[] [] This eBooks is licensed under a Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US You are free to: Share — copy and redistribute the material in any medium or format The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: Attribution — you must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. Non Commercial — you may not use the material for commercial purposes. http://deviyar-illam.blogspot.com/ No Derivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material. No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits. At the end of the book, add the contents from the page. Free Tamil EBooks எங்களைப் பற்றி http://freetamilebooks.com/about-the-project/ பழைய குப்பைகள்   வெளியீடு : FreeTamilEbooks.com உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US   ஜோதிஜி. திருப்பூர் தேவியர் இல்லம். மின் அஞ்சல் முகவரி – powerjothig@yahoo.com வலை பதிவு முகவரி – http://deviyar-illam.blogspot.   மேலட்டை உருவாக்கம் : மனோஜ் குமார் மின்னஞ்சல் :  socrates1857@gmail.com பொருளடக்கம் 1 ஜோதிமயமானவனின் சில குறிப்புகள்.......... 6 2 நான்…….. 10 3 இதுவும் கடந்து போகும் 16 4 கற்றுக் கொண்டால் தப்பில்லை 20 5 மசாலா தூவினால் தான் மரியாதையா? 27 6 கற்றதும் பெற்றதும் 32 7 நாலும் புரிந்த நாய் வயசு 37 8 அங்கீகாரமும் அவஸ்தைகளும் 44 9 எதிரி தான் எழுத உதவினார் 48 10 பாவம் அப்பாக்கள் 57 11 ஆசை மரம் 61 12 இனிய நினைவுகள் 68 13 விதைக்குள் உறங்கும் சக்திகள் 74 14 தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார் 83 15 பழைய குப்பைகள் 92 16 சுருக்கமாகப் பேசு ......... 97 17 தினந்தோறும் மலரும் பூக்கள் 106 18 பயணமும் எண்ணமும் 113 19 நீயும் பொம்மை நானும் பொம்மை 120 20 விழா தரும் போதை 127 21 திருட அனுமதிக்கும் விளம்பரங்கள் 134 22 சாதிப் பொங்கலில் சமத்துவ சர்க்கரை. 141 23 ஆன்மீகம் என்பது யாதெனில்? 162 24 ஆன்மீகம் எனப்படுவது யாதெனில் -2 170 25 ஆன்மீகப்பற்றும் அடுத்தவர் சொத்தும்? 177 26 கேள்விகளுக்கு இங்கே பதில் உண்டு? 186 27 பத்து கேள்விகள் 192 28 ஏக்கம் வந்தால் தூக்கம் போய்விடும் 199 1 ஜோதிமயமானவனின் சில குறிப்புகள்.......... மனித வாழ்க்கையின் மகத்தான சாதனை என்று நீங்கள் எதை வேண்டுமானாலும் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் மனம் தளராமல் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டேயிருப்பது தான் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். 1989 ஆம் ஆண்டுக் கல்லூரிப் படிப்பை காரைக்குடியில் முடிக்கும் வரையிலும் வாழ்க்கையில் உள்ளே, வெளியே எந்தப் போராட்டங்களையும் நான் பார்த்தது இல்லை. நடுத்தரவர்க்கத்தின் இயல்பான ஆசைகள் எப்போதும் போல கிடைத்தது. ஆனால் அதற்குப் பிறகு கடந்து போன 25 வருடங்களில் போராட்டங்களைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததே இல்லை. ஒவ்வொன்றும் போராட்டத்தின் வழியே தான் கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு போராட்டங்களும் ஒரு அனுபவத்தினைத் தருகின்றது. அந்த அனுபவம் ஒரு பாடத்தைக் கொடுத்து விட்டு நகர்கின்றது. அடுத்தடுத்து புதிய பாடங்கள் புதிய அனுபவங்கள். மாறிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையில் கற்றுக் கொள்வது மட்டுமே பிரதானமாக உள்ளது. எனக்குக் கிடைத்த அதிகப்படியான அனுபவங்கள் தான் என் எழுத்துப் பயணத்திற்கு உறுதுணையாக உள்ளது. 2009 முதல் 2016 வரைக்கும் ஏறக்குறைய 7 ஆண்டுகள் இணையம் வழியே கற்றதும் பெற்றதும் ஏராளம். வரலாறு, கட்டுரை வடிவங்களில் என் எழுத்துப் பயணம் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க இந்த முறை என் சுய தேடலை இந்த மின் நூலில் உங்களுக்கு வாசிக்கத் தந்துள்ளேன். 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 20ந் தேதி என் முதல் மின் நூலான "ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்" வெளிவந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து எனது எட்டாவது மின் நூல் "பழைய குப்பைகள்". இது என் வாழ்வின் காலடித்தடங்கள். ஒவ்வொன்றும் குப்பைகளாக மாறி உரமாக மாறியவை. நான் வெளியிட்ட ஏழு மின் நூல்களும் 1,70,000+ பேர்களை சென்றடைந்துள்ளது. நான் கடந்து வந்த பாதையை, என் குடும்பச் சூழ்நிலை, பின்னணி, எண்ணங்கள், நோக்கங்கள் போன்றவற்றை ஓரளவுக்கு இந்த மின் நூல் வழியே உங்களால் புரிந்து கொள்ள முடியும். இது முழுமையான சுயசரிதை அல்ல. நமக்கான அடையாளத்தை நாமே உணர்ந்து கொள்ள முடியாவிட்டால் நாம் வாழும் சமூகத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும்? என் புரிதலின் முதல் பகுதி இது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பயணச்சுவடுகள் இதில் எங்கேனும் தெரியக்கூடும். உங்களின் விடமுடியாத கொள்கைகள் காலப்போக்கில் கேள்வியாக மாறி கேலி செய்யும். மனைவியும், குழந்தைகளும் கேட்கும் கேள்விகள் அனைத்தும் உங்களின் அடிப்படை சித்தாந்த அஸ்திவாரத்தை ஆட்டம் காணவைக்கும். உறவுக்கூட்டம் உறங்க விடாமல் தவிக்கவிடும். மொத்தத்தில் “பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை” என்பதனை மொத்த உலகமும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். வாழ்க்கையில் எனக்கு உருவாகும் சோர்வினை எழுத்துலகம் மூலமாக ஒவ்வொரு முறையும் கழுவி துடைத்துக் கொள்கிறேன். இதுவே காயங்களுக்கு மருந்து போடுவது போல உள்ளது. 75 வயதுக்குண்டான அனுபவங்கள் எனக்குக் கிடைத்த காரணத்தினால் இந் நூலைப் படிக்கும் உங்களுக்கு உண்மையான பரவத்தைத் தரும் என்றே நம்புகிறேன். பணம் என்ற ஒற்றைச்சொல் உங்களின் இறுதிப் பயணம் வரைக்கும் படாய்படுத்தும். ஆனால் அதற்கு உங்களின் ஆரோக்கியம் என்பதனை விலையாக வைக்க வேண்டும் என்பதனை உணர்ந்தவர்கள் என்னைப் போல “ருசியான வாழ்க்கை” வாழத் தெரிந்தவர்கள். அளவான பணம் மூலம் நீங்கள் வாழ முடியும். ஆனால் அளவற்ற பணமென்பது எதனையும் ஆள முடியும் என்றாலும் முழுமையாக வாழ முடியுமா? என்று கேட்டுக் கொள்பவனின் காலடித் தடமிது. பொருள் சேர்க்க வேண்டும் என்றால் "இப்படித்தான் வாழ வேண்டும்" என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் ஒழுக்க விதிகளை கடைபிடிப்பவனின் சங்கட விதிகளை சமரசமின்றி எழுதியுள்ளேன். இதனைச் சுற்றியுள்ள உலகம் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனப்படுத்தும் என்பது எத்தனை உண்மையோ அந்த அளவுக்குப் பிடிவாதமாக "இப்படியே வாழ்ந்து பார்த்து விட்டால் என்ன?" என்ற கேள்வியோடு ஒவ்வொரு நிகழ்வினையும் ரசனையோடு சமூகப் பார்வையோடு எழுதியுள்ளேன். என் பயணம் சோர்வின்றி இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. என் ஆரோக்கியம் மட்டுமே பெரும் சொத்தாக உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நானே உருவாக்கிக் கொண்ட காயங்களை கடந்த ஏழு ஆண்டுகளாக எழுத்து வழியாக மருந்திட்டு வந்துள்ளேன். வாழும் போதே வெளிப்படைத் தன்மையை எல்லா இடங்களிலும் நீக்கமற விதைத்து வந்து உள்ளேன். என் ஆரோக்கியம் முழுமையாக இருக்கும் வரையிலும் இந்த எழுத்துலகத்தில் என் தடம் மாறாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்றே நம்புகின்றேன். இந்நூலுக்கு விமர்சனத்தின் வாயிலாக தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் மாறாத அன்பும். நல்வாழ்த்துகள். ஜோதிஜி திருப்பூர். டிசம்பர் 31 2016 [] [] 2 நான்…….. 1992 முதல் திருப்பூரில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றேன். ஆனால் 2002 முதல் ஏற்றுமதி துறை தொழில் வாழ்க்கையில் கணினி என்பதும் இணையமும் எனக்கு அறிமுகம் ஆனது. அதன் பிறகு இணையம் என்பது தினந்தோறும் 12 மணி நேரத்திற்கும் மேலாக என் வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து இருந்த போதிலும் 2009 ஆம் ஆண்டு தான் தமிழ் இணையம் எனக்கு அறிமுகம் ஆனது. என்னுடைய முதல் பதிவு வேர்ட்ப்ரஸ் ல் ஜுலை 3 2009 அன்று எழுதி வெளியிட்டேன். நண்பர் நாகாவின் வேண்டுகோளுக்கிணங்க அவர் உருவாக்கித் தந்த ப்ளாக்கர் தளத்தின் மூலம் செப்டம்பர் 26 2009 முதல் எழுதத் தொடங்கினேன். இதுவரையிலும் 700 பதிவுகளை எழுதியுள்ளேன். பதிவின் நீளம், அகலம், உயரம், எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள், புரியாத தன்மை, விவரிக்கும் பாங்கு என்று தட்டுத்தடுமாறி ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு உயர்ந்து வந்துள்ளேன். திருப்பூரில் எனக்கு முன்னால் எழுதியவர்கள் அநேகம் பேர்கள். பலருக்கும் தொழில் வாழ்க்கையின் காரணமாக படிப்படியாக தங்களை சுருக்கிக் கொண்டார்கள். இன்று வரையிலும் எனக்குத் தெரிந்தவகையில் சோர்வடையாமல் என்னைப் பாதிக்கும் ஒவ்வொன்றையும் அனுபவம் சார்ந்த பதிவுகளாக மாற்றிக் கொண்டே வந்துள்ளேன். என்னுடைய எழுத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்கள் எனக்கு நெருக்கமான உறவுகளாகவும் மாறியுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இடத்திலும் யாரோ ஒருவர் எனக்கு நெருக்கமான சொந்தமாக மாறியுள்ளனர். அனைத்துக் கட்சிகளிலும் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நெருக்கம் பாராட்டுபவர்கள் அநேகம் பேர்கள். ஊடகத் துறையிலும் அதிகம் பேர்கள் அறிமுகமாகி உள்ளனர். பலதரப்பட்ட இயக்கம் சார்ந்த கொள்கைகள் கொண்டவர்களுடன் நட்பு கொள்ளவும் முடிந்துள்ளது. பிரபல எழுத்தாளர்கள், பதிப்பக மக்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் என்று பல தரப்பட்ட நிலையில் பலரையும் தொடர்பில் வைத்திருக்க முடிந்துள்ளது. ஒவ்வொரு அனுபவமும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பாடங்களை கற்றுத் தந்து கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு நிலையிலும் “எண்ணம் போல வாழ்வு” என்பதனையும், “தீதும் நன்றும் பிறர் தர வரா” என்ற முதுமொழியையும் மனதில் வைத்துக் கொண்டே நகர்ந்து வந்துள்ளேன். நான் கடந்து வந்த ஆறு வருடங்களில் என் தளத்தை தவிர்த்து வினவு தளம், சிறகு தளம், தமிழ்ப் பேப்பர் போன்ற தளங்களில் என் கட்டுரைகள் வந்துள்ளது. வெகுஜன பத்திரிக்கையான புதிய தலைமுறையில் எனது சாயப்பட்டறை குறித்து “மூடு” என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாக (கவர் ஸ்டோரி) வந்துள்ளது. ஆழம் பத்திரிக்கையில் இதுவரையிலும் மூன்று கட்டுரைகள் வெளியாகி உள்ளது. அதிக அளவு “4 தமிழ் மீடியா” குழுமத்தில் எனது கட்டுரைகள் வெளியாகி உள்ளது. வலைச்சரத்தில் இதுவரையிலும் இரண்டு முறை சீனா அவர்கள் என்னை வலைச்சரம் ஆசிரியர் பணியில் அமர்த்தி வைத்து அழகு பார்த்ததோடு முழுமையான சுதந்திரத் தையும் அளித்து ஊக்கப்படுத்தினார். புத்தக வடிவில் டாலர் நகரம் என்று நூல் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று வெளிவந்தது. விகடன் குழுமத்தில் வெளி வரும் ஜுனியர் விகடன் புத்தக விமர்சனத்தில் தரமான இடத்தைப் பெற்றது. 2014 ஆம் விகடன் ஆண்டு மலர் புத்தகத்தில் சிறப்பான பத்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்வு பெற்றது. இதுவரையிலும் என் வலைப்பதிவில் எழுதிய கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை எட்டு மின் நூலாக இணையத்தின் வழியே கொடுத்துள்ளேன். இதனை மொத்தமாக 1,70,000+ பேர்கள் தரவிறக்கம் செய்துள்ளார்கள். நான் சார்ந்திருக்கும் ஏற்றுமதி தொழில் வாழ்க்கைச் சூழலில் இந்த எழுத்து வாழ்க்கையில் முனைப்பாகச் செயல்பட வாய்ப்பில்லாத காரணத்தால் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுத வாய்ப்பில்லாது நகர்ந்து கொண்டேயிருக்கின்றேன். நான் எழுதத் தொடங்கிய பிறகே வாழ்க்கையை அதிக அளவு ரசிக்கவும், அன்றாட வாழ்க்கையை அனுபவித்து வாழவும் கற்றுள்ளேன். வலைத்தளத்தில் எழுதத் தொடங்கிய போது குழப்பமான சிந்தனைகளை அதிகம் பெற்றிருந்த போது தேவியர்கள் பள்ளிக்கு செல்லத் தொடங்கியிருந்தார்கள். மனைவியின் ஆதரவு எப்போதும் போல இயல்பாக இருப்பதால் இந்த வாழ்க்கையை ரசனைக்குரியதாகத் தினந்தோறும் உருவாக்கிக் கொள்ள முடிகின்றது. ஒவ்வொரு பிரபல்ய எழுத்தாளர்களும் வாசகர் கடிதம் என்று ஒன்றை வெளியிட்டு அதற்கு அவர்களும் பதில் அளித்திருப்பதை நீங்கள் படித்து இருக்கக்கூடும். எனக்கும் வலைப்பதிவில் விமர்சனம் கொடுக்காமல் தனிப்பட்ட முறையில் மின் அஞ்சல் வழியே தங்கள் அன்பை, ஆச்சரியத்தை வெளிப்படுத்தியவர்கள் அநேகம் பேர்கள். அவர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது உண்டு. ஒரு நண்பரின் கடிதத்தை பெயர் தவிர்த்து அவர் எழுதிய மொழியிலேயே இங்கு வெளியிடுகின்றேன். இதுவும் ஒரு வகையில் அங்கீகாரம் தான். ஆதரவளித்த ஆதரவளிக்கும் அத்தனை வாசிப்பாளர்களுக்கும் என் நன்றிகளை இங்கே எழுதி வைக்கின்றேன். Dear Jothi Ganesan, Well and wish the same. You may be surprised to receive this e-mail after a long interval. Due to my personal health problems I discontinued posting my writings in the web and stayed away from the web for some time. Very recently I had the chance to read some of your article on Eelam Tamil issue. Those articles forced me to write this e-mail. Dear Jothigy your investigative journalism have exposed many influential people to the web readers. You have touched very sensitive nerves of the higher ups. Exposing their design and their manipulations to amesh wealth and fame have angered many of them. Due to this I fear for your safety and well being. Anything can happen to anyone in India. Please show some restraint in exposing those elements. I have personal bitter experience in this type of matter in SriLanka. That is why I am requesting you to be cautious. Your personal safety is very important to your family. Particularly to your wife and children. I hope that you can understand my fear as a co writer in the web. I have preserved many of your article in a separate external hard disc. So far no one has written with facts and proof in their articles. I am proud of you. I am living in Toronto, Canada. After serving in the Royal Bank of Canada I am retired now. I have only one daughter who is married and settled here. I am enjoying my retired life by visiting distance land in the globe. If I come to India I wish to meet you. Please be cautious and alert. My best wishes and blessings to your wife and children. My best wishes and blessing for all your future endeavor. Take care. [] 3 இதுவும் கடந்து போகும் நான் வாழ்ந்த சமூக வாழ்க்கை முழுவதும் கரடுமுரடாகத் தான் இருந்து இருக்கிறது. இன்று வரையிலும் சமதள பயணம் அமைந்ததே இல்லை. எதிர்பார்த்ததும் இல்லை. குடும்பத்தினர்க்கு இதில் எந்த சம்மந்தமும் இல்லை. முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்த குஞ்சு போல் வெளி உலகத்தை அளந்து பார்த்து விடவேண்டுமென்று அலைந்து திரிந்து பெற்ற சுய அனுபவங்கள். எட்ட முடியுமா? என்ற யோசிக்கும் போது கிடைத்த மேடுகளும், நம்முடைய திட்டமிடுதல் தவறாகப் போய்விடாது என்று எண்ணிக்கொள்ளும் சமயங்களில் இயல்பாகவே பள்ளமும் என்றும் கொண்டு போய் சேர்த்து விட்டுள்ளது, வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் உருவான மாற்றங்கள் இன்று வரையிலும் ஏதோ ஒரு உருவத்தை உருவமாக்கிக்கொண்டே இருக்கிறது. இரண்டுபடிகள் கூடத் தொடர்ந்து ஏற அனுமதித்ததே இல்லை. ஒவ்வொரு சமயத்திலும் ஒரு படிக்கான வாய்ப்புகள் தான் இன்றைய வசதிகளை உருவாக்கித் தந்துள்ளது. திருப்பூர் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கான பணி மற்றும் சொந்த ஏற்றுமதி நிறுவன தொழில் வாழ்க்கைக்கான ஏற்றத்தாழ்வில் கற்றுக்கொண்டது அத்தனையும் என்னைச் சார்ந்த சின்ன வட்டத்திற்குள் முடிந்து போனது. வாசிப்பு அனுபவமும் வாழ்ந்த வாழ்க்கைப் பாடங்களும் எழுத அதிக உதவியாய் இருந்ததைப் போலவே ஒவ்வொரு தரமான விமர்சனங்களும் ஒழுங்கான பாதையை உருவாக்கக் காரணமாக இருந்தது. மீள் பதிவு என்று இம்சிக்காமல் நீள் பதிவு என்ற அவஸ்தையை மாற்றிக்கொள்ள முடிந்தது. எத்தனைப் புத்திசாலித்தனம் காட்டினாலும் படிப்பவர்களுக்கு புரிய வேண்டும். மொத்தத்தில் எளிமை நடை வேண்டும். அதை உணர எனக்கு 40 தலைப்புகள் தேவைப்பட்டது. பள்ளிப் பருவம் முதல் படித்த எத்தனையோ எழுத்தாளர்களின் எழுத்துக்கள், பார்த்த பலரின் வாழ்க்கையில் வழி தவறிய பாதைகள் உருவாக்கியவைகள் என்று பார்த்து வந்தவனுக்கு எத்தனைச் சிந்தனைகளை உருவாக்கியதோ அதன் மூலம் உருவான பாதிப்பால் எழுதிய எதுவும் வீணாகிப் போய்விடவில்லை, படிப்பவர்கள் “வெறுக்கக்கூடிய” வகையிலும் எதையும் எழுதிவிடவில்லை. 2009 மே மாதம். தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்த பண வாழ்க்கை மாறிக் கிடைத்த ஓய்வும் மனம் சார்ந்த வாழ்க்கையும் அறிமுகமானது. எழுதவும் முடியும் என்று உள்மனம் சொன்னது. என்னுடைய எழுத்துக்கள் மற்றவர்களுக்கு என்ன தாக்கத்தை உருவாக்கியதோ ? ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்ள வேண்டிய அத்தனை சகிப்புத் தன்மையை வளர்த்து நிதான போக்கை உருவாக்கிட காரணமாக இருந்தது. ஆழ்ந்த யோசனைகளும், விவேகமும் சேர்ந்து இன்று முழுமையான அமைதியான மனிதனாக மாற்றியுள்ளது. எழுதுவதற்கு முன்பு இருந்த வாசிப்பு அனுபவமும், எழுதத் தொடங்கிய பிறகு உண்டான வாசிப்பும் மொத்தமும் வெவ்வேறாக இருக்கிறது. புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கும், பணி நிமித்தமாக வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், தமிழ் வலை உலகமென்பது வரம். ஆனால் புத்தகங்களை மட்டும் வாசிக்க விருப்புவர்களும் இது ஒரு இம்சை. காரணம் வெகு நேரம் படிக்க முடியாத அவஸ்த்தை. தினசரி,வார,மாத இதழ்கள் கிடைக்கும் இடங்களில் வாழ்க்கை அமைந்தவர்களுக்கு இந்த வலை உலகத்தில் அத்தனை ஈர்ப்பு இருக்காது. ஆனால் எந்த வகையில் பார்த்தாலும் இந்த வலையின் வீச்சு என்பது வெகுஜன ஊடகங்கள் எட்டிப் பார்க்க முடியாத காடு மலை கடல் தாண்டிப் பயணிக்கக்கூடிய சக்தி வாய்ந்த அதி உன்னதமான ஊடகம் இது. உணர்ந்து எழுதுபவர்கள் “பாக்கியவான்கள்” ஏதோ ஒரு சமயத்தில் நிச்சயம் இறந்து விடத் தான் போகின்றோம். நீங்கள் உழைத்து உழைப்பு ஊருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ உங்கள் வாரிசுகளுக்கு ஒரு காலத்தில் பயன்படக்கூடும். தலைமுறை இடை வெளியினால் விலகிப் போன விசயங்கள் உங்களைப் பற்றி உங்கள் எழுத்துக்கள் மூலம் நீங்கள் இல்லாத போதும் கூடப் புரியவைக்கக்கூடும். ஒவ்வொரு எழுத்தாளர்களின் தாக்கமும் என்னை வளர்த்தது. இன்று வரையிலும் எத்தனையோ பேர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையையும் அவர்கள் தான் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பரபரப்புக்காக எழுதப்படும் அனர்த்தங்களை தவிர்த்துப் பார்த்தால் வலைபதிவு (BLOGS) எழுத்தென்பது உணர்ந்தவர்களுக்கு வாழ்நாள் பொக்கிஷம். [] 4 கற்றுக் கொண்டால் தப்பில்லை எனக்குத் தமிழ் இணையம் அறிமுகமான நேரத்தில் திரட்டிகள் எதுவும் அறிமுகமாகவில்லை. அது குறித்த தேடலும் என்னிடமில்லை. அது குறித்து தெரிந்தால் தானே தேட முடியும்? வேர்ட்ப்ரஸ் அறிமுகமானதும், எழுதியதை மாட்டி வைக்க/வெளியிட கற்றுக் கொண்ட போது அதுவே எனக்கு அப்போது இருந்த மனோநிலையில் போதுமானதாக இருந்தது. தொடக்கத்தில் தினந்தோறும் எழுதி வெளியிட்டுக் கொண்டிருந்தேன். எழுதுவதென்பது மற்றவர்களைப் போல மிகக் கடினமாக எனக்கில்லை. 20 வருடங்களுக்குப் பின் தமிழில் டைப்புவதும் எளிதாகவே இருந்தது. முழுக்க முழுக்க திருப்பூர் குறித்த வாழ்க்கை அனுபவங்கள். ஒரு மாதத்திற்குள் மனதில் இருந்த கடந்து வந்த வாழ்க்கை அனுபவங்களில் பெரும்பாலான சம்பவங்களை எழுதி முடித்து இருந்தேன். நம்மைப் போல ஏராளமான பேர்கள் இதே போல் எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதே இரண்டு மாதத்திற்குப் பின்பே தெரிய வந்தது. 1992ல் வாசிப்பதை நிறுத்திய நான் 2009 ல் தான் மீண்டும் வாசிப்பு பக்கமே வர முடிந்தது. இடைப்பட்ட வருடங்களில் வாசித்த வாரப் பத்திரிக்கைகளும், தினசரிகளும் சொற்பமே. இடையில் திருப்பூரில் உள்ள நூலகம் மூலம் புத்தகம் எடுத்து வந்து படிக்க முற்பட்ட போது அதுவும் தோல்வியில் தான் முடிந்தது. முதல் இருபது வருடங்கள் வெறுமனே பாடப்புத்தகங்கள், அத்துடன் ஊரில் இருந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் என்பதோடு சமூகம் குறித்த எந்த அறிவும் இல்லாமல் புத்தக அறிவைக் கொண்டு தான் இந்தச் சமூகத்தின் உள்ளே வர முடிந்தது. அடுத்து வந்த 18 ஆண்டுகள் வாசிக்க நேரம் என்பதே இல்லாமல் முழுமையாக மக்களோடு மக்களாகப் பழகும் சூழ்நிலை அமைந்தது. இரண்டும் வெவ்வேறு துருவங்கள். புது இடம், புதிய மனிதர்கள். 12 கிலோ மீட்டரில் இருந்த காரைக்குடிக்கு கல்லூரி சமயத்தில் தான் வர முடிந்த எனக்கு மாவட்டங்கள், மாநிலங்கள் தாண்டிய பயணம் என்பது இறுதியில் பல நாடுகள் வரைக்கும் சென்றாக வேண்டிய சூழ்நிலையை அடுத்தடுத்து என்னை நகர்த்திக் கொண்டிருந்தது. மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கம் அப்படியே மாறிப் போயிருந்தது. ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், ஊருக்குத் திரும்பவும் முடியாமல் திரும்ப திரும்பக் காலுக்குள் சிக்கிய பந்து போலத் தடுமாறிய காலமது. பெண்கள் மட்டுமல்ல. ஆண்கள் கூட வீட்டை விட்டுத் தாண்டாமல் வளர்ந்து வெளியே வரும் போது ஏறக்குறைய ஒரு பெண்ணின் நிலையில் தான் தொடக்க வாழ்க்கை அமையப் பெறுகின்றது. வாழ்ந்த ஊர் நினைவுகள் முழுமையாக மனதில் இருந்து மறையவே மூன்றாண்டுகள் தேவைப்பட்டது. காரைக்குடி மொழியை மாற்றிக் கொள்ள ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டது. தொழில் ரீதியாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளுதல், போட்டியில் இருந்த தப்பித்துக் கொள்ள, முந்திவர, கற்றுக் கொள்ள வேண்டிய நடைமுறை தந்திரங்கள் என்றும் படிப்படியாக அறிமுகமான பின்பே வாழ்க்கை குறித்த ஒரு தெளிவு வந்தது. ஊர் மறந்தது. பணம் குறித்த தேடலே வாழ்வின் தேவையாக மாறிப் போனது. பட்ட பின்பே ஞானம் அல்லது அனுபவமே ஆசிரியர் என்பார்களே அது தான் இது. திருமணம், மனைவி, குழந்தைகள், உயர்பதவி, சொந்த தொழில், வெற்றி, தோல்வி, என்று மாறி மாறி காட்சிகள் நகர்ந்து கொண்டே செல்ல ஓய்வு நேரமும் உணர வேண்டிய நேரமும் கிடைக்க எதிர்பாராத சூழ்நிலையில் இந்தத் தமிழ் இணையம் அறிமுகமானது. அப்போது தான் வாசிப்பதற்கான நேரமும் முழுமையாகக் கிடைத்தது. . வாசிக்க வேண்டிய தேவைகள் என்னை படிப்படியாக நகர்த்தியது. மீண்டும் விருப்பமான பலவற்றையும் வாசிக்க நேரம் கிடைத்தது. இணையம் மூலம் அதிர்ஷ்டவாய்ப்பாக நல்ல நண்பர்கள் முதல் இரண்டு மாதங்களில் இருந்தே கிடைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் மூலம் பலவற்றையும் கற்றுக் கொள்ள முடிவதும், பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அமைந்ததும் ஜென்ம புண்ணியம் போலத் தான் என்று ஒவ்வொரு சமயமும் மனதில் நினைத்துக் கொள்வதுண்டு. காரணம் முதல் நாள் படித்த எதுவும் அடுத்த நாள் மனதில் நிற்பதில்லை. தொடர்ந்து வரும் நாளில் உருவாகும் மன அழுத்தத்தில் அத்தனையும் மறந்து புதிய வாழ்க்கையின் பரிணாமங்களை ஒவ்வொரு முறையும் அறிமுகம் செய்து விடுகின்றது. கண்ட அனுபவங்களே என் எழுத்தாக மாற்றி விட எழுதுவதற்கு இயல்பானதாக அமைந்து விடுகின்றது. அதிகமாகச் சேர்த்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருப்பவர்கள், தேவைக்கு அதிகமான பணத்தை வைத்திருப்பவர்கள், ஐந்து இலக்கம் முதல் ஆறு இலக்கம் முதல் சம்பளமாக வாங்கிக் கொண்டிருப்பவர்கள், மாதச் சம்பளத்தை பத்து நாளைக்குள் செலவழித்து விட்டு அட்வான்ஸ் எழுதி வந்து நிற்பவர்கள், மாதம் முழுக்க வேலை செய்தும் 9000 ரூபாயைத் தாண்ட முடியாதவர்கள் எப்படி உழைத்தாலும் 5000 ரூபாய்க்கு மேலே பார்த்திராதவர்கள் என்று அத்தனை தரப்போடும் தினந்தோறும் உறவாட வேண்டிய வினோத கலவையோடு அமைந்த வாழ்க்கையில் கற்றுக் கொள்ள நிறையச் சந்தர்ப்பங்கள் இயல்பாகவே அமைந்துள்ளது. அதுவே எழுத நிறைய எழுத்துக்களைத் தந்து கொண்டேயிருக்கின்றது. வாழ்ந்து கொண்டிருப்பவனின் அனுபவங்கள் வாசிப்பவனுக்குப் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை. அங்கே தான் நம்ப முடியாதவற்றை எழுதுகின்றாய். உன் உலகம் குறுகிய வட்டத்திற்குள் உள்ளது என்பது வரைக்குமான உரையாடலை நீட்டித்துக்கொண்டே செல்கின்றது. நான் தொடக்கத்தில் எழுதத் தொடங்கிய போது தீர்க்கமான கொள்கைகள் எதையும் எடுத்துக் கொள்ளாமல் மனதில் தோன்றிய அனைத்தையும் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் எழுத்து நடை, பிழைகள், குறிப்பாக இலக்கண பிழைகள் என்று ஒவ்வொன்றாகப் பலரின் விமர்சனத்தின் மூலம் என்னைத் தாக்கத் தொடங்கியது. நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் மூன்றையும் குழப்பி அடித்து குழிப்பணியாரம் கணக்காகச் சுட்டு வைக்கப் பலரின் அறிவுரைகள் என்னைப் பதம் பார்க்கத் தொடங்கியது. ஆகா ஒரு ஸ்பீட் ப்ரேக் தேவை போல என்று அடுத்த கட்டத்திற்கு நகர முடிந்தது. எழுதிக் கொண்டிருந்த சொந்த விசயங்களை நிறுத்தி விட்டு புத்தகங்களை படித்து அதில் உள்ள விசயங்களை என் பார்வையில் எழுதத் தொடங்கிய போது கியர் மாற்றத் தேவையில்லாத நிலையில் பறக்கத் தொடங்கியது. அங்கும் பிரச்சனை வேறு விதமாக உருவாகத் தொடங்கியது. கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இன்னும் பல புத்தகங்களைத் தேடிப்பிடித்து ஓடத் துவங்க ஓட்டம் இன்னும் வேகமாக மாறியது. ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தால் உலகம் என்ன நினைக்கும்? என்று அன்றாட நிகழ்வுகளை என் பார்வையில் எழுதத் தொடங்கிய போது தான் எழுத்து கொஞ்சம் கைவசமாகி உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதுவே குழந்தைகள் குறித்த அனுபவங்களை எழுதத் தொடங்கியபோது தான் படிப்பவர்களின் ரசனைக்கும் எழுதுபவனின் ரசனைக்கும் இடையே உள்ள மெல்லிய கோடு தரும் சுகத்தையும் உணர முடிந்தது. மூன்று படிகளை தாண்டி வந்த போது சமூகம் குறித்து ஆழமான கட்டுரைகளை எழுத வேண்டும் என்று தோன்றியது. அலட்சியமான போக்கு, அவசர கதி இல்லாமல் என்னாலும் பல கட்டுரைகளை எழுத முடிந்ததுள்ளது. ஆனால் கருத்து விவாதங்கள், மோதல்கள் என்று இன்று வரையிலும் நான்கு பக்கத்தில் இருந்தும் ஏவுகணைகள் போல தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றது. இறுதியாக உனக்கு அரசியலும் தெரியாது, வரலாறும் தெரியப்போவதில்லை என்பது வரைக்கும் வாசிக்க வந்த நண்பர்கள் மூலம் விமர்சன மகுடங்கள் வாங்கியாகி விட்டது. சாதி, மதம், அரசியல் பற்றி எழுதினால் எளிதில் ஒரு முத்திரை குத்தி முச்சந்திக்குள் நிறுத்தி கும்மத் தொடங்கி விடுகின்றார்கள். ஆனால் நாங்கள் கொடுத்த முத்திரை தான் உன் முகத்திரை என்று ஒரு பக்கம் கொள்ளாமல் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று எழுதினாலும் குத்துக்கள் ஏதோவொரு பக்கத்தில் இருந்து இன்றும் வந்து கொண்டேதான் இருக்கின்றது. குத்து வாங்கிய களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் எந்திரித்து எழுதத் தொடங்க ன்று ஒதுங்கி விடுகின்றார்கள். ஆனால் அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றார்கள். மொத்தத்தில் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுத முடியும். ஆனால் அதற்கான உழைப்பு தேவை என்பதை இந்த நான்கு ஆண்டுகள் எனக்கு உணர வைத்துள்ளது. வாழ்க்கையில், அலுவலகத்தில், தொழிலில் நடந்த அதே படிப்படியான வளர்ச்சி. திடீரென்று எதுவும் என் வாழ்வில் நடந்ததில்லை. இடைவிடாத முயற்சியும் தனிப்பட்ட ஆர்வமான துரத்தலும் தான் இன்றைய வாழ்வில் பல நிலைகளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளது. [] 5 மசாலா தூவினால் தான் மரியாதையா? அப்பா எப்போதும் தினமணி மட்டும் தான் வாங்குவார். தொடக்கத்தில் எரிச்சலாக இருந்தாலும் மேல்நிலைப்பள்ளி வந்த சமயத்தில் அதில் தொடர்ச்சியாக வரும் சிறப்புக்கட்டுரைகளை கடையில் இருக்கும் அந்த மதிய நேரத்தில் வாசித்துக் கொண்டு இருப்பதுண்டு. புரிந்ததோ இல்லையோ வாசிப்பு என்பதனை ஒரு கடமையாக வைத்திருந்த காலமது. நூற்றுக் கணக்கான கட்டுரைகளை வாசித்துள்ளேன். இன்று கட்டுரைகள் சார்ந்த வாசிப்புக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றேன். ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட விசயத்தை வாசித்து முடிக்கும் போது "அட நமக்கு இத்தனை நாளும் இது குறித்து தெரியலையே" என்ற அங்கலாய்ப்பும் வந்து விட அடுத்த தேடல் தொடங்கக் காரணமாக அமைந்து விடுகின்றது. எழுதி அனுபவமில்லாதவர்கள் எது குறித்து வேண்டுமானாலும் எழுதலாம். எதைப் பற்றி எழுத வருகின்றதோ அதிலிருந்தே எழுதத் தொடங்கலாம். ஆனால் படிப்படியான மாறுதல் தேவைப்படும் களத்தில் இந்த எழுத்துக்களம் முக்கியமானது. நாம் எப்படி ஒன்றைப் பார்க்கின்றோம். அதுவும் மற்றவர்களிடமிருந்து எப்படி அதனை வேறுபடுத்தி எழுத்தில் காட்ட முயற்சிக்கின்றோம் என்பதில் தான் முக்கியத்துவம் உள்ளது. அந்த முக்கியத்துவம் தேவையில்லை என்றாலும் கவலைப்படத் தேவையில்லை. எழுதும் சுகம் என்பதும் அது மற்றவர்களுக்கு எந்த விதத்தில் பிடிக்கும் என்பதும் எவராலும் அனுமானிக்க முடியாத ஒன்று. நாம் ஒன்றை அனுபவித்து ரசித்து எழுதியிருப்போம். ஆனால் அது சீந்துவாரற்று கிடக்கும். சிலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மேம்போக்காக எழுத அது பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டு இருக்கும். காரணம் படிப்பவனின் வாழ்க்கை என்பது எழுதுபவனால் யூகிக்க முடியாத ஒன்று. எழுத்தும் வாசிப்பும் சில சமயம் பொருந்தி போய்விடும். பல சமயம் அந்த வாய்ப்பில்லாமல் போய்விடும். கவலைப்படத் தேவையில்லை. எழுதிக் கொண்டே இருக்கும் போது தான் அந்தச் சூட்சமத்தை உணர முடிகின்றது. வலைத்தளத்தில் எழுதுபவர்கள் தொடக்கத்தில் தங்களது அனுபவங்களை எழுதினால் போதும் என்று தான் நான் சந்தித்த நபர்களிடம் சொல்லியுள்ளேன். காரணம் அது தான் எளிதானது. படிப்படியாக வளர்த்துக் கொண்டு மற்ற விசயங்களைப் பற்றி எழுதலாம். நம்முடைய அனுபவங்கள் குறித்து எழுதும் போது நம்முடைய எழுத்து பலம் தெரிய வரும். கோர்வையாய் கோலம் போடும் தன்மை புரியும். வாசித்துக் கொண்டிருப்பவனை நகர விடாது இழுத்துச் செல்ல வேண்டிய சூட்சமத்தை உணர வைப்பதன் சூத்திரத்தை புரிந்து கொள்ள முடியும். வாசிப்பவனை நம் எழுத்திலிருந்து நகர விடாது "நான் உங்கள் கட்டுரையை ஓரே மூச்சில் படித்து முடித்தேன்" என்று சொல்ல வைக்க வேண்டிய அவசியம் புரியத் தொடங்கும். ஆனால் சமூகம் சார்ந்த நிகழ்வுகளைப் பற்றி எழுதத் தொடங்கும் போது தான் நம்முடைய எழுத்துத் தகுதிகள் குறித்து நமக்கே புரிய வரும். நாம் எழுத்துக் கலையில் வளர்ந்துள்ளோமா? என்பதன் சவால் இங்கிருந்து தான் தொடங்குகின்றது. "கரணம் தப்பினால் மரணம்"என்கிற நிலையே இங்கே தான் தொடங்குகின்றது. அதுவும் களத்தில் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கின்ற விசயம் என்றால் சொல்லவே தேவையில்லை. உளறி வைக்க முடியாது. உண்டு இல்லையென்று படுத்தி எடுத்து விடுவார்கள். ஒரு வேளை நாம் தவறு செய்திருந்தாலும் அடுத்த முறை திருத்திக் கொள்ள வாய்ப்பாகவும் அமைந்து விடும். அதுவே நம்மை வளர்க்க ஒரு காரணியாகவும் அமைந்து விடுகின்றது. இப்படித்தான் நானும் வளர்ந்துள்ளேன். இன்று பத்திரிக்கையின் படிக்கும் ஒரு சிறிய துணுக்குச் செய்திகளை வைத்துக் கொண்டு தினசரி வாழ்க்கையில் பார்த்த மற்றொரு நிகழ்வோடு கோர்த்துச் சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளேன். அப்பா வாங்கிய தினமணி கொடுத்த தாக்கம் எனக்கு அரிச்சுவடியாக இருந்திருக்குமோ என்று இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். அதன் நீட்சியே நான் இந்தத் தளத்தில் எழுதும் சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கு முக்கிய காரணமாகக்கூட இருக்கக்கூடும். ஆனால் இன்று குறிப்பிட்ட தனி இதழ்களைத் தவிர்த்து ஆழமான கட்டுரைகள் எந்த வெகுஜன பத்திரிக்கைகளிலும் வருவதில்லை. ஒரு திரைப்படம் வந்தவுடன் மாங்கு மாங்கென்று அதற்கு விமர்சனம் எழுதும் வலையுலக மக்கள் ஒரு அரசாங்கத்தின் புதிய திட்டத்தைப் பற்றி கண்டு கொள்வதில்லை. காரணம் கேட்டால் அது போன்று எழுதினால் எவரும் வந்து படிக்க மாட்டார்கள் என்ற மாயப் போதையில் தான் பலரும் இருக்கின்றார்கள். பல எழுத்தாளர்கள் முதல் வலையுலக மக்கள் வரைக்கும் காலப் போக்கில் காணாமல் போனது இந்த வகையில் தான். நம்முடைய கவனம் கருத்தில் இருப்பதைப் போல அதைப் படிப்பவனுக்கு கொண்டு சேர்ப்பதிலும் கவனம் வைத்திருக்க வேண்டும். என் அனுபவத்தில் விமர்சனம் எதுவும் கொடுக்காமல் ஆழ்ந்து படிப்பவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கின்றார்கள். இது போன்ற நூற்றுக்கணக்கான பேர்களை ஒவ்வொரு சமயத்திலும் நான் சந்தித்துள்ளேன். ஆச்சரியப்படுத்தியுள்ளனர். [] 6 கற்றதும் பெற்றதும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சுறுசுறுப்பாக இருந்தாலும் அல்லது செயல்படாத நிலையில் வாழ்ந்தாலும் நம்மைச் சுற்றிலும் உள்ள உலகம் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. நாம் சுகமாய் இருக்கின்றோம் அல்லது சோகத்தில் இருக்கின்றோம் என்பதற்காக எதுவும் இங்கே மாறிவிடப்போவதில்லை. இங்கே ஒவ்வொன்றின் முடிவும் நொடிப் பொழுது மட்டுமே. அடுத்தடுத்து அதன் போக்கிலேயே நகர்ந்து கொண்டேயிருக்கின்றது. இந்தியாவில் ஏதோவொரு இடத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை எனக்கு வெறுமனே செய்தி மட்டுமே. என்னை, என் குடும்பத்தை தாக்காத வரைக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் கடந்து போக வேண்டிய, மறுநாள் பத்திரிக்கையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகவே உள்ளது. ஒவ்வொருவருக்கும் இப்படித்தான். இதனால் தான் இந்தியாவில் எந்தப் பிரச்சனையும் பொதுப் பிரச்சனையாக மாறாமல் துணுக்கு செய்தியாகவே மாறி விடுகின்றது. பச்சாதாபத்திற்கோ, பரிதாபப்படுவதற்கோ எவருக்கும் நேரம் இருப்பதில்லை. எதிர்பார்ப்பதில் பலன் ஒன்றுமில்லை. ஏமாற்றங்களை, சோகங்களை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தால் தான் இங்கே உயிர்ப்புடன் வாழ முடியும். நம் தேடல் மட்டுமே நம்மை இயக்குகின்றது. தேடிச் சென்றால் மட்டுமே துன்பம் விலகுகின்றது. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகின்றது. நம் ஆசைகளின் எல்லைகளையும், நமது தகுதியையும் இணைத்துப் பார்க்கும் போது மட்டுமே நம் வாழ்க்கையில் அமைதி உருவாகின்றது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் அறிமுகமான தமிழ் இணையத்தின் ஆழமும் அகலத்தையும் குறித்து அப்போது எனக்கு அதிகம் யோசிக்கத் தெரியவில்லை. நீச்சல் தெரியாதவன் கடலில் குதித்தது போலவே இருந்தது. ஆனால் இன்று? பலரும் என்னைக் கவனித்துள்ளனர். சிலரை என் எழுத்து மூலம் திருப்திப் படுத்தி உள்ளேன். வாசித்த அந்தப் பத்து நிமிடத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்த்துள்ளேன். என் குடும்பத்தை நினைத்துள்ளேன். ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் குழந்தைகளை நினைத்து ஏங்கியுள்ளேன் என்று உரையாடலில், விமர்சனத்தில் தெரிவித்துள்ளனர். வியப்பாகவே உள்ளது. உலகம் முழுக்க பரந்து விரிந்துள்ள இணையத்தில் யாரோ ஒருவர் ஏதோவொரு இடத்தில் இருந்து கொண்டு ஒவ்வொரு நிமிடத்திலும் தன் கருத்து என்று ஏதோவொன்றை சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றார்கள். நாம் விழித்திருந்தாலும், கண்டு கொள்ளாமல் கடந்து போனாலும் தமிழ் இணையம் அதன் சுறுசுறுப்பை இழந்து விடுவதில்லை. நாளுக்கு நாள் இதன் வேகம் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது. எதைப் பற்றி எழுத வேண்டும் என்று தெரியாதவர்களுக்கும், எதையாவது எழுதி மற்றவர்கள் நம்மை நோக்கித் திரும்பி பார்க்க வைத்துவிட வேண்டும் என்பவர்களுக்கும் மத்தியில் தான் தமிழ் இணையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. முறைப்படி பயன்படுத்தத் தெரியாதவர்கள் படும் அவஸ்தைகளும், இதுவே தான் வாழ்க்கை என்பதைத் தப்பாக உணர்ந்தவர்களுக்கும் இடையே உள்ளவர்கள் தான் அளவோடு பயன்படுத்தி வளமோடு இருப்பவர்கள். இந்த இடைப்பட்ட நபராகவே இதில் இருந்து வருகின்றேன். பெரும் பொறுப்புகளில் இருந்து கொண்டு நம் விருப்பம் சார்ந்த செயல்பாடுகள் என்று பட்டியலிட்டுக் கொண்டு அது நிறைவேறாத பட்சத்தில் சமூகத்தின் மீது, வாழும் வாழ்க்கையின் மீது, நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மேல் கோபப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமான தோல்விகள் அது தந்த வலிகள். ஏராளமான ஏமாற்றங்கள் அதனோடு சேர்ந்து வந்த அவமானங்கள் என்று எல்லாவற்றையும் அனுபவித்துள்ளேன். சிறிது சிறிது என்னை மாற்றிக் கொண்டே வந்துள்ளேன். என் நடை,உடை,பாவனை, பேசும் விதம், உடல் மொழி என்று எல்லாவிதங்களிலும் கவனம் செலுத்தியுள்ளேன். முடிந்தவரையிலும் என்னைப் பற்றி அடுத்தவர்கள் சொல்லுகின்ற விமர்சனங்களின் மீது கவனம் செலுத்தியுள்ளேன். அடுத்தடுத்த நிலையை அடையப் போராடியிருக்கின்றேன். அடைந்தும் உள்ளேன். ஆனால் ஒவ்வொன்றையும் விருப்பப்பட்டுச் செய்துள்ளேன். வாழ்கின்ற ஒவ்வொரு நாளையும், அது வெற்றியோ தோல்வியோ ரசனையோடு பார்க்க, வாழப் பழகியுள்ளேன். ஆற்ற முடியாத காயங்களோடு வாழ்பவர்களையும், உழைக்க முடியாதவர்கள் காட்டக்கூடிய பொறாமையையும், அடக்க முடியாத இச்சைகளுடன் இருப்பவர்களையும், என்ன தான் நெருக்கமாகப் பழகினாலும் கட்சி, மதம், சாதி ரீதியான கொள்கை வேறுபாடுகளை மனதில் வைத்துக் கொண்டு வன்மத்தோடு பார்ப்பவர்களையும் அமைதியாகக் கவனிக்கும் மனத்துணிவைப் பெற்றுள்ளேன். இதனை எழுத வந்த பிறகே நான் அதிகம் பெற்றுள்ளேன். இதன் காரணமாகவே இந்த எழுத்துலக பயணத்தை அதிகம் நேசிக்கின்றேன். கிடைக்க வேண்டிய அங்கீகாரம் என்பதனை எதிர்பார்க்காமல் நான் பார்க்கும் சமூகத்தை என் மொழியில் எழுதி வைத்து விட வேண்டும் என்பதைத் தீரா வெறி போல தீர்க்க வேண்டிய கடமை எனக் கருதி கடந்த ஐந்து வருடமாக எழுதி வந்துள்ளேன். இணையத்தில் செய்து கொண்டிருக்கின்ற "மார்க்கெட்டிங் யுக்தி"களின் மேல் கவனம் செலுத்தாமல் உழைப்பின் மேல் நம்பிக்கை வைத்து இந்த எழுத்துலக பயணத்திற்காக ஒவ்வொரு நாளின் இரவிலும் தூக்கத்தை துறந்து இஷ்டப்பட்டு உழைத்துள்ளேன். இணையம் தான் எனக்கு எழுதக் கற்றுத் தந்தது. இணையத்தில் அறிமுகமானவர்களே வழிகாட்டியாய் இருந்தார்கள். வழி நடத்தினார்கள். விமர்சித்தவர்கள் கற்றுத்தந்த பாடத்தின் மூலம் அடுத்தடுத்து நகர்ந்து வந்துள்ளேன். [] 7 நாலும் புரிந்த நாய் வயசு ஒவ்வொருவருக்கும் இருபது வயதில் இந்த உலகம் அழகாகத் தான் தெரியும். சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றியே அதிகம் யோசிக்க வைக்கும். வானத்தைக் கூட வில்லாக வளைத்து விட முடியும் என்று நம்ப வைக்கும். மொத்தத்தில் தன்னம்பிக்கை ததும்பி வழியும். ஏறக்குறையக் கடலை கரையோரம் நின்று ரசிக்கும் மனப்பாங்கு. ஆனால் கடலில் இறங்கி உள்ளே நுழைவதற்குள் முப்பது வயது டக்கென்று வந்து விடும். வானம், கடல், அலைகள் என்று ரசிப்பதற்காக இருந்த அத்தனையும் அப்படியே மாறி கணக்குகளின் வழியே ஒவ்வொன்றையும் யோசிக்கத் தோன்றும். நாம் சம்பாரிக்க என்ன வழி? என்ற அலை தான் மனதில் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கும். . அப்போது நம்மிடமிருந்த ரசனைகளை ஒரு அலை இழுத்துச் செல்லும். மிச்சம் மீதியிருந்த ஆர்வத்தை மற்றொரு அலை அலைக்கழிக்கும். கொஞ்ச கொஞ்சமாக நம்முடைய குழந்தைத்தனம் மாறியிருப்பதை அப்போது தான் உணரத் தொடங்குவோம். ஆனாலும் இரவு பகலாக ஏதொவொன்றுக்காக மனம் கெஞ்சிக் கொண்டேயிருக்கும். அந்த அலை மட்டும் இடைவிடாமல் நம்மை தாக்கிக் கொண்டேயிருக்கும். . இந்தச் சமயத்தில் தான் கணக்கில்லா கணக்கு அலை நம்மை இழுத்துச் செல்லும். அந்த அலை காட்டும் வழியில் நம் பயணம் தொடங்கும். அந்த பாலபடங்களே நம்மை வழிநடத்தும். கலையார்வம், கலாரசனை அத்தனையும் அகன்று "இனி நம் தலையை காப்பாற்றிக் கொண்டால் போதும் " என்ற நிலையில் திருமணம் என்றொரு படகு கிடைக்கின்றது. மூச்சு வாங்கி, மூச்சடைந்து இனி நாம் மூழ்கி விடுவோமோ என்ற சூழ்நிலையில் இது நமக்கு ஆசுவாசத்தைக் கொடுக்கும். பல சமயம் தள்ளு காற்று இழுத்துக்கொண்டு செல்ல பயணம் சுகமாகவே இருக்கும். எதிர்காற்றில் பயணம் தொடங்கும் போது உள்ளூற இருக்கும் சக்தியின் ரூபமே நமக்கு புரிபடத் தொடங்கும். படகில் குழந்தைகளும் வந்தமர "பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்" என்ற புலம்பல் அலை நமக்கு அறிமுகமாகின்றது. ரசனையான விசயங்களும், ரசிக்க வேண்டிய தருணங்களும் நம்மை விட்டுச் முழுமையாகச் சென்ற பிறகே கணக்குள் இப்போது துடுப்பாக மாறுகின்றது. வலிகளே வாழ்க்கையாக மாறும். நாற்பது வயதைக் கடந்தவர்களும், கடந்து அதற்கு மேலே வந்தவர்களும் இதனை உணர்ந்தே இருப்பார்கள். நாற்பது வயது தொடங்கும் போது மூச்சு முட்டும். பலருக்கும் இந்த வாழ்க்கை போராட்டங்கள் பழகிப் போயிருக்கும். "விதி வலியது" என்ற அசரிரீ குரல் வானத்தில் இருந்து ஒலிக்கும். செக்கு மாட்டுத்தனமாக மாறியிருப்போம். ஆனாலும் நாற்பது வயதைக் கடந்து சாதித்தவர்களும் இங்கே அதிகம். சாதனைகள் என்றதும் இது வெறுமனே பணம் சார்ந்ததாக எடுத்துக் கொள்பவர்கள் ஒரு பக்கம். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கின்றேன் என்பவர்கள் மறு பக்கம். விரும்பியபடி வாழ்கின்றேன் என்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்களைப் போன்றவர்களால் இந்த வலையுலகம் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. மண்டைச்சூடு நிறைய உள்ளவர்களால் மட்டும் வலையில் ஏதோவொன்றை எழுத முடிகின்றது.. இங்கே ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் வழித்தடங்கள். எது சரி? எது தவறு? என்று இன்னமும் எவராலும் அறுதியிட்டுக் கூறமுடிவதில்லை. பணத்தையே சுற்றிச் சுற்றி வந்தாலும், மனைவியுடன் கொஞ்சிக் கொஞ்சி வாழ்ந்தாலும், குழந்தைகளை உயிராக நேசித்தாலும் இங்கே ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாகத்தான் வாழ வேண்டியுள்ளது. இதுவே தான் எழுதுவதற்கான காரணங்களையும் உருவாக்கியது. வாய்ப்பு கிடைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் போது ஆச்சரியமான திறமைகள் வெளியே தெரிய வருகின்றது. தங்கள் ரசனைகளை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்பவர்கள் சுகவாசியாகவும் மாறிவிடுகின்றனர்.. காரணம் ஒருவர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் எந்த அளவுக்கு அவரைச் செதுக்கி உருவமாக மாற்றுகின்றதோ அதே அளவுக்குத்தான் அவரின் தனிப்பட்ட சிந்தனைகளும் காலப்போக்கில் மாறிக் கொண்டும் வருகின்றது. பணத்தேடல்களுக்கு அப்பாற்பட்டு தனது ரசனை உள்ளத்தைக் காப்பாற்றி வைத்திருப்பவர்களிடம் பொறாமை உணர்வு மேலோங்குவதில்லை. உண்டு களித்து உறக்கம் தவிர்த்து ஓயாமல் காட்டு ஓநாய் போலவே உலகத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்களால் ஒரு நாளும் நிம்மதியாகவும் வாழ முடிவதும் இல்லை. நாற்பது வயதில் தன் விருப்பங்களை விடத் தான் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளுக்குச் சரியானவனாக இல்லாத போது அந்த வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுகின்றது. இதுவே சம்பாரிப்பதே முதல் கடமை என்கிற ரீதியில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. அதைத்தவிர வேறொன்றைப் பேசுவதும் நினைப்பதும் வேலையற்ற வெட்டி வேலை என்று அடையாளம் காட்டப்படுகின்றது. இது இந்திய சூழல் மட்டுமல்ல. வளரும் நாடுகளில் போராடித்தான் தங்கள் இடத்தை வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலையில் வாழ்பவர்கள் அத்தனை பேர்களுக்கும் வாழ்க்கை என்பது சுற்றியுள்ள ரசனைகளை ரசிப்பதற்கல்ல. பிழைத்திருப்பதற்கு மட்டுமே.. இங்கே கோடுகளை நாம் கிழிப்பதில்லை. மற்றவர்களால் கிழிக்கப்பட்டு நாம் அதற்குள் சிக்கிக் கொள்ள வேண்டியவர்களாக மாறிப் போகின்றோம். இந்தச் சமயத்தில் தான் நம்முடைய அத்தனை விருப்பங்களும் அடிபட்டு அடைய முடியாத கனவுகளை அடை காக்கும் கோழி போல வாழ்கின்றோம். இந்தியாவில் வேலைகேத்தத படிப்பில்லை. படிப்பிற்கேற்ற வேலையும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் தான் பிழைப்புக்காக ஒரு துறையில் நுழைந்து நுகத்தடி பூட்டப்பட்ட மாடு போல மாறி விடுகின்றோம். அவரவர் சார்ந்த துறையில் எத்தனை பேர்களுக்கு என்னவிதமான திருப்தி கிடைத்தது? என்பதை யோசிக்கும் போது இறுதியில் ஒவ்வொருவருக்கும் மிஞ்சுவது "நாமும் இந்த உலகில் வாழ்ந்துள்ளோம்" என்பதே. நம் முன்னால் இருக்கும் ஒவ்வொரு போட்டிகளும் பூதாகரமாக நமக்குத் தெரிய காலப் போக்கில் பந்தயக் குதிரையாக மாறி விடுகின்றோம். நமக்கான விருப்பங்கள் அத்தனையும் பின்னுக்குப் போய் விடுகின்றது. இலக்கில்லா பயணம் போல இந்த வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கின்றது. எத்தனை பேசினாலும் ஒவ்வொருவரும் "பொருள்வாதி"களாகவே வாழ்கின்றோம். அதுவே சரியென்று சமூகம் உணர்த்துவதால் அவ்வாறே வாழ ஆசைப்படுகின்றோம். நம் விருப்பங்கள், மனைவி,, மகள் மகன் என்று தொடங்கி இந்த ஆசைகள் விரிவடைந்து கொண்டே போகின்றது. இன்று பேரன் பேத்திகளுக்கும் சொத்து சேர்க்க வேண்டும் என்று விரிவடைந்து வந்து விட்டதால் பறக்கும் மனிதர்களாகவே மாறிவிடுகின்றோம். ரசிக்க நேரமில்லாமல் ருசிக்க விருப்பமில்லாது இந்த வாழ்க்கையை விரும்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏக்கத்தைச் சுமந்து ஏக்கத்தோடு வாழ்ந்து "ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்" என்கிற ரீதியில் இந்த வாழ்க்கை முடிந்தும் போய் விடுகின்றது. மனிதர்களின் நாற்பது வயதை நாய் வயது என்கிறார்கள். கவ்வியிருப்பது எலும்பென்றும் தெரிந்தும் அதையே தான் தூக்கிக் கொண்டு அலைகின்றோம். கவலைகள் நம்மை அழைத்துச் செல்கின்றது. அதுவே நம்மை உருக்குலைக்கவும் செய்கின்றது. அறுபது வயதை மற்றொரு குழந்தை பருவத்தின் தொடக்கம் என்கிறார்கள். அறுபது வயதிற்கு மேல் ஒருவர் ஆரோக்கியத்துடன் வாழும் பாக்கியம் அமையப் பெற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவன். இயற்கை கொடுத்த வரம் அல்லது இயல்பில் உருவாக்கிக் கொண்ட பழக்கவழக்கம் தந்த பரிசு. மனிதனுக்கு ரசனை எந்த அளவுக்கு முக்கியமோ அதை அனுபவிக்க ஆரோக்கியம் அதை விட முக்கியம். ஆனால் தற்போது கண்களை விற்றே சித்திரம் வாங்கிக் கொண்டிருக்கின்றோம். இங்கு அத்தனை பேர்களுக்கும் ஏதோவொரு திறமை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அடையாளம் காணப்படாமல் ஒதுங்கிப் போனவர்கள் தான் அதிகம். அவரவர் உழைப்பை மீறி சில சமயங்கள் இங்கே அதிசயங்கள் நிகழ்வதுண்டு. மாற்ற முடியாத துயரங்கள், தொடர்ந்து வரும் போதும், ஒவ்வொரு சமயத்திலும் துன்பங்கள் அலைக்கழித்த போதிலும், தூக்கம் வராத இரவுகள் அறிமுகமாகும் போதும், அருகே வந்த இன்பங்கள் நம்மைவிட்டு அகன்ற போதிலும்,ரசனை உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே ஒவ்வொன்றில் இருந்தும் மீண்டு வர முடிகின்றது. எழுத்தும் வாசிப்பு கலையும் நம்மை நமக்கே உணர்த்தும். பல சமயம் நம் ஆயுளையும் அதிகப்படுத்தும். [] 8 அங்கீகாரமும் அவஸ்தைகளும் மறதியென்பது மனிதனின் வரம். பலசமயம் ஒருவன் பைத்தியமாக மாறாமல் இருக்க இந்த மறதியே உதவுகின்றது. இதைப்போலத் தன்னைச் சார்ந்த பலவற்றை மறைத்துக் கொள்வதன் மூலம் சில சமயம் வளர்ச்சியும் பல சமயம் அவமானங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் முடிகின்றது. இந்த இரண்டுக்குள் தான் ஒவ்வொருவரின் அந்தரங்கமும் உள்ளது. ஆனால் வளர்ந்து கொண்டேயிருக்கும் தொழில் நுட்பத்தால் இனி எவருக்கும் தனிப்பட்ட அந்தரங்கம் தேவையில்லை என்று சமூகம் சார்ந்த சூழ்நிலைகள் ஒவ்வொருவரையும் மாற்றிக் கொண்டே வருகின்றது. ஒரு குடும்பம் சார்ந்த அத்தனை அந்தரங்களும் இன்று சமூக வலைத்தளங்களில் விருப்பத்துடன் பகிரப்படுகின்றது. பிறநத நாள், இறந்த நாள் என்று தொடங்கிக் கணவன் மனைவி அந்தரங்கள் வரைக்கும் விவாதப் பொருளாக மாற்றப்பட்டு எழுத்தாக வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது. அதற்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் மனோ நிலையோடும் காத்திருக்கின்றார்கள். திருப்பூரில் கடந்த இருபது வருடங்களில் ஒவ்வொரு ஐந்து வருடங்களையும் நான் முக்கியமாகக் கருதுவதுண்டு. காரணம் ஒரு ஐந்து வருடத்தில் ஒட்டு மொத்த வளர்ச்சி, வீழ்ச்சி என்பதைச் சற்று நிதானமாகப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுக் காணாமல் போனவர்கள், அழிந்து போனவர்கள், அழிக்கப்பட்டவர்கள், அசாத்தியமான உயரத்தை எட்டியவர்கள் என்று ஏராளமான ஆச்சரியத்தைக் கடந்த இருபது வருடத்தில் பார்த்துள்ளேன். இதற்குப் பின்னால் எண்ணிக்கையில் அடக்க முடியாத ஒரு சமூகக்கூட்டம் சம்மந்தப்பட்டு இருப்பதால் ஏராளமான அனுபவங்களை உணர்ந்துள்ளேன். ஊருக்குச் செல்லும் போது தாத்தா வாழ்ந்த வீட்டைப் பார்ப்பதுண்டு. அந்த இடம் தற்பொழுது வேறொருவர் கைக்குப் போய்விட்டது. கேட்பாரற்று வேலிக்கருவைச் செடிகள் மண்டி சுற்றிலும் வேலி போட்டு இடம் என்றொரு பெயரில் வைத்துள்ளனர். பல முறை முள்கம்பிகளை ஒதுக்கி உள்ளே சென்று அந்த இடத்தைப் பார்க்கும் பொழுது தாத்தாவுடன் பேசிய தினங்கள், பள்ளிக்கூட ஞாபகங்கள் ஒவ்வொன்றாக என் மனதில் வரும். ஏன் எழுதுகின்றாய்? என்ற கேள்வியும் எழுதி என்ன ஆகப்போகின்றது? என்ற கேள்வியும் எனக்கு அதிக ஆச்சரியம் அளித்தது இல்லை. ஆனால் நான் படித்தால் எனக்கு என்ன நன்மை? என்று கேட்பவர்களைப் பார்க்கும் போது தான் தமிழர்களின் எண்ணம் எந்த அளவுக்குக் குறுகிய இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என்பதை நினைத்துக் கொள்வதுண்டு. நுட்பமான உணர்வுகள் அனைத்தும் நம்மை விட்டுப் போய்விட்டது. ரசிப்பின் தன்மையும் ரசனைகளின் அளவுகோலும் மாறிவிட்டது. நம் ஆசைகள் நம்மை வழி நடத்துகின்றது. இறுதியில் ஆசைகளே நம்மை ஆளவும் செய்கின்றது. எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் அங்கீகாரத்தைப் பெற்று விட வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். ஆனால் அந்த அங்கீகாரம் எதற்காக? என்று யோசித்தால் அதனால் ஒரு பலனும் இல்லை என்பது தான் உண்மையாக இருக்கும். 1947க்குப் பிறகு தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபல்யங்கள், எழுத்தாளர்களில் இன்று எத்தனைப் பேர்களின் பெயர்களை நம்மால் நினைவு வைத்திருக்க முடிகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்து மறைந்தவர்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எத்தனை வேலைகளைச் செய்து இருப்பார்கள். ஏன் காணாமல் போனார்கள்? காலம் என்பது ஒரு சல்லடை. பாரபட்சமின்றிச் சலித்துத் துப்பும் போது எஞ்சியவர்களும், மிஞ்சியவர்களும் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இங்கே காலத்தை வென்றவர்களாக இருக்க முடிகின்றது. என்னை யாராவது நினைவில் வைத்திருப்பார்களா? என் எழுத்தை அடுத்தத் தலைமுறைகள் படிப்பார்களா? என்று யோசிப்பதை விட அதற்கான வழிமுறைகளை உருவாக்கி விட்டு அமைதியாக ஒதுங்கி விடுவதே உத்தமம். காரணம் அறிவை விட அறியாமை தான் மிகப் பெரிய வரம். காலம் காலமாக அறியாமையுடன் வாழ்ந்தவர்கள் தான் வாழ்க்கை முழுக்கக் குறைவான வசதிகளுடன் வாழ்ந்த போதிலும் அமைதியாய் வாழ்ந்து மடிந்துள்ளனர். அறிவுடன் போராடி மல்லுக்கட்டிய அத்தனை பேர்களும் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கு, ஆக்கப்பூர்வமான செயல்பாட்டிற்கு உதவியிருக்கின்றனரே தவிரத் தனிப்பட்ட வாழ்க்கையில் நிம்மதி இழந்து, அங்கீகாரத்தை எதிர்பார்த்து, வாழும் போது கிடைக்காமல், மற்றவர்களால் புறக்கணிப்பட்டு மறைந்தும் போயுள்ளனர். அங்கீகாரத்தின் தேவையை நாம் தான் உணர்ந்து வைத்திருக்க வேண்டும். அமைதியான கவனிப்பு, பரவலான கவனிப்பு, ஆர்ப்பாட்டமான கவனிப்பு என்ற இந்த மூன்றுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரிந்தால் உங்கள் கடமையை அமைதியாகச் செய்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விட முடியும் தானே? [] 9 எதிரி தான் எழுத உதவினார் அப்பா இறந்து போகும் வரையிலும் அவர் மேலிருந்த கோபம் எனக்குத் தீரவில்லை. அவர் எந்தத் துரோகமும் எனக்குச் செய்யவில்லை. அவர் தப்பான ஆளுமில்லை. அவரிடம் வெற்றிலை போடும் பழக்கம் கூட இல்லை. அவர் வாழ்வில் கடைசி வரைக்கும் எந்தத் தப்பான பழக்கத்திற்கும் அடிமையானதும் இல்லை. மிகப் பெரிய கூட்டுக் குடித்தனத்திற்கு தலைமைப் பொறுப்பில் இருந்தவர் அவரின் கடைசி நாள் வரைக்கும் உழைத்துக் கொண்டே தான் இருந்தார். எங்களையும் உழைப்பின் வழியே தான் வளர்த்தார். ஆடம்பரங்களை அண்ட விடாமல் வைத்திருந்தார். தவறான பழக்கம் உள்ளவர்களை அறவே வெறுத்தார். தான் தன்னுடைய குடும்பம் தன்னுடைய தொழில் என்ற மிகச் சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்தார். அதுவே பலமென்று கருதினார். ஊருக்குள் நாலைந்து பேர்களைத் தவிர அவர் நெருக்கம் பாராட்டியது மிகக் குறைவு. நட்பு வட்டாரம் என்று பெரிய அளவில் இல்லை. அதை அவர் விரும்பியதும் இல்லை. ஆனால் ஊரில் மதிப்பு மிக்க குடும்பம் என்ற பெயரை பெற்று இருந்தார். வீட்டில், வயலில், கடையில் வேலை பார்த்தவர்களின் குடும்பத் தொடர்புகள் தவிர வேறு எதையும் அனாவசியமான தொடர்புகளாக கருதியவர். ஊரில் பேட்டை வியாபாரிகளின் சங்கத்திற்கு இரண்டு முறை தலைவராக இருந்தவர். அதுவும் இவரின் இரண்டு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே மாறிப் மாறி வருவதாக இருக்கும் அந்தப் பதவியும் குறிப்பிட்ட சுற்றில் இவருக்கு வந்த காரணத்தால் ஏற்றுக் கொண்டவர். குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு இளைஞர்களின் கைக்கு அந்த பதவிக்குச் சென்ற போது இவர் வெளியே வந்து விட்டார். கையில் ஒரு மஞ்சள் பை என்பதைத் தனது அடையாளமாக கருதிக் கொண்டவர். ஒவ்வொரு காசையும் பார்த்துப் பார்த்து செலவு செய்ய கற்று வைத்திருந்தவர். வாழ்வில் உயர உடல் உழைப்பே போதுமானது என்று நம்பியவர். ஆடம்பரம் என்ற வார்த்தையில் உணவைத் தவிர அத்தனை விசயங்களையும் கருதியிருந்தார். மகள்கள் கேட்கும் போது மனம் மாறிவிடுவார். காந்தியவாதி என்பதை விடக் கடைசிவரைக்கும் காங்கிரஸ்வாதியாகத்தான் இருந்தார். முதன் முதலாக வலையில் எழுதத் தொடங்கிய போது நாம் எதைப் பற்றி எழுதுவது என்று யோசித்த போது எப்போதும் போல அந்த மதிய வேளையில் அப்பா ஞாபகம் தான் வந்தது. ஏறக்குறைய அவர் இறந்து எட்டு வருடம் கடந்திருந்த போதிலும் அவர் உருவாக்கிய தாக்கம் குறைந்தபாடில்லை. ஒழுக்கம் தான் முக்கியத் தேவை என்கிற பெயரில் மிகப் பெரிய சர்வாதிகாரத்தை எங்கள் அனைவர் மீதும் வன்முறைக்குச் சமமாக பிரயோகித்திருந்தார். இந்திய சுதந்திர போராட்டத்தில் சொல்லப்படும் ம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்பார்களே அதே போலத்தான். அவர் எங்கள் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தினார். எங்களை மட்டுமல்ல.அவரின் இரண்டு தம்பிகளையும் கட்டுப்படுத்தித் தான் வைத்திருந்தார். முன் கோபக்காரர். சொல் பேச்சு கேட்காத போது டக்கென்று கையை நீட்டி விடும் பழக்கம் உள்ளவர். அனைவரும் அவர் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் இருந்தோம். அவரின் எந்தக் கட்டளைகளையும் மீறாமல் தான் வாழ்ந்தோம். வளர்ந்தோம். படித்தோம். நான் மட்டும் என்னை ஆளை விட்டால் போதும் என்று வெளியே வந்து விட்டேன். நான் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் எந்த நிலையிலும் வறுமை எதையும் பார்த்ததில்லை. அடிப்படை வசதிகளுக்கும் எந்தப் பஞ்சமில்லை. அப்பா எப்போதும் கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகளைத் தான் கொண்டாடினார். பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தூரில் அக்கா படிக்கச் சென்ற போது தயங்காமல் கல்லூரி விடுதியில் தான் சேர்த்தார். கல்லூரி அளவில் அக்கா முதல் மதிப்பெண் வாங்கிய போது எவரும் யோசித்தே பார்க்கமுடியாத நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியில் கொண்டு போய்ச் சேர்த்தார். ஆனால் லஞ்சம் என்பதை ஆதரிக்க மாட்டார். தேவையற்ற செலவு என்பதே எங்கும் செய்ய மாட்டார். எவரும் எதிர்பார்க்கவும் முடியாது. உறவினர்கள் மத்தியில் ராமநாதன் குடும்பம் சரஸ்வதி குடியிருக்கிற குடும்பம் என்கிற அளவிற்கு மற்றவர்களின் பார்வைக்கு அவர் குறைகளை மீறி ஒளி விளக்காய் தெரிந்தார். அப்பாவிடம் வருகின்ற எவரும் இவர் குணங்கள் தெரிந்தே தான் பேசுவார்கள். அளவாகத்தான் பேசுவார். எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார். ஆனால் எல்லாவற்றுக்கும் எதிர்மறையான குணங்கள் என்னிடம் இருக்க அதுவே எனக்கும் அவருக்கும் நாளுக்கு நாள் தூரங்கள் அதிகமாகப் போக காரணமாகவும் இருந்தது. கல்லூரி முடியும் வரையிலும் முழுமையாக ஒட்டவும் முடியாமல் ஓடி ஒளியவும் முடியாமல் சிற்றப்பா தான் என் விருப்பங்களுக்கு ஊன்று கோலாக இருந்தார். கலையார்வமோ, வேறு எந்த வித விருப்பமோ எதுவும் வீட்டுக்கு அண்டக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். அது தான் என் முக்கிய நோக்கமாக இருந்தது. படிப்பைத் தவிர மற்ற அத்தனை விசயங்களிலும் கெட்டியாக இருந்த என்னை விரட்டி விரட்டி அடித்த போதும் வீண்வம்புகள் வீடு வரைக்கும் வருவதும் மட்டும் குறைந்தபாடில்லை. என்னை என்னால் மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. என்னைச் சுற்றிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட நண்பர்களின் பட்டாளத்தையும் குறைக்கும் வழியும் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் தாமதமாகச் செல்லும் அந்த இரவு வேளைகளில் முன்பக்க கதவுகளை தாழ்போட்டு திறக்கக்கூடாது என்ற கட்டளையோடு விழித்துக் கொண்டு காத்திருப்பார். இவர் சங்கதி தெரிந்து பின்புறம் கொல்லைப்புறம் இருந்த அந்த முள்காட்டுக்குள் கவனமாகக் கால்வைத்து ஏறி பின்பக்க கதவு வழியாக வந்து கிசுகிசுப்பாக சகோதரிகளை எழுப்பி உள்ளே வந்து சேரும் போது சரியாக காத்திருந்து கச்சேரியுடன் இடி மின்னல் வெடிக்கும். சாப்பாடு இல்லாமல் கண்ணீர் மழையுடன் தான் பல நாள் கழிந்துள்ளது. ஆகஸ்ட் 25 2001 அவர் இறந்த போது மிகத் தாமதமாகத்தான் அந்தத் தகவல் எனக்கு திருப்பூருக்கு வந்து சேர்ந்தது. சென்னையில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்த போது திருச்சி பேருந்து நிலையத்திற்கருகே நெஞ்சு வலியினால் அந்த அதிகாலை வேலையில் நொடிப் பொழுதில் இறந்துப் போனார். நள்ளிரவில் போய்ச் சேர்ந்த போது அப்பாவின் சடலத்தைப் பார்த்த போது தொடக்கத்தில் எந்தச் சலனமும் மனதில் உருவாகவில்லை. இவர் சாவுக்கு நாமும் ஒரு வகையில் காரணமோ என்று கூட தோன்றியது. அவர் எதிர்பார்த்துக் காத்திருந்த வசதியான பெண்களை எல்லாம் புறக்கணித்து ஒவ்வொன்றும் தள்ளிப் போய் என் சம்மந்தப்பட்ட விசயங்களில் நிறையவே வெறுத்துப் போயிருந்தார். காரணம் திருப்பூருக்குள் மிகப் போராட்டமாய் வாழ்ந்து வந்திருந்த எனக்கு அந்த வருடம் முதல் படியில் ஏறி ஒரு நிறுவனத்தின் உற்பத்தியின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருந்தேன். அந்த வருடம் தான் அப்பா இறந்திருந்தார். நான் கடந்து வந்திருந்த தோல்விகள் ஒவ்வொன்றுக்கும் அப்பா தான் காரணம் என்று உறுதியாக நம்பியிருந்தேன். நம்மிடம் இல்லாத திறமைகள் அனைத்து அவர் கற்றுத் தராததே என்பதாக எனக்குள் ஒரு உருவகத்தை உருவாக்கி வைத்திருந்தேன். நம்மை அடக்கி அடக்கி வைத்த காரணத்தால் பல விதங்களில் நாம் பின் தங்கியிருக்கின்றோம் என்பதாகத்தான் ஆற்றாமையில் வெம்பியிருக்கின்றேன். அவர் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் மிகப் பெரிய அளவில் சொத்துக்களை விரிவாக்கம் செய்திருக்க முடியும். அவர் விரும்பியிருந்தால் சிலரைச் சென்று பார்த்திருந்தால் அப்பொழுதே எனக்குக் கிடைக்கவிருந்த அரசு வேலையில் சேர்த்திருக்க முடியும். எனக்கு மட்டுமல்ல. அவர் ஆண் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் உன் திறமையில் வளர் என்பதாகத்தான் வெளியே அனுப்பினார். வார்த்தைகளில் தயவு தாட்சண்யம் என்பதே இருக்காது. முக்கியமான விசேடங்களைத் தவிர மற்ற இடங்களுக்குத் தம்பிகளை அனுப்பி விடுவார். எவரையும் நம்ப மாட்டார். எவரிடமும் அறிவுரையும் கேட்க மாட்டார். தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றியும் யோசிக்க மாட்டார். மற்றவர்களைப் பற்றி கவலைப்படவும் மாட்டார். தான் உண்டு. தன் வேலையுண்டு என்பதைத்தான் தன் வாழ்க்கை நெறிமுறையாக வைத்திருந்தார். காலத்தோடு ஒத்துப் போக முடியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் உள்ளூருக்குள் வந்த புதியவர்கள் ஒவ்வொருவரும் வளர வளர இவரால் தன்னை வளர்த்துக் கொள்ளவும் முடியவில்லை. தன் இயல்புகளை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. எவருக்கும் மனதறிந்து துரோகம் செய்யக்கூடாது என்பதை முக்கியமாகக் கொண்டவரின் கொள்கைகள் எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியைத் தந்த போதிலும் காலத்திற்கேற்ப புதிய முயற்சிகள் கூட தேவையில்லை என்பதாக வாழ்ந்தவரின் கொள்கைகள் தான் எங்களுக்கு அதிக எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்கியது. தானும் வளராமல் எங்களையும் அண்ட விடாமல் தான் சேர்த்த சொத்துக்களை அடைகாத்தார். நான் ஊரில் பார்த்த முக்கால்வாசிப்பேர்கள் மூன்று தலைமுறைகளாக காத்து வந்த சொத்துக்களை மொத்தமாக விற்றுவிட்டு வெளியேறிய போதிலும் இன்று வரையிலும் அவர் சம்பாரித்த எந்தச் சொத்துக்களும் சேதாரம் இல்லாமல் தான் இருக்கின்றது. அவர் தம்பிகளுக்கு பிரித்தது போக இன்றும் அப்படியே இருக்கின்றது. அப்பா இறக்கும் வரையிலும் உணவு தான் வாழ்க்கை. ருசி தான் பிரதானம் என்பதான சிறிய வட்டத்திற்குள் பொருந்திக் கொண்ட அவருக்கும் உலகத்தை அளந்து பார்த்து விட வேண்டும் என்று போராடிப் பார்த்த எனக்கும் உருவான பிணக்குகள் நாளுக்கு நாள் அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை. கால் நூற்றாண்டுகள் காலம் அவரை வெறுத்துக் கொண்டே வாழ்ந்த வாழ்க்கையில் என் குழந்தைகளின் காலடி தடங்களைப் பார்த்த போது அப்பா என்ற பிம்பத்தின் முதன் முறையாக மரியாதை உருவானது. குழந்தைகளின் மருத்துவத்திற்காக அலைந்த போது தான் அவரின் உண்மையான ரூபம் புரிந்தது. குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற போது தான் எத்தனை அறிவிலியாக இருந்துள்ளோம் என்பதை உணர்ந்து பார்க்க முடிந்தது. இன்று அம்மா வாழ்ந்திருந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடிகின்றது. அவரின் அசாத்தியமான பொறுமை இன்று என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அவர் மிகப் பெரிய பட்டாளத்திற்கு சமைத்துப் போட்டு உழைத்த உழைப்பு இன்னமும் நாம் உழைக்க வேண்டும் என்று உந்தித் தள்ளுகின்றது. வீட்டுக்கு மூத்த மருமகளின் கொடூரமான சகிப்புத்தன்மையை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் மனோநிலையோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிகின்றது. குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால் குறைகளை மீறியும் குடும்பத்தை காத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி இப்போது தான் யோசிக்க முடிகின்றது. அப்பாவுக்கு எந்த வகையிலும் நாம் மகிழ்ச்சியைத் தரவில்லையே என்ற குற்றவுணர்வு மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது. குடும்பத்தினர் திருமணத்தை ஏற்பாடு செய்து உறுதி செய்த போது அப்பா இறந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. என்னை விட்டு விடக்கூடாது என்று மாமனார் அவசரமாக இருந்தார். ஏதோவொரு வகையில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன். மாமனாரிடம் ஒரு வருடம் முழுமையாக முடியட்டும் என்று காத்திருக்கச் சொன்னேன். ஊர்ப் பழக்கத்தில் தாத்தா அப்பா பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பது வாடிக்கை. ஆனால் ஆண் குழந்தைகள் வந்தால் என்னைப் போல இருந்து விடுவார்களோ என்று இயற்கை நினைத்ததோ தெரியவில்லை. ஒன்றுக்கு மூன்றாகப் பெண் குழந்தைகள் வந்து சேர இன்று மூவரும் எங்களைக் கொண்டாடுகின்றார்கள். இப்போது எங்கள் குழந்தைகள் தான் எனக்கு அப்பாவாக இருக்கின்றார்கள். காரணம் இவனைத் திருத்தவே முடியாது என்று புலம்பியவரின் பேத்திகள் தான் இன்று என்னை பேதியாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்று வளர்த்தவரின் பேத்திகள் இன்று கேள்விகளால் துளைத்தெடுக்கின்றார்கள். உங்கள் காலம் வேறு. எங்கள் காலம் வேறு என்று மல்லுக்குச் சரிசமமாக இருக்கின்றார்கள். அமைதியாய் வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை என்று உணர்த்திய அப்பாவின் வாழ்க்கையின் தத்துவங்களைத்தான் இப்போது நானும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றேன். ஆமாம் பல சமயம் குழந்தைகள் கேட்கும் உண்மையான அக்கறையான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அழகாய் ஒதுங்கிவிடத்தான் தோன்றுகின்றது. ஏன் எதற்கு எப்படி என்று கேட்டுப் பழக வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த நிலைக்கு இப்போது மூன்று பக்கத்திலிருந்து சூறாவளியும் சுனாமியும் ஒன்று சேர தாக்கிக் கொண்டேயிருக்கிறது. வீட்டில் என்னால் சமாளிக்க முடியவில்லை என்று சொல்லும் அளவுக்குத் தினந்தோறும் வாழ்க்கை அதகளமாக போய்க் கொண்டேயிருக்கிறது. அன்று அப்பாவிடமிருந்து ஒதுங்கிச் சென்ற கால்கள் இன்று குழந்தைகளின் மாறிக் கொண்டேயிருக்கும் எதிர் பார்ப்புகளைப் பார்த்து விழிபிதுங்கி நிற்கின்றது. [] 10 பாவம் அப்பாக்கள் வாசித்து முடிக்க முடியாத பெரிய புத்தகத்தைப் போல, வாசித்தாலும் புரிந்து கொள்ள முடியாத எழுத்து நடையைப் போலத்தான் அப்பாக்கள் இருக்கின்றார்கள். கிராமத்து, நகர்ப்புறங்களில் வாழும் அப்பாக்கள் என்று வகையாகப் பிரிக்கலாமே தவிரக் காலம் காலமாக அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் உண்டான 'சீனப்பெருஞ்சுவர்' இன்று வரையிலும் உடைந்த பாடில்லை. சாதாரண மனிதர்கள் முதல் வாழ்வில் சாதித்த சாதனையாளர்கள் வரைக்கும் தங்களின் வாழ்க்கை உயர்வுக்குக் காரணமென அவரவர் அம்மாக்களைத்தான் சுட்டிக் காட்டுகின்றார்கள். விதையாக இருக்கும் அப்பாக்கள் காலப்போக்கில் விரும்பப்படாதவர்களின் பட்டியலில் போய்ச் சேர்ந்து விடுகின்றார்கள். நான் எழுதத் தொடங்கிய போது அப்பாவைப்பற்றித்தான் எழுதினேன். அது சரியா? தவறா? என்று கூடத் தெரியாமல் அவரால் உருவாக்கப்பட்ட தாக்கத்தை எழுத்தாக மாற்றி என் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினேன். எழுதி முடித்த போது நம்பிக்கை வந்தது. எழுதுவற்கு நமக்கு விசயம் இருக்கிறது என்ற எண்ணம் உருவானது. தொடர்ந்து எழுத முடிந்தது. உள்ளுற இருக்கும் ஓராயிரம் அனுபவங்களை எழுத்தாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்தது. நம்மால் முடியுமா? என்பதன் தொடர்ச்சி தான் தவறாக வந்து விடுமோ? என்ற எண்ணம். நம் தைரியமே முதல் அடியை எடுத்து வைக்க உதவும். உள்ளுற உழன்று கொண்டிருக்கும் வரையிலும் எந்தக் கருத்துக்களும் சிந்தனைகளாக மாறாது. நம் திறமைகளும் வெளியே வருவதில்லை. நமக்கு இப்படி ஒரு திறமை உண்டா? என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்குத்தான் நம் அன்றாட நெருக்கடிகள் பலரையும் அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது. நாம் உணரவே வாய்ப்பில்லாத திறமைகளை நாம் வாழ்க்கையில் உருவாகும் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் காட்டிக் கொடுத்து விடும். நம்மால் இது முடியுமா? என்ற யோசனை மாறி நாம் இத்தனை நாளும் உணராமல் இருந்துள்ளோமே? என்று வெட்கப்பட வைக்கும். அப்படித்தான் இந்த எழுத்துப் பயணம் உருவானது. முழுமையான மனிதர்கள் என்று இங்கு எவருமே இல்லை. எல்லோருமே ஏதோவொருவகையில் அரை குறையாகத்தான் இருக்கின்றோம். ஆனால் நாம் அதை நாம் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. அவரவர் சாதனைகளின் அளவுகோல் வேறானதாக இருக்குமே தவிர அதுவும் ஒரு சாதனை தான் என்பதனை உணர்ந்தவர்களின் எண்ணிக்கை சொற்பமே. வாழ்வில் சாதித்தவர்களிடம் உள்ள சல்லித்தனமான புத்திகளும், வாழ்க்கை முழுக்கச் சங்கடங்களுடன் வாழ்ந்தாலும் தரமாக வாழ்க்கை நடத்துபவர்களும் என நம்மைச்சுற்றியுள்ள கூட்டுக்கலவை மனிதர்கள் மூலமே நாம் பலவற்றை கற்றுக் கொள்ள முடிகின்றது. நாம் அதனை எந்த அளவுக்கு உணர்ந்துள்ளோம்? எப்படி உள் வாங்கியுள்ளோம்? என்பதில் தான் நம் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. ஒரு தனி மனிதனின் குணாதிசியங்களில் பெற்றோர்களின் அறிவுரையும் ஆலோசனைகளும் கால் பங்கு தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஒருவன் வளரும் சூழ்நிலை தான் அவனை உருவாக்குகின்றது. காலம் அவனை உருவமாகின்றது. தவறான பாதைகளில் சென்றால் தான் சீக்கிரம் முன்னேற முடியும்? என்று எந்த பெற்றோராவது தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றார்களா? எந்த ஊரில் வாழ்ந்தாலும், குழந்தைகளுக்குக் காலம் காலமாகப் புராண இதிகாசங்களையும், நன்னெறி நூல்களில் உள்ள உபதேச கருத்துக்களையும் தானே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்கின்றார்கள். நாகரிகம் வளர்ந்துள்ளது என்று நம்பப்படும் இந்தக் காலத்தில் வக்கிர மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தானே உள்ளது. இங்குத் தான் புரிதலில், உணர்தலில் உள்ள தவறுகளும் சேர்ந்து கூட்டுக்கலவையாகி மனித எண்ணங்களாக மாறிவிடுகின்றது. இங்கே எழுத்தாளர்களுக்குப் பஞ்சமில்லை. எழுதியவர்களின் எண்ணிக்கையை விட அதை வாசித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனாலும் எந்த மாறுதல்களும் உடனடியாக உருவாகவில்லையே? எழுதுவது எப்படி? என்று யோசிப்பவர்களும், தொடர்ந்து எழுதுவது எப்படி? என்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பவர்களும் முதலில் அவர்களின் கடந்த காலத்தைப் பற்றி யோசித்தாலே போதுமானது. வாழ்ந்த வாழ்க்கை, பெற்ற அவமானங்கள், கற்ற பாடங்கள், கடந்து வந்த துயரங்கள் போன்றவற்றை யோசித்தாலே பத்து "பொன்னியின் செல்வன்" கதை போல நமக்குக் கிடைக்கும். ஆனால் நாம் முகமூடி அணிந்து கொண்டு புது அவதாரம் எடுக்கவே விரும்புகின்றோம். புரட்சியாளராக, புதுமை விரும்பியாக நிஜவாழ்க்கையில் சாதிக்க முடியாதவற்றை எழுத்து வழியே அடைய விரும்புகின்றோம். உள்ளே இருக்கும் மனப்பிறழ்வை இறக்கி வைத்து இறுதியில் அவற்றை ரசித்துப் பழகிடவும் மாறிவிடுகின்றோம். [] 11 ஆசை மரம் " இவனை நம்மால் அடக்கமுடியாது " என்று குடும்பத்தினர் ஒதுங்கியிருந்த போது தான் அக்கா மூலமாக மாமனார் என்ற தெய்வரூபம் என்னைத் தேடி நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தார். என்னுடைய கொள்கைகள், நோக்கங்கள் அத்தனையும் புரிந்து கொண்டு மற்றொரு அப்பாவாக மாறினார். ஏற்கனவே நண்பர் சுட்டிக்காட்டியிருந்தபடி திருமணமும் திரைப்பட காட்சிகளைப் போலவே நடந்து முடிந்தது. முந்தைய மூன்று தலைமுறைகளில் எவருக்கும் இல்லாத இரட்டைக் குழந்தைகள் வந்து சேர மொத்த என் சிந்தனைகளும் மாறத் தொடங்கியது. ஏன் எதற்கு அழுகை? எப்போது இவர்களுக்குப் பசிக்கும்? ஒருவருக்குக் கழுவி முடிக்கும் போது அடுத்தவருக்குக் கழுவி விடத் தொடங்கிய போது தான் எனக்குள் இருந்த அத்தனை அழுக்குகளும் கலைந்து போகத் தொடங்கியது. இரண்டு கைகளிலும் நிறைந்து இருந்த அந்தச் சின்ன உருவங்கள் என்னுடைய அத்தனை மாயப் பிம்பங்களையும் கலைத்துப் போட்டது. சட சடவென்று ஒவ்வொன்றாக மாறத் தொடங்கியது. காட்டாறு போல் ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கையை நதியாய் மாற்றத் தொடங்கினர். முதல் மூன்று வருடங்களும் அலுவலக வேலைகளுடன் வேறு எந்த வெளியுலகமும் தெரியாத வாழ்க்கையாய் என்னை ஆக்கிரமித்து இருந்தனர். மூன்றாவது வந்தவள் தொழில் மற்றும் வாகன யோகத்தையும் சேர்த்து கொண்டு வர அப்போது தான் பிறந்த ஊருக்குச் செல்லும் பழக்கம் உருவானது. அதுவரைக்கும் அத்தனை பேர்களும் திருப்பூருக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். தொடக்கத்தில் ராக்கோழி கணக்காய் இரவு முழுக்க பேருந்தில் பயணித்து கண் எரிச்சலோடு அந்த அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைவேன். அரை குறை தூக்கத்துடன் அம்மா கேட்கும் முதல் கேள்வி....... வாடா........ எப்ப மறுபடியும் திருப்பூருக்கு போகப்போறே? காரணம் உள்ளே இருந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து மறுபடியும் கால்கள் நகராமல் இருந்து விடுவேனோ என்ற பயம். அப்பா உடனே ஒத்து ஊதுவார். உடன்பிறப்புகள் நக்கலுடன் நகர்ந்துவிடுவார்கள். ஆனால் மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளியே எவரும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். காரணம் மறுபடியும் பூதத்தை பாட்டிலுக்குள் அடக்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் கெஞ்சும் போது மிஞ்சி ஓட்டம் பிடித்தேன். இன்று இருக்க எண்ணம் இருக்கிறது. இரண்டு நாளைக்கு மேல் இருந்து விடாதே என்று சொல்லக்கூடிய தொழிலும் இருக்கிறது. காரைக்குடியில் இருந்து அரை மணி நேரம் பயணம். முன்னாள் மத்திய நிதி அமைச்சரின் ஊரைத்தாண்டி உள்ளே நுழைந்தால் உங்களை இனிதே வரவேற்கும். பாலத்தைத் தாண்டும் போதே பக்கவாட்டில் இருந்த புளிய மரத்தைப் பார்ப்பேன். பேய் பிசாச என்று கிளப்பி விட்டு எங்களை அந்தப் பக்கம் வர விடாமல் தடுத்த அக்கா அண்ணன்களின் லீலைகள் இப்போது புரிகிறது. அரிசி ஆலையைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் இல்லாத ஊர். சுற்றிலும் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு கடைத்தெரு உள்ள ஒரு ஊர். அந்த அளவிற்குத் தான் மக்களின் எண்ணமும் வளராமல் இருந்தது. உள்ளே நுழையும் போதே எதிரே வரும் நபர்களின் முகம் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்துக் கொண்டே நடந்து செல்வேன்,. ஒவ்வொருவர் வாயிலும் ஒவ்வொரு விதமான வரவேற்பு. சட்டைக்குள் கைவிட்டு எடுக்க காத்திருக்கும் சிலரைத்தாண்டி உள்ளே நடந்து செல்ல வேண்டும். ஓடித்திரிந்த தெருக்கள், உட்கார்ந்து அரட்டை அடித்த பாலம், நாள் முழுக்க அமர்ந்து இருந்த பஞ்சாயத்து போர்டு குட்டிச்சுவர்கள் என்று அத்தனையும் அனாதையாய் இருக்க, பழகிய எவரையும் இன்று காணவில்லை. கற்பக விநாயகர் திருக்கோயில். எதிரே குளம். சுற்றிலும் நூற்றுக்கும் குறைவான கடைகள். ஓரமாய் ஒதுங்கி வேறொருபுறம் சென்றால் ராவுத்தர் தெரு. மீன்கடை, இறைச்சிக்கடை. தொட்டுத் தொடங்கி மூச்சுப் பிடிக்க ஓடினால் பழைமை வாய்ந்த சாக்கோட்டை, பெயரில் தான் கோட்டை இருக்கிறதே தவிர மொத்த குடும்பமே நூறு இருக்குமா என்று ஆச்சரியம். ஆலமர வரிசையில் மறைந்து கொண்டு இருக்கும் மஞ்சுவிரட்டு பொட்டலும் நடக்கும் களேபரத்தை அடக்கும் காவல் நிலையம் இப்போது அமைதியாய் இருக்கிறது. காவல் நிலையத்தை தாண்டிச் சென்றால் நூற்றாண்டுகளைத் தாண்டி இருக்கும் பெரிய மற்றும் சிறிய கோவில். சிறிய கோவிலைத்தாண்டி குழந்தைகளுடன் பெரிய கோவிலுக்குள் நுழைகின்றேன். கோவில். பிரகாரத்தில் மூச்சு விட்டால் படபடக்கும் பறவைகளில் இரைச்சல். இருட்டுக்குள் நடந்து வந்தால் சுத்தம் செய்யாத முடை நாற்றம். அங்கே குருக்கள் பணியில் இருந்தவன் பள்ளியில் என்னோடு படித்தவன். அவன் முகம் எங்கும் முதுமை பெற்ற தோற்றம். அருகில் பேசச் சென்றாலும் ஏதோ ஒரு தயக்கம். ஒதுங்கிச் சென்றான். குழந்தைகளுடன் ஒவ்வொன்றாக தொட்டுப் பார்த்துக் கொண்டு நகர்கின்றேன். குழந்தைகளுக்குக் கிடைத்த சுதந்திரத்தில் ஓ......வென்று அவர்கள் கத்திய இரைச்சல் அந்தக் கோவில் முழுக்க எதிரொலிக்கின்றது. கூட்டம் இல்லாமல், வருமானம் இல்லாத வரிசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அக்கிரகாரத்தைச் சுற்றி வரும்போதே எங்கள் வயலுக்குச் செல்லும் பாதையில் கிராமத்துப் பள்ளிச் சிறுவர்கள் சந்தோஷமாய் பைக்கட்டு தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். மழை வரும் போல் இருக்கிறது. மண் வாசனை நாசியை நெருடுகிறது. கோவிலுக்கு எதிரே மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சுத்தமான அந்தப் பெரிய குளத்தை உற்று பார்த்துக் கொண்டிருக்கின்றேன். பக்கத்தில் உள்ள அத்தனை கிராமங்களும் குடிநீர் எடுக்கக் கூட்டமாய் வந்த தருணங்கள் மனதில் வந்து போகின்றது. படித்துறையில் அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கி அழைத்து வரும் போது எதிரே வந்தவர் புவியியல் ஆசிரியர். பூமிக்கும் வானத்துக்கும் கோபப்படும் அவர் இன்று கஞ்சி ஊத்தாத மருமகளை அண்டிக் கொண்டு அடங்கி வாழ்ந்து கொண்டுருப்ப்தை கண்ணீருடன் பேசினார். குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்குச் சமாளித்து கொட்டிக் கிடந்த மணலில் காலை சரட்டிக் கொண்டு அவர்களின் ஓட்ட வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் மூச்சு வாங்குகிறேன். தேர்முட்டியைக் கடந்து சென்ற போது கரையான் அரித்த ஓலைகளால் போர்த்தி வைக்கப்பட்ட சின்னத்தேர் பெரியதேர் இரண்டு சிருங்காரமாய் நிற்கிறது. தடவிப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். டவுசருடன் மட்டும் வந்த திருவிழாவும், போட்டிருந்த புதுச்சட்டையில் ஒளித்து வைத்த பலூனை மறந்து செய்த களேபரம் நினைவுக்கு வருகிறது. வாங்கிய அடியில் துடைக்காத மூக்குச்சளியை நினைத்து இப்போது உறுத்தலாய் இருக்கிறது. நான் பார்த்த பல வருடத் திருவிழாக்கள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து போகின்றது. வெட்டுப்பட்ட ஆட்டுத் தலையும், வெட்டியும் அடங்காமல் துடித்த உயிர்க் கோழிகளும் சிதறடித்த ரத்த மண் வாசனையை தடவிப் பார்க்கின்றேன். தொடர்ச்சியாகக் குழந்தைகளின் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. பதில் என்று ஏதோ ஒன்று வந்து கொண்டு இருக்கிறது. மனம் முழுக்க வெறுமையாக இருக்கிறது. ஊரின் மற்றொருபுறம் பக்கம் கார் வந்து நிற்க ரயில் நிலையத்தைக் கண்டவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஓடுகிறார்கள். மேட்டைக் கடக்க ரயில் தண்டவாளத்தை ஓட்டி கண்களுக்கு எட்டிய வரைக்கும் தெரிந்த கண்மாய் தண்ணீர் இப்போது உட்கார்ந்து கழுவினால் கூட போதாத அளவிற்கு வற்றிப் போய் உள்ளது. இதை நம்பி மற்றொரு புறத்தில் இருந்த பல ஏக்கர் வயற்காடுகள் குடியிருப்புக்கு அளந்து கொண்டிருக்கிறார்கள். அருகே ரயில் நிலையம். மயிலாடுதுறை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் வருகைக்காக சில பேர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பழகிய சில பெரியவர்களின் வாயில் இருந்து அளவான புன்னகை.. ஆனால் பெயரில் மட்டும் தான் எக்ஸ்பிரஸ். எக்ஸ் ஒய் இசட் என்று கத்திக் கொண்டே ரயில் ஓடும் வேகத்திற்கு நாமும் ஓடிவிடலாம். இந்த ரயில் பாதை நடைமேடையில் தான் பல மணி நேரம் தவம் போல் அமர்ந்து படித்து கல்லூரிப்பாடங்களும் குளிக்க வந்த பெண்களின் காமப் பாடங்களையும் பார்த்த ஞாபகம். மாதவன், கோவிந்தராஜன் சேர்ந்த கூட்டணிகள் இறுதி வரைக்கும் உடையாமல் இருந்தது. அவர்கள் தொழில் நுடபகல்லூரிக்குள் நுழைய தடமும் மாறிவிட்டது. ரயில் நடைமேடைகளைக் கடந்து நெருஞ்சி முள் குத்தாமல் ஜாக்கிரதையாகக் கால்கள் வைத்து வேலி தாண்டிய வெள்ளாடு போல் வந்தால் அருகே உள்ள பூங்காவிற்குள் நுழையலாம். பழைய தகரங்களைக் கோர்த்து உள்ள நடுநாயக நடைமேடைகளும், எப்போதும் விழும் என்று காத்து இருக்கும் பட்டுப் போன மரங்களுக்கும் இடையே என்னுடைய முக்கியமான மரம் ஒன்று உண்டு. குழந்தைகளின் கைபிடித்து அந்த இடத்தை தேடி அலைந்து கடைசியில் கண்டு கொண்டேன். கால் நூற்றாண்டு காலம் ஆனாலும் முதல் காதல் உருவாக்கிய நினைவுச் சின்னம் அதில் இருக்க ஆசையுடன் பார்த்தேன். தாவரத்தின் பட்டை மறைத்து ஆணியால் கீறப்பட்ட இரண்டு பெயர்களில் அவள் பெயர் மறைந்து விட்டது. என் பெயர் மட்டும் மெலிதாக தெரிந்தது. அதன் அருகில் குழந்தைகள் தங்களின் பெயரை ஆணியால் செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்... [] 12 இனிய நினைவுகள் பூங்காவில் இருந்து குழந்தைகளை வெளியே அழைத்து வர முடியவில்லை. மரங்களும் அருகே தெரிந்த பொட்டல்காடுகளும் வேறொரு உலகத்தைப் பார்த்தது போல் இருந்திருக்கலாம். வீட்டுப் பாடங்களும் விளையாட முடியாத சோகங்களும் இன்று முடிவுக்கு வந்தது போலிருந்தது . அவர்கள் போட்டிருந்த செருப்புகள் எங்கோ அனாதையாய் கிடக்க அவர்களின் ஓட்டமும் கத்தலும் மரங்களில் இருந்த பறவைகளை படபடக்க வைத்தது. பூங்காவில் இருந்த சறுக்கு மர தகரத்தில் நீட்டிக் கொண்டிருந்த துருப்பிடித்த கம்பிகள் என்னை யோசிக்க விடாமல் தடுக்க குழந்தைகளைப் பிரித்து வண்டிக்குள் அடைத்துப் பயணித்த தெருவின் இறுதிப் பகுதி பங்களா ஊரணித் தெரு. நடுநாயகமாகக் குளம் அருகே ஆலமரம். எப்போதும் போல மரத்தின் கீழே பிள்ளையார் சிலை. ஒவ்வொரு பகுதிகளுக்கும் இருக்கும் வெட்டி ஆபிசர்களைப் போல இந்தச் சந்துக்குள் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக வந்தால் இரவு நேரம் தவிர எப்போதும் சீட்டாடி கோஷ்டிகள் நிறையப் பேர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு சந்தின் பெயரும் வினோதமான பெயர்க்காரணமாக இருக்கும்.. நடுவீதி, நடராஜபுரம், கீழப் பெருமாள் கோவில், மேலப்பெருமாள் கோவில், யெமு வீதி இப்படித் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு நீண்ட சந்தில் அதிகபட்சம் இருபது வீடுகள் இருக்கலாம். அடுத்த தெருவுக்கு பிரிக்கும் பாதைகள் என்பது ஒரு முழு வீட்டின் அளவு. மொத்தத்தில் ஒரு வீட்டின் மொத்த அளவு முடியும் போது இடையில் உள்ள சந்து பிரிந்து அடுத்த வீட்டுக்குத் தொடக்கமாக இருக்கும். முழுவீட்டையும் சந்தின் வழியே நான்கு புறமும் சுற்றி வரும் போது லேசாக மூச்சு வாங்கும்.. குழந்தைகள் அருகே கட்டி வைக்கப் பட்டுருநத கைப்பந்து வலையுடன் ஒன்றிப் போயிருந்தார்கள். பார்த்துப் பழகிய சிலர் கண்களுக்குத் தெரிந்தார்கள். முதல் இருபது வருட வாழ்க்கையில் அவஸ்ய தேவைகளைத் தவிர்த்து நான் வெளியே எங்குமே சென்றது இல்லை. நான் பார்த்த ஊர்களை எளிதில் பட்டியலிட்டு விடலாம். கண்டணூர்,கோட்டையூர்,காரைக்குடி,தேவகோட்டை,,ஆர்,எஸ்,மங்கலம், திருவாடனை, பிள்ளையார்பட்டி, திருப்பத்தூர்,கல்லல், கோனாபட்டு கண்டரமாணிக்கம் கீழச்சீவல்பட்டி கீழப்பூங்குடி கானாடுகாத்தான் பள்ளத்தூர்,கோட்டையூர் என்று எண்ணிக்கைகளுக்குள் அடக்கி விடலாம். அரசாங்க ஊழியர்களுக்கு தண்டணைப்பகுதி என்று சொல்லப்பட்ட பிரிக்கப் படாத இராமநாதபுர மாவட்டத்தில் தான் பிறந்தேன். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று மாறியது. பிறகு சாதிப் பெயர் கூடாது என்று பசும்பொன் முத்துராமலிங்கம் என்று மாறி இன்று சிவகங்கை மாவட்டம் என்று வந்து நின்றுள்ளது. பெயர்கள் மாறியதே நான் பார்த்தவரைக்கும் மிகப் பெரிய மாறுதல்கள் கால் நூற்றாண்டு காலத்தில் ஒன்றுமே நிகழவில்லை. எந்த அரசியல்வாதிகளும் சிறு துரும்பைக் கூட அசைத்துப் போடவில்லை. சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினத்தில் இந்தச் சமூக மக்களின் வாழ்க்கை தொடங்கியதாக வரலாறு சொல்கிறது. காலமாற்றத்தில் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங் களைச் சுற்றிய 9 கிராமங்களில் தொடக்கத்தில் குடியேறினர். இன்று பொதுப் பெயராக மொத்தமாகச் செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் போன்ற ஊர்களை அடிப்படையாகக் கொண்டு சுற்றிலும் உள்ள 96 கிராமங்களில் பரவி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வியாபார நிமித்தமாக மன்னர் காலங்களில் வைசியர் குலம் என்று தொடங்கி இருக்க வேண்டும். வர்ணாசிர்மம் என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள உழுத்துப் போன சமாச்சாரங்கள் இங்குத் தேவையில்லை. மொத்தத்தில் தொழில் அடிப்படையில் இந்த ஜாதி மூலக்கூறுகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் இதில் மகத்தான ஆச்சரியம் ஒன்று உண்டு. தொடக்கத்தில் ஒவ்வொரு தனி மனிதர்களும் தாங்கள் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு தொழில் அடிப்படையில் உருவான சமூக அமைப்பில் உருவான சாதிகள் கிமு நாலாம் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரைக்கும் ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகள் கோலோச்சிய புத்த சமண மதங்கள் முன்னிலையில் இருந்தாலும் இந்த ஜாதி மூலக்கூறு மட்டும் கவனமாக சிதையாமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இத்தனை நூற்றாண்டுகள் கழிந்தும் இன்றும் பலரையும் படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறது. மன்னர்களுக்கு உதவும் வகையில் வைசியர் குலத்தில் உருவானது தான் இந்தச் செட்டி என்ற சொல்லாக வந்திருக்க வேண்டும். இதில் உள்ள பல கிளைநதிகளை முதன் முதலாக திருப்பூருக்குள் வந்த போது தான் உணர்ந்து கொள்ள முடிந்தது. 24 மனை, தெலுங்கு, கன்னடம்,வளையல்கார என்று பிரிந்து போய்க் கொண்டே இருக்கிறது. ஏறக்குறைய 60 நகரத்தார் கிராமங்கள். 9 விதமான கோவில்களின் அடிப்படையில் 12 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார்பட்டியை அடிப்படையாக் கொண்டு நிலைபெற்று உருவான சமூக மக்கள். ஒவ்வொரு விதமான பாரம்பரியம். சிங்கப்பூர் முருகன் கோவிலில் முன்புறம் உள்ள அந்தச் சிறிய கல்வெட்டை உற்றுக் கவனித்தால் 1859 ஆம் ஆண்டு அங்கு வாழ்ந்த பெருமக்களின் சேவையை நமக்கு உணர்த்தும். அங்கு மட்டுமல்ல மலேசியாவில் உள்ள பினாங்கு பகுதியில் உள்ள சிவன் கோவிலைச் சுற்றி வரும் போது நாம் இருப்பது வெளிநாட்டிலா இல்லை தமிழ்நாட்டின் ஒரு பகுதியா என்று நம்மை திகைப்படைய வைக்கும். பர்மா வரைக்கும் சென்று பொருள் ஈட்டிய சமூகம் , இது எந்த அளவிற்கு இருந்தது தெரியுமா? ஈழத்தில் சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் கொழும்புச் செட்டி என்ற தெருவில் நடந்த நிதி ஆதார பரிவர்த்தனைகளை நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அன்றைய காலகட்டத்தில் இலங்கையின் மொத்த நிதி ஆதாரத்தில் 90 சதவிகித பங்களிப்பு நம்மவர்களின் கையில் தான் இருந்தது. உச்சக்கட்டமாக இன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அண்ணாமலை செட்டியார் தன்னிடம் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவித்த நெல்லை விற்பதற்குப் பயன்படுத்திய நாடு இலங்கை. தமிழ் நாட்டில் இருந்து நெல் அரிசி மூட்டைகளை இலங்கைக்குக் கொண்டு செல்லத் தனியாகவே கப்பல்கள் வைத்து இருந்தது ஆச்சரியத்தின் உச்சம். இன்று அத்தனை வீடுகளும் பாழடைந்து கிடக்கின்றது. தேக்கு மர கதவுகளும், பெல்ஜியத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த அலங்காரங்களும் பொலிவிழந்து போய்விட்டது. 150 ஆண்டுகள் கடந்ததும் இன்று ஒரு சுவரில் கூட நான் விரிசலைப் பார்த்தது இல்லை. முட்டைச் சாற்றை குழைத்து முழுமையான அர்ப்பணிப்பும் கலைநுணுக்கமாய் கட்டிய மொத்த வீட்டின் வாரிசுகளும் புலம் பெயர்ந்து எதையோ தேடி எங்கேயோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வின் கடைசி கட்டத்தில் வாழும் பெரியவர்களுக்கு இவ்வளவு பெரிய வீட்டில் ஏக்கமான நினைவுகளைத் தவிர வேறொன்றும் துணையில்லாமல் துணிவே துணையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வள்ளல் அழகப்பர் இல்லையென்றால் வரப்பட்டிக்காட்டு வாசியாக என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையும் புதுவயல் என்ற கிராமத்திற்குள் முடிந்து போயிருக்கும். [] 13 விதைக்குள் உறங்கும் சக்திகள் நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் இன்னமும் கலங்கலாக என் நினைவில் இருக்கின்றது. கொண்டு போய் சேர்த்தார்கள் என்ற வார்த்தையே தவறு. ஐந்து வயது ஆனதும் அக்காவுடன் அனுப்பி வைத்தார்கள். என் பள்ளிக்கூட ஆசிரியர் சீனிவாசன் அப்பா ஒரு முலையில் அமர்ந்திருந்தார். யார் வீட்டு கொழந்த? என்று கேட்டார். அக்கா அப்பாவின் பெயரை சொன்னார். பெரிய இலையில் நெல் பரப்பியிருந்தது. என் கையைப் பிடித்து அந்த நெல்லில் அ போட வைத்து என்னை உள்ளே அனுப்பி வைத்தார். சுபம். அதன் பிறகு பள்ளி என்ற நதிப்பயணம் தொடங்கியது. வேறெந்த முன்னேற்பாடுகளும் முஸ்தீபுகளும் இல்லை. டவுசர், சட்டை கூட ஒரு மஞ்சள் பை. அதற்குள் ஒரு சிலேட்டு. உடைந்த குச்சி. இதை பல்பம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் வீட்டில் இரட்டையரைப் பள்ளியில் சேர்க்கும் வயது வந்த போது ஒரு மாதம் முன்பாகவே அத்தனை முன்னேற்பாடுகளையும் அக்கறையுடன் செய்ய வேண்டியதாக இருந்தது. பள்ளி திறந்த முதல் நாளில் அனுப்பவில்லை. திருப்பூரில் இருக்கும் சரஸ்வதி கோவிலுக்கு அழைத்துச் சென்றோம். கல்விக்கென்று உருவாக்கப்படுத்தப்பட்ட அந்தத் தெய்வத்தின் கதையை அவர்களுக்குச் சொன்னோம். அது அப்போதிருந்த மனத்தின் தன்மையில் அக்கறை என்ற பெயரில் தொடங்கிய பயணம் அது. ஆனால் அவர்களைப் பொறுத்த வரையிலும் அதுவொரு ஜாலியான ரவுண்ட் போன சுகம். மறுநாள் இருவருக்கும் பள்ளிச்சீருடை அணிவித்து மாட்ட வேண்டிய மற்ற சமாச்சாரங்களையெல்லாம் மாட்டி அலங்கரித்து பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். ப்ரிகேஜி வகுப்பறையில் இரண்டு ஆசிரியைகள் இருந்தார்கள். ஒருவர் வயதானவர். மற்றொருவர் மிக இளமையாக இருந்தார். இருவரும் அங்கே செய்து கொண்டிருந்த பணி தான் என்னை அங்கே சிறிதுநேரம் நிறுத்தி வேடிக்கை பார்க்க வைத்தது. காரணம் அங்கே கொண்டு வந்து சேர்த்த எந்தக் குழந்தைகளும் அடங்குவதாகத் தெரியவில்லை. ஒரே கத்தல் கதறல். மூக்குச் சளி சிந்தி உள்ளே நடந்த களேபரத்தில் பல கூத்துக்கள் நடந்து கொண்டிருந்தது. நிச்சயம் நம்மாளுங்க தலை தெறிக்க ஓடி வரப் போகின்றார்கள் என்று காத்திருந்தேன். காரணம் வயதான ஆசிரியை வகுப்பறையின் உள்ளே இருந்து கொண்டு அழும் குழந்தைகளை சமாதானம் செய்து கொண்டிருந்தார். மற்றொருவர் இரண்டு கதவில் ஒரு கதவை சார்த்தியபடி அம்மா அப்பாவை அனுப்புவதில் குறியாக இருந்து கொண்டு அடுத்து வரும் குழந்தைகளை உள்ளே அனுப்புவதில் கவனமாக இருந்தார். கதவைக் கெட்டியாக பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார். அவரின் சேலை தலைப்பை சில குழந்தைகள் இழுத்தபடி அழுதன. இருவரும் தடுமாறி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். என் அலுவலக வேலையை மறந்து விட்டு அங்கேயே சற்று நேரம் நின்று அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். பாதிக் குழந்தைகள் கத்திய கத்தல் அந்த மூடிய கதவைத் தாண்டி வெளியே எதிரொலித்தது. கதவின் இடையே தெரிந்த வெளிச்சத்தில் உள்ளே பார்த்தேன். ஆனால் நமது இரட்டையர்கள் இருவரும் அழவில்லை. ஆனால் அங்கே அழுது கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கண்களில் மட்டும் லேசாகக் கண்கள் கலங்கியதைத் தூரத்தில் இருந்து பார்த்த போது புரிந்து கொள்ள முடிந்தது. என் தலையை கதவிடுக்கின் வழியே கண்ட போது கூட அடம் பிடித்து வெளியே வர முயற்சிக்க வில்லை. எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது. பெண்ணை கட்டிக் கொடுத்து மாப்பிள்ளையோடு அனுப்பும் போது பெற்றோருக்கும் எவ்வித மனோநிலை இருக்குமோ அந்த மனநிலை அப்போது எனக்கும் தோன்றியது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பாக வருகின்றது. முதல் இரண்டு வாரங்கள் நண்பகல் 12 மணி வரைக்கும் என்று சொல்லியிருந்தார்கள். அலுவலக பணியில் மறந்து போய்விடுவோம் என்று அலைபேசியில் அலாரம் வைத்துக் கொண்டு அடிக்காமல் இருந்து விடுமோ என்று அரைமணிக்கு ஒரு தரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக 11.45க்கு டாண் என்று அந்த வகுப்பறையில் வாசலில் தவம் கிடந்தேன் என்று தான சொல்ல வேண்டும். காரணம் இரட்டையரில் ஒருவரின் உடல் நலம் குறித்த அதிக அக்கறையில் அதிகம் கவனம் செலுத்திக் கொண்டிருந்த நாட்கள் அது. பள்ளி நேரம் முடிந்து. வெளியே வந்தவர்கள் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்த போது தான் எனக்க போன உயிர் திரும்பி வந்தது. பள்ளிக்குள் இருக்கும் அந்தச் சின்ன பூங்கா பக்கம் அழைத்துச் சென்று ஊஞ்சலில் ஆட விட்டு அன்றைய வகுப்பறை அனுபவம் குறித்து மெதுவாகக் கேட்டேன். மழலை மொழியில் கூறியது இப்போதும் நினைவில் இருக்கிறது. "நாம தான் அ ஆவன்னா ஏபிசிடி எல்லாமே படிச்சாச்சுல்ல. அத்தாம்பா சொன்னார்கள்" என்றார்கள். கொண்டு போயிருந்த மீதியிருந்த தின்பண்டங்களை தின்று கொண்டே வண்டியில் ஏறினார்கள். அன்று தொடங்கிய இலகுவான இவர்களின் கல்வி பயணத்திற்கு நாங்கள் முன்னேற்பாடுகளுக்காகச் செலவழித்த காலம் ஏறக்குறைய மூன்று மாதங்கள். பள்ளியில் கட்டணம் கட்டி உறுதியானதும் பள்ளி குறித்துப் புரிய வைத்தோம். பள்ளியின் அருமையை விளக்கிச் சொன்னேன். பல படங்கள் அடங்கிய புத்தகங்களை ஆறு மாதமாக வாங்கி புத்தகங்களின் மேல் உள்ள ஆர்வத்தை உருவாக்கினோம். வீட்டில் எழுத கற்றுக் கொடுத்த போது நான் மட்டும் எழுத வைக்க வேண்டாம். நான்கு வயதில் எழுதத் தேவையில்லை. பேச கவனிக்கத் தெரிந்தால் போது என்று அவர்கள் மேல் வலிய எதையும் திணிக்காமல் அவர்கள் போக்குக்கு அனுமதித்தேன். எந்தப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தாலும் மூன்று நாட்களுக்குள் அது கிழிக்கப்பட்டு கப்பல் போல ஏதோவொன்றை செய்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அலுவலக வேலை முடித்து வீட்டுக்குள் வரும் போதே வேறொரு புத்தகத்தை வாங்கி வந்து விடுவதுண்டு. பல புத்தகங்கள். ஆனால் ஒவ்வொன்றும் வாய் இருந்தால் கதறியிருக்கும். இரண்டு புத்தகங்கள் என்று ஒவ்வொரு செலவும் இரண்டு இரண்டாகச் செய்ய வேண்டியிருந்தது. கடைசியில் அட்டையில் போட்ட படங்கள் அடங்கிய பாடங்களை வீட்டுக்குக் கொண்டு வந்த சேர்த்த போது தான் ஒரு முடிவுக்கு வந்தது. அவர்கள் அதையே வைத்துக் கொண்டு விளையாட்டுப் பொருட்கள் வைத்துக் கொண்டு ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். எங்கள் மூச்சு சீரானது. நம்முடைய கல்வியின் முக்கியப் பிரச்சனையே இங்கு தான் தொடங்குகின்றது. படங்கள் மூலம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல வளர்ந்த பிறகும் பாடம் நடத்தும் போது அது எளிதாக மூளைக்குக் கடத்தப்படுகின்றது. ஆனால் இந்திய கல்வியில் செயல்வழி கல்வியை விட எழுத்து வழிக் கல்விக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. வலியத் திணிக்கும் போது வாந்தி பேதியாகிவிடுகிறார்கள். கல்வி என்பது கசப்பு மருந்து போல ஆகிவிடுகின்றது. நன்றாக கவனித்துப் பாருங்கள். நாமும் படித்து வந்துள்ளோம். நம்முடைய குழந்தைகளும் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். நம்மில் எத்தனைப் பேர்கள் பள்ளிக்கூட புத்தகங்களை கதை புத்தகம் போல விருப்பத்துடன் அணுகியிருக்கின்றோம். கடமைக்கு, பயத்துக்கு, கட்டுப்பாட்டுக்கு என்று ஏதோவொரு விதத்தில் தான் ஒவ்வொரு வகுப்பையும் கடந்து வந்துள்ளோம். அதுவே தான் இன்று குழந்தைகள் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கின்றது. தாய்மொழிக் கல்வி என்பது மாறி அந்நிய மொழி கல்வி என்ற போது இன்னமும் திகட்டல் அதிகமாகி விடுகின்றது. இந்திய கல்வியில் மட்டுமல்ல கலாச்சாரத்தில் கூட விருப்பங்களை விடத் திணித்தல் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. மதிப்பெண்களுக்கு உள்ள மரியாதை மனதில் உள்ளக் கருத்துக்களுக்கு கிடைப்பதில்லை. எதிர்ப்பு சக்தியை இழக்க வைத்துவிட்டு எதிராளிகளோடு போராட வேண்டிய கலையை இங்கே கற்றுக் கொடுக்கின்றார்கள். ஒரு பக்கம் முழுக்க பூச்சி பூச்சியாக வெறுமனே எழுத்துக்கள் மட்டுமே இருந்தால் எத்தனைப் பேர்கள் விரும்பி வாசிப்பார்கள். அதுவே படங்கள் இருக்கும் போது ஆர்வம் இயல்பாக உருவாகின்றது. ஆனால் இங்கே எழுத்துக்கள் மூலம் மட்டுமே அத்தனையும் புகட்டப்படுகின்றது. மூளையில் உள்ள ந்யூரான்களில் விதைக்கப்படும் விதைகளை விட அதில் செலுத்தப்படும் கருத்துக்களை அடைகாப்பது தான் முக்கியம் என்று போதிக்கப்படுகின்றது. தொடக்கத்தில் மனித இனம் வேட்டையில் தான் தனது வாழ்க்கையைத் தொடங்கியது. அப்போது கலாச்சாரம் என்றொரு வார்த்தையே இல்லை. காலப்போக்கில் பொருளாதார வாழ்க்கைக்கு மாறிய போது தான் கலாச்சாரம் என்றொரு வார்த்தையும் இடையில் வந்து சேர்ந்தது. எல்லாமே மாறத் தொடங்கியது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மனித இனம் மாறத் தொடங்கிய போதே அவரவர் விரும்பிய வகையில் சட்டங்கள் வளைக்கப்பட்டது. சட்டமியற்றும் அதிகாரத்தில் இருந்தவர்கள் சூழ்ச்சி வலையை மறைமுகமாக வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் உருவாக்கினார்கள். உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் தலைமுறை கடந்தும் பலரால் வெளியே வரமுடியாத அளவுக்குச் சமூகத்தின் ஓரத்திற்கே செல்லக் காரணமாக இருந்தது. அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்டு காரணங்கள் கற்பிக்கப்பட்டது. ஆனால் காலவெள்ளத்தில் ஒவ்வொன்றும் உடைபடவும் தொடங்கியது. வலியவர்கள் பிழைக்க முடியும் என்ற பொது விதி உயிர்பெறத் தொடங்கியது. உலகில் படைக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் மற்றவர்கள் வாழ்க்கையின் நலனுக்கே என்பதாக மாறியது. கருத்துக்கள் அனைத்தும் பகிர்வதற்கே என்று தோன்றிய போது தான் நவீனங்கள் தங்களது வெளிச்சத்தை உலகத்தின் மேல் பாய்ச்சத் தொடங்கியது. விஞ்ஞானம் வளர்ந்தது. பலவற்றையும் வளர்த்தது. ஆனால் இன்று நாம் பார்ப்பது என்ன? வேடவர் சமூகத்தில் தொடங்கிய நமது பயணம் இன்று வேடர்களைப் போலவே நம்மை மாற்றியுள்ளது. தொடக்கத்தில் மனிதன் சிறு புள்ளியாக இருந்தான். வட்டம் தொடங்கியது. தொடங்கிய இடத்திற்கே தற்போது வந்து சேர்ந்துள்ளோம். சக மனிதனை, நாடுகளை சுய லாபத்திற்காக வேட்டையாடுதல் தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. இனம், மதம், மொழி, சாதி என்ற பெயரைக் கொண்டு வேட்டையாடத் தொடங்கி விட்டது. பொறாமை என்பது உள்ளே ஒழித்து வைக்கப்பட்டு அது வன்மமாக மாறியுள்ளது. அதுவே வாழ்க்கை சூத்திரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றும் விட்டது. இறுதியில் இது தான் சமூகத்திற்கான தகுதியாகவும் மாறியுள்ளது. அப்படியென்றால் இத்தனை காலம் மனிதக் குலம் கடந்து வந்த பாதையில் ஒவ்வொருவரும் கற்ற கல்வி என்ன ஆச்சு? காரணம் குறிப்பிட்ட மக்களுக்குக் கல்வி என்பது ரத்தம் சதை நாளம் நரம்பு என்று அத்தனையிலும் ஊறிப்போய் அதனையே வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்வில் உயரத் தொடங்கினார்கள். கற்ற கல்விக்கும் அப்பாற்பட்டும் சிந்தித்தார்கள். உயர்ந்தார்கள். கல்வி சொன்ன பாதையை மட்டுமே நம்பினார்கள். ஆனால் கல்வியை அணியும் ஆடை போல, பூசும் பவுடர் போலப் பயன்படுத்திய அத்தனை பேர்களும் தானும் கற்க முடியாமல் தனக்குப் பின்னால் வந்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்காமல் வன்மத்தை விதைத்து வகைதொகையில்லாமல் வன்முறையை அறுவடை செய்யத் தொடங்கினார்கள். கல்வியென்பது மனதில் மலர்ச்சியை உருவாக்கக் கூடியது. சிந்தனைகளைச் சிறகாக மாற்றக்கூடியது. இங்கே எத்தனைப் பேர்களுக்கு சிறகு முளைத்தது.? இங்கே பலருக்கும் கற்ற கல்வி எந்த மாறுதல்களையும் தந்துவிடவில்லை என்பது தான் ஒத்துக் கொள்ள வேண்டிய முக்கிய விசயம். வீழ்ச்சியைத் தான் தந்துள்ளது என்ற போது கல்வியைக் குறை சொல்வீர்களா? கற்றுக் கொடுத்தவர்களை வசை பாடுவீர்களா? யாரைக் குறை சொல்ல முடியும்.? கல்வி என்பது பொதுவானது. ஆனால் அதை அணுகும் விதம் தான் இங்கே முக்கியமானது. கடந்த 20 ஆண்டுகளில் நம் நாடு கல்வி ரீதியாக மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை பாராட்டுரை போல சொல்லிக் கொள்கின்றோம். ஆனால் தரமென்பது அதலபாதாளத்தில் தானே இருக்கிறது. காரணம் என்ன? செயல் முறைக் கல்வி என்பது செயலோடு கலந்தது. அது என்றுமே மறக்க முடியாத அளவில் நம்மை மாற்றி விடக்கூடியது. நம்மை நமக்கே உணர்த்தக்கூடியது. மற்றவர்களுக்கும் உணர்த்த வைத்து விடும். ஒவ்வொரு குழந்தைகளுக்குள் இருக்கும் சக்தியை எதைக் கொண்டு உங்களால் அளக்க முடியும்? . ஆலமரத்தின் வீரியத்தைப் போல தேக்கு மரத்தின் தகுதியைப் போல மாற வேண்டிய குழந்தைகள் எப்படி வளர்கின்றார்கள்? தற்போதைய கல்வி முறையினால் மொட்டுப் பருவத்திலேயே கருகிப் போய் கனவுகளை மட்டும் விதைத்து அறுவடை செய்ய தயாராக இருக்கின்றோம். மனப்பாடமே முதல் தகுதி என்ற வரையறையில் தான் இங்கே சாதனை என்ற வார்த்தையே உருவாக்கப்படுகின்றது. ஆனால் வெறுமனே எழுத்துக்கள் மூலம் கற்றுக் கொடுக்கும் தற்போதைய கல்வியின் பலன் என்ன தெரியுமா? அரிசி எந்த மரத்தில் வருகின்றது? என்று குழந்தைகள் கேட்கும் அளவிற்கு நாம் வளர்ந்துள்ளோம். [] 14 தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார் "வீடு ரொம்ப நல்லா இருக்குடா" என்றார். அம்மா முதல் முறையாக வீட்டுக்கு வந்த போது சொன்ன வார்த்தைகளை விட அவரை திருப்பூருக்கு அழைத்து வந்ததே பெரிய சாதனையாக எனக்குத் தெரிந்தது. புதிய கார் எடுத்த ஒரு மாதத்தில் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தேன். ஊரிலிருந்து ஆறு மணி நேரப் பயணத்தில் வீட்டில் கொண்டு வந்து நிறுத்திய போது பயந்தபடி அவரின் கால் வீங்கவில்லை. காருக்குள் அளவாக வைத்திருந்த குளிர்சாதன வசதியால் பயண அலுப்பு கூட தெரியவில்லை. மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் நுழைந்தவர் "கார் நல்லா ஓட்டுறாண்டி" என்று மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த போது எனக்குச் சற்று நம்பிக்கை வந்தது. நிச்சயம் சில மாதங்கள் இங்கே இருப்பார் என்றே நம்பினேன்?. அம்மா வந்த போது குழந்தைகள் பாலர் பள்ளியை முடித்திருந்தார்கள். வீட்டுக்குள் சுவற்றுக்குள் மாட்டியிருந்த பலவிதமான அட்டைகளை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தார். எண்கள், எழுத்துக்கள், படங்கள் எனக் குழந்தைகளின் கல்வி ஆர்வத்தை வளர்க்க ஒவ்வொன்றாக வாங்கி மாட்டி வைத்திருந்தேன். பலவிதமான கல்வி சார்ந்த பொம்மைகள் வீடு முழுக்க இருந்தன. ஆர்வமாய் ஒவ்வொன்றையும் பார்த்தவர், "இப்படியெல்லாம் தான் நீங்க படிச்சீங்களா?" என்று கேட்டு சிரித்தார். இது தவிர அவர்களின் கல்விக்கென வேறெந்த பெரிதான முயற்சியையும் செய்யவில்லை. அதிகாலைப் பொழுதில் குளிக்க உதவும் போது அவர்களுடன் பேசுவதைத் தவிர வேறெந்த சமயமும் வாய்ப்பதில்லை. பள்ளி முடியும் சமயத்தில் அவசரமாகச் சென்று அழைத்து வீட்டில் விடுவதோடு என் கடமை முடிந்து விடும். அலுவலகம் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்குள் நுழையும் பொழுது தூங்கிக் கொண்டிருப்பார்கள். எனக்கும் குழந்தைகளுக்கும் உண்டான உறவும், உரையாடலும் மிகக் குறைவாகவே இருந்தது. இதன் விபரீதம் அம்மா வந்த பொழுது, அவர் குழந்தைகளுடன் உரையாடும் சமயங்களில் தான் எனக்கு முழுமையாகப் புரிந்தது. அம்மாவின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர் காசி பயணத்தைத் தவிர வெளியுலகத்தைப் பார்த்த தருணங்கள் மிக மிகக் குறைவு. மிகப் பெரிய கூட்டுக்குடித்தனத்தின் அச்சாணியே அவர் தான். நாள் முழுக்க உழைப்பு. அந்த உழைப்பு மட்டுமே குடும்பத்தின் ஆதாரமாக இருந்தது. அவர் உடம்பும் எண்ணமும் உழைப்பதற்கென்றே மாறிப் போன காரணத்தால் பக்கத்து ஊர்கள் குறித்து கூடத் தெரிந்து கொள்ள ஆர்வமின்றி நாற்பதாண்டுக் காலத்தை கழித்தவர். அவருக்கும் பயணம் என்றால் பயம் பிடிக்கும் சமாச்சாரம். கனத்த உடம்பு படுத்தி எடுப்பதால் ஆசைகள் இருந்தாலும் அவரின் உடம்பு ஒத்துழைப்பதில்லை. வெளியுலகம் என்பதே அப்பாவின் மறைவுக்குப் பிறகே அவருக்கு வாய்த்த காரணத்தால் ஒரு படபடப்பு அவருக்குள் இருந்து கொண்டேயிருக்கும். சாலையில் படபடக்கும் வாகனங்கள் கூட அவருக்குப் பயத்தை தருகின்ற சூழ்நிலையில் வாழ்ந்த காரணத்தால் கவனமாக காரில் அழைத்து வந்தேன். ஒருவரின் மாற்ற முடியாத விசயங்களை அப்படியே மாற்றாமல் நாம் ஏற்றுக் கொள்வதும் ஒரு வகையில் நல்லது தானே. ஆனால் அம்மாவிடம் மாறாத கொள்கை ஒன்று உண்டு. "பெண்ணாய் பிறக்கக்கூடாது. பெண் குழந்தைகள் என்றால் ஆகாது". காரணம் அவரின் துயரக்கதை சீனப் பெருஞ்சுவரை நீளமானது உயரமானதும் கூட. கஷ்டப்படுவதற்கென்ற பிறப்பெடுப்பவர்கள் பெண்கள் என்ற கொள்கையை இன்று வரையிலும் அவர் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. நான் இதனை உணர்ந்திருந்த போதிலும் பேத்திகளை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று நினைத்தே அழைத்து வந்தேன். குழந்தைகள் பிறந்த போது பார்த்த முகத்தைப் பல வருடங்கள் கழித்து பார்த்த போது குழந்தைகளின் தோற்றத்தில் சொக்கிப் போனார். புது முகத்தைப் பார்த்த இருவர் விலகி நின்ற போது ஒருவர் மட்டும் எளிதாக ஒட்டிக் கொள்ள, தொடர்ந்து வந்த நாட்களில் அவர்களும் ஒன்றிப்போக இயல்பாகத்தான் போனது. பல சமயம் விடுமுறை தினங்களில் பாட்டி பேத்திகளின் உரையாடல்களைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தாலும் அலுவலகச் சுமையின் காரணமாக வீட்டில் இருக்க வாய்ப்புகள் அமையாது. அந்தப் பெரிய வீட்டின் மற்ற இடங்களையும் விட வாசலில் அமர்ந்திருப்பதே அம்மாவுக்குப் பிடிக்கும். வீட்டுக்கு வெளியே இருந்த பெரிய வேப்ப மரக் காற்றின் சுகமே அவருக்குப் போதுமானதாக இருந்தது. வாசலின் குறுக்கே காலை நீட்டிக் கொண்டு வெற்றிலைப் பையை பிரித்து வைத்துக் கொண்டு மெல்லுவதும் எச்சிலை அருகே உள்ளே தோட்டத்து மண்ணில் துப்பிக்கொண்டிருப்பதும், தெருவில் செல்லும் ஆட்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அன்றாட வாடிக்கையாக இருந்தது. இங்கிருந்து தான் பிரச்சனை தொடங்கியது. உள்ளே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் கத்திக் கொண்டே வாசலை நோக்கி ஓடி வர, விரட்டிக் கொண்டே வருபவர் வெளிப்புற சந்தின் வழியே வாசலுக்கு வரக் காலை நீட்டிக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு ஒவ்வொரு முறையும் காலை மடக்குவதும், மீண்டும் நீட்டுவதுமென புதிய வேலையை உருவாக்கத் தொடங்கினர். முட்டி வலியும், முதுகு வலியையும் நிரந்தரமாக இருந்தவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. எரிச்சலை உருவாக்கினாலும் அவரால் வேறொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து உட்கார மனமில்லாது கத்தத் தொடங்கினார். இதற்கு மேலாக அவருக்கு பேச்சுத் துணைக்கு ஆட்கள் இல்லை. பக்கத்து வீடுகளில் இருந்தவர்களின் நாகரிக பேச்சும், கொங்கு பாஷையும் வினோதமாகத் தெரிய அதையும் விரும்பாமல் வானத்தை வெறிக்கத் தொடங்கினார். நாற்பது வயதுக்கு மேல் நாய்ப்புத்தி என்பதைப் போல அறுபது வயதை மீண்டும் குழந்தையாக மாறும் தருணம் என்கிறார்கள். விதிவிலக்குகளைத் தவிர்த்து நாற்பது வயதிற்குள் தனக்கான இடத்தை அடையாதவர்களின் வாழ்க்கையென்பது இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அலைவதை குறைத்துக் கொள்ள முடியாமல் அவஸ்தைகளின் தொடக்கம் ஆரம்பித்து விடுகின்றது. உடல் ஆரோக்கியத்தின் சவாலும் இந்த வயதிலிருந்தே தொடங்குகின்றது. இதுவே அறுபது வயதில் கண் பார்வை குறைந்து, செவிப்புலன் திறன் இழந்து எரிச்சலையும் ஏக்கத்தையும் இயல்பான குணமாக மாற்றி விடுகின்றது. இயல்பான விசயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களை பார்க்கும் பொழுது எரிச்சல் உருவாகும். மனஉளைச்சல் அதிகமாகும். தலைமுறை இடைவெளி பூதாகரமாக உருவாகும். இந்த வயதில் தான் ருசியை மட்டுமே உணவாக வைத்து வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் வாய்க்கும் வயிற்றுக்கும் மிகப் பெரிய போராட்டமே தொடங்குகின்றது. ருசி தான் வேண்டும் என்ற மனமும் இதெல்லாம் இனி ஆகாது என்று வயிறும் சண்டை போட வாழ்வே நரகமாக மாற வாரிசுகள் மீதுள்ள அன்பு கூட பலசமயம் மாறிவிடுகின்றது. சிலர் பழக்கத்தினால் தங்களை மாற்றிக் கொண்டு விடுகின்றார்கள். பலர் தங்கள் வாழ்க்கையைக் கழிவிரக்கமாக மாற்றி வைத்துக் கொண்டு உடனிருப்பவர்களைப் படுத்தி எடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள். இதற்கு மேலாக வயதானவர்களுடன் உரையாடும் தொடர்பு மொழி முக்கியமானது. அவர்களுக்குப் பிடித்த அவர்கள் விரும்பும் நிலையில் இருந்து பொறுமையுடன் உரையாட வேண்டும். பலராலும் இது முடிவதில்லை. ஒரு சமயம் "அப்பத்தா இதைக் கேளுங்கள்" என்று மகள் ஒரு அட்டையை எடுத்துக் கொண்டு அவர் அருகே சென்ற போது அம்மாவில் விலகல் என்னைக் கூர்மையாக கவனிக்க வைத்தது. மனைவியிடம் கேட்ட போது "இவர்கள் பேசுறது அவங்களுக்கு புரியலையாம்" என்றார். எங்கேயிருந்து இந்தக் குழப்பம்? என்று ஆராயத் தொடங்கினேன். குழந்தைகள் பள்ளிக்கு சென்றார்களே தவிர அவர்களின் கல்வி குறித்தோ, அவர்களின் மற்ற செயல்பாடுகள் குறித்தோ அதிகம் கவலைப்பட்டுக் கொண்டதில்லை. குறிப்பாக தனித்தீவாக ஒதுங்கிப் போனதால் உறவுகள் கூட வருடத்துக்கு ஒரு முறை என்கிற ரீதியில் இருந்த காரணத்தால் வீடே வாழ்க்கை பள்ளிக்கூடமே உலகம் என்பதாக வளர்ந்து கொண்டிருந்தார்கள் தமிழை ஆங்கிலத்திற்கு இடையே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். பள்ளி கொடுத்திருந்த கல்விச்சூழல் அவர்களை அப்படி மாற்றியிருந்தது. புதிய மொழியும் அவர்களின் பழக்க வழக்கங்களும் அம்மாவிற்கு அதிக குழப்பத்தை உருவாக்கியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. எல்லாமே சின்னச் சின்ன விசயங்கள் தான். அதுவே ஒவ்வொரு முறையும் வினோதமான பிரச்சனைகளை உருவாக்கியது. இன்று உள்ளூரில் வேலைவாய்ப்புகள் குறைந்து மாவட்டங்கள்,. மாநிலங்கள் தாண்டி பல்வேறு நாடுகளில் வாழ வேண்டிய சூழ்நிலையில் உறவுகளுக்குண்டான மரியாதை என்பது தற்போது சில நிமிட தொலைப்பேசி அழைப்புகள் தான் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்தத் தொடர்பில் தொடர்பு மொழியே பிரச்சனை எனில் அங்கே அந்தச் சங்கிலியும் அறுபடத் தொடங்குகின்றது. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த மொழித் தொடர்பு பிரச்சனை என்றால் தற்போது இங்கே உள்ள கல்விச்சூழல் என்பது வினோத கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டிருப்பதால் மொழியின் தன்மை மாறிக் கொண்டேயிருக்கின்றது. குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிறுநீர் கழிக்கும் அவசரத்தில் அப்பத்தா ஒன் பாத் ரூம் என்று கத்திக் கொண்டே ஓடிவர இவர் குழப்பத்துடன் என்னவென்று அறியாமல் வாசலுக்கு அருகே படுத்து இருப்பார். எந்திரிக்காமலே தலையைத் தூக்கி பார்ப்பார். கவுனை தூக்கிக் கொண்டு அவர்கள் வரும் வேகத்தைப் பார்த்து வேகமாக எந்திரிக்க, வந்த வேகத்தில் ஒருவருடன் ஒருவர் முட்டிக் கொள்ள ரசபாசமாகத் காட்சிகள் மாறிவிடும். பொழுது போகாத சமயத்தில் குழந்தைகளை அழைத்து பேசத் தொடங்குவார். அவர் கேட்கும் கேள்விக்கு இவர்களுக்குத் தெரியாது. இவர்கள் சொல்லும் பதில்கள் அவருக்குப் புரியாது. ராஜா கதை சொல்லும் போது குறுக்கே ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் குறுக்கு கேள்விகள் எழுப்ப அவருக்குக் குழப்பம் வந்துவிடும். அவர் ஒதுங்கி விடுவார். கடைசியாக இவர்கள் நாங்க உங்களுக்கு ரைம்ஸ் சொல்லட்டுமா என்பார்கள். பேந்த பேந்த முழித்துக் கொண்டு கேட்பார். மொழி புரியாது. சுவராசியம் இருக்காது. "ஏதாவது கதை சொல்லுங்கள் அப்பத்தா" என்றால் இவர் சொல்லும் வட்டார வழக்குத் தமிழ் வார்த்தைகள் அவர்களுக்குப் புரியாமல் அது குறித்து அப்டின்னா? என்று தொடர் கேள்விகளை எழுப்ப அம்மாவுக்கு அலுப்பாகி விடும். இரண்டு மாதம் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு வந்தவர் ஒரு மாதத்தில் சென்று விட்டார். மனைவி மூலம் விசயங்களைப் புரிந்து கொண்டு உறவுச்சங்கிலிகள் உடையும் விதங்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். அதற்கான பதில் அம்மாவைக் கொண்டு போய் விட்ட தம்பி வீட்டில் எனக்குக் கிடைத்தது. அம்மாவிடம் தம்பி மகன் வேகமாக வந்து "ஏய் கிழவி கீழே படு" என்றான். அம்மா டக்கென்று மல்லாக்கப் படுக்க நெஞ்சில் ஏறி தொம் தொம்ன்று குதிக்க எனக்குப் பாதி உயிர் வாயில் வந்து நின்று விட்டது. அம்மா சிரித்துக் கொண்டே "இருடா குப்புற படுக்குறேன்" என்று சொல்லிவிட அவன் ஆட்டம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. கால்வலி, முதுகுவலி, பயணஅலுப்பு மீறி அவரின் நெருக்கமும், பேரனின் வார்த்தைகளும் அவருக்கு புதிய உற்சாகத்தைத் தந்ததை கவனித்துக் கொண்டே அவர்களின் உரையாடலை கவனித்துக் கொண்டே சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கூட நண்பனுடன் பேசியது அப்போது என் நினைவில் வந்து போனது. நண்பனின் அண்ணன் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்று இருக்கின்றார். தொடக்கத்தில் ஊருக்கு வருடத்திற்கொருமுறை வந்து கொண்டிருந்தார். கடந்த சிலவருடங்களாக வருவதில்லை. அவனை சந்தித்த போது "அண்ணன் வீட்டுக்கு வருவதில்லையா?" என்று கேட்டேன். "அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்" என்றான். காரணம் பேரனுக்கும் பேத்திக்கும் தாத்தா பாட்டியுடன் உரையாடத் தமிழ்பேச தெரியவில்லை. இவர்களுக்கு அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை. [] 15 பழைய குப்பைகள் ஊரில் வாழ்ந்த வீடென்பது தோட்டமும் மரங்களுமாய் இருந்த காரணத்தால் எப்போதும் குப்பைகளுக்கு பஞ்சமில்லை, உதிர்ந்த இலைகளும், உதிர்ந்து போக காத்திருக்கும் இலைகளும் சேர்ந்து அடிக்கும் காற்றில் வீட்டை நோக்கிப் பறந்து வந்து கொண்டேயிருக்கும், திடீரென்று அடிக்கும் காற்றில் எங்கேயோ சுழன்று கொண்டிருக்கும் தூசிகள் எதிர்பாரா விருந்தாளியாய் வீட்டை ஆக்கிரமிக்கும், எப்போதும் தூசிகளுடன் வாழ்ந்த வாழ்க்கையாகத் தான் இருந்தது, வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் முறை வைத்துக் கூட்டி பெருக்கிக் கொண்டேயிருந்தாலும் ஏதோவொரு ரூபத்தில் வீட்டுக்குள் ஏதோவொரு இடத்தில் குப்பைகள் இருந்து கொண்டேயிருக்கும், ஏன் இப்படி வீடே குப்பையாய் இருக்கிறது? என்று கேட்கத் தோன்றாது, காரணம் அவற்றை இயல்பான வாழ்க்கையாக எடுத்துக் கொண்ட காரணத்தால் கூட இருக்கலாம், விசேட தினங்களில் தான் வீட்டுக்கு புது சுவாசம் வரும், அது வரைக்கும் அந்தத் தூசிக்குள் தான் நமது சுவாசக்காற்று அலைமோதும், வெளியுலகம் தெரியாத மனதில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை, பெரிதான ஏக்கமும் இல்லை, ஆனால் காலமாற்றத்தில் நாம் கண்ட ஒவ்வொரு சுத்தமான வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் இப்படி இருக்க வேண்டும் என்பதாக நினைத்துக் கொண்டே அது முடியாமல் தான் இன்று வரைக்கும் வாழ்க்கை ஓடிக் கொண்டேயிருக்கிறது, எப்போதும் நம் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதிற்குள் இன்று வரை இருந்து கொண்டேயிருக்கிறது, வீட்டுக்குள் இருக்கும் சின்ன ஒட்டடைகளைப் பார்த்து விட்டாலே போதும் நேரம் காலம் தெரியாமல் உடனே குச்சியை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்ய தொடங்கி விடுவதுண்டு, ஆனால் ஓட்டடைகளைச் சுத்தம் செய்யத் தொடங்கினால் கடைசியில் அடுக்கி வைத்துள்ள அத்தனை மூட்டைகளையும் கலைக்க வேண்டியதாக இருக்கும், எதையும் வெளியே தூக்கி போட முடியாமல் கடைசியில் வீட்டுக்குள் பிரச்சனை தான் உருவாகும், வீடு முழுக்க முக்கால்வாசி புத்தகங்களாக அடைந்து கிடைக்கும் போது எதை ஒதுக்கி எதை நீக்குவது என்ற குழப்பத்தில் மீண்டும் ஒவ்வொரு மூட்டைகளும் இருந்த இடத்திற்கே சென்றுவிடும், ஆறாவது படிக்கும் போது வாசிக்கத் தொடங்கிய வாழ்க்கையில் கல்லூரி படிப்பு படித்து முடித்த போது தான் காசு கொடுத்து புத்தகங்கள் வாங்கும் பழக்கம் உருவானது, காசு கொடுத்து புத்தகங்கள் வாங்குவது என்பது காசை பிடித்த கேடு என்பது வீட்டில் உள்ளவர்களின் தராக மந்திரம், ஆனால் புத்தக காதல் என்பது இன்று வரை மாறவில்லை, என்ன கற்றுக் கொண்டோம்? இதனால் என்ன பிரயோஜனம்? என்று எதைப்பற்றியும் யோசிப்பதில்லை, வாசிக்க வேண்டும் என்பது மட்டும் கொள்கையாக இருந்தது, ஒவ்வொரு காலகட்டத்திலும் வைத்திருந்த கொள்கைகள் மாறியிருக்கிறது, ஆனால் இந்தப் புத்தக வாசிப்பு என்ற கொள்கை மட்டும் தான் இன்று வரை மாறாமல் அப்படியே இருக்கிறது, படக்கதைகளில் தொடங்கி, கதைக்கு மாறி, சதைக்குத் திரும்பி இன்று கட்டுரைகளில் வந்து நிற்கின்றது, வாசிக்கும் விசயங்கள் தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டிருக்கிறதே தவிரப் புத்தகங்கள் வாங்குவது இன்று வரை நின்றபாடில்லை, இடையிடையே வேலைப்பளுவின் காரணமாக வாங்கி வரும் புத்தகங்களை படிக்க முடியாமல் மூலையில் கிடந்தாலும் அடுத்த வாரம் கால்கள் இயல்பாகப் புத்தக கடைக்குச் சென்று விடுகின்றது, படிக்காமலேயே புத்தகங்கள் இருக்கின்றேதே என்று மனம் கேட்பதில்லை, அடுத்த வாரப் புத்தகமும் வீட்டில் வந்து விழும், ஆனால் மொத்தமாக மெனக்கெட்டு ஒருநாள் உட்கார்ந்து படிக்கத் தொடங்கும் போது கொடுத்த காசுக்கு பிரஜோனமில்லையே என்ற அங்கலாய்ப்பு மனதிற்குள் இருந்தாலும் அதுவும் மாறிவிடும், அப்புறம் எப்போதும் போல ஏதோவொரு குப்பை பத்திரிக்கையைத் தலைப்பு பார்த்து காசு கொடுத்து வாங்கி வந்து திட்டிக் கொண்டே தூக்கி எறிந்து விடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, நூலகத்திற்குள் சென்றால் எவர் கையில் எந்தப் புத்தகம் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பதே ஒரு பெரிய சவாலான வேலையாக இருக்கிறது. அந்தப் புத்தகத்தை எடுத்து எப்போது படித்து முடித்து வைப்பார் என்பதைக் கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும், நம்மைப் போல மற்றொருவரும் கவனித்துக் கொண்டிருப்பார். இத்தனை தொந்தரவுகளையும் தாண்டி அந்தப் புத்தகத்தை கையில் எடுக்கும் போது சார் வேலை நேரம் முடிந்து விட்டது, பூட்டப் போகின்றோம் என்று நூலகர் பக்கத்தில் வந்து சொல்லும் போது மனம் வெறுத்துப் போய்விடும், இந்தப் பஞ்சாயத்துக்கு பயந்து கொண்டே வாரமானால் நூறு ரூபாயை ஒதுக்கி வைத்து விடுவதுண்டு, அந்த வாரத்தில் படிக்காத புத்தகங்களை மறுவாரத்தில் பார்க்கும் போது படிக்கத் தோன்றாது, இப்படியே கடந்து வந்த பாதையில் என்ன சாதித்தோம் என்று யோசித்துப் பார்த்தால் குழப்பம் தான் அதிகம் மிஞ்சுகின்றது, தொடக்கத்தில் படித்த வார பத்திரிக்கையில் முக்கியமான கட்டுரைகள், அற்புதமான துணுக்குத் செய்திகள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்துப் படித்து முடித்ததும் கத்தரித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது, அதற்கென்று ஒரு கோப்பு உருவாக்கி துறை வாரியாக பிரித்து வைத்துக் கொள்வதுண்டு, இது எதற்காக இப்படிச் செய்கின்றோம் என்பது தெரியாமலே பல வருடங்கள் செய்து கொண்டே வந்திருக்கின்றேன், நாமும் எழுதப் போகின்றோம் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை, ஆனால் சேகரித்த தாள்களை திடீர் என்று கிடைக்கும் விடுமுறை தினத்தில் ஆர்வமாக ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்கும் போது என்சைக்ளோபீடியா போல நம் மனக்கண்ணில் பல பிம்பங்கள் விரியும், பல மனிதர்களின் மேல் வைத்திருந்த அபிமானங்களும் மாறும், நம்மைக் குருடர்களாக, செவிடர்களாக, பைத்தியங்களாக நினைத்துக் கொண்டு பத்திரிக்கையில் அவரவர் அந்தந்த காலகட்டத்திற்கேற்ப கொடுத்த பேட்டிகளை படித்து முடிக்கும் போது இவர் மேல் நாம் இத்தனை அக்கறை கொண்டிருந்தோமா? என்று நமக்கே வெட்கமாக இருக்கும். ஆரம்பத்தில் விரும்பிய நடிகை, நடிகர்கள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாறிய பிம்பங்கள் நமக்குப் பல பாடங்களை உணர்த்தும், வட நாட்டில் எவருக்கோ இரண்டாம் தாரமாகவோ அல்லது மறைந்து வாழும் வாழ்க்கையென்ற வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த நடிகையின் மேல் நாம் கொண்டுருநத அக்கறை இப்போது நமக்கும் கேலியாய் பார்த்துச் சிரிக்கும், என்ன செய்வது? மாற்றம் என்பது மாறாதது தானே? [] 16 சுருக்கமாகப் பேசு ......... 25 வருடங்களுக்குப் பிறகு அந்த இடத்தைப் சென்னையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது பார்த்தேன். சொந்த ஊர் நினைவு வந்தது. செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்குள் ரயில் உள்ளே நுழையும் போது நான் பார்த்த ரயில் நிலையத்திற்கு வெளியே தெரிந்த நடைமேடையும் அங்கேயிருந்து பார்த்த அந்த நீண்ட ஏரியும் எனது ஊரில் உள்ள ரயில் நிலையத்தை ஞாபகப்படுத்தியது. சென்னையிலிருந்து ஒரு மணி நேரம் பயணித்து செங்கல்பட்டு அருகே வந்த போது தான் மனதிற்குள் குளிர்ச்சி வந்தது. ரயில் பயணத்தில் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வந்த காட்சிகளில் நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் வீடுகளும், வாகன சப்தங்களும், ஏதோவொரு தொழிற்சாலையின் புகையுமாக நாட்டின் தொழில் வளர்ச்சி என்பதை எனக்குள் நினைவு படுத்திக் கொண்டிருந்தது. சென்னையின் விஸ்தீரணம் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வாழ முடியாத, வாய்ப்புகளை தேடிக் கொண்டிருப்பவர்களுமாய் இந்த நகரத்தை மொய்த்து இன்று உள்ளே வாழும் மக்களின் தொகை 50 லட்சம். தினந்தோறும் வந்து போய்க் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்து லட்சம் பேர்கள். அடிப்படை கட்டுமானம் என்று ஒன்று சென்னையில் இல்லவே இல்லை. அது குறித்த அக்கறையும் ஆட்சிக்கு வரும் எந்த அரசுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. சென்னைக்கு வரவே பலரும் விரும்புகிறார்கள். வந்தவர்கள் எல்லோரும் தங்க விரும்புகிறார்கள். தங்களுக்கான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறார்கள். வாய்ப்புகளைத் தேடி அலைகிறார்கள். முடியாதவர்கள் சாலையோரத்திலும், கூவத்தின் ஓரத்திலும் போய்ச் சேர்ந்து விடுகிறார்கள். வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் வளர்ந்தவர்களைக் காட்டி காட்டி ஊரில் இருப்பவர்களுக்கும் ஆசையை அதிகமாக்கி விடுகிறார்கள்.இதன் மூலமே இந்தச் சென்னை இன்று வரையிலும் ஒவ்வொருவரையும் தினந்தோறும் வரவழைத்துக் கொண்டிருக்கிறது. நான் பார்த்த அந்த நீண்ட ஏரியின் பிரமாண்டமும், அதில் நிறைந்திருந்த தண்ணீரும் எனக்கு அதிக சந்தோஷத்தை தந்தது. உள்ளே நுழைந்த ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நிதானமாக ரசிக்க முடிந்தது. ரயில் பாதை நடைமேடையிலிருந்து பார்க்கும் போது சிறுவனாக மாறி இறங்கி ஓடிப்போய் ஒரு ஆட்டம் போட்டுவிட்டு வரலாமா? என்று தோன்றியது. மனதிற்குள் புத்துணர்ச்சி பரவியது. ரயில் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து சிறுவனைப் போல குதுகலித்த என்னை அருகில் இருந்தவர் வினோதமாகப் பார்த்தார். சொந்த ஊரில், ஊருக்கு வெளியே தான் ரயில் நிலையம் இருக்கிறது. இரண்டு ஊருக்கு நடுவே கண்டணூர் - புதுவயல் என்று தென்னக ரயில் வரலாற்றில் ஒரு குட்டியுண்டு ரயில்நிலையம் அது. பரபரப்பான ரயில் மார்க்கமல்ல. எந்த முக்கியத்துவமும் இல்லாதது. காரைக்குடியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாகச் சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து அதே வேகத்தில் தான் இன்று வரை சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க மாற்றங்களை தனதாக்கிக் கொண்டேயிருக்க இந்தியாவின் ரயில்வே துறைக்குள் மட்டும் எதுவும் அத்தனை சீக்கிரம் எட்டிப்பார்ப்பதில்லை. நாம் விஞ்ஞானத்தின் உதவியால் பல விதங்களிலும் வளர்ந்து விட்டோம். ஆனால் நாமே ஒரு குப்பை தான் என்பதை வெளியிடத்தில் நடந்து கொள்ளும் முறையை வைத்து எளிதாகக் கண்டு கொள்ள முடியும். சக மனிதர்களைப் பார்க்கும் போது பழகும் போது எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அரசாங்க சொத்து என்றால் அதில் காட்டும் அக்கறையற்ற தன்மையை வைத்தே கண்டு கொள்ள முடியும். அவசரம் என்ற பெயரில் காணும் இடங்களில் மிருகம் போல தூக்கிக் கொண்டு நிற்க முடியும். பின்னால் வருபவர்களைக் கவனிக்காமல் துப்ப முடியும். பாதி வைத்த உணவுகளை அப்படியே போட்டு விட்டு இருக்கும் இடத்தை ஈ மொய்க்க உதவும் நம்மவரைத் தவிர வேறு எவரையும் உதாரணம் காட்ட முடியாது. ஆனால் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் கூட்டம் குறைவான காரணத்தால் குப்பைகளுக்கும் அசிங்கத்திற்கும் வாய்ப்பு குறைவு. பல சமயம் இந்தப் பக்கத்தின் வழியாகச் சரக்கு வண்டிகள் மட்டுமே வந்து போகும். எனது ஊரிலிருந்து சென்னைக்குச் செல்ல நினைக்கும் குறிப்பிட்ட இன மக்கள் தான் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்துவார்கள். அவர்கள் குடும்பத்துடன் இந்த ரயிலில் தான் செல்வார்கள். ஆனால் பெரும்பாலும் நான் பார்த்தவரைக்கும் இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் ரயில் மூலமாகப் பயணிப்பவர்கள் குறைவு. வேகம் ஒரு காரணமோ? நேரப் பிரச்சனையோ? எப்போதும் பலரும் பேருந்துப் பயணத்தைத்தான் இன்று வரையிலும் விரும்புகிறார்கள். இப்போதுள்ள கட்டண வித்தியாசங்களால் மட்டுமே பலரும் இப்போது ரயிலைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த நீண்ட ரயில் நடைமேடை தான் எனக்கு ஞானம் தந்த போதிமரம். ஒரு முனையில் நடக்க ஆரம்பித்தால் மறுமுனை வரைக்கும் ஐந்து நிமிட பயணத்தில் அடைய முடியும். சாயங்கால நேரத்தில் அங்கே வரும் ஏழெட்டு பயணிகளைத் தவிர வேறு எவரும் அந்தப் பக்கம் கூட எட்டிப் பார்க்க மாட்டார்கள். இந்த இடம் தான் என எதிர்கால கனவுகளை அடைகாத்த ஆலமரம். வீட்டுக்குப் பின்புறம் தோட்டம் இருந்தாலும் பள்ளி வரைக்கும் பள்ளிக்கூட மைதானம் தான் சாயங்கால சமயங்களில் படிக்க உதவியது. பல தரப்பு மாணவர்களும் வந்து விடுவார்கள். பெரும்பாலும் பள்ளி முடிந்ததும் விளையாட்டு பிரியர்களின் புகலிடமாக அந்த மைதானம் இருந்தது. கல்லூரி வந்த போது நண்பர்களும் மாறினார்கள். இடமும் மாறியது. கல்லூரி பாடங்களை படிக்க உதவிய இடமாக இந்த ரயில் நிலையம் இருந்தது. மதிய வெயில் குறையும் போது வீட்டிலிருந்து நடந்து வந்தால் 20 நிமிடத்தில் இங்கே வந்து விடலாம். இருட்டு வரும் வரைக்கும். அங்கேயிருக்கும் ரயில் நிலையத்தை ஒட்டி ஒரு புறம் நீண்ட கண்மாய். எப்போதும் நிறைந்திருக்கும் தண்ணீர். மறுபக்கம் வயல்வெளிகள். கண்ணுக்குப் பச்சையாய் இருக்கும். கண்மாய் தண்ணீர் மூலம் காற்றில் வரும் சுகத்தை அனுபவித்துக் கொண்டே மூன்று மணி நேரம் தவம் போலப் படித்து விடலாம். இரைச்சலின்றி, எந்தத் தொந்தரவும் இல்லாமல் அந்தப் பேரமைதி நம்மை நமக்கே உணர வைத்து விடும். ஈ, காக்கை கூட அந்தப் பக்கம் வராது. ஆடு மேய்ப்பவர்கள் மட்டும் அங்கங்கே இருப்பார்கள். உலகத்தை உணர வைத்த காலங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. படிக்கும் போது உடன் இருந்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். பல இடங்களிலும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஊருக்குள்ளே, ஊருக்கு அருகே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். . ஆனால் நடந்து முடிந்த மாற்றங்கள் தான் அதிசயமாக இருக்கிறது. பெண்களைக்கண்டாலே தலையை குனிந்தவனுக்கு இன்று பெண்கள் இல்லாமல் இரவு நகராது என்ற நிலையில் வாழ்க்கை மாறியுள்ளது. ஒவ்வொரு முறையும் அடுத்த பத்தாண்டு கழித்துப் பார்க்கும் போது நாம் எப்படியிருப்போம்? இங்கே வருவோமா? என்று பேசியுள்ளோம். ஆனால் இரண்டு பத்தாண்டுகள் கடந்து போய்விட்டது. ஆனால் எவரும் இந்த நடைமேடைக்கு வருவதில்லை. வெளியூர், உள்ளூர் என்றாலும் இந்தப் பகுதியை பேருந்து வழியே கடந்து செல்லும் போது கண்களால் பார்ப்பதோடு சரி. மற்றபடி பழைய நினைவுகளைக் கூட அவர்களுக்கு அசை போட நேரமில்லை. ஒவ்வொருவருடனும் பேசும் போதெல்லாம் உலகப் பிரச்சனைகளை விட அவரவர் சார்ந்த பிரச்சனைகள் தான் பெரிதாக இருக்கும் போல தெரிகின்றது. விரும்பியே ஆக வேண்டிய குடும்ப வாழ்க்கை ஒரு பக்கம். பொருளாதார பிரச்சனைகள் அடுத்த பக்கம் என்று நுகத்தடியில் மாட்டப்பட்ட மாடுகளைப் போல தங்களை மாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கைவசம் எதுவும் அவர்களிடமும் இல்லை. அதை நோக்கி யோசிப்பதும் இல்லை. ஊருக்குச் செல்லும் சமயங்களில் வாடா... அந்தப்பக்கம் போயிட்டு வரலாம் என்றாலும் வினோதமாகப் பார்ப்பவர்கள் தான் அதிகம். காரணம் நாம் எல்லாவற்றையும் மறக்கவே விரும்புகின்றோம். இன்றைய பிரச்சனைகள் தான் முக்கியம். ஒவ்வொரு நிமிடமும் வருமானத்திற்கு உண்டான வாய்ப்புகளைப் பற்றி மட்டும் தான் பேச விரும்புகின்றோம். சுருக்கமாகப் பேசு. விரைவாகச் செயல்படு என்பது தாரக மந்திரமாகவே ஆகிவிடடது. சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோவொரு ஆசைக்கு ஆசைப்பட்டு அடைய முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதற்காக போராடிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அடையும் நேரம் தான் தெரியவில்லை என்று நேர காலத்தைச் சொல்லி அலுத்துக் கொள்கிறார்கள். நம் செட்டில் படித்த இவன் எப்படி செட்டிலாகி விட்டான் தெரியுமா? வீடு மட்டும் 50 லட்சத்திற்கு கட்டியுள்ளானாம் என்பது போன்ற விசயங்களுக்குத் தான் முக்கியத்துவம் கிடைக்கின்றது. தொழில் சார்ந்து, பணம் சார்ந்து, விருப்பங்களை உள்ளடக்கிய எதிர்கால திட்டங்கள் மட்டும் தான் பேச்சாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு குறுக்குப் புத்தி ஓடிக்கொண்டிருப்பதை இயல்பான உரையாடலில் உணரமுடிகின்றது. உடுத்திருக்கும் உடை, அணிந்திருக்கும் ஆபரணம் என்று தொடங்கி பயணிக்கும் வாகனம் வரைக்கும் நமது தகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. சமீபத்தில் என்ன படித்தாய்? என்று கேட்டால் கெக்கேபிக்கே என்று சிரிப்பு தான் வருகின்றது. எத்தனை வருமானம் இருந்த போதிலும் உள்ளுக்குள் இருக்கும் அந்த எச்சக்கலை புத்தி மட்டும் மாறவேயில்லை. பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல பொருட்கள் அரசாங்கம் கொடுத்த இலவச பொருட்கள். அடுத்து வேறென்ன தருவார்கள் என்ற ஆர்வம் குறைந்தபாடியில்லை. ஒரு முறை இடைத்தேர்தல் வராதா என்று ஏங்குகிறார்கள். வாங்கி வைத்திருக்கும் இரண்டு சக்கர வாகனத்தை வீட்டில் வைத்து விட்டு ஓசியில் தொத்திக் கொண்டு செல்லும் சிக்கனம் என்ற ஒவ்வொருவரின் பின்னாலும் ஓராயிரம் தந்திரங்கள். அத்தனைக்கும் சமூகம் கொடுக்கும் அங்கீகாரம் தான் ஆச்சரியம் அளிக்கின்றது. வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பெண்களின் மனம் முழுக்க விகாரமாக மாறி தொலைக்காட்சி கற்றுத் தந்த கண்றாவிகளைத் தான் வேதமாக எடுத்துக் கொண்டு வெற்றி பெற்றதாக பேசுகிறார்கள். அலைபேசிகளைக்கூட மிஸ்டு கால் கொடுக்கத்தான் அதிகம் பயன்படுத்துகின்றேன் என்று நண்பன் சிரித்துக் கொண்டே சொன்ன போது என்னால் சிரிக்க முடியவில்லை. எத்தனை முறை எது குறித்து பேசினாலும் கடைசியில் காசு சம்பாரிக்க வழி சொல்லடா? திருப்பூர் வந்தால் ஒரு வருடத்திற்குள் சம்பாரித்து விட முடியுமா? என்பவனிடம் எது குறித்து பேச முடியும்? ரயில் மேடையில் நான் பார்த்த அந்த மரங்களைப் போலத் தான் பல சமயத்தில் அமைதியாகவே இருந்தேன். பேசத் தொடங்கினால் எதிரே நிற்பவர் மனோநிலை என்ன? பேசுவதை விரும்புகிறாரா? இல்லையா? என்பதைக்கூட யோசிக்காமல் பேசிக்கொண்டே இருப்பவனை என்ன சொல்லி திருத்திவிட முடியும். காது இரண்டு, வாய் ஒன்றும் படைத்த இயற்கையின் கூற்றை எவரும் புரிந்து கொள்ளவில்லை. கேட்பதில் கவனிக்க முடிகின்றது. கவனிக்கும் போது பேசுவதின் அளவு புரிகின்றது. யோசிக்க அவகாசம் கிடைக்கின்றது. கிடைத்து விட்டானே என்று கொட்டித் தீர்க்கும் அவர்களது அர்த்தமற்ற உரையாடலை உள்வாங்கும் போது எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. அன்று ரயில் நிலையத்தில் பார்த்த மரங்கள் இன்றும் அப்படியே தான் இருக்கிறது. மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து, வெறும் கிளைகள் மட்டும் அப்படியே இருக்கிறது. இலையுதிர் காலத்தால் வந்த மாற்றமல்ல இது. எப்போதுமே இப்படித்தான் இந்த மரங்கள் இருக்கும். வந்து போகும் ஒவ்வொரு ரயிலும் துப்பிய புகையைச் சுவாசித்து தன் சுயத்தை இழந்து நிற்கும் மரத்தையும் மனிதர்களின் மனோநிலையையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிந்தது. மரம் என்ற போர்வையில் நின்று கொண்டிருப்பதை கோட்டோவியம் போல ரசித்துப் பார்த்தேன். மழுங்கடித்த மரமாக இருப்பதைப் போலத்தான் எல்லோரும் மாறிக் கொண்டேயிருக்கின்றோம். பணம் என்ற வஸ்து மனம் என்ற பொக்கிஷத்தை பொட்டலமாகக் கட்டி பின்னுக்குத் தள்ளிவிட்டது. நாமும் அதைத்தான் விரும்புகின்றோம். [] 17 தினந்தோறும் மலரும் பூக்கள் கடந்து போன வாழ்க்கையில் சென்னையில் ஒரு நள்ளிரவு மட்டும் இந்த ஆங்கில புத்தாண்டு வரவேற்பை மெரினா கடற்கரை கூட்டத்தில் கரைந்து போய் ரசித்தேன். ஆராவாரமும், ஆர்ப்பாட்டமும் அள்ளித் தெளித்த கோலமாய் கடற்கரை மணலில் வரவேற்ற தலைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. அந்தக் கூட்டம் இன்று வரை கண்களுக்குள் நிற்கிறது. கடல் அலையில் கால் நனைத்து மச்சினன் கைபிடித்து வாழ்க்கையை தேடிக் கொண்டிருந்த போது அந்த இரவு இனம் புரியா மகிழ்ச்சியைத் தந்தது. வாழ்க்கை நகர்ந்தது, இயல்பான வாழ்க்கையின் சூத்திரங்களின் சூட்சமங்களை கற்றுக் கொள்ளத் தெரியாத வாழ்க்கை திருப்பூருக்கு நகர்த்தியது. வாழ்க்கை அதன் உண்மையான அர்த்தங்களை அறிமுகம் செய்ய ஆரவாரங்கள் பின்னுக்குச் சென்று அலையில்லா கடல் போல அமைதியும் வந்தது. ஒவ்வொரு வருடத்தின் கடைசி இரவும் வந்தபடியே தான் இருக்கின்றது.. அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு வருடமும் ஆழ்ந்த உறக்கத்தின் ஆழத்தை காட்டிக் கொண்டிருக்கும். விடிந்து பார்க்க நேற்றைய பொழுதுகள் மறந்து இன்றைய தேவைகளுக்காக மனம் ஓடத் தொடங்கி விடுகின்றது.. எந்த வருடத்தின் தொடக்கத்திலும் நான் எந்தச் சபதங்களையும் எடுப்பதில்லை. காரணம் அதுவொரு சடங்காகத்தான் முடியும். மீனவனின் வாழ்க்கைக்கும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் பெரிதான வித்தியாசங்கள் இல்லை. அங்கே தண்ணீர். இங்கே கண்ணீர். அங்கே எல்லைப் பிரச்சனை. இங்கே அரசாங்கத்தின் கொள்கை பிரச்சனை. ஆனால் இணையம் என்ற இந்த உலகம் அறிமுகமானதும் என்னுடைய வாழ்க்கை பலவிதங்களிலும் மாறியுள்ளது என்பதை ஒவ்வொரு கணமும் யோசித்து பார்த்துக் கொள்வதுண்டு. ஏன் எழுத வந்தோம்? என்பதும் எதற்காக எழுதிக் கொண்டிருக்கிறாய்? என்ற கேள்வியும் சக்களத்தி சண்டையாய் நடந்து கொண்டே தான் இருக்கிறது. நள்ளிரவு தாமதமாக வந்தாலும் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் உருவங்களை விளக்குப் போட்டு ரசிக்கும் போது மனதில் வார்த்தைகளாக வந்து மோதும். அப்பா ஏன் இன்னும் வரவில்லை? என்ற கேள்வியை கேட்டவளுக்கு அடுத்தவள் பதில் சொல்ல அவர்களின் இரவு உறக்கத்தின் தொடக்க சண்டைகள் தொடங்கும். வீட்டுக்குள் நுழைந்ததும், என்ன நடந்தது? என்று கேட்க எப்போதும் போல மனைவியின் விவரிப்பில் சிறிது புன்னகை என்னுள் எட்டிப் பார்க்கும். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பெற்ற பொம்மைகள் தள்ளிக்கிடக்கக் கோட்டோவியமாய் வினோத வடிவில் சுருக்கிக் கொண்டு படுத்துறங்கும் அவர்களின் தூக்கத்தை பார்த்து மனதில் வார்த்தைகள் வந்து வந்து போகும். இந்தத் தலையணை தான் வேண்டும் என்று போராடிப் பெற்ற போராட்டங்கள் அர்த்தமில்லாமல் ஏதோவொரு மூலையில் கிடக்கும். அவர்களின் தலையைச் சுற்றிய போர்வைகள் மூச்சு முட்டுமே என்று நகர்த்த முற்படும் போது அவர்களின் அனிச்சை செயல்கள் நமக்கு ஆச்சரியத்தை வரவழைக்கும். அதுவே எழுதத் தூண்டும் காரணியாகவும் பல சமயம் அமைந்து விடும். பலசமயம் அதிகாலை விழிப்பு அவஸ்தையாய் வந்து விடும். காரணம் அருகில் படுத்தவள் புரண்டு வந்து நெஞ்சுக்குள் புதைந்து விடத் திரும்ப முடியாத உடம்பில் கோழிக்குஞ்சு சுகத்தை ரசித்துக் கொண்டே எழுந்து விடுவதுண்டு. பல சமயம் அலுப்பாக இருக்கும். அவர்களின் கலைந்த ஆடைகளைக் கவனித்து போர்வையைப் போர்த்தி விட்டு வெளியே வந்து கதவு திறந்தால் குளிர் காற்று வரவேற்கும். கூடவே பக்கத்து வீட்டுப் பஜனை சப்தம் காதில் வந்து மோதும். அடிவாங்கித் திரும்பி வந்துகொண்டிருக்கும் தமிழர்களைப் பற்றி கவலைப்படாமல் ஐயப்பனைக் காண வாருங்கள் என்று பாடிக் கொண்டிருப்பவர் இப்போது எங்கே இருப்பார் என்று யோசிக்க வார்த்தைகள் வந்து வந்து மோதும். விடியாத பொழுதில் சாலையில் ஆள் அரவமிருக்காது. பகலில் பணம் துரத்தச் செல்லும் பறவைகள் இப்போது பாதுகாப்பான வீட்டுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். நடமாட்டம் இல்லாத சந்தும், ஆய்த்தப்பணியில் இருக்கும் பறவைகளும் ஏதேதோ கவிதை சொல்லும். புலராத பொழுதுகள் புதிதாய் தெரியும். காணும் காட்சிகளை வார்த்தைகளாகக் கோர்ப்பதற்குள் பக்கத்து வீட்டு மனிதன் எப்போதும் போல தனது பயணத்தை தொடங்குவார். டாஸ்மாக் கடையை நோக்கிச் செல்லும் பயணம் அது. அவரின் பயணத்தை பார்த்துக் கொண்டே மதுவால் அழிந்தவர்களின் பலரின் வாழ்க்கை நினைவில் வந்து தாக்கும். அழிந்து போன பல கோடி வர்த்தக ஜாம்பவான்களின் கதைகளை நினைக்கச் சொல்லும். பள்ளிக்குச் செல்லாமல் பாரம் சுமக்கும் அவரின் மூத்த மகன் முகம் மனதில் வந்து மோதும். . உருவமாய், உணர்வாய் கோர்க்க முடியாத எழுத்துக்கள் உள்ளே ஓடிக் கொண்டேயிருக்கும். அதிகாலையில் மடிக் கணினி உயிர் பெற உள்ளூரைப் பார்த்த மனம் உலகத்திற்குத் தாவும். முகமூடிகளும் மூச்சு முட்டும் விவாதங்களுமாக இணையப் பெருவழியில் படம் காட்டிக் கொண்டு இருப்பவர்களையும் பலசமயம் மனம் இனம் கண்டு கொள்ளும். ஏதோவொன்றை தேட, என்ன நடக்கிறது என்பதை அறிய உதவும் இந்த இணைய மேய்ச்சல் எனக்கு ஏராளமான ஆச்சரியத்தை விதைத்துக் கொண்டேயிருக்கிறது. எத்தனை மனிதர்கள்? எத்தனை நிறங்கள்? பாசாங்கு, படபடப்பு, வன்முறை, எரிச்சல், ஏமாற்றம், குரோதம், பொதுப்புத்தி என்று துப்பிய எழுத்துக்களைப் பார்க்க படிக்க அங்கங்கே பயரேகைகளும் உள்ளங்கையில் இருக்கும் ரேகை போலவே படிந்துவிடுகின்றது. விவாதங்கள் விபரீதமாகி தனிப்பட்ட நபர்களின் வினோத உருவங்களை உள்வாங்கிக் கொண்டேயிருக்கும். படிக்கும் வார்த்தைகள் நம் மனதின் வலிமையை உணர வைத்துக் கொண்டேயிருக்கிறது. பால்காரரின் சப்தம் மனைவியின் அன்றாட கடமையை தொடங்கி வைக்கும். தேநீரை உறிஞ்சிக் கொண்டே உள்வாங்கும் செய்தித்தாள்களின் சார்புத்தனமான கட்டுரைகள், செய்திகளைப் பார்த்து சலிப்பைத்தந்தாலும் குழந்தைகளின் முழிப்பு கதையில் அடுத்த அத்தியாயம் போல மாறத் தொடங்கும். அவர்களின் அவசர ஓட்டத்தின் என் சிந்தனைகள் மாறி அவர்களுடன் நாங்களும் ஓடத் துவங்குகின்றோம். . அவர்களின் அவசர ஓட்டங்கள் ஒவ்வொன்று ஒவ்வொரு புதுக்கவிதையை தந்து கொண்டு இருக்கும். நான் முந்தி, நீ முந்தி என்று குளியறையில் நடக்கும் கூத்தில் உலகத்தில் நாம் ஓட வேண்டிய அவசரத்தை அவர்களின் அவசரம் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கும். இறுதியில் டார்வின் சொன்ன வலிமையானவர் குளித்துக் கொண்டிருக்க பக்கவாட்டில் அழுகை சத்தம் ஓங்காரமாய் ஒலிக்கும். வளர்ந்து கொண்டே இருக்கின்றோம் என்று உணர்த்தும் அவர்களின் துடுக்குத்தன பேச்சுகளில் உள்ளம் மகிழ்ந்தாலும் ஒரு மூலைக்குள் பேசியே நாட்டை ஆள வந்தவர்களின் தற்போதைய வாழ்க்கை நினைவலையில் நீந்தும். குளிக்க ஒரு போராட்டம், துவட்ட ஒரு போராட்டம் என்று அடுத்தடுத்து கதைக்களம் மாறிக் கொண்டேயிருக்கும். நடக்கும் பஞ்சாயத்தில் நான் தான் பலமுறை வாய் பேசாத மன்மோகனாய் இருக்க வேண்டியதாக உள்ளது. அர்த்தப்பார்வையோடு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேயிருப்பேன். கவனிக்கும் எல்லாவற்றையும் ஒரு கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அவசரத்தில் அவர்கள் மாற்றிப் போட்ட ஜட்டிகளின் வினோத வடிவம் வீட்டில் சிரிப்பலையை பரப்புகின்றது. . பவுடர் பூச்சு அதிகம் பெற்ற அவர்களின் முகத்தின் வழியே நான் பார்த்த பழைய நாடக அவதாரங்கள் வந்து போகும். பள்ளிக்கருகே வீடென்பதால் இவர்களுக்கு இப்போதெல்லாம் படிப்பதற்கு நேரம் கிடைக்கிறது. ஆனால் படிப்பதை விட்டு பலதையும் பேசச் சந்தைக்கடை போல உள்ளூர் முதல் உலகம் வரை மிதிபட்டு நசுங்குகின்றது. மடிக்கணினியில் இருக்கும் என் பார்வையும், அவர்களின் பேச்சுக்களை நோக்கியிருக்கும் என் காதுகளும் ஒரு கலவையான காலத்தைச் சுமந்து கொண்டு முன்னும் பின்னும் அலைந்து கொண்டேயிருக்கிறது. நான் செய்து கொண்டிருக்கும் வேலைகள் செக்கு மாட்டுத்தனமாய் மாறிவிடுகின்றது. அடங்க மாட்டீர்களா? என்ற சப்தம் சமையலறையில் இருந்து வரும். அடங்கி விட்டார்களோ? என்று ஆச்சரியமாய் பார்த்தால் அடுத்து அணுகுண்டாய் மாற்றி அவஸ்தையை உருவாக்குவார்கள்.. மாட்டிய சீருடையில் மாறிப் போன ஷுக்களின் எண்கள் புதுக்கவிதை சொல்லும். கால் ஒரு பக்கம் ஷு ஒரு பக்கம் என்று கோணி நிற்க மூவரின் வாய்களும் சிரித்து நிற்க அவசரத்தில் நிற்கும் மனைவியின் வாயில் வார்த்தைகள் வசைமாறி பொழியத் தொடங்கும். குட்டிகள் உருவாக்கிய குட்டிப் பஞ்சாயத்தில் மீண்டும் நிறுத்தப்படுவேன். கத்திப்பார்த்த மனைவியின் சொல் காற்றில் பறக்க பல சமயம் மாட்டிக் கொண்டிருக்கும் ஷுக்களும் பறக்கத் தொடங்கும். அலுத்துப் போனாலும் மனதில் வார்த்தைகளாக கோர்த்துக் கொண்டேயிருக்கின்றேன். ஆழ்மன அழுத்தங்கள் அகன்று விடுகின்றது. குதுகலமாய் அவர்களின் கொண்டாட்டங்களில் .பங்கெடுத்து அதிகாலையில் பள்ளி நோக்கிய பயணம் தினந்தோறும் தொடங்குகின்றது. அவர்களின் பயணங்கள் எனக்கு வாழ வேண்டிய அவசிய நம்பிக்கைகளையும் விதைத்தபடியே இருக்கிறது. தெரு முனையில் கொக்குபூ மரம். தொடர்ந்த வீடுகளில் மஞ்சள் பூக்கள் என்று சாலையில் ஏராளமாய் இறைந்து கிடக்க இவர்களின் இரைச்சல் சப்தத்தில் வழியெங்கும் மலர்வனத்தில் மூன்று பூக்களுடன் நடந்து கொண்டே இருக்கின்றேன். நம்பிக்கை செடிகளை வளர்ப்பதும் முக்கியம். உரமிடுவது அதைவிட அவசியம். . கவனிக்கப் பழகுங்கள். அவற்றை எழுத்தாக முயற்சித்துப் பாருங்கள். அவரவர் வளர்த்துக் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் நாளைய சரித்திரத்தை உருவாகக்கூடும். [] 18 பயணமும் எண்ணமும் "தம்பி நமது நாட்டு ஜனாதிபதி யாருப்பா?" "பிறதீபா பாட்டீல்" "இல்லப்பா? இப்ப மாறியிருக்குறாங்களே அவங்க பேரு?" "தெரியலையே....." "சரி தெரிஞ்சுக்க அவர் பேரு பிரணாப் முகர்ஜி" பையன் யோசிக்காமல் சட்டென்று அடித்தான். "இவரு இன்னும் பேமஸ் ஆகலை. அதுதான் எனக்கு தெரியவில்லை" என்றான். சென்னையை நோக்கி ரயிலில் சென்று கொண்டிருந்த எனக்கு எதிரே நடந்த உரையாடல் இது. பையன் நாகரிகமான உடையில் பளிச்சென்று இருந்தான். நிச்சயம் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டுருக்ககூடும். கேள்வி கேட்டவர் அவனை விடவில்லை. அவன் பக்கத்து பெட்டியில் இருந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தவன். என் எதிரே இருந்த இருக்கை காலியாக இருக்க, வந்தமர்ந்தவனுக்குச் சோதனையாக இந்தக் கேள்வி பதில் போட்டுத் தாக்கியது. என் எதிரே இருந்தவர் தொடர்ச்சியாக ஏதோவொரு புத்தகத்தை படித்துக் கொண்டே வந்தார். அது முடியும் போது என்னிடம் உள்ள புத்தகத்தை வாங்கி படிக்கத் தொடங்கி விடுவார். இடையில் சற்று நேர ஓய்வில் இந்தப் பையன் மாட்டிக் கொண்டான். பையனுக்குப் பதில் தெரியவில்லை என்ற கவலை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அவனுடைய நோக்கம் வேறு எங்கோ இருந்தது. ஒவ்வொரு இருக்கையாக தாவிக் கொண்டிருந்தான். கேள்வி கேட்டவர் புலம்பிக் கொண்டிருந்தார். "பாருங்கள் சார். என்ன வெளியே நடக்குதுன்னு ஒரு பசங்களுக்கும் தெரியமாட்டுது". என்றார். அவரைக் கவனிக்கும் போதே உள்ள ரயில் பெட்டியின் உள்ளே வெவ்வேறு பகுதிகளில் இருந்தவர்களைக் கவனித்தேன். சென்னை எக்ஸ்பிரஸ் வண்டியில் தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் ஒரே மாதிரியான இணைப்பு என்பதால் பயணிப்பவர்களுக்கு பல விதங்களில் பயன் உள்ளதாக இருக்கிறது. பொழுது போகவில்லை என்றால் முதல் பெட்டியிலிருந்து கடைசி வரைக்கும் ஒரு நடை போய்விட்டு வரலாம். நானும் போய்விட்டு வந்தேன். பலவிதமான முகங்கள். ஒவ்வொரு முகமும் சொல்லும் ஏராளமான கதைகள். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் ரயில் பயணங்களில் மட்டுமே தான் கேட்க முடியும். பேருந்து போலப் புகை நம் முகத்தை நேரிடையாக தாக்காது. டீசல் புகையில்லாமல் நகருக்கு வெளியே பயணிக்கும் ரயில் வண்டி பயணமென்பது குழந்தைகளுக்கு எப்போதும் விருப்பமாகத் தான் இருக்கிறது. பேரூந்து பயணத்தில் ஒரு ஒழுங்கு முறை இருக்காது. போக்குவரத்து நெரிசல் தொடங்கி, ஒவ்வாத சப்தம் என்று மாறி மாறி நம்மை கடுப்பேற்றும். ஒவ்வொரு நிறுத்தமும் கத்தலும் கலந்து கவனத்தை திசை திருப்பும். கூட்டம் சேர சேர உள்ளே புழுக்கம் அதிகமாகும். புகை பிடிப்பவர்கள் அருகில் அமர்ந்திருந்தால் இன்னமும் அவஸ்தைகள் அதிகமாகும். ஆனால் ரயில் பயணம் ஒரு வீட்டுக்குள் இருக்கும் சுகம் போலத்தான் இருக்கிறது. அதுவும் விரைவு ரயில் என்றால் இன்னமும் வியப்பாகத்தான் இருக்கிறது. நகரங்களில் பயணிக்கும் போது கூட அவுட் லைன் போல ஓட்டி வெட்டி நகரும் போது அந்த நகரத்தின் வேறொரு தோற்றம் நமக்கு தெரிய வரும். மாறி வரும் காட்சிகளில் என்றுமே அலுப்பாய் இருக்காது. பக்கத்துப் பெட்டியில் ஒரு கல்லூரி மாணவ கூட்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய 30 பெண்களும் 20 ஆண்களுமாய் இருந்த அந்தக் கூட்டத்தில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. திடும் திடுமென்ற சப்தமும், சிரிப்புமாய் சில்லறை சிதறல்களாய் என்னை வந்து தாக்கிக் கொண்டேயிருந்தது. எது குறித்தும் கவலையில்லை. எப்போதும் இந்த வாழ்க்கையில் இந்த மகிழ்ச்சி நிரந்தரம் என்பதாகத் திரைப்பட பாடல்களை மாறி மாறி ஒவ்வொரு பெண்ணாக சொல்லிச் சொல்லி அடுத்த பெட்டிக்கு கேட்கும் அளவுக்கு தங்களது பயணத்தை மற்றவர்களுக்கு பயமாக்கிக் கொண்டிருந்தார்கள். அருகே இருந்த மாணவர்கள் வாய் பார்த்து கோராஸ பாடிக்கொண்டிருந்தார்கள். பெட்டியில் பெரும்பாலான இளையார்களின் காதில் நிச்சயம் ஒரு ஹெட்போன் இருக்க அலைபேசி பாடல்களை அவசரம் அவசரமாக ரசித்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தார்கள். ரசனைக்கும் கத்தலுக்கும் இடையே உள்ள இடைவெளியை அவர்களின் முகபாவனையை வைத்து கவனித்துக் கொண்டிருந்தேன். ஏதோவொரு விதத்தில் ஒவ்வொருவரும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள். வயதுக்கும் பொறுப்புக்கும் நிறைய சம்மந்தம் இருக்கும் போல. வேலையில்லாமல் இருப்பது மட்டும் பொறுப்பற்ற தனமல்ல. தெளிவற்ற சிந்தனைகள் கூட ஒருவகையில் பொறுப்பற்ற தனம் தான். பயணங்களில் மற்றும் காத்திருக்கும் சமயங்களில் பெரும்பாலும் புத்தகம் படிப்பது என்பது 40 வயதுகளைக் கடந்தவர்களின் கைகளில் தான் பார்க்க முடிகின்றது. வாசிப்பு அனுபவம் என்பது மெதுமெதுவாக மறைந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பதிலாக உருவாகியிருக்கும் நவீனங்களின் மூலம் தான் பலருக்கும் ஆசைகள் முடிவுக்கு வருகின்றது. நவீனங்கள் தான் இன்றைய இளையர்களை நகர்த்திக் கொண்டேயிருக்கிறது. மேலைநாடுகளில் ஐ போன் கொண்டாட்டங்களைப் போல இங்கே அலைபேசியில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை கேட்டு முடியும் போது பலருக்கும் ஜென்ம சாபல்யமே முடிவுக்கு வருகின்றது. இளையர்களின் கொண்டாட்ட மனோநிலையில் புத்தகங்கள் என்பது காணாமல் போய்விட்டது. பாடப் புத்தகத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதை தற்போதைய கல்வித்திட்டம் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. ஆதரிக்க விரும்புவதும் இல்லை. மதிப்பெண்கள் தான் இன்றைய கல்வியில் மிக முக்கியம். அதற்காக சுய சிந்தனைகளை வளர்க்காத மக்காக இருந்தாலும் அது குறித்து அக்கறையில்லை. இதன் காரணமாகவே நூலகத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருக்கிறது. வீட்டில் குழந்தைகளுடன் பேசும் போது அவர்களின் சொந்த கற்பனைகளைப் பரிட்சையில் எழுதச் சொல்வதுண்டு. ஆனால் அவர்கள் ஒன்றைத் தவறாமல் சொல்வார்கள். "மிஸ் சொந்தமாக எழுதினால் மதிப்பெண் போடமாட்டங்கப்பா" என்பார்கள். எழுதியிருந்தாலும் சுழித்திருப்பதை பலமுறை பார்த்து இருக்கின்றேன். கருத்து அதுவாகத்தான் இருக்கும். ஆனால் வார்த்தைகள் தான் வேறுவிதமாக இருக்கும். ஆதரிக்க மனமில்லாதவர்களை ஆசிரியர்களாக பெற்றிருக்கும் போது குறுகிய உள்ளம் கொண்டு மாணவர்களைத் தான் உருவாக்க முடியும். மனப்பாடம் தான் மகத்தான சாதனை என்பதாக மாற்றப்பட்ட ஒரு கல்விச் சமூகம் நம் முன்னால் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. படிக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். நல்ல வேலை அதிக சம்பளம். எளிதான வாழ்க்கையில் தனக்கான இருப்பிடம் என்பதாக ஒரு வரையறை உருவாக்கப்பட்டு விட்டது. அதிக பணத்தை கொண்டாடுபவர்களின் கூட்டம் வெளியே தான் வீரர்களாக இருக்கிறார்கள். மனதளவில் மடையர்களாகத்தான் இருக்கிறார்கள். பணம் தரும் போதையில் சமூகம் அவர்களைக் கொண்டாடப்படுவதால் பார்ப்பவர்களின் பார்வையில் பரிசுத்தமானவர்களாகத் தெரிகிறார்கள். என் முன்னால் அமர்ந்திருந்த மற்றொரு மாணவன் வண்டி ஓடத் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக தனது மடிக்கணினியை பார்த்துக் கொண்டே வந்ததால் அந்த அளவுக்கு வேலை இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் உண்மை புரிந்தது. கல்லூரி விடுதியில் பார்க்க முடியாத படங்களை இது போன்ற சமயங்களில் பார்த்து விடுவானாம். வரிசையான பட்டியல்களை காட்டினான். கலந்து கட்டியிருந்த அந்த படவரிசை பத்து "பயம்" தந்த கலக்கலாகியிருந்தது. பேரூந்து பயணங்களை விட ரயில் பயணம் தான் தற்போதைக்கு பல விதங்களில் சிறப்பு,. ஏறக்குறையக் கட்டண விகிதத்தில் ரயிலுக்கும் பேரூந்துக்கும் ஐந்து மடங்கு வித்தியாசம் இருப்பதுடன் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் பயணிப்பது ஒரு தனியான சுகம். முன்பதிவு செய்யாத சமயங்களில் பலமுறை நெருக்கியடித்து, வியர்வைக் குளியலில் நனைந்து பலமுறை பயணித்திருந்த போதிலும் ஒவ்வொரு பயணமும் தற்கால சமூகத்தை அப்பட்டமாகப் பிரதிபலிப்பதை கவனித்தால் நன்றாகப் புரியும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயணிக்கும் ரயிலில் ஒரு முறை சென்று வாருங்கள். அந்த வாய்ப்பு இந்த முறை எனக்குக் கிடைத்தது. திருப்பூர் முதல் சென்னை வரைக்கும் பயணிக்கும் போது பார்த்த மனிதர்களின் மனோபாவம் என்பது சென்னை முதல் காரைக்குடி வரைக்கும் பயணிக்கும் பயணத்தில் மொத்தமாக மாறிவிடுகின்றது. உடைகள், நடைகள், பேச்சு, பாவனைகள், கவலைகள் என்று மொத்தமாகப் புதிதாக இருக்கிறது. எந்த இடத்தில் இருந்தாலும் உங்களைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதைக் கவனிக்க பழகி விட்டால் உங்கள் சொந்த கவலைகள் காணாமல் போய்விடும். உங்களைவிட அதிக கவலைகள் சுமப்பவர்களை பல பயணங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். சுற்றிலும் கவனிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தால் உங்களுக்குள் இருக்கும் பல விதமான கலைஞர்கள் வெளியே வந்து எட்டிப்பார்க்ககூடும். காரணம் இங்கே எவரும் கவனிக்க விரும்புவதே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அவசரங்கள். தன்னுடைய அவஸ்தைகளையும் சுமந்து கொண்டு தான் பலரும் பயணிக்கின்றார்கள். பதில் தெரியாத கேள்விகளைப் போல பயத்துடன் தான் பயணிக்கின்றனர். அப்புறம் எங்கே பயணம் சுகமானதாக இருக்கும். கவலைகளைப் பயணிக்கும் போது ஜன்னலில் தூக்கி எறிந்து விடுங்கள். காணும் காட்சிகளின் மூலம் கிடைக்கும் பதில்கள் உங்களுக்குத் தேவைப்படும் ஏதோவொன்றாக மாறக்கூடும். ஒவ்வொருவரின் பயணமும் ஓராயிரம் அனுபவங்களை இலவசமாகத் தந்துவிடுகின்றது. கவனிக்க மனம் தான் வேண்டும் [] 19 நீயும் பொம்மை நானும் பொம்மை ஈமு கோழி விளம்பரங்களுக்கு நடிகர்கள் சிரித்துக் கொண்டே நடித்து நம்பிக்கை கொடுத்தார்கள், நம்பிக் கையில் வைத்திருந்த காசை கொண்டு போய் கொட்டியவர்கள் மட்டும் சிரிக்க முடியாமலும் வெளியே சொல்ல முடியாமலும் நொந்து கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறையும் இது போன்ற பரபரப்பு பத்திரிக்கைகளுக்கு தேவைப்படுகின்றதோ இல்லையோ நமக்கு முக்கியமாக தேவைப்டுகின்றது, பத்திரிக்கைகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய், தொடங்கும் போது விளம்பரத்திற்கான காசு, முடியும் போது பரபரப்பு செய்திகள், நம்பியவர்களுக்கு? ஒன்றை மறக்க மற்றொன்று, அதை மறக்க இன்னொன்று என்று மாறி மாறி நமக்கு ஏதோவொன்று சூடாக தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது, தொடக்கத்தில் திண்டபங்களுக்குத் தான் கொறிக்க சுவைக்க என்று விளம்பரப்படுத்துவார்கள், இப்போது ஊடகங்களுக்கும் தேவையாய் இருக்கிறது, இது போன்ற செய்திகளை விரும்பத் தொடங்க அதுவே இறுதியில் திணிப்பது போல மாறிவிடுகின்றது, வாங்கிவிட்டீர்களா? என்று கத்தி நமது செவிப்பறையை கிழித்து செவிடர்களாய் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள், வலைத்தளம் முதல் செய்தித்தாள்கள் வரைக்கும் அத்தனைக்கும் இப்போது லைட் ரீடிங் என்பதே தாரக மந்திரமாக இருக்கிறது, கடினமான விசயத்தைக் கொடுத்தால் பக்கத்தை நகர்த்திச் சென்று விடுவார்கள் என்று நடிகை கிசுகிசுக்களைப் போட்டு நமக்குச் சந்தனம் பூசிக் கொண்டிருக்கிறார்கள். அவளின் காண முடியாத மார்பைக் கனவுகளில் தேடிக் கொண்டிருக்கின்றோம், நமக்கும் அதுவே தான் தேவையாய் இருக்கிறது, திரை அரங்கத்திற்குள் சென்றால் மூன்று மணி நேரம் கவலைகளை மறக்க என்ற போதை ஊட்டப்படுவதால் படம் எடுப்பவர்கள் என்ன கருத்து கந்தசாமி கணக்காக கைக் காசை செலவழிப்பார்கள் என்றா நம்ப முடியும், கலை என்பது பணம் சம்பாரிக்க என்ற பிறகு அங்குக் கலைக்கு வேலையில்லை. சதைக்குத் தான் வேலை. ஒரு செய்தியை முக்கியத்துவப்படுத்த வேண்டுமானால் நமது பத்திரிக்கைகள் கொடுக்கும் வார்த்தைகளை கவனித்துப் பார்த்தாலே நமக்கு நன்றாகப் புரியும், கிரானைட் ஊழல் என்று சொன்னால் அதில் ஒரு கிக் இருக்காது என்பதால் கிரானைட் மாஃபியா என்று ஏதோவொரு நோய்க்கான ஃபோபியா போலவே புனைகதைகளை சுருட்டிச் சுருட்டி சூறாவளியாக்கி மக்கள் கவனத்தை திசை திருப்பத் தொடங்கி விடுகிறார்கள். நாலைந்து வாரமாக அன்றடாட பத்திரிக்கையில் வந்து கொண்டிருக்கும் பி.ஆர்,பி, நிறுவன அதிபர் பழனிச்சாமி கதையும் திடுக் திடுக் என்று மர்மகதைகளைப் போலத்தான் போய்க் கொண்டிருக்கிறது, இப்போது தான் மக்களுக்கே டாமின் என்றொரு அரசாங்க நிறுவனம் இதற்கென்று இருக்கிறது என்பதே தெரிய வருகின்றது, முன்பிருந்த இருந்த தியோனேஸ்வரன் தொடங்கி இன்று வரைக்கும் உள்ள அதிகாரிகளின் சொத்து பட்டியலைப் பார்த்தாலே சொர்க்கம் என்பது இந்தக் கனிம வள துறை தான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும், சில துறைகளின் ஊழல்கள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரியும், ஆனால் அரசாங்கத்தில் உள்ள பல துறைகளில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்கள் இன்று வரைக்கும் பலருக்கும் தெரிய வாய்பில்லாமலே கடந்து போய்க் கொண்டிருக்கிறது, அருண்ஷோரி மத்திய அமைச்சராக இருக்கும் போது அலைக்கற்றை ஊழல் என்பது இத்தனை பிரமாண்டமானதாக இருக்கும் என்பதை எவராவது கற்பனை செய்து பார்த்து இருப்பார்களா? இல்லை தயாநிதி மாறனுக்குத் தான் காமதேனு பசு மேல் நாம் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கின்றோம் என்று நம்பியிருப்பாரா? ராசா தான் கறவை மாடு கணக்காக மாற்றப் போகின்றோம் என்று கனவு கண்டிருப்பாரா? அமைச்சராக வந்தாலே போதும்? கற்றுக் கொடுப்பவர்கள் சுற்றியிருக்கும் போது களவு என்பது புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடாக மாறிவிடுகின்றது, இன்று சூறாவளியாக செய்தித் தாள்களில் ஓடிக் கொண்டிருக்கும் கிரானைட் ஊழலைப் பற்றி கலைஞருக்குத் தெரியாதா? இல்லை இப்போது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் ஜெ, வுக்குத்தான் தெரியாத விசயமா? கடந்த பத்தாண்டு ஆண்டுகளாக இந்த கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை கிராம மக்களும் அரசாங்கத்திற்கு அனுப்பிய மனுக்களும், நினைவூட்டல் கடிதங்களும் அரசாங்க அதிகாரிகளுக்குக் கிடைக்காமல் தபால் துறை ஏதும் சதி செய்து இருக்குமோ? இல்லை கிராம நிர்வாக அதிகாரி முதல் கோட்டையில் இருக்கும் துறை சார்ந்த அத்தனை கோமகன்களுக்கும் இது குறித்த அக்கறை இல்லாமலா போயிருக்கும், ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு விதமான படையல் செய்யும் உலகத்தில் இருக்கும் போது அமைச்சர் முதல் அதிகாரிகள் வரைக்கும் எப்படிக் கவனிக்க வேண்டும் என்று கூடவா பழனிச்சாமிக்குத் தெரியாமலா போயிருக்கும், ஒருவர் வளரும் போது குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்ந்தவர் என்று நான்கு பக்க விளம்பரங்களை வாங்கிக் கொண்டு வாழ்த்தும் அதே பத்திரிக்கைகள் தான் வீழும் போது மாஃபியா உலகத்தில் அவிழும் மர்ம முடிச்சுகள் என்று சிறப்புக்கட்டுரையாக எழுத முடிகின்றது, உலகமெங்கும் அரசியல் செய்வதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதொவொரு பலியாடுகள் தேவையாய் இருக்கிறது, அதிலும் இந்தியாவில் இந்தப் பலியாடுகளை நம்பித்தான் அரசியலே நடக்கின்றது, திருவிழா காலத்தில் அடிக்கப்படும் கோழி, ஆடுகளைப் போல ஒவ்வொரு சமயத்திலும் இதற்கென்று குறி பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்கள் அநேகம் பேர்கள். அது அமைச்சராக இருக்கலாம், ஆட்சிக்கு ஜீவநாடியாக உதவிக்கொண்டிருக்கும் அதிகாரியாகக்கூட இருக்கலாம், மாவட்ட ஆட்சியர் சகாயத்தை மாற்றியவர்கள் தான் அவர் அனுப்பிய கோப்பின் நகலைப் படிக்கவே பல மாதங்கள் ஆகியுள்ளது, காரணம் தேவையைப் பொறுத்தே அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுகின்றது, அவசரங்கள் கருதி அரசியலில் எதுவும் செய்யப்படுவதில்லை, அவசியங்கள் கருதியே இங்கு ஒவ்வொன்று நடைபெறுகின்றது, காரணம் ஜனநாயகத்திற்கு நாம் கொடுக்கும் விலையென்பது இதுவே தான், ஊழல் என்றொரு வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போன உலகில் மீண்டும் மீண்டும் இதில் ஊழல் அதில் ஊழல் என்று சொல்லும் போது படிப்பவர்களும் துணுக்கு செய்திகளைப் போல படித்து விட்டு நகர்ந்து போய் விடுகின்றனர், மறுநாளும் படிக்கும் போது எரிச்சல் தான் உருவாகின்றது, காரணம் படிப்பவர்களும், பார்ப்பவர்களும் நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருப்பவர்களாக இருப்பதால் மூச்சடைக்கும் ஊழல் என்பது கூட இன்று எளிதாக மாறிவிட்டது, நல்லொழுக்கம் என்ற வார்த்தை என்பதே நாற்றம் பிடித்த வார்த்தையாகச் சமூகம் பார்க்கத் தொடங்கிய போதே நல்ல விசயங்கள் என்பது நம்மைச்சுற்றி அரிதாகத்தான் நடக்கும், நான்காயிரம் அதிகாரிகள் இருக்கும் இடத்தில் நான்கு அதிகாரிகள் செய்யும் செயலால் சிலருக்கும் இன்னமும் தர்ம புண்ணியத்தின் மேல் நம்பிக்கை வருகின்றது, நாம் தான் வாழ்வில் பாதி நாட்கள் ஏக்கத்திலும், மீதி நாட்கள் எரிச்சலிலுமாய் கழிக்கும் போது இறுதியில் நமக்கு மிஞ்சப்போவது கழிவிரக்கம் மட்டுமே, நுகர்வு கலாச்சாரம் என்பது நுகத்தடி பூட்டப்பட்ட மாடுகள் போல ஒரே நேர்கோட்டில் போய்க் கொண்டிருக்கிறது, நமக்கு எது தேவை என்பதை விட மற்றவர்கள் பார்வையில் நாம் சிறப்பாக தெரிய எதுவெல்லாம் தேவை என்பதாகக் கலாச்சாரம் மாறியுள்ளதால் நமக்கே நமக்கான தேவைகளை புரிந்து கொள்ள முடியவில்லை, ஃபேஷன் என்ற வார்த்தையை நாம் நோண்டிப்பார்த்தால் நம் பணத்தின் தேவையை அதிகப்படுத்தும் அசிங்கம் என்பதை யோசிப்பதே இல்லை, அவர்கள் முன்னால் நாம் கௌரவமாக தெரிய வேண்டாமா? என்று யோசித்து யோசித்து கடைசியில் கடன் என்ற பெயரில் பிச்சை எடுக்கும் அளவுக்குப் போய் கடனாளியாக மாறி இங்கு பாதிப் பேர்களின் வாழ்க்கை தெருவுக்கு கொண்டு வந்து விடுகின்றது, தற்போது அதிகாரியாய் இருப்பவன் சம்பளத்திற்கு மேல் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ் ஆசைப்படுபவன், அவனைச் சரிக்கட்ட நினைப்பவன் கருப்பு பணத்தை கட்டிக் கொண்டு தூக்கம் மறந்து தவிப்பவன், பணம் என்பது காகிதம் என்பதை மறந்து உலகில் உள்ள அத்தனை கவலைகளையும் போக்கவல்லது என்பதாக நினைத்துக் கொண்டவர்கள் இருக்கும் உலகில் எதை இயல்பாகப் பேசினாலும் இளிச்சவாயன் பட்டமே மிஞ்சும், அளவான பணத்தைப் பெற்றவன் அவனை அவனே ஆள முடியும், அளவுக்கு மிஞ்சிய பணத்தைப் பெற்றவன் பணமே அவனை ஆளத் தொடங்கும், பணம் ஆளத் தொடங்கும் போது தான் மர்மக் கதையில் வரும் திடுக்கிடும் திருப்பங்களும் நம் வாழ்வில் நடக்கத் தொடங்குகின்றது, இருப்பதை வைத்துச் சிறப்பாக வாழ்வோம் என்று எண்ணிக் கொள்பவர்கள் வாழ்க்கை முழுக்க பொம்மையாய் காட்சிகளைக் கண்டு நகர்ந்து விடுவது உத்தமம். [] 20 விழா தரும் போதை விழாக்கள் என்பது உறவுகளை ஒரே இடத்தில் கூடுவதற்காகத் தான் இருந்து வருகின்றது. அது ஊர் சம்மந்தப்பட்ட விழாவாக இருந்தாலும் சரி அல்லது தனிப்பட்ட குடும்ப விழாக்களாக இருந்தாலும் தமிழர்களின் வாழ்வில் மட்டுமல்ல மொத்த சமூகத்திலும் இப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது விழாக்களின் முகம் முற்றிலும் மாறிவிட்டது. ஊரில் திருவிழா என்றால் அது உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும் நாள். ஆன்மீகம் சம்மந்தப்பட்டதாக மட்டுமல்ல அத்தனை உறவுகளையும் இதன் காரணமாக ஒன்று சேர்க்க உதவியது. தமிழர்களின் கலை, பண்பாட்டு, கலாச்சாரத்தையும் வளர்க்க உதவியது. தெருக்கூத்து, நாடகம் என்று தொடங்கி அடித்தட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க உதவியது. அய்யனார், மாடசாமியை நட்டு வைத்துக் கல் வடிவத்தில் வணங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு கற்சிலை அறிமுகமாக அத்தனையும் மாறத் தொடங்கியது. இதில் தெய்வங்கள் உள்ளே நுழைந்து மனிதர்களின் எண்ணங்களை மாற்றியது கற்சிலையில் புகுத்தப்பட்ட சாஸ்திர சம்பிரதாய ரூபங்கள் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதையும் மாற்றியது. கோவில் கட்ட உதவியவர்கள் அத்தனை பேர்களும் உழைக்கப் பிறந்தவர்கள் என்று மாற்றம் பெற வீதியில் நின்று வணங்கி அவர்களின் அடிப்படை கலாச்சாரத்தையே வேரறுத்து வெட்ட வெளியில் நிறுத்தியது. மன்னர்கள் காலம் முதல் இன்று ஆட்சி செய்யும் மடையர்கள் காலம் வரைக்கும் விழாக்கள் என்பது தனிமனித துதிகளைத்தான் முன்னிறுத்துகிறது. சமூகம் நம்மைப் புறக்கணித்து விடும் என்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதர்களும் ஆட்டுமந்தையாக இதன் வழியே வந்து கொண்டேயிருக்கிறார்கள். அமைதியை உருவாக்க வேண்டிய தத்துவங்களில் அவரவர்களின் சுயநலங்கள் கலந்து போக இன்றைய சூழ்நிலையில் மொத்தமாக மாறி வன்முறைகளை வளர்க்க உதவும் ஒரு களமாக மாறியுள்ளது. மதம் என்ற சொல்லில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத காரணத்தால் அதுவே பிரிந்து பிரிந்து இன்று ஜாதியாக மாறியுள்ளது. அதுவும் இன்றும் பிரிந்து கொண்டே செல்கின்றது. ஒவ்வொரு நிலையிலும் யாரோ ஒருவர் இதைத் தெளிவாக புரிந்து கொண்டு குறிப்பிட்ட மக்களை தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு மெதுமெதுவாக இறுக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடியாமலே அவர்களைப் பின்பற்றி சென்று கொண்டேயிருக்கிறார்கள். எந்த நாளும் கொண்டாடப்பட வேண்டிய நாளாக இருக்க வேண்டியதே என்பதை உணர்ந்து கொள்ள விருப்பமில்லாமல் நாம் குறிப்பிட்ட நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அடுத்த மாதம் மகளுக்குப் பிறந்த நாள், அடுத்த வாரம் மனைவிக்குப் பிறந்த நாள் என்று ஒவ்வொரு நாளுக்கும் தவமாய் தவமிருக்கின்றோம். குறிப்பிட்ட நாளில் அதீத அன்பும் தொடர்ந்து வரும் நாட்களில் புரிதல் இல்லாத வாழ்க்கையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நமது நாகரீகம் தான் நல்ல நாகரிகம்? பிறந்த நாள், இறந்த நாள், நினைவு நாள் என்று போய்க் கொண்டிருந்த இந்தக் கொண்டாட்டங்கள் இன்று அப்பா தினம், அம்மா தினம் என்று மாறி ஒவ்வொன்றுக்கும் ப்ளக்ஸ் போர்டு கலாச்சாரமாக மாறியுள்ளது. இன்று எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேவை என்பதாக கருதிக் கொண்டு நாம் நம்மை அவசரமாக மாற்றிக் கொள்ள நிறையவே அவசரப்படுகின்றோம். அடுத்த சந்துக்கு அரசியல்வாதிகள் வருவதைக்கூட அலங்காரமாக காட்டிக் கொள்ள விரும்புவதால் தினந்தோறும் கொண்டாட்டங்களின் காலமாக உருமாறியுள்ளது. நாமும் நம் அளவுக்கு அவர்களுடன் போட்டி போடவே விரும்புகின்றோம். ஆனால் தங்களுடைய பிறந்த நாளை அரசியல்வாதிகள் வசூலிக்கும் நாளாக மாற்றவிடுவதில் வல்லவர்கள். ஆனால் எந்த அதிகாரி வர்க்கமும் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. அதற்குப் பதிலாக குழந்தைகளின் பிறந்த நாள், புதுமனை புகுவிழா என்று தொடங்கி ஒவ்வொன்றுக்கு ஒரு காரணத்தைத் தேடி கொண்டாடும் மனநிலைக்கு மாறியள்ளார்கள். சமீபத்தில் மாசுகட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி வேறொரு வகையில் ஒரு சிறப்பான நாளைக் கொண்டாடினார். அவரின் மூத்த மகளின் வளைகாப்பு நிகழ்ச்சியைச் சென்னையில் ஏற்பாடு செய்து இருந்தார். இதன் மூலம் வசூலித்த தொகை உத்தேசமாக திருப்பூர் சாயப்பட்டறை சங்கங்கள் மூலம் வசூலித்த தொகை மட்டும் 13.25 லட்சம். இது தவிர மற்ற தங்க காசு சமாச்சாரங்கள் தனி. மொத்தத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காரணம் உண்டு. எந்தக் காரணமாக இருந்தாலும் அத்தனைக்குள்ளும் பணம் உண்டு. உங்கள் தகுதியை நிரூபிக்க இது போன்ற விழாக்கள் உதவும். நீங்கள் செல்லும் இடங்கள் உங்கள் சமூக அந்தஸ்த்தை மற்றவருக்குப் புரியவைக்கும். சமூகத்தில் உங்கள் பழக்கவழக்கங்கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதை உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியவர்களுக்கும் உணர்த்தும். அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணத்துக்கு முந்திய வருடத்தில் பிள்ளையார் பட்டியில் ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அறுபதாம் வயது திருமண நிகழ்ச்சியை இராமேஸ்வரத்தில் நடத்தினார்கள். அநேகம் பேர்கள் ஆசீர்வாதம் வாங்கினார்கள். அம்மா அன்று கூட அமைதியாகத்தான் இருந்தார். காரணம் நான் பார்த்தவரைக்கும் அம்மாவின் அந்த அளவுக்கு அதிகமான அமைதியே அப்பாவின் முரட்டுத்தனத்தை ஈடு செய்வதாக இருந்தது. அடங்கியே வாழ்ந்தவருக்குச் சமூகம் சூட்டியிருந்த பெயர் சௌந்தரம் அமைதியானவள் என்பதே. ஏறக்குறைய மூளை ஒரு குறிப்பிட்ட விசயத்திற்குப் பழகி விட்டால் இது இறப்பது வரைக்கும் மாறாது போல. இப்படியே பழகிப்போனவரின் வாழ்க்கை இன்று வரைக்கும் தைரியத்தின் அருகே கூட செல்லமுடியாமல் நிறைய வேகப்படாதடா என்பதே அவர் பேசும் தராக மந்திரமாக உள்ளது. பலமுறை யோசித்துள்ளேன். ஒவ்வொரு வருடத்தில் வரும் அவரின் திருமண நாளும் அம்மாவுக்குத் தெரியுமா? அன்றாவது அவர்கள் இருவருக்கும் உண்டான புரிதலை மேம்படுத்துவார்களா? என்று யோசிப்பதோடு நிறுத்திக் கொள்வதுண்டு. நகர்ப்புற வாழ்க்கையில் தான் இந்தக் கொண்டாட்டங்கள் பெரிதாக எண்ணப்படுகின்றதோ என்று நினைத்துக் கொள்வதுண்டு. ஒருவரின் பிறந்த நாள் முக்கியம். அதைவிட அவரின் வயதும் அதற்கேற்ற எண்ண வளர்ச்சியும் அதைவிட முக்கியம். ஆனால் தற்போது இவை முக்கியமல்ல. இந்த நாளை எப்படி எங்கே கொண்டாடுவது? என்பது தான் மிக முக்கியமாக இருக்கிறது. கவலைக்கு ஒரு சரக்கு. உற்சாகத்திற்கு மற்றொரு சரக்கு. மொத்தத்தில் நுகர்வு கலாச்சாரத்தில் மனிதனே ஒரு கடைச்சரக்கு தானே. குழந்தைகளின் பிறந்த நாளைப் போல வளர்ந்தவர்கள் கொண்டாடப்பட வேண்டிய நாள் திருமண நாள். காரணம் இரு வேறு துருவமாக எங்கங்கே பிறந்த வளர்ந்து, எண்ணங்களாலும் செயல்களாலும் மாற்றுக் கருத்துக் கொண்டு நாம் இனி இணைந்தே வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சேரும் பந்தம் இந்தத் திருமணம். சமகாலத்தில் எந்த அளவுக்கு இதற்கு மதிப்பு இருக்கிறது என்பதை விட இந்த உறவுக்கு நாம் எப்படி மதிப்பளிக்கின்றோம் என்பதில் தான் நம்முடைய குழந்தைகளுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்கின்றோம். நம்மால் சிலவற்றை மாற்றிவிட முடியாது என்பது எத்தனை உண்மையோ நாம் பலவிசயங்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள முடியும் என்பதும் உண்மைதானே. நுகர்வு கலாச்சாரத்தை நமது கலாச்சாரமாக நம்மை மாற்றிக் கொள்ளும் இப்போதுள்ள சூழ்நிலையில் நம்முடைய அடிப்படையான கலாச்சாரம் மெதுமெதுவாக செல்லரித்துக் கொண்டிருக்கிறது. மகன் ஒரு பக்கம். மகள் வேறொரு பக்கம். விருப்பத்தை நிறைவேற்றாத கணவன்,. வரவேற்க விரும்பாத மனைவி. நான்கு முனை சுவர்களைப் போல யாருக்கு யார் உறவு? என்பதாக மாறியுள்ளது. அப்பா,கணவன் என்ற பாத்திரத்திற்குள் தேங்கிய தண்ணீராக கண்ணீருடன் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குடித்தே அழிப்பவனை அன்றாடம் சமாளித்து ஜெயித்தாலே இன்றைய சூழ்நிலையில் பல பெண்களுக்கு தினந்தோறும் திருவிழாவாகத்தான் இருக்கிறது. நினைத்து அடைந்தால் சமூக அங்கீகாரம். இல்லாவிட்டால் பிழைக்கத் தெரியாதவன் என்கிற மாயவலைக்குள் சிக்கி நமக்கு என்ன தேவை என்பது கூட தெரியாத அளவுக்கு மனரீதியான உளைச்சலுடன் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பரஸ்பரம் வாழ்த்துகளைக் கூட நம்மால் பரிமாறிக் கொள்ள முடியவில்லையோ என்று நினைத்துக் கொள்வதுண்டு. நீண்ட நேரம் எவருடனும் பேச முடியவில்லை. அவசரமாய் ஓடிக் கொண்டேயிருக்கின்றோம். பல சமயம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடுகின்றது. பேசினாலும் அர்த்தம் இல்லாதவைகள் தான் உரையாடலில் வந்து விழுகின்றது. தெளிந்த நீராக வெளியே தெரிந்தாலும் கசடுகளை மறைத்துக் கொண்டே வாழ பழகிக் கொண்டிருக்கின்றோம். [] 21 திருட அனுமதிக்கும் விளம்பரங்கள் "உன் தலையில் மூளை இருக்கா இல்லை களிமண் தான் இருக்கா?" பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் நம்மைப் பார்த்து ஏதோவொரு சமயத்தில் கேட்டுருக்ககூடும். உண்மையிலேயே களிமண் மண்டைக்குள் இருந்தால் எப்படியிருக்கும்? யோசித்துப் பார்த்தால் தற்போது நிஜமாகவே சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. யோசிக்க வேண்டிய மூளை வேடிக்கை பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறது. களிமண் தான் உள்ளே இருக்குமோ? என்று நினைக்கும் அளவிற்கு மக்கள் தினந்தோறும் புதுப்புது ஆச்சரியத்தைத் தந்து கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கைக்கு எது அவசியமானது என்பதைத் தாண்டி எது நமக்கு அந்தஸ்தை தரும் என்பதாக தேடித் தேடி பொருட்களை வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றார்கள். விருப்பம் என்பது வெறியாக மாறியுள்ளது. வாங்கிக் குவிக்கும் பொருட்கள் குப்பையாக இருந்தாலும் சரி வாங்கியே ஆக வேண்டும் என்று அடுத்த முறையும் கடைகளுக்கு படையெடுக்கின்றார்கள். படையெடுத்து நாடுகளைப் பிடித்த காலம் மலையேறிவிட்டது. கடைகளை நோக்கிப் படையெடுப்பது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நுகர்வு கலாச்சாரத்தை புரிந்து கொண்டவர்களும் விதவிதமான விளம்பரங்கள் மூலம் நம்மை வரவழைக்க யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். தரமான பொருட்கள் என்பது மாறி விளம்பரத்தால் வெற்றி என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளோம். . ஒரு விளம்பரத்தைப் பார்த்தவுடனே நமக்குத் தேவையில்லாத பொருட்கள் கூட தேவையாகி விடுகின்றது. "எதையும் சொல்ற விதமாகச் சொன்னால் வாங்க வந்துவிடுவார்கள்" என்பது மந்திரமாக மாறியுள்ளது. "சொர்க்கத்தில் ப்ளாட் விற்பனை" என்று விளம்பரம் வந்தாலும் முன்பதிவு செய்ய தயாராகவே இருக்கின்றார்கள்.. நம் அடிப்படைத் தேவை தீர்ந்ததும் மாடல் பைத்தியம் பிடிக்கத் துவங்கி விடுகின்றது. மாடல் பைத்தியம் முடிந்ததும் அதிக வசதிகளுக்குத் தாவி விடுகின்றோம். ஒவ்வொன்றாக மாற்றும் குணம் இயல்பாக வந்து விடுகின்றது. இந்தக் குணமே பலரும் கடன் வாங்கிச் செலவழிப்பது தவறில்லை என்பதில் வந்து முடிகின்றது. கடன் தொல்லையால் குடும்பமே கடைசியில் மண்டையைப் போட காரணமாகவும் அமைந்து விடுகின்றது. பிடித்த நடிகர் சொன்னார். விரும்பும் நடிகை போட்டிருப்பது என்று தொடங்கிய இன்று சந்தையில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்குப் பின்னாலும் ஏராளமான நட்சத்திரங்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். வண்ண வண்ண நட்சத்திரங்கள் போல் ஜொலிப்பாய் பேசி, ஆடி, நம்பவைத்து நம்மை வாங்க அழைக்கிறார்கள். அவர்கள் நடிக்க வாங்கிக் கொண்ட காசுக்குக் கொஞ்சம் அதிகமாகவே கூவ கூவக் கடைகளில் சேரும் கூட்டமும் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இன்று தொலைக்காட்சிகள் தொடங்கி வானொலி வரைக்கும் சந்தைக்கடை இரைச்சலாகவே மாறியுள்ளது. விளம்பரம் இல்லையேல் வியாபாரம் இல்லை என்பதால் புதுப்புது விளம்பரங்கள் தினந்தோறும் வந்து குடும்பத்தை நோகடித்துக் கொண்டிருக்கின்றது. ஆசைகளுக்கு எல்லையில்லை. எல்லையில்லா வானத்தைப் போல இங்கு எப்போதும் ஏக்கத்துடனே வாழ்ந்து கொண்டிருப்பதாலே எல்லாமே தேவையாய் தெரிகின்றது. குறிப்பிட்ட பொருட்களை வாங்கி வந்த பின்பு தான் "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை" கணக்காய் ஏமாளியாகின்றோம். முக்கால்வாசி விளம்பரங்களை அது வாங்கச் சொல்லும் பொருட்களைத் தனியாக இருக்கும் போது யோசித்துப் பாருங்கள். உங்களின் அவசிய தேவைகளை விட ஆடம்பர தேவைகளை அதிகப்படுத்துவதாக இருக்கும். அரிசிக்கு விளம்பரம் தொடங்கி அலங்கரிக்கப்பட்ட கக்கூஸ் ல் போய் உட்காருங்கள் வரைக்குமான அத்தனை விளம்பரங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும். எல்லா விதமான விளம்பரங்களும் நம்மை நோக்கி வந்து கொண்டேயிருக்கிறது. புத்தியை அடகு வைத்து விட்டு புதிதாய் வாங்க கற்றுக் கொண்டிருக்கின்றோம். இன்று தடுக்கி விழுந்தால் ஏதோவொரு நெடுந் தொடரில் தான் விழ வேண்டும். எவரும் விதிவிலக்கல்ல. கடந்த பத்தாண்டுகளில் விளம்பரத்தின் வருவாயைப் பெருக்க உதவிய அத்தனை பெண்களும் இன்னமும் ஆ.......வென்று பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நெஞ்சை நக்கி அழவைத்த அத்தனை நடிகர் நடிகைகளும் நகரின் முக்கிய பகுதியில் ஆடம்பர வீடு கட்டி அடுத்தடுத்த மாநிலங்களில் வாங்கிப் போட்டுள்ள சொத்தை பாதுகாக்க பறந்து கொண்டிருக்கிறார்கள். விளம்பர உலகத்திற்கு பெண்களே வரப்பிரசாதம். அழகுபடுத்த, மேலும் அழகுபடுத்த, சிவப்பு நிறமாக மாற்ற என்று பெண்களின் சிந்தனைகளைச் சிறகடிக்க வைப்பதால் கண்டதையும் தடவித் தடவி தாவாக்கட்டையில் புண் வந்தது தான் மிச்சமாக இருக்கிறது. இந்தப் பொருளை தந்தார்கள்? என்று நாம் எந்த நீதிமன்றத்திலும் ஏற முடியாது. நீதிமான்களும் ஏதோவொன்றை தடவிக் கொண்டிருக்கக்கூடும். அடுத்து என்ன வாங்கலாம்? என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். இன்றைய விளம்பரங்களே கற்று தந்து கொண்டிருக்கின்றது. இப்படித்தான் இன்றைய பெரும்பாலான விளம்பரங்கள் வீட்டின் படுக்கையறை வரைக்கும் வந்து பல்லைக் காட்டி வரவேற்கின்றது. பணக்காரனுக்கு எப்போதும் கவலையில்லை. பணத்தைச் செலவு செய்ய ஏதோவொரு காரணம் வேண்டும். ஏழைகளுக்கு அடுத்த வேளைச் சோற்றுக்கு ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். இடையில் மாட்டிக் கொண்ட திருவாளர் நடுத்தரவர்க்கம் தான் இந்த விளம்பரங்களினால் இருப்பதையும் இழந்து விட்டுக் கதறுகிறார்கள். கறை நல்லது என்பது விளம்பர வாசகம். கடன் கெட்டது என்பது எதார்த்தம். . தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு விளம்பரங்களும் ஏதோவொரு விதத்தில் நம்மைக் கவர்வதாக இருக்கிறது. தொலைக்காட்சியில் படங்களைப் பார்ப்பதை விட இடையில் வரும் விளம்பரங்களைப் பார்க்கவே விரும்புகின்றேன். ஆமாம் ரசிக்க மட்டுமே விரும்புகின்றேன். மிகக் குறுகிய நேரத்தில் சொல்லப்படும் அந்த விசயத்தை யோசித்தவர்களை பாராட்டத் தோன்றும். இன்று விளம்பர உலகம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. சவாலான வேலை. ஆனால் சரியான வருமானம். ஒரு விளம்பர நிறுவனம் சந்தையில் நிலையான இடத்தைப் பெற்று விட்டால் திரைப்பட பிரபல்யங்கள் கூட இவர்களின் வாசலில் நிற்பர். குறுகிய கால அறுவடை என்பதை விட அன்றைய உழைப்புக்கு அப்போதே பலன் என்பதால் பலருக்கும் ஏராளமான வருவாயைத் தந்து கொண்டிருக்கின்றது. தலைமுடி அலங்காரத்தைப் பாராட்டுவார் என்று எதிர்பார்த்த சிநேகாவிற்கு (நிஜ) கணவர் சம்பார் வாடையைச் சிலாகித்து பேசுவது. நீண்ட நாளாக வராமல் இருந்த பறவையை ரசித்துக் கொண்டிருந்த பெரியவர் பறவை போன்ற வாகனத்தில் ஏறியதும் இளம் பெண்களை டாவடிப்பது. புதிய சாக்லேட் சுவையைச் சுவைத்ததும் புதிய உலகத்தைக் காணும் ஆடவர் கூட்டம். ஸ்பிரைட் குடித்தவுடன் பெண் வண்டியில் வந்து உட்காருவது என்று விதவிதமான ரகங்கள். ஜோதிகா சொன்ன பிறகு தான் இங்குப் பலரும் இதயம் நல்லெண்ணெய் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதை நம்பத் தொடங்கினார். அட விளக்கெண்ய்களா? என்று நாம் பேச முடியாது? ஆனால் அத்தனை அபத்தங்களையும் மீறி இந்த விளம்பங்களை ரசிக்க முடிகின்றது. ஆனால் ரசிப்புடன் நின்று விட வேண்டும். பெப்ஸி விளம்பரத்தில் கோடிக்கணக்கான ரூபாயை பெற்றுக் கொண்டு நடிக்கும் அந்த பிரபல்யத்திடம் கேட்டுப்பாருங்க. தினமும் இந்த பெப்ஸியைத்தான் குடிப்பீர்களா? என்று. முகத்தை வேறு பக்கம் வைத்துக் கொண்டு சென்று விடுவார். சொந்த செலவில் எவராவது சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவார்களா? பெப்ஸியில் போட்ட இரும்பே கரையும் போது நமது குடல் என்னவாகும்? விளம்பரம் என்பது ஒரு விதமான மாயை. உங்களை மாய உலகில் சஞ்சாரம் செய்ய அழைத்துச் செல்லும் புஷ்பரக விமானம் போன்றது. ஆனால் கண்விழித்துப் பார்ப்பதற்குள் கனவு என்று தெரிந்துவிடும். பார்ப்பதற்கு அழகாய் இருக்கும் பல விசயங்களை பார்த்துக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அருகே சென்றால் அணுகுண்டு கணக்காய் நம் பையில் உள்ள பணத்தை காணாமல் போக்கி விடும். . ஆனால் இன்று உலகமே விளம்பரத்தை வைத்துத் தான் தான் வாங்க வேண்டிய பொருட்களையே தீர்மானிக்கின்றார்கள். அதிலும் பிராண்ட் என்ற சொல் இன்று மனிதர்களை யோசிக்க விடாமலேயே செய்துவிட்டது. எத்தனைப் பொருட்கள் சந்தையில் இருந்தாலும் குறிப்பிட்ட நிறுவனத்தைத் தாண்டி உங்களால் வேறு எந்த நிறுவனத்தையும் யோசிக்கவே முடியாது. காரணம் அவர்கள் உழைத்த விளம்பர உழைப்பின் பலன் இது. நுகர்வோர்களுக்கு ஆழத்தில் பதிய வைத்து விட்டால் காலம் முழுக்க அறுவடை தான். அனுபவிக்க நினைக்கும் மனிதனுக்குத் தோன்றும் குறுக்கு வழிகள் தான் இறுதியில் சிறைச்சாலையில் கொண்டு போய் சேர்க்கின்றது. [] 22 சாதிப் பொங்கலில் சமத்துவ சர்க்கரை. களம் 1 அவன் என் சொந்த ஊருக்கு அருகே உள்ள கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு ஒன்பதாம் வகுப்பு எங்கள் ஊரில் உள்ள மேல் நிலைப் பள்ளியில் வந்து சேர்ந்தான். அவன் அப்பா அம்மா இருவருமே அரசு ஊழியர்கள். இது தவிர அவர்களுக்கு நிலங்கள் தோட்டங்கள் என்று அபரிமிதமான பணம் இருந்தது. ஏறக்குறையச் சமூக அந்தஸ்தில் இருவரும் ஒரே நிலையில் இருந்தோம். பள்ளிக்கூட பழக்கம் என்றபோதிலும் குறுகிய காலத்தில் மிக நெருக்கமாகப் பழகி என்னைத் தேடுபவர்கள் அவன் வீட்டிலும், அவனைத் தேடுபவர்கள் என் வீட்டிலும் வந்து பார்க்கும் அளவிற்கு ஈருடல் ஒருயிராக பழகினோம். பத்தாம் வகுப்பில் நான் பெற்ற மதிப்பெண்கள் 65 சதவிகிதம். அவன் பெற்றது 66 சதவிகிதம். அருகே உள்ள அழகப்பா தொழில் நுட்ப கல்லூரியில் எங்கள் செட்டில் என்னுடன் 15 பேர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அப்போது பாலிடெக்னிக் என்றால் மிக உயர்ந்த கௌரவம் சார்ந்த படிப்பு. ஆனால் எங்களுடன் படித்த முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவனுக்கு மட்டும் அங்கே இடம் கிடைத்தது. அவன் பெற்ற மதிப்பெண்கள் 440. எனக்கு நிலைமை புரிந்து விட்டது. டக்கென்று அதே பள்ளியில் பதினோராம் வகுப்பில் நுழைந்து இயல்புக்கு வந்து விட்டேன். ஆனால் இவனைக் காணவில்லை. நானும் மறந்து விட்டேன். எப்போதும் போல மாலை வேளையில் எங்கள் வீட்டுக்கருகே உள்ள பாலத்தில் கூட்டாளிகளோடு உட்கார்ந்திருந்த போது காக்கி பேண்ட் காக்கி சட்டை, புதுச் சைக்கிள், சைக்கிளின் உள்ளே பல கருவிகள் என்று வைத்து சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தவன் நாங்கள் உட்கார்ந்திருந்த பாலத்தின் மேல் ஒற்றைக் காலை வைத்து ஒரு வில்லன் சிரிப்பு சிரிக்க எனக்கு வியப்பாக இருந்தது. எனக்குப் புரிந்து விட்டது. இவனுக்கும் பாலிடெக்னிக்கில் சீட் கிடைத்து விட்டது என்று தெரிந்து கொண்டு வாழ்த்து சொன்னேன். அவன் மட்டுமல்ல. அவனது தம்பிக்கும் அடுத்த வருடம் அதே கல்லூரியில் சீட் கிடைக்க என் மனதிற்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. எனக்கு வேறுவிதமாக அப்போது யோசிக்கத் தெரியவில்லை. எப்படியோ திறமையின் அடிப்படையில் கிடைத்து இருக்கும் போல என்று மனதில் வைத்திருந்தேன். இதே போல அவர்கள் குடும்பத்தில் அவனது தங்கையும் தொடர்ந்து வந்த வருடத்தில் +2 முடித்து விட்டு பி.ஈ சீட்டு கிடைத்து படித்துக் கொண்டு இருந்தார். இவர்களது தந்தை மிக மிகக் கண்டிப்பானவர். நான் முதல் முதலாக அவர்கள் வீட்டுக்குச் சென்ற போது எங்கள் குடும்பத்தை நன்றாகத் தெரிந்த காரணத்தால் தான் வீட்டுக்குள் எங்கே வேண்டுமானாலும் செல்ல அனுமதி கிடைத்தது. குறிப்பிட்ட சிலர் மட்டும் வீட்டுக்கு வர முடியும். பெரும்பாலும் எப்போதும் போல அருகே இருந்த புளியந்தோப்பில் தான் மற்ற அத்தனை பேர்களும் கூடுவோம். காரணம் அவன் அப்பா டக்கென்று எவராக இருந்தாலும் கை நீட்டி விடும் பழக்கம் உள்ளவர். அத்துடன் கொஞ்சம் கூடச் சங்கடப்படாமல் மூஞ்சிக்கே நேராக நாகரிகமின்றி எதை வேண்டுமானாலும் பேசி விடுவார். அவனது தங்கையை பி ஈ படிக்கும் கல்லூரி விடுதியிலேயே சேர்த்து இருந்தார்கள். வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. நான் கல்லூரி முடித்து ஊரை விட்டு வெளியே வந்து விட்டேன். ஊருக்குச் செல்லும் போது அவனைப் பார்க்கச் சென்ற போதிலும் படித்த படிப்பை அவனும் அவன் தம்பியும் முழுமையாக முடிக்க முடியாமல் வெளியே வந்து சொந்த தொழில் தான் செய்து கொண்டிருந்தார்கள். காரணம் மனப்பாடம் செய்து பள்ளியில் வாங்கிய மதிப்பெண்கள் கல்லூரியில் எடுபடவில்லை. இன்று வரைக்கும் பாக்கி உள்ள பாடங்களை அவர்களால் முடிக்கவில்லை. இது நமக்கு முக்கியமல்ல. அவனது தங்கையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தான் எனக்குப் பல உண்மைகளைப் பின்னால் புரியவைத்தது. கல்லூரியில் படித்த தங்கை அங்கே உடன் படித்த ஒருவரைக் காதல் செய்து கொண்டிருக்கும் விசயங்கள் வீட்டுக்கு வந்து சேர வீடே கொந்தளித்துக் கொண்டிருந்தது. காரணம் அந்தப் பையன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். இது அரசல் புரசலாக எங்கள் வீட்டுக்குத் தகவல் வர என்னிடம் கேட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அன்று பெரிதான சிந்தனைகளோ சமூக வேறுபாடுகள் குறித்த சிந்தனைகளோ அன்று யோசிக்கத் தெரியவில்லை. ஆனால் நண்பன் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஒருவிதமான அசாதாரணமான சூழ்நிலை அங்கே நிலவுவதைப் பலமுறை கவனித்து இருக்கின்றேன். திருப்பூரில் இருந்து ஊருக்குச் சென்றால் கட்டாயம் அவன் வீட்டுக்குச் செல்லும் பழக்கத்தை உடைய எனக்கு ஒவ்வொரு முறையும் அவன் வீட்டுக்குச் சென்றவுடன் என்னை வேகமாக அழைத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள புளியந்தோப்பிற்கு அழைத்து வந்து விடுவான். எனக்குப் புரியவில்லை. எப்போதும் அவன் அப்பா அம்மா என்னுடன் நன்றாகப் பேசுவார்கள். அவர்கள் என்னைத் தவிர்ப்பதும் கண்கூடாகத் தெரிந்தது. ஒரு நாள் உண்மை வெளியே வந்தது. நான் சென்ற போதெல்லாம் அங்கே ஒரு அறையில் அவன் தங்கையை அடைத்து வைத்திருந்தது எனக்குப் பின்னாளில் தான் தெரிந்தது. அடித்துத் துவைத்திருந்தார்கள். குடும்பத்தினரால் தங்கையின் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை. கடைசியாகத் தப்பு செய்ய மாட்டேன் என்று உறுதி மொழி சொல்லிவிட்டு பரிட்சை மட்டும் எழுதிவிட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவர் பரிட்சை எழுதாமல் இருவரும் சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். அந்தப் பையனின் அப்பா தாசில்தார் பணியில் இருந்த காரணத்தால் இவர்களால் அதற்கு மேல் ஒன்று செய்ய முடியவில்லை. தலை முழுகி விட்டோம் என்று அறிவித்து விட்டார்கள். அதிகமான சொத்துக்கள் இருப்பதால் தங்கை மூலம் பின்னால் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதால் அது சார்ந்த பல நடவடிக்கைகளையும் செய்தார்கள். குறிப்பாக என் நண்பனின் தம்பி அந்த விசயத்தில் அதி தீவிரமாக செயல்பட்டான். அவசரமாகக் குடும்பத்தில் என் நண்பனுக்கும் அவன் தம்பிக்கும் ஒரே நாளில் திருமணம் நடந்தது. வசதியான குடும்பம், வந்த பெண்களும் அரசுப்பணியில் இருப்பவர்கள். . காலப்போக்கில் என் நண்பன் மட்டும் தன் தங்கையோடு மெதுவாக வீட்டுக்குத் தெரியாமல் தொடர்பை உருவாக்கி வைத்திருந்தான். அதுவும் வீட்டுக்குத் தெரியவர தம்பி மூலம் ஏராளமான பிரச்சனைகள். நண்பன் வீட்டில் உள்ளவர்களின் தன்மைகளை மாற்ற முடியாமல் பட்டும் படாமல் இன்றும் தங்கையோடு தொடர்பில் இருக்கின்றான். இன்று நண்பனின் தங்கையும், அவர் காதலித்த நபரும் முழுமையாகப் படித்து முடித்து நல்ல உயர்ந்த நிலையில் உள்ள பதவியில் இருக்கின்றார்கள். அவர்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று அரசாங்கத்தில் சான்றிதழ் வாங்கி அவர்களும் இன்று மருத்துவ துறையிலும், கட்டிட வடிவமைப்பாளர் துறையிலும் கலக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இன்று வரையிலும் நண்பனின் தங்கைக்கு குடும்பத்தோடு தொடர்பே இல்லாமல் போய்விட்டது. ஆனால் எப்படியாவது தொடர்பை உருவாக்கிக் கொண்டு விடலாம் என்று நண்பனின் தங்கையும் ஏதோவொரு வகையில் போராடிக் கொண்டு இருக்கின்றார். இதில் என்ன சிறப்பு என்று உங்களுக்குத் தோன்ற வேண்டுமே? தனது சாதீயத்தை இன்று வரைக்கும் உயர்த்திப் பிடிக்கும் அவன் அப்பா தனது மூன்று குழந்தைகளுக்கும் தொடக்கத்தில் செய்த ஒரு காரியம் தான் முக்கியமானது. ஒவ்வொரு சாதியிலும் பல பிரிவுகள் உண்டு. அதிலும் நுணுக்கங்கள் வரையறை உண்டு. ஒரு சின்ன உதாரணம் மூலம் இதை விளக்குகின்றேன். நாயக்கர், நாயுடு என்றால் நமக்குத் தெரியும். ஆனால் இதற்குள்ளும் பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவும் ஒரு தனித்தீவுகள். இதே போல ஒவ்வொரு சாதியிலும் குலம், கோத்திரம் என்கிறார்கள். நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றால் பொதுவாக செட்டியார் என்ற ஒரு பிரிவில் வந்து விடுகின்றது. ஆனால் எந்த சாமியை நீங்க கும்புடுறீங்க என்ற கிளைநதிகள் பிரிகின்றது. இது போக செட்டியார் என்றால் அதிலும் பல செட்டியார்கள் உள்ளன. இதை இங்கே குறிப்பிடக் காரணம் நண்பனின் அப்பா செய்த காரியம் நாயக்கர் என்ற வார்த்தை முன்னால் காட்டு என்று சேர்த்து காட்டு நாயக்கராக மாற்றி விட அது எஸ்டி என்ற பிரிவுக்கு சென்று விட அரசாங்கத்தின் கதவு அகல திறந்து விடுகின்றது. இப்படிச் செய்து தான் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற மூவரையும் கல்லூரியில் சேர்த்து இருக்கின்றார். . ஏறக்குறைய பத்து வருடங்கள் கழித்து தான் இதில் சொல்லப்பட்ட பல விசயங்கள் என் காதுக்கு வந்தது. இது குறித்து அவன் சொன்னதும் இல்லை. நானும் கேட்டுக் கொண்டதும் இல்லை. *** களம் 2 அவனும் என் நெருங்கிய நண்பன் தான். ஒன்பது, பத்தாம் வகுப்பில் முதல் பெஞ்சில் உள்ள நான்கு பேர்களில் இவனும் என்னுடன் தான் இருந்தான். இவனும் அருகே உள்ள கிராமத்தில் இருந்து தான் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தான். அப்பா கோவில் குருக்கள் வேலையில் இருந்தார். கிராமத்துக் கோவில் என்பதால் வருமானம் மிக மிகக் குறைவு. அவன் உடைகள், நடவடிக்கை என்று அத்தனையிலும் அவனின் ஏழ்மை நன்றாகவே தெரியும். ஆனால் எதையும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டான். முற்பட்ட வகுப்பில் இருந்தாலும் எங்களுக்கு அத்தனை கெட்ட காரியங்களையும் கற்றுத் தந்தவன். ஆனால் வாய்ச் சொல்லில் மட்டும் தான் வீரன். எந்தத் தவறான பழக்கம் பக்கமும் செல்ல மாட்டான். படிப்பில் சுமார் ரகம் தான். குடும்ப சூழ்நிலையின் காரணமாக பத்தாம் வகுப்பு வன் தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள ஐடிஐ யில் போய்ச் சேர்ந்தான். பிட்டர் துறையில் படிப்பதாக சொன்னான். பல காலம் அவனைப் பார்க்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் காரைக்குடியில் உள்ள செக்காலை பகுதியில் ஒரு பேக்கரி கடையின் உள்ளே செல்ல காரை ஓரமாக நிறுத்திவிட்டு குழந்தைகளை உள்ளே அழைத்துக் கொண்டு சென்ற போது ஒருவர் வந்து என்னை அடையாளம் தெரிகின்றதா? என்று என்னிடம் கேட்க குழப்பத்துடன் தெரியவில்லையே என்றேன். பெயர் சொல்லி நான் தாண்டா? என்றான். திகைத்துப் போய்விட்டேன். சமவயது உள்ளவன் ஏறக்குறைய அறுபது வயது தோற்றத்தை பெற்று இருந்தான். அருகில் இருந்த பேரூந்து நிறுத்தத்தில் அவனது குடும்பமும் இருந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு கடைக்கு உள்ளே மொத்தமாகச் சென்று அவனுடன் ஏறக்குறைய ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது இப்போதும் மனதில் பாரமாக உள்ளது. நண்பன் ஆள் நோஞ்சானாக இருப்பானே தவிர வேலைகளுக்கு அஞ்சும் ஆளில்லை. ஐடிஐ யில் பிட்டர் முடித்து விட்டு முறைப்படி ஒரு வருடம் பயிற்சி எல்லாம் எடுத்து விட்டு நிறுவனங்களில் வேலைக் கேட்டு செல்லும் போது அவனை ஒவ்வொரு வித்தியாசமான பிரச்சனைகளும் தாக்கி தடுமாற வைத்துள்ளது. ஏம்பா நீயெல்லாம் இந்த வேலைக்கு வர்றே? உங்களுங்க இதற்கெல்லாம் லாயிக்கு பட மாட்டாங்கப்பா? என்று ஒவ்வொருவரும் அலைக்கழிக்கத் தொடங்கியுள்ளனர். அவனது பள்ளிக்கூட மாற்றுச் சான்றிதழில் உள்ள சாதிப் பெயர் காட்டிக் கொடுக்க அதைக் காட்டாமல் அனுபவ அடிப்படையில் கொஞ்சம் சில இடங்களில் வேலை பார்த்துள்ளான். இவனும் விடாமல் பல கையில் முயற்சித்துக் கொண்டிருக்க, வேலைத் தொடங்க உள்ளே நுழைந்தால் சட்டையை கழட்டி விட்டு வேறு சட்டை போடத் தொடங்கும் போது இவன் உடம்பில் இருந்த பூணூல் பார்த்து அங்கேயிருப்பவர்கள் ஆராய்ச்சியைத் தொடங்குவார்கள். கடைசியாக இவனை ஒதுக்கத் தொடங்க ஒவ்வொரு விதமான பிரச்சனைகளும் உருவாகக் குறிப்பிட்ட கால கட்டத்திற்கு மேல் போராட முடியாமல் ஊரில் உள்ள கோவில் வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளான். திருமணம் ஆகி குழந்தைகள் வர மேலும் பொருளாதார சிக்கல்கள் விரிவடையத் திருமணத்திற்கு காத்திருக்கும் தங்கைகள் என்று அழுத்தம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. இடையே தொடர்ச்சியாக அப்பா, அம்மா இருவருமே இறந்து விட நான்கு பக்க கணைகளும் ஒரே சமயத்தில் தாக்குவதைப் போல திக்குமுக்காடத்தில் மாட்டிக் கொண்டான். இப்போது அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை இறப்பவர்களுக்குக் காரியம் செய்யும் வேலைகள். "சுற்றியுள்ள கிராமத்தில் யாராவது இறந்தால் தான் எங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்" என்று அவன் சொன்ன போது திருப்பூர் திரும்பும் வரைக்கும் என் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. *** களம் 3 வீட்டில் குழந்தைகள் தூங்கும் போது தான் அவர்களது உரையாடல் தொடங்கும். மூவரில் ஒருவர் படுத்தவுடன் தூங்கி விடுவார். இருவர் சரியான வாயடிகள். அதிலும் ஒருவருக்குப் பேச்சு முடிவதற்குள் கை நீண்டு விடும். உள்ளே அலறல் சப்தம் கேட்பதை நான் கண்டு கொள்ளாமல் கணினியில் என் வேலையில் கவனம் செலுத்தி பார்த்துக் கொண்டிருப்பேன். உள்ளே சமையறையில் இரவின் இறுதி வேலையில் இருக்கும் மனைவி ஓடிவர கப்சிப் பென்று அமைதி நிலவும். அதுவும் கொஞ்ச நேரம் தான். மறுபடியும் சமாதானம் ஆகி அவர்களின் உரையாடல் மீண்டும் தொடங்கும். நான் கவனித்துக் கொண்டே இருப்பேன். தலையிடுவது இல்லை. எப்போதும் போல அன்று இருவரும் பேசிக் கொண்டிருந்தவர்கள் கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது நான் பார்த்துக் கொண்டிருந்த என் வேலையை நிறுத்தி விட்டு அவர்களின் உரையாடலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று இருவரும் வந்து ஒரே சமயத்தில் என்னிடம் ஒற்றுமையாக வந்து நின்றார்கள். அல்லா என்றால் யாருப்பா? என்று ஒருவர் கேட்க அதுவும் சாமி தான் என்றேன். அப்புறம் எதற்கு ஏசு என்று மற்றொருவர் கேட்க அதுவும் இன்னோரு சாமி தான் என்றேன். அப்ப நாம் இந்து மதத்திலே ஏன் இத்தனை சாமிகள்? என்று விடாமல் இருவரும் ஒரே சமயத்தில் கேட்க அவங்க அவங்களுக்கு எந்த உருவம் பிடிக்கிறதோ அதை வைத்துக் கொண்டு கும்பிடுகின்றார்கள் என்று பொத்தாம் பொதுவாக அடித்து விட்டேன். அப்புறம் எதற்கு நமது மனசு தான் முதல் சாமியென்று நீங்க சொல்கிறீர்கள்? என்று மேற்கொண்டு அவர்கள் கேள்வி எழுப்ப இருந்தவர்கள் அம்மாவைப் பார்த்ததும் உள்ளே சென்று விட்டார்கள். கடந்த இரண்டு வருடங்களாகத்தான் மூவருக்கும் மதங்கள் குறித்து அதன் வித்தியாயசங்கள் குறித்து புரியத் தொடங்கியுள்ளது. இருபது வயதுக்கு மேல் எனக்கு உருவான புரிதல்கள் இவர்களுக்கு பத்து வயதில் தொடங்கியுள்ளது. வகுப்பறையில் மாற்று மத தோழியர்கள் அவர்களது பண்டிகை தினத்தன்று கொண்டு வரும் தின்பண்டங்கள், அவர்களுடன் உரையாடும் விதம் போன்றவைகள் இந்த மத வேறுபாடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்து கொண்டு இருக்கின்றது. நல்லவேளையாக இவர்கள் படிக்கும் பள்ளியில் இது போன்ற மத மாச்சரியங்கள் உள்ள வேறுபாடுகளை ஊக்குவிப்பதில்லை என்ற போதிலும் ஏதோவொரு வகையில் இவர்களின் அனுபவங்கள் இவர்களுக்குள் இருக்கும் மதம் சார்ந்த கேள்விகளுக்குப் பதில் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. இந்த நிமிடம் வரைக்கும் இவர்களுக்குச் சாதி என்ற சொல் அறிமுகம் ஆகவில்லை என்பது கூடுதல் தகவல். கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளியில் சாதிச் சான்றிதழ் வேண்டும் என்று இவர்களது டைரியில் எழுதி எழுதி அனுப்பிய போதிலும் நான் இன்று வரையிலும் கொண்டு போய் கொடுக்கவில்லை. வகுப்பாசிரியர் நேரிடையாக வரவழைத்தும் என்னைக் கேட்டார். "என்ன சார், யார் யாரோ வந்து கொடுத்துட்டு போயிட்டாங்க. உங்களுக்கென்ன சார்?" என்று வரையிலும் நைச்சியமாகப் பேசிய போதும் கூட இதுவரையிலும் கொடுக்க வில்லை. அவர் யார் யாரோ என்று கேட்டதற்குப் பின் சில தேவையற்ற சமாச்சாரங்கள் உள்ளது. அது அவரது பார்வையில் உள்ள வித்தியாசங்கள். எங்கள் குடும்ப பின்புலம் பற்றி வகுப்பாசிரியருக்கு தெரியும் என்பதால் கூடுதல் உரிமையுடன் பேசிய போதும் பள்ளி மாறும் போது தானே தேவைப்படும். அது வரையிலும் பொறுத்திருங்கள் என்று சிரித்து சமாளித்து வந்து விடுவேன். வீட்டில் கத்திப் பார்த்து காரியம் ஆகவில்லை என்ற நிலையில் இப்போது கத்துவதை குறைத்து கெஞ்சத் தொடங்கியுள்ளார். "ஏதாவது பிரச்சனையின்னு வந்தா நான் தான் பொறுப்பு. கவலைப்படாதே " என்று சொன்னதற்குப் பிறகு இப்போது அந்த விசயமாக என்னை நச்சரிப்பதில்லை. எத்தனைக் காலம் இப்படி தள்ளிப் போட முடியும்? என்பது பெரிய கேள்விக்குறி என்ற போதிலும் எனக்குள்ளும் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கத்தான் செய்கின்றது. முதல்வன் படத்தில் வருவதைப் போல யாரோ ஒரு புண்ணியவான் நான்கு என்று பிரித்து வைத்து இந்த சாதிப் பெயர்கள் வெளியே தெரியாமல் உருவாக்க வருவானா என்ற நடைமுறையில் சாத்தியப்படாத பல கனவுகளை வைத்துத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எப்போதும் என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகம் விதித்துள்ள சின்னச் சின்ன கோடுகளைத் தாண்டுவதையும், அழிப்பதையும் என் வழக்கமாக வைத்துள்ளேன். சில எல்லைகளை முடிந்த வரைக்கும் மீறிப் பார்ப்பதுமுண்டு. . இது எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆன்மீகம் என்பதை உண்மையாகவே மிக அழகாக நெருங்கிப் பார்த்த காலமும் உண்டு. அதை விட்டு விலகி நிற்கும் காலத்திற்குள்ளும் வந்துள்ளேன். எது குறித்தும் விமர்சிப்பதில்லை. ஒவ்வொன்றும் அவரவர் மனம் சார்ந்த, அனுபவங்கள் சார்ந்த படிப்பினைகள் என்பதில் கவனமாக இருக்கின்றேன். ஆனால் என் முன் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவாக்கி விட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றேன். அது என் கருத்தாகத்தான் இருக்கும். மற்றவர்களுக்குப் பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. பத்தாயிரம் புத்தகங்கள் தராத விசயங்கள் நாம் வாழ்வில் நடக்கும் ஒரு சிறிய அனுபவம் தந்து விடும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். எந்த நிலையிலும் சலனமற்ற மனோநிலை தான் தேவை என்பதை அடிப்படை கருத்தாக வைத்துள்ளேன். இது சாத்தியப்படுமா? என்றால் முயற்சித்துப் பார்க்கலாமே? என்பேன். எனது திருப்பூர் நிறுவன அனுபவங்களில் இங்குள்ள எந்த நிறுவனமும் இஸ்லாமியர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அப்படியே இருந்த போதிலும் அடிமட்ட வேலைகளில் மிக மிகக் குறைவான சதவிகிதத்தில் தான் இருக்கின்றார்கள். என்னால் பொறுக்க முடியாமல் ஒரு முறை ஒரு முதலாளியிடம் முறையிட்ட போது "அவர்கள் வேறு நாம் வேறு" என்று பொதுவாக முடித்து வைத்து விட்டார். விளம்பரங்கள் கொடுத்து நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரும் போதே இந்த வடிகட்டல் கண்களுக்குத் தெரியாமல் நடத்தப்படுகின்றது என்பதும் உண்மை. கிறிஸ்துவ சமூகத்தில் உள்ளவர்களுக்குப் பெரிய அளவுக்குப் பிரச்சனைகள் இல்லாத போதும் இன்றும் நதி மூலம் ரிஷி மூலம் ஆராய்வதில் கவனமாக இருக்கின்றார்கள். பெரிய பதவிகளில் தனது சமூகம் சார்ந்தவர்கள், உறவுகளை வைத்துக் கொள்வதில் தான் அனைவரும் கவனமாக இருக்கின்றார்கள். ஆனால் இந்த இரண்டு சமூகம் மொத்தமாகப் பார்க்கும் போது ஒதுங்கித்தான் இருக்கின்றது. சமூக நீரோட்டத்தில் அதிக அளவு ஒன்றிணைய முடியவில்லை. ஆனால் தொழிலாளர் வர்க்கத்தில் இந்தப் பாகுபாடு இல்லை. மற்ற இடங்களில் எப்படியோ? இங்கு நிச்சயம் அந்த வேறுபாடுகள் இல்லை. மைனாரிட்டி சமூகத்திற்கு எத்தனையோ நலத்திட்டங்கள் இருந்த போதிலும் அது குறிப்பிட்ட சிலரின் பைகளுக்குத்தான் இன்று வரை சென்று கொண்டு இருக்கின்றது. இட ஒதுக்கீடு மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் மேலே வந்து கொண்டு இருப்பது தெரியவில்லையா என்று கேட்டால் அதுவும் முறையற்ற வழியில் பலன் அடைபவர்களைத்தான் போய்ச் சேர்ந்து கொண்டு இருக்கின்றது. இங்கே எதுவும் பேசமுடியாது. பேசவும் கூடாது. பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் பரஸ்பரம் அவநம்பிக்கைகளைச் சுமந்தபடியே தான் இருக்கின்றார்கள். வெளியே காட்ட முடியாத வன்மத்தைத் துப்ப முடியாமல் தடுமாறிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். பல இடங்களில் மௌன சாட்சியாக ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். ஆனால் எந்த நிலையில் எனக்கு இந்தச் சாதீயம் இதுவரையிலும் தீண்டியதில்லை. ஆனால் தீண்டி பாதிக்கப்படுவார்களுக்கு அலுவலக ரீதியாக என் எல்லை வரைக்கும் சென்று உதவிக் கொண்டு தான் இருக்கின்றேன். "பெரியார் தான் என் உண்மையான கடவுள்" என்று சொல்கின்ற உங்கள் தொடர்பில் உள்ள நண்பர்களை,பிரபல்யங்களை இப்போது உங்கள் நினைவில் கொண்டு வாருங்கள். அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அத்தனை பேர்களும் திவ்யமாக சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பார்கள். காரணம் கேட்டால் அது அவர்களது தனிப்பட்ட உரிமை. இது என் தனிப்பட்ட கொள்கை என்பார்கள். வீட்டையே திருத்த முடியாதவன் ஏன் நாட்டைப் பற்றி மதத்தைப் பற்றி சாதியைப் பற்றி பேச வேண்டும்? எழுத வேண்டும்? மதவாத கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட பா.ஜ.க. கட்சியை இங்குள்ள அத்தனை கட்சிகளும் ஆதரித்ததோடு அமைச்சரவையிலும் இடம் பிடித்து பல புதிய தத்துவங்கள் சொன்னார்கள். அவர்கள் தான் இன்று நரேந்திர மோடியை வேறுவிதமாகச் சொல்கின்றார்கள். கொலை செய்தவனை விடக் கொலைக்கு உடந்தையாக இருந்தவனையும் நமது இ.பி.கோ சட்டம் கடுமையான பார்வையில் தான் பார்க்கின்றது. ஆனால் நாம் அனைத்தையும் மறந்து விடத் தயாராக இருப்பதால் கட்சிகளின் கொள்கை என்பது தேர்தல் அறிக்கைக்காக மட்டுமே என்கிற ரீதியில் மாற்றம் பெற்றுள்ளது. ஆதிக்க சாதியினர் இனச் சுத்திகரிப்பு செய்வது போல இந்த அளவுக்கு அக்கிரமம் செய்யலாமா? என்று கேள்வி வரும் போது மற்றொரு கேள்வி உங்களுக்கு வர வேண்டுமே? ஏன் திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பு உருவாக்கலாமே? ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், சீர்மரபினர் என்று சமூகத்தால் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட அத்தனை பேர்களை ஒன்று திரட்டி "பாருங்கப்பா இனிமேலாவது நாம அத்தனை பேர்களும் ஒற்றுமையாக இருந்த சமூக நீதியைப் பெற வேண்டும்" என்று சொல்ல வேண்டாமா? செய்ய முடியுமா? இல்லை இரண்டு பக்கமும் இவர்களைச் செய்யத்தான் விடுவார்களா? இருவரின் தலையும் அவர்கள் உடம்பில் இருக்காது. அங்கேயும் பிரச்சனை. அதற்குள்ளும் ஆயிரெத்தெட்டு பிரிவினைகள். ஒருவரைக் கண்டால் மற்றொருவருக்கு ஆகாது. எனக்குக் கீழே தான் நீ என்று மாற்றி மாற்றி உள்ளூர பொங்கும் வன்மத்தின் வெளிப்பாடு இங்கே மட்டுமல்ல ஒவ்வொரு சாதிக்குள்ளும், அதன் கிளைப்பிரிவுக்குள்ளும் பரந்து பட்டு நிற்கின்றது. இது இன்று நேற்றல்ல. பூட்டனுக்கு பூட்டடென்னல்லாம் உழன்று போய் போராட முடியாமல் மண்ணோடு மண்ணாகிப் போனவர்களை சரித்திரங்களைச் சுமந்து தான் இந்தப் பூமி இன்றும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அது அந்தச் சமயத்தில் நமக்குக் கிடைக்கும் ஒரு விதமான குரூர மனத்திருப்தி. அத்தோடு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து விட்டு மறுபடியும் இந்த நிஜ சமூகத்தில் உலவும் போது உங்களை ஏதோவொரு வகையில் இந்தச் சாதீயம் தாக்கத்தான் செய்யும். அவரவர் தங்கை அக்காக்களை ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் திருமணம் செய்து கொடுப்போம் என்று அவரவர் குடும்பத்தில் போய் சொல்லிப் பாருங்கள்? என்ன நடக்கும்.? முதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருப்பவர்களே பணபலம் பார்க்காமல் மன பலம் பார்த்து திருமணங்கள் நடந்தாலே மாற்றத்தின் முதல் படியில் காலடி வைத்தது போலவே இருக்குமே? ஆனாலும் இங்கே ஏதோவொரு வகையில் மாறுதல்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. மன உறுதி உள்ளவர்கள் எங்கேயோ ஒரு பக்கம் தங்களால் முடிந்த அளவுக்கு உடைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் அது சிறுபுள்ளி. அதுவும் கரும்புள்ளியாகத்தான் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மாறிவிடுகின்றது. காரணம் இங்கே தனி மனிதனுக்குச் சமூகம் தரும் அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மிகத் தைரியமாக கலப்பு திருமணங்கள் செய்து கொண்டு இன்றும் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்ய முடியாமல் தடுமாறும் எத்தனையோ நபர்களை நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். மாற்று மதங்களைச் சமப்படுத்தி வாழ்வில் ஜெயித்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் இன்றும் பலரும் என் பார்வையில் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் அது வேறொரு பிரச்சனைகளையும் உருவாக்கத்தான் செய்கின்றது. என் மதத்தில் தான் பெண் (அ) மாப்பிள்ளை பார்க்க வேண்டும் போன்றதொரு வித்தியாசமான பிரச்சனைகளை தலையெடுக்கின்றது. அப்படியென்றால் இந்த அளவுக்கு நாகரிகம் வளர்ந்துள்ளதே? இன்னுமா மாறவில்லை என்று கேள்வி வர வேண்டுமே? ஆமாம் உடைகளில், உணவுகளில், அன்றாட பழக்கவழக்கங்களில் போலித்தனமான நாகரிகம் வளர்ந்துள்ளது. மனதளவில் எந்த எந்த மாறுதலும் இல்லை. முன்பு கல்யாண புரோக்கர் ஊருக்கு ஊர் அலைந்து ஆட்கள் பிடித்து வந்து கொண்டு இருந்தார். இன்று அந்த வேலையை மேட்ரிமோனியல் என்ற பெயரில் பத்திரிக்கையும், கணினி வழியேயும் நாகரிக உலகம் முன்னேறியுள்ளது. எல்லோருக்கும் ஆசைகள் உடம்பு முழுக்க இருக்கிறது. சாதி இல்லாத சமூகம் உருவாக வேண்டும். இந்தச் சாதீயம் அழிய வேண்டும். மனிதர்களை மனிதராக மதிக்க வேண்டும் என்று. ஆனால் இது அத்தனையும் நமக்கான ஆசைகள். இதற்கான முதல் படியில் நாம் கால் வைக்க விரும்புவதில்லை என்பது தான் உண்மை. காரணம் மாற்றங்கள் என்பது வெளியே நடக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் விரும்புகின்றோம். நாம் தான் மாற்றத்தை உருவாக்க வேண்டும். நம் குடும்பத்தில் இருந்து தான் அந்த மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்று கனவில் கூட நினைப்பது இல்லை. காரணம் இப்போது மாற்றங்கள் என்பது நொடிப்பொழுதில் தான் நடந்து கொண்டு இருக்கின்றது. நேற்று என்ன நடந்தது என்பது பற்றி யோசிப்பதற்குள் அதற்குப் பின்னால் பத்து மாற்றங்கள் நம்மை அடித்துக் கொண்டு சென்று விடுகின்றது. நம்மைப் புறந்தள்ளி விடுவார்களோ? காலத்தோடு ஒட்டி ஒழுகாதவன் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்ற அச்சமும், தன் இருப்பு குறித்த பயமும் ஒவ்வொருக்குள்ளும் நெருஞ்சி முள் போல குத்திக் கொண்டே இருக்கின்றது. இரத்தத்தை துடைத்துக் கொண்டே நாமும் வெட்கம் இல்லாமல் எதை எதையோ நோக்கி முன்னேறிக் கொண்டேயிருக்கின்றோம். அடிமைத்தனம் ஆதிக்க மனப்பான்மையை வளர்த்தது. ஆதிக்கம் தொடங்கிய போது தன் சுயநலம் மேலோங்கி நின்றது. சுயநலம் பெருகப் பெருக சக மனிதனை கேவலப் பொருளாக பார்க்க நாகரிகம் என்ற வார்த்தை நமக்குப் பலவற்றையும் கற்றுக் கொடுத்தது. ஆனால் இந்த படிப்படியான வளர்ச்சியில் ஒவ்வொரு இடத்திலும் வன்மத்தோடு கலந்த பொறாமைகள் நம்மோடு தொடந்து கொண்டேயிருப்பதால் மனிதன் என்ற போர்வையில் நாட்டில் வாழும் மிருகம் போலத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இதுவே தான் ஒரே சாதி ஆனால் பொருளாதார ரீதியாகச் சம அந்தஸ்து என்கிற அளவில் மாற்றம் பெற்றுள்ளது. பணபலத்தில் சமமாக இல்லாதவன் ஒரே சாதியாக இருந்த போதிலும் கூட அவனும் தள்ளி நிற்க வேண்டியது தான். சமூகத்தில் ஒவ்வொரு கால கட்டத்திலும் நடக்கும் மாற்றங்களை வந்து போகும் தலைவர்கள் உருவாக்குவதில்லை. நாம் மனதில் உள்ளே வைத்திருப்பதை, விரும்புவதைச் செய்து காட்டும் காரியவாதிகளாகத்தான் அவர்கள் இருக்கின்றார்கள். [] 23 ஆன்மீகம் என்பது யாதெனில்? இன்று வரையிலும் யாரோ, ஏதோவொரு சமயத்தில் பேசி என்னை கோபப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள்? இருபது வருட திருப்பூர் வாழ்க்கையில் நேற்று வரையிலும் புதிதாகச் சந்திக்கும் எவருக்கும் காரைக்குடி என்ற ஊர் பெரிய அளவுக்குத் தெரிந்த ஊராக இல்லையே என்ற ஆதங்கம் எப்போதும் எனக்குள் உண்டு. டக்கென்று காரைக்கால் தானே? என்பார்கள். குறிப்பாக திருப்பூர் முதலாளிகளுக்குப் பிள்ளையார்பட்டி தெரிந்த அளவுக்குக் காரைக்குடி மேல் அத்தனை ஈர்ப்பு இருந்ததில்லை. அப்படியா? என்று போற போக்கில் இழுத்தபடியே சென்று விடுவார்கள். ரொம்ப நெருங்கிக் கேட்டால் அந்தப் பக்கம் சாப்பாடு நல்லாயிருக்கும்லே? என்று வெறுப்பேற்றுவார்கள். இதே போலத்தான் ஆசான் பயணத்திட்டம் வகுத்துக் கிளம்பிய சமயத்தில் திருவாவாடுதுறை என்ற பெயரை ஆசான் சொன்னபோது நானும் புரியாமல் முழித்தேன். உங்களுக்குத் தெரியாதா? என்று ஆச்சரியமாகப் பார்த்தார். உண்மையிலேயே அன்று தான் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இப்படி ஒரு ஊர் உள்ளது என்றும், அங்குப் பிரபலமான ஆதீனம் உள்ளது என்பதையும் அறிந்தேன். தனுஷ்கோடியில் இருந்து கிளம்பி இராமநாதபுரம் தொடங்கி கடற்கரைச் சாலை பயணம் வழியாக பட்டுக்கோட்டை வந்து அடைந்தோம். அங்கே இருந்து மயிலாடுதுறை மார்க்கத்தில் திருவாவாடுதுறை வந்து சேர்ந்தோம். திருவாவாடுதுறைக்கு மிக அருகே மயிலாடுதுறை உள்ளது. 1984 ஆம் ஆண்டு இந்த வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு வந்துள்ளேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமொரு பயணம். இரவு நேரப் பயணமாக இருந்த போதிலும் சாலையின் இரண்டு பக்கமும் எந்தப் பெரிதான மாற்றமும் இல்லை. அதே குறுகிய சாலைகள். ஒவ்வொரு இடங்களிலும் கிராமத்து முகம் கொண்ட சிறிய ஊர்கள். திருவாவாடுதுறை இரண்டு கெட்டான் போலவே உள்ளது. கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகள் என்பதால் மக்கள் கூடும் இடம் போலத்தான் நகரப்பகுதிகள் உள்ளது. பெரிதான ஆடம்பரங்கள் ஏங்குமே இல்லை. முதன் முதலாகச் சுடிதார் அணிந்த கிராமத்துப் பெண்ணுக்கு எப்படித் தடுமாற்றம் இருக்குமோ? அப்படித்தான் இரண்டுங்கெட்டானாக முக்கியச் சாலைகள் இருந்தன. ஊருக்குள் நுழைந்து முக்கியச் சாலையில் இருந்து பிரிந்து போடப்பட்டுள்ள தனியார் தார் (இந்தப் பகுதிகள் ஏற்கனவே ஆதீனத்திற்குச் சொந்தமாக இருந்த பகுதிகள்) சாலையின் வழியாக ஆதீனத்திற்குள் வந்து சேர்ந்தோம். பல ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்துள்ள மடம் மற்றும் அதனைச் சார்ந்த கோவில் உள்ள பகுதிகள். சுற்றிலும் உள்ளே பணிபுரிபவர்களுக்கெனக் கட்டப்பட்ட வீடுகள். உள்ளேயே நீண்ட அகண்ட தார் சாலைகள். இரண்டு புறமும் மரங்கள். வீடுகள் ஒவ்வொன்றின் வயதும் ஏறக்குறைய நூற்றாண்டுகளைக் கடந்ததாக இருக்கக்கூடும். ஒவ்வொரு வீட்டுக்குப் பின்னாலும் வயல் வெளிகள். நீண்ட மதில் சுவர்கள். பாதிக் காரைக்குடி பகுதியில் உள்ள கட்டிடங்கள் போலவும் மீதி ஒரு கிராமத்திற்குள் நுழைந்தது போலவும் இருந்தது. அருகே இருந்த நகர்ப்புற வளர்ச்சிக்குக்குக் கொஞ்சம் கூடச் சம்மந்தம் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. திரைப்படம் எடுக்கத் தேவைப்படும் பகுதியாகவும் எனக்குத் தெரிந்தது. மடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது பண்டாரங்கள், பரதேசி போன்ற வார்த்தைகள் உங்கள் நினைவுக்கு வருமென்றே நினைக்கின்றேன். ஆனால் இந்த மடத்தின் உள்ளே சென்று பார்க்கப் பார்க்க மிரண்டு போய் மயங்கி விழாத குறை தான். ஒவ்வொரு பகுதியிலும் கலையம்சமும், அலங்காரங்களும் சேர்ந்து விரிசல் விடாத சுவற்றில் வித்தியாசமான ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியத்திற்குள்ளும் ஓராயிரம் சரித்திர சம்பவங்கள். உள்ளே இருந்த அறிவிப்புப் பலகையை வைத்து யூகித்தபடி முறைப்படியான ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்து தொடங்குகின்றது. இந்த மடத்தின் பூர்விக வரலாறு, ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த மாற்றங்கள், படிப்படியான வளர்ச்சிகள், ஆதீன பதவிகளில் இருந்தவர்கள், அவர்களின் சாதனைகள், ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள், பகுதிகள், நிலங்கள் குறித்த குறிப்புகள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த போது இந்திய அரசின் பட்ஜெட் தான் என் நினைவுக்கு வந்தது. ஒரு மினி அரசாங்கமாகவே ஆதீனங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த ஆதீனங்கள் மூலம் யாரும் லாபம்? என்றொரு பெரிய கேள்வி உண்டு. அதைப் பிறகு பார்ப்போம். அல்லது தொடர்ந்து படித்து வரும் போது உங்களுக்கே புரியும். இந்தப் பகுதிக்குள் நுழைந்த பின்பு வெளியுலகமே துண்டித்தது போலவே இருந்தது. உடம்பில் இருந்த படபடப்பும், வேகமும் குறைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை தந்த சுகத்தை உடனடியாக அனுபவிக்க முடிந்தது. ஆசான் திரு.கிருஷ்ணன் திருச்செந்தூரில் ஐந்தாம் வகுப்பு முடித்த பின்பு குடும்ப வறுமையின் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாத சூழ்நிலையில் திருவாவாடுதுறை ஆதீனத்திற்கு வந்தார். காரணம் ஆசானின் இரண்டு சகோதரிகளின் கணவர்கள் இந்த மடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ஓதுவார் குடும்பம் என்பதால் மடத்தில் நடக்கும் அத்தனை விசேடங்களுக்கும், மற்றும் கோவிலுக்குப் பூக்கள் கட்டிக் கொடுப்பது தான் முக்கிய வேலையாக இருந்தது. ஆசான் இங்கிருந்தபடியே பள்ளிக்குச் சென்றதோடு கூடவே அப்போது பதவியில் இருந்த ஆதீனத்திற்கு உதவியாளராகவும் இருந்தார். இதற்கு மேலாக ஆதீனத்திற்குச் சொந்தமான அனைத்து இடத்தில் இருந்தும் வரி, வசூல் போன்றவற்றைக் கவனித்துக் கொண்டதும் ஆசானே. வரி வசூல் என்றதும் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நன்செய் மற்றும் புன்செய் பூமிகள். இதற்கு மேலாக ஆதீனத்திற்குச் சொந்தமாக உள்ள வாடகைக்குக் கட்டி விடப்பட்ட கடைகள், கட்டிடங்கள் இன்னும் பலப்பல. இந்த ஆதீனத்திற்குச் சொந்தமான பல இடங்கள் திருச்செந்தூரில் இருந்தது. ஆனால் அது பல தனியாருக்குச் சொந்தமானதாக மாறியுள்ளது. அதற்குப் பின்னால் ஏராளமான மர்மக்கதைகள் இருப்பதால் அதைப்பற்றி இந்தச் சமயத்தில் விலாவாரியாக பேச வேண்டாம் என்றே நினைக்கின்றேன். ஆசானுடன் ஆதீனத்தின் உள்ளே உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்ற போது சுவராசியம் ஏதுமில்லாமல் உள்ளே ஏதாவது ருசியாகச் சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன். காரணம் ஆசான் வாயைத் திறந்தால் திருமந்திரத்தை பொளந்து கட்டிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்தவுடன் நெற்றி நிறையப் பட்டை. கழுத்தில் கொட்டை மற்றும் மணிகள் உள்ள ஆபரணங்கள் என் கன ஜோராக மற்றவர்கள் எழுவதற்கு முன்பே குளித்து முடித்து தயாராக இருப்பார். அதாவது பாருங்க..... ஜோதி என்று ஆசான் தொடங்கினார் என்றால் அரை நூற்றாண்டு கதையைச் சொல்லி முடிக்கும் போது எனக்கு மீண்டும் பசியெடுக்கத் தொடங்கி விடும். இதன் காரணமாகவே இரண்டு மூணு தேங்காய் மூடிகளை எப்போதும் எண்ணருகில் தயாராக வைத்திருப்பேன். திருவாவாடுதுறையில் வாழ்ந்த போது ஆசான் தங்கியிருந்த வீடு மற்றும் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்த்த போது எனக்குப் பெரிதான ஆச்சரியமல்ல. காரணம் எங்கள் பகுதியில் ஒவ்வொரு செட்டியார் வீடுகளின் அமைப்பைப் போல முற்றம் வைத்துக் கட்டப்பட்ட வீடுகள், ஊஞ்சல், கரி அடுப்பு, போன்ற அத்தனை பழங்காலத்துப் பழக்கவழக்கங்கள் உள்ள அமைப்பாக இருந்தது. கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி ஒன்று மட்டுமே அங்கே நான் பார்த்த நவீன பொருள். மற்றவை எல்லாமே 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட விசயமாகவே இருந்தது. திருமூலர் பற்றி முழுமையாக முதல் முறையாக அறிந்து கொண்டது, ஆதீனங்களின் வரலாறு, தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆதீனங்களைப் பற்றி தெரிந்து கொண்ட விபரங்கள், சண்டை சச்சரவுகள், போட்டி பொறாமைகள், அதிகாரப் போட்டிகள், தற்போது பதவியில் இருக்கும் ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அதற்குப் பின்னால் உள்ளவர், அதிகாரப் போட்டியில் பாதிக்கப்பட்டவரை நேரிடையாகச் சந்தித்தது அவருடன் உரையாடிய போது மடத்திற்குள் நடந்த, நடந்து கொண்டிருக்கும் திருட்டுத்தனங்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் என ஒரு திகில்படத்தின் கதைக்குச் சமமாகப் பல விசயங்களை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் வருடந்தோறும் ஆதீனத்திற்கு வர வேண்டிய வருமானம் என்பது ஏறக்குறைய நூறு கோடி ரூபாய். ஆனால் வந்து கொண்டிருப்பதே இருபதில் ஒரு மடங்கு கூட இருக்குமா? என்று தெரியவில்லை. முக்கால்வாசியை விற்று தினறுவிட்டார்கள். இது தவிர ஆதீன சொத்துக்களை தினந்தோறும் சுரண்டிக் கொண்டேயிருக்கின்றார்கள். நானே சில சுவராசியமான நிகழ்வுகளை அங்கே பார்த்தேன். இதைப்பற்றி விரிவாக எழுதினால் ஏற்கனவே என் மேல் கொலைவெறியில் இருக்கும் என் நெருங்கிய நண்பர்கள் அலைபேசியில் பேசி காதில் ரத்தம் வர வைத்துவிடுவார்கள். ஆனால் உண்மைகள் எப்போதும் உறங்காது. அதற்கு இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என்ற பாரபட்சம் இல்லை. ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் தாமதமானாலும் ஒரு நாள் தகுதிகள் தான் சபையில் ஏறும். அதுவரையிலும் தரமற்றது தான் பேயாட்சி நடத்தும். தமிழ்நாடு முழுக்க இந்த ஆதீனத்திற்குப் பாத்தியப்பட்ட பல இடங்கள் உள்ளது. இதே போலக் குத்தகைக்கு விடப்பட்ட விவசாயப் பூமிகள். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு காலகட்டத்தில் பலரால் வழங்கப்பட்ட நன்கொடைகள். இதன் மூலம் தமிழ் மொழியையும், ஆன்மீகத்தையும் இது போன்ற மடங்களின் மூலம் வளர்த்து விட முடியும் என்ற நம்பிக்கையோடு பலரும் வழங்கி உள்ளனர். ஆனால் காலமாற்றத்தில் ஒவ்வொன்றும் மாறியதைப் போலவே இன்று ஆதீனங்களின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்பாடுகள் அனைத்தும் மாறிப் போய் ஊழலில் திளைத்து, உண்மைக்கு இடம் இல்லாத அளவுக்கு நிர்வாகம் கெட்டுப் போய் இறுதி மூச்சில் தான் ஆதீனங்கள் உள்ளது. பலருடனும் தனிப்பட்ட முறையில் பேசிய போது இன்னும் இரண்டு தலைமுறைகள் தாண்டுவதற்குள் ஆதீனம் என்ற பெயரே இருக்காது என்கிற அளவுக்கு இந்த இடமே விற்பனை பூமியாக மாறிப் போய்விடும் என்றார்கள். ஆசானைப் பொருத்தவரையிலும் ஆன்மீகம் தான் அவர் மூச்சுப் பேச்சு எல்லாமே. ஆனால் நான் அவற்றைக் கடந்து வந்து விட்டேன். தற்பொழுது எனக்குத் தினசரி வாழ்க்கையில் அன்றைய தினம் மட்டுமே முக்கியமாகத் தெரிகின்றது. நேற்றைய வாழ்க்கையும், நாளைய வாழ்க்கையும் குறித்த யோசனைகளும், பயமும் அதிகம் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆன்மீகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றே நம்புகின்றேன். [] 24 ஆன்மீகம் எனப்படுவது யாதெனில் -2 ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகள் தேர்தல் சமயங்களில் மட்டுமல்ல எப்போதுமே பேசக்கூடாத விசயங்கள் பல உண்டு. அது சரியாக இருந்தாலும் பெரும்பான்மையினர் ஆதரவு இல்லாதபட்சத்தில் அவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனையை எடுத்துக் கொள்வோமே? கூடங்குளம் அணுமின் உலை என்பது மிகப் பெரிய கேடு விளைவிக்கும் செயல் என்று அனைவருக்குமே தெரியும்? பத்து தலைமுறைகளையும் வாழ முடியாத அளவுக்கு நாசகார விளைவைத் தரக்கூடிய சமாச்சாரமது. எந்த அரசியல்வாதியாவது வாயைத் திறக்கின்றார்களா? ஒப்புக்குச் சப்பாணி போலத்தான் உளறி வைக்கின்றார்கள். காரணம் பெரும்பான்மையினர் ஆதரவு இதற்கு இல்லாமல் இருப்பதே இந்தப் போராட்டங்கள் தீவிரப் பாதைக்குச் சென்று சேரவில்லை. அத்துடன் நடுத்தரவர்க்கமென்பது எவன் செத்தால் எனக்கென்ன? நாம் பிழைத்திருக்க என்ன வழி? என்று யோசிக்கக்கூடிய வர்க்கமாக இருப்பதால் (இன்று என் வசதிகளுக்கு மின்சாரம் தேவை)அடுத்த தலைமுறைக்குக் கேடு வந்தால் எனக்கென்ன ஆச்சு? என்பதால் மட்டுமே வருடக்கணக்கில் இடிந்தகரை மக்களின் அகிம்சை போராட்டமானது இன்னமும் முடிவே தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றது. இதே போலத்தான் சாதி மற்றும் மதம் குறித்து அரசியல்வாதிகள் மட்டுமல்ல தனி மனிதர்கள் கூட அதிகம் வாய் திறப்பதில்லை. மதம் குறித்து எழுதினால் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் வந்து நிற்பார்கள். சாதி குறித்து எழுதினால் அனானி ரூபத்தில் ஆவியாக வந்து நிற்பார்கள். அவரவர் சிந்தனைகளைத் தங்கள் மனதிற்குள் தான் வைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். தேவைப்படும் சமயங்களில் தேவைப்பட்ட இடங்களில் தேவையான அளவிற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். தனக்குப் பாதிப்பை உருவாக்காது என்ற நிலையில் மட்டுமே ஒருவர் பலதரப்பட்ட தத்துவங்களை வாரி வழங்குவார். இத்துடன் கடவுள் சார்ந்த சிந்தனைகளையும் சேர்த்து வைத்துப் பார்த்து விடலாமே? "எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை" என்று பொதுப்படையாக பழகியவர்களிடம் சொல்லிப் பாருங்கள். உங்களை மேலும் கீழும் பார்ப்பார்கள். சிலரோ துணிந்து "இரத்தம் சுண்டினால் தானாகவே நம்பிக்கை வந்து விடும்" என்பார்கள். இதற்கு மேலாக. "அவர் பக்திமான். இது போன்ற தப்புகள் எல்லாம் அவர் செய்திருப்பார் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாது" போன்ற ஐஎஸ்ஐ சான்றிதழ் கொடுக்கும் மனிதர்களையும் பார்க்க முடியும். அதாவது "ஆன்மீகம் என்பது வாழ்க்கை நெறியல்ல. அதுவொரு அங்கீகாரத்தைத் தேடித்தரும் சமாச்சாரம்". "நான் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன்" என்று சொல்பவர்களைக் காட்டிலும் அதிகப் பிரச்சனைக்குரியவர்கள் "நான் கடவுள் நம்பிக்கையற்றவன்" என்பவர்கள் தற்போதைய சமூகத்தில் ஒரு நாடக நடிகர் போலவே வாழ்ந்தாக வேண்டும். அம்மா ஒரு திசை, மனைவி ஒரு திசை, என்று வீடு ஒரு திசையில் செல்ல இவன் மட்டும் வாயால் கம்பு சுழற்றுவதே வாடிக்கையாக இருக்கும். "என் மனைவிக்குத் தெய்வ நம்பிக்கை உண்டு. ஆனால் எனக்கில்லை. நாங்கள் கோவிலுக்குச் செல்வோம். நான் வெளியே இருப்பேன். அவர் உள்ளே சென்று வணங்கி விட்டு வருவார்" . போன்ற திரைக்கதைகளை இந்த நடிகர்கள் வாயால் கேட்கலாம். இத்தனை விளக்கமாக எழுதும் நான் இதில் எந்த இடத்தில் இருக்கின்றேன் என்ற கேள்வி வாசிக்கும் பொழுதே உங்கள் மனதில் தோன்ற வேண்டுமே? அதற்கு முன்னால் தற்போதைய சமூகச் சூழ்நிலையில் நான் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களும் இந்த ஆன்மீகம் என்ற வார்த்தையை எப்படிப் பார்க்கின்றார்கள்? கடவுள் பக்தி என்பதை எப்படிப் புரிந்து வைத்துள்ளார்கள்? 'இறை நம்பிக்கை' என்பது தற்போதைய மக்களிடத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கியுள்ளது? என்பதைப் பற்றி நாம் புரிந்து கொள்ளச் சில மனிதர்களின் அனுபவங்களைப் பார்த்து விடுவோம். இவர்கள் நான் பார்த்து பழகிக் கொண்டிருக்கும் மூன்று நிலையில் உள்ள மனிதர்கள். அதுவொரு பெரிய ஏற்றுமதி நிறுவனம். கடந்த பத்தாண்டுகளாகப் பல விதங்களில் உச்சத்தைத் தொட்ட நிறுவனமும் கூட. ஆனால் தற்பொழுது இறுதி மூச்சில் இன்றோ? நாளையோ? என்று போய்க் கொண்டிருக்கின்றது. தொழில் ரீதியான காரணக் காரியங்கள் நமக்குத் தேவையில்லை. ஆனால் அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பற்றி அவரின் குணாதிசியம் தான் பார்க்க வேண்டும். அந்த நிறுவனத்தின் காசாளர் முதல் கணக்காளர் வரை ஒவ்வொரு வருட வங்கிக் கணக்கு (மார்ச் மாதம்) முடியும் சமயங்களில் இரண்டு நாட்களில் (மட்டும்) ஆசுவாசமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். வருடத்தின் மற்றத் தினங்களில் உலையில் துடிக்கும் அரிசி போலத் தவித்துக் கொண்டிருப்பார்கள். காரணம் சார்பு நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகை காரணமாக இருவரும் அதிகளவில் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்கள். சிலர் வர வேண்டிய தொகையை வசூலிக்க முடியாத கோபத்தில் அலுவகத்திற்கே வந்து இவர்களை பொளந்து கட்டிக் கொண்டிருப்பார்கள். அசைந்து கொடுக்க வேண்டுமே? நிர்வாகம் எவருக்கும் அத்தனை எளிதாகக் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையைக் கொடுத்து விடுவதில்லை. முடிந்தவரையிலும் இழுத்துப் பார்க்கும். முரண்டு பிடிக்கும் போது பாதித் தொகை கொடுத்து மீதி காந்தி கணக்கில் ஏற்றி விடுவார்கள். ஆனால் முதலாளி ஒவ்வொரு வருடத்திலும் தவறாமல் புதுக்கணக்குப் போடுவதற்கு முன்பு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் குடும்பத்தோடு சென்று விடுவார். செல்லும் போது இரண்டு பெரிய சூட்கேஸ் நிறையப் பணமும் போகும். காரணம் அந்த வருட லாப நட்ட கணக்கின் அடிப்படையில் வெங்கடாஜலபதிக்கு சேர வேண்டிய தொகையை உண்டியலில் போட்டு விட்டு வருவார். காரணம் வெங்கி அவர்கள் இந்த நிறுவனத்தின் சைலண்ட் பார்ட்னர். ••• அவர் நெருங்கிய நண்பர் தான். இருபது வருடப் பழக்கம். இருவரின் ஊரும் அருகருகே தான் உள்ளது. கடந்த ஆறு வருடமாக வேலையில்லாமல் இருக்கின்றார். அவர் மனைவிக்குக் கோவில் கட்டிக் கும்பிடலாம். அந்த அளவுக்குப் பொறுமையான பெண்மணியை வேறெங்கும் காண முடியாது. இக்கட்டான சூழ்நிலையில் கூட இருப்பதை வைத்துச் சமாளித்து விடுவார். குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். பள்ளி கல்லூரிக்குச் செல்கின்றார்கள். வறுமை என்ற வார்த்தை ஒரு குடும்பத்தில் என்னவெல்லாம் செய்யும் என்பதை அவர்கள் வாழ்க்கையில் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் நண்பர் காலையில் எழுந்தவுடன் திவ்யமாகக் குளித்து முடித்து நெற்றி நிறையப் பட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினால் ஒவ்வொரு கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பார். பத்து மணி வாக்கில் சிக்கியவனை அழைத்துக் கொண்டு டாஸ்மாக் கடைக்குச் சென்று விடுவார். ஒவ்வொரு முறையும் பார்க்கும் பொழுதெல்லாம் அவர் வேலையைப் பற்றி ஞாபகப்படுத்துவேன். உடனடியாக வார்த்தைகள் வந்து விழும். பகவான் பல்லாக்குழி ஆட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார். சனி சுயதிசையில் என்ன செய்வாரென்று உங்களுக்குத் தெரியாதது அல்ல? என்பார். "அது தான் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றேன்" என்பார். இடைப்பட்ட நேரத்தில் கட்டுமரமாய் டாஸ்மாக்கில் சேவை செய்து கொண்டிருப்பார். ••• இவரின் வயது அறுபதுக்கு மேல் இருக்கும். மெல்லிய தேகம். ஆனால் களையான முகம். எவரிடமும் அநாவசியமாகப் பேச மாட்டார். கடமையே கண். தானுண்டு தன் வேலையுண்டு என்கிற நிலையில் இருப்பார். நூறு சதவிகிதம் நேர்மையான மனுஷி. நான் அம்மா என்று தான் அழைப்பேன். நான் பணிபுரியும் நிறுவனத்தில் கூட்டிப் பெருக்கும் பணியில் இருக்கின்றார். என் அறைக்கு இவர் மட்டும் உரிமையுடன் வந்து போய்க் கொண்டிருப்பார். எனக்குத் தேவையான ஒவ்வொன்றும் இடைவெளி விட்டு வந்து கொண்டேயிருக்கும். பல சமயம் உரிமையுடன் "அதை எடுத்துக் குடித்து விட்டு வேலையைப் பாருங்களேன்" என்று அதட்டுவார். எவரையும் குறை சொல்ல மாட்டார். சென்ற வாரத்தில் பல நாட்கள் நிறையச் சோர்வாகவே தெரிந்தார். காரணம் கேட்ட போது விரதம் என்றார். நான் மேற்கொண்டு எதையும் கேட்டுக் கொள்ள விரும்பவில்லை. சில தினங்களுக்கு முன்பு மதிய வேளையில் பயந்து கொண்டே என் அருகே வந்து "இரண்டு நாள் லீவு வேண்டும்" என்று கேட்டார். ஏன்? என்று கேட்ட போது கொண்டாத்தா (இந்தப் பகுதியில் உள்ள பெருமாநல்லூர் என்ற ஊரில் உள்ள காளி கோவிலில் வருடந்தோறும் மிக விமரிசையாக நடக்கும் தீ மிதித்தல் )கோவிலில் விசேடம் என்றார். "அதுக்கென்ன காலையில் போய்க் கும்பிட்டு விட்டு வந்துடுங்க" என்றேன். "இல்லை பூ மிதிக்கின்றேன்" என்றார். சற்று குரலை உயர்த்திச் சப்தம் போடத் தொடங்கினேன். "ஏம்மா விளையாடுறியா? புருஷன் இல்லை. கல்யாணம் செய்து ஒரு வருஷத்தில் போயிட்டாரு. குழந்தை குட்டிகளும் இல்லை. அக்கா வீட்டில் தான் இத்தனை காலமும் தங்கியிருக்குறே? வாங்குற சம்பளத்தையும் செலவழிப்பதில்லை. இங்கே உங்களுக்கு எந்தக் குறையுமில்லை. இந்த வயசில் போய்த் தீ மீதிக்கிறேன்னு சொல்கிறீர்கள்? இது தேவையா?" என்று சொன்னது தான் தாமதம் கரகரவென்று கண்ணில் நீர் வழிய "நீங்க எதுவேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் ஆத்தாவுக்குப் பூ மிதிக்கிற பற்றி மட்டும் எதுவும் சொல்லாதீர்கள். போன ஜென்மத்திலே நான் செய்த பாவமெல்லாம் இத்தோட போயிடனும். அது தான் என் ஆசை" என்றார். [] 25 ஆன்மீகப்பற்றும் அடுத்தவர் சொத்தும்? நம் வாழ்க்கையில் நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளப் பல வார்த்தைகள் உண்டு. அதில் ஒன்று தான் "அடுத்தவரின் நம்பிக்கையைப் புண்படுத்த வேண்டாம்" என்ற வாக்கியமும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் வைத்திருக்கும் நம்பிக்கைகள் ஒன்றா? இரண்டா? மதம், இனம், மொழி, சாதி, ஊர் எனப் பலதரப்பட்ட நம்பிக்கைகளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் சுமந்து கொண்டே தான் திரிய வேண்டியுள்ளது. அது தேவையா? என்பதை உணர்வதும் இல்லை. அதற்கான வாய்ப்புகளும் நமக்கில்லை. பகுத்தறிய விரும்புவதுமில்லை. சரியா? தவறா? என்று கூட யோசிப்பதில்லை. இந்த வார்த்தையே தவறு. நம்மை யோசிக்க விட விடுவதில்லை என்பது தான் சரி. நீ இந்த மதத்தில் பிறந்துள்ளாய். இது தான் உன் தெய்வம். இது தான் உன் பழக்கவழக்கம், பண்பாடு, கலாச்சாரம் என்று கோட்டை உருவாக்கி சுற்றிலும் அகழியையும் உருவாக்கி உள்ளேயே வாழ்ந்து உள்ளேயே மரணித்தும் போய் விடுகின்றோம். உலக மாறுதல்களை அறிவது இருக்கட்டும், ஊருக்கு அருகே நடக்கும் மாறுதல்களைக் கூடக் கவனிக்க முடியாத அளவுக்குச் சேனம் கட்டிய விலங்கு போலவே நம் வாழ்க்கை குறுகிய வட்டத்திற்குள் உழன்று முடிந்தும் போய்விடுகின்றது. கோவிலுக்குள் சென்றாலும் முந்திக் கொண்டு முன்னால் நிற்கவே விரும்புகின்றோம். உண்டியலில் காணிக்கை போடும் போதே நாம் வைத்துள்ள ஆசைகளின் வரவு செலவு அடிப்படையில் கணக்குபுள்ளையாகச் செயல்படுகின்றோம். கோவிலுக்குள் பக்திமானாகச் செல்லும் அனைவரும் வெளியே வரும் போது சீதை விரும்பிய மாயமானை தேடுபவர்களாகத்தான் வருகின்றார்கள். கடைசியில் பக்தி என்பது பகல் வேஷம் போல மாறிவிடுகின்றது. நாம் வைத்துள்ள எல்லாவிதமான நம்பிக்கைகளும் மதத்திலிருந்து தொடங்கி மத நம்பிக்கைகளுக்குளே முடிந்து போயும் விடுகின்றது. ஏன்? என்று கேட்கக்கூடாது? இது எதற்காக? என்று பார்க்கக்கூடாது. பகுத்தறிவுவாதி என்பதே கெட்டவார்த்தை போலவே பார்க்கப்படுகின்றது. நம்மை ஒதுக்கி விடக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்பவர்கள் தான் "ஊரோடு ஒத்து வாழ்" என்ற பழமொழியை நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். எதையும் "ஆராய்ச்சி மனப்பான்மையில் பார்க்காதே" என்பவர்கள் தான் "ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினையுண்டு" என்பதை மறந்து போய் விடுகின்றார்கள். இது விஞ்ஞான விதி மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சூத்திரமும் கூட. ஒன்றைப்பற்றி அறியாத போது தான் ஆதங்கம் அதிகமாக உருவாகின்றது. இந்த ஆதங்கம் தான் காலப்போக்கில் ஒவ்வொரு மனிதர்களுக்குக் கழிவிரக்கத்தை உருவாக்கி ஏக்கத்தை மட்டும் சுமந்து வாழும் மனிதர்களாக மாற்றி விடுகின்றது. அவனின் சக்தியை அவனால் உணர முடியாத போது எளிதாக "எல்லாமே விதிக்குள் அடக்கம்" என்பதான யோசனையில் போய் முடிந்து விடுகின்றது. 'முயற்சித்தேன் கைகூடவில்லை' என்பதற்கும் 'விதியிருந்தால் அது நடக்கும்' என்பதற்கும் உண்டான வித்தியாசங்களை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் ஆன்மீகத்தின் ஆதார பலத்தைப் பற்றி உணர முடியும். வயதாகி விட்டது. உடம்பு ஒத்துழைக்கவில்லை என்பதில் இரண்டு அர்த்தம் உண்டு என்பதை எப்போதும் நாம் மறந்து விடக்கூடாது. உடல் உறுப்புகள் காலப்போக்கில் அதன் வீரியத்தன்மையை இழப்பதென்பது இயற்கை விதி. ஆனால் இளமையில் போட்ட ஆட்டத்தினால் உறுப்புகள் அந்தர்பல்டி அடித்துச் சத்தியகிரகம் செய்யும் போது தான் ஒவ்வொருவருக்கும் இந்த ஆன்மீக ஞானமே பிறக்கின்றது. அதாவது நான் திருந்தி வாழ விரும்புகின்றேன். ஆனால் என் மனதை அடக்க முடியவில்லை. அதற்கு ஒரு சாய்வு தேவை என்கிற ரீதியில் தான் பலருக்கும் இந்த ஆன்மீகம் அருமருந்தாக உள்ளது. "உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை. எதன் மேலும் ஆசை வைக்காதே" என்று தான் உலகில் உள்ள அனைத்து மதத் தத்துவமும் இறுதியாகச் சொல்கின்றது. ஒரு வேளை அப்படியே மனித இனம் யோசித்திருந்தால் மின்சாரம் இல்லாத வாழ்க்கை அமைந்திருக்கும். தொடர் பைத்தியமாக இருக்கிறாளே என்று சம்சாரத்தைத் திட்ட வேண்டிய அவசியம் வந்திருக்காது. கணினியை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்தக் 'கடவுள் ஆராய்ச்சி' தொடங்கியிருக்காது. இந்த வரிகளை வாசித்திருக்க முடியாது. கல்வியறிவு வளர்ந்திருக்காது. 'கண்டவர் விண்டிலர்' என்ற சொல்லும் போதே "அதெல்லாம் சரிப்பா அதுக்குக் கொஞ்சம் அர்த்தத்தையும் சொல்லிட்டு போ" என்கிற தைரியம் பிறந்திருக்காது. மனிதர்களின் ஆசைகள் ஒவ்வொரு சமயத்திலும் அவனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. உழைக்கத் தொடங்கினார்கள். தோல்விக்கு நாமே காரணம் என்று உணர்ந்து மேலும் உழைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்து வர மொத்த சமூகத்தின் வேகமும் நான்கு கால் பாய்ச்சலில் பயணிக்கத் தொடங்கியது. எந்த விஞ்ஞானிகளும் கடவுளைப் பற்றி யோசிக்கவில்லை என்பதை விட அதனைப் பற்றி நினைத்துப் பார்க்க நேரமும் இருக்கவில்லை. லட்சக்கணக்கான சிந்தனைகளின் செயல்பாடுகளின் இன்று உலகம் முழுக்க உள்ள 700 மில்லியன் ஜனத்தொகையை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. பல வசதிகளைத் தந்துள்ளது. 'வாழ்க்கை என்பது அழகானது' என்பதை உணரவும் வைத்துள்ளது. விஞ்ஞானிகள் கடவுளைப் பற்றி நினைக்கவில்லையே தவிர ஒவ்வொரு காலகட்டத்திலும் மதவாதிகள் நினைக்க வேண்டிய கடவுள்களைத் தவிர மற்ற அனைத்தையும் நினைத்தார்கள். தங்கள் ஆளுமைக்குள் தான் அனைத்தும் இருக்க வேண்டும் என்று கருதினார்கள். அது தொடர்பான வேலைகளை மட்டுமே செய்தார்கள். அக்கிரமங்கள் மட்டும் நின்றதே இல்லை. கல்லடி கொடுத்தார்கள். கழுவில் ஏற்றினார்கள். உண்மைகளை வெளியே வராத அளவுக்கு உக்கிரமாகச் செயல்பட்டார்கள். கடைசியில் "பாவத்தைச் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்" என்று மதப் போர்வையைப் போர்த்திக் கொண்டு பரிதாபமாகக் கூவினார்கள். உன் விதிப் பயன் மாறும் என்றார்கள். பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் மாற்ற முயற்சித்தார்கள். ஆனால் திறந்த அணையைக் கை வைத்துத் தடுக்க முடியுமா? மதவாதத்தை இன்று மார்க்கெட்டிங் செய்து வளர்க்கும் அளவிற்கு மாறியுள்ளது. ஆனால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றையும் மக்கள் தேடிப்போய் வாங்கிக் கொள்ளும் அளவிற்கு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கின்றது. வாழ்க்கையை நேசிப்பவர்கள் வசதியை விரும்புகின்றார்கள். இந்த வசதிகள் கொடுத்த தைரியத்தில் தான் 'சிறப்புத் தரிசனம்' என்ற பெயரில் நானும் ஆன்மீகவாதிதான் என்று திருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள். ஒருவன் எந்த நாட்டில் எந்தச் சூழ்நிலையில் வாழ்கின்றானோ, அதற்கேற்றாற் போல அவன் உடலும் மாற்றம் பெறுகின்றது. இது இயற்கை உருவாக்கிய பொதுவான விதி. ஆனால் ஒருவன் எங்கு வாழ்ந்தாலும் அவனிடம் உள்ள ஆதார பயமென்பது 'அப்பாற்பட்ட ஏதோவொன்று இருக்கின்றது' என்பதாக அவன் மனம் நம்பத் தொடங்குகின்றது. அப்போது தான் ஆன்மீகம் விஸ்வரூபம் எடுக்கின்றது. வணங்கும் பொருட்கள் மாறலாம். வழிபாட்டுத் தன்மை கூட வேறுபட்டதாக இருக்கலாம். ஆனாலும் அவனுக்குள் இருக்கும் ஆதார பயம் மட்டும் சாவின் கடைசி நொடி வரைக்கும் தொடருகின்றது. ஒரு மனிதனின் பயம் விலக அவன் பார்க்கும் பார்வைகள் நிறையவே முக்கியம். எதையும் உணர மறுக்கும் குருடனிடம் போய் எந்தப் பார்வையை உங்களால் உணர்த்த முடியும்? 'பலவற்றை உன்னால் உணர முடியாது'? என்று சொல்லியே தன்னை உணர மறுக்கும் மனித கும்பலை மதவாதிகள் வளர்த்தார்கள். அப்படித்தான் வளர்க்கவும் விரும்புகின்றார்கள். உருவாக்கப்பட்ட மதக் கொள்கைகளில் இடைச் சொருகலாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றையும் புகுத்திக் கொண்டே வர இன்று எது உண்மையான ஆன்மீகம் என்ற கேள்விக்குறியில் வந்து நிற்கின்றது? வாழும் போது மற்றவர்களை வதைப்பவர்களைப் பார்த்து அவன் முன் ஜென்ம பலனால் இன்று அரசாட்சி செய்கின்றான் என்கிறார்கள். வதைபட்டுத் துடித்துக் கொண்டிருப்பவர்களும் அதையே தான் சொல்கின்றார்கள்? உணர மறுப்பவனின் தவறா? உணர்வே தெரியாதவனின் குறையா? எங்கே வந்து முடிந்துள்ளது? அழியப் போகும் உடம்பை நினைப்பதை விடச் சேர்த்து விடத் துடிக்கும் சொத்தின் மேல் பற்றுதல் உருவாகி உள்ளது. படபடப்பு என்பது இயல்பான குணமாக மாறியுள்ளது. அறநெறிகள் அவசியமில்லை என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. பாவமன்னிப்பு மூலம் சமன் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளது. நாம் வாழ்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவுக்கு நாகரிகம் கற்றுத் தந்துள்ளது. இளிச்சவாய்த்தனமாக இருக்காதே என்று அறிவுரை சொல்லும் அளவிற்கு மாறியுள்ளது. ஆன்மீகத்தைப் பற்றி அதன் மொத்த கூறுகளைப் பற்றி அதன் தன்மைகளைப் பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? போன்ற ஆராய்ச்சி கூடத் தேவையில்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். நீங்கள் வணங்கித்தான் தீர வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்க அவர் அரசியல்வாதி அல்ல. சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் அவர் கேட்கவில்லை. இந்த உடையில் தான் வரவேண்டும் என்று சொல்வதற்கு அவர் தனியார் கல்விக்கூடம் நடத்தும் நபர் அல்ல. அண்டா நிறைய பாலைக் கொண்டு ஊற்றினாலும், அல்வா போன்ற பட்சணங்களைப் படைத்தாலும் அவர் மயங்க அமைதிப்படை நாயகன் அல்ல. உங்கள் பாவக் கணக்கை பட்டியலிட மடிக்கணினி ஏதும் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் உங்கள் மனதில் ஒவ்வொன்றுக்கும் தொடக்கம் இருப்பதைப் போல முடிவும் உண்டு என்பதையும், எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்பதையாவது புரிந்திருக்க தெரிய வேண்டும். குறிப்பாக உங்களை நீங்களே அறிந்திருக்க வேண்டும். உங்களின் அளவற்ற சக்தியை உணரத் தெரிந்திருக்க வேண்டும். "முடிவில்லாத முயற்சிக்கு ஒரு நாள் கூலி கிடைத்தே தீரும்" என்ற எண்ணம் உள்ளத்தில் உருவாகி இருக்க வேண்டும். அப்படியே கிடைக்காத போதும் கூட என் கடமையை சரியாகத் தான் செய்துள்ளேன் என்ற சுய நிர்ணயத்தில் கம்பீரமாக வாழக் கற்று இருக்க வேண்டும். குறிப்பாக மெய்யியல் ஆன்மீகத்தையாவது புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஒவ்வொருவரும் தனது ஒரு நாள் வாழ்க்கையை எத்தனைப் பேர்கள் உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்தச் சமயத்தில் யோசித்துப் பாருங்களேன். இரவில் தூங்கத் தொடங்கும் வரையிலும் தான் உங்கள் ஆசை, காமம், குரோதம், வன்மம், பொறாமை, எரிச்சல் போன்றவர்கள் பங்காளிகளாகப் பல் இளித்துக் கொண்டு உங்களுடன் தான் இருக்கின்றார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் உங்களின் உயிர் எங்கே இருக்கும்? அந்தரத்திலா? ஆள் அரவமற்ற இடத்திலா? காலையில் விழிப்பு வந்தால் மட்டுமே நீங்கள் உயிருடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். பாதித் தூக்கத்திலே பரதேசம் போனவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றோம் தானே? ஆனால் நாம் தினந்தோறும் பயத்துடன் தான் படுக்கச் செல்கின்றோமா? அடுத்த நாள் ஆட்டையைப் போடும் கணக்கோடு தானே தூங்கச் செல்கின்றோம். காலையில் தொடங்கும் வார்த்தைகளே இன்னமும் காபி போடலையா? என்று எரிச்சலுடன் மனைவியைப் பேசத் தொடங்க உள்ளேயிருக்கும் வன்மம் வளரத் தொடங்க வாழ வந்தவளை மதிக்கத் தெரியாதவன் கடைப்பிடிக்கும் ஆன்மீகம் எதைக் கற்றுக் கொடுக்கும்? குழந்தைகளை கொண்டாடத் தெரியாதவன் சிலைகள் மேல் கொண்டு போய் கொட்டும் பாலையும் தேனையும் ஆண்டவன் மட்டுமல்ல? நக்கிக்குடிக்கும் நாய் கூட சிந்தாது. இதைத்தான் இந்த உலகில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள். உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதைத் தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை அடையாளம் காட்டினார்கள். அதை உங்களால் உணரத் தெரியாவிட்டால் ஆன்மீகத்தின் மீது தவறல்ல. நீங்கள் வளர்த்துக் கொண்டுள்ள தகுதியற்ற ஆசையே காரணமென்பதை உணர்ந்து கொள்ளவும். [] 26 கேள்விகளுக்கு இங்கே பதில் உண்டு? சில மாதங்களுக்கு முன்பு அழைத்த நண்பரின் உரையாடலில் முக்கியக் கேள்வியைக் கேட்டு இருந்தார். நீங்கள் யார்? தமிழர் தேசியம் ஆதரவாளரா? ஹிந்து மத எதிர்ப்பாளரா? சாதியை மறைமுகமாக ஆதரிப்பவரா? இன்று மற்றொரு நண்பருடன் உரையாடும் போது எனக்குள் கேட்டுக் கொண்ட விடை தெரியாத கேள்விகளுக்குச் சில வெளிச்சம் உருவானது. தமிழர்களுக்கான தேசியம் என்பது வெறும் வார்த்தைகளாகக் கடைசி வரை வாழும். அது எழுத்தாக, விமர்சனத்துக்குரியதாக, வார்த்தைகளாக மட்டுமே வாழும். காரணம் தகுதியான தலைமைப்பண்பு உள்ளவர்கள் இங்கே எவரும் இல்லை. எதிர்காலத்தில் உருவாகக்கூடுமா? என்பது பற்றி எனக்கு எவ்வித எண்ணமும் இல்லை. இனி வரும் காலங்களின் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் களங்கள் செயல்பட வாய்ப்பில்லை. இதை வாசிக்கும் போது உங்களுக்குள் தோன்றும் எரிச்சலை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. காரணம் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது நீங்களும் நானும் நினைத்தே பார்த்திராத அத்தனை தளங்களை உடைத்துக் கொண்டே வருகின்றது. என்னைப் பொறுத்தவரையிலும் தமிழ்நாடு என்பது இந்தியாவில் ஒட்ட வைக்கப்பட்டுள்ள ஒன்று. டெல்லியின் பார்வையில் தொடக்கம் முதல் இன்று வரையிலும் ஏன் நாளைக்குக்கூடக் கண்ணில் விழுந்த தூசி போல எரிச்சல் தரக்கூடிய சமாச்சாரம். எந்த உரிமையைப் பற்றிப் பேசக்கூடாது. பேசுபவர்களை அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அமைதியாக்கிவிடுவார்கள். அது தான் தொடக்கம் முதல் நடந்து வருகின்றது. காரணம் பணம் என்ற பலவீன அடிப்படையில் இங்கே எவரும் எதைப்பற்றியும் குரல் எழுப்பத் தகுதியில்லாதவர்களாக இருக்கும் வரையிலும் நாம் வாழும் வரையிலும் கற்பனைகளை மனதில் வைத்துக் கொண்டு நம் எல்லைக் கோடுகளைப் புரிந்து கொண்டு வாழ்ந்து இறந்து விடுவோம் என்பதே எதார்த்தம். மாற்றங்கள் உருவாகும். நாம் அப்போது இங்கே இருக்கப் போவதில்லை. காலம் தீர்மானித்துள்ள கணக்கு வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வர நாம் யார்? மதம் என்பதனை முதலில் வெறுத்தேன். கால மாற்றத்தில் விரும்பினேன். மறுபடியும் மாற்றம் நிகழ்ந்தது. இப்போது வெறுக்கவும் இல்லை. விரும்பவும் இல்லை. அதனைப் பார்வையாளராகப் பார்க்கும் பக்குவம் வந்து விட்டது. எனக்கான அடையாளம் நான் உருவாக்கியது இல்லை. பிறக்கும் போது அது ஒட்டி வைக்கப்பட்டு இதுவே இன்று வரையிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. அதனை மாற்றவும் முடியாது. மாற்றவும் விரும்பவில்லை. அதனைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கான சமூக வாழ்க்கையில் என் தேடலில் மதம் சார்ந்த விசயங்கள் இல்லை என்பது தான் என் வளர்ச்சியின் அடையாளமாகக் கருதுகின்றேன். நான் பணிபுரியும் நிறுவன நிகழ்ச்சிகள், உறவுக் கூட்டங்களின் முக்கிய நிகழ்வுகள் போன்ற எல்லா நிகழ்வுகளில் பங்கேற்கும் போது ஒரு வேடிக்கையாளனாக என்னைக் கருதிக்கொள்கிறேன். என் புத்திக்கு அப்பாற்பட்டு, என் தனிப்பட்ட திறமைகளைத் தாண்டி கால மாற்றம் என்னை வேறு பாதைக்கு நகர்த்திச் செல்லும் போது, மன ஆறுதல் தேவைப்படும் போது தேவைப்படும் தெய்வ நம்பிக்கைகள் (அல்லது) பிரபஞ்ச சக்தி (அல்லது) ஏதோவொரு அப்பாற்பட்ட சக்தி ஏதோவொன்று நம்மை இயக்குகின்றது என்று உறுதியாக நம்புகிறேன். அதனை மதம் என்ற குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வர விரும்புவதில்லை. மதம் எனக்கு எதனையும் கற்றுத் தரவில்லை. அதில் இருந்து கற்றுக் கொள்ள ஒன்றுமே இல்லை என்பது தான் என் தனிப்பட்ட கருத்து. சமூகம் தான் என்னை வழிநடத்துகின்றது. நல்லது கெட்டதும் கலந்து நிறைந்த இந்த மனிதக்கூட்டம் தான் மாற்றத்தை உருவாக்குகின்றார்கள். பாடங்களை உள்ளே இருந்து எடுக்காமல் புராண, இதிகாசங்களை நோண்டி நொங்கெடுப்பது என்பது வாழ்வின் கடைசிக் காலகட்டத்தில் செயல்பட முடியுமால் இருக்கும் போது வேண்டுமென்றால் மன அமைதிக்கு எடுத்துக்கொள்ளலாமே என்பேன். செயல்பட வாய்ப்பு இருக்கும் அத்தனை தளங்களிலும் ஏன் நம்மால் செயல்பட முடிவதில்லை? நமக்கான சிந்தனை என்பது மாறிக் கொண்டே இருப்பது? அதனை ஏன் நாம் மாற்றமாக எடுத்துக் கொள்ளக்கூடாது? நாளைய நமது மாற்றத்தைப் பற்றி நாம் யோசிப்பதைப் விட இன்றைய ஒரு நாள் கடமையை நாம் சரியாகச் செய்துவிடலாமே? "மனிதன் என்பவன் மகத்தான சல்லிப்பயல்" என்பது அடிப்படை ஆதாரம். இவர்களைத்தான் நாம் கையாள வேண்டும். இவர்களிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் உருவாக்கும் மாயவலை தான் மதம் என்ற அடையாளத்தை உருவாக்குகின்றது. தேவைப்படும் நேரத்தில் தேவைப்படுகின்றதை எடுத்துக் கொள்வோம். அதற்காக அது தான் நம் முக்கியத் தேவை என்பதை முட்டாள்தனமாகக் கொள்கையை விட்டு வெளியே வந்து நின்று வாழ்ந்து பார்க்கலாமே? சாதீய அடையாளம் என்பது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் அழிந்து போய் விடும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உறுதியாக நம்பினேன். ஆனால் இன்று பிரமாண்டமாக விஸ்வரூபம் போல வளர்ந்து வருகின்றது. பலரும் அதனை வளர்க்கவே விரும்புகின்றார்கள். மகத்தான ஆச்சரியம் என்னவென்றால் உயர்கல்வி கற்றவர்கள், புலம் பெயர்ந்து பல இன மக்களுடன் வாழ்பவர்கள், அதீத திறமை கொண்டவர்கள் என்று அத்தனை பேர்களும் இதனை விட்டு வெளியே வர விரும்புவதில்லை என்பதனை கடந்த சில ஆண்டுகளாகக் கவனித்து வருகின்றேன். சற்றுப் பயமாக உள்ளது. நெருங்கிய நட்பு உடைபட்டு விடுமோ ? என்று யோசித்துள்ளேன். மாற்றுக் கருத்து என்பதனைக் கூடத் தனிப்பார்வையாகப் பார்க்க இங்கே யாரும் தயாராக இல்லை. இதற்குப் பின்னால் உரிமைகள் என்றொரு வார்த்தைகளைக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள். நீ சாதியை வைத்துத் தானே உனக்கான உரிமையைப் பெற்றாய்? உன் குழந்தைகளும் அதன் வழியே தானே கல்லூரிக்குச் செல்லப் போகின்றார்கள்? அனுபவிக்கும் போது ஆரத்தழுவி விட்டு இப்போது அட அசிங்கமே? என்று ஏன் சொல்கிறாய்? இது போன்ற பல கேள்விகள் என்னைத் தாக்குகின்றது, சாதியப் பார்வையில் பிராமணர்களை மையப்படுத்தி வந்த ஒவ்வொரு கேள்விகளும் இன்று வலுவிழந்து போய்விட்டது. ஆனால் நம்மவர்கள் இன்னமும் அதனைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இடை நிலை சாதி என்று ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்களோ அப்பொழுதே நியோ பிராமின் (நவ பார்ப்பனர்கள்) என்றொரு புதிய கூட்டம் உருவாக்கத் தொடங்கியது. இந்தக் கூட்டம் தான் இன்று சாதியை வளர்க்கின்றார்கள். வளர்க்க விரும்புகின்றார்கள். அதன் மூலம் கிடைக்க வேண்டிய ஆதாயத்தை அறுவடை செய்கின்றார்கள். அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம் என்று அத்தனை தளங்களிலும் இது தான் நடந்து கொண்டிருக்கின்றது. இது எப்போது மாறும் என்பதனை என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால் தனக்கான ஒரு அடையாளம் என்பதனை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூகமும் உருவாக்கி வந்தது. இன்று அதில் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது. இவர் ஆசிரியர், இவர் தலைவர், இவர் நடிகர், இவர் எழுத்தாளர் என்ற மாயப் பிம்பம் உடைபட்டு விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அனைத்தையும் உடைத்துப் போட்டு விட்டது. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாகப் பலருக்கும் நடுக்கம் உருவாகின்றது. என் இடத்தை இவர் பிடித்து விடுவாரோ? என்ற இடைவிடாத போராட்டத்தில் சாதீயத்தை உள்ளே கொண்டு வருகின்றார்கள். அரசியலில் தொடங்கும் இந்த வெடிகுண்டு சமாச்சாரம் படிப்படியாகக் கோவில் வரைக்கும் வந்து நிற்கின்றது. எனக்கான தேவையை எந்தத் தெய்வங்களும் வந்து செய்யப் போவதில்லை. எனக்கான அங்கீகாரத்தை என் சாதி தரப்போவதில்லை. அப்படியே தொடக்கத்தில் தந்தாலும் அதைத் தக்க வைத்துக் கொள்ளத் தொடர்ந்து அந்தச் சாதிய அடையாளம் காப்பாற்றித் தரப் போவதில்லை. என் இருப்பு என்பதும் எனக்குத் தேவைப்படும்அங்கீகாரம் என்பது என் திறமைகளின் அடிப்படையில், நான் இந்த வாழ்க்கையைப் புரிந்து கொண்டு கையாள்வதன் அடிப்படையில் தான் உருவாகும். இந்த எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவன் எவனோ அவனுக்கு எந்த அடையாளமும் தேவைப்படாது. [] 27 பத்து கேள்விகள் 1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்? நான் அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். தாத்தா (அப்பாவின் அப்பா) பழைய வீட்டில் இருந்தார். நாங்கள் ஊருக்குள் அப்போது கட்டியிருந்த புது வீட்டில் இருந்தோம். தாத்தாவிற்குத் தினந்தோறும் இனிப்பு மற்றும் கார வகைகளைக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டியது என் பொறுப்பாக இருந்தது. ஒரு தடவை நான் சென்ற போது அவருக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த நாட்டு வைத்தியர் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்தேன். "டாக்டர் இப்போதெல்லாம் என்னால் சாப்பிடவே முடியவில்லை" என்று அங்கலாய்ப்புடன் சொல்லிக் கொண்டே சூடான பதினெட்டாவது இட்லியைத் தாத்தா உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். கூடவே அம்மியில் அரைத்த மிளகாய், செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய் சேர்த்து குழப்பி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். மருத்துவர் சிரித்துக் கொண்டே வெளியே சென்ற காட்சி இன்று மனதில் நிழலாடுகின்றது. அப்போது தாத்தாவின் வயது 84. அதே போல அப்பா இறந்த போது வயது 69. அப்பனுக்குத் தப்பாத பிள்ளை போலத்தான் இருந்தார். சாப்பாடு மேல் தீரா ஆர்வம் கொண்ட எனக்கும் இவர்களைப் போல வாழ்ந்து விடத்தான் ஆசை. ஆனால் கடந்த 14 வருடங்களாக உணவு முதல் என் அனைத்து பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி மருந்துவம் தேவைப்படாத ஆரோக்கிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றேன். 'பதின்ம வயதை' வளரும் குழந்தைகளுக்கு பிரச்சனையான காலம் என்கிறார்கள். இதைப் போலவே ஒவ்வொரு ஆணுக்கும் 40 வயதின் தொடக்கமும் பிரச்சனைகளை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது கண்கூடு. புதிய காதல் தோன்றும். விரும்பாத பழக்கங்கள் அறிமுகமாகும். பதவி, பணம் பொறுத்து இன்னும் பலதும் வாழ்க்கையில் அறிமுகமாகும். ஆனால் இவையெல்லாம் தாண்டி வந்த போதிலும் உணவில் அதிக ஆர்வம் செலுத்தும் எனக்கு உடம்பு ஒவ்வொரு முறையும் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே தான் இருக்கின்றது. மனம் ஆசைப்பட்டாலும் 'வேண்டான்டா மகனே' என்று எச்சரிக்கும் போது ஏன் இந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று தோன்றுகின்றது. இன்னும் ஏராளமாய் அடக்க வேண்டியது உன் பட்டியலில் உள்ளது என்று மனம் சொல்ல ஆசை மட்டும் எல்லையைத் தாண்டிச் செல்வேன் என்று பிடிவாதம் பிடிக்க நான் வாழும் ஒவ்வொரு நாளும் ரணகளமாகத்தான் போய்க் கொண்டேயிருக்கின்றது. மனைவி என்னைக் குழந்தை போலப் பாதுகாக்க நான் பிடிவாதம் பிடிக்கச் சாப்பாடு வகைகள் 'சப்பென்று' தான் இருக்கின்றது. நூறு வயது என்பது தேவையில்லாத ஒன்று. நாற்பது வயதைத் தாண்டும் போதே பல உறுப்புகள் அடம் பிடிக்கத் தொடங்குகின்றது. ஒவ்வொன்றையும் அடக்கு அடக்கு என்று எச்சரிக்கின்றது. விரும்பியவற்றை உண்ண முடியவில்லை. வேடிக்கை பார்க்கும் சூழ்நிலையில் தான் வாழ வேண்டியதாக இருக்கின்றது. அறுபது வயது கடந்தவுடன் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் நாம் செய்த நல்ல காரியங்களின் மூலம் கிடைத்த வெகுமதியாகத்தான் இருக்கும் என்றே கருதுகின்றேன். நாம் வாழும் வாழ்க்கை என்பது வயதோடு சம்மந்தப்பட்டது அல்ல என்பதை உறுதியாக நம்புகின்றேன். வாழும் வரையிலும் மனைவிக்கு, முக்கியமாகக் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், காட்ட வேண்டிய அக்கறையைச் சரியான முறையில் நிறைவேற்றிக் காட்டி விட்டாலே போதும் என்றே நினைக்கின்றேன். தாத்தாவும், அப்பாவும் நொடிப் பொழுதில் இறந்து போனார்கள். இறக்கும் வரையிலும் விரும்பியபடி உண்டு, விருப்பப்படி வாழ்ந்து விட வேண்டும் என்று விரும்புகின்றேன். ஏதோவொரு நாளில் தாத்தா, அப்பாவுக்கு அமைந்தது போல அப்படியான மரணம் அமைந்து விட வேண்டும் என்றே விரும்புகின்றேன். 2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? இந்தியாவில் உள்ள வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் உள்ளடங்கிய பகுதிகளுக்குச் சென்று வர விரும்புகின்றேன். அவர்களின் கலாச்சாரம், மொழி, வாழ்க்கைத்தரம் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கின்றது என்பதைக் கற்றுக் கொள்ள விரும்புகின்றேன். 3.கடைசியாகச் சிரித்தது எப்போது? எதற்காக? கடைசி என்ற வார்த்தையே தவறு. அலுவலகத்திலும் சிரி, வீட்டிலும் சரி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சிரித்துக் கொண்டே தான் இருக்கின்றேன். மற்றவர்களையும் சிரிக்க வைத்து விடுவேன். அலுவலக பணியாளர்களுடன் நான் சிரித்துப் பேசினால் அடுத்து ஏதோவொரு ஆப்பு என்று அவர்களே சொல்லிவிடுகின்றார்கள். வீட்டில் மனைவி இதைத் தினந்தோறும் ஒரு முறையாவது சொல்லிவிடுகின்றார். 4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன? பக்கத்தில் உள்ள மின்சாரக் கம்பியின் பழுது காரணமாகப் பல முறை இப்படி நடந்துள்ளது. இரவு நேரத்தில் மட்டும் (தூங்க ஆறு மணி நேரம்) மின்சாரம் இருந்தால் போதும் என்று மட்டும் தான் நான் நினைப்பேன். மற்ற நேரங்களில் பகல்பொழுது என்றால் பழைய பத்திரிக்கைகளை வீட்டுக்கு வெளியே பரப்பி வைத்துக் கொண்டு குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பேன். 5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? அதற்கு இன்னமும் உத்தேசமாக 15 வருடங்கள் இருக்கின்றது. அப்போது நான் இருந்தாலும் அறிவுரையாக எதையும் சொல்ல மாட்டேன். எப்போதும் என் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டிருப்பது ஒரு நாள் வாழ்க்கை அனுபவங்கள் தான் உனக்குப் பாடம். நீ தான் புரிந்து கொள்ள வேண்டும். உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் மாற்றிக் கொள். மற்றவர்களை எப்போதும் குறை சொல்லாதே. உன் வாழ்க்கை உன் கையில் மட்டுமே. 6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்? உலகத்துப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எப்போதும் உண்டு. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் வங்கியில் கடன் வாங்கிச் சவடால் கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெரிய மனிதர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு ஒரு மாதத்திற்குள் வசூலிப்பேன். அப்படிக் கொடுக்காதவர்களின் சொத்துக்களை அரசாங்க உடைமையாக்குவேன். இது செய்தாலே நாட்டில் பாதிப் பிரச்சனை தீர்ந்து விடும். புண்ணியவான்கள் ஏப்பம் விட்டது கொஞ்சமா? 7.நீங்கள் யாரிடம் அறிவுரை கேட்பீர்கள்? 'ஞானாலயா' கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம். ஒவ்வொரு முறையும் குழப்பங்கள் உருவாகும் போது அவரிடம் தான் கேட்கின்றேன். 8.உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்? சம்மந்தப்பட்டவர் யார் என்று தெரிந்து கொண்டு அமைதியாக இருப்பேன். ஏற்கனவே இணைய நண்பர் ஒருவர் அந்த வேலையைச் செய்தார். உடல்ரீதியான பாதிப்பில் இப்போது செயல்பட முடியாத நிலையில் இணையம் பக்கம் வரமுடியாமல் படுத்த படுக்கையாக இருக்கின்றார். 9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்? எந்த அறிவுரையும் சொல்ல மாட்டேன். அவர் முடிவு செய்ய வேண்டிய கடமைகள், தீர்மானங்கள், வேலைகள் குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். 10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்? வீட்டைச் சுத்தம் செய்வேன். முடிந்தால் சமையல் செய்ய முயற்சிப்பேன். கொஞ்சம் நேரம் வாசலில் அமர்ந்து தெருவில் நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். பல நாட்கள் பேச முடியாத நண்பர்களை, உறவினர்களை நினைவில் வைத்து ஒவ்வொருவராக அலைபேசியில் அழைத்துப் பேசுவேன். படிக்காமல் விட்டுப் போன பழைய பத்திரிக்கைகள், வார இதழ்களில் படிக்காதவற்றைப் படிக்க முயற்சிப்பேன். மற்ற நேரங்களில் எழுதிக் கொண்டிருப்பேன் [] 28 ஏக்கம் வந்தால் தூக்கம் போய்விடும் “ஆபிஸ்ல தான் கம்ப்யூட்டர். வீட்லே வந்தும் கம்யூட்டர் தான் கதியா கிடக்கனுமா? “ “அப்பா எங்களை விட உங்களுக்கு கம்யூட்டர் தான் ரொம்பத் தேவையா இருக்கோ?” மனைவியும் குழந்தைகளும் என் மீது வைக்கும் குற்றச்சாட்டைப் போல நீங்களும் இது போன்ற கேள்வியை எதிர் கொண்டிருக்கக்கூடும் தானே? இங்கே பிரச்சனை வலையில் எழுதுவதில் இல்லை. அதற்கான நேரத்தை நாம் எப்படிக் கையாள்கின்றோம் என்பதில் தான் இருக்கின்றது. என் தொடர்பில் உள்ள பலருக்கும் நேரம் தாராளமாக இருக்கின்றது. ஆனால் எவரும் அந்த நேரத்தில் பதிவு எழுதியே ஆக வேண்டும் என்று எவரும் தன்னை அதற்குள் திணித்துக் கொள்வதில்லை. அப்படியே எழுதினாலும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ள முனைவதும் இல்லை. இதைத்தான் நான் முக்கியமாகக் கருதுகின்றேன். வலையில் எழுதத் தொடங்கும் போது எல்லோருக்குமே ஆர்வம் தோன்றுவது இயல்பே. அது நாள்பட ஒருவிதமான குறுகுறுப்பையும் உருவாக்கும். அடுத்தடுத்து எழுத வேண்டும் என்று உந்தித்தள்ளும். நன்றாக எழுதத் தெரிந்தவுடன் தான் பிரச்சனை தொடங்குகின்றது. யாராவது பாராட்ட மாட்டார்களா? அதிகமான மறுமொழிகள் வராதா? சிறப்பான அங்கீகாரம் கிடைத்து விடாதா? இன்று எத்தனை ஓட்டுக்கள் நமக்கு விழும்? என்ற ஏக்கமும் உருவாகத் தொடங்குகின்றது. இதுவே மனதில் அழுத்தமாய் பதிய தினந்தோறும் இணையத்தில் அதிக நேரம் செலவிட வைக்கின்றது. குடும்ப வாழ்க்கை முதல் தொழில் வாழ்க்கை வரைக்கும் பந்தாட்ட களம் போல மாறத் தொடங்குகின்றது. இது தான் கொடுமையின் முதல் படி. ஆனால் முழித்துக் கொள்பவர்கள் குறைவான நபர்களே. பெரும்பாலோனோர் பல வருடங்கள் கடந்து கண்ணீர் காவியமாக மாறியதும் தான் தங்களை உணர்ந்து கொள்ளும் சூழ்நிலைக்கு வருகின்றார்கள். வலைப்பதிவுகளைப் போல இன்று ஏனைய சமூக வலைத்தளங்களில் இன்று ஏராளனமான பேர்கள் கபடியாட்டம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது மனதிற்குள் இருக்கும் வருத்தம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கின்றது. தேவையற்று இணையத்தை ஒருவர் அடிக்கடி பயன்படுத்த தொடங்கும் பொழுதே அவரின் அடிப்படை வாழ்க்கையே மாறப் போகின்றது என்று அர்த்தம். காரணம் இணையத்தில் எல்லாமே திறந்த வெளியில் இருப்பதால் எவரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. இணைப்பு இருந்தால் போதும். வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டால் வசதியாக இணையத்தில் உலாவ முடியும். சாக்கடை முதல் அன்றாடம் நடக்கும் சண்டை சச்சரவுகள் வரைக்கும் நம்மால் வேடிக்கை பார்க்க முடியும். எவராவது நம்மைப் பார்த்து விடுவார்களோ? என்று பயந்து கொண்டு ஊருக்கு வெளியே உள்ள டூரிங் டாக்ஸியில் பார்த்த படங்களை உங்கள் அறையில் உட்கார்ந்தே ரசிக்க முடியும். ரசிப்பதில் தவறில்லை. ஆனால் அதுவே அன்றாட கடமைகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளும் போது உளவியலில் மாற்றம் உருவாகத் தொடங்குகின்றது. குடும்ப கடமைகள் மறந்து போய் குதுகலமாய் வாழ்க்கையை அனுபவிக்க மனம் ஏங்கத் தொடங்குகின்றது. உண்மையான உழைப்பை வெறுக்கத் தொடங்க எண்ண வேர்களில் நாமே விரும்பி வெந்நீரை ஊற்றத் தொடங்குகின்றோம். இதைப் போல நன்றாக எழுதிப் பழக வேண்டும் என்று வருபவர்கள் எழுத்துக்கலை கைகூடி நாள்பட நன்றாகவும் எழுதத் தொடங்கியிருப்பார்கள். ஏனைய பிற சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்த அவர்களைக் காலப்போக்கில் காணாமல் போகச் செய்து விடும் மாய உலகம் இது. இதையும் மீறி நாம் நிறைய விசயங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று முயற்சிப்பவர்களை வேறொன்று தாக்கத் தொடங்குகின்றது. எழுதக் கற்றுக் கொள்வதைவிட எழுதியதை விளம்பரப்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற குறுக்குப் புத்தி ஓடத் தொடங்குகின்றது. இதனால் என்ன லாபம்? கூட்டிக்கழித்துப் பார்த்தால் நட்டங்கள் தான் அதிகம். சுழலும் உலகம் இது. இறுதியில் நம் சொந்த வாழ்க்கை நட்டாற்றில் நிற்பதைக் கண்கூடாக பார்க்கலாம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எழுத்தின் மூலம் புதிய மாற்றங்கள் வந்து விடும் என்று நீங்கள் நம்பினால் அதைப் பத்திரமாக உங்கள் வீட்டுப் பரண் மேல் வைத்து விட்டு வெளியே வாருங்கள். காரணம் அந்த நம்பிக்கை பலரின் கால் மேல் பட்டு சிதைப்பட்டு சின்னாபின்னமாவதை காணும் துர்ப்பாக்கிய நிலைமை உங்களுக்கு வர வேண்டாம். உங்கள் வீட்டுக்கருகே உள்ள நூலகத்தின் உள்ளே பத்திரமாக அடுக்கி வைக்கப்பட்டு ஒட்டடை படித்த நூல்களைப் பார்க்க வாய்ப்பிருந்தால் போய் பாருங்கள். எத்தனை எத்தனை பேர்கள்? தங்கள் வாழ்க்கை முழுவதையும் அடகு வைத்து இந்தத் தமிழ் எழுத்துலகத்திற்கு தங்களை அர்ப்பணித்துள்ளார்கள் என்று பட்டியலிட்டால் பட்டியலை முடிவுக்குக் கொண்டு வரவே உங்களுக்குப் பல வருடங்கள் ஆகலாம். தமிழர்களைப் பற்றி, தமிழினத்தின் வரலாற்றைப் பற்றி கண்டறிந்து எழுதியவர்கள் முதல் மாறும் சமூகத்திற்கு தேவைப்படும் கருத்துக்களைத் தந்த அத்தனை பேர்களும் தங்கள் குடும்பத்திற்கு வறுமையைத்தான் பரிசாக தந்து விட்டு மறைந்துள்ளார்கள். காரணம் இங்கே கவர்ச்சிக்கும் கருத்துக்கும் நடக்கும் போராட்டத்தில் எப்போதும் கவர்ச்சிதான் முன்னால் நிற்கின்றது. அது தான் திரைப்படம் மூலமாக நம்மை நோக்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் தாக்கிக் கொண்டேயிருக்கின்றது. அதுவே தான் இன்று வலையுலகில் ஒரு படம் வெளியான மூன்று மணிநேரத்தில் திரை விமர்சனம் என்ற பெயரில் எழுத வைத்துக் கொண்டிருக்கின்றது. நீ முந்தி நான் முந்தி என்று போட்டி போட வைக்கின்றது. நாமும் அதைத்தான் ஆதரிக்க விரும்புகின்றோம். காரணம் எளிமையானது. கருத்துக்களை உள்வாங்கும் போது மனம் தேவையற்ற கவலை கொள்கின்றது. கலகலப்பாய் படித்து முடிக்கும் போது நிகழ் கால அச்சத்தை அந்த நிமிடமாவது கழட்டி வைக்க முடிகின்றது. போதையை விரும்பி போதையை ஆதரித்து போதையிலேயே வாழ விரும்பும் உலகமிது இணையத்தில் புழங்குபவர்கள் சில எதார்த்தங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இணையத்தில் இரண்டு வகையான மனிதர்கள் தான் முன்னிலையில் இருக்கின்றார்கள். ஒன்று வேடிக்கை காட்டுபவர்கள் மற்றொன்று வேடிக்கை பார்ப்பவர்கள். இந்த இரண்டுக்கும் நடுவே இருப்பவர்கள் தான் எழுதிக் கொண்டிருப்பவர்கள். இதைப்போல இணையத்தில் ஆழ்ந்து வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எவரும் தங்களை எந்த இடத்திலும் காட்டிக் கொள்ளாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள். காரணம் அவர்கள் வாசிப்பின் ருசி அறிந்தவர்கள். இணையத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்களைக் கூட இப்படி இனம் கண்டுகொள்ள முடியும். நம்மால் பகிர்ந்து கொள்ள முடிகின்றதே என்பதோடு நமக்குக் கோர்வையாக . எழுதவும் வருகின்றதே என்று தாங்கள் பார்க்கும் சமூகத்தை அதன் பிரதிபலிப்பை சொல்ல வருகின்றவர்கள் ஒரு பக்கம். நானும் எழுதியே ஆக வேண்டும் என்று பிடிவாதத்துடன் வெட்டி ஒட்டிப் பதிவு என்ற பெயரில் எதைப்பற்றியாவது எழுதிக் கொண்டிருப்பவர்கள். ஏன் எழுதுகின்றோம்? எதற்காக எழுதுகின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள்? ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் ஒரு சிறிய அங்கீகாரம் தேவை என்பது தான் முக்கியமாகத் தெரிகின்றது. இங்கே அங்கீகாரத்தை எதிர்பார்க்காதவர்கள் யாராவது இருக்கின்றார்களா? ஆனால் இந்த அங்கீகாரத்தின் அளவு கோல் என்பதைத் தெரிந்து கொள்ளாத போது தான் ஒவ்வொரு பிரச்சனைகளும் நம்மைத் தாக்கத் தொடங்குகின்றது. அதுவே இறுதியில் நமது சொந்த வாழ்க்கையில் அதிக மன உளைச்சலைப் பரிசாக தந்து விடுகின்றது. மேலே சொன்ன இரண்டு வகையினரும் இருக்கும் துறைகள் முக்கியமாக மென்பொருள் துறை. இப்போது இந்தத் துறை உலகம் முழுக்க மூன்று ஷிப்ட்டுகளில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாலும், உலகம் முழுக்க தமிழர்கள் இருப்பதாலும் இரவு பகல் என்று எந்நேரமும் இவர்கள் இணையத் தொடர்பில் இயல்பாகவே இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களின் நோக்கம் எதையும் எழுதிச் சாதிப்பதல்ல. தமிழ் மொழிக்குத் தேவைப்படும் அவசியமான மென்பொருள் உருவாக்கத்தில் கூட இவர்களின் பங்களிப்பு குறைவே. சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு எல்லோமே வேடிக்கை. எல்லாவற்றிலும் விமர்சனம். இவர்களின் உலகம் அழகாய் இருக்கும். முக்கியமாக உழைப்புக்கேற்ற ஊதியம் இருப்பதால் உலகத்தில் எங்கே இருந்தாலும் அவர்களின் அடிப்படை வாழ்க்கையில் பணரீதியான பிரச்சனைகள் எப்போதும் இருக்காது. பெரும்பாலான குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவர்களாகவும் இருப்பதால் எந்திரகதியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த இணையம் தான் எளிமையான பொழுது போக்கு. அக்கரையில் வாழ்ந்தால் எது குறித்தும் அக்கறையற்று இருப்பவர்கள். அப்படியே தேறினாலும் வாசிப்பவர்களும், வாசித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களும், எழுத வேண்டும் என்று நினைப்பவர்களும் சொற்ப எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். தேவை தான் இங்கே பாதையை உருவாக்குகின்றது. தேவையில்லாத போது எந்தத் தீர்மானமும் நம் மனதில் உருவாவது இல்லை. இயல்பான வாழ்க்கையே போதுமானதாக இருந்து விடுகின்றது. இவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்வதை கவனித்துப் பாருங்கள். வீட்டு நாய் கக்கா போனது முதல் முந்தா நாள் பார்ட்டியில் வாந்தி எடுத்தது வரைக்கும் லஜ்ஜையின்று பகிர அதையும் பத்துப் பேர்கள் ஆகா ஓகோ என்று புன்னகைத்து வழிமொழிந்து கொண்டிருப்பார்கள். நெருக்கிப் பிடித்து கேட்டால் நான் படிக்கும் போது கஷ்டப்பட்டு படித்தேன். இப்ப சந்தோஷமா இருக்கிறேன். உனக்கு எங்கே வலிக்கிறது போன்ற தத்துவங்களால் நம்மைத் திணறடிப்பார்கள். இவர்களிடம் நாம் எப்போதும் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்து விடுவதே உத்தமம். காரணம் பொதுவெளியில் எதையெல்லாம் எழுதக்கூடாது என்பதையும் எப்படியெல்லாம் நம் நேரத்தைக் கொல்ல முடியும் என்பதையும் இவர்கள் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் என்பதால் இவர்களைத் தான் ஒழுங்காக எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்து ஏற்றுமதி துறை. இதில் பல துணைப்பிரிவுகள் உள்ளது. உற்பத்திக்கூடங்கள் தவிர்த்து கப்பல் விமான சேவை சார்ந்த பணியில் பதவியில் இருப்பவர்கள் வரைக்கும் இந்தத் துறையில் இருக்கின்றார்கள். ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் இணையத் தொடர்பில் தான் இருந்தாக வேண்டும். இந்தத் துறையில் அவரவர் பதவியைப் பொறுத்து இணையத் தொடர்பு என்பது கணினியில் இருக்கும். சிலருக்கு இணையத் தொடர்பென்பது துண்டிக்கப்பட்டதாக இருக்கும். மின் அஞ்சலைத் தவிர வேறேதும் இவர்கள் பார்வையில் பட வாய்ப்பிருக்காது. கடைசியாக ஊடகத் துறை. இங்கேயும் அவரவர் பதவி பொறுத்தே இணையத் தொடர்பு இருக்கும். இதற்கு மேலே பணி ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவர்கள், ஆர்வத்தின் காரணமாக வீட்டில் கணினி வாங்கி வைத்திருப்பவர்கள். உடல் ஆரோக்கியத்துடன் போராடிக் கொண்டிருந்தாலும் ஏதாவது நல்ல செய்திகள் கண்ணில் படாதா என்று போட்டிருக்கும் கண்ணாடி வழியே இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர் இதையும் மீறி எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இன்று ஒருவர் எந்தத் துறையில் இருந்தாலும் இப்போதுள்ள நவீன வசதிகள் ஒவ்வொருவரையும் இணைய எழுத்தாளர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் நம்பமுடியாத குறைவான விலையில் கிடைப்பதால் அவரவர் கையில் உள்ள கைப்பேசிகள் ஒரு கணினி அளவில் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் நினைத்த கருத்துக்களை நினைத்த இடத்தில் இருந்து கொண்டே சொல்லிவிட முடிகின்றது. இந்த எளிய வசதிகள் தான் இன்று தமிழ் இணையத்தை திணறடித்துக் கொண்டிருக்கின்றது. புதிதாக இந்த இணைய உலகத்திற்கு வருபவர்களுக்கு முதலில் சில மாதங்களுக்குக் குழப்பமாகவே இருக்கும். எப்படி இவர்களுக்கு நேரம் கிடைக்கின்றது? என்ற அங்கலாய்ப்பு இருந்து கொண்டேதான் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இணையம் என்பது மாய உலகம், மந்திர உலகம் என்பது போன்ற பம்மாத்து வார்த்தைகளை நான் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் நமக்கு இதுவும் ஒரு அவசியமான உலகம் என்பதைக் கவனத்தில் வைத்திருங்கள். பத்திரிக்கையில் கத்தரித்து வெட்டி ஒட்டி வெளியே வரும் கட்டுரைகளை விட ஆழமான அழகான அற்புதமாகக் கட்டுரைகளை தந்து கொண்டிருக்கின்ற இந்த இணைய வசதிகளை ஒழுங்காக பயன்படுத்துவோருக்குத் தான் இதன் உண்மையான அருமை புரியும். அய்யோ இதைப் பற்றி இவரைப் பற்றி எழுதினால் ஆட்டோ வீட்டுக்கு வந்து விடுமோ என்ற பயமற்று வெளி வரும் உண்மையான பதிவுகள் மூலம் தான் அரசியல்வாதிகளின் உண்மையான முகமே வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. இந்த அவசிய உலகத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்பதை ஒரு நாளில் பாதி நேரம் ஒதுக்கி வைத்து பதிவுலகம், திரட்டிகள், கூகுள் ப்ளஸ், முகநூல், டிவிட்டர் போன்றவற்றில் ஒரு சுற்று சுற்றிவிட்டு கணினியை நிறுத்தும் போது நிச்சயம் நீங்கள் மயக்க நிலைக்கு அருகே தான் வந்திருப்பீர்கள். காரணம் 80 சதவிகித குப்பைகளைத் தாண்டி உங்களுக்குப் பிடித்த ஏதோவொன்றை நீங்கள் அடையாளம் காணக்கூடிய திறமைசாலியாக இருக்க வேண்டும். குப்பை என்றதும் புத்தி சார்ந்த விசயங்கள் என்பதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒவ்வொருவரும் எதற்காக இந்த இணையத்தைக் கையாள்கின்றார்கள் என்பதில் தொடங்கி எதைப் பற்றி எழுதலாம்? எதைப் பற்றியெல்லாம் எழுதக்கூடாது? என்பது போன்ற அத்தனை விசயங்களையும் கற்றுக் கொள்ள நாம் இந்த இணையத்தில் தினந்தோறும் ஒரு தடவை முழுமையாகச் சுற்றி வந்தாலே போதுமானது. நமக்குத் தேவையான ஒன்று அது மற்றவருக்குத் தேவையில்லாததாக இருக்கலாம். உனக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பவர்களும் உண்டு. என் தனி மனித சுதந்திரத்தை கெடுக்காதே. கருத்து சுதந்திரத்தை மதிக்காதவன் என்று கூட பெயர் வரக்கூடும். அவசியமான இந்த இணையம் உங்களுக்குச் சீக்கிரம் கசந்து போய் விட்டது என்றால் அதற்குக் காரணம் மற்றவர்கள் அல்ல. உங்களின் தேர்ந்தெடுப்பில் உள்ள பிரச்சனைகள் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள். (வாசித்த உங்களுக்கு என் நன்றியும் அன்பும்) [] [] [] http://freetamilebooks.com/ebooks/factory-notes/ http://freetamilebooks.com/ebooks/konjam-soru-konjam-varalaru/ http://freetamilebooks.com/ebooks/tamilar-desam/ http://freetamilebooks.com/ebooks/white-slaves/ http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/ http://freetamilebooks.com/ebooks/live-with-fear/ http://freetamilebooks.com/ebooks/karaikudi-unavagam/ [] தொடர்புக்கு: Mail ID – powerjothig@yahoo.com Blog : http://deviyar-illam.blogspot.com/ Face BooK : https://www.facebook.com/jothi.ganesan Twitter - https://twitter.com/deviyarillam Skype - texlords For E Books download http://freetamilebooks.com/authors/jothiji-tiruppur/