[] []                                                        நெடுநல்வாடை                             முனைவர் . செங்கைப் பொதுவன்                                    நூல் : நெடுநல்வாடை ஆசிரியர் : முனைவர் . செங்கைப் பொதுவன் மின்னஞ்சல்  : podhuvan9@gmail.com    மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com   உரிமை: Creative Commons Attribution-ShareAlike 4.0 InternationalYou are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work with attributing this original work. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.  இவ்வுரிமை நூலின் எழுத்துகளுக்கு மட்டுமே. படங்களுக்கு அல்ல.        செங்கைப் பொதுவன் மின்னூல் எண் 2 Sengai Podhuvan’s ebook no. 2   2200 ஆண்டுகளுக்கு முன் நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை   Anti-breeze By Nakkiran   செங்கைப் பொதுவன் விளக்கம்   தலைவன் வினை முடித்துத் திரும்ப வேண்டும் என்று தலைவி காத்திருப்பதைத் தோழி கூறும் பாட்டு   The wife is waiting for safe return of her husband after success in his venture   விளக்கம் செங்கைப் பொதுவன் Dr.Sengai Podhuvan M. A., M. Ed., Ph. D. podhuvan9@gmail.com www.vaiyan.blogspot.com     படிப்பவர்களுக்குக் குறிப்பு   முதலில் பாடல்-விளக்கம் அடுத்து பாட்டு பின்புல வண்ணத்தில் பொருளடக்கம்   1 பெரும்பனி வாடை - கோவலர் நடுங்கல் 11  2 வாடை வீச்சின் தாக்கம் 12  3 நாட்டின் செழிப்பு 13  4 முழுவலி மாக்கள் தெருக்களில் சுற்றித் திரிதல் 15  5 மகளிர் மாலைவிளக்கு 17  6 மாடப்புறாக்கள் 19  7 காலத்துக்கு ஏற்ற கோலம் 20  8 அரசியின் அரண்மனை - மனை வகுத்த முறை 24  9 அரசியின் அரண்மனை நிலைவாயில் 26  10 திருமனை முற்றம் 28  11 அரண்மனைக் கோயிலில் எழும் ஓசைகள் 29  12 அரசியின் கருவறையில் பாவை விளக்கு 30  13 அரசி படுத்திருக்கும் பாண்டில் கட்டில் 33  14 பாண்டில் சேக்கை (மெத்தை) 35  15 மெத்தைமேல் மெத்தை \ சேக்கை 37  16 அரசியின் கோலம் புனையா ஓவியம் 38  17 அரசியின் கலக்கம் 40  18 அரசியின் ஏக்கம் 42  19 பாசறைத் தொழில் இன்னே முடிக 44  20 பாசறைத்தொழில் 45  21 தனிப் பாடல் 49  ஆசிரியர் செங்கைப் பொதுவன் 50  பத்துப்பாட்டு   பத்துப்பாட்டு நூல்கள் இவை என்பதை மனத்தில் பதித்துக்கொள்ள உதவும் வாய்பாட்டுப் பாடல் இது.   முருகு1 பொருநாறு2  பாணிரண்டு3,4 முல்லை5  பெருகு வள மதுரைக் காஞ்சி6 - மருவினிய கோல நெடுநல் வாடை7 கோல்குறிஞ்சிப்8 பட்டினப் பாலை9 கடாத்தொடும்10 பத்து   பத்துப்பாட்டு நூல்கள் படலின் அடி அளவில் எவ்வளவு பெரியவை என்பதைக் காண உதவும் அளவைப் படம் இது.     []   நெடுநல் வாடை - பொருள் கண்ணோட்டம்   பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றாகத் திகழும் இந்த நூல் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மீது பாடப்பட்ட நூல் என அதன் கொளுக்குறிப்பு தெரிவிக்கிறது.   இந்த வகையில் இது புறப்பொருள் பற்றிய நூல்.   நூலைப் படிப்பவர்களுக்கு இது முல்லைத்திணையின் உரிப்பொருளான ‘இருத்தல்’ (ஆற்றியிருத்தல்) பொருள் பற்றிய நூலாகவே திகழ்கிறது.   ‘முல்லைப்பாட்டு’ நூல் தலைவன் பிரிவை ஆற்றிக்கொண்டிருக்கும் (பொறுத்துக்கொண்டிருக்கும்) தலைவி பற்றிக் கூறுகிறது.   ஆகவே அகப்பொருள். முல்லைத் திணை.   நெடுநல்வாடை தலைவன் பிரிவை ஆற்றிக்கொண்டு இருக்கும் தலைவியைப் பற்றியும், தன் வினையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் தலைவன் தன் போர் வினையை முடித்துக்கொண்டு தலைவியிடம் வந்து சேரவேண்டும் எனக் கூறும் தோழியின் கூற்றாகவும் உள்ளது.   இந்த வகையில் இது அகப்பொருள். குறிஞ்சித் திணை.   எனினும் இது வரலாற்று நோக்கில் பாண்டியன் நெடுஞ்செழியன் மீது பாடப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது.   பாடலில் இதற்கான சான்று ஒன்றும் இல்லை.   “வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகம்” (176), “வேந்தன்” (186) என்னும் குறிப்புகள் நெடுஞ்செழியனைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டவர்கள் இந்தப் பாடலைப் புறப்பொருள்-பாடல் எனக் குறிப்பிடுகின்றனர்.   கூதிர்கால வாடையில் அரண்மனைக் கருவறையில் தலைவி தலைவனை எண்ணி வாடும் காட்சியும், பாசறையில் தலைவன் இருக்கும் காட்சியும் இப்பாடலில் இணைத்துக் காட்டப்பட்டுள்ளன.   தலைவியின் “இன்னா அருபடர் தீர, இன்னே முடிகதில் அம்ம” (168) “பாசறைத் தொழிலே” (188) என முடித்து, தோழியின் கூற்றாகக் கொண்டு இந்தப் பாடலை அகப்பொருள்-பாடல் எனக் கொள்வதே சாலச் சிறந்தது.   []       1 பெரும்பனி வாடை - கோவலர் நடுங்கல்   உலகம் குளிரில் நடுங்கும்படி மழை பொழிந்துகொண்டிருக்கிறது. கோவலர் தம் ஆனிரைகளை வேறு நிலப்பரப்பில் மேயவிட்டுக்கொண்டு புலம்புகின்றனர். அவர்கள் தலையில் வெண்காந்தள் பூவைச் சூடிக்கொண்டுள்ளனர். பனியோடு சேர்ந்து வாடைக்காற்று வீசுகிறது. தம் கைகளைக் கன்னத்தில் வைத்துக்கொண்டு நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்.   பாட்டு   வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ,           பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென,              ஆர்கலி முனைஇய கொடுங் கோல் கோவலர்          ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி,               புலம் பெயர் புலம்பொடு கலங்கி, கோடல்     5 நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,           மெய்க் கொள் பெரும் பனி நலிய, பலருடன் கைக் கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க   2 வாடை வீச்சின் தாக்கம்   வாடைக்காற்றின் குளிர் தாக்குவதால் பசுக்கள் சரியாக மேயவில்லை. மரத்தில் இருக்கும் மந்திக் குரங்குகள் கூம்பிய நிலையில் அமர்ந்துகொண்டிருக்கின்றன. பறவைகள் பறக்காமல் நிலத்தையே விரும்புகின்றன. கன்றுக்குட்டிகள் கூடக் கறக்கும் தாய் மடியில் பால் குடிக்கவில்லை. இப்படிக் கடுமையான வாடைக்காற்று வீசுகிறது. இந்தக் காலத்தில் ஒருநாள் நள்ளிரவு.   பாட்டு   மா மேயல் மறப்ப, மந்தி கூர,     பறவை படிவன வீழ, கறவை     10 கன்று கோள் ஒழியக் கடிய வீசி,              குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்     3 நாட்டின் செழிப்பு   []   முசுண்டைக் கொடி முசுண்டைக் கொடியில் பொறிப்பொறியாக வெண்ணிறப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. அதனோடு புதர் வேலியில் பீர்க்கம் பூ பொன் நிறத்தில் பூத்துக் கிடக்கிறது. ஈர மணலில் இருக்கும் பசுமை நிறக் கால்களை உடைய கொக்கு, சிவந்த கால்களை உடைய நாரை ஆகியவை எளிமையாகக் கவர்ந்துண்ணும்படி கயல் மீன்களை ஆற்று வெள்ளம் அடித்துவந்தது. பெயல் நின்றதும் வெண்மேகம் படர்ந்துவரும் மூடுபனி. வயலில் விளைந்திருக்கும் நெற்கதிர் வளைந்து தொங்குகிறது. பாக்கு மரத்தில் காய்கள் சதைப் பிடிப்புடன் முற்றித் தொங்குகின்றன. காட்டில் பூத்திருக்கும் குளிர்கால மலர்களில் பனித்துளிகள் தூங்குகின்றன.   பாட்டு   புன் கொடி முசுண்டைப் பொறிப் புற வான் பூ,              பொன் போல் பீரமொடு, புதல்புதல் மலர;       பைங் காற் கொக்கின் மென் பறைத் தொழுதி,            15 இருங் களி பரந்த ஈர வெண் மணல்,     செவ் வரி நாரையோடு, எவ் வாயும் கவர        கயல் அறல் எதிர, கடும் புனல் சாஅய்:              பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை        அகல் இரு விசும்பில் துவலை கற்ப;                   20 அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த     வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க;               முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்                கொழு மடல் அவிழ்ந்த குழூஉக் கொள் பெருங் குலை,     நுண் நீர் தெவிள வீங்கி, புடை திரண்டு,             25 தெண் நீர்ப் பசுங் காய், சேறு கொள முற்ற;     நளி கொள் சிமைய, விரவு மலர், வியன் காக்              குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க        4 முழுவலி மாக்கள் தெருக்களில் சுற்றித் திரிதல்   பழமையான ஊர். வளமான ஊர். ஓங்கிய மாடமாளிகைகள். ஆறு போல் அகன்ற தெருக்கள். முழு வலிமை பெற்று முறுக்கான உடல் கொண்ட மக்கள். காவல் புரியும் மக்கள். படலைப் பூ மாலை தலையில் சூடியவர்கள். குளிரில் முதுகு கூனி முடக்கத்துடன் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வண்டு மொய்க்கும் தேறல் பருகியிருக்கிறார்கள். பனித் துவலைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இரட்டைத் துணியால் போர்த்துக்கொண்டிருக்கின்றனர். பகல் அல்லாத இரவிலும் விரும்பிய இடங்களிலெல்லாம் திரிகின்றனர்.   பாட்டு   மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்,              ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,      30 படலைக் கண்ணி, பரு ஏர் எறுழ்த் திணி தோள்,        முடலை யாக்கை, முழு வலி மாக்கள்              வண்டு மூசு தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,      துவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து,                இரு கோட்டு அறுவையர், வேண்டு வயின் திரிதர 35   5 மகளிர் மாலைவிளக்கு   மகளிர். பருத்த மார்பகத் தோள். வள்ளிக்கொடி எழுதப்பட்ட தோள். வெள்ளி நிறத்தில் வள்ளிக்கொடி எழுதப்பட்ட தோள். மெத்தென்ற உடம்பு. அழகு. முத்துப் போன்ற புன்னகை. காதுத் தொங்கல் குழையை விரும்பிப் பாய்வது போன்ற நீண்ட கண்கள். மழை போல் ஈரமான கண்கள். எழிலான கண்கள். இவற்றைக் கொண்ட மடவரல் மகளிர். மடப்பத் தன்மை உடைய மகளிர். இவர்கள் மாலைப் பொழுது என்று கணித்து அறிந்துகொள்கின்றனர். பூக்கூடையில் உள்ள பூ மலர்வதால் தெரிந்துகொள்கின்றனர். இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் திரியைத் திரித்து வீட்டு-விளக்கு ஏற்றுகின்றனர். நெல்லும் மலரும் தூவி வழிபடுகின்றனர். மாலைக்காலத்தை வழிபடுகின்றனர்.   பாட்டு   வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்,        மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,    பூங் குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக் கண்,    மடவரல் மகளிர் பிடகைப் பெய்த          செவ்வி அரும்பின், பைங் கால் பித்திகத்து,  40 அவ் இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,       இரும்பு செய் விளக்கின் ஈர்ந் திரிக் கொளீஇ,                நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,          மல்லல் ஆவணம் மாலை அயர                 6 மாடப்புறாக்கள்   வீட்டுப் புறாக்கள். இணை புறாக்கள். செங்கால் புறாக்கள். ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்தே மேயும் பழக்கம் கொண்ட புறாக்கள். மன்ற வெளிகளில் மேயும் புறாக்கள். குளிர் மிகுதியால் அவை மேயவில்லை. மதலைப் பள்ளியில், மாட இருக்கையில் இடம் மாறி மாறி உட்காருகின்றன. இரவிலும் பகலிலும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டு மயங்கிக் கிடக்கின்றன.   பாட்டு   மனை உறை புறவின் செங் கால் சேவல்        45 இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது,                இரவும் பகலும் மயங்கி, கையற்று,      மதலைப் பள்ளி மாறுவன இருப்ப;           7 காலத்துக்கு ஏற்ற கோலம்   செல்வர் மாளிகை. பாதுகாப்பாளர் இருக்கும் மாளிகை. அங்குப் பணியாளர்கள் கொள்ளுப் போன்ற வட்டமான கல்லில் மணக்கூட்டுப் பொருள்களை அரைக்கின்றனர். (வெப்பம் தரும் மணக்கூட்டுப் பொருள் அது) வடநாட்டு மக்கள் தந்த வட்டமான சந்தனக் கல்லும், தென்னாட்டுச் சந்தனக் கட்டையும் அரைக்கப்படாமல் தூங்குகின்றன. (சந்தனம் குளுமைக்காகப் பூசப்படுவது ஆகையால் குளிர் காலத்தில் பயனற்றுக் கிடக்கிறது) மகளிர் நிறைந்த பூக்கள் கொண்ட மாலைகளைத் தோளில் அணிந்துகொள்ளவில்லை. சிலவாகிய ஒரிரு பூக்களையே தலையில் செருகிக்கொண்டனர். அதனைச் சூடிக்கொள்வதற்கு முன்பு தகரம் பூசிக் குளித்தனர். நெருப்பில் அகில் கட்டைத் துகள்களையும், வெண்ணிற அயிரையும் (சாம்பிராணியையும்) போட்டுப் புகைத்து உலர்த்திக்கொண்டனர். கைத்தொழில் கலைஞன் கம்மியன் செய்து தந்த செந்நிற வட்ட விசிறி விரிக்கப்படாமல் சுருக்கித் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் சிலந்திப் பூச்சி கூடு கட்டும் அளவுக்குப் பயன்படுத்தப்படாமல் கிடந்தது. மேல்மாடத்தில் தென்றல் வீசும் கட்டளை(சன்னல்) திறக்கப்படாமல் தாழிட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது. வாடைக்காற்றின் நீர்த் துவலை தூவிக்கொண்டே இருந்ததால் யாரும் கூம்பிய கன்னல் சொம்பில் குளிர்ந்த நீரைப் பருகவில்லை. மாறாக அகன்ற வாயை உடைய தடவில் (தடா வட்டி) சுடச்சுட வெந்நீரைப் பருகினர். ஆடல் மகளிர்க்குப் பாட்டுப் பாடவேண்டிய நிலை வந்தபோது, பாடலுக்கு யாழிசை கூட்டவேண்டிய நிலையில், யாழ் நரம்பு குளிர் ஏறிக் கிடந்ததால், அவற்றைச் சூடாக்கும் பொருட்டு, யாழ் நரம்புகளை மகளிர் தம் குவிந்து திரண்ட தம் முலை முகடுகளில் தேய்த்துச் சூடேற்றிக் கொண்டனர். காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர் புலம்பிக்கொண்டிருந்தனர். பெருமழையோடு கூதிர்க் குளிர் வீசிக்கொண்டிருந்தது.   பாட்டு   கடியுடை வியல் நகர்ச் சிறு குறுந் தொழுவர்,             கொள் உறழ் நறுங் கல், பல கூட்டு மறுக;       50 வடவர் தந்த வான் கேழ் வட்டம்             தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப;            கூந்தல், மகளிர் கோதை புனையார்,   பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,       தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து,     55 இருங் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப,              கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த   செங் கேழ் வட்டம் சுருக்கி; கொடுந் தறி,          சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க; வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின்,     60 வேனில் பள்ளித் தென்வளி தரூஉம் நேர் வாய்க் கட்டளை, திரியாது, திண் நிலைப்           போர் வாய் கதவம் தாழொடு துறப்ப;   கல்லென் துவலை தூவலின், யாவரும்          தொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார், 65 பகுவாய்த் தடவில் செந் நெருப்பு ஆர;                ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார்,         தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை,            கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ,       கருங் கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப;    70 காதலர்ப் பிரிந்தோர் புலம்ப; பெயல் கனைந்து,         கூதிர் நின்றன்றால் போதே, மாதிரம்       []   செங்கேழ் வட்டம்   8 அரசியின் அரண்மனை - மனை வகுத்த முறை   அரசிக்கு மனை அரண்மனைக்கு ஒப்பாக அமைக்கப்பட்டது. கட்டடக்கலை நூலில் தேர்ச்சி பெற்ற கலைஞன் அரசிக்கு மனை வகுத்தான். அவன் கயிறு கட்டி மனையைப் பிரித்துக் காட்டினான்.   - நிறுத்தியும் கிடத்தியும் ஒரே கோலை மடித்து வைத்து சூரியனின் நிழல் ஒன்றன் நிழல் மற்றொன்றின்மீது படும்படி நிறுத்துவது இருகோல் குறிநிலை.   ஏறும் பொழுதாகவும், இறங்கும் பொழுதாகவும் இல்லாத நண்பகலில் இருகோல் குறிநிலை நிறுத்தி அவன் நிலத்தின் திசையைக் கணித்துக்கொண்டான். திசைமுகத்துக்கு ஏற்பக் கயிறு கட்டி, சுவர் அமைக்க அடிக்கோடு போட்டுக்கொண்டான்.   - (மூலைப்பக்கம் நோக்காமல் கட்டடம் கட்டுவது அக்கால மரபு).   தெய்வத்தை வாழ்த்திய பின்னர் மனையை வகுத்துக் காட்டினான். பாட்டு   விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம், இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு, ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து,                               75 நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு, தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி, பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து   9 அரசியின் அரண்மனை  நிலைவாயில்   வளைந்த முகடுகளை உடைய மனை. அதில் யானையானது தன் வெற்றிக் கொடியுடன் புகும் அளவுக்கு உயர்ந்தோங்கிய நிலைவாயில். குன்றைக் குடைந்தது போல் தோன்றும் நிலைவாயில். அதில் இரட்டைக் கதவு. கதவைத் தாங்கும் இரும்பு ஆணி. அரக்கு சேர்த்துப் பிணித்த மரக்கதவு. அதற்கு ‘உத்தரம்’என்னும் நாள்மீனின் பெயர் கொண்ட நிலை. நிலையில் குவளைப்பூவின் மொட்டு போல் கலைத்திற வேலைப்பாடுகள். கதவுக்குத் தாழ்ப்பாள். இவற்றையெல்லாம் செய்தமைத்தவன் ‘கைவல் கம்மியன்’. தாழ்ப்பாளும், கதவைத் தாங்கும் இரும்பாணியும் எளிதாக இயங்கும் பொருட்டு ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய்ப் பூச்சு. – இப்படி அந்த வாயில் அமைக்கப்பட்டிருந்தது.     பாட்டு   ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்,               பரு இரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ,      80 துணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு, நாளொடு பெயரிய கோள் அமை விழுமரத்து,            போது அவிழ் குவளைப் புதுத் பிடி கால் அமைத்து தாழொடு குயின்ற, போர் அமை புணர்ப்பின்,               கை வல் கம்மியன் முடுக்கலின், புரை தீர்ந்து,           85 ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை,             வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக,          குன்று குயின்றன்ன, ஓங்கு நிலை வாயில்,                 10 திருமனை முற்றம்   அரசி அரண்மனைக்குத் ‘திருநகர்’என்று பெயர். அதன் முன்புறமும் பின்புறமும் முற்றம். வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மணல் பரப்பப்பட்டுள்ள முற்றம். அதில் வெண்ணிற எகினமும், அன்னமும் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன.   பாட்டு   திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின்,    தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து,    90 நெடு மயிர் எகினத் தூ நிற ஏற்றை         குறுங்கால் அன்னமோடு உகளும் முன் கடை,             11 அரண்மனைக் கோயிலில் எழும் ஓசைகள்   கட்டிக் கிடப்பதை விரும்பாத குதிரைகள் புல் உணவைத் தெவிட்டும் புலம்பல் ஒலி. நிலா-முற்றத்தில் மகரமீன் வாயிலிருந்து நீர் விழுவது போல் அமைக்கப்பட்டிருந்த கிம்புரிப் பகுவாய். அதன் வழியாக ‘அம்பணம்’என்னும் தொட்டியில் விழும் அருவி-நீரின் ஒலி. அருகே தோகை-மயில் கொம்பூதும் ஒலி போல் சிலம்பும் ஒலி.  இப்படிப்பட்ட ஓசைகள் அந்த மனைக்கோயிலில் கேட்டுக்கொண்டிருந்தன.   பாட்டு   பணை நிலை முனைஇய பல் உளைப் புரவி                புல் உணாத் தெவிட்டும் புலம்பு விடு குரலொடு,     நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து,  95 கிம்புரிப் பகு வாய் அம்பணம் நிறைய,               கலிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து, அயல                ஒலி நெடும் பீலி ஒல்க, மெல் இயல்   கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை,               நளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில்    100     12 அரசியின் கருவறையில் பாவை விளக்கு   அரசியின் கருவறையில் பாவை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பாவை விளக்கு யவனர் கலைஞர்களால் செய்யப்பட்டது. ஐந்து திரிமுனைகள் கொண்டது. பருமனான திரியிடப்பட்டு அது எரிந்துகொண்டிருந்தது. அது ஒளி மங்கும்போதெல்லாம் எண்ணெய் ஊற்றித் தூண்டப்பட்டது. அங்கே பல்வேறு படுக்கைகள் இருந்தன. அதற்குள் அரசன் தவிர வேறு எந்த ஆணும் செல்வதில்லை. அது மலை போல் தோன்றும் மனை. அதில் மலைமேல் வானவில் கிடப்பது போல் துணிக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன. அது வெள்ளி போல் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட வெள்ளை மாளிகை. சுவர் செம்பால் செய்யப்பட்டது போல் இருந்தது. அதில் வளைந்து வளைந்து கொடி படர்வது போல் மணிகள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த மனைக்குக் கருவறை என்று பெயர்.   பாட்டு   யவனர் இயற்றிய வினை மாண் பாவை          கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து,    பரூஉத் திரி கொளீஇய குரூஉத் தலை நிமிர் எரி,     அறு அறு காலைதோறு, அமைவரப் பண்ணி,             பல் வேறு பள்ளிதொறும் பாய் இருள் நீங்க;  105 பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது,      ஆடவர் குறுகா அருங் கடி வரைப்பின்,              வரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு       வில் கிடந்தன்ன கொடிய, பல் வயின்,               வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ,          110 மணி கண்டன்ன மாத் திரள் திண் காழ்,             செம்பு இயன்றன்ன செய்வு உறு நெடுஞ் சுவர்,           உருவப் பல் பூ ஒரு கொடி வளைஇ,      கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்       []   பாவை விளக்கு []   ஐயகல் ஐஞ்சுடர் விளக்கு     13 அரசி படுத்திருக்கும் பாண்டில் கட்டில்   அரசியின் கட்டிலின் கால்கள் 40 ஆண்டுகள் நிறைந்த யானையின் தந்தத்தால் செய்யப்பட்டவை. யானைகள் உணர்வில் மாறுபட்டு ஒன்றோடொன்று போரிடும்போது முரிந்த தந்தங்கள் அவை. அவற்றில் கலைவல்லவன் உளியால் தோண்டி வேலைப்பாடுகளைச் செய்திருந்தான். இரட்டை இலை வேலைப்பாடுகள் அதில் செய்யப்பட்டிருந்தன. மகளிர் முலைகள் போல் குட அமைப்புகளும், வெங்காயம் முளைப்பது போன்ற அமைப்புகளும் அதில் இருந்தன. அந்தக் கட்டிலைப் ‘பாண்டில்’என்று வழங்கினர்.   பாட்டு   தச நான்கு எய்திய பணை மருள் நோன் தாள்,             115 இகல் மீக்கூறும், ஏந்து எழில் வரி நுதல்,         பொருது ஒழி, நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து,        சீரும் செம்மையும் ஒப்ப, வல்லோன்                கூர் உளிக் குயின்ற, ஈர் இலை இடை இடுபு, தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப்               120 புடை திரண்டிருந்த குடத்த, இடை திரண்டு, உள்ளி நோன் முதல் பொருத்தி, அடி அமைத்து,      பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில்         []     மர யானைத் தந்தம் இருக்கை இது போல் யானைத்தந்த கால் கொண்ட கட்டில்   14 பாண்டில் சேக்கை (மெத்தை)   சன்னலில் முத்துச் சரங்கள் தொங்கின. மெல்லிய நூல்களில் கோக்கப்பட்டவை அந்த முத்துச் சரங்கள். படுக்கைக் கட்டிலின் தகட்டுத் தளத்தில் புலி உருவப் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அது புதையும்படி பல்வகை மயிர்களைத் திணித்து உருவாக்கப்பட்ட மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. மெத்தையின் துணியில் வயமான் (சிங்கம்) வேட்டையாடுவது போலவும், முல்லைப்பூ பூத்திருப்பது போலவும் தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. - இப்படிப்பட்ட மெத்தை மேல் அரசி இருந்தாள்.   பாட்டு   மடை மாண் நுண் இழை பொலிய, தொடை மாண்டு, முத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து,                  125 புலிப் பொறிக் கொண்ட பூங் கேழ்த் தட்டத்துத் தகடு கண் புதையக் கொளீஇ, துகள் தீர்ந்து, ஊட்டுறு பல் மயிர் விரைஇ, வய மான் வேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து முல்லைப் பல் போது உறழ, பூ நிரைத்து,                        130 மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட,            []     15 மெத்தைமேல் மெத்தை \ சேக்கை   மெத்தையின் மேல் மற்றொரு மெத்தை. இப்படிச் சேர்க்கப்பட்டிருப்பதுதான் சேக்கை. மேல்மெத்தையில் அன்னத்தின் தூவிகள் திணிக்கப்பட்டிருந்தன. ஆண் பெண் அன்னங்கள் உறவு கொண்டபோது உதிர்ந்த இறகுத் தூவிகள் அவை. அதன் மேல் துணி விரிப்பு. அது கஞ்சி போட்டுச் செய்த சலவை-மடிப்பு விரித்த துணி.   பாட்டு துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி இணை அணை மேம்படப் பாய், அணை இட்டு,          காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடு அமை தூ மடி விரித்த சேக்கை,                              135   []   அன்னத்தின் தூவ 16 அரசியின் கோலம் புனையா ஓவியம்   அரசியின் முலைமேல் முத்தாரம். அதன் மேல் பின்புறத் தலைப்பின்னலை முன்புறமாக வளைத்துப் போட்டிருந்தாள்.   அவளது தலைவன் அப்போது அங்கு இல்லை. சில முடிகள் அவள் நெற்றியில் பறந்துகொண்டிருந்தன. குழைகளைக் கழற்றி வைத்துவிட்டதால் வெறுங்காது துளையுடன் காணப்பட்டது. பொன்வளையல்கள் கழன்றுவிட்டதால் வளையல் இருந்த அழுத்தம் தோளில் காணப்பட்டது.   முன்கையில் சங்கு-வளையலும், காப்புக்காகக் கட்டிய கடிகைநூலும் இருந்தன.   வாளைமீன் வாய் போல் பிளந்திருக்கும் மோதிரத்தை விரல்களில் அணிந்திருந்தாள்.   சிவப்பு நிறத்தில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இடையிலே உடுத்தியிருந்த அழகிய ஆடை அழுக்குப் பிடித்திருந்தது. மொத்தத்தில் அவள் புனையா ஒவியம் (sketch) போலக் காணப்பட்டாள்.   பாட்டு ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்             பின் அமை நெடு வீழ் தாழ, துணை துறந்து, நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி,        நெடு நீர் வார் குழை களைந்தென, குறுங் கண்            வாயுறை அழுத்திய, வறிது வீழ் காதின்,         140 பொலந் தொடி தின்ற மயிர் வார் முன்கை,    வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து,               வாளைப் பகு வாய் கடுப்ப வணக்குறுத்து,     செவ் விரல் கொளீஇய செங் கேழ் விளக்கத்து, பூந் துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல்,     145 அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு,                புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல்            []   பூனையா ஓவியம் 17 அரசியின் கலக்கம்   பணிப்பெண்கள் அவளது காலடிகளைத் தடவிக்கொடுத்தனர்.   அந்தப் பணிப்பெண்கள் தளிர் போன்ற மேனி, அதில் சுணங்கு-மடிப்பின் அழகு, மூங்கிலை வென்ற தோள், பருவத்தில் தோன்றும் முலையில் கச்சு என்னும் வம்பு முடிச்சுக் கட்டுத்துணி, மெல்லிய இடை ஆகியவற்றைக் கொண்டு கட்டழகுடன் காணப்பட்டனர்.   அவர்களுடன் ஆங்காங்கே நரைமுடி தோன்றும் கூந்தலை உடைய செவிலியர், செந்நெறி இது என முகத்தால் கூறும் செவிலியர் “உன் துணைவர் இப்பொழுதே வந்துவிடுவார்” என்று அவளுக்கு விருப்பமான சொற்களைப் பேசினர்.   இவற்றைக் கூட அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கலங்கினாள்.   பாட்டு   தளிர் ஏர் மேனி, தாய சுணங்கின், அம் பணைத் தடைஇய மென் தோள், முகிழ் முலை, வம்பு விசித்து யாத்த, வாங்கு சாய் நுசுப்பின்,             150 மெல் இயல் மகளிர் நல் அடி வருட; நரை விராவுற்ற நறு மென் கூந்தல் செம் முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ, குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி, 'இன்னே வருகுவர் இன் துணையோர்' என,                   155 உகத்தவை மொழியவும் ஒல்லாள், மிகக் கலுழ்ந்து     18 அரசியின் ஏக்கம்   அவளது படுக்கைக்கு மேலே விதானம் அமைக்கப்பட்டிருந்தது.   அந்த மேல்கட்டியின் கால் முலை வடிவு வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தது.   மேல்கட்டித் துணியில் மெழுகு பூசப்பட்டு அதில் சந்திரன் உரோகினி என்னும் பெண்ணைத் தழுவும் ஓவியம் வரையப்பட்டிருந்தது.   அந்த ஓவியத்தைப் பார்த்து அரசி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள்.   அப்போது கடைக்கண்ணில் தோன்றிய கண்ணீர்த் துளியைத் தன் செவ்விய விரல்களால் துடைத்துத் தெரித்துக்கொண்டாள்.   பாட்டு   நுண் சேறு வழித்த நோன் நிலைத் திரள் கால், ஊறா வறு முலை கொளீஇய, கால் திருத்தி, புதுவது இயன்ற மெழுகு செய் படமிசை, திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக,                            160 விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து, முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய, உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா, மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பனி, செவ் விரல் கடைக் கண் சேர்த்தி, சில தெறியா,       165 புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு   []   உரோகினி   19 பாசறைத் தொழில் இன்னே முடிக   அந்த அரிவைப்பெண் புலம்பிக்கொண்டு வாழ்கிறாள். அது துன்பம் தரும் நினைவோட்டம். அது தீரவேண்டும். அதற்கு வழி அவளது தலைவன் போரில் வெற்றி பெற வேண்டும்.  போர் இப்போதே முடியவேண்டும். – இது பாடலின் முடிபு.   பாட்டு   இன்னா அரும் படர் தீர, விறல் தந்து, இன்னே முடிகதில் அம்ம மின் அவிர்       20 பாசறைத்தொழில் - யானை – மின்னி ஒளிரும் யானை ஓடை நெற்றியில் கொண்ட யானை, போர்த்தொழில் திறம் பெற்ற யானை, தன் கையை நிலத்தில் போட்டுக்கொண்டு புரளும்படி, - பெருஞ்செய் ஆடவர் – பெருஞ்செய் என்பது போர்க்களம். யானை நிலத்தில் புரளும்படி போரிட்ட ஆடவர்,   யானையை வீழ்த்திய ஆடவர் வாள்-புண் பட்டுக் கிடப்பதைக் காண அரசன் வெளியே வந்தான். வடக்கிலிருந்து காற்று வீசும்போதெல்லாம் பாண்டில் விளக்கில் எரியும் சுடர் தெற்குப்பக்கமாக வணங்கியது. வேப்பந்தழை கட்டிய வேலுடன் அறிமுகம் செய்யும் முன்னோன் காட்டிக்கொண்டே முன்னே சென்றான். அரசன் பெருஞ்செய் ஆடவரை (போர்வீரர்களை)  கண்டான். முதுகில் மணி தொங்கும் பெண்-யானைகளைக் கண்டான். இருக்கைப் பருமம் களையப்படாத குதிரைகளைக் கண்டான். சேறு பட்டுக் கிடந்த தெருவில் நடந்து கண்டான். விழும் பனித்துளியில் நனைந்துகொண்டே சென்று கண்டான். காற்றில் நழுவும் வேலாடையைத் தன் இடக்கையில் தழுவிக்கொண்டே சென்று கண்டான். வாளைத் தோளில் கோத்துக்கொண்டிருந்த மெய்க்காப்பாளனின் தோளில் கையை வைத்துக்கொண்டு சென்று கண்டான். ஆர்வம் தழுவிய முகத்துடன் கண்டான். நூல்-குஞ்சம் தொங்கும் அவனது வெண்கொற்றக்குடை வீசும் வாடைத்துளிகளை மறைத்து அங்குமிங்கும் அசைந்துகொண்டிருந்தது. அது நள்ளிரவு நேரம். அவன் தன் படுக்கையில் இல்லை. சிலரோடு திரிந்துகொண்டிருந்தான். இது அவன் பாசறைத் தொழில். இந்தப் பாசறைத்தொழில் உடனடியாக முற்றுப்பெற வேண்டும். ஆரிவையின் நினைவலைத் துன்பம் தீர முற்றுப்பெற வேண்டும்.   இது பாடலின் முடிபு.   பாடல்   ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை          நீள் திரள் தடக் கை நிலமிசைப் புரள,                  170 களிறு களம் படுத்த பெருஞ் செய் ஆடவர்,     ஒளிறு வாள் விழுப் புண் காணிய, புறம் போந்து,     வடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கி, தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய, நன் பல்     பாண்டில் விளக்கில், பரூஉச் சுடர் அழல,       175 வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு               முன்னோன் முறைமுறை காட்ட, பின்னர், மணி புறத்து இட்ட மாத் தாள் பிடியொடு        பருமம் களையாப் பாய் பரிக் கலி மா இருஞ் சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப,           180 புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ,            வாள் தோள் கோத்த வன்கண் காளை                சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,   நூல் கால்யாத்த மாலை வெண் குடை             தவ்வென்று அசைஇ, தா துளி மறைப்ப,           185 நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,         சிலரொடு திரிதரும் வேந்தன்,   பலரொடு முரணிய பாசறைத் தொழிலே          பாண்டியன் நெடுஞ் செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.   நெடுநல்வாடை முற்றும்   []   வெண்கொற்றக் குடை 21 தனிப் பாடல்   வாடைக்காற்று துன்புறுத்திக்கொண்டிருக்கையில், அவள் அவன் தோளை விரும்பிக்கொண்டிருக்கையில், அவன் அவளை நினைக்க மாட்டானோ? கோடல் பூ எரியும் தீ போல் அல்லவா பூத்துக் கிடக்கிறது. பாசறையில் அல்லவா அவன் இருக்கிறான்.   நலிய, வடிக் கண்ணாள் தோள் நசைஇ, ஓடை மழ களிற்றான் உள்ளான்கொல்- கோடல் முகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கி, பகையோடு பாசறை உளான்? []   பாசறை   ஆசிரியர் செங்கைப் பொதுவன்   வயலை உழும் தொழிலில் வாழ்க்கையைத் தொடங்கி, பள்ளி-ஆசிரியர், பல்கலைக் கழக விரிவுரையாளர், அரசு ஆராய்ச்சி வரலாற்றுப் பதிப்பாசிரியர், அரசு வெளியீடு விளையாட்டு இதழ்-ஆசிரியர் என்று பல பணிகளை மேற்கொண்டிருந்தார்.   தற்போது தமிழை உழுது பயிரிட்டு விளைச்சலை மக்களுக்கு வழங்கிவருகிறார்.   தந்தை பொன்னுசாமி. தாய் செல்லம்மமாள். மனைவி செங்கைச் செல்வி. ஐந்து பெண்மக்கள், ஒரு மகன், 11 பேரக்குழந்தைகள், 6 கொள்ளுப்பேரக் குழந்தைகள் என்று இவர் செல்வப் பேறு பெற்றவர்.   ஊர் செங்காட்டுப்பட்டி (திருச்சி, தமிழ்நாடு, இந்தியா). செங்காட்டுப்பட்டி பொன்னுசாமி மகன் துரைசாமி = செங்கைப் பொதுவன். பொதுவன் = பொதுவானவன், பொதுவில் நடனம் ஆடும் சிவன், மாடு மேய்க்கும் பொதுவனாகிய (இடையனாகிய) மால், என்றெல்லாம் அறிஞர்கள் இவரது பெயருக்கு விளக்கம் கூறி இவரை வாழ்த்தினர்.   பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், தானாகவே படித்து, ஆசிரியர் பணிச் சலுகையில் தேர்வுகள் எழுதி தமிழ்-வித்துவான், B.A., M.A., Ph.D., ஆகிய பட்டங்களையும், B.T., M.Ed. ஆகிய பட்டங்களைக் கல்லூரியில் பயின்றும் பெற்றார்.   தமிழ் மன்றங்கள் பல இவரது தொண்டுகளைப் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன.   பணி ஓய்வுக்குப் பின்னர் 2005-ல் கணினி ஒன்று வாங்கி அன்பர் சிலர் உதவியுடன் தானே பயின்று சில தமிழ் நூல்கள் உருவாக்கி வெளியிட்டுள்ளார்.   பின்னர் விக்கிப்பீடியாவில் நுழைந்து, தமிழ்-இலக்கணம், சங்ககாலப் புலவர்கள், மன்னர்கள், மலர்கள், விளையாட்டுக்கள், தமிழில் தோன்றிப் பதிப்பாகிய 700-க்கு மேற்பட்ட நூல்கள் முதலானவை பற்றி 2700-க்கு மேற்பட்ட புதிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.   en.Wikisource பகுதியில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.   இதன் பட்டறிவால் இப்போது www.vaiyan.blogspot.com என்னும் தளத்தில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற நூல்களுக்கு விளக்கம் எழுதி மூலத்துடன் பதிவேற்றியுள்ளார்.     அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களுக்கு ஆங்கிலத்திலும் விளக்கம் தந்துள்ளார்.   மேலும் பலவற்றை எழுதிவருகிறார். இப்போது அவற்றை மின்னூல் வடிவமாக்க முயன்றுவருகிறார்.   தொடர்பு podhuvan9@gmail.com / www.vaiyan.blogspot.com