[] பட்டினத்தடிகளின் பாடல்கள் தஞ்சை வெ.கோபாலன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-NoCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது. http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/ This book was produced using PressBooks.com. Contents - பட்டினத்தடிகளின் பாடல்கள் - அறிமுக உரை - மின்னூல் ஆக்கம் - 1. கோயிற்றிருவகவல் - 2. கச்சி திருஏகம்பமாலை - 3. திருத்தில்லை - 4. பொது - 5. அன்னை ஈமச்சடங்கு - 6. நெஞ்சோடு புலம்பல் - 7. தனிப் பாடல்கள் - 8. உடற்கூற்று வண்ணம். - 9. முதல்வன் முறையீடு - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி - வேண்டுகோள்! - ஆசிரியர் பற்றி - நன்றி 1 பட்டினத்தடிகளின் பாடல்கள் [pattinathar-cover] பட்டினத்தடிகளின் பாடல்கள் (எளிய உரையுடன்)   ஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன் privarsh@gmail.com வலைத்தளம் : http://tamilnaduthyagigal.blogspot.in/ வெளியீடு : FreeTamilEbooks.com திருச்சிற்றம்பலம்   தஞ்சை வெ.கோபாலன், புவனேஸ்வரி இல்லம், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம். 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007. # 9486741885 2 அறிமுக உரை பட்டினத்தார் நம் தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவம் தந்த சிவச் செல்வராவார். கடலோடி பொருள்தேடும் வைசிய குலத்து அவதரித்த செல்வர். வாழ்வின் செல்வச் செறுக்கையும், போகங்களையும் வெறுத்து, இறைவன் திருவருளை நாடி கட்டிய கோவணமும், நாவில் தவழ்ந்திடும் சிவநாமமும் உடன்வர கால் போன போக்கில் நடக்கலானார். “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” எனும் பொன்னான போதனையை உளத்தில் கொண்டு, அதுவே சத்தியம், அதுவே இறைவன் நமக்களித்த வரம் என்று உணர்ந்து அதனை ஒரு ஓலை நிறுக்கில் எழுதிப் போட்டுவிட்டுத் தன் கால் போன போக்கில் செல்லத் துவங்கினார்.   ஊர் ஊராய்ச் சென்று சிவதரிசனம் செய்து, யாக்கை நிலையாமை, பூமியில் சிற்றின்பக் கேணியில் மூழ்கிக் கிடந்து இறைவன் அருள் எனும் பேரருள் பெருங்கடலை மறந்த மக்களுக்கு இடித்துரைப்பது போல் உண்மைகளை உணரவைக்கும் பாடல்களைப் பாடிக் கொண்டு பரதேசியாத் திரிந்தார். உள்ளத்தை மெல்ல வருடிக் கொடுத்து உண்மைகளை மெல்லப் புகட்டும் பழைய பாதையை விட்டு நீங்கி, உள்ள உண்மையை போட்டு உடைத்து நம் கண் முன்னே பாதை தெரியுது பார் என்று உந்தித் தள்ளும் பாடல்கள் அவை.   போலித்தனமும், பொய்மையும், சுயநலமும், நிரந்தரமில்லா சிற்றின்பமும் வாழும் முறைக்கு ஏற்றதல்ல, ஈசன் இணையடி நிழலே நாம் வேண்டும் நிரந்தர பேரின்பம் என்பதை பறைசாற்றும் பாடல்கள் அவை. சொல்லுகின்ற சொல் கடுமையாய், உள்ளத்தைச் சுடும்படியாய், உள்ளதை உள்ளபடி கேட்கக் கூசினாலும் அதுவே முற்றிலும் உண்மை என்பதை உணரச் செய்யும் பாடல்கள்.   மனதுக்கும், செவிக்கும், கண்களுக்கும் தற்காலிக இன்பம் சேர்க்கும் கலை போலன்றி பட்டினத்தார் பாடல்கள் உண்மையை விண்டுரைக்கும் சத்திய வாக்கு என்பதால், மருந்து கசக்குமென்றாலும், உண்மை சுடும் என்றாலும், பிறவிப் பேற்றுக்கு அதுவே மருந்து என்பதால் பட்டினத்தார் சொற்களை விரும்பிப் படிக்க வேண்டும். இது அந்த நோக்கத்துக்காகச் செய்யப்பட்ட ஒரு எளிய முயற்சி. படித்தபின் கருத்தைப் பதிவு செய்யுங்கள். நன்றி.   அன்பன், தஞ்சை வெ.கோபாலன் 3 மின்னூல் ஆக்கம் மின்னூல் ஆக்கம் : த. ஸ்ரீநிவாசன் tshrinivasan@gmail.com   மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com வெளியீட்டாளர்: த. ஸ்ரீநிவாசன், தரை தளம் 4, சுபிக்ஷா அடுக்ககம், 42, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம் சென்னை  – 600 059 தொ. பே: +91 98417 95468 – tshrinivasan@gmail.com   நன்றி : http://pressbooks.com [pressbooks.com] 1 கோயிற்றிருவகவல் நிலமணிடல ஆசிரியப்பா   நினைமின் மனனே! நினைமின் மனனே சிவபெருமானைச் செம்பொனம் பலவனை நினைமின் மனனே நினைமின் மனனே அலகைத் தேரின் அலமரு காலின் உலகப் பொய் வாழ்க்கையை உடலை யோம்பற்க பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும் தோன்றிய மறையும் மறைந்தன தோன்றும் பெருத்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம் உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம் என்றிவை யனைத்தும் உணர்ந்தனை யன்றியும் பிறந்தன பிறந்த பிறவிகள் தோறும் கொன்றனை யனைத்தும் அனைத்து நினைக்கொன்றன தின்றனை யனைத்தும் அனைத்து நினைத் தின்றன பெற்றனை யனைத்தும் அனைத்து நினைப் பெற்றன ஓம்பினை யனைத்தும் அனைத்து நினை யோம்பின செல்வத்துக் களித்தனை தரித்திரத் தழுங்கினை சுவர்க்கத் திருந்தனை நரகிற் கிடந்தனை இன்பமுந் துன்பமும் இருநிலத் தருந்தினை ஒன்றொன் றொழியாது உற்றனை யன்றியும் புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம் என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக் கல்லினும் வலிதாக் கருதினை யிதனுள் பீளையும் நீரும் புலப்படும் ஒரு பொறி மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி சளியும் நீருந் தவழும் ஒரு பொறி உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒரு பொறி வளியும் மலமும் வழங்கும் ஒரு வழி சலமுஞ் சீழும் சரியும் ஒருவழி உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும் சட்டகம் முடிவிற் சுட்டெலும் பாகும் உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து கடிமலர் கொன்றை சடைமுடிக் கடவுளை ஒழிவருஞ் சிவபெரும் போக இன்பத்தை நிழலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி எனதற நினைவற இருவினை மலமற வரவொடு செலவற மருளற இருளற இரவொடு பகலர இகபரம் அறவொரு முதல்வனைத் தில்லையுள் முளைத்தெழுஞ் சோதியை அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை நெருப்பினில் அரக்கென நெக்கு நெக்குருகித் திருச்சிற்றம்பலத் தொளிருஞ் சிவனை நினைமின் மனனே நினைமின் மனனே சிவபெருமானைச் செம்பொனம் பலவனை நினைமின் மனனே நினைமின் மனனே.   இந்தப் பாடலில் அடிகளார் சொல்ல வந்த கருத்து நமது வேத வேதாங்கங்கள் சொல்லுகின்ற பழம்பெரும் கருத்துதான். ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ எனும் சொல் வழக்கு நம்மிடையே உண்டு. இந்த உலகம் எப்போதும் இயங்கிக் கொண்டே யிருக்கிறது. இயக்கம்தான் சக்தி. ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டு அந்த ஆற்றில் ஓடும் தண்ணீரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இந்த விநாடி அவ்விடத்தைக் கடந்த நீர் அடுத்த விநாடி எங்கே இருக்கும் தெரியாது நமக்கு. ஆனால் தொடர்ந்து ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அந்த நிலையில் இப்போது பார்த்த நீர் எங்கே செல்கிறது என்பதை நாம் கவனிப்பதில்லை. உயிர்கள் தோன்றுகின்றன, வளர்கின்றன, தோன்றியதன் நோக்கம் நிறைவேறுகிறதோ இல்லையோ, காலம் வந்ததும் அது மறைந்து விடுகிறது. ஒன்று மறைந்தது உணராமல் மற்றொன்று அங்கு தோன்றுகிறது. எட்ட இருந்த இந்த இயற்கையில் விளையாட்டைப் பார்ப்பவர்களுக்கு இங்கு ஏற்படுகின்ற இந்த மாற்றங்கள் அத்தனை இலகுவில் தெரிய வாய்ப்பில்லை. அந்த இயற்கையின் மர்மத்தை பாமரர்களும் உணரும்படியாக அடிகளார் இந்தப் பாடலில் கருத்துக்களை உதிர்த்திருக்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார். ஓ! மனிதர்களே! இந்த இயற்கையின் விளையாட்டில் தன்னை மறந்து ஈடுபட்டிருக்கும் மானுட ஜன்மங்களே, சற்று நினைத்துப் பாருங்கள். உலகில் பிறப்பு எடுத்து பேய் போன்று உடல் படைத்து சோதனைகள் எனும் பேய்க்காற்று சுற்றிச் சுழற்றி ஆட்டுவிக்கும் போதில், சிவனை நினை, அந்த பொன்னம்பலத்தில் ஆடுகின்ற சிதம்பரநாதனை, நடராசப் பெருமானை மனத்தில் நினை. பாரதி சொன்னது போல “உலகெலாம் பெரும் கனவு, அஃதுளே, உண்டு, உறங்கி, இடர்செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும்” என்றானே, அந்தக் கருத்துக்கு மூலம் இந்த பட்டினத்தார் வாக்குதான். எப்படி எனக் கேட்கலாம்? தனது சுயசரிதையை “கனவு” எனும் தலைப்பில் எழுதத் துவங்கிய பாரதி முதலில் பட்டினத்துப் பிள்ளையின் இந்த வரிகளோடுதான் துவக்குகிறான். ஆகவே மேற்சொன்ன கருத்துக்கு ஊக்கமளித்தது கீழ்கண்ட இந்த வரிகள்தான்: அது “பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே”   கனவின் முதலடிகள் “வாழ்வு முற்றும் கனவு எனக் கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண்” என்பதுதான். இந்த கனவின் கருத்தும் பட்டினத்தடிகளின் இந்த ‘யாக்கை நிலையாமை’ குறித்ததுதான். இந்தக் கோயிற்றிருவகவல் பாடலில் அடிகள் சொல்ல வந்த கருத்து பல்வேறு செயல்கள் எப்படி முன்பு இருந்ததென்பதையும், அது பின்னர் எங்ஙனம் மாறுகிறது, மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் மாறுகிறது என்பதை பலசொல்லி விளக்க முயல்கிறார். இவ்வுலகில் பிறந்த அனைத்தும் ஓர் நாள் அழிந்தே தீரும், அப்படி அழிந்த அனைத்தும் மீண்டும் இங்கு வந்து பிறந்தே தீரும். இறைவன் படைப்பின் இரகசியமே இதுதான். இன்று தோன்றியது நாளை மறைகிறது. நாளை மறந்தது மற்றொரு நாள் மீண்டும் தோன்றுகிறது. இன்று இந்த பூமியைக் கட்டியாளும் பார்போற்றும் சீமானாக விளங்குபவன், காலவோட்டத்தால் கீழ்நிலை அடைந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிக்கலாம். காலத்தின் கோலத்தால் தெருவோரம் கிடந்து வருத்தப்படுபவன் நாளையே தலையெடுத்து பாராளும் வேந்தனாக ஆகலாம். எவன் எப்போது எப்படி ஆவான் என்பதை அவனைத்(பரம்பொருள்) தவிர வேறு யாரறிவார் என்பது அடிகளின் கூற்று. இன்று உறவு நட்பு என்று கூடி மகிழ்ந்து வாழுவோர் நாளை விதியின் வசத்தால், காலவோட்டத்தின் கட்டாயத்தால் பிரிந்து வருந்தி வாழ நேரலாம். மகிழ்ந்து கூடி திருமண பந்தத்தால் கட்டுப்பட்டவர்கள் கூட குறுகிய காலத்தில் பிரிந்து நீ யாரோ, நான் யாரோ என்று வாழ்வதில்லையா? இன்று தலைவாழை இலைபோட்டு பஞ்ச பரமான்னம் அருந்தினாலும், நாளையும் அவை உண்டவனிடம் அப்படியேவா இருக்கப் போகிறது. மறுநாள் அது கழிவுப் பொருள். அதை யார் சீண்டுவார்கள். புத்தம்புது பட்டாடை விரும்பி இன்று அணிந்தாலும் நாளை அது தூய்மை செய்யப்பட வேண்டிய அழுக்கு அல்லவா? இன்று விரும்பியது நாளை வெறுக்கத்தக்கதாக ஆகும். சேர்ந்தவர் பிரிவர், பிரிந்தவர் சேர்ந்து கொள்வர். ஆசையோடு விரும்பியது வெறுக்கத்தக்கதாகும், வெறுத்து ஒதுக்கியது விரும்பத்தக்கதாகும். பிறக்கும் உயிர்கள் யாவும் இறந்து போகும், இறந்தவை அனைத்தும் மீண்டும் புனர்ஜென்மம் எடுத்து வரும். ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்று ஆதி சங்கரர் சொல்லவில்லையா? பரம்பொருளில் இருந்து ஜீவாத்மாக்கள் உதிக்கின்றன, வெட்ட வெளியில் அந்த ஜீவ ஒளிகள் சுற்றிச் சுழன்று ஓய்ந்து மீண்டும் அந்த பேரொளியில் சென்று ஐக்கியமாகிவிடுகின்றன. இதை உணர்ந்தவனே ஞானி. வாழ்க்கை என்பதில் ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு. சுவர்க்கமும் உண்டு, நரகமும் உண்டு. வருத்தமும் உண்டு, மகிழ்ச்சியும் உண்டு. எது எப்போது வரும், யாருக்குத் தெரியும்? பிறப்பு எடுத்தோம், பட்டுடைகள் எட்டு வகை அணிந்து கொண்டோம், அவை நிரந்தரம் என்று இறுமாந்திருந்தோம். கல்லினும் இது வலியது என்று ஆணவம் கொண்டிருந்தோம். எனக்கு நிகராக எவர் இங்கு என்று இரும்பூது கொண்டிருந்தோம். அப்படிப்பட்டதா இந்த உடல். கல்லினும் வலியதோ இது? நீர்க்குமிழி போன்ற இவ்வுடல் சிலநாட்கள் ஒதுங்கும் ஒரு குடிசை என்பதை உணர். (புற்பதம்=நீர்க்குமிழி. குரம்பை=குடிசை துச்சில்=தங்குமிடம்) உடலில் எத்தனை அங்கங்கள். அழுக்குப் பீளையும், நீரும் கசியும் ஓர் அங்கம். அழுக்கும் குறும்பியும் வெளிப்படும் ஓர் அங்கம், சளியும் நீரும் பொழியும் ஓர் அங்கம், உமிழ்நீர் கோழை ஒழுகும் ஓர் அங்கம், வளியும் (வாயு) மலமும் வெளிப்படும் ஓர் அங்கம், நீரும் சளியும் சரியும் ஓர் வழி, இன்று இன்பங்களைத் துய்க்கும் உடல் நாளை வெந்து சாம்பலாகும். இன்பத்தை உடல் துய்க்கிறதா, உள்ளம் துய்க்கிறதா? முடிவில் இரண்டுமே காலத்தோடு கரைந்து போகிறது. கானல் நீர் போன்ற தோன்றி மறையும் இன்பத்தை வேண்டி, நிரந்தர நன்மையைப் புறந்தள்ள முடியுமா? நினை! சிவபெருமானை நினை. மாய நினைவுகளை நீக்கிவிடு. இன்பமென நினைத்துத் துன்பங்களை தழுவும் எண்ணத்தைக் கைவிடு! இகத்துக்கும் பரத்துக்கும், அறத்துக்கும் முதல்வனான தில்லையில் எழுகின்ற ஜோதியாம் நடராசப் பெருமானை நினை. ஆனந்தக் கூத்தனை நினை. தீயிலிட்ட அரக்கு உருகுவது போல நெஞ்சம் நெக்குருகி திருச்சிற்றம்பலத்தானை, அவன் இருதாளை நினை. ஏ மனமே, அவனை நினை. சிவபெருமானை, பொன்னம்பலமாடும் திருவருட் செல்வனை எப்போதும் நினை. நிரந்தரப் பொருள் அவன், மற்றெல்லாம் தோன்றி அழிவன. நிரந்தப் பொருளை எப்போதும் நினை மனமே! 2 கச்சி திருஏகம்பமாலை (எளிமையான சில பாடல்கள்) கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன் வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால் கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால் எட்டி அடிவைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே! காலம் வந்ததும் உயிரைப் பறித்திடும் காலன் வந்து நம் உயிரை எடுத்துக் கொண்டு, உடலை வெட்டி சாய்த்த மரம்போல வீழ்த்தும்போது, தாலிகட்டிய மனைவியும், பிள்ளைகளும் ஆ, ஊ என்று முழக்கமிட்டு அழுவார், இடுகாட்டுக்கு வந்து ஈமக்கிரியை செய்வதன்றி நம்கூட மேலும் ஒரு அடி எடுத்து வைப்பரோ கச்சி நகர் வாழ் ஏகம்பநாதனே! பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள் தமை வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால் செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கு அன்பு இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே! நான் மிகப் பொல்லாதவன், நன்னெறிகளைக் கைக்கொண்டு வாழாதவன், புலன்களை வெல்லாமல் அவை போன போக்கில் போய் அழிந்தவன், கல்வி பயிலாதவன், மெய் அடியார்களைக் கண்டு வணங்காதவன், உண்மை பேசாதவன், இறைவா உன் திருவடியைப் பணியாதன் அப்படிப்பட்டவனாகிய நான் ஏன் இந்த மண்ணில் வந்து பிறந்தேன் கச்சி ஏகம்பநாதரே! பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில் குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது இறக்கும் *குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே! *(குலாமர்=கீழ்மக்கள்) பிறந்தபோது எதையும் இந்த பூமிக்குக் கொண்டுவந்ததில்லை; இந்த பூமியில் வாழ்ந்து முடிந்த பின் போகும்போது எதையும் கொண்டு போகப்போவதுமில்லை; இடையில் கிடைத்த இந்த செல்வங்கள் எல்லாம் இறைவன் தந்தது என்று தானும் அனுபவித்துப் பிறருக்கும் தந்து அறவாழ்வு வாழாத கீழ்மக்களுக்கு நான் என்ன சொல்வேன் காஞ்சி ஏகம்பரநாதனே! அன்ன விசாரம் அதுவே விசாரம்; அது ஒழிந்தால் சொர்ண விசாரம் தொலையா விசாரம்; நற்றோகையாரைப் பன்ன விசாரம், பலகால் விசாரம் இப்பாவி நெஞ்சுக்கு என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சி ஏகம்பனே! தினமும் சோற்றுக் கவலையே பெருங்கவலை, அதுதான் ஒரே கவலை. அது இல்லையென்றால் தங்கம் வாங்க வேண்டுமென்கிற கவலை அது முடிவில்லா கவலை, அழகிய பெண்களைக் கவரவேண்டுமெ என்கிற கவலை, பல நாளும் இந்தக் கவலை, இவை தவிர இந்தப் பாவிக்கு என்ன கவலை வைத்தாய் இறைவா காஞ்சி வாழ் ஏகாம்பரநாதனே! கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே! செய்துவிட்ட தவறுகள்தான் எத்தனை? படிக்காத தவறு, நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாத தவறு, இறைவனை நினைந்து கசிந்துருகி வணங்காத தவறு, அவனை நினைக்காத தவறு, ஐயனின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதாத தவறு, போற்றாத தவறு, வணங்காத தவறு இவை எல்லா தவறுகளையும் ஐயனே கச்சி ஏகம்பனே பொருத்தருள்வாய்! காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே மாதென்று சொல்லி வரும் மாயைதன்னை *மறலி விட்ட (*மறலி=காலன்) தூதென்று எண்ணாமல் சுகமென்று நாடும் இத்துர்புத்தியை ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே! மாயை என்று உணராமல் எதிரில் வரும் காதல் மடமாதரை பல்விதமாகக் கொஞ்சி மகிழ்ந்து வந்ததைத் தவிர, அது எமன் நமக்கு அனுப்பியுள்ள தூது என்பதை நினைத்துப் பார்க்காமல் இதுவே சுகம் என்று கண்டதே காட்சியாய், கொண்டதே கோலமாய் வாழ்ந்த இந்த அறியாமையை என்னவென்று சொல்வேன் இறைவா கச்சி ஏகம்பனே! ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும் சீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல தேசத்திலே யாரும் சதமல்ல நின்றாள் சதம் கச்சி ஏகம்பனே! வாழும் இந்த ஊர், சொந்தம் கொண்டாடுகின்ற உற்றார் உறவினர், கடினமாக உழைத்து வாங்கிய நற்பெயர், மனைவி மக்கள், ஞானம், செல்வம் இவை எதுவும் நிரந்தரமானதல்ல, நம்மைச் சுற்றி வாழுகின்ற எதுவும் எவரும் நிரந்தரமானவர்கள் அல்ல, உன்னுடைய இரு தாமரைப் பாதங்கள் மட்டுமே நிரந்தரம் கச்சி ஏகம்பனே. பொருள் உடையோரைச் செயலினும், வீரரைப் போர்க்களத்தும், தெருள்* உடையோரை முகத்தினும், தேர்ந்து தெளிவது போல் (*தெருள்=ஞானம்) அருள் உடையோரைத் தவத்தில், குணத்தில், அருளில், அன்பில், இருள் அறு சொல்லினும் காணத்தகும் கச்சி ஏகம்பனே! செல்வந்தனாக இருந்தால் அவனுடைய நற்செயல்களாலும், வீரனாக இருந்தால் போர்க்களத்திலும், நல்ல தெளிந்த ஞானமுடையவனாக இருந்தால் அவனுடைய முகத்திலும், பார்த்துத் தெரிந்து கொள்ள முடிவது போல, இறைவன் அருள் பெற்றவர்களை அவர்களுடைய தவத்திலும், குணத்திலும், அருளிலும், அன்பிலும், வஞ்சகமில்லா சொல்லிலும் பார்க்க முடியும் கச்சி ஏகம்பனே. வாதுக்குச் சண்டைக்குப் போவார் வருவார், வழக்குரைப்பார் தீதுக்கு உதவியும் செய்திடுவார், தினம் தேடி ஒன்று மாதுக்கு அளித்து மயங்கிடுவார், விதி மாளும் மட்டும் ஏதுக்கு இவர் பிறந்தார் இறைவா கச்சி ஏகம்பனே! சதா ஊர் சண்டை, தெருச்சண்டை போடுவதோடு, மற்றவர்களைப் பற்றி குறைசொல்லிக் கொண்டிருப்பது, தீமையான காரியங்களுக்குத் துணை போவது, தினம் உழைத்த பொருளை இன்ப போகத்துக்குச் செலவிடுவது இவையெல்லாம் உயிர் உள்ள காலம் வரை செய்து கொண்டிருப்பவர்கள் எதற்காகப் பிறந்தாரோ தெரியவில்லையே இறைவா கச்சி ஏகம்பனே! ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப்பெற்ற தாயாரை வைவார், சதி ஆயிரம் செய்வார், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்யார், தமை அண்டினோர்க்கு ஒன்றும் ஈயார் இருந்தென்ன போயென்ன காண் கச்சி ஏகம்பனே! விழித்திருக்கும் நேரமெல்லாம் பொய் ஒன்றே உயிர் மூச்சாய் சொல்லிடுவர், நல்லவர்களைப் பொழுதுக்கும் தூற்றிக் கொண்டிருப்பர், சுமந்து பெற்ற தாயாரைத் திட்டிக் கொண்டிருப்பர், சூதும் வாதும் ஆயிரக்கணக்காய் செய்து கொண்டிருப்பர், எந்த உயர்ந்த சாத்திரங்களையும் கற்று உணராதிருப்பர், பிறருக்குத் தேவைப்படும் போதும் ஆபத்துக் காலத்திலும் ஓடிப்போய் உதவாதவர், நம்மையே அண்டி நிற்போருக்கு எதையும் கொடுக்காத கஞ்சனாக இருப்பர் இவர்கள் உயிரோடு இருந்தால் என்ன, போய்ச்சேர்ந்தால் என்ன கச்சி ஏகம்பனே! நாயாய் பிறந்திடில் நல்வேட்டையாடி நயம்புரியும் தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க் காயா மரமும், வறளாங் குளமும், கல்லாவும் அன்ன ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே! நாய் ஜென்மமாகப் பிறந்திருந்தாலும் வேட்டைக்குச் சென்றிருக்கலாம்; தாயார் வயிற்றில் பத்து மாதங்கள் குடியிருந்து பிள்ளையென்று பிறந்து, வாழ்க்கை முழுவதும் காய்க்காத மரத்தைப் போலவும், வறண்டு போன குளத்தைப் போலவும், அசையாத பாறை போலவும் இருக்கின்ற கஞ்ச மகா பிரபுக்களை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பநாதனே! 3 திருத்தில்லை   சோறிடு நாடு, துணி தரும் குப்பை, தொண்டு அன்பரைக் கண்டு ஏறிடும் கைகள், இறங்கிடும் தீவினை எப்பொழுதும் நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம் கண்டால் ஊறிடும் கண்கள், உருகிடும் நெஞ்சம் என் உள்ளமுமே. 1. திருநீறு பூசிய உடலோடு பொன்னம்பலத்தில் நடனமிடும் நடராஜப் பெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டால் கண்கள் பனிக்கும், நெஞ்சும் உள்ளமும் உருகும், நாடு வளம் கொழித்து பஞ்சமின்றி சோறிடும், குப்பைகூட உடுக்க துணி தரும், அடியார்களைக் கண்டால் கரங்கள் இரண்டும் தலைமேல் சென்று கும்பிடும், தீவினைகள் எப்போதும் நம்மைவிட்டு நீங்கிவிடும். அழலுக்குள் வெண்ணெய் யெனவே உருகிப் பொன்னம்பலத்தார் நிழலுக்குள் நின்று தவம் முஞற்றாமல் நிட்டூரமின்னார் குழலுக்கு இசைந்த வகை மாலை கொண்டு குற்றேவல் செய்து விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேன் என் விதிவசமே. 2. பொன்னம்பலத்தான் நடராஜப் பெருமானின் சன்னிதியில் நின்று தீயிலிட்ட வெண்ணெய் போல மனம் உருகி தவம் புரியாமல், எதிலும் குறை கண்டு வருந்திப் பழிபேசும் பொதுமைப் பெண்களின் கூந்தலில் சூட்டுதற்கென்று வகைவகையாய் மலர்மாலைகளைக் கொண்டு வந்து கொடுத்து, அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்துகொண்டு, நற்பயிருக்கன்றி, சுற்றிலும் முளைத்துள்ள பயனற்ற காளான்களுக்கு நீர்பாய்ச்சி வீணானென், இதனை விதிவசம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல வல்லேன். ஓடாமல், பாழுக்கு உழையாமல், ஓரம் உரைப்பவர் பால் கூடாமல், வல்லவர் கூட்டம் விடாமல், வெங்கோப நெஞ்சில் நாடாமல், நன்மை வழுவாமல், இன்றைக்கு நாளைக்கு என்று தேடாமல், செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. 3. சிதம்பரத்தில் சிற்சபையில் ஆடும் நடராஜப் பெருமானே! வயிற்றுப்பாட்டுக்காகவும், பிழைப்புக்காகவும் அங்குமிங்குமாய் ஓடி அலையாமல், பலன் எதுவும் கிட்டாத பாழுக்கு உழைக்காமல், இடத்துக்குத் தகுந்தாற்பொல சுய நலத்தோடு மாற்றி மாற்றி பேசுபவர்களோடு கூடியிருக்காமல், நல்லதே நினைக்கும் உத்தமர்கள் கூட்டத்தை விட்டு அகலாமல், கொடுமைதரும் கோபத்தை நெஞ்சில் சுமப்பாறோடு கூடாமல், சத்திய வழியில் உறுதியோடு நிற்பவர்களை விட்டு நீங்காமல், இன்றைக்கெனவும் நாளைக்கெனவும் தேடித்தேடி பொருள் சேர்க்காமலும், உன்னுடைய அருள் செல்வத்தை எனக்கு அள்ளி அள்ளித் தரவேண்டும் ஐயா சிதம்பரநாத தேசிகனே. பாராமல் ஏற்பவர்க்கு இல்லை எனாமல், பழுது சொல்லி வாராமல் பாவங்கள் வந்து அணுகாமல் மனம் அயர்ந்து பேராமல் சேவை பிரியாமல் அன்பு பெறாதவரைச் சேராமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. 4. குற்றம் குறைகள் கண்டுபிடித்து ஏற்றத் தாழ்வு பாராமல், ஈயென்று இரப்போர்க்கு சாக்கு போக்கு சொல்லி இல்லை என்று சொல்லாமல் தானம் கொடுத்து, அப்படி குறைகள் காண்பதால் உண்டாகும் பாவங்கள் வந்து சேராமல், நன்மை தீமை இவைகளைக் கண்டு மனம் சோர்ந்து போகாமல், பிறர்க்கு உதவும் சேவை உள்ளத்தை மறந்து கைவிடாமல், பரமேஸ்வரா! உன்னிடம் அன்பு வைத்து வணங்காதவர்களைச் சென்றடைந்து உறவு பூணாமல், இறைவா உன் பேரருள் எனும் செல்வத்தை எனக்குத் தந்திடுவாய் சிதம்பனாத தேசிகனே. கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரம் கோள் களவு கல்லாமல், கைதவரோடு இணங்காமல், கனவிலும் பொய் சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையிலே செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. 5. உயிர்களைப் பலியிட்டுக் கொல்லாமல், அப்படிக் கொன்ற அந்த ஜீவங்களின் உடல் மாமிசத்தை உண்ணாமல், பிறரை வஞ்சிப்பது, மற்றவர்களைப் பற்றி கோள் சொல்வது, பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வது இவைகளைக் கற்றுக் கொள்ளாமல், சூதாடுவோரோடு கலந்து உறவாடாமல், பிறர் உரைக்கும் பொய் வார்த்தைகளைப் பொருட்படுத்திக் கேட்காமல், தோகைவிரித்தாடும் மயில் போன்ற அழகுடைய மாதரோடு மயங்கிப் பின் செல்லாமல், சிதம்பரத்து தேசிகனே எனக்கு அப்படிப்பட்ட அருட் செல்வத்தை அளித்திடுவாய் ஐயனே. முடிசார்ந்த மன்னரும், மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர் அடிசார்ந்து நாம் உய்ய வேண்டுமென்றே அறிவார் இல்லையே. 6. பூவுலகை ஓகோவென ஆண்டு கொண்டிருந்த மன்னர்களும், அவரோடு இணைந்து செல்வச் செறுக்கில் கிடந்து மகிழ்ந்தோரும் முடிவில் மான்டு போய், எரியூட்டப்பட்டு ஒரு பிடி சாம்பராக ஆன செய்தியை நம் கண்ணாரக் கண்டபின்னரும், நாம் இந்த பூமியில் கிடைக்கும் இன்பமெல்லாம் வேண்டி சகல செல்வங்களோடும் வாழ விரும்புவதல்லால், பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் அந்த சிற்சபேசனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு நல்வழிக்கு உய்ய வேண்டுமென்று அறிபவர் யாரும் இங்கு இல்லையே, என் செய்வேன்? காலை உபாதி மலம் சலமாம் அன்றிக் கட்டுச்சியில் சாலவும் பாதி பசி தாகமாம் உன் சஞ்சிதமாம் மாலை உபாதி துயில் காமமாம் இவை மாற்றி விட்டே ஆல முகம் தருள் அம்பலவா! என்னை ஆண்டருளே. 7. பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த ஆலகால விஷத்தை யுண்டு கண்டத்துள் வைத்த நீலகண்டனே! காலையில் எழுந்ததும் மலஜலம் கழித்தல் எனும் கடமை, உச்சி நேரத்தில் பசியும் தாகமும் வாட்டுகின்ற நேரம், மாலை நேரம் ஆனதும் உறக்கமும், காமம் தீர்த்தலுமாம் என்று இப்படி மாறி மாறி தொழில் செய்து மாளும் என்னைக் காத்து இரட்சிக்க வேண்டும் ஐயா! ஆயும் புகழ்த் தில்லை அம்பலவாணர் அருகில் சென்றால் பாயும் இடபம், கடிக்கும் அரவம்; பின்பற்றிச் சென்றால் பேயும் கணமும் பெருந்தலைப் பூதமும் பின் தொடரும் போய் என் செய்வாய் மனமே பிணக்காடவர் போமிடமே. 8. பிறவி எனும் பெருங்கடலில் வீழ்ந்து நீந்தி அல்லல் பட்டு ஆற்றாது அழுதுருகும் ஏ மனமே! சர்வ லோகமும் போற்றிப் புகழும் அந்தத் தில்லை அம்பலவாணருக்கு அருகில் போவோம் என்று சென்றால், அவனைத் தாங்கி நிற்கும் ரிஷபம் இருக்கிறதே அது தன் கொம்புகளால் முட்ட வருகிறது; அவன் தலைமுடியில் படமெடுத்து ஆடுகின்ற நாகம் நம்மைக் கடிக்க வருகின்றது; அவனைப் பின்பற்றிச் செல்வோமென்றாலோ அவனைப் புடைசூழ நின்றிருக்கும் பூதகணங்களும், பேய் பிசாசுகளும் நம்மைத் துரத்திக் கொண்டு வருகின்றன. இவற்றையெல்லாம் மீறி நீ அவனைப் பின்பற்றிப் போய்த்தான் என்ன செய்யப் போகிறாய்? அவன் இருப்பிடமோ பிணங்களைச் சுட்டெரிக்கும் இடுகாடு. ஓடும் எடுத்து, அதளாடையும் சுற்றி, உலாவி மெள்ள வீடுகள் தோறும் பலிவாங்கியே, விதி அற்றவர் போல் ஆடும் அருள் கொண்டு இங்கு அம்பலத்தே நிற்கும் ஆண்டி தன்னை தேடும் கணக்கென்ன காண்! சிவகாம சுந்தரியே. 9. இடையில் துணியை அன்றோ எல்லோரும் அணிவர், ஆனால் உடுக்க துணியின்றி இடையில் புலித்தோலை அணிந்து கொண்டும், கையில் பிரம்ம கபாலத்தை பிட்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு, வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து, உற்றார் உறவு என்று எவருமில்லை யெனும்படி காட்சி தந்து இந்தத் தில்லையம்பலத்தில் ஆடுகின்ற அந்த ஆண்டியைத் தேடுவதன் இரகசியம்தான் என்ன அம்மா, சிவகாமசுந்தரி! ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்று மூட்டுவிப்பானும் முயங்குவிப்பானும், முயன்ற வினை காட்டுவிப்பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி ஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டே தில்லை அம்பலத்தே. 10. இப்பூவுலகில் படைக்கப்பட்ட உயிர்களுக்கெல்லாம் கல்லுக்குள் தேரைக்கும் கருப்பை உயிர்களுக்கும் உணவளித்து ஊட்டுவிப்பவனும், அவை களைத்துப் போய் ஓய்ந்து கிடக்கும் போது அவைகளை உறங்க வைப்பானும், ஒன்றோடு மற்றொன்றை இணைத்து வாழச்செய்பவனும், அவைகளை இவ்வுலகயியலில் இயங்கச் செய்பவனும், அப்படி அவை இயங்குவதால் உருவாகும் பலங்களை உலகுக்குக் காட்டுபவனும், இரு வினைகளால் ஆகிய பாசக் கயிற்றால் அவற்றை இயங்க வைப்பவனும் ஆகிய ஒருவன் உண்டு. அவன் தான் தில்லை பொன்னம்பலத்தே ஆடுகின்ற எம்பெருமான் நடராசப் பெருமான்! அடியார்க்கு எளியவர் அம்பலவாணர் அடிபணிந்தால் மடியாமல் செல்வ வரம் பெறலாம் வையம் ஏழு அளந்த வெடியோனும் வேதனும் காணாத நித்த நிமலன் அருள் குடிகாணும் நாங்கள் அவர் காணும் எங்கள் குலதெய்வமே. 11. அடியார்களுக்கு மிக எளிதில் கைவசமாகக்கூடிய பொன்னம்பல வாணரின் பாதங்களைப் பணிந்து எழுந்தால் அழியாத செல்வங்களை வரமாகப் பெறலாம்; ஏழு உலகங்களையும் தன் திருவடியால் அளந்த திருமாலும், வேதங்களைத் தன் முகங்களாகக் கொண்ட பிரம்ம தேவனும், அடிமுடி காண முயன்றும் முடியாத சிவபெருமானின் திருவருளைப் பெற்ற அவன் அடியார்களாக விளங்குகின்றோம்; அந்த சிவனே எங்கள் குலதெய்வமும் ஆகும். உடுப்பானும், பால் அன்னம் உண்பானும், உய்வித்து ஒருவர் தம்மைக் கெடுப்பானும் மேதென்று கேள்வி செய்வானும், கெதி அடங்கக் கொடுப்பானும், தேகி என்று ஏற்பானும், ஏற்கக் கொடாமல் நின்று தடுப்பானும் நீ அல்லையோ தில்லை ஆனந்தத் தாண்டவனே. 12. பட்டும் பீதாம்பரமுமாக வேளைக்கொரு உடையை உடுப்பவனும், வேளைதோறும் பால் அன்னம் உண்பவனும், சிலரை வாழவைத்தும் சிலரது வாழ்வில் துன்பம் கொடுத்துச் சோதித்துக் கெடுப்பானும், செய்யும் கிருத்தியங்களையெல்லாம் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்பவனும், நேரிடும் கேடுகளை நீக்கி நல்லனவற்றைக் கொடுப்பானும், பிட்சாந்தேகி என்று வாயிலில் நின்று இரப்பானும், கொடு என்று கேட்பவனுக்குக் கொடுப்பவனைத் தடுப்பவனும் நீதானே ஐயா! தில்லையம்பலத்தில் ஆனந்தத் தாண்டவமிடும் தாண்டவனே, நடராஜப் பெருமானே! வித்தாரம் பேசினும், சோங்கு ஏறினும், கம்ப மீதிருந்து தத்தா வென்று ஓதிப் பவுரி கொண்டு ஆடினும், தம்முன் தம்பி ஒத்தாசை பேசினும் ஆவதுண்டோ தில்லை உண்ணிறைந்த கத்தாவின் சொற்படி அல்லாது வேறில்லை கன்மங்களே. 13. வாசாலகமாக வக்கணையாகப் பேசினாலும், கடலில் மரக்கலத்தில் ஏறிப் பயணித்தாலும், கம்பத்தில் ஏறி கழைக்கூத்து ஆடினாலும், இளையவன் ஓடிவந்து தான் இருக்க பயமேன் என்று துணை நலம் பேசினாலும், அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் அந்த தில்லைத் தலமாடும் தாண்டவன் எண்ணப்படியன்று வேறெதுவும் நடைபெறுமோ? பிறவாதிருக்க வரம் பெறல் வேண்டும், பிறந்து விட்டால் இறவாதிருக்க மருந்து உண்டு காண், இது எப்படியோ? அறமார் புகழ் தில்லை அம்பலவாணர் அடிக்கமலம் மறவாது இரு மனமே! அது காண் நன்மருந்து உனக்கே! 14. ஓ மனமே! உன் பிணிக்கு ஏற்ற நல்ல மருந்து எது தெரியுமா? எத்தனை பிறவிகள் மீண்டும் மீண்டும் பிறந்து வருந்துவதைத் தவிர்த்து இனி பிறவாத வரம் வேண்டுமென்றால், அப்படிப் பிறந்து விட்டால் புகழோடு இப்புவியில் வாழவேண்டுமென்றால் அதற்கொரு மருந்து இருக்கிறது. அது எப்படி முடியும் என்று கேட்கிறாயா? ஒரு நல்ல மருந்து இருக்கிறது, அது, அறமும், புகழும் மண்டிக் கிடக்கும் தில்லை நடராஜப் பெருமானின் சிற்சபை இருக்கிறதே அங்கு ஆனந்த நடனமிடுபவரின் மலரடியாம் ‘குஞ்சிதபாதத்தை’ மட்டுமே கதியெனக் கொண்டு சரணமடைந்தால் முடியும். அதுதான் உனக்கு நல் மருந்து. தவியாதிரு நெஞ்சமே, தில்லை மேவிய சங்கரனைப், புவி ஆர்ந்திருக்கின்ற ஞானாகரனைப், புராந்தகனை, அவியா விளக்கைப், பொன்னம்பலத்து ஆடியை ஐந்தெழுத்தால் செவியால் நீ செவித்தால் பிறவா முத்தி சித்திக்குமே. 15. ஓ மனமே! என்ன செய்வேன், எப்படிச் செய்வேன் என்றெல்லாம் தவித்து அலையாதே. தில்லையில் குடிகொண்ட சிவபெருமானை, இந்தப் புவியெல்லாம் நிரம்பியிருக்கின்ற ஞான சொரூபமானவனை, திரிபுராந்தகனை, அனவரதமும் அணையாமல் ஒளிவீசும் பொற்சுடரை, பொன்னம்பலம் மேவி ஆனந்த நடனம் புரிகின்றவனை, பஞ்சாட்சர மந்திரத்தை வாய்விட்டு உச்சரிக்காமல் மனதுக்குள் உன் உட்செவிக்கு மட்டும் கேட்கும்படியாக சதா சொல்லி வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கும், முக்தியும் சித்திக்கும் என்பதை உணர். நாலின் மறைப் பொருள் அம்பலவாணரை நம்பியவர் பால் இல்லொருதரம் செவிக்கொணாதிருப் பார்க் கருங்கல் மேல் எடுத்தவர் கைவிலங்கைத் தைப்பர் மீண்டுமொரு காலினில் நிறுத்துவர் கிட்டியும் தாம் வந்து கட்டுவரே. 16. சதுர் வேதங்களாம் ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகியவற்றின் உட்பொருளாக விளங்குகின்ற சிவபெருமானை மனத்திடை கொண்டு, அவன் ஞானசபையின் முன்னே சென்று ஒரு முறையாயினும் வழிபடாமல், மற்றைய விவகாரங்களில் ஈடுபட்டு வீண் பொழுது போக்கி வாழ்பவனை அந்த காலனுடைய தூதர்கள் வந்து அவர்கள் தலைமீது பெரும் பாறாங்கல்லை வைத்து அழுந்தும்படி செய்து, அது போதாதற்கு கைகளில் விலங்கையும் மாட்டிப் பூட்டி விடுவார்கள். அது மட்டுமா? ஒற்றைக் காலில் நிற்கும்படிச் செய்து விடுவர். எமனுடைய பாசக் கயிறு அவர்களை இறுகப் பிணித்துவிடும். ஆற்றோடு தும்பை அணிந்து ஆடும் அம்பலவாணர் தமைப் போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில் சோற்று ஆவியற்றுச் சுகமற்றுச் சுற்றத் துணியும் அற்று ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே. 17. தலையில் தனது ஜடாமுடியில் கங்கையோடு தும்பைப் பூவையும் அணிந்து, திரு நடனம் புரியும் அம்பலவாணனைத் துதித்துப் போற்றாதவர்களுக்கு இந்த பூவுலகில் சில அடையாளங்கள் உண்டு; அப்படி என்ன அடையாளங்கள்? சோறு மட்டுமல்ல, சோற்றின் மணம் கூட எட்டாதபடியும், சுகம் என்பது என்னவென்றே தெரியாதபடியும், இடையில் அணியத் துணிகூட இல்லாமலும், பிச்சை எடுக்கலாம் என்று சென்றால் கூட பிச்சை கிடைக்காத படியும் ஏங்கித் தவிப்பார்கள். அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க்கு அதிபதியை வித்தனை அம்மை சிவகாமசுந்தரி நேசனை எம் சுத்தனைப் பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காணக் கண்கள் எத்தனை கோடி யுகமோ தவம் செய்திருக்கின்றனவே. 18. உயிர்களுக்கெல்லாம் தந்தையானவனை, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முதன்மையானவனை, என்றும் நிலையாய் இருப்பவனை, அன்னை சிவகாமசுந்தரியைத் திருமணம் புரிந்தவனை, நமக்கெல்லாம் இறைவனை சிதம்பரம் சிற்சபையில் நடம் புரியும் அண்ணலைக் காண்பதற்கு நம் கண்கள் எத்தனை கோடி யுகங்கள் தவம் செய்தனவோ அறியேனே. 4 பொது   உடை கோவணம், உண்டு உறங்கப் புறந்திண்ணை, உண்டு உணவிங்கு அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே விடை ஏறும் ஈசர் திருநாமம் உண்டு, இந்த மேதினியில் வடகோடு உயர்ந்தென்ன, தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே. 1. இந்த பூவுலகில் வாழ்வதற்கு வழியா இல்லை? உடுக்க கெளபீனம், படுத்து உறங்குவதற்கு வீட்டின் வாயிற்புறத் திண்ணை, பசிக்கிறதா கவலை இல்லை உண்பதற்கு இலைகள், காய்கள் இவைகள் உண்டு, தாகமெடுத்தால் அருந்துதற்குத் தண்ணீர் உண்டு, உற்ற துணையாக ரிஷப வாகனம் மீது அமர்ந்திருந்து அருள் பாலிக்கும் சிவபெருமானின் ஐந்தெழுத்துத் திருமந்திரமுண்டு, ஆதலினாலே இவ்வுலகில் எனக்கு என்ன கவலை. அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் பிறைச் சந்திரனுடைய வடகோடு உயர்ந்தால் என்ன, தென்கோடு தாழ்ந்தால்தான் எனக்கென்ன கவலை. (மூன்றாம் பிறையின் வடகோடு உயர்ந்து, தென்கோடு தாழ்ந்திருந்தால் மழைக்கு அறிகுறி. இப்படி உடுக்க, இருக்க, உண்ண, அருந்த, எண்ண எல்லாம் இலவசமாய்க் கிடைக்கும்போது சந்திரன் காட்டும் குறிகளின்படி மழை பெய்தால் என்ன, பெய்யாவிட்டால்தான் என்ன, நன்மைகள் விளைந்தாலென்ன, தீமைகள் விளைந்தால் என்ன). இதே பாடல் வரிகளை மகாகவி பாரதியும் தன் சுயசரிதையில் “தேம்பாமை” எனும் துணை தலைப்பில் சொல்லும் கருத்தும் கவனிக்கத் தக்கது:– “வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே, வான் பிறைக்குத் தென் கோடு” பார்மீதிங்கே விடமுண்டுஞ் சாகாமலிருக்கக் கற்றால் வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே? திடங் கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டாம் தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்குமினி அஞ்சாதீர் புவியிலுள்ளீர்.” இந்த வரிகளையும் பட்டினத்தாரின் மேற்சொன்ன வரிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். வீடு நமக்குத் திருவாலங்காடு, விமலர் தந்த ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ நாடு நமக்கு உண்டு கேட்டதெல்லாம் தர நன்னெஞ்சமே ஈடு நமக்குச் சொலவோ ஒருவரும் இங்கில்லையே. 2. என் நெஞ்சே கேள்! நமக்கு வீடு திருவாலங்காடு எனும் புண்ணியத் தலமாகும் (காரைக்கால் அம்மையாருக்குக் கையிலையில் இருந்து சிவபெருமான் அருள் புரிந்தத் தலம் என்பதால்), சிவனடியார்களுக்கே உரிய பிட்சா பாத்திரமாக சிவன் அளித்த ஓடு இருக்கிறது, அது அட்சய பாத்திரம் அன்றோ! எடுக்க எடுக்க உணவளிக்கும் பாத்திரமாகிய அதுவும் இருக்கிறது, இந்த பரந்து விரிந்த நாடும் மக்களும் இருக்கிறார்கள் நமக்குத் தேவையானவற்றைக் கேட்டதும் அள்ளிக் கொடுக்க, அப்படிப்பட்ட எமக்கு இங்கு ஈடு இணை யார் இருக்கிறார்கள் சொல் பார்ப்போம். “மேலே ஆகாயம், கீழே பூமி” என்றொரு சொல் வழக்கு உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு எதற்கென்று கவலைப்பட வேண்டும்? நாடிக்கொண்டு ஈசரை நாட்டம் உற்றாயில்லை, நாதரடி தேடிக்கொண்டாடித் தெளிந்தாயில்லை, செகமாயை வந்து மூடிக்கொண்டோமென்றும் காமாயுதங்கள் முனிந்த என்றும் பீடிப்பையோ நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தர்களே. 3. ஓ என் மனமே! இறைவனின் கருணையை நாடிக் கண்டுகொள்ளவில்லை, அவன் பாதாரவிந்தங்களைத் தேடி அடைந்தாயில்லை, அவன் அருள் கருணையை உணர்ந்தாயில்லை, இது குறித்தெல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல், உலக மாயா விவகாரங்களில் மயங்கி வீழ்ந்து, அவை தரக்கூடிய தொல்லைகளால் மனம் வருந்தி வாடுகிறேன் என்றும் சொல்லி வருந்துவாயேல், உன்னைப் போல பைத்தியக்காரர்கள் உலகில் வேறு எவரும் இல்லை என்பதை உணர்ந்து கொள். கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப் பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும் மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான் செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே. 4. ஐயனே! இறைவா! எனது கைகள் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்க, விழிகளோ வேறெதையோ பார்த்துக் கொண்டிருக்க, மனமோ வேறெதையோ எண்ணிக் கொண்டிருக்க, வஞ்சனையை மாற்றி மாற்றிப் பேசுகின்ற நா வேறெதையோ பேசிக் கொண்டிருக்க, புலால் நாற்றம் வீசும் இந்த உடலானது எதையெதையோ அனுபவிக்க, செவிகள் எதையெதையோ கேட்டுக் கொண்டிருக்க பூஜை செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு நான் மலரை எடுத்து உன் சிலையில் அல்லது படத்தின் மீது போட்டால், இறைவா, அதை நீ எங்ஙனம் ஏற்றுக் கொள்வாய் வினைதீர்க்கும் அருள் கொண்ட இறைவா சொல். கண்ணுண்டு காணக், கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப் பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப் பல்பச்சிலையால் எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே மண்ணுண்டு போகுதையோ கெடுவீர் இந்த மானிடமே. 5. இறைவனின் தெய்வீகக் காட்சியைக் காண அவன் அளித்துள்ள இரு கண்கள் இருக்கின்றன; அவனுடைய கருணை உள்ளத்தை எண்ணி உருக நல்ல மனம் இருக்கிறது; அவனை எண்ணி உருகிப் பாட அவன் புகழ்பாடும் பாமாலைகள் பல உள்ளன; அவற்றைக் கேட்டு இன்புற்று அவனை வணங்க இரு செவிகள் உள்ளன; ஈசன் திருவடிகளைப் போற்றி பச்சிலைகளால் அர்ச்சிக்கப் பல மந்திரங்கள்உண்டு; இப்படிப் பல விதங்களால் அவன் அருளால் அவனடி தொழ வழிமுறைகள் இருக்கும்போது, இவற்றுக்காகவே இப்புவியில் பிறவியெடுத்த மானுடப் பிறவியில் உடலை வீணாக மண்ணுக்குத் தின்னக் கொடுக்கின்றோமே, கெடுக இந்த மானுடப் பிறவி. சொல்லினும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும் அல்லினும் மாசற்ற ஆகாயம் தன்னிலும் மாய்ந்து விட்டோர் இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்கும் இடம் கல்லினும் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே? 6. நெற்றியொற்றைக் கண்ணனான சிவபெருமான், அவன் புகழ்பாடும் சொற்களிலும், அந்த மந்திரச்சொற்களின் முடிவான பலன்களிலும், வேதங்களின் சாரத்திலும், இருளிலும், தெளிந்த வெட்டவெளி ஆகாயத்திலும், சிவனோடு ஐக்கியமாகிவிட்ட அன்பர்கள் இல்லங்களிலும், சிவனடியார்களிடத்திலும் இருக்கின்ற ஈசனை அங்கெல்லாம் சென்று பார்க்காமல், கல்லில் வடித்த சிலைகளிலும், செம்பில் வார்த்த சிலா வடிவங்களிலுமா இருப்பான். அன்பர் உள்ளங்களே அவன் வாழும் இடம் என்பதை உணர்தல் வெண்டும். வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய் வினைதான் ஒழிந்தால் தினைப் போதளவு நில்லாது கண்டாய் சிவன் பாதம் நினை நினைப்போரை மேவு நினையாளர் நீங்கி இந்நெறியினின்றால் உனைப்போல் ஒருவர் உண்டோ மனமே எனக்கு உற்றவரே. 7. இந்த மானுடப் பிறவியே நாம் செய்த முற்பிறவி வினைகளினால்தான் என்பதை உணர்ந்திருக்கிறோம்; அவ்வினைகள் நீங்கிவிட்டால் இந்த உடல் ஒரு நொடிப்போதும் இப்பூவுலகில் இல்லாமல் நீங்கிவிடும் என்பதும் உணர்ந்திருக்கிறோம்; ஆனபடியால் எம்பிரான் ஈசனின் பாதாரவிந்தங்களை எப்போதும் மனதால் நினை; அப்படி சிவ சிந்தனையில் திளைத்திருப்போரின் துணையையும் எப்போதும் நாடு; இறை சிந்தனை இல்லாமல் அவனின்றும் நீங்கி நிற்பார்தம் உறவினை நீக்கிவிடு; இப்படி நீக்குவன நீக்கி, சேர்வன சேர்ந்து வாழ்ந்தால் அவனைப் போல இறைவனருள் பெற்றவர் வேறு எவரும் இலர் என்பதை உணர்ந்து கொள். பட்டைக்கிழித்துப் பருவூசிதன்னைப் பரிந்தெடுத்து முட்டச்சுருட்டியென் மொய்குழலாள் கையில் முன்கொடுத்துக் கட்டியிருந்த கனமாயக்காரிதன் காமமெல்லாம் விட்டுப்பிரிய என்றோ இங்ஙனே சிவன் மீண்டதுவே. 8. வாழ்கின்ற வரையில் பட்டும் பீதாம்பரமும் அணிந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும், முடிவில் காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே எனும் உண்மையை எனக்கு உணர்த்துவதற்காக வன்றோ அந்த ஈசன் என்பால் கருணை வைத்து என்னைப் பற்றியிருந்த காமக் குரோத ஆசைகள் எல்லாம் விட்டொழிக்க எண்ணியன்றோ என்னை ஆட்கொண்டிருக்கிறான். பட்டாடை அணிந்து கோலாகலமாக வாழ்ந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒரு பட்டுத்துணியை எடுத்துக் கிழித்து, போகும்போது இதுகூட உன் கூட வராது என்பதைக் குறிக்கும் வகையில் அதில் ஓர் பெரிய ஊசியையும் வைத்து நன்கு சுருட்டி அதனை அடர்ந்த கூந்தல் வாய்ந்த என் மனையாட்டியின் கையில் கொடுத்து, வாழ்வின் இரகசியத்தைப் புரியவைத்த அவன் கருணையை என்னவென்று சொல்வேன். சூதுற்ற கொங்கையு மானார் கலவியும் சூழ் பொருளும் போதுற்ற பூசலுக்கு என் செயலாம் செய்த புண்ணியத்தால் தீதற்ற மன்னவன் சிந்தையினின்று தெளிவதற்கோ காதற்ற ஊசியைத் தந்துவிட்டான் என்றன் கைதனிலே. 9. பருத்த கொங்கைகளையுடைய மனையாளும், மானின் விழிகளையொத்த இன்பம் தரும் மாதருடன் கொண்ட போகங்களும், உலக இன்பங்களை நுகர்தற் பொருட்டு சேர்த்து வைத்த செல்வங்களும், வாழ் நாள் முடிந்து போகுங்காலை இவைகளால் ஐம்பொறிகளும் படும் பாட்டுக்கு என்ன செய்யப் போகிறோம். ஏதோ முற்பிறவிப் பயனால் அன்பே உருக்கொண்ட இறைவன் ஈசன் நம் மனம் தெளிந்து வாழ்வின் உண்மைகளை உணர்ந்து கொள்ளவென்றோ காதற்ற ஊசியொன்றை என் கைகளிலே கொடுத்துப் உணர வைத்தான். வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப் போதுற்று எப்போதும் புகலும் நெஞ்ச்சே இந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வம் என், தேடிப் புதைத்த திரவியம் என் காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே. 10. நெஞ்சே கேள்! திண் தோள் தகையாளரும், திரு அண்ணாமலையில் வீற்றிருப்பவருமான சிவபெருமானுடைய திருவடிகளே கதியென சரணம் அடைந்திடுவாய். எப்போதும் அவரையே துதி செய்திடுவாய். இப்பூவுலகில் செல்வத்தால் உருவாகும் தீமைகள் எத்தனை, பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைத்த செல்வம் தான் எத்தனை, இவை அனைத்தும் இவ்வுலக வாழ்வை நீங்கி போகும் காலை கூடவே எவை வரும், காதற்ற ஊசிகூட உன் கூட வராது என்பதை உணர்ந்து கொள். வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப் போதித்த வன்மொழி கேட்டிலையோ செய்த புண்ணியத்தான் ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம தாம் பொழுது காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. 11. பெரியோர்கள் நமக்கு எத்தனையோ உபதேசங்களைச் சொல்லி வைத்தார்கள்; எதைத்தான் கேட்டு அதன் வழி நடந்தோம்? நான்கு வேதங்கள் கூறுகின்ற நற்கருத்துக்களைக் கேட்டுப் பின்பற்றினோமா? இல்லை, மண்ணாசையை, பெண்மீதான ஆசையை விட்டுவிடு என்றார்கள் சிவ நேசச் செல்வர்கள், அவர்கள் சொல்லியபடியாவது அவற்றை விட்டுத் தொலைத்தோமா? இல்லையே! ஏதோ நல்ல காலம், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த புண்ணியங்களின் பலனாக நம்முடைய ஆன்மா இவ்வுடலை விட்டு நீங்கிச் செல்லுங்கால், சூரியனும் சந்திரனும் போல ஒளிபடைத்ததாக வெளியேறும், அப்படி வெளியேறிய ஆன்மா செல்ல வேண்டிய மார்க்கத்தில் வேறெதுவும், ஒரு காதற்ற ஊசியும் கூட அதன் கூட வராது என்பதை உணர்வாயாக. மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே இனமான சுற்றம் மயான மட்டே, வழிக்கேது துணை தினையா மளவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம் தனை ஆளவென்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே. 12. ஒருவன் வாழ்ந்து முடிந்து இறந்து போகும்போது, அவனோடு நெடுங்காலம் வாழ்ந்த அவன் மனைவியும், அவனுடைய பிள்ளை குட்டிகளும், அவன் பாடுபட்டுத் தேடிச் சேர்த்து வைத்த செல்வமும், இவை அனைத்தும் வீடு வாயில் வரையிலும் தான் கூட வரும். வாசலைத் தாண்டிவிட்டால் அவனுடைய இனத்தார், உறவினர், நண்பர்கள் இவர்கள் எல்லாம் மயானம் மட்டும் வருவர். இதைத் தாண்டி அவன் ஆன்மாவானது உடலைவிட்டுப் பிரிந்து தனிவழி போகும்போது அது கூட வருவோர் எவருமின்றி தனித்தே போகுமே, வாழ்ந்தபோது இருந்த மனைவி, மக்கள், உறவு, நட்பு இவர்களில் எவரும் அப்போது உடன் வருவதில்லையே. அதனால்தான் வாழுகின்ற காலத்தில் ஒரு சிறு தினை அளவாவது, அல்லது எள் அளவிலாவது முன்பு நல்ல காரியம், தர்ம காரியம் செய்திருந்தால் அதன் பலன்கள் அப்போது துணை வரும், ஆன்மாவும் சிவலோகம் சென்றடையும், ஆம்! இது நிச்சயம். அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம் பொழுக மெத்திய மாதரும் வீதி மட்டே, விம்மி விம்மி யிரு கைத்தல மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே. 13. பாடுபட்டுத் தேடிய செல்வமும், செறுக்கான வாழ்வும் வீட்டோடு சரி; கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருக ஓவென கட்டி அழும் மனைவி முதலான வீட்டுப் பெண்கள் வீட்டின் வாசலோடு சரி; இரு கரங்களைத் தலையில் தாங்கிக் கொண்டு விம்மி அழும் பிள்ளைகள் சுடுகாட்டுக்கு வந்து எரியேற்றுவதோடு சரி; அப்படியானால் நீ இறந்த பின் உன் ஆன்மா தனிவழிச் செல்லும்போது துணைக்கென்று யார் வருவர்? அப்போது கூட வரக்கூடியவை நீ செய்த புண்ணியங்களும் பாவங்களும் தான். பலன்களும் பண்ணிய பாவ புண்ணியங்களுக்கேற்ப அமைந்திடும். சீதப் பனிக்கு உண்டு சிக்கெனக் கந்தை, தினம் பசித்தால் நீ துய்க்கச் சோறு மனைதோறும் உண்டு, நினைவெழுந்தால் வீதிக்குள் நல்ல விலை மாதருண்டு இந்த மேதினியில் ஏதுக்கு நீ சலித்தாய் மனமே யென்றும் புண்படவே. 14. பனிக் காலத்தில் கடுமையான குளிர் அடிக்கும்போது கதகதப்பாக இருக்க நிறைய கந்தல்கள் உண்டு; தினமும் பசியெடுக்கும் போதெல்லாம் உனக்குப் பசியாற வீடுதோறும் சோறு உண்டு; காம உணர்வு மனதில் எழுமானால் வீதிகளில் பல விலைமாதர்கள் உண்டு; அப்படி நினைத்ததெல்லாம் கிடைக்க மார்க்கம் இருக்கையில் எதற்காக மனம் வருந்தி சலிப்புறுகிறாய்? ஆறு உண்டு, தோப்பு உண்டு, அணி வீதி அம்பலம்தானும் உண்டு நீறுண்டு கந்தை நெடுங் கோவணமுண்டு நித்த நித்தம் மாறுண்டு உலாவி மயங்கு நெஞ்சே மனைதோறும் சென்று சோறுண்டு தூங்கிப் பின் சும்மாயிருக்கச் சுகமுண்டே. 15. உறுதியான நிலையின்றி சஞ்சலத்தால் உலவி பேதலிக்கும் மனமே! உடலைத் தூய்மை செய்து கொள்ள நதிகள் இருக்கின்றன; வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பி களைப்பு தீர ஓய்வெடுக்க பசுமையான நல்ல தோப்புகள் இருக்கின்றன; அங்கு மன நிறைவோடு உலாவி வர இடமும் உண்டு; அழகழகான வீதிகளும், வீதிதோறும் அற்புதமான வீடுகளும் இருக்கின்றன; மக்கள் கூடியிருக்க பொதுவிடங்களும் இருக்கின்றன; நெற்றியில் ஐந்தெழுத்தோதி பூசிக்கொள்ள திருநீறும் இருக்கிறது; இடையில் அணிந்திட கந்தைத் துணியும் கெளபீனமும் உண்டு; போதாதற்கு வீடுவீடாகச் சென்று பிட்சை பாத்திரம் ஏந்தி அதில் கிடைக்கும் உணவை உண்டு, உண்ட களைப்பு தீர் நன்கு படுத்துறங்கி சும்மாயிருக்கும் சுகமும் இருக்கிற பொது எதற்காக வீணில் மனம் சஞ்சலிக்கிறாய். உடுக்கக் கவிக்க குளிர்காற்று வெயில் ஒடுங்கி வந்தால் தடுக்கப் பழைய ஒரு வேட்டியுண்டு, சக முழுதும் படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு, பசித்து வந்தால் கொடுக்கச் சிவனுண்டு, நெஞ்சே நமக்குக் குறைவில்லை. 16. கவலைப்படும் என் நெஞ்சே! கேள் நமக்கு எந்தக் குறைவும் இல்லை. ஏன் தெரியுமா? குளிர் காற்றினாலும் வெயிலினாலும் துன்பப்பட்டு உண்டாகும் களைப்பைத் தீர்க்க உடுத்திக் கொள்ளவும், குளிருக்குப் போர்த்திக் கொள்ளவும் பழைய துணியிருக்கிறது. படுத்து உறங்க வேண்டுமானால் திரும்பிய பக்கமெல்லாம் வீட்டின் வாசற் புறத்தில் திண்ணைகள் உண்டு; பசித்த உயிர்களுக்கு உணவளிக்க உலகையாளும் சிவபிரான் இருக்கிறார், அப்படியிருக்க நாம் ஏன் வருந்த வேண்டும். மாடுண்டு கன்றுண்டு மக்கள் உண்டென்று மகிழ்வதெல்லாம் கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம் இனிக் கேள் மனமே ஓடுண்டு கந்தை உண்டு உள்ளே எழுத்து ஐந்தும் ஓத உண்டு தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையும் உண்டே. 17. மனமே! இன்னும் கேள்! நமக்குப் பால் தரவும், உழைக்கவும் மாடுகள் உண்டு, அவற்றுக்குக் கன்றுகளும் உண்டு, நம் குலம் தழைக்க மக்கள் உண்டு என்று மனம் மகிழ்ந்திருப்பதெல்லாம் பின்னாளில் அவைகள் எல்லாம் இல்லாமல் போய் மனம் துன்பப்படவும் நேரிடும் என்பதைப் பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆகவே நிலையற்ற மேற்சொன்ன செல்வங்களில் மனத்தைச் செலுத்தாமல் உண்ண உணவுக்கு பிட்சைப் பாத்திரம் உண்டு, உடுக்க கந்தை உண்டு, ஓதுவதற்கு பஞ்சாட்சர மந்திரம் உண்டு, தோடுடைய செவியன், விடையேறிய சிவனுடைய அடியார்களின் துணை உண்டு என்பதை நிச்சயப் படுத்திக் கொள். மாத்தான வத்தையும் மாயாபுரியின் மயக்கத்தையும் நீத்தார் தமக்கொரு நிட்டை உண்டோ நித்தனன்பு கொண்டு வேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்து விழி துயின்று பார்த்தால் உலகத்தவர் போலிருப்பர் பற்றற்றவரே. 18. சொர்க்கத்தைப் போல சுகானுபவங்களையும், மாயையால் கிடைக்கும் அற்புதப் பொருட்களின்பால் ஏற்படுகின்ற மயக்கத்தையும் நீக்கிவிட்டவர்கள் தங்களுக்கென்று பிறர் காணும்படியாக செய்யக்கூடிய தவம் எனும் புறத் தோற்றங்கள் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? ஞானத்தை அடைந்து விட்ட அவர்களும் மற்றவர்களைப் போலவே வியர்த்தால் குளித்தும், பசித்தால் உணவை உண்டும், உறக்கம் வந்தால் படுத்து உறங்கியும் உலகில் வாழுகின்ற மற்றவர்களைப் போலத்தான் காணப்படுவர். யோகியர்கள் தங்கள் வெளித் தோற்றத்தால் சாதாரண மக்களினின்றும் மாறுபட்டுத் தோன்றுவதில்லை. ஒன்றென்று இரு, தெய்வம் உண்டென்று இரு, உயர் செல்வமெல்லாம் அன்றென்று இரு, பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்று இரு, நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்று இரு மனமே உனக்கே உபதேசம் இதே. 19. ஏ மனமே! உனக்கு உபதேசம் இது. தெய்வம் ஒன்று என்று இரு. அந்த தெய்வம் என்றும் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டு இரு. உயர்ந்த செல்வங்கள் எல்லாமே நிச்சயமற்றவை என்பதை உணர்ந்து கொண்டு இரு. பசித்தவர்களின் முகம் கண்டு இரக்கம் கொண்டு இரு. அறவழி நடப்பவர்களோடும், உத்தமர்களோடும் நட்பு கொண்டு இரு. அப்படிப்பட்டவர்கள் நட்பு நன்மை தரும் என்பதை உணர்ந்து கொண்டு இரு. நடுநிலை மாறாமல் நடந்து கொண்டு நமக்கு விதித்தது இவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொண்டு இரு. நாட்டமென்றே இரு, சற்குரு பாதத்தை நம்பு, பொம்மல் ஆட்டமென்றே இரு, பொல்லா உடலை அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு, சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு, நெஞ்சே உனக்கு உபதேசம் இதே. 20. உன் வாழ்வின் குறிக்கோளை உணர்ந்து கொண்டிரு; நல்வழிகாட்டும் உத்தமமான குருவின் பாதங்களை நம்பு; வாழ்க்கை ஒரு பொம்மலாட்டம் என்பதை உணர்ந்து கொள், சுற்றம் நட்பு இவைகள் உன்னைச் சுற்றியுள்ள அடர்ந்த சந்தைக் கூட்டம் என்பதை தெரிந்து கொள், குடத்தைக் கவிழ்த்த நீர் போலத்தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள், இதுவே உனக்கு உபதேசமாகும். என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே உன் செயலே என்று உணரப்பெற்றேன், இந்த ஊனெடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை, பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே. 21. இங்கு நடைபெறும் எந்தச் செயலும், நான் எனும் இந்த உயிராலோ அல்லது அவ்வுயிரைத் தாங்கும் உடலாலோ நடைபெறவில்லை, நடப்பது அனைத்தும் இறைவா உன் செயலால் என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன், இந்த ஊனுடம்பைப் பெற்று இந்த பூமியில் நான் பிறந்த பின்னர் செய்த தீச்செயல்கள் எவையும் இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நான் முந்தைய பிறப்புகளில் செய்த தீவினையால் அன்றோ எனக்கு இப்படித் துன்பங்கள் நேரிடுகின்றன. (இந்த இடத்தில் பட்டினத்தார் இப்பிறவியில் தீங்கு எதையும் தான் செய்யவில்லை என்றும், முற்பிறவியில் செய்த தீவினையால் இப்படி நேர்ந்தது என்று எதைக்குறித்துப் பாடினார் என்பதை விளக்க வேண்டும் அல்லவா? பட்டினத்தார் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியை நாம் இப்போது பார்க்க வேண்டும். பட்டினத்தார் திருவாரூரிலிருந்து கிளம்பி கொங்கு நாட்டை அடைந்து மெளன விரதம் பூண்டு ஊர் ஊராய் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு நாள் இரவில் ஒரு முரடனுடைய வீட்டின் முன்பு நின்று, தான் மெளன விரதம் பூண்டு பேசாமல் இருப்பதால் தன்னிரு கைதட்டி பசிக்குச் சோறு கேட்டார். அந்த முரடனுக்கு என்ன ஆத்திரமோ இவரை யாரென்று அறியாமல் கைதட்டியா சோறு கேட்கிறாய் என்று அவரை தடிகொண்டு நையப் புடைத்து விட்டான். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுவாமிகள் இனிமேல் என்னைத் தேடிக் கொண்டு வந்து யாராவது உணவு அளித்தால் அன்றி உணவு உட்கொள்ளுவதில்லை என்று முடிவு செய்து துளுவ நாட்டுக்குச் சென்று அங்கு உஞ்சேனை மாகாளம் சென்று ஒரு விநாயகர் ஆலயத்தில் உட்கார்ந்து கொண்டார். அப்படி அவர் அங்கு உட்கார்ந்திருந்த காலத்தில் ஒரு நாள் இரவு, சில திருடர்கள் அவ்வூர் அரசன் பத்திரகிரியின் அரண்மனையில் திருடிக் கொண்டு வரும் வழியில் சுவாமிகள் உட்கார்ந்திருந்த கோயில் விநாயகருக்கு அணிவிக்கவேண்டுமென்று எண்ணி ஒரு விலை உயர்ந்த பதக்கத்தை இருளில் விநாயகர் என்று நினைத்து சுவாமிகளின் கழுத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டனர். மறு நாள் அரண்மனையில் திருட்டுப் போய்விட்டது என்று காவலர்கள் தேடிக்கொண்டு வரும்போது பிள்ளையார் கோயிலில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்த சாமியாரின் கழுத்தில் ஒரு பதக்கத்தைப் பார்த்துவிட்டு, இவரைப் பிடித்துப் பெரிதும் துன்புறுத்தினார்கள். மன்னர் முன் விசாரணை நடந்தது. சுவாமியை கழுமரத்தில் ஏற்றிவிடுமாறு மன்னன் கட்டளையிட்டான். இவரை கழுமரத்தருகில் கொண்டு சென்று கழுவிலேற்ற முயற்சி செய்கையில் அவர் இந்தப் பாடலைப் பாடி இறைவனை வழிபட்டார். அந்தக் கழுமரம் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயிற்று. மன்னன் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் என்பது கதை) திருவேடமாகித் தெருவிற் பயின்றெனைத் தேடிவந்து பரிவாகப் பிச்சை பகருமென்றானைப் பதம் பணிந்தேன் கருவாகும் ஓதக் கடற்கரை மேவக் கருதுமென்னை உருவாக்கிக் கொள்ளவல்லோ இங்ஙனே சிவனுற்றதுவே. 22. தாருக வனத்தில் சிவபெருமான் பிக்ஷாடனராக மண்டையோடு ஏந்தி தாருக வனத்து முனி பத்தினிகளிடம் பிக்ஷை கேட்டுப் போனது போல நானும் ஆண்டி வேடமிட்டு தெருத் தெருவாய் பிக்ஷை வேண்டி கேட்டுப் பெற்று உண்ணும் நேரம், பரிவோடு என்னை அணுகி பசிக்கிறது அன்னம் கொடு என்று என்னுடைய பிக்ஷை அன்னத்தைப் பங்கிட்டுக் கொள்ள திருவேடமிட்டு வந்த அந்த சிவபெருமானின் தாள் பணிகின்றேன். அப்படி உலகத்துக்கே பிக்ஷை அளிக்கும் சிவன் என்னிடம் வந்து பிக்ஷை கேட்டுப் பெற்ற என்னை தடுத்தாட்கொண்டு இனி பிறவி இல்லாத நிலை அளிக்கவல்லவோ, சம்சார சாகரத்தில் வீழ்ந்து கிடக்கவிருந்த என்னை அவன் தடுத்தாட்கொண்டிருக்கிறான். விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன் கிட்டேன் அவர் உரை கேட்டும் இரேன் மெய் கெடாத நிலை தொட்டேன் சுகதுக்கம் அற்றுவிட்டேன் தொல்லை நான்மறைக்கும் எட்டேன் எனும் பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே. 23. சதுர்மறை எனும் நான்கு வேதங்களுக்கும் எட்டாத பரம்பொருளான ஈசன் என்னைத் தேடி வந்து இங்கு அடைக்கலம் தந்த பிறகு இவ்வுலக பந்த பாசங்களையெல்லாம் விரும்பாமல் அறவே விட்டுவிட்டேன். வீண் வம்பு பேசும் வீணர்களுடனான உறவை நீங்கிவிட்டேன். அப்படிப்பட்டவர்கள் பேசும் பேச்சுக்களையும் காது கொடுத்துக் கேளேன். இப்பிறவிக்கு நன்மை பயக்கும் நிலைமையை அடைந்து விட்டேன். சுகம் துக்கம் எதுவும் என்னை பாதிக்காத நிலையை அடைந்து விட்டேன். அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவ(ஸ்)த்தை ஐந்தும் விட்டேறிப்போன வெளிதனிலே வியப்பொன்று கண்டேன் வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந்திருக்க எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி யிருக்கின்றதே. 24. எட்டு அங்கம், அதாவது #அஷ்டாங்க யோகம், *ஆறுவகையான ஆதார நிலைகளையும், @ஐந்து வகையான அவஸ்தை எனும் அனுபவத்தினையும் கடந்து மேலே மேலே உணர்வால் சென்று அந்தப் பரவெளியெனும் சொர்க்கத்தை அடைந்த போது வியப்பான காட்சி கண்டேன். அப்படி வியந்து நின்ற அந்தக் கணத்தில் சந்திர மண்டலத்தினின்றும் பொழியும் அமிழ்த பானத்தை உண்டு களித்தேன். எளிதில் கிடைத்தற்கரிய பேரின்பத்தில் என் நினைவிழந்து மூழ்கிக் கிடக்கின்றேனே. # அஷ்டாங்க யோகம்: எட்டு அங்கங்களாவன யம, நியம முதலான எட்டு யோகங்கள். அவை யம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்யாகார, தாரண, த்யான, சமாதி ஆகிய யோகங்களாம். *6 ஆதாரங்கள்: மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விஸுத்தி, ஆக்ஞை. @ 5 அவ(ஸ்)தைகள்: ஜாக்கிரம், ஸொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம். (யோகம் பயில்வோர் தெரிந்து கொண்டு விளக்கம் பேற வேண்டிய மார்க்கங்கள் மேற்சொன்ன எட்டு அங்க, ஆறு ஆதார, ஐந்து அவஸ்தைகளைக் கடந்து மேலே செல்லுகையில் ஆங்கே பரவேளி தோன்றும். அப்பரவேலி நடுவே வட்டவடிவான ஜோதி, அதனின்றும் தோன்றும் அமிழ்தம் என்றெல்லாம் சொல்லப்படும் அமரத்தன்மை பற்றி சுவாமி குறிப்பிடுகிறார்.) எரிஎனக்கென்னும், புழுவோ எனக்கெனும், இந்த மண்ணுஞ் சரிஎனக்கென்னும், பருந்தோ எனக்கெனுந், தான் புசிக்க நரி எனக்கென்னும், புல்நாய் எனக்கு என்னும், இந்நாறு உடலைப் பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறெனக்கே. 25. நம் உயிர் குடியேறி வாசம் செய்யும் இந்த பூத உடலை எப்படியெல்லாம் வளர்த்துப் பாதுகாத்தேன். சோப்பு என்ன, பவுடர் என்ன, வாசனைக்கு செண்ட் என்ன இதன் மேலே விதவிதமாய் உடைகள் என்ன, சிறு சிராய்ப்பு ஏற்பட்டால்கூட அதைப் பார்த்துப் பார்த்து மாய்ந்து போனது என்ன, அப்படிப்பட்ட உடலை விட்டு என் உயிர் நீங்கிய பின் பிணமென பெயரிட்டு, அதிக நேரம் வைத்திருந்தால் நாற்றமெடுக்கும் என்று கொண்டு போய் கொளுத்திட அனைவரும் அவசரப்படும் இந்த உடலைப் பார்த்து அக்னி பலே எனக்கு உணவாகப் போகிறது என்று எண்ணுமாம்; இதை மண்ணில் புதைக்கட்டும் இது எனக்கு உணவாகும் என்று புழு எண்ணுமாம்; மண்ணோ இதோ இந்த உடல் எனக்குத்தான் எனுமாம்; உயரப் பறக்கும் பருந்து சரிதான் இது எனக்குத்தான் எனுமாம்; நரியானது நான் உலாவும் சுதந்திரப் பிரதேசத்துக்குத்தானே இதைக் கொண்டு வரவேண்டும், அப்போது இது எனக்குத்தான் என்று எண்ணுமாம்; கேவலாமான பிறவியான நாய் இருக்கிறதே அதுகூட இது எனக்குத்தான் வேறு யாருக்கு? என்று கேட்குமாம். இப்படி இத்தனை பேர்கள் இந்த நாற்ற உடலுக்குக் காத்துக் கிடப்பது தெரியாமல் நான் இத்தனை காலமும் இதை எப்படியெல்லாம் பேணிப் பாதுகாத்தேன். அண்ணல்தன்வீதி அரசிருப்பாகும் அணிபடையோர் நண்ணொரு நாலு ஒன்பதாமவர் ஏவலும் நண்ணுமிவ்வூர் துண்என்பசிக்கு மடைப்பள்ளியான சுகமும் எல்லாம் எண்ணிலி காலம் அவமே விடுத்தனம் எண்ண அரிதே. 26. நம் உடலானது ஒரு சிற்றூர் என்று எண்ணிக் கொள்ளுங்கள். இந்த சிற்றூரை ஆளும் அரசன் நம்முடைய ஆன்மாவாகும். அந்த அரசன் உட்காரும் சிம்மாசனம் நம்முடைய இதயம். வாழ்வுக்கு உரிய *ஆறு ஆதாரங்கள் வீதிகள், அவைகளில் உலாவி வந்து, வாழ்வியல் தத்துவங்கள் **முப்பத்தியாறையும் படைகளாக எண்ணிக் கொண்டு, அந்த அரசன் பசியாற்றிக் கொள்ள மடைப்பள்ளியாக இவ்வுடலின் வயிற்றைப் பயன்படுத்திக் கொண்டு சுகமடைந்து வாழ்கிறான். இப்படிப்பட்ட வாழ்க்கையை எண்ணிப் பார்ப்பதும் சிறப்பானதே. (நம் உடலில் ஆறு ஆதாரங்கள் உள. இவற்றைத் சைவ சித்தாந்தத்தில் தாமரை மலராக உருவகம் செய்வர். சக்கரம் எனவும் உரைப்பர். இது நான்கு இதழ் தாமரை வடிவம் உடையது. இதன் வடிவம் நாற்கோணத்தில் முக்கோணம். இதிலிருந்து மற்ற சக்கரங்கள் இயங்குவதால் இதனை மூலாதாரம் என்றார்கள். இங்குதான் குண்டலினி சக்தி இருக்கிறது.இந்த ஆறு ஆதாரங்கள் எவை என்பதை 4ஆவது பாடலில் விளக்கியிருக்கிறோம். (திருமந்திரம் 1704ஆம் பாடல்) The Saiva Siddhanta analyses the universe into 36 Tattvas (principles). The 36 Tattvas arise from Maya, the material cause of the world. Suddha Maya is Maya in its primal state. From it arise the five pure principles called Siva Tattva, Sakthi Tattva, Sadasiva Tattva, Iswara Tattva and Suddhavidya Tattva. Siva functions through these five pure principles. என் பெற்ற தாயரும் என்னைப் பிணமென்று இகழ்ந்து விட்டார் பொன் பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பி விட்டார் கொன் பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார் உன் பற்று ஒழிய ஒரு பற்றுமில்லை உடையவனே. 27. இவ்வுடலை விட்டு உயிர் போயின பின்பு, இதைப் பெற்ற அன்னையும் இதை ‘பிணம்’ என்று சொல்லி விட்டாள்; பொன்னும் பொருளுமாக என்னிடம் பெற்றுக் கொண்ட மனைவி உட்பட பெண்டிரெல்லாம் இதைக் கொண்டு போங்கள் என்று உரைத்து விட்டார்; பெற்ற பிள்ளைகளோ இடுகாட்டில் நீர் நிறைந்த மண் குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு இவ்வுடலை மூன்று முறை சுற்றி வந்து அக்குடத்தை பின்புறமாக வீசி குடத்தை உடைத்துவிட்டுப் போய்விட்டார், இப்படிப்பட்ட நிலையில் இறைவா உன்னைத் தவிர எனக்கு இனி பற்றுக்கோடு யார்? கறையற்ற பல்லும் கரித்துணி ஆடையும் கள்ளமின்றி பொறையுற்ற நெஞ்சமும் பொல்லாத ஊணும் புறந்திண்ணையும் தரையிற் கிடப்பும், இரந்து உண்ணும் ஓடும் சகமறியக் குறைவற்ற செல்வம் என்றே கோல மாமறை கூப்பிடுமே. 28. மனித வாழ்க்கையில் எது குறைவற்ற செல்வம் தெரியுமா? வெற்றிலை, புகையிலை, சிகரெட், பீடி, பீடா போன்றவற்றைப் போட்டுப் போட்டுக் கறை படிந்த பற்கள் இல்லாமல் பளிச்சென்று விளங்கும் வெள்ளைப் பற்களும், மடிப்பு கலையாத பட்டு பீதாம்பர வஸ்திரங்கள் அன்றி அழுக்குப் படிந்திருந்தாலும் உடலை மறைக்கவோர் ஆடை; வஞ்சமில்லாததும், பொறுமையுள்ளதுமான நல்ல மனம்; தெய்வம் தந்த பூமியே படுக்கையாகவும்; பிச்சை வாங்கி உண்ண ஒரு திருவோடும் ஆக இவைகளே நிரந்தர செல்வம் என்று நம் வேதங்களும் சொல்லுகின்றன. எட்டுத் திசையும், பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிச் சுருட்டித் தங்கட் கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார் பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே. 29. இந்த அண்ட பெருவெளியின் எட்டுத் திசைகளிலும், பதினாறு கோணங்களிலும் எங்கும் நீக்கமற நிலவி பரவியிருக்கும் ஜோதி ஸ்வரூபனான பரப்பிரம்மத்தை, அற்புத ஜோதியை உணர்ந்து கொள்ளாத மூடர்கள் அவை பற்றிய சுவடிகளை மட்டும் துணியில் கட்டிக் கயிற்றால் கட்டித் தங்கள் கக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பார்களே தவிர அந்த உண்மையைப் புரிந்து கொண்டு மனதில் கொள்ளாதவர்கள். இவர்கள் பட்டப் பகலை இரவு என்று கூறிடும் பாதகர்கள் ஆவார்கள். (இதன் பொருள் இவ்வண்ட பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கின்ற சர்வ பரிபூரண சச்சிதானந்த பரிபூரணத்தை விளக்குகின்ற சாஸ்திர நூல்களை, புராண, இதிகாசங்களை படித்துப் புரிந்து மனதில் கொள்ளாமல் அந்த சுவடிகளை மட்டும் நூலினால் கட்டித் தங்கள் கக்கத்தில் வைத்துக் கொள்வதால், படித்துப் புரிந்து உணர்ந்து கொண்டதாய் ஆகிவிடுமா? என்பதுதான் கேள்வி. இந்தக் கருத்தை வலியுறுத்தும் ஒரு பாடல் இதோ: ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மானிடர் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே. தாயுமானவ சுவாமிகளும் “சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே” என்று இறைவன் குடிகொள்ளும் இடம் மனமே என்பதை விளக்குவதையும் இங்கு சிந்திக்கலாம்.) உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே செருக்கித் தரிக்கத் திருநீறுமுண்டு தெருக்குப்பையில் தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்தச் சாதியிலும் இரக்கத் துணிந்து கொண்டேன் குறையேதும் எனக்கில்லையே. 30. என் நாவு எப்போதும் உரைக்க திரு ஐந்தெழுத்து இருக்கிறது; இறைவனை எண்ணி பெருமைப்பட்டு நெற்றியில் தரிக்கத் திருநீறும் இருக்கிறது; மற்றவர்கள் வீசியெறிந்த கரித்துணி நான் எடுத்து உடுத்துக் கொள்ள குப்பைமேட்டில் இருக்கிறது; பசியெடுத்தால் யார் எவர் எந்த சாதி என்பதைப் பொருட்படுத்தாமல் பிக்ஷை கொள்ளவும் மனம் துணிந்து விட்டேன், பின்னர் எனக்கு என்ன குறை? ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டை இது என்றறிந்து போதப் பட்டாயில்லை நல்லோரிடம் சென்று புல்லறிவால் வாதைப் பட்டாய், மடமானார் கலவி மயக்கத்திலே பேதைப் பட்டாய் நெஞ்சமே! உனைப் போல் இல்லை பித்தருமே. 31. என் நெஞ்சே! கேடு கெட்ட என் மனமே! பெரியோர்களைத் துணை கொண்டு நல்வழிப் படவில்லை; உன்னுடைய பேதமையால் நல்லவர்களிடம் சென்றடைந்தும் தவறுகளைச் செய்து வேதனைப் பட்டாய்; மான்போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்களின் கலவி மயக்கத்தில் வீழ்ந்து கிடந்தாய்; உன்னைப் போல வேறு பித்தர் எவரும் உண்டோ? பேய்போல் திரிந்து பிணம் போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத் தாய்போல் கருதித் தமர் போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச் சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே. 32. மெய்ஞானம் கைவரப் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? பேய் போல அங்குமிங்குமாய் அலைந்து திரிவர்; உயிரற்ற உடல்போல கிடைத்த இடத்தில் படுத்துப் புரண்டு கொண்டும்; பிக்ஷை பாத்திரத்தில் எவர் உணவு இட்டாலும் அதனை வாங்கி நாயைப் போல உண்டு கொண்டும்; நரியைப் போல ஒளிந்து மறைந்து ஓடி ஒளிந்து கொண்டும்; பெண்களைக் கண்டால் தாய் என்ற உணர்வோடு வணங்கிப் போற்றிக் கொண்டும்; ஊரார் அனைவரையும் சுற்றத்தார் போலக் கருதிக் கொண்டு அன்போடு பழகியும்; சின்னக் குழந்தையைப் போல கல்மிஷம் இல்லாமல் தெளிந்த அறிவோடு இருப்பர். விடக்கே, பருந்தின் விருந்தே, கமண்டல வீணின் இட்ட முடக்கே, புழு வந்து உறைவிடமே, நலமுற்றும் இலாச் சடக்கே, கருவி தளர்ந்து விட்டால் பெற்ற தாயும் தொடாத் தொடக்கே, உனைச் சுமந்தேன் நின்னின் ஏது சுகம் எனக்கே. 33. அட மாமிசப் பிண்டமே! (விடக்கு = மாமிசம்); பருந்துகளுக்கு இனிய விருந்தே! கையில் கமண்டலம் சுமக்கும் பிரம்மன் படைத்த கோணலே (முடக்கு = கோணலான); புழுக்களுக்கு உணவாகி, அவை வந்து குடியேறும் மாமிசப் பிண்டமே; நன்மை எதையும் செய்யாத உடலே (சடக்கு = உடல்); உடலின் அங்கங்கள் செயல் இழந்தால் அன்னை கூடத் தொடத் தயங்கும் மிருகமே (தொடக்கு = மிருகம்); உன்னை இது வரை சுமந்துகொண்டிருக்கின்றேனே, உன்னால் என்ன சுகத்தைக் கண்டேன்? சொல். (தன் உடலைத் தானே விமரிசித்து அதற்காக வருந்துவதாக அமைந்த பாடல்) அழுதால் பயன் என்ன, நொந்தால் பயன் என்ன ஆவதில்லை தொழுதால் பயன் என்ன, நின்னை ஒருவர் சுட உரைத்த பழுதால் பயன் என்ன, நன்மையும் தீமையும் பங்கயத்தோன் எழுதாப்படி வருமோ? சலியாது இரு என் ஏழை நெஞ்சே! 34. என் அருமை ஏழை நெஞ்சமே! உன் அறியாமையால் நீயாகவே தேடிக்கொண்ட துன்பங்களை எண்ணி அழுது வருந்துவதால் என்ன பயன்; அதற்காக மனம் நொந்து போவதாலும் என்ன பயன்; அந்த நிலையில் போய் தொழுவதாலும் என்ன பயன்; உன் மனம் வருந்தும்படி தவறுகளை எடுத்துக் காட்டிப் பேசுவதாலும் என்ன பயன்; இவற்றால் எல்லாம் ஆவது எதுவும் இல்லை. இவைகள் எல்லாம் முன்பே பிரம்மன் உன்னைப் படைக்கும்போது உனக்கென்று எழுதிவைக்கவில்லை யென்றால் இவற்றால் எல்லாம் எந்தப் பயனும் இல என்பதை உணர்ந்து மனம் வருந்தாமல் இரு. ஊரீர்! உமக்கோர் உபதேசம் கேளும்! உடம்பு அடங்கப் போரீர் சமணைக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையிற் சாரீர், அனதலைச் சுற்றத்தை நீங்கிச் சகம் நகைக்க வேரீர், உமக்கவர் தாமே தருவர் இணையடியே. 35. ஊராரே கேளுங்கள்! உங்களுக்கெல்லாம் நான் செய்யும் உபதேசம் இதைக் கேளும்; முன்பு சமணர்களைக் கழு மரத்திலேற்றிய சைவர்கள் அணியும் திருநீற்றினை உடலெங்கும் பூசிக்கொண்டு வீட்டின் முன்புறத் திண்ணையிற் படுத்து உறங்குங்கள்; கூட்டம் கூடி உறவென்று சொல்லியும், சுற்றம் என்று சொல்லியும் திரியும் கூட்டத்தை விட்டு நீங்கி உலகம் சிரித்தாலும் இரந்துண்டு வாழ்வாயாக! அப்படிச் செய்வாயானால் எம்பெருமான் உம்மை ஆட்கொண்டு தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வார். நீற்றைப் புனைந்தென்ன, நீராடப் போயென்ன நீ மனமே மாற்றிப் பிறக்க வகை அறிந்தாயில்லை மாமறை நூல் ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய் ஆற்றிற் கிடந்தும் துறை அறியாமல் அலைகின்றதே. 36. உடலெங்கும் திருநீற்றைப் பூசியென்ன; புனிதத் தலங்களுக்குச் சென்று நதிகளில் நீராடியதால் என்ன; ஏ மனமே! இப்படி அஞ்ஞானியாக அன்றி மெய்ஞானியாக மாறிப் பிறக்க வழி அறிந்திருக்க வில்லை; சதுர் வேதங்களைப் படித்து உணர்ந்து கொள்ளவோ, ஏழுகோடி மந்திரங்களின் பெருமையை உணரவோ உன்னால் முடியவில்லையே, என்ன பயன். ஆற்றிலேயே மிதந்து கொண்டிருந்தாலும் தோணி தான் ஒதுங்க வேண்டிய துறை அறியாமல் தத்தளிக்கின்றதே! என்ன செய்ய. செல்வரைப் பின் சென்று உபசாரம் பேசித் தினந்தினமும் பல்லினைக் காட்டிப் பரதவியாமற் பரானந்தத்தின் எல்லையில் புக்கு நல் ஏகாந்தமாய் எனக் காமிடத்தே அல்லல் அற்று என்றிருப்பேன் ஆலநீழல் அரும் பொருளே. 37. ஆல விருட்சத்தின் கீழமர்ந்த குரு தட்சிணாமூர்த்திப் பெருமானே! செல்வந்தர்களைத் தேடிச் சென்று அவர்கள் மனம் மகிழும்படி பேசி மகிழ்வித்து, பல்லெல்லாம் தெரியக் காட்டிக் கெஞ்சிக் கூத்தாடி வாணாளை வீணாளாக ஆக்காமல் பரமானந்த வாழ்வின் எல்லை கண்டு ஏகாந்தமாய் அமர்ந்து அல்லல் நீங்க ஆனந்த வாழ்வை என்று பெற்று வாழ்வேன் சொல். ஓங்காரமாய் நின்ற வத்துவிலே ஒரு வித்து வந்து பாங்காய் முளைத்த பயன் அறிந்தால் பதினாலு உலகும் நீங்காமல் நீங்கி நிறையா நிறைந்து நிறையுருவாய் ஆங்காரமானவர்க்கு எட்டாக்கனி வந்து அமர்ந்திடுமே. 38. ஓங்காரமாய் விளங்கும் பிரணவப் பொருளதனுள் வந்து விழுந்த வித்தொன்று முளைத்து செடியாகி மரமாகி செழித்தோங்குவதன் நோக்கம் என்னவென்ற உண்மையை அறிந்து கொண்டால், ஈரேழு பதினான்கு உலகத்திலும் நீக்கமற நிறைந்து பரிபூரணமாக விளங்குகின்ற நிறைந்த ஆனந்தம் எதுவோ, மனதில் மமதை எனும் அகங்காரம் கொண்டவர்க்கு எட்டாத கனி எதுவோ அந்தப் பரம்பொருள் எனும் கனி வந்து நம் மனதில் அமர்ந்து கொண்டு அருள் பாலிக்கும். விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன் கயிலைப் பதியார் துடைப்பும் நம்பால் அணுகாது பரானந்தமே கதியாகக் கொண்டு மற்றெல்லாம் துயிலிற் கனவென நீ மதியாதிரு மனமே இதுகாண் நன் மருந்து உனக்கே. 39. முத்தொழில் புரியும் தெய்வங்களில் பிரம்மனின் படைப்பினால் உண்டாகும் இன்ப துன்பங்களும், காத்திடும் கடவுளாம் ஹரியின் கொடைகளும், கயிலையங்கிரி வாழ் பரமேஸ்வரனின் அழிக்கும் தொழிலும் அவற்றால் உருவாகும் விளைவுகளும் நம்மை என்றும் அண்டவே அண்டாது மனமே, பரம்பொருளை மனதில் தியானித்துக் கொண்டு அவனே எல்லாம் என்று இருந்தால், உலகில் மற்றெல்லாமுமே உறக்கத்தில் காணும் கனவு போல நீ அவற்றைப் பற்றி கவலை கொள்ளாதிரு மனமே, இதுதான் உனக்கு நல்ல மருந்து. (மகாகவி பாரதியும் “உலகெலாம் ஓர் பெருங்கனவு, அஃதுளே உண்டு, உறங்கி, இடர் செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும்; இதனிடை சில தினங்கள் உயிர்க்கமுதாகியே செப்புதற்கரிதாக மயக்குமால்; திலக வாணுதலார் தரும் மையலாம் தெய்விக கனவன்னது வாழ்கவே” எனும் வரிகளை நினைவு கொள்ளலாம்.) நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல வாய்க்குண்டு மந்திர பஞ்சாக்ஷர மதியாமல் வரும் பேய்க்குண்டு நீறு, திகப்புண்டு நின்ற பிறவிப் பிணி நோய்க்குண்டு தேசிகன் தன்னருள் நோக்கங்கள் நோக்குதற்கே. 40.   குப்பை மேடுகளில் நாய்களுக்கு உணவாக மனிதர் வீசியெறிந்த எச்சில் இலைகள் இருக்கின்றன; மனிதருக்கோ வீடுதோறும் சென்று கேட்டுப் பெறும் பிக்ஷை உணவு கிடைக்கும்; நம்மைக் கொண்டு போக வருகின்ற நமனை வெல்ல நம் வாய் உச்சரிக்க பஞ்சாக்ஷர மந்திரமும் உண்டு; நாம் அந்த சிவபெருமான் அடிமை என்று உணராது நம்மை பீடிக்க வரும் பேய்களை விரட்ட நெற்றியில் பூசும் திருநீறு உண்டு; பிறவிப் பிணி நீங்கப் பெம்மான் அருட்பார்வை நமக்கு எப்போதும் உண்டு என்பதை தெளிந்திரு. நேமங்கள், நிட்டைகள், வேதங்கள், ஆகம நீதிநெறி ஓமங்கள், தர்ப்பணஞ் சந்தி செப மந்த்ர யோகநிலை நாமங்கள், சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே.   41.   நித்ய கர்மாணுஷ்டானங்கள் என்று சொல்லி, ஸ்நான, பான, போஜன விதிமுறைகளைச் சொல்லி, நேம நிஷ்டையோடு வாழ்வதாகப் பிறர் உணரும்படி காட்டிக் கொண்டு, தினசரி வேதபாராயணம் செய்வதாய்ச் சொல்லிக் கொண்டு, ஆகம சாஸ்திரம், நியாயம் போன்ற வழிகளைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு, மாதாந்தர, அமாவாசை திதி தர்ப்பணங்கள் செய்து கொண்டு, காலை, பகல், சந்தி ஜெபம் செய்து கொண்டு, மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டு, சகஸ்ரநாமம், அஷ்டோத்தரம் என்று இறைவன் புகழைப் பாடிக் கொண்டு, நெற்றியில் சந்தனமென்ன, திருநீறு என்ன என்று பளிச்சென்று பிறர் பார்த்து அதிசயிக்க அணிந்து கொண்டு ஒவ்வொரு ஜாமத்திலும் ஆத்மார்த்தமில்லாமல் நாம் செய்யும் பூசனைகள் அனைத்தும் போலித்தனமே.   நான் எத்தனை புத்தி சொன்னாலும் கேட்டிலை நன்னெஞ்சமே ஏன் இப்படி கெட்டு உழலுகின்றாய் இனி ஏதுமிலா வானத்தின் மீனுக்கு வன்றூண்டிலிட்ட வகையதுபோல் போனத்தை மீள நினைக்கினையே என்ன புத்தியிதே.  42.   எத்தனை முறை உண்மைகளை எடுத்துரைத்தாலும் ஏ மனமே! நீ கேட்பதாயில்லை. ஏன் இப்படி கெட்டு அலைகிறாய்? வானத்தில் கணக்கின்றிக் கொட்டிக் கிடக்கும் விண்மீன்களை (நட்சத்திரங்களை) பிடித்து விடவேண்டுமென்று தூண்டிலைப் போடுவதைப் போல் நடந்ததையே மீண்டும் மீண்டும் நினைத்துருகி வருந்திடுகிறாயே, என்ன புத்தியப்பா இது.   (மகாகவி பாரதியின் இந்தப் பாடலை நினைவில் கொள்ளுங்கள்:–   “சென்றதினி மீளாது மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுறை இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்! தீமையெல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா!”)   இன்னுமொரு பாடலையும் படியுங்கள்:–   “சென்றதைக் கருதார், நாளைச் சேர்வதை நினையார் கண்முன் நின்றதைப் புசிப்பார் வெய்யினிலவாய் விண் விழுது வீழ்ந்து பொன்றின சவம் வாழ்ந்தாலும் புதுமையாய் ஒன்றும் பாரார், நன்று தீதென்னார் சாட்சி நடுவான் ஜீவன்முத்தர்”   அஞ்சக்கரமெனுங் கோடாலி கொண்டிந்த ஐம்புலனாம் வஞ்சப் புலக்கட்டை வேரற வெட்டி வளங்கள் செய்து விஞ்சத் திருத்திச் சதாசிவ மென்கின்ற வித்தையிட்டுப் புஞ்சக்களை பறித்தேன் வளர்த்தேன் சிவபோதத்தையே. 43.   ‘அஞ்சக்கரம்’ (ஐந்து + அக்ஷரம் ) எனும் பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுத்துக் கோடாலியைக் கொண்டு ஐம்புலன்கள் எனும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றாலும், அவை உணரும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐவகையாலும் உணருகின்ற போகங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி எடுத்துவிட்டு, மனத்தை வளம்பெறச் செய்து, உரமிட்டு தயார் செய்து அதில் சதாசிவம் எனும் மந்திர வித்தை விதைத்துப் பின் விளையும் களைகளை நீக்கி மனதில் சிவானந்தப் பயிரை நன்கு வளர்த்தேன்.   தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள் நீயாரு நானார் எனப் பகர்வார் அந்த நேரத்திலே நோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட நோயும் ஒரு பாயாரு நீயும் அல்லாற் பின்னை ஏது நட்பாம் உடலே.     44.   உன்னைப் பெற்ற தாயாரும், சுற்றத்தாரும், தாலிகட்டி மணம் செய்த மனைவியரும் இவர்கள் எல்லாம், நீ உன் வாழ்வின் இறுதி கட்டத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், இனி வேறு வழியில்லை நீ இவ்வுலக வாழ்வை நீத்திடப் போகிறாய் எனத் தெரிந்ததும், நீ யார், நான் யார் என்று விரக்தி நிலைக்கு வந்து விடுவார்கள். அந்த நேரம் பார்த்து நோய்கள் இருக்கின்றனவே, அவை உன்னை வந்து பற்றிக் கொண்டுவிடும். அந்த நோயும், நீ படுத்துக் கிடக்கும் பாயும் அன்றி பின் உனக்கும் உன் உடலுக்கும் யார் உறவு சொல்.   ஆயும் பொழுது மயிர்க்கால்கள் தோறும் அருங்கிருமி தோயும் மலக்குட்டையாகிய காயத்தைச் சுட்டி விட்டாற் பேயும் நடனமிடும் கடமாமென்று பேசுவதை நீயும் அறிந்திலையோ பொருள் தேட நினைந்தனையே.     45.   ஏ நெஞ்சமே! இந்த உடலைப் பற்றி நன்றாக ஆய்ந்து உணர்ந்து பார்! உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் ஏராளமான கிருமிகள் மலிந்து கிடக்கின்றன; உடலோ கழிவுகளைத் தாங்கிய பண்டம்; இந்த உடலில் ஊசலாடும் உயிர்மட்டும் இவ்வுடலை விட்டு நீங்கி விட்டால் இதைக் கொண்டு போய் மயானத்தில் எரித்து விடுவர். அந்த இடம் பேய்கள் ஆடுகின்ற மேடை என்று மக்கள் பேசுவதை நீ கேட்டதில்லையோ? அப்படிப்பட்ட இந்த உடலை வளர்க்க, இதனை வாசனை திரவியங்களிட்டு பாதுகாக்கப் பொருள் தேட நினைக்கின்றனையே, அது சரியா?   பூணும் பணிக்கல்ல, பொன்னுக்குத் தானல்ல, பூமிதனைக் காணும் படிக்கல்ல, மங்கையர்க்கு அல்ல, நற் காட்சிக்கல்ல, சேணும் கடந்த சிவனடிக்கல்ல என் சிந்தை கெட்டுச் சாணும் வளர்க்க அடியேன் படும் துயர் சற்றல்லவே.   46.   என் உடலைப் பேணி பாதுகாப்பது எதற்காகத் தெரியுமா? பொன்னும், மணியுமாக இழைத்த அழகிய ஆபரணங்களை அணிந்து அலங்காரம் செய்து கொள்வதற்காக அல்ல; பொன்னும் பொருளும் தேடி செல்வச் சீமானாக விளங்குதற்கும் அல்ல; ஏராளமான நிலம் நீச்சை வாங்கிச் சேர்ப்பதற்காகவும் அல்ல, பெண்களுக்காகவும் அல்ல; ஊர் சுற்றிப் பார்த்து இயற்கை வளங்களைக் கண்டு களிக்கவும் அல்ல; அண்டங்களைக் கடந்த சிவபெருமானின் சேவடிகளைத் துதித்து வாழ்ந்திடவும் அல்ல; புத்தி கெட்டுப் போய் என்னுடைய ஒரு சாண் வயிற்றை நிரப்புவதற்காகவன்றோ நான் இத்தனை கஷ்டங்களையும் பட்டுக் கொண்டிருக்கிறேன்.   வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், வேறொருவர்க்கு எட்டாத புட்பம், இறையாத தீர்த்தம் இனி முடிந்து கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே.    47.   செப்புத் தகட்டில் பதிந்து வைக்காத மந்திரித்த சக்கரங்கள், வாயினால் உச்சரிக்காத மந்திரங்கள், எவர்க்கும் கிட்டாத மலர்கள், பிறர்க்கு அர்க்கியம் தராத புனித நீர்; துணியில் சுற்றிப் பெட்டியில் வைத்து மூடாத சிவலிங்க விக்ரகம்; நினைத்த காரியத்தை செய்து முடிக்காத நெஞ்சம் என்று இத்தகு நிலையில் உள்ள நிலை எதுவோ அதுவே எனது குருநாதர் எனக்கு உபதேசித்த மந்திரம்.   எருமுட்டை பிட்கின் உதிர்ந்திடும் செல்லுக்கு எவர் அழுவார் கருமுட்டை புக்குக் கழல் அகன்றாய் கன துக்கமதாய்ப் பெருமுட்டுப் பட்டவர் போல அழும் பேதையீர்! பேத்துகிறீர் ஒருமுட்டும் வீட்டு மாநாமம் என்றைக்கும் ஓதுமினே.  48.   அன்பர்களே! ஒரு சொல் கேளீர்! அன்னையின் கருவில் உதித்து, அங்கு வசித்து வெளிவந்து வந்த இடத்தில் ஏராளமான துன்பங்களைப் பட்டு துக்கப்பட்டு வருந்தி அழும் பேதைகளே, நீங்கள் கலங்கி மனம் வருந்துவதால் என்ன பயன்? இந்த உடல் அழியப் போவது. அதை சிந்தை செய்வதை விட்டு மனம் தேறுவீர். எருமுட்டை எனப்படும் விராட்டி உதிர்ந்து பொலபொலவென்று கொட்டும் நிலைகண்டு யார்தான் அழுது புலம்புவார். இவ்வுடல் இருக்கும் வரைக்கும் இறைவனின் திருநாமத்தை எண்ணி வழிபட்டு மகிழ்ந்து இருப்பாயாக.   மையாடு கண்ணியும், மைந்தரும் வாழ்வு மனையும் செந்தீ ஐயா நின்மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துளே மெய்யாயிருந்து நாட்செல நாட்செல வெட்ட வெறும் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே.     49.   உடல் செந்தீ போன்ற ஜொலிப்போடும், மாலை நேர செவ்வானம் போன்று தோற்றமளிக்கும் சிவபெருமானே! மாயையாய் உருவான இந்த பூவுலகில் மாயை வடிவில் இங்கிருக்கும் அனைத்துமே உண்மை என நம்பும்படியாக, மாடு, மனை, வீடு, இல்லாள், பிள்ளை என்று பல வடிவில் தோற்றமளித்து, பின்னர் நாளாக ஆக மெல்ல அனைத்துமே பொய்யாய், இல்லையெனும்படியாகவும், கனவு போலவும் மெல்லக் கரைந்து போயிற்றே.   ஆயாய் பலகலை ஆய்ந்திடும் தூய அருந்தவர்பால் போயாகிலும் உண்மையைத் தெரிந்தாய் இல்லை, பூதலத்தில் வேயார்ந்த தோளியர் காம விகாரத்தில் வீழ்ந்து அழுந்தி பேயாய் விழிக்கின்றனை மனமே என்ன பித்துனக்கே.  50.   ஏ மனமே! பற்பல கலைகளை ஆய்ந்து நன்கு தேறிய தூய்மையான தவசிகளிடம் சென்றாவது வாழ்வின் உண்மையை அறிந்து கொள்ளவில்லை, அதை விடுத்து இளம் மூங்கிலைப் போன்ற தோளை உடைய அழகுப் பெண்களின் பால் உள்ள ஈர்ப்பால் விழுந்து, அதிலேயே மூழ்கி பேய்போல விழிக்கின்றாயே. உனக்கு என்ன பைத்தியமா?   அடியார் உறவும், அரன் பூசை நேசமும், அன்பும் அன்றிப் படிமீதில் வேறு பயன் உளதோ, பங்கயன் வகுத்த குடியான சுற்றமும் தாரமும் வாழ்வும் குயக் கலங்கள் தடியால் அடியுண்ட வாறொக்கும் என்று இனம் சார்ந்திலரே. 51. சிவநேசச் செல்வர்களான அடியார்களின் நட்பும், சிவபெருமானுக்குச் செய்கின்ற பூஜைகளும், அவர் மீது செலுத்துகின்ற அன்பையும் உள்ளடக்கிய பக்தி மார்க்கத்தை விட இவ்வுலகிலுள்ள ஜீவன்களுக்கு வேறு நல்ல செயல் ஏதேனும் இருக்கிறதா என்ன? பிரமன் படைப்பில் நமக்கென்று அமைந்த சுற்றத்தார், மனைவி முதலான உறவினர்கள், அவர்களோடு இனிது வாழ்கின்ற வாழ்க்கை இவைகள் யாவுமே குயவன் செய்த மட்பாண்டங்களைத் தடியால் அடித்தால் என்னவாகுமோ அதைப் போல ஆகும் என்பதை எண்ணி நல்லோர் நட்பை சார்ந்திருக்கவில்லையே. ஆங்காரப் பொக்கிசம், கோபக் களஞ்சியம், ஆணவம்தான் நீங்கா அரண்மனை, பொய்வைத்த கூடம், விண் நீடிவளர் தேங்கார் பெருமதிற் காம விலாசம், இத்தேகம் கந்தல் பாங்காய் உனைப் பணிந்து எப்படி ஞானம் பலிப்பதுவே. 52. என்னுடைய இந்த உடல் இருக்கிறதே இது கிழிந்து போன தோலால் ஆன பை. இது எப்படி இருக்கிறது தெரியுமா, அகங்காரத்தை உள்ளடக்கிய பொக்கிஷம், கோபத்தைத் தேக்கி வைத்த களஞ்சியம், ஆணவம் குடிகொண்ட அரண்மனை, பொய் கோலோச்சுகின்ற கூடம், விண்ணை முட்டும் பெரிய மதிற்சுவரைக் கொண்ட காமவிலாச மாளிகை. இவை அத்தனையையும் நீக்கிவிட்டு இறைவா உன்னைப் பணிந்து வணங்கி நற்கதி அடைகின்ற ஞானத்தைப் பெறுவது எங்ஙனம்? ஒழியாப் பிறவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி, அனாதியனை மழுமான் கரத்தனை மால் விடையானை மனத்தில் உன்னி விழியால் புனல் சிந்தி விம்மி அழு; நன்மை வேண்டும் என்றே. 53. ஓயாமல் திரும்பத் திரும்பப் பிறந்து, பின் இறந்து இப்படி எத்தனையோ பிறவி எடுத்து மனம் வருந்தி தவிக்கின்ற என் நெஞ்சே! அழிவற்ற முக்தி நிலையை அடைய உனக்கு ஒரு மருந்தைச் சொல்கிறேன் கேள்! தொடக்கமோ முடிவோ இல்லாத ஆதி அந்தமில்லாப் பெருமானை, மழு, மான் இவற்றைத் தன் கரங்களில் தாங்கியவனும், திருமாலை ரிஷபமாகக் கொண்ட சிவபெருமானை மனத்தால் தியானித்து, கண்ணீர் விட்டு அழுது அரற்றி, அவனது அருட்கருணை வேண்டுமென்று வரம் கேட்டு உய்வாயாக. நாய்க்கொரு சூலும், அதற்கோர் மருத்துவம் நாட்டில் உண்டோ? பேய்க்கொரு ஞானம் பிடிபடுமோ பெரும் காஞ்சிரங்காய் ஆக்குவார் ஆர் அது அருந்துவர் ஆர் அதுபோல் உடம்பு தீக்கிரை ஆவதல்லால் ஏதுக்காம் இதைச் செப்புமினே. 54. *நாய் கர்ப்பமாக இருந்தால் அதை வைத்தியம் செய்து பிரசவம் எல்லாம் பார்க்கிறோமா என்ன? பேய்களுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமா என்ன? எட்டிக் காயை பயிராக்கி காய்த்தால் அதை உண்பார் உண்டா என்ன? அதுபோலத்தான், இந்த நம்முடைய உடல் இருக்கிறதே இதிலிருந்து ஆவி நீங்கிவிட்டால் தீக்கு இரையாவதைத் தவிர வேறு பயன் உண்டோ சொல். *அந்தக் காலத்தில் நாய் சினை கொண்டிருந்தால் அதற்கு மருந்து கொடுத்து மருத்துவம் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதால் இப்படிக் குறிப்பிடுகிறார். இபொழுது வளர்ப்புப் பிராணிகளாக நாய் வளர்ப்போர் அதையும் செய்யலாம். கச்சிற் கிடக்கும் கனதனத்திற் கடைக்கண்கள் பட்டே இச்சித்திருக்கின்ற ஏழை நெஞ்சே, இமவான் பயந்த பச்சைப் பசுங்கொடி உண்ணாமுலை பங்கர் பாதத்திலே தைச்சுக்கிட மனமே ஒருக்காலும் தவறில்லையே. 55. பெண்களின் மார்பில் கச்சைக்குள் அடங்கிய கனத்த தனங்களின் மீது இச்சைகொண்டு அலையும் பேதை நெஞ்சே! மலையத்துவஜனின் மகளான பச்சைப் பசுங்கொடியன்ன விளங்கும் அந்த உமாதேவியாம் உண்ணாமுலை அம்மையைத் தன் உடலின் வாமபாகத்தில் கொண்ட சிவபெருமான் பாத கமலங்களில் மனத்தைச் செலுத்திக் கிடந்தால் உனக்கு ஒரு துன்பமும் வாராதே. மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவுங் கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை போனாலும் பேறிருந்தாலும் நற்பேறிது பொய்யன்று காண் ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே. 56. மானின் விழிகளையொத்த வேல்விழி மாதர்களின் மோகவலையைக் கடந்து அதிலிருந்து விடுபட்டு வந்துவிட்டேன், ஞானகுருவாக வந்து இறைவன் அருள்பாலித்து என்னை ஏற்றுக் கொண்டனன்; ஆகையால் எனக்கு இனி ஒரு குறையுமில்லை. இந்த பூத உடல் இருந்தாலும் சரி, இல்லை அழிந்தாலும் சரி எனக்கு எந்தக் குறையுமில்லை; அப்படிப்பட்ட நற்பேற்றினை நான் பெற்றுவிட்டேன், இஃது உண்மை. இருந்தாலும் இந்த இழிவான உடலைத் தாங்கிக் கொண்டிருப்பது எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. சற்றாகிலும் உந்தனைத் தானறியாய் தனை ஆய்ந்தவரை உற்றாகிலும் உரைக்கப் பொருந்தாய் உனக்கான நிலை பற்றாய் குருவைப் பணியாய் பரத்தையர் பாலிற் சென்று என் பெற்றாய் மட நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தனுமே. 57. ஏ மட நெஞ்சமே! ஒரு சிறிதாவது உன்னைப் பற்றி நீ யார் என்பதை ஆராய்ந்தறிந்து பார்த்திருக்கிறாயா? இல்லையே! போகட்டும் அப்படித் தன்னைத் தானே யார் என்று வினா எழுப்பி ஆய்ந்து அறிந்து ஞானம் பெற்றவரை அணுகி அவர் உரையையாவது கேட்டதுண்டா? இல்லையே. ஆகையால் உனக்கு ஏற்ற நிலை எது என்பதை எண்ணி அதனைப் பின்பற்றுவாயாக. சற்குருநாதரைக் கண்டு அவர் பாதங்களைப் பணியாமல், பொதுப் பெண்டிர் இல்லம் சென்று நீ பெற்றதென்ன? உன்னைப் போன்ற பித்தன் இவ்வுலகில் வேறு யாரும் இல்லை. *உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊற்றையறப் புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன் எனவே ஒளியிட்ட தாள் இரண்டுள்ளே இருத்துவது உண்மையென்று வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே. 58. கல்லை உளியால் செதுக்கிச் சிற்பமாக ஆக்கிய விக்கிரகத்தையும், மிக அழகாக உருவாக்கிய சுண்ணாம்பினால் ஆன சிலையையும், புளியினால் தேய்த்துப் பளபளக்கும் செம்பினால் ஆன விக்கிரகத்தையும் நான் போற்றி வணங்க மாட்டேன். பொன்மேனி அமைந்த பரமேஸ்வரனின் தாமரைப் பாதங்கள் இரண்டையும் என் நெஞ்சத்துள் பதித்து வைத்து விட்டேன், எனவே இனி எனக்கு ஒன்றும் வேண்டியதில்லை. *பத்ரகிரியாரும் தன் பாடலொன்றில் இப்படிச் சொல்லுகிறார்: “உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும் புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்”. கல்லால் எறியுண்டும் காலால் உதையுண்டும் காளை கையில் வில்லால் அடியுண்டும் முன்னாள் விடம் உண்டு மேவிளித்துப் பல்லால் புரமெரி ஏகம்பவாணர் பதாம் புயத்தின் சொல்லார் செவியினிற் கேளாதிருந்தது என் தொல்வினையே. 59. சாக்கிய நாயனார் எறிந்த கல்லால் அடிபட்டும், காளத்தி வேடன் கண்ணப்பன் தன் காலால் உதையுண்டும், இளையவனான அர்ஜுனனிடம் வில்லாம் அடிபட்டும், அந்த நாளில் பாற்கடலைக் கடந்தபோது எழுந்த ஆலகால விடத்தை உண்டு கண்டத்தில் தாங்கியும் இப்படி சிரமங்களையெல்லாம் பட்டபோதும், பற்கள் தெரிய புன்னகைத்த ஏகம்பவாணருடைய பொன்மலர் பாதங்களைப் பாடிய பனுவல்களைக் காதால் கேளாமலே இருந்தது என் முன்வினைப் பயனே. ஒருநான்கு சாதிக்கு மூவகைத் தேவர்க்கும் உம்பருக்கும் திருநாளும் தீர்த்தமும் வேறுளதோ அத்திசைமுகனால் வருநாளில் வந்திடும் அந்தக் கண்ணாளன் வகுப்பொழியக் குருநாதன் ஆணை கண்டீர் பின்னை ஏது இக்குவலயத்தே. 60.   நான்கு வருணத்தார்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும், இவர்கள் அல்லாத மற்ற தேவர்களுக்கும் திருவிழாவோ அல்லது புண்ணிய தீர்த்தமோ வேறு ஏதேனும் உண்டோ? பிரம்ம தேவன் வகுத்தபடி அதது அந்தந்த நாட்களில்தான் வரும். பிரம்ம சிருஷ்டிப் பணி முடியும் காலத்தில் பரமகுருவான பரமேஸ்வரனின் பாதரவிந்தங்களே கதி என்பதைத் தவிர வேறு என்ன உண்டு இந்த உலகத்தில். 5 அன்னை ஈமச்சடங்கு   (அவருடைய அன்னை மறைந்தபோது அவருக்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடியவை.) ஐயிரண்டு திங்களா அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பேன் இனி. 1. பத்து மாதங்கள் சுமந்து, அங்கம் தளர்ந்து வருந்திப் பெற்று, ஆண் குழந்தை என்றுணர்ந்து தன் உடல் நோவெல்லாம் மறைந்து மனம் களிப்புற்று, குழந்தையைத் தன்னிரு கரங்களில் ஏந்தித் தாய்ப்பால் அளித்து என்னைப் போற்றி வளர்த்த அந்தத் தாயை இனி நான் எந்தப் பிறவியில் மீண்டும் காண்பேன். முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாட்சுமந்தே அந்தி பகலாய்ச் சிவனை ஆதரித்துத் – தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழம் மூட்டுவேன். 2. தனக்கொரு மகவு வேண்டுமென்று பலகாலம் தவமாய்த் தவமிருந்து முன்னூறு நாட்கள் வயிற்றில் சுமந்து, அந்தி, பகலென்று பாராமல் சிவபெருமானை வழிபட்டு, வயிறு முட்டக் குழந்தையைச் சுமந்து பெற்ற தாய்க்கோ நான் அவள் உடலை தீக்கு இரையாக்குவேன். வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து – முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீ மூட்டுவேன். 3. தூளியிலும், மரத் தொட்டிலிலும், தன் மார்பின் மேலும், தோள்மீதும், கட்டிலிலும் வைத்து என்னை அன்பு செலுத்தி பறவைகள் தன் குஞ்சுகளைத் சிறகுவிரித்துக் காப்பதுபோல் காப்பாற்றி என்னைச் சீராட்டிய அன்னையை விறகுகளை அடுக்கி எப்படி நான் தீ மூட்டுவேன். நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ மெய்யிலே தீ மூட்டுவேன். 4. உடல் வருந்தி என்னைச் சுமந்து பெற்று, என் உடல் வருந்தாமல் என்னைத் தன் கரங்களிலே ஏந்தித் தாய்ப்பால் அருந்தக் கொடுத்து வளர்த்தெடுத்து, காலை மாலை பாராமல் எப்போதும் என்னைக் கீழே விடாமல் கைகளிலே வைத்துக் காப்பாற்றிய என் தாய்க்கோ உடலில் தீ மூட்டுவேன். அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள தேனே அமிழ்தமே செல்வத் திரவியமே மானே என அழைத்த வாய்க்கு. 5. என்னை இனிய தேனே, அமிழ்தே, செல்வமே, திரவியமே, மானே என்று அனை அன்போடு அழைத்த அன்னைக்குப் பெருமைகள் செய்யாமல் அவள் வாய்க்கு நானே வாய்க்கரிசி போடுவதோ. அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல் கொள்ளி தனை வைப்பேனோ கூசாமல் – மெள்ள முகம்மேல் முகம் வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வாய்க்கு. 6. சின்னக் குழந்தையாய்த் தரையில் படுத்து கைகால்களை நான் அசைத்து விளையாடியபோது என்னை மெள்ள எடுத்து முகத்தின் மேல் தன் முகம் வைத்து முத்தம் கொடுத்து, என் அருமை மகனே என அழைத்தத் தாயின் வாயில் நான் இப்போது அரிசியிட்டுத் தலைமேல் கொள்ளியையும் வைப்பது எங்ஙனமோ. முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையில் அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே யானுமிட்ட தீ மூள்க மூள்கவே. 7. முற்காலத்தில் சிவபெருமான் இட்ட தீ திரிபுரங்களையும் எரித்தது; பின்னர் அனுமன் இட்ட தீ தென் இலங்கையைச் சுட்டெரித்தது; என் உடலில் தாய் வைத்த உயிர்த்தீ இப்போது பற்றி எரிகிறது; நான் இப்போது அவள் உடலுக்கு இடும் தீயும் பற்றி எரியட்டும். வேகுதே தீ அதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக் குருவி பறவாமல் கோடாட்டி என்னைக் கருதி வளர்ந்தெடுத்த கை. 8. வெட்ட வெளியில் என்னை எடுத்துச் சென்றால் வானில் பறக்கும் பறவை தோஷம் எனக்குப் பட்டுவிடும் என்று எச்சரிக்கையோடு என்னை எடுத்து வளர்ந்த அன்னையின் இரு கரங்களும் தீயினால் பற்றி எரிகிறதே, பொடிப்பொடியாய் சாம்பலாய் ஆகின்றதே, அந்தோ என் செய்வேன். வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும் உன்னையே நோக்கி உகந்து வரங்கிடந்து என் தன்னையே ஈன்றெடுத்த தாய். 9. திரு அண்ணாமலையில் ஜோதி ஸ்வரூபனாய் எழுந்தருளியிருக்கும் பரஞ்சோதிச் சுடரே! சதாகாலமும் உன்னையே எண்ணி பூசித்து வணங்கி வரம்பெற்று என்னை இப்பூவுலகில் மகவாகப் பெற்ற என் அன்னை தீயினில் வெந்தாளோ, வெந்து உந்தன் திருவடிகளை அடைந்தாளோ, என்னையும் தன் மகவு என்பதை மறந்தாளோ. வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள் நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறானாள் – பால் தெளிக்க எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம். 10. உயிரோடும் உயிர்ப்போடும் ஜீவகளையோடும் இருந்தாள் என் தாய், வீதிகளில் சென்று உலாவித் தன் வேலைகளைச் செய்தாள், நேற்று இருந்தாள், இன்றோ தீயில் வெந்து சாம்பரானாள். ஆகையால் அவளுக்குப் பால் தெளிக்க எல்லோரும் வாருங்கள், என்ன ஏது என்று எண்ணி வருந்தாதீர்கள், உலகமே சிவமயம், அவனன்றி ஓரணுவும் அசையாது. 6 நெஞ்சோடு புலம்பல் (இதில் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் தன் நெஞ்சை விளித்துச் சொல்லும் பாங்கில் ‘நெஞ்சே’ என்று முடித்திருப்பார்) மண்காட்டிப் பொன்காட்டி மாய இருள்காட்டிச் செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல் கண்காட்டும் வேசியர்தம் கண் வலையில் சிக்கிமிக அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே. 1. ஏ மனமே! திருச்செங்காட்டில் திருநடனம் புரிகின்ற எம்பெருமான் நடராசனை வணங்கித் தொழாமல், மண்ணாசையையும், பொன்னாசையையும் காட்டி சபலத்தை உண்டு பண்ணி இருளில் ஆழ்த்திவிட்டு, அதோடு நில்லாமல் கண்ணால் ஜாடைகாட்டி மயக்கும் வேசியர்தம் வலையில் சிக்கிக் கொண்டு, கடைவீதியில் கிடைக்கும் உணவுக்காக அலைகின்ற நாயைப் போல அலைகின்றாயே! புட்பாசன அணையில் பொற்பட்டு மெத்தையின் மேல் ஒப்பா அணிந்த பணியோடாணி நீங்காமல் இப்பாய்க் கிடத்தி இயமனுயிர் கொள்ளு முன்னே *முப்பாழைப் போற்றி முயங்கிலையே நெஞ்சமே. 2. ஏ மனமே! பட்டு மெத்தையின் மேல், மலர்களைப் பரப்பி, சர்வாலங்கார பூஷிதையாகக் கிடந்த அழகு கெடாதபடி பின்னர் மரணப் படுக்கையில் கிடந்து காலன் வந்து உயிரைப் பறித்துச் செல்வதற்கு முன்பாக மூவகை பாழுக்குக் காரணமாயிருந்து ஆட்டுவிக்கும் அந்த பரமன் திருவடியை நினைக்க முயற்சி செய்யவில்லையே. (*முப்பாழ் என்பதை ஜீவப்பாழ், சிவப்பாழ், பரப்பாழ் என்பர்; அவை ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம் என்பதாகும். ஜீவப்பாழ் என்பது “நான்” எனும் ஜீவனைப் பற்றிய அறிவு, பரப்பாழ் என்பது வித்யா தத்துவம் எனவும், சிவப்பாழ் என்பதை ‘சிவம்’ என்பதன் உண்மை அறிவு என்பதையும் பெரியோர் குறிப்பிடுவர்) முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும் பாழாய் அப்பாழுக்கு அப்பால் நின்று ஆடும் அதைப் போற்றாமல் இப்பாழாம் வாழ்வை நம்பி ஏற்றவர்க்கு ஒன்றீயாமல் துப்பாழாய் வந்த வினை சூழ்ந்தனையே நெஞ்சமே. 3. ஏ மனமே! பொய்யான, கனவு போன்ற இந்த வாழ்வை நிலையென்று எண்ணி, மூவகையான பாழுக்கு அப்பால் உள்ள முதற்பாழ் எனப்படும் பரவேளி தத்துவத்தை, அந்தப் பரவெளியாம் ஆகாயத்தில் திருத் தாண்டவம் புரியும் சிவபெருமானைப் போற்றித் துதிக்காமலும், இல்லையென்று வரும் வறியவர்கு எதையும் வழங்காமலும், நீ செய்த வினைப்படி வெறும் பாழான வாழ்க்கையை வாழ்ந்தாயே, அப்படி வாழ்ந்ததால் தீவினை சூழப்பெற்றாயே. அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயுஞ் சென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றாமல் பொன்னும் அனையும் எழிற் பூவையரும் வாழ்வு நிலை இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே. 4. ஏ மனமே! பசி என்று உணவுக்கு ஏங்கி அலைந்தவர்களுக்கு வயிறார உண்ண அன்னம் அளித்து உதவி எதையும் செய்யாமல், பிறவி எடுத்ததே பரம்ப்பிரம்மத்தை வணங்குவதற்கு எனும் அறிவு இல்லாமல் சிவனை வழிபட்டு அவன் அருளைத் தேடாமல், இந்தப் புவியில் பொன்னும், பொருளும், இன்பம் தரும் அழகிய பூவையரும்தான் கதி என்று வாழ்ந்தனையே நெஞ்சமே. முற்றொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம் இற்றைநாள் போற்றோம் என்றெண்ணாது பாழ் மனமே அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல் கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறந்து விட்டனையே. 5. பாழாய்ப் போன என் மனமே! முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியங்களினால் இப்பிறவியில் அரிய பல செல்வங்களை இறைவனது கருணையினால் பெற்றிருக்கிறோம் எனும் உண்மையை உணராமல், செல்வம் அற்றவர்க்கும், ஏழை எளியவர்க்கும் எதையும் கொடுக்காமலும், கல்வி கற்ற மேலோர்களுக்குக் கொடுத்து அவர்தம் ஆசியைப் பெறாமலும், ஆணவத்தினால் கண்மூடி இருந்தாயே. மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு ஆணிப் பொன் சிங்காதனத்தில் இருந்தாலும் காணித் துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால் காணிப் பொன்கூட வரக் காண்கிலமே நெஞ்சமே. 6. ஏ மனமே! நவரத்தினங்களால் ஆன ஆபரணங்களை அணிந்து கொண்டு, பொன்னாலும் மணியாலும் இழைக்கப்பட்ட நவரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும், இந்த உடலை காலன் நன்கு கட்டி கைபிடித்துத் தூக்கிச் செல்கையில் நீ சேர்த்து வைத்து அனுபவித்த ஒரு சிறிதளவு பொன்கூட உன் பின்னால் வரக் காணோமே. கற்கட்டு மோதிர நற்கடுக்கன் அரைஞாண் பூண்டு திக்கு எட்டும் போற்றத் திசைக் கொருத்தரானாலும் பற்கிட்ட எமன் உயிர் பந்தாடும் வேளையிலே கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே. 7. நவரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட தங்க மோதிரமென்ன, ஜொலிக்கின்ற காதில் அணியும் கடுக்கன் என்ன, அரையில் அணியும் தங்க அரைஞாண் என்ன இவைகளையெல்லாம் பார்த்து எட்டு திசைகளிலும் இருப்போர் எல்லாம் பார்த்து ஒகோவென்று புகழ்ந்தால் என்ன, பற்கள் கிட்டி மரணப் படுக்கையில் கிடக்கையில் காலன் வந்து உயிரைப் பந்தாடுவது போல எடுத்துக் கொண்டு போகும்போது, ஒரு சிறு ஓலைகூட உன்கூட வரக்காணோமே நெஞ்சே, என்ன செய்வது. முன்னை நீ செய்த தவம், முப்பாலும் சேருமன்றிப் பொன்னும் பணி திகழும் பூவையும் அங்கே வருமோ தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல் கண்ணற்ற அந்தகன் போல் காட்சி அற்றாய் நெஞ்சமே. 8. ஏ மனமே! முன் பிறவிகளில் நீ செய்த பாவ புண்ணியங்கள்தான் இந்தப் பிறவியிலும் உனக்கு வந்து உறுமே அன்றி, பளபளக்கும் பொன்னும், ஆபரணாதிகளை அணிந்து கொண்டு அழகொழுக நிற்கும் பூவையரும், உன்கூட வந்து நிற்பரோ? இவ்வுடலையும், இந்த வாழ்வையும் சதமென்றெண்ணிக் கொண்டு சற்குரு நாதராம் பரம்பொருளை நாடாமல் கண் இல்லாத குருடனைப் போல் எதையும் காணாமல் நின்றாயே. பையரவம் பூண்ட பரமர் திருப் பொற்றாளைத் துய்யமலர் பறித்துத் தொழுது வணங்காமல் கையில் அணி வளையும் காலில் இடும் பாடகமும் மெய் என்று இறுமாந்தி விட்டனையே நெஞ்சமே. 9. ஏ மனமே! தனது ஜடாமுடியில் படமெடுத்தாடும் நாகப்பாம்பை ஆபரணமாகக் கொண்ட பரமன் சிவபெருமானுடையத் தாமரைப் பாதங்களைப் பணிந்து வணங்காமல், கையில் அணிகின்ற தங்கக் காப்பையும், காலில் அணிகின்ற பாடகத்தையும் நிரந்தரம் என்று எண்ணி மனம் இறுமாந்து இருந்தனையே. மாதுக்கொரு பாகம் வைத்த அரன் பொற்றாளைப் போதுக்கொரு போதும் போற்றி வருந்தாமல் வாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே ஏதுக்குப் போகநீ எண்ணினையே நெஞ்சமே. 10. ஏ நெஞ்சே! உமையொரு பாகனாம் சிவபெருமானுடைய திருத்தாமரைத் தாளினை மனதில் பதித்து பொழுதெல்லாம் அவனைப் போற்றி வழிபடாமல், ஊரெல்லாம் ஓடியாடி தேடிய செல்வத்தைப் பிறருக்கும் தராமல் உலோபியாய் வாழ்ந்து மண்ணில் புதைத்துவைத்தாயே, என்ன நினைத்து? இவைகளெல்லாம் உன்னோடு வருமென்றெண்ணியோ, பிறர்க்கு உதவாமல் இப்படி புதைத்து வைத்து என்ன கண்டாய்? அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன் வஞ்சத்தை நீக்கி மறுநினைவு வாராமல் செஞ்சரணத் தாளைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே. 11. ஏ மனமே! திருவருள் சக்திகளான இறைவனுடைய இதயத்தின் ஞானசக்தி, சிரத்திலுள்ள பராசக்தி, தலை முடியிலுள்ள ஆதிசக்தி, கவசத்தில் அமைந்த இச்சா சக்தி, கண்களில் அமைந்த கிரியா சக்தி ஆகிய இந்த ஐந்து சக்திகளையும் வணங்கி, அவற்றைக் கொண்டு ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை அடக்கி உன்வசப் படுத்திக் கொள்வதற்கு உனக்கு ஓர் உபாயம் சொல்கிறேன் கேள்! நெஞ்சே, உன்னில் தோன்றுகின்ற வஞ்சக எண்ணத்தை அறவே நீக்கி, அது மீண்டும் உன்னிடம் தோன்றாமல் கவனமாக இருந்து, சிவந்த தாமரைப் போன்ற சிவபெருமானின் பாதகமலங்களையே எப்போதும் சிந்தை செய்வாயாக. *சிவபெருமானின் ஐந்து சக்திகள் குறித்த திருமந்திரப் பாடலைப் பார்ப்போம்: “எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம் விண்ணிற் பரைசிர மிக்க சிகையாதி வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம் பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே” பொருள்: இருதய மந்திரம் இறைவனுக்கு ஞானசக்தியாகும், சிரசு மந்திரம் வானத்தில் விளங்கும் பராசக்தியாகும். சிகாமந்திரம் ஆதிசக்தியாம். அழகுடைய கவச மந்திரம் பல நிறங்களையுடைய இச்சா சக்தியாகும். நேத்திரம் கிரியா சக்தியாம். அற்புதமாய் இந்த உடல் ஆவி அடங்கு முன்னே சற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல் உற்பத்தி செம்பொன் உடைமைப் பெருவாழ்வை நம்பிச் சர்ப்பத்தின் வாயில் தவளை போல் ஆனேனே. 12. அற்புத சக்தி படைத்த உயிர் இந்த உடலை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலை மாறி அதிலிருந்து ஆவி பிரிந்து சென்று பரபிரம்மத்தோடு இணையும் காலத்துக்கு முன்பாகவே சற்குருவாம் தக்ஷிணாமூர்த்திப் பெருமானைப் போற்றி வணங்கி தவம் செய்து நற்கதியடைய முயலாமல் வீணே, மண்ணில் உருவான செம்பொன்னையும், மாய உலகின் கனவுபோன்ற உடைமைகளையும், வாழ்ந்த பெருவாழ்வையும் சதமென்று எண்ணி, நாகம் பிடித்து வாயில் கவ்வியுள்ள தவளையைப் போல மாயவலையில் சிக்கித் தவிக்கின்றேனே. உற்றார் பெற்றார் ஆர், உடன் பிறப்பார் பிள்ளைகள் ஆர், மற்றார் இருந்தால் என், மாளும் போது உதவுவரோ? கற்றாய் இழந்த இளங் கன்றது போலே உருகிச் சிற்றாகிச் சிற்றினம் சேர்ந்தனையே நெஞ்சமே. 13. ஏ நெஞ்சே, நமக்கு உற்ற நண்பர் உறவினர்கள் யார், பெற்றோர் யார், உடன் பிறந்த சகோதர சகோதரியர் யார், பெற்ற பிள்ளைகள்தான் யார், வேறு எவராயிருந்தாலும் அவர்களெல்லாம் யார், இவர்கள் எல்லாம் நம் உயிர் இவ்வுடலைவிட்டுப் பிரிந்து போகும் போது யார் வந்து உதவுவார்? எவரும் வரமாட்டார். எனவே நீ தாய்ப்பசுவை இழந்த சின்னஞ்சிறு கன்றினைப் போல மனமுருகிச் சோர்ந்து, கீழான எண்ணங்கொண்ட சிற்றினத்து மாந்தரைச் சேர்ந்து அழிகின்றனையே. வீடிருக்கத், தாயிருக்க, வேண்டு மனையாள் இருக்கப், பீடிருக்க, ஊணிருக்கப், பிள்ளைகளும் தாமிருக்க, மாடிருக்கக், கன்றிருக்க, வைத்த பொருள் இருக்கக், கூடிருக்க, நீ போன கோலமென்ன கோலமே. 14. குடியிருக்க வீடு இருக்கிறது; பெற்று வளர்த்த தாய் இருக்கிறாள்; இனிய மணம் புரிந்த இல்லாளும் இருக்கிறாள், பெருமைகள் உன்னை நாடியிருக்கின்றன; உண்பதற்கு உணவிருக்கிறது; பெற்ற அன்பு மக்களும் கூட இருக்கின்றனர், குடும்பத்தின் புனிதத்துக்கு பசுமாடுகளும், கன்றுகளும் கூட இருக்கின்றன; இவையெல்லாம் தவிர நம் முன்னோர் சேர்த்துவைத்த பொருட்குவை பெரிதிருக்க இவை அத்தனையும் நீங்கி நீ சென்றவிடம் எங்கே, இவை எதுவும் உன்கூட வரவில்லையே. சந்தனமும் குங்குமமும் சாந்து பரிமளமும் விந்தைகளாய்ப் பூசிமிகு வேடிக்கை ஒய்யாரக் கந்தமலர் சூடுகின்ற கன்னியரும் தாமிருக்க எந்தவகை போனாய் என்று எண்ணிலையே நெஞ்சமே. 15. மணம் வீசும் சந்தனம் உடலில் பூசி, நெற்றியிலே மங்கலமாய்க் குங்குமத்தை வைத்து, சாந்தும் பரிமள வாசனையும் விதவிதமாய்ப் பூசி நாற்புறமும் மணம்வீச, மனம் உல்லாச போதையில் மிதக்க, ஒய்யாரமாய் கொண்டையில் மணம்வீசும் மலர்கள் சூடிய மங்கையரும் உடனிருக்க, இப்படி எல்லா சுகங்களும் உன்னைச் சுற்றியிருக்க நீ எங்கே போனாய், எப்படிப் போனாய் என்பதை சிந்தை செய்யவில்லையே நெஞ்சே. காற்றுத் துருத்தி கடிய வினைக்குள்ளான ஊற்றைச் சடலத்தை உண்டென்று இருமாந்து பார்த்திரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல் ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே. 16. காற்றுத் துருத்தி போல காற்றை உள்வாங்கி வெளியே விட்டு உயிர்வாழ்ந்து, தீவினைகள் எத்தனை உண்டோ அத்தனையும் செய்து கொண்டு, நாற்றமெடுத்த இந்த சடலம் போன்ற உடலை நித்தியமானது என்று எண்ணி ஆணவத்தோடு இருந்தாயே, பசி என்று தெரிவோடு பிச்சை கேட்டு அலையும் ஒரு பரதேசிக்கு பசியாற வயிற்றுக்கு அன்னம் கொடுக்காமல், ஆற்றுநீர் போல ஓடிப்போய் கடலில் கலந்தாயே நெஞ்சே. நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயமென்றே எண்ணிப் பாக்கு அளவாம் அன்னம் பசித்தோர்க்கு அளிக்காமல் போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் போது ஆர்ப்படுவரென்றே அறிந்தலையே நெஞ்சமே. 17. நீரின்மேல் குமிழி போன்று தோன்றி உடனே மறைந்து போகும் வாழ்க்கையை சதமென்றெண்ணிக் கொண்டு, பசித்து வந்தவர்க்கு ஒரு பாக்கின் அளவுகூட சோறு போடாமல் கஞ்சத்தனம் செய்து வாழ்ந்துவிட்டு, நெஞ்சில் கபம் வந்து அடைத்துக் கொண்டு எமதூதன் பிடித்து இழுக்கும்போது அந்தத் துன்பத்தை எப்படி அனுபவிப்பது என்பது தெரியாமல் இருக்கிறாயே என் நெஞ்சே. சின்னஞ் சிறு நுதலாள் செய்த பல வினையான் முன் அந்த மார்பில் முளைத்த சிலந்தி விம்மி வன்னம் தளதளப்ப மயங்கி வலைக்குள்ளாகி அன்னம் பகிர்ந்துண்ண அறிந்திலையே நெஞ்சமே. 18. அழகிய சிறு நெற்றியை உடைய பெண்ணானவள் முன்பு செய்த வினைப்பயனால் அவள் மார்பில் விம்மி எழுந்த தளதளத்த தனங்களின் மேல் மோகம் கொண்டு, மயங்கிக் கிடந்து, முகம் வாடி வாயில் புறத்தில் வந்து நின்று வயிற்றுக்கு உணவு கேட்டு நிற்கும் ஏழை பிச்சைக்காரனுக்கு ஒரு சிறிது அன்னம் அளித்து அவன் பசியைப் போக்கும் வழியினை அறிந்திருக்கவில்லையே ஏ மனமே. (இதே கருத்தை வள்ளலார் இராமலிங்க அடிகளும் “கன்னியர்தம் மார்பிடங் கொண்டலைக்கும் புன்சீழ்க் கட்டிகளைக் கருதி மனங் கலங்கி வீணே, அன்னியனா யலைகின்றேன், மயக்கம் நீக்கி அடிமை கொளல் ஆகாதோ, அருட்பொற்குன்றே” என்று சொல்கிறார்.) ஓட்டைத் துருத்தியை உடையும் புழுக் கூட்டை ஆட்டுஞ் சிவசித்தர் அருளை மிகப் போற்றியே வீட்டைத் திறந்து வெளியை ஒளியால் அழைத்துக் காட்டும் பொருள் இதென்று கருதிலையே நெஞ்சமே. 19. ஒன்பது வாசல்கள் கொண்டதான தோல்பையைப் போன்ற இழிந்ததும், தட்டினால் உடைந்து போகின்ற பாங்கில் அமைந்த இந்த பாழ் உடலை ஆட்டிவைப்பவன் அந்த பரமேஸ்வரன். அந்த சர்வ வல்லமை படைத்த இறைவனைத் தொழுது அவன் திருவருளை வேண்டி, ஆணவ மலத்தால் ஆன இந்த கோட்டையைத் திறந்து, அதனுள் பரவெளியில் பரவிக் கிடக்கும் ஜோதிஸ்வரூபனை அந்த இறைவன் சக்தியால் உள்ளே அழைத்து, உண்மைப் பொருள் அந்தப் பரம்பொருளே என்பதை நீ உணர்ந்திருக்கவில்லையே என் மனமே. ஊன் பொதிந்த காயமுனைந்த புழுக் கூட்டைத் தான் சுமந்ததல்லால் நீ சற்குருவைப் போற்றாமல் கான்பரந்த வெள்ளங் கரைபுரளக் கண்டேகி மீன் பரந்தாற் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே. 20. இந்த பூதவுடல் இருக்கிறதே இது மாமிசத்தால் ஆனது, இதனுள் சிறிது சிறிதாக அரித்து உட்கொள்ளும் ஆயிரமாயிரம் புழுக்கள் அடங்கிய கூடு இது. இந்த அற்பப் மாமிசப் பிண்டத்தைத் தூக்கிக் கொண்டு அலைந்தாயே தவிர உண்மையான வழிகாட்டக்கூடிய சற்குரு அந்த பரப்பிரம்மம் என்பதை உணராமல், கானல் நீரை உண்மையான நீரோடை என்று நம்பி அதன் பின்னால் ஓடி ஏமாந்து போன மீனைப் போல துயரமடைந்து நிற்கிறாயே என் நெஞ்சே. உடைக்கை யொருக்கி உயிரை அடைத்து வைத்த சடக்கைச் சதமென்று சார்ந்து அங்கு இறுமாந்தை உடைக்கைத் தகர்த்தே உயிரை யமன் கொள்கையிலே அடக்கமாய் வைத்த பொருள் அங்கு வரமாட்டாதே. 21. புலால் உடலைக் காற்றால் நிரப்பி மூடி, அதில் உயிரை அடைத்து இந்த உடலை நிரந்தரமானது என்று எண்ணி இறுமாப்போடு அதில் குடியிருந்தாய்; பிறகு எமதர்மன் வந்து இந்த உடலில் நிரம்பியிருந்த உயிரைப் பறித்துக் கொண்டு போகின்ற காலத்தில், நீ அதுநாள் வரை சேர்த்து மறைந்து வைத்திருந்த பொருட்களும், செல்வங்களும் உன்கூட வராது என்பது உனக்கும் தெரியும் அல்லவா, அப்போது என்ன செய்வாய்? தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல் பற்றிப் பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம் சுற்றியிருக்கும் வினை சூழந்தனையே நெஞ்சமே. 22. ஏ மனமே! சொல்லச் சொல்லத் தெவிட்டாத தேனைப் போன்றது சிவனுடைய ஐந்தெழுத்து மந்திரம். அப்படிப்பட்ட தித்திக்கும் தெவிட்டாத தேனை ருசிக்காமல், தேவர்கள் அருந்தும் அமிழ்தத்தையொத்த *முப்பாழாம் அதிமுக்கிய தத்துவங்களை வணங்கிப் போற்றிப் புகழாமலும் தலை வணங்காமலும், எமன் வந்து உயிரைத் தான் பாசக்கயிற்றால் கட்டிப் பற்றி இழுக்கும்போது உன்னைச் சுற்றியிருக்கும் தீவினைகள் எனும் காட்டில் அழுந்திக் கிடக்கின்றனையே. (*முப்பாழாவன மாயைப் பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் ஆகியன. போதப்பாழ் என்பது ஆன்ம அறிவு அகல விளங்குதல், உபசாந்த நிலையில் பரவெளியில் இருத்தல் உபசாந்தப் பாழ். மாயைப் பாழில் தத்துவங்கள் தூய்மை அடையும்; போதப் பாழில் ஆன்மா தூய்மை அடையும்; காரிய காரண உபாதைகள் நீங்குவதால் உபசாந்தம் உண்டாகும் என்கிறது “திருமந்திரம்”. ‘தத்வமசி’ நீ அதுவாகிறாய் எனும் வாக்கின் பொருளை விளக்கும் விதத்தில் அமைந்த கருத்து. தத்+துவம்+அசி இவை ‘இரண்டு அல்லாதது” அதாவது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறு வேறானவை அல்ல என்பது. இதன் பொருள் “நீ அதுவாகிறாய்”7 மாயப்பாழும், சீவப்பாழும், உபசாந்தப் பாழும் நிலைபெற்ற பரனின் அறிவுக்கு அப்பாற்பட்ட முப்பாழ் என்கிறது. சிவசக்தியான அருளில் ஜீவன் ஓங்கி நிற்கும் மூன்று பாழ்நிலைகளாம். அத்தகைய தூய்மையான சிவ சொரூபத்தில் அடங்கி நிற்பதே ‘தத்வமசி’ எனும் வாக்கியத்தின் முடிவாகும்.) அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ ரட்சரமாய்ப் பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல் வஞ்சகமாயுற்ற முலை மாதவர் வலைக்குள்ளாகிப் பஞ்சரித்துத் தேடிப் பாழுக் கிரைத்தோமே. 23. ஒப்புயர்வற்ற எழுத்து பஞ்சாட்சரம் எனும் ஐந்தெழுத்து மந்திரம்; எட்டு அட்சரம் கொண்டது அஷ்டாட்சரம்; ஐம்பத்தோரு அட்சரமாகவும், சக்தியின் பீஜாக்ஷரமாகவும் விரிந்து பரவியுள்ள நம் பரமேஸ்வரனைத் துதித்துப் போற்றாமல் வஞ்சக மனமும், மயக்கும் மார்பகமும் கொண்ட பெண்களின் மாயா மோக வலையில் அகப்பட்டு அவர்களிடம் அடிமைப்பட்டுக் கீழ்ப்படிந்து மன்றாடி நின்று காலத்தை வீணடித்தோமே. (அஞ்செழுத்து என்பது “சிவாயநம” எனும் மந்திரம். எட்டெழுத்து என்பது “ஓம்; ஆம்; அவ்வும்’ என்பதாகும், இதுவும் சிவாயநம: என்பதாகும். ஐம்பத்தோரு அட்சரம் என்பதை பிஞ்செழுத்து, சத்தியாக்ஷரமாகிய வகரம் ஆகியவைகளை குரு மூலமாக உபதேசம் பெறுதல் வேண்டும் என்கின்றனர் பெரியோர்) அக்கறுகு கொன்றை தும்பை அம்புலியும் சூடுகின்ற சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல் மக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிகநம்பி அன்பாய் எக்காலமும் உண்டென எண்ணினையே நெஞ்சமே. 24. ஓ என் நெஞ்சே! சிவனுக்கே உரிய ருத்திராக்ஷ மாலையும், கொன்றை மலர்களையும், தும்பைப் பூக்களையும், பிறைச் சந்திரனையும் தன் முடியில் சூடிய எம்பெருமான் சொக்கநாதரின் திருவடிகளே சரணமென்று விழுந்து வணங்காமல், நீ இன்னாள் வரை என்ன செய்து கொண்டிருந்தாய்? நான் எனது எனும் ஆணவ மலத்தோடு கூடிய உறவு முறையில் என் மக்கள், என் மனைவி, என் சுற்றம் என்று இந்த வாழ்வு என்னவோ நிரந்தரமானது என்று நம்பிக்கொண்டு இந்த உறவுகளோடு எப்போதும் இப்படியே மகிழ்ச்சியோடு உறவாடிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தாயே, சரிதானா? ஆண்ட குருவின் அருளை மிகப் போற்றி வேண்டும் கயிலாய வீட்டு வழிபாராமல் பூண்ட குழல் மாது நல்லார் பொய் மாய்கைக்கு உள்ளாகித் தூண்டிலில் அகப்பட்டுத் துடி கெண்டை யானேனே. 25. உலகத்து உயிர்களையெல்லாம் அருள்பாலித்து ஆண்டு அனுக்கிரகம் செய்யும் பரமகுருவான சிவபெருமானின் பேரருளைப் போற்றி வழிபட்டு அவனடியில் வீழ்ந்து வீடுபேறு பெற்று கயிலாயம் செல்ல வழி காணாமல், வாசமலர்களை அணிந்த அழகிய மாதரார்தம் பொய்மை மயக்கத்துக்கு ஆட்பட்டுத் தூண்டிலில் மாட்டிக் கொண்ட கெண்டை மீனைப் போல துடிக்கலானேனே, என் செய்வேன். ஏணிப் பழுவாம் இருளை அறுத்தாள முற்றும் பேணித் தொழுங் கயிலை பேறு பெறமாட்டாமல் காணவரும் பொருளாய்க் கண் கலக்கப்பட்டு அடியேன் ஆணியற்ற மாமரம் போல் ஆகினனே நெஞ்சமே. 26. ஓ எந்தன் மனமே! கேள். ஏணிப் படிகளைப் போல ஒன்றன் மேலொன்றாக மனத்தில் ஆணவ இருள் வளர்ந்து கொண்டிருக்க, அவற்றை முழுவதுமாக அறுத்தெறிந்து விடுபட்டு கயிலை நாதனாம் சிவபெருமானை தொழுது அடி பணிந்து பெரும்பேற்றைப் பெறமுடியாமல், உயிரையும், சேர்த்து வைத்த செல்வம் முதலான பொருளையும் நிலையானது என்ற ஆணவத்தில் அடியவனான நான் இப்போது ஆணிவேர் அறுந்த மாமரம் போல ஆகிவிட்டேனே என் செய்வேன். கோத்துப் பிரகாசம் கொண்டு உருகி அண்டமெல்லாம் காத்தபடியே கயிலாயம் சேராமல் வேற்றுருவப் பட்டு அடியேன் வெள்ளம் போல் உள்ளுருகி ஏற்றுங் கழுவிலிருந்த பணமானேன். 27. மனத்தில் அருள் ஒளியுண்டாகி இவ்வண்டங்களையெல்லாம் தன் கருணையினால் காத்தருளும் கயிலாசவாசியான சிவபெருமானின் திருவடிகளே சரணமென்று சென்றடையாமல், மனவேறுபாட்டோடு அடியவனான நான் மனத்தினுள் வருந்தி கலக்கமடைந்து கழுவில் ஏற்றப்பட்ட பிணம்போல காட்சி தருகின்றேனே. நிலைவிட்டு உடலை உயிர் நீங்கி அகலுமுன்னே நிலை தொட்ட வேடன் எச்சில் தின்னானைச் சேராமல் வலைபட்டு உழலுகின்ற மான்போல் பரதவித்துத் தலைகெட்ட நூலதுபோல தட்டழிந்தாய் நெஞ்சமே. 28. ஓ என் நெஞ்சே! ஊர்மெச்ச வாழ்ந்த உயர்ந்த நிலையில் இருந்த இந்த பூதவுடலைவிட்டு உயிரானது பிரிந்து செல்லும் முன்பாகவே, காளத்தி வேடனாம் கண்ணப்பன் எச்சிற்படுத்திக் கொடுத்த உணவை உண்ட அந்த சிவபிரான் கழல்களைச் சேர்ந்து உய்ய வழிகாணாமல், இப்படி வலைக்குள் சிக்கிய மான் போல பரிதவித்துத் நூற்கண்டின் நூல் நுனி எது என்றறியாமல் துழாவிடும் மனிதனைப் போல் தவிக்கின்றேனே. முடிக்குமயிர்ப் பொல்லா முழுக் குரம்பை மின்னாரின் இடைக்கு நடைக்கு இதங்கொண்ட வார்த்தை சொல்லி அடிக்கொண்ட தில்லை வனத்து ஐயனே நாயனையேன் விடக்கை இழந்த மிருகமது வானேனே. 29. எனையாளும் தில்லையில் நடம் பயிலும் நடராசப் பெருமானே! கேவலம் நான் ஒரு நாயைப் போல அலைகின்றேனே. புழு நெளிந்து புண்ணழுகி யோசனை நாறும் கழிமுடை நாற்றத்த உடலைக் கொண்ட மாதரார் கூந்தலை வர்ணித்து, இடையைக் கண்டு மகிழ்ந்து, நடையைப் பார்த்துப் பாராட்டி, மனத்துக்கு இதம் தரும் சொற்களால் அவள் மனத்தை மகிழவைத்து இறுதியில் உன் திருவடிகளை அடையாமல் வாயில் கவ்வியிருந்த மாமிசத்தை இழந்து ஏமாந்து போன மிருகமாய் ஆகிவிட்டேனே. பூவாணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது சீபாதம் போற்றிச் சிவலோகம் சேராமல் தாவாரம் தோறும் தலை புகுந்த நாய்போல் ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே. 30. எனக்கு எதிரியான என் நெஞ்சமே! இப்பூமியில் வாழும் மாந்தரெல்லாம் போற்றி வழிபடும் மதுரை சொக்கநாதக் கடவுளின் சீரான பாதங்களைப் போற்றி வழிபட்டு சிவலோகம் சென்றடையும் வழி காணாமல், வீணில் வீடுதோறும் சென்று தலைகாட்டிவிட்டு வரும் நாயைப் போல அலையவிட்டாயே நியாயமா? பத்தெட்டாய் ஓரைந்தாய்ப் பதின்மூன்றையும் கடந்த ஒத்திட்டு நின்றது ஓர் ஓவியத்தைப் போற்றாமல் தெத்திட்டு நின்ற திரிகண்ணிக்கு உள்ளாகி வித்திடாய் நெஞ்சே விடவும் அறியாயே. 31. ஓ என்றன் மனமே! *முப்பத்தாறு தத்துவங்களையும் (அதாவது பத்து+எட்டு+ஐந்து+பதிமூன்று=முப்பத்திஆறு) கடந்து அதற்கு அப்பால் நின்று கொண்டிருக்கும் ஓவியம் போன்றவனான சிவபெருமானின் அற்புத தரிசனம் கண்டு அப்பரப்பிரம்ம ஸ்வருபத்தில் நிலைத்த இன்பத்தைக் காணாமல், உலகத்தில் சுலபமாகக் கிடைக்ககூடிய அற்ப சுகங்கள் எனும் வலையில் மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்து உன் புத்தியை அதில் விதைத்துவிட்டு நிற்கிறாயே, அதனின்றும் விலகி வாழ அறிந்து கொள்ளவில்லையே. (*சைவ சித்தாந்தத்தில் முப்பத்தியாறு தத்துவங்கள் சொல்லப்படுகின்றன, அவற்றைப் பற்றிய விவரங்களைச் சைவ சித்தாந்த நூல்களில் காணமுடியும்) அஞ்சுடனே ஏழாகி ஐமூன்றும் எட்டும் ஒன்றாய் மிஞ்சி யிருந்த விளக்கொளியைப் போற்றாமல் பஞ்சிலிடு வன்னியைப் போல் பற்றிப் பிடியாமல் நஞ்சுண்ட கெண்டையைப் போல் நான் அலைந்து கெட்டேனே. 32. மறுபடி மீண்டும் இங்கும் அதே முப்பத்தாறு தத்துவம் பேசப்படுகிறது. அவை (5+7+(5×3)15+8+1=36) முப்பத்தியாறு தத்துவங்களைத் தாண்டி நிற்கும் அந்த ஜோதிஸ்வரூபனான சிவபெருமானைப் போற்றி வழிபடாமல், பஞ்சில் தீப்பிடித்தது போல சட்டென்று பிடித்துக் கொள்ளாமல், நஞ்சை உண்ட கெண்டை மீனைப் போல அங்குமிங்குமாய் அலைந்து கெட்டேனே. ஊனமுடனே அடையும் புழுக்கட்டை* மானமுடனே சுமந்து மண்ணுலகில் மாளாமல் ஆனதொரு பஞ்சவர்கள் ஆண்டிருந்த தெசம் விட்டுப் போனது போலே நாம் போய்ப்பிழைத்தோ மில்லையே. 33. இந்த உடல் பூவுலகின் கேடுகளையெல்லாம் செய்து சீர்கெட்டுப் போன கிருமிகள் வாழ்கின்ற கேவலமான வஸ்து. இந்த உடலை வைத்துக் கொண்டு மானம், மரியாதை இவற்றோடு வாழ்ந்து, இப்பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு போகும் இடத்துக்குப் புண்ணியத்தைத் தேடாமல், பஞ்ச பாண்டவர்கள் செல்வச் செறுக்கோடு வாழ்ந்திருந்த தேசத்தை விட்டுக் காட்டுக்குப் போய் பிழைத்தது போலே நாமும் கானகம் சென்று அந்த இறைவனை நினைந்து தவம் செய்து வாழ்ந்தோமில்லையே. (*புழுக்களுக்கு இரையாவதும், புழுத்துப் போகும் நிலை கொண்டதுமான இந்த உடலைப் பற்றி பலரும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். யாக்கை நிலையாமை என்பது தமிழிலக்கியத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. மணிமேகலை காப்பியத்திலும் கூட “வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது, புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது; பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்; மனித யாக்கை இது” என வரும் வரிகளை நினைவு கூரலாம்.) ஊறையிறைக்கின்ற உப்பிருந்த பாண்டத்தை நாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை வீறாம்புரத்தை விரும்புகின்றது எப்படி என்று ஆறாத நாட்டில் அகன்றிருந்தேன் இல்லையே. 34. கழிவுகளை உடலினின்றும் வெளியேற்றும் உப்பூரும் பாத்திரமாம் இந்த பூதவுடல் உயிர் உள்ளபோதும் அசுத்தங்களை வைத்துக் கொண்டு நாற்றமெடுக்கிறது, அதுமட்டுமல்லாமல் வண்டுகள் அழியக்கூடியதான கூடுகளைக்கட்டி அதில் புழுவினைக் கொண்டு வைத்துச் சேர்த்து பின்னர் அவை அழிக்கப்படுவதைப் போன்ற உடலை, நான் எனது எனும் அகங்காரமும் ஆணவமும் ஆட்கொண்டிருந்த இந்த உடலைப் போற்றி பாதுகாத்து வந்தது அல்லாமல் இதுபோன்ற கேடுகள் இல்லாத புண்ணித் தலங்களைப் பற்றி அறியாமல் அவற்றிலிருந்து எட்டாத தூரத்தில் இருந்துவிட்டேனே. அரிய அரிதேடி அறியா ஒரு முதலைப் பரிவுடனே போற்றும் பரஞ்சுடரைப் போற்றாமல் கரிய பெருவாழ்வை நம்பிக் காமத்து அழுத்தியே அரிவாயில் பட்ட கரியது போலானேனே. 35. அடி முடி காண்பதற்காக பிரம்மனும், ஹரியும் மேலும் கீழுமாய்ச் சென்றும் காணமுடியாத ஒப்பிலாத முதல்வனை சதாகாலமும் வழிபடவேண்டிய அந்தப் பெருஞ் சுடராம் சிவபெருமானைப் போற்றி வழிபட்டு வாழாமல், நிலையற்ற இந்த புவிவாழ்வை சதமென்று எண்ணிக் காம உணர்வுகளில் மூழ்கித் திளைத்து சிங்கத்தின் வாயில் அகப்பட்ட யானையைப் போல ஆகிவிட்டேனே. தந்திரத்தை உன்னித் தவத்தை மிகநிறுத்தி மந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி விந்துருகி நாதமாம் மேலொளியைக் காணாமல் அந்தரத்தே கோலெறிந்த அந்தகன் போல் ஆனேனே. 36. ஆகமங்களை அறிவதால் பலன் இல்லை என்று எண்ணி தவமே மேலென்று அதிலே மனம் செலுத்தி, வேதத்தை சிறப்பென்று ஓதியும் மனம் தெளிவின்றி மயங்கித் தடுமாறி, விந்து நாதத்திற்கு அப்பால் ஓங்கி நிற்கும் பெரும் ஜோதியாம் பரம்பொருளைக் காணாமல், ஆகாயத்தின் வெட்டவெளியில் கோலை எறிந்துவிட்டு அது எங்கு போனது, என்ன ஆனது எப்படிப் பிடிப்பது என்று தெரியாமல் தவித்துத் தடுமாறும் அந்தகனைப் போல ஆகிவிட்டேனே. விலையாகிப் பாணனுக்கு வீறடிமைப் பட்டதும் பின் சிலையார் கைவேடன் எச்சில் தின்னானைப் போற்றாமல் அலைவாய்த் துரும்பது போல் ஆணவத்தினால் அழுங்கி உலைவாய் மெழுகது போல் உருகினையே நெஞ்சமே. 37. மதுரையம்பதியில் புகழ்பெற்ற பாணனான பாணபத்திரரின் இசைக்கு அடிமையானதும், பின்னர் காளத்தி வேடன் கண்ணப்பன் கொணர்ந்து தந்த எச்சில் பண்டத்தை உண்டவனான சிவபெருமானைப் போற்றி வழிபடாமல், கடல் அலையில் விழுந்த துரும்பினைப் போல் அங்குமிங்குமாய் அலைக்கழித்து நிலை தடுமாறி, ஆணவப் பேய் தலையில் அமர்ந்து கொண்ட நிலையில், நெருப்பினைக் கக்கும் உலையில் விழுந்த மெழுகு உருகுவது போல மனம் உருகித் தவிக்கின்றனையே என் நெஞ்சமே. 7 தனிப் பாடல்கள்   இனி சில தலங்களில் பாடிய தனிப் பாடல்கள்: 1. திருச்செங்கோடு : நெருப்பான மேனியர் செங்காட்டிலாத்தி நிழலருகே இருப்பார் திருவுளம் எப்படியோ இன்னம் என்னை அன்னை கருப்பாசயக் குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய திருப்பாதமே தருமோ தெரியாது சிவன் செயலே. செக்கச் செவேலென்று சிவந்த வானத்தைப் போன்ற திருமேனியை உடையவரும், அத்திமர நிழலில் வீற்றிருப்பவருமான பரமேஸ்வரனது கருணை உள்ளம் என்ன நினைக்கின்றதோ? அடியவனான என்னை மீண்டும் தாயின் கர்ப்பத்தில் வாசம் செய்யப் பணிக்கின்றாரோ; அப்படியின்றி அந்த மகாவிஷ்ணுவாலும் அடிமுடி காணமுடியாத அத்தனின் திருப்பாதங்களை அளித்து முக்தி தருமோ யார் கண்டார். எல்லாம் அந்த சிவபெருமான் செயல். 1. திருவொற்றியூர். ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன் யான் செய்யும் திருவொற்றியூருடையீர் திருநீறும் இட்டுக் கையும் தொழப் பண்ணி ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே. திருவொற்றியூர் தலமேவும் சிவபெருமானே! நெஞ்சில் (‘ஐயும்’ என்பதில் ‘ஐ’ எனும் எழுத்துக்கு கபம் அதாவது bronchial congestion என்பார்கள்) சளி கபம் அடைத்துக் கொண்டு, விழிகள் மேல்புறமாய்ச் செருகிக் கொண்டு, உணர்வுகள் அடங்கிப் போய், இதுகாறும் ஓடியாடிக் கொண்டிருந்த இந்த பூதவுடலானது ஜீவன் இழந்து பிணமாகி இனி இது இல்லையெனும் நிலைமைக்கு வரும்போது இறைவா, நான் உன்னிடம் ஒரு வரம் கேட்பேன். அதனைக் கேட்டு நீயும் அங்ஙனே ஆகுக என வரமளித்திடுவாய் ஐயனே! எனக்கு நீ அருளும் வரம் என்னவென்றால், நான் நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொண்டு, இரு கரங்களாலும் உன்னைத் தொழுது கொண்டு உன் ஐந்தெழுத்தான ‘நமசிவாய’ எனும் மந்திரத்தை ஓதவும் அருள் புரிய வேண்டும் என்பதே. சுடப்படுவார் அறியார் புரம் மூன்றையும் சுட்டபிரான் திடப்படு மாமதில் தென்னொற்றியூரன் தெருப்பரப்பின் நடப்பவர் பொற்பதம் நம் தலைமேல் பட நன்கு உருண்டு கிடப்பது காண் மனமே விதி ஏட்டைக் கிழிப்பதுவே. ஏ மனமே! நன்கு உணர்ந்து கொள்வாயாக. திரிபுரங்களைப் பெம்மான் சிவபெருமான் சுட்டெரிக்கும் தருணத்தில் சுடப்படுபவர்களான ஜீவன்கள் அறிந்து கொள்ளாத செய்தியொன்று உண்டு. வானுயர்ந்த நெடு மதில்கள் சூழ் எழில்வாய்ந்த திருவொற்றியூர் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பவனான தியாகராஜப் பெருமானுக்குரிய திருவீதிகளில் நடந்து செல்லும் மெய்யடியார்களின் திருவடிகள் நம் தலையில் படும்படி வீழ்ந்து கிடந்தால் மட்டுமே பிரம்ம தேவன் நமக்காக எழுதிய விதி எனும் ஏட்டைக் கிழித்தெறிய முடியும். இதனை அறிவீனர்கள் உணர்வதில்லையே. 1. திருவிடைமருதூர். காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி ஓடே எடுத்தென்ன உள்ளன்பு இலாதவரோங்கி விண்ணோர் நாடே இடைமருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால் வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே. உள்ளத்தில் இறைவன் பால் உண்மையான அன்பு இல்லாதவர்கள் காட்டில் தனித்து இருந்தால்தான் என்ன? உணவை நீக்கி காற்றை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களாக இருந்தால்தான் என்ன? கந்தலாடை அணிந்து கொண்டு கையில் பிட்சாபாத்திரம் ஏந்திக் கொண்டு யாசகம் பெற்று வாழ்ந்தால் என்ன? இவற்றால் எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் ஏதும் இல்லை. விண்ணோர் வாழும் தேவலோகமெனப் போற்றப்படும் திருவிடைமருதூர் ஈசர்பால் மெய்யன்பு பூண்டவர்கள் மேற்சொன்னவர் களைப் போல தவம் செய்வதாகச் சொல்லிக் கொண்டு உள்ளன்பு இல்லாமல் இருப்பதைக் காட்டிலும், இல்லறத்தில் ஈடுபட்டுத் தங்கள் மனைவி மக்களோடு இருப்பார் நிச்சயம் வீடுபேறு பெற்று மோட்சம் பெறுவர். (திருமூலரும் “வேடநெறி நில்லார் வேடம் பூண்டென்பயன், வேட நெறி நின்றார் வேடமெய் வேடமே” என்கிறார்.) தாயும் பகை கொண்ட பெண்டீரும் பகை தன்னுடைய சேயும் பகை உறவோரும் பகை இச்செகமும் பகை ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில் இங்கு ஆதலினால் தோயும் நெஞ்சே மருதீசர் பொற்பாதம் சுதந்திரமே. இவ்வுலக வாழ்வை நன்றாக ஆராய்ந்து பார்க்கின்றபோதில், நமக்குரிய செல்வங்கள் எல்லாம் நம் கையைவிட்டுப் போய் வறியவனாக ஆனபோழ்தில், நமக்குப் பெற்ற தாயோ, மனைவி மக்கள் சுற்றமோ எவரும் உறவாக இருக்கப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த ஊரும் உலகமும் நமக்குப் பகைதான். ஆகையால் என் நெஞ்சே திருவிடைமருதூரில் வதியும் பரமேசர் திருப்பாதங்களே நமக்கு அடைக்கலமே. 4. திருக்கழுக்குன்றம்: காடோ செடியோ கடற்புறமோ கனமே மிகுந்த நாடோ நகரோ நகர் நடுவோ நலமே மிகுந்த வீடோ புறந்திண்ணையோ தமியேன் உடல் வீழுமிடம் நீடோய் கழுக்குன்றில் ஈசா உயிர்த்துணை நின்பதமே. திருக்கழுக்குன்றத்தில் வானுயர நீண்ட மலையுச்சியில் அமர்ந்துள்ள எம்பிரானே! தனித்திருக்கும் அடியேனின் உடல் உயிரிழந்து வீழுகின்ற இடம் காடோ, மரத்தடியோ, கடற்கரையிலோ, வளம் கொழிக்கும் நாடோ, நகரமோ, நகரத்தின் நடுவிலோ, எல்லா நலன்களும் நிறைந்த வீடோ, வீட்டின் திண்ணையோ எதுவாகினும் அடியேனுக்கு நினது திருவடிகளே துணை. 5. திருக்காளத்தி: பத்துப் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி முத்தும் பவளமும் பூண்டு ஓடியாடி முடிந்த பின்பு செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள் கத்தும் கணக்கென்ன காண் கயிலாபுரிக் காளத்தியே. தென்கயிலை எனப்பெயர் பெற்ற திருக்காளத்தியில் எழுந்தருளியுள்ள சிவனே! அன்னையின் கர்ப்பத்தில் பத்துமாதங்கள் சிறையிருந்து, பின்னே இம்மண்ணில் வந்து பிறந்து, வளர்ந்து பட்டாடைகளை உடலில் அணிந்து கொண்டு, முத்திலும் பவளத்திலும் ஆன மணிகளை அணிந்து அழகுபடுத்திக் கொண்டு, ஓடி ஆடி விளையாடி முடித்தபின்பு, உலக இன்பங்களையெல்லாம் அனுபவித்து ஓய்ந்த பின்பு உயிர் பிரிந்தபின் பிணமென்று பெயர் சூட்டிப் படுக்க வைத்து, அந்தப் பிணத்தைச் சுற்றி அமர்ந்து இனிச் சாகப்போகும் பிணங்கள் ஓசையிட்டு அழுவதும் ஏனோ ஐயனே! பொன்னால் பிரயோசனம் பொன் படைத்தார்க்குண்டு, பொன்படைத்தோன் தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு ஏது உண்டு, அத்தன்மையைப்போல் உன்னாற் பிரயோசனம் வேணதெல்லா முண்டு உனைப்பணியும் என்னாற் பிரயோசனம் மேதுண்டு? காளத்தி ஈசுரனே. திருக்காளத்தி வாழ் பரமேச்வரனே! பொன்னும் செல்வமும் படைத்தவர்களுக்கு அந்த பொன்னால் பயன் உண்டு, ஆனால் பொன் படைத்தவனால் அந்தப் பொன்னுக்கு ஏதும் பயன் உண்டோ? அதைப்போலத்தான் உன்னால் எமக்குப் பயன் வேண்டிய மட்டும் உண்டு, ஆனால் உன் திருவடிகளே கதி என்று பணிந்து தினந்தினம் போற்றுகின்ற எம்மால் உமக்கு ஏது பிரயோசனம், சொல். வாளான் மகவு அரிந்து ஊட்டவல்லேன் அல்லன், மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன், தொண்டு செய்து நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் நான் இனிச் சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே. சிவனடியாராக வந்து நீ கேட்டதற்காகச் சிறுத்தொண்டரைப் போல வாளால் தன் சொந்த மகவையே அரிந்து கறிசமைத்து உனக்கு ஊட்டும் வல்லமை சிறிதும் இல்லாதவன் நான்; ‘திருநீலகண்டத்தின் மீது ஆணை என்னை இனி தீண்டலாகாது’ என சூள் உரைத்த மாதின் சொல்லை ஏற்றுத் திருநீலகண்ட நாயனார் தன் மனைவியைத் தொடாமலே இளமைக் காலத்தைக் கடந்தாரே அதைப் போல தியாகம் செய்ய வல்லவன் அல்ல நான்; ஆறே நாட்கள் காளத்தியப்பனைக் காட்டில் கண்டு பக்திகொண்டு ஆறாம் நாள் அவர் கண்களில் உதிரம் கசியக் கண்டு தன் கண்ணை எடுத்து அவருக்கு அப்பிய அந்த நெஞ்சுரம் கொண்ட கண்ணப்பனைப் போல மனோதிடம் கொண்டவன் அல்லன்; அப்படிப்பட்ட நான் காளத்தி அப்பரே நான் உன்னை அடைக்கலமென்று அடைவதுதான் எப்படியோ? முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால் செப்போதிள முலையாருடன் சேரவும் சீவன் விடும் அப்போது கண்கலக்கப் படவும் அமைத்தாய் ஐயனே எப்போது காணவல்லேன் திருக்காளத்தி ஈசுரனே. திருக்காளத்தி ஈஸ்வரா! ஒவ்வொரு நாளும் மூன்று போழ்திலும் சோற்றைப் புசிக்கவும், பின்பு நன்கு உறங்கவும், மோகங்கொண்டு செம்புக் கிண்ணம் போன்ற இளம் தனங்களைக் கொண்ட மாதருடன் உறவாடவும், இவ்வுயிர் உடல்விட்டுப் போகுங்காலை மனம் வருந்தி கண்கலங்கி அழவும் வைத்தாயே ஐயனே! உன்னை எப்போதுதான் நான் காண்பேன். இரைக்கே இரவும் பகலிம் திரிந்திங் கிளைத்து மின்னார் அரைக்கே அவலக் குழியருகேயசும் பார்ந்தொழுகும் புரைக்கே உழலுந் தமியேனை ஆண்டருள் பொன்முகலிக் கரைக்கே கல்லால் நிழற்கீழமர்ந்தருள் காளத்தியே. பொன்முகலியாற்றங்கரையில் கல்லால மரத்தடியில் வீற்றிருக்கும் காளத்தி அப்பனே! வயிற்றுப் பசிக்காக ஆகாரம் தேடி அங்கும் இங்குமாய் ஓடி அலைந்து திரிந்து, அதனால் உடலும் மனமும் வாடிப் போய், மாதர்தம் மின்னலிடைக் கிடையே அவலக் குழியில் சுகம் கண்டு வாழும் இழிமதியாளனாகிய என்னைக் காத்தருள்வாயே. நாறும் குருதிச் சலதாரை தோற்புரை நாடொறும் சீழ் ஊறு மலக்குழி காமத்துவாரம் ஒளித்திடும் புண் தேறும் தசைப் பிளப்பு அந்தரங்கத்துள் சிற்றின்பம் விட்டு ஏறும் பதந்தருவாய் திருக்காளத்தி ஈச்சுரனே. திருக்காளத்தி நகர் வாழ் ஈஸ்வரனே! நாற்றமெடுத்த குறுதிவழியும் ஜலதாரை, தோல் துளை, கழிவுகள் வரும், இச்சையைத் தூண்டும் பாதை, மறைவில் உள்ள புண் போன்ற இடம், தசைப் பிரிவு ஆகிய அந்தரங்கமான அவ்விடத்தில் கேவலமான அற்ப சுகம் காண்பதை ஒழித்து பேரின்பத்தைப் பெறும் நினது திருப்பாதங்களை அளிப்பாயாக. 6.திருக்கைலாயம். கான்சாயும் வெள்ளி மலைக்கரசே நின் கழல் நம்பினேன் ஊன் சாயும் சென்மம் ஒழித்திடுவாய் கரவூரனுக்கா மான் சாயச் செங்கை மழுவலம் சாய வளைந்த கொன்றைத் தேன் சாய நல்ல திருமேனி சாய்ந்த சிவக் கொழுந்தே. 1. மணம் பரப்பும் (கான் = மணம்) பனிமலையாம் கயிலையங்கிரிக்கு அதிபதியே! (கரவூரன் = கரவூர் என வழங்கும் விரிஞ்சீபுரத்து அன்பன். அங்கு சிவனுக்குப் பூசை புரியும் அந்தணச் சிறுவனுக்கு அபிஷேகம் செய்ய எட்டவில்லை என்பதால் சிவன் தலை குனிந்து கொடுத்ததாகத் தல புராணம் கூறுகிறது) கரவூர் அன்பனான சிவசருமனுக்காக உன் திருக்கரங்கரங்களில் தாங்கியுள்ள மான் சாய்ந்திடவும், மற்றோர் கையிலுள்ள மழு வலப்புறமாகச் சாய்ந்திடவும், உன் கழுத்தில் அணிந்திருக்கும் கொன்றைமாலையிலிருந்து தேன் ஒழுக, இவை அனைத்தோடும் உன் திருமேனியும் சாய அமர்ந்திருக்கும் சிவக் கொழுந்தே உன் பாதங்களைப் பணிந்தேன், மாமிசப் பிண்டமான இப்பிறவியை ஒழித்து எனக்கு மோட்சமளிப்பாய். குறிப்பு:- விரிஞ்சிபுரம் பற்றியும் அங்கு சிவனுக்கு பூசை செய்த அந்தணச் சிறுவன் சிவசருமன் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். விரிஞ்சிபுரத்து ஈசன் மார்க்கபந்தீச்வரர், அம்பாள் மரகதாம்பிகை. 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தத் திருத்தலம் வேலூருக்கு அருகில் இருக்கிறது. இவ்வூரின் தலபுராணத்தின் படி படைப்புக் கடவுளான பிரம்மா இங்கு சிவபூஜை செய்யும் சிவாச்சாரியார் குடும்பத்தில் சிவசர்மனாகப் பிறந்தார். சிவசர்மன் உபநயனம் செய்யப்படாத குழந்தையாக இருந்த போதே அவனுடைய தந்தையார் இறந்து போனார். விரிஞ்சிபுர ஆலயத்திலுள்ள சிவனுக்கு பூஜை செய்யும் கடமை இந்த சிறுவனுக்கு வந்தது. ஆனால் உபநயனம் (பூணூல் அணிதல்) நடந்தால்தான் பூஜை செய்ய முடியும். இறந்து போன சிவாச்சாரியாரின் உறவினர்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கிற நிலம் மற்றும் பூஜை செய்யும் உரிமை அனைத்தையும் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்கிற எண்ணம். அதனால் சிறுவன் சிவசர்மனிடம் உன் முறை வரும்போது நீ போய் பூஜை செய்யவில்லையானால் அந்த உரிமை எங்களுக்கு வந்துவிடும். நிலத்தையும் நாங்கள் பிடுங்கிக் கொள்வோம் என்றனர். சிவசர்மாவின் தாய் இறைவன் மார்க்கபந்தீச்வரரிடம் வேண்டிக் கொண்டார் வழிகாட்டு என்று. கார்த்திகை மாதத்தில் கடைசி சனிக்கிழமை இறைவன் அந்த அன்னையின் கனவில் தோன்றி சிறுவனை பூஜை செய்ய அனுப்பும்படி சொல்லி ஆசி வழங்கினார். மறு நாள் சிவசர்மன் பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து கொண்டிருந்த போது சிவபெருமான் ஒரு கிழவர் வேடத்தில் வந்து அவனுக்கு பூணூல் அணிவித்து உபநயனம் செய்வித்து பிரம்மோபதேசம் எனும் காயத்ரி மந்திர உபதேசம் செய்து வைத்தார். அதோடு சிவனுக்கு பூஜை செய்யும் உரிமையுள்ள சிவதீட்சையையும் வழங்கினார். பின்னர் கிழவர் மறைந்து சென்றார். சிறுவன் பிரம்ம தீர்த்தத்திலிருந்து புனித நீரை குடத்தில் எடுத்துக் கொண்டு ஒரு யானை மீதேறி கோயிலுக்கு வர அங்கு கூடியிருந்தோர் அதிசயித்துப் போக, கோயில் கதவு தானாகத் திறந்து கொண்டது. ஏதோ காலம் காலமாக பூஜை செய்து வந்த அனுபவசாலியைப் போல அந்தச் சிறுவன் முதலில் சுவர்ண கணபதிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்தான். அடுத்து பூஜை செய்ய சிவனிடம் சென்றால் அவனால் சிவனுடைய தலையை எட்ட முடியவில்லை. இறைவா! உன் தலையில் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்ய எனக்கு உயரம் எட்டவில்லையே என்ன செய்வேன் என்று வேண்ட, சிவன் தன் தலைமுடியைத் தாழ்த்தி குனிந்து கொடுத்து அவன் பூஜை செய்ய வசதியாக நின்றார். இன்றும் அங்கு சிவன் சற்று குனிந்த நிலையில் இருப்பார். இங்கு பட்டினத்தார் இதைக் குறிப்பிட்டு அன்று அந்தச் சிறுவனுக்காக உன் உடல், கை மழு, மான், கழுத்து மாலை அனைத்தும் தாழக் குனிந்தாயே என்கிறார். இல்லம் துறந்து பசி வந்தபோது அங்கு இரந்து தின்று பல்லும் கறையற்று வெள்வாயுமாய் ஒன்றில் பற்றுமின்றிச் சொல்லும் பொருளும் இழந்து சுகானந்தத் தூக்கத்திலே அல்லும் பகலும் இருப்பதென்றோ கயிலாயத்தனே. 2. வீடு, வாசல், மனைவி மக்கள் அனைத்தையும் நீங்கி வெளியேறி, பசி எடுத்தால் பிச்சை எடுத்து உண்டு, இல்லறத்தில் உணவு அருந்தியபின் தாம்பூலம் போட்டு பற்கள் கறையாகி விடுமே, அதுபோல அல்லாமல் கறையற்ற பல்லோடு வெளுத்த வாயோடும், எதிலும் பற்று இல்லாமலும், சொற்களை நீக்கி மவுன நிலை அடைந்து, எனக்கென பொருள் எதுவை இல்லாமல் சுகானந்த அனுபவத்தில் இரவு என்ன, பகல் என்ன என்று எப்போதும் யோக நித்திரையில் இருக்கும் நாள் என்றோ கயிலையில் அமர்ந்த கோவே. சினந்தனை அற்றுப் பிரியமும் தானற்றுச் செய்கை அற்று நினைந்தது அற்று நினையாமையும் அற்று நிர்ச்சிந்தனாய்த் தனந்தனியே இருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற வனந்தனில் என்று இருப்பேன் அத்தனே கயிலாயத்தனே. 3. இயல்பிலே உள்ளத்தில் அமைந்த கோபத்தை அறவே நீக்கி; ஆசையை அகற்றி; செய்கைகள் அனைத்தையும் துறந்து; இதுவரை மனதில் சேர்த்து வைத்திருந்த நினைவுகளையெல்லாம் நீக்கிவிட்டு; மறந்து விடுதல் என்பதையும் மறந்துவிட்டு; வெறுமையான மனத்தினனாய்த் தன்னந்தனியானாய் அமர்ந்து சிவசிந்தனையோடு எப்போதும் இருப்பது எப்போது ஐயனே கயிலாயத்தமர்ந்த கோவே. கையார வேற்று நின்று அங்ஙனந் தின்று கரித்துணியைத் தையாது உடுத்து நின் சந்நிதிக்கே வந்து சந்ததமும் மெய்யார நிற்பணிந்து உள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப ஐயாவென்று ஓலமிடுவதென்றோ கயிலாயத்தனே. 4. கை நிறைய பிச்சை ஏற்று, வாங்கிய இடத்திலேயே அதை உட்கொண்டு, கரிபடிந்த துணியைத் தைக்காமல் உடுத்துக் கொண்டு உன்னுடைய சந்நிதிக்கு வந்து சதாகாலமும் மனதில் உன்னை எண்ணிப் பணிந்து, உடலில் மயிர்க்கால்கள் அனைத்தும் குத்திட்டு நிற்க ‘ஐயா’ என்று உரத்தக் குரலெடுத்து உன்னைப் பார்த்து ஓலமிடுவது என்னாளோ, கயிலையில் அமர்ந்த பெம்மானே. நீறார்ந்த மேனி உரோமஞ் சிலிர்த்து உளம் நெக்குநெக்கு சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி நின் சீரடிக்கே மாறாத் தியானம் முற்றானந்த மேற்கொண்டு மார்பில் கண்ணீர் ஆறாய்ப் பெருகக் கிடப்பதென்றோ கயிலாயத்தனே. 5. உடலெங்கும் திருநீறணிந்து, உன்னை எண்ணி மயிர்க்கால்கள் குத்திட்டு, உள்ளமோ உன்னை நினைந்து நெக்குருகி சேறு போல கனிந்து, உன் சேவடித் தாமரைகளை மனதில் எண்ணி எப்போதும் தியானம் செய்து, கண்களில் பெருகி வரும் கண்ணீரால் மார்பு நனையக் கிடப்பது என்னாளோ, கயிலைமலை வாழ் சிவபெருமானே. செல்வரைப் பின் சென்று சங்கடம் பேசித் தினந்தினமும் பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரானந்தத்தின் எல்லையில் புக்கிட ஏகாந்தமாயெனக் காமிடத்தே அல்லல் அற்று என்று இருப்பேன் அத்தனே கயிலாயத்தனே. 6. செல்வம் படைத்த சீமான்களைத் தேடிப்போய் என் துயரங்களையெல்லாம் சொல்லி, பற்களைக் காட்டிக் கெஞ்சி பரிதவித்து நிற்காமல், பரானந்தமாம் சிவானந்தத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று, ஏகாந்தமாகத் துன்பங்கள் எதையும் அண்டவிடாமல் இருக்க அருள் செய்திடுவாய் அத்தனே, கயிலாயம் அமர்ந்த பெருமானே. மந்திக் குருளை யொத்தேனில்லை நாயேன் வழக்கறிந்தும் சிந்திக்கும் சிந்தையை யான் என்செய்வேன் எனைத்தீது அகற்றி புந்திப் பரிவிற் குருளையை ஏந்திய பூசையைப் போல் எந்தைக்கு உரியவன் காணத்தனே கயிலாயத்தனே. 7. குட்டிபோட்ட குரங்கு தன் குட்டியை எடுப்பதில்லை, அந்த குட்டியே தாயின் வயிற்றைக் கவ்விக் கொள்ளும் (மர்க்கட நியாயம்) போல நான் உன்னைக் கவ்விக் கொள்ளவில்லை, நாயினும் கேவலமான நான் நிலைமைகளை அறிந்திருந்தும் உன்னைச் சிந்திக்காமல் இருக்கும் என்னுடைய சிந்தையை என்னவென்று சொல்வேன்; என் உள்ளம் புகுந்த கள்ளத்தை நீக்கி பூனை எப்படித் தன் குட்டியைக் கவ்விக் கொண்டு போகுமோ அதுபோல (மார்ச்சால நியாயப்படி) நீ என்னை கவ்விக் காத்திட வேண்டும் தந்தையே, கயிலை நாயகனே. வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழி போய்ப் பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன் புகழ்வாரிடத்தில் இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயல் அஞ்செழுத்தாம் அருந்தேன் அருந்துவன் நின்னருளால் கயிலாயத்தனே. 8. திருக்கயிலாயம் அமர்ந்த சிவபெருமானே! இனி நான் பிறந்தும் பின் இறந்தும் இப்படி துன்பப்படமாட்டேன், ஐம்புலன்களின் மயக்கத்தால் அவை காட்டும் திசை நோக்கிப் போய் எச்செயலிலும் ஈடுபட்டுத் துன்புறமாட்டேன்; பாபக் குழியெனும் நரகத்தில் விழமாட்டேன், காரணம் நான் நின் அடியவர் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன், அந்த அடியார் திருக்கூட்டத்தை எந்த காரணத்தினாலும் விட்டு விலகமாட்டேன், இனிய தேனின் சுவையுடைய உன் ஐந்தெழுத்தாம் ‘சிவாயநம’ எனும் மந்திரத்தை அருந்திக் கிடப்பேன். 7. மதுரை விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை விட்டு மனம் திடப்படுமோ நின்னருள் இன்றியே தினமே அலையக் கடப்படுமோ அற்பர் வாயிலிற் சென்று கண்ணீர் ததும்பிப் படப்படுமோ சொக்கநாதா! சவுந்தரபாண்டியனே. மதுரை வாழ் சோமசுந்தரா! சவுந்தரபாண்டியனே! இப்பூவுலக வாழ்க்கையில் காணுகின்ற அனைத்து இன்பங்களையும் விட்டு நீங்கிவிடமுடியுமா; அப்படி விட்டு விலகிவிட மனம்தான் துணிந்து திடப்படுமோ; அப்படியின்றி தினம்தினம் அதனைச் சாராமல் இருக்கத்தான் முடியுமா; மனம் சலனப்பட்டு அங்குமிங்குமா அலைக்கப்படுமோ; அற்பர்கள் வீட்டு வாயிலில் சென்று கண்களில் நீர் சோர நின்று மனவருத்தம் பட இயலுமோ, நின் அருள் கிடைக்காதவரை அவை இயலாது. 8.திருவிடைமருதூர் மென்று விழுங்கி விடாய் கழிக்க நீர்தேடல் என்று விடியும் எனக்கு என்கோவே – நன்றி கருதார் புரம் மூன்றும் கட்டழலாற் செற்ற மருதா உன் சந்நிதிக்கே வந்து. நன்றி கொன்ற அரக்கர்களையும், அவர்தம் புரம் மூன்றையும் மூண்ட செந்தழலாற் எரித்த மருதூர் வாழ் அண்ணலே! சதா காலமும் வயிற்றுக்கு உணவையும், உண்டபின் விடாய் தீர நீர்தேடி ஓடும் இந்த நீச வாழ்க்கை என்று தீரும், என்று நான் உன் சந்நிதிக்கு வந்து உனக்கே ஆளாவேன் சொல்லுவீர் எனை ஆளும் என் அரசே! 9.திருவொற்றியூர் கண்டங் கரியதாம் கண் மூன்று உடையதாம் அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர் உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுக ழொற்றிக் கடலருகே நிற்கும் கரும்பு. ஆலகால விடமுண்ட காரணத்தால் நீலநிறம் பாய்ந்த கண்டமும், முகத்தில் மூன்று நயனங்களும், இந்த அண்டசராசரங்களைப் போல அழகும் படைத்த தொண்டர்கள் உடலும் உள்ளமும் உருகவைக்கும் இனிமை பொருந்திய கரும்பே! கீழைக் கடற்கரையோரம் திருவொற்றியூர் அமர்ந்த பெருமானே. ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பது வாய்ப் புண்ணுக்கு இடுமருந்த யான் அறிந்து கொண்டேன் – கடுவருந்தும் தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில் போவார் அடியிற் பொடி. சீவடியும் புண்போன்ற ஒன்பது வாசல்களைக் கொண்ட இந்த உடலுக்கு இடவேண்டிய மருந்தை நான் அறிந்து கொண்டேன். அந்த மருந்து யாதெனின், (கடு + அருந்தும் = ஆலகாலவிடத்தை உண்ட) தேவாதி தேவனான திருவொற்றியூரானின் அடியவர்கள் தினந்தினம் நடந்த பூமியில் கிடக்கும் பாததூளியே இப்பிணிக்குச் சரியான மருந்து. (இக்கருத்தையொட்டியே சில ஆலயங்களில் அங்கப் பிரதக்ஷணம் செய்வது அடியார்கள் நடந்த பாததூளி உடலில் பட்டுப் புனிதமடைதற்காக என்பது கருத்து) வாவி யெல்லாம் தீர்த்தம், மணல் எல்லாம் வெண்ணீறு காவணங்களெல்லாம் கணநாதர் – பூவுலகில் ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர் ஓதும் திருவொற்றி ஊர். மெய்யான தவம் புரிந்த புனிதர்கள் எல்லோரும் போற்றுகின்ற திருத்தலமாம் திருவொற்றியூரில் அமைந்துள்ள நீர்நிலைகள் அனைத்துமே சிவ புண்ணிய தீர்த்தங்களாம்; அந்நகர் எங்கும் பரவிக் கிடக்கும் மணல் யாவும் அவன் அணியும் திருநீறு; மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனங்கள் அனைத்துமே சிவகணங்களாகும். 10. திருவாரூர் ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாளென்று ஊரூர்கள் தோறும் முழலுவீர் – நேரே உளக் குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர் விளக்கிருக்கக் தீத்தேடு வீர். திருவாரூர் தியாகேசர் இங்கே இருக்க, எந்தெந்த ஊரிலோ திருநாள் என்று ஊரெங்கும் பறையறைவீர். அட பேதையர்களே! சித்தத்தில் உறையும் அறிவான தெய்வத்தை உணராமல், ஊமைகளே! யாராவது விளக்கு எரிந்து கொண்டிருக்க தீக்காக அலைவார்களா? 11.திருக்காளத்தி பொய்யை ஒழியாய், புலாலை விடாய், காளத்தி ஐயரை எண்ணாய், அறம் செய்யாய் – வெய்ய சினமே ஒழியாய், திருவெழுத்து ஐந்து ஓதாய், மனமே உனக்கென்ன மாண்பு. நெஞ்சே! பொய் பேசுவதை நீ விட்டபாடில்லை; மாமிச உணவுகளை உண்பதை விட்டபாடில்லை; காளத்திநாதனை நினைக்கவில்லை; தான தர்மங்களையும் செய்தபாடில்லை; துன்பம் தரும் கோபத்தையும் விட்டபாடில்லை; அதெல்லாமிருக்கட்டும் சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவதும் இல்லை, இவைகளையெல்லாம் கடைபிடிக்காமல் உனக்கென்ன அத்தனை கர்வம். 12. காஞ்சிபுரம் எத்தனை ஊர் எத்தனை வீடு எத்தனை தாய் பெற்றவர்கள் எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் – நித்தம் எனக்குக் களையாற்றா ஏகம்பா கம்பா உனக்குத் திருவிளையாட் டோ. ஏ கம்பநாதா, எகம்பநாதனே! எனக்குத்தான் எத்தனை பிறவி, அவை அத்தனையிலும் எத்தனை ஊர், எத்தனை வீடு, என்னைப் பெற்ற அன்னையர்கள் எத்தனை பேர், எனக்கிட்டழைக்க எத்தனை பெயர்கள் ஏன் என சிந்தித்தேன், ஏகம்பநாதரே! இவை அத்தனைக்கும் நான் ஆளாவது எதனால், இதெல்லாம் உனது திருவிளையாடலோ? 13. திருவிருப்பையூர் மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன் வேதாவும் கைசலித்து விட்டானே – நாதா இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமற் கா. இருப்பையூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! எனக்குத்தான் எத்தனை தாயார்கள் ஒவ்வொரு பிறவியிலும் அவர்கள் அத்தனை பேரும் என்னைப் பெற்று மனம் சலித்தார்கள்; தீவினைகள் செய்ய அத்தனை பிறவிகளிலும் ஓடியாடியதால் நானும் கால் சலித்துப் போனேன்; என்னை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வைத்து அந்த பிரம்மனாம் நான்முகனும் கைசலித்துப் போனான்; ஐயனே! இனியும் ஒரு முறை நான் கருப்பையூர் சென்று வாசஞ் செய்து மீண்டும் பிறக்காமல் வரமருள்வாயே. 14. திருக்காரோணம் அத்தி முதல் எறும்பு ஈரான உயிர் அத்தனைக்கும் சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகா – மெத்தப் பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி இசிக்குதையா காரோண ரே. திருநாகைக் காரோணப் பெருமானே! யானை முதல் எறும்பு வரையிலான பலகோடி ஜீவராசிகளுக்கும் உணவளித்துக் காக்கும் பரமேச்வரா! ஞானத்தைத் தேடி அலையும் எனக்கும் வயிறு உண்டு, பசி உண்டு என்பதை அறியாமல் இருந்தேனே; பசிக்கொடுமை தாங்கமுடியவில்லை, அடியவனின் பாழ்வயிற்றைப் பற்றி நினைக்க வேண்டியிருக்கிறதே ஐயனே. 15. திருக்குற்றாலம் காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே பாலுண் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்தே உற்றார் அழுமுன்னே, ஊரார் சுடுமுன்னே குற்றாலத் தானையே கூறு. என் பாழும் உயிரை எடுத்தேக எமன் வருவதற்கு முன்பாக, கண்கள் பஞ்சடைந்து பார்வை மங்குமுன்பாக, வாயில் ஊற்றிய பால் உள்ளே இறங்காமல் கடைவாயில் வழிந்தோடுதற்கு முன்பாக, உயிர்போன என் உடல் மீது உறவும் சுற்றமும் விழுந்து அழுமுன்னே, அந்தப் பாழுடலை ஊரார் எடுத்துச் சென்று தீயிட்டுச் சுடுமுன்னே, ஓ நெஞ்சமே, திருக்குறாலநாதனை நினைத்துப் போற்றிடுவாய். 8 உடற்கூற்று வண்ணம்.   (இந்தப் பகுதியில் மனித இனத்தில் பிரஜோற்பத்தி தொடங்கி, மதலையாகி வளர்ந்து முதிர்ந்து இறுதியில் மூச்சடங்கி தீக்கிரையாகும் வரையிலான நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக யாக்கை நிலையாமை பற்றிச் சொல்லியிருக்கிறார். இந்தப் பகுதியில் அடிகளாரின் சொற்கள் படிக்கச் சற்று அருவருப்பாகத் தோன்றினாலும், அதுதான் முற்றிலும் உண்மை என்பதால் அந்த கசப்பான உண்மையை நம் மனம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.) “ஒருமட மாதும் ஒருவனுமாகி இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி உணர்வு கலங்க ஒழுகிய விந்து ஊறுசுரோணித மீது கலந்து பனியிலொர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்துபுகுந்து திரண்டு பதுமவரும்பு கமடமிதென்று பார்வை மெய்வாய் செவி கால்கைகளென்ற உருவமுமாகி உயிர்வளர் மாதம் ஒன்பதுமொன்றி நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து யோகமும் வாரமும் நாளும் அறிந்து மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட வுந்தி உதைந்து கவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதமருந்தி ஓரறிவு ஈரறிவாகி வளர்ந்து….” பேதைகள் இருவர் ஆணும் பெண்ணுமாய் இனிமை தரும் சுகானுபவத்தில் திளைத்திருக்க, அன்பு பெருக, உணர்வு மயங்கி, கலவியின் பயனாய் ஆண்மகன் சுக்கிலம் தலைவியின் சுரோணிததில் கலந்ததும்; இவ்விரு கலப்பில் சுக்கிலம் பனித்துளியின் பாதியளவில் சுரோணிதச் சேர்க்கையால், தாமரை மொட்டைப் போலவும் பின் ஆமை வடிவம் கொண்டும் வளர்ந்து பெரிதாகி கண், காது, மூக்கு, கால், கைகள் இவைகளெல்லாம் சிறிது சிறிதாகப் பிரிந்து வளர்ந்து; சிசுவின் உருவம் வளர்ந்து ஒன்பதும் ஒன்றுமாய் மாதங்கள் முடிந்ததும், தலைவி வேதனையுற, வருந்தியந்த சிசுவும் மண்ணில் விழ, கூடியிருந்த சுற்றம் அந்த சிசுவிற்கு நாள், நட்சத்திரம் கோள்களைக் கணித்திட; கூடியிருந்த மாதரார் கூட்டம் குழந்தையை எடுத்துச் சீராட்டி தூளியிலிட்டுத் தாலாட்ட, சிறுகச் சிறுக அந்தச் சிசு கால் கைகளை உந்தி விளையாடிப் புரண்டு படுத்து தவழ்ந்து, தாயின் அரவணைப்பில் தாய்ப்பால் அருந்தி ஓரறிவு, ஈரறிவு என வளர்ந்து வரும் காலத்தில்; “ஒளிநகையூற இதழ் மடவாரும் உவந்து முகந்திட வந்து தவழ்ந்து மடியிலிருந்து மழலை மொழிந்து வா இரு போ என நாமம் விளம்ப; உடை மணியாடை அரைவடமாட உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு தெருவிலிருந்து புழுதியளைந்து தேடிய பாலரொடோடி நடந்து அஞ்சு வயதாகி விளையாடியே உயர்தரு ஞான குரு உபதேசமும் தமிழின் கலையும் கரைகண்டு, வளர் பிறையென்று பலரும் விளம்ப வாழ் பதினாறு பிராயமும் வந்து மயிர்முடி கோதி அறுபத நீல வண்டிமிர் தண்தொடை கொண்டை புனைந்து, மணி பொனிலங்கு பணிகளணிந்து மாகதர் போகதர் கூடி வணங்க……” சின்னஞ் சிறியதாய் மல்லிகை மொட்டாய் பற்கள் வெளிவர, மெல்லிய இதழில் மடவார் முகர்ந்து முத்தமிட, குழந்தையும் மகிழ்ந்து அவர்பால் செல்ல, தாய்மடியேறி மழலைகள் மொழிய, ‘வா’ எனவும் ‘போ’ எனவும் சொற்களைப் பேசித் தொடர்ந்து ‘அப்பா’ என்றும் ‘அம்மா’ என்றும் கொஞ்சி அழைக்க; பட்டாடைகளும், பன்மணி மாலையும், தங்கத்தில் அரைஞாண் இடையினில் ஆட, உண்பவர், தின்பவர் செயலைப் பார்த்துத் தானும் உண்டும், பருகியும், தெருவில் ஓடி, புழுதியில் அளைந்து, தன்வயதொத்த பாலரைத் தேடி ஓடி விளையாடி, ஐந்து வயதாக ஆன பிறகு; தகுதியுள்ள குருவிடம் சேர்ந்து, ஞானோபதேசமும் நல்ல தமிழ்க் கல்வியும், சாத்திர நீதியும் கசடறக் கற்று, நூல் பல தேர்ந்து நன்கு பயின்று, வளர்பிறை போலவே நாளும் வளர்ந்து, பதினாறு வயதினை அடையும் போதினில்: நீண்ட கூந்தலைச் சீவி முடிந்து கொண்டைகள் இட்டு, ஆறு கால் கொண்ட நீலநிற வண்டுகள் மொய்க்கும் நல்ல மலரில் மாலைகள் கட்டி அணிந்து, மணிகள் பொதிந்த பொன் அணிகளை அணிந்து பார்ப்பவர் அனைவரும் கூடிநின்று பாராட்டி நிற்க; “மதன சொரூபன் இவன் என மோக மங்கையர் கண்டு மருண்டு திரண்டு, வரிவிழி கொண்டு சுழிய எறிந்து மாமயில் போல் அவர் போவது கண்டு; மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல சந்திகழ் கொங்கை மருவ மயங்கி இதழமுதுண்டு தேடிய மாமுதல் சேரவழங்கி; ஒருமுதலாகி முதுபொருளாய் இருந்த தனங்களும் வம்பில் இழந்து,மதன சுகந்த விதனமிது என்று வாலிப கோலமும் வேறு பிரிந்து; வளமையும் மாறி இளமையும் மாறி வன்பல் விழுந்திரு கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரை திரை வந்து வாத விரோத குரோதம் அடைந்து செங்கையினில் ஓர் தடியுமாகியே…….” மன்மதனையொத்த அழகுடையவனாக இவன் இருக்கிறானே என மோகங் கொண்ட மங்கையர்கள் மனம் மயங்கி, செவ்வரி படர்ந்த கண்களால் பார்த்து மருண்டு அழகிய மயில்கள் பவனி செல்வது போல போகும் அவர்கள் செல்லும் காட்சியும்; தன்னைப் பார்த்து மயம் மயங்கிச் செல்லும் அந்த மாதைப் பின்பற்றிச் சென்று, அவளது கொங்கைகள் தன் மார்போடு இழைய மருவிக் கொண்டு, இதழோடு இதழ் வைத்து இன்பம் தேடி, அவள் விரும்பியவாறு இன்பமளித்து; முன்னோர்கள் தேடிவைத்த செல்வங்களையெல்லாம் திரட்டி, தான் சேர்த்தவற்றையும் இப்படி இன்ப நாட்டத்தில் கொண்டு செலுத்தி, மதன சுகங்களின் மிகையால் செல்வம் கரைந்து, உடலும் மெலிந்து வாலிபத் தோற்றம் மாறி கிழத்தனம் எய்தி, மிகுந்த சுகத்தின் பலன் இது என பிறர் பரிகசிக்க; செல்வம் அழிந்து, இளமை ஒழிந்து, பற்கள் விழுந்து, கண்கள் இருண்டு, வயதின் முதிர்ச்சியால் தலை நரை படர்ந்து, தோல் சுருங்கி, ஆத்திரமும், பொறாமை குணங்களும் பெற்று நடுங்கும் கரங்களில் ஒரு தடியையும் ஊன்றிக் கொண்டு; “வருவது போவது ஒரு முதுகூனுமந்தி யெனும்படி குந்தி நடந்து, மதியும் அழிந்து, செவி திமிர் வந்து வாயறியாமல் விடாமல் மொழிந்து; துயில் வரு நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு; கலியுக மீதில் இவர் மரியாதை கண்டிடு மென்பவர் சஞ்சலம் மிஞ்ச, கலகலவென்று மலசலம் வந்து கால்வழி மேல்வழி சார நடந்து; தெளிவுமிரா உரைதடுமாறி சிந்தையும் நெஞ்சமும் உலைந்து மருண்டு, தடமும் உலனிது மிகவும் மலைந்து தேறி நல்லாதர வேதென நொந்து…….” கிழக்குரங்கொன்று தன் கூன் முதுகைச் சாய்த்துக் கொண்டு அங்கும் இங்குமாய் திரிகின்ற காட்சிபோலவும், அறிவு கெட்டு, காதும் செவிடாகி அடைத்துக் கொண்டும், அடுத்தவர் சொல்வதைக் கேட்க முடியாமலும், வாயில் வந்ததையெல்லாம் விடாமல் உளறிக் கொட்டிக் கொண்டு; இரவு ஆனதும் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வருகின்ற நேரம்; அந்த நேரம் பார்த்து விடாமல் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும்; தொண்டையும், நெஞ்சும் இருமியதால் வறண்டு போகும், தூக்கத்தில் துகில் போன இடம் தெரியாமல் விலகிக் கிடக்கும்; இவற்றைக் கண்டு பெண்டிர் வருந்துவர், இளையோர் ஏகடியம் பேசுவர்; இது கலியுகம். யுகதர்மங்கள் மாறுபடும். இந்த யுகத்தில் இதுபோன்ற நிலைமையை அடைந்தவர்களைக் கண்டு பரிதாபப் படமாட்டார்கள், பெரிசு படும் பாட்டைப் பாருங்கள் என்பர், மனது வருத்தப்படும், நம்மை அறியாமலே நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் மலமும், சலமும் தானே கழிந்து பார்ப்பவர் முகம் சுளிக்க வைத்துவிடும்’ மனத்தில் தெளிவு இல்லாமையால் பேசும் சொற்களிலும் தெளிவு இருக்காமல் வார்த்தை தடுமாறும்; சிந்தை வரண்டு விடும், நெஞ்சம் உரைந்துவிடும், மனோதிடமும் குலைந்துவிடும், நமக்கு இனி உறுதுணை யார் என்பதை மனம் எண்ணத் துவங்கிவிடும். “மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும் என்று தெளிந்து இனியென கண்டம் இனியென தொந்தம் ஏதினி வாழ்வு நில்லாது இனி நின்ற; கடன்முறை பேசும் என உரை நாவு முழங்கி விழுந்து கைகொண்டு மொழிந்து கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து பூதமு நாலு சுவாசமும் நின்று - நெஞ்சு தடுமாறி வரும் நேரமே. வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு குஞ்சியும் விஞ்ச, மனதும் இருண்ட வடிவும் இலங்க மாமலை போய் யம தூதர்கள் வந்து; வலைகொடு வீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து குனிந்து அழ நொந்து, மடியில் விழுந்து மனைவி புலம்ப மாழ்கினரே இவர் காலமறிந்து……..” படைப்புக் கடவுளாம் பிரம்ம தேவன் எழுதிய பிரம்ம லிபியின் படி வாழ்க்கையில் எத்தனை கண்டங்களொ அத்தனையும் நினைந்து, இனியும் கண்டங்கள் உண்டோ, விதியின் நியதிப்படி என்னென்ன நேருமோ, இனி வாழ்வு என்ன வாகுமோ, நிலைக்குமோ என்றெல்லாம் சிந்தித்து; வாழ்க்கை லட்சியங்கள், கடமைகள் என்றெல்லாம் வாழும் முறைகளை வக்கணையாய்ப் பேசுகின்ற நாவு சோர்ந்து வீழ்ந்து பேசமுடியாமல் போய்; கைகளால் சைகை செய்து பிறருக்கு உணர்த்தி, கடின சோறு உண்ண முடியாமையால் கஞ்சி குடித்து, குடித்த கஞ்சியும் கடைவாய் வழியே தவறிச் சிந்தி வழிய, உள்செல்லும் பிராணவாயு குறைய, சப்த நாடிகளும் ஒடுங்கிக் கிடக்க, பேசமுடியாமல், மூச்சு விடவும் முடியாமல் மனம் கலங்கிடும் காலத்தில்; வளர்பிறைச் சந்திரனையொத்த கடைவாய்க் கோரைப் பற்களோடும், தீப்பற்றி எரிவதைப் குத்திட்டு நிற்கும் செம்பட்டைத் தலைமுடியும், அதில் சடைகள் நிரம்பியிருக்கவும், கடுத்த மனமும், இருள் போல விளங்கும் கருத்த மேனியும், பெரிய மலைபோன்ற சரீரமும் கொண்ட எம தூதர்கள் வந்து; பாசக் கயிற்றை வீசி உயிரைக் கட்டி இழுத்துக் கொண்டு போகும்போது, பிள்ளைகள் வந்து ஐயோ போயினரே என்று கதறி அழுது வருந்த, மடியில் விழுந்து மனைவி புலம்ப, ஏனையோர் அந்த துக்க சூழ்நிலைக்கேற்ப வருந்தி நிற்கின்ற நேரத்தில்; “பழையவர் காணும் எனும் அயலார்கள் பஞ்சு பறந்திட நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்தவே பிணம் வேக விசாரியும் என்று; பலரையும் ஏவி முதியவர் தாம் இருந்த சவம் கழுவும் சிலரென்று, பணி துகில் தொங்கல் களபம் அணிந்து பாவகமே செய்து நாறும் உடம்பை; வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர் குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து மானிட வாழ்வு எ(ன்)ன வாழ்வென நொந்து; விறகிடமூடி அழல்கொடுபோட வெந்து விழுந்து முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி ஓர்பிடி நீறுமிலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே.” நெடுநாளைய மனிதன் இவன் என்று பேசிக் கொண்டு அண்டை அயலார் ஓடிவந்து பார்த்து, அருகில் இருந்தவர்களைப் பார்த்து வருபவர்கள் உட்கார பந்தல் போடுங்கள், பறை ஓசை எழுப்ப ஆட்களைக் கூப்பிடுங்கள், பிணத்தைக் கொண்டுபோய் எரித்திட ஆவன செய்யுங்கள் என்று சொல்லி; பலபேருக்குச் சொல்லி அனுப்பி, பெரியவர்கள் பிணத்துக்கு எண்ணெயி இட்டுக் காப்புச் செய்து, தண்ணீர் விட்டுக் கழுவுங்கள் என்று சொல்லி, பொன்னால் ஆன அணிகலன், புதிய துணி, பூமாலை, வாசனைப் பொடி அத்தனையும் போட்டுத் தங்கள் பாசத்தை வெளிப்படுத்தி, நாற்றமெடுக்கக் கூடிய இந்த சரீரத்தை; செய்ய வேண்டிய முறைப்படி காரியங்களைச் செய்து பிணத்தை எடுங்கள் என்று பெரியவர்கள் சொல்ல, நல்ல உடல்வாகு கொண்ட நால்வர் வந்து எடுத்துத் தங்கள் தோள் மீது சுமந்து, வேகமாய் நடந்து, சுடுகாட்டை அடைந்து, “என்னடா மனித வாழ்க்கை’ என்று அப்போது தோன்றிய சுடுகாட்டு வைராக்கியம் எனும் ஞானத்தால் மனம் நொந்து கூறி; நல்ல காய்ந்த விறகு, மாட்டுச் சாணத்தால் ஆன விராட்டி இவைகளைக் கொண்டு வந்து அடுக்கி, அதன் மீதில் பிணத்தைக் கிடத்தி, அதன் நெஞ்சில் தீமூட்டி, பிணம் எரிந்து வெந்திடும் போது அதன் தசைகளும் கொழுப்பும் சரிந்து விழுந்ததை பிணம் எரிப்போன் மீண்டுமெடுத்து எரித்தும், எலும்புகள் கருகிப் பின் சுட்ட சாம்பலாய்ப் போய் ஒருப்டிக்குள் அடங்கிடும் வண்ணம் அமைந்த இந்த அரிய சரீரத்தை மாண்புடையது என்று பெரும் பொருட்டாக எண்ணி இறுமாந்திருந்த இந்த அடிமையை இப்போதாவது கனிவு கொண்டு ஆண்டு அருளவேண்டும் ஐயனே!! 9 முதல்வன் முறையீடு (மதுரையம் பதியில் கோயில் கொண்டுள்ள சோமசுந்தர கடவுளை நோக்கிப் பாடியதாக அமைந்தவை. கன்னிவனமென்பது மீனாட்சியம்மன் ஆட்சிபுரியும் தலம். ஆதியில் கடம்பவனமாக இருந்த மதுரை ஊழிக்காலத்திலும் அழியாமல் நின்ற காரணத்தால் ‘கன்னி’ எனும் பெயர் பெற்றது.) கன்னிவனநாதா, கன்னிவனநாதா, மூலமறியேன், முடியும் முடிவறியேன் ஞாலத்துட்பட்ட துயர் நாட நடக்குதடா, அறியாமையாம் மலத்தால் அறிவு முதற் கெட்டனடா பிரியா வினைப் பயனாற் பித்துப் பிடித்தனடா, தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா மனுவாதி சக்தி வலையில் அகப்பட்டனடா மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா தாமாயுலகனைத்தும் தாது கலங்குகிறண்டா. மதுரையம்பதி மேவிய சிவபெருமானே, சிவபெருமானே! ஆன்மாக்கள் எங்கிருந்து பிறந்தன, எங்குபோய் முடிகின்றன என்பதை உணர்ந்தேனில்லை. இப்பூவுலகில் வாழ்க்கையின் ஊடே கணக்கற்ற துன்பங்கள் வந்து சேர்ந்து துயரத்துள் ஆழ்த்துகின்றன. வாழ்க்கையில் இன்பம் எது, துன்பம் எது என்பதை அறிந்து கொள்ள முடியாத அறியாமையாம் மலம் அறிவை மூடிவிட்ட காரணத்தால் அறிவு முதல் அனைத்தும் கெட்டுத் தொலைந்தது. முற்பிறவிகளில் செய்த பாவங்கள் எனைத் துரத்தி வந்ததனால் மனம் பித்துப் பிடித்துப் போனது. ‘தனுவாதிய நான்கும்’ அதாவது தனு, கரணம், புவனம், போகம் எனப்படும் இப்பூவுலக வாழ்வின் தத்துவங்களில் மூழ்கித் தவித்து மனம் மயங்கி, மறைக்கும் மாயத் தொழிலைப் புரியும் ‘திரோதான’ சக்தியுள் ஆட்பட்டுவிட்டேன். உலகமும் அதன் உட்பொருளும், மறையும் பாங்கினதால் அவை மாயை எனப்படும். அந்த மா மாயை எனும் பெரும் மாயக் காட்டினுள் வழியறியாது அலைந்து திரிகின்றேன், இப்பிறவியும் வாழ்வும் மாயை எனும் உண்மை புரிவதால், உளம் கலங்குகிறேன். (இதில் கண்டுள்ள சில சொற்களும் கருத்துக்களும் சைவ சித்தாந்தம், யோகம் பயின்றவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுதல் நலம்) கன்னிவனநாதா, கன்னிவனநாதா, மண்ணாசை பட்டேனை மண் உண்டு போட்டதடா பொன்னாசை பெண்ணாசை பேர்கேனே என்குதே மக்கள் சுற்றத்தாசை மறக்கேனே என்குதே திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே கட்டு வர்க்கத்தாசை கழலேனே என்குதே செட்டு தனில் ஆசை சிதையேனே என்குதே மாற்றும் சலவை மறக்கேனே என்குதே சோற்றுக் குழியும் இன்னும் தூரேனே என்குதே. கன்னிவனமாம் மதுரயம்பதிவாழ் சோமசுந்தரனே! சிவபெருமானே! மண் மீது ஆசை கொண்டு மேன்மேலும் நிலம் வாங்கி மகிழ்ந்திருந்தேன், அந்த மண்ணே இந்த உடலைத் தின்றுவிட்டதே. பொன் மீதும், பொன் நகை மீதும் கொண்ட ஆசையும், பெண்ணாசையும் என்னைவிட்டுப் போகமாட்டேன் என்கிறதே. பெண்டு, பிள்ளைகள், உறவுகள் என்று நான் கொண்ட ஆசைகள் எதனையும் மனம் மறக்க மாட்டேன் என்கிறதே, எட்டு திசைகளையும் கட்டியாள வேண்டுமென நான் கொண்ட ஆசையும் தீரமாட்டேன் என்கிறதே; பற்பல வித்தைகள், அறுபத்தினாலு கலைகள் மேன்மேலும் கற்கவேண்டும் என்கிற மனத்தாசையை விட்டொழிக்க இயலவில்லையே, அட்டமாசித்திகளை எப்படியும் அடைதல் வேண்டுமென்ற எண்ணமும் நீங்கவில்லையே; மந்திரங்கள் செய்யும் மாயங்கள் அனைத்தையும் கற்றல் வேண்டுமென நினைப்பது மறக்கவில்லையே, பிறர் பார்க்க அழகொழுக இருக்க நினைப்பதும் துறக்க முடியவில்லையே; வியாபாரம் செய்து அதில் லாபம் அடையவேண்டுமென்ற ஆசை சிதைய மறுக்கின்றதே (செட்டு = வியாபாரம்), வேளைதோறும் சலவை செய்த ஆடை அணியும் ஆசை மறக்கமாட்டேன் என்கிறதெ, சொற்றினைக் கொள்ளும் வயிறும் நிரம்பி விட்டது போதும் எனும் நிலையை அடையமாட்டேன் என்கிறதே. கன்னிவனநாதா கன்னிவனநாதா ஐந்து புலனும் அடங்கேனே என்குதே சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே காமக் குரோதம் கடக்கேன் என்குதே நாமே அரசென்று நாடோறும் எண்ணுதே அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே கைச்சு மின்னுமானம் கழலேனே என்குதே நீர்க்குமிழியாம் உடலை நித்தியமாய் எண்ணுதே ஆர்க்கும் உயிர் ஆசை அழியேனே என்குதே கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக் கண்டும் எண்ணும் திரமா இருப்போமென்று எண்ணுதே அநித்தியத்தை நித்தியம் என்று ஆதரவா எண்ணுதே தனித்திருக்கேன் என்குதே தனைமறக்கேன் என்குதே நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே உரகப்படத்து அல்குல் உனைக் கெடுப்பேன் என்குதே குரும்பை முலையும் குடிகெடுப்பேன் என்குதே அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே மாதர் உருக்கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே ஆதரவும் அற்றிங்கு அரக்காய் உருகிறண்டா கந்தனை ஈன்றருளும் கன்னிவனநாதா எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா. என் ஐம்பொறிகளும் அடங்கமாட்டேன் என்கின்றனவே, அவற்றல் வரும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவற்றைத் தேடுகின்றதே. எதையெதையோ எண்ணி மனம் சஞ்சலப்படுவது நின்று, தெளிய மாட்டேன் என்கிறதே. காமமும் குரோதமும் தணிய மறுக்கின்றதே, நானே ராஜா நமக்கு நிகர் எவருமில்லை என்கிற ஆணவம் தினந்தோறும் தோன்றுதே. அச்சமும், ஆங்காரமும் அடங்க மறுக்கின்றதே, அனைத்தையும் ஒழித்தாலும் மனம் மட்டும் குரங்குபோல் தாவுவது நிற்கவில்லையே. நீர்க்குமிழி போன்ற நிரந்தரமற்ற இந்த உடலை சாச்வதமானது என்று மனம் எண்ணுகின்றதே, உயிர்மேல் இருக்கும் ஆசை அழியமாட்டேன் என்கிறதே. கண்ணெதிரே மாண்டவர் பிணம் கட்டையில் எரிவது கண்டும், நாம் மட்டும் நிரந்தரமாய் இருப்போம் என்று எண்ணம் இருக்கிறதே. நிரந்தரமில்லாததை நிரந்தரம் என்று எண்ணுகிறதே, சுற்றிலுமுள்ள ஆர்ப்பாட்டங்களிலிருந்து தனித்து இருக்க மறுக்குதே, மனம் அனைத்திலும் விடுபட்டு இருக்கவும் முடியலையே. இடுகாட்டில் மரணக் குழியோ உன்னை நான் உண்டு தீர்ப்பேன் என்கிறதே, பெண்ணுறவின் மீதான ஆசை உன்னைக் கெடுத்தே தீருவேன் என்கிறதே. தென்னங்குரும்பை போன்ற தனங்கள் உன் குடியைக் கெடுப்பேன் என்று கச்சைகட்டி நிற்கின்றதே, அழகிகளின் அம்பு விழிகள் என் ஆவியைக் குடித்தே தீருவேன் என்கிறதே. எமனோ பெண்ணுருவத்தில் வந்து என்னை மோசம் செய்ய எண்ணுகிறான், என்னைத் தேற்றி ஆதரவு தர எவருமின்றி நான் அரக்கைப் போல உருகுகின்றேனடா. கந்தவேளாம் முருகக் கடவுளைப் பெற்றெடுத்த மதுரையம்பதிவாழ் சிவனே, எந்த விதத்தில் நான் நினது திருவடிகளைப் பற்றிக் கொள்வேன்? கன்னிவனநாதா கன்னி வனநாதா புல்லாகிப் பூடாய்ப் புலர்ந்தநாள் போதாவோ கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாவோ கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ நீர்யாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ வேதனை செய்தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள் போதாதோ தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ நோய் உண்ணவே மெலிந்து நொந்தநாள் போதாதோ பேய் உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ ஊனவுடல் கூன் குருடாய் உற்றநாள் போதாதோ ஈனப் புசிப்பில் இளைத்த நாள் போதாதோ பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ கெட்டநாள் கெட்டேன் என்று கெட்டநாள் போதாதோ நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ எல்லாரும் என்பாரம் எடுத்தநாள் போதாதோ காமன் கணையால் கடைபட்டல் போதாதோ ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ உருத்திரனார் சங்காரத்து உற்றநாள் போதாதோ வருத்தம் அறிந்தையிலை வாவென்றழைத்தயிலை. கன்னிவனமாம் மதுரையம்பதிவாழ் சோமசுந்தரனே! சிவபெருமானே!! எத்தனை பிறவிகள், எத்தனை அனுபவங்கள், எத்தனை துன்பங்கள். புல்லாகவும், பூண்டாகவும் பிறந்து வாடிய காலம் போதாவோ, கல்லாகவும் மரமாகவும் கிடந்த காலம் போதாவோ. கீரியாகவும், புழுவாகவும் பிறந்து நொந்த காலம் போதாவோ நீர்வாழ் ஜந்துவாகவும், மண்ணில் ஊரும் உயிராகவும் இருந்தநாள் போதாவோ. பூதமுமாய், தேவனுமாய்ப் பிறந்து கிடந்த நாள் போதாவோ, பிறருக்குத் துன்பங்களைக் கொடுத்து வாழ்ந்த நாள் போதாவோ. அன்னையின் கர்ப்பத்தில் அடைபட்டுக் கிடந்தநாள் போதாவோ, மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள் போதாவோ. தாயாகவும், மனைவியாகவும் தாழ்ந்து கிடந்த நாள் போதாவோ, சேயாய், புருஷனாய் சென்ற நாள் போதாவோ. நோய் மலிந்து மெலிந்த நாள் போதாவோ, பேய்களுக்கு உணவாக ஆன பேயாகப் பிறந்த நாள் போதாவோ. பிறப்பெடுத்த நாள் முதலாய் கூன், குருடு, முடமாகத் துன்பம் அடைந்த நாள் போதாவோ, உண்ண உணவின்றி வாடி மெலிந்த நாள் போதாவோ. பிறப்பினால் களைப்பும், பரிதவிப்பும் அடைந்த நாள் போதாவோ, இருக்கின்ற காலமும் கெட்டதோடு, மேலும் கெட்டவனாக ஆனதும் போதாவோ. இந்த பாழ் பிறவி நிலையில்லை என்பது தெரிந்து வருந்தியது போதாவோ, என் வினையால் மற்றவர்கள் பாரம் சுமந்ததும் போதாவோ. காமன் கண்வீச்சால் கடைப்பட்டுப் போனதும் போதாவோ, எமன் கரங்களால் இடிபட்டடும் போதாவோ. பிரம்மனின் தலையெழுத்தால் வதையுண்டது போதாதோ, தேன்சொரியும் துளசிமாலை அணிந்த பெருமாளின் சக்கரத்தால் பட்டவினை போதாவோ. உருத்திராட்சம் அணிந்த சிவன் சம்ஹாரம் செய்ததால் துன்பப்பட்டது போதாவோ, என் வருத்தத்தை உணரவில்லை, போதும் பட்டது இனி முடியாது, வந்துவிடு என்னிடம் என்று அழைத்தாயில்லை, என் செய்வேன். கன்னிவனநாதா கன்னிவனநாதா பிறப்பைத் தவிர்த்தையிலை பின்னாகக் கொண்டையிலை இறப்பைத் தவிர்த்தையிலை என்னென்று கேட்டைய்லை பாசமெரித்தையிலை பரதவிப்பைத் தீர்த்தையிலை பூசியநீற்றைப் புனை என்று அளித்தையிலை அடிமையென்று சொன்னையிலை அக்குமணி தந்தையிலை விடுமுலகம் போக்கி உன்றன் வேடம் அளித்தையிலை உன்னிலழைத்தையிலை ஒன்றாகிக் கொண்டையிலை நின்னடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை ஓங்குபரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான் ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை நாமந்தரித்தையிலை நானொழிய நின்றையிலை சேவவருளி எனைச் சிந்தித்தழைத்தையிலை முத்தி அளித்தையிலை மோனங் கொடுத்தையிலை சித்தி அளித்தையிலை சீராட்டிக் கொண்டையிலை தவிர்ப்பைத் தவிர்த்தையிலை தானாக்கிக் கொண்டையிலை அவிப்பரிய தீயாய் என் ஆசை தவிர்த்தையிலை நின்ற நிலையில் நிறுத்தி எனைவைத்தையிலை துன்றும் கரணமொடு தொக்கழியப் பார்த்தையிலை கட்ட உலகக் காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை நிட்டையிலே நில்லென்று நீ நிறுத்திக் கொண்டையிலை. கன்னிவன நாதனே கன்னிவன நாதனே, மீண்டும் மீண்டும் பிறப்பதைத் தவிர்த்தாயில்லை, பிறந்தபின் தடுத்து ஆட்கொண்டாயில்லை, இறப்பையும் தடுத்ததில்லை, ஏன், எதற்கு என்று எனை எதுவும் வினவவும் இல்லை. உறவையும் பாசத்தையும் நீக்கியபாடில்லை, பரிதவித்து ஏங்குவதையும் தீர்க்கவில்லை, நெற்றியில் இடும் திருநீற்றையும் அணியும்படி எனக்குத் தரவில்லை. நான் உனது அடிமை என்பதை ஏற்று அறிவித்தாயில்லை, அணிந்துகொள்ள ருத்திராக்ஷ மாலையும் தரவில்லை, சாச்வதமில்லாத இந்த உலகத்தை மாயம் என்பதை உணர்வித்து உன் காட்சியைக் கொடுத்தாயில்லை. உன்னிடம் என்னை அழைத்துக் கொள்ளவில்லை, உன்னோடு என்னையும் ஒன்றாக்கிக் கொண்டாயில்லை. கூடிநிற்கும் உன் அடியார் கூட்டத்தில் என்னையும் சேர்த்தாயில்லை. உன்னையே கதியென்று ஏற்றுக் கொண்ட அடியார் கூட்டத்தில் இவனும் ஒருவன் என்று என்னை அறிமுகம் செய்தாயில்லை. என்னை அடியவன் எனப் பெயர் சொல்லி அழைக்கவில்லை, ஆணவ மலத்தை அழித்தாயில்லை, உனது திருவருட் கருணையில் பிணைத்தாயில்லை. முக்தி தந்தாயில்லை, மோன நிலையை அளித்தாயில்லை, அட்டமா சித்திகளை அருளிச் செய்தாயில்லை. பரிதவிப்பை நீங்க்கினாய் இல்லை, என்னைச் சிவமாய்க் கொண்டாயில்லை. யோகத்தில் நிலைத்திட செய்தாயில்லை. யோகம் செய்யும் சாதனமான தீய அகக் கரணாதிகளை அடக்கினாயில்லை. சிரமம் தரும் உலக வாழ்விலிருந்து நீங்கி நிற்கும் மார்க்கத்தை அருளினாயில்லை, நிஷ்டையில் நிலைத்திரு என உபதேசம் செய்யவும் இல்லை. கன்னிவனநாதா கன்னிவனநாதா கடைக்கண் அருள்தாடா கன்னிவனநாதா கெடுக்கும் மலமொறுக்கிக் கிட்டிவரப் பாரேடா காதல் தணியேனோ கண்டு மகிழேனோ சாதல் தவிரேனோ சங்கடந்தான் தீரேனோ உன்னைத் துதியேனோ ஊர்நாடி வாரேனோ பொன்னடியைப் பாரேனோ பூரித்து நில்லேனோ ஓங்காரப் பொற்சிலம்பின் உல்லாசம் பாரேனோ பாங்கான தண்டை பலபணியும் பாரேனோ வீரகண்டாமணியின் வெற்றிதனைப் பாரேனோ சூரர் கண்டு போற்றும் அந்தச் சுந்தரத்தைப் பாரேனோ இடையில் புலித்தோல் இருந்தநலம் பாரேனோ விடையில் எழுந்தருளும் வெற்றிதனைப் பாரேனோ ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ மானைப் பிடித்தேந்து மலர்க்கரத்தைப் பாரேனோ மாண்டார் தலைப்பூண்ட மார்பழகைப் பாரேனோ ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ கண்டங்கறுத்து நின்ற காரணத்தைப் பாரேனோ தொண்டர் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ அருள் பழுத்த மாமதியாம் அனனத்தைப் பாரேனோ திருநயனக் கடைஒளிரும் செழுங் கொழுமைப் பாரேனோ செங்குமிழின் துண்டம் வளர் சிங்காரம் பாரேனோ அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ முல்லை நிலவெறிக்கு மூரல் ஒளி பாரேனோ அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ மகரங்கிட்னதொளிரும் வண்மைதனைப் பாரேனோ சிகரமுடியழகும் செஞ்சடையும் பாரேனோ கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ பொங்கரவைத் தான் சடையில் பூண்டவிதம் பாரேனோ சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ எருக்கறுகு ஊமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ கொக்கிறகு சூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ அக்கினியை ஏந்திநின்ற ஆந்தம் பாரேனோ தூக்கிய காலும் துடியிடையும் பாரேனோ தாக்கு முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ வீசுகரமும் விகசிதமும் பாரேனோ ஆசையளிக்கும் அபயகரம் பாரேனோ அரிபிரமர் போற்ற அமரர் சயசய எனப் பெரியம்மை பாகம் வளர்பேரழகைப் பாரேனோ சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ சந்திரசேகரன் ஆய்ந்த் தயவுசெய்தல் பாரேனோ. மதுரைக்கரசே, கன்னிவனநாதா கடம்பவன ஈசா! கடைக்கண் பார்த்து கருணை புரிவாய், ஆணவ மலம் என் மனத்தை ஆட்டிப் படைக்காமல் அதை வீழ்த்தி என்னிடம் நெருங்கி வரப் பார்ப்பாயே! நின் அருட்பார்வையொன்றை என்னை வீழ்ச்சியிலினின்றும் தடுத்து நிறுத்தும். உன் அருட்பார்வை கிடைக்கப் பெற்றால் உலகத்துப் பற்றை ஒழிப்பேன்; உந்தன் மலர்த்திருப்பதம் கண்டு தரிசிப்பேன், மரணத்தை வெல்வேன், சங்கடங்கள் தீர்வேன். உன் அருள் கிட்டிவிட்டால் உன்னை எப்போதும் துதிப்பேன், நீ கோயில் கொண்ட தலங்கள் தோறும் சென்று தரிசித்து மகிழ்வேன், நினது திருமலரடிகளைத் தொழுது பூரித்து நிற்பேன். பிரணவத்தின் தோற்றமாய் அமைந்துள்ள நின்றன் சிலம்பின் அழகைக் கண்டு களிப்பேன், காலின் அசைவில் ஓசையெழுப்பும் நினது தண்டை யொலியை பரிவோடு பார்ப்பேன். நடனமாடும் நின் திருப்பாதத்தில் அணிந்த வீரகண்டாமணியின் வெற்றிகளைக் காண்பேன், சூராதி சூரர்கள் உன் புகழை வாயாரப் பேசுவதைக் கேட்டு மகிழ்வேன். அரையில் அணிந்த புலித்தோலின் அழகைக் கண்டு களிப்பேன், ரிஷப வாகனம் ஏறி காட்சி தரும் இன்பத்தை நுகர்வேன். தாருகவனத்தில் மோதிய யானையைக் கொன்று மேலே போர்த்திய காட்சியக் கண்டு களிப்பேன், மானைப் பிடித்து கையில் வைத்த நின் தாமரைக் கரங்களைக் கண்டு மகிழ்வேன். கல்பகோடி ஆண்டுகள் வாழ்ந்த பிரம்மாக்களின் சிரங்களை மாலையாய் அணித்த அழகைக் காண்பேன், என்னுடைய இறைவன் இவன் என்று மகிழ்ந்து திரிவேன். நினது பொன்னிறத்து கண்டம் கருமை நிறம் ஆனதன் காரணத்தை அறிந்து கொள்வேன், மெய்யன்பர்களோடு உவந்து நிற்கும் காட்சியைக் காண்பேன். கனிவு ததும்பும் நின் நிலவொத்த முகத்தைக் காண்பேன், கடைவிழியின் அழகை மனம் களித்துப் பார்ப்பேன். சிவந்த குமிழ மலரையொத்த உன் நாசியழகைக் கண்டு மகிழ்வேன், கொவ்வைக் கனியினும் சிவந்த உன் உதட்டழகைப் பார்த்து மகிழ்வேன். முல்லை மலரைப் போன்ற உன் பல்வரிசை அழகைக் கண்டு மகிழ்வேன், கரிய நெற்றிப் புருவ அழகைக் கண்டு மகிழ்வேன். மகர குண்டலம் அணிந்த நின் காதின் அழகைக் காண்பேன், திருமுடியில் துலங்கும் சிவந்த சடையழகைக் காண்பேன். கங்கையும் நிலவையும் அணிந்த நின் தலைமுடியை எண்ணி மகிழ்வேன், சீறும் பாம்பை முடியில் அணிந்த அழகைக் காண்பேன். சரக்கொன்றை மலரணிந்த நின் கற்றைச் சடையழகைக் காண்பேன், எருக்கு, அறுகு, ஊமத்தை மலர்களை அணிந்த நின் அழகைப் பார்ப்பேன். கொக்கின் இறகைச் சூடிய அழகைக் காண்பேன், இடக்கரத்தில் அனலை ஏந்திய உன் அழகினை நன்கு பார்ப்பேன். நடனமாட தூக்கிய அந்த குஞ்சித பாதத்தின் அழகைக் கண்டு மகிழ்வேன், எதிர்த்து வந்த தீமைகளின் ஒருமுகப்பட்ட முயலகனை வலக்காலின் கீழிட்டு ஆடுகின்ற அழகைக் காண்பேன். ஆடலின் போது வீசுகின்ற கரத்தினையும், நேரே வந்து தோன்றும் அழகினையும் கண்டு களிப்பேன். ஆசிவழங்கும் வலக் கரத்தை வணங்கி மகிழ்வேன். பெருமாளும், பிரம்மனும் துதி செய்ய, தேவாதி தேவரெல்லாம் ஜெய ஜெய என்று கோஷமிட, உமையினை இடப்பக்கம் கொண்டு நீ நிற்கும் அழகைக் கண்டு களிப்பேன். நெற்றியில் பூசிய திருநீற்றின் அழகைப் பார்ப்பேன். சந்திரசேகரனாய் தோன்றி ஆருயிர்க்கெல்லாம் அருள்புரியும் காட்சியைக் கண்டு களிப்பேன். கன்னிவனநாதா கன்னிவனநாதா கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேனோ பட்டநாள் பட்டாலும் பதமெனக்குக் கிட்டாதோ நற்பருவமாக்கும் அந்த நாளெனக்குக் கிட்டாதோ எப்பருவமுங் கழன்ற ஏகாந்தம் கிட்டாதோ வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்கத்தி கிட்டாதோ வெந்துயரைத் தீர்கும் அந்த வெட்டவெளி கிட்டாதோ சிந்தையைத் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ அனாடியார்க் கடிமை கொளக் கிட்டாதோ ஊனமற என்னை உணர்ந்து வித்தல் கிட்டாதோ என்னென்று சொல்லுவண்டா என்குருவே கேளடா பின்னை யெனக்கு நீ அல்லாற் பிரிதிலையே. மதுரையம்பதி வாழ் சோமசுந்தர சிவமே! நினது திருவருளைப் பெறாமல் நாட்கள் வீணாகிப் போனாலும், இனியாவது நின்றன் கருணையினைப் பெறாமல் இருப்பேனோ? அருள் கிடைக்காமல் நான் அவதியுற்றாலும் இனியொருநாள் நற்கதியை அடையாமல் போவேனோ? நற்பேறு பெருகின்ற நல்ல காலம் எனக்குக் கிட்டாதோ, அதனால் விளைகின்ற நன்மைகளை நான் அடையும் நாள் வந்து சேராதோ. சதாகாலமும் பேசிக் கொண்டிருக்கும் நிலைமை மாறி உன்னில் மனம் வைத்து வாய் மெளனம் கிட்டாதோ, மேலும் ஜீவராசிகளோடு கூடியிருக்கும் நிலை மாறி சுத்த சிவத்தில் லயிக்கும் ஏகாந்தம் கிட்டாதோ. பிறவியினால் பெற்ற துன்பங்கள் நீங்கி பரவெளியின் அமைதியில் நான் நிலைக்கும் நாள் வாராதோ, எண்ணங்களை அடக்கி ஒருமுகப்படுத்தி உன்னில் ஒன்றும் அந்தத் தேன்சுவையும் கிட்டாதோ. மெய்யடியார் கூட்டத்தில் நான் தொண்டுபுரியும் காலமும் வாராதோ, குற்றமே குணமாக்கொண்ட எனக்கு நின் திருவருளை ஓதுவித்தல் கூடாதோ. சற்குருநாதா, என் குருமணியே! என்னவென்று சொல்லுவேன், என்னவென்று சொல்லுவேன். நின்னையன்றி என்னை ஆதரிப்பார் இல்லையே. கன்னிவனநாதா கன்னிவனநாதா அன்ன விசாரம் அது அற்ற இடம் கிட்டாதோ சொன்ன விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ உலக விசாரம் ஒழிந்தவிடம் கிட்டாதோ மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ ஒப்புவமை அற்றோடொழிந்த இடம் கிட்டாதோ செப்புதற்கும் எட்டாத் தெளிவிடமும் கிட்டாதோ வாக்கு நனாதீத வகோசரத்திற் செல்ல எனைத் தாக்கு மருட் குருவே நிந்தாளிணைக்கே யான்போற்றி. கன்னிவனத்து நாதனே, சிவபெருமானே! சோற்றுக் கவலையே பெருங்கவலை, அந்தக் கவலை இல்லாத இடம் எனக்குக் கிடைக்காதா, தங்கம் தங்கம் என்று பொன்னின் நினைவாக இருக்கும் நினைவு அகன்று அது போன இடம் தெரியாத வெற்றிடம் எனக்குக் கிடைக்காதா. பூலோக வாழ்க்கையின் நிறை குறைகளில் ஈடுபட்ட இவ்வுலக விசாரம் தொலைந்து போன இடம் எனக்குக் கிடைக்காதா. இழிநிலையாம் மகளிரொடு கூடிவாழும் வாழ்க்கை நிலை இல்லாத வெற்றிடம் எனக்குக் கிடைக்காதா. பிறரது சுகவாழ்க்கை, நல்வாழ்க்கை இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து இரங்குகின்ற நிலை மாறி சமமான பார்வை எனக்குக் கிடைக்காதா. சொற்களால் வியந்து போற்ற முடியாத வெற்றிடமும் கிட்டாதோ. வாக்கு, மனம் இவற்றுக்கு அப்பாற்பட்ட இடத்துக்கு எனை செலுத்துவீர் ஐயனே! நினது திருத்தாள் இணையடி போற்றுகின்றேன். (முதல்வன் முறையீடு நிறைவு பெற்றது) 1 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   2 வேண்டுகோள்!   என் அன்பிற்கினிய நண்பர்களே, பாரதி பயிலகம், இலக்கிய பயிலகம், தமிழ் நாடு சுதந்திரப் போர் தியாகிகள் தவிர கம்பராமாயணம் உரை நடை ஆகியவற்றை எனது வலைப்பூக்களில் படித்துவரும் அன்பர்களே! உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன். என்னுடைய கீழ்கண்ட வலைப்பூக்களுக்கு விஜயம் செய்யுங்கள். படித்தபின் தங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள். அவை எனக்கு மேலும் ஊக்கத்தையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் என்பதால் தங்களது கருத்துக்களை தயவு செய்து பதிவு செய்யுங்கள். எனது வலைப்பூக்கள் விவரம் இதோ:– 1.http//www.bharathipayilagam.blogspot.com 2.http//www.ilakkiyapayilagam.blogspot.com 3.http//www.tamilnadythyagigal.blogspot.com 4.http//www.kambaramayanam-thanjavooraan.blogspot.com நன்றி நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்! தஞ்சை வெ.கோபாலன்   3 ஆசிரியர் பற்றி [Kambaramayanam] தஞ்சை வெ.கோபாலன் privarsh@gmail.com வலைத்தளம் : http://tamilnaduthyagigal.blogspot.in/ 38 ஆண்டுகளாய் பொதுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகாகவி பாரதி பற்றி பயிலரங்குகள் நடத்தி வருகிறார். பாரதி பயிலகம், இலக்கிய பயிலகம் நடத்துகிறார். தமிழ் நாடு சுதந்திரப் போர் தியாகிகள் பற்றி எழுதுகிறார். —- 4 நன்றி படங்களுக்கு நன்றி ; திரு. காசிநாதன் அவர்கள், சென்னை pattinathar.kasi@gmail.com []