[] பள்ளியினூடே ஒரு பயணம் நிர்மலா ராகவன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை பள்ளியினூடே ஒரு பயணம் Copyright © 2013 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License. This book was produced using PressBooks.com. 1 உரிமை [Creative Commons License] பள்ளியினூடே ஒரு பயணம் by நிர்மலா ராகவன்is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US You are free to: - Share — copy and redistribute the material in any medium or format - - The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: - Attribution — You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. - NonCommercial — You may not use the material for commercial purposes. - NoDerivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material. - No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits. 2 ஆசிரியர் பற்றி நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 171942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர்.   [DSC_6783-orig]   எழுத்துத் துறை ஈடுபாடு 1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக சிந்திக்கும் இவர் தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றியும் அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டு வருகின்றார். பரிசில்களும், விருதுகளும் - “சிறுகதைச் செம்மல்”விருது (1991) - “சிறந்த பெண் எழுத்தாளர்”விருது (1993) - தங்கப் பதக்கம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2006) - சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006)   கல்வி: B.Sc., Dip.Ed கர்னாடக இசை, பரதநாட்டியம் ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றவர். அவைகளுக்கான விமர்சனங்களை ஆங்கில தினசரியில் எழுதியுள்ளார். தொண்ணூறுக்கு மேற்பட்ட நாட்டியப் பாடல்களை இயற்றி, கர்னாடக இசை முறைப்படி அமைத்து, பதிவு செய்திருக்கிறார். மின்னஞ்சல் – nirurag@gmail.com Contents - உரிமை - ஆசிரியர் பற்றி - பள்ளியினூடே ஒரு பயணம் - முன்னுரை - 1. அத்தியாயம் 1 - 2. அத்தியாயம் 2 - 3. அத்தியாயம் 3 - 4. அத்தியாயம் 4 - 5. அத்தியாயம் 5 - 6. அத்தியாயம் 6 - 7. அத்தியாயம் 7 - 8. அத்தியாயம் 8 - 9. அத்தியாயம் 9 - 10. அத்தியாயம் 10 - 11. அத்தியாயம் 11 - 12. அத்தியாயம் 12 - 13. அத்தியாயம் 13 - 14. அத்தியாயம் 14 - 15. அத்தியாயம் 15 - 16. அத்தியாயம் 16 - 17. அத்தியாயம் 17 - 18. அத்தியாயம் 18 - 19. அத்தியாயம் 19 - 20. அத்தியாயம் 20 - 21. அத்தியாயம் 21 - 22. அத்தியாயம் 22 - 23. அத்தியாயம் 23 - 24. அத்தியாயம் 24 - 25. அத்தியாயம் 25 - 26. அத்தியாயம் 26 - 27. அத்தியாயம் 27 - 28. அத்தியாயம் 28 - 29. அத்தியாயம் 29 - 30. அத்தியாயம் 30 - 31. அத்தியாயம் 31 - 32. அத்தியாயம் 32 - 33. அத்தியாயம் 33 - 34. அத்தியாயம் 34 - 35. அத்தியாயம் 35 - 36. அத்தியாயம் 36 - 37. அத்தியாயம் 37 - 38. அத்தியாயம் 38 - 39. அத்தியாயம் 39 - 40. அத்தியாயம் 40 - 41. அத்தியாயம் 41 - 42. அத்தியாயம் 42 - 43. அத்தியாயம் 43 - 44. அத்தியாயம் 44 - 45. அத்தியாயம் 45 - 46. அத்தியாயம் 46 - 47. அத்தியாயம் 47 - 48. அத்தியாயம் 48 - 49. அத்தியாயம் 49 - 50. அத்தியாயம் 50 - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 3 பள்ளியினூடே ஒரு பயணம் [journey-via-school] A JOURNEY THROUGH SCHOOL நிர்மலா ராகவன் nirurag@gmail.com 4 முன்னுரை ஒரு போட்டிக்காக எழுதப்பட்ட நாவல் இது. மலேசியாவில் இரண்டு வகை இந்தியர்கள் — தோட்டப்புறம் எனப்படும் ரப்பர் மற்றும் எண்ணைப் பனை எஸ்டேட்டில் வாழ்பவர்கள், மற்றும் நகர்ப்புறத்திலேயே வாழ்ந்துகொண்டு, வெளியூர்களுக்குச் செல்கையில் அத்தோட்டப்புறங்களைக் கடப்பவர்கள். முதல் வகையைச் சேர்ந்த பலர் நகர்ப்புறத்தவர்களாக ஆகி இருக்கின்றனர். நான் 47 ஆண்டுகளாக மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலேயே வசிப்பவள். உத்தியோக நிமித்தம் இங்கு வாழும் எல்லா இனங்களுடனும், எல்லா வயதினருடனும் தொடர்பு இருந்தது. மலேசியப் பின்னணியைக் கொண்டிருக்க வேண்டும் என்ற போட்டி நிபந்தனை பொருந்தியது. என் அனுபவங்களையே எழுதினால் என்ன என்ற யோசனை வரும்போது, போட்டியின் இறுதிநாளுக்குப் பன்னிரண்டு நாட்கள்தாம் இருந்தன. நூறு பக்கங்கள்! ஏழேட்டு நாட்களில் எழுதி முடித்து, இரண்டு நாட்களில் திருத்தி, அவசரத் தபாலில் அனுப்ப இரண்டு நாட்கள் என்று கணக்குப் போட்டபோது உற்சாகமாக இருந்தது. பயமோ, படபடப்போ இருக்கவில்லை. குடும்பத்தில் சிறுவர்களிலிருந்து பெரியவர்கள்வரை எல்லாரிடமும் என் திட்டத்தைக் கூறி, யாரும் என்னுடன் பேசி, என் `மூடை`க் கலைக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டேன். ஓயாமல் எழுதாது, காலாகாலத்தில் உணவு, தகுந்த ஓய்வு, உடற்பயிற்சி என்று பொழுதை அமைத்துக்கொண்டேன். பரீட்சைக்கு முனைந்து படித்த நாட்கள்போல் இருந்தது. தன்னை மறந்து, பிடித்த ஒரு காரியத்தில் ஈடுபடுவதிலுள்ள சுகம் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். விரல்கள் கணினியின் விசைப் பலகைமேல் ஓடியபோதும், என்றோ நடந்த சம்பவங்களை எல்லாம் அப்போதுதான் நடப்பதுபோல் எழுதமுடிந்தபோதும், யாரோ என்னைச் செலுத்துகிறார்கள் என்றே தோன்றியது. நானே மறந்திருந்த சிலரது குணாதிசயங்கள் எழுத்தாக வடிவெடுத்தபோது, `என்னே உள்மனத்தின் சக்தி!` என்ற வியப்புதான் ஏற்பட்டது. அகிலாவின் குடும்ப சமாசாரங்களைத் தவிர மற்றதெல்லாம் நான் அனுபவித்தவை. `நான் இறந்த பிறகு கண்டிப்பாக சொர்க்கத்துக்குத்தான் போவேன். ஏனெனில் இப்போது நரகத்தில் அல்லவா இருக்கிறேன்!` என்று என்னை ஒரு முறை சக ஆசிரியைகளிடம் சொல்ல வைத்தது அந்நாட்கள். `இனி தாங்கவே முடியாது,` என்ற நிலைக்கு நான் தள்ளப்பட்டபோதெல்லாம், என்மேல் உள்ள அன்பினாலோ, இல்லை அனுதாபப்பட்டோ என் கணவர் மிகவும் ஆதரவாக இருந்தார். ஒரு முறை, ஒரே நாளில் மூன்று திரைப்படங்களுக்கு அழைத்துப்போனார்! மாணவர்கள், மேலதிகாரிகள், சக ஆசிரியைகள் என்று, வித்தியாசமில்லாது எல்லாரிடமும் இடிபட்டிருக்கிறேன். என் தவறு — பள்ளிக்கூடம் என்ற ஒன்று மாணவர்களுக்காக இருக்கிறது என்ற என் நம்பிக்கை. சுய மதிப்பு குன்றிய மேலதிகாரிகளைக் காக்காய் பிடிப்பது கேவலம் என்ற (திமிரான? காலத்துக்கு ஒவ்வாத?) மனப்பான்மை. `மாணவியின் வீட்டுக்கே போய் இருக்கிறார், அவளைப்பற்றி அறிந்துகொள்ள! தமிழ்ப்பெண்களை சக ஆசிரியை மோசமாக நடத்தியபோது, அவளைத் தட்டிக் கேட்டிருக்கிறார். இவ்வளவு நல்லவர்களாகக்கூட ஒரு டீச்சர் இருப்பார்களா என்ற ஆச்சரியம்தான் எனக்கு ஏற்பட்டது!` என்றெல்லாம் தலைமை நீதிபதி (அவரது உரையைச் சுருக்கி இருக்கிறேன்) பரிசளிப்பு விழாவின்போது கூறியபோது, நான் சென்ற பாதை சரியானதுதான் என்ற நிறைவு ஏற்பட்டது. இதைவிட நல்ல பாராட்டு எனக்குக் கிடைத்ததில்லை. நன்றி. நிர்மலா ராகவன் [pressbooks.com] 1 அத்தியாயம் 1 “பள்ளிக்கூடம் எப்படிம்மா இருக்கு?” அப்பா ஆவலுடன் விசாரித்தார். கையெழுத்தைத் தவிர வேறு எதுவுமே எழுதத் தெரியாத அந்த முடிவெட்டுத் தொழிலாளிக்கு,  தனக்கு இதுவரை கிட்டாதது எல்லாவற்றையும் அறிந்துகொண்டுவிட வேண்டும் என்ற ஆவல் கிளர்ந்தது. அவருடைய ஆர்வத்தில் கிஞ்சித்தும் பங்கு கொள்ள முடியாது, அலட்சியமாக சூள் கொட்டினாள் அகிலா. “அதான் பாத்திருப்பீங்களேப்பா, நாடு பூராவும் இருக்கிற எல்லாப் பள்ளிக்கூடம் மாதிரியும்தான் இருக்கு. ரெண்டு மாடிக் கட்டடம் ரெண்டு. இன்னும் ஒண்ணு — மாடி இல்லாம. மொதல்ல கட்டினதா இருக்கும்”. இன்னும் என்ன சொல்லி, அப்பாவின் அறிவுப் பசிக்குத் தீனி போடலாம் என்று சற்றே யோசித்துவிட்டுத் தொடர்ந்தாள்.  “ரெண்டு கட்டடத்துக்கு நடுவில சின்னதா ஒரு மரம். அதையும் மொட்டையா வெட்டிட்டாங்க. இந்த லட்சணத்திலே, பத்து மணிக்கு முன்னாலே மின்விசிறியை போடக்கூடாதுன்னு சட்டம் வேற. பகல்ல அனல் அடிக்குது”. நல்லசாமிக்கு பெருமையும், ஆச்சரியமுமாக இருந்தது. வீடு என்ற பெயரில் புறாக்கூண்டு மாதிரி இருந்த இடத்தில் வளர்ந்த பெண்! இப்போது பெரிய மனிதர் வீட்டுப் பெண்போல் அலட்டுகிறாள்! காற்று வரவில்லையாமே! அவருக்குத் தெரியவில்லை, அங்குள்ள மனிதர்களைப் பற்றி எதுவும் சொல்லி, அப்பா மனத்தையும் கலக்கிவிடப் போகிறோமோ என்ற பதைப்பில், அவள் வேறு திசையில் பேச்சைக் கொண்டுசெல்கிறாள் என்று. உண்மையில், `யாருமே என்னை ஒரு மனுஷியா மதிச்சுப் பேசறதில்லேப்பா!` என்று அழவேண்டும்போலத்தான் இருந்தது அகிலாவிற்கு. எவ்வளவோ கற்பனைகளுடன்தாம் ஆசிரியத் தொழிலுக்கு வந்திருந்தாள் அகிலா. நல்லசாமி , `நான்தான் படிக்காத முட்டாளாயிட்டேன். நாள் பூராவும் ஒழைச்சாலும், வயிறார சாப்பிடக்கூட முடியல. இந்த லட்சணத்தில ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க வேற! நீங்களாவது கல்யாணம், குடும்பம்னு எல்லாப் பொண்களைப்போலவும் திருப்தி ஆகிடாதீங்க. நீங்க நல்லா படிக்கணும்மா, மத்தவங்களுக்கும் படிச்சுக் குடுக்கணும்!” என்ற ரீீதியில் சமயம் வாய்த்தபோதெல்லாம் கூறுவார். அவர் அலுத்துக்கொள்ளவில்லை, அவர்களுக்கு எப்படி கல்யாணம் செய்து முடிப்பது என்ற அச்சமே அவரை அப்படிப் பேச வைத்தது என்று, தமது அன்புத் தந்தையைப் புரிந்து வைத்திருந்தனர் மகள்கள். ஆகவே, `தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் வண்ணம்,  நன்கு படித்தனர். உள்நாட்டில் மேல்படிப்பு படிக்க, போதிய பொருளாதார வசதி இருக்கவில்லை. ஆகவே, சீதா, அகிலா இருவரையும் தஞ்சாவூரில் இருந்த தம் அக்காள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் நல்லசாமி. `ஒங்களை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேம்பா,` என்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதற வேண்டும் போலிருந்தது அகிலாவுக்கு. ஆனால் அவர் மனதை நோகடிக்க அவளுக்கு மனம் வரவில்லை. `நீ வயத்திலே இருக்கிறப்போ, ஒங்கம்மா என்ன சொன்னாங்க, தெரியுமா?  இந்தப் பிள்ளை ரொம்ப நிறைய படிக்கணும். நம்ப குடும்பத்திலேயே அதிகமா படிச்சது இதுவாத்தான் இருக்கணும், அப்படின்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க, அகிலா!` என்று பலமுறை சொல்லி இருக்கிறார். தான் அறியாத அம்மா ஆசைப்பட்டார்களோ, என்னவோ, ஆனால், அப்பாவின் நீண்டநாள் கனவு அது என்று அகிலா நன்றாகவே அறிந்திருந்தாள்.  இளநிலை பட்டம் வாங்கி வந்த பிறகுதான் தெரிந்தது, அவளது விஞ்ஞனப் பட்டப்படிப்பு மலேசிய அரசாங்கத்தால் சமமாக ஏற்கப்படவில்லை என்ற அவலம். குறைந்த ஊதியம். ஆனால், மலாயா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் இருந்த பல்கலைக் கழகங்களில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கான அதே வேலை.   ஆசிரிய உத்தியோகத்தில அகிலாவுக்கு முதன் முதலாக அதிருப்தி ஏற்பட்டது அப்போதுதான். அதுவே ஆத்திரமாக மாறியது. ஆனால், அவளது துணிச்சலும், கோபமும் உத்தியோகத்திற்கு ஏற்றதாக இருக்கவில்லை. 2 அத்தியாயம் 2 “டீச்சர்! ஒங்களை குரு பெசார் (guru besar) கூப்பிடறாரு,” என்று அலுவலகப் பையன் அறிவித்ததும், சற்று குழம்பிப் போனாள் அகிலா. தலைமை ஆசிரியர் தன்னை எதற்காக அழைக்கிறார்?  சிலரைப்போல இல்லாமல், உரிய நேரத்திற்கு வகுப்பிற்குப் போகிறோம். ஒன்றரை மணி நேர வகுப்பானாலும், நின்றும், நடந்தபடியும் பாடம் கற்பிக்கிறோம். அப்படித்தானே நடந்துகொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கான ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது! எதற்கும் பயப்படாதவள், தயங்கியபடி அவரது அறையை நோக்கிப்போனாள். அறை சாத்தப்பட்டிருந்தது. ஒரு விரலால், சன்னமாகத் தட்ட, `கம் இன்,` என்று அவள் உள்ளே நுழைய அனுமதி அசரீரியாக ஒலித்தது. சிவப்பாக இருந்தார் அந்த வட இந்தியர், மிஸ்டர் ராய். சற்றும் இஸ்திரி கலையாத, விலையுயர்ந்த ஆடைகள். தலைமுடியை வழவழவென்று வாரியிருந்தார். தன் புறத்தோற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்துபவர் என்பது நன்றாகவே தெரிந்தது. “மிஸ் அகிலா! நீங்கள் ஒரு இந்திய பட்டதாரி. இல்லையா?” `தெரிந்த சமாசாரம்தானே!` என்று அவள் சற்று அலட்சியமாகத் தலையாட்டினாள். “வாயைத் திறந்து பதில் சொல்லுங்க!” மிரட்டலாக வந்தது அவருடைய கனக்குரல். “ஆமாம் சார். சாரி சார்,” என்று அவள் தடுமாற, அவர் முகத்தில் வெற்றிப் புன்னகை. பெண்களைத்தான் எவ்வளவு எளிதாக பயமுறுத்த முடிகிறது! வீட்டில் வாயில்லாப் பூச்சியாக இருந்த மனைவி அவரது நினைவில் எழ, முகம் சுருங்கியது. இந்தப் பெண்தான் எவ்வளவு அழகாக இருக்கிறாள்! இவள் மட்டும் எனக்குக் கிடைத்தால்.. என்று ஒரு கூடாத எண்ணம் வந்தது. “நீங்க பௌதிகம் படிச்சிருக்கீங்க. நானும் அதே பாடம்தான். அதனால, இந்தியாவிலே பட்டம் வாங்கி இருக்கிற ஒங்களுக்கு அந்தப் பாடம் சரியா வராதுன்னு எனக்குத் தெரியும்,” என்று அவர் சொல்லிக்கொண்டே போக, அகிலாவின் ரத்தத்தில் சூடேறிற்று. “அதான் ஒங்களைக் கூப்பிட்டு அனுப்பினேன்.  நீங்க இனிமே, சனிக்கிழமை சாயந்திரங்களிலே எங்கிட்ட பாடம் கத்துக்க வாங்க”. பாடமா கத்துக் குடுக்கப் போறே? என்ன பாடம்? உடல்கூறா? விருக்கென்று எழுந்தாள் அகிலா. “நோ, தாங்க்ஸ், எனக்கு என் பாடம் நல்லா தெரியும். ஒங்ககிட்ட பாடம் கத்துக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல,” என்று விறைப்பாகச் சொல்லிவிட்டு வெளியேறியவளையே வெறித்துப் பார்த்தார் அந்தப் `பெரிய` ஆசிரியர். அவளை வேறு எப்படி வீழ்த்தலாம் என்று அவரது யோசனை போயிற்று. (“இன்னிக்கு `ஓசை`யில மொதல் பக்கம் பாத்தியா?” முதலிரவு அரைத்து வைத்த இட்லி மாவு ஒரேயடியாக புளித்துப்போயிருந்தது. வாரக்கணக்கில் மழை இல்லாது, வெயில் காய்ந்து, வெப்பத்தை உண்டாக்கியிருந்ததுதான் காரணம். இரண்டு கோப்பை அரிசியையும், அதில் ஒன்றில் மூன்று பங்கு என்ற கணக்கில் உளுத்தம்பருப்பையும் முதல் நாள் காலையிலேயே ஊறப் போட்டு அரைத்திருந்தாள். மின்சார இயந்திரம்தான் என்றாலும், களைந்து, கல்லரித்து, அரைபட்ட மாவை வழித்தபின், கிலோ கணக்கில் கனத்த இயந்திரத்தை தூக்கமாட்டாது தூக்கி, கழுவி.. எத்தனை வேலை! இரண்டு மணி நேரம் வாய் ஓயாது, பாடம் நடத்தியபோதுகூட இவ்வளவு ஆயாசம் வந்ததில்லை அவளுக்கு. அந்த மாவு பாத்திரத்தின் வெளியே வழிந்து, சமையலறை மேடையிலும் கொட்டி இருந்தது. அதை வழித்து பாத்திரத்துக்குள்ளே போடுவதா, இல்லை, ஈரத்துணியால் துடைத்து விடலாமா, அப்படிச் செய்தால் முழுவதாக ஒரு கோப்பை அரிசி வீணாகிவிடுமே என்று பலவித குழப்பங்களில் ஆழ்ந்திருந்த அகிலாவுக்குக் கணவரின் குரல் எரிச்சலைத்தான் உண்டுபண்ணியது. “இன்னிக்கு என்ன அப்படி தலைபோற செய்தி? படுகொலையா, பூகம்பமா, இல்ல ரயில் விபத்தா?” என்று உரக்கக் கேட்டவள், `இங்க ஒவ்வொருத்தரும் படற பாடு போதாதுன்னு, தினமும் காலையில ஏதாவது எழவுச் செய்திதான்!` என்று முணுமுணுத்துக் கொண்டாள். ஓயாது வீட்டு வேலை செய்வது, படித்து உத்தியோகம் பார்த்த மனைவிக்கு அலுப்பைக் கொடுத்தது அவருக்குத் தெரிந்ததுதான். ஆகவே, “இல்ல, அகிலா. ஒனக்கு சம்பந்தமான செய்திதான். அடுத்த வருஷத்திலேருந்து, கல்வி அமைச்சு எவ்வளவு நல்ல,  நல்ல திட்டங்களைக் கொண்டுவரப் போறாங்க, தெரியுமா?” என்றார், வலிய வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன். தனது வேலையை தாற்காலிகமாக மறந்து, அவரை நோக்கி நிமிர்ந்தாள் மனைவி. “பேப்பரில போட்டா ஆச்சா? நடைமுறைக்கு ஒண்ணும் வராது,” என்றாள்). 3 அத்தியாயம் 3 பட்டப் படிப்புடன், ஆசிரியப் பயிற்சியும் பெற்று, முதன் முதலில் உத்தியோகத்தில் சேரப்போகும் உற்சாகத்தில் இருந்தாள் அகிலா. அம்பாங்கில் அவர்கள் வீடு இருந்ததால், அருகிலிருந்த ஒரு இடைநிலைப் பள்ளியில் அவளுக்கு வேலை கிடைத்திருந்தது. “டீச்சர் என்ன இனம்?” என்று கேலிச்சிரிப்புடன் பதின்ம வயதினன் ஒருவன் கேட்டபோது, திக்கென்றது. குரு கடவுளுக்கு ஒப்பானவர் என்பார்களே! அண்ணன், தம்பிகள் இல்லாது வளர்ந்திருந்த அகிலாவுக்கு  அங்கிருந்த மாணவர்கள் — அனேகமாக அனைவருமே அருகிலிருந்த அடுக்கு மாடிக் கட்டடங்களிலிருந்த வந்தவர்கள்தாம்– அச்சத்தையும், குழப்பத்தையும்தான் விளைவித்தனர். தன்னை ஏன் இப்படி வித்தியாசப்படுத்துகிறார்கள்? அவர்கள் எல்லாரும் என்ன இனம் என்று தெரிந்துகொண்ட பின்னர்தான் அவள் வேலையில் சேர்ந்தாளா, என்ன? தனக்கு வேறு எந்த வழி திறந்திருந்தது என்ற கசப்பான எண்ணம் உதித்தது. நினைவு தெரிந்த நாளாக அப்பா காட்டிய வழி இது. மருத்துவமோ, வக்கீல் படிப்போ படிக்க வசதி இருக்கவில்லை. அரசாங்கப் பள்ளிகளில், உத்தியோக நேரம் காலை ஏழரை மணியிலிருந்து, மத்தியானம் கிட்டத்தட்ட ஒன்றுவரையே. அவள் படித்துக் கொடுக்கப்போகும் மூன்றாம் படிவத்திற்குமேல் இருந்தவர்கள் காலையில்தான் வருவார்கள். இதுதான் பெண்களுக்குச் சௌகரியமானது. வீடு, குடும்பம், பிள்ளைகுட்டிகள் என்று எல்லா காரியத்தையும் கவனித்துக்கொள்ள இயலும். இதையெல்லாம் அவள் முதலிலேயே யோசித்துவைத்து, மகிழ்ந்திருந்தாள். ஆனால், இதையும் மீறி, மாணவர்களின் மரியாதைக் குறைவான போக்கு என்று ஒன்று இருக்கலாம் என்று தனக்கு ஏன் முதலிலேயே தோணாமல் போய்விட்டது? ஆசிரியப் பயிற்சியின்போது போதிக்கப்பட்ட சமூக இயலும், மனோதத்துவமும் அவளைப் பொறுத்தவரையில் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகத்தான் இருந்தன. கண்கூடாக அப்பாடங்களில் வர்ணிக்கப்பட்ட பிரச்னைகளைப் பார்த்தபோது, கலக்கம்தான் ஏற்பட்டது. முதலாமவனின் கேள்விக்கு மற்றொருவனே பதிலளித்தான்: “அதான் வயிறு தெரிய சேலை கட்டறாங்க இல்ல? இந்தியாதான்! கண்ணும் அழகா, பெரிசா இருக்கு, பாருடா!” வகுப்பே கலகலத்துப்போனது. அடுத்த முறை, துளிக்கூட முதுகு தெரியாதபடி தையல்காரரிடம் ரவிக்கை தைக்கச் சொல்லவேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டாள். நைலக்ஸ் புடவைகள்தாம் தினப்படி துவைத்துக் கட்ட எளிதாக இருக்கின்றன, பிழியவும் வேண்டாம், இஸ்திரியும் போட அவசியமில்லை என்று வாங்கியது தவறோ என்று அவள் எண்ணம் போயிற்று. உடம்பு தெரிய உடுத்தினால், இந்த வால்கள் அதைவேறு விமரிசனம் செய்து தொலைப்பான்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. வீட்டில் வாண்டுகள் முதற்கொண்டு, தலையை வெளிக்காட்டாது மறைத்த கலாசாரம்தான் அவர்களுக்குப் பழக்கம். இவர்கள் உலக அனுபவமேயற்ற இளசுகள். அவர்கள்மேல் எரிச்சலும், அனுதாபமும் ஒருங்கே எழுந்தன. விரைவிலேயே அகிலா டீச்சரை அவர்களுக்குப் பிடித்துப் போயிற்று. அவளுடைய புடவையையும், தலை நிறைய மல்லிகைப்பூவை நீண்ட, ஒற்றைப்பின்னலின் மேல்  சூடியதையும் அவர்கள் பிரமிப்புடன் பார்த்தார்கள். “உங்களுக்கு சிவப்பு நிறம்தான் டீச்சர் அழகாக இருக்கிறது. தினமும் சிவப்பே உடுத்திட்டு வாங்க!” என்று மலாயில் அன்பு வேண்டுகோள் விடுத்தனர். புடவைகளுக்கேற்ற வண்ணத்தில் கைநிறைய கண்ணாடி வளையல்களை அணிந்து, அவள் கரும்பலகையில் எழுதும்போதெல்லாம், ரயில் வண்டி போவதுபோல்,  `சுக்குச் சுக்கு, சுக்குச் சுக்கு,” என்று அந்த ஓசையை ரசித்தார்கள். மற்ற ஆசிரியர்களைப்போல அவள் வகுப்புக்கு ரோத்தான் (Rotan, மெல்லிய, நீண்ட பிரம்பு) கொண்டுவந்து மிரட்டவில்லை. அவர்களை `முட்டாள்’ என்று கேலி செய்யவில்லை. அதிகாரமாக நடத்தவில்லை. “ப்ளீஸ். நான் சொல்வதைக் கேளுங்களேன்!” என்று ஒரு ஆசிரியை தங்களைக் கெஞ்சியது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.  ` “மலாயில பேசுங்க, செக்கூ (Cikgu, ஆசிரியை)” என்று மட்டும் செல்லமாக அடம் பிடித்தார்கள். விஞ்ஞானம் ஆங்கில மொழியில் இருந்தது. அவர்களுக்குத் தமது தாய்மொழியில் பற்று, அல்லது தேர்ச்சி என்பதற்காக, அப்பாடத்தை எப்படி வேறு மொழியில் போதிக்க இயலும்? ஆங்கிலம் படித்தால், தாய்மொழிக்குத் துரோகம் செய்வதுபோல் இருக்கிறது, `ரொம்பத்தான் கர்வம்!` என்று பெற்றோர் வேறு திட்டுகிறார்கள் என்று ஒரு பையன் தனியாக வந்து சொல்லியபோது, அவளுடைய குழப்பம் அதிகரித்தது. அரசாங்க பள்ளிப் படிப்புக்குச் சம்பளம் கட்ட வேண்டாம் என்ற நிலையில், பள்ளிக்கூடத்துக்கு வருவதே சகமாணவர்களுடன் கலந்து பேசுவதற்காகத்தான் என்பதுபோல்தான் நடந்துகொண்டார்கள் பெரும்பாலோர். அவர்களே அதை ஒத்துக்கொண்டதுதான் வேடிக்கை. கண்வலியில் கண்கள் இரண்டும் சிவந்து, நீர் வடிய ஒரு மாணவன் அவளுடைய வகுப்பில் அமர்ந்திருந்ததைக் கண்டு, “நீ இப்படி வந்திருக்கக்கூடாது. அப்புறம் எல்லாருக்கும் தொத்திக்கும்,” என்று அவள் கண்டிப்பாகக் கூறினாள் ஒரு முறை. “வீட்டில பேரரிங் (boring), டீச்சர். ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. சண்டை போடலாமில்ல?” என்றான் அவன் துடுக்காக. அவன் முகத்தில் இருந்த குறும்புச் சிரிப்பு அவளையும் பற்றிக்கொண்டது. கோபிக்கத் தோன்றவில்லை. 4 அத்தியாயம் 4 `புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவள், இவளுக்கு என்ன தெரியும்!` என்ற அலட்சியத்துடன், அகிலாவை ஒதுக்கி இருந்தனர் எல்லாரும். தலைமை ஆசிரியரின் நைச்சியப் பேச்சிற்குப் பிறகு, அவருடன் மோதியபின், அவளால் யாருடனும் பழக முடியவில்லை. தனக்கு நேர்ந்த அவமானத்தை எத்தனை பேர் அவமானம் என்று ஒத்துக்கொள்வார்கள்? அழகைப் பணயமாக வைத்து, வேலையில் எளிதாக முன்னுக்கு வந்துவிடலாம் என்று நடிக்கிறாள் என்றுதானே நினைப்பார்கள்? பெரும்பாலும், ஆசிரியர்களின் பொது அறையில் நோட்டுப் புத்தகங்களைத் திருத்துவதிலும், அன்று கற்றுக் கொடுக்க வேண்டிய பாடத்தை மீண்டும் மீண்டும் கவனமாகப் படித்தபடியும் பொழுதைக் கழிக்கலானாள். முதல் நாள் சொல்லிக் கொடுத்த பாடம்தான். ஆனால், பலருக்கும் புரியவில்லை என்பது அவர்களது முகத்திலேயே தெரிய, தன்மேல்தான் தவறோ என்று அதே பாடத்தை வேறு ஒரு புத்தகத்திலிருந்து படித்துக்கொண்டிருந்தவளுக்கு, மணி அடித்ததோ, பிற ஆசிரியைகள் வெளியே நடந்ததோ, அல்லது வகுப்பு முடிந்து உள்ளே நுழைந்ததோ எதுவுமே தெரியவில்லை. “மிஸ். அகிலா. கிளாசுக்குப் போங்க!” அறை வாயிலிலிருந்து வந்த கனக்குரல் அவளைத் திடுக்கிடச் செய்தது. மணிக்கட்டிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். அவள் வகுப்பு ஆரம்பித்து, பத்து நிமிடங்கள் ஆகியிருந்தன. செய்யக்கூடாத தவற்றைச் செய்துவிட்டதைப்போல, புத்தகங்களைத் திரட்டிக்கொண்டு நடந்தாள். அறை வாயிலை நந்திமாதிரி மறைத்தபடி நின்றிருந்தார் பெரிய ஆசிரியர். சற்று விழித்துவிட்டு, அறையின் மறுகோடியில் இருந்த இன்னொரு வாயிலை நோக்கிப்போனாள் அகிலா. அவர் முகத்தில் புன்னகை. `இவளை விரட்டிப் பிடிப்பதில்தான் எவ்வளவு சுவாரசியம்!` என்று நினைத்துக் கொண்டார். ஆதிகாலத்தில் விலங்குகளைத் துரத்தித் துரத்தி வேட்டையாடிய மனிதன் எவ்வளவுதான் நாகரீகமாக ஆனாலும், அவனது அடிப்படை புத்தியில் அந்த வேட்டைக்குணம் அகலவில்லை. என்றோ படித்திருந்தது அவருக்குப் பெருமையைத்தான் அளித்தது. “அந்த மனுஷன் ஒங்களை ரொம்பத் தொந்தரவு செய்யறான், இல்லே?” வகுப்பிற்குப் போனவளால் நிம்மதியாகப் பாடம் பயில்விக்க முடியவில்லை. காரணமில்லாமல் ஆத்திரப்பட்டுவிட்டு, மாணவர்களின் பயந்த முகத்தைப் பார்த்து பரிதாபம் எழ, ஏதோ எழுத்து வேலையைக் கொடுத்தாள். பௌதிகத்தில் கணக்கும் சேர்ந்திருந்தது சௌகரியமாகப் போயிற்று. அவள் பயந்தபடி, தலைமை ஆசிரியர் அவளுக்காக பொது அறை வாயிலில் காத்திருக்கவில்லை. தன் இடத்திற்கு வந்து மர நாற்காலியில் அமர்ந்தவள், சோர்வு தாங்காது, மேசைமேல் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். கண்ணீர் பெருகியது. விம்மலை அடக்கப் பாடுபட்டாள். அப்போதுதான் அவர் குரல் கேட்டது. “அந்த  மனுஷன் ஒங்களை ரொம்பத் தொந்தரவு செய்யறான்,இல்லே?” கனிவாக, அதிலும் தமிழில் ஒலித்த குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள் அகிலா. அந்த ஆசிரியர் உபசாரத்திற்காக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, “என் பேரு ராமசாமி. நானும் ஒங்களைக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்,” என்றார். இளைஞராகவேறு இருந்து தொலைத்தார். `என்ன இது, ஒரு ஆணும் தன்னை நிம்மதியாக விடமாட்டானோ,` என்று எரிச்சல் பிறந்தது அகிலாவுக்கு. தன்னையே கவனிக்கிறாராமே! “பயந்துட்டீங்களா? நீங்க வேற!” பயத்தால் அவள் கண்கள்  விரிந்ததைக் கண்டு நகைத்தார். “நான் கல்யாணம் நிச்சயமானவன், மிஸ்! ஓ! நான் சொன்னதை தப்பா அர்த்தம் பண்ணிக்கிட்டீங்க போல இருக்கு,” என்று மன்னிப்பு கேட்கும் தோரணையில் பேசினார்.  “இவனைப்போல ஆளுங்களுக்கெல்லாம் பயப்படக்கூடாது. நல்லாக் குடுங்க. தானே ஒதுங்கிடுவான்,” என்று அறிவுரை கொடுத்தார். மரியாதைகெட்ட விதத்தில் நடந்துகொண்ட மேலதிகாரிக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கிறது என்பதுபோல அவர் ஒருமையில் பேசியது அவளுக்குத் தெம்பை அளித்தது. “நீங்க புதிசில்ல? அதான் மிரண்டு போயிட்டீங்க. தானே ரெண்டு வருஷமானா, எல்லாரும் மதிச்சு நடப்பாங்க. கவலையை விடுங்க!” என்று நடைமுறையையும் விளக்கினார். மேலே பேச எதுவுமில்லை என்பதுபோல் அவர்  எழுந்தார், “காண்டீனுக்குப் போறேன்,” என்று யாரிடமோ சொல்வதுபோல் தெரிவித்துவிட்டு. 5 அத்தியாயம் 5 மத்தியானம் பஸ் பிடித்து, வீட்டுக்குப் போனாள். இந்த வேலையில் இன்னும் இருபது, முப்பது ஆண்டுகள் நிலைத்திருக்க வேண்டுமே என்று நினைத்தபோது மலைப்பாக  இருந்தது. “நல்லா படிச்சு, பெரிய வேலையிலேயும் சேர்ந்துட்டே! `எம் மக பட்டதாரி ஆசிரியை`ன்னு நாலு பேர்கிட்ட சொல்றப்போ, எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?” என்று தந்தை பாராட்டியபோது, அழலாம் போலிருந்தது. சிரிக்க முயன்று தோற்றவளாக, உள்ளே விரைந்தாள். “காலையில ஆறரை மணிக்குப் போன பிள்ளை! பள்ளிக்கூடத்தில ரெண்டு துண்டு ரொட்டி தின்னிருப்பே. அது எப்படிப் போதும்? மணி ரெண்டாகப் போகுது.  சீக்கிரம் வந்து சாப்பிடும்மா. ரசம் சூடா இருக்கு, பாரு!” அப்பாவின் குரல் பின்னாலிருந்து ஒலித்தது. மகள் பசி தாங்க மாட்டாள் என்ற கரிசனத்துடன், முதல்நாள் அவள் சமைத்து ஐஸ் பெட்டியில் வைத்துப்போனதை அவர் சுட வைத்திருக்கிறார்! அன்பைப் பொழியும் அப்பா, வயது ஐம்பதாகியும், தன் கீழ் வேலை பார்க்கும் ஒரு இளம்பெண்ணை பெண்டாள நினைக்கும் தலைமை ஆசிரியர், இதமாகப் பேசி, காயம் பட்ட அவள் மனத்தை ஆற்ற நினைத்த சக ஆசிரியர் ராமசாமி! `ஆண்களில்தாம் எத்தனை வகை!` என்று அதிசயப்பட்டவளாக, கையைக் கழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள் அகிலா. இன்னும் என்னென்ன சோதனைகளைச் சந்திக்க வேண்டி இருக்குமோ என்ற லேசான பயம் தலைதூக்கிற்று. மறுநாள் பகல். ஆசிரியர்களின் பொது அறையில் அதிகம் பேர்  இருக்கவில்லை. “மிசஸ் வாங்! இப்போ மணி என்ன?” என்று, தன் எதிரில் உட்கார்ந்திருந்தவளைப் பார்த்து ஆங்கிலத்தில் கேட்டாள் இன்னொரு சீன மாது. யாரைக் கேட்டால் என்ன? அவளுக்கு வேண்டியது மணிதானே என்று எண்ணமிட்டவளாய், “பத்தடிச்சு பத்து நிமிஷம்,” என்று வலியப்போய் கூறினாள் அகிலா. ஆனால் அவளோ, அகிலா சொன்னது காதிலேயே விழாததுபோல், “மிசஸ் வாங்,” என்று ஆரம்பித்து, தன் கேள்வியை மீண்டும் கேட்டாள். கேட்டுவிட்டு. ஒருமுறை தலை நிமிர்ந்து, `உன்னை யார் கேட்டது?` என்பதுபோல் அகிலாவை ஒரு பார்வை பார்த்தபோது, அகிலாவுக்கு அவமானமாக இருந்தது. இனிமேல் யாருடனும் தானே போய் பேசவே கூடாது என்று தீர்மானித்துக்கொண்டாள். அதன்பின், ஒரு சிறிய இடைவேளை. இருபதே நிமிடங்கள். காண்டீன் குத்தகையை எடுத்திருந்த ஆ சேக் (சீன மொழியில் மாமா) தயாராகப் பண்ணி வைத்திருந்த மீ அல்லது ரிப்பன் வடிவில் இருந்த கொயித்தியாவ் பிரட்டல், அல்லது வேகவிட்ட சிவப்பு நிற பீன்சில் தேங்காய்ப்பாலும், வெல்லமும் சேர்ந்த சூப் — இப்படி எதையாவது வாங்கித் தின்றுவிட்டு, சேற்றுக் குழம்புபோல்  கெட்டியாக, அதிபழுப்பாக  இருந்த மிக இனிப்பான தேத்தண்ணீரையும் குடித்துவிட்டு, ஒரு பாட்டம் தம் கணவன்மார்களையோ, வீட்டுப் பணிப்பெண்ணையோ வசை பாடிவிட்டு வருவார்கள் அனேக ஆசிரியைகள். யாரும் அவளைத் தங்களுடன் காண்டீனுக்கு வரும்படி அழைக்கவில்லை. தான் கொண்டு வந்திருந்த வெண்ணை தடவிய ரொட்டித்துண்டுகளை கடித்தாள் அகிலா. மென்னியைப் பிடிப்பதுபோல் இருந்தது. சிறிது தண்ணீரைக் குடித்துவிட்டு, ரொட்டியை அப்படியே மூடி, தன் தோள்பையில் போட்டுக்கொண்டாள். இன்னும் மூன்று மணி நேரம் இடைவிடாமல் வகுப்பு நடத்தியாக வேண்டுமே என்ற யோசனை அப்போது இருக்கவில்லை. அந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தார்  மிஸ்டர் ராய், `எனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா என்ற வியாதி. ரொம்ப நேரம் நான்கு சுவர்களுக்கிடையே இருந்தால், படபடத்துவிடும்,` என்று. விஷயம் புரிந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டார்கள். அவருடைய தந்திரம் இவர்களுக்கா புரியாது! ஆசிரியர்களை வேவு பார்க்கவென தாம் வராந்தாவில் நடப்பதைப் பார்த்துவிட்டு, விறைப்பாகவோ, அல்லது இன்னும் உரக்கவோ பாடம் நடத்தியபோது, தலைமை ஆசிரியர்களின் பலம் கூடிவிடுமோ, என்னவோ! நாள் முழுவதையும் அப்படித்தான் நடந்தே கழித்தார் அவர். 6 அத்தியாயம் 6 வகுப்புக்கு வெளியே நடை பழகிக்கொண்டிருந்தவரைச் சிறிதும் கவனியாது, பாடத்திலேயே கண்ணாயிருந்தாள் அகிலா. தன்னை யாரோ குறைத்து மதிப்பிட்டதைப்போல் அவமானம் எழ, ஆத்திரத்துடன் அந்த வகுப்பறைக்குள் நுழைந்தார். கரும்பலகையில் கண் போயிற்று. சற்றும் தாமதியாமல், மீதமிருந்த பாடத்தைத் தானே நடத்த ஆரம்பித்தார். திகைப்பில் வாயடைத்துப் போனாள் அகிலா. தான் நிற்பது அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? என்னதான் மேலதிகாரியாக இருந்தாலும், முதலில் உத்தரவு கேட்க வேண்டாம்? அதிகாரத் தொனியுடன் சில மாணவர்களை ஏதேதோ கேள்விகள் கேட்டு, அவர்கள் அளித்த பதிலின் உச்சரிப்பில் குற்றம் கண்டுபிடித்துவிட்டு, பின் அகிலாவின் பக்கம் திரும்பினார் மிஸ்டர் ராய். “பார்த்துக் கொண்டீர்களா, மிஸ். அகிலா? இப்படித்தான் பாடம் நடத்த வேண்டும். பாவம், நீங்கள் சின்னவர்கள்! ஒன்றும் தெரியவில்லை” என்றுவிட்டு, மிடுக்காக வெளியே நடந்தார். சிலரது கேலி நகைப்பு கேட்டது. தலைமை ஆசிரியரின் வசவுக்கும்,ஏளனத்துக்கும் நம்மை இலக்காக்கிவிட்டார்களே இந்த ஆசிரியை என்ற கோபம். `கெளிங்!` (Keling) என்று யாரோ ஒரு மாணவன் சொன்னது தெளிவாகக் கேட்டது. இந்தியர்கள் `கலிங்கத்திலிருந்து வந்தவர்கள்` எனறு பொருள்படும்படி,  ஒரு காலத்தில் அப்படி அழைக்கப்பட்டிருந்தனர். பின்பு, அதுவே தரக்குறைவான வார்த்தையாகிவிட்டது, `நீக்ரோ` என்பதுபோல். ஆனால், அவனைக் கண்டிக்கும் மனநிலையில் அகிலா இருக்கவில்லை. அவளை அதிகம் தவிக்கவிடாது, மணி அடித்தது. தூக்கத்தில் நடப்பவளைப்போல தன் நினைவு அற்றவளாக தன்னிருப்பிடத்துக்கு வந்தமர்ந்தவள், அப்படியே தலையைக் கவிழ்த்துக்கொண்டு, விம்ம ஆரம்பித்தாள். “என்ன ஆச்சு? என்ன ஆச்சு?” பல பெண்குரல்கள் கரிசனத்துடன்  ஒலிக்க, மெல்ல நிமிர்ந்தாள். `உலகில் காருண்யம் அறவே அற்றுப்போகவில்லை` என்ற நிதரிசனத்தில் சிறிது தெம்பு பிறந்தது. “மிஸ்டர் ராய் என் கிளாசுக்கு வந்து..” மேலே தொடரமுடியாது, ஒரு விம்மல். கண்களைத் துடைத்துக்கொண்டு, நடந்ததை விவரித்தாள். அலாதி மௌனம் நிலவியது சில நிமிடங்கள். தங்களில் ஒருத்திக்கு நிகழ்ந்த மானக்கேடு தமக்கும் நேர எத்தனை காலமாகும் என்று எல்லாரும் யோசித்ததுபோல் இருந்தது. “பாவம்!” என்றார்கள் சிலர். இறுதியில், அவர்களில் சற்று வயதானவளாக இருந்த ஜோன் கூறினாள்: “ஏன் இப்படி நடந்துக்கிறார், தெரியுமா? அவர் என்ன செய்தாலும், நீங்க பொறுத்துப் போறீங்க! இப்படியே நடந்தா, ஒரு பையனும் ஒங்களை மதிக்க மாட்டான்!” பேசியவள் `மஞ்சள் தோல்` என்று மிசஸ் லிங்கம் ஒருமுறை எரிச்சலுடன் வர்ணித்த பட்டதாரி கணக்கு ஆசிரியை என்று பின்பு தெரிந்துகொண்டாள். அவள் ஏணிபோல், ஐந்தடி எட்டங்குலம் இருந்தாள். அவளுடைய நிமிர்ந்த நடையும், மாணவர்களிடையே அவள் பெற்ற மதிப்பும் பிற ஆசிரியைகளின் பொறாைைமயைத் தூண்டிவிட்டிருந்தது. அகிலா யோசித்தாள். தன் கௌரவம் நிலைக்க வேண்டுமானால், தான் செய்ய வேண்டியது ஒன்றுதான் இருந்தது. 7 அத்தியாயம் 7 தலைமை ஆசிரியர் என்ற மரப்பலகை தொங்கிய அறைக்கு வெளியே முக்காலியில் அமர்ந்திருந்தான் அலுவலகப் பையன். பதினெட்டு வயதுக்கு மேல் இராது. ஒரு ஆசிரியரின் மகன் அவன், போதைப் பழக்கத்துக்கு ஆளாகி, படிப்பை அரைகுறையாகவிட்டவன் என்றவரையில் பிறர் பேசுவதைக் கேட்டிருந்தாள். ஆனால் இப்போது அவனுடைய அழகோ, பாலியத்திலேயே வாழ்க்கையைத் தொலைத்துவிட்டானே என்ற பரிதாபமோ அவளுக்குள் எழவில்லை. “இருக்காரா?” என்று கழுத்தசைவால் சுட்டிக் கேட்டாள். அவனும் தலையாட்ட, சுழலும் கதவை தன்னால் இயன்ற பலத்துடன் தள்ளி, உள்ளே நுழைந்தாள். தனது விசாலமான இருக்கையில் அமர்ந்திருந்தவர் எதுவும் புரியாது அவளையே பார்த்தார். நேரிடையாக விஷயத்துக்கு வந்தாள் அகிலா. “மிஸ்டர் ராய்! ஒங்களுக்கு மத்தவங்களை மதிக்கத் தெரியாம இருக்கலாம். ஆனா, எனக்கு என்னோட மாணவர்களோட மதிப்பு வேணும். என்ன நினைச்சுக்கிட்டு, என்னோட வகுப்பில நுழைஞ்சீங்க?” புன்னகைத்தார் தலைமை ஆசிரியர். `அரசியல்வாதியாக இருந்திருக்க வேண்டியவர்!` என்று அதன்பின் அந்த நிகழ்ச்சியைப்பற்றிப் பிறரிடம் சிரித்தபடி சொன்னாள் அகிலா. “அவங்க எதுவும் நினைக்க மாட்டாங்க. ஒங்களைவிட எனக்கு அனுபவம் அதிகம் இல்லையா?” என்றார் புன்னகை மாறாமல். எப்போது தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து, சண்டைபோட இவள் வந்திருக்கிறாளோ, இனி இவளை வீழ்த்துவது எளிது என்று கணக்குப் போட்டார். அவளுடைய மார்பகத்தில் கண் போயிற்று. அம்மியிலும், கல்லுரலிலும் அரைத்ததன் பயனாக, `பணை முலை` என்று பண்டைக்கால இலக்கியவாதிகள் வர்ணித்ததுபோல் இருந்தன. `சினிமா நடிகைங்க மாதிரி உள்ளே ரப்பர் எதுவும் வெச்சுக்காமலேயே எப்படி இருக்கா! இவளை எப்படியும் என் வழிக்குக் கொண்டு வந்துடணும்!` என்று முடிவு செய்துகொண்டார். கூடியவரைக்கும் பொறுமையை இழக்காமல், இவளை விட்டுப் பிடிப்போம் என்று தீர்மானித்துக்கொண்டார். அவருடைய மன ஓட்டத்தைச் சற்றும் புரிந்துகொள்ளாது, “அவங்களுக்கு எதை, எப்படி சொல்லிக் கொடுக்கணும்கிறது எனக்கும் தெரியும். இனிமே நீங்க என்னோட முன் அனுமதி இல்லாம உள்ளே நுழைஞ்சீங்கன்னா..” என்று படபடத்தாள் அகிலா. `போனால் போகிறது என்று பார்த்தால், இந்தப் பெண் ரொம்பத்தான் பேசுகிறதே!` அவருக்கும் ரோஷம் பிறந்தது. நேற்று பிறந்த பெண்! நான் அவளுடைய மேலதிகாரி. என்ன பேச்சு பேசுகிறாள்! சுத்தமாக மரியாதை இல்லை! “எதுக்கு கத்தறீங்க? நான் ஒண்ணும் செவிடு இல்ல,” என்றார்  ஆத்திரத்துடன். “நானும்தான் செவிடு இல்ல. ஆனா, ஒங்களுக்கு அது தெரியாம போச்சே, என்னோட வகுப்பில நுழைஞ்சப்போ!” என்றவள், அவருடைய பதிலுக்குக் காத்திராது, வெளியே நடந்தாள். விறைத்துப் போயிருந்தான் வெளியே முக்காலியில் அமர்ந்திருந்த பையன். “கேட்டுச்சில்ல?” என்று விசாரித்துவிட்டு, அவன் `இல்லை’ என்பதுபோல் அதிவேகமாகத் தலையை பக்கவாட்டில் ஆட்டி, தான் ஒரு வார்த்தை விடாமல் கேட்டதை உறுதிப்படுத்தியதும், வெற்றிப் புன்னகையுடன் பள்ளி அலுவலகத்தின் வெளியே விரைந்தாள் அகிலா. `வீராங்கனைங்க!` `பத்திரமா இருங்க. நீங்க இன்னும் தாற்காலிகமாத்தான் இருக்கீங்க. ஒங்களை நிரந்தரமா ஆக்கறது H.M கையிலதான் இருக்கு!` என்று பெண்களுடன் சேர்ந்துகொண்டு, ஆண்களும் மாறி மாறிப் பாராட்டியதோ, அறிவுரை வழங்கியதோ அவள் நினைவில் பதியவில்லை. தனது விசாலமான, குஷன் பதித்த நாற்காலியின் பின்புறத்தில் ஒட்டிக்கொள்வதுபோல் மிஸ்டர் ராயின் உடல் ஒடுங்கியதுதான் அவள் கவனத்தில் நிறைந்து நின்றது. குனிந்த தலை நிமிர்ந்தது. சில சமயங்களில், சண்டை உதவுவதுபோல வேறு எதுவும் பயனளிப்பதில்லை என்று நினைத்து, தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். `நீ ஏன் இவ்வளவு சண்டைக்காரியா இருக்கே?` விளையாட்டாகவும், குற்றம் சாட்டுவது போலவும் பலர் அவளைக் கேட்டிருக்கிறார்கள். அப்பாதான் ஒருமுறை சொன்னார்: “நீ பிறந்தப்போவே அம்மா இறந்துட்டாங்க, அகிலா. ஒன்னைப் பாக்கல, ஒரு வாட்டிகூட தாய்ப்பால் குடிக்க நீ குடுத்து வைக்கல. அதான் ஒன்னை நானே பாத்துக்கணும்னு முடிவு செஞ்சேன். அக்காளை பாட்டி வீட்டுக்கு அனுப்பிட்டேன். ரெண்டு சின்னப் பிள்ளைங்களை எப்படிப் பாக்க முடியும்? நான் வேலையைக் கவனிப்பேனா, இல்ல அழற பிள்ளைக்குப் பால் குடுப்பேனா? நீ வேற, உசிருக்குப் போராடிக்கிட்டு, அழுதுகிட்டே இருப்பே”. அவர் பலமுறை வெவ்வேறு விதத்தில் அவளுடைய  பிள்ளைப் பருவத்தைப்பற்றி விவரித்து இருக்கிறார். முதலில் சுய பச்சாதாபம் எழுந்தது அவளுக்கு. யோசித்தபோது, சுதந்திரமாக, தாயின் உதவியின்றி மூச்சு விட ஆரம்பித்ததுமே உயிருக்காகப் போராடி வெற்றி பெற்றதால், என்ன போராட்டம் வந்தாலும் தான் விலகிப்போவது கிடையாது என்று புரிந்துகொண்டாள். தன்னால் ஏற்க முடியாததை எப்பாடு பட்டாவது விலக்கும் மனோபாவம். ஆனாலும், வயதில் பெரியவர் ஒருவரை, அதிலும் தன் முன்னேற்றத்தில் முக்கியமான பங்கு வகிப்பவரை தான் இன்று மரியாதைக்குறைவாகப் பேசியதை அப்பாவிடம் சொல்ல முடியாது. அப்பா ஏதாவது கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசித்தபடி பேருந்தில் ஏறினாள். அவள் மத்தியானம் வீட்டுக்கு வரும்போது, பக்கத்திலிருந்த தன் கடையை உடன் வேலை பார்ப்பவரைக்  கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு,  ஏதோ பூசை நேரம் வந்ததுபோல்,  தானும் அவளோடு சேர்ந்து சாப்பிட தவறாது வந்துவிடுவார் நல்லசாமி. “பள்ளிக்கூடம் எப்படிம்மா அகிலா இருந்திச்சு?” வழக்கமான கேள்விதான் என்றாலும், சற்றே யோசித்தாள் அகிலா. நடந்ததைச் சொன்னால், `நாம்ப ஏழைங்க. அதிலும் நாட்டிலே சிறுபான்மையானவங்க. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டுத்தான் போகணும்!` என்பார், சிறு குரலில்.  இப்படி அடங்கி ஒடுங்கித்தான் நம்மவர்கள் இன்னும் கீழேயே தங்கி இருக்கிறார்கள் என்று ஆத்திரம் பிறந்தது அவளுக்குள். சிறுவர்கள்கூட தன்னை மதிக்காததன் காரணம் அப்பாமாதிரி பலரும் நம்பி, நடப்பதால்தான். ஆனாலும், அப்பாவையும் குற்றம் சொல்ல முடியாது. அவருடைய பின்னணி அவரை அப்படிப் பேசவைத்தது என்று அவளுக்குத் தெரியாததா! பத்து வயதில் தாயையும், அக்காளையும் பிரிந்து, தன் தந்தையுடன் மலாயா வந்த அப்பா, பரம்பரைத் தொழிலையே செய்தார். வாழ்க்கை அவர் நினைத்து வந்தமாதிரி வளப்பமாக இருக்கவில்லை. `விதி!` என்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார். அப்பாவின் கேள்விக்குப் பதிலாக, “நிறைய சமாசாரங்க கத்துக்க முடியுதுப்பா,” என்றாள், பட்டும் படாமலும். ஒரு விதத்தில் தான் சொன்னது உண்மை என்றே அவளுக்குத் தோன்றியது. அன்று அப்பாவுக்கு நிறைய வேலை போலும்! முதல் நாள் சமைத்த பதார்த்தங்கள் ஐஸ் பெட்டியிலேயே இருந்தன. அடுப்பைப் பற்ற வைத்தாள். காஸ் அடுப்பில் நீலமாகத் தீ எரிந்தது. 8 அத்தியாயம் 8 செய்தி காட்டுத்தீபோல் பரவியது. பள்ளிக்கூடத்துக்கு ஒரேயடியாக, பத்து இன்ஸ்பெக்டர்கள் வரப்போகிறார்கள்! மிஸ்டர் ராயின் ஏகாதிபத்தியத்தைத் தாங்கமுடியாது, எல்லா ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து ஒரு புகார்மனுவைத் தயாரித்து, கல்வி இலாகாவிற்கு அனுப்பி இருந்தனர். மேலதிகாரி தன்னை மட்டும் மிரட்டவில்லை என்று புரிந்தபோது, முதலில் அகிலாவுக்கு திருப்தியாக இருந்தது. ஒரு சிலர் மண்டையை உடைத்துக்கொண்டு எல்லாருடைய புகார்களையும் ஒரு சேரத் திரட்டி ஒரு மனுவைத் தயாரித்ததும், பிறருடன் சேர்ந்து, அகிலாவும் அதில் கையொப்பம் இட்டிருந்தாள். அதன் ஆக்ககரமான விளைவுதான் மேலதிகாரிகளின் விஜயம். தன்னைப்பற்றி மிகவும் மோசமாக புகார் செய்யப்போவது அந்த இளரத்தம்தான் என்று அனுமானித்த தலைமை ஆசிரியர் அவளைக் கூப்பிட்டு அனுப்பினார். “மிஸ் அகிலா! இந்த உத்தியோகத்திலே ஒங்களை நிரந்தரமாக்க நான் இந்த மனுவைப் பூர்த்தி செய்து அனுப்பணும். ஒங்களுக்கு உயிரியல் தெரியாதில்ல? அதை நான் குறிப்பிட்டாகணும்” சற்று கேலியாக ஒலித்தது குரல். இவள் தனக்குக் கிடைக்காவிட்டால் பரவாயில்லை, தன் வேலைக்கு உலை வைக்காவிட்டால் போதும் என்ற விவேகம் வந்திருந்தது அவருக்கு. அவளுக்குக் கோபம் வந்தது. “நான் பட்டப்படிப்புக்கு எடுத்த பாடங்க பௌதிகம், வேதியல். இன்னும் கணக்கு. சிலபேரைப்போல நான் ஒரே ஒரு பாடம் மட்டும் கத்துக் குடுக்கறதில்ல. என்னோட ஆக்கபூர்வமான தகுதிகளைப் பாக்காம, ஏன் சார் மிரட்டறீங்க?” என்று கத்தினாள். அவளுடைய எதிர்ப்பைச் சற்றும் எதிர்பாராததால் ஒரு கணம் அதிர்ந்தவர், “ஒங்க வார்த்தைகள் — ரொம்ப தரக் குறைவா இருக்கு மிஸ் அகிலா,” என்றார் கண்டிப்பான தொனியில். `உனக்கென்ன பதில் வேண்டிக் கிடக்கிறது!` என்பதுபோல், மௌனமாக அங்கிருந்து வெளியேறினாள் அகிலா. அவள் மனம் இறுகி இருந்தது. (“அகிலா! இட்லி இறுகிடப் போவுது. கோழி கூவுது, பாரு! ” கணவரின் குரல் கேட்டு நனவுலகிற்கு வந்தாள் அவள். `கோழி` என்று அவர் குறிப்பிட்டது அந்த வடிவத்திலிருந்த, வெள்ளையும், சிவப்புமான அலாரம் அடிக்கும் கடிகாரம். `இங்கு விற்கும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சாமான்கள்  ஒவ்வொன்றும் ஐந்து ரிங்கிட்தான்!` என்று விளம்பரப் படுத்திக்கொண்ட ஜப்பான் நாட்டுக் கடையான டய்சோவில்(DAISO) வாங்கியது. இட்லியைத் தட்டில் வார்த்துவிட்டு, ஆறு நிமிடங்கள் ஆனதை அறிவிக்க, கோழியின் அடிப்பாகத்தைத் திருப்பி இருந்தாள். அது அடித்தது கூடத் தெரியாது, அப்படி என்ன பழங்கதையில் மனம் போய்விட்டது! சற்றே வெட்கம் அடைந்தவளாக, “நல்ல வேளை, சொன்னீங்க!” என்று உரக்க நன்றி தெரிவித்தாள். கார் வடிவத்திலிருந்த எவர்சில்வர் டப்பாவைத் திறந்து பார்த்தாள். `கடவுளே, தோசை மிளகாய்ப்பொடி காலியாகி விட்டிருக்கிறதே!` ஆயாசம் பிறந்தது. “மிளகாய்ப்பொடி முடிஞ்சுபோச்சு. நானும் மொதல்லேயே பாக்கலே. ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க,” என்று சின்னதாகக் குரல் கொடுத்தாள். “அரை மணி வேணுமானாலும் எடுத்துக்க. எனக்கு ஒண்ணும் அவசரமில்ல,” என்றவர், மீண்டும் தினசரியில் பார்வையைப் பதித்தார். குறித்த நேரத்திற்கு வகுப்பிற்குப் போய், மணி அடித்ததும் வெளியேறி, இடையே தேநீர் அருந்தி, வேறொரு வகுப்புக்குப்போய், ஒழிந்த நேரத்தில் மட்டுமே கழிப்பறைக்குச் சென்று — இப்படி எதையுமே கடிகாரத்தில் ஒரு கண்ணைப் பதித்தபடியே செய்திருந்ததால், ஆசிரியர்களுக்கு நேரப்படிதான் எல்லாமே நடந்தாக வேண்டும் என்பது அவருக்கு மட்டும் தெரியாதா, என்ன! இரும்புச் சட்டியில் எள்ளைப் போட்டு, அது எதிர்ப்புடன் பெரரிந்ததும், ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொண்டாள். பின்னர், சிறிது நல்லெண்ணையை விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய், வற்றல் மிளகாய், பெருங்காயம் ஆகியவைகளை தனித்தனியே வறுத்தாள். அவை ஆறியவுடன் உப்பு, புளி கலந்து மின்சார இயந்திரத்தில் அரைத்தாள். முன்பெல்லாம் வெல்லம் போடுவாள். ஆனால், கணவருக்குப் பிடிப்பதில்லை. எல்லாம் கால்மணியில் முடிந்தது. “சாப்பிட வாங்க. கூப்பிட மாட்டேன்,” என்று பாட்டுபோல், விளையாட்டாகக் குரல் கொடுத்தபோது, கடந்தகால நினைவுகளிலிருந்து மனம் நன்றாக மீண்டிருந்தது அவளுக்கே தெரிந்தது. ஐம்பத்து ஐந்து வயதில் உத்தியோக வாழ்க்கைக்கு ஒரு முடிவு வந்தாலும், சமையல், பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என்று பெண்களின் வாழ்க்கையில் நிரந்தர ஓய்வு என்பதே கிடையாது. அந்த எண்ணம் எழுகையிலேயே, இதுவும் இல்லாவிட்டால், வேண்டாத எண்ணங்களிலேயே மூழ்கி, பைத்தியம் பிடித்துப்போக வேண்டியதுதான் என்றும் தோன்றியது. பார்க்கும் இடங்களில் எல்லாம், தன்னை ஒத்த பலரும் பேரக் குழந்தைகளுக்காகச் சமைத்து, தாம் சமைப்பதில் அவர்களுடைய விருப்பு, வெறுப்பைப்  பிறருடன் பங்கிட்டுக் கொள்ளும்போது, அவர்களுடைய பெருமை கலந்த பேச்சில் அகிலாவால் கலந்துகொள்ள இயலாது. தவிப்புதான் ஏற்படும். அவளுக்கும்தான் ஆணும், பெண்ணுமாய் இரண்டு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். எங்கேயோ, கண்காணாத தூரத்தில். விமானத்தில் இருபத்து நான்கு மணிநேரப் பிரயாணம். மூட்டு வலியுடன் அவளால் அதெல்லாம் முடியாது. மூன்று வருடங்களுக்கொரு முறை மகன் வந்து போகிறான், குடும்பத்துடன். மருமகள் வெள்ளைக்காரி. குழந்தைகளுக்கு தாய்மொழிதான் புரிந்தது. “நீயும் சேர்ந்து சாப்பிடறதுதானே அகிலா!” என்றபடி, பசியாறியதும், வழக்கம்போல நண்பர்களைப் பார்க்க வெளியே கிளம்பினார் கணவர், “நான் இன்னிக்கு சாப்பாட்டுக்கு வரமாட்டேன்,” என்று தெரிவித்துவிட்டு. அவரிடமிருந்து உருப்படியான பதில் எதுவும் வராது என்று தெரிந்திருந்தும், “எங்கே போறீங்க?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை அகிலாவால். அவள் அனுமானித்தபடியே பதில் வந்தது: “நாலைந்து எடத்துக்கு!” நாலைந்து இட்லிகள் மிஞ்சி இருந்தன. பகல் உணவுக்குத் தனக்கு இது போதும் என்று தீர்மானித்தவளாய், அகிலா முன்னறைக்குச் சென்று, சோபாவில் அமர்ந்தாள். கால்களை எதிரேயிருந்த முக்காலியில் நீட்டிக்கொண்டாள். மூன்று மாடிகளில் அனாயாசமாக ஏறி, நின்ற நிலையில் பாடம் எடுத்தது ஒரு காலம்! எவ்வளவுதான் உணவுக் கட்டுப்பாடு இருந்தாலும், கால்நடை, யோகாசனம் என்று விதவிதமாக தேகாப்பியாசம் செய்தாலும், வயோதிகம் என்ற பருவ மாற்றத்தை, அது உடலில் நிகழ்த்தும் அநியாயங்களை, எந்தக் கொம்பனாலும் தவிர்க்கவோ, அதிலிருந்து தப்பிக்கவோ  முடியாது என்று புரிந்துபோக, பெருமூச்சு விட்டாள்). இன்ஸ்பெக்டர்களின் வரவை ஒட்டி, பிற மனிதர்களுடன் அதிகத் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமற்ற ஒரு வேலை மிஸ்டர் ராய்க்கு அளிக்கப்பட்டது. அவர் தொலைந்ததை ஆசிரியர்கள் எல்லாரும் ஒரு விருந்து வைத்துக் கொண்டாடினர். அடுத்து வருபவர் எப்படி இருப்பாரோ, நம்மை எப்படியெல்லாம் ஆட்டிவைப்பாரோ என்ற பயம் இன்னும் அவர்களுக்குள் எழவில்லை. ஆனால், போகுமுன் மிஸ்டர் ராய் ஒரு காரியம் செய்திருந்தார். `மிஸ் அகிலாவுக்குத் தன் பாடத்தில் திறன் போதாது. நிரந்தரமாகும் தகுதி இவருக்கு இல்லை!` என்று அவளுடைய மனுவில் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தார். நல்ல வேளையாக, அவருடைய நல்லெண்ணத்தை மேலதிகாரிகள் சந்தேகப்பட்டதால், அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பேதும் கொடுக்கப்படவில்லை. அகிலாவின் ஆசிரியப் பணி நிரந்தரமாகியது. 9 அத்தியாயம் 9 ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அகிலாவிற்கு வேலை மாற்றம் கிடைத்தது. ஒரே பள்ளியில் நீண்ட காலம் வேலை பார்த்தால், அந்தப் பள்ளியை என்னமோ தாங்களே கட்டியதுபோல உரிமை கொண்டாடி, சக ஆசிரியர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளும் ஆசிரியர்களிடமிருந்து அந்த வாய்ப்பைப் பிடுங்கும் கல்வி இலாகாவின் முடிவு அது. கோலாலம்பூரின் வடகிழக்குப் பகுதியில் இருந்த புடு என்ற இடத்தில் இருந்த அந்தப் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தாள் அகிலா. பெண்கள் பள்ளிக்குப் போகிறோம், அங்கு ஒழுக்கக் குறைவு பெரிய பிரச்னையாக இருக்காது என்ற எதிர்பார்ப்பு இருந்தது அவளிடம். `இடைநிலைப் பள்ளி` என்று பெயர்தான் பெரிதாக இருந்ததே தவிர, அதற்கு பிரத்தியேகமான நுழைவாசல்கூட இருக்கவில்லை. பக்கத்திலிருந்த ஆரம்பப் பள்ளிக்குள் புகுந்து வரவேண்டியிருந்தது. பள்ளியை ஒட்டி இருந்த அரசாங்க நிலத்தில், `சேரி` என்று சொல்லக்கூடிய விதத்தில் கோணல்மாணலாக ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் வீடுகள் முளைத்திருந்தன. மலாய், சீன, இந்திய மக்கள் வாழும் மலேசிய நாட்டின் பள்ளிக்கூடங்களில், மூவினத்தைச் சார்ந்த மாணவிகளும் இருந்தார்கள் — வெவ்வேறு விகிதத்தில். அது  பள்ளி இருந்த இடத்தைப் பொறுத்திருந்தது. மலாய் கம்பங்கள், சீனர்களின் புது கிராமங்கள், ரப்பர் அல்லது செம்பனை தோட்டப்புறவாசிகளான தமிழர்கள் என்று பூகோள ரீதியில் அவர்கள் பிரிந்திருந்தார்கள். ஏதாவது ஓரினம் பெரும்பான்மையாக இருக்கும்போது, மற்ற இனத்தைச் சார்ந்த ஆசிரியைகள் திக்குமுக்காடித்தான் போனதுதான் உண்மை. இந்தியப் பிள்ளைகளை மரியாதையாக நடத்தினால், அவர்கள் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் ஆனாலும், தம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதுபோல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்கள். இந்த நடப்புமுறை புடு பள்ளியின் பெரும்பான்மையினரான சீன மாணவிகளிடம் பலிக்கவில்லை. நயமாகப் பேசும் இந்திய ஆசிரியைகள் அசட்டுத்தனத்தாலோ, தம்மைப் பார்த்து அடைந்த பயத்தாலோ அப்படி இருந்ததாக கற்பனை செய்துகொண்டு, மரியாதை கொடுக்காமல் நடந்துகொண்டார்கள்.  மாணவிகளின் கையே ஓங்கியிருந்தது. `நம்ப பள்ளி மாணவிகள் எல்லாம் ரௌடிங்க!` என்று அடிக்கடி சொல்லி, அவர்களின் போக்கை அலட்சியப்படுத்தினார்கள் ஆசிரியைகள். தினமும் வீட்டில் செய்த பலகாரம் ஒன்றை பெரிய டப்பாவில் கொணர்ந்து, எல்லாருக்கும் பகிர்ந்து அளித்து, தம் ஒற்றுமையை நிலைப்படுத்திக் கொண்டனர். தனித்தே செயல்படக்கூடாது என்று, அகிலாவும் அவ்வப்போது காண்டீனில்  பிரட்டப்பட்ட மீ கேரரிங் (MEE GORENG, வறுக்கப்பட்ட நூடுல்ஸ்) வாங்கிச் சாப்பிட்டாள். அதிலிருந்த அதிகப்படியான எண்ணை வயிற்றைப் பாதிக்காமலிருக்க, `சைனீஸ் டீ` யைக் குடித்தாள். அதைக் கவனித்த சீன ஆசிரியைகள் அவளைத் தங்களில் ஒருத்தியாக மகிழ்வுடன் ஏற்றனர். உலகில் சாப்பிடப் பிடிக்காதவர்கள் மிகச் சிலரே. உணவு மனிதனின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று என்பது ஒரு புறமிருக்க, அதையும் மீறி, `நான் உயிர் வாழ்வதே சாப்பிடுவதற்குத்தான்!` என்பதுபோல் நடப்பவர்கள்தாம் அனேகர். இத்தகையவர்களுடைய நட்பையும், ஆதரவையும் பெற மிகச் சுலபமான வழி அவர்கள் வயிற்றின் மூலமாகத்தான் என்று புரிந்து, அகிலாவும் முந்திரியையும், நெய்யையும் கொட்டி, ரவா கேசரி செய்துபோனாள். `ரொம்ப எண்ணையாக இருக்கிறது!` என்று நாசூக்காக மறுத்துவிட்டார்கள்.  மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் பால், நெய் போன்றவற்றின் வாசனையைக்கூடப் பொறுக்க மாட்டார்கள் என்று ஒருத்தி ரகசியமாகத் தெரிவித்தாள். “இந்த மாணவிகளை எப்படி வழிக்குக் கொண்டு வருவதென்றே புரியவில்லையே!” என்று அகிலா வாய்விட்டு அரற்றினாள், ஒருநாள். “இங்கு படிப்பவர்கள் எல்லாரும் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். வீட்டில் அறவே கவனிப்பு கிடையாது. அதனால் மனம் போனபடி நடப்பார்கள். அவர்களை அவர்கள் போக்கிலேயேதான் நடத்த வேண்டும்”. “புரியவில்லையே! நானும் கவனிக்காமல் விட்டுவிட வேண்டும் என்கிறீர்களா?” “இல்லை. இவர்கள் கும்பலாக இருக்கும்வரையில்தான் தைரியமாக அலட்டுவார்கள். அவர்களைப் பிரிக்க வேண்டும். அவர்களுக்குப் புரிவதெல்லாம் வசவு மொழி, மட்டம் தட்டுவது. இதற்குத்தான் மசிவார்கள்”. மிசஸ் லீயின் ஆலோசனை பயங்கரமாக இருந்தது அகிலாவுக்கு. மாணவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அதுதான் ஓர் ஆசிரியையின் கடமை என்று அவள் நம்பி இருந்தாள். அப்படித்தான் அவளுக்குப் போதிக்கப்பட்டிருந்தது — பயிற்சியின்போது. ஒருவேளை, அவளுடைய ஆசிரியர்களின் முழுக் கவனமும் அவள்மீது படிந்திருக்காவிட்டால், அவள் இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்திருக்க முடியுமா? அவளுடைய எண்ணப்போக்கைக் கவனியாது, மிசஸ் லீ கேட்டாள்: “நீ ஷட் அப் –வாயை மூடு — என்று சொல்வாயா?” “சேச்சே!” வலுவாக மறுத்தாள் அகிலா. ஏதோ பெரிய ஹாஸ்யத்தைக் கண்டுவிட்டமாதிரி பலரும் சிரித்தார்கள். அது போதாதென்று, “ஹே! இதைக் கேளுங்க. நம்ப அகிலாவுக்கு ஷட் அப் சொல்லத் தெரியாதாம்!” என்று பறைசாற்றினாள் ஒருத்தி. “இங்கே அடிக்கடி அந்த மாதிரி வார்த்தைகளை உபயோகிக்க வேண்டியிருக்கும். நீ மிரட்டினால்தான் அவர்கள் பணிவார்கள். இல்லாவிட்டால், நீ அவர்களுக்கு ஒரு துரும்புதான்!” “ஷட் அப் என்று மரியாதையாகச் சொல்லாதே. ஷட..ப் என்று கத்து!” வாழ்க்கையின் மேல் தளத்துக்கு ஒருவரைக் கொண்டுசெல்ல கல்விதான்அடிப்படை என்று நினைத்தால், இவர்களோ கீழே நோக்கி அழைத்துச் செல்லச் சொல்கிறார்கள்! அகிலாவுக்கு இந்த காட்டுமிராண்டிகள் தன்னைத் தனியாக விட்டுப் போகமாட்டார்களா என்று இருந்தது. இனிமேல், வகுப்புக்குப் போகவேண்டிய நேரம் தவிர, பாக்கி எல்லாவற்றையும் பள்ளி வாசகசாலையில் கழிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள். ஆனால், அவர்கள் அவள்மீது இருந்த கரிசனத்தால், அவளும் தங்களில் ஒருத்தி, அவள் கஷ்டப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தினால்தான் அப்படி `அறிவுரை` கூறினார்கள் என்பது நாளடைவில் புரிந்தது. தன்னையும் அறியாது, தன்னை மதியாத மாணவிகளை மட்டம் தட்டுவது, அல்லது திட்டுவது என்பதை வழக்கமாக்கிக் கொண்டாள். ஒரு வியாதிக்காக சாப்பிடும் மருந்துகளில் பக்கவிளைவு இருப்பதுபோல், இந்தத் தொழிலில் கட்டைக் குரலும், சிறுகச் சிறுக பெண்மையின் மென்மையை இழப்பதும் தவிர்க்க முடியாதவை என்பதைப் புரிந்துகொண்டாள். பயிற்சியின்பொது, குரலைப் பாதுகாப்பதற்கான சிகிச்சை முறைகளையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் என்று தோன்ற, சிரிப்பு வந்தது. 10 அத்தியாயம் 10 (“உன்னைப்போல யாரும் வடை சுட முடியாது,” என்று ஏதோ கூறியபடி உள்ளே வந்தார் கணவர். “என்னங்க?” “காலைல இட்லி மெத்து மெத்துனு இருந்திச்சா? வயிறு தெரியாம சாப்பிட்டுட்டேன். சாப்பாட்டு நேரத்தில லேசா ரெண்டு வடை மட்டும் சாப்பிடலாம்னு  சாப்பிட்டேன். என்ன கண்ராவி எண்ணையில சுட்டாங்களோ, வயத்தைப் புரட்டுது”. “ஐயையோ!” பதைத்தாள் அகிலா. “லங்கணம் சர்வ ரோக நிவாரணம்,” புதிர் போட்டார். பின், “புரியல? பட்டினிதான் எல்லா உபாதைக்கும் உகந்த மருந்துன்னு அந்தக் காலத்திலேயே  என்னை மாதிரி தீனிப் பண்டாரங்களுக்காக சொல்லி வெச்சிருக்காங்க!” அவருடைய சிரிப்பில் கலந்துகொண்ட அகிலாவுக்கு `வடை` என்ற வார்த்தை பழைய ஞாபகம் ஒன்றைக் கிளப்பிவிட்டது). பள்ளிக்கூடங்களில் பணம் திரட்ட, ஒவ்வொரு ஆண்டும் ஏதேதோ வழிகளைக் கையாளுவார்கள். அப்படி அமைந்ததுதான் உணவு விற்பனை. அவள் தலைமையில் நடந்த விஞ்ஞானச் சங்கம் வடை சுட்டு விற்று, பணம் திரட்டித்தர ஒப்புக் கொண்டிருந்தது. அதில் அவளுடைய உபயம் உளுத்தம் பருப்பு. இரண்டு இந்திய மாணவிகள் வடை மாவை உருட்டி, பிளாஸ்டிக் பை ஒன்றின்மேல் அது ஒட்டாமல் தட்டி, பின் கொதிக்கும் எண்ணையில் போட்டார்கள். விற்பனை செய்யும் பொறுப்பு  ஏகமனதாக சோ லியன் என்ற ஒரு சீன மாணவியிடம் விடப் பட்டிருந்தது. `வியாபார நுணுக்கங்கள் தெரிந்த இனம்` என்ற பிறரது கேலியை அவர்கள் புகழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருந்தது சௌகரியமாகப் போயிற்று. “எனக்கு ரெண்டு வடை,” என்று ஒரு மத்தியானப் பள்ளி ஆசிரியை தயக்கத்துடன் வந்து நின்றாள். இடைநிலைப் பள்ளியின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் மலாய் மொழி போதிக்கும் ஆசிரியை அவள். ஆசிரியர்களுக்கான வரிசைக்கிரமத்தில் பின்தங்கியவளாக அவளைப்  பிறர் நடத்தியதில் அகிலாவுக்கு உடன்பாடு இல்லை. எல்லா வகுப்பு ஆசிரியர்களும் அந்தந்த வயதினருக்கு முக்கியமானவர்கள்தாமே? அவர்கள் ஏற்ற பணியை செய்து முடிப்பதற்கேற்ற கல்வித்திறன் அவர்களுக்கு இருந்தது. இதில் என்ன, உயர்வு, மட்டம்? புன்னகையுடன் அவளை வரவேற்றாள் அகிலா. அவள் எதிரில் ஒரு பெரிய வடையை எடுத்த சோ லியன், மேசைக்கு அடியில் அதற்குப் பதிலாக ஒரு சிறிய வடையை மாற்றியதைப் பார்த்தாள் அகிலா. தன் கண்களோடு இணைந்த அவளது கள்ளச் சிரிப்பை ரசிக்க முடியவில்லை. அதிர்ச்சிதான் ஏற்பட்டது. தனக்கு என்றோ படித்துக் கொடுத்த ஆசிரியைதானே, இனி அவள் தயவு எதற்கு என்ற அலட்சியமா, இல்லை, இயற்கையிலேயே அமைந்த வியாபார தந்திரமா? வீட்டருகே இருந்த காலைச் சந்தையில் ஒரு அழுகிய உருளைக் கிழங்கு போட்டான் கடைக்காரன் என்று எப்படி சண்டை பிடித்திருக்கிறோம் நாம்! அவன் படிக்காதவன், இந்த மாணவி படிக்கிற, புத்திசாலியான பெண். ஒருவேளை, படிப்புக்கும், வியாபாரத்துக்கும் சம்பந்தம் இல்லையோ? பணம் என்று வரும்போது, மற்ற நியாயமான கொள்கைகளும், குணங்களும் தாமாகவே விலகிவிடுமோ? அந்த மாணவியின் போக்கில் இனத் துவேஷம், பிற இனங்கள் தாழ்மையானவை என்ற மனப்பான்மை,  கலந்திருந்தது வெகுநாட்கள் கழித்துதான் புரிந்தது அவளுக்கு. பஸ்சில் பயணம் செய்துவந்தது களைப்பை அளித்தது.  ஆகவே, தனது வீட்டுக்குச் சற்று தொலைவில் இருந்த  சக ஆசிரியையான மிசஸ் ஹோ தன்னையும் அவளுடைய காரில் தன்னை ஏற்றிப்போக முடியுமா என்று கேட்டாள். கார் எப்படியும்தான் போகப் போகிறது, தான் ஒருத்தி ஏறினால், அதனால் கூடுதலான பெட்ரோலா செலவழிந்து போய்விடப் போகிறது என்று நினைத்துத்தான் கேட்டாள். ஆனால், ஓரிரு முறை அழைத்துப் போய்விட்டு, “அதான் ஆயிரக் கணக்கிலே சம்பளம் வருதில்ல? கார் வாங்கறது!” என்று ஏளனமாக மிசஸ் ஹோ கூறியபோது, அவமானத்தில் மூச்சே நின்றுவிடும்போல இருந்தது. அதற்குப்பின் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. அவளே உபசாரமாக அழைத்தாலும், நாசூக்கான புன்னகையுடன் மறுத்து விடுவாள். அதன்பின்தான், கார் வாங்கும் யோசனையே வந்தது. “இப்போ எதுக்கும்மா கார்? மொதல்லே சொந்த வீடு வாங்கு!” என்று அப்பா கூறியதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை அகிலா. 11 அத்தியாயம் 11 அன்று காலை தன் காரை வாயிலுக்கு அருகே நிறுத்திவிட்டு இறங்கி நடந்தாள் அகிலா.  பன்னிரண்டு, பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இருவர் ஓடி வந்தார்கள். “இன்னிக்கு தூக்கிட்டுப் போக ஒரு நோட்டும் இல்லே,” என்று முறுவலுடன் மலாய்மொழியில் கூறினாள். அவர்கள் ஆரம்பக் கல்வியை சீனப் பள்ளிக்கூடத்தில் முடித்தவர்கள், ஓரளவு மலாய், ஆங்கிலம் இரண்டும் தெரியும் என்று அவர்களைப்பற்றித் தெரிந்து வைத்திருந்தாள். பிற மாணவிகளுக்கு அதுகூடத் தெரியாது என்ற நிலையில், ஆறாவதும் அல்லாது, ஏழாவதும் அல்லாது, `புகுமுக வகுப்பு` என்று அதற்கிடையே ஒருதிரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிக்கொண்டு இருந்தார்கள் அவர்கள். தமிழ் பள்ளிக்கூடங்களில் கல்வியை ஆரம்பித்த இந்திய மாணவிகளும் இப்படிப்பட்ட புகுமுக வகுப்பிற்குத்தான் அனுப்பப்பட்டனர் என்றாலும், அப்பள்ளியில் ஒரு தமிழ் மாணவிகூட அந்த ஆண்டு இருக்கவில்லை. “டீச்சர்!” என்று பவ்வியமாக அழைத்த ஒரு பெண், (அவள் பெயர்  கிம் ஹூவா, Kim Hua என்று பின்பு தெரிந்துகொண்டாள்) ஒரு புத்தகத்தை அவள் கண்ணெதிரே நீட்டினாள். ஒரு வார்த்தையைக் காட்டி, “ஆபா? (apa, என்ன)” என்று கேட்டாள். அதுவோ மலாய் வார்த்தை. அகிலாவுக்குப் புரிந்தாலும், அதை இவர்களுக்கு எப்படி விளக்குவது என்று யோசித்தாள். கோபம், வெறுப்பு என்ற வார்த்தைகளை அடுத்தடுத்து ரோஸ் காட்டியபோது, ஒரு வழிதான் புலப்பட்டது அவளுக்கு. வார்த்தைகள் உதவாதபோது, சைகையும், முகபாவமும் போதாதோ? “பாருங்கள்,” என்றுவிட்டு, தன் முகபாவத்தாலேயே விளக்கினாள். புரிந்துகொண்டவர்களாக,”ஓ!” என்றபடி சிரித்தார்கள். ஒருவருக்கொருவர் தமது காண்டனீஸ் மொழியில் விளக்கிக்கொண்டனர். “தெரிமா காசே, செக்கூ! (Terima kasih, Cikgu)” என்று மலாயில் நன்றி தெரிவித்துவிட்டு அவர்கள் ஓடியபோது, அவர்களுடன் சேர்ந்து அகிலாவின் எண்ணமும் ஓடியது. வகுப்புக்கு வரும் ஆசிரியையைக் கேட்காது, இவர்கள் ஏன் தன்னிடம் வந்து அரைகுறையாகக் கற்றுப் போகிறார்கள்? அந்த ஆசிரியை கற்பிப்பது புரியாததாலா? வேறு ஏதாவது காரணத்தாலா? முன்பெல்லாம் இங்கு மக்கள் ஒற்றுமையாக இருந்தார்களே என்ற வருத்தம் எழுத்தது அகிலாவுக்கு. கடந்த நூற்றாண்டின் எழுபது, எண்பதில்தான் ஏதோ மாறிவிட்டது. `உங்கள் கலாசாரம்,எங்கள் கலாசாரம்` என்று பிரித்துப் பார்த்து, தம்மிலிருந்து மாறுபட்டவர்களைக் கேலி செய்யும் குணம் எல்லாரிடமும், பரவலாக. நாட்டின் பொருளாதாரம் பெருகினால், குணமும் பாதிக்கப்பட்டுவிடுமோ? இந்தப் போக்கு அவளிடம் இல்லை என்பதாலோ, என்னவோ, பல இன மாணவிகளும் பலவிதமான புகார்களை ரகசியமாக அவளிடம் தெரிவித்தனர் “டீச்சர்!  லாபிலே (பரிசோதனைக் கூடம்) எங்களை எதுவும் பண்ண விடறதில்ல எங்க கெமிஸ்ட்ரி டீச்சர்.” அதிர்ந்த அகிலா, “யாரு?” என்று கேட்டாள், வேறு எதுவும் பேசத் தோன்றாது. “மிஸ். சின். அவங்க ஜாதிதான் எல்லாம் பண்ணணுமாம். அவங்க முடிச்சதும், சோதனைக் குழாய் எல்லாத்தையும் எங்களைக் கழுவி வைக்கச் சொல்றாங்க!” இது கமலினி. “இதனால, யாரும் எங்களை மதிக்கிறதில்லே,”என்று சேர்ந்துகொண்டாள் லட்சுமி. “நான் கேக்கறேன்,” என்று வாக்களித்தாள் அகிலா. ஏதாவது மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்காகத்தானே அவளிடம் வந்து சொல்கிறார்கள்! ” வேணாம், டீச்சர். அப்புறம் மிஸ். சின் எங்களை ஃெபயிலாக்கிடுவாங்க!” “கவலைப்படாதீங்க.ஒங்க பேரைச் சொல்லமாட்டேன்,” என்று உறுதி அளித்தவள், “இனிமே எதையும் நீங்க கழுவாதீங்க. பரிசோதனை செய்யறவங்க வேலை அது. ரொம்பக் கேட்டா, சண்டை பிடிங்க!” என்று, தான் அனுபவ பூர்வமாக அறிந்த நியதியைச் சொல்லிக் கொடுத்தாள். விஷயத்தைச் சற்று ஆறப்போட்டு, மிஸ் சின்னைச் சந்திக்க முடிவெடுத்தாள். அவளுடைய அதிர்ஷ்டமோ, போதாத காலமோ,  ஓய்வு வேளையில் வேதியல் ஆசிரியை மிஸ் சின் வராந்தாவில் அகிலாவின் எதிரே நடந்து வந்துகொண்டிருந்தாள். வழக்கம் இல்லாத வழக்கமாக, அவளுக்கு முகமன் கூறிவிட்டு, ” அது என்ன, ஒங்க பரிசோதனைக் கூடத்தில இந்திய மாணவிங்களுக்கு எந்த பரிசோதனையும் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதில்லையாமே?” என்று கேட்டாள். கேட்ட பிறகு, இன்னும் கொஞ்சம் நாசூக்காகக் கேட்டு இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அவளுக்கிருந்த மனக் கொதிப்பில் வேறு எந்த விதமாகவும் கேட்டிருக்க முடியாது. சுமார் இருபத்தாறு வயதிருக்கும் அந்த ஆசிரியைக்கு. மற்ற சீன ஆசிரியைகளைப்போல, முழங்காலுக்குக் கீழே தொங்கும்  ஸ்கர்ட்(பாவாடை), இடுப்புவரை ஒரு சட்டை, தோள் வரை தொங்கும் `நீட்ட முடி`. இயற்கையான அந்த நேர் கூந்தல்  கடையில் சுருட்டப் பட்டிருந்தது.  `இருநூறு வெள்ளி பிடித்திருக்கும். பணக்காரப் பெண்தான்! அதான் இவ்வளவு திமிர்!` என்று ஒரே பார்வையில் அவளை எடைபோட்டாள் அகிலா. “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை,” என்று அவசரமாக மறுத்த இளையவள், “யார் சொன்னது?” என்று கேட்டாள் ஆத்திரத்துடன். “கேள்விப்பட்டேன். ஆனா, சொன்னது அந்த மாணவிங்க இல்ல. அதை மட்டும் உறுதியா சொல்ல முடியும்”. அங்கிருந்து நழுவ முயற்சித்தாள் மிஸ் சின். “இன்னொரு சமாசாரமில்ல? இந்திய மாணவிங்களோட வேலை கழுவிச் சுத்தப்படுத்தறதில்ல,” என்று பின்னாலிருந்து கத்தினாள் அகிலா. `முஹிப்பா`(muhibbah), அதாவது `இன ஒற்றுைைம` என்று அரசியல்வாதிகள் கரடியாகக் கத்தினாலும், தம்மிலிருந்து மாறுபட்ட பிறரை இயல்பாகவே வெறுத்து, மட்டமாக நடத்தும் தனி மனிதர்களை மாற்றவே முடியாது என்றுதான் தோன்றியது அவளுக்கு. அதற்கடுத்த வாரம் கமலினி, “டீச்சர்,” என்று கூவியபடி அவளருகே வர, “எல்லாம் சரியாப் போச்சா?” என்று மெள்ள விசாரித்தாள் அகிலா. வாயெல்லாம் பல்லாக, “எஸ் டீச்சர்,” என்ற மாணவி மேலே எதுவும் சொல்வதற்குள்,  அகிலா அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். தப்பித்தவறி மிஸ் சின் அவர்களைப் பார்த்துத் தொலைத்துவிட்டால், இந்தப் பெண்தான் பிற்காலத்தில் அவதிப்படுவாள். இன்னும் உலகம் புரியவில்லை, பாவம், என்றெல்லாம் எண்ணியபோதே, அவளைச் சொல்கிறோமே, பத்து வருடங்களுக்கு முன் நாம் எப்படி இருந்தோம் என்று நினைத்துக் கொண்டாள். சிரிப்பு வந்தது. “என்னங்க, தானே சிரிச்சுக்கிறீங்க?” யாரோ கேட்டபடி நடந்தார்கள். “அட, மகிழ்ச்சியா இருந்தா, சிரிக்கிறதுகூட தப்பா?” என்று பதில் கேள்வி கேட்டாள் அகிலா. “நான் இப்பல்லாம் சிரிச்சுக்கிட்டு இருக்கேன்!” சாதாரணமாக யாராவது அப்படிச் சொன்னால், பைத்திக்காரத்தனமாக இருக்கும். ஆனால், முந்தைய பள்ளிக்கூடத்தில் மிஸ்டர் ராய் தொலைந்ததும்,  எல்லாரும் அந்த வாக்கியத்தைத்தான் சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு மேலதிகாரி தன் கட்டுப்பாட்டில் இருந்தவர்களின்மீது அளவுக்கு அதிகமாக ஆதிக்கம் செலுத்தும்போது, நாம் சிரிக்கக்கூட மறந்து விடுகிறோம் என்பதை யாரும் உணர்வதில்லை. 12 அத்தியாயம் 12 அந்த இருண்ட காலத்திற்குப்பின், இரண்டு தலைமை ஆசிரியர்கள் மாறினார்கள். அவர்கள்தாம் எவ்வளவு வித்தியாசமாக இருந்தார்கள் என்று எல்லாரும் பூரித்தனர். அகிலாவுக்கு மட்டும் புரிந்தது — அவர்கள் தம் கடமையைச் செவ்வனே செய்யாது, அவ்வப்போது, “சரி. என்னைப்பத்தி ஒரு புகார் மனு எழுதிப் போடுங்க. ஒங்களுக்குத்தான் கைவந்த கலையாச்சே அது!” என்று கோபமும், கேலியுமாகச் சொல்லி வந்தது ஏனென்று. இது அவர்கள் கையாண்ட அடக்கு முறை. அவர்களும் வேலை செய்யவில்லை, பிற ஆசிரியர்கள்  ஒழுங்காக வேலை செய்கிறார்களா, இல்லையா என்றும் கண்காணிக்கவில்லை. இதனால், குறித்த நேரத்துக்கு வகுப்பிற்குச் செல்லாது, அரட்டை அடித்தனர் சிலர். பாட புத்தகத்திலிருந்து பக்கம் பக்கமாக காபி அடிக்கச் சொல்லிவிட்டு, தம் தொண்டைத் தண்ணீர் வற்றாமல் பார்த்துக் கொண்டனர் இன்னும் சிலர். மொத்தத்தில், மாணவர்களின் பாடுதான் பரிதாபம். `சிறப்பான ஆசிரியர்களாக விளங்குவது எப்படி?` என்று இவர்கள் எல்லாம் பயிற்சியின்போது கற்கவில்லையா என்று யோசித்தாள்அகிலா. `நாங்கள் உழைத்துப் பட்டம் பெற்றவர்கள். இனி கற்க வேண்டியது எதுவுமில்லை,` என்பதுபோல், அப்போதும் முக்கால்வாசிப்பேர் அசிரத்தையாக இருந்தது நினைவுக்கு வந்தது . விரிவுரையாளர்களுக்கு அவர்களை தட்டிக் கேட்கவும் இயலாதிருந்தது. ஓரிரு முறை மிரட்டியவர்கள் மேலதிகாரிகளால் எச்சரிக்கை செய்யப்பட்டனர்: `பட்டம் வாங்கிற அளவுக்கு புத்திசாலியாக இருக்கிறவங்க.  இவங்களால கேவலம் ஒரு டிப்ளோமா வாங்க முடியாதா?` `அடுத்த முறை இன்னும் கொஞ்சம் நல்லாப் பண்ணுங்க,` என்று பற்களைக் கடித்துக்கொண்டு, போலி மரியாதையுடன் சொல்லத்தான் அவர்களால் முடிந்தது. இந்த மாதிரியாகத் தம் பயிற்சியைக் கடந்திருந்த ஆசிரியர்களுக்கு மாணவர்களின் நலனில் என்ன அக்கறை இருக்க முடியும்? ஒருமுறை ராமசாமி சொன்னது நினைவுக்கு வந்தது: `இந்த ஒலகத்தில் எந்த ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கிறதில்ல. அதனாலதான் ஒலகத்துக்கு தலைசுத்திப் போகுது! உருண்டுகிட்டே இருக்கு!` அதைக் கேட்டு, எல்லாரும் எப்படிச் சிரித்தார்கள்! அது எப்படி சிலபேருக்கு மட்டும் எதையும் லேசாக எடுத்துக்கொள்ள முடிகிறது என்று வியந்தாள் அகிலா. “நம்பளை உணர்ச்சிங்களின் எல்லையிலேயே வெச்சிருக்க ஆண்கள் இல்லாட்டி, நாம்ப என்ன செய்யப் போறோம்!” அவளுடைய காரோட்டும் திறனை, அல்ல, அவளுக்கு அந்தத் திறன் இல்லாததை கணவர் பழிக்க, வேடிக்கையாக ஆணினத்தையே சாடினாள் மிசஸ் கோ (Goh). வழக்கமான வம்பு மடம் ஆசிரியர்களின் பொது அறையில் தொடங்கியது. நாள் தவறாமல் வகுப்புக்குப் போய், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அலுப்பு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கே ஏற்படும் உப வியாதி. கணவன், மாமியார், பணிப்பெண் ஆகியோரை நாக்கு என்னும் சாட்டையால் விளாசிவிட்டு, தத்தம் அருமைப் பிள்ளைகளை `தப்பிப் பிறந்தவர்கள், உலகம் காணாத அதிசயம்` என்பதுபோல் பேசி, அந்த `வியாதி`க்கு ஒரு மாற்றம் தேடுவார்கள். இதில் ஒரு உறவும் அகிலாவுக்கு இன்னும் ஏற்படவில்லை என்பதால், அவள் வாயைத் திறவாது, காதுக்கு மட்டும் வேலை கொடுத்தாள். வாய் ஓயாது, தத்தம் குடும்பத்தைப் பற்றி உயர்வாகவும், பிறரைப் பற்றி அவதூறாகப் பேசுவதுமாக இருந்தால், சில பெண்களுக்கு சாப்பாடே வேண்டாம். அதனால்தான் வெகு சில ஆண்களே ஆசிரியத் தொழிலுக்கு வருகிறார்கள் போலும் என்று எண்ணத் தோன்றியது. ஏதோ உந்துதலில் வந்த ஆசிரியர்களும், சுரத்தின்றி, எப்போது ஓய்வு பெறப்போகிறோம், அப்போது நமக்கு விருப்பமானதைச் செய்யலாமே என்று ஏங்கியவாறு நாட்களைக் கடத்துவது போல் இருந்தது அவளுக்கு. தனக்கும் திருமணம் என்று ஒன்று நடந்தால், இப்படி சுவற்றை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கும் ஒரு ஆண் வேண்டவே வேண்டாம் என்று தீர்மானித்தாள். அது என்ன, இப்போதெல்லாம் தன் மனம் கல்யாணத்தையே சுற்றிச் சுற்றி வருகிறது? யோசிக்கும்போதே ஒரு வித மகிழ்ச்சியும், வெட்கமும் உண்டாயின. எல்லாம் அப்பா இந்த கல்யாணப் பேச்சை எடுத்தபிறகுதான். “ஏம்மா அகிலா? ஒனக்கு முப்பது வயசாகப் போகுதே! இப்போ கல்யாணம் பண்ணிக்காம, அப்புறம் எப்போ பண்ணிக்கிறது?” அப்பா கேட்டு சுமார் மூன்று மாதங்கள் இருக்கலாம். அலட்சியமாகச் சூள் கொட்டினாள் மகள். “நான்தான் படிச்சுட்டு, சொந்தக் காலில நிக்கறேனேப்பா,” என்று நாசுக்காக மறுத்தாள். “அதுக்காக படிச்சவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கறதில்லியா, என்ன?” அப்பா எதிர்வாதம் செய்தார்.  “ஒரு குடும்பத்திலே ரெண்டு பேரும் சம்பாதிச்சா, தாராளமா செலவு செய்யலாமில்ல?” `பாவம் அப்பா! வாழ்நாளில் பெரும்பகுதியை வாய்க்கும், வயிற்றுமாகவே கழித்திருக்கிறார். பணப் பற்றாக்குறையைத் தவிர வேறு எதையுமே யோசிக்கத் தெரியவில்லை!` என்று பரிதாபப்பட்டாள் அகிலா. அவரிடம் அனுசரணையாகப் பேசவேண்டும் என்று தோன்றியது. “அக்கா கல்யாணம் கட்டிக்கிட்டு, புருஷனோட வாழற லட்சணத்தைப் பாத்தீங்கல்ல?” ஏதோ சொல்ல வாயெடுத்தவருக்கு பேச இடம் கொடுக்கவில்லை அகிலா. “எனக்குப் பயமா இருக்குப்பா. எனக்கு வர்றவனும் என் சம்பளத்தை அப்படியே பிடுங்கி, குடியிலேயும், சூதாட்டத்திலேயும் விட்டுட்டா?” “அப்படி ஒருத்தன் செஞ்சா, நீ சும்மா விட்டுடுவியா?” அப்பா சிரித்தார்.  “எல்லா ஆம்பளைங்களுமா அப்படி இருக்காங்க?” என்று முணுமுணுப்பாகச் சொன்னவர், அதற்குமேல் அவளை வற்புறுத்தவில்லை. காலம் கனிந்தால், எல்லாம் கூடிவரும் என்று நம்புபவர் அவர். தமது அனுபவத்தில் கண்டிருக்கிறார். 13 அத்தியாயம் 13 அந்த அனுபவம் அகிலாவுக்குப் புதிது. முதன்முறையாக அப்பாவைப் பிரிந்து வந்திருக்கிறாள். விஞ்ஞான ஆசிரியர்கள் எல்லாரும் கூடிய ஒரு வாரப் பட்டறை அது. உள்ளூரில்தான் என்றாலும், வீட்டுக்குப் போக முடியாது. ஒரு  அறைக்கு இருவர் என்ற விகிதத்தில், ஹாஸ்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை எட்டு மணியிலிருந்து பட்டறை துவங்கிவிடும். முடிய மாலை ஐந்தாகிவிடும். அதன்பின் நாலைந்து பேராக, கடைத்தெருக்களுக்குப் போனார்கள். அபூர்வமாக, குடும்ப வேலைகளிலிருந்து சுதந்திரம் கிடைத்திருக்கும் மகிழ்ச்சியில், வேண்டாத சாமான்களையும் வாங்கினார்கள். ஒரு நாள் கழிந்தது. இரவு ஒரே மெத்தையில் இரு பெண்கள். ஒரே போர்வை வேறு. என்னவோபோல் இருந்தது. சரியான தூக்கமில்லை. இன்னும் ஐந்து நாட்களைக் கழித்தாக வேண்டுமே என்ற ஆயாசத்துடன் நடந்தவள், யாரோ தன் பக்கத்தில் வந்து உடன் நடப்பதைப் பார்த்து நிதானித்தாள். “ஹலோ! என்னை ஞாபகமிருக்கா?” முகம் கொள்ளாத சிரிப்புடன், “மிஸ்டர் ராமசாமி. இல்லே?” என்று கேட்டுவைத்தாள், அவர்தான் என்று உறுதியாகத் தெரிந்திருந்தும். “நீங்க யானைங்க!” என்று பாராட்டினார், அவள் முதன்முதலாய் வேலைக்குச் சேர்ந்தபோது, ஆதரவாக இரண்டு வார்த்தை பேசிய ஆசிரியர். “கோர்சுக்கு வந்தீங்களா?” அனாவசியமாக விசாரித்தாள், கடைகண்ணியில் பார்ப்பவர்களை, `சாமான் வாங்க வந்தீங்களா?` என்று கேட்பதுபோல். “ஆமா. பசியாறிட்டீங்களா? வாங்களேன், சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்!” சிறிது யோசித்துவிட்டு, அவர் பக்கத்தில் நடந்தாள் அகிலா. அப்பாவைத் தவிர வேறு எந்த ஆணுடனும் அவள் நெருங்கிப் பழகியதில்லை. சற்று பயமாகக்கூட இருந்தது. `இவ்வளவு பேர் சுத்தி இருக்கிறப்போ, இவர் என்னை என்ன செய்துட முடியும்!` என்று அவளுடைய யோசனை போனபோது, வேடிக்கையாக இருந்தது. தைரியசாலி என்று பெயரெடுத்த தனக்கா பயம்? ஏன்? இவரைக் கண்டால் மட்டும் ஏனிந்த பயம்? ரொட்டித் துண்டுகள், சிறு சிறு பாக்கெட்டுகளில் வெண்ணை, டீ, ஒரு வாழைப்பழம் எல்லாவற்றையும் வரிசையில் நின்று பெற்றுக்கொண்டு, இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்துகொண்டார்கள். “ஒங்க பேரை அப்பப்போ பேப்பரில பாக்கறேன். பெரிய எழுத்தாளரா ஆகிட்டீங்க போல இருக்கு!” அகிலா எழுத ஆரம்பித்தது தற்செயலாகத்தான். ஒரு பொதுக்கூட்டத்தில், `ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், மனைவியை அடிக்காத கணவனே கிடையாது!` என்று தலைமை வகித்தவர் அடித்துக்கூற, ஆண்கள் அனைவரும் பலக்கச் சிரித்தது அவளைச் சிந்திக்க வைத்தது. எதனால் ஒரு பெண் அடி வாங்குகிறாள் என்று ஆராய்ந்தறிய, அம்மாதிரிப் பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் இல்லத்துக்குச் சென்றாள். பல அபலைகளைப் பேட்டி கண்டதும், அவளுக்கு ஒன்று புலனாகியது: ஆணுக்குப் பெண் அடிமை என்று இருபாலருக்கும் சிறு வயது முதற்கொண்டு போதித்திருப்பதன் விளைவு அது. அதிகார மமதையுடன் ஆண் வதைக்கிறான். பெண்ணும் பொறுத்துப் போகிறாள். இந்த நியதிக்கு படித்த  பெண், படிக்காத பெண் என்றெல்லாம் விலக்கில்லை. வளர்க்கப்பட்ட விதம்தான் முக்கிய காரணம். அத்தகைய அபலைகளுக்குத் தான் ஆதரவாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தாள். பெண்களின் தலைவி என்று சொல்லிக்கொண்ட ஒருத்தி, ஒரு ஆங்கிலப் பத்திரிகையில், `இப்போதெல்லாம் தமிழ்ப்பெண்கள் நம் கலாசாரம், பண்பு இதையெல்லாம் கட்டிக் காப்பதில்லை. சிறு விஷயங்களுக்குக்கூட விவாகரத்து என்று போய்விடுகிறார்கள்!` என்று சாடியிருந்ததைப் படித்ததும், அகிலாவுக்கு ஆத்திரம் பிறந்தது. எது சிறு விஷயம்? மனைவி தனக்காக கலக்கிய கோப்பியில் சீனி குறைவாக இருக்கிறதென்று அவளை ரத்தம் வரும்வரைக்கும் இடுப்பு பெல்டால் அடித்த கணவனின் செய்கை மட்டும் நியாயமானதா? ஆத்திரம் சற்று மட்டுப்படும்வரை காத்திருந்துவிட்டு, பின்பு ஒரு கடிதம் எழுதினாள் ஆசிரியருக்கு. விஞ்ஞான ஆசிரியைக்கு ஒப்ப, உணர்ச்சிகளை மிகைப்படுத்தாது, புள்ளி விவரங்களுடன் விளக்கினாள். மூன்றாம் நாளே அது பிரசுரமாக, உற்சாகத்துடன் நிறைய எழுதினாள், பல பொருட்களைத் தொட்டு. “மொழி தெரிஞ்சவங்க எல்லாம் எழுதிட முடியுமா? நீங்க ரொம்ப தைரியம். மனசில பட்டதை எதுக்கும் பயப்படாம, வெளிப்படையா சொல்லிடுவீங்க இல்ல? அதான் இப்படி எழுத முடியுது”. “அதெல்லாம் ஒன்றுமில்லை,” அடக்கம் கருதி அப்படிக் கூறினாலும், பெருமையாக உணர்ந்தாள். “எந்த வேலையும் ஆரம்பிக்கறப்போ, கூட இருக்கிற எல்லாரும் பந்தாடுவாங்க, தைரியமா திருப்பிக் கொடுக்கணும்னு எனக்குப் போதிச்ச குருவே நீங்கதானே!” ராமசாமி உல்லாசமாகச் சிரித்தார். “அதை இன்னுமா ஞாபகம் வெச்சுக்கிட்டிருக்கீங்க?” அதைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் ஒன்றாகவே உட்கார்ந்தார்கள், காலை, பகல், சாயந்திரம் சாப்பிடும்போதெல்லாம். பிறர், அவரை `டாக்டர் ராமசாமி` என்று விளித்ததைக் கேட்டாள். தன்னைப்போல இவர் கற்க வரவில்லை, கற்பிக்க வந்திருக்கிறார் என்று தெரிந்தபோது அகிலாவிற்கு ஆச்சரியமாகப் போயிற்று. “நான் ஆறு வருஷமா வெளிநாட்டிலே தங்கி படிச்சேன்,” அவள் கேட்காத, ஆனால் கேட்க நினைத்த கேள்விக்குத் தாமே பதிலளித்தார் அவர். “குடும்பத்தோட போனீங்களா?” ஏன் கேட்டோம் என்று அகிலாவுக்கே புரியவில்லை. அதைத் தப்பாக நினைக்காது, அவர் புன்னகைத்தார். அவளுக்குக் கல்யாணமாகிவிட்டதா என்று அறியத் தான் துடிக்கிறபடி, அவளுக்கும் அதே ஆர்வம் இருக்கக்கூடாதா? “எனக்குக் கல்யாணமே நடக்கல. நிச்சயதார்த்தம் முடிஞ்ச அப்புறம், அந்தப் பொண்ணு வேற ஒருத்தரை விரும்பி கட்டிக்கிட்டா”. ஏதோ உபசார வார்த்தை சொல்ல வாயெடுத்த அகிலாவை ஒரு கையில் அபய முத்திரை காட்டித் தடுத்துவிட்டு, “மொதல்லேயே சரியா விசாரிக்காதது எங்க தப்பு. பழகின எடத்தில இருக்கப் பிடிக்கல. போனேன்,” என்று தன் கதையை முடித்தார். “இப்போ இந்த டாக்டர் பட்டமும், வேலையும் ஏதோ விபத்துமாதிரி இருக்கு!” அவருடைய எளிமை அவளுக்குப் பிடித்திருந்தது. அவருடன் பேசும்போது, தனக்குத்தானே யோசித்து வைத்ததை எல்லாம் பேச முடிந்தது. அவளுடைய ஒவ்வொரு வார்த்தையையும் அவர் புரிந்து கொண்டார் என்பது அந்த அகன்ற கண்களிலேயே தெரிந்தது. உற்சாகம் பெருக, வழக்கத்துக்கு மீறி, ஓயாது பேசினாள். கடைசி நாள். இனியும் அடக்க முடியாது என்று, “நீங்க இன்னும் மிஸ்தானா?” ராமசாமி  அவளைக் கேட்டபோது, அவளுக்கு அடிவயிறு மேலெழுந்துவிட்டதுபோல் ஒரு உணர்வு. வேகமாகத் தலையாட்டினாள். “அதைக் கொஞ்சம் மாத்த எனக்கு அனுமதி உண்டா?” அவர் முகத்தில் குறும்புச் சிரிப்பு. “ஆ!” அந்த ஒரே வார்த்தையில் அதிர்ச்சி, ஆனந்தம், நம்பிக்கையின்மை எல்லாம். “தப்பா நினைக்காதீங்க. காதல், அது, இதுன்னு ஔறிட மாட்டேன். ஒங்ககூட பேசறப்போ, மனசில பாரமில்ல. இவங்ககிட்ட எது வேணுமானாலும் சொல்லலாம்னு ஒரு தைரியம் வருது. அதோட.., ” தயங்கினார். `இவர் தன் மனதில் இருப்பதையே சொல்கிறாரே!` என்ற திகைப்புடன், அவரையே பார்த்தாள் அகிலா. “சொன்னா, தப்பா நினைக்க மாட்டீங்களே? இன்னிக்குக் காலையில எழுந்திருச்சதும், `இன்னிக்கி அகிலா எங்கூடப் பேசுவாங்களா?`ன்னு யோசனை போச்சு. `இன்னும் பத்து வருஷம் கழிச்சும், இவங்க என் பக்கத்திலேயே இருப்பாங்க`ன்னு நினைச்சுப் பாக்கிறப்போ, நல்லா இருக்கு!” என்று, தர்மசங்கடத்துடன் அவர் சுற்றி வளைக்க, அகிலா கலகலவென்று நகைத்தாள். (“என்ன அகிலா? பழைய போட்டோ ஆல்பத்தை பாத்துக்கிட்டு, தானே சிரிச்சுக்கிட்டு இருக்கே?” கணவர் ராமசாமியை நோக்கினாள் அகிலா. “அப்போ ஒங்களுக்கு தலை நிறைய எவ்வளவு முடி, பாருங்க! இப்படி வழுக்கையா இருந்திருந்தா, நான் ஒங்களைக் கல்யாணமே செஞ்சுக்கிட்டு இருக்க மாட்டேன்,” என்றாலும், அவளது கண்களில் இருந்த சிரிப்பு தடித்த மூக்குக் கண்ணாடிக்குள் தெரிந்தது. “இங்கே மட்டும் என்ன வாழுதாம்! தலையெல்லாம் ஒரே நரை! தாடை தொங்கிப் போச்சு!” என்று வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தார். “எனக்கென்ன, ஆம்பளைச் சிங்கம்! இன்னொரு கல்யாணம்கூட கட்டிக்கலாம். `நான், ந`ீன்னு  போட்டி போட்டுக்கிட்டு பொண்ணுங்க வருவாங்க!” “வருவாங்க, வருவாங்க! நல்லா விடுவேனே!” என்று அகிலா எழ, அதற்குள் விரைவாக வந்து, அவள் தோளை அணைத்தார் கணவர். பிறகு, அப்படியே அவள் பக்கத்தில் உட்கார்ந்து, அவரும் புகைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தார். மகன் செந்திலின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் பத்திரப்படுத்தி இருந்தார்கள் — பிறந்த மேனியுடன் குப்புறப் படுத்த செந்தில், பொக்கை வாயைக் காட்டி சிரித்தபடி விழுவதுபோல் அமர்ந்திருந்த செந்தில், ஆண்டுநிறைவன்று அம்மாவின் புடவையைப் பிடித்தபடி நின்ற பாலகன் — இப்படி ஆரம்பித்து, நீண்ட அங்கியும், தொப்பியும் அணிந்து, பெற்றோர் இருவரும் பூரிப்புடன் இருபுறமும் நிற்கும்  படம்வரை — எல்லாமே இருந்தது. அவர்களுக்குத் திருமணமாகி, ஏழு வருடங்கள் கழிந்து, அருமையாகப் பிறந்த பிள்ளை. ஆனால், அவனது கல்யாணப்படத்தில் அவர்கள் இல்லை. இத்தனைக்கும், அவள் அவனைத் திட்டியதே இல்லையே!) 14 அத்தியாயம் 14 “அம்மா எப்பவும் ஒரே திட்டுதான்!” புடுவிலிருந்த பள்ளியில், மாணவிகள் அவ்வப்போது வந்து, பள்ளிக்கு வெளியிலிருந்த தங்களுடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டது அகிலாவுக்கு ஒன்றும் புதிதல்ல. சற்று துணிச்சல்காரியான கமலினியைப் பார்த்தாள் அகிலா. தன்னையே பார்ப்பதுபோல் இருந்தது. தனக்கும் ஒரு தாய் இருந்து, அவள் தன்னை வளர்த்திருக்காவிட்டால் என்ன?  தஞ்சாவூரில் அத்தை வீட்டில் தங்கிப் படித்தபோது, அந்தக் குறையும் தீர்ந்தது. `பொம்பளைப் பிள்ளைக்கு என்ன படிப்பு வேண்டி இருக்கு! ஒங்கப்பனுக்குப் புத்தி கெட்டுப் போச்சு!” என்பாள், நாள் தவறாமல். ஆனாலும், தனது பொறுப்பிலிருந்து தவறாது, `ஓயாம அப்படி என்ன படிப்போ! கண்ணு அவிஞ்சு போயிடும். முருங்கைக்கீரையை பிரட்டி வெச்சிருக்கேன் — ஒரு சிட்டிகை சீனி போட்டுத்தான். கசக்குதுன்னு இன்னிக்கும் சொன்னே, தோலை உரிச்சுடுவேன்!` அத்தைக்குத் தெரிந்த உலகம் குடும்பம், பிள்ளைகுட்டிகள், வீட்டு வேலை, சமையல். அவ்வளவுதான். அதிலேயே நிறைவு கண்டுவிட்டாள். அன்பும், கண்டிப்புமாக இருந்தாள். திட்டும்போதே கண்கள் சிரிக்கும். ஆகையால், யாரும் அத்தையைப் பார்த்து அஞ்சி விலகியதில்லை. கமலினியையும் அவளுடைய அம்மா திட்டுகிறாளாமே! காலம் இருக்கிற இருப்பில், வயது வந்த பெண்களைக் கட்டிக் காப்பது சுலபம் இல்லைதான். நிறைய பேர் தங்களுடைய பயத்தைக் கோபமாக மாற்றி, தங்களையும் வருத்திக்கொண்டு, மகள்களையும் வறுத்தெடுக்கிறார்கள். அந்த சம்பவத்திற்குப்பிறகு கமலினி அடிக்கடி அகிலா டீச்சரைச் சந்திக்க ஏதாவது காரணம் தேடினாள். அவள் பங்கு கொள்ளப் போகும் பேச்சுப் போட்டிக்கு, பள்ளிக்கு வெளியே நடந்த ஒரு நடனப் போட்டிக்காக  சில அடவுகள், பரீட்சைக்கான  கேள்வி-பதில் புத்தகங்கள் (`டீச்சரிடம் நிறைய இருக்குமே!`) என்று அடிக்கடி அவளை நாடினாள். அகிலாவும், `ஏழைப்பெண், பாவம்! எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும் என்று துடிக்கிறாள்!` என்று அவளுக்கு அதிகமாகவே உதவி செய்தாள், நேரம், காலத்தைப் பொருட்படுத்தாது. பிஞ்சிலேயே பழுத்திருந்த அச்சிறுமியின் மூளையோ, பிற ஆசிரியைகளின் மதிப்பைப் பெற்றிருந்த ஆசிரியையின் நல்லெண்ணத்தைத் தானும் பெற்றால், தன்னையும் பிறர் மதிப்பார்களே என்று கணக்குப் போட்டது. கமலினியின்  கபட புத்தியை அகிலா வெகு காலம் உணரவில்லை. பாம்பின் காலை பாம்புதானே அறியமுடியும்? (அண்மையில் ஒரு நாள் தற்செயலாக, கமலினியைப் பார்த்தாள் அகிலா. அந்தப் பொது நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு உயர்ந்திருந்த பழைய மாணவியைக் கண்டு  பூரிப்படைந்தாள். ஆனால் அவளோ, ஆசிரியையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தலையைத் திருப்பிக் கொண்டாள் — `இனிமேல் எனக்கு உன் தயவு எதற்கு?`– என்பதைச் சொல்லாமல் சொல்வதுபோல். கணவரிடம் போய் அரற்றியபோது, “எல்லாரும் ஒன்னைமாதிரியே, கபடு சூது தெரியாம, குழந்தைமாதிரி இருப்பாங்களா, அகிலா? போகட்டும், விடு. அவ முன்னுக்கு வரணும்னுதானே நீ அவ்வளவு செய்தே? அதுக்குப் பலன் கிடைச்சிருக்கு இப்போ. அதுக்காக சந்தோஷப்பட்டுக்க,” என்று சமாதானப்படுத்தினார். கமலினிக்குத் தான் அப்படி என்ன பிரத்தியேகமாகச் செய்தோம் என்று யோசிக்க ஆரம்பித்தாள் அகிலா. பள்ளியின் ஆண்டுவிழாதான் நினைவில் எழுந்தது). 15 அத்தியாயம் 15 “இந்த வருஷம் பள்ளி ஆண்டுவிழாவில் எல்லா இன நடனமும் இருக்கணும்,” என்று அறிவித்தாள் தலைமை ஆசிரியை. பிறருக்கு அதை இன்னும் விளக்க வேண்டுவது அவசியம் என்று நினைத்தவளாக, “மலாய், சீன, இந்திய நடனங்கள்!” என்று விளக்கினாள். எல்லா ஆசிரியைகளும் சிரிப்புடன் அகிலாவையே பார்க்க, அவள் மிரண்டு போய், “எனக்கு டான்ஸ் எல்லாம் தெரியாதுப்பா,” என்றாள். “சும்மா சினிமா டான்ஸ் போதும். பளபளன்னு டிரெஸ் போட்டுக்கிட்டு, நிறைய நகை போட்டு, இடுப்பை ஆட்டி, வேகமா குதிச்சா, அதுதான் இந்தியன் டான்ஸ்!” துடுக்கான ஒரு ஆசிரியை தன் பங்குக்குச் சொன்னாள். எல்லாரும் சிரித்தார்கள். மலாய் நடனத்தில் பெண்களே ஆண் வேடத்தில் ஆட, ஆணும், பெண்ணுமாய் மொத்தம் ஆறு பேர் என்று நிச்சயிக்கப்பட்டது. ஒரு பெண்ணின் அத்தையோ, பெரியம்மாவோ (ஆன்ட்டி என்று அவள் குறிப்பிட்டிருந்தாள்) சைனாவிலிருந்து வந்திருந்தாள். அவள் நாட்டியக்காரி என்பது சௌகரியமாகப் போயிற்று. அந்தப் பிரச்னையும் தீர்ந்தது. அப்போதுதான், கமலினி தனக்கு ஆடத் தெரியும் (`சொந்தமா கத்துக்கிட்டது`) என்று வலிய வந்து தெரிவித்திருந்தது நினைவுக்கு வர, நான்கு பேர் ஒரு படப்பாடலுக்கு ஆடுவதாகத் தீர்மானம் செய்தார்கள். `சிரிச்சபடி ஆடணும். கை, கழுத்து, காது எல்லாத்திலேயும் நகை போடணும். வீட்டிலே இல்லியா, அக்கம் பக்கத்து வீட்டிலே கேளுங்க. ஆனா, தங்கம் வேண்டாம்,` என்று அடுக்கடுக்காக கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு, சற்று யோசித்தாள். `அப்புறம்.., தலையில நிறைய பூ வைக்கணும். அப்போதான் பாக்க அழகா இருக்கும்,` என்று முதலிலேயே அகிலா எச்சரித்து இருந்தாள். பளபளவென்று அவர்கள் மேடையில் தோன்றியபோதே எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். ஏதோ ஒரு குத்துப் பாட்டு. `நானிருக்கிறேன்,` என்று இடுப்பு  உரக்கக் கூவுவதுபோல் அமைத்திருந்தார்கள். `எங்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததே!` என்ற பூரிப்புடன், வியர்த்து விறுவிறுக்க, மேடை எங்கும் சுற்றிச் சுற்றி, இந்திய மாணவிகள் ஆடியபோது, கைதட்டலில் ஹாலே அதிர்ந்தது. பார்வையாளர்கள் எல்லோர் முகத்திலேயும் பெரிய சிரிப்பு. அதற்கடுத்து வந்த சீன நடனம் சாஸ்திர முறைப்படி இருந்தாலும், அந்த அளவு கைதட்டலைப் பெறவில்லை. அது மிகுந்த கட்டுப்பாட்டுடன் அமைந்து இருந்ததால், துரிதமாக உற்சாகத்தை வேண்டும் மாணவிகளால் அதை ரசிக்க முடியவில்லை. அதற்கு முன் வந்த விளையாட்டு விழாவில், அகிலா அவளது `விளையாட்டு வீட்டை`ப் பிரதிநிதித்தாள். இன்னொரு ஆசிரியையின் கையைப் பிடித்துக்கொண்டு ஓட வேண்டும். ஆனால், அந்த ஆசிரியையின் கண் கட்டப்பட்டு இருக்கும். மிசஸ் சிங்கம் சற்றுப் பருமனாக இருந்தாள். தங்களுடைய கேளிக்கைக்காகவே அவளை மாணவிகள் தேர்ந்தெடுத்து இருந்ததாக அகிலாவுக்குப் பட்டது. அவர்களில் சற்று துணிச்சலான இருவர், ஒரு பெரிய கைக்குட்டையால் கண்ணைக் கட்டிவிட்டு, தம் விரல்களை விரித்து, “இது எத்தனை, டீச்சர்? சொல்லுங்க, பாக்கலாம்!” என்று பரிசோதிக்க, அவளும் சற்றும் சளைக்காது, மூன்றை ஐந்து என்றும், எட்டை ஒன்று என்றும் கூறி, கலகலப்பூட்டினாள். அகிலாவும், மிசஸ் சிங்கமும்தான் முதலாவதாக வந்தார்கள். ஆனால் என்ன, வெல்ல வேண்டும் என்ற எண்ணமே ஓங்கி நிற்க, இறுதி எல்லை வந்துவிட்டது என்று எச்சரிக்கத் தோன்றவில்லை அகிலாவால். விளைவு: தரையில் உட்கார்ந்திருந்த மாணவிகளைத்  தன் செருப்புக் காலுடன் மிதித்தபடி மிசஸ் சிங்கம் ஓட, சுவாரசியமாக பந்தயத்தை ரசித்துக் கொண்டிருந்த மாணவிகளோ, வலி தாங்காது, ஏதோ பூகம்பத்தில் மாட்டிக்கொண்டதுபோல, உலகின் முடிவே வந்துவிட்டதுபோல, அலறினார்கள். அசுர பலத்துடன் மற்றவள் கையை இழுத்து, அந்த ஓட்டத்தை நிறுத்த வேண்டி இருந்தது அகிலாவால். சிரிப்புப் பொங்கியது அவளுக்கு. “முடிவு வந்தாச்சுன்னு நீங்க எங்கிட்ட சொல்லி இருக்கணும்,” என்று அன்று முழுவதும் மிசஸ் சிங்கம் அரற்றிக் கொண்டிருந்தாள். அகிலாவும் மன்னிப்பு கேட்டபடி இருந்தாள்! அடுத்த ஆண்டும் மாணவிகள் அகிலாவுக்காக ஒரு வேடிக்கையான விளையாட்டைத் தயார் செய்து வைத்திருந்தார்கள். “நானே எல்லா விளையாட்டையும் விளையாடினா எப்படி? மத்த டீச்சருக்கும் வாய்ப்பு குடுக்கணுமில்ல?” என்று விலகிக்கொள்ளப் பார்த்தாள். “நீங்கதான் ஸ்போர்டிங், டீச்சர்!” என்று அவர்கள் வேண்டியபோது, அவளால் மறுக்க முடியவில்லை. தம்மைப் பார்த்து மாணவிகள் சிரித்தால், தமது மதிப்பு குறைந்து விடும் என்பதுபோல் பிற ஆசிரியைகள் நடந்துகொண்டது அவள் அறியாததல்ல. கணவர் அடிக்கடி சொல்வதுபோல், மாணவிகளோடு ஒன்றிப் போனதில், அவளுக்கும் குழந்தைத்தனம் மாறாது, இளமை குன்றாமல் இருந்தது போலிருந்தது. அவர்களுடன் சமமாக உறவாடினாள் — ஆனால், மரியாதைக்கு உட்பட்டு. அவர்களும் அவளைத் தங்களில் ஒருத்திபோல பாவித்து, தமது அந்தரங்க ரசியங்களைப் பகிர்ந்துகொண்டனர். அப்படித்தான் லிண்டா  கூ என்ற பெண்ணைப்பற்றி அறிந்தாள். ஒரு வாரமாக லிண்டா  கூ பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை. அவளுடைய வகுப்பாசிரியையான அகிலா ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு இருந்த கடிதத்தில் `உங்கள் மகள் … கீழ்க்கண்ட மூன்று தினங்கள் பள்ளிக்கு வரவில்லை என்று இரண்டு கடிதங்கள் எழுதிப் போட்டாள், பள்ளியின் சார்பில். லிண்டாவின் தந்தை, பெரிய கூ, நேரில் வந்தார், ஒரேயடியாகக் கலங்கிப் போனவராக. கீழ்மட்ட வியாபாரி என்று பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது. தொளதொளவென்ற அரை நிஜார் — சுமாரான மெல்லிய துணியில். மேலே, கையில்லாத  ஒரு வெள்ளை பனியன். `இவருடைய சோனி உடம்புக்கு இரண்டு அளவு சிறியதாக வாங்கி இருக்கலாம்,` என்று அகிலாவின் எண்ணம் போயிற்று. “லிண்டாவோட அம்மா ஆறு மாசம் முந்தி இறந்து போயிட்டாங்க. அதிலிருந்தே அவ ஒரு மாதிரிதான் இருக்கா. நானோ ஏழை. காலையில நாலு மணிக்கு எழுந்து, என்னோட சோயா பீன் வியாபாரத்துக்காக வேலை செய்யறேன். எங்க வீட்டில நாலு பேர் சாப்பிடணும். நான் இவளைக் கவனிப்பேனா, இல்லே  சம்பாதிக்கிற வழியைப் பாப்பேனா?” என்று கண்ணைத் துடைத்தபடி அவர் பேசப் பேச, அகிலாவுக்கு அவர்மேல் பச்சாதாபம் ஏற்பட்டது. சீனம்போல் ஒலித்த அவருடைய மலாயைப் புரிந்துகொள்ளப் பாடுபட்டாள். ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னரும், ஒரு `ஆ`. `அவளோட அம்மா ஆ, ஆறு மாசம் முந்தி ஆ..` இப்படி. ரகரம் எல்லாம் லகரம் ஆயின. அவர்களது அகராதியில் `ர` என்ற எழுத்து இல்லாவிட்டால், அவர் என்ன செய்வார், பாவம் என்று அறிவு இடித்துரைத்தாலும், புரிந்துகொள்வது கடினமாகத்தான் இருந்தது. லிண்டா திரும்பி வந்தால், தந்தை படும் பாட்டை அவள் உணர வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். மனைவியை இழந்த ஒரு ஆண். அப்பா அவள் நினைவில் தோன்றி மறைந்தார். “போலீசில சொல்லிட்டீங்களா?” என்று மிஸ்டர் கூவை விசாரித்தாள். “அதெல்லாம் வேணாங்க. எம் மக மக்குதான். ஆனா, அவ கெட்ட வழியில போற பிள்ளை இல்ல! எங்க வீட்டுப் பக்கத்திலே இருக்கிற சிலதுங்க பத்து, பன்னண்டு வயசிலே சிகரெட்டு, அப்புறம் டாடா (DADAH, போதை மருந்து) எல்லாம் பழகறாங்க. லிண்டா எங்கே போயிடப் போகுது! தானே வரும், பாருங்க!” அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. லிண்டா கூ திரும்பி வந்தாள். “எங்கே போயிருந்தே?” அகிலா மென்மையாகக் கேட்டாள். “என் ஃப்ரெண்ட் வீட்டிலதான் இருந்தேன். எங்கேயும் போகல”. “ஏன் போனே? அப்பா எவ்வளவு கவலைப்பட்டாரு, தெரியுமா?” லேசாக அதட்டினாள். “அவர் கவலைப்படணும்னுதான் போனேன்”. அழுத்தமாக வந்தது பதில். “ஏன்?” இதுவரை திடமாக இருந்த லிண்டா, உடைந்துபோய், அழ ஆரம்பித்தாள். சின்ன விசும்பலில் ஆரம்பித்த அழுகை கதறலாக மாறியது. அகிலாவுக்குப் புரிவதுபோல் இருந்தது. மனைவியை அண்மையில் இழந்து, ஒரு பெண் துணை தேடும் தந்தை. பருவ வயதில் மகள். பரிவுடன் தோளில் கை போட்டு, அவளிடம் மெல்லப்  பேச்சுக் கொடுத்து, உண்மையை வரவழைத்தாள். தன் அனுமானம் சரிதான் என்று புரிந்தது. எதிர்பார்த்ததுதான் என்றாலும், வருத்தமாக இருந்தது. “இப்போ என்ன செய்யப்போறே?” அந்த இளம்பெண்  உதட்டைப் பிதுக்கினாள். “இது போலீஸ் சமாசாரம்,” என்று ஆரம்பித்த அகிலாவிடம், “ப்ளீஸ் டீச்சர். போலீசெல்லாம் வேண்டாம், டீச்சர். அப்பா பாவம்!” என்று கெஞ்ச ஆரம்பித்தாள் லிண்டா கூ. கடவுள் ஆண்களுக்கு அரக்க குணமும், பெண்களுக்கு இளகிய, தெய்வீகமான குணமும் குடுத்திருக்காரு! தந்தையால் வதைபட்ட அவனுடைய அம்மா சொன்னதாக, முன்பு எப்போதோ ஒரு பையன் அவளிடம் தெரிவித்து இருந்தது இப்போது ஞாபகத்துக்கு வந்தது. அதில் ஓரளவு உண்மையும் பொதிந்திருக்குமோ என்றுதான் இப்போது எண்ணத் தோன்றியது. 16 அத்தியாயம் 16 புதிதாக வந்திருந்த தலைமை ஆசிரியை புவான் (puan, திருமதி) சயீடா அந்தப் பதவிக்கு ஏற்ப நடந்துகொண்டாள். படாடோபம் இல்லை. மனிதத்தன்மை இருந்தது அவளிடம். தன்னைப் போலவே இருந்த அகிலாவை அவளுக்குப் பிடித்துப் போனது. ஆசிரியர்களின் அறைக்கு வந்து, அவளுடன் தனியே பேசினாள். தன் அறைக்கு அழைத்துப் பேசினாள். பெரும்பாலான மாணவிகளின் பழக்க வழக்கங்களும், குணாதிசயங்களும் அவர்களுக்கு விளங்காததாக இருந்தது. “இந்த சீனப் பெண்கள் என்ன, கொஞ்சம் திட்டினால்கூட எகிறுகிறார்களே!” அகிலாவுக்குச் சிரிப்பு வந்தது. இங்கு வந்த புதிதில் தானும் அப்படித்தானே திணறினோம்! “சில பேர் வாரக் கணக்கில் பள்ளிக்கு வருவதில்லை,” என்று சயீடா ஆரம்பித்ததும், “நாங்களும் அவர்கள் வீட்டுக்கு கடிதங்கள் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம்,” என்று தற்காத்துக் கொள்ளப் பார்த்தாள் அகிலா. “பெற்றோர் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், பெண்கள் ஏன் இப்படி கெட்டுப்போகிறார்கள்!” என்றவள், “நான் ஒங்களை எல்லாம் குற்றம் சொல்ல மாட்டேன். நீங்கள் ஓரிருவர் அவர்கள் வீட்டுக்குச் சென்று விசாரித்துப் பாருங்களேன்!” என்று முடித்தாள். “புவான்! அவர்கள் சீனப் பெண்கள். அடித்தட்டில் இருக்கும் மக்கள். பெற்றோருக்கு மலாயோ, ஆங்கிலமோ தெரியுமா என்பது சந்தேகம்தான். நான் போய் எப்படி..?” ” மொழி தெரிந்த ஒருவரை அழைத்துப் போங்கள்!” அகிலாவும், மிசஸ் சாங்கும் அப்படித்தான் அந்த அடுக்கு மாடி வீட்டுக்குப் போனார்கள். வீட்டு வாசலிலே குன்றுபோல் குப்பை. சோனியான, வியாதிப் பிண்டமான தெருநாய்கள் அந்தக் குப்பையில் தம் அடுத்த வேளை உணவைத் தேடி, அதற்கும் சண்டை பிடித்துக்கொண்டு இருந்தன. குறுகிய மாடிப்படிகளில் ஏறினார்கள். அதிலும் ஒரே அசுத்தம் — சிகரெட்டுத் துண்டுகள், மூக்கைச் சிந்திவிட்டு, சுருட்டி வீசப்பட்ட காகிதம், இப்படி. குறிப்பிட்ட வீடு மூன்றாம் மாடியிலிருந்தது. ஏறுவதற்குள் அவர்களுக்கு மூச்சிறைத்தது. வாசலில் பத்துப் பன்னிரண்டு ஜோடி காலணிகள்! கதவைத் தட்டினார்கள். “யாருமில்லையோ?” “வெளியில் பூட்டவில்லையே!” அவர்கள் விவாதித்துக்கொண்டிருந்தபோதே கதவைத் திறந்தாள் ஒரு மாது. `அறுபது வயதுக்குமேல் இருக்கும் போலிருக்கிறதே! ஒருவேளை, பாட்டியோ?` என்று அவர்கள் எண்ணம் போயிற்று. அறிமுகம் முடிந்ததும், “என் மக தினமும் காலையில பள்ளிச் சீருடை உடுத்திக்கிட்டு, வெளியே போறா. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அவ எங்கே போறா, என்ன செய்யறான்னு எல்லாம் என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது!” எனறாள் விட்டேற்றியாக. “வீட்டிலே எத்தனை பேர் இருக்காங்க?” மிசஸ் சாங் எதற்கு விசாரிக்கிறாள் என்று முதலில் புரியவில்லை அகிலாவுக்கு. “ஏன்?  என்னோட ஏழு பிள்ளைங்களும் இங்கதான் இருக்காங்க. அதில ரெண்டு பேர் கல்யாணம் கட்டி இருக்காங்க!” இப்போது புரிந்தது. இருப்பது இரண்டே அறைகள். பதினாறு வயதுப் பெண்ணுக்கும் தகாத ஆசை ஏற்பட்டிருப்பதில், என்ன ஆச்சரியம்? நிராசையுடன் இருவரும் எழுந்தார்கள். முதியவள் நகரவேயில்லை. வாழ்வில் எத்தனை எத்தனையோ மேடு பள்ளங்களைச் சந்தித்துவிட்டு, இறுதிக்காலத்தில் எதுவும் செய்யத் தோன்றாது, `யாரோ எப்படியோ போகட்டும்` என்று எதிலும் குறுக்கிடாத, அஞ்ஞாத வாசம் அவளுடையது. இவர்களைப்போலவே மேலும் இருவர் கமாரியா என்ற பெண்ணின் வீட்டுக்குப் போய் வந்தார்கள். அந்தக் கதையை புவான் சயீடா அகிலாவுடன் பகிர்ந்துகொண்டாள். தந்தை வேறு பெண்ணுடன் போய்விட்டதால், நிர்கதியான குடும்பத்தை அந்தப் பெண்தான் காப்பாற்றுகிறாள். தாயிடம்  பத்து வெள்ளி கொடுத்துவிட்டு, அவளை வெளியில் அழைத்துப் போகிறார்கள் இளைஞர்கள். அப்படி அவள் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தில்தான் குடும்பம் நடக்கிறது. கமாரியாவின் தாய், “நான் படிப்பில்லாத பொம்பளை. வேற எப்படி பிழைக்கிறது!” என்றதாகத் தெரிவித்தார்களாம் அந்த மலாய் ஆசிரியைகள். அகிலாவுக்கு தன் குடும்பப் பின்னணி நினைவுக்கு வந்தது. ஏழையாக இருந்தால் என்ன? உழைத்துப் படித்தால் உயர முடியாதா? கல்வியால் உடனுக்குடன் பணம் பார்க்க முடியாதுதான். அது புரியாது, அன்றைய பாட்டை மட்டும் பார்த்துக்கொள்ள நினைத்தவர்களாய், தாம் பெற்ற பிள்ளைகள் தமது எதிர்காலத்தை நாசம் செய்து கொள்வதைக் கண்டும், கையாலாகாத்தனத்துடன் நடந்து கொள்ளும் தாய்மார்கள் எதில் சேர்த்தி? விரக்திதான் மிகுந்தது. அவளைப்போன்ற ஆசிரியைகள் தம் மாணவிகளை முன்னுக்குக் கொண்டுவர எப்பாடு பட்டாலும்,  அவர்களது பெற்றோரும் அக்கறை எடுத்துக்கொள்ளாதவரை எதுவும் செய்ய முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது. `நல்ல வேளை, தமிழ்ப்பெண்கள் இப்படி அடிக்கடி மட்டம் போடுவதில்லை,` என்ற அற்ப மகிழ்ச்சி எழுந்தது. அதைக் குலைப்பதுபோல், ஒரு நாள் கரும்பலகையை அழிக்கும் சாக்கில் அவளருகே வந்த சரோ, “டீச்சர்! எங்கப்பா தினமும் குடிச்சுட்டு வந்து, அம்மாவை அடிக்கிறாரு!” என்று தெரிவித்தாள். அகிலாவுக்குப் புதிய கவலை முளைத்தது. இந்த வயதிலேயே நிம்மதியை இழந்துவிட்டால், படிப்பில் எப்படிக் கவனம் போகும்? 17 அத்தியாயம் 17 அகிலா மாணவிகளின்மேல் கொண்ட அக்கறை பிற ஆசிரியைகளின் கவனத்தை ஈர்த்தது. மத்தியானப் பள்ளியில் இருந்த ஆசிரியைகள்கூட அவளுடன் உறவாடினார்கள். “நீங்க வந்ததாலதான் தமிழவங்க தலை நிமிர்ந்து நிக்க முடியுது. இதுக்கு முன்னால, எங்களை ஏதோ குப்பையைப் பாக்கறாப்போல பாத்தாங்க. யாரும் எங்ககூட பேசக்கூடமாட்டாங்க!” சொன்னாள் மிசஸ். பகவான். ஆனால், அவளைப்பற்றி மிஸ் யாப் (Yap) வேறு விதமாகச் சொன்னாள். “எங்களுக்கு, புடவை கட்டி இருப்பவங்க எல்லாம் இந்தியன்தான். நான் மிசஸ் பகவானை, `ஒங்களைமாதிரி இந்தியன்`னு ஏதோ சொல்ல, என்னமா சண்டை பிடிச்சாங்க, தெரியுமா? `வார்த்தையை அளந்து பேசுங்க. நாங்க ‚லங்கா வம்சாவளி!`ன்னு ஒரே கத்தல்!” மொழி, உடை, மதம் எல்லாவற்றிலும் இந்தியத் தமிழர்களை ஒத்திருந்தாலும், `நாங்கள் வேறுதான்!` என்று பெருமையுடன் குறிப்பிட்டுக் காட்டத் தயங்கமாட்டாள். ஒரு பண்டிகை சமயத்தில்தான் மிசஸ் பகவானுடைய இந்தக் குணத்தைப் புரிந்துகொண்டாள் அகிலா. அப்போதெல்லாம் தைப்பூசத்திற்கு விடுமுறை கிடையாது. அகிலா புவான் சயீடாவின் அறைக்குப் போனாள். “நாளைக்குத் தைப்பூசம். பத்துமலைக்குப் போகணும். உத்தரவு குடுப்பீங்களா?” என்று வினவினாள், பணிவுடன். என்னதான் தோழமையுடன் பழகினாலும், மேலதிகாரி ஆயிற்றே! தலைமை ஆசிரியை யோசித்தாள். “நீங்க எத்தனை பேர்?” `நான்கு,` என்றதும், அவள் அதிகம் யோசிக்காது, தலையாட்டினாள். “மத்தியானப் பள்ளி ஆசிரியைகள் மூணு பேர்,” என்று மெள்ள சுட்டிக் காட்டினாள் அகிலா. அவளுடைய சாமர்த்தியத்தை உணர்ந்து, புவான் சயீடா முகத்தைச் சுளுக்கினாள். ஆனால், கொடுத்த வாக்கை மீற முடியவில்லை. அகிலாவே தங்களுக்கும் சேர்த்து விடுமுறை வாங்கிக் கொடுத்ததை அறிந்து,  மத்தியானத்தில் போதிக்கும், பட்டதாரிகள் அல்லாத இந்து ஆசிரியைகள் அகமகிழ்ந்தார்கள். `நம் தலைவி!` என்று அவள் கேளாதபோது பாராட்டினார்கள். சற்று நேரம் பொறுத்து, தலைமை ஆசிரியை இந்து ஆசிரியைகளைச் சந்திக்க வந்தாள். “நீங்க எல்லாருமே பத்து மலைக்குப்போய், பூசை போடப் போறீங்களா?” அவநம்பிக்கையுடன் ஒலித்தது குரல். இவர்களைச் சந்தேகப்பட்டுக் கேட்க வேண்டியிருக்கிறதே என்ற அவளுடைய தர்மசங்கடம் அகிலாவுக்குப் புரிந்தது. “நான் போவேன்!” விருட்டென கையைத் தூக்கினாள் மிசஸ் பகவான். தமிழ் பேசுபவர்களை யாரும் மதிப்பதில்லை என்று அரற்றியவள். முன்பொருமுறை முறை தன்னிடம் என்னவெல்லாம்  கூறினாள்! `ஒரு வருசம், தமிழ்ப் பொண்ணுங்க மூணு பேரு ரொம்ப குறைச்சலா மார்க் வாங்கிட்டாங்க. அவங்கப்பா பாத்தா மாட்டிக்குவோம்னு பயந்து, அதை அழிச்சிட்டு, தாங்களே தாராளமா போட்டுக்கிட்டாங்க`. `முட்டாள்தனமா இருக்கே! எப்படி திருப்பிக் குடுக்க முடியும்?` `அப்போ திரும்ப மாத்தினாங்க,` கேலியாகச் சிரித்தாள் மிசஸ் பகவான். `ஆனா, திருத்தினது நல்லா தெரிஞ்சிச்சு.` `ஐயையோ!` காலங்கடந்து கவலைப்பட்டாள் அகிலா. `அதுக்காக, ஒரு நாள் பூராவும் ரிபோர்ட் கார்டைத் திறந்து பிடிச்சுக்கிட்டு, மாடிப்படிகிட்டே நிக்க வெச்சாங்க. போறவங்க, வர்றவங்க எல்லாம் அவங்களைப் பாத்து சிரிச்சாங்க!` என்று விவரமாகத் தன்னிடம் சொல்லிப் பொருமியவள். தான் எல்லாருக்கும் பொதுவாக உத்தரவு வாங்கிக் கொடுத்திருக்கிறோம். இவள் சுயநலத்துடன் இப்படித் தன்னைத் தனிமைப்படுத்திப் பேசி, நம் ஒற்றுமையைக் குலைக்கிறாளே என்ற அங்கலாய்ப்பு உண்டாயிற்று அகிலாவுக்கு. சும்மாவா சொன்னார்கள், தமிழர்கள் ஒற்றுமையுடன் கூடும் ஒரே தினம் தைப்பூசத் திருநாளன்றுதான் என்று! ஒருவருக்கு ஒருவர் குழி பறிப்பதிலேயே காலத்தைச் செலவிட்டால், யார்தான் மேலே போக இயலும்? 18 அத்தியாயம் 18 “பத்து வருஷம் இந்தப் பள்ளியில் இருந்திருக்கீங்க. ஒவ்வொரு வருஷமும், ஒங்க பாடத்திலே தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேல தேர்ச்சி பெற்று இருக்காங்க. எதுக்காக வேற பள்ளிக்கூடத்துக்கு மாத்தச் சொல்றீங்க? ” என்றார் கல்வி அதிகாரி. கோட்டும், டையுமாக தடபுடலாக இருந்தார். மார்பின் இடப்பக்கத்தில் குத்தியிருந்த பிளாஸ்டிக் தகடு அவர் பெயர் ஹமீத் என்று அறிவித்தது. “இஞ்சே (Encik, திரு) ஹமீத்,” என்று பணிவாக ஆரம்பித்தாள் அகிலா. காரியம் ஆக வேண்டுமென்றால், எதன் காலை வேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று யாரோ சொல்லி வைக்கவில்லை? “நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான்,” என்று தெளிவான மலாயில் உரையாடினாள். பௌதிகப் பாடத்தை மலாய் மொழியில் போதிப்பவள் ஆயிற்றே! அவளுடைய கலகலப்பான போக்கிற்குப் பொருத்தமான சிவப்பு பட்டுச்சேலை. உதட்டில் சாயம் — புடவைக்கேற்ற கருஞ்சிவப்பில். `ஒனக்கு இன்னும் ஒலகம் புரியல, அகிலா. நீ புத்திசாலியா, நல்லவளா என்கிறதைப்பத்தி எல்லாம் யாருக்கும் கவலையில்லே. வெளிப்பூச்சுக்கு மயங்கிறவங்கதான் இங்க அதிகம்! நாப்பத்து அஞ்சு வயசெல்லாம் இப்போ இளமையிலதான் சேர்த்தி. மாவட்ட கல்வியதிகாரியைப் பாக்கப் போறே. அழகா லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டுப் போ,` என்று கணவர் சொன்னபோது, `இவர் என்ன என்னை கட்டுப்படுத்தறது!` என்றவகையில் முகத்தைச் சுளுக்கினாலும், அவர் சொன்னபடிதான் வந்திருந்தாள். “எங்க வீட்டிலேருந்து முந்தியெல்லாம் ஆறரை மணிக்குப் புறப்படுவேன், இஞ்சே. இப்போ, ஆறு மணிக்குப் புறப்பட்டாக்கூட, ஒரே வாகன நெரிசல். வயசும் ஏறிக்கிட்டே போகுதா! ரொம்ப களைப்பாகிடுது”. சற்று மூச்சு வாங்கிக்கொண்டாள். “பள்ளிக்கூடம் வீட்டுக்கிட்டே இருந்தா சௌகரியமா இருக்கும்”. முகத்தில் பரிதாபத்தை வரவழைத்துக்கொண்டு, தலையை ஆட்டியபடி அவளைப் பார்த்தார் ஹமீத். அவளுடைய இடர்பாடுகளுக்காக அவரே அழுதுவிடுவார் போலிருந்தது. “புவான்!ஒங்க வீடு எங்கே இருக்கு?” என்று ஒப்புக்காகக் கேட்டபடி, அவள் முன்பே எழுதி, பள்ளித் தலையை ஆசிரியை மூலம் அனுப்பியிருந்த கடிதத்தில் கண்ணைச் செலுத்தினார். அடுத்த ஆண்டே வேறு பள்ளிக்கு மாற்றல் கிடைத்தது. “இதோட எத்தனை தடவை வேலை மாத்தம் கேட்டு மனு போட்டீங்க?” எவ்வளவோ நட்புரிமையுடன் பத்தாண்டு காலம் பழகியும், தங்களிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாது, ரகசியமாக அவள் வேலை மாற்றத்துக்கு ஏற்பாடு செய்திருந்ததில் சக ஆசிரியைகளுக்கு அகிலாவிடம் சற்று வருத்தம்தான். இப்போதெல்லாம் மாணவிகள்  தன்னை ஒரு சராசரி ஆசிரியையாக பார்க்கவில்லை, ஓர் இனத்தின் பிரதிநிதியாக, அல்பமாக நடத்துகிறார்கள் என்று எப்படிச் சொல்வாள்! ஐந்து வருடங்களுக்குமுன், அவளிடம் மலாய் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டுப்போன மாணவி கிம் ஹூவா மட்டும் அதற்கு விதிவிலக்கு. `பொன் மலர்` என்ற தன் பெயருக்கு ஏற்ப, நன்றிக்கடனை மறக்காது நடந்துகொண்டாள். பள்ளி இறுதியாண்டின்போது, ஆசிரியர் தினத்தில், தனக்கு பௌதிகம் போதித்த அகிலாவிற்கு தானே தயாரித்த ஒரு வாழ்த்து அட்டையை அளித்திருந்தாள். கடவுள் எல்லா இடத்திலேயும் இருக்க முடியவில்லை. அதனாலேயே உங்களைப் போன்ற ஆசிரியைகளைப் படைத்திருக்கிறார்! அந்த வாசகத்தைப் படித்ததும் சிலிர்ப்பு உண்டாயிற்று அகிலாவுக்கு. தொழிலில் தான் இதுவரை பட்ட துயரங்கள், ஓரவஞ்சனை, பராமுகம் எல்லாமே துச்சமாயின. “எதுக்காக இப்படி பவுடரை அப்பிக்கறீங்க? ஒரே வெள்ளையா இருக்கு!” அதிகம் பரிச்சயமில்லாத மிசஸ் சூ முகத்தைச் சுளித்தபடி குறை கூற, `ஒங்க கலரா ஆக முயற்சி பண்ணறேன்,` என்றாள் அகிலா. அசட்டுச்சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லை. அந்த சீன ஆசிரியை சிரிக்கவில்லை. “ஒன் முகம் பழுப்பு நிறம். அந்தக் கலரிலேதான் பவுடரும் இருக்கணும்!” என்று கடுகடுத்த முகத்துடன் அறிவுரை கூறினாள். ஆசிரியர்கள் நல்லெண்ணத்துடன் அறிவுரை கூறும்போது, அதை லேசாக எடுத்துக்கொண்டு கேலி பேசினால் மரியாதைக் குறைவு — அது இன்னொரு ஆசிரியை ஆனாலும். அன்றே ஒரு மருந்துக் கடைக்குப் போய்,  தன் வண்ணத்தில் இருந்த கட்டிப் பவுடரை வாங்கினாள் அகிலா. அதைப் பூசியதும், முகம் பளிச்சென்று இருந்தது அவளுக்கே தெரிந்தது. தன்னை மதித்து நடக்கும் பிறரிடமிருந்து அதிகம் வித்தியாசப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று,  குதிகால்வரை நீண்ட பாவாடையும், இடுப்புடன் நின்ற மேல்சட்டையும் தைத்து அணிந்து வந்தாள், ஒரு முறை. “எதுக்காக இந்த நான்சென்சை எல்லாம் போட்டுட்டு வர்றீங்க? ஒங்களுக்கோ அருமையான இந்திய உடலழகு!” திட்டும், பாராட்டுமாக மிசஸ் சூ கூற, கலகலவென நகைத்தாள் அகிலா. “அது என்ன, இந்திய உடல்?” மற்றவள் கைகளால் பாவனை செய்தாள். “குடம் மாதிரி, பெரிய, பெரிய வளைவுகள்,” என்று விளக்கினாள். “இப்படி ஒரு உடம்பை வெச்சுக்கிட்டு, எதுக்காக மூடி மறைக்கிறீங்க? ஒண்ணை வெளியே விடறது!” அகிலா அடைந்த அதிர்ச்சியில் சிரிப்பு உறைந்தே போயிற்று. “அது சரி, இப்பல்லாம் ஏன் நாம்ப  எல்லாரும் எப்பவும், சாப்பாடு, ஆடை அலங்காரம் — இப்படி எதுக்கும் உதவாத விஷயமாவே பேசறோம்? இத்தனைக்கும், நாம்ப எல்லாரும் நல்லாப் படிச்சவங்கன்னு பேரு!” இப்போது மிசஸ் சூ அவளுக்கு ஒரு நல்ல தோழியாக ஆகியிருந்தாள். அகிலா ஏற்கெனவே இதைப்பற்றி யோசித்து வைத்திருந்தாள். ஆகவே, உடனடியாகப் பதிலளிக்க முடிந்தது. “சென்சிடிவ், அதாவது மத்தவங்க உணர்ச்சியைத் தூண்டும் சமாசாரங்களைப்பத்தி பேசினா தண்டனை அப்படின்னு சட்டமே போட்டிருக்காங்களே!” ஒரு சிறு கேலிச்சிரிப்புடன் கூறினாள். “ஏடாகூடமா நம்ப ஏதாவது பேசிவெச்சு, அதுக்காக இசா (ISA, Internal Security Act) சட்டப்படி, `நாட்டின் ஒற்றுமையை குலைக்கிற காரியத்தைச் செய்தவன்` அப்படின்னு முத்திரை குத்தி, உள்ளே தள்ளிட்டா? வக்கீல் வெச்சு, வாதாடவும் வழி கிடையாது”. மேலே பேச எதுவுமில்லை என்பதுபோல், யோசிப்பில் ஆழ்ந்தபடி அப்பால் நகர்ந்தாள் மிசஸ் சூ. அகிலாவுக்கு நன்றாக நினைவு இருந்தது. அரசியல்வாதிகள் எங்கே அதை  மறக்க விட்டார்கள்! கடந்து போனதையே திரும்பத் திரும்ப பயமுறுத்தலாகச் சொல்லி, யாரும், எதையும் பற்றி கருத்து தெரிவிக்கக்கூட யோசிக்கும் வண்ணம் செய்திருந்தார்களே! 19 அத்தியாயம் 19 1969, மே மாதத்தில்தான் அந்த மாபெரும் கலகம் நடந்தது. “நீ திரும்பவும் கைலியே கட்டிக்கலாம். இன்னிக்கு எல்லாத்துக்கும் விடுமுறையாம்!” பள்ளிக்குப் புறப்படத் தயாராக நின்றவளிடம் நல்லசாமி படபடப்புடன் கூறினார். “பள்ளிக்கூடம், ஆபீஸ், கடைங்க, எதுவுமே திறக்காதுன்னு டிவியில சொல்றாங்க. வந்து பாரு!” வீடுகள் பற்றி எரிந்துகொண்டிருந்தன. அவலமான ஓலம். கதறியபடி மக்கள் தெருக்களில் ஓடிக் கொண்டிருந்தார்கள். சமீபத்திய தேர்தலில் சீன இனத்தவரின் கட்சி பெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்கும், இன்று நடக்கும் அட்டூழியத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது அகிலாவுக்கு. நாட்டின் முதல் பிரதம மந்திரியான துங்கு அப்துல் ர‹மான் அடிக்கடி தொலைகாட்சி திரையில் வந்தார். முகம் வாட, குரலடைக்க, `கோமுனிஸ் (கம்யூனிஸ்டு) தொல்லை` என்று பழியை யார்மேலோ சுமத்தினார். ஊரடங்குச் சட்டம் அமல் படுத்தப்பட்டது. ஒரு வாரம் எந்தக் கடையும் இல்லை. அன்றாடம் சாமான் வாங்கி, அன்றைய பாட்டைக் கவனிக்க வேண்டிய  நிலையிலிருந்த அடிமட்ட மக்கள் ரொம்பவே அவதிப்பட்டனர். பலர் வீட்டில் தினமும் கொல்லையிலிருந்து பிடுங்கின மரவெள்ளிக்கிழங்கு, இல்லை, கீரைதான் சமைக்கப்பட்டது. சில மணி நேரங்களே திறந்து வைக்க அனுமதி இருந்த கடைகளிலோ, கூட்டம் நெரிந்தது. சீனி, பால் மாவுடன், சிறிய தகர டின்களில் அடைக்கப்பட்ட வேகவைத்த பட்டாணி, கொட்டையில்லாத லைச்சி (lychee, சீீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது) என்னும் பழம், மற்றும் உள்ளூரில் பழுத்த ரம்புத்தான் பழம் ஆகியவைகளுக்கு ஏக கிராக்கி வந்தது. ஆனால் விலையை அநியாயமாக ஏற்றும் புத்தி வியாபாரிகளுக்கு இருக்கவில்லை அக்காலத்தில். ஒரே வளாகத்துள் இருந்த  மூன்று வீடுகளில் ஒன்றில் குடியிருந்தார் நல்லசாமி. வெளியில் எங்கும் போக முடியாது என்ற நிலையில், அக்கம்பக்கத்தவர் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வந்து, `நாடு இவ்வளவு கெட்டுப்போச்சே!` என்று அங்கலாய்த்தார்கள். “யாருக்கு காது குத்தற வேலை இது! கம்யூனிஸ்டாம்!” என்று சொல்லியபடி, ஒருவர் துருப்புச்சீட்டை எடுத்துப் போட்டார். சீட்டு, இல்லாவிட்டால் தாயக்கட்டம் ஆடி, பொழுதைப் போக்கினார்கள். எத்தனை மணி நேரம்தான் காட்டியதையே காட்டும் தொலைகாட்சியைப் பார்ப்பது! “அம்மா அகிலா! எல்லாருக்கும் தேத்தண்ணி கலக்கிட்டு வாம்மா,” என்று குரல் கொடுத்தார் நல்லசாமி, என்னமோ அவர் வீட்டு விருந்துக்கு எல்லாரும் வந்திருப்பதுபோல். சாவுத்தினம் நீங்கலாக, பிற தருணங்களில் எவர் நம் வீட்டுக்கு வந்தாலும், குடிக்க ஏதாவது கொடுப்பது தமிழரின் பண்பு. அதிலும்,செல்வம் கொழித்த நாடு. ஒரு பவுன் தங்கம் முப்பதே வெள்ளிதானே அப்போது! அகிலா பதில் குரல் கொடுத்தாள்: “சீீனி இல்லப்பா”. அக்குரலில் வெட்கமோ, அவமானமோ இல்லை. உடன் இருக்கும் எல்லாருமே ஒரே மாதிரி துன்பத்தை அனுபவிக்கும்போது, அதைப்பற்றிப் பேச தயக்கப்பட வேண்டியதில்லை. “இருங்க,” என்ற பக்கத்து வீட்டுக்காரர், தன் வீட்டுக்குப் போய், “நல்ல வேளை, எங்க வீட்டில சீனி இருக்கு. ஆனா, பால் மாவு முடிஞ்சு போச்சாம். இந்த வெயில்லே சூடா ஏதாவது குடிச்சாத்தான் சுறுசுறுப்பா இருக்கும். இல்லாட்டி, தலைவலி கொன்னுடும்,” என்று ஒரு சிறிய கிண்ணத்தில் சீனி கொண்டு வந்தார். “அப்போ, அத்தைக்கும் சேர்த்து கலக்கிறேன், மாமா,” என்றபடி, அதை வாங்கிப்போனாள் அகிலா. அன்று, `சீனி இல்லை,` என்று சொன்னதை நினைத்தால், இப்போது வேடிக்கையாக இருந்தது. அவர்கள் நேரிடையாகப் பாதிக்கப்பட்டு, பொருள், உற்றவர் என்று எதையும் இழக்கவில்லைதான். ஆனால், அதைவிடப் பெரிய இழப்பு — ஒற்றுமை குலைந்ததுதான். ஒரு இனத்தை மற்றவர்கள் அச்சத்துடனும், சந்தேகத்துடனும் பார்க்க ஆரம்பித்தது அதன்பின்தான். அதற்கு முதல் வருடம். ஒரு நாள் சாயந்திரம், கால் போனபடி எங்கோ உலாவப் போயிருந்தவள், “மாசோக், லா! (masuk, lah)” என்று தன்னை உள்ளே அழைக்கும் ஒரு பெண் குரலைக் கேட்டு, ஆச்சரியத்துடன் திரும்பினாள். ஒரு மலாய் கம்பத்தின் சிறிய மர வீடு, பெரிய தோட்டம். அதில், அம்மாதிரியான இருப்பிடங்களில் பொதுவாகக் காணப்படும், மா, பலா,வாழை, ரம்புத்தான், மங்குஸ்தான் ஆகிய பழ மரங்களுடன், நீண்டு வளர்ந்திருந்த ஆர்கிட் செடிகளும் ஊதா நிறப் பூக்களுடன் மிளிர்ந்தன. அகிலாவைப் பார்த்துத் தோழமையுடன் சிரித்தாள் அந்த மூதாட்டி. ஐம்பது வயது இருக்கலாம். முகத்தில் அரிசி மாவைக் குழைத்துப் பூசி இருந்தாள். இடுப்பில் பாதேக் சாரோங், மேலே ஒரு பூப்போட்ட, தொளதொளவென்றிருந்த சட்டை இடுப்புக்குக்கீழ் தொங்கியது. முகமெல்லாம் சிரிப்பு. யோசியாது, அவளைத் தொடர்ந்து அவ்வீட்டுக்குள் நுழைந்தாள் அகிலா. “துங்கு (Tunggu)!” என்று அவளை காத்திருக்கப் பணித்துவிட்டு, உள்ளே மெதுவாக நடந்தவள், ஒரு பெரிய தட்டில் இனிப்புப் பணியாரங்களைக் கொண்டு வந்து, மேசைமீது வைத்தாள். முதல் வாரம்தான் நோன்பு முடிந்து, ரம்ஜான் கொண்டாடினார்கள் என்பது ஞாபகத்துக்கு வர, அகிலா நன்றி தெரிவித்துவிட்டு, சாப்பிடத் தொடங்கினாள். அவளுக்கு மிகவும் பிடித்தமான குவே லாபிஸ் (kueh lapis)– ஐந்து வண்ணங்களில் சிறு சிறு வில்லைகள் அடுக்காக. நிறைய தேங்காய்ப்பாலுடன் அரிசி மாவு, மரவள்ளிக்கிழங்கு மாவு, சீனி எல்லாம் சேர்த்து, ருசியாக ஆக்கியிருந்தாள். அதில், பாண்டான் (Pandan, ஒருவித புதர்) இலைகளின் வாசம் ஆளைத் தூக்கியது. அடுத்து, டோடோல் (dodol). மூன்று, நான்கு வீட்டுப் பெண்கள் இணைந்து, ஒரு வீட்டு வாசலில் மூன்று செங்கல்லை வைத்து விறகடுப்பு மூட்டுவார்கள். அதன்மேல் ஒரு பெரிய பாத்திரத்தில்  தேங்காய்ப் பாலும், பனை வெல்லமும் கலந்து, நீண்ட கிரிக்கெட் மட்டைபோல் இருந்த மரக் கரண்டியின் கூரான நுனியால் மணிக்கணக்கில் கிளறுவார்கள். ஒருவராலேயே பல மணி நேரம் கிளறமுடியுமா? அதோடு, ஊர்க்கதையெல்லாம் பேசியபடி, மாறி, மாறி வேலை செய்வதே ஒரு தனிச் சுகம். “என்னம்மா, இப்படி முன்னே பின்னே தெரியாதவங்க வீட்டுக்குள்ளே போயிருக்கியே!  யாராவது கூப்பிட்டா ஒடனே போகக்கூடாது, அகிலா. அபாயமில்ல!” என்று அப்பா காலங்கடந்து எச்சரித்ததும், அவள் சிரித்தாள். “எனக்கு நல்லவங்க, கெட்டவங்க தெரியாதாப்பா? அந்த பாட்டி கண்ணிலேயே தெரிஞ்சிச்சு அவங்க நல்ல குணம்,” என்றாள். அன்று ஐம்பது வயதுக்காரியை, `பாட்டி` என்றிருக்கிறோம்! இப்போதோ, அறுபதில்கூட வயதானவர்கள் அல்ல என்பதுபோல், சிந்தனை, உருவம் எல்லாவற்றிலும் மாற்றம். அந்த பொற்காலம் இனி வருமா? 20 அத்தியாயம் 20 `இங்கு மாற்றல் கேட்டு வந்தது தவறோ?` என்று அகிலாவைச் சந்தேகிக்க வைத்தது மலாய் கம்பத்திலிருந்த அந்தச் சிறிய இடைநிலைப் பள்ளி. ஆயிரம் மாணவர்களில், ஒரே சதவிகிதம்தான் பூமிபுத்ரா அல்லாதார். பெரும்பாலோர் பேசிய மொழி வழக்கைப் புரிந்துகொள்வதே கடினமாக இருந்தது. அவர்களுக்கும், தான் அப்படித்தான் அந்நியமாகத் தென்படுகிறோம் என்பது அவளுக்கு முதலில் புரியவில்லை. முதல் இரண்டு நாட்கள் அவளைக் கண்டு அஞ்சி, ஒதுங்கினார்கள். இரு பாலரும் இணைந்து படித்த பள்ளி அது. முதலில் ஆண்கள் பள்ளியில் கற்பித்த அனுபவமும், அதன்பின் பெண்கள் பள்ளி அனுபவமும் கைகொடுத்தன. மூச்சு விடாது, கதை கதையாகப் பேசினாள், தன் முந்தைய பள்ளி மாணவர்களின் வேடிக்கையான நடத்தையைப்பற்றி. தான் எவ்வளவு கண்டிப்பானவள், கோபமே வராது, ஆனால் வந்தாலோ, மணிக்கணக்கில் அதை அடக்கவே முடியாது என்றெல்லாம் அளந்தாள். அப்பள்ளி மாணவர்கள் அறிந்திருந்த மலாய் அல்லாத ஆசிரியைகள் ஓரிருவர்தாம். அவர்களும் தம்மீது  எரிச்சலும், வெறுப்புமாக நடந்து கொண்டது ஏனென்று புரியவில்லை அந்தப் பிஞ்சுகளுக்கு. முதலில் குழம்பியவர்கள், அதன்பின் அந்த ஆசிரியைகளைப் பாடாய் படுத்தி, அதில் ஒரு குரூரமான திருப்தி அடைந்தனர். அகிலாவுக்கு அவர்களது மனநிலை புரிந்தது. கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் பூமி புத்ரா என்ற வார்த்தை பிரபலமாயிற்று. வடமொழிச் சொல்தான். `நாட்டின் மைந்தர்கள்` என்று மலாய்க்காரர்களும், பூர்வீகக் குடிகளும் அழைக்கப்பட்டார்கள். எங்கிருந்தோ வந்திருக்கும் சீனர்களும், இந்தியர்களும் நாட்டின் செல்வத்தை அனுபவிப்பதா என்றோ, என்னவோ, பூமி புத்ராக்களுடைய பொருளாதார நிலையை உயர்த்தும் வழிகள் தோற்றுவிக்கப்பட்டன. அயல்நாட்டில் மேல்படிப்புக்குப் போக உபகாரச் சம்பளத்திலிருந்து,  வியாபாரம் செய்ய அனுமதி, அதை ஆரம்பிக்கப் பொருள்வசதி, நில வர்த்தகம் என்று எல்லாத் துறைகளிலும் அவர்களுக்கு நிறைய  சலுகைகள் கொடுக்கப்பட்டன. இதை ஒப்பாததுபோல், மற்ற இனத்தினரில் பலர் தம் வேரைப் பிடுங்கிக்கொண்டு, வெளிநாடுகளுக்குப் பெயர்ந்தனர். `நாம் பின்னடைந்து விடுவோம், நம் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறிதான்,` என்று  மீதியிருந்தவர்கள் அச்சம் கொண்டனர். அவர்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டி இருந்தது.  நாட்டில் முன்பிருந்த ஒற்றுமை குறைந்துகொண்டே வந்தது பள்ளிக்கூடங்களில் தெளிவாகவே தெரிந்தது. அரசியல்வாதிகள் என்னவோ செய்துவிட்டுப் போகட்டும், அதற்காக இந்த இளம் கொழுந்துகளின்மீது ஆத்திரப்படுவது நியாயமில்லை என்றே அகிலா கருதினாள். கல்விதான் ஒருவரின் பொருளாதார நிலையைக் கண்டிப்பாக உயர்த்த முடியும். வியாபாரத்தினால் ஒருவர் உயர்வது என்பது நிச்சயமில்லை. அது அவரவர் அதிர்ஷ்டம் மற்றும் திறமையைப் பொறுத்தது என்று அவளுக்குப் புரிந்திருந்தது. அந்தச் செல்வத்தை எல்லாருக்கும் அளிக்கத்தான் நாம் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். இதில் தனிப்பட்ட உணர்வுகள் எதற்கு குறிக்கிட வேண்டும்? இப்படியெல்லாம் யோசித்த அகிலாவுக்கு, குறுகிய காலத்திலேயே மாணவ மாணவிகளின் அன்பையும், மதிப்பையும் பெறுவது கடினமாக இருக்கவில்லை. ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவ மாணவிகளோ, இல்லை தலைமை ஆசிரியரோ பிரச்னைக்கு உரியவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக ஆசிரியர்கள் ஒன்று சேருவார்கள். ஆனால், ஓர் ஆசிரியை மாணவர்களின் நம்பிக்கையைப் பெற்றால், பிற ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும் பொறாமை கிளர்ந்துவிடுமாம். இது ஆசிரியப் பயிற்சியில், இத்தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொடுக்கும் பாடம். இரண்டாவது நிலையில்தான் அகிலா இருந்தாள். இப்பள்ளியின் மாணவர்களும் அப்படி ஒன்றும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் இல்லை. அவர்களின் தந்தையர்கள் வெகு சுமாரான கல்வித் தகுதியுடன், ஸ்கூட்டர்தான் வைத்திருந்தனர். கார் கிடையாது. `இந்த மாதிரி இடத்திலிருந்து வரும் மாணவர்கள் எல்லாம் முன்னுக்கு வந்து கிழித்தார்கள்!` என்றே பல ஆசிரியர்களும் கருதியதுபோல், அரை மனதாகப் பாடம் நடத்தினர். வகுப்புக்கு ஒழுங்காகப் போவது கிடையாது. பிள்ளைகள் சத்தம் போடாது, புத்தகத்தைப் பார்த்து, அதில் இருப்பதையே எழுத வேண்டும் என்று வேலை வைக்க, பிள்ளைகளும் அதுவே பழக்கமாகி விட்டதால், மறுப்பேதும் சொல்லாது, ஒழுங்கைக் கடைப்பிடித்தனர். “டீச்சர்! எனக்கு இன்னும் பத்து மார்க் கூட்டிப் போடுங்க,” அதிகாரமாக ஒரு பையன் அவளிடம் வந்து கேட்டபோதுதான் அகிலாவுக்கு அந்த நடப்பினை தெரியவந்தது. பாடத்தை ஒழுங்காக நடத்தாது, பரீட்சைகள் முடிந்ததும், விடைத்தாள்களில் தாராளமாக மதிப்பெண்களைக் கூட்டிப் போட்டுவிடுவார்கள் சிலபேர்! ஒன்று, இரண்டு என்றால், எப்படியோ சமாளித்து விடலாம். முழுவதாக பத்து அல்லவோ கேட்கிறான்! அவள் வன்மையாக மறுக்க, “ஐயே! இவங்க..!” என்று அவள் மதிப்பைக் குறைக்கும் வகையில் ஏதோ முணுமுணுத்தபடி அப்பால் நகர்ந்தான். 21 அத்தியாயம் 21 தலைமை ஆசிரியை புவான் மஹானிக்குச் சிறிய உருவம், சிவப்புத்தோல், கடுகடுவென்ற முகம். அவளைப் பொறுத்தவரை, `அதிகாரம்` என்றால் மிரட்டுவது. `இவளுக்குச் சிரிக்கவோ, மெதுவாகப் பேசவோ தெரியவே தெரியாதோ?` என்று பிறரைச் சந்தேகப்பட வைக்கும் ரீதியில், காது கிழியும்படி உரக்கப் பேசினாள். தங்களை இவ்வளவு தூரம் ஆட்டிவைத்தவளின் போக்கிற்கு காரணம் தேடும் சாக்கில், மஹானியின் குடும்பப் பின்னணி பொது அறையில் அலசப்பட்டது. கணவரின் முதல் தாரம் இவள்; பிள்ளை இல்லாததால், இரண்டாவது மனைவியாக ஒரு விதவையை மணம் புரிந்துகொண்டிருந்தார் கணவர், என்ற உண்மையைக் கண்டுபிடித்துக்கொண்டு வந்தாள் நூர்ஜேஹான். அன்று எல்லாருக்கும் பொழுது நன்றாகப் போயிற்று. ஜேஹான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல, அவள் வார்த்தைகளை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். தன் இனிப்புநோய்  முற்றிவிட்ட நிலையில், ரம்லான் என்னும் ஆசிரியர் அடிக்கடி சிகிச்சைக்குப் போனார். ஓய்ந்த நிலையில், அன்று காலையிலிருந்தே படுத்தபடி இருந்தார். மத்தியானம் மாணவர்கள் கால்பந்து ஆடுகையில், அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அவருக்கும், அகிலாவுக்கும். அகிலா அதை மறந்தே போனாள். மாதாந்திர வயிற்று வலி வேறு படுத்த, வழக்கம்போல் மத்தியானம் பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டுக்குப் போனவள், சாப்பிட்டு முடித்த கையோடு தூங்கிவிட்டாள். மறு நாள் காலை, வழக்கம்போல் மாடி ஏறி, பள்ளி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெயரேட்டில் தான் வந்த நேரத்தை எழுதி, கையொப்பமிட்டாள். அந்த நீண்ட மேசைக்குப் பின்னால அவளுடைய வருகைக்காக, இரைக்காக காத்திருக்கும் வனவிலங்குபோல, தயாராக அமர்ந்திருந்த தலைமை ஆசிரியையைக் கவனிக்கவில்லை. “புவான் அகிலா!” இடிச்சத்தம் மாதிரி மஹானியின் குரல் கேட்டது. ஒன்றும் புரியாது அவளைப் பார்த்தாள் அகிலா. “நேத்து நீங்க விளையாட்டை மேற்பார்வை பாக்கல!” குற்றச்சாட்டாக வந்தது அந்தப் பெரிய குரல். அகிலாவுக்குத் திடுக்கிட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை! அவள் மத்தியானமும் பள்ளியில் இருக்க வேண்டிய நாள்! அதை எப்படி மறந்து போனாள்? ஒன்றுமில்லாததற்கே ஆர்ப்பட்டம் செய்வாள் இவள்! இப்படி வசமாக மாட்டிக்கொண்டோமே என்று கலங்கினாள். “ஒங்களையும் காணும், இஞ்சே (திரு) ரம்லானும் அங்கே இல்ல. நான் போனபோது, மைதானத்தில பசங்க தனியா, அவங்கபாட்டில விளையாடிக்கிட்டு இருந்தாங்க! அதுக்கு என்ன சொல்றீங்க?” என்று கர்ஜித்தாள். சொல்வதற்கு என்ன இருந்தது? அகிலாவுக்குத் தன்மேல் தப்பு இருந்தது தெரிந்தது. குனிந்த தலையுடன், “சாரி, புவான் மஹானி,” என்றாள். “சாரி சொல்லிட்டா, சரியாப் போச்சா?” மஹானி அலறிய அலறலில், குரலே மாறிப் போனதுபோல இருந்தது. “ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தா, யாரு அவங்க அப்பா, அம்மாவுக்குப் பதில் சொல்றது?” அகிலாவைக் காப்பாற்ற எண்ணியதுபோல, முதல் மணி அடித்தது. “எனக்கு கிளாஸ் இருக்கு,” என்றபடி, அங்கிருந்து நழுவினாள் அகிலா. “அதுதான் அசம்பாவிதம் எதுவும் நடக்கலே இல்லே? பின்னே எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்யறா?” தன் முகத்தைச் சுளித்தபடி, `இந்தப் பெண்களே தலைமை வகிக்க லாயக்கற்றவர்கள்` என்பதைச் சொல்லாமல் சொன்னார் டேவிட். அந்த ஐம்பது வயதுக்காரர் ஒரு சீனர். பெண்மையின் நளினம் சற்று அதிகமாகவே அவரிடம் இருந்ததுபோல் பட்டது அகிலாவுக்கு. உணர்ச்சிவசப்படும்போது, நிறைய சைகைகளுடன்தான் பேசுவார். சீனர்களின் நடனம் தெரியும் என்று அவர் ஒருமுறை அந்தரங்கமாகத் தெரிவித்தபோது, அவளுக்கு அதிசயமாக இருந்தது. `நீங்க மிஸ்டர் டேவிட் மாதிரியே இருக்கீங்க, டீச்சர்!` ஆச்சரியமும், பாராட்டுமாக பலர் அவளிடம் சொல்லி இருக்கிறார்கள். சில ஆண்டுகள் அவருடன் பழகிய பின்னர்தான் தெரிந்தது அவர்களுக்கு இடையே இருந்த ஒற்றுமை. இருவருமே வெளிநாட்டில் படித்தவர்கள். பொழுதுபோக்கும் படிப்புதான். அத்துடன், சமூக நலனிலும் அக்கறை கொண்டிருந்தனர். `பள்ளிக்கூடம்’ என்பது மாணவர்களை வித்தியாசம் பாராது, முன்னுக்குக் கொண்டு வரும் ஒரு புனித இடம் என்று நம்பினர் இருவருமே. அது மாசு படுத்தப்பட்டபோது, பொங்கி எழுந்தனர். எப்போதாவது, இருவருக்கும் வகுப்பு இல்லாவிட்டாலோ, அல்லது எதையாவது திருத்த வேண்டிய வேலை இருக்காவிட்டாலோ, ஒருவர் மேசைக்கு இன்னொருவர் வந்து, மிகச்சில நிமிடங்கள் உரையாடிவிட்டுப் போவார்கள். அன்றும் அப்படித்தான். “டேவிட்! ஒங்களைக் கொஞ்சம் போரடிக்கலாமா?” என்று, புன்சிரிப்புடன் வந்து நின்ற அகிலாவை, “வாங்க, டியர். ஒக்காருங்க,” என்று உபசரித்தார் அவர். அந்தச் செல்வந்தர் இங்கிலாந்திலேயே வளர்ந்திருந்ததால், ஆங்கிலேயர்போலப் பேசுவார். வலது கையால் ஏதாவது சாப்பிடும்போது, இடது கை வாயை மூடிக் கொள்வதுபோல் அருகேயே இருக்கும். மிகவும் பிடித்தவர்களை `டியர்` என்று அழைப்பார். ஆனால், அதில் காமமோ, விரசமோ இருக்காது. “விவாகரத்தைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?” கேட்டது அகிலா. எதற்காக அகிலா  இப்படிக் கேட்கிறாள், அதுவும் என்னைப்போய் கேட்பானேன் என்றெல்லாம் அனாவசியமாகக் குழம்பாது, நல்ல ஆசிரியராக லட்சணமாக, கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார். “எதிலேயும் ஒத்துப் போகாம, ஓயாம சண்டை பிடிச்சுக்கிட்டு இருக்கிறதுக்கு, சட்டபூர்வமா பிரியறது  எவ்வளவோ மேல்!” “எனக்கும் அதான் தோணுது. இன்னிக்குப் பேப்பரிலே பாத்தீங்களா? இப்ப நாகரீகம் முத்திட்டதால, பொண்ணுங்க விவாகரத்து கேக்கறாங்களாம். அவங்க பாட்டிகளுக்கு இருந்த பொறுமையும், நல்ல குணமும் இவங்களுக்கு இல்லியாம். யாரோ ஒரு தலைவி பொங்கி எழுந்திருக்காங்க!” டேவிட் புன்னகைத்தார். “பொறுமைங்கிற பேரில கணவர் அடிக்கிறதையும், ஒதைக்கிறதையும் தாங்கிக்கிட்டா, உசிரே போயிடும். இல்லே, பைத்தியம் பிடிச்சுடும். நிறைய பெண்கள் விரக்தியின் எல்லையில இருக்கிறதும், தங்களோட மோசமான வாழ்க்கையைப்பத்தி நினைக்கப் பிடிக்காம, மத்த பெண்களைப்பத்தி ஓயாம வம்பு பேசறதும் இதனாலதான்,” என்று, ஏதோ மேடையில் பேசுவதுபோல அந்தப் பிரச்னையை அலசினார். “விவாகரத்து செய்துட்டா? அப்போ பிரச்னை தீர்ந்துடுமா?” அவளை உற்றுப் பார்த்துவிட்டு, மெல்லச் சிரித்தார் நண்பர். “ஏதாவது எழுதப் போறீங்களா?” “ஒரு வேளை எழுதலாம். அதுக்காக கேக்கல. பேப்பரிலே போட்டிருந்ததைப் பார்த்து, எனக்கு ஒரே ஆத்திரமாயிடுச்சு. அதான் ஒங்ககிட்ட பேச வந்தேன்”. “எழுதுங்க,” என்றார் புன்னகை விரிய. பிறகு, ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார்: “ஏன் எல்லாப் பெண்களும் ஒங்களை மாதிரி இல்ல?” அவள் தங்களிடமிருந்து வித்தியாசப்பட்டு இருக்கிறாளே என்ற பயத்திலோ, பொறாமையிலோ, அவள் பிற பெண்களின் மெல்லும் வாய்க்கு அவலானது அவளுக்கு மட்டும் தெரியாதா, என்ன! “நான் நானாக இருக்கறது சுலபமல்ல, டேவிட்!” என்று அயர்ச்சியுடன் கூறினாள். பிறகு, `என்னைப்பற்றி யார் எப்படி நினைத்தால் எனக்கென்ன!` என்று தன் போக்கிலேயே நடந்தாள். 22 அத்தியாயம் 22 வகுப்பின்முன் நின்றபடி பாடம் நடத்த ஆரம்பித்தபோது, அகிலாவின் மனம் தெளிவாக இருந்தது. இப்படி ஒரு நல்ல நண்பர் இருந்தால் உலகையே எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. அவளுடைய நிம்மதி நீடிக்கவில்லை. “டீச்சர்!” மாணவர்கள் கைகள் அனைத்தும் சுவற்றின் பக்கம் சுட்டியிருந்தன. ஏதாவது அவசரமான அறிக்கை இருந்தால், பள்ளி முழுவதும் கேட்கும்வண்ணம் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்வார்கள். ஆண்டு விழா, விளையாட்டு தினம் போன்ற விசேட நாட்கள் நெருங்கி வரும்போது, அறிவிப்புகளும் அதிகரிக்கும், `பயிற்சிக்கு கீழ்க்கண்ட மாணவர்கள் உடனடியாக அழைக்கப்படுகிறார்கள்,` என்ற பாணியில். `இந்த வேளையில் என்னவாம்!` அலுப்பு ஏற்பட்டது. தலைமை ஆசிரியை மஹானியின் குரல் கர்ணகடூரமாக ஒலித்தது: “இது மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்குமான முக்கிய அறிவிப்பு. நேற்று மத்தியானம் மூன்று மணிக்கு உங்கள் தலைமை ஆசிரியையாகிய நான் நமது பள்ளி மைதானத்தைச் சுற்றி வரும்போது..,” அகிலாவின் மூச்சே நின்றுவிடும்போல இருந்தது. “.. மாணவர்கள் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த செக்கூ ரம்லான், செக்கூ அகிலா ஆகிய இருவருமே அங்கு இல்லை”. வகுப்பிலிருந்த மாணவ மாணவிகள் அனைவரும் அவளையே பரிதாபத்துடன் பார்ப்பது தெரிந்தது. “நம் பள்ளியில், மாணவர்களுக்குப் பொறுப்பு கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியப் பெருமக்களே இப்படி அலட்சியமாக இருந்ததை என்னவென்று சொல்வது! இனி இம்மாதிரி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றால், தக்க தண்டனை அளிக்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். நன்றி”. அடுத்த பல நிமிடங்களுக்குப் பள்ளி எங்கிலும் ஒரு அசாத்திய அமைதி நிலவியது. `இதுவரை பிற ஆசிரியர்களின் எதிரில் வசைபாடி வந்தவள், இப்போது மாணவர்களும் கேட்கும் வகையில் அலறுகிறாள்! இனி யார் என்னை மதிப்பார்கள்!` பாடம் நடத்த முயன்றாள் அகிலா. முடியவில்லை. ஏதேதோ எண்ணங்கள் போத்தலில் அடைத்த தக்காளி கெட்சப் (ketchup)போல் ஒரே சமயத்தில் வெளியே வர முயன்றன. முதல் வருடம் தலைமை ஆசிரியர் ராயிடம் தான் மோதியது நினைவில் எழுந்தது. அப்போது இருந்த தைரியம் இப்போது எங்கே போய்விட்டது? அவர் ஆண் என்பதால்தான் அப்படி நடந்தார் என்று நினைத்தோமே! அதிகாரம் செய்வதில் ஆணென்ன, பெண்ணென்ன! பதவி அவர்களை அந்தப்பாடு படுத்துகிறது. தம்மை, கிட்டத்தட்ட கடவுள் என்று நினைத்து, கர்வம் கொள்ளும் பேதமை. பதவி என்பது நிரந்தரமில்லை என்பதை இவர்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லையா? பதவி போனதும், இவர்கள் யாரிடம் தம் அதிகாரத்தைக் காட்டுவார்கள்? அகிலாவின் குரல் ஒத்துழைக்கவில்லை. கனைத்துப் பார்த்தாள். அப்படியும் முடியவில்லை. ஒரு மாணவன் அவள்முன் வந்து நின்று, தன் கையை நீட்டினான். “என்ன ஷாம்?” “நான் படிக்கிறேன், டீச்சர். அவங்க எழுதட்டும்”. “பரவாயில்லே. அப்புறம் நீ என்ன செய்வே?” “நான் அவங்க எழுதி இருக்கிறதைப் பாத்து எழுதிட்டுப் போறேன்”. அதற்குள், “ஷாம் படிக்கட்டும், குடுங்க, டீச்சர். அப்புறம் ஒங்களுக்கு இருமல் வந்துடப்போகுது!” என்று இன்னொருவன் கத்த, எல்லையில்லா இந்தக் கருணைக்கு இவர்கள் எல்லாருக்கும் ஐந்தோ, பத்தோ மதிப்பெண்கள் கூட்டிப்போட வேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டாள் அகிலா. 23 அத்தியாயம் 23 `சிறந்த ஆசிரியராக இருப்பது எப்படி என்று இவ்வளவு விரிவாக எங்களுக்குப் போதிக்கிறீர்களே, இதன்படி நடந்தால், நாங்கள் காலாகாலத்தில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார் செய்ய முடியுமா? சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னால்தான் மனதில் படியும் என்பதற்காக, அளவு கடந்த நேரத்தை எப்படிச் செலவிட முடியும்?` பயிற்சிக் காலத்தின்போது,  ஒருவர் விரிவுரையாளரைக் கேட்டார். `நல்லவராக நடந்துகொள்ள ஒருவரைப் பழக்கினால், அவர் கெட்டுப் போவது எளிதில்லை என்ற நம்பிக்கைதான்!` என்ற பதில் வந்தது. இப்போது அகிலாவுக்கு அந்த ஞாபகம் வந்தது. தன்னிடம் அன்பு செலுத்தும் இந்த மாணவர்களுக்குத் தான் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். பாடம் மட்டுமின்றி, நன்மை, தீமை ஆகியவைகளைப் பிரித்து உணரும் அறிவை அவர்களுக்கு ஊட்டவேண்டும் என்று உறுதி பூண்டாள். எல்லா வகுப்புகளும் மலாய் மொழியும், ஆங்கிலப் பாடமும் எடுக்கவேண்டும் என்று கல்வித்திட்டத்தில் ஒரு நியதி. ஆனால் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் அந்தந்த மொழி அறிந்தவர்கள் ஒரு மொழியைக் கற்பிக்க வேண்டி இருந்தது. அப்படித்தான் அகிலா இரண்டாவது படிவத்துக்கு ஆங்கில ஆசிரியை ஆனாள். ஒருமுறை, ஒரு புது விதமான வியாசத்தை அளித்தாள்: எல்லா மாணவர்களும் தமது பத்து நல்ல குணங்கள் மற்றும் பத்து தீய குணங்களை ஒரு காகிதத்தில் எழுதி, தன்னிடம் கொடுக்க வேண்டும். ஐந்தே நிமிடங்களுக்குள் ஒரு பையன் வந்தான். பதினான்கு வயதில், பத்து வயதுகூட நிரம்பாதவன் மாதிரி இருந்தான். “முடிச்சுட்டியா?” ஆச்சரியத்துடன் கேட்டாள் ஆசிரியை. “எனக்கு ஒரே ஒரு நல்ல குணம்தான் இருக்கு, டீச்சர்!” பரிதாபமாகச் சொன்னான். அவளது நீட்டிய கரத்தில் தனது எழுத்துப் படிவத்தை வைத்தான் சிறுவன் முஸ்தாபா. அவள் அதில் கண்ணை ஓட்டினாள். தினமும் நான் வேளைதவறாது பூசை செய்கிறேன். அதுமட்டும்தான் அவனிடம் அவனுக்குப் பிடித்த குணம். தீய குணங்கள் என்ற உபதலைப்பின்கீழ் அடுக்கி இருந்தான். எனக்கு யாரிடமும் பேசிப் பழகப் பிடிப்பதில்லை. நான் மகா கோபக்காரன். என் நண்பர்களை கோபப்படச் செய்தால், எனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. அகிலா தலைநிமிர்ந்தாள். முஸ்தாபாவின் வாய் சற்றே கோணி இருந்தது. ஒரு காது மற்றதைவிட மிகவும் கீழே இருந்தது. அவனுடைய காதைச் சுட்டிக்காட்டி, “இது எப்படி..?” என்று மெள்ளக் கேட்டாள். முஸ்தாபா தோள்களைக் குலுக்கினான், அலட்சிய பாவத்தில். “இயற்கை!” “பிறந்ததிலிருந்தா?” துருவினாள். பிரச்னை என்னவென்று தெளிவாகப் புரிந்தால்தானே தீர்வு காணமுடியும்? அவன் தலையாட்டினான். கண்ணீர் வெளியே விழாமலிருக்கப் பாடுபட்டது நன்றாகவே தெரிந்தது. “அதனால ஒனக்கு கோபமா?” `இல்லை,` என்பதுபோல் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினான். “வருத்தமா?” இப்போது மெள்ள அழ ஆரம்பித்தான் முஸ்தாபா. “நான் சொல்றதை இப்போ எழுது. இங்கே — நல்ல குணம்னு தலைப்பு போட்டிருக்கியே, அதுக்குக் கீழே”. “பேனா கொண்டுவரேன், டீச்சர்,” என்று போனவன் சற்று நிமிர்ந்திருந்தாற்போல் அவளுக்குத் தோன்றியது. “நான் புத்திசாலி. ம், எழுது”. நம்பிக்கை இல்லாதவனாக அவளைப் பார்த்தான் முஸ்தாபா. “போன பரீட்சையில, ஆங்கிலத்தில எத்தனை மார்க்?” “அறுபது”. வேறு சிலர் எண்பதுக்குமேல் வாங்கி இருந்தது அவனுக்குத் தெரியும். “பாத்தியா? பாசாயிட்டே, இல்லே? அதான் சொல்றேன். இப்படி எழுது, நான் புத்திசாலிதான்னு எங்க டீச்சர் சொல்றாங்க”. அவன் வேகமாக எழுத ஆரம்பித்தான். “என்ன விளையாட்டு எல்லாம் விளையாடுவே?” “எல்லாம்,” என்று சாதாரணமாகச் சொன்னவன், `தற்பெருமை` என்று ஆசிரியை நினைத்துவிடப் போகிறார்களே என்று பயந்தவன்போல, “எனக்கு விளையாடப் பிடிக்கும், டீச்சர். விளையாடினா கோபம் வரதில்ல. கால்பந்து, கூடைப்பந்து, செபாக் தாக்ரா (sepak takra, ஒரு கையால் பிடித்துக் கொள்ளக்கூடிய ஒருவித மூங்கில் பந்தை காலாலும், தலையாலும் உதைப்பது), இன்னும்..” நிறுத்தாது சொல்லிக்கொண்டே போனான். மூன்றாவது நல்ல குணம் என்னவென்று தெரிந்தது அகிலாவுக்கு. “எனக்கு சுறுசுறுப்பாக, நண்பர்களுடன் விளையாடப் பிடிக்கும். எழுதிட்டியா?” `என்னிடம் இவ்வளவு நல்ல குணங்கள் இருக்கின்றனவா!` பிரமித்தான். “இப்போ என்னால எழுத முடியும், டீச்சர். ரொம்ப நன்றி, டீச்சர்”. ஓடாத குறையாகத் தன் இருப்பிடத்துக்குப் போன பையனையே பார்த்தாள் அகிலா. தனக்கு ஆசிரியத் தொழிலைப் பயில்வித்தவர்கள் இப்போது பார்த்தால், எத்துணை மகிழ்ச்சி கொள்வார்கள் என்று தோன்றிப்போக, புன்முறுவலில் அவளுடைய உதடுகள் விரிந்தன. அனேகமாக எல்லாருமே ஒரே மாதிரியாக எழுதியிருந்தார்கள். `பெற்றோர் சொல்லைக் கேட்பேன், கல்வி பயிலப் பிடிக்கும், துன்பப்படுகிறவர்களுக்கு உதவி செய்வேன்` – இந்த ரீதியில் அவர்கள் எழுதி இருந்ததைப் படித்தபோது, இவர்கள் சுயமாகச் சிந்திக்கிறார்களா, இல்லை, யாராவது இச்சிந்தனைகளை இவர்களுள் புகுத்துகிறார்களா என்ற யோசனை வந்தது அந்த ஆசிரியைக்கு. அதற்கு அடுத்த வாரமே, அவர்களைப் பரீட்சை செய்வதுபோல் ஒரு நிகழ்ச்சி நடந்தது அந்த வகுப்பில். 24 அத்தியாயம் 24 பள்ளியில் மாதப் பரீட்சை நடந்துகொண்டிருந்தது. அகிலாவின் வகுப்பில் திடீரென்று ஏதோ கலவரம். மாணவர்கள் கூக்குரலிட்டபடி, தம் இருப்பிடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார்கள். “என்ன ஆச்சு? ஒக்காருங்க!” என்று அகிலா கத்தியதை யாரும் பொருட்படுத்தவில்லை. சில மாணவிகள், “ரஷிதா, டீச்சர்!” என்று கூவியபடி, ஒரு பெண் இருந்த திசையைச் சுட்டினார்கள். அப்போதுதான் அவளைக் கவனித்தாள் அகிலா. அப்பெண்ணின் தலை ஆட ஆரம்பித்தது. பின், வாயிலிருந்து நீர் ஒழுக — காக்காய் வலிப்பு! எதுவும் புரியாது, “இப்போ என்ன செய்யறது?”என்று உரக்கவே கேட்டாள். “கார் சாவி, டீச்சர்”. அதற்குள் அந்தப் பெண் தரையில் விழுந்திருந்தாள். அகிலா விரைந்தாள் அவளிருந்த இடத்திற்கு, கையில் சாவிக்கொத்துடன். சில நிமிடங்களில் ரஷிதா சுயநினைவு அடைந்தாள். அகிலா நீட்டிய கைக்குட்டையை எதுவும் புரியாது பார்த்தாள். “துடைச்சுக்கிட்டு, ஒன் நாற்காலியில ஒக்காந்துக்க, போ!” கனிவுடன் கூறினாள். தன் இருக்கையில் அமர்ந்ததும், தலையைக் கவிழ்த்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள் ரஷிதா . வெளியே ஓடிப் போயிருந்தவர்கள் மீண்டும் நுழைந்தார்கள். அகிலாவுக்கு எங்கிருந்தோ கோபம் வந்தது. “நீங்க எல்லாரும், `நான் நல்லவன்`னு  எழுதினீங்களே!” என்று அவர்கள்மேல் பாய்ந்தாள். “இதுதான் நல்ல குணமா? ஒங்களில் ஒருத்தி துன்பப்படறப்போ, உதவி பண்ணாம, பயந்து ஓடுவீங்களா? மௌனம். அகிலா அதையே மாற்றிப் போட்டாள். “ஒங்களுக்கு ஒரு வியாதி வந்து, மத்தவங்க பயந்து ஓடினா, ஒங்களுக்கு எப்படி இருக்கும்!” அதற்கு யாரும் பதில் சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒரு சிறுவனின் குரல் மெல்லியதாக ஒலித்தது: “அவமானமா இருக்கும்!” எல்லாரும் தலை குனிந்தார்கள், தாங்கள் அறியாது செய்த ஒரு செய்கையால் ஒரு சகமாணவியை எப்படி வருத்தியிருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாக. இப்போது அவர்களைப் பார்க்க அகிலாவுக்கே பரிதாபமாக இருந்தது. “போனால் போகட்டும். இனிமேல் யாருக்காவது உங்கள் உதவி தேவைப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?” ஒரே குரலில் பதில் வந்தது: “ஓடிப்போய், எங்களால் ஆனதைச் செய்யணும்’. “வெரி குட்”. வகுப்பைவிட்டுக் கிளம்பும்போது, “அப்புறம் என்னை வந்து பார்,” என்று ரஷிதாவிடம் சொன்னாள். அன்று மத்தியானமே சாப்பாட்டு நேரத்தில் அகிலாவைப் பார்க்க, ஆசிரியர்களின் பொது அறைக்கு வெளியே காத்திருந்தாள் ரஷிதா. அகிலாவின் முதல் கேள்விக்கு, “நான் ஒரு தடவை கீழே விழுந்துட்டேனாம். சின்னப்பிள்ளையா இருந்தபோது. அம்மா சொல்வாங்க,” என்றாள். “மருந்து சாப்பிடுவியா?” “இப்போ இல்ல. முடிஞ்சு போச்சு. முந்தி அப்பாதான் ஆசுபத்திரிக்கு கூட்டிட்டுப் போனார்”. “எப்போ?” “நாலாவது படிக்கிறபோது”. அதாவது, மூன்று வருடங்களுக்கு முன்னர்! “அடிக்கடி இப்படி வருமா?” ” பரீட்சை வந்தா, யாராவது என்னை ஏசினா!” ஆத்திரமோ, பயமோ வரும்போது என்று அகிலாவுக்குப் புரிந்தது. அவளுக்கு இந்த வியாதியைப்பற்றி எதுவும் தெரியாது. ஆனாலும், இப்போதுதான் அனேகமாக எல்லா வியாதிக்கும் மருந்து கிடைக்கிறதே என்று எண்ணமிட்டவளாய், “நாளைக்கு ஒங்கப்பாவை வந்து என்னைப் பாக்கச் சொல்லு,” என்றாள், கண்டிப்பான குரலில். “அவர் வராட்டி, நானே ஒங்க வீட்டுக்கு வந்துடுவேன்”. அந்த நினைவே மகிழ்ச்சி உண்டுபண்ண, கலகலவென்று சிரித்தாள் அப்பெண். 25 அத்தியாயம் 25 ரஷிதாவின் அம்மாதான் வந்தாள். சாயம் போன கைலியும்,  அந்த சூழ்நிலைக்குத் தான் ஏற்றவள்தானா என்று பயந்ததும் அவள் பொருளாதார நிலையைப் பறைசாற்றியது. அவளை மரியாதையுடன் வரவேற்று, பொது அறையிலிருந்த சோபா ஒன்றில் அமரச் செய்தாள் அகிலா. அகிலா எதுவும் கேட்பதற்குள், அந்தத் தாயே படபடப்பாகப் பேசினாள்: “எனக்கு ஆறு பிள்ளைங்க. அவங்கப்பாவுக்கும் வேலை இல்ல. நான்தான் கிடைக்கிற வேலையைச் செய்து, எல்லாரையும் பாக்கணும். டாக்டருக்கு குடுக்க ஏது காசு!” “காசே வேண்டாம், அம்மா. நான் ஒங்களுக்கு ஒரு கடிதம் குடுக்கிறேன் — பள்ளிக்கூடத்திலிருந்து. அதை எடுத்துக்கிட்டு,” என்றவள், ஏதோ சந்தேகத்துடன், “ஒங்க வீடு எங்கே இருக்கு? ஆசுபத்திரிக்குப் போக, பஸ்சுக்கு காசு வேணுமில்ல!” என்றாள், நாசூக்காக. “முடியும்”. களைப்புடன் பதில் வந்தது. “கொஞ்சம் இருங்க,” என்றுவிட்டு, அகிலா அலுவலகத்தை அடைந்தாள். அங்கு ஏதோ எழுதுவதாகப் பாவனை செய்துகொண்டிருந்த குமாஸ்தாவிடம் கேட்டு, ஒரு மனுவை வாங்கிக்கொண்டாள். பள்ளி முத்திரையின்மேல்  தன் கையொப்பத்தை இட்டாள். “இதிலே அவ பேரை எழுதி இருக்கேன். பள்ளிக்கூட விலாசமும் இருக்கு. நீங்க போனா, ஒங்க மகளுக்கு இலவசமா வைத்தியம் பாப்பாங்க”. அடுத்த நாள், ஒரு தோழியைத் தன்கூட அழைத்து வந்தாள் ரஷிதா. “டீச்சர்! ரஷிதா டீச்சருக்கு ஏதோ குடுக்கணுமாம். டீச்சர் கோபிச்சுப்பீங்க மாட்டீங்களேன்னு கேக்கறா!” என்றாள் புதியவள். வேறு வகுப்பைச் சேர்ந்தவள். “மாட்டேன்,” என்று புன்சிரிப்புடன் அகிலா சொல்லி முடிப்பதற்குள், அவள் கையில் ஒரு சிறிய பெட்டியை வைத்துவிட்டு ஓடினாள் ரஷிதா. திறந்து பார்த்தாள்அகிலா. அதன் அடக்கம்: ஒரு வளையல், தலைக்குக் குத்திக் கொள்ளும் ஒரு சிவப்புநிற கிளிப், ஒரு சிறிய சாந்து போத்தல். அவளுக்குச் சிலிர்த்தது. தன் அன்பை எப்படி வெளிக்காட்டுகிறாள் இந்தப் பெண்! பெருமையுடன் எல்லாரிடமும் காட்ட வேண்டும் என்று அறைக்குள் நுழைந்தாள். ஒரு ஆசிரியை யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள்: “ரஷிதா நேத்து வந்து, `ரொம்பப் பசிக்குது, சாப்பிட காசு இல்லே`ன்னு வந்து கெஞ்சினா. ரெண்டு வெள்ளி குடுத்ததும்தான் நகர்ந்தா!” ரஷிதாவின் தாயுடன் அகிலா பேசிக்கொண்டிருந்தபோது, `இவள் ஏன் வேலை மெனக்கெட்டு பெற்றோரை வரவழைக்கிறாள்!` என்று அகிலாவின்மேல் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தாள் தலைமை ஆசிரியை. பெற்றோர் வந்தாலே, தம் பிள்ளைகளைச் சரிவரக் கவனிக்காததற்காகப் பள்ளிக்கூட நிர்வாகத்தினரைச் சாடுவார்கள் என்பது அவள் அனுபவத்தில் கற்ற பாடம். அதனால் அவர்கள் வேண்டாத விருந்தினர். அவர்களை வருந்தி அழைக்கும் ஆசிரியை ஒரு தலைவலி. அங்கு போதிக்கும் அனேகம் பேருக்கு இந்தப் பெண்ணின் நிலை தெரிந்திருக்கலாம். அவர்களுக்கு எல்லாம் இல்லாத அக்கறை இவளுக்கு என்ன வந்தது? இந்த இந்திய ஆசிரியையின்மேல் ஒரு கண் வைத்துக்கொள்ளவேண்டும் என்று கறுவினாள் புவான் மஹானி. இவள் ஏன் குறிப்பாக இங்கு மாற்றல் கேட்டு வந்தாள்? 26 அத்தியாயம் 26 ஒரு பள்ளியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றப்பட்டால், நிறைய துன்பங்களை அனுபவிக்க நேரிடும். புதிய இடம், வேறு குடும்பப் பின்னணியிலிருந்த மாணவர்கள், தங்களுக்குப் பழக்கமில்லாத புதியவர்களை வெறுக்கும் ஆசிரியர் குழாம் — இப்படி எவ்வளவோ இருந்தன. அகிலா வேறு ஒன்றையும் சந்திக்க நேரிட்டது. இங்கு வேலையில் சேர்ந்து, ஐந்து மாதங்கள் ஆகியும், அவளுக்குச் சம்பளம் கிடைக்காமல் இருந்தது. எப்போது கேட்டாலும், “மாவட்ட அலுவலகத்திலிருந்து இன்னும் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை,” என்று பட்டுக் கொள்ளாமல் பதிலளித்தான் குமாஸ்தா. அவனைக் கேட்டுப் பிரயோசனம் இல்லை என்று நிச்சயித்தவளாக, நேராக அந்த அலுவலகத்துக்கே போனாள் அகிலா. மறுநாள் காலை, தன் பெயருக்கு நேரில் கையொப்பம் இடும்போது அருகே நின்றிருந்த புவான் மஹானியிடம், தான் அறிந்து வந்ததைக் கூறி, “நீங்கள்தான்  இன்னும் ஏதோ அனுப்ப வேண்டுமாம்,” என்று தெரிவித்தாள். தலைமை ஆசிரியைக்கு வந்ததே பார்க்கலாம், கோபம்! “நீ சும்மா இரு. ஒன்னை யாரும் கேக்கலே. என்ன செய்யறதுன்னு எனக்குக் கத்துக் குடுக்க நீ யாரு? ஒன்னை யாரு அங்கேயெல்லாம் போகச் சொன்னது?” என்று, பைத்தியம் பிடித்தவள்போல, கத்த ஆரம்பித்தாள். குரல் கிரீச்சென்று மாறி இருந்தது. பள்ளி ஆரம்பிக்கும் நேரமானதால், சுமார் பத்து ஆசிரியைகள் அவளைச் சுற்றி இருந்தார்கள். அவர்களில் சிலர் அதிர்ந்து போக, வேறு சிலர் லேசாகப் புன்னகை செய்தார்கள். அகிலா அப்பால் நகர்ந்தாள். இவள் ஏன் எல்லாவற்றிற்கும் இப்படி கத்துகிறாள் என்று ஆத்திரம் வந்தது. சம்பளம் இல்லாது எத்தனை காலம் இருக்க முடியும்? அதை இவர்கள் ஒழுங்காகக் கொடுத்தால், அவள் ஏன் பிரயாசைப்பட்டிருப்பாள்! ஆசிரியத் தொழில் என்றால், இளம் பிஞ்சுகளை உருப்படியான மக்களாக ஆக்குவது என்ற கனவுடன்தானே இதைத் தேர்ந்தெடுத்தாள்! அப்பாவின் உந்துதலும் இருந்தாலும், அவளுக்கே பிடித்ததால்தான் இதற்குப் படித்திருந்தாள். இப்போதோ, இதிலிருந்து எப்போது மீளப் போகிறோம் என்று மலைப்பாக இருந்தது. இன்னும் ஏழெட்டு வருடங்கள் தன்னால் தாக்குப் பிடிக்க முடியுமா? (“என்னால இனிமே தாக்குப் பிடிக்க முடியாது. வேலையை விட்டுத் தொலைச்சுடலாம்போல இருக்கு,” என்று கணவரிடம் தெரிவித்தாள், அன்று மாலை. பின், அவர் கேளாமலேயே, அன்று பள்ளியில் தான் பட்ட அவமானத்தை ஒன்று விடாமல் கூறி முடித்தாள். நிதானமாக யோசித்தவர், “கத்தறப்போ, குரல் மாறிச்சா? அப்போ, அவ மனநிலை சரியில்லை, பாவம்!” என்று அவர் பரிதாபப்பட்டார். தனக்கு ஆதரவாக ஒருவார்த்தைகூட பேசாது, அந்தப் பிசாசுக்குப் பரிந்து பேசுகிறார்! ஆத்திரம் தாங்காது, அப்பால் சென்றாள் அகிலா. “ஏய்! யார்மேலேயோ இருக்கிற கோபத்தை பாத்திரத்தின்மேலே காட்டாதே,” என்றபடி உள்ளே வந்தார் ராமசாமி. “இன்னிக்கு சமையல் அவ்வளவுதானா?” “சிரிக்காதீங்க!” “சரி, அழறேன்,” என்று பலக்கச் சிரித்தவர், “அகிலா! ஒனக்குப் பிடிக்காட்டி, வேலையை விட்டுடேன்,” என்று ஒரு அருமையான ஆலோசனை அளித்தார். “பென்ஷன்?” நாற்பத்தைந்து வயதுக்குமேல் ஓய்வைத் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் அதைத் தடுக்க பள்ளிக்கு உரிமை உண்டு.  அப்படியே கிடைத்தாலும், வாழ்நாள் முழுவதும் மாதாமாதம் அளிக்கப்படும் ஓய்வூதியம் கணிசமாகக் குறைந்துவிடும். ஆயிரக்கணக்கில் வரும் சம்பளம் சரிபாதிக்கும் குறைவாகக் கிடைத்தால் எவ்வளவு தட்டுப்பாடு! அதோடு, வீட்டிலேயே உட்கார்ந்து, என்ன செய்வது? இப்போது செய்வதுபோல், மாணவர்களுக்கு உதவ அவளை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்! “நீ இப்போ சமைக்க வேண்டாம். வெளியே போய் சாப்பிட்டுட்டு, அப்படியே ஒரு படத்துக்கும் போயிட்டு வரலாம், வா”. “நீங்கபாட்டிலே சொல்லிடுவீங்க. காலையில எப்படி எழுந்திருக்கிறதாம்?” “அதெல்லாம் அப்போ பாத்துக்கலாம். புறப்படு”). 27 அத்தியாயம் 27 ரஷிதா இப்போதெல்லாம் வெகுவாக மாறி இருந்தாள். அகிலா ஏதாவது எழுத்து வேலை கொடுத்தால், முதலில் முடித்துவிட்டு, ஓடி வந்து கொடுப்பாள், “முடிச்சுட்டேன், டீச்சர்,” என்று பெருமையுடன் அறிவித்தபடி. தப்பும், தவறுமாகச் செய்திருப்பாள் என்பது வேறு விஷயம். “மருந்து சாப்பிடறியா?” ரகசியக் குரலில் விசாரிப்பாள் அகிலா. “ம்,” தலையாட்டுவாள். முன்போல், வகுப்பில் எல்லாரும் அவளை ஒதுக்காது, தங்களில் ஒருத்தியாகப் பாவித்து நடத்தியதில் அவளுக்குக் கொள்ளை மகிழ்ச்சி. மாறிவிட்ட ரஷிதாவின் போக்கு அகிலாவுக்குத்தான் தலைவலியாக மாறியது. கரும்பலகையை அழிக்க வேண்டுமா, நோட்டுப் புத்தகங்களை மாணவ மாணவிகளிடமிருந்து சேகரிக்க வேண்டுமா, எல்லாவற்றுக்கும் அவள்தான் முன்னே நின்றாள். அதற்கென வேறு சிலர் இருந்தாலும், அவர்களை முரட்டுத்தனமாகக் கையால் பிடித்துத் தள்ளிவிட்டுவிடுவாள். மாணவிகளுக்கு அவள்மேல் சுரந்த பச்சாதாபம் மறைந்துவிடும் அபாயத்திலிருந்ததை அகிலா உணர்ந்தாள். மாணவிகளின் தலைவியைக் கூப்பிட்டு அனுப்பினாள். “ரஷிதா பாவம்! இத்தனை நாளும் யாரும் அவளைச் சரியா கவனிக்கலே. ஒடம்பும்..உக்கும் (கனைத்துக் கொண்டாள்) ஒனக்கே தெரியும், இஸ்மா. நான் அவங்கம்மாவைக் கூப்பிட்டு அனுப்பினேனில்ல? அவங்க டாக்டர்கிட்டே  அழைச்சுட்டுப் போனாங்களாம். மருந்து சாப்பிட்டு, இப்போ நல்லாயிட்டா. அந்த உற்சாகத்திலதான் … டீச்சர்கிட்டே சொந்தம் கொண்டாடறா”. எல்லாம் விளங்கிய பாவனை அந்தப் பெண்ணின் முகத்தில். “ஓ!” என்று தலையைப் பெரிதாக ஆட்டினாள். “எனக்கு நீங்க எல்லாரும் ஒண்ணுதான். ஒனக்குத் தெரியுமில்ல?” இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாது, தலையாட்டி வைத்தாள் இஸ்மா. “போ! போய் எல்லார்கிட்டேயும், `டீச்சர் சொன்னாங்க`ன்னு சொல்லு. ஆனா, ரஷிதா இல்லாதப்போ!” இருவரும் சிரித்தார்கள், ஏதோ அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொண்டுவிட்ட பூரிப்புடன். தங்களில் ஒருத்தியாக இந்த அறியாச் சிறுவர்கள் தன்னை ஏற்றுக் கொண்டுவிடும்போது, தானும் அவர்களில் ஒருத்தியாகச் சிறிதே தன்னை மாற்றிக் கொண்டால் என்ன என்று தோன்றியது அகிலாவுக்கு. ராமசாமியும் சொல்லிக்கொண்டேதான் இருந்தார், “இன்னும் சின்னப் பொண்ணு மாதிரி ஒடம்பை வெச்சிருக்கே. அதைப் பெருமையா காட்ட வேணாம்?” என்று. “அப்புறம் எவனாவது பாத்து மயங்கிட்டா? நீங்க, பாவம், என்ன செய்வீங்க?” அந்தக் குறும்பை ரசித்தவராக, “எனக்கென்ன?  நானும் காலையில எழுந்து, மைதானத்தைச் சுத்தி நாலு தடவை ஓடினா, சின்னப் பையன் மாதிரிதான் ஆயிடுவேன். அப்புறம்..” “போதும்.போதும். வழியாதீங்க. ஏதோ நீங்க கெஞ்சறதாலே பெரிய மனசு பண்ணறேன்”. அப்படி வாங்கியதுதான் உடலின் எல்லாப் பாகங்களையும் இறுகப் பிடித்திருந்த, பாஜூ கெபாயா (baju kebaya) என்றழைக்கப்பட்ட அந்த மலாய் உடை. தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டதும், அகிலாவுக்கே வெட்கம் ஏற்பட்டது. எப்படி உருண்டு திரண்டு இருக்கிறோம்! `அருமையான இந்திய உடல்` என்று முன்பு தன்னை யாரோ வர்ணிக்கவில்லை? பெருமை ஏற்பட்டபோதே, வேறு ஒரு எண்ணமும் தோன்றியது. பதின்ம வயதுப் பையன்களை அன்றாடம் சந்திக்கிறோமே! அவர்கள் மனதில் கிளர்ச்சி உண்டாகிவிடாது? அது பெரிய பாபம் அல்லவா! அவள் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. வகுப்பில் நுழையும்போதே  சீழ்க்கை ஒலி. மாணவிகள், சிரித்த முகத்துடன், பெருமையாக நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். தாங்கள் மதிக்கும் ஆசிரியை தங்களுடன் ஓயாது சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் பையன்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றதில் அவர்களுக்குப் பெருமிதம். துணிச்சல்காரனான ஒரு பையன் தன் இருக்கையை விட்டு எழுந்து, அவள்முன் வந்து நின்றான். `என்ன நடக்கிறது?` என்று யாரும் புரிந்துகொள்வதற்குள், ஒரு முழங்காலில் மண்டியிட்டு அமர்ந்தான். உடல் சற்றே பின்னுக்குப் போக, தன் இடது கையை இதயத்தில் வைத்து, வலது கையை அகிலாவின் முன் நீட்டி, “டீச்சர்! என் மனசைத் திருடிட்டீங்க!” என்றான், நாடக பாணியில். வகுப்பில் அமர்ந்திருந்த எல்லாரும் விறைத்துப் போனார்கள். அகிலா மட்டும் சிரித்தபடி, அடிக்கப்போவதுபோல் விளையாட்டாகக் கையை ஓங்கினாள். அவளுடைய மகனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இவன் சின்னக் குழந்தை. `டீச்சர் சிரிக்கறாங்க!` தாம் பார்ப்பதை நம்ப முடியாது அவர்கள் ரகசியக் குரலில் கூறிக் கொண்டது அகிலாவின் காதையும் எட்டாமல் போகவில்லை. “ஒன் பேரென்ன?” அவனைக் கேட்டாள். அவன் சற்றே பயந்துபோனது விரிந்த விழிகளிலிருந்து தெரிந்தது. அகிலா கருணையுடன் அவனைப் பார்த்துச் சிரித்ததும், தெளிந்தான். “அப்துல், டீச்சர்!” தான் இந்த நல்ல டீச்சருக்கு ஒரு பொருட்டாக ஆகியிருக்கிறோம் என்ற பெருமை அவன் தோள்களை அளவுக்கு அதிகமாகவே ஆட்டியபடி நடக்கையில் தெரிந்தது. அதன்பின், முன்பு ரஷிதா செய்ததுபோல், எதற்கும் முன் வந்து நின்றான். பாடங்களை ஒழுங்காகப் படித்துக்கொண்டு வந்தான். எந்த கேள்வி கேட்கப்படும்போதும், கையைத் தூக்கினான். `இவனை இத்தனை நாட்களும் எப்படி கவனிக்காமல் விட்டோம்!` என்று அகிலாவே ஆச்சரியப்படும் வகையில், புத்திசாலித்தனமாக நடந்துகொண்டான். 28 அத்தியாயம் 28 “அப்துல்? ஓ, அந்த அழகான பையனைச் சொல்றீங்களா?” அவள் கேட்டவுடனே புரிந்துகொண்டார் டேவிட். “ஒங்ககிட்டே கொஞ்சம் தாராளமா பழகுவானே?” “அவனேதான்,” என்று புன்னகைத்தாள். “எப்போதும் சோகமா இருக்கான். ஆனா, வகுப்பிலே கோமாளிமாதிரி நடந்துக்கறான். அவனுக்கு என்ன பிரச்னை, டேவிட்?”. டேவிட் மெல்லச் சிரித்தார். “நீங்கதான் இங்க கவுன்சிலராக இருந்திருக்கணும். என்னமோ, தன்னை மகாராணியாக பாவிச்சு நடக்கிற சிதி நோர்கிட்ட (SITI NOR) அந்தப் பதவியைக் குடுத்திருக்காங்க. அதுக்கு மனோதத்துவம்கிறது வெறும் ஏட்டுச் சுரைக்காய். `சைகாலஜிபடி`ன்னு வாய்க்கு வாய் சொல்வா. அதுக்கு அர்த்தம் தெரியுமோ, என்னவோ! மத்தவங்களை மதிக்கவும் தெரியாது”. எவரையும் வசைபாடத் தயங்கமாட்டார் டேவிட். அவர்களிடமே அதைக் கூறவும் தயங்க மாட்டார்! அவர்கள் எப்படி கோபிக்காமல், சிரித்துவிட்டு, அவர் தங்களிடமே தங்களைப்பற்றிக் குறை கூறுவதைச் சகித்துப் போகிறார்கள் என்று அகிலாவுக்கு இன்றுவரை புரியவில்லை. பிறகு, அவள் கேட்ட விஷயத்திற்குத் தாவினார். “எனக்குப் பொதுவா, ஒருத்தரைப்பத்தி, அவங்க பக்கத்திலே இல்லாதப்போ ஏதாவது பேசறது பிடிக்காது. நீங்க கேக்கறதாலே சொல்றேன்,” என்ற பீடிகையுடன் டேவிட் ஆரம்பித்தபோது, சிரிக்க வேண்டும்போல இருந்தது அகிலாவுக்கு. யாரைப் பற்றியும் பேசமாட்டாராமே? தமக்கென்று வரும்போது, எல்லாருமே அளவுக்கு அதிகமான மதிப்பெண்களையே அளித்துக் கொள்கிறார்களே, ஏனிப்படி, என்று யோசித்தாள். தாமே தம்மை விரும்பும்போதுதான் பிறரும் தம்மை விரும்புவார்கள் என்பதாலா? அவளுடைய மனப்போக்கை உணராது, “அப்துல் தத்து எடுக்கப்பட்ட பிள்ளை,” என்று தெரிவித்தார் டேவிட். அகிலா இருக்கையின் முன்னால் நகர்ந்தாள், சுவாரசியம் மிக. “போன வருஷம், அதாவது, அவனோட பதிமூணு வயசிலதான் அதைத் தெரிஞ்சுக்கிட்டான். அதுவும் எப்படி? அவங்க இருந்த கம்பத்து (கம்பம் = மலாய்க்காரர்களின் குடியிருப்பு நிலம், kampung என்ற வார்த்தையிலிருந்து மருவியது) வீடு நெருப்புப் பத்தி எரிஞ்சதிலே, எல்லாமே அழிஞ்சு போச்சு.  இவன் அந்தக் குடும்பத்துக்கு வந்ததாலதான் அப்படி ஆயிடுச்சுன்னு கன்னா பின்னான்னு பேசி இருக்காங்க!” “இருக்காதே! நாட்டுக்காரங்க அவங்க பெத்த பிள்ளைங்ககிட்ட ரொம்ப அருமையா நடந்துக்குவாங்களே!” அவநம்பிக்கைப் பட்டாள் அகிலா. “ஏதாவது தப்பு செய்தாக்கூட, `பிள்ளையோட கௌரவம் குறைஞ்சிடும்`னு (He will lose face) திட்டமாட்டாங்க. எனக்குத் தெரியும். அக்கம்பக்கத்திலே பாத்திருக்கேன். இவங்க வீட்டிலே மட்டும் எப்படி..?” அவள் இடைமறித்ததைச் சட்டைசெய்யாது, “இத்தனைக்கும் பாருங்க, ஆறு மாசப் பிள்ளையா இருக்கும்போதே இவனைத் தத்து எடுத்திருக்காங்க. இப்போ, அவங்களுக்கே சொந்தமா ஒரு குழந்தை பிறந்திடுச்சா, இவன் வேண்டாதவனாப் போயிட்டான்”. “பாவம்!” என்று மட்டும்தான் அகிலாவால் சொல்ல முடிந்தது. 29 அத்தியாயம் 29 அடுத்த முறை அந்த மாடி வகுப்புக்குப் போனபோது, அப்துல்லை அறைக்கு வெளியே அழைத்தாள். அங்கிருந்த குட்டைச் சுவற்றோரமாக நின்றபடி, “ஒனக்கு ஏதாவது மனவருத்தம் இருந்தா சொல்லு,” என்றாள். அவள் மலாய் உடை அணிந்து வந்ததிலிருந்து, அவளைத் தங்களில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டிருந்தனர் மாணவர்கள். வகுப்பின் காலவரை நீண்டிருந்தால், வகுப்பில் அமர்ந்து நெளிந்து கொண்டிருந்தவர்களின் பொறுமையைச் சோதிக்காது, ஒவ்வொருவரிடமும்  இப்படி அவர்களுடைய அந்தரங்கத்தை விசாரிப்பது அவள் வழக்கமாக இருந்தது. `நண்பர்களைத் தவிர, யாரிடமாவது தங்கள் கதையைச் சொல்ல மாட்டோமோ,` என்று அவர்கள் காத்துக் கொண்டிருந்ததுபோல் இருந்தது அகிலாவிடம் அவர்கள் வெளிப்படையாகப் பேசிய விதம். “எங்கம்மா எங்கூட பேசணும்!” என்று ஆரம்பித்தான்அப்துல். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாது, “பேசறதில்ல?” என்று விசாரித்தாள். “சாப்பிட்டுப் போயேண்டான்னு அலுப்பா கத்துவாங்க. அவ்வளவுதான்”. `இப்படியும் ஒரு தாய் இருப்பார்களா!` புரிந்துகொள்ளச் சற்று கஷ்டமாகக்கூட இருந்தது. தானே சுமந்து பெற்றால்தான் உண்மையான அன்பு வருமா? அதற்காகத்தான் இயற்கை, `பிரசவ வலி` என்று ஒன்றைப் பெண்களுக்கு வைத்திருக்கிறதா? முயற்சி இல்லாது ஒன்றை அடைந்தால், அதன் மதிப்பு தெரியாமல் போய் விடுமோ? ஏதேதோ யோசனைகளுக்குப் பிறகு, “அம்மா வேலைக்குப் போறவங்களா?” என்று கேட்டுப் பார்த்தாள். “ஊகும்,” ஏளனச் சிரிப்புடன் பையன் தலையாட்டினான். “என்னதான் பண்ணுவாங்க?” “எப்பவும் ரேடியோதான்!” `ரேடியோ` என்கிற வார்த்தையை அழுத்தமாகச் சொன்னான். தனக்குப் போட்டியாக வந்து தொலைத்திருந்த வானொலியின்மேல் அவ்வளவு ஆத்திரம். “ஒங்கப்பா?” “வாரத்திலே ஒருநாள்தான் வீட்டுக்கு வருவார்”. அகிலாவுக்குப் புரிகிறமாதிரி இருந்தது. இரு தாரப் பிரச்னை! ஆனால், அதற்கு நாம் என்ன பண்ண முடியும் என்ற நிராசையும் எழுந்தது. “நீ ஒண்ணு பண்ணு. நாளைக்கு, இல்ல, இன்னிக்கே ஒங்கம்மாகிட்டே போய், `அம்மா! எங்கூட கொஞ்சம் பேசுங்களேன்`னு கேளு. கேக்கணும். என்ன கேப்பியா?” பிரச்னையின் ஆழத்தை அவனுக்குப் புரியவைக்கும் நோக்கத்தில் அழுத்தம் திருத்தமாகக் கூறினாள். தயக்கத்துடன் தலையாட்டினான் அப்துல். “சரி. ஒன் பக்கத்திலே யாரு? அவனை வரச் சொல்லு,” என்று தன் கடமையைத் தொடர்ந்தாள் அகிலா. வகுப்புக்குள்ளே நடந்த அப்துல்லிடம், “டீச்சர் என்ன கேட்டாங்க?” என்று பலரும் ஆவலுடன் கேட்பதும், “பியாசா (biasa, வழக்கம்போல்தான்)!” என்று அவன் சுரத்தில்லாமல் கூறியதும் அவளுக்குத் தெரிந்தது. சில மாதங்களுக்குள் அவன் போதைப் பித்தனாவான், சகமாணவியிடம் கொண்ட தவறான உறவு காவல்துறைவரைக்கும் போக, பள்ளியை விட்டே நீக்கப்பட்டு, சிறுவர்களுக்கான சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுவான் என்றெல்லாம் அப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. 30 அத்தியாயம் 30 `நம் அதிகாரத்தை ஆட்டிவைப்பதுபோல் நடந்துகொள்ளும் இவள் தொலையப் போகிறாளே!` என்ற மகிழ்ச்சி, தலைமை ஆசிரியை புவான் மஹானியிடம் தெரிந்தது. அவள் முகமெல்லாம் ஒரே சிரிப்பு. `உங்களை ஒரு மாத காலம் மேற்பயிற்சிக்காக கெந்திங் ஹைலாந்திலுள்ள கல்வி நிலையத்திற்கு அனுப்ப நிச்சயித்திருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்` என்ற வாசகத்துடன் கல்வி இலாகாவிலிருந்து வந்திருந்த கடிதத்தை தானே நேரில் எடுத்துக்கொண்டு வந்திருந்தாள். தான் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் வந்திருக்கிறாளே, இப்போது என்ன கலாட்டா செய்யப் போகிறாளோ என்று அகிலாவுக்குப் பயம் வந்தது. ஆனால், “நீங்க அடுத்த வாரமே கெந்திங் ஹைலாந்து போகணும்,” என்று நீட்டப்பட்ட கடிதத்தின்மேல் பார்வையை ஓடவிட்டதும் அந்தப் பயம் மறைந்தது. `இதை அலுவலகப் பையனிடம் கொடுத்து அனுப்பி இருக்கலாமே! தானே எதற்கு வந்தாள்?` என்று அகிலாவின் யோசனை போயிற்று. “கிட்டத்தட்ட ஒரு வருஷம் அங்கேயே, ஹாஸ்டல்ல தங்கணும். வாரக் கடைசியிலே மட்டும்தான் வீட்டுக்கு வர முடியும்,” மிகுந்த சிநேகித பாவத்துடன் அவள் பேச, அகிலாவுக்கு அவள்மேல் இரக்கம் சுரந்தது. எந்தச் சிறு மாறுதல் வந்தாலும், அதற்காக அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்பட்டு விடும் ரகம் இவள். தன் போக்கு பிறரை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதை உணரமுடியாத ஒரு அசட்டுத்தனம், இல்லை, மெத்தனம். கணவர் அன்றொருநாள் அவள் குணத்தை அலசியது சரிதான் என்று பட்டது. சிறிது காலம் ஏதாவது மனோதத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால், இப்படி எல்லாரும் வெறுக்கிறமாதிரி நடந்துகொள்ள மாட்டாள். தன்னை மட்டுமில்லாமல், ஆண்களையும் அவள் அதிகாரமாக நடத்துவது அகிலாவுக்கும் தெரிந்ததுதான். ஆனால், நம்மை அவள் விரட்டாதவரைக்கும் திருப்திப்பட்டுக் கொள்வோம் என்று மற்றவர் எல்லாரும் தத்தம் பாட்டைக் கவனித்துக் கொண்டது ஏனென்றுதான் அவளுக்குப் புரியவில்லை. எல்லாருமே தமது சொந்த நலத்தில் மட்டும் அக்கறை கொண்டால், பள்ளி, ஊர், நாடு, உலகம் எல்லாம் எப்படி முன்னேற்றம் அடைய முடியும்? `நல்ல காலம், நானும் அவர்களைப்போல் இல்லையே,` என்று அல்பதிருப்தி கொள்ளத்தான் அவளால் முடிந்தது. திங்கள் கிழமை காலை முதல் வேலையாக, எல்லா மாணவர்களும் பள்ளிக்கூட வளாகத்தில் அவரவர் வகுப்புடன் சேர்ந்து நிற்பார்கள். வாராந்திர பொதுக்கூட்டத்திற்காகத்தான். அப்போது, `அறிவுரை`  என்ற பெயரில் அவர்களைத் திட்டித் தீர்ப்பாள் தலைமை ஆசிரியை. வசவு பிறருக்குத்தான் என்றாலும், அதைச் செவிமடுக்கும்போது, யாருக்குமே நாராசமாக இருந்தது. `அவளுக்குக் குழந்தை குட்டி இருந்தால்தானே பிறர் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று தெரியும்?” என்று இளக்காரமாக முணுமுணுத்தாள் ஆறு பிள்ளைகளுக்குத் தாயான மரீனா. தம்மைப் பார்த்துத் திட்டாவிட்டாலும், ஆசிரியர்களுக்கே அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. மாணவர்களுக்கு எப்படி இருக்கும்! தன் பங்கிற்கு அகிலாவும், “சனி, ஞாயிறை ஜாலியா ஃப்ரெண்ட்சோட கழிச்சுட்டு, படிக்கிற ஆர்வத்தோட இவங்க வர்றாங்க, பாவம்! உள்ளே நுழையறபோதே இவ கத்தினா, இனிமே யாருமே பள்ளிக்கூடத்துக்கு வர பயப்படுவாங்க,” என்று ஆமோதித்தாள். சுமார் ஐம்பது ஆசிரியர்கள் இருக்கும்போது, இனி தான் ஒருத்தி வராவிட்டால் யாருக்குத் தெரியப்போகிறது என்ற நினைப்பில், அடுத்தடுத்து வந்த திங்கட்கிழமை பொதுக்கூட்டங்களின்போது, பரிசோதனைக் கூடத்துக்குப் பக்கத்தில் அமைந்திருந்த தன் அறையை உள்ளே பூட்டிக்கொண்டு, `யாருமில்லை போலிருக்கிறது!` என்று பிறரை எண்ணவைக்க, விளக்கையும் அணைத்துவிட்டு உள்ளே உட்கார்ந்திருக்க ஆரம்பித்தாள்! அப்படியும் புவான் மஹானியின் கத்தல் அவளது செவிகளுக்கு எட்டாமல் போகவில்லை. “புகை பிடிப்பது எத்தனை கெட்ட பழக்கம், தெரியுமா? நமது பள்ளிக்கூடத்தில் அதற்கு அனுமதி இல்லை என்று உங்களுக்குத் தெரியும். ஆனாலும், உங்களில் சிலர், பெரியவர்கள் கூறும் எந்த நல்ல அறிவுரையையும் ஏற்பதில்லை. அவ்வளவு திமிர்! பாடம் நடந்து கொண்டிருக்கும்போது, வகுப்பிலிருந்து வெளியேறி, கழிப்பறை செல்கிறீர்கள். எதற்கு? சிகரெட் பிடிக்க!” எதையும் ஆரம்பித்தால் முடிக்கத் தெரியாது அவளுக்கு. பேசிக் கொண்டே போனாள். மாணவர்கள் தோள்களைச் சுழற்றிப் பார்த்தார்கள். மாணவிகள் காலை மாற்றி மாற்றித் தூக்கி, தம் வலியை மறக்க முயன்று கொண்டிருந்தனர். ஒருத்தி மயங்கி விழுந்தே விட்டாள். நாலைந்து மாணவிகளும், வகுப்பாசிரியையும் ஓடி வந்தார்கள், அவள் உதவிக்கு. `அவர்கள் பாடு!` என்று அதை ஒதுக்கிவிட்டு, அனைத்து மாணவ மாணவிகளையும் அப்படியே கட்டாந்தரையில் அமரச் செய்துவிட்டு, தன் போதனையைத் தொடர்ந்தாள் புவான் மஹானி. “நீங்க தொடர்ந்து மூணு தடவை சிகரெட் பிடிக்கறபோது பிடிபட்டா, ஒங்க பெற்றோருக்கு பள்ளி கடிதம் அனுப்பும். இன்றையிலிருந்து, இடைவேளையின்போது மட்டும்தான் நீங்க வகுப்புக்கு வெளியே போக முடியும். செய்ய வேண்டியதை எல்லாம் காலையிலே வீட்டிலேயே செய்துட்டு வாங்க! நான் ஆசிரியர்களிடம் மொதல்லேயே இதைப்பத்திப் பேசியாச்சு. அப்புறம்..,” யோசித்தாள். தான் மேடைமேல் நிற்க, மற்ற எல்லாரும் தன் முன்னால் நின்று கொண்டிருப்பது, அவளுடைய அதிகாரத்தைக் கூட்டுவதுபோல இருந்ததால், அந்த உரையை சீக்கிரத்தில் முடித்துக்கொள்ள மனம் வரவில்லை. “சில பேர், `செக்கூ ரசாலி கூடத்தான் சிகரெட் பிடிக்கிறார்,` அப்படின்னு எங்கிட்டே திருப்பிக் கேக்கறாங்க,” என்று தெரிவித்தாள். பரிதாபத்துக்குரிய அந்த ஆசிரியரின் தலை கவிழ்ந்தது. முகத்தில் ஆத்திரம், மாணவர்கள்முன் இப்படித் தலைகுனிய வைத்துவிட்டாளே என்று. எல்லா மாணவர்களின் கண்களும் அவரை நோக்கித் திரும்பின. அவர்கள் முகத்தில் கேலிச் சிரிப்பு. புகை பிடிக்கும் வழக்கமுள்ள பிற ஆசிரியர்கள், `நல்லவேளை, நமது பெயரைச் சொல்லாமல் விட்டாளே,” என்று நிம்மதி அடைந்தனர். 31 அத்தியாயம் 31 “ஆண்களுக்கு, அதுவும் ஆசிரியர்களுக்கு, கொஞ்சம்கூட மரியாதை குடுத்து நடத்தத் தெரியல!” பரிசோதனைக் கூடத்தை ஒட்டிய சிறு அறைதான் இப்போது அகிலாவின் பிரத்தியேகமான இடம். அதற்கு முற்பகுதியில் கொஞ்சம் இடமிருந்தது. அதில் மாணவர்களை விளையாடவிட்டு, ஆசிரியர் ரசாலி அவள் அறைக்கு வெளியே வந்து நின்று, கதவுச் சட்டத்தைக் கைநீட்டிப் பிடித்தபடி புகார் செய்தார், முனகலாக. “புவான் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது,” என்று ஆமோதித்தாள் அகிலா. “என்ன இருந்தாலும், நீங்க சுயமா சம்பாதிக்கிறவர். சின்னப் பையனில்ல, வயது வந்த ஆண்,” என்று அவருக்குப் பரிந்து பேச, அவருடைய ஆத்திரம் சிறிது மட்டுப்பட்டது. “ஆம்பளைங்க எல்லாருக்குமே அவங்கமேல ரொம்ப கோபம். அதை எப்படிக் காட்டறதுன்னுதான் புரியல,” என்று அகிலாவிடம் மறைமுகமாக யோசனை கேட்டார். பெண்கள் என்றாலே காத தூரம் ஓடுபவர், நாற்பத்தைந்து வயதுக்குமேல் ஆகியும், கட்டைப் பிரம்மச்சாரி என்றெல்லாம் ரசாலியைப்பற்றி அவள் தெரிந்து வைத்திருந்தாள். இத்தகையவர், வலிய வந்து தன்னுடன் பேசுகிறார்! அவருக்கு எப்படியாவது உதவி செய்தாக வேண்டும். “நீங்க சொன்னா, மத்தவங்க கேப்பாங்களா?” அவர் தலையாட்டியதும், “நாளைக்கு இங்கே ஒரு விருந்து இருக்கில்ல? அதுக்கு ஒருத்தரும் போகக்கூடாதுன்னு சொல்லிடுங்க!” என்றாள். ரசாலியின் கண்கள் மின்னின. “உங்கள் அறையை என்ன இப்படி வெறுமையா வெச்சிருக்கீங்க? கலர் கலரா பூக்களோட ஒரு ஜாடி வைக்கக்கூடாது?” என்று தோழமையுடன் சிரித்தவர், “ஒழுங்கா விளையாடுங்கடா,” என்றபடி தன் கடமையைத் தொடரப்போனார். மறுநாள் நடந்த விருந்தின்போது, `ஆசிரியர்கள் அழைக்கப்படுகிறார்கள்!` என்று, பள்ளி மாணவர் தலைவன் ஒலிபெருக்கியில் இடைவிடாது கூப்பிட்டான், தலைமை ஆசிரியை சார்பாக. முன்பு நினைத்தபடி, எல்லா விரோதமுமே இன வேற்றுமையாலோ, வெறுப்பாலோ கிளர்வது அல்ல என்று புரிந்தது அகிலாவுக்கு. ஆண் பெண்ணைப் பழிக்கிறான். அவளை மிரட்டித் தன் வசமாக்கிக்கொள்ளப் பார்க்கிறான். பெண் மற்றொரு பெண்ணை கவிழ்க்கப் பார்க்கிறாள். தங்களை விரட்டும் இந்த உலகத்தை எதிர்த்து, வெகு சில பெண்கள்தாம் கைகோர்த்துக் கொள்கிறார்கள். பிற சமயங்களில், பெண் ஆணைக் கவிழ்க்கப் பார்க்கிறாள், ஆண்டாண்டு காலமாக, பெண்களைவிட உயர்ந்த நிலையில் ஆண்கள் வைக்கப்பட்டிருந்ததை தகர்க்க முயலுவதுபோல். இந்த நியதியிலிருந்து மாறுபட்டவர்களும் இருந்தார்கள், அவள் கணவரைப்போல், டேவிட்டைப்போல். இவர்கள் பெண்மையின் வித்தியாசத்தால் கலவரப்படாது, அதை ரசித்து ஊக்குவிக்கும் அற்புத மனிதர்கள். குணம் என்பது பிறவியிலேயே வருவதா, இல்லை, வளர்ப்பு முறை, சுற்றுச்சூழல் எல்லாமே தங்கள் பங்கை ஆற்றி இருந்தனவா? மனிதர்களின் மனப் போக்கை யாராலும் முழுமையாக உணரமுடியாது என்றே தோன்றியது அகிலாவுக்கு. இந்தக் குழப்பமான சூழ்நிலையிலிருந்து நீண்ட காலம் விடுபட்டு இருக்கப்போவதை எண்ணியபோது, உற்சாகமாக இருந்தது. 32 அத்தியாயம் 32 கெந்திங் மலை! சூதாட்டத்தைப் பொழுதுபோக்காக மாற்றிய சில பெரிய ஹோட்டல்கள் நிரம்பிய சொர்க்கபூமி! கோலாலம்பூரின் வடகிழக்குப் பகுதியில், சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்த டிடிவாங்சா (Titiwangsa) மலைகளின் சிகரம் மலேசிய நாட்டின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இருந்தது. கடல் பரப்புக்குமேல், 2,000 மீட்டர் உயரத்தில் இருந்ததால், குளிரை அனுபவிக்க வருவோருடன், கட்டடத்தின் உள்ளேயும், வெளியேவும் இருந்த பல விளையாட்டு சாதனங்களில் திளைப்பதற்காக பெரியவர்களும், சிறார்களும் சேர, தினமும் லட்சக்கணக்கானபேர் திரண்டு வரும் இடமாக இருந்தது. அந்தப் பாதையில் பாதி தூரத்திலேயே இருந்தது இன்ஸ்டிட்யூட் அமினுத்தின் பாகி (Institute Aminuddin Baki) என்ற இடம்.  பெரிய நிலப்பரப்பில் இருந்தது. அந்தக் காலத்திலேயே அதை நிர்மாணிக்க மூன்று கோடி ரிங்கிட் செலவாயிற்று என்று ஒரு விரிவுரையாளர் சொல்லக் கேட்டாள் அகிலா. அமினுத்தின் பாகி என்ற பெயர் அவளுக்குப் பரிச்சயமானதுதான். அப்பெயரில் பல பள்ளிக்கூடங்கள் நாடெங்கும் இருந்தன. கடந்த நூற்றாண்டில் பிறந்த அவர், சிங்கப்பூரில் இருந்த பல்கலைக்கழகத்திலும், பின்னர் லண்டனில் சிறப்பு உபகாரச் சம்பளம் பெற்று, `கல்வி கற்பிக்கும் முறைகள்` என்ற தலைப்பில் படித்ததையும் அவள் படித்திருக்கிறாள். `மலேசிய நாட்டின் கல்விக்குத் தந்தை` என்று வர்ணிக்கப்பட்ட அவர், நாட்டின் புதிய கல்வித் திட்டத்துக்குத் தலைமை ஆலோசகராக இருந்தாராம். காலை ஏழிலிருந்து எட்டுவரை காலை உணவு. அதன்பின் பாடங்கள். அங்கும், பயிற்சிபெற வந்த எல்லா ஆசிரியர்களும் தத்தம் இனப்படி பிரிந்து, மற்றவர்களிடமிருந்து விலகியவர்களாய் இயங்கிக்கொண்டு இருந்தது அகிலாவுக்கு வினோதமாக இருந்தது. சிற்றூர்களிலிருந்து வந்திருந்தவர்கள் கழிப்பறைக்குச் செல்வதில்கூட ஒற்றுமை! அவர்களுடன் சேராது, அகிலா தனித்திருந்தாள். எப்போதுமே, ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வருபவர் தனித்துதான் ஓடுவார், அவரைத் தொடர்ந்து வரும் அனேகர் வெற்றி பெறுவதில்லை — அவள் சுய முன்னேற்றப் புத்தகம் எதிலோ படித்திருந்தது. பங்கேற்ற எல்லாரும் பெரியவர்கள் என்பதால், அவர்களைச் சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, ஒரு தலைப்பைக் கொடுத்து, அதைப்பற்றித் தமக்குள் விவாதித்தபின் அதன் சாராம்சத்தைப் படிக்கச் சொன்னார்கள். விரிவுரையாளர்கள் போதிக்கும்போது, அவர்கள் சொன்னதையை அழுத்தி, இரண்டு, மூன்று முறை சொன்னாலும், வேறு எதிலும் மனம் அலையாது பார்த்துக்கொண்டு, ஒரு வார்த்தை விடாது, எல்லாவற்றையும் முழுமையாக எழுதிய ஆசிரியைகளைப் பார்த்து அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. `இன்னுமா இந்த சிறுபிள்ளைத்தனம் இவர்களை விடவில்லை!` என்று அதிசயித்தாள். பள்ளியில் படித்த காலத்திலிருந்து, ஆட்டு மந்தைபோல், தம்மைவிட உயர்பதவிகளில் இருக்கும் பிறர் சொல்வதை அப்படியே கேட்டு நடந்த வழக்கமோ? சுயமாகச் சிந்தித்து நடப்பவர்களை இந்த உலகம் என்ன பாடுபடுத்தும் என்பது அகிலாவுக்குத் தெரியாததில்லை. ஆனால், இவ்வுலகை எதிர்க்கும் தைரியம் இல்லாது, அனேகர் சராசரியாகிப் போனதுதான் வருத்தப்பட வேண்டிய சமாசாரம் என்றே நினைத்தாள். ஒருக்கால், இவர்கள், `பரீட்சை இருந்தால்தான் புத்தகங்களைத் தொட வேண்டும்,` என்ற கொள்கை உடையவர்களைப்போல, எதையுமே படிக்காதவர்களோ! அவ்வளவு விதமான ஆசிரியர்களை ஒரே இடத்தில் பார்ப்பதே ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு தனி அறை கொடுக்கப்பட்டு இருந்ததால், அந்த விசாலமான வளாகத்தில் மௌனம் நிலவியது. இரவு உணவுக்குப் பின்னரும் பாடம் நடந்தது. அந்தக் குளிரில் எப்படி உடல் ஓய்ந்து போகாமல், நாள் பூராவும் பாடத்தில் கவனம் செலுத்த முடிகிறது என்று எல்லாரும் வியந்துகொண்டனர். முதலிலேயே, நாற்பது பக்கத்திற்குக் குறையாது, அந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் படைக்க வேண்டிய வியாசத்திற்காக நான்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தன. ஏதாவது ஒன்றைப்பற்றித்தான் எழுத வேண்டும் என்ற நிலையில், அதை முன்னதாகவே தேர்ந்தெடுத்துக்கொண்டாள் அகிலா. அதனால், படபடப்பு இல்லாது, வகுப்பில் கேட்பதை அரைகுறையாகக் காதில் வாங்கிக்கொண்டு, சாயந்திரம் கிடைத்த ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி, ஓட்டம் என்று  உல்லாசமாகக் கழிக்க முடிந்தது. ஒரு பாடம் அவளை மிகவும் கவர்ந்தது: தலைமை ஆசிரியர் எப்படி நடக்க வேண்டும்? ஒரு தலைமை ஆசிரியர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்றார்களோ, அதன்படியே இருந்தாள் புவான் மஹானி! `இவளைத் தட்டிக் கேட்க யாருமில்லை என்ற எண்ணத்தில் ஆட்டம் போடுகிறாளா!` என்ற ஆத்திரம் பிறந்தது அகிலாவுக்கு. தான் பட்ட அவமானங்களை நினைத்துப் பார்த்தாள். பிற ஆசிரியர்கள் சூழ்ந்திருக்க, காலை முதல் வேலையாக எப்படிச் சாடினாள்! அது போதாதென்று, பள்ளி முழுவதும் கேட்கும்படி, ஒலிபெருக்கியில் வேறு அலறினாளே! அவளைப் `பிசாசு` என்று அப்போது தான் மனத்திற்குள் திட்டிக்கொண்டபின், `மேலதிகாரியை இப்படி மரியாதைக் குறைவாக நினைக்கலாமா?` என்று குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி இருந்தாள். இப்போது யோசித்தபோது, இவள் எல்லாரையும் நடத்திய லட்சணத்துக்கு, எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்று தோன்றியது. சிகரெட் பழக்கம் கொண்டிருந்த ஆசிரியர்களின் பெயர்களை மாணவர்கள் எதிரே சொல்லி, அவர்களைத் தாளாத அவமானத்துக்கு உள்ளாக்கவில்லை? ஆசிரியர்களை மட்டுமா? மாணவர்களையும் அவள் விட்டு வைக்கவில்லையே! 33 அத்தியாயம் 33 சில மாணவர்கள் ரகசியமாகப்  புகைபிடிக்க கழிப்பறைக்குப் போகிறார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அந்த இடத்துக்கு வேறு உபயோகங்களும் உண்டு என்பதை மறந்திருந்தவள்போல் நடந்துகொண்டாள் மஹானி. அதன் விளைவுதான் அவளுடைய புதிய சட்டம்: இடைவேளையில் மட்டும்தான் அத்தனை பேரும் `டாய்லெட்`டுக்குச் செல்லலாம். ஆயிரம் பேர் இருந்த பள்ளியில் பாதிபேர் ஆண்கள் என்ற நிலையில், கீழ்த்தளத்தில் மட்டும் இருந்த நாலைந்து அறைகள் அச்சமயத்தில் நெரிபட்டன. உள்ளேயும், வெளியேவும் ஒரே கூட்டம், ஏதோ தேர் திருவிழாபோல். அவர்கள் சாப்பிடப் போவார்களா, இல்லை இயற்கைக் கடனைக் கழிக்கப் போவார்களா? பல பேருக்கு உடல் உபாதை வேறு. சுகாதாரம் குறைந்த இடத்தில் அவர்கள் வசித்து வந்ததால், சிறுநீரில் கிருமிகள் தொற்றி, அடிக்கடி கழிக்க வேண்டிய ஒரு இடர்ப்பாடு. எதற்காகவும் வகுப்பைவிட்டு வெளியே போகக்கூடாது என்ற நிலையில், அவர்கள் திண்டாடிப் போனார்கள். அகிலா டீச்சர்  வகுப்பை நடத்த வரும் நேரத்தை அவர்கள் பதைப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவள்தான் மனிதாபிமானம் உடையவளாக இருந்தாள். பள்ளிக்கூட சட்டதிட்டங்கள் மாணவர்களின் நலனுக்காகவேயன்றி, அவர்களை அகாரணமாகத்  தண்டனைக்கு இலக்காக்கி, அவர்களிடமிருந்த துர்குணங்களை வெளிக்கொணர்வதற்கில்லை என்று ஆழமாக நம்பினாள். இதே போல், ஒவ்வொரு வகுப்பிலும், அகிலா உள்ளே நுழைவதற்காக ஏழெட்டு மாணவர்கள் வாசலிலேயே காத்திருப்பது வழக்கமாயிற்று. “இவ்வளவு பேரா?” என்று அவள் அயர்ந்தாள். “நான் மாட்டிக்கப் போறேன்!” மாணவனோ, ஆசிரியரோ, யார்மேல் வேண்டுமானாலும் பாய்வாள் புவான் மஹானி என்பது அவர்களுக்கு மட்டும் தெரியாதா, என்ன? “சீக்கிரம் திரும்பிடறோம், செக்கூ!” என்று கெஞ்சினார்கள். “ஐந்து நிமிடம். எல்லாரும் வந்தால்தான் நான் பாடத்தைத் துவங்க முடியும்,” என்று எச்சரிக்கை விடுக்கும்போது, தன்மேலேயே வெறுப்பு உண்டாகும் அகிலாவுக்கு. “இருங்கள். எல்லாரும் ஒரே கும்பலாகப் போக வேண்டாம். இரண்டிரண்டு பேராக..,” என்று சட்டத்தைச் சற்று மாற்றினாள். அதுவும் தப்புதான் என்று விரைவிலேயே புரிந்தது. சிறிது நேரம் கழித்து, தயங்கியபடி உள்ளே நுழைந்த பாக்தியார் என்ற ஒரு பையன், தன் அடிப்பாகத்தை ஒரு கையால் மறைத்தபடி வந்தான். பகீரென்றது அகிலாவுக்கு. அடக்கமாட்டாது, தன் உடுப்பை நனைத்திருக்கிறான்! அதிகாரத்தைத் தவறான முறையில் நிலைநாட்ட முயன்ற மஹானிக்குத் தானும் துணைபோய்விட்டோமே என்று வருந்தினாள். தன் பெயரைக்கூட ஒழுங்காக எழுதத் தெரியாதவன் பாக்தியார். சாது, பிறரிடம் பழகத் தெரியாதவன். அவனுக்கு யார்மேல் என்ன கோபமோ, அப்படி ஒரு செய்யக் கூடாத காரியத்தைச் செய்தான், அடுத்த நாளே. தன் கால்சட்டையை நனைத்துக் கொண்டதற்காக சகமாணவர்களின் கேலிக்கு இலக்காக்கி விட்ட ஆசிரியை என்ற கோபமோ, என்னவோ! இதனால் எல்லாம், அவன் தன்மேல் அவனது நோட்டுப் புத்தகத்தைத் தூக்கி விசிறியதை பெரிது பண்ணாமல் விட்டுவிட முடியுமா? “இங்கே வா, பாக்தியார்,” என்று அகிலா மிரட்டலாக அழைத்தபோது, நாலைந்து மாணவர்களும் ஓடி வந்தார்கள், அவனுக்கு ஆசிரியை என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள் என்பதைக் கண்டு ரசிக்கும் ஆர்வத்துடன். “உனக்கு யாரும் மரியாதை என்பதையே கற்றுக் கொடுக்கவில்லையா?”அகிலா இரைந்தாள். என்ன பதில் சொல்வது என்று புரியாது அவன் விழித்தான். ஒரு பையன் முந்திரிக்கொட்டை மாதிரி கேட்டான்: “அவனோட அம்மா அவனுக்கு எதுவுமே கத்துக் குடுக்கலே. இல்லே, டீச்சர்?” அகிலா சற்றும் எதிர்பாராவிதமாக, பாக்தியார் அந்தப் பையன்மேல் பாய்ந்து, அவனைக் கீழே தள்ளினான். அவன் முகம், உடல் எங்கும் ஒரே குத்து. அவன் எதிர்த்துச் சண்டை போடவே விடாது, அப்படி ஒரு ஆவேசம் வந்தவனாகக் குத்தினான். “ஏய்! விடு, விடு!” என்று அகிலா கத்தியதில் எந்தப் பலனும் இருக்கவில்லை. எல்லாரும் ஆர்வத்துடன் முன்னால் ஓடி வந்தார்கள், என்ன நடக்கிறது என்று பார்க்க. அப்போதுதான், அவளருகே வந்த அவ்வகுப்பின் மாணவத் தலைவன் ரகசியமாகக் கூறினான்: “பாக்தியார் அனாதை ஆசிரமத்திலிருந்து வர்றான், டீச்சர்!” 34 அத்தியாயம் 34 ஏழைகளாக இருப்பதுதான் எவ்வளவு கொடுமை! அதிலும், பெற்றோரும் இல்லை என்றால், அப்பப்பா! வேறு சிலருக்குப் பெற்றோர் இருந்தனர் — பெயரளவில். ஏதோ தம் பொறுப்பில் இருந்த பிள்ளைகளுக்குச் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்துவிட்டால், தம் கடமை முடிந்தது என்று நினைப்பவர்கள்தாம் இந்த உலகில் அதிகமாகப் போய்விட்டார்கள் என்று அவளை நினைக்க வைத்தது அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள். பத்துமலை! அருகிலிருந்த மற்றொரு அனாதை ஆசிரம விடுதியில் வளர்ந்தவன். அவனுக்கு அம்மா இருந்தாலும், அவனைப் பராமரிக்க வசதி போதாது என்பதால் இங்கே அனுப்பி இருந்தாள். அம்மா இல்லாதவர்கள் அங்கே இருப்பது நியாயம். ஆனால் தான் ஏன் அம்மாவுக்கு வேண்டாதவனாகப் போய்விட்டோம் என்று அவன் உள்ளுக்குள் குமைந்தது யாருக்குப் புரியும்? மனம் குழம்பி இருந்தது. எதிலும் கவனம் போகவில்லை. (கோலாலம்பூரிலிருக்கும் திருத்தலம் பத்துமலை (Batu Caves). கல் குகை என்ற பொருள்வாய்ந்த அப்பெயரை முருக பக்தர்கள் தம் பிள்ளைகளுக்குச் சூட்டினர். அந்தமாதிரிப் பெயர்களை எல்லாம் வைக்கக்கூடாது என்று ஒரு சாரார் கண்டிக்க, `ஏன்? பழனி, ஏழுமலை இதெல்லாமும் அப்படிப்பட்ட பெயர்கள்தாமே?’ என்று எதிர்வாதம் செய்யப்பட்டது, அண்மையில்). படிக்கிறோமோ, இல்லையோ, பரீட்சையில் எல்லா பாடங்களிலும் முட்டை வாங்கினாலும் அடுத்தடுத்த வகுப்புக்குத் தூக்கிப் போட்டுவிடுவார்கள் என்று பத்துமலைக்குச் சந்தேகமறத் தெரிந்திருந்ததால், படிப்பில் நாட்டம் போகவில்லை. அதிலும், மலாய் மொழி சுத்தமாகத் தெரியவில்லை. மொழி தெரிந்தால்தானே, ஒருவருடைய கலாசாரத்தை அறிந்துகொள்ள முடியும்! அவன் படித்த தமிழ் பள்ளியில், `நான் பேசறப்போ, மரியாதையோட என் முகத்தைப் பாருடா! எங்கே வேடிக்கை பாக்கறே?` என்று அவனைத்தான் எத்தனை முறை மிரட்டி இருக்கிறார் ஆசிரியர்! அந்தப் பழக்கத்தை இந்தப் பள்ளிக்கும் கொண்டு வந்திருந்தான் பத்துமலை. ஒரு நாள் அகிலா தன் வகுப்புக்கு நடக்கும்போது, அந்தக் காட்சியைப் பார்க்க நேரிட்டது. செக்கூ அபு பகார் எதிரில் நின்றுகொண்டிருந்தான் பத்துமலை. அவர் மலாய்மொழியில் ஏதோ கேட்க, எதுவும் புரியாது, அவர் முகத்தையே வெறித்துப் பார்த்தான். “என்ன முறைக்கிறே?” ஆசிரியர் பிரம்பை எடுத்தார். அவர் கட்டொழுங்கு ஆசிரியர். மாணவர்களை அடிக்கும் உரிமை அவருக்கு உண்டு. `சட்டை ஏன் வெளுப்பாக இல்லை? அதுவும் கால்சட்டைக்குள் அதைத் திணிக்காமல், வெளியே விட்டுக்கொள்வது பள்ளி விதிகளுக்குப் புறம்பானது என்று அவனுக்குத் தெரியாதா? முடியை வெட்டிக்கொள்வதே கிடையாதா?` என்றெல்லாம் அடுக்கடுக்காக அவர் கேட்டதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. ஒரேயடியாக விழித்தான் பத்துமலை. “என்னையா முறைக்கிறே!` என்றபடி, அவர் பிரம்பால் அவனை வெளுத்தபோது, அகிலாவில் எதுவும் செய்ய முடியவில்லை. இரு பக்கத்திலும் நியாயம் இருந்ததை அவள் உணர்ந்தாள். அக்காட்சியைக் காண சகிக்காமல், அப்பால் விரைந்தாள். அவளுக்குக் கடமைகள் காத்திருந்தன, அடுத்த வகுப்பின் உருவில். `எல்லாரையும், எந்தச் சமயத்திலும் காக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை,` என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். ஆனால் தான் என்ன தவறிழைத்தோம் என்று புரியாமலேயே அடி வாங்கிய பத்துமலை அவள் கண் முன்னாலேயே நின்றான். முகத்தில் அசட்டுக்களை — தன்னம்பிக்கை அறவே அற்றுப் போனதால். எதையும் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில், சாப்பிடுவதையே பேரின்பம் என்று கருதிய மனோபாவம். கிடைத்ததை எல்லாம் அளவு தெரியாது சாப்பிட்டதில், குண்டாக இருந்தான். அதனாலும் பிறரது கேலிக்கு ஆளானான். ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்ததும், வழியிலிருந்த பெட்ரோல் நிலையத்திற்கு தற்செயலாகப் போவதுபோல் போனான் பத்துமலை. அங்கு இலவச கழிப்பறை இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. கும்பல் இல்லை. வந்த காரியம் முடிந்ததும், இல்லத்துக்குத் திரும்பிப்போக மனம் வரவில்லை. அதனை ஒட்டி இருந்த கடையில் ஏதேதோ சாப்பாட்டுச் சாமான்கள் வைத்திருக்கிறார்களே என்று ஆசையுடன் உள்ளே நுழைந்தான். பார்த்துவிட்டுத் திரும்பலாம் என்றெண்ணி நுழைந்தவனுக்கு, வரிசை வரிசையாக அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருந்த சாக்லேட்டுகளைப் பார்த்ததும், பொங்கிவந்த ஆசையை அடக்க முடியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரே ஒரு இளைஞன் மட்டும் கல்லாவில். அவனும் யாரிடமோ அவர்கள் வாங்கிய சாமான்களைக் கணக்கு செய்துகொண்டிருப்பதில் மும்முரமாக இருந்தான். இதுதான் சமயம் என்று, ஒரு பெரிய சாக்லேட்டை எடுத்து, தன் கால்சட்டைப் கையில் திணித்துக் கொண்டான் பத்துமலை. பிறகு, `எனக்கொன்றும் தெரியாதுப்பா` என்கிறமாதிரி, வலிய வரவழைத்துக்கொண்ட அறியாத்தனத்துடன், வெளியே விரையப் போனவனைத் தடுத்து நிறுத்தினான் கல்லாவில் இருந்தவன். “காசு? அவனே அங்கு அளிக்கப்படும் குறைந்த சம்பளத்துக்கு வேலையில் இருப்பவன். ஏதாவது குறைந்தால், பதில் சொல்ல வேண்டிய நிலை. `சின்னப்பையன், பாவம்! ஏழை! ஏதோ தெரியாமல் செய்துவிட்டான்!` என்று மன்னித்து விட்டுவிட அவனுக்கு அதிகாரம் ஏது! “நான்..நான் ஒண்ணும் வாங்கலியே!” பத்துமலை திணறினான். “பாக்கெட்டில என்ன அது?” அவசரத்தில் போட்டதில், ஒரு சிறு பகுதி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. “சாரி,” என்று பத்துமலை அதை மேசையில் போட்டுவிட்டு, அவசரமாக நழுவப் பார்த்தான். ஆனால், அதற்குள் காரியம் முற்றி இருந்தது. “இங்கே என்ன கலாட்டா?” என்றபடி முதலாளி மாதிரி இருந்த ஒருவர் உள்ளேயிருந்து வந்தார். “சாக்லேட் எடுத்துக்கிட்டு, காசு குடுக்காம ஓடப் பாக்கறான், சார்!”. “இந்த வயசிலேயே திருட ஆரம்பிச்சுட்டியா? இப்போ சாக்லேட் எடுப்பே. நாளைக்கே, வங்கியில கொள்ளை அடிப்பே!” என்று ஏசியவர், “இந்த மாதிரி ஆசாமிகளால்தான் நாடு உருப்படாம போயிடுச்சு. எல்லா இந்தியனும் குண்டர் கும்பல்லே சேர்ந்து, அடாவடி பண்ணறான்,” என்று ஒட்டுமொத்தமாக வைதுவிட்டு, தன் கைத்தொலைபேசியை எடுத்தார். “போலீஸ்?” என்று அவர் அழைத்தபோது, மீண்டும் சிறுநீர் கழிக்க ஓட வேண்டும்போல இருந்தது பத்துமலைக்கு. 35 அத்தியாயம் 35 “என்னடா பண்ணிட்டு இருக்கே?” போலீசில் சாதாரணமாகக் கேட்டதுகூட மிரட்டியதுபோல் இருந்தது. அதிகாரி கேட்டதை உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்த்தான் ஒருவன். குரல் கம்ம, “மலாய் பள்ளிக்கூடத்திலே படிக்கிறேன், சார்,” என்றான். அவனுக்குத் தெரியாது, அப்போது எல்லா இடைநிலைப் பள்ளிகளிலும் பாடங்கள் மலாய் மொழியில்தான் நடந்தன என்று. “பின்னே, இவனைப்போல இருக்கிறவங்க எல்லாம் உலகமயமான தனியார் பள்ளியிலா படிக்கப் போவாங்க?” பக்கத்திலில் இருந்தவரிடம் கேட்டுவிட்டு, பலக்கச் சிரித்தார். என்ன சொல்கிறார் என்றே புரியாது, பத்துமலையும் உடன் சிரித்தான். “ஒன் பேர், விலாசத்தை இந்த நோட்டில எழுதிட்டுப் போ! நாளைக்கு ஒங்கப்பா, இல்லே அம்மாவைக் கூட்டிட்டு வரணும். என்ன?” “அப்பா, அம்மா இல்ல”. அது தன் தப்பு என்பதுபோல் தலை குனிந்திருந்தது. “பின்னே? ஆகாயத்திலிருந்து குதிச்சியா?” தன் ஜோக்கை மெச்சி, தானே சிரித்துக் கொண்டார். “ஆசிரமத்திலே இருக்கேன்”. “ஆசிரமத்திலேயா? சாமியாரா?” “இல்லே, அனாதை ஆசிரமத்திலே!” அதிகாரிக்குப் பொறுமை கடந்தது. “சரி. சரி. போய்த்தொலை,” என்று விரட்டினார். கடந்தவாரம் வெள்ளிக்கிழமை நடந்திருந்த சம்பவம் உடனே காவல்துறையினரால் தலைமை ஆசிரியையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. சனி, ஞாயிறு இரு நாட்களையும் ஆத்திரம் பொங்கக் கழித்தாள் மஹானி. தான் இந்த மாணவர்களை நற்கதிக்குக் கொண்டுவர என்ன பாடுபடுகிறோம்! அது பயனில்லாமல் போய் விடும்போல இருக்கிறதே! தனக்கு இவர்கள்மேல் இருக்கும் அக்கறைகூட, தமது முன்னேற்றத்தில் இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று பலவாறாக எண்ண, எண்ண அவளுடைய ஆஸ்துமா நோய் அதிகரித்தது. மருத்துவரிடம் போய், ஊசி குத்திக் கொண்டாள். அவள் பேசிய விதத்திலிருந்தே அவளுடைய குணத்தை ஓரளவு புரிந்துகொண்ட அவர், “எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்,” என்று கனிவுடன் கூறினார். அவரைக் கொன்றுவிட வேண்டும்போல ஆத்திரம் பிறந்தது மஹானிக்கு. அந்த மருந்தின் பக்கவிளைவால், படபடப்பு இன்னும் மோசமாகப் போயிற்று. ஒரேயடியாக வியர்த்தது. இரவு தூங்க முடியாது, விழிப்புக் கொடுத்தது. தன் நல்லெண்ணம் புரியாது, தன்னை இப்படி அலைக்கழிக்கும் மாணவர்களை எப்படி வழிக்குக் கண்டு வரலாம் என்று, படுக்கையில் புரண்டபடி யோசித்துக்கொண்டு இருந்தாள். நல்ல காலம், கணவர் அருகில் இல்லை. திங்கள் காலை. மாணவர்கள் கூடுவதை கண்களில் வெறியுடன் பார்த்தபடி, மேடைமேல் நின்றிருந்தாள் மஹானி. அவள் கையில் மெல்லிய, ஈரப் பிரம்பு. அதுதான் அதிக வலியை உண்டுபண்ணும் என்று, தயாராகக் கொண்டு வந்திருந்தாள். அவ்வப்போது தன்னை ஒதுக்கி விடுவதுபோல் தனியே தவிக்கவிட்டுப் போய்விடும் கணவரைப் பிரதிநிதித்த ஆண் குலத்தையே மஹானி வெறுத்தாள். பிற ஆண்களைத் தண்டிப்பதன் மூலம் அந்த வெறுப்பின் பாதையை மாற்றி அமைத்தாள். பத்துமலை செய்த அநியாயத்தை ஒலிபெருக்கியில் சொல்லிவிட்டு, “திருடறதானா, ஆயிரக்கணக்கிலே, லட்சக்கணக்கிலே திருடுங்க. நாட்டில நடக்கறதுதான். இப்படி ஒரு வெள்ளி இருபது காசு சாக்லேட்டைத் திருடி, அதுவும் மாட்டிக்கிட்டு..! அவமானம்!” என்று, `திருடியது பரவாயில்லை, ஆனால் மாட்டிக்கொண்டதுதான் கேவலம்` என்பதுபோல அவள் பேசிக்கொண்டே போக, மாணவர்கள் கொல்லென நகைத்தார்கள். சில ஆசிரியர்களும் புன்னகைத்தார்கள், இவளிடம்கூட நகைச்சுவை உணர்வு இருக்கிறதே என்று ரசித்தவர்களாய். “சிரிக்காதீங்க,” என்று அலறினாள் மஹானி. “இது நம்ப எல்லாருக்கும் பெரிய தலைகுனிவை ஏற்படுத்திட்ட காரியம். இதை இதோட விட்டுடக் கூடாது. ஒரு முடிவு கட்டணும்,” என்றவளாய், மேடையை விட்டு இறங்கினாள். கீழே, தயாராக, பலி ஆடுபோல், மாணவர்களுக்கு எதிரே, நிற்க வைக்கப்பட்டிருந்தான் பத்துமலை. முதல் அடி விழுகையில், “அம்மா!” என்று அலறினான். அதன்பின், தான் என்ன  கதறினாலும், தன்னைக் காப்பாற்ற பெற்றவளோ, வேறு யாருமோ வரமாட்டார்கள் என்ற கசப்பான உண்மை புரிய, மௌனமானான். தவறு செய்தவர்களைத் தண்டிக்க மஹானிக்கு ஓரளவு அதிகாரம் இருந்தாலும், அதுவே போதையாக மாறி, நிறைய, அல்லது அடிக்கடி, பிறரைத் தண்டித்தால்தான் அடங்கும் என்ற நிலைக்கு வந்திருந்தது. `அழறானா, பாரு! கல்லுளிமங்கன்!` என்று நினைத்தபோது, அவளுக்குக் கொலை வெறி எழுந்தது. கை ஓயும்வரை அடித்துக்கொண்டே இருந்தாள். இரண்டு, மூன்றுநாட்கள் கழிந்திருக்கும். அன்று பள்ளிக்கு விடுப்பு கோரியிருந்த ஆசிரியையின் இடத்துக்கு அகிலா அனுப்பப்பட்டாள். அவள் அந்த வகுப்புக்குப் பாடம் எடுப்பதில்லை. “இவன் ஏன் நின்னுக்கிட்டே இருக்கான்?” என்று பத்துமலையைப் பார்த்துவிட்டு, பொதுவாக வகுப்பில் ஒரு கேள்வி எழுப்பினாள். “அவனால ஒக்கார முடியாது, டீச்சர். அன்னிக்கு குரு பெசார் அடிச்சாங்க இல்ல? அதனால ரொம்ப வலி, டீச்சர்,” என்று, முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பையன் சொன்னான். குரல் ரகசியமாக வந்தது, சகமாணவனுக்கு நேர்ந்த துயரத்தைத் தானும் பகிர்ந்து கொண்ட விதத்தில். வேறு யாராவதாக இருந்தால், பெற்றோர் போலீசிலேயே புகார் கொடுத்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டாள் அகிலா. அந்த மாணவன்மீதும் கோபம் வந்தது. ஏற்கெனவே தன்னை எல்லா ஆசிரியைகளும் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். இந்த அழகில், `சே, இந்தியர்கள்!` என்று, ஒரு சமுதாயத்தையே அவர்கள் மட்டமாக எடைபோட வழி வகுத்துவிட்டானே! தனது சுயநலப் புத்தியை நினைத்து, அகிலாவுக்கு உடனே வெட்கம் உண்டாயிற்று. ஏழைச் சிறுவன்! சரி தவறு புரியாது, அதையெல்லாம் அன்புடன் யாரும் சொல்லிக் கொடுக்காத நிலையில், வயிற்றுப் பசிக்காக ஏதோ திருடி இருக்கிறான். பள்ளியில் நன்னெறிப் பாடம் படிக்கலாம். ஆனால், அதை நடைமுறையில் காட்டுவது வேறு விஷயம். கண்டித்து விட்டிருக்கலாம். அதோடு மறந்திருப்பான். இப்போது, வெறியையே அல்லவா அவனுள் கிளப்பி விட்டிருப்பார்கள்! ஒரு வேளை, நிகழ்கால நடப்பைத் தாங்கும் சக்தி இல்லாது, புத்தி பேதலித்து விடுமோ? இந்தமாதிரி அராஜகத்தை முறியடிக்க தன்னால் ஆனதைச் செய்யவேண்டும் என்று தீர்மானம் அவளுக்குள் பிறந்தது அப்போதுதான். 36 அத்தியாயம் 36 பயிற்சித் தலத்தில் வேலை அதிகமிருக்கவில்லை. சீதோஷ்ண நிலை வேறு ரம்மியமாக இருந்தது. அகிலாவின் கற்பனைவளம் பெருக்கெடுத்தது. மஹானியைப்பற்றி, அவள் பிறருக்கு இழைத்த கொடுமைகளைப்பற்றி நான்கு பக்கம் எழுதித் தள்ளினாள். `மனநிலை சரியாக இல்லாத பலர், பிறர் அதை அறியாவண்ணம் நடந்து கொள்கின்றனர். இவர்களால் பொறுப்பான  வேலைகளைக் கவனிக்க முடிந்தாலும், மற்றவருடன் பழகுவதில் குறைபாடு உள்ளவர்கள். இத்தகையவர்கள் தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவர்கள்தானா என்று கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டும்`, என்று காரசாரமாக எழுதினாள். ஒரு வாரத்துக்குள் அவளுடைய கடிதம் அரசாங்க சார்புடைய ஆங்கில தினசரியில் பிரசுரமாகியது, முழுப்பக்கத்தில். அன்று வேறு எந்தக் கடிதத்திற்கும் இடமில்லை. அதன்பின் தொடர்ந்த நாட்களில், விரிவுரையாளர்கள் அவளைப் புது மரியாதையுடன் பார்த்தார்கள். அவள் நடக்கையில், பலரும் அவளைச் சுட்டிக் காட்டி, குசுகுசுவென்று பேசியது அவளுக்கும் தெரியாமல் போகவில்லை. வேறென்ன, முதுகெலும்பு இல்லாதவர்கள் தைரியசாலியைப் பழிக்கிறார்கள். அவள் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தால், உடனே அவளைச் சிலாகித்து, வாய் ஓயாமல் பேசுகிறார்கள். பிறர் தன்னை இகழ்ந்தால் அதை அலட்சியப்படுத்தும்போது, புகழுக்காகப் பெருமைப்படுவது எந்த விதத்தில் நியாயமென்று எண்ணினாள் அகிலா. தன் நிலை உயர்ந்திருப்பது அவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. எப்போதும்போல்இருந்தாள். இது ஆண்களின் உலகம். கேளாமலேயே அவர்களுக்குப் பலதும் கிடைத்துவிடுகிறது. அதனால்தான் அவர்கள் பழகுவதற்கு இனிமையாக இருக்கிறார்கள். பெண்களோ எல்லாவற்றையும் சண்டை போட்டுத்தான் பெற வேண்டிய கட்டாயம். மூன்று வயதிலிருந்தே பெண்கள் கணக்கற்ற கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகிறார்கள். சிறு வயதிலேயே, `ஒன் தம்பி சின்னவன்தான். ஆனா, அவன் ஆம்பளை! அவனோட ஒனக்கென்ன போட்டி? ஒன்னைத் தனியா வெளியில அனுப்பிட்டு, வயத்திலே நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க என்னால முடியாது”. `சரியா ஒக்காரு! காலை விரிச்சுக்கிட்டு, என்ன இது ஆம்பளை மாதிரி!` எதுவும் புரியாத அந்த இளம் வயதில், அளவுக்குமீறி கீழ்ப்படிய வேண்டியிருந்ததும், அதை மீறினால், ஓயாத வசவுக்கும், ஏளனத்துக்கும் ஆளானதையும் எந்தப் பெண்ணால்தான் மறக்க முடியும்? தமக்கும்  வயதோ, பதவியோ வந்ததும், பிற பெண்களை அதேபோல் தம் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியவைக்க எண்ணுகிறார்கள். அகிலா ஏராளமாகப் படித்திருந்த பெண்ணியப் புத்தகங்களில் இவ்வாக்கியங்கள் காணப்பட்டன. தான் மட்டும் எப்படி வித்தியாசப்பட்டுப் போனோம்? அகிலாவுக்கு யோசனை வந்தது. `பிற பெண்களைப்போல இரு,` என்று ஓயாமல் குற்றம் கண்டுபிடித்துத் திருத்த ஒரு அம்மா இல்லாததாலா? அல்லது, `பெண்களாலும் சாதிக்க இயலும்` என்று அவளை நம்பவைத்த அப்பாவாலா? 37 அத்தியாயம் 37 அவளது அறையிலிருந்து பாடம் நடக்கும் இடத்துக்கு சுமார் பத்து நிமிடங்கள் மலைப்பகுதியான தெருவில் நடக்க வேண்டும்.  நேராக அந்த இடத்தை அடைய படிகள் இருந்தன. கருங்கல்லால் ஆன, சுமார் நூறு படிகள். அதில் ஏற முடிந்தவர்கள் ஏறிப் போனார்கள். இன்று எப்படிப் போகலாம் என்று  அகிலா யோசித்துக் கொண்டிருந்தபோதே, ஒரு புரோடான் சாகா (PROTON SAGA, மலேசிய கார்) கிளம்ப இருந்தது தெரிந்தது. இரு தமிழர்கள் உள்ளே. அகிலா காரின் மூடிய கதவைத் தட்டினாள். அவள் எதுவும் கேட்பதற்குள்ளேயே, “ஏறிக்குங்க,” என்று அனுமதி வந்தது ஓட்டுநர் ஆசனத்தில் இருந்தவரிடமிருந்து. கொஞ்ச நேரம் மௌனமாக வானொலிவழி ஒலித்த, `சுந்தரி ந்யானும்` என்ற பாட்டில் ஆழ்ந்து போனார்கள். “கமலஹாசனே பாடி இருக்காரு,” என்றாள் அகிலா. தெரிந்திருந்தும், அவர்களும் தலையாட்டினார்கள். “ஆமாங்க. எவ்வளவு திறமைசாலி, பாத்தீங்களா!” என்று மெச்சிக் கொண்டார்கள். அதற்குள் இறங்குமிடம் வந்தது. “டீச்சர்! எங்களை யாருமே மதிக்கிறதில்லே,” சொன்னார் அவர். காரை ஓட்டியவர். அகிலா அவரைப் பார்த்தாள். என்றோ மூக்கு குத்திக்கொண்டு இருந்ததன் அடையாளமாக இப்போது துளை மட்டும் இருந்தது. அவருடைய வித்தியாசம் புரிந்ததுபோல் இருந்தது. “நல்லத்தனமா பேசினாலுமா?” என்று கேட்டாள். அவர் பரிதாபமாகத் தலையாட்டினார். “அப்போ சண்டை போடுங்க”. பயத்தால் அவர் விழிகள் விரிந்தன. “வேற வழியே இல்ல. மத்தவங்க மரியாதை குடுக்காட்டி, அதை அடிச்சுப் பிடிச்சுத்தான் வாங்கணும். என்ன சொல்றீங்க?” சிரிப்புப் பொங்க, இதுவரை எதுவும் பேசாதிருந்தவர் கேட்டார், “நீங்க யாருங்க, டீச்சர்? நல்லாப் பேசறீங்களே!” “ஒங்களைமாதிரி ஒருத்திதான். ஆனா, நான் நல்லா சண்டை போடுவேன்,” என்று சிரித்தவளையே பார்த்தபடி நின்றனர் அந்த இரு தமிழர்களும். அவள் விளையாட்டுக்குச் சொல்லிப் போகிறாள் என்றுதான் அவர்களுக்குத் தோன்றியது. `இங்கு குளிரில் நாம் ஓய்வாக இருந்த காலம் முடியப் போகிறது. திரும்பவும் வீடு, வேலை, பள்ளிக்கூடம் என்று இயந்திர கதியில் செய்ததையே செய்ய வேண்டுமே!` என்று பயிற்சிக்கு வந்திருந்த எல்லா ஆசிரியர்களும் வருத்தப்பட ஆரம்பித்தார்கள். “இனி, நீங்கள் எல்லாரும், உங்கள் பள்ளிக்குச் சென்று, இங்கு கற்றவிதத்தின்படி பாடம் நடத்த வேண்டும். அதை உங்கள் தலைமை ஆசிரியை கண்காணித்து, மதிப்பெண்கள் அளிப்பார்கள். எங்களில் ஒருவரும் வருவோம்,” என்று ஒரு விரிவுரையாளர் சொல்லக் கேட்டு, அகிலா திடுக்கிட்டாள். மாவட்ட அதிகாரிகள் பல முறை பள்ளிக்கு வந்து, மஹானியையும், பிற ஆசிரியர்களையும் `பேட்டி` என்ற பெயரில் உலுக்கியிருந்ததை அவள் அறிவாள். மஹானியும், அவளுக்கு வேண்டிய ஒன்றிரண்டு ஆசிரியைகளும் அகிலாமீது கோபமாக இருந்தார்களாம். நியாயம்தான். தான் செய்த காரியத்திற்கு மஹானி தன்மேல் காதல் கொள்வாள் என்று எதிர்பார்க்க முடியாதுதான். இருந்தாலும், இப்போது எந்த முகத்துடன் அங்கு போய் பாடம் நடத்துவாள்? பழி உணர்வுடன், அவள் தன்னை வீழ்த்திவிடுவாளே! ஒன்றுமில்லாததற்கே அலறுபவள். இப்போது கேட்க வேண்டுமா! மஹானியா, ஷரிபாவா? யார் இன்னும் மோசம் என்று ஒப்பிட்டுப் பார்த்தாள் அகிலா. 38 அத்தியாயம் 38 அவளுடன் உண்மையான நட்பு பூண்டு, எத்தனையோ சமாசாரங்களைப் பகிர்ந்துகொண்ட புடு பள்ளியின் தலைமை ஆசிரியை புவான் சயீடா இரண்டே வருடங்களில் வேலை மாற்றம் வாங்கிக்கொண்டு, கெடாவுக்குப் போய்விட்டாள். `இங்கே, கே.எல்லிலே (K.L, Kuala Lumpur) எல்லாமே கொள்ளை விலை விக்குது. ஒரு தர்ப்பூசணி ரெண்டு வெள்ளி. எங்க ஊரில அந்தப் பணத்துக்கு மூணு வாங்கலாம். அங்கேயும் இதே சம்பளம்தான் கிடைக்கப் போகுது. நிறைய காசு மிச்சம் பண்ணலாமே!` என்று அகிலாவிடம் சொல்லிவிட்டுப் போனாள். அடுத்து வந்தவள்தான் ஷரிபா. அனுபவமோ, கல்வித் தகுதியோ பிறரைவிட அவளுக்கு அதிகம் இருக்கவில்லை. உப தலைமை ஆசிரியையாக வந்தாள். யாரோ மந்திரி தன் மாமா என்று சொல்லிக்கொண்டாள். எல்லாம், அவரைப்போய் யார் கேட்டுவிடப் போகிறார்கள்என்ற தைரியம்தான். சிறுமிகளுடனேயே பழகிப் பழகி, குழந்தைத்தனம் மிகுந்து, தாம் கேட்பதையெல்லாம் நம்பிய ஆசிரியர்களும் அவளுடைய அளப்பை நிஜமென்று எண்ணினார்கள். `இவளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நம் வேலைக்கே வேட்டு வைத்துவிடுவாள்,” என்று அஞ்சி, தம் சுதந்திரத்தைப் பறிகொடுக்க ஆயத்தமானார்கள். நிரந்தரம் ஆகிவிட்டால், தம் அரசாங்க உத்தியோகத்தை யாரும் அவ்வளவு எளிதில் பறித்துவிட முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு ஏன், தவறு செய்பவர்கள்கூட வேலை மாற்றம்தான் காண்கிறார்கள், தண்டனை என்ற பெயரில்! முதல் இரண்டு நாட்கள், எல்லாப் பற்களும் தெரிய ஷரிபா எப்போதும் சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, எல்லாரும் மயங்கினர். `எவ்வளவு இனிமையானவங்க!` என்று ஒருவருக்கொருவர் சிலாகித்துக் கொண்டார்கள். (அந்தப் பற்களும் போலி என்பது அவள் சில ஆண்டுகளில் பல் செட்டை மாற்றி, அரிசிப் பற்களை பொருத்திக் கொண்டபோது தெரிந்தது). அகிலா பல்லைக் கடித்துக் கொண்டாள், இவர்கள் எல்லாரும் இவ்வளவு ஏமாளியாக இருக்கிறார்களே என்று. ஒரு முறை, பக்கத்திலிருந்தவளிடம், “மந்திரி வேலுச்சாமி முந்தி எங்க வீட்டுக்கு வந்திருக்கார். நான்கூட டீ போட்டுக் குடுத்திருக்கேன். எங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப சிநேகிதம்,” என்று அளந்தாள். இன்னொருத்தியின் கண்கள் வியப்பால் விரிந்ததை ரசித்தாள். அதன்பின், பள்ளி நடைமுறையில் நிறைய மாற்றம் வந்தது. ஷரிபாவின் சொல் கேட்டு நடந்தவர்களுக்கு நிறைய சலுகைகள். அவள் வந்த முதல் வருடத்தின் இறுதியில், அவளைத் தட்டிக் கேட்கத் துணிந்தவர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்தாள். முதல் மாதமே அகிலாவை அழைத்து, “ஒங்க பரிசோதனைக்கு வேண்டிய பொருட்களை இனிமேல் இந்த கம்பெனியிலிருந்து வாங்குங்க,” என்று ஆணை பிறப்பித்தாள்.  அகிலா தப்பாக நினைத்துவிடக் கூடாதே என்று பற்களைக் காட்டி, தன் கட்டைக் குரலையும் கூடியவரை மிருதுவாக்கிக்கொண்டே பேசினாள். “எப்போதும் வேறோரு கம்பெனியிலிருந்துதான் நான் விஞ்ஞான பரிசோதனைக்கு வேண்டிய பொருட்களை வாங்குகிறேன். நம்பகமாக இருக்கிறது. இப்போது எதற்காக மாற்ற வேண்டும்?” என்று அகிலா வாதிட்டாள். தன் உறவினன் புதிதாக அந்த வியாபாரம் துவங்கி இருக்கிறான் என்று ஷரிபாவால் சொல்லவாமுடியும்! “மலிவா குடுக்கறாங்களாம்,” என்றாள். தான் இவளிடம் தழைந்துபோக ண்ேடி இருக்கிறதே என்ற ஆத்திரம் மூண்டது அவளுக்குள். `அகிலா பெரிய கர்வி!` என்று தன்னைக் காக்காய் பிடித்தவர்களிடம் பரப்பினாள். பள்ளி அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்கிறோம் என்று பெயர் பண்ணிய இரு பெண் கிராணிகளையும் (kerani, குமாஸ்தா) அவள் விட்டு வைக்கவில்லை. அடுத்த முறை, அகிலா கீழ்த்தளத்தில் இருந்த அலுவலகத்தின் வழியே போய்க் கொண்டிருந்தபோது,  “ஏய்! ஏய்!” என்று குமாஸ்தாக்கள் இருவரும் ஜன்னல் வழியே அழைப்பது கேட்டது. கண்ணுக்குத் தெரிகிறவரைக்கும் யாரும் காணப்படவில்லை. தன்னைத்தான் அப்படி அழைக்கிறார்கள் என்று தெரிந்தும், அகிலா நடையைத் துரிதமாக்கினாள். “ஏய்!” இப்போது குரல் பலக்க ஒலித்தது. அகிலா மிக மிக மெள்ளத் திரும்பினாள். “என்னையா கூப்பிடறீங்க? என் பேரு புவான் அகிலா. `ஏய்` இல்ல,” என்று தவறு செய்த குழந்தையை, பிறர் எதிரில் அதன் தாய் இனிமையாகத் தண்டிப்பதுபோல் ஏளனத்துடன் கூறிவிட்டு, வேகமாக நடந்தாள். அவர்களில் ஒருத்தி, “புவான் அகிலா!” என்று உரக்க அழைப்பதற்கும், அகிலா பொது அறைக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. அகிலா அந்த அழைப்பை அலட்சியம் செய்தாள். அவ்வளவு முக்கியமானதாக இருந்தால், அவர்களேதான் நேரில் வந்து சொல்லட்டுமே! அவ்விரு பெண்களும், ஷரிபாவிடம் போய், தாம் எவ்வளவோ அழைத்தும், அகிலா தங்களை ஒரு பொருட்டாக  மதிக்கவில்லை என்று புகார் செய்தார்கள். “நானும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். அவள் மற்றவர்கள் மாதிரி இல்லை. ரொம்ப கர்வி! நான் பார்த்துக்கிறேன். விடுங்க,” என்று அபயம் அளித்தாள் ஷரிபா. அகிலா ஒருத்தி மட்டுமே ஒரு முக்கியமான விஞ்ஞானப் பாடத்தை எடுப்பதால்தான் அவள் இவ்வளவு கர்வமாக இருக்கிறாள், தான் சொல்வதைக் கேட்பதில்லை என்று ஷரிபா தீர்மானித்தாள். `இவளுக்குப் போட்டியாக இன்னொரு பௌதிக ஆசிரியரைக் கொண்டுவந்துவிட்டால்?` என்று ஒரு குறுக்கு வழியைத் தேடினாள். 39 அத்தியாயம் 39 வந்தவர் அம்ரு. இருபத்து நான்கு வயதே மதிக்கத்தக்க சிறிய உடல்வாகு. “ஏன் இவ்வளவு குச்சியாக இருக்கிறீர்கள்?” எனறு யாரோ கேட்டபோது, “சர்க்கரை வியாதி” என்று சொன்னார். தாம் நோயால் அவதிப்பட்டுக்கொண்டு இருப்பதாகச் சொன்னால், பிறரது அனுதாபத்தைப் பெறலாம், யாரும் தன் வம்புக்கு வர மாட்டார்கள் என்று நினைத்தாரோ, என்னவோ! அவர் வந்து ஒரு வாரம் இருக்கும். ஆசிரியர்களின் அறைக்கு வந்தாள் ஷரிபா. கதவை ஒட்டி இருந்த அகிலாவின் இடத்துக்கு எதிரில் நின்றுகொண்டு, “எப்படி இருக்கீங்க, அகிலா?” என்ற உபசார வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, “இப்போ உங்களுக்குக் கொஞ்சம் வேலைப் பளு குறைஞ்சிருக்குமே!” அவளுடைய பொய்ப்பற்கள் வெள்ளையாக மிளிர்ந்தன. அகிலா பதில் ஒன்றும் பேசாமல், அவளையே பார்த்தாள். முகத்தில் ஒரு உணர்ச்சியையும் காட்டவில்லை. ஷரிபாவுக்கே என்னமோபோல ஆகிவிட்டது. “பாவம் அம்ரு! உங்களைப்போல் அனுபவம் இல்லாதவர். உடல்நலம் வேறு (கனைத்தாள்)..! “அசட்டுச்சிரிப்புச் சிரித்தாள். இதற்கும் அகிலா மௌனம் காத்தாள். `இதை எல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறீர்கள்?` என்று நினைத்துக்கொண்டாள் அகிலா. ஆனால் ஒன்றும் கேட்கப் பிடிக்கவில்லை. தன்னை ஒரு எதிரிபோல் பாவித்து நடத்தியவள் இன்று வலிய வந்து இழைகிறாள் என்றால், ஏதாவது காரணம் இல்லாமலா இருக்கும்? “நீங்கள் அவருடன் உங்கள் திறமையைப் பகிர்ந்துகொண்டால்.. என்ன சொல்கிறேன் என்றால், நீங்கள் கரைத்துக் குடித்ததை அவருக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால்.., நம் மாணவிகளுக்குத்தான் உபயோகமாக இருக்கும்!” அதற்குமேலும் பொறுக்கமுடியாது, அகிலா தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். “மாணவிகளுக்குப் பாடம் சொல்லித்தர மட்டும்தான் எனக்கு சம்பளம் குடுக்கறாங்க!” வெறியாகக் கத்தினாள். “மத்த டீச்சர்களுக்கு நான் டீச்சர் இல்ல”. அங்கு உட்கார்ந்து தத்தம் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்த எல்லா ஆசிரியைகளும், தாம் திருத்திக் கொண்டிருந்த நோட்டுப் புத்தகங்களிலிருந்து கண்ணை எடுத்தனர், சாப்பிடுவதை மறந்தனர், வம்புப் பேச்சை நிறுத்தினர், கதைப் புத்தகங்களை மூடி வைத்தனர். இங்குதான் புனைக்கதைகளைவிட சுவாரசியமாக என்னமோ நடக்கிறதே! அகிலாவால் நிறுத்த முடியவில்லை. “நான் முதல் வருஷத்திலிருந்தே கஷ்டப்பட்டு, நாலைஞ்சு புத்தகங்களைப் பாத்து, முக்கியமானதை எழுதி வெச்சுக்கிட்டேன். எனக்கு அப்போ யாரும் உதவி செய்யல. அதேமாதிரி மத்தவங்களும் சுதந்திரமா வேலை கத்துக்கட்டும்! எல்லாத்துக்கும் மத்தவங்களை எதிர்பாத்தா எப்படி? சுயமுயற்சின்னு ஒண்ணு இருக்கு, தெரிஞ்சுக்குங்க!”" ஷரிபாவின் முகம் அவமானத்தால் கறுத்தது. எவ்வளவு திமிர் இருந்தால், இப்படி எல்லார் எதிரிலேயும் தன் முகத்தில் கரியைப் பூசுவாள்! இவள் அம்ருமேல் இருந்த ஆத்திரத்தில் பேசவில்லை என்று தோன்றியது. `மத்தவங்களை எதிர்பாத்து` என்று ஏதோ சொல்லவில்லை?  மறைமுகமாகத் தன்னை, தன் இனத்தைத்  தாக்குகிறாள்! அடுத்த வருடமே அகிலாவின் ஒரு முக்கிய பொறுப்பு பறிக்கப்பட்டது. விஞ்ஞானப் பொருட்களை தேர்வு செய்து வாங்குவதற்கு அம்ரு நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல் நிலை மோசமாகவே, அவர் தாற்காலிகமாக வேலையை விட்டு நின்று கொண்டார். அந்த காலகட்டத்தில், பௌதிகம் போதிக்கப் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்ற செய்திக்கு தினசரிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அகிலாவோ, அனேகமாக எல்லா மாணவிகளும் சிறப்பான தேர்ச்சி பெறும் வகையில், சில சமயம், ஞாயிற்றுக் கிழமைகளில்கூட விசேட வகுப்பு எடுத்தாள். ஷரிபா தன்னையும் எங்கேயாவது மாற்றி விடுவாள் என்றுதான் அகிலா எதிர்பார்த்தாள். அந்த எதிர்பார்ப்பில் பயம் இருக்கவில்லை. அலட்சியம்தான் இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அகிலாவைத் துரத்தினால், அவளுக்கு இணையாக வேறு நல்ல ஆசிரியர் கிடைப்பாரா என்று ஷரிபாவுக்குத் தயக்கமாக இருந்தது. பள்ளியிறுதியாண்டு முடிவில் எல்லா முக்கியப் பாடங்களிலும் தேர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்தால், தனக்குத்தான் நல்ல பெயர் வரும். அதனால் விரைவில் தலைமை ஆசிரியையாக உத்தியோகத்தில் முன்னேற்றம் காணலாம் என்றெல்லாம் ஷரிபா கணக்குப் போட்டு வைத்திருந்தது அகிலாவுக்குத் தெரியாது. 40 அத்தியாயம் 40 ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம்தான் ஓர் ஆசிரியை பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று ஒரு விதியைப்  பலரும் அறிந்திருக்காதது ஷரிபாவுக்கு நன்மையாக முடிந்தது. பொதுவாகவே, ஓரிரு வருடங்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்தைப் போதித்தபின், அது நன்றாகப் புரிந்துபோக, `இது போதும். இன்னும் படித்து என்ன ஆகவேண்டும்?` என்று எண்ணத் தலைப்பட்டார்கள் எல்லாரும். அகிலாவைப் போன்ற ஓரிருவர்தாம் விலக்காக இருந்தார்கள். காலை எட்டுக்கு ஆரம்பித்த அகிலா இடைவிடாது, நாலரை மணி நேரத்துக்குமேல் போதிக்கும்படி  கால அட்டவணையை அமைத்தாள். மறுநாள் அதற்குச் சிறிது கம்மி. அவ்வளவுதான். பாதிக்கு மேற்பட்ட மணித்துளிகளை இரண்டே நாட்களில் செலவிட்டு விட்டதால், புதனிலிருந்து சற்று ஓய்வாக இருக்கும். அப்போது, பள்ளிக்கு வராத பிற ஆசிரியைகளின்  வகுப்புக்குப் போகச் செய்வாள். பலமுறை, அவளுடைய வகுப்புக்கே அகிலாவை அனுப்பி இருக்கிறாள், தனக்கு முக்கியமான வேலை வந்துவிட்டது என்ற சாக்கில்! எப்போதும்போல, அவள் மனத்தில் இருந்ததை ஒளிக்காமல் சொன்னாள் அகிலா. சில ஆசிரியர்களின் வேலைப்பளு, அவர்களைத் தண்டிக்கவென, அளவுக்கு அதிகமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று பொதுக்கூட்டத்தில் அதைப்பற்றிக் குரல் எழுப்பினாள். இதனால், சில ஆசிரியைகளின் நன்மதிப்பையு ம், வேறு சிலரின் வெறுப்பையும் சம்பாதித்தாள். சுயநலமிகளான சிலர் ஒரு வகுப்புக்கும் போகாது, அரட்டை அடிக்கும் சந்தர்ப்பங்களும் அமைந்தன. ஆசிரியப் பயிற்சியை மேற்கொண்டிருக்கும் இளம் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் பல பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கான ஒருவித ஒத்திகை இது. தாம் கற்ற நாகரீக முறைப்படி அவர்கள் போதிக்க, அவர்களுடைய விரிவுரையாளர்கள் வகுப்பில் உட்கார்ந்து, அவர்களது திறமையை மதிப்பிடுவார்கள். இம்மாதிரியான சமயங்களில், வழக்கமாக அந்தப் பாடத்தை நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை இருக்காது. அகிலாவைத் தண்டிக்கும் வகையில், இப்படிப்பட்ட ஒரு `அருமையான` வாய்ப்பு அவளுக்கு வருடா வருடம் மறுக்கப்பட்டது. அவள் இடைவிடாது  தன் வகுப்பிற்குச் செல்ல வேண்டும், ஆனால் ஷரிபாவுக்குப் பிடித்தவர்களின் பாடத்துக்கு மட்டும் பயிற்சியில் இருக்கும் ஆசிரியர்கள் வருவார்கள். சும்மா உட்கார்ந்திருப்பவர்கள்,”பாவம்! உங்கள் பாடத்துக்கு யாருமே வரவில்லையா?” என்று கேட்டு, அகிலாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள். அப்படி யாரும் தனக்குப் பதிலாகப் பாடம் நடத்த வராவிட்டால் பரவாயில்லை, ஆனால் அது அவளுக்கு நிராகரிக்கப்பட்ட அருமையான வாய்ப்பு என்று பலரும் பரிதாபப்படுவதுபோல் நடித்ததுதான் அவளுக்குப் பொறுக்கவில்லை. இப்படியாவது நிம்மதியை தொலைத்துக்கொண்டு வேலை பார்க்க வேண்டுமா என்று வெறுத்துப் போனாள். முனைந்து, மாற்றல் கேட்டாள். அவள் வந்து சேர்ந்த இடமோ! ஷரிபா ஒரு அரசியல்வாதியைப்போல் தந்திரமாகத் தன் காயை நகர்த்தினாள் என்றால், புவான் மஹானி வெளிப்படையாகச் சண்டை போட்டாள். அதனால் எல்லாரையும் பகைத்துக் கொண்டாள். பெண்கள் தலைவியாக இருக்க ஏற்றவர்கள் இல்லையோ என்று தன்பாலருக்கே எதிராக அகிலாவின் யோசனை போயிற்று. தனக்கு, பெண்களைவிட ஆண்களின்மேல்தான் அன்பும், மரியாதையும் அதிகமாக இருக்கிறது. இதை வெளியில் சொன்னால், எவர்க்கும் புரியாது. ஏதாவது பெயர் கட்டி விடுவார்கள். ஆனால் இது அவளை அறிந்த பிறருக்கும் தெரிந்துதான் இருந்தது. ஒருமுறை வகுப்பில், அவள் வகுப்பு மாணவிகள்கூட அகிலாவுடன் செல்லமாகச் சண்டை பிடிக்கவில்லை? “டீச்சர்! ஒங்களுக்கு பாய்ஸ்தான் (boys, பையன்கள்) பிடிக்கும். எங்களைப் பிடிக்கலே”. “நீங்க சொல்றது உண்மைதான்!” என்று புன்சிரிப்புடன் ஒத்துக்கொண்டாள் அகிலா. பிறகு, இருபாலரின் இடையே இருந்த ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை எடுத்துச் சொன்னாள்: “ஆண்பிள்ளைகளைத் திட்டி, வகுப்புக்கு வெளியே நிற்க வைத்தாலும், `நன்றி` என்று சொல்லிவிட்டுத்தான் மீண்டும் உள்ளே நுழைவார்கள். அதுவே, பெண்களை ஒரு வார்த்தை கடிந்து சொல்லிவிட்டால், ஆயுசுக்கும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்!” எல்லாரும் சிரித்தார்கள். `நீங்கள் சொல்வது உண்மைதான்!` என்று, தலையை ஆட்டி ஆமோதித்தார்கள். `மஹானி, ஷரிபா இருவருக்கும் பதிலாக ஒரு ஆண் தலைமைப் பதவியில் இருந்தால்?` என்று அகிலாவின் யோசனை போயிற்று. சனிக்கிழமை சாயந்திரங்களில் பாடம் கற்க அவளைத் தம்மிடம் வரச்சொன்ன மிஸ்டர் ராய் அகிலாவின் நினைவில் வந்து போனார் ஒரு கணம். அவள் தலையை ஆட்டிக் கொண்டாள், அந்த வேண்டாத நினைவை அகற்ற விரும்புவதுபோல். நூற்றில் ஐந்து ஆண்கள் வேண்டுமானால் அப்படி போக்கிரித்தனமாக நடக்கலாம். அதற்காக எல்லாரையுமே குறை கூறுவதா என்று பெரிய மனது பண்ணினாள். 41 அத்தியாயம் 41 மேற்பயிற்சி காலம் முடிந்து, திரும்பி இருந்தாள் அகிலா. வேறு பள்ளியில் அவள் பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடாகி இருந்தது. அதற்கான கடிதத்தை புவான் மஹானியிடம் கொடுக்கும்படி உத்தரவு. வழக்கம்போல் தன் அறைக்கு வெளியே உட்கார்ந்து, போகிற வருகிற ஆசிரியர்களை எல்லாம் கண்ணாலேயே மிரட்டும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் தலைமை ஆசிரியை. “புவான் மஹானி!” என்று மரியாதையுடன் அகிலா ஒரு கவரை அவளிடம் நீட்டியபொது, அச்சத்துடன் அவளைப் பார்த்தாள். “அ.. என்ன.. என்ன இது?” என்றவளுக்கு நாக்குழறியது. அகிலாவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “எடுத்துக்குங்க. உங்களுக்குத்தான்!” அக்குரலின் தொனியில் எதையோ பார்த்து மிரண்டு அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தும் கனிவு. சற்றே தாமதித்துவிட்டு, ஒரு பெருமூச்சுடன், (அகிலா அதைக் கவனித்தாள்) பிடுங்காத குறையாக அதைப் பற்றினாள். “பிரித்துப் பாருங்கள்!” அகிலா சொல்லச் சொல்ல, `ஏற்கெனவே இவள் படுத்திய பாட்டால், அடித்த கூத்தால், நான் யார் யாருக்கோ பதில் சொல்லியாக வேண்டி இருக்கிறது. இன்னும் என்ன வேட்டு வைக்கப் போகிறாளோ!` என்ற கசப்பு முகத்தில் வெளிப்படையாகத் தெரிய, அதைப் பிரிக்க தன் அறைக்குள் போனாள். `தொலைந்தாள்!` எப்போதும் சிடுசிடு என்றே இருந்ததால், வயதுக்கு மீறி கிழன்றிருந்த அவள் முகத்தில் நிம்மதி. `அகிலா மூன்று மாதங்களுக்கு வேறு பள்ளிக்கு அனுப்பப்படுகிறாள்` என்ற செய்தியைத் தாங்கி வந்திருந்த வார்த்தைகளை முத்தமிட வேண்டும்போல இருந்தது மஹானிக்கு. தான் வந்த வேலை முடிந்தது என்று பள்ளியை விட்டுக் கிளம்ப இருந்த அகிலா, ஏதோ நினைத்தவளாக, பக்கத்திலே இருந்த பொது அறைக்குள் நுழைந்தாள். உற்சாகம் ஏற்பட்டது. எப்போதும்போல, தனது தடித்த மூக்குக் கண்ணாடி கீழே நழுவுவதுபோல் தலையை ஒரேயடியாகக் குனிந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தைத் திருத்திக் கொண்டிருந்த டேவிட், அவளது குரலைக் கேட்டுத் தலையைத் தூக்கினார். இதழ்கள் புன்னகையில் விரிந்தன. “நம் கதாநாயகி திரும்ப வந்துவிட்டாள்!” என்று நாடகபாணியில் அறிவித்தார். சிரித்தபடி அவரெதிரே அமர்ந்து கொண்டாள் அகிலா. “சில பேர் என்னை, `கறுப்பு ஆடு,`  என்கிறார்களே!” வெள்ளையான செம்மறியாடுகள் ஒளிந்திருக்கும் மந்தையில், ஒரு கறுப்பு ஆடு இருந்தால், தனது வித்தியாசத்தால் அது மற்றவைகளையும் காட்டிக் கொடுத்துவிடும். எவர் பாராட்டையும் பெரிதாக எண்ணிப் பெருமைப்படாது, ஒரு தினுசாக அப்பால் தள்ளிவிடும் அவள் சொற்களைக் கேட்டு, ரசித்துச் சிரித்தார் டேவிட். அவருடன் பேசும்போது அகிலாவின் மனது லேசாக இருந்தது. `ஏன்தான் இப்படி சண்டையே விலைக்கு வாங்குவாயோ!` என்று அலுத்துக்கொண்ட கணவரைப்போல் இல்லாது, இந்த நண்பர் பாராட்டுகிறார். கண்முன் அக்கிரமம் நடப்பதைப் பார்த்தும், யாருமே தட்டிக் கேட்கவில்லை என்றால், இவ்வுலகில் பிறரைப் பாடுபடுத்தும் மனிதர்கள்தாம் நிறைந்திருப்பார்கள். அப்புறம் அமைதி, இன்பம் எல்லாவற்றிற்குமான அர்த்தத்தை அகராதியில் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள முடியும். அந்த எண்ணத்தில் சிரிப்பு வந்தது. அவளைப் பார்த்ததும், பெரிதாகச் சிரித்தபடி அருகில் வந்தாள் மிஸ் ங் (Ng). முப்பது வயதுகூட இருக்காது அவளுக்கு. ஆசிரியப் பணியில் இன்னும் ஆர்வத்தை இழக்காது, எல்லோருடைய வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். விரைவில் தனக்குப் பதவி உயர்வு கிடைத்துவிடும் என்ற மாய நம்பிக்கையில் உழல்பவள். “நீங்கள் எழுதியதைப் படிக்காதவர்களே இங்கு இல்லை. நான் ஒரு பேட்டிக்கு பல்கலைக்கழகத்துக்குப் போனேன். மேல் படிப்புக்கு மனு போட்டிருந்தேன், அல்லவா? அதற்காக!” மூச்சு விடாமல் பேசினாள். “அங்கு ஒவ்வொரு விரிவுரையாளரும் உங்கள் கடிதத்தின் சாராம்சத்தைப் பற்றித்தான் என்னிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார்கள்”. பொதுவாகவே அகிலா பிறரது பாராட்டைப் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அவர்களுக்குத் தன்னால் ஆக வேண்டியது ஏதாவது இருக்கும், அதனாலேயே குழையடிக்கிறார்கள் என்ற அபிப்ராயம் அவளுக்கு. மரியாதைக்குக்கூட புன்னகைக்காது இருந்து விடுவாள். சில சமயம், முகம் இறுகிவிடும். பிறர் தன்னைத் தவறாக நினைக்கலாம். அதனால் என்ன மோசம்? நல்ல பெயர் எடுப்பதிலேயே குறியாக இருக்க, தான் என்ன அரசியல்வாதியா, இல்லை திரைப்பட நாயகியா? இப்போதோ, உண்மையாகவே பெருமையாக இருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. “நிஜமாகவே உங்கள் தலைமை ஆசிரியை இவ்வளவு மோசமா என்றெல்லாம் கேட்டார்கள்,” என்ற மிஸ் ங் அப்போதுதான் சுயபிரக்ஞை வந்தவளாய், “நான் ஓட வேண்டும். உங்களுடன் சிரித்துப் பேசுவதை யாராவது பார்த்துவிட்டால், வம்பு!” என்றாள். 42 அத்தியாயம் 42 இன்னொரு ஆண்டு பிறந்தது, புவான் மஹானி அதைவிடச்  சிறியதொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றப்பட்டிருந்தாள் — பதவிக் குறைப்புடன். அனேகமாக எல்லாருமே நிம்மதியுடன் ஒருவரைப் பாராட்டிக்கொண்டார்கள். இன்னொரு சிறு கவலைதான் அவர்களுக்கு. புதிதாக ஒரு தலைமை ஆசிரியர் வரப்போகிறாராம்! இவர் ஆண் என்பதால், மஹானி அளவுக்குத் தாழ்ந்து போய், தனக்குக் கீழ் இருப்பவர்களை வாய்க்கு வந்தமாதிரி இகழ மாட்டார் என்று நம்பினார்கள். புதிதாக வந்திருந்த  தலைமை ஆசிரியர் துவான் ஹாஜி, ஆசிரியர்களின் கூட்டத்தை நடத்த உள்ளே நுழைந்தார். அவர் பெயர் என்னவோ, ஆனால் அவர் இந்தப் பெயரால்தான் குறிப்பிடப்பட்டார். முன்பொரு முறை அவள் கேட்டபோது, மெக்கா போய்விட்டு வந்தவர்களுக்கான பட்டம் என்றவகையில், ஒரு மாணவன் தெரிவித்து இருந்தான். அவன் ஹாஜா — சிறுவர்களுக்கான பட்டம் வைத்திருந்தான். ஏதோ விசேடமான பூசை நடத்தியதால் கிடைத்தது என்று சொன்னான். அவளும் மேற்கொண்டு துருவவில்லை. மத சம்பந்தமான எதையாவது தான் பேசப்போய், அதற்காக, `பிறரது உணர்ச்சிகளைக் கிளறும் வகையில் பேசிவிட்டாள்` என்று தன்னை `உள்ளே` தள்ளிவிட்டால்? பொதுவாக ஆண்கள்தாம் பெரும்பாலும் இசா சட்டத்தின்கீழ் தண்டிக்கப் பட்டார்கள் எனினும், அவளும் அவர்களைப்போலத்தானே இதயத்தால் யோசிக்காது, அறிவைப் பயன்படுத்தினாள்? எதற்கும் ஜாக்கிரதையாக இருக்கத் தீர்மானித்தாள் அகிலா. கடந்த வருடம் போல் இல்லாது, எல்லாருக்கும் ஓடிப்போய் உதவி செய்யும் தன்னுடைய இன்னொரு முகத்தை இந்த வருடம் காட்ட வேண்டும் என்று நிச்சயித்தாள். 43 அத்தியாயம் 43 “நீங்கள் மிகவும் கஷ்டப்படுத்தப் பட்டதாக அறிகிறேன். என் வருத்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். நீங்கள் என்னை நம்பலாம்”. `அரசியல் கட்சித் தலைவர்போல அல்லவா பேசுகிறார்!` என்று தோன்ற, முகத்தைச் சுளிக்காது இருக்க பெரும்பாடுபட்டாள் அகிலா. அதனால், அப்போது எழுந்த கைத்தட்டல் அவளை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. துவான் ஹாஜி அகமகிழ்ந்து போனார். இந்த மந்தையை மேய்ப்பது எளிது என்ற நம்பிக்கை வந்தது அவருக்கு. தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இவர்களும் தம் விருப்பப்படி நடந்து வைக்கட்டும் என்று பெரிய மனதுடன் முடிவு செய்தார். மாணவர்களுக்கு படிப்பில் உண்மையான அக்கறை இருந்தால், அவர்களது பெற்றேரரின் காசில், பள்ளிக்கு வெளியே கூடுதல் படிப்புக்கு டியூஷன் வைத்துக் கொள்ளட்டும். “கோலாலம்பூர் நமது அருமையான, மதிப்பிற்குரிய மலேசிய நாட்டின் தலைநகரம். இங்கு வேலை செய்யப் போகிறோம் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. ஆனால், நான் வேறு மாநிலத்திலிருந்து வந்தவன். என் நகரத்தின் மொழி வழக்கு, அதன் விசேடமான உணவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் வெகுவாக `மிஸ்` செய்கிறேன்!” சம்பந்தம் இல்லாது அவர் என்னென்னவோ பேசுவது போலிருந்தது அகிலாவுக்கு. அவர் எங்கிருந்து வந்திருந்தால் யாருக்கென்ன? இதனால் அவர் தனக்கு உதவியாக இருக்கச் சிலபேரைத் தேடினார் என்பது அவளுக்குப் புரியவில்லை. “உங்களுக்கே தெரியும். நம் பள்ளி மாணவர்கள் பணக்காரக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் அல்லர்.  வெளி உலகத்தை அவர்களுக்குக் காட்ட நாம் கடமைப்பட்டு இருக்கிறோம். நான்கு இடங்களுக்கு அழைத்துப்போய், அவர்களுடைய பொது அறிவை வளர்க்க உங்களில் எத்தனை பேர் தயார்?” அகிலா கையைத் தூக்கினாள். அவர் என்ன பேசுகிறார் என்றே பலருக்குப் புரியவில்லை. கண்கள் திறந்தபடி இருக்க, காதையும் தற்காலிகமாக செவிடாக்கிக்கொண்டு, அவர்கள் பாடம் நடத்தும்போது வகுப்பில் வெறித்தபடி இருக்கும் மாணவர்களின் நிலையில்தான் அவர்களும் இப்போது இருந்தார்கள். அகிலா தன் கட்சியில் சேர்ந்ததைக் கண்டு, தலைமை ஆசிரியருக்குத் தெம்பு வந்தது. “செக்கூ! உங்கள் பெயர்?” என்று அன்பு சொட்ட விசாரித்துவிட்டு, தனது வலது கையில் எல்லா விரல்களையும் மடித்து, கட்டை விரலை மட்டும் நீட்டி, அவளைப் பாராட்டினார். பிற ஆசிரியைகள் அவளைப் பொறாமையுடன் பார்த்தார்கள். என்ன நாடகம் ஆடுகிறாள் இவள்? தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் பதவியை இவள் தன் எழுத்து வன்மையால் ஆட்டங்காணச் செய்தது இவருக்குத் தெரியாது, இல்லை தெரிந்துவிட முடியாது என்ற நினைப்பா? சில ஆசிரியைகள் அவளை முறைத்ததை அகிலா கவனிக்கவில்லை. அதே மாநிலத்திலிருந்து வந்திருந்த கம்சியா, தனக்கு இருபது ஆண்டு கால அனுபவம் இருந்தும், ஏன் இன்னும் பதவி உயர்வு எதுவும் கிடைக்கவில்லை என்று ஏங்கிக் கொண்டிருப்பவள். ஆங்கில பாடத்தை மலாய் மொழியில் போதிக்கிறாள். இதில் என்ன தப்பு என்பது அவள் வாதம். மாணவர்களுக்கும் புரிகிறது, அவளுக்கும் எளிதாக இருக்கிறது. அவர்கள் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெறாதது அவள் தப்பா? நம் தேசிய மொழியைவிட, நம்மை அடக்கியாண்ட பிரிட்டிஷ்காரனின் மொழி ரொம்ப உயர்த்தியோ? இப்படியெல்லாம் விதண்டாவாதம் செய்து கொண்டிருந்தவளுக்கு, தன்முன் ஒரு அருமையான சந்தர்ப்பம் காத்திருப்பது புரிந்தது. தன் வீட்டிலிருந்து தலைமை ஆசிரியருக்குப் பிடித்த பணியாரங்களைக் கொண்டு வந்து கொடுத்தாள். பிறகு அவரைத் தன் வீட்டு விருந்துக்கு, தன் கணவரை விட்டு அழைக்கச் செய்தாள். அதன்பின் அவர் மனதைக் கலைத்து,  அகிலா ஒரு `பெரிய கலகக்காரி, உதவி செய்பவள்போல் நடித்து, காலை வாரிவிடுவாள்` என்று அதில் நஞ்சைக் கலப்பது அவளுக்குக் கடினமாக இருக்கவில்லை. தன் வேலைக்கும் இந்த `செக்கூ இண்டியா` வேட்டு வைத்துவிடப் போகிறாளே என்ற பயம் வந்தது தலைமை ஆசிரியருக்கு. 44 அத்தியாயம் 44 `ஒரே வாரத்தில் இன்னொரு பொதுக்கூட்டம் எதற்கு?` ஆசிரியர்கள் அனைவரும் சிறிது ஆச்சரியப்பட்டார்கள். நிறைய கடுப்பு அடைந்தார்கள். பின்னே? விடுமுறை நாளான சனிக்கிழமையும் பள்ளிக்கு வர வேண்டும் என்று நிர்ப்பந்தித்தால்? அகிலா தயாராக இரண்டு, மூன்று துணுக்குப் புத்தகங்களை எடுத்து வந்தாள். என்ன பேசுகிறோம் என்று அவருக்கே புரியாது பேசுவார் தலைமை ஆசிரியர். அப்போது படிக்கலாம் என்றுதான். கடைசி வரிசையில் உட்கார்ந்து கொள்வதுதான் சௌகரியம். தானும், தன்னை மறந்து எதற்காவது அபிப்ராயமோ, அல்லது எதிர்ப்போ தெரிவிக்காமல் இருக்கலாம். வழக்கம்போல், முக்கால் மணி தாமதமாக வந்தார். “என் ஒருவனுக்காக நீங்க எல்லாரும் காத்திருக்கிறது எனக்குப் பெருமையா இருக்கு!” என்று உளறினார். பொதுவாக வாழ்க்கையைப் பற்றியும், அதில் எப்படி வெற்றி பெறுவது என்பதையும் சில அயல்நாட்டு புத்திமான்கள் புத்தகமாக எழுதி, பெரும் பணமும், அகில உலகப் புகழும்  ஈட்டியிருந்தார்கள். முதலில் எல்லாருக்கும் அப்புத்தகங்களிலிருந்து சில பக்கங்களின் நகல் வழங்கப்பட்டன. “படித்துப் பாருங்கள்,” என்று ஊக்கினார். அதையெல்லாம் யார் விளக்கிக் கொண்டிருப்பார்கள்! அவரே முழுமையாகப் படிக்கவில்லை என்பது யாருக்குத் தெரியப் போகிறது! பிறகு, விஷயத்துக்கு வந்தார். “உங்களுக்கே தெரியும், எல்லா வகுப்புகளிலும் ஆங்கிலம் ஒரு கட்டாய பாடம் என்று. ஆனால் நம் பள்ளியில் ஆங்கிலத்தைப் போதிக்கும் திறன் வெகு சிலருக்குத்தான் உள்ளது. நம் உறவினர்கள் எல்லாரிடமும் நமது தாய் மொழியைப் பேச வேண்டி இருப்பதால், சிலரைப்போல நமக்கு ஆங்கில மொழியில் சரளமாகப் பேசவோ, இல்லை எழுதவோ வருவதில்லை!” அவர்கள் ஒற்றுமையை நிலைநாட்ட முயன்றுகொண்டு, அதே சமயத்தில் தன்னையும் மறைமுகமாகத் தாக்குகிறார் என்பது புரிந்தது அகிலாவுக்கு. இப்போது என்ன சொல்கிறார்? பௌதிகத்தைத் தவிர, ஆங்கிலமும் தான் கற்பிக்க வேண்டும் என்று சொல்ல வருகிறார். அதைச் சொல்லத்தான் இவ்வளவு பீடிகையா என்று தனக்குள் நகைத்துக் கொண்டாள். அவர் குரல் தொடர்ந்து ஒலித்தது: “அதனால், புவான் அகிலாவை மத்தியானப் பள்ளிக்கு அனுப்ப நம் நிர்வாகம் உத்தேசித்து இருக்கிறது”. அகிலா மட்டுமின்றி, அனைவருமே அதிர்ந்தார்கள். `சாது மாதிரி நடித்து இவர்தான் எப்படி நெருக்குகிறார்! `இன்று இவள், நாளை நாமா?’ `இனி எந்தத் தலைவரையும் எதிர்த்து, ஒன்றும் செய்யக்கூடாது. அவரவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு, பிறர் என்ன செய்தாலும் அவர்கள் வழியில் குறுக்கிடாமல் இருப்பதுதான் பிழைக்கும் வழி!` என்றெல்லாம் அவர்கள் யோசனை போயிற்று. எல்லாரும் அகிலாவின் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் ஏளனமும், பரிதாபமும் கலந்திருந்தது. அகிலா அதைப் பொருட்படுத்தவில்லை. `முதலிலேயே எல்லாவற்றையும் யோசித்துத்தானே, மஹானியைப் பற்றிய கடிதத்தைப் பிரசுரத்திற்கு அனுப்பினோம்! இனி வருத்தப்பட என்ன இருக்கிறது!` என்ற அலட்சியம் பிறந்தது அவளுக்குள். மீட்டிங் நடக்கும்போது பொழுதுபோக, தான் தயாராகக் கொண்டு வந்திருந்த துணுக்குப் புத்தகத்தைப் பிரித்தாள். 45 அத்தியாயம் 45 மத்தியானப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ப் பரம சந்தோஷம்.  அகிலா டீச்சர்மாதிரி வேடிக்கையும், விளையாட்டுமாக எந்த ஆசிரியையுமே தங்களுடன் பேசியதாக அவர்களுக்கு நினைவில்லை. “இந்த வருஷத்திலிருந்து நீங்க — இரண்டாம் படிவ மாணவர்கள் — மத்தியானப் பள்ளிதான். எப்பவும்போல, காலையில வந்து வைக்காதீங்க. அப்புறம், டீச்சர் மத்தியானம், நீங்க எல்லாரும் காலையில!” என்று எளிமையான ஆங்கிலத்தில் அவள் கூற, எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்ததைப் பார்த்து, அவளுக்கே ஆச்சரியமாகப் போயிற்று. அவளுக்கும் இவர்களைப் பிடித்துப் போயிற்று. நல்லவிதமாக இவர்களுக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி, வழிகாட்டலாம் என்ற நம்பிக்கை வந்தது. வகுப்பில் பாடம் நடத்தியபோது, அவள் கேட்ட கேள்விக்கு ஒருவன் தவறான பதில் சொல்லிவிட்டால், பிறர் சிரிப்பது வழக்கமாக இருந்தது. இதை மாற்றி அமைக்க அகிலா முடிவெடுத்தாள். “யாரெல்லாம் இதுவரை ஒரு முறைகூட விழாமல் இருந்திருக்கிறீர்கள், கை தூக்குங்கள்,” என்றாள். சற்று விழித்தபடி, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “யாருமில்லையா? நல்லது. ஆனால், விழுந்துவிட்டோமே, பிறர் சிரிப்பார்களே என்று நடக்கப் பயந்திருக்கிறீர்களா?” சிலருக்கு லேசாகப் புரிய ஆரம்பித்தது. மெல்லச் சிரித்தார்கள். “நீங்கள் தப்பான பதில் சொல்வதும் கீழே விழுவதுபோல்தான். அதற்குப் பயந்து, கேள்வி கேட்கவோ, இல்லை, பதில் சொல்லவோ பயப்படக்கூடாது”. அவளுடைய போதனை எவ்வளவு தூரம் அவர்கள் மனதில் படிந்திருக்கிறது என்பதை அகிலா விரைவிலேயே புரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் வந்தது. ஒரு வாக்கியத்தைக் காட்டி, ஒரு பையன், “டீச்சர்! இதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான். “ஐயே! இதுகூடத் தெரியாதா?” என்று மற்றொருவன் கேலி செய்ய, அகிலா அவனைத் தடுக்கப் போனாள். ஆனால் அதற்கு அவசியமே இருக்கவில்லை. “ஆமாம். எனக்குத் தெரியாதுதான். கற்றுக்கொள்ளத்தானே பள்ளிக்கு வருகிறேன்!” என்று ஒரு போடு போட்டான் முதலாமவன். கேலி செய்த மாணவன் தலைகுனிந்தபடி உட்கார்ந்தான். மாணவர்களின்  மொழி வன்மை சிறப்படைதற்காக, ஏதாவது கதைகள் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் அகிலா. பாடம் என்று வரும்போது தூங்கி வழிபவர்கள்கூட கதைகளைக் கேட்க நிமிர்ந்து உட்கார்ந்தனர். சிலர் இன்னும் பேசிக்கொண்டிருந்தனர். தன் குரலை உயர்த்தினாள். காதுக்குப் பின்னால் வலித்தது. (“காது செவிடாப் போயிடும்போல இருக்கு. எதுக்கு இவ்வளவு சத்தமா டிவியை போட்டிருக்கே?” என்றார் கணவர். “காதே கேக்கல, அதான்,” என்று சொன்னவளைப் பரிதாபமாகப் பார்த்தார். “டாக்டர்கிட்டே போகலாமா?” என்று கரிசனத்துடன் கேட்டார். இருவருக்கும் வயதாகிக்கொண்டே போகிறதே, இனி கண், காது, மூட்டு  என்று ஒவ்வொரு அவயவமாக தன் சக்தியை இழந்துகொண்டேதான் வரும் என்று நினைத்தார். ஆசிரியர்களின் பொது அறையில்தான் அவள் இப்போது அமர வேண்டி இருந்தது. தனக்கென ஏகபோகமாக ஒரு அறையில் தனியே உட்கார்ந்து பழக்கப்பட்டவளுக்கு, அங்கிருந்த ஓயாத சத்தம் தாங்க முடியவில்லை. தொலைகாட்சியை அணைத்தாள். “பள்ளிக்கூடத்திலே ஒரே சத்தம். தாங்க முடியல. அதான்!” என்று தெரிவித்துவிட்டு, “காதில பஞ்சு வெச்சுக்கணும்,” என்றாள், தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல்). இரண்டரை வகுப்பறைகளின் பரப்பைக் கொண்டிருந்த விஞ்ஞான பரிசோதனைக் கூடத்தில் தன் குரல் சரியாகக் கேட்கவில்லை என்று மாணவர்கள் கெஞ்சலாகக் கூறியபோது, பெரிய கூம்பு போன்றிருந்த ஒரு ஒலிபெருக்கியைப் பயன்படுத்த ஆரம்பித்தாள். எல்லா மாணவர்களும் `வேடிக்கை` என்று நினைத்துச் சிரித்தார்கள். அந்த வழியாக நடந்த ஆசிரியை ஒருத்தி, “எனக்குக்கூட ஒண்ணு வேணும், தெரியுமா? எப்பவும் இருமல் வருது, இந்தக் குரங்குகளுக்குச்சரியா கத்தி, கத்தி!” என்று  பொறாமையுடன் சொல்லிவிட்டுப் போனாள். ஒரு துடுக்கான மாணவி மட்டும், “டீச்சருக்கு உரக்கப் பேச முடியாதா?” என்று கேட்டாள். அதில் பொதிந்திருந்த ஏளனம் அகிலாவின் ஆத்திரத்தைத் தூண்ட, “உங்களுக்காகச் சாக நான் விரும்பல,” என்று பதிலளித்தாள், சுடச்சுட. அம்மாணவியின் முகம் தொங்கிப் போயிற்று. 46 அத்தியாயம் 46 மத்தியானத்தில் வந்த ஆசிரியர்கள் பட்டப் படிப்பு படிக்கவில்லை.  பிறரை முட்டித் தள்ளிக்கொண்டாவது முன்னேற வேண்டும் என்ற வெறி அவர்களிடம் காணப்படல்லை. தமக்குக் கிடைத்ததை  வைத்துக்கொண்டு, மகிழ்வோடு வாழத் தெரிந்தது அவர்களுக்கு. அதனாலேயே தகுதி இருக்கும் பிறரை வாயாரப் புகழ்ந்தார்கள். சலேஹா என்ற ஆசிரியை, “உங்கள் ஒருவர் வகுப்பில்தான் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஒருவரை நான் புகழ்ந்தாலும், மற்ற எல்லாரும் சந்தோஷப்படுகிறார்கள் — என்னமோ நான் அவர்களையே புகழ்ந்தமாதிரி!” என்று அகிலாவிடம் வந்து கூறிவிட்டுப் போனாள். அகிலா நன்றியைப் பார்வையிலேயே தெரிவித்துவிட்டு, “தாங்க்ஸ்!” என்றாள். எல்லாத் தொழில்களிலும் சில நல்ல நேரங்களும் இருக்கத்தான் செய்கிறது என்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. `ஆச்சு. இன்னும் ரெண்டு வருஷத்திலே நிரந்தர ஓய்வுதான்!’ என்று நினைத்துப் பார்த்தபோது, `இந்த இரண்டு வருஷமும் எப்போது சீக்கிரம் நகரும்?` என்ற அவசரம் ஏற்பட்டது. ஒரு நாள் மத்தியானம். அப்போதுதான் பள்ளிக்கு வந்திருந்தாள் அவள். பள்ளி முடிந்து போகும் சிறார்களும், ஆசிரியர்களும் களைப்பாகத் தென்பட, மத்தியானப் பள்ளிக்கூடத்துக்கு புத்துணர்வோடு வந்திருந்தார்கள் மற்றவர்கள். ஒரே சத்தம். தயாராகக் கைப்பையில் வைத்திருந்த பஞ்சை எடுத்துக் காதில் அடைத்துக்கொண்டாள் அகிலா. அவளுடைய இடத்துக்கு வந்தாள் ஒரு இளம்பெண். “ஹலோ! நான் — ரோஹானி,” என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். “புது டீச்சர்,” என்று அகிலாவையே பார்த்தாள். `இதை எதற்கு என்னிடம் வந்து சொல்கிறாள்?` என்று ஓடிற்று அகிலாவின் எண்ணம். “நான் வெளிநாட்டிலே படிச்சேன். அரசாங்க உபகாரச் சம்பளத்திலே. ஏதாவது நல்ல வேலை கிடைக்கறவரைக்கும் பொழுது போக, இங்கே டீச்சரா வந்தேன்”. அகிலாவின் உதடுகள் சுழித்தன. பொழுது போகவாம்! ஜம்பத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை. அவள் வேலையில் புதிதாகச் சேர்ந்தபோது, நாட்டின் மக்கள்தொகையில், இரண்டு சதவிகிதம்தான் பட்டதாரிகளாக இருந்தனர். கல்லூரியில் சேர்வதற்கு நிறைய தகுதிகள் வேண்டி இருந்தது. இப்போதோ, பட்டதாரிகளுக்கே வேலையில்லை. அவ்வளவு நிறைய பேர்! தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் உபகாரச் சம்பளமோ, கல்விக்கான கடனோ கொடுத்ததன் விளைவு, பலரும் தாம் பட்ட கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை. அவர்கள் பெயர்களை தினசரிகளில் பகிரங்கமாக வெளியிட்டதால், அஞ்சி ஒரு சிலர் கடனை அடைத்ததாக அகிலா படித்திருந்தாள். அந்த வரிசையில் இன்னொருத்தி! “நான் பௌதிகப் பட்டதாரி,” என்று அவள் சொன்னபோது, இனம் தெரியாத ஆத்திரம் ஏற்பட்டது அகிலாவுக்கு. `நான் எவ்வளவு மூத்தவள்! எத்தனை வருட அனுபவம் எனக்கு! என்னிடம் பாடம் கற்றுக்கொண்ட மாணவிகளின் வயதுதான் இருக்கும் இவளுக்கு. என்னைக் கீழே பிடித்துத் தள்ளாத குறையாகத் தள்ளிவிட்டு, இவளை என்னிடத்திற்கு வருந்தி அழைத்து வந்திருக்கிறார்கள்!` ஒன்றும் பேசாதிருந்தாள். “நான் கணக்கிலே அவ்வளவு போதாது. பௌதிகத்திலேயோ கணக்குதான் நிறைய இருக்கு.” “இதையெல்லாம் எங்கிட்ட எதுக்கு வந்து சொல்றீங்க?” அலட்சியத்துடன் கேட்டாள் அகிலா. `கணக்கு போடத் தெரியாதவள் எல்லாம் பௌதிகப் பாடத்தில் பட்டம் வாங்கி, அதைக் கற்பிக்கவும் வந்தால், அவர்களிடம் படிக்கும் அபாக்கியசாலிகளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்` என்று நினைத்துக்கொண்டாள். “இல்லே, நான் எத்தனையோபேரைக் கேட்டுப் பாத்தேன். நீங்கதான் இந்தப் பாடத்திலே புலின்னாங்க! இதையெல்லாம் எப்படிப் போடறதுன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா..” ஒரேயடியாகக் குழைந்தாள். “யாரோ தப்பா சொல்லி இருக்காங்க. நான் ஆங்கிலம் சொல்லிக் குடுக்கிற ஆசிரியை ஆச்சே!” மிக மிக இனிமையாகச் சொல்லிவிட்டு, அகிலா எழுந்து கொண்டாள். அவளுக்குச் செல்லவேண்டிய வகுப்பு எதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்னும் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தால், தன் பொறுமை மீறிவிடும் என்று பயந்தாள். ரோஹானி நகரவில்லை. “நீங்க போன வருஷம் பௌதிகம் சொல்லிக் கொடுத்து, நூறு சதவிகிதம் தேர்ச்சின்னு எல்லாரும் சொன்னாங்களே!” என்றாள் விடாப்பிடியாக. “ஒங்களை மாதிரி அனுபவம் இருக்கிற டீச்சர் இங்கே இருக்கிறப்போ, என்னை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்தாங்க?” அழுதுவிடுவாள் போலிருந்தது. “ஏன்னா, அவங்க எல்லாருமே முட்டாள்கள்!” அகிலா உரக்கச் சொன்னாள், எதையோ அறிவிக்கும் பாவனையில். `யார் காதிலாவது விழுந்திருக்கப் போகிறதே!` என்று அஞ்சியவளாக, ரோஹானி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “நான் வந்த நேரம் சரியில்லே போல இருக்கு. அப்புறமா வந்து ஒங்களைப் பாக்கறேன்,” என்று நகரப் பார்த்தாள். “கஷ்டப்படாதீங்க. நீங்க எப்போ வந்தாலும், என்னோட பதில் இதுதான்: நான் ஆங்கில ஆசிரியை. எனக்கும், நீங்க கேக்கற பாடத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை”. சொன்னபிறகு, பெரிய யுத்தம் ஒன்றில் வெற்றிபெற்ற களைப்பும், உவகையும் சேர்ந்து வந்தன அகிலாவுக்கு. 47 அத்தியாயம் 47 “நீங்க பெரிய அறிவாளி, ஒங்களுக்கு எல்லாமே தெரியும்னு எல்லாரும் பேசிக்கிறாங்க,” என்ற முகஸ்துதியுடன் வந்தவளைப் பார்த்துச் சற்றே சிரித்தாள் அகிலா. அன்றொரு நாள் தன் வகுப்பு மாணவர்கள் போட்டி, பொறாமையின்றி, ஒற்றுமையாக நடக்கிறார்கள் என்று வாயாரப் புகழ்ந்தவள். இவளுக்குத் தன்னிடம் ஆகவேண்டிய காரியம் என்னவாக இருக்கும்? எவராலும் உபயோகம் உண்டு என்று நினைத்துத்தான் அன்று நல்லபடியாக நடந்துகொண்டாளோ? “என்ன சமாசாரம் சலேஹா?” என்று விசாரித்தாள் அகிலா. அப்போது பொது அறையில் நிறையபேர் இருக்கவில்லை. ஏதோ அந்தரங்க விஷயமாக வந்திருப்பாள் என்று தோன்றியது. “என் உடம்பு குண்டாயிட்டே போகுது. மூணு பிள்ளைங்க இல்லியா? எப்படி இளைக்கிறதுன்னு தெரியல”. மலாய்க்காரர்கள், ஏன் இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் போன்ற கிழக்காசிய நாடுகளில் இருந்த எல்லாப் பெண்களுமே, தம் உடலழகைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள். நாற்பது வயதுக்குமேலும் இளமை குன்றாது இருப்பதில் கவனமாக இருப்பார்கள். சிலரைப் பார்த்தால், `ஏழெட்டு பிள்ளைகளைப் பெற்றவளா இவள்!` என்ற அதிசயம் உண்டாகும். சில மாதங்களுக்கு முன்னர், அகிலாவின் பக்கத்து வீட்டில் இருந்த லதிஃபா மசக்கையாக இருந்தபோது, வாந்தி அதிகமாக, அகிலாவிடம் உதவி கேட்டு வந்திருந்தாள். தான் எப்போதோ இந்தியாவிலிருந்து வாங்கி வந்திருந்த நாரத்தங்காய் ஊறுகாயில் சில துண்டங்களை அவளுக்குக் கொடுத்தாள் அகிலாவும். (எலுமிச்சை வகையைச் சேர்ந்த நாரத்தங்காய் மலேசியாவில் கிடைப்பதில்லை.  புளிப்பும், கசப்பும் சேர்ந்த ருசிகொண்ட அது, பச்சையாக, தடித்த தோல் கொண்டது. அதைச் சுருள் சுருளாக, தோலுடன் நறுக்கி, உப்பில் பிசிறி வைத்து, வெயிலில் காயவைத்து எடுத்தால், ஊறுகாய் தயார்). பிரசவத்துக்கு அப்புறம், ஓரடி அகலமாக ஒரு கனத் துணியை மடித்து, அதை வயிற்றைச் சுற்றிச் சுற்றிக் கட்டுவார்களாம்– முதலில் வயிற்றின்மேல் மஞ்சள் குழம்பைப் பூசிவிட்டு. களைத்திருந்த உடலை மூலிகை கலந்த எண்ணையால் நீவி விடும் வயோதிக மாது, அதன்மேல் லேசாகச் சூடான செங்கல் வைப்பாள். அவள் வாய் அந்த சமயத்திற்கேற்ற மந்திரங்களை உச்சரிக்கும் என்றெல்லாம் அவள் சொல்லித்தான் கேட்டிருந்தாள் அகிலா. விரைவில் அப்பெண்ணின் கருப்பை சுருங்கிவிடும். ஒரே ஆண்டில், லதிஃபா இரண்டாவது முறை சூல் தரித்திருந்தபோது, அவளிடம் கொடுக்க அகிலாவிடம் உலர்ந்த நாரத்தங்காய் இருக்கவில்லை — வெயில் நாட்களில், ஒரு சிறு துண்டத்தை வாயில் அடக்கிக்கொண்டாலே போதும், உடனே தலை சுற்றலும், வயிற்றுப்புரட்டலும் நின்றுவிடும் என்று அகிலா அனுபவத்தில் அறிந்திருந்ததால். “நீங்கதான் பிள்ளைப் பேறுக்கு அப்புறம் மசாஜ் செய்துப்பீங்களே?” “ஆமாம், ஆனா, வாரத்திலே ஒருமுறை என் சிநேகிதிகளோட மத்தியானச் சாப்பாட்டுக்குப் போறேன். அதனாலதான் எடை கூடிடுது!” அகிலாவுக்குச் சிரிப்பு வந்தது. “அப்படி என்ன சாப்பிடுவீங்க?” என்று கேட்டாள். “யாருக்குத் தெரியும்!” “என்னங்க சலேஹா! விளையாடறீங்களா?” “நிஜமாத்தான். அவங்க ஒவ்வொருத்தரும், `என் வீட்டுக்காரர் இந்தப் பொண்ணோட தொடர்பு வெச்சிருக்கார்`, ` `இன்னொருத்தியைக் கட்டப் போறாராம். எனனோட அனுமதி கேட்டு, தினமும் நச்சரிக்கிறார். நான் மறுத்தப்போ, ஒரே அடிதடிதான். உருண்டு புரண்டு சண்டை போடுவோம்` அப்படின்னு அவங்க சொல்றப்போ, நாங்க எல்லாரும் அழுவோம்.” “ஏங்க?நீங்க ஏன் அழணும்?” “நமக்கும் இப்படி ஒரு கதி வந்துட்டா என்ன பண்ணப் போறோம் அப்படின்னு நினைச்சா, பயமா இருக்குமில்ல? அதுதான் அழுவோம். என்ன செய்யறோம்னு புரியாம, எதை எதையோ சாப்பிடுவோம்.” தான் கெந்திங் மலையில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது நடந்த ஒன்று அகிலாவின் ஞாபகத்துக்கு வந்தது. `உங்களை நீங்களே புரிந்துகொள்ள,` என்று சொல்லிவிட்டு, வகுப்பிலிருந்தவர்களுக்கு ஆளுக்கொரு கேள்வித்தாள் கொடுத்திருந்தார் விரிவுரையாளர். `ஒப்புகிறேன்,` அல்லது `மறுக்கிறேன்` என்று மட்டும் எழுதவேண்டும். உங்கள் கணவர் உங்களை விட்டு, இன்னொரு பெண்ணை மணக்கலாம். இதற்கு சீனர்களும், இந்தியப் பெண்களும் ஒரே மாதிரியான பதிலைத் தந்திருந்தார்கள். “ஏன் `ஒப்புகிறேன்’னு எழுதியிருக்கீங்க? ஒங்களுக்கு வருத்தமா இருக்காது?” அவளிடம் சற்று நெருங்கியிருந்த ஒருத்தியைக் கேட்டாள். “எங்க மதத்தில சரின்னு சொல்லி இருக்கே!” என்று பதில் வந்தது. அகிலா யோசித்தாள். “இனிமே இந்தமாதிரி சோகக்கதையைக் கேக்கறபோது, நீங்க மத்தவங்களுக்காக அழுங்க. ஆனா, சாப்பிடாதீங்க.” மனம் லேசாக, சலேஹா சிரித்தாள். “பாலம் வர்றப்போ, அதைக் கடந்தா போதும். இது ஆங்கிலப் பழமொழி. வர்றப்போறதை நினைச்சு மொதல்லேயே எதுக்கு பயப்படணும்? அது வராமலேயே போகலாம், இல்லையா?” சலேஹா சமாதானம் அடையவில்லை. “அதான் ஒங்களைக் கேக்கலாம்னு வந்தேன், அகிலா.  நானோ பருத்துக்கிட்டே இருக்கேன். என் அழகு போயிட்டா, எங்க வீட்டுக்காரரும் வேற எவளையாவது — அவ இளமையா, ஆம்பளைங்கிற மயக்கிற குணமா இருந்தா — அவகிட்ட போயிட்டா?” அகிலாவுக்குப் பரிதாபம்தான் ஏற்பட்டது. பெண்களுக்குத்தான் எத்தனை விதமான இடர்பாடுகள்! பணமில்லை, கறுப்பு என்று ஓரினத்தில் பெண்கள் ஒதுக்கப் படுகிறார்கள். சலேஹா போன்றவர்களுக்கோ, கட்டிவனைத் தன்னுடன் நிலைத்து வாழவைப்பதே தினசரி எழும் பிரச்னை. 48 அத்தியாயம் 48 சலேஹா ரகசியக் குரலில் கேட்டாள்:”புவான் மஹானியை நினைவிருக்கா? அவளைப்பத்தி ஏதோ எழுதினீங்களாம்,” என்று பெரிய பீடிகையுடன் ஆரம்பித்தாள். “எல்லாரும் சொல்லிக்கிட்டாங்க. நான் படிக்கலே,” என்றாள். `நினைவிருக்கா?` என்று கேட்கிறாளே! தன் ஆயுள் உள்ளவரை அவளை மறக்க முடியாமா? அந்த தலைமை ஆசிரியை பிறருக்குக் கொடுத்த கஷ்டங்களைத் தான் பிரபலப்படுத்தினோம்.  ஆனால், தண்டனையை என்னவோ தான்தான் அனுபவிக்கிறோம் என்ற கசப்பான நிதரிசனம் எழ, அடக்கிக் கொண்டாள். “அவங்களுக்கென்ன இப்போ?” “புருஷனை விரட்டிட்டாங்களாம்,” விரைவாகப் பேசினாள் சலேஹா, அந்த எண்ணமே தனக்கும் கசப்பைக் கொடுத்தமாதிரி. “அவளுக்குப்புறம் அவர் ஒரு விதவையைக் கட்டிக்கிட்டார். தெரியுமில்ல? ஆனா, மூணாவதா வந்தவ, விவாகரத்து செய்துகிட்டவளாம். விதைைவ ஏத்துக்கிட்ட நம்ப ஃப்ரெண்டுக்கு விவாகரத்து கேசை ஏத்துக்க முடியல. விரட்டிட்டாங்க. வேலையையும் விட்டுட்டாங்கன்னு பேசிக்கிறாங்க. இப்போ, பூசைதானாம், விடியற்காலையிலிருந்து நாள் பூராவும்!” இவர்களுக்கெல்லாம் எப்படி இவ்வளவு விஷயங்கள் கிடைக்கின்றன என்று அதிசயமாக இருந்தது அகிலாவுக்கு. இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அலசுவதில்தான் பெண்களுக்கு எவ்வளவு ஆர்வம்! அந்தச் சமயத்தில் நம் வாழ்வை, அதன் தடுமாற்றங்களை, சற்று மறந்திருக்க முடிகிறதே என்ற ஆறுதலா? தன் கணவர் அன்பானவராக, ஆதரவானவராக இல்லாவிட்டால், தானும் இந்த சலேஹாவைப்போல்தான் ஆகியிருப்போம். பிற பெண்களின் கண்ணீர்க்கதைகளைக் கேட்டு, அப்போது எழும் துயரத்தை மறக்க, தன்னை மறந்து சாப்பிட்டு, குண்டாகி இருப்போம்! நினைக்கும்போது, வேடிக்கையாகவும், எதிரில் இருந்தவளின்மீது சிறிது பரிதாபமும் எழுந்தது. “உடற்பயிற்சி ஏதாவது செய்யறீங்களா?” “அதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு!” “அப்படிச் சொல்லக்கூடாது. தினமும் சாயந்திர வேளைகளிலே ஒரு முக்கால் மணியாவது நடங்க, காத்தோட்டமான இடத்திலே. அப்புறம்.., எண்ணையில பெரரிச்சதை..,” அகிலா முடிப்பதற்குள், ஆதங்கத்துடன் இடைமறித்தாள் சலேஹா. “கேரரீங் பீசாங்கூட (goreng pisang, சுமாராகப் பழுத்த வாழைக்காயை நீளமாக நறுக்கி, மரவள்ளிக்கிழங்கு மாவும், அரிசி மாவும் கலந்த கலவையில் போட்டுப் பிரட்டி, அதன்பின் பொறித்தது) முடியாதா?” அகிலா பெரிதாகச் சிரித்தாள். “ஒடம்பு இளைக்கணுமா, வேண்டாமா?” போலியாக மிரட்டினாள். “சீனிப்பாலையும் விடுங்க”. அது நடந்து சில மாதங்கள் ஆகியிருக்கும். சலேஹாவின் உடலில் அழகழகான வளைவுகள் வந்தன. பருத்திருந்த வயிறும், இடுப்பும் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போயிருந்ததாகப் பட்டது அகிலாவுக்கு. இந்த மாற்றங்களைத் தான் ஒருத்தி மட்டும் கவனிக்கவில்லை என்று விரைவிலேயே அவளுக்குப் புரிந்தது. “நீங்க சொன்ன மாதிரியே செஞ்சு பாத்தேன். மொதல்லே பத்து நிமிஷம் நடந்தாலே, மூச்சு வாங்கிச்சு. விடாம நடந்தேனா! இப்போ, சுலபமா ஒரு மணி நேரம் நடக்க முடியுது! பழைய பாஜூ கெபாயா எல்லாத்தையும் போட்டுக்க முடியுது”. அவள் குரலில் பெருமிதம். கணவர் தன்னை விட்டுப் போகமாட்டார் என்ற நினைப்பிலோ? தான் இவ்வுலகத்தைப்பற்றி அறிய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்ற நினைக்க வைத்தது, சலேஹா அடுத்துச் சொன்னது. “என்னோட பழைய சிநேகிதர் ஒருத்தர் — நான் அவரைத்தான் கல்யாணம் செய்துக்கறதா இருந்திச்சு — அவர் அன்னிக்கு என்னைப் பாத்தார். தன்கூட ஒரு நாள் சேர்ந்து சாப்பிடக் கூப்பிட்டார்”. சற்றே நிறுத்தினாள். அகிலா திடுக்கிட்டாள். ஒரு பெண் அழகாக, இளமை குன்றாது இருந்தால், எந்த ஆணுக்கும் அவளை விட்டுவைக்கத் தோன்றாதோ? தன் அதிர்ச்சியைக் குரலில் காட்டாது கேட்டாள்: “அவருக்கு மனைவி இருக்காங்களா?” “கல்யாணம் ஆகிடுச்சு. ஆனா, `தனிமை ரொம்ப வாட்டுது, லேஹா`ன்னு அவர் எங்கிட்டே சொல்றப்போ, எனக்குப் பாவமா இருக்கு. அதான் ஒங்ககிட்டே கேக்க வந்தேன். மத்தவங்களுக்கு இதெல்லாம் புரியறதில்ல!” அகிலாவுக்கு ஒன்றுதான் புரிந்தது. தன் தோழிகளின் கணவன்மார்கள் பிற பெண்களை நாடிப் போகிறார்கள் என்று அவர்களுக்காகப் பரிதாபப்பட்டு அழுத அந்த சலேஹா இல்லை இவள். தானே அந்த `இன்னொரு பெண்`ணாகத் துணிந்தவள். பாராட்டலுக்கு மயங்கி, செய்யத் தகாத காரியம் ஒன்றைச் செய்யத் துணிந்தால், தன்னால் இன்னொரு பெண் பாதிக்கப்பட்டுவிடுவாளே என்ற கரிசனம் சற்றம் இல்லாதவள். “இப்போ நான் என்ன செய்யறது? நீங்கதான் சொல்லணும்” அகிலா ஆத்திரத்துடன் கத்தினாள்: “தனிமை வாட்டினா, அவரோட மனைவியைக் கூட்டிக்கிட்டு, ஊர் சுத்தச் சொல்லுங்க அந்த நண்பரை!” அதன்பின் சலேஹா அவளைப் பார்க்க வரவில்லை. 49 அத்தியாயம் 49 “நீங்க இருக்கிறப்போ, நல்லா இருந்திச்சு!” எனறு பிரியாவிடை கொடுத்தனுப்பினார்கள் மத்தியானப் பள்ளி ஆசிரியைகள். “நான் எங்கே போயிடப் போறேன்! காலையில இங்கதானே இருப்பேன்! மத்தியானம் நீங்க வர்றப்போ பாக்கலாமே!” அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் கூறினாள் அகிலா. நான்காம், ஐந்தாம் படிவங்களில் பௌதிகப் பாடத்தை நடத்த, அவளுக்குப் பதிலாக பள்ளி நிர்வாகம் அழைத்து வந்திருந்த ரோஹானி, அந்த ஆண்டு முழுவதும், `எனக்குத் தைரியமில்லை,` என்று கூறியபடி, பாடம் எதுவுமே நடத்தாமல் காலத்தைக் கழித்தாளாம். நம்மில் ஒருத்தியை எப்படிக் கண்டிப்பது என்று புரியாது, ஆண்டு இறுதியில் அவளுக்கு வேலைமாற்றம் அளித்து இருந்தார்கள். அந்த இடத்துக்கு மீண்டும் அகிலா வந்தாள். தலைமை ஆசிரியராக புதிதாக ஒருவர் வந்திருந்தார். அவர் மனத்தைக் கலைக்க இப்போது கம்சியா இல்லை. அவளுடைய கணவர் படுத்தபடுக்கையாகிவிட்டதால், அவரைக் கவனிப்பதற்காக, தன் வீட்டுக்கு அருகே இருந்த வேறொரு பள்ளிக்குப் போய்விட்டாள். அகிலா, தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாள். பள்ளி காண்டீனில் அவள் சாப்பிடுவதற்கேற்ற எந்த உணவும் இருக்கவில்லை. இடைவேளைக்கு ரொட்டித் துண்டுகள் சாப்பிட்டு அலுத்திருந்ததால், இப்போதெல்லாம் சாதம், அதனுடன் ஏதாவது பிரட்டல், ஊறுகாய் என்று எவர்சில்வர் டப்பாவில் அடைத்துவந்தாள். கேட்ட பிறருக்கு, அவற்றை எப்படிச் செய்வது என்று எழுதிக் கொடுத்தாள். `இவளுடன் ஆங்கிலம் பேசலாம், கர்வி என்று பழிக்க மாட்டாள்,` என்று சில இளம் ஆசிரியைகள் அரட்டை அடித்து, தம் மொழி வன்மையைப் பெருக்கிக்கொள்ள வந்தார்கள். மொத்தத்தில், அலை அடித்து ஓய்ந்தாற்போல் இருந்தது அவளுடைய உத்தியோக வாழ்க்கை. வீட்டுக்குத் திரும்பினதுமே, கணவர் உற்சாகமாகக் குரல் கொடுத்தார். “சீக்கிரம் வா. செந்தில் பேசறான்!” வழக்கம்போல், “செந்தில் ! என்னப்பா? நல்லா இருக்கியா?” என்று குசலம் விசாரித்தாள். “நீங்களே பாத்துக்குங்கம்மா. அடுத்த வாரம் அங்கே வரப்போறேன் — வேலை விஷயமா!” என்றான். “சரி,” என்று மட்டும் சொன்னாள் அகிலா. `என் படிப்பையும், அனுபவத்தையும் எதற்காகப் பிற நாட்டுக்காக உழைத்து, அவர்களுக்குப் பயன்படச் செய்வது?` என்று திரும்பி வந்திருந்த சிலரை அவளுக்குத் தெரியும். செந்தில் மட்டும் ஏன் அப்படி இல்லை? செந்திலை மகனாகவா வளர்த்தாள்! அவனுடைய உற்ற தோழியாக அல்லவா இருந்தாள்! தன் பள்ளி வாழ்க்கையின் ஒவ்வொரு பயணத்தையும் சொல்லிச் சொல்லி அவனை வளர்த்தாளே! அவளுக்குக் கிடைக்க வேண்டிய வேலை உயர்வு மேலதிகாரியை காக்காய் பிடித்த, சுயமாக எந்த முடிவையும் எடுக்கத் தெரியாது, மேலதிகாரிகள் சொல்வதுபோல் எந்த ஒரு காரியத்தையும் செய்த ஒருத்திக்குப் போனதைப்பற்றி அவனிடம் எத்தனை முறை சொல்லி இருக்கிறாள்! இத்தனைக்கும் அவள் தன்னைவிட பதினைந்து வருடங்கள் குறைந்த அனுபவம் உள்ளவள். `உன் கதையை நீயே சொல்லிச் சொல்லிக் கேட்டு வளர்ந்தவன்! இப்போ அவன் முடிவை எப்படி குத்தம் சொல்ல முடியும்?` என்ற கணவரின் சமாதானத்தை அகிலாவால் ஏற்கத்தான் முடியவில்லை. 50 அத்தியாயம் 50 விரைவிலேயே மற்றொரு அழைப்பு வந்தது. “செக்கூ? புவான் அகிலாதானே?” ஆங்கில மொழி, மலாய் உச்சரிப்பு. “ஆமா. யாருங்க?” “ஒங்களுக்கு என்னை நினைவிருக்காது. ஆனா, ஒங்களால நாங்க நிறைய பேர் பலனடைஞ்சோம். நீங்க மட்டும் இந்த ஆசிரியத் தொழிலை விடவே விடாதீங்க, டீச்சர்!” உருப்போட்டு வைத்திருந்ததைப்போல் படபடவென்று வந்தது வார்த்தைகள். அவளுக்கும் உணர்ச்சிப் பிரவாகம் எடுத்ததில், மூச்சு பெரிதாக வந்தது. “அட, நீ வேற! நான் ஓய்வு பெற அதிக நாள் இல்லை,” என்று சிரித்துச் சமாளித்தாள். பிறகு, “ஆமா? ஒன் பேரு என்னப்பா?” என்று கேட்டாள். “அஸ்லான், செக்கூ! ஒங்க ஆயிரக்கணக்கான மாணவர்களில ஒருவன். நீங்க என்னை மறந்திருப்பீங்க. ஆனா, என்னால மறக்க முடியாது. ஒரு தடவை..,” என்று ஆரம்பித்து, அவள் தனக்கென பிரத்தியேகமாக ஒரு கணக்கைச் சொல்லிக் கொடுத்த ஒரே ஒரு நிகழ்ச்சியை மிகுந்த நன்றியுடன் நினைவு கூர்ந்தான். “இப்போ பாங்கில தலைமைப் பதவியிலே இருக்கேன். அன்னிக்கு ஒங்களைப் பாத்தேன். ஆனா, ஒங்களுக்கு என்னை அடையாளம் தெரியல”. சிறு வருத்தத்துடன் சொன்னான். இப்போது ஞாபகம் வந்தது. அவளுடைய முதல் பள்ளிக்கூடத்தில், வகுப்புத் தலைவனாக அவளே தேர்ந்தெடுத்து இருந்த பையன். அக்கண்களில் இருந்த நேர்மையை மறக்க முடியுமா! அரை நிஜார் அணிந்திருப்பான் அப்போது. இப்போது, முப்பது வருடங்கள் கழித்து, அவளுக்கு அடையாளம் தெரியவில்லையே என்று குறைப்படுகிறான்! “டீச்சர் பாடம் நடத்தறப்போ, நிறைய கதை சொல்வீங்க! நல்ல நல்ல அறிவுரை எல்லாம் சொல்வீங்க!” கடந்த காலம் திரும்பவும் வராதா என்ற ஏக்கம் அவன் குரலில். “இப்பவும் அதையேதான் சொல்றேன். நேர்மையா இருக்கணும். அதுதான் எந்த உத்தியோகத்திலும் அவசியம்,” என்று வலியுறுத்தினாள். மாணவர்களுக்கு எத்தனை வயதானால்தான் என்ன! அவர்களுக்கு புத்தி கூறுவதைத் தவிர்க்க முடியாது ஆசிரியர்களால்! நன்றி கூறி, உரையாடலை முடித்துப் போனான் முன்னாள் மாணவன். தான் சற்றும் எதிர்பாராத அந்த அழைப்பால், பிரமிப்பாக இருந்தது அகிலாவுக்கு. இனி யாராவது, `இன வேற்றுமையால் உண்டாகும் வெறுப்பும், அவநம்பிக்கையும் எல்லாருக்கும் உள்ள பொதுக்குணம்` என்று சொன்னால், சண்டை போட வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. அது தார்மிக கோபம். முற்றும் 1 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள்  இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் சமீபத்திய புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அல்லது www.pressbooks.com   தளத்தையும் பயன்படுத்தலாம். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.comஎனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.         இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. http://jayabarathan.wordpress.com/ 3. kaniyam.com 4. blog.ravidreams.net 5. http://mmauran.net/blog 6. http://gnutamil.blogspot.in/ 7. http://tech.neechalkaran.com/p/copyleft.html 8. http://tamilcpu.blogspot.in எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். www.freetamilebooks.com  எனும் தளம் தயார் நிலையில் உள்ளதா ? தற்சமயம் இல்லை. கூடிய விரைவில் தயார்நிலைக்கு வந்துவிடும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/