[] பகுத்தறிவின் முரண்பாடுகள் பகுத்தறியப்படுகிறது - பாகம்-1 பாண்டியன் ரமேஷ் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை பகுத்தறிவின் முரண்பாடுகள் பகுத்தறியப்படுகிறது - பாகம்-1 Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.. This book was produced using PressBooks.com. Contents - பகுத்தறிவின் முரண்பாடுகள் பகுத்தறியப்படுகிறது - பாகம்-1 - என்னுரை - 1. எதுவெல்லாம் காட்டுமிராண்டித்தனம் - 2. தமிழ் ஏன் இப்படி? தமிழர்கள் ஏன் இப்படி? - 3. ஒரு பகுத்தறிவாளனின் வாக்குமூலம். - 4. கொள்கைக்காக மோசம் போகலாமா? - 5. பணத்துக்காக எழுதுபவரும், கொள்கைக்காக எழுதுபவரும் - 6. பகுத்தறிவாளரையும் முட்டாள் என சொல்ல யார் காரணம் - 7. சீமானை திராவிட பகுத்தறிவு கைவிட்டதேன் - 8. சாதிக்கொரு நீதி பேசிய பகுத்தறிவின் சாதனை - 9. விலைவாசி உயர்வுக்கு காரணம் யார்? பகுத்தறிவு கண்டுபிடிப்பு - 10. கேள்வி கேள் என்றோர் - கேள்வி கேட்டால் பாய்கிறார்கள் - 11. திராவிட பேச்சோடு போச்சு - தமிழர் ஒற்றுமை - 12. நாத்திகம், பகுத்தறிவு வளர்ச்சி - 13. பசி வந்தால் பகுத்தறிவும் பறக்கும் - 14. இவர்கள் "தமிழர்கள் ஒற்றுமையை பற்றி" பேசலாமோ - 15. சச்சின் v/s பகுத்தறிவு - 16. கமலுக்கு கருத்து சுதந்திரம் இல்லையாம். உண்மையா? - 17. பார்ப்பனரை ஒழித்து, பார்ப்பனியத்தை வாழ வைத்தோர் - 18. கடவுள் மறுப்பாளர்களும், கடவுள் இருப்பாளர்களும் - 19. அண்ணா கைவிட்ட திராவிடமும், திராவிடம் கைவிட்ட அண்ணாவும் - 20. தமிழர்கள் இளிச்சவாயர்களா? திராவிடம் பரிகாசம் - 21. சாதியை சொல்லி திட்டியதால் உயிரிழந்தவர் - 22. "தி இந்து'...திராவிட பகுத்தறிவுக்கு இதைவிட அவமரியாதை உண்டா - 23. சாதி எதிர்ப்புகளின் சாதி ஒழிப்பு கதை - 24. சீதைக்கு கோவிலா? பகுத்தறிவு கோபாவேசம் - 25. அரசியல் வாரிசுகளுக்கு பாடமான அர்ஜுன் டெண்டுல்கர் - 26. ராவணன் - திராவிடனா? சிங்களனா? - 27. பகுத்தறிவின் "காலம் கடந்த ஞானோதயம்" - 28. விருது வாங்கியவரின் சாதியும், பகுத்தறிவின் புத்தியும் - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 பகுத்தறிவின் முரண்பாடுகள் பகுத்தறியப்படுகிறது - பாகம்-1 [பகுத்தறிவு] உருவாக்கம்: பாண்டியன் ரமேஷ் மின்னஞ்சல்: ooossai@gmail.com மேலட்டை உருவாக்கம்: ப்ரியமுடன் வசந்த் மின்னஞ்சல்: vasanth1717@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். 2 என்னுரை இந்த மின்னூல் தேவையா என்கிற கேள்வி சிலரிடமாவது எழக்கூடும் – காரணம் பகுத்தறிவாளர்களையும் பகுத்தறிய முனைவதால்…உலகிலேயே பகுத்தறிவாளர்களுக்கென்று இயக்கம், அமைப்பு – அதன் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தையே கைப்பற்றல்  என்கிற பெருமைக்குரிய அம்சங்கள் தமிழகத்தில் நடந்திருந்தாலும் – அவை முழுப்பெருமை அடைவது, அதன் நூறு சதவித செயல்பாட்டில் தான். ஆனால் திராவிட பகுத்தறிவாளர்களின் நடவடிக்கைகள் பெருமைக்குரியதாக இல்லை என்பது வருத்தமான உண்மை. மதவாதிகளிடம் இருக்கிற மூட நம்பிக்கைகள், முரண்பாடுகள், பித்தலாட்டங்கள் – இவை அனைத்துமே கொஞ்சமும் குறையாமல் அல்லது இன்னும் அதிகமாகவோ  பகுத்தறிவாதிகளிடமும் காண நேர்ந்தது. அதை, “நமக்கேன் வம்பு” என்று பலர் கண்டுணர்ந்தும் கடந்து சென்றிருக்கலாம். சக பகுத்தறிவாளரான எம்மால் அப்படி கண்டு கொள்ளாமல் செல்ல இயலவில்லை. அதே நேரம், அவர்களின் முரண்பாடுகளை விமர்சிக்கும்போது, “சுயமரியாதைக்காரர்களை விமர்சிக்கலாமா” என்றொரு கேள்வியும் வந்தது. குப்பையை யார் போட்டாலும், தெரு அசுத்தமாக தானே செய்யும். பகுத்தறிவாதி போட்ட குப்பை என்பதற்காக, அவற்றை கூட்டி பெருக்காமல் இருக்க முடியுமா? ஒரு சிறு குற்ற செயலில் இருந்து தேச விரோத நடவடிக்கைவரை, அதை விமர்சிக்க அல்லது கண்டும் காணாமல் போக பகுத்தறிவாதிகள் காட்டுகிற அணுகுமுறை உள்ளதே… மதவாதிகள் தோற்றார்கள். சாதியவாதிகள் தோற்றார்கள். இந்த கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்படும் முரண்பாடுகள் யாவும் – சில மாத விடுதலை பத்திரிகையை வாசித்ததன் விளைவுகள்.. மொத்த பத்திரிகையையும் வாசித்தால் தான் தெரியும் – அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் மொத்த முரண்பாடுகளும்..பகுத்தறிவாதிகள் போட்ட குப்பையை கூட்டி பெருக்கியதன் விளைவே – இந்த மின்னூலில் உள்ள கட்டுரைகள். மேலும் பெரியார் காலம் தொட்டு காணப்படும் முரண்பாடுகளையும் பதிவு செய்திருக்கிறோம். அப்போது தான் இப்போது காண கிடைக்கும் முரண்பாடுகளுக்கு காரணமும், ஆரம்பமும் எங்கே என்று புரியும். சின்ன சின்ன வரலாற்று நிகழ்வினையும் பதிவு செய்ய முடியும். இந்த கட்டுரைகள் இன்றைய காலத்தின் கண்ணாடி… மேலும் அவசிய தேவை எனலாம். ஒரு சாராரின் கட்டுரைகளை மட்டும் வாசித்தால் – நாம் வாழும் காலத்திலேயே பல்வேறு உண்மைகளை அறியாதவர்களாகவே வாழ்ந்து மடிந்தவர்களாவோம். சர்வரோக நிவாரணியாக – அவர்கள் தங்களின் பகுத்தறிவை, பெரியார் சிந்தனைகளை கருதும்போது, அதில் எந்தளவு உண்மை உள்ளது என்று அலசி ஆராய்ந்ததன் பலனே இந்த கட்டுரைகள். திராவிட நாத்திக பகுத்தறிவாளரின் முரண்பாடுகளை, மோசமான அணுகுமுறைகளை சரியான முறையில் ஆய்வு செய்து எழுதியதாகவே நூறு சதம் நம்புகிறேன். வாசியுங்கள். உண்மை இருக்கிறதென ஒப்புக்கொள்வீர்கள். ஒரு சிறுகதை எழுத்தாளனாக துவங்கிய என் எழுத்து பயணம் வார இதழ்களில் வெற்றிகரமாகவே தொடர்ந்தது. சில இலக்கிய அமைப்புகளின் விருதுகள் என்று தொடர்ந்த அந்த பயணம் தடையும் பட்டது. சிறுகதை எழுத்தாளர்களின் கனவு தொடர் எழுதுவது. தொடர்கதைகளை வெளியிடுவதற்கான சூழலை தற்கால பத்திரிகைகள் கொண்டிருக்கவில்லை என்பதால் எழுதுவதை நிறுத்தினேன். வார பத்திரிகை ஆசிரியர்களிடம் தொடர் எழுத வாய்ப்பு கேட்டபோது, “இணையத்தில் எழுத சொன்னார்கள்”. அதற்கு பிறகு தான் கணினியை பயன்படுத்தவே கற்றுகொண்டேன். பதிவுலகில் எழுதுபவர்கள் தந்த பிளாக்கர் டிப்ஸ்களை வாசித்து, வலைத்தளம் துவங்கினேன். வலையுலகிற்கு (http://oosssai.blogspot.com) வந்தும் நிறைய எழுதிவிட்டேன். நிறைய வாசிக்கிற வாய்ப்பையும் பெற்றேன். இன்றைக்கு இந்த மின்னூலையும் வெளியிட்டுள்ளேன். பள்ளி இறுதியாண்டை கூட தாண்டாத நான், இந்த மின்னூலை நானே உருவாக்குகிற அளவு கணினி அறிவு பெற்றதற்கு, இணையத்தில் தமிழில் கொட்டிகிடக்கிற கணினி சார் எழுத்துகளே காரணம். வாழ்க தமிழ். இந்த நேரத்தில் – இணையத்தில் எழுதும் யோசனை தந்தவர்களை நினைத்து பார்க்கிறேன். நன்றி கூறுகிறேன். எனது கட்டுரைகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தபோதும், உண்மைகளை எழுதுகிறோம் என்கிற பெருமிதம் கொள்கிறேன். உண்மையை எழுதுவதும், உண்மையை பேசுவதும் சமூகத்திற்கு ஆற்றும் பணியாகவே கருதுகிறேன். இந்த சேவை தொடரும் – வாசிப்பாளர்களின் பங்களிப்போடு… நன்றி. அன்புடன், பாண்டியன் ரமேஷ். ooossai@gmail.com [pressbooks.com] 1 எதுவெல்லாம் காட்டுமிராண்டித்தனம் எதையெல்லாம் காட்டுமிராண்டித்தனம் என கூறலாம். மதவாதம் மற்றும் ஆத்திகர்களின் மூடநம்பிக்கைகளை காட்டுமிராண்டித்தனம் எனலாம். ஆனால் இங்கே ஒருவர் நாத்திகத்தையும் காட்டுமிராண்டித்தனம் என்கிறார். தெரிந்து சொல்கிறாரா அல்லது தெரியாமல் சொல்கிறாரா… இதற்கு நாத்திக திராவிட பகுத்தறிவு என்ன கருத்து சொன்னது என்று பார்ப்போம். இந்த கேள்வி-பதிலை வாசியுங்கள். பகுத்தறிவு ஏடு உண்மையில் வந்தது. காஞ்சியை சேர்ந்த க.திராவிட முரசு என்பவர் கேள்வி : தோழர் ஜெயகாந்தன் அவர்கள் சபை நடுவே என்ற புத்தகத்தில் ஆத்திகமான காட்டுமிராண்டித்தனங்களும் நாத்திகமான காட்டுமிராண்டித்தனங்களும் வளர்ந்து கொண்டு இருக்கின்றன என எழுதியுள்ளாரே, இதைப்பற்றி தாங்கள் கூறுவது என்ன? அய்யா கி.வீரமணி பதில் : தோழர் ஜெயகாந்தன் எனது இனிய நண்பர்; அவர் கருத்தையெல்லாம் அதற்காக நான் ஏற்க முடியுமா? நட்பு வேறு; கொள்கை வேறு. “நாத்திகம் காட்டுமிராண்டித்தனம்” என்று சொன்ன ஜெயகாந்தனின் கூற்றுக்கு கி.வீரமணி அய்யாவின் இந்த பதில் மட்டும் போதுமானதா? நாத்திகம் குறித்து “எவர் ஒருவர் இப்படி கருத்துரைத்தாலும் அவர்களின் பதில் இப்படி தான் இருக்குமா?” சொன்னவர் யார் என்று பார்த்து அதற்கேற்ப்ப, அவர்களின் கருத்து வந்திருக்கும். ஜெயகாந்தன் ஒரு முற்போக்காளர், முன்னாள் கம்யூனிஸ்ட், இலக்கியவாதி… இவர்கள் உலக நூல்களை கரைத்து குடித்த அளவுக்கு, அவரும் நாத்திகத்திலிருந்து ஆத்திகம் வரை, தீவிரவாதத்தில் இருந்து மிதவாதம் வரை என்று கரைத்து குடித்தவர். அவர் ஏன் நாத்திகத்தை காட்டுமிராண்டித்தனம் என்று கூற வேண்டும். இங்கர்சால் போன்ற பகுத்தறிவாளர்களை படித்தவருக்கு இங்கே பகுத்தறிவாளர்களாக உள்ளோர் செயல்  ஏன் காட்டுமிராண்டித்தனமாக தோன்றி இருக்கிறது. மேற்கண்ட வாசகர் கேள்விக்கு ஆற அமர யோசித்து, “ஜெ.கா சொல்வதில் உண்மை இருக்க வாய்ப்புள்ளதா” என்பதாகவும் சிந்தித்து, ஜெயகாந்தனின் கூற்றில் தவறு இருந்தால், அவருக்கு தம் பதிலை தெரிவித்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி இல்லாது, ” நட்பு வேறு; கொள்கை வேறு.” என்று சொல்வது, அந்த கேள்வியை கடந்து போக நினைப்பதாக தான் தோன்றுகிறது. ஜெயகாந்தனின் கருத்து ஏற்புடையது தானா? ஜெயகாந்தன் சொன்னதில் ஒரு திருத்தம் உள்ளது. காட்டுமிராண்டித்தனம் என்கிற வார்த்தைக்கு பதிலாக வேறு வார்த்தை உபயோகித்திருக்கலாம். காட்டுமிராண்டிதனம் என்பது மிக கடுமையான வார்த்தை. இன்னும் அந்த நிலையை அவர்கள் அடையவில்லை. சரி, வேறு என்ன வார்த்தை உபயோகிக்கலாம். சில சமீபத்திய நாத்திக திராவிட நடவடிக்கைகளை பார்த்துவிட்டு, என்ன பெயரிடலாம் என்று பார்ப்போம். சமீபத்தில் காவல்துறையில் உயரதிகாரிகளாக இருந்த நடராஜ் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகியோர் – அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அரசு உயர்பதவியில் இருந்தவர்கள், ஒய்வு பெற்றதும் கட்சியில் சேருவதை திராவிட பகுத்தறிவு விமர்சித்து எழுதும். காரணம், இப்படி இணைபவர்கள் – தங்கள் பதவி காலத்தில் எப்படி பக்கச் சார்ப்பற்று நேர்மையுடன் பணியாற்றி இருப்பார்கள் என்ற கேள்வியை எழுப்பும். நியாயமான கேள்வி தான். ஆனால், காங்கிரஸில், தி.மு.க.வில் மற்றும் சாதிக்கட்சிகளில் யாரேனும் அரசு அதிகாரிகள் சேர்ந்தால் விமர்சிக்கிற வேலையை செய்ய மாட்டார்கள். அ.தி.மு.க, என்றால் மாத்திரம் கேட்பார்கள். சரி, அ.தி.மு.க.வில் இணைகிற எல்லோரையும் ஒரே மாதிரி விமர்சிப்பார்களா என்று பார்த்தால் – அதிலும் பகுத்தறிவு சறுக்கும். பெயரை பார்த்து – என்ன சாதி, என்ன மதம் என்று கண்டுபிடித்து விமர்சிக்கும். அப்படி தான் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த நடராஜையும், அலெக்ஸாண்டரையும் சாதி, மதம் பார்த்து – நடராஜ் அவர்களை மட்டும் விமர்சித்துள்ளது. அலெக்ஸாண்டரை கண்டு கொள்ளவில்லை…. “ஒரு தவறை தட்டிக்கேட்க பகுத்தறிவு எவ்வளவு தூரம் சிந்திக்கிறது பாருங்கள்”. ஆனால் பெருமைபடக்கூடிய வகையில் இல்லையே – சிந்தனை. நேர்மையாளராக திராவிட பகுத்தறிவிருந்தால், “அரசு ஊழியர்கள் எவரும் தங்கள் ஒய்வுக்கு பிறகு கட்சியில் சேரக்கூடாது” என்று சட்டமியற்ற போராடுங்கள். அதைவிடுத்து இந்த இடத்திலுமா ஆளுக்கொரு நீதி. ” இத்தகைய நேர்மையற்ற, கண்மூடித்தனமான போக்கை தான் ஜெயகாந்தன் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால், அது காட்டுமிராண்டித்தனம் அல்ல – அதற்கு அடுத்த நிலையில் இருக்கிற பித்தலாட்ட குணம். அடுத்தது – சமீபத்தில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில், ஒரு பெண்ணை விபச்சாரத்திற்கு உட்படுத்தி, அந்த பெண்ணை கொடூரமான முறையில் சித்திரவதை செய்திருக்கின்றனர். அவர் மார்பை வெட்டி எறிந்திருக்கின்றனர். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தை குஜராத்தில் நடந்தது போல இப்படி தலைப்பிட்டிருக்கின்றனர். ” குஜராத் – மோடி ஆட்சியில், விபச்சாரத்துக்கு உடன்படாத பெண்ணின் மார்பகங்கள் அறுப்பு! ” மோடி – எதிரி தான். அதற்காக உண்மை செய்தியை மறைப்பது அயோக்கியத்தனம் இல்லையா? . இந்த அயோக்கியத்தனத்தை தான் ஜெயகாந்தன் தவறுதலாக காட்டுமிராண்டித்தனம் என்று கூறிவிட்டார். ஒரு மகளிருக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் கூட அரசியல் செய்யும் அயோக்கியதனம், காட்டுமிராண்டித்தனமன்றி வேறென்ன என்று கூட சொல்லலாம். ..ஒரு பதினைந்து நாள் செய்திகளிலேயே – திராவிட பகுத்தறிவிடம் இத்தனை புரட்டு இருந்தால், இதுவரை எத்தனை புரட்டு இருந்திருக்கக்கூடும். இந்த புரட்டை தான் ஜெயகாந்தன் காட்டுமிராண்டித்தனம் என்று கூறி இருக்க வேண்டும். நாத்திகமும், திராவிட பகுத்தறிவும் – இத்தகைய பழிச்சொல், இழிச்சொல்லில் இருந்து தப்பிக்க என்ன வழி. நேர்மையாக இருத்தல், நேர்மையாக பேசுதல்… நாம் மேற்கண்டு சொன்ன நிகழ்வுகளில், நாத்திகத்தின் அறிவு நாணயமற்ற செயலே வெளிப்படுகிறது. அதிலிருந்து அவர்கள் மீளாதவரை – மதவாதம் எந்தளவு விமர்சிக்கப்படுகிறதோ, அதே அளவு பகுத்தறிவாதமும் விமர்சனத்துக்கு ஆளாகத் தான் நேரிடும். 2 தமிழ் ஏன் இப்படி? தமிழர்கள் ஏன் இப்படி? தமிழர்களின் ஒற்றுமையின்மை குறித்து பேசிக்கொண்டே இருக்கிறோம். அவன் பிற மொழி பேசுபவர்களால் தொடர்ந்து சுரண்டப்படுவதை கவலையுடன் பார்க்கிறோம். பல பதிவுகள் நாமும் எழுதி உள்ளோம்.சமீபத்தில்  வாசித்த சில தகவல்கள் – மற்றுமொருமுறை தமிழர்களின் ஒற்றுமையின்மை குறித்து சிந்திக்க வைத்தது. “தமிழ் ஏன் இப்படி? தமிழர்கள் ஏன் இப்படி?” என்று.  வாசித்ததை தந்த பிறகு எம் கருத்தை வைக்கிறோம். “உலக நாடுகளில், இனப்பற்று மிகுந்த மக்கள் : ஸ்வீடன் 97%; அயர்லாந்து 97%; கிரேக்கம் 97%; டென்மார்க் 96%; பிரான்சு 92%; இத்தாலி 91%; ஸ்பெயின் 90; பிரிட்டன் 87; ஜெர்மனி 86; ஆலந்து 79%; —இப்புள்ளிவிவரப் பட்டியலை அளித்தவர், s.sachchithanantham-La France et Les Francais, p. 376. [இந்தியர்களில், மலையாளி 100%; கன்னடன் 100%; தமிழன்...???] ரூத் பெனடிக் [Ruth Benedict] என்னும் மானுட இயல் அறிஞர், Pattern of Culture [pp. 57, 131, 123, 173] என்னும் நூலில் உலகில் உள்ள பல்வேறு இனத்தவரின் போர்க் குணங்களை ஆராய்ந்து சொல்லியிருக்கிறார். அவற்றில் சிலவற்றை, ‘தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?’ என்னும் தம் நூலில் மேற்கோள் காட்டிய தமிழறிஞர், டாக்டர் க.ப.அறவாணன் அவர்கள், தமிழன் தன்மானம் குன்றி வாழ்ந்ததற்கான காரணங்கள் பலவற்றையும் விவரித்திருக்கிறார்.ஓர் இனம் வளர்வதற்கும், உயர்வதற்கும், தளர்வதற்கும், தாழ்வதற்கும் முதன்மைக் காரணம், அவ்வினத்துக்கு அவ்வப்போது அமையும் தலைமை ஆகும். நம் மாநிலத்தில் வாழும் தமிழினம் முன்னேற வேண்டுமானால், இங்கே மிகச் சிறந்த தன்னலம் கருதாத தலைமை தேவை.” என்கிறது மிக உண்மை. தமிழர்களை பொறுத்தவரை மொழிக்காகஉணர்வுடன் வாழ்ந்த, வாழுகிற தமிழ் தலைவர்கள் மிக குறைவு. அப்படி தோன்றினாலும், அவனை வளரவிடாமல் செய்வது – போலி தமிழ் (திராவிட)தலைமைகளின் வேலை. இந்த போலி தமிழ் தலைமையின் சாதுர்யம் – வீரியத்துடன் இருக்கிறவரை தமிழர்களின் ஒற்றுமை என்பது சாத்தியமே இல்லை. நல்ல தலைவர்களை தக்கவைத்து கொள்ள இயலாமல் – முரண்பட்ட மனிதர்களை, தம் தலைவர்களாக தமிழர்கள் கொண்டதால் – புள்ளி விபரத்தில்  சொன்னது போல தமிழர் நிலைமை இவ்வாறானது. தாய்மொழியை, இனத்தை பழிப்பவனை கூட, நேர்மையாக விமர்சிக்க வேண்டும் என்கிற பகுத்தறிவில்லாமல், இதிலும் ஆள் பார்த்து பதிலடி தருகிற வேலையை செய்யும்போது – மொழியும், இனமும் எப்படி உயர்வடையும். பல தமிழ் தலைவர்கள் முரண்பாடுகளை ஒவ்வொரு பதிவாக பதிவிட இருக்கிறேன். முதலில் பகுத்தறிவு பகலவன் பெரியாரில் இருந்து தொடங்குவோம். இப்படி இருந்தால் தமிழர்களின் ஒற்றுமை எங்ஙனம் இருக்கும். பெரியார் தமிழின், தமிழர்களின் பெருமை குறித்து 1938ல் பேசியது. “சட்டசபை உறுப்பினர்களுக்காக, “ஏ, சட்டசபைத் தமிழா! நீ சர்வமுட்டாள் அல்ல. தாய் நாட்டுக்குத் துரோகம் செய்யும் தறிதலை யல்ல. தாய் பாஷையைக் கட்டாயமாக்கக் கூடாதென்று கருதித்திரியும் சண்டாளனல்ல. நீ தமிழன்; உன் தந்தை தமிழன்; உன் தாய் தமிழ் மகள்; உற்றார் தமிழர், உறவினர் தமிழர். உனது முறுக்கேறிய நரம்புகளில் ஓடுவது வீரத்தமிழர் குறுதி. கட்டாய இந்தியால், உன் தமிழ் நாலா வகையிலும் நசுக்கப்படுகிறது. பாஷா பாடங்களைத் தமிழில் கற்பிப்பதால் தமிழ் விருத்தியாய் விடும் என்று கருதி மயங்காதே தனராசி எண், ரிணராசி எண், வியாசார்த்தம், அனுபூரகம், குணரங்கம் என்றெல்லாம் உன் தமிழ் பாஷையில் நீ கேட்டதுண்டா? இவையெல்லாம் உன் தாயை, உன் தமிழைக் கொல்லுவதற்குப் பார்ப்பனர் விடும் அம்புகள் என்று நினைக்கின்றாயா? அவர்கள் பேச்சு வழி நின்று உன் தாயை – உன் தமிழை – இம்சிக்காமல், தமிழைக் கட்டாய பாடமாக்க வேண்டுமென்று இப்போதே தீர்மானிப்பாயாக. இல்லையானால், தமிழைக் கட்டாயமாக்க வேண்டுமென்று முயலாயானால், நீ உன் நாட்டுக்குத் துரோகியாவாய்; உன் நாட்டு மொழிக்குத் துரோகியாவாய்; உன் நாட்டின் கலைக்கு விரோதியாவாய். நீ மானமுள்ள தமிழனானால், மதி மிகுந்த தமிழனானால் உன் பெற்றோரின் தமிழ் ரத்தம் உன் உடலில், நரம்பில், உதிரத்தில் தோய்ந்திருக்குமானால், இப்போழுதே – ஏன் இன்றே – எங்கள் நாட்டில் எங்கள் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டுமென்று ஒரு தீர்மானம் அனுப்புவாயாக. தமிழை ஒவ்வொருவறும் கட்டாயம் படித்தால்தானே தமிழ் கலைச் சொற்களையுண்டு பண்ண முடியும். உங்கள் தமிழைக் கட்டாயமாக்க முயற்சி செய்யாமல் இருப்பது உங்கள் தகுதிக்கு அடுக்குமா? நீங்கள் தன் உணர்ச்சியில்லாத விலங்குகளா? தாய் பாஷையில் அபிமானமில்லாத தசைப்பிண்டங்களா? தேசத்தின் பெயரையோ சமூகத்தின் பேரையோ, அரசியல் கொள்கையின் பெயரையோ சொல்லிச் சிறை சென்றவர் எல்லா நாட்டிலும் உண்டு. நீ, விரும்பும் இந்தி பேசும் நாட்டிலும் உண்டு. தான் பேசும் பாஷை குறித்து சிறை புகுந்த தீரம் தமிழனுக்கு உண்டு! தாய் பாஷைக்காகச் சிறை புகுந்தான், புகுகிறான், புகுவான்; தடியடி பட்டான், படுகிறான், படுவான்; சகல துன்பங்களையும் அனுபவிப்பான், அவன் பேசும் தமிழை தாய் பாஷையாக உடைய நீ இப்படித் தாய்பாஷையை கட்டாயமாக்கக் கூடாது என முயலும் துரோகியாகப் போகிறாயா? போவாயானால் ஏ,துரோகி உன் சட்டசபை வாழ்வுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதென்று எண்ணிக்கொள்.” உண்மை கண்டோன் என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் வீராவேசமாக எழுதிய கட்டுரை — ”குடி அரசு” – 04.09.1938. நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. “இப்படியொரு தமிழர் தலைவரை பெற நாம் என்ன பாக்கியம் செய்தோம்” என்று. ஆனால் தமிழர்களின் சந்தோஷம் எப்போதும் அற்ப ஆயுசு கொண்டது தானே. அதே பெரியாரின் நாக்கு எப்படி புரள்கிறது என்று பாருங்கள். மொழியையும், உணர்வையும் எப்படி பழிக்கிறார் என்பதையும் பாருங்கள். “பேச்சு, நா இரண்டுடையார் போற்றி” என்று அறிஞர் அண்ணா யாருக்கோ சொன்னது – அவரின் குருநாதர் பெரியாருக்கும் பொருந்தியது தான் விந்தை. 1938ல் இந்தியை எதிர்த்தவர், 1965ல் இப்படி பேசுகிறார். “தமிழுக்கென்று – தமிழர் சார்பாக – நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் பெரியார் ‘காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து’ நடக்கும் போராடம்மாக வர்ணித்து கொச்சை படுத்தினார். “இந்தியைத் திணிப்பதில்லை என்று அன்றே காமராசர் எனக்கு எழுதித் தந்திருக்கிறாரே! அந்த உறுதிமொழியை அரசினரும் மீறாதபோது, ஏன் கிளர்ச்சி செய வேண்டும்? பதவியைப் பிடிப்பதற்காகக் கண்ணீர்த்துளிகள் (திமுக) செத்த பாம்பை (இந்தி எதிர்ப்பு) எடுத்து ஆட்டுகின்றனர்”.கவிஞர் கருணானந்தம்: “தந்தை பெரியார்” புத்தகம், பக்கம் 416-418. என்று 1965 ஜனவரி 19 அரகண்டநல்லூரில் பேசினார். போராடிய மாணவர்கள் எல்லாம் புத்தி கெட்டு போராடினார்களா? 1938ல் மொழிக்காக சிறை சென்றதை பெருமையாக பேசியவர், காமராசருக்காக மொழிப்பற்றை தியாகம் செய்துவிட்டாரா என்கிற கேள்வி நம் மனதில் எழுகிறது. மேலும் சொல்கிறார். தமிழ் ஆதரவாளர்களை(தி.மு.க என்கிற கண்ணீர்துளிகளை) இப்படி சாடுகிறார். ‘பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறிவிடுவோம்’ என்று சொல்கி றார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளை யெல்லாம் கல்லூரியிலும் கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்கு கிறோம் என்றுதானே பொருள்? இப்படி யான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்த தாகத்தானே முடியும்? இதுதானா இந்தச் சிப்பாய்கள் வேலை? – விடுதலை (5.4.67)யில் பெரியார். 1938ல் ” உன் பெற்றோரின் தமிழ் ரத்தம் உன் உடலில், நரம்பில், உதிரத்தில் தோய்ந்திருக்குமானால்,” என்றெல்லாம் சூடாக பேசியவரும், “தமிழை ஒவ்வொருவறும் கட்டாயம் படித்தால்தானே தமிழ் கலைச் சொற்களையுண்டு பண்ண முடியும்.” என்றெல்லாம் பேசியவர், “தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார்.” எனவும் எழுதுகிறார். பெரியார் விடுதலை(27.11.43)யில்.. ஆனால் எந்த அனுபவப் புலவர்  அப்படி கேவலமாக சொன்னார் என்று சொல்லவில்லை. ” இதே கருத்தை வேறு எவரேனும் சொல்லி இருந்தால் – தமிழினத்திற்கே துரோகி ஆகி இருப்பார்கள். பெரியார் சொன்னதால், சொன்ன கருத்தை பூட்டி வைத்து, நல்லதாக சொன்ன கருத்துகளை மட்டும் நடமாட விடுகிறார்கள். தமிழ்பற்றாளர்களை பற்றி மேலும் சொல்கிறார். “நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.” தந்தை பெரியார் விடுதலை (16.3.67) பெரியார் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. பெரியார் தம் அனுபவத்தில் இருந்தே பல கருத்துகளை சொல்வதால், “1938ல் பிழைப்பில்லாமல் இருந்ததால், தமிழை காக்க அவர் நினைத்திருக்கலாம்”. 50களுக்கு பிறகு  பிழைப்பு நடத்த வேறு விஷயங்கள் கிடைத்ததால் தமிழை கைவிட்டிருக்கலாம்.. இந்தியாவில் மொழிப்பற்று, இனப்பற்று கொண்டார் வரிசையில்  , மலையாளி 100%; கன்னடன் 100%; தமிழன்…??? புரிகிறது  தமிழர்கள் ஏன் கடைசி இடத்தில் இருக்கிறார்கள் என்று. 3 ஒரு பகுத்தறிவாளனின் வாக்குமூலம். பலரும் திராவிட பகுத்தறிவை விமர்சிக்கிறார்கள். அதற்கு சிலர் சீற்றம் கொள்கிறார்கள். சரி, ஏன் பகுத்தறிவை விமர்சிக்கிறோம். பகுத்தறிவை விமர்சிக்க வேண்டிய அவசியமென்ன? அவை பகுத்தறிவு என்று சொல்லி கொண்டு, பகுத்தறிவாக இல்லாத காரணத்தால் விமர்சிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. இதோ ஒரு உதாரணம். ஒரு திராவிடர் பகுத்தறிவு கூட்டத்தில் ஒரு பகுத்தறிவாளர் பேசிய பேச்சு இது. இதை ஒரு பகுத்தறிவாளனின் வாக்குமூலம் என்றும் வைத்து கொள்ளலாம். “எங்களுக்கு விடுதலை ஏடு தான் வழிகாட்டி. சென்னையில் கண்ணகி சிலை இடிக்கப்பட்டபோது என்னிடம் சிலர் கேட்டார்கள். கண்ணகி சிலை இடிக்கப்பட்டது பற்றி உங்கள் கருத்தென்ன என்று கேட்டனர். “இருங்கள் நாளைக்கு விடுதலையில் அது பற்றி என்ன கருத்து சொல்லப்படுகிறது என்பதைப் படித்து விட்டுச் சொல்லுகிறேன். இடித்தது சரி என்று எழுதி இருந்தால் சரிதான் என்பது எனது பதிலாக இருக்கும். சரியில்லை என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டு இருந்தால் ஆமாம் சரியில்லை என்று சொல்லுவேன்” என்று நான் தெரி வித்தபோது அந்த தோழர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.” என்றார் மேடையில். சக தோழர்கள் – இவரின் பதிலை கேட்டு ஆச்சர்யப்பட்டு போனார்களாம். ஏன் ஆச்சர்யப்பட்டார்கள். “இது தான் பகுத்தறிவா? இவ்வளவு தான் பகுத்தறிவா? இவர்கள் தான் பகுத்தறிவாளர்களா?” என்று ஆச்சர்யத்துடன் இவருக்கென்று சுய அறிவோடு எந்த கருத்தும் இருக்காதோ என்று கவலையும் பட்டுப்போயிருப்பார்கள். கண்ணகி சிலைக்கு மட்டுமல்ல, எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும். அதனால் தான் பகுத்தறிவு பரிகாசத்துக்கு ஆளாகிறது. “வெள்ளிக்கிழமை யாருக்கும் பணம் கொடுக்க மாட்டார்கள் பார்ப்பனர்கள்” காரணம்? “கொடுக்கக்கூடாதுனா கொடுக்கக்கூடாது” என்று பதில் வரும். அத்தகைய ஒரு கண்மூடித்தனத்தை தான் பகுத்தறிவாளனின் வாக்குமூலம் இயம்புகிறது. “பகுத்தறிவு என்றால் என்ன? ஜீவப் பிராணிகளின் சிந்தனா சக்தியையும், சிந்திப்பதின் உணர்ச்சியையும் தான் அறிவு என்று சொல்லப்படுகிறது. அச்சிந்திக்கும் தன்மையின் கூர்மையை பகுத்தறிவு என்றுச் சொல் லலாம். ஆனால் அப்பகுத்தறிவை பெரிதும் மனிதனுடைய சிந்திக்கும் தன்மைக்கும், சிந்திப்பதின் கூர்மைக்குமே சொல்லப்படுகின்றது.” என்று பெரியார் சொன்னது – அவர் வழி செல்பவர்களாலேயே நிராகரிக்கப்படுகிறது. “நாம் ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லி இருக்கிறோம். விடுதலையை மட்டும் வாசித்தால், பார்ப்பனர்களின் பத்திரிகைகளை மட்டும் வாசித்தால் “நிச்சயம் கிணற்று தவளைகளாக தான் இருப்போம்” என்று. இரண்டு உதாரணங்களாக பார்ப்பன பத்திரிகையை மட்டும் வாசிப்பவரையும், பகுத்தறிவு ஏட்டை மட்டும் வாசிப்பவரையும், அவர் தம் அறிவையும் பார்ப்போம். நணபர் ஒருவர் – சமீபகாலமாக துக்ளக்கில் வரும் ஈழம் குறித்த செய்திகளை முழுமையாக நம்புபவர். எப்போதும் ஈழம் குறித்து, புலிகள் குறித்து சோ என்ன எழுதுகிறாரோ அதை பூரணமாக நம்ப கூடியவர். “ஈழத் தமிழர்களின் அவலத்துக்கு புலிகளே காரணம்” என்கிற சிந்தனை அவருள் ஆழமாக வேர்விட்டிருந்தது. அதனால் இப்படி சொன்னேன். “இப்படி கண்மூடித்தனமாக ஒரு சாராரின் கருத்தை மட்டும் உண்மை என்று நம்புவது – எந்த ஒரு நிகழ்ச்சி, சம்பவத்திலும் உண்மையை மட்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நம் ஆர்வத்துக்கு தீங்கானது. இரண்டு தரப்பின் கருத்து, பக்கச் சார்பற்றோர் கருத்து என ஒரு விஷயத்தில் – உண்மையை அறிந்து கொள்ள நிறைய தரப்பின் கருத்துகளை அறிய வேண்டும். பிறகு உண்மை எதுவாக இருக்கும் என்பதை உணரலாம்” என்றேன். ஆனால் நண்பரோ “சோ சொன்னால் சரியாக தான் இருக்கும்” என்று உறுதியாக சொன்னார். வாசிப்பாளர்களின் இத்தகைய மூர்க்கத்தனத்துக்கு சாமானியன் என்றோ, பகுத்தறிவு இதழ்களை வாசிப்பவன் என்றோ விதிவிலக்குகளை வைக்க இயலாது. அதை தான் ஆரம்பத்தில் சொன்னோம். “விடுதலை என்ன சொல்கிறதோ, அதுவே என் கருத்தும்” என்றவரின் கூற்றும். விடுதலையை வாசித்தால் போதுமா? உண்மையை பகுத்தறிவுடன் அறிய இயலுமா? பார்ப்போம். ஈழம் குறித்து, புலிகள் குறித்து சோ சொல்வதை மட்டும் நம்பும் ஒருவரை பார்த்தோம். அதே போல விடுதலை ஏட்டின் பேச்சை நம்பி – “புலிகள் தவறே செய்யாதவர்கள்” என்று நம்பும் மூளைசலவை செய்யப்பட்ட ஒரு அப்பாவி பகுத்தறிவாதியை பார்ப்போம். ஒரு பகுத்தறிவு நண்பருடன் பேசி கொண்டிருந்தபோது, “புலிகள் செய்த படுகொலைகள் குறித்த பேச்சு வந்தது”. அப்போது “புலிகள் ஒரு சிவிலியனை கூட கொன்றது இல்லை” என்றார். “எப்படி சொல்றிங்க” என்று கேட்டேன். “விடுதலையில் இதுவரை அப்படி ஒரு செய்தி வந்ததே இல்லை” என்றார். சிரிப்பு தான் வந்தது. அதனால் தான் இவரை பற்றி சொல்லும் போது, “மூளைசலவை செய்யப்பட்ட ஒரு அப்பாவி பகுத்தறிவாதி” என்று சொன்னோம். அவருக்காக தேடி பிடித்து விடுதலை(சனி, 23 மார்ச் 2013 )யில் வந்த இந்த செய்தியை காட்டினோம். “கேள்வி: விடுதலைப்புலிகள் இலங்கையில் சிங்களவர்களைத் தாக்கியதுண்டா? – சேலம் இராசு. கி.வீரமணியின் பதில்: பொதுவாக இல்லை; சிங்கள இராணுவ வீரர்கள் பிடிபட்டபோதுகூட மனிதநேயத்துடன் நடத்தியதை அவர்களே கூறி, செய்தித்தாள்களில் இலங்கையிலேயே வந்துள்ளது ; எங்காவது அத்தி பூத்ததுபோல ஒன்றிரண்டு சம்பவங்கள் நடை பெற்றிருக்கலாமே தவிர, வேறில்லை.” தோழர் வாசித்தார். “இதில் புலிகள் படுகொலைகள் செய்திருப்பார்கள்” என்று உறுதியாக சொல்லவில்லையே” என்றார். செய்தியை ஆதாரத்துடன் காட்டினாலும், அழகாக நழுவுவதில் குறியாக இருக்கிறார். கேள்வி கேட்பது தான் பகுத்தறிவு என்பார்கள். இவர்களோ தப்பிக்கும் பதிலில் பகுத்தறிவை வைத்திருக்கிறார்கள். “தோழரே, இதில் புலிகள் படுகொலைகள் செய்திருப்பார்கள்” என்று உறுதியாக சொல்லவில்லை தான். அதே நேரம் உறுதியாக படுகொலைகள் செய்யவில்லை என்று ஏன் சொல்லவில்லை. அப்படி சொன்னால் கேவலப்பட்டிருக்கும் பகுத்தறிவு. அங்கொன்றும், இங்கொன்றுமாக என்கிறார்கள் – அதில் தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லீம்கள்” என்று சரிசமமாக இருப்பார்கள். அங்கொன்றும், இங்கொன்றும் என்று சொல்லி இருக்கக்கூடாது. அங்கு நூறும், இங்கு நூறும் என்று சொல்லி இருக்க வேண்டும் தோழரே. மௌனத்தின் வலி என்று கலைஞர் மு.கருணாநிதி சொல்வதை கேளுங்கள் “இளந்தலைவர் ராஜீவ்காந்தியும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்தினமும், பத்மநாபாவும், யோதீஸ்வரனும் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கிய போது – அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?” என்று கேட்டார். கலைஞர் கண்ணீர் விட்ட அனைவரும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் தாம். கலைஞர் சொன்னாலாவது நம்புவீர்களா” என்று கேட்டோம். “முடியாது. விடுதலை ஏடு சொன்னால் தான் நம்புவோம். விடுதலை ஏடு – புலிகளை படுகொலையாளர்கள் என்று சொன்னால் தான் நாங்களும் சொல்வோம்.” என்றார். அது நடக்கிற காரியம் இல்லையே. சோ எப்படி புலிகளை நல்லவர்கள் என்று சொல்ல போவதில்லையோ, அதே போல வீரமணியார் புலிகளை படுகொலையாளர்கள் என்று சொல்ல போவதில்லை. யாருக்கும் எந்த விஷயத்திலும் உண்மைகளை பகுத்தறிய வேண்டும் என்றும் தோன்ற போவதில்லை. இது ஒரு உதாரணம் நிச்சயம் தமிழ் சமூகத்துக்கு தான் பெரிய பின்னடைவு. இப்படித்தானே ஒவ்வொரு தமிழர்களின் பிரச்சனைகளில் ஆளுக்கொரு தீவாக இருந்து கொண்டு… தன்னை தானே அழித்து கொள்கிறது தமிழ் சமூகம். இதோ இன்னொரு உதாரணம். கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா பதவி ஏற்றதும், “வந்துட்டாரய்யா பகுத்தறிவாதி சித்தராமையா – கர்நாடக முதல்வராக. இனி காவிரி பிரச்சனையை மனித நேயத்துடன் அணுகுவார்” என்று அய்யா கி.வீரமணி ஒரு பக்கத்துக்கு கட்டுரை தீட்டினார். ஆனால் நடந்தது? நான் பகுத்தறிவாதி அல்ல – கர்நாடக வாதி, பெரு மழை பெய்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் ” என்று எடீயூரப்பாவை போன்ற இடையூரப்பாவாக மாறி உள்ளார் சித்தராமையா . ஆனால் அதை பற்றிய செய்தியையே விடுதலையில் காணவில்லை. இப்படி இருக்கிறது திராவிடர்களின் திருமுகம். இதை வாசித்து ஒருவன் உலக பகுத்தறிவை வளர்க்க போகிறானா? உள்ளூர் அறிவையே வளர்க்க இயலாது.  ஒரு பகுத்தறிவாதி,  “விடுதலை – கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கண்டித்தால் தான் நானும் கண்டிப்பேன்” என்று சொன்னால் தமிழர்களின் மீதும் அக்கறை இல்லை, பகுத்தறிவு குறித்த தெளிவும் இல்லை என்று தானே அர்த்தம். துக்ளக் வாசகனுக்கு இந்த கிணற்று தவளை நிலை சரி. பகுத்தறிவாளனுக்கு? “சரியாக இருந்தாலும் சரி பார்க்க வேண்டியது தானே பகுத்தறிவு பணி” அதை செய்யவில்லையே பகுத்தறிவு. 4 கொள்கைக்காக மோசம் போகலாமா? காசுக்காக பொய் செய்தி போடுபவனை விட மோசமானவன்,  கொண்ட கொள்கைக்காக பொய் செய்தி போடுபவன் என்று  சில கட்டுரைகளில் தெரிவித்திருந்தோம். அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று நிருபித்திருக்கிறது திராவிட பகுத்தறிவு. நேற்று காலையில் ஒரு செய்தி வாசித்தோம் – தினசரியில், “மகாராஷ்டிராவில், தானே அருகே பிவாண்டி நகரம் உள்ளது. இது, ஜவுளித் தொழிலுக்கு புகழ் பெற்றது. ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வந்துசெல்வதால், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்தது. வெளி மாநிலங்களில் இருந்து, புரோக்கர்களின் மூலம் பெண்களை வரவழைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பலர், லாபம் சம்பாதித்து வருகின்றனர். இங்குள்ள விபசார விடுதி ஒன்றில், வெளி மாநிலத்தில் இருந்து, புதிதாக அழைத்து வரப்பட்ட, 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை, பாலியல் தொழிலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினர். அந்த பெண், இதற்கு இணங்கவில்லை. ஆவேசமடைந்த, விபசார விடுதி உரிமையாளரான பெண், தன்னுடன் இருந்த ஆண் அடியாட்களின் துணையுடன், அந்த பெண்ணின் மார்பகங்களை துண்டித்து, சித்ரவதை செய்துள்ளார். விபசார விடுதியின் உரிமையாளரான ரூபி என்ற பெண், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்த, இந்த கொடுஞ்செயல் எல்லா தினசரிகளிலும் வந்திருந்தது. நேற்றைய மாலை பகுத்தறிவு கொள்கைக்காக நடத்தப்படும் பத்திரிகையாம் விடுதலையில் இந்த செய்தி வந்திருக்கிறது. இந்த தலைப்பில், “குஜராத் – மோடி ஆட்சியில், விபச்சாரத்துக்கு உடன்படாத பெண்ணின் மார்பகங்கள் அறுப்பு!” குஜராத் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்தது போல தலைப்பிட்டு, செய்தியில் இந்த சம்பவம் எந்த மாநிலத்தில் நடந்தது என்பதை கூட தெரிவிக்காமல் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள் – கொள்கைக்காக மோசம் போன திராவிட பகுத்தறிவாளர்கள். விடுதலையில் வந்த செய்தி. “குஜராத் மாநிலத்திலிருந்து 24 வயது பெண், பெற்றவர்களாலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக அவளின் சகோதரர்களும் இருந்துள்ள கொடுமை குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. தானேவை அடுத்த பிவண்டி பகுதியில் அனுமான் தேக்தி என்கிற இடத்தில் உள்ள விபச்சார விடுதியில் விற்பனை செய்யப்பட்ட அப்பெண், விபச்சாரத் தொழிலுக்கு உடன்படாததால் தொடர்ந்து சித்தரவதைகளுக்கு உள்ளானார். விபச்சார விடுதியின் நிர்வாகி 24 வயதுள்ள அப்பெண்ணை தனி அறையில் அடைத்து சிகரெட்டால் சுட்டு துன் புறுத்தி உள்ளார். அவரிடம் தன்னை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லுமாறு அப்பெண் வேண்டியும், மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல மறுத்துள்ளார். மேலும் இரண்டு நாளில் அப்பெண்ணின் மார்பகங்களையும் அறுத்தும் உள்ளார். அப்பெண்ணின் கதறல் அந்த தெரு வழியே சென்றவர்களுக்கு எட்டியதால் காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. காவல்துறை யினர் அந்த இடத்திற்கு சென்று அப்பெண்ணை மீட்டு இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், அப்பெண்ணின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள் உடனடியாக, தானே பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட அப்பெண் அதிர்ச்சியில் எதுவும் பேச முடியாதவராக உள்ளார். பிவண்டி காவல் நிலைய ஆய்வாளர் இச்சம்பவம் குறித்து கூறும் போது, பாதிக்கப்பட்ட பெண் பேச முடியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார். இதற்கு காரணமான ரூபி முன்ஷி என்கிற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார். இவ்வழக்கில் அப்பெண்ணின் சகோதரர் களான ஆலம், அப்சல் உட்பட மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் 325,326,370 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களையும் காவல்துறை தேடி வருகிறது” என்கிறது விடுதலை செய்தி. மகாராஷ்ராவில் நடந்த சம்பவத்தை குஜராத்தில் நடந்தது போல, காட்ட முயன்றிருக்கிறார்கள். இது தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டு உண்மைக்கு சமாதி கட்டும் செயல் அல்லவா? இந்த சம்பவம் எப்படி பார்க்கபட்டிருக்கிறது. எப்படி பார்க்கப்பட்டிருக்க வேண்டும். குஜராத் மீது வெறுப்பை காரி உமிழ மாத்திரமே, இந்த சம்பவம் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, வேறு யாதொரு அதிர்வலையையும் அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை. சம்பவம், தேசத்தில் பெண்களுக்கு இருக்கிற பாதுகாப்பின்மையை வெளிப்படுத்துகிறது. அது குறித்த சமூக அக்கறை செய்தியில் வெளிப்படவில்லை. எதிரிகளை திட்டி தீர்க்க ஒரு வாய்ப்பு. பயன்படுத்தி கொள்கிறார்கள். நாம் திராவிட பகுத்தறிவாளர்களை விமர்சிப்பது, சிலருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. காரணமில்லாமல் யாரையும் விமர்சிக்க போவதில்லையே. கொள்கைக்கு மோசம் போகாமல், நேர்மையாக இந்த செய்தி பிரசுரிக்க பட்டிருந்தால் – நம் இந்த விமர்சன பதிவுக்கே அவசியமில்லையே. தவறு எங்கே நடந்தாலும் பொங்கி எழுபவன் மனிதனா அல்லது எங்கே தவறு நடக்கிறது என்று பார்த்து, இடத்துக்கு தகுந்து பொங்கி எழுபவன் மனிதனா? குஜராத்திலிருந்து அழைத்து வந்து, இந்த கொடூர செயலை மகாராஷ்ரா மாநிலத்தில் நிகழ்த்தி இருக்கிறார்கள். ஒரு வேளை மகாராஷ்ரா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியிலிருந்திருந்தால், இந்த சம்பவம் எந்த மாநிலத்தில் நடந்திருக்கிறது என்று ஈரோடு கண்ணாடி போட்டு கொண்டவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஒரு குற்றத்தை, அதுவும் மகளிருக்கு எதிரான குற்றச்செயலை – சாதி, மொழி, மதம், இனம் கடந்து கண்டிக்க வேண்டும். நம் திராவிட பகுத்தறிவு, அதை செய்யாமல் – குற்றம் செய்தவர் சன் டி.வி ராஜாவா, சன் டிவி புகழ் நித்தியானந்தாவா என்று பார்ப்பதிலேயே தம் பகுத்தறிவை தொலைத்து கொண்டிருக்கிறது.  நாம் எப்போதும் சொல்வதை தான் இப்போதும் சொல்கிறோம். “கொள்கைக்காக மோசம் போகும் இந்த பகுத்தறிவு இருப்பதால் தான் என்ன புரியோஜனம். இல்லாமல் போவதால் தான் என்ன நஷ்டம்” 5 பணத்துக்காக எழுதுபவரும், கொள்கைக்காக எழுதுபவரும் “ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்க செய்ய வைப்பது பத்திரிகைகள்தான்” என்கிற தலைப்பிலும், “பணம் வாங்கிக்கொண்டு ஆதாய செய்திகள் போடுவதை தவிர்க்க வேண்டும்.” என்கிற உப தலைப்பிலும் பகுத்தறிவு ஏடு விடுதலையில் ஒரு செய்தி. இந்திய பத்திரிகைகள் சங்கம் (அய்என்எஸ்) 75 ஆம் ஆண்டு, பவள விழாவை டில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சமீபத்தில் தொடங்கி வைத்தார். அங்கு, அவர் பேசியதை, விடுதலை ஏட்டில் வந்ததை சுருக்கிய வடிவில் தருகிறோம். “பணம் வாங்கிக்கொண்டோ, பணம் கொடுத்தோ எந்தவித செய்தியையும் வெளியிட்டு விட முடியும் என்று சிலர் எண்ணுகின்றனர். இந்த ஆதாயச் செய்திகள் இன்னும் பரபரப்பை ஏற்படுத்துவதுடன், தவறான தகவல்களை உண்மை போல உலவ விடுகின்றன ஊடகங்கள். இந்தப் போக்கு தவறானது. இதை உடனே தடுக்க வேண்டும். இதற்குப் பத்திரிகைகள்தான் முயற்சி எடுக்கவேண்டும். இதற்கு அவர்களே ஒரு சுய தொழில் நுட்பத்தை கொண்டு வர வேண்டும். அப்போது தான் இதற்கு முடிவு கட்ட முடியும். நாட்டு வளர்ச்சிக்கு, பாதுகாப்புக்கு முக்கியமாக அங்கம் வகிப்பது பத்திரிகைகள், ஊடகங்கள் தான். எந்த ஒரு முக்கிய விஷயம் பற்றிய விவாதமாக இருந்தாலும், எந்தவித மனமாச்சரியம் இன்றி, சாதக பாதகங்களை வெளிப்படையாக, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கையாள வேண்டும். அப்படிப்பட்ட விவாதங்களால் தான் புதிய தீர்வு கிடைக்கும்; மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்; இதில் ஒளிவு மறைவு கூடவே கூடாது. பொது வாழ்க்கையில் உள்ளவர்களை முறைப்படுத்தும் மிக முக்கிய பொறுப்பும் பத்திரிகைகளுக்கு உள்ளது. அப்படி இருக்கும்போது உண்மையான செய்திகளை மட்டும் போட வேண்டும். மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்த வேண் டும் என்பதற்காக தவறான, கற்பனை செய்திகளை போடக்கூடாது. உண்மையான, பகுத்தாய்ந்த தகவல்களுக்கு கற்பனை, பொய்யான தகவல்கள் ஈடாகாது. மக்களிடம் எப்போது உண்மை செய்திகள் தான் எடுபடும். பத்திரிகை மீது நம்பிக்கை ஏற்படுத்தும். வதந்திகள், கிசுகிசுக்கள் எல்லாம் போகப்போக மங்கிவிடும். பொதுமக்களுக்கும், அவர்களுக்குப் பணிகளை செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் இடையே கண்காணிப்பு பணியை மேற்கொள்வது, முக்கிய கால கட்டங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் கடமை ஆகியவை எல்லாம் பத்திரிகைகளின் தலையாயப் பொறுப்புகள். நலிந்த, ஏழை மக்களின், ஒடுக்கப் பட்டவர்களின் குரலை ஒலிக்கச் செய்வது, அவர்கள் வாழ்க்கை தரம் உயர, கல்வி, வேலை வாய்ப்புகள் போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளை சீராக செய்ய வைப்பதும் பத்திரிகைகள் தான். ஆனால், பத்திரிகை செய்திகளில் இருட்டும், மங்கலான நிலையும் மட்டும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. செய்திகளில் தெளிவு தேவை; உண்மை பேச வைக்க வேண்டும். பொய் கூடாது; கற்பனை, கட்டுக்கதைகளுக்கு இடம் தரக் கூடாது. பத்திரிகைகளின் சக்தி மகத்தானது. அதை தவறாக மதிப்பிடக்கூடாது. தனி மனித ஒழுக்கங்களை மேம்படுத்துவ தில் இருந்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதுவரை பத்திரிகைகள் பங்கை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.” என்று ஜனாதிபதி தம் உரையில் குறிப்பிட்டார். நன்றாக தான் பேசி இருக்கிறார். திராவிட பகுத்தறிவு ஏடு விடுதலையில் வந்ததால் – இந்த செய்தி தனித்துவம் பெறுவதோடு, இக்கட்டுரை நம்மை மேலும் சிந்திக்க வைப்பதோடு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சொல்ல தவற விட்ட சில விஷயத்தை சொல்ல வைக்கிறது. அது என்ன சொல்லாத விஷயம். பணத்துக்காக ஆதாய செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் ஒரு புறம் என்றால், கொள்கை என்று கூறிக்கொண்டு, தங்கள் பிரியத்துக்குரியவர்களின் பாதகமான உண்மை செய்திகளை மறைத்து, சாதகமான பொய் செய்திகளை அரங்கேற்றும் இழிவேலையும் மறுபுறம் பத்திரிகை துறையிலேயே நடக்கிறதே. அதை பகுத்தறிவு ஏடு விடுதலையும் செய்கிறதே. ஜனாதிபதி சொன்ன பல கருத்துகள் பகுத்தறிவு பத்திரிகைக்கும் பொருந்துவது வெட்கக்கேடான விஷயம் இல்லையா? இது குறித்து நாம் பல கட்டுரைகளில், முன்பே தெரிவித்திருக்கிறோம். “எந்த ஒரு முக்கிய விஷயம் பற்றிய விவாதமாக இருந்தாலும், எந்தவித மனமாச்சரியம் இன்றி, சாதக பாதகங்களை வெளிப்படையாக, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கையாள வேண்டும்.” என்கிற ஜனாதிபதியின் எழுத்துகளை தங்கள் பத்திரிகையில் போட்டால் மட்டும் போதுமா? “கட்சிக்கொரு காட்சியும், சாதிக்கொரு நீதியும், மதத்துக்கொரு நியாயமும்” பேசுவதை நிறுத்த வேண்டாமா? இது பணத்துக்காக ஆதாய செய்தி போடுவதை விட அழுக்கில்லையா? ஒரு பட்டிமன்றம் வைக்கலாம். “பணத்துக்காக பொய் செய்தி போடுபவன் ஆபத்தானவனா அல்லது கொள்கை என்று சொல்லி கொண்டு பொய் செய்தி போடுபவன் ஆபத்தானவனா” என்று. ஒரு கட்சி ஊழல் செய்கிறது. அதை மூன்று விதமான ஊடகவியலாளர்கள் எப்படி செய்தி போடுவார்கள் என்று பார்ப்போம். உண்மையை எழுத வேண்டும் என்று நினைக்கும் ஊடகவியலாளர் “குற்றத்தை தான் பார்ப்பாரே தவிர குற்றவாளிகளை பார்க்க போவதில்லை”. இரண்டாம் வகை பேர்வழிகள் யார் என்று பார்த்தால், இந்திய ஜனாதிபதி சுட்டிக்காட்டிய பணம் வாங்கி கொண்டு ஆதாய செய்தி வெளியிடுவோர், மூன்றாவது ரகம் யார் என்று பார்த்தால் நம்ம ஊர் பகுத்தறிவு மற்றும் முற்போக்கு ஊடக வகையறாக்கள். குண்டு வைத்தவனை, ஊழல் செய்தவனை, பாலியல் வன்கொடுமை செய்தவனை – நேர்மையாக கண்டிக்கிற திராணி இல்லாமல், “தம் இனத்தவனா, தம்மை போன்று திராவிட கூட்டமா, தம் பங்காளியா” என்று பார்த்து அதற்கேற்ப்ப சாதக, பாதக செய்திகள் வெளியிடுபவர்கள். இந்த செய்கைகளால் – சமூகத்திற்கு எவ்வளவு பெரிய தீங்கினை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய ஜனாதிபதிக்கு தமிழக திராவிட பகுத்தறிவாதிகளின் அரசியல் எல்லாம் தெரியாததால் – தம் பேச்சில், “எழுதுபவர்கள் – வேண்டியவன், வேண்டாதவன் என்று பார்த்து ஆதாய செய்திகளை வெளியிடக்கூடாது” என்று குறிப்பிடவில்லை. பணத்துக்காக செய்கிற அனைத்து பித்தலாட்டங்களையும் – கொள்கை என்கிற பெயரில் செய்தால், அது பித்தலாட்டம் என்று ஆகாதா?  பணத்தின் மீதான மோகம் குறைந்த பின்னால் – பணத்தை வாங்கி கொண்டு ஆதாய செய்திகள் வெளியிட்டவன் கூட திருந்தி இருப்பான். அதனால் “பணத்துக்காக பொய் செய்திகளை வெளியிடுபவனை விட, மிக பெரிய ஆபத்தானவர்கள் – கொள்கை, இனம் என்று சொல்லி கொண்டு உண்மை செய்திகளை மறைப்பவர்களே” என்பது நமது தாழ்மையான, அதே நேரம் உண்மையான கருத்து. 6 பகுத்தறிவாளரையும் முட்டாள் என சொல்ல யார் காரணம் கடவுளை நம்புகிறவனை முட்டாள் என சுலபமாக சொல்ல முடியும். காரணம் – அவன் கொண்டுள்ள முட்டாள்தனமான மூடநம்பிக்கை. நாம் பகுத்தறிவாளனையும் முட்டாள் என சொல்கிறோம் – தைரியமாக. அப்படி நம்மை பேச வைக்க யார் காரணம். நிச்சயம் பகுத்தறிவாளர்களின் முட்டாள்தனமே அன்றி வேறென்ன காரணமாக இருக்க முடியும். பகுத்தறிவாளனிடம் முட்டாள்தனமா? அது சாத்தியமா. ஏன் இருக்காது. உண்மைக்கு விலை போகாமல், கொள்கைக்கு விலை போனால் – அங்கே முட்டாள்தனம் தானாக வந்துவிடும். அந்த கொள்கைக்கு ஆத்திகம் என்றோ, நாத்திகம் என்றோ வித்தியாசம் இருக்க போவதில்லை. பகுத்தறிவாளனையும் முட்டாள் என சொல்ல வைத்த இரண்டு விஷயத்தை இங்கே பதிகிறோம். டில்லி சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த கெஜ்ரிவாலின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் குற்றம் கண்டு பிடித்து அலசி ஆராய்ந்து கட்டுரை தீ(தி)ட்டியது திராவிட பகுத்தறிவு – ஆனால் அந்த ஆராய்தலிலும் கோட்டை விட்டது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பதவியேற்றதும் – அமைச்சர்கள் ஒவ்வொருவரின் சாதியையும் குறிப்பிட்டு பேசியது. ஒருவரின் ஒழுக்கத்தை பற்றி பேசாமல், அவர்களின் சாதியை துப்பறிந்து, அது பற்றி பேசியது முதல் முட்டாள்தனமென்றால், அந்த இழிவேலையை கூட ஒழுங்காக செய்யாமல் – தப்பும் தவறுமாக ஒரு சட்டமன்ற உறுப்பினரை பற்றி எழுதியது இரண்டாவது முட்டாள்தனம். அரவிந்த கெஜ்ரிவால் அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக, மகளிருக்கு பெருமை சேர்க்கும்விதமாக, தம் இருபத்தி எட்டாவது வயதிலேயே பதவியேற்றார் ராக்கி பிர்லா. அவரை, பகுத்தறிவு ஏடு விடுதலை இப்படி அறிமுகப்படுத்தி இருந்தது. “ராக்சி பிர்லா என்ற அமைச்சரின் பெயரில் உள்ள பிர்லா என்பது மார்வாரி, மகேசுவரி என்றழைக்கப்படும் உயர் ஜாதி பனியாக்களின் ஜாதிப் பெயர்” என்று. அப்படி அறிமுகப்படுத்த வேண்டிய முட்டாள்தனமான அவசியமென்ன. இன்றைக்கு தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. இப்படி தான் ஒவ்வொரு வேட்பாளரின் சாதி குறித்து ஆராய்ந்ததா பகுத்தறிவு. ராக்சி பிர்லா என்ற பெயரை மட்டும் பார்த்து, செய்தியின் நம்பகத்தன்மை அறியாது, அவர் உயர் சாதிக்காரராய் இருப்பாரோ என்கிற அனுமானத்தில் வெளிப்பட்டது மற்றொரு முட்டாள்தனம். அவரை சாதி சொல்லி விமர்சித்ததும் கயமை. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ராக்கி பிர்லா. ஆம்ஆத்மி கட்சியின் இணையதளம் – தம் சமூக மக்களின் அபிவிருத்திக்காக ராக்கி பிர்லா உழைப்பதாக தெரிவிக்கிறது. அரைகுறை விஷய அறிதலோடு தவறான செய்தியை, சாதியை திரித்தலுடன் ஒரு இழி வேலையை செய்து இருக்கிறார்கள். மோடி தப்பும் தவறுமாக பேசுவதை, கேலி பேசுகிறார்கள் – இவர்களிடம் மட்டும் என்ன வாழுகிறது. ஒரு தலித் பெண்மணி, தம் இருபத்தி எட்டாவது வயதில் – சாதி பெயர் சொல்லாத கட்சியால் எம்.எல்.ஏ.,வாகி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாகி இருக்கிறார். பெருமைப்படதக்க விஷயமில்லையா? ஆனால் பெண்ணியவாதிகளாம் இந்த சமூகநீதி பேசிய பெரியார்வாதிகள் அதில் பெருமை கொள்ளவில்லை. வாரிசுகள் தான் இந்திய அரசியலில் வெகு வேகமான வளர்ச்சியை அடைய முடியும் என்கிற இந்திய ஜனநாயகத்தின் சிறுமையை தவிடுபொடி ஆக்கி இருக்கிறார் ராக்கி பிர்லா. சிறு தகவல் : பிர்லா என்ற பெயர், ராக்கியின் பெயருடன் இணைந்ததற்கு காரணம் – பத்தாம் வகுப்பு சான்றிதழில் நிகழ்ந்த குளறுபடி. அதை உணராத அரைகுறை பகுத்தறிவு – ராக்கி பிர்லாவை மார்வாரி, மகேசுவரி என்று அளந்துவிட்டது. இப்படி எத்தனை பேர் – இந்த பகுத்தறிவாளர்களிடம் மாட்டி கொண்டு முழி பிதுங்குகிறார்களோ. பெயரை பார்த்து தங்கள் முட்டாள்தனத்தை காட்டியவர்கள், ஆளை பார்த்து காட்டிய முட்டாள்தனத்தை பார்ப்போமா? வெள்ளையாய் இருந்தால் பார்ப்பனனாய் இருப்பான் என்கிற அனுமானத்தில் காட்டிய முட்டாள்தனம். ஒரு சினிமா நடிகர் – ஆபாச வசனங்களை பேசுகிறார். சமூக ஆர்வலர்கள் அந்த நடிகரை கண்டிப்பார்கள். நிச்சயம் – அந்த விமர்சனத்தில் சாதி பார்க்கப்படாது, மதம் பார்க்கப்படாது. சமூகம் – ஒரு மனிதனின் கண்ணியமற்ற செயலால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்கிற அக்கறை மட்டுமே இருக்கும். ஆனால் திராவிட பகுத்தறிவு – சாதி பார்த்து, மதம் பார்த்து தம் நியாய தராசுக்கு வேலை கொடுத்தது. ஆபாசமாய் வசனம் பேசிய அந்த நடிகர் பார்ப்பனராய் இருப்பாரோ என்ற யூகத்தில், சாதியை ஒழித்த சம்ர்ப்புலிகளின் பத்திரிகையாம் விடுதலை தந்த தலைப்பு. “பார்ப்பன நடிகருக்குக் கண்டனம்” என்று. என்றேனும், எங்கேனும் சம்பந்தப்பட்ட நடிகர் தம் சாதி பெருமை பேசி இருந்தால் கூட, அந்த தலைப்பை மன்னித்து ஏற்கலாம். ஆனால் அப்படியும் கிடையாதே. “ஆண்களை சிரிக்க வைக்கப் பெண்களை இழிவுபடுத்தி திரைப்படங்களில் வசனக் காட்சிகளைப் புகுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் பார்ப்பன நடிகர் சந்தானம் நிறுத் திக்கொள்ளவேண்டும் என்று பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது” உண்மையில் சந்தானம் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர். தோற்றத்தை பார்த்து ஏமாந்த பகுத்தறிவு ஏமாளிகள். “சந்தானம் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்.” என்கிற உண்மை முதலிலேயே தெரிந்திருந்தால் – சந்தானம் குறித்த செய்தியே, அவர்களின் பத்திரிகையில் வந்திருக்காது. மேலும் “வன்னிய சாதியை சேர்ந்த நடிகருக்கு கண்டனம்” என்று செய்தி போடும் துணிச்சலை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. “பெயரை பார்த்து ஏமாந்து ஒரு முட்டாள்தனம். அடுத்து தோற்றத்தை பார்த்து ஏமாந்து மற்றொரு முட்டாள்தனம்”. எதையும் நேர்மையாக பார்க்கிற திறன் இல்லையென்றால் பகுத்தறிவு எதற்கு. கடவுள் நம்பிக்கையாளனை முட்டாள் என சொல்ல இருக்கிற அத்தனை காரணமும், பகுத்தறிவாளனை சொல்வதற்கும் இருப்பது வருந்தத்தக்கது. ஆத்திகன் முட்டாளாய் இருப்பதில் எந்த ஆபத்தும் இல்லை. நாத்திகனோ, பகுத்தறிவாளனோ முட்டாளாய் இருப்பது தான் ஆபத்தோ ஆபத்து. 7 சீமானை திராவிட பகுத்தறிவு கைவிட்டதேன் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் “இந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக” கூறி இந்து அமைப்பினர் காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரில் கூறப்பட்டுளளதாவது., இந்துமத கடவுள்களான சிவன், விநாயகர் ஆகியோரை பற்றி அவதூறாக சீமான் பேசியுள்ள வீடியோ காட்சிகள் யூ டியூப் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் சீமான், இந்துக்கள் கல்லை கடவுளாக வழிபட்டு பின்னர் அந்த கல்தான் நம்மை படைத்ததாக கூறுகின்றனர். இந்து கடவுள் எதைத்தான் படைத்தார். அவருக்கு படைக்கப்படுகின்ற கொழுக்கட்டையையாவது படைத்தாரா என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே இந்திய தண்டனை சட்டத்தின்படி மத உணர்வுகளை புண்படுத்தியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது இணையத்தில், சமூக வலைத்தளங்களில் சீமானை கண்டித்து எழுதப்பட்டும் வருகிறது. சீமானுக்கு பகுத்தறிவு கற்று கொடுத்த திராவிட பகுத்தறிவாளர்கள் – சீமானுக்கு எதிரான, இந்த தாக்குதலை பார்த்து கொண்டு சும்மா தான் இருக்கிறார்கள். சக பகுத்தறிவாளனுக்கு மதவாதிகளால் ஊறு என்றால் “அவன் தமிழ் தேசியவாதி, இவன் திராவிட தேசியவாதி” என்று பார்த்து கொண்டிருப்பதா திராவிட பகுத்தறிவுக்கு பெருமை. பார்ப்பன கமலஹாசனுக்கே “விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லீம் அமைப்புகளால் சிக்கல்” என்றதுமே, கமல் அழைக்காமலே பஞ்சாயத்துக்கு ஆஜரான திராவிட பகுத்தறிவு - இன்றைக்கு பார்ப்பனரல்லாத சீமானுக்கு ஒரு சிக்கல் என்றால், “என்ன ஏது” என்று பார்க்கக்கூட யோசிக்கிறது. என்ன காரணம். திராவிட பகுத்தறிவு “மத வன்முறையை தட்டிக்கேட்க, வைத்துள்ள மதத்துக்கொரு நியாயம் அளவுகோலையே – மதத்துக்கெதிராக பேசி மாட்டிக்கொண்டு முழிப்பவர்களை காப்பாற்றவும், “இவன் வேண்டியவனா, வேண்டாதவனா… இவனுக்கு குரல் கொடுப்பதால் நமக்கென்ன லாபம், நம் இயக்கத்துக்கென்ன நஷ்டம்” என்றெல்லாம் பார்க்கிறது. சீமானையும் அப்படி ஈரோடு கண்ணாடி போட்டு பார்த்ததில், திராவிடத்துக்கு “இது தேறாத கேஸ்” என்று புரிந்ததால் – இப்போது சீமான் பக்கமே எந்த திராவிட பகுத்தறிவும் தலைவைத்து படுப்பதில்லை. சென்ற தி.மு.க ஆட்சியில் “இரண்டு முறை சீமான் குண்டர் சட்டத்தில் கைதான போதும்” – தம் மேடையேறி பகுத்தறிவு பிரச்சாரம் செய்த சீமானை கண்டு கொள்ளவில்லை திராவிட பகுத்தறிவு. சீமான் தனக்கு சரியென்றுபடுவதை ஒரு போதும் மறைத்து பேசியதில்லை. எந்த ஒரு கருத்தையும் – பெரியாரே சொல்லி இருந்தாலும், கண்மூடித்தனமாக ஏற்பதில்லை. அதனால் தான் திராவிட பகுத்தறிவு சீமானை கைவிட்டுவிட்டது எனலாம். சீமானுக்கு மதவாதமும் ஒன்று தான். பகுத்தறிவாதமும் ஒன்று தான். பதிவின் துவக்கத்தில் – சீமான் இந்து மதத்தை கேள்விக்கேட்டதை வாசித்தீர்கள். இதோ திராவிட பகுத்தறிவாதத்தையும் கேள்வி கேட்கிறார். வாசியுங்கள். “திராவிடக் கொள்கை திராவிடக் கொள்கைங்கிறாங்களே. அது என்ன? திராவிடக் கொள்கை? நாங்க வந்துதான் சுயமரியாதைத் திருமணம் நடத்திவச்சோம்! நாங்க வந்துதான் விதவைத் திருமணம் நடத்திவச்சோம்! ன்றாங்க. போங்கடா வெட்டிப்பயல்களா!எங்க ஊர்ல பார்த்தா அண்ணன் செத்துப்போயிட்டான். அண்ணன் பொண்டாட்டி கைக்குழந்தையோட நிக்குது. தம்பி கட்டிக்கிட்டான். நீயா செஞ்சு வச்சே? காலம் காலமா இப்படித்தான் நடந்துகிட்டிருக்கு. சீர்திருத்த திருமணம் நடத்தி வச்சுட்டோம் ன்றாஙக.” சீமான் பேசியதிலுள்ள உண்மையை ஜீரணிக்க முடியாத திராவிட பகுத்தறிவு, அரைகுறையாக தமிழர்களின் வரலாற்றை எழுத முனையும் திராவிட பகுத்தறிவு – “சீமான் சாதி பெண்களின் நிலை வேறு, பிற சாதி பெண்களின் நிலை வேறு” என்று பிரித்து பார்த்து கருத்து சொல்ல முனைகிறது. இப்போது தானே திராவிட பகுத்தறிவு – பெண்களுக்கு  சாதிக்கொருநீதி இருந்த உண்மையை எடுத்தியம்புகிறது. சீமான் சொன்னது போல, “இவ்வளவு காலமும் எல்லா நல்லவைகளும் எம்மாளேயே நடந்தது” என்று தானே முழக்கமிட்டார்கள். . அதன் உண்மை நிலை தெரிய வரும்போது, தெளிவதற்கு காரணமானவர்கள் மீது எரிச்சல் படுகிறார்கள். ஒரு முன்னாள் திராவிட பகுத்தறிவாளர் சொன்னார். “சீமான் கேட்டதில் என்ன தவறு. எத்தனை விதவை பெண்களை, இந்த திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் மணம் முடித்தார்கள். இவர்களின் தலைவரே, அந்த நல்ல காரியத்தை செய்யவில்லையே”. உண்மை தான். எப்படி இந்துமதவாதிகள், “தங்கள் மதம் அவமானப்பட்டது” என்று பொங்குகிறார்களோ – அதே போல திராவிட பகுத்தறிவாதிகளும் பொங்குகிறார்கள். “திராவிட பகுத்தறிவுக்கெதிராக கருத்து வைத்தால்”. ஆனால் ஒரு வித்தியாசம். மதவாதிகள் கண்ணை கசக்கி கொண்டு காவல்நிலையத்துக்கு போவது போல, இவர்களால் போக முடியாது. காரணம் திராவிட பகுத்தறிவிடம் பாடம் கற்ற சீமான் சாமானியரா? சில மாதங்களுக்கு முன் மானமிகு அய்யா கி.வீரமணி – கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவது குறித்து, தம் பகுத்தறிவு கருத்தை சொல்ல – இந்து அமைப்புகள் காவல்துறையை நாடியது. அது குறித்து விடுதலையில் வந்த கேள்வி பதில். தேவிபட்டினத்தை சேர்ந்த துரை. தேசிங்கு என்பவரின் கேள்வி: கிருஷ்ணனைப் பற்றி தாங்கள் எழுதிய அறிக்கைக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதே? - இனமான அய்யா கி.வீரமணி பதில்: மருந்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளது என்பதை அறிய மகிழ்ச்சி பொங்குகிறது! (7.9.2013 ஞாயிறுமலர்) உலகில் எல்லாமே மாறுதலுக்குரியது. நாம் பகுத்தறிவு என்று நினைக்கிற சிலவும் மூடநம்பிக்கை ரகமாகவே உள்ளது. சீமானை போன்றவர்கள், எம்மை போன்றவர்கள் அதை கேள்வி கேட்கிறோம். எதையும் மீள பகுத்தராய சொல்கிறோம். எந்த சிந்தனையும் முடிவான ஒன்றல்ல. அய்யா கி.வீரமணியோ – - நாம் சொல்வதை கேட்டு, பகுத்தறிவு “மருந்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளது என்பதை அறிய மகிழ்ச்சி பொங்குகிறது” என்று மகிழாமல் பார்ப்பனர்களை பார்ப்பது போல, எதிரிகளை பார்ப்பது போல நம்மவர்களை பார்ப்பது சரியா? 8 சாதிக்கொரு நீதி பேசிய பகுத்தறிவின் சாதனை சாதி பார்த்து ஒவ்வொருவரின் குற்றத்தையும் அலசி ஆராயும் திராவிட பகுத்தறிவு – அந்த ஆராய்தலிலும் பல நேரங்களில் கோட்டை விடுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பதவியேற்றதும் – அமைச்சர்கள் ஒவ்வொருவரின் சாதியையும் குறிப்பிட்டு பேசியது. ஆனால் அதில் கூட கோட்டை – சொன்ன உண்மையில் ஓட்டை. அந்த   அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக, மகளிருக்கு பெருமை சேர்க்கும்விதமாக, தம் இருபத்தி எட்டாவது வயதிலேயே பதவியேற்றுள்ள ராக்கி பிர்லாவை, பகுத்தறிவு ஏடு விடுதலை இப்படி அறிமுகப்படுத்தி இருந்தது. “ராக்சி பிர்லா என்ற அமைச்சரின் பெயரில் உள்ள பிர்லா என்பது மார்வாரி, மகேசுவரி என்றழைக்கப்படும் உயர் ஜாதி பனியாக்களின் ஜாதிப் பெயர்” என்று. ஆனால் பகுத்தறிவு ஏடு விடுதலை எழுதியது தவறு என்று (பொய் என்றும்) சொல்லலாம்… அந்த செய்தி தவறென்று “அர்விந்த கெஜ்ரிவாலையும் விட்டு வைக்கவில்லையே பகுத்தறிவு” என்கிற நமது பதிவுக்கு வந்த ரியான் என்பவரின் பின்னூட்டம் தெரிவித்தது. பிறகு – உண்மை நிலை அறிய முற்பட்டோம்..தலித் சமூகத்தை சேர்ந்தவர் ராக்சி பிர்லா. சாதிகட்சியின் பெருந்தலைகளை எல்லாம் விட்டுவிட்டு – அரசியலில் நுழைந்த ஒரு பெண்ணை இப்படி சாதிய வட்டத்துக்குள் திணித்திருக்கின்றனர். ஆம்ஆத்மி கட்சியின் இணையதளம் – தம் சமூக மக்களின் அபிவிருத்திக்காக ராக்கி பிர்லா உழைப்பதாக தெரிவிக்கிறது. அரைகுறை விஷய அறிதலோடு தவறான செய்தியை, சாதியை திரித்தலுடன் ஒரு இழி வேலையை செய்து இருக்கிறார்கள். ஒரு தலித் பெண்மணி, தம் இருபத்தி எட்டாவது வயதில் – சாதி பெயர் சொல்லாத கட்சியால் எம்.எல்.ஏ.,வாகி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாகி இருக்கிறார். பெருமைப்படதக்க விஷயமில்லையா? வாரிசுகள் தான் இந்திய அரசியலில் வெகு வேகமான வளர்ச்சியை அடைய முடியும் என்கிற இந்திய ஜனநாயகத்தின் சிறுமையை தவிடுபொடி ஆக்கி இருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியான ராக்கி பிர்லாவின் வளர்ச்சியை சமூக நீதி பேசுபவர்கள் வரவேற்றிருக்க வேண்டாமா? மேலதிக தகவல் : பிர்லா என்ற பெயர், ராக்கியின் பெயருடன் இணைந்ததற்கு காரணம் – பத்தாம் வகுப்பு சான்றிதழில் நிகழ்ந்த குளறுபடி. இதை உணராத அரைகுறை பகுத்தறிவு – மார்வாரி, மகேசுவரி பிரதிநிதியாக்கிவிட்டது. இப்படி எத்தனை பேர் – இந்த பகுத்தறிவாளர்களிடம் மாட்டி கொண்டு முழி பிதுங்குகிறார்களோ. குறை கண்டுபிடிக்க முடிவெடுத்த சமூக நீதி பேசுபவர்களின் பழுதடைந்த பார்வை, பழுதாகவே சிந்தித்து எழுதி உள்ளது. ராக்கி பிர்லா முன்னாள் தொலைக்காட்சி நிருபர். ஒரு செய்தியில் தவறு வருவது இயற்கை. அதை நாம் பெரிதுபடுத்தவும் விரும்புவதில்லை. காழ்ப்புணர்ச்சியுடன் திரிக்கப்படும் செய்திகள் குறித்து பேச தான் வேண்டும். “தங்கள் பத்திரிகை செய்தியினால் -தாம் பொய்யர்கள் ஆகிவிட்டோமே” என்று வருந்தி பகுத்தறிவு ஏடு அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டாமா? முன்பு நடிகர் சந்தானத்தை பற்றி – இப்படி தான் சாதிய அவதூறு செய்தது. நடிகர் சந்தானம் தோற்றத்தை பார்த்து, பார்ப்பனராய் இருப்பாரோ என்று திராவிடத்தின் பகுத்தறிவு அரைகுறையாய் கணித்து (?) “பார்ப்பன நடிகருக்கு கண்டனம்” என்று விமர்சிக்க – பிறகு தான் தெரிந்தது – வன்னிய சமூகத்தை சேர்ந்தவர் சந்தானம் என்று. அந்த தவறு குறித்து எந்த மறுப்பும் இல்லை. செய்தி போட்டது, போட்டது தான். இது தான் திராவிட பகுத்தறிவு . இந்த வரலாற்று சிறப்பு மிக்க எழுத்தை நாம், தவறு கண்டு பிடித்து எதுவும் கேட்டுவிடக்கூடாதாம். வரலாறு பொய்களால் நிரம்பிவிடக்கூடாது என்பதே நம் கவலை. ஆனால் சொல்லப்படும் செய்தியில் உண்மைக்கு பழுது ஏற்பட்டால், அதற்காக சின்ன வருத்தமோ, மறுப்போ தெரிவிக்க வேண்டும். திராவிட பகுத்தறிவாளர்கள் குறித்து ஒரு தவறான செய்தி வெளியிட்டால், உடனடியாக அதற்கான மறுப்பை, உண்மையை உடனடியாக பதிவு செய்பவர்கள் – பிறர் குறித்த தவறான செய்தி வெளியிடுவதை, முன்னுதாரணமாக இருந்து தவிர்க்க வேண்டும். முன்பொரு முறை எழுதியதை இங்கே சுட்டி காட்ட விரும்புகிறோம். “முதல் நாள் வரும் செய்தி மறுநாள் பொய் என்றோ அல்லது பலரின் நம்பகத்தன்மைக்கு ஊறு விளைவிக்க கூடிய செய்தியாக மாறும்போது – முதல் நாள் செய்தியை வெளியிட்ட ஊடகம், மறுநாள் மறக்காமல் உண்மை செய்தியை கட்டாயம் வெளியிட வேண்டும். அதை செய்யவில்லை எனில் – போலி விளம்பரத்தாரர்களின் மோசடி விளம்பரத்தை போன்றது – இவர்களின் பாதி செய்தி. பணத்துக்காக பொய் பேசுகிற வியாபாரிகளுக்கும், சுயநலத்துக்காக உண்மையை மறைக்கிற இவர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. ஆனால் நிச்சயம், எந்த பத்திரிகையாளருக்கும் “அந்த செய்தி உண்மையற்றது” என்று முதல் நாள் தெரியாது. அதற்காக நாம் அவர்களை கண்டிக்கவில்லை. ஆனால் “உண்மை என்ன” என்று அடுத்து ஒரு செய்தி வருகிறதே – அதை அறிந்தும் பிரசுரிக்காமல் ஒழித்து வைப்பதில் தான் ஊடகங்களின் விருப்பு வெறுப்பு, பித்தலாட்டம் இருக்கிறது. அதை தான் பகுத்தறிவு ஏடு செய்கிறது. சென்ற வருஷம் திராவிடர் கழகத் தலைவரின் சகோதரர் – சங்கராச்சாரியரை சந்தித்ததாக பார்ப்பன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உடனடியாக தி.க தலைமை, “தலைவருக்கு தம்பியே கிடையாது. இது பொய். மோசடி செய்தி” என்று அறிக்கை வெளியிட்டது. அது மறுநாள் செய்தியானது. முதல் நாள் செய்தியை மட்டும் வாசித்தவன் “உண்மையை உணராமலே போவான்”. பார்ப்பன ஊடகங்களை போன்றே பகுத்தறிவு ஊடகங்களும இருந்தால எப்படி.அவரவர்கள் கண்களை மூடிக் கொண்டதால் மட்டும் உலகம் இருண்டு விடாது “. ஒரு செய்தியை மறைப்பதன் மூலம் நாம் மக்களை ஏமாற்றவில்லை. நம்மையே நாம் ஏமாற்றி கொள்கிறோம். அதை உணர்ந்தால் செய்தி வெளியிடுவதில் விருப்பு, வெறுப்பு தோன்றாது. ஆளையும், பெயரையும் பார்த்து பகுத்தறிவு ஜோசியம் சொன்னால் – இது தான் நிலை. சாதிக்கொரு நீதியே தவறு. அதையும் தப்பு தப்பாய் செய்வது -  அதை விட பெரிய தவறு. ..சாதி பார்த்து குற்றங்குறைகள் பேசுவதை நிறுத்தினால் – பகுத்தறிவின் பெருமை குலையாது. 9 விலைவாசி உயர்வுக்கு காரணம் யார்? பகுத்தறிவு கண்டுபிடிப்பு இவ்வளவு காலமும் விலைவாசி உயர்வுக்கு காரணம் யார் என்று தெரியாமல் தான் இருந்தோம் அல்லது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அல்லது ஆட்சியில் இருக்கிற ஏதேனும் ஒரு கட்சி என்று தவறாக நினைத்திருந்தோம். ஆனால் நம் புரிதல் தவறு என்று மானமிகு அய்யா கி.வீரமணி தெளிவுபடுத்த முயன்றிருக்கிறார் – ஒரு கேள்வி, பதில் மூலம். அந்த கேள்வி, பதிலை வாசித்த பிறகு நம் மனதில் சில சந்தேகங்கள் எழுந்தன. அந்த சந்தேகங்களையும் பகுத்தறிவு தெளிவுபடுத்தினால் மிக நல்லது. விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம், யார் காரணம் என்று கண்டுணர்ந்த கேள்வி-பதில் இதோ. கேள்வி: விலைவாசி உயர்வுதான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று காங்கிரஸ் தலைவரே ஒப்புக் கொண்ட பிறகும்கூட, மீண்டும் சமையல் எரிவாயு போன்ற அடிப்படைத் தேவையான பொருள்கள் மீது கூட விலை ஏற்றப்படுகிறதே? – கொ. சியாமளாதேவி, சென்னை-10 பதில்: காங்கிரசின் எதிரிகள் – அங்கேயே இருக்கிறார்கள் போலும்! சில மக்கள் தொடர்பற்ற நிபுணர்கள் என்ற பார்ப்பன நிதியாலோசனை யாளர்கள் அறிவுரைகள் வேறு! இப்படி அதனை மீளாப் பள்ளத்தில் தள்ளுகின்றன. கூட இருந்தே குழி பறிக்கும் குல்லூக பட்டர்கள் ஆதிக்கத்தில் அக்கட்சி இருக்கிறது. பாடம் கற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை!” என்கிறார் அய்யா கி.வீரமணி. பகுத்தறிவாளர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று அப்படியே நம்பிவிடலாமா? முந்தைய அனுபவங்கள், அத்தகைய நம்பிக்கைகளை ஊட்டாததால் – சரியாக தான் சொன்னதா பகுத்தறிவு என்று சரி பார்க்க சொல்கிறது நம் அறிவு. காங்கிரஸ் போன்ற கட்சிகளில் – பார்ப்பன ஊடுருவல் உள்ளது. அதனால் பார்ப்பன சதியால் விலைவாசி ஏறிக் கொண்டே போகிறது என்று பகுத்தறிவு கும்பல் சொல்வதை, அரைகுறையாக நம்பினாலும் – பார்ப்பனியத்தையே வெட்டி வீழ்த்தி, குழி தோண்டி புதைத்து, ஆட்சிக்கு வந்ததாக சொல்லி கொள்ளும் திராவிட பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் விலையேற்றம் இருந்ததா, இல்லையா என்று பகுத்தறிவுகள் தான் கண்டு பிடித்து சொல்ல வேண்டும். “பகுத்தறிவு, பகுத்தறிவோடு கருத்து சொல்லவில்லையாயினும் பரவாயில்லை. முட்டாள்தனமாக கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும்.” பகுத்தறிவு இழிபடுவதை அனுமதிக்க இயலாது. சென்ற கலைஞர் ஆட்சியில் – சட்டசபையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், “விலை உயர்வு மக்களை பெருமளவு பாதிப்பதாக வேதனைப்பட்டார்கள்”. அதற்கு கலைஞர், “அப்படி என்றால் ரங்கநாதன் தெருவில் கூட்டம் இல்லாமலா உள்ளது” என்று கேட்டார். விலைவாசி உயர்வை நியாயப்படுத்தி பேச கலைஞருக்கு, எந்த நிதியாலோசனை பார்ப்பனர்களும் எழுதி கொடுத்தார்களா என்ன. பகுத்தறிவு ஏடுகளாம் விடுதலையும், உண்மையும் – சில வருஷங்களுக்கொரு முறை விலையேறத்தை சந்திக்கும். அந்த விலையேற்றத்துக்கு கூட பார்ப்பன நிதியாலோசனை யாளர்கள் சொன்ன அறிவுரை தான் காரணம் என்று பகுத்தறிவு அளந்துவிட்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தமிழகத்தில் “எப்படிப்பட்ட பகுத்தறிவு, எப்படிப்பட்ட பகுத்தறிவாளர்கள்” என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. விலை உயர்வுக்கு – பகுத்தறிவு சொன்ன காரணத்தை அவர்களால் நிருபிக்க முடியுமா? சம்பந்தப்பட்டவர்களை நீக்கினால் விலை உயர்வு கட்டுப்படுமா? விலைவாசி உயர்வு என்றால் அதற்கான உண்மையான காரணம் என்ன என்று அலசி ஆராய்ந்து எழுத பொருளாதார நிபுணத்துவம் வேண்டும். அதை பற்றிய அறிவு இல்லை என்றால் பேனாவை மூடி வைத்து விட வேண்டும். ஒரு ஆட்சியில் விலை உயர்வு என்றால் – பணிபுரிகிற மக்கள் தொடர்பாளர்கள் தான் காரணம் என்று புளுக – இதுவரை எந்த அரசியல்வாதிகளுக்கும் கூட தோன்றி இருக்காது. ஆனால் நம் பகுத்தறிவாளர்கள் “மாத்தியோசித்திருக்கிறார்கள்”. ஆனால் என்ன? வழக்கம் போல பெயிலாகிவிடுகிறார்கள். பகுத்தறிவு பிள்ளைகள், பகுத்தறிவு தலைமை சொன்னதை தவறாக புரிந்து கொண்டு – அடுத்த முறை சமையல் எரிவாயு விலையை காங்கிரஸ் உயர்த்தினால் – காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக பிராமண சங்கக்கட்டிடம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த, கிடத்த போகிறார்கள். விலைவாசி உயர்வு, அநியாய வரி குறித்து கருத்து சொல்வது – பகுத்தறிவுகளின் அகராதியில் ஆட்சிக்கு ஆட்சி மாறுகிற விஷயம். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின்  (காமராசர்) ஆட்சியில் வரி விதிப்பு குறித்த எதிர்ப்புக்கு வக்காலத்து வாங்கி அய்யா கி.வீரமணி எழுதிய தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி. “எந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட் சிக்கு வந்தபோதிலும், அரசாங்கத்தை நடத்த நிதி தேவை. நிதியைப் பெருக்க பெரும்பாலும் நான்கு வழிகள்தான் உள்ளன. 1. வரி 2. கட்டண வருமானம் (ரயில், தபால், ரிஜிஸ்டிரேஷன் மூலம் வருவது) 3. கடன் 4. நோட்டு அச்சடித்தல். நமக்குத் தெரிந்தவரையில் இதைத்தவிர வேறு வழிகள் கிடையாது என்றே கருதுகிறோம். இந்த உண்மை எதிர்க்கட்சி நாற்காலியில் உள்ள தலைவர்களுக்குத் தெரியாது என்று நாம் சொல்ல மாட்டோம். தெரிந்தும் மறைத்து, திரித்துக் கூறினால் தான் ஆளுங்கட்சியை வீழ்த்த முடியும் என்பது அவர்களது முடிவு.” என்கிறார்.அன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தோர் – பெரியாரின் நண்பரான ராசாசியும், பெரியாரால் கண்ணீர்துளி என்ற அழைக்கப்பட்ட தி.மு.க.,வும். மேற்கண்ட கி அய்யா கி.வீரமணி எழுதிய தலையங்க நியாயங்கள் – எதிரிகளின் ஆட்சிகள் என்றால் மாறி. “அநியாயம்” என்று பேனா உளறும். விலைவாசி குறித்த அய்யாவின் பதிலை வாசித்தபோது – திராவிட மேடை புகழ் கவிஞர் உடுமலைநாராயணகவி சொன்னதாக பகுத்தறிவு ஏடு அடிக்கடி சுட்டிக்காட்டும், “பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கடா – அட போக்கத்தவர்களே” என்கிற வாசகம் தான் ஞாபகத்துக்கு வந்தது. கவிஞர் உடுமலை நாராயணக்கவிராயர் – யாருக்கோ சொன்னது, தற்சமயம் திராவிட பகுத்தறிவுகளுக் கு பொருந்தி போகிறது. 10 கேள்வி கேள் என்றோர் - கேள்வி கேட்டால் பாய்கிறார்கள் “ஏன்… எதற்கு… எப்படி… ” என்று கேட்க சொன்னவர்கள், “கேள்வி கேட்பதன் மூலமே அறியாமை என்னும் இருளை அகற்ற முடியும்” என்றும் சொன்ன பகுத்தறிவாளர்கள் தான் – கேள்வி கேட்டால் கோபப்படுகிறார்கள். ஆச்சர்யப்படுத்தும் உண்மை தான். “சொல்வது ஒன்று… செய்வது ஒன்று…” இது தானே திராவிட பகுத்தறிவு. அதையே கேள்வி கேட்டலிலும் வெளிப்படுத்துகிறார்கள். ஒரு போதும் அவர்கள் தங்களை கோபப்படுத்தக்கூடிய கேள்விகளை விரும்புவதில்லை. தங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக்கூடிய கேள்விகளை விரும்புவதில்லை. தங்கள் தரப்பு ஆட்கள் குறித்த குற்ற செய்திகளை விவாதிக்கவும் விரும்புவதில்லை. அதில் எத்தனை உண்மை அல்லது பொய் சுமந்திருந்தாலும், தேர்வில் தெரியாத கேள்விகளை விட்டு ஒதுக்கும் மக்கு மாணவனை போல பகுத்தறிவும், அத்தகைய கேள்விகளை விட்டு ஒதுக்கி தள்ளுகிறது. நாம் பகுத்தறிவு பத்திரிகையாம் – உண்மையில் வந்த ஒரு கேள்வி, பதிலை (நவம்பர் 16-30 – 2013)மையமாக வைத்தே இந்த பதிவை தொடர்கிறோம். உண்மை இதழில் வந்த கேள்வி-பதில். கேள்வி : புலிகள் பற்றி தவறான செய்திகளை ஊடகத்தின் மூலம் சொல்லி விட்டு பிறகு வருத்தம் தெரிவித்த திருமதி சிவகாமி (இ.ஆ.ப. ஒய்வு) அவர்களைப் பற்றி என்ன நினைப்பது? – தி.இரமணன், தண்டையார்பேட்டை. அய்யா கி.வீரமணியின் பதில் : இப்படியெல்லாம் கேள்வி கேட்டு எமது நேரத்தை தயவு செய்து வீணடிக்காதீர்கள். (புலிகள் – பெண் போராளிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார்களே என்பதே சிவகாமியின் தவறான குற்றச்சாட்டு) அது குறித்த கேள்விக்கு – வீரமணியாரின் பதில் சரியானது தானா? எல்லாமே பதில்கள் தான். ஆனால் அதில் எத்தனை சரியானவை? நேரத்தின் அருமையை உணர்ந்தவர்கள் சொல்கிறார்கள். “இப்படியெல்லாம் கேள்வி கேட்டு எமது நேரத்தை தயவு செய்து வீணடிக்காதீர்கள்” என்று. அப்படியெனில் கேள்வி கேட்டவர் காலத்தின் அருமை தெரியாதவரா – நேரத்தை வீணடிக்க. அது அப்படி அல்ல. நாம் முதலில் சொன்னது போல – திராவிட பகுத்தறிவு “தம்மை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளை விரும்புவதில்லையே”. வாசகர் “தீபாவளிக்கு வெளியான படங்களில் எது சூப்பர்” என்றா கேட்டார். நேரத்தை வீணடிக்கும் கேள்வி என்று ஒதுக்க. ஆனால் இப்படி கேள்வியை ஒதுக்குதன் மூலம், உண்மையை வெளிப்படுத்தாமல் போவதன் மூலம் – புலிகளை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறோம் என்பதையும் உணரவில்லை. சிவகாமி அவர்களுக்கு பதிலாக இந்த வேலையை ஆதிக்க சாதி செய்து இருந்தால் – பதிலில் பிச்சு வாங்கி இருப்பார்கள். அதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்கிற வருத்தம் திராவிட பகுத்தறிவுக்கு இருக்கும். அதனால் தான் பதில் “பலவீனத்தை சுமந்து கொண்டுள்ளது”. அறிவு நாணயம் உள்ளோர், தம் வாசகரின் கேள்வியை மதிக்க வேண்டும் என்று நினைப்போர் – எத்தகைய பதிலை தந்திருப்பார்கள் என்று பார்ப்போம். அதற்கு முன் கேள்வி கேட்ட இரமணன் குறித்து சில வார்த்தைகள் பேசவேண்டும். நிச்சயம் பத்திரிகையில் தம் பெயர் வர வேண்டும் என்கிற அற்ப ஆசையில் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டார். அத்தகைய ஆசை கொண்டோருக்கான இடம் உண்மை பத்திரிகை அல்ல. அதற்கு பல பார்ப்பனிய பத்திரிகைகள் உள்ளன. அதனால் இந்த வாசகர் “சிவகாமி பேசிய கருத்து குறித்து அய்யா என்ன நினைக்கிறார்” என்று தெரிந்து கொள்ள கேட்டிருக்கலாம்.  அத்தகைய வாசகரை -அவமதிப்பது போன்றது – இந்த பதில். இதே கேள்வியை வேறு பத்திரிகைக்கு அனுப்பி இருந்தால், நிச்சயம் இதை விட நேர்மையான பதில் கிடைத்திருக்கக்கூடும் என்பது நம் கருத்து. என்ன மாதிரியான கருத்தினை அய்யா கி.வீரமணி தந்திருக்க வேண்டும். “சமூகத்தில் எத்தனை பெரியவராக இருந்தாலும் – ஒரு கருத்தை வெளிப்படுத்துவதற்கு முன், அது சரியான கருத்து தானா என்று உறுதி செய்து பேச வேண்டும். இது ஒரு மோசமான, அதே நேரம் அநாகரீகமான குற்றச்சாட்டு. யோசிக்காமல், உண்மை தெரியாமல் பேசிவிட்டு பிறகு பின் வாங்குவது, வருத்தம் தெரிவிப்பது அவர் வகித்த பதவிக்கு பெருமை சேர்ப்பதல்ல” என்கிற ரீதியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எல்லாம் மரியாதையான கருத்தை வைக்க விரும்பவில்லை – சுயமரியாதைக்காரர்கள். இத்தகைய கேள்விகள் வந்தால், “ஏனய்யா – எங்க உயிரை வாங்கறிங்க” என்கிற ரீதியில் பதில் வருவது நியாயமா? சிவகாமி சாதாரணமானவர் அல்ல.தம் பணிக்காலத்தில் மட்டும் அல்ல -தற்போது வரை ஒடுக்கப்பட்ட ம்க்களின் முன்னேற்றத்துக்கு முழு மூச்சாய் பாடுபடுகிறவர். மிக பெரிய இலக்கியவாதியும் கூட. அவர் “ஆனந்தாயி” என்கிற நாவலின் மூலம் தம் பெயரை – இலக்கிய உலகில் மிக அழுத்தமாக பதிவு செய்தவர். அத்தகையவரிடம் இருந்து – உண்மை அறியப்படாமல் இந்த குற்றச்சாட்டு வந்திருக்கக்கூடாது. அது அவர் தவறு. வருத்தம் தெரிவித்துள்ளார். நல்லது. ஆனால் கேள்விகளுடனேயே வாழ்க்கை பயணத்தை தொடரச் சொல்பவர்கள் – கேள்வி கேட்டோரை உதாசினப் பதில் கொடுத்து வாயை மூட செய்தது தவறு. கேள்வி பகுத்தறிவு இதழுக்கான தகுதியுடன் உள்ளதா என்று பார்க்கலாமே தவிர – தம்மை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகிறதா என்று பார்க்கக்கூடாது. 11 திராவிட பேச்சோடு போச்சு - தமிழர் ஒற்றுமை சமீபத்தில் மூன்று விஷயங்களை வாசிக்க நேர்ந்தது. திராவிட தலைவர்கள், “தமிழர்களின் ஒற்றுமை குறித்து பேசிய அக்கறை பேச்சு” மற்றும் அவர்கள் செய்கைகள். பேசிய பேச்சுக்கும், செய்த செயலுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்பதை சிற்சில சம்பவங்கள் சுட்டிக்காட்டி தமிழர்களிடம் ஏன் ஒற்றுமையில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டின… அதனால் தமிழர்களின் ஒற்றுமையின்மை எங்கே, எப்படி துவங்கியது என்பதையும் உணர முடிந்தது. திராவிடர் கழகத்தின் உண்மை இதழில் வந்த ஒரு கேள்வி பதில் இது. ? _ சி. சுவாமிநாதன், ஊற்றங்கரையிலிருந்து கேட்ட கேள்வி : கருநாடகத்தில் யார் முதல்வராக வந்தாலும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கொடாக்கண்டர்களாக இருக்கிறார்களே. அதற்கு, அய்யா கி.வீரமணி : அவர்களது மாநில உரிமை, பிடிப்பு _ ஒற்றுமை _ இவைகளின் வெளிப்பாடு அது! இங்கே… அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே!” என்று பதிலளிக்கிறார். “ஏன் அய்யாவுக்கு வெட்கமாகுது” என்கிற கேள்வி மனதில் எழுந்தது. ஏறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன் பெரியார் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்தால் “ஏன் வெட்கமாகுது” என்பது புரியும். எண்பது ஆண்டுகளாக தமிழர்களின் ஒற்றுமையில் எந்த மாற்றமுமில்லை என்பதே “வெட்கமாகுதுக்கு காரண்மாக” இருக்குமோ? பெரியாரின் கட்டுரையை சுருக்கி தருகிறோம். “முதலாவது நமக்குள் ஒருவித ஒற்றுமையை உண்டாக்கிக் கொள்ள-வேண்டும். அதற்காகவே பாடுபடவேண்டும். உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால், அதற்கு இடையூறாய் உள்ளவற்றை எல்லாம் ஒழிக்கவேண்டும். நமது நாட்டில் ஒற்றுமைக் குறைவு என்பது ஒரு தேசத்தாருக்கு ஒரு தேசத்தார் என்கிற முறையில் மாத்திரம் இல்லை. ஒரு மதஸ்தருக்கு மற்றொரு மதஸ்தர் என்கிற முறையில் மாத்திரம் இல்லை. நம்மைப் பொறுத்தவரை, அதாவது இங்கு கூடியுள்ள பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரை, ஒரு மதஸ்தர் (இந்துக்கள்) என்பவர்களுக்-குள்ளாகவே அநேக விதமான கொடுமையும், ஒற்றுமைக் குறைவும் இருந்து வருகிறது” என்கிறார். அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதே கர்நாடகா மற்றும் கேரளாவில் அதே ஒற்றுமையில்லாததாக கூறும் ஒரு மதஸ்தர்கள் (இந்துக்கள்) எப்படி எந்த ஒரு பிரச்சனை என்றாலும் ஒற்றுமையாக குரல் கொடுக்கிறார்கள் என்பதை அறிவுடன் சிந்தித்தோமேயானால் பகுத்தறிவு எங்கே கோட்டை விட்டது என்பது புரியும். நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் எடுக்கப்படாத நடவடிக்கைகள், சில கேரள மீனவர்களின் மரணத்திற்கு எடுக்கப்பட்டதே. எண்பதாண்டு கால தமிழர் ஒற்றுமை முழக்கம் என்னவானது என்பது மீனவர் படுகொலை சம்பவங்களில் பார்க்கலாம். தமிழர்களின் ஒற்றுமையின்மைக்கு சாதியும் காரணமாக இருக்கலாம், ஆனால் சாதி மட்டும் காரணம் என்பது முட்டாள்தனம். கர்நாடகாவிலும், கேரளாவிலும் – பெயருக்கு பின்னால் சாதியை துறக்கும் பழக்கம் இன்னுமில்லை… அங்கேயும் சாதிக்கு பஞ்சமில்லை… அதே நேரம் அய்யா கி.வீரமணி சொன்னது போல, “அவர்களது மாநில உரிமை, பிடிப்பு _ ஒற்றுமை _ இவைகளின் வெளிப்பாடு – பிரச்சனைகளுக்கு ஒருமித்த குரல் கொடுத்தல்” என்பது இங்கே ஏன் இல்லாமல் போனது. மக்கள் தான் சாதீயத்தை கட்டிக்கொண்டு நான் பெரியவனா, நீ பெரியவனா என்று மோதி கொண்டு முட்டாள்களாக இருக்கிறார்கள். தலைவர்களாவது, பகுத்தறிவு திராவிட தலைவர்களாவது – சக தலைவர்களை விரோதம் பாராட்டாதவாறு, ஒற்றுமையுடன் தமிழர் நலனில் தமிழர்களுக்காக அல்லது திராவிடர்களுக்காக பிரச்சனைகளில் இணைந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ முன்னுதாரணமாக இருக்கலாமே. ஏன் அது முடியாதா? அங்கே தானே பிரச்சனையே. தமிழர்களின் ஒற்றுமையின்மைக்கு தலைவர்களின் செயல்பாடுகளே முக்கிய காரணம் என்பதை ஒரு சம்பவத்தின் வாயிலாக உணர முடிந்தது. நிச்சயம் அதை வாசித்தபோது அதிர்ச்சியாக தான் இருந்தது. பெரியாரே இப்படி என்றால்? பிற தலைவர்களை குற்றம் சொல்லி என்ன பிரச்சனை. அந்த ஒரு சம்பவம். “தேவிகுளம், பீர்மேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை”யாம். இது தான் தமிழகத்தில் இருந்த, இருக்கிற தலைவர்களின் உண்மை முகம். அதுவே இன்றைக்கும் தொடர்கிறது. எனக்கு வெகுநாளாக உறுத்தி கொண்டிருந்த விஷயம் இது. தமிழகத்தில் மட்டும் தான் – அனைத்து கட்சி கூட்டம் என்றால், அம்மா முதல்வர் என்றால் எதிர்க்கட்சி அய்யா கலந்து கொள்ள மாட்டார். பதிலுக்கு யாரையேனும் அனுப்புவார்கள். அதே போல அய்யா முதல்வராக இருந்தால் அம்மா கலந்து கொள்ள மாட்டார். பதிலுக்கு யாரையும் அனுப்பவும் மாட்டார். கல்யாண வீடு என்றால் கூட – யாராவது ஒரு தலைவர் வந்து போன பின் தான் அடுத்த தலைவர் வருவார். தலைவர்களே இப்படி பகைமை காட்டினால், மக்கள் எப்படி இருப்பார்கள். டெல்லியில் – சோனியாவை எவ்வளவு விமர்சித்தாலும் பா.ஜ.,வை விரோதியாக கருதாது காங்கிரஸ். பா.ஜ., வை மதவாதிகள் என்று எத்தனை கேவலமாக காங்கிரஸ் பேசினாலும், பா.ஜ.,க்கு அவர்கள் எதிரிகள் அல்ல. இந்தியா முழுக்க இது தான் நிலை – தமிழகத்தை தவிர. சாதி இல்லாத மாநிலங்கள் இந்தியாவில் இல்லை எனும்போது – தமிழர்கள் ஒற்றுமையின்மைக்கு சாதி தான் காரணம் என்பது, ஒற்றுமையின்மைக்கு உண்மையான காரணம் தேட விரும்பாது – பொய்யாக ஒற்றுமையை போதிப்பதால் என்ன மாற்றம் நிகழும். சரி ஒற்றுமையின்மைக்கு என்ன காரணமாக இருக்க முடியும். இறை நம்பிக்கையாளர்கள் V/S இறை நம்பிக்கையற்றவர்கள் என்பதான சூழல் பிற மாநிலத்திலில்லை. ஆனால் இங்கே வேறு மாதிரியான சூழல். பகுத்தறிவாளர்கள் – ஆத்திகர்களுக்கு முன்னுதாரணமாக நேர்மையாக வாழ்ந்து – பேதங்களை தவிர்க்க வேண்டும். உண்மை பேச வேண்டும். உண்மை பேசும் மனநிலையில் திராவிட பகுத்தறிவு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தமிழர்களின் ஒற்றுமையின்மை குறித்து பெரியார் எழுதிய கட்டுரையின் மற்றொரு பகுதியை தருகிறோம். “நமது நாட்டில் மக்களைப் பிறவியிலேயே உயர்வு – தாழ்வு கற்பித்து, ஒன்றுக்கொன்று ஒன்று சேர விடாமல் தடுத்து, எவ்வளவு அயோக்கியனாய் இருந்தாலும், ஒரு வகுப்பு தாய் வயிற்றில் பிறந்ததற்காக மாத்திரம் உயர்ந்தவன் என்றும், மற்றெல்லோரும் அவனைத் தொழ வேண்டியவர்கள் என்றும், ஆக்கி வைத்திருக்கிறது” என்கிறார். மதவாதிகளும், சாதியவாதிகளும் மட்டுமே – பெரியார் சொன்னது போல இருந்தால் அதை திருத்த முயற்சிக்கலாம். ஆனால் தமிழகத்தின் இழிவு… பகுத்தறிவாதிகளும் அவ்விதம் இருக்கிறார்களே… தவறு செய்கிறவனை, ஊழல் செய்கிறவனை, குண்டு வைக்கிறவனை, பாலியல் வன்கொடுமை செய்கிறவனை, நரபலி செய்கிறவனை என்று ஒவ்வொன்றயும் விமர்சிக்கும் போது – அவன் சாதி, மதம், கட்சி, வேண்டியவனா, வேண்டாதவனா என்று பார்த்து – பெரியார் தமிழர்களின் பின்னடைவுக்கு எதுவெல்லாம் காரணம் என்று சொன்னாரோ – அதையே திராவிட பகுத்தறிவாதிகளும் செய்தால்… அவர்கள் தங்களை முதலில் திருத்தி கொள்ள இயலாமல் “தமிழர்கள் திருந்த வேண்டும், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என்று பேசுவதால் மட்டும், எண்பதாண்டு காலமாய் காணாத ஒற்றுமையை கண்டுவிட போகிறோமா? 12 நாத்திகம், பகுத்தறிவு வளர்ச்சி நாத்திகம், பகுத்தறிவு வளர்ச்சி வரவேற்கத்தக்கதா? நிச்சயம் வரவேற்கத்தக்கது. ஆனால் எது பகுத்தறிவு, யார் பகுத்தறிவாளர்கள் என்கிற கருத்தில் நாம் மாறுபடுகிறோம். அந்த வளர்ச்சி மனித குலத்துக்கு வளர்ச்சியாக உள்ளதா அல்லது கண்ணுக்கு தெரியாத வீழ்ச்சியை கொண்டுள்ளதா? முற்போக்கும், பகுத்தறிவும் மதத்தை பழித்தாலும் தனி மனித துதிப்பாடலுடன் மதம் செய்கிற வேலைகளை தானே செய்கிறது. உலகின் முதல் பகுத்தறிவாளர் என்று சொல்லப்படுகிற புத்தரால் துவங்கப்ட்டது – சில நூற்றாண்டுகளிலேயே தம் இருப்பை தக்க வைத்து கொள்ள அன்று தொடங்கி இன்றைய ஈழம், பர்மா வரை வன்முறையை நாடவில்லையா? சமீபத்திய கடவுள் நம்பிக்கையாளர்கள், நாத்திகர்கள் பற்றிய ஆய்வு கட்டுரையை (விடுதலையிலிருந்து) வாசித்து விட்டு என் விமர்சனத்தை வைக்கிறேன். “51 ஆயிரத்து 927 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. லண்டனில் அண்மையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்தியர்களிடம் கடவுள் நம்பிக்கை குறைந்து விட் டது உறுதியாகி உள்ளது. 2005-ஆம் ஆண்டு கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் தற்போது 6 சதவிகித இந்தியர்கள் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.ஒட்டு மொத்த இந்தியாவில் கணக்கிட்டால் 81 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கையுட னும் 13 சதவிகிதம் பேர் மத ஈடுபாடு இல்லாமலும், 3 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகவும் உள்ளனர். நமது அண்டை நாடான சீனா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அங்கு 48 சதவிகிதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. சீனாவில் 14 சதவிகித மக்களே கடவுள் நம்பிக்கையுடன் உள்ளனர். அது போல ஜப்பானில் 16 சதவிகித மக்களே கடவுள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த வரிசையில் செக் குடியரசு 20 சதவி கிதம், பிரான்சு 37 சதவிகிதம், தென் கொரியா 52 சதவிகிதம் நாடுகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன. உலக அளவில் பாகிஸ்தானில் கடவுள் நம்பிக்கையுடன் அதிக மக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானில் தற்போது 6 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர். ஆனாலும் நாத்திக அமைப்புகளும் முஸ்லிம் நாடுகளில் தோன்றிட ஆரம்பித்துள்ளன.” என்கிறது கட்டுரை. மதம் கோலோச்சும் நாடுகளிலும் நாத்திகர்கள் உருவாவது வரவேற்கத்தக்கது. மேற்குலக நாடுகளின் நாத்திகம் வளர்வதற்கும், கம்யூனிச நாடுகளில் நாத்திகம் வளர்வதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். ஒரு தனி மனிதன் நாத்திகனாக இருப்பதற்கும், அதுவே ஒரு நாத்திக இயக்கமாக இருப்பதிலும் வேறுபாடுகள் உள்ளன. என்ன வேறுபாடு. நாத்திகமும், பகுத்தறிவும் தொடர்ந்து அதிகரிக்கும் மேற்குலக நாடுகளில் மத பிரச்சாரங்களுக்கு யாதொரு தடையுமில்லை. ஆனால் நாத்திகம் தழைத்தோங்கி முதலிடத்தில் இருப்பதாக சொல்லப்படும் கம்யூனிச சீனாவில் மதப்பிரச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. வலுவில் நாத்திகத்தை உருவாக்குகிறார்கள் என சொல்லலாமா? மதங்கள் தடை செய்யப்பட்டுள்ள நாட்டில் மத நம்பிக்கை இல்லாமல் போவதில் ஆச்சர்யமென்ன. சீனத்து அண்மைய செய்தி ஒன்று. “சீனாவில், மதப் பிரசாரத்தில் ஈடுபட்ட, 20 பேருக்கு ஆயுள் தண்டனை, விதிக்கப்பட்டுள்ளது. துர்க்மெனிஸ்தான் நாட்டையொட்டிய, சீனாவின், சின்ஜியாங் மாகாணத்தில், உய்குர் இனத்தைச் சேர்ந்த, சிலர் குடியேறினர். அவர்கள், அங்கு இஸ்லாமிய மதம் குறித்து பிரசாரத்தை செய்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர்களில், 20 பேரை, போலீசார் கைது செய்து, அவர்கள் மீது பிரிவினைவாதம், நாட்டை துண்டாட சதித்திட்டம் தீட்டுதல் போன்ற வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள், மத பிரசாரம் செய்வதற்காக, பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், டி.வி.டி.,க்கள் என, பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கம்யூ குறித்து தம் வலைப்பூவில் எழுதியவரை சிறையில் தள்ளியது அரசு. அத்தகைய நிலையில் சீன கருத்துகணிப்பு உண்மையை பேசும் என்று நம்புவதற்கில்லை. மேற்குறிப்பிட்ட பிரச்சார வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 20 பேருக்கும், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.” என்கிறது செய்தி. இதே மாதிரியான செய்தி சவூதியிலிருந்தும் வந்துள்ளது. இஸ்லாம் அல்லாத மதங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமிய சவூதிக்கும், கம்யூனிச சீனாவுக்கும் என்ன வித்தியாசம். அங்கே இஸ்லாத்துக்கு ஆபத்து வந்துவிடக்கூடும் என்பதால் பிற மதங்களுக்கு தடை. சீனத்து கம்யூனிசத்துக்கு மதவாத சக்திகள் மூலம் ஆபத்து வந்துவிடும் என்பதால் மத பிரச்சாரங்களுக்கு தடை. பாமியானாவில் புத்தர் சிலைக்கும், அயோத்தியில் பாபர் மசூதிக்கும் நேர்ந்த நிலையே – கம்யூனிசம் மதமாக உள்ள சீனாவில், யூவான் சுவாங் கல்லறைக்கும் ஏற்பட்டது. “கடவுள் இல்லை என்று சொல்கிற நாத்திகர்களால் இதுவரை எந்த வழிபாட்டுத்தலமும் இடிக்கப்பட்டதில்லை என்பார்கள் பகுத்தறிவாளர்கள்” ஆனால் அது பொய். சீன நாத்திகவாதிகளால் இடிக்கப்பட்ட வழிபாட்டுதலங்கள் அனேகம். அங்கே கம்யூனிசம் மதமாக, மாவோ கடவுளாக… அவ்வளவு தான் வித்தியாசம். மூளைச்சலவை செய்யப்பட்ட தேசத்தில் நாத்திகனாக இருப்பதில் எந்த பெருமையுமில்லை. இங்கே உள்ள கம்யூனிஸ்ட்களையும் பார்க்கிறோம். “வேதப்புத்தகத்திற்கு பதிலாக மூலதனம்… கடவுள் படங்களுக்கு பதிலாக கம்யூனிச தலைவர்களின் படங்கள்” சுயமாக சுதந்திர சிந்தனையுடன் சிந்திக்காமல் தம் தலைவர்கள் சொன்னது சரியா, தவறா என்று ஆராயாமல் “ஆமாம் சாமி” போடும் தங்களை இவர்களும் பகுத்தறிவாதிகள் என்றே அழைக்கிறார்கள். மேற்குலக நாடுகளில் நாத்திகர்களின் வளர்ச்சி அவர்களின் அறிவின் முதிர்ச்சி காரணமாக வந்தது. அதனால் உலகில் நாத்திகர்கள் என்று சொல்லக்கூடிய தகுதியை அவர்கள் பெறுகிறார்கள். கடவுளுக்கு, மதங்களுக்கு நிகரான நவீன கடவுள்கள், மதங்களாக கம்யூனிச தலைவர்களும், இயக்கங்களும்… யிசங்களும், விஷங்களும் உள்ளே இருக்கிற வரை – அவன் எப்படி நாத்திகனாவான். சரி, நம் ஊர் பகுத்தறிவும், நாத்திகமும் எப்படி. கம்யூனிஸ்ட்களுக்கு சொன்ன அத்தனையும் இவர்களுக்கும் பொருந்தும். “நாத்திகம் என்கிற மதத்தில் இருந்து கொண்டு பெரியாரை தொழுகிறார்கள்” தம் மதம் சொல்வது சரியா, தவறா என்பதை ஆராய விரும்பாமல் மத நம்பிக்கையாளன் எப்படி வாழ விரும்புகிறானோ, அது போலவே தம் தலைவர் சொன்ன தெல்லாம் சரியாக இருக்கும் என்று வாழுகிறவன் எப்படி பகுத்தறிவாளனாக இருக்க முடியும். நாம் அவர்களின் பல்வேறு முரண்பாடுகளை, பல்வேறு பதிவுகளில் சுட்டிக்காட்டி இருக்கிறோம். இவர்களை எப்படி பகுத்தறிவாதி என்பது. “பெரியாரை கடவுளாக கொண்ட மதத்து அங்கத்தினர்கள்” என்று சொல்லலாம். இவர்களின் எண்ணிக்கை என்றேனும் அபரிதமாக உயர்ந்தால் – மதவாதிகள் என்னவெல்லாம் செய்தார்களோ, அதையே தான் செய்வார்கள். “பகுத்தறிவு என்றால் என்ன? ஜீவப் பிராணிகளின் சிந்தனா சக்தியையும், சிந்திப்பதின் உணர்ச்சியையும் தான் அறிவு என்று சொல்லப்படுகிறது. அச்சிந்திக்கும் தன்மையின் கூர்மையை பகுத்தறிவு என்றுச் சொல் லலாம். ஆனால் அப்பகுத்தறிவை பெரிதும் மனித னுடைய சிந்திக்கும் தன்மைக்கும், சிந்திப்பதின் கூர்மைக்குமே சொல்லப்படுகின்றது.” என்று ஆரம்பித்தவர்கள் தான் வளர்ந்த பிறகு இப்படியும் சொன்னார்கள். “நமக்குப் புதிதாகக் கருத்துச் சொல்லக்கூடியவர்கள் இப்போது தேவையில்லை” என்று. இப்படி பேசுதல் எப்படி பகுத்தறிவை வளர்க்கும். அங்கேயும் மறைமுகமாக பார்ப்பனியமும், ஆதிக்க சக்தியும் தான் வளரும். 13 பசி வந்தால் பகுத்தறிவும் பறக்கும் பசி எடுத்ததாலும், பதவி ஆசை வந்ததாலும் – பகுத்தறிவு பறந்த இரண்டு கதையை பார்ப்போம். “பசி வந்தால் பத்தும் பறக்கும்..” என்பதை ஒளவையார் இப்படி பாடினார். “மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் சிவந்திடப் பறந்து போம்”. இதில் பகுத்தறிவையும் சேர்க்கலாமோ? அறிவுடைமை என்று சொன்னாலும் அது பகுத்தறிவுக்கு ஈடாகுமோ? பகுத்தறிவை இங்கே குறிப்பிட காரணம் – ராணி மைந்தன் அவர்கள் எழுதிய, ‘ராஜாராம்’ என்ற நூலிலிருந்து (1967) தரப்பட்ட ஒரு செய்தி. திராவிடர் கழக மாநாடு, 1945ல் திருச்சியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தான், இரண்டு மிக முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. திராவிடர் கழகத் தோழர்கள், கறுப்புச்சட்டை அணிய வேண்டும் என்பதும், பிராமணர் ஓட்டல்களில் சாப்பிடக்கூடாது என்பதுமே, அந்தத் தீர்மானங்கள். கறுப்புச் சட்டைத் தீர்மானம், ஒரு மனதாக நிறைவேறியது. ஆனால், இன்னொரு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியவர்களில் முக்கியமானவர் அண்ணாதுரை. அவர், ‘எந்த ரயில்வே ஸ்டேசனுக்குப் போனாலும், அங்கே பிராமணர் நடத்தும், உணவு விடுதிகள் தான் இருக்கின்றன. ரயிலில் நெடுந்தூரம் பயணம் போகிறவர்கள், இந்தத் தீர்மானத்தை செயல்படுத்துவதற்காக, பட்டினி கிடக்க முடியாது. அப்படித் தொண்டர்களையும், கழக உறுப்பினர்களையும் வற்புறுத்தக் கூடாது…’ என்று வலியுறுத்தினார். விளைவு, அந்தத் தீர்மானம் நிறைவேறவில்லை. அண்ணாதுரை அவர்கள் குறிப்பிட்டதில் நியாயம் உள்ளது. ஒரு சாண் வயிற்றுக்காக தானே எல்லா பாடுகளும். அதை வாடவிடுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.”பசி உயிர் போகிறது”என்பார்களே… எப்பாடுபட்டாவது உயிரை காப்பாற்றியாக வேண்டுமே… “பசி வந்தால் பகுத்தறிவும் பறக்கலாம். தவறில்லை தான்” . அதே நேரம் பதவிக்காக பகுத்தறிவை பறக்கவிடலாமா? பசியால் பகுத்தறிவு பறந்ததிலிருந்த நியாயம் – பதவிக்காக பகுத்தறிவை, தன் பார்ப்பனிய எதிர்ப்பு கொள்கையை பறக்கவிட்டதில் இல்லையே. 1967ல் பார்ப்பனிய ராஜாஜியுடன் தேர்தல் கூட்டணி வை த்து கொண்ட அண்ணாதுரை அவர்களை தான் பதவிக்காக பகுத்தறிவை பறக்கவிட்டவர் என்கிறோம். அன்றே, 1945லேயே – எதிர்காலத்தில் பார்ப்பனர்களுடன் கூட்டணி வைக்கக்கூடும் என்பதை தான், பகுத்தறிவுக்காக பார்ப்பன உணவகங்களை துறக்க முடியாது என்று சிம்பாலிக்காக சொல்லி விட்டாரோ. பதவிக்காக பகுத்தறிவை துறந்த கதையை இங்கே தருகிறோம். மாலைமலரின் காலச்சுவடுகள் பகுதியிலிருந்து. 1967 பொதுத்தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியுடன், எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து, கூட்டணியை தி.மு.கழகத் தலைவர் அண்ணா அமைத்தார். கூட்டணி அமைப்பதற்காக, தி.மு.கழகத்தின் மாநில மாநாடு சென்னை விருகம்பாக்கத்தில் 1966 டிசம்பர் 29 ந்தேதி முதல் 4 நாட்கள் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ராஜாஜி பேசியதாவது, “மாநாட்டு அமைப்பு இவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ மாயத்தால் செய்தது போல் இருக்கிறது. தேர்தலிலும் மாயம் செய்து வெற்றி பெறவேண்டும். நான் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறேன். முன் சரித்திரங்களைப் பார்த்தால் இது ஆச்சரியமாக இருக்கும். இந்த கூட்டு சரித்திரத்தில் பதிவாகும். தேர்தலில் வெற்றியும் கிடைத்தால் நன்றாக பதிவாகும். “காங்கிரஸ் கட்சி படுத்துக்கொண்டே வெற்றி பெறும்” என்று காமராஜர் கூறுகிறார். படுப்பது நிச்சயம். ஆனால் வெற்றி பெறுவது சந்தேகம். காங்கிரஸ்காரர்களுக்கே காங்கிரஸ் வெற்றி பெறுவதில் சந்தேகம். சந்தேகம் இருக்கும்போது வெளியில் தைரியமாக பேசுவார்கள். அதுபோல் காமராஜரும் தைரியமாக பேசுகிறார். காங்கிரஸ் ஒரு பழம். அது அழுகி விட்டது. துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது. இனி அதை குப்பை தொட்டியிலே போடவேண்டும். அண்ணாதுரையுடன் நான் கூட்டு சேருகிறேன் என்றதும் காங்கிரசார் “வேடிக்கை” என்று நினைத்தார்கள். இப்போது எதிர்ப்பு அணியின் பலத்தை தெரிந்து கொண்டார்கள். முயற்சி செய்து கூட்டை உடைக்கப் பார்த்தார்கள். நடக்கவில்லை. காங்கிரஸ் ஏணியில் ஏறி உச்சத்திற்கு சென்று விட்டது. இனி கீழே விழவேண்டியதுதான். இறங்கும்போது நிதானமாக இறங்க வேண்டும். அகம்பாவத்தில் இறங்கினால் தலைகீழாக விழவேண்டியதுதான். ஆட்சியை ஜனநாயக முறையில் இறக்காமல் பலாத்கார முறையில் இறக்க வழி இல்லை. ஓட்டு மூலம்தான் இறக்கவேண்டும். படுத்துக் கொண்டே வெற்றி பெறுவேன் என்று கூறியதன் முடிவை, 1967ல் ஓட்டு எண்ணும்போது காங்கிரசார் பார்க்கப்போகிறார்கள். தேர்தலில் காங்கிரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றுவோம். அதற்கு நீங்கள் எல்லோரும் பாடுபடவேண்டும்.” என்று ராஜாஜி கூறினார். ராஜாஜியுடன் அண்ணா கூட்டணி சேர்ந்தததை -காங்கிரசார் “வேடிக்கை” என்றார்களாம். பதவிக்காக பகுத்தறிவு பறந்ததை தான் காங்கிரஸார் வேடிக்கை என்று நினைத்திருக்கக்கூடும். மேலும், மாநாட்டுக்குத் தலைமை தாங்கி அண்ணா பேசியதை பார்ப்போம். “எப்படியாவது ஆட்சியில் போய் உட்கார்ந்து விடுவது அல்ல நம் நோக்கம். தரணியிலே தமிழகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அந்த வாய்ப்பு, காலத்தால் என் கையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. “ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்” என்று மக்கள் கூறினால், “ஆகட்டும்” என்று ஏற்றுக்கொள்வோம். இதற்குக் காரணம் பதவியில் லாபம் சுவை இருக்கிறது என்பதல்ல. நாம் ஆட்சியில் அமர்ந்தால் தமிழ் மரபு காப்பாற்றப்படும் என்ற எண்ணம் தான். இனத்தையும், மொழியையும் காப்பாற்றத்தான் அரசியலில் ஈடுபட்டு இருக்கிறேன். மற்றபடி மந்திரிசபை அமைத்து, கருணாநிதிக்கு ஒரு மந்திரி பதவியும், நெடுஞ்செழியனுக்கு ஒரு மந்திரி பதவியும் கொடுப்பதற்கு அல்ல. அரசியலில் நான் ராஜாஜியை கண்டித்தது போல் வேறு யாரையும் கண்டித்தது இல்லை. அவர் இன்று நம்மை வாழ்த்துகிறார். நினைத்தால் வேடிக்கையாக விசித்திரமாக இருக்கிறது. “விதி வகுத்தது” என்று சொல்வார்களே அதுபோல் இருக்கிறது. ராஜாஜி வாழ்த்துவது என்றால் சம்பிரதாயத்துக்காக அவர் வாழ்த்தவில்லை. உள்ளத்தில் இருந்து வாழ்த்துகிறார். இது ஒரு அரசியல் திருப்பம் ” என்று அண்ணா கூறினார். பதவியை பிடிக்க அண்ணா என்ன என்னவெல்லாம் கதை சொல்கிறார் பாருங்கள். “தமிழ் மரபு காப்பாற்றப்படவேண்டும். இனத்தையும், மொழியையும் காப்பாற்றத்தான்” ராஜாஜியுடன் அண்ணா கூட்டணி வைத்தாராம். காலமெல்லாம் எதிர்த்த பார்ப்பனியத்துடன் பதவி சுகத்துக்காக அண்ணா கூட்டணி வைக்கிறார். பதவிக்காக பகுத்தறிவும் பறந்து போகிறது. பசி வந்து பகுத்தறிவு போனதிலிருந்த நியாயம் – பதவி ஆசையால் பகுத்தறிவு போனதில் இல்லையே. இந்த தேர்தலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி “போட்டியிடட இடங்கள் -   27″   …வென்ற இடங்கள் – 20..  . இவர்களின் கூட்டணியில் கர்மவீரர் காமராசர் தோற்றது தனி கதை. சந்தர்ப்ப வாத கூட்டணி அமைப்பதில் – இன்றைய அரசியல்வாதிகளுக்கு அன்றைய அரசியல் தலைவர்கள் ஆசான்கள். ஆரிய திராவிட யுத்தம் முடியவில்லை என்று தேர்தலுக்கு தேர்தல் கர்ஜித்தாலும், சில தேர்தலுக்கு மட்டும் “பிரேக்” விட்டு விடுவார்கள்.  தேர்தல் காலங்களில் முந்தைய தேர்தல் கதைகளை அறிவது நல்லது. 14 இவர்கள் "தமிழர்கள் ஒற்றுமையை பற்றி" பேசலாமோ தமிழர்களின் பிரச்சனைக்கு, திராவிட கட்சிகள் – தங்கள் பேதம் மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால் விடிவு கிடைக்குமே என்றொரு வாசகருக்கு தோன்ற – அந்த சிந்தனையை கேள்வியாய் எழுப்பி விடுதலைக்கு அனுப்பி இருக்கிறார். அவரது கேள்வியும் மற்றும் இனமான கி.வீரமணி அய்யா அவர்களின் பதிலும் – நம் மனதில் வேறு சில கேள்விகளை எழுப்ப, அனைத்தையும் இந்த பதிவாக்கி இருக்கிறோம். வழக்கம் போல பதிலுக்கு சம்பந்தமில்லாமலே, தங்கள் பாதையை வகுத்து கொண்டுள்ளது பகுத்தறிவு. முதலில் கேள்வி, பதில்…                                                                                                                                                                                                                   கேள்வி : வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு திராவிடக் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாய் நின்றால் 40 இடங்களையும் கைப்பற்ற முடியுமே? அதன்பின் அமைச்சரவையில் சேராமல் இருந்தால் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமே. எனது கனவு பலிக்குமா? – சீர்காழி கு.நா. இராமண்ணா, சென்னை பதில் : உங்கள் கனவு ஒருபோதும் நடக்காது; ஏற்கெனவே நாம் திராவிட பார்முலா சொன்னபோதும் பலனில்லை. தமிழ்நாட்டில் சாவு வீட்டிற்குக்கூட ஒன்றாக சேர்ந்து போக மறுக்கும் வெட்கக்கேடான நிலை உள்ளதே!” என்கிறார் அய்யா கி.வீரமணி. தமிழர்களின் ஒற்றுமையின்மையை குறித்து சரியாக சொல்லி இருக்கிறார். ஏனைய தென்னிந்திய திராவிட மொழி பேசுவோர் ஒற்றுமையாக இருக்க – இங்கே மட்டும் எதனால் இந்த ஒற்றுமையின்மை, திராவிட கட்சிகளை ஒன்று சேர்க்க முடியாமை போன்றவைகளை அலசி ஆராய்ந்தால் தான் கருஞ்சட்டைகாரருக்கெல்லாம் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பேசும் தகுதியே இல்லை என்பது புரியும். இவர்களின் “தமிழ்நாட்டில் சாவு வீட்டிற்குக்கூட ஒன்றாக சேர்ந்து போக மறுக்கும் வெட்கக்கேடான நிலை” என்கிற ஏளனப் பேச்சை ஒரு பக்கம் வைத்துவிட்டு, இவர்கள் ஒற்றுமைக்காக கொடுக்கும் உரிமைக்குரல் கொடுக்கும் அழகை முதலில் பார்ப்போம். “சேலம் வருமான வரி அலுவலகத்தின் மீது நடந்த தாக்குதல் முயற்சி தொடர்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டிருக்கிறார். அய்யா கொளத்தூர் மணி திராவிடர் கழகத்தில் இருந்தவர் தான். திராவிடர் கழகத்திலிருந்து எவரும் இந்த கைதை கண்டிக்காத நிலையில், “இந்த கைதை தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என துணிச்சலாக விமர்சிக்கிறார் வை.கோ. இந்த கைதை முதல் ஆளாக கண்டித்து இருக்க வேண்டிய தாய் கழகமான திராவிடர் கழகம் கண்டிக்காததற்கு காரணம் மாற்றாந்தாய் மனப்போக்கே காரணம். தங்கள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களை எப்படி தங்களுக்கு சமமாக பார்ப்பது என்கிற பகுத்தறிவும் ஒரு காரணம். தமிழக அரசுக்கும், கொளத்தூர் மணிக்கும் வாய்க்கால் சண்டையா? கண்டு கொள்ளாமல் போக. இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று கோரிக்கையை வலியுறித்தி , தமது எதிர்ப்பை தெரிவித்த விதத்தில் சில விரும்பதகாத சம்பவம். ஆனாலும் உண்மை என்ன என்பதை அறிந்து குரல் கொடுக்க வேண்டாமா?                                                                                                                                                                     விஸ்வரூபம் படத்திற்கு பார்ப்பனர் கமலுக்கு எதிர்ப்பு என்றதுமே, ஒரு பக்கத்திற்கு அறிக்கை தயாரிக்க நேரமும் இருந்தது, மனமும் இருந்தது. இங்கே சக திராவிடர் கழகத்தவர் கைது குறித்து பேச நேரமும் இல்லை. மனமும் இல்லை. இது தான் தமிழனின் குணம். திராவிட பகுத்தறிவின் மாற்றாந்தாய் மனப்போக்கு உணர்வுக்கு மற்றொரு உதாரணம் உள்ளது. பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த பழனி என்பவர் கொடூரமான முறையில் வலது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,வால் ராமச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். சக பெரியார் கழக தொண்டர் என்பதன் அடிப்படையில் அந்த செய்தியை வெளியிட்டு, அந்த படுகொலைக்கு காரணமானவர்களை கண்டித்து, பழனி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டும் – திராவிடர் கழகமும், விடுதலையும்., ஆனால் செய்யவில்லை. அவர்களிடம் இருந்து விலகி போனவரின் அமைப்பின் தொண்டராம். அதனால் வெளியிடவில்லை போலும். சக திராவிட கழக தொண்டர் படுகொலை குறித்த செய்தியையே வெளியிடுவோமா… வேண்டாமா… என்று யோசித்து – வெளியிடாமல் விட்ட இவர்கள் தான் தமிழர்களின் ஒற்றுமை குறித்து சிந்திப்பவர்களாம். இந்துத்வா அமைப்பால் கொல்லப்பட்டிருந்தால் படுகொலை செய்தி விடுதலையில் வந்திருக்கும். ஒரு கைது நடவடிக்கைக்கு, ஒரு படுகொலைக்கு – சக பெரியார் இயக்கத்தினருக்கே குரல் கொடுக்க முடியாதவர்கள் தான் “ஏற்கெனவே நாம் திராவிட பார்முலா சொன்னபோதும் பலனில்லை” என்கிறார்கள். ஒற்றுமை மாத்திரமே திராவிடத்தலைகளின் குறிக்கோள் என்றால், “ஏன் அய்யா உங்களுக்குள்ளேயே எத்தனை தடவை அடித்து கொண்டு உடைந்தீர்கள்”. “தமிழ்நாட்டு திராவிடக் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாய் நின்றால் 40 இடங்களையும் கைப்பற்ற முடியுமே? அதன்பின் அமைச்சரவையில் சேராமல் இருந்தால் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமே.” என்று சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்டிருக்கிறார் அந்த வாசகர். திராவிடக்கட்சிகள் எம்.பி.,யாக முயற்சிப்பதே மந்திரியாகத்தானே. விடுதலை இதழ் கணித மேதை ராமானுஜம் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. பார்ப்பனிய சமூகத்தில் பிறந்த ராமானுஜத்தை பார்ப்பனியர்கள் கைவிட்டார்கள், வெள்ளைக்காரர்களே அவரின் திறமையை வெளி கொண்டு வந்தார்களாம்.                                                                                                                                                                                                                                                           “வெள்ளைக்காரர்களுக்கு – இருந்த மனிதநேயம், சொந்த நாட்டு ஜாதிக்காரர் களுக்கோ, பணம், நிலபுல வசதி படைத்த வர்களுக்கோ இல்லையே! வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் அதன் பேராசிரியர் களும் காட்டிய பரிவு, கொடுத்த அங்கீகாரத் தின் முன்பு சுய ஜாதி அபிமானம், தேசாபிமானம் எம்மாத்திரம்?அப்படியெல்லாம் இருந்து வாழ்ந்த அவருக்குரிய இறுதி மரியாதை அவர் சாவின் போது அந்த ஜாதி யினர், சொந்த உறவுகளால் கிடைத்ததா? அதுதான் வேதனை – வெட்கம்!” என்கிறது விடுதலை. சாதீயவாதிகளுக்கு விடுதலை சொன்ன இந்த உதாரணம், திராவிட பகுத்தறிவாதிகளுக்கும் பொருந்தியதே. வை.கோவை, தி.மு.க.,விலிருந்து கேவலமாக துரத்தியபோது, பேரறிவாளனை திராவிடர் கழகம் கைவிட்டபோது என்று திராவிட சாதி,  திராவிட சாதியை கைவிட்ட உதாரணம் தொடர்கிறதே…. நாம் – பல திராவிட தலைவர்கள் மீதான வன்முறையை பார்ப்பன பத்திரிகைகளை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது என்பதே உண்மை. பகுத்தறிவாளர்கள் ஒரு போதும் “ஆளுக்கொரு நீதி” என்கிற தங்கள் பாதையை விட்டுவிலகுவதில்லை. அதற்கு சமீபத்திய உதாரணம், “சக திராவிடர் இயக்கத்தவரின் கைதையே கண்டு கொள்ளாத போக்கு”.இவர்கள் ஒற்றுமை என்று பேசி தங்களையும். தமிழர்களையும் ஏமாற்ற முனைகிறார்கள். 15 சச்சின் v/s பகுத்தறிவு சச்சினை பற்றி எல்லோரும் எழுதியாயிற்று. திராவிட பகுத்தறிவு மட்டும் எழுதாமல் இருக்குமா? எழுதி இருக்கிறது, “பாரதரத்னா படும்பாடு” என்கிற தலைப்பில். நம் நாட்டில் அரசு கொடுக்கும் விருதாகட்டும் அல்லது அமைப்போ அல்லது திராவிட பகுத்தறிவாளர்கள் கொடுக்கிற விருதாகவே ஆகட்டும் – அவை எல்லாம் எள்ளி நகையாடக்கூடிய ரகத்தை சேர்ந்தவைகளே. பெரியார் விருது படும்பாட்டையே நாம் இங்கே பதிவிட்டிருக்கிறோம். அதனால் தரப்படும் எந்த விருதாலும் பெருமையோ, தரப்படாத எந்த விருதாலும் யாருக்கும் சிறுமையோ இல்லை. சச்சினின் வெற்றிகளை, சாதனைகளை சொல்லி பலர் பட்டியலிட்டார்கள். சச்சினின் தோல்விகளை, சோதனைகளை சொல்லி பட்டியலிட்டிருக்கிறது திராவிட பகுத்தறிவு. “எது மாதிரியும் இல்லாது, புது மாதிரியானவர்கள் ஆயிற்றே – அவர்கள்”. பார்ப்பன சச்சினை சிறுமைப்படுத்த நினைத்து எழுதப்பட்ட பகுத்தறிவுகளின் தலையங்கத்தில் – அவர்களையும் அறியாமல் சச்சினை பெருமைப்படுத்தும் சில விஷயங்களை தந்து விட்டார்கள். சச்சினின் புகழ் பாடிய கட்டுரைகள் செய்யாத தாக்கத்தை, சச்சினை இகழ பாடிய கட்டுரை – ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அது என்னவென்று பார்ப்போம். சச்சினின் சறுக்கிய சாதனைகளாக பகுத்தறிவு ஏடு விடுதலை தரும் பட்டியல். “சச்சின் தனது 79 ஆவது ஒரு நாள் போட்டியில் தான் முதல் சதமே போட்டார். சச்சின் அணித்தலைவராக இருந்து ஆடிய 5 நாள் போட்டிகள் 25. அதில் வெற்றி – 4, தோல்வி – 9, சரி சமம் (டிரா) 12. சச்சின் அணித்தலைவராக ஆடிய ஒரு நாள் ஆட்டங்கள் – 73, அதில் வெற்றி – 23, தோல்வி – 43, சரிசமம் -2, முடிவு இல்லாதது – 5″ என்று கண ஜோராக பட்டியலிட்டு இது தான் சச்சினின் சாதனையா என்று கேட்கிறது. சச்சினின் தலைமையில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதும் இல்லை என்கிற கொசுறு தகவலையும் இலவச இணைப்பாக தந்துள்ளது. இனி நம் விமர்சனம். “சச்சின் தனது 79 ஆவது ஒரு நாள் போட்டியில் தான் முதல் சதமே போட்டார்” நிச்சயம் கிரிக்கெட் ஆடுபவர்களுக்கு மட்டுமல்ல – வாழ்க்கையில் போராட்டத்தை துவங்கும் ஒவ்வொரும் தம் முதல் முயற்சியிலேயே பெரிய வெற்றியை பெற்றுவிடுவதில்லை. சிலருக்கு அப்படி வாய்க்கலாம். பெரும்பாலோர் நாள் கணக்கில், மாசக் கணக்கில், வருஷக்கணக்கில் போராடி, போராடி தோற்று தான் முதல் வெற்றியை பெறுகிறார்கள். சச்சினுக்காக அவர்கள் சொன்னார்கள். நாம் நம் சக மனிதர்களுக்காக சொல்கிறோம், எம் வாழ்க்கை கற்று தந்த பாடமாக சொல்கிறோம். தாமஸ் அல்வா எடிசன் நூற்றுக்கணக்கான சாதனங்களை கண்டு பிடித்தார். அதே நேரம் ஆயிரக்கணக்கான தோல்வியில் முடிந்த கண்டுபிடிப்புகளையும் கண்டார். அனுபவத்தை விட வேறு என்னய்யா சிறந்த பாடம். திராவிட பகுத்தறிவாளர்களுக்காக சொல்கிறோம். அறிஞர் அண்ணாவே தம் பள்ளி இறுதியாண்டு தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்து பிறகு தான் தேர்ச்சியடைந்ததாக சொல்வார்கள். அதே அறிஞர் அண்ணா – தம் முதல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்று தானே போனார். அறிஞர் அண்ணாவை பற்றி எழுதும்போது தோற்றதை சாதனை என்பீர்களா? தோல்வி என்பது நிச்சயம் அவமானமல்ல. முதல் போட்டியில் சதமடித்த எத்தனையோ ஆட்டக்காரர்கள் பிரகாசிக்காமல் போய் இருக்கிறார்கள். முதல் 79 போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமல் சாதனை புரிந்தவன் தான், பிறகு விளையாடிய 400 போட்டியில், 8 ஆட்டத்திற்கு ஒரு சதம் என்கிற கணக்கில் 49 சதம் அடித்தான். இதனால் அறியப்படும் நீதியாதெனில் “முடியாதது உலகில் எதுவுமில்லை. முதல் தோல்வியில் வெம்புவது நியாயமும் இல்லை” என்பதே. சிறுமையையும் பெருமைப்படக் கூடிய விஷயங்களாக சிந்திக்க வைத்த பகுத்தறிவுகளுக்கு நன்றி. அடுத்து பகுத்தறிவு சுட்டிக்காட்டுவது. சச்சின் அணித்தலைவராக இருந்து ஆடிய 5 நாள் போட்டிகள் 25. அதில் வெற்றி – 4, தோல்வி – 9, சரி சமம் (டிரா) 12. சச்சின் அணித்தலைவராக ஆடிய ஒரு நாள் ஆட்டங்கள் – 73, அதில் வெற்றி – 23, தோல்வி – 43, சரிசமம் -2, முடிவு இல்லாதது – 5. இது தான் சச்சினின் சாதனையா” என்று கேட்கிறது. உற்று நோக்கினால் இதிலும் சில சாதனைகளை பார்க்கலாம். தலைமை பதவியில் இருக்கக்கூடிய தகுதி எல்லோருக்கும் வந்துவிடாது. தகுதி இருப்பவர்கள் – தோனியை போல ஜொலிக்கிறார்கள். தகுதி இல்லாதவர்கள் “தனக்கு அந்த தகுதி இல்லை” என்று உணரும் பட்சத்தில் சச்சினை போல, தலைவர் பதவியை விட்டு அழகாக ஒதுங்குகிறார்கள். சச்சினை தலைவர் பதவியிலிருந்து யாரும் விலக்கவில்லை என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அவராக தான் விலகினார். நம் ஊரில் சில தலைவர்கள் இருக்கிறார்கள் – சிவலோக பதவி கிடைக்கிற வரை தலைவர் பதவியை விட மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள். ஒரு வேளை சச்சின் அவர்களை போல் அப்படி அடம்பிடித்திருந்தால் என்னவாகி இருக்கும். அடுத்த சில வருஷங்களில் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே அஸ்தமித்திருக்கும். சச்சினின் சாதனைகளில் பெரும்பாலனவை – அவர் தலைவர் பதவியை உதறிய பின் செய்தவையே. இதனால் அறியப்படும் நீதியாதெனில் “தன்னால் முடியாத ஒன்றை, வெட்கம் விட்டு “முடியாது” என்று சொல்வதும் ஒரு சாதனை. “சச்சினின் தலைமையில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதும் இல்லை” என்று சொல்லப்படுவதை எப்படி பார்ப்பது. “எம்.ஜி.ஆர் இருந்தவரை கலைஞரால் வெற்றி பெற முடியவில்லை. அதனால் கலைஞர் – எம்.ஜி.ஆரை விட திறமைக்குன்றியவர் என்று சொல்லலாமோ” சொன்னால் அது முட்டாள்தனம் இல்லையா? தாம் சட்டசபைக்கு போட்டியிட்ட 13 முறையும் தோல்வியையே சந்திக்காமல் ஒரு சாதனையை புரிந்திருக்கிறார் கலைஞர். இந்திய அரசியலில் யாரும் செய்யாத, இனி செய்ய முடியாத ஒரு சாதனை. அதற்காக தி.மு.க தோல்வியே சந்திக்கக்கூடாது என்று சொல்ல இயலுமா? அரசியல் கட்சியின், ஒரு விளையாட்டு அணியின் வெற்றி என்பதெல்லாம் கூட்டு முயற்சி. இதில் “போன மாசம் ஜெயிக்கல. அதுக்கு முந்தின மாசம் தோத்தே” என்பது அனுபவமில்லாதவர்களின் குற்றச்சாட்டு. இதனால் அறியப்படும் நீதியாதெனில் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பது – சோற்றுக்கும், சோற்று பானைக்கும் சரியாக இருக்கலாம்.” ஆனால் மனிதர்களுக்கு சரியாக வராது. வெற்றி, தோல்வி, துயரம், துரோகம், இன்பம், போராட்டம் என பல படிக்கட்டுகளை தாண்டி வர வேண்டும். சச்சின் பார்ப்பனர் என்பதால் புகழப்படுகிறாராம். பகுத்தறிவு சொல்கிறது. உண்மையா? சக ஆட்டக்காரர் வினோத் காம்ப்ளியும், சச்சினும் – தங்கள் கிரிக்கெட் பயணத்தை ஒன்றாக துவக்கு கிறார்கள். பள்ளி போட்டியில் – காம்ப்ளி (349) சச்சின்(326) இணைந்து எடுத்த 664 ரன்கள் – அவர்களை திரும்பி பார்க்க செய்தது. சச்சின் இங்கு இருக்கிறார். காம்ப்ளி? இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றும் தகாத செயல்கள் காரணமாக பிரகாசிக்க முடியாமல் போனார். “எப்படி இருக்க வேண்டும்” என்பதற்கு சச்சின் உதாரணம். புகழ், பணம் இவை வந்தாலும் – எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு காம்ப்ளி உதாரணம். சச்சினை வானளவ புகழ்வதிலும் நமக்கு உடன்பாடில்லை தான். அதே நேரம் இகழ்வதிலும் நமக்கு உடன்பாடில்லை தான். 16 கமலுக்கு கருத்து சுதந்திரம் இல்லையாம். உண்மையா? கமல் தம்மை போன்ற கலைஞர்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை என்று விசனப்பட்டிருக்கிறார். கமலின் கருத்து சுதந்திர பேச்சையும், கருத்து சுதந்திரத்தை – அவர் எவ்வளவு மலிவாக, கேவலமாக பயன்படுத்தி இருக்கிறார் என்பதையும் பார்ப்போம். கமல் பேசியது. “இங்கு அரசியல் சுதந்திரம் இல்லை. பெரியார் காலத்தில் இருந்த அரசியல் சுதந்திரம் கூட கமலஹாசனுக்கு கிடையாது. நீங்கள் தைரியமானவராக இருந்தால் கூட உங்களுக்கு சுதந்திரம் கிடையாது ! (திராவிடர் கழகத் தலைவர்) வீரமணிக்கு கூட அந்த சுதந்திரம் இல்லை. நாம் எல்லைகளை மேலும் மேலும் இறுக்கிக் கொண்டே வருகிறோம். இங்கே நினைப்பதைச் சொல்ல சுதந்திரம் இல்லை. ஒரு எழுத்தாளராக ஜெயகாந்தனோ, பெரியாரோ அனுபவித்த சுதந்திரம் கூட ஒரு திரைப்பட நடிகனாக எனக்கு கிடைக்கவில்லை. இங்கு சகிப்புத்தன்மை இல்லை. அதுவே இங்கு ஒரு கலாச்சாரமாக இருக்கிறது. நான் சுயமரியாதை இயக்கத்தின் உருவாக்கம். சுயமரியாதை உள்ளவனாகவே வளர்ந்தேன். வேறு மாதிரியாக என்னைக் காட்டிக் கொள்ள என்றும் விரும்பியதும் இல்லை. என் சினிமாக்களும் இதையே பிரதிபலிக்கும். இங்கே நிறைய விஷயங்கள் தவறாகவே இருக்கின்றன” என்கிறார். சரி, நேற்று இருந்ததாக சொல்லப்படும் கருத்து சுதந்திரம் – இன்று உண்மையிலேயே இல்லையா அல்லது இல்லாதது போன்று ஒரு தோற்றமா என்று அவசியம் சிந்திக்க வேண்டும். உண்மையோ, பொய்யோ -சொல்லப்படும் விஷயத்திற்கு எல்லா நாளிலும் எதிர்ப்பு என்பது இருக்கவே செய்கிறது. அந்த எதிர்ப்பு – இன்று சற்று அதிகரித்திருக்கிறது. இதை விழிப்புணர்வின் வெளிப்பாடாகவும் பார்க்கலாம். அதே நேரம் சிறிதளவு சகிப்புத்தன்மையின்மை என்றும் சொல்லலாம். அது பிரச்சனைக்கு பிரச்சனை மாறக்கூடியது. பொத்தாம் பொதுவாக சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என்று கூறக்கூடாது. “நான் சுயமரியாதை இயக்கத்தின் உருவாக்கம். சுயமரியாதை உள்ளவனாகவே வளர்ந்தேன். வேறு மாதிரியாக என்னைக் காட்டிக்கொள்ள என்றும் விரும்பியதும் இல்லை. என் சினிமாக்களும் இதையே பிரதிபலிக்கும்.” என்று தன்னை தானே பெருமை பேசிக் கொள்ளும் கமலஹாசன் 1986ல் தன் படத்தில் – கருத்து சுதந்திரம் என்கிற சுதந்திரத்தில் பேசிய ஒரு வசனத்தை, இன்று தன் படத்தில் மீண்டும் பேசினால் மாதர் அமைப்புகள் சும்மா இராது. அது சகிப்புத்தன்மை குறைவதால் வரும் எதிர்ப்பல்ல. மகளிரிடம் இன்று ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, ஆணாதிக்கத்திடம் எஞ்சியுள்ள ஆண்டான புத்தியை துடைக்க வேண்டும் என்கிற உத்வேகம். 1986ல் கமல் அப்படி என்ன வசனம் பேசினார். விக்ரம் திரைப்படத்தில், சுயமரியாதைக்கார கமல்ஹாசன் தம் காரியதரிசி லிஸியிடம் – ஆணுக்கு பெண் சமம் அல்ல என்பதற்காக பேசும் வசனம், “நான் வியர்த்தா சட்டைய கழட்டி போட்டுட்டு நிற்பேன். உன்னால் முடியுமா?” என்று கேட்பார். இது நாவல் வடிவத்தில் இந்த வசனத்தை தாங்கி வந்தது. “நான் சுவத்துல ஒண்ணுக்கு அடிப்பேன். உன்னால் அடிக்க முடியுமா?”. நிச்சயம் இன்றைக்கு மேற்கண்ட வசனத்தை கமல் பேசினால் – சின்ன சலசலப்பாவது வரத்தான் செய்யும். அன்றைக்கு இந்த வசனத்தை பெண்கள் கேட்டு சிரித்திருக்கலாம். இன்றைக்கு சிரிக்க முடியாது. சிந்திப்பார்கள். வசனம் எழுதிய சுஜாதா – தம் மனைவியையே எப்படி நடத்தினார் என்பது சமீபத்தில் எவ்வளவு பெரிய விவாதமாய் இருந்தது. அதை வைத்து பார்க்கும்போது – இந்த வசனம் மீதமிஞ்சிய வக்ரத்தின் வெளிப்பாடு எனலாம். கருத்துசுதந்திரம் என்கிற பெயரில், நீங்கள் வெளிப்படுத்தும் மேற்கண்ட வக்கிர வசனத்தை சகித்து கொள்ள முடியுமா? கமல் “எழுத்தாளர் ஜெயகாந்தன் என்றதால்” ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. 1987ல் இந்திய அமைதிப்படை இலங்கையில் பல விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டபோது – ஜெயகாந்தன் காங்கிரஸ்க்கு ஆதரவாக, IPKFன் தவறுகளை நியாயப்படுத்தி மேடைகளில் மிக மோசமாக பேசினார். இன்றைக்கு அது பலருக்கு மறந்திருக்கலாம். பதிவு செய்யப்படாமலே போன நிகழ்வு. மேலும், அன்றைக்கு அது ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளப்படவில்லை – எவராலும். இன்றைக்கு அப்படி பேசினால் சு.சாமிக்கு விழுந்த அடி ஜெ.காவுக்கும் விழும். விஸ்வரூபம் பட வெளியீட்டின் போது விழுந்த அடி கமலை கருத்து சுதந்திரத்தை பற்றி பேச வைத்திருக்கிறது என்று நினைக்கிறோம். கமல் சொல்கிறார், “நீங்கள் தைரியமானவராக இருந்தால் கூட உங்களுக்கு சுதந்திரம் கிடையாது ! (திராவிடர் கழகத் தலைவர்) வீரமணிக்கு கூட அந்த சுதந்திரம் இல்லை.” என்கிறார். எவர் ஒருவருக்கும் கருத்து சொல்ல தைரியத்தோடு நேர்மை வேண்டும். நேர்மை குன்றும்போது தைரியமும் குன்றுகிறது. கருத்து சொல்வதில் “உண்மை -ஆளுக்காள் வித்தியாசப்பட்டால் என்ன கருத்து சுதந்திரம் வேண்டி கிடக்கிறது”. கருத்து சுதந்திரத்தில் கமலஹாசன்  மேக்கப் இல்லாமல் போட்ட இரட்டை வேஷத்தை பார்ப்போம். மன்மதன் அம்பு திரைப்படத்திற்கு, அவர் எழுதிய ஒரு பாடலுக்காக – இந்து அமைப்பிடமிருந்து எதிர்ப்பு வந்தது. தயாரிப்பாளர் தரப்பு, “எதற்கு பிரச்சனை” என்று சம்பந்தப்பட்ட பாடல்வரிகளை நீக்கி விட்டு படத்தை வெளியிட்டார்கள். அப்போது கருத்து கமலஹாசன் சொன்னார். “மன்மதன் அம்பு என் தயாரிப்பில் எடுக்கப்பட்டு இருந்தால் அந்த வரிகளை நீக்கி இருக்க மாட்டேன். நான் சுயமரியாதைக்காரனாக்கும்” என்றெல்லாம் வசனம் பேசினார். அடுத்து விஸ்வரூபம் அவர் தயாரிப்பில் எடுக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு என்றதுமே – அந்த சுயமரியாதைக்காரர் மன்மதன் அம்பு படத்தின் போது பேசிய டைலாக்கை எல்லாம் மறந்து எப்படி வளைந்தார், நெளிந்தார், குலைந்தார் – நாட்டை விட்டே ஓடிவிடுவேன் என்று கடைசியாக கரைந்தார். எல்லாவற்றையும் தான் பார்த்தோமே. இங்கே கருத்து சுதந்திரம் உள்ளது. அதை எதற்கு, எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே கேள்வி. பெண்களை கேலி பேசவும், சினிமாவில் பணம் சம்பாதிக்கவும் பயன்பட வேண்டும் என்று நினைத்தால் – இனி அது முடியாது. 17 பார்ப்பனரை ஒழித்து, பார்ப்பனியத்தை வாழ வைத்தோர் தமிழகத்தில் எந்த மூலையிலாவது, ஏதோ ஒரு ஆதிக்க சாதி, தன் சாதீ வெறிக்கு எவரையேனும் பலி கொடுத்துவிட்டால், அது பற்றி எழுதப்பட்டால் – முதலில் வரும் மறுமொழி, இவ்வாறானதாக தான் இருக்கும். “பெரியார் தான் மீண்டும் பிறந்து இதற்கு தீர்வு காண வேண்டும்” என்று. நாமும் கூட வெகுகாலம் அவ்வாறு தான் நினைத்திருந்தோம், நம்பி இருந்தோம். “சர்வரோக நிவாரணி திராவிட கழகங்களும், பெரியாரும்” என்று. ஆனால் திராவிட கழக வரலாற்றுகளை வாசிக்கும் போது, நாமாக ஒரு விஷயத்தை தவறாக இத்தனை காலம் நினைத்திருக்கிறோம் அல்லது அவ்வாறு நினைக்கும்படி எம் முளை சலவை செய்யப்பட்டிருக்கிறது என்று. இதோ,சக போலீஸ்காரர் ஒருவரை, மேலதிகாரி “சாதியை சொல்லி திட்டி அவமானப்படுத்தியதால் – போலீஸ் வேலையே வேண்டாம்” என்ற காவலர் குறித்த செய்தியை வாசித்தபோது, “பெரியார் மண்ணில் இப்படி ஒரு நிகழ்வா” என்றார் தோழர். எப்போதும் எம் மனதில் எழும் கேள்வியே, இப்போது எழுந்தது. சுயமரியாதையும், சாதி மறுப்பும், பகுத்தறிவும் எங்கே தவறு செய்தது. பார்ப்பனர்களை கொட்டத்தை ஒழித்ததாக பெருமை பேசுவோர் – சாதியை ஒழித்த சமர்புலிகள் என்போர், பார்ப்பனியத்தின் எச்சமான பிற ஆதிக்க சாதி வெறியை முழுமூச்சுடன் ஏன் எதிர்க்கவில்லை. எதிர்க்கவில்லை என்றதோடு – அதை வளர்த்திருக்கிறார்கள் என்பது தான் கொடுமை. இன்றளவும் சுட்டெறிக்கிறதே ஏனைய ஆதிக்க சா”தீ”. நமது இந்த விமர்சனம் சரியா? சரியில்லை என்று சிலர் மறுக்கலாம். அவர்களுக்கு சிற்சில ஆதாரங்களுடன் கட்டுரையை தொடர்கிறோம். குடிஅரசு இதழின் 19.12.1926 தலையங்கத்தை வாசித்தபோது, அன்றிலிருந்து வளர்க்கப்பட்டதே ஆதிக்க சாதியின் வெறி என்பதை உணர முடிகிறது. பார்ப்பனரல்லாதோர் மாநாடுக்காக எழுதப்பட்ட தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி. “டிசம்பர் 25,26-ஆம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுரை மாநகரில் பார்ப்பனரல்லாத மக்களின் மகாநாடு கூட்டப் போகும் விபரம் சென்ற வார இதழிலேயே தெரிவித்திருக்கிறோம். இம்மகாநாடு பார்ப்பன ரல்லாதார்களுக்கு மிகவும் முக்கிய மகாநா டாகும். பெரும்பாலும் நமது மக்களின் பிற்கால நிலைமை இதன் மூலமாகவே இச்சமயம் நிர்ண யமாக வேண்டியிருக்கிறது. சுயமதிப்புள்ள ஒவ்வொரு மனிதனின் கடமையானதுமான இந்த முக்கியமான கூட்டத்திற்குப் போவதை ஒரு செலவாகவோ காலப் போக்காகவோ கருதக் கூடாது என்றும் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆனால் சிலர் அதாவது பார்ப்பனர் புன்சிரிப்புக்கு ஆசைப்பட்டவர்களுக்கும் பார்ப்பனரின் மனக்கோணலுக்கு பயப்பட்டவர்களும் தனக்கென ஒரு கொள்கையில்லாமல் வலுத்த கையோடு சேர்ந்துக் கொண்டு ஞானோபதேசம் செய்து தங்களது மனிதத் தன்மையை காப்பாற்றிப் பிழைப்பவர்களும் சுலபத்தில் வர தைரியம் கொள்ளமாட்டார்கள் என்பதையும் நாம் நன்றாய் உணர்வோம். ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், மிராஸ்தார்கள், குடியானவர்கள், தொழிலாளர்கள், கூலிக்காரர்கள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், பெண் மக்கள் ஆகிய எல்லா வகையாரும் தவறாமல் விஜயம் செய்து மகாநாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும். ஒவ்வொரு ஜில்லா தாலுகா கிராமங் களிலுமுள்ள பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி யுள்ள ஒவ்வொரு குலாபிமானிகளும் தங்களால் கூடுமானவரை பிரதிநிதிகளைச் சேர்த்து அழைத்துக் கொண்டு வரவேண்டுமென்றும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.” என்கிறது தலையங்கம். பார்ப்பனரல்லாத மாநாட்டுக்கு யாரையெல்லாம் அழைக்கிறார் என்று பாருங்கள். “ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், மிராஸ்தார்கள்” என்று. சமூகத்தின் ஏற்றத்தாழ்வை போக்க வேண்டும் என்று நடத்தப்படும் மாநாட்டிற்கு, அது நாள் வரை பார்ப்பனர்களை ஊட்டி வளர்த்த, மனுதர்மத்தோடு கை கோர்த்த ராஜாக்களை, ஜமின்தார்களை, மிராசுதார்களை அழைக்கிறார். இன்றளவும் ராசராசசோழனையே பார்ப்பனியத்தை போற்றியவர், தமிழ் சமூகத்தை பின்னுக்கு தள்ளியவர் என்றெல்லாம் பேசும்போது – அதுநாள்வரை பார்ப்பனியத்தை வளர்த்தெடுத்த ஜமின்தார்களை, ராஜாக்களை – பார்ப்பனரல்லாதோர் மாநாட்டுக்கு அழைக்கிறார். பார்ப்பனரல்லாத மாநாட்டுக்கு, பார்ப்பனியத்தைமறைமுகமாக அங்கீகரிக்கும் ஜமின்தார்களும், ராசாக்களும் வருவதால் என்ன புரியோஜனம் இருக்கக்கூடும்.   மனுதர்மத்தை தம் சமஸ்தானங்களில் ஒழிக்க முயலாதவர்கள், ஒழிக்க முடியாதவர்களை அழைத்து என்ன சாதிக்க முடியும். பார்ப்பனர் எதிர்ப்பு மாநாட்டிக்கு அழைக்கப்பட்ட ஜமின்தார்களை எதிர்த்து பின்னாளில் ஜமின்தார்கள் எதிர்ப்பு மாநாட்டையும் பெரியார் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றை எதிர்க்க – பலரை இணைக்க முயற்சிக்கிற போது, அப்பழுக்கற்றவர்களாக பார்த்து கைக்கோர்க்க வேண்டும் இல்லையேல்  முரண்பாட்டாளராக தான் அறியப்படுவார்.. “குடியானவர்கள், தொழிலாளர்கள், கூலிக்காரர்கள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், பெண் மக்கள்” என்று மனுதர்ம அடுக்குகளால் பாதிக்கப்பட்ட மக்களை அழைப்பதிலுள்ள நியாயம் – ராஜாக்களை, ஜமின்தார்களை, மிராசுதார்களை அழைப்பதில் இல்லையே. அது மட்டுமல்லாமல், “பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி யுள்ள ஒவ்வொரு குலாபிமானிகளும் தங்களால் கூடுமானவரை பிரதிநிதிகளைச் சேர்த்து அழைத்துக் கொண்டு ” வரவேண்டுமென்கிறார். குலாபிமானங்கள் என்றால் என்ன? அது யாரை குறிப்பிடுகிறது. அந்தந்த சாதி மக்களை தவிர வேறென்ன. மதுரை மாநாடு என்றால் பெருந்திரளாக யார் வருவார்கள். தேவர் குலாபிமானிகள் என்று உறுதியாக சொல்லலாம். இந்த தலையங்கம் எழுதி 87 ஆண்டுகள் ஆகியும் தலித் மக்களின் மீதான அடக்குமுறையை இன்னும் கைவிடாதவர்கள், 87 வருஷத்துக்கு முன் எத்தகைய ஆதிக்க வெறியுடன் இருந்திருப்பார்கள். அவர்களை தான் அழைத்திருக்கிறார் – பார்ப்பனரல்லாத மாநாட்டிற்கு, அவர்களின் ஆதிக்க சாதி வெறியை கண்டு கொள்ளாமல். பார்ப்பன வெறியை ஒழிக்க, அதிகார (ஜமின்தார்களை) வெறியையும், ஆதிக்க (ஆண்ட பரம்பரை) வெறியையும் அழைத்திருக்கிறார். சாதிய கட்டுமானத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்கிற முழு சிந்தனை அதிலில்லையே. அந்த தலையங்கத்தில் பெரியார் சொல்கிறார் இப்படி – பார்ப்பன ஆதரவாளர்களை பார்த்து, “சிலர் அதாவது பார்ப்பனர் புன்சிரிப்புக்கு ஆசைப்பட்டவர்களுக்கும் பார்ப்பனரின் மனக்கோணலுக்கு பயப்பட்டவர்களும்” இதே தானே பிற ஆதிக்க சாதியினரை பார்க்கும் போது – பெரியாரின் மனநிலை இருந்திருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் மனக்கோணலுக்கு பயந்து, தேவரின சாதிவெறியை சாடியதே இல்லையே. செட்டியார்கள், முதலியார்கள் போன்ற பிற ஆதிக்க சாதியினரை பக்கத்திலேயே அணுசரனையாக வைத்திருந்து – அந்த ஆதிக்க சாதிக்களினாலேயே, அள்ளி தெளிக்கப்படும் பார்ப்பனியத்தை எப்படி ஒழித்திருக்க முடியும். “ஒரு அசிங்கத்தை ஒழிக்க இன்னொரு அசிங்கத்தை வாழ வைத்த தவறை” பெரியாரே “தவறு” என்று ஒப்பு கொள்கிறார் இப்படி. ஆனால் அதற்குள் எல்லாம் எல்லை மீறி போய்விட்டதே. அதன் பலனை தான் நாம் அனுபவிக்கிறோம். “பார்ப்பானுக்குப் பயந்தும், பிற சமூகத்துக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது. இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம் மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும்” என்று முடிக்கிறார் தம் விடுதலை தலையங்கத்தில். ஆக, இந்த முரண்பாட்டை, அவர் பகுத்தறிவில் நேர்ந்த குளறுபடி எனலாமோ? பல நூற்றாண்டுகளுக்கு பிறகு பார்ப்பனியத்திடமிருந்து மீள கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினோமோ? பயன்படுத்தாமல்  “பார்ப்பானுக்குப் பயந்தும், பிற சமூகத்துக்கு அதிக இடம் கொடுத்து” என பாவமன்னிப்பு கேட்பது போல உள்ளது தலையங்கம். இன்றளவும், திராவிட பகுத்தறிவு “பெரியார் சொன்ன பல விஷயங்களை ஒழித்து வைத்தே பார்க்கிறது”. ஒழித்து வைக்க காரணம். அவையெல்லாம் சுயமரியாதைக்காரர்களால் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியவை. மதவாதிகள் போல் வீம்புக்கு சரியாக இருக்கும் என்று அடம் பிடிக்கிறார்கள். அது நிச்சயம் – தமிழர்களுக்கு செய்கிற தீங்கே. ஒன்று மட்டும் உறுதி. தமிழகம் ஆதிக்க சாதி வெறிக்கு பழியாவதற்கு திராவிட அமைப்புகளின், இன்றளவும் “சாதிக்கொரு நீதி” பேசுகிற பேச்சும், ஒரு காரணம் என்பதை ஒரு போதும் ம(று)றக்க முடியாது. 18 கடவுள் மறுப்பாளர்களும், கடவுள் இருப்பாளர்களும் “கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, கோவில் நிலங்களை வாடகைக்கு கொடுப்பதற்கும், மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதற்கும்”தடை விதிக்கப்பட்டுள்ளதான ஒரு செயதியை வாசித்தோம். இது பற்றிய ஒரு தகவல். “கடந்த மாதம், திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில், தி.க.,வினர் நிகழ்ச்சிக்கு கோவில் மண்டபம் அளிக்கப்பட்டது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. இது குறித்து, “ஜோதிமலை இறைபணி திருக்கூடம்’ சார்பில், முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் உள்ள தகவல் குறித்து, அதன் நிர்வாகிகள் கூறியதாவது, “திருவாரூர் மாவட்டம், கமலாபுரம் அருகிலுள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் உள்ள சிவாலயத்துக்கு உட்பட்ட திருமண மண்டபத்தில், திராவிடர் கழக கூட்டம், சமீபத்தில் நடந்தது. இப்பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல இடங்களில், கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு, இடம் தரப்படுகிறது. ஆன்மிகத்துக்கு இழுக்கான இச்செயலை, அறநிலையத்துறை அனுமதிப்பது தவறு. இதுபோன்ற மண்டபங்களை, பக்தர்கள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு விட வேண்டும்” இவ்வாறு, அவர்கள் தெரிவித்ததாக கூறினர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து, கோவில் செயல் அலுவலர்களுக்கும், புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (இது தினமலர் செய்தி) இந்த செயல் சரியா? எந்த இடமும் யாருக்கும் சொந்தமில்லை என்பதே நிதர்சனம். ஆனால் ஆத்திகர் இடத்தில் நாத்திகமும், நாத்திகர் இடத்தில் ஆத்திகமும் கூட்டம் போடுவது – தங்கள் கொள்கைப்படி சரியா? ஆத்திகரின் இடத்தில் நாத்திகம் கூட்டம் போடுவதை கூட ஜீரணித்து கொள்ளலாம். ஆனால் நாத்திகரின் இடத்தில் மதம் கூட்டம் போடுவதை, கொள்கைரீதியாக ஏற்க இயலுமா? இது குறித்து நமக்கும் முன்பே ஒருவர் எழுதி இருக்கிறார். நாம் இது குறித்து எழுதுவதை விட, அவர்கள் எழுதியதையே இங்கு தருகிறோம். நம்மை விட அவர் சிறப்பாக எழுதி இருக்கிறார் என்பதோடு, திராவிட பகுத்தறிவாளர்களுக்கு பிடித்த மதத்தை சேர்ந்தவர் எழுதி இருப்பதால், அவர் கருத்து திராவிட பகுத்தறிவாளர்களை சிந்திக்க வைக்குமே, சிந்திக்க வைக்க வேண்டுமே…. ஆன்லைன் பீஜே தளத்தில் வந்த அந்த கருத்தை நாமே சொன்னால் திராவிட பகுத்தறிவுகளுக்கு வலிக்கும் என்பதோடு அல்லாமல், நாம் சொல்வதில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்று ஆராயும் மனமும் இராது. சக பகுத்தறிவாளரான நாம் சொன்னால் புரியாதது, பிடித்த மத அபிமானிகள் சொன்னாலாவது புரிகிறதா என்று பார்ப்போம். “மத நிகழ்ச்சிகள் மூலம் வருவாய் ஈட்டுதல்” என்கிற தலைப்பில் பீஜே தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை. “பெரியாரின் பெயரால் திடலை அமைத்து அதில் மண்டபமும் அமைத்து அதை வாடகைக்கு விட்டு பொருளீட்டி வருகிறார்கள் வீரமணி வகையறாக்கள். இவர்கள் எதை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்கிறார்களோ அந்த மதங்களின் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டு மதக் கருத்தைப் பரப்ப துணை நிற்கிறார்களே! இதில் வியாபாரம் – அதுவும் நெறி தவறிய வியாபாரம் தான் உள்ளதே தவிர பகுத்தறிவு ஏதும் இல்லை. நாம் கூட பெரியார் திடலில் நிகழ்ச்சிகள் நடத்தி இஸ்லாத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்திருக்கிறோம். எதைத் தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை ஒழிப்பதில் தான் பகுத்தறிவும் சுயமரியாதையும் உள்ளது. காசு வருகிறது என்பதற்காக நாம் எதிர்க்கும் காரியத்தையே நமது இடத்தில் நடத்திக் கொள்ள அனுமதிப்பது மானம் கெட்ட செயலே தவிர சுயமரியாதைக்கு உகந்த செயல் அல்ல. விபச்சாரம் செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்பவன் எனது வீட்டிலே வந்து அதைச் செய்து கொள் என்று கூறினால் அவன் சுயமரியாதை உள்ளவனா?” என்று கேட்டிருக்கிறார்கள். என்ன சரியாக கேட்டுள்ளாரா? இதைவிட பகுத்தறிவுடன் சிறப்பாக கேட்க வேறு எவராலும் இயலாது என்பதாலேயே பீஜே தளத்திலிருந்து எடுத்து பகிர்ந்தோம். சரி, இதற்கு எமது பதிலென்ன. “பகுத்தறிவுக்கு பாடம் புகட்டிய மதவாதிகள்” என்கிற எனது பதிவிற்காக – நான் எழுதிய முதல் இரண்டு பத்திகளை இங்கு தருகிறேன். அந்த பதிவில் சொன்னதையே எமது இந்த பதிவுக்கான கருத்தும் கூட. இதோ, “நமக்கு எப்போதும் ஒரு வருத்தம் உண்டு. அது யாதெனில் “தமிழகத்தில் உள்ள திராவிட பகுத்தறிவாளர்கள் – மூடநம்பிக்கையாளர்களுக்கு பாடங்களை கற்று கொடுக்க வேண்டிய இடத்தில் இல்லாமல், பாடங்கள் கற்று கொள்ள வேண்டிய இடத்தில், நிலையில் இருக்கிறார்களே” என்பது தான். கற்று கொள்வது ஒன்றும் தவறில்லையே… பெருமையான, அழகான விஷயம் தானே. மனிதர்கள் வாழ்நாளெல்லாம் எதையாவது கற்று கொண்ட வண்ணம் தானே இருக்கிறார்கள். அர்த்தத்துடன் சொல்வார்களே, “கற்றது கையளவு… கல்லாதது உலகளவு…” என்று. ஆனால் ஒரு போதும் கள்வனிடம் காவலாளி கற்று கொள்வது என்பது பெருமைக்குரியதான விஷயமாக ஆகாது இல்லையா? எதை யாரிடம் கற்று கொள்கிறோம் என்பது தானே முக்கியம். (இந்து என்றால் கள்வன் என்று அர்த்தம் சொன்னவர்கள் இல்லையா) அந்த வகையில் மதவாதிகளிடம் பாடம் கற்க வேண்டிய துர்பாக்கிய நிலை பகுத்தறிவுக்கு வந்ததை என்னவென்று சொல்வது. ஏன் அப்படி நிகழ்ந்தது. “தன் கடமையை திராவிட பகுத்தறிவு மறந்ததால் – இழி சொல்லுக்கும், பழி சொல்லுக்கும் ஆளாகிறது என்பதை தவிர வேறென்ன சொல்வது. ஆத்திகன் கூட இன்னாரிடம் தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்று கொள்கை கொண்டுள்ளபோது, பகுத்தறிவாளன் தன் கொள்கைக்கு விரோதமாக, மதம் வளர வியாபாரம் செய்யலாமா? 19 அண்ணா கைவிட்ட திராவிடமும், திராவிடம் கைவிட்ட அண்ணாவும் திராவிட நாட்டு கொள்கையை பேரறிஞர் அண்ணா ஏன் கைவிட்டார் என்பதை பார்ப்போம். இது அண்ணா கைவிட்ட திராவிட கதை. தனி நாடு கோருவதை சட்ட விரோதம் ஆக்கி, “பிரிவினை தடை சட்டத்தை மத்திய அரசு 1963 ல் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை வைத்து, தி.மு.கழகத்துக்கு தடை விதிக்கப்படலாம் என்று கருதப்பட்டது. இதன் காரணமாக, திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை கைவிடுவதாக, தி.மு.கழகத் தலைவர் அண்ணா அறிவித்தார். 25.10.1963 அன்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- “பிரிவினை தடை” சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதால், திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை கைவிட தி.மு.கழகம் முடிவு செய்து இருக்கிறது. தி.மு.கழகம், சட்ட வரம்புக்கு உட்பட்ட கட்சியாக இயங்க விரும்புவதால், இந்த முடிவுக்கு வந்து இருக்கிறது. எனவே, கழகத்தின் சட்ட திட்டங்கள், இதற்கு ஏற்றபடி மாற்றப்படும். இதுபற்றி, கட்சியின் மற்ற தலைவர்களை கலந்து ஆலோசித்து, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடிவு செய்வேன். தி.மு.கழகத்தின் நன்மைக்காகவே, திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை கைவிட முடிவு செய்தோம். தவிரவும், தேசத்தின் நலனும் பாதிக்கக்கூடாது என்பதிலும் தி.மு.கழகம் ஆர்வம் கொண்டு இருக்கிறது.” இவ்வாறு அண்ணா கூறினார்.. அண்ணாவின் அறிவிப்பைத் தொடர்ந்து, தி.மு.கழக தலைவர்கள் கூட்டம் 3.11.1963 அன்று சென்னையில் நடந்தது. அண்ணா, நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, அன்பழகன், என்.வி.நடராசன், மதியழகன் நாஞ்சில் மனோகரன், சத்தியவாணிமுத்து, மாவட்ட செயலாளர்கள் நீலநாராயணன், அன்பில் தர்மலிங்கம், சிவசாமி, மன்னை நாராயணசாமி, சி.வி.எம்.அண்ணாமலை, சட்டசபை உறுப்பினர்கள் ப.உ.சண்முகம், கிருஷ்ண மூர்த்தி உள்பட முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். கேரள மாநிலத்தின் சார்பில் புருஷோத்தமனும், கர்நாடக மாநிலத்தின் சார்பில் திராவிடமணியும் கலந்து கொண்டனர். “திராவிட நாடு” அமையப் பாடுபடுவதாக உள்ள தி.மு.கழகத்தின் இரண்டாவது விதியை திருத்துவது என்று, இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக புதிய விதி சேர்க்கப்பட்டது. புதிய விதி பின்வருமாறு:- “தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய 4 மொழிவழி மாநிலங்களும், இந்திய அரசுரிமை, ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரம் பெற்று, நெருங்கிய திராவிட கூட்டமைப்பாக நிலவ பாடுபடுவது.” (இதுவரை அப்படி பாடுபட்டதற்கான தகவல் இல்லை) இந்த புதிய விதி அமலுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.கழகத்தின் சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டது குறித்து தி.மு.கழகத் தலைவர் அண்ணா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- “பிரிவினை கொள்கையை கொண்டிருந்ததால் எங்களுடன் சேரமுடியவில்லை என்றும், எங்களுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை என்றும் சிலர் கூறி வந்தார்கள். இப்போது எங்களையும், அவர்களையும் பிரிப்பது எதுவும் இல்லை. எனவே, எங்களுடைய புதிய கொள்கையையும், மாறுதலையும் அனைவரும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். எல்லோருடைய ஒத்துழைப்பும், ஆதரவும் எங்களுக்கு தேவை.” இவ்வாறு அண்ணா அந்த அறிக்கையில் கூறியிருந்தார். நன்றி – காலச் சுவடுகள், மாலைமலர் இதுவே பேரறிஞர் அண்ணா திராவிட நாட்டை கைவிட்டதற்கான கதையாக திராவிட இயக்கத்தவர்களால் சொல்லப்படுகிறது அல்லது பரப்பப்படுகிறது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக கௌரவமாக சொல்லும் பொய் அது. ஆனால் உண்மை என்ன? திராவிட நாட்டு கொள்கையை கைவிட்டதாக சொல்வதற்கு பல கதைகள் இருந்தாலும் உண்மை கதை தெரியவேண்டாமா.இது திராவிடம் அண்ணாவை கைவிட்ட கதை. ஏற்கனவே எனது பதிவொன்றில் குறிப்பிட்டது. மீண்டும் இங்கே. திராவிட நாடு என்கிற ஒன்றுக்கே வாய்ப்பில்லாத சூழலில் பகல் கனவு கண்டு தெளிந்த கதை இதோ. ஈ.வே.கி.சம்பத் வினா எழுப்பினார் இப்படி..”நாம் திராவிட நாடு கேட்கிறோம். ஆனால் தமிழகம் தவிர்த்த மற்ற தென் மாநிலங்களில் இது பற்றி மக்களுக்குத் தெரியவில்லை. எங்களுக்காக நாடு கேட்க நீ யார்? என்று ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் கருதுகின்றனர். நாம் அங்கெல்லாம் கழகத்தைப் பரவச் செய்து திராவிட நாடு கொள்கைகளுக்கு அங்கேயும் தெளிவு ஏற்படுத்தி ஆதரவு திரட்ட வேண்டுமென்பதில் நம் கட்சித் தலைமைக்கு இன்னமும் ஆர்வம் வாய்க்கப் பெறவில்லை. இதற்கான முயற்சிகளை முந்தைய பொதுச் செயலாளர் அண்ணா மேற்கொள்ளாததற்கு அப்போதைய வளர்ச்சி பெறாத நிலை ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் நாம் திராவிட நாட்டுப் பிரிவினை பற்றி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிற இந்த நிலையிலும், நமது லட்சியக் குரல் மற்ற மூன்று மாநிலங்களிலே கேட்கவில்லையென்பது தலைமையின் அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது. அண்ணா அவர்களும் இதில் ஆர்வம் செலுத்தாததற்கு எது தடையாக இருக்கிறதென்று அறிய விரும்புகிறேன்” ..  இதற்கு பிறகு திராவிட நாடு சாத்தியமா என்று கருத்தறிய வழக்கறிஞர் வி.பி. ராமன் இல்லத்தில் ஒர் ஆலோசனைக்கூட்டத்தை சம்பத் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.என், ஆசைத்தம்பி, மதியழகன் ஆகிய பல முக்கியப் பிரமுகர்களும் வந்திருந்தனர். அண்ணாவுக்குக் காஞ்சிபுரத்திற்கு டிரங்கால் போட்டு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றும் அழைத்தனர். திராவிட நாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தமது வாதங்களை எடுத்து வைத்தார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா, “”என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதச் சொல்றே. உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்…” என்றார். உடனே சம்பத், “”கிடைக்காதுன்னு தெரிஞ்சப்பிறகு அதைச் சொல்லாதது மோசடியல்லவா?” என்று கேட்டார். அதற்கு அண்ணா, “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என்று வெறியேற்றிவிட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா தொண்டன் படுத்துவிடுவான். அதனாலே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம்” என்றார். அதாவது 25 வருஷங்களாக சொல்லி கொண்டு இருந்த பொய்க்கு 63ல் முற்றுப்புள்ளி வைக்கிறார். எப்போதோ தெரிந்துவிட்டது “திராவிட நாட்டு கூவலுக்கு அற்ப ஆயுசு” என்று. ஆனாலும் அதை வைத்தே காலத்தை ஓட்டி இருக்கிறார்கள். இது “திராவிட நாடு அண்ணாவை கைவிட்ட கதை. இப்போது சொல்லுங்கள்.. அண்ணாவை திராவிடம் கைவிட்டதா அல்லது திராவிடத்தை அண்ணா கைவிட்டாரா.. பதிவுக்கு உதவி-” இனியன் சம்பத் அவர்களின் ” ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும் ” கட்டுரை. 20 தமிழர்கள் இளிச்சவாயர்களா? திராவிடம் பரிகாசம் கேரள மாநிலத்தில் அரசுப் பணியில் சேர மலையாளம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்கிற சட்டம் ஏற்கனவே உள்ளது. அதை நடைமுறைப்படுத்த இருப்பதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்திருந்தார். அந்த செய்தியை பகுத்தறிவு ஏடு விடுதலை இப்படி வெளியிட்டுள்ளது. “கேரளமா – கொக்கா?” என்கிற தலைப்பில். “கேரள மாநிலத்தில் அரசுப் பணியில் சேர மலையாளம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. வேற்று மொழிக்காரர்கள் அதனை எதிர்க்கின்றனர். எனவே, ஏற்கனவே இருந்துவரும் ஆணையை மறுபரிசீலனை செய்யலாமா என்று அரசு ஆலோசித்து வருவதாக கேரள மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி கூறியுள்ளார். தொடக்கத்திலேயே இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கேரளம் என்ன தமிழ்நாடா? கண்டிப்பாக அங்கு மொழிமீது கை வைக்க முடியாது – மலையாளிகள் தமிழர்கள்போல இளிச்சவாயர்கள் அல்லவே!” என்கிறது. “கேரளத்தை போல தமிழகத்திலும், தமிழ் தெரிந்திருந்தாலே வேலை” என்று ஆணையிட வலியுறுத்தாமல் “தமிழர்கள் இளிச்சவாயர்களா… இல்லையா…” என்று பட்டிமன்றம் நடத்துகிறார்கள். தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்றால் – அப்படி ஆக்கிய பெருமை திராவிட திருவாளர்களை தான் சாரும். செய்வதையும் செய்துவிட்டு, “மலையாளிகள் தமிழர்களை போல இளிச்சவாயர்கள் அல்லவே” என்று அழுத்தி சொல்கிறார்கள். நியாயப்படி, மலையாளிகள் திராவிடர்களை போல இளிச்சவாயர்கள் இல்லையே என்று தான் திராவிட பகுத்தறிவு சொல்லி இருக்க வேண்டும். அசிங்கப்படுத்த வேண்டும் என்றால் தமிழர்கள் என்கிற வார்த்தைகளை உபயோகிப்பார்கள். அழகு படுத்தி பார்க்க வேண்டும் என்றால் திராவிடத்தை பயன்படுத்துவார்கள். நிச்சயம் மலையாளிகள், திராவிடர்களை  போல இளிச்சவாயர்கள் அல்ல தான். தமிழர்களை அவன் தமிழ் உணர்வை எள்ளி நகையாடி, திராவிடன் என்று அழைக்கும் கேடு கெட்ட செயல் அங்கே இல்லையே. அவன் திராவிடன் என்று சொல்லியதை புறங்கையால் தடுத்தான். இங்கே – தமிழுக்கோ, தமிழர்களுக்கோ குரல் கொடுக்கும் தமிழ் தேசியவாதிகளை – பார்ப்பனியத்தை ஆதரிப்போர் என பேச தயங்காத திராவிட திருவாளர்கள் தான் “தமிழர்களை இளிச்சவாயன்” என்கிறார்கள். “தமிழ் மொழி, தமிழர்கள்” என்று பேசினாலே – அவன் வேலை வெட்டி இல்லாதவன் என்று பேசுகிற போக்கு பெரியார் காலத்திலிருந்தே இருக்கிறது. பெரியார் சொல்கிறார். “நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.” என்கிறார் பெரியார். தாய்மொழிப்பற்று இப்படி ஏளனப்படுத்தப்படுகிறது. கேரளாவில் மலையாளம் குறித்து யாரேனும் இப்படி பேச முடியுமா? மேலும் சொல்கிறார். “தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். ” என்கிறார் தந்தை பெரியார் விடுதலை(27.11.43)யில். சங்கராச்சாரி “தமிழை நீச பாஷை” என்று சொன்னதற்கு எந்த விதத்தில் குறைந்தது மேலே சொன்னது. சமீபத்தில் வாசித்த ஒரு கட்டுரையை இங்கே பகிருவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பன்னீர் செல்வம் என்ற பள்ளி தலைமை ஆசிரியர் எழுதியது. அறிஞர் அண்ணா முதல்வர் பதவியேற்றதும், “பள்ளிமுதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலைகளிலும் அனைத்துத் துறைகளிலும் ஐந்தாண்டுகளில் தமிழ்மொழி பயிற்று மொழியாக்கப்படும் என்னும் கொள்கைத் திட்டத்தை வெளியிட்டாராம்”. ஆனால் இன்றுவரை அதை நிறைவேற்ற முடியாத பரிதாபம். இந்த திராவிடர்கள் தான் “தமிழர்களை இளிச்சவாயர்கள்” என்கிறார்கள். “தமிழக ஆட்சியை 1967-இல் கைப்பற்றிய அண்ணா, சுயமரியாதை திருமண முறையை சட்ட சம்மதமாக்குதல், சென்னை மாநிலம் என்றிருந்ததை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தல், தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழியை நீக்குதல் எனும் முப்பெரும் சாதனைகளுடன், நான்காவதாக ஒரு சாதனையைப் படைக்க விரும்பினார். தமிழ்நாட்டில் பள்ளிமுதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலைகளிலும் அனைத்துத் துறைகளிலும் ஐந்தாண்டுகளில் தமிழ்மொழி பயிற்று மொழியாக்கப்படும் என்னும் கொள்கைத் திட்டத்தை வெளியிட்டார். ஆனால் அண்ணாவின் அறிவிப்புக்கு ஆங்காங்கு எதிர்ப்பு கிளம்பியதும், எதிர்ப்பின் கடுமையையுணர்ந்த அண்ணா, ஐந்தாண்டுகள் என்னும் காலக்கெடுவை மாற்றி, படிப்படியாக – என அறிவித்தார். அவ்வாறு அறிவிக்கப்பட்டு நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அண்ணாவின் பெயர் சொல்லும் கழகங்களின் ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆனால், அண்ணா அறிவித்த படிப்படியாக என்பது இன்றளவும் கீழ்ப்படியாகவே இருக்கின்றது. அதேசமயம், கல்லூரி, பல்கலைக்கழகம் என்னும் நிலையிலிருந்த ஆங்கிலப் பயிற்றுமொழி என்பது தொடக்கப் பள்ளி வரை நீண்டுவிட்டது. முப்பெரும் சாதனை படைத்த அண்ணா ஒரு வேதனையையும் படைத்தார். அவர் நடைமுறைப்படுத்திய இருமொழிக் கொள்கை என்னும் திட்டமானது, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழை விருப்பப் பாடமாகவும், ஆங்கிலத்தைக் கட்டாயப் பாடமாகவும் ஆக்கியது. நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, தமிழ்ப் பயிற்று மொழி படிப்படியாக நிறைவேற்றப்படும் என்பதற்கு மாறாக, தமிழ்ப் பாடமொழி படிப்படியாக நிறைவேற்றப்படுதல் பெருஞ் சோகக் கதை” என்கிறது அந்த கட்டுரை. தமிழ்நாடு என்று பெயர் வைத்தாலே, தமிழை காப்பாற்றிவிடலாம் என்று திராவிடர்கள் நினைத்துவிட்டார்கள் போலும். ஆரியர்களின் கையில் ஊடகங்கள் இருந்தவரை, அதில் “அவாள் பாஷை” இருந்தது. திராவிடர்கள் கைக்கு ஊடகங்கள் சென்ற பின், அங்கே “தமிழிஷ்” வந்தது. அத்தகைய தமிழ் அழிப்பை கண்டு கொள்ளாதவர்கள் தாம், எம்மை போன்ற சாமானிய தமிழர்களை “இளிச்சவாயர்கள்” என்று பரிகாசம் செய்கின்றனர். 21 சாதியை சொல்லி திட்டியதால் உயிரிழந்தவர் இளையான்குடி அருகே ஜாதியைச் சொல்லி திட்டியதால் விவசாயி ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இளையான்குடி அருகே அரணையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நள்ளாலு(50) இவர் இக்கிராமத்தில் அழகர் என்பவரது பருத்திக்காட்டில் ஆடுகளை மேய்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அழகர் நள்ளாலுவை அவரது ஜாதியைச் சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இச் சம்பவம் குறித்து தனது மகன் சதீஷிடம் நள்ளாலு தெரிவித்துவிட்டு இது குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் தந்தை வீடு திரும்பாததால் நள்ளாலுவைத் தேடி சதீஷ் சென்றுள்ளார். அப்போது வழியில் உள்ள கருவேல் மரத்தில் நள்ளாலு தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார். அழகர் “ஜாதியைச் சொல்லி திட்டியதால்தான் தந்தை நள்ளாலு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக இளையான்குடி காவல் நிலையத்தில் சதீஷ் புகார் செய்தார். போலீஸார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாதியை ஒழித்த சமர்புலிகள் வாழும் மண்ணில் ஏன் இன்னும், இந்த அவலம். சாதி பார்த்து விமர்சிப்பது, பகுத்தறிவிலுள்ள பெரிய மனிதர்களின் வேலை என்றால் சாதி சொல்லி திட்டுவது நல்லளுவின் உயிரை வாங்கிய சின்ன மனிதர்களின் வேலை. இன்றைக்கும் கையறு நிலையில் – மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், வாக்கு வங்கி அரசியலில் – கட்சிகளுக்கு, அவர்களால் எந்த புரியோஜனமும் இல்லாத அளவுக்கு மிக, மிக சிறுபான்மையினராக இருக்கிற காரணத்தால் – நள்ளாலு போன்றவர்களின் மரணம் கண்டு கொள்ளப்படாமல், தற்கொலை மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் காப்பாற்றி விடுகிறது சமூக நீதி காத்த பூமி. எவர் ஒருவராலும் கண்டு கொள்ளப்படாமல் போன மரணங்கள் எத்தனை, எத்தனை. சாகிறவனின் சாதியும், சாகடிக்கிறவனின் சாதியும் தானே – கொலையை சாதாவாகவோ, ஸ்பெஷலாகவோ மாற்றக்கூடிய சக்தியை பெறுகிறது. சாதி வெறி பிடித்தவர்களால் மட்டும் சாதி வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. சாதிக்கொரு நீதி பேசும் கயவர்களாலும் சாதி வாழ்ந்து கொண்டிருக்கிறது. பகுத்தறிவாதிகளும் சாதி பார்த்த நிகழ்வு, தமிழ் மண்ணில் ஏன் சாதி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மையை சொல்லும். பத்திரிகையாளரான காலம் சென்ற கண்ணன் ஒரு கட்டுரையில்…(பிப்ரவரி 2 தினமலர்-வாரமலர் 2014) “அண்ணாதுரையின் ஆலோசனையின் பேரில், ‘விடுதலை’ அலுவலகத்தில், 1947-ல் ஈ.வெ.ரா.,வை சந்தித்தேன். முதல் கேள்வியே, ‘நீ என்ன ஜாதி?’ என்று தான் கேட்டார். எனக்குப் பெரும் அதிர்ச்சி; ‘முதலியார்…’ என்றேன். உடனே அவர், ‘கறி திங்கற முதலியாரா, தின்காத முதலியாரா?’ என்று கேட்டார். பக்கத்திலிருந்த மணியம்மை யிடம், ‘உங்க ஆளுங்க…’ என்பது மாதிரி, கண்ணசைத்துக் காட்டினார். பின், ஜாதி பற்றி கேட்டதற்கு, அவரே விளக்க மளிக்கும் விதமாக ‘ஏன் கேட்டேன் தெரியுமா? மற்றவர்களுக்கு, ‘விடுதலை’ என்பது சாதாரண பத்திரிகையாகத் தெரியலாம். ஆனால், இது, என்னுடைய எண்ணத்தின் வாகனம். உணர்ச்சிப்பூர்வமான ஈடுபாடு இருந்தால் தான், வேலை செய்ய முடியும். எல்லா ஜாதிக்காரர்களுக்கும், அந்த உணர்வு வராது. பார்ப்பனரல்லாதவர்களில் கூட, தங்களை உயர்வாகவும், மேல் ஜாதிக்காரர்களாகவும் நினைத்துக் கொள்கிறவர்கள் இருக்கின்றனர். ஆகவே, ‘விடுதலை’ பத்திரிகையில் பணியாற்றுவதற்கு, ஜாதிப் பின்னணியும் பார்ப்பதுண்டு…’ என்றார். ஆக, இன்ன சாதிக்காரனை, வேலைக்கு சேர்த்தால் தான் சரியாக வரும்” என்கிற எண்ணம் பெரியாருக்கே இருந்திருக்கிறது என்பதை இந்த சம்பவம் வாயிலாக அறிய முடிகிறது. பெரியாருடனான இந்த உரையாடலை அப்படியே அண்ணாதுரையிடம் சொன்னபோது, ‘அவர் தாம் ஈ.வெ.ரா.,’ என்றாராம் பெருமிதத்துடன். பெரியார் ‘விடுதலை’ பத்திரிகையில் பணியாற்றுவதற்கு, ஜாதிப் பின்னணி பார்த்தது போல…’ ஒவ்வொரு சாதிக்காரனும் பார்த்தால் – சமூகநீதி எங்கே வரும். எல்லோருமே, பிறர் தனக்கு கீழ் இருப்பதையே விரும்புகிறார்கள் – இதில் பகுத்தறிவு,  சாதா அறிவு என்கிற வித்தியாசமில்லை. சாமானியன் இதே வேலையை செய்தால், அது சாதி வெறியாவதில்லையா? இதையே மதவாதிகள் செய்தால் மத தீவிரவாதம் ஆவதில்லையா… மருத்துவரய்யாவின் மக்கள் தொலைக்காட்சியில் – காலியான பணிக்கு ஆட்களை நிரப்ப நினைத்தபோது, வன்னியர்களில் இருந்து மிக குறைவானர்களே விண்ணப்பித்திருந்ததை கண்டு, அதற்கு மருத்துவரய்யா வருத்தப்பட்டாராம். சாதியை ஒழிப்பதாக சொல்பவர்களும் சாதி பார்க்கும்போது, சாதியத்தலைவர் கள் தைரியமாக சாதி பெருமை பேசுவார்களே. “பார்ப்பனரல்லாதவர்களில் கூட, தங்களை உயர்வாகவும், மேல் ஜாதிக்காரர்களாகவும் நினைத்துக் கொள்கிறவர்கள் இருக்கின்றனர்.” என்ற பெரியார் – மேல் சாதிக்காரர்களாக தங்களை நினைத்து கொண்டிருக்கும் ஏனைய மேற்படி சாதிக்காரர்கள் யாரெல்லாம் என்று பட்டியலிட்டு இருந்திருக்கலாம். அத்தகையோரின் ஆதிக்க சிந்தனைகளை பெரிய அளவில் எதிர்க்க துணியாமை – சாதிய எதிர்ப்பில் இருந்த இரட்டை வேஷத்தை காட்டும். அதே நேரம் -பின்னாளில் பார்ப்பனர்களை எதிர்த்தது போலவே, முதலியார்களையும் எதிர்க்க துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதை முழுமையாக செய்யவில்லை. இப்படி ஒவ்வொரு சாதிக்காரர்களிடமும் மெதுவாக பாடம் கற்று, ஒவ்வொரு ஆதிக்க சாதியினரையும் தனித்தனியாக எதிர்க்க துவங்குவதற்கு, ஆரம்பத்திலேயே – எந்த சாதி கூட்டத்திலும் பங்கெடுக்காமல், இன்றைய திராவிட பகுத்தறிவாளர்களும் – ஏனைய ஆதிக்க சாதியினரின் ஆட்டத்தை, பாரபட்சமின்றி எதிர்க்க துணிந்திருந்தால் – சாதிய தலைவர்களின் ஜெயந்தி விழாக்களால், தென் தமிழகம் வன்முறை காடாகி இருக்காது. 22 "தி இந்து'...திராவிட பகுத்தறிவுக்கு இதைவிட அவமரியாதை உண்டா விடுதலை ஏட்டில் விடுதலையின் வாசகர் ஒருவர் – தி.என்னாரெசு பிராட்லா, “தி இந்து” நாளிதழின் முதல் நாள் இதழை பகுத்தறிந்து விமர்சித்திருக்கிறார். அந்த விமர்சன கடிதத்தை வாசித்தபோது, நம் மனதில் நியாயமாக உதயமானதை இங்கே தருகிறோம். “தி இந்து தமிழ் பதிலளிக்குமா தமிழில்?” என்கிற தலைப்பில் கடிதம். சுருக்கப்பட்டு. “தி இந்து தமிழ் நாளிதழுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழ் பத்திரிகை உலகில் நல்ல பல அம்சங்களுடன் வெளிவந்திருக்கும் தி இந்துவில் எந்தவித பாரபட்சங்களுமின்றி கருத்துகள் இடம்பெற வேண்டும் என்பது என்னைப் போன்றோர் கருத்து. நான் தினமும் ஆறு பத்திரிகை களைப் படிப்பவன். பார்ப்பவனல்ல! ஆங்கில நாளிதழில் பல வெளிவராத செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதை மற்ற நாளிதழ்கள் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளன. இப்போது ஒரு நெருடலான செய்தி என்னவென்றால் முதல் நாள் வெளிவந்த தி இந்து ஆர்வமாய் வாங்கி படித்தேன். நல்ல பல கட்டுரைகள். கவர் ஸ்டோரி, விளையாட்டு, இன்னும் பல.. ஆனால் தேடி தேடி பார்க்கின்றேன். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செய்தி ஒரு இடத்தில் கூட இல்லை. ஆனால் ஒரு வகையில் நான் எதிர்பார்த்தது தான் தவறு என நினைக்கின்றேன். ஆம். சென்னை உயர்நீதிமன்றத் தில் டி.முத்துசாமி அய்யர் என்ற ஆரியர் ஒருவர் தமிழராக தெரியும் (இன்றைய தலையங்கத்தில் வந்த ஆதாரம்) தி இந்துவிடம் தன் தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அண்ணாவை எப்படி தெரியும்? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். திராவிட இயக்கப் புறக்கணித்தலை கைவிட்டால் தான் தங்கள் நாளிதழை மக்கள் புறக்கணிக்க மாட்டார்கள்.” என்கிறார்… நல்லது. இனி நம் மனதில் தோன்றிய கருத்துகள். “தி இந்துவில் எந்தவித பாரபட்சங்களுமின்றி கருத்துகள் இடம் பெற வேண்டும் என்பது என்னைப் போன்றோர் கருத்து.” என்று துவக்குகிறார். இதை விடுதலை ஏடு என்றாவது பின்பற்றி இருக்குமா? ஒரு அரசியல் கொலை நடக்கிறது என்று வைத்து கொள்வோம். அந்த செய்தியை பாரபட்சமின்றி வெளியிடுகிற திறன் விடுதலைக்கு உள்ளதா? “கொலையானவர் யார்… கொலை செய்தவர் யார்…” என்று பார்த்து, அதற்கேற்ப செய்தி வெளியிடும் அவலத்தை, விடுதலை வாசகர்களாக இருக்கிற பகுத்தறிவாளர்கள் தவறு என்று என்றேனும் கண்டு சொன்னதுண்டா? சங்கர்ராமனையும், தா.கிருஷ்ணனையும் தவிர இதற்கு வேறு உதாரணங்கள் சொல்லவும் வேண்டுமோ? அடுத்ததாக அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை பற்றி எழுதாத செய்தி. ஒருவேளை அறிஞர் அண்ணா மறையும்போது, பெரியாரின் “கண்ணீர்துளிகளாகவே” இருந்திருந்தால் – தி இந்து செய்த வேலையையே விடுதலை செய்திருக்கும் என்று உறுதியாக நம்பலாம். “ஈ.வே.கி.சம்பத்தை என்றேனும் விடுதலை நினைத்து பார்த்திருக்குமா? சரி. ஆரிய பத்திரிகைகள் அறிஞர் அண்ணாவை மறந்துவிட்டன. திராவிட பத்திரிகைகள்? “நான் தினமும் ஆறு பத்திரிகை களைப் படிப்பவன். பார்ப்பவனல்ல” என்று பெருமை பொங்க பேசிய விடுதலை வாசகர், தி.க செயலாளர், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் (15-9-13) அன்று வெளிவந்த தினத்தந்தியை வாசிக்க மறந்துவிட்டார் போலும். அண்ணாவின் பிறந்த நாளுக்கு மறுநாள் தி இந்து செய்த  கணடு கொள்ளாத  வேலையையே, தினத்தந்தி – அண்ணாவின் பிறந்த நாள் அன்றே செய்திருக்கிறது. பிறந்தநாள் அன்று தானே ஒருவர் குறித்த செய்தியை வெளியிட முடியும். மறுநாள் தேடினால்? முன்னாள் முதல்வரை பற்றி திராவிட பத்திரிகையாம் தினத்தந்தியில் ஒரே ஒரு செய்தியை தவிர வேறு செய்தியை காணோம். அப்படி என்ன ஒரே ஒரு செய்தி என்று கேட்கிறிர்களா? புரட்சி தலைவி, முதல்வர் அம்மா அவர்கள் அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர் தூவும் நிகழ்ச்சி குறித்த அரைபக்க விளம்பரத்தை தவிர வேறு அண்ணா செய்தியை காணோம். இது அண்ணாவுக்கு திராவிட பத்திரிகையின் மரியாதை. இந்த மரியாதை விடுதலை வாசகரின் கண்ணில் படவில்லை போலும் அல்லது கண்ணில்பட்டிருந்தாலும் “ஆளை பார்த்து, ஆரிய ஊடகங்களுக்கு ஒரு நீதி, திராவிட ஊடகங்களுக்கு ஒரு நீதி என்று சொல்வது தானே பகுத்தறிவின் வேலை”. அது தான் அண்ணா பிறந்தநாளுக்கும் நிகழ்ந்துள்ளது. நிச்சயம் இதற்கு பெருமைப்படுவார் அண்ணா. “நம் கொள்கை நன்றாக பின்பற்றப்படுகிறது” என்று. தி இந்து செய்ததல்ல அவமரியாதை. உங்களின் இந்த இரட்டை வேஷமே, உண்மையில் அவமரியாதை. அவர்கள் என்ன அவமரியாதை செயவது. எங்களை நாங்களே செய்து கொள்கிறோம் என்று செய்து கொண்டிர்கள் போலும். அல்லது ஆரியன் எழுதினால் தான் பெருமை என்று நினைக்கிறிர்களோ. ஒருவர் நம்மை பற்றி பேசவில்லை என்பதற்காக நாம் குறைந்து போக போவதில்லை. “பேசவில்லை, செய்தி போடவில்லை” என்று கேட்பதை விட, செய்தி போடாதது ஒரு பெரிய கேவலமோ, அவமரியாதையோ இல்லை. ஒரு செய்தி வெளியிடுவதில்  பகுத்தறிவாளனுக்கே இவ்வளவு சுயநலம் இருக்கும்போது பார்ப்பானுக்கு எப்படி அய்யா இல்லாமல் போகும். மகாத்மா காந்தியின் மரணத்தை நீங்கள் நினைவு கூர்வது ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் அவர் கொல்லப்பட்டதால். தி இந்து பத்திரிகை -ராஜீவ்காந்தியின் மரணத்தை பேசுகிறது என்றால் புலிகளால் கொல்லப்பட்டதால் மட்டுமே. இங்கே கொல்லப்பட்டவர்களுக்கு காட்டும் கண்ணீரை விட, கொன்றவர்களை சாடுவதற்கு கிடைத்த வாய்ப்பே உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த பகுத்தறிவு, பார்ப்பனிய ஊடகக்காரர்கள் தான் ஒருவரை சாடிக்கொண்டு இப்படி சொல்கிறார்கள். “நீ தான் ரெம்ப மோசம்” என்று. தேவநாதனுக்காக திராவிட ஊடகங்களும், தினகரன் அலுவலக எரிப்பு செய்திக்காக ஆரிய ஊடகங்களும் – பிணந்தின்னி கழுகுகளாக காத்திருக்கின்றனர். இதில் “யார் யோக்கியன், யார் அயோக்கியன்”  தி இந்து குறித்த விடுதலை கடிதம் இவ்வாறு முடிகிறது. “திராவிட இயக்கப் புறக்கணித்தலை கைவிட்டால் தான் தங்கள் நாளிதழை மக்கள் புறக்கணிக்க மாட்டார்களாம்”. பகுத்தறிவு சொல்வது உண்மையா? பகுத்தறிவுக்கு நகைச்சுவை உணர்வு நன்றாக வருகிறது எனலாம். மக்கள் கையில் ஒரு பத்திரிகை நிலைக்க நம்பகத்தன்மை தான் முக்கியமே தவிர – ஆரியமா, திராவிடமா என்பதல்ல. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. திராவிட ஆதரவு தான் கை கொடுக்கும் என்றால் முரசொலியும், விடுதலையும் தான்- விற்பனையில் முதலிரண்டு இடத்தில் இருந்திருக்கும். தி இந்துவில் விஷயமிருந்தால் தான் தன் பயணத்தை தொடர முடியும். ஆனால் ஒரே ஒரு விஷயத்துக்காக திராவிட பகுத்தறிவாளர்கள் மகிழலாம். “எவ்வளவு நாளைக்கு தான் தினமணி, தினமலரையும் மட்டும் அடித்து துவைத்து வீரத்தை காட்டுவது. புதுசா ஒரு அடிமை (தி இந்து) சிக்கிட்டான்டா” என்று வடிவேல் கணக்காய் குதிக்கலாம். 23 சாதி எதிர்ப்புகளின் சாதி ஒழிப்பு கதை இரண்டு தினங்களுக்கு முன், தொலைக்காட்சியில் அக்கா, அண்ணி கேரக்டரில் நடிக்கும் ஒரு நடிகையின் நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது. அந்த நடிகையை பற்றிய தகவல்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கேட்டு கொண்டிருந்தபோது, அந்த நடிகை, “தான் பிறந்த ஊர், தான் என்ன சாதி” என்பதையும் மறக்காமல் விளக்கி கொண்டிருந்தார். அதே நேரலை நிகழ்ச்சியில், சிறிது நேரத்தில் – தொலைபேசியில் தொடர்பு கொண்ட நேயர் ஒருவர், “நானும் உங்க சாதி தான். முதுகுளத்தூர். இனி நீங்க நடிக்கிற படங்களை ஒண்ணும் விடாம்ம பார்ப்பேன்” என்றார் சாதிய பற்றில். “இன்னும் இப்படி சாதிப்பற்றுடன் இருக்கிறார்களே” என்று வியந்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். சாதி ஒழிப்பு வீரர்கள் நிரம்பியுள்ள சுயமரியாதை மண்ணில் – தைரியமாக ஊடகங்களில், இப்படி பேசுவது ஆச்சர்யமாக இருந்தது. எவ்வளவோ போராட்டங்கள், சாதிய எதிர்ப்புகள்… இருந்தும் – தொடர்ந்து சாதி, மதம் குறித்து பெருமையாக, தைரியமாக பேசும் நிலைக்கு என்ன காரணம். யோசிக்கையில், எப்போதோ படித்த சாதி ஒழிப்பாளர்களின் சாதிய பற்று குறித்த குறிப்புகள் நம் ஞாபகத்துக்கு வந்து போயின. பகுத்தறிவு ஏட்டில், சாதிய ஒழிப்பு ஏட்டில் வாசித்ததை தருகிறேன். “சுயமரியாதைகாரர் சித்த மருத்துவர் தகடூர் செல்லையா அவர்கள், எவ்வளவுதான் பசிக்கொடுமையால் வாடினாலும், பிராமணர்களின் உணவுக் கடைக்குப் போகவே மாட்டார். அது மட்டுமன்று; பிராமணர்களுக்கு மருத்துவம் செய்யவும் மறுத்துவிடுவார். இத்தகைய நெஞ்சுரம் எல்லாத் தமிழர்களுக்கும் வேண்டும்.” என்கிறது விடுதலை ஏட்டின் குறிப்பு. ஒரு வியாதியஸ்தனை கூட சாதி பார்த்து “பார்ப்பானாக இருந்தால் வைத்தியம் பார்க்காதே” என்று பகுத்தறிவே போதிக்கிறபோது, அதையும் வீர சாகசமாக, பெருமையாக தம் பத்திரிகையில் போடுகிறபோது, சாதீயத்தில், மதவாதத்தில் ஊறிப்போனவன் – எத்தனை படித்திருந்தாலும் அவன் திருந்துவானா? தகடூர் செல்லையாவிடம் இருந்ததும் ஒரு சாதிவெறி. ஆனால் அதற்கு “அவர்கள் பகுத்தறிவு” என்று பெயர்சூட்டி கொண்டார்கள். அறிஞர் அண்ணா சொன்ன குறிப்பொன்று. அண்ணாவின் இனப்பற்று என்கிற தலைப்பில் விடுதலை வெளியிட்டது . “ஒரு அல்லாடி கிருஷ்ணசாமியைவிட ஒரு வி.எல். எத்திராஜ் சிறந்த வழக்கறிஞர் என்று கூறுகிறது என் இனப்பற்று. ஒரு அரியக்குடி அய்யங்காரை விட ஒரு நாயனாப்பிள்ளை சிறந்த பாடகர் என்று கூறுகிறது எனது இனப்பற்று. ஒரு ரெங்காச்சாரியைவிட ஒரு லட்சுமணசாமி சிறந்த டாக்டர் என்று கூறுகிறது எனது இனப்பற்று. ஒரு சத்தியமூர்த்தி அய்யரைவிட ஒரு ஆர்.கே. ஷண்முகம் சிறந்த பேச்சாளர் என்று கூறுகிறது என் இனப்பற்று. ஒரு பாரதியாரை விட ஒரு கனகசுப்புரத்தினம் சிறந்த கவிஞர் என்கிறது என் இனப்பற்று (விடுதலை 15.10.1958) என்று சொன்னார் அறிஞர் அண்ணா என்பதை ஆரியர் மறக்க வேண்டாம் என்கிறது விடுதலை. மேற்கண்டவை திராவிட பகுத்தறிவாளர்களுக்கு நியாயமாக தோன்றினாலும் – இதையே சாமான்யன் செய்தால், அது சாதி வெறியாக தானே தெரியும். இனப்பற்று முற்றினால் – சாதீய வெறிக்கு குறையாமல் வன்மத்தை கக்கவே செய்யும். “சாதிப்பார்க்க இவர்களே சொல்லி கொடுத்ததாக ஆகாதா?”. முதலியார் சமூகத்தை சேர்ந்த அறிஞர் அண்ணா பார்ப்பனிய எதிர்ப்பை கொண்டார். அதே முதலியார் வகுப்பை எதிர்க்க, பெரியார் பார்ப்பனிய எதிர்ப்பை போல – முதலியார் எதிர்ப்பு துவங்கினார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். திராவிட பகுத்தறிவுகளால் மறைக்கப்பட்ட வரலாறு. ராம்குமார் என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து. ‘சிலம்புச் செல்வர் ம பொ சி யுடன்’ புத்தகத்தில், ம.பொ.சியின் நண்பர் திரு, மு.மாரியப்பன் என்பவர் – முதலியார் எதிர்ப்பு நிகழ்வை பதிவு செய்கிறார். அதிலிருந்து சில வரிகள்… ஒரு முறை கும்பகோணம் பயனியர் விடுதியில் ம.பொ.சி மற்றும் அவருடன் மு.மாரியப்பனும் தங்கி இருந்தார்கள். அங்கே பக்கத்து அறையில் ராமசாமி நாயக்கரும் தங்கியிருக்கிறார் என்ற விபரம் ம.பொ.சிக்கு தெரிய வரவே இருவரும் சென்று ஈ.வெ.ரா வை அவரது அறையில் சந்திக்கிறார்கள். அந்த சமயம், முதலியார்களின் மீது கடுமையான வெறுப்பைக் கொண்டிருந்த ஈ. வெ.ரா “தான் எழுதிய முதலியார் ஒழிப்பு தலையங்கம்” பற்றி ம.பொ.சியிடம் கேட்கிறார். “ஈ வெ ரா: ‘முதலியார் ஒழிப்பு தலையங்கம் படிச்சீங்களா’ ம.பொ.சி: ‘நாங்கள் இருவரும் படித்தோம்’ ஈ வெ ரா: ‘தங்கள் அபிப்பிராயம் என்ன?’ ம.பொ.சி : ‘இதற்கு நான் என்ன அபிப்பிராயம் சொல்ல இருக்கிறது,” என்கிறார். பார்ப்பனியத்தை எதிர்த்தபோதே – ஏனைய ஆதிக்க சாதிகளின் வெறியையும் ஒரு சேர எதிர்த்திருந்தால் – தமிழகத்துக்கு புண்ணியமாக போயிருக்கும். ஒரு ஆதிக்க சாதியின் கையை கோர்த்து கொண்டு, இன்னொரு ஆதிக்க சாதியை எதிர்ப்பதா பகுத்தறிவு. ஒரு ஆதிக்க சாதியை எதிர்க்கும்போதே – பிற ஆதிக்க சாதியினருக்கு பயம் வந்திருக்க வேண்டும். “நாமும் சாதி வெறி பிடித்து ஆடினால், நாளை நமக்கும் இந்த நிலை தான்” என்று பிற ஆதிக்க சாதிகள் அச்சப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் நிகழ்ந்ததா? இல்லையே. ஏன்? ஆதிக்க சாதியினர் எதிர்ப்பில் நேர்மையின்மை. அதன் விளைவு, பிற ஆதிக்க சாதியவெறியின் உச்சக்கட்டம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு சாதியை எதிர்க்கும் வேலையை செய்தது பகுத்தறிவு. “நேற்று வரை சாதியவெறி இல்லாது இருந்தவனுக்கு, திடீரென்று ஒரே நாளில் சாதி வெறி வந்துவிட்டதா”. கிடையாது. அவன் எப்போதும் அப்படி தான் இருந்தான். பகுத்தறிவாளர்கள் அதை அறிந்தும், அறியாதவர்களாக இருந்தார்கள். திடீரென்று சாட என்ன காரணம். “இனி அவர்கள் தயவு தேவை இல்லை எனும்போது, தம் சாதீய எதிர்ப்பை காட்டினார்கள். ஒரு சாதி ஒழிப்பாளர் சொல்கிறார், “பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களான பிள்ளைமார், சைவ முதலியார், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் ஜாதிவெறியையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியையும் நியாப்படுத்திய சைவ சமயத்தையும் கந்தலாக்கியது பெரியார் இயக்கம்.” என்று. என்ன கந்தலாக்கியது. இப்படி வீண் பெருமை பேசுவதை விட என்ன சாதித்தது. இன்றும் தொடர்கிறது – அந்த நிலை. ஒரு தோழர் கேட்டார். “இராசா சர்.அண்ணாமலைச்  செட்டியாரிடம்  நன்கொடை எதிர்பார்த்தபோது – நாட்டுக்கோட்டை செட்டியார்களின் சாதிவெறி தெரியவில்லையா – திராவிட பகுத்தறிவாளர்களுக்கு” என்று. திராவிடர் பெயரை சொல்லி நடத்தும் இயக்கங்கள் அனைத்தும் “இன்றைக்கும் – சாதிக்கொரு நீதி” சொல்பவையாக தான் உள்ளது. பிற முற்போக்கு அமைப்புகளாவது “ஆதிக்க சாதிகளை எதிர்ப்பதில் – சாதிக்கொருநீதியை கடைப்பிடிக்காமல் உள்ளது”. இன்றைக்கு சாதீயம் பேசுபவன் அச்சப்படுவதற்கு காரணம் – நிஜமான சில முற்போக்கு அமைப்புகளாலேயே. ஆனால் “சாதிக்கொருநீதி” பேசிக் கொண்டே “சாதியை ஒழித்த சமர்ப்புலிகள்” என்று பெருமை மட்டும் பேசி கொள்வதில் என்ன பெருமை உள்ளது… 24 சீதைக்கு கோவிலா? பகுத்தறிவு கோபாவேசம் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டவிருக்கும் செய்தியை கேட்டு – திராவிட பகுத்தறிவுகள் “சீதைக்கு கோவிலா?” என்று கோபாவேச பட்டிருக்கிறார்கள். நல்ல விஷயம் தான். கோபமும் நியாயமானதே. இருக்கிற கோவில்கள் போதாதென்று இன்னும் எதற்கு கோவில்கள். ஆனால் பகுத்தறிவுகள் – அதே இலங்கையில் ராவணனுக்கு கோவில் கட்ட இருப்பதை வரவேற்கிறார்கள். இது தான் பகுத்தறிவு. இந்த இரட்டை நிலை தான் திராவிட பகுத்தறிவு. “ஏன், சீதைக்கு கோவில் கட்டக்கூடாது, ராவணனுக்கு ஏன் கோவில் கட்ட வேண்டும்” என்பதனை இப்படி விளக்குகிறார்கள். “இலங்கையில் சீதைக்குக் கோயிலாம் சீதை என்பது இதிகாச தொடர்புடைய ஒரு பாத்திரம். ஒரு வரலாற்று மகளிர் கிடையாது. இப்படி புராண இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கெல்லாம் கோயில் கட்டுவது தான் ஓர் அரசின் வேலையா? சீதையில் ஆரம்பித்து ஒவ்வொரு அவதாரத்திற்கும் கோயில் கட்ட ஆரம்பிக்க மாட்டார்கள் என்று உறுதி அளிக்க முடியுமா?” என்று கேட்கிறார்கள். நல்ல கேள்வி தான். ஆனால் ராவணன் என்று வரும்போது பகுத்தறிவு மூளைக்கு ராவணனும் ஒரு இதிகாச பாத்திரம் தானே, அவனுக்கு மட்டும் கோவில் கட்டலாமா என்கிற கேள்வி மட்டும் எழவில்லை. அவ்வப்போது பகுத்தறிவு மூளையில் பழுது ஏற்படுவது – அந்தோ பரிதாபமே. “ஆளை பார்த்து நீதி சொல்லும் பகுத்தறிவு நேர்மையாக பேசினால் தானே ஆச்சர்யப்பட வேண்டும்”. அதனால் இந்த முரண்பாடு நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. ராவணனை பற்றி இப்படி எழுதுகிறார்கள். “பார்க்கப் போனால் இலங்கை என்றால் மாவீரன் இராவணன் நிலம் என்று தான் சொல்லத் தோன்றும். அப்படிப் பார்க்கப் போனால் முதலில் இலங்கையில் கோயில் எழுப்பப்பட வேண்டியது இராவணனுக்கே” என்கிறார்கள். ராவணன் மாவீரனாம். ஒரு பெண்ணை கடத்தி கொண்டு போய் கற்பழித்தவன் மாவீரனாம். சுயமரியாதைக்கு பகுத்தறிவை விட நகைசுவை நன்றாக வருகிறது. அப்படியெனில் ஓராயிரம் எம் தமிழ் சகோதரிகளை கெடுத்தவன்களை என்னவென்று சொல்வீர். மொத்த தமிழின மக்களுக்கும் சவாலாக, அச்சுறுத்தலாக இருக்கிற பௌத்த பயங்கரவாத அமைப்பான ராவண பலய அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது போல திராவிட பகுத்தறிவு தம் கட்டுரையை தொடர்கிறது இப்படி. “ராவணனுக்கு சிலை வைக்க நாம் சொல்லவில்லை. இலங்கையில் உள்ள ராவண பாலயா என்ற புத்தமத அமைப்பு சீதையின் கோயில் முன்பு இராவணன் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது. இந்தியாவில் கூட இராவணனை வழிபடும் மக்கள் உண்டே!” ஆக, ஒரு இதிகாச பாத்திரத்துக்கு சிலை வைப்பது குறித்து ஆட்சோபம் இல்லை. இன்னொரு இதிகாச பாத்திரத்துக்கு சிலை வைத்தால் பொங்குகிறார்கள். வழக்கம் போல பகுத்தறிவு தம் வேலையை காட்டிவிட்டது. பெண்ணை பலவந்தப்படுத்தியவனுக்கு “மாவீரன்” என்று பட்டம் வேறு. வெட்கக்கேடு. சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும், சிங்கள பௌத்த தேசியவாத அமைப்பான ராவண பலய அமைப்பின் கருத்தை இங்குள்ளவர்கள் ஆமோதிப்பதே அசிங்கம். அதிலும் தமிழர்கள்? அவர்களுக்கு வக்காலத்து வேறு. அடுத்து இதிகாச பாத்திரங்களின் மூட நம்பிக்கையை எப்படி தங்களுக்கு ஆதரவாக பார்க்கிறார்கள் பகுத்தறிவாளர்கள் என்று பாருங்கள். “இராவணன் சீதையைத் தொட்டு எடுத்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப்பானாகில், சீதை இராவணனுக்கு உடன் பட்டவள் என்றே பொருள்படும். காரணம், இராவணன், தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை சுக்குநூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல் இருக்குமானால், அவள் இஷ்டப்பட்டாள் என்றுதான் பொருள்படும். அதன்படியே இராவணனுக்குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவண னுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பொருள்.” என்கிறார்கள். சீதை என்ன உயர்அழுத்த மின் பெட்டியா? தொட்டவுடன் இராவணன் பந்தாடப்பட. பகுத்தறிவு “இந்த மூட நம்பிக்கை கதையை” நம்புகிறது. சமீபத்தில் ஒரு கேடு கெட்டவன் “பெண்கள் கற்பழிக்கப்படுவதை விரும்புகிறார்கள்” என்று சொன்னதற்கும், இவர்கள் சொல்வதற்கும் எந்த வித்தியாசமில்லை. இந்த கேடு கெட்ட மூட நம்பிக்கை கதையை நம்பி ஒரு அயோக்கியனை மாவீரனாக்குகிறார்கள். ஒரு அபலை பெண்ணை “வலிய கெட்டு போனவளாக காட்ட முயற்சிக்கிறார்கள்” பெரியார் தொடங்கி அவர் தம் தொண்டர்கள் வரை “சீதையின் கற்பை ஆய்வுக்குட்படுத்துகிறார்கள்”. ஏனய்யா இப்படி என்று கேட்டால் “அது தான் உண்மை” என்கிறார்கள். ஆனால் இங்கே உள்ள ராவண பக்தர்களுக்கு இலங்கையிலுள்ள ராவண பக்தர்கள் இந்த விஷயத்தில் சற்று யோக்கியர்கள். ராவண பலய அமைப்பை சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் “பல வருடங்களாக சீதையை சிறைவாசம் வைத்திருந்தாலும் சீதைக்கு ராவண மன்னன் இடையூறு விளைவித்ததில்லை. எனவே, ராவணன் ஒரு கொள்கையை கடைபிடிப்பவர் என்று புலப்படுவதால், முதலில் அவருக்கே ஆலயம் அமைக்கப்பட வேண்டும்.” என்கிறார்கள். மேலும் திராவிட பகுத்தறிவு “சிங்கள அரசு – சீதைக்குக் கோயில் கட்ட அனுமதிப்பது – சிங்களவர்களும், ஆரியர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான்; இனம் இனத்தோடு சேர்கிறது என்றே கருத இடம் இருக்கிறது.” என்கிறார்கள். கடைசிவரை சிங்கள பயங்கரவாதத்தை பௌத்த பயங்கரவாதம் என்று சொல்கிற நேர்மையே வரவில்லை பகுத்தறிவாளர்களுக்கு. இத்தகையவர்களின் ஈழத்தமிழர்கள் ஆதரவு, “ஆதரிப்போம். ஆனா ஆதரிக்க மாட்டோம் ” கதை தான். இறுதியாக புத்த கயா குண்டுவெடிப்பு குறித்த விடுதலை கேள்வி பதிலை பார்ப்போம். செட்டிநாட்டிலிருந்து இல.மெய்யப்பன் என்பவர் கேட்ட கேள்வி, “புத்த கயாவில் குண்டு வெடிப்பு நடத்தப் பட்டுள்ளதே?” அதற்கு அய்யா கி.வீரமணி அளித்த பதில், “வன்மையான கண்டனத்திற்குரியது. ஆனால் இதை எதிர்த்து இலங்கை புத்த பிக்குகள் கண்டன ஊர்வலம் போவது அதைவிடக் கொடுமை! அவர்கள் ஈழத் தமிழர்களைக் கொல்லுவதைச் செய்து கொண்டே இப்படிப் பேச, கண்டிக்க அந்த அரசியல் பிக்குகாரர்களுக்குத் தகுதி உண்டா?” இந்த கேள்வி பதிலை வாசித்ததும், மனதில் தோன்றியது இது தான். “உங்களுக்கு உலகெங்கும் நிலவும் புத்த மத பயங்கரவாதத்தை பற்றி பேசவும் துணிவில்லை. புத்த மதத்தின் மீதான பயங்கரவாதத்தை பற்றி பேசவும் துணிவில்லை”. குண்டு வெடிப்பு குறித்த புலன்விசாரனை முடிந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டப் பின், குற்றவாளியின் “குலம், கோத்ரம் பார்த்து” குண்டு வெடிப்பை  கண்டியுங்கள்.. 25 அரசியல் வாரிசுகளுக்கு பாடமான அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு செய்தி. “சச்சினின் மகன் அர்ஜுன் சரியாக விளையாடாததால் “மும்பை உத்தேச அணியில் (14 வயதுக்கு உட்பட்டோர்) இருந்து நீக்கப்பட்டுள்ளாராம்”. சில மாதங்களுக்கு முன், கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சினின் மகன் அர்ஜுன் மும்பை அணிக்காக கிரிக்கெட் விளையாட துவங்கியதும், அரசியல் வாரிசுகளையும், சச்சின் வாரிசையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போட்டோம். அதிலிருந்து, “சச்சின் மகன் கிரிக்கெட் விளையாடும்போது – அரசியல்வாதியின் பிள்ளைகள் அரசியலில் இறங்குவது எப்படி தவறாகும்” என்று ஒருவர் அறிவுப்பூர்வமாய் கேட்டிருக்கிறார். இவ்வளவு அறிவுப்பூர்வமாக யார் கேட்பார்கள் – நம் பகுத்தறிவாளர்களை தவிர்த்து. பகுத்தறிவு ஏட்டில் தான் -முகப்புத்தகத்தில் வந்ததை எடுத்து போட்டிருக்கிறார்கள். “அப்பாடா, சச்சினுக்கு வாரிசு வந்தாச்சு… மகன் அர்ஜூனுக்கு கிரிக்கெட் அணியில் இடம்! – செய்தி… இதை எல்லாம் யாரும் கண்டுக்க மாட்டாங்களே!!!!! நாங்க மிசாவிலே அடிப்பட்டு, கிட்டதட்ட 40 ஆண்டுகள் அரசியலில் போராடி ஒரு பொறுப்புக்கு வருவதை “வாரிசு அரசியல்” என்று கேவலமாக பேசுவதை எப்படி சொல்வது?” ஸ்டாலினை மனசில் வைத்து கொண்டு ஒரு திராவிடர் எழுதியது போன்று தெரிகிறது. ஆனால் “ஸ்டாலினை தமிழக வருங்கால முதல்வராக” தமிழக மக்கள் எப்போதோ ஏற்று கொண்டு விட்டார்கள். குடும்பத்திற்குள் தான் அவர் முதல்வராக தடை உள்ளது. குடும்பத்தில் உள்ள எல்லோரும் அரசியல்வாதியாக வேண்டும் என்கிற ஆசையை தான் பலர் விமர்சிக்கிறார்கள். எல்லா கட்சிகளிலும் – தகுதியும், திறமையும் கொண்டோரை நயவஞ்சகமாக அப்புறப்படுத்திவிட்டு வாரிசு அரசியலை வளர்க்கிறார்கள். அதனால் சச்சின் மகனையும், ஏனைய அரசியல்வாதிகளின் பிள்ளைகளை பற்றியும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு வேளை எதிர்காலத்தில் சச்சின் மகன் அர்ஜூன் நட்சத்திர ஆட்டக்காரராக வரும் பட்சத்தில் – அதை விமர்சிக்க நிறைய பேர் தங்கள் பகுத்தறிவை உபயோகிக்கக்கூடும். அதனால் கிரிக்கெட் வாரிசுகளையும், அரசியல் வாரிசுகளையும் ஒரு ஒப்பிடல் செய்வது காலத்தின் கட்டாயமாகிறது. “நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களில் இருபத்தி எட்டு புள்ளி ஆறு 28.6 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்களின் வாரிசுகளே என்றும் – முப்பது வயதுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே வாரிசுகளே” என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 125 கோடி ஜனத்தொகை கொண்ட நாட்டில் எம்.பி.,யாவதற்கு வாரிசுகளை தவிர வேறு எவருக்கும் தகுதி இல்லை. அந்தோ… பரிதாபம். இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதிக்காக போராடுவதாக சொல்லும் கட்சிகளும் – அடுத்தவரின் வாய்ப்பை பறித்து தம் வாரிசுகளுக்கு கொடுக்க தயங்குவதே இல்லை. இது சமூக நீதியல்ல. சமூக அநீதி.” என்று அந்த கட்டுரையில் சொல்லி இருந்தோம். இப்போது அதற்கென்ன என்கிறிர்களா? இப்போது இங்கே இந்த செய்தியை பொருத்தி பாருங்கள். சச்சினின் மகன் அர்ஜுன் சரியாக விளையாடாததால் “மும்பை உத்தேச அணியில் (14 வயதுக்கு உட்பட்டோர்) இருந்து நீக்கப்பட்டுள்ளாராம்.” அரசியலில் இதுவரை எந்த வாரிசாவது – இப்படி அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்களா? சட்டசபையில், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க தெரியாதவரெல்லாம் – தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். ஊழல் காரணமாக, கொலை குற்றம் காரணமாக – எவரும் அரசியலிலிருந்து அப்புறபடுததப்பட்டதில்லை. ஊழல் குற்றம் காரணமாக வாரிசுகள் சிறை போய் வந்தாலும், தியாகிகளை வரவேற்பது போல மேள தாளத்துடன் வரவேற்பு. ஊழல் செய்து சிறை சென்று வந்தவருக்கு இத்தகைய வரவேற்பு எதற்கு என்றால், அடுத்த முறை எம்.பி.,யாகி மேலும் ஊழல் செய்ய ஆசிர்வதிக்கிறார்களா? இதற்கு திராவிட பகுத்தறிவாளர்களின் ஒத்து ஊதல் வேறு. சரி, அங்கே மட்டும் என்ன வாழுகிறதாம். ஆனால் கிரிக்கெட் வாரிசுகளிடம் இந்த கேவலம் இல்லை. கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி கைதானவர்கள், அணியை விட்டு துரத்தப்பட்டவர்கள் எதிர்காலம் இருட்டு தான். ஆனால் அரசியலில் தப்பு செய்ய, தப்பு செய்ய தான் எதிர்காலமே பிரகாசம் அடைகிறது. கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான எந்த ஆட்டக்காரரும், “நான் இன்ன சாதிக்காரன். அதான் என் மீது குற்றம் சாட்டுகிறார்கள்” என்று அழவில்லை. ஆனால் அரசியலில் அத்தகைய வசனமும் உண்டு. ஒரு எம்.பி.,யாக உள்ள சச்சினாலேயே, தம் வாரிசை அணியில் சேர்க்க முடியவில்லையா அல்லது சரியாக விளையாடவில்லை, அதனால் அணியில் சேர்க்கவில்லை, இதற்காக யாரிடமும் சிபாரிசுக்கு போகவேண்டுமா என்று கருதி விட்டு விட்டாரா? இருக்கலாம். திறமை குறைந்தவன், திறமையை வளர்த்து கொள்ளட்டும் என்று விட்டிருக்கலாம். சுட்டு போட்டாலும், அரசியலில் வாரிசுகளை வளர்க்கும் நம் அரசியல்வாதிகளுக்கு இந்த பண்பு வராதே. எதிரியின் கால்களில் விழுந்தாவது, பட்டம் பதவியை வாங்கி விடுவார்களே. அந்த வகையில் அரசியல் வாரிசுகளுக்கு பாடம் புகட்டி உள்ளானோ அர்ஜுன் தண்டுல்கர். தகுதி இருக்கிறவன் தந்தை வகித்த பதவிக்கு வருவதில் யாதொரு ஆட்சோபனையும் இல்லை. தகுதி இல்லாதவனை, தலைவரின் வாரிசு  என்கிற ஒரே காரணத்துக்காக திணிக்கிறார்களே. அதை ஆட்சோபிக்கிறோம், உழைக்காமல் உடல் வளர்த்த பார்ப்பனியத்திற்கு சளைத்ததல்ல- இந்த நவீன குல தொழில் முறை.சமூக நீதி பேசுபவர்கள் தங்களுக்கு, தங்கள் வாரிசுகளுக்கு என்று இடத்தை பத்திரப்படுத்தி கொண்டு தான் இட ஒதுக்கீடு பேசுகிறார்கள்.இனி அரசியலவாதியாக, மருத்துவராக சாமானியர்கள் எவரும் நினதது கூட பார்கக இயலாது போலும். சச்சின் வாரிசு மட்டும் கிரிக்கெட் ஆடலாமா என்று கேட்டு வாரிசு அரசியலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் குற்றம் செய்தவர்களானார்கள் என்றால் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்படவும் குரல் கொடுப்பார்களா? 26 ராவணன் - திராவிடனா? சிங்களனா? “ராவணன் – திராவிடனா? சிங்களனா?” என்றொரு கேள்வி எழுகிறது. காரணம், இலங்கையில் ராவணன் பெயரை தாங்கியுள்ள அமைப்பின் தமிழர் விரோத நடவடிக்கையின் காரணமாக. “திராவிட பற்றின் காரணமாக ராவணனை தூக்கி பிடிக்கும் தமிழக பகுத்தறிவுக்கு போட்டியாக தமிழர்களை கொன்று குவித்த பௌத்த சிங்கள தரப்பும் இப்போது ராவணனை தூக்கி பிடிக்க துவங்கி உள்ளது ” ராவண பலய என்கிற அமைப்பின் மூலமாக. சிங்களத்தை ஆரிய வம்சமாக சித்தரிக்கும் திராவிட பகுத்தறிவு… ராம, ராவண போரை ஆரிய, திராவிட போராக பார்க்கும் திராவிட பகுத்தறிவு – இந்த ராவண பலய அமைப்பின் தமிழ் விரோத பௌத்த பயங்கரவாதத்தை எப்படி பார்க்க போகிறது. ராவணன் ராமனுக்கு மட்டும் எதிரியாக இல்லாமல் இன்றைக்கு தமிழர்களை வாழ்வை நிர்மூலமாக்குவதில் முதன்மையாக இருக்கிறானே. அன்றைக்கு ராமனாக, இன்றைக்கு இந்தியனாக என்று ஆக்ரமிப்பாளனாக ராவண பலய அமைப்பு பார்க்கிறது. நாம் முட்டாள்களாக நமக்கு சம்பந்தமே இல்லாத ராவணனை தூக்கி பிடிக்க முயல்வதில் என்ன நியாயமுள்ளது. நாம் தரப்போகும் செய்தியை வாசித்து – திராவிட பகுத்தறிவு “இனி ராவணனை கொண்டாடுவதா… வேண்டாமா” என்று முடிவு செய்து கொள்வது நல்லது. ராவணன் பலய அமைப்பின் ராவண லீலைகளை பார்ப்போம். முதலாவதாக வங்கக் கடலில் சென்ற வருடம் உருவாகிய புயல் ஒன்றுக்கு விடுதலைப் புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரனின் பெயரை சூட்டுமாறு சிங்கள பௌத்த தேசியவாத அமைப்பான ராவண பலய பரிந்துரை செய்ததை யார் அறிவார். காரணம். புயல் என்றால் அழிவு. அழிவுக்கு காரணமானவற்றுக்கு, அழிவுக்கு காரணமானவரின் பெயரை வைக்க சொல்ல பரிந்துரை செய்கிறது ராவணன பலய அமைப்பு. அது தம் அறிக்கையில, “மூன்று பத்தாண்டுகளாக நாட்டை பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய விடுதலைப் புலிகளுக்குத் தலைமை தாங்கிய, பிரபாகரனின் பெயரை இந்தப் புயலுக்குச் சூட்டுவதற்கு ராவண பலய அமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்காது என்று கூறியது. முன்னதாக இந்த புயலுக்கு இலங்கை மன்னன் “மகாசேன மன்னனின் பெயர் சூட்டப்பட இருந்தற்கு ராவணய பலய அமைப்பு தம் எதிர்ப்பை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது”. ஆக அழிவை ஏற்படுத்தும் புயலுக்கு பெயர் வைப்பதில் கூட எவ்வளவு வன்மம் உள்ளது ராவண படையால். அங்கே ராவண பக்தன்கள் என்றால், இங்கே ராம பக்தர்கள். பெரிய வித்தியாசமில்லை. வழக்கம் போல பகுத்தறிவு – பௌத்த பயங்கரவாதத்தை சிங்கள பயங்கரவாதமாக, ராவண படையின் அடிப்படை வாதத்தை ஆரிய வம்சத்தின் வேலையாக காட்டி கொள்ள முற்படும் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டுவிடும். அடுத்த ராவண லீலையை பார்ப்போம். இலங்கையில் சீதை சிறைபிடிக்கப்பட்டதாக கருதப்படும் நுவரெலியாவின் ஹக்கலை – திவுரும்பொல பிரதேசத்தில் சீதைக்கு மத்திய பிரதேச அரசு கோவில் கட்ட உத்தேசித்துள்ளதற்கு ராவண பலய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதற்காக அவர்கள் தந்த அறிக்கை. “சீதை அம்மனுக்கு ஆலயம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இராவண மன்னனுக்கு சிலையொன்று நிறுவப்பட வேண்டும். ராவண மன்னன் வரலாற்றுடன் எமக்கு முக்கியமான ஒருவர், ராவணனால் தான் சீதை பத்தினி என்ற பெயரை பெற்றார். இராவணன் சீதை பலவந்தப்படுத்தியிருந்தால் அவர் அந்த தகுதியை பெற்றிருக்க மாட்டார். பல வருடங்களாக சீதையை சிறைவாசம் வைத்திருந்தாலும் அவருக்கு ராவண மன்னன் இடையூறு விளைவித்ததில்லை. எனவே, ராவணன் ஒரு கொள்கையை கடைபிடிப்பவர் என்று புலப்படுவதால், முதலில் அவருக்கே ஆலயம் அமைக்கப்பட வேண்டும். சீதை நினைவாக கோவில் அமைப்பதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.” “ஆனால், ராவணனுக்கு முதலில் சிலை வைத்த பின்னரே சீதைக்கு கோவில் அமைக்க வேண்டும். அது நடக்காவிட்டால், சீதைக்கு கோவில் அமைப்பதற்கு அனுமதிக்கமாட்டோம். நாட்டின் தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதே எமது நோக்கம்.” என்கிறது. இங்கே ராமருக்கு கோவில், அங்கே ராவணனுக்கு கோவில் – மதபிமானிகளால் எங்கும் பிரச்சனை தான். சீதை பத்தினியாகவே இருந்ததற்கு ராவணனின் பெருந்தன்மையே காரணம் என்கிறார்கள் அங்குள்ள ராவண பக்தர்கள். “சீதையை ராவணன் எப்படி கற்புடன் இருக்க விட்டிருப்பான்” என்று கேட்கிறார்கள் இங்குள்ள ராவண பக்தர்கள் – இங்கே. ராவணன் பலய அமைப்பின் எஞ்சியுள்ள ராவண லீலைகளை பார்ப்போம். ” ஜெகோவாவின் சாட்சிகள் என்ற கிருஸ்தவ மதப்பிரிவினர், தமது சமய ஏடுகளின் சிங்கள மொழிப் பிரதிகளை முல்லேரியா பகுதியில் விநியோகித்துக் கொண்டிருந்த போது ராவண பலய அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்குகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். கிருத்தவ மதப் பரப்புரைகளை மேற்கொண்டவர்களை வளைத்துப் பிடித்த, ராவண பலய அமைப்பினர், மற்றும் பௌத்த பிக்குகள், அவர்களை முல்லேரியா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ராவண பலயவின் தலைவர் சத்ததிஸ்ஸ தேரர் முல்லேரிய காவல் நிலையத்திற்குள், கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர்களை பலமுறை எச்சரிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பினர்களாம்.” இது எப்படி இருக்கு. ராவண அபிமானிகளால் தமிழகத்தில் ராவண படை வளர்ந்தால் இத்தகைய அதிரடி நிகழ்வுகளை பார்க்கலாம் போலும். அடுத்த ராவண பலய அமைப்பின் ராவண லீலையை பார்ப்போம். “பௌத்த சிங்களரல்லாதவர்களை ராவண பலய அமைப்பு ஒரே மாதிரி ஏற்றத்தாழ்வின்றி சரி சமமாக ஓர வஞ்சனையின்றி வஞ்சிப்பதை பார்க்க முடிகிறது – எடுத்துக்காட்டாக முஸ்லீம்களுக்கு எதிரானவற்றை பார்ப்போம். “அல்குர்ஆனின் போதனைகளை திரிபு படுத்துவது, திரிபுபடுத்தப்பட்ட தமது சுயகருத்துக்களை வெளியிடுதல், முஸ்லிம்கள் பற்றி சிங்களவர்களிடையே தப்பபிப்பிராயத்தை வளர்த்தல் முதலிய 6 குற்றச்சாட்டுக்களின் பேரில் பொதுபல சேனா, ராவண அமைப்புக்களின் செயலாளர் உட்பட நால்வருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அஸாத் ஸாலி குறிப்பிட்டுள்ளார்.” மதத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் இங்கே உள்ள ராவண பக்தர்கள். மதத்தை எப்படி வளர்ப்பது என்று யோசிக்கிறார்கள் அங்கே உள்ள ராவண பக்தர்கள். பௌத்தம் பகுத்தறிவு மதம் என்கிறார்கள் இங்கே உள்ள பௌத்த விசுவாசிகள். ஆனால் பகுத்தறிவு மதத்தை கொண்டு போரை வளர்க்கிறார்கள், மத உணர்வை தூண்டி குளிர் காய்கிறார்கள் அங்கே உள்ள பௌத்த விசுவாசிகள். ராவண விசுவாசிகளின் லீலைகள் சரியா என்பதை திராவிட பகுத்தறிவுவாதிகள் தான் சரி பார்க்க வேண்டும். இங்கே யார் பெயரை பெருமையாக உச்சரிக்கிறிர்களோ – அந்த பெருமைக்குரியவர்களின் பெயரை சொல்லி கொண்டு தான் அங்கே வன்முறை வெறியாட்டம். அதனால் கொஞ்சம் மாத்தியும் யோசியுங்கள்… சிந்தியுங்கள்… 27 பகுத்தறிவின் "காலம் கடந்த ஞானோதயம்" திராவிட பகுத்தறிவாளர்கள் எப்போதாவது உண்மை பேசுகிறார்கள். எப்போதும் உண்மை பேசினால் நன்றாக இருக்கும். சமூகமும் செழிக்கும். இந்த அளவுக்காவது உண்மை பேசுகிறார்களே என்று ஆறுதல் அடைய வேண்டியது தான். சரி. அப்படியென்ன உண்மை பேசிவிட்டார்கள். இதோ – இந்த கேள்வி பதில் அந்த உண்மைகளை தருகிறது. 8.6.2013 விடுதலை ஞாயிறு மலரில் வந்த கேள்வி பதில் இது. “கேள்வி: சட்டத்தின் மீதுள்ள பயம் படிப்படியாகக் குறைந்து வருவதற்குக் காரணம் என்ன? – க. மல்லிகா, புளியங்குடி கி.வீரமணி அவர்கள் பதில்: நம் நாட்டில் ஆட்சி இருக்கிறது; ஆட்சிகள் இருக்கின்றன. ஆனால் ஆளுமை இல்லை. வாக்கு வங்கி அரசியல் பொது ஒழுக்கத்தையும், சட்டத்தை மதிக்கும் உணர்வையும் நாசப்படுத்தி விட்டதே!” அய்யா கி.வீரமணி சொன்ன பதில் உண்மைகளை உள்ளடக்கியது தான். ஆனால் என்றோ சுட்டி காட்டி இருக்க வேண்டியதை இப்போது சுட்டி காட்டி “காலங் கடந்த ஞானோதயர்களாக” இருந்திருக்கிறார்களே. இப்போது மட்டும் சொல்ல வேண்டிய அவசியமென்ன. பங்காளிகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காரணமாக இருக்கலாம். அரசியல்வாதிகளின் வாக்கு வங்கி அரசியல் மட்டுமல்ல, பகுத்தறிவாதிகள் முரண்பட்டு சொன்ன நியாயங்கள் கூட “பொது ஒழுக்கத்தையும், சட்டத்தை மதிக்கும் உணர்வையும் நாசப்படுத்தி விட்டது!” என்றும் சொல்லலாம். இதை நாம் பல பதிவுகளில் எழுதியாயிற்று. “சாதிக்கொரு நீதி” சொன்ன பகுத்தறிவாதிகள், “மதத்துக்கொரு நியாயம்” சொன்ன நாத்திகவாதிகள். இந்த நாடு பொது ஒழுக்கத்தையும், சட்டத்தை மதிக்கும் உணர்வையும் கெடுக்க இவை போதாதா? அரசியல்கட்சிகளுக்கு “நேர்மை பேச” வாக்கு வங்கி அரசியல் இடைஞ்சலாக இருக்கலாம். சரி பகுத்தறிவு பேசுபவர்கள் நியாயம் பேச வேண்டியது தானே. என்ன கேடு வந்தது. “அவர்களுக்கென்ன நிர்ப்பந்தம்”. தவறை தவறென்று சுட்டி காட்ட முடியாதவர்கள் எப்படி சுயமரியாதைக்காரராக இருக்க முடியும். அதே இதழில் வந்த மற்றொரு கேள்வி பதில் இது. கேள்வி: சில முஸ்லீம் அமைப்புகளின் தீவிரவாதம் – சங்பரிவார்க் கும்பலின் வளர்ச்சிக்குத் தீனியாகிறதே – இதனை அவர்கள் உணரக் கூடாதா? – எம்.ஏ. சுல்தான், ராஜகிரி கி.வீரமணி அவர்கள் பதில்: என்ன செய்வது! சிலருக்குப் புரிய வில்லை. அந்த வெறித்தனத்தனங்களால் ஒட்டு மொத்த சமூகத்தின் நிரந்தர பாதுகாப்பு மிகவும் பாதிக்கப்பட்டு, பொது மக்கள் மத்தியில் கூட அவர்களைப் பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கும் அவல நிலை தொடர்கிறது! சரியான வழி காட்டுதல் தேவைப்படுகிறது” என்கிறார். நல்லது. ஆனால், வன்முறையை, மத பயங்கரவாதத்தை ஒரே கண்ணோட்டத்தில் கண்டித்திருந்தால் – பயங்கரவாதம் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு கொண்டு வளர்ந்திருக்காதே. “அ” மதத்தின் பயங்கரவாதத்தை முதல் பக்கத்தில் பிரசுரித்தும், “ஆ” மத பயங்கரவாதத்தை கடைசி பக்கத்தில், ஏன் பெட்டி செய்தியாக கூட போட மனமில்லாதவர்கள் தான் “வாக்கு வங்கி அரசியலால் நாடு நாசமாக போகிறதே” என்று அஞ்சுகிறார்கள். இந்த பாரபட்சத்துடன் அநீதியை எதிர்க்கிற போக்கு நீதிக்கட்சி காலத்திலிருந்தே துவங்கிவிட்டது. பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த பிற ஆதிக்க சாதியினரோடு கைக்குலுக்கியதன் விளைவு – பெரியாரால் பின்னாளில் ‘முதலியார் ஒழிப்பு இயக்கம்” என்று துவக்குகிற சூழ்நிலையை உருவாக்குகிறது. நெருப்பை அணைக்க தண்ணீரை ஊற்றுகிறோம் என்று நினைத்து கொண்டு மண்ணெணெய் ஊற்றியதன் விளைவை தான் நாம் அனுபவிக்கிறோம். தவறை எந்த சாதியினர் செய்தாலும் கண்டிப்போம் என்கிற மனநிலை இல்லாததன் விளைவு – இப்படி இன்று வடிவமெடுத்தது. ஒரு நீதிபதி மீது அளவுக்கதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த நீதிபதி என்ன சாதியென்று பகுத்தறிந்து, “தப்பு செய்தாரா இல்லையா” என்று பார்க்காமல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதீய அடிப்படையில் ஆதரவாக வக்காலத்து வாங்கினார்கள் சுயமரியாதைக்காரர்கள். இதுவா பகுத்தறிவு. இந்த நாடு விளங்குமா? இப்படி வக்காலத்து வாங்கினால் “தவறு செய்பவன் தைரியமாக “பீஸ் வாங்காமலே ஒரு வக்கீல் நமக்கு வாதாட இருக்கிறார்” என்கிற துணிச்சலில் தவறு செய்ய வாய்ப்பாகாது”. இப்படி “சாதிக்கொரு நீதியும், மதத்துக்கொரு நியாயமும்” பேசிக்கொண்டு – நாம் தான் “வாக்கு வங்கி அரசியல் – பொது ஒழுக்கத்தையும், சட்டத்தை மதிக்கும் உணர்வையும் நாசப்படுத்தி விட்டதே!” என்று பேசி கொள்கிறோம். முன்னுதாரணமாக இருக்க வேண்டிய முன்னணி தலைவர்களே இப்படி இருந்தால் நாடு பின்னணிக்கு போகாதா? இந்த நாடு நாசமாக போனதற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல காரணம், இத்தகைய பகுத்தறிவாளர்களும் தான். பல நேரங்களில் அரசியல்வாதிகளை விட இவர்கள் சிறந்த நடிகர்களாக இருப்பது தான் வேதனை. 28 விருது வாங்கியவரின் சாதியும், பகுத்தறிவின் புத்தியும் இரண்டு பகுத்தறிவாளர்கள் சாகித்ய அகாடமி விருது குறித்து பேசி கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உரையாடல்களில் இருந்து, “இந்த வருஷம் யாருக்கோ சாகித்ய அகாடமி விருது கொடுத்திருங்காங்களாமே” என்றார் நம்பர் 1 பகுத்தறிவாளர். “யாருக்கோ இல்லை… ஜோ டி குரூஸ் என்பவரின் கொற்கை நாவலுக்கு. யாருக்கோ கொடுத்தாங்கன்னு அரைகுறையா பேசக்கூடாது” என்றார் நம்பர் 2 பகுத்தறிவாளர். “அரைகுறையா எல்லாம் பேசலே நண்பரே. சாகித்ய அகாடமி விருது வாங்கியவரின் பெயரை பார்த்தேன். கிருத்தவ பெயர் மாதிரி தெரிஞ்சது. வேறு மாதிரி பெயரா இருந்து இருந்தா குலம், கோத்ரம் பார்த்து, நம்ம பகுத்தறிவை உபயோகித்து – ஆதிக்க சாதி, பார்ப்பன துதிக்கு கிடைச்சு இருக்குன்னு குதிச்சு இருப்போம்ல. காமெடி சினிமா நடிகரை விமர்சிக்க கூட என்ன சாதி’ன்னு பார்த்தவங்க, பாலியல் வன்கொடுமை புரிபவனை கூட என்ன சாதி’ன்னு பார்த்து கண்டிக்கிற மானங்கெட்ட நாம – இதை லேசுல விடுவோமா? ஜோ டி குரூஸ்ன்னு வாயில நுழையாத பெயரா இருந்தது. அதான் நமக்கு தேவையில்லாத சங்கதின்னு ஒதுங்கிட்டேன். மற்றப்படி “சாதிக்கொரு நீதி பார்க்கிற” நம்ம பகுத்தறிவு நம்மகிட்டயே தான் இருக்கு. தப்பா எடுத்துக்காதிங்க” என்றார் நம்பர் 1 பகுத்தறிவாளர். “நல்லது. அப்படி தான் இருக்கணும். ஆனா பெயரை பார்த்து ஏமாந்துடக்கூடாது. இந்த இடத்துல பகுத்தறிவு சுதானமா இருக்கணும். பெயரை வைச்சு எதையும் முடிவு பண்ணிடக்கூடாது.” என்றார் நம்பர் 2 பகுத்தறிவாளர். “சரியா சொன்னீங்க. உமாசங்கர் ஐ.ஏ.எஸ் விஷயத்துல அப்படி தான் ஏமாந்து போனோம். அவர் மதவாத பேச்சையும், அவர் பெயரையும் பார்த்துட்டு இந்து’ன்னு நினைச்சிட்டு அவர் மத பிரசாரத்தை தட்டி கேட்க “ரெண்டுல ஒண்ணு பார்த்துடுறதுன்னு” வேகமா போனோம். ஆனா அவரு கிருத்தவ மத போதகராம். அதனால் போன வேகத்துல திரும்பிட்டோம்ல. எப்பூடி” என்றார் நம்பர் 1 பகுத்தறிவாளர். “அப்படி தான் இருக்கணும். சாதி தெரியல, மதம் தெரியலன்னு விட்டுடக்கூடாது. எப்படியாவது குலம், கோத்திரம் தெரிஞ்சிட்டு அதுக்கேத்த மாதிரி விமர்சிக்கணும். பெரியார் பாசறையில் இருந்து வந்துட்டு இதைக்கூட செய்யலன்னா எப்படி. பெரும்பாலும் யாருக்கு சாகித்ய அகாடமி கிடைச்சாலும் – அதை விமர்சிக்க ரெண்டு கும்பல் கிளம்பும். ஒரு கும்பல் யாருன்னா, “தனக்கு கிடைக்காதது அவனுக்கு கிடைச்சிடுச்சா”ன்னு வயிறு எரியிற கும்பல். அவங்க சாதாரண அறிவு படைச்சவங்க. நாம இரண்டாவது குரூப். அதாவது பகுத்தறிவுள்ளவங்க. புத்தகத்தை படிச்சு விமர்சிக்க வேண்டியது இல்ல. எழுதினவன் சாதிய பார்க்க வேண்டியது. மதத்தை பார்க்க வேண்டியது. திராவிடம் வாழ்க’ன்னு சொல்ற குரூப்பா, தமிழ் தேசியம் பேசுற குரூப்பா’ன்னு பார்க்க வேண்டியது. நமக்கு பிடிக்காத கூட்டமா இருந்தா நமது பகுத்தறிவை காட்ட தவறிடக்கூடாது” என்றார் நம்பர் 2 பகுத்தறிவாளர். “இதுல இவ்வளவு விஷயம் இருக்கா. தமிழ் தமிழ்’ன்னு பேசறோம். உலக தமிழர்கள் என்றெல்லாம் பேசுறோம். சாதிய மறந்து சக உள்ளூர் தமிழர்களுக்கு விருது கிடைச்சா பெருமை’னு பாராட்டக் கூடாதா?” என்று கேட்டார் நம்பர் 1 பகுத்தறிவாளர். “அந்த தவறை மட்டும் செஞ்சிடக்கூடாது. காட்டுமிராண்டி பாஷைன்னு பெரியார் சொன்னது தெரியாதா? தொல்காப்பியர் காலத்துல இருந்து இன்னி வரைக்கும் எவனும் உருப்படியா எழுதுனது இல்ல”ன்னு சொன்னதை மறக்கலாமா. மறந்தா நாம பகுத்தறிவாளரா” என்றார் நம்பர் 2 பகுத்தறிவாளர். “இப்ப இந்த ஜோ டி குருஸை எப்படி விமர்சிக்கிறது. அவர் கிருத்தவரில்லையா.  அதனால் நம்ம பகுத்தறிவு மூளை வேலை செய்ய மாட்டேங்குதே” என்றார் நம்பர் 1 பகுத்தறிவாளர். “திராவிட பகுத்தறிவாளரா இருந்துட்டு தெரியல, முடியலன்னு சொல்லலாமா? அவர் விபூதி எல்லாம் பூசி இருக்காரு. இது ஒண்ணு போதாதா? அவரை விமர்சிக்க. நம்ம நண்பர் இவரை இப்படி விமர்சிக்கிறார். “சைவ சமயத்தை சேர்ந்த கிறிஸ்துவருக்கு இம்முறை சாகித்திய அகடாமி விருது அருளப்பட்டிருக்கிறது. ஆரூத்ரா தரிசனம் நாளில் அறிவிப்பு வந்தது தற்செயலானதல்ல’ன்னு மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் எப்படி முடிச்சு போடுறார் பாருங்க. மதவாதம்னு பீதிய கிளப்பணும்.” என்றார் நம்பர் 2 பகுத்தறிவாளர். “விருது பெற தகுதி படைத்த ஒருவர், சுயநல காரணங்களால் நாம அங்கீகரிக்க விரும்பாத ஒருவர் – உலக தமிழர்களால் அங்கீகரிக்கப்படும்போது, அது நமக்கு கேவலமில்லையா?” என்று கேட்டார் நம்பர் 1 பகுத்தறிவாளர். “அப்படியெல்லாம் கேட்கக்கூடாது. நீதி, நேர்மை பேசி திராவிட பகுத்தறிவு சூத்திரத்தை மாற்றிடக்கூடாது ” என்றார் நம்பர் 2 பகுத்தறிவாளர். உண்மை தான். மாற்றவே கூடாது. பார்ப்பனியத்தின் மனுதர்மத்தை ஒழிக்க முடிந்தாலும் ஒழிக்க முடியும் – ஒழிக்க முடியாதே, பகுத்தறிவுகளின் மனுதர்மத்தை. சாதியை மறந்தவனுக்கும் சாதியை நினைவூட்டுவார்கள். 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  - தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !