், பக்தி, ஈடுபாடு, இவர் சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களுக்குமே “திருநாவுக்கரசு” என்றே பெயர் வைத்து, அப்பெயரை பலமுறை உச்சரிக்கும் பாக்கியம் பெற்றிருந்தார். வீட்டிலிருந்த படி, மரக்கால் இவைகளுக்கும் திருநாவுக்கரசுதான். பசுக்கள், எருமைகள் அனைத்துக்கும் அவர் பெயரேதான். அவ்வூரில் அவர் செல்வந்தராகையால் ஒரு மடம் கட்டி அதற்கும் திருநாவுக்கரசர் என்று பெயரிட்டார். வழிப்போக்கர்கள் தாகசாந்தி செய்து கொள்வதற்கென்று பல தண்ணீர்ப் பந்தல்களை நாட்டி வைத்தார். அவைகளுக்கும் திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் என்றே பெயரிட்டார். அவ்வூர் மக்களின் பயன்பட்டுக்காக அவர் எடுப்பித்த குளங்களுக்கும், நந்தவனங்களுக்கும் அதே பெயர் தான். என்ன இது? இப்படியொரு பக்தியா? தான் கண்ணால் கண்டிராத ஒரு சிவபக்தர், தலைசிறந்த மகான் அவர்மீது கொண்ட காதலால் அவர் செய்து வைத்த அத்தனைக்கும் அந்த மகானின் பெயரே வைத்தார் என்றால் அவரது பக்தியை என்னவென்று சொல்லிப் புகழ்வது? நாவுக்கரசர் திங்களூர் வருகை இப்படியிருக்கும் நாளில் திருநாவுக்கரசர் சுவாமிகள் பற்பல சிவத்தலங்களுக்கும் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு காவிரியின் கரையோடு வந்து கொண்டிருந்தார். அப்படி அவர் திங்களூரைக் கடந்து செல்கையில் அவர் கண்களில் பட்ட அனைத்து இடங்களிலும் “திருநாவுக்கரசு” என்ற தனது பெயர் இருக்கக் கண்டார். அப்படி அவர் திகைத்து ஒரு தண்ணீர் பந்தலருகில் நின்றிருந்த சமயம் அங்கிருந்தவரைப் பார்த்து, இந்தத் தண்ணீர் பந்தலுக்கும் மற்ற பல அறக்காரியங்களுக்கும் இவ்வூரில் “திருநாவுக்கரசு” என்று பெயரிடப்பட்டிருப்பதன் காரணத்தை வினவினர். அதற்கு அந்த மனிதர் இவ்வூரில் அப்பூதி அடிகள் என்றொரு சிவபக்தர் இருக்கிறார். அவர் இந்தத் தண்ணீர் பந்தலுக்கு மட்டுமல்ல, அவர் செய்திருக்கிற அனைத்து தர்ம காரியங்களுக்கும் அதாவது அவர் கட்டிய சத்திரம், கிணறுகள், நந்தவனம், குளம் எல்லாவற்றுக்கும் திருநாவுக்கரசு என்றுதான் பெயரிட்டிருக்கிறார் என்று கூறினார். இப்படி அவர் சொன்னதைக் கேட்ட திருநாவுக்கரசு சுவாமிகள் திகைத்துப் போனார். இவர் ஏன் அப்படி எல்லா அறச்செயல்களுக்கும் திருநாவுக்கரசர் என்ற பெயரைச் சூட்டியிருக்கிறார், அப்படிப்பட்ட புண்ணியவான் எங்கே இருக்கிறார் என்று வினவினார். அதற்கு அந்த மனிதர், அப்பூதியடிகள் இதே ஊரைச் சேர்ந்தவர்தான். இந்நேரம் வரை இங்குதான் இருந்தார். இப்போதுதான் தன்னுடைய வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். அவர் வீடும் அதோ மிகச் சமீபத்தில்தான் இருக்கிறது என்றார் அவர். அப்பூதியார் இல்லத்தில் உடனே திருநாவுக்கரசு சுவாமிகள் அப்பூதி அடிகளுடைய வீடு அமைந்திருக்கிற தெருவுக்குச் சென்று அவர் வீடு எது என்று விசாரித்து அந்த வீட்டின் வாயிலில் போய் நின்றார். அப்போதுதான் உள்ளே நுழைந்து கால்கைகளைச் சுத்தம் செய்துவிட்டுத் திரும்பிய அப்பூதியாரின் கண்களில் வாயிலில் வந்து நிற்கும் ஒரு முதிய சிவனடியார் பட்டுவிட்டார். உடனடியாக வாயிலுக்கு வந்து அங்கு நிற்கும் சிவனடியாரை வணங்கி திண்ணையில் அமரச் செய்தார். அப்பூதி அடிகளைக் கண்ட திருநாவுக்கரசரும் உளம் குளிர அந்த பெரியோனை வாழ்த்தி வணங்கினார். திண்ணையில் அமர்ந்த திருநாவுக்கரசரை அப்பூதியடிகள் “ஐயனே! தேவரீர் இவ்விடத்திற்கு எது குறித்து எழுந்தருளியிருக்கின்றீர்” என வினவினார். அதற்கு அப்பர் சுவாமிகள் சொன்னார், ” அன்பரே! யான் திருப்பழனம் எனும் சிவத்தலத்தில் கோயில் கொண்டுள்ள எம் ஐயனை தரிசித்துவிட்டு வரும் வழியில் நீர் வைத்திருக்கிற தண்ணீர் பந்தலைக் கண்டு, அப்படியே நீர் இன்னும் பல நற்காரியங்களையும் தர்மங்களையும் செய்திருக்கிறீர் என்பதை அறிந்தும் கேட்டும் உம்மீது மிகவும் மகிழ்ந்து இவ்விடம் வந்தோம்” என்றார். பின்பு, “சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்திருக்கிற தண்ணீர் பந்தரில் உம்முடைய பெயரை எழுதாமல் வேறு யாரோ ஒருவருடைய பெயரை எழுதியதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் பொருட்டும் இங்கு வந்தேன்” என்றார். இதைக் கேட்ட அப்பூதி அடிகள் அப்பரை நோக்கி, “ஐயனே! பார்த்தால் நீர் நல்ல சிவனடியாராகத் தோன்றுகின்றீர். ஆனால் நீர் சொல்லிய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இல்லையே. பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவ மன்னன் செய்த இடையூறுகளையெல்லாம் சிவபக்தி எனும் பலத்தினாலே வென்று வெற்றிகண்ட திருநாவுக்கரசு சுவாமிகளின் திருப்பெயரை நான் எழுதிவைக்க, நீர் இதனைக் கொடுஞ்சொல்லால் பேசுகின்றீரே. கல்லால் ஆன தோணியைக் கொண்டு கடலைக் கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகில் அறியாதவர் எவரும் உண்டோ? நீர் சிவ வேடத்தோடு நின்று கொண்டு இவ்வார்த்தைகளைப் பேசியதால் உம்மைச் சும்மா விடுகிறேன். நீர் யார்? எங்கிருப்பவர். எங்கிருந்து வருகின்றீர்” என்றெல்லாம் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். ஆட்கொள்ளப்பட்ட அடியார் அப்பூதி அடிகள் கோபமாக அந்தப் பெரியவரிடம் பேச, அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த திருநாவுக்கரச சுவாமிகள் அமைதியாகச் சொன்னார், “அன்பரே! சமணப் படுகுழியில் விழுந்து அதிலிருந்து மேலேறும்படியாக பரமசிவனால் சூலை நோயைக் கொடுத்து ஆட்கொள்ளப்பட்ட உணர்வில்லாத சிறியேன் யான்” என்றார். அப்பூதி அடிகளுக்கு அதிர்ச்சி. தன் எதிரில் நின்று கொண்டு தான் கோபப்பட்டுப் பேசிய போதும் அன்பு பெருக்கெடுத்தோட, சற்றும் ஆணவமின்றி அடக்கத்தோடு தன்னை இன்னார் என்பதை அடையாளம் காட்டிடும் இவர்தானே திருநாவுக்கரசர் சுவாமிகள். இதை புரிந்து கொள்ள முடியாத மூடனாகிவிட்டேனே. அவர் கரங்கள் இரண்டும் தலைக்கு மேல் குவிந்தன. கண்கள் கண்ணீரை சொரிந்தன. பேச்சு தடுமாற, உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்க்கும்படியாக பூமியில் விழுந்து திருநாவுக்கரசர் சுவாமிகளின் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொண்டு தன் கண்ணீரால் கழுவினார். அப்பர் சுவாமிகள் அப்பூதியடிகளை எதிர் வணங்கி, அவரை அள்ளி எடுத்து அணைத்துக் கொள்ள அடிகளாரும் உளம் மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடினார். பாடினார், ஆடினார்; மகிழ்ச்சிப் பெருக்கால் தான் என்ன செய்கிறோம் என்பதைக் கூட மறந்தார். வீட்டினுள்ளே ஓடினார், அங்கு தன் மனைவி மக்கள் ஆகியோரிடம் திருநாவுக்கரசர் தங்கள் இல்லம் நோக்கி வந்துவிட்ட செய்தியைச் சொல்லி அவர்களையும் வாயிலுக்கு அழைத்து வந்து வணங்கச் செய்தார். அப்பரை உள்ளே அழைத்துச் சென்று உபசரிக்கத் தொடங்கினர். அவர் பாதங்களைக் கழுவி, பாதபூசை செய்து அந்தப் பாதோதகத்தைத் தங்கள் தலைகளில் புரோட்சித்துக் கொண்டார்கள். பின்பு திருநாவுக்கரசு சுவாமிகளை ஓர் ஆசனத்தில் அமர்த்தி, முறைப்படி அர்ச்சித்து பூசனைகள் புரிந்து “சுவாமி! தேவரீர் இன்று இவ்வீட்டில் திருவமுது செய்தருள வேண்டும்” என்று வேண்டிக் கொள்ள நாயனாரும் அதற்கு உடன்பட்டார். அப்பர் அமுதுண்ணல் அப்பூதியடிகள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கிற திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு அறுசுவை விருந்து படைக்க தன் மனைவியைப் பணித்தார். அவரும் தங்கள் குலதெய்வமென மதிக்கும் அடியாருக்கு அடிசில் படைக்க ஓடியாடி பணிபுரிந்து அரியதொரு விருந்தினைத் தயாரித்தார். அடியார் அமர்ந்துள்ள ஒரு தலைவாழ இலை வேண்டுமே. தனது மூத்த மகனான திருநாவுக்கரசை அழைத்து வாழைத்தோட்டத்துக்குச் சென்று ஒரு பெரிய இலை கொண்டு வரப் பணித்தார். அந்தச் சிறுவனும் வீட்டிற்கு வந்திருக்கும் முக்கிய விருந்தாளி சிறப்பாக விருந்துண்ணும்படியான ஒரு பெரிய இலையை அறுக்க முயன்றான். அப்போது வாழைக் குறுத்துக்குள்ளிருந்து ஒரு நல்ல பாம்பு அவன் கையில் தீண்டிவிட்டது. தன் கையில் சுற்றிக் கொண்ட அந்தப் பாம்பை உதறி வீழ்த்திவிட்டுப் பதைபதைப்புடன் தன்னுடலில் ஏறும் விஷம் அவனை நினைவிழக்கச் செய்யும் முன்பாக இந்த இலையைக் கொண்டு போய் கொடுக்க வேண்டுமே என்று ஓடி கண்களும் உடலும் பற்களும் நஞ்சின் கொடுமையால் கருத்த நிறமாக மாற இலையைத் தாயார் கையில் கொடுத்துவிட்டு கீழே விழுந்து இறந்தான். பாம்பு கடித்த பாலகன் தன் தனையனின் நிலைகண்டு பதறிய தந்தையும் தாயும், “ஐயகோ! என்ன இது. இப்படி நேர்ந்து விட்டதே. விருந்துண்ண வந்த இடத்தில் வீட்டு பாலகன் பாம்பு கொத்தி மரணமடைந்துவிட்டான் என்று தெரிந்தால் அடியார் அமுதுண்ண மாட்டாரே, என்ன செய்வோம், பரமேஸ்வரா” என்று கைகளைப் பிசைந்து கொண்டு நின்றனர். உடனே ஒரு பாயை எடுத்து அதில் உயிர் பிரிந்து கிடந்த மகனின் உடலைச் சுற்றி வீட்டின் முற்றத்தில் ஓர் மறைவான இடத்தில் வைத்துவிட்டனர். அதன் பின் அடியாரிடம் சென்று ஐயனே, எழுந்து வந்து அமுது செய்ய வேண்டும் என்றனர். அப்பர் சுவாமிகளும் எழுந்து கைகால்களைச் சுத்தி செய்து கொண்டு, வேறோர் ஆசனத்தில் அமர்ந்து அப்பூதி அடிகளாருக்கும், அவர் மனைவிக்கும் திருநீறு கொடுத்துவிட்டு, நான் திருநீறணியும் முன்பாக, திருநீறு பூசிக்கொள்ள உமது மகனையும் அழையுங்கள் என்றார் அப்பர். அதற்கு அப்பூதி அடிகள், “ஐயனே! அவன் இப்போது இங்கே வரமாட்டான்” என்றார். அப்பூதியடிகள் இப்படி பதில் சொன்னவுடன் மனத்தில் ஏதோவொரு ஐயம் ஏற்பட அப்பர் சுவாமிகள் அவரைப் பார்த்து “அவன் என்ன செய்கிறான்? ஏன் வரமாட்டான்? உண்மையைச் சொல்லுங்கள்” என்றார். இதைக் கேட்ட அப்பூதியடிகள் பயந்து, உடல் நடுக்குற்று, பெரியவரை வணங்கி நின்று நடந்த விவரங்களைச் சொன்னார். அதனைக் கேட்ட அப்பர் சுவாமிகள் “நீர் செய்தது சரியா? நன்றாயிருக்கிறதா? உங்கள் பிள்ளை இறந்தது கேட்ட வருந்தாமல் நான் சாப்பிட வேண்டுமென்று வருந்துகின்றீகளே! என்னே உங்கள் மன உறுதி. வேறு யாரால் இப்படிப் பட்ட சூழ்நிலையில் இப்படி நடந்து கொள்ள இயலும்?” என்று சொல்லிக் கொண்டே எங்கே உங்கள் மகனின் உடல் என்றார். பின்னர் சிறுவனின் உடலைக் கரங்களில் அள்ளிக் கொண்டு அப்பரும் அப்பூதியடிகளும் குடும்பத்தார் ஊராரும் அவர் பின் செல்ல அனைவரும் அவ்வூரிலிருந்த சிவாலயம் சென்றனர். அங்கு கொண்டு போய் சிறுவனின் உடலை இறைவன் முன் கிடத்திவிட்டு “ஒன்று கொலாம்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார். மாண்டவன் மீண்ட அதிசயம் அப்படி அவர் அந்தத் திருப்பதிகத்தை சிவபெருமான் மீது பாடி முடிக்கவும் உடலில் ஏறிய நஞ்சு இறங்கி அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்து அப்பர் சுவாமிகளின் திருவடிகளில் வீழ்ந்தான். அப்பரும் அவனுக்குத் திருநீறு பூசி வாழ்த்தியருளினார். அப்பூதியடிகளுக்கும், அவர் மனைவியாருக்கும் தங்கள் மகன் உயிர் பிழைத்த மகிழ்ச்சிகூட இல்லாமல், நாயனார் உணவருந்தாமல் இருக்கின்றாரே என்று கவலையடைந்தார்கள். அப்பர் பெருமானும் அவர்களது உள்ளக்கிடக்கையை அறிந்து அவர்களோடு அவர்களது வீட்டுக்குச் சென்று அவர்கள் அனைவரோடும் உட்கார்ந்து திருவமுது செய்தார். சில நாட்கள் அவர்களோடு தங்கிய பின்னர் அவர் அங்கிருந்து திருப்பழனம் சென்றடைந்தார். சைவசமய குரவராகிய திருநாவுக்கரசர் சுவாமிகளின் திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெரும் செல்வம் என்று வாழ்ந்திருந்த அச்சிவனடியார் அப்பூதியடிகளின் வாழ்க்கைச் சரிதம் இது. “ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்” (சுந்தரரின் திருத்தொண்டர் திருத்தொகை) 25 சுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று!   சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக பாவித்தவர். அவர் ஒரு நாட்டுக்கு, ஒரு இனத்துக்கு, ஒரு மொழிக்கு மட்டும் சொந்தக்காரராகப் பார்க்க முடியாது. யாரையும் எதிரியாகவோ, வேற்றாளாகவோ கருதியது கிடையாது. அன்பு மட்டுமே அவரை உலக மக்களின் இதய சிம்மாசனத்தில் உட்கார வைத்திருந்தது எனலாம். பிறப்பால் வங்காளியான அவருக்கு தமிழ் மொழியின் மீதும், தமிழர்கள் மீதும் இருந்த அன்பும் அக்கறையும் பல நேரங்களில் வெளிப்பட்டிருக்கின்றன. அவரது சிகாகோ பயணத்தின் முதல் கட்டத்தில் அவர் பயணம் செய்த கப்பல் சென்னை நோக்கி வரும் செய்தியைத் தொடர்ந்து அவரது தென்னக மக்கள் மீதான அன்பையும் வெளிப்படுத்தும் பகுதியும் வருகிறது. அவரது பயணத்தை மட்டும் சொல்லாமல், பயணம் செய்யும் இடங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார். அவர் காலத்தில் தமிழ்பேசும் நல்லுலகம் மட்டுமல்ல, ஆந்திரப் பகுதிகளின் பெரும்பாலான இடங்கள், கர்நாடகத்தின் சில பகுதிகள், கேரளத்தின் மலபார் பகுதிகள் இவற்றை உள்ளடக்கியிருந்தது பழைய சென்னை மாகாணம். சுவாமிஜி சொல்கிறார் “தென்னிந்தியாவின் பெரும் பகுதி சென்னை மாகாணத்தைச் சேர்ந்தது. நிலம் மட்டும் பரந்து கிடப்பதில் என்ன பயன்? அதிர்ஷ்டம் உள்ளவனிடம் பாலைவனம் கிடைத்தாலும் அது சொர்க்கமாக ஆகிவிடும்” என்று தென்னக மக்களின் உழைப்பை உயர்வுபடுத்திச் சொல்லுகிறார். தென்னக மக்களைக் குறிப்பாக தமிழக மக்களை அவர் வர்ணிக்கும் காட்சி அற்புதமானது. அவர் சொல்கிறார்: “மழித்த தலை, குடுமி, பல்வேறு வண்ணங்களைப் பூசிய நெற்றி, கட்டைவிரலை மட்டுமே நுழைத்து அணியக்கூடிய செருப்பு. பொடி போட்டு இளகிய மூக்கு – இத்தகைய தோற்றம், உடம்பு முழுவதும் சந்தனம் அப்பிய தனது குழந்தைகள், என்று நால் கல்கத்தாவின் ஜகந்நாத கட்டத்தில் ஒரிசா பிராமணனைக் காண்கிறோமே, அது தென்னிந்தியக் காட்சியின் ஒரு நகல்தான்” இங்கு சுவாமிஜி வந்து தங்கி பழகிய மனிதர்களின் தோற்றத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். தென்னிந்திய பிராமணர்கள் திருஷ்டி கழிப்பதற்கென்று மண்குடத்தில் வெள்ளையடித்து வண்ணம் பூசி வீட்டுமுன்பு வைத்திருப்பார்களாம். அதை வர்ணிக்கும் சுவாமி சொல்லுகிறார்: “தூரத்திலிருந்து பார்க்கும்போது இராமானுஜ நெறியினரின் (வைஷ்ணவர்கள்) நெற்றியில் திகழும் அந்த நாமம் சாட்சாத் அப்படியேதான் தெரிகிறது”. நல்ல ரசனை. தமிழ்நாட்டு உணவுப் பண்டங்களையும் சுவாமி வர்ணிக்கத் தவறவில்லை. நம்முடைய ‘ரசம்’ முதலான உணவுப் பண்டங்கள் பற்றிய அவர் விளக்கம் இதோ: “மிளகுத் தண்ணீர்” ரசத்துடன் கூடிய அந்த ‘ஸாப்பாடு’ ஒவ்வொரு கவளம் உள்ளே போகும்போதும் நெஞ்சம் ஒருமுறை நடுங்கித் தணியும்! அந்த அளவிற்கு காரமும், புளிப்பும். கடுகும் கருவேப்பிலையும் வறுத்துச் சேர்த்துள்ள தயிர்சாதம், நல்லெண்ணெய்க் குளியல், நல்லெண்ணெயில் பொரித்த மீன் — இவற்றையெல்லாம் விட்டுவிட்டு தென்னிந்தியாவை நினைக்க முடியுமா?” என்கிறார். “சென்னை மாநிலத்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நாகரிகம் மிகமிகப் பழமையானது. யூபிரட்டஸ் நதிக்கரையில் மிகப் பழங்காலத்தில் பரவியிருந்த பெருநாகரிகம் இந்தத் தமிழர்களில் ஒரு பிரிவினராகிய சுமேரியர்கள் பரப்பியதே” இப்படி உலக நாகரிகம் தமிழகத்திலிருந்து பரவிய கருத்தை சுவாமிஜி அழகாக விவரிக்கிறார். “ஜோதிடமும், அறநெறியும், நீதிநெறியும், ஆசாரங்களும்தான் அசிரிய, பாபிலோனிய நாகரிகங்களுக்கு அடிப்படை. இவர்களின் புராணங்களே கிறிஸ்தவர்களின் பைபிளுக்கு மூலம். இவர்கலின் மற்றொரு பிரிவினர் மலபார் கரை ஓரத்தில் வாழ்ந்து அற்புதமான எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர். தென்னகத்தில் உள்ள இவர்களது பிரம்மாண்டமான கோயில்கள் வீர சைவ, வீர வைணவ நெறிகளின் கீர்த்தியைப் பறைசாற்றுகின்றன. இவ்வளவு சிறப்பான வைணவ நெறி உள்ளதே, “முறம் விற்பவரும் அதே வேளையில் பெரும் யோகியாகத் திகழ்ந்தவரும்” தாழ்ந்த குலத்தில் பிறந்தவருமாகிய ஒரு தமிழர் ஆரம்பித்தது அது. தமிழ் ஆழ்வார்கள், வைணவர் அனைவராலும் இன்றும் வழிபடப் படுகின்றனர். த்வைத, விசிஷ்டாத்வைத, அத்வைத வேதாந்தங்கள் பற்றி மற்ற இடங்களைவிட இங்குதான் இன்றும் அதிக ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நடைபெறுகின்றன. மற்ற இடங்களைவிட அறவழியில் நாட்டம் அதிகமாக உள்ளது.” அவர் எழுதிய கடிதங்களைப் பார்த்தால் பெரும்பாலும் தமிழர்களுக்கு எழுதியிருக்கிறார். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் பட்டியலில் பேராசிரியர் சிங்காரவேலு முதலியார், அளசிங்கப் பெருமாள், ‘லோகோபகாரி’ எனும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரும் சுவாமிஜியின் சொற்பொழிவுகளின் தமிழாக்கத்தை மொழிபெயர்த்தவருமான வி.நடராஜ ஐயர், நாட்டராம்பள்ளி கே.வெங்கடசாமி நாயுடு ஆகியோரைச் சொல்லலாம். சென்னையில் இப்போது விவேகானந்தர் இல்லம் என வழங்கப்படும் ஐஸ் ஹவுஸ் எனும் கட்டடத்தை ஐஸ்கட்டி இறக்குமதி செய்யும் ஒரு கம்பெனியிடமிருந்து வாங்கிய பிலிகிரி ஐயங்கார் என்பவரைப் பற்றியும் சுவாமிஜி குறிப்பிட்டு விசாரித்திருக்கிறார். தமிழ் நாட்டுச் சுற்றுப் பயணத்தில்தான் பல தமிழர்களின் பழக்கம் சுவாமிஜிக்கு ஏற்பட்டது. சென்னையில் அவரை ரதத்தில் உட்காரவைத்து இழுத்துச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர்களில் ராஜாஜியும் ஒருவர். இராமநாதபுரம் சேதுபதி உட்பட இவருக்கு உதவி செய்த பலரும் தமிழர்களே. சிகாகோ போக உத்வேகம் கொடுத்த கன்னியாகுமரி பாறை இவரது வாழ்க்கையையே திசைதிருப்பிய இடம், அது இருப்பதும் தமிழ்நாடே. ஆக, தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் சுவாமிஜியிடம் உள்ள உறவு எல்லை கடந்தது. 26 கவியோகி சுத்தானந்த பாரதியார் [] கவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தானந்த பாரதியார் குறித்து நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் அந்தக் காலத்தில் டி.கே.பட்டம்மாள் பாடிய “எப்படிப் பாடினரோ அடியார் – அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே!” என்ற பாடலை நினைத்துப் பார்க்கலாம். அல்லது எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி பிரபலமான இந்தப் பாடலை நினைவுப் படுத்திக் கொள்ளலாம். அது:- “இல்லையென்பான் யாரடா? என் அப்பனைத் தில்லையிலே பாரடா! கல்லும் கசிந்துருகக் கனிந்த முறுவலுடன் காட்சியளிக்கும் அந்தக் கருணைச் சுடரொளியை, இல்லையென்பான் யாரடா?” இந்தப் பாடலும் நமக்கு கவியோகியை நினைவு படுத்தும். மற்றொரு பாடல் “அருள் புரிவாய் கருணைக் கடலே, ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே, அருள்புரிவாய் கருணைக் கடலே” என்பது. அடுத்தது “ஜகஜ்ஜனனீ சுகவாணி கல்யாணி”, “ஜங்கார ஸ்ருதி செய்குவாய்”, “சகல கலா வாணியே, சரணம் தாயே!” என்றொரு பாடல். இது அந்தக் காலத்தில் பல பள்ளிக்கூடங்களில் காலையில் பள்ளி தொடங்கும் போது பாடப்படும் கடவுள் வாழ்த்துப் பாடலாகத் திகழ்ந்திருக்கிறது. இப்படி அந்தக் காலத்தில் கவிதை உலகில் கொடிகட்டிப் பறந்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். இவற்றிலெல்லாம் மிகச் சிறந்தது என்று அனைவராலும் பாராட்டப்பட்டது “பாரத மகாசக்தி காவியம்” எனும் படைப்புதான். இவரது படைப்புக்கள் பலப்பல. இவர் ஒரு சிறந்த இலக்கிய வாதி. ஆன்மீக உலகத்திலும் கொடிகட்டிப் பறந்தவர். மகாத்மா காந்தி விரும்பிய “உலகமே ஒரு குடும்பம்” என்பது யோகியின் பார்வை. இவருக்கு ஜாதி, மதம், இனம், நாடு என்ற எல்லைகள் கிடையாது. சுத்த ஆன்ம யோக நெறிமுறைகளே இவரது வாழ்க்கை. எட்டு வயதிலேயே சில மகான்களின் கருணையால் குறிப்பாக இவரது உறவினரும் மாபெரும் யோகியுமான பூர்ணானந்தர் என்பவரால் பேரின்பப் பாதையை அறிந்து கொண்டவர். இவர் சந்தித்தப் பெரியோர்கள் அனேகர். அவர்கள் மகாத்மா காந்தி, பாரதியார், வ.வெ.சு.ஐயர், அரவிந்தர், திலகர், வ.உ.சி., கல்கி இப்படிப் பற்பல பெயர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆன்மீகத் தூண்களான ஷீரடி பாபா, ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், அரவிந்த அன்னை, ஞானானந்தகிரி சுவாமிகள் ஆகியோரின் தொடர்பும் இவருக்கு இருந்தது. சுத்தானந்த பாரதியார் ஒரு பன்மொழிப் புலவர். தமிழில் கவிதை, இசைப்பாடல்கள், சிறுகதை, கட்டுரை, நாவல் முதலியன இவரது புகழ் மிக்கப் படைப்புகள். மொழிபெயர்ப்புப் பணியிலும் இவர் தனி முத்திரை பதித்தவர். “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” எனும் மகாகவி பாரதியின் வாக்கைச் செயல்படுத்திக் காட்டியவர். பல அயல்நாட்டு அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை இவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். இத்தாலிய மகாகவி தாந்தே வரலாறு, அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் வரலாறு, பிரெஞ்சு இலக்கிய மேதை விக்டர் ஹியூகோவின் அற்புதமான நாவலான “லே மிசரபிளே’, “லாஃபிங் மேன்” போன்றவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதியிருக்கிறார். விக்டர் ஹியூகோவின் ‘லே மிசரபிளே’தான் பட்சிராஜா பிலிம்ஸ் நாகையா நடித்த “ஏழை படும் பாடு” எனும் படமாக வெளிவந்தது. ‘லாஃபிங் மேன்” கதையை “இளிச்சவாயன்” என்று மொழிபெயர்த்து எழுதினார். இளமைப் பருவம் இவரது இளமைக்காலம் பற்றி அதிகமாக யாரும் எழுதாவிட்டாலும் இவரே ஒரு காலத்தில் சில பத்திரிகைகளில் எழுதியிருக்கிற கட்டுரையிலிருந்து சில செய்திகள் தெரிய வருகின்றன. “சோதனையும் சாதனையும்” எனும் நூலில் இவர் தன் சுயசரிதையை விரிவாக எழுதியிருக்கிறார். அது தவிர சிவகங்கை மன்னர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து பின்னர் அருகிலுள்ள சோழபுரத்தில் யோகியார் தொடங்கிய உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்த அவரது உறவினர் திரு ஆர்.வெங்கடகிருஷ்ண ஐயர் எழுதி வெளியிட்ட “Experiences of a pilgrim soul” எனும் வாழ்க்கை சரிதமும் இவர் வரலாற்றைக் கூறுவதாகும். சிவகங்கை இவரது ஊர். தந்தை பெயர் ஜடாதரர். தாயார் பெயர் காமாட்சி அம்மாள். இவர் பிறந்தது 11-5-1897. இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள், ஒரு மூத்த சகோதரி. இவர்கள் இப்போதைய ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தென் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள். வேதம், இசை இவற்றில் தேர்ந்தவர்கள்.அந்த குடும்பம் பக்தி நெறியில் ஈடுபட்டவர்கள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வெங்கடசுப்பிரமணியன் என்பது. இவருடைய வீட்டுக்கு வந்த இவரது உறவினரும் மாபெரும் ஞானியுமான பூர்ணானந்தர் இவரது ஆற்றலை உணர்ந்து இவருக்கு சுத்தானந்தர் என்று பெயர் சூட்டினார். இவரது தகப்பனார் வக்கீலாக இருந்தவர். பள்ளியில் பயிலும் காலத்திலேயே இவருக்குக் கம்பன் கவியமுதில் மனம் நாட்டம் கொண்டார். திருக்குறள் இவர் மனதைக் கவர்ந்தது. தந்தை ஜடாதரர் இவரது கல்வி, ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். மதுரையில் இவரது தாயின் குடும்பமும் வசதியான குடும்பம். மதுரையில் இவரது தாய் மாமாவும் ஒரு வக்கீல். நல்ல செல்வந்தர். இவருடைய தாய்வீட்டில் எல்லா வசதிகளும் இருந்த போதும் மனத்தில் மகிழ்ச்சியில்லையாம். அமைதி இல்லையாம். சிவகங்கையில் தந்தை வீட்டில் அமைதியையும், மதுரையில் தாய்மாமன் வீட்டில் உலகத்தையும் அறிந்தேன் என்கிறார் இவர். இளம் வயதிலேயே சுற்றுப்புற ஊர்களுக்குச் சென்று பெற்றோருடன் சேர்ந்து ஹரிகதை, பஜனை இவற்றை நடத்தி வந்தார். அவருக்கு எட்டு வயது இருக்கும்போது சிதம்பரம் ஆடல்வல்லான் ஆலயத்துக்குச் சென்று நடராஜர் சந்நிதியில் ஆழ்ந்த யோகத்தில் இருந்தார். நெஞ்சம் நெகிழ்ந்து அவர் மனதில் தோன்றியது ஒரு தமிழ்ப்பாட்டு. அதுதான் நான் முன்பே சொன்ன “எப்படிப்பாடினரோ, அடியார் அப்படிப்பாட நான் ஆசை கொண்டேன் சிவனே!” எனும் பாட்டு.   “எப்படிப் பாடினரோ – அடியார் அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே! அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும் அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்து உன்னையே (எப்படிப்) குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானரும் அருணகிரி நாதரும் அருட்சோதி வள்ளலும் கருணைக் கடல் பெருகி காதலினால் உருகி, கனிதமிழ்ச் சொல்லினால் இனிதுனை அனுதினம் (எப்படிப்)   சிதம்பரம் சிவகாமி நடராஜப் பெருமான் திருவருளால் முதன்முதல் கவிபாடி அரங்கேற முடிந்தது சுத்தானந்தரால். தெய்வசிகாமணிப் புலவர் என்பவர் இவருக்குத் தமிழ் போதித்தார். இலக்கணம், இலக்கியம் முதலானவற்றை முறையாகப் பயின்றார் இவரிடம். யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம் இவர் ஒரு குறள் எழுதிக் காட்டினார். அது “தெய்வ வொளிதனையே தேடு, பிறவெல்லாம் கைநழுவும் கால்த்திற்காண்” என்பது. இதைக் கண்ட ஆசிரியர் “நீ எழுது. மேன்மேலும் எழுது, உன்னிடம் கலைமகள் அருள் நிறைந்திருக்கிறது, புலமை இருக்கிறது” என்றார். தன் இளமைக் காலத்திலேயே தமிழ் தவிர, சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். “மில்டனில் தாந்தேயைக் காண்கிறேன், தாந்தேயே என் கவிக்கனவின் தந்தை” என்கிறார். மதுரை மீனாட்சி அருளால் யோகியானது இவரது இளம் வயதில் தனது தந்தையை இழந்து, இவரும் இவரது தாயாரும் மதுரையில் இருந்த இவரது தாய்மாமா வீட்டில் தங்கி படித்தார். பெரிய மாமாவின் பெயர் வக்கீல் ராமசாமி ஐயர். ஆங்கிலத்தில் பெரும் புலவர். ஜபம், தியானம், பூஜை, பாராயணங்கள் இவைகளை செய்து வந்தார். தானே ராட்டையில் நூல் நூற்று கதர் வாங்கி அணிவார். அவரது மாப்பிள்ளை ஒரு ஞானி. சதா தத்வமசி என்று வாழ்ந்தார். அவரை மனநலமில்லாதவர் என்று துரத்திவிட்டனர். அவர் சுத்தானந்தரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு இவர்களுக்கு நம் வழி புரியவில்லை, நீயும் என்னுடன் வந்து விடு என்றார். அவர் சொன்னார், “ஞானிகளைப் பித்தர் என்று கூறும் இந்த நரகம் உனக்கு வேண்டாம். உலகம் ஒரு துன்பக்காடு, உள்ளுறவுதான் நல்ல உறவு. நீ தனித்திரு, இனித்திரு” என்றார். சுத்தானந்தரின் சித்தியின் கணவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் தகாத உறவொன்றை வைத்துக் கொண்டு இவரது சித்தியைப் படாத பாடு படுத்தி வந்தார். இப்படி அவர் குடும்பத்தில் அனைவர் மீதும் இவருக்குப் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. சுத்தானந்தர் கல்லூரிப் படிப்பை முடித்தபின் இவரை லண்டனுக்கு அனுப்பி பார் அட் லா படிக்கவைக்க வேண்டுமென்பது மாமனின் விருப்பம். தனக்குப் பின் தன் வக்கீல் தொழிலைத் தன் குடும்பத்தார் செய்யவேண்டுமென்பது அவரது ஆவல். ஆனால் இவருக்கு வேலைக்குப் போகவேண்டும், சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் சதா ஆன்மீக சிந்தனையில் ஈடுபட்டு வந்தார். கோயில் குளம் போன்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்திருப்பார். இவரது போக்கு இவரது மாமாவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் இவரது மாமா இவரை அழைத்து நீ ஒழுங்காகப் படித்து மேற்கொண்டு சட்டம் படிக்க முயற்சி செய்யாமல் சதா சர்வ காலம் கோயில், குளம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறாய். அங்கெல்லாம் போய் கண்ணை மூடிக்கொண்டு யோகம் செய்கிறாயாம். என்னடா இது? படிக்கிறதாய் இருந்தால் இங்கே இரு. இல்லாவிட்டால் எங்காவது போய்விடு. உன்னையும் உன் அம்மாவையும் உட்கார வைத்து சோறு போடுவது நீ படித்து முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் தெரிகிறதா? என்றார். யோகிக்கு அவர் சொல்கிற பாதை பிடிக்கவில்லை. என்னால் யோகத்தில் ஈடுபடுவதை நிறுத்த முடியாது. எனக்கு இறைவன் வகுத்த வழி யோகியாக ஆவதுதான் என்றார். அவர் மாமா தன் பெட்டியைத் திறந்து அதில் ஏராளமாகச் சேர்த்து வைத்திருந்த பொன், நகைகள் இவைகளைக் காட்டி, இவைகளெல்லாம் உனக்காகத்தான் நான் சொல்கிறபடி கேட்டால் இவையெல்லாம் உனக்குத் தருகிறேன். இல்லையேல் வேறு யாருக்காவது கொடுத்துவிடுவேன் என்றார். இவர் அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. எனக்கு என் மீனாட்சி அம்மன் அருள் செய்வாள் என்றார். அப்படியானால் நீ இந்த வீட்டில் இருக்க வேண்டியதில்லை, எங்கேயாவது போய் உன் யோகத்தை நடத்திக் கொள் என்றாள். இவரும் சரியென்று சொல்லி கிளம்பினார். உடனே மாமாவும் இவரது அம்மாவும் இவரைத் தடுத்து நிறுத்தினார்கள். மாமா கேட்டார், பெரிய வீராப்போடு போகிறாயே, ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்? திரும்ப இங்கதானே வரவேண்டும் என்றார். இதைக் கேட்ட யோகி நிதானமாகச் சொன்னார், “நான் வெளியே போய்விட்டால் இரவு சாப்பாட்டை என் அன்னை மீனாட்சி போடுவாள்’ என்றார். அப்படியா போடாவிட்டால் என்ன செய்வாய் என்றார் மாமா. மரியாதையாக நான் தோற்றுவிட்டேன் என்று சொல்லி இங்கே திரும்பி வந்து விடுகிறேன். இல்லையென்றால் மீனாட்சி விட்ட வழியில் நான் என் பாட்டைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார். வீட்டைவிட்டுப் புறப்பட்ட சுத்தானந்தர் மீனாட்சி கோயிலுக்குச் சென்றார். ஆலயத்தில் எல்லா சந்நிதிகளிலும் சென்று வழிபட்டு முடித்துவிட்டு அங்கிருந்த ஒரு மரத்தடி மேடையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அர்த்தஜாமம் முடிந்து வெளியே வந்த தேவேந்திர பட்டர் எனும் சிவாச்சாரியார் மேடையில் தியானத்தில் அமர்ந்திருக்கும் இவரிடம் வந்தார். அவருக்குச் சுத்தானந்தரை நன்கு தெரிந்திருந்தது. அவரை எழுப்பி என்னப்பா இங்கே இந்த நேரத்தில் ஆத்தில் மாமா, அம்மா எல்லோரும் செளக்கியமா? என்று விசாரித்தார். பிறகு அர்த்தஜாமத்துக்கு செய்த நைவேத்தியம் இருந்த பாத்திரத்திலிருந்து பிரசாதத்தை அவருக்குக் கொடுத்து உண்ணச் செய்தார். இவரும் அவற்றைப் பசியாற உண்டார். ஆகா! மீனாட்சி என் விரதத்தை அங்கீகரித்து விட்டாள். இனி அவள் காட்டும் பாதையில் செல்வேன் என்று சபதம் செய்து கொண்டார். வீட்டுக்குப் போகலியா என்று கேட்ட சிவாச்சாரியாரிடம் நடந்த விவரங்களைச் சொன்னார். அவர் சுத்தானந்தரை வக்கீல் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு நடந்ததை விவரித்தார். மாமாவுக்கும் இவரது யோகத்தின் மீது நம்பிக்கைப் பிறந்தது. இவர் உறுதியாக நம்பியபடி மீனாட்சி இவருக்கு இரவு உணவு அளித்து தங்க இடமும் கொடுத்து விட்டாளே என்று. சிவகங்கை வாசம் தனது பதினெட்டு வயதுவரை இவர் சிவகங்கையில்தான் இருந்தார். ஐந்து வயதில் ரங்க ஐயங்கார் திண்ணைப் பள்ளியில் படித்தார். பின்னர் அரசர் பள்ளியில் படிப்பு. படிப்பில் அதிக கவனமின்றி புலவர்கள், பெரியோர்களின் சொற்பொழிவு என்று இவர் சுற்றத் தொடங்கினார். ஒரு ஆசிரியர் மாணவர்களையெல்லாம் திட்டிக்கொண்டே இருப்பார். பிறகு அவர்களைப் பார்த்து “டேய், தடிப்பயல்களா, நான் சொல்வதை எழுதுங்கள்” என்பாராம். இவரோ, அவர் திட்டிய சொற்களையெல்லாம் எழுதிக் காண்பிக்க அவரிடம் மறுபடி அர்ச்சனை வாங்குவாராம். “பத்து முறை எழுதுடா கழுதை” என்றால், கழுதை கழுதை என்று பத்து முறை எழுதி அடிவாங்கியிருக்கிறார். தெய்வசிகாமணிப் புலவர் என்பவர் இவரது தமிழறிவை ஊக்குவித்தார் என்று முன்னமேயே சொன்னேன். மேலும் சில ஆசிரியர்கள் ஆங்கிலப் புலமையை வளர்த்துவிட்டனர். சிவகங்கையில் வாழ்ந்த நாட்கள் கல்வி வளர்ச்சியில் இவரை ஊக்கவில்லை ஆனால் யோக வளர்ச்சியில் ஊக்குவித்தது. இலக்கியமும், கவிதைத்திறனும் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட், ஷெல்லியின் புரோமிதியஸ், பிரான்சிஸ் தாம்சனின் ஹெளண்ட் இவை எனக்கு ஆவேசமளிக்கின்றன, அரவிந்தரின் அஹானா என் உள்ளத்தை அள்ளுகிறது என்று இவர் எழுதியிருக்கிறார். நாளெல்லாம் படிக்கிறேன், பசித்தபோது படித்துக் கொண்டே இருக்கிறேன்” என்கிறார். என் சிறந்த நண்பர்கள் இலக்கியங்களே, இலக்கியத்துக்கு அடுத்ததாக அறிவியல் நூல்களைப் படிக்கிறேன் என்கிறார் இவர். கவிதை எழுதத் தூண்டுபவை எவை என்றால் இவர் சொல்கிறார்: “அருவியும் குருவியும் அளித்தன கவிதை; காடும் மலையும் கவிமலர் கொய்தேன், கொய்த மலர்களைக் கோர்த்துக் கோர்த்துச் சுத்த சக்திக்கே சூட்டி மகிழ்ந்தேன்” என்று. சிவயோக ஆன்மாக்களின் தொடர்பால் இவரது மனம் பக்குவப்பட்டது. அதன் பின்னர் கல்லூரி பாடங்களில் மனம் பதிந்தது. முதலாவது மாணவனாக இவர் தேர்ந்தார். நாட்டரசன்கோட்டையில் கம்பர் சமாதியில் அமர்ந்து கம்பராமாயணம் முழுதும் பயின்றார். பற்பல இலக்கிய நூல்களைப் படித்துப் பல நூல்களை இவரும் எழுதிவைத்தார். வேதம், உபநிஷத்துக்கள், பிரமசூத்திரம், ஜூதஸம்ஹிதை முதலியன கற்றார். அவற்றையெல்லாம் தமிழாக்கம் செய்தார். தெலுங்கும் இந்தியும் பயின்றார், அவற்றிலும் கவிதைகள் எழுதினார். அக்கால வழக்கப்படி ஆங்கிலத்தை சிறப்பாகக் கற்றார். பிரெஞ்சும், லாட்டினும் பயின்றார். ஷேக்ஸ்பியர், மில்டன், பைரன், டென்னிஸன், பிரெளனிங், வேட்ஸ்வொர்த், ஷெல்லி, அரிஸ்டாடில், பிளேட்டோ, ஸ்காட், அன்னிபெசண்ட், இராமதீர்த்தர், விவேகானந்தர் ஆகியோருடைய நூல்களைக் கற்றார். பட்டப்படிப்பு முடித்தவுடன் மேலும் படிப்பதற்காகவே அரசர் கல்லூரியில் இவர் நூலகர் வேலையில் சேர்ந்து அங்கும் ஓயாமல் படித்தார். இப்படி இவர் விடாமல் படித்ததால்தான் அறிவு பெற்றாரா என்று கேட்டால், இவர் சொல்கிறார், என்மீது திணிக்கப்பட்ட நூலறிவு சிற்றறிவே, என் யோகத்தால் உள்ளிருந்து மலர்ந்த சுத்த ஆன்மஞானமே பெரியது என்றார். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இருக்க வேண்டிய குணங்கள் இவரிடம் இல்லை. மாறாக எப்படி யிருந்தது என்பதை அவர் சொல்வதைப் பார்ப்போம். “சக்தியின் அருளால் நான் பெண்களை சக்திமயமாகப் பார்த்தேன். எல்லா பெண்களையும் ஓம் ஓம் சுத்த சக்தி என்று வணங்கினேன். என் மனம் மாசுற்றால் உடனே பராசக்தியைப் பாடுவேன், பட்டினி போடுவேன், என்னை நானே தண்டித்துக் கொள்வேன். புலனடங்கினால் மனமும் அடங்கும். புலனடக்கத்திற்கு தூய்மை வேண்டும்.” என்கிறார். அவரது இளமைக் காலம் வீட்டில் எங்ஙனம் இருந்தது என்றால்: “வீட்டில் இனிய பாட்டின் முழக்கம் இப்புறம் வேதம்; அப்புறம் கீதம்; எதிரே கோயிலில் இசையின் அலைகள் சிவகங்கை யெங்கும் திருவிழாக் கோலம். பாடகர், பண்டிதர், பாவலர், நாவலர், பாக வதர்கள் பஜனை மடங்கள் மல்கிய சூழலில் வளர்ந்தது என் வாக்கே கேட்டுக் கேட்டுப் பாட்டுக் கற்றுப் பாமாலை சூட்டிப் பரமனைத் தொழுதேன்” என்கிறார். தமிழ் மொழிபால் இவருக்கிருந்த விருப்பத்தைப் பல பாடல்களில் விவரித்திருக்கிறார். “வெள்ளி நகைப்பது பார், வெண் சங்கொலிப்பது கேள்; கிள்ளை கூறு மொழியும் கீதக் குயிலிசையும் அள்ளி வரும் தென்றல் அருந்தேன் மலர்களுடன் துள்ளி விளையாடுதல் பார்! தும்பி ஓம் சக்தியெனக் கள்ளுண்டு அலம்புவ பார் காதற் களிப்பூறி உள்ளம் குளிர உயிர் குளிர ஊன் குளிரத் தெள்ளருளாம் தெய்வத் திருவாரமுதமய வெள்ளத்திலாட விரைந்தேலோ ரெம்பாவாய்!” இவருக்குத் திருக்குறள் மீதும், மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் மீதும், சங்க இலக்கியங்கள் மீதும், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் காவிய நயத்திலும் அபாரமான ஈடுபாடு, இவை அனைத்தும் அழியாப் பீடினைப் பெற்றவை என்பது இவர் கருத்து. அதைச் சொல்லும் போது:- “தேவர் குறளாட்டித், திருவாசகம் சூட்டி மூவர் தமிழ் ஓதி, நாலாயிரம் பாடி தாவடங்களாக முச்சங்கத் தமிழணிந்து காவிய மாமணியாம் கம்ப முடி கவிழ்த்து கூவித் திருப்புகழைக் கூத்தாடித் தெண்டனிட்டு தேவாதி தேவனருட் சேர்ந்திடுவோ மெம்பாவாய்” என்கிறார். தமிழை வாழ்த்தி ஒரு கவிதை: “திருகொலு விருக்கும் தமிழ்த் திருவாழ்க! அரனருட் புதல்வி, அருங்கலைச் செல்வி வரனருள் முதல்வி; வாழிய தமிழ்த்தாய் அறிவனல் விழியாள், அமுதக் கதிர்விரி முழுமதி முகத்தாள், மோகன காந்தம் வீசிடும் அரசி மின்னெனத் தெறிக்கும் பொலிநகை முத்தம் பொழிந்திடும் வாயாள்” மற்றொரு கவிதை தமிழ் அன்னை என்ற தலைப்பில் “அன்புருவான தமிழ் அன்னை மொழி அரசியான தமிழ் அன்னை இன்பம் அளிக்கும் தமிழ் அன்னை எங்கள் இன்னுயிரான தமிழ் அன்னை ஆறுகள் ஊறும் மலை வளர்த்தாள் – இயல் அழகு சொட்டும் பசு வளர்த்தாள் வீறுய் மிகுந்த படை வளர்த்தாள் – ஞான வித்தகர் போற்றும் கலை வளர்த்தாள்” “தமிழ் முழக்கம்” எனும் தலைப்பில் பாடிய கவிதை. “வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள் ஒன்றாய்ச் சேருங்கள் கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள் வெற்றி பூணுங்கள் தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம் நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம் வீரம் காட்டுவோம்” இப்படித் தமிழ் மீது பற்பல கவிதைகள் பாடியிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நம் நாட்டினர் ஆண்மையற்றுக் கிடந்த நிலையைப் பார்த்து மனம் நொந்தார். நெஞ்சில் ஆவேசக் கனல் ஆர்த்தெழ வேண்டும் என்ற விருப்புடன் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதினார். அப்படி அவர் எழுதிய கட்டுரைகள் எண்ணற்றவை. வீரத் தமிழர்க்கு ஆவேசக் கடிதங்கள் எனும் தலைப்பில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கவியோகி அற்புதமான நூலொன்றை எழுதியிருக்கிறார். அந்த நூலில் எம் தமிழர்க்கு மொழி அன்பு, நாட்டு அன்பு, உலக அன்பு, கடவுள் அன்பு இவை நான்கும் இதயத்தில் பொங்கி எழ வேண்டுமெனத் தன் கருத்தை வெளிப்படுத்துகிறார். எல்லோருக்கும் தமிழுணர்வு வேண்டும். இந்தத் தமிழுணர்வு எலெக்ட்றான் அணுக்களைப் போல எங்கணும் பரவ வேண்டும் என்கிற தனது பேரவாவை வெளிப் படுத்துகிறார். தமிழரின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக இருப்பது போலிச் சாதி உணர்வு என்கிறார். இந்த உணர்வு நொறுக்கப்பட வெண்டும், பெயருக்குப் பின் ஜாதிப் பெயர்களைத் தூக்கி எறிய வேண்டுமென்கிறார். இவர் தனது “முன்னேற்ற முழக்கம்” எனும் கவிதை நூலில் தமிழர் எழுச்சி குறித்து அருமையான கவிதைகளை எழுதியிருக்கிறார். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். “தங்கமணிப் படுகையிலே முத்திறைத்து தவழமுத வெள்ளமென நடைகுங்குஞ் சங்கமணிச் செல்வங்கல் மல்கு நாட்டீர்! தமிழ் மறையைப் புவிக்கீந்த செந்நாப்போதர் துங்கமணிக் கவியரசன் கம்பன் துலங்குமிளங் கோவடிகள் சொல்லையுண்ட சிங்க அணித் தமிழர்காள் கலையினுச்சிச் சிகரத்தில் செயக் கொடியை நாட்ட வாரீர்! தமிழ் மன்னர்களின் வீரம் குறித்த இவரது கவிதை தெவிட்டாத இன்பமூட்டக்கூடியது. “கண்ணகிக்குப் பத்தினிக்கல் கொணர்ந்த சேரன் கனக விசயர் செருக்களிக்க நடந்து போரில் விண்ணெட்ட வெற்றி முரசொலித்த நாட்டீர் வியன் கப்பற் படை நடத்தி ராச ராசன் கண்ணெட்டு நாடெல்லாம் கைக்கொண்டான் கலைச்சாலை அறச்சாலை கவின்செய் கோயில் விண்ணெட்டப் புகழ் விளங்கச் செய்தான் அன்னான்! வெற்றி நினைந்து ஆவேசம் பெற்று வாரீர்!” கவியோகி பன்மொழிப்புலவர் என்பதை முன்பே பார்த்தோம். அப்படிப் புலமை பெற்ற அத்தனை மொழிகளிலும் இவர் மிக அருமையான படைப்புக்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார். அவர் எழுதியுள்ள பாடல்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டுகிறது. இவை தவிர தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இவர் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக் குவித்திருக்கிறார். அவர் எழுதியுள்ள நூல்கள் ஆயிரத்தைத் தாண்டும். தனிமனிதனொருவன் தானே இவ்வளவு பெரிய சாதனையைச் செய்திருக்கிறான், அதுவும் இன்றுபோல அத்துணை வசதிகள் இல்லாத காலகட்டத்தில் எழுதிக் குவித்திருக்கிறான் என்றால் இதற்கு ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம். இவர் உணவு நெறியை மிகக் கவனமாகக் காத்தார். உப்பு, புளி, மிளகாயை நீக்கினார். வேகும் சோற்றில் காய்கறிகளைப் போட்டு உண்டார். உணவோடு நல்ல சாதுக்களின் சகவாசமும் இவருக்கு உதவியது என்கிறார். நிலக்கடலை, பழங்கள் இவைதான் இவருக்கு உணவு. இதனை எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கவனமாக கடைப்பிடித்தார். இவருக்கு மதுரையில் இருந்த நாட்களில் வ.உ.சி., ஜி.சுப்பிரமணிய ஐயர், சிவா ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. பாரதியாரும் பிறகு அங்கு சேர்ந்து கொண்டார். மதுரை பசுமலையில் இவர் ஆசிரியர் பயிற்சியும் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு திருமங்கலத்தில் வேலைக்கு போன இடத்தில் நிரம்பியிருந்த ஊழலைக் கண்டு ஓடிவந்து விட்டார். அப்போது முசிறி அருகே இருந்த காட்டுப்புத்தூர் எனும் ஜமீன் கிராமத்தில் ஆசிரியர் வேலை இருப்பது அறிந்து மனுப்போட்டார் அங்கு வேலை கிடைத்தது. காட்டுப்புத்தூர் காட்டுப்புத்தூர் இவரை பொறுத்தவரை பாட்டுப்புத்தூராக இருந்தது என்கிறார். அவ்வூரின் ஜமீந்தார் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரம் ஐயர் என்பார். காட்டுப்புத்தூர் பள்ளிக்கூடத்தில் இவர் ஆங்கிலம், சயின்ஸ், பூகோளம் ஆகியவை கற்பித்தார். 7ஆம் வகுப்புக்கு கணக்கும் பாடம் எடுத்தார். அங்கு மாணவர்களை இவர் கேட்டார், “நீ எதற்கு பள்ளிக்கூடம் வந்தாய்?” என்று. ஒவ்வொருவரும் ஒரு பதிலை அளித்தனர். அப்பா அனுப்பினார் வந்தேன் என்றான் ஒருவன். வீட்டில் பொழுது போகவில்லை வந்தேன் என்றான் மற்றொருவன். ஒரே ஒருவன் மட்டும் சொன்னான் “அறிவு வளர்ச்சி பெற வந்தேன்” என்று. இவருக்கு சாரணர் பயிற்சி அளிக்கப்பட்டது. இவரும் அதனை ஆவலுடன் கற்றுக் கொண்டு மாணவர்களையும் அதில் பயிற்றுவித்தார். அந்தப் பள்ளி மாணவர்களுக்குத் தீக்குச்சி செய்ய கற்றுத் தருகிறேன் என்று இவர் எதையோ போட்டு அரைக்க அது வெடித்து, இவரது ஆசிரியர் பதவிக்கும் வேட்டு வைத்துவிட்டது. மற்றவர்கள் இவரைப் போகச் சொல்லாவிட்டாலும், இவருக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. வேலையை விட்டுவிட்டு சுற்றுப்புற ஊர்களுக்கெல்லாம் செல்ல ஆரம்பித்தார். ஆங்காங்கே மக்களைக் கூட்டிவைத்து பேசினார். இவரது தோற்றம், இவரது பாடல்கள், பேச்சு முதலியன மக்களைக் கவர்ந்ததால், இவர் போகுமிடங்களிலெல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. “நச்சரிக்கும் வாழ்வைநீ நம்பாதே என்று அம்மான் எச்சரிக்கை செய்தான், இனிநானும் – அச்சமுறேன் சாவையும் வெல்லுமொரு சக்திப் பணிசெய்யப் போவேன், அவனே புகல்” என்று அங்கிருந்து வெளியேறினார். இவர் கரூர், நெரூர், தாந்தோன்றிமலை ஆகிய இடங்களுக்கும், அகண்ட காவிரி பாயும் பகுதிகளுக்கும் சென்று அங்கெல்லாம் அமர்ந்து “பாரத மகாசக்தி காவியம்” என்ற பெயரில் ஒரு காவியத்தை எழுதினார். இவர் புதுச்சேரி சென்று வ.வெ.சு.ஐயரையும் பாரதியாரையும் பார்த்தார். பாரதி இவருடைய “பாரதசக்தி” நூலைப் பாராட்டி “தமிழுக்கு ஒரு மகாகாவியம் விளங்கட்டும், செய் பாண்டியா, பராசக்தி உனக்கு நல்ல வாக்குத் தருவாள்” என்று ஆசிர்வாதித்தார். பாரதியைப் போற்றி இவர் எழுதிய வெண்பா:- “வீரங் கனலும் விழிக்கனலும், பிள்ளைபோல் ஈரந் திகழும் இளநெஞ்சும் – பாரதியின் சொல்லும் பொருளும் சுதந்திரப் பேரிகையும் வெல்லும் புவியை விரைந்து”. இவருக்கு சுதந்திர வேட்கை பிறந்தது. திருச்சியில் அப்போது இருந்த காங்கிரஸ் ஆபீசுக்குச் சென்றார். அங்கு கல்கியின் அறிமுகமும், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜனின் அறிமுகமும் கிடைத்தது. அங்குதான் இவர் காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அவர் அழைப்பை ஏற்று காங்கிரஸ் பிரச்சாரப் பணியில் இறங்கினார். சுத்தானந்தர் கரூரில் அரசியல் கூட்டங்களில் பேசினார். அங்கு கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டார். கரூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையோடு தொடர்பு ஏற்பட்டது. காந்தியடிகளுடன் மகாத்மா காந்தி ரயிலில் திருச்சி வருகிறார், அவரை கட்டளை ரயில் நிலையத்தில் சந்திக்க இரவு பன்னிரெண்டு மணிக்குத் தன்னுடன் மாணவர்கள் பலரையும் சேர்த்துக் கொண்டு காந்திஜியைச் சந்திக்கச் சென்றார். ரயில் வந்து நின்றபோது நள்ளிரவு. அனைவரும் தூங்கும் நேரம். ரயில் வந்து நின்றதும் இவரும் நண்பர்களும் ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ என்றும் ‘வந்தேமாதரம்’ என்றும் குரல் கொடுத்தனர். ஜன்னல் திறந்தது. செளகத் அலி எனும் தலைவர் தலையை வெளியே நீட்டி, “அரே அங்கு என்ன கூச்சல்! மகாத்மா தூங்குகிறார்” என்றார். உடனே கொண்டுவந்திருந்த மாலையையும், பணத்தையும் செளகத் அலியிடம் கொடுத்துவிட்டு மகாத்மாவிடம் சமர்ப்பியுங்கள் என்றார். இந்த சந்தர்ப்பத்தில் காந்தி எழுந்து விட்டார். உடனே அவரைப் பார்த்து சுத்தானந்தர் “நமஸ்தே” என்றார். காந்தி மலர்ந்த முகத்துடன் நாங்கள் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டார். “சிரமம் கொடுத்துவிட்டோம், படுத்துக் கொள்ளூங்கள், நாங்கள் திருச்சியில் தங்களைச் சந்த்க்கிறோம்’ என்று சொல்லி திரும்பி வந்துவிட்டார். அதன்படி மறுநாள் திருச்சியில் மகாத்மா காந்திஜியை சந்தித்தார். திருப்பதி யாத்திரை பிறகு இவர் திருப்பதி, காளகஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். காங்கிரசில் இருந்த பிளவு குறித்து மனம் வருந்தி இவர் அதிலிருந்து ஒதுங்கி ஒரே இடத்தில் தங்கிவிட முடிவு செய்தார். சொந்த ஊரான சிவகங்கைக்கு வந்தார். இவருக்கு தேவகோட்டையில் நண்பர் ஒருவர் தொடங்கிய பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்தது. அங்கு பணி புரிந்தார். தினமும் ஆறு மணி நேரம் மட்டும் பேசுவதும், மற்ற நேரங்களில் மெளன விரதமும் அனுஷ்டித்தார். விடுமுறை நாட்களில் முழுவதும் மெளனம்தான். தினமும் காலை 3 மணிக்கு எழுந்துவிடுவார். உடனே தியானம். பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்துவதில் முழு உழைப்பையும் நல்கினார். தேவகோட்டையில் இவர் பொது சேவையில் ஈடுபட்டிருந்த சமயம் வ.வெ.சு.ஐயரிடமிருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. இவரை அவரது பரத்வாஜ ஆசிரமத்துக்கு வரசோல்லி. இவரும் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. வ.வெ.சு.ஐயர் ஒரு புரட்சிக்காரர். அவரோடு போய் இவர் சேருவதை குடும்பத்தார் விரும்பவில்லை. அது குறித்து இவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்:- “சில நண்பர்களைக் கொண்டு எனக்கு வீட்டில் புத்தி சொல்லச் சொன்னார்கள். ஒருவர் கண்டபடி திட்டினார். நான் மெளனமாக பொறுத்துக் கொண்டு என் வேலையைப் பார்த்தேன். உலகுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் கழுதை விற்ற கந்தப்பன் கதைதான். அனைவரும் என்னை பைத்தியம் என்றனர். அது சரிதான் என்று நிரூபிப்பது போல நான் எனது தலைப்பாகையைக் கழற்றி எறிந்தேன். என் உடைமைகள், உடைகள் அனைத்தையும் தீயிட்டு எரித்தேன். நான் எழுதிய கையெழுத்துப் பிரதிகளில் “பாரத சக்தி”யை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற நாவல்கள், நாடகங்கள் அனைத்தையும் தீயிட்டு எரித்தேன்.” அப்போது ராமேஸ்வரத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்கு இவர் சென்றார். அங்கு ந.சோமையாஜுலு, ஸ்ரீனிவாசவரதன் ஆகியோரை சந்தித்தார். அங்கு மாநாடு முடிந்ததும் தனுஷ்கோடி, மதுரை போய்விட்டு சேரன்மாதேவிக்குப் போனார். அங்கு வ.வெ.சு.ஐயர் இவரை வரவேற்றார். வ.வெ.சு.ஐயரின் ‘பரத்வாஜ் ஆசிரமத்தில் தியாகச்சுடர், மாவீரன் வ.வெ.சு.ஐயரிடம் இவருக்கு நல்ல பழக்கம் உண்டு. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் ஐயர் நிறுவிய பரத்வாஜ் ஆசிரமத்திலும், அவரது பத்திரிகையான ‘பாலபாரதி’யிலும் சுத்தானந்தருக்கு தொடர்பு உண்டு. இவரது தமிழார்வத்தையும், கவிதைத் திறத்தையும் ஐயர் வெகுவாக புகழ்ந்திருக்கிறார். ஐயர் மீது இவருக்கு இருந்த அன்பை விளக்க இவர் ஐயருக்கு எழுதிய கடிதமொன்றில் இவரது வாசகத்தைப் பார்க்கலாம். அதில் இவர் ஐயரை, “வீரவிளக்கே! விக்ரமச் சிங்கமே! வ.வெ.சுப்பிரமணிய தீரனே! தீப்பொறி சிந்தும் சிங்கம் போல பாரத தேவியின் துயர் தீர்க்க வீறுகொண்டெழுந்த வித்தகனே! என்றெல்லாம் போற்றியிருக்கிறார். ஐயரை இவர் வர்ணிப்பதைப் பார்க்கலாம் “சிங்க முகம், நீலமணிக் குன்று போல் திண்ணுடல்; புதிய வைரம்போல் உறுதியான அங்கங்கள்; கர்லாவும் பஸ்கியும் செய்து இறுகிய தசைகள்; செவ்வரி படர்ந்த கூர்விழிகள்; அடர்ந்த தாடி; வகுடெடுத்துஒழுங்காகச் சீவி விட்ட கேசம். அகன்ற மார்பு, பஞ்சகச்ச வேஷ்டி, மேலே கதர் துப்பட்டா, பிறைச்சந்தனத்தின் நடுவே குங்குமப் பொட்டு. அவரது கிண்கிணிக் குரலுடன் நாணப் புன்னகையும் சேர்ந்து என் உள்ளத்தில் அன்பு மின்சாரம் பாய்ச்சின” சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயரின் குருகுலம் அமைக்கப்பட்டது. அதற்கு தலைவர் வ.வெ.சு.ஐயர். அங்கு சுத்தானந்தர் இலக்கியம், கல்வி விளம்பரம், பத்திரிகை காரியாலயம் நிர்வாகம் ஆகியவற்றைக் கவனித்தார். “பாலபாரதி” இதழ் பொறுப்பு முழுவதும் இவருடையது. வ.வெ.சு.ஐயரின் குருகுல வாழ்க்கை பற்றி இவர் எழுதியதைப் படித்தால்தான் அந்த குருகுலம் எப்படிச் செயல்பட்டது என்பது புரியும். அங்கு ஒருநாள் வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா? காலை நாலறைக்கு அனைவரும் எழவேண்டும். காலைக்கடன்கள் அனைத்தும் முடியும். பல்துலக்க மாவிலை பறித்து அதில்தான் துலக்க வேண்டும். சிறிது உடற்பயிற்சி. பின்னர் ஆசிரமத்தைக் கூட்டி சுத்தம் செய்தல்; பின்னர் குளிக்க வரிசையில் தாமிரபரணி ஆற்றுக்குச் செல்வர். ஆசிரமம் திரும்பியதும் காலை உணவாக வாழைப்பழம், வேர்க்கடலை, மோர் அல்லது பழைய சோறு. வகுப்புகள் தொடங்கும். பதினோரு மணிக்கு மதிய உணவு. சாப்பிடும்போது யாரும் பேசக்கூடாது. உணவு, சோறு, கூட்டு, மோர், பழம், தேங்காய் இவைகளே. புளி, மிளகாய், வெங்காயம், காபி, டீ இவை அறவே கிடையாது. உணவுக்குப் பின் தட்டுக்களைக் கழுவுதல், இடத்தை சுத்தம் செய்தல் அனைத்தும் மாணவர்களே. பிற்பகல் சந்தைக்குச் சென்று சிலர் வேண்டிய சாமான்களை வாங்குவர். மற்றவர் ராட்டையில் நூல் நூற்பர். பிற்பகல் நான்கு மணிக்கு வகுப்புகள் தொடங்கும். மாலையில் விளையாட்டு. இரவு பஜனை தொடர்ந்து உணவு. ஒன்பது மணிக்கு ஆசிரமம் தூங்கிவிடும். இங்கு சுத்தானந்தர் எழுதிய பாரதசக்தி மகாகாவியம் ஐயரால் மேலும் மெருக்கூட்டப்பட்டது. இங்கு தலைவர்களின் விழாக்கள் நடக்கும். திலகர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நவராத்திரி உத்சவம், உடல்நலம் கெட்டால் இயற்கை வைத்தியம் இப்படி. பாலபாரதி பத்திரிகைக்கு சுத்தானந்தரே முழுப்பொறுப்பெடுத்து வெளியிட்டார். படிப்பு தவிர மாணவர்களை அடிக்கடி வெளியில் சுற்றுலா அழைத்துச் சென்று இயற்கை வளங்களைக் காண்பிப்பார்கள். அப்படி அவர்கள் சென்ற இடங்கள், கல்யாண அருவி, குற்றாலம், நாகர்கோயில், குமரி முனை, பத்மநாபபுரம், திருவனந்தபுரம், கொல்லம், திருச்செந்தூர் இப்படி பல இடங்களுக்கும் சென்று நல்ல அனுபவம் பெற்றனர் மாணவர்கள். இவர் அங்கிருந்த காலத்தில்தான் வ.வெ.சு.ஐயர் மீது ஜாதிப்பிரிவினைப் பார்த்து உணவு வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வளவுக்கும் ஐயர் மிகப் பரந்த மனப்பாங்கு உள்ளவர். குறுகிய ஜாதிப்பிரிவுகளில் உட்படாத புரட்சிக்காரர். அவருக்கே இப்படிப்பட்ட குற்றச்சாட்டு எழுந்ததை சிறுபிள்ளைத்தனமாக இருந்தது என்கிறார் சுத்தானந்தர். பிரயாணங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக கலந்தே சமைத்து உண்டோம் என்கிறார் இவர். இவரிடம் ஐயர் மனம்வருந்தி பேசிய மற்றொரு செய்தி எவருடைய மனதையும் நெகிழச்செய்து விடும். அது என்ன? சுத்தானந்தர் எழுதுகிறார்:- “மணி பதினொன்று. நான் கீதை காட்டும் பாதை எழுதிக் கொண்டிருந்தேன். “ஸஞ்சலம் ஹி மனக் கிருஷ்ண’ என்ற பகுதியை உரக்கப் படித்தேன். அப்போது ஐயர் வந்தார். ஆம், மனம் ஸஞ்சலமாகத்தான் இருக்கிறது. தைர்யவானையும் காலம் சோதிக்கத்தான் செய்கிறது. மனம் உடைகிறது. சோதனைகளை வென்றுதான் நமது தார்மிக வாழ்வை நிலைநாட்ட வேண்டும் என்றார். வ.வெ.சு.ஐயர் அருவியில் விழுந்து இறப்பதற்கு முதல்நாள் ஐயர் தன் மகளுடன் கல்யாண அருவிக்குப் புறப்பட்டார். அப்படி புறப்பட்ட ஐயரை இவர் வர்ணிக்கும் பகுதி இது: “சிங்கம் போன்ற முகம்; நெற்றி நிறைய விபூதி; அழகாகச் சீவி கழுத்தில் படிந்த கேசம்; நீண்டு வளர்ந்த தாடி – இரவும் பகலும் போல் கருப்பும் வெள்ளையும் காட்டுகிறது. வீரக்கனல் விழிகள்; நீர்க்காவி ஏறிய கதர் பஞ்சகச்சம்; மேலே பூப்போட்ட கதர் அங்கவஸ்திரம்; இறுகிப் புடைத்த தோளில், பை; அந்தி அழகெல்லாம் ஐயர் மேல் பொலிகிறது. மஞ்சள் வெயிலில் அவரது வீர வடிவம் தெரிகிறது. அந்தி மல்லிகைக் கொடிபோல் சுபத்திரா தவழ்கிறாள். நமஸ்காரம்…. என்றேன். அந்தோ! அதுதான் அவரது கடைசி சமஸ்காரமானதோ!” பிறகு, மறுநாள் நடந்தவைகளை அவர் வாக்கால் கேட்டால்தான் அதன் ஆழம் புரியும். அவர் சொல்லுகிறார்:- “மறுநாள் அனந்தகிருஷ்ணய்யர் ஓடிவந்தார். வாருங்கள் என்று என்னை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் விம்மி விம்மி அழுதார். ‘சுபத்ரா கால் தவறி அருவியில் விழுந்தாள். அவளை எடுக்க ஐயரும் குதித்தார். இதுகாறும் உடல் கிடைக்கவில்லை’ என்றார். என் தலை சுழன்றது. தமிழகம் சுழன்றது. உலகமே சுழன்றது.” “கல்யாண அருவியை நோக்கி ஓடினேன். அப்போதுதான் ஐயரின் உடலை எடுத்துப் போட்டிருக்கிறார்கள். பார்க்கச் சகிக்கவில்லை. தாடி மீசையெல்லாம் முகம் முழுவதும் மீன்கள் கொத்தி விகாரப்படுத்தியிருந்தன. அழகான பெண் சுபத்ரை பிணமாகக் கிடக்கிறாள். மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் வந்தாள். அந்த சோகமயமான சூழ்நிலையை எப்படிச் சொல்வது. இறுதி கிரியைகள் முடித்து அந்த அம்மாள் தன் மகன் கிருஷ்ணமூர்த்தியுடன் திருச்சிக்குச் சென்றாள்.” இப்படி அந்த சோக நிகழ்ச்சியை வர்ணிக்கிறார் யோகி. மறுநாள் அந்த கல்யாண அருவிக்குப் போனார் சுத்தானந்தர். முதல்நாள் நடந்தவை அவர் மனக்கண்ணில் ஓடுகின்றன. ஐயரின் நினைவு அவர் மனத்தை வாட்டுகிறது. ஒரு பாடல் தோன்றுகிறது. “சிங்கம் போல் வீறுடையான், சேய்போல் வஞ்சமிலான் தங்க மணிக்குரலான் சாவிற்கும் அஞ்சாதான்; முனிபோல் முகமுடையான் முத்துநகையுடையான் கனிபோல் மொழியுடையான் கண்ணிலினிக் காண்பேனோ?” தஞ்சையில் “சமரஸபோதினி” அதன் பின் இவர் பாலபாரதியை நடத்த முயன்றாலும் முடியவில்லை. பத்திரிகை நின்று போனது. ஆசிரமத்திலிருந்தும் சுத்தானந்தர் வெளியேறினார். பின்னர் தஞ்சையில் அப்போது வெளியான “சமரஸபோதினி” எனும் பத்திரிகைக்கு ஆசிரியரானார். அதுகுறித்து அவர் சொல்லும் செய்திகளைப் பார்ப்போம். இதில் தி.ஜ.ரங்கனாதன் துணை ஆசிரியர். (இவர் பின்னாளில் மஞ்சரி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர்) மற்றும் பலரும் பத்திரிகை வெளிவர துணை புரிந்தனர். அப்போது இவரை டாக்டர் கோபு, பூவராகவன் ஆகியோர் வந்து காண்பராம். பத்திரிகை அலுவலகத்திலேயே இவரும் தங்கிக்கொண்டார். தஞ்சையில் இவருக்குப் பிடித்த இடங்களாக இவர் குறிப்பிடுபவை, வெண்ணாற்றின் பொழில், கருந்திட்டைக்குடி தமிழ்ச்சங்கம், சேதுபாவா மடம், பூர்ணானந்தர் தோட்டம், பிரஹதீஸ்வரர் கோயில், கருவூரார் சந்நிதி, பங்காரு காமாட்சி ஆலயம் இங்கெல்லாம் இவர் மனம் பறிகொடுத்து தியானத்திலும் பாடல்களைப் பாடுவதிலும், பிரசங்கங்கள் செய்வதிலும் கழித்ததோடு பல பெரியவர்களையும் தரிசித்துப் பழகியிறுக்கிறார். இவர் அடிக்கடி தியானம் செய்யச் செல்லும் மற்றொரு இடம் ‘நீலகிரி தோட்டம்”. இங்கு சுவாமி கேவல்ராம் என்பவர் இருந்தாராம். இவர் அரவிந்தருக்கும் நண்பராம். தஞ்சையில் இருந்தபோது இவர் திருப்பூந்துறுத்தி சென்றிருக்கிறார். அங்கு ஓர் வேதாந்த சுவாமிகள் இருந்தாராம். அப்பர் மடம் இடிந்து கிடந்ததாம். அங்கிருந்து திருவையாறு சென்றிருக்கிறார். தியாகப்பிரம்மத்தின் சமாதியில் கீர்த்தனங்களை இயற்றிப் பாடினாராம். கல்யாணமஹால் சம்ஸ்கிருத கல்லூரிப் புலவர்களுடன் அளவளாவியிருக்கிறார். சமரஸபோதினி எனும் இந்த பத்திரிகை வாரம் இருமுறையாக வெளிவந்தது. இவர் பத்திரிகையில் சாத்தூர் விஸ்வநாத ஐயர் பாரதியார் பற்றி எழுதிவந்தார் என்கிறார். இவர் பாரதியாரின் தம்பி சி.விஸ்வநாத ஐயராக இருக்க வேண்டும். இவர் தஞ்சையில் இருந்த போது 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மகாநாடு நடந்திருக்கிறது. அதில் திரு வி.க. தலைமை வகிக்க வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டி பெரியார் தீர்மானம் கொண்டு வந்து அது ஏற்றுக்கொள்ளப் படாமையால் அதிலிருந்தும் காங்கிரசிலிருந்தும் வெளிநடப்பு செய்தார். அந்த மாநாட்டிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அந்த மகாநாட்டுக்கு முதல்நாள் நடந்த ‘விஷயாலோசனைக் கூட்டம்’ எப்படி நடந்தது என்பதை இவர் எழுதுகிறார். “விஷயாலோசனைக் கூட்டம் சந்தைக்கூட்டமாக இருந்தது. பேச்சுக்கு பேச்சு வாள்வீச்சாக இருந்தது. ஒருவர் பேசியபின் மற்றவர் பேசினால் நன்றாக இருக்கும், இவர்கள் சளசளவென்று ஒரே நேரத்தில் அனைவரும் கூக்குரல் இட்டனர்” என்கிறார். காஞ்சிபுரம் மகாநாட்டையடுத்து வேதாரண்யத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டிலும் கலந்துகொண்டு இவர் பேசியிருக்கிறார். அதன் பின் சீர்காழியை அடுத்த எருக்கூர் சென்றார். இவ்வூரில்தான் புரட்சிவீரன் நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளலாம். இங்குள்ள பாரத சமாஜத்தில் இவர் பேசினார். திருவையாற்றில் நடக்கும் தியாகபிரம்ம உத்சவத்திலும் கலந்துகொண்டு பல பாகவதர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது மைசூர் நாகரத்தினம்மாள் இவரிடம் உமக்கு எதற்கு அரசியலும் பத்திரிகையும். பேசாமல் கீர்த்தனாஞ்சலி செய்து கொண்டு இரும், என்று கூறியிருக்கிறார். ஒரு முறை ஈரோட்டுக்குச் சென்று பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமி நாயக்கரிடம் பேசிவிட்டு பெரியார் வீட்டுக்குப் போக வழி கேட்க, அவர் சொன்னாராம், “சை! அவன் பாமரன், நாத்திகன், ராமாயண விரோதி, பிராமண விரோதி” என்று அஷ்டோத்திரம் நடத்தினார். பிறகு ஒரு மாட்டு வண்டியில் இவரை தன் தம்பி ராமசாமி நாயக்கர் வீட்டுக்கு அனுப்பினாராம். அங்கு இவரை ஈ.வே.ரா. அன்புடன் வரவேற்று மனைவிக்கு அறிமுகப்படுத்தினாராம். இவர் பெரியாரின் இல்லத்தில் ஸ்நானம் செய்து நித்ய அனுஷ்டானங்களை முடித்து சூரிய நமஸ்காரம் செய்வதை அவர் பார்த்துக் கொண்டிருந்தாரம். அதற்குள் அந்த அம்மாள் கூடத்தில் கோலம் போட்டு, ஊதுவத்தி கொளுத்தி, விளக்கேற்றி தட்டில் பழங்களைக் கொண்டு வைத்தாராம். பெரியார் இவரிடம் “பூஜை சேயண்டி” என்றார். இவரும் ஜபமும் தியானமும் செய்து கற்பூரம் ஏற்றி அந்தச்சுடரை தியானம் செய்ய, பெரியார் “பாகு பாகு சரியண்டி (நல்லது சரி சரி) என்றாராம். பெரியாரைப் பற்றி இவர் கூறுவது: “நாயக்கர் காந்தியிடம் அன்பு வைத்திருந்தார். சாதி இறுமாப்பையும் கடவுள் பெயரால் நடக்கும் போலி நாடகங்களையும் அவர் கண்டித்தார். அரசியல் நாடகத்தில் புகுந்த கூனி வேலைகளையும் கோமாளிக் கூத்துக்களையும் அவர் வெறுத்தார், கண்டித்தார்.” பத்திரிகை தொழிலை விட்டுவிட்டு திருத்துரைப்பூண்டி அருகிலுள்ள பாமணி கிராமத்தில் மக்கள் நல்வாழ்வுக்காகப் பல சீர்திருத்தங்களைக் கற்றுக் கொடுத்து அந்த கிராம மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். பின்னர் அங்கிருந்து பாலையூர் எனுமிடத்துக்குப் போய் அங்கு தங்கி ஆசிரமம் ஏற்படுத்திக்கொண்டு கிராம முன்னேற்றத்துக்குப் பாடுபட்டார். மக்களின் மகோன்னத ஆதரவு இவருக்குக் கிடைத்தது. அப்போது காங்கிரசை விட்டு விலகிய பெரியார் தொண்டர்கள் நாகப்பட்டினத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு நடத்தினார்கள். அதில் மாயவரம் சின்னையா பிள்ளை தலைமை வகித்தார். அதில் காந்தி படத்தைத் திறந்து வைத்து சுத்தானந்தர் பேசினார். இந்த மகாநாட்டில் பட்டுக்கோட்டை அழகிரி, மாயவரம் நடேசன், சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பலரும் பார்ப்பனீயம் என்றும் பிராமணர்கள் பற்றியும் கேலியாகப் பேசினர். ஒருவர் “பார்ப்பனீயம் ஒழிக!” என்றார். பின்னர் சுத்தானந்தர் பேசுகையில் சொன்னது:- “நான் ஒரு பார்ப்பான். எதைப் பார்ப்பான் தெரியுமா? எல்லோர் மனதையும் ஊடுருவிப் பார்ப்பான். சமரசத்தால் உங்களைப் பார்ப்பான். சாதி மதம் ஒழியப் பார்ப்பான் (கைதட்டல் கேட்கிறது) நான் ஒரு புரட்டன். ஆன்மாவைப் புரட்டிப் பார்ப்பவன். நான் ஒரு பஞ்சாங்கன், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்ச அங்கமுடையோன். பசியும் தாகமும் அனைவருக்கும் ஒன்றுதான். தோலைத் தாண்டினால் உள்ளம் ஒன்றுதான். நம்மைக் கெடுப்பது மனமயக்கம்தான். உள்ளறிவால் கண்டால் ஒருமையே தெரியும். இதைத்தான் அருட்சுடர் வள்ளலார் சொன்னார்” என்று பேசியதை பலரும் வரவேற்றார்கள். திருவாரூரில் ரயிலேறி பயணம் செய்கையில் இவருக்கு தொண்டு செய்யும் சீடர்கள் போல நடித்து இருவர் இவர் பெட்டியைத் திருடிச்சென்று விட்டனர். டிக்கட் இல்லாமல் பயணம் செய்த இவரை மாயவரம் ஸ்டேஷனில் இறக்கி விசாரித்தபோது இவர் விவரங்களைச் சொல்ல, அந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு இவரைத் தெரிந்திருந்தமையால் அங்கு சிலநாட்கள் தங்கி பின் பயணத்தை தொடர்ந்தார். சென்னையில் சென்னையில் இவர் மனம் கவர்ந்த இடம் மைலாப்பூர். அடையாற்றில் இவர் அன்னிபெசண்ட் அம்மையாரையும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியையும் சந்தித்துப் பேசினார். அப்போது சென்னை இந்தி பிரச்சார சபா திருவல்லிக்கேணியில் இருந்தது. அங்கிருந்த பாரதியின் உறவினர் ஹரிஹர சர்மாவோடு பழக்கம் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் இவர் பெங்களூர் மற்றும் வடநாட்டுத் தலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்துக்கும் சென்றார். பம்பாய் பெருநகரத்திலும் இவரது வாசம் சில நாட்கள் இருந்தன. சென்னையில் இவருக்கு காந்திஜியோடு இருக்கும் பாக்கியம் கிடைத்தது. காந்திஜி இவரை ஆசீர்வதித்தார். “ஸ்வராஜ்யா” இவர் சென்னையில் இருந்த சமயம் டி.பிரகாசம் “ஸ்வயராஜ்யா” பத்திரிகையை நடத்த இவரை அழைத்தார். அதே காரியாலயத்தில் இவருக்குத் தங்க இடம் தரப்பட்டது. அவர் “சுயராஜ்யா” பத்திரிகையில் ஆசிரியராக இருந்தது பற்றி அவரே கூறும் செய்தியைப் பார்ப்போம். “பிராட்வேயில் மிகப் பெரிய மாளிகையில் ‘ஸ்வராஜ்யா’ காரியாலயம் இருந்தது. முதல் தளத்தின் முன்புறம் இரண்டு ‘லைனோக்கள்’ வேலை செய்தன. அடித்த்தளத்தின் பின்புறம் பெரிய ஆங்கில இயந்திரம் ஆங்கில ‘ஸ்வராஜ்யா’வை அச்சடித்துக் கொண்டிருக்கும். மூன்றாம் மாடிக்குச் சென்றால் இவருடைய அறை. ஒரு கோவணத்தைக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் பேனரை ஓட்டிக் கொண்டிருப்பார். இவர் ஸ்வராஜ்யா ஆசிரியராக இருந்த சமயம் “பால்ய விவாகம்” பற்றிய சர்ச்சை எழுந்து பல கூட்டங்களில் விவாதங்கள் நடந்தன. அங்கெல்லாம் இவர் போய் பால்ய விவாகத்தை எதிர்த்தார். அப்போது சிலர் ‘பெண்களுக்கு எட்டு வயதில் திருமணம் செய்ய வேண்டும், அதுதான் சாஸ்திரம். விதவைத் திருமணம் விபசாரமாகும்” என்றெல்லாம் பேச அங்கெல்லாம் கலவரம் நடந்தது. இந்த பத்திரிகை சிலகாலம் வரை வெளிவந்து கொண்டிருந்தது. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணுரிமை கூட்டமொன்று நடந்தது. அவ்வூரில் பால்ய விவாகத்தின் காரணமாகப் பல விதவைகள் இருந்தனர். அதன் கொடுமைகள் குறித்து இவர் பேச அங்கு சென்றார். கோயில் மண்டபத்தில் கூட்டம். பெண்கள் பலர் அங்கு வந்து கன்னத்தில் கைவைத்துக் கொண்டு நின்றிருந்தனர். சில வைதீகர்கள் அவர்களை விரட்டியடித்தனர். “புருஷாள் கூட்டத்தில் உங்களுக்கு என்ன வேலை, போங்கோ” என்று விரட்டினார். அவர்கள் சுற்றியிருந்த வீட்டுத் திண்ணையில் கூடி கூட்டத்தைக் கேட்டனர். வைதீகர்கள் ‘கலிகாலம் கலிகாலம்’ என்றனர். உள்ளூர் பிரமுகர் யாரும் முன்வராததால் சுத்தானந்தர் பேசத் தொடங்கினார். அவர் பராசர ஸ்மிருதி, வேதம், பகுத்தறிவு இவற்றை ஆதாரமாகக் கொண்டு வாதம் புரிந்தார். ஆண்டாள் புரிந்தது காதல் திருமணம் என்றார். அங்கிருந்த வைதீகர்கள் சிலர் “நீங்கள்தான் கலிகால தூதர்கள், உங்களால்தான் மழை பெய்யவில்லை, கம்மனாட்டிகளுக்குக் கல்யாணமாம், திரண்டு குளித்த பெண்டுகளை மணையில் வைப்பதாம், காதலாம் கத்தரிக்காயாம், கலியாணமாம், போங்காணும்; கோயில் மண்டபத்தில் அபசாரமாகப் பேசக்கூடாது” என்று கூச்சலிட்டனர். அப்போது விசாலாட்சியம்மாள் என்பவர் பேச வந்தார். “ஏய்! பெண்கள் புருஷாள் முன் பேசக்கூடாது” என்று தடுத்தனர். இவர்கள் கோயிலுக்கு வெளியே ஒரு மேஜையைப் போட்டு அதில் ஏறி பேசிமுடித்துவிட்டே அங்கிருந்து கலைந்தனர். முத்துலட்சுமி ரெட்டி தலைமையில் தேவதாசி முறை ஒழிப்பையும் இவர் ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார். “சக்தி” நமக்கெல்லாம் “சக்தி” கோவிந்தன் பற்றி தெரியும். இவர் வெளியிட்ட சக்தி எனும் பத்திரிகை மிகவும் பிரபலம். அதில் ஆரம்பகாலத்தில் கவியோகிதான் ஆசிரியராக இருந்தார். “மஞ்சரி” பத்திரிகையில் இருந்த தி.ஜ.ரங்கநாதன் என்பவர்தான் இவருக்கு “சக்தி”யில் உதவி ஆசிரியர். “சக்தி” ஒரு மிகச்சிறந்த இலக்கியப் பத்திரிகை. அதில் யோகியின் கவிதைகள், கட்டுரைகள் அதிகம் இடம்பெற்றன. “இயற்கை போதினி” இவை தவிர “இயற்கை போதினி” என்ற ஒரு குறும் பத்திரிகையிலும் இவருக்குத் தொடர்பு இருந்தது. அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர் 1908 முதல் 1924 வரை நடத்தி வந்த “விவேக போதினி” பத்திரிகையிலும் யோகி எழுதி வந்தார். கவிதைகள்: யோகி சுந்தானந்தருடைய கவிதைகள் கணக்கிட வேண்டுமென்றால் அது சாத்தியமான காரியமாக இருக்காது. பல்லாயிரக்கணக்கான பாடல்களை இவர் பாடியிருக்கிறார். மகாகவி பாரதியாரைப் போன்றே இவரும் சக்தியைப் பற்றிப் பாடியிருக்கிறார். “சுத்த சக்தி தாண்டவம்” எனும் தலைப்பில் அமைந்த பாடலின் மேன்மையைப் பார்ப்போம். “ஓங்குயர் மோன ஒளி அதனில் ஓமென யாழிசைத்தாய் அந்த நீங்கறு பாட்டினிலே – பராசக்தி நீளுலகைப் படைத்தாய். ஈருயிர் யாவினுக்கும் – உயிராய் எங்கும் இருப்பவளே – எம்மைத் தாங்கி வளர்ப்பவளே – சுத்த சக்தி தர்மச் சுடர் மணியே!” இன்னொரு பாடல்: “ஓடும் அருவியெலாம் அம்மா உன் ஓங்கார வீணையன்றோ? பாடும் பறவையெல்லாம் திருப் பாவை முழக்கமன்றோ” கூடும் மணத் தென்றல் கண்ணன் குழலமுத மன்றோ? ஆடும் அவனியெல்லாம் ஓம் சச்சி தானந்த தாண்டவமே!” இங்கே ஒரு திருப்பள்ளி எழுச்சி. கேட்போமா? “விண்முகம் கனிந்தது விடிந்தது காலை வீங்கிருள் அகன்றது தூங்கின குமுதம் தண்முகம் அருளைத் தணல்முக மானது தடங்களில் விரிந்தன தாமரை யெல்லாம் மண்முகம் புதுப்பசும் பொன்முக மாகிட மங்கலச் செங்கதிர் மலர்ந்தது வானில் எம்முகம் பார்த்தருள் புரிவதற் கெண்ணி எழுந்தருள் இத்தினம் இன்பக் கொழுந்தே!” பெண்மைக்கு இலக்கணம் சொல்கிறார் இந்தப் பாட்டில்: “வசந்த சோலை போலே மின்னும் வான்முகிலைப் போலே இசைந்த காதல் போலே நல் இன்பமான பெண்மை கலை வளர்க்கும் பெண்மை கவிகனிய நிற்கும் பெண்மை தலை சிறந்த இன்பம் நல்கும் தாயமுதப் பெண்மை தேன் மொழிகள் பேசி அன்புத் திருநகையை வீசி வானமுதம் ஊட்டி நம்மை வளர்க்கும் பெண்மை வாழ்க” ‘இளங்கதிர்’ என்றொரு கவிதை: “இளங்கதிர் காலை இயற்கையின் அழகில் இலக்கியங்காணோமோ? களங்க மில்லாத மலை அருவியினிலே கவிதைகள் கேளோமோ? உளங்குளிர் காதல் ஒருமையில் இன்பம் ஊறிடக் காணோமோ? வளம்பெறும் ஆண்பெண் சிவசக்தி எனவே வாழ்ந்திட மகிழோமோ? “யசோதரையும் சித்தார்த்தனும்” எனும் தலைப்பில் ஒரு கவிதையை சுத்தானந்தர் இயற்றியிருக்கிறார். தமிழிசைப் பற்று கர்நாடக இசையில் பெரும்பாலும் தெலுங்குப் பாடல்கள்தான் அதிலும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பாடல்களைத்தான் எல்லோரும் பாடுகிறார்கள். ஓரிருவர் முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் பாடல்களையும், ஒரு காலத்துக்குப் பிறகு கன்னட மொழிப் பாடல்களையும் பாடிவருகின்றனர். இதையொட்டி தமிழ்நாட்டில் தமிழிசை இயக்கம் தொடங்கியது. செட்டிநாட்டரசர் தலைமையில் கல்கி, ராஜாஜி ஆகியோரும் தமிழிசைக்கு ஆர்வம் காட்டி வளர்க்கத் தொடங்கினர். தமிழிசை பரவ வேண்டுமானால் தமிழில் நல்ல சாகித்தியங்கள் இயற்றப்பட வேண்டும் என்று பாரதியார் கூட விரும்பியிருக்கிறார். அதையொட்டி சுத்தானந்தர் கச்சேரிகளில் பாடக்கூடிய பல நல்ல தமிழ் சாகித்தியங்களை இயற்றினார்.இவருடைய தமிழ்ப் பாடல்களை திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எம்.தண்டபாணி தேசிகர், டி.கே. பட்டம்மாள், ஜி.என்.பாலசுப்பிரமணியம், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடிப் பிரபலப்படுத்தினார்கள். எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி பிரபலமான பாடல் “இல்லையென்பான் யாரடா” எனும் பாடல். தமிழில் பாட பாடல்கள் எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல இந்தப் பாடல் அமைந்தது என்று தேசிகருக்கு பெருமகிழ்ச்சி. தமிழில் சாகித்தியங்கள் இவர் திரைப்படங்களிலும் பாடல்களை எழுதியிருக்கிறார். அந்தக் காலத்தில் வந்த போஜன், ஆண்டாள், சுதர்சன், பொன்வயல், பார் மகளே பார், மரகதம் போன்ற படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் சுதர்சன் படத்தில் பி.யூ.சின்னப்பா பாடியுள்ள “உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே அன்றோ கண்ண பரமாத்மா” எனும் பாடலும் “பொன்வயல்” படத்தில், “சிரிப்புத்தான் வருகுதையே, உலகைக் கண்டால் சிரிப்புத்தான் வருகுதையே” எனும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடலும், “பார் மகளே பார்” எனும் படத்தில் வரும் “வெட்கமாய் இருக்குதடி இந்த வேலவர் செய்திடும் வேலை இல்லா வேலை” எனும் பாடலும், “மரகதம்” படத்தில் வந்து பிரபலமாக விளங்கிய “மாலை மயங்குகின்ற நேரம், பச்சை மலை வளரும் அருவி ஓரம்” எனும் சுப்பையா நாயுடு இசை அமைத்த பாடல் இவை சிறப்பாக விளங்கிய பாடல்களாகும். சர்வமத சம்மதம் இவருக்கு மத பாகுபாடு இல்லை. இந்து மதத்தாராயினும் மற்ற மதங்களையும் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல, அந்தந்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அந்த மதத்தாராகவே இருக்கப் பழகியவர். மற்ற மதங்களின் நூல்களைப் பழுதறக் கற்றவர். ஜைன மத்தின் தத்துவங்களை ஆழமாகக் கற்றுத் தேர்ந்தவர் இவர். அது போலவே பைபிள் முழுவதும் இவர் கற்று அறிந்து வைத்திருந்தார். இஸ்லாம் தத்துவங்களைக் கற்றுக் கொள்வதற்காக திருக்குர்ரானை முற்றிலுமாக ஓதியவர். அவர் இயற்றியுள்ள “பாரத சக்தி மகா காவியம்” எனும் நூலில் இந்த சர்வமதக் கருத்துக்களை ஆழ்ந்து படித்து நமக்குக் கொடுத்திருக்கிறார். இவர் கிறிஸ்தவ மதம் பற்றிய “கிறிஸ்து சாதனம்” எனும் கட்டுரையொன்றை எழுதி அந்த மதம் சார்ந்த கருத்துக்களைச் சிறப்பாக எடுத்து விவரிக்கிறார். கிருஸ்துவ மத நூலான பைபிளில் 25000 சொற்கள் உண்டு என்றும், இதை வைத்துக் கொண்டு பாதிரிமார்கள் அரிய தொண்டினை இயற்றுவதாகக் கூறுகிறார். பைபிள் உலகிலுள்ள 400 மொழிகலில் இருப்பதாகவும் இவர் ஒரு தகவலைக் கொடுக்கிறார். தான் சென்ற உலக நாடுகள் அனைத்திலும் பைபிள் படிக்கப்படுவது குறித்தும் இவர் குறிப்பிடுகிறார். இவர் “புத்தர் கருணை” எனும் சிறிய நூலொன்றை எழுதியிருக்கிறார். புத்தரைப் பற்றி இவர் கூறும் கருத்துக்கள். “புத்தர் அரச போகத்தைத் துறந்தார். அரச மரத்தினடியில் அமர்ந்து இவர் உலகத்தார் துயர் நீங்க ஓர் மார்க்கம் கண்டார். பெளத்தம் அறவழியை போதிக்கிறது. அன்பு, இரக்கம், எளிமை, தன்னலமில்லாதிருத்தல், தானம், சீலம், நல்லொழுக்கம் இவை அமைதிக்கான வழி என்கிறார் சுத்தானந்தர். புத்தமத பிரச்சாரத்திலும் இவர் ஈடுபட்டார். ஜைனர்களின் மகாவீரர் பற்றியும் இவர் விளக்குகிறார். அவர் சொல்கிறார்: “மகாவீரர் என்ற பெயரால் அவர் ஏன் அழைக்கப்பட வேண்டும் தெரியுமா? அதிமுத்தம் என்கிற பயங்கரமான சுடுகாட்டில் மகாவீரர் தியானத்தில் இருந்தார். கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்தது. பேய்க்கணங்களும், கொள்ளிவாய்ப் பிசாசுகளும் அவரை அச்சுறுத்தின. மகாவீரர் அசையவில்லை. பின்னும் அவரது பிரம்மச்சரியம் மாயப்பெண்களால் மாசுபடுத்த முயல்கின்றன. ஒன்றுக்கும் அசையாத மகாவீரரை ஒரு தேவதை “முனிவரே, உம்மை சோதித்தோம், நீரே பிரம்மச்சாரி, உம்மை மகாவீரர் என்பேன் என்கிறது அந்த தேவதை. இப்படி இவர் மற்ற மதங்களையும் விரும்பி அதன் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அதன் பெருமைகளையெல்லாம் ஊருக்குச் சொன்னவர். ஆனாலும் அவர் அடிப்படையில் ஓர் அத்வைதி. ஆதி சங்கரரின் மீது அசைக்கமுடியாத பக்தி கொண்டவர். மகாகவி பாரதியாரோடு சுத்தானந்தர் மகாகவியின் பெருமையை மக்கள் பெரிதும் உணராதிருந்த காலத்தில் அந்த மாபெரும் கவிஞனைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டவர் சுத்தானந்தர். பாரதி குறித்து அவர் “பாரதி விளக்கம்”, “கவிக்குயில் பாரதியார்” என இரு நூல்களை எழுதியிருக்கிறார். பாரதிக்கும் தனக்கும் இருந்த பழக்கம் குறித்து அவரே எழுதியதைப் பார்க்கலாம். “பாரதியாரை சிறுவயதில் நான் மதுரையில் பார்த்தேன். அப்போது அவர் வாட்டசாட்டமாக களை பொருந்தியவராக இருந்தார். புதுச்சேரியில் அவரைப் பார்த்தபோது அவர் மெலிந்து போயிருந்தார். நெற்றியில் நாமமும், கூரிய பார்வையும், பாவறா வாயும், தைரிய மீசை தாடியும் பாரதியை விளக்கின. இப்போது எவ்வளவு வேற்றுமை. ஆள் இளைத்திருந்தார். ஆனால் விழிகளில் அதே கனல். வெற்றிலைக் காவியேறி உதட்டில் அதே முத்து நகையைக் கண்டேன். மீசை ஜயமுண்டு பயமில்லை என்று பேசியது. தாடியில்லை.” கடையத்துக்குச் சென்று பாரதியைக் கண்ட காட்சியை இப்படி விளக்குகிறார். “முதலில் அக்கிரகாரத்துக்குச் சென்று பாரதியார் வீடு எது என்று வினவினேன். அடடா! நீர் வைதிகமாயிருக்கிறீர். அவனை ஏன் பார்க்கிறீர், அவன் முழு அனாச்சாரம் என்றார் ஒருவர். ‘அது கிறுக்குப் பிடித்து கஞ்சா போட்டு எங்காவது திரியும்’ என்றார் இன்னொருவர். ‘நாங்கள் யாரும் அவன் வீட்டுக்குப் போவதில்லை, அவன் கழுதையைக் கொஞ்சும் கவி’ என்றார் இன்னொருவர். நான் அவர்கள் வாயை அடக்கினேன். ‘ஐயா! தமிழ்நாடு முழுவதும் கொண்டாடும் கவிக்குயிலை காகமும், கூகையும் வெறுத்தால் பரவாயில்லை, அவர் பெருமையை நான் அறிவேன் என்றேன். ஒருவர் மட்டும் கடையம் சத்திரத் திண்ணையிலிருந்து வந்து “அதோ அந்த ஆற்றங்கரை தோப்பில் தாண்டுகால் போடுகிறார்” என்றார். ஓடினேன். “விட்டு விடுதலை ஆகிடுவாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே” என்ற பாட்டு என்னை வரவேற்றது. பாரதியார் அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு வெகு முறுக்காக ராணுவ நடைபோட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே மீசையை நகாசு செய்து கொண்டே, அஸ்தமனச் சூரியனைப் பார்த்தார். பசுஞ்சோலையில் தங்க முலாம் பூசியது போல மஞ்சல் வெயில் படர்ந்தது.” இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறார் சுத்தானந்தர். மறுமுறை திருச்செந்தூரிலும் பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அங்கு பாரதியார் “முருகா, முருகா” எனும் பாடலைப் பாடியதைக் கேட்டிருக்கிறார். கடைசி முறையாக பாரதியைச் சென்னைக் கடற்கரையில் பார்த்திருக்கிறார். அப்போதுதான் பாரதியார் “பாரத சமுதாயம் வாழ்கவே” எனும் பாடலைப் பாடியதையும் அப்போது வ.வெ.சு.ஐயரும் கூட இருந்ததையும் விவரிக்கிறார். அந்தக் கூட்டம் மழை காரணமாக சீக்கிரம் முடிந்துவிட்டதாம். வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன் தூத்துக்குடி சென்று இவர் வ.உ.சி.யைச் சந்தித்தார். அப்போது காங்கிரசில் இரு பிரிவுகள். ஒன்றுக்கு வரதராஜுலு நாயுடு தலைவர். இவர் அங்கு சென்றதும் மற்றொரு கோஷ்டி இவரை கூட்டங்களில் பேச அழைத்தது. வ.உ.சியுடன் நெருங்கிப் பழகிய காலமும் இதுதான். அவரைப் பற்றி சுத்தானந்தர் கூறுவது: “உரம் பெற்ற வீர உள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ்ப்பேச்சு, பேச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல் – எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. ‘வீரச்சிதம்பரம் பிள்ளை’ என்ற பாட்டைப் பாடினேன்.” என்கிறார். பாட்டைக் கேட்ட வ.உ.சி. “பாட்டு கம்பீரமாக இருந்தது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வயராஜ்யாவில் தங்கள் தலையங்கம் படித்தேன், நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாக இருக்கிறது. திலகரும் உமது நண்பர்தானே?” என்றார் பிள்ளைவாள். அதற்கு சுத்தானந்தர், “திலகரிடமும் எனக்கு உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கிறதே. வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன் வெட்கும்படி கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன் எழுத்துக்களால் பொறிக்கும்” என்றேன். பிள்ளை சொன்னார், “நான் சிறையை விட்டு வெளிவந்தபோது எனக்கு மாலை சூட்டி வரவேற்க ஒரு தமிழன்கூட இல்லை. எண்ணைக்கடை வைத்துப் பிழைத்தேன். வறுமையில் வாடினேன். வாலஸ் துரை எனது சன்னத்தை மீட்டுத்தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்: “கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்றுள்ளக் கெடும்”. இன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தால் இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்” என்றார். “தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு, ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம் – இந்த நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்புவாதம்தான் நாட்டைப் பிளக்கிறது” என்றேன்.அதற்கு வ.உ.சி. சொன்னார், “என் குருநாதர் காலத்தில் வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து, முஸ்லீம், பார்ப்பான், அல்லான், வைதிக ஒத்துழையாமை, ஸ்வயராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும், ஐயங்காரும், ஐயரும் என்னுடன் கைகோர்த்து நடக்கச் செய்வேன்” என்றார்.அன்று நடந்த கூட்டத்துக்கு சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். வரதராஜுலு நாயுடு, எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர் ஆகியோர் பேசினர். கடைசியில் சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார் என்று அழைத்தார் தமிழ்ச்சிங்கம் வ.உ.சி. காலமும் கடமையும் என்று நான் பேசினேன், இல்லை கர்ஜித்தேன் என்கிறார் சுத்தானந்தர். சுத்தானந்தரைப் பற்றிய பொதுவான சில செய்திகள் 1979ஆம் வருஷம். சென்னை பள்ளிப்பட்டு ஸ்ரீராம் நகரில் யோகி சுத்தானந்த பாரதியார் தனது “யோக சமாஜம்” அமைத்து அதில் தங்கி இருந்தார். அங்கே அவருடைய சீடர்கள் சிலர் தங்கியிருந்தனர். அந்த காலத்தில் அவர் பல ஊர்களுக்கும் கூட்டங்களுக்கும் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் போய்வந்தார். பெரும்பாலான நேரங்களில் அந்த கட்டடத்தின் மாடியில் எழுதிக்கொண்டோ அல்லது தியானத்திலோ இருப்பது வழக்கம். இவருக்கு உதவியாகச் சில சீடர்களும் உடன் இருந்தார்கள். அடிக்கடி பல பெரியவர்கள் இவரைப் பார்க்க வருவார்கள். அவர்களுடன் இவர் இலக்கியம், கவிதை, யோகம், அரசியல் என்று ஒன்றுவிடாமல் பேசினார். அவர் ஃபிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்த கதையான “ஏழை படும் பாடு” என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தார்கள் அல்லவா, அதில் நடித்த வி.நாகையா பற்றி இவருக்கு நல்ல அபிப்பிராயம். அவர் நன்றாகப் பாடுவார், நல்ல சங்கீத ஞானமுள்ளவர் என்பார். இவர் ஃபிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்த மற்றொரு கதையை எம்.ஆர்.ராதா படமெடுக்க விரும்பினார் என்றும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் கூறுகிறார். இவர் தன்னை மட்டும் பற்றி சிந்திக்கவில்லை, அவர் காலத்து மற்ற எழுத்தாளர்கள், படைப்பாளிகள் பற்றியெல்லாம் இவருக்கு நல்ல எண்ணம் உண்டு. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் இவர்களது சிறுகதைகளை இவர் பெரிதும் பாராட்டியிருக்கிறார். பாரதிதாசனனின் கவிதை வேகத்தையும் இவர் புகழ்ந்து பேசுகிறார். கம்பதாசன் குறித்து இவர் சொன்னது, “அந்த ஆள் அற்புதமான கவிஞன், ஆனால் ஒண்ணாம் நம்பர் குடிகாரன்” என்றார். கண்ணதாசன் குறித்து, “அவர் நல்ல கவிஞர், என் மீது நிரம்ப மரியாதை உள்ளவர்” என்கிறார். கவிஞர் சுரதா பற்றி இவர் கூறுவது: “சுரதாவை எனக்கு அவரது இளமைக் காலம் தொட்டே தெரியும். அவர் என் புத்தகங்களை எல்லாம் படித்து என்மீது ஆர்வம் கொண்டு தன் பெயரை “சுத்தானந்த தாசன்” என்று வைத்துக் கொண்டார். பின்னாளில் பாரதிதாசனிடம் ஐக்கியமாகி சுப்புரத்தினதாசன் என ஆனார்” என்கிறார். காஞ்சி மகாசுவாமிகள் காஞ்சி மகான் பற்றி இவர் எழுதியதைப் பார்ப்போம். ‘இவர் துறவுலகத்துக்கே தூய ஒளியாகத் துலங்குகிறார். அவரை நான் ஐந்து முறை தரிசித்துள்ளேன். 1922இல் அவர் சிவகங்கைக்கு வந்தபோது ராஜா சத்திரத்தில் தங்கியிருந்தார். நானும் என் தமயனாரும் சென்று தரிசித்தோம். எப்போதும் அவர் மகா தேஜஸ்வியாகத் துலங்கினார். அவர் பேச்சு மிக இனியது. அவர் குறித்து நான் பாடினேன். “தேனினும் இனிய சொல்லான், தீச்சுடர் மேனிகொண்டான் ஊனுயிர்க்குயிரதான ஒன்றினைக் கலந்து நின்றான் ஏனினிக் கவலை நெஞ்சே; இன்றுனக் கருள்செய் தானிஞ் ஞானவான் – காமகோடி நாதனை நம்புவோமே” அவருடைய திருக்கரத்தால் தேங்காயும் கனிகளும் திருநீறும் அளித்தார். மறுமுறை நான் திருப்பெருந்துறைக் கோயில் குறுந்தமரத்தடியே நிஷ்டைகூடி மாணிக்கப்பாட்டு எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது அடியார் சூழ ஆசாரியார் வந்தார். ஒரு பாட்டுப் படித்தேன். என்னை ஆசீர்வதித்தார். ஒரு வாரம் அவருடனே இருந்தேன். பிறகு காஞ்சி, சென்னை, திருப்பதி மூன்றிடங்களுக்குத் தலைமை வகித்து அவரைப் பற்றிப் பேசினேன். [] ரமண மகரிஷியும் அரவிந்த மகானும் அரசியல், ஆசிரியர் பணி, ஊர் சுற்றல், வாதம் புரிதல், கிராம நிர்மாணத் திட்டங்கள் இப்படி பல அவதாரங்களை எடுத்த இவர் அடிக்கடி தியானத்தில் அமர்ந்துவிடுவார் என்பதைப் பார்த்தோம் அல்லவா? ஒரு நிலையில் இவரது தியானத்தில் ரமணமகரிஷி தோன்றத் தொடங்கினார். அது முதல் ரமணர் குறித்தும், அவர் வாழ்ந்த திருவண்ணாமலை, அவர் தவமிருந்த விருபாக்ஷி குகை இவை மனதில் ஓடத்தொடங்கின. விடுவாரா இவர்? எங்கெங்கோ சுற்றி மறுபடி திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். [] திருவண்ணாமலையில் வந்து இறங்கியதும் அண்ணாமலைப் பிள்ளை, ஜானகிராம அய்யர் ஆகிய இருவர் இவரை வரவேற்றனர். இவர் அண்ணாமலை குன்றில் ஏறி அங்கு அருவியில் நீராடிவிட்டு விருபாக்ஷி குகைத் திண்ணையில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். பின்னர் அங்கிருந்து ரமணாசிரமம் சென்றார். அங்கு அப்போது இருந்த பிரபல காங்கிரஸ் தலைவரும் ஆன்மீகத்துறையில் பெரியவருமான காவ்யகண்டம் கணபதி சாஸ்திரிகள் இருந்தார். மகரிஷியிடமும் காவ்யகண்டம் சாஸ்திரிகளிடமும் சுத்தானந்தர் நன்கு அளவளாவினார். இந்த சந்திப்பினால் தான் ‘ரமணப்பிரகாசத்தின்’ பெருமையை அறிந்தேன் என்கிறார் சுத்தானந்தர். இவர் திருவண்ணாமலையில் பகவான் ரமணரின் அனுமதியோடு மலைமீது ரமணர் தவமிருந்த விரூபாக்ஷி குகையில் அவரைப் போலவே மெளனத் தவத்தில் அமர்ந்து இருந்திருக்கிறார். ரமணாசிரமத்தில் சுத்தானந்தர் வசித்து வரும் போது அங்கிருந்த காவ்யகண்டம் கணபதி சாஸ்திரிக்கு அரவிந்தரை தரிசிக்க வருமாறு அழைப்பு வருகிறது. தானும் அரவிந்தரை தரிசிக்கவும் தன் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை அரவிந்தரிடம் கொடுத்துவிட வேண்டுமென்கிற எண்ணமும் உதயமாகியது. ரமணரின் சந்நிதியில் இருக்கும்போதுதான் ‘ரமணரைப் பார்த்தாலே போதும், அவர் அடைந்த உயர் நிலையைப் பிறரும் அடையத் தூண்டும் சக்தி கிடைக்கும்’ என்று உணர்ந்தார் சுத்தானந்தர். திருவண்ணாமலை வாசத்தின் போதுதான் சேஷாத்ரி சுவாமிகளையும் தரிசித்தார். அவர் சொன்ன மகா உபதேசம் “சுத்தானந்தமாக இரு” என்பது. அந்த ஆசியை மனதில் வாங்கிக்கொண்டு திருவண்ணாமலையை விட்டுப் புறப்பட்டார். [] அங்கிருந்து புதுச்சேரி வந்தார். அங்கு அரவிந்தரையும் அன்னையையும் தரிசித்தார். 5-12-1950இல் அரவிந்தர் முக்தி அடைந்தார். அதன் பின் ஆரோவில் எனும் ஊர் உருவானது. அதில் 200 பேர் அயல்நாட்டார் சிறு குடில்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது அன்னையும் காலமானார். அதன்பின் அங்கு தொடர்ந்து வாழ்ந்து வந்த சுத்தானந்தர் முதல் ஏழு ஆண்டுகளில் அரவிந்தரின் நூல்கள் அனைத்தையும் பயின்றார். பல நூல்களை மொழி பெயர்த்தார். அவர் கவிதைகளை வரிவரியாக ஆழ்ந்து படித்தார். அதைப்பற்றியெல்லாம் சுமார் 40 நூல்கள் எழுதி வெலியிட்டார். அங்கு மெளனமும், நூல் எழுதுதல், படித்தல் என்று பொழுது போயிற்று. [] [] []Seshadri swamigal அரவிந்த ஆசிரமத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளைக் கழித்தபின் அவர் புதுவையை விட்டு வெளியேறினார். புதுவையில் இருந்த 25 ஆண்டுகளும் அவர் மெளன விரதம் பூண்டிருந்தார். முதல் பத்து ஆண்டுகளில் அரவிந்தரின் நூல்கள் அனைத்தையும் படித்துத் தேர்ந்தார். பின்னர் பற்பல நூல்களை எழுதிக் குவித்தார். அத்தனையும் தனது மெளன விரதத்தோடேயே நடந்தது. அங்கு இவர் யோகம் பயின்றதோடு, அரவிந்தரின் அன்புக்கும், அன்னையின் கருணைக்கும் பாத்திரமானார். தினம் இவர் அவர்களை தரிசித்தபின் தான் தனது வேலைகளைத் தொடங்குவார். அரவிந்த அன்னை இவருக்குத் தினமும் ஒரு மலரைக் கொடுத்து ஆசி வழங்கி வந்தார். வாழ்க்கைப் பலனைப் பெற்றதாகவும், அவர்களது அருளாசி தனக்கு முழுமையாகக் கிடைத்ததாகவும் இவர் கருதினார். நான் ஏன் அரவிந்தாசிரமத்தை விட்டு வெளியேறினேன் என்பதற்கு “கடவுள் ஆணை’ என்கிறார். அரவிந்த ஆசிரமத்தைவிட அரவிந்தரை மேலாக நினைக்கிறேன் என்கிறார். அங்கிருந்து சிதம்பரம் அண்ணாமலை நகருக்குச் செல்கிறார். அங்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பேசினார். பிறகு தருமபுரம் ஆதீனம் சென்று அவர்களோடு சைவ சித்தாந்தத்தைப் பரப்புவது குறித்து பேசினார். அங்கிருந்து வைத்தீஸ்வரன்கோயில் சென்று தரிசித்தார். சுவாமி சிவானந்த சரஸ்வதி, ஆரிய சமாஜ் தலைவர் சுவாமி ஸ்ரத்தானந்தா, ஷீரடி சாய்பாபா, புட்டபர்த்தி பாபா, மேகர் பாபா, இவர்கள் தவிர பிரபல விஞ்ஞானி சர் சி.வி.ராமன், கே.எம்.முன்ஷி, ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, திருக்கோயிலூர் தபோவனம் சுவாமி ஞானானந்தா ஆகியோர்களோடும் இவருக்கு பழக்கம் இருந்தது. இதன் பின் உலக நாடுகள் பலவற்றுக்கும் யாத்திரை சென்றார். அதன் விவரங்கள் இதோ: [] Swamy Sivananda வெளிநாட்டுப் பயணங்கள் இன்றைய சூழ்நிலையில் வெளிநாடு செல்வது என்பது நம் ஊரிலிருந்து சென்னைக்குப் போய் திரும்புவது போலத்தான். ஆனால் அதிக வசதிகள் இல்லாத நிலையில் யோகி சுத்தானந்த பாரதி பல ஊர்களுக்கும் சென்று வந்ததென்பது சிறப்பான செய்தி. இவர் சென்ற நாடுகளிலெல்லாம் இவரது தோற்றமும், பேச்சும் இவர் மீது மக்கள் மதிப்பும் பக்தியும் கொள்ள வைத்தது. இந்து சமயத்தைப் பற்றி பேசும் இவர் மற்ற சமயங்களையும் போற்றிப் பேசியதை மக்கள் வரவேற்றனர்.இவர் வெளிநாட்டுப் பயணங்கள் இவர் மட்டும் கண்டும் வசித்தும் வந்த நிகழ்ச்சியாகி விடாமல் அவற்றை “நான் கண்ட ரஷ்யா”, “நான் கண்ட ஜப்பான்” என்றெல்லாம் நூல்களை எழுதி மக்களும் படிக்க வசதி செய்து கொடுத்தார். இவர் சென்று வந்த நாடுகள் ரஷ்யா, இலங்கை, மலாயா (மலேசியா), தாய்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், லண்டன் (இங்கிலாந்து), ஜெர்மனி, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இத்தாலி ஆகியவைகளாகும்.ரஷ்ய அனுபவம் மாஸ்கோவிலிருந்து சுமார் 100 மைல் தூரத்திலிருந்த டால்ஸ்டாய் பண்ணையும், அவரது மாளிகையும் இவர் சென்று பார்த்த இடங்களில் முதலாவதாகும். அங்கு டால்ஸ்டாயின் வீட்டில் ஒரு நினைவகம் இருக்கிறது. அங்கு டால்ஸ்டாய் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கண்டு களித்தார். பின்னர் அங்கு அமர்ந்து தியானம் செய்தார். அங்கு போய் டால்ஸ்டாயின் நினைவிடத்தில் அமர்ந்து கொண்டு நமது ஊரில் வடலூரிலுள்ள வள்ளலாரின் நினைவிடத்தையும் அப்படி மாற்ற வேண்டுமென்று எண்ணமிடுகிறார். அங்கிருந்து லெனின்கிராட் செல்கிறார். அங்கு இவர் ஒரு பள்ளிக்கூடத்துக்குச் செல்கிறார். அங்கு ஒரு மாணவனிடம் போய் இவர் “நீ கடவுளை நம்புகிறாயா?” என்றார். அந்த மாணவன் சொன்னானாம், “ஆம் நான் நம்புகிறேன், ஆனால் இந்த விஷயம் என் ஆசிரியருக்குத் தெரியக்கூடாது” என்றானாம். இதை அவரே எழுதுகிறார். இவரது ரஷ்யப் பயணத்தின் போது இவர் எழுதிய இரு ஆங்கிலக் கவிதைகள் படிக்க சுவாரசியமாக இருக்கும். “Gandhiji’s spirit is speaking here With Tolstoy soul to soul What they are speaking I can hear With my heart so closely near When shall we see a world of peace Where wicked, wasteful wars shall cease Where Nations are one human fold And all countries form a unique world Where lovers unite like gem and gold Where truth is bright and love is bold Where bread comes out of workers sweat Where joy smiles out of every heart Where the toiler to his field goes Kissing the lips of blooming rose Where existence is Master’s treat And peace keeps on in cold and heat Where all have work, dress and food Where government goes on as it should be To the rhythm of the people’s voice Such is the New World of our Choice.” மற்றொரு அருமையான கவிதை. “Work and food and cloth for all Equal status for all Health and Home and School for all A happy world for all No idle rich, no more beggars All are equal workers”. வார்சா நகருக்குப் போனபோது அவர் மனதில் தோன்றிய ஓர் அருமையான ஆங்கிலக் கவிதை:- “Warsaw saw War We saw ruins Let the war be ruined What a pitiful havoc Ukraine comes Wheat Wheat everywhere Eat Eat Ukraine bread It looks like Marvari turban” இலங்கை அனுபவம் இவர் இலங்கை சென்ற சமயம் அங்கு அமைதி நிலவியிருந்தது. மன்னார் சென்றடைந்த இவர் அங்கிருந்து கதிர்காமம் வரை சென்ற போது இவருக்கு அதி விமரிசையான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஒவ்வோர் ஊரிலும் ஆடலும், பாடலும், நாட்டியம், ஊர்வலம் என்று தடபுடலாக வரவேற்பு இருந்தது. சைவம் தழைத்தோங்கிய பகுதி அது. அங்கு அனைத்து மதத்தினரும் அன்பு, பக்தி, நேர்மை இவற்றோடு ஒற்றுமையாக வாழ்வதை இவர் கண்டதாக எழுதுகிறார். ஆறுமுக நாவலரின் சைவம், சுவாமி விபுலானந்தரின் சங்கத் தமிழ், பொலநருவாவில் புத்தர் காட்சியும், திரிகோணமலையின் கடற்கரையும், ச்கிரியா மலையின் மேல் சித்திரக் காட்சிகளும், சிங்கக் குகையும், அனுராதபுரத்தில் அசோகனின் மகள் சங்கமித்திரையால் நடப்பட்ட அரச மரம், புத்த நாகரிகச் சின்னங்கள் இவைகளைக் கண்டு இவர் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார்.கண்டியில் புத்தருடைய பல் இருப்பதை தரிசனம் செய்திருக்கிறார். அங்கு இவர் “சமயோக தர்மம்” எனும் தலைப்பில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார். இவர் நாவலப்பிட்டி, வதுளை, குவீன்ஸ்மேரி, கல்யோயா ஆகிய ஊர்களுக்குச் சென்றபோது கடுமையான மழை பெயதபோதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவர் பேச்சைக் கேட்டனர். வவுனியாவில் சுத்தானந்தர் இளைஞர் மன்றம் எனும் ஓர் அமைப்புச் செயல்பட்டு வந்தது. அங்கு ஏராளமான தமிழ் அன்பர்கள் இவருக்கு மறக்கமுடியாத வரவேற்பு கொடுத்தனர்.மலாயா பயணம் மலாயா செல்வதற்காக இவர் முதலில் சிங்கப்பூர் சென்று அங்கு நகரசபை மண்டபத்தில் மாபெரும் கூட்டத்தில் உரையாற்றினார். தலைப்பு “சர்வமத சமரசம்” என்பது. அங்கிருந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது, எனவே இவர் ஆங்கிலத்தில் பேசினார். அங்குள்ள பத்திரிகைகள் இவரது பேச்சை விவரமாக வெளியிட்டிருந்தன. தமிழ் முரசு, மலாயா மெயில், தமிழ்நேசன், டைம்ஸ் ஆகிய பத்திரிகைகள் தினமும் இவரது பேச்சை வெளியிட்டன. கோலாலம்பூர் முதலான இடங்களிலும் இவரது பேச்சைக் கேட்க மக்கள் திரளாக வந்திருந்தனர். தாய்லாந்து பயணம் இவர் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கிற்கு சென்றதும் அங்கு பரவியிருந்த இந்திய பண்பாடு கலை இவைகளைக் கண்டு ரசித்திருக்கிறார். புத்தர் கோயில், ராமாயண சிற்பங்கள் இவை இவருக்கு உள்ளக்கிளர்ச்சியை உண்டு பண்ணியதாக இவர் குறிப்பிடுகிறார். சயாம் சங்கத்தில் இவர் கம்ப ராமாயண சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார். இவர் பன்மொழிப் புலவர் அல்லவா? அங்கு இந்தியில் வேதம் குறித்த சொற்பொழிவொன்றையும் நிகழ்த்தியிருக்கிறார். தற்போதைய வியட்நாமிலுள்ள சைகோனுக்கும் சென்றார். இப்படி தென்கிழக்கு ஆசியா முழுவதும் இவர் பயணம் செய்தார். ஜப்பான் பயணம் ஜப்பானின் பயணம் இவருக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததாம். அவர் சொல்கிறார், “ஆசியாவின் ஆற்றல் பெற்ற வீரத் திருநாடு ஜப்பான்” என்று. அங்கு போனதும் அது இவரது தாய்வீடு போல உணர்ந்தாராம். யோகஹாமா துறைமுகம் பார்த்துவிட்டு அங்கு நடந்த உலக பெளத்த மகாநாட்டில் ஜென் புத்தம் எனும் தலைப்பில் ஒரு மணிநேரம் பேசினாராம். டோக்கியோ பல்கலைக்கழகத்தையும் இவர் கண்டு களித்திருக்கிறார். ஃபிரான்ஸ் பயணம் ஃபிரான்சின் வண்ணமிகு தலைநகர் பாரிசுக்கு இவர் சென்றார். அங்கு ஜோன் ஆஃப் ஆர்க் கையில் வைத்திருந்த வாளைக் கண்டு அதைக் கண்களில் ஒத்திக் கொண்டாராம். ஈஃபிள் டவர் இவரைக் கவர்ந்த இடம். இவருக்கு ஃபிரெஞ்சு மொழி நன்றாகத் தெரியும். கவிதைபாடும் ஆற்றலும் உண்டு. ஆகவே அங்கு இவர் பல ஃபிரெஞ்சு புலவர்களைக் கண்டு உரையாடியிருக்கிறார். லண்டன் பயணம் லண்டன் சென்று அங்கிருந்து ஷேக்ஸ்பியர் கிராமமான ஸ்டாட்ஃபோர்டு சென்று அங்கு ஷேக்ஸ்பியர் விழாவில் கலந்து கொண்டார். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று வந்தார். ஜெர்மனி பயணம் பெர்லினில் உலக சமாதான மகாநாடு நடைபெற்றது. அதில் பங்குகொண்டு இவர் பேசினார். இவர் பேச்சுக்கு ஜெர்மானியர்கள் அடிக்கடி எழுந்து வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பரித்தனராம். இந்த நாடுகள் தவிர இவர் அமெரிக்கா, இத்தாலி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். உலக நாடுகள் முழுவதையும் சுற்றி பார்த்த பின் பூரண ஞானத்துடன் இவர் தனது வாசத்தைச் சென்னையில் நிலைநிறுத்தினார். அங்கு ஒரு யோக சமாஜம் எனும் இடத்தை அமைத்துக் கொண்டு அங்கு சந்நியாச வாழ்க்கையைத் தொடர்ந்தார். இவர் தனது தென்னாப்பிரிக்கப் பயணத்தின் போது டர்பன், ஜோஹன்ஸ்பர்க், கேப்டவுன், கிம்பர்லி, ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள தமிழர்களிடையே பேசினார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவர் பேச்சைக் கேட்டனர். ராஜராஜன் விருது இவர் சென்னையில் தனது “யோக சமாஜத்தில்’ இருந்த காலத்தில்தான் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் இவருக்கு முதன்முதலாக அறிவிக்கப்பட்ட “ராஜராஜன் விருதை”க் கொடுத்து கெளரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் அறிஞர் இவர்தான். தமிழ்ப் பல்கலைக் கழகம் தோன்றி அறிவித்த முதல் விருது இது. இதனைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றவர் யோகி சுத்தானந்த பாரதியார். இவர் பாடல்களிலும், எழுத்திலும் மணிப்பிரவாள நடையே அதிகமிருக்கும். தனித்தமிழ் இயக்கத்தார் சிலர் இவரது இந்த மணிப்பிரவாள நடையை ஏற்றுக் கொள்ளவில்லை, குறை சொன்னவர்களும் உண்டு. அவர் அதிகம் உறங்குவது கிடையாது. அது பற்றி வ.வெ.சு.ஐயர் கூறுகிறார்; “அவர் பேனா நள்ளிரவில்கூட ஓடிக்கொண்டிருக்கும்” என்பார். அதிக நேரம் தியானத்தில் இருப்பார். உணவு வகைவகையாக சாப்பிடமாட்டார். அரிசியோடு காய்கறிகளையும் ஒன்றாகப் போட்டு வேகவைத்து சாப்பிட்டுவிடுவார். வயதான காலத்திலும் கிணற்றில் நீர் இறைத்து குளித்து தன் உடைகளைத் தானே துவைத்து உணர்த்திப் போட்டுக் கொள்வார். சென்னை அடையாறு யோக சமாஜத்தில் இருந்து கொண்டிருந்த சுவாமிஜிக்கு திடீரென்று தான் பிறந்த சிவகங்கையின் நினைவு வந்தது. அங்கு தொடங்கிய அவரது வாழ்வு உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தபின் சென்னை அடையாற்றில் பல காலம் யோக சாதனையில் ஈடுபட்டுப் பிறகு தன் வாழ்வின் அந்தி நேரம் நெருங்குகிறது என்பதை உணர்ந்தோ என்னவோ தன் சொந்த ஊருக்கு வர எண்ணினார். 1973இல் சிவகங்கை ராஜா உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ஆர்.வெங்கடகிருஷ்ண ஐயருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் சிவகங்கை நகரையொட்டிய புறநகர் பகுதியில் ஓர் பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும், அதற்கு ஆகவேண்டிய காரியங்களைத் தொடங்குங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஒரு பள்ளிக்கூடம் தொடங்க வேண்டுமானால் அதற்கான பூர்வாங்க வேலைகள் எவ்வளவு சிரமம் என்பது அதில் ஈடுபட்டவர்களுக்குத்தான் தெரியும். எத்தனை நடைமுறைகள், எத்தனைத் தடைகள், அலைச்சல், செலவு, இதையெல்லாம் எண்ணி தலைமை ஆசிரியர் சற்று திகைத்தார். இருந்தாலும் இப்படியொரு பள்ளி தொடங்குவது என்பது வரவேற்கத்தக்கதுதான் என்று முடிவு செய்து அதற்காக ஒரு கமிட்டி ஏற்படுத்தி வேலைகளில் இறங்கினார். பள்ளிக்கூடம் தொடங்குவது என்றால் அதனை ஏதாவது ஒரு அமைப்பின் சார்பில்தான் தொடங்க வேண்டுமென்று சுவாமிஜி விரும்பியதால் “யோக சமாஜம்” எனும் பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. உடனே சிவகங்கையைச் சுற்றி பள்ளிக்கூடத்துக்கு ஏற்ற இடம் கிடைக்கிறதா என்று தேடத் தொடங்கினார்கள். அப்படியொரு பெரிய இடம் சோழபுரம் எனும் கிராமத்தில் இருந்தது. அதன் உரிமையாளர்களான இரு செல்வந்தர்கள் தங்கள் இடத்தைத் தானமாகக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த இரு தனவந்தர்கள் மனமுவந்து இந்த நற்பணிக்காகத் தங்கள் 27.37 ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்தனர். வாழ்க அவர்களது தர்ம சிந்தை. ஒருவருடைய இடம் 22 ஏக்கர் மற்றொருவருடையது 7.37 ஏக்கர். இரண்டும் ஒரே இடத்தில் அமைந்திருந்தது. 1977 ஜனவரியில் Gift Deed பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை கம்பன் விழாவுக்கு வந்த யோகி சுத்தானந்த பாரதியார் யோக சமாஜத்துக்கு “சுத்தானந்தா யோக சமாஜம்” எனப் பெயரிட்டு பதிவு செய்யச் சொன்னார். 1978இல் பள்ளிக்கூடம் தொடங்க அனுமதி கேட்டு மனுச்செய்தனர். கே.என்.ராமநாதன் செட்டியார் என்பவர் தனது மாளிகையொன்றை தற்காலிகமாக பள்ளிக்கூடம் நடத்த கொடுத்தார். பல அரசு அதிகாரிகளும் இப்படியொரு பள்ளிக்கூடம் தொடங்க, அதுவும் சுவாமி சுத்தானந்தர் தொடங்குவதனால் அனைத்து ஒத்துழைப்பையும் தந்தனர். ஆனால் ஒரே ஒருவர் Joint Director of School Education அனுமதி தர மறுத்துவிட்டார். எனவே கமிட்டி சென்னையிலிருந்த டைரக்டருக்கு மேல் முறையீடு செய்தனர். அப்போது டைரக்டராக இருந்தவர் கல்வியாளர் டாக்டர் கே.வெங்கடசுப்பிரமணியம். அவர் அவசரமாக மும்பை செல்லவிருந்ததால் வந்தவுடன் அனுமதி தந்துவிடுவதாகச் சொல்லி மனுவைத் தன் உதவியாளரிடம் கொடுத்துச் சென்றார். அந்த உதவியாளர் வேண்டுமென்றோ அல்லது தவறாகவோ அதனை அனுமதி மறுத்த அதிகாரிக்கு அனுப்பி வைத்துவிட்டார். மறுபடி தேர் புறப்பட்ட இடத்திலேயே சென்று நின்றது. அப்போது எதிர் கட்சி தலைவராக இருந்த உ.சுப்பிரமணியமும் அவர் தம்பி உ. பில்லப்பன் என்பவரும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் இது குறித்து பேசினார். பண்ருட்டி ராமச்சந்திரனிடமும் பேசினார். உடனே பண்ருட்டி டைரக்டருக்கு போன் செய்து அனுமதி தருவது குறித்து முடிவு என்ன ஆயிற்று என்று முதலமைச்சர் கேட்பதாகக் கேட்டதும், அவசர அவசரமாக கையெழுத்தாகியது. இப்படி மலையைக் கெல்லி ஒரு எலியைப் பிடிக்க வேண்டியிருந்தது, இப்படியொரு பள்ளிக்கூடம் தொடங்குவதற்காக. சிவகங்கை ராஜா உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த வெங்கடகிருஷ்ணன் தான் இந்த பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1-9-1979 அன்று பள்ளிக்கூடம் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் பத்தாவது ஆரம்பிப்பது என்று முடிவானது. அதுவரை 59 பேர் பள்ளியில் சேர்ந்திருந்தனர். பள்ளிக்கூடத்துக்கு தானமாக வந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. 1-6-1987இல் இந்த புதிய கட்டடத்துக்கு பள்ளிக்கூடம் மாற்றப்பட்டது. அந்தக் கட்டடம் Dr.K.வெங்கடசுப்பிரமணியம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. உதவி செய்த அத்தனை கல்வித்துறை அதிகாரிகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள். சென்னை அடையாறு யோக சமாஜத்தில் தங்கியிருந்த யோகியார் சிவகங்கை சோழபுரத்துக்கு வந்து நிரந்தரமாகத் தங்குவதென்று முடிவுக்கு வந்தார். 1982 டிசம்பரில் இவர் சிவகங்கை வந்து சேர்ந்தபோது மகிழ்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு அவருக்கு பல ஊர்களிலிருந்தும் சீடர்களும், ஆர்வலர்களும் வந்து சேர்ந்தார்கள். இவருடைய ONE GOD, ONE WORLD AND ONE COSMIC RACE எனும் சித்தாந்தம் தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. 1990இல் அவரே சோழபுரம் பள்ளிக்கூடத்தில் தன் வரலாற்றைப் பேசினார். அது:- “என்னை ஆட்கொண்டு ஆளாக்கிய மகான்கள் பலர். தேவி மீனாட்சி அருளால் அருட்கவியானேன். பூர்ணானந்தர், ஞானசித்தர், ரமணர், ஷீரடி சாயிநாதர், சேஷாத்ரி சித்தர், சித்தாரூடர், அப்துல்லா மெளல்வி, சாது சுந்தர் சிங், மெஹர்பாபா, அரவிந்த அன்னை, அனிபெசண்ட், வ.வெ.சு.ஐயர், கவிக்குயில் பாரதியார் போன்ற எத்தனையோ அருளறிவுச் செல்வருடன் பழகிய அனுபவங்கள் இங்கே செயல்வடிவம் பெற வேண்டும். பல மொழிகளைக் கற்றேன், பல சமயங்களையும் பழகிப் பயின்றேன். பாரத நாட்டைப் பலமுறைச் சுற்றினேன். உலகைப் பலமுறை வலம் வந்தேன். நாடு நாடாகச் சுற்றி, மலைக் குகைகளிலும், காடுகளிலும் அரவிந்தர் ஆசிரமத்திலும் முப்பதாண்டுகள் மோனத்தவமிருந்து எனது அனுபவங்களையெல்லாம் ஆயிரம் நூல்களில் எழுதிக் குவித்துள்ளேன். அவை அனைத்தும் மீண்டும் அச்சேறி வரவேண்டும். பிற்காலத்தில் இதை ஒரு அன்புப் பணியாக மேற்கொள்க” என்று உரையாற்றினார். சுவாமிஜி அந்த முதிர்ந்த வயதிலும் மறுபடி ரிஷிகேஷ், சிம்லா, ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார். 1990 பிப்ரவரியில் இவர் ஊர் திரும்பினார். அது முதல் அவரது உடல் நிலை கெடத்தொடங்கியது. ஜோதி விழா நடந்த சமயம் கூட அவரால் பேச முடியவில்லை. மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் சுவாமிஜி உணவு உட்கொள்ள மறுத்து விட்டார். வயது மூப்பும், தள்ளாமையும் யோகி சுத்தானந்தரை மிகவும் வாட்ட 7-3-1990இல் இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார். அன்று காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் யோகியார் அதுவரை எழுந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து அவர் அறைக்குச் சென்று பார்க்க அங்கு கவியோகி சுத்தானந்த பாரதியார் மீளாத அமரத்துவம் பெற்றுவிட்டதைக் கண்டார். 11-5-1897இல் பிறந்த அவர் தனது 93ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். யோகியாரின் பூதவுடல் அந்தப் பள்ளி வளாகத்திலேயே சமாதி வைக்கப்பட்டு அங்கு ஓர் கோயில் எழுப்பப் பட்டது. ஏற்கனவே ஒரு நகரத்தார் நண்பரிடம் பள்ளி வளாகத்தில் ஒரு ஆலயம் எழுப்பி அதிலொரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டும், அதற்காக ஒரு லிங்கம் கொண்டு வரப் பணித்திருந்தார். அந்த லிங்கம் இவர் காலமான சமயம் வந்து சேர்ந்தது. அது சுவாமிஜியின் சமாதி ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு பஜனை முதலிய வழிபாடுகள் நடந்து வருகின்றன. அவரது பூதவுடல் மறைந்தாலும் தமிழில் அவர் படைத்த படைப்புக்கள் அனைத்தும் என்றென்றும் வாழ்ந்திருக்கும். நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை இவரைப் பற்றி பாடிய பாடல் ஒன்றை நினைவுகூர்வோம். “தென்மொழியும் வடமொழியும் தெளியக் கற்றான் திசைமொழியாம் ஆங்கிலத்தில் திறமை மிக்கான் மென்மைமிகும் பிரெஞ்சு மொழியை விரும்பிக் கொண்டான் பன்மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்த பாரதி மெய்ஞ்ஞானப் பண்பில் மிக்கத் தன் மொழியே தலைசிறந்த மொழியா மென்று தமிழுக்கே பணிபுரியும் தவசியானான்!” வாழ்க கவியோகி சுத்தானந்த பாரதியார் புகழ்! 27 தியாகராஜ சுவாமிகள் வரலாறு [] தியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள்  கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பெற்றிருப்பவர் தியாகராஜ சுவாமிகள். கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது பாடல்களே இடம்பெறுகின்றன. முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற இதர வாக்யேயக்காரர்களின் பாடல்களும் இடம் பெற்றாலும், பிரதானமாகப் பாடப்படுபவை இவரது பாடல்களே. இது நீண்டகாலமாக இருந்து வரும் பழக்கமென்பதை மகாகவி பாரதியாரின் “சங்கீத விஷயம்” எனும் கட்டுரைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். தியாகராஜ சுவாமிகள் தெலுங்கிலும், மற்ற இருவரும் பெரும்பாலும் சமஸ்கிருதத்திலும் பாடியிருக்கிறார்கள். தியாகராஜரின் கீர்த்தனைகளை தெலுங்கு மொழி தெரிந்தவர்கள்தான் என்பதல்லாமல் அம்மொழி தெரியாதவர்களும் உணர்வுபூர்மாக கேட்டு ரசிக்கிறார்கள். உலகமுழுவதிலுமுள்ள சங்கீத ரசிகர்களுக்கு சங்கீதம் என்றால் அது தியாகராஜருடைய சங்கீதம்தான். அப்படி இவருடைய பாடல்களில், அதிலும் அந்த மொழி நமக்கெல்லாம் அன்னியமாயிருந்தபோதிலும், மனங்கவரும் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அவரது பாடல்களில் அடங்கியிருக்கும் பக்தி ரஸமும், பாடல்களின் பொருளும், அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கிற இராகங்களுமே காரணம் என்றால் அது மிகையல்ல. மாணிக்கவாசக சுவாமிகள் பக்தி ரசம் சொட்டச் சொட்ட சிவபெருமானை அழுது புரண்டு மனம் உருகப் பாடியதைப் போல, தியாகராஜ சுவாமிகளும் அவரது இஷ்ட தெய்வமான இராமனை, சீதாபிராட்டியை அவர்கள் வரலாற்றில் காணப்படும் பல நிகழ்ச்சிகளைச் சொல்லிச் சொல்லி பக்தி ரஸத்தோடு பாடியிருப்பதும் அந்தப் பாடல்கள் உயிரோட்டத்தோடு மிளிர்வதற்குக் காரணங்களாகும். அவருக்கு முன்பாகவும் பக்தி ரஸத்தோடு பலர் பாடியிருக்கிறார்கள். அவைகளெல்லாம் அந்தந்த காலங்களில் பாடல் ரஸத்திற்காகவும், பொருளமைதிக்காகவும், இறைவனது பெருமையையும், புகழையும் பாடியிருப்பதனால் அவை பிரபலமாகியிருந்தன. நமது முன்னோர்கள், மகான்கள் இவைபற்றி மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் விவாதித்திருக்கிறார்கள். இவைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கின்றபோது, ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சாகித்தியங்கள் என்றென்றும் இந்த புண்ணிய பூமியில் நிலைத்திருக்கும் என்பது திண்ணம். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய ஸாகித்தியங்களை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் அவரது வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய கீர்த்தனங்கள் எந்த சந்தர்ப்பத்தில் பாடப்பட்டவை, அவற்றைப் பாடுகையில் அவர் மனப்பாங்கு எங்ஙனம் இருந்தது என்பன பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவருக்கு ஏற்பட்ட சோதனைகள், மன வேதனைகள், குடும்பத்திலிருந்த சூழ்நிலை இவற்றைத் தெரிந்து கொண்டோமானால், அவரது கீர்த்தனங்களில் இழையோடும் அந்தந்த பாவங்கள், ரஸங்கள் நமக்குத் தெளிவாகும். ஸ்ரீ இராமபிரானைப் பற்றியும் சீதாதேவி பற்றியும் அவர் பாடியுள்ள பாடல்கள் அனைத்தையும் பார்க்கும்போது, அவர் ஏதோவொரு மானசீகமான உலகத்தில் அவர்களோடு நெருங்கிப் பழகி, அவர்களோடு உரையாடியது போலவும், அந்த உரையாடலைத் தொடர்ந்து ‘இராமா, நீ இப்படிச் செய்யலாமா? நீ ஏன் கருணை காட்ட மறுக்கிறாய், அன்று நீ அப்படிச் சொன்னாயே’ இப்படியெல்லாம் அவர் சொல்வது அவர் வாழ்ந்த உலகம் தனி, அந்த உலகத்தில் இராம சீதா, லக்ஷ்மண அனுமன் போன்றோர் மட்டுமே இருந்தனர் என்பதும் நமக்குத் தெரியவரும். ஸ்ரீ தியாகராஜர் எந்த உணர்வில் இருந்தார், லோகாயதமான விஷயங்களில் அவருக்கு அக்கறை இருந்ததா என்பது போன்ற கேள்விகள்கூட நமக்கு எழலாம். இல்லாவிட்டால் சரபோஜி மன்னன் அவரை அழைத்துப் பொன்னும் பொருளும் தர விரும்பியபோதும், அதற்குச் சம்மதிக்காமல், இவைகள் சுகம் தரக்கூடியவைகளா, அல்லது இராமா உனது சேவடி கைங்கர்யம் சுகம் தருமா என்றெல்லாம் பாடியிருப்பாரா? வேதங்கள் எப்படி எழுதப்படாமல் வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக் கிறதோ, அப்படியே, மகான்களின் பாடல்களும் வரிசைப்படுத்தியோ, ஸ்வரப்படுத்தியோ, எழுதிவைத்தோ பிற்கால தலைமுறையினருக்கு கொடுக்கப்படாமல், குருமார்களிடம் கற்றுக்கொண்ட சீடர்களின் மூலமே இன்றுவரை வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தானோ என்னவோ, ஒருசிலர் அவர் பாடிய தெலுங்கு மொழிச் சொற்களைச் சில இடங்களில் தவறாகக்கூட உச்சரிக்கிறார்கள். இதற்கு முன்பு ஸ்ரீ தியாகராஜருடைய வாழ்க்கை வரலாற்றைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். திருவையாறு க்ஷேத்திரத்தைப் பற்றிக் கூற வரும்போது, ஸ்ரீ தியாகராஜருடைய வாழ்க்கையையும் சாதனைகளையும், அவருடைய பெருமையையும் சொல்லாவிட்டால் முழுமையடையாது. பிழைகள் இருக்குமானால் பொருத்தருள வேண்டும். நாதத்தின் பெருமை. நாதம் அல்லது ஒலி என்றால் என்ன பொருள்? இதற்கு மகான்கள் நல்ல விளக்கங்களைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். “நா” என்று சொன்னால் பிராணன் அல்லது உயிர், “த” என்றால் அக்னியென்றும் கூறியிருக்கிறார்கள். இவையிரண்டும் சேரும்போது ஏற்படும் ஒலியே “நாதம்” எனப்படும். இந்த நாதமே “ஓம்” எனும் ஓங்கார மந்திரமானதென்று கூறுகிறார்கள். சிவபெருமானின் முகங்களிலிருந்து தோன்றியவையே சப்தஸ்வரங்கள் எனப்படும். எனவே குருமுகமாய் கேட்டு, அறிந்து பழகும் ஸங்கீத ஞானம் இல்லாமல் மோக்ஷம் கிடைக்குமா? ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் “மோக்ஷமு கலதா” எனும் ஸாரமதி இராகக் கீர்த்தனையில் இப்படிச் சொல்லுகிறார். “உன்னுடைய சிறந்த பக்தியோடு கூடிய ஸங்கீத ஞானம் இல்லாதவர்களுக்கு மோக்ஷம் கிடைக்குமா? அந்தப் பாடலின் முழு அர்த்தத்தையும் இப்போது பார்க்கலாம். “இந்தப் பூவுலகில் ஜீவன் முக்தருக்கன்றி மற்றவர்களுக்கு மோட்ச கதி கிடைக்குமா? எப்பொழுதும் பிரத்தியட்சமான உருவத்தை உடையவனே! ராமா! உன்னிடம் பக்தியும் ஸங்கீத ஞானமும் இல்லாதவர்களுக்கு மோட்சம் கிடைக்குமா? பிராணவாயு, நெருப்பு ஆகியவற்றின் சேர்க்கையினால் பிரணவநாதம் சப்தஸ்வரங்களாகப் பெருக, வீணை வாசிப்பதன் மூலம் நாதோபாசனை செய்யும் சிவபெருமானின் மனப்போக்கை அறியாதவர்க்கு மோட்சம் உண்டா?” என்கிறார். ஆகவே இசை மார்க்கமே மோட்சத்துக்கு வழி என்பது அவரது முடிவு வரலாறு இந்த வரலாறு முழுவதும் பெரும்பாலும் ஸ்ரீ தியாகராஜரின் சீடர்களில் ஒருவரான வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் அவர்களின் பேரனும், கிருஷ்ணசாமி பாகவதரின் மகனுமான ஸ்ரீ இராமசாமி பாகவதர் 1935இல் ஸ்ரீ தியாகராஜர் வாழ்க்கை வரலாற்று நூலான “ஸ்ரீ தியாக ப்ரஹ்மோபநிஷத்” முதல் நூலிலிருந்து கொடுக்கப்படுகிறது. பிற்காலத்தில் ஸ்ரீ தியாகராஜர் பற்றி எழுதியுள்ளவற்றுக்கும் இதற்கும் சற்று மாறுபாடுகள் இருக்கலாம். எனினும் இது தியாகராஜ சுவாமிகளின் சீடரின் பரம்பரையினர் எழுதியதால் இதுவே சரியானது என்று ஏற்றுக்கொள்ளலாம். நீர்வளம், நிலவளம் முதலான அனைத்துச் செல்வங்களும் நிரம்பப்பெற்று, சீர்மிகு சோழமன்னர்களால் நீதி தவறாமல் ஆட்சி புரிந்துவரும் சோழநாட்டில் திருவாரூர் எனும் தலம்; ஸ்ரீ தியாகராஜப் பெருமானும், கமலாம்பிகை அம்பாளும் குடியிருக்கும் திவ்ய க்ஷேத்திரம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தரிசித்து “திருத்தொண்டத்தொகை” பாடி சிவனடியார்களின் பெருமையை உலகறியச் செய்த புண்ணிய பூமி. இந்த புண்ணிய பூமியில் தற்போதைய ஆந்திரப் பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஸ்ரீ ராமபிரம்மம் என்பவர் வாழ்ந்து வந்தார். தியாகராஜரின் கொள்ளுப் பாட்டனார் பஞ்சநதப் பிரம்மம் என்பவர். இவருடைய பெயரிலிருந்து இவர் திருவையாற்றில் வாழ்ந்தவர் என்பதை அறியமுடிகிறது. தியாகராஜரின் தாய்வழி பாட்டனார் வீணை காளஹஸ்தய்யா என்பவர் திருவாரூரில் வாழ்ந்தார். ராமபிரம்மத்தின் மனைவிக்கு சீதம்மா என்பது திருநாமம். ஸ்ரீ தியாகராஜர் தனது “சீதம்ம மாயம்ம ஸ்ரீராமுடு நாதன்றி” எனும்பாடலில் ஸ்ரீ இராமபிரானை மட்டுமல்ல, தனது தாய்தந்தையரையும் வணங்கிப் போற்றுகிறார். இவர்கள் அறவழியில் பூஜை, தியானம் என்று வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு ஸந்தான பாக்கியம் கிடைக்கப்பெற்று மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள். அவர்களுக்கு ஜல்பேசன் என்கிற பஞ்சநதம், ராமநாதன், தியாகராஜன் எனப் பெயரிட்டு வளர்த்துவந்தார்கள். ராமநாதன் இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். இவர்களில் மூன்றாவது, இளைய மகவாகப் பிறந்தவர்தான் நாம் இப்போது பார்க்கப் போகும் தியாகராஜன் எனப்படும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். இவர் கலியுகாதி வருஷம் 4868, சாலிவாகன 1689க்குச் சரியான ஸர்வஜித் வருஷம், சித்திரை மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை, வைசாக சுக்ல ஸப்தமி பூச நக்ஷத்திரம், கடக லக்கினம், சூரிய உதயாதி 15-1/2 நாழிகையில் கடக லக்னத்தில் (அதாவது 4–5–1767) பிறந்தார். சில ஆண்டுகள் கழிந்தபின்னர் ஸ்ரீ ராமபிரம்மம் திருவாரூரை விட்டு நீங்கி காவிரிக்கரையில் அமைந்துள்ள திருவையாறு க்ஷேத்திரத்திற்கு வந்து சேர்ந்தார். தந்தைவழி ஊர் என்பதால் அவர் திருவையாற்றில் வாழ்ந்து வரலானார். தஞ்சாவூர் அப்போதைய மராட்டிய மன்னர்களின் தலைநகர் என்பதால் பண்டிதர்களும் பல்வேறு கலைஞர்களும் தலைநகருக்கு அருகில் வாழ்வதையே விரும்பினர். தியாகராஜனுக்கு அவரது தந்தையார் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்பித்தார். தாயாரிடம் ஜெயதேவரது அஷ்டபதி, ராமதாஸர் கீர்த்தனைகள் மற்றும் பல பக்திப் பாடல்களைக் கற்றுக் கொண்டார். ஸ்ரீ தியாகராஜரின் எட்டாவது வயதில் அவருக்கு பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்டது. அப்படி பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்ட நேரத்தில் தந்தை குரு உபதேசமாகத் தன் மகனுக்கு “ஸ்ரீ ராம” நாம உபதேசமும் செய்வித்தார். அதுவரை ராமப்பிரம்மம் தான் பூஜை செய்துவந்து ஸ்ரீ ராம, லக்ஷ்மண, சீதா, அனுமன் விக்கிரகங்களை அவரிடம் கொடுத்து அவரே அதற்கு நித்ய பூஜைகளைச் செய்துவருமாறு பணித்தார். அதுமுதல் ஸ்ரீ தியாகராஜர் தினசரி கர்மானுஷ்டானங்களை கடமை தவறாமல் செய்துவந்ததோடு ஸ்ரீ ராமருடைய விக்கிரகங்களுக்கும் நித்ய பூஜைகளைச் செய்து வந்தார். இப்படிச் சில காலம் கழிந்த பின்னர் அப்போது திருவையாறு க்ஷேத்திரத்தில் வசித்து வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தா சுவாமிகள் என்பவர் ஸ்ரீ தியாகராஜருக்கு “ஸ்ரீ ராம ஷடாக்ஷரி” எனும் மந்திரோபதேசம் செய்வித்தார். சிறு பிள்ளையாயிருந்த காலந்தொட்டே ஸ்ரீ தியாகராஜருக்கு இராமபிரான் மீது அபாரமான பக்தி. அதிலும் தன் எட்டாவது வயதில் பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்ட நாளிலிருந்து ஸ்ரீ ராம விக்கிரகத்துக்கு பூஜைகள் செய்வித்து வந்ததாலும், பக்தி, அன்பு, பாசம், ஈடுபாடு ஏற்பட்டு, தானும் இராமனும் இணைபிரியாதவர்கள் என்ற உணர்வுபூர்வமான எண்ணத்தில் வாழ்ந்து வந்தார். ஸ்ரீ இராமனுக்கு அபிஷேகம், பூஜைகள், அர்ச்சனைகள் செய்யும் காலத்தில் உளப்பூர்வமாக, உணர்ச்சி பூர்வமாக மெய்மறந்து பூஜா கர்மாக்களில் தன் மனத்தை ஈடுபடுத்திச் செய்து வந்தார். அப்படி பூஜை செய்யும்போது, ஸங்கீத ஞானமுடையோர் நல்ல பாடல்களைப் பாடி வழிபடுவது முறை. அப்படியே ஸ்ரீ தியாகராஜரும் தான் பூஜை செய்யும்போது, ஸ்ரீ ராமபிரான்மீது புதிய புதிய கீர்த்தனைகளை இயற்றிப் பாடிவரலானார். அப்படி இவர் முதன்முதலில் செய்த கீர்த்தனையாக “நமோ நமோ ராகவாய” எனும் கீர்த்தனை சொல்லப்படுகிறது. இராமபிரானிடம் அபாரமான பக்தி கொண்டு அந்தப் பெயரைத் தொண்ணூற்றாறு கோடி முறை ஜெபித்து முடித்தவுடன் ஸ்ரீ ராமபிரான் காட்சி கொடுத்ததாகக் கூறுகிறார்கள். ஸ்ரீ ராமபிரான் மீது அபரிமிதமான பக்தி ஏற்பட்டு அவருடைய கவிதா ஊற்றுக்கண் திறந்து ஏராளமான பாடல்களைப் பாடத் தொடங்கினார். இப்படி ஸ்ரீ தியாகராஜர் தினப்படி கீர்த்தனைகளை இயற்றிப் பாடிவருவதை கவனித்து அதனை எழுதி, திருவையாற்றிலிருந்த பல பெரியவர்களிடம் ஸ்ரீ ராமபிரம்மம் காட்டி மகிழத் தொடங்கினார். அந்த கீர்த்தனைகளில் பொதிந்து கிடக்கும் பக்தி ரஸம், பாடல் யுக்தி, கவிதைச் சிறப்பு இவைகளைக் கண்டு மகிழ்ந்து அவர்கள் தியாகராஜரைப் புகழ்ந்து பாராட்டத் தொடங்கினார்கள். அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ராஜ்யத்தை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். கலைகளையும், கல்வியையும் போற்றி வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுடைய சபையில் சுமார் 360க்கும் மேற்பட்ட ஸங்கீத வித்வான்கள் இருந்தார்கள். அவர்கள் அத்துணை பேருக்கும் தலைவராக இருந்தவர் ஸ்ரீ ஸொண்டி வேங்கடரமணய்யா என்பவர். இவரது தகுதி கருதி இவருக்கு மன்னருக்கு இணையான ஆசனமிட்டு அதில் உட்கார வைக்கப்படுவார். தலைமை வித்வானாகிய இவர்தான் ஒவ்வோர் வருஷத்தின் முதல்நாள் மன்னன் சபையில் பாடி கெளரவிக்கும் வித்வான் எனத் தகுதி பெற்றவர். அத்தகைய சிறப்புப் பெற்ற தலைமை வித்வானிடம் நமது தியாகராஜர் முறைப்படி ஸங்கீத சிக்ஷை பெறலானார். ஸொண்டி வெங்கடரமணய்யா: ஸ்ரீ தியாகராஜரின் குருவான ஸொண்டி வெங்கடரமணய்யா பற்றி பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி அவர்கள் கூறும் விவரங்களைப் பார்ப்போம்:- தியாகராஜர் சிறுவனாக இருக்கும்போது காலையில் மலர் கொய்வதற்கு நந்தவனம் செல்வார். அது திருவையாற்றையடுத்த அந்தணக்குறிச்சி எனுமிடத்தில் இருக்கிறது. போகும் வழியில் ஸொண்டி வெங்கடரமணய்யாவின் வீடு. அங்கு சீடர்களுக்கு அவர் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பார். அந்த வீட்டு வாயிலில் நின்று தியாகராஜர் சங்கீதம் கேட்டுக்கொண்டிருப்பார். அப்படியொருநாள் இவர் நின்று கேட்பதை ராமப்பிரம்மம் கவனித்துவிட்டு, குருநாதரிடம் சென்று தன் மகனுக்கும் சங்கீத சிக்ஷை சொல்லிக்கொடுக்க வேண்டினார். அவரும் உவகையுடன் ஒப்புக்கொண்டாராம். சொல்லிக்கொடுக்க வேண்டியதனைத்தையும் சீடன் மகா மேதை என்பதை உணர்ந்து ஒரே ஆண்டில் சொல்லிக்கொடுத்து விட்டார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய தாய்வழித் தாத்தா வீணை காளஹஸ்தி அய்யர் என்பவர். அவர் பல ஸங்கீத நூல்களைத் தன்வசம் வைத்திருந்தார். அவைகளையெல்லாம் வாங்கி வந்து தியாகராஜர் படிக்கலானார். அந்த நூல்களில் ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிக்கொள்ள இவர் அப்போது திருவையாற்றிலிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணாந்தா ஸ்வாமிகளிடம் சென்று பாடம் கேட்கலானார். அப்படி பாடம் சொல்லிக்கொடுக்கும்போது ராமகிருஷ்ணானந்தர் தியாகராஜரிடம், நாரத மஹரிஷியை உபாசனை செய்துவந்து வழிபட்டால் ஸங்கீதக் கலை வசப்படுவதோடு, மனதில் தோன்றும் ஐயப்பாடுகள் அனைத்தும் நீங்கிப்போகும் என்று எடுத்துரைத்தார். அதற்கான “நாரத உபாஸனா” மந்திரத்தையும் அவருக்கு உபதேசித்தார். ஸ்ரீ தியாகராஜர் தன் குருநாதர் கூறிய மந்திரத்தைத் தலைமேற்கொண்டு உபாசனை செய்து வந்தார். இவரது மந்திரோபாசனையையும், பக்தியையும் பாராட்டி நாரத மஹரிஷியே இவர்முன் தோன்றி, ஸங்கீத ஸ்வர ரகஸ்யங்களடங்கிய “ஸ்வரார்ணவம்” எனும் அரிய நூலைக் கொடுத்து மறைந்தார். ஸ்ரீ நாரத பகவான் தரிசனமும், அவர் அளித்த நூலின் சிறப்பாலும், தியாகராஜர் நிரம்ப ஸங்கீத ஸ்ருதி ஆதாரங்களைக் கொண்ட பாடல்களை இயற்றிப் பாட ஆரம்பித்தார். இப்படி இவரது பெயரும் புகழும் நாடு முழுவதும் பரவப் பரவ பல்வேறு இடங்களிலிருந்தும் சீடர்கள் இவரை நாடிவந்து சேர்ந்து கொண்டார்கள். ஸ்ரீ தியாகராஜருடைய வாழ்க்கை இப்படி ஸங்கீதம், பூஜை, தியானம், சீடர்களுக்கு இசை ஞானத்தை உபதேசிப்பது என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு பார்வதி எனும் கன்னிகையைத் திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுடைய மணவாழ்க்கை என்பது வெறும் ஐந்தே ஆண்டுகள் நடந்தன. பிறகு பார்வதி அம்மாள் ஸ்ரீ ராமனின் பாதாரவிந்தங்களில் ஐக்கியமாகிவிட்டார். பார்வதி இறந்த சிலகாலம் கழித்து அன்னாருடைய தங்கையான கமலாம்பாள் (கனகம்மாள் என்று திரு வி.ராகவன் குறிப்பிடுகிறார்) என்னும் கன்னிகையை இவருக்குத் திருமணம் செய்வித்தார்கள். அதன்பின்னர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சிலகாலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். தினமும் ஸங்கீதம் பாடுவது, ஸாஹித்யங்கள் இயற்றுவது, வேதங்களைப் பாராயணம் செய்வது, புராணங்களைக் கற்பது, பின் அவற்றைப் பிறருக்கு ஓதுவது, ஜோதிஷ சாத்திரத்தைக் கற்பது, அதில் ஆராய்ச்சி செய்வது, கணித சாத்திரத்தைக் கற்பது, இப்படிப் பற்பல கலைகளிலும் விற்பன்னராக விளங்கி வந்தார். இவர் பாடுவதோடு, வீணை வாசிப்பதிலும், கின்னரீ எனும் தந்தி வாத்தியத்தை வாசிப்பதிலும் நிகரற்று விளங்கினார். இவருடைய இசை ஞானத்தைப் பற்றி கேள்விப் பட்டவர்கள் இவரை பூலோக நாரதர் என்றே பெருமைப் படுத்திப் பேசினர். நாட்டில் மக்கள் இறையருளை மறந்து, பாவங்களைச் செய்து பாழ்நரகக் குழிக்கே செல்லும் பான்மை நீங்க மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய நல்ல பல பக்தி கீர்த்தனைகளை இவர் இயற்றி மக்களுக்குப் பயன்பட வைத்துக் கொண்டிருந்தார். சங்கீதம் மட்டுமல்லாமல், கணிதம், ஜோதிஷம் ஆகிய சாஸ்திரங்களையும் இவர் தனது சீடர்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். அந்தக் காலத்தில் குருமார்கள் தங்கள் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கென்று தட்சிணை எதுவும் வாங்கும் வழக்கம் கிடையாது. சீடர்களைத் தங்களோடு வைத்துக்கொண்டு, உணவளித்துப் பாடங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள். விசேஷமான உத்சவ தினங்களில் குறிப்பாக ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் இவர் பக்க வாத்தியங்களோடு ஊரில் உஞ்சவிருத்திசெய்து அதில் ஈட்டும் பொருள் கொண்டு திருவிழாக்களைக் கொண்டாடி வந்தார். திருமஞ்சன வீதியில் தியாகராஜரின் வீடு அமைந்திருந்தது. தினசரி உஞ்சவிருத்தி சென்று வீதிகளின் வழியாக நடந்து வந்து வீட்டை அடைவார். அங்கு அவருடைய பூஜை அறையில் ஸ்ரீ சீதாராமர், லக்ஷ்மணர், அனுமன் ஆகியோர் உள்ள விக்ரகத்தின் முன் உட்கார்ந்து தியானிப்பார். கையில் தம்பூரா, மெய்மறந்த நிலையில் அவர் பாடும் பாடல்கள், காவிரியின் பிரவாகம் போல பெருக்கெடுத்து ஓடிவருகின்றது. இசை இன்பம் ஊரை நனைக்கிறது. இவர் சீடர்களிடம் பணம் வாங்குவது கிடையாது என்பதையும் முன்பே குறிப்பிட்டோம். இவரது ஸாஹித்யங்களில் ஸ்ருங்கார ரஸம்கொண்ட பாடல்கள் கிடையாது. இவர் நெளகா சரித்திரம் எனும் இசை நாடக வடிவத்தைப் படைத்திருக்கிறார். இதில் ஸ்ருங்கார ரஸ வருணனைகளுக்கு இடமிருந்தும் அவர் அப்படிப் பாடவில்லை. இவரது நோக்கமே மக்களுக்கு பக்தி ரஸத்தை அள்ளி வழங்க வேண்டுமென்பதுதான் என்பது தெரிகிறது. இவர் சிறு வயதுமுதலே ஸ்ரீராம நாம ஜபத்தைச் செய்துகொண்டு வந்தார். தினம் தினம் இவர் ஜபிக்கும் ராமநாம ஜபம் பல கோடிகளைக் கடந்ததாக இருந்தது. இவர் எந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருந்தாலும், இவரது நா ஸ்ரீராமநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருக்கும். இவர் தாய்மொழி தெலுங்கு என்றாலும், தெலுங்கு நாட்டிலிருந்து தமிழ்நாட்டின் இருதய ஸ்தானத்திற்கு குடிபுகுந்தவர் என்றபோதிலும், இவர் பெரும்பாலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சீடர்களைத் தன்னுடன் ஏற்றுக்கொண்டு இசை ஞானத்தை அவர்களுக்கு உபதேசித்து வந்தார். இவர் ஸ்ரீ ராமனை வழிபட்டாலும், இதர தெய்வங்களின்மீது பற்றும் பக்தியும் குறைந்தவரில்லை. தாய் மொழி தெலுங்கு என்றாலும், பிற மொழிகளின் மீது துவேஷம் இல்லை. தன் பாடல்களை மட்டுமின்றி பூஜையின் போது மற்ற பல பெரியோர்களின் கீர்த்தனைகளையும் இவர் பாடி வந்திருக்கிறார். அப்படி இவர் பாடிய பெரியோர்கள் ஸ்ரீ புரந்தரதாஸர், ஸ்ரீ ராமதாஸ், ஸ்ரீ வேங்கடவிட்டலஸ்வாமிகள், ஸ்ரீதாளபாக்கம் சின்னையா, ஆகிய பெரியோர்களின் பாடல்களும் இவரால் பாடப்பட்டன. இவரை குருவாக ஏற்றுக்கொண்டு சீடர்கள் எனும் பெருமையைப் பெற்றவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் முறையே, வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர், தில்லைஸ்தானம் ராமய்யங்கார், திருவொற்றியூர் வீணை குப்பையர், ஐயா பாகவதர், மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர், தஞ்சாவூர் ராமராவ், லால்குடி ராமய்யர், நெய்க்காரப்பட்டி சுப்பையர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர், ஸொஜிரி சீதாரமையர், நங்கவரம் நீலகண்டய்யர், கணேசய்யர் காரு, செவுனா வெங்கடாசலபதி பாகவதர் ஆகியோராவர். ஸங்கீதத்தை கிரமப் படுத்தி அதனை முறையாகப் பயிலுவதற்கு ஏற்ப அதற்கு ஸரளிவரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், கீதம், வர்ணம், ஸ்வரஜதி, கீர்த்தனம் என்று வகைப்படுத்திக் கொடுத்தவர் ஸ்ரீ புரந்தரதாஸர். அப்படி அவர் ஏற்படுத்திக் கொடுத்த இலக்கணப் பாதையில் பற்பல ராகங்களில் அபூர்வமான சாஹித்தியங்களைச் செய்தருளியவர் தியாகராஜர். மகாகவி பாரதியார் குறிப்பிட்டிருப்பதைப் போல, சாஹித்தியத்தின் ரஸம் அந்தந்த ராகத்தில் வெளிப்படவேண்டும். அப்படி வெளிப்படும்படியான பாடல்களைப் பாடியவர் ஸ்ரீ தியாகராஜர். தற்காலத்தில் சிலர் தங்கள் மனதுக்கேற்றவாறு இவற்றை மாற்றியும், அழகு செய்தும் பாடமுயற்சிக்கிறார்கள், அங்ஙனம் செய்தல் கூடாது என்று பல பெரியோர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். ஸ்ரீ தியாகராஜரை சந்தித்த ஆன்றோர்கள்: சியாமா சாஸ்திரிகள்:- சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் (1762-1827) தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் பூஜை உரிமை பெற்ற பரம்பரையைச் சேர்ந்தவர். தெலுங்கு, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் அம்பிகையைப் பாடியவர். தியாகராஜரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்த சியாமா சாஸ்திரிகள் அடிக்கடி திருவையாறு வந்து தியாகராஜரைக் கண்டு அளவளாவுவது வழக்கம். அத்தகைய சந்திப்புக்களில் தம்முடைய பாடல்களைத் தியாகராஜரிடம் பாடிக்காட்டுவாராம். கோபாலகிருஷ்ண பாரதியார்:- இவர் மாயூரத்தில் வசித்து வந்தார். திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை காலத்தில் வாழ்ந்தவர். அவரோடு நல்ல பழக்கம் உள்ளவர். நந்தனார் சரித்திரம் எனும் இசை நாடக வடிவத்தையும், வேறு பல தமிழ் சாகித்யங்களையும் இயற்றி பெரும் புகழ் பெற்றவர். இவர் காலம் 1811 முதல் 1881 வரையிலானது. தமிழ்த்தாத்தா என்று பிற்காலத்தில் புகழ்பெற்று பழைய சங்க இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து பதிப்பித்து தமிழ் வாழ பாடுபட்ட உ.வே.சாமிநாதய்யர் ஸ்ரீமான் பிள்ளையவர்களிடம் கல்வி பயின்று வந்த காலத்தில் மாயூரத்தில் சில காலம் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசை பயின்று வந்திருக்கிறார். பிறகு பிள்ளையவர்கள் உ.வே.சாவிடம் நீ தமிழ் படிக்க வேண்டுமா, அல்லது சங்கீதம் பயில வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள் என்று சொன்னபின், கோபாலகிருஷ்ணபாரதியாரிடம் இசை பயில்வதை நிறுத்திக் கொண்டு, பிள்ளையவர்களிடம் தமிழை மட்டும் படிக்கலானார் என்று அவரது ‘சுயசரிதை’ கூறுகிறது. கோபாலகிருஷ்ணபாரதியார் சற்குரு ஸ்ரீ தியாகராஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு திருவையாறு வந்தார். ஸ்ரீ தியாகராஜர் தன் வீட்டில் சீடர்களுக்கு ஆபோகி ராகக் கீர்த்தனையைப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்து கோபாலகிருஷ்ண பாரதியார் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். குருநாதர் பாடம் சொல்லிவிட்டு காவிரிக்குச் சென்று ஸ்நானம் செய்து வருவதற்காக வாயிற்புறம் வந்தபோது திண்ணையில் உட்கார்ந்திருக்கும் கோபாலகிருஷ்ண பாரதியாரை யார் என்று விசாரித்தார். தான் மாயூரத்திலிருந்து வருவதாக பதில் சொன்னார். அப்படியானால் அங்கு தமிழில் சிறப்பான பாடல்களை இயற்றிப் பாடுகிறாரே கோபாலகிருஷ்ண பாரதியார் அவரை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். அடியேன்தான் அந்த கோபாலகிருஷ்ண பாரதி என்றார் இவர். தியாகராஜருக்கு மிக்க மகிழ்ச்சி. வந்திருக்கும் விருந்தினரை வரவேற்று உபசரித்தார். நீங்கள் ஆபோகியில் ஏதாவது பாடல் இயற்றிப் பாடியிருக்கிறீர்களா என்றார். இதுவரை இல்லை என்று இவர் பதிலிறுத்தார். சரி இருங்கள் நான் போய் காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சென்றவர் வீடு திரும்பியதும், பாரதி சொன்னார் நான் இப்போது ஆபோகியில் ஒரு பாடல் இயற்றியிருக்கிறேன் என்று. அப்படியா சரி பாடுங்கள் என்றார் தியாகராஜர். கோபாலகிருஷ்ண பாரதியார் பாடினார். “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா – தில்லை சபாபதிக்கு” என்று தொடங்கும் பாடல் அது. தான் காவிரிக்கு ஸ்நானம் செய்து திரும்புமுன் இப்படியொரு கீர்த்தனையை இவர் இயற்றியது கண்டு சுவாமிகளுக்கு பேரானந்தம். அவரை மனதாரப் பாராட்டினார். (இந்த வரலாற்றை டாக்டர் ராமநாதன் அவர்கள் “தியாகையருடன் ஒரு நாள்” என்ற தலைப்பில் இசைப் பேருரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டது) இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியுள்ள சான்றோர்கள் சிலர், நிகழ்ச்சி பற்றிய சந்தர்ப்பங்களை வேறு விதமாகவும் எழுதியிருந்தாலும், நிகழ்ச்சியின் கருப்பொருள் இதுதான் என்பதால் நடந்தது இதுதான் என்பதை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாம். இவர்களைத் தவிர வேறு பல பெரியோர்களும் ஸ்ரீ தியாகராஜரை வந்து தரிசித்து உரையாடி மகிழ்ந்திருக்கின்றனர். சுவாதித் திருநாள் மகாராஜா ஸ்ரீ தியாகராஜரின் பாடல்களை கன்னையா பாகவதர் பாடக் கேட்டிருக்கிறார். ஆகவே அவரை நேரில் காண விரும்பினார். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த தஞ்சை மூவர் எனப்படுபவர்களில் ஒருவரான வடிவேலு என்பவர் மகாராஜாவின் சபையில் ஆஸ்தான வித்வானாக இருந்தார். அவரை மகாராஜா அழைத்து திருவையாறு சென்று ஸ்ரீ தியாகராஜரை சந்தித்து வரும்படி கேட்டுக் கொண்டார். அவரும் திருவையாறு வந்து தியாகராஜர் வாழ்ந்த திருமஞ்சன வீதியில் ஒரு வீட்டில் வந்து தங்கினார். தினமும் ஸ்ரீ தியாகராஜர் காலை மாலை இரு வேளைகளிலும் காவிரிக்குச் செல்வார். அப்படிச் செல்லும் வழியில் இருந்த ஒரு வீட்டில்தான் வடிவேலு தங்கினார். தியாகராஜர் காவிரிக்குச் செல்லும் நேரத்தில் வடிவேலு தன் இல்லத்தில் பாடிக்கொண்டிருப்பார், அது சுவாமிகளின் காதுகளில் விழும். அந்த இசை நயமாக இருந்ததால் தியாகராஜர் சற்று நின்று அவர் பாட்டைக் கேட்டுவிட்டுத்தான் நகருவார். ஒருநாள் தியாகராஜர் அந்த வீட்டினுள் நுழைந்து வருவதைக் கண்ட வடிவேலு, ஓடிவந்து அவரைப் பணிந்து, ஐயனே, தாங்கள் சொல்லியனுப்பி யிருந்தால் நான் வந்திருப்பேனே என்றார். அவரது இசையை தியாகராஜர் பாராட்டிவிட்டு மறுநாள் தன் இல்லத்துக்கு வந்து பாடும்படி கேட்டுக் கொண்டார். பாடியபிறகு அவருக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேட்கலாம் என்றார் தியாகராஜர். இவரும் தியாகராஜரிடம் தான் திருவையாற்றுக்கு வந்த விவரத்தைச் சொல்லி விட்டு அவர் திருவாங்கூர் வந்து மகாராஜாவைச் சந்திக்க வேண்டுமென்றார். குருநாதர் தயங்கிவிட்டுச் சொன்னார், எங்கள் சந்திப்பு நிச்சயம் நடக்கும், ஆனால் அது வைகுண்டத்தில் நிகழும் என்றார். இப்படி பலர் கோவிந்த மாரார் என்பவர் உட்பட பலர் ஸ்ரீ தியாகராஜரை வந்து சந்தித்தனர். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சீதாலக்ஷ்மி என்று பெயர் சூட்டி வளர்த்தார். பருவம் வந்த காலத்தில் அந்தப் பெண்ணை திருவையாற்றையடுத்த அம்மாள்அக்ரஹாரத்தில் வசித்து வந்த குப்புசாமி என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். அந்தத் திருமணத்துக்காக பலரும், சீடர்கள் உட்பட பல்வகை பரிசுகளை வழங்கினார்கள். அதில் ஸ்ரீ ராமபிரான் சீதா லக்ஷ்மண அனுமன் சமேதராக இருக்கும் ஒரு படமும் வந்தது. அந்தப் படத்தை வாங்கிக் கொண்ட சுவாமிகள் உடனே அதனைத் தன் பூஜை அறைக்கு எடுத்துச் சென்று “நனுபாலிம்ப நடசி வச்சிதிவோ நா ப்ராணநாத” என்னும் கிருதியைப் பாடினாராம். வந்திருந்தவர்கள் அனைவரும் ஆனந்த பரவச நிலையடைந்தார்கள். இந்தப் படம் சுவாமிகளின் உறவினர் ஸ்ரீ பட்டாபிராம பாகவதர் என்பவரின் இல்லத்தில் நெடுங்காலம் இருந்ததாகத் தெரிகிறது. சுவாமிகளின் பெண் சீதாலட்சுமிக்கு தியாகராஜன் என்றொரு மகன் பிறந்தார். சங்கீதத்தில் தேற்சியடைந்த இந்த தியாகராஜன் வயலின் வாத்தியத்திலும் மிகத் தேற்சி பெற்றிருந்தார். குரவம்மாள் என்னும் பெண்ணை மணந்துகொண்ட இவர் தனது முப்பதாவது வயதில் வாரிசுகள் எதுவும் இல்லாமலேயே காலமாகிவிட்டார். எனவே ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு வம்சாபிவிருத்தி யின்றியே போயிற்று. [] ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனைகளைக் கொண்டு சொல்லப்படும் நிகழ்வுகள்: தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பெருமையையும், அவரது ஸங்கீதத்தைப் பற்றியும் கேள்விப்பட்டு அவர் தங்கள் சபையில் வந்து பாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டும், ஸ்வாமிகள் போகவில்லையாம். அப்போது “நிதிசால ஸுகமா” எனும் கீர்த்தனையைப் பாடியதாகக் கூறுகிறார்கள். “நிதிசால” எனும் கீர்த்தனையில் எல்லாவற்றினும் உயர்ந்ததாக இராம தரிசனத்தைத் தான் மதிப்பதாகவும், உலகியல் சார்ந்தவற்றின் பயன்களில் தனக்குள்ள வெறுப்பையும், தன் வைராக்கியத்தையும் தியாகராசர் உறுதி செய்கிறார். “நிதியும் செல்வமும், மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடியவைகளா? அல்லது ஸ்ரீ ராமனின் ஸந்நிதியில் சேவை புரிவது சால சுகம் தருமா? மனமே! இதற்கு உண்மையான பதிலைக் கூறு. தயிர், வெண்ணெய், பால் முதலியன சுவை தருமா? அல்லது தசரதகுமாரன் ராமனைத் தியானித்துப் பாடும் பாடல் ருசி தருமா? அடக்கம், சாந்தம் எனும் குணம் அமைந்த கங்கா ஸ்நானம் சுகம் தருமா? அல்லது சிற்றின்பச் சேறு நிறைந்த கிணற்று நீர் சுகம் தருமா? அகம்பாவம் நிறைந்த மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா? அல்லது நன்மனத்தவனாகிய தியாகராஜன் வணங்கும் தெய்வத்தைத் துதித்தல் சுகம் தருமா?” இதுதான் அந்தப் பாடலின் கருத்து. தஞ்சை மராட்டிய மன்னன் தன்னை அழைத்தபோது வரமறுத்து இந்தப் பாடலைப் பாடினார் என்று பலரும் எழுதுகிறார்கள். இதைப்போல பல சம்பவங்கள் இவரது வாழ்க்கை சரிதத்தை எழுதியவர்கள் கூறியிருந்த போதிலும், பல இவரது பாடல்களின் கருத்தின் அடிப்படையில் யூகித்து எழுதியிருக்கிறார்களே தவிர இதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பது சிலரது கருத்து. இது போலவே பல சந்தர்ப்பங்கள் இவர் வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகின்றன.. பெரிய மகான்களின் வரலாற்றை எழுதும்போது கூடியவரை உள்ளது உள்ளபடி எழுதுவது சிறப்பு. ஸ்ரீ தியாகராஜர் திருப்பதி சென்றபோது திருவேங்கடத்தான் சந்நிதியில் திரைபோட்டு மறைத்திருந்ததாகவும், அது அறுந்து விழ வேண்டி “தெர தீயகராதா” எனும் பாடலைப் பாடினார் என்றும் கூறுகிறார்கள். சிறந்த இராம பக்தரான ஸ்ரீ தியாகராஜர் பெருமாள் சந்நிதிக்குச் சென்று அங்கு அலங்காரங்கள் நடைபெற்று தீபாராதனைக்காகத் திரை விலகும்வரை காத்திருக்காமல், திரை அறுந்து விழும்படியாக பாடியிருப்பாரா என்ற ஐயப்பாடு தோன்றுவது இயல்பு அல்லவா? திரை போடப்பட்டு வேங்கடவனின் தரிசனம் உடனே கிடைக்கவில்லையே என்று அவர் வருந்தியிருக்கலாம். அந்த நேரம் பார்த்து திரை விலக்கப்பட்டு இவருக்குத் தரிசனம் கிடைத்திருக்கலாம். அதுதான் சரியான நிகழ்வாக இருந்திருக்க வேண்டுமே தவிர, திரை அறுந்து விழும்படி இவர் பாடியிருப்பாரா என்பது கேள்விக்குறிதான். இந்தப் பாடலின் உட்கருத்து என்னுள்ளே இருக்கும் பொறாமை எனும் திரையை நீ விலக்கலாகாதா? பரமபுருஷா! அந்தப் பொறாமை எனும் திரை தர்மம் முதலான நான்கு வகை புருஷார்த்தங்களை என்னிடம் அணுகாத வண்ணம் விரட்டியடிக்கிறதே. கடவுளை உணராமலும், காணாமலும் மத, மாற்சர்ய, காமக்குரோதத் த்ிரைகள் நீங்கி இறை தரிசனம் கிட்டாதா என்ற கருத்தில்தான் இப்பாடல் உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தும் நியாயமானதாகத்தான் இருக்கிறது. இது போன்ற வேறு சில நிகழ்ச்சிகளையும் இங்கு பார்க்கலாம். பிலஹரி ராகத்தில் அமைந்த “நா ஜீவாதாரா” எனும் கீர்த்தனையில் இறந்து போன குழந்தையை எழுப்புவது பற்றி குறிப்பு எதுவும் இல்லை. அதுபோலவே தர்பார் ராகத்தில் அமைந்த “முந்து வேனுக” என்பதில் ஸ்ரீ தியாகராஜரை வழிப்பறி செய்யக் கொள்ளைக் கூட்டத்தார் முயன்றதாகவோ முன்னும் பின்னும் இராம இலக்குவர்கள் அவரைக் காத்து வந்ததாகவோ குறிப்பு எதுவும் இல்லை. இராமா, நீ என் முன்னும் பின்னும், இரு புறங்களிலும் எழுந்தருளி வருக. பாகவதர்களின் நேசனே என்னை நன்கு காப்பாற்ற வருக எனும் பொதுவான கருத்தை பிரதிபலிக்கும் விதமாகவே இந்தப் பாடல் அமைந்திருக்கிறதே தவிர கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற எனும் குறிப்பு எதுவும் இதில் இல்லை. இந்தப் பாடலின் நேரடியான கருத்து இதுதான்:– “முரனையும், கரனையும் கொன்றவனே!, என் முன்னும் பின்னும் இரு புறங்களிலும் நீ எழுந்தருளி வருக! எங்கேயும் உன் திருவழகைப் போல கண்டதில்லை ரகுநந்தனா! நீ விரைந்து வருக!! புகழ்வாய்ந்த சூரிய வம்சம் எனும் கடலில் உதித்த சந்திரனே! கோதண்டத்தைக் கையில் ஏந்தி வா! அளவிடமுடியாத பலத்தைக் கொண்டவனே! உன் அருகில் இருந்து கொண்டு தொண்டு செய்யும் இலக்குவனோடு கூட வா! ஓ! கஜேந்திரன் எனும் யானையைக் காப்பாற்றியவனே! ஓ! சக்கரவர்த்திக் குமாரா! ஓங்காரம் எனும் பிரணவத்தில் வாழ்பவனே, வா! பாகவதர்களை நேசிப்பவனே! தியாகராஜனைக் காப்பாற்ற வா!”. இராமனுக்குரிய ஒரு பொதுவான வழிபாட்டினையே இது சுருக்கமாகக் கொண்டுள்ளது. உண்மையில் இது ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தின் தெலுங்கு வடிவம் என்று கூறப்படுகிறது. நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியச் செய்தி, தியாகராஜரின் அண்ணன் தியாகராஜரைக் கொடுமைப்படுத்தி இராம இலக்குவ சீதாபிராட்டி விக்கிரகங்களை எடுத்து காவேரி வெள்ளத்தில் வீசி எறிந்தது பற்றியது. இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே பல சோகரஸக் கீர்த்தனைகள் எழுந்தன என்பது உயர்வு நவிற்சி எனக் கூறப்படுகிறது. புகழ்வாய்ந்த பெரியோர்களுடைய பெருமைகளை பரப்ப வேண்டுமானால் அவர்களுக்கு பல துன்பங்கள் ஏற்பட்டு அதனால் வருந்துவது போலவும், அந்தத் துன்பங்களிலிருந்து விடுபட மாட்டோமா என்று கதறுவது போலவும் கதைகள் சொல்வது இயல்பு. அப்படிப்பட்ட தீங்குகளை விளைவிக்க யாராவது ஒருவரை சிருஷ்டித்துக் காட்டுவதும் புனைந்துரைத்து கதாநாயகனின் பெருமையை நிலைநாட்டுவதும் வழக்கம். காவிரியில் வெள்ளம் வடிந்த பிறகு தியாகராஜர் அந்த விக்கிரகங்களைத் தேடி அலைந்தார், அழுதார், புலம்பினார் என்கின்றனர். “நே நெந்துவெத குதுரா” முதலான கீர்த்தனைகள் அவர் அழுது புலம்பி தேடியதன் விளைவு என்கின்றனர். கர்நாடகபெஹாக் ராகத்தில் அமைந்த இந்தப் பாடலின் பொருள் வருமாறு:- “ஹரி! உன்னை நான் எங்கெல்லாம் தேடுவேனடா? நான்முகனான பிரமன் இட்ட முறைகளைக் கேட்டும் வராத உன்னை நான் எங்கே தேடுவேனடா? தியாகராஜனால் துதிக்கப்படுபவனே! பாவம் நிறைந்த உள்ளத்துடன் தீய செயல்கள் புரிந்து பல தடவைகள் தகாத மொழிகளைப் பேசிக்கொண்டு, உலகத்தில் சிறந்த பக்தனைப் போல் வெளி வேடமிட்ட நான் உன்னை எங்கே தேடுவேனடா?” கடவுளைக் காண்பதிலுள்ள கஷ்டங்களைப் பற்றிய மேலான குறிப்புகள்தான் இந்தப் பாடலில் காணப்படுகின்றன. தவிர, ஆற்று வெள்ளத்தில் தேடித் துழாவினார், ராமவிக்கிரகம் கிடைக்காமல் அழுது புலம்பினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இங்கே இக்கதை நிகழ்ச்சி ஸ்ரீ தியாகராஜரின் உடன்பிறந்த சகோதரரை கொடுமைக்காரராகக் படம்பிடித்துக் காட்டுகிறது. இப்படிப்பட்ட மகானுக்கு, இவ்வளவு கொடுமை மனம் படைத்தவரா தமையனாராக இருந்தார் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா. அவரது தமையனார் இவரைப் போலன்றி மாறுபட்டவராகவும் இருக்கலாம், இவர் குடும்பத்து வருமானத்துக்கு வழிதேடாமல் இப்படி பொழுதெல்லாம் இராமநாம ஜெபத்திலும் பாட்டிலும் ஆழ்ந்திருக்கிறாரே, இவரால் குடும்பத்துக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லையே என்று வருந்தியிருக்கலாம். இவை அனைத்தும் உண்மையாக இருந்த போதிலும் நம் மனத்தில் ஒரு உறுத்தல் ஏற்படாமல் போகவில்லை. இவ்வளவு சிறந்த பக்தரின் பெருமைகளையெல்லாம் கண்கூடாகப் பார்த்து வரும் தமையனார் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருக்க முடியுமா என்பதுதான் அது. மன்னரே அழைத்துத் தன் தம்பிக்குப் பொன்னும் பொருளும் கொடுக்கத் தயாராக இருக்கும்போது அவற்றை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இராம நாமமே தனக்குப் போதும் என்று இப்படி யாராவது இருப்பார்களா என்று அவர் ஆதங்கப் பட்டிருக்கலாம். கஷ்டப்படும் தன் குடும்பத்துக்குத் தம்பி செல்வம் எதையும் தேடிக் கொடுக்கவில்லையே என்று வருந்தியிருக்கலாம் மனக்கஷ்டப் பட்டிருக்கலாம். இந்த நிகழ்ச்சி பற்றி ஸ்ரீ தியாகராஜர் வரலாற்றை உணர்ந்தவர்களே ஊகித்து உணர்ந்து கொள்வது நலம். ஒருவருடைய பெருமைகளையும் ஏற்றங்களையும் போற்றி வணங்கும் அதே நேரத்தில் மற்றவர்களைத் தாழ்த்திப் பார்க்க வேண்டுமா? இவற்றையெல்லாம் நாம் மனதில் கொண்டே மகான்களின் வரலாற்றைப் படிக்க வேண்டும். ஸ்ரீ சுவாமிகளின் சீடர்களில் தஞ்சாவூர் ராமராவ் என்பவர் ஒருவர். இவர் மாத்திரம் சுவாமிகளிடம் அதிகமான உரிமையையும் அன்பையும் உடையவர், சில சமயங்களில் தான் விரும்பியபடி சுவாமிகள் கிருதிகளை இயற்றித் தரவேண்டுமென்று அடம்பிடித்து பாடச் செய்வாராம். சுவாமிகளும் அவர் விரும்பியபடியே செய்து தருவாராம். ஸ்ரீ தியாகராஜருடைய பெற்றோர்கள் வாழ்ந்த காலத்திலேயே தஞ்சாவூர் ராமராவ் எனும் இந்த சீடர் அவர்களைக் கேட்டு தியாகராஜருடைய ஜாதகக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார் என்று திரு டி.எஸ்.பார்த்தசாரதி தனது நூலில் குறிப்பிடுகிறார். இவரை ஆஞ்சநேயரின் அம்சம் என்றும் கூறுவதுண்டு. திருவையாற்றுக் கீர்த்தனைகள்: ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் தன் இளம் வயது முதல் வாழ்ந்து வந்த திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் பஞ்சநதீஸ்வரர் பெயரிலும் அம்பாள் தர்மசம்வர்த்தனியின் பெயரிலும் எட்டு கீர்த்தனங்களைப் பாடியிருக்கிறார். இதில் ஸ்வாமியின் பேரில் நான்கும் அம்பிகையின் மீது எட்டும் அமைந்திருக்கின்றன. அந்தக் கீர்த்தனைகள் வருமாறு:- பஞ்சநதீஸ்வரர் பேரில்: 1. அடாணா ராகத்தில் ‘இலலோ பிரணதார்த்திஹருடு’ 2. மாளவஸ்ரீ ராகத்தில் ‘எவருந்நாரு பிரோவ’ 3. ஸாரங்கா ராகத்தில் ‘ஏஹி த்ரிஜகதீச’ 4. மத்யமாவதி ராகத்தில் ‘முச்சட பிரஹ்மாதுலகு’ தர்மஸம்வர்த்தனி பேரில்: 1. தோடி ராகத்தில் ‘கருணஜூடவம்ம’ 2. ஸாவேரி ராகத்தில் ‘பராசக்தி மநுபராத’ 3. ஸாவேரி ராகத்தில் ‘நீவுப்ரோவவலெ’ 4. ரீதிகெளளை ராகத்தில் ‘பாலே பாலேந்து’ 5. அடாணா ராகத்தில் ‘அம்ம தர்மஸம்வர்த்தநி’ 6. யமுனாகல்யாணி ராகத்தில் ‘விதி சக்ராதுலகு’ 7. கல்யாணி ராகத்தில் ‘சிவே பாஹிமாம்’ 8. ஆரபி ராகத்தில் ‘அம்ப நின்னு நம்மிதி’ ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் இசை நாடகங்கள். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீ ராமபிரான் மீது தவிர பல தலங்களில் எழுந்தருளியிருக்கும் சுவாமி அம்பாள் பற்றியெல்லாம் பாடியதைத் தவிர இரண்டு இசை நாடகங்களையும் இயற்றியிருக்கிறார். அவை ‘பிரஹலாத பக்தி விஜயம்’ மற்றும் ‘நெளகா சரித்திரம்’. இவை தவிர சீதாராம விஜயம் என்றொரு நாடகமும் இயற்றியதாகத் தெரிகிறது ஆனால் அது கிடைக்கவில்லை. இறைவனின் புகழ்பாடி ஆடும் நாட்டிய நாடகமே ‘நாட்டிய மேளா’ என நடத்தப்பட்டு வந்துள்ளது. மராட்டிய மன்னர்கள் காலத்தில் ‘பாகவத மேளா’ என இவை நடித்துக் காட்டப்பட்டன. தஞ்சை மராட்டிய மன்னர்கள் குறிப்பாக இரண்டாம் சரபோஜி மன்னர் கலை இலக்கியங்களைப் போற்றி வளர்த்தார். விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்த பல கலை, இசை, நாட்டியக் கலைஞர்கள் தஞ்சை ராஜ்யத்தில் வந்து குடியேறினார்கள். இவர்கள் மெலட்டூர், சாலியமங்கலம், சூலமங்கலம், ஊத்துக்காடு, நல்லூர், தேப்பெருமாநல்லூர் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. மெலட்டூரில் இந்த பாகவத மேளா இன்று வரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. காஞ்சி, திருவொற்றியூர், திருப்பதி விஜயம்.  இப்படி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் திருவையாற்றில் இசை உண்டு, தன் இராமனுண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில், காஞ்சிபுரம் ஸ்ரீ உபநிஷத் பிரஹ்ம சுவாமிகள் என்பவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளைத் தன் ஊருக்கு வருமாறு அழைக்கிறார். இந்த உபநிஷத் சுவாமிகள் தியாகராஜரின் தந்தைக்கு மிகவும் வேண்டியவர் மட்டுமல்லாமல் நூறு வயதைக் கடந்தவரும்கூட. சென்னை நகரத்தில் வசித்து வந்த பெரும் வணிகரும் பக்திமானுமான கோவூர் சுந்தர முதலியார் என்பவர் ஸ்ரீ தியாகராஜரைத் தன் கிராமத்துக்கு வரவழைத்துவிட வேண்டுமென்று விரும்பி உபநிஷத் பிரம்ஹ சுவாமிகளிடம் வேண்டிக்கொள்ள அவரும் அங்ஙனமே இவரை வரச்சொல்லி தகவல் அனுப்பினார். திருவையாற்றில் மிகவும் பிரபலமாகவும், ஸ்ரீ ராமபிரான் மீது கொண்ட பக்தியால் பற்பல பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதையும் கேள்வியுற்ற உபநிஷத் சுவாமிகள் கோவூர் சுந்தர முதலியார் வேண்டுகோளுக்கிணங்க இவரை அழைக்கிறார். திரு வி.ராகவன் அவர்கள் தன் நூலில் சோழ நாட்டில் 18ஆம் நூற்றாண்டில் காமகோடி பீடத்தில் விளங்கிய அத்வைத சந்நியாசியாகிய திரு போதேந்திரர்தான் தியாகராஜரை காஞ்சிபுரம் வருமாறு அழைத்ததாகக் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள நூலில் குறிப்பிடுகிறார். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த ஆச்சார்யார்களில் 6ஆவது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்தான் (1813 முதல் 1875) ஸ்ரீ தியாகராஜர் காலத்தில் இருந்தவர். மேலும் இவர் அப்போது காஞ்சிபுரத்தில் இல்லாமல், முகலாயர் படையெடுப்பு காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தனது மடத்தை மாற்றிக் கொண்டு வந்துவிட்டார். அப்போது இவர் கும்பகோணம் அல்லது திருவிடைமருதூர் இங்கு எங்காவது இருந்திருக்க வேண்டும். மேலும் ஸ்ரீ தியாகராஜர் ஊர் சுற்றிப் பார்க்கவோ, பல தலங்களுக்குச் செல்ல வேண்டுமென்றோ விரும்பியது கிடையாது. அவர் திருவையாற்றைத் தவிரவும் தன் இராம பக்தி சாம்ராஜ்யத்தை விட்டும் எங்கும் போகவிரும்பாவிட்டாலும், சில நிர்ப்பந்தங்கள் காரணமாகத்தான் ஸ்ரீரங்கம், லால்குடி, திருப்பதி, கோவூர், திருவொற்றியூர், நாகப்பட்டணம் ஆகிய ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறாரே தவிர ஊர்சுற்றும் ஆசை அவரிடம் இல்லவே இல்லை. ஸ்ரீ உபநிஷத் சுவாமிகள் அழைத்த காரணத்தால் காஞ்சி சென்றார் அவ்வளவுதான் அங்கிருந்து மற்ற இடங்களுக்கும் அவசியம் நேர்ந்ததால் சென்றார். ஸ்ரீ தியாகராஜர் காஞ்சிபுரம் தலயாத்திரை சென்றார் என்கிறார்கள். “History of Kanchi Sankaracharya Math and Acharyaparampara” எனும் ஆங்கில வரலாற்று கட்டுரையை “Make History” மூன்று மாதத்திற்கொருமுறை வெளியாகும் ஆங்கில பத்திரிகையில் 2003ஆம் வருஷம் ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான இதழில் வெளியாகியிருக்கிறது. இந்த கட்டுரையில் காஞ்சி மடம் தோன்றிய காலம் தொட்டு இப்போது 70ஆவது பீடாதிபதியாக வீற்றிருக்கும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வரை விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1813 முதல் 1875 வரை ஸ்ரீ 6ஆம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பீடாதிபதியாக இருந்திருக்கிறார்கள். ஆகவே ஸ்ரீ தியாகராஜரை காஞ்சிக்கு அழைத்தவர் காஞ்சி சங்கராச்சாரியார் இல்லை, தியாகராஜரின் உறவினரான உபநிஷத் சுவாமிகள்தான். காஞ்சிக்குப் புறப்பட்ட சுவாமிகள் சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ வீணை குப்பய்யர் வேண்டுகோளுக்கிணங்க கோவூர் சுந்தர முதலியாருடைய பந்தர் தெரு கிரகத்தில் ஏழு நாட்கள் தங்கினார். அந்த செல்வந்தருடைய இல்லத்தில் மாலை நேரங்களில் பாட்டுக் கச்சேரிகள் நடந்தன. அங்கிருந்து தன்னை வரவேற்ற சுந்தர முதலியாரின் கோவூருக்குச் சென்றார். அங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீ சுந்தரேச்வரரைப் பற்றி பாடினார். அங்கு ஐந்து கிருதிகளைச் செய்து அவை ‘கோவூர் பஞ்ச ரத்தினங்கள்’ எனும் பெயர் பெற்றன. அந்த செல்வந்தர் தியாகராஜருக்குத் தெரியாமல் ஆயிரம் பொற்காசுகளைக் கட்டி அவரது பல்லக்கில் மறைத்து வைத்திருந்தாராம். தெரிந்தால் சுவாமிகள் வாங்கிக் கொள்ள மாட்டார் என்ற எண்ணம். சீடர்களுக்கெல்லாம் நல்ல சன்மானங்கள் வழங்கி வழி அனுப்பி வைத்தாராம். ஸ்வாமிகள் பற்றி கூறப்படும் நிகழ்ச்சிகள். இந்த இடத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதன் தீவிரத் தன்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் வாசகர்களுக்கு உரியது. சிலரது பெருமையை உயர்த்திக் காட்டும் வகையில் சில புனந்துரைகள் புகுந்துவிடுவது இயல்பு. இந்தக் கதையும் அதுபோன்ற புனந்துரையா, அல்லது நடந்ததா என்பதை நீங்களே புரிந்து கொள்ளுவதுதான் சரியாக இருக்கும். ஸ்ரீ சுவாமிகள் பயணம் செய்துகொண்டிருந்த போது வில்லில் கற்களை வைத்து அடித்து வழிப்பறி செய்யும் ஒரு கூட்டம் இவர்களை வழிமறித்ததாம். நாகலாபுரம் கள்வர்கள் எனப்படும் அவர்கள் வழிப்பறி செய்யும்போது அவர்கள் சீடர்களில் ஒருவர் சுவாமிகளிடம் சென்று முறையிட்டார். அதற்கு சிவாமிகள் நம்மிடம் என்ன இருக்கிறது கொள்ளையடிக்க என்கிறார். அப்போது அந்த சீடர் கோவூர் முதலியார் ஆயிரம் பொற்காசுகளைப் பல்லக்கில் வைத்திருப்பதைச் சொல்கிறார். அப்படியானால் அந்த காசுகளை எடுத்து அந்த கொள்ளையர்களிடம் கொடுக்கச் சொல்லி சுவாமிகள் சொல்கிறார். அதற்கு சீடர் கோவூர் முதலியார் அந்த பொன்னை அவரது சொந்த செலவுக்குக் கொடுக்கவில்லையென்றும் ஸ்ரீ ராமபிரான் உற்சவங்களுக்கென்று கொடுக்கப்பட்டவை என்றும் சொல்கிறார். அதற்கு சுவாமிகள் அப்படியானால் அது ஸ்ரீ ராமனின் சொத்து, அதனை அவனே காத்துக் கொள்வான் என்கிறார். அப்போது இரண்டு வில்வீரர்கள் தோன்றி அம்புகள் எய்து அந்த திருடர்களை விரட்டியடிக்கின்றனர். பின்னர் மறைந்து விடுகின்றனர். அவர்கள் யார் என்று விசாரிக்க அவர்கள் அங்கு காணப்படவில்லை. வந்தவர்கள் இராம லக்ஷ்மணர்களே என்று அனைவரும் மகிழ்ந்து போற்றுகின்றனர். இப்படியொரு வரலாறும் ஸ்ரீ தியாகராஜர் வாழ்க்கையில் பேசப்படுகிறது. திருப்பதியை விட்டு காஞ்சிபுரம் வரும் வழியில் புத்தூர் அருகில் ஒரு கிணற்றங்கரையில் பலர் நின்றுகொண்டு வருந்துகின்றனர். விஷயம் என்னவென்று சுவாமிகள் விசாரிக்க, சேஷய்யா எனும் பிராமணர் ஒருவர் அந்த கிணற்றில் விழுந்து உயிர் துறந்துவிட்ட செய்தியையும், அவரது மனைவியும் குழந்தையும் கதறி அழுகின்றனர் என்றும் அங்கிருந்தவர்கள் சொல்ல, ஸ்ரீ தியாகராஜர் தனது சீடர்களைவிட்டு “லோகாவன சதுர பாஹிமாம்” எனும் பாடலையும், “ஏமானதிச்சேவோ யேமெஞ்சினாவோ” எனும் கிருதியையும் பாடச் சொல்லுகிறார். வேங்கடரமண பாகவதர் “நாஜீவாதார நா நோமுபலமா” எனும் பிலஹரி ராகக் கிருதியைப் பாடுகிறார். இந்தப் பாடலின் பொருள்: “என் உயிருக்கு ஆதாரமே! நான் நோற்ற நோன்புகளின் பயனே! பங்கயக் கண்ணனே! ராஜாதி ராஜருள் முதல்வனே! என் பார்வையின் ஒளி நீயே! என் நாசி நுகரும் நறுமணமும் நீயே! நான் ஜபம் செய்யும் அக்ஷரங்களின் உருவம் நீயே! நான் செய்யும் பூஜைக்கு மலரும் நீயே!” இவ்வளவுதான் அந்த பாடல். இறந்து கிடந்த அந்தணர் உயிர் பெற்றெழுகிறார். அனைவரும் ஸ்ரீ தியாகராஜரை வணங்கி வாழ்த்துகின்றனர். பின்னர் சுவாமிகள் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, ஸ்ரீரங்கம் முதலான இடங்களுக்குச் சென்றுவிட்டு திருவையாறு திரும்புகிறார். 1845 விச்வாவசு வருஷம் அவரது தர்மபத்தினியாரவர்கள் மோட்ச கதியை அடைகிறார்கள். அதற்கடுத்த பராபவ வருஷம் புஷ்ய சுக்ல ஏகாதசி ராத்திரியில் பஜனை நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஸஹானா ராகத்தில் “கிரிபை நெலகொன்னராமுனி” எனும் கிருதியைப் பாடி அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்து “அன்பர்களே! வரும் (1857) பகுள பஞ்சமி தினத்தில் ஓர் விசேஷம் நடக்கப் போகிறது. எல்லோரும் அந்த தினத்தில் அதிகாலை வேளையில் இங்கு வந்துவிடுங்கள்” என்று அழைப்பு விடுத்தார். அதன்படியே அன்றைய தினம் எல்லோரும் வந்து கூடினார்கள். ஆபத் ஸந்நியாசமும் முக்தியும்  அன்றைக்கு நாலைந்து நாட்களுக்கு முன்னதாக சுவாமிகள் ஸ்ரீ பிரம்மானந்த ஸ்வாமிகள் என்பவரை வரவழைத்து அவரிடம் ஆபத் ஸன்யாசம் வாங்கிக் கொண்டார். பகுளபஞ்சமி தினம் அதிகாலை ஸ்நானம் முதலான நித்ய கர்மாக்களை முடித்துக் கொண்டு பக்தர்களும் சீடர்களும் புடைசூழ ஸ்ரீ ஸீதாராமச்சந்திர மூர்த்தியை ஆராதித்தார். அதனைத் தொடர்ந்து பஜனை நடைபெறுகிறது. அப்போது சுவாமிகள் பஜனையை நிறுத்திவிட்டு அனைவரும் ஸ்ரீராம நாம ஜபத்தை இடைவிடாமல் செய்து வரச் சொன்னார். அதன்படியே அங்கு ஸ்ரீ ராம நாமத்தை அனைவரும் ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஸ்ரீ சுவாமிகள் மனோஹரி ராகத்தில் “பரிதாபமு கனியாடின பலுகுல மரசிதிவோ” எனும் கிருதியைப் பாடி, கரத்தில் சின்முத்திரை காட்டி முக்தியடைந்தார். அந்த சமயம் அவர் கபாலத்திலிருந்து ஒரு ஜோதி புறப்பட்டு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி விக்கிரகத்திலும், மேலே சென்றதையும் சிலர் பார்த்ததாகக் கூறுகிறார்கள். சமாதியும் குருபூஜை ஆராதனைகளும் [] பிறகு பக்தர்கள் சீடர்கள் ஒன்றுகூடி திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அவர் உடலுக்கு மஹாபிஷேகம் முதலானவைகளைச் செய்து, பிருந்தாவன வடிவாக ஒரு ஸமாதியைக் கட்டி முடித்தார்கள். இவர் தனது சீடர்களிடம் தான் மறைந்த பிறகு 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தன் கீர்த்தி பிராபல்யமாகுமென்று கூறிவந்தாராம். அதன்படி சுவாமிகள் சமாதியடைந்து 60 ஆண்டுகள் கழித்து, அதே பராபவ ஆண்டில் ஆங்கில வருஷம் 1907இல் வாலாஜாபேட்டை ஸ்ரீரங்கதாம பாகவதர் அதிவிமரிசையாக புஷ்ய பகுளபஞ்சமி முதல் 10 நாட்கள் குருபூஜை உற்சவத்துக்கு ஏற்பாடு செய்தார். அடுத்த 1908ஆம் வருஷம் தில்லைஸ்தானம் ஸ்ரீ நரசிம்ஹ பாகவதர், பஞ்சு பாகவதர், பிடில் கோவிந்தசாமி பிள்ளை ஆகியோர் திருவையாற்றில் ஆராதனைகளை அதிவிமரிசையாக நடத்திவரலானார்கள். அதன்பிறகு புஷ்ய பகுளபஞ்சமியை சென்னையில் தில்லைஸ்தானம் ஸ்ரீ ராமய்யங்கார் வாரிசுகள் சிறப்பாகக் கொண்டாடலாயினர். சென்னை ‘சுதேசமித்திரன்’ ஆசிரியராக இருந்த C.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அதன் வார இதழில் ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனைகளை வாரம் ஒன்றாக வெளியிட்டு பிரபலப் படுத்தி வந்தார். மதுரை செளராஷ்டிர மக்களும், காஞ்சிபுரத்தில் நாயனாப் பிள்ளையும், திருவல்லிக்கேணி மிருதங்கம் பீதாம்பர தேசாயி அவர்களும் ஒவ்வோராண்டும் ஆராதனைகளைச் செய்து வந்தார்கள். மைசூர் ராஜ்யத்தில் பிறந்து பெங்களூரில் வாலாஜாபேட்டை கிருஷ்ணசாமி பாகவதரின் சீடர் முனுசாமி அப்பா என்பவரிடம் இசை பயின்று சென்னையில் வாழ்ந்த ஸ்ரீமதி பெங்களூர் நாகரத்தினம்மாள் என்பவர் ஸத்குரு சுவாமிகளின் ஸமாதியைத் தன் சொந்த செலவில் அழகிய சிறு கோயிலாகக் கட்டி, சுவாமிகளின் விக்கிரகத்தை 1925 ஜனவரி 7ஆம் தேதி பிரதிஷ்டை செய்து வழிபடலானார். பெங்களூர் நாகரத்தினம்மாள் சற்குரு தியாகராஜ சுவாமிகளுக்குக் கோயில் எழுப்பிய பெங்களூர் நாகரத்தினம்மாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? இவர் மைசூரில் பிறந்தவர், எனவே மொழியால் கன்னடர். இவர் சமஸ்கிருதம், தெலுங்கு முதலான மொழிகளோடு சங்கீதமும் கற்றுத் தேர்ந்தார். நாட்டியக் கலையும் இவர் பயின்றார். தியாகராஜ சுவாமிகளிடம் அபார பக்தி கொண்டவர். அவருடைய பாடல்களைப் பாடி இவர் சங்கீதக் கச்சேரி நடத்துவார். இவருக்கு மைசூரைச் சேர்ந்த ஒரு அன்பர் கடிதம் எழுதியிருந்தார். அதில் திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் சமாதியையொட்டி சுகாதார சீர்கேடு அடைந்து மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதற்கு விடிவுகாலம் பிறக்காதா என்றும் கேட்டு எழுதியிருந்தார். இந்தக் கடிதம் கண்டவுடன் நாகரத்தினம்மாள் சென்னை சென்று அங்கு சங்கீதத் துறை சம்பந்தப்பட்டவர்களிடமும் பேசி அவர்கள் ஆலோசனையின்படி இவர் திருவையாற்றுக்குப் பயணமானார். அங்கு சென்று இவர் தஞ்சை மராட்டிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ராஜாராம் மன்னோஜி கர்வே என்பவரிடம் பேசி சமாதி நிலத்தை கையகப்படுத்திக் கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் ஏராளமான சமாதிக் கோயில்கள் இருந்தமையாலும், அசுத்தமும், அடர்த்தியான செடிகொடிகளும் வளர்ந்திருந்ததாலும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சமாதி எது என்பதைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. பின்னர் இதுதான் சற்குருவின் சமாதி என்பது உறுதி செய்துகொண்டபின் தன் சொந்தப் பணத்தில், வீடு, நகை முதலான ஐஸ்வர்யங்களை விற்றுக் கிடைத்த பணத்தில் சுவாமிகளுக்கு சமாதி மீது கோயில் எழுப்பி கும்பாபிஷேகமும் செய்வித்தார்கள். அங்கு காணப்படும் கல்வெட்டில் கீழ்காணும் வாசகம் பொறிக்கப்பட்டது. “ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆலயமும் பிரகாரமும், மடப்பள்ளி முதலிய கட்டடங்களும் இவைகள் அமைந்திருக்கும் ஆஸ்ரமும் மேல்படி சுவாமிகளின் அடியாளும், மைசூர் புட்டலெக்ஷ்மி அம்மாளின் புத்திரியுமான வித்யாசுந்தரி பெங்களூர் நாகரத்தினம்மாளின் கைங்கர்யமாகக் கட்டப்பெற்று 7-1-1925இல் கும்பாபிஷேகம் நடைபெற்று 1930ல் கட்டடம் பூர்த்தியாகியுள்ளது” திருமதி பெங்களூர் நாகரத்தினம்மாள் திருவையாற்றுக்கு வந்து தியாகையருடைய சமாதியில் கோயில் எழுப்பவும், இடத்தை வாங்கவும் மராட்டிய ராணி துர்க்காபாயி எனும் அம்மையாரிடமிருந்து அவருக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தை விலைக்கு வாங்கவும், சட்டப்படியான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு எல்லா உதவிகளையும் செய்தவர் திருவையாற்றில் வழக்கறிஞராக இருந்த சி.வி.இராஜ கோபாலாச்சாரியார் என்பவராகும். சற்குரு தியாகராஜ சுவாமிகளின் சமாதிக் கோயிலும் அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் இசை விழாவையும் கண்டு கேட்டு ரசிக்கும் இந்த வேளையில் இவர் போன்ற மகான்களை நினைவுகூறுவது அவசியம். ஒவ்வோராண்டும் தை மாதம் பகுள பஞ்சமி திதியில் சுவாமிகளின் குருபூஜையை சங்கீத உற்சவமாகக் கொண்டாடி வந்தார்கள். தியாகராஜ சுவாமிகளின் ஆராதனையில் நடைபெற்ற கச்சேரிகளில் பெண் வித்வான்களை மேடையில் அமர அனுமதிப்பல்லை என்ற வழக்கம் இருந்து வந்தது. நாகரத்தினம்மாள் வந்த பிறகு இந்த நிலையை மாற்ற நினைத்தார். அவர் பெண்களை மட்டுமே வைத்து சமாதியின் பின்புறம் கச்சேரிகளை நடத்தத் தொடங்கினார். இதற்கான செலவுகளை நாகரத்தினம்மாளே ஏற்றுக் கொண்டார். மற்ற இரு பிரிவினரான சின்ன கட்சி, பெரிய கட்சி இவர்களில் வாய்ப்பு கிடைக்காத ஆண் வித்வான்களுக்கும் நாகரத்தினம்மாள் தனது கச்சேரி மேடைகளில் வாய்ப்பு நல்கத் தொடங்கினார். இவர்கள் நடத்திய இசை ஆராதனை பெரும்பாலும் பெண்களே பாடும் நிகழ்ச்சியாக இருந்தது. சுவாமிகளின் ஆராதனையை மூன்று கட்சிகளாகப் பிரிந்து தனித்தனியே நடத்தி வந்தார்கள். சமாதிக்கு அருகே மராட்டிய ராணி துர்க்காபாயி எனும் அம்மையாருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தை விலைக்கு வாங்கி அங்கு மணல் நிரப்பி மேடாக்கி அந்த இடத்தையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். முதலில் ஒரு கட்சி தனது ஆராதனை விழாவை உயர்நிலைப் பள்ளி மைதானத்திலும், மற்றொரு கட்சி கல்யாண மகாலிலும், மூன்றாவதாக நாகரத்தினம்மாள் குழுவினரின் ஆராதனை சமாதிக்கருகிலும் நடத்தினார்கள். இப்படித் தனித்தனியே பிரிந்து நடத்தியதன் விளைவு விபரீதமாகப் போகக்கூடாது என்று கருதி 1940ஆம் வருஷத்தில் செம்மங்குடி சீனிவாசய்யர், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, முசிரி சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் கூடிப்பேசி அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே இடத்தில் ஆராதனையை நடத்துவதென்று தீர்மானித்து அதுமுதல் அங்ஙனமே நடைபெற்று வருகிறது. ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா. அவரது ஆராதனை விழா முன்பே கூறியபடி தை மாதம் பகுள பஞ்சமி தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இசைக் கலைஞர்களும், வாத்தியக் கலைஞர்களும், இசை ரசிகர்களும் பெருமளவில் வந்து கூடுகின்றனர். சற்குருவின் சந்நிதியில் பாடுவது தங்களுக்கு அவரது ஆசி பரிபூரணமாக அமைவதாக அனைவரும் நம்புகின்றனர். ஒரு வாரம் வரை நடைபெறும் இவ்விழாவில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர். நாள் முழுவதும், நள்ளிரவு வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதுவரை பந்தல் நிறைந்த ரசிகர்கள் கூட்டம் அமைதியாக ரசிக்கிறது. புஷ்ய பகுள பஞ்சமி அன்று காலை திருமஞ்சன வீதியில் ஸ்ரீ தியாகையர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி புறப்படுகிறது. மிக மூத்த இசைக்கலைஞர் இதற்குத் தலைமை தாங்கி உஞ்சவிருத்தி எடுக்கிறார். பின்னால் வேத கோஷங்கள் முழக்கிக் கொண்டும், ஸ்ரீ தியாகையர் கீர்த்தனைகள் பாடிக்கொண்டும் பக்தர்கள் செல்கிறார்கள். அவர்கள் ஸ்ரீ தியாகராஜர் சமாதி சந்நிதிக்கு வரும் சமயம் ஆராதனை நடைபெறும் பந்தல் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்து வழியும். மேல்சட்டை அணியாமல் மேல் வஸ்த்திரம் மட்டும் அணிந்தவர்கள் சமாதிக்கு எதிரே இரு வரிசையாக நடுவில் வழிவிட்டு அமர்ந்துகொண்டு ஆராதனையைத் தொடங்குகிறார்கள். காலை முதல் மங்கள் இசை வாசிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து புல்லாங்குழல் கலைஞர்கள் வாசிக்கும் கீர்த்தனையைத் தொடர்ந்து பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. தமிழகத்தின் முன்னணி இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பக்தி சிரத்தையுடன் இந்த பஞ்ச ரத்தினத்தைப் பாடுவதைக் கேட்பதே ஒரு இன்ப அனுபவம். இந்த பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகள் நாட்டை, கெளளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகிய ராகங்களில் அமைந்தவை. இது பாடி முடிந்ததும் சுவாமிகளுக்குத் தீபாராதனை நடைபெறும். ஸ்ரீ தியாகப்பிரஹ்ம ஆராதனை சபா சார்பில் மிகச் சிறப்பாக ஆராதனை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவையாற்றுக்குப் பெருமையும், புகழும் சேர்த்துக் கொடுப்பதில் இந்த ஆராதனை விழாவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது கபிஸ்தலம் ஸ்ரீ ரங்கசாமி மூப்பனார் அவர்கள் தலைமையில் விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். சென்னை தொழிலதிபர் டெக்கான் மூர்த்தி அவர்கள் இங்கு வருகைதரும் பக்தர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் விழாவின் எல்லா நாட்களிலும் உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். விழாவின் எல்லா நாட்களிலும் திருவையாறு நகரமே மக்கள் கூட்டத்தால் குலுங்கும். [] இசைவிழாவின் போது சமாதிக்கெதிரே இசைக்கச்சேரிகள் நடைபெறும் கொட்டகைக்குச் செல்லும் வழியெங்கும் ஏராளமான கடைகள் அமைக்கப்படும். இசை நூல்கள், இசை வாத்தியங்கள், கேசட்டுகள் குறுந்தகடுகள் இவை விற்பனை தவிர அரசாங்க, வங்கி அலுவலகங்களும் திறக்கப்பட்டிருக்கும். தென்னக ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியும் இங்கு செய்து தரப்பட்டிருக்கிறது. அஞ்சல் துறையின் அலுவலகமும், தொலைத் தொடர்புத்துறை சார்பில் தொலைபேசி, டெலக்ஸ் ஆகிய வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. செயலாளர், இணைச் செயலாளர் ஆகியோருக்கு இந்த வளாகத்திலேயே தற்காலிக அலுவலகம் திறக்கப்படுகின்றன. கலைஞர்கள் வந்து தங்குவதற்கு அறைகளும், உணவுக்காக பெரிய ஹாலும் கட்டப்பட்டுள்ளன. திருவையாறு பாரதி இயக்கம் பல்வேறு பதிப்பகத்தாரின் ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் காட்சிக்கு வைத்திருப்பதோடு விற்பனையும் செய்து வருகிறார்கள். ராமகிருஷ்ண மடத்து நூல்கள் மற்றும் பல புத்தக வெளியீட்டாளர்களும் தங்கள் புத்தகங்களை இங்கு விற்பனை செய்கிறார்கள். நிறைவு நாளன்று இரவு ஆஞ்சநேயர் உத்ஸவமும், நாதஸ்வர வித்வான்களின் மல்லாரி இசையுடனும் விழா நிறைவு பெறுகிறது. 28 வேதநாயக சாஸ்திரியார்   சுவிசேஷ கவிராயர் வேதநாயக சாஸ்திரியார் (1774 – 1864)கிறிஸ்தவ மத தோத்திரப் பாடல்கள் பலவற்றை இயற்றியவர் இந்த வேத நாயகசாஸ்திரியார். இப்போதும்கூட வேதநாயக சாஸ்திரியார் பாடல் என்ற அறிவிப்போடு பல பாடல்களைக் கேட்டு வருகிறோம் அல்லவா? அந்த வேதநாயக சாஸ்திரியார் திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாளர் மரபில் தோன்றியவர். இவருக்குப் பன்னிரெண்டு வயது ஆகும்போது, தஞ்சை ராஜா சரபோஜிக்கு போஷகராக இருந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியார் இவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தார். தஞ்சை மாவட்டம் கடற்கரைப் பிரதேசமான தரங்கம்பாடியில் இருந்த ஒரு கல்வி நிலையத்தில் இவரைக் கல்வி கற்க வைத்தார் ஸ்வார்ட்ஸ். அங்கு இவர் இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்றார். அதன் பின் இவர் தஞ்சாவூருக்கு வந்து அங்கு இயங்கி வந்த தத்துவக் கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அந்த நாளில் தஞ்சையை அரசு புரிந்தவர் மகாராஜா சரபோஜி IV ஆவார். அவர் கலை இலக்கியங்களில் ஆர்வம் உடையவர். வேதநாயகர் ஒரு சிறந்த கவிஞர். இவர் 52 நூல்களை இயற்றியிருப்பதாகத் தெரிகிறது. இந்தச் செய்தி சென்னை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் 1956இல் வெளியிட்ட தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் எனும் டாக்டர் தா.வி.வேதநேசன் எழுதிய நூலில் இருக்கிறது. தஞ்சை மராத்திய வம்சத்தில் வந்தவரும், துளஜா ராஜாவின் சகோதரர் முறை உள்ளவரும், தஞ்சையை சரபோஜிக்கு முன்பு சில காலம் ஆண்டவரும், பின்னாளில் திருவிடைமருதூரில் வாழ்ந்தவருமான அமரசிம்மன் என்பவரின் மகன் பிரதாபசிம்மன் என்பவருக்கு வேதநாயகர் 1-2-1828இல் எழுதியுள்ள கடிதமொன்றில் “சிறிதும் பெரிதுமான அறுபது பொஸ்தகங்களை உண்டு பண்ணினேன்” என்று எழுதியிருப்பதாகத் தெரிகிறது. இவருடைய நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவது “பெத்தலேஹம் குறவஞ்சி”. மற்றொரு சிறந்த நூல் “பேரின்பக் காதல்”. இது 1813இல் இயற்றப் பெற்றதாகத் தெரிகிறது. இந்த நூல் 1815இல் திருச்சியில் அரங்கேற்றப்பட்ட போது இவருக்கு “வேத சாஸ்திரி” எனும் பட்டம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. ஸ்வார்ட்ஸ் பாதிரியாருக்குப் பிறகு தஞ்சையில் இருந்தவர் Rev. Kohlhoff என்பவர். இவருடைய பரிந்துரையின் பேரில் மன்னர் சரபோஜி இவருக்கு ஒரு சால்வை அணிவித்து மரியாதை செய்ததோடு, மன்னரை மாதம் இருமுறை பார்க்கவும் அனுமதி வழங்கப் பட்டது. இவருடைய பணியைப் பாராட்டி சரபோஜி மன்னர் இவருக்கு மாதச் சம்பளமும் கொடுக்க ஆணையிட்டார். வேதநாயக சாஸ்திரியார் மராத்திய போன்ஸ்லே வம்சத்து வரலாற்றை செய்யுளாக இசைத்துக் கொடுத்திருக்கிறார். 1-2-1828இல் இவர் திருவிடைமருதூரில் வாழ்ந்த பிரதாபசிம்மனுக்கு எழுதிய கடிதத்தில், “Rev.Kohlhoff எனக்காகச் சிபாரிசு செய்ததன் பேரில் மகாராஜா எழுதி வைத்த போன்ஸ்லே வம்ச ராஜ சரித்திரத்தில் சிறிது விருத்தமாகப் பாடிய சில பாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் செய்து கொடுத்தார்கள்” என இருக்கிறது. ஆக, இவர் போன்ஸ்லே வம்ச சரித்திரத்தை பாடலாக வடித்திருக்கிறார் என்பது தெரிகிறது. இன்னொரு நிகழ்ச்சியும் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் மன்னர் சரபோஜி இவரை பிரஹதீஸ்வர ஸ்வாமியின் பேரில் ஒரு குறவஞ்சி பாடும்படி கேட்டதாகவும், அதற்கு வேதநாயகர் மறுத்து விட்டதாகவும், அதன் விளைவாக இவ்விருவருக்கும் மன வேற்றுமை ஏற்பட்டது என்றும் தெரிகிறது. இந்த வேதநாயக சாஸ்திரியார், சில காலம் கர்னல் மெக்கன்சியிடம் சுவடி தயாரிப்பில் ஈடுபட்டு வேலை செய்ததாகத் தெரிகிறது. இவர்24-1-1864இல் காலமானார். 29 சிவகங்கை மருது பாண்டியர் சிவகங்கை மருதிருவர் மருது பாண்டியர்களின் வரலாறு பெரிது. அதனை முழுமையாக பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இப்போது அவர்கள் வரலாற்றில் ஒரு சிறு துளி மட்டும் இங்கே …1801ஆம் வருஷம் ஒரு அறிவிப்பு வெளியாகிறது. அந்த அறிவிப்பு கூறும் செய்தி மிக நீண்டது. அதில் ஒரு பகுதி மட்டும் இதோ: – “….நாவலந்தீவு எனப்படும் இந்த நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் இந்த அறிவிப்பு கொடுக்கப் படுகிறது. …. பரங்கியர்களின் அந்தரங்கத்தை அறியாத நீங்கள் எங்களுடன் ஒத்துப் போக மறுக்கிறீர்கள். உங்களிடையே ஒற்றுமை இல்லை … இழிகுலத்தவர் பரங்கியர்களுடன் இணைந்து இந்த நாட்டை அடிமைப் படுத்தியுள்ளது நாமறிந்த விஷயம். ஆகையால் நீங்கள் பரங்கிகளை எங்கு கண்டாலும் அவர்களை அழித்து ஒழியுங்கள் …. ” இப்படி போகிறது அந்த அறிவிப்பு. இந்த அறிக்கையின் பிரதிகள் அப்போது இந்த பாரத புண்ணிய பூமியில் நாடு பிடித்துக் கொண்டிருந்த வெள்ளை கும்பினியாரின் கைகளுக்கும் போய்ச் சேர்ந்தது. இதைப் படித்த வெள்ளை அதிகாரிகளுக்குக் கோபம் தலைக்கேறியது. அறிக்கையின் நகல்களைக் கிழித்தெறிந்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். யார் வெளியிட்ட அறிக்கை இது? இதனை வெளியிட்டவர்களையும் இந்த அறிக்கையைக் கிழித்தெறிந்தது போல கிழித்தெறிய வேண்டுமென துடித்தனர். வெறிகொண்டு அலைந்தனர். எங்கேயோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து இங்கு வாணிபம் செய்ய வந்த ஒரு சிறு கூட்டம், தாங்களாக மட்டும் இந்த மண்ணுக்கு உரிய மாவீரர்களை அழித்து விடுவது என்பது சாத்தியமா என்ன? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்து, இந்த மண்ணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய சில கருங்காலிகள் தங்கள் உடன் பிறந்தவர்களையே காட்டிக் கொடுத்து, அன்னியன் இடும் பிச்சைக்கு ஆலாய் பறந்து கொண்டிருக்கிறார்களே! என்ன செய்வது. இல்லாவிட்டால் வீரம் செறிந்த கட்டபொம்மனைத் தூக்கில் போட முடியுமா? நூற்றுக் கணக்கான ஆண்டுகள் இங்கு வந்து நம்மை கட்டியாள முடியுமா? சரி! அந்த அறிக்கையை வெளியிட்டவர்கள்தான் யார்? வேறு யார்? சிவகங்கைச் சீமையின் சிறுத்தைகளான மருது சகோதரர்கள்தான் அவர்கள். சிவகங்கைச் சீவையின் வரலாற்றைப் படித்தால் தான் இந்த வீரம் செறிந்த பாளையக்காரர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். மருதுபாண்டியர் என்றும், மருதரசர் என்றும் மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இந்த சகோதரர்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய சாதனை படைத்தவர்கள். காட்டில் அலைந்து திரியும் புலிகளையும், சிறுத்தைகளையும்கூட எதிர்த்து நின்று போரிட்டு வெற்றி பெறும் ஆற்றல் படைத்தவர் பெரிய மருது. அந்தக் காலத்தில் ஆற்காட்டு நவாப் வெள்ளியில் தடித்த நாணயமொன்றை வெளியிட்டிருந்தார்கள். அந்த கனத்த நாணயத்தைத் தனது விரல்களுக்கிடையில் வைத்து விரலால் வளைத்து ஒடித்துவிடும் எஃகு போன்ற பலமுடைய மாவீரன் அவர். தேக்கு மரத்தில் இழைத்துச் செதுக்கிய அற்புத சிற்பம் போல உடலமைப்பு கொண்ட மாவீரன் சின்ன மருது. உடல் பலத்தால் மட்டுமல்ல, தோற்றத்தாலும் மற்றவர்கள் பார்த்து வியக்கும் வண்ணம் இருந்தவன். அறிவிலே சிறந்தவன்; சாணக்கியனுக்கு நிகரானவன். பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கர் 1799 ஜூன் மாதம் 5ஆம் தேதி சிவகங்கை சீமைக்கு வந்து சேர்ந்தார். தனது பாளையத்தில் வெள்ளைக்காரன் ஆக்கிரமித்துக் கொண்டு மக்களைக் கசக்கிப் பிழிந்து ஆற்காட்டு நவாப் கொடுத்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களிடம் வரிவசூல் செய்வதையும், தென்னக பாளையக் காரர்களைத் தங்கள் எடுபிடிகளைப் போல நடத்திக் கொண்டு அவர்களை அவமரியாதை செய்து கேவலப்படுத்தி வருவதையும், பொருள்களை விற்க வந்த இந்த கும்பல் நாடுபிடிக்கக் கடந்து அலைவதையும் சொல்லி வருத்தப் பட்டார் கட்டபொம்மு நாயக்கர். கட்டபொம்மு நாயக்கரைவிட பெரிய மருது பன்னிரெண்டு வயது மூத்தவர். தன்னுடைய இளைய சகோதரனைப் போன்ற கட்டபொம்மு நாயக்கர் தனது பாளையத்திலிருந்து விரட்டப்பட்டு இங்கு வந்து சரண் புக காரணமாயிருந்த வெள்ளைக் கும்பினியாரை பழிவாங்கத் துடித்தார் பெரிய மருது. தன்னை நாடி உயிர் பிழைக்கத் தஞ்சம் புகுந்துவிட்ட கட்டபொம்மனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். தன்னோடு தங்கிக் கொள்ளவும் அனுமதியளித்தார். சமயம் நேரும்போது பழிக்குப் பழி வாங்கிட உறுதியளித்தார். 1801ஆம் வருஷம் மருதுபாண்டியர் கமுதி கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார். ஆங்கிலப் படைக்கு கர்னல் அக்னியூ என்பவன் தலைமை தாங்கி வந்தான். அவன் தன்னுடைய படைகளை மட்டும் கொண்டு போர் புரிந்து தோல்வியடைந்த பின் எதிரிகளைத் துரோகிகளாக மாற்றி, பிரித்தாளும் வழக்கமான ஆங்கில பாணியைப் பின்பற்றி அங்கிருந்த மற்ற பாளையக்காரர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி தன் பக்கம் இழுத்துக் கொண்டான். தென்பாண்டிச் சீமையின் வீர மறவர்களுக்குள் பிரிவினை நேர்ந்தது. புதுக்கோட்டை தொண்டைமான் அரசர் தன் பங்குக்கு ஆங்கிலக் கம்பெனியாருக்கு உதவவும் முன்வந்தனர். காளையார்கோயில். மருதிருவரின் மானம் காக்கும் கோட்டை. கானப்பேரெழில் என்பது அதன் பழைய பெயர். அந்த காளையார்கோயில் கோட்டையை நாற்புறமும் கம்பெனியாரின் வெள்ளைக்காரப் படையும் தோழமையுடன் சேர்ந்துகொண்ட மற்ற துணைப் படைகளும் சூழ்ந்து கொண்டன. கிழக்கிலிருந்து கர்னல் பிளாக்பர்ன் என்பவன் தலைமையில் ஒரு படை. மேற்கு திசையிலிருந்து கர்னல் அக்னியுவின் தலைமையில் ஒரு படையும், தெற்கிலிருந்து மெக்காலே என்பவன் தலைமையில் ஒரு படையும் காளையார்கோயிலைத் தாக்கின. மருதுவின் படை வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆங்கில கம்பெனியாரின் படைகளை எதிர்த்து நின்றனர். கடுமையான போர். பாண்டிய நாடு கண்டிராத கடுமையான பீரங்கித் தாக்குதல். அந்தப் போரின் இறுதியில் கம்பெனியார் படைகள் வென்றன. மருது சகோதரர்கள் தப்பி ஓடி காடுகளில் தஞ்சம் புகுந்தனர். 1801ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் தேதி காளையார்கோயில் கோட்டை ஆங்கிலேயர் வசம் போனது. தப்பி ஓடிவிட்ட மருது சகோதரர்களைப் பிடித்துக் கொடுத்தால் ஏராளமான பரிசுகள் தரப்படும் என்று கும்பினியார் முரசு கொட்டி அறிவிப்பு செய்தனர். அன்னியன் தரும் பிச்சைப் பரிசுக்கு ஆசைப்பட்டு இந்த புண்ணிய மண்ணில் பிறந்த துரோகிகள் பலரும் நாயாய் அலைந்தனர் அந்த வீரத் திருமக்களைப் பிடித்துக் கொடுப்பதற்காக. துரோகிகளின் முயற்சிகள் பயன் அளிக்கவில்லை. மருதிருவரைப் பிடிக்க இவர்களால் ஆகவில்லை. வீரம் செறிந்த இந்த மாவீரர்களைப் பிடிக்க வேண்டுமானால் ஏதாவது தந்திரம் செய்து ஏமாற்றிப் பிடித்தால்தான் உண்டு என்பதை கும்பெனியார் உணர்ந்தனர். ஆட்கள் தேடி அலைந்தும் பிடிக்க முடியாத இந்த வீரர்களை பிடிக்க ஒரு உத்தியைக் கையாண்டனர். யானைகளைப் பிடிக்க பள்ளம் தோண்டி விழவைத்துப் பிடிக்கலாம், மனிதர்களைப் பிடிக்க முகஸ்துதி செய்து பிடிக்கலாம் என்றாலும் மருது சகோதரர் போன்ற வீரர்களைப் பிடிக்க என்ன செய்யலாம்? அவர்கள் உயிரினும் மேலாக நினைக்கும் ஆலயங்களை இடிப்பதாகச் சொன்னால், தானாக அந்த சிறுத்தைகள் மறைவிடம் விட்டு வெளிவந்து அந்த ஆலயங்களைக் காக்கப் போராடும் என்பதனை யாரோ சொல்லி அறிந்து கொண்டனர் வெள்ளையர்கள். ஒரு அறிவிப்பு வெளியானது. “மருது சகோதரர்கள் வந்து உடனடியாக ஆங்கிலப் படையிடம் சரண் அடையாவிட்டால், அவர்களது காளையார் கோயில் ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்படும்” என்பது அந்த அறிக்கை. தாங்கள் ஒவ்வொரு செங்கல்லாய் எடுத்து வைத்து கட்டிய, தங்கள் உயிரினும் மேலான காளையார்கோயில் இடிபடுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை மருது சகோதரர்களால். தங்கள் உயிர் போனாலும் கவலை இல்லை தங்கள் நினைவைப் போற்றக் காலம் காலமாய் இருக்கப் போகும் அந்த ஆலயத்தைக் காப்பாற்றியே தீரவேண்டுமென்று முடிவு செய்தனர். மறைவிலிருந்து வெளிப்பட்டார் பெரிய மருது. வெள்ளையனின் சூழ்ச்சியால் பிடிபட்டார். விரட்டிச் சென்று காட்டில் இருந்த சின்ன மருதையும் பிடித்துக் கொணர்ந்தனர் வெள்ளைக் கும்பினியார். பிடித்துவிட்ட பின் விசாரணை செய்ய வேண்டுமே! ஒரு நாயைக் கொல்வதானாலும் விசாரணை செய்துதான் கொல்வோம் என்று மார்தட்டிக் கொண்ட வெள்ளையன் பெயருக்குக்கூட ஒரு விசாரணை இல்லாமல் மருது சகோதரர்களை திருப்பத்தூர் கோட்டையில் 1801 அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிட்டனர். பெரிய மருது தன் உயிரினும் மேலாகக் கருதிய காளையார்கோயிலின் முன்பு தனது உடல் சமாதி வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. ஒரு நாட்டை வீரத்தால் ஜெயிக்கலாம். துரோகத்தால் ஜெயிப்பது என்றால்? துரோகத்தால் அடிமைப்பட்ட நாடுகள் ஏராளம் ஏராளம். அதிலிருந்து பாரத நாடு மட்டும் தப்புமா என்ன? எந்த நாளும் துரோகம் இங்கு கோலோச்சிக் கொண்டுதான் இருந்தது, இருக்கிறது, இருக்கும். மண்ணோடு மண்ணாகிப் போன தியாக மன்னர்களும், தேசபக்தர்களும், வீராதி வீரர்களும் நம் மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அன்னிய பக்தியும், அன்னியனுக்கு கால்கழுவும் புத்தியும் இல்லாமல் நம் பெருமை, நம் தன்மானம் இவற்றால் உயர முடியும். உலகத்துக்கு வழிகாட்ட முடியும். செய்ய முடியுமா? முடியும், நிச்சயம் முடியும். இளைய தலைமுறை உரக்க சபதம் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால்! வாழ்க பாரதம்! 30 பூலித்தேவன் ‘நெற்கட்டும்செவ்வல்’ பூலித்தேவன்சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் அவர்கள், வரலாற்றிலும் மறைக்கப்பட்டு, மக்களாலும் மறக்கப்பட்ட சில சுதந்திரப் போர் வீரர்களை வெளிச்சத்துக் கொண்டு வந்தார். அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோராவர். அப்படி அவர் இந்த சுதந்திரப் போர் வீரர்களை பல இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளுக்குமிடையே பரப்பி வந்த நேரத்தில் என்ன காரணத்தினாலோ தமிழ் எழுத்தாளரும், கல்கண்டு பத்திரிகை ஆசிரியருமான தமிழ்வாணன் அவர்கள் கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்று எழுதி வரலானார். ஒரு காலகட்டத்தில் ம.பொ.சி. ஒருபுறம் கட்டபொம்மனை உயர்த்தி எழுத, தமிழ்வாணன் கட்டபொம்மனை கொள்ளக்காரன் என்று எழுதியதோடு, தென் தமிழ்நாட்டில் சுதந்திரக் குரல் எழுப்பிய முதல் பாளையக்காரன் “நெய்க்கட்டான்சேவல் பூலித்தேவன்” என்றே வலியுறுத்தி எழுதி வந்தார். ஆனால் நாளடைவில் சிலம்புச் செல்வரின் குரல்தான் ஓங்கி ஒலித்தது, ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்வாணன் தூக்கிப் பிடித்த புலித்தேவனும் சுதந்திர வேகம் கொண்டவர்தான்; அதிலொன்றும் மறுப்பு இல்லை. ஆனால் கட்டபொம்மன் வரலாற்றில் அவருடைய அமைச்சர் தானாவதி பிள்ளை செய்த ஒரு காரியம், கட்டபொம்மனுக்குக் கொள்ளைக்காரன் என்ற அவப் பெயரை ஆங்கிலக் கும்பினியார் கொடுத்து விட்டனர். அதுவும் சிலர் நெஞ்சில் நிலைத்து விட்டது. என்றாலும் இருள் ஒரு நாள் அகலும், ஒளி அன்று உண்மையை விளக்கும் என்பது சரியாகிவிட்டது. சரி, இப்போது நெய்க்கட்டான்சேவல் பூலித்தேவன் என அழைக்கப்படும் வீரன் பற்றிய சில செய்திகளைப் பார்க்கலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலுக்கு வடமேற்கில் ஆவுடையார்புரம் எனும் பெயருடைய “நெற்கட்டும் செவ்வல்” எனும் பாளையம் இருக்கிறது. இந்த பாளையத்தின் அதிபதியாக, அதாவது பாளையக்காரராக சித்திரபுத்திர தேவர் என்பவர் இருந்தார். இவரது மனைவியின் பெயர் சிவஞான நாச்சியார். இந்த பாளையக்காரருக்கு 1715இல் ஒரு வீர மகன் பிறந்தான். அந்த மகன் தான் நாம் இப்போது பார்க்கப் போகும் பூலித்தேவன். பாளையக்காரரின் மகன் அல்லவா? வீரம் செறிந்த நெல்லை மண்ணில் பிறந்த இந்தக் குழந்தை சிறு வயதிலேயே போர்ப் பயிற்சிகள் அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். வீர விளையாட்டுக்களிலும், வேட்டையாடுவதிலும் ஆர்வமுடைய இந்த பூலித்தேவன் ஒரு முறை காட்டிலிலுருந்து தப்பிவந்து கிராமங்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த புலியொன்றைத் தன் கட்டாரியால் குத்திக் கொன்றாராம். அந்தப் பகுதி மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாதலின், இந்தச் செய்தியைக் கேள்விப் பட்ட நாயக்க அரசர் இந்த வீரனை அழைத்து அவனுக்கு “வடக்கத்தான் பூலித்தேவன்” என்று பட்டமளித்தாராம். அன்று முதல் இவனை பூலித்தேவன் என்றும், புலித்தேவன் என்றும் ஏதோ வாயில் நுழைந்த வகையில் மக்கள் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்கள். இதே வலைத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிற தஞ்சை மராத்தியர் வரலாற்றைப் படித்தவர்களுக்கு நாம் இப்போது சொல்லப்போகிற செய்தி தெரிந்திருக்கும். அதாவது ஆற்காட்டு நவாப் முகமது அலியின் அண்ணன் மாபூஸ்கான், தளபது யூசூப்கான் ஆகியோர் அவர்களது எஜமானர்களான கிழக்கிந்திய கம்பெனியின் தளபது கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான் என்பவனின் ஆணைப்படி தென் தமிழ்நாட்டு பாளையக் காரர்களிடமிருந்தெல்லாம் கிஸ்தி வசூல் செய்வதற்காக தென்னகம் நோக்கி படையெடுத்து வந்தார்கள். இது நடந்தது 1755ஆம் ஆண்டில். அதுவரை டில்லி பாதுஷாவுக்குக் கட்டுப்பட்ட, நிஜாமும், நிஜாமின் கீழ் பணியாற்றிய ஆற்காடு நவாபும், ஆங்கிலேய கம்பெனியாரிடம் வாங்கிய கடனுக்காக நேரடியாக தென் தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்துகொண்டு தங்கள் கடனை நேர் செய்துகொள்ள அனுமதி அளித்தனர். அதன் பலனாக அந்த ஆற்காட்டுப் படை முதன் முதல் தென்கோடி தமிழ்ப் பிரதேசத்துக்குள் படையெடுத்து நுழைந்தது. அவர்களிடம் வரிவசூல் செய்துகொள்வது, இல்லையேல், அவர்களது நாட்டை கபளீகரம் செய்துகொள்வது என்பது அவர்களது நோக்கம். மக்கள் வரிப்பணத்தை வசூல் செய்துகொண்டு ஆடம்பர வாழ்க்கையில் சுகபோகமாக இருந்த சில பாளையக்காரர்கள், ஆற்காட்டுப் படைக்கும், ஆங்கில கம்பெனியார் படைக்கும் பயந்துகொண்டு கேட்ட கிஸ்தியை அவர்களுக்குக் காணிக்கையாக்கி பணிந்து போயினர். இந்த மதார்ப்பில் ஆங்கில கம்பெனிப் படை நெற்கட்டும் செவ்வலைச் சென்றடைந்தது மாபூஸ்கான் தலைமையில். பாளையக்காரர் புலித்தேவனுக்குத் தகவல் கிடைத்ததும் கொதித்தெழுந்தார். “வரி, கிஸ்தி என்று எவனாவது என் ஆட்சிக்குரிய நிலத்தில் கால்வைத்தால் அவன் திரும்ப மாட்டான்” என்று உறுமினார். “வரியாவது, வட்டியாவது? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? வரி என்ற பெயரில் ஒரு மணி நெல்கூட இவர்களுக்குத் தரமுடியாது” என்று கர்ஜித்தார் பூலித்தேவர்.  தன்னுடைய படைகளை ஒன்று திரட்டினார். தனது மண்ணில் நுழைந்துவிட்ட அந்நியப் படையை எதிர்கொண்டு இவரே போய் அவர்களை வெறிகொண்டு தாக்கித் தோற்கடித்தார். கம்பெனிப் படைகளும், மாபூஸ்கான் படைகளும் தாங்கள் கொண்டு வந்த பீரங்கிகளையும், வெடி மருந்துகளையும் போட்டது போட்டபடி போர்க்களத்தைவிட்டு ஓட்டமெடுத்தனர்.  ஒடிப்போன மாபூஸ்கான் தன் எஜமானன் அலெக்சாண்டர் ஹெரானிடம் போய் புகார் செய்தான். ஆத்திர மடைந்த அந்த ஆங்கில கர்னல் தன்னுடைய படைகளை அழைத்துக் கொண்டு மீண்டும் பூலித்தேவனை எதிர்க்க வந்து சேர்ந்தான். என்னதான் நவீன எந்திரங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தினாலும் பூலித்தேவனின் வீரமிக்க வீரகளின் சாதாரண கத்தி ஈட்டிகளின் முன்பாக நிற்க முடியவில்லை. தோற்றுப் போன ஹெரான் சமாதானம் பேசினான். என்னவென்று? தான் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். வெறும் இருபதினாயிரம் ரூபாயைக் கப்பமாகக் கட்டிவிட்டால் அதை வாங்கிக் கொண்டு தான் திரும்பிப் போய்விடுவதாக அவன் கூறினான். இந்த மண்ணில் வாழ்வோர் தமிழர். உழைப்பவர் தமிழர். அந்த உழைப்பை எந்தவொரு அன்னியனும் திருடிச் செல்ல தமிழ் வீரர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று பதில் சொன்னார் பூலித்தேவன். தோல்வியில் துவண்டு போய் ஹெரான் ஆற்காட்டுப் படைகளுடன் மதுரைக்குத் திரும்பிச் சென்றான். 1756ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் திருநெல்வேலியில் மாபூஸ்கானுக்கும் பூலித்தேவருக்கும் ஒரு கடுமையான சண்டை நடந்தது. அதில் பூலித்தேவரின் நெருங்கிய தோழனொருவன் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டான். நண்பனின் மரணம் பூலித்தேவரைச் சோர்வடைய வைத்துவிட்டது. தோல்வியால் துவண்டு ஊர் திரும்பினார் பூலித்தேவர். அதன் பிறகு 1766இல் காப்டன் பெரிட்சன் எனும் ஆங்கில தளபதி வாசுதேவநல்லூரைத் தாக்கினான். அங்கு நடந்த போரிலும் ஆங்கில கம்பெனிப் படை தோல்வியடைந்தது. பூலித்தேவனை அடக்க என்ன வழி என்று கம்பெனியார் ஆலோசனை நடத்தினர். அவனைத் தனிமைப் படுத்தி, அவனைச் சுற்றி இருக்கும் பாளையங்களைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டால் அவனை அடக்கிவிடலாம் என்று திட்டமிட்டனர்.  1767இல் டொனால்டு காம்ப்பெல் எனும் ஆங்கில தளபதியின் தலைமையில் மேஜர் பிளிண்ட், கேப்டன் ஹார்பர் ஆகியோர் ஒரு பெரும் படையுடன் வந்து வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கத் தொடங்கினார். பீரங்கி குண்டுகள் தாக்கி சேதமடைந்த கோட்டைச் சுவர்களை, பூலித்தேவனின் ஆட்கள் உடனுக்குடன் களிமண், வைக்கோல் கொண்டு அடைத்து சீர் செய்தனர். அவசரத்துக்கு மண்ணும், வைக்கோலும் கிடைக்காத நேரத்தில் வீரர்கள் தங்கள் உடலையே அந்த இடிபாடுகளில் வைத்து அடைத்தனர். ஒரு வாரகாலம் போர் நடைபெற்றது. அது நல்ல மழைக் காலம் பூலித்தேவர் மலைப் பகுதிகளுக்குச் சென்று மறைவாக ஒளிந்து கொண்டார். எப்போதுமே இவர்களுக்கு ஒரு துரோகி கிடைத்துவிடுவான் அல்லவா? அப்படிப்பட்ட ஒரு துரோகி பூலித்தேவன் பதுங்கி இருக்கும் இடத்தை ஆங்கில கும்பெனியாரிடம் காட்டிக் கொடுத்துவிட்டான். கட்டபொம்மனுக்கு எட்டப்பனைப் போல, இவருக்கும் ஒரு குட்டப்பன் வந்து சேர்ந்தான். சதிசெய்து, சூதால் பூலித்தேவன் கைது செய்யப்பட்டு கும்பெனியாரால் அழைத்துச் செல்லப்பட்டார். போகும் வழியில் தங்கள் குலதெய்வமான சங்கரன்கோயிலுக்குச் சென்று வழிபட ஆங்கிலேயர்களிடம் அனுமதி பெற்று கோயிலினுள் நுழைந்தார் பூலித்தேவர். போனவர் போனவர்தான். அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்பது யாருக்குமே தெரியவில்லை. அந்த மர்மம் இன்றுவரை தெரியவில்லை என்கின்றனர் பூலித்தேவனின் வரலாற்றை உணர்ந்தவர்கள். வாழ்க பூலித்தேவன் புகழ். 31 விந்தன் “எதை எழுதினாலும் அதை நான்கு பேர் பாராட்ட வேண்டும் அல்லது திட்ட வேண்டும். இரண்டும் இல்லையென்றால் எழுதுவதைவிட எழுதாமல் இருப்பது நன்று!”  இந்தப் பொன்மொழியை உதிர்த்தவர் அமரர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. உதிர்க்கப்பட்டவர் கல்கியில் உதவி ஆசிரியராக இருந்த விந்தன். சாதாரணமாக தமிழ் எழுத்தாளர்கள் என்றால் முன்பெல்லாம் ஒருவகையான உருவகம் கொடுத்திருந்தார்கள். அப்படிப்பட்ட உருவகங்களிலிருந்து பலர் மாறுபட்டனர். அவர்களில் முதன்மையானவராக ஜெயகாந்தனைச் சொல்லலாம். அப்படிப்பட்டவர்களில் நாம் பார்க்கப் போகும் விந்தனும் ஒருவர். செங்கற்பட்டுக்கு அருகில் நாவலூர் எனுமிடத்தில் 1916இல் தோன்றியவர் கோவிந்தன். பள்ளிக் கல்வி அதிகம் பயிலாத கோவிந்தன் உழைப்பை நம்பினார். இரவுப் பள்ளியில் படித்தார். ஓவியம் கற்கப் போய் அதையும் பாதியில் விட்டார். ஜெமினி ஸ்டுடியோவில் ஓவியப் பிரிவில் பணியில் அமர்ந்தார். அதிலிருந்து அச்சுக் கோர்க்கும் பணிக்குப் போனார். குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படவேண்டும் என்பார்கள். இவர் அச்சுக் கோத்தது ‘ஆனந்தவிகடன்’ பிரஸ்சில். இவருக்குத் திருமணம் ஆயிற்று. 1941இல் கல்கி பத்திரிகை தொடங்கப் பட்டது. இவர் அங்கு அச்சுக்கோக்கும் பணிக்குச் சென்றார். ஆசிரியர் கல்கியின் எழுத்துக்கள் படித்து ரசிக்க அருமையாக இருந்தபோதும், அந்த எழுத்துக்கள் பிரம்ம லிபியாக இருக்கும் என்பர். அப்படிப்பட்ட கல்கியின் கையெழுத்தை பிழையின்றி அச்சுக்கோத்து அவரிடம் ஷொட்டு வாங்கியவர் கோவிந்தன்.  புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர் கல்கி, தன் பிரஸ்சில் வேலைபார்க்கும் கோவிந்தனையும் அவர் கதைகள் எழுதுவார் என்று தெரிந்துகொண்டு ஒரு கதை எழுதிக் கொண்டுவரச் சொன்னார். ஏதோ மனத்தைச் செலுத்தி அவர் பாணியில் அவர் மொழியில் ஒரு கதை எழுதிக் கொண்டு போய் ஆசிரியரிடம் கொடுக்க அவர் சொன்னது, “பேஷ், ரொம்ப நன்னாயிருக்கே, தொடர்ந்து எழுது” என்பதுதான். கல்கியில் வி.கோவிந்தன் என்பதை வி.ஜி. என்று இவர் எழுத ஆசிரியர் சொன்னார் ‘விந்தன்’ என்று பெயரை வைத்துக் கொள் என்றார். நாமகரணம் ஆயிற்று. அதிலும் கல்கியினால். சில பிரச்சினைகளை அங்கு அவர் சந்திக்க நேர்ந்தாலும், கல்கியின் அன்பு அவரை பத்திரிகைக்குத் துணை ஆசிரியராக ஆக்கியது. கல்கியில் பணியாற்றிய சமயம் அவர் படைத்த பல படைப்புகள் பாராட்டுகளைப் பெற்றன. எதிர்ப்புகளும் தோன்றின. அவருடைய ‘முல்லைக் கொடியாள்’, ‘பாலும் பாவையும்’ போன்றவை வெளியாகின. இந்த நிலையில் சினிமாவில் சேரும் ஆசையில் கல்கியை விட்டு விலகினார். டி.ஆர்.ராமண்ணாவின் ‘வாழப்பிறந்தவள்’ எனும் படத்துக்கு வசனம் எழுதினார். ‘அன்பு’ என்றொரு படம், அதில் வசனத்தோடு ஒரு பாடலையும் எழுதினார். சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ எனும் படத்தில் வசனமும் சில பாடல்களும் எழுதினார். இவற்றில் கிடைத்த வருமானம் தந்த உற்சாகத்தில் “மனிதன்” என்றொரு இதழை வெளியிட்டார். தொடர்ந்து ‘மணமாலை, ‘சொல்லு தம்பி சொல்லு’, ‘பார்த்திபன் கனவு’, ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ போன்ற படங்களுக்கும் வசனம் எழுதினார். பிழைக்க வழி தேடி மறுபடி ‘தினமணி கதிர்’ இதழில் சேர்ந்தார். அதில் ஓ மனிதா!, பாட்டில் பாரதம், எம்.கே.டி.பாகவதர் கதை, எம்.ஆர்.ராதா சிறைச்சாலை சிந்தனைகள் இப்படி பலவற்றை எழுதினார். வாழ்க்கை ஓட்டத்தில் வயது ஆனதே தெரியவில்லை. மணிவிழா காணும் வயது வந்துவிட்டதாம். 1975இல் போதும் இந்த வாழ்க்கை என்றோ என்னவோ இவர் மாரடைப்பால் காலமாகிவிட்டார். விந்தன் எழுதிய எண்ணற்ற சிறு கதைகள் 92 கதைகள் அடங்கிய இரு பாகங்கள், ஆறு புதினங்கள், ‘கண் திறக்குமா?’, ‘பாலும் பாவையும்’, ‘அன்பு அலறுகிறது’, ‘மனிதன் மாறவில்லை’, ‘காதலும் கல்யாணமும்’, ‘சுயம்வரம்’ ஆகியவை அவர் பெயரைச் சொல்ல இருந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ‘பாலும் பாவையும்’ கல்கியில் தொடராக வந்தது. இந்த நாவல் இவருக்குப் பெரும் புகழைச் சேர்த்துக் கொடுத்தது. விந்தன் எழுதிய திரைப்படப் பாடல்களில் சிறப்பாகக் குறிப்பிட வேண்டுமானால், ‘கூண்டுக்கிளி’ படத்தில் வந்த “கொஞ்சும் கிளியான பெண்ணைக் கூண்டுக்கிளி ஆக்கிவிட்டு கெட்டி மேளம் கொட்டுவது சரியா? தப்பா?” என்ற பாடலை சொல்லலாம். தமிழர்கள், தமிழில் எழுதி புகழ் சேர்த்த எழுத்தாளர்களை ஓரளவுக்கேனும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அந்த எண்ணத்தில்தான் ‘விந்தனின்’ வரலாறு தரப்படுகிறது.  32 கரிச்சான்குஞ்சு என்னதான் ஒரு எழுத்தாளர் சிறப்பாக எழுதியிருந்தாலும், அவருடைய படைப்புகளைப் பற்றி நான்கு பேர் பெருமைபட பேசினால்தான் அவர் யார் என்பது உலகுக்குத் தெரிய வரும். மக்களாகத் தேடிப் போய் ஒருவரிடம் இருக்கும் திறமையைப் போற்றும் வழக்கம் என்றும் இருந்ததில்லை. நான் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருந்து வந்தேன். அதன் தலைவர் அடிக்கடி சுற்றறிக்கைகள் ஆங்கிலத்தில் எழுதுவார். அவைகளைப் படித்தபின் உறுப்பினர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தன்னுடைய எழுத்துக்களை ஆகா, ஊகூ என்றெல்லாம் மற்றவர்கள் பாராட்டவேண்டும், தன்னுடைய ஆங்கிலப் புலமையை மற்றவர்கள் புகழ்ந்து பேச வேண்டும் அதன் மூலம் தான் ஒரு சிறந்த தலைவர் என்பது நிலைநாட்டப்பட வேண்டுமென்பது அவருடைய கருத்து. அதற்காக ஒருசிலரைத் தூண்டிவிட்டு ஆங்காங்கே பேச வைத்தார். இந்த கைத்தடிகள் ஒவ்வொரு உறுப்பினரிடமும் சென்று சுற்றறிக்கை படித்தீர்களா, அடடா, என்ன ஆங்கில நடை. இதுபோல எழுத யாருக்கு வரும் என்றெல்லாம் பேசித்திரிவார்கள். கால ஓட்டத்தில் சும்மா கிடந்தவனுக்கும், ஓகோ, இவர் நன்றாக ஆங்கிலம் எழுதுகிறார் போலிருக்கிறது என்கிற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இது ஒரு வகை!ஆனால், நான் இப்போது சொல்லப்போவது மற்றொரு வகை. கல்கி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்ற சிறந்த கதாசிரியர்கள் போல தமிழகத்தில் கரிச்சான்குஞ்சு என்கிற புனைப் பெயரில் கதைகள் எழுதிவந்த ஒரு சிறந்த கதாசிரியரும் இருந்தார். ஆனால் ஏனோ தெரியவில்லை, அவரைப் பற்றி அதிகம் யாரும் பேசக்காணோம். ஆகையால் அவரைப் பற்றிய வரலாற்றுச் சுருக்கத்தை இங்கு வெளியிடலாம் என்று இதனை எழுதுகிறேன். கரிச்சான்குஞ்சு எனும் இந்த மூத்த தலைமுறை எழுத்தாளரை வயதில் மூத்த சிலர் நினைவில் வைத்திருக்கலாம். ஆனால் இளைஞர்களுக்கு இவரைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. கரிச்சான்குஞ்சுவின் இயற்பெயர் ஆர்.நாராயணசாமி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை பேராசிரியர் கே.ஜி.சேஷாத்ரி எழுதி சாகித்ய அகாதமி வெளியிட்டிருக்கிறது. இவர் மன்னார்குடியில் இருக்கும் தேசிய உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர். இவர் பிறந்தது நன்னிலம் அருகிலுள்ள சேதினிபுரம். 1919 ஜூலை 10 இவர் பிறந்த நாள். தந்தையார் இராமாமிருத சாஸ்திரி, தாய் ஈஸ்வரி அம்மாள். தந்தையார் இளமையிலேயே மறைந்துவிட்டதால், தாயார் வறுமை காரணமாக குடந்தையில் ஒரு சத்திரத்தில் சமையல் வேலை செய்து வந்தார். வறுமை காரணமாக இவர் தாய்மாமன் இருந்த பெங்களூரில் சம்ஸ்கிருதம், வேதம் பயின்றார். மதுரையில் வந்து தமிழும், சம்ஸ்கிருதமும் பயின்று வித்வான் சிரோமணி பட்டம் பெற்றார்.  தொடக்கத்தில் சென்னையில் இராமகிருஷ்ணா பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அதன்பின் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளி, விஷ்ணுபுரம் உயர்நிலைப் பள்ளி அதன்பின் தொடர்ச்சியாக மன்னார்குடி தேசிய உயர்நிலைப் பள்ளியில் என்று ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டார்.  இவருடைய எழுத்துப் பணி “மலர்ச்சி” எனும் கலைமகளில் 1940இல் வெளியான கதையோடு ஆரம்பமாகியது. இவருடைய சமகால எழுத்தாளர்களாக இருந்த தி.ஜானகிராமன், கு.ப.ராஜகோபாலன், எம்.வி.வெங்கட்ராம், ஆகியோரும் இவருடைய நண்பர்களே. அந்தக் காலத்தில் திருச்சியிலிருந்து “சிவாஜி” எனும் இதழ் வெளியாகியது. இதன் ஆசிரியர் திருலோக சீதாராம். இந்த “சிவாஜி”யில் இவர் தொடர்ந்து எழுதினார். வாழ்க்கையில் கஷ்டம் ஒன்றையே கண்டுவந்த இவருக்கு நல்ல மகள் கிடைத்து, அவர் மூலம் இவருக்கு நிம்மதியான வாழ்க்கையும் அமைந்தது. இவருடைய வாழ்வு 1992 ஜனவரி 19ஆம் தேதி முடிவடைந்தது. இவர் தனது வாழ்நாளில் சுமார் 200 சிறுகதைகளும், ஒரு புதினம், பல மொழிபெயர்ப்புகள் இவற்றைத் தமிழ் மொழிக்குத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். கரிச்சான்குஞ்சுவின் சிறுகதைத் தொகுதிகள் 11 வெளியாகியிருக்கின்றன. அவை:– 1. காதல் கல்பம் 2. குபேர தரிசனம் 3. வம்ச ரத்தினம் 4. தெய்வீகம் 5. அன்றிரவே 6. கரிச்சான்குஞ்சு கதைகள் 7. சுகவாசிகள் 8. தெளிவு 9. கழுகு 10. ஒரு மாதிரியான கூட்டம் 11. அம்மா இட்ட கட்டளை புதினம்: “பசித்த மானிடம்”. வரலாறு: 1. சங்கரர் 2. கு.ப.ரா. 3. பாரதி தேடியதும் கண்டதும் மொழிபெயர்ப்புகள்: 1. இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும். 2. தொனி விளக்கு இவருடைய “காதல் கல்பம்” எனும் சிறுகதை ஒரு கப்பல் பயணம் பற்றியது. இங்கிலாந்திலிருந்து கிளம்பிய பாய்மரக் கப்பலில் இந்தியா வந்தவர்கள் பற்றிய இந்தக் கதையில் பயணம் செய்யும் ஆங்கிலேயர்களுக்கு இருந்த அபிப்பிராயம், உதவாக்கறை ஆட்களும் இந்தியா சென்றால் செல்வந்தனாகலாம் என்பதுதானாம். அதில் பயணம் செய்த ஒரு இளைஞன் பற்றிய கதை இது. இந்தக் கதையில் கதாபாத்திரங்களுக்குப் பெயர்கள் கிடையாது.  “லக்ஷப்பாட்டி” என்றொரு கதை. 1967 “சிவாஜி” ஆண்டு மலரில் வெளியானது. அதில் ஒரு பாட்டி, தன் ஏழை பேரனுக்கு, அவன் தனக்கு சேவை செய்ததைப் பாராட்டி “இதோ பார் அம்பி! உனக்கு இரண்டு லட்சம் தருகிறேன். இனிமேல் உனக்கு முன்னேற்றம்தான்” என்று ஒரு பொட்டணத்தைக் கொடுக்கிறாள். பேரன் பிரித்துப் பார்க்க அதில் இருந்தது திருநீறு. அதில் அவள் லக்ஷம் தடவை ராமநாமாவை எழுதி எழுதி வைத்ததாம். இப்படி முடிகிறது கதை. “அம்மா” என்றொரு கதை. வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அன்றைய நடுத்தர குடும்பத்தின் வறுமை, கஷ்டங்கள், பெண்களின் தியாகம் இவற்றை விளக்கும் கதை இது. “காதல் காவியம்” என்ற கதை 1973இல் வெளிவந்தது. இந்தக் கதை மனவருத்தத்தில் இருந்த ஒரு தம்பதியரை இணைத்து வைத்ததாம். அதுதான் கதை.  “புதிய நசிகேதன்” எனும் கதை 1973இல் வெளிவந்ததுதான். பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் பற்றிய கதை இது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய படைக்கும், இந்தியப் படைக்கும் நடந்த போர் பற்றிய விவரங்கள். வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியது இது. கரிச்சான்குஞ்சுவின் கதைகள் பெரும்பாலும் மனித உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும். அவர் காலத்தில் இவருடைய பெருமையை எழுதுலகம் நன்கு புரிந்து கொண்டிருந்தது. இதற்கு ஒரு நிகழ்ச்சியைச் சொல்லலாம். ஒருமுறை இவர் சென்னை சென்றார். கையில் இருந்த பணமெல்லாம் செலவாகிவிட்டது. ஊர் திரும்ப பணம் இல்லை. இவர் “ஆனந்தவிகடன்” அலுவலகம் சென்றார். அங்கு போய் ஆசிரியரிடம் ஐந்து ருபாய் பணம் கடனாக வேண்டும், ஊர் போய்ச்சேர்ந்து கதை எழுதி அனுப்பி கடனைத் தீர்த்து விடுகிறேன் என்றாராம். அவரோ, அங்கேயே உட்கார்ந்து கதையை எழுதிக் கொடுத்துவிட்டுப் பணம் வாங்கிச் செல்லும்படி சொன்னார். இவரும் அப்படியே அங்கேயே உட்கார்ந்து ஒரு கதை எழுதிக் கொடுத்துவிட்டுப் பணம் வாங்கிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தாராம். எப்படி இருக்கு? இவரைப் பற்றி இன்னொரு செய்தியும் கூட சுவாரசியமானது. இவருடைய தோற்றம் தலையில் குடுமி, வேதப் படிப்பு, நெற்றியில் பட்டை திருநீறு, சந்தனக் கீற்று, ஆனால் இவர் ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி. கும்பகோணத்தில் ஒரு சமயம் கம்யூனிச இயக்கம் சார்ந்த பீப்பிள்ஸ் வார் குரூப் நடத்திய ஊர்வலத்தில் “புரட்சி ஓங்குக!” என்று கோஷமிட்டுக் கொண்டு முன்வரிசையில் சென்றவர் இந்தக் கரிச்சான்குஞ்சு. இப்போது புரிகிறதா கரிச்சான்குஞ்சு யார் என்று? 33 ராஜாஜி   [] [Rajaji 2] [] ராஜாஜி அவர்களுடைய பிறந்த நாளையொட்டி வெளியாகும் சிறப்புக் கட்டுரை இது: ராஜாஜி 1878 டிசம்பர் 10ஆம் தேதி தமிழகத்தின் அப்போதைய சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி எனும் ஊரில் ஓர் ஆண் மகவு பிறந்தது. பின்னாளில் அந்தக் குழந்தை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பணிபுரியும் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்? ராஜகோபாலன் எனும் நாமகரணம் பெற்ற இந்தக் குழந்தை பின்னர் ராஜகோபாலாச்சாரியாராக ஆகி பின்னர் ராஜாஜி என்றும் சி.ஆர். என்றும் அழைக்கப்பட்ட மேதை, தீர்க்கதரிசி, தலைசிறந்த அறிவாளி. இவருடைய 134ஆம் பிறந்த நாள் இந்த மாதம் 10ஆம் தேதி வந்து சென்றது. இந்த நேரத்திலாவது தமிழகம் தந்த இந்தப் பெரியோனின் வரலாற்றின் பக்கங்களைச் சிறிது புரட்டிப் பார்க்கலாமே! சேலம் மாவட்டம் தொரப்பள்ளியில் பிறந்த ராஜகோபாலன் பெங்களூர் செண்ட்ரல் காலேஜிலும், பின்னர் சென்னை ராஜதானி கல்லூரியிலும் பயின்றார். சட்டம் படித்த இவர் 1900இல் அதாவது தனது 22ஆம் வயதில் வக்கீலாக தொழிலில் இறங்கினார். இவருடைய திறமை காரணமாக புகழ் பெற்ற வக்கீலாக இருந்தார். சேலம் நகரசபையில் முதலில் உறுப்பினராகவும் பிறகு அதன் சேர்மனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திரப் போர் சூடு பிடிக்கத் தொடங்கிய சமயத்தில் ரெளலட் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் ஈடுபட்டார். வைக்கம் சத்தியாக்கிரகம் சட்டமறுப்பு இயக்கம் ஆகியவற்றிலும் பங்கு கொண்டார். 1930இல் வடக்கே காந்திஜி நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரகத்தைப் போல தெற்கே திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை தொண்டர்களுடன் சென்று உப்பு எடுத்து சத்தியாக்கிரகம் செய்து முதன் முறையாக சிறையில் அடைக்கப்பட்டார். 1937இல் நாடு முழுவதும் நடந்த தேர்தலில் சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலுக்குப்பின் இவர் மாகாணத்தின் பிரதமராக (அப்போது முதல்வரை அப்படித்தான் அழைப்பர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரை இங்கிலாந்து அறிவித்தபின் 1940இல் இவர் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சி 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நடத்தியபோது இவர் அதில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரசிலிருந்தும் விலகியிருந்தார். யுத்த நேரத்தில் நாம் இங்கிலாந்துடன் ஒத்துழைத்து நமது சுதந்திரத்துக்கு முயற்சி செய்ய வேண்டுமென்று விரும்பியதால், இவர் 1942 க்விட் இந்தியா இயக்கத்தில் ஈடுபடவில்லை. காங்கிரஸ் நாட்டு பிரிவினைக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தபோது, இந்து முஸ்லீம் கலவரங்களையும், படுகொலைகளையும் தவிர்க்கத் தனி நாடு ஏற்படுவதே சிறந்தது என்று எண்ணி இவர் முகமது அலி ஜின்னாவுடனும் முஸ்லிம் லீகுடனும் பேச வேண்டுமென்று விரும்பினார். 1946இல் கீழ்வானில் இந்திய சுதந்திரத்தின் உதயம் தெரிந்த நேரத்தில் டெல்லியில் உருவான இடைக்கால மத்திய சர்க்காரில் நேரு தலைமையில் இவர் தொழில்துறை, விநியோகம், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். 1947, 1948இல் இந்திய சுதந்திரத்துக்குப் பின் மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்கத்துக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டார். அதன் பின் லார்டு மெளண்ட் பேட்டனுக்குப் பிறகு கடைசி கவர்னர் ஜெனரலாக 1948 முதல் 1950 வரை பதவி வகித்தார். 1951, 1952 காலகட்டத்தில் இவர் டெல்லியில் மத்திய சர்க்காரில் உள்துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.  இந்தியா ஜனநாயக குடியரசாக அறிவிக்கப்பட்டு புதிய அரசியல் சாசனத்தின்படி முதல் பொதுத்தேர்தல் 1952இல் நடைபெற்றது. அதில் சென்னை மாகாணத்துக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. எதிர்கட்சிகள் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் பெருமளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஜவஹர்லால் நேருவின் விருப்பப்பட்டியும், காமராஜ் போன்றோரின் சம்மதத்துடன் ராஜாஜியை அழைத்து சென்னை மாகாண முதலமைச்சராக ஆகும்படி வற்புறுத்தவே இவர் முதல்வர் ஆனார். 1953இல் இவர் கொண்டு வந்த ஆதாரக் கல்வியை எதிர் கட்சியும் காங்கிரசில் ஒரு சாராரும் இது ‘குலக்கல்வி முறை’ என்று குற்றம்சாட்டி எதிர்க்கவே, இவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு 1954இல் வெளியேறினார். 1959இல் இவர் காங்கிரசிலிருந்து விலகி சுதந்திரா கட்சி என்று தனிக்கட்சி துவக்கினார். சோஷலிசம் பேசிவந்த காங்கிரசை எதிர்த்து வலதுசாரி கொள்கைகளைக் கொண்ட கட்சி என்று பிரகடனப்படுத்திக் கொண்டு சுதந்திராக் கட்சி பிரபலமாக வளர்ந்து வந்தது. பெரும் புள்ளிகள் இந்தக் கட்சியில் சேர்ந்தனர். 1962, 1967, 1972 ஆகிய வருடங்களில் நடந்த தேர்தல்களில் இந்தக் கட்சி போட்டியிட்டது. சென்னை மாகாணத்தில் 1967இல் அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு தி.மு.க.அமைச்சரவை அமைய இவருடைய சுதந்திரா கட்சி தி.மு.கவுடனும் இதர கட்சிகளுடனும் ஒரு கூட்டணி அமைத்து போட்டியிட்டு காங்கிரசைத் தோற்கடித்து காரணமாக விளங்கியது. 1967இல் விழுந்த காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் எழவேயில்லை. ராஜாஜி சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நல்ல புலமை உடையவர். பாரத புண்ணிய பூமியின் தலைசிறந்த இதிகாசங்களான மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் நூலாக எழுதி வெளியிட்டவர். கர்நாடக இசையிலும் வல்லவர். இவர் எழுதிய “குறையொன்றும் இல்லை” எனும் பாடலைப் பாடாத பாடகர்களே இருக்க முடியாது. இவர் திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்காக எழுதிக் கொடுத்து அவர் பாடிய பாடல்கள் உண்டு. தமிழ்நாட்டு ஆலயங்களில் ஆலயங்களுக்குள் சில சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அனுமதிக்காத நிலை இருந்து வந்தது. அதனால் இவர் தென் தமிழ் நாட்டில் மதுரையில் மதுரை வைத்தியநாத ஐயர் தலைமையில், பசும்பொன் தேவர் துணையுடன் மீனாக்ஷி ஆலயத்தில் ஆலயப் பிரவேசத்தை நடத்தி முடித்தார். ஹரிஜனங்கள் மேம்பாட்டுக்காக ராஜாஜியும் மதுரை வைத்தியநாத ஐயர் போன்ற அவருடைய ஆதரவுத் தலைவர்களும் அயராது பாடுபட்டனர். 1937இல் இவர் பிரதமராக இருந்தபோது கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார், பின்னர் இவரே இந்தியை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தத் துணை புரிந்தார். மகாத்மா காந்தியின் மனசாட்சியின் காப்பாளர் என்று இவரை ஜவஹர்லால் நேரு வர்ணித்தார். 1897இல் அலமேலு எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். இரு மகன்கள் இரு பெண்கள். 1916இல் இவரது மனைவி இறந்தார். இவரே குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து வளர்த்தார். இவரது மகன்களில் ஒருவரான சி.ஆர்.நரசிம்மன் நாடாளுமன்ற உறுப்பினராக 1952லிருந்து 1962 வரை இருந்திருக்கிறார்.  1965இல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டல் வலுத்தது. 1965 ஜனவரி 26 முதல் இந்தி அரசாங்க அலுவல் மொழியாக ஆகியது. இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்கக்கூடாது என்று போராட்டம் வெடித்தது. 17-1-1965இல் திருச்சியில் இந்தி எதிர்ப்பு மகாநாட்டை ராஜாஜி கூட்டினார். அதில் இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் இந்திய அரசியல் சட்டத்தை கடலில் தூக்கி எறியவேண்டுமென பேசினார். 1967 தேர்தலில் தி.மு.க.வுடன் இவருடைய சுதந்திராக் கட்சி கூட்டணி அமைத்து தனது 88ஆம் வயதிலும் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காங்கிரசை ஒழித்துக் கட்டுவதே தனது வாழ்வின் லட்சியம் என்று பேசினார். தேர்தலில் தி.மு.க. வென்றது. சிஎன்.அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு மு.கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். 1971இல் இவர் மதுவிலக்கை தளர்த்திவிட்டு அதற்கு மாநிலத்தின் நிதிநிலைமைதான் காரணம் என்று கூறிவந்தார். சுந்தந்திராக் கட்சி இந்த மதுவிலக்குத் தளர்வை எதிர்த்து ஆதரவை நீக்கிக் கொண்டது. 1972இல் ராஜாஜியின் உடல்நிலை தளர்ந்து போயிற்று. 94 வயதை அடைந்த ராஜாஜி சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். 1972 டிசம்பர் 25 கிருஸ்துமஸ் தினத்தன்று மாலை 5.44க்கு அவர் உயிர் பிரிந்தது. அவர் மகன் சி.ஆர்.நரசிம்மன் அவருக்குப் பக்கத்தில் இருந்தார். இலக்கிய உலகுக்கு அவர் அளித்த கொடை அதிகம். 1922இல் “சிறையில் தவம்” எனும் நூலை எழுதினார். தனது 1921, 22 ஆண்டுகளில் சிறை வாழ்க்கையை பிரதிபலித்தது இந்த நூல். 1951இல் இவர் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் சுருக்கி நூலாக “வியாசர் விருந்து” என்றும் “சக்கரவர்த்தி திருமகன்” என்றும் நூலாக எழுதினார். 1965இல் இவர் “திருக்குறள்” நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பகவத் கீதை, உபநிஷத் பற்றி நூல்கள் எழுதி வெளியிட்டார். சாக்ரடீஸ் பற்றி “சோக்ரதர்” எனும் நூலை எழுதினார். 1958இல் இவருக்கு சாஹித்ய அகாதவி விருது கிடைத்தது. கே.எம்.முன்ஷியுடன் இணைந்து இவர் பாரதிய வித்யா பவனை உருவாக்கினார். “இந்துயிசம் – ஒரு வாழ்க்கைத் தத்துவம்” எனும் நூலை எழுதி வெளியிட்டார். இவர் அணு ஆயுதங்களுக்கு எதிரானவர். வெளிநாட்டுப் பயணங்களை ஏற்காத இவர் அணு ஆயுத எதிர்ப்புக்காக அமெரிக்கா சென்று ஜனாதிபதி கென்னடியைச் சந்தித்துப் பேசியது வரலாற்றின் ஏடுகளில் பதிவான சிறப்பான செய்தியாகும். அவர் இவருக்கு அளித்த மரியாதை வேறு யாருக்கும் கொடுத்ததில்லை என்கின்றன அமெரிக்கப் பத்திரிகைகள். போற்றுவார் ஒரு புறம், இவரைத் தூற்றுவார் ஒரு புறமுமாக இவர் தன் வாழ்க்கையை நிஷ்காம்யகர்மமாக நினைத்துத் தனது 94ஆம் வயதில் அமரர் ஆனார். ராஜாஜி என்ற சொல்லுக்கு சுடர்மிகும் அறிவு என்று பொருள் கொள்ளும்படியாக அமைந்தது இவரது வாழ்க்கை. வாழ்க ராஜாஜியின் புகழ். 34 ராஜாஜியும் காமராஜரும் [] ராஜாஜியும் காமராஜரும் (இந்தக் கட்டுரையை எழுதியவர் ஒரு புகழ்பெற்ற காங்கிரஸ்காரர். நகைச்சுவையோடு நீண்ட நேரம் பேசக்கூடியவர். ஆவேசமாகவும் பேசுவார், கேட்போரை அழவும் வைத்துவிடுவார். சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகும்படி பல பழமொழிகளை உதிர்த்துக் கிண்டலாகவும் பேசுவார். 1942இல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தமிழகத்தில் இவர்தான் பெரிய ‘ஹீரோ’ எனச் சொல்லும்படி நம்பமுடியாத சம்பவங்கள் நடந்தேறின. இவர் யார்? கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு இவர் யார் என்பதைப் பாருங்கள்.) 1942இல் ராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டார். க்விட் இந்தியா இயக்கம் வன்முறை இயக்கம் என்பது அவர் கருத்து. அதன் பின்னர் அவரை காங்கிரசில் சேர்க்க சிலர் முயன்றனர். தமிழ் நாட்டின் காங்கிரஸ் தலைமை எதிர்த்தது. இந்த சூழ்நிலை குறித்த நமது ‘புகழ்பெற்ற’ கட்டுரையாளர் என்ன சொல்கிறார் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம். [] Chinna Annamalai with Rajaji & MKT Bhagawathar “காங்கிரசிற்கு ராஜாஜி வேண்டாம்” என்று தமிழ் நாட்டுக் காங்கிரஸ்காரர்களில் ஒரு பகுதியினர் கிளர்ச்சி நடத்தினர். இந்தக் கிளர்ச்சியைத் தலைவர் காமராஜ் ஆதரித்தார். மற்றும் பல காங்கிரஸ் தலைவர்களும் அதே எண்ணம் கொண்டு தொண்டர்களைத் தூண்டி வந்தனர்.  “காங்கிரசிற்கு ராஜாஜி வேண்டும்” என்று தலைவர்களில் ஒரு சாராரும், தொண்டர்களில் சிறுபான்மையினரும் வாதாடினார்கள். நான் சிறுவயது முதற்கொண்டே ராஜாஜியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வந்தவன். அரசியலிலும் சரி, தமிழ்த் தொண்டிலும் சரி ராஜாஜி உடன் இருந்து பல காரியங்கள் செய்து வருபவன். ஆகவே “ராஜாஜி வேண்டும்” என்ற கோஷ்டியில் நான் சேர்ந்து பணிபுரிவது இயற்கையே. ஆனால் காமராஜ் என் மீது தனி அபிமானம் கொண்டிருந்தார். 1942 போராட்டத்தில் எனது ‘சாகசம்’ அவரைக் கவர்ந்திருந்தது. எனது நகைச்சுவைப் பேச்சு அவருக்கு மிகவும் பிடிக்கும். [] ஒரு நாள் நான் காமராஜ் அவர்களைப் பார்க்கப் போயிருந்தபோது என்னிடம் மிகவும் கோபமாக பேசினார். “ராஜாஜி 1942 போராட்டம் செய்தவர்களை எல்லாம் ‘குண்டர்கள், பலாத்காரவாதிகள்’ என்றெல்லாம் ஏசிப்பேசி நமது போராட்டத்தை எதிர்த்தாரே மறந்து விட்டீர்களா? 1942 போராட்டத்தை நடத்திய நீங்கள் குண்டரா? நான் குண்டாவா? இப்படிப்பட்டவர்களைக் காங்கிரசில் வைத்துக் கொள்ளலாமா? 1942 ஆகஸ்டில் தியாகம் செய்யாதவர்கள் காங்கிரசிற்கே வேண்டாம்” என்று பொரிந்து தள்ளினார். நாம் அமைதியாகச் சொன்னேன். “ராஜாஜியை ஆகஸ்ட் தியாகி இல்லை என்று சொல்லுகிறீர்கள். அதனால் என்ன, அவர் செப்டம்பர் தியாகி, அக்டோபர் தியாகி, நவம்பர் தியாகி, டிசம்பர் தியாகி — பல ஆண்டுகளாகப் பல மாதங்கள் தியாகம் செய்த பெரியவரை – சிறந்த அறிஞரை நான் இழக்க விரும்பவில்லை” என்றேன். “காங்கிரஸ் தொண்டர்கள் பெரும்பாலோர் வேண்டாம் என்று சொல்லும்போது நீ மட்டும் ஏன் கிறுக்கனாக இருக்கிறாய்?” என்றார். “எனக்கு காந்தி கிறுக்கு – காந்தியடிகளை நம்பி காங்கிரசுக்கு வந்தவன். மகாத்மாஜி “ராஜாஜியை வேண்டாம்” என்று சொல்லவில்லையே. ராஜாஜியை ஏற்றுக் கொள்ளும்படிதானே ‘ஹரிஜன்’ பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.” “நீங்கள் எல்லாம் ஏன் காந்திஜி பேச்சை மீறுகிறீர்கள்? காந்திஜிக்கு விரோதமான இக்காரியம் செய்யும் உங்களுடன் நான் ஒருக்காலும் ஒத்துழைக்க மாட்டேன். காந்தியடிகளின் விருப்பத்தைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பிரச்சாரம் செய்வேன்” என்றேன். “சரி, சரி போ – போய் அந்தக் கிழவனைக் கட்டிக் கொண்டு அழு” என்று சீறினார். நான் அமைதியாக வந்துவிட்டேன். அதன் பின்னர் “ராஜாஜி வேண்டும்”, “வேண்டாம்” கிளர்ச்சி பெரிதாக நடந்தது. ராஜாஜியை காங்கிரஸ் உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் சேர்த்துக் கொண்டார். ராஜாஜியை வேண்டாம் என்று சொல்பவர்களை ‘க்ளிக்’ என்று மகாத்மாஜி ஹரிஜன் பத்திரிகையில் எழுதினார். உடனே காந்திஜியை கண்டனம் செய்து காங்கிரஸ் தொண்டர்கள் பலர் பேசினார்கள். சில ஊர்களில் காந்தியடிகளின் படங்கள்கூட எரிக்கப்பட்டன. இப்படியாகத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லோலப் பட்டது. கடைசியில் ஒரு வழியாக ராஜாஜி மத்திய அரசில் மந்திரியானார். அத்துடன் அந்தப் பிரச்னை தீர்ந்தது. ஆனால் திரு காமராஜ் அவர்கள் அதன் பின்னர் ராஜாஜியை ஆதரித்தவர்களை நம்புவதில்லை. காங்கிரஸ் கமிட்டிகளில் எதிலும் வந்து விடாதபடி பார்த்துக் கொண்டார். நான் எப்போதும்போல் காங்கிரஸ் பிரசாரம் செய்து கொண்டிருந்தேன். நாளாக ஆக, தலைவர் காமராஜ் அவர்கள் பழையபடி என்னுடன் சுமுகமாகப் பழக ஆரம்பித்தார்கள். ராஜாஜி வங்காள கவர்னராகி, அதன் பின்னர் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகி மிகுந்த புகழுடன் பதவி விட்டு சென்னை வந்து தங்கியிருந்தார். 1952 தேர்தலில் காமராஜ் சுற்றுப்பயணம் செய்யும்போது என்னைக் கூடவே கூட்டிக் கொண்டு போனார். ரொம்பவும் அன்பு காட்டினார். நானும் “இனி காமராஜ் நம்பிக்கையைப் பெற்று விடலாம் என்று மகிழ்ந்திருந்தேன். தேர்தலில் முதலமைச்சர் குமாரசாமி ராஜா தோற்றார். காங்கிரஸ் பெரும்பான்மை இழுபறியாகிவிட்டது. காமராஜ் பார்லிமெண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் மந்திரிசபை அமைப்பதானால் ராஜாஜியைத் தவிர வேறு யாராலும் சமாளிக்க முடியாது என்று குமாரசாமி ராஜா கருதினார். மீண்டும் ராஜாஜியை முதலமைச்சராகக் கொண்டு வருவதை காமராஜ் எதிர்த்தார். கடைசியில் சர்தார் வல்லபாய் படேலும், நேருஜியும் ராஜாஜிதான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று தீர்மானமாகக் கூறிவிட்டார்கள். காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால் காங்கிரஸ்காரர்கள் கீழ்ப்படிய வேண்டியதுதானே? ஆனால் காமராஜ் எதுவும் கூறாமல் மெளனமாக இருந்து வந்தார். ராஜாஜி மந்திரிசபை அமைத்தார். கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்த்தார்கள். “ராஜாஜி மந்திரிசபை எதிர்ப்புக் கூட்டம்” என்று மூலைக்கு மூலை போட்டார்கள். அவர்களுடன் காங்கிரஸ் எதிரிகள் அனைவரும் சேர்ந்து கொண்டார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டிகள் மெளனமாகவே இருந்தன. காமராசரும் நமக்கென்ன என்பது போல வாளாவிருந்தார். இதை என்னால் கொஞ்சம் கூட பொறுக்க முடியவில்லை. நேராக காமராஜரிடம் போனேன். “இப்படி இருந்தால் எப்படி?” என்றேன். “என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்றார். “மந்திரிசபை காங்கிரஸ் மந்திரிசபைதானே. அதை ஆதரித்து நாம் கூட்டம் போட்டு எதிர்க்கட்சிகளின் போக்கை அம்பலப்படுத்த வேண்டாமா?” என்றேன். “ராஜாஜியை எவன் கொண்டு வந்தானோ அவன் செய்யட்டும். நான் ஒன்றும் செய்யப் போவதில்லை” என்றார். “நீங்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர். நடப்பது காங்கிரஸ் மந்திரிசபை. இதை ஆதரிப்பது ஒரு காங்கிரஸ்காரன் கடமை அல்லவா?” என்றேன். “ஆமா! கடமைதான். நீ வேண்டுமானால் உன் கடமையைச் செய்” என்று கோபமாகப் பேசினார். “கடமையைக் கண்டிப்பாகச் செய்வேன்” என்று கூறிவிட்டு திரு ம.பொ.சி.யிடம் போனேன். பின்னர் சி.சுப்பிரமணியத்தைச் சந்தித்தேன். கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியவர்களைச் சந்தித்துப் பேசினேன். அதன் பலன் சென்னை கடற்கரையில் திரு ம.பொ.சி. தலைமையில் ராஜாஜி மந்திரிசபை ஆதரவுக் கூட்டம் பிரம்மாண்டமான முறையில் நடந்தது. ராஜாஜியும் வந்து கலந்து கொண்டார். பின்னர் பட்டி தொட்டிகளில் எல்லாம் மந்திரிசபைக்கு ஆதரவுக் கூட்டம் நடந்தது. கம்யூனிஸ்டுகள் ஒருவாறு அடங்கினார்கள். இவைகள் எதிலும் காமராஜ் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. என்மீது மீண்டும் அவர் கோபம் கொண்டார். ராஜாஜிக்கு இக்கட்டான நிலைமை உண்டானது. புதிய கல்வித் திட்டத்தைத் திரித்துக் கூறி ராஜாஜியை திராவிடக் கழகம் – முன்னேற்றக் கழகம் எல்லாம் எதிர்த்தார்கள். அப்போதும் தலைவர் காமராஜ் ராஜாஜிக்கு ஆதரவாக இருக்கவில்லை. அதனால் ராஜாஜி தன் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் காமராஜ் முதன் மந்திரியானார். ராஜாஜி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரு அண்ணாதுரை அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து 1967 தேர்தலில் காமராஜ் அவர்களையும் தோற்கடித்து, காங்கிரஸ் கட்சியையும் தோற்கடித்தார். ராஜாஜி – காமராஜ் சண்டையினால்தான், காங்கிரஸ் நாளாவட்டத்தில் பலவீனமடைந்தது. தேசிய சக்திகள் குன்ற தேச விரோத சக்திகள் பலமடைந்தன. காமராஜ் அவர்களை முறியடிக்க ராஜாஜி அவர்கள் செய்த முயற்சியில் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்துவிட்டது. பின்னர் ராஜாஜி – காமராஜ் இருவரும் ஒன்று சேர்ந்தும் கூட தி.மு.க.வைத் தோற்கடிக்க முடியவில்லை. தேசிய சக்திகள் மீண்டும் தமிழகத்தில் தலைதூக்க முடியாதபடி ராஜாஜி காமராஜ் பகை செய்துவிட்டது. அரசியலில் ராஜாஜி – காமராஜ் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களே ஒழிய, தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதித்தார்கள். ராஜாஜி தன் கடைசி காலத்தில் தமிழ அரசைக் காமராஜரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று மிகவும் விரும்பினார். காமராஜரைப் போன்ற நாணயமான வாழ்க்கை உடையவர்கள் அரசியலில் கிடைப்பது அரிது என்று ராஜாஜி கருதினார். இதைப் பகிரங்கமாக எழுதினார், பேசினார். ஆனால் ராஜாஜியின் எண்ணம் நிறைவேறவில்லை. அவர் அமரரானார். சொன்னால் நம்பமாட்டீர்கள்! யாருக்கும் கண்ணீர் விடாத காமராசர், ராஜாஜியின் சடலத்தைப் பார்த்ததும் ‘பொல பொல’வென்று கண்ணீர் சிந்தினார். (இதை எழுதியவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? இவர் 1942 க்விட் இந்தியா போராட்டத்தில் தூள் கிளப்பியவர். இவருக்காக ஒரு ஊரின் சிறைக் கதவுகள் உடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். யார் இவர்? நாளைக்குச் சொல்கிறேனே, ஒரு சிறு சஸ்பென்சோடு. கண்டுபிடிக்க முடிந்தவர்களுக்கு சபாஷ், தமிழக வரலாற்றை நன்கு படித்தவர்கள் என்று பாராட்டுகிறேன்.) “காமராஜ் – ராஜாஜி” குறித்து நேற்று வெளிவந்த கட்டுரையை எழுதியவர் திரு சின்ன அண்ணாமலை. அவருடைய “சொன்னால் நம்பமாட்டீர்கள்” எனும் நூலில் வெளியான கட்டுரை அது. இவர் செட்டிநாட்டில் தேவகோட்டையைச் சேர்ந்தவர். தமிழ் நூல்கள் வெளியீட்டாளர். தமிழ்ப் பண்ணை எனும் இவரது பதிப்பகம் பல எழுத்தாளர்கள் கூடும் இடமாக இருந்தது. இவர் 1942இல் கைது செய்யப்பட்டு திருவாடனை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து சிறைக் கதவை உடைத்து இவரை வெளிக் கொணர்ந்தனர். பின்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இவர் காங்கிரஸ் கட்சியிலும் பின்னர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்திலும் இருந்தவர். தங்கமலை ரகசியம் போன்ற பல திரைப்படங்களை எடுத்தவர். சரோஜா தேவியை திரையுலகத்துக்கு அறிமுகம் செய்தவர். சிவாஜி ரசிகர் மன்றத்தைத் தோற்றுவித்தவர். 35 காந்திஜிக்கு ராஜாஜியின் நட்பு [] [Rajaji & Gandhiji 2] []   காந்திஜியின் மனச்சாட்சி என்று ராஜாஜி அழைக்கப்பட்டார். எப்படி அப்படியொரு நட்பும், நம்பிக்கையும் நிலவியது என்பது பலரும் அதிசயிக்கும் செய்தி. காந்திஜி வாயால் அந்த சூழ்நிலையைப் பார்ப்போம். “தென்னாடு எப்பொழுதுமே எனக்குச் சொந்த வீடுபோல் தோன்றும். தென்னாப்பிரிக்காவில் நான் செய்த வேலையின் காரணமாகத் தமிழர் மீதும் தெலுங்கர் மீதும் எனக்கு ஒருவகையான தனி உரிமை இருப்பதாகவே நான் உணர்ந்தேன். தென்னாட்டின் நல்ல மக்கள் என் நம்பிக்கையை என்றும் பொய்பித்தது இல்லை. காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காரின் கையொப்பத்துடன் அழைப்பு வந்தது. ஆனால் அந்த அழைப்புக்கு முக்கியமான காரணஸ்தராக இருந்தவர் ராஜகோபாலச்சாரியாரே என்பதைப் பிறகு நான் சென்னைக்குப் போகும் வழியில் தெரிந்து கொண்டேன். அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது அதுவே முதல் தடவை என்று சொல்லலாம். அது எப்படியாயினும் முதல் தடவையாக ஒருவரையொருவர் நேரில் அறிந்து கொண்டது அப்போழுதுதான். காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார் போன்ற நண்பர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரிலும், பொது வாழ்க்கையில் மேலும் தீவிரமான பங்கு வகிக்கலாம் என்ற நோக்கத்தின் பேரிலும், அப்பொழுது கொஞ்ச காலத்திற்கு முன்னால்தான் ராஜகோபாலாச்சாரியார் சென்னையில் வக்கீல் தொழிலை நடத்தச் சேலத்திலிருந்து வந்திருந்தார். சென்னையில் அவரோடேயே நாங்கள் தங்கினோம். ஆனால் அவருடன் இரு தினங்கள் தங்கியிருந்ததற்குப் பின்னாலேயே இதை நான் கண்டு பிடித்தேன். ஏனெனில், நாங்கள் தங்கியது ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காருக்குச் சொந்தமான பங்களா ஆகையால் அவருடைய விருந்தினராகவே நாங்கள் தங்கியிருக்கிறோம் என்று எண்ணினேன். ஆனால், மகாதேவ தேசாய் எனக்கு விஷயத்தைக் கூறினார். அவர் வெகு சீக்கிரத்தில் ராஜகோபாலாச்சாரியாருடன் நெருங்கிய பழக்கம் கொண்டுவிட்டார். ராஜகோபாலாச்சாரியாரோ, தமது சங்கோஜத் தன்மையினால் எப்பொழுதும் பின்னுக்கே இருந்து வந்தார். ஆனால், மகாதேவ தேசாய் எனக்கு யோசனை சொன்னார். “இவருடன் நீங்கள் நெருங்கிய பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் ஒரு நாள் சொன்னார். அவ்வாறே செய்தேன். போராட்டத்தின் திட்டங்களைக் குறித்துத் தினமும் சேர்ந்து விவாதித்தோம். ஆனால், பொதுக்கூட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு எந்த வேலைத் திட்டமும் எப்பொழுதும் எனக்குத் தோன்றவில்லை. ரெளலட் மசோதா முடிவில் சட்டமாக்கப்பட்டு விடுமானால், அதை எதிர்த்துச் சாத்வீக சட்ட மறுப்பு செய்வது எப்படி என்பது எனக்கு விளங்கவே இல்லை. சட்டத்தை மறுப்பதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளித்தால்தான் அச்சட்டத்தை ஒருவர் மீற முடியும். அதில்லாது போனால், மற்றச் சட்டங்களை நாம் சாதிவிக முறையில் மீற முடியுமா? அப்படிச் செய்வதாயின் அதற்கு எந்த இடத்தில் வரம்பை நிர்ணயிப்பது? இதையும் இதுபோன்ற பல விஷயங்களையும் குறித்து நாங்கள் விவாதித்தோம். விஷயத்தை நன்கு பரிசீலனை செய்து முடிவுக்கு வருவதற்காக ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார், தலைவர்கள் அடங்கிய சிறு கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.அதில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டவர்களில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரும் ஒருவர். சத்தியாக்கிரக சரித்திரத்தின் நுட்பமான விவரங்கள் அடங்கிய விரிவான குறிப்பு நூல் ஒன்றை நான் தயாரிக்க வேண்டும் என்று அவர் யோசனை கூறினார். அந்த வேலை என் சக்திக்குப் புறம்பானது என்பதை உணர்ந்தேன். அதை அவரிடம் தெரிவித்தும் விட்டேன். இந்த ஆலோசனைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கையில், ரெளலட் மசோதா சட்டமாகப் பிரசுரமாகிவிட்டது என்ற செய்தி கிடைத்தது. அதைப் பற்றி யோசித்தவாறே அன்றிரவு தூங்கி விட்டேன். மறுநாள் அதிகாலையில் வழக்கமாக எழுவதற்குக் கொஞ்சம் முன்பாகவே எழுந்து விட்டேன். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே உள்ள நிலையில் நான் இருக்கும்போது திடீரென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அது கனவைப் போன்றே இருந்தது. காலையில் அதன் விவரம் முழுவதையும் ராஜகோபாலாச்சாரியாரிடம் கூறினேன். “நேற்றிரவு கனவில் ஒரு யோசனை வந்தது. பொது ஹர்த்தாலை நடத்த வேண்டும் என்று தேச மக்களைக் கேட்டுக் கொள்வது என்பதே அது. ஆன்மத் தூய்மை செய்து கொள்ளும் ஒரு முறையே சத்தியாக்கிரகம். நம்முடைய போராட்டமோ, ஒரு புனிதமான போராட்டம். ஆகையால், அதை ஆன்மத் தூய்மை செய்து கொள்வதோடு ஆரம்பிப்பதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே, இந்திய மக்கள் எல்லோரும் அன்று தங்கள் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்யட்டும். முஸ்லிம்கள் ஒரு நாளுக்கு மேல் பட்டினி விரதம் இருக்க மாட்டார்கள். ஆகவே, பட்டினி விரதம் இருக்கும் நேரம் 21 மணி என்று இருக்க வேண்டும். இந்த நமது கோரிக்கையை எல்லா மாகாணங்களுமே ஏற்றுக் கொண்டு நடத்தும் என்று சொல்லுவதற்கிலை. ஆனால் பம்பாய், சென்னை, பிகார், சிந்து ஆகிய மாகாணங்கள் அனுசரிப்பது நிச்சயம் என்று எண்ணுகிறேன். இந்த இடங்களிலெல்லாம் ஹர்த்தால் சரியானபடி அனுஷ்டிக்கப் பட்டாலும் நான் திருப்தியடையக் காரணம் உண்டு என்றே கருதுகிறேன். என்னுடைய இந்த யோசனையை ராஜகோபாலாச்சாரியார் உடனே ஏற்றுக் கொண்டார். பிறகு இதை மற்ற நண்பர்களுக்கு அறிவித்தபோது அவர்களும் வரவேற்றார்கள். சுருக்கமான வேண்டுகோள் ஒன்றை நான் தயாரித்தேன். 1919 மார்ச் 30ஆம் தேதி ஹர்த்தால் அனுஷ்டிப்பது என்று முதலில் நிர்ணயிக்கப் பட்டது. ஆனால், பிறகு ஏப்ரல் 6ஆம் தேதி என்று மாற்றினோம். இவ்விதம் மக்களுக்குச் சொற்ப கால அவகாசத்துடனேயே அறிவித்தோம். நீண்ட காலத்திற்கு முன்னால் அறிவிப்பது சாத்தியமில்லை. இதெல்லாம் எவ்விதம் நடந்தது என்பதை யார் அறிவார்கள்? இந்தியா முழுவதிலும் ஒரு மூலையிலிருந்து மற்றோர் மூலை வரையில் பட்டணங்களும் கிராமங்களும் அன்று பூரணமான ஹர்த்தாலை அனுஷ்டித்தனர். அது மிகவும் அற்புதமான காட்சியாக இருந்தது. “சத்திய சோதனையில்” காந்திஜி. [] 36 ஆலத்தூர் சகோதரர்கள் [] தமிழ் நாட்டில் இசையுலகில் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் வெற்றி நடை போட்ட இசை ஜாம்பவான்களில் ஆலத்தூர் சகோதரர்களும் அடங்குவர். இவர்கள் ஸ்ரீநிவாச ஐயர், மற்றொருவர் சிவசுப்பிரமணிய ஐயர் ஆவர். வாய்ப்பாட்டு வித்தகர்களான இவர்களில் ஸ்ரீநிவாச ஐயர் 1912இல் பிறந்தவர், காலமானது 1980இல். சிவசுப்பிரமணிய ஐயர் பிறந்தது 1916, காலமானது 1964. இவர்கள் திருச்சியில் வாழ்ந்தவர்கள், என்றாலும் தமிழகம் முழுவதும் இவர்களுடைய இசைப் பயணம் வெற்றிகரமாக இருந்து வந்தது. ஆலத்தூர் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டார்களே தவிர இவ்விருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் அல்ல. இவர்களில் சிவசுப்பிரமணிய ஐயரின் தந்தையார் வெங்கடேச ஐயர் என்பவரிடம்தான் இவர்கள் இசை பயின்றனர், அந்த நட்பில் சகோதர பாவத்துடன் இவர்கள் இரட்டையர்களாக இசைப் பணியைத் தொடர்ந்தனர். முதன் முதலாக இவர்களுடைய இசை நிகழ்ச்சி மேடையேறியது 1928இல், திருவையாற்றில் நடக்கும் சற்குரு ஸ்ரீ தியாகராஜரின் ஆராதனை விழாவில்தான். அதுமுதல் இவர்களது மிக உயர்ந்த, இசையுலக மேதைகளாலும் பாராட்டப்படும் அளவுக்கு மிகவும் சுத்தமான கர்நாடக இசையை இவர்கள் தமிழகத்துக்கு வழங்கி வந்தார்கள். கர்நாடக இசையுலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி அமைந்து விடும். சிலருக்கு அவர்களுடைய குருவின் தாக்கம் அதிகம் இருக்கும். ஆனால் சிலர் மட்டும் தங்களுக்கென்று ஒரு தனி பாணியில் பாடுவது என்பது இசையின் சிறப்பு. ஆலத்தூர் சகோதரர்களின் பாணி அப்படியொரு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இசையுலக ஜாம்பவான் எனப் போற்றப்பட்ட செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் அவர்களே ஆலத்தூர் சகோதரர்களின் பாணியை வெகுவாகப் புகழ்ந்து பேசியிருப்பதிலிருந்தே இவர்களுடைய மேன்மையை உணர முடிகிறது. ஆலத்தூரார்களின் மேடைக் கச்சேரிகளுக்கு இசையுலக ஜாம்பவான்கள் பக்கவாத்தியக்காரர்களாக அமைந்தனர். திருவாலங்காடு சுந்தரேச அய்யர், மாயவரம் கோவிந்தராஜ பிள்ளை, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, மைசூர் செளடையா, டி.என்.கிருஷ்ணன், லால்குடி, கண்டதேவி அழகிரிசாமி போன்ற மாமேதைகள் எல்லாம் இவர்களுக்கு வாசித்திருக்கிறார்கள். [] இவர்கள் திருச்சியில் வசித்து வந்த காரணத்தாலும், அந்த நாட்களில் இப்போது போல நினைத்தவுடன் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வது முடியாத காரியம் என்பதாலும், பெரும்பாலும் இவர்கள் திருச்சி நகரை மையமாகக் கொண்டு சுற்றுப்புற ஊர்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி வந்தார்கள். மேலே சொன்ன வயலின் இசைக் கலைஞர்கள் தவிர, மிருதங்கம் பக்க வாத்தியம் வாசித்தவர்களில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை, பழனி சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் முக்கியமானவர்கள். பின்னாளில் இவர்கள் தஞ்சையிலும், சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடத்துகின்ற சமயங்களில் பாலக்காடு மணி ஐயரும் இவருக்கு வாசித்திருக்கிறார். இவர்களுடைய திறமையை அறிந்த திருவாங்கூர் மகாராஜா இவரை தன்னுடைய ஆஸ்தான வித்வான்களாக நியமித்திருந்தார். 1944 முதல் 68 வரையிலான காலகட்டத்தில் இவர்கள் அந்தப் பெருமைக்குரிய பதவியில் இருந்தார்கள். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய சிஷ்ய பரம்பரையொன்றை இவர்கள் உருவாக்கி விட்டுச் சென்றிருக்கின்றனர். திரையுலகில் புகழ் பெற்றிருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் தன்னுடைய கர்நாடக இசையை வலுப்படுத்திக் கொள்ள இவர்களிடம் இசைப் பயிற்சி செய்திருக்கிறார். 37 கவி காளமேகம் காளமேகம் கவிஞனாக ஆன கதையை முன்பு பார்த்தோம். இனி அவன் படைப்புகளில் இப்போது இரு பாடல்களைப் பார்ப்போம். 1. முதல் பாட்டு: காளமேகம் காஞ்சிபுரம் போனான். அப்போது வரதராஜ பெருமாள் கோவிலில் கருடோத்சவம் நடந்து கொண்டிருந்தது. பெருமாள் வீதி புறப்பாடு நடந்து கொண்டிருந்தது. வரதராஜப் பெருமாளை கருட வாகனத்தில் ஏளப் பண்ணி (இது வைணவ பரிபாஷை: பொருள் எழுந்தருளப் பண்ணி) வீதி வலம் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது இவனுக்கு பெருமாளைப் பாடவேண்டுமென்றும் ஆசை, ஆனால் அவன் தான் சைவத்துக்கு மாறிவிட்டானே, இப்போது பெருமாளைப் பாடுவதைக் கண்டு யாராவது குறை சொன்னால் என்ன செய்வது. சரி! இதற்கு ஒரு வழி செய்யலாம் என்று பெருமாள் மீது நிந்தாஸ்துதி (இகழ்வது போல புகழ்வது) பாடிவிடலாம் என்று பாடினான். “பெருமாளும் நல்ல பெருமாள் அவர் தம் திருநாளும் நல்ல திருநாள் – பெருமாள் இருந்திடத்திற் சும்மா இராமையினால் ஐயோ பருந்து எடுத்துப் போகின்றதே பார்!” “பெருமாள் நல்ல பெருமாள் தான். அவருக்குக் கொண்டாடும் இந்தத் திருநாளும் நல்ல திருநாள்தான். ஆனாலும் என்ன செய்வது. இந்த பெருமாள் சும்மா கோயிலுக்குள் உட்கார்ந்திருக்காமல் இப்படி வீதியில் சுற்றத் தொடங்கியதால், பருந்து வந்து அவரைத் தூக்கிக் கொண்டு போகிறதே” என்று பாடினான். 2. இரண்டாம் பாட்டு. காளமேகம் காஞ்சிபுரம் போன அதே நேரத்தில் அங்கிருந்த விநாயகப் பெருமானுக்கும் திருவிழா நடந்து கொண்டிருந்தது. கணபதியை மூஞ்சூறு வாகனத்தில் வைத்து ஊர்வலம் கொண்டு போகிறார்கள். காளமேகத்துக்கு உடன் பிறந்த கிண்டல் இங்கும் வேலை செய்கிறது. இவன் அலறுகிறான். ஐயையோ! இது என்ன அக்கிரமம்! சிவனுடைய பிள்ளையை இப்படி ஒரு எலி இழுத்துக் கொண்டு போகிறதே. இதனைக் கேட்பார் இல்லையா? சிவபெருமானுடைய மழு எங்கே போயிற்று. அதனால் தாக்க வேண்டாமா? திருமாலிடம் சக்கரம் இருக்குமே. அது என்னவாயிற்று. அதனால் எலியை அறுத்துவிடலாமே. பிரம்மன் கையில் உள்ள தண்டம் எங்கே? அதால் அடிக்கக்கூடாதா? அவைகளெல்லாம் பறிபோய்விட்டனவா?” யானையை ஒரு எலி இழுத்துக் கொண்டு போகிறதே! என்று புலம்புகிறான். “மூப்பான் மழுவும், முராரி திருச் சக்கரமும் பாப்பான் கதையும் பறிபோச்சோ – மாப்பார் வலமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ எலி இழுத்துப் போகின்ற தென்?” மூப்பான் என்பது சிவன், அவன் கையில் உள்ளது மழு என்னும் ஆயுதம். (சிறிய கோடரி போன்ற ஆயுதம்). முராரி என்பது பெருமாள், அவர் கையில் உள்ளது சுதர்சன சக்கரம். பாப்பான் என்பது பிரம்மனைக் குறிக்கும், அவன் கையிலுள்ளது தண்டம் என்கிற கதை. இந்தக் கிண்டல்தான் காளமேகத்தின் முத்திரை. 38 ஆர். வெங்கட்ராமன் [] இந்தியாவின் ஜனாதிபதி பதவி வகித்தவருள் இரண்டாவது தமிழர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள். முதலாமவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். ஜனாதிபதி பதவிக்கு உரிய கெளரவத்தை, அறிவாற்றலை, திறமையை வெளிப்படுத்தியவர்களில் ஆர்.வி. அவர்களும் ஒருவர். அவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பது இந்த மாவட்டக் காரர்களுக்கு பெருமை. இளம் வயது முதல் நாட்டுப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு முழுமையான வாழ்வு வாழ்ந்தவர் ஆர்.வி. தமிழகத்தில் அமைச்சராக இருந்த காலம் இம்மாநிலத்தின் பொற்காலம் எனலாம். அவர் காலத்தில்தான் அரசு போக்குவரத்துக் கழகம் உருவானது. அவர் காலத்தில்தான் தமிழகத்தின் பல இடங்களில் தொழிற்பேட்டைகள் தோன்றின. அவர் காலத்தில்தான் திருவெறும்பூரில் ‘பெல்’ தொழிற்சாலை, நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலை போன்ற பல தொழில்கள் தோன்றின. எளிமையும், நேர்மையும் அவருடைய கொள்கை. தலைவர் காமராஜ் அவர்களின் வலது கரம் போல இருந்து பணியாற்றி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தவர் ஆர்.வி. அவர் வரலாறு தமிழக அரசியல் காரணமாகவோ, அலட்சியம் காரணமாகவோ அல்லது என்ன காரணத்தினாலோ அவ்வளவாக பிரபலமாகாமலே இருந்து வருகிறது. தேவையற்ற வர்களைப் பற்றி ஓகோ என்று எழுதிவரும் ஊடகங்களும் இவரைப் போன்ற ஒரு ஆக்க பூர்வமான தலைவரை திரைபோட்டு மூடப்பார்க்கிறது என்பது வருத்தத்துக்குரியது. ஆர்.வி.அவர்கள் ஓர் உண்மையான தேசபக்தர். நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவர். அவர் வாழ்நாளில் அவர் வகித்த எந்த பதவியானாலும் அந்தப் பதவிக்கு கெளரவமும், அந்தப் பதவியினால் நாட்டுக்கும் மக்களுக்கும் அளவற்ற சேவையைச் செய்தவர் என்கிற புகழுக்கு உரியவர். அவரை ஒரு சாதாரண அரசியல் வாதி என்பதைக் காட்டிலும் நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒரு தீர்க்கதரிசி எனலாம். அவர் ஜனாதிபதியாக இருந்த காலம் அமைதியான அரசியல் இருந்த காலம் அல்ல. அவர் பதவிக் காலத்துக்குள் இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று பிரதம மந்திரிகள் பதவி ஏற்றுக் கொள்ளும் நிலைமை எல்லாம் உருவானது. அப்போது நடந்த அரசியல் சதுரங்கத்தில் நேர்மை தவறாமல், மனச்சாட்சிக்கும், அரசியல் சாசனத்துக்கும் உண்மையாக நடந்து கொண்டு தம்முடைய கெளரவத்தை உயர்த்தியவர் ஆர்.வி. இன்னும் சொல்லப் போனால் பொதுவாழ்வில் அவரைப் போல நேர்மையும், நாணயமும், சத்தியத்தின்பால் நாட்டமும் கொண்ட வேறொருவரை இன்று பார்ப்பது அரிது. வாசாலகமாகப் பேசவும், தன்னைத் தன் அளவுக்கு மீறி புகழ்ந்துகொள்வதும், இல்லாததை இருப்பதுபோல் காட்டிக் கொள்ளுவதும் போன்ற காரியங்கள் எதையும் அவரிடம் பார்க்கமுடியாது. அதுபோலவே காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காகவும், சுயநலத்திற்காகவும் யாரிடமும், எந்தக் காரணம் கொண்டும் அவர் துதிபாடி காரியங்களைச் சாதித்துக் கொண்டது கிடையாது. [] சுதந்திரப் போர் காலத்தில் மகாத்மா காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் போன்றவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடந்த அதே நேர்மை சுதந்திர இந்தியாவிலும் அவர்களது கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் காட்டியவர் ஆர்.வி. காந்தி, நேரு காட்டிய பாதையிலிருந்து சற்றும் வழுவாமல் கடைசிவரை ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தவர் ஆர்.வி. இனி கர்ம வீரர் காமராஜரின் வலது கரமான ஆர்.வி பற்றிய சுயவிவரங்களைப் பார்க்கலாம். இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ராஜாமடம் எனும் கிராமத்தில் 1910 டிசம்பர் 4இல் பிறந்தார். திருச்சி தேசியக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதார முதுகலை பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து 1935இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். வக்கீலாக பணியாற்றிக் கொண்டே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1938இல் இவர் ஜானகி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தேசபக்தி காரணமாக காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1942இல் பம்பாய் காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை நிறைவேற்றியது. நாட்டின் தலைவர்கள் அனைவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இளம் வக்கீலான ஆர்.வி. அப்போது அந்தப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டு இரண்டு ஆண்டுகள் சிறை சென்றார். தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்ட ஆர்.வி. தொழிலாளர் நலச் சட்டத்திலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார், அதன் மூலம் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு ஆதரவும், அவர்களுக்கு ஆதரவாக பல வழக்குகளில் வெற்றியும் பெற்றுத் தந்திருக்கிறார். ஆகஸ்ட் புரட்சியின்போது சிறை சென்று திரும்பியபின் ஆர்.வி. காங்கிரஸ் இயக்கத்தின் தொழிலாளர் பிரிவில் தீவிர பங்காற்றத் தொடங்கினார். 1949இல் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் Labour Law Journal எனும் இதழைத் தொடங்கி நடத்தினார். சென்னையில் பல தொழிற்சங்கங்களில் இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிலாளர் நலனுக்காக இவர் அல்லும் பகலும் பாடுபட்டு, அவர்களின் அன்புக்கும், நன்றிக்கும் பாத்திரமானார். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இவர் காலத்தில் தமிழகத்தின் பல தொழில்களிலும் வளர்ந்து தொழிலாளர்களின் வாழ்வை நிச்சயிக்கும் முக்கியப் பணியில் ஈடுபட்டிருந்தது. ஐ.என்.டி.யு.சி. எனும் இந்தத் தொழிற்சங்கம் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியமைக்கு ஆர்.வி. ஒரு முக்கிய காரணம். [] சட்ட ஞானமும், தொழிலாளர் சட்டங்களில் உள்ள ஆற்றலும் இவரை அரசியலுக்கு இழுத்துச் சென்றது. அரசியல் நிர்ணய சபையில் இவரும் ஒரு உறுப்பினர் ஆனார். இந்த சபைதான் ஒரு உப கமிட்டியை நியமித்து இந்திய அரசியல் சட்ட வரைவை உருவாக்க ஏற்பாடு செய்தது. அதில் ஆர்.வி. முக்கிய பங்கு வகித்தார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த 1950 முதல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952 வரையில் இவர் பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருந்து பாடுபட்டார். இவரது அயராது உழைப்பைப் பார்த்த தலைவர் காமராஜ் இவரை 1952இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நிறுத்தி வெற்றிபெறச் செய்தார். 1957 வரை இவர் அந்தப் பதவியில் இருந்தார். 1957இல் நடந்த தேர்தலிலும் இவர் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். ஆனால் அங்கு அவர் நீண்ட காலம் பணியாற்றவில்லை. காரணம் அவரது சேவை தமிழகத்துக்குத் தேவைப்பட்டது. பெருந்தலைவர் முதல்வராகப் பதவி வகித்த போது இவர் சென்னைக்கு அழைக்கப்பட்டு, தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார். தொழிலாளர் நலம் தவிர, தொழில்கள், மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, வணிகவரித்துறை என்று பல துறைகளை இவர் கவனித்து வந்தார். பல வெளிநாடுகளுக்கு இவர் தொழிலாளர் நலம் குறித்த கூட்டங்களுக்கு அனுப்பப் பட்டார். நியுசிலாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற கூட்டத்துக்கு இவர் பிரதிநிதியாகச் சென்றார். 1967இல் இவர் மத்திய மந்திரிசபையில் ஒரு அமைச்சரானார். அங்கு இவர் தொழில்கள், தொழ்லாளர் நலன், மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை, ரயில்வே ஆகிய துறைக்குப் பொறுப்பு வகித்தார். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராகவும் இருந்தார். [] 1975 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் இவர் “சுயராஜ்யா” பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். மத்திய அரசாங்கத்தில் அரசியல் விவகாரக் குழுவிலும், பொருளாதார விவகாரங்களுக்கான குழுவிலும் இவர் அங்கம் வகித்திருக்கிறார். 1977இல் தென்சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லி சென்றார். ஆனால் அந்த ஆண்டில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஜனதா அரசு பதவி ஏற்றது. அப்போது ஆர்.வி. ஒரு எதிர்கட்சி எம்.பி.யாகவும் பணியாற்றியிருக்கிறார். பாராளுமன்ற வழக்கப்படி பொதுக்கணக்குக் குழுவுக்கு எதிர்கட்சி உறுப்பினர்தான் தலைவராக ஆவார்கள். அதுபோல அந்த ஆண்டு பொதுக்கணக்குக் குழுவுக்கு ஆர்.வி.தான் தலைவர். ஜனதா அரசு கவிழ்ந்து மறுதேர்தல் 1980இல் நடைபெற்ற போது இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு மீண்டும் பதவிக்கு வந்தது. அப்போதும் ஆர்.வி. தேர்தலில் வெற்றி பெற்று இந்திய அரசின் நிதி அமைச்சராக பதவி ஏற்றார். 1983இல் அமைச்சரவை மாற்றம் நடந்தது. ஆர்.வி. பாதுகாப்பு அமைச்சராக ஆனார். இவருடைய காலத்தில் நமது ராணுவம் நவீனமயம் ஆவதற்கு உண்டான அனைத்துப் பணிகளையும் இவர் செய்தார். ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்கு இவர் ஆற்றிய பணி முக்கியமானது. அப்போது வான்வெளி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை ஏவுகணை உற்பத்தித் துறைக்கு மாற்றியதும் ஆர்.வி.தான். அவர் காலத்தில் அந்தத் துறை அடைந்த வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டும் என்பது இல்லை, அல்லவா? [] 1984இல் இந்திய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1987இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1992 வரையில் அந்தப் பதவிக்குக் கெளரவம் சேர்த்தார். இவர் காலத்தில்தான் மூன்றுக்கும் மேற்பட்ட பிரதமர்கள் குறுகிய காலத்தில் பதவிக்கு வரும் நிலைமையும், நாட்டில் கூட்டணி அமைத்து அரசு அமைக்கும் நிலைமையும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இவர் நேர்மையாகவும், சற்றும் பாரபட்சமின்றியும் நடந்துகொண்டது வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட நிகழ்ச்சி. ஆனாலும் நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனை நல்லவரானாலும் அவருக்கும் ஒரு களங்கம் கற்பிக்கும் வழக்கம் உண்டு அல்லவா, அப்படி ஒரு சில கால நேரங்களில் அவரும் குறைகூறப்பட்டார். 1950 முதல் 1960வரையிலான காலகட்டத்தில் ஆர்.வி. பல சர்வதேச அமைப்புகளில் அங்கம் வகித்துப் பணியாற்றியிருக்கிறார். சர்வதேச நிதித் துறையில் I.M.F. எனப்படும் International Monetary Fundலும், International Bank for Reconstruction and Development, Asian Development Bank ஆகியவற்றில் பதவி வகித்திருக்கிறார். ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் இவர் இருந்திருக்கிறார். 1958இல் ஜெனீவா நகரில் நடந்த சர்வதேச தொழிலாளர் நல மாநாட்டில் இந்தியக் குழுவிந்த் தலைவராகச் சென்று கலந்து கொண்டிருக்கிறார். 1978இல் வியன்னா நகரில் நடந்த மகாநாட்டிலும் இவர் பங்கு பெற்றிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள United Nations Administrative Tribunal எனும் அமைப்பில் இவர் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். 1968இல் இவர் அதன் தலைவராகவும் இருந்திருக்கிறார். 1979 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். இவருக்குப் பல விருதுகள் கிடைத்தன. ஆனால் இவர் பெயருக்கு முன்பு அவற்றைப் போட்டுக்கொண்டு பெருமைப் பட்டுக் கொள்ளவில்லை. சென்னை பல்கலைக் கழகம், பர்துவான் பல்கலைக்கழகம், நாகார்ஜுனா பல்கலைக் கழகம், பிலிப்பைன்ஸ் பல்கலைக் கழகம் ஆகியவை இவருக்கு கெளரவ Doctor of Law எனும் பட்டத்தைக் கொடுத்து கெளரவித்திருக்கிறது. ரூர்க்கி பல்கலைக் கழகம் இவருக்கு Doctor of Social Sciences எனும் பட்டத்தைக் கொடுத்தது. சென்னை மருத்துவக் கல்லூரியில் இவர் Honorary Fellowஆக இருந்தார். இந்திய சுதந்திரப் போரில் பங்குகொண்டு சிறை சென்றமைக்காக இவருக்குத் தாமரப் பட்டயம் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. சோவியத் யூனியனுக்கு பெருந்தலைவர் காமராஜ் சென்றபோது இவரும் உடன் சென்றார். அப்போது இவருடைய அனுபவங்களையும் பெருந்தலைவரின் சுற்றுப்பயணம் குறித்தும் “Kamaraj’s Journey to Soviet Countries” எனும் தலைப்பில் எழுதிய நூலுக்கு ரஷ்யாவிலிருந்து வெளிவந்த “Soviet Land” விருது 1967இல் கிடைத்தது. ஐக்கிய நாடுகள் சபையில் இவர் ஆற்றிய பணிகளுக்காகவும் இவர் கெளரவிக்கப்பட்டார். நிறைவாக இவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இவர் காஞ்சி காமகோடி மடத்தின் 68ஆவது பீடாதிபதியாக விளங்கிய மகாசுவாமிகள் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பக்தர். காஞ்சி மடத்தின் கெளரவ ஆலோசகர் இவர். அந்த மகா சுவாமிகள் இவருக்கு “சத் சேவா ரத்னா” எனும் விருதை வழங்கி ஆசீர்வதித்தார். இவர் தனது 98ஆம் வயதில் சிறிதுகாலம் உடல் நலக் குறைவால் டெல்லி மருத்துவ மனையில் 27-1-2009 அன்று காலமானார். இவருக்கு மனைவி ஜானகி வெங்கட்ராமன் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர். 1 ஆசிரியரை பற்றி   தஞ்சை வெ.கோபாலன்   Tamilnadu Freedom Fighters கம்பராமாயணம் (இராமகாதை) உரைநடையில் பாரதி பயிலகம் வலைப்பூ தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள் Kamba Ramayanam Tamilnadu Freedom Fighters Kamba Ramayanam 2 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/