[] பண்புடன் சிறப்பிதழ் தொகுப்பு - ஸ்ரீதர் நாராயணன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை பண்புடன் சிறப்பிதழ் Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 4.0 Un ported License. This book was produced using PressBooks.com. Contents - பண்புடன் சிறப்பிதழ் - Main Body - 1. நல்லா இருங்கடே - ஜனவரி 10, 2012 - கதைகள் - 2. கொலாஜ் கதை - கற்பகம் - 3. ரோஸ் மில்க் - 4. விஷம் - 5. நம்பிக்கை - 6. பலி - 7. சஸ்பென்ஸ் - 8. கக்கூஸ் - 9. பெட்டியைத் திறந்து பார்த்தால் - கவிதை - 10. அன்புக்கு நான் அயன்மை - 11. கூழாங்கல் பிரார்த்தனை - 12. குறுகத் தரித்த மனம் - 13. புணர் நிமித்தம் - 14. என்ன செய்ய இந்தக் காதலை? - 15. மொட்டை மாடியில் - கட்டுரை - 16. காற்றுப் பள்ளத்தாக்கின் இளவரசி - 17. தமிழ் நாவல்கள்- ஒரு அழகியல் பார்வை - 18. அரசியல் திறன் - 19. ரியாலிட்டி ஷோ - 20. ட்விட்டரதிகாரம் - 21. ஆண்டாள் என்னும் ‘பறை’ச்சி - 22. எது சமூகப் பொறுப்பு ? - 23. பூக்கள் பூக்கும் தருணம் - 24. அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது - 25. ஐ.டி கம்பெனியில் வர்ணாஸ்ரமம் - 26. சேத்தன் பகத்தின் வழியில்... - நூல் மதிப்புரை - 27. இருள் நிறைக்கும் வெளிகள் - 28. ஒரு உலகைப் புரட்டிப் போட்டவனின் வரலாறு - பகடிகள் - 29. கவுண்டர்ஸ் டெவில் ஷோ - கௌதம் வாசுதேவ் மேனன் - 30. மாவீரன் தில்லுதுர - பதிவுகள் - 31. சிறுகதைப் போட்டிகள் - 32. பாலமும் காலமும் - 33. எனக்கானது… - 34. மஞ்ச டாப் - 35. கடவுச் சொல்லாயிரம்! - 36. கேரக்டர்: வைத்தி மாமா - 37. பற்றிப் படரும் பசலை - குறும்படம் - 38. குறும்படம் எடுக்கலாம் வாங்க...! - 39. ரத்து - 40. அப்பாட்டக்கர் - நாடகம் - 41. வம்ச வதம் 1 பண்புடன் சிறப்பிதழ் [Panpudan]   பண்புடன் [http://panbudan.com]  மின்னிதழின் 2012 புத்தாண்டு சிறப்பிதழ். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், பகடிகள், பதிவுகள், குறும்படம், நாடகம் ஆகியவற்றைக் கொண்ட இனிய கதம்பம் இது. தொகுப்பு – ஸ்ரீதர் நாராயணன்.   வெளியீடு : FreeTamilEbooks.com   அட்டைப்படம் – ப்ரியமுடன் வசந்த்  vasanth1717@gmail.com மின்னூலாக்கம் – இராஜேஸ்வரி sraji.me@gmail.com     [pressbooks.com] 1 Main Body 1 நல்லா இருங்கடே - ஜனவரி 10, 2012   அன்பின் உறவுகளே! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! ‘பண்புடன்’ மின்னிதழ் என்றொரு ஆர்வம் முன்வைக்கப்பட்டபோது அதனைச் செயல்படுத்துவதென்பது எத்தனை சிரமமென நான் திகைத்துப் போயிருந்தேன். ஆனால் ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ என்று ஆர்வம் கொண்ட நண்பர்கள் இதழைத் துவங்கவே செய்து விட்டார்கள். இன்றைக்கு பதிவுலகம் உள்ளிட்ட தனிக்குடில்கள் வந்து விட்டபின் மின்னிதழ்கள் என்பவை முன்பு போல அத்தனை பளபளப்பாக இயங்க வாய்ப்பில்லை என்பதே எனது கணிப்பாக இருந்தது. ஆனால்.. அப்படியில்லை. அவரவருக்கென தேவைகள் ரசனைகள் இருப்பதையொட்டி ஒவ்வொரு இதழுக்கும் அதற்கான தேவை இருக்கவெ செய்கிறதென புலப்படுத்தினார்கள் நண்பர்கள். அந்தவகையில் இன்னொரு முயற்சியாக பண்புடனுக்கு பொறுப்பாசிரியர்களாக இணையத்தில் உலாவரும் சிலரை நியமித்து அவர்கள் மூலம் பண்புடனை அழகுபடுத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தபோது – இது ஒன்றும் புதிதில்லை என்றபோதும் – அதனை உடனே செயல்படுத்த முன் வந்த முகிலனுக்கும் ஜீவ்ஸூக்கும் இந்தத் தருணத்தில் நன்றி. எப்போதிருந்து செயல்படுத்துவது என்ற கேள்வி எழுந்தபோது ஆங்கில, தமிழ்ப்புத்தாண்டுகள் ஒன்றாக வரும் ஜனவரியில் இதற்கான சந்தர்ப்பம் கூடி வருமென்றார்கள். யார் முதல் இதழுக்கான பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி எழுந்தபோது இவரது பெயரை முன்மொழிந்தார்கள் நண்பர்கள் கடந்த மூன்று வருடங்களாக தமிழ் இணையத்தில் உலாவருபவர். ஆனால் எப்போதும் தன்னைப் புத்தகங்கள் மற்றும் புனைவுகளுக்குள் திணித்துக்கொண்டு தொடர் வாசிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர். கதைகள் படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது  போன்ற பொழுது போக்குகளை அதிதீவிரமாகச் செய்பவர் என்றாலும் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருப்பவர். இணையத்தில் பலரும் செய்வது போலவே நேர விரயம், வம்பு பேச்சுகளில் ஆர்வம் காட்டினாலும் அதையும் தாண்டி கொஞ்சமாவது தனது வாசிப்பை கூர்மையாக்கி கொள்ள முடிந்திருப்பதில் இணையத்திற்கும் பங்கிருப்பதாக நம்புகிறவர். இவைகளைத் தவிர பெரிதாக எதுவும் சாதித்ததில்லை என்று தன்னடக்கத்துடன் இவர் சொல்லிக் கொண்டாலும் பதிவுலகில் நடந்த பல்வேறு சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகள் வென்றிருப்பதை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.. யார் இவர்? வேறு யார் நமக்கு இணையம் மூலம் நன்கு அறிமுகமான நண்பர் ஸ்ரீதர் நாராயணன் தான். “ஒரு பக்கம்’ என்ற இணைய தளத்தின் மூலம் தனது பல பக்கங்களை நமக்கு அறியத் தரும் ஸ்ரீதரை இம்மாத பண்புடன் இதழின் பொறுப்பாசிரியராக உலாவரச் செய்வதில்பண்புடன் குழுமம் மகிழ்கிறது. அவருக்கு நம் நெஞ்சம் நிறைந்த நன்றி! பொறுப்பாசிரியராக சம்மதித்த ஸ்ரீதர் இது குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா? ”இணையம் அளிக்கும் சாதகங்களில் இம்மாதிரியான பொறுப்புகள் தரும் சவால்கள் சுவாரசியமானது. அதற்காகவே ‘பண்புடன்’  குழுமத்தினருக்கு வந்தனங்கள்”  எங்கள் வந்தனங்கள் உங்களுக்கும் ஸ்ரீதர்! []   review" alt="book review" coords="476,0,630,100" shape="rect" href="http://panbudan.com/story/thuruva-natchathiram" /> காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். அது தன் போக்கில் போய்க்கொண்டேயிருக்கிறது. அதன் வழியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் இன்னல்களையும், இழப்புகளையும் வாரி இறைத்துக் கொண்டு அதன் போக்கில் செல்லும் காலத்தின் சாட்சியாக இதோ மீண்டும் பிறப்பெடுக்கிறது புதிய ஆண்டு. புத்தாண்டு என்பது இன்னுமொரு நாளேதான் எனினும் எப்போதேனும் நம்மை நாம் புனர்பரிசோதனை செய்வதற்காகவாவது ஒரு நாள் அவசியப்படுகிறது. அத்தகைய ஒரு நாளாகவே புத்தாண்டு பலராலும் கருதப்படுகிறது. ஊரே கூடி தேர் இழுக்கும் இந்நன்னாளில் பண்புடன் மின்னிதழும் தனது வாசகர்களுக்கு இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை இதயபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறது. எல்லா வளங்களும் நலங்களும் அனைவருக்கும் உண்டாகவும், பூமியில் சமாதானமும் மன அமைதியும் குடிகொள்ளவும் நல்லவைகள் செழிக்கவும் அல்லன அகலவும் நாமும் பிரார்த்திப்போம். கடந்த ஆண்டு நம்மில் பலருக்குச் சிற்ப்பானதாக இருந்திருக்கும் சிலருக்கு எதிர்பார்த்தவைகள் கைகூடாமல் போயிருந்திருக்கலாம். சிலரது வாழ்க்கைத் தரம் சிறப்பானதாகவும் சிலருக்கு வெறுப்பானதாகவும் இருந்திருக்கக் கூடும். ஆனால், காலம் என்றுமே ஒரே பாதையில் ஒரே மாதிரியான வழியில் பயணிப்பதில்லை. வேதனைகளற்ற, நன்மைகள் மட்டுமே நிறையும் ஓர் ஆண்டாக இந்த இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு அமையுமென்று நம்புவோம். எல்லாரும் எல்லாக்காலமும் நல்லா இருங்கடே!!   ஆசிஃப் மீரான் 2 கதைகள் 2 கொலாஜ் கதை - கற்பகம் +-----------------+-----------------+-----------------+-----------------+ | சித்ரன் | தமிழ்ப் பறவை | பேயோன் | மோகன்தாஸ் | +-----------------+-----------------+-----------------+-----------------+ | [Chitran] | [Tamilparavai] | [Payon] | [Mohandoss] | +-----------------+-----------------+-----------------+-----------------+ கொலாஜ் கதை என்பது, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத படங்களிலிருந்து உருவாக்கப்படும் கதை.  இந்த முயற்சிக்கு இணையத்தில் பிரபலமான ஓவியர்கள் சிலரை அணுகி படங்கள் கேட்டபோது மிகவும் உற்சாகமாக கொடுத்து உதவினார்கள்.  ஒரு படத்திற்கு இரு படமாக தந்து ஊக்கமளித்தார்கள்.  இவர்களின் படங்களை வைத்து நான் உருவாக்கிய கதைதான் இது. [linesep]  கற்பகம் ‘ஒரு பூ பேர் நினச்சுக்கோ’ என்னைப் பார்த்ததும் முதலில் இந்தக் கேள்விதான் கேட்டாள் கற்பகம் அக்கா. ‘ரோஜாதானே நினச்சுகிட்ட’  வியப்பாக இருந்தது.  அந்த வயதில் அக்கா பேசினாலும் வியப்புதான். பேசாவிட்டாலும் வியப்புதான். வயலின் மாஸ்டர் பொன்னுரெங்கம் ‘பாரிஜாதம்’ என்று நினைத்துக் கொண்டாராம்.  அக்கா இரண்டொரு கேள்விகளில் சரியாக கண்டுபிடித்துவிட்டாளாம். ‘இதெந்தா குறளி வித்தையோ டீச்சர்… ‘  என்று வயலின் மாஸ்டர் பொன்னுரெங்கம் அதிசயிக்க, ‘இதென்ன பெரிய விஷயம்… இப்ப நீங்களே உங்களுக்குப் புடிச்ச பொண்ணு பேரை நினைச்சுக்குங்களேன்’ புருவங்களை ஏற்றி இறக்கி அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே ‘நான் கரெக்டா கெஸ் பண்றேன் பாருங்க’ என்று இழுத்தவாறே சிரிக்க… வயலின் மாஸ்டர் கன்னமெல்லாம் சிவந்து போய், கிறுகிறுப்பாகி விட்டார். ‘பாதை காத்த பாதாளி’ கோவிலுக்கு எதிர் வரிசையில் மூன்றாம் வீடுதான் கற்பகம் அக்கா வீடு.  கோவில் என்றால் பெரிய கட்டிடம் எல்லாம் கிடையாது.  ஏன், அது கோவிலே கிடையாது என்றுச் சொல்லலாம்.  சாலையோர கல் தான் அடையாளம்.  நாங்கள் அப்பொழுதுதான் கம்பன் நகரத்திற்கு குடிபெயர்ந்து வந்திருந்தோம். அதற்கு முன்னர் பாதாளியைப் பற்றியெல்லாம் கேள்விபட்டதேயில்லை. . பக்கத்தில் தெப்பக்குள சந்தைக்கு பின்புறம் உள்ள தேனம்மை நடுநிலைப் பள்ளியில்தான் நான்காம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். ‘என்னாத்துக்கு ரிச்சால்லாம்… ந்தா… எதிர்லதான் நான் இருக்கேன்.  நான் பாத்துக் கூட்டிப் போயி சேப்டியா கொண்டாந்து விடறேன்க்கா.  என்னடா குட்டி?’ என்று அம்மாவிடமிருந்து அடமாக என்னை பொறுப்பேற்றுக் கொண்டாள்.  அன்றிலிருந்து அக்காவின் நிழலாகிப் போனேன்.  ஸ்கூல் போகும் வழியில் சந்தை திருப்பத்தில் மூணு ரோட்டு முக்கில் இருக்கும் பாதாளி அம்மனை அவள்தான் எனக்கு அறிமுகபடுத்தினாள். நடைபாதயோரம் தார் ரோட்டில் பாதாள நீர்தேக்க  திறப்பில், பெரிய கல்லை போட்டு மூடியிருக்க, சிறிய விரிசல் வாய் அருகே கற்பூரம் ஏற்றி வைத்திருப்பார்கள். பக்கத்தில் குங்குமம் சிதறியிருக்கும். [collage-drawing-1-tamilparavai] எண்ணெய் ஊற்றிய எலுமிச்சை மூடிகள் சுற்றி இறைந்து கிடக்க, ‘ஆத்தா’ என்று முணுமுணுப்பாய் வேண்டிக் கொண்டே தானும் குங்குமம் எடுத்து வைத்துக் கொண்டு எனக்கும் ஒரு பொட்டு வைப்பாள். தினமும் ஏதாவது ஒரு பூ சாற்றுவது தவறாது.  பூவை விட அதன் வாசம் மேல் எப்போதும் அக்காவிற்கு பைத்தியம். ‘என்ன வாசனை பாரு குட்டி’ என்று கைகளை விரித்து முகத்தருகே நீட்டுவாள்.  எனக்கு எல்லா பூவின் வாசனைகளும் ஓரளவுக்கு  அத்துபடியாகிவிட்டது.  நந்தியாவட்டை, பவழமல்லி, சாமந்தி, மல்லி, அடுக்குமல்லி, பன்னீர் பூ, செம்பருத்தி, ரோஜா, தாழம்பூ, கொன்றை, முல்லை, ஆவாரம், நாகலிங்கம், மருக்கொழுந்து, வாடாமல்லி, கனகாம்பரம்…. ஒவ்வொரு பூக்கும் ஒவ்வொரு வாசம். அக்காவின் வாசத்தோடு கலந்து தனி வாசமாக உருவெடுத்து விடும். அக்காவே ஒரு மலர்ந்த புஷ்பம் போல்தான் தெரிந்தாள். தொடுத்த செண்டு மல்லி போல் ஒரு கம்பீரம் கலந்த அழகு அவள். அக்காவின் அப்பா ‘பிரிட்டாணியா’ ஆறுமுகத்தின் அங்காளி பங்காளிகள்தான் தேனம்மை டிரஸ்டில் பொறுப்பில் இருந்தார்கள்.  அதனால், ஸ்கூல் வேலை பெரிதாக இருக்காது.  ஆண்டுவிழா, டிராயிங் கிளாஸ், பாட்டு போட்டி, டிராமா ரிகர்சல் என்று இஷ்டத்துக்கு செய்து கொண்டிருப்பாள். நிர்மலா டீச்சர் பிரசவத்திற்கு போயிருந்தபோது இந்திப் பாடம் கூட எடுத்தாள்.  ‘இந்த கொக்கியை இப்படிக்கா திருப்பி போடனுமாக்கும்’ என்று எங்களிடமே கேட்டு கேட்டு எழுதி, திரிபாதி முகௌடே பாடம் எல்லாம் சமாளித்து விட்டாள். ‘இதென்னடா படம் குட்டி? மீனா இது?’ [collage-drawing-2-peyon] நான் வரைந்த முதல் படம் என நினைக்கிறேன்.  வால் நீட்டி, மை தீட்டிய, பளபளக்கும் காந்தக் கண்களைப் பார்த்துக்கொண்டே தலையாட்டினேன். அவள் கண்களே கடல் போல ஆழமாகவும், இழுத்துப் பிடிக்கும் சுழலாகவும் தெரிந்தது.  அந்தப் படத்தை வெகு நாட்கள் வகுப்பறை சுவரில் ஒட்டியிருந்தாள். ’நிறைய வரையனும் குட்டி நீயி’. நான் அக்காவோடு வாலாக மாறியதின் பக்கவிளைவாக ‘எந்தா மோனே… எந்தா களிக்கானு’ என்று வயலின் மாஸ்டரின் வாஞ்சையும் அதிகரித்தது. பாதாளி கோவில் பக்கத்தில் மலேஷியா செட்டியார் வீட்டு மூன்றாவது மாடியில்தான் குடியிருந்தார் மாஸ்டர்.  அக்காவின் பின்புலம், கம்பன் நகரத்தின் சாதி கட்டுமானம், ஆறுமுகனாரின் செல்வாக்கு பற்றியெல்லாம் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அக்காவிடம் கொஞ்சம் அதிகமாகவே ‘ஷோக்கு’ காட்டிக் கொண்டிருந்தார். வலதுபக்கமாக வகிடெடுத்து சுருட்டையான கிராப்புடன், கவர்ச்சியான மொணமொண குரலுடன் ‘டீச்சருக்கு மாடர்ன் டிரஸ் ஏ கிளாஸாயிட்டு இருக்கும். வல்லிய ஸ்ட்ரக்சருண்டாக்கும் நிங்கள்க்கு’ என்றெல்லாம் ஜாடையாக பேசுவார். ஒருமுறை சங்கீத சமாஜத்தில் பாட்டு போட்டி நடந்தது.  பசங்களோடு அக்கா எஸ்கார்ட்டாக போக, அக்காவிற்கு நான் எஸ்கார்ட்டாக போனேன்.  மாஸ்டரும் ரிகர்சல் மேற்பார்வைக்காக கூட தொற்றிக் கொண்டார்.  7-Aவா, 12-C ரூட்டா என்று நினைவில்லை.  நான்காவது வரிசையில் ஜன்னல் பக்கமாக நான் உட்கார்ந்திருக்க, பக்கத்தில் அக்கா என் கையைக் கோர்த்துக் கொண்டு மகிழம் பூ மணம் வீச அமர்ந்து இருந்தாள். மூன்று பேர் உட்காரும் சீட்டில் மாஸ்டர் கடைசி இருக்கையில். [collage-drawing-3-tamilparavai] ‘மனோரஞ்சிதம் பூ பார்த்திருக்கீங்களா சார்?’ ‘அய்யோ… அது பார்த்தால் பெருசா ஒண்ணும் இருக்காது.  ஆனா வாசன அள்ளிகிட்டு போகுமாக்கும்.  டீச்சர்… ஒருசமயம் குட்டநாடு வரனும்.  வேம்பநாட்டு காயல் காணலாம்.  அங்க ஆரணூர் பக்கம்தான் நம்ம மணை. தோட்டத்துல மனோரஞ்சிதம் மணம் எப்பவும் உண்டாக்கும். டீச்சர் வெகேஷன்க்கு வரனும்.  காயலில் போட் ரேஸ், ஃபிஷிங் எல்லாம் பாக்கலாம்…’ பிரவாகமாக ஏதேதோ பேசிக் கொண்டே வந்தார்.  உணர்ச்சி வேகத்தில் தமிழ் தடுமாறி மலையாளத்தில் பொங்கி வழிந்து கொண்டிருந்தார். நடுவில் எப்போது பேச்சு அறுந்து போனது என்று நினைவில்லை… தல்லாகுளம் வந்தபோதுதான் கவனித்தேன், மாஸ்டர் வலதுகை விரல்களில் கர்சீப் சுற்றியிருக்க அதில் இரத்தம் ஊறி உறைந்திருந்தது. சமாஜத்தில் பார்ப்பவர்களிடம் எல்லாம் ‘பஸ்ஸில் தகரம் கீச்சி விட்டது’ என்று பரிதாபமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ‘கையக் கால வச்சிகிட்டு சும்மா வந்தாத்தானே’ என்று எரிச்சலோடு முணுமுணுத்தாள் அக்கா. ரிகர்சல் முடியும்வரை இரண்டு பேரும் முகம் கொடுத்து பேசாமல்தான் திரிந்து கொண்டிருந்தார்கள். மாலை பள்ளிக்கு திரும்பும்போது மாஸ்டர்தான் பூ வாங்கிக் கொடுத்து புதிய ஹேர்பின்னும் வாங்கிக் கொடுத்து வெள்ளைக் கொடி ஏற்றினார். அவர்களுக்கிடையிருந்த மாயத்திரை ஒன்று விலகியது போல் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்கள். ‘நல்லாயிருக்கா குட்டி?  இத நான் வாங்கிக்கனுமாம்.  நீ என்ன சொல்றே?’ அழகான வெண்தாமரைப் இதழ் நடுவில் மிதக்கும் பனித்துளி போல் அவள் கையில் அந்த மோதிரம் இருந்தது. அமெரிக்கன் டைமண்ட்டாம். ‘உனக்குப் புடிச்சிருக்கா? வெறும் ராசிக்கல் மோதிரம்னு அம்மாகிட்ட சொல்லிட்டேன்’ என்று சிரித்துக் கொண்டாள். மாஸ்டருக்கு அந்தளவு சாமர்த்தியம் போறவில்லை.  அட்டெண்டர் ஜோசப் அறிமுகம் செய்த நகைக்கடையில்தான் அந்த மோதிரம் வாங்கியிருந்தார்.  அதுவரை ஸ்கூலில் அரசல்புரசலாக புகைந்த நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்தது.  படபடவென சம்பவங்கள் நடந்தது. மலேஷிய செட்டியார் வீட்டை இடித்து கட்டப்போகிறார்கள் என்று சொல்லி மாஸ்டர் காலி செய்து  சோலை ஹோட்டல் பக்கம் ரூமெடுத்துக் கொண்டு போய்விட்டார். அப்படியே, அரசு இசைக்கல்லூரிக்கு வேலை மாற்றிக் கொண்டுவிட்டார்.  தெய்வானை அத்தாச்சிக்கு நெஞ்சுவலி என்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.  ‘எம்மக கல்யாணம் பாக்காம நான் கண்ணை மூடிருவேனோ’ என்று அத்தாச்சி கூப்பாடு போட, அவர் தம்பி வள்ளிநாயகத்துக்கும் கற்பகம் அக்காவிற்கும் திருப்பரங்குன்றத்தில் கல்யாணம் நடந்தது.  அக்காவின் அம்மா கம்பன் நகரில் எல்லாருக்குமே அத்தாச்சிதான். அக்கா கொஞ்சம் அதிர்ச்சியடைந்திருந்தாலும் கம்பீரம் குறையாமல் இருந்தாள்.  மருதாணி இட்டு, ராக்கொடி வைத்து, பூ தைத்து கண்கள் அகல ‘எப்படிடா குட்டி?’ என்று கட்டிக் கொண்டாள்.  புதுசாக மல்லிகையும் சாமந்தியிம் கலந்த வாசனையுடன் இருந்தாள். [collage-drawing-4-peyon] வள்ளிநாயகம் மாமா கராத்தே பள்ளி வைத்திருந்தார்.  ஸ்கூட்டர் முன்பக்கம் ஒரு காளை படம் வரைந்திருக்கும். அது ஏதோ ஒரு வகை கராத்தே பயிற்சியாம்.  அதைப் பயின்றவர்கள் வெறுங்கையாலேயே காளை மாட்டை அடக்குவார்களாம்.  அக்காவைவிட ஓரிரு இஞ்ச்கள் குள்ளமாக, கரளை கரளையான கைகளுடன், இறுக்கமான சட்டையில் தெறிக்கும் பித்தான்களுடன் ‘திம்’ என இருந்தார்.  கைகள் மட்டும் இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்தால் அப்படியே சிம்பன்ஸி போலிருப்பார். இரவு பிரியாணி விருந்தில் கேட்டேன் ‘மாமா, உங்களுக்கு பிடிச்ச பூவை சொல்லுங்களேன்.  அக்கா கண்டுபிடிக்குதா பாக்கிறேன்’. ‘அவனுக்கு என்னா… இனிமேட்டு எல்லாம் கற்பூதான் புடிக்கும்னுவான்’  யாரோ சொல்ல வள்ளிநாயகத்தின் அம்மா வார்த்தையிலேயே நொடித்துக் கொண்டார். ‘புடிச்ச்சிட்டாலும்… நல்லா வச்சாங்க பேர உம் பொண்டாட்டிக்கு. ஊத்தவாய்ல  தேனொழுகிச்சாம்கிற கதயா…’ என்று சலித்துக் கொண்டார்.  சட்டென எல்லாரும் அமைதியாகிவிட்டு, கொஞ்ச நேரத்தில் மீண்டும் சளசளவென பேச ஆரம்பித்து விட்டார்கள்.  மாமாவிற்கு என்ன பூ பிடிக்கும் என ஊகிக்க முடியாதபடிக்கு அவர் சிரிக்க மட்டும் செய்தார்.  ஒருவேளை அவருக்கு பூவே பிடிக்காதோ என்று ஆதங்கமாய் இருந்தது. மாடியில், அக்கா குளித்து முடித்து ஈரத்தலையை உலர்த்திவிட்டிருக்க, பச்சை பட்டுசேலையும், இரட்டை வட சங்கிலியுமாக அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.  அத்தாச்சி மெல்லமாக முணுமுணுப்பாக சொல்லிக் கொண்டிருக்க,  காமாட்சி மாமி சுற்றி வைத்திருந்த பூப்பந்தை பிரித்துக் கொண்டிருந்தார். அக்கா கண்ணாடியைப் பார்த்தவாறே அத்தாச்சியின் மந்திரத்திற்கு தலையாட்டிக் கொண்டிருந்தாள். [collage-drawing-5-chitran] ‘குட்டி, இதப் பாத்தியா வாசனை முல்லை… காலை வரைக்கும் அப்படியே இருக்கும் தெரியுமா? அங்கேயே நின்னு என்னத்த பாத்திட்டிருக்க… இங்கிட்டு வாவேன்’என்றாள். அறையே வாசனையால் நிரம்பியிருக்க அக்கா சுடர் போல பிரகாசித்துக் கொண்டிருந்தாள். மருதாணி வெளிறிப்போன விரல்களுடன் அக்கா மறுவீட்டுக்கு வந்தாள். ‘மாப்ள ஒரு பாயட் சியரெட் வாங்கிட்டு வா’ என்றபோது அக்கா என்னை முறைத்துவிட்டு ‘அவன் எதுக்கு… நீங்களே போங்க’ என்று சொல்லிவிட்டாள்.  மாமா என்னைக் கொஞ்சம் உறுத்தலாக பார்த்துவிட்டு போய்விட்டார்.  அதற்கப்புறம் பெரிதாக எதுவும் பேசியதாக நினைவில்லை.  சார்ம்ஸ் என்று ஒரு மட்டரக பிராண்டு சிகரெட்டு அது. மாமா அந்த காலத்தில் வெகு தீவிரமாக ஆணழகன் போட்டிக்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்.  குமரன் காலனியில் நடந்த முதல் கட்ட சுற்றுகளில் தேறியிருந்தார். அக்காவோடு ஒன்றிரெண்டு போட்டிகளில் பார்த்திருக்கிறேன்.  ஜிம்மிலே நிறைய நேரம் எக்ஸைர்ஸ் பண்ணிக் கொண்டே இருப்பார் எனச் சொல்லியிருக்கிறாள். ‘ஏங்க்கா,  மாமா ரொம்ப ஸ்ட்ராங்கோ.  ஜல்லிகட்டுக்கெல்லாம் போவாரா?  மாடு படம்லாம் போட்டிருக்காரே’ ‘அது அவங்க மாஸ்டர் ஜப்பான்ல நிறைய மாடு பிடிச்சிருக்காராம். அதனால இவங்கள்லாம் அப்படி படம் வச்சுப்பாங்களாம்.  இவர் கையால மாட்டைப் பிடிக்கவே வேணாம்.  இந்த சிகரெட் நாத்தத்துக்கு அதுவாவே ஓடிரும்’ ‘உவ்வே… என்னா ஸ்மெல்லு இது? பீடி நாத்தம்விட கேவலமா இருக்கு. அவரால மட்டும் எப்புடி பொறுத்துக்க முடியுது?’ ‘அவருக்கு எந்த வாசனையுமே தெரியாதுடா.  அஸ்னோமியாவோ கெஸ்னோமியாவோ… அப்படின்னு ஒரு வியாதி.  நாக்கு மூக்கு எதுவும் ஸ்மெல் தெரியாம மரத்து போயிரும்.  செண்டு மல்லி, சாணிப்பூ எல்லாம் ஒண்ணுதான் அவருக்கு’  அக்கா அதை வெகு சாதாரணமாக சொல்லிக் கொண்டே வாடிப் போயிருந்த கனகாம்பரத்தை சரமாக தொடுத்துக் கொண்டிருந்தாள். பிறகு ஆடிப்பிறப்பு, விளக்குபூஜை, முளைப்பாரி என்று ஒவ்வொறு விசேஷமாக கம்பன் நகரத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தாள்.  இரண்டு வருடங்களில் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டே வந்த போது கம்பன் நகருக்கே முழுவதுமாக திரும்பிவிட்டாள்.  அக்காவின் புறங்கையில் இருந்த சூட்டு தழும்புகளைப் பார்த்துவிட்டு அத்தாச்சியும், மாமாவும் புலம்புவதை நிறுத்திக் கொண்டார்கள்.  சிகரெட் சூடாம் அதெல்லாம். அக்காவின் ரொட்டீன் மீண்டும் ஆரம்பித்தது.  பாதாளிக்கு பூ போடுதல், பள்ளிக்கு நடை, வாரசந்தை, நாட்டியம், நாடகம் என்று பழைய அக்காவாகி விட்டாள். ‘சீதை காட்டுக்கு போகனும்னு வந்தப்ப அவளுக்கு பதிலா அவள் நிழல்தான் போச்சாம் குட்டி. சண்டைல்லாம் முடிஞ்சு திரும்பி வந்ததும் சீதை பழயபடிக்கு ஆயிட்டாளாம்.  அந்த மாதிரி இவ்வளவு காலமும் எல்லாம் நிழலாவே இருந்திருக்கலாம் நானு.’ சில சமயம் வள்ளிநாயகம் மாமா வந்து ஓரிரெண்டு நாட்கள் இருந்துவிட்டுப் போவார்.  பூக்கடை குணசீலனிலிருந்து டீக்கடை அழகர் வரை என்னைத் தனியாகப் பார்த்தால் ‘அப்புறம் அக்கா என்ன செய்யுது?  மாப்பிள்ள வந்தாரா?’ என்று கர்மசிரத்தையாக கேட்டுவிட்டு குறுகுறுப்பாக பார்ப்பார்கள். அவர் வரும்போதெல்லாம் அந்த நாத்தம் பிடித்த சார்ம்ஸ் சிகரெட்டு புகையும் வந்துவிடும். அடுத்து நான்கைந்து வருடங்களுக்கு ஸ்கூல்தான் அக்காவின் உலகமாகிப் போனது.  ஷேக்ஸ்பியர் நாடகங்கள், டான்ஸ் புரோகிராம்கள், பேச்சுப் போட்டிகள் என்று நிறைய செய்தாள். நான் ப்ளேகிரவுண்டை விட ஆடிட்டோரியமில் அவள் பின்னால்தான் அதிகம் சுற்றிக் கொண்டிருந்தேன்.  எம்டிஎஸ் டிரான்ஸ்போர்ட் முதலாளி திருவேங்கடத்திற்கு அக்காவை பெண் பார்க்கிறார்கள் என்று  கேள்விப்பட்டபோதுதான் அக்காவின் திருமணம் முற்றிலுமாக முறிந்து போயிருந்ததை உணர்ந்தேன்.  பஸ் கம்பெனி முதலாளியின் மூத்த பெண்ணிற்கு என்னை விட இரண்டு வயது அதிகம். அவருக்கா அக்காவை  பெண் கேட்கிறார்கள்?  அடுத்த சில மாதங்களில் அக்காவிற்கு இரண்டு, மூன்று இடங்களில் சம்பந்தம் பார்த்து தட்டிப் போய்விட்டது.  அந்த வரன்களில் ஸ்கூல் கரெஸ்பாண்டன்ட்டின் சொந்தக்காரர், அம்பத்தி மூணு வயதுக்கார தாத்தாவும் ஒருவர். [collage-drawing-6-chitran] பூ வாசனைகளும், மத்தாப்பு சிரிப்புகளும், கம்பீர தோற்றத்தையும் தாண்டி அக்காவை நெருக்கமாக நான் உணர்ந்திருந்த காலம் அது. அக்காவின் மனதில் இருக்கும் அந்த கனவு நாயகன் யாராக இருக்கும் என்று ரொம்பவும் யோசித்திருக்கிறேன்.  அக்கா இந்த வரன்கள் பற்றி பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. ‘குட்டி, ப்ரிட்டோ ஸ்கூல்ல டான்ஸ் புரோகிராம் இருக்கு. கிரிக்கெட்டு, கீரைக்கட்டுன்னு ஓடிடாத…’. முனைவூர் சம்பந்தம் ஒன்று தகைந்தது என்று  பேச்சு வந்தபோது நான் வீட்டை விட்டு, கம்பன் நகரை விட்டு,  ஏன்… மதுரையை விட்டே ஓடிப்போய் இருந்தேன். பத்தாம் வகுப்பு தேர்வு சமயம் அது.  ஏகத்துக்கு கொந்தளித்துக் கொண்டிருந்த மனதோடு படிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த காலம் அது.. பரீட்சைக்கு ஒருவாரம் இருக்கும் போது வெளித்திண்ணையில் டிராயிங் நோட்டை வைத்துக் கொண்டு ஏதேதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்.  புத்தகம் பக்கமே கவனத்தை திரும்ப முடியவில்லை.  நடு இரவில் ஆறிப்போன டீயை குடித்துவிட்டு கண்ணயர்ந்த போதுதான்…. ‘குட்மார்னிங்’ என்று குரல் கேட்டது.  திடுக்கிட்டு விழித்துப் பார்த்தால் இருட்டில் சில்-அவுட்டாக அக்கா ‘பன்ணெண்டு மணிக்கு மேல ஆயிடுச்சுப் பாரு.  உள்ள போயி தூங்குடா’ மலங்க மலங்க பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன். ‘சார் பெரியாளாயிட்டீங்களோ. ஆளையே பார்க்க முடியலயேடா. அடுத்த வருஷம் பேண்ட்டெல்லாம் போட்டுகிட்டு ப்ரிட்டோ ஸ்கூலுக்கு போயிடுவியாடா?’ தேனம்மை ஸ்கூல் ஹை ஸ்கூல்தான்.  பத்தாவதோடு சரி. ‘போய்த் தூங்கு.  காலைல படிச்சாதான் எஃபெக்டிவ்வா இருக்கும்’ கை தூக்கி எழுப்பி விட்டாள். மகிழம் பூவின் மணம் அப்படியே அடர்ந்து கொண்டே வந்தது. நறுமனங்களின் சேர்க்கையில் பக்குவங்கள் பற்றி பின்னாளில் நிறைய படித்திருக்கிறேன்.  அது ஒரு இசைதொகுப்பு போலத்தான் என்பார்கள்.  மேலே மல்லிகை வாசம் படர்ந்திருந்தாலும், அடியாழத்தில் ஒரு சந்தன வாசனை அப்படியே கிறுகிறுக்க வைத்தது.. லேவண்டர் வாசனை ஊடாக நிரம்பியிருக்க, அடர்த்தியான மணம் நாசியில் ஒவ்வொரு பிரியாக சுற்றிக் கொண்டது.  அவள் கிளம்பிப் போனபிறகும், கட்டவிழ்ந்து கிடந்த நறுமனப் பிரிகளில் அவள் நிழல் நீண்டு கிடந்தது. அந்த நிழல்தான் அதுவரையிலும் நிஜமாக இருந்தது என்று ஓங்கி கத்தவேண்டும் போல் இருந்தது. பரீட்சை எழுதப் போகவே முடியவில்லை.  சூரியனைப் பார்க்க அஞ்சிய குந்தி போல் பயந்து கொண்டிருந்தேன்.  ஸ்கூலுக்கு பதிலாக கொய்யாதோப்பில் சுற்றிக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன்.  ஐயப்ப நாடார் கடையில் வைத்து செல்வக்குமார்தான் முனைவூர் சம்பந்தம் பற்றி ஏதோ கிண்டல் பேசினான்.  கடை வாசலில் இருந்த அடிபம்ப்பை இடித்து தள்ளிக் கொண்டு இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டோம். செங்கல்லால் அவன் மண்டையை உடைத்து விட்டு, சென்னைக்கு லாரி ஏறிவிட்டேன். சமுத்திரத்தில் விட்ட எல்லா படகும் கவிழ்ந்தா போகிறது? அல்லாடி தள்ளாடி ஏதோ ஒரு கரை சேர்ந்து விடுகிறதே. பாதாளி அம்மன் எங்கோ நின்று புன்னகைத்து கொண்டுதான் இருக்கிறாள். பதினாறு வருடங்களும் ‘என்னை நான் நிரூபிப்பேன்’ என்று சொல்லிக் கொண்டே இருந்ததின் பயனாக, என் முதல் ஓவியக் கண்காட்சி சென்னையில் நடந்தது.  இதோ போன வாரம் என்னுடைய நான்காவது ஓவியக் கண்காட்சி ‘பஞ்ச கன்னிகா’ பெங்களூரில் வெற்றிகரமாக நடந்தேறியது.  சிறப்பு அழைப்பாளராக ஹெய்தி பவல்ஸ் வந்திருந்தார்.  ‘Sita and Radha in Scripture and on Screen’ என்ற தன் புத்தகத்தை முன் வைத்துப் பேசினார்.  ‘இதோ நானும் இரண்டு கால்களில் எழுந்து நின்று விட்டேன்’  என்று கர்வப்பட்டுக் கொண்டேன். பாதாளி அம்மனை ஒருமுறை பார்க்க போக வேண்டும் என்று மனசு ஓயாமல் அடித்துக் கொண்டிருந்த வேளையில், ஃபேஸ்புக்கில் தேனம்மை டிரஸ்ட்டின் பொன்விழா என்று விளம்பரம் காணக் கிடைத்தது.  அப்படியே அடைத்து வைத்த எல்லா நினைப்புகளும் பொத்துக் கொண்டு கரைபுரண்டு ஓட, கிங்ஃபிஷர் பிடித்து மதுரை வந்து, கம்பன் நகருக்கு வந்துவிட்டேன்.  பதினாறு வருடங்களில் பொண்ணு வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோ என்று, கம்பன் நகர் ஏகத்துக்கு மாறியிருந்தது. பாதாளி கோவிலை தரையில் தேட அவசியமில்லாமல் அமர்த்தலான கட்டிடமாகவே நிமிர்ந்திருந்தது. உள்ளே அம்மனுக்கு சிலையெல்லாம் கூட எடுத்திருந்தார்கள். சென்ற வருடம் கும்பாபிஷேகம் ஆகிவிட்டது என்று சொன்னார்கள். ஸ்கூலும் பெரிதாகியிருந்தது.  மேற்கு பக்கம் இருந்த சின்ன ப்ளேக்ரவுண்டில் புதிய ஆடிட்டோரியம் கட்டியிர்ருந்தார்கள்.  நான் உள்ளே நுழைந்தபோது மேடையில் நாட்டிய நாடகம் நடந்து கொண்டிருந்தது. [collage-drawing-7-mohandoss] ‘ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்… ‘  வால சரிதை நாடகம் என்றுப் படித்த நினைவில் இருக்கிறது.  மேடையில் சீலையும், கச்சுமாக அந்தப் பெண் கண்ணனைத் தேடி அபிநயித்துக் கொண்டிருந்தாள்.  அழகான கண்களில் அகலமாக மையெழுதி, சொப்பு வாயோடு கண்ணனைத் தேடி அவள் சுற்றி சுற்றி வருகிறாள்.  தனியாகத்தான் ஆடுகிறாள்.  ஆனால் அவள் சுட்டுகின்ற இடத்தில் எல்லாம் கண்ணனும், இதர ஆய்ச்சியரும் தோன்றி தோன்றி மறைகின்றனன்.  குட்டிக் கண்ணனைத் தேடிப் பிடித்து மாலையைப் போடுகிறாள்.  அவனோ சிரித்துக் கொண்டே அடுத்த மூலைக்கு ஓடிவிடுகிறான்.  ஒன்று இரண்டாகி, நான்காகி மேடை முழுவதும் ஆய்ச்சியர் கண்ணனைத் தேடி ஓடுகிறார்கள். ‘நம் பின்னைதானாம் என்றே ஐ! என்றாள் ஆயர் மகள்’ என்று மாதரி சொல்ல நப்பின்னை சுழன்று சுழன்று ஆடுகிறாள்.  அடேயப்பா.  அவள் மேலிருந்த கண்ணை எடுக்க முடியவில்லையே. நப்பின்னையும், ஆய்ச்சியரும் கண்ணனின் மேலிருந்த பிரேமையில் பரவசமாக ஆடுகின்றனர்.  இப்படிப்பட்ட சுற்றமும், கூட்டமும் கிடைக்க அந்த குட்டிக் கண்ணன்தான் என்ன தவம் செய்தானோ என்று விம்மிப் போனது மனது. நாடகம் முடிந்ததும் பக்கவாட்டு மேடையிலிருந்து ஒரு பையன்  ‘தட் வாஸ் ஆய்ச்சியர் குரவை ஃபார் யூ’ என்று அறிவிக்க, கரகோஷங்களும், விசில்களும் பறக்கிறது.  குமிழ் சிரிப்போடு நப்பின்னை இரண்டடி முன்னே வைத்து, குனிந்து வணக்கம் சொல்கிறாள். ‘எனாக்ட்டட் பை கே.மீனாட்சி’ கொஞ்சம் இடைவெளி ‘டாட்டர் ஆஃப் அவர் பிலவ்ட் டீச்சர் கற்பகம் மேம்’ மீண்டும் கரகோஷம்.  பொலபொலவென ஆகிவிட்டது மனம்.  அப்படியே அந்தப் பெண்ணை பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.  இங்குதான் எங்காவது ஒரு மூலையில் அக்காவும் இருப்பாள்.  ‘குட்டி’ என்று குழைவாகக் கூப்பிடப் போகிறாள் என்றுத் தோன்ற பரபரப்பாக திரும்பி வெளியேறுகிறேன்.. [linesep] 3 ரோஸ் மில்க் [vimalathiththa mamallan]   விமலாதித்த மாமல்லன் ”உங்கள் திரை உலகனுபவங்களைப் பற்றி கட்டுரை ஏதேனும் தர முடியுமா? வித்தியாசமாக இருக்குமே…” என்று கேட்டவுடன், ‘ஒரு புதிய கதை எழுதத் தொடங்கியிருக்கிறேன். அதையே தருகிறேன்’ என்று அன்புடன் சொல்லிவிட்டார். பிறகு அதுவே நாவலாக விரிந்து விட்டது.  சுந்தரராமசாமி, பிரமிள் தலைமுறையைச் சேர்ந்தவர். இன்றைக்கும் முக்கிய இலக்கிய ஆளுமையாக இருக்கிறார். [1985-86ல் தேசிய ஒருமைப்பாட்டிற்காக பாபா ஆம்தேவின் தலைமையில் மேற்கொண்ட இந்தியாவைஇணைத்துக்கட்டு என்கிற சைக்கிள் பயண அனுபவத்தை அடிப்படையாய் வைத்துஎழுதிக்கொண்டிருக்கும் ’சக்கரம்’ என்கிற நாவலின் ஒரு அத்தியாயம்] [linesep] முகப்பு வளைவை ஒட்டிய இடப்பக்கச் சுவரில் தோட்டாக்கள் சல்லடையாய் துளைத்திருந்த அடையாளங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்  அப்படியே இருந்தன. பயம் நினைவில் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவும் வஞ்சம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பாலும் வடுக்கள் மறைந்துவிடாதவண்ணம் பதற்றத்துடன் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அரைமணி நேரத்திற்கு ஒருமுறை புகைப்பவன், நாள் முழுக்க சிகரெட் பிடிக்காமல் இருக்கவேண்டியிருப்பது எவ்வளவு சிரமம் என்பது எல்லோருக்கும் சுலபத்தில் புரியக்கூடிய விஷயமில்லை. கடைசி சிகரெட்டைப் பிடித்தது, விடியற்காலை நான்கு மணிக்கு. தற்காலிகக் ’குழி கக்கூஸ்’களுக்குத் துணி மறைப்பு நடுவதற்கான இரும்புக் கம்பங்கள், காடாத் துணிகள் இன்னபிற தட்டுமுட்டுச் சாமான்களையும் ஏற்றிசெல்லும் டிரக்குக்குப் பின்புறமாய் மறைந்து நின்று, ரிடையர்டு கர்னல் ரேகேயின் கொள்ளிக் கண்ணுக்குப் படாதவண்னம் பிடித்த சிகரெட்தான் கடைசி. ஒட்ட இழுத்திழுத்து நிகொடினின் மஞ்சள் படிந்த சுட்டு நடுவிரல்களைக் கொண்ட கையும் வாயும் சிகரெட்டுக்காக நமநமத்துக் கொண்டிருந்தன. இரவு ஏறிக்கொண்டிருந்தபோதிலும் வரிசைவரிசையாய் அறைகளைக் கொண்ட நீண்ட மாடி வராண்டாவின் கோடியில் இருந்த கக்கூசில்கூடப்போய் புகைக்க வழியில்லை. காரணம் தங்கவைக்கப்பட்டிருந்தது சீக்கியர்களின் புனித இடமான பொற்கோவில். பொற்கோவிலைச் சுற்றி பீடி சிகரெட் போன்ற லாகிரி வஸ்துக்களை உபயோகிக்கத் தடைசெய் என்கிற கோரிக்கையாய் முளத்த சிறிய போராட்டம் கணக்கற்ற உயிர்களைக் காவுகொண்டுவிட்டிருந்தது. முடிவற்ற பெரும் போர் போல தொடர்ந்துகொண்டிருந்தது. போர் வேண்டாம். போரில் ஜெயிப்பு தோற்பு இல்லை. இழப்பு மட்டுமே உண்டு என்கிற அமைதிக்கான குரல்கள் வரிசையாய் சைக்கிள் மிதித்தபடிக் கூவிக்கொண்டு கன்யாகுமரியில் இருந்து காஷ்மீரை நோக்கி ஊரூராய் சென்றுகொண்டிருந்ததில் இடைவழித் தங்கலில் ஒன்றுதான் பொற்கோவில். சாலையில் சக்கரங்கள் உருளத்தொடங்கி, பக்கம்பக்கமாய் நூறு நாட்களைத் தொட்டுக்கொண்டிருந்தது. அட்டவணைப்படி ஜம்முவைத்தொட இன்னும் சில நாட்களே இருந்தன. காலையில், பொற்கோவிலுக்கு வரும்போது நன்கு வெயிலேறிவிட்டிருந்தது. வளாகத்தின் நுழைவு வளைவின்மேல், உப்பரிகை போல் தோற்றமளித்த இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு மெஷின்கன் நீட்டிக்கொண்டிருந்தது. அதைப் பிடித்தபடி ராணுவப் பச்சையில் உடையணிந்த வீரர் உட்கார்ந்திருந்தார். தொலைவிலிருந்தே மெஷின்கன் மூட்டமாய்த் தெரியத்தொடங்கிவிட்டிருந்தது. முதலில் கவனித்த சைக்கிள்கள் ஒன்றோடொன்று கிசுகிசுத்துக்கொள்ள அனைத்தும் தலைதூக்கிப் பார்த்தபடி பிரதான வாயிலுக்குள் நுழைந்தன. பச்சை சீருடை சலனமற்ற முகத்துடன் கீழே பார்த்துக்கொண்டிருந்தது. தோளில் போடப்பட்ட ஜடையாய்ப் பக்கவாட்டில் தோட்டாக்கள் சரமாய்த் தொங்கும் மெஷின்கன்களை, ஆங்கில போர்ப்படங்களில்தான் அதற்கு முன்பாகப் பார்த்திருந்ததாக நினைவு. சினிமாக்களில் எப்போதுமே மெஷின்கன்னுடன் மேலே உட்கார்ந்திருப்பவன் வில்லனாகவும் கீழிருந்து, எதன் பின்னாலாவது ஒளிந்தபடி சின்ன கைத்துப்பாக்கியால் உச்சிக் கொட்டகையில் உட்கார்ந்திருப்பவனை சுட்டுச் சாய்ப்பவன், நாயகனாகவுமே இருப்பான். வில்லன் வீழ்ந்ததுமே, நாயகனோடு அடையாளப்படுத்திக்கொண்டு ஒன்றிப்போயிருக்கும் பார்வையாளக் கூட்டத்தோடு சேர்ந்து நர்சிக்கும் உற்சாகம் பிய்த்துக்கொள்ளும். பொற்கோவில் நுழைவில் இருந்த இயந்திரத் துப்பாக்கியும் அதன் குறி பதிந்த இடங்களும் எதிரெதிர் அணிகளில் இருந்தாலும் நாயக வில்லனாய்த் துல்லியமாய்ப் பிரிக்கமுடியாதவையாய் இருப்பதாகத் தோன்றியது. சைக்கிள்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டிருந்த மாடி அறைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்பது, தோளில் தொங்கிய கெட்டிச்சணலாலான குடிதண்ணீர்ப் பையைத் தூக்கிக் குடித்துவிட்டுக் சுவரோரமாய்க் கீழே வைக்கையில்தான் மண்டையில் உறைத்தது.  பயம்தான், எதையுமே நினைவில் பதியவிடாமல் அனிச்சையாய் இயக்கிக்கொண்டிருந்தது போலப்பட்டது. அறைக்கு வெளியில், நீளமான பால்கனிக்கு வந்து நின்றான். வந்த வழியைப் பார்த்தபோது, ஒன்றரை வருடத்திற்குமுன் அங்கே நுழைந்த ராணுவம், ஒரு ஆளை மட்டும் அங்கேயே விட்டுச் சென்றுவிட்டதுபோல் சற்றுத்தொலைவில் மெஷின்கன்னின் விறைத்திருந்த முதுகு தெரிந்தது. வளாகத்தின் உள்ளே பெரிய குளமும் நீருக்கு நடுவில் பொற்கோயிலும் தகதகத்துக்கொண்டிருந்தன. ஆனால் பார்வை என்னவோ மறுபடியும் அந்த மெஷின்கன் மனிதர் மீதே திரும்பப்போய் பதிந்தது. அநேகமாக அந்த ஆளை அண்ணாந்து பார்க்காமல் உள்ளே ஒரு சைக்கிள்கூட நுழையவில்லை என்று பட்டது. அவர்களுக்குள்ளான சளசளப்பற்ற அமைதிப் பார்வையிலேயே பயம் மெழுகப்பட்டிருந்தது. அறைக்குள் இருந்தவர்கள் சுவரில் துவண்டிருந்தார்கள். வெயிலில் சைக்கிள் மிதித்து வந்ததன் அயர்ச்சிமட்டுமே அதற்குக் காரணம் இல்லை. ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கையில், அனந்த்பூர் சாகிப்புக்குள் முதுகெலும்பு சில்லிட நுழைந்தபோது உண்டான பயமே அறிவுருத்தலாய் வடிவெடுத்திருக்க வேண்டும். உக்கிரப்போரின் முக்கியக் கேந்திரத்திற்குள் செல்கிறோம், முடிந்த அளவு தனியே செல்வதைத் தவிருங்கள். வெளியில் செல்லவே செல்லதீர்கள். எதிர்படுபவர்களிடம் பார்த்துப் பக்குவமாகப் பேசி நடந்துகொள்வது நல்லது என்று முந்தைய நாள் கொடுக்கப்பட்ட அறிவுரைகள் வேறு பீதியைப் பெரிதுபடுத்திவிட்டிருந்தன. உண்மையில் சொல்லப்போனால், பஞ்சாப்புக்குள் நுழைவதற்கு முன்னால் இருந்த மிரட்சி, நுழைந்தபின் ஒவ்வொரு ஊரிலும் கிடைத்த உற்சாக விருந்தோம்பலில் மறந்தே போயிருந்தது. எந்த மாநிலத்திலும் இல்லாத வண்ணம், பஞ்சாப்பில் மட்டும், சென்ற ஊர்களில் எல்லாம் தினத்திற்குக் குறைந்தது இரண்டுவேளை வரவேற்பும் உணவும் தின்பண்டங்களுமாய் அப்படியொரு உபசரிப்பு. போதும்போதுமெனச் சொன்னதையும் மீறி, தட்டில் விழுந்த ஜிலேபியைப் பார்த்துப் பக்கத்தில் அமர்ந்திருந்த சுதிர், ஒன்றா தோட்டாவால் சாவு இல்லையேல் இனிப்பால் சாவு என்று லூதியானாவில் சொன்னது நினைவுக்கு வந்தது. பஞ்சாப்புக்குள் நுழையப்போகும் முன்தினம், அம்பாலாவில் அந்த இரவு உண்டாக்கிய கிலி கொஞ்சநஞ்சமன்று. உணவுக்குப்பின் அவசரமாகக் கூடச்சொல்லி அழைப்பு வந்தது. வழக்கத்திற்கு மாறான அவசர அழைப்பு என்று அறிவிக்கப்பட்டது, அந்த அழைப்பே நர்சியையும் சுதிரையும் விசேஷ பார்வைகளைப் பறிமாரிக்கொள்ள வைத்தது. சுதிரின் பார்வையில் பயமும் கூடவே நக்கலும் இருந்ததுபோல் நர்சிக்குப்பட்டது. பாபா உற்சாகமின்றிக் காணப்பட்டார். கர்ஜனையின்றி கவலையின் கீறல் விழுந்த குரலில், சாத்தியோ(ன்) என்று செருமிக்கொண்டு பேசத் தொடங்கினார். அம்பாலாவிலேயே பத்துப் பதினைந்து நாட்கள் தங்க வசதி செய்துகொடுக்கிறோம். நிலைமை மிகவும் பதற்றமாக இருக்கிறது. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நிலவரம் சரியாகிக் கட்டுக்குள் வரட்டும். அப்புறம் பஞ்சாபுக்குள் நுழையலாம் என்பதுதான் செய்தி. பாபா அதை அறிவித்ததுதான் தாமதம். ஒரே கூச்சலும் குழப்பமுமாய் ஆவேசக் குரல்கள் முட்டிமோதி எழுந்தன. பெண்சாயல்நடை காரணமாய் பிரசித்திபெற்றிருந்த பேராசிரியர் காயர்க்கர் சட்டை பட்டன்களைக் கழற்றாத குறையாக முதல் ஆளாக நான் போகத்தயார் முதல் குண்டு வாங்கி சாகத்தயார் போன்ற வீர வசனங்களைப் பேசத் தொடங்கிவிட்டான். இதுவே வேறொரு சமயமாய் இருந்தால் வெடித்து சிரித்துவிட்டிருக்ககூடிய நர்சி சுதீரை கவலையுடன் பார்த்தான். அவன் பெருமூச்சுவிடுவது தெரிந்தது. கூட்டத்தை அமைதிப் படுத்திவிட்டு பாபா கூறினார். நாம் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பது சாவதற்காக அன்று. அர்த்தமற்ற வன்மத்தில் சண்டையில் மாட்டிகொண்டு உயிர்கள் பலியாவதைத் தடுப்பதற்காகவே உடலை வருத்திக்கொண்டு வந்துகொண்டு இருக்கிறீர்கள். ஆகவே கொந்தளித்து ஆவேசமாய்ப் பேசுவதைவிடவும் விவேகமாய் யோசிப்பதே இப்போதைய அவசியம். என் உயிருக்கு மட்டுமன்று உங்கள் உயிருக்கும் சேர்த்தே நான் பொறுப்பு. அதேசமயம் எல்லோருக்குமாய் சேர்ந்த முடிவை நானே எதேச்சையாய் எடுக்கவும் விரும்பவில்லை. உங்கள் கருத்தையும் தெரிந்துகொள்ளவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. எனவே அமைதியாகவும் தனித்தனியாகவும் அவரவர் கருத்தைக் கூறுங்கள். திரும்ப ஆளாளுக்கும் ஒரே சமயத்தில் பேசத்தொடங்கி, பெண்களும் சேர்ந்துகொள்ள ஒரே களேபரம். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த மாத்தூர் கோஷ்டி நடப்பதைக் கண்டு தலையைக் குனிந்தவண்ணம் நகைத்துக் கொண்டிருந்தது. மாத்தூர், ராஜஸ்தான்காரர். பத்திரிகையாளர். அரிதாக ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கி ஹிந்திக்குத் தாவி விடுவார். தீவிர இடதுசாரி அரசியல்சார்பு கொண்டவர் என்று கேள்விப்பட்டிருந்தான். நிதானமான ஆள், மந்தமற்ற முதிர்ந்த மனிதர் என்கிற எண்ணமே மனதில் அவரைப்பற்றி உருவாகி இருந்தது. நர்சி அவரைப் பார்த்த சமயத்தில் அவரும் பார்க்கப்போக உதட்டைப் பிதுக்கினார். லெஃப்டினெண்ட் கர்னல் ரேகே சுவரோரம் சாய்ந்தபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பாபா எதிரில் அவர் அநேகமாய் பேசுபவரே அல்ல. பலமணி நேரம் ஆகிவிட்டபடியால் சிகரெட்டுக்காக கையும் வாயும் பரபரத்தன. பத்து நாளைக்கு ஒருமுறை வரும் சைக்கிள் மிதிக்கு ஓய்வளிக்கும் தினமாய் மறுநாள் இருந்தது அதிகாலையில் அரக்கப்பறக்க எழவேண்டிய அவசியமில்லை. அடுத்த நாள் தங்கல் அநேகமாய் இந்துக் கோவில் ஒன்றில்தான் எனக் கேள்விப்பட்டிருந்தான். நாளைக்கு ஜாலியன்வாலாபாக் போவது என மனதிற்குள் தீர்மானித்திருந்தான். கிட்டத்தட்ட எல்லோரும் படுக்கைக்குப் போயாகிவிட்டது. வழக்கம்போல சுதிர் ஏதோ புத்தகத்தைப் பிரித்துக்கொண்டு சுவரில் சாய்ந்திருந்தான். ஏப்ரலின் முதல்வார இரவு, எனினும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்ததும் மெட்ராஸின் மார்கழியாய் சில்லென்றிருந்தது. அநேகமாய் ஆள் நடமாட்டமே இல்லை. வளாகத்தின் பிரதான வழிக்கு அந்தப்பக்கம் இருந்த லங்கரில் அப்போதும் விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. தலைப்பாகையில்லாத இரண்டொருவர் ரொட்டி தின்றுகொண்டு இருந்தனர். வள்ளலாரின் வடலூரைப்போல இங்கேயும் இன்னொரு அடுப்பு இருந்தது போலும். மதிய உணவிற்காக சுதிருடன் லங்கரில் போய் உட்கார்ந்தபோது கேட்காமலே ரொட்டி வந்து தட்டுகளில் விழுந்துகொண்டே இருந்ததைக்காண வியப்பாய் இருந்தது. கோவிலுக்குப் போவோரும் வருவோரும் சரசரவென நடமாடிக்கொண்டிருந்த வேகத்தைப் போலவே ரொட்டிகளும் வந்துகொண்டே இருந்தன. இரண்டு ரொட்டியை நிதானமாகத் தின்பதற்குள் வயிறு நிறைந்துவிட்டிருந்த்து. அந்த ரொட்டிகளைத் தின்பதால்தான் அவர்கள் திடகாத்திரமாக இருக்கிறார்களோ என்றும் திடகாத்திரமாய் இருப்பவர்களே அந்த ரொட்டியைத் தின்ன முடியும் என்றும் பட்டது. அதை சுதிரிடம் கிசுகிசுப்பாய்ச் சொல்லவும் பின்னே சர்தார் என்றால் சும்மாவா என்று கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்து அடித்தாலும் மரன அடி கொஞ்சினாலும் மூச்சு முட்டும். ஜாக்கிரதை இன்னொரு ரொட்டி வந்து விழுந்துவிடப்போகிறது  நர்சி என்றபடி சிரித்தான். எப்படி இவ்வளவு பெரிய சிடுக்காகிப்போனது என்பதுதான் புரியவே இல்லை. மதிய உணவிற்குப்பின் கோவிலைச் சுற்றிப்பார்க்கப் போனபோது, பல இடங்கள் தோட்டா வடுக்களைத் தாங்கியவண்ணம் இருந்தன. பொதுமக்கள் யார் போலீஸ் யார் தீவிரவாதிகள் யார் என்று பிரித்துப் பார்க்கவே இயலாதவாறு எல்லோரும் தலைப்பாகைகளுடன் வளைய வந்துகொண்டிருந்தனர். சைக்கிள் பயணிகள் யாரும் எதையும் யாருடனும் விவாதிக்கவேண்டாம் என்று ஏற்கெனவே அதிகாரபூர்வமற்று அறிவுருத்தப்பட்டிந்ததன் காரணம் புரிந்தது. அகால் தக்த்தை நெருங்கும்போதே பிந்திரன்வாலே எங்கே உட்கார்ந்திருந்தார் ராணுவம் எப்படி நுழைந்தது என்று ஆங்கிலப் பத்திரிகைகளில் படித்ததையும் படங்களாய்ப் பார்த்ததையும் நின்று நிதானித்து கைகளை உயர்த்திச் சுட்டிக்காட்டி விளங்கிக்கொள்ள முடியவில்லை. யுத்தபூமியாக அது மாற்றப்பட்டிருந்தாலும் அவர்களின் கோவில் அல்லவா? போரின் சுவடுகளைச் சுற்றுலாப் பயணிகள்போல் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? இதுகள் ஏன் இங்கே வந்திருக்கின்றன என்று வேண்டா வெறுப்பாய் எல்லோரும் பார்ப்பது போலப் பட்டது. சண்டிகர் சாலையில், ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ என்று கோஷமிட்டு மெல்ல நகர்ந்துகொண்டிருந்த சைக்கிள்களுக்கு இடையில் புகுந்து சாலையைக் கடந்த கன்னியமான தோற்றத்தில் இருந்த நரைமுடிக்காரர் ஃபெவிகால் லகாவ் என்று சொல்லிவிட்டுப்போனது நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, கட்டிலில் படுத்திருந்த பாபா ஆம்தேவிடம், யாருக்காக இந்த சைக்கிள் பயணம், இந்துக்களான இவர்களே இப்படிப் பேசுகிறார்களே என்று சிலர் கோபப்பட்டனர். அதற்காகத்தான் இந்தப்பயணம் என்று பாபா ஆம்தே அமைதிப்படுத்தினார். ஆனால் அம்பாலாக் கூட்டத்தில் பாபாவின் குரலில் தெரிந்த கலவரத்திற்குக் காரணம்,  தற்போது நிலவரம் சரியில்லை, பத்துப்பதினைந்து நாட்கள் கழித்து பஞ்சாப்புக்குள் வாருங்கள் என்று முதலமைச்சர் சுர்ஜித் சிங் பர்னாலாவே கேட்டுக்கொண்டதுதான் என்று பின்புதான் தெரிய வந்தது. உள்ளூர் பத்திரிகைகளின் முதல் பக்கத்தை படுகொலைச் செய்திகள் மட்டுமே ஆக்கிரமித்திருந்தன. ஆவேசமாய் எழுந்த குரல்களில் அநேகமாய் பயணத்திற்கு இடைக்காலத்தடை விதிக்க பலத்த எதிர்ப்பு மட்டுமே இருந்ததன்றி, நிலைமையின் தீவிரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்ட குரல்கள் மவுனமாகவே இருந்தன. கன்யாகுமரியில் தொடங்கியபோது தீர்மானித்திருந்த அட்டவணைப்படி ஏப்ரல் 9ஆம் தேதி ஜம்முவை அடைந்தே தீருவோம் அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதே இறுதிமுடிவாய் அறிவிக்கப்பட்டது. கூட்டம் ஆரவாரத்தில் கைதட்டி குதூகலித்தது. பயணிகளில் பெரும்பாலோர் இருபதை ஒட்டிய வயதுடையவர்கள். பெரும்பாலும் மராட்டியர்கள். சமூகத்தொண்டாற்றும் ஆர்வத்திலும் பாபாவின் மேலிருந்த ’பக்தி’யிலும் கிளம்பி வந்தவர்கள். சட்டை பட்டன்களைப் பிய்த்துக்கொள்ளாத குறையாய் அந்தக்கணமே குண்டுவாங்கத் தயாராக இருந்த காயர்க்கர், தான் ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்கிற நினைவே இல்லாது குஷியில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தான். சட்டெனப் பிண்டு எங்கே இருக்கிறான் எனப் பார்க்கத் தோன்றியது. சைக்கிள் பயணத்தின் ஒரே சீக்கியப் பிரதிநிதி, பிண்டு என்கிற மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மஞ்சித் சிங்.உச்சிக் கொண்டையை வெட்டிக் கிராப்பாக்கிக் கொண்டிருந்தான். ஏன் எனக்கேட்டபோது, ஐ நாட் லைக் நர்சி என்றான். திரும்பிப் போகையில் வீட்டாருக்கு என்ன பதில் சொல்லுவாய் என்றதற்கு, பாரதத்தை ஒன்றிணை என்றபடி பஞ்சாப்புக்குள் நுழைந்தவன் சர்தார் எனத் தெரிந்தால் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விடுவார்கள் என பயமாக இருந்த்தால் வெட்டிவிட்டேன் என்று பயமுறுத்திக் கடிதம் போட்டுவிட்டதாய்க் கூறிச் சிரித்தான். அவன் எங்கே என்று கூட்டத்தைத் துழாவினான் நர்சி. ஐ லைக் ஸ்ரீதேவி என்கிறவிதமாய்த் தமிழ்நாட்டை அறிந்திருந்த பிஞ்சுப் பயல் ஓரமாய் சுவரில் சாய்ந்து தலைகுனிந்தவண்ணம் இருந்தான். வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்த மாத்தூரையும் சுதிரையும் பார்த்தான். இருவர் முகங்களிலும் இறுக்கம் இளகக்கூட இல்லை. பாபா வலிந்து வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன் இருப்பதாய்ப் பட்டது. மராட்டியப் புலி என்று சிலிர்த்து சீறியவை எல்லாம் எமெர்ஜென்சியில், இருக்கிற இடம் தெரியாமல் பூனையாகிக் கிடந்தபோது, துணிவாக எதிர்த்துக்குரல் கொடுத்த சாத்னா பத்திரிகையின் ஆசிரியராய் இருந்தவர் என்று சுதிரால் அறியக்கிடைத்த பெரியவர் யதுநாத் தத்தேவிடம்போய் சிலர் கைகுலுக்கினர். அவரோ அமைதியாய் தலையசைத்துக் கொண்டிருந்தார். எழுதுகோலுக்கு புல்லட் என்றால் என்னவென்றும் தோட்டாக்கள் எவ்வளவுதூரம் எழுதுகோலை மதிக்கக்கூடியவை என்றும் அவருக்குத் தெரியாததா? அடுத்த நாள் காலையில், சண்டிகர் நோக்கிய நெடுஞ்சாலையில் குளிர்நிறைத்த இளவெயிலில் சக்கரங்கள் விர்ரிட்டுக்கொண்டு இருந்தன. திடீரென இடிபோல் துப்பாக்கி வெடித்தது. அந்த சத்தத்தில் சாலையோர மரங்களிலிருந்து பறவைகள் பிய்த்துக்கொண்டு விருட்டென விண்ணுக்குத்தாவின. வெடியொலியில் வாயடைத்து சைக்கிள்கள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன. வரிசையில் சற்று முன்னாலிருந்த சுதிர் ரவுத் தலையைத் திருப்பி நர்சியைப் பார்த்துப் புன்னகைத்தான். காயர்க்கர் சட்டையைக் கழற்றியாயிற்றா என்று சத்தமாகக் கேட்டான். வெடித்தெழுந்த சிரிப்பலையில் காயர்க்கரும் சேர்ந்துகொண்டான். அடுத்தடுத்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் எதிரொலித்தது. சற்றுநேரம் சென்றபின் சிற்றுண்டிக்காய் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டன. தெருவோரம் விநியோகிக்கப்பட்ட மிக்சரைத் தின்றபடி, அந்தப்பக்கமாய் வந்த  கர்னல் ரேகேயிடம், வரும்வழியில் வெடித்த்து 303 ரைஃபிள்தானே என்று கேட்டான். திருட்டு சிகரெட் மதராசிக்கு 303யும் தெரியுமா? என்று ஹிந்தியில் சிரித்தபடித் தொடங்கி ஆங்கிலத்தில் ஆமாம் என்று முடித்தார். வெட்கத்துடன், கல்லூரி நேவியில் இருந்தபோது துப்பாக்கி சுடும் பயிற்சியில் 303ஐக் கையாண்டிருப்பதாகவும் கழற்றி துடைக்கவும் தெரியும் என்றான். நெடுஞ்சாலைக்கு நன்கு தள்ளி உள்ளே எங்கோ பயிற்சிக்களம் இருந்தது போலும். அப்போதும் தூரத்து இடியாய் ஐந்தாறு வெடி சத்தங்கள் மங்கலாய்க் கேட்டன. ஒருங்கமைப்பாளன் அதுல் சர்மா கர்னலின் அருகில் வந்து, இந்தத் துப்பாக்கி சத்தத்திற்கே குலை நடுங்கிப்போனதே, இன்னும் ஏகே 47 எதிரில் தெரிந்தால் என்ன ஆகுமோ என்கிற ரீதியில் ஹிந்தியில் சொனான். முதலமைச்சரே நிலவரம் பற்றி கவலை தெரிவிப்பதுதான் கவலைகொள்ள வைக்கிறது என்றார் கர்னல். கருத்த நெற்றியில் கவலையின் சுருக்கம் தெரிந்தது. சண்டிகரில்தான் நர்சி முதன்முதலாக ஏகே 47ஐப் பார்த்தான். தொட்டுப்பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. வழக்கம்போல் புகைக்க ஒதுங்கியபோது, பள்ளிக் கட்டிடம் ஒன்றின் முன்னால், பெல்டில் துப்பாக்கியை சங்கிலியால் பிணைத்துத் தோளில் மாட்டியிருந்தவர் தமிழர் போன்று தோன்றவே, மெல்லப் பேச்சு கொடுத்தான். நீங்க தமிழா? முகம் பிரகாசப்பட்டது. நீங்க தமில் பேசறீங்க? என்றார் பதிலுக்கு. மெட்ராஸ். ஆனா உங்களைப்பாத்தா வடநாட்டுக்காரர்போலத்தான் தெரியுது. சைக்கிள் பயணத்தில் வந்திருப்பது பற்றியும் ஒருவாரத்திற்குப்பின் சவரம் செய்ய போரடித்துப்போய் விட்டதில் தாடி நீண்டுவிட்டதாகவும் கூறி கொஞ்சம் சகஜபாவம் தோன்றியதும் கேட்டான். இதான் ஏகே 47ஆ? சாதகமாய் தலையசைத்தார். சங்கிலில ஏன் கோத்துருக்கீங்க? சிரித்தார். சொல்லலாம்னா சொல்லுங்க. இந்த ஊர்க்காரங்கன்னா இவ்ளோ நேரம் நாம்ப பேசியிருக்கக்கூட மாட்டோம். நீங்க நம்பொ தமிள்காரரா வேறப்போயிட்டிங்கொ. வெக்கத்தவுட்டுச் சொல்னும்ணா, இதைப் பக்கத்துல சாச்சி வெச்சிட்டு, வெளிக்கிக் கூடப் போக முட்யாது. யார் வேணா எப்ப வேணா எட்த்து சுட்டுட்டு துப்பாக்கியத் தூக்கிட்டி ஓட்ருவாங்கொ. இங்க ஆம்ளே பொம்ளே வித்தியாசமெல்லாம் கெட்யாது. நெஞ்சை நிமித்திகிட்டு சுடுங்கடா பாக்கலாம்னு அனந்த்பூர் சாகேப் ஊர்லெ லேடீஸ் முன்னாடி வந்துச்சு. இத்தினிக்கும் அப்போ அந்தூரு கர்ப்யூல இருக்கு. சாவப்பத்திக் கொஞ்சங்கூட பயமே கெட்யாது. இந்த மாதிரி தெகிரியத்தை இந்துஸ்தானத்துல வேற எங்கியுமேப் பாக்க முடியாது. இன்க்கி இந்துஸ்த்தானம் பத்தி எரியுதுன்னா அத்க்கு அந்தம்மாதான் கார்ணம். ஒண்ணுமில்லாத ஆளை அந்தம்மாதான் வள்த்துவுட்டுது. கட்சீல அந்தாளும் போச்சி அதுவும் போயிட்ச்சி. ம். ஆனா இந்த சண்டை என்க்கி முடியுமோ யார்க்கும் தெரியாது என்று பெருமூச்சுவிட்டார். குடும்பம் அவரது கண்ணெதிரில் வந்து நிற்பதுபோல் பட்டது. வெள்ளைக்காரன் காலத்தில் கேஜிஎஃப்பில் போய் நிரந்தரமாய்த் தங்கிவிட்ட தமிழ்க்குடும்பங்களின் வழித்தோன்றல். இருட்டுச் சந்து எங்காவது போய் சிகரெட் பிடிக்கவேண்டி, பொற்கோவில் வளாகத்தை விட்டு அந்த இரவில் தெருவிற்கு இறங்கியதும் எதிரில் தெரிந்தது, யாருமற்ற இருட்டில் ஏகே 47ஐத் தோளில் மாட்டியபடி உலாத்திக்கொண்டிருந்த வீரரும், சற்றுத்தொலைவில் அடைக்கப்பட்டுக்கொண்டிருந்த,பாதியாய்த் தெரிந்த கடையில், பாத்திரங்களைக் கழுவி அடுக்கிக்கொண்டிருந்த பெண்மணியும்தான். கடையை நோக்கி நடந்தான். வழியில், நர்சியின் வயதுகூட இருக்குமா என்று சந்தேகப்படவைக்கும் குழந்தை முகம் போல ஏகே 47காரன் தென்பட்டான். ஜீன்ஸ் பாண்டுக்குள் கைகளை நுழைத்தபடி லேசாக அவனைப் பார்த்து சிரித்து வைத்தான். அந்த வடக்கத்தி முகத்தில் எந்த மாறுதலும் தென்படவில்லை. நெருக்கத்தில் கடந்து சென்றபோது அவனும் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது மூடப்பட்டுக்கொண்டிருந்த கடை விளக்கின் வெளிச்சத்திலும் தெரிந்தது.  கடைக்குள், குட்டி மணையில் திடகாத்திரமான பாட்டியம்மாள் உட்கார்ந்திருந்தார். அருகில் போனதும் அகலமான அலுமினியப் பாத்திரத்தில் ரோஸ் மில்க் இருப்பது தெரிந்தது. ரோஸ் மில்க் கித்னா பைசா? ஒன்றுமே பேசாமல் பாத்திரத்தை எடுத்து ஒரு ஆட்டு ஆட்டி எவர்சில்வர் டம்ளரில் ஊற்றினார். ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினான். பாத்மே என்று அப்புறமாக என்பதுபோல் சைகையில் காட்டினார். ரோஸ் மில்க் நல்ல திடத்தில் இருந்தது. உயரமான டம்ளரில் கொடுக்கப்பட்டதைக் குடித்தபடி பக்கவாட்டில் பார்த்தான். சற்றுத் தொலைவில் துப்பாக்கிக் குழந்தை தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. தான் பார்ப்பது தெரிந்ததும் அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். நாயொன்று வந்து வாலாட்டிவிட்டுக் கடந்து சென்றது. குடித்துவிட்டு டம்ளரையும் காசையும் கொடுக்கப்போக, அதைக் கண்டுகொள்ளாமல், கீழே வைத்த டம்ளரில் பாட்டி திரும்பவும் ரோஸ் மில்க்கை ஊற்றுவதைப் பார்த்துப் பதறியவனாய் வேண்டாம் வேண்டாம் என்றான் நர்சி. அட சும்மா குடியப்பா என்பது போல் அதட்டினார் பாட்டி. கூச்சத்துடன் மூச்சு வாங்கக்குடிக்கத் தொடங்கினான். ரோஸ் மில்க் பாத்திரத்தைக் கையில் எடுத்து இன்னொரு லோட்டாவில் ஊற்றி, கையைக் காட்டி ஏகே47ஐ அழைத்தார் பாட்டி. அவன் வேறு யாரையோ அழைப்பது போல கவனிக்காது இருந்தான். அட வாய்யா கூச்சப்படாதே என்பதுபோல் பாட்டி கூப்பிட்டார். அவன் லஜ்ஜையுடன் சிரித்தபடி வேண்டாம் என்றான். விஷமொன்றும் கலக்கவில்லை. இவருக்குக் கொடுத்ததைத்தான் உனக்கும் கொடுக்கிறேன் கடை மூடும் நேரம் வா குடி என்றார். குழந்தைமுக வீரன் டம்ளரைக் கையில் எடுத்துக் குடிக்கத்தொடங்கினான். சண்டை என்று வரும்போது எதிரெதிராய் நின்று சண்டை போட்டுக்கொள்ளலாம். அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்றார் அந்த சர்தாரினி. 4 விஷம் ஆபிதீன்    இவருடைய எழுத்தில் வழியும் அங்கதச்சுவை இதமான தொடுதல் போல.  நடுநடுவே வெடிச்சிரிப்புகளுக்கும் உத்தரவாதம் உண்டு. வெறும் நகைச்சுவையோடு நின்றுவிடாமல், ஆபிதீனின் கதைகள் ஆழமான பாதிப்பையும் உண்டாக்குகிறது என்பதுதான் தனிசிறப்பு. [abitheen] [linesep] ‘சுரீர்’ என்றது. அதற்கப்புறம் நடந்தது ஞாபகம் இல்லை.. கடித்தது பாம்பா , பூரானா ? இந்த வலி வலிக்கிறதே..’ர்ர்’ என்று இன்னும் ஏறிய வண்ணம்.. கொட்டிற்றோ ? பெரிய கருந்தேளாக இருக்குமோ? ஏற்கனவே பட்ட அனுபவம் இருந்திருந்தால் இனம் கண்டு கொண்டிருக்க முடியுமோ என்னவோ..அனுபவம் எல்லாவற்றுக்கும் தேவைப்படுகிறது.. நுரை தள்ளிய வண்ணம் நான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்? எனக்கே ஓதிப்பார்க்க தெரிந்துதான் இருந்தது. நாலு வருடங்களாகின்றன ‘இஸ்மு’ வாங்கி. இதை வாங்கவா கெளஸ் ஹஜ்ரத்தின் காலடியில் விழுந்தோம் என்றால் இதுவாவது குடும்பத்தில் அன்றாடம் தேவைப்படும் அபாயத்தைச் சமாளிக்க உதவுமே என்றுதான். ஹஜ்ரத் எதைத்தான் சொல்லவில்லை? பிட்யூட்டரி சுரப்பியைத் தட்டி எழுப்பும் பயிற்சிகள் என்று நான் சொன்னால் ஹராம்? நமக்கு வாங்கவும், சரியாக உபயோகிக்கவும் , பத்திரப்படுத்தவும் தகுதிகள் இல்லை. முப்பது வருடங்களுக்கு முன்பு இளமையில் , பொறி தெறிக்கிறார் போல் அவர்கள் தொடர்ந்து தன் சீடர்களுக்கு மூன்று மாதம் – ஒரு நாளைக்கு மூன்று கேஸ்ஸட்கள் வீதம் – பேசிய கேஸ்ஸட்டுகள் எங்கே? பத்து கேஸ்ஸட்கள் அதில் மிஞ்சியதே பெரிய விஷயம்.அற்புதமாக ரிகார்டிங் செய்ததற்கு பழைய சீடர்கள் குழுவுக்கு நன்றி சொல்லதான் வேண்டும். அவர்கள் பதிவு செய்வதில் மட்டும் கெட்டிக்காரர்களாய் இருந்திருக்கிறார்கள். எழுந்து எழுந்து வீழ்கிற அலைகள்..ஆனால் இதைப் பார்ப்பது மட்டும் சாதனை செய்கிற விசயமா என்ன? நாங்கள் கடைசி அலையா? இல்லை. கடலை ஜெயிக்கிற கப்பல்கள். அலைகளின் எந்த பேரெழுச்சிகளையும் சுழற்சிகளையும் சமாளித்து, அதன் தாயின் ஓங்கார ஓசைக¨ளைப் புணர்வின் இன்ப முனகல்களாக மாற்ற மேலேறிப் பயணிப்பவர்கள். ஹஜ்ரத்தின் பேச்சு எங்களை அப்படி உற்சாகம் கொள்ள வைத்தது. We are the captain of our Ship… வாழ்க்கையைப் பற்றி பேசும் ஹஜ்ரத்கள் அபூர்வம். ஒரு தாடி , இரண்டு ‘மாஷா அல்லாஹ்’ , காலடியில் கிடக்கிற ரோஜாப்பூக்களைப் பார்த்த வண்ணம் ஞானப் பார்வை, பன்னீர் வாசம் வீசுகிற மவுலூது சபைகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. சில சர்க்கார்கள் இரண்டு தாடி கூட வைத்திருக்கிறா¡ர்கள்! ‘தொப்பி போடாத தலையும் , சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட பிரகாசம் பொங்கும் முகமும் , கையிலே எந்நேரமும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டும் எப்போதும் சூழ்ந்திருக்கும் இளைஞர் கூட்டமும் ‘ கொண்ட கெளஸ் ஹஜ்ரத் எனக்கு பிடித்துப் போனது. ‘பறக்கிற அவ்லியா பறந்துகிட்டே வந்து சலாம் சொன்னாலும் ‘ வ அலைக்கும் சலாம்; உங்களாலே பறக்க மட்டும்தான் முடியும். எங்க வாழ்க்கைக்கு ஒரு மயிரையும் உங்களாலே புடுங்க முடியாது ‘ என்று சொல்ல ‘தில்’ இருக்கனும்’ என்று சொல்லும் ஹஜ்ரத்தை எப்படி பிடிக்காமல் போகும்? இவர்களை ஊருக்குப் பிடிக்காமல் போனதில் வியப்பில்லைதான். யாரோ ஊதி விட்டதைக் கேட்டு ஊர் கிளர்ந்தெழுந்தது. புது மார்க்கம் உண்டு பண்ணுபவனை கல்லால் அடி ! பயந்து, மரத்தில் புகுந்த அவுலியாவை ஒழித்துக்கட்ட மரத்தை அறுத்த கூட்டத்தின் வாரிசுகள்.. இப்போது ஹஜ்ரத்தைப் பார்க்க வரும் பெரிய மனிதர்கள் அந்த காலத்தில் அவர்களுக்கு எதிராகக் கல்லை எடுத்தவர்கள்தான். நான் சொல்லை எடுத்தவர்களின் list ல் வருகிறேன். அடுத்த தலைமுறை. இன்றைய தலைமுறையோ பல்லை எடுக்கிறது… எல்லாவற்றிலும் தோற்றுப்போய் வாழ்வில் நம்பிக்கைப் பெற அவர்களை நாடிய போது பழசு எதையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ‘வாங்க existentialism…!’ என்று மட்டும் இலேசான புன்னகை… கோபம் வராதா? வரும் பயங்கரமாக – எதிரில் உட்கார்ந்திருப்பவர்களின் ஒரு மிகச் சிறிய , தவறான, உடல் அசைவைக் கண்டால். இது Similarity Science என்று அப்புறம் அவர்கள் விளக்கிய போது தான் தெரிந்தது.. ‘உஙகளுடைய ஒவ்வொரு அசைவும் உங்களுக்கு மேம்பட்ட , உஙகளை விட அழகான , power ஆன சக்தியினுடைய இயக்கமாகத்தான் அசையனும். உங்களை ஒப்படைச்சிடனும் அது கிட்டே. அப்பத்தான் ‘ ஆண்டவனே, என்னை எதற்காக படைத்தாயோ அதைச் செய்யவிடு ‘ ங்குற துஆ correctஆ இருக்கும். அவனுக்குத் தெரியும் – புள்ளைக்கி என்னா வேனும்டு…! – ஹஜ்ரத். இல்லை , இவர்கள் வெறும் ஓதிப்பார்த்து நூல் முடிந்து போடும் சாதாரண சாபு அல்ல. இவர்களை விமர்சித்துக் கொண்டிருந்த காலங்களில் துளியூண்டை என்னை நான் விமர்சிப்பதில் செலவழித்திருந்தால் எப்படியோ மாறிப் போயிருக்கலாம். ஃபிக்ரு க ஃபீக யக் ஃபிக்.. என் நடவடிக்கையில் எற்பட்ட மாற்றம், நண்பர்கள் சிலரின் வேடிக்கைக்கு ஆளாயிற்று. இரண்டு மாதமாக கடுமையாக கஷ்டப்படுத்திய மூச்சுத் திணறல் அவர்கள் ஓதிக் கொடுத்த தண்னீரை குடித்த மாத்திரத்தில் எப்படி கானாமல் போ¡யிற்று?! காய்ந்த, கணுக்களற்ற மஞ்சள் துண்டுகளையும் ஒதிக் கொடுத்தார்கள். அதை நெருப்பில் போட்டு புகையை முகர வேண்டும் – ஒரு நாளைக்கு இரு முறை. ‘ரெண்டு மாசமா நீம்பரு, டாக்டர் கொடுத்த மருந்தை சாப்பிட்டிருக்கியுமுலெ? அதான்..’ – நண்பன் சேத்த மரைக்கான். ஹஜ்ரத்தைப் பார்க்க வரும் அதே டாக்டரை அவனிடம் காட்டினேன். டாக்டரின் பெண்டாட்டிக்கு மனக் கோளாறு ! ‘டாக்டருக்குத்தான் பைத்தியம் !’ என்றான் அவன். ‘யாரோ ஒருவருக்கு பைத்தியம் பிடித்து இருக்கிறது..’ என்று எண்ணும்போது ‘ ஓய் பேக்கூ…… ‘ என்று சத்தம் கேட்டது. ஜப்பார் நானா! எப்போதும் யாரையும் ‘ஜனாப்..’ என்று கூப்பிடும் அவர், தன்னை இந்த மட்டரகமான கெட்ட வார்த்தையில்….!- சேத்த மரைக்கான் கொதித்தான். ‘வயசுலே பெரியஹண்டு கூட பார்க்க மாட்டேன்.’ங்கும்மாலெ ஓக்க’ண்டு ஏசிப்புடுவேன்..’!’ ‘அடக்கும்..’ என்பது மாதிரி ஜப்பார் நானா கை ஆடியது. ‘ஒங்கட வயசுக்கு…’ ‘ச்சூ…இரிங்க தம்பீ..! நீங்க பேசுறதைக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். ஏன் தம்பி, நான் அலங்கார வாசல்லேர்ந்து திட்டுறேன் – மணி மேடை கிட்டே இருக்கிற உங்களைப் பார்த்து. சாதாரண மனுஷன் பேசுற சத்தம். அதுக்கு இவ்வளவு power ! கொதிக்கிறீங்க…உம்மாட ‘ஹயா’வுலெ பூறுறீஙக..! அப்ப, ‘ஹக்கன்’ற வார்த்தைக்கு எவ்வளவு power இரிக்கும் ? ஹஜ்ரத், அதைத்தானே ஒதி ஊதுறாஹா?’ சேத்த மரைக்கான் ஒன்றும் பேசவில்லை. அதற்கு அப்புறம் யாரிடமும் பேசவில்லை. அவர்களுக்குப் பட்டால்தான் தெரியும். துபாயிலிருந்து ,அங்கே குணப்படுத்த இயலாமல் ஊர் வந்திருக்கிற நான், ஆயிரத்தெட்டு முறைகளையும் அலசிப் பார்த்து முடிவுக்கு வந்த பிறகுதான் சுலபமாக ஓதிப் பார்த்தே இதைக் குணப்படுத்த முடியும் என்பதில் முயற்சிக்க வேண்டுமா ?. விசாவும் வேலையும் முடிந்து விடும்… பொறுப்புள்ள பெரியவர்களிடம் பிரச்சினைகளை ஒப்படைத்து விடுவதுதான் எவ்வளவு சுலபமான காரியம். மூளையைக் கசக்கும் நேரம் மிச்சம். விரயமாகும் சக்தி மிச்சம். இதை விட்டு விட்டு.. ஹஜ்ரத் இதையெல்லாம் எப்படி செய்கிறர்கள்? காக்காய் உட்கார பனம்பழம் விழுகிற மாதிரி ?…எத்தனை வெளியூர் காக்காக்கள் ! இல்லை, critical faculty ஐ உஸ்தாத் விசயத்தில் பயன்படுத்துவது ஹராம். spiritual force என்றால் எண்ணம் என்று கூட தெரியாமலிருந்த நான் அதை செய்யக் கூடாது. அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வதே முறை. வாங்கும்போது கை தாழ்ந்திருப்பதே அவசியம். கடன் நீங்க , காரியங்கள் சித்திக்க , கெளரவம் வர , கவலை தீர இஸ்முகள் கிடைத்தன. தொடர்ந்து ஓதிக் கொண்டு வந்ததில் மாற்றங்களும் தெரிந்தன. கடன் அதிகமானால் சரியாக ஒதவில்லை என்று அர்த்தம்….! நல்லவைகள் நடந்தால் நம் குருவால். கெட்டதானால் நம்மாலா ? ‘(மனிதனே) உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும் உனக்கு ஏதாவாது தீங்கு ஏற்பட்டால் அது உன்னால்தான் வந்தது..’ (5:4:79) கெட்டது நடக்க விடாமல் எது தடுக்கிறது ? ‘வீணிற் திரிந்தலையாதே உன்னை விட்டும் புறம்பிலே ரப்பைத் தேடாதே காண உன்னால் முடியாதே – உன்னைக் காட்டிடும் முர்ஷிதைத் தேடிடிப்போதே ‘ – மெய்ஞானத் தெளிவு, பாடல்களுக்கா பஞ்சம் ? ஆனால் அவைகள் , பட்ட பாட்டிலும் , கிடைத்த பாடத்திலும் அடைந்த பழத்திலுமுள்ள விளைவுகளல்லவா? தெளிவு கிடைத்தது. என் முர்ஷித் , ஹஜ்ரத்தான். பூனையின் பல் கடி பற்றி எலிகள்தான் பயப்பட வேண்டும். குட்டிகளுக்கோ அது இதம். பாதுகாப்பு.. – எங்கோ படித்த ஞாபகம்.. கொடுத்த இஸ்முகள் எல்லாம் சீடர்களின் பாதுகாப்புக்குதான். கொடுப்பது , ஹஜ்ரத்தின் பாதுகாப்புக்கு என்று சொல்லக்கூடாது. இலவசமாக அனைவருக்கும் தருவதில் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது ? சீடர்களிடம் எந்த காசும் வாங்குவதில்லை. ஓதிப் பார்த்தும் , தாயத்து போட்டும் , அவ்வப்போது செவுனைக் கோளாறுகளைச் சரி செய்தும், பேய் ஓட்டியும் வருகிற காசில் அவர்கள் வாழவில்லை. நாடு முழுவதும் உள்ள பெரும் அரசியல் தலைவர்கள், நடிக நடிகையர்கள் , தொழிலதிபர்கள் வந்து நக்குகிறார்களே.. Don’t Care.. சீடராகி , தொடர்ந்து அவர்கள் ஓதும் புர்தா ஷரீ·பில் கலந்து கொண்டு வர வேண்டும். லைலைத்துல் கத்ரு, சஃபே பாராத் இரவுகளில் திக்ரு இருக்கும் விடிய விடிய.. அப்புறம் மார்ச் இரண்டாம் வாரத்திலும் அக்டோபர் மூன்றாவது வாரத்திலும் ‘பட்டை’ க்கு உட்கார்வது இருக்கிறது. பட்டை, ஒரு கெட்டியான அட்டை. ஹஜ்ரத் ஓதியது. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு வண்ணத் துணியில் மூடி வரும். இது பரக்கத்திற்காக. பணம் புழங்குகிற இடத்தில் இதை வைத்திருக்க வேண்டும். சீடர்களில் உள்வட்டம் என்ற பிரிவு உண்டு. ரகசிய ஞான விஷயங்கள் போதிக்கப்படும் அவர்களுக்கு.. விஷக்கடிக்கு இஸ்மு எல்லா சீடர்களுக்கும் ஒரே நாளில்தான் கிடைத்தது. அப்படியென்றால் இது ரகஸ்யமானதா இல்லையா என்று சீடர்கள் அலசிக் கொண்டிருந்தார்கள். அவுஸ்பென்ஸ்கியும் அரை அவுன்ஸ் விஸ்கியும் ஒன்றா எனும் விவாதம்.. ‘ஹஜ்ரத்தை விட ஒரு நல்ல குரு நமக்கு கிடைக்காது. நம்மளை விட பே துப்பாக்கள் ஹஜ்ரத்துக்கும் கிடைக்காது’ என்றேன் ஆதங்கத்துடன் , கிருஷ்ணசாமி என்ற சீடரிடம். கணிதப் பேராசிரியர். சென்னையிலிருந்து வந்திருந்தார். உடனே ஹஜ்ரத்தின் காதில் போட்டு விட்டார். சீடர்கள் எதையும் மறைக்கக்கூடாதாம்.. நான் இஸ்முவை எழுதும்போது ‘மனுஷக் கடிக்கு’ என்று தலைப்பிட்டேன். பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு சீடர் அதையும் உடைத்தார்.! ஹஜ்ரத் எதையும் சொல்லவில்லை. கண்கள் சிரித்த மாதிரி இருந்தது. பிரமையோ ? விஷக்கடி மந்திரம் சொல்லிக்கொடுக்க ஊரில் எத்தனையோ பேருண்டு. பணக்கடியில் அவதிப்பட்டு வாழ்பவர்கள் அவர்கள். அதை மட்டும்தான் சொல்லித்தர இயலும். குண்டலினி பற்றிக் கேட்டால் குப்புறப் படுத்துக் கொள்வார்கள். முக்கோணம் ? அது தசையாலானது..! நாசுவன் சாதிக் கூட விஷக் கடிக்கு ஓதிப் பார்க்கிறானே ! அவன் வாப்பா சுல்தான் நானா அவனுக்குக் கொடுத்து விட்டுப் போன ஒரே சொத்து அது. சுல்தான் நானாதான் எனக்கு ‘சின்னத்து’ பண்ணியவர். அறுத்ததும் ,மார்பு வரை கூம்பாக மூடிய சிகப்பு வண்ணத் துணியில் இருக்கும் குறியைப் பார்த்தவாறு , ‘கட்டு.. கட்டு..பூட்டு..பூட்டு..’ என்று எதேதோ உரக்க சப்தமிட்டு வேப்பிலை அடித்தது (துணி மேல்தான் !) ஞாபகம் வருகிறது. காப்பு கட்டுவது என்று பெயராம். அதற்கு நபிமார்களையும் அவுலியாக்களையும் கூப்பிடும் மந்திரம். ‘குஞ்சை அறுத்து கட்டுன பொறகு என்னாங்கனி ‘கட்டு..கட்டு’ ங்கிறியும் ?! ‘ என்று பெரியாப்பா கேட்டார்கள் அப்போது. ‘விஷயம்’ வீங்கி விறைத்து விடும் ஒதா விட்டால் என்று அவர்களுக்கு தெரியுமா ? ‘உஸ்..’ என்றார் சுல்தான் நானா. ஓதும்போது இடைஞ்சல் செய்யாதே..பலிக்காது! அல்லது மந்திரத்தில் அதுவும் சேர்த்தியா ? தெரியவில்லை. இதே இஸ்முவைத்தான் விஷக்கடிக்கும் பயன் படுத்துவாரா என்றும் தெரியவில்லை. இவர் மகன் சாதிக் மந்திரிக்கும்போது சப்தம் வர மாட்டேன்கிறது..அறுபடும்போதும் யாரும் சப்தமே எழுப்புவதில்லை. sparay அல்ல காரணம். கத்தி அவ்வளவு நாசூக்காக இருக்கிறது. பணம் வாங்கும்போதும்தான்.. ‘என்னாங்கனி ஒதுறியிம் ?’ என்று கேட்டேன் என் மகன் சாமானை அவன் பரிசோதிக் கொண்டிருக்கும்போது. ‘கேட்காதீங்க நானா.. சீக்கிரம் ஆறாது..!’ ‘அப்ப ஏன் மாத்திரை கொடுக்கிறியும் ?’ என்று கேட்கலாம். ‘மாவு’ சேர்ந்து விடும் என்று சாபம் கொடுப்பார்கள்! மனமிரங்கி அவன் சொன்னாலும் நான் செய்தால் பலிக்குமா என்பது ஐயம்தான். ‘உத்தரவு’ பெற வேண்டும். வழி வழியாகத்தான் இப்படித்தான் வருகிறது. உஸ்தாதிடம் உத்தரவு வாங்கிச் செய்வதுதான் உயர்வு. ஆனால் இம்மாதிரி பல இஸ்முக்கள் உள்ள புத்தகங்கள் இப்போது நிறைய வருகின்றன. எல்லா வகையான காரியங்களுக்கும் அதில் இஸ்முக்கள் அரபியில் இருக்கின்றன – இத்தனை தரம் தினம் ஓதி வரவேண்டும் என்ற குறிப்புடன். இதில் அனுமதியும் ஆசியும் எங்கிருந்து கிடைக்கும் ? பணம் கொடுத்து வாங்கினால்தான் பலிக்கும் என்று எடுத்துக் கொள்வதா ? இந்த புத்தகங்கள் ஒன்றில் இருந்த இஸ்மு ஒன்றை தினம் அதில் குறிப்பிட்டவாறு ஓதியே தான் பிள்ளை பெற்றாதாக என் பெரிய லாத்தா முத்து உம்மனை தீர்மானமாகச் சொல்வாள் – மச்சானை பக்கத்தில் வைத்துக் கொண்டே! பத்து வருடமாக இல்லாத பிள்ளை பின் எப்படி வந்ததாம் ? மச்சான் முகம் பார்க்கச் சகிக்காது. ஒப்புக் கொண்டால் அவருக்கு அவமானம். ஒப்புக் கொள்ளாவிட்டால் ஆயத்துகளின் மேல் குற்றம் சொல்லும் பாவத்திற்கு உள்ளாகிறார்.. சிரித்து வைப்பார் அவர். இதற்கும் முத்து உம்மனை எதாவது மந்திரித்திருக்க வேண்டும் – புஸ்தகத்தைப் பார்த்துத்தான்! புஸ்தகங்கள் பார்த்து வரும் ஞானத்திலும் காய்ச்சும் ஆனத்திலும் எனக்கு நம்பிக்கையில்லை. இத்தனை முறை ஓத வேண்டும் என்று போட்டிருக்கும். உருவேற்றியிருக்க வேண்டுமே அதற்கு ! கிரகணத்தன்று உருவேற்ற வேண்டும் – உத்தரவு கிடைத்தால். அதுதான் கிடைத்தாயிற்றே என்றால் கிரகணம் வரவேண்டாமா ? நானோ சேர்ந்திருந்த புதிது. ஹஜ்ரத் சொன்னவுடன் உடனே எழுதிக்கொண்டேனே தவிர கிரகணத்திற்காக எதிர்பார்த்தில்லை. விடுமுறையில் தாயகம் வருவது முழு நிலாக்களைப் பார்க்கவல்லவா? காலை நேரங்களில் நிலா வருவதில்லை. ரொம்ப வருடஙகளாக அப்படித்தான் இருக்கிறது…இன்னும் வாலிபன் போன்ற திகட்டாத ஆர்வம்… பயணம் புறப்படும்போதுதான் ஹஜ்ரத்திடம் கேட்டேன். இப்படி சீடர்களெல்லாம் அரபு நாடு என்று அலைந்து திரிவதில் ஏற்பட்ட வருத்தத்தோடு, போனவுடன் கிரகணத்தன்று உருவேற்றச் சொன்னார்கள். கிரகணங்களுக்கா பஞ்சம் ? குழுவோடு அவர்கள் முன்னிலையில் சேர்ந்து செய்வதை தவற விட்டதால் எனக்கு உருவேற்றும் எண்ணிக்கை 1000 ! தண்டனையா ? அதிக power வரட்டும் என்ற அக்கறையாகத்தான் இருக்க வேண்டும். விபத்தில் மாட்டியவனுக்கு அதிக ரத்தம் தேவைப் பட்டால் ஆள் பேராபத்தில் இருக்கிறான் என்றல்லவா அர்த்தம்? ஒரு வருடத்திற்கு முன்பே தனக்கு , தன் சின்னாப்பா விஷக்கடி இஸ்மு கொடுத்து 1800 முறை உருவேற்றச் சொன்னார்கள் என்று ஹஜ்ரத்தின் நானா மகன் காமில் சென்னது ஞாபகம் வந்தது. அவனுக்கு 18000 தடவை கூட கொடுக்கலாம். ‘உம்மாடி..’பட்’டுண்டு கேக்கும் அது..! அன்னைக்கி அப்படித்தான். ‘சுபுஹு’ நேரத்திலே ஒரு பட்டணச்சி வந்து கதவை தட்டு தட்டுண்டு தட்டுனா.. அவ புள்ளைய நட்டுவாக்கிளி கடிச்சி புடிச்சிண்டு..’சாபு காப்பாத்துங்க…’ண்டு கத்துறா..! ‘எஜமானே எஜமானே..’ண்டு சின்னப்பாவை உடலே..! டேய் பாத்துட்டு வாடாண்டு என்னையை அனுப்புனாஹா.. சைக்கிளை எடுத்துட்டுப்போயி கடிவாயிலை விரலை வச்சி ஓதுனதுதான்…புள்ளை உடனேயே எந்திருச்சிட்டான் – ‘பட்’டுண்டு ! என்றான் அவன். இன்னொரு கொடும் விஷத்தைத் தாங்கத் திராணியில்லாமல் பையன் முழித்துக்கொண்டு விட்டான் போலும்! காமில் ஒரு பெரிய சடை மண்டலம். எத்தனையோ பேருக்கு வழி காட்டுகிற ஹஜ்ரத்துக்கு இவனுக்கு வழி காட்ட இயலாதா? சிறு பிள்ளையிலேயிருந்து தன் காலிலேயே இருப்பவனின் வாழ்வை மாற்ற இயலாதவர்கள் மற்றவர்களுக்கு நினைத்ததை அடையும் சக்தியை எப்படி கொடுக்க முடியும் ? என்று ஷைத்தான் என்னை அரித்தான்.. கேட்டே விட்டேன். ‘இப்ப எந்த கேள்வியும் கேட்க வேணாம்.. எனக்குத் தெரியும் – எவனுக்கு என்னா சந்தேகம் முளைக்கும் ; எப்ப முளைக்கும்ட்டு… பேசும்போதே பதிலைக் கொடுத்து விடுவேன். அதில்லாம என் பேச்சுக்கு உதாரணம் காட்டினாலோ அல்லது தன்னோட கருத்தை எடுத்து வச்சாலோ ‘செத்த நேரம் பேசாமா இருடா’ண்டு என்னைச் சொன்னதா அர்த்தம்.. பேசாமா உருப்படப் பாருங்க. முதல்லெ கேட்கப் படிச்சிக்குங்க..’ என்பவர்களிடம் கேள்வியா ! அதுவும் சலாம் சொல்லி பவ்யமாக வந்து அவர்களின் கால்களை கண்களில் ஒற்றிக்கொண்டு பின்பு அப்படியே திரும்பாமால் நடந்து செல்லும் சில சீடர்களுக்கு மத்தியில்… சீடர்கள் என்னை அடிக்காமல் விட்டது ஆச்சரியம். அல்லது மின்னலாய் இறங்கிப் பொசுக்கி ஆட்கொள்ளும் ஹஜ்ரத்தின் கண்கள் செய்த மாயம். ‘ இப்ப என்னோட வலது பக்கத்திலே சுவரோரமா என்னென்னா பொருள்ங்க இருக்குண்டு பாருங்க..’ ‘…… ……’ ‘சும்மா சொல்லுங்க.. மத்த பேர் நெஞ்சுலெ உள்ள கேள்விதான் உங்க மூலமா வந்திக்கிது. புரிய வைக்கத்தான் உங்களை கேட்கிறேன்’ ‘பீரோ…டேபிள்..’ ‘போதும்…இருபது வருஷமா என்னெட்டே இக்கிது. கொஞ்சம் கூட மாறலே – வேறு பொருளாக!’ அவ்வளவுதான். பொறி கலங்கிப் போயிற்று எனக்கு.. நான் சுத்தமாக மாறிப் போனேன். இனி எந்த ஷைத்தானும் விளையாட முடியாது. ஹஜ்ரத் சொல்வதற்கு உட்படுவது. அவ்வளவுதான். எந்த விஷக்கடியையும் ஓதிப் பார்த்தே குணப்படுத்த முடியும் என்று சொல்பவர்கள் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஊரில் நிகழ்ந்து பரபரப்பாய் பேசப்பட்ட நூர் முஹம்மது மெளத்தை தவிர்த்திருக்க இயலாதா என்று நான் கேட்கக் கூடாது. எந்த பயங்கரமான பாம்பாக இருந்தாலும் கையால் தைரியமாக பிடிக்கிற அந்த இளைஞன் பாம்பு கடித்துதான் மெளத்தானான்…வெளியூர்களிலிருந்தெல்லாம் விஷக்கடி வைத்தியர்கள், மந்திரவாதிகள் காட்டிய வித்தை பலிக்கவில்லையே…அப்பொதெல்லாம் ஹஜ்ரத் ஊரில் இருந்தார்களே.. மெளத்தான பிறகு என்ன ஓதிப் பார்ப்பது ? பிழைக்க வைக்கிற சாத்தியம் இருந்திருந்தாலும் பாம்புக் கடிக்கு என்று தனியாக ஒரு முறை இருக்கிறது. ஆங்கில மருத்துவ முறையைச் சொல்லவில்லை. ஹஜ்ரத் சொன்ன அந்த கொட்டையின் பெயர் ஞாபகம் இல்லை. அதை வைத்துக்கொண்டு கிரகணத்தன்று உருவேற்றிய ஆள் அதை செய்ய முடியும். இதை நிர்வாணமாக செய்ய வேண்டுமாம். ஒரு மைல் தூரத்திற்கு யாரும் இருக்கக்கூடாது. ஊரில் சாத்தியமா இது ? இப்படி செய்த கொட்டையின் விசேஷம் அதை வைத்திருக்கும் யாரும் எந்த மாதிரி விஷக்கடியையும் சமாளிக்கலாம். கொட்டையை கடிபட்ட இடத்தில் தேய்க்க வேண்டும். அந்தக் கொட்டை ஒன்று தன்னிடம் இருந்ததாக ஹஜ்ரத் சொல்லியிருக்கிறார்கள். அது அந்தச் சமயம் இல்லாமலிருந்திருக்கலாம். அல்லது அது பற்றி அவர்களுக்குக் கூட தெரியாமல் இருந்திருக்கலாம். ஹஜ்ரத்தும் சீடர்தானே – அவர்களின் உஸ்தாதுக்கு ? என்ன கஷ்டம் வந்தாலும் ஹஜ்ரத்திடம் போவதில்லை என்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள் – ‘செத்தாலும் ‘நஜாத்’ பள்ளியில் தொழ மாட்டேன்’ என்று சில பேர் சொல்வது மாதிரி..அவர்களின் பிரச்சனைகளுக்கு ஹஜ்ரத்தா பொறுப்பு ? ஆயிரம் முறை என்ன, 10000 முறை ஓதி உருவேற்ற வேண்டும் என்று ஹஜ்ரத் சொன்னாலும் கேட்டு நட. உனக்கும் நாலு பேர்களுக்கு உதவுகிற மாதிரி ஒரு விஷயம் இலவசமாக கிடைக்கும் போது இதென்ன பைத்தியக்காரத்தனம் ? ஓது ! ‘யா அஹியா அஸ்ராஹியா ஆதூனி அஸ்மா உஸு யா முஜ்லி அலாயிமுல் ஊமூதி பிஹக்கில் ஹக்கி வபி ஹக்கி ஃகாலிகல் ஃகல்கி…..’ என்று நீளும் பத்து வரிகளுக்குள் அடங்கும் அதில் கடைசி இரண்டு வரிகள், ஏதேனும் ஒரு பொருள் வாங்கும்போது நமக்கு தீங்கு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள உதவும். மன்னிக்க வேண்டும். முழு இஸ்முவையும் எழுத அனுமதி இல்லை. இத்தனை வருட ஒதுதலையும் வீணாகி விடும். ஆரம்ப உரு 1000. தினம் மூன்று முறை. விசேஷ காலங்களில் 108 தடவை ஓதுவது என்று இந்த 5 வருடங்களாக கணக்கிட்டால் எண்ணிக்கை எங்கோ போய் விடும். தேள்தான் அகப்பட மாட்டேன் என்கிறது! ஊரிலிருக்கும்போது , பிள்ளையார் கோயில் தோட்டத்திலிருந்து என் மனைவி வீட்டுக்கு அடிக்கடி வரும் தேள்கள் எங்கே போயின ? இந்த நாலு வருடத்தில் ஊரில் எத்தனையோ விஷக் கடிகள் ஏற்பட்டிருக்கலாம்தான். நான் இரண்டு முறைதானே ஊர் போயிருக்கிறேன்! அப்போது என் கண்ணுக்கு யாரும் தட்டுப் படவில்லை. பரீட்சித்துப் பார்க்க வேண்டுமென்று யார் மேலாவது விஷ ஜந்துக்களைப் போட்டு கடிக்க விட்டிருக்கலாமோ ? ஒரு மாமா மகன் ஃபரீதை முயற்சித்தேன் , அவனுக்குத் தெரியாமல். ஜந்து இறந்து விட்டது! அதை எனக்கே கூட செய்து பார்த்திருக்கலாம்தான்.. ஆனால் ஒருமுறை தேள் கொட்டுவது போல் நடித்திருக்கிறேன் என் மனைவி அஸ்மாவிடம். ஏப்ரல் முதல் தேதி விடியும் நேரத்தில் என்னமோ சிறு பிள்ளை விளையாட்டு போல விளையாடும் ஆசை.. அல்லது அதற்கு சற்று நேரத்திற்கு முன் அவளுடன் என் உடம்பு தளர்ந்து தோற்றதில் , சமாளிக்கும் வாய்ப்பாக அதை எடுத்துக் கொண்டேன் போலும்..இருக்காது. ஹஜ்ரத்திடம் போய் வருவதிலிருந்து அதிகம் சிரிக்காமல் இருக்கிறேன் என்று அவள் முகம் சொன்னது. ஆன்மீக நாட்டம் யாரையும் அழுமூஞ்சிகளாக ஆக்கும் அவசியம் இல்லை என்று காட்டுவதற்குக் கூட நான் அப்படி செய்திருக்கலாம். ‘எனக்குத் தெரிந்த உண்மைகள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் குறைவாக சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்’ என்று ரசூலுல்லா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மனைவியை சந்தோஷமாக வைத்திருப்பதின் அவசியத்தையும் சொல்லியிருக்கிறார்கள் நிறைய..ஆயிஷா நாயகத்திடம் அவர்கள் விளையாட்டாகத் தோற்பதெல்லாம் அதற்குத்தான். பெண்டாட்டிதான் backing force என்று ஹஜ்ரத் சொல்லியிருக்கிறார்களே.. ‘புள்ளே எந்திரி… என்னமோ ‘சுரீர்’ண்டு கொட்டுனிச்சி…ஆ…அல்லாவே… கடுக்குதே…’ -அலறினேன். ‘ச்சு..சும்மா படுங்க மச்சான்! எறும்பா இக்கிம் !’ – அஸ்மா அலட்சியமாய் சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள். April Fool…April Fool ! ‘இப்படியே ஊராட இருந்து ஏதாச்சும் சின்ன வியாபாரம் பண்ணலாம்ட்டு நினைக்கிறேன் புள்ளே..போதும் இந்த சபர்..’ என்று சொன்னதற்குத்தான் இந்த முகம் எவ்வளவு திகிலைக் கொட்டியது ! அவரவர்களுக்கு அவரவர் பாதுகாப்பு. துபாயின் நகரப் பகுதியில் மின்னும் வெளிச்சத்தைத் தவிர்த்து விட்டு இப்படி ஆப்ரா முடிவடையும் வெறிச்சோடிய ,இருட்டடைந்த பகுதியில் வாழ்கிற எனக்கு என்ன பாதுகாப்பு? வாடகை பணத்தை மிச்சப்படுத்தி பத்தால் பெருக்கி மகிழலாமே..இதுதான் பாதுகாப்பு. எனது portableஐ சுற்றிலும் அடுக்கியுள்ள பெரும் பெரும் புல் கட்டுகளிலிருந்து பாம்புகள் தலை காட்டாதிருக்க வேண்டும். செளதியிலிருந்து வருகிற புல் கட்டுகள்..பிரைட், ஹஸீஸ், அலஃப் என்று பல பெயர்கள் இதற்கு.. பிரித்து சிறு சிறு பண்டல்களாக , ‘பது’ அரபிகள் மற்றும் தூரமாய் கிராமப் புறங்களுக்கு கொண்டு போய் விற்கிற பட்டான்கள் கேட்கிற sizeக்கு தயார் பண்ணும் பாகிஸ்தானி மற்றும் பலுச்சி கூலிகள் பாம்பை பார்த்ததாகவும் அடித்ததாகவும் சொல்வார்கள். ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை இதுவரை. Gulf Newsல் விளம்பரம் கொடுக்க இயலுமோ விஷக்கடி மந்திரிப்பு பற்றி ? மம்னு ! டிரைவிங் லைசன்ஸ் எடுத்துக் கொடுக்க தாயத்து விற்கிறவர்கலெள்ளாம் இருக்கிற நாட்டில் மந்திரிப்பவர்களும் இருக்கத்தான் இருப்பார்கள். ஆனால் எல்லோரும் ஒன்றாகி விடுவார்களா ? ‘உங்கள்ட்டெ சக்தி இருக்குண்டு வெளிலே காட்டுறது வழிச்சிக்கிட்டு காமிக்கிற மாதிரி ‘ என்றீர்களே ஹஜ்ரத்.. நான் எப்போது பரீட்சித்துப் பார்ப்பது? சந்தேகம் வந்து விட்டாலே ஞானம் பலிக்காதுதான். உதவுபவர்களுக்குள்ள தகுதியை அறிவது எப்படியாம் ? ‘ஆசைப்படு.. ஆசைதான் துஆ’ – ஹஜ்ரத் என்னை கேலியாய் பார்த்து சிரிப்பது போல.. அடுத்த அரை மணி நேரத்தில் பக்கத்து பாகிஸ்தானி ரூமில் கூச்சல் கேட்டது. இர்ஷாதுக்கு தேள் கொட்டி விட்டது ! ‘பிச்சுனே பாய்கோ டங் மாரா !’ – இர்ஷாதின் தம்பி நவீத் அழுது கொண்டே ஓடி வந்தான் என்னிடம். பிச்சு=தேள். டங்=கொட்டுதல். சில மொழிகள் வலிமையானவை. கேட்கும்போதே அந்த effect வந்து விடும். ‘பிச்சு மர்கயா ?’ நவீத் என் நகைச்சுவையை சிக்கிற சமயமா இது ? ‘பாய்.. எதாச்சும் செய்’.. என்று துடித்தான். புர்தா ஷரீஃபில் நான் உட்கார்ந்திருக்கும் போது ஒரு நாள் எதேச்சையாக நுழைந்தவன், இலேசான வெளிச்சத்தில் நான் ஊதுபத்தி மணம் கமழ உட்கார்ந்திருந்த முறையை கவனித்திருக்கிறான். அன்றிலிருந்து அவனுக்கு என் மேல் மரியாதை. பச்சைப் போர்வை போர்த்தாத குறை ! எண்ணிய உடன் நடந்து விட்டதே!. என் பரபரப்பை முதலில் அடக்க வேண்டும். இர்ஷாத் ரூமில் நுழைந்தேன். பெரும்பாலான பாகிஸ்தானி கூலி போல இரண்டு A.Cக்களை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கி நடக்கிற பயில்வானாக இருந்தால் என்ன ? விஷத்தை விட பயம் அதிக விஷம் கொண்டது. ‘யா அஹியா அஸ்ராஹியா ஆதூனி அஸ்மா உஸு யா முஜ்லி அலாயிமுல் ஊமூதி ….. ‘ கொட்டிய இடத்தில் என் வலது கையை வைத்து மெதுவாக மூச்சு விட்டபடி 41 முறை ஓதினேன். ஹஜ்ரத் பக்கத்தில் நிற்பது போல கற்பனை செய்து கொண்டேன் , முதல் முறையாக இருப்பதால். அடுத்த ஐந்து நிமிடத்தில் கடுப்பு குறைய வேண்டும். நவீத் கவைலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சகோதரன் வலியில் முனகுவதை. இப்போது இர்ஷாதுக்கு வேர்த்து விட ஆரம்பித்தது.. இல்லை, இது விஷ வேர்வை..அவனுக்கு கடுப்பு கூடிக் கொண்டே போனது. ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது. இப்போது எனக்கு வேர்த்து விட ஆரம்பித்தது. இர்ஷாதுக்கு உண்மையில் தேள் கொட்டிற்றா இல்லையா ? இல்லை இந்தியன் ஓதும் இஸ்மு , பாகிஸ்தானிக்கு பலிக்காதா ? ஆனால் நான் பாகிஸ்தானியிடம் சுளுக்கு வலித்து குணமாகியிருக்கிறதே.. ‘நவீத்..உஸ்கோ ரஷீத் ஹாஸ்பிடல் லேகெ ஜானா.. ஜல்தி..’ என்று சொல்லிவிட்டு நவீதின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தபடி என் அறைக்கு வந்தேன். எங்கே தவறு நிகழ்ந்தது ? உச்சரிப்பில் கோளாறு இருந்திருக்குமோ ? அல்லது ஓதும் எண்ணிக்கையில் மாற்றம் இருந்ததா ? ஹஜ்ரத் கொடுத்த இஸ்முகளை எழுதி வைத்திருக்கிற டைரியைப் புரட்டினேன். எல்லாம் சரிதான். அவர்கள் கொடுக்கும்போது எழுதியதுதான். பிறகு சீடர்கள் லேசர் பிரிண்டரில் அச்சிட்டு , ஹஜ்ரத் பார்த்து சரி சொன்ன பிறகு xerox எடுத்த பிரதி , கேஸ்ஸட்டில் கேட்டு பிறகு டைரியில் எழுதிய வரிகள் எல்லாம் ஒன்றுதான்… ஷர்புன் நிஃமத் (கொடுக்கப்பட்ட அருள் பறிக்கப்படுவது) இறங்கி விட்டதோ ? ஏன், ஒரு நொடி சந்தேகப் பட்டு விட்டேனோ ? நாலு வருட உருவும் நேரமும் வீணாகி விட்டதே.. கெளஸ் ஹஜ்ரத்துக்கு உடனே ·போன் செய்தேன். கலங்கிய படி சொன்னேன். உடனே பதில் சொல்ல மாட்டார்கள் எப்போதும். என்னவோ என் நேரம் அவர்கள் நல்ல மூடில் இருந்தார்கள். ‘என்னா ஓதுனீங்க அப்படி ? எங்கே சொல்லுங்க..’ ‘யா அஹியா அஸ்ராஹியா….’ ‘நிறுத்துங்க..’- குறுக்கிட்டார்கள். ‘ஏன் ஹஜ்ரத் ?’ ‘என் பெயரை கெடுத்துடுவீங்க போலக்கிதே !.. அதானே பார்த்தேன்..’ எனக்குப் புரியவில்லை. குழம்பினேன். ‘ ‘யா அஹியா’ அல்ல. வெறும் ‘அஹியா’ தான். ‘அஹியா அஸ்ராஹியா..’ண்டு தான் ஆரம்பிக்கனும்.’ ‘சுரீர்’ என்றது. அதற்கப்புறம் நடந்தது ஞாபகம் இல்லை… அருஞ்சொற் பொருள் : இஸ்மு = மந்திரம் ஹயாவு = பெண் குறி ஆனம் = குழம்பு மம்னு = தடை துப்பா = மடையன் ரப், ஹக்கன் = இறைவன் ஹராம் = (மார்க்கத்தில்) அனுமதிக்கப்படாதவை திக்ர் = ஜெபம் , இறைச்சிந்தனை 5 நம்பிக்கை [parisalkaran]   பரிசல்காரன்   இணையத்தில் ”ரசிப்போர் விழி தேடி…” எழுதிக் கொண்டிருப்பவர். ’நறுக்’ என சிறுகதைகள் எழுதுவதில் சமர்த்தர். சிறுகதை தொகுப்புகளும் வெளியிட்டிருக்கார். சமீபகாலமாக சிறுகதைப் போட்டிகள் எல்லாம் நடத்தி கலக்கிக் கொண்டிருக்கிறார்.     [linesep] அந்த அறையின் கால்வாசி அளவுக்கு ஆக்ரமித்திருந்த பெரிய டேபிளின் அந்தப்புறம் டாக்டர் சடகோபன் அமர்ந்திருந்தார். வெளிர் நீல நிற டி ஷர்ட் அணிந்திருந்தார். 40+ வயது இருக்கக்கூடும். வலது கையில் ஒரு வாட்ச். கழுத்திலோ, கையிலோ ஆபரணங்கள் ஏதும் இருக்கவில்லை. நிமிடத்திற்கொரு முறை மூக்கைச் சுருக்கி சுவாசித்துக் கொண்டிருந்தார். அது அவரது மேனரிசமாக இருக்க வேண்டும்.   அவரது டேபிளின் இடதுபுறமிருந்த வித்தியாசமான கடிகாரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அஷோக். குளிரூட்டப்பட்ட அந்த அறையின் அமைதியில் அதன் டிக்-டிக் துல்லியமாகக் கேட்டது.   “ஸோ.. நீங்க சொல்ல வர்றது யாரும் உங்களை நம்ப மாட்டீங்கறாங்க. இல்லையா?”   “எஸ் டாக்டர்” என்ற அஷோக் ஜீன்ஸிற்குள் தனது ஆலன் சோலியை செலுத்தியிருந்தான். 25 வயது. பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பராக பணிபுரியும் திறமையான இளைஞன். ஒரே அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. அம்மா ஹவுஸ் வைஃப். அப்பா வங்கி அதிகாரி.   ”எப்போலேர்ந்து உங்களுக்கு இப்படி தோண ஆரம்பிச்சது?”   “ஒரு பத்து பதினஞ்சு நாளாவே இப்படித்தான் டாக்டர்”   “சரி.. இப்ப நான் சில கேள்விகள் கேட்கறேன். பதில் சொல்லுங்க”   அஷோக் டாக்டரை நேருக்கு நேராய்ப் பார்த்து ‘கேன் ஐ ஹாவ் சம் வாட்டர்?” எனக் கேட்டான். டாக்டர் அவர் டேபிள் பக்கவாட்டில் இருந்த காலி டம்ளரை நிமிர்த்தி, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து நீரை நிரப்பி அவனிடம் நீட்டினார்.   வாங்கிக் குடித்ததும் ‘கேளுங்க டாக்டர்’ என்றான்.   “எங்க வேலை செய்யறீங்க?”   சொன்னான்.   “உங்க பிறந்த தேதி என்ன?”   சொன்னான்.   “பிறந்த கிழமை?”   தாமதிக்காமல் உடனே சொன்னான்.   “உங்க அப்பா அம்மா திருமண நாள் ஞாபகமிருக்கா”   சொன்னான்.   “உங்க அக்கா திருமண நாள்?”   சொன்னான்.   “வெரிகுட். ஞாபக சக்தியெல்லாம் நல்லாவே இருக்கு. நீங்க நார்மலா இருக்கீங்க.. என்ற டாக்டர் தொடர்ந்தார்: “எந்த விஷயத்துல – யார் – உங்கள நம்பமாட்டீங்கறாங்கன்னு நீங்க ஃபீல் பண்றீங்க அஷோக்?”   “எந்த விஷயத்துலயும் யாரும் என்னை நம்பமாட்டீங்கறாங்க டாக்டர்” “ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?”   அஷோக் ஏதோ ஒரு மூலையை சில நிமிடங்களுக்கு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். டாக்டர் அமைதியாக அவனையே பார்த்தவாறு இருந்தார். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னான். “என் மேனேஜர் எனக்கு ஒரு டாஸ்க் கொடுத்திருந்தார் ரெண்டு வாரம் முந்தி. ஆக்சுவலா அதை முடிக்க பத்து நாளாகும். ஒரு வாரத்துல முடிச்சுத் தரணும். க்ளையண்ட் அவசரப்படுத்தறாருன்னு சொன்னார். ஒரு வேகத்துல நான் சின்சியரா இருந்து அஞ்சே நாள்ல அதை முடிச்சுக் குடுத்தேன்” “குட்.. இதுல என்ன.. “டாக்டர் எதோ கேட்க முயல அஷோக் தொடர்ந்தான். “நான் அவ்ளோ சீக்கிரம் முடிச்சத அவர் நம்பலை. வேறொரு டீம் லீட்கிட்ட அதை குடுத்து வெரிஃபை பண்ணீட்டு அப்பறம்தான் க்ளையண்ட்கிட்ட சப்மிட் பண்ணினார்” “இட்ஸ் ஓகே அஷோக். உங்க ஃபீல்ட்ல இது நார்மல்தானே?” “இல்ல டாக்டர். அது என் திறமையை சந்தேகப்படறமாதிரி. அதுவும் அந்த டீம் லீட் எனக்கு அல்மோஸ்ட் எனிமி மாதிரி. அவன்கிட்ட குடுத்து… ச்சே.. ஐ காண்ட் டாலரேட் இட் டாக்டர்” அவன் முகம் மாறியது. டாக்டர் அவனை வேறெதுவும் கேட்காமல் கொஞ்ச நேரம் அமைதி காத்தார். அவன் அமைதியான பிறகு கேட்டார். “மிஸ்டர் அஷோக்.. அலுவலக சூழல்ல இது மாதிரி நடக்கறது சகஜம். வீட்லயும் உங்களை நம்பலைன்னு ஃபீல் பண்றதா சொன்னீங்களே..” “யெஸ் டாக்டர். எங்க அக்காவுக்கு கல்யாணமாகி, ஒரு சில குடும்பப் பிரச்சினைகள்ல இருக்கா. மாமா ரொம்ப நல்லவரு. எனக்குத் தெரியும். அக்காவோட சில பிடிவாதங்களால அவங்களுக்குள்ள ஆறேழு மாசமாவே சண்டை வருது. சமீப காலமா இந்த விஷயத்தைப் பத்தி பேசறப்ப என்கிட்ட கலந்துக்கறதில்லை. உதாசீனப்படுத்தறாங்க. நான் சின்னவன், என்னோட கருத்து சரிப்படாதுன்னு அவங்க ஃபீல் பண்றாங்க. நான் எது சொன்னாலும் நம்பறதில்லை. அதும் என்னை ரொம்ப பாதிக்குது டாக்டர்” “சரி.. உங்க பொழுதுபோக்கு என்ன? ஃப்ரண்ட்ஸ், கேம்ஸ்..” “நான் ஆஃபீஸ்ல டெய்லி ஈவ்னிங் கேரம் விளையாடுவேன் டாக்டர்”   “குட்..” “நானும் என் கொலீக் கேசவ்-வும் எப்பவும் ஜோடியா ஆடுவோம். ஒரு வாரமாவே நாங்க ஜெயிக்கல. நேத்து அவன் ’நீ வேணும்னுட்டு மோசமா ஆடறடா.. எதிர் டீமுக்கு விட்டுக் குடுக்கற’ன்னு பேசறான்” ”ஆக.. அவனும் உங்களை நம்பலைங்கறீங்க..” “ஆமா டாக்டர்..” டாக்டர் சிறிது நேரம் அவனை வேறு சில கேள்விகள் கேட்டார். அவனுக்கு சில மாத்திரைகள் பரிந்துரை செய்தார். “உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அடுத்தவங்க உங்களை நம்பறாங்களா இல்லையான்னு பார்க்காம உங்க வேலைகளை நீங்க செஞ்சுட்டே இருங்க.. தட்ஸ் ஆல். ஒரு விதமான டிப்ரஷன்தான். கொஞ்சம் டேப்லட்ஸ் குடுத்திருக்கேன். ஒரு வீக் எண்ட் ஃப்ரெண்ட்ஸ் கூட டூர் போய்ட்டு வாங்க. மைண்ட் சேஞ்ச் ஆகிடும். ஆல் த பெஸ்ட்” அஷோக் ப்ரிஸ்க்ரிப்ஷனை வாங்கிக் கொண்டு எழுந்தான். அறையை விட்டு வெளியே வந்தான். அந்த பில்டிங்கை விட்டு வெளியே வந்து பைக்கை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் மெதுவாக ஓட்டினான். இடப்புறமும் வலப்புறமும் எதையோ தேடிக் கொண்டே வந்தான். நூறு அடிகள் கடந்தவன், ஒரு மெடிகல் ஷாப்பின் முன்புறம் பைக்கை நிறுத்தினான். மெடிகல் ஷாப்பில் இருந்த இளைஞன் ஒருவரிடம் கேட்டான்: “சார்.. இந்த ஏரியால நல்ல சைக்காட்ரிஸ்ட் யார் இருக்காங்க. டாக்டர் சடகோபன் வேணாம்.. வேற யாராவது?” 6 பலி ரா. கிரிதரன் ”பொறியியல் துறையில் பகல் பொழுதையும், இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்” என்று சொல்லிக் கொள்பவர். ஆனால் இவர் எழுத்து சராச்ரிக்கெல்லாம் வெகு மேலே.  நுண்ணீய ரசனையும், தேர்ந்த எழுத்தும் கொண்ட நல்ல படைப்பாளி. அருமையான நண்பரும் கூட. [giri]     [linesep] லியான் வீட்டுத் தோட்டம் இரண்டாம் நாளாக வெறிச்சோடிக் கிடந்தது. அவன் இன்றும் விளையாட வரவில்லை. தோட்டம் நீளவாக்கில் தெரு வரை நீண்டிருந்தது. வீட்டு வாசலே இல்லையோ எனச் சந்தேகம் வருமளவு அப்பார்ட்மெண்டுக் குழந்தைகள் மாலை முழுவதும் அவனது தோட்டத்திலேயே பழியாய்க் கிடப்பார்கள். வாசல் சந்தடியில்லாமல் இருக்கும். முதல்முறை பார்த்தபோது, ` என்னோட பர்பிள் பேபி பொம்மை வேணுமா?` என லியான்  கேட்க, சொல்லத்தெரியாமல் ‘ஹ.ஹ்ம்’ என மேலும் கீழும் தலை ஆட்டிய சுமி அவனது பொம்மைகளிலிருந்து எடுத்த பர்பிள் பேபியைத் திருப்பிக் கொடுத்தாள். அருகிலிருந்த ஏடன் பழுப்பு நிறக் குச்சியால் மண்ணைக் குத்திக் கொண்டிருந்தான்; ஒரு கிளை வழியாக ஏறி இன்னொன்று வழியாக இறங்க முடியுமா எனப் பார்த்துக்கொண்டிருந்தான் கால்வின். அவரவர் உலகின் ஆழத்துள் அவரவர் ஏகாந்தமாக அமிழ்ந்திருந்தார்கள். தன் வீட்டுக்குள் குடுகுடுவென ஓடி உள்ளிருந்து நடுத்தர வயது நபரை அழைத்து வந்தான் லியான். லண்டனுக்கு வந்த புதிதில் புதியவர்களைப் பார்த்துப் பயந்த சுமி இந்த அபார்ட்மெண்டுக்கு வந்த நாளிலிருந்து அவர்களுக்குப் பழகியிருந்தாள். ‘இவதான் கேட்டாள் அப்பா’ எனச் சுமியை கைகாட்டி அவர் முகத்தைப் பார்த்தான் லியான். ‘ஒ, லிட்டில் பிரின்சஸ் கேட்டாளா? உனக்கு இல்லாததா?’ என அவள் உயரத்துக்குக் குனிந்து கண்சிமிட்டியபடி, ‘லியான், பிரின்ஸசுடன் ஷேர் பண்ணி விளையாடறியா?’ என அவளது ஹேர்பேண்டை தொடாமல் தொட்டுச் சொன்னதில், லியானுக்கு அடுத்து சுமிக்குப் பிடித்துப்போன ரெண்டாவது வெள்ளையர் ஆனார் அவர். கைநிறைய கலர் சாக்லேட்டைக் கொடுத்துவிட்டத்தைப் போலப் பரவசப்பட்ட லியான் தன் வெள்ளை தலைமுடி அதிர ‘ஒகே’ என மேலும் கீழும் தலையாட்டினான். புறநகர்ப் பகுதியில் இருந்த அவர்களது அப்பார்ட்மெண்ட் லண்டனின் மனித நடமாட்டத்துக்கு எல்லைப் பகுதியோ எனச் சந்தேகப்படுமளவு காடுகள் சூழ்ந்திருந்தன. இருவரது வீடுகளும் ஒட்டிப்பிறந்த ரெட்டைப் போல வசதியாக அமைந்திருந்தன. நினைத்த நேரத்தில் இருவரும் தோட்டத்து மூலைகளில் கிடக்கும் சாதாரணப் பொருட்களையும் சுவாரஸ்யமான விளையாட்டுப் பொருளாக மாற்றிக்கொண்டிருப்பார்கள். கடவுள் புன்னகையை வீசிச் செல்லும் நேரத்தில் மண் புழுவும் காட்டு ராஜாவாக மாறும். வீட்டுக்குள் போரடிக்கும் நாட்களில் அவர்களது அப்பார்ட்மெண்டில் இருக்கும் தோட்டத்துக்கு விளையாடப்போவார்கள். பல நேரங்களில் லியான் செய்வதை நிழல் போலத் தொடர்ந்து செய்வாள் மூன்று வயது சிறியவளான சுமி. அவனது ஆறு வயதுத் துடிதுடிப்புக்கு இணையாக செய்ய முற்பட்டாலும் பல சமயங்களில் அவளால் வேடிக்கை மட்டும் பார்க்க முடியும். லியான் தோட்டத்திலிருந்த டிராம்போலின் மேல் குதித்து விளையாடுவது, அவனுடன் சேர்ந்து புத்தகப் படங்களை வேடிக்கைப் பார்ப்பது என சுமி நேரம் காலம் தெரியாமல் அவர்கள் வீட்டுப் பின்புறத்திலிருந்தாள். தினமும் செய்யும் காரியம் தான் என்றாலும், தோட்டத்திலிருந்த மஞ்சள் ரோஜாக் கிளையை உடைத்து வீட்டுக்குப் பின் பக்கம் குழி நோண்டி லியான் நடும்போது அவளுக்கு கட்டுப்படுத்த முடியாத சந்தோஷம் வந்துவிடும். தன் வீட்டிலிருந்து பிளாஸ்டிக் குடுவையில் நீர் எடுத்து வந்து செடியில் ஊற்றுவாள். சின்னச் சின்ன கூழாங்கற்களை மணல் மேல அழுந்தச் செய்துவிட்டு அவனைக் கட்டிக்கொள்வாள். அவளுக்காகவே லியான் பல பொம்மைகளை வெளியே எடுக்கத் தொடங்கினான். ஸ்கூலிலிருந்து வருவதற்குக் கொஞ்சம் தாமதமானாலும் அவனது வீட்டின் பின்பக்கக் கண்ணாடிக் கதவில் முகத்தை அழுந்திவைத்து ‘லியான், லியான்’ என யாராவது வரும்வரைக் கூப்பிட்டபடி நிற்பாள். பெரும்பாலும் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். அவனை அழைத்து வர அவனது அம்மா க்ளேர் பள்ளிக்கூடத்துக்குப் போயிருப்பாள். அவர்கள் வரும்வரை பின்கட்டு பொம்மைகளைத் தொடாமல் டிராம்போலின் அருகே பொறுமையில்லாமல் சுமி காத்திருப்பாள். விளையாடி முடித்த பின்மாலை வேளைகளில் அவனது வீட்டிலிருந்து கொஞ்சமும் சத்தம் வெளிவராது. பல சமயங்களில் லியான் அப்பாவுடன் சிரிக்கும் சத்தம் மட்டும் திடீரெனக் கேட்கும். அச்சமயம் காரணமறியாத குதூகலம் அவளை ஆட்கொள்ளும். சில நேரங்களில் லியானுடன் விளையாட அவனது அப்பா வந்துவிடுவார். அவர்கள் இருவர் மட்டும் தோட்டத்தில் விளையாடும் நாட்களில், ‘லிட்டில் பிரின்சஸ், வா ஒரு ரைடு போகலாம்’ என அவரது சைக்கிள் முன்சீட்டில் அவளை பெல்ட் போட்டு உட்காரவைத்து அபார்ட்மெண்டு முழுவதும் சுற்றி வருவார். சுமி அதிகமாக வெட்கப்படுவது அப்போதுதான். அதுவும் யாரேனும் எதிரே வந்து, ‘ஒ, என்ஜாய் யுவர் ரைட் டார்லிங் ‘ எனச் சொன்னால் போதும் முத்துப்பல் அத்தனையும் தெரிய ஈ-எனச் சிரித்து சின்ன சைக்கிளில் கூடவே வரும் லியானைப் பார்த்து, ‘லியான்!’ எனக் கைநீட்டுவாள். லியானின் அப்பா குஷியாக விசிலடித்தபடி ஏதாவது பாடிக்கொண்டுவர, முகமெல்லாம் சிரிப்பது போலப் பூரணச் சந்தோஷத்துடன் வலம் வருவாள். மழை வராத நாட்களில் தோட்டத்தின் மறு எல்லையில் இருக்கும் ரோஜா செடிகளுக்கிடையே இருந்த மரப்பாச்சி தாத்தா பொம்மைகளோடு விளையாட லியான் துடிப்பான். யார் அவற்றை அங்கு வைத்தது என்ற அவனது கேள்விக்கு ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கதைகளை அவனது அப்பா கூறுவார். நிலவின் அரசன் பூமிக்குக் கொடுத்த பரிசு எனச் சொன்னதும் வாஞ்சனையோடு நிலவை மானசீகமாக கட்டிப் பிடிப்பான் லியான். அவன் செய்வது புரியாவிட்டாலும் சுமி அவனோடு சேர்ந்து நிலவுக்கு முத்தங்களை அள்ளிக் கொடுப்பாள். கேப்டன் அமெரிக்கா தங்க குதிரையில் வந்திறங்கி லியானுக்காகச் செய்தது அந்த பொம்மைகள் எனச் சொல்லும் நாட்களில் உடம்பு முழுவதும் கொப்பளிக்கும் குதூகலத்துடன் `தாங்க்யூ கேப்டன் அமெரிக்கா!` எனக் கத்தியபடி தோட்டம் முழுவதும் சுற்றி வருவான் லியான். காற்றிலிருந்துப் பரவசம் தொற்றிக்கொண்டது போல் சுமி தன் பிஞ்சு விரல்களால் அவனைப் பிந்தொடந்து கண்ணுக்குத்தெரியாத குதிரையை ஓட்டிச் செல்வாள். அப்போது குதிரை ஓட்டுவது எப்படி என அவளது கை விரல்களைப் பிடித்தபடி கணைத்துக் கொண்டே அவளுக்குச் சொல்லித்தருவான். கடந்த ரெண்டு நாட்களாகவே லியான் விளையாட வரவில்லை. பக்கத்து வீடு அமைதியாக இருந்து பழக்கப்பட்ட சுமிக்கு, மாலைவேளைகளில் அங்கிருந்து வரும் கூச்சல் கிலி மூட்டியது. உள்ளே சென்று பார்க்கலாம் என்றால் அவன் வீட்டுப் பின்கதவு திரைச் சீலைப் போட்டு மூடி இருந்தது. பல முறை சென்று பார்த்தும், எப்போதும் வீட்டு ஜன்னல் வழி சமையலறையில் தெரியும் கிளேரைக் காணவில்லை. இரவு தூங்கும் வரை அங்கு கேட்ட சத்தத்துக்கிடையே லியான் குரலைக் கண்டுபிடிக்க முயன்றாள். இன்றாவது வந்துவிடுவானென டிராம்போலினில் உட்கார்ந்திருந்தாள். பள்ளியிலிருந்து வந்ததும் தன் டிராம்போலினில் சுமி உட்கார்ந்திருந்ததைப் பார்த்த லியான், புத்தக மூட்டையை கீழே வைத்த கையோடு வேகமாக வெளிவந்து `கெட் ஆஃப். இட்ஸ் மைன்`என அவளைக் கீழே தள்ளிவிட்டான். திடீரென இத்தாக்குதலால் வெலவெலத்துப் போய் அழுகை வந்தாலும் அவன் விளையாட வந்தது சுமியைக் குஷிப்படுத்தியது. அவனருகே சென்று , `உட்டன் கிரான்ட்பா!` என ரோஜா தோட்டமிருந்த மரப்பாச்சி திசையில் ஆசையாகக் கைநீட்டினாள். என்ன நடந்தது எனப் புரிவதற்குள், `நீ மட்டும் போய் விளையாடிக்கோ!` எனக் கத்தியபடி அவளைத் தள்ளிவிட்டான் லியான். கீழே விழுந்ததால் ஏற்பட்ட சிராய்ப்பு வலியைவிட பயம் அவனிடமிருந்து அவளை விரட்டியது. லியான் முகத்தைப் பார்த்து பயந்தபடி தன் வீட்டுக்குள் ஓடிவிட்டாள். தன் அறை ஜன்னலிலிருந்து வெறுமையானத் தோட்டத்தை அழுதுகொண்டே பார்த்தபடி சுமி தூங்கிப்போனாள். லியான் வீட்டிலிருந்து கடந்த மூன்று நாட்களாக கேட்ட கூச்சல் இன்று காலையிலிருந்து இல்லை. முந்தினம் நடந்த சம்பவத்தால் மிகவும் பயந்து போயிருந்ததால், வெளியே வராமல் தன் வீட்டு ஜன்னலிலிருந்து வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தாள். ஆசையாக அவர்கள் நட்ட செடிகளை லியான் பிடுங்கி எறிந்து கொண்டிருந்தான். எப்போதும் விளையாட வரும் கால்வின், ஏடன் என யாரும் அங்கில்லை. ஆத்திரத்துடன் செடிகளை உதைத்து புழுதி கிளப்பினான். எப்போதும் அவன் வீட்டுப் பின்பக்கம் இருக்கும் சைக்கிள் அப்போது அங்கில்லை. அவனது அப்பா இருந்தாலாவது வெளியே போய் விளையாடலாம் என சுமி நினைத்த நேரத்தில், ‘லியான் உள்ள வரியா இல்லியா?’ , என கத்தலாய் ஒரு ஆண் குரல் கேட்டது. பின் அந்தக் குரலுக்குச் சொந்தமான உருவம் சத்தமாக முணுமுணுத்தபடி சுமி வீட்டைத் தாண்டி தோட்டத்துக்குப் போக எத்தனித்தது. லியான் அப்பாவின் உடலசைவில் புதுவிதமானக் கடுமைத் தெரிந்தது. அவரைப் பார்க்கவும் அவளுக்கு பயமாயிருந்தது. `வர்றேன் டாடீ!`, எனப் பதறியடித்தபடி லியான் அவரை நோக்கி ஓடிவந்தான். மாடியிலிருந்து சுமி பார்த்தபோது, அப்பாவைத் தொடர்ந்த லியான் பர்பிள் பேபியை விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். லியான் வீட்டுத் தோட்டம் முன்பில்லாத மெளனத்துக்குத் திரும்பியது. 7 சஸ்பென்ஸ் வெண்பூ வெங்கட் [venpoo] எளிமையான வடிவத்தில், ஆற்றொழுக்கான நடையில், நிறைவான கதைகளை எழுதுபவர். முடிவில் உத்தரவாதமான திருப்பம் இருக்கும். இனிமையான சுபாவம் உள்ள நண்பரும் கூட   [linesep]  கடந்த சிலமாதங்களாகவே அவன் தன் அப்பாவிடம் ஒரு மாற்றத்தை கவனிக்கிறான். தனக்கு விவரம் தெரிந்த பின்னான இத்தனை ஆண்டுகளிலும் அவரிடம் இதுவரை பார்க்காத ஒரு மாற்றம். அவர் ஏனோ திடீரென்று ஒரு ஆனந்த தவிப்பில், உணர்வின் எழுச்சியில் இருப்பது போல் தோன்றியது அவனுக்கு.  ஆனாலும் கவனிக்காதது போலவே இருந்தான், அவரும் அவனிடம் சொல்ல முயற்சிக்கிறார் என்று தோன்றவில்லை. எல்லா ஆண் குழந்தைகளைப் போலவே அவனுக்கும் அவன் முதல் நாயகன் அப்பாவே. அவன் அப்பா கடினமான பொருளாதாரச் சூழலுக்கிடையே பள்ளிப்படிப்பை நன்றாக முடித்து, கிடைத்த சிறப்பான மதிப்பெண்களையும், அவர் தந்தை வேலை செய்த முதலாளியின் உதவியிலும் சென்னையின் பெரும் பல்கலையில் பட்டம் முடித்து சில வருடங்களில் அமெரிக்காவிற்கு வேலைக்காக வந்து, அங்கேயே மேல்படிப்பு, திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆனவர், மூன்று வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் பெரிய தொலைதொடர்பு நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர், இதுவரை எவ்வளவு பெரிய இன்ப மற்றும் துன்ப நிகழ்வுகளிலும் பெரிய அளவில் உணர்ச்சிவசப்படாத அவருக்கு, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இதுவரை பார்க்காத ஒரு உணர்வுகள் ஏன் என்று எவ்வளவு யோசித்தாலும் அவனுக்கு விளங்கவில்லை.   அடுத்த வாரம் அவர் இந்தியா செல்ல இருப்பது குறித்து இருக்கலாம் என்றாலும், அது இப்போதெல்லாம் இரண்டாண்டுக்கு ஒருமுறை நடக்கும் சடங்கு என்ற அளவிற்கு சரளமாகிவிட்டிருந்ததால் அவனுக்கு அதையும் யூகிக்க இயலவில்லை. வார இறுதியில், கொஞ்சம் ஓய்வு கிடைத்ததும் அவரிடம் பேச நினைத்தான் “அப்பா, அப்படியே கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாமா? எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும், இந்த வாரம் ஃபுல்லா கடிச்சிட்டானுங்க” என்றான். அந்நிய மண்ணிலேயே பிறந்து வளர்ந்தாலும் ஓரளவு அவன் இன்னும் சொந்த நாட்டின் மரபுகளை கடைபிடிப்பவனாகவே இருந்தான். ஆனால் அமெரிக்கத்தனமாக எதைச் செய்தாலும் உடனே தன் அப்பாவிடம் வந்து சொல்லிவிடும் அளவுக்கு நல்ல நண்பனாகவே இருந்தார் அவர். வார இறுதிகளில் மாதம் ஒருமுறையாவது இவர்கள் இருவர் மட்டும் ஷாப்பிங் மால் அல்லது பார்க் சென்று நேரத்தை கடத்திட்டு வருவது எப்போதும் செய்வதே. அவர்கள் இருவருக்கு மட்டுமேயான தருணங்கள் என்று அவன் சிறுவனாக இருந்தபோது ஆரம்பித்த பழக்கம் என்பதால் அவன் அம்மாவோ, அவன் மனைவியோ மட்டுமல்லாது அவன் குழந்தை கூட அவர்களை தொந்தரவு செய்வதில்லை என்பது அவனுக்கே ஆச்சர்யம். வீட்டில் இருந்து பத்து நிமிட நடையில் இருந்த பூங்காவிற்கு அருகில் இருந்த அந்த அமெரிக்க காபி நிலையத்தில் வழக்கம்போல் கடும் கசப்பு காப்பியை வாங்கிக் கொண்டு பூங்காவிற்குள் சென்று அமரும் வரை அவன் பேசிக்கொண்டே வந்தான். அந்த வார அலுவலக நிகழ்வுகளில் இருந்து, அடுத்த அதிபர் தேர்தல்,  பொருளாதாரம்,  திரைப்படங்கள்,  புதிதாய் சேர்ந்த வேலைக்கு சேர்ந்த எகிப்திய பெண்ணின் அழகு என்று எல்லாவற்றையும் பேசிக் கொண்டே இருந்தான், அவன் அப்பா புன்னகையுடன் கேட்டுக் கொண்டே வந்தார். ஒவ்வொருமுறையும் அவனுக்கே தோன்றும், பலமுறை அவரிடமே அவன் சொல்வதுண்டு  “நான் பேசுறதை அதிகமா கேக்குறது நீங்கதான்பா, அதேமாதிரி நீங்க அதிகமா கேக்குறதும் நான் பேசுறதைத்தான் இல்லப்பா?”  என்பான். பதில் சொல்லாமல் வாய்விட்டு சிரிப்பார், சிரிப்பான். பூங்காவில் ஆட்கள் அதிகம் இல்லாத ஒரு பகுதியில் ஒன்றிரண்டு மஞ்சள் இலைகள் உதிர்ந்து கிடந்த நாற்காலியில் உட்கார்ந்ததும், சில நிமிடங்கள் சற்று தொலைவில் எதிரில் இருந்த குளத்தையும் அதில் இருந்த வாத்துகளையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அவர் பக்கம் திரும்பாமல் முன்னால் பார்த்தவாறே தெளிவாக ஆரம்பித்தான் “லெட் மீ ப்ரேக் த ஐஸ்.. சொல்லுங்கப்பா, என்ன நடக்குது, ஏன் திடீர்னு இப்ப கொஞ்ச நாளா ரொம்ப நிலைகொள்ளாம தவிக்குறீங்க.. நீங்க ஒருமாதிரி சந்தோசமா இருக்குறமாதிரி தோணுது, அம்மாவுக்கும், ஷைலுவுக்கும் கூட எதோ வித்தியாசம் தோணுதுன்னு சொன்னாங்க, சொல்ல வேணாம்னா கேக்கலை, ஆனா ரொம்ப க்யூரியஸா இருக்குப்பா” என்றான். சிறிது நேரம் எந்த பதிலும் வராது போகவே அவர் புறம் திரும்ப, அவர் கைகளை தலைக்கு பின்னால் கட்டிக் கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். முகம் முழுதும் சந்தோச அலைகள், கேட்டவுடன் பொம்மை கிடைத்த குழந்தை போல, காதலியிடம் முதல் முத்தம் வாங்கிய இளைஞனைப் போல,  பிறந்தவீட்டில் இருந்து பட்டுப்புடவை கிடைத்த பெண்ணைப்போல. அன்றைய மாலையில் முதல்முறையாக வாய்திறந்தார். “உனக்கு சஸ்பென்ஸ் நாவல், படம் எல்லாம் புடிக்கும்ல”  என்றார். ’நான் கேட்டது என்ன இவர் என்ன சொல்றாரு’ என்று குழம்பியவாறே “ம்ம்ம்… உங்களுக்கு தெரியாதாப்பா, ரொம்ப” என்றான். “உன்னால எவ்ளோ நேரம் சஸ்பென்ஸ் தாங்க முடியும்?” “தெரியலைப்பா, எனக்கெல்லாம் ஒருநாளே அதிகம், டிஜிட்டல் ஃபோர்ட்ரெஸ் புக் சஸ்பென்ஸ் தாங்காம முழுநைட்டும் படிச்சிட்டு மறுநாள் ஸ்கூல்ல போயி தூங்கி வழிஞ்சேனே நினைவில்லையா? அதுல இருந்து சஸ்பென்ஸ் த்ரில்லர் எல்லாம் வீக் எண்ட்ஸ் மட்டும்தான் படிக்கணும்னு சொல்லிட்டீங்களே, என்கிட்ட போயி இந்த கேள்வி கேக்கலாமா?” என்றான் சிரிப்புடன், அந்த நிகழ்வுகளை அசை போட்டவாறே. ”சரி, உன்னால ஒரு சீக்ரெட்டை எத்தனை நாளைக்கு சீக்ரெட்டா வெச்சிக்க முடியும்?” “ம்ம்ம்… யோசிக்குறேன், கஷ்டம்பா.. யார்கிட்டயாவது சொல்லிடுவேன். ரொம்ப சீக்ரெட்டா இருந்தாலும் ஆபிஸ்ல யாராவது அந்த சீக்ரெட்டுக்கு சம்பந்தமேபடாத ஆளுங்ககிட்ட டீடெய்ல்ஸ் சொல்லாம அப்படி இப்படின்னு சொல்லிடுவேன், என்கிட்ட எல்லாம் சீக்ரெட்ஸ் தாங்காது” அடுத்த சில நிமிடங்கள் அவர் பேச காத்திருந்தான். சிறிது நேரத்திற்கு பிறகு அவரே கேட்டார். “என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்லயும் எனக்கு ரொம்ப நெருக்கமான ரெண்டு பேர் யாருன்னு உன்னால சொல்ல முடியுமா?” என்றார் “உடனே சொல்லுவேன், ஆர் சி அங்கிளும் என் பிரியமான மாமனாரும்தான்.. எனக்குத் தெரிஞ்சி என் சின்ன வயசுல இருந்து உங்க மூணுபேரையும் வேற வேற ஆளுங்கன்னு பிரிச்சே பார்க்க முடியலை”  என்றான் “அது தப்புன்னு சொன்னா ஒத்துக்குவியா?” “வாட்?” “நிஜம்தாண்டா.. சேலத்துல படிப்பை முடிச்சிட்டு உன் தாத்தா அப்ப வேலை செஞ்ச கடை முதலாளி புண்ணியத்துல சென்னைக்கு படிக்க வர வரைக்கும் நான் சேலத்தை விட்டு அதிகம் வெளிய போனதில்லை. சென்னை புதுசா இருந்தாலும் ஹாஸ்டல்ல  தங்கி படிச்சிட்டு இருந்த எனக்கு எல்லாமே புதுசுதான்.  படிப்பு படிப்புன்னு வெளி உலகம் தெரியாம எந்நேரமும் இருந்தவனை ஒரு இயல்பான மனுசனா மாத்துனது என்னோட ரெண்டு ஃப்ரெண்ட்ஸும்டா, பார்த்தசாரதி, பாசான்னு கூப்பிடுவோம், மணிகண்டன், மணிம்போம்” “இதுவரைக்கும் இவங்க ரெண்டுபேரைப் பத்தியும் சொன்னதே இல்லையே, உங்க காலேஜ் குரூப் ஃபோட்டோ காட்டுனப்பகூட இவங்களை அடையாளம் காட்டுனதே இல்லையே” இவனுக்கு பதில் சொல்லாமல் அவர் தொடர்ந்தார் “டீனேஜ்ல கிடைக்குற எந்த ஒரு புது மனிதர்களோட உறவும் சாகும் வரைக்கும் மறக்க முடியாதுடா, பெரும்பாலானவங்க அந்த வயசுல வர்ற காதலி அல்லது காதலனை மட்டுமே மறக்க முடியுறதில்லைன்னு நினைச்சிட்டு இருக்காங்க, ஆனா உண்மையில அப்ப கிடைக்குற உறவுகள் அது நண்பர்களா இருக்கலாம், காலேஜ் ப்ரொஃபசர்களா இருக்கலாம், டெய்லி சாப்பிடுற மெஸ் ஓனரா இருக்கலாம், ரெகுலரா போற பஸ் கண்டக்டரா இருக்கலாம், எல்லாமே நம்ம மனசோட ஒரு மூலையில இருந்துகிட்டே இருப்பாங்க” “ம்ம்ம்… தத்துவமா?” என்று சிரித்தான். அவரும் சிரித்தவாறே “பாசாவும் மணியும் நானும் ஒரே க்ளாஸ், ஆனா ஹாஸ்டல்ல ஒரே ரூம் இல்ல,  ரெண்டாவது வருசம் படிக்குறப்ப கேட்டு மாத்திகிட்டு ஒரே ரூமுக்கு வந்தோம். எப்படி அமைஞ்சதுன்னு தெரியலை சொல்லி வெச்ச மாதிரி மூணு பேருக்கும் ஒரே ரசனை, ஒரே யோசனை.. பசங்க எல்லாம் எங்களை மும்மூர்த்திகள்னு கிண்டலடிப்பாங்க. ஒருதடவை எங்க ப்ரொஃபசர் ஒருத்தர் மும்மூர்த்திகளாவது ஆக்கல், காத்தல், அழித்தல்னு வேற வேற தொழில் செய்யுறாங்க, இவங்க மூணுபேரும் காலேஜ் முடிச்சி வேலைக்குக் கூட ஒரேமாதிரிதான் போவாங்கன்னு நினைக்குறேன்னு சொல்ற அளவுக்கு இருந்தோம்” “ம்ம்ம்” ”மூணு பேரும் வேற வேற ஊர்ல இருந்து வந்தவனுங்க, பாசா உள்ளூர்க்காரன், அப்பா நல்ல பணக்காரர், அப்பவே பாரிஸ் கார்னர்ல ஹோல்சேல் துணிக்கடை வெச்சிருந்தாரு, ஆனாலும் அவன் வீட்டுல இருந்தா படிக்கமாட்டான்னு ஹாஸ்டல்ல விட்டுட்டாரு, மணி மதுரைக்காரன்.  என்னை மாதிரியேத்தான் சுமாரான குடும்பப்பிண்ணனி.” அவர் பேசும்போது அவரிடம் இருந்த மகிழ்ச்சி இதுவரை அவன் அவரிடம் காணாதது. “நாலு வருசம் ஒண்ணா இருந்தோம், ஒரே ரூம்ல தங்கி, ஒரே க்ளாஸ்ல தண்ணியடிச்சி, நம்ப முடியல இல்ல, நடுவுல ஒருவருசம் தண்ணியடிச்சி எல்லாம் இருந்திருக்கேன், ஒரே பொண்ணை சைட் அடிச்சி, எக்ஸாமுக்கு முந்தின ஒருவாரம் குரூப் ஸ்டடி நைட்டு நைட்டா படிச்சின்னு என்னோட ஒவ்வொரு நிமிசத்துலயும் அவனுங்க இருந்திருக்கானுங்க” திடீரென்று அமெரிக்க பல்கலையில் அவன் தங்கிப் படித்த ஹாஸ்டல் நினைவுக்கு வந்து அவர் மீது பொறாமையாக வந்தது அவனுக்கு. “ஒவ்வொரு லீவுக்கும் ஒருவாரம் அவனுங்க சேலம் வருவானுங்க, ஒருவாரம் மதுரை போவோம், நினைச்சப்ப எல்லாம் மெட்ராஸ்ல பாசா வீட்டுக்கு போவோம், மூணு வீடுகள்லயும் நாங்க மூணுபேருமே போடாத ஆட்டம் இல்ல.” ”ம்ம்ம்” “ரொம்ப ஆச்சர்யமான விசயம் எல்லா விசயத்துலயும் நாங்க மூணுபேரும் ஒரே மாதிரி திங்க் பண்ணுவோம், பசங்க எதாவது பிரச்சினைன்னா எங்ககிட்ட வருவானுங்க, சொல்லிவெச்ச மாதிரி நாங்க மூணு பேர் குடுக்குற சொல்யூசனும் ஒரே மாதிரி இருக்கும். அதை வெச்சி நிறைய காமெடி பண்ணிட்டு இருப்பானுங்க எங்க செட் பசங்க” சிரித்துவிட்டு சில நிமிடம் அமைதியானார். ”லாஸ்ட் இயர்ல காலேஜ் முடிக்க இன்னும் மூணுமாசம் இருக்குன்னு ஆனப்பத்தான் ஒருமாதிரி உறைக்க ஆரம்பிச்சது” அவர் குரல் முழுக்க மாறி இருந்தது. ”என்னதான்  நாலு வருசம் ஒண்ணுக்குள்ளா ஒண்ணா இருந்தாலும் வெளிய போய் வேலை தேடி, செட்டில் ஆகணும்குறது பெரிய விசயமா தோணினது. பாசாவுக்கு பிரச்சினை இல்லை, அவனே வேலைக்கு போக நினைச்சாலும் முடியாது, வீட்டுக்கு ஒரே பையன், அவன் அப்பாவுக்கு அப்புறம் பிசினஸை அவன் மட்டுமே பாத்தாகணும், நானும் மணியும் வேலை தேடி அலைஞ்சாகணும். அதுக்கு நடுவுல எப்படி மூணு பேரும் பாத்துக்காம, பேசிக்காம இருக்க முடியும்னு நெனச்சுக் கூட பார்க்க முடியலை. மூணு பேருக்குமே ஒருமாதிரி பைத்தியம் புடிச்ச மாதிரிதான் இருந்தது. சொல்லப்போனா இவனுங்க கூட பழகாமே இருந்திருக்கலாமோன்னு கூட யோசிச்சேன்னா பாத்துக்கா. ” அமைதியாக அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான். “காலேஜோட கடைசி வாரத்துலதான் ஒருநாள் மணி அந்த ஐடியா குடுத்தான். காலேஜை விட்டு வெளிய போனா எப்படி இருந்தாலும் வாழ்க்கையோட சூழல் ஒவ்வொருத்தனையும் ஒவ்வொரு மாதிரி இழுக்கத்தான் போகுது.  என்னதான் திறமை இருந்தாலும் அடுத்த நான்கைந்து வருடங்கள் ரொம்ப கஷ்டப்படணும், அதுக்கப்புறம் குடும்பம், குழந்தைகள்னு செட்டில் ஆக வேண்டி இருக்குகும். அதுக்கு நடுவுல எங்களுக்குள்ள பாத்துக்கறது ரொம்ப சிரமமாத்தான் இருக்கப்போகுது. அதனால அடுத்த கொஞ்ச வருசத்துக்கு நாங்க மீட் பண்ணாமயே இருந்தா என்னன்னு கேட்டான்?” ”ம்ம்ம்… இண்ட்ரெஸ்டிங்” “எத்தனை வருசம்னு பேசுறப்பதான் மூணு பேரும் ஒரே மாதிரி ஒரு முப்பது நாப்பது வருசம் கழிச்சு பாத்தா எப்படி இருக்கும்னு சொல்லிகிட்டோம்.  கடைசியில நாப்பது வருசம் கழிச்சி மீட் பண்ணலாம்னு முடிவாச்சு.  இந்த நாப்பது வருசமும் அடுத்தவன் எப்படி இருப்பான், வேலை கிடைச்சிருக்குமா,  கல்யாணம் ஆகி இருக்குமா, எத்தனை குழந்தைகள்னு எந்த விசயத்தையும் கம்யூனிக்கேட் பண்ணிக்கலை.  இத்தனை நாளா ஒவ்வொரு நாளும் அவங்களை நினைச்சிகிட்டே இருந்தாலும் அவங்களைப் பத்தி எதுவுமே எனக்குத் தெரியாது” “ஏன் இப்ப நெட்ல தேடக்கூடாதாப்பா?” “இல்ல, அதுதான் ரூல்ஸே.  முதல்ல சஸ்பென்ஸ், அடுத்தவனைப் பத்தி தெரிஞ்சுக்கக்கூடாது, தெரிஞ்சுக்க முயற்சி பண்ணவும் கூடாது. ரெண்டாவது சீக்ரெட். 40 வருசம் கழிச்சி நாங்க சந்திக்கப்போற கடைசி மாதம் வரை யாருக்கும் சொல்லக்கூடாது.  ஆர் சிக்கும் நந்துவுக்குமே போன வாரம்தான் சொன்னேன்.  நேத்து நைட்டுதான் உங்கம்மாட்ட சொன்னேன், யாராலயும் நம்ப முடியலை. இத்தனை நாளா இப்படி ஒரு விசயத்தை அவங்ககிட்ட சொல்லாம நான் வெச்சிருக்கமுடியும்னே நம்பமாட்டேங்குறாங்க” என்று சிரித்தார். “என்னாலயே நம்ப முடியலைப்பா, அவ்ளோ க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸை ஒவ்வொரு நாளும் இப்பவும் நினைச்சிட்டு இருக்குறவங்களை பாக்காம எப்படிப்பா இத்தனை வருசம் இருந்தீங்க?” என்றான் “லைஃப்ல எதாவது சஸ்பென்ஸ் வேணாமா? நாப்பது வருச காத்திருப்பு… ஐ’ம் சோ எக்ஸைட்டட்ரா” என்றார். ***** அடுத்த ஒருவாரம் வேகமாக ஓடியதாகப்பட்டது. அவன் அப்பாவும் அம்மாவும் இந்தியாவுக்கு சென்றனர். அப்பா சந்திப்பு நடக்கும் என்ற சொல்லியிருந்த நாளை எண்ணிக்கொண்டே இருந்தான். அவன் அப்பாவை விட அவன் அந்த சந்திப்பை அதிகம் எதிர்நோக்கி இருப்பதாக தோன்றியது அவனுக்கு. அவன் மனைவியும் “என்னமோ நீங்க உங்க கேர்ள் ஃப்ரெண்டை பாக்க போறமாதிரி தவிக்குறீங்க” என்று கிண்டல் அடித்ததையும் பொருட்படுத்தாமல் அதையே பேசிக்கொண்டிருந்தான். அந்த நாள் கடந்ததும் அவன் அப்பாவின் தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருந்தான். வார இறுதியில் அவர் அழைத்ததும் அவசரமாக கேட்டான் “அப்பா, என்னாச்சி,  மீட் பண்ணினீங்களா?” என்றான் அவன் அப்பா எந்த உணர்ச்சியும் காட்டியதாக தெரியவில்லை “நேர்ல சொல்றேன்டா, எப்படி இருந்தாலும் அடுத்த வாரம் அங்க வரத்தானே போறேன்” என்றார். “அப்பா, பாத்தீங்களா, இல்லையா? அதையாவது சொல்லுங்க, எனக்கு மண்டை வெடிச்சிடும் போல இருக்கு” என்றான் “நான் நாப்பது வருசம் காத்திருந்திருக்கேன், நீ இன்னும் நாலு நாள் காத்திருக்க முடியாதா? நேர்ல சொல்றேன், அது வரைக்கும் சஸ்பென்ஸாவே இருக்கட்டும்” என்றார். குழப்பத்தில் ஆழ்ந்தான். **** அடுத்த ஒரு வாரமும் என்ன யோசித்தும் அவனால் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. அப்பாவின் குரலில் மகிழ்ச்சி இல்லை என்று கொண்டாலும், அவர் சோகமாகவும் இல்லை. அதனால விவகாரமாக எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே பட்டது.  அவர் வருகைக்காக காத்திருந்தான். அடுத்த வார இறுதியில் அப்பாவும் அம்மாவும் வந்தனர். வழக்கம் போல வீட்டில் நுழைந்ததுமே பெட்டி பிரிக்கப்பட்டு ”இது உனக்கு,  இது உனக்கு”  என்று இந்திய பொருட்கள் பங்கு பிரிக்கப்பட்டன.  எல்லாம் முடிந்து அவரவர் அறைக்கு சென்றதும், அப்பாவும் அவனும் மட்டும் வரவேற்பறையில் தனித்திருந்தனர். தவிப்புடன் கேட்டான் “இப்பவாவது சொல்லுவீங்களாப்பா?” அவன்புறம் திரும்பியவர் முகத்தில் எந்த உணர்ச்சிகளும் இல்லை. “நீங்க மீட் பண்ணினீங்களா இல்லையா?” அமைதியாக சொன்னார் “இல்ல” “வாட்… ஏன்பா, என்னாச்சி” “நான் போகலை”  என்றார். “பைத்தியமாப்பா உங்களுக்கு, ஏன் போகலை”  சற்று சத்தமாகவே கேட்டார். படுக்கையறைக் கதவைத் திறந்து அவன் மனைவி எட்டிப் பார்த்தாள். சிலவிநாடிகள் அமைதிக்கு பின் அவன் முகம் பார்க்காமல் அவர் மெல்லிய குரலில் சொன்னார் “நாப்பது வருசம்ன்றது ரொம்ப ரொம்ப பெரிய காலகட்டம்.  அப்ப விளையாட்டுத்தனமா பேசிகிட்டு வைராக்கியமா இருந்துட்டாலும்,  நாப்பது வருசம் கழிச்சி அங்க போக, உண்மைய சொன்னா பயமா இருந்தது.  இந்த நாப்பது வருசமும் நான் எப்படி அவனுங்கள நினைச்சிட்டு இருந்தேனோ அதேமாதிரிதான் அவனுங்களும் என்னை நினைச்சிட்டு இருந்திருப்பானுங்க, இப்ப நான் எக்ஸைட் ஆனேனே அதேமாதிரிதான் எக்ஸைட் ஆகி இருப்பானுங்க,  உலகத்தோட எந்த மூலையில இருந்தாலும் அந்த ஒரு நாளுக்காக ஊருக்கு வந்திருப்பானுங்க” அவர் குரல் உடையத் தொடங்கியது, கண்களில் லேசான கண்ணீர் தென்பட்டதாக தோன்றியது. “ஒருவேளை நான் அங்க போயி, பாசாவோ மணியோ ரெண்டு பேர்ல ஒருத்தனோ அல்லது ரெண்டு பேருமோ வராம போனா அதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும், என்னால அதை தாங்கமுடியும்னு தோணலைடா” அவர் அப்படியே நிறுத்த, பேச நா எழாமல் அவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சி செய்துக் கொண்டிருந்தார். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, கண்களை துடைத்துவிட்டு எழுந்து அவர் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். “அப்பா” என்றான் அவர் திரும்பினான், ”ஏம்பா நீங்க இப்படி யோசிக்கலை, ஒருவேளை அவங்க ரெண்டு பேருமோ அல்லது ஒருத்தரோ வந்திருந்தா, நீங்க வராததை வெச்சி என்ன முடிவுக்கு வந்திருப்பாங்க?” என்றான். அவர் முகம் மீண்டும் மாறியது, இந்த முறை அவரது உதடுகள் அகன்று முகம் புன்னகை பூத்தது, புன்னகையுடன் தலையை இடவலமாக ஆட்டியவாறு அவர் அறைக்கு திரும்பி நடக்க ஆரம்பித்தார். 8 கக்கூஸ் ஜேகே   இணையத்தில் மாறுபட்ட எழுத்துகளை முயற்சி செய்து கொண்டிருப்பவர்.  முன்னர் ஒரு சாதாரண த்ரில்லர் கதையை நான் லீனியராக எழுத முயற்சித்திருந்தது என்னை கவர்ந்தது. இந்தக் கதையும் மாறுபட்ட களனில் எழுதப்பட்டது [jk]   [linesep] ரயிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும், இருக்கத்தான் டக்கீலா விடவில்லையே! காலையிலேயே ஒரு மாதிரி மார்க்கமாக தான் இருந்தது. கொஞ்சம் இஞ்சி போட்டு கோப்பி குடிச்சதால அவ்வளவு தெரியவில்லை. ஆனால் ரயில் ஜோலிமொன்ட் ஸ்டேஷன் கடக்கும் போது வயிறு கொஞ்சம் மக்கர் பண்ண தொடங்கியது. அட இதெல்லாம் நமக்கு சாதாரணம் என்று அதை பற்றியே யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்ததில் ஒருமாதிரி சமாளித்தாயிற்று. மெல்போர்ன் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கும்போது புரிந்துவிட்டது. இன்றைக்கு சங்கு தான்.   அலுவலகத்துக்கு பதினைந்து நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த வயிற்றோடு தாம் தாம் என்றும் நடக்கமுடியாது. கொஞ்சம் கவனமாக நடக்கவேண்டும். நின்று அடக்கிப்பார்த்துவிட்டு போகலாமா? வேண்டாம் யோசிக்காதே. அதைப்பற்றி யோசிப்பது தான் எமன். ஏதாவது பாட்டு. ம்ஹூம். புத்தகம். ஆ, புத்தகம் பற்றி யோசிக்கலாம். என்ன புத்தகம். “The Namesake”? சுத்தம்! இந்த நேரத்தில அந்த  புத்தகத்தை எல்லாமா யோசிப்பது? “Too Perfect” , போன வாரம் வாசித்த புத்தகம். உணர்வுகளை கட்டுப்படுத்தலை எத்தனை அழகாக சொல்கிறது. “When being in control gets out of control…” அய்யய்யோ, இப்ப நான் என்ன கன்ட்ரோல்ல இருக்கிறேன்? ஷிட், எது யோசிச்சாலும் அங்க தான் போய் நிற்கிறது. அட, அவசரத்திலேயும் என்ன “சுத்த தமிழ்” வேண்டி இருக்கு? “நிக்குது”. என்னப்பா இது! ஒண்டையும் யோசிக்கவேண்டாம். முதலில் ஆபீஸ் போவம். முருகப்பெருமானே அது வரைக்கும் என்னோட கக்கூசை கட்டுப்படுத்தும் வரம் தா. அடுத்த நல்லூர் தேருக்கு காவடி தூக்கிறேன்!   அலுவலகம் வந்துவிட்டது. கால்களை ஒருக்களித்தே ஒரு மார்க்கமாக நடந்தபடியே உள்ளே நுழைகிறேன். ரிசப்ஷனில் இருந்த பெண் சிரித்தாள். பதிலுக்கு சிரித்துவிட்டு எதுவுமே காட்டிக்கொள்ளாமல் கொஞ்சம் மெதுவாகவே நடந்தேன். கக்கூஸ் இடது பக்க மூலையில் இருந்தது. திரும்பும்போது தான் ஜிம் எதிரே வந்தான். “Hey maite … how are ya?”   இந்த ஆஸ்திரேலியர்கள் தொல்லை தாங்க முடியாது. எங்கே கண்டாலும் “How are you?” சொல்லுவார்கள். பற்றாக்குறைக்கு “mate” என்பதை “maite” என்று உச்சரிப்பார்கள். அது புரிவதற்கே எனக்கு ஆறு மாசம் எடுத்தது. எது சொன்னாலும் பதிலுக்கு ஒரு “Thanks” சொல்லி வைப்பார்கள். “I am good .. Jim … yourself?” “I am great … Thanks, How was your weekend…?” அடடா weekend பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டான். இவனுக்கு பதில் சொல்லி, பதிலுக்கு இவன் weekend இல் என்ன செய்தான் என்று கேட்பதற்குள் இங்கேயே ஆய் போய் விடும்! வெட்ட வேண்டியது. “Sorry Jim, I gotta make an urgent call.. catcha in a while” “No worries maite ..…”   ஜிம் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் முன்னரேயே கழிப்பறை நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஓடும்போது தான் லேப்டாப் பை இன்னமும் தோளில் கிடந்தது ஞாபகம் வர, அட லாப்டாப் பையுடன் கக்கூசுக்குள் போனால், அத்தனை அவசரமா என்று எல்லாரும் சிரிப்பார்களே என்று துணுக்குற்றேன். ம்ஹூம், வேகமாக என் காபினுக்கு திரும்பி வந்து பையை வைக்கும் போது தான் பார்த்தேன். பக்கத்தில் பீட்டர் உட்கார்ந்திருந்தான். அடடா ..இவனா, தொடங்கினால் நிறுத்தமாட்டானே! “Hey buddy … How’s thing? Had a great weekend?” “Was cool Peter …. Excuse me mate… I really have to make this call urgently” பீட்டர் என்ன பதில் சொன்னான் என்பதை கேட்கும் நிலையில் நான் இல்லை. மெதுவாக ஆனால் வேகமாக கக்கூஸ் நோக்கி நடந்தேன். ஓடினேன் என்று தான் சொல்லவேண்டும். கதவை திறந்தபோது தான் பெருத்த நிம்மதி வந்தது. அப்பாடா ஒருவரும் உள்ளே இல்லை. மொத்தமாக ஐந்து அறைகள் காலியாக இருந்தது. நேரே வரிசையில் கடைசியில் இருந்த அறைக்கு ஓடினேன். திறந்து பார்த்தால் யாரோ ஒரு நாதாரி பயல் டாய்லெட் சீட்டை மடிக்காமல் ஒன்றுக்கு போயிருக்கவேண்டும். சீட் முழுதும் மஞ்சள் நிறத்தில் திட்டு திட்டாய் ஈரம். இவர்கள் எல்லாம் எப்படி பெண்கள் இருக்கும் வீடுகளில் வாழ்கிறார்களோ தெரியாது. ஒன்றுக்கு போகும்போது சீட் தூக்கி விட்டு தான் போகவேண்டும் என்று கூட தெரியாதவனுக்கு எல்லாம் எப்படி இங்கே வேலை கிடைத்தது? அது சரி, இண்டர்வ்யூ என்றால் மினுக்கிக்கொண்டு பேசத்தேரிந்தவர்கள் தானே!   எந்த ஒரு பொது கக்கூஸ் அறைகளிலும் முதலாவதாக இருக்கும் அறைக்கு தான் போகவேண்டுமாம். உளவியல் ஆராய்ச்சிப் படி பொதுவாகவே எல்லோரும் கடைசியில் இருக்கும் அறையை தான் நாடுவார்களாம். அதனால் அது அசுத்தமாகவும், முதலாவது அதிகம் பாவிக்கப்படாமல் சுத்தமாகவும் இருக்குமாம். அந்த அவசரத்திலும் எங்கோ வாசித்தது மூளையில் புலப்பட, உடனடியாக, வரிசையில் முதலாவதாக இருந்ததுக்கு ஓடினேன். சுத்தமாக இருந்தது. டிஷு உருண்டையும் புதுசாக இருக்க, சீட்டை விரித்து அதை சர சரவென்று இழுத்து சீட்டில் இன் மீது கவனமாக விரித்தேன். அப்படியே திரும்பி, ஜீன்ஸை இறக்கி ஆயாசமாய் உட்காரும்போது தான் போது அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ச்சே யாரோ வந்துவிட்டான்!   யாராக இருக்கும்? மெலிதான விசில் சத்தம். நான் இருக்கும் கக்கூஸ் கதவிடுக்கால் வெளியே பார்க்கலாம். வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே தெரியுமா? இந்த நிலையில் என்னை பார்த்து விடுவானா? இதை எல்லாம் கட்டும்போது கவனிக்கமாட்டார்களா? சரி, யார் தான் வந்தவன்? இந்த விசில் எங்கேயோ கேட்ட விசில் ஆச்சே! கதவிடுக்கினை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். கலிங்கத்து சிறையில் அகப்பட்டிருந்த கருணாகரபல்லவன், சிறை நடமாட்டங்களை, தான் தப்புவதற்காக உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தது தான் ஞாபகம் வருகிறது. கூடவே இருந்த கூலவாணிகனின் அசட்டை ஆச்சரியாமாய் தோன்றியது. அவனைப்போய் எப்படி சோழர் ஒற்றனாக நியமித்தார்கள்? அட கருமமே! கக்கூஸில் இருக்கும் போது கடல்புறாவா? மற்றவனும் இப்படித்தான் ஆய் போகும் போது ஏறுக்கு மாறாக சிந்திப்பானா? இடுக்கினூடாக பார்க்கும் பொது அந்த ஆள் கடந்து போவது தெரிந்தது. கடவுளே இது அதே ஜிம் தான். சந்தேகமேயில்லை. இவன் ஏன் இங்கே வந்தான்? நான் இருக்கும் நேரம் பார்த்து தான் வரவேண்டுமா? எனக்கு தான் யாராவது அருகில் இருப்பது தெரிந்தால் ஒன்றுமே போகாதே! பக்கத்து அறைக்கு தான் போகிறான். ஐயோ இவனுக்கு நான் இங்கே இருப்பது வேறு தெரிந்திருக்குமோ? நான் கக்கூஸ் போகும்போது டர் புர் என்று சத்தம் வந்து அவன் கேட்டுவிட்டால்? ஐயோ  அவமானமாய் போய்விடுமே! ஆண்டவா ஏன் இப்படி மீண்டும் மீண்டும் என்னை சோதிக்கிறாய்?   இரண்டு காதுகளையும் தீட்டிக்கொண்டேன். ஜிம் அவசர அவசரமாக அவன் டாய்லட் சீட்டினை டிஷ்ஷு பேப்பரால் துடைக்கும் சத்தம் கேட்கிறது. ம்ம்ம் வெள்ளைக்காரன், வெட்கம் மானம் இல்லாதவன். பக்கத்து கக்கூஸில் ஒருத்தன் இருக்கிறான் என்ற விவஸ்தை இல்லாமல் கர் குர் சத்தத்தோடு சிவனே என்று போவான். அட அவனுக்கு எப்படி சிவனை தெரியும்? கக்கூஸில் எதுக்கு கடவுளை நினைக்கிறேன்? ஆக்கப் பொறுத்தவன், ஆறப்பொறுப்பது தான் உசிதம். ஜிம் முடித்துவிட்டு போகட்டும். இரவு வேறு டக்கீலாவுடன் பப்பாளி பழம் சேர்த்து சாப்பிட்டது. நாற்றத்தில் கண்டுபிடித்துவிடுவான். கொஞ்சநேரம் தான், அடக்கிவிடலாம். ஆனால் ஜிம் நான் இருப்பதை சட்டை செய்வதாய் தெரியவில்லை. அவன் பாட்டுக்கு யேசுவே என்று போய்க்கொண்டு இருந்தான். அவன் சப்பாத்து கூட மர அடைப்புக்கு கீழால் தெரிந்தது. அடிடாஸ் பிராண்ட். இவனுக்கு எவ்வளவு சம்பளம் வரும்? என்னை விட அதிகம் தான். என் சப்பாத்தின் பிராண்ட் எனக்கே தெரியவில்லை. சப்பாத்தை கொஞ்சம் உள்ளே இழுத்துக்கொண்டேன். ஏன்தான் இந்த கக்கூஸ் பக்கத்து மர அடைப்புக்கு கீழே இத்தனை இடைவெளி விடுகிறார்களோ!   எனக்கு இதற்கு மேல் அடக்க முடியவில்லை. கொஞ்சம் வியர்க்கவும் ஆரம்பித்துவிட்டது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்குவதை வீரம் என்கிறார்கள். இதை எவன் அடக்க முடியும்? நான் வீரனா கோழையா? வேண்டாம். இன்னும் கொஞ்சநேரம் தான். ச்சே ஜெஸ்ஸி தான் என்னை தவிக்கவிடுகிறாள் என்றால் ஜிம் கூடவா! மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்! பேசாமல், வெட்கம் பார்க்காமல் ஆய் போய் விட்டால் தான் என்ன? ஐயோ வேண்டாம் இந்த விஷ பரீட்சை! எனக்கென்று அலுவலகத்தில் ஒரு மரியாதை இருக்கிறது. அவமானமாக இருக்கும். இத்தனை அடக்கிவிட்டு இனி ஆய் போனால் சத்தம் வேறு இன்னும் பெருத்து கேட்கும். அப்புறம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனை பார்ப்பது. வேண்டாம். மனிதனாய் பிறந்தால் எப்போதும் dignity மிக முக்கியம்.   ஜிம் முடித்துவிட்டான். வெட்கம் கெட்டவன். இப்படியா ஒருத்தன் கக்கூஸ் போகும்போது சத்தம் போடுவது? அது வேறு அந்த நாற்றம் நாறுகிறது. என்ன கருமத்தை நேற்று சாப்பிட்டானோ! இருந்து முடித்த ஆயாசத்தில் பெருமூச்சு வேறு. ச்சே நாடு விட்டு நாடு வந்து நிமமதியாய் கக்கூஸ் கூட போகமுடியாத நிலைக்கு போய்விட்டென். ஆ, டிஷ்யூ உருண்டை உருளும் சத்தம். இனி போய் விடுவான். சப்பாத்தும் அசைகிறது. போடா ராசா போடா.   புறப்பட்டு விட்டான். இன்னும் முப்பது செகண்ட்ஸ் தான். கையை கழுவி, துடைத்துவிட்டு போய்விடுவான். இனி ஒருத்தரும் இல்லை. நிம்மதியாய் போகலாம். பத்து செகண்ட்ஸ் தான். பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, ஒன்று! ஜிம் கதவு திறக்கும் சத்தம் கேட்க, அப்பாடி இனி வாழ்க்கையில் நிம்மதி. ஆயாசமாய் கண்ணை மூடிக்கொண்டு ஆய் போகலாம் என்று ரெடியாகும் போது தான் புதிதாக ஒரு பேச்சு குரல் கேட்டது. Hi Jim, how are ya? Great Thanks .. Yourself  Peter? ஐயோ பீட்டரா? எண்ட கடவுளே!   பிற்குறிப்பு: இந்த கதையில் காட்டப்படும் உணர்வை Parcopresis என்று உளவியல் நிபுணர்கள் அழைப்பார்கள். பக்கத்தில் யாராவது இருந்தாலோ, இருப்பது போல பிரமை கொண்டாலோ அவர்களால் இயல்பாக இயற்கை கடன்களை கழிக்கமுடியாது. இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு! http://en.wikipedia.org/wiki/Parcopresis 9 பெட்டியைத் திறந்து பார்த்தால் அருண் நரசிம்மன்  [அருண் நரசிம்மன்] சுவையான, அதே சமயம் சமரசமில்லாத அறிவியல் கட்டுரைகளை தமிழில் எழுதும் வெகு சில அறிவியலாளர்களில் ஒருவர்.   நடுவில் ’கொளை காதை’ மாதிரியான வித்தியாசமான கதைகளும் எழுதி வியக்க வைப்பார். [linesep] எப்படியும் இன்று பெட்டியைத் திறந்து பார்த்துவிடவேண்டும். என்னத்தான் இருக்கும் உள்ளே? எப்படித்தான் இருக்கும் அவ்வுலகம்? இருட்டாய் இருக்கும், கண் சரியாய்த் தெரியாது, துழாவ வேண்டும். ஆபத்தை உணர்ந்தால் பெட்டியை விட்டு ஓடிவிடு. எத்திசை என்பது முக்கியமில்லை. நெடிய கால்கள் கொடுக்கும் வேகத்தில் ஓடிவிடு. பெரிய மீசை பத்திரம். பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே என் குலத்தாருக்கே பெரிய மீசை. அமேரிக்கா, ஆப்பிரிக்கா என கண்டமெட்டிலும் வேரின்றிக் காலூன்றினாலும் மீசையைக் களையோம். ஸ்டார்பக்ஸில் டாலர் காபியை இருளில் முகர்கையிலும், மெஹிகன் டாக்கோ பெல்லின் என்சிலாடாக்களை வாயெல்லாம் சீஸ் வழிய பகலிலேயே புசிக்கையிலும், இடர்படும் மீசையை மழியோம். என் சொந்த கிராமத்திலும் இவ்வாறே. தேவர் மகனென்ன, அத்தைக்கே மீசை முளைக்கும் எங்கள் குலத்தில், தேவரின் தெய்வத்திற்கும் மீசை உண்டு. மீசையை சற்றே முறுக்கி, மூக்கைத் துருத்தி, நாங்கள் மேல்பார்வை பார்த்தால் அநேகர் அம்பேல். அலறி ஒளிவர். பயம். பயம். உணர்ந்து சலித்த மற்றொரு உணர்ச்சி. காடென்றும் வீடென்றும் கட்டிட வெற்றிடமென்றும் விரியும் எங்களூரில் அநேகப் பெண்களுக்கு என்னிடம் பயம். என் குறுகுறு மீசையில் பயம். குறுக்கும்நெடுக்குமாய் அலைபாயும் என் சுறுசுறுப்பில் பயம். அங்கம் அவிழ ஆடையணிந்துள்ள அணங்கையின் அழகை அள்ளிவிடுவேனோ. கண்ணாடி பீரோவின்முன் களைந்து களைபெறும் காரிகையைக் கண்ணடித்திடுவேனோ. இல்லை கன்னத்தில் என்னடி காயம் எனுமளவில் கடித்து ஏதேனும் மாயம் செய்திடுவேனோ. ஒட்டுமொத்த பெண்குலத்திற்கே சப்ஜாடாய் என்னிடம் எதற்கோ பயம். பரஸ்பரம் பயம். தொட்டால் சிணுங்கிக் கொலையும் செய்யத்துணியும் இவ்வகைப் பெண்களைக்கண்டாலே எனக்கும் பயம். தாத்தா இருந்தவரை லேசாய் உணர்ந்தது, இன்று அவர் போனபிறகு உறைக்கிறது. உறைகிறது. தாத்தாவிடம் பெண்பாடம் கேட்டுத்தான் பயம். அன்றிலிருந்துதான் அவ்வுணர்வு பயம். பளீரென்ற வெளிச்சத்தைக் கண்டால் ஏற்படுவது. அசூயையும் ஆர்வமும் ஆச்சர்யமும் பரிதவிப்பும் கலந்த பயம். கடவுளோ கந்தசாமிபிள்ளையோ என்று இனம்காணா உணர்வு. பயம். அது பசியோடு சேர்ந்தியங்கும் என் பழங்குடிமையான உணர்வன்றோ. இருத்தலின் நிரந்தரத்திற்கு இறை தேடும், என் முடிவிலியின் தொடர்ச்சிக்குத் துணை தேடும், நான் என்பதே நாங்களில் ஒருவன் என முழங்குவதற்கு சூழலில் வாசமதனைத் தெளித்தோடும் சாதாரண எனக்கும் அது உள்ளுணர்வில் உறைந்ததன்றோ. என்ன, பயத்தில் சிலருக்கு நாக்கு வரளும். எனக்கு அவ்வாறு நிகழாது. சரி விஷயத்திற்கு வருவோம். பெட்டியா, பெண்ணா? ஒன்றினால் மற்றொன்று. சொல்கிறேன். *** நான் ஒன்றும் அப்பிராணி இல்லைதான். என் வயதுக்கேற்ற இளமை மிளிர்ந்தாலும், ஊர் பெண்களிடம் சர்வ ஜாக்கிரதை. காரணம் இருக்கிறது. அழகர்மலை திருவிழாவில் கோவில் கூடத்தில் மோகனாம்பா ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்த ஒருத்தியின் மேலாக்கு விலகலை வெளிச்சமா இருட்டா எனத் தெரியாமல் பக்கத்து தூணுடன் உரசியபடியிருந்த என் தாத்தா கண்டு, மருண்டு… மங்கையின் மல்லிகையை முகரத்தான் குனிந்தாராம்; பெண்மையின் மயக்கத்தில், நெய்யிட்ட நெருப்பாகி, மனம் செயலற்ற பயமாகி, மையிட்ட நங்கையின் பொய்யிட்ட மனதைத் தொட்டு… வுடுவாளா பாதகி; காலில் போட்டிருந்ததை கழட்டி… கழனியில் கையிட்ட காமுகனை சவட்டி… அதிசயக் குருதிகொட்ட தாத்தா தறிகெட்டு ஓடி… கோவில்ல எப்படி தாத்தா செருப்பு என்று கேட்டால் பதில் சொல்லமாட்டார். இது ஆணுக்கு ஏற்படும் இயல்பான பெண் கவர்ச்சிடா; நான் என்ன இப்ப கேள்விப்படறா மாதிரியா செய்யறேன். அவ வேறு குலமில்லையா, அதான் என்ன அவளுக்குப் பிடிக்கல. பயம். ஆனா பாரு, அதே ஆட்டத்துல பக்கத்துல ஒருத்தன் ஒத்தரூவா காசு சைஸ்ல பொட்டு வச்சுகிட்டு முட்ட கண்ணோட லட்சணமா இருந்த ஒருத்திய தோள்ல தவில் வாசிச்சான். அவ என்ன செருப்பாலயா அடிச்சா. இத்தனைக்கும் பாக்க சகிக்கமாட்டான். ஏன்னா அவன் அவ குலம். பெண்ணோட சல்லாபம் இயல்பா அமையணும்டா. இவ்வளவு ஏன், அதே ஆட்டத்துல பக்கத்துத் தூணுக்குப் பின்னாடி நின்னு, மேடைல ஆடின மோகனாம்பாவயே வச்சகண் வாங்காம ஒருத்தன்… இத்தனைக்கும் அந்தாளுக்கு என்ன மாதிரி மீச கூட கிடையாது. பச், அத்த வுடு. ஏதோ அன்னிக்கி அவகிட்ட செருப்பால மரண அடி வாங்கினாலும், தல தப்பியது தட்டான் புண்ணியம். தாத்தா இதையெல்லாம் வெளிப்படையா சொல்வாரா என்ன. எனக்கே பேச்சு வராது. கிழத்துக்கு எங்கே. நானாகவே உணர்ந்துகொண்டேன். தாத்தா பேச்சிழந்தது அப்பாவின் மரணத்தில். இப்படித்தான் தோன்றுகிறது. அதற்கு முன்னால் அவர் பேசியிருந்தாலும் நான் குழந்தையல்லவா. பசியில் பத்தும் பறந்திட்ட ஒரு காலத்தில், உணவைத் திருடிய குற்றத்திற்காக அப்பாவை பூட்ஸ் காலால் மிதித்தே கொன்றிருக்கிறார்கள் கிராதகர்கள். பிறகு வந்த கலவரத்தில் உற்றார் உறவினர் என்று பல குடும்பங்களை அக்கிராதகர்கள் இட்ட புகை ஆட்கொண்டுவிட்டது. மரணப் புகை. அப்போது எனக்கு சிறுவயசு. நீண்ட என் மீசையை முறுக்கி, “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றிருந்தேன். இன்றும் எப்பவாது ஜெகத்தினை அழிக்கனும். அதற்காகத்தான் குறுக்கும் நெடுக்குமாய் இப்படி ஒடுகிறேனோ. அதற்கு முன் பெட்டியைத் திறக்கவேண்டும். தாத்தாவினால்தான் பெட்டியை அறிந்தேன். அவருக்காகத்தான் இன்று அதை எப்படியாவது திறந்துவிடப்போகிறேன். செத்தாலும் பரவாயில்லை. சொல்கிறேன். *** அப்பா, குடும்பம், உறவினர் இழந்து, மிச்சம் மீதி இருந்தவர் இடம்பெயர்ந்து காலப்போக்கில் கிடைத்த இடங்களில் தங்கிவிட்டோம். தாத்தாவும் நானும், வேறு சிலரும் இப்போது இங்கே. இங்கு ஊரின் மேட்டுக்குடியில் அவரது வாசம். சிறைவாசம். வேலையும் அதற்கேற்றார்போல திருட்டு வேலை. அவ்வப்போது இருட்டில் திருட்டில் எனக்கும் பங்கு உண்டு. பிழைக்க வேணுமே. பிழைப்பு வேணுமே. உங்களது எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானமாயிருக்கலாம். எங்கள் குலத்திற்கு வயிறே பிரதானம். பஞ்சத்தில் அடிபட்ட குலம். பசிதான் உயிருடன் இருப்பதை உணர்த்தும். அப்பா செத்தாலும் புத்தி வராது. அதானே, செத்தபிறகு எப்படி புத்தி? இத்தனையிலும் தாத்தா வாஞ்சையாக என்னை வளர்த்தவர். என் மீசைவரை வருடியவர். கோபத்தில் அவரது மீசை துடிதுடித்தலிலும் குல தர்மம் தெறிக்கும். உங்களுக்கு எப்படியோ, எங்கள் குலத்திற்கே இவ்வகை மரபுவழி ஞானம் அதிகம். லேசில் விடமுடியாது. வழிவழியாக தொடு உணர்வின் சங்கேதத்தில் இவ்வகை நிரூபணமற்ற ஞாபகங்கள்தான் எத்தனை. இளவயதின் திமிரடங்க இரவுகளில் என் பொழுதுபோக்கு, நண்பர்களுடன் விளையாட்டு. காட்டில் ஓட்டம். மரம், செடி, பரம், கரம், புதர், புத்தர் என்று கண் மண் தெரியாத சடுகுடு ஓட்டம். ஆனந்தக் களியாட்டம். காலத்தில் தொடங்கி அகாலத்தில் ஓய்கையில் மூச்சே நின்றுவிடுமென்ற களிவெறி மிச்சம். அன்றும் அப்படித்தான், விளையாடி பின், வாசனையுடன் வீடுநோக்கிப் பயணித்தேன். செரித்த உணவின் கழிவுதான் என் வாசனை என்றில்லை. குவித்த புருவமும் கோவைச்செவ்வாயுமாய் எனக்கென்றும் பிறந்திருப்பவளுக்காக காற்றினில் விரவும் என் மகரந்தமும் வாசனைதான். அதிசயக் குருதிசொட்டக் குற்றுயிராய் கிடந்தார் தாத்தா. அலறிவிட்டேன். வழக்கம்போல சப்தம் வரவில்லை. தாத்தாவிற்கும் கேட்டிருக்காது. செவிடு. ஏதேதோ சொன்னார்; சொல்ல நினைத்தார். உடைந்த கால்களை இழுத்து இழுத்துத் தவழ்ந்தார். ஹிஸ்ஸ்ஸ் என்று ஹீனமாய் ஏதோ முனகினார். மாளிகை. பெட்டி. திற. உணவு. வாசனை. வாழ்வு. சுவர்கம். அமைதியானார். வழக்கமோ இயற்கையின் பழக்கமோ, வீட்டில் பிணத்தை வைத்திருக்கவிடுவதில்லை. அணிவரிசையாய் வந்தவர்கள், கைகொடுத்துத் தூக்கித் தோளின்மீதுவைத்துக்கொண்டு, அலைபாய்ந்து, தடுமாறி, எடுத்துச்சென்றனர். யாரிவர்கள். நிச்சயம் எங்கள் குலமில்லை. மீசையில்லையே. ஆனால் எங்களைப்போல் பஞ்சத்தில் அடிபட்டவர்களே. அவர்களுக்கும் வயிறே பிரதானம். எனக்கு உதவுபவர்களை கேட்கவா முடியும், மேல் ஜாதியா கீழ் ஜாதியா என்று. தாத்தாவின் சபலபுத்தியால்தான் அடித்துத் தூக்கியெறியப்பட்டிருக்கிறார். பெண் விவகாரம்தான். போஷித்த மாளிகையின் மகராசியை, பூஜையில் கவிழ்ந்த வாளிப்பை மேலே விழுந்து… மாபாதகச் செயலாம். என்னத்தான் பெண் பித்தர் என்றாலும் தாத்தா என் சித்தர். தாத்தாவிடமிருந்து அறிந்தது பயம் மட்டுமில்லையே. மாலையில், காலையில், கண் கூசும் கும்மிருட்டில், வெளியுலகை உணர்தியவர் அவர்தான். உணவு இறைச்சியை, இனப் புணர்சியை, அரவமென ஹிஸ்ஸிடுவதும் பறவையென க்ரீசிடுவதும் இன்னும் எத்தனை. தாத்தாவிடம் என் கனவுகளை செரித்திருக்கிறேன். தாத்தாவிற்காக அவர் கண்ட அந்தப் பெட்டியைத் திறந்துவிடவேண்டும். *** பெட்டி இருக்கும் இடத்திற்கு அருகில்தான் நாங்கள் காலைக்கடன்களுக்காக ஒதுங்குவோம். அப்படி ஒருநாள்தான் எதிர்ச்சையாக கண்டோம் பெட்டி இருக்கும் இடத்திற்கான வழியை. குகைப்பாதை நிலத்தடியில் எங்களை இட்டுச்சென்றது பெட்டிக்கு. சற்று ஒதுங்கினாற்போல், புதர்களுக்கிடையே புற்று. பாம்புகள் இருக்கும் என்று தெரியும். எம்மை ஒன்றும் செய்யாது என்றும் தெரியும். நீங்கள் எப்படியோ, தேவையென்றால் எங்களாலும் பாம்புகளைப்போல் ஹிஸ்ஸ்ஸ் என்று சப்தமிடமுடியும். குலத்தின் வம்சாவளி அறிவு. ஆனால் பாம்புகளைக் கேலிசெய்வதில்லை. பயம். பெண்கள் மீதிருக்கும் அதே பரஸ்பர பயம். அருவருப்பு. துவேஷம். யுகாந்திரங்களாக எங்களுக்குள் பந்தம். இயற்கையின் நியதி. எம்மில் சிலர் ஒப்புக்கொள்வதில்லை. பசித்தால் புசி. கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு சாப்பிடவேண்டியதுதான். செவிடுகளுக்கு ஒரே பசி வயிற்றில்தான். உறுபசி. எது உணவு என்று பார்க்கக்கூடாது. ஆகாரத்தில் மீனமேஷம் பார்த்தால் வம்சாவளியே அருகிவிடும். வாழ்வதற்கு உண்பது இயற்கையின் நியதியே. ஆன்றோர் வாக்கு. இப்பொதெல்லாம் செத்த பாம்புகளை மட்டும் உண்கிறோம். யமன்தான் வேறு உருவில் வருகிறானே. இப்படிப் பாம்புகளைத் தேடித்தான் அன்று அப்புற்றைக் கண்டோம். புற்று இல்லை அது. பெரிய குகை. பலர் நுழையலாம். தலை இடிக்காமல். கூட்டம் கொடுக்கும் தைரியத்தில் நுழைந்தோம். பாம்புகள் இல்லை. ஆனால் இடத்தை ஆராய்வதற்கு சிரமமிருக்கவில்லை. எலி விசர்ஜனங்கள் கமழ்ந்து குமட்டும் வளைந்த குகைப்பாதையில் சுழன்று கை கால் பிடித்து, உருண்டு, படுத்துப் புரண்டு, மேலேறி வந்துவிட்டோம் பெட்டிக்கருகே. மூடியற்ற பெட்டி. ஒரு ஓட்டையுமில்லை. துவாரங்கள் இல்லை. வழுவழுவென தேக்குமரத்தால் ஆனது போலும். ஒருவித பழைய வாசனை. எனக்கு ரொம்பப் பிடிக்கும். நண்பர்களுக்கும்தான். மூடியிருந்ததை நெம்பித்திறக்கவேண்டும். பலர் கூடி, முயன்று, முட்டுக்கொடுத்து, கிரீச்சிட்டு, பயத்தில் மலமிட்டு, வாசனை பரப்பி… பெட்டியின் கதவு மெள்ள உயர்ந்தது. தலையை நுழைக்குமுன்… பளிச் என்று பீறிட்ட இருளில் அப்பிராந்தியமே மூழ்கிவிட்டதுபோல். கூரிய இருட்டின் கீறல்களில் பார்வையை ஓர் இடத்தில் நிலைபெற கண் வலித்தது. பெட்டியின் கதவைப் பிடித்திருந்த என் கை நடுங்கியது. ஐயோ, நசுங்கிவிடும்போலிருக்கிறதே… விடமாட்டேன். தாத்தாவுக்காக. அவர் எட்டிய சொர்க்கம் அது என்ன? சாவதற்குமுன் கண்ட சாகஸி யார்? இவ்வளவு தூரம் வந்தாயிற்று. உயிரே போனாலும் பரவாயில்லை. வாழ்வது ஒருமுறை. வீரனாய் வாழ்வோம். குலச் சிறுமையென்ன செய்திடும் நிறக் கருமையென்ன செய்திடும். ஆறு கால்களையும் உந்தி, இறக்கைகளைக் குறுக்கி, வெள்ளைக் குருதி பிதுங்கி வழிய, என் நான்கு முதுகுகளினால் பெட்டியின் கதவை நெட்டித் திறந்து… பூஜையறையின் கரையான்கள் அரித்த மூலையில் எலி குடைந்த மரப்பெட்டியினுள் இருந்து, அதன் கதவிடுக்கில் வெளிவந்து, ஆதிக்க மனிதனின் மின்சார ஒளி உலகில் விக்கித்து விழுந்தது கரப்பான் பூச்சி. ***** பண்புடன் இணைய இதழின் புத்தாண்டு மலருக்காக நண்பர் ஸ்ரீதர் நாராயணன் கேட்டுக்கொண்டதினால் எழுதிய மென்-விஞ்ஞான புனைவின் ஒரு வடிவம் | 3 கவிதை 10 அன்புக்கு நான் அயன்மை ராஜ சுந்தர்ராஜன் எளிமையான வடிவத்தில் காத்திரமான கவிதைகள் எழுதுவது மட்டுமல்ல, அவற்றைப் பற்றி நுட்பமாகவும் தெளிவாகவும் உரையாடுபவர்.  தனக்கென தனியாக தளம் எதுவும் வைத்துக் கொள்ளாதவர், அவ்வப்போது மற்ற பதிவுகளில் இடும் மறுமொழிகளே தேடிப் பிடித்துப் படிப்பேன். [Raja Sundarrajan] [linesep] மிக மென்மையானவை; வாசனை என, கற்சுவர் கதவுத் தடை கசிந்து கடப்பவை; மழை இறங்கி ஆழத் தீண்டிய உள்ளாடை உணர்வு எனத் தணுப்பவை; கண்ணிமைநீர்த் தேங்கல் என வெதுவெதுப்பவை; கடுப்பில், கசப்பில் நீடவிடாமல் நம்மைக் கனிவுக்குள் வீழ்த்துபவை, ஆதலால், பசைமொழி அன்பின் பயனிலை நயப்பது இல்லை, உலகீர், வசைவெளி வடுப்படல் வாழ்க்கையின் எமக்கே. (நயப்பது = likable, justifiable) [linesep] இருண்மை காக்கை ஒன்றின் கறுஞ்சிறகுக் கொலை விரட்டல் வெருண்டு, அங்கொரு வீட்டுக் கம்பி அழி புகுந்து உயிர் தப்பியது ஒரு புறா. காலக் கருக்கலில் அவ் வீடும் இருண்டு வேட்டைச் சிறகெனத் தோன்றியதோ, தப்பியது மீண்டும் அதே புறா! [linesep] ரத்த சம்பந்தம் விரட்டிக்கொண்டு போய் அடிக்க வேண்டியது இல்லை கொசுவை ஈர்த்திழுக்கும் குருதி நாற்றமோ நம்மில். [linesep] பொய்த்த பருவம் அதிர்வு உறுத்தா நகர்த்தலில் வழக்கமாய் இமைகளை வருடிச் சார்த்தும் இரவும் உறக்கத்தை எனக்குத் துணைகிடத்தக் கூடாமல் முகங்கறுத்து யாமத்துள் நழுவ இன்று ஒண்டியோராளாய்க் கிடக்கிறேன் ஈரத் துளி முத்தக் கோடிச் சிலிர்சிலிர்ப்பால் அன்புசெயப் பெறவில்லை ஆயினும் ஊளி-விழாக் களியாடல் போலப் புழுதிப் பொடி விதரிப் போயதொரு பருவக் காற்றாற் பட்ட கறையினது இவ் ஊரும் கம்பலை ஒழிந்தே. (ஊளி-விழா = Holi festival கம்பலை = ஆரவாரம், noisiness) [linesep] 11 கூழாங்கல் பிரார்த்தனை  நேசமித்ரன் நிறைய படிமங்களை வைத்து கவிதை சமைப்பவர். இந்தக் கவிதையைப் பற்றி குறிப்பிடும்போது கூட ’இது மூன்று கருப்பொருளுக்கு பொருந்தக் கூடியது’ என்று குறிப்பிட்டார்.  ‘வலசை’ என்னும் காத்திரமான சிற்றிதழை நடத்தி வருகிறார்.   [linesep] உள்ளாடையுதிர் ரோமங்களால் தன் ரேகைகள் எழுதும் பெரியாற்றுக் கூழாங்கல் இன்னும் தன் மொழியறியாத கடவுளுக்கான பிரார்த்தனையை தியானித்திருக்கிறது பனிமுயலின் கண்களால் உள்வாங்கிய கடலின் பாறையொளிர் சூரியன் பாலறுந்தும் பாவனையில் உறக்கத்தில் குவியும் உதடுகளுடன் சுழற்சி தப்பிய பூமிக்கு பழகுகிறது செயற்கைக் கோள் புதிதாய் சிலுவையிடப் பழகும் கரமாய் விதைத்தோல் இன்னும் உதிராத துளிர் முத்த ஞாபகம் செதிள் சிவப்பு மாறாமல் கூடல்தோறும் தரைகீறும் புலியுறங்கும் அடிவயிற்றில் ஊதிக்காட்டி சங்குகள் விற்கும் சொல்லற்ற சிறுமி கிரகணமழை சீனனின் கருநீர் ட்ராகன் உமிழக்கூடும் புதிய பரிதியை [linesep] 12 குறுகத் தரித்த மனம் [Gayathri] காயத்ரி சித்தார்த் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றக் கவிஞர். இலக்கியத்தின் வழியாகவே இல்லறத் துணையையும் தேடிக் கொண்டவர்.  குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி இருந்தவரை, இந்த இதழுக்காக மீண்டும் எழுத வைத்தது மகிழ்வான அனுபவம்.   [linesep] சிகரங்களின் சீதளத்தையும் பள்ளத்தாக்குகளின் விரிசல்களில் நதியோடு கசியும் ரகசியங்களையும் ஒருபோதும் அறிந்ததில்லை தோட்டத்துப் பூக்கள் தினமும் விரித்துச் சுருட்டும் படுக்கைகளுக்குள்ளாக இருதயம் போல் கசங்கி விரிகின்றன நாட்கள் ஜன்னல்களின் விளிம்பில் கிளைபரப்பிக் கனிவளர்த்து செழித்து நிற்கின்றன போன்சாய் மரங்கள் ஆயினும்.. தொட்டி மீன்களின் கனவில் ஓயாமல் அலைவீசிக் கொண்டிருக்கிறது பேராழம் மிக்கப் பெருங்கடல் ஒன்று.   [linesep] 13 புணர் நிமித்தம்   [Bogan]   போகன் சமீபகாலமாக இணையத்தில் கவிதை, கதைகள் என்று பிரமாதபடுத்தி வரும் எழுத்தாளர்.  இன்னும் பல சிகரங்கள் தொடுவார்.  தெளிவாகவும், தைரியமாகவும் தனது கருத்தினை எடுத்து வைக்கும் சிந்தனாவாதி. [linesep] ஆடும் ரயில் பெட்டியின் கழிவறையில் சிறுநீர் கழிக்கும் புழையை வெறித்துக் கொண்டிருந்தேன் அது ஏன் நிதம்ப வடிவில் இருக்கிறது என்று கேட்டுக் கொண்டேன் நீளக் குழாயின் மறுபுறம் பூமி ஓடிக கொண்டே இருந்தது இந்தக் கழிவறையில் புணர்ச்சி நடந்திருக்குமா என்று யோசித்தேன் இருக்கலாம் பூமியில் புணர்ச்சி நடை பெறாத இடம் எது ? மயானத்தில் கூட நடந்து கொண்டே இருக்கிறது புணர்ச்சி ஒரு நதி போல பூமி மீது ஓடிக கொண்டே இருக்கிறது மழைத் துளிகள் போல் யோனி நிலம் மீது விந்துத் துளிகள் வீழ்ந்து கொண்டே இருக்கின்றன நல்ல நிலத்தில் வீழ்ந்த விதைகள் மட்டுமல்ல முட்செடிகள் நடுவிலும் சில முளைக்கின்றன நெருக்குண்டு மடிகின்றன ஆனால் விதைத்தல் பொருட்டல்ல புணர்ச்சி ”நான் கடவுளை உறவு உச்சத்தின் கடைசி நொடியில் மட்டுமே பார்க்கிறேன் ” என்று உடன் பிரயாணித்த வெள்ளைக் காரி சொன்னாள் அவள் கடவுளின் விலாசத்தைத் தேடித் திருவண்ணாமலைக்குப் போய்க் கொண்டிருந்தாள் ”சில சமயம் ராம கிருஷ்ணரைப் போல பச்சை வயல்களின் மீது வெள்ளைக் கொக்குகள் எழும்புவதைக் காணும் போதும் அது நிகழ்வதுண்டு ”என்று சொன்னாள். எனக்கு ராம கிருஷணர் மேல் ஆர்வமில்லை ஆனால் அவளது நீர்த்த டீ சர்ட்டின் மேலே விறைக்கும் முலைகள் அந்தக் கொக்குகளை நினைவுபடுத்துகின்றன என்ற போது சிரித்தாள் எனக்கு அவளைப் பிடித்திருந்தது என்னைப் போலவே கண் தெரியாத தம்பதிகளின் கண்தெரியும் குழந்தை அழுவதை பதற்றத்துடன் கண்ணீருடன் கவனித்தாள் அப்போது அவள் கண்களில் கடவுள் நம்பிக்கை இல்லை. என்பதைக் கவனித்தேன். ”புணர்ச்சி எனக்கு இந்த இடத்தில் விலகு என்று சொல்லும் ஒரு அறிவிப்புப் பலகை இரு தொழு நோயாளிகள் புணர்ந்ததைப் பார்த்த கணத்திலிருந்து எனக்கு இவ்விதம் தோன்றி வருகிறது சீழ் பழுத்த யோனிகளிலும் புழுத்த குறிகள் கண நேரக் கடவுளைத் தேடித் துழாவுகின்றன ” என்று நான் அவளிடம் சொன்னேன் ”பூமியில் புணர்ச்சி நிகழாத மனம் எது?” என்று அவள் கேட்டாள். அப்போது அவள் கண்கள் மிக தூரத்திலிருந்தன. நான் அவற்றை வரைய முயன்று தோற்றேன் ஒப்பிட எனக்கு அவள் முலைகளை வரைவது எளிதாக இருந்தது தோய்த்த பால் பனீர் போலிருந்த அந்த வெள்ளைக்காரச்சியின் முலைகள் உடைந்த கொப்புளம் போல சிவந்திருக்குமா இல்லை நான் பார்த்த சுதேசியக் கருப்பு நாவல் பழங்கள் போலிருக்குமா என்று மட்டும் யூகிக்க முடியாமல் ஒரு கேள்விக் குறியை இட்டு வைத்தேன். கருப்பே ருசி… அது எனது மூளையை அந்துப்பூச்சி போல் துளைத்துக் கொண்டே இருந்தது திருச்சியில் அவள் இறங்கும் முன்பு அந்தக் கேள்வியை கேட்டே விட்டேன் அவள் புன்னகையுடன் போன மாதம் தான் அவளுக்கு முற்றிய நிலை மார்புப் புற்று நோய் கண்டறியப் பட்டதாகச் சொன்னாள் அவள் ஏன் என்னிடம் அதைச் சொன்னாள் என்பதை நான் அறியேன் ஆனால் இக்கவிதையில் எந்த நீதியும் இல்லை என்று மட்டும் உங்களுக்கு சொல்லிக் கொண்டு விடை பெறுகிறேன் போகும் முன்பு கடைசியாக… அவை வெடித்த கொப்புளங்கள் போல்தான் இருந்தன. [linesep] 14 என்ன செய்ய இந்தக் காதலை?   [Umashakthi] உமா ஷக்தி கவிதைகள், கதைகள், சின்னத்திரை தொடர்கள் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்ட கவிஞர்.  கவிதை தர முடியுமா என்றுக் கேட்டவுடன் மடமடவென எழுதி த்ந்துவிட்டார்.  எளிமையான விவரணைகளில் ஆழமான உணர்வுகளை தொட்டுச் செல்வார். [linesep] இன்று  அக்  கவிதையை எழுதி விட வேண்டும். ஒரே ஒரு வார்த்தைதான் தேவை. கெண்டைகள்  துள்ளி  மறையும் குளமொன்றின் கரையில் தங்க மீன்  போன்ற  அவ் வார்த்தைக்காகக் காத்திருக்கிறது இரவு பகலற்று  தூண்டில்.புல்லும் புதரும் விலகி  வழி விட்ட காட்டின் ஒற்றையடிப்  பாதையில் கால்கள் நின்ற  இடம் உனது மரத்தின்  அந்தத் தேன்கூடு. நீயோ இன்னொரு மரமாய் படரும்  கிளைகளை  வெட்டிப் பார்க்க ஆசைப்படுகிறாய் கட்டற்ற வான்  பரப்பில் பறந்தாலும் கடைசியில் கரத்தினில்  வந்தமரும் வெண்  புறாவைத் முத்தமிடு. கண்ணீர்க் கோடுகள, வசைச்சொற்களினிடையே ஓர்  சுழியோடி போலாகி ஒவ்வொரு முறையும் நீர்ப்  பாசியின்  குளுமை  வர்ணத்தாலான பூரணமாகா ஓவியத்தைக்  கண்டடைகிறேன்தீயில்  குளித்து உதடுகளை  சுட்டு  விரல்  கோடிழுக்கும் போது எங்கோ  தீவில் இருந்து உடைகளைக்  களைய ஆரம்பிக்கின்றாய். தூரங்கள்,தேசங்கள் ,தேகங்கள் எல்லாமே  பொய்தானோ? இவ்வோடையில் தங்கமீன்  போல் அச்சொல்  கிடைத்தால் போதும். குறுஞ்சிரிப்புடன் வீடேகும்  செம்படவத்தியாய் திரும்பிச் செல்வேன். காதல் மழை ஜூலை மாதப் பகலொன்றில் பெய்த மழையில் முற்றிலும் நனைந்த ஈரம் இன்னும் காயவில்லை… இனி என்றுமே காயாதிருக்கும். கடலாய் விரியும் காதலில் வீழ்ந்து கிடக்கிறேன். சுற்றி மற்றொரு உலகமும் நிழற்படமாய் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது! கைக்குள் பொத்தியிருந்த  பூவை கொடுத்துவிட முடியாமல் மேகத்தினூடாய் மறைந்து சென்றாய். தனிமையின் தீச்செடிக்குள் எந்த மலருமற்று இப்போது புதைந்து கிடைக்கிறேன் ஆயினும் நிகரற்ற ஓர் படகாய் காத்திருப்பேன் அன்பே.. ஒரு பெரு மழையை ஒளித்து வைத்திருக்கும் கரு முகில்களின் ரகசியங்களால் ஆனவை நம் புதுப் பயணங்களின் சாலைகளின் எல்லா வழிகளிலும் தேடிக் கொண்டே இருப்பேன். உனது வீட்டின் முற்றத்தில்,நிதமும் மண்ணில் வீழ்ந்து வாடும் நித்யமல்லிப் பூக்களை முகர்ந்தறிகிறேன் தேனீர்க் கோப்பையிலிருந்து சிந்திய ஒரு துளியை என் உதடுகள் சுவைக்கிறது.. ஆண்மையின் நறுமணம், காட்டினுள் காலடி பட்ட பசும்  புல்லின் வாசனையாய் கிளர்த்த, மீள சிதைகிறேன் மீண்டும் மழை பொழிகிறது இதுவும் ஜூலை மாதம்தான்! [linesep] 15 மொட்டை மாடியில் அனுஜன்யா இணையத்தில் உதயமாகி பெரிய அளவில் உயரத்தைத் எட்டியக் கவிஞர்.  எளிமையான கவிமொழியும் நுட்பமான படிமங்களும் கொண்டவர். இணையத்தின் ஒரே ‘யூத்’கவிஞராக ஏகோபித்த ஆதரவுடன் கலக்கி வருகிறார். [Anujanya]   [linesep] மொட்டை மாடியில் அந்தரத்திலோ அல்லது சூரிய அதிவொளியில் அருவமாகிய கம்பியிலோ தம்பதிகளை உதறியிருந்த ஆடைகள் அவர்களின் நேற்றைய காமத்தை துரோகத்தை வன்மத்தை பகிர்ந்துகொண்டே உலர்கின்றன கூடுதல் காற்றின் அனுகூலத்தில் கைப்பிடிச்சுவர் ஆணியில் ஓரங்குலம் கிழித்துக்கொண்டு ஒரு மாத ஓய்வுக்கு வழி செய்துகொண்ட சூடிதாரைப் பார்த்து முறுவலித்தது சட்டை. வெகுநாள் முன்பு ஓய்வு பெற்ற தாத்தாவின் கிழிசல் வேட்டியில் ஒற்றை நூல் மட்டும் ஈரம் காயாது தரையில் வீழ்ந்திருந்த பாப்பாவின் வாடாமல்லி கவுனைப் பார்த்துக்கொண்டே காற்றில் இன்னமும் பதற்றத்துடன் துடிக்கிறது [linesep] 4 கட்டுரை 16 காற்றுப் பள்ளத்தாக்கின் இளவரசி [Siddharth]   சித்தார்த் வெங்கடேசன் இலக்கியம், திரைப்படம், மென்பொருள். என தன் முப்பரிமாணங்களையும் அழுத்தமாக பதிவு செய்து வருபவர். அவர் எழுத்தைப் போலவே அவருடைய வாசிப்பனுபவமும் ரசனையும் அருமையானது. இன்னமும் பல சிகரங்கள் தொடுவார். [linesep] சென்ற இரண்டு ஆண்டுகளில் நான் வாசித்த அனைத்து ஆங்கில நூல்களூமே மின்நூல் வடிவில் வாசித்தவையே. இதில் பெரும்பாலானவை எனது அலைபேசியில் வாசித்தவை. அலைபேசியில் வாசிப்பதை துவங்குவதற்கு முன்பு அந்த  சிறிய திரையில் வாசிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும் என்றே நினைத்தேன். ஆரம்பத்தில் சற்று வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அலைபேசியில் வாசிக்கின்றோம் என்பதை மறந்து வாசிப்பில் ஆழ முடிந்தது. அலைபேசியில் முதலில் வாசித்த  பெரிய நாவல்  Twilight நாவல் தொடர் தான். இதில் ஏதோ ஒரு தொகுதியை மட்டும் வழக்கமான புத்தக வடிவத்திலும் மற்ற நான்கு தொகுதிகளை அலைபேசியிலும் வாசித்தேன். இன்று எதை எதில் வாசித்தேன் என்று நினைவிலில்லை. ஊடகம் என்பது ஒரு எல்லை வரை தான். இங்கு அடிப்படையாக நிகழ்வது மனம் கதை காணும் செயல் தான் அல்லவா? புத்தகம், ஒலிநூல், மின் நூல், கூகுள் பஸ்ஸிலும் வேறு இணைய தளங்களிலும் வாசிப்பது, கதைசொல்லியின் எதிரே அமர்ந்து கேட்பது , திரையில் படமாக பார்ப்பது எல்லாவற்றிலும் நிகழ்வது இந்த மனம் கதைகாணும் நிகழ்வே. இது வாசகனின் பார்வையில். எனில், எழுத்தாளரின் கோணத்திலும் அவர் தேர்ந்தெடுக்கும் ஊடகம் என்பது ஒரு கருவி மட்டும் தான் அல்லவா? நாவல், சிறுகதை, படக்கதை என எந்த வடிவில் சொன்னாலும் கதைசொல்லியின் அடிப்படை செயல்பாடு கதைசொல்லுதல் தான். படக்கதை என்ற வடிவம் நமக்கு அம்புலிமாமா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மூலமெல்லாம் நமக்கு அறிமுகமான வடிவம் தான். இவை மேற்கில் நிகழ்ந்த ஒரு பெரிய படக்கதை அலையின் தாக்கத்தில் இங்கு உருவானவை. ஆனால் மேற்கில் படக்கதை வடிவம், பதின்ம வயது சிறுவர்களுக்கானது என்ற வரையறையைத் தாண்டி ஆழமான படைப்புகளாக விரிவடைந்ததைப் போல இங்கு நிகழவில்லை. சிறுவர்களுக்கான comicsல் இருந்து வேறுபடுத்திக்காட்ட இவ்வகை படக்கதைகளை graphic novels என்று பெயரிட்டு அழைத்தனர். மேற்கை போலவே ஜப்பானிலும் படக்கதைகளுக்கென மிகப்பெரிய பாரம்பரியம் உண்டு. அவர்களின் படக்கதைகள் மங்கா (Manga) என்ற பொதுப்பெயரால் சுட்டப்படுன்றன. மங்காவில் சிறுவர்களுக்கானது, பதின்ம வயதினருக்கானது, நகைச்சுவை, மாயம் சார்ந்தது, அறிவியல் புனைவு, காமம் என பல்வேறு வகை உண்டு. இரண்டாம் உலகப்போருக்கு பின்னான அமெரிக்க கலாச்சார பாதிப்பும், பாரம்பரிய ஜப்பானிய ஓவிய பாணியும் இணைந்த புள்ளி தான் மங்கா. அலாதியான உலகம் இது. **** [siddhu-1] கிரிகௌவும் சூனியக்காரியும் (Kirikou and the Sorceress) என்றொரு ப்ரெஞ்சு அனிமேஷன் படம். ஆப்பிரிக்க நாடோடிக்கதை ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. கிராமமே அந்த சூனியக்காரியை கண்டு பயப்படுகிறது. ஊருக்கு வெளியே ஒரு குடிலில் தங்கி இருக்கும் அவள் கிராமத்து விளைச்சலை எல்லாம் தொடர்ந்து அபகரிக்கின்றாள். அவளுடன் சண்டையிடப்போன எந்த ஆணும் உயிருடன் திரும்பியதில்லை. அந்த கிராமத்தில் பிறக்கும் கிரிகௌ என்ற சிறுவன் மீண்டும் மீண்டும் “சூனியக்காரி ஏன் கெட்டவளாக இருக்கிறாள்?” என்ற கேள்வியை கேட்கிறான். “ஏனெனில் அவள் கெட்டவள்” என்ற பதில் அவனுக்கு போதுமானதாக இல்லை. அப்படி யாரும் கெட்டவர்களாகவே இருந்துவிட மாட்டார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறான். அவள் தன்னை சுற்றி உருவாக்கி வைத்திருக்கும் அத்தனை பிம்பங்களையும் தாண்டிச்சென்று உண்மையான அவளை அவன் கண்டுகொண்டு அவளை அவளிடமிருந்தே காப்பாற்றுவதே கதை.     [sidhu-2] பெஞ்சமின் சஃபானியா என்ற அபாரமான எழுத்தாளர் பதின்ம வயதினருக்கென எழுதிய புதினம், “ஆசிரியர் இறந்துவிட்டார்” (Teacher’s Dead). பள்ளி மாணவர்களான லியோனலும் ராம்சியும் பள்ளியில் பலரது முன்னிலையில் ஆசிரியர் ஒருவரை குத்திக் கொன்றுவிட்டு எந்த பதட்டமும் இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்கின்றனர். ஊரும் செய்தி நிறுவனங்களும் பதின்ம வயது கொலையாளிகள் என்று முத்திரையிட்டு சிறுவர்களின் வன்முறை பற்றி உரக்க பேசிக்கொண்டிருக்கும் பொழுது சக மாணவனான ஜாக்சனுக்கு மட்டும் ஒரு கேள்வி உறுத்திக்கொண்டே இருக்கிறது. “ஏன் அவர்கள் இந்த கொலையை செய்தார்கள்?”. ஜாக்சன் கொலையை நேரில் பார்த்தான். அந்த நிதானமான நடை அவனை உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஏனெனில் அவர்கள் அப்படித்தான் என்ற பதில் அவனுக்கு போதுமானதாக இல்லை. அவன் இந்த கொலையை பற்றித் துப்பறிவதே நாவல்… மேற்சொன்ன இரு ஆக்கங்களுமே என்னை மிகவும் பாதித்தன. நன்மைக்கும் தீமைக்குமான கோடு மிக சன்னமானது என்பதை கூறியதால் மட்டும் அல்ல. அதை பல இலக்கிய ஆக்கங்கள் செய்துள்ளன. ஆனால் சிறுவர் இலக்கியம் என்ற வரையறைக்குள் நின்றுகொண்டு இந்த செயலை செய்தது மிக மிக முக்கியமானதாக எனக்குப் பட்டது. குழந்தைகள் தங்களுக்கான விழுமியங்களை கண்டடைவது எப்படி? சொல்லித்தரப்படுவதை விட தாம் வளரும் சூழல் அவர்களுக்கு அளிப்பதை கொண்டே தங்களின் சாரத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள் என்று படுகிறது.  ஒரு மதக்கலவரத்தை பற்றிய உரையாடலின் இடையில், “அவனுங்க அப்படித்தாண்ணே… எல்லாரையும் ஊரவிட்டே தொரத்தனும்” என்று ஒரு பதினெட்டு வயது சிறுவன் சொல்லக்கேட்டபோது எழுந்த அதிர்ச்சி கொஞ்சமல்ல… இத்தனை தட்டையாக உலகை பார்ப்பது அவன் தவறா அல்லது அப்படி பார்க்க பழக்கிய சூழலின் தவறா? சோட்டா பீம் முதல் பவர் ரேஞ்சர்ஸ் வரை அவர்களை பாதிக்கும் அத்தனை ஆக்கங்களும் மீண்டும் மீண்டும் இந்த நல்லவர்/தீயவர் என்ற இருமையையே முன்வைக்கின்றன. “கிரிகௌவும் சூன்யக்காரியும்” மற்றும் “ஆசிரியர் இறந்துவிட்டார்”  ஆகிய இரண்டு படைப்புகளும் இந்த காரணத்தாலேயே மிக மிக முக்கியமானவை என்று பட்டது. அவை முதல் பார்வை கொடுக்கும் பிம்பங்களை தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை பற்றி பேசுகின்றன. இவ்விரு ஆக்கங்களும் எதேச்சையாக ஒரே நேரத்தில் என் கைக்கு வந்து சேர்ந்தன. வேறேதோ படத்தை தேடும் பொழுது கிரிகௌவும் விமான நிலையத்தில் காத்திருந்த பொழுது ஆசிரியர் இறந்து விட்டாரும். என் வாழ்வில் எப்போதேனும் நிகழும் அபாரமான எதேச்சைகளில் இதன் தொடர்ச்சியாய் நிகழ்ந்த அந்த இன்னொரு நிகழ்வும் அடங்கும். சில நாட்களிலேயே எதேச்சையாக Sprited Away எனும் அனிமேஷன் படத்தினை காணும் வாய்ப்பு கிடைத்தது. என்ன சொல்ல… I was blown away. அது வரை டிஸ்னித்தனமான கார்டூன்களை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட எனக்கு இது வேறொரு உலகமாக பட்டது. குழந்தையின் கனவு இப்படி தான் இருக்கும் என்று நினைக்க வைத்த படம். அப்படித்தான் மியாசாகியின் உலகிற்குள் நுழைந்தேன். ஹயாவோ மியாசாகி ஒரு ஜப்பானிய திரைப்பட இயக்குனர். உலகின் ஆகச்சிறந்த Animator என்று அத்துறை வல்லுனர்களால் போற்றப்படுபவர். ஆகச்சிறந்த கதைசொல்லியும் கூட. கொஞ்சம் பழைய மனிதர். 40 ஆண்டுகளாக அனிமேஷன் துறையில் இருக்கிறார். உலகின் கடைசி “கைகளால் வரையும் அனிமேடர்” இவராகத்தான் இருப்பார்  என்கின்றனர். இவர் கணினியை பயன்படுத்துவதில்லை. இவரது படங்களின் ஒவ்வொரு கணமும் இவரது கையால் வரைந்த ஓவியங்களால் ஆனது. கிரிகௌ மற்றும் சஃபானியாவின் நாவலுக்கு பின் மியாசாகிக்குள் நுழைந்ததில் ஒரு மிகப்பெரிய நன்மை இருந்தது. அவ்விரு ஆக்கங்களின் சாரமான “கருப்பு/வெள்ளை பிம்பங்களை தாண்டி தேடு” மியாசாகியின் எல்லா படங்க ளிலும் வியாபித்திருந்தன. மியாசாகி இயக்கிய முதல் திரைப்படம் நௌசிகா, காற்றுப்பள்ளத்தாக்கின் இளவரசி (“Nausicaa, the Princess of the valley of the wind”). 1984ல் வெளிவந்த படம் இது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பெயரில் ஒரு படக்கதை வடிவ நாவலை ஒரு ஜப்பானிய மங்கா இதழில் தொடராக வரைய ஆரம்பித்திருந்தார் மியாசாகி. 1982, 83ஆம் ஆண்டுகளில் அந்நாவலின் முதல் இரு பாகங்களை முடித்துவிட்டார். அந்த இரு பாகங்களை அடிப்படையாக வைத்தே 1986ஆம் ஆண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நாவல் மேலும் 10 வருடங்கள் அந்த இதழில் வெளிவந்து 1994ஆம் ஆண்டு நிறைவடைந்தது. [sidhu-3] 1982 – 1994… 12 ஆண்டுகள். நௌசிகா நாவல் ஒரு பெருங்கனவு. முழுமையான நூல் வடிவில் 1300 பக்கங்களுக்கு விரியும் படக்கதை இது. தூரத்து எதிர்காலத்தில் நிகழும் கதை. உலகின் மிகப்பெரிய போர் (Seven Days of Fire என்று இந்த நிகழ்வு குறிப்பிடப்படுகிறது நாவலில்) உலகின் வளங்களை எல்லாம் மாசுப்படுத்திவிடுகிறது. உலகை விஷக்காடுகள் சூழ்ந்து வேகமாக பரவுகின்றன. அவ்விஷக்காடுகளெங்கும் மிகப்பெரிய பூச்சிகள், வண்டுகள்… இவற்றுடன் ஓஹ்மா எனப்படும் ஒரு ராட்சச பூச்சி இனம். வேறு உயிரினங்களே இல்லை. உலகில் எஞ்சியவை தோரோக்மியா மற்றும் டோரோக் ஆகிய இரு பெரும் ராஜ்ஜியங்களும் சில சிறிய நாடுகளுமே… நிலமும் வளமும் அரிதானதால் தோரோக்மியாவும் டோரோக்கும் தொடர்ந்து போரில் ஈடுபடுகின்றன. இந்த சிறிய நாடுகளோ இரண்டில் ஏதோ ஒரு பெரும் ராஜ்ஜியத்திற்கு போரில் உதவியே தங்களின் தனிநாடு அந்தஸ்தினை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலை… அப்படி ஒரு சிறிய நாடு தான் காற்றுப்பள்ளத்தாக்கு.  அங்கு காற்று மிக அதிகமாக வீசுவதால் இவர்களின் நிலப்பகுதி விஷக்காட்டின் பரவலுக்கு பலியாகாமல் இருந்தது. இந்த நாட்டின் இளவரசியான நௌசிகாவை சுற்றியே இந்த நாவல் சுழல்கிறது. போர் எதற்கு என்ற கேள்வி அவளை துரத்துகிறது. தோரக்மியாவிற்கும் பின்பு டோரோக்கிற்கும் செல்கிறாள். இரண்டு பெரு ராஜ்ஜியங்களுமே பேரழிவு திட்டம் ஒன்றுடன் போரில் இறங்கியுள்ளன. அதை முறியடிக்க போராடுகிறாள். இவை அனைத்தையும் சாத்வீக வழியில் நிகழ்த்த முனைகிறாள்… டோரோக் பழங்கதைகளில் மீட்பரின் வருகையை பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. அந்த குறிப்பில் இருப்பதை போலவே இவளது வருகையும் நிகழ்வதால் இவளை உலகின் மீட்பர் என்றும் கடவுள் என்றும் நம்பும் கூட்டம் ஒன்றும் உருவாகிறது… போர், சூ ழலியல், பெண்ணுரிமை, மதம் சார்ந்த அரசியல் என பல தளங்களை தொட்டுச்செல்கிறது நாவல். ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து பேரழிவுப்போரை நிகழ்த்தும் தோரக்மியா மற்றும் டோரோக் ராஜ்ஜிய மன்னர்களும் ஒரு வகையில் சூழலின் கைதிகளே என முன்வைப்பது,  அனைவராலும் அருவெறுப்புடன் பார்க்கப்படும் Worm Handlers (பெரிய புழுக்களை வளர்த்து அவற்றின் உதவியுடன் போர்களத்தில் பிணங்களுக்கிடையே பொருட்களை தேடும் கூட்டம்) எனும் இனமக்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்வது என நாவல் முழுவதும் அவர் உருவாக்கும் பிம்பங்களை அவரே உடைத்த வண்ணம் இருக்கிறார். இது ஒரு வகையில் பின்னால் வரப்போகும் அவரது எல்லா படங்களிலும் அவர் தொடர்ந்து செய்துகொண்டே இருந்த செயல். எதிர்நிலையில் நிற்கும் மனிதனின் நியாயத்தையும் அலசிப்பார்க்கும் பக்குவத்துடன்  (Empathy) உலகைப் பார்க்க குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க முடியுமெனில், அதைவிட பெரிய விழுமியத்தை அவர்களுக்கு நாம் தந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. மனைவி கருவுற்றிருந்த நேரம். நல்ல திரைப்படங்களைப் பார்ப்பது தாயின் மன மகிழ்ச்சிக்கும் குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் உதவுமென்பதால் ஒரு மாதம் தொடர்ச்சியாக மியாசாகியின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். Laputa, the Castle in the Skyல் துவங்கி அவரது சமீபத்திய படமான Ponyo வரை அனைத்தையும் மிகவும் ரசித்துப் பார்த்தோம். படம் பார்ப்பது, அது குறித்த ஒத்த விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்வது,  விவாதிப்பது என என் வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்களில் ஒன்றாக மாறிய மாதம் அது. மியாசாகியின் படங்கள் அலாதியானவை, எளிதில் அணுகக் கூடியவை. கனவிலிருந்து உயிர்த்து வந்த வண்ணங்களால் நிரம்பியவை. கருணையை பாடமாக போதிக்காமல்  குழந்தைகளின் ஆழ்மனத்தில்  இயல்பாக பதியமிடச் செய்பவை. ஒன்னரை வயதான என் மகளுக்கு மியாசாகியை அறிமுகப்படுத்தும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். [sidhu-4] பின்குறிப்பு : இந்த படத்தையும் நாவலையும் முடித்துவிட்டு இது குறித்து இணையத்தில் தேடியபொழுது  நெளசிகா பற்றி அவர் அளித்த ஒரு நீண்ட பேட்டி கிடைத்தது. பொக்கிஷம் அது. எழுதுதல் எனும் செயல்பாட்டில் ஆர்வமிருக்கும் எவரும் நிச்சயம் படிக்க வேண்டிய பேட்டி. ஒரு எழுத்தாளர் தன் படைப்பின் பின் இருந்த திட்டமிடல் (அல்லது இன்மை) குறித்தும், எடுத்த முடிவுகள் குறித்தும், சொல்லாமல் விட்ட விஷயங்கள் குறித்தும் படைப்பின் விதைகள் குறித்தும் பேசுவது படைப்பைப் போலவே முக்கியத்துவமானது எனப் படுகிறது. அந்த பேட்டிக்கான சுட்டி : http://www.comicbox.co.jp/e-nau/e-nau.html [linesep] சில சுட்டிகள் நௌசிகா (திரைப்படம்) : http://en.wikipedia.org/wiki/Nausica%C3%A4_of_the_Valley_of_the_Wind_(film) நௌசிகா (நாவல்) : http://en.wikipedia.org/wiki/Nausica%C3%A4_of_the_Valley_of_the_Wind_(manga) கிரிகௌவும் சூன்யக்காரியும் : http://en.wikipedia.org/wiki/Kirikou_and_the_Sorceress ஆசிரியர் இறந்துவிட்டார் : http://www.thebookbag.co.uk/reviews/index.php?title=Teacher’s_Dead_by_Benjamin_Zephaniah [linesep] 17 தமிழ் நாவல்கள்- ஒரு அழகியல் பார்வை [Ayyanar Viswanath] அய்யனார் விஸ்வநாத் இணையத்தில் தன் எழுத்துகளை கூர் தீட்டிக் கொண்டு இலக்கிய உலகில் பிரவேசித்திருக்கும் எழுத்தாளர்.  இவருடைய பதிவுகளில் வரும் உரையாடலினி எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம். தன்முனைப்பும், படைப்பூக்கமும் மிக்க எழுத்தாளர். [linesep] தமிழ் சிறுகதைகள் எட்டிய உயரத்தை இன்னும் தமிழ் நாவல்கள் எட்டவில்லை என்பது ஒரு சாரரின் கருத்து. இதை முழுவதுமாகவே நிராகரிக்கிறேன். தமிழ் நாவலின் வரலாறு 130 வருடங்களைக் கடந்திருப்பினும் முதல் அறுபது வருடங்களில் எழுதப்பட்ட நாவல்கள் எண்ணைக்கையளவில் மிகவும் சொற்பமானவை. தமிழ் நாவலின் வளர்ச்சி என்று பார்த்தோமானால் அது 1940 திற்குப் பிறகுதான் சீரடைகிறது. ஆக கடைசி எழுபது வருடங்களில் தமிழ் நாவல் சூழலில் நிகழ்ந்திருப்பது நிச்சயம் புலிப் பாய்ச்சல்தான். படைப்பாளியாய் எனக்கான தேர்வுகள், அரசியல் பார்வைகள் உண்டெனினும் அவற்றின் தாக்கமில்லாது ஒரு தேர்ந்த வாசகனாய் என் வாழ்வோடு பயணித்த நாவல்களில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதை ஒரு விமர்சனக் கட்டுரையாக எழுதுவதைக் காட்டிலும் வாசிப்பு மனதின் அனுபவங்களாக எழுதுவதையே விரும்புகிறேன். சம காலத்தில் வாசிப்பு என்பது படைப்பிற்கு நிகரான ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. படைப்பையும் வாசகரையுமே பிரதானமாகக் கொள்ள வேண்டிய, படைப்பாளியையே தன் படைப்பின் இன்னொரு வாசகராக மாற்றக்கூடிய சூழல் இது. இச்சூழலின் சுதந்திரத்தைக் கணக்கில் கொண்டு படைப்புகளை முன்னிறுத்தியே இந்தக் கட்டுரையை  எழுத விரும்புகிறேன். காலகட்டம், தர வரிசை போன்றவற்றைக் கணக்கில் கொள்ளாது எனக்குப் பிடித்த நாவல்களைப் பகிரும் கட்டுரைதான் இது. ஆகவே எது முதல்? எது இரண்டாவது? என்கிற தொணி இதில் கிடையாது. கால வரிசையையும் கணக்கில் கொள்ளாமல் வெறும் மனப்பதிவாக மட்டுமே இக்கட்டுரையை அனுகக் கோருகிறேன். இந்த வருடத்தின் நடு வாக்கில் பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை யை வாசித்து முடித்தேன். சென்ற வருட இறுதியில் வாசிக்க ஆரம்பித்த ஆயிரம் பக்க நாவல் இது. ஒப்பீட்டளவில் இதுவரைக்குமான என் வாசிப்பில் மிக அதிக அளவு காலத்தை எடுத்துக் கொண்ட நாவலும் இதுதான். என்னை ஈர்த்த முதல் விஷயமாகச் சுட்ட விரும்புவது இக் கதை இயங்கும் தளம். அந்நிய நிலப்பிரதேசங்களில் துவங்கி, வரலாற்றுப் பயணமாய் இந்தியாவில் நுழைந்து, தொன்மங்களில் முடிவடையும் நெடிய பயணம்தான் இதன் களம். படைப்பாளி தான் வாழ்ந்த, தான் நன்கு அறிந்த, தளங்களில் மட்டுமே இயங்க வேண்டும் என்கிற என் எண்ணத்தையும் இந்நாவல் மாற்றியமைத்தது. படைப்பு மனதின் எல்லைகள் என நானாகவே நிறுவிக் கொண்ட பல விஷயங்களையும் தாண்டவராயன் கதை தகர்த்தது. பதினாறாம் லூயி பிரான்சை ஆண்டக் காலக் கட்டத்தில் முதற்கட்டக் கதை சொல்லப்படுகிறது. பல்வேறு வகையான புதிய நிலப்பிரதேசங்கள் துல்லியமாகவும், புனைவாகவும், மாய யதார்த்தமாகவும் நாவலின் நெடிய வழியெங்கும் பதிவாகியிருக்கிறது. மதங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் யாவற்றையும் கதையோடு பின்னிப் பிணைத்திருப்பதும் ஒரு முழு படைப்பிற்கான உத்திரவாதத்தை அளிக்கிறது. ட்ரிஸ்ட்ராம் சதுப்பு நிலப் பெண்ணான எலினார் மீது காதல் கொள்வது- ஒரு மாயக் காட்டில் அவர்களுக்குள் நிகழும் கலவி- அதன் தொடர்ச்சியாய் கண்களை இழந்து விநோத நோய்மையால் பீடிக்கப்படும் எலினார்- அவள் நலம்பெற தேவைப்படும் சிகிச்சைக்காக ட்ரிஸ்ட்ராம் மேற்கொள்ளும் சாகஸப் பயணம் இதான் தாண்டவராயன் கதை. இந்தியாவில் நுழையும் ஆங்கிலேயர்களுக்கு இந்திய செழிப்புகளின் மீது படரும் பேராசை. இந்தியத் தொன்மை வாழ்வு யாவற்றையும் சாக்த, பெளத்த மதப் பின்னணியோடு நிறுவி இருப்பதும் இந்நாவலின் மற்றுமொரு தனித்துவம். பா.வெங்கடேசனின் மொழி, அவரின் வரலாறு மற்றும் நிலப்பிரதேசங்களின் மீதான கூர்ந்த அவதானிப்பு இந்நாவலைக் கச்சிதமாய் எழுத வழிவகுத்திருக்கிறது. மேலும் இக்கதையை நிகழ்த்திக் காட்டத் தேவையான அறிதலும், அதற்கான உழைப்பும் வாசிப்பவர்களை பிரம்மிக்கச் செய்து விடுகிறது. இந்நாவலின் அடிநாதம் தீராக் காதல் என்பதாகத்தான் இருக்க முடியும். காதல் மட்டுமே தொன்மங்களில் துவங்கி, நவீனத்தில் கிளைத்து மாயங்களில் திளைக்க முடியும். தாண்டவராயனில் நிகழ்வதும் அதுதான். இந்நாவலுக்கான விரிவான விமர்சனத்தை எழுதி விட வேண்டும் என்கிற பேராசை எனக்கு உண்டு. அடுத்த வருடத்திலாவது அதைச் செய்துவிட வேண்டும். சமீபத்தில் படித்த சுவாரசியமான தமிழ் நாவல் தமிழ்மகனின் வெட்டுப் புலி. இரண்டே நாளில் படித்து முடித்த வேகம், நாவலில் இருக்கிறது. திராவிடத்தின் மீதிருக்கும் என் விருப்பமும், பெரியார் சார்புத் தன்மையும் இந்த நாவலை விருப்பத்தோடு படிக்க உதவியிருக்கலாம். தீப்பெட்டி அட்டையிலிருக்கும் சித்திரத்தின் பின்புலம் தேடிப் பயணிப்பது என்பது எத்தனை சுவாரசியமான ஒன் லைனர்! ஒரு நாவல் இம்மாதிரிப் புள்ளியில் துவங்குவது பெரும்பாலான வாசகர்களை ஈர்க்கும். நாவல் உத்தியளவில் இது பிரமாதமான அனுகுமுறை. சரியானத் தகவல்களை, தமிழகத்தின் வரலாறை, புனைவோடு இணைத்துச் சொல்லியிருப்பது இந்த நாவலின் இன்னுமொரு சிறப்பு. புனைவும் வரலாறும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருப்பதாகத்தான் உணர்ந்தேன். எண்பதுகளில் நாவல் தடதடவென முடியும் எல்லையை நோக்கி நகர்ந்தாலும் இதற்கு மேல் விலாவரியாக எழுதத் தேவையில்லை என்பதே என் எண்ணமாகவும் இருக்கிறது. இலட்சுமண ரெட்டி -குணவதி, தியாகராசன் – ஹேமலதா இவர்களின் பகுதி என்னை வெகுவாகத் தொந்தரவு செய்தது. குறிப்பாய் ஹேமலதா கதாபாத்திரத்தின் கடைசி கால மாற்றங்களும் அதை தியாகராசன் எதிர்கொள்வதும் மீண்டெழுதலின் யதார்த்தம். மேலதிகமாய் இந்த நாவல் முன் வைக்கும் கொள்கைகளின் தேய்வு என்னை அதிர்ச்சியடைவே வைத்தது. ஒரு மாற்று இயக்கமும் அதன் தலைவர்களும் நாளையடைவில் எவ்வாறு பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளத் தேய்வடைகிறார்கள் என்பதிலிருந்து, அவர்களின் சுயலாபம், குடும்ப நலன் என எல்லாப் புள்ளிகளையும் நேரடியாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. அண்ணாவிலிருந்து அழகிரி வரைக்குமாய் ஒருவரையும் விடாமல் விமர்சித்திருக்கிறது. தலைவர்களின் வாழ்வைத் தவிர்த்து சாமான்யர்களின் நம்பிக்கைகள், கொள்கைப் பிடிப்புகள் நிறமிழந்து போவதையும் இந்த நாவல் சரியாகவே பதிவித்திருக்கிறது. தீவிரக் கடவுள் மறுப்பாளனான தியாகராசன் ஒரு கட்டத்தில் அன்னையைத் தஞ்சமடைவது எத்தனை பெரிய அவலம்! தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் இரண்டறக் கலந்தது. அதையும் நாவல் ஒரு பிடிபிடித்திருக்கிறது. பாலச்சந்தரிலிருந்து ரஜினிகாந்த், மணிரத்னம் என எவரையும் விட்டுவிடாத சரித்தன்மையும் நாவலில் இருக்கிறது. திராவிடப் பின்புலத்திலிருந்து வந்த பத்திரிக்கையாளன் நடிகையின் பேட்டிக்கு பணம் பெறும் நிலைக்குத் தள்ளப்படும் காலத் தேய்வையும், இயக்கத்தை உருவாக்கியத் தலைவர்களின் சம காலத் தோற்றத்தையும் சரியாய் பதிவித்திருக்கிறார். புனைவுப் பாத்திரங்களைக் கொண்டு சமகால அரசியலைக் கடுமையாய் விமர்சிப்பதும் இந்த நாவல் முழுக்க நிகழ்ந்திருக்கிறது. இந்திரா,அண்ணா,எம்ஜிஆ​ர், கருணாநிதி என எல்லோர் மீதும் கதையில் வரும் பாத்திரங்கள் கடுமையான விமர்சனங்களை உரையாடலாகச் சொல்லிவிட்டுப் போகின்றன.நெருக்கடிகால மிசாக் கடுமைகளுக்கு காரணமாக இருந்த இந்திராவுடன் அரசியல் கூட்டு வைப்பதை வேதனையாய் பகிர்ந்திருக்கும் ஒரு பத்தி, அரசியல் சதுரங்கத்தின் சாணக்ய புத்தியைச் சரியாய் துகிலுரித்திருந்தது.எண்பது வருட தமிழக வரலாறை, நேரடிப் பெயர்களோடு வெகு இயல்பாய், வரலாற்றுப் பிழையில்லாமல், எந்தச் சார்புமில்லாமல்(பெரியாரைத் தவிர்த்து) , சாதாரண மொழியில் தமிழ்மகனால் சொல்ல முடிந்திருக்கிறது. என் வாசிப்பளவில் தமிழில் இது ஒரு முக்கியமான படைப்பு. இந்த வருடத்தில் படித்த இன்னொரு மிகச் சிறந்த நாவல்  பிரான்சிஸ் கிருபா வின் கன்னி. கவிஞர்கள் நாவலெழுதும் போது மொழி கூடுதல் சிறப்பாகிவிடுகிறது. கன்னியில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம் அதன் மொழிக் கட்டுமாணம். தவிர இந்நாவலில் பதிவாகியிருக்கும் மென் மனம். அதன் மிக மிக அந்தரங்கமான நுட்பம். எதோ ஒரு புள்ளியில் சட்டெனத் தலைகீழாகும் மனதின் விநோதம். இவை எல்லாமும் இந்நாவலில் உண்டு. சந்தனப் பாண்டியின் மனப் பிறழ்விற்கு காரணமாக அமலாவைச் சொல்வதா? சாராவைச் சொல்வதா? அவனின் சிக்கலான் பேரன்புதான் எல்லாவற்றிற்குமான காரணம் என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறோம். மதங்கள்,சம்பிரதாயங்கள் சாதாரணர்களின் வாழ்வில் நிகழ்த்தும் வன்முறையாகக் கூட இந்நாவலை வாசித்துப் பார்க்கலாம். படைப்பாளியை நன்கு அறிந்திருந்தால் நாவலின்  வடிவ  அமைப்பை கச்சிதமான ஆட்டோ பிக்சன் எனவும் வரையறுக்கலாம். தேவதேவனும், தாடிக்கார தாத்தனும், கடலும் ,நண்டும் பால்யக் கால அத்தைப் பெண்ணும், பைத்திய வெறுமையும், மிகப்பெரும் வாதையும் நாவல் முழுக்கப் பதிவாகி வாசகர்களை கலைத்துப் போடுகிறது. புனைவிற்கும் நிஜத்திற்குமான ஊடாட்டத்தில் கலங்கித் திரிவது படைப்பு மட்டுமல்ல வாசகரும்தான். சில படைப்புகளை எங்காவது யாராவது சொல்லக் கேட்டிருப்போம். பின்பு அதைத் தேடியும் கிடைக்காமல் போனால் அதன் மீது மற்ற எல்லாவற்றையும் விட அதிகமான ஈர்ப்பு இயல்பாகவே படர்ந்து விடும். சம்பத்தின் இடைவெளி  எனக்கு அப்படி ஒரு அனுபவத்தைத் தந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாய் தேடி பிறகு நண்பரொருவரின் முயற்சியால் ஒளி நகலாக இந்த நாவல் என் கைக்குக் கிடைத்தது. மரணத்தின் வாசனையை  முழுக்க வாசிப்பவர்களால் நுகர இயலும். சாவு பற்றிய கேள்வி, சாவு பற்றிய வரையறைதான் இந்த நாவல். கதை என தனியாய் சொல்ல இதில் ஒன்றுமில்லை. சிக்கலான மனம் ஒன்று சாவைத் தொடர்ச்சியாக சிந்திக்கிறது. சாவை வார்த்தையாக்கி விட அது வாழ்வைப் போராட்டமாக்குகிறது. திரும்பத் திரும்ப வாசிக்கும் நாவல்களில் இது முக்கியமானது. ஒரு வகையில் இந்த நாவல் ஒரு வித போதாமையில் முடிந்து போகிறது. மேலும் அது அப்படித்தான் முடியும். சாவு என்பதை இதுதான் என யாராலாவது அத்தனை எளிதில் வரையறைத்து விட முடியுமா என்ன? சம்பத்தைப் பொறுத்தவரை, சம்பத் தேடிக் கண்டடைந்த வரை. அஃதொரு இடைவெளிதான். அவரின் தேடுதல்தான் இச்சிறுநாவல். தத்துவமும், யதார்த்தமும், நவீன வாழ்வின் வெறுமையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நாவலிது. சுருக்கமாக மரணத்தின் மீதான தியானம் என்கிறார் நாகார்சுனன். கதையின் பிரதான பாத்திரம் தினகரன் என்றாலும் அதை சம்பத்தாகப் புரிந்து கொள்ளும் திறப்பும் வாசகருக்கு இருக்கிறது. சம்பத் தினகரனைப் போலத்தான் வாழ்ந்தார் என அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். காதல் நிமித்தமான தோல்வியொன்றில் மொட்டைமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள விழைந்த நொடிக்கு முன்னதாக தினகரன் தரையில் தன் சடலத்தைப் பார்க்கிறான்.பயந்து பின் வாங்கி அதைப்பற்றியே யோசிக்கும்போது அந்நொடியில் நிகழ்ந்தவைகளை நிசப்தம் என அர்த்தப்படுத்திக்கொள்கிறான்.பின் ஒன்றிலிருந்து ஒன்றாக சாவு புதுப்புது பரிமாணங்களை அவனுள் நிகழ்த்துகிறது. 1.சாவு என்பது நிசப்தம்,தாங்கொனா நிசப்தம். 2.சாவு என்பது வாழ்விற்கு கருணா சமுத்திரம். 3.சாவு என்பவர் கண்காணிப்பாளர். 4.சாவு மனிதர்களுக்காக காத்துக்கிடக்கிறது. காத்திருத்தல் என்பதைக் கண்டறிந்ததும் தினகரன் சிறிது சந்தோஷப்படுகிறான். அந்த எண்ணமும் நெடுநாள் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.பின்பொரு தருணத்தில் சாவென்பது இடைவெளி என அவனுக்குப் புலப்படுகிறது.சுருக்கு கயிற்றின் முடிச்சினுக்கு இடையுள்ள இடைவெளி, கழுத்தை நெருக்கி சாவினுக்கு காரணமாய் அமையும்.ஆக சாவென்பது இடைவெளிதான் என தீர்மானமாய் நம்புகிறான். மகிழ்கிறான். என்னால் குழம்பிப் போகத்தான் முடிந்தது. தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் தொந்தரவு செய்த எழுத்துக்களுள் முதலாவதாக கோபி கிருஷ்ணன் எழுத்துகளையே குறிப்பிட விரும்புவேன். அவர் வறுமையில் வாடினார். அங்கீகாரமில்லாமல் செத்துப் போனார் போன்ற தனிப்பட்ட விஷயங்களால் உருவான மிகை அல்ல இது என்பதையும் தெளிவாகவே குறிப்பிட விரும்புகிறேன். கலைஞன் எப்போதும் கலைஞன்தான். வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அவனை என்ன செய்துவிட முடியும்? கோபியின் எழுத்துக்களில் தெரிக்கும் அப்பட்டமான நேர்மை என் ஆன்மாவை நேரடியாய் தொடுகிறது. விமர்சனத்தையே வைக்க முடியாமல் போகும் எழுத்து இவருடையதுதான். கோபியின் டேபிள் டென்னிஸ், உள்ளேயிருந்து சில குரல்கள் இவ்விரண்டையும் நாவல் வடிவில் வைத்துப் பேசமுடியும். இரண்டுமே அதனதன் தளத்தில் உச்சமானவை. காமத்தையும், இயலாமையையும் மனப்பிறழ்வையும் இவரால் துணிவாகவும் நேர்மையாகவும் எழுத முடிந்திருக்கிறது. உள்ளேயிருந்து சில குரல்கள் நாவலில் முதுநிலை உளவியல் படித்த ரவீந்திரனும் ஸ்டெல்லாவும் மனநோயாளிகளைப் பற்றின சமூகத்தின் தவறான புரிதலினை களையும் பொருட்டு ஒரு மனநல காப்பகத்தில் சந்தித்த மனநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்வார்கள்.அய்ம்பத்தி ஒன்பது மன நிலைகள் தனித்தனியாய் சொல்லப்பட்டிருக்கும்.  19 காட்சிகளையும் 59 நிலைகளையும் இன்றும் தொடரும் பழமையெனும் தலைப்பில் ஆறு தனித்தனி குறிப்புகளும் சில செய்திகள் சிந்தனைகள் எனும் தலைப்பில் எட்டு குறிப்புகளும் தொகுக்கப்பட்டிருக்கும்.ஒரு ஆராய்ச்சி நூலின் வடிவத்திலும், பல சிறுகதைகளின் வடிவத்திலும், மொத்தமாய் பார்த்தால் நாவலின் வடிவத்திலுமாய் இப்படைப்பை பல விதங்களில் பொருத்திப் பார்க்கலாம்.என்னைக்கேட்டால் கோபியின் ஒட்டு மொத்த படைப்புகளும் ஒரே நாவலின் வெவ்வேறு பக்கங்கள் என்பேன். ஏன் மன வினோதங்களையும் இயல்பாய் அங்கீகரிக்கக்கூடாது? எனக்கேட்கும் கோபி சுவாதீனம்,சுவாதீனமின்மை என்கிற பாகுபாடுகள் அற்ற சமூகத்தை உண்டாக்க உதவுவது தனது இலட்சிய கனவு என்கிறார்.மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை.மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை எனும் கோபி இப்படைப்பில் அவ்வார்த்தைகள் புரிதல் நிமித்தமாக கையாண்டதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறார். இந்தப் புத்தகத்தை படித்த முடித்தவுடன் இதில் சொல்லப்பட்டிருக்கும் பல நிலைகளில் நான் இருப்பதாக உணர்ந்தேன்.என் குணாதிசயங்களை ஒத்த பல நண்பர்கள் இப்புத்தகத்தில் காணக் கிடைத்தார்கள்.என்னுடைய அபார போலித்தனத்தின் காரணத்தால் சமதளத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் அல்லது அது போன்ற ஒரு பிம்பத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.அப்படி ஒரு போலி பிம்பத்தை உருவாக்க முடியாதவர்களை சமூகம் ‘பைத்தியம்’ என்கிறது. நாவலில் சொல்லப்பட்டிருக்கும் 59 நிலைகளில் வரும் எல்லா மனிதர்களின் அடிப்படைப் பிரச்சினையும் பயம்தான். வாழ்வைப் பற்றின பயம்.சமூகத்தினை பற்றின பயம்.அடுத்தவர்களின் மதிப்பீடுகள் பற்றிய பயம். கட்டமைக்கப்பட்டவைகளின் மீதான பயம். புனிதங்களை மீறுவதன் பயம். புனிதங்களாய் இல்லாமல் போனதின் பயம். ஒருகட்டத்தில் மிகுந்த பயங்கள் தாங்காது, தன்னைக் காத்துக்கொள்ளும்பொருட்டு,வன்முறையாளர்களாக சடுதியில் மாறிப்போகிறார்கள் அல்லது சந்தேகிக்கிறார்கள்.தொடர்ச்சியான சந்தேகித்தல் வினோதமான நடவடிக்கைகளுக்கு அவர்களை உட்படுத்துகிறது.சில சந்தேகங்கள் கொலையிலும் சில சந்தேகங்கள் தற்கொலையிலும் முடிந்துபோகின்றன. உச்ச மனப் பிறழ்வில் சிதறலாய் கொட்டப்பட்ட வார்த்தைக் கோர்வைகள்தான் டேபிள் டென்னிஸ். காமத்தில் உள்ள பால் வேறுபாடுகளைக் களைவது முதல், அன்பை உறவு எனும் விலங்கிட்டுக் கட்டி வைப்பது வரை சராசரி வாழ்வின் எல்லா முரண்களையும் டேபிள் டென்னிஸ் தொட்டுச் செல்கிறது. “ஜான்ஸி உஷாவுக்குத் தெரிந்துவிட்டது.நடுவிலேயே உருவி எறிந்துவிட்டாள்.தங்கள் பொச்சில் மீதியை முடித்தூக் கொள்ள வேண்டுமாம்.வாருங்கள் ஜான்ஸி,தொலைதூரம் சென்று தோழமை வாழ்வைத் துவங்குவோம்.ஸ்தோத்திரம் ஜான்ஸி.தங்கள் கணவரும் உடன் வரலாம்.அவர் என் தோழர்” எனும் மனதை எப்படிப் பார்ப்பது? நகுலன் கவிதைகளை முன்பே வாசித்திருந்தாலும் இரண்டாயிரத்து ஏழாம் வருட வாக்கில்தான் நகுலன் நாவல்களின் தொகுப்பு – ஐ வாசிக்க முடிந்தது.1965 லிருந்து 2002 வரை அவரால் எழுதப்பட்ட நிழல்கள்,நினைவுப்பாதை,நாய்கள்,நவீனன் டைரி,சில அத்தியாயங்கள்,இவர்கள்,வாக்குமூலம்,அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி என்கிற வெவ்வேறு பெயரில் எழுதப்பட்ட ஒரே தளத்தில் இயங்குகிற நாவல்களின் தொகுப்பை மொத்தமாய் படிக்க முடிந்தது. வாசித்தவரை நகுலன் கதை என்ற ஒன்றை சொல்ல மெனக்கெடவே இல்லை. நனவோடையில் தன் எண்ணங்களை,கொந்தளிப்புகளை, உதிர்த்துக் கொண்டே செல்கிறார். அது வாசகரிடத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தோ அவை கதையாக, படைப்பாக உருமாறுகிறதா என்பதைக் குறித்தோ நகுலனும் சரி அவர் படைப்புகளும் சரி பெரிதாய் கவலைப் பட்டுக்கொள்ளவில்லை. மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடுதான் நகுலனின் எழுத்து. நவீனன் அல்லது நகுலன் என்கிற பெயரில் உலவும் ஒருத்தருக்கு நேரும் மிகவும் தனிமைப்பட்ட அனுபவங்களே இவரின் படைப்புகள். எழுத்தின் போதையை இவர் நன்கு அனுபவித்திருக்கிறார். பரவலாய் வாசிப்பதும் மிகவும் உள் சார்ந்த தனிமையில் ஆழ்ந்துபோவதும் இவரது பிரதான பாத்திரத்தின் இயல்பாய் நாவல்களில் வெளிப்படுகிறது. வளர்ச்சிக்காய் புகழுக்காய் தத்தமது சுயங்களை தொலைக்கும் மனிதர்களின் மீதான எள்ளலும், கோபமும் எல்லாவிடங்களிலும் வெளிப்படுகிறது. பெரும்பாலான வாசகர்கள் நகுலனை அவர் படைத்த சுசீலாவின் மூலம்தான் அடையாளப்படுத்துகிறார்கள். நினைவுப்பாதையில் சிவன் பாத்திரம் யார் சுசீலா? எனும் கேள்விக்கு என் மனதின் பைத்திய நிழல்தான் சுசீலா என்கிறார் மேலும் அவள் திருமணமாகிப் போய்விட்டாள் என்கிற தகவலையும் சொல்லுகிறார்.இல்லாத ஒன்றினை உருவாக்கி கொண்டு உருகும் மனதை பிரம்மிப்பாய் பார்க்க வேண்டியிருக்கிறது. தன்னை ஒரு தோல்விக்கலைஞன் என சொல்லிக்கொண்ட நகுலன் தோற்பதின் சுவையறிந்திருக்க வேண்டும்.உள்விழிப்புபெற்ற மனிதனால் மட்டுமே தோல்வியை கொண்டாட முடியும். ஒஷோ வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது தோற்பவர்கள் மட்டுமே இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும் என்கிறார். நகுலனுக்கும் அதே போன்றதொரு மனோநிலை வாய்த்திருக்க வேண்டும். தன் எழுத்துக்களை  நண்பர்களிடம் கொடுத்துவிட்டு கூடவே அஞ்சலட்டையும் இணைத்து கொடுக்கும் வழக்கமும், கடிதத்திற்கான எதிர்பார்ப்புகளும், தாமதமானால் எழும் கோபங்களும் எந்த பாசாங்குமில்லாமல் புனைவாகவும் பதியப்பட்டிருக்கிறது. எழுத்து வணிகர்களை அவர்களின் சொந்த பெயர்களிலேயே தன் படைப்புகளில் கிண்டலடித்திருக்கிரார். நகுலனின் எழுத்தை நனவோடை உத்தி என விமர்சகர்கள் வரையறுக்கிறார்கள். இன்னும் சிலர் நகுலன் பெரிதாய் எதையும் சாதித்து விடவில்லை எனவும், நோயின் தாக்கத்தால் எழுத்தாய் கொட்டியவற்றை வாசகர்கள் புரிந்து கொள்ளாமல் பிரம்மிப்பாய் அனுகுகிறார்கள் என்றுமாய் எழுதி வருகிறார்கள். அவை குறித்து தேர்ந்த வாசகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உண்மை என்கிற ஒன்று கூரிய வாளினைப் போல இவர் படைப்புகளின் பளபளத்துக் கொண்டிருப்பதை நெருங்கினால் அறிய முடியும். வாழ்வின் அபத்தங்களை,துயரங்களை எள்ளலோடும் வெறுமையோடும் பதிவித்தவர்களில் நகுலன் முக்கியமானவர். பின்நவீனம் குறித்தான ப்ரக்ஞை தமிழில் ஏற்பட்ட பின்பு பெண்ணியம், தலித் இலக்கியம், விளிம்பு நிலை மொழி போன்ற பல்வேறு திறப்புகள் தமிழில் நிகழ்ந்தன. பல புதிய கவிதைகள் பெண் மொழியில் எழுதப்பட்டன. ஆண் பெண் பேதமில்லாமல் கவிதைகளில் உடல் மொழி பேசப்பட்டது. போலவே தலித் எழுத்துக்களும் வட்டார வழக்குகளும் செல்வாக்கு பெறத் துவங்கின. தமிழில் பின் நவீனத்துவ நாவல் எழுதுவதற்கான முயற்சிகள் பலரால் மேற்கொள்ளப்பட்டன. சிலரால் அதில் வெற்றியும் பெற முடிந்தது. அந்த வகையில் ரமேஷ்-ப்ரேம்களின் சொல் என்றொரு சொல் நாவலை பின்நவீனத்துவ நாவல் வகைமையில் சேர்த்து விட முடியும். இந்நாவல் தமிழின் அகமரபுக்கும் புறமரபுக்கும் இடையூடாக ஓடும் ஒரு குறியியல் நாவலாகவும் கதையாடல்கள் பற்றிய கதையாடல்களின் நாவலாகவும் அமைந்திருக்கிறது.சில கதைகளால் கட்டப்படும் தமிழ் மனம்தான் வேறு கதைகளால் கட்டவிழ்க்கவும் படுகிறது என்கிறது. வார்த்தையாடல்களின் கவர்ச்சியும் மொழியின் வசீகரமும் நம்மை வேறு ஏதோ ஒரு உலகத்தில் புரியாத ஒரு வெளியில் தொலைக்கச் செய்து விடுகிறது. காமமும்,புணர்வும், விலங்குகளின் நடமாட்டங்களும், மனித மனங்களின் உள்ளூடாக பயணித்திருப்பதும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. புரட்சிகளின் வடிவமாக, அடக்குமுறைகளின் மீறலாக, புனிதங்களின் கட்டுடைப்பாக அதீதன் வரையறுக்கப்படுகிறான். காலத்தை மந்தமாக்கி சொற்கள் எங்கெங்கோ அலைகின்றன.  இதன் உள்ளடக்கம் 24 தலைப்புகளில் வெவ்வேறு கதையாடலை முன் வைக்கிறது.வாசிப்பின்பம் என்பதை பிரதியோடே உணர முடிவதும். சிதறலாய் கதையல்லாத கதை ஒன்றை சொல்வதும், மய்யமான கதை சொல்லும் பாணியை தகர்த்திருப்பதும் இந்நாவலின் பின்நவீனத்துவ வடிவத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. தொடர்ந்து இறுக்கமான எழுத்துக்களை பற்றியே பேசுவது போன்ற உணர்வை எழுதும் போதே பெற முடிகிறது. இறுக்கத்தைத் தளர்த்த நாஞ்சிலாரைப் பற்றிப் பேசலாம். வெகுசனக் கதைப் பரப்பில் இருந்தபடியே இலக்கியத் தரத்தை தொடும் எழுத்துதான் இவருடையது. ஒரு தேர்ந்த திரைக்கதைக்கான முழு உத்திரவாதமும் இவரது நாவல்களில் காண முடியும். வழக்கமான கதைகளாக இருந்தாலும் அவற்றை தன் கூர்மையான அவதானிப்பால், நுட்பமான விவரணைகளால் நாஞ்சில் தேர்ந்த இலக்கியப் பிரதியாக மாற்றிவிடுகிறார். நாஞ்சிலின் தலைகீழ் விகிதங்கள் அதிகம் பேசப்பட்ட நாவல். தங்கர் பச்சான் இயக்கத்தில் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்தது. கதையின் சிவதாணுவை சேரன் கச்சிதமாகவே காட்சிப்படுத்தியிருப்பார். நாவலை சிதைக்காத நல்லதொரு சினிமாவில் சொல்ல மறந்த கதையும் அடக்கம். அடுத்ததாய் எல்லோருக்கும் பிடித்த இவரின் நாவல் சதுரங்க குதிரைகள் .   என்னளவில் மிகவும் ஒன்றிப்போய் வாசித்த இவரின் படைப்பு எட்டுத் திக்கும் மதயானை   ஒரு வகையில் இந்நாவல் என் நாடோடி மனநிலைக்கு தீனி போடுவதாய் அமைந்திருந்தது. பி.காம் கடைசி வருடம் படிக்கும் பூலிங்கம் தன் வகுப்பில் படிக்கும் பெண்ணிடம் வெகு சாதாரணமாய் பேசிய காரணத்திற்காக தவறாய் புரிந்து கொள்ளப்பட்டு அபபெண்ணின் தகப்பனாரால் அவமானப்படுத்தப்படுகிறான். வன்மம் கொண்ட பூலிங்கம் அவரின் வைக்கோல் போருக்கு தீவைக்கிறான். உயிருக்கு பயந்து ஊரை விட்டு ஓடுகிறான். ஆந்திரா,கர்நாடகா,கோவா என அலைந்து திரிகிறான். பெரும்பாலும் ரயில் நிலையங்கள், ப்ளாட்பாரங்கள்  என நாட்கள் நகர்கின்றன. ரயிலில் ஐஸ்கிரீம் விற்பது,கோவாவிலிருந்து மது புட்டிகள் கடத்துவது. போதை மருந்து கடத்தல், லாரியில் ஓடுவது என வாழ்வு மாறிக்கொண்டே இருக்கிறது. எங்காவது யாராவது எதிரியாக முளைத்து விடுத்துவிடுகிறார்கள். பல சமயங்களில் இவனே இவனுக்கு எதிரியாகிறான். ஒருவழியாய் பாம்பாயில் ஒரு பெரிய சாராய வியாபாரியிடம் தஞ்சமடைகிறன். மிகுந்த பாதுகாப்புகளோடு சாராயம் கடத்துகிறான். நண்பர்கள் வட்டம், புதிதாய் தொழில் ஆரம்பித்தல் என நிலைபெறுகிறது. இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான செண்பகம் பம்பாய்கு திருமணமாகி வருகிறாள். அவளின் கணவரிடம் அல்லல்படுகிறாள். பூலிங்கம் அவளை அவனிடமிருந்து மீட்டு புதிதாய் வாழ்வை தொடங்குகிறான். மிகவும் சாதாரண கதை மாதிரித் தோன்றினாலும் கதையோடு முழுவதுமாய் ஒன்றிப் போக வைக்கும் எழுத்து. நாஞ்சிலின் தனித் தன்மையும் அதுதான். என் பாட்டி எங்கள் பகுதியிலேயே நல்ல கதை சொல்லி. ஏராளமான நாட்டுப் புறக் கதைகளையும் இதிகாசக் கிளைக் கதைகளையும் தெரிந்து வைத்திருந்தாள். வெற்றிலை எச்சில் தெறிக்க எல்லா மாலைகளிலும் வீட்டு வாசலில் உட்கார்ந்து தெருக் குழந்தைகள் அனைவரும் படையெனச் சூழ்ந்திருக்க உரத்த குரலில் கதை சொல்லுவாள். அவளின் மகன் வயிற்றுக் கடைசிப் பேரன் என்பதால் மிகுந்த உரிமைகளோடும் பெருமிதங்களோடும் அவள் மடியில் புதைந்து கொண்டு கதை கேட்பேன். தமிழ் இலக்கியத்தில் இத்தகையதொரு பாட்டி- பேரன் மடிப்புதைவு உறவு கி.ராஜநாராயணனுக்கும் அவருடைய வாசகர்களுக்கும் நிச்சயம் இருக்கும். தமிழின் ஆகச் சிறந்த கதை சொல்லி கி.ராஜநாயணன்தான். இதை தமிழ் இலக்கிய அறிமுகமுள்ள அனைவரும் வழிமொழிவார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது. கோபல்ல கிராமம்- கோபல்ல கிராமத்து மக்கள் –அந்தமான் நாயக்கர் இந்த மூன்று நாவலையும் ஒரே மூச்சில் வாசித்து பாட்டியின் அருகாமையை மீண்டும் உணர்ந்தேன். கோபல்ல கிராமத்தின் விடியல் -  கோட்டையார் வீட்டின் சகோதரர்களின் அறிமுகம்-வழிப்பறி- கொள்ளையர்களை கோபல்ல கிராம மக்கள் எதிர் கொள்ளும் சாகசம்- இடை இடையே அக்கிரமத்தின் நீண்ட நெடிய வரலாறு என ஒரு தேர்ந்த கதை சொல்லி அடுக்கடுக்காய் கதைகளை உயிர்ப்பித்துக் கொண்டே போகும் மாயம் நாவலில் தொடர்ந்து நிகழும். கிராமங்களில் இயல்பாகவே உலவும் மிகைக் கதைகள், முனிக் கதைகள் படிக்கும்போதே பரவசத்தையும் புன் முறுவலையும் ஏற்படுத்தும். பெண் பிம்பங்கள் குறித்தான மிகு புனைவுகள், இயல்பாய் நடக்கும் காமம், உறவு மீறல், கள்ளம் எல்லாமும் அடுக்கடுக்காய் இக் கதைகளில் சொல்லப்படும். நாயக்கர் சமூகம் ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்த கதையை விலாவரியாகச் சொல்லி இருப்பார். காடுகளை அழித்து விளை நிலங்களை உருவாக்கியது, பசுக்களை கொண்டு விவசாயத்தைத் தழைக்கச் செய்தது, சமூக அடுக்குகளை உருவாக்குவதென நம் முன்னோர்களின் வாழ்வு கதைகளாய் விரியும். கோபல்ல கிராமத்து மக்களில் இந்தியச் சுதந்திரம், மக்களின் வாழ்வில் அரசாங்கத்தின் தாக்கம் எனவாய் வளர்ச்சியடையும். முழுக்க கரிசல் மண்ணின் வாசனையை இக்கதைகளின் வழியாய் நுகர முடியும். யதார்த்த வாதம், வட்டார வழக்கு போன்ற எழுத்து வகைமைகள் தமிழில் செழிக்க விதையாக இருப்பவர் கி.ரா. இவரை அடியொற்றியே ஏராளமான கரிசல் மண் சார்ந்த படைப்பாளிகள் உருவாகினர். கோவில் பட்டியிலிருந்து தமிழிலக்கியத்திற்கு செரிவான படைப்பாளிகள் கிடைத்தனர். கி.ரா ஒரு வாழும் வரலாறு. பதின்மத்தின் இறுதியில் என்னை மிகவும் சுழற்றியடித்த நாவலாக தி.ஜானகிராமனின் மோகமுள்  ஐ சொல்லலாம். பாலகுமாரன் பெண் பிம்பங்களிலிருந்து மெல்ல விடுபட்டு தி.ஜா வின் பெண் பிம்பங்களில் மாட்டிக் கொண்ட தருணம் அது. யமுனாவையும் பாபுவையும் மோகத்தீயில் எரிந்து போகும் மாமியையும் எனக்குள் வாங்கிக் கொண்ட தருணம் அது. யமுனா என்ற பெயர் கொண்ட பெண்ணையாவது பார்த்துவிட மாட்டோமா? எனப் பைத்தியமாய் திரிந்த காலம் அது. எழுத்து வாசிப்பவர்களை என்னவெல்லாம் செய்யும் என்பதை முழுக்க உணர்ந்தே வந்திருக்கிறேன். மோகமுள்ளின் கனவுத் தன்மை தந்த எழுச்சி தி.ஜா வின் புத்தகங்களை தொடர்ந்து தேட வைத்தது. பாலகுமாரனின் காயத்ரிகளை, ஸ்வப்னாக்களை, மரப்பசு அம்மிணி நிர்மூலமாக்கினாள். மரப்பசு அம்மிணிக்குப் பிறகு நிறமிழந்து போன பெண் பிம்பங்களை நினைத்துத் துக்கமாக இருந்தாலும் பதின்மம் முழுக்க பரவசத்தைத் தந்தவர்கள் என்கிற நன்றியும் எனக்கு எப்போதும் உண்டு. அம்மா வந்தாள், செம்பருத்தி, அன்பே ஆரமுதே, மலர் மஞ்சம்  என தி.ஜா வின் நாவல்கள் அனைத்துமே நாவல்களின் ஒழுங்கமைவிற்கான உதாரணங்கள். தமிழ் நாவலின் வடிவத்தையே தி.ஜா ஒரு கட்டுக் கோப்பிற்குள் கொண்டு வந்தார். தி.ஜாவை வாசித்து முடித்த பின்பு லா.ச.ரா விற்குத் தாவினேன். இன்றைய மனம் பிறழ்ந்த எழுத்துகளுக்கு முன்னோடியாக லா.ச.ராவைச் சொல்லலாம். நிறைவேறாக் காமம், பால்யத்தின் மீதான ஏக்கம், முழுக்க கனவுப் பிரதேசமென லா.ச.ராவின் கதைக் களன் மாயத் தன்மைக்கு அருகாமையில் வருவது. லா.ச.ராவின் எனக்குப் பிடித்த சிறு நாவல் பச்சைக் கனவு மற்றும் கழுகு. அவரின் புகழ் பெற்ற படைப்பான அபிதா வின் மீது எனக்கு மாற்றுக் கருத்துகள் உண்டெனினும் எழுதப்பட்ட வகையில் அபிதா ஒரு சவாலான படைப்புதான். கழுகு நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலேயும் ஒரு கவிதை வரும். நான் பற்றிய விசாரணைகள், தத்துவத்திற்கும் இருப்பிற்குமான போராட்டம், பெண், உடல், காமம் குறித்தான மிகைகள் என எல்லாமும் கலந்து கட்டிய தெறித்த எழுத்து லா.ச.ரா வினுடையது. சொற்களில் ஒரு வித லயமும் இசைத் தன்மையும் மிகுந்திருக்கும். அசோகமித்திரனை வந்தடைந்த போது சற்று நிதானத்திற்கு வந்திருந்தேன். அல்லது அசோக மித்திரன் இந்த நிதானத்தை வர வழைத்தாரா? என்பதும் தெரியவில்லை. உரத்து சொல்லுதலை, நெகிழ்வை, கரைதலை அசோக மித்திரன் சற்று நிதானப்படுத்துகிறார். எந்த வித மிகையுணர்ச்சியும் இல்லாத எழுத்து. மிகு கற்பனைகள், உவமை, உதாரணம், கனவு என எதுவுமே இல்லாத நேரடி முகத்திலறையும் எழுத்து. ஒரு வித மிகை மனதோடு இவரை வாசிக்க ஆரம்பித்த புதிதில் இவர் தந்த அப்பட்டம் சற்று எரிச்சலைக் கூட வரவழைத்தது. அமி யின் தண்ணீர் என்னை அசைத்துப் பார்த்த நாவல். கீழ் மத்திய தர வர்கத்தின் கிட்டத்தட்ட விளிம்பு நிலை வாழ்வின் அவலத்தை சன்னமான குரலில் சொல்லும் நாவல். சென்னையின் பொந்து குடித்தன வாழ்வை, தண்ணீர் பற்றாக்குறை அவலத்தை, மிகையே இல்லாது புகாரே இல்லாது போகிர போக்கில் சொல்லிப் போன நாவல். யமுனா, தாட்சாயணி போன்ற மிகை பிம்பங்களை கற்பனையில் சுகித்த மனது ஜமுனாவை வியர்வையும் சதையுமாய் எழுத்தில் கண்டபோது வெலவெலத்துப் போனது. என்னை நெடுநாட்கள் அலைக்கழித்த பிம்பம் தண்ணீர் ஜமுனாதான். கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் வண்ண நிலவனை வாசித்தேன். வண்ண நிலவனுடைய கடல் புரத்தில்  எப்போதைக்குமான பிடித்த நாவல். கம்பா நதி,ரெய்நீஸ் அய்யர் தெரு, எஸ்தர் என எல்லா வ.நி யின் படைப்புகளும் எனக்கு பிடித்தமானவைதாம் என்றாலும் கடல் புரத்தில் தனிதான். சில நாவல்களின் ஆரம்ப வரிகள் மனதில் அத்தனை அழுத்தமாய் பதிந்து போகும். பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள் நாவலின் முதல் வரி, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் முதல் வரி, போலவே கடல் புரத்தில் ‘குருஸ் மிக்கேலுக்கு யாரையும் பிடிக்காது ‘என்கிற முதல் வரி. வண்ண நிலவன் குலசேகரப் பட்டிணத்தில் வாழ்வுச் சுழலின் நிமித்தம் சில மாதங்கள் சைக்கிள் கடை ஒன்றில் பணி புரிய நேர்ந்தது. அக்காலகட்டத்தில் மீனவர்களின் வாழ்வை மிக நெருக்கமாகக் காணும் வாய்ப்பும் கிட்டியது. அப்பாதிப்பில் உருவானதுதான் கடல் புரத்தில். மீனவர்களின் வாழ்வு குறித்தான மிக முக்கியமான பதிவாகவும் இந்நாவலைப் பார்க்கலாம். பிலோமி கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் துரதிர்ஷட முடிவும் மிகப்பெரும் சங்கடத்தைத் தந்தது. நாவல்கள் மூலமாக என்றும் வாழும் கதை மாந்தர்களில் இந்தப் பிலோமி முக்கியமானவள். தமிழில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை, அப்பட்டமான மொழியில் பேசிய முக்கியமான நாவல் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே.  ஒரே ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை மட்டுமே காட்சிப்படுத்தும் இந்நாவல், மொழி அடிப்படையிலும், வடிவ அடிப்படையிலும் நம் சூழலின் புதிய திறப்பு. கந்தன் கதாபாத்திரத்தின் மூலமாக மரபான தமிழ் நாவலை சற்றே கலைத்துப் போட்டிருப்பார். இலக்கிய உலகம் பதிவு செய்யத் தவறிய, தினசரி வாழ்வில் நாம் காண மறுக்கும் மக்களின் வாழ்வை ஜி.நாகராஜன் ஆழமாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருப்பார். இதையொட்டி பேசவேண்டிய இன்னொரு முக்கியமான நாவல் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி. மற்றும் இதன் இரண்டாம் பாகமான கடலுக்கு அப்பால்.  சற்று வியப்பாக சொல்ல வேண்டுமெனில் தமிழில் இதைப் போன்ற ஒரு படைப்பு இன்னும் எழுதப்படவில்லை. காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஒரு படைப்பை எழுதிவிட்டு எந்தச் சத்தமும் சலம்பலும் இல்லாமல் ஒற்றைத் தனியறையில் வாழ்ந்து கொண்டு, மதுரை தினந்தந்தி அலுவலகத்தில் ப்ரூஃப் பார்த்துக் கொண்டிருந்த சிங்காரத்தை நினைத்தால் மேதமைத் தனத்தின் மீது மதிப்பு பன்மடங்காகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து உண்மையான கலைஞர்களை நசுக்கும் வாழ்வின் குரூரத்தின் மீதும் வெறுப்பு படராமல் இல்லை. மலேசியாவின் பினாங்கு நகரத்தின் செட்டித் தெருவை, சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய INA படைகளின் சாகசத்தை தமிழில் சங்க இலக்கிய உரையாடல் சகிதமாய் படிக்க முடியும் என்பதே தமிழ் வாசகருக்கு மிகப்பெரிய உவகைதான். அப்படி ஒரு பெரும் வியப்பும் திகைப்பும்தான் புயலிலே ஒரு தோணி. இலட்சியவாத இளைஞனான பாண்டியன் மற்றும் அவன் சகாக்கள் லேவாதேவி வாழ்விலிருந்தபடியே ஐஎன் ஏ விற்கு ரகசியமாய் உதவுவது. ஜப்பான் மற்றும் சீனப் படைகளை எதிர்கொள்வது என முற்றிலும் புதிய களத்தை, புதுமாதிரியான எழுத்து நடையை புயலிலே ஒரு தோணி நமக்குப் பரிசளிக்கிறது. பினாங்கில் கொடிகட்டிப் பறந்த மதுரைச் செட்டியார்கள் வாழ்வும். பாண்டியனுக்கு ஏற்படும் மெல்லிய காதலும் நாவலிடையே உண்டு. இரண்டாம் பாகமான கடலுக்கு அப்பால் இலட்சிய வாத மிகைகளும் சாகசங்களும் தீர்ந்து தத்துவத்தில் அடங்குவதை பதிவு செய்திருக்கும். தமிழின் பெரும்படைப்புகளைப் பட்டியலிட்டால் அதில் முதலிடம் புயலிலே ஒரு தோணிக்குத்தான். கொங்கு வட்டாரத்தின் வாழ்வினை களமாகக் கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.திருச்செங்கோடு பகுதியின் மொழியை, மக்களின் வாழ்வை, குறிப்பாய் சக்கிலிய இன மக்களின் பதிவுகளை தமிழில் நாவல் வடிவில் மிகச் சிறப்பாக பதிவு செய்தவர் பெருமாள் முருகன். இவருடைய ஏறு வெயிலும் கூளமாதாரியும் என் மனதிற்கு வெகு நெருக்கமான படைப்புகள். எண்பதுகளில் வீட்டு வசதி வாரியம் தமிழ் நாடு முழுவதும் விளை நிலங்களை அழித்து விட்டு வீடுகளைக் கட்டியது. எண்பத்தெட்டில் இவ்வாரியம் திருவண்ணாமலையில் என் வீட்டிற்கு சமீபமாகவிருந்த வயல்கள், கிணறுகள், தோப்புகள், சிறு சிறு குட்டைகள் எல்லாவற்றையும் அழித்து விட்டு  மிகுந்த பரப்பளவில் வீடுகளைக் கட்டின. பறவைகளும், சிறுசிறு விலங்குகளும், என் போன்ற சிறாரும் இனி எங்கு போவது என திகைத்துப் போனோம். விவசாயிகள் அனைவரும் காடுகரைகளை விற்றுவிட்டு கிடைத்த பணத்தை குடித்தே அழித்து விட்டு, அதே வீட்டு வசதி வாரியம் கட்டும் கட்டிடங்களுக்கு சித்தாளாகப் போக ஆரம்பித்தனர். இந்த மாபெரும் அவலத்தை கண்கூடாகப் பார்த்திருந்ததால் பெருமாள் முருகனின் ஏறுவெயில் நாவல் என்னால் எப்போதுமே மறக்க முடியாத ஒரு நாவலாக மாறிப்போனது. விளை நிலங்களை விற்ற விவசாயின் சீரழிந்த வாழ்வுதான் ஏறுவெயிலின் கதை. வன்மம் தகிக்கும் வாழ்வின் உக்கிரத்தை நாவல் முழுக்கப் பதிவு செய்திருப்பார். இவருடைய மற்றொரு படைப்பான கூளமாதாரி சக்கிலிய குடி சிறார்களை முன் வைத்து எழுதப்பட்ட சிறப்பான நாவல். இதே வட்டார வழக்கில் எழுதப்பட்ட  வா.மு.கோமுவின் கள்ளி யும் என்னளவில் முக்கியமான நாவலே. இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம்.எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றத. இலக்கிய வடிவில் சேர்க்க விரும்பாத,சேர்க்கத் தயங்கிய பல கூறுகளை எவ்வித தயக்கமும் இல்லாது நேரடியாய் பேசுகிறது இவரின் மொழி. கற்பு, ஒழுக்கம் என எவ்வித பம்மாத்துகளுமில்லாது காமத்தை இவரின் கதை மாந்தர்கள் ஒரு விளையாட்டாய் விளையாடித் தீர்க்கிறார்கள். நள்ளிரவு, விடியல், முன்னிரவு, என எல்லாப் பொழுதுகளிலும் வெட்ட வெளி, பாறை இடுக்கு, முட்காடு, எவருமற்ற அந்நியன் வீடென எங்கெங்கிலும் புணர்ந்து திரியும் இவரது கதை மாந்தர்களுக்கான அடிநாதம் தீராக்காமமாயும் பருவத் தெறிப்பாகவுமிருக்கிறது. இது தவிர்த்து இந்நாவல் தொட்டுச் செல்லும் இன்னொரு தளம் மாதாரிகளின் கொண்டாட்டமும் அவலமுமான வாழ்வு.மேலதிகமாய் கவுண்டர்களின் ஆதிக்கத் திமிர்களையும் பண்ணைய முறைகளின் வன்முறைகளையும் கோடிட்டுச் சென்றிருக்கிறது. விடலைத் தனம் நிரம்பியிருப்பதால் மிக அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்க வேண்டிய பல விதயங்களை சற்றே தொட்டுவிட்டு மதுவில் கரைந்து போகிறது. முதல் அத்தியாயத்தில் தொடங்கிய வீச்சும், புதுத்தளமும், புதுமொழியும், அசாத்திய நகைச்சுவையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வலுவிழந்து போகிறது. எனினும் கிண்டலும், கேலியும், காமமும் சேர்ந்து நாவலை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் மனநிலையைத் தந்துவிடுகிறது.  கடைசி அத்தியாயத்தில் தாங்கிப் பிடிக்கும் ஆதிக்க மனோபாவ கொடி முதல் அத்தியாயத்திலிருந்து சொல்லப்பட்ட விளிம்புசார் நிலையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. எழுத்தாளனுக்கான கடமை இதுவென எதையும் வலியுறுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் தான் எழுதும் தளத்தின் வீச்சை, தேவையை உணர்ந்து கொள்ள வேண்டியது எழுத்தாளன் செய்ய வேண்டியது. புனைவுத் தளத்தில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். இவரின் கானல் நதி எனக்குப் பிடித்தமான நாவல். குள்ளச் சித்தன் சரித்திரமும் முக்கியமான நாவலே. கானல் நதி இசையை பின்புலமாக கொண்ட நாவல். தனஞ்செய் முகர்ஜி என்றொரு இசைக்கலைஞனின் இசை ஞானம், கல்கத்தா நகர வாழ்க்கை, சரயூ என்கிற பெண்ணின் மீது தோன்றும் நிறைவேறாக் காதல். மேதமைத் தனத்திற்கு பரிசாய் வந்து சேரும் பித்து என வழக்கமாய் யூகிக்க கூடிய தளம்தான் என்றாலும் யுவனின் புனைவு மொழி இந்நாவலின் தரத்தை உயர்த்துகிறது. பால்யம், வாலிபம், நாட்குறிப்பு, அழைப்பு என நான்கு பாகங்களாக நாவல் பிரிக்கப்பட்டிருக்கிறது. மனதின் ஆழ்நிலைகளை, நுட்பமான சலனங்களை, அசைவுகளை, துல்லியமாய் இந்நாவல் பதிவு செய்திருக்கிறது. எழுத எழுத போதாமை இருந்து கொண்டே இருக்கிறது. இன்னும் குறிப்பிட ஏராளமான படைப்புகள் உள்ளன. ஆனால் பதினைந்து பக்கத்திற்கும் மேலாக ஒரு இதழில் அடைந்து கொள்ள என்னவோ போல் இருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னும் சில முக்கியமான நாவல்களை பட்டியலாக மட்டும் குறிப்பிடுகிறேன். இது என்னுடைய சொந்த அரசியலுக்கு உட்பட்டதுதான். 1.    வாடிவாசல் – சி.சு.செல்லப்பா 2.    காதுகள் – எம்.வி. வெங்கட்ராம் 3.    பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு 4.    வாசவேஸ்வரம் – கிருத்திகா 5.    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் 6.    ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி 7.    சாயாவனம் – சா. கந்தசாமி 8.    குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி 9.    சோளகர் தொட்டி – ச.பாலமுருகன் 10.  கருக்கு -பாமா 11.  தலைமுறைகள் – நீல.பத்மநாபன் 12.  வெக்கை - பூமணி 13.  ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான் 14.  மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் 15.  என் பெயர் ராமசேஷன் – ஆதவன் 16.  பாய்மரக்கப்பல் – பாவண்ணன் 17.  பாழி – கோணங்கி 18.  செடல்- இமையம் 19.  தகப்பன்கொடி – அழகிய பெரியவன். 20.  கொரில்லா – ஷோபா சக்தி 21.  ரத்தஉறவு - யூமாவாசுகி 22.  அளம் - தமிழ்செல்வி 23.  அஞ்சலை - கண்மணி குணசேகரன் 24.  ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ் 25.  ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான் 26.  கள்ளம் – தஞ்சை பிரகாஷ். 27.  பிளம் மரங்கள் பூத்துவிட்டன, ஒப்பந்தம் – வாசந்தி. 28.  தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி. 29.  ஒரு மனிதனின் கதை – சிவசங்கரி. 30.  மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பந்தயப்புறா -  பாலகுமாரன் 31.  நெடுங்குருதி,யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன் 32.  பின்தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம் – ஜெயமோகன் 33.  ராசலீலா, ஜீரோ டிகிரி – சாரு நிவேதிதா தமிழ் நாவல் மரபு அதற்கே உண்டான கட்டமைவுகளோடும் அவ்வப்போது மீறல்களோடும் மிகச் சரியாகவே பயணிப்பதாக உணர்கிறேன். முன்னோடிப் படைப்பாளிகள் தொட்டுச் சென்றிருக்கும் உயரத்தை தாண்டுவதென்பது   சம கால படைப்பாளிகளுக்கு மிகப் பெரும் சவால்தான். [linesep] 18 அரசியல் திறன் [Prabhu R]   பிரபு ஆர்   இது இவரது முதல் கட்டுரை.  மிக நேர்த்தியாக Political Quotient எழுதியிருக்கிறார்.  நண்பர் கிரிதரனின் தூண்டுதலால் எழுதத் தொடங்கியிருக்கிறார்.  மென்மேலும் பல கட்டுரைகள் எழுதி எழுத்துலகில் வெற்றிபெறுவார் என்றுதான் தோன்றுகிறது.  வாழ்த்துகள் பிரபு!   [linesep] ஒரு கார்பரேட்(corporate) சூழலில் எப்படிப்பட்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பது நிர்வாகவியலில் என்றும் அலசப்படும் ஒரு விஷயம்.  இது ஒரு ஆர்வமூட்டும் கேள்வியும் கூட.  நிர்வாகத்தில் வெற்றி அறிவுத்திறனால் மட்டுமே என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. இது intelligence quotient (IQ) என்ற ஒரு அளவையால் அளக்கப்பட்டது.  நிர்வாகிகள் பெரும்பாலும் இந்த தகுதியிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பின் அவர்கள் தங்கள் கீழிருப்பவர்களை நிர்வாகிக்கும் போது அவர்களின் உணர்ச்சிகளும் அதனை சமாளிக்கவேண்டிய ஒரு அவசியமும் கவனத்திற்கு வந்தது. இந்த சமயத்தில் Daniel Goldman என்பவர் உணர்ச்சி திறன் (emotional intelligence ) என்ற ஒரு கருதுகோளை அறிமுகபடுத்தினார். ஒரு தனி நபரின், குழுவின் உணர்சிகளை அவதானித்து அதை முறைப்படுத்தும் திறன் அது. பிறரின் உணர்சிகளையும் அதன் பின் உள்ள காரணிகளையும் சரியாக உணர்ந்து அதற்கேற்ப செயல்படுபவனே மனிதர்களை நிர்வகிக்க திறன் உடையவன் ஆகிறான் என்பதே அதன் சாராம்சம். இத்தனைக்கும் பின்பும் கூட ஒரு விஷயம் ஆய்வாளர்களை குழப்பியது. அறிவு திறனும், உணர்ச்சி திறனும் அதிகம் வாய்க்க பெற்ற பலர் பின்னால் இருக்க ஒப்பீட்டளவில் இந்த திறன்கள் அதிக அளவில் அமைய பெறாத சிலர் முன்னணியில்இருந்தார்கள். இது ஏன் என்று ஆராய்ந்து பின்பு அதற்கான காரணத்தை கண்டுபிடித்தனர். அது மாக்கியவல்லியின் காலகட்டத்தில் இருந்தே பேசப்பட்டு வரும் அரசியல் திறன் என்பதே ஆகும். இதை political quotient(PQ) என்ற சொல்லால் குறிக்க தொடங்கினர். ஆனால் மாக்கியவல்லி விவரிப்பதை போன்ற பயமுறுத்தும், ஏமாற்றும்,நம்ப வைத்து கழுத்தறுக்கும் எதிர்நிலை அம்சங்கள் கொண்டதல்ல இது. மாறாக இது மக்களின் நம்பிக்கையும், மதிப்பையும் சம்பாதித்து அதன் மூலமாக ஒரு அதிகார வலையை உருவாக்குவது. இன்றைய தட்டையான கார்பரேட் அமைப்புகளில் தன ஆதிக்கத்திற்கு கீழ் வராத எந்த வித அதிகாரமும் செலுத்த முடியாதவர்களை வைத்தே ஒருவர் பல திட்டங்களை செயல் படுத்த வேண்டி இருக்கிறது. இதில் அறிவுத்திறனும் உணர்ச்சி திறனும் மட்டும் இருந்தால் போதாது..அரசியல் திறன் அதிகமும் தேவை. இந்த திறனை எப்படி வளர்த்து கொள்வது, அதை எப்படி வரையறுப்பது என்பது குறித்து ஜோ ஓவென்(JO OWEN ) என்பவர்  தனது ‘வழிநடத்துவது எப்படி (How to Lead)’ என்ற புத்தகத்தில் விவரித்து இருக்கிறார். அதிகாரத்தின் விதிகள் என்ற தலைப்பில் அதை பின்வருமாறு பட்டியல் இடுகிறார். 1) செயல்திட்டத்தை வடிவமைப்பவராய் இருங்கள் நீங்கள் ஈடுபடும் செயல்களில் வேறு எவருக்கும் முன்னதாகவே நீங்கள் செயல் திட்டத்தை கையில் எடுப்பது அவசியம். - எங்கே இருக்கிறோம் - இறுதி இலக்கு என்ன - அதை எப்படி அடைய போகிறோம் என்ற மூன்றையும் உடனே வரையறுத்து விடுங்கள். இந்த முன்வரைவை நீங்கள் அளித்த பின்பு வேறு யாராவது மறுப்புகள் சொன்னாலும் அது இந்த சட்டகத்திற்கு  உள்ளேயே இருக்கும். இதுவே அரசியலின் முதல் படி. 2) தொடர்புகளை உருவாக்குங்கள் உங்கள் அதிகாரம் நீங்கள் உருவாக்கும் தொடர்புகளின் தரத்தையே சார்ந்து இருக்கிறது.  நீங்கள் உங்கள் மேலாளருடைய மேலாளரிடம் தொடர்புகளை உருவாக்கி கொள்ளுதல் அவசியம். உங்களுடைய நேரடி நிர்வாகியால் உங்கள் எல்லா தேவைகளையும்   நிறைவேற்ற முடிவதில்லை. அதை நீங்கள் உங்கள் தொடர்புகள் மூலமே நிரப்ப வேண்டும். உங்கள் தொடர்பு வலையை சிறுக சிறுக விரிவாக்குங்கள். உங்களை பின்பற்றுபவர்களை நீங்கள் உருவாக்கவேண்டியது அவசியம்.  மக்களின் முன்னேற்றத்திலும் அவர்களின்  வளர்ச்சியிலும் நீங்கள் அக்கறை கொள்ளும்போது அவர்கள் உங்களுக்கு விசுவாசமானவர்களாக மாறுகிறார்கள். 3) நடிக்க ஆரம்பியுங்கள் நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அவரை போன்று நடிக்க தொடங்குங்கள் என்பது பழமொழி. உங்கள் மேலாளருடைய பாவனையை கைகொள்ள ஆரம்பியுங்கள். உடைகள், உடல்மொழி போன்ற எல்லாம் இதில் அடங்கும். உங்கள் மேலாளருடைய பார்வையில் ஒரு பிரச்சனையை அணுகி அவருடைய மொழியில் பேச துவங்கும் போது நீங்கள் அவருக்கு இணையானவராய் கருதப்படுவீர்கள். 4)  உங்கள் மோதல்களை தேர்ந்து எடுங்கள் எந்த ஒரு நிறுவனமும் முரண்பாடுகள் நிறைந்ததாக தான் இருக்கும்.  குறைவான வாய்ப்புகளுக்கு பலர் முண்டியடிக்கும் ஒரு களன் அது.  இதில் தன்முனைப்பினால் வரும் மோதல்களும் சண்டைகளும் சகஜம்.. அந்த முரண்பாடுகள் உருவாக்கும் மோதல்களில் இருந்து எப்போதும் தப்பிக்க நினைக்காதீர்கள். அதை எதிர்கொள்ளுங்கள். ஆனால் வீணான சண்டைகளில் நேர விரயம் செய்வதும் உகந்ததல்ல. இந்த மூன்று விதிகளை நினைவில் வைத்திருப்பது உதவும். - சில்லறை லாபங்களுக்காக ஒரு போதும் மோதலில் இறங்க வேண்டாம். - நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே கோதாவில் இறங்குங்கள். - வேறு எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டுவிட்டால் மட்டுமே மோதலில் ஈடுபடுங்கள். 5)  கொஞ்சம் பைத்தியகாரனாய் இருங்கள் . எப்போதும் அறிவிற்கும்/நடைமுறைக்கும்  பொருந்தி வருகிறது போன்ற  செயல்திட்டங்களை மட்டும் வைத்து கொள்ளாதீர்கள். கனவு காண்பவராக இருங்கள்.ஒரு நடைமுறை நிர்வாகியால் மைக்ரோசாப்ட்-ஐயோ ஜெனரல் மோட்டர்சையோ எதிர்கொள்ள முடிந்திருக்காது. ஆப்பிள்-யும் டோயோடாவையும் உருவாக்கி அளித்தது இந்த ‘பைத்திய கார’ நிர்வாகிகளே. உங்கள் கீழ் இருப்பவரிடம் இருந்து அளவுக்கு அதிகமாய் எதிர்பாருங்கள். அப்போது அவர்களின் சாத்தியங்களின் எல்லைகள் அதிகரிக்கப்படுகின்றன. அது உங்கள் நிறுவனத்தின் சாத்தியங்களை அதிகரிப்பதே. 6)  அதிகாரத்தை தேடி செல்லுங்கள் பணம் வேண்டுபவர்கள் பணத்தை தேடி செல்வது போல, புகழ் வேண்டுபவர்கள் புகழை தேடி செல்வது போல, அதிகாரம் வேண்டுபவர்கள் அதிகாரத்தை தேடி செல்லுங்கள். எந்த ஒரு அமைப்பிலும் ஒரு அதிகார மையம் ஒன்று இருக்கும். அத்துடன் இயைந்து கொள்வது மூலமே ஒருவரால் அதிகார படிகளை ஏற முடியும். இந்த மையத்துடன் ஒன்றாமல் தனித்து வேலை செய்து கொண்டிருப்பதன் மூலமாக உங்களுக்கு ஒரு பிரச்சனைகள் அற்ற ஒரு சூழல் அமையலாம். ஆனால் அதில் முன்னேற்றங்களும் இல்லை என்பதை நினைவில் நிறுத்துங்கள். 7)  தெளிவின்மைக்கு தயாராய் இருங்கள் ஒரு அமைப்பில் தெளிவின்மைகளும் நெருக்கடிகளும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். தெளிவான பாதைகள் பெரும்பாலும் இருப்பதே இல்லை. அரசியல் திறன் மிக்க ஒருவன் இந்த தெளிவற்ற சூழலை தன்வச படுத்தி கொண்டு தலைமை ஏற்று செயல்திட்டத்தை வழி நடத்துகிறான். முக்கியமான செயல்திட்டத்தை அவன் கைகொண்ட பிறகு மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் சின்ன பொறுப்புகளுக்கு பிறர் முண்டியடிக்கும் நிலைமைக்கு தள்ள படுவார்கள். 8)  இறுதி இலக்குகளில் கருத்தாய் இருங்கள் இலக்குகளில் கவனமாய் இருப்பது என்பது எல்லோரும் அறிந்த, முனைந்து சொல்லுவதற்கும் தேவையில்லாத ஒன்று என்றே தோன்றும். ஆனால் பல நிர்வாகிகள் செயல்முறை சிக்கல்களில் கவனம் கொடுத்து இறுதி இலக்கை தவற விட்டு விடுகின்றனர். நிர்வாகம் எப்போதுமே அலசி ஆராய்ந்து சிந்தனை செய்து கொண்டு இருப்பவர்களையும் செயலை முன்னேடுப்பவர்களையும் எளிதாக தரம் பிரித்து கண்டு கொள்கிறது. இரண்டாமவருக்கே முன்னேற வாய்ப்புகள் உண்டு. 9)  பயன்படுத்தாதை இழந்து விடுவீர்கள் நீங்கள் எவ்வளவு தூரம் உங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை உபயோகிக்கிறீர்களோ அவ்வளவு தூரம் நீங்கள் மேலும் அதிகாரத்தை ஈட்டுவீர்கள். அதிகாரம் மேலும் மேலும் அதிகாரத்தை ஈர்க்கும்.அதிகாரத்திற்கான ஒரு காலியிடத்தை எப்போதும் விட்டு வைக்காதீர்கள். உங்களால் முடியாவிட்டால் அது வேறொருவரால் நிரப்பப்படும். மேற்சொன்னவை அறிவுத்திறன் மற்றும் உணர்ச்சிதிறனின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவது அல்ல. ஆனால் இவற்றுடன் அரசியல் திறனும் சேரும்போது மட்டுமே ஒருவன் அமைப்பின் ஏணிப்படிகளில் விரைவாக ஏறுகிறான். மேலும் அதிகாரம் சூழ்ச்சிகளாலும், நயவஞ்சகத்தாலும் அடையபெறுவது அல்ல, மாறாக நம்பிக்கையும், மதிப்பும் நிறைந்த தொடர்புகளை உருவாக்கி கொள்வதிலும் இலக்குகளைஅடைவதில் உள்ள ஒருவரது திறனிலும் அது ஒளிந்திருக்கிறது என்பதை இது சுட்டுகிறது. [linesep] 19 ரியாலிட்டி ஷோ [Padma Arvind]    பத்மா அரவிந்த் நெடுங்காலமாக இணையத்தில் எழுதி வருகிறார்.  அரசியல், அறிவியல் என்று எல்லா தளங்களிலும் தேர்ந்த கருத்துகளை முன்வைப்பவர். தற்போது ட்விட்டரோடு தன் எழுத்தை சுருக்கிக் கொண்டாலும் அவ்வப்போது இம்மாதிரியான காட்டுரைகள் எழுத வேண்டும் என்பதே நம் விருப்பம். [linesep] கடந்த சில வருடங்களாகவே ரியாலிட்டி ஷோ என்ற விபரீதம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பீடித்திருக்கிறது. இதனால் வரும் பின்விளைவுகளைப்பற்றிய கவலையைவிட இந்த நிகழ்வை இன்னும் கொஞ்சம் புனைவு நிகழ்ச்சிகளைச்  சேர்த்து இன்னும் உணர்ச்சிகளை எழுப்பும் வகையில் அதை எமோனஷலாக்கி பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வரச்செய்து தங்கள் ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ளும் கவலையே அதிகம்.நிறைய பாட்டுப்போட்டிகளாகட்டும் அல்லது நடனப்போட்டிகளாகட்டும் யாராவது ஏழ்மை நிலையில் இருந்தோ அல்லது விதவைத்தாயாரோடு கஷ்ட ஜீவனம் நடத்துவதாகவோ, இல்லை எனில் தந்தை குடிகாரனாக குடும்பத்தை கவனிக்க முடியாதவனாகாவோ இருந்தால் இன்னமும் அவர்களுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும்.அவர்களும் கரைந்து உருகி இது என் சொந்த விஷயம், இதற்கும் என் கலை உணர்வுக்கும் என்ன சம்பந்தம் எனச்சொல்லாமல் அழுதுகொண்டே கதையை சொல்வதும் இல்லையேனில் அம்மாவை மேடைக்கு அழைத்து அவரையும் லிட்டர் கணக்கில் அழவைப்பதோ நடக்கும். அமெரிக்காவிலும் சர்வைவர் முதல் who is biggest loser வரை இப்படியான நிகழ்ச்சிகள் அதிகம். What not to wear என்ற நிகழ்வில் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் (அவர்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் பரிந்துரையில்) வீடியோ எடுத்து அதை கிரிடிசைஸ் செய்வதாக நினைத்து அந்தப் பெண்களை இன்னமும் மோசமாக கேலி செய்து, அவர்கள் அதுகாறும் வைத்திருந்த துணிமணிகளை எல்லாம் குப்பையில் போட்டு, சொல்லித்தருவேன் என்ற வகையில் அவர்களின் அங்க அடையாளங்களையெல்லாம் கிண்டலுக்கு ஆக்கி அவர்களை ஒரு வழியாக்கி கடைசியாக $5,000 புது ஆடைகள வாங்க உதவி செய்வதாக ஒரு நிகழ்வு வரும். சில பேர் இந்தப் பெண்களின் தாழ்வு மனப்பான்மையை எப்படி போக்குகிறார்கள் என்றெல்லாம் சொன்னாலும் அதை செய்ய மிக ருமையான வழிகாட்டுதல்களும் உண்டு. இந்த நிகழ்ச்சியையே கூட இன்னமும் நாகரீகமாக எடுக்க முடியும் ஆனால் அப்படி செய்தால் பார்வையாளர் ரேட்டிங், அவர்களின் stickiness குறைந்துவிடும் என ஒரு மிகைப்படுதலே அதிகம். என் கவலை எல்லாம் 18 வயதுக்கு மேலானவர்கள் பற்றியதல்ல. சின்னக் குழந்தைகள் தொடர்பான ரியாலிட்டி ஷோக்கள் பற்றியதுதான். Zee தொலைகாட்சியில் சரிகமபா என்ற குழந்தைகளுக்கான பாட்டுப்போட்டியில் தங்களுடைய குழந்தைகளுடன் மும்பை வந்து 6 மாதம் தங்கி இருந்து போட்டிக்கு பயிற்றுவிக்கிறார்கள். இதில், பெரும்பாலும் அம்மாதான் குழந்தையுடன் கூடவே வந்து தங்கி இருக்கிறார். எப்போதாவது அப்பாக்களும் வருவதுண்டு. இந்தக் குழந்தையால்தான் எங்கள் குடும்பமே பெருமை அடைகிறது என்று பேசும் போது மற்ற குழந்தைகள் மனநலன் உளைச்சலுக்கு ஆளாகலாம், இல்லை என்றால் அம்மா அண்னன்/ தங்கையுடந்தான் அதிக நேரம் செலவிடுகிறார், என்னுடன் செலவிட வேண்டுமானால் நானும் நன்றாக பாடவோ அல்லது ஆடவோ செய்ய வேண்டும் என்றும் தோன்றக்கூடும் போட்டியில் பங்குபெரும் குழந்தையுடன் ஏற்படும் வருத்தம் அல்லது பொறாமை நீண்ட நாளைக்கு நீடிக்க கூடும். ஒருமுறை சிமிதா என்ற பாடகி முதல் 7( top 7) சிறப்பான பாடகியாக தேர்வாகி, பிறகு பார்வையாளர்களின் வாக்கு எண்ணிக்கை குறைவாக இருந்ததால் நீக்கப்பட்ட செய்தி கிடைத்து அவருடைய தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அந்நிகழ்ச்சியில் நன்றாக பாடிய இன்னொரு பெண் இதை காரணம் காட்டி தான் நீக்கப்படமால இருந்த போதும் பாட மறுத்துவிட்டார். எனக்கு வாக்கு எண்ணிக்கை குறைவாக கிடைத்தால் என்னை நீக்கிவிடுவீர்கள், அப்புறம் என் தந்தைக்கும் மாரடைப்பு வந்தான் என்ன செய்வது என்று கூறி மறுத்த பெண்ணிற்கு நிறைய ஆறுதல்கள் கூறி பாட வைத்தார்கள். நிகழ்ச்சியில் இருந்து குழந்தைகள் நீக்கப்படும் போதும் இந்த பெற்றோகள் போடும் வாக்குவாதமும் குழந்தைகள் முன்னிலையில் புரியும் தர்க்கமும், வெற்றி பெற வேண்டுமானால் என்ன செய்தாலும் சரி என்பதை புரியவைக்காதா? போட்டியில் தோல்வியை ஏற்கவும் வெற்றியை கொண்டாடவும் சரியான மனப்பக்குவததை சொல்லித்தரவேண்டிய வயதில்லையா இது? நீக்கப்பட்ட குழந்தைகள் உடனே அப்பா அம்மா, சாரி நான் உங்களுக்க்கு மிகுந்த வமானத்தை தந்துவிட்டேன், உங்களின் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டேன் என்று அழுவது ஆபத்தில்லையா? பெற்றோர்கள் கனவை ஏன் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டும், அவர்களுக்கான கனவும் அவர்களுக்கான வாழ்வும் தனி என்பதை கூட ஏன் பெற்றோர்கள் சொல்லித்தருவதில்லை? ஒரு தந்தை மிக நிறைய செலவு செய்து பலருக்கு SMS அனுப்ப பணம் கொடுத்து எல்லாம் செய்தும் ( ரூ 70,000)அவர் குழந்தை நீக்கப்பட்டது. உடனே நானே 75,000 வாக்குகள் வரையில் நிறைய பேரை வாக்களிக்க செய்திருக்கிறேன், பல இடங்களில் பல அக்கவுண்ட் மூலமாக கணிணி வழி வாக்களித்திருக்கிறேன் எப்படி என் குழந்தை தோற்க முடியும் என்றும் வாக்குவாதம் செய்தார். ஒருமுறை முதல் நான்கு சிறுவர்களிடையே போட்டி நடந்தது. அதில் ஒருவர் நீக்கப்பட்டு, மற்ற மூவரும் கடைச் சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தன்மய் என்ற சிறுவன் குறைவான வாக்குகள் பெற்று நான்காம் நிலையில் இருக்க மற்ற மூவரும் கடைசி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் இந்த வாரம் யாரையும் நீக்குவதில்லை என்று முடிவெடுத்தார்கள். அதற்கு அடுத்த வாரம் குறைவான வாக்கு எண்ணிக்கையால் அமீர் ஹாவீஸ் என்ர சிறுவன் நீக்கப்பட, அவருடைய பெற்றோர்களுக்கும் Zee தொலைகாட்சியினருக்கும் நிறைய வாக்குவாதம் நடந்தது. அதில் மிகவும் மனமுடைந்தவனாக காட்சியளித்த அந்தச் சிறுவனை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இதைவிட வருத்தமான விஷயம், சோனுநிகம் இதனால்தான் எழைக்குழந்தைகளை ஊக்குவிப்பது தவறு, ஏனென்ரால் அவர்களின் குணம் இப்படி, கிடைத்தைக் கொண்டு திருப்தியடையாதவர்கள், அதனால்தான் ஆண்டவன் அவர்களை கஷ்ட நிலையில் வைத்திருக்கிறான் என்றெல்லாம் பேசியது அருவருப்பாக இருந்தது,இதற்கு இடையில் மத சாதி சண்டைகள் என zee அனைத்தையும் காட்டி பார்வையாளர்களுக்கு இன்னமும் சென்சேஷனல் போதை ஏற்றிக்கொண்டிருந்தது. பாட்டு நிகழ்ச்சி ஒரு பக்கம் என்றால், ஆடல் போட்டிகள் இன்னும் மோசம். இது சல்சா, இது டாப் டான்ஸ்(Tap dance), இது ஆச்திரேலியன் டாப்டாக் என்றெல்லாம் சொல்லி இன்னும் மோசமான ( porno) அசைவுகளை சொல்லித்தந்து குழந்தைகளை ஆடவைப்பது அவர்கள் மனநிலையை பாதிக்கும் என்ற எண்ணம் ஏன் தோன்றுவதில்லை. குழந்தைகள் ஒருபுறம் என்றால், மூன்று தலைமுறைக்கான நடன போட்டி ஒன்று தொடர்ந்து நடந்தது. இதில் தாத்தா பாட்டிகளுக்கும் , நடக்கவே கஷ்டப்பட்டவர்களையும் நடனம் ஆட செய்து அந்த போட்டியை நடத்தியது முதியவர்களின் மீதான வன்முறை என்ற அளவில் இருந்தது. 70 வயதை தாண்டிய பாட்டிகளை முழங்காலுக்கும் மேலே ஸ்கர்ட் அணியவைத்து அதை அ வர்கள் பிடித்து இழுத்து கொள்வதாகட்டும், நடக்கவும் முடியாமல் உடலை அசைப்பதாகட்டும் காணவே கொடுமை. இதில் பங்கு பெற்று வெற்றி பெற்றால் வரும் பணம் எங்கள் கஷ்டம் குறையும், இதென்ன எங்களுக்கு மட்டுமா அவர்களையும் நாங்கள்தானே பார்த்துக் கொள்கிறோம் இதை புரிந்துகொண்டு அவர்களே பங்கு பெற முன்வந்திருக்க வேண்டும் என்று பேசியவர்களும், போட்டியில் குறைவான மதிப்பெண் பெற்ற போது மேடையிலேயே அம்மா/அப்பாவிடம் பிராக்டீஸ் போதாது என்று கடிந்து கொண்டவர்களைம் பார்த்து என்ன சொல்வது என்ற தெரியவில்லை. கடற்கரையில் ஒருவன் மூழ்கி இறப்பதை, தலை வெட்டப்பட்டு ஒருவன் இறப்பதை, தூக்கு போட்டு ஒருவனைக் கொலை செய்வதைக் கூட ரியல்டைம் செய்திகளாக காட்டி மகிழ்விக்கும் கலாச்சாரம் எங்கே போய் முடியுமோ என்று தெரியவில்லை. நாளை இன்னொருவரின் கஷ்டம் பார்த்து கலங்கும் மனம் மறத்து போனால் நமக்குத்தான் ஆபத்து. வாழ்க்கைக்குப் பணம் அவசியம் என்றாலும் பணமே வாழ்க்கையில்லை என்பதை புரிந்து கொள்ளும் காலம் வருமா? [linesep] 20 ட்விட்டரதிகாரம் [nchokkan]   என். சொக்கன் எழுதுவதிலும் சரி பழகுவதிலும் சரி அவ்வளவு கண்ணியம்.  நிறைய புத்தகங்கள் தேடித் தேடி படிப்பார்.  அதே அளவுக்கு புத்தகங்கள் எழுதி குவித்திருக்கிறார். ட்விட்டரில் பெரிய ரசிகர்மன்றமே இருக்கிறது இவருக்கு. இவ்வருட புத்தக கண்காட்சிக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் பற்றிய சொக்கனின்  புத்தகமும் வந்துவிட்டது.   [linesep] முன்குறிப்பு: இவை வெண்பாக்கள் அல்ல, வெண்பாம்கள், அதாவது, வெண்பாவின் ஒலி, எதுகை, மோனை, இயைபு போன்றவை இருக்கும், இலக்கணம் அங்கங்கே குறைபடலாம், அது தெரிந்தே செய்யும் பிழை என்பதறிக 1. இலவசமாய் ட்விட்டரில் இன்றே புகுந்திடுநீ வளவளன்னு பேசலாம் வம்பு   2. ஒன்ஃபார்ட்டி எழுத்துகளில் உலகத்தை வலம்வரலாம் மண்டைக்குள் சரக்கிருந்தா மஜா   3. நண்பர்கள் இங்குஉண்டு, நச்சரிப்பும் மிகஉண்டு, பண்பாளர் பலர்உண்டு, பழகு   4. புத்தியில் தோன்றியதைப் பட்டுன்னு எழுதிவைக்கச் சத்தியமா ட்விட்டர்தான் சிறப்பு   5. சுருக்கமா எழுதுதற்கு ஜோரான நெட்ப்ராக்டீஸ், வருத்தம்ஏன்? உன்கருத்தை விளம்பு   6. இணையத்தில் தென்படும் இனிப்பான மேட்டரெல்லாம் அனைவர்க்கும் லிங்காக்கித் தா   link = URL   7. ஆரேனும் ஒருகருத்தை அழகாகச் சொல்லிவிட்டால், ஆர்டிசெய் வாழ்த்துவார் அவர்   RT = ReTweet   8. பேச்சுமட்டும் போதாதா? படங்களும் காட்டிடலாம் கூச்சமின்றி ட்விட்பிக்கில் குதி   Twitpic = Image service for Twitter   9. ட்ரெண்டில் வரணுமா, ட்விட்டரில் உன்னுடைய ஃப்ரெண்ட்ஸை அனுசரித்துப் பரவு   Trend = Twitter’s popular topics / people   10. அளவாக ட்வீட்டினால் அமுதேதான், அனுபவி, வளமாகும் நாள்தோறும், வாழ்த்து! [linesep] 21 ஆண்டாள் என்னும் ‘பறை’ச்சி [Kannapiran Ravishankar] கண்ணபிரான் ரவிஷங்கர் (KRS) இவருடைய மாதவிப் பந்தல் இணைய தளம் ஆன்மிகவாதிகளிடையே மிகப் பிரபலமான தளம்.  தவிர கண்ணன் பாட்டு, முருகனுக்கான தளம் என்று பல களம் கண்ட பாகவதர். இவருடைய கட்டுரைகள் மிக விரிவாகவும், புதிய பார்வையோடும் எழுதப்பட்டிருக்கும். [linesep] மிக உயர்ந்த சங்கத் தமிழ்ச் சொல்லான “பறை”, ஆதிக்க மனப்பான்மையின் தவறான செயல்களால், இன்று, தாழ்வான சொல் போல் பிறழ்ந்து விட்டது! பாணன் “”பறையன்” துடியன் கடம்பன் இந்நான்(கு) அல்லது குடியும் இலவே - என்பது புறநானூறு! நெறிகளை அரசுக்கே “பறை”ந்த பறையர் என்ற தமிழ் ஏற்றம்!   [krs-1] ஆனால்…சிறந்த ஒன்றை, கும்மியடித்து, தவறாகப் பலுக்கிப் பலுக்கி, இழிவு பெறச்செய்தல் என்பது, ஆதிக்கப் புத்தி! சிறுபான்மையினரும் மரபுச் சிறப்பைப் பேணிக் கொள்ளலாம்,ஆனால் எங்களுக்கு உட்பட்டே,அடக்கி வாசித்தே… என்னும் மேலாளப் போக்கு! இதுக்கெல்லாம் போராடித் தான் மீளணும்!   போராட்டங்களுக்குப் பின் நிலைமை மாறி, இப்போது அப்படியெல்லாம் இல்லை என்று ஆகிவிட்டாலும், “பறை” என்ற அழகான தமிழ்ச் சொல் போனது போனது தானே? அதை நெருடல் இல்லாமல் நம்மாலேயே பலுக்க முடிகிறதா, யோசித்துப் பாருங்கள்? இன்றைய கால கட்டத்தில், பறையன்/பறைச்சி என்பது வசைச்சொல்! அதை ஒருவர் மீது சொல்லாடினால் சட்டப்படிக் குற்றம்! ஆனால் என் தோழியை நான் “பறைச்சி”-ன்னு சொல்லலாமா? இதற்காக வெல்லாம் கோதை என் தோழமையை மறுதலிப்பாளா என்ன?:) “பறை” என்ற குறிப்புச் சொல்லாட்சி, வேறு எந்த ஆழ்வார்-நாயன்மார் பாட்டிலும் காண முடியாது! ஒரு பெண்-கவிஞராக அவள் மட்டுமே செய்து காட்டிய Poetical Abstraction – கவிதை மறைக்கரு! எதையோ மறைபொருளாகச் சொல்லி வைக்கிறாள்! = என்ன அது? வாய்ச்சுவையும் நாற்றமும் எல்லாம் வெளிப்படையாகச் சொன்னவள்…இதை மட்டும் மறைபொருளாக வைக்கிறாளோ? ஒரு பெண், தன் ஆணிடம் மிக விரும்பும் ஒன்றைத் தானே மறைபொருளாகச் சொல்லுவாள்? = பறை என்றால் என்ன? இருங்க, இருங்க! அதுக்கும் முன்னாடி ஒரு கேள்வி! ஆண்டாளை எப்படி “பறைச்சி”-ன்னு சொல்லலாம்? அவள் ஒரு பிராமணப் பொண்ணு அல்லவா? [:)] ஹிஹி! இன்றைய நிலைமைகளை அன்றைய உள்ளங்களின் மேல் ஏற்றிட முடியாது! மேலும் ஆண்டாள் என்பவள் பிராமணப் பெண்ணல்ல! அப்படியான வீட்டில் “வளர்ந்தவள்” மட்டுமே! அவள் ஒரு அனாதைக் குழந்தை! கண்டெடுக்கப் பட்டவள்! ஊர் பேர் தெரியாதவள்! “அப்பன் பேர் தெரியாதவள்” என்ற கேலியும் இருந்திருக்குமோ என்னவோ? வரிக்கு வரி, பட்டர்பிரான். கோதை, விட்டுசித்தன். கோதை என்று தன் இனிஷியலைப் போட்டுக் கொள்ள அவள் தவறுவதே இல்லை! இப்படி வேறெந்த ஆழ்வார்களும் செய்யவில்லை! (பிறப்பறியாத முதலாழ்வார்கள் உட்பட) உளவியல் அன்பர்களுக்கும் அவள் வாழ்வு ஒரு பெரும் பொக்கிஷம்! [krs-2] ஆண்டாளின் கதை இன்று வேண்டுமானால் ஒரு Fairy Tale போல இருக்கலாம்! ஆனால் அவள் காலத்தில்? காரைக்கால் அம்மை (எ) புனிதாவைப் போல் சுடுகாட்டுக்குத் துரத்தவில்லையே தவிர, கோதையின் வித்தியாசமான மனப் போக்குக்கு, அவளை என்ன கேலி பேசினார்களோ, நாம் அறியோம்! அவள் தன் வாழ்வை எப்படி எதிர் கொண்டாளோ, நாம் அறியோம்! உள்ளத்தே தங்கி விட்ட மாசில்லாத காதலின் உயர்வு!   அரங்கனில் ஏறிக் “கலந்தாள்” என்பது சமயப் பூர்வமாக நிலைநிறுத்தப்பட்டு விட்டது இன்று! * ஆனால், அவள் “கலந்தாளா”?… * ஒருவன் நினைப்பிலேயே “கரைந்தாளா”? அவளின் கடைசிப் பாட்டு இருக்கு பாருங்க! ஓரளவு அவள் மனப்போக்கை உங்களுக்கு எடுத்துக்காட்டக் கூடும்!   [krs-3] கோதை, பிராமண வீட்டில் வளர்ந்தாலும், ஒரு “இடைச்சி” போலவே தான் வளர்ந்தாள்-ன்னு சொன்னேன் அல்லவா? (இன்றளவும் அவள் ஊரிலே, கண்டாங்கிச் சீலையில், இப்படியும் அலங்காரம் செய்து வைக்கிறார்கள்) இடைச்சியா? என்ன ஆதாரம்? என்ன தரவு? = அவள் கவிதையே ஆதாரம்! தரவு!! கீழ்வானம் வெள்ளென்று “எருமைச் சிறுவீடு” மேய்வான் பரந்தன காண்… இதில்……..எருமை, சிறுவீடு மேய்தல்-ன்னா என்ன? எதுக்கு எருமை மாடு? பசு தானே “புனிதம்”? எருமையைப் போய் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் திருப்பாவையில் கொண்டாந்து வைக்கலாமா? [:)] பசு மாட்டை அவிழ்த்து விடணும்-ன்னு அவசியம் இல்லாமல் வைக்கோலைப் போட்டாலேயே அது திங்கும்! ஆனால் எருமை அப்படி அல்ல! அதுக்கு மேய்ந்தே ஆகணும்! அதுக்காக அவ்வளவு அதிகாலையில் மேய்ச்சலுக்குக் கூட்டிப் போக முடியுமா? அதான் சேரி வீட்டுக்குள்ளேயே ஒரு “சிறுவீடு”! கொல்லையை ஒட்டிய மேய்ச்சல் புல்! அங்கேயே மேய விடுவாங்க! உங்கள்-ல்ல எத்தனை பேருக்குச் “சிறுவீடு” பற்றித் தெரியும்? நகரத்தை விடுங்க! கிராமங்களில் இருந்து வந்தவர்கள்? அவிங்களுக்குத் தெரிவதே கூடக் கொஞ்சம் கஷ்டம் தான்! பறைச்சேரி, ஆயர்ச்சேரிக்கே உரிய வழக்கத்தை…. எப்படி ஒரு “பிராமண வீட்டு” ஆண்டாள்…. தெரிந்து வைத்துக் கொண்டுப் புழங்குகிறாள்? வியப்பிலும் வியப்பு! இதே போல், * பறைச்சேரிக்கே/இடைச்சேரிக்கே உரிய சொற்களும், * “கண்ணாலம்” போன்ற பாமரச் சொற்களும், * கணவனை “மைத்துனன்/மச்சான்” என்று அழைக்கும் முறையும், அவள் திருமொழியில் மறைக்காமல் அப்படியே வரும்! கண்டாங்கிச் சீலையும், கோடாலி முடிச்சும், மேனியில் வெண்ணைய் வீச்சமும், பறைச்சேரிப் பேச்சுமாய்… அவனையே நினைத்து நினைத்து, தன்னையும் ஆய்ச்சியாகவே பாவித்துப் பாவித்து, அவளும் அப்படியே ஆயிட்டாள் போலும்! = பாவனை அதனைக் கூடில்,அவனையும் கூடலாமே!   [krs-5]     பறை = Drums! பறை தருவான்-ன்னா Drums தருவான்-ன்னா அர்த்தம்? [:)] ஆண்டாள் என்னும் பெண்ணியவாதி, அதென்ன பசங்க மட்டும் குத்துப்பாட்டுக்கு ஆடறது? நாங்களும் எறங்கறோம்-ன்னு இறங்கிட்டாளா? [:)]   * பறை = மோட்சம்! (ஆன்மீக ரீதியில்) * பறை = பேரின்பம்! (இலக்கிய ரீதியில்) * பறை = அவன் இன்பம்! (காதல் ரீதியில்) அட, வெறுமனே ஒரு வாத்தியக் கருவி எப்படிங்க மோட்சத்தை/ இன்பத்தைக் குறிக்கும்??? சங்கத் தமிழரோடு நெருங்கிய தொடர்புள்ள இசைக்கருவி = பறை! பிறப்பு முதல் முடிவு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் பறை இருக்கும்! போர், உழவு, கூத்து-ன்னு ஒவ்வொரு திணை/துறையிலும் பல்வேறு பறைகள்! அரிப் பறை, செருப் பறை, ஆகுளிப் பறை என்றெல்லாம் சங்கத் தமிழில் வரும்! அப்பேர்ப்பட்ட சங்கத்தமிழ்க் கருவியைத் தான், நோன்புக் கருவியாக கொண்டு வந்து வைக்கிறாள் கோதை!   [krs-6]   ஆனால், பறை என்பது வெறுமனே இசைக்கருவி மட்டும் தானா? = இல்லை! சமூக வழக்கிலே அது அளக்கும் கருவியாகவும் மாறி விட்டது! மேலே படத்தைப் பாருங்க! தட்டைப் பறையைக் கவிழ்த்தால், பறை ஒரு கொள்-கலன் (container) ஆகி விடும்! கூத்து முடிந்த பின், பறையைக் கவிழ்த்து, அதிலேயே காசுகள் பெறும் தெருவோரக் கலைஞர்களைப் பார்த்திருக்கோம் அல்லவா? முற்காலத்தில், பறையடித்து முடிந்ததும், அளந்துவிடும் நெல் கூலியைப் பறையிலேயே வாங்கிக் கொள்ளலாம்! = பறைக் கூலி! * அதே போல், தெய்வம் தரும் கூலி = மோட்சம் = பறை! * காதலன் தரும் கூலி = பேரின்பம் = பறை! * பறையடித்து, அடித்த கூலியும் அதிலேயே வாங்கிக் கொள்ளுதல் போலே… * பிறவி கொடுத்து, அதன் கூலியான மோட்சத்தையும், பிறவியின் முடிவிலேயே கொடுத்து விடுகிறான் எம்பெருமான்! சரணம் ஆகும் தனதாள் அடைந்தோர்க்கெல்லாம், மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று மாறனின் திருவாய்மொழியை ஒப்பு நோக்கிப் பாருங்கள்! [krs-7] இப்படி நம் அனைவருக்கும் கூலி கொடுக்கும்/படியளக்கும் ஐயன்! இந்தப் படியளத்தலே = பறை! * யார் தருவார் பறை? = நாராயண”னே”! * யாருக்குத் தருவார் பறை? = நமக்”கே”! நாராயணனே, நமக்கே, பறை தருவான்!! என்று முதல் பாட்டைத் துவங்கி விட்டாள்!   “பறை” என்பது “உள்ளுறை உவமம்” / Abstraction in Poetry! வேறு எந்தவொரு ஆழ்வாரோ, நாயன்மாரோ குறியீடு காட்டாத… ஒரு பெண் மட்டுமே சாதித்துக் காட்டிய… அவள் அப்பாவின் கவிதையிலும் காணமுடியாத உள்ளுறை! இப்படி ஒரு தனித்தன்மை இந்தப் பெண்ணுக்கு!   “பறை” எங்கெல்லாம் வருகிறது? —————————————————————————————   1. நமக்கே “பறை” தருவான் (தி:1 – மார்கழித் திங்கள்) 2. பாவாய் எழுந்திராய், பாடிப் “பறை” கொண்டு (தி:8 – கீழ்வானம் வெள்ளென்று) 3. போற்றப் “பறை” தரும் புண்ணியனால் பண்டொரு நாள் (தி:10 – நோற்றுச் சுவர்க்கம்)   4. சிறுமியரோமுக்கு அறை “பறை” மாயன் மணிவண்ணன் (தி:16 – நாயகனாய் நின்று) 5. நின் கையில் வேல் போற்றி! உன் சேவகமே ஏத்திப் “பறை” கொள்வாம் (தி:24 – அன்று இவ்வுலகம்) 6. உன்னை அருத்தித்து வந்தோம் “பறை” தருதியாகில் (தி:25 – ஒருத்தி மகனாய்)   7. சாலப்பெரும் “பறை”யே பல்லாண்டு இசைப்பாரே (தி:26 – மாலே மணிவண்ணா) 8. பாடிப் “பறை”கொண்டு யாம்பெறும் சம்மானம் (தி:27 – கூடாரை வெல்லும்சீர்) 9. இறைவா நீ தாராய் “பறை”யேலோ ரெம்பாவாய் (தி:28 – கறவைகள் பின்சென்று)   10. இற்றைப் “பறை” கொள்வாம் அன்று காண்! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் (தி:29 – சிற்றஞ் சிறுகாலே) 11. அங்கு அப்”பறை” கொண்ட ஆற்றை, அணி புதுவை…பட்டர்பிரான் கோதை சொன்ன (தி:30 – வங்கக் கடல்கடைந்த) —————————————————————————————   திருப்பாவையில் மட்டுமேயான சொல்லாட்சி பறை! அதுவும் கடைசி 7 கவிதைகளில், தொடர்ச்சியாக வரும் சொல்லாட்சி!   * துவக்கத்திலே, பறை=நோன்புக்கான இசைக்கருவி என்பது போல் காட்டி விட்டு… * நடுவிலே, பறை=யாம்பெறும் சன்மானம் என்று, படியளந்து கிடைச்ச பரிசைச் சொல்லி… * இறுதியிலே, பறை=பேரின்பம்… இற்றைப் பறையெல்லாம் வேணாம், எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயே! பறை = பேரின்பக் கூலியாக முடிக்கிறாள்!   இப்போது தெரிகிறதல்லவா? பறை = அவள் தனித்துவமான கவிதை! உள்ளுறை உவமம்! கவிதை மறைக்கரு (Poetical Abstraction)   * பறை = இசைக்கருவி * பறை = அதில் படியளந்து பெறும் கூலி * பறை = எனக்கு-அவனே என்ற பேரின்பக் கூலி! = பேறு   ஒரு காதல் உள்ளத்துக்கு, “அவன்” கொடுக்கும் உச்சகட்ட இன்பக் கூலியே=பறை! என் தோழி ஆண்டாளின் அடிமனசு இன்பமே…. உனக்கு-அவனே… என்னும் “பறை”…..ஏல்-ஓர் எம்பாவாய்!!! [linesep] 22 எது சமூகப் பொறுப்பு ? [Gnani]    ஞாநி பூக்கடைக்கு விளம்பரம் வேண்டுமா?  இவரை ஒரே ஒரு முறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன்.  இந்த சிறப்பிதழுக்கு ஏதாவது பங்களிக்க முடியுமா என்று மெயிலில் கேட்டவுடன் ‘உங்களை நன்றாக நினைவில் இருக்கிறது’ என்று அன்பு பாராட்டி உடனடியாக ஒரு கட்டுரையும் கொடுத்து விட்டார். அவருடைய வழமையான சமூக ப்ரக்ஞையுடன் கூடிய அருமையான கட்டுரை.   [linesep] எந்த சமூகப் பிரச்சினையானாலும் உடனே தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள் சினிமாகாரர்களின் கருத்தைக் கேட்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் உடனே கருத்தையும் சொல்லிவிடுகிறார்கள். ஈழத்தமிழர் துயரம், காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினை, முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை எல்லாவற்றிலும் சினிமா துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள்.  அப்படி ஆர்வம் காட்டாதவர்களுக்கு கண்டனம் கூட் வருகிறது. சமூக விஷயங்களில் சினிமாகாரர்கள் இப்படி அக்கறை காட்டுவது மாதிரி வேறு எந்தத் துறையினரும் செய்வதில்லை. மருத்துவர்களோ, பொறியாளர்களோ, ஆடிட்டர்களோ இப்படிப் பொது விஷயங்களில் கருத்து சொல்வதில்லை. வழக்கறிஞர்கள் மட்டுமே ஒரு விதிவிலக்கு. சமூகப் பிரச்சினைகளில் சினிமாகாரர்கள் அக்கறை காட்டுவது நல்லதுதான். ஆனால் அதிலும் செலக்டிவாக மட்டுமே ஏன் இருக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. அண்ணா ஹசாரே இயக்கம் பற்றி,  லோக்பால் அமைப்பு பற்றி, மதுவிலக்கு பற்றி, சமச்சீர் கல்வி பற்றி  என்று அவர்கள் கருத்து சொல்லாத துறைகளும் உள்ளன. அண்மைக் காலமாக கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்று ஒரு கோட்பாடு செயல்பட்டு வருகிறது. அதாவது பெரிய பெரிய கம்பெனிகள், தொழிலதிபர்கள் எல்லாருக்கும் கொஞ்சம் சமூகப் பொறுப்பும் இருக்க வேண்டும் என்று கருதி இப்படி ஒரு தனிப் பிரிவையே பல கம்பெனிகளில் ஏற்படுத்தியிருகிறார்கள்.கம்பெனியின் லாபத்தில் ஒரு தொகையை சமூகத்தொண்டுக்கு செலவிடுவதுதான் இந்தப் பிரிவு. ரத்த தானம், கண் தானம் முதல் இதய சிகிச்சை, எய்ட்ஸ் குழந்தைகளுக்கு உதவி என்று என்ன மாதிரி சமூகத் தொண்டுக்கு செலவிடவேண்டுமென்று ஒவ்வொரு கம்பெனியும் விதவிதமாக தீர்மானிக்கும். சமூகத் தொண்டிலும் லாபம் சம்பாதிக்கும் வழிகள் இப்போது வந்துவிட்டன. விழிப்பு உணர்வுப் பிரச்சாரப் படம் எடுத்து தருவதற்குத் தான் டி.வியில் சம்பாதித்ததை விட அதிகமாக சம்பாதித்த சமூக அக்கறையுள்ள சினிமாகாரர்கள் சிலரை நான் அறிவேன். கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி கொளகையை செயல்படுத்தும் கம்பெனிகள் ஏன் தங்கள் தொழிலில் அதை செயல்படுத்துவதில்லை என்பதுதான் என் கேள்வி. இப்போது ஒலிம்பிக் விலையாட்டுக்கு நிதி உதவி செய்ய முன்வருகிற அதே டவ் கம்பெனிதான் போபால் விஷ வாயு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு தருவது பற்றிய தன் பொறுப்பை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எய்ட்ஸ் நோயாளிக்கு உதவி செய்ய முன்வரும்  ஒரு கம்பெனி, தன் ஊழியர்களை தொழிலாளர்களை எப்படி நடத்துகிறது என்பது முக்கியமில்லையா? அதே போலத்தான் சமூக விஷயங்களில் கருத்து சொல்லுகிற சினிமாகாரர்களும் முதலில் தங்கள் தொழிலில் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்கிறார்களா என்பது எனக்கு முதலில் கவனிக்க வேண்டிய விஷயமாகப் படுகிறது. இன்னமும் திரைப்படத் துறையில் பல பிரிவுகளில்  ஒரே வேலை செய்யும் ஆண் தொழிலாளருக்கும் பெண் தொழிலாளருக்கும் ஒரே பேட்டா, ஒரே சம்பளம் கிடையாது. இதை மாற்ற நடவடிக்கை வேண்டாமா? மன்மோகன்சிங் பற்றி கருத்து சொல்லத் தயங்காத சினிமாகாரர்கள் கூட தங்கள் துறையிலேயே இருக்கும் சக படைப்பாளிகள் பற்றி கருத்து சொல்ல பயப்பட்டு பம்முவது வழக்கமாக இருக்கிறது. கொலை வெறி என்ற பாட்டு பற்றி ஊரே விவாதிக்கிறது. அந்த விவாதத்தில் சினிமா துறையின் குரலையே காணோம். சினிமாவைக் கொட்டகைக்கு வந்து பார்த்து பைரைசிக்கு எதிராக எங்களை ஆதரியுங்கள் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்ளும் எந்த சினிமாகாரரும், கொட்டகைக்கு வரும் ரசிகர்களிடம் சிற்றுண்டிகளைக் கொள்ளை விலையில் விற்கும் கொடுமையைப் பற்றி வாயை திறப்பதே இல்லை. ஒரு மருத்துவரின் சமூகப் பொறுப்பு என்பது என்ன ?  தன்னிடம் வரும் நோயாளிக்கு சரியான சிகிச்சையை நியாயமான செலவில் அக்கறையுடன் செய்வதுதான். சின்ன விஷயத்துக்கெல்லாம் சி.டி.ஸ்கேன் எடுக்க சொல்லி பெரும் செலவு வைத்து, ஸ்கேன் சென்அரிடம் கமிஷன் அடித்து, போதுமான வசதிகள் இல்லாத மருத்துவமனைக்கு பெரும் கட்டண்ஙகள் வசூலித்து பெரும் பணக்காரர்க இருக்கும் ஒரு மருத்துவர் தனியே தன் சமூகப் பொறுப்பின அடையாளமாக ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நன்கொடை வழங்கினால் அது சமூகப்பொறுப்பாகிவிடுமா? உன் தொழிலை ஒழுங்காக சமூகப்பொறுப்புடன் முதலில் செய் என்றுதானே நமக்கு சொல்லத் தோன்றுகிறது ? அது சினிமாவுக்கும் பொருந்தும். எடுக்கும் சினிமாவை சமூகப் பொறுப்புடன் எடுப்பதுதான் அடிப்படை தேவை. உலகத்தின் மிக சிறந்த சினிமாகள் என்றும் சினிமாகாரர்கள் என்றும் போடப்படும் பட்டியலைப் பார்த்தால் தெரியும். அந்தப் படங்கள் எல்லாம் காதலைப் பேசினாலும் யுத்தத்தைப் பேசினாலும், சமூகப் பொறுப்புடன் இருக்கும். அந்தப் படங்களை எடுத்தவர்களில் பலர் தனி வாழ்க்கையில் ஒழுக்கப் பிரச்சினைகளுடன் இருந்தாலும் தங்கள் படங்களில் சமூக அக்கறையும் மனித நேயத்தோடும் மட்டுமே படைத்திருப்பார்கள். தனிப்பட்ட முறையில் நல்லவனாக இருந்துவிட்டு,  எடுக்கும் படைப்பில் சமூக விரோதியாக இருப்பவர்களின் படங்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுவதில்லை. மனித உடலுடன் உறவாடும் மருத்துவர் எப்படி அதில் பொறுப்பின்றி விளையாடமுடியாதோ, அதே போல மனித மனங்களுடன் உறவாடும் சினிமாவின் படைப்பாளிகளும்  பொறுப்பின்றி பொழுது போக்கு என்ற பெயரில் விளையாடமுடியாது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இது புரியாதவர்களுக்கு இதர சமூக விஷயங்களில் கருத்து சொல்ல ஏது உரிமை ? ஏது தகுதி ? [linesep] 23 பூக்கள் பூக்கும் தருணம் [Giriram] கிரி ராமசுப்ரமணியன்  ட்விட்டர், ப்ளாக் என்று பல தளங்களில் சிறகடித்து பறந்தவர் சென்றவருடம் BPO துறைப் பற்றி நூல் எழுதி வெளியிட்டிருக்கிறார். எழுத்தை தவமாக எண்ணி அர்பணிப்பு உணர்வோடு எழுதுபவர்.   [linesep] கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! நள்ளிரவில் மின்சாரம் போகிறது, மின்விசிறி நின்றுவிடுகிறது. காற்று இல்லை, அறை நிசப்தத்தினுள் உறைகிறது, நம் தூக்கம் தடைப்படுகிறது. நம் தூக்கத்தின் தடையானது அந்த மின்சாரம் பிடுங்கிச் சென்ற மின்விசிறிக் காற்றினாலா அல்லது மின்விசிறியின் ஓசை தடைப்பட்டதாலா என்று கேட்டால், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மின்விசிறியின் அந்த ஓசையின்மையே நம்மை ஓங்கியறைந்து எழுப்பிவிடும் காரணியாகிறது. காற்றின் துணையின்றிக் கூட  தூங்கிவிட முடிகின்ற நம் உடலால், கேட்டுப் பழகிய ஒரு ஓசையின் துணையின்றி தூங்க முடிவதில்லை. பகல் நேரத்தில் கூட பக்கத்து வீட்டின் மிக்ஸி ஓசை, எங்கோ யார் வீட்டிலோ ஓடும் தண்ணீர் மோட்டார்,  பக்கத்துத் தெருவில் மாவுமில் இயந்திரத்தின் கரகரக்கும் குரல், ”கோல மாவேய்” என்பவனின் குரலோடு சேர்த்து எண்ணெய் காட்டாத அவன் சைக்கிள் செயினின் கிரீச் கிரீச் சத்தம், நாய்க்குரைப்பு போல் தொடங்கி தேசியகீதத்தில் முடியும்  கார் ஒன்றின் ரிவர்ஸ் கியர் ஓசை  என இவற்றில் எந்தச் சத்தமும் நமக்குப் புதிதாய் இல்லை. இந்த இரைச்சல்கள் இப்படி இருக்க ”பூ உதிரும் ஓசை” என்று ஒன்று உண்டு; அதனை உணரும் புலனும் மனிதனாகிய நமக்கு உண்டு என்று ஒருத்தர் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள் என நானறியேன்; நான் முதலில் நகைக்கத்தான் செய்தேன். [Giri-Jeyamohan]   படம் – நன்றி: ஹரன்பிரசன்னா  “தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை” இந்த ஆண்டு சென்னையில் சில தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை, கங்கைகொண்ட சோழபுர வரலாறு,  ரகுநாத நாயக்கரின் வாழ்க்கை என தொடர்ந்து ஐந்து தினங்கள் “தமிழ் பாரம்பரியக் கச்சேரி” என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள். இவற்றின் தொடக்க நிகழ்வாக எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய ‘குறுந்தொகை, தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்ற உரையில் அவர் குறிப்பிட்டதே அந்தப் “பூ உதிரும் ஓசை”. ‘தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை’ பேராசிரியர் சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் இயங்கி வருகிறது. பத்ரி சேஷாத்ரி அவர்கள்  இந்த அறக்கட்டளையின் ஓர் அறங்காவலர். பாரம்பரியம் என்று இவர்கள் பட்டியலில் இருப்பவை இலக்கியம், சிற்பம், ஓவியம், கோவில் கட்டுமானம், இசை, நாட்டியம் போன்றவை. மாதாமாதம் முதல் சனிக்கிழமை அன்று பாரம்பரியம் தொடர்பாக ஓர் உரையை சென்னை தக்கர் பாபா பள்ளியில் தொடர்ச்சியாக கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வருகிறார்கள்.  இதுதவிர, விருப்பம் உள்ள சுமார் 20-25 பேர் சேர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை பாரம்பரிய இடங்களுக்குப் போய் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றி ஆர்வமாகக் கற்று வருகிறார்கள். மகாபலிபுரம், அஜந்தா/எல்லோரா ஆகிய இடங்கள் கடந்த இரண்டாண்டுகளில் இவர்கள் சென்று வந்துள்ள இடங்கள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சென்னை இசைவிழாவின் போது கூடும் மக்களுக்கு இசையுடன் சேர்த்து பாரம்பரிய விஷயங்களையும் அறிமுகம் செய்ய இந்த ஆண்டு முதல் துவங்கப்பட்டதுதான் ”தமிழ் பாரம்பரியக் கச்சேரி”. http://blog.tamilheritage.in என்ற இணைய முகவரியில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிகழ்வுகள் குறித்த தகவல்களும், முந்தைய நிகழ்வுகளின்  ஒலி/ஒளிப்பதிவுகளும் கிடைக்கின்றன. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிகழ்வுகளில் / செயற்பாடுகளில் தன்னார்வத்துடன் பங்கேற்க சிறுவர்கள் / இளைஞர்கள் வரவேற்கப்படுகிறார்கள் எனவும் இந்நிகழ்வுகள் குறித்து அறிந்தோர் தெரிந்தோருக்குக் கூறவும் எனவும் துவக்க உரையில் பத்ரி சேஷாத்ரி குறிப்பிட்டார். சரி, பூ உதிரும் ஓசைக்குப் போவோம்! “வாசலில் மன்னா உன் தேர் வர; ஆடுது பூந்தோரணம்”, என்ற திரைப்பாடல் கேட்டிருக்கிறீர்களா? நெடுநாள் பிரிந்திருந்த தலைவன் வருகையை எண்ணித்  தவிப்பில் காத்திருக்கிறாள் தலைவி. தலைவன் திரும்பும் வேளையில் அவன் தேர் வருகையை அசைந்து உணர்த்துகிறது அவள் வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் பூந்தோரணங்கள். காற்றில் அசையும் பூந்தோரணத்திற்கும் காதலன் வருகை அறிவிக்கும் பூந்தோரணத்திற்குமான வித்தியாசத்தை உணரச் செய்வதுதான் நம் நுண்ணிய புலன்களின் சிறப்பு. தற்காலக் கவிஞனின் இந்தப் பாடலுக்கான கற்பனையை குறுந்தொகையின் இந்தப் பாடல் தந்திருக்கலாம்; மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக் கறவை கன்று வயிற் படரப் புறவில் பாசிலை முல்லை ஆசில் வான் பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று உய்யேன் போல்வல் தோழி யானே - வாயிலான் தேவன் மேகம் விளையாடும் இந்தச் சிறு வீட்டில் கறவைப் பசுவை நினைத்து கன்று கத்திக் கொண்டே வருகிறது மாலை வெய்யிலின் சிவப்பு பட்டு முல்லை சிவந்த நிறம் பெறுகிறது, எனக்கு மீட்பு வரும்போலத் தெரிகிறது. தலைவன் வருகிறான் எனத் தலைவி சொல்வதாக வருகிறது இந்தப் பாடல். வாழ்க்கையின் நுட்பங்களை நம் புலன்களுக்கு உணர்த்துவதில் இயற்கை வகிக்கும் பங்கினை சங்கப்பாடல்கள் வெறும் கற்பனைகளின் வாயிலாகவே அல்லாமல் இது போன்ற நுட்பமான அனுபவங்கள் வாயிலாக உணர்த்துவதை அன்று ஜெயமோகன் தான் எடுத்துக் கொண்ட எட்டு குறுந்தொகைப் பாடல்கள் வழியாகவும் தன் உரையில் கூறினார். ”பூவுதிரும் ஓசை கேட்கும் புலனும் மனிதனுக்கு உண்டு. அதை மீட்டெடுக்கும்  நம் முயற்சியே சங்கப்பாடலை நாம் சுவைக்கும் திசை நோக்கி நம்மைக் கொண்டு செல்லும்”, என்கிறார் ஜெயமோகன். ஜெயமோகனின் ‘சங்க சித்திரங்கள்” நூலின் கட்டமைப்பு இப்படி இருக்கும்; தன் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவம், அதனோடு தொடர்புடைய ஒரு சங்கப்பாடல், அந்தப் பாடலுக்கான கவிதை போன்ற ஒரு எளிய மொழிபெயர்ப்பு, பாடலுக்கும் தன் வாழ்வின் அந்த சம்பவத்திற்கும் இடையேயான தொடர்பு என்று அழகாய் நெய்யப்பட்ட ஒரு நூல் அது. இதுபோல உரை சொல்லும் உத்தி ஜெயமோகன் அந்த நூலுக்காக அவர் குறிப்பாகக் கையாண்ட விதம் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். கவிதைக்குக் காலகட்டம் இல்லை, அது நித்தியமானது. நல்ல வாசகனுக்கு கவிதை என்பது இறந்த காலத்தில் இல்லை. அது வரலாறு இல்லை, ஒரு அனுபவம் என்று அவர் குறிப்பிட்ட போதுதான் இது சங்கப்பாடல்களை அவர் அணுகும் முறை என்றும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திற்காக கையாளப்பட்ட உத்தி இல்லை என்றும் புரிந்தது. ”கடந்தகாலத்தில் வாழ்ந்த ஒருவனின் வாழ்க்கையை அறிவதற்காக இந்தப் பாடலைப் படிக்காதீர்கள்; தன்னுடைய வாழ்க்கையை அறிய இவற்றைப் படியுங்கள். தமிழகத்தை அறியவேண்டி அல்ல தன் அகத்தை அறிவதற்காக இந்தப் பாடல்களைப் படியுங்கள்” என்று ஜெயமோகன் சொல்கிறார். சுருங்கச் சொன்னால் கவிதையிலிருந்து அதன் அர்த்தத்திற்குப் போகாமல் வாழ்க்கைக்கு வாருங்கள் என்பதுதான் அன்று ஜெயமோகன் தந்த மொத்த உரையின் சாராம்சம். வந்த இடத்தில் மலை முழுக்க அழகழகாய்ப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த குறிஞ்சிப் பூக்கள் ஒருத்தனின் தேனிலவுக் கொண்டாட்டங்களை எப்படித் தொந்தரவு செய்தன என்ற நிஜ வாழ்வு சம்பவம் ஒன்றின் வாயிலாக இந்தப் பாடலுக்கான உரை சொன்னார் ஜெயமோகன். பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமொ டுடனுயிர் போகுக தில்ல கடன்றிந் திருவே மாகிய வுலகத் தொருவே மாகிய புன்மைநா முயற்கே. - சிறைக்குடி ஆந்தையார் பிரிவின் துயரை விளக்குகிறது இந்தப் பாடல். தங்கள் கூடலின் இடையில் வந்தமரும் ஒரு சிறுமலர் தரும் திசைதிருப்புதலின் கணநேரப் பிரிவும் கூட ஓர் வருடத்துப் பிரிவின் வலியைத் தர வல்லது என்பது இப்பாடலின் முதல் வரி தரும் பொருள். இந்தப் பூவிடைப்படுதலை உவமையாக, உதாரணமாகப் பாராமல் நிஜமாகக் காண்பது சாத்தியமா என்ற கேள்வி எழக்கூடும். நம்மில் ஒவ்வொருவரும் காதலின் நெருக்கத்தில் இத்தகைய தீவிரமான உச்சத்தை வாழ்வின் ஏதேனும் சில கணங்களில் உணர்ந்துவிட்டே வாழ்க்கையைக் கடக்கிறோம் எனில் இது நிஜமே. மேலே குறிப்பிட்ட இரண்டு பாடல்களுக்கும் ஒரு ஒற்றுமையை நீங்கள் பார்க்கலாம். இரண்டு பாடல்களிலும் மலர்களின் பங்கு உண்டு. இவையிரண்டு மட்டுமல்ல அன்று ஜெயமோகன் எடுத்துக் கொண்ட எட்டு பாடல்களுக்கும் பூக்களுடனான தொடர்பு இருந்தது. புதுவை ஸ்ரீஅரவிந்த ஆசிரம பக்தர்களை கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒன்று புரியும். அவர்களின் வழிபடுதல் முறைகள் பெரும்பாலும் பூக்களைச் சார்ந்தே இருக்கும். மலர்களால் தட்டுகளில் அலங்காரம் செய்து அரவிந்தர், அன்னை படங்களின் முன் வைப்பார்கள், மலர்களால் தரையில் சின்னங்களை வரைந்து அலங்கரிப்பார்கள். வாழ்க்கையின் பிரச்னைகள் அனைத்திற்கும் பூக்கள் மூலமாக தீர்வு சொல்வார்கள். மலர்களும் அதன் மகிமைகளும் என்பது போன்ற தலைப்பில் புத்தகங்களைச் சுமந்து திரிவார்கள். Spiritual Significance of Flowers என்ற ஸ்ரீஅன்னை அவர்கள் எழுதிய நூல் பற்றி ஜெயமோகன் குறிப்பிட்டு இந்த உலகில் ஒவ்வொரு மலருக்கும் பின்னால் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது என்று ஸ்ரீஅன்னை சொல்வதாகக் குறிப்பிட்டார். அந்த பக்தர்களின் செயற்பாடுகளின் பின்னணி அப்போதுதான் நமக்குப் புரிகிறது. நம் ஐந்திணைகளுமே கூட ஒவ்வொன்றும் மலர்களின் பெயர் சுமந்து அந்த மலர்களின் தன்மையை ஒத்த வாழ்நிலையை பேசுவனதானே என்பதை தன் உரையில் குறிப்பிட்ட ஜெயமோகன் நம் சங்கக்கவிதைகளையும் அதுபோல மலர்களைக் கொண்டு அணுகுவதன் அவசியத்தை குறிப்பிட்டார். அடுத்த பாடலும் மலர் கொண்ட பாடல்தான் எனினும் இந்தப் பாடலின் உள்ளுறைப் பொருள் பற்றி ஜெயமோகன் தந்த விளக்கம் கவனிக்கத்தக்கது: கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர் நூலறு முத்திற் காலொடு பாறித் துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை யானும் காதலென் யாயுநனி வெய்யள் எந்தையுங் கொடீஇயர் வேண்டும் அம்ப லூரும் அவனொடு மொழிமே -  குன்றியனார் கடல்நிலத்துத் தலைவன் மேல் காதல் கொண்டுள்ள தலைவி, அவள்  தாய் காதலை விரும்பாதவள். இவள் நிலை குறித்து ஊர் முணுமுணுக்க, தன்னைத் தலைவனுடன் சேர்த்திட தன் தந்தையின் அருள் வேண்டுகிறாள் தலைவி. நேரடிப் பொருள் இதுவெனினும், இப்பாடல் கொண்ட உள்ளூறைப் பொருள் நோக்கினால், தாயை அந்த நீர்முள்ளிச் செடியின் முள்ளோடும், ஊர்பேசும் வார்த்தைகளை நூலறுந்த முத்தின் சிதறலாகவும் தலைவி குறிப்பிடுகிறாள். ஒரு பொறியாளனின் பணிபோல சொல் பிரித்து அசை பிரித்து அர்த்தம் கூறுதலுக்கும் இதுபோல வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்து பாடல்களை உள்வாங்குதலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர்ந்து செயல்படுவதில்தான் சங்கப்பாடல்களை நாம் நம் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் வாய்ப்பு அமர்ந்துள்ளது. அந்த விதத்தில் ”தமிழ் பாரம்பரியக் கச்சேரி” ஏற்பாட்டில் நடந்த ‘குறுந்தொகை, தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ நிகழ்ச்சி ஒரு நல்ல ஆரம்பம் எனலாம். நம் நிகழ்கால வாழ்வுடன் இணைந்து சங்கப்பாடல்களைப் பார்க்கும் உத்தியை நம் முன்வைக்கும் ஜெயமோகன் நிச்சயம் நன்றிக்கு உரியவர். மார்கழி மாதம் வந்தாலே சென்னை சபாக்கள் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளுக்காய்க் களைகட்டும். இதற்கென கூடும் கூட்டத்தினை கருத்தில் கொண்டு தமிழ் பாரம்பரியக் கச்சேரியை அதே நேரத்தில் நடத்திடும் முயற்சி சிறப்பானது. இம்மாதிரியான நிகழ்வுகளை நடத்தி இந்நிகழ்வுகளின் ஒலி, ஒளி வடிவுகளைப் பதிவு செய்து வலையேற்றும் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள் பெரும் பாராட்டிற்கு உரியவர்கள். இந்நிகழ்வுகளை அவர்கள் வருடாவருடம் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைப்போம். [linesep] 24 அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது [Gayathri] காயத்ரி சித்தார்த் ஒரு கவிஞராக இவரை “‘குறுகத்தரித்த மன’த்தில் அறிமுகபடுத்தியாகிவிட்டது.  ஒரு ரசிகையாக, வாசகியாக இந்த கட்டுரையை வரைந்திருக்கிறார்.  இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் அ.முத்துலிங்கம் எழுத்தின் மேல் உங்களுக்கு அதீதப் பிரேமை வந்து விடும். [linesep] என் செல்ல மகள் அமுதினிக்கு ஒன்னரை வயதாகிறது. அவள் என் வயிற்றில் 3 மாதக் குழந்தையாக இருந்த போதிலிருந்து இன்று வரையிலும் அவளுக்கென்று பிரத்யேகமாய் ஒரு கடிதத்தை எழுதிவிட முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் முதலில் ஓரிரு வரிகள் எழுதுவதும்,  அதையே திரும்பப் படித்து, திருப்தியில்லாமல் வார்த்தைகளை மாற்றுவதும், அடித்துத் திருத்தித் திருத்தி  ஒருவழியாக அவ்வரிகளை அரை மனதோடு ஏற்றுக் கொள்ளும் போது “இதை அடுத்த பத்தியில் சேர்த்துக் கொள்ளலாம். மடலின் துவக்கம் இன்னும் அழகாக, இன்னும் வாஞ்சையாக, இன்னும் குழைவாக… அவள் மீதான என் உள்ளன்பு  முழுவதையும் வெளிக்காட்டுவதாக அமைந்தால் நன்றாக இருக்குமே” என்றோர் ஏக்கம் தோன்றுவதும், பெருமூச்சோடு  அம்முயற்சியை அப்படியே கிடப்பில் போடுவதும் இது வரை பல தடவைகள் நடந்து விட்டது. ஒவ்வொரு வரியிலும் ஒரு சொல் நிரப்ப வேண்டிய இடத்திற்கென அதே பொருள் கொண்ட ஒன்பது சொற்கள் முட்டி மோதிப் போட்டியிட்டு ஒன்றும் வெற்றி பெறாமல் போவதே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இதே போன்றதொரு இடர்ப்பாட்டினை எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் கதைகள் குறித்து எழுத முயல்கையிலும் நான் சந்திக்க நேர்கிறது. வாத்சல்யம் என்றோர் சமஸ்கிருதச் சொல் உண்டு. மனதிற்குள் உச்சரித்தாலும் காதுகளுக்குள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பிரியமான சொல் அது. வாத்சல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான அதே சமயம் மிக மிருதுவான சொல்லாக விளங்குவது. என் அம்முவை எத்தனை வாத்சல்யத்தோடு அணுகுகிறேனோ அதே அளவு வாத்சல்யத்துடனே அ.மு வின் எழுத்துக்களையும் எதிர்கொள்கிறேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கக் கூடும். ”இலங்கை கொக்குவில் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் கடமையாற்றி தற்சமயம் ஓய்வுபெற்று தன் மனைவி கமலரஞ்சினியுடன் வசிப்பது கனடாவில்.  இவரின் மகன் சஞ்சயனும், மகள் வைதேகியும் வசிப்பது அமெரிக்காவில்.” என்று இவருக்கு அறிமுகம் தந்திருக்கிறது தமிழ் விக்கிபீடியா. இதை விடவும் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’, ‘அங்கே இப்ப என்ன நேரம்’ முதலான தொகுப்புகளிலும் இன்ன பிற  கதைகள் மற்றும் கட்டுரைகளிலும் இவர் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினர் பற்றியும் கொடுத்திருக்கும் தகவல்களே மனதிற்கு மிக நெருக்கமானவையாய் இருக்கின்றன. ‘ பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு நள்ளிரவில் திரும்பி வரும் மகனிடம் பரிசு குறித்து ஒன்றுமே கேட்காமல் விழித்திருந்து உணவு பரிமாறும் அம்மா,  கதவிற்கு வெளியே உருண்டு வரும் தேசிக்காய்களை வைத்து குழந்தைகள் பிறந்த நேரத்தைக் குறித்துக் கொண்டு,  ஊருக்கு வரும் ஒவ்வொரு ஜோசியரிடமும் பிள்ளைகளின் ஜாதகக் கட்டைக் கொடுத்து பலன் கேட்கும் தந்தை, தம்பியைப் படம் எடுக்க வீட்டிற்கு புகைப்படக்காரர் வந்த போது அழுது அரற்றி தன்னையும் படம் பிடிக்கும்படி பிடிவாதம் செய்த அண்ணர், சங்கீதம் கற்றுக் கொள்ளும் அக்காள்,  தன் தலையைக் காட்டிலும் பெரிதான மாம்பழத்தை நெஞ்சோடணைத்து வீடெங்கும் தூக்க முடியாமல் தூக்கித் திரிந்த குட்டித்தங்கை, கனமான புத்தகங்களை அடியிலும் மெலிதானவற்றை மேலாகவுமாக அடுக்கி வைத்து ஒரே கதையின் அடுத்தடுத்த பாகங்களை கீழ்மேலாக தேடச் செய்யும் மனைவி, குதிரையிடம் கடி வாங்கிய மகள், சூட்டிகையான பேத்தி அப்சரா’ என்று அவரது உறவினர்கள் அனைவருமே ஏற்கனவே நன்கு அறிமுகமான தூரத்து சொந்தங்களாகவே தோன்றுகின்றனர். “நாங்க 5 பேரும் தினம் 8 மணிக்கெல்லாம் தூங்கிடுவோம். தாத்தி மட்டும் தாத்தாவுக்காக முழிச்சிருப்பாங்க. நைட் 10, 11 மணிக்கு வருவார். வெளியூருக்கு போய்ட்டு வந்தார்னா அன்னேரத்துலயும் உசிரோட வாத்தோ, கோழியோ வாங்கிட்டு வந்து அப்பவே தோலுரிச்சி மஞ்சப் பூசிக் குடுத்து சமைக்கச் சொல்லுவார். தாத்தி நடுராத்திரில அம்மில வருக் வருக்னு மசாலா அரைச்சி குழம்பு வைப்பாங்க. புள்ளைங்க சூடா சாப்பிடட்டும்னு நைட் 1 மணிக்கு எங்களை எழுப்பி சாப்பிடச் சொல்லுவார் தாத்தா. தூங்கி விழுந்துகிட்டே சாப்பிடுவோம். காலைல கேட்டா உன் கடைசிச் சித்தி நான் நைட் சாப்பிடவே இல்லன்னு அழுவா” என்று நாங்கள் பார்த்தேயிராத தாத்தாவைப் பற்றியும் எங்கள் குழந்தைப் பருவத்துக் குறும்புகள் பற்றியும் அம்மா சொல்லும் கதைகளில் இருக்கும் சுவாரஸியத்தையும் நம்பகத் தன்மையையும் அச்சுப் பிசகாமல் கொண்டிருப்பவை அ.முவின் அனுபவக் கதைகள். இவரது கதைகளின் சிறப்பம்சமாக அதில் விரவியிருக்கும் நகைச்சுவையை பலரும் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். “புன்னகைக்கும் கதை சொல்லி” என்பார் ஜெயமோகன். உடல்நலம் குன்றிய தன் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து அருகில் துணைக்கிருந்த இரவில், சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாமல் வாய் விட்டுச் சிரித்தபடியே ‘அங்கே இப்ப என்ன நேரம்’ தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார் பா.ராகவன்.  ‘ஐவேசு’ கதையை தன் பதிவில் குறிப்பிட்டு எழுதியதன் வாயிலாக எனக்கு முதன் முதலாக அ.மு வை அறிமுகப்படுத்திய ஆசிப் அண்ணாச்சியும் அதன் நகைச்சுவையே தன்னை வெகுவாகக் கவர்ந்த அம்சம் என்று கூறியிருக்கிறார். ஆனால் என்னளவில் நகைச்சுவையைக் காட்டிலும் அ.மு வின் கதை சொல்லும் நேர்த்தியும் சொக்க வைக்கும் விவரணைகளுமே அவரது அதி சிறந்த அம்சங்களாகத் தோன்றுகின்றன. ஜெயமோகனின் தாயார் பாதம் சிறுகதையில் “சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ….ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூப்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம்.”  என்றொரு வரி இடம்பெற்றிருக்கும்.  அ.முத்துலிங்கத்தின் எழுத்தை வாசிக்கும் போதெல்லாம் இப்படியானதொரு அனுபவம் வாய்க்கத் தவறியதில்லை. அவரின் இணையதளத்தில் இருக்கும் ‘மாம்பழம்’ என்ற கட்டுரை நான் மிக மிக ரசித்துக் கிறங்கிப் படித்த கட்டுரைகளுள் ஒன்று.  தோட்டத்திலிருக்கும் மாமரத்திலிருந்து வீட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கான பழத்தைத் தேர்வு செய்து அதில் தங்கள் பெயர் எழுதிய சீட்டுக்களை கட்டி வைக்கின்றனர். அவற்றின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து அவை முற்றிக் கனிந்ததும் அவரவர் கனியை பறித்து உண்டு மகிழ்கின்றனர். அவர்களுள் மிகச் சிறியவளான 3 வயது தங்கையின் மாம்பழம் குறித்து பின்வருமாறு விவரிக்கிறார் ஆசிரியர். “ஆக எஞ்சியது தங்கச்சியின் மாங்காய்தான். அது ஒவ்வொரு நாளும் பெருத்துக்கொண்டே வந்தது. அவளுடைய தலையளவுக்கு பெருத்த பிறகு நிறம் வைக்கத் தொடங்கியது. ஒருநாள் காலை பழுத்து கனிந்து சாப்பிடுவதற்கான பருவத்தை எட்டியது. அண்ணர் அதை ஆய்ந்து அவளிடம் கொடுத்தார். இரண்டு கைகளாலும் ஏந்திப் பிடிக்க  கைகளில் அவளுக்கு போதிய பலம் கிடையாது. ஆனாலும் அவள் அதை கீழே இறக்கவில்லை. குழந்தையை அணைத்துப் பிடிப்பதுபோல நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக்கொண்டு வீடு முழுக்க அலைந்தாள். ஒரு புதுப் பொம்மை கிடைத்ததுபோல மகிழ்ச்சி. மதியம்வரை அதை நெஞ்சைவிட்டு கீழே இறக்கவில்லை. அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது.” இந்தப் பத்தியைப் படிக்கும் போதே மாம்பழத்தைத் தூக்க முடியாமல் தூக்கித் திரியும் குட்டிப் பெண்ணின் உருவம் மனக்கண்ணில் தோன்றியதோடு அவளின் மகிழ்ச்சி என் முகத்திலும் கசிந்து விரவிக் கொண்டிருந்தது.  இறுதியாய் ‘அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்குக் கிடையாது’ என்ற வரியை வாசித்தபோது உண்டான மனக்கிளர்ச்சியை எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை. ஏறத்தாழ அ.முவின் எழுத்துக்களை நானும் இப்படித்தான் தூக்கிக் கொண்டு திரிகிறேனோ என்று தோன்றுகிறது! விவரணைகளைப் போன்றே அவர் கையாளும் உவமைகளும் மிக மிக அழகானவை. ‘ஐயோ’ எப்படித்தான் இப்படியெல்லாம் சொல்லத் தோன்றுகிறதோவென மாய்ந்து மாய்ந்து வியக்கச் செய்பவை. “தாயின் கையை பறித்துக்கொண்டு ஓடும் குழந்தைபோல ஒரு முடிக்கற்றை நெற்றியிலே விழுந்தது” “இப்பொழுதுதான் பிறந்த ஆட்டுக்குட்டி எழுந்து நிற்பதுபோல அவர் கால்கள் நடுங்கின” “என்னுடைய முகம் சாத்தி வைத்த கதவு போல இருந்தது” “ஒரு குளவியை அறைக்குள் விட்டு கதவைச் சாத்தியது போல அறையின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாக கனகி சர்க் சர்க் என்று பறந்து கொண்டிருந்தாள்.” “குழந்தை அவசரமாக தாயைப் பின் தொடர்ந்தது. திடீரென நின்று, தானியத்தைக் கொத்துவதற்கு குருவி தயங்குவது போல யோசித்தது” ” கனடாவின் 143 வருட சரித்திரத்தில் முதன்முதலாக ஓர் ஈழத்தமிழர் உடலழகன் போட்டியில் பங்குபற்றியதுமல்லாமல் இரண்டாவது இடத்தையும் வென்றிருந்தார்.  அவர் பெயர் பகீரதன் விவேகானந். ஒரு மேப்பிள் இலை உதிர்ந்ததுபோல, ஒரு குறுக்கெழுத்துப் புதிர் பூர்த்தியானதுபோல, ஒரு வீதி விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியதுபோல இந்தச் சம்பவம் மிகச் சாதாரணமாக மறக்கப்பட்டுவிடும் ” என்பவை சில எடுத்துக்காட்டுகள். எவருடைய நூலைப் பற்றியாவது சிலாகித்துப் பேசுகையில் அதில் வரும் மிகச் சிறந்த வசனத்தை சுட்டிக் காட்டி “இந்த ஒரு வசனத்திற்கே புத்தகத்திற்கு கொடுத்த மொத்த விலைப்பணமும் சரியாய்ப் போய்விட்டது” என்று குறிப்பிடுவது அ.முத்துலிங்கம் அவர்களின் வழக்கம். அவரது புத்தகத்தை வாசிக்கையில் குறைந்தது 50 முறைகளாவது இதே வரியை நினைவு கூர வேண்டியிருக்கிறது. உவமைகளைப் போன்றே ஒவ்வொரு கதையிலும் புதிதாக அறிந்து கொள்வதற்கென நிறைய சுவாரஸியமான செய்திகள் பொதிந்திருக்கும். அட! என புருவமுயர்த்தி ஆச்சரியப்பட வைக்கும். “ஆராய்ச்சி’ என்று ஒரு மாமரம். அதன் காய்கள் பனங்காய் அளவுக்கு பெரிசாக வளர்ந்து தன் பாரத்தை தானே தாங்க முடியாமல் வெடித்துவிடும். இன்னொரு வகை ’மத்தளம்தூக்கி’. நார்ச்சத்துள்ள இனிய பழம். இன்னொன்று ’வெங்காயம் காய்ச்சி’. இதை பழுக்க வைப்பதில்லை, இதில் வெங்காய வாசனை வரும் ஆகவே கறிக்கு பயன் படுத்துவார்கள்.” “தென் அமெரிக்காவில் 150 பேர் மட்டுமே கொண்ட ஓர் இனக்குழு உண்டு. அவர்களுடைய மொழியில் ’அரைகுறையாக அம்பு எய்தவன்’ என்பதற்கு ஒரு வார்த்தை உண்டு. அரைகுறையாக அம்பு எய்தால் மிருகம் வலியில் துடித்து உழன்றுதான் சாகும். அந்த மொழியில் ஆக மோசமாக ஒருவரை திட்டவேண்டும் என்றால் அந்த வார்த்தையை சொல்லி வைவார்கள். ” “ஆப்பிரிக்காவில் மணமுடிக்கும் முன்னரே பிள்ளை பெற்ற பெண்ணுக்கு மதிப்பு அதிகம். அவள் கர்ப்பம் தரிப்பது பிரச்னை இல்லாததால் அவளை மணக்க ஆடவர் போட்டியிடுவர். இந்தியப் படங்களில் ஒரு பெண் கற்பைக் காப்பாற்றப் போராடும் இடங்கள் அவர்களுக்குப் புரிவதேயில்லை.” “ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிணத்தை எரிப்பதைப் பார்த்ததும் ஆப்பிரிக்கர்கள் கிலி பிடித்து ஓடிவிடுவார்கள். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கம் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்”. இப்படி தனி நூலாய்த் தொகுக்குமளவிற்கு கதையெங்கும் பரவியிருக்கும் நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமல்லாது சாதாரணமாய் நகரும் கதையை ஒற்றை வரியால் சட்டென வேறு தளத்திற்கு உயர்த்திச் செல்லும் லாவகமும், மாலையா இரவா எனப் பிரித்தறிய முடியாதபடி மயங்கி வரும் பொழுதைப் போல உண்மையா புனைவா என்றுணர மாட்டாத  மயக்கத்தோடு அனுபவங்களை விவரித்து செல்லும் பாங்கும், வெவ்வேறு தேசங்கள், பல்வேறு வாழ்க்கை முறைகள் என வாசிப்போருக்கு அந்நியமாயிருக்கும் அனைத்தையும் எளிய தமிழின் வழியாக மிக அணுக்கமானதானக் காட்டும் திறமையும், செறிவான சொற்களைத் தேடித் தேடிப் பயன்படுத்தும் வசீகரமும் அவரின் தனிச்சிறப்புக்களாக மிளிர்கின்றன. அ.மு வின் கதைகளில் எதிரி, மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்கள், மயான பராமரிப்பாளர், வேட்டை நாய், என் குதிரை நல்லது, முதலியவற்றோடு எனக்கு மிக மிகப் பிடித்தமான கதைகள்  இரண்டு உண்டு.  “அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை“  “உடனே திரும்ப வேண்டும்“  ஆகிய 2 கதைகளையும் என்னால் மறக்க முடிந்ததே இல்லை. இவை என் மனதில் ஆழப் பதிந்து அழியாமல் நின்று விட்டமைக்கு, இந்த இரண்டு கதைகளுமே உடல் நலமின்றித் துன்புறும் இளங்குழந்தையைப் பற்றியும் குழந்தையின் அவஸ்தையைக் காணச் சகியாத பெற்றோரைப் பற்றியுமான கதைகளாய் அமைந்தது காரணமாயிருக்கலாம். என் மகள் பிறக்கும் முன்பாகவே இவ்விரண்டு கதைகளையும் பதைபதைப்போடு மிகவூன்றிப் படித்திருந்தேன். அவள் பிறந்து வளர்ந்து முதன் முதலாகப் பின்னோக்கித் தவழத் தொடங்கிய நாட்களிலும், சமீபமாய் உடல்நலமின்றி இரவெல்லாம் கடுமையான சளித் தொந்தரவோடும் காய்ச்சலோடும் அவள் அவதிப்பட்ட நாட்களிலும் இக்கதைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்த படியே இருந்தேன். ‘அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை’ என்ற கதையில்  வரும், தவழும் பருவத்துக் குழந்தையான லவங்கி திடீரென கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுவாள். ஒரு சுவாசப் பை முற்றிலும் மடிந்து உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் குழந்தைக்கு ஊசி மருந்து செலுத்துவதும், சலைன் ஏற்றுவதும், உடலில் மெல்லிய குழாயைச் செலுத்தி சிறுநீர் எடுப்பதுமாக மருத்துவ சோதனை என்ற பெயரில் அலைக்கழிப்பார்கள். ஒவ்வொன்றிற்குமாக அழுது அழுது களைத்த குழந்தை, எக்ஸ்ரே எடுப்பதற்காக அந்நிய மனிதர்கள் இருவர் அவளை அழுத்திப் பிடித்ததும் அது வரை இல்லாத அளவுக்கு கதற ஆரம்பிப்பாள்.  இதற்கு அனுமதித்த தன் அப்பாவை நம்ப முடியாத கண்களால் பார்ப்பாள். முதல் மொட்டை அடிப்பதற்காக அமுதினியை எல்லாருமாக சேர்ந்து அழுத்திப் பிடித்து தலையில் தண்ணீர் தெளித்த போது இதே போன்ற பார்வையுடன் தான் கதறித் தீர்த்தாள். அம்மா.. அம்மா என்றே ஓயாமல் அழுதாள். சுற்றியிருந்த அத்தனை பேரையும் விடுத்து அவள் கருவிழிகள் என்னை மட்டுமே ஊடுருவித் துளைத்தன. அவ்விழிகளில் கண்ணீரோடு சேர்ந்து நீயுமா இதற்கு உடந்தை? என்ற கேள்வியும் கலந்து கன்னத்தில் இறங்கியபடியே இருந்தது. மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகளை மனைவியின் வசம் ஒப்படைத்து, இரண்டே நாட்களில் திரும்பி விடுவதாக வாக்களித்து  விட்டு பணி நிமித்தமாய் தூர தேசம் செல்லும் தந்தை தொடர்ந்து 8 நாட்களாக ஊருக்குத் திரும்ப இயலாமல் அவதிப்படுவதைப் பற்றிய சிறுகதை ‘உடனே திரும்ப வேண்டும்’. போதாக்குறைக்கு கைக்குழந்தையான அவர் மகளின் தோள் மூட்டில் பூச்சியொன்று முட்டையிட்டு கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்திற்குள் வளர ஆரம்பித்து சருமம் வீங்கத் தொடங்கியிருக்கும். வலி தாளாமல் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டேயிருக்கும்.  விமானம் பழுதாகி விசா இல்லாமல் அல்லாடி மீண்டும் விமானம் ஏற முடியாமல் தவித்து முழுதாக 8 நாட்கள் கழித்து அவர் திரும்பி வரும் போது அப்புழு வளர்ந்து குழந்தையின் தசையைப் பிளந்து கொண்டு வெளியேறிப் போயிருக்கும். குழந்தை சுரம் குறைந்து களைப்போடு ஒரு குட்டித் தலையணையில் தன் குட்டித் தலையை வைத்துப் படுத்திருக்கும். இரு கதைகளிலுமே குழந்தை உடலால் அனுபவிக்கும் வேதனைக்கு சற்றும் குறையாத வேதனையைப் பெற்றோர் மனதால் அனுபவிக்கின்றனர். எப்போது நினைத்துக் கொண்டாலும் மையுறிஞ்சும் தாளைப் போல நெஞ்சில் துக்கம் பரவிப் பாய்வதைத் தடுக்க முடிந்ததில்லை.  வாசிக்கும் போது கண்ணோடும்  கையிலிருக்கும் நூலோடும் மட்டும் நின்று விடாமல் வாசிப்பவரின் நெஞ்சோடு கலந்து வாழ்க்கை முழுவதும் துணை வரும் படியாக இப்படி ஒரு சில கதைகளே வாய்க்கின்றன.  என் கல்லூரிக்கால முதல் வகுப்பில் ‘இலக்கியத்தின் பயன் என்ன?’ என்று எங்கள் ஆசிரியர் கேட்ட கேள்விக்கான பதிலையும் இது போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே  நான் கண்டு கொள்கிறேன். நான் தமிழ் இலக்கியம் பயின்றவள். எந்தவொரு பொருள் குறித்தும் காய்தல் உவத்தல் இன்றி  ஆராய்ந்து நேர்மையான முறையில் அவற்றின் நிறை, குறைகளை முன்வைத்து கட்டுரை படைக்கப்பட வேண்டும் என்றே எனக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் எனக்குப் பிடித்தமானவை குறித்து நானெழுதும் கட்டுரைகள் அனைத்திலும் சிலாகிப்புகள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன.  ‘எழுதுங்கால் கோல் காணாக்  கண்ணே போல்’ என்பார் வள்ளுவர்.  ரோஜாக்களைப் பற்றி பேச முனைகையில் முட்களை முன்னிறுத்த வேண்டிய அவசியம் தான் என்ன? [linesep] 25 ஐ.டி கம்பெனியில் வர்ணாஸ்ரமம் [ERaghuram] காஞ்சி ரகுராம் ’இன்று’ என்னும் தளத்தில் பல கோவை எழுத்தாளர்களுடன் இணைந்து எழுதிக் கொண்டிருக்கும் காஞ்சிபுரத்துக்காரர் இவர். நீங்கள் ஒரு கட்டுரை தரமுடியுமா என்றுக் கேட்ட மறுநாள் கட்டுரையை அனுப்பி விட்டார். [linesep] “நீ என்ன ஜாதி தம்பி?” அந்த முதியவர் கேட்ட போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பள்ளத்தில் சைக்கிள் இறங்கியதால் விழுந்துவிட்டவரை தூக்கி உட்கார வைத்திருக்கிறேன். அவருக்காக ஹேண்டில் பாரை சரி செய்த போதுதான் அக்கேள்வியைக் கேட்டார். இப்போது அவருக்குப் பிடித்த ஜாதியில் நான் இல்லாவிட்டால் மீண்டும் ஹேண்டில் பாரை திருகிக் கொண்டு விழுந்துவிடவா போகிறார்? “உங்களுக்கு உதவின ஜாதி… பாத்து போங்க…” அனுப்பி விட்டு நடையைத் தொடர்ந்தேன். பெற்ற உதவிக்குக் கூட ஜாதி பார்த்துதான் நன்றி சொல்வார்களா? மக்களின் பாதுகாப்பும், வாழ்க்கைத் தரமும் உயர வகுக்கப்பட்ட வர்ணாஸ்ரமம் கால மாற்றத்தில் இந்தளவிற்குத் திரிந்துவிட்டது வேதனை. இதன் நோக்கத்தை ஐ.டி துறையைக் கொண்டு விளக்குகிறேன். நான் பணிபுரியும் ஐ.டி கம்பெனியுடன் வியாபார ரீதியாக தொடர்பிலிருக்கும் கம்பெனிகளுக்கு,  புதிய ப்ராஜெக்டை ஆரம்பித்து வைக்க அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் ப்ராஜெக்டில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க நான் செல்வதுண்டு. அந்தக் கம்பெனிகள் எனக்கென பிரத்யேகமாக அடையாள அட்டையைத் தரும். அது அவர்களுடைய வழக்கமான அட்டையைப் போலவே இருந்தாலும், வேறு நிறத்தில் இருக்கும். ஒருநாள் ஒரு கம்பெனியில் தீவிர விவாதத்தில் இருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் விவாதத்தைத் தொடர்ந்திருக்கிறேன். அந்த நேரத்தில் அந்த அறையை ரிசர்வ் செய்திருந்த நபர், பொறுமையிழந்து கத்திக் கொண்டே, என்னைத் திட்டிக் கொண்டே வந்தார். உடன் இருந்தவர்கள் குறுக்கிடக் காட்டிய தயக்கம், அவரின் பதவியை உணர்த்தியது. “என்ன பிரச்சனை சார்?” எழுந்தபடி கேட்டேன். என் அடையாள அட்டையின் நிறம் அவர் கண்ணில் பட, சட்டென நிதானத்திற்கு வந்தார். அது வேறு கம்பெனியிலிருந்து வரும் டொமெய்ன் எக்ஸ்பர்ட்டை (Domain Expert) குறிக்கும் முதல் வர்ணம். “இங்கே ஒரு முக்கிய மீட்டிங் நடத்த வேண்டியிருக்கிறது. உங்களுடையது எப்போ முடியும்?”. இப்போது அவர் குரலில் கண்ணியம் தெரிந்தது. இந்த வர்ண ஜாலம்தான் வர்ணாஸ்ரமத்தின் அடிப்படை. எந்த ஐ.டி ப்ராஜெக்டாக இருந்தாலும் நான்கு குழுவினர்களின் பணி முக்கியமானவை. 1. ப்ராஜெக்ட் சம்பந்தமான அறிவியல் அனுபவத்துடன் ப்ராஜெக்டை வடிவமைத்துத் தரும் குழு – டொமெய்ன் எக்ஸ்பர்ட்ஸ் (Domain Experts). 2. முதல் குழுவின் வழி காட்டுதலின் படி Java, .Net போன்ற கணினி மொழிகளைப் பயன்படுத்தி ப்ராஜெக்டை உருவாக்கும் குழு – டெவலப்பர்ஸ் (Developers). 3. உருவாக்கப்பட்டதை விற்பனை செய்யும் குழு – சேல்ஸ் (Sales). 4. ப்ராஜெக்ட் நிறுவப்படும் இடங்களில் அதை இயங்க வைக்கும் குழு – ஆபரேஷன்ஸ் (Operations). இந்தக் குழுக்கள், அதனதன் பணியைச் சரியாகச் செய்தால்தான் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக இயங்கும். இவர்களிடையே அனுசரணையும் முக்கியம். சேல்ஸ் குழுவின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, ஆபரேஷன்ஸ் குழுவின் மூலம் நடைமுறை சிக்கல்களை அறிந்து, டொமெய்ன் எக்ஸ்பர்ட்ஸ் குழு மேலும் வழிகாட்டுவதை டெவலப்பர்ஸ் கடைபிடித்தால்தான் ப்ராஜெக்ட் மேற்கொண்டு வளரும். ப்ராஜெக்டை இப்படி வளர்ப்பதைப் போலவே, சமுதாயத்தை வளர்க்க, ப்ராஜெக்ட் குழுக்களைப் போலவே நான்கு குழுக்கள் அன்றைய நாளில் நியமிக்கப்பட்டன. அறம் வளர்ப்பவர், அதன்படி நாட்டை நடத்திக் காப்பவர், வருவாய் ஈட்டுபவர், இயக்கத்திற்கு உழைப்பவர். சில ஐ.டி கம்மெனிகள் அவுட் சோர்சிங் (Out Sourcing) முறை மூலம் வேறு கம்பெனிகளிலிருந்து இக்குழு நபர்களை வருவிக்கும் போது, அவர்களின் பணியை மற்றவர் உணர்ந்து நடந்து கொள்ள வர்ண அடையாள அட்டைகளைத் தருகிறது. அன்றைய நாளில்,  போட்டோ அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு பந்தா காட்டுவது கண்டுபிடிக்கப் படாததால், வண்ணத் துணிகளை தலையில் பாகையாக, இடையில் கச்சையாக, தோளில் பட்டையாகக் கட்டிக் கொண்டார்கள் என நினைக்கிறேன். வெள்ளை, சிவப்பு, பச்சை, கறுப்பு போன்ற நிறங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும். கல்லூரி முடித்து மாணவர்கள் கம்பெனியில் சேரும்போது, முதலில் அனைவருக்கும் பொதுவான பயிற்சி அளித்து, அதில் அவர்களின் தேர்ச்சியை, திறமையை வைத்து, நான்கு குழுக்களுக்குள் ஒன்றை ஒதுக்கி, அதற்கான பிரத்யேக பயிற்சிக்குப்பின் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இப்படித்தான் வர்ணாஸ்ரமமும் தகுதியின் அடிப்படையில் நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் தோன்றியதே. வனப் பகுதியிலிருந்து, வளப் பகுதிக்கு நகர்ந்த மனிதனுக்கு ஜாதி ஏது? ஒரு நோக்கம் நிறைவேறியபின் அதற்கான முனைப்புகள் அர்த்தம் இழக்கின்றன. இயங்கத் தொடங்கிய ப்ராஜெக்ட் மேலும் விஸ்தரியும் போது, அதன் குழுக்களில் புதிய நபர்கள் சேர்கிறார்கள். பழையவர் வேறு கம்பெனிக்குத் தாவுகிறார்கள். சிபாரிசில் சிலர் நுழைகிறார்கள். இவர்கள் அடிப்படையையும், நோக்கத்தையும் தெரிந்து கொள்ள முயலாமல், எதையாவது செய்து ப்ராஜெக்டை சொதப்புகிறார்கள். பிரச்சனைகள் முளைக்கத் தொடங்குகின்றன. பழியை ஒருவர் மீது  ஒருவர் சுமத்த சண்டைகள் ஆரம்பம். இன்று இந்த நான்கு குழுக்களும் அடித்துக் கொள்ளாத ஐ.டி கம்பெனிகளே இல்லை. வர்ணாஸ்ரமமும் சந்ததி வளர்ச்சியில், மதங்களாகி, ஜாதிகளாகி சில சாரார் மட்டுமே உயர, பல இடங்களில் எப்போதும் கலவர நிலவரம். ஐ.டி கம்பெனிகளெல்லாம், செலவுகளைக் குறைக்க, ஆட்களைக் குறைக்க க்ளவுட் கம்யூட்டிங் (Cloud Computing) என்ற அடுத்த கட்ட டெக்னாலஜியை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. இது ஐ.டி குழுக்களின் உட்பிரிவுகளை கணிச்சமாகக் குறைக்கும். அது போல ஜாதிகளும் குறைந்தால் சரி. [linesep] 26 சேத்தன் பகத்தின் வழியில்...  பத்ரி சேஷாத்ரி [badri] புத்தக கண்காட்சி, தினமும் எழுதும் பதிவுகள், ட்விட்டர் என்று மிக பிஸியாக இருப்பாரே என்று தயக்கத்துடன்தான் கட்டுரை கேட்டேன்.  ‘யார் கேட்டாலும் மாட்டேன்னு சொல்லமாட்டேன்’ என்று சொல்லி உடனடியாக கட்டுரையையும் அனுப்பி விட்டார். ‘க்ரிகின்ஃபோவிலிருந்து கிழக்கு வரை’ என்ற சுயசரிதை எழுத ஆரம்பித்து விட்டாரா எனத் தெரிந்து கொள்ள ஆவல். சுவாரசியத்திற்கு உத்தரவாதமான புத்தகமாக இருக்கும். [linesep] சேத்தன் பகத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியாவின் புத்தகச் சந்தையை மாற்றி அமைத்தவர்களில் ஒருவர் என்று இவர் வரலாற்றில் அறியப்படப்போகிறார். என் புத்தகத்தைப் படி என்று ஒருவரிடம் சொல்வதே ஒருவிதமான வன்முறை என்று தமிழின் மூத்த இலக்கியவாதி ஒருவர் என்னிடம் சொன்னார். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள், எழுதுவது மட்டுமே தம் கடமை என்று இருந்துவிடுபவர்கள். எழுத்துதான் பேசவேண்டும், எழுத்தாளன் அல்ல என்பவர்கள். நல்ல எழுத்து காலம் காலமாக நிலைத்து நிற்கும் என்பது உண்மைதான். அதற்குப் பெரும் விளம்பரங்கள் ஏதும் தேவையில்லை. அது முதல் பதிப்பு காணும்போது ஆயிரம் பிரதிகள்கூட விற்காமல் இருந்திருக்கலாம். ஆனால் ஐம்பது ஆண்டுகள் கழித்து அந்தப் புத்தகம் மட்டும்தான் நிலைத்திருக்கும். இடையில் வந்த வெற்று ஆரவாரக் கூச்சல் மிகுந்த எண்ணற்ற புத்தகங்கள் சில லட்சம் பிரதிகள் விற்று, பின் காணாமலேயே போயிருக்கலாம். நல்ல இலக்கியம் என்பது அது விற்கும் எண்ணிக்கையில் அல்ல, அது எவ்வளவு காலம் தாண்டி நிற்கிறது என்பதிலும் எத்தனை தலைமுறை வாசகர்களை பாதிக்கிறது என்பதிலும்தான் என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நாம் அனைவருமே இப்படிப்பட்ட இறவா இலக்கியங்களை மட்டும்தான் படிக்கிறோமா? எழுத்து பல காரியங்களைச் செய்கிறது. அறிவையும் தகவலையும் தரும் அ-புதினங்கள் பல. அவற்றைத் தாண்டி, கிளுகிளுப்பையும் சிரிப்பையும் தரும் எழுத்துகள். மர்ம நாவல்கள். பயமுறுத்தும் பேய்க் கதைகள். வெறும் வாசிப்பு இன்பத்தை மட்டும் தரும் பல்ப் ஃபிக்‌ஷன். சில கதைகள் மட்டுமே சிந்தையைத் தூண்டி, நம் வாழ்க்கையையே மாற்றக்கூடியவை. ஆனால் நாம் அவற்றைமட்டுமா படிக்கிறோம்? அனைத்தையும்தானே படிக்கிறோம்? எதைப் படிப்பது என்பதில் நான் ஒரு வரைமுறையை வைத்துக்கொள்வதே இல்லை. ஒரே நேரத்தில் என்னால் மிகவும் சீரியஸான இலக்கியத்தைப் படிக்கமுடியும், ‘குப்பை’ என்று பலராலும் ஒதுக்கித் தள்ளப்பட்ட, மேலோட்டமான பல்ப் பிக்‌ஷனையும் படிக்கமுடியும். கடலை சுற்றிவந்த காகிதத்தில் உள்ள பாதி கிழிந்த துணுக்கைக்கூட விடாமல் படிப்பவன் நான். இதை மட்டும்தான் படிக்கவேண்டும் என்று பாடமெடுக்கும் சட்டாம்பிள்ளைகளை நான் கண்டுகொள்வதே இல்லை. இதையும் படியுங்கள் என்று சொல்வோரையே நான் மதிக்கிறேன். இப்போது சேத்தன் பகத்துக்கு வருவோம். ஆங்கிலத்தில் கதைகள் எழுதும் இந்தியர் இவர். இவர் புத்தகங்கள் வருவதற்குமுன், சிலருடைய எழுத்துகளே இந்தியாவில் பத்தாயிரம் பிரதிகளைக் கடந்து விற்றுள்ளன. காந்தியின் சுயசரிதை, பகவத்கீதை, குஷ்வந்த் சிங், பைபிள், ஷோபா தே என்று கலந்துகட்டின கலவை அவை. ஐந்தாயிரம் பிரதிகள் விற்றாலே ஒரு புத்தகம் சூப்பர் செல்லர் என்று பெங்குவின் இந்தியாவே புல்லரித்துப்போன காலம் அது. அப்படிப்பட்ட நிலையில் கடந்த பத்தாண்டுகளில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தார் சேத்தன் பகத். ஒரு இன்வெஸ்ட்மெண்ட் பேங்கராக ஹாங் காங்கில் வசித்துவந்த இவருக்கு எண்ணற்ற பலரைப்போல கதை எழுதும் ஆர்வம் வந்திருக்கிறது. அதே எண்ணற்ற பலரைப்போல இவருடைய கதை எழுதும் திறனும் வெகு சுமார்தான். அதே எண்ணற்ற பலருடையதைப் போல இவருடைய கதையும் எடிட்டர்களால் பந்தாடப்பட்டு குப்பைக்கூடைக்குள் போனபடி இருந்தது. ஆனால் இவர் ஒரு ஐஐடி, ஐஐஎம் கிராஜுவேட் அல்லவா? எனவே சந்தையை ஓரளவு புரிந்துவைத்திருந்தார். ஏன் மிகச் சிறந்த புத்தகங்கள்கூட அதிகம் விற்பதில்லை? ஏனெனில் அவை அதிகம் அச்சிடப்படுவதில்லை. பிரச்னையே அங்குதான் ஆரம்பிக்கிறது. நீங்கள் அச்சடிப்பதே 2,000 பிரதிகள் என்றால், அவை நூறு கடைகளுக்கு, கடைக்கு 20 என்று போனால் கையில் பிரதிகள் தீர்ந்துபோய்விடும். உங்கள் பதிப்பாளர் மேற்கொண்டு உடனே அச்சடிக்கமாட்டார். அனுப்பிய புத்தகம் விற்று, காசு கைக்கு வரும்வரை பொறுமையாக இருப்பார். பின் காசு வரும்போது வேறொருவருடைய புத்தகம் அச்சுக்குத் தயாராக இருக்கும். அடுத்த ரீபிரிண்ட் வராமலேயே போகலாம். அப்படியானால் எடுத்த எடுப்பிலேயே 25,000 பிரதிகள் ஏன் அடிக்கக்கூடாது? சரிதான். ஆனால் அதற்கான செலவுக்கு யார் பணம் தருவது? தான் தயார் என்றார் சேத்தன் பகத். சொந்தக் காசில் புத்தகங்களை அச்சடிப்பது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. வானிட்டி பப்ளிஷிங் என்பது உலகம் முழுதும் பரவியுள்ள ஒன்றுதான். ஆனால் அப்படியும் 1,000 அல்லது 2,000தானே அடிக்கப்படும்? பகத் முன்வைத்த கருத்து எளிதானது. 20,000-25,000 அடியுங்கள். விற்காவிட்டால் என்னவெல்லாம் மீதி இருக்கிறதோ, அதனை அச்சிட ஆகும் செலவைக் கொடுத்து நான் எடுத்துக்கொள்கிறேன். ஆக, விற்றால் பதிப்பாளருக்கு லாபம். விற்காவிட்டால் நஷ்டம் இல்லை. அத்துடன், புத்தகத்தை எப்படி விற்பது என்ற விரிவான ஒரு பிசினஸ் பிளானையும் சேர்த்து அனுப்பியிருந்தார் சேத்தன் பகத். அப்படியும் பகத் எழுதிய முதலிரண்டு நாவல்கள் ஓரளவுக்குத்தான் சென்றன. முதலாவது, ஐஐடி தில்லியில் நடப்பதாக எழுதப்பட்ட நாவல். ஃபைவ் பாயிண்ட் சம்ஒன். ஐஐடியில் ஆர்வமுள்ள பலர் வாங்கினார்கள். பின்னர் இதன் ஒரு வடிவம் ஆமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படமானது. விரைவில், விஜய் நடிப்பில் தமிழிலும் வரப்போகிறது. இரண்டாவது, ஒன் நைட் அட் தி கால் செண்டர். பெங்களூரில் நடக்கும் கதை. என்னால் நான்கு பக்கங்களைக்கூடத் தாண்டமுடியவில்லை. ஆனால் இதன் இந்திப் பதிப்பாளர் என்னிடம், இதன் இந்தி வடிவம் இருபதாயிரம் பிரதிகளுக்குமேல் விற்றது என்று சொன்னார். இது ஏதோ கால் செண்டரில் வேலை எப்படி வாங்குவது என்று சொல்லித்தரும் புத்தகம் என்று பலர் நினைத்திருக்கக்கூடும். அடுத்து த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப். அகமதாபாத்தில் நிலநடுக்கத்துக்கும் மதக் கலவரத்துக்கும் இடையில் நடக்கும் ஒரு கதை. சுமாரான கதைதான். ஆனால் லட்சம் பிரதிகளைத் தொட ஆரம்பித்துவிட்டது விற்பனை. அடுத்து வந்தது டூ ஸ்டேட்ஸ். முதலாவது கதையைப் போல நான்காவது கதை அவருடைய சொந்தக் கதை. பஞ்சாபியான அவர் ஒரு தமிழ்ப்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருந்தார். அதுதான் கதையே. மிக சுவாரசியமாக, ரசிக்கத்தக்கதாக இருந்தது. கதை சென்னையிலும் கொஞ்சமாக தில்லியிலும் நடப்பது. இதுபோல் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளது என்றனர் பலர். இந்தக் கட்டத்தில் லட்சம் பிரதிகள் எல்லாம் சாதாரணம் என்றானது. ஐந்தாவது கதைதான் சமீபத்தில் வெளியான ரெவொல்யூஷன் 2020. கதை நடப்பது காசியில். ஊழல் அரசியல்வாதி, ஐஐடி நுழைவுத்தேர்வு, எஞ்சினியரிங் கல்லூரி கட்டுவது என்று செல்லும் கதை. ஆறு லட்சம் பிரதிகளுக்குமேல் விற்றுள்ளதாகக் கேள்வி. இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் பதிப்பித்துள்ளது ரூபா அண்ட் கோ. பல முன்னணிப் பதிப்பகங்களும் சேத்தன் பகத்தைப் புரிந்துகொள்ளாத நிலையில் ஃபைவ் பாயிண்ட் சம்ஒன் புத்தகத்துக்கு ஆதரவு கொடுத்து, இன்றுவரை தொடர்ந்து சேத்தன் பகத்தைப் பதிப்பித்துவருபவர்கள். இப்போது சேத்தன் பகத் ஒரு ஸ்டார். டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் வாராவாரம் பத்தி எழுதுகிறார். ஃபேஸ்புக்கில் மிகப்பெரும் குழு இவரைப் பின்பற்றுகிறது. ட்விட்டரிலும் அப்படியே. ஐஐடி பற்றி யாராவது எதாவது தவறாகச் சொன்னால் கொதித்து எழுகிறார். அது நாராயண மூர்த்தியாகவே இருந்தாலும் சரி. உடனே பத்திரிகைகள் அவரை மேற்கோள் காட்டி, ஊதிப் பெருக்குகின்றன. அண்ணா ஹசாரே அருகில் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார். இளைஞர்கள் அவரைக் கொண்டாடுகின்றனர். அவருடைய அடுத்த சில கதைகளும் பல லட்சம் பிரதிகள் விற்கும். சினிமாவாக மாறும். இதிலிருந்து ஒரு பதிப்பாளராக நான் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறேன்? நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. தமிழின் இலக்கிய வானில் சில பதிப்பாளர்கள் அற்புதமான பணியாற்றி, சிறந்த இலக்கியத்தை வெளியே கொண்டுவர உதவுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்லன். புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். நன்றாக விற்பனை ஆகாது என்றால் அவற்றைப் பதிப்பிக்க நான் விரும்புவதில்லை. சில புத்தகங்களை என் சொந்த ஆசைக்காகப் பதிப்பிப்பதும் உண்டு. கமெர்ஷியலாகப் பார்க்கும்போது அவை தவறான முடிவுகள் என்று நன்கு தெரிகிறது. வரும் காலங்களில் இந்தத் தவறைக் குறைத்துக்கொள்வேன். எங்கள் புத்தகங்களை மட்டும் விற்பனை செய்வதற்காக என்று நான் உருவாக்கியுள்ள கட்டுமானத்தை இப்போது அனைவருடைய புத்தகங்களையும் விற்பனை செய்ய என்று பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன். ஒரு பதிப்பாளருக்கு மட்டுமின்றி, ஓர் எழுத்தாளருக்கும் தன் புத்தகங்கள் அதிகம் பேரைச் சென்றடையவேண்டும் என்ற பேரார்வம் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிறர் தன்னைப் படிக்கவேண்டும், விமர்சிக்கவேண்டும் என்று அவர் விரும்பவேண்டும். அதற்காக, கெஞ்சி, இரங்கி, என் புத்தகத்தை தயவுசெய்து வாங்கிக்கொள் என்று ஓர் எழுத்தாளர் சொல்லவேண்டியதில்லை. ஆனால் குறைந்தபட்சம், புத்தகம் ஒன்று வருகிறது என்பதை விரிந்த வாசகர் சமூகத்துக்குச் சொல்லவேண்டியது ஓர் எழுத்தாளனின் கடமை; ஒரு பதிப்பாளரின் பணி. இன்று அதற்கான வெளி தமிழில் இல்லவே இல்லை. பெரும் பத்திரிகைகள் புத்தக அறிமுகப் பக்கங்களை வைத்திருப்பதே இல்லை. அப்படிச் செய்வது அந்தப் புத்தகத்துக்கு கொடுக்கும் இலவச விளம்பரம் என்று தவறாக நினைத்துவிடுகிறார்கள். தொலைக்காட்சிகள் புத்தகங்களைக் கண்டுகொள்வதே இல்லை. காசு கொடுத்துப் பெரும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது ஒரு பதிப்பாளனுக்கு இயலாத காரியம். அப்படிச் செய்யும் செலவை, விற்பனையால் ஈடுகட்டவே முடியாது. எனவே வேறு வழிகளையே ஒரு பதிப்பாளனும் எழுத்தாளனும் கையாளவேண்டியுள்ளது. அங்குதான் இணையம் வருகிறது. தமிழின் சில எழுத்தாளர்களே இதனை ஒழுங்காகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைச் சொல்வேன். அதிலும் சாரு நிவேதிதா, ஃபேஸ்புக் தளத்தை மிக அற்புதமாகப் பயன்படுத்திவருகிறார். அவருடைய வாசகர்கள் தம் சொந்த செலவில் சமீபத்தில் அவருடைய எக்ஸைல் நாவல் வெளியீட்டை காமராஜர் அரங்கத்தில் வைத்துக் கொண்டாடினார்கள். போஸ்டர் அடித்துத் தெருவில் ஒட்டுவதுமுதல், துண்டுப் பிரசுரங்களைப் பல இடங்களில் விநியோகிப்பதுவரை, அனைத்தையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தார்கள். ஓர் இலக்கிய நிகழ்வுக்கு இதைவிடப் பெரிய கூட்டம் வந்ததில்லை. அதேபோல ஜெயமோகன் வாசகர்கள் தீவிரமான ஒரு குழுவாக இயங்குகிறார்கள். இலக்கியக் கூட்டங்கள், விருது வழங்கும் விழா என்று அமர்க்களப்படுத்துகிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு வந்திருந்த கூட்டம் அபாரமானது. இம்மாதிரியான நிகழ்வுகளே நாற்பது, ஐம்பது என்பதிலிருந்து நானூறு, ஐந்நூறு என்று வாசகர் வட்டத்தை விரிவாக்குபவை. பதிப்பகங்களில் இணையத்தை ஓரளவுக்குச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் என்றால் எங்கள் கிழக்கு பதிப்பகத்தையும், உயிர்மை பதிப்பகத்தையும்தான் சொல்வேன். உயிர்மையின் மனுஷ்யபுத்திரன், ஃபேஸ்புக்கில் நல்லதொரு கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அவருடைய கருத்துகளுக்கும் அவர் வெளியிடும் புத்தகங்களுக்கும் இணையத்தில் தொடர்ந்து இடம் ஏற்படுத்திக்கொடுத்து, அவற்றைப் பற்றிப் பிறர் பேச ஒரு வாய்ப்பை உருவாக்குகிறார். கிழக்கு சமீபத்தில் வீடியோ பாட்காஸ்ட்மூலம் புத்தகங்கள் பற்றிய உரையாடல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. தனித்தனிப் புத்தகங்களுக்கு மைக்ரோசைட், ஃபேஸ்புக் பக்கங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இவை பெரும் வாசகர் வட்டத்தைக் கூட்டியுள்ளன. உதாரணத்துக்கு பி.சி. பாலசுப்ரமணியனும் ராஜா கிருஷ்ணமூர்த்தியும் எழுதியுள்ள ரஜினியின் பன்ச் தந்திரம், கபிலன்வைரமுத்து எழுதியுள்ள உயிர்ச்சொல் என்ற நாவல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதுநாள்வரை நான் புத்தகக் கூட்டங்களுக்கு அதிகமாக ஏற்பாடு செய்ததில்லை. அவை வலிதரக்கூடியவை என்பது என் கருத்து. ஆடி ஓடி, பணம் செலவழித்து ஏற்பாடு செய்தால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது 20 பேர் உட்கார்ந்திருப்பதே பெரிய விஷயம். கூட்டம் கூட்டினால், 200 பேருக்குமேல் இல்லை என்றால் அதற்கான முயற்சி வீண். ஆனால் வரும் மாதங்களில் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு, எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் சில கூட்டங்களை நடத்த முடிவுசெய்துள்ளேன். சேத்தன் பகத் புத்தகங்கள்போல, தமிழில் லட்சக்கணக்கில் புத்தகங்கள் விற்கவேண்டும் என்றால் என்ன தேவை? முதலில் தமிழ் எழுத்தாளர்கள் ஒரு பிராண்ட் ஆக மாறவேண்டும். அவர்கள் ஒளிந்துகொண்டிருந்தால் காரியம் நடக்காது. வெளியே வரவேண்டும். ஊர் முழுதும் சுற்றவேண்டும். நடப்புச் செய்திகள் பற்றிக் கருத்து சொல்லவேண்டும். நிச்சயமாக வலைப்பதிவு எழுதவேண்டும். தொலைக்காட்சியில் வரவேண்டும். தம் செயல்பாட்டை விரிவாக்கவேண்டும். விழாக்களில் கலந்துகொள்ளவேண்டும். சிறு சிறு ஊர்களில் அங்குள்ள அமைப்புகளோடு சேர்ந்து, புத்தகத்திலிருந்து சில பகுதிகளைப் படிப்பது, வாசகர்களுடன் விவாதிப்பது ஆகியவற்றில் ஈடுபடவேண்டும். ஊடகங்கள் எழுத்தாளர்களை வருந்தி அழைத்து எழுதவைப்பது எப்போதாவதுதான் நடக்கும். ஆனால் எழுத்தாளர்கள் பிரபலமாகிவிட்டால், இதே ஊடகங்கள் அவர்களைக் கெஞ்சுவார்கள். அந்த நிலைக்கு எழுத்தாளன் முதலில் செல்லவேண்டும். எழுத்தாளனின் கையில் வலுவான ஓர் ஆயுதம் உள்ளது. எழுத்து வலிமை. ஓர் அச்சுப் பத்திரிகையில் எழுதும் ஸ்டாஃப் ரிப்போர்ட்டர்களைவிடப் பல மடங்கு சிறப்பாக, படிப்பவர் கருத்தைச் சட்டென்று கவரும்வண்ணம் எழுதக்கூடியவன் ஓர் எழுத்தாளன் மட்டுமே. இதனை ஊடகங்கள் உணருமாறு செய்வது எழுத்தாளன் கையில்தான் இருக்கிறது. வரும் ஆண்டு என் வேலை, நான் பதிப்பிக்கும் சில எழுத்தாளர்களை இப்படிப்பட்ட பிராண்டுகளாக ஆக்குவதற்கு எந்தவகையில் பங்களிக்கலாம் என்று முயற்சி செய்வதே. அப்போதுதான் தமிழில் 25,000 அல்லது 50,000 என்று புத்தகங்களை விற்கவைக்க முடியும். நானும் பணம் பண்ணமுடியும் [linesep] 5 நூல் மதிப்புரை 27 இருள் நிறைக்கும் வெளிகள் [sureshvenkat]   சுரேஷ் வெங்கட் இதுதான் சுரேஷ் எழுதும் முதல் கட்டுரை.  அதுவும் காவல்கோட்டம் போன்ற ஹெவிவெய்ட்டுகளோடு களம் இறங்கியிருக்கிறார்.  நண்பர் பாஸ்கரின் தூண்டுதலால் எழுதத் தொடங்கியிருக்கிறார்.  அருமையான ஆரம்பம். வாழ்த்துகள். [linesep] காவல் கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற செய்தி குறித்து கேள்விப்பட்டவுடனேயே முதலில் தோன்றிய எண்ணம், “ஆகா, நாம் ஏற்கனவே படித்துவிட்ட ஒரு புத்தகத்திற்கு அவார்ட் கிடைத்திருக்கிறதே,”  என்ற மகிழ்ச்சிதான்.  பெரும்பாலான சமயங்களில் பரிசு வாங்கிய ஒரு புத்தகத்தைப் படிப்பதற்காக அலையோ அலை என்று அலைய வேண்டியிருக்கும். இம்முறை அம்மாதிரியில்லை. ஏற்கனவே நான் படித்து மகிழ்ந்து நண்பர்களுக்குப் பரிந்துரை செய்த ஒரு புத்தகத்திற்குப் பரிசு என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தந்தது.   காவல் கோட்டம் கிட்டத்தட்ட 1050 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம். படிக்கும்போது சுமை தாங்காமல் இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரித்து வெளியிட்டிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒரு வேளை இப்புத்தகத்தின் ஒருமை சிதைந்துவிடும் என்று எழுத்தாளரும் பதிப்பாளரும் நினைத்திருக்கக்கூடும்.   நாவலைப் படித்து இரண்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நான் இதை இப்போது என் நினைவிலிருந்து எழுதுகிறேன். எது நினைவில் நிற்கிறதோ அதுவே அதன் தாக்கம் என்ற அளவில் இந்த நாவல் என் மனதில் பெற்றுள்ள வடிவம் என்ன,  அதில் நான் எவற்றை சிறப்பான, கவனிக்கத்தக்க பகுதிகளாகக் கருதியிருக்கிறேன் என்பதை இங்கு நான் கண்டடைகிறேன். ஒரு நகரத்தையும் ஒரு சமூகத்தையும் மையமாகக் கொண்ட,  அதன் அறுநூறு ஆண்டுகால வரலாற்றைப் பேசும்  ஒரு பெரும் நாவல் காவல்கோட்டம்.  மாலிக் கபூரின் மதுரை வெற்றியில் தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை விரியும் இந்நாவல், ஒரு சமூகத்தின் கள்வர்-காவலர் என்ற இருமை நிலையை அதன் அறுநூறு ஆண்டுகால வரலாற்றில், விஜயநகரப் பேரரசின் ஆளுமைக்கு மதுரை ஆட்பட்ட வரலாற்றையும் மதுரை நாயக்கர்களின் ஆட்சியும் இணைத்துப் பேசுகிறது.  இந்த அறுநூறு ஆண்டு காலகட்டத்தில் சு வெங்கடேசனின் பார்வையில் முக்கியத்துவம் பெறும் நிகழ்வுகள் நாவல் வடிவம் பெற்றுள்ளன. பல சம்பவங்கள், பல மனிதர்கள்.   வேளாண் நாகரிகத்தினுள் நுழைந்திராத தாதனூர் கள்ளர்கள் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மதுரையின் காவலதிகாரம் பெறுகிறார்கள்.  பின்னர் ஆங்கில அரசு மதுரையைக் கைப்பற்றும்போது கர்னல் ப்ளாக்பர்ன் மதுரையின் காவல் அமைப்பை மாற்றியமைக்கிறார்.  கள்ளர்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.  பிற சமூகத்தினரையும் உள்ளடக்கிய காவல் படையை பிரிட்டிஷ் அரசு அமைக்கும்போது, அவர்களுக்குக் கீழ் கள்ளர்கள் பணியாற்றும் சூழல் எழுகிறது. அவர்கள் அதை எதிர்த்துப் போராடும்போது  அதிகார அமைப்புக்கு வெளியே தள்ளப்படுகிறார்கள். குற்றவாளிச் சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு சமூகத்தின் விளிம்பு நிலையில் இருத்தப்படுகிறார்கள்.  காவல் கோட்டத்தின் களம் இது என்று ஓரளவு உறுதியாகச் சொல்லலாம்.   ஆனால் காவல் கோட்டத்தைப் பற்றிப் பேசுமுன் முதலாவதாக சு வெங்கடேசன் களவை அதீதமான கற்பனையினூடாக (ரொமாண்டிசைஸ் செய்து) விவரித்திருப்பதைச் சொல்ல வேண்டும்- மதுரை கோட்டை அழிக்கப்படும்போது அதன் காவல் தெய்வங்கள் ஒவ்வொன்றாக வெளியேறுவது ஒரு பெரும் துக்கத்தைத் தரக்கூடிய கவித்துவ மொழியில் விவரிக்கப்படுகிறது.  மதுரையில் காவலதிகாரத்துடன் இருந்த ஒரு சமூகம்  ஒரு குற்றச் சமூக முத்திரை பெற்று அதிகார அமைப்பை விட்டு விலக்கப்படுவதன் சோகம் இந்த விவரிப்பில் ஒரு முழுமையான படிம நேர்த்தி பெறுகிறது. இதே படிம நேர்த்தி காவல் கோட்டத்தை  நிறைக்கும் இரவு,  இருள் வர்ணனைகளில் அடையப்பட்டுள்ளது.   நாவலில் இடம்பெறும் ஒரு சம்பவத்தை முக்கியமானதாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்: எவரும் அனுமதியின்றி நுழையமுடியாத கட்டுக்கோப்பான அமைப்பு கொண்டது என்று பெருமையாக பேசப்படும் திருமலை நாயக்கரால் புதிதாகக் கட்டப்பட்ட மாளிகைக்குள் சவால் விட்டு, கன்னம் வைத்து நுழைத்து இரண்டு ராஜமுத்திரைகளைக் களவாடுகிறான் கழுவன். கைது செய்யப்பட்டதும் அவனுக்கு சவுக்கடி தண்டனை விதிக்கும் திருமலை மன்னர், கழுவன் தண்டனை பெற்றபின் அவனது திறமையைப் பாராட்டி அந்த இரு ராஜமுத்திரைகளையும் அவனுக்கே பரிசாக அளித்து விடுகிறார்.   இந்தக் கதைக்குப் பின் உள்ள வரலாற்று சான்றுகள் எவை என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை.  ஆனால், சு வெங்கடேசனின் விவரிப்பில், குறிப்பாக இந்த நிகழ்வில்,  களவு தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலை மாறி அது அதன் தொழில் நேர்த்திக்காக ரசிக்கப்பட வேண்டிய கலையாக உருவகம் பெறுகிறது. பொதுவாகவே நாவலெங்கும்  களவுச் சம்பவங்களைச் சித்தரிக்கும் விவரணைகளில் அவரது மொழி ரசனையின் உயர்நிலைகளைத் தொடுகிறது.  கள்வர்களைக் காவலர்களாக ஏற்றுக் கொள்வதில் உள்ள முரண்பாடுகளைக் கடக்க இத்தகைய அதீதமான கற்பனை (romantic imagination) தேவைப்படுகிறது-  ஒரு புனைவின் சுவையான விவரிப்பில்  களவு கலையாக உருமாற்றம் பெறும்போது கள்வர்களை காவலர்களாக ஏற்க உதவும் கற்பனை வெளியொன்று உருவாக்கப்படுகிறது-  ஒரு சமூக, அரசியல் கட்டாயத்தின் காரணமாக நிகழ்த்தப்பட வேண்டிய பார்வை மாற்றத்துக்கு அறிவுப்புல ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றைக் கட்டமைத்துக் கொள்ளத் துணை செய்யும் கட்டளைப் படிவப் பெயர்வுகள் (paradigm shifts) இவ்வகை கற்பனை விரிவாக்கத்தால் சாத்தியப்படுகிறது.  அதீத கற்பனையைக் கையாண்டு இதைச் சாதிப்பதில் சு வெங்கடேசன் பெறும் வெற்றியே நாவலின் வெற்றி.   காவல்கோட்டம் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இயல்பான நாவல் என்று  பேசப்பட்டாலும்  படைப்பூக்கத்தின் வெளிப்பாடாக இது உணர்வுத்தளத்தில் வெற்றி பெற சு வெங்கடேசனின் அதீதமான கற்பனை (romantic imagination) பெரிய அளவில் பங்காற்றுகிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.  களவைக் கலையாக்கும் அவரது நுண்விவரணைகள், அங்கு அவரது மொழி அடையும் உயர் ரசனையின் வெற்றிகள்  சிறப்பான வாசிப்பு அனுபவத்தைத் தருவனவாக உள்ளன.   ஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும் ஒரு நாவலைப் பற்றி முழுமையாகப் பேசுவது என்பது முடியாத காரியம். ஆனால்,  அதன் மையத்தில் உள்ள காவல் தெய்வங்கள் மற்றும் இருள் படிமங்கள், களவைக் கலையாக்கும் கற்பனையின் சொல்லாட்சி – இவை காவல் கோட்டம் நாவலுள் நாம் செல்ல ஒரு எளிய, துவக்க கட்ட திறப்பைத் தரக் கூடும்.  இதைத் தவிர இந்த நாவலை அறிமுகப்படுத்தும் முகமாக அற்புதமாக எழுதப்பட்ட சில இடங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.   OoOoOo   நாவலின் துவக்கத்தில் குமார கம்பணனின் படைகள் வைகையாற்றைக் கடந்து மதுரையுள் நுழைவது விவரிக்கப்படுகிறது. இங்கு ஒரு திரைப்படத்தில் நாம் காணக்கூடிய பெரும்பரவலான காட்சியமைப்புக்கு இணையான சொல்லாட்சி சு வெங்கடேசனுக்கு சாத்தியப்பட்டுள்ளது.   இதே சொல்லாட்சி திரைப்படங்களால் எட்ட முடியாத உயரத்துக்கும் காவல் கோட்டத்தைக் கொண்டு செல்கிறது -  யார் எங்கு நிற்க வேண்டும், யார் எப்போது எங்கு செல்ல வேண்டும் என்பன போன்ற ஆணைகள், மதுரையை எப்படி பிரித்துக் கொள்ளப்படுகிறது என்ற விவரணைகள், ஒருமைப்பாடுடைய போர் அமைப்பாகத் தோற்றம் தரும் விஜயநகரப் படையின் உண்மை நிலையில் நிலவும் சமூகப் பகுப்புகளையும் அதன் அதிகாரப் படிநிலையையும் முழுமையாக காட்சிப்படுத்துகின்றன.   ஸ்ரீ ஜானகிராணி கனகநூகா என்றழைக்கப்படும் குமாரக் கம்பணனின் மனைவி கங்கா தேவியின் பரிவாரத்தில் இருக்கும் ஒரு சிறு பெண் மதுரையை வெற்றி கொள்ள தன்னை மாய்த்துக் கொள்கிறாள். இது அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. இங்கும் நாம் வெங்கடேசனின் அதீத கற்பனை வெற்றி பெறுவதைக் காண முடிகிறது.   தாதுவருஷப் பஞ்சத்தால் ஏற்படும் இடப்பெயர்வுகள்.  அதைத் தொடர்ந்து பென்னிக்விக்கால் முல்லைப் பெரியாறு அணை கட்டப்படுவது ஒரு ஜெசுவிட் பாதிரியார் எழுதும் கடிதமாக விவரிக்கப்படுகிறது. இது கிருத்துவத்தின் வருகையைப் பதிவு செய்கிறது.  அந்த அணையை நிர்மாணிக்க பணிபுரியும் கள்ளர்கள் மலேரியாவுக்கு பலியாகும் நிகழ்வுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதிகள்.   இந்த தாது வருஷப் பஞ்சத்தின்போது இரு பெண்கள் தங்கள் செயல்களால் சரித்திரத்தில் இடம் பெறுகின்றனர். ஒருவர் நாமனைவரும் அறிந்த நல்லதங்காள். மற்றவர் குந்தத்தம்மாள் என்ற தேவதாசிப் பெண். தன்னிடமுள்ள சொத்துகளைத் தன் கடைசி நகை வரை விற்று கஞ்சி ஊற்றும் சித்திரம் அருமையான ஒன்று. மற்றொரு தேவதாசிப் பெண் உருவாக்கிய கூத்தியார்குண்டு என்றழைக்கப்படும் குளம் மதுரையில் இன்றும் உண்டு. இவை குறித்த விவரணைகள் எளிய மக்களை எளிய மக்களே அறிய உதவும் சொற்சித்திரங்கள்.   ரசிக்கத்தக்க பல சித்தரிப்புகள் கொண்ட இந்த நாவலின் சில பகுதிகள் முழுவதுமே பாடப் புத்தக மொழியில் எழுதப்பட்டுள்ளது. இவை நாவலின் சுவாரஸ்யத்தைக் குறைக்கும் தடைகளாக இருப்பதை உணர முடிகிறது.   ஆனால் பொதுவாகச் சொன்னால், வரலாற்றில் பேசப்படாமல் எப்போதும் வாழ்ந்து மறையும் சாமானிய மக்களின் வாழ்வைச் சுவையாகச் சித்தரிப்பதில் தன் முதல் நாவலிலேயே கணிசமான அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் சு வெங்கடேசன். நாவலை வாசித்து முடித்தபின் மனதை நெருடும் சில விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். பொதுவாகவே இந்நாவலில் ஒரு தலைகீழாக்கம் நிகழ்ந்துள்ளதை உணர முடிகிறது. ஏற்கப்பட்ட வரலாற்றில் நேர்மறையாகப் பேசப்படும் பலர் இங்கு எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர் – கிருஷ்ண தேவராயர், வித்யாரண்யர், திருமலை நாயக்கர் முதலானவர்களின் பாத்திரப்படைப்பை இதற்கு காட்டுகளாகச் சுட்டலாம்.   விஜயநகரப் பேரரசின் ஸ்தாபிதம் குறித்து வெங்கடேசனின் பார்வை சந்தேகத்துக்கிடமின்றி ஏற்கப்பட்ட வரலாற்றோடு முரண்படுவதாக உள்ளது. எந்த தரவுகளின் அடிப்படையில் இத்தகைய விவரிப்புக்கு மெய்த்தன்மை கோரப்படுகிறது என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளும் வகையில் எவ்விதமான சான்றாதாரமாவது உள்ளதா என்ற கேள்விக்கு இந்நூலில் பதிலில்லை. ஏழாயிரம் சமணர்கள் மதுரை மாநகர வரலாற்றில் கழுவேற்றப்பட்டதாக அமணமலையில் கங்கா தேவி நினைத்துப் பார்ப்பது இந்நாவலின் கதைக்களத்துக்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது. குமாரகம்பணனின் மதுரா விஜயம் மீனாட்சியம்மனை மீட்கவே என்பது ஏற்கப்பட்ட வரலாறாக உள்ளது என்ற பின்னணியில் இக்காட்சி வலிந்து திணிக்கப்பட்ட கதையாடலாக உள்ளது.   தாதனூர் கள்ளர்களுக்கும் அவர்களின் சமகால உயர்நிலை சமூகங்கள் பலவற்றுக்கும் இடையுள்ள உறவை வெவ்வேறு வகைகளில் பேசுகிறது இந்நாவல். ஆனால் இதே தாதனூர் கள்ளர்கள் தங்களைவிட தாழ்நிலையில் இருந்த சமூகங்களுடன் எவ்வகைப்பட்ட உறவு கொண்டிருந்தனர் என்பது இந்நாவலில் பேசப்படுவதேயில்லை. காவல் கோட்டம் ஒரு பொழுதுபோக்கு நாவலல்ல. உண்மைகளின் அடிப்படையில் இன்றைய சமுதாயத்துக்கான பாடங்களை உணர்த்தும் தன்மை கொண்ட நாவலாகவும் ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்க முற்படும் இயக்கத்தின் துணைப் பிரதியாகவும் முன்னிறுத்தப்படும் ‘உண்மையான வரலாற்றுச் சித்தரிப்பு’ இது.  பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, மேலவளவு போன்ற இடங்களில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பின்னணியில் சு வெங்கடேசன் பேசத் தவறிய இந்த மௌன வெற்றிடத்தை விடையற்ற பல கேள்விகள் நிறைக்கின்றன.   அறியப்படாத வரலாற்றை நிறுவ முற்படும் இத்தகைய ஒரு மாபெரும் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் பின்னிணைப்புகளில் ஆதார தரவுகள் குறித்த விரிவான பட்டியல் (Bibliography) சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். காவல் கோட்டம் வரலாற்றைப் பேசுவதாகச் சொல்லிக் கொள்வதால், இந்தப் போதாமையை இந்நாவலின் அடிப்படைக் குறையாகப் பார்க்கிறேன். அமிதவ் கோஷ் போன்றவர்கள் எழுதும் வரலாற்று நாவல்களில் எவ்வளவு அதிக பக்க அளவில் இத்தகைய ஆவணங்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.   நாவல் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் எஸ் ராமகிருஷ்ணனின் மிகக் காட்டமான ஒரு விமர்சனம் மற்றும் ஜெயமோகனின் ஆழமும் விரிவும் கூடிய ஒரு நீண்ட விமரிசனத்தைத் தவிர வேறெந்த விமரிசனமும் பொருட்படுத்தத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு விமரிசனம் இதுவரை எழுதப்பட்டுள்ளதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்நாவலுக்கு இவ்வாண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது- இந்த நிகழ்வாவது காவல் கோட்டம் பரவலாக வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவும் வழி செய்ய வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. [linesep] காவல் கோட்டம்- சு. வெங்கடேசன். 2012 -சாகித்ய அகாதமி பரிசு Submitted by PERUMALMAGAN on Fri, 13/01/2012 – 16:46. காவல் கோட்டம்- சு. வெங்கடேசன். 2012 -சாகித்ய அகாதமி பரிசு இருள் நிறைக்கும் வெளிகள் எனும் தலைப்பில் சுரேஷ் வெங்கட் அவர்கள் இந்தவருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற சு. வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நூலைப்பற்றிய பதிவினை வாசித்தேன். முதல் பதிவு நன்று. சிற்றிலக்கிய இதழ்களின் சொல்லாடல் கைவந்த கலையாக இருக்கிறது, முதல் பதிவு என்ற உணர்வின்றி. நூலைப் பற்றி தன் நினைவில் நின்ற தாக்கத்தின் பதிவுகள் நன்று. காவலர்-கள்ளராக விழிம்பு நிலை மாற்றத்தை தான் ரசித்த பகுதியாக காட்டுகிறார். மேலும் குறிப்பிட்ட போர்க்கள விரிவுக் காட்சிகளின் ரசனை தேவலாம். முன்பே சாண்டில்யன் அவர்கள் தன் புனைவுகளில் போர்க்கள காட்சிகளை விவரித்து காட்டியிருக்கிறார். வெற்றிகளே சரித்திரமாகும்போது தோல்விகளின் சரித்திரம் மறைக்க படுகிறது. அதுவும் புனைவுகளில் அதிகம். -உதாரணம் கல்கியின் சிவகாமியின் சபதம் – ஒப்பு கொள்ளப்படாத பல்லவனின் தோல்வி – அவ்வாறு தானே சு.வெங்கடேசன் விஜய நகர பேரரசின் ஸ்தாபிதம் பற்றிய விவரிப்பை கையாண்டு இருக்கிறார். விதிக்கப்பட்ட விதியின் வழியே செல்ல போகும் மற்றும் ஒரு நூல் அல்ல இது. பரவலாக வாசிக்கப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது பேராசை. ஆயிரம் பக்கம் அபத்தம் எனும் விமர்சனத்தையும், ஆழமும் விரிவும் கூடிய நீண்ட விமர்சனமும் இதுவரை தேர்ந்த வாசகர்கள் மத்தியில் எந்த விதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அதிகாலை ஆறு மணிக்கு ஷங்கரின் விஜய் நடித்த படமான நண்பன் திரைப்படத்தின் படபெட்டி வரும் முன்னே திரையரங்கம் முன் கோலாகலமாகக் காத்திருக்கும் இளைஞர்கள் நிறைந்த தமிழ் சமூகம் இது  – பெருமாள் மகன் 28 ஒரு உலகைப் புரட்டிப் போட்டவனின் வரலாறு பாஸ்கர் சொல்வனம், நிமிஷக்கதை என்று வெகு பிஸியான எழுதுபவர். இந்த சிறப்பிதழுக்கு உடனே நூல் மதிப்புரை கொடுத்தது விட்டார்.  கட்டுரை பிழைகள் ஏதுமின்றி, சரியானபடிக்கு வரவேண்டுமென மிகவும் உன்னிப்பாக இருந்தார்.   [linesep] லலிதா ராம் எழுதி சொல்வனம் வெளியிட்டுள்ள “துருவ நட்சத்திரம்” இந்த ஆண்டின் இசை நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்று என்று சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். இசை நிகழ்ச்சிகளைவிட இசையைப் பேசும் ஒரு புத்தகத்துக்கு அதிக முக்கியத்துவம்  இருக்க முடியுமா என்று கேட்பவர்கள் இந்தப் புத்தகம் யாரைப் பேசுகிறது என்பதை கவனிக்க வேண்டும். மிருதங்க மாமேதை பழனி சுப்பிரமணிய பிள்ளை ஒரு உலகைப் புரட்டிப் போட்டவர். அவர் மறைந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆன நிலையில் மறக்கப்பட்டு வரும் நினைவுகளைத் தொகுத்து அவரது வாழ்வை அதன் காலத்தோடு ஆவணப்படுத்தும் வாழ்க்கை வரலாறு ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இவ்வாண்டு டிசம்பர் சீசனின் துவக்கத்தில் ஹிந்து நாளிதழ் அரை பக்க அளவிலும் டைம்ஸ் ஆப் இந்தியா முழு பக்க அளவிலும் லலிதா ராமின் பேட்டிகளைப் பிரசுரித்துள்ளன- ஒரே வாரத்தில் இரு வேறு தேசிய நாளிதழ்களில் லலிதா ராமின் விரிவான பேட்டிகளையும் புகைப்படங்களையும் பார்த்ததும் அவர்தான் இந்த சீசனின் நாயகன் என்ற எண்ணமே ஏற்பட்டு விட்டது!   [dhuruvanatchathiram] பழனி சுப்ரமணிய பிள்ளையின் காலம் மேடைக் கச்சேரிகளில் பாடகருக்கு வலப்புறத்தில் மிருதங்க வித்வானும் இடப்புறத்தில் வயலின் வித்வானும் அமர்வது மரபாக இருந்த காலம். மிருதங்க வித்வான் பாடகருக்கு வலப்புறம் அமர்ந்திருக்கும்போது அவரது மிருதங்கத்தின் வலந்தலை சபையை நோக்கி இருக்கும். மிருதங்க வித்வான் இடப்புறம் அமர்வதில் என்ன பிரச்சினை என்றால் தொப்பி என்று அழைக்கப்படும் மிருதங்கத்தின் இடந்தலை சபையை நோக்கி இருக்கும்போது அதிலிருந்து எழும் ஒலி ஓங்கி ஒலிக்கும். இது சுருதியுடன்  ஒன்றாத தன்மை கொண்டது. வலந்தலைதான் சுருதியுடன் இசையும் ஒலி எழுப்பக் கூடியது. இது தாழ்ந்து ஒலிப்பது கச்சேரிக்கு இனிமை சேர்க்காது என்பதால் இடது கை பழக்கம் கொண்ட மிருதங்க வித்வான் வயலின் வித்வானுடன் இடம் மாறி அமர வேண்டும். இப்போது கேட்க ஆச்சரியமாக இருக்கிறது, இது போல் இடம் மாறி அமர்வதை சம்பிரதாய விரோதமாக அக்காலத்தில் கருதி, அப்படி இடம் மாறி உட்கார மறுத்தார்கள் என்று பதிவு செய்கிறார் லலிதா ராம். சுப்பிரமணிய பிள்ளை இடது கைப் பழக்கம் கொண்டவர். பழனி சுப்பிரமணிய பிள்ளையின் தந்தை முத்தையா பிள்ளை அவர் காலத்தில் பிரபலமாக இருந்து வித்வான்கள் அனைவருக்கும் மிருதங்கமும் கஞ்சிராவும் வாசித்தவர். தன் மகன் சுப்பிரமணியத்தின் சம்பிரதாய விரோதமான இடது கை வாசிப்பைத் திருத்த முடியாமல் அவன் மிருதங்கத்தைத் தொட்டு எடுத்தாலே ஆத்திரத்துடன் அவனை அடித்து விடுமளவுக்கு அவரது ஏமாற்றம் வெறுப்பாக மாறியிருந்தது. தம்பி சௌந்தரபாண்டியனுக்கு அப்பா கற்றுத் தருவதை அவதானித்து அவர் இல்லாதபோது பாடங்களைத் தொடர்ந்து வாசித்துப் பழகி வந்தார் சுப்ரமணியப் பிள்ளை. அப்பாவின் நண்பரும் தன் குரு மான்பூண்டியா பிள்ளையின் சக மாணவருமான தட்சிணாமூர்த்தி பிள்ளை தெய்வாதீனமாக ஒரு முறை சுப்பிரமணியனின் வாசிப்பைக் கேட்க நேர்கிறது. அப்போது அவர், “முத்தையா! உம்ம பேரும் வித்தையும் காலங்காலமா நிலைச்சு நிக்கப் போறது இந்தப் பையனாலதான்,” என்று சொல்வது தெய்வ வாக்காகவே இன்றும் ஒலிக்கிறது. [dhuruvanatchathiram-2] தான் மிகவும் மதிக்கும் தன் நண்பரின் பேச்சைத் தட்ட முடியாமல் மகனுக்கு மிருதங்கம் கற்பிக்கிறார் முத்தையா பிள்ளை- ஆனால் அதில்தான் என்ன ஒரு ஆங்காரம்! பத்து பதினைந்து வயதுகூட ஆகாத சிறுவன் சுப்பியமணியம். குழந்தைகள் மலர் மாதிரி, மிகவும் கெடுபிடியாக நடந்து கொண்டால் அவர்களது பிஞ்சு மனம் வாடி வதங்கி விடும் என்று நம் குழ்னதைகளை நாம் எவ்வளவு ஆசையாக வளர்க்கிறோம்? ஆனால் இவருக்குத் தன் மகன் காலை நான்கு மணிக்கே எழுந்து சாதகம் செய்ய வேண்டும். அதன் பின் இரண்டு மணி நேரம் கழித்து அன்றைய பாடத்தைக் கற்றுத் தருவார். அதை சரியாகக் கற்றுக் கொள்ளாவிட்டால் அடி, உதை. அந்த பாடத்தையும் அப்போதே ஏழெட்டு வகைகளில் லயக் கோவை கெடாமல் வாசித்துக் காட்ட வேண்டும்.  அதைச் செய்து காட்டினால்தான் சாப்பாடே கிடைக்கும். அப்புறமும் இரவு பத்து மணி வரை சாப்பாட்டு நேரம் தவிர சாதகம் தொடர்ந்தாக வேண்டும். எவ்வளவு சொன்னாலும் கேட்காமல், அடித்தாலும் அடங்காமல் தன் இடது கைப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளாத பிடிவாதக்காரன் என்று முத்தையா பிள்ளை தன் மகனை வெறுத்திருக்க வேண்டும். சொன்ன பேச்சு கேட்க மறுக்கிறான் என்பது ஒரு புறம் இருக்கட்டும், அவர் தெய்வமாய் மதிக்கும் கலையை சம்பிரதாய விரோதமாக அல்லவா வாசிக்கிறான் மகன். தட்சிணாமூர்த்தி பிள்ளை  சொன்னதை மறுக்க முடியாமல் அவன் மிருதங்கத்தை அடித்தே தேய்ந்து போகட்டும் என்று இத்தனை கெடுபிடியாக காலை நான்கு மணி முதல் இரவு பத்து மணி வரை தன் மகனுக்கு ராட்சத வெறியுடன் பாடம் எடுத்த முத்தையா பிள்ளையின் மனம் அவனது திறமை நாளுக்கு நாள் மெறுகேறுவதைக் கண்டு திகைப்பும் ஆத்திரமுமாக என்ன பாடுபட்டிருக்க வேண்டும் என்று நினைத்தே பார்க்க முடியவில்லை. ஆனால் தனது பதினைந்தாவது வயதில் ராமநவமி கச்சேரி ஒன்றில் அரங்கேற்றம் செய்யும் சுப்பிரமணிய பிள்ளை, அதன் பின்னும் அவரது இடது கைப்பழக்கம் காரணமாக அவரை வாதிக்கும் அத்தனை தடைகளையும் தாண்டி இன்று வாசிக்கும் மிருதங்க இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் ஆதர்சமாய் விளங்கும் துருவ நட்சத்திரமாய் உயர்ந்து நிற்கிறார். ஒரு சமயம் “மிருதங்கம் என்றால் பழனி; பழனியென்றால் மிருதங்கம்” என்று செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரால் போற்றப்பட்ட சுப்ரமணிய பிள்ளை அவர் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய பாடகர்கள் அனைவருக்கும் வாசித்து அவர்கள் அனைவராலும் புகழப் பெற்றிருக்கிறார். பிற்காலத்தில் வாசனை திரவியங்கள், மடிப்பு கலையாத கதராடை மினுமினுக்கும் வைரக் காதணிகள் என்று சபையை அலங்கரித்தார் சுப்ரமணிய பிள்ளை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தன் காரை மாற்றிய அவர் சென்னையில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டுக்கு அருகில் அரண்மனை போன்ற பங்களாவில் ஏராளமான சிஷ்யர்களுடன் வாழ்ந்தார். இன்று சென்னையில் வெங்கடநாராயணா ரோட்டில் உள்ள ஸ்ரீங்கேரி மடம் இவர் கொடையாக அளித்த இடத்தில்தான் இயங்கி வருகிறது. இவை அனைத்துக்கும் மேலாக, இன்று மிருதங்கம் வாசிப்பவர்களில் தொண்ணூறு சதவிததினர் இவரது பாணியைப் பின்பற்றுகின்றனர். பழனி சுப்பிரமணிய பிள்ளை குறித்து லலிதா ராம் இந்நூலில் பதிவு செய்திருக்கும் தகவல்களில் நான் மிக உயர்வாகக் கருதுவது மதராஸ் கண்ணன் அவர்களின் இந்த மேற்கோளையே: “ஒரு கலைஞனின் உண்மையான குணம் அவன் வாசிப்பில் நிச்சயம் வெளிப்படும். மிக அரிதாகத்தான் மேதைமையும் அடக்கமும் ஒரே இடத்தில் தென்படும். பழனியின் வாசிப்பிலும் அவர் நடத்தையிலும் இவ்விரண்டு அம்சங்களும் நிரம்பித் ததும்பியதைப் பார்க்கலாம்.” இந்த மேற்கோளில் பழனி சுப்பிரமணிய பிள்ளை ஒரு மனிதனாகவும் கலைஞனாகவும் முழுமையான வடிவம் பெறுகிறார். மகனாகவும் இசைக் கலைஞனாகவும் எவ்வளவு கேவலமாக நடத்தப்பட முடியுமா அவ்வளவு கேவலமான துவக்கத்திலிருந்து தன் துறையில் எவ்வளவு உச்ச நிலையைத் தொட முடியுமோ அவ்வளவையும் தொட்ட பழனி சுப்பிரமணிய பிள்ளை தான் புரண்டெழ இசையுலகையே புரட்டிப் போட வேண்டியிருந்தது. ஆங்கிலத்தில், “He bent the world to his will” என்ற சொற்றொடரைப் பரவலாகப் பயன்படுத்துவதுண்டு. ஒருவர் இப்படிச் செய்தார் என்று சொல்லும்போது அது அவரைப் பற்றிய புகழ்ச்சியாக இருக்காது என்றால் சுப்பிரமணிய பிள்ளை குறித்து சொல்லப்படும்போதுதான் அது முழுக்க முழுக்க பொருத்தமாக இருக்கிறது என்று தோன்றுகிறது.  தன் ஆளுமையாளல்ல, மேதைமையால் இதை சாதித்த அவரது வாழ்வு, இந்த சாதனைக்கு இணங்கிய இசைச் சூழல் மற்றும் மிருதங்க வாத்தியத்தில் தனி முத்திரை பதித்த அவரது இசைத்திறன் – இந்த மூன்றையும் பாமரர்களும் பண்டிதர்களும் சுவாரசியமாக வாசிக்கும் வகையில் எழுதியிருக்கிறார் லலிதா ராம். துருவ நட்சத்திரத்தின் முதல் பாதி பாமரர்களுக்கு எழுதப்பட்டிருக்கிறது என்றால் அதைத் தொடரும் பகுதிகள் இசையறிவு உள்ளவர்கள் அனுபவித்து ரசிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. எந்த ஒரு துறையிலும் அதன் நுட்பங்களை அறிந்தவர்களையும் அறியாதவர்களையும் பிரிக்கும் இடைவெளி மிகப் பெரிய ஒன்று. இவர்களில் ஒருவருடன் பேசுவது மற்றவருக்கு சுவாரசியப்படாது. இருவருக்குமாக இந்தப் புத்தகத்தை எழுத முயற்சித்துள்ள லலிதா ராம், இந்த இடைவெளியை நிரப்புவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார் என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால் இந்த ஓரளவு என்பது பெருமளவு என்பதற்கு இதுவரை இப்புத்தகத்துக்குத் தொடர்ந்து கிடைத்து வரும் அங்கீகாரமும் பாராட்டுகளுமே சான்றாக இருக்கின்றன. (துருவ நட்சத்திரம் – லலிதா ராம், 2011, சொல்வனம் வெளியீடு. 224 பக்கங்கள், விலை ரூ.150) [linesep] 6 பகடிகள் 29 கவுண்டர்ஸ் டெவில் ஷோ - கௌதம் வாசுதேவ் மேனன் [Balaji]   ‘வெட்டிப்பயல்’ பாலாஜி தமிழ் இணைய உலகில் பிரபலமாக இருந்த ‘வருத்தப்படாத இளைஞர் சங்கத்தில்’ முக்கிய அங்கத்தினர்.  இவர் எழுதும் கதைகளும், கட்ட்டுரைகளும் சாஃப்ட்வேர் உலகில் புயலைக் கிளப்பியவை.  ஃபார்வேர்ட் மெயில்களாக மாறிய இவருடைய ‘பகடி’ ஒன்று பிரபல எழுத்தாளரின் இணையதளத்தில் வெளியாகியது வரலாறு.  இதை சாக்கிட்டு மீண்டும் இணையத்தை கலக்க வாருங்கள் பாலாஜி. [linesep] கவுண்டர்: சில பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டெவில் ஷோல உங்களை எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நம்ம டெவில் ஷோல கெஸ்டா வந்திருக்குறது படத்து பேரை அழகா தமிழ் பாட்டுல இருந்து காப்பி அடிச்சிட்டு உள்ள இங்கிலிபிஸ்ல பேசற டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனன். இப்ப நிகழ்ச்சிக்கு போகலாம். க: வணக்கம் கௌதம் வாசுதேவ் மேனன் கௌ: வணக்கம் கவுண்டர் சார். க: அது என்னது அது முதல் படத்துல கௌதம், ரெண்டாவது படத்துல கௌதம் மேனன், அடுத்து கொஞ்ச நாள்ல கௌதம் வாசுதேவ் மேனன். உன் மண்டைல முடி வளர்றதை விட உன் பேர் அதிகமா வளருதே. கௌ: படத்துல என்ன புதுசா இருக்குனு யாரும் கேள்விக் கேட்டுட கூடாது இல்ல. அதனால தான் என் பேர்லயே புதுசா ஒரு வார்த்தை சேர்த்துக்கறேன். இதுவரைக்கும் உலகத்துலயே எந்த டைரக்டரும் இது போல புது முயற்சி பண்ணதில்லை. க: டேய் கோக்கனட் மண்டையா, இது தான் உன் புதுமையா? அது என்ன விஜய் கூட சண்டைப் போட்டுட்டு இப்ப சேர்ந்துட்டீங்க? கௌ: நான் ”ஏ” க்ளாஸ் ஆடியன்ஸ்க்கு படம் எடுக்கறவன். என்கிட்ட ”லோ” க்ளால் ஆடியன்ஸ்க்கு படம் எடுக்க சொன்னாரு. அது தான் பிரச்சனை. இப்ப எல்லாம் சரியாகிடுச்சு. க: அது என்னடா “ஏ” க்ளாஸ், ”லோ” க்ளாஸ் ஆடியன்ஸ்க்கு படம் கௌ: இங்கிலிஸ் சிடில இருந்து காப்பி அடிச்சா அது ”ஏ” க்ளாஸ் ஆடியன்ஸ் படம். தெலுகு பட சிடில இருந்து காப்பியடிச்சா அது ”லோ” க்ளாஸ் ஆடியன்ஸ்க்கான படம். க: அப்ப மலையாள படத்துல இருந்து காப்பி அடிச்சா? கௌ: அது மிடில் க்ளாஸ் ஆடியன்ஸுக்கான படம். க: ஆஹா. என்ன ஒரு தத்துவும். இதை அப்படியே மஹாபலிபுர சிற்பங்களுக்கு நடுல செதுக்கி வெச்சிட்டு பக்கத்துலயே நீயும் உக்காந்துக்கோ. உனக்கு பின்னால வந்து காப்பி அடிச்சி படம் எடுக்குற இயக்குனர்களுக்கு பயனுள்ளதா இருக்கும். டேய் காப்பி கேட் மண்டையா, அடிக்கறது காப்பி, இதுல என்னடா உனக்கு ஏ க்ளாஸ், லோ க்ளாஸ் எல்லாம். சொந்தமா படம் எடுங்கடா. கௌ: இப்படி எல்லாரும் காரி துப்பறாங்கனு தான் பச்சைக் கிளி முத்துச்சரத்துக்கு அப்பறம் எல்லாப் படமும் என் சொந்தக் கதையையே படமா எடுக்கறேன். க: ஆமாம். அது என்ன பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தை நான் Derailed படத்துல இருந்து திருடல. நாவல்ல இருந்து தான் எடுத்தேனு ஒரு விளக்கம். ரெண்டுத்துக்கும் என்ன மேன் வித்தியாசம்? தயிரைத் திருடி சாப்ட்ருக்கான் பாருனு சொன்னா, இல்லை நான் பாலத் திருடி உறை ஊத்தி தயிரா மாத்திருக்கேனு ஸ்டேட்மண்ட் விடற. உங்களுக்கு எல்லாம் இந்த வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதமே இருக்காதா? கௌ: நாவல்ல இருந்து எடுத்தா இன்ஸ்பிரேஷன், படத்துல இருந்து எடுத்தா தான் அது காப்பி. ஆனா அந்த படத்தைத் தவிற என்னோட மத்த படத்துல எல்லாம் என்னோட வாழ்க்கைல நடந்த சொந்தக் கதையைத் தான் எடுத்திருக்கேன். க: ஆமாண்டா, ஹீரோ மெக்கானிக்கல் இஞ்சினியரு, படிக்காத தறுதலை, அரியர் வெச்சிருப்பான், ஹீரோயின் மேக்ஸ் படிச்சிட்டு சாப்ட்வேர் இஞ்சினியரு, லவ் அட் ஃபர்ஸ்ட் சைட், ஹீரோயின் குழப்பமாவே இருப்பா. அப்பறம் ஹீரோயினைத் தேடி ஹீரோ போவான், வளைஞ்சி வளைஞ்சி டேன்ஸ் ஆடுவான். இது தான உன் கதை. இதையே எத்தனைப் படத்துலடா எடுப்ப? கௌ: அப்படி இதுவரைக்கும் எத்தனைப் படத்துல எடுத்திருக்கேன்? மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா? அப்பறம் காக்க காக்க, வேட்டையாடு விளையாடுல ஹீரோயின் மேக்ஸ், கம்ப்யூட்டர் இஞ்சினியர் அவ்வளவு தானே? க: டேய் இங்கிலிபிஸு மண்டையா, நீ எடுத்ததே அவ்வளவு படம் தாண்டா. அப்பறம் என்னுமோ ஏ க்ளாஸ், லோ க்ளாஸ்னு கதை விடற. உன் படத்துல வில்லனுங்க எல்லாம் கெட்ட கெட்ட வார்த்தை தாண்டா பேசறானுங்க. கௌ: ஓ அதுவா? இங்கிலிஸ் கெட்ட வார்த்தை பேசனா அது தான் ஏ க்ளாஸ். க: டேய் நாயே, காக்க காக்கல ஜீவன் பேசறது எல்லாம் என்ன தெலுங்கு கெட்ட வார்த்தையா? அதுல என்ன இங்கிலிஸ்ல பேசினா ஏ க்ளாஸ்? பாதி படம் ”ஏ” படமா எடுத்துட்டு பேசற பேச்சைப் பாரு? எந்த மொழில கெட்ட வார்த்தைப் பேசினாலும் அது ஒண்ணு தாண்டா அமெரிக்கா மண்டையா? அது என்னடா நாயே நடுநிசி நாய்கள்னு ஒரு படம். பத்து நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியலை. அதுக்கு நீ, நடுநிசி பேய்கள்னு தான் பேர் வெச்சிருக்கணும். படமாடா அது? கௌ: அக்சுவலி பார்த்தீங்கனா, இது வரைக்கும் நான் பண்ணதுலயே வித்தியாசமான படம் தான் நடுநிசி நாய்கள். வெரைட்டியா கொடுக்கணும்னு பண்ண முயற்சி தான் அது. மக்களுக்கு அது புரியலை. க: ஆமாம். இவர் பெரிய இன்சப்ஷன் எடுத்துட்டாரு. மக்களுக்கு புரியலைனு சொல்றதுக்கு. கௌ: இருந்தாலும் தமிழ்ல இது ஒரு வித்தியாசமான முயற்சி இல்லையா? க: டேய் மொன்ன நாயே, அது தான் உங்க ஊர்ல வித்தியாசமாடா? வேட்டையாடு விளையாடுல வர ரெண்டு சைக்கோங்களையே மொத்தமா ஒரு படமா எடுத்துட்டு வித்தியாசமான முயற்சி, பயிற்சினு பில்ட் அப் கொடுடா. கல்யாண பரிசு, தேன் நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லைனு படம் எடுத்தார் பாரு டைரக்டர் ஸ்ரீதர், அது தான் மேன் வித்தியாசம். இரண்டு கதையை வெச்சிட்டு மாத்தி மாத்தி எடுத்துட்டு வித்தியாசமாம் வித்தியாசம். கௌ: என் படம் யூத்துக்குத் தான் பிடிக்கும். உங்களை மாதிரி ஓல்ட் மேன்களுக்கு எல்லாம் பிடிக்காது. க: டேய் பரக்காவட்டித் தலையா. அடிக்கறது காப்பி. படத்து பேரை தமிழ் பாட்டுல இருந்து திருடற. படக்கதையை இங்கிலிஷ் படத்துல இருந்து திருடற, இல்லை உன் முந்தன படத்துல இருந்தே திருடற, அதுலயும் பாதி ஏ சர்டிபிகேட் வாங்கன படம். இதை எடுத்துட்டு என்னுமோ ஏ செண்டர், யூத்துனு பீலா விட்டுட்டு திரியறயறையே. உனக்கே இது நியாயமா இருக்கா? இத்தனைக்கும் அந்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்துல அந்த திருஷா புள்ள பின்னாடியே கேமராவை வெச்சி படம் பிடிச்சிருக்க. கௌ: அதுக்கு காரணம் நான் இல்லை. சிம்பு அவ பின்னாடியே சுத்தினார்னு சிம்பாலிக்கா காட்டத்தான் அப்படி வெச்சது. அது மட்டும் இல்லாம படத்துலயே சிம்பு அதை சொல்லுவாரே. க: சொம்பு கூட எல்லாம் உன்னை யார் மேன் சேர சொன்னது. உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேனு அப்பறம் புலம்ப வேண்டியது தான். இனிமேலாவது ஒழுக்கமா படம் எடு. அப்பறம் முக்கியமான ஒண்ணு, இந்த ஒன்றையனா படம் எடுத்துட்டு ஸ்பீல்பர்க் ரேஞ்சுக்கு பேசாத. புரியுதா? கௌ: சரி கவுண்டரே! க: மறுபடியும், அவனைப் போட்டுத் தாக்கணும், பேக்கணும், தூக்கணும்னு படத்துல டயலாக் பேசிட்டு திரிஞ்ச நான் பேச மாட்டேன், என் காலு தான் பேசும். கவுண்டர் காலைத் தூக்க, கௌதம் வாசு தேவ் மேனன் எஸ்கேப் ஆகிறார். [linesep] 30 மாவீரன் தில்லுதுர  [Meenaks] மீனாட்சி சுந்தரம் குறும்பதிவுகள், கீச்சுகள் என்று ரக்ளையாக எழுதுபவர்.  இவருடைய ரசிகர் மன்ற தொல்லை தாங்காமல்தான் கூகுள் Buzz மூடிவிட்டார்கள் என்றுக் கேள்வி. தில்லுதுரை, டேனி என்று சில பிரத்யேக பாத்திரங்கள் வைத்து ‘நறுக்’ அங்கதங்கள் எழுதுபவர்.  [linesep] அது ஐந்தாம் வகுப்புக்கான நீதிபோதனை வகுப்பு. ஆசிரியை தனது மாணவர்களுக்கு நேற்று கொடுத்திருந்த அசைன்மென்ட் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். அது எல்லோரும் தனது பெற்றோரிடம் ஒரு நீதிக்கதையைக் கேட்டு அதை வந்து வகுப்பில் சொல்ல வேண்டும் என்பதே. அதேபோல், எல்லோரும் ஒவ்வொருவராய் வந்து தனது அப்பா அம்மா சொன்ன கதைகளை சொல்லத் துவங்கினர். எல்லாம், வழக்கமான கெடுவான் கேடு நினைப்பான், ஏமாற்றாதே ஏமாறாதே வகைக் கதைகளே. கிட்டத்தட்ட ஆசிரியை அலுத்துப் போகும்போது, தில்லுதுரயின் மகன் எழுந்து வந்தான். ஆசிரியை அவனிடம் ஆவலுடன் கேட்டார். “தம்பி… நீ எதுவும் கதை சொல்லப் போறியா?”. அவன் ஆர்வத்துடன் பதில் சொன்னான். “ஆமா மிஸ். எங்க அம்மா சொன்னாங்க. எங்க அப்பாவைப் பத்தின கதை!”. சுத்தமாய் அலுத்துப் போயிருந்த ஆசிரியை, சட்டென்று ஆர்வம் கண்ணில் மின்ன கேட்டார். “ம்ம்ம்… சொல்லு சொல்லு!”. அவன் ஆர்வமாய் சொல்ல ஆரம்பித்தான். “மிஸ்… எங்கப்பா பேரு தில்லுதுர. இது அவர் மிலிட்டரில வேலை பார்க்கும்போது நடந்தது. அவர் ஒரு சமயம் பாகிஸ்தான் பார்டர்ல போயிட்டருந்தப்ப அவர் ப்ளேனை எதிரிகள் சுட்டு விழுக வச்சிட்டாங்க. அப்ப, எங்கப்பா டக்குனு பாராசூட்ல வெளிய குதிச்சுட்டாரு. குதிக்கும்போது அவர் கையில ஒரு பாட்டில் விஸ்கி, ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி மட்டும்தான் இருந்ததாம். குதிச்ச இடமோ எதிரிகள் மத்தியில. எங்கப்பா மேல இருந்து எறங்க எறங்கவே கையில இருந்த விஸ்கிய மொத்தமும் தொறந்து குடிச்சுட்டாராம்.” ஆசிரியை மட்டுமல்ல, வகுப்பே தில்லுதுர இப்ப என்ன செஞ்சிருப்பாருனு ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தது. பையன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். “கீழே எறங்கின எங்க அப்பாவை எதிரிகள் 75 பேரு சுத்திக்கிட்டாங்க. எங்கப்பா மொதல்ல துப்பாக்கில இருந்த புல்லட் தீருற வரைக்கும் 40 பேரை சுட்டுக் கொன்னுட்டு, அடுத்த 20 பேரை கத்தி ஒடயற வரைக்கும் குத்திக் கொன்னாராம். மீதி இருந்த 15 பேரையும் வெறும் கையாலயே அடிச்சுக் கொன்னுட்டு வந்த எங்கப்பாவுக்கு அரசாங்கமே பரம்வீர்சக்ரா அவார்ட் கொடுத்துச்சாம்!”. அவன் சொல்லி முடித்ததும் வகுப்பே வியப்புடன் அவனைப் பார்க்க, ஆசிரியை மட்டும் அதிர்ச்சியுடன் அவனிடம் கேட்டார். “இந்தக் கதைல உங்க அம்மா உனக்குச் சொன்ன நீதி என்ன? “. ஆசிரியை கேட்டதும் அவன் எந்த சலனமும் இல்லாமல் சொன்னான். “அப்பா குடிச்சிருக்கும் போது யாரும் அவர் பக்கத்துல போகக் கூடாது..!”. [linesep] 7 பதிவுகள் 31 சிறுகதைப் போட்டிகள் [sathyaraj] சத்யராஜ்குமார் ஒருகாலத்தில் ராஜேஷ்குமாரின் வாரிசாகவே அறியப்பட்டவர்.  குமுதம், விகடனில் இவர் பெயரை நிறையவே பார்த்திருக்கிறேன்.  நேரில் சந்தித்தபோது எந்தவித பாசாங்கும் இல்லாமல் ‘இவரா அவர்’ என்று வியக்கும்படி வெகு இயல்பாக பழகினார். இப்போதும் இணையத்தில் ‘இன்று’ என்று ஒரு குழுமமாக பல எழுத்தாளர்களை இணைத்து இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறார். [linesep] நீங்கள் அனுப்புவதெல்லாம் பிரசுரமானால் ஒருவித திமிர் வரும் பாருங்கள். அதுவும் லட்சோப லட்சம் பேர் வாசிக்கும் பிரபல பத்திரிகைகளில் எனில் அதன் வீரியம் எப்படி இருக்கும். பதினாலு கண்ணகி தெரு என்று வசிக்கும் தெருவை எழுதினாலும் கதையாகிறது. வீட்டு போன் நம்பரை தலைப்பாய் வைத்து அனுப்பினாலும் அடுத்த வாரம் அரஸ் படம் வரைந்து அச்சாகிறது. காம்ப்ளிமெண்ட்டரி காப்பிகளை போஸ்ட் ஆபிசிலேயே பிரித்துப் படித்து விட்டு, அதற்கப்புறம் வீட்டுக்கு டெலிவரி செய்யும் தபால்காரர், “ஸார், அடுத்த கதைல ஒரு கேரக்டருக்கு என் பேரைப் போடுங்களேன்.” எஞ்சினீரிங் வகுப்பில் விரிவுரையாளரின் உரைக்கு இடைஞ்சலாய் லொடலொடவென  சப்தமெழுப்பியபடி, எந்த நிமிஷமும் விழுந்து விடத் தயாராயிருக்கும் மின்விசிறியை சுட்டிக் காட்டி பக்கத்து இருக்கை சக மாணவர், “இந்த ஃபேனைப் பத்தி ஒரு கதை எழுத மாட்டிங்களா?” என்று கேட்க, தாத்தாவும், ஃபேனும் என்று அது விகடனில் மருதுவின் கிறுக்கலான ஓவியத்துடன் இலக்கிய கெட்டப்பில் வெளி வருகிறது. இன்லாண்ட் லெட்டர்களிலும், அஞ்சல் அட்டைகளிலும் ரகம் ரகமான கையெழுத்துகளில் புதிது புதிதாய் மலரும் பாராட்டுக்கள். இந்த மாதிரி சமயத்தில்தான் ஒரு மமதை வருகிறது. நான் எழுதுவதுதான் கதை. இதற்கு மேல் எழுதி சாதிக்க ஒன்றுமில்லை. இந்தப் பத்திரிகைகளை எல்லாம் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்த விடாமல் பார்த்துக் கொண்டாலே போதும். இந்த கர்வத்துக்கெல்லாம் சேர்த்து வைத்து செவிட்டில் அறைந்தாற்போல ஒரு மரண அடி அதே லட்சோப லட்சம் பேர் படிக்கும் குமுதம் பத்திரிகையிலிருந்தே எனக்கு வந்து விழுந்தது. மாவட்ட சிறுகதைப் போட்டி என்று ஒன்றை ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் வைத்தார்கள். போட்டிகளிலெல்லாம் அதுகாறும் நான் கலந்து கொண்டதில்லை. பாக்கெட் நாவல் உலகின் இளவரசனாகி விடப் போகிற எனக்கு இது மாதிரி போட்டிகளிலெல்லாம் கலந்து கொள்வது மாபெரும் கவுரவக் குறைச்சல் அல்லவா? அது மட்டுமில்லை; சோகத்தைக் கசக்கிப் பிழிவதற்கெல்லாம் அந்த நாட்களில் எனக்கு அவ்வளவாய் இஷ்டமில்லை. கதை என்றால் வெட்டு ஒன்று துண்டு நான்கு என்று ரத்தமும், சதையுமாய் இருக்க வேண்டும். விறுவிறுவென்று பி.டி உஷா மாதிரி ஓட வேண்டும். ஆனால் ராஜேஷ்குமார்தான் என்னைத் தூண்டி விட்டார். “கலந்துக்கோ சத்யராஜ். பத்திரிகை  போட்டிகளில் பரிசு வாங்கினா அது உனக்கு ஒரு தனி அங்கீகாரம் கொடுக்கும்.” வேறு யாராவது சொல்லியிருந்தால், “போங்க ஸார். வேற வேலையில்லை. டெய்லி பத்து பேர் என் கதையைப் படிச்சுட்டு பாராட்டி லெட்டர் போடறான். இதை விட தனியா என்ன அங்கீகாரம் வேண்டியிருக்கு.” என்று அலட்சியப்படுத்தியிருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அவர் எனக்கு துரோணாச்சார்யார் போல. மறுத்து ஒரு வார்த்தை பேச எனக்குத் துணிவில்லை. போட்டியில் அவரும் ஒரு நடுவர். ஆனால் வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் ஓர்  அறிமுகத்தை சாதகமாக்கிக் கொள்ள நான் முயன்றதேயில்லை. அதற்கு அவரும் இடம் கொடுக்க மாட்டார் என்று தெரியும். எனக்குக் கிடைக்கும் எதுவும் எனது தகுதியின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் எனக்குண்டு. முதன் முதலில் என்னை அச்சுப் பத்திரிகையில் எழுத வழி காட்டியவரும் அவர்தான். “யாரோட ரெக்கமண்டேஷனும் தேவையில்லை. உன் கதை நல்லா இருந்தா போடுவாங்க.” என்று சொல்லி தைரியம் தந்தவர். பொதுவாய் அவரை சந்திக்கையில் எனது கதைகளைப் பற்றி விவாதிக்கும் நான் குமுதம் மாவட்ட சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்த பின், அதில் எழுதப் போகும் கதை பற்றி விவாதித்து தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. அப்போதெல்லாம் போலிஸ் ஸ்டேஷனில் கற்பழிப்பு என்ற செய்தி அடிக்கடி வெளியாகும். போட்டிக்கு அதையே மையமாக்கி ஒரு சிறுகதை எழுத முடிவெடுத்தேன். ‘நூலிழை வெளிச்சம்’ என்பது கதையின் தலைப்பு. காவல் நிலையத்தில் வன்புணர்ச்சிக்கு ஆளாகும் ஒரு பெண்ணுக்கு மகளிர் சங்கங்களின் ஆதரவு கிடைத்து, விஷயம் தீவிரமாகிற போது – போலிஸ் ஐ.ஜி வெளிநாட்டிலிருந்து திரும்பிய தனது மகனுக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து வைப்பதன் வாயிலாக பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். காவல் துறைக்கு கண்ணியத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார். செம சினிமாட்டிக் இல்லையா? ஆனால் கதையாய் படிக்கும் போது கடைசி வரை இயல்பாகவே கதை செல்லும். குமுதம் நடத்திய இந்தப் போட்டி சற்றே வித்தியாசமானது. கதையை எழுதி பத்திரிகைக்கு அனுப்பும் வழக்கமான போட்டி இல்லை. எல்லா எழுத்தாளர்களும் ஒரு ஹாலில் உட்கார்ந்து, பரீட்சை எழுதுவது போல் மூன்று மணி நேரத்தில் எழுதித் தந்து விட்டுப் போக வேண்டும். எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. ஆனால் மற்றுமொரு நடுவரான விமலா ரமணிக்கு பெண்ணியத்தை வலுவாகப் பேசும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்ததாகத் தகவல். இதற்கு ஏதாவது ஒரு பரிசு தந்தாக வேண்டுமென்று கடைசி வரை அவர் போராடினதாகக் கேள்விப்பட்டேன். ஐ.ஜி தனது ஃபாரின் ரிட்டர்ன்டு மகனுக்கு அந்தப் பெண்ணை மணமுடிப்பதை விட – சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு மணமுடித்து வைப்பதாக எழுதியிருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்கும், ஆறுதல் பரிசாவது கொடுத்திருக்கலாம் என்று தான் கருதியதாக ராஜேஷ்குமார் சொன்னார். நான் நாக்கைக் கடித்துக் கொண்டேன். அட, எப்படி எனக்கு இது தோணாமல் போனது. கதையின் மற்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு என்னைக் கூப்பிட்டு முடிவை மாற்றி எழுதச் சொல்லலாம் என்று கூட நடுவர்கள்  விவாதித்தனராம். ஆனால்  குமுதம் சார்பாக போட்டியின் பொறுப்பாளராக வந்திருந்த பால்யூ அது போட்டி விதிமுறைக்கு முற்றிலும் புறம்பானது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாராம். நல்ல வேளை. அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்போது மட்டும் எனக்குப் பரிசு கிடைத்திருந்தால் அதெல்லாம்தான் சிறுகதை என அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குத் தோன்றியிருக்கும். மேலும் வளராமல் போயிருப்பேன். நல்ல பல சிறுகதைகள் எழுதாமல் போயிருப்பேன். முதல் முதலாய் கலந்து கொண்ட போட்டி என்பதால் யாருக்குப் பரிசு கிடைத்தது, அப்படி என்னதான் அவர் எழுதியிருக்கிறார் என்று ஆர்வமாக குமுதத்தின் முடிவுக்குக் காத்திருந்தேன். சூசன் என்பவரது கதை பரிசு பெற்ற கதையாக குமுதத்தில் வெளிவந்தது. ‘புகை படிந்த அம்மாவும், சில கரப்பான் பூச்சிகளும்’. தலைப்பே மனதை என்னவோ செய்கிறதே என்று முதன் முதலாக தடுமாறி நின்றேன். கதையைப் படிக்க ஆரம்பித்ததும் கணக்கு வாத்தியாரைப் போல ஒவ்வொரு பாராவும் ணங் ணங் என்று என்று என் தலையில் கொட்டு வைக்க ஆரம்பித்தது. நான் எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் சிறுகதையே அல்ல. என் எழுத்து நடையும் சும்மா கவர்ச்சி நடனம் ஆடி விட்டுப் போகிற நடிகை மாதிரிதான். ஐந்து நிமிஷத்துக்கு மேல் யாரும் சீந்தப் போவதில்லை. குடிகார உதவாக்கரைப் புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட அம்மா அவனுடைய கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு, நாலு வீடுகளில் வேலை செய்து மிச்ச நேரத்தில் அடுப்பங்கரைப் புகையில் உழல்பவள். அப்படி புகையில் உழன்று உழன்று நுரையீரல்கள் பாதிக்கப்பட்டு கொடிய ஆஸ்த்மாவுக்கு உள்ளாகிறாள். பணமில்லாததால் மருத்துவம் பார்க்காமல் நாட்கள் போகின்றன. ஆஸ்த்மா முற்றிப்போகவே, எப்படியோ பணம் கொஞ்சம் ஒதுக்கி,  குடிகாரக் கணவனும், அவளும் டாக்டரிடம் போகிறார்கள். ‘யாருக்கும்மா  பார்க்கணும்?’ என்று டாக்டர் கேட்கிற போது – போகிற வழியெல்லாம் குடியால் பாதிக்கப்பட்ட கணவனின் இருமல் பார்த்து விட்டு, ‘இவருக்கு.’ என்று புருஷனைக் கை காண்பித்து அவனுக்கு வைத்தியம் பார்த்து விட்டுத் திரும்புவதாக கதை முடியும். நச்சென்று இருந்தது கதை. மனதைப் பிசைந்தது. இயல்பான மனிதர்கள். இயல்பான சம்பவங்கள். இதற்கு முன் நான் படித்த நல்ல சிறுகதைகளெல்லாம் அந்தக் கணம் மனதில் ஓட ஆரம்பித்தன. இரவில் நை நை என்று அழும் குழந்தையால் தூக்கம் பாதிக்கப்பட்டு, எரிச்சல் அடைந்து, சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பிச் செல்கிறான். சே! இனி ஒரு குழந்தையை இந்த ஜென்மத்தில் மனசால் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஒரு நடை போய் விட்டு திரும்பி வருவதற்குள் அழும் குழந்தையை சமாதானப்படுத்தி பால் புகட்டி தூங்க வைத்து விட்டு சற்றே அசந்திருக்கிறாள் மனைவி. பொத்தான்களிடாமல் அவள் மார்புகள் பளீரென்று புலப்பட, ஆசையாய் அவளை அணுகுகிறான். இன்னும் நிறைய கதைகள். எல்லாவற்றுக்கும் இங்கே கதைச் சுருக்கம் எழுதித் தீராது. அந்தக் கதைகளெல்லாம் எனக்கு உணர்த்திய பாடம், சிறுகதை எழுத்தாளன் என்பவன் புகைப்படக் கலைஞனின்  நீட்சியாக இருக்க வேண்டும் என்பதே. காட்சியை மட்டும் எடுத்து வை. கதையை வாசகர்கள் தங்கள் மனதுக்குள் எழுதிக் கொள்வார்கள். முடிந்த மட்டிலும் அலங்காரங்கள் இல்லாத எளிமையான நடையை கைக் கொள். இரண்டு வார்த்தைகளில் சொல்ல வேண்டிய சங்கதிக்கு நான்கு வார்த்தைகள் உபயோகிக்காதே. அன்றாட சமூகப் பிரச்னையை மையம் கொள். தலைப்பில் முழுக்கதையையும் பதுக்கி வை. திமிர் அகன்று, கர்வம் குறைந்து, கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்குடன்  நான் படித்த, அசை போட்ட கதைகள் எல்லாமே இப்படி எனக்கு சின்னச் சின்ன விஷயமாய் போதிக்க ஆரம்பித்தன. இப்போதும் நேற்றைக்கு முளைத்த எழுத்தாளரின் படைப்பபானாலும் சரி, எழுத்துலக ஜாம்பவான்களின் கதையானாலும் சரி அதே பணிவோடு அணுகிப் படிக்கிறேன். அவைகளும் தவறாமல் எனக்கு ஏதோ ஒன்றைக் கற்றுத் தந்தபடியே உள்ளன. அதன்பின் போட்டி என்பது பரிசுக்கான மல்யுத்தக்களம் அல்ல; நல்ல கதை எழுத கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம் என்கிற பக்குவம் ஏற்பட்டது. கல்கியில் பரிசுகள் பல கிடைத்தன. அமுதசுரபி, விகடன், கலைமகளிலும் பரிசுகள் கிடைத்தன. ஆனால் கர்வம் பிறக்கவில்லை. எனக்குத் தெரியும் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று. இப்போதும் இணையத்தில் நடக்கும் போட்டிகளில் என் கதைகள் பங்கு பெறுவதைப் பார்க்கலாம். பரிசுக்காக அல்ல, எழுதுவதற்காக மட்டுமே தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பேன். [linesep] 32 பாலமும் காலமும் [Sarasuram]   சரசுராம் இவரும் ‘இன்று‘ குழுமத்தில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்.  மிக இயல்பான நனவோடை பாணியில் ஒரு சிறுகதைக்கான கருவோடு அருமையாக எழுதியிருக்கிறார்.  முடிவில் உங்கள் உதட்டில் ஒரு புன்முறுவல் உத்தரவாதம். [linesep] வழக்கம் போல் வீட்டில் அப்பாவுடன் சண்டை. ஆனால் இந்த முறை அதிகம் கத்தியது நான்தான். இருக்கட்டுமே. ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? நான் எங்கள் வீதி முக்கில் இருக்கும் பாலத்தில் அமர்ந்து நண்பர்களுடன் பேசக் கூடாதாம். ஏரியா ரவுடி மாதிரி தெரிகிறேனாம். என்ன பேச்சு இது? எனக்கு வெறுப்பாய் இருந்தது. நேரம் பார்த்தேன். இரவு பத்தாகி இருந்தது. நண்பர்கள் அனைவரும் வீட்டில் அடைந்திருப்பார்கள். அவர்கள் வீட்டிலும் இதே சண்டை தொடர்ந்திருக்கலாம். யாரையும் கூப்பிட்டு இந்த நேரத்தில் தொந்தரவு செய்ய முடியாது. நான் சட்டையைப் போட்டேன். அப்பா முறைப்பதை உணர்ந்தேன். அம்மா ’ராம் இந்த நேரத்தில எங்க போறே?’ என்றாள். நான் பதில் சொல்லவில்லை. வேகமாய் வெளியேறினேன்.  நடக்க ஆரம்பித்தேன். எங்கள் பாலத்தில் வந்துதான் அமர்ந்தேன். ஊரே அடங்கி இருந்தது. ஜன்னல்களில் டி.வி பார்க்கும் வெளிச்சங்கள். வரவேற்ற குளிர்ந்த காற்று. வீதி விளக்கின் மிதமான வெளிச்சம். தெளிவான நட்சத்திரங்களுடன் வானம். தூரத்தில் யாரென கேட்டு குரைக்கிற நாய். எல்லாம் உணர்ந்து அங்கே அமர்ந்து போது எனக்குள் மீண்டும் அமைதி வந்தது. ஆறுதல் கிடைத்தது. எங்கள் சொந்த ஊரான பொள்ளாச்சியில் நாங்கள் வசித்த மின் நகரில் நான் மற்றும் என் நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் இடமாக அந்த பாலம் இருந்தது. பாலம் என்றால் கல்கத்தா பாலம் ரேன்ஞ்சுக்கு கற்பனை வேண்டாம். இது மினியேச்சர் சைஸ். ஒரு சின்ன ’திட்டு’ என்று கூட  அதை சொல்லலாம். நாங்கள் அங்கே அமர்ந்து பேசி காலம் தள்ளி வீட்டில் ’திட்டு’ வாங்கியதால் அந்த பெயர்தான் அதற்கு பொருத்தம் என்று தோன்றுகிறது. அது ஒரு நான்கு அடிக்குள் இருக்கும். விட்டுக் கொடுத்து உட்கார்ந்தால் தாராளமாய் நான்கு பேர் உட்காரலாம். மீதி பேர்கள் நின்றபடி மற்றும் வண்டியில் அமர்ந்தபடி தான் பேச வேண்டியிருக்கும். அதை பிரஸ்டீஜ் விஷயமாக இல்லாமல் வழக்கமான விஷயமாகத்தான் நாங்கள் எடுத்துக் கொண்டோம். கிராமத்து மக்களுக்கு அரசமரத்தடி ,மாதிரி எங்களுக்கு இது. எங்கள் அரட்டை அரங்க மேடை. அந்த பாலம் நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருந்தது. அதன் கீழே சின்னதாய் ஒரு சாக்கடை ஒன்று ஓடிக்கொண்டிருக்கும்.   அதை ஒட்டி அமைந்த காலனியின் மெயின் வீதி. அந்த ஏரியா மக்கள் எங்களை கடந்துதான் போகவேண்டும். அது படித்துக் கொண்டிருந்த காலம் மற்றும் படித்து முடித்து வேலை தேடி கொண்டிருந்த காலமும் பெரும்பாலும் அந்த பாலத்தில் கழிந்தது. சாயந்திரங்களில்தான் எங்கள் சந்திப்புகள் தொடங்கும். நாங்கள் பேனா பிடித்து கன்னத்தில் கைவைத்து மேலே பார்த்தபடி பெரிய எழுத்தாளர்களாய் கனவு கண்ட காலம். பல கதைகளை அந்த பாலத்தில்தான் பேசியிருக்கிறோம். கொசுக்களின் பின்னணி இசையோடு எங்கள் பேச்சுக்கள் தொடங்கும். இலக்கியம், அரசியல், சினிமா, பெண்கள் என எல்லாத் தலைப்புகளும் வந்து போகும். ’என்னடா இங்க உட்கார்ந்து பேசறீங்களே நாத்தம் அடிக்கலயா’ என்று சிலர் எங்களை கேட்டுவிட்டு போவார்கள். அவர்களுக்கு நாங்கள் சொன்ன சேதி “எங்கள் பேச்சுக்கள் தாங்க முடியாமல் இந்த சாக்கடைதான்  மூக்கை பொத்தும். நாங்கள் சிரித்த சிரிப்பில் அக்கம்பக்கத்து வீடுகள்தான் காதை பொத்தும்”. சுபாவுடனான என் முதல் காதலும் அந்த பாலத்திலிருந்துதான் தொடங்கியது. நான் அந்த பாலத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவள் அந்த வீதியில் கடந்து போன ஒரு கணத்தில்தான் அந்த காதல் மலர்ந்தது. வெறும் பார்வைகள் மட்டுந்தான் காதல். அந்தக் காலத்து சொல்லாமலே காதல். வேலை தேடித் தேடி அலைந்த காலத்தில் எங்கே போய் காதலைச் சொல்வது? அவள் போகும் பஸ்ஸில் போவது. அவள் இருந்த வீட்டின் வழியே காரணமே இல்லாமல் கடந்து போவது. அவளை பார்க்க வேண்டி அவள் படித்துக் கொண்டிருந்த கல்லூரிக்குள் போய் வருவது. இவ்வளவுதான் என் காதலின் பெரும் காட்சிகள். அவள் கடந்து போகிற சில கணங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள். அங்கே பாருடா உன் ஆள் வருது என்று நண்பர்கள் சொல்ல ஏற்படும் அதி அற்புத சந்தோசம் மீண்டும் எந்த காதலிலும் கிடைத்ததில்லை. எந்த காலமும் தந்ததில்லை. அவள் திருமணம் ஆகி தன் கணவனுடன் போனதும் நான் அதை முட்டாள்தனமாய் கண்ணீரோடு அதை பார்த்ததற்கும் அந்த பாலம்தான் சாட்சி. நாங்கள் சாய்ந்திரம் கிரிக்கெட் விளையாடி விட்டு இரவு தொடங்குகிற போதுதான் அந்த பாலத்தில் சந்திப்போம். எங்களின் அப்பாக்கள் ஆபிஸ் விட்டு வீடு திரும்புகிற நேரம். பெரும்பாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிகிற அப்பாக்கள். அரசாங்க வேலை பார்க்கிற மிதப்பில் வருகிற அப்பாக்கள். அவர்கள் பஸ்ஸை விட்டு இறங்கி எங்களை கடந்துதான் போக வேண்டும். அப்படி போகிற போது அவர்கள் முகம் போகிற போக்கை பார்க்க வேண்டுமே. அனல் தெறிக்கும். கோபத்தில் வாய் மெல்ல முணுமுணுக்க அவர்கள் எங்களை கடந்து போவார்கள். அதற்கு நாங்களே “இவனுக எங்க உருப்பட போறாங்க..” என்கிற மாதிரி டப்பிங் கொடுப்போம். பிறகு ’நேரலை’ வீட்டில் தொடரும். “அங்க உட்கார்ந்து ஏண்டா நேரத்த வீணாக்கற..? உட்கார்ந்து ஏதாவது பேங்க் எக்ஸாம்க்கு படிக்கலாமல்ல..” “ரெண்டையுமே செய்யறேன்ப்பா..” ”உன்னை திருத்தவே முடியாதுடா..” அப்பா துண்டை உதறியபடி கோபித்தார். “ஏம்ப்பா உங்களை ஒண்ணு கேட்கட்டா? உங்களுக்கு பிரண்ட்ஸுன்னு யாராவது இருந்திருக்காங்களா?” “இருந்திருக்காங்க.. ஆனா அதுவே வாழ்க்கைன்னு நான் இருந்ததில்லை.. டேய்.. நான் என்ன சொல்றேன்னா..” என்றபடி அப்பா தன் அறிவுரை மூட்டையை அவிழ்க்க ஆரம்பிக்க நான் வேகமாய் வெளியே கிளம்பிக் கொண்டேன். யார் பேச்சும் காதில் கேட்காத காலம். எந்த விமர்சனமும் எந்த விளைவையும் ஏற்படுத்தாத வயது. ஒரு முறை அந்த பாலத்தில் அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் பேசி சிரித்த விஷயம் அந்த வழிப்போக்கு இளைஞனை பாதித்தது போலும். அவனைத்தான் கிண்டல் செய்து சிரிப்பதாக நினைத்துக் கொண்டான். கோபமாய் போய் நாலைந்து பேரோடு திரும்பி வந்தான். அங்கே பேச்சு வார்த்தையெல்லாம் எடுபடவில்லை. மண்ணில் புரண்டு சண்டை போட்டு சட்டைகளை கிழித்த பிறகே ஒரு தீர்வு கிடைத்தது. ’இனி கிழிகிற விதமாய் சட்டை வாங்கக் கூடாது’. வீட்டிற்கு விஷயம் தெரிந்தது. அப்பா கோபத்தில் கிழிந்த சட்டையை மேலும் கிழிக்க வந்தார். ’ரோட்டில போறவன்கிட்டயெல்லாம் அடி வாங்கறதுக்கா பெத்து போட்டிருக்கோம்.’ அம்மா அழுதாள். அதற்கு பிறகு அந்த பாலத்திற்கு போவதை நிறுத்தினேன். அதிகமில்லை ஒரு மூன்று நாட்கள்தான். மீண்டும் அதே பாலம். அதே நண்பர்கள். அதே குதூகலம். அப்பா முறைப்பதுகூட வீண் என்று  என்னை சாதாரணமாய் பார்த்துவிட்டு போனார். ஒருமுறை ஒரு சின்ன லாரி வந்து அதன் கிளீனர் ’முட்டுதா.. முட்டுதா..” பார்த்ததில் அந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து போனது. நாங்கள் உடைந்து போனோம். அப்பாக்கள் சந்தோசப்பட்டார்கள். ஆனால் நாங்கள் விடுவதாக இல்லை. லாரிக்காரனிடம் கொஞ்சம் பணம் வசூலித்தோம். மேலும் பஞ்சாயத்தில் அதை சரி செய்யச் சொல்லி  எழுதிப் போட்டோம். வழக்கம் போல் அது கடலில் கரைத்த பெருங்காயம்தான். அதற்கு பிறகு நாங்களே களத்தில் இறங்கி ஏரியா மக்களிடம் பணம் வசூல் செய்தோம். நான் அப்பாவிடம்  பணம் கேட்டேன். அப்பா நெற்றிக் கண்ணை திறந்தார். ”ஓகேப்பா.. ஓகே.. அத நீங்க வெறும் பாலம்னு நினைக்கறீங்க. அது வரலாறுப்பா..” என்று நான் சொல்ல அப்பா ”அடி செருப்பால..” என்றபடி என்னை அடிக்க ஓடி வந்தார். தேவையான பணம் சேர்ந்தது. ஒரு மேசனை விட்டு திருப்ப புதுப்பித்தோம். எங்களின் வரலாற்று சிறப்புமிக்க இடம் சிதிலமாவதில் எங்களில் யாருக்கும் விருப்பமில்லை. எல்லாவற்றையும் புரட்டிப் போடும் பயில்வானான காலம் எங்களையும் புரட்டிப்போட்டது. படித்து வேலை தேடி ஆளாளுக்கு பிடித்த பிடிக்காத திசையில் பயணம் போனோம். ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் சொந்த ஊருக்கு போகிற மாதிரி ஆகிவிட்டது. இப்போதும் அந்த பாலம் இருக்கிறது. ஆனால் ஒன்றிரண்டு பேரைத் தவிர பழைய நண்பர்கள் யாரும் இல்லை. எனக்கு சொந்த வீடு அங்கேதான் என்பதால் நான் அடிக்கடி போகிறேன். நான் மட்டும் தனியாய் அந்த பாலத்தில் அமர்ந்து பழைய நினைவுகளை நினைத்துப் பார்ப்பதுண்டு. ஆனால் அது அதிக சந்தோஷம் தராமல் வேதனையையே தர அதிக நேரம் அங்கே உட்கார பிடிக்காமல் எழுந்து வந்து விடுவேன். ஒரு பொங்கலுக்கு ஊருக்கு போனேன். பஸ்ஸை விட்டு இறங்கினது என் பார்வை படுகிற முதலிடம் என் பாலம்தான். அப்படிதான் நான்  பாலத்தை பார்த்தேன். நான் அங்கே பார்த்த காட்சியை என்ன சொல்வதென தெரியவில்லை. எங்கள் பாலத்தில் என் அப்பா அமர்ந்திருந்தார். கூடவே அவரது அந்த ஏரியா நண்பர்கள். அப்பா உட்பட நிறைய பேர் தற்போது தாங்கள் பார்த்த வேலைகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்கள். தண்ணீர் பாட்டில்கள். வெத்தலை பெட்டி. நொறுக்குத்தீனி சகிதமாய் அமர்ந்திருந்தார்கள். அப்பாவின் நண்பர்கள் ’இப்பத்தான் வர்றயாப்பா’ என்றார்கள். அப்பா எதுவும் பேசவில்லை. எப்படி பேசுவார்? அவர்களின் சிரிப்பிலும் பேச்சிலும் அந்த ஏரியா அதிர ஆரம்பித்தது. நான் சிரித்தபடி வீட்டை நோக்கி போவதை அப்பா கவனிப்பது தெரிந்தது. என்னை தொடர்ந்து காலமும் சிரிப்பது எனக்கு மட்டும் கேட்டது. [linesep] 33 எனக்கானது… கலகலப்ரியா இவரது கவிதைமொழி மிகவும் எளிமையானது.  அதே சமயம் நுண்ணிய அழகியல் கொண்டது.  இவரது அனுபவ பகிர்வுகள் தொடராக வந்திருக்கின்றன.  சீக்கிரம் புத்தக வடிவிலும் வர வேண்டும்.   [linesep] அவர்களின் பார்வையிலிருந்து இதை எழுத வேண்டுமானால், “நான் செத்துப் போயிருந்தேன்” என்று ஆரம்பிக்க வேண்டும். செத்தபின் கண்மூடி நீட்டி நிமிர்ந்து படுத்தபடி சுற்றியுள்ளவற்றை அவதானிக்கும் செயல் உள்ளத்தைச் சற்றுக் கிளர்த்துவதாகவே இருக்கும். ஆனால் தன்னிலை ஒருமையிலிருந்து பார்ப்பதுதான் எனக்குச் சௌகர்யம். நான் மிக உயிர்ப்புடன் இருந்தேன். எதிரிலிருந்தவள் அதே உயிர்ப்புடன் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். கழுத்தைச் சுற்றியிருந்த வெளிர் நீலச் சால்வையின் பின் பளிச்சென்ற நீல வண்ண ஆடையில் தேவதை போலிருந்தாள். வசீகரமான அந்தப் புன்னகை கண்களின் சிறு மணிகளில் ஆரம்பித்து நெற்றியில் பரந்து, புருவத்தை நீவி, கன்னங்களில் பளிச்சிட்டு, உதட்டில் குவிந்திருந்தது. துறுதுறுப்பான அவள் இருப்பின் உள்ளிருக்கும் பேரமைதி எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஆழமாகப் பரவுவதைக் குறுகுறுப்புடன் அவதானித்தேன். அதே புன்னகையைப் பிரதிபலித்தேன். அவள் போலவே ஆகியிருந்தேன். கண்களைத் தாழ்த்தி இடது கையின் மணிக்கட்டிலிருந்து விரல் நோக்கிச் செல்லும் கரும்பச்சையாகத் தெரியும் நாளத்தை நேரம் பார்ப்பது போல் பார்த்து, வலது கையின் நடுவிரலால் தடவினேன், கையைத் திருப்பிச் சற்றுப் புடைத்திருந்த நாடியை அதே விரலால் வருடினேன். மீண்டும் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். என் பார்வையை என்னுடன் சேர்ந்தே தொடர்ந்து நிமிர்ந்தவள் கண்களுக்குள் பார்த்து “என்ன?” என்று கேட்டாள். கண்களை என் கண்களுக்குள்ளேயே வைத்திருந்தாலும், அவள் என் கைகளைப் பார்த்து “அங்கே என்ன?” என்று கேட்டது என் கண்களுக்குத் தெரிந்தது. ”உயிருடன் இருக்கிறேனா என்று பார்த்தேன்” என்றேன். கருவிழிகளில் புன்னகை இம்மியளவு சுருங்கி மீண்டும் விரிந்தது. “இந்தச் சந்தேகம் எப்படி வந்தது?” “அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” “எவர்கள்?” அவள் கேட்ட பின்புதான் நானே கேட்டுக் கொண்டேன் “ஆமாம் யார் அவர்கள்?” கைகளை விரித்து “அவர்கள், ..யாரோ” என்றேன். “அவர்களில் யார் யாருக்கெல்லாம் உன் உலகத்தில் அனுமதி உண்டு?” “யாருக்குமில்லை” “கேள்வி தவறு, அவர்களைத் தவிர உன் உலகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் யாராவது…” நாளத்தை வருடிய விரலுடன் இன்னும் மூன்று விரல்களை விரித்து, மறுகையில் மூன்று விரல்களை விரித்து, அதில் ஒரு விரலை பாதி மடக்கியும் மடக்காமலும், யோசனையுடன் பார்வையை வேறோர் உலகிற்கு அனுப்பி, மீட்டு, மீண்டும் அவளைப் பார்த்தேன். பார்த்துக் கொண்டே இருந்தவள் மீண்டும் என் கண்களிலிருந்து பார்வையை விலக்காது என் கைவிரல்களைப் பார்த்து “அவர்களுமா அப்படி நினைத்துக் கொண்டிருப்பார்கள்?” என்று கேட்டாள். “இல்லை, அவர்களுக்குத் தெரியும்” “மற்றவர்கள் பற்றி என்ன?” ”ஒன்றுமில்லை” “ஒன்றுமில்லாதது பற்றி நாடிநாளங்களில் என்ன பரிசோதனை?, நீ உயிருடனிருப்பது பற்றித் தலைக்குத் தலை தந்தி அடிக்கலாமா?” “அவசியமில்லை” என் புருவத்தின் மத்தியில் பார்வையைப் பதித்து “பிறகென்ன முடிச்சு அங்கே” என்று கேட்டாள். “அவைகளை நாளாந்தம் கடக்க வேண்டியிருக்கிறது” “அதனாலென்ன?” “முடிச்சு எப்படியோ விழுந்து விடுகிறது” ”சரி, பிணங்கள் நடைபழகுவதுதான் உன் பிரச்சனையா?” “ம்ம்..” “இதோ பார், உன் குறுகிய காலத்தில் அவைகளையெல்லாம் உயிர்ப்பிக்க முடியாது, புதைக்கவும் முடியாது. அவற்றைப் புதைப்பதற்குக் கூட உன் உலகத்தில் இடம் கிடையாது, கடக்க வேண்டித்தான் இருக்கும், கடந்து போ, அவை தொலை தூரம், வெவ்வேறு பால் வீதிகளில் உருண்டு கொண்டிருக்கும் வெவ்வேறு உலகங்களுக்கிடையிலான தூரம்..” “செய்து கொண்டிருக்கிறேன்..” “பிறகென்ன?” அவளின் நீவி விட்ட நெற்றி போன்றில்லாது, உடைந்த கிரகம் போலிருந்த புருவமத்தியின் முடிச்சை அதே வலது கையின் நடுவிரலால் நீவி விட்டேன். விரலிடையில் நழுவி மீண்டும் அப்படியே நின்றது. அவள் கண்களில் சிறு இயலாமையின் சாயல் தோன்றிய மாத்திரத்தில் மறைந்தது. ஆழ மூச்சிழுத்து வெளியிட்டாள். ”உன்னால் அவற்றிலிருந்து பார்வையை விலக்க முடியவில்லை?” “இல்லை அவற்றின் பார்வையிலிருந்து என்னை விலக்க முடியவில்லை” ”ஓ, அவை உன்னை என்ன செய்துவிடும்?” “ஒன்றும் செய்யாது” “பிறகென்ன?” ”ஏதோ உறுத்தல்” “உன் இருப்பின் நிமித்தமா?” “அதுவும், அது சார்ந்தவை நிமித்தமும்” ”சார்ந்தவை நிமித்தம்? அப்படியானால் வெளியிலிருப்பவை பற்றியதில்லையா?” “ஓ..” “சார்ந்தவைகளில் சாராதவை அடக்கமா?” “அப்படித் தோன்றவில்லை” “சாராதவைகளில் சார்ந்தவை அடக்கமா?” “இருக்கலாம், இருக்க வேண்டும்” “அப்படியானால் கண்டு கொள்வது பற்றிய முடிச்சா அது? அல்லது கண்டு கொள்ளாதது பற்றியதா?” “இரண்டுமிருக்கலாம்” “அப்படியானால் அனுமதி யாருக்குமில்லாமிலில்லை அப்படித்தானே?” “ம்ம்” “கேட்பவர்களுக்கெல்லாம் வழங்குவதில்லை, வழங்கவேண்டியவர்கள் இன்னும் கேட்கவில்லை?” “கேட்க வேண்டியதில்லை” “அப்படியானால் வரவில்லை” “ம்ம்” ”ஏன் என்று யோசித்தாயா?” “இல்லை” “ஏன்?” “ஏனென்றால் எனக்கு இது தோன்றவில்லை” “சரி, நான் வந்தபோது ‘அனுமதியின்றி உட்பிரவேசிக்காதீர்கள்’ என்ற பலகையைப் பார்த்தேன்” “ஓ..” “அதனால் வராதிருக்கலாம்” “ஓ.. ஆனால் அவர்களுக்கு அனுமதி தேவையில்லையே” “உனக்குப் புரியவில்லையா? அனுமதியுடன் வருபவர்கள் கேட்டுக்கொண்டு வந்து விடுவார்கள் அல்லது சென்று விடுவார்கள்.” “ம்ம்..” “அனுமதி தேவையில்லாதவர்கள் அனுமதி கேட்க மாட்டார்கள்” முடிச்சைத் தேய்த்துக்கொண்டு அவள் கண்களையே பார்த்தேன் “ம்ம்.. பிறகென்ன..?” “பலகை” “ஓ” “கேட்கவும் முடியாது, நுழையவும் முடியாது” “ஓ.. அப்படியானால்..” “காத்துக் கொண்டிருக்கலாம்..” “எங்கே?” “பலகை எங்கிருக்கிறது?” “ஓ…?” “எப்போவாவது வாயிற்கதவு திறந்து பார்த்திருக்கிறாயா?” “கடவுளே!.. எத்தனை நேரம்…?” “காலம் என்று கேள்?” “ஆ!.. அத்தனை காலமா” “ஆமாம், எத்தனை காலமானாலும் அங்குதானிருப்பார்கள்” “ஏன் இப்படி?” “பலகைக்கு என்ன அவசியம்?” “சாராதவர்…” “அப்படியானால், நீ அங்குதான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்” “ஓ..” “பார், அவர்கள் நினைத்தாலும் வாயிலைத் தாண்டி ஒரு அடி வைக்க முடியாது..” “உண்மை!” “ம்ம்.. இன்னும் உட்கார்ந்திருக்கிறாய்” எழுந்து கொண்டேன். அவளும் என்னுடனே எழுந்து கொண்டாள். திரும்பி அவளுக்கு முதுகு காட்டி நடந்தேன். நாலைந்து அடிகளுக்குப் பிறகு ஓடிக் கதவு திறந்தேன். கை கதவின் விளிம்பிலேயே நிலைத்தது. விரலால் புருவமத்தியைத் தேய்க்கும் அவசியமில்லாது, முடிச்சகன்று, நெற்றியுடன் நெற்றியாக நீவி விடப்பட்டிருந்தது, கண்கள் தளும்பிய நீர்வழி சிரித்துக் கொண்டிருந்தன. நான் செத்துவிட்டிருந்தேன். [linesep] 34 மஞ்ச டாப் [GaneshChandra]   கணேஷ் சந்திரா “தமிழோவியம்“ இணைய பத்திரிகையை பத்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருபவர்.  பல பிரபல தமிழ் எழுத்தாளர்களை இணையத்திற்கு இழுத்து வந்தவர். நாடகம், குறும்படம் என்று பெரிதாக சிறகுகள் விரித்து பறந்து கொண்டிருக்கிறார்.  கூடிய சீக்கிரம் திரை ஊடகங்களிலும் கலக்குவார் என நினைக்கிறேன்.   [linesep] எதுக்குடா  வெளியில வர்ற சொன்னே ? அங்க பாரு.. எங்க ? அதோ… அந்த பில்டிங் கீழே என்னடா சொல்ல வர்ற ? நல்லா பாரு, மஞ்ச டாப்பு .. வாவ் !! சூப்பருடா. வா கிட்ட போய் பார்க்கலாம்.. அவசர படாதே.. யாராவது பார்த்துட போறாங்க.. செம்ம கட்டையா இருக்கு.. ஆமாம் உனக்கு எப்படி தெரியும் ? உன்னைய கூப்பிடறதுக்கு முன்னாடி நான் சும்மா போகற மாதிரி போய் பக்கத்துல நின்னு பார்த்தேன்.. சூப்பரா இருந்துச்சு அதான் உன்னைய வர்ற சொன்னேன். அடப்பாவி நீ மட்டும் கிட்ட போனீயா.. இரு நானும் போய் பார்த்திட்டு வர்றேன் சொன்னா கேளு.. நான் தான் மொதல்ல பார்த்தேன்.. அதுக்காக.. நீ மொதல்ல வந்தே அதனால மொதல்ல பார்த்தே.. சரி இப்ப என்ன செய்யலாம்.. கொஞ்ச நேரம் இங்கே நின்னு கவனிக்கலாம்.. அதுக்குள்ள போயிடுச்சுனா ?.. நம்மகிட்ட கார் வேற இல்ல ? இரு அவசரப்படாதே.. எங்கேயும் போகாது.. அப்படியே போனாலும் இன்னொன்னு மாட்டும்னு அர்விந்த் சொன்னான். யாரு கலிபோர்னியாவுல இருக்கானே அவனா ? ஆமாம்.. அவன் இந்த ஊருக்கு வந்து 2 வருஷம் ஆகுது.. இந்த மாதிரி நிறைய மாட்டியிருக்காம் அவனுக்கு. நான் அமெரிக்கா வந்த போதே சொன்னான்.. “அமெரிக்காவுல ஈசியா மாட்டும்.. கொஞ்சம் பொறுமையா இருந்தா வாரம் ஒன்னு மாட்டும்னு, அப்புறம் குஜால்தான்னு” சரிடா.. அவன் கலிபோர்னியாவுல, ஹாலிவுட் பக்கத்துல இருக்கான்.. வெள்ளைகாரன் அதிகம் இருக்குற ஏரியா, அவனுக்கு மாட்டும். நாம இருக்குறது நியுஜெர்சி… இந்தியர்கள் ஜாஸ்தி, இங்க இப்படி அப்படி எதுனா மாட்டினாதான். ஹூம்.. அதுவும் சரிதான், அப்ப வா .. சிக்குதானு பார்க்கலாம். வா !! வா !! சீக்கிரம் வா.. யப்பா ரொம்ப அலையற.. இரு யாரும் பார்க்கலை.. சீக்கிரம் ரெண்டு காலை பிடி நான் பின்னாடி பிடிக்கறேன்.. அப்படியே இந்த மஞ்ச சாய்வு நாற்காலிய நம்ம ரூமுக்கு கொண்டு போயிடலாம். எப்படித்தான் இந்த மாதிரி நல்ல சேரை தூக்கி போட மனசு வருதோ இவனுங்களுக்கு. சும்மா இருடா.. இந்த மாதிரி நாலு பேர் தூக்கி போட்டாதான் நமக்கு ஈசியா பத்து காசு.. சே! பத்து செண்ட் செலவாகாம இதெல்லாம் கிடைக்குது. [linesep] 35 கடவுச் சொல்லாயிரம்! [essexsiva]   Essex சிவா பொதுவாக எனக்கு பாஸ்வேர்ட் என்றாலே அலர்ஜி. எப்படியும் மறந்து தொலைக்கப் போகிறேன். என்னத்த நினைவில் வைத்துக் கொள்வது.  இவரோ ஆயிரம் கடவுச் சொற்களை உருவாக்கி அரை அட்மின் ஆகியிருக்கிறார்.  அருமையான சிறுகதை வடிவத்தில் ஓர் அனுபவ பகிர்வை எழுதியிருக்கிறார்.   [linesep] இன்றைய நவீன உலகில் கணிணியின் பயன்பாடு எந்தளவிற்கு என்பது இந்த கட்டுரையை கணிணியில் படிக்கும் நமக்கு தெரியாததில்லை. கூடவே அதன் கடவுசொற்களும்… கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் கடவுசொல் புதில்லை – ‘அண்டாகாகசம்’ காலத்திலிருந்தேதான் இருக்கிறது. அதன் வடிவம், உபயோகிக்கும் முறைகளும் இடங்களும்தான் மாறிவிட்டன. அவைகளை பராமரித்தல் அவ்வளவு சாதாரண காரியமில்லை, அதுவும் என்னை மாதிரி மறதிக்காரர்களுக்கு. அதைப்பற்றி கொஞ்சம் சொல்கிறேன். என்னிடம் ஒரு கடவுச்சொற்கள் பட்டியல் எக்செல் வடிவில் இருக்கிறது. அதில் என்னல்லாம் இருக்கிறது? எனது நிறுவன மின்னஞ்சல், வாடிக்கையாளர் (customer) மின்னஞ்சல், வழக்கமான விமான நிறுவன லாகின், உள்ளூர் மற்றும் இந்திய வங்கி கடவு சொற்கள், (இரண்டிரண்டு) அலைப்பேசிகள் (மனைவி மற்றும் என்னுடையது) எனது போர்ட்போலியாவில் உள்ள ,மூன்று அப்ளிகேஷன்களின் கடவு சொற்கள் குறைந்த பட்சம் மூன்று enviroments (DEV, INT, STAGE) அப்புறம் டேட்டாபேஸ்கள் மற்றும் மற்ற tools… (அணியில் உள்ளவர்களிடம் இவை இருக்கும்; இருந்தாலும் அவர்கள் விடுமுறை/உடல்நிலை சரியில்லாமல் போகும்போது…) அப்புறம் பெரும்பாலவற்றின் கடந்த மூன்று, நான்கு பழைய கடவுச்சொற்கள்… ஒரளவிற்கு ஏன் என்று தெரிந்திருக்கும். அவற்றை வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியிருக்கும். அப்போது கடந்த மூன்று நான்கு முறை உபயோகித்தவற்றை மறுபடி உபயோகிக்கமுடியாது; எனவே அவற்றை வைத்திருத்தல் நலம். மனமென்னும் கலைடாஸ்கோப்பில் எண்களையும் எழுத்துக்களையும் சிறப்பு எழுத்துக்களையும் போட்டு குலுக்கி எடுத்து மாற்றுவது அவ்வளவு எளிதல்ல, எண்ணுவது போல! ஒவ்வொரு முறை மாற்றும்போது இல்லையென்றாலும் பல தடவைகள் இந்த கடவுசொல்லால் என் முதல் வேலையில் நான் பட்ட பாடு மின்னிப்போகும். …தமிழ் பதிவுலகில் ஒரு புகழ்பெற்ற பதிவர் சொல்வதுபோல் சமீபத்தில் மத்திய தொண்ணூறுகளில் சென்னையை அடுத்த(!) பெருங்குடியில் மிண்ணணு (electronic) தொழிற்பேட்டையில் இருந்த ஒரு தொலைபேசி தயாரிக்கும் தொழிற்சாலையில், EDPயில்தான் எனது முதல் வேலை…. நேர்முகத்தேர்விற்கு போனது, அது நடந்தவிதம், தேர்வான காரணம் எல்லாம் சில பல சிறுகதைகளுக்கு தேறும். இன்று நான் சொல்லவிழைவது அதற்கப்புறம் நடந்த சம்பவம்…. அன்றைய கால கட்டத்தைப்பற்றிய சின்ன சித்திரம்… நேர்முகத்தேர்விற்கு மாம்பலத்திலிருந்து சைதாப்பேட்டை வரை ஒரு பஸ், பின் அங்கிருந்து மத்திய கைலாஷ் நிறுத்ததில் இறங்கி அந்த கோவிலுக்கு எதிர் சாரியில் இருந்த பெட்டிக்கடை பக்கத்திலிருந்து பெருங்குடிக்கு ஆட்டோவில் போக இருபது ரூபாய் கொடுத்தேன்…அதிகம்தான்… தொழிற்சாலைப்பற்றிய சின்ன சித்திரம்… மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை முன்னூறிற்குள்தான் இருக்கும். நான்தானே மாதக்கடைசியில் சம்பளஸ்லிப் அருமையான NEC பிரிண்டரில் (எம்டி ஹாங்காங்கில் இருந்து கொண்டுவந்தவைகளில் உருப்படியான கொஞ்சத்தில் இதுவும் ஒன்று) அடித்துக்கொடுப்பேன். தொழிற்சாலை – இருதளங்களான கட்டிடம். மேல்தளத்தில் ஆர்அண்ட்டி மற்றும் மெயின் சர்வர் அறை. கீழ்தளத்தில் நிர்வாக அலுவலகம் (EDPயும் அடக்கம்), Warehouse, அசெம்பளி லைன், எம்டி அலுவலகம் இத்யாதி, இத்யாதி). இரு ஜிஎம்கள், சில இன்ஜினியர்கள், இரு டைப்பிஸ்ட்கள், ஒரு ஓட்டுனர், EDPயில் மொத்தம் மூன்றே பேர்! – மூத்தவர் சாஜித்அலி, நான் மற்றும் ஒரு ஜூனியர் (என்னை விட) புரோக்கிராமர். EDP மென்பொருள்கள் – FoxPro 2.0, Clipper, LAN, Wordperfect, ஒரு அக்கவுண்டிங் சாப்ட்வேர் (Windows 3.1 அடுத்த வருடம்தான் எம்டி ஹாங்காங்கிலிருந்து கொண்டுவருவார்). சர்வரின் Super User கடவுச்சொல் என் பொறுப்பில்தான் இருந்தது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுவேன், என் விருப்பப்படி. அம்மா பெயரிலிருந்து இளங்கலையின்போது என்னைக்கவர்ந்த ஜூப்ளியின் பெயரிலிருந்து (மணியம் செல்வன் கதாநாயகி முகம் போலவே இருக்கும்) பிரிய கணேஷ், வசந்திலிருந்து பல்வேறு பெயர்கள்…இது எனக்கே எனக்கான ஒரு இடம், யாருக்கும் தெரியவேண்டியதில்லை, சொல்லவேண்டியதில்லை..மாற்றும்போது உற்சாகமாக இருக்கும். எம்டி ஒரு சுவாரசியமான பின்புலம். அறுபதுகளில் ஜெர்மனி போய், செட்டிலாகி, ஜெர்மானிய பெண்ணை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி பின் ஏதோ ஒரு கட்டத்தில் ஹாங்காங் வந்து அங்கிருந்து கார்ட்லெஸ் தொலைப்பேசி உபகரணங்களை இந்தியா அனுப்பி, பெருங்குடியில் அவைகளை இணைத்து ஆஸ்திரேலியா,நியுசிலாந்து நாடுகளுக்கு (100% EOU) அனுப்புவதுதான் அவரது திட்டம். ஓரளவிற்கு சுமாராக சமாளித்துதான் வந்தார். கணீரென்ற ஆங்கிலத்தின் நடுவே அப்பப்ப கொழ கொழ பிராமண தமிழ்…. அறைக்கண்ணாடி கதவை திறந்து போகும்போது பின்னால் வருபவர்களுக்காக திறந்து பிடித்திருப்பார். பின்னால் வரும் பணியாளர்கள் எம்டியே கதவை திறந்து காத்திருக்கிறாரே என்று புல்லரித்துப்போவார்கள். இது யாரும் யாருக்காவும் சாதாரணமாக செய்யும் விஷயம் என்பது பின் வருடங்களில் வெளி நாடுகளுக்கு போன(வந்த) பின்தான் எனக்கு தெரியவந்தது! ஆரம்பக்காலங்களில் EDP தினசரி அலுவல்களில் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளானேன். கல்லூரி முதுகலைப்பட்டம் வேலைக்காகவில்லை. 19B சைதாப்பேட்டை ஸ்டாப்பிலிருந்து (அப்போது, இப்போது இருக்கும் நிறுத்தம் இல்லை) காலை 7:15 அளவில் கிளம்பும்போது கையில் Foxpro அல்லது LAN புத்தகங்களை வைத்துக்கொண்டிருப்பேன். பின்னர் சாஜித் அலி ஸாரின் புண்ணியத்தில் Foxpro reports களில் தேர்ந்து பெற்று ஜிஎம்களின் கண்களை தைரியமாய் பார்த்து பதில் சொல்ல ஆரம்பித்தேன். இப்போது உங்களுக்கு ஓரளவிற்கு அன்றைய சித்திரம் கிடைத்திருக்கும். அன்றைய நாளிற்கும் இன்றைக்கும் மிகப்பெரிய வித்யாசங்கள், சாலை, சம்பளம், செலவு…தீயணைப்பு துறை வைத்திருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. விளக்கவேண்டியதில்லை. ஆனால் மிகப்பொதுவான ஒன்று – அன்றும் இன்றும் – மின் தடை! காலை 8:30 மணிக்கு பேக்கப் கார்ட்ரிட்ஜ் வைத்து ஆரம்பிப்பேன் – மருந்தீஸ்வரை நினைத்துக்கொண்டு. அவர் மனம் வைத்தால் அன்று பேக்கப் சுமுகம், இல்லையெனில் சுத்தம். பின்னாளில் போர்ட் மாதிரி பெரிய நிறுவனங்களில் Disaster Recovery திட்டமிடும்போதேல்லாம் இந்த பேக்கப் கார்ட்ரிட்ஜ் நினைவின் மூலையில் இருந்துகொண்டே இருக்கும் – தொலைக்காட்சி சேனல் சின்னம்போல! …ஆச்சா , இப்போது சம்பவம், சம்பவம் என்று சொல்ல வருகிறேனே அன்றைக்கு போகலாமா… அன்று காலை ஒரு பதினொன்று மணியளவில் வழக்கமான மின் தடை – ஏர்கண்டிஷனர் அடங்கி இரு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. சூரி ஸார், ஜிஎம், தடதடத்துவந்தார். “எம்டி, அந்த பாம் (BOM) ப்ரிண்டவுட் கேக்கிறார்பா” மூச்சு வாங்கினார். சூரி ஸாருக்கு ஒரு காரணப்பெயர் உண்டு – சரியான அதிர்ச்சி பைத்தியம். எல்லாவற்றிக்குமே அதிர்ச்சியாவார். - ‘கரெண்ட் போயிருச்சா?” - ‘கரெண்ட் வந்திருச்சா?” - ‘அமல் இன்னுமா வரலை?” - ‘அமல் அதுக்குள்ள வந்தாச்சா?” (ஓட்டுனர்) - ‘ராத்திரிக்கு அடையா?!” (மாமியுடன் போனில்) எனவே நான் பெரிதாய் ரியாக்ஷன் காட்டாமல் விஷயத்தை வாங்கினேன். அது இதுதான்: எம்டி போன வாரம் ஒரு புது மாடலின் BOM (Bill of Material) ஹாங்காங்கிற்கு பேக்ஸ் அனுப்பியிருந்தார். அதில் ஏதோ குழப்பம். ஒரிஜனலை மீண்டும் டேட்டாபேஸிலிருந்து மறுபடியும் ஒரு ப்ரிண்டவுட் தேவை… “சட்டுனு ப்ரிண்ட் கொடுப்பா, எம்டிக்கு ப்ளைட் டயமாயிட்டது”… ப்ரிண்டவுட்டா…இப்பவேயா… இருவரும் ஒரு சேர்ந்து மெதுவாய் கணிணியைப்பார்த்தோம், ஓசைப்படாமல் பக்கத்தில் வந்து நின்ற குட்டி டைனசோரைப்பார்ப்பது போல. “அடக்கடவுளே, இந்த நேரம் பார்த்தா கரெண்ட் போகணும், எப்ப வருமோ?” நெளிந்தார்; முகத்தை கர்சீப்பால் துடைத்துக்கொண்டார்; வெளியேறினார்… காபி மணி கொண்டுவந்த பிரமாதமான காபியை உறிஞ்சிக்கொண்டே அட்மின் அறையை விட்டு வெளியே வந்து கார் ஸ்டாண்ட் பக்கம் நின்றேன். ஒரு அக்டோபர் மாத சமயம். நேற்று இரவிலிருந்தே நசநசவென தூறல். ரம்ய மணம். மாலை திரும்பவேண்டிய பழைய மகாபலிபுரச் சாலை எப்படியிருக்குமோ என்ற யோசனை வந்தது. காலையில் வரும்போதே கந்தன்சாவடி பக்கத்தில் சாலை ஓரத்தில் இரு லாரிகள் சேற்றில் சிக்கியிருந்தன.  மழை என்றால் எந்த ஒரு எண்ணத்திற்கும் முன்னால் முதலில் பய மின்னல் தோன்ற ஆரம்பித்தது சென்னை வந்தபிறகுதான்… மரங்கொத்தி மரத்தை கொத்துவது போல சத்தம்… டைப்பிஸ்ட் மைதிலிதான் கண்ணாடிச்சுவரின் பின்னின்று தட்டிக்கொண்டிருந்தார். கையை மேலேக்காட்டினார்…மின்சாரம் வந்துவிட்டது! ஒரு பாட்ஸ்மென் அவுட் ஆகி பெவிலியன் மறைந்தபின் சில நிமிடங்களில் தோன்றும் அடுத்த பாட்ஸ்மென் மைதானத்திற்குள் குற்ற உணர்வுடன் ஓடி வருவாரே அதே மாதிரி நானும் என் அறைக்கு ஓடினேன். சுளீரென்று உறைத்தது. மின்சாரம் போனபின் வழக்கமாய் மேலே போய் சர்வரை அணைத்துவருவேன். இல்லையெனில் சில சமயங்களில் LAN தானாக mount ஆகாது; மேனுவலாகத்தான் up செய்யவேண்டும். (குழப்புகிறேன் என்றால் ஒன்னும் பாதகமில்லை, கவலை வேண்டாம்!) இண்டர்காம் துடித்தது. சூரி ஸார்தான்! “நான் இங்க மேல சர்வர் ரூமில்தான் இருக்கேன். ப்ரிண்டவுட் கொடுத்திட்டயா, இதோ வந்திட்டே இருக்கேன்” “ஓ ஸார்” “என்னப்பா” இயல்பான அதிர்ச்சி. “சர்வர் சரியா அப்பாகலை போல இருக்கு, இதோ நான் மேலே வரேன் ஸார்” “என்னப்பா இது..நான் பார்க்கறன்…ஆமா கர்சர் துடிச்சிக்கிட்டு இருக்கு…சுப்பர் யுசர் பாஸ்வேர்ட் கேக்கறது. அப்படியே போன்லியே சொல்லுப்பா. நான் அடிச்சிடறன்” …பாஸ்வேர்ட் எனக்கு நன்றாக நினைவிலிருந்தது…அய்யோ சொல்ல முடியாதே..! “நானே வரன் ஸார், இதோ…” “இல்லை ஸார், அது வந்து…” … அதுவரை சாதாரணமாக இருந்த மைதிலி சட்டென விறைத்தார் – காட்டில் மான்கள் காது விறைக்குமே அது மாதிரி. என்னாச்சு? எம்டி உள்ளே நுழைந்திருந்தார். “சூரி எங்க?” “மேல ஆர்அண்ட்டியில(R&D) ஸார்” “அங்க என்ன பண்றான், ஒரு BOM ப்ரிண்டவுட் கேட்டிருந்தேனே?” (சூரி அவரது மாமா பையன்) “இல்ல, கரெண்ட்…” “அதுதான் வந்தாச்சே” “இதோ” இண்டர்காமில் சூரி கதறிக்கொண்டிருந்தார். நான் சரியாக கேட்காதது மாதிரி “இதோ வந்திட்டன்” என்று பட்டபகலில் கொள்ளையடித்துவிட்டு கடையை விட்டு வெளியேறுபவது போல வெளிவந்து நாலு நாலு எட்டாக மாடிப்படிகளை தாண்டி ஆர்எண்டியின் கதவை திறந்து உள் சென்றால், சூரி ஸாரைச்சுற்றி இஞ்ஜினியர் ரமேஷும் கனக லட்சுமியும். “என்னப்பா, போனிலியே சொல்லவேண்டியதுதானே” தயக்கமே இல்லாத எரிச்சல் சூரி ஸாரின் குரலில். அது உயர்ந்துகொண்டே போனது நான் அவரை நெருங்கிக்கொண்டிருப்பதால் மட்டும் அல்ல! “ஒரு நிமிஷம் ஸார், பாஸ்வேர்ட் சரியான்னு ஒரு டவுட்டு, நீங்க தப்பாய் மூன்று தடவை அடிச்சு அது லாக்காய்டுச்சுன்னா…” சொல்லிக்கொண்டே தடதடவென்று தட்டச்சினேன். சூரி ஸார், பாதி கண்களில் நேராகவும் மீதிக்கண்களில் கண்ணாடி வழியாகவும் எட்டிப்பார்ப்பதிற்குள் தட்டியாயிற்று! FINE! “என்னப்பா அந்த பாஸ்வேர்ட்?” விடாது சூரி! “கீழே எம்டி வெயிட் பண்றார் ஸார்…ப்ரிண்டவுட்…” கீழே நோக்கி மறுபடியும் ஓட்டம். மனதிற்குள் முழுதிருப்தி! சின்ன மிஷன் இம்பாஸிபிள் சென்னையில் நடத்தியிருக்கிறேன்! ப்ரிண்டவுட் ஓடிக்கொண்டிருக்கும்போதே பாஸ்வேர்டை மாற்றி விட்டு (எந்த கன்ஸோலிருந்தும் மாற்றலாம்) நிமிர்ந்த போது சூரி ஸார் மூச்சு வாங்க எதிரில் நின்றார். மூச்சு பூராவும் சந்தேகம், சந்தேகமே இல்லை! மறுபடியும் எம்டி உள்ளே வந்துகொண்டிருப்பது கண்டு ப்ரிண்டர் பக்கம் வேகமாய் நகர்ந்தார்… ..அப்புறம் எம்டி புயல் விமான நிலையத்தை நோக்கி போனதும் நான் மதியத்தில் சூரி அறையின் உள்ளே போனேன். அவர் ரிலாக்ஸ்டாக சாய்ந்திருந்தார், பாவம். அவர் எதுவும் ஆரம்பிக்க முன்னரே “ஸார், பாஸ்வேர்ட் இதில இருக்கு” என்று அந்த கவரைக்கொடுத்தேன். “சாஜித் ஸார்க்கும் ஒரு காப்பி வைச்சிருக்கேன்” ஒன்றும் சொல்லவில்லை முதலில். பின் தீனமாக “எப்பப்பா மாத்தணும்?” “அதுக்கு இன்னும் மூணு மாசமிருக்கு ஸார். எவ்வரி த்ரீ மன்ஸ் ஒன்ஸ்..” சொல்லிவிட்டு திரும்பும்போது கிடுக்கிபிடி ஒன்று காத்திருக்கிறது பற்றிய சாத்தியமே மனதில் படவில்லை. “இன்னும் மூணு மாசமிருக்கா…கடைசியா எப்ப மாத்தினது” புறத்தோற்றத்தில் என்னவோ மெலிதான தொப்பையும் குச்சி கைகளும் கவலைக்கண்களும்தான். அகத்தில் ஸ்பைடர் மேன் பட வில்லனாகத்தான் தோன்றினார்! இந்த அறிவையெல்லாம் அசெம்பளி லைன்ல காட்டினா எவ்வளவு நல்லாயிருக்கும்! “அது…ரெண்டு வாரத்திற்கு முன்னனு நினைக்கிறேன்…சாஜித் சார் கிட்ட கேக்கறன்…அவர்தான் மாத்தினார்” “அவர் எப்ப லீவு முடிஞ்சி வரார்?” “வர திங்கள்…” என்றோ பட்ட வாழைக்கறை மாதிரி இவர் சந்தேகக்கறை போகப்போவதேயில்லை, போகவேயில்லை, கடைசிவரை! அப்படி என்னத்தான் அந்த கடவுச்சொல்? பெரியதாய் ஒன்றுமில்லை. ஸில்க்ஸ்மிதா! (இரு Sகளும் பெரிய எழுத்துகள்!). இரு வாரங்களுக்கு முன் பாஸ்வேர்டை மாற்றிய நாளின் பரபரப்பு செய்தி இந்த நடிகையின் தற்கொலை! சட்டென்று வைத்துவிட்டேன்! இதைச்சொல்ல என்ன தயக்கம்,கூச்சம்? தெரியவில்லை. ஒரு வேளை சுகாஸினி என்று வைத்திருந்தால் இவ்வளவு தயக்கமிருக்காதா? மேலே ஆர்ண்டி போனவுடன் மெலிதாய் சொல்லியிருந்திருக்கலாம், ஏன் சொல்லவில்லை? கனகலட்சுமி இருந்ததாலா? என்னவோ தெரியவில்லை….சூரி ஸாரிடம் சொல்லவில்லை, அவ்வளவுதான்! அப்புறம் பல நாட்கள் இதைப்பற்றி யோசித்து புன்னகைத்திருக்கிறேன்!… முடிப்பதிற்குள் ஒரு விஷயம்.  ஆரம்பத்தில் ஒரு பட்டியல் எக்ஸெல் வைத்திருப்பதாக சொன்னேன் இல்லையா? அந்த எக்ஸெல்லை “திறப்பதிற்கு” ஒரு கடவுச்சொல் வைத்திருக்கிறேன்! பின்ன நாளை பின்ன யாராவது மடிக்கணிணியை ஹாக் செய்து இந்த ஃபைலை திறந்துவிட்டால்! அது என்ன என்பது…கண்டிப்பாய் ஸில்க்ஸ்மிதா இல்லை! [linesep] 36 கேரக்டர்: வைத்தி மாமா [Vasu Balaji]   வாசு பாலாஜி இவருடைய ‘கேரக்டர்’ இடுகைகளை வைத்து ஒரு சினிமாப் படமே எடுக்கலாம்.  அவ்வளவு சுவாரசியமான கேரக்டர்களை கண் முன்னே நடமாட விடுவார். கூடிய சீக்கிரம் ஒரு நாவல் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன். [linesep] வைத்தி மாமாவை நீங்கள் பாராமல் இருந்திருக்க முடியாது. எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும் இருப்பவர் அவர். பொதுவான ஒரு தோற்றம் போலவே பொதுவான ஒரு தொழிலும் அவர்களுக்கு உண்டு. அந்தக்காலத்து பி.ஏ. லிட்ரேச்சர் ஆஃபீஸர்களுக்கு அந்தக் காலத்து சிக்ஸ்த் ஃபார்ம் (இந்தக்காலத்து எம்.ஏக்கு சமமாக்கும் என்ற அலட்டலுடன்) எனக்கு டிக்டேட் பண்ணக்கூடிய அளவுக்கு உனக்கு லேங்க்வேஜ் போதுமா என்ற திமிருடனும், நான் சொல்ற ஸ்பீடுக்கு எழுதீடுவியா என்ற கித்தாப்புடன் இருக்கும் அதிகாரிக்கு ஸ்டெனோவாக ஒரு லவ் ஹேட் ரிலேஷன்ஷிப்புடன் இருப்பவர்கள். தனிப்பட்ட ரீதியாக, டெரர் ஆஃபீஸர் வீட்டில் எலி என்ற ரகசியத்தை கான்ஃபிடன்ஷியலாகப் பரப்பும் தூதர்கள். தன்னைத் தவிர யாரும் நெருக்கமாகிவிடாமல் கீழ்மட்ட ஊழியர்களைப் போட்டுக் கொடுத்தே பேர்வாங்கும் புலவர்களும் இதில் உண்டு. வெள்ளிக்கிழமை ரேசுக்கு நம்பர் கிடைக்காமல் அல்லாடும் அதிகாரியின் கடுப்பைப் புரிந்துக் கொண்டு யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பது, வெளியூர் டூர் போகும்போது தீர்த்தவாரி கொண்டாடும் ஆஃபீசர்களுக்குத் தோதான ப்யூனை செலக்ட் செய்து கொண்டு போவது, மதுரை டூட்டியானால் இருட்டுக் கடை அல்வாவும், சுங்கடிப் புடவையும் விற்கும் ஊழியரின் தகவல், திருச்சியானால் மாவடு, மாம்பழம், மடிக்கு வாழைமட்டை இத்யாதிகள் போன்ற பொது அறிவு மிக முக்கியம். பிட்மன் வேண்டுமானால் பென்ஸிலில் எழுதி இருக்கட்டும், நாங்கள் இங்க் பேனாவோ, பால்பென்னிலோ எழுதுவோம் என்ற தெனாவட்டும், ‘நீ திக்கித் திணறி குடுக்கற டிக்டேஷனுக்கு ஷார்ட் ஹேண்ட் ஒரு கேடா’ என்று சொல்லாமல் நக்கலடிக்கும் லாங் ஹேண்ட் நோட்ஸ் எழுதும் குசும்பும், இதற்காகவே எங்கேயோ ட்ரெயினிங் எடுத்தமாதிரி இருந்தவர்கள் இவர்கள். சக ஸ்டெனோ பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது கிழவியோ குமரியோ, ஆஃபீசரின் ‘அந்தரங்க’ என்பதை அழுத்தி காரியதரிசியாகப் பரப்புபவர்கள். இளம் வயதானால் டெரிலின் ஷர்ட்டும், கத்தி முனை டெரிகாட்டன் பளபளா பேண்டும், மினுக்கும் ஷூவுமாக பந்தாவும், நடுத்தர வயது தாண்டினால் தொளதொளா பேண்டு அல்லது வேட்டி, இஸ்திரி காணாத சட்டை (நடு முதுகில் கொடியில் உலர்த்திய கோடு அணில் மாதிரி தெரியும்), ஏரோப்ளேன் டயர் செருப்புமாக பரிணாம மாற்றம் அடைந்தவர்கள். எழுதுவது பேனாவில் என்றாலும், ஸ்டெனோ என்பதற்கு அடையாளமாக கூராக சீவிய பென்ஸிலும், காலிகோ அட்டைக்குள் செருகிய ஷார்ட் ஹேண்ட் நோட்டும் கவச குண்டலங்களாகக் கொண்டவர்கள். வைத்தி என்கிற வைத்தீஸ்வரன் இதற்குரிய சகல அடையாளங்களும் கொண்டவர். பெரும்பாலும் சந்தனக் கலர் டெரிலீன் ஷர்ட், காப்பி கலர் பேண்ட், நெற்றியில் பட்டையாக விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் சிந்தூரம், ஐயப்பன் கோவில் கருப்பு மை என்று சகலமும் இருக்கும். சுமாரான உயரம், எச்சில் விழுங்கினால் தெரியும் பல்லி வெள்ளை நிறம், அலையலையான முடி, குறுகுறு கண்கள், கண்ணாடி, மழுங்கச் சிரைத்து படிகாரம் பாலிஷ் போட்ட முகம், தாமரைப் பூவிதழ் நிறத்தில் மெல்லிய உதடுகள், மெலிந்த கையில் ஃபேவ்ரி லூபா கடிகாரம், விரல் நுனிகளில் காலைப் பூஜையின் அட்சதை மஞ்சள், எப்போதும் சிரித்த முகம் என்று லைவ்லியாக இருப்பார். காலையில் வந்ததும் டைப்ரைட்டருக்கு மூடிய தகரக் கூட்டின் இரண்டு பக்கப் பூட்டுக்களை கழற்றி, டேபிள் அறையிலிருந்து டங்க்ரி துணியால், குளுப்பாட்டிய குழந்தை மாதிரி வாஞ்சையோடு துடைத்து, கவரைக் கழற்றி டைப்பிங் பேஸ்கட்டில் ப்ரஷ் செய்து திரும்பப் பூட்டி, பதக்க இரண்டு உள்ளங்கையும் ஊன்றி கண்ணில் ஒற்றிக் கொள்ளும்போது வாய் முணு முணுக்கும். ஒரு வேளை டைப்ரைட்டர் அகவலோ, அந்தாதியோ அவரே இயற்றி இருக்கக் கூடுமாவென சந்தேகம் பலருக்கும் உண்டு. பிறகு டேபிள் கண்ணாடியின் கீழ் இருக்கும் வெங்கடாசலபதி, லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார், குருவாயூரப்பன், அண்ணாமலையான், முருகன் இத்யாதியோடு பல சாமியார் படங்களுக்கும் முணுமுணுப்பும் கண்ணொற்றுதலும் நடக்கும். பிறகு மேல் சட்டைப் பாக்கட்டிலிருந்து புறப்படும் பாக்கட் டைரியின் உள் மடிப்புகளில் இருக்கும் சில்லறை தெய்வ வழிபாடு, ஷார்ட் ஹேண்ட் நோட்டுக்கு ஸ்பெஷலாக முகத்தோடு ஒற்றி ஒரு நமஸ்காரம், கால் இண்டிகேட்டர் பச்சையில் இருக்கிறதா என்ற செக்கப்புக்குப் பிறகு ப்யூனை அழைத்து ஆஃபீசரை வரவெற்று ப்ரீஃப்கேஸ், சாப்பாட்டுப் பை கொண்டு வர அனுப்பி, அஃபீஸர் ரூம் துடைத்திருக்கிறதா, ஃபைல் எல்லாம் நேராக இருக்கிறதா, அவுட் ட்ரே சுத்தமாக இருக்கிறதா, டெலிஃபோன், இண்டர்காம், காலிங் பெல் செக்கிங் எல்லாம் முடித்து அயற்சியோடு வந்து ஒரு வாய் தண்ணீர் குடித்து முடிக்க, சார்வாள் வந்திருப்பார். ‘குட் மார்னிங் சாரோடு உள்ளே போய், அன்றைய கடைமைகளான மச்சினிக்கு டிக்கட், மாமனாருக்கு எமர்ஜன்ஸி கோட்டா தகவல், காசிச் செட்டித் தெருவில் வாங்க வேண்டிய பன்ஸி ரவைக்காக பிதுக்கி எண்ணிக் கொடுத்த சில்லரை ஆகியவற்றோடு வந்தால் அப்புறம் ஆரம்பிக்கும் வைத்தி மாமாவின் ராஜ்ஜியம். ஆர்டர் அதகளம் பறக்கும். சீனியர் ஸ்டெனோவாக இருந்தும், லேட்டஸ்டாக கோத்ரஜ் ஏ.பி., ரெமிங்டன் மெஷினெல்லாம் ஒத்து வராது. பழைய ஹால்டா மெஷின்தான். பக்கத்தில் குட்டியாக போர்ட்டபிள் ப்ரதர் டைப்ரைட்டரும் இருக்கும். வைத்தி டைப் அடிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் ரசனை உள்ளவர்களுக்கு அது ஒரு கச்சேரி. சில நேரம் மணி அய்யரின் அவுட்வாண சங்கதியாக, சில நேரம் பாலக்காடு மணி அய்யரின் ஃப்ரண்களாக, சில நேரம் சிவமணியின் ட்ரம்ஸாக ரசிக்க முடியும். இன்றைக்கு வேர்ட் ஃபைலில் ஃபார்மட் செய்வதற்கே மூச்சுத் திணறிப் போகும் வேளையில், அந்த வேகத்தில் அடிக்கும் போதே கூடிய வரை வலது பக்க மார்ஜினும் ஒழுங்காக, மேல் கீழ் மார்ஜின் சீராக, கடைசிக் கார்பன் காப்பியிலும் எல்லா எழுத்தும் ஒரே தெளிவுடன் இருக்கும்படியான கலைஞன் வைத்தி. ஒரு எழுத்து விட்டுப் போனதோ, ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு கரக்டிங் ஃப்ளூயிட் போடுவதோ, எக்ஸ் அடிப்பதோ கிடையவே கிடையாது. பொதுவாக ஸ்டெனோக்கள், அதுவும் உயர் அதிகாரியின் ஸ்டெனோக்கள் காசுக்காக எக்ஸ்ட்ரா வேலை பார்ப்பது அரிது. வைத்தி மாமாவுக்கு அதெல்லாம் பொருட்டில்லை. வைத்தி மாமா டைப்பிங் என்றால் ப்ரூஃப் பார்க்கத் தேவை இல்லை என்பதால், ஊழியர்களின் வீட்டுக் கடன் அடமானப் பத்திரங்கள், ஒப்பந்தங்கள், காண்ட்ராக்ட் ஒப்பந்தங்கள், அலுவலக விசாரணை மனுக்கள் என்று பல வேலைகள் தேடி வரும். அத்திப் பூத்தாற்போல் டிக்டேஷனும் உண்டு. களைத்த விரலைச் சொடுக்குவது, பெருமூச்சு, சலிப்பு ஒன்றும் காணமுடியாது. இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் ஆஃபீஸ் அக்கப்போர்கள், கிசுகிசுக்கள், இதர ஆஃபீசர்களின் நிறை குறைகள் பற்றிய விமரிசனம் எல்லாவற்றிற்கும் எங்கிருந்து நேரம் ஒதுக்குகிறார் என்பது யாரும் அறியாத ஒன்று. வைத்தி மாமா, சில நேரம் மாமா என்று அழைக்கப்படுவதற்குக் காரணமும் உண்டு. மனுஷனுக்கு ஒரு குணக்கேடு உண்டு. ஒரு ஊகமாக வேறு யாரும் செய்ய வாய்ப்பில்லை என்று ஏகோபித்த கருத்துடன் இருந்தாலும் நிரூபிக்கவும் முடியாமல், கையும் களவுமாக பிடிக்க முடியாமல் வைத்தி மாமா செய்யும் ஒரு வேலை கூலரில், கக்கூஸ் கதவுகளில், லிஃப்டில் என்று ஜோடி சேர்த்து எழுதுவது. எங்கெங்கு காணினும் கமலா (ஹார்ட்டின் ஏரோ) அனந்து, டெய்ஸி/சுந்தரம், மெஹர்/கார்த்தி என்று சீர்திருத்தக் காதல் உட்பட சகலமும் காணலாம். கொடுமை என்னவென்றால் இது குறித்து ஆஃபீசரிடம் முறையிட பெர்மிஷன் கேட்டு வரும்போது மாமா அவர்களுக்கு ஆதரவாகத் திட்டும் திட்டில் வேறு யாராவது எழுதி இருந்தால் தற்கொலையே செய்துக் கொள்ளக் கூடும். யாராவது பிடிக்காத ஆட்கள் என்றால் மொட்டைப் பெட்டிஷன் போடுவது உபரிப் பொழுது போக்கு. மாமாவுக்கு மாதம் ஒரு முறை எப்படியாவது தீர்த்தவாரி ஆகிவிடும். காண்ட்ராக்ட் கிடைத்த மகிழ்ச்சியோ, கல்யாணம் நிச்சயமான கொண்டாட்டமோ, அலுவலகப் பரிட்சை பாசோ, மகன்/மகளுக்கு வேலையோ ஏதோ ஒரு சாக்கில் நடக்கும் பார்ட்டியில் வைத்தி மாமா உற்சாகமாகக் கலந்து கொள்வார். மூடியைத் திறக்கும்போதே முழி சொருகும் அளவுக்குதான் தாங்கும் சக்தி என்றாலும், விடுகிற பந்தா முழு பாட்டிலை ராவாக அடிக்கிறவன் தோற்கும் அளவிற்கு இருக்கும். பார்ட்டி முடிந்து மாமாவை வீடு சேர்க்கும் பொறுப்பு இருப்பதால் ப்யூனுக்கும் ஆங்கே பொசியும். ஒரு விறற்கணு மதுவுக்கு அரையடி நீர் சேர்த்து, தலை குலுக்கி, ஊறுகாய் நக்கி, சிப்ஸ் கடித்து, வடையோ, மிக்ஸரோ ஸ்ருதி சேர்த்து பார்ட்டி முடியும் வரை பாதி தாண்டியிருக்க மாட்டார். புறப்படும் நேரம் பெரிய குடிகாரன் மாதிரி ஒரு கல்ப்பில் முடித்து, ஹாய்/பை சொல்லி ப்யூனுடன் புறப்படும் போதுதான் சிக்கல். எத்தனை சாமர்த்தியமாக கூட்டிக் கொண்டு போனாலும் ஏதோ ஒரு தெருவிளக்குக் கம்பம் கண்ணில் பட்டு/கவனத்தில் பட்டால் போதும். அது சாய்ந்து விழுந்துவிடுவது போல் தோன்றுமோ என்னமோ? கைப்பையை காலிடுக்கில் வைத்துக் கொண்டு விளக்குக் கம்பம் சரியாமல் பிடித்துக் கொள்வார். படைத்த ப்ரம்மனே வந்தாலும் அவரைப் பிரிக்க முடியாது. ஒரே ஒரு வார்த்தை வெளிவராது. மணிக்கணக்கில் பிடித்தபடி நிற்பார். ப்யூன் ‘சார்! உழாது வா சார்! லாஸ்ட் ட்ரெயின் போயிடும் சார் வா சார்! என்ற கெஞ்சலெல்லாம் காதில் ஏறும் என்ற நம்பிக்கை பொய்த்தபின், சோடா வாங்கி முகத்தில் அடித்து, கன்னத்தில் தட்டி என்று சண்டிமாடு கணக்காய் இடம் பெயர்த்தினால் தள்ளாட்டமின்றி போவார். ஆனாலும் எப்போதும் சள சளவென்று பேசுபவர் ஊமையாகி விடுவார். சவடால் வைத்தி உண்மையில் பெரும் கோழை என்பதை விதி ஒரு நாள் காட்டிக் கொடுத்துவிட்டது. ஒரு ரவுடி ஊழியனை பணி நீக்கம் செய்தபின் அப்பீலுக்காக ஆஃபீசரைப் பார்க்க வந்திருந்தான். வரும்போதே நல்ல போதை. ஆஃபீஸர் அறையில் இல்லை என்பதை விட அவருக்கு குடிகாரர்களைக் கண்டால் இருக்கும் பயம் தெரியுமாதலால் சவடாலாக ’அதெல்லாம் இப்ப பார்க்க முடியாதுய்யா! தெளிஞ்சிருக்கும் போது வா!’ என்று எகிறியபோது துணைக்கு ப்யூன் இல்லை என்பதை மறந்துவிட்டார். ‘அய்ரே! என்னப் பார்த்தா போதை பண்ணா மாதிரியா தெரியுது?’ என்று அடிக்கப் பாய்ந்தபோது, தப்புக் கணக்குப் போட்டு ஆஃபீசரின் அறைக்குள் பாய்ந்து விட்டார். அதே வேகத்தில் பாய்ந்து அந்த ஊழியன் விட்ட ஒரு அறையில் அங்கிருந்த சோஃபாவில் விழுந்து, அபயக் குரல் எழுப்புவதற்குள், கொலை வெறியோடு விழுந்த சில அறைகளில் காலரா வந்தவன் போல் கழிந்து விட்டது. அப்புறம் ப்யூன்கள் ஓடி வந்து விலக்கி விட்டு, வைத்திமாமாவை டாய்லட்டுக்கு அழைத்துப் போய், எல்லாம் செய்தாலும் விலை உயர்ந்த சோஃபா கழித்துக் கட்டப்பட்டது. ஆனாலும், ஆட்டோ பிடித்து உடை மாற்றி கடமையுணர்வுடன் திரும்பவும் டூட்டிக்கு வந்த வைத்திமாமாவின் கடமை உணர்ச்சியை என்னவென்று பாராட்ட? ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து என்பார்களே அப்படி ஏதோ ஒரு சபிக்கப் பட்ட நேரத்தில் நேர்மையான, போலீஸில் உயர்மட்ட தொடர்புள்ள ஒரு அதிகாரியைக் கடிக்கத் தோன்றியது வைத்தியின் குணக்கேடு. ரிட்டையர் ஆக மூன்றாண்டு இருந்த நிலையில், ப்ரமோஷனுக்காக போய் பார்த்தபோது இவரின் குணக்கேடும் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும், எல்லாருக்கும் நல்லவரான அந்த அதிகாரி கடுமையாகப் பேசிவிட்டார். அந்தக் கடுப்பில், ரொம்பவும் புத்திசாலித்தனமாக அவர் அறையில் இருந்த ஒரு பழைய டைப்ரைட்டரில் பொய்க் கையெழுத்தோடு விஜிலன்சுக்கு ஒரு பெட்டிஷன் தட்டிவிட்டார் வைத்தி. உயர் அதிகாரி ஆனதால் போலீசுக்கு கேஸ் போய்விட்டது. சந்தேக லிஸ்டில் வைத்திமாமா இருந்தார். புலனாய்வில் தேய்ந்து போன ஒரிரு எழுத்துக்களை வைத்து இவர் அறையில் இருந்த ஹால்டா டைப்ரைட்டரில்தான் அடிக்கப்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாட்சியம் போதாதுதான் என்றாலும், ஓரிரு அறைக்கே கழிந்தவர், போலீஸ் விசாரணைக்கு என்று அழைத்ததும் கலங்கிப்போனார். ஒரு மிரட்டல், ஒரு அறையில் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துவிட்டு வெளிறிப் போய் வந்த பிறகு சஸ்பென்ஷன், பணி நீக்கம் என்றாயிற்று. திறமையான ஆள் என்றாலும் யாருக்கு எந்த நேர்த்தில் என்ன நேருமோ என்ற சந்தேகமும் சேர்ந்ததால் அப்பீல் எதுவும் ஏற்கப்படவில்லை. டிஸ்மிஸ் ஆனதால் பென்ஷன், க்ராச்சூவிடி, ரிடையர்மெண்ட் பாஸ் எதுவும் இல்லை. பின்பொரு நாள், ஹைகோர்ட் எதிர் சந்து ஒன்றில் நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் வாங்கச் சென்றபோது ஒரு கடை ஓரத்தில் ஒரு பழைய ஹால்டா மெஷின் எதிரில் வைத்தி மாமா அமர்ந்திருந்தார். நீர்க்காவி வேட்டியும், காலர் கிழிந்த சட்டையும், செருப்பற்ற காலும், பொலிவிழந்த முகமுமாக இருந்த போதும், டைப்ரைட்டரில் விரல் பாவியபோது மணி அய்யர்களோ, சிவமணியோ அவர் விரலை விட்டு நீங்கி விடவில்லை.   [linesep] 37 பற்றிப் படரும் பசலை [Aathi]   ஆதிமூலகிருஷ்ணன் எப்போதும் எழுத்தில் மனைவியை ‘ரவுசு’ விடும் ஆதியா பசலை பற்றியெல்லாம் எழுதுகிறார் என்று ஆச்சரியம்.  மென்மையான உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவது சவால்தான்.  அருமையான பகிர்வு. சிறுகதைப் போட்டிகள், குறும்படங்கள், திரைக்கதை என்று வெவ்வேறு தளங்களில் சாகசம் செய்கிறார்.     [linesep] ‘ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வரவேண்டாம், வீண் அலைச்சல்தானே.. நீங்கள் வீட்டிலேயே இருங்கள். நான் போய்க்கொள்கிறேன்.. ஒவ்வொரு முறையும் வந்து வழியனுப்ப நான் என்ன விருந்தாளியா, இல்லை சின்னப்பிள்ளையா?’ என்று முதலில் கிண்டலாகவும், பின்னர் அழுந்திச்சொல்லியும் கேளாமல் அதன் பின் வாக்குவாதமாகவும், சண்டையாகவும் மாறும் இதே வாக்கியங்கள்.. ஒவ்வொரு தடவையும் நான் ஊருக்குச்சென்று திரும்பும் போதும் இது நிகழ்கிறது எனக்கும் என் அம்மாவுக்கும் இடையே. அப்படி அவர் ரயிலடி வரை வருவதில்தான் எனக்கு என்ன குறைந்துவிடப்போகிறது? அவரும்தான் வீட்டில் இருந்தால் என்ன? பிரிவு. அந்தப் பிரிவை இன்னும் ஒரு மணி நேரம் தள்ளிப்போட முயலும் அங்கலாய்ப்பு. அந்த வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக சண்டை, ‘ஊரு உலகத்துல பிள்ளைகள் அம்மாவை உடனேயே வைத்துக்கொள்ள விரும்புவார்கள். எனக்கென்று வாய்த்திருப்பவை கொஞ்சமும் மதிப்பதில்லை. என் தலையெழுத்து. ரயில்நிலையம் வரைகூட அனுமதிப்பதில்லை..’ என்று கண்ணீரில் வந்து நிற்பார். இந்த வார்த்தைகள் எதுவுமே மனதிலிருந்து வருவதில்லை. பிரிவை மேற்கொள்ளும் பிள்ளை மீது ஏதும் குற்றம் சுமத்தி, அந்தப் பிரிவின் வலியை குறைத்துக்கொள்ளும் முயற்சி. ஆனால் அதனால் எந்தப் பயனும் இருப்பதில்லை. சில தடவைகள் நான் அமைதியாகவே இருந்து, ‘வரவேண்டுமானால் வாருங்கள் அம்மா’ என்று ரயிலடிக்கு அழைத்தாலும் கூட, அவரே அறியாமல் அந்தச் சண்டைக்கான‌ இன்னொரு காரணம் முளைக்கும். நான் பிடிக்கவில்லை என்று ஒதுக்கிய பழைய சட்டையை என் பையில் எடுத்துவைத்துவிட்டு, ‘புது சட்டையை போடாமலே வைத்திருந்து ஏன் இப்படி வம்பாகத் தொலைக்கிறாய்? சம்பாதிக்கும் திமிரா? இதைச் சென்னைக்குக் கொண்டுசென்று அலுவலகத்துக்குப் போட்டுச்சென்றால்தான் என்ன?’ என்று துவங்கித் தொடரும். பின்னர் பேருந்தில் நெல்லையை அடைந்து, கடைசி நேர இனிப்புகள், பழங்கள் வாங்கிக்கொண்டு ரயிலடிக்கு வந்தாயிற்று. இருக்கையையும் தேடி அமர்ந்தாயிற்று. இயல்பாக இந்த வாழ்க்கையையும், நிகழ்வுகளையும்தான் இன்னும் ஏற்றுக்கொள்ள இன்னும்முடியவில்லை. படிப்பு முடித்ததும் 22 வயதில் பிள்ளையை வேலை தேடி தனியே அனுப்பிய நாளில் உணர்ந்ததைப் போலவேதான் இன்று மணமாகி, மனைவி், குழந்தையோடு வாழும், தலை நரைக்கத்துவங்கிவிட்ட 36 வயதுப் பிள்ளையை வழியனுப்புகையிலும் உணரமுடிகிறது. ரயில் கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க.. பேச்சில் ஒரு அர்த்தமிழந்த பரிதவிப்பு ஏற்படுகிறது. கண்கள் தளும்புகின்றன. அதைக் கேட்கவும், பார்க்கவும் முடியாமல் மனதைக் கல்லாக்கிக்கொண்டு உள்ளே பைகளை அடுக்கிவைப்பதாய் பாவனை செய்கிறேன். வலுக்கட்டாயமாக புன்னகைத்து,  இயல்பாய் இருப்பதாய் காட்டிக்கொள்ள முயல்கிறேன். இதற்காகத்தான் அவரை ரயிலடி வரை வரவேண்டாம் என்று சொல்வது. ஆனால் அவர் அப்ப‌டி வராமலேயிருந்தாலும் கூட அந்தப் பரிதவிப்பில் இருந்து மட்டும் என்னால் எப்போதுமே தப்பமுடிவதேயில்லை. ஆரவாரமும், கொண்டாட்டமுமாய் நிகழ்ந்தது தங்கையின் திருமணம். மூன்று நாட்களாய் உற்சாகமும், மகிழ்ச்சியும். அன்றிரவு அவளை அந்த இன்னொரு வீட்டில் விட்டுவந்த‌போது அவள் கண்கள் கொப்பளிக்க அழுத போது கூட இயல்பு இது உணர்ந்து, ‘நீயும் உணர், என் அன்பு தங்கையே.. சிந்திப்பவளுக்கு இதொன்றும் சிரமமல்லவே’ என்று கூறிச்சிரித்து வந்துவிட்டேன். பக்கத்து ஊர்தானே? எப்போதும் தங்கை என் பார்வைக்கோணத்தில்தானே என்ற இறுமாப்பு. ஆயினும் அன்றிரவு வீட்டுக்கு வந்தபோது கத்திலறைந்த வெறுமை என் வாழ்நாளில் எப்போதுமே நான் அறியாதது. அதன் வீச்சைப் பொறுக்க முடியாமல் இரவெல்லாம் நண்பர்களுடன் எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருந்துவிட்டு காலையில்தான் வீடு திரும்ப நேர்ந்தது. கோழியின் சிறகு மறைப்பிலிருந்து வெளியேறி, ஏதோ எல்லாம் தெரிந்ததைப்போல 3 அடிகள் விலகி இரையெடுப்பதைப்போல தலையைக் குனிந்து குனிந்து நிமிர்கிறது நடைகூட இன்னும் படித்திடாத அந்தப் பட்டுக்குஞ்சு. ‌முதல் முறையாக 6 மணி நேரங்கள் எங்கள் பிடியிருந்து உன்னை நாங்கள் விடுவித்து இவ்வுலகுக்கு உன்னைத் தரவேண்டும். ஊரெங்கும் நடப்பது, உலகெங்கும் நடப்பதுதான். சீருடை, புத்தகங்கள், பை, புதிய காலணிகள். உற்சாகமான ஏற்பாடுதான். ஆனால் முதல் நாள் உன்னை பள்ளியில் விட்டுவிட்டு, மூட‌ப்பட்ட பள்ளிக் கதவுகளுக்குப் பின்னே எத்தனை நேரம் நின்றுகொண்டேயிருந்தேன் சுபா? ஏன் என்னால் அங்கிருந்து நகரவே முடியவில்லை? யாரும் பார்ப்பார்களோ என்று போனைஎடுத்து காதில் வைத்துக்கொண்டு எதற்காக அவ்வளவு நேரம் நின்றுகொண்டிருந்தேன்? உடலைக் கொஞ்சம் தேற்றிக்கொள்ளட்டும், வயிற்றுப்பிள்ளைக்காரியை கவனிக்கும் பொறுப்பும், நேரமும் நமக்கு இருக்கவா செய்கிறது என்று மூன்று மாதத்தில் ஊரில்கொண்டு போய் விட்டது மனைவியை. இதோ ஆயிற்று இன்னுமொரு மூன்று மாதங்கள். அவளில்லாத அடுத்த இரவே கூட ஒரு தவிப்பில் விழுந்தது நினைவிருக்கிறது. சுதந்திரமாக இருக்கலாம், மது அருந்தலாம், புகைக்கலாம். நண்பர்களோடு ஊர் சுற்றலாம். தோளிலிருக்கும் சுமை இப்போது இல்லைதான், ஆனால் மனதில் ஒரு சுமையாக உட்கார்ந்திருப்பவளை எப்படி இறக்கிவைக்க முடியும்? யாரும் பார்க்கப்போவதில்லை என்ற நினைப்பில் தலையணைக்கு மேலே சரசரக்கும் அவளது ஷிஃபான் சேலைகளை விரித்துப் படுத்துத் தூங்க வேண்டியிருந்தது. நம்மை ஒரு சின்னஞ்சிறுமியைப் போலவும், அவள் கையை விட்டகலாத பட்டுப்பொம்மையைப் போல அந்த சேலையையும் உணரமுடிகிறது. மனதுக்குள் ஒரு மெல்லிய படபடப்பு. அலுவலகம் விட்டு வந்ததும் ஏதேனும் அரிதாய்க் காரணம் கண்டுபிடித்து தினமும் ஒரு வாக்குவாதம் செய்த நேரத்தை அமைதியாகக் கழிக்க முடியவில்லை. ஒரு நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிகழக்கூடிய ஸ்பரிசம் இல்லை. டிவியாலும், புத்தகத்தாலும் இந்த வெறுமையைப் போக்கிவிடவே முடியாது. எதிலும் கவனம் நிலைப்பதே இல்லை. உடலுறவின் கிளர்ச்சியைப் போலவே தொலைவிலிருக்கையில் ஏற்படும் இந்த மனவுறவிலும், ஒரு பெரும்கிளர்ச்சி இருக்கிறது. இதில் கூடுதலாக கொஞ்சம் வலியும்.  மூன்று மாதங்களுக்குப் பின் இதோ செல்கிறேன். வாயிலில் நின்றுகொண்டிருக்கிறாள். வேறு யாரும் இல்லை. இருந்தாலும் கூட அவளுக்கு அது ஒரு பொருட்டாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன். அவள் முகம் எப்படி இருக்கிறது? வயிறு எப்படி இருக்கிறது? எதையும் பார்க்க, கேட்க நேரமில்லை.  அது வேறு. முதலில் இந்தக் கணக்கைத் தீர்க்க வா என்கிறாள். பாய்ந்து கட்டியணைத்து ஒரு நாற்காலியில் அரைகுறையாய்ச் சாய்த்து, சாய்ந்து மார்போடு முகம் புதைத்து எத்தனை நிமிடங்கள் இருந்தாள்? நின்றுகொண்டுதானே இருந்தாள்.. எங்கிருந்தோ ஓடிவந்தவள் போல ஏன் இப்படி ஒரு படபடப்பும், துடிப்பும்? வாய்ச் சொல் ஏதுமின்றி நாம் அந்த நிமிடங்களில் எத்தனை யுகங்களுக்கான கதைபேசினோம்? 90 நாட்களுக்கு முன்னால் நான் கையசைத்த அந்த விநாடியில் தொற்றியதா உன்னையும், என்னையும் ஒரு பசப்பு.? அதனால்தானா நான் தவித்தேனா? அதைத்தானா இப்போது உன் உடல்மொழியும் சொல்கிறது? பரவி வேர்பிடித்த அந்தப் பசலையில் இருந்து மீண்டெழத்தானா நமக்கு இத்தனை நிமிடங்கள்? உறவுகள்தான் எத்தனை மெல்லிய இழைகளால் பின்னப்பட்டிருக்கின்றன‌. நெருங்கியிருக்கையில் ஆழ அமிழ்ந்தும், விலக விலக மேலெழுவதுமாய் ஒரு மின்னிழையைப் போன்ற ஒரு தவிப்பு. அறிவு இவ்வுலகை ஆட்சி செய்யவில்லை. அறிவு மனிதத்தைப் பிழைத்திருக்கச் செய்திருக்க முடியாது. உணர்வுகள்தாம் நம்மைப் பல்கிப் பெருகியிருக்கவும், நெடும் வரலாற்றை நோக்கி வழி நடத்தியிருக்கவும் செய்திருக்கவேண்டும் இல்லையா? [linesep] 8 குறும்படம் 38 குறும்படம் எடுக்கலாம் வாங்க...! [dynobuoy-1]  டைனோபாய் இவர் பதிவுகள் எழுதுவதில்லையே தவிர இணைய உலகில் மிகப் பிரபலம்.  ட்விட்டர், கூகுள், ஃபேஸ்புக் என்று பல தளங்களிலும் தன் கருத்துகள் ஆணித்தரமாகவும், தைரியமாகவும் வெளிப்படுத்துபவர். குறும்படங்கள் மேல் அளப்ப்பரியா ஆர்வம் கொண்டவர்.  தற்போது மிகத்தீவிரமாக குறும்படம் உருவாக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்து திரை ஊடகத்திலும் கால் பதிப்பார் என்று எதிர்பார்ப்போம். இந்தக் கட்டுரையில் குறும்படம் தயாரிப்பதற்கான ஃபார்முலாவை மிக அழகாக வரைந்திருக்கிறார். கலக்கல்! [linesep] தமிழ் சூழலுக்கு கொஞ்சம் அன்னியமாய் இருந்த குறும்படங்கள் முன் எப்போதையும் விட இப்போது அதிகமாக பேசப்பட்டும் வெளியிடப்பட்டும் வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக படக்கருவிகளின் விலை குறைந்து வருவதும், படங்களை வெளியிட யூட்யூப் போன்ற தளங்கள் பெருகியுள்ளதும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாய் கொள்ளலாம். முன்பு படமெடுப்பது முழுவதும் படச்சுருளில் பதித்து, பின்னர் பிற்சேர்க்கைகள், பதனிடுதல் என்று பல படிகளைத்தாண்டித்தான் ஒரு காட்சி படமாக்கப்பட்ட வடிவத்தை காணவே முடியும். ஆனால் இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் குறுவட்டுகள் வன்தட்டுகள் கொண்ட படப்பிடிப்பு கருவிகளின் அபார தொழிநுட்ப வளர்ச்சியாலும், படப்பிடிப்பு உபகரணங்களின் விலை வீழ்ச்சியினாலும் பலரும் படப்பிடிப்பு கருவிகளை சொந்தமாகவே வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் படமாக்கலும் எளிமையாக்கப்பட்டிருக்கிறது. சினிமா மீது அதன் ஜிகினாத்தனம் கொடுக்கும் மாயையினால் கவரப்பட்டு சினிமா உருவாக்குதலின் மீது அதீத ஆர்வம் மற்ற துறைகளை தாண்டி சற்று கூடுதலாகவே நம் மக்களுக்கு இயல்பாகவே உண்டு. நவீன கருவிகளின் விலை இறக்கம் பலருடைய இந்த கலாதாகத்தை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கிறது! இந்த நிலையில்தான் இன்று புற்றீசல் போல குறும்படங்கள் நூற்றுக்கணக்கில் அதுவும் தமிழில் மட்டுமே உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைய படங்கள் ஒரு குறும்படத்திற்கான இலக்கணங்களை பின்பற்றி வருகிறதா? அதற்கு முன்னால் குறும்படத்திற்கென்று தனி இலக்கணம் இருக்கிறதா? எந்த வை படங்களை குறும்படம் என்று அழைக்கலாம்? குறும்படம் என்றால் என்ன? முதலில் குறும்படம் என்றால் படக்கருவி மூலம் படம்பிடிக்கும் அனைத்தும் குறும்படம் ஆகமுடியாது. ஒரு முழுநீளப்படத்திற்க்கான இலக்கணங்கள் எல்லாமுமே குறும்படத்திற்கும் பொருந்தும். கதை, திரைக்கதை போன்ற படப்பிடிப்பிற்கு முன்னர் செய்யவேண்டிய முன்தயாரிப்பு வேலைகளும், படத்தொகுப்பு, இசையமைத்தல் போன்ற பிற்சேர்க்கை வேலைகளும் ஒரு குறும்படத்திற்கு தேவைதான். அவை இல்லாவிட்டால் படத்துணுக்குகளை ஒட்ட வைத்த ரசிகத்தன்மை சிஞ்சித்தும் இல்லாத கண்றாவி கோர்வையாக அமையும். வேண்டுமானால் சில இலக்கியவாதிகளை அழைத்து பின்னவினவத்துவ விருந்து என்று பொய் சமைக்கலாம். 40 நிமிடங்களுக்கு உட்பட்ட படங்களைதான் குறும்படம் என்று வகைப்படுத்துகிறது ஆஸ்கார் விருதுகளை வழங்கும் அக்காதமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம். இதையே குறும்படத்திற்கான கால அளவாக பெருவாரியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் பெரும்பான்மையான குறும்படங்கள் 10 நிமிடங்களுக்கு உட்பட்டே இருப்பதை காணலாம். இதற்கு படம் எடுக்க ஆகும் செலவே பெரும்பாலும் காரணம் என்று சொல்லலாம். ஆனாலும் 10 நிமிடத்திற்குட்பட்ட படங்களை இணையத்தில் எளிதில் வெளியிடமுடியும் என்பதும் ஒரு முக்கிய காரணம். முழுநீளப்படங்கள் போலவே குறும்படங்களிலும் பல்வேறு பாணிகள்(genre) உள்ளன. ஆனாலும் ஆவணப்படங்கள். அறிவுரைப்படங்கள், கதைப்படங்கள் என்று புரிதலுக்காய் எளிமைப்படுத்தி மூன்றாய் பிரித்துக்கொள்ளலாம். இன்று குறும்படம் எடுப்பவர்கள் முதலில் இதை தீர்மானத்துகொண்டு தன் படங்களை எடுக்கவே ஆரம்பிக்க வேண்டும். எந்த பாணியில், எந்த வகையில் படம் எடுத்தாலும் அதற்கான திரைக்கதை அமைப்பது மிக முக்கியமான பணியாகும். இன்று இணையத்தில் இரைந்துகிடக்கும் குறும்படங்களில், அதுவும் குறிப்பாக தமிழ் குறும்படங்களில் இல்லாத வஸ்து இந்த திரைக்கதைதான் (முழுநீளப்படங்களிலும் அது இல்லை என்பது வேறு சமாச்சாரம்). சொல்லவந்த செய்தியை வெகு குறுகிய கால அளவில் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்பதால் திரைக்கதை கட்டமைப்பு இறுக்கமாகவும் பார்வையாளரின் ஈடுபாட்டையும் கவனத்தையும் கவர்வதாக அமைக்கப்படவேண்டும். ஆவணப்படங்கள் / அறிவுரைப்படங்கள் எடுப்பவர்கள் தங்கள் குறும்படத்திற்கு திரைக்கதை தேவையில்லை நடப்பதை அப்படியே எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். அனுபவமிக்கவர்களே சறுக்கி விழும் இடம் இதுதான். கருத்துப்படங்களானாலும் ஆவணப்படங்களானாலும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு இல்லாவிட்டால் பார்வையாளர்கள் ஈடுபாட்டுடன் ரசிக்க இயலாது. இவ்வகைப்படங்களில் பொதுவாக கீழ்கண்ட பகுதிகளாய் இருப்பதை பார்க்கலாம் 1. ஒரு சமூக ப்ரச்சனை 2. அந்த ப்ரச்சனையின் தீவிரம் / பாதிப்பு 3. அதற்க்கான தீர்வுகள் சாதாரண புகைபிடித்தலில் உள்ள தீமைகளை விளக்கும் 2 நிமிடப்படமானாலும் சரி மைக்கேல் மூரின் சிக்கோ போன்ற படமானாலும் இப்படியாப்பட்ட ஒரு எளிய கட்டமைப்பை கொண்டதாகவே இருக்கும். இதில் ப்ரச்சனைகளின் தீவிரத்தை காட்சிப்படுத்தும்போது, பார்வையாளர்கள் தங்கள் வாழ்வில் உணர்ந்த அல்லது சந்தித்த ஒரு களத்தை வைத்து விளக்கினால் பார்வையாளனால் நன்றாக ஒன்ற முடியும். வெற்றி பெற்ற கதை குறும்படங்களிலும் கீழுள்ள ஒரு கட்டமைப்பை காணலாம் 1. முக்கிய பாத்திர அறிமுகம் 2. பாத்திரம் சந்திக்கும் பிரச்சனைகள் 3. பிரச்சனைகளுக்கான தீர்வை பாத்திரம் கண்டுபிடிப்பது/அடைவது பெரும்பான்மையான முழுநீளப்படங்களுக்கு இந்த கட்டமைப்பு பொருந்தி வருவதை பார்க்கலாம். ஆனால் முழுநீளப்படங்களில் இன்னும் அதிகமான துணைக்கதைகள் இருக்கவேண்டும். பாத்திரத்தை சுற்றி நடப்பவை, உப/துணை  பாத்திரங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்று இணைப்பது சுவாரஸ்யத்தை கூட்டும். ஆனால் குறும்படத்தின் நீளம் காரணமாக அவ்வகையான பகட்டுகள் எல்லாம் குறும்படத்திற்கு ஒத்து வராது. ஒரு குறும்படத்தை ஒரு சிறுகதைக்கான கட்டுமானத்தோடு ஒப்பிடலாம். ஒரு சிறுகதை எப்படி உச்சகட்டத்திற்கு மிக அருகில் ஆரம்பிக்கப்படவேண்டுமோ, அதைப்போலவே ஒரு குறும்படமும் உட்டகட்ட காட்சிக்கு மிக அருகாமையில் துவங்கப்படவேண்டும். அதைப்போலவே வருடக்கணக்கில் நடக்கும் கதைகள் குறும்பட அமைப்பிற்கு ஒத்து வராது. ஒரு சிறிய நிகழ்வோ அல்லது அந்த நிகழ்வு நிகழ்வதற்கான களனை சார்ந்தோ திரைக்கதை அமைப்பது சுவாரஸ்யத்தைக்கூட்டும். குறும்படம் எடுக்க என்ன தேவை? கையில் படப்பிடிப்பு கருவி கிடைத்ததும் நானும் குறும்படம் எடுக்கிறேன் என்று கிளம்பிவிடுதால்தான் இயல்பாக நடக்கக்கூடியது. ஆனால் நல்ல குறும்படங்கள் முன்பே கூறியதுபோல முன் தயாரிப்பு, படப்பிடிப்பு, பிற்சேர்க்கை என்ற மூன்று நிலைகளில் ஒரு முழுநீளப்படத்திற்குரிய எல்லா படலங்களையும் வரிசைச்சிரமாக செயல்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு படலத்திலும் நடைபெற வேண்டிய முக்கிய செயல்களை கிழே உள்ளன: முன் தயாரிப்பு: கதை தயாரித்தல் திரைக்கதை அமைத்தல் ஸ்டோரி போர்ட் அல்லது கதைப்பலகை – முழுகதையையும் ஓவியங்கள் மூலம் விளக்குவது காட்சி கோணங்களின் பட்டியல் பட்ஜெட் தயாரிப்பு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தேர்ந்தெடுப்பு படப்பிடிப்பிற்கு தேவையான அனுமதி ஆவணங்கள் படப்பிடிப்பு: உணவு பரிமாற்றம் பட சேமிற்பிற்கான வந்தகடு/குறுந்தகடுகளை தயாராக வைத்திருத்தல் லைட்டிங் / ஒளிஅமைப்பு படப்பிடிப்பில் நடிகர்கள் / டெக்னிசியன்களின் பாதுகாப்பு   பிற்சேர்க்கை: படத்தொகுப்பு / ஒளி அமைப்பு (கலர் கரெக்‌ஷன்) இசை / ஒலி அமைப்பு வெளியீடு ஒர் சாதாரண குறும்படத்திற்கு இத்தனை விரிவான செயல்திட்டம் எல்லாம அவசியமா என்ற கேள்வி எழலாம். ஒரு நல்ல குறும்படத்திற்கான குறைந்தபட்ச செயல்திட்டமே இது. இதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டியதில்லை. உங்கள் நேரத்திற்கேற்றவாறு கண்டிப்பாக மாற்றி அமைக்கலாம். ஆனால் ஒரு திட்டத்துடன் குறும்படத்தை எடுக்க ஆரம்பித்தால் பின்னர் வரும் சிக்கல்களை தவிர்க்கலாம். குறும்பட டிப்ஸ் / இடறுகுழிகள்: 10 நிமிடப்படம்தானே ரெண்டு மணி நேரத்தில் எடுத்து முடித்துவிடலாம் என்று முதன்முதலில் படமெடுக்க கிளம்புபவர்கள் அது எத்தனை தவறான கருத்து என்பதை முதல் 30 நிமிடத்திலேயே உணர்ந்துவிடுவார்கள். ஒரு படம் எடுப்பது ஒரு தனிநபர் காரியமல்ல, ஒரு குழுவினராய் செயலாற்றி நிறைவேற்ற வேண்டிய கூட்டுப்பணி. அதில் ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் குழுவினர் முழுவதுமே பாதிப்புக்குள்ளாவார்கள்.  அதனால்தான் ஒரு சரியான செயல்திட்டம் வகுப்பது மிக முக்கியமாகிறது. எனக்கு தெரிந்த டிப்ஸ் மற்றும் இடர்களை முடிந்தவரை பட்டியலிட்டிருக்கிறேன். 1. திரைக்கதையை முடிந்தவரை அதற்குரிய வடிவத்திலேயே எழுதப்பழகுங்கள். அதையே மற்றவர்களுடன் கருத்து பரிமாற்றத்திற்கும் பயன்படுத்துங்கள். செல்டெக்ஸ் போன்ற இலவச மென்பொருட்களை பயன்படுத்துவது செலவை குறைப்பதுடன் திட்டமிடுதலுக்கும் பல நல்ல செயலிகளை கொண்டுள்ளது. ஒரு பக்க கதை படத்தில் ஒரு நிமிட நேரத்திற்கு ஒடும். ஒரு பக்கத்தை காட்சிப்படுத்த ஒன்னரை – இரண்டு மணிநேரங்கள் பிடிக்கும். அதனால் செல்டெக்ஸில் ஐந்து பக்க திரைக்கதை, முடிவில் 5 நிமிடம் ஓடும் படமாக வரும். அதை படம்பிடித்து முடிக்க எட்டு முதல் பத்து மணிநேரம் வரை பிடிக்கும். 2. ஒரு கதாபாத்திரத்தின் வசனம் 10-12 வார்த்தைக்கு மிகாமல் பார்த்து கொள்ளுங்கள். படக்குழுவினரும், நடிகர்களும் பெரும்பாலும் தொழில்முறை கலைஞர்களாக இல்லாதபட்சத்தில், ஆறு – எட்டு வார்த்தைக்கு மேற்ப்பட்ட வசனங்களை இயல்பாக ஏற்ற இறக்கத்துடன் நீங்கள் நினைக்கும் வகையில் பேச வைப்பது மிகவும் கடினம். அதனால் வசனங்களின் அளவை குறைப்பது நல்லது. மேலும் பெரிய வசனங்கள் காட்சிகளை நீளமடையவைத்து பார்வையாலர்களை சலிப்பைடைய வைக்கும். 3. காட்சிக்கோணங்களையும், காட்சி வரிசையையும் முன்தயாரிப்பிலேயே முடிவு செய்து கொள்ளுங்கள். படப்பிடிப்பு சம்யத்தில் லைட்டிங், கேமராவின் குறைபாடுகள் போன்றவற்றால் சில காட்சிகளின் அமைப்பு கோணங்களை மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாவிட்டாலும், முன்னரே தீர்மானிப்பது படப்பிடிப்பு நேர அலைச்சல்களையும் கருத்து மோதல்களையும் தவிர்க்கலாம். 4. படப்பிடிப்பில் நேரும் டெக்னிக்கல் விசயங்களை பிற்சேர்க்கையில் சரிபடுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணமே வரக்கூடாது. குறிப்பாக நிறங்கள், லைட்டிங் போன்ற சமாச்சாரங்களை பிற்சேர்க்கையில் சரிபடுத்திவிடலாம் என்ற நினைப்பிற்கு இடம் தரக்கூடாது. பிற்சேர்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பதை படப்பிடிப்பிற்கு முன்னரே முடிவு செய்திருக்க வேண்டும். 5. நண்பர்களுடன் சேர்ந்து படம் எடுத்தாலும் அவர்களுடைய நேரம், பங்களிப்பு ஆகிவற்றை பற்றி முன்பே வரையறுத்து கூறிவிடுங்கள். யாராருக்கு எந்த துறை, எந்தவிதமான பங்களிப்பு, மற்றவர்களுடன் இருக்கும் சார்புநிலை ஆகிவற்றை முன்பே விலக்கிவிடுதல் நலம். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் 15-30 நிமிடங்கள் இதை தெளிவுபடுத்திவிடுவது நல்ல வாடிக்கை. நண்பர்களின் பங்களிப்பிற்கு தக்க அங்கீகரிப்பை செலுத்தவும் மறக்ககூடாது. 6. படக்கோணங்களை ஒளிப்பதிவாளரிடம் முன்னரே பேசி தெளிவுபடுத்திவிடுங்கள். ஒளி அமைப்பிற்கும் படக்கருவியை வைக்க தகுந்த இடம் போன்றவற்றை அவர் தயார் செய்ய அது உதவும். 7. குறும்படங்களில் பங்கேற்பவர்களுக்கு பணம் கொடுக்க நம் பட்ஜெட் ஒத்து வராவிட்டாலும், கலைஞர்களுக்கு குறைந்தபட்ச உணவவையாவது வழங்குவதற்க்கான பட்ஜெட் செய்வது பண்பு. 8. ஒரு காட்சி/கோணத்தைப்பற்றி சந்தேகம் இருந்தால், படப்பிடிப்பிற்கு முன்பே டெஸ்ட் சூட் செய்துவிடுவது நல்லது. படப்பிடிப்பில் டெஸ்ட் செய்துகொண்டிருந்தால் குழுவினருக்கு டைரக்டர் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும். 9. முடிந்தால் கலைஞர்களின் திறமையை கண்டறிய ஆடிசன் வைப்பது நல்லது. அப்படி ஆடிசன் நடக்கும் போது கையில் உள்ள சிறிய கேமராவாகினும் அதை படம்பிடித்து கொள்ளுங்கள். பின்னர் சரியான கலைஞர்களை தேர்ந்தெடுக்க உகர்ந்ததாக இருக்கும். 10. ரிகர்சல் / ஒத்திகை பார்ப்பது மிகவும் அவசியம். முடிந்தால் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே ஒத்திகை நடப்பது சிறப்பு. பெரும்பான்மையான கலைஞர்கள் இதை பொழுதுபோக்காக செய்ய வருவதால் ஒத்திகை அவர்களுடைய பங்களிப்பை மேன்மைபடுத்த உதவும். ஒத்திகையையும் படம்பிடித்தால் தவறுகளை திருத்த உதவும். முக்கியமான கட்டளையாக - டைரக்டர்தான் கேப்டன் என்பதை தீவிரமாக செயல்படுத்துங்கள். சினிமா / படப்பிடிப்பு என்பது நம் மக்கள் அதீத விருப்பு கொண்டுள்ள ஒரு விசயம். படப்பிடிப்பை பார்வையிட வந்த நண்பருக்கு கூட காட்சி அமைப்பில் சில கருத்துகள் இருக்கலாம், டெண்டுலகருக்கே கிரிகெட் கற்றுத்தரும் துடிப்புடன் களத்தில் குதிக்க தயாராக நண்பர்கள் சுற்றிலும் இருக்கலாம். நடிகர்களின் நடிப்பை பற்றிய மாற்றங்களை சொல்ல நினைக்கலாம். ஆனால் அதை டைரக்டரிடமோ அவரது உதவியாளரிடமோ தெரிவிக்கலாமோ அன்றி, படக்குழுவினரையும், நடிகர்களையும் வெளி நபர்களோ மற்ற படக்குழுவினடிடத்திலோ நேரடியாக கருத்து / மாற்றங்களை சொல்ல அனுமதித்தல் கூடாது. டைரக்டர் மட்டுமே மொத்த குழுவினரையும் வழிநடத்தவேண்டும். நீங்கள் டைரக்டராக இல்லாத பட்சத்தில் இதையே கடைப்பிடித்து டைரக்டரின் பேச்சுக்கு மதிப்பளியுங்கள். குறும்படத்திற்கு இத்தனை திட்டங்களா என்று தளர்ந்துவிடாதீர்கள், முன்பே சொன்னது போல இந்த திட்டங்களை எல்லாம் அப்படியே கடைப்பிடிக்க வேண்டியதில்லை. முடிந்தால் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு ஒரு முறை சென்று பார்வையாளராக சென்றி கவனித்துவிட்டு வாருங்கள். இனி என்ன, குறும்படம் எடுக்க கேமராவை கையில எடுத்துட்டீங்களா? அதான் தப்பு… அப்ப கட்டுரையை இன்னொருக்கா முதல்ல இருந்து படிங்க! [linesep] 39 ரத்து [PenathalSuresh]   பினாத்தல் சுரேஷ் (எ) ராம்சுரேஷ் பினாத்தல்கள் என்ற பெயரில் முன்பு தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தார்.  ஒருபுறம் காப்பியத்தை நாவல் வடிவத்தில் எழுதுவார். மறுபுறம் த்ரில்லர் நாவல்களும்.  இயல்பான நகைசுவை இவரது ஸ்பெஷாலிட்டி.  வசனங்கள் மூலமாக காட்சிபடுத்துவதில் சுஜாதாவின் சிஷ்யர்.  கதை எழுதுகிறேன் பேர்வழி என்று இவரிடம் விவாதித்து நிறைய இம்சித்திருக்கிறேன். என்னைப் போல நிறைய பேர். மனிதர் ஆனாலும் பொறுமைசாலி. [linesep] காட்சி1 டின்னர் டேபிள். ஐந்து பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாதவன்: டெலிஷியஸ். இந்த ஊர்லேகூட இப்படி ஒரு வாழைத்தண்டு கிடைக்குதா? ரமேஷ்: ஒரு கடை இருக்கு சார். சைனீஸ் ஷாப். ஒரு நாள் பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன். நிர்ம்லா: சைனீஸ் ஷாப்பா? பாத்துங்க.. பாம்பு வயிறா இருக்கப்போகுது. ரோகிணி: இருந்தா என்ன? டேஸ்டா இருந்தா சரிதான். சிரிக்கிறார்கள். ராகுல்: என்ன டேஸ்ட் இது? ஐ காண்ட் கண்டின்யூ. (எழுந்து கொள்கிறான்) மாதவன்: சின்னப்பையனா இருக்கறதுல இது ஒரு சௌகரியம். பட்டதை பட்டுன்னு சொல்லிடலாம். ரோகிணி: அப்ப நீங்க பொய்தான் சொன்னீங்களா? நல்லா இருக்குன்னு? மாதவன்: சேச்சே.. நான் வேற யாருக்கும் பயப்படறதில்லை – நிர்மலா தவிர்த்து. நிர்மலா: பயமாமே.. பயப்பட்டாதான் உருப்பட்டுடுவீங்களே.. ரோகிணி: அட்லீஸ்ட் பயப்படறமாதிரி நடிக்கவாச்சும் செய்யறாரே – அது போதாதா உருப்பட? ரமேஷ்; (திடீரென்று கோபமாகி): அதாவது.. நான் உருப்படாம இருக்கேன், அதுக்குக் காரணம் உனக்கு பயப்படாம இருக்கேன்.. அதானே சொல்ல வரே? டின்னர் டேபிள் அமைதியாகிறது. வெறும் ஸ்பூன் ஃபோர்க் சத்தங்கள். டைட்டில்ஸ் காட்சி 2: மெலிதான லைட்டிங்கில் ஒரு பில்லியர்ட்ஸ் டேபிள் தெரிகிறது. இரண்டு சோஃபாக்கள் முன்னால் ஒரு டீபாய், ஃப்ரிட்ஜின் மேல் க்ளாஸ்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. லைட் பிரகாசமாகிறது. ரமேஷ்: பாத்து வாங்க மாதவன். அந்த நாலாவது படி எட்ஜ் உடைஞ்சிருக்கு. மாதவன்: வாவ்.. பில்லியர்ட்ஸ் ஆடுவீங்களா நீங்க? ஹவ் அபவுட் அ கேம் நவ்? ரமேஷ்: இப்ப எங்க சார் மூட் இருக்கு? அதெல்லாம் முன்னாடி.. மாதவன்: முன்னாடி? என்னவோ 90 வயசானாப்பல சொல்றீங்க? டிஜெக்டடா இருக்காதீங்க. சியர் அப். என் ஃப்ரெண்ட் நாளைக்குள்ள உங்களை காண்டாக்ட் பண்ணுவான். 3 மாசமா பெஞ்ச்லே இருக்கீங்களா? இதுக்கே தளர்ந்துட்டா எப்படி? ரமேஷ்: வேலையை விடுங்க சார். இன்னிக்கு வரும் நாளைக்குப் போகும். அதைத் தவிரவே ஆயிரம் பிரச்சினைகள். க்ளாஸில் பெரிய அளவில் ஸ்காட்சைக் கவிழ்த்துக் கொள்கிறான். ஒரு பியரை எடுத்து “க்ளாஸ்?” மாதவன்: அதெல்லாம் வேணாம். அப்படியே கொடுங்க. சியர்ஸ். ரமேஷ் வேகமாக ஸ்காட்சை காலி செய்து பாட்டிலை எடுக்கிறான். மாதவன்: கோ ஈஸி ரமேஷ். இவ்ளோ ஃபாஸ்டா? ஒரு சிறுவன் உள்ளே நுழைந்து ரமேஷைப் பார்த்து “அங்கிள், பால் இருக்கா?” ரமேஷ் எழுந்து உள்ளே சென்று ஒரு பாலைக் கொண்டு வருகிறான். ராகுல்: ஆரம்பிச்சுட்டீங்களா அப்பா.. இருங்க அம்மா கிட்டே சொல்றேன். மாதவன்: டேய்.. உடனே போட்டுக்கொடுக்க ஓடாதே. சின்ன பியர்தாண்டா. ராகுல் (பாலை வாங்கிக்கொண்டே): அப்ப விளையாடறதுக்கு வாங்க. மாதவன்: அம்மா கூட விளையாடுடா. ராகுல்: போங்கப்பா. அம்மாவுக்கு விளையாடவே தெரியலை. அண்டர் ஆர்ம் போடறா. நான் என்ன குழந்தையா? மாதவன்: அவளுக்கு பல்லாங்குழிதான் ஆட வரும். என்னவோ பண்ணு. இங்கே இருந்து கிளம்பு. ராகுல்: போர் அடிக்குதேப்பா. ரமேஷ்: பிஎஸ்பி விளையாடறயா? என்கிட்ட ஒரு பழைய ஸ்பைடர்மேன் கேம் இருந்தது. (மறுபடி உள்ளே போய் தேடுகிறான்) ராகுல் (கிளம்புமுன்): இந்த கேம்தான் அங்கிள், அப்பாகிட்ட வாங்கித்தரச் சொல்லி கெஞ்சிகிட்டு இருக்கேன். ரமேஷ்: நீ அப்பாவைப் போட்டுக் கொடுக்காம இருந்தேன்னா, இந்த கேமை நீயே வச்சுக்க. டீல்? ராகுல்(உற்சாகமாக): டீல்! மாதவன்: ரமேஷ் – யூ ஆர் அ சேவியர்! இருவரும் சிரிக்கிறார்கள். மாதவன்: என் ப்ராப்ளத்தை இவ்ளோ சுலபமா சால்வ் பண்ணிட்டே. உனக்கென்ன ப்ராப்ளம், அதைச் சொல்லு. (கொஞ்சம் போதையில் நீங்க நீ ஆகிவிட்டது) ரமேஷ்: ரோகிணி. மாதவன்: ப்ராப்ளம்ன்னா என்ன ரமேஷ்? எதிர்பாக்காம நடக்கறது. மலைமேலே ஏறறே, கால் வலிக்குது – இஸ் இட் அ ப்ராப்ளம்? மலைமேலே இருந்து கீழே விழுந்தா, தட் இஸ் ப்ராப்ளம். ரமேஷ்: என்ன சார் சொல்றீங்க? மாதவன்: கல்யாணம்னு ஒண்ணு பண்ணிக்கும்போதே, வித் ஆல் இட்ஸ் ஃப்யூ ப்ளஸ் பாயிண்ட்ஸ், யூ இன்ஹெரிட் சம் எக்ஸ்ட்ரா பேக்கேஜஸ். இதையெல்லாம் ப்ராப்ளம்னு சொல்லக்கூடாதுன்னு சொல்றேன். ரமேஷ்: உங்களுக்கென்ன சார் ஈஸியாச் சொல்லிட்டீங்க. அனுபவிச்சாதானே கஷ்டம் தெரியும்? காட்சி2: கிட்சனில் பாத்திரங்கள் டிஷ்வாஷருக்குள் அனுப்பிக்கொண்டிருக்கிறாள் ரோகிணி. நிர்மலா பக்கத்தில் நின்று கொண்டு உதவிக்கொண்டிருக்கிறாள். ராகுல் உள்ளே கேம் ஆடியபடியே நுழைகிறான். ராகுல்: ஆண்டி சிப்ஸ் இருக்கா? ரோகிணி: அந்த ஃப்ரிட்ஜ் மேலே இருக்கும் எடுத்துக்க. நிர்மலா: என்னேரமும் சிப்ஸ், கேம். கவுச் பொட்டாடோவா ஆயிட்டிருக்கே நீ. அப்பனுக்குப் போட்டியா குண்டாயிட்டிருக்கே. எங்கே அந்த ஆள்? பேஸ்மெண்ட்லே பியரா? ராகுல்: எனக்குத் தெரியாது. ஐ அம் நாட் சப்போஸ்ட் டு டெல் எனிதிங். (சென்றுவிடுகிறான்) நிர்மலா சிரிக்கிறாள். “ஒண்ணும் சொல்லாமலே போட்டுக்கொடுத்துட்டான் பாத்தியா?” ரோகிணி: அவரும் ரொம்பக் குடிப்பாரோ? நிர்மலா: சேச்சே.. அதெல்லாம் இல்லை. எப்பவாவது இந்த மாதிரி கெட்டுகெதருக்கு வந்தா ஒன் ஆர் டூ பியர்ஸ். அடக்கி வச்சிருக்கமில்ல. ரோகிணி: எனக்கும் அதைச் சொல்லிக்கொடுங்க நிர்மலா. கஷ்டமா இருக்கு. நிர்மலா: என்னடி கஷ்டம் உனக்கு? ரமேஷ் நல்ல பையனாச்சே.. பேஸ்மெண்ட்: ரமேஷ்: நல்ல பையனாத்தான் சார் இருந்தேன். பட் இட் கில்ஸ் டு பீ ஐடில். மாதவன்: விஸ்கி நெவர் சால்வ்ஸ் எனி ப்ராப்ளம். தனியா குடிப்பீங்களோ? கிட்சன்: ரோகிணி: 7 மணி ஆகக்கூடாது நிர்மலா. லைட்டையெல்லாம் ஆஃப் செஞ்சுட்டு ஆரம்பிச்சுடறார். நேத்து நான் வந்து அரை மணி நேரம் கதவை இடிச்சிருக்கேன். ஆடிக்கிட்டே வந்து திறக்கறார். திறந்தவுடனே ‘ எவன்கூடடீ சுத்திட்டு இவ்ளோ லேட்டா வரே?’ (குரல் கம்முகிறது) நிர்மலா: அமைதியாகி பாத்திரங்களை டிஷ்வாஷரில் இருந்து எடுத்து வைக்கிறாள். ரோகிணி கண்ணைத் துடைத்துக்கொண்டு: ஐ டோண்ட் நோ வாட்ஸ் காட் டு ஹிம். முன்னே எல்லாம் இப்படி இல்லை. பேஸ்மெண்ட்: ரமேஷ்: ஐ டோண்ட் நோ வாட்ஸ் காட் டு ஹெர். முன்னே எல்லாம் இப்படி இல்லை. எனக்கு வேலை போனதில இருந்துதான்.. <ஃப்ளாஷ்பேக்> லிவிங் ரூம் சோஃபாவில் ரமேஷ் உட்கார்ந்திருக்கிறான். ரோகிணி ஆஃபீஸில் இருந்து வீடு திரும்பி பேகைத் தூக்கி டீபாயில் போடப்போய் அது ரமேஷ் மேல் பட்டுவிடுகிறது. ரமேஷ்: என்ன கொழுப்பா? பேகெல்லாம் மேலே போட்டு சாகடிக்க முடியாது தெரிஞ்சுக்க. ரோகிணி: ப்ராக்டிஸ் பண்றேன்.ஒருநாள் கத்தி வீசலாம். (குறும்பாகத்தான் சொல்கிறாள்) ரமேஷ்: நீ வீசினாலும் வீசுவே. ஐ அம் அ டெட்வெயிட். யூ ஆர் த கேரியர். ரோகிணி: லூஸுத்தனமா பேசாதே. பால் வாங்கி வந்தியா? ரமேஷ்: இல்லை. வெளியவே போகலை. ரோகிணி: ஒரு வேலைதானே சொன்னேன். அதைக்கூட செய்ய முடியாதா? ரமேஷ்: வேலைவெட்டி இல்லாம இருக்கேன்னு நக்கல் அடிக்கறியா? ரோகிணி அமைதியாக கிட்சனுக்குள் செல்கிறாள். ரமேஷ் தொடர்கிறான். ரமேஷ்: அவ்ளோ நல்லவளா நீ? நான் சொன்ன வேலையைச் செஞ்சியா நீ? ரோகிணி: எந்த வேலை? ரமேஷ்: அப்பாவுக்குப் பணம் அனுப்பச் சொன்னேனே, அனுப்பினயா? ரோகிணி: பல்லைக் கடித்துக்கொள்கிறாள். அச்சச்சோ.. மறந்தே போச்சே.. நாளைக்கு அனுப்பிடறேன். ரமேஷ்: கோபமாக: என்ன? இன்னும் அனுப்பலயா? அப்பாவோட ட்ரீட்மெண்டுக்கான காசு. உன் காசை அனுப்ப மாட்டியா? ரோகிணி: ஏன் இப்படிப் பேசறே? மறந்துபோச்சு. நாளைக்கு அனுப்பறேன் ரமேஷ்: உன் சம்பாத்தியத்துல வண்டி ஓடுதுன்ற திமிர்.. கிட்சன்: ரோகிணி: எவ்ளோ பேசினார் தெரியுமா அன்னிக்கு? ஆக்சுவலா அன்னிக்கு: கட் ஷாட்ஸ்: ஃபுல் ரஷ்ஷில் உள்ள ரயிலில் இருந்து இறங்குகிறாள் ரோகிணி. காரிடம் வந்தால் பார்க்கிங் டிக்கெட் இளிக்கிறது. ஆஃபீஸில் பேப்பர் மலைபோலக் குவிந்திருக்கிறது. வலியோடு வேலை செய்கிறாள். ரோகிணி:இத்தனையையும் மீறி நான் அவர்கிட்ட பதமாத்தான் நடந்துகிட்டேன். பேஸ்மெண்ட். இன்னொரு க்ளாஸை சரிக்கிறான் ரமேஷ். ரமேஷ்: கொழுப்பு சார். வேலை என்ன பிரமாதம்.. என் எக்ஸ்பீரியன்ஸ்க்கு உடனே கிடைச்சிரும். இவளோட கொழுப்பை உடனே அடக்கறேன். (பேக்கட்டில் தேடி எடுக்கிறான்) ஆண்டர்சன்.. லாயர் சார். என் எக்ஸ் கலீக் கொடுத்தான். வெட்டிவிட்டுட்டுத்தான் மறுவேலை. மாதவன்: கூல் கூல் ரமேஷ். ஏன் இப்படி அவசரப்படறே? என் பேச்சைக் கேளு.. இதெல்லாம் எல்லா வீட்டிலும் சகஜம். ரமேஷ்: சும்மா ஆறுதலுக்குச் சொல்லாதீங்க சார். கிட்சன்: நிர்மலா: ஆறுதலுக்காகச் சொல்லலை ரோகிணி. எங்க வீட்லே நடந்ததெல்லாம் கேட்டேன்னா இதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு தோணும். நான் கிராமத்தில் இருந்து வந்தவ. அமெரிக்காவுல எதைப்பாத்தாலும் ஆச்சரியம்.அப்ப இவர் டெய்லி லேட்டா வருவார். என்ன விஷயம்னே எனக்குப் புரியாது. பேஸ்மெண்ட்: மாதவன்: இவளுக்குச் சொன்னாலும் புரியாது ரமேஷ். என் ஆஃபீஸ் செகரட்டரிக்கு அப்ப கார் இல்லை. சோ, டெய்லி அவளை வீட்லே ட்ராப் பண்ணிட்டு வருவேன். அதை சந்தேகமா பாக்க ஆரம்பிச்சா. ரமேஷ்: ஒன் மோர் பியர்? மாதவன்: வேண்டாம்பா.. அவதான் ட்ரைவ் பண்ணுவா, இருந்தாலும் தூங்க முடியாது. ரமேஷ்: அப்புறம்? மாதவன்: என்னவோ அட்லாண்டா கண்ணகி மாதிரி உடனே அவ சகவாசத்தை வெட்டி எறிஞ்சாதான் உண்டு. இல்லாட்டி எனக்கு டிக்கட் புக் பண்ணிக்குடுன்னு சண்டித்தனம் செஞ்சா. கிட்சன்: நிர்மலா: டிக்கட் புக் பண்ணிட்டார். தப்பு இல்லன்னா ஏன் இப்படி எல்லாம் பண்ணனும்? நான் கிராமமா இருக்கலாம். ஆனா உள்ளுக்குள்ள ஒரு உணர்ச்சி எல்லாருக்கும் உண்டு. எது சரியான உறவு, எது தப்பான உறவுன்னு. 6 மணிக்கு ஆஃபீஸ்லே இருந்து கிளம்பி 10 மணிக்கு வீட்டுக்கு வருவார். கேட்டா ட்ராப் பண்ணேன்றார். ரோகிணி: மாதவன் சாரா? நம்பவே முடியலையே.. பேஸ்மெண்ட்: மாதவன்: நம்பினாளே.. வீட்லே டெய்லி நரகம். அப்பதான் தெரியவந்தது.. (பியரை சரித்துக்கொள்கிறார்) ரமேஷ்: என்ன? மாதவன்: ராகுல். கிட்சன்: நிர்மலா: நான் புள்ளையாண்டிருக்கேன்னு தெரிஞ்சவுடனே ரொம்பவே மாறிட்டார். சண்டையெல்லாம் குறைஞ்சது, ஆஃபீஸ் விட்டு டைமுக்கு வர ஆரம்பிச்சுட்டார். சொன்னா நம்பமாட்டே, அதுக்கப்புறம் எங்களுக்குள்ள ஒரு சண்டையும் வந்ததில்ல.. பேஸ்மெண்ட்: மாதவன்: ஒண்ணு தெரிஞ்சுக்க ரமேஷ்.. மெக்கானிகல் ஜார்கன்லே பெட்டிங் இன் பீரியட்னு ஒண்ணு சொல்வாங்க.. புது காம்பனண்ட்ஸ் அதிகமாத் தேயறதுக்கு. வாழ்க்கையிலேயும் அப்படித்தான். புது கல்யாண ஜோடிங்களுக்குதான் சண்டை அதிகமா வரும். ஒரு குழந்தை வந்தா எல்லாம் சரியாயிரும். மேலிருந்து குரல்: கிளம்பலாமா? லேட் ஆயிருத்து. மாதவன்: யெஸ் பாஸ். இதோ வந்துடறேன். கார்: காரில் ஏறுகிறார்கள் மாதவன், நிர்மலா மற்றும் ராகுல். ராகுல்: அங்கிள். இந்தாங்க கேம்.. ரமேஷ்: இட்ஸ் யுவர்ஸ். ராகுல்: இல்லை அங்கிள். மாம் கேம் டு நோ. மாதவன்: அடப்போடா.. பெரிய தங்கமலை ரகசியம் சொல்லிட்ட.. நிம்மி, யூ ட்ரைவ். நிர்ம்லா: எத்தனை? ஒழிஞ்சுபோ.. நான் வரேன் ரோகிணி. டேக் கேர்.. எல்லாம் நல்லபடியா நடக்கும், நான் சொன்னதுக்கு வழியைப்பாரு. மாதவன்: ரமேஷைப்பார்த்து.. நான் உனக்குச் சொன்ன அதே மேட்டராதான் இருக்கும்னு நினைக்கறேன். ஆகவேண்டியதைக் கவனிங்க. ரோகிணியும் ரமேஷும் குறும்பாகப் பார்த்துக்கொள்கிறார்கள். கார் வேகமெடுக்கிறது. இளையராஜா பாடுகிறார். “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” நிர்மலா: சின்னப்பசங்க.. எவ்ளோ அவசரமா டைவர்ஸ்ன்னு போயிடறாங்க பாத்தீங்களா.. மாதவன்: ஆமாம். பிடிப்பு ஒண்ணும் இல்லைல்ல.. புருஷன் பொண்டாட்டி டைவர்ஸ் பண்ணலாம், தப்பில்ல, அப்பா அம்மா டைவர்ஸ் பண்ணக்கூடாதுன்னு எதோ ஒரு சினிமால டயலாக் வருமில்ல? நிர்மலா: அதான் சொல்லிட்டு வந்தேன். நீங்க என்ன சொன்னீங்க என் குடிகாரக் கணவரே? மாதவன்: சம்திங் சிமிலர். இவனுக்கு இப்ப வேலை இல்லைன்ற சுயபச்சாதாபம். எங்கே பொண்டாட்டி மதிக்காம போயிடுவாளோன்ற பயம். நிர்மலா: அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஆம்பளைங்கற திமிர். நான் பார்க்காததா? மாதவன்: டோண்ட் ஜெனரலைஸ். ஒரு ரமேஷ் தப்பு பண்ணா உடனே ஆம்பளைங்கன்றியே. நிர்மலா: ரமேஷ், மாதவன்.. பேர்தான் மாறும். குணம் எங்கே மாறுது? மாதவன்: ஆம்பளைங்களுக்கா சொல்றாங்க “there can be different types of women, but there is only one type of wife”ன்னு நிர்மலா: இப்ப யார் ஜெனரலைஸ் பண்றது? ராகுல் (அலுப்பாக) : if u guys want to fight, get home and fight. எனக்கு தலைவலிக்குது. கேம்லே கான்சண்ட்ரேட் பண்ண முடியலை. மாதவன்: இயர்ஃபோன் போட்டுக்கடா.. அலுப்பைப்பாரு.. அப்படியே அம்மாவாட்டம்.. நிர்மலா: இப்ப எதுக்கு என்னை இழுக்கறீங்க? மாதவன்: இல்லையா பின்னே.. அடுத்தவனோட உணர்ச்சிகளை மதிக்காம தன் காரியம்தான் பெரிசுன்னு வாழற குணம்.. நான் கோபத்துல கத்தினாலும் அதை கொஞ்சம்கூட மதிக்காம உன் பாட்டுக்கு வேலை செய்யறவதானே நீ.. நிர்மலா: நீ கோபமாப் பேசும்போது பதில் சொன்னா சண்டை வலுக்கும்னு சும்மா இருந்தா அதுக்கும் இப்படி ஒரு பேரா? மாதவன்: சும்மா இருக்கயா நீ? உன் கோபம் எனக்கு தூசுன்னுதானே இம்ப்ளை பண்றே.. நிர்மலா: வெட்டிக்குக் கோபப்பட்டா, தூசுதான். இவரு கோபப்படுவாராம், நாம உடனே மன்னித்துவிடு கண்ணாளான்னு கால்லே விழணுமாம். சதி அனுசூயா காலம் எல்லாம் எப்பவோ மலையேறிடுச்சு.. மாதவன்: தேர் யூ கோ. இதுல ஆம்பளை பொம்பளை எங்க வந்தது? நான் எதிர்பார்க்கிறது மனுஷ உணர்வுக்கு ஒரு மரியாதை. நிர்மலா: அது ரெண்டு பக்கமும் இருந்தா மரியாதை. ஒரு பக்கம் மட்டும் இருந்தா ஆணாதிக்கம். மாதவன்: நான் அந்த மரியாதை கொடுக்கலைன்னா சொல்றே? ஆர் யூ சீரியஸ்? நிர்மலா: எனக்குத் தெரிஞ்சு ஒண்ணும் நடக்கலை.. மாதவன்: நானும் சொல்லிக் காட்டிக்க விரும்பலை.. டோண்ட் புஷ் மீ. நிர்மலா: அப்படி ஒரு விஷயம் நடந்திருந்தா, சொல்லலாம்.. கற்பனையச் சொன்னா, நான் ஏத்துக்க முடியுமா? மாதவன்: ராகுல் வரான்னு தெரிஞ்சதும் நான் மாறினேனே.. அது உன்னோட உணர்ச்சிக்கு கொடுத்த மரியாதையாத் தெரியலையா? சீன் சேஞ்சஸ் டு ரமேஷ் வீடு. ரோகிணி: நைஸ் கப்பிள். எவ்ளோ அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்காங்க. ரமேஷ்: எக்ஸ்பீரியன்ஸ் இருக்கில்ல.. ரோகிணி: சரி. எனக்கு கொஞ்சம் க்ளீனிங் வேலை இருக்கு. வரேன். ரமேஷ்: இரு நானும் வரேன். நீயும் பாவம் காலைலே இருந்து சமையல், க்ளீனிங்னு செஞ்சுண்டே இருக்கே. ரோகிணி: ஆச்சரியமா இருக்கே.. நீயா ஹெல்ப் பண்றதுக்கு வரே? ரமேஷ்: ஹேய் செல்லா.. Do you really expect me to say those words? ரோகிணி: எந்த வார்ட்ஸ்? ரமேஷ்: that I am sorry for my behaviour ரோகிணி: லூஸே.. எனக்கு உன் சாரியும் வேணாம் லாரியும் வேணாம். All I expect.. ரமேஷ்: I love you? ரோகிணி: Exactly..வேறென்னடா வேணும் எனக்கு? ஃபோன் அடிக்கிறது. ரமேஷ்: சொல்லுங்க நிர்மலா.. எதாச்சும் விட்டுட்டுப் போயிட்டீங்களா? காரில். நிர்மலா: ரமேஷ்? அந்த லாயர் ஃபோன் நம்பர் வேணுமே, தரமுடியுமா? ***டைட்டில்ஸ்*** [linesep] 40 அப்பாட்டக்கர் இளா [Ila-1] தமிழ் இணையத்தில் வ.வா.சங்கம், சங்கமம் என்று முக்கியமான சில நிகழ்வுகளில் தீவிரமாக பங்காற்றியிருக்கிறார்.  ஐஃபோன் காமிராவைக் கொண்டே ஒரு குறும்படத்தை முழுவதுமாக உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார்.  அந்த அனுபவங்களை அழகாக தொகுத்து அளித்திருக்கிறார். [linesep] http://www.youtube.com/watch?feature=player_embedded&v=qGf-oPYsbEs அமெரிக்காவில் வெளியிடங்களில் குறும்படம் எடுப்பது என்பது கொஞ்சம் என்ன, ரொம்பவே சிக்கலானா அதே சமயம் அதிகப்  பொருட்செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனாலயே ஒரு அறைக்குள்ளேயோ, கட்டிடத்துக்குள்ளேயோ படப்பிடிப்பு வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் அடிநாதம். இப்படித்தான் ஆரம்பித்தது அப்பாடக்கர் என்னும் குறும்படம். பொருட் செலவுன் இருக்கக்கூடாது, கண்டிப்பாக கருத்துச் சொல்லக்கூடாது, சோகம் இருக்ககூடாது. இது எல்லாம் நாங்களே வைத்துக்கொண்ட அளவுகோல். ஒரு வழியாக நானும் ஸ்ரீராமும் ஒரு கதை தயார் செய்தோம். அதாவது Oneline. ஆங்கிலம் பேசத் தெரியாத ஒரு கிராமத்தான், நகரத்தில் வசிக்கும், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் அவனுடைய நண்பனான அறைக்கு வந்து அவனுக்கு கிடைக்க இருக்கும் வேலையப் பறித்துக்கொள்கிறான். இதுதான் நாங்கள் நினைத்து வைத்த கதை. வசனம் எழுத இந்தா அந்தா என்று கொஞ்சம் காலம் பிடிக்க இதே சாயலுடன் “பெங்களூரு” என்ற இன்னொரு குறும்படம் வெளியானது. மறுபடியும் நானும் ஸ்ரீராமும் பேசினொம் பேசினோம், பேசினோம். அப்படி உருவான கதைதான் அப்பாடக்கர்(கதையே இல்லைன்னுதான் கடைசி வரைக்கும் நம்பிட்டு இருந்தோம்) முதல் நாள், வெளிப்புற படப்பிடிப்பு போகும்போது (300 மீட்டரில் இருந்தது படப்பிடிப்புத்தளம், ஏனெனில், மறுபடியும் முதல் வரியைப்படியுங்கள்) காட்சி அமைப்பு மட்டுமே இருந்தது, வசனம் கூட எழுதப்படவில்லை. அங்கேயே வசனம் எல்லாம் பேசி எடுத்துவிட்டு வந்து பார்த்தால் திருப்தி இல்லை. அடுத்த நாள் வசனம், முழு கதைக்களன், வசனம் தயார் செய்து கேபிள் சங்கரிடம் கொடுத்து விவாதித்து, சரி செய்து கொண்டேன். அதாவது Bounded Script தயாராகிவிட்டது. ஸ்ரீராமும் நானும்  அருகருகே குடியிருப்பதால் தினமும் ஏதோ சும்மானாச்சுக்கும் சந்தித்து இது பற்றி பேசிப் பேசியே எங்களையே உசுப்பேற்றிக்கொண்டோம். ஒரு அறையில் அதுவும் இந்தியாவில் நடக்கும் கதை என்பதால் என் வாரிசின் அறையை இந்திய இளைஞர்கள் இருக்கும் அறையாக மாற்ற முயன்றேன். படங்கள் தயார், இந்தியாவில் இருப்பது போன்ற பாய் வேண்டும், படுக்கை விரிப்பு வேண்டும், காரணம் American Carpet Floor. அதனால் தரையை முழுக்கவே மறைத்தாக வேண்டிய கட்டாயம். படங்கள் சுலபமாகக் கிடைத்தது, நன்றி இணையம். படுக்க விரிப்புகள் சமாளிக்கப்பட்டது. ஆனால் பாய், தேடியலைந்து ஓரிடத்தில் கிடைத்தது. பொம்மைகள் நிறைந்த வாரிசின் அறையை இந்திய அறையாக மாற்றம் செய்ய 45 நிமிடங்கள் ஆகும். படப்பிடிப்பு முடிந்தால் மீண்டும் மாற்ற மற்றொரு 45 நிமிடம் ஆகும். தொடர்ந்தும் படமெடுக்க முடியாத நிலை. வேறென்ன கால்ஷீட் பிரச்சினை. இவர் வந்தால் அவரில்லை. அவர் இருந்தால் இவரில்லை. எப்படியோ முதல் நாள் உட்புற படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. நடிப்பதற்கு நூல் பிடித்துக்கொண்டார்கள் ராமும், ஜெயவேலனும். நடிப்பு வரும் என்பது அவர்களுக்கும் தெரியவில்லை, எனக்கும் தெரியவில்லை. ஆனால் காட்சியமைப்போடு அட்டகாசமா ஒன்றிப் போனார்கள். ஒவ்வொரு முறை வசனம் பேசும் போதும் மெருகேற்றிக்கொண்டே இருந்தோம். முதல் நாளே திருப்தியாக முடிந்தது. நான்கு நாட்கள் வெளிப்புறத்திலும்(தலா 30 நிமிடங்கள்), 6 நாட்கள் உட்புறத்திலும் படம் எடுத்தாயிற்று. இடையே வாரிசு நடிக்கும் காட்சி சேர்க்கப்பட்டது. இந்த சமயத்தில் படத்தின் இன்னொரு நாயகனான ஜெயவேல் இந்தியாவிற்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.கதையை எப்படி முடிப்பது என்று நான் தெளிந்து வருவதற்குள் ஜெயவேலன் இந்தியா கிளம்பினார். அவரில்லாமலேயே கதையை நகர்த்துவது எப்படி என்று மண்டை காய்ந்து போனது. ஸ்ரீராம் மற்றும் ஜெயவேலன் ஆகியோரைக் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். அவர்களை நான் படுத்திய பாடு எல்லாம் Editingல் தெளிவாகத்தெரிந்தது. ஆனால், சீக்கிரமே நடிப்புக்கலையை கற்றுக்கொண்டது நான் செய்த புண்ணியம். Editing என்று வந்த பிறகுதான் தெரிந்தது, 35 GB இருந்தது raw files. அதுவரைக்கும் சுலமாக தெரிந்தது எல்லாமே கஷ்டமாக தெரிந்தது. ஒரு நாளைக்கு, வடிவேலு சொல்வது போல, எல்லாமே தேவை இல்லாத ஆணிகளாகவே தெரிந்தது.அடுத்த எல்லாமே தேவையான ஆணிகளாகத் தெரிந்தது.  ஜெயவேலன் இல்லாத நேரத்தில் டப்பிங் செய்யவேண்டும். இந்தியாவிலிருந்தே செய்ய முடியுமா என்று முயற்சித்தேன். அவருக்கு கல்யாண வேலை. ஆமாம், ஜெயவேலைனுக்குத்தான் திருமணம். அதிக அழுத்தம் வேறு தரமுடியாத நிலை. ஆனால் அவரே பேசினால் நல்லது என நினைத்தேன். வேறு வழியில்லாமல் அவருக்குப் பதிலாக வேறொருத்தர் செய்துவிடலாம் என முடிவு செய்தேன்.வேறு யார் செய்ய, நானேதான். படம் ஆரம்பத்தில் திருநெல்வேலி களத்துடன் ஆரம்பித்தது. பிறகு கோவை வட்டார மொழிக்கு மாற்றினேன், காரணம் நமக்கு நல்லா வரும் என்பதால். சரியாகப் பொருந்திப்போக, சும்மா எடுத்த சில காட்சிகளை வைத்து ஒப்பேற்றினேன். இது எல்லாம் எழுதப்படவே இல்லை. எடிட்டிங் முடிந்த பிறகே ஸ்ரீராமிற்கே தெரிந்தது. இடையிடையே ஸ்ரீராமும் நானும், பல விதமாக காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தோம். எப்படி காட்சிகளை அமைத்தாலும் வேறு வேறுவிதமான பரிமாணங்கள் வருவதைக்கண்டு நாங்களே ஆச்சர்யப்பட்டுக்கொண்டோம். அதிசயித்தோம் எடிட்டிங் என்னும் பெரும் கலை கண்டு.உண்மையைச் சொன்னால் கத்திரி வைப்பதில் தான் படத்தின் ஓட்டம் அமைந்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் வெளியுலகில் இருப்பவர்களுக்கு தெரிவதேயில்லை. இசைக் கோப்பிற்காக ஒரு வார காலமானது. அப்படி இப்படியென 4 மாத காலமானது. பல இரவுகள் 2 மணி வரைக்கும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். கண்டிப்பாக 80-100 மணிநேரமாவது உழைத்திருப்பேன் என நினைக்கிறேன். ஒரு வாராக 6 நிமிடத்திற்கு ஜெயவேலன் இல்லாமலேயே படம் முடிந்தது. வெளியிடும் நேரத்தில் எனக்கு ஒரு தயக்கம். காரணம், படம் எனக்குப் பிடிக்கவில்லை, அடுத்தது negative thought உருவாக்கம். IT பத்தின இந்த விசயங்கள் பெரிதாக பேசப்படவில்லை எனினும் இந்தப் படம் தெளிவாகவே அதைச் சொன்னது. ஸ்ரீராம் கோபத்தின் உச்சநிலையை அடைந்திருந்தார், ருத்ரதாண்டவம் ஆடாதது ஒன்றுதான் குறை. படம் வந்தே ஆகவேண்டும் என்று அவரே கடைசியாக ஒரு நாள் குறித்தார். அதற்கு முன்னரே படம் முடிவடைந்திருந்தது. சொன்னதேதியில் ஸ்ரீராமிம் கையால் படம் வெளியிடப்பட்டது. ஆனால தமிழோய்வியம்தான் படம் வெளியிடுவதாக இருந்தது. எங்களுக்குள் இருந்த குழப்பத்தால், இரு பக்கமும் படம் ஒரே நாளில் வெளியானது. பதிவர்கள் மட்டுமே முதல் நாளில் அதிகம் பார்த்தார்கள் என நினைக்கிறேன், தெரிந்தவர்கள் ஆதலால் யாரும் பெரிதாக குறை சொல்லவில்லை. நல்ல நண்பர்கள். Gregopaul எனும் twitter நண்பர்கள் படத்தை அங்குலம் அங்குலமாக விமர்சித்தார், திரைப்பட்த்தில் ஒளிப்பதிவாளராக இருக்கும் அவர் படத்தினைப்பார்த்த கோணம் வித்தியாசமாக இருந்தது. இந்தப் படத்திற்காக செலவு என்பது செய்யப்படவே இல்லை. ஆமாம், படம் பிடிக்கத்தேவைப்படும் சில கருவிகள் வாங்கியதைத்தவிர படத்தில் செலவு என்பதே இல்லை. படம் பெரும்பாலும் நான் உபயோகப்படுத்தும் iPhoneலயே பிடிக்கப்பட்டது. Dollyயும் நானே வீட்லேயே செய்துகொண்டேன். ஒரு படம் எடுப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதும் எவ்வாறாக படம் எடுக்கவேண்டும் என்பதற்கான முதல் புள்ளியையும் கற்றுக்கொடுத்தது இந்தப் படம். ஆமாம் பாஸ், படம் எடுக்கிறது ரொம்பக் கஷ்டங்க. [linesep] 9 நாடகம் 41 வம்ச வதம் [Valarmathi]   வளர்மதி சிறு பத்திரிகையாளர், கலகக்காரன் என்ற பிம்பம், இலக்கியவாதி, கோபக்காரர் என்றெல்லாம் பற்பல பிம்பங்கள் கொண்டவர். இந்த நாடகத்தை எப்போதோ எனக்குப் படிக்க தந்திருந்தார்.  அப்பொழுதே ஒரு ஈர்ப்பு உண்டாகியிருந்தது.  மகாபாரத பின்புலத்தில் இன்னொரு நாடகமும் வாசித்திருக்கிறேன்.  ஏனோ இவர் அதிகம் எழுதுவதில்லை. [linesep] குடுகுடுப்பைக்காரனின் நுழைவுக்கு முன்பாக அரங்கில் கூக்குரல்கள், ஓலங்கள் (audio cuts)  … அரங்கத்தின் மையத்தில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தல் … பின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொன்றாக விளக்குகளை ஏற்றி வைத்தல் … ஒவ்வொரு விளக்கு ஏற்றப்படும்போதும் அதனருகில் படுகாயம் பட்ட உருவம் ஊர்ந்து செல்லத் தொடங்குதல் … ஒவ்வொரு காயம்பட்ட உருவமும் சிறிது தூரம் ஊர்ந்து சென்று பார்வையாளர்களிடையே அமைதியாக அமர்ந்து கொள்ளல் … இச்சமயம் முழுக்க அரங்கில் பதிவு செய்யப்பட்ட கூக்குரல்கள் ஓலங்கள் இடைவெளி விட்டு ஒலிக்கச் செய்தல் … அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டதும் குடுகுடுப்பைக்காரன் அரங்குள் நுழைகிறான். குடுகுடுப்பைக்காரன்:  நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது ஆத்தா பகவதி மாகாளியம்மா ரத்தஞ் சொட்டுற நாக்கு சொல்லுதம்மா அம்மா நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது அய்யா நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது மாதேவி மாகாளியம்மா நர்த்தனமாடி கால்கடுக்க தலகொடுத்தா நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது மண்ணாச விண்ணாச பெண்ணாச பொன்னாச பேராச பேயாச விட்டு ஆத்தா மாகாளியம்மா கேட்டா தல கொடுத்தா நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது (பார்வையாளர்களை நோக்கி) அம்மா நீ கொடுக்கியா அய்யா நீ கொடுக்கியா நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது (பார்வையாளர்கள் பின்னே இருந்து வரும் இளைஞன்) இளைஞன்:    ஏ குடுகுடுப்ப … நாங் கொடுக்கேன் குடுகுடுப்பைக்காரன்:                  தம்பீ … வெளயாட்டில்ல … தலயக் கொடுக்கோனும் … தலயக் கொடுக்கோனும் … இளைஞன்:                   தலையக் கொடுக்கேன் … தலையக் கொடுக்கேன் … பொறு பொறு … தலை என்ன கிள்ளுக்கீரையா லேசுல கொடுக்க? பொறு … குடுகுடுப்பைக்காரன்:                  தம்பீ, தெய்வகுத்தமாயிடும் … தெய்வகுத்தமாயிடும் … அளந்து பேசு, அளந்து பேசு … இளைஞன்:                  ஏ, குடுகுடுப்பை … தலையக் கேக்குற நீ … தலயக் கேக்குற  நீ … அளந்து பேச இது என்ன ஒழக்கா – ஆழாக்கா … இல்லே, என் தலை என்ன உனக்கு அளக்குற படியா? இத்தனை காலும் கையும் முண்டமும் சிதறிக் கிடக்கே … எங்கே, முழுசா ஒரு தலை கிடைச்சுதா உனக்கு? நான் தர்றேன்னு வந்திருக்கேன் … நீ என்னமோ … விரட்டுறயே! குடுகுடுப்பைக்காரன்:                  தம்பீ … தம்பீ … முழுசா ஒரு தலை … ஒரு தலை … குடுப்பியா? குடுக்கறயா? இளைஞன்:                  தர்றேன் … தர்றேன் … பதிலுக்கு நீ என்ன கொடுப்ப? உன் ஆத்தா என்ன கொடுப்பா? குடுகுடுப்பைக்காரன்:                  என் ஆத்தா எதக் கேட்டாலும் கொடுப்பா …இந்தக் கடலையே குடிக்கலாம் நீ … மரத்தப் புடுங்கலாம் மலயப் பெயர்க்கலாம் மண்ணப் பொன்னாக்கலாம் பொன்ன கல்லாக்கலாம் கல்ல சிலையாக்கலாம் சிலைய பெண்ணாக்கலாம் காத்தக் கட்டி கக்கத்துல வச்சுக்கலாம் ஆமா … ஒனக்கென்ன வேணும் இளைஞன்:                  எனக்கென்ன … ஒரே ஒரு வரம் வேணும் … குடுகுடுப்பைக்காரன்:                  வரம்தானே … நீடூழி வாழ வரம் வேணுமா … தாராளமா கொடுப்பா … காலம் பூரா அவ காலடியில அடிமையா விழுந்து கிடக்கலாம் … அது போதாதா? இளைஞன்:                  அடிமையாவா? குடுகுடுப்பைக்காரன்:                   பக்தனா துதிச்சுப் பிழைக்கலாம்னு சொன்னேனப்பா! இளைஞன்:                   பக்தனாவா! மஞ்சத் துண்டு போடமாட்டேன்! பச்ச சேல கட்ட மாட்டேன்! பட்டை அடிச்சுக்கிறேன், பொட்டு வச்சுக்கிறேன். ஆனா … மஞ்சத் துண்டு … பச்ச சேல … ஹூம் ஹூம் … அது ரெண்டு மட்டும் முடியாது … உன் ஆத்தா ஒத்துக்குவாளா? குடுப்பைக்காரன்:                  என்னாது! பட்ட அடிச்சிக்கறியா! ஏனடா! ஆத்தாவுக்கு முன்னால பட்டச் சாராயங்குடிச்சு நிப்பியா நீ! என்ன திமிர் உனக்கு! (குடுகுடுப்பை இளைஞனை அடிக்கத் தொடங்குகிறான்) காளி:                   அடேய்! பேய்க்கூத்தாடியபடி காளி அரங்கவெளியை வலம் வந்து அரங்கின் மையத்தில் நிலை கொள்கிறாள். குடுகுடுப்பைக்காரன் (தாயே என்றலறி) முழங்காலிட்டு கைகூப்பி வணங்கி உறைந்து விடுகிறான். இளைஞன் பயந்து நடுங்கி அவன் பின்னே ஒடுங்கி நிற்கிறான். காளி:                  அடேய்! யாரடா அது! பட்டச் சாராயம் கொடுக்கறேன்னு சொன்னது! குடுகுடுப்பைக்காரன்: (பின்னாலிருக்கும் இளைஞனை முன்னே இழுத்து நிறுத்தி) தாயே! மாகாளி! இவன்தாம்மா, இவன்தாம்மா! இளைஞன்: நா இல்ல, நா இல்ல. பயந்து நடுநடுங்கி ஒடுங்கி நிற்கிறான். குடுகுடுப்பைக்காரன், அவனைப் பிடித்து மண்டியிட்டு குனியச் செய்கிறான். இளைஞன்:                  (தலை நிமிராமல்) ஆத்தா! என்ன விட்டுடு, என்ன விட்டுடு! காளி:                   அடேய், மானிடா! எங்கேயடா சாராயம்! எங்கேயடா சாராயம்! குடுகுடுப்பைக்காரன்:                  ஆத்தா! … என்ன பேசுற நீ … என்ன கேக்குற நீ! காளி:                  (குடுகுடுப்பைக்காரனை நோக்கி) ம்ம்ம் … பட்டச் சாராயம் கேக்குறேனடா முட்டாள்! காது கேக்கலையா உனக்கு … (குடுகுடுப்பைக்காரனின் தலைப்பாகையை உருவி, மேலுக் உரக்க) சாராயம் … பட்டச் சாராயம் … குடுகுடுப்பைக்காரன்:                  (நடுங்கிக்கொண்டு) தாயே! பைரவி! அகிலாண்டேஸ்வரி … ஆரோக்கியமாதா … இல்லே இல்லே … ‘அபிராமி அபிராமி’ … ஐயோ … ஆத்தா … காளியாத்தா … பத்ரகாளியம்மா … அடுக்குமா? இது உனக்கே அடுக்குமா? காளி:                  இரத்தமா குடிச்சுக் குடிச்சு, நா வறண்டு போச்சுடா! கொஞ்சம் சாராயத்தக் கொடுடா … தாகமா இருக்குடா! ம்ம்ம்!!! (இளைஞனை நோக்கி வேகமாக நகர்ந்து, சூலத்தை உயர்த்திக் காட்டி பயமுறுத்தி) அடே! எங்கேயடா சாராயம்! எங்கே! தர்றியா இல்லை உன் தலைய எடுக்கவா! இளைஞன்:                  (பயத்தில்) ஆத்தா … இல்ல ஆத்தா! சாராயம் இல்ல ஆத்தா! நான் (நெற்றியில் பட்டையாக இழுத்துக் காட்டி) பட்டயா விபூதி போட்டுக்கறேன்னு சொன்னேன் ஆத்தா! காளி:                   (ஏமாற்றத்தில் இன்னும் கோபமாக) என்னது! சாராயம் இல்லையா! (குடுகுடுப்பைக்காரனை நோக்கி) என்னடா இது! ரெண்டு பேருமா சேர்ந்து விளையாட்டு காட்டுறீங்களா! எதுக்கடா என்னை இப்போ இங்கே கூப்பிட்டீங்க! (ஆவேசமாக) எதுக்கு! (இருவரையும் நோக்கி) என் பொறுமையைச் சோதிக்காதீங்கடா! குடுகுடுப்பைக்காரன்:                  ஆத்தா! இவன் … இவன் … தலையைக் கொடுக்கத் தயாரா இருக்கானாம்! காளி:                  (இளைஞனை வியந்து பார்த்து சில நொடிகள் நிதானித்து பலமாகச் சிரிக்கிறாள்) காளி:                   இவனா! அங்கே குற்றுயிரும் குலை உயிருமாய் இருக்கும் ஆயிரமாயிரம் உடல்களைச் சுவைப்பதை விட்டுவிட்டு, இந்தப் பதர் சொன்ன ஒரு வார்த்தையைக் கேட்டு – சாராயம் என்ற ஒத்த வார்த்தையைக் கேட்டு இப்படி நாக்கைத் தொங்கப் போட்டு ஓடி வந்தேனே! என்னைச் சொல்லனும், என்னைச் சொல்லோனும் (தலையில் அடித்துக் கொள்கிறாள்). இளைஞன்:                  ஆத்தா … கடல் தாண்டி வந்தியா! ஆத்தா … இப்படி உக்காரு ஆத்தா … உக்காரு! (அரங்கின் மையத்தில் அவளை அமர வைக்கிறான்) குடுகுடுப்பைக்காரன்:                  ஆமாண்டா அபிஷ்டு. ஆத்தா கடல் தாண்டித்தான் வந்திருக்கா. உனக்காக … உனக்கு வரங் கொடுக்கறதுக்காக … கோட்ட விட்டுடுவ போல இருக்கே … இளைஞன்:     ஆத்தாவப் பாத்தா வரங்கொடுக்குற நிலைமையில இல்லை போலிருக்கே! (கலக்கத்துடன்) சாராயம் கொடுக்காத ஆத்திரத்தில என் தலைய எடுத்துட்டு அவபாட்டுக்கு போயிடுவா போலிருக்கே! குடுகுடுப்பைக்காரன்:                   அடேய்! உன் ஒரு தல ஆத்தாவுக்கு எம்மாத்திரம் … ஆத்தா & co பல லட்சம் தலைகள உருட்டியிருக்காக. இளைஞன்:     ஆத்தா & co – வா? குடுகுடுப்பைக்காரன்:                   ஆமாமடா … சகோதரிகள் நாலுபேர் … திசைக்கு ஒருத்தி. மேற்கு ஆரோக்கியமாதாவுக்கு , கிழக்கு மகிஷாசுரமர்த்தினிக்கு , வடக்கு திரிசூலிக்கு , தெற்கே … பத்ரகாளி … யுகயுகமா மனுஷங்க ரத்தம் குடிச்சுக் குடிச்சு அட்டகாச நடனம் ஆடிட்டிருக்காங்க. ஆனந்தக் களி நடனம் … ஆகா … காணக் கண் கோடி வேணுமடா … கண் கோடி வேணும் … என் மாகாளி, பத்ரகாளியம்மா பாதம்பட்ட மண் ரத்தத்தால சிவக்குமடா, ரத்தத்தால சிவக்கும் … புத்தனையே புல்லனாக்கும். இளைஞன்:                  என்னது! புத்தனையேவா? குடுகுடுப்பைக்காரன்:                   நாஞ்சொல்லலையப்பா, நாஞ்சொல்லல. தெற்கின் மாகாவியம், மகாவம்ச மகாகாவியம் சொல்லுது … போர்த்தியிருக்கும் குடுகுடுப்பைக்காரனுக்குரிய சால்வையைக் களைந்துவிட்டு ஒரு கதைசொல்லியாக முன்நகர்ந்து, பார்வையாளர்களை நோக்கி … கல்பகோடி ஆண்டுகள் முன்னே பூமாதேவி மத்தியிலே – நெத்தியிலே ஒசந்து நின்ன மேருமல அடிவாரத்திலே பரந்து விரிந்த ஜம்புத்வீபம் நாவலந்தீவு பாரதவர்ஷம் யுகங்கள் கற்பூரமாய் எரிந்து அந்தார கல்பத்திலே ஆங்கார ஆசையிலே மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை பேராசை பேயாசை விரட்டி பாவம் பலகோடி புரிந்த பாதகரைக் காத்துக் கடைத்தேற்றப் பிறந்தான் சித்தார்த்தன் போதி மரத்தடியில் சித்தம் தெளிந்து ஞானம் கண்டு புத்தனான ஒன்பதாம் வருஷத்திலே ஜம்புத்வீபத்தின் தென் கோடியிலே இந்து மகாசமுத்திரத்திலே தத்தளித்துத் தவித்துக் கிடந்த இலங்கைத் தீவும் சேர்ந்தான் மாகாளி பாதம் பட்ட மண்ணல்லவா புத்தனும் புல்லனானான் புத்தனும் புல்லனானான் புயலும் பெருமழையும் இருளும் சுடுநெருப்பும் பொழிந்து ஆங்கே கூடிக்களித்திருந்த யட்சர்களை பூச்சிக்காட்டி பணியவைத்தான் பணியவைத்தான் பெளத்த மாகாவியம் மகாவம்ச மகாகாவியம் சொல்லுதடா புத்தனும் புல்லனானான் புத்தனும் புல்லனானான் … எம் மாதேவி மாகாளி பெளத்த மாகாவியத்திலே கொண்ட ரூபம் விகாரை தமிழன் தலையறுத்த வாள் கழுவி அச்செந்நீர் பருகி சூல் கொண்டு மாகாளி விகாரி ஈன்ற பிள்ளை துத்தகமுனு … துத்தகமுனு … கதைசொல்லி, இளைஞன், காளி மூவரும் இணைந்து ஒரு வட்டமாகச் சுழன்று பாத்திரம் மாறுகின்றனர்: கதைசொல்லி அரசனாக, இளைஞன் துத்தகமுனுவாக, காளி விகாரையாக. அரசன்:    (துத்தகமுனுவை நோக்கி) துத்தகமுனு! தாயின் தாள் பணிந்து தருக்கழித்து தணிந்து என் முன்னே வா! துத்தகமுனு விகாரையின் தாள் பணிந்து, தந்தையின் முன் வந்தமர்கிறான்.   அரசன்:     பிள்ளாய்! காட்டுக் குறவர்க்கும் கிட்டாத தேனெடுத்து பன்னிரெண்டாயிரம் பிக்குகள் பருகி மீதம் தந்ததைச் சுவைத்து தமிழனொருவன் தலையறுத்த வாள் கழுவி அச்செந்நீர் பருகி அறுத்த தலைமீதேறி அநுராதபுரத்து பொற்றாமரைக் குளத் தாமரை மலர் சூடி தவமிருந்து பெற்றாளடா உன் அன்னை  விகாரை. இப்பால் சோறு உண்டு யானுரைக்கும் மொழி கேட்டு சபதம் கொள்! (பால் சோறுள்ள கிண்ணம் எடுத்து, முன்னே வைப்பது போன்ற பாவனை செய்து) எம் தேசத்து உயிர்ச்சுடராம் பிக்குகளை ஒருநாளும் புறந்தள்ளாய்! துத்தகமுனு:              (பால் சோறு பருகும் பாவனை செய்து) இத்திண் தோள் மீது சிரம் நிற்கும் வரை எம் பிக்குகள் வழி நடப்பேன் தந்தையே! அரசன்:                  (இரண்டாவது பால் சோறு கிண்ணத்தைத் தந்து) ஒருபோதும் சோதர யுத்தம் புகமாட்டேன் என சபதஞ்செய்! துத்தகமுனு:             (பருகி) இன்னுயிர் துறக்கினும் உடன் பிறந்தோனை ஒரு வன்சொல் துணியேன்! அரசன்:                  தமிழர் தம் பகை நாடேன் என சூல்கொள்! துத்தகமுனு:              ஆ! (அலறி ஆவேச நடனம் ஆடி பால் சோறு கிண்ணத்தை வீசி எறிந்து …) ஏலாது! ஏலாது! ஒருபோதும் ஏலாது! உரக்கச் சொல்லி விரித்திருக்கும் சால்வையில் கைகால்கள் குறுக்கி படுக்கிறான். விகாரை:                 (அவனருகே சென்று தலை வருடி) துத்தகமுனு … ஏனய்யா கூனிக்குறுகி இக்கோலம் … ? துத்தகமுனு:              தாயே!முப்புறம் கடல் … வடக்கே தமிழர் … எங்ஙனம் யான் கைவீசி, கால் பரப்பி உடல் சாய்ப்பேன்? விகாரை:                 (ஆங்காரமாக சைகையுடன்) இப்படி உதையடா! தமிழரை இப்படி உதை! உதைத்துக் காட்டி ஆவேச நடனமாடி வலம் வந்து நிற்க, அதேபோது, துத்தகமுனுவும் அரசனும் இரு சேவகர் போல், சற்று தள்ளி மண்டியிட்டு நிலை கொள்கின்றனர். விகாரை:                  உதைத்துத் துரத்து தமிழரை உதைத்துத் துரத்து … கொல் கொல் பட்டத்து யானை சரிந்துபட கரம் பரப்பி களத்தில் நெடுக வீழ்வான் எல்லாளன் அவன் மகுடம் மண்ணில் தேய்த்து அமிழ்த்தி சிரம் கொய்து ஆங்கே நெடிதுயர்ந்து எழுப்பு ஓர் தூபி ஆண்டுகள் ஈராயிரம் கடக்கினும் உன் வழித்தோன்றல்கள் இரத்தத்தினால் அபிஷேகம் செய்து எனை வழிபட ஏதுவாய் நெடிதுயர்ந்த ஓர் தூபி … தமிழர் தலையறுத்து இரத்தாபிஷேகம் இரத்தாபிஷேகம் புத்தம் சரணம் புத்தம் சரணம் … தலைகள் தலைகள் புத்தம் சரணம் புத்தம் சரணம் … இரத்தம் இரத்தம் புத்தம் சரணம் புத்தம் சரணம் … எங்கே எங்கே புத்தம் சரணம் புத்தம் சரணம் … யாரடா அங்கே அடே வர்த்தனா அடே பக்சனா எங்கேயடா இரத்தம் எங்கேயடா இரத்தம் இருவரும் ஒருசேர:                  தாயே! இதோ … இதோ … இருவரும் பார்வையாளர்களிடையே அமர்ந்திருக்கும் 10 நடிகர்களில் ஒருவரைப் பிடித்து இழுத்து விகாரையின் முன் நிறுத்தி … இருவரில் ஒருவர்:                     உன் பேரென்ன? பிடித்து வரப்பட்டவர்:              குமரன் வயது:                                                 15 விகாரை:                                          கொல்! கொல்! இருவரும் அந்த இளைஞனைக் கொல்வது போன்று பாவனை செய்ய, அவன் விகாரையின் முன் வீழ்கிறான். அடுத்தவர் … இருவரில் ஒருவர்:                     பேரென்ன? பி.வ:                                         கந்தய்யா வயது:                                         18 விகாரை:                                     அறு! கழுத்தை அறு! பாவனை … இளைஞன் முன் விழுந்தவன் அருகே வீழ்கிறான். அடுத்தவர் … இரு. ஒரு:                                         பேரச் சொல்லு? பி. வ:                                                   கோணேஸ்வரி விகாரை:                                          இவளைச் சூறையாடுங்கள்! இருவரும் அவளைச் சுழற்றி விட அவள் மும்முறை சுழன்று விழ … விகாரை:                                          அவள் யோனியில் குண்டைத் திணி! வெடித்துச் சிதறட்டும்! அடுத்தவர் … இரு. ஒரு:                                         பெயர்? பி. வ:                                                   யோகன் … 14 வயசுங்கோ… விகாரை:                                          கிட்டே இழுத்துவாங்கடா அவனை … மடியில் கிடத்தி கழுத்தைக் கடித்து இரத்தம் உறிஞ்சுவது போன்று பாவனை செய்து உருட்டி விடுகிறாள். சரசரவென அடுத்தடுத்து … : குமுதா 16, செல்வா 22, குமரேசன் 19, ராசய்யா 17, யோகேஸ்வரன் 20, சீராளன் 15… உடல்கள் ஒன்றன்மீது ஒன்று சரிந்து ஒரு மலை போலக் குவிந்து கிடக்க, விகாரை அப்பிணக்குவியலைச் சுற்றி ஆவேச நடனமாடி, நின்று, “இரத்தம், இரத்தம்” என்று அலறிக்கொண்டு, பார்வையாளர்களைச் சுற்றி அங்குமிங்குமாக அலையத் தொடங்குகிறாள். வர்த்தனாவும் பக்சனாவும் காளி அமர்ந்திருந்த இருக்கையை பிணக்குவியலின் முன் கொண்டு வந்து இருத்தி, இருபுறம் அமர்ந்து, எதுவுமே நடவாதது போன்ற ஆழ்ந்த அமைதியான தொனியில் பேசத் தொடங்குகின்றனர். வர்த்தனா:                                        பக்சனா! ஈராயிரம் ஆண்டுகள்! நம் மூத்த குடி, துத்தகமுனு கொண்ட சபதம் முடித்தோமா? பக்சனா:                                             (சிறு எள்ளலுடன்) வர்த்தனா! துத்தகமுனுவின் வழித்தோன்றல் அல்லவே நான்! யானே துத்தகமுனு! யானே துத்தகமுனு! வர்த்தனா:                                        மமதை கொண்டு உளறாதே பக்சனா! எல்லாளன் பரம்பரையை எளிதாக எண்ணாதே! புல்லூடும் ஊடுருவிப் படரும் புல்லுருவிகள் அவர்கள்! புல்லுருவிகள்! பூண்டற்றுப்போகச் செய்யவேண்டும்! முடித்தாயா? உடுக்கை அதிர விகாரி அரங்கவெளிக்குள் நுழைந்து “தலைகள் தலைகள்” என்றலறி, தேடியலைந்து மீண்டும் பார்வையாளர்களைச் சுற்றிஅலைகிறாள். பக்சனா:                                             (பிணக்குவியலை நோக்கி கைநீட்டிச் சுட்டி) குவியல் காண்! பிணக்குவியல் காண்! வர்த்தனா:                                        (எள்ளல் தொனிக்க) இதென்ன பிரமாதம்! எத்துனை விலை கொடுத்தாய் இதற்கு! எத்துனை ஆயிரம் சிங்களப் பாலகரைப் பலி கொடுத்தாய்? எத்துனை பத்தாயிரம் இளைஞரை முடமாக்கினாய்? பிணக்குவியல் ஒன்றும் புதிதில்லை எனக்கு! ஜூலை 83 … சடுதியில் மறந்தாயோ … பதிமூன்று … வெறும் பதிமூன்று சிப்பாய்களின் மரணத்திற்கு மூவாயிரம் தமிழரை பலி கொண்ட படையெனது. மறவாதே! பதினெட்டாயிரம் தமிழரை வீதிக்கு துரத்திய பெருமை எனக்குண்டு. எளிய சிங்களவரை வெறிகொண்டெழச் செய்து வீதிகளில் வேட்டை மிருகங்களாய் உலவவிட்ட பேரரசுப் பொற்காலம் எனது. எம் அன்னை விகாரை வழி நின்று, வெளிக்கடையில் குருதி குடித்தனரே … வீரச் சிங்களவர் … குருதி குடித்தனரே … (பெருமிதத்தோடு) ஆ! அந்நாட்கள்! எம் சிங்கள இளைஞர், ஆண் மக்கள் தாம் என்பதை வீதிகளில் காட்டினரே! இருபது இளஞ்சிங்கங்கள் சேர்ந்து ஒரு தமிழ் பெட்டையை நட்ட நடு வீதியில் புணர்ந்து கொன்ற கோலம்! என்னே எம் மக்கள்! என்னே எம் மக்கள்! (சோகப் பெருமூச்சு விட்டு) எங்கே தொலைந்தன அப்பொற் கணங்கள்! அறுபதினாயிரம் வீரர்களை பலிகொண்டு நீ நடாத்திய இப்போரில் எங்கே … ஓர் சாகசம் சொல்! விகாரை அரங்கவெளிக்குள் நுழைந்து வெறிகொண்டாடி, சற்று எட்ட நின்றபடி பக்சனாவை நோக்கி “எங்கே எங்கே” என்று உரத்த குரலில் கேட்டு, உடன் மீண்டும் பார்வையாளர் ஊடாகச் சென்று அலைகிறாள். பக்சனா:                   வர்த்தனா! புவியறியும் உமது சாதனை. மறுத்தேனில்லை. மறக்கவும் இல்லை. வெளிக்கடைச் சிறை முற்றத்தில் பலி கொண்ட தமிழரை … இதோ இப்படி மலை போல் குவித்து, புத்த பகவானுக்கு உமது சேனைகள் சமர்ப்பணம் செய்த காட்சி … இன்னும் என் கண் முன்னே … (பரவசப்பட்டு) ஆகா! (கோரஸ்):                   (ஆழ்ந்த அமைதியான தொனியில்) புத்தம் சரணம் புத்தம் சரணம் தலைகள் தலைகள் புத்தம் சரணம் புத்தம் சரணம் புத்தம் சரணம் கொலைகள் கொலைகள் பிணங்கள் பிணங்கள் புத்தம் சரணம் புத்தம் சரணம் புத்தம் சரணம் புத்தம் சரணம் புத்தம் சரணம் … பக்சனா:                   சிங்களக் கோட்டையாம் பதுல்லாவிலே … உமது சேனைச் சிங்கங்கள் … ஒவ்வொரு பொன்னான மணித்துளியும் ஓயாது சுற்றிச் சுழன்று ஆடிய வேட்டை … ஆகா! … வழிநடாத்திய சிங்கங்கள் ஃப்ரான்சிஸ் ராஜபக்சே, திஸ்ஸநாயகே இருவரையும் மறக்க முடியுமா? … தம் பள்ளிப் பாலகரையும் வேட்டைக்குப் பழக்கிய ஹீராத் … ஓ! அவரை மறப்பேனா!  (பெருமிதத்துடன்) காளி கோவிலையும் சூறையாடி தங்க விக்கிரகத்தைக் கவர்ந்த ஹெத்திஹேவா …  என்னே அவர் நெஞ்சுரம் … என்னே அவர் நெஞ்சுரம் … எம் தாய் விகாரை பெருமிதம் கொண்டாள் … காளியையே சூறையாடிய சிங்கம் … பத்திரமாக இருக்க முடியாதவள் பத்ரகாளியாம் … எம் தாயின் செருக்கு முன் அவள் என்னே! விகாரை இப்போது சூலமேந்தி – காளியாகி, அரங்கிற்குள் நுழைந்து, இருவரையும் சுற்றி ஆவேசமாக ஆடி … காளி:                  அடேய்! யாரடா அது! இந்த மாகாளியைப் பழித்தது! எனக்கும் உங்க ஆத்தாளுக்கும் வித்தியாசம் தெரியுமாடா உங்களுக்கு! அடேய்! விட்டா என்னையும் சூறையாடுவீங்களாடா! அடேய்! அடேய்! வாங்கடா! எங்கே வாங்கடா பாக்கலாம்! (நின்று இருவரையும் வெறுப்புமிழ வெறித்து, மீண்டும் பார்வையாளர்களுக்கு அப்பால் உலவத் தொடங்குகிறாள்) வர்த்தனா:                   என் சாதனை புகழ்ந்தது போதும் பக்சனா … உன் சாகசம் என்ன … எங்கே ஒன்று சொல் … பக்சனா:                  (லேசாக சிரித்து) வெள்ளை வேன்! வர்த்தனா:                  ஓ! பக்சனா:                  உமது சிறு மூளைக்கு எட்டாத சாதனை! வடக்கே யான் நடாத்திய போர் … கூட்டங்கூட்டமாக புகலிடம் தேடி ஓடிய தமிழரை ஆட்டுமந்தைபோல ஓட்டி … ஓரிடத்தில் சேர்த்து … பீரங்கிக் கணைகள் … இங்கே தெற்கே … சும்மா வீட்டிலடைந்து கிடக்கும் தமிழரை தேடித் தேடி வேட்டையாடி பொறுக்கியெடுத்து மெல்ல நசுக்கி நசுக்கி உயிரெடுக்க வெள்ளை வேன் … (லேசான பெருமிதச் சிரிப்புடன்) மொத்த வியாபாரம் … சில்லறைப் புழக்கம் இரண்டும் செய்தேன் … உயிர் … வடக்கே வெல்லக்கட்டி … ஆங்கே விழுங்கினேன் … உடல் … இங்கே வெறும் வெங்காயம் … வேன் அனுப்பி உரித்து எடுத்து எத்தேனே … உம்மால் முடியாதது … நான் செய்தேன் … செய்து முடித்தேன் … போதுமா … ? வர்த்தனா:                   ஆகா! மெச்சினேன் … மெச்சினேன் … (எழுந்து பெளத்த முறைப்படி வணக்கம் செய்து ஆரத்தழுவிக் கொள்கிறான் பக்சனாவை) பக்சனா:                   (சற்றும் அமைதி மாறாத் தொனியில்) ஆயினும் … சிங்காதனத்தில் அமர்ந்தோர்க்கு சாகசமும் வீரமும் மட்டுமே போதா வர்த்தனா … மதிநுட்பம் வேண்டும் … மதிநுட்பம் … வர்த்தனா:                  மதிநுட்பம் என்று சொல்லாதே! சதி நுட்பம் என்று சொல்! (அழுத்தமாக) சதியாலோசனை! பக்சனா:                  (ஆமோதித்து தலையசைத்து) சரிதான் … சரிதான். தமிழர்க்கு மதிநுட்பம் வர்த்தனா. நமக்கு சதிநுட்பம். விதியை மதியால் வெல்வது வீணர்களின் வேலை. மதியை சதியால் வெல்வது எம் தாய் தந்த கடாட்சம். நினைவிருக்கிறதா? “தமிழனொருவன் தலையறுத்த வாள் கழுவி … அச்செந்நீர் பருகி … சூல் கொள்வேன்” என்று சூளுரைத்தாளே எம் அன்னை விகாரை … அத்தலை கொய்த காதை அறிவாயா? வர்த்தனா:                  அறிவேன் அறிவேன். என்றாலும் உலகறியச் சொல் பக்சனா. பக்சனா:                                             எல்லாளன் படைக்களம் சேர்ந்து … நல்லொழுக்கம் புனைந்து … பொய்யொழுகி அவன் மனம் கவர்ந்தான் சிங்களச் சூரனொருவன் … பொற்றாமரைக் குளத் தாமரை மலர் சேர்த்து … இருள் விலகாத அதிகாலைப் பொழுதொன்றில் அவன் புரவியொன்று கவர்ந்தான் … விரட்டி விரைந்தேகினான் எல்லாளன் படை வீரன் … (பலமாகச் சிரித்து) வீணன் … வெட்டி வீரன் … மறைந்து ஒளிந்து நின்ற எம் சிங்களச் சூரன் எட்டி … வாளை நீட்டி … அறுத்தான் … நோகாமல் அறுத்தான் … கழுத்தறுத்தான் …  சிரம் கொய்தான் … வீரன் வீழ்ந்தான் … வீழ்வான் … விதியை மதி வெல்லும் … மதியை … சதி வெல்லும் … மந்திராலோசனை வீழும் … தந்திராலோசனை … சதியாலோசனை வெல்லும் … சதியே மதி … சதியே மதி … அத்தனை சுலபம் அத்தனை சுலபம் வர்த்தனா … (இருவரும் சேர்ந்து உரக்கச் சிரிக்கின்றனர்). வர்த்தனா:                  ஆயின் … சதியாலோசனைக்கு கலங்காச் சித்தம் வேண்டும் பக்சனா. பக்சனா:                                             உண்டு வர்த்தனா. கவலை வேண்டாம். கலங்காச் சித்தமும் உண்டு, எப்பாதகத்திற்கும் கழுவாய் உண்டு என்பதும் அறிவேன்.  தமிழர் குருதியால் குளம் நிறைத்த துத்தகமுனு …  கடைத்தேற்றம் உண்டோவெனக் கலங்கி நின்றான். பெளத்தப் புனிதர்களாம் அரஹத்துகள் அவன் இருப்பிடம் நாடி, உரைத்த நியாயமும் அறிவேன். தமிழர் மானுடரே அல்லர். ஆகின் உனைப் பாவம் சேராது என்றுரைத்தது மறவேன். (உரக்க) தமிழர் மானுடப் பிறவி அல்லர். மானுடப் பிறவிகளே அல்லர். மாக்கள். மாக்கள். விலங்குகள். விலங்குகள் (உரக்கச் சிரிக்கிறான்). (உரக்க) தமிழரைக் கொல்வது பாவமில்லை. தமிழரைக் கொல்வது பாவமில்லை. கொன்றேன் … கொல்வேன் … குளமென்ன குட்டையென்ன … குருதியாறு பெருகச்செய்வேன் இந்துமாச் சமுத்திரத்தையே அவர்தம் செந்நீரால் நிரப்புவேன் … தமிழ் பேசும் ஒரு விலங்கும் பெளத்தம் தழைத்தோங்கும் இத்தீவில் உயிர் பிழைத்திருக்காது … சூளுரைக்கிறேன் … காளி ஆவேச நடனமாடியபடி அரங்கிற்குள் நுழைந்து, மையத்தில் நிலைகொள்கிறாள். இருவரையும் நோக்கி … காளி:                  அடே யாரடா அது? என்னைத் தெரியுதாடா? சொல்லுங்கடா? சொல்லுங்கடா? இருவரும் ஒருசேர:                  (மிகுந்த அமைதியாக) எம் தாயே! பெளத்த முறைப்படி வணங்குகின்றனர். காளி:                  (உரக்கச் சிரித்து) அதிபுத்திசாலி மூடங்களா! அதிபுத்திசாலி மூடங்களா! கும்பிட்டது போதுமடா … கொண்டு வாங்கடா … கொண்டு வாங்கடா … உருட்டுங்கடா தலைகளை … உருட்டுங்கடா தலைகளை … வர்த்தனாவும் பக்சனாவும் மிக நிதானமாக, பார்வையாளர்களிடையே இருந்து நபர்களை இழுத்து வந்து அவள் முன்பாகக் கிடத்துகிறார்கள். இறுதியாக, இருவரையும் நோக்கி … காளி:                   அடே முண்டங்களா … நான் உங்க ஆத்தா இல்லையடா … காளியடா காளி … மாகாளி … பத்ரகாளி … ஆயி … மாயி … நீலி … சூலி … இன்னும் மனுச முண்டத்துக்குள்ள இருக்குற எல்லாப் பேய்க்கும் மூத்தவளடா … எல்லோருக்கும் மூத்தவ … எங்கிட்டவே உங்க ஆட்டமா ? உரக்கச் சிரித்து ஆக்ரோஷமாக நடனமாடி, வர்த்தனா – பக்சனா இருவரையுமே மடியில் கிடத்தி இரத்தம் குடித்து அப்பிணக்குவியலில் தள்ளி, குவியலின் மேல் ஒருகாலை வைத்து ஆவேசம் அடங்காது நிற்கிறாள்.   [linesep]