[] [பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர்] பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர் ஏற்காடு இளங்கோ மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.   This book was produced using Pressbooks.com. Contents - பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர் - 1. ஹெலன் கெல்லர் - 2. என்னுரை - 3. ஹெலன் கெல்லர் - 4. பிறப்பு - 5. நோய் - 6. திருப்பு முனை - 7. ஆனி சல்லிவன் - 8. கற்பித்தல் - 9. ஆரம்பக் கல்வி - 10. பேசக் கற்றுக் கொள்ளுதல் - 11. உயர் கல்வி - 12. கல்லூரி - 13. பொது உடமைக் கருத்து - 14. படைப்பாளி - 15. தொண்டு அமைப்பு - 16. அரசியல் - 17. தொழிற்சங்கம் - 18. காதல் - 19. மேடை பேச்சு - 20. சேவை - 21. உலக அமைதி - 22. புத்தகங்கள் - 23. தோழமை - 24. பயணங்கள் - 25. வளர்ப்பு நாய் - 26. மோப்ப சக்தி - 27. பொழுது போக்கு - 28. பொன்மொழிகள் - 29. அற்புதமான உழைப்பாளி - 30. பட்டமும் - விருதுகளும் - 31. என்றும் நினைவுகளில் - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர் [அட்டைப்படம்] பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர் ஏற்காடு இளங்கோ yercaudelango@gmail.com ஒருங்குறி மாற்றம் – மு.சிவலிங்கம் – musivalingam@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.   அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com [pressbooks.com] 1 ஹெலன் கெல்லர் பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர் ஏற்காடு இளங்கோ 2 என்னுரை தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் எனத் தற்போது பிரகடனம் செய்யப்படுகிறது. பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுதல் என்பதே இன்றைக்கு சாதனையாகக் கருதப்படுகிறது. இதற்காகவே பெற்றோர்களும் தன்னம்பிக்கை புத்தகங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். வெற்றி பெறுவதற்கான உபதேசங்கள் கொடுக்கப்படுகின்றன. அதிக மதிப்பெண்கள் பெறுதல் என்பது எதிர்காலத்தில் அதிக பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாக உள்ளது. விடா முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் உதாரணமாகச் சொல்லப்படுபவர்களில் ஹெலன் கெல்லரும் ஒருவர். விடா முயற்சியும், தன்னம்பிக்கையின் காரணமாக உலகமே அவரை திரும்பிப் பார்த்தது. கடின உழைப்பு, சமூக சேவை, கல்வி, சம உரிமை ஆகியவற்றிற்கான அவர் ஆற்றிய பெரும் பணியால் அவரை உலகம் போற்றியது. பார்வையற்ற, காது கேளாத ஒரு பெண், தடைகளைக் கடந்து மக்கள் சேவை புரிந்ததால் அவரை அதிசயப் பெண் என புகழ்ந்தனர். மக்கள் நலத்தில் அக்கறை கொண்டவரால் தான் உலகளவில் பிரபலம் அடைய முடியும் என்பதற்குஹெலன் கெல்லர் ஓர் உதாரணம். காது கேளாத, பார்வையற்ற பெண்ணின் வியப்படையச் செய்யும் சாதனை வாழ்க்கையை விவரிக்கும் புத்தகம். இதனைப் படிக்கும் போது சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்படும். இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த மனைவி திருமிகு. E. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த நண்பர் திருமிகு. S. நவசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. M. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் நன்றி. இப்புத்தகத்தை வெளியிட்டுள்ள freetamilebooks.com மிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகளுடன் – ஏற்காடு இளங்கோ 3 ஹெலன் கெல்லர் ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு தனித்திறமைகள் உள்ளன. அதனை அவன் சரியான வழியில், சமூக வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் போது சிறந்த மனிதனாக மாறி விடுகிறான். மனிதனின் மூளையின் ஆற்றல் திறன் என்பது மாமேதை எனப்படும் அறிஞர்களுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் வேறுபடுவதில்லை. மாமேதை எனப் போற்றப்படும் அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையை ஆராய்ந்து பார்த்தே இந்த முடிவுக்கு வந்துள்ளனர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட தனது மூளைத் திறனில் சுமார் 15 சதவீதம் மட்டுமே பயன்படுத்தி இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். [] ஒரு மனிதன் தன்னால் எது முடியும், எது முடியாது என்பதைத் தெளிவாக அறிந்துக் கொள்வதில்லை. தன்னால் இதெல்லாம் முடியாது என நினைக்கிறான். இதற்குக் காரணம் அவனிடம் போதிய தன்னம்பிக்கையும், உலகம் சார்ந்த அறிவும் இல்லாததே. இதற்கு தனி மனிதனை மட்டும் குறை கூறி விட முடியாது. ஒருவனை வழி நடத்துவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் சரியான வழிகாட்டியும் இல்லாததே காரணம். நம்மால் என்னென்ன முடியும் என்பதை முயன்று பார்ப்பதில் தவறு ஏதும் கிடையாது என்பதை உணர வேண்டும். அதற்குத் தொடர்ச்சியாக முயற்சி எடுக்க வேண்டும். எடுத்த முயற்சியிலிருந்து கிடைத்த அனுபவங்களைக் கொண்டு தொடர்ந்து, முயற்சி செய்தால் வெற்றி அடைவோம் என்பது பல சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது. கண்கள் இரண்டும் தெரியாது; காதுகள் இரண்டும் கேட்காது; வாய் பேச முடியாது. இப்படிப்பட்ட ஊனம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்டவர்களின் நிலை என்பது மிகவும் மோசமானது. இதனை யோசித்துப் பார்த்தால் வாழ்க்கை நடத்துவது என்பது எவ்வளவு சிரமம் எனத் தெரியும். இப்படிப்பட்ட மூன்று மிகப் பெரிய குறைபாடு கொண்ட ஒருவரால் உலக அளவில் பிரபலம் அடைய முடிந்தது என்றால் அதனை நாம் எப்படி பாராட்டுவது என்றே கூற முடியவில்லை. இதனை சிலர் உலகின் 8 ஆவது அதிசயம் என்கின்றனர். செவிட்டுத் தன்மையையும், பார்வையற்ற தன்மையையும் அவரால் மாற்ற முடியவில்லை. ஆனால் ஊமைத் தன்மையைக் கடும் முயற்சியால் மாற்றி வெற்றி கண்டார். பேசும் வல்லமை பெற்றார். பிறகு நான்கு மொழி பேசும் திறன் படைத்தவராக தன்னை வளர்த்துக் கொண்டார். கண் தெரியாத, காது கேளாத, ஊமையான அவர், தன்னுடைய விடா முயற்சியால் படிப்பையும் மேற்கொண்டார். அக்காலத்தில் மாற்றுத் திறனாளிகளில் அதிகம் படித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். அது மட்டுமல்ல, அவர்தான் உலகில் முதன் முதலாக பட்டம் பெற்ற மாற்றுத் திறனாளி ஆவார். அப்படிப்பட்டவரின் பெயரைத் தெரிந்துக் கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கத்தானே செய்யும். அவர்தான் ஹெலன் கெல்லர். ஊமையான இவர் பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராக விளங்கினார். பல நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றினார். 12 புத்தகங்களை எழுதினார். உலகம் போற்றும் சமூக சேவகியாகத் திகழ்ந்தார். பெண்கள், தொழிலாளர்களின் உரிமைக்காக போராடியவர். முதலாளித்துவத்தையும், உலக யுத்தத்தையும், அணுகுண்டுகளையும் எதிர்த்தவர். பொதுவுடமைக் கருத்துக்களில் ஆழமான நம்பிக்கைக் கொண்டவர். பார்வையற்றவர்களுக்காகத் தொண்டு நிறுவனம் ஏற்படுத்தினார். தன் வாழ்நாள் எல்லாம் அதற்காக உழைத்தார். அவரைப்பற்றி உலகம் முழுவதும் பல மொழிகளில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவரைப் பற்றி திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவர் ஒரு ஊமைப் படத்திலும் நடித்து இருக்கிறார். இவரை நாம் தன்னம்பிக்கையின் மொத்த உருவமாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. செவிடு, ஊமை, குருடு ஆகிய மூன்றும், பெரிய குறைகள் என்று அவர் கருதவில்லை. அவர் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து போராடினார். மன உறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொண்டார். அவரின் ஓயாத உழைப்பு அவரை உலகளவில் பிரபலம் அடையச் செய்தது. தன்னம்பிக்கையின் மறு உருவம், தீரமிக்க நங்கை, வரலாற்று நாயகி என அவரைப் புகழ்கின்றனர். வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை… எனக் கூறும் பொன்மொழியாக அவரின் வாழ்க்கை சிறப்படைந்து விட்டது. அவரின் வாழ்க்கை மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் அல்ல. ஆரோக்கியமாக வாழும் அனைவருக்குமே ஒரு வழிகாட்டி தான். அவரின் வாழ்க்கை வரலாறை படிக்கும் நாமும், சமூகத்தின் மேம்பாட்டிற்காக நம்மால் முடிந்ததைச் செய்வோம். இனி ஹெலன் கெல்லரை தெரிந்து கொள்வோம்… 4 பிறப்பு அமெரிக்க நாட்டில் உள்ள அலபாமா மாநிலத்தில் டஸ்காம்பியா (Tuscumbia) என்னும் ஊரில் 1880ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27ஆம் நாள் ஹெலன் கெல்லர் பிறந்தார். டஸ்காம்பியா ஒரு நகரமாக விளங்குகிறது. இங்கு ஹெலன் கெல்லர் பிறந்ததால் பிற்காலத்தில் இது உலகளவில் பிரபலம் அடைந்தது. இந்த நகரத்தில் 1815ஆம் ஆண்டில் மக்கள் குடியேறினர். ஹெலன் கெல்லர் தனது தாத்தாவால் கட்டப்பட்ட ஐவி கிரீன் என்னும் பண்ணை வீட்டில் பிறந்தார். இந்த வீடு 1820ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த வீட்டில் தான் ஹெலன் கெல்லர் தன் குழந்தைப் பருவத்தைக் கழித்தார். இங்கு தான் விளையாடினார். அந்த டாஸ்காம்பியாவின் வடமேற்கு பகுதியில் 300ஆவது எண் கொண்ட வீடாக உள்ளது. ஒவ்வொரு கோடை காலத்திலும், கெலன் நிறுவனத்தின் சார்பாக இங்கு பொது நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதத்தில் ஹெலன் கெல்லர் திருவிழாவும் இங்கு நடத்தப்பட்டு வருகிறது. [] ஹெலன் கெல்லரின் தந்தை ஆர்தர் ஹெச் ஹெலன். இவர் டஸ்காம்பியா வடக்கு அல்பாமைன் என்னும் உள்ளூர் நாளிதழ் ஒன்றின் பதிப்பாளராகப் பணிபுரிந்தார். தனது பண்ணையில் பருத்தி பயிரிட்டு வந்தார். மேலும் ராணுவத்தில் படைத்தளபதியாகவும் பணிபுரிந்து வந்தார். இவரின் தாயார் காதரின் ஆடம் கெல்லர். இவர் வர்ஜினியாவின் கவர்னர் மரபில் தோன்றியவர். ஹெலனின் ஒவ்வொரு செயலையும் கண்டு பெற்றோர்கள் மகிழ்ந்தனர். இவர்கள் இட்டப்பெயர் ஹெலன் ஆடம்ஸ் கெல்லர் (Helen Adams Keller) என்பதாகும். ஹெலனை மிகக் கவனத்துடனும், சிறப்புடனும் வளர்த்து, குடும்பத்திற்கு பெருமையும், உலகிற்கு முன் உதாரணமாக விளங்க வழி வகுத்தவர் இவரின் பெற்றோர்கள். 5 நோய் ஹெலன் பிறக்கும் போது முழு ஆரோக்கியத்துடனே பிறந்தார். பார்வையும், கேட்கும் திறனும் கொண்டவராகவே இருந்தார். ஒன்றிரண்டு வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தார். அவரின் குழந்தைத்தனத்தைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ந்தனர். தங்களை அம்மா, அப்பா என அழைப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். ஒவ்வொரு குழந்தையும் தங்களைப் பார்த்துப் பேசும் போது மகிழ்ச்சியடையாத பெற்றோர்கள் இருக்கவே முடியாது. தங்களின் குழந்தையின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என நம்பினர். ஹெலன் 19 மாதக் குழந்தையாக இருக்கும் போது அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. ஸ்கார்லட் (Scarlet Fever) அல்லது அது மூளைக் காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் கருதினர். இது 4-8 வயதுக்குக் குறைவான வயதுடைய குழந்தைகளுக்குத் தொற்றுகிறது. இதற்கு அக்காலத்தில் தடுப்பூசி கிடையாது. இந்த மூளைக் காய்ச்சல் கடுமையாக இருந்தது. அது குழந்தையின் உயிரைப் பறித்துவிடும் எனப் பயந்தனர். ஆனால் சில நாட்களில் குணமானது. இதன் விளைவாக ஹெலன் பார்க்கும் திறனையும், கேட்கும் திறனையும் இழந்தார். பேசும் திறனையும் இழந்தார். தன் பெயரைக் கூட கேட்டறிய முடியாத பச்சிங்குழந்தையின் பரிதாபமான நிலை. தனது உணர்ச்சிகளை சரியான முறையில் வெளிப்படுத்த முடியாத பரிதாபமான ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டது. இப்படி பாதிப்பு நமக்கு ஏற்பட்டால் நம்மால் என்ன செய்ய முடியும். இது மிக மிகக் கொடுமையானது. பார்க்கவும் முடியாமல், பேசவும் முடியாமல், காது கேட்காத நிலை ஏற்பட்டதால் ஹெலன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டார். தன் வாழ்நாள் இறுதி வரை இருண்ட வாழ்க்கையை அனுபவித்தார். [] மொழி என்பது ஒரு மனிதனை வளர்த்து எடுக்கும். ஆனால் பேச முடியாத போது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள சைகைதான் உதவும். ஹெலனின் சைகைகளை பெற்றோர்களால் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. ஆனால் ஹெலன் வீட்டில் இருந்த சமையல்காரரின் மகள் மார்த்தா வாஷிங்டனால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. அக்குழந்தைக்கு 6 வயது. அவளால் ஹெலன் என்ன சொல்கிறாள், என்ன கேட்கிறாள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இதன் மூலம் ஹெலன் குறிப்பிடும் சைகை மொழிகளில் 60க்கும் மேற்பட்டவற்றை அவரின் பெற்றோர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஹெலனிடம் மார்த்தா வாஷிங்டன் நெருங்கிப் பழகினாள். இரண்டு குழந்தைகளும் வீட்டின் உள்ளேயும், தோட்டத்திலும் விளையாடினார். இது பெற்றோர்களுக்கு ஒரு ஆறுதலை ஏற்படுத்தியது. ஹெலனும் வேறு ஒரு குழந்தையுடன் விளையாட முடிந்தது. 6 திருப்பு முனை ஹெலன் கெல்லர் பொருட்களைத் தொட்டு, தடவிப்பார்த்து பலவற்றைத் தானே கறறுக் கொண்டார். கேட்கும் தன்மையை இழந்த அவர் பொருட்களை முகர்ந்து பார்த்து சிலவற்றைத் தெரிந்து கொண்டார். சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) என்பவர் எழுதிய அமெரிக்கன் நோட்ஸ் என்னும் புத்தகத்தை ஹெலனின் தாய் 1886ஆம் ஆண்டில் படித்தார். கண் தெரியாத, காது கேட்காத பெண் லாரா பிரிட்ஜ்மென் (Laura Bridgman) என்பவர் எப்படி கல்வி கற்றார் என்பது அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது ஹெலனின் தாய்க்கு நம்பிக்கையை ஊட்டியது. தன்னுடைய மகளையும் படிக்க வைக்க முடியும் என்கிற ஒரு நம்பிக்கை பிறந்தது. லாரா பிரிட்ஜ்மென் (டிசம்பர் 21, 1829 – மே 24, 1889) என்கிற கண் தெரியாத, காது கேளாத பெண் முதன் முதலாக அமெரிக்காவில் ஆங்கில மொழி பயின்ற பெண் ஆவார். இது ஹெலன் கெல்லர் பிரபலம் அடைவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இவர் பூஸ்டனில் உள்ள பெர்கின்ஸ் பார்வையற்ற பள்ளியில் கல்வி கற்றார். ஜூலை 24, 1839 இல் இவர் தனது பெயரை முதன் முதலில் எழுதினார். இவர் கல்வி கற்றப்பின் இதே பள்ளியின் முதல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். இவரின் கதையை ஹெலனின் தாயார் படிக்காமல் இருந்திருந்தால் ஹெலனின் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். ஹெலனின் பெற்றோர்கள் மருத்துவர் ஜுலியன் ஷிஷோம் (Julian Chisolm) என்பவரைச் சந்தித்தனர். இவர் கண், காது, மூக்கு மற்றும் தொண்டை ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர். இவர் கிரகாம் பெல்லை சந்திக்குமாறு ஆலோசனை வழங்கினார். [] அலெக்சாண்டர் கிரகாம்பெல் தான் (Alexander Graham Bell) தொலைபேசியைக் கண்டுபிடித்தவர். இவர் காது கேளாதவர்களுக்கு சிறப்புப் பள்ளி நடத்தி வந்தார். இவர் ஒரு ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் விளங்கினார். இவரது தாயாரும், மனைவியும் செவிடர்கள் என்பதால் காது கேளாதவர்களின் மீது அக்கறை காட்டினார். காது கேளாதவர்களுக்காகப் பேசும் பயிற்சியைக் கற்று கொடுத்து வந்தார். ஹெலன் கெல்லரின் பெற்றோர்கள் 1887ஆம் ஆண்டு கிரகாம்பெல்லைச் சந்தித்தனர். அவர் அவர்களை பார்வையற்றோருக்கான பெர்சின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். இவரின் வழிகாட்டலால் ஹெலன் தனது 7ஆம் வயதில் பார்வை இழந்தோர் பயிலும் பள்ளியில் 1887ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளி 1829இல் ஆரம்பிக்கப்பட்ட மிகப் பழமையான பார்வையற்றோர் பள்ளியாகும். இங்கு ஆனி சல்லிவன் என்ற ஆசிரியையை ஹெலன் கெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இவர்தான் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை மாற்றியவர். கெலனின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுத்தியவர். 7 ஆனி சல்லிவன் ஹெலன் கெல்லரின் இருண்ட வாழ்க்கைக்கு கல்வி ஒளியை ஏற்றியவர். ஹெலனை உலகில் உச்சத்துக்குக் கொண்டு சென்ற ஆசிரியர். ஒரு ஆசிரியர் தனி கவனத்துடன் திறமையாக செயல்பட்டால் ஒருவரை உலகளவில் உயர்த்த முடியும் என்பதற்கு ஆனி சல்லிவன் (Anne Sullivan) ஒரு உதாரணமாகும். இவர் கெல்லருடன் 49 ஆண்டுகள் ஒன்றாகவே இருந்து தன் வாழ்வை அர்ப்பணித்தார். ஆனி சல்லிவன் ஒரு ஐரிஸ் – அமெரிக்கன் ஆசிரியை. ஒரு சிறந்த ஆசிரியை எனப் பெயர் பெற்றவர். ஏப்ரல் 14, 1866 இல் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்தார். இவர் தனது 5ஆவது வயதில் பார்வையை இழந்தார். பின்னர் தனது கண்ணில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதன் பலனாக ஓரளவு பார்வை கிடைத்தது. 1886இல் பெர்கின்ஸ் பள்ளியில் பட்டம் பெற்றார். பிறகு இந்தப் பள்ளியின் ஆசிரியராகச் சேர்ந்தார். இவருக்கு 20 வயது இருக்கும் போது ஹெலன் கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் மார்ச் 3, 1887இல் ஹெலன் கெல்லரின் வீட்டிற்கு ஆசிரியராகச் சென்றார். அது கெல்லரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பொன்னாள். அன்று முதல் அக்டோபர் 20, 1936 வரை ஹெலனுடனே இருந்தார். ஆம் அவர் இறக்கும் வரை கெல்லரின் ஆசானாகவே வாழ்ந்து மறைந்தார். ஆனி சல்லிவனின் தந்தை ஒரு மிகப் பெரிய குடிகாரர். இவரது தாயார் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டார். ஆகவே இவரின், இளமைப் பருவம் வறுமையும், துயரமும் நிறைந்ததாகவே இருந்தது. இவரின் 5 ஆவது வயதில் டிரக்கோமா நோயால் பாதிக்கப்பட்டார். பெற்றோர்கள் முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. ஆனி சல்லிவனுக்கு 7 வயது இருக்கும் போது தாய் இறந்து போனார். தந்தை குடிகாரன் ஆனதால் கவனிப்பாரற்று, 5 வயது சகோதரனுடன் ஆதரவற்றோர் விடுதி ஒன்றில் சேர்ந்தனர். ஏற்கனவே நோய் வாய்ப்பட்டிருந்த சகோதரனும் இறந்து விட்டதால் ஆனிக்கு என்று ஆதரவாக யாரும் இல்லை. சொல்லப்போனால் ஒரு அனாதை என்கிற நிலைதான். [] ஆனி சல்லிவன் பெர்கின்ஸ் என்னும் பார்வையற்றோர் பள்ளியில் படித்தார். இந்தப் பள்ளியில் தனது 14ஆவது வயதில் தான் சேர்ந்தார். இவருக்குப் பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தன. அதன் உதவியால் கண் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இருப்பினும் குறைந்தளவே பார்வை கிடைத்தது. இவர் சைகை மொழியில் சிறந்த வல்லுநர் ஆனார். பார்வையற்றக் குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அளவிற்கு திறமை கொண்டவராக ஆனி விளங்கினார். 8 கற்பித்தல் ஆனி பணம் பெற்றுக் கொண்டு, வீட்டிற்குச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியராக ஹெலன் வீட்டிற்குச் சென்றார். ஆனியின் பணி என்பது பணம் பெற்றுக் கொண்டு வேலை செய்யும் வேலையாள் அல்ல. கல்வி போதிக்கும் ஒரு ஆசானாகச் சென்றார். கூர்ந்த அறிவும், பொறுமையும் கொண்டவர். அவர் ஹெலனை புரிந்து கொண்டு அவரை நெருங்குவதற்குச் சில வாரங்கள் ஆனது. ஏனென்றால் ஹெலன் விரக்தியின் உச்சத்தில் கோபக்காரக் குழந்தையாக இருந்தார். ஆத்திரத்தில் பொருட்களைத் தூக்கி வீசுபவராகவே இருந்தார். இப்படி ஒரு கோபக்கார குழந்தையை இதற்கு முன்பு பார்த்திருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். [] ஹெலனை நன்கு புரிந்து கொண்ட ஆனி, ஹெலனுடன் நெருங்கிவருவதற்கே சில நாட்கள் ஆனது. ஹெலன் கோபத்தால் ஆனியின் கன்னத்தில் பல முறை அறைந்தும் இருக்கிறார். இதையெல்லாம் ஆசிரியர் சகிப்புத் தன்மையுடன் பொருத்துக் கொண்டார். அதே சமயத்தில் பாசத்துடன் நடந்து கொண்டார். ஆனியின் அரவணைப்பு தாயைப் போன்றதாக இருந்தது. இதனால் இருவருக்கும் இடையில் புரிதல் ஏற்பட்டது. ஹெலனிடம் இருந்த கோபத்தைப் படிப்படியாகக் குறையச் செய்தார். பிறர் பேசுவதை புரிந்து கொள்வதற்கான பயிற்சியளித்தார். பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதை புரிந்து கொள்ளும் கலையை கெல்லருக்குக் கற்பித்தார். அடுத்து விரல்களின் உதவியால் சைகை மொழியைக் கற்றுக் கொடுத்தார். ஆனி எழுதுவதற்குத் தனது ஆன்காட்டி விரலையேப் பயன்படுத்தினர். அந்த விரலால் ஹெலனின் இடது கையில் எழுதினார். கற்றுக் கொடுப்பவர் ஆள் காட்டி விரலை நீட்டி மற்ற விரல்களை மடக்கிக் கொண்டு, கற்பவரின் இடது கையில் எழுதுவதுதான் பார்வையற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் முறையாக இருந்தது. ஹெலன் வீட்டிற்கு ஆசிரியர் ஆனி வந்த போது அவளுக்கு ஒரு பொம்மையைப் பரிசாக வாங்கி வந்திருந்தார். அந்த பொம்மையிலிருந்து எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். ஹெலனின் உள்ளங்கையில் முதன் முதலாக D-o-l-l என ஒவ்வொரு எழுத்தாக எழுதிக் காட்டினார். ஹெலனுக்குத் தன் உள்ளங்கையில் எழுதியது மிகவும் பிடித்திருந்தது. விளையாட்டாக அது இருந்தது. ஆனாலும் அது பொம்மை என்பதைக் குறிக்கும் வார்த்தை என்பதைப் புரிந்து கொண்டார். தான் கற்ற அந்த முதல் வார்த்தையை தன் தாயின் கையைப் பிடித்து உள்ளங்கையில் எழுதிக் காட்டினார். அது ஹெலனுக்கும், தாய்க்கும் மிகப் பெரிய மகழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வார்த்தை உள்ளது என்பதை ஹெலனுக்குப் புரிய வைக்க ஆனி முயற்சி செய்தார். அவர் Mug (குவளை) என்பதை எழுதிக் காட்டினார். ஹெலனுக்கு அது பிடிக்கவில்லை. பொம்மையை தூக்கி எறிந்து உடைத்து விட்டார். ஹெலனது கோபம், அவனது பிடிவாதம் பற்றி நன்கு அறிந்திருந்த ஆனி, பொறுமையாக உடைந்த பொம்மையை கூட்டி எடுத்தார். ஹெலனுக்குப் பிடித்தமானவற்றை முதலில் கற்றுக் கொடுப்போம் என்கிற முடிவுக்கு வந்தார். ஹெலனுக்கு வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்க ஆனி எடுத்த முயற்சிகள் மிகவும் வியப்பை ஊட்டுபவையாகவே இருந்தது. ஹெலனுக்கு தண்ணீர் (Water) என்னும் வார்த்தையைக் கற்றுக் கொடுக்க, குழாய்க்கடியில் கையை வைத்து வேகமாக தண்ணீரைத் திறந்து விட்டார். குளிர்ந்த நீர் கையைத் தொட்டுச் செல்லும் போது W-A-T-E-R என்று ஆள் காட்டி விரலால் ஹெலனின் கையில் எழுதினார். அதனை ஹெலனிடம் சொல்லிக் காட்டினார். இது பொருளுடன் விளக்கக் கூடிய வார்த்தையாகும். இது ஹெலனுக்கு நன்கு புரிந்தது. ஒன்றை புதியதாகக் கற்றுக் கொண்டோம் என்பது ஹெலனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனை ஆசிரியரின் கையில் எழுதிக் காட்டினார். ஹெலனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட ஆனிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. தன்னுடைய மாணவி ஒன்றைக் கற்றுக் கொடுத்ததை புரிந்து கொண்டு உடனே அதனை எழுதியும் காட்டிவிட்டார். ஆனிக்கும் உற்சாகம் பிறந்து விட்டது. ஹெலனின் பெற்றோர்களும் இதனைக் கண்டு மகிழ்ந்தனர். தன்னால் ஹெலனுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை ஆசிரியருக்கு பிறந்து விட்டது. [] ஆரம்பத்தில் ஹெலனின் கையில் எழுதியதை அவர் விளையாட்டாகவேக் கருதினார். தான் கற்றுக் கொண்ட எழுத்துக்களை அவரால் பொருட்களோடு தொடர்புப்படுத்த முடியவில்லை. முதலில் தண்ணீருக்கு Water என அவர் கையில் எழுதிய பொழுது அவர் எழுத்துக்களைப் புரிந்து கொண்டார். ஆனால் அது தண்ணீர் என்று தெரியாது. தண்ணீர் குழாய்க்குக் கீழ் கெல்லரின் வலது கையில் தண்ணீர் படுமாறு வைத்து இடது கையில் Water என்று எழுதிக் காட்டினார். அப்போது ஹெலனின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அப்போது தான் முதன் முதலாக ஒரு பொருளைத் தொட்டு உணர்ந்து அதனைக் கற்றுக் கொண்டார். தண்ணீர் என்ன என்று தற்போது ஹெலன் புரிந்து கொண்டார். அப்பொழுதுதான் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பொருள் உண்டு என்பதை அவர் உணர்ந்தார். அதன் பிறகு ஒவ்வொரு பொருளையும், அதற்கான வார்த்தையைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஹெலனுக்குப் பிறந்தது. Water என்பதைக் கற்றுக் கொடுத்த உடனே ஹெலன் கையை தரையில் வைத்தார் ஆசிரியர். எர்த் (பூமி) என்று இடது கையால் எழுதிக் காட்டினார். ஹெலன் ஒரு புதிய உலகில் காலடி எடுத்து வைத்துவிட்டார். எர்த் என்பதை எழுதிக் காட்டினார். உடனே அம்மா, அப்பா, தங்கை, ஆசிரியர் என வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார். அம்மாவைத் தொட்டு அம்மா என ஹெலன் எழுதிக் காட்டினார். அப்பாவைத் தொட்டு அவர் கையில் அப்பா என எழுதிக் காட்டினார். அன்றைய தினத்தில் சுமார் 30 சொற்களைக் கற்றுக் கொண்டார். பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. கற்பித்தலை வீட்டிற்குள்ளே மட்டும் அல்லாமல், வீட்டுக்கு வெளியேயும் அழைத்துச் சென்று கற்பித்தார். அது ஹெலனுக்கு உற்சாகத்தை ஊட்டியது. செடி, பூ, மரம், காய், பழம், மண், நீரூற்று என்று ஒவ்வொன்றையும் தொட்டுக் காட்டி, கையில் எழுதிக் காட்டினார். இப்படி ஒவ்வொன்றாக ஒரு குழந்தைக்குக் கற்றுக் கொடுத்தார். இது சாதாரணமாக கற்பிக்கும் முறை என்றாலும், பார்வையற்ற, காது கேளாத, பேச முடியாத குழந்தைக்குக் கற்பித்தல் என்பது மிகவும் புதுமையானது. ஹெலனுக்குப் புரிய வைப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இதனை கற்றுக் கொடுக்க சகிப்பும், பொறுமையும் தேவை. தான் எடுத்த முயற்சிக்கு உடனே பலன் கிடைக்கவில்லை என்றாலும், ஹெலன் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட்டதால் ஆனியால் தொடர்ந்து கற்பிக்க முடிந்தது. தானே பலவற்றைத் தொட்டுப் பார்த்தார். அதற்கான வார்த்தை என்ன என்பதை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டார். ஒருவர் தனது சந்தேகங்களைத் தானே கேட்டு தெரிந்து கொள்வதன் மூலம் தான் புதிய கற்றலுக்கு வழி பிறக்கும். அவர் தோட்டத்தில் உள்ள பூக்களையும், புற்களையும் தொட்டுப் பார்த்து அது என்ன மலர் என்பதையும், அதன் வாசனையையும் தனித்தனியாக பிரித்து உணர்ந்தார். இப்படி இயற்கையையும் அவர் தெரிந்து கொண்டார். வாசனையைக் கொண்டு என்ன மலர், என்ன பழம் என்பதையும் தெரிவிக்கும் அளவிற்கு அவரது கற்றல் இருந்தது. [] ஒருவர் தன்னிடம் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். ஆனால் அவரால் அடுத்தவரின் முக பாவனையைப் பார்க்க முடியாதே. ஆனாலும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அவரிடம் பெற்றோர்கள், ஆசிரியர் காட்டும் அன்பை தெரிந்து கொள்ள முடியவில்லை. அவரால் பொருளை தொட்டுப் பார்க்காமல் அதனை உணர முடியாது. அன்பு என்பது பொருள் அல்ல. அதனை புரிய வைப்பதற்கு ஆசிரியர் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஹெலனும் Love என்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார். அன்பை கையால் தொட முடியாது. ஆனால் இன்பத்தை உணர முடியும் என்பதை தன்னுடைய அரவணைப்பின் மூலமும், தாய், தந்தையரின் அவரணைப்பு மூலமும், இயற்கையின் மூலமும் விளக்கினார். ஹெலனும் தனது அன்பை ஆசிரியை ஆனியி கன்னத்தில் முத்தமிட்டு வெளிப்படுத்தினார். ஹெலனுக்குப் புரிந்து கொள்ளும் திறனும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அவரிடம் இருந்த கோபம் மறையத் தொடங்கியது. தொட்டு உணர்ந்ததை எழுதத் தொடங்கினார். சிறு சிறு வார்த்தைகளை ஒன்று சேர்த்து ஒரு வாக்கியமாக மாற்றினார். மோப்ப சக்தியால் பொருட்களை உணரும் பாடங்களையும் அவருக்கு ஆனி நடத்தினார். அதுவே குழந்தைப் பருவத்தில் பொருளை கண்டறிய மிகவும் உதவியது. ஹெலனுக்கு உணவு மேஜையில் உட்கார்ந்து சாப்பிடத் தெரியாது. அவள் தன் இஷ்டம் போல் சாப்பிட்டாள். அவளுக்குக் கோபம் ஏற்பட்டால் தட்டுக்களை தூக்கிப் போட்டு உடைப்பாள். ஹெலனுக்கு உணவு மேஜையில் நாகரீகமாக சாப்பிடுவதற்கு சற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஆசிரியர் ஈடுபட்டார். அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. நாற்காலியில் உட்கார வைத்தால் உட்காராமல் இறங்கிவிடுவார். பெற்றோர்கள் மிகவும் சங்கடப்பட்டனர். அவளை சரியாக உட்கார வைக்க முடியவில்லையே என வருந்தினர். ஆனி சல்லிவன் எடுக்கும் முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை என வருந்தினர். அவள் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடட்டும், விட்டு விடுங்கள் என்றனர். ஆனால் ஆனி விடுவதாக இல்லை. அனைவரையும் உணவு உண்ணும் அறையை விட்டு வெளியே போகச் சொன்னார். அறைக் கதவை தாளிட்டார். ஹெலனை தூக்கி நாற்காலியில் உட்கார வைத்தார். அவள் இறங்கி ஓடினாள். தட்டுகளை எடுத்து எறிந்தாள். ஆசிரியரின் கன்னத்தில் அடியும் விட்டாள். இதையல்லாம் ஆசிரியர் பொறுத்துக் கொண்டார். ஹெலன் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அவள் கையில் எதையும் எழுத மாட்டார். அது அவளுக்குக் கொடுக்கும் தண்டனை. இது ஹெலனை வருத்தமடையச் செய்தது. அவள் மன்னிப்பு கேட்டாள். அதன் பிறகு ஹெலன் ஆசிரியர் சொல்வதைக் கேட்டார். பிறகு நாற்காலியில் உட்கார வைத்து உணவை எப்படி நாகரீகமாக உண்பது என்பதை கற்றுக் கொடுத்தார். தனது பொறுமையால், அன்பால் ஹெலனை ஆனி வென்றார். தொடர்ந்து போராடி தனது மாணவிக்கு கற்றுக் கொடுத்தார். ஆனி ஒரு திறமையான நல்ல ஆசிரியராக மட்டும் அல்லாமல், ஒரு வளர்ப்புத் தாயாகவும் நடந்து கொண்டார். பாதுகாவலானகவும், அறிவு புகட்டும் ஆசானாகவும் இப்படி எல்லாருமாக ஹெலன் வாழ்வில் நிறைந்தவராக ஆசிரியர் ஆனி சல்லிவன் இருந்தார். அதனாலேயே ஹெலன் ஆசிரியரின் அன்புக்குக் கட்டுப்பட்டவளாக மாறினார். [] ஆசிரியர் “தொடுதல் மூலம் புரிதல்” வகையில் பாடம் எடுத்தார். கொஞ்சம், கொஞ்சமாகப் புரிந்து கொண்டு அதன்படி சைகை பாவனையில் அடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு பதில் கொடுத்தாள். அடுத்தவர் பேசுவதை புரிந்து கொள்வதற்குத் தொடுதல் முறையிலேயே அறிந்து கொள்ளும்படி வழிகாட்டினார் ஆனி சல்லிவன். 9 ஆரம்பக் கல்வி எட்டு வயதில் ஹெலன் கெல்லர் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டு எழுதத் தொடங்கினாள். இவருக்கு லூயிஸ் பிரெய்லி முறையில் எழுத்துக்களைக் கற்பித்தார். இது கண் பார்வையற்றோருக்கான எழுத்து முறையாகும். லூயிஸ் பிரெய்லி என்கிற பிரெஞ்சுக்காரரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறைக்கு பிரெய்லி (Bralle) எழுத்து முறை என்று பெயர். இவர் 1821இல் பார்வையற்றோர்கள் படிக்க உதவ பிரெய்லி என்னும் புடைப்பெழுத்து முறையை உருவாக்கினார். ஒவ்வொரு புடைப்பெழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்ட செவ்வகக்கலம் ஆகும். புள்ளிகள் 6 இடைநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (2⁶), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமலும் இருக்கலாம். அதே போல் இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துக்கள் உண்டு. புடைப்பெழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய ரகசியத் தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரெய்லை சந்தித்து, லூயி பிரெய்லின் ஆலோசனைக்கு ஏற்ப குறிமுறைகளை மாற்றி அமைத்தார். ஹெலன் கெல்லரை 1888 மே மாதத்தில் பெர்கின்ஸ் பார்வையற்றோர் நிறுவனத்தில் கல்வி பயில சேர்த்தனர். இது அமெரிக்காவின் மிகப் பழமையான பார்வையற்றோர் பள்ளியாகும். இதனை பெர்ஜின்ஸ் பார்வையற்றோர் பள்ளி என்று அழைத்தனர். தற்போது உலகம் முழுவதும் 67 நாடுகளில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பிரெய்லி கல்வி முறையில் பார்வையற்றோருக்குக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனை பெர்ஜின்ஸ் (Perkins) என்பவர் 1829ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கினார். ஹெலனுக்கு எதையும் விரைவாகக் கற்றுக் கொள்ளும் ஆற்றல் இருந்தது. அவர் பிரெய்லி எழுத்துக்களை விரைவாகக் கற்றுக் கொண்டார். ஆசிரியர் ஆனிக்கு 4 மொழிகள் தெரியும். அவர் ஹெலனுக்கு, ஆங்கிலம் உள்பட லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் கிரேக்க மொழிகளை பிரெய்லி முறையில் கற்றுக் கொடுத்தார். ஹெலன் தனது 10 வயது நிறைவதற்குள் 4 மொழிகளைக் கற்றுக் கொண்டார். இது மிகப்பெரிய ஆச்சரியத்தை பெற்றோருக்கு ஏற்படுத்தியது. 10 பேசக் கற்றுக் கொள்ளுதல் அடுத்தவர்கள் பேசும் மொழி என்ன என்பதைக் கண்டுபிடிக்க பேசுபவரின் தொண்டைக் குழியில் கையை வைத்து என்ன பாசை பேசுகிறார்கள், எந்த நாட்டு மொழி என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலை ஆனி கற்றுக் கொடுத்தார். இதனால் என்ன மொழி பேசுகிறார் என்பதை ஹெலனால் கண்டறிய முடிந்தது. அதே சமயத்தில் தானும் பேச வேண்டும் என ஆசைப்பட்டார். அவரால் வாட்டர் என்பதை மட்டும் தட்டுத்தடுமாறி பேச முடிந்தது. அதனால் அவரை பேச வைக்க முடியும் என்கிற நம்பிக்கை ஆனி டீச்சருக்கு இருந்தது. அந்தச் சமயத்தில் ராக்ன்ஹில்டு கட்டா (Ragnhild Katta) என்கிற, சிறுமியைப் பற்றி ஆனி தெரிந்திருந்தார். நார்வே நாட்டைச் சேர்ந்த பார்வையற்ற, காது கேளாத சிறுமியான ராக்ன்ஹில்டு கட்டாவிற்கு 1890ஆம் ஆண்டில் சாரா புல்லர் (Sarah Fuller) என்பவர் பேசக் கற்றுக் கொடுத்தார். இதனை ஹெலனுக்கு ஆனி தெரிவித்தபோது தன்னையும் சாராபுல்லரிடம் அழைத்துச் செல்லும்படி வற்புறுத்தினார். சாராபுல்லர் ஒரு அமெரிக்கன் பெண் கல்வியாளர். ஊமைகளுக்கான பள்ளியில் பயிற்சிப் பெற்றவர். அவர் ஹார்ஸ்மான் (Horace mann) என்னும் பள்ளியின் முதல்வராகப் பணிபுரிந்து வந்தார். இவர் ஊமைக் குழந்தைகளுக்கு பேசக் கற்றுக் கொடுத்து வந்தார். பல ஊமைக் குழந்தைகளையும் பேச வைத்ததன் மூலம் இவர் பலருக்குத் தெரிந்த நபராக விளங்கினார். ஹார்ஸ்மான் பள்ளி என்பது காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்களுக்கான ஒரு பொதுப் பள்ளி. இது 1869ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் அருகில் உள்ள ஆல்ஸ்டன் (Allston) என்னுமிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு 3 முதல் 22 வயது கொண்டவர்களுக்குப் பேசும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அலெக்சாண்டர் கிரகாம்பெல் மூலம் இப்பள்ளி பிரபலம் அடைந்தது. இப்பள்ளியில் ஹெலன் கெல்லர் 1894ஆம் ஆண்டில் சேர்ந்தார். சாரா புல்லர் ஹெலனுக்கு பேசக் கற்றுக் கொடுக்க சம்மதித்தார். பேச வைக்க முடியும் என்கிற நம்பிக்கையை உருவாக்கினார். பார்க்கவும், கேட்கவும் முடியாத ஒருவரை பேச வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும் முடியும் என்கிற ஒரு நம்பிக்கையுடன் தொடங்கினார். சாரா புல்லர் பேசும் போது அவரின் உதடு அசைவுகளையும், கன்னத்தின் அசைவையும், நாக்கின் அசைவையும் தொட்டு உணரச் செய்தார். பேசும் போது தொண்டைப் பகுதியில் குரல் வளையில் ஏற்படும் அசைவையும் உணரச் செய்தார். அது தவிர வாயிலிருந்து வெளிப்படும் ஒலி அதிர்வுகளையும் கையால் உணரச் செய்தார். நாக்கின் அசைவையும், ஒலி அதிர்வுகளையும் நன்கு கவனத்தில் எடுத்துக் கொண்டார். சாரா புல்லர் பேசக்கற்றுக் கொடுக்கும் போது அவரின் முக அசைவு, நாக்கின் அசைவு ஆகியவற்றை உணர்ந்து தட்டுத் தடுமாறி, கொஞ்சம், கொஞ்சம் வார்த்தைகளை உச்சரிக்கத் தொடங்கினர். அதே சமயத்தில் டீச்சர் ஆனியும் இந்த பேச்சு பயிற்சி முறையைக் கற்றுக் கொண்டார். சாரா புல்லரிடம் சென்ற சில நாட்களிலேயே ஆறு விதமான ஒலிகளை எழுப்பக் கற்றுக் கொண்டார். இரண்டு ஆண்டுகள் சாரா புல்லரிடம் பேசும் பயிற்சியை எடுத்துக் கொண்டார். ஹெலன் மிகவும் சிரமப்பட்டே வார்த்தைகளைக் கற்றுக் கொண்டார். அவர் சாரா புல்லரிடமிருந்து 1896ஆம் ஆண்டில் தனது வீடு திரும்பினார். தொடர்ந்து ஹெலனுக்கு பேசும் பயிற்சியை ஆனி டீச்சர் கற்றுக் கொடுத்தார். பல ஆண்டுகள் சிரமப்பட்டு பயிற்சி செய்தார். அவரால் தெளிவாக பேச முடியவில்லை. ஆனால் அதற்காக மனம் தளரவில்லை. உதடுகளைத் தொட்டறிந்து, அதே போன்று ஒலிகளை எழுப்பி பேசக்கற்றார். பலமுறை, நூறு முறை என வாய் வலிக்கப் பேசிப் பழகினார். அவர் பேசியது பிறருக்குப் புரியவில்லை. ஆனால் ஆனி சல்லிவனுக்கும், சாரா புல்லருக்கும் புரிந்தது. தொடர்ந்து பயிற்சி எடுத்ததன் மூலம் கரகரத்தக் குரலில் பேசினார். இதனை மற்றவர்கள் ஓரளவு புரிந்து கொண்டனர். தொடர்ந்து பேசும் பயிற்சி எடுத்துக் கொண்டதால் பிற்காலத்தில் பொது மேடைகளில் பேசும் ஒரு பேச்சானராக மாறினார். இருப்பினும் அவரால் சரளமாக பேச முடியாது. வார்த்தைகள் தடைபட்டே வெளிப்படும். பேசும் வார்த்தைகள் அவ்வளவு தெளிவாக இல்லை. ஆனால் பிறவிலேயே பேச முடியாத ஒருவர் மற்றவர்கள் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு, மேடையில் பேசும் அளவிற்கு ஒரு பேச்சாளராக மாறியது மிகப் பெரிய சாதனைதான். அவர் எடுத்துக் கொண்ட அதீத முயற்சியாலேயே இது சாத்தியமானது. ஆனால் அதில் ஒரு கொடுமை என்னவென்றால் அவர் பேசுவதை அவரால் கேட்க முடியாததுதான். பத்து வயதில் ஹெலன் பேசுவதற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டார். பிரெய்லியில் படிக்கும் முறையையும், டைப் ரைட்டர் செய்யும் முறையையும் கற்றுக் கொண்டார். 11 உயர் கல்வி ஹெலன் கெல்லர் கேம்பிரிட்ஜ் இளம்பெண்கள் பள்ளியில் சேர்ந்தார். இந்தப் பள்ளியில் ஊனமில்லாத மாணவர்கள் பயின்று வந்தனர். இந்தப் பள்ளியில் படிப்பவர்கள் எதிர்காலத்தில் ராட்கிளிஃப் கல்லூரியில் சேர்வதற்கு ஒரு திறவு கோளாகக் கருதப்பட்டது. தானும் கல்லூரியில் சேர்ந்து சாதாரண மாணவர்களைப் போல் படிக்க வேண்டும் என்பதற்காகவே இப்பள்ளியில் சேர்ந்தார். இந்தப் பள்ளி 1883ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது தனியார் பள்ளி. இது ஆண், பெண் என இருபாலரும் படிக்கும் பள்ளி. ஹெலனை சேர்ப்பதற்கு முதலில் தயக்கம் காட்டினர். பின்னர் ஹெலனின் கற்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவரை பள்ளியில் சேர்த்துக் கொண்டனர். [] ஹெலன் கெல்லருடன் ஆனி சல்லிவனும் அமர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்களை ஹெலனுக்கு ஆனி டீச்சர் விளக்கினார். நடத்தப்படும் பாடங்கள் அனைத்தையும் ஹெலனுக்குப் புரியும் வகையில் ஆள் காட்டி விரலால், தொடுதல் முறையில் விளக்கினார். இது ஒரு சாதாரண பணி என்று மட்டும் கருதி விட முடியாது. ஹெலனுக்காக சல்லிவன் படும் சிரமத்தைக் கண்டு வகுப்பு ஆசிரியர்கள் நெகிழ்ந்து போனார்கள். உண்மையில் ஆனி சல்லிவன் ஒரு முன் மாதிரியான டீச்சர்தான். வகுப்பறையில் நடத்தப்பட்ட பாடங்களை ஹெலன் கெல்லர் தனது வீட்டில் பிரெய்லி தட்டச்சில் டைப் செய்து கொண்டார். இறுதித் தேர்வில் தட்டச்சு முறையில் தேர்வு எழுதினார். தேர்வில் ஆனி சல்லிவனை அனுமதிக்கவில்லை. ஹெலனுக்கு பள்ளியின் தலைவரே வினாக்களை தொடுதல் முறையில் விளக்கினார். ஹெலன் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றியும் பெற்றார். ஹெலனின் உயர்கல்விக்காக ஆனி சல்லிவன் கூடவே தங்கினார். உடன் தங்கி ஹெலனின் தேவைகளையும் பூர்த்தி செய்தார். ஹெலனின் பின்னால் இருந்து கொண்டு, ஹெலனின் அறியாமை இருளைப் போக்கினார். கவிதைகளையும், கட்டுரைகளையும், கதைகள் எழுதும் திறனையும் வளர்க்க உதவினார். சல்லிவனின் உதவியும், ஹெலனின் விடா முயற்சியும் நாளடைவில் அவர் சிறந்த ஒரு பெண்மணியாக மாற உதவியது. 12 கல்லூரி ஹெலன் கெல்லர் ராட்கிளிஃப் கல்லூரியின் (Radcliffe college) நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1900ஆம் ஆண்டில் கல்லூரியில் சேர்ந்தார். இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் தங்கும் விடுதியான சௌத் ஹவுஸின் பிரிக்ஸ் ஹாலில் தங்கினார். உடன் தங்குவதற்கு ஆனி சல்லிவனும் அனுமதிக்கப் பட்டார். இக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும், உடலில் எந்தக் குறையும் இல்லாதவர்களே. ஒரு மாற்றுத் திறனாளி மாணவர்கள் கூட கிடையாது. சராசரி வாழ்க்கை நடத்தும் மாணவர்களுடன் ஹெலன் கெல்லரும் சேர்ந்து விட்டார். படிப்பில் மற்றவர்களிடம் இருந்து தான் சளைத்தவர் அல்ல என்பதைக் காட்டும் ஒரு சவாலாக இது ஹெலனுக்கு அமைந்தது. எல்லோரும் படிக்கும் பாடங்களை பார்வையற்ற, காது கேட்காத ஹெலன் படிப்பது குறித்து வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது. பிரபலமான அமெரிக்க எழுத்தாளர் மார்க் டாவின் (Mark Tawin) என்பவருடன் ஹெலனுக்குத் தொடர்பு கிடைத்தது. ஹெலனும், மார்க் டாவினும் நண்பர்களானார்கள். இவர் பல நாவல்களை எழுதி பிரபலமானவர். 19ஆம் நூற்றாண்டில் மிகச் சிறந்த மனிதர்கள் என இருவர்களைத் தேர்வு செய்தால் அவர்களில் ஒருவர் நெப்போலியன், மற்றொருவர் ஹெலன் கெல்லர் என தேர்வு செய்வார்கள் என மார்க் டாவின் கூறினார். அந்தளவிற்கு ஹெலன் கெல்லர் ஒரு திறமைசாலியாக விளங்கினார். [] மார்க் டாவின் நாவல்கள், குழந்தைகளுக்கான கதைகள், வரலாற்று புனைக் கதைகள், சுற்றுப் பயண இலக்கியம், கட்டுரைத் தொகுப்பு, தத்துவங்கள் என பல புத்தகங்கள் எழுதியவர். உலகளவில் இவருடைய படைப்புகள் பேசப்படுகிறது. இவருக்கு பல நண்பர்கள் இருந்தனர். அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் வணிக கம்பெனியின் தலைவரான ஹென்றி ஹட்டல்ஸ்டன் ரோஜர் என்பவர் இவரின் நண்பராக இருந்தார். இவர் அமெரிக்காவின் தொழிலதிபர். மிகப் பெரிய கோடீஸ்வரர். மார்க் டாவின் வேண்டுகோளுக்கு இணங்கி ஹெலன் கெல்லரின் கல்லூரி படிப்பிற்கு உதவி செய்ய முன் வந்தார். தனது நண்பரின் மூலம் ஹெலன் கெல்லரின் கல்லூரி செலவுகளை ஏற்றுக் கொள்ளச் செய்தார். ஹெலனுடன் கல்லூரிக்குச் சென்று அருகில் அமர்ந்து கொண்டு பாடங்களை விளக்கினார் ஆனி சல்லிவன். கெல்லருக்காக ஆனியும் பாடங்களைக் கற்க வேண்டி இருந்தது. ஒரு ஆசிரியர் ஒரு மாணவியின் நலனில் எவ்வளவு அக்கறை காட்டினார் என்பதற்கு ஆனி சல்லிவன் ஒரு மிகச் சிறந்த உதாரணம் எனக் கல்லூரி பேராசிரியர்களும் புகழ்ந்தனர். கல்லூரியில் ஹெலன் கெல்லர் 1904ஆம் ஆண்டு வரை படித்தார். அவர் படித்த 4 ஆண்டுகளுக்கும் ஆசிரியர் ஆனி சல்லிவன் இவருடைய மொழி பெயர்ப்பாளராய் இருந்து கற்றலை எளிமையாக்கினார். 1904ஆம் ஆண்டில் ஹெலன் கெல்லர் இளங்கலை பட்டம் (BA) பட்டம் பெற்றார். மாற்றுத் திறனாளிகளில் உலகிலேயே முதன்முதலாக பட்டப்படிப்பு முடித்தவர் ஹெலன் கெல்லர் என்கிற பெருமையைப் பெற்றார். ஹெலன் கெல்லர் தேர்வு எழுதும் போது ஆனி சல்லிவனை அருகில் இருக்க அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அவர் தேர்வில் ஹெலனுக்கு உதவி செய்யக் கூடும் எனக் கல்லூரி முதல்வர் கருதினார். ஆகவே கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த ஒருவர் அருகில் இருந்து வினாக்களைப் புரிய வைத்தார். வினாக்களை நன்கு புரிந்து கொண்டு, அதற்கான விடைகளை டைப் செய்தார். ஹெலன் பிரெய்லி தட்டச்சு முறையில் மட்டுமே டைப் செய்வார் என்று கருதி விட வேண்டாம். அவர் மற்றவர்கள் டைப் செய்யும் தட்டச்சு முறையையும் கற்று இருந்தார். ஹெலன் கெல்லர் தனது 24ஆவது வயதில் பட்டப்படிப்பை முடித்தார். பார்வையற்ற, காது கேளாத ஒருவர் பட்டம் பெற்றது என்பது உலகளவில் பிரபலமானது. இது பல ஊனமுற்ற, பார்வையற்ற, காது கேளாதவரிடம் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. பலரிடம் இது விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பார்வையற்ற, காது கேளாதவர்களாலும் படித்துப்பட்டம் பெற முடியும் என்கிற எண்ணத்தை உருவாக்கியது. உலகில் பல நாடுகளில் பார்வையற்றவர்களுக்கும் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு சிந்தனையை தோற்றுவித்தது. இவர் கல்லூரியில் படிக்கும் போது பல மாணவிகள் இவரிடம் நட்புடன் பழகினர். இவருக்காக தொடுதல் முறையில், விளக்கும் கலையைக் கற்றுக் கொண்டனர். இதன் மூலம் ஹெலனிடம் அவர்கள் உரையாடினார். தன்னுடன் பயிலும் கல்லூரி மாணவர்கள் தன் மீது இரக்கப்படுவதையோ, அனுதாபப்படுவதையே அவர் ஒரு போதும் விரும்பவில்லை. தன் குறைகளை அவர் பெரியதாகக் கருதவில்லை. மனம் அவருக்குப் பக்குவப்பட்டு விட்டது. இத்தனைக் குறைகளும் அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. எல்லோரையும் போலவே கல்லுரியில் படித்தார். தனக்கு என்று ஒரு சலுகையையும் அவர் எதிர்பார்க்கவில்லை. அவரின் படிப்பிற்கு கால அவகாசம், கால நீடிப்புக் கொடுக்க முன் வந்த போது அதனை ஏற்க மறுத்து விட்டார். குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே தனது கல்லூரி படிப்பை முடித்தார். எந்த குறையும் இன்றி இருக்கும் சராசரி மாணவர்களை விட சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெற்றார். [] அறிவே உலகம், அறிவே மகிழ்ச்சி என்பதை ஆனி சல்லிவன் ஹெலனுக்குக் கற்றுக் கொடுத்தார். சலிக்காமல் புரிய வைத்தார். இந்த உலகில் வாழ்வது அற்புதமானது என்பதையும் விளக்கினார். தனக்கு கல்லூரிக் கல்வி சிந்திக்க எதையும் பெரியதாகக் கற்றுத் தரவில்லை என்றே பின்னாளில் குறிப்பிட்டுள்ளார். பட்டப்படிப்பு அத்துடன் முடிந்து போனாலும் பல விசயங்களைக் கற்றுத் தேர்ந்தார். ஹெலன் கெல்லர் பட்டம் பெற்று 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ராபர்ட் ஸ்மித்தாஸ் (Robert Smithdas) என்பவர் பட்டப்படிப்பு முடித்தார். இவர் பெர்கின்ஸ் பள்ளியில் படித்த பார்வையற்ற, காது கேளாத மாணவராவார். இவர்தான் ராட்கிளிஃப் கல்லூரியில் இரண்டாவதாக பட்டம் பெற்ற பார்வையற்ற, காது கேளாத பட்டதாரியாவார். இதன் பின்னர் தான் உலகின் பல நாடுகளில் பார்வையற்றவர்கள் பட்டபடிப்பை படிக்கத் தொடங்கினர். ஹெலனுடன் ஆசிரியர் ஆனியும் சேர்ந்தே உழைத்தார். அதன் பயன் ஹெலன் பட்டதாரி ஆனார். ஒரு பார்வையற்ற பெண்ணை பட்டதாரியாக்கிய பெருமை ஆனிக்கும் கிடைத்தது. அதாவது பிரெய்லி எழுத்துக்களை தடவித் தடவி தெரிந்து கொண்டு, அதற்கான விடையை ஆனியின் கையில் எழுதிக் காட்டினார். இப்படி பயிற்சி எடுத்துக் கொண்டார். இதன் மூலம் சரியான பதில்களை அவர் ஆனியின் கையில் எழுதிக் காட்டினார். இந்த பயிற்சியின் மூலம் தனது கல்லூரித் தேர்வில் வெற்றி பெற்றார். 13 பொது உடமைக் கருத்து ஆனி 1905ஆம் ஆண்டில் ஜான் மெசி (John Macy) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவருமே ஹெலன் மீது அக்கறை செலுத்தினர். ஹெலனை தங்களுடனே வைத்துக் கொண்டனர். மூன்று பேரும் சேர்ந்தே வாழ்ந்தனர். ஹெலனுக்கு பல வகையில் ஜான் மெசி உதவினார். அவருக்கு உலக நடப்புகளை விளக்கினார். பொதுவுடமை, அரசியல் போன்ற விசயங்களை ஹெலனுக்கு புரியவைத்தார். ஆனியின் திருமணம் ஹெலனின் வாழ்க்கையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆசிரியர், மாணவி என்கிற உறவில் எந்தப் பாதிப்பையும் உண்டாக்கவில்லை. மாறாக தம்பதியர்கள் இணைந்து ஹெலனின் படிப்பிற்கும் மற்ற நடவடிக்கைக்கும் பெரிதும் உதவினர். [] ஹெலன் பொதுவுடமைவாதியாக மாறினார். பொதுவுடமை கருத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவரானார். பெண்கள், தொழிலாளர்களுக்காக போராடினார். முதலாளித்துவம், அணுகுண்டு, உலகயுத்தம் போன்றவற்றை எதிர்த்தார். சார்லி சாப்ளின் என்கிற பிரபலமான நடிகருடன் பொதுவுடமைக் கருத்துக்களை விவாதித்தார். ஆனிக்கும், ஜான் மெசி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1914ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். ஆனால் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. அதன் பின்னர் ஆனி சல்லிவன் ஹெலன் மீது முழு அக்கறை காட்டினார். அவரின் வளர்ச்சி மீது முழு அக்கறை செலுத்தினார். இப்போது ஹெலன் உலகத்தைப் புரிந்து கொண்டார். இனி மற்றவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார். 14 படைப்பாளி ஹெலன் கெல்லர் படிப்பதோடு நின்றிருந்தால் அவரது வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்திருக்காது. தான் கற்றவற்றை மற்றவர்களுக்கு எழுதி அவர்களை மகிழச் செய்தார். அவர் பல நூல்களை எழுதினார். இவரது எழுத்துக்கள் சாதாரணமானதாக இல்லை. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும், வறுமையில் வாடுவோருக்கும் துணிவைத் தந்தது. பலருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. ஹெலன் கெல்லர் கல்லூரியில் படிக்கும் போதே 1903ஆம் ஆண்டில் தன் வாழ்க்கை வரலாறு (The Story of my life) என்னும் நூலை எழுதினார். இதனை எழுதுவதற்கு ஜான் மெசி அவருக்கு உதவினார். இந்தப் படைப்பு பெண்கள் சஞ்சிகை (The Ladies Home Journal) என்ற செய்தித்தாளில் ஒரு தொடராக வெளி வந்தது. பின்னர் இது என் கதை என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. இது ஒரு தலைச் சிறந்தப் புத்தகம், உலகம் முழுவதும் இன்று 50 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. மராத்தி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஹெலன் படைப்புகளில் இன்றும் தலைச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. உலகில் பார்வையற்ற, காது கேளாத ஒருவர் எழுதிய முதல் புத்தகம் இது. இதன் மூலம் உலகளவில் ஹெலன் கெல்லர் பிரபலம் அடைந்தார். இந்தப் புத்தகத்தை எழுதும் போது அவருக்கு வயது 21. அப்போது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தார். ஹெலனின் என் கதை என்பது அதிசயமே அசந்து போகும் ஒரு அசாத்தியமான சாதனைக் கதையாகக் கருதப்படுகிறது. பார்க்கிற, கேட்கிற, பேசுகிற சக்தியை இழந்த ஒரு குழந்தை போராடி பேசக்கற்றுக் கொண்டு உலகமே போற்றும் அளவிற்கு உயர்ந்தது எப்படி என்பதை விளக்கும் கதை, ஹெலன் தன்னுடைய ஒவ்வொரு அனுபவத்தையும் விவரித்து எழுதியது. கொடிய வேதனைகளை அனுபவித்த ஹெலன், ஒவ்வொரு படியாக கற்று, தனது வாழ்க்கையை எப்படி முன்னேற்றினார் என்பதை விளக்கும் ஒரு சாகசக் கதையாக உள்ளது. கொட்டும் தண்ணீருக்கு அடியில் கையை வைத்து தண்ணீர் என்பதைக் கற்றுக் கொண்ட பின் அவருக்கு அறிவு என்னும் ஊற்று திறந்தது. அப்போது அவரது வாழ்க்கையில் சந்தோசம் பிறந்தது. அறிவைத் தேடும் ஒரு பெண்ணாக அப்போது மாறினார். [] கொடிய நோயால் பார்க்கும், கேட்கும் பேசும் திறனை இழந்தவர், தன்னுடைய தொடர் முயற்சியால் சாதாரண மனிதர்களை விட அபார ஆற்றல் கொண்ட பெண்ணாக மாறியதை விளக்கும் போராட்டக் கதை. ஒரு ஆசிரியர் கற்றுக் கொடுத்தால் எப்படிப்பட்ட குழந்தையும், சாதனைபடைப்பவராக மாற முடியும் என்பதை எடுத்துக் கூறுகிறது. இது ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை மட்டும் எடுத்துக் கூறும் கதையாக மட்டும் அல்லாமல் அவருக்காக உழைத்த ஆனி டீச்சரின் புகழையும் எடுத்துக் கூறும் கதை. ஆனி டீச்சரைப் பற்றி குறிப்பிடும் போது, என் வாழ்க்கையில் நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு காலடியும் அவருடையதே. என்னுடைய எல்லா சிறப்புகளும் அவருக்கே சொந்தமானவை. அவருடைய அன்பான ஸ்பாரிசத்தால் விழிப்படையாத எந்த ஒரு திறமையோ அல்லது உத்வேகமோ அல்லது ஒரு சந்தோசமோ என்னிடம் கிடையாது. இது ஒரு கற்பனை கதையல்ல. ஆனால் கற்பனையில் கூட இப்படி நடக்காது என்று பலர் கூறும் விதமாகவே ஹெலனின் வாழ்க்கை அமைந்துள்ளது. விடாமுயற்சியால் உயர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாறு. விடா முயற்சி, முனைப்பு, அக்கறை, துணிச்சல், ஆர்வம், ஊக்கம், விவேகம், உற்சாகம், பாசம், தேடல் என அத்தனையும் கொண்ட பெண்ணின் வாழ்க்கை. அப்படிப்பட்ட திறன் கொண்ட கெல்லரின் வாழ்க்கையை அவரே எழுதியது. இது பலருக்கு தன்னம்பிக்கையையும், சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் உலகம் முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. ஹெலன் கெல்லர் தன்னுடைய 11ஆவது வயதில் ‘பணி அரசன்’ (The Frust king) என்னும் ஒரு சிறு கதையை எழுதினார். அதனை ஆனி சில்லிவன் ‘ஆட்டம்ன் லீவ்ஸ்’ (Autumn Leaves) என பெயர் கொடுத்தார். இக்கதையை பெர்க்கின்ஸ் பார்வையற்றோர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் அனாக்னஸ் (Michael Anagnos) என்பவருக்கு அனுப்பி வைத்தனர். அவர் அதனை பள்ளி ஆண்டு விழா மலரில் 1892 ஆவது ஆண்டில் வெளியிட்டனர். அக்கதை மார்கரெட் கான்பி (Margaret Canby) என்பவர் எழுதியக் கதை எனப் பின்னர் தெரியவந்தது. ஹெலன் எழுதிய கதை திருடப்பட்ட கதை என குற்றம்சாட்டப்பட்டது. இக்கதை எப்போது அவர் கேட்டார், படித்தார் என ஹெலனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவரின் அபார ஞாபக சக்தி, அக்கதையில் உள்ளபடியே எழுதி இருந்தார். இது திருட்டுக் கதை எனக் கூறப்பட்டதால் ஹெலன் கெல்லர் மிகவும் வேதனை அடைந்தார். இதனை அறிந்த கதை ஆசிரியர் மார்கரெட் கான்பி இவருக்கு ஆறுதல் கடிதம் எழுதினார். அதன் பின்னர் இவருக்கு எழுத வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரித்தது. ஆஸ்திரேலிய நாட்டின் தத்துவவாதியான வில்ஹெய்ம் ஜெருசலேம் என்பவர் ஹெலன் கெல்லரின் இலக்கிய ஆர்வத்தைக் கண்டறிந்தார். ஹெலனை ஒரு எழுத்தாளராக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டார். ஹெலன் 12 புத்தகங்களை எழுதினார். அரசியல், தொழிலாளர் பிரச்சனைகள், பெண்கள் உரிமைகள், அணு குண்டுக்கு எதிர்ப்பு, முதல் உலகப் போரில் அமெரிக்காவின் பங்கேற்பிற்கு எதிர்ப்பு என்று பல்வேறு விசயங்களை குறித்தும் எழுதினார். அரசியல், வரலாறு, தத்துவம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் எழுதினார். ‘இருட்டிலிருந்து வெளியேறு’ (Out of Dark) என்ற தலைப்பில் பொதுவுடமைக் கருத்துகளைத் தொடர் கட்டுரையாகவும் வெளியிட்டார். நான் வாழும் உலகம், நம்பிக்கை ஒரு கட்டுரை, கற்சுவரின் கீதம், இருளிலிருந்து, என் மதம், மாலைக்காலத்து அமைதி, ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நம்பிக்கை கொள்வோம், ஆனி சல்லிவன் மேஸி – என் ஆசிரியை, திறந்த கதவு போன்றவை அவருடைய படைப்புகள். இவை தவிர காது கேளாமை, பார்வையின்மை, சமூகவியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணுரிமை போன்ற பல கட்டுரைகளை தொடராகவும் எழுதினார். வாராந்திர, மாதாந்திர மற்றும் தினசரி நாளிதழ்களுக்கும் கட்டுரை எழுதினார். ஹெலன் 1908ஆம் ஆண்டில் ‘நான் வாழும் உலகம்’ (The World I Live) என்ற நூலை எழுதினார். அவருடைய உலகமானது மோப்ப சக்தியைக் கொண்டும், தொட்டு உணர்ந்து புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டும் அமைந்துள்ளது என்பதை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். எனது கையே எனது பார்வை என்பது இந்தக் கதையின் சாரம். கையை, பார்க்கும் கை என்கிறார். இருண்ட வாழ்வில், இந்த உலகை தனது கையாலும், நுகர்வு சக்தியாலும் உணர்ந்தார். இந்த உலகச் சிறையில் இருக்கும் ஹெலன் தொடு உணர்வு, வாசனை, கற்பனை மற்றும் கனவுகளுடன் அவர் வாழ்ந்த உலகத்தை விளக்கியுள்ளார். நீங்கள் எப்படி கேட்கிறீர்களோ, பார்க்கிறீர்களோ அதனை எனது கையால்தான் நான் பார்க்கிறேன், கேட்கிறேன் என்பதை புத்தகத்தில் தெரிவிக்கிறார். அவர் ஒரு பொருளை பார்வையற்ற, காது கேளாதவர்கள் எப்படி உணர்கிறார்கள், அறிந்து கொள்கிறார்கள் என்பதை தன் வாழ்க்கை அனுபவங்களுடன் இதில் விவரித்துள்ளார். ஒவ்வொரு செயல்பாட்டிலும் கைவிரல்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் உள்ளது. அதனால் தான் உலகை என் கைகளால் பார்த்தேன் என ஹெலன் கெல்லர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகம் 241 பக்கங்களைக் கொண்டது. ஹெலன் கெல்லரின் இளம் பருவத்தில் ஆனி சல்லிவன், பிலிப்ஸ் புரூக்ஸ் (Phillips Brooks) என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் ஒரு பிஷப் மற்றும் எழுத்தாளர். அவர் ஹெலனுக்கு கிறிஸ்துவத்தை அறிமுகம் செய்து வைத்தார். நான் அவருடன் இருக்கும்போது புதியவற்றைக் கற்றுக் கொண்டேன். ஆனால் அவரின் பெயர் எனக்குத் தெரியவில்லை என்கிறார். ஹெலன் 1927ஆம் ஆண்டில் தனது மதம் (My Religion) என்னும் புத்தகத்தை எழுதினார். ஹெலன் ஒரு கிறிஸ்துவர் அல்ல. இமானியல் ஸ்விசன்பர்க் என்பவர் 1688ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் பிரபஞ்சவாதம் என்னும் கோட்பாட்டை பின்பற்றினார். ஹெலனும் இவரின் கோட்பாட்டை பின்பற்றினார். பைபிளை படித்தார். அதில் உள்ளவற்றை ஏற்று பொருத்தம் பார்த்து அதன் போதனைகள் சிலவற்றை மறுத்தார். மதத்தின் கோட்பாட்டை மாற்றுபவர் நகரத்திற்குச் செல்வார்கள் என்கின்றனர். ஹெலன் தன்னுடைய புத்தகத்தில் நான் கிறிஸ்துவர் இல்லை. குறுகிய மனப்பான்மைக் கொண்டவர்கள், கிறிஸ்துவர்கள் அல்லாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆன்மா மாற்றத்திற்கு உட்பட்டது. நான் அற்புதமான மனிதர்கள் வாழ்ந்து இறந்ததை அறிந்திருக்கிறேன். இதனை நான் பேகன் (Pagan) நிலங்களில் கண்டேன். நான் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். அனைத்து தேசிய இன மக்களையும் சந்தித்துள்ளேன். எனக்கு பல நண்பர்கள் இதன் மூலம் கிடைத்தனர். ஒவ்வொருவரும் ஒரு சமயக் கோட்பாட்டை கடைபிடிப்பவர்களாக உள்ளனர். ஹெலன் சுய சிந்தனையாளராக இருந்தார். அவரது மத நம்பிக்கை என்பது தனது சொந்த வாசிப்புகள் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது மத நம்பிக்கைகளை முடிவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இவரது ‘மதம்’ என்கிற புத்தகம் 1927ஆம் ஆண்டில் தனது 47 ஆவது வயதில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் 1994இல் Light in my Darkness என்கிற புத்தகமாக மீண்டும் வெளிவந்தது. கெல்லர் தனது முற்போக்கான கருத்துக்களை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். இதனை மறுபதிப்பாக 1994இல் ராய் சில்வர்மென் (Ray Silverman) என்கிற ஸ்டீவென்பர்க் அமைச்சர் மற்றும் கல்வியாளர் வெளியிட்டார். 2000ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பு வெளி வந்தது. என் ‘மதம்’ என்கிற புத்தகத்தின் பெயரை Light in my Darkness என மாற்றி வெளியிட்டனர். இந்த வார்த்தை ஹெலன் கெல்லர் எழுதிய ஒரு கவிதையிலிருந்து கிடைத்தது. வாழ்க்கை எனக்கு கொடுத்தது அன்பை வளர்த்துக் கொள்வதற்குத்தான். எனக்கு கடவுள் என்பது சூரியன். அதுதான் பூவின் நிறத்தையும், வாசனையையும் எனக்கு இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. எனது நிசப்தம் குரலாக வெளிப்பட்டது என இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிடுகிறார். ஹெலன் கெல்லர் மனித ஆற்றலின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார். நம்பிக்கையை வலியுறுத்தும் வகையில் ‘நாம் நம்பிக்கை கொள்வோம்’ என்கிற நூலையும் எழுதியுள்ளார். வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் சாதிக்க வேண்டியதன் அவசியத்தை அந்தப் புத்தகத்தில் எழுதினார். கண் பார்வையற்ற ஒருவர் கண் பார்வை உள்ளவர்களுக்கும், கண் பார்வையற்றவர்களுக்கும் கண்ணாக இருந்தார். வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்வதற்காகவே பிறந்துள்ளோம். வாழ்க்கை என்பது அவசர கதியானது. அதனை உணர்ந்து நமது ஆற்றலை ஆக்கத்திற்கும், நல்ல செயல்களுக்காகவும் விரைவுபடுத்த வேண்டும். இது போன்ற கருத்துக்களை தன் எழுத்தின் மூலம் பரவச் செய்தார். 15 தொண்டு அமைப்பு ஹெலன் கெல்லர் பார்வையற்றவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான உரிமைக்காக போராடினார். ஊனமுற்றவர்களுக்கும் சம உரிமைகள் கிடைக்கப் பாடுபட்டார். பெண்கள் உரிமைக்காகவும், பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமைக்கான இயக்கத்திலும் இணைந்தார். சமாதான இயக்கத்திலும் ஈடுபட்டார். உட்ரோ வில்சன் (Woodrow Wilson) என்பவர் ஒரு தீவிர சோசலிசவாதியாகவும், குடும்பக் கட்டுபாட்டை ஆதரிப்பவராகவும் செயல்பட்டார். இவருடன் இணைந்து ஹெலன் கெல்லர் செயல்பட்டார். [] ஹெலன் கெல்லர் 1915ஆம் ஆண்டில் ஜார்ஜ் கெஸ்ஸர் (George Kessler) என்பவருடன் சேர்ந்து சர்வதேச ஹெலன் கெல்லர் தொண்டு நிறுவனத்தை (HKI) ஆரம்பித்தனர். ஜார்ஜ் கெஸ்ஸர் (1862-1923) ஒரு ஜெர்மன் அமெரிக்கர். இவர் சிறந்த கட்டிடக் கலை மற்றும் நகர அமைப்பாளராக இருந்தார். அமெரிக்காவில் 100 நகரங்களில் குடியிருப்புகள், பூங்காக்கள், பள்ளிகள் போன்றவற்றை உருவாக்கிக் கொடுத்தவர். அரசின் பல திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தார். சர்வதேச ஹெலன் கெல்லர் தொண்டு அமைப்பானது பார்வையற்றவர்கள், சுகாதாரம், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்றவற்றை ஆராய்ந்தது. பார்வை, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்தது. இந்த அமைப்பு கண் பார்வை பாதுகாத்தலுக்காக பாடுபட்டது. கண்பார்வையை இழந்தால் வாழ்க்கையில் எவ்வாறு கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்பதை மக்களிடம் விளக்கியது. ஜார்ஜ் கெஸ்ஸருக்கு சாம்பாக்னி கிங் (Champagne King) நண்பராக இருந்தார். இவர் பார்வையற்ற வீரர்களுக்கு சேவை செய்து வந்தார். அவர் ஹெலன் கெல்லரின் தொண்டு நிறுவனத்திற்கு நிதி உதவி செய்தார். ஹெலன் கெல்லர் தொண்டு நிறுவனம் கண் நலம் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய இரண்டு பிரிவுகளில் முக்கிய கவனம் செலுத்தியது. உலகம் முழுவதும் கண் பார்வையற்றவர்களுக்காக சேவை செய்ய பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த அமைப்பிற்காக நிதி திரட்டினார். உலகம் முழுவதும் நிதி திரட்டினார். நூல்களை எழுதுவதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு தொண்டு அமைப்பை நடத்தினார். ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் உணர்த்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். குறிப்பாக மாணவர்களிடம் ஊட்டச் சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த அமைப்பின் மூலம் உலகளவில் பல லட்சக்கணக்கான மக்கள் பலன் அடைந்தனர். நியூயார்க் நகரை தலைமை இடமாகக் கொண்டு இந்த தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா உள்பட உலகளவில் சுமார் 22 நாடுகளில் இந்த அமைப்பு இன்றைக்கும் பார்வையற்றவர்களுக்காகவும், ஊட்டச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்காகவும் பாடுபட்டு வருகிறது. ஹெலன் கெல்லர் சமுதாயத்தில் இருக்கும் குறைகளைக் கண்டுபிடித்து அதனைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். தன்னுடைய குறைகளை ஒரு பொருட்டாக நினைக்காமல் ஏழைகளுக்காகவும், வீடு இல்லாதவர்களுக்காகவும், வறுமையில் வாடுபவர்களுக்காகவும் வாழத் தொடங்கினார். குறிப்பாக பார்வையற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். ஒரு பெரும் சமுதாய விமர்சகராக பலர் இவரைப் புகழ்ந்தனர். 16 அரசியல் ஹெலன் கெல்லர் சோசலிஸ்ட் கட்சியில் (Socalist Party) உறுப்பினராகச் சேர்ந்தார். கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஆகியோரின் நூல்களை விரும்பிப் படித்தார். 1917ஆம் ஆண்டில் நடந்த ரஷ்ய புரட்சியை ஆதரித்தார். பார்க்கும் திறனும், கேட்கும் திறனால் மட்டும்தான் வெளி உலக அனுபவத்தை பெற முடியும் என்பதில்லை. புதிய, முற்போக்கான சிந்தனைகளை வளர்த்தல் மூலம் உலக அரசியலை தெரிந்து கொள்ள முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராக கெல்லர் இருந்தார். சோசலிசக் கட்சிக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இதனை ஆதரித்து எழுதினார். 1909 முதல் 1921ஆம் ஆண்டு வரை தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக எழுதினார். சோசலிசக் கட்சியின் சார்பாக யூஜின் வி. டெப்ஸ் (Engene V. Debs) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ஹெலன் ஆதரவு தெரிவித்ததோடு தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். யூஜின் வி. டெப்ஸ் 1912 மற்றும் 1920 ஆகிய தேர்தல்களில் இருமுறை வெற்றி பெற்றார். ஹெலன் கெல்லர் மிகத் தைரியமாக சோசலிசக் கருத்துக்களைப் பரப்பினார். சில பத்திரிக்கையாளர்கள் அவரை குறை கூறி எழுதியிருந்தனர். தான் ஒரு பார்வையற்றவர், செவிடு என்பதைக் கருத்தில் கொண்டு தனக்கு சோசலிசத்தைப் பற்றி அதிகம் தெரியாது எனக் கருதி எழுதியிருந்தனர். ஹெலன் பத்திரிக்கையாளரை நேரில் சந்தித்து இந்த சமூக அமைப்புதான் பார்வையற்றதாகவும், செவிடாகவும் உள்ளது. இதனைத்தான் மாற்ற வேண்டும் என்றார். அப்போது தான் ஹெலன் கெல்லருக்கு சோசலிசக் கொள்கையில் எந்த அளவிற்கு பொது அறிவு உள்ளது எனத் தெரிய வந்தது. பெண்கள் அரசியலுக்கு வருவதே சிரமம். அதிலும் பார்வையற்ற, காது கேளாத பெண் பல இன்னல்களையும் தாண்டி அரசியலுக்கு வருவது என்பது ஆச்சரியமானதே. 17 தொழிற்சங்கம் மனித குலத்தின் பெரும்பான்மை உழைக்கும் மக்களாக உள்ளனர். அரசு முதலாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. நாட்டின் நிறுவனங்கள், வங்கியாளர்கள், நில உடமையாளர்கள் என அனைவரும் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுபவர்களாகவே உள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமலும், உரிமைகள் கொடுக்கவும் மறுக்கின்றனர். அது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது. தொழில்துறை அடக்குமுறைக்கு எதிராக மனித குலம் இறங்கிப் போராடும் போதுதான் சுகமான வாழ்க்கை நிலை ஏற்படும் என ஹெலன் கெல்லர் 1911 ஆம் ஆண்டில் எழுதினார். [] ஹெலன் கெல்லர் 1912ஆம் ஆண்டில் உலக தொழிற்சாலை தொழிலாளர்கள் அமைப்பில் (Industrial Workers of the world) உறுப்பினராகச் சேர்ந்தார். இந்த அமைப்பு 1905 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கொள்கை ஒரே பெரிய தொழிற் சங்கம் என்பதாகும். தொழிலாளர்கள் ஓரணியில் திரள வேண்டும். முதலாளித்துவத்திற்கு எதிராக அணி திரள என்பதாகும். இந்த அமைப்பின் மூலம் அமெரிக்காவின் பல பகுதிகளில் தொழிலாளர்களின் உரிமைக்காக போராட்டம் நடத்தப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்த்தப்பட்டது. ஹெலன் கெல்லர் பாராளுமன்ற சோசலிசம் என்பது அரசியல் சேறு நிறைந்ததாக உள்ளது என்றார். இவர் உலக தொழிற்சாலை தொழிலாளர்களுக்காக 1916 முதல் 1918 வரை எழுதினார். நான் ஏன் இதன் உறுப்பினராக சேர்ந்தேன் என்பதற்கானக் காரணத்தையும் இவர் குறிப்பிட்டார். பார்வையற்றவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் மீது பாராமுகமாக உள்ளனர். நான் இந்த அமைப்பில் ஈடுபாட்டுடன் செயல்படும் போது ஊனமுற்றவர்களின் மீது அக்கறையும், அவர்களின் கோரிக்கை மீது மற்றவர்களுக்கு கவனமும் ஏற்படும் என்றார். தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றி ஆராய ஒரு விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டபோது இவர் அதன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொழிலாளர்களின் நலன் பற்றி பாராமுகமாக இருப்பது மனித கட்டுப்பாட்டை மீறியதாக உள்ளது எனக் கருதி வந்தேன். ஆனால் அது பொதுவாக முதலாளிகளின் சுயநலம் மற்றும் பேராசை காரணமாகவே இருக்கிறது என்பதை முதன் முறையாக நான் அறிந்தேன் என ஹெலன் கெல்லர் கூறினார். வறுமை பெண்களை அதிகம் பாதிக்கிறது. வறுமைக்குக் காரணம் முதலாளிகளின் பாராமுகமே என ஹெலன் கண்டறிந்தார். மசாசூசெட்ஸில் உள்ள லாரன்ஸ் ஜவுளி தொழிலாளர்கள் 1912ஆம் ஆண்டில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை உலக தொழிற்சாலை தொழிலாளர் அமைப்பு முன் நின்று நடத்தியது. இந்த போராட்டம் தீவிரம் அடைந்தது. அதில் அனைத்து ஜவுளி தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 20000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஹெலன் கெல்லர் ஆதரவு தெரிவித்தார். ஆதரவு தெரிவித்ததோடு அல்லாமல் இது சோசலிசத்திற்கான போராட்டம் என்று எழுதினார். 18 காதல் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையிலும் காதல் மலர்ந்தது. காதல் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும். காதலில் புரிதல் என்பது மிக மிக முக்கியமானது. ஆனி சல்லிவனின் உடல் நலம் 1916 இல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஆனியின் உடல் நலம் தேறவும், ஓய்விற்காகவும் போர்டோரிக்கோ தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது ஹெலனின் எழுத்துப் பணிக்கு உதவ பீட்டர் ஃபேகன் என்னும் இளம் எழுத்தாளரை தற்காலிக காரியதரிசியாக நியமிக்கப்பட்டார். பீட்டர் மிக விரைவாக ஹெலனுடன் கருத்துக்களைப் பரிமாறும் கலையைக் கற்றுக் கொண்டார். இருவரும் நிறைய விசயங்களைப் பகிர்ந்து கொண்டனர். பீட்டர் சிறந்த மனிதராகவும் இருந்தார். அதுவரை ஆண்களிடம் நெருங்கியப் பழக்கம் இல்லாத ஹெலனுக்கு பீட்டரின் அன்பு புதிய உணர்வைத் தந்தது. இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டது. அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் ஹெலனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தக் காலகட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் திருமணம் செய்து கொண்டால், மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கையைக் கூட நடத்த முடியாது என்கிற கருத்து சமூகத்தில் நிலவி வந்தது. இதே கருத்தைத்தான் ஆனி சல்லிவனும், ஹெலனின் பெற்றோர்களும் கொண்டிருந்தனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள ஹெலன் முடிவு செய்த போதிலும் அவர்கள் திருமணம் நடக்கவில்லை. துரதிஷ்டவசமாக பீட்டர் ஃபேகன், ஹெலன் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகிச் சென்று விட்டார். என் தனிமையைப் போக்க வந்த சூரியன் அவன். இருள் நிறைந்த கடலில் மகிழ்வோடு இளைப்பாறக் கிடைத்த சிறு தீவு என் காதல் என அவரின் குறுகிய காலக்காதலைப் பற்றி ஹெலன் இவ்வாறு குறிப்பிட்டார். உலகில் உள்ள மிக அழகானப் பொருட்களைத் தொட்டுப் பார்க்க முடியாது என ஹெலன் குறிப்பிட்டார். ஆனால் மிகவும் அழகானப் பொருட்கள் என்பது மனிதர்களின் உணர்வுகள் தான் எனக் கூறியுள்ளார். எனது வாழ்க்கையினை அழகுப்படுத்தும் மிகச் சிறிய விசயங்களில் காதலும் ஒன்று. ஒருவர் மீது அன்பு செய்வதும், அன்பு செய்யப்படுவதும் உலகின் உன்னத விசயமாகும். எனினும் அந்த அன்பின் ஒவ்வோர் பக்கத்திலும் ஒவ்வோர் வாசனை உண்டு எனக் காதல் பற்றி ஹெலன் கெல்லர் குறிபிட்டுள்ளார். 19 மேடை பேச்சு ஊமையாக இருந்த ஹெலன் கெல்லர் முதன் முதலாக தனது கருத்தை தனது வயது குழந்தையிடம் பரிமாறிக் கொண்டது. மே 26, 1888ஆம் ஆண்டில் தான். அப்போது அவருக்கு வயது எட்டு ஆனி சல்லிவன் விரல்கள் மூலம் பேசும் முறையைக் கற்றுக் கொடுத்திருந்தார். ஹெலன் கெல்லர் பெர்கின்ஸ் பள்ளிக்குச் சென்ற போது தன் வயது கொண்ட பள்ளி குழந்தைகளிடம் முதன் முதலாக நேரடியாகவும், எளிதாகவும் கருத்தை பரிமாறி, பேசிக் கொண்டார். அப்பள்ளிக் குழந்தைகளும் அவருடன் தொடுதல் முறையில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஹெலன் கெல்லர் ஆங்கில எழுத்துகள் 26யும் கற்றுக் கொண்டார். ஆங்கில எழுத்துக்கள் 26க்கும் தனித்தனியாக வெவ்வேறு விரல் நிலைகளையும், உள்ளங்கையைத் தொட்டும் கற்றுக் கொண்டார். பார்வையற்ற, காது கேளாதவர்களிடம் பேசுவதற்கு அவருக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை. மொழி பெயர்ப்பாளர் யாரும் தேவை இல்லை. எந்தவிதக் கவலையும் இன்றி, தயக்கமின்றி நேரிடையாக பேச முடிந்தது. தன்னுடைய சொந்த மொழியில், பார்வையற்ற, காது கேளாதவர்களிடம் பேசுவது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. [] ஹெலன் கெல்லர் பேசக்கற்றுக் கொண்டார். அவரை மற்றவர்கள் முன்னிலையில் பேச வைக்க வேண்டும் என ஆனி டீச்சர் முடிவு செய்தார். ஆனி ஒரு சிறந்த பேச்சாளரும் கூட தன்னை போல் ஹெலனையும் ஒரு மேடை பேச்சாளராக மாற்ற வேண்டும் என ஆசைப்பட்டார். நியூ ஜெர்சியில், மோன்டேக்ளேர் என்னுமிடத்தில் ஹெலனை முதன் முதலாக மேடையில் பேச வைத்தார். ஹெலன் கெல்லர் முதன் முதலாக பிப்ரவரி 1913ஆம் ஆண்டில் பேசினார். முதன் முதலாக ஹெலன் பேசும் போது மிகவும் பயந்துவிட்டார். ஆனால் எப்படி சுருக்கமாகவும், தெளிவாகவும் மேடையில் பேச வேண்டும் என்பதை ஆனி கற்றுக் கொடுத்தார். ஒரு வழியாக ஹெலனை மேடையிலும் ஏற்றி விட்டார். என் உடல் நடுங்கியது. எனது மனசு உறைந்து போனது. எனது இதயத்துடிப்பு நின்றுவிட்டது போல் இருந்தது. நான் என்ன செய்ய வேண்டும், எனக்குள் ஏற்பட்ட தயக்கத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என ஆனியைத் தொட்டார். ஹெலன் தனது விரலை ஆனியின் உதட்டில் வைத்து காட்டி எப்படி உதட்டு அசைவைக் கொண்டு வாசிக்க முடியும் என பார்வையாளர்களிடம் காட்டினார். ஆனி மெதுவாக ஹெலனின் கையைப் பிடித்து அழுத்தி தடவி பேசுமாறு தூண்டினார். ஆனி ஒவ்வொரு வார்த்தையாக ஹெலனுக்குச் சொல்ல பார்வையாளர்கள் புரிந்து கொள்ளுமாறு பேசினார். ஆனால் ஒன்றைச் சொல்ல முடியாமல் தடுமாறினார். இருப்பினும் தட்டுத் தடுமாறி பேசினார். ஹெலன் தனது உரையை பேசியவுடன், அவரை சுற்றி பார்வையாளர்கள் கூடினர். கையை பிடித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர் மேடையை விட்டுக் கீழே இறங்கினார். அவர் மேடையில் பேசினாலும் அவருக்கு அது தோல்வி என்றே கருதினார். அவர் அடக்க முடியாமல் கண்ணீர்விட்டார். இது அவருக்கு மேடையில் கிடைத்த முதல் அனுபவம். இது ஆனி இதை ஒரு வெற்றி என்றே கூறினார். இதுதான் ஹெலனை தொடர்ந்து 50 ஆண்டுகள் மேடையில் பேச வைத்தது. ஒவ்வொரு பொதுக் கூட்டத்தில் ஹெலன் பேசும்போது கலந்து கொண்ட பார்வையாளர்கள் யார், அவர்களுக்கு எந்த தகவலைக் கொடுக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே கண்டுபிடிக்க முயற்சி செய்வார். அவர் பார்வையாளர்களின் நலன்கள் மற்றும் தேவையைப் பொருத்து ஆர்வத்துடன் அவர்கள் உற்சாகம் அடையும் வகையில் பேசினார். குறிப்பாக ஏழைகள், இளைஞர்கள், பார்வையற்றவர்கள், காது கேளாதோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார். ஹெலனின் இலக்கு இவர்களின் வாழ்க்கையை முன்னேறும் வகையிலேயே இருந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளை ஆனி சல்லிவன் மூலம் தெரிந்து கொண்டு அதற்கான பதிலை அளிப்பார். கலந்து கொண்ட பார்வையாளர்கள் இவரின் பேச்சுத் திறமையைக் கண்டு ஆச்சரியப்படுவர். இவரின் திறமையைக் கண்டு பிரமிப்பும் அடைந்தனர். 20 சேவை ஹெலன் கெல்லர் மாற்றுத் திறனாளிகளுக்காகவே சேவை செய்தார். எல்லோரையும் போலவே மாற்றுத்திறனாளிகளும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். உலகில் வாழும் அனைவரும் சமமானவர்களே என ஹெலன் தனது பேச்சிலும், எழுத்திலும் எழுதினார். அவர்களின் வாழ்க்கை உயர போராடினார். மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டங்கள் கொண்டு வர பாடுபட்டார். பார்வையற்றோருக்காவும், காது கேளாத வாய் பேச இயலாதவர்களுக்காக பாடுபடுவதை தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டார். தன் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக அமையும்படி நடந்து கொண்டார். தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டினார். பார்வையற்றவர்களுக்காக ஒரு தேசிய நூலகத்தை உருவாக்கினார். இதற்காக உலகம் முழுவதும் இருந்து நூல்களைப் பெற்று நூல் நிலையத்தை வளர்த்தார். [] அமெரிக்காவில் போரினால் கண் இழந்தவர்களுக்கான நிவாரண போர் நிதி வாரியம் 1915இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வாரியத்தின் முதல் இயக்குனராக ஹெலன் கெல்லர் நியமிக்கப்பட்டார். 1924ஆம் ஆண்டில் ஹெலன் கெல்லர் நிதியக அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. பார்வையற்ற, காது கேளாத ஒருவர் மற்றவர்களுக்கு செய்யும் சேவை உலகம் முழுவதும் தெரிய வந்தது. பல தொழிலதிபர்கள் ஹெலன் கெல்லர் அறக்கட்டளைக்கு உதவி செய்தனர். சுமார் 1.5 கோடி பணம் நிதியாகக் கிடைத்தது. அதனைக் கொண்டு பார்வையற்றவர்களுக்கு உதவி செய்தார். உலகில் நடத்தப்பட்டு வந்த பார்வையற்ற பள்ளிகளுக்கு நிதி உதவி செய்தார். அமெரிக்காவில் பார்வையற்றவர்களுக்காக அலுவலக ஆட்சி மொழியாக பிரெய்லி எழுத்து 1918இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்குக் காரணம் ஹெலன் கெல்லர்தான். ஹெலன் கெல்லர் பார்வையற்ற இளைஞர்களுக்காக ஒரு ஏஜென்ஸியையும் ஆரம்பித்தார். லையன்ஸ் கிளப்புடன் உறவு கொண்டு உலகம் முழுவதும் பார்வையற்ற, காது கேளாதவர்களுக்கு கருவிகள் வழங்க ஏற்பாடு செய்தார். அமெரிக்காவில் கண்பார்வையற்றோர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் அதிகாரபூர்வ பேச்சாளராக ஹெலன் கெல்லர் நியமிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் எழுச்சி அடையவும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், பார்வையற்றோர் கழகம் வளர்ச்சி பெறவும் பாடுபட்டார். பலருக்கு கடிதம் எழுதி இதனை வளர்த்தார். 1946ஆம் ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பார்வையற்றோர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் கவுன்சிலராக ஹெலன் கெல்லர் நியமிக்கப்பட்டார். உலகளவில் இயங்கும் பார்வையற்றோர் அமைப்பு எதுவாக இருந்தாலும் அதன் பொறுப்புகளில் ஒருவராக இவரை தேர்வு செய்யும் அளவிற்குப் பிரபலம் அடைந்தார். பார்வையற்ற, காது கேளாதோர் பிரச்சனை எதுவாக இருந்தாலும் தீர்த்து வைக்கும் நிபுணராக ஹெலன் விளங்கினார். இங்கிலாந்தில் பார்வையற்றவர்களுக்காக 1932ஆம் ஆண்டில் ஒரு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அச்சங்கத்தின் உதவித் தலைவராக ஹெலனைத் தேர்ந்தெடுத்தனர். பார்வையற்றோர் கழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேல் ஹெலன் சேவை புரிந்தார். இதன் மூலம் பார்வையற்றவர்களுக்கான பேசும் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கான பயிற்சிக் கொடுக்கப்பட்டது. தான் இறக்கும் வரை இந்த அமைப்பின் மூலம் பார்வையற்றவர்களுக்காகப் பாடுபட்டார். பார்வையற்றவர்களை விட காது கேளாதவர்கள் மீதே ஹெலன் அதிகம் அக்கரை காட்டினார். அதைவிட பார்வையற்ற மற்றும் காதுகேளாத ஆகிய இரண்டு குறைபாடு கொண்டவர்கள் மீது மிக அதிகம் அக்கறை காட்டினார். பார்வையற்றவர்கள், பார்வை இழந்தோர்களுக்காக கருவிகள், உபகரணங்கள் வாங்கிக் கொடுத்து உதவினார். பார்வையற்றோரின் தலைமை அலுவலகம் நியூயார்க் நகரில் உள்ளது. இங்கு ஹெலன் கெல்லர் பார்வையற்றவர்களுக்காக எழுதிய கட்டுரைகள், புத்தகங்கள் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். இங்கு அவரின் சேவைகளை தனி கவனம் செலுத்தி பாதுகாத்து வருகின்றனர். அவர் செய்த சாதனைகளை வரிசைப்படுத்தி பார்வைக்கு வைத்திருக்கின்றனர். 21 உலக அமைதி இரண்டாம் உலக யுத்தம் நடந்த போது உலக அமைதி வேண்டும் எனக் குரல் கொடுத்தார். இரண்டாம் உலக யுத்தத்தில் காயமடைந்த, உடல் ஊனமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் தொடருங்கள் என தெம்பு ஊட்டினார். அணு ஆயுதங்கள் வேண்டாம் எனக் கூறினார். அணு சக்தியை ஆக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும். அதுவே சர்வதேச அளவில் உலக அமைதியை ஏற்படுத்தும். அணு சக்தி ஆக்கத்திற்கே, அழிவிற்கல்ல என உலகம் முழுவதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆதரவு திரட்டினார். ஹெலன் கெல்லர் இதற்கு ஆதரவு தெரிவித்தார். கட்டுரைகள் எழுதினார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்கு அவர் டிசம்பர் 17, 1947 இல் நன்றி தெரிவித்து ஹெலன் கெல்லருக்குக் கடிதம் எழுதினார். ஒரு நாள் ஹெலன் கெல்லரை அவரது நண்பர் பார்க்கச் சென்றார். உங்களுக்கு விருப்பமான ஒன்று தரப்படுகிறது என்றால் அது என்னவாக இருக்க வேண்டும் என அவர் கேட்டார். பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் தனக்குத் தேவை என்று சொல்வார் என அந்த நண்பர் எதிர்ப்பார்த்தார். இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் என ஹெலன் கெல்லர் பதில் அளித்தார். யுத்தத்தை அவர் வெறுத்தார். உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்றே விரும்பினாார். 22 புத்தகங்கள் ஹெலன் கெல்லர் புத்தகங்களை விரும்பிப் படித்தார். அவர் பிரெய்லி எழுத்துக்களில் வெளிவந்த புத்தகங்களை வாங்கிப் படித்தார். ஆனி சல்லிவன் அரசியல், வரலாறு, தத்துவம் சார்ந்த புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதோடு படித்தும் காட்டினார். புத்தகங்கள் தந்த இன்பம் ஹெலனுக்கு மகத்தானதாக இருந்தது. “என் மவுனம் நான் வாசித்த புத்தகங்களின் சாரத்தால் ஆனது.” என ஹெலன் கெல்லர் புத்தகங்கள் வாசிப்பதையும், நேசிப்பதையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவர் ஜெர்மன், பிரெஞ்ச் இலக்கியங்களையும், சேக்ஸ்பியரின் நாடகங்களையும் படித்தார். கவிதைகள் என பலவற்றை விரும்பி படித்தார். மனிதனின் பரிணாமம், உலகம், மனிதனின் இடப்பெயர்ச்சி என பல சமூகம் சார்ந்த புத்தகங்களையும் படித்தார். புத்தகங்கள் அவரது வாழ்வில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் சிறந்தப் பேச்சாளராக மாறுவதற்கும் உதவியது. 23 தோழமை ஆனி சல்லிவன் ஹெலன் கெல்லரின் ஆசிரியராக மட்டும் இல்லை. அவர் ஒரு தோழராக இருந்தார். ஹெலனை உன்னதமான ஒரு நிலைக்கு உயர்த்தியவர். ஆனி சல்லிவன் பாதி பார்வையற்றவர். உடல் நலம் குன்றியவராக இருந்தார். ஆனால் ஹெலன் கெல்லரை முன்னேற்றுவதில், தனது வாழ்க்கையை முழுவதும் அவரின் நலனுக்காகவே அர்பணித்தார். அவருக்கு தாயாகவும், ஆசிரியராகவும், நண்பனாகவும், தோழராகவும் இருந்து வழி காட்டினார். இந்த தோழமை 50 ஆண்டுகள் தொடர்ந்தது. ஹெலனுக்கு பாடம் நடத்துவதற்காக வந்த போது, பணத்திற்காகவும், வயிற்றுப் பிழைப்பிற்காகவும் வந்தவர் எனக் கருதி விட முடியாது. அவர் ஹெலனை கண்டவுடன் அக்குழந்தையின் பரிதாப நிலையைக் கண்டார். தன்னால் முடியும் அளவிற்கு அக்குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என உறுதியாக இருந்தார். அது மட்டும் அல்லாமல் பொறுமையும் சகிப்புத் தன்மையும் கொண்டவராக இருந்தார். ஒரு 20 வயது பெண் ஆசிரியருக்கு இந்தளவிற்கு பொறுமையும், சகிப்புத் தன்மையும் இருந்தது என்பது ஆச்சரியம் ஊட்டக் கூடியது தான். ஹெலனைப் பொருத்தவரை குழந்தைப் பருவத்தில் கரடு, முரடான குழந்தையாக இருந்தார். அவரை பெற்றோர்கள் சமாளிப்பதே பெரும் பிரச்சனையாக இருந்தது. ஒரு ஆசிரியரை வைத்துக் கொண்டால் ஹெலனை நல்வழிப்படுத்த முடியும் என அவரது பெற்றோர்கள் கருதினர். உண்மையில் நல்வழிப்படுத்தும் ஒரு ஆசானாக ஆனி சல்லிவன் அமைந்துவிட்டார். கோபமும், அடங்காத்தனமும் கொண்ட ஹெலனை தனது பொறுமையாலும், அன்பாலும் சாந்தப்படுத்திவிட்டார். [] உடல் குறைபாடுகள் இல்லாத மாணவர்களுக்கு பாடம் நடத்தி புரிய வைக்கவே பல ஆசிரியர்கள் தடுமாறுகின்றனர். ஆனால் பார்வையற்ற, காது கேளாத, பேசாத குழந்தைக்கு பாடம் நடத்துவது என்பது எளிதான காரியமா? நாம் சிந்தித்துப் பார்த்தால் அது எவ்வளவு சவால் நிறைந்ததாக இருக்கும். அப்படி ஒரு சவாலை ஏற்றுக் கொண்டவர்தான் ஆனி சல்லிவன். ஆனிக்கு திருமணம் ஆனவுடன் கியூன்ஸ் என்னுமிடத்தில் உள்ள பாரஸ்ட் ஹில்ஸ் என்ற இடத்திற்குச் சென்றனர். ஆனி தன்னுடன் ஹெலனையும் அழைத்துச் சென்றார். மூவரும் ஒரே வீட்டில் தங்கினர். அந்த வீட்டில்தான் அமெரிக்க பார்வையற்றோர் அறக்கட்டளையை ஹெலன் ஆரம்பித்தார். 1914ஆம் ஆண்டில் கணவரிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஆனி பிரிந்தார். அந்த ஆண்டிலிருந்து ஆனியின் உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அப்போது பாலி தாம்சன் (Polly Thompson) என்பவரை வீட்டில் வேலைக்கு பணியமர்த்தினார். அவர் ஒரு ஸ்காட்லாந்து பெண். அவருக்கு செவிடு மற்றும் பார்வையற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முன் அனுபவம் எதுவும் கிடையாது. அவர் ஹெலனின் தனி செயலாளராக இருந்தார். ஆனி சல்லிவனுக்கு உடல் நலம் நாளுக்கு நான் பாதிப்படைந்தது. அவருக்கு மருத்துவ உதவிகளை ஹெலன் செய்தார். ஆனி சல்லிவனுக்கு மருத்துவம் செய்வதற்காக ஐரோப்பாவிற்கும் சென்றனர். அப்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ஹெலனின் வாழ்க்கையை முன்னேற்றி கல்வி ஒளி கொடுத்த தாய் என ஆனியைப் புகழ்ந்தார். ஆனி சல்லிவனின் சிறந்த வேலையைப் பாராட்டி ஸ்காட்லாந்து பல்கலைக் கழகமும், ரூஸ் வெல்ட் நினைவு ஃபவுண்டேஷனும் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தின. நாளடையில் ஆனி கண் பார்வையை இழந்தார். இது ஹெலனை மிகவும் பாதித்தது. ஆனியின் உடல் நலம் கெட்டு அவர் கோமா நிலைக்குச் சென்றார். மயக்க நிலையில் இருந்த ஆனி 1936ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். அவரின் இறப்பு ஹெலனை மிகவும் பாதித்தது. உலகின் பல நாடுகளில் இருந்து ஹெலனுக்கு ஆறுதல் கூறப்பட்டது. ஹெலனின் நிலையிலிருந்து நாம் ஆனி டீச்சரை பார்த்தால் நாம் ஒவ்வொருவரும் ஆனி சல்லிவனுக்காக கண்ணீர் வடித்துத்தான் ஆக வேண்டும். ஆனி சல்லிவன் அக்டோபர் 20, 1936ஆம் ஆண்டில் நியூயார்க்கில் பாரஸ்ட் ஹில்லில் இறந்தார். அவர் ஹெலன் கெல்லரை உலகப்புகழ் பெறச் செய்த உலகின் தலைச் சிறந்த ஆசிரியை. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20 அன்று ஆனி சல்லிவன் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனி சல்லிவன் இறந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு, ராட்கிளிஃப் கல்லூரி அவரை கௌரவிக்கும் வகையில் ஒரு செயற்கை நீருற்றை கல்லூரியில் அமைத்தது. அந்த விழாவிற்கு ஹெலன் கெல்லரை அழைத்திருந்தனர். ஆனி சல்லிவன் தனக்கு முதன் முதலில் கற்றுக் கொடுத்த வாட்டர் என்கிற வார்த்தையை கூறி அனைவரையும் நெகிழச் செய்தார். ஆனி இறந்த பிறகு பாலி தாம்சனுடன் ஹெலன் கனெக்டிகட் சென்றார். உலகம் முழுவதும் சென்று பார்வையற்றவர்களுக்காக நிதி திரட்டினர். 1957இல் பாலி தாம்சன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவர் குணம் அடையாமல் 1960ஆம் ஆண்டில் இறந்தார். பாலி தாம்சன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு உதவிட வின்னீ கார்பாலி (Winnie Corbally) என்கிற செவிலியரை வைத்துக் கொண்டார். பாலி தாம்சன் இறந்தப் பிறகு அந்த செவிலியர் ஹெல்லரின் இறுதிக்காலம் வரை உடன் இருந்தார். இப்படி பலர் அவரின் வாழ்க்கையில் தோழமையுடன் இருந்தனர். [] 24 பயணங்கள் ஹெலன் கெல்லர் உடல் ஊனமுற்றோருக்காக பேசி வந்ததால் பல நாடுகள் அவரை பேச அழைத்தன. 1930ஆம் ஆண்டிலிருந்து பல நாடுகளுக்குச் சென்று பேசினார். அவர் பேசிய இடங்களில் எல்லாம் பார்வையற்றோருக்காக நிதி சேர்த்தார். ஹெலன் தன்னுடைய டீச்சர் ஆனி சல்லிவனுடன் பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். செல்லும் இடமெல்லாம் தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டினார். மாற்றுத் திறனாளிகளாலும் சாதிக்க முடியும் என்பதை பல உதாரணங்களுடன் விளக்கினார். ஹெலன் கெல்லர் 5 கண்டங்களில் 39 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். செல்லும் இடமெல்லாம் ஊனமுற்றவர்களுக்காக சேவை செய்தார். இவர் 1965ஆம் ஆண்டில் ஆசிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அது ஒரு மிக நீண்ட சுற்றுப்பயணம். அப்போது அவருக்கு வயது 75. இந்த வயதில் அவர் 40,000 மைல்கள் தூரம் பயணம் செய்தார். 5 மாத இடைவெளியில் இந்தக் கடினமான மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டார். இது தேர்தல் பயணம் அல்ல. பார்வையற்றோருக்காக உதவிட மேற்கொண்ட பயணம் என்பதை மறந்துவிடக் கூடாது. இவர் பயணத்தின் போது, உலகில் பல பிரபலமான தலைவர்களைச் சந்தித்தார். பல தலைவர்கள், மிகச்சிறந்த மேதைகளை நேருக்கு நேர் சந்தித்து பேசி மகிழ்ந்தார். பயணம் மேற்கொண்ட நாடுகளில் எல்லாம் காது கேளாத, பார்வையற்றவர்களுக்குப் பள்ளிகள் தொடங்க உலக நாடுகளை வற்புறுத்தினார். பல நாடுகள் இதனை வரவேற்றன. ஹெலன் கெல்லரின் பயணத்தின் மூலம் பல நாடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பயணங்களில் அற்புதமான, உற்சாக மூட்டும் உரைகளை நிகழ்த்தினார். ஹெலன் கெல்லர் 1931 ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்றார். அங்கு இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி மேரி ஆகியோரைச் சந்தித்தார். அவர்கள் ஹெலனின் திறமையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். தொடுதல் மூலம் எப்படி விசயங்களை புரிந்துகொள்கிறார் என்பதை நேரில் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் ஹெலன் கெல்லருக்கு நிதி உதவி செய்து பாராட்டினர். ஹெலன் கெல்லர் ஜப்பான் மூன்று முறை சென்றுள்ளார். அவர் இரண்டாவது உலகப் போர் முடிந்த பின்னர் ஜப்பான் சென்றார். அப்போது அவர் அமெரிக்காவால் அணு குண்டு வீசி அழிக்கப்பட்ட ஹிரோசிமா மற்றும் நாகசாகி நகருக்கும் சென்றார். அங்கு நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அணு ஆயுதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஹெலன் ஜப்பான் மக்கள் மீது அதிகம் பாசம் கொண்டிருந்தார். அவர்களின் உழைப்பைப் பாராட்டினார். தொட்டும், நுகர்ந்தும், சுவைத்தும் அவர்களின் அன்பை புரிந்து கொண்டார். ஜப்பான் அவருக்கு முழு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஜப்பானின் உணவு, பட்டுத்துணி, டாட்டாமி விரிப்பு, வெந்நீர் குளியல் ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்தது. [] ஆனி டீச்சர் இறந்த பிறகு ஹெலன் கெல்லர் பாலி தாம்சனுடன் பல நாடுகளுக்குப் பயணம் செய்தார். அவர் சீனா, ஜப்பான், இந்தியா உள்பட பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். ஆசியாவில் பயணம் மேற்கொண்ட போது 1955ஆம் ஆண்டில் ஹெலன் கெல்லர் இந்தியாவுக்கு வந்தார். அவர் இந்தியாவில் ரவீந்திரநாத் தாகூர், நேரு ஆகியோரைச் சந்தித்தார். ஹெலன் கெல்லர் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று இந்தியாவின் அப்போதைய ஜனாதிபதி டாக்டர். ராஜேந்திர பிரசாத்தைச் சந்தித்தார். அங்கு ஹெலனுக்கு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் ஜவகர்லால் நேரும் கலந்து கொண்டார். ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர். அவர் சற்று முன் கோபம் கொண்டவர். சட்டென்று கோபப்படுவார். ஆனால் உடனே கோபம் மறைந்துவிடும். தேசாபிமானத்தில் தலை சிறந்தவர். நேருவின் முகத்தை ஹெலன் கெல்லர் தொட்டுத் தடவி அவரை அறிந்து கொண்டார். நேருவைப் பற்றி அவர் முன்பே தெரிந்திருந்தாலும், அவரின் முகத்தை அவர் பார்த்ததில்லை. அவரின் முகத்தைத் தொட்டுப் பார்த்த பிறகு இவர்தான் நேரு; இவர் இப்படித் தான் இருப்பார் என்பதைத் தெரிந்து கொண்டார். ஹெலனின் கை விரல்கள் அவருக்குக் கண்ணாக செயல்பட்டன. மேடாக அமைந்துள்ள உமது நெற்றியையும், அது வெளிப்படுத்தும் உமது மேதைத் தனத்தையும் வருணிக்க ஒரு கவிஞனின் கற்பனை ஊற்று வேண்டும். வாழ்வியல் நாகரீகத்துக்கு அடித்தளமாகிய மானிடத்தின் உன்னத இலக்குகளை முன்கொணரும் புருஷோத்தமன் ஒருவரைப் பற்றி என் மனதில் ஒரு கனவு உண்டு. அதை உங்களிடம் நான் உணருகிறேன் என ஹெலன் கெல்லர் நேருவிடம் கூறினார். தான் சந்தித்த தலைவர்களில் நேருவே தன்னை மிகவும் கவர்ந்ததாகச் சொன்னார். இந்தியாவில் ஹெலன் கெல்லர் மும்பைக்குச் சென்றார். அங்கு பார்வையற்றோர்க்காக உருவாக்கப்பட இருந்த ஒரு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்கச் சென்றார். தாஜ்மஹாலின் பளிங்குக் கற்களை தொட்டுத் தடவிப் பார்த்தார். மும்தாஜின் கல்லறையைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தார். உலக அதிசயங்களில் ஒன்றை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். பார்வையற்ற ஒருவராலும் தாஜ்மஹாலின் அழகை ரசித்து வருணிக்க முடியும் என்பதை ஹெலன் கெல்லர் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. ஹெலன் கெல்லர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னைக்கும் வந்தார். அவருக்கு கவர்னர் மாளிகையில் விருந்து உபச்சாரம் செய்யப்பட்டது. ஹெலன் கெல்லர் தமிழ்நாட்டில் சிறந்த பின்னணி பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியையும் சந்தித்தார். அவர் குரலை தனது விரல்களால் தொட்டு அவரின் இசையைக் கண்டார். ஊட்டிக்குச் சென்று பூங்காவில் பூத்திருந்த மலர்களை தொட்டு முகர்ந்து பரவசம் அடைந்தார். அவர் இந்தியாவிற்கு வந்த போது அவர் சேலை உடுத்திக் கொண்டார். அவருடன் வந்த பாலி தாம்சனும் சேலை உடுத்திக் கொண்டார். இதெல்லாம் அவர் இறக்கும் வரை இந்தியாவை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன. 25 வளர்ப்பு நாய் ஹெலன் கெல்லர் மூன்று முறை ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டார். அவர் ஜப்பானியர்களின் விருப்பத்திற்குரிய நண்பராக மாறினார். ஹெலனுக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும். ஹெலன் ஜப்பானுக்கு 1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதன் முறையாகச் சென்றார். அப்போது அகிடா என்னும் எல்லைப்பகுதிக்குச் சென்றார். இது வடக்கு ஜப்பானின் மலைப்பிரதேசம். இப்பகுதியில் அகிடா (Akita) எனப்படும் பெரிய வேட்டை நாய்கள் வளர்க்கப்படுகின்றன. இவை இந்த மலைப்பகுதியில் மட்டுமே வளரும் விசேஷ நாயாகும். ஹெலனுக்கு அகிடா நாயின் மீது ஆசை ஏற்பட்டது. ஹெலனுக்கு நண்பர் ஒருவர் ஒரு நாய்க்குட்டியைக் கொடுத்தார். நாய் கொடுத்த நண்பர் விபத்தில் இறந்துவிட்டார். அவரின் சகோதரர் ஒரு நாய்க்குட்டியை அன்பளிப்பாக ஹெலனுக்கு வழங்கினார். இது ஜப்பான் அரசு மூலம் ஜூலை 1938இல் அதிகாரப்பூர்வமாக ஹெலனுக்கு வழங்கப்பட்டது. நாய்க்குட்டியை வழங்கியவரின் பெயர் ஹென்சான் – கோ (Kenzan – go). அந்த நாய்க்குட்டிக்கு கோ கோ (go – go) எனப் புனைப்பெயர் வைத்து ஹெலன் அழைத்தார். [] அகிடா நாய் இனத்தை அமெரிக்காவில் முதன் முதலில் வளர்த்தவர் ஹெலன் கெல்லர்தான். ஜப்பான் நாட்டை சேர்ந்த அகிடா நாய் இனத்தை ஹெலன் அமெரிக்காவில் அறிமுகம் செய்தார். அதன் மூலம் அவரை ஜப்பானியர்கள் பாராட்டினர். ஹெலன் இந்த நாயை பற்றி அகிடா என்னும் இதழில் எழுதினார். எப்போதும் இதன் ரோமம் ஒரு தேவதைக்கு இருப்பது போலவே இருந்தது. இது போல் வேறு எந்த செல்லப் பிராணியிடமும் இவ்வளவு மென்மையைக் உணர முடியாது. இது அனைத்து நல்ல குணங்களும் கொண்டுள்ளது. என்னிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்கிறது. அது எனக்கு தோழனாகவும், நம்பகமான பாதுகாவலனாகவும் இருக்கிறது. ஹெலன் கெல்லரின் செல்ல நாயான அகிடா இறந்த போது ஹெலன் மிகவும் வேதனை அடைந்தார். இதனை அறிந்த நண்பர்கள் ஹெலனுக்கு ஆறுதல் கூறியதோடு, அதற்குப் பதிலாக வேறு ஒரு நாய்க்குட்டியை வாங்கிக் கொள்ள பண உதவி செய்தனர். ஆனால் அந்தப் பணத்தைக் கொண்டு அவர் நாய்க்குட்டி வாங்காமல், கண் பார்வை இழந்த ஒரு சிறுவனுக்கு பண உதவி செய்தார். 26 மோப்ப சக்தி ஹெலன் கெல்லருக்கு நன்கு உணர்ந்து கொள்ளும் மோப்ப சக்தி இருந்தது. அவர் பொருட்களின் வாசனையை முகர்ந்துப் பார்த்து அது என்ன என்பதை எளிதில் கூறிவிடும் ஆற்றல் கொண்டவராக இருந்தார். அவருக்கு கைவிரல் எப்படி கண்ணாக செயல்பட்டதோ அது போலவே மோப்ப சக்தியும் பொருட்களைக் கண்டறிய உதவியது. ஹெலன் கெல்லர் தான் சென்ற நாட்டின் மண்ணின் வாசனையைக் கொண்டு அது எந்த நாடு என்பதைக் கூறிவிடுவார். ஒருவர் நடந்து வரும் போது ஏற்படும் அதிர்வைக் கொண்டே அவர் யார் என்பதைக் கண்டுபிடித்து விடுவார். நடந்து வரும் அதிர்வைக் கொண்டே குணத்தைக் கண்டுபிடித்து விடுவார். ஒருவர் தொடுவi கண்டு அவரின் குணத்தைக் கண்டுபிடித்து விடுவார். கையை குலுக்கும் போதே அவர் நல்ல எண்ணம் கொண்டவரா அல்லது கெட்ட எண்ணம் கொண்டவரா என்பதைக் கண்டுபிடித்து விடுவார். மோப்ப ஆற்றலைக் கொண்டு பொருட்களை கண்டுபிடிப்பது போல், அதிர்வுகளை கொண்டு ஆட்களையும், விலங்குகளையும் கண்டுபிடித்தார். அவர் மிருகக்காட்சி சாலைக்கு சென்ற போது கூண்டின் உள்ளே இருக்கும் விலங்கின் குரலை வைத்து அது என்ன விலங்கு என்பதைக் கூறிவிட்டார். அவரால் கேட்க முடியாவிட்டாலும், கூண்டின் கம்பியில் ஏற்படும் அதிர்வை வைத்து அது எந்த மிருகத்தின் குரல் என்பதைக் கண்டறிந்து கூறும் ஆற்றல் கொண்டவராக இருந்தார். சாதாரண மனிதர்களைவிட பார்வையற்ற, காது கேளாதவர்களுக்கு இது போன்று மோப்ப உணர்வும், அதிர்வை உணரும் ஆற்றலும் அதிகம் தேவைப்படுகிறது. இதனை சரியாக ஆளுமை கொள்வதன் மூலமே வாழ்க்கையை எளிமையாக நடத்த முடியும். 27 பொழுது போக்கு ஹெலன் கெல்லர் சிறு வயதிலேயே குதிரை சவாரி செய்யக் கற்றுக் கொண்டார். நீந்தவும் கற்றுக் கொண்டார். மரம் ஏறவும் கற்றுக் கொண்டார். படகு ஓட்டவும் அவருக்குத் தெரியும். இதையெல்லாம் ஆனி சல்லிவன் தொடுதல் முறையில் ஹெலனுக்குக் கற்றுக் கொடுத்தார். கோடை காலத்தில் அவர் குதிரை சவாரி செய்வார். அவருக்கு குதிரை சவாரி செய்வது மிகவும் பிடித்தமானது. இவர் பீவரி மலைப்பகுதியிலும் குதிரை சவாரி செய்தார். குதிரை சவாரி செய்வது என்பது ஒரு விளையாட்டிற்காக அல்ல. ஆனால் அது இயற்கையோடு தோழமை கொள்வதற்காக என்றார். ஹெலனுக்கு ரேண்டம் பை சைக்கிள் கூட ஓட்டத் தெரியும். இதனை இருவர் அமர்ந்து இயக்க வேண்டும். இது தவிர ஹெலன் கெல்லர் சதுரங்கம் விளையாடவும் கற்றுக்கொண்டார். சதுரங்கம் எப்படி விளையாடுவது என்பதைக் கற்றுக் கொடுக்க அன்றைக்கு பிரெய்லி முறையில் புத்தகம் கிடையாது. ஆனி சல்லிவன் ஹெலனுக்கு சதுரங்கத்தையும் (Chess) கற்றுக் கொடுத்தார். [] ஹெலன் சதுரங்கம் விளையாடுவதற்கு என்றே தனியாக வடிவமைக்கப்பட்ட பலகை ஒன்று உண்டு. வெள்ளை காய்கள் சற்று பெரியதாகவும், கருப்பு காய்கள் சற்று சிறியதாகவும் இருக்கும். காயை நகர்த்தும் அதிர்வைக் கொண்டு அடுத்தது தான் நகர்த்த வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு நகர்த்துவார். இந்த விளையாட்டிலும் அவர் திறமைசாலியாகவே இருந்தார். ஆனி சல்லிவனிடம் 1900 ஆம் ஆண்டில் விளையாடி வெற்றியும் பெற்றார். இவர் தனது நண்பர்களுடனும் சதுரங்கம் விளையாடுவார். சதுரங்கம் தவிர இவருக்கு சாலிட்டர் சீட்டும் விளையாடத் தெரியும். அவரது சீட்டில் பிரெய்லி எழுத்து அடையாளம் வலது பக்க மூளையில் குத்தப்பட்டிருக்கும். இதனைக் கொண்டு அவர் விளையாடுவார். மாலைப் பொழுதில் தனது செல்ல நாயை அழைத்துக் கொண்டு நடைப்பயணம் மேற்கொள்வார். 28 பொன்மொழிகள் ஹெலன் கெல்லர் பல இடங்களில் பேசப்பட்ட தத்துவங்கள் அனுபவம் சார்ந்தவையாக இருந்தன. அவை மற்றவர்களின் வாழ்க்கைக்கும் பொருந்தும் படியாக உள்ளன. இதனை ஹெலனின் பொன்மொழிகள் என்று பலராலும் போற்றப்படுகின்றன. பறக்க விரும்பினால் படர முடியாது. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை. ஒரு முறை கெல்லரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு “இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் படைத்திருக்கிறார் என்று நம்புகிறேன். அதை என்றாவது ஒரு நாள் நான் உணர்வேன். அப்போது தான் நான் அதுகுறித்து மகிழ்வேன்” என்று கூறினார். வாழ்க்கையைப் பற்றி அவர் கூறியதாவது… வாழ்க்கை என்பது துணிச்சல் மிகுந்த தீரச் செயல் அல்லாமல் வேறு ஒன்றுல்ல. ஹெலன் தனக்காகத் திறக்கப்பட்ட கதவுகளை வெகு எளிதில் அறிந்து கொண்டார். தன் இழப்புகளை அலட்சியப்படுத்தி வாழ்வின் இன்பங்களை உணர்ந்து கற்றார். இதனால்தான் அவரால் அரிய பல சாதனைகளைப் புரிய முடிந்தது. [] “இன்பத்தின் ஒரு கதவு மூடும் போது, மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் மூடிய கதவையே உற்று நோக்குவதால் நமக்காகத் திறந்திருக்கும் கதவை நாம் பார்ப்பதில்லை” என்று சொன்னார். ஒரு கூட்டத்தில் அமெரிக்க எழுத்தாளர் ஹெலன் கெல்லர் பேசும் போது எனக்கு அமைதியைத் தரும் புரிதலையே என்றும் விரும்புகிறேன் என்றார். அது ஒரு வாழ்வியல் தத்துவமாகவே கருதப்படுகிறது. அதாவது… “எனக்கு என்னுடைய புரிதலுக்கு மீறிய அமைதி என்றுமே தேவை கிடையாது. மாறாக எனக்கு அமைதியினைத் தரும் புரிதலையே என்றும் நான் விரும்புகிறேன்.” இவரின் கருத்துக்களின் மூலம் உலகில் மக்களுக்கு நம்பிக்கை என்னும் விதைகளைத் தூவிச் சென்றார் என்றே சொல்லலாம். ‘வாழ்க்கையில், இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்! அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது’ என்று ஹெலன் சொன்னார். தானே அப்படி வாழ்ந்தும் காட்டினார். தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ ஹெலன் நமக்கு வழியும் காட்டியுள்ளார். 29 அற்புதமான உழைப்பாளி ஹெலன் கெல்லர் உலகமெங்கும் பார்வையற்றோருக்காக பள்ளிகள் திறக்கவும் அதற்கு உதவவும் நாடகங்கள் நடத்தியும், திரைப்படம் எடுத்தும் நிதி திரட்டினார். ஹெலன் தன் வாழ்க்கையை ‘மீட்சி’ (Deliverance) என்னும் படமாக எடுத்தார். அதில் தன் பாத்திரத்தில் தானே நடித்தும் தொண்டு செய்தார். இது ஒரு ஊமைப்படமாகும். இதில் எந்த உரையாடலும் கிடையாது. இது பொழுதுபோக்கான படம். வசனம் சைகைகள் மூலமும், அட்டையில் எழுதியும் காட்டினர். சில உரையாடல் காட்சிகளை ஒலி பெருக்கிக் குழாய் மூலம் ஒலிபரப்பு செய்தனர். இது போன்றுதான் 1920ஆம் ஆண்டுகளில் திரைப்படங்கள் வெளிவந்தன. அந்த முறைப்படி ‘மீட்சி’ படம் 1919இல் வெளிவந்தது. 1920ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் பேசும் படங்கள் தயாரிக்கப்பட்டன. ‘மீட்சி’ படத்தை ஹெலன் கெல்லர் திரைப்படக் கழகம் தயாரித்தது. இது ஹெலன் கெல்லர் மற்றும் அவரது ஆசிரியர் ஆனி சல்லிவன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் கதையாகும். இந்த திரைக்கதையை பிரான்சிஸ் த்ரவேல்லியன் மில்லர் என்பவர் எழுதினார். இந்தப் படத்தில் ஹெலன் கெல்லர், ஆனி சல்லிவன், ஹெல்லரின் தாய், தந்தை, பாலி தாம்சன் ஆகியோரும் நடித்தனர். துரதிருஷ்டவசமாக இந்தப் படம் தோல்வியைத் தழுவியது. ‘ஹெலன் கெல்லர் அவரது வாழ்க்கை’ (Helen Keller in Her Story) என்கிற ஆவணப்படம் ஜுன் 15, 1954ஆம் ஆண்டில் வெளி வந்தது. இதனை நான்சி ஹாமில்டன் எழுதி இயக்கினார். இதில் ஹெலனும் நடித்துள்ளார். இந்தப்படம் 1955ஆம் ஆண்டில் சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதினை வென்றது. ஹெலன் கெல்லர் பார்வையற்ற, காது கேளாத பெண் அவரின் வாழ்க்கைப் போராட்டங்களை படம்பிடித்துக் காட்டுகிறது. இது ஆங்கில மொழியில் 55 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாகும். [] ஹெலன் கெல்லரின் என் கதை என்கிற வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தனர். அது ‘அற்புதமான உழைப்பாளி’ (The Miracle Worker) என்கிற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. அற்புதமான உழைப்பாளி என்று இவரது வாழ்க்கை நிகழ்வுகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. இதன் பின்னர் இவரது வாழ்க்கையை ஆர்தர் பென் (Arthur Penn) திரைப்படமாக எடுத்தார். ஹெலன் கெல்லர் மற்றும் ஆசிரியர் ஆனி சல்லிவன் ஆகிய இருவருக்கும் இடையில் இருந்த உறவு பற்றி விளக்கும் கதையாக இது உள்ளது. ஒரு பார்வையற்ற, காது கேளாத, வாய் பேசாத குழந்தை எப்படி கல்வி கற்றுக் கொள்கிறது. அதன் பின்னர் அரசியல், இயக்கங்கள், மக்கள் சேவை மூலம் உலகப் புகழ் பெறுகிறார் என்பதை எடுத்துக்காட்டும் படம். ஹெலன் கெல்லர் ஒரு அதிசய பெண். உடலில் எந்தவித குறைபாடும் இல்லாதவர்களே, இது என்ன வாழ்க்கை என தங்களை சலித்துக் கொள்கின்றனர். ஆனால் பெரும் குறைபாடுகளைக் கொண்ட ஹெலன் கெல்லர், ஆசிரியரின் உதவியுடன் மிகவும் மனம் தளராமல் சாதனைகள் பல புரிந்தார். அவரை உலக நாட்டுத் தலைவர்களே புகழ்ந்து பாராட்டினர். இந்தப் படம் எடுப்பதில் பல சுவராசியமான தகவல்களும் உள்ளன. “பராசக்தி” படத்தில் முதன் முதலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தார். அதன் மூலம் தமிழ் திரை உலகத்தில் சிவாஜி கணேசன் காலடி வைத்தார். இந்தப் படத்தில் சிவாஜி கணேசனை நடிக்க வைக்க பெருமாள் முதலியார் தீர்மானமாக இருந்தார். அதே போல் அற்புதமான ‘உழைப்பாளி’ என்ற படத்தில் ஆனி பேன்குரோப்ட் (Anne Boncroft) என்பவரை நடிக்க வைக்க அதன் இயக்குநர் ஆர்தர் பென் மிகவும் தீவிரம் காட்டினார். ஆனால் தயாரிப்பாளர்கள் எலிசபெத் டைலரை நடிக்கச் சொன்னார்கள். எலிசபெத் டைலரை படத்தில் நடிக்கச் செய்தால் 5 மில்லியன் டாலர் தருவதாகக் கூறினார். ஆனியை நடிக்கச் செய்தால் 5,00,000 டாலர் மட்டுமே தருவதாகக் கூறினர். இயக்குநர் பிடிவாதமாக ஆனியை நடிக்க வைத்தார். இந்தப் படத்தின் கதாநாயகி பார்வையற்ற, காது கேளாதவராக நடித்தார். இத்திரைப்படம் ஹெலன் கெல்லர் அவர்களின் சுய சரிதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த, திரைப்படம் 20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை படமாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்திற்கு 1962ஆம் ஆண்டில் 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இந்தப் படத்தில் ஹெலனாக நடித்த நடிகைக்கும், ஆசிரியர் ஆனி சல்லிவனாக நடித்த நடிகைக்கும் சிறந்த நடிகைக்கான விருதுகள் கிடைத்தன. ஹெலன் கெல்லராக பாட்டி டியூக்கும் (Patty Duke) ஆனி சல்லிவனாக ஆனி பேன்குரோப்ட்டும் நடித்தனர். ஆசிரியர் மற்றும் மாணவி இருவரின் தேர்ந்த நடிப்பிற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அத்தனை நேர்த்தியான நடிப்பும், இயக்கமும் கொண்ட இத்திரைப்படம் முழு வெற்றி பெற்றது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பு அற்புதமான படைப்பாளி என்கிற பெயரில் இது தொலைக்காட்சிப் படமாக 1957ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதனை வில்லியம் கிப்சன் (William Gibson) என்பவர் வெளியிட்டார். இவர் ஒரு அமெரிக்க நாடக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். தொலைக்காட்சி படமான (Tele film) இது ஹெலன் கெல்லரின் குழந்தைப் பருவக்கல்வியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது சிறந்த தொலைக்காட்சி படமாக தேர்வு செய்யப்பட்டு டோனி விருது 1959ஆம் ஆண்டில் பெற்றது. இதுவே பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதினைப் பெற்றது. ஹெலன் கெல்லரின் வாழ்க்கைக் கதையை 1984ஆம் ஆண்டில் ‘அற்புதம் தொடர்கிறது’ (The Miracle Continnes) என்ற தொலைக்காட்சி படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் ஹெலன் கெல்லரின் கல்லூரி வாழ்க்கை, இளம் பருவ சம்பவங்கள், காதல், ஆனி சல்லிவனின் திருமணம் என இடம் பெற்றுள்ளன. அது தவிர ஹெலன் கெல்லர் கலந்து கொண்ட போராட்டங்கள், சமத்துவத்திற்கான பங்களிப்பு, சமூக ஆர்வலராக அவர் ஆற்றிய பங்களிப்பும் படத்தில் இடம் பெற்றுள்ளன. பல நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவாற்றி அதன் மூலம் பணம் திரட்டும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இப்படம் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவுகிறது. [] ‘பிளாக்’ (Black) என்கிற பாலிவுட் படம் 2005இல் எடுக்கப்பட்டது. இது ஹெலன் கெல்லரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. இது இந்தியப்படம். ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியது. இப்படத்தில் ராணி முகர்ஜி மற்றும் அமிதாபச்சன் ஆகியோர் நடித்தனர். இந்தப்படம் காது கேளாத, பார்வையற்ற பெண்ணை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையில் உறவை மையமாகக் கொண்டு கதை இயங்குகிறது. அது தவிர ஹெலனின் குழந்தை பருவம் முதல் கல்லூரி பருவம் வாழ்க்கை வரை எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் காஸாபிளான்கா திரைப்பட விழா மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது சிறந்த இந்தித் திரைப்படம். இது தேசிய திரைப்பட விருது மற்றும் 16 பிலிம் பேர் விருதுகளையும் வென்றது. 2005ஆம் ஆண்டில் உலகளவில் வெளியிடப்பட்ட 10 சிறந்தபடங்களில் ஒன்றாக ‘பிளாக்’ படத்தை டைம் பத்திரிக்கை (ஐரோப்பா) தேர்வு செய்தது. பத்து சிறந்த படங்களில் இது ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. உலகில் வேறு சில நாடுகளிலும் ஹெலன் கெல்லரைப் பற்றி ஆவணப் படங்கள் எடுத்துள்ளனர். 2005ஆம் ஆண்டில் சுவீடன்போர்க் அறக்கட்டளை சார்பாக ஹெலன் கெல்லரின் ஆன்மீக வாழ்க்கையை மையப்படுத்தி ‘ஆன்மா ஒளிர்கிறது’ (Shining Soul) என்கிற ஆவணப்படம் எடுத்தனர். மூன்று குறைபாடுகளுடைய ஹெலன் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை கதை விளக்குகிறது. நியூ இங்கிலாந்து வரலாற்று மரபினக் கழகம் மார்ச் 6, 2008இல் ஒரு அரிய புகைப்படத்தைக் கண்டுபிடித்தது. அந்தப் புகைப்படத்தில் ஹெலன் கெல்லரும், ஆனி சல்லிவனும் உள்ளனர். இந்தப் புகைப்படம் பலரின் கண்களுக்குத் தெரியாமல் இருந்தது. ஹெலன் கெல்லர் பல பொம்மைகளை வைத்திருக்கும் காட்சி. ஹெலனுடன் ஆனி இருக்கும் மிகப் பழமையான புகைப்படம் அது. 30 பட்டமும் - விருதுகளும் ஹெலன் கெல்லர் இறக்கும் வரை மாற்றுத் திறனாளிகளுக்கும், பெண்கள் உரிமைக்கும், சம உரிமைக்கும், சமத்துவத்திற்காகவும் பாடுபட்டார். ஊனம் தடையில்லை என உறுதியுடன் உழைத்தார். இவரது அறிவுத் திறனையும், சேவையையும் பாராட்டி ஹார்வர்டு பல்கலைக்கழகம், கிளாஸ்கோ பல்கலைக் கழகம், டெம்பிள் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்து – பெர்லின், ஜெர்மனி போன்ற நாட்டின் பல்கலைக் கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின. நம் நாட்டின் டெல்லி பல்கலைக் கழகமும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. ஹெலன் கெல்லரின் சேவையைப் பாராட்டி ஜப்பான் நாட்டின் புனிதப் புதையல் (Japan’s Sacred Treasure) என்ற பட்டத்தையும், பிலிப்பைன்ஸ் மக்கள், பிலிப்பைன்ஸ் நாட்டின் தங்க இதயம் (The Philippines Golden Heart) என்ற சிறப்பையும், லெபனான் நாட்டினர் நல்லெண்ணத்திற்காக லெபனானின் தங்கப் பதக்கத்தையும் (Lebanon’s Gold Medal of Merit) வழங்கியது. [] லூயிஸ் பிரெய்லியின் நூற்றாண்டு விழா 1952ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. ஹெலன் கெல்லர் எழுதப்படிக்க கற்றுக் கொண்டது பிரெய்லியின் எழுத்துக்களால்தான். ஹெலன் கெல்லரின் முன்னேற்றத்திற்கு இவரின் எழுத்து முறையும் ஒரு காரணமாகும். பிரெய்லியின் நூற்றாண்டின் போது பிரான்சு நாட்டின் பிரசித்திப் பெற்ற செவாலியர் விருது ஹெலன் கெல்லருக்கு வழங்கப்பட்டது. ஹெலன் கெல்லர் ராட் கிளிஃப் கல்லூரியில் பட்டம் பெற்றார். அவர் பட்டம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு சாதனை புரிந்த முன்னாள் மாணவி (Alumnae Achievement Award) என்ற விருதினை கல்லூரி வழங்கி பெருமை சேர்த்தது. அத்துடன் அவர் படித்த பள்ளியில் ஹெலன் கெல்லரின் பெயரில் பூங்கா ஒன்று அமைத்தனர். அங்கு நீருற்று ஒன்றினை ஆனி சல்லிவன் பெயரில் அமைத்தனர். இது ஆசிரியர் – மாணவி அர்பணிப்புத் தன்மையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. [] அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிக உயரிய விருதனை அதிபரின் சுதந்திர பதக்கம் (Presidential Medal of Freedom) ஹெலனுக்கு 1964ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. சாதனையாளர்கள், உலகை மாற்றியவர்கள் போன்றோரை அங்கீகரிக்கும் அமைப்பான தேசிய மகளிர் ஹால் ஆப்ஃபேம் (National Women’s Hall of Fame) மூலம் சிறந்த பெண்மணியாக 1965ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விருதுகளை விட தன் வாழ்நாளில் சந்தித்த பெரிய மனிதர்கள் மற்றும் அவர்களின் நட்பை மிக உயர்வாக ஹெலன் கெல்லர் மதித்தார். தன் வாழ்நாளில் 12 அமெரிக்க ஜனாதிபதிகளை நேரில் சந்தித்துப் பேசினார். சார்லி சாப்ளின், நேரு, ஜான் எஃப் கென்னடி போன்றவர்களுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். கேத்தரின் கார்னல், அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஜோ டேவிட்ஸன், மார்க் ட்வைன், வில்லியம் ஜேம்ஸ் போன்றவர்களுடன் தோழமையுடன் பழகி வந்தார். 31 என்றும் நினைவுகளில் ஹெலன் கெல்லர் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டது. 1961ஆம் ஆண்டில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அது மிகப்பெரிய வேதனை. அவர் பொது வாழ்க்கையிலிருந்து விடுபட்டார். இருப்பினும் பார்வையற்றவர்களுக்காக தொடர்ந்து சேவை செய்தார். அவரை உலகம் மறக்கவில்லை. அப்போதும் அவருக்குப் பல விருதுகள் வீடு தேடி வந்தன. [] ஹெலன் கெல்லர் தனது 88 ஆவது வயதில் இறந்தார். அவர் உறங்கிக் கொண்டு இருக்கும் போதே ஜுன் 1, 1968ஆம் ஆண்டில் உயிர் பிரிந்தது. ஹெலன் கெல்லரின் உடல் தனது அன்பிற்குரிய ஆசிரியர் ஆனி சல்லிவன் மற்றும் தனது உதவியாளர் பாலி தாம்சன் ஆகியோரின் சமாதிகளுக்கு இடையில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய உடல் வாஷிங்டனில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டது. நினைவஞ்சலி செலுத்துவதற்காக பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். மாபெரும் அஞ்சலியில் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், காது கேளாதோர், பார்வையற்றவர்களின் ஸ்தாபனங்கள் சார்பாகக் கலந்து கொண்டனர். ஹெலன் கெல்லரால் பலன் அடைந்தவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். வாழ்க்கையை ஒரு அவசர நெருக்கடியாக உணர வேண்டும். அப்போதுதான் நமது ஆற்றல் எல்லாம் வலிமை பெற்று செயல்களைத் துரிதமாக செய்ய முடியும் என்று கூறி வந்தார். அப்படித்தான் அவர் செயல்பட்டார். பேச்சு, எழுத்து, சிந்தனை, செயல் என அனைத்து விதங்களிலும் மக்களுக்காக ஹெலன் கெல்லர் பாடுபட்டார். அவரது வாழ்க்கை காது கேளாதவர்களுக்கும், காது கேட்பவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும், பார்வை உள்ள அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக உள்ளது. அவருடைய நினைவுகள் என்றென்றும் சமூகத்தில் நிலைத்திருக்கிறது. ஹெலன் கெல்லர் இறந்த பிறகும் அவரின் தியாகம் நினைவு கூறப்பட்டு வருகிறது. 1980ஆம் ஆண்டில் ஹெலன் கெல்லரின் 100 ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்று ஹெலன் கெல்லர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் ஜுன் 27, 1980 அன்று தேசிய விடுமுறை தினமாக அறிவித்து ஹெலன் கெல்லருக்கு புகழ் சேர்த்தார். ஹெலன் நினைவுப் பூங்கா 1971இல் திறக்கப்பட்டது. இந்த நினைவுப் பூங்கா ஹெலனின் ஐவி வீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மார்பளவு ஒரு தகடு பொறிக்கப்பட்டுள்ளது. அதில் “I am Your Opportunity. I am Knocking at your door” “நான் உங்களுக்கான வாய்ப்பு. நான் உங்கள் கதவை தட்டிக்கொண்டு இருக்கிறேன்” என எழுதப்பட்டுள்ளது. லயன்ஸ் கிளப் ஜுன் 1, 1971ஐ ஹெலன் நினைவு தினமாகக் கொண்டியாது. அப்போது முதல் லயன்ஸ் கிளப் ஜுன் 1 ஐ ஹெலன் நினைவு தினமாக ஆண்டு தோறும் கொண்டாடுகிறது. அத்தினத்தில் உலக முழுவதும் பார்வையற்றவர்களுக்காக பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் மிகப் பிரபலமாக போற்றக்கூடியவர்களின் பட்டியலை காலப் (Gallup) என்ற அமைப்பு 1999இல் எடுத்தது. அதில் ஹெலன் கெல்லரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பிடித்த முதல் அமெரிக்கப் பெண் ஹெலன் கெல்லர் ஆவார். ஹெலன் கெல்லரின் பெயரில் தெருக்களும், பூங்காக்களும், பள்ளிகளும் தொடங்கப்பட்டன. இந்தியாவில் மைசூர் பகுதியில் பார்வையற்ற, காது கேளாதவர்களுக்கான பள்ளியை கே.கே. சீனிவாசன் நிறுவினார். அப்பள்ளிக்கு ஹெலன் கெல்லர் பள்ளி எனப் பெயரிட்டார். உலகின் பல நாடுகள் அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவம் செய்துள்ளளன. [] ஹெலன் கெல்லருக்கு அக்டோபர் 7, 2009ஆம் ஆண்டில் அலபாமாவில் உள்ள தேசிய சட்டப்பூர்வ ஹாலில் ஒரு வெண்கல சிலை வைக்கப்பட்டது. 7 வயது குழந்தையான ஹெலன் கெல்லர் தண்ணீர் குழாய் அருகில் நிற்பது போல் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஹெலன் கெல்லர் முதன் முதலாக Water என்பதை கற்றுக் கொண்டார். ஆனி சல்லிவன் ஆசிரியர் ஹெலன் கெல்லரின் கையில் W-A-T-E-R என எழுதிக்காட்டியதை நினைவு கூறுவதை இது உணர்த்துகிறது. சிலையின் பீடத்தில் பிரெய்லி எழுத்துக்களில் மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ளது. அதாவது “உலகின் சிறந்த மற்றும் மிகவும் அழகான பொருட்களை பார்க்க அல்லது தொடக்கூட முடியாது, அவைகளை மனதில் கண்டு உணர்ந்தேன்”. இந்த சிலை தான் உடல் ஊனமுற்ற ஒருவருக்காக அமெரிக்காவில் வைக்கப்பட்ட முதல் சிலையாகும். இது உலகில் ஊனமுற்ற ஒருவருக்காக உருவாக்கப்பட்ட முதல் சிலை என்பதும் குறிப்பிடத்தக்கது. நாமும் ஹெலன் கெல்லர் தினத்தையும், ஆசிரியர் ஆனி சல்லிவன் தினத்தையும் கொண்டாடுவோம். அன்றைய தினத்தில் அவர்களின் சேவையை நினைவு கூர்வோம். 1 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !