[] 1. Cover 2. Table of contents நெஞ்சை அள்ளும் தஞ்சை நெஞ்சை அள்ளும் தஞ்சை   செ.இராசு எம்‌.ஏ.,     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - மனோஜ் - manojopenworks@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/nenjai_allum_thanjai நெஞ்சை அள்ளும் தஞ்சை ஆசிரியர் புலவர் செ. இராசு எம்.ஏ., தலைவர், கல்வெட்டியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -5. வெளியீடு கொங்கு ஆய்வு மையம் தென்றல் 4, பல்கலைக்கழகக் குடியிருப்பு தஞ்சாவூர் - 613 005. மின்னூல் வெளியீடு : Kaniyam Foundation உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம் Scan, Ocr, Proof Reading & Acquisition of Creations: Anwar gnuanwar@gmail.com Cover Image: Manoj manojopenworks@gmail.com பதிப்புரை தமிழக நகர்களில் தலைசிறந்த நகரம் தஞ்சை. வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சை கவின்கலைகளின் இருப்பிடமாகத் திகழுகிறது. கட்டிடக்கலை, சிற்பக்கலை, நாட்டியக்கலை, இசைக்கலை, ஓவியக்கலை, இலக்கியக்கலை ஆகியவைகளை உருவாக்கி, வளர்த்துக் கட்டிக் காத்துவரும் எழில்நகர். பெருவுடையார் ஆலயமான கற்கோயிலையும், சரசுவதி மகாலான சொற்கோயிலையும் பெற்ற திருநகர். மருத்துவக் கல்லூரியும், மாபெரும் சிற்பக் களஞ்சியமான கலைக்கூடமும், ஆராய்ச்சி அறிவாலயமாம் தமிழ்ப் பல்கலைக்கழகமும் அமையப் பெற்ற பெருநகர் தனித்தன்மைகள் பலகொண்ட தஞ்சை, தமிழ் மாநாட்டு ஏற்பாடுகளால் புதுமைப் பொலிவுடன் அழகு பெற்றுத் திகழுகிறது. தஞ்சைத் தரணிக்கு ஒளியேற்ற வாராதுபோல வந்த மாமணி எட்டாம் உலகத் தமிழ் மாநாடு! தமிழக அரசின் தாராள உதவியாலும், ஆழ்ந்து திட்டமிட்ட பணிகளாலும் தஞ்சை பெற்ற தனிநன்மைகள் பலப்பல. தமிழ்த்தாய்க்கு மகுடம் சூட்டும் மாபெரும் எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் கொங்கு ஆய்வு மையம் நெஞ்சை அள்ளும் தஞ்சை’ என்னும் இச்சிறு நூலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறது. கொங்கர் கோமான் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களின் கொடையால் இந்நூல் வெளியிடப்படுகிறது. நூலுக்குக் கொடை அளித்த கொங்கு ஆய்வு மையப் புரவலர் அருட்செல்வர் அவர்களுக்கும், கொங்கு ஆய்வு மையத்திற்காக இந்நூலை மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கிக் கொடுத்த கல்வெட்டறிஞர் புலவர் செ. இராசு அவர்களுக்கும் எங்கள் நன்றி உரியதாகுக. தஞ்சாவூர் கௌரிராசு 30.12.94. தமிழகம் பழந்தமிழ் நாடு முன்னொரு காலத்தில் இமயம் முதல் குமரிமுனைக்குத் தெற்கேயிருந்த குமரிக் கண்டம்வரை தமிழ்நாடாக இருந்தது. காரிகிழார் என்னும் சங்கப்புலவர் (புறம்.6:1-2) ’வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் தமிழ்நிலம் இருந்ததாகக் கூறுகிறார். தெற்கே இன்று இருப்பது குமரிமுனைதான். குமரி மலையும் குமரி ஆறும் குமரி முனையின் தெற்கே இருந்துள்ளது (சிலம்பு.11:20:8:1-2). அங்கு ஏழ் தெங்க நாடு,ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு. ஏழ் பின்பாலை நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் குணகரை நாடு, ஏழ் குறும்பனை நாடு என நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன (சிலம்பு. 8:1-2 அடியார்க்கு நல்லார் உரை). அக்குமரிக் கண்டம்தான்.. கடல்கோளால் அழிந்தது. இதனைப் பழந்தமிழ் இலக்கியங்கள் ‘பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடும்கடல் கொள்ள’ (சிலம்பு.11:19-20) ‘மலிதிரை ஊர்ந்து மண்கடல் வௌவ’ (கலி.104:19) என்று கூறுகின்றன. இன்றைய பூகோளவியல் அறிஞர்களும் இக் கடல்கோள் ஏற்பட்டுக் குமரிக்கண்டம் அழிந்ததை ஒப்புக் கொள்கின்றனர். லெமூரியா, கொந்துவானா என அதனைக் கூறுகின்றனர். சங்ககாலம் காலம் செல்லச் செல்ல வேங்கடத்துக்கு அப்பால் வேறு மொழிகள் தோன்றின அகம் 211:8). வேங்கடமே தமிழ்நாட்டின் வடக்கு எல்லை ஆயிற்று. ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்’ என்று பனம்பாரனாரும் (தொல். பாயிரம்), ‘வேங்கடம் குமரி தீம்புனல் பௌவமென்று இருநான் கெல்லை தமிழது வழக்கே’ என்று சிகண்டியாரும். ‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாடு’ என்று இளங்கோவடிகளும் (8:1-2) ‘குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும்நான்கு எல்லையின் இருந்தமிழ்க் கடல்’ என்று நன்னூல் சிறப்புப் பாயிரமும் கூறும். இன்று வேங்கடமும் நம்மைவிட்டுச் சென்றது; சேரநாடும் கேரளமாகியது. தமிழ் நிலவிய நாடு சங்கப் புலவர் மாமூலனார் மொழியால் மூவேந்தரையும் ஒன்றாக்கித் ‘தமிழ்கெழு மூவர்’ என்றார் அகம்.31:14). வெள்ளைக்குடி நாகனார் மண்தினி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்’ என்று மூவேந்தரைச் சுட்டிக் கூறினார் (புறம்.35:3). மூவேந்தர் நாட்டைத் ‘தமிழ்நாடு தமிழகம்’. ‘தென்தமிழ் நன்னாடு’ என்றெல்லாம் இளங்கோ பாடிப் பாடி மகிழ்ந்தார் (25:165; 3:37; 10:58). புத்த ஜாதகக் கதைகளில் ‘த்ரமிள ராஜ்யம்’ என்று தமிழ்நாடு குறிக்கப்படுகிறது 5. ப.150). ஒன்றுபட்ட தமிழகம் என்ற கருத்து சங்க காலத்திலேயே உருவாகிவிட்டதெனலாம். ஐந்து பிரிவுகள் சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் கொங்கு நாட்டையும், தொண்டை நாட்டையும் சேர்த்துத் ‘தமிழ்நாடு ஐந்து’ என்று கருதும் வழக்கம் முன்பு இருந்தது. தண்டியலங்காரத்தில் உள்ள பழைய மேற்கோள் பாடல் ஒன்றில் இக்கருத்து வருகிறது (75). ‘நறவேந்து நங்கை நலங்கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் - துறையின் விலங்காமை நின்ற வியன்தமிழ்நாடு ஐந்தின் குலங்காவல் கொண்டொழுகும் கோ’ என்பது அப் பாடலாகும். சைவத் திருமுறைகளில் மிகவும் தொன்மையானதாகக் கருதப்படும் திருமூலரின் திருமந்திரத்தில் (1646), ‘தமிழ் மண்டிலம் ஐந்து’ என்று கூறப்படுகிறது. அண்மையில் பெரியார் மாவட்ட பெருந்துறை வட்டம் கூனம்பட்டி மாணிக்கவாசகர் மடாலயத்தில் கிடைத்த செப்பேடு ஒன்றில் சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் எனத் தமிழகத்தின் ஐந்து பிரிவுகள் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மூவேந்தர்கள் தமிழ்நாட்டுக்குரிய பேரரசர்களாக சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தரும் திகழ்ந்தனர். ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்றும். ‘போந்தை வேம்பே ஆர்என வரூஉம் மாபெருந் தானையர்’ என்றும் தொல்காப்பியர் கூறினார் (செய்.75; புறத்.5). போந்தை என்பது பனையையும், ஆர் என்பது ஆத்தியையும் குறிக்கும். இவை மூவேந்தர் மாலையாகும். ‘பழங்குடி’ என்பதற்கு விளக்கம் கூறவந்த பரிமேலழகர் ‘சேர சோழ பாண்டியரைப் போலப் படைப்புக் காலம்தொட்டு வரும் குடி’ என உரை எழுதினார் (குறள்-955). சிறுபாணாற்றுப்படையில் சேர, சோழ, பாண்டிய நாடுகள் முறையே குடபுலம், குணபுலம், தென்புலம் என அழைக்கப்படுகின்றன (வரிகள் 47, 49,63), ‘முரசு முழங்கு தானை மூவர் என்ற புறநானூற்றில் வெள்ளைக்குடி நாகனார் கூறுகிறார் 135:4). ’முடியுடை வேந்தர் மூவர்’ என்பார் இளங்கோவடிகள் (1:10; கட்2), முடிமன்னர் மூவரும் காத்தோம்பும் தெய்வ வடபே ரிமய மலையிற் பிறந்து கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர் என்பது சிலப்பதிகார வாழ்த்துக் காதைப் பாடலாகும். சோழ நாடு பெயர்க் காரணம் சோழர், சோழ நாடு ஆகியவற்றின் பெயர்க் காரணம் பற்றி விரிவான ஆய்வுகள் நடைபெறவில்லை. கர்னல் ஜெரினி என்பார் ‘கால’ என்னும் வடமொழிச் சொல்லுக்குக் ‘கறுமை’ எனப் பொருள் என்றும். ஆரியர்களுக்கு முன் தென்னாட்டில் வாழ்ந்த கறுப்பு நிற மக்களைக் குறிக்கும் ‘கோல்’ என்ற சொல்லிலிருந்து ‘சோழர்’ என்ற சொல் தோன்றியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எல்.வி. இராமசாமி என்பார் மொழியியல் வல்லார் கருத்துப்படி ஊ- ஓவாக மாறும். சூழ்’ என்னும் சொல்லுக்கு வட்டமிடுதல், சுழற்சி என்ற பொருள்கள் உண்டு. வட்டமிடுவோர் என்று பொருள்தரும் சூழ் எனும் சொல்லிலிருந்து ‘சோழர்’ என்ற சொல் பிறந்திருக்கலாம் என்பார். சோழ நாட்டில் கடற்கரை மிகுதி. அங்கு ‘சோழி’ மிகுதியாகக் கிடைக்கும் காரணத்தால் இங்குள்ள மக்கள் சோழியர் எனப்பட்டனர். சோழியர் நாடு சோழநாடு என்று பெயர் பெற்றது. ‘சோளம் விளைகின்ற பகுதி சோள நாடு சோழ நாடு ஆயிற்று என்று சிலர் கூறுவர். வருணசிந்தாமணி எனும் நூல் சோழநாட்டைச் ’சோழம்’ என்று கூறுகிறது. வேறு சிலர் ‘சோர’ என்னும் திருடரைக் குறிக்கும் சொல்லிலிருந்து சோழநாடு என்ற பெயர் தோன்றியிருக்கலாம் என்பர் (இது பிழையானது). இவை அனைத்தும் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. சோலைநாடு சோழநாடு சோலைகள் மிகுந்தது. சோலை நாடு சோழநாடு என்று ஆகியிருக்கலாம் என்று கருத இடம் உண்டு. சோழ நாட்டின் நரம்பு மண்டலமாக ஓடி உயிரளிப்பது காவிரியாறு. கா + விரி என்றால் இருபுறமும் சோலைகளை விரித்துச் செல்லும் ஆறு என்று பொருள். சோழநாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பல உள. அவற்றுள் திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருத்தலைச்சங்காடு. திருத்தலையாலங்காடு, திருக்கொள்ளிக்காடு. திருமறைக்காடு. திருக்காட்டுப்பள்ளி, திருக்கோலக்கா, திருக்குரங்குக்கா, திருஆனைக்கா, திருநெல்லிக்கா, திருக்கானாட்டு முள்ளூர் என்பன பெயர் பெற்று விளங்குகின்றன. ஆலம்பொழில், திருத்தண்டலை நீள்நெறி, இடும்பாவனம், அரசவனம், வில்வவனம், சாயாவனம் எனச் சில தலங்கள் பெயர் பெற்றுள்ளன. தில்லை, திருவீழிமிழலை, திருப்புன்கூர், திருப்பனந்தாள். திருக்கொட்டையூர், திருப்பழுவூர், மாந்துறை, கடம்பந்துறை, திருப்பராய்த்துறை, பாலைத்துறை, இடைமருதூர், திருப்பனையூர் போன்ற ஊர்ப் பெயர்களும் மரக் கூட்டங்களின் அடிப்படையாகத் தோன்றியவையாகும். பள்ளன்கோயில் செப்பேட்டிலும், வேலூர்ப் பாளையம் செப்பேட்டிலும் பல்லவன் சிம்மவிஷ்ணு சோழநாட்டைக் கைப்பற்றிய விபரம் கூறப்பட்டுள்ளன. ‘சிம்மவிஷ்ணு கவேரன் மகளான காவிரி நதியை மாலையாகவும் நெல்வயல்கள், செழுமையான கரும்பு வயல்கள் ஆகியவற்றை ஆடையாகவும் கமுகுத் தோட்டம், வாழைத் தோட்டம் ஆகியவைகளை ஒட்டியாணமாகவும் கொண்ட சோழர் பூமியைக் கைப்பற்றினான்.’ (பள்ளன்கோயில் செப்பேடு-5) ‘பிரகாசிக்கும் பாக்கு மரங்கள் நிறைந்ததும், செந்நெல் தானியம் நிறைந்த காடுகளை அணியாகக் கொண்டதும், கவேரன் மகளான காவிரியினால் அலங்கரிக்கப்பட்டதுமான சோழர்களுடைய நாட்டை சிம்மவிஷ்ணு கைப்பற்றினான்.’ (வேலூர்ப் பாளையம் செப்பேடு-10) என்பன அப் பகுதிகளாகும். மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி சோழநாட்டை, ‘சோலை மலிபழனச் சோணாடு’ என்று கூறுகிறது. ஒரு சோழமன்னன் சோலைகளைக் காக்கும் வகையில் ‘உசிருள்ள மரங்களை வெட்டாதே’ என ஆணை பிறப்பித்தான். தஞ்சை நகரின் வடமேற்குப் பகுதியில் கி.பி. 5ஆம் நூற்றாண்டு முதல் ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்ற வைணவத் திருப்பதிகள் பல உள்ளன. அப்பகுதிக்கு அன்றுமுதல் ‘வம்புலாஞ் சோலை’ என்றே பெயர் வழங்கிவந்துள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் அச்சொல் இடம்பெற்றுள்ளது. பிற்கால ஆவணங்கள் பலவற்றில் சோலை செட்டி - சோழ செட்டி சோலீசர்- சோழீசர்.சோலியம்மன் - சோழியம்மன், என எழுதப் பட்டுள்ளமையைக் காணுகிறோம். லகரம் ழகரமாக மாற வாய்ப்புள்ளது. மேற்கண்ட செய்திகளை எல்லாம் நோக்கும்பொழுது சோலை நாடு சோழநாடு ஆகியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. சோழநாடே தமிழ்நாடு இலக்கண ஆசிரியர்கள் செந்தமிழ் வழங்கும் நாட்டைத் ‘தமிழ்நிலம் என்றும், தமிழ் திரிந்து வழங்கும் நிலத்தைக் ’கொடுந்தமிழ் நாடு என்றும் குறிப்பர். செந்தமிழ்நாடு பன்னிரு பகுதிகளாகப் பிரிக்கப் பெறும். அவற்றுள் ’புனல்நாடு’ என்பது சோழநாட்டுப் பகுதியாகும். சிலர் புனல்நாடாகிய சோழ நாட்டையே ‘செந்தமிழ்நாடு’ என்பர். அதாவது சோழநாட்டில் வழங்குவதே செந்தமிழ் என்பது கருத்து. தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் ஆகிய இளம்பூரணர் தொல்காப்பியச் சொல்லதிகாரக் கிளவியாக்கம் 13ஆம் நூற்பா உரையில், ‘நும்நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்’ என்று கூறுகிறார். அவரே தொல்காப்பிய எச்சவியல் உரையில் ‘செந்தமிழ் நிலம், வையையாற்றின் வடக்கு, மருதயாற்றின் தெற்கு, கருவூரின் கிழக்கு. மருவூரின் மேற்கு’ என்று குறிக்கின்றார். இவற்றுள் பெரும்பகுதி சோழ நாட்டின் பகுதியாக அமைவதைக் காணலாம். மற்றொரு உரையாசிரியர் சோழநாடே செந்தமிழ்நாடு என்று கூறி அதற்குரிய காரணங்களையும் விளக்குகிறார். ’மன்ற வாணன் மலர்திரு அருளால் செந்தமிழ் மகிமை சிவணிய செய்த அடியவர் கூட்டமும் ஆதிச் சங்கமும் படியின்மாப் பெருமை பரவுறு சோழனும் சைவமா தவரும் தழைத்தினிது இருந்த மையறு சோழ வளநாடு என்ப என்பது அவர் காட்டும் பாடலாகும். புகழேந்திப் புலவர் பாடல் ஒன்றில் சோழனைத் ’தமிழ்நாடன் என்று அழைக்கிறார். ‘பங்கப் பழனத்து உழும் உழவர் பலவின் கனியைப் பறித்ததெனச் சங்கிட்டு எறியும் குரங்குஇளநீர் தனைக்கொண்டு எறியும் தமிழ்நாடா’ என்பது அவர் பாடலாகும். அரிசமய தீபம் என்னும் நூல் சோழநாட்டை ’தமிழ்ச் சோணாடு என்று கூறுகிறது. சோழ மண்டலம் [கங்கை கொண்ட சோழபுரம்] - திருவாரூர் - தஞ்சாவூர் - உறையூர் - பழையறை - மருவூர் தஞ்சை பெயர்க் காரணம் சோழ வளநாடு நீர்வளம் மிக்கது. நீர் மிகுதியாகப் பாய்வதால் வயல்கள் எப்பொழுதும் குளிர்ச்சி பொருந்தியனவாக மாறின. அவை தண் + செய் ‘தண்செய்’ எனப்பட்டது. தண்செய் என்ற பெயரே பின்னாளில் தஞ்சை என மாறியது என்பர். ‘தஞ்சன்’ என்று ஒரு அரக்கன் வாழ்ந்துவந்தான். அவனை ஆனந்தவல்லி அழித்தாள். ஆனந்தவல்லியால் கொல்லப்படுமுன் தஞ்சன் தான் வாழ்ந்த ஊருக்குத் தன்பெயர் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அவன் விருப்பப்படி ’தஞ்சபுரி" தஞ்சாவூர் ஆயிற்று என்பர் சிலர் இவனைத் தஞ்சகன் என்றும், விஷ்ணு அழித்ததாகவும் கூறுவர்). ‘நேராய் வரம்பெற்று நின்றதஞ்ச காசுரன்தன் பேராய் விளங்குகின்ற பேரூர்’ என்று பெருவுடையார் உலாக் கூறும் (300). சோழநாடு சோறுடைத்து. அதனால் பிற நாடுகளில் பஞ்சம் முதலியன ஏற்பட்டால் மக்கள் இங்குதான் ‘தஞ்சம்’ புகுவர். மக்கள் தஞ்சம் புகுந்த இந்நகருக்குப் பெயர் தஞ்சஊர் > தஞ்சாவூர் ஆயிற்று என்பர். அஞ்சினான் புகலிடத்தோடு இப்பெயரை ஒப்பிட்டும் காட்டுவர். ‘தண்சாய்’ என்பது ஒருவகைக் கோரையின் பெயர். அத் தண்சாய்க் கோரை மிகுந்துள்ள இடம் ‘தஞ்சை’ எனப்பட்டது என்பர் சிலர். அருகில் மாணாங்கோரை, தண்டாங்கோரை எனச் சில ஊர்கள் உள்ளன. தஞ்சாறை என்பதே இந்நகரின் பழம்பெயர் என்பர் சிலர். ‘ஆறை’ என்றால் கோட்டை, மதில், அரண் என்று பொருள் கொள்வர். தஞ்சாறை என்ற பெயரே தஞ்சாவூர் ஆயிற்று என்றும் அவர் கொள்வர்.. ‘ஆவூர்’ என்பது சோழ நாட்டின் மிகத் தொன்மையான ஊர்களில் ஒன்று ஆவூர் மூலங்கிழார் என்ற சங்கப் புலவர் வாழ்ந்த ஊர். தேவாரப் பாடல் பெற்ற தலம். சங்க காலத்திற்குப்பின் விசயாலயன் காலம்வரை முற்காலச் சோழர்கள் பன்னெடுங்காலம் அப்பகுதியில் தங்கியிருந்தனர். அப்பகுதிக்குப் பழங்காலத்தில் ‘செம்பியந் கிழார் நாடு’ என்று பெயர். கண்டியூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டால் அது தெரியவருகிறது. தஞ்சைக்கு ஆவூரிலிருந்து வந்த சோழர்கள் தஞ்சையுடன் தம் ஆவூரையும் சேர்த்துத் தஞ்சைஆவூர் என வழங்கியிருக்கலாம் பின் அப்பெயரே தஞ்சாவூர் என ஆகியிருக்கலாம். பல்லவர் கல்வெட்டு, முத்தரையர் கல்வெட்டு. ஆழ்வார்கள் பாடல், திருநாவுக்கரசர் தேவாரம் - விசயாலயன் கல்வெட்டு ஆகிய தொன்மையானவற்றில் ‘தஞ்சை’ என்ற பெயரே காணப்படுகின்றது ஏறக்குறைய முதல் பராந்தகன் காலத்தில்தான் ‘தஞ்சாவூர்’ என்று பெயர் வழங்கத் தொடங்கியது என்பர். தஞ்சை போலவே சோழ நாட்டின் தொன்மையான ஊர்கள் பல ஐகாரத்தால் முற்றுப்பெற்று விளங்கின. இரும்பூளை, இலந்தை, உறந்தை. கழிப்பாலை, குடந்தை, குறுக்கை, கொடும்பை, தண்டலை, தில்லை, நாகை, பழையாறை, புள்ளமங்கை என்பன அவை. இவற்றால் தஞ்சை என்பதே பண்டைய வழக்கு என்பதனை அறிகிறோம். நான்கு தஞ்சாவூர்கள் தமிழ்நாட்டில் நான்கு தஞ்சாவூர்கள் உள்ளன. 1. சோழர் தலைநகர் தஞ்சை - தஞ்சாவூர். 2. மன்னார்குடி வட்டத்தில் தஞ்சாவூர் என்னும் ஊர் ஒன்று உள்ளது. அது தலைநகர் தஞ்சாவூருக்குக் கிழக்கே உள்ளதால் அவ்வூர் கீழ்த்தஞ்சை-கீழத்தஞ்சை என்று அழைக்கப்பட்டது. அத் தஞ்சையை "மருகல் நாட்டுத் தஞ்சாவூர்’ என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. 3. கொங்கு நாட்டில் பெரியார் மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் அன்னூர் (மன்னியூர்) என்ற ஊர் உள்ளது. கொங்குச் சோழர் தலைநகரங்களில் ஒன்றாகவும், சோழர் படைகள் தங்கிய இடமாகவும் அவ்வூர் இருந்தது. அவ்வூருக்குக் கொங்குச் சோழர்கள் ’மேல்தலைத் தஞ்சாவூர்" என்று பெயரிட்டனர். 4. பாண்டியனின் அமைச்சராக விளங்கிய சந்திரவாணனின் ஊர் தஞ்சாக்கூர். அவ்வூரைத் தஞ்சை என்றும் சுருக்கி அழைப்பர். சந்திரவாணன் மீது பொய்யாமொழிப் புலவர் ’தஞ்சைவாணன் கோவை என்னும் இலக்கியம் இயற்றியுள்ளார். ‘தாக்கச் சிவந்த தடந்தோன் தயாபரன் தஞ்சையன்னாய்’ என்பது கோவைப் பாடலின் பகுதியாகும். சைவத் திருமுறைகளில்: தஞ்சையில் ‘தளிக்குளம்’ என்ற சிவாலயம் ஒன்று கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்தது என்பதைத் திருஞானசம்பந்தர் தேவாரத்துள், ‘குளம் மூன்றும் களம் ஐந்தும் பாடி நான்கும்’ என்று குறிப்பது மூலம் அறிகின்றோம். குளம் மூன்று என்ற அவர் குறிப்பதனுள் தஞ்சையில் இருந்த ‘தளிக்குளம்’ ஒன்று என்பது அறிஞர்கள் கருத்தாகும். மற்ற இரண்டு குளங்கள் திருப்புகலூரிலும், உடையார் கோயிலிலும் உள்ளன என்பர். திருநாவுக்கரசர் கி.பி.7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். அவர் வைப்புத் தலங்களில் ஒன்றாகத் தஞ்சையைக் குறிப்பார். திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் பெருமான், ‘அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற்று உள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார் தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்’ (6:51.8) என்று பாடியுள்ளார். அவரே தம் க்ஷேத்திரக் கோவையில், ‘மஞ்சார் பொதியின்மலை தஞ்சை’ : (6:70.8) என்று பாடியுள்ளார். திருவிசைப்பா -கண்டராதித்தன் சைவத் `திருமுறைகளில் ஒன்றாகிய ஒன்பதாம் திருமுறையில் கணடிராதித்த சோழன் கிபி 950 - 957) தில்லையைப் பற்றிப் பாடிய திருவிசைப்பாப் பதிகம் உள்ளது இறுதிப் பாடலில் அவர் தன்னைத் தஞ்சையர்கோன் என்று குறித்துக்கொள்ளுகிறார். ‘காரார்சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன்’ என்பது கண்டராதித்தன் பாடிய திருவிசைப்பாப் பகுதி ஆகும். திருவிசைப்பா - கருவூர்த் தேவர் ஒன்பதாம் திருமுறையில் அதிகத் தலங்களுக்குத் திருவிசைப்பாப் பதிகம் பாடிய கருவூர்த் தேவர் தஞ்சைக்கும் பாடியுள்ளார். விலங்கல்செய் நாடக சாலை இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத்து இவர்க்கே’ என்பது அவர் பாடிய பாடலில் ஒரு பகுதியாகும். வைணவ இலக்கியங்களில் பன்னிரு ஆழ்வார் பெருமக்கள் பாடியவை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் எனப்படும். ஆழ்வார் பெருமக்களால் பாடப்பட்ட தலங்கள் ‘திவ்யதேசம்’ என்றும், ’மங்களா சாசனம் பெற்ற தலங்கள் என்றும் வைணவ மரபுப்படி கூறுவர். வைணவத் திருப்பதிகள் 108 தலங்கள். 40 தலங்கள் சோழ நாட்டில் உள்ளன. அவற்றுள் தஞ்சையும் ஒன்று. பூதத்தாழ்வார் முதல் ஆழ்வார்களாகிய பொய்கையாழ்வார். பேயாழ்வார். பூதத்தாழ்வார் ஆகிய மூவருள் ஒருவரான பூதத்தாழ்வார் பாடிய தலங்கள் 12. இவற்றுள் தஞ்சை ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பூதத்தாழ்வார் கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர். அவர் காலம் கி.பி. 488-590 ஆகும். அவர் பாடிய இரண்டாம் திருவந்தாதிப் பாடல் ஒன்றில் (70) தஞ்சை முதலில் குறிப்பிடப்பெறுவது சிறப்புக்குரியதாகும். ‘தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்’ என்பது பூதத்தாழ்வார் பாடல் பகுதியாகும். இதற்கு உரை எழுதிய பெரியார் ‘ஆச்ரிதர்களுக்காக ஸர்வேசுவரன் சன்னிதி பண்ணுவது அவர்களின் இருதயத்திலும், தஞ்சை முதலிய தலங்களிலும் என்கிறார்கள்’ என்று எழுதியுள்ளார். திருமங்கையாழ்வார் திருமங்கையாழ்வார் (கி.பி. 716-821) சோழ மண்டலத்து ஆலி நாட்டுத் திருக்குறையலூரில் சோழர் படைத்தலைவராகிய கள்ளர் குலப் பெருமகனாருக்குத் திருமகனாகத் தோன்றியவர். இவர் பிறவியில் சைவர். வைணவக் குமுதவல்லியாரை மணந்து வைணவரானார். இவருடைய திருப்பாடல்கள் மூன்றில் தஞ்சை இடம்பெறுகிறது. ’வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான்கண்டு கொண்டேன் நாராய ணாஎன்னும் நாமம்’ (1:1:6) என்னும் திருப்பாடல் பகுதியில் தஞ்சை ‘மாமதிள் தஞ்சை’ என்று குறிக்கப்பெறுகிறது. மற்ற இரண்டு பாடல் பகுதிகள், தடம்பருகு கருமுகிலை தஞ்சைக் கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையம் காக்கும் கடும்பரிமேல் கற்கியைநான் கண்டு கொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசய னத்தே! ‘தஞ்சையாளியைப் பொன்பெயரோன்’ (2:5:3) என்பனவாகும். 7:3:9) தஞ்சையில் மங்களாசாசனம் பெற்ற திருக்கோயில்கள் வெண்ணாற்றங்கரையில் உள்ளன. நீலமேகப் பெருமாள் கோயில் (செங்கமலவல்லித் தாயார்) மேல சிங்கப் பெருமாள் கோயில் (தஞ்சைநாயகித் தாயார்) மணிகுன்றப் பெருமாள் கோயில் (அம்புஜவல்லித் தாயார்) இவற்றுள் நீலமேகப் பெருமாள் கோயில் தஞ்சை மாமணிக் கோயில் என அழைக்கப்படும். ஆழ்வார் பாடல்களில் நீலமேகப் பெருமாள் கோயிலும், மணிகுன்றப் பெருமாள் கோயிலும் குறிக்கப்பட்டுள்ளன. மணிகுன்றப் பெருமாள் கோயில் உள்ள பகுதி ‘தஞ்சையாளி நகர்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. தஞ்சையின் ஒரு பகுதி முன்பு ‘வம்புலாஞ்சோலை’ என்று அழைக்கப்பட்டது அங்குள்ள குளம் (சூரிய புஷ்கரணி) சிங்கப் பெருமாள் குளம் என்று அழைக்கப்படுகிறது. அங்கிருந்த நீலமேகப் பெருமாள் கோயிலும், நரசிங்கப் பெருமாள் கோயிலும் தஞ்சை நாயக்கர் காலத்தில் வெண்ணாற்றங்கரையில் கட்டப்பட்டன. மணிகுன்றப் பெருமாள் கோயில் களிமேடு கிராமத்தின் கீழ்ப்புறம் அமைந்திருந்தது என்பர். பிள்ளைப் பெருமாளய்யங்கார் வைணவத் திருப்பதிகளாம் நூற்றியெட்டுத் திருத்தலங்களைப் போற்றி ‘நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி’ என்று சிலர் பாடியுள்ளனர் பிள்ளைப் பெருமாளய்யங்கார் பாடிய அந்தாதியில் 3) பெருந்தஞ்சை மாமணியைப் பேணி வடிவம் பொருந்தஞ்சை மாமணியைப் போற்று என்பது தஞ்சையைக் குறிக்கும் பாடல் பகுதியாகும். இலக்கியங்களில் ‘புயல்மேவு பொழில் தஞ்சை’ ஓதவளர் வண்மை ஒபௗநாதன் தஞ்சை’ (கல்வெட்டுப் பாடல்கள்) ‘ஆரூர்வாழ் புழுகாச்சி அளித்த தஞ்சை’ தஞ்சை நாயகம் மீது பாடல்) ‘தரு தஞ்சை’ (சர்க்கரைப் புலவர்) எழிலார் தஞ்சை (சரபேந்திரர் குறவஞ்சி தஞ்சை மாநகர்’ (சிவரகசியம்) ‘மலிபுனல்சேர் சோணாடு தஞ்சை’ (திருவையாற்றுப் புராணம்) ` ‘தஞ்சைத் தென்னாரு கொடிவிதி’ (மாயூரம் புராணம்) ‘மணமலர்ச் சோலைசூழ் தஞ்சை’ ‘வல்லோர் புகழ் தஞ்சை’ ‘நன்னயஞ்சேர் தஞ்சை’ ‘மங்களஞ்சேர் தஞ்சை’ (சரபேந்திரர் குறவஞ்சி எனப் பல்வேறு இலக்கியங்களில் தஞ்சை சிறப்பு அடைமொழிகளுடன் குறிக்கப்பெறுகிறது. சங்ககாலக் கரிகாலன் தஞ்சையிலும் ஆட்சிபுரிந்ததாகப் பழம் பாடல் ஒன்று கூறுகிறது. ‘அஞ்சின் முடிகவித்து ஐம்பத்து மூன்றளவில் கஞ்சி காவேரிக் கரைகண்டு தஞ்சையிலே எண்பத்து மூன்றளவும் ஈண்ட இருந்தேதான் விண்புக்கான் தண்புகார் வேந்து’ என்பது அப் பாடலாகும். அருணகிரியார் திருப்புகழில் நாடெங்கும் சென்று முருகன் தலங்களில் சந்தத் தமிழ்ப் பாக்கள் பாடி வழிபட்ட அருணகிரியார் தஞ்சைக்கும் வந்து மூன்று பாடல்கள் பாடியுள்ளார். அவர் காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு ஆகும். ‘நஞ்சமு தாஉணும் அரனார்தம் நன்கும ராஉமை அருள்பாலா தஞ்சென வாம்அடி யவர்வாழத் தஞ்சையில் மேவிய பெருமாளே’ ’சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச் சம்பு போதகக் குருநாதா சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத் தஞ்சை மாநகர்ப் பெருமாளே!’ ’சண்டநீ லகலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன்வா சவன்மேவி வாழ்பதிக்கு யர்ந்த தஞ்சைமா நகர்ராஜ கோபுரத்த மர்ந்த பெருமாளே!’ என அருணகிரியார் பாடுகிறார். கல்வெட்டில் கல்வெட்டுக்களில் தஞ்சை என்ற வழக்குப் பெரிதும் பயின்று வந்துள்ளதைக் காணுகிறோம். ‘குஞ்சித்த திருவடியின்கீழ்க் கிடந்த முசலகனோடும் கூட பாதாதி கேசாந்தம் இருமுழமே நால்விரல் உசரமும் ஸ்ரீஹஸ்தம் நாலும் உடையாராய்க் கனமாக எழுந்தருள்வித்த தஞ்சையழகர் என்று திருநாமம் உடைய திருமேனி ஒருவர்’ என்ற கல்வெட்டுத் தொடரால் பெருவுடையார் கோயில் நடராசருக்குத் ‘தஞ்சை அழகர்’ என்று பெயர் இருந்ததை அறிகிறோம். ‘தஞ்சை விடங்கர்’ ‘தஞ்சை -விடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேகவரியார்’ என்ற தொடர்களும் கல்வெட்டில் பயின்றுவருகின்றன. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இருந்த பண்டாரமும் ‘தஞ்சை விடங்கன்" என்று அழைக்கப்பட்டது. தஞ்சை அருகில் இருந்த ஓரூர் ’தஞ்சை மாமணி கண்டங்குறை’ எனப்பட்டது. பொதுமக்கள் பலர் தங்கள் பெயருடன் தஞ்சையையும் சேர்த்து வழங்கியுள்ளனர். ‘உடநிலைக் குதிரைச் சேவகரில் நின்றும் புகுந்த தஞ்சை கணபதி’ ‘வீரை கிழையான் தஞ்சை திருவுடையான் கடிகைவேளான்’ ‘தஞ்சை வீரன் நாகன் அறியான்’ தஞ்சை வீரன் குற்றி கல்லன்’ ஆகிய பெயர்களையும் கல்வெட்டில் காணுகின்றோம். ஒரு கல்வெட்டில் ‘தைஞ்சை’ எனக் குறிக்கப்படுகிறது. கீழை, மேலை நரசிங்கப்பெருமாள் கோயில் தாயார்களுக்கு ‘தஞ்சை நாயகித் தாயார்’ என்று பெயர். தஞ்சாசெட்டி, தஞ்சைநாயகம் என்று இவ்வூர் மக்கள் பெயர் வைத்துக் கொண்டுள்ளனர். சரபோசி காலத்துத் தஞ்சைப் பெருவுடையார் கோயில் வெட்டியானுக்குத் தஞ்சான் எனப் பெயர். ‘தஞ்சாவூர்’ என்ற வழக்கும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ‘தஞ்ச நகர்’ ‘தஞ்ச நகரம்’ ‘தஞ்சை மாநகரம்’ ’தஞ்சாவூர்க் கூற்றம் ‘தஞ்சாவூர் நாடு’ ’தஞ்சாவூர்ப் பற்று ‘தஞ்ச நகரம் சீமை’ ‘தஞ்சாவூர் ஏரியூர் நாட்டு தளி’ ’தஞ்சாவூர் பிரமகுட்டம் "தஞ்சாவூர் ஜெயபீதமளி என்ற தொடர்களைக் கல்வெட்டில் காணுகின்றோம். பிற்கால மராட்டியர் கல்வெட்டொன்று ‘ஐம்பத்தாறு தேசத்துக்கும் மேலான தெய்வபூமியான தஞ்ச நகரம்’ என்று குறிக்கிறது. குபேரன் வழிபட்ட காரணத்தால் இவ்வூர் குபேரபுரி அளகாபுரி, அளகை, தென்அளகை என்றும் அழைக்கப்படுகிறது. புராணங்களில் ’சமீவன க்ஷேத்ரம் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்பு TANJORE என வழங்கியது THANJAVUR என மாற்றம் செய்யப்பட்டது. அரசர்கள் போற்றிய ஊர் அரசர்கள் சிலர் தங்கள் பெயருடன் தஞ்சையின் பெயரை இணைத்துக்கொண்டனர். அதன் மூலம் தஞ்சையின் பெருஞ்சிறப்புப் புலப்படுகிறது. தஞ்சை மீது அவர்கள் கொண்டிருந்த பற்றும் பாசமும் வெளிப்படுகிறது. சிலர் தஞ்சையை வென்றதாகக் கூறிக்கொள்கின்றனர். அரிய அவ்வெற்றியைப் பெயருடன் இணைத்துக்கொண்டனர். பல்லவரின் கீழ், நியமத்திலிருந்து ஆட்சிபுரிந்த முத்தரையர்களில் பெரும்பிடுகு முத்தரையன் சுவரன்மாறன் (655-680) மீது பாடப்பட்ட பாடல்களில் அவன் ‘தஞ்சைக்கோன்’. ‘தஞ்சை நற்புகழாளன்’ என்று குறிக்கப்பெறுகிறான். மார்பில் 96 விழுப்புண்களைப் பெற்றுப் பெருவீரனாகப் போராடி வென்று பிற்காலச் சோழமரபை நிறுவின விசயாலய சோழன் 1846-881 தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து மீட்டான். அதனால் விசயாலயன் ‘தஞ்சைகொண்ட பரகேசரி’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான் (திருக்கோவிலூர் அருகில் வீரசோழபுற நடுகல் கல்வெட்டு, ஆண்டறிக்கை 1936, ப.34) தொண்டை நாட்டையும் சோழநாட்டையும் வென்ற இராட்டிகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் (இவனுக்குக் கன்னரதேவன் என்ற பெயரும் உண்டு) தன்னைக் ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவன்’ என்று அழைத்துக்கொண்டான் (தெ.இ.க. ப. 259) ஒன்பதாம் திருமுறையில் ஒன்றான திருவிசைப்பாப் பாடிய கண்டராதித்தன் தன்னைத் ’தஞ்சையர் கோன் என்று குறிப்பிட்டுக்கொண்டான் (10). இராசராசன் காலத்துத் தஞ்சைப் பகுதிகள் இராசராசன் காலத்தில் தஞ்சை நகரம் உள்ளாலை, புறம்படி என்று இரு பிரிவுகளாக இருந்தது. உள்ளாலை என்பது கோட்டைக்கு உள்பகுதியாகும். புறம்படி என்பது கோட்டையின் வெளிப்பகுதியாகும். உள்ளாலையில் அரண்மனையும் பாண்டி வேளமும், சாலியத் தெருவும் இருந்தன. அரண்மனை கோயில் எனப்பட்டது புறம்படியில் இருந்தவை. தெரு: பன்மையார் தெரு, ஆனையாட்கள் தெரு. ஆனைக்கடுவார் தெரு, காந்தர்வத் தெரு. மடைப்பள்ளித் தெரு, வில்லிகள் தெரு. பெருந்தெரு: சூரகாமணிப் பெருந்தெரு. நித்தவிநோதப் பெருந்தெரு, மும்முடிசோழப் பெருந்தெரு, ராஜவித்யாதரப் பெருந்தெரு, வானவன்மாதேவிப் பெருந்தெரு, வீரசிகாமணிப் பெருந்தெரு, வீரசோழப் பெருந்தெரு. ஜெயங்கொண்ட சோழப் பெருந்தெரு. வேளம்: அபிமான பூஷணத் தெரிந்த வேளம், அருமொழி தேவத் தெரிந்த திருப்பரிகலத்தார் வேளம், உத்தம சீலியார் வேளம், உய்யக்கொண்டான் வேளம், பஞ்சவன்மாதேவியார் வேளம், ராஜராஜத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம். அங்காடி: கொங்காள்வார் அங்காடி, ராஜராஜப் பிரம மகாராயன் அங்காடி பேரங்காடி திரிபுவனமாதேவிப் பேரங்காடி மடவிளாகம்: ரௌத்ரமகாகாளத்து மடவிளாகம் படைவீடு: சிவதாசன் சோலையான இராஜராஜப் பிரம மகாராஜன் படைவீடு. ஆட்சியாளர்கள் பல்லவர் சிம்ம விஷ்ணு 1525-550) சோழநாட்டைக் கைப்பற்றியதாகப் பள்ளன்கோயில் செப்பேடும். வேலூர்ப் பாளையம் செப்பேடும் கூறுகின்றன. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள பல்லவரின் ஆறாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் ‘தஞ்சையை வென்றவன்’ என்ற பொருளில் ‘தஞ்சஹர’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் 6ஆம் நூற்றாண்டிலேயே தஞ்சை முக்கிய நகரமாக விளங்கியிருக்க வேண்டும் என்பது திண்ணம். (கல்வெட்டு ஆண்டறிக்கை 1938 எண் 35) பெருவுடையார் கோயில் கல்வெட்டுத் துண்டு ஒன்றில் ‘ஸ்ரீதந்தி’ என்ற பெயர் காணப்படுகிறது. கரந்தையில் கிடைத்த பாடல் கல்வெட்டில் ‘காடவன்’ என்ற பெயர் காணப்படுகிறது. தஞ்சையில் சில பல்லவர்காலச் சிற்பங்கள் காணப்படுவதுடன் தஞ்சையைச் சுற்றிலும் பல்லவர் கல்வெட்டுக்கள் பல உள்ளன. அவர்களின் தலைநகர்களில் ஒன்றாகிய நந்திபுரம் ஆயிரத்தளி தஞ்சை அருகிலேயே உள்ளது. முத்தரையர் கி.பி. 7-9ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சைப் பகுதியை ஆட்சி புரிந்தவர்கள் முத்தரையர் சோழநாட்டு நியமம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் முத்தரையர். அவர்கள் களப்பிரர் வழியினர். கங்கர் மரபினர் தமிழக வேளிர் என்று ஆய்வாளர்கள் பலவாறு கூறுவர். அவர்கள் ‘பெருமுத்தரையர்’ என்று நாலடியாரில் புகழப்பட்டவர்கள். அவர்கள் தஞ்சை நகரையும் ஆட்சிபுரிந்துள்ளனர். அவர்கள் காலத்தில் தஞ்சை மிகச் சிறப்புற்று விளங்கியிருக்க வேண்டும். பாச்சில்வேள் நம்பன், கோட்டாற்று இளம்பெருமானார், ஆச்சாரியர் அனிருத்தர் என்பார் பாடிய பாடல்களில் தஞ்சை இடம்பெறுகிறது. இவை பெரும்பிடுகு முத்தரையனைப் பாடியவை (கி.பி.655-680). வஞ்சிப்பூச் சூடிய வாளமருள் வாகைப்பூக் குஞ்சி கமழ்கண்ணிக் கோமாறன் - தஞ்சைக்கோன் கோளாளி மொய்ம்பில் கொடும்பாளூர் காய்ந்தெறிந்தான் தோளால் உலகளிக்கும் தோள். நிற்கின்ற தண்பணை தோறும் தஞ்சைத்திறம் பாடிநின்றார் விற்கின்ற வீரர்கள் ஊர்கின்ற இப்பிணக் குன்றுகாள் நெற்குன்ற யானை. சொற்புகு தொண்டைக் கனிபுகு தூமதி போல்முகத்தாள் பொற்புக வெற்புப் புகுதிகண்டாய் புகழிப் பொருதார் கற்பக விற்புகக் கண்டவன் கள்வர கள்வன் தஞ்சை நற்புக ழான்கரம் போற்கொடை காலும் கடுமுகிலே. மண்டீது கண்டார்தஞ் சைச்செம்புலநாட்டு வெண்கோடல் விண்டபோது கொண்டாயவர் மலையம் புதுமணம் மீதுசெந்தீத் தண்டுகண் டாலன்ன கோபங்கள் ஊர்கின்ற தாழ்புறவே என்பன முத்தரையர் புகழ்ச்சிப் பாடலாகும். இவர்களில் கடைசி மன்னன் சாத்தன் பழியிலி (826-851. சோழர் சங்ககாலத்தில் தஞ்சைப் பகுதியில் சோழர் ஆட்சி புரிந்துள்ளனர். வல்லமும், ஆர்க்காடும் (கண்டியூர் அருகில்) சோழர்க்கு உரியனவாகக் கூறப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் எழுபது மாடக் கோயில்கள் கட்டினான். அவற்றுள் தஞ்சைத் தளிக்குளத்தார் கோயிலும் ஒன்றாக இருக்க வேண்டும். பெருவுடையார் கோயில் மாடக்கோயில் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காவிரிக்குக் கரைக்கட்டுவித்த கரிகாலன் தஞ்சையில்ஆட்சிபுரிந்ததாகத் தனிப்பாடல் ஒன்று கூறுகிறது. கரிகாலனுக்குக் கருங்குட்ட நோய் இருந்தது என்றும் சிவகங்கைக் குளத்தில் மூழ்க அது மறைந்தது என்றும் பெருவுடையார் உலாக் கூறுகிறது. ‘மஞ்சுருவம் தேய்த்தபெரு நோய் தீர்த்துச் செம்பியனைக் காத்தபுகழ் வாய்த்த சிவகங்கை’ என்பது உலா வரிகளாகும். கருந்திட்டைக்குடி வரலாற்றிலும் கரிகாலன் குறிக்கப்படுகின்றான். சங்க காலத்திற்குப் பின் களப்பிரர், பல்லவர், முத்தரையர் ஆட்சிக் காலத்தில் ஒளி மங்கி மறைந்து சோழர்கள் வாழ்ந்தனர். ஏறக்குறைய கி.பி.846 இல் முத்தரையரிடமிருந்து தஞ்சையை மீட்டுப் பிற்காலச் சோழப் பேரரசுக்கு அடிகோலியவன் விசயாலயன். 96 விழுப்புண்களைப் பெற்றுப் போராடி விசயாலயன் அரசை நிறுவினான். ‘தஞ்சை கொண்ட கோப்பரகேசரி’ என்ற பட்டப் பெயரை அவன் பெற்றான். முதல் இராசேந்திரனின் திருவாலங்காட்டுச் செப்பேடும். வீரராசேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட்டும் விசயாலயன் தஞ்சையைக் கைப்பற்றியதை விவரிக்கின்றன. விசயாலய சோழனுக்குப் பிறகு 1846-881) முதல் ஆதித்தன் 1871- 907), முதல் பராந்தகன் (907-953), கண்டராதித்தன் (950-957), அரிஞ்சயன் (956-957), இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் (957-970), உத்தமசோழன் முதலியோர் ஆட்சி புரிந்தனர். முதலாம் இராசராசன் 985ஆம் ஆண்டு பட்டம் பெற்றான். இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனுக்கும் மலையமான் மரபில் வந்த வானவன் மாதேவிக்கும் மகனாக ஐப்பசி சதயநாளில் பிறந்தவன். இவனது இயற்பெயர் அருமொழி என்பதாகும். மிகவும் இளவயதிலேயே பெற்றோரை இழந்த இராசராசன் மாதேவடிகள் செம்பியன் மாதேவியாலும், குந்தவைப் பிராட்டியாலும் வளர்க்கப்பட்டான். மதுராந்தகன் உத்தமசோழன் காலத்தில் இராசராசன் அரசனாகும் தகுதிகளைப் பெற்றான். நன்றி மறவா இராசராசன் தன் பெண் மக்களுக்கு மாதேவடிகள், குந்தவை என்றும் மகனுக்கு மதுராந்தகன் (முதல் இராசேந்திரன்) என்றும் பெயரிட்டான். முதல் இராசேந்திரன் காலத்தில் (1012-1044) தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டது. தஞ்சைப் பெருவுடையார் - கோயில் கொடைகள் சில இராசேந்திரசோழன் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சில பணிகள் முற்றுப்பெறாமைக்குக் காரணம் தஞ்சைச் சிற்பிகளும் கங்கைகொண்ட சோழபுரம் சென்றமையே காரணம் என்றும் சிலர் கருதுவர். முதல் இராசேந்திரனின் மகள்வயிற்றுப் பேரனான கீழைச்சாளுக்கிய இளவரசன் விஷ்ணுவர்த்தனன் இராசேந்திரன் என்ற பெயரோடு சோழ அரசனாக முடிசூடினான். அவனே முதல் குலோத்துங்கன் (1070-1120). அவனுக்குப் பின் விக்கிரமன் (1118-1136), இரண்டாம் குலோத்துங்கன் (1133-1150), இரண்டாம் இராசராசன் (1146-1163), இரண்டாம் இராசாதிராசன் (1163-1178), மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218), மூன்றாம் இராசராசன் (1216-1260), மூன்றாம் இராசேந்திரன் (1246-1279) ஆகியோர் ஆட்சிபுரிந்தனர். தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டபோதும் தஞ்சை தன் வரலாற்று முக்கியத்துவத்தை இழக்கவில்லை என்பதைத் தஞ்சையிலுள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறிகின்றோம். பாண்டியர் சோழர்களும் பாண்டியர்களும் சிலமுறை நண்பர்களாகவும் பலமுறை பகைவர்களாகவும் வாழ்ந்துள்ளனர். மதுராந்தகன், மதுராந்தகி, மதுரைகொண்ட பராந்தகன், பாண்டிய குலாசனி, வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலன் என்ற சோழர்கள் பெயரால் பாண்டிய நாட்டின்மீது சோழர்கள் கொண்டிருந்த ஆதிக்கம் புலப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை (1178-1218) சோழரிடம் தோற்று அவமானம் அடைந்த பாண்டியர்கள் பலர் நாட்டை விட்டே ஓடியுள்ளனர். மூன்றாம் குலோத்துங்கன் 1202இல் மதுரையை அழித்துப் பாண்டிய மன்னர்களின் அரண்மனையை இடித்துப் பொடியாக்கிக் கழுதை ஏர் பூட்டிக் கவடி விதைத்தான், அது முதலாம் சடையவர்மன் குலசேகரன் காலம் (1190-1218) ஆகும். அடுத்து பட்டம் பெற்ற முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1244) மூன்று முறை சோழ நாட்டின்மீது படையெடுத்து தஞ்சைக்கு மிகவும் அண்மையிலிருந்த சோழநாட்டு நித்தவிநோத வளநாட்டு கிழார்க் கூற்றத்து ஆயிரத்தளி அரண்மனையிலும் (கண்டியூர்), பழையாறையாகிய முடிகொண்ட சோழபுரத்து அரண்மனையிலும் வீராபிடேகமும் விசையாபிடேசமும் செய்துகொண்டான். பாண்டிய குலாசனி (அசனி இடி) வளநாட்டுக்கு பாண்டிய குலபதி வளநாடு என்று பெயர் மாற்றினர். சோழநாட்டின் சிறந்த நகரங்களான தஞ்சாவூரையும், உறையூரையும் நெருப்பிட்டுக் கொளுத்தினர் என்று சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. பொன்னிசூழ் நாட்டில் புலிஆணை போய்அகலக் கன்னிசூழ் நாட்டில் கயல்ஆணை கைவளர் வெஞ்சின இவுளியும் வேழமும் பரப்பித் தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திக் காவியும் நீலமும் நின்று கவின் இழப்ப வாவியும் ஆறும் மணிநீர் நலன்அழித்துக் கூடமும் மாமதிளும் கோபுரமும் ஆடரங்கும் மாடமும் மாளிகையும் மண்டபமும் பலஇடித்து என்பது சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்திப் பகுதி. முதலாம் மாறவர்மன் ஸ்ரீவல்லபன் கல்வெட்டொன்று பெருவுடையார் கோயிலில் உள்ளது. பாண்டியன் படைத்தலைவன் தொண்டைமானார் தம் பெயரால் சாமந்த நாராயணச் சதுர்வேதிமங்கலம் என்ற ஊரை ஏற்படுத்தி 106 அந்தணர்கட்கு அளித்த செய்தியும், அங்கு சாமந்த நாராயண விண்ணகர எம்பெருமாள் கோயில் என்ற கோயிலை ஏற்படுத்திய செய்தியும் கூறப்பட்டுள்ளது. அவ்விண்ணகரம் தஞ்சை கீழவாசல் அருகேயுள்ள கொண்டிராஜபாளையம் கீழை நரசிங்கப் பெருமாள் கோயிலாக இருக்கலாம் என்று குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் கருதுகிறார். அருகில் உள்ள குளத்திற்குச் சாமந்தான் குளம் என்று பெயர் வழங்குகிறது. கீழை நரசிங்கப்பெருமாள் கோயிலை ‘புறாதனம் கோயில்’ என்று சரபோசி கல்வெட்டுக் கூறுகிறது. போசளர் பாண்டியருக்குப்பின் சோழநாட்டுப் பகுதியைப் போசளர் கைப்பற்றினர். ‘பொன்னி நன்னாட்டுப் போசளத்து அரசர்’ என்று அவர்களைப் பற்றிப் பாண்டியர் மெய்க்கீர்த்தி கூறும். தஞ்சைப் பகுதியில் போசளர் கல்வெட்டுக்கள் சில கிடைத்துள்ளன. விஜயநகர அரசர்கள் ’ தேவராயனின் தளபதி ஸ்ரீவல்லபன் 1446இல் தஞ்சையைக் கைப்பற்றினான். 15ஆம் நூற்றாண்டில் தஞ்சைப் பகுதியில் விஜயநகர ஆட்சி ஏற்பட்டது. மகாமண்டலேசுவரன் சாளுவத் திருமலைதேவ மகாராசா தஞ்சையில் ஆட்சி புரிந்தான். விஜயநகர ஆட்சியில் 1464ஆம் ஆண்டு ’தஞ்சாவூர்ச் சீமை என்ற பகுதி ஏற்பட்டது. கிருஷ்ண தேவராயனின் ஈங்கோய் மலைக் கல்வெட்டில் சோழமண்டலத்துத் தேவஸ்தானங்களில் கொடை அளித்த ஊர்களில் தஞ்சாவூரும் ஒன்றெனக் குறிக்கப்பட்டுள்ளது (1517). அச்சுத தேவராயன் கல்வெட்டில் "சோழ மண்டலம் திருச்சிராப்பள்ளி உசாவடி தஞ்சாவூர் சீமை’ எனப்பட்டது (1532). பின் தஞ்சாவூர் தனி உசாவடி ஆனது. ‘சோழமண்டலம் தஞ்சாவூர் உசாவடி’ சோழமண்டலச் சீமை தஞ்சாவூர் உசாவடி’ என்ற கல்வெட்டுக்களைக் காணுகின்றோம். தஞ்சை இராஜகோபாலசாமி கோயிலில் உள்ள விஜயநகர அச்சுத தேவராயன் கல்வெட்டில் ‘பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாபுரி மதனகோபாலப் பெருமாள் பிரதிட்டை’ (1538) என்ற தொடர் காணப்படுகிறது. தோப்பாரங்கட்டிப் பிள்ளையார் கோயிலில் அச்சுத தேவராயன் கல்வெட்டு உள்ளது. தஞ்சை நாயக்கர்கள் தொண்டைநாட்டு நெடுங்குன்றம் செவ்வப்ப நாயக்கர் என்பவர் விஜயநகர மன்னன் அச்சுத்தேவ மகாராயரின் மனைவி திருமலாம்பாளின் தங்கை மூர்த்தியம்பாள் என்பவளைத் திருமணம் செய்துகொண்டார். தன் சகலன் செவ்வப்பனுக்கு அச்சுததேவ மகாராயர் தன் பிரதிநிதிகள் அதிகாரம் செலுத்திய தஞ்சை அரசைச் சீதனமாகக் கொடுத்தார். செவ்வப்ப நாயக்கர் தஞ்சை அரசை நிறுவினார். அரண்மனை, கோட்டை, அகழி ஏற்படுத்தினார். 1532இல் தஞ்சை நாயக்க அரசு நிறுவப்பட்டது. சிவகங்கைக் குளத்தருகேயுள்ள ஏரியைச் செவ்வப்ப நாயக்கர் வெட்டியதாகக் கருதப்படுகிறது. நாயக்க அரசர்களும் பல ஆலயத் திருப்பணிகள் செய்தனர். செவ்வப்ப நாயக்கன் 1532 - 1580 அச்சுதப்ப நாயக்கன் 1580 - 1600 இரகுநாத நாயக்கன் 1600 - 1633 விசயராகவ நாயக்கன் 1633 - 1673 மன்னார்தாஸ் செங்கமலதாஸ் மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதன் தஞ்சை நாயக்க மன்னர் மகளை மணம் செய்துகொள்ள விரும்பினார். விசயராகவன் மறுக்கவே மதுரைக்கும் தஞ்சைக்கும் போர் மூண்டது. விசயராகவ நாயக்கர் தோல்வியுற்று வீரமரணம் அடைந்தார். போரில் அவர் மகன் மன்னார்தாசும் இறந்தார். அரண்மனைப் பெண்கள் அனைவரும் தீப்பாய்ந்தனர். மதுரை நாயக்கப் பிரதிநிதி அழகிரி நாயக்கர் தஞ்சையை ஆட்சி புரிந்தார். விசயராகவன் பேரனும், மன்னார்தாசின் மகனுமாகிய செங்கமலதாசை மறைமுகமாக நாகப்பட்டினம் தருமலிங்கம் செட்டியார் வளர்த்தனர் என்பர். மராட்டியர் தஞ்சை அரசுக்கு உரியவன் செங்கமலதாசே, மதுரைப் பிரதிநிதி அழகிரியை விரட்டிவிட்டுச் செங்கமலதாசை அரசராக்க வேண்டும் என்று தஞ்சை இராயசம் வெங்கண்ணா பீசப்பூர் சுல்தானிடம் வேண்டிக் கொண்டார். பீசப்பூர் சுல்தான் அடில்ஷா தன் அமைச்சர்கள் கவாஸ்கான், அப்துல் ஹலீம் தளபதி காதர் என்பவர்களையும், பெங்களூர் சாகீர்தார் ஏகோசியையும் அனுப்பிவைத்தார். தஞ்சை வந்த அவர்கள் அய்யம்பேட்டையில் நடைபெற்ற போரில் அழகிரியை விரட்டிச் செங்கமலதாசை அரசர் ஆக்கினர். செங்கமலதாஸ் தன்னை வளர்த்த செட்டியாருக்கு அளித்த முக்கியத்துவம் இராயசம் வெங்கண்ணாவுக்கு அளிக்கவில்லை. பதவி கிடைக்காத வெங்கண்ணாவின் வேண்டுகோள்படி ஏகோசி தஞ்சை அரசை மேற்கொண்டார். 1676 தொடக்கத்தில் ஒரு குண்டுகூட வெடிக்காமல் தஞ்சை மராட்டிய அரசு ஏற்பட்டது. ஏகோசி | 1676 - 1684 சகசி 1684 - 1711 சரபோசி |1711 - 1729 துக்கோசி 1729 - 1735 ஏகோசி II 1735 - 1737 சுசான்பாய் 1737-1738 காட்டுராசா 1738 சையாகி 1738 பிரதாபசிங் 1739 - 1763 துளசா 1763 1787 அமர்சிங் 1787 - 1798 சரபோசி !! 1798 - 1832 சிவாசி 1832-1855 என்பது தஞ்சை மராட்டியர் பரம்பரைப் பட்டியலாகும். இவர்களில் இரண்டாம் சரபோசி புகழ்வாய்ந்த அரசர். 1798 இல் ஆட்சியை வெள்ளையரிடம் ஒப்படைத்துக் கலைப்பணியில் ஈடுபட்டார். வாரிசு இல்லாததால் சிவாசியுடன் மராட்டியர் ஆட்சி முடிவுற்றது. தஞ்சைத் தரணி ஆங்கிலேயர் வசப்பட்டது. கோயில்கள் நிசும்பசூதனி விசயாலயன் தஞ்சையைக் கைப்பற்றி நிசும்பசூதனிக்கு ஒரு கோயில் எடுத்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகிறது. நிசும்பசூதனி கோயில் எது என்பதுபற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. 1. தஞ்சையின் கீழ்புறம் குயவர் தெரு அருகே கருவேலங்காடு என்னும் பகுதியுள்ளது. அங்கு சோழர் கலைப்பாணியில் அமைந்த தொன்மையான இறைபடிமங்களைக் கொண்ட காளி கோயில் ஒன்றுள்ளது. அதனை உக்கிரகாளி, உக்கிரமாகாளி என்பர். அவங்குள்ள காளி சிலையே நிசும்பசூதனி என்பது சிலர் கருத்து. 2. தஞ்சை நகரில் கீழவாசல் அருகேயுள்ள பூமாலை ராவுத்தன் கோயில் தெருவில் வட பத்ரகாளி கோயில் உள்ளது. அவ் வட பத்ரகாளி கோயிலே நிசும்பசூதனி கோயில் என்பது சிலர் கருத்து. இக்கோயில் அருகே தொன்மையான கௌமாரி சிற்பம் ஒன்று உள்ளது. அது பல்லவர் காலச் சிற்பம் ஆகலாம். 3. கரந்தையின் வடக்கே விண்ணாற்றங்கரை செல்லும் வழியில் கோடியம்மன் கோயில் உள்ளது. கோடியம்மனை வடவாயிற் செல்வி என்றும் தஞ்சை நகரின் காவல் தெய்வம் என்றும் அழைப்பர். அக்கோயில் சோழர் காலக் கோயில் நந்திமாகாளி, நந்தி மிடாரி எனக் கல்வெட்டில் குறிக்கப்படுவதற்கு ஏற்ப இன்றும் நந்திவாகனம் உள்ளது. இக்கோயிலே நிகம்பசூதனி கோயில் என்பது சிலர் கருத்து. தளிக்குளத்தார் மாமன்னன் இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் அல்லது புதிய இடத்தில் ஏற்கெனவே அமைத்தானா? அல்லது எற்கெனவே திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் ‘குளம். ’தளிக்குளத்தார்’ ‘தஞ்சை’ என்று பாடப்பட்ட வைப்புத் தலத்தில் அமைந்திருந்த சிறிய கோயிலைப் பெரிதாக அமைத்தானா? என்பதுபற்றி இன்னும் சரியான முறையில் ஆய்வு நிகழ்த்தப்பெறவில்லை. இராசராசன் ‘பாண்டியகுலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி’ என்று கல்வெட்டில் பொறித்துள்ளான். இங்கு ‘கற்றளி’ என்ற சொல் முக்கியமானது. கற்றளி என்ற சொல்லால் ஏற்கெனவே அங்கு ‘செங்கல்தளி’ ஒன்று இருந்தமை புலப்படுகிறது. கோயில், ஆலயம், கிரகம் என்று கூறாமல் ‘தளி’ என்று குறிக்கப்பட்டுள்ளது. தளிக்குளத்தார் கோயில் ‘செங்கல் தளி’. இராசராசன் அமைத்தது ‘கல் தளி’ எனக்கொள்ளலாம். சோழநாடெங்கும் பெரும்பான்மையான இடங்களில் தேவாரப் பதிகம் பெற்ற சிறு கோயில்களே பிற்காலத்தில் சோழ மன்னர்களால் பெரிதாக எடுக்கப்பட்டுள்ளன. தஞ்சைப் பெருவுடையார் கோயில் இராசராசனின் 19ஆம் ஆட்சியாண்டில் கி.பி. 1004இல் கட்டத் தொடங்கப்பட்டது. கோயில் திருப்பணி ஆறாண்டுகளில் முடிக்கப்பட்டு 22.4.1010 அன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது இந்நாள் இராசராசனின் ‘யாண்டு இருபத்தைஞ்சாவது நாள் இருநூற்றெழுபத்தஞ்சு’ என்று கல்வெட்டு மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அன்றுதான் ‘உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் ஸ்ரீ ராஜராஜீஸ்வரமுடையார் ஸ்ரீ விமானத்து செம்பின் ஸ்தூபித்தறியில் வைக்கக் குடுத்த செப்புக்குடம் ஒன்று நிறை மூவாயிரத்து எண்பத்து முப்பலத்தில் சுருக்கின தகடு பல பொன் ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை இரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தறு கழஞ்சரை’ அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மேலைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் தைலபன் மகனான சத்தியாசிரயனை வென்று அவனுடைய இரட்டபாடி ஏழரை இலக்கத்தைக் கி.பி. 1007இல் வென்ற இராசராசன் அங்கிருந்து கொண்டுவந்த பொற்குவியலைப் பொன்மலராக்கித் தஞ்சைக் கோயில் அபிடேகம் செய்துள்ளான் என்று கல்வெட்டில் ’தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ‘சத்தியாசிரயனை எறிந்து எழுந்தருளி வந்து ஸ்ரீபாதபுஷ்பமாக அட்டித் திருவடி தொழுதன’ என்பது கல்வெட்டுத் தொடர். 1005, 1008ஆம் ஆண்டுகளிலும் இராசராசனால் இக்கோயிலுக்குக் கொடைகள் அளிக்கப்பட்டுள்ளன. இது எவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடும்? கி.பி.1010 ஆம் ஆண்டு கலசம் நிறுவிப் பொன்தகடு போர்த்துக் குடமுழுக்குச் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பெருவுடையார் கோயிலில் கி.பி.1007 இல் எவ்வாறு வழிபாடு நடந்தது. ‘குடமுழுக்கு விழா 1010 இல் நடைபெற்றது: வழிபாடு முன்னரே தொடங்கிவிட்டது’ என்று சிலர் கூறுவது பொருத்தமானதாகத் தோன்றவில்லை. எனவே 1007 இல் இராசராசன் வணங்கிய கோயில் பெருவுடையார் கோயில் கட்டிடப்பணி நடைபெறும்போது அப்பகுதியில் இருந்த தளிக்குளத்தாரின் ‘பாலாலயம்’ என்பது தெளிவாகிறது. ஒரு கோயில் திருப்பணி செய்யும்போது முன்பு இருந்த இறைவனைப் பாலாலயம் அமைத்து அங்கு வழிபடுவது வழக்கம். தளிக்குளத்தார் கோயிலைப் பற்றிய சில கல்வெட்டுக்கள் தஞ்சைப் பெருவுடையார் கோயில் வளாகத்திலேயே துண்டுக் கல்வெட்டுக்களாகக் கிடைத்துள்ளன. அவை செங்கற் கோயிலில் பதித்து வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுக்களாகலாம். (அ) 1. பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரிபன்மற்கு.- 2 ளானார்ச் சீ தளிக்குள தேவர்க்கு பொன்னமரையர் அங்காடி இரு… 3. கோவிராசகேசரிபன்மர்க்கு யாண்டு 11 ஆவது (வை)த் நொந்தாவி (ளக்கு - 4. நாகராசன் திருவடிகள் கையெழுத்து (ஆ) 1.(ஏரி) ப்பதாக நொந்தா விளக்கு ஒன்று) 2. வை வத்த எண்ணை உழக்கும் எரிப்ய - 3. தளி திருக்கோயிலுடையான் ச… 4. ய) ன்மாகேஸ்வரர் ரக்ஷை (இ)1. க்கு யாண்டு 4ஆவது தஞ்சாவூர் தளிக்குளமுடைய மஹாதேவர்க்கு உடையார் ஸ்ரீ 2. தேவர் ஸளுக்கி குலகாலத் தெரிந்த வேளத்துப் பெண்டாட்டி சசந்த பொந்னம்பலம் ஸந்திவிளக்கு மூன்று 3. கு வைத்த விளக்கொன்று மூன்று ஸந்திக்கும் ஆக நெய் 4. யாண்டு 4 ஆவது 5. வெண்ணிக் கூற்றத்து பிரஹ்ம 6. தேயம் ஸ்ரீபூதிச் சது 7. ப்பேதி மங்கலத் 8. ஸபையோம் து 9. விற்ற நிலவிலை 10. யாவணம் தஞ் 11. சாவூர் கூற்றத் 12. து தஞ்சாவூர் மேற்படி 10. சிகாமணிப் பல் 13. லவரையந் சீ 12.தளிக்குளத்து மகா 14. தேவர்க்கு விற்று கு 15. டுத்த நிலமாவது.. இராசராசன் கல்வெட்டில் ‘தஞ்சை ஜெய்பீம் தளி’ என்ற தொடர் வருகிறது. அப்பெயரில் ஒரு கோயில் இருந்திருக்க வேண்டும். வெண்ணாற்றங்கரையில் ஆற்றுக்கு வடபுறம் இலட்சுமிராஜபுரம் அக்கிரகாரத்தில் உள்ள சிவாலயத்துக்குத் ‘தளிகேசுவரர்’ என்று பெயர். இவை தளிக்குளத்தின் நினைவை நமக்குக் கொண்டுவருகின்றன. இதைக் குறித்து ஆய்வு செய்த தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார். தஞ்சைத் தளிக்குளத்தைத்தான் இராசராச சோழன் பெரிய கற்றளியாக எடுப்பித்து அதற்கு இராசராசேச்சுரம் என்னும் பெயரும் வழங்கிச் சிறப்பித்தனன் என்பது ஈண்டு உணரற்பாலதாகும். எனவே அத் திருக்கோயிலின் தொன்மையும் பெருமையும் அறிந்துதான் இராசராசன் அதற்கு மிகச் சிறந்த முறையில் திருப்பணி புரிந்து யாவரும் வியக்கும் நிலையில் அதனை அமைத்துள்ளான் என்பது நன்கு துணியப்படும். ஆகவே தஞ்சைமாநகரில் வெற்றிடமாகக் கிடந்து நிலப்பரப்பில் அஃது இராசராசனால் புதியதாக அமைக்கப்பெற்றதொன்றன்று என்பது தெள்ளிது’ (பிற்காலச் சோழர் வரலாறு. ப.127). மேற்கண்ட எல்லாச் சான்றுகளையும் நோக்கும்போது தேவாரகாலத் தஞ்சைத் தளிக்குளமே பெருவுடையார் கோயிலாக கற்றளியாக மாற்றப்பட்டது என்பதை அறிகிறோம். பெருவுடையார் கோயில் தஞ்சைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் ஒப்புயர்வற்ற கலைக்கோயில் தஞ்சை இராசராசேச்வரம் என்னும் பெரிய கோயில். அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் பிரகதீசுவரர் -அம்மன் பிரகந்நாயகி என அழைக்கப்படுகின்றனர். பெருவுடையார் - பெரியநாயகி என்பதே தமிழ்ப் பெயர் பெருவுடையார் கோயிலைப் பற்றி மக்களிடையே எத்தனையோ சுவையான கதைகள் வழங்குகின்றன. - விமான நிழல் கீழே தரையில் விழுவதில்லை. - நந்தி வளர்ந்துகொண்டு இருக்கிறது. (வளர்ச்சியை நிறுத்த நந்தியின் முதுகில் ஆணி அடித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. - கருவூர்த்தேவர் எச்சில் தம்பளத்தால் லிங்கத்திற்கு அட்டபந்தனம் செய்தார். அப்போதுதான் சிவலிங்கம் நின்றது. - இராசராசன் பணி செய்யும் சிற்பிக்கு வெற்றிலை மடித்துத் தந்தார். இராசேந்திரன் மனைவி பெருவுடையார்கோயில். கரணச் சிற்பங்களுக்கு மாதிரியாக நின்றாள். - விமான உச்சியில் உள்ள பிரமரந்திரக்கல் (80 டன்) ஒரே கல்லால் ஆனது. - அக் கல் அழகி என்ற கிழவி வீட்டிலிருந்த கல். - பிரமரந்திரக் கல்லை சாரப்பள்ளத்திலிருந்து விமான உச்சிக்கு ஏற்றினர். - தமிழக ஆட்சி மாற்றங்களைப் பற்றிப் பெருவுடையார் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. - பெருவுடையார் கோயிலைப் பெருமை மிக்கதாய் அமைத்த இராசராசன் கனவில் ‘கிழவி அழகியின் நிழலில் நிம்மதியாய் உள்ளேன்’ என்று பெருவுடையார் கூறினார் என்பர். இதனை, ‘அம்மையார் நிழலில்யாம் அமர்வோம் என்று அருள்செய்த செம்மையார் வீற்றிருக்கும் திருத்தஞ்சை’ என்று மயிலாடுதுறைப் புராணமும் 54), பொன்னி- நதியுடையோன் முன்ஓர் நரைமுதியாள் நீழல் வதிகின்றோம் என்ன வந்தான்’ என்று தஞ்சைப் பெருவுடையார் உலாவும் (70) கூறுகின்றன. மேற்கண்ட செய்திகட்கெல்லாம் எந்தவிதமான சான்றுகளும் இல்லை.பொதுமக்கள் பெருவுடையார் கோயில்மீது கொண்டுள்ள மிகுந்த ஆர்வத்தையே இக்கதைகள் காட்டுகின்றன. முதலாம் இராசராசன் (985-1014) தன் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் (1004) பெருவுடையார் கோயில் கட்டும் பணியைத் தொடங்கி இருபத்தைந்தாம் ஆட்சியாண்டில் (1010) முடித்தான். ‘பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜ ராஜீஸ்வரம்’ என்பது இராசராசன் கல்வெட்டுத் தொடர் ஆகும். ‘யாண்டு இருபத்தைஞ்சாவது நாள் இருநூற்றெழுபத்தைஞ்சினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் ஸ்ரீ ராஜராஜீஸ்வர முடையார் ஸ்ரீவிமானத்து செம்பின் ஸ்தூபித் தறியில் வைக்கக் குடுத்த செப்புக்குடம் ஒன்று நிறை மூவாயிரத்து எண்பத்து முப்பலத்தில் கருக்கின தகடு பல பொன் ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை இரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தறு கழஞ்சு’ இராசராசனின் 25ஆம் ஆண்டு 275ஆம் நாள் விமானத்தில் வைக்கச் செப்புக்குடம் அளித்ததால் அன்றே கோயில் பணி முடிந்து குடமுழுக்குச் செய்த நாளாக இருக்கலாம். குடந்தை அறிஞர் என். சேதுராமன் அவர்கள் அந்நாள் 22. 4. 1110 என்று கணித்துள்ளார்கள். கோயிலைக் கட்டிய சிற்பியருள் வீரசோழக் குஞ்சரமல்லன் ஆன ராஜராஜப் பெருந்தச்சன், நித்தவிநோதப் பெருந்தச்சன், கண்டராதித்தப் பெருந்தச்சன் என்பவர் சிலர். முதல் வாயில் ‘கேரளாந்தகன் திருவாயில், இரண்டாவது வாயில் ’இராசராசன் திருவாயில் மூன்றாவது வாயில் கருவறைக்குப் பக்கவாட்டில் வடபுறம் அமைந்துள்ள ’திரு அணுக்கன் திருவாயில் என்பவைகளாகும். விமானத்தில் தெற்கு வாயில் ’விக்ரமன் திருவாசல்’ எனப்பட்டது. விக்ரமன் என்பது முதல் இராசேந்திரன் பெயராகும். கேரளாந்தகன் வாயிலுக்குத் தோரணவாயில் என்றும். இராசராசன் வாயிலுக்குத் திருமாளிகைவாயில் என்றும் பெயர் வழங்கிற்று. பெருவுடையார் கோயில் மாடக்கோயில் வகையைச் சேர்ந்தது. விமானம் மேரு வகை விமானம் ஆகும். இராசராசன் காலத்தில் முன் இரு வாயில்கள். விமானம். சண்டிகேசுவரர் கோயில். மேலைத் திருச்சுற்றில் உள்ள பரிவார ஆலயத்துப் பிள்ளையார், சேனைத் தலைவன் கிருஷ்ணன் ராமனான. மும்முடி சோழப் பிரம்மராயன் எடுத்த திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகையில் இந்திரன், அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலிய அட்டதிக்குப் பாலகர்கட்குக் கோயில்கள் ஆகியவை மட்டுமே இருந்தன. அட்ட பரிவார தேவதைகட்கும் கோயில்கள் இருந்தன என்று அறிஞர். எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் கூறுகிறார். சூர்யன், சப்தமாதர், கணபதி, சுப்ரமணியர். ஜேஷ்டாதேவி, சந்திரன், சண்டேசுவரர், பைரவர் ஆகியோர் அட்ட பரிவார தேவதைகள் ஆவர். அண்மையில் சிவகங்கைப் பூங்காவில் பெரிய ஜேஸ்டாதேவி சிலை கிடைத்திருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது. திருக்கோயில் 241. 51 மீட்டர் (793 அடி) நீளமும், 125. 218 மீட்டர் 397 அடி) அகலமுமுடையது. உள் நுழைந்தவுடன் 500 அடி நீளமும் 250 அடி அகலமும் உடைய பரந்த வெளியில் மேடையில் நந்தி அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். விமானம் 30.18 மீட்டர் சதுரத்துக்குச் சதுரம் 66 மீட்டர் உயரம் 216 அடி) 13 நிலைகளைக் கொண்டுள்ளது. விமானத்தின் உச்சியில் உள்ள பிரமரந்திரக்கல் 7.77 மீட்டர் 251/2 அடி பக்கம் கொண்ட சதுரக்கல். ஏறக்குறைய 80 டன் எடையுள்ளது. முன்பு இக்கல் ஒரே கல் என்று கருதப்பட்டது. சில கற்களின் இணைப்பு என்பது ஆய்வாளர் கருத்தாகும்). நந்தி ஒரே கல்லால் ஆனது. உயரம் 3.68 மீட்டர் 112 அடி), நீளம் 5.94 மீட்டர் (19 1/2 அடி), அகலம் 2.51 மீட்டர் 18/4 அடி) ஆகும். இது இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியாகும். (பெரிய நந்தி ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டம், இந்துப்பூர் வட்டம் இலேபாட்சி வீரபத்திர சுவாமி கோயிலில் உள்ளதாகும்) நந்தியும் மண்டபமும் தஞ்சை நாயக்கர் திருப்பணியாகும். மண்டபத்தின் எதிரேயுள்ள தூண்களில் நாயக்க மன்னர் உருவச் சிலைகள் உள்ளன. நந்தியின் எடை 25 டன் ஆகும். நந்திக்கு மிளகு அபிடேகம் செய்தால் மழை வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறே சிலமுறை பெய்துள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், தபனமண்டபம், நர்த்தன மண்டபம், வாத்ய மண்டபம் என ஆறு பகுதிகள் கோயிலில் உள்ளன. கோயிலில் உள்ள துவாரபாலகர்கள் 5.48 மீட்டர் 118 அடி) உயரமும், 2.5 மீட்டர் 18 அடி) அகலமும் ஆகும். துவார பாலகர்களின் கால்களில் ஒரு பாம்பு யானையை விழுங்குவது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. துவாரபாலகர்கள் மிகமிகப் பெரியவர்கள் என்பதைக் காட்ட சிற்பி அந்த உத்தியைக் கையாண்டுள்ளான். இலிங்கம் 4.32 மீட்டர் உயரம் உள்ளதாகும். இலிங்கம் நர்மதை நதி தீரத்திலிருந்து கொண்டுவரப்பட்டது என்பர். கருவறையில் செம்புத் திருவுருவில் போகசக்தி அம்மன் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இராசராசன் பெருவுடையார் கோயிலுக்கும் 41,559 கழஞ்சு பொன்னையும். 50,650 கழஞ்சு வெள்ளியையும், 10,200 பொற்காசு மதிப்புள்ள அணிக்கலன்களையும் அளித்துள்ளான். ஏறக்குறைய அவற்றின் இன்றைய மதிப்பு 8 கோடி ரூபாயாகும்! கோயில் வழிபாடு. நாள் பூசைக்காகப் பல ஊர்களும், பல ஊர்களில் உள்ள நிலங்களும் கொடையாக அளிக்கப்பட்டன. சுமார் 1,20,000 கல நெல் வரக்கூடிய நிலங்களை இராசராசன் அளித்தான். இலங்கையிலும் பெரிய கோயிலுக்குரிய நிலங்கள் இருந்தன. தஞ்சைக் கோயிலார் தங்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்தின் சொந்தத்தையோ பயிரிடும் உரிமைகளையோ பெறவில்லை. நிர்ணயிக்கப்பட்ட கடமை வருவாயை மட்டும் பெற்றனர். இதைக் கல்வெட்டு ‘இறை கட்டின நிலத்தால் காணிக் கடனாக வந்த நெல்’ என்று குறிப்பிடுகிறது. கோயிலில் திருவிளக்கு எரிக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் அளிக்கப்பட்டன. ஒரு விளக்குக்கு நாள்தோறும் ஒரு உழக்கு நெய் அளிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்கு ஆடுகளானால் 96, பசுக்களானால் 48, எருமைகளானால் 16 அளிக்க வேண்டும் என்றும் அளவு நிர்ணயிக்கப்பட்டது. இவ்வகையில் பெரிய கோயிலில் சுமார் 10,000 கால்நடைகள் இருந்தன. 400 பெண்கள் தளிச்சேரிப் பெண்டுகளாகப் பணிபுரிந்தனர். அவர்கட்குக் கோயிலின் வடக்கிலும், தெற்கிலும், பின்புறமும் தனித்தனியாக வீடுகள் அளிக்கப்பட்டிருந்தன. 48 பிடாரர்கள் (ஓதுவார்கள்) திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் பணியில் இருந்தனர். அவர்கட்கு உடுக்கையும் கொட்டிமத்தளமும் வாசிக்கப்பட்டது. கோயிலில் நட்டவம் செய்வார், கனபாடி, தமிழ்-ஆரியம் பாடுவார். பக்கவாத்யர். காந்தர்வர், திருவாய்க்கேள்வி, கணக்கு, உவைச்சர், விளக்குடையார், திருமடைப்பள்ளி, திருபள்ளித் தொங்கல் உட்படுவார். நாயகம் செய்வார். நீர் தெளியான், வண்ணத்தார், காவிதிமை செய்வார், கோலினமை செய்வார், நாவிசம் செய்வார், கன்னான், தச்சு, கண்காணி நாட்டாமை முதலிய பற்பல பணியாளர்கள் இருந்தனர். 44 வகையான பணிகட்கு 985 பேர் இராசராசன் காலத்தில் கோயிலில் பணி செய்தனர் அவர்களில் சோனகன் சாவூர் பரஞ்சோதி என்ற இசுலாமியரும் ஒருவராவார். இராசராசனின் சமயப் பொறையை இது காட்டுகிறது. பெரியகோயில் நிருவாகத்தைக் கவனித்துவந்தவன் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளான். பூசைகளைக் கவனித்து மேற்பார்வை செய்துவந்தவர் சர்வசிவ பண்டித சைவாச்சாரியார் என்பவர். விமானத்தின் வடபுறம் ஒரு மேனாட்டவர் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இராசராசன் காலத்துச் சோனகன் சாவூர் என்றும், 13ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த யாத்ரீகர் மார்க்கோபோலோ என்றும், இரகுநாத நாயக்கன் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ரோலண்ட் கிரேப் என்ற டேனிஷ் நாட்டவர் என்றும் பல கருத்துக்கள் உள்ளன. கீழே இரண்டு சுவர்கள் அமைக்கப்பட்டு அதன்மீது உயரமாக விமானம் எழுப்பப்பட்டுள்ளது. இரு சுவர்களின் இடைவெளியில் இரு அடுக்குகளில் நாம் நடந்து செல்லலாம். ஒன்றில் நாட்டியக் கரணச் சிற்பங்களும், மற்றொன்றில் ஓவியங்களும் உள்ளன. சோழர்கால ஓவியத்தின் மீது தஞ்சை நாயக்கர் தம் ஓவியங்களை வரைந்துவிட்டனர். 1931ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.கே. கோவிந்தசாமி அவர்கள் சோழர்கால ஓவியத்தைக் கண்டுபிடித்தார். மத்தியத் தொல்லியல் துறையினர் மிகவும் சிறப்பாக நாயக்கர் கால ஓவியத்தை அகற்றிச் சோழர்கால ஓவியங்களை வெளிப்படுத்திவருகின்றனர். சோழர்கால ஓவியங்களில் தட்சிணாமூர்த்தி, பைரவர், நடராசர் ஆனந்த நடனம், சுந்தரர் வரலாறு, இராசராசனும் மூன்று மனைவிமார்களும், இராசராசனும் கருவூர்த் தேவரும், திரிபுராந்தகர், இராவணன் கைலையைப் பெயர்த்தல் ஆகியன போன்ற பல காட்சிகள் உள்ளன. நாயக்கர் ஓவியங்களில் சிறந்தவை பாற்கடல் கடைவது. கண்ணப்ப நாயனார் ஆகிய காட்சிகளாகும். யுனெஸ்கோ நிறுவனத்தினர் சிறப்புமிக்க உலக மரபுச் சின்னங்களில் அறிவித்துள்ளனர். இதன் ஒன்றாகப் பெருவுடையார் கோயிலை பாதுகாப்புக்கும் உதவியுள்ளனர். தஞ்சைப் பெரியகோயிலின் உள்ளே அமைந்துள்ள அம்மன் கோயில், முருகன் கோயில், விநாயகர் கோயில், கருவூர்த் தேவர் கோயில், வராகி கோயில் ஆகியவை பிற்காலத்திய திருப்பணிகள். விசயநகர அரசர், நாயக்கர், மராட்டியர், பொதுமக்கள் திருப்பணிகளாகும். கோயிலைக் கட்டிக் காப்பதில் மத்தியத் தொல்லியல் துறையின் சென்னை வட்டம், தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை, மராட்டிய மூத்த இளவரசரின் அரண்மனை தேவஸ்தானம் ஆகிய மூன்று நிறுவனங்களும் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றன. கோயிலைப் பழுதுபார்ப்பதிலும், சுற்றுப்புறத்தை அழகுபடுத்துவதிலும் மத்தியத் தொல்லியல் துறையினர் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்துவருகின்றனர். சாரப் பள்ளம் தஞ்சாவூரில் சாரப்பள்ளம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்தது மண் எடுத்து சாரம் அமைத்துத்தான் தஞ்சை விமானத்தில் மூடுகல், மேலே இழுத்துச் செல்லப்பட்டதாகச் செவிவழிக் கதை வழங்குகிறது. அத்தகையதொரு சாரத்தில் எச்சம் தற்போதும் உள்ளது. சாரப்பள்ளத்திலிருந்தல்ல. கோயிலின் வடமேற்குப் பக்கத்தில் ரெட்டிப்பாளையம் என்ற இடத்திலிருந்து தொடங்குகின்றது. தற்போது இருப்புப்பாதையும், கல்லணைக் கால்வாயும் சந்திக்கும் இடத்திலிருந்து இதன் எச்சங்கள் காணப்படுகின்றன. வளைவாக அமைந்துள்ளது, டிரபீசியம் வடிவில் சரிவான பாதை போல உள்ளது. மேல் அகலம் சுமார் 60 அடிக்கு மேல் இருக்கும். கோயிலை நோக்கி உயர்ந்துகொண்டே செல்கிறது. மேல் பாதை கெட்டிச் சரளையால் ஆனது. இது மனிதனால் அமைக்கப்பட்ட கரை என்பது பார்த்தாலே விளங்கும். இது கோயில் முகடு வரை செல்லும் சாரமாக இல்லாமல் போனாலும், இதற்கு ஒரு சாலையின் மதிப்பு உண்டு. பண்டைத் தமிழகத்தின் சாலை எதுவும் கிடைக்காத நிலையில் இது ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய கட்டுமானம் ஆகும். தற்போது புதிதாக வீடு கட்டுவோர் இந்தக் கரையிலிருந்து மண் எடுத்துச் செல்கின்றனர். அடுத்த தலைமுறை வரை தங்காது. (தகவல் கொடுமுடி சண்முகம் பிற சைவக் கோயில்கள் பூக்காரத் தெரு சுப்பிரமணியர் கோயில், வெட்டுக்காரத் தெரு காட்டுக் கோயில், விஜய மண்டபம் தியாகராசர் கோயில், ராஜப்பா நகர் செங்கமல நாச்சியம்மன் கோயில், கீழவீதி மாரியம்மன் கோயில், சாமந்தான் குளம் லோகநாதேசுவரர் கோயில், பஜனசாலை விட்டோபா கோயில் மணிகர்ணிகேசுவரர் கோயில், வெள்ளைப் பிள்ளையார் கோயில், வடவாற்றின் தென்கரை நாகநாத சுவாமி கோயில், குறிச்சித்தெரு முருகன் கோயில், தெற்கு வீதி பிசுவநாதர் கோயில், தெற்கு வீதி. பாஞ்சாள விசுவநாதர் கோயில் மேற்கு வீதி விசுவநாதர் கோயில், அய்யங்குளம் விசுவநாதர் கோயில், தெற்கு வீதி காளியம்மன் கோயில், எல்லையம்மன் கோயில், தொப்பரங்கட்டிப் பிள்ளையார் கோயில் சங்கர நாராயணர் கோயில், கோடியம்மன் கோயில், மேற்கு வீதி கொங்கணேசுவரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், பங்காரு காமாட்சியம்மன் கோயில் மேலக்கோட்டைவாசல் குமாரசாமி கோயில், மேலவாசல் காளியம்மன் கோயில், இரத்தினகிரீசுவரர் கோயில், வடக்கு வாசல் முருகன் கோயில், சிதானந்தீசுவரர் கோயில் என்பனவாம். வைணவக் கோயில்கள் சிவராயர் தோட்டம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கீழவீதி வரதராசப் பெருமாள் கோயில், கீழ நரசிங்கப் பெருமாள் கோயில். கோதண்டராமர் கோயில், தெற்கு வீதி வெங்கடேசப் பெருமாள் கோயில். பஜார் பட்டாபி ராமசாமி கோயில், மேற்கு வீதி விஜய கோதண்ட ராமசாமி கோயில், மேற்கு வீதி நவநீத கிருஷ்ணன் கோயில், மூலை அனுமார் கோயில் இராஜகோபாலசுவாமி கோயில், நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் என்பனவாம். சமணக் கோயில்கள் கரந்தையில் சமண தீர்த்தங்கரருள் முதல் தீர்த்தங்கரரான ரிஷப தேவருக்குக் கோயில் உள்ளது. அச் சமணப் பள்ளி, ஆதீசுவரர் கோயில், என்றும் அழைக்கப்படும் சுமார் 400 ஆண்டுகட்கு முன்பு ஏற்பட்ட கோயில். 24 தீர்த்தங்கரர் சிற்பங்களும் தொகுதியாக உள்ளன. சந்திரப்பிரப தீர்த்தங்கரர், அனந்த தீர்த்தங்கரர், பத்மபிரப தீர்த்தங்கரர், பார்சுவநாதர், மகாவீரர் ஆகியோருக்குத் தனிச் சிற்பங்களும் உள்ளன. கரந்தையைத் தவிர தஞ்சை ஜவுளிச்செட்டித் தெருவிலும் சில சமணக் குடும்பங்கள் உள்ளன. சமணக் கோயிலுக்கு ’அறம் கூறும் அன்னை இராஜலட்சுமி அம்மையார் அவர்கள் அறங்காவலராக உள்ளார்கள். அரிய சமண நூல்களைத் தொகுத்து வைத்துள்ள அவர்கள் சமணத் தத்துவத்தில் தேர்ந்த ஞானம் உடையவர்கள். கரந்தை சமணக் கோயிலில் சில கல்வெட்டுக்களும் உள்ளன. பௌத்தம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் கருவறையின் தென்புற வாயிலின் கீழ் போதிமரத்தடியில் அமர்ந்துள்ள புத்தர் உருவச்சிலை உள்ளது. அருகில் சீடர்கள் பலர் உள்ளனர். கேரளாந்தகன் வாயிலிலும் புத்தர் உருவம் உள்ளது. இசுலாம் தஞ்சை மண்ணில் இசுலாம் தொன்றுதொட்டுக் காலூன்றியிருந்தது. முதலாம் இராசராசன் காலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குக் கொடை அளித்த பெருமக்களில் தஞ்சாவூர்ப் புறம்படி இராஜவித்யாதரப் பெருந்தெருவில் வசித்த சோனகன்சாவூர் பரஞ்சோதி என்பவர் ஒருவர் குறிக்கப்பெறுகிறார். அவர் இசுலாமியரே ஆவார். ‘ஜாஃபர்’ என்ற பெயரே சாவூர் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இராசராசன் காலத்தில் பெருவுடையார் கோயிலுக்கு அளிக்கப்பட்ட அணிகலன்களில் சோனகச்சிடுக்கு, சோனகச் சிடுக்கின் கூடு என்பன குறிக்கப்படுகின்றன. அவை இசுலாமியர் அணிகலன்களாகும். இராசராசன் காலத்தில் நாகப்பட்டினம் அருகேயுள்ள சன்னமங்கலத்தில் ‘துருக்கன் அகமது’ என்பார் ’இருந்ததாக ஆனைமங்கலம் செப்பேடு பெரிய லெயிடன் செப்பேடு கூறுகிறது. இசுலாமியர் தஞ்சையில் ஐந்து வகைக் குழுவாகக் குடியேறினர். அவை வைத்தியப் பட்டறை, அத்தர் பட்டறை. வளையல் பட்டறை. கயித்துக்காரப் பட்டறை, மீன் பட்டறை என்பனவாகும். பட்டறை என்பதைக் குழு எனலாம். அவை முறையே எல்லையம்மன் கோயில். சின்னய்யாபிள்ளை தெரு. ஐயன்கடைத் தெரு. மேல அலங்கம், மகர் நோன்புச் சாவடி ஆகிய இடங்களில் முதலில் குடியேறின என்பர். தஞ்சை நாயக்கரில் முதல் மன்னன் செவ்வப்ப நாயக்கன் அதிராம் பட்டினத்தில் ஹஜரத் ஹாஜா அலாவுதீன் ஜிஸ்திய்யி வலியுல்லாஹ் தர்கா கட்ட இடமும் அளித்து தர்காவும் கட்டித்தந்தார். தர்காவில் உள்ள செப்பேடு ‘ராமானுஜாய நம’ என்று தொடங்குவது சிறப்புக்குரியது. செவ்வப்ப நாயக்கன் 1550ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் நாள் தஞ்சை இரயிலடி அருகில் உள்ள சமுகப்ரு பள்ளிவாசல் பக்கீர்களுக்கு நாஞ்சிக்கோட்டை மண்ணையார்களைக் கொண்டு 7 வேலி நிலம் அளிக்குமாறு செய்தார். தஞ்சையில் பல இசுலாமியப் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் சிலர் யூனானி மருத்துவமுறையை இலக்கியங்களாகப் பாடியுள்ளனர். பள்ளிவாசல்கள் கீழ அலங்கம், விசிறிக்காரத் தெரு, கந்தப்பொடிக்காரத் தெரு அத்தர் மகலா பள்ளிவாசல்), பாம்பாட்டித் தெரு, சையத் அலி பாஷா தெரு. மகர்நோன்புச் சாவடி, மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோயில் தெரு, மேல அலங்கம் ( ஹாஜியார் பள்ளிவாசல்), செவ்வப்ப நாயக்கன் வாரி, வடக்கு வீதி, வடக்கு வாசல் யாக்கூபியா பள்ளிவாசல் இரயில்வே காலணி ஈத்கா பள்ளிவாசல், இராஜராஜன் வளாகம் மன்சூர் பள்ளிவாசல்), ஆத்துப் பாலம் (ஜும்மா பள்ளிவாசல், பர்மா காலனி (ஜாமியா பள்ளிவாசல், அல்மஜீதுல் ஹிதாய பள்ளிவாசல்), நாஞ்சிக் கோட்டை சாலை ( நூர் பள்ளிவாசல்), மருத்துவக் கல்லூரிச் சாலை மஜித்தே ரஹ்மானி பள்ளிவாசல். தர்காக்கள் இராசராசன் வளாகம் ஷம்ஸ் மன்சூர் தர்கா). காந்திஜி ரோடு இரட்டை மஸ்தான் தர்கா). கீழவாசல் (சாக்காஃப் சாகிப் தர்கா), ஆடக்காரத் தெரு யீர் முகமது ஷா காதிர் தர்கா), பழைய மாரியம்மன் கோயில் தெரு சூஃபியா காதிர் தர்கா), (ஹஜ்ரத் ஸோபீஸர் மஸித் அவுலியா), ஆட்டு மந்தைத் தெரு ஹஜ்ரத் சையது அலிபாஷா தர்கா), சின்னையா பிள்ளைத் தெரு (ஹஜ்ரத் சந்தா ஹுசேனி தர்கா), பாம்பாட்டித் தெரு (ஹஜ்ரத் கமால்பாஷா தெரு). மாரியம்மன் கோயில் தெரு (ஹஜ்ரத் அசர்புஷா தர்கா), வடக்கு வீதி (ஹஜ்ரத் ஸர்வர் ஹுசேனி தர்கா), வடக்கு வாசல் (ஹஜ்ரத் படே ஹுசேனி தர்கா), வ.உ.சி.நகர் (பைராம்கான்ஷா அவுலியா தர்கா), மருத்துவக் கல்லூரி வளாகம் ஜமாலா கமால்ஷாஹ் தர்கா). நாஞ்சிக்கோட்டை ரோடு தாடுகாம்பட்டி (ஹஜ்ரத் சையது சாகிப் அவுலியா தர்கா. கிறித்தவ தேவாலயங்கள் பெர்த்தலோமியஸ் சீகன்பால்கு என்னும் கிறித்தவ மதகுரு 1706இல் தரங்கம்பாடிக்கு வந்த பின்னரே தஞ்சைப் பகுதியில் புராடெஸ்டண்ட் கிறித்தவம் பரவியது என்பர். நிருவாகிகளாகவும், படைவீரர்களாகவும் எண்ணற்ற கிறித்தவர்கள் தஞ்சை வந்தனர். அவர்களில் பலர் மரணமடைந்து இங்கேயே அடக்கமாகியுள்ளனர். 17, 18, 19ஆம் நூற்றாண்டுக் கல்லறைகள் பல இங்குள்ளன. இங்கு கிறித்தவர்கள் பல தேவாலயங்களைக் கட்டியுள்ளனர். தென்னிந்தியத் திருச்சபை ஸ்வார்ட்ஸ் பாதிரியார் முதலில் கட்டியது மகர்நோன்புச் சாவடியில் உள்ள பார்க சர்ச் எனப்படும் கருங்கல் கட்டிடமாகும். அது சிலுவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 1779 இல் சிவகங்கைக் கோட்டையினுள் ஸ்வார்ட்ஸ் துளசா மன்னர் உதவியுடன் ஒரு தேவாலயம் கட்டினார். அது கிறிஸ்து நாதர் ஆலயம் எனப்படுகிறது. மகர்நோன்புச் சாவடியில் புனித பீட்டர் தேவாலயம் உள்ளது. தஞ்சை அருகேயுள்ள வேதியர்புரத்தில் சில கிறித்தவ நிறுவனங்கள் தஞ்சையுடன் தொடர்பு கொண்டிருந்தன. ஸ்வார்ட்ஸ் பாதிரியார் ஆங்கிலேயர்கட்கும் திப்புவிற்கும் சமரசம் ஏற்படுத்த முயன்றார். ஸ்வார்ட்ஸ் குறிப்புக்களில் தஞ்சை பற்றிய பல குறிப்புக்கள் உள்ளன. தஞ்சை அரண்மனையில் பல கிறித்தவ அதிகாரிகள் பணிபுரிந்தனர். டேவிட் பிள்ளை என்பவர் தஞ்சை அரண்மனையில் அமைச்சராக விளங்கினார். இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபை ஈசுவரி நகர் அருகே தூய லூக்கா தேவாலயமும், மகர்நோன்புச் சாவடியில் நல்ல மேய்ப்பன் தேவாலயமும் இச் சபைக்குச் சேர்ந்தவை. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை கிறித்தவப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தூய தேற்றரவாளர் தேவாலயம். கத்தோலிக்க தேவாலயங்கள் புனித வியாகுலமாதா ஆலயம், திரு இருதய மறைமாவட்டப் பேராலயம், புனித சூசையப்பர் ஆலயம், புனித செபஸ்தியார் ஆலயம், புனித அருளானந்தர் ஆலயம், புனித அந்தோணியார் ஆலயம் (வடக்கு வாசல்) புனித அந்தோணியார் ஆலயம் (கல்லறை மேட்டுத் தெரு), புனித சவேரியர் ஆலயம், தூய அலங்கார மாதா ஆலயம், புனித சவேரியர் ஆலயம் (கரந்தை), புனித லூர்து மாதா ஆலயம். காணத்தக்க இடங்கள் கோட்டை தஞ்சையில் கோட்டை பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. திருமங்கையாழ்வார் பாடலில் ‘வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை’ என்றும், கருவூர்த் தேவர் திருவிசைப்பாவில், ‘மறிதிரை வடவாற்று இடுபுனல் மதகில்வாழ் முதலை எற்றுநீர்க் கிடங்கில் இஞ்சிசூழ்தஞ்சை இராசராசேச்சரம்’ என்றும் கூறப்படுவதால் கோட்டை இருந்தமையை அறிகின்றோம். வடவாற்று நீர் தஞ்சைக் கோட்டை அகழிக்கு வந்த குறிப்பைக் கருவூர்த் தேவர் சுட்டிக் கூறுகிறார். பெருவுடையார் கோயிலைச் சூழ்ந்துள்ள கோட்டை சிவகங்கைக் கோட்டை அல்லது சின்னக் கோட்டை எனப்படும். செவ்வப்ப நாயக்கன் கட்டியது. அதன் பரப்பளவு 36 ஏக்கர் என்பர். 1779 இல் ஸ்வார்ட்ஸ் கட்டிய கிறிஸ்து நாதர் கோயில் இக்கோட்டைக்குள் உள்ளது. அங்கு வாழ்ந்தவர்கள் சின்னக்கோட்டை கிறித்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். துளசா காலத்தில் அவர்கட்கு மகர்நோன்புச் சிவகங்கைக் குளமும் சாவடியில் இடம் அளிக்கப்பட்டது.இக்கோட்டைக்குள் அடங்கும். தஞ்சை நகரக் கோட்டை மிகப் பெரியது. 530 ஏக்கர் பரப்புடையது. இக்கோட்டையைக் கருடக் கோட்டை என்று அழைப்பர். கருடன் வடிவில் அமைந்ததால் இப்பெயர் பெற்றது. இப்பெயர் இருப்பதால் இக் கோட்டைக்குள் யாரும் பாம்பு கடித்தால் மரணம் அடைவதில்லை என்று கூறுவர். கோட்டைக்கு 8 காவல் கோபுரங்கள் உள்ளன. இராசராசன் காலத்தில் ‘உள்ளாலை’ என்று கூறப்பட்ட தஞ்சைப் பகுதி கோட்டைக்குள்பட்ட பகுதியாக இருந்தது. சின்னக் கோட்டையின் வடகிழக்கு மூலையும், பெரிய கோட்டையின் தென்மேற்கு மூலையும் திறந்தவெளியாக இணைந்துள்ளது. அரண்மனை கருவூர்த் தேவர். ‘இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை’ என்றும், அருணகிரியார் ‘பொன்மாளிகைத் தஞ்சை மாநகர்’ என்றும் பாடியுள்ளனர். மாட மாளிகைகள் இருந்தமை அவர்கள் பாடலால் பெறப்படுகிறது. சோழர்கால அரண்மனை எங்கிருந்தது என்பது குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. செக்கடிமேடு, சீனிவாசபுரம், அப்பாசாமி வாண்டையார் காலனியை அடுத்துள்ள பகுதியாக இருக்கக்கூடும் என்று இவர் கருதுகின்றனர். இப்போதைய அரண்மனைப் பகுதியாகவும் இருக்கலாம். முறையான அகழ்வாராய்ச்சி நடத்தினால் உண்மை புலப்படும். இப்போதைய அரண்மனையின் பெரும்பகுதி செவ்வப்ப நாயக்கரால் கட்டத்தொடங்கி இரகுநாத நாயக்கர், விசயராகவ நாயக்கர் ஆகியோரால் முடிக்கப்பட்டிருக்கலாம். இரகுநாதன் காலத்தில் ‘விஜய விலாசம்’ என்றும். ‘இரகுநாத விலாசம்’ என்றும், விசயராகவன் காலத்தில் "விஜயராகவ விலாசம்’ என்றும் அரண்மனை அழைக்கப்பட்டுள்ளது. சாகித்ய ரத்நாகரம், ரகுநாத நாயக்காப்யுதயமு. மன்னாருதாச விலாசம் போன்ற நூல்களில் அரண்மனை பற்றிக் கூறப்பட்டுள்ளன. ஆயுதமகாலும், 7 மாடிகளுடன் 34.8 மீட்டர் உயரமுடைய மணிமண்டபமும் வெளியேயிருந்து பார்ததால் தெரியும் வண்ணம் உயரமாக உள்ளது. கீழவீதியில் 100 அடி உயரமும் 7 மாடியும் கொண்ட சதிர்மாடியும், பூசா மகாலும், பில்லி மகாலும் 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மராட்டியர் கட்டியவை. தர்பார் ஹால் நாயக்கர் காலத்தில் கட்டி மராட்டியர் புதுப்பித்ததாகும். இரண்டாம் சரபோசியின் மனைவிமார் தங்கத் திருவையாற்றில் கல்யாணமகாலும், சிவாஜியின் மனைவிமார்கள் (42 பேர்) தங்கத் தெற்கு வீதியில் மங்கள விலாசும் சிறந்த அரண்மனைகளாகத் திகழ்ந்தன. தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் உலகில் உள்ள சிறப்பும் பெருமையும் மிக்க நிறுவனங்களில் ஒன்று தஞ்சை சரசுவதி மகால் நூலகம். சோழர் காலத்துச் ‘சரசுவதி பண்டாரம்’ என விளங்கிய நூலகம் தஞ்சை நாயக்கர் காலத்தும் தொடர்ந்து விளங்கி மராட்டியர் காலத்தில் விரிந்து பெருகியது. இதனைப் பாதுகாத்து வளர்த்த பெருமை தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோசிக்கு உண்டு (1798 - 1832). அவரே இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல மேனாட்டு மொழிகளிலும் உள்ள நூல்களை 4500 க்கு மேல் தொகுத்துள்ளார். பலவற்றில் அவர் கையெழுத்துக்கள் உள்ளன. காசி யாத்திரை மேற்கொண்ட சரபோஜி அங்கிருந்து பல வடமொழி ஏடுகளைக் கொண்டு வந்தார். இங்குள்ள சுவடிகள் பலவற்றில் ஓவியங்கள் உள்ளன. காணற்கரிய அவை உலகில் வேறெங்கும் இல்லாதவை. மோடி ஆவணங்களில் நூலக வளர்ச்சி, நடைமுறை பற்றிப் பல செய்திகள் உள்ளன. இங்கு ஓலையிலும், காகிதத்திலும் எழுதப்பட்ட 46667 சுவடிகள் உள்ளன. அவற்றுள் 39300 வடமொழியைச் சேர்ந்தவை. தமிழ்ச் சுவடிகள் 3490 உள்ளன. மராத்திச் சுவடிகள் 3075. தெலுங்குச் சுவடிகள் 802. பல இலக்கியம், இலக்கணம், நாடகம் தொடர்பானவை. கஜ, அசுவ சாஸ்திரச் சுவடிகள் குறிப்பிடத்தக்கவை, மருத்துவச் சுவடிகள் பல உள்ளன. சரசுவதி மகாலில் பணிபுரியும் அறிஞர்களைக் கொண்டும். பிற அறிஞர்களைக் கொண்டும் இதுவரை தமிழ், வடமொழி, மராத்தி, தெலுங்கு. ஆங்கில மொழிகளில் 354 வெளியீடுகள் வந்துள்ளன. தமிழ் 175. 1939 முதல் பருவ இதழ் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இந்நூலகத்தில் மராத்தி மொழியில் மோடி எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆவணங்கள் 850 கட்டுக்கள் உள்ளன. அவற்றில் 255,000 ஆவணங்கள் உள்ளன. சொந்த அச்சகம் நூலகத்திற்கு உள்ளது. 41 தொகுதிகள் சுவடி அட்டவணைகள் வெளிவந்துள்ளன. அருங்காட்சியகமும், நுண்படப் பிரிவும் உள்ளன. நூலகப் பணியாளர்கள் ஆய்வாளர்கட்குச் சிறப்புடன் உதவி வருகின்றனர் ஆங்கிலேயர்கள் தம் சொத்தாக்க நினைத்த இந்த நூலகத்தை நார்ட்டன் துரையைக் கொண்டு போராடி மீட்டவர் சிவாஜி மன்னரின் மனைவி காமாட்சியம்பா பாய் ஆவார். மராட்டிய மன்னர் குடும்பச் சொத்தாக இருந்த இந்நூலகம் 5.101918 முதல் பொது நூலகம் ஆயிற்று. நூலகத்திற்குச் சரபோசி பெயரும் சூட்டப்பட்டது. 1983 முதல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைய- மாநில உதவியுடன் சிறப்பாக இயங்கிவரும் இந்நூலகத்தில் பலமொழிகளில் 42,600 நூல்களைக் கொண்ட அரிய நூலகம் உள்ளது. நவீன வசதிகளுடன் பழஞ்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் சரபோசி பிறந்தநாள் விழாவைச் சிறப்புடன் கொண்டாடுகின்றனர். காசிக்குச் சென்றால் கங்கையில் நீராடுவது எவ்வளவு முக்கியதோ அவ்வளவு முக்கியம் தஞ்சை வந்தால் சரசுவதி மகாலைப் பார்ப்பதாகும். என்சைக்ளோபீடியா ஆஃப் பிரிட்டானிகா இந்நூலகம் பற்றி The most remarkable library in India’ என்று குறிப்பிட்டுள்ளது. பர்னர், ஃபூலர் முதலிய மேனாட்டறிஞர்கள் இந்நூல் நிலையத்தைப் பலவாறு புகழ்ந்துள்ளனர். - கலைக்கூடம் சோழமண்டலத்தின் கலைப்பெட்டகமாகத் திகழ்வது தஞ்சைக் கலைக்கூடம். கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான அரிய கவின்மிகு சிற்பங்கள் இங்கு உள்ளன. ஒருமுறை கலைக்கூடத்தைச் சுற்றிப் பார்த்தால் சோழநாடு முழுவதையும் சுற்றிப்பார்த்த பயனை அடையலாம். இக் கலைக்கூடம் தோன்றியதே ஒரு சுவையான நிகழ்ச்சி. 1951 ஆம் ஆண்டு கரந்தையில் வடவாற்றின் வடகரையில் கவனிப்பாரற்றுக் கிடந்த பிரம்மாவின் சிலையொன்றை அறிஞர் சிவராமமூர்த்தி அவர்கள் கல்கத்தா அருங்காட்சியகத்திற்குக் கொண்டுசெல்ல முயன்றார். கரந்தை மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துத் தடுத்தனர். அதைப் பார்வையிடச் சென்ற தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் திரு டி.கே. பழனியப்பன் அவர்களிடம் அச்சிலையைத் தஞ்சையிலேயே ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கக் கரந்தை மக்கள் ஒப்புக் கொண்டனர். அப் பிரம்மா சிலை அரண்மனை வளாகத்திற்கு வந்தது. கலையார்வம் மிக்க தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் முயற்சியும் இணைந்தது. அமரர் தஞ்சை மூத்த இளவரசர் இராஜாராம் ராஜா சாகேப் அவர்கள் தம் பராமரிப்பில் இருந்த கோயில்களில் இருந்த வழிபாடற்ற சிலைகளை அளித்தார். தஞ்சை மாவட்டத்தின் பல கோயில்களிலிருந்து சிலைகள் கொண்டு வரப்பட்டன. பூமிக்குள் கிடைத்த செப்புப் படிமங்களும், கற்சிலைகளும் கலைக்கூடத்தை அடைந்தன. 9.12.1951ஆம் நாள் கலைக்கூடம் தொடங்கப்பட்டது. கலைக்கூடப் பூஜா மண்டபத்தில் பிரம்மா, நர்த்தன விநாயகர், விஷ்ணு. கஜசம்காரர், திரிபுராந்தகர், துவாரபாலகர், தட்சிணாமூர்த்தி, சிவன், பார்வதி முதலியோர் சிலைகள் உள்ளன. தெற்குக் கோபுர அடிமண்டபத்தில் புத்தபிரான், சிவலிங்கம், சாக்கிய முனிவர்கள், நாராயணி, பிட்சாடனர், ரிஷி பத்தினிகள், கங்காதரர், அர்த்த நாரீசுவரர் முதலியோர் சிலைகள் உள்ளன. நாயக்கர் கொலு மண்டபத்தில் வியத்தகு செப்புப் படிமங்கள் அழகுறக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதிகாரநந்தி, விநாயகர். திரிபுராந்தகர், பைரவகாளி, துர்க்கை, அப்பர், பிரமாதிராயர், பைரவர். ரிஷபவாகனதேவர். பார்வதி, பிட்சாடனர், கலியாணசுந்தரர், திருஞானசம்பந்தர், கண்ணப்பர், வேணுகோபாலர், ருக்மணி, சீதாராமன், விஜயராகவ நாயக்கர். சோமாஸ்கந்தர், நடராசர், மாணிக்கவாசகர் முதலியோர் செப்புப் படிமங்கள் உள்ளன. சரபோசி மன்னரின் வெண்பளிங்குச் சிற்பமும் உள்ளது. ஒவ்வொரு படிமத்திற்கும் வரிசை எண், கிடைத்த இடம், காலம், பிற சிறப்புக்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் பல செப்புப் படிமங்கள் அமெரிக்கா. ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகட்கு எடுத்துச் செல்லப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டு உலகோர் கண்டு வியந்தவை. கலைக்கூடத்தில் புகைப்பட அட்டைகள் கிடைக்கும். கட்டணத்துடன் புகைப்படமும் எடுக்கலாம். கலைக்கூடம் மிக நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. சங்கீத மகால் கலைக்கூடத்தின் எதிரில் தொன்மையான சங்கீத மகால் உள்ளது. மராட்டியர் காலக் கட்டிடக் கலையின் சின்னமாகத் திகழும் சங்கீத மகாலில் முன்பு நாட்டிய நாடகங்கள், இசையரங்குகள் நடைபெற்று வந்தன. அரிய வேலைப்பாடுகள் கொண்ட மண்டபம். ராயல் அருங்காட்சியகம் மூத்த இளவரசர் வழியினர் அரணமனை தேவஸ்தானங்களின் கோயில்களைக் கட்டிக்காத்து வருகின்றனர். பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா அவர்கள் அரண்மனையில் ராயல் அருங்காட்சியகம் ஏற்படுத்தியுள்ளார். மராட்டியர் கலைப்பொருட்களைக் காண அரிய வாய்ப்பாகும். தொல்லியல் துறை அருங்காட்சியகங்கள் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை தர்பார் மண்டபத்திலும், கலைக் கூடத்தின் உள்ளும் இரண்டு அருங்காட்சியகங்களைச் சிறப்புடன் நடத்திவருகிறது கருந்திட்டைக்குடி சுருக்கமாகக் கரந்தை என்றும், பொதுமக்களால் கரந்தட்டாங்குடி என்றும் அழைக்கப்படும் தஞ்சை நகரின் ஒரு பகுதியின் பழம்பெயர் கருந்திட்டைக்குடி என்பதாகும். கருவிட்டைக்குடி, கருவிட்டகுடி எனவும் வழங்கப் பெற்றுள்ளது. இவ்வூர் திருநாவுக்கரசர் பாடலில் குறிக்கப்பெற்ற வைப்புத் தலமாகும். நற்கொடிமேல் விடையுயர்ந்த நம்பன் செம்மங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி கருந்திட்டைக்குடி சடயக்குடி காணுங்கால் விற்குடி வேள்விக்குடி நல்வேட்டக்குடி வேதிகுடி மானிகுடி விடைவாய்க்குடி புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்றஇடர் போகுமன்றோ! (அடைவு திருத்தாண்டகம். 3) என்பது திருநாவுக்கரசர் பாடலாகும். கருந்திட்டைக்குடி தொன்மையானதோர் ஊர். தனி ஊர். ஆனால் தஞ்சையோடு நெருங்கிய தொடர்புடையது. தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர்ப் பற்று கருந்திட்டைக்குடி என்றும், தஞ்சாவூர்க் கருந்திட்டைக்குடி என்றும் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. தஞ்சையையும் கருந்திட்டைக்குடியையும் வடவாறு பிரிக்கிறது. வடவாறு பராந்தகசோழன் காலத்தில் வெட்டப்பட்டது. அதற்கு வீரசோழ வடவாறு என்றும் பெயர் உண்டு. அரியாறு, மணிமுத்தாநதி என்றும் அழைப்பர். வடவாற்றின் வடகரையில் இவ்வூர் உள்ளதெனக் கல்வெட்டுக் கூறும். இராசராசன் காலத்தில் தஞ்சைக் கோட்டையின் மும்முடிச்சோழ மதிலுக்கு வெளியேதான் கரந்தை இருந்தது. அதனால்தான் கல்வெட்டுக்களில் தஞ்சாவூர்ப் ‘புறம்படி’ கருந்திட்டைக்குடி என்று குறிக்கப்படுகிறது. கருந்திட்டைக்குடிக்குச் சுங்கந் தவிர்த்த சோழநல்லூர், குலோத்துங்க சோழநல்லூர் எனப் பிற்காலச் சோழர் காலத்தில் பெயர் வழங்கியுள்ளது. இங்கிருந்த ஒரு நந்தவனம் கங்கைகொண்டசோழன் நந்தவனம் எனப் பெயர் பெற்றிருந்தது. இன்றும் கரந்தைக் கிராமத்தின் ஒரு பகுதி ‘சுங்காந்திடல்’ என அழைக்கப்படுகிறது. விண்ணாறு, கரந்தையிலிருந்து தஞ்சைக்கு வரும்வழி அக்காலத்தி. கோடிவனமுடையான் பெருவழி என்று அழைக்கப்பட்டது. கருந்திட்டைக்குடியை ஒட்டி வடமேற்குப்புறம் காடவன் மகாதேவி ஆன விருதராச பயங்கரச் சதுர்வேதிமங்கலம் இருந்தது. பாண்டியர் ஸ்ரீவல்லபன் காலத்தில் கரந்தை, தஞ்சையில் சில பகுதிகள் சேர்ந்து ஜகதேக வீரசுவர்ணமங்கலம் என்று அழைக்கப்பட்டது. பாண்டியன் ஸ்ரீவல்லபனின் தளபதி சாமந்த நாராயணன் என்ற தொண்டைமானார் தம் பெயரால் எடுத்த சாமந்த நாராயணச் சதுர்வேத மங்கலத்தில் சாமந்த நாராயண விண்ணகர் எம்பெருமானுக்கும் அகரத்துப் பட்டர்களுக்கும் கொடையாக அளிக்கப்பட்டது. இரண்டாம் இராசாதிராசன் காலக் கல்வெட்டொன்றில் (1178) ஐம்பது கோயில் காணியுடைய குடிமக்கள் கருந்திட்டைக்குடியைத் தங்கள் காணி ஊர் என்று கூறியுள்ளனர். வசிட்டேசுவரர் கோயில் இராசராசனுக்கு முற்பட்ட சில சோழர் கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன. பராந்தகன், கண்டராதித்தன். உத்தமசோழன் காலத்துக் கொடையளிக்கப்பட்ட கோயில். கருங்குட்ட நோய் உடைய சோழன் ஒருவனுக்குச் சிவபெருமான் வேங்கை வடிவமாகத் தோன்றினார். சோழன் வேங்கையைத் துரத்தவே வேங்கை ஓடிவந்து இக்கோயில் குளத்தில் மறைந்தது. சோழன் இக்கோயில் குளத்தில் மூழ்கி எழ அவன் குட்டநோய் நீங்கியது. அச்சோழ மன்னன் இக்கோயிலைக் கட்டினான் என்பர் இச்சோழனைக் கரிகாலன் என்பர் ஆதியில் வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்குக் குபேரன் வந்து நகர் ஏற்படுத்திச் சிவனை வணங்கிக் கோயில் எடுத்தான் என்பர். அம்மூர்த்தங்கள் அழகீசர் அசலாம்பிகை எனப்பட்டன. இவ்வரலாறுகள் பிரமாண்ட புராணம், பதுமபுராணம், சூதமுனிவரின் அளகாபுரி புராணம் என்னும் சமீவன க்ஷேத்ரபுராணம், கி.வாசுதேவ நாயக்கரின் தஞ்சை மாநகரத் தலபுராணம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளன. அம்மன் பெரியநாயகி, திரிபுரசுந்தரி வசிட்டேசுவரருக்குக் கருவேல்நாதசுவாமி என்றும் பெயர் உண்டு. கல்வெட்டுக்களில் வசிட்டேசுவரர் கருந்திட்டைக்குடி மகாதேவர் என அழைக்கப்படுகிறார். முதல் இராசராசன், முதல் இராசேந்திரன். இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன் கல்வெட்டுக்களும் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் ஏழு தலங்களின் திருவிழா நடைபெறுகிறது. தஞ்சையிலும் ஒரு ’சப்த ஸ்தான விழா நடைபெறுகிறது. மராட்டிய இராணிமார்கள் தீபாம்பாபாய், இராம குமராம்பா பாய் ஆகியோர் அளித்த பல்லக்கில் பெரிய நாயகியுடன் சப்தரிஷீசுவரரும், வெட்டிவேர்ப் பல்லக்கில் அருந்ததி சமேத வசிட்டரும் வைகாசி விழாவில் கரந்தை, வெண்ணாறு, தென்குடித்திட்டை, கூடலூர். கடகடப்பை, புன்னைநல்லூர், தஞ்சை ஆகிய ஏழு தலங்களில் திருவுலா வருவது சிறப்புக்குரியதாகும். கோடிவனமுடையாள் கோயில் கரந்தையின் வடக்கே விண்ணாற்றங்கரை செல்லும் வழியில் கோடிவனமுடையாள் என்னும் கோடியம்மன் கோயில் உள்ளது. முன்பு இக்கோயில் தஞ்சையின் வடமேற்கேயுள்ள பொந்திரிபாளையத்தில் இருந்தது. வடவாயிற் செல்வியாக உள்ள கோடியம்மனைத் தஞ்சை நகரின் காவல் தெய்வம் என்பர். தஞ்சகன், தண்டகன் முதலிய அசுரர்களிடமிருந்து தஞ்சை மீட்கப்பட்டது. தாரகனை காளிதேவி வதம் செய்தாள். பராசரரும் மற்ற . முனிவர்களும் இலங்கிய வடிவுடன் நின்று காத்தருள வேண்டும் என வேண்ட அம்பிகையும் கோட்டீரவம் என்ற சடைமுடியுடைய கோடிக் காளியாகவும், சாமளை வடிவாய்ப் பச்சைக் காளியாகவும் தாரகனின் உதிரம் தன் மேல் படிந்திருந்தமையால் பவளக்காளியாகவும் கோட்டீர சாமள பிரவாள காளியாக நின்று காத்தருளுகிறாள் என்பது தஞ்சைத் தலமான்மிய வரலாறு. இக்கோயிலின் உற்வச மூர்த்திக்குத் தஞ்சை மேற்கு வீதியில் தனிக்கோயில் உள்ளது. ஆதிக்கோடிகாளி எனப்படுவதாலும், பெருவுடையார் கோயிலில் சித்திரைப் பெருவிழாவில் அஷ்டக் கொடியன்று பெருமைப்படுத்தப்படும். பழங்குடியினருக்கு இத்தேவியார் குலதெய்வம் ஆதலாலும் விசயாலயன் எழுப்பிய நிசும்பசூதனி கோயில் இக்கோயிலே என்று ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை கருதுகிறார். இக்கோயில் சோழர் கல்வெட்டுக்களில் ‘நந்தி மாகாளி கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் நந்தி வாகனம் இருப்பது சிறப்புக்குரியதாகும். முன்பு கோடியம்மன் வரலாறு பொந்திரி சாதியாரால் நடிக்கப்பட்டது. மராட்டியர் நாள் முதல் பங்குனி மாதம் 11 நாள் கொலுவும் மங்கல வாரத்தில் பவனியும் நடந்து வருகிறது. சித்திவிநாயகர் கோயில் கில்லண்ணா அப்பா மண்டபம் என்னும் மண்டபத்தில் உள்ள இக்கோயிலை எடுத்தவர் கும்பகோணம், ஆரியப்படையூர் ரகுசாமி அப்பா போன்சலே அவர்கள். அழகிய புஷ்கரணி உள்ளது. ப**டித்துறை வெங்கடேசுரர் கோயில் வடவாற்றின் வடகரைக் கோயில் முன்பு தென்கரையில் இருந்தது என்பர். தாயார் அலமேலு மங்கை. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பழைய சிவாலயம். அருகே. ஆனந்த உச்சி விநாயகர் கோயில் உள்ளது. விண்ணாற்றங்கரை தஞ்சையின் வடக்கில் கும்கோணம் வழியில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வெண்ணாற்றங்கரை. அதன் பழம் பெயர் விண்ணாற்றங்கரை என்பதாகும். பகீரதன் கங்கையை உலகிற்குக் கொண்டு வந்தது போல விண்ணன் இந்த ஆற்றை வெட்டினான் என்று சோழமண்டல சதகம் புகழுகிறது (93). ’கண்ணார் உலகில் பகீரதனும் கண்டு கொணர்ந்தான் கங்கையென்பார் விண்ணாறு எளிதோ ஆறுதந்த வேளாண் குரிசில் விண்ணன் அன்றோ’ என்பது சோழமண்டல சதகப் பாடலாகும். விண்ணனை, ‘முழங்கு கடல்தானை மூரிக் கடற்படை முறித்தார்மன்னர் வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல்விண்ணன்’ என்று யாப்பருங்கலவிருத்தி மேற்கோள் பாடல் கூறுகிறது 167. இவன் நாகமணியைப் புலவர்க்கு ஈந்தவன் என்று ஒரு தனிப்பாடல் புகழுகிறது. ‘கூர்ந்த வறுமையிடைக் கோள் அரவம் ஈன்றமணி சார்ந்த புலவன் தனக்களித்தான்-வார்ந்ததரு மேலைவிண்ணின் மண்ணில் விளங்கும் புகழ்படைத்த சாலைவிண்ண னுக்குஇணையார் தாம்’ என்பது பழம்பாடல். இவன் வெட்டிவைத்த ஏரியால் ஓர் ஊர்ப்பெயர் வழங்குகிறது. ‘பாண்டிய குலாசனி வளநாட்டு ஏரியூர் நாட்டு விண்ணநேரியான மும்முடிச் சோழநல்லூர்’ என்பது தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டின் ஒரு பகுதியாகும். இங்குள்ள திருமால் ஆலயங்கள் பற்றியும், அவற்றைப் பற்றித் திவ்வியப் பிரபந்தக் குறிப்புக்கள் உள்ளவை பற்றியும் முன்பே கூறப்பட்டுள்ளது. தஞ்சபுரீசுவரர்-ஆனந்தவல்லியம்மன் கோயில் சோழர் காலத்திற்கு முன் குபேரன் பூசித்த பழங்கோயில், தஞ்சை நகரின் தலபுராணத்தில் காளிதேவி தாரகாசுரனைக் கொன்றபின் முனிவர் முதலானவர்கட்குச் சூலத்துடன் ஆனந்தத்தை அளித்த திருக்கோலம் ஆனந்தவல்லி. இறைவன் தஞ்சைத் தலத்திற்குப் பெயர் கொடுத்த பரமசிவம்; தேவியார் நகரக்காப்புத் தெய்வம். இங்குள்ள பிற கோயில்கள் கலியாண வெங்கடேசப் பெருமாள் - அலமேலுமங்கைத் தாயார் கோயில், வேளூர் வரதராசப் பெருமாள் கோயில், சொக்கநாதர் கோயில், காசிவிசுவநாதசுவாமி கோயில், ’சுந்தரேசுவரர் கோயில், காளத்தியீசுவரர் கோயில் ஆகியவை இங்கு உள்ளன. விண்ணாற்றின் வடகரையில் தளிகேசுவரர் கோயில் உள்ளது. இதற்கு அமிர்தகடேசுவரர் கோயில் என்றும் பெயர் வழங்குகிறது. இரண்டாம் சரபோசி தங்கை இலட்சுமிபாய் ராஜாமணியின் கணவர் இராமோசி சற்சேராவ் காட்கே எடுத்த கோயில் விண்ணாற்றங்கரையில் உள்ள அழகிய கோயில். இக்கோயிலுக்காகக் குளம் வெட்டி அக்கிரகாரம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இலட்சுமிராஜபுரம் என்பது அதன் பெயர். இராசாகோரி தஞ்சை நகரின் வடபுறம், வடவாற்றின் தென்கரையில் வம்புலாஞ் சோலை எனப்படும் தொன்மையான பகுதியில் மராட்டிய மன்னருடைய சமாதிகள் உள்ளன. இவ்விடத்திற்கு ‘இராசாகோரி’ அல்லது ‘கைலாசமகால்’ என்று பெயர். சைவ மரபினரான மராட்டிய மன்னர்கள் இறந்தால் கைலாச மலைக்குச் சென்று சிவபதம் அடைந்தார் என்று கூறுவர்; கைலாசவாசியானார் என்பதும் உண்டு. ‘1737 இல் தஞ்சாவூர்க் கோட்டை அன்னசத்திரத்தில் மகாராசா கைலாசவாசம் செய்தார்’ என்று இரண்டாம். ஏகோசி இறந்த செய்தி குறிக்கப்பெறுகிறது. இறந்தவரைப் பின்னாளில் குறிக்கும்போதும் ‘கைலாசவாசி’ என்று பெயர்க்கு முன் குறிப்பர் (LATE என்பது போல) இறந்த அரசர்க்குக் கோயில் எடுக்கப்பட்டது. உடன்கட்டை ஏறிய அரசியருக்கும் கோயில் கட்டினர். அரசர்க்குச் சிவலிங்கமும், அரசியர்க்கு உருவச்சிலையும் வைப்பது வழக்கம். பிரதாபசிங், துளசா, இரண்டாம் சரபோசி ஆகியோரின் சமாதிகள் மிகவும் அழகிய வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. பீஜப்பூர் மொகலாயக் கலைச்சிறப்பை அவைகளில் கண்டு மகிழலாம். சமாதிகள் ஆலயமாகக் கட்டிக் ‘கும்பாபிஷேகமும்’ செய்யப்பட்டதாகக் கல்வெட்டுக் கூறுகிறது. கைலாசமகாலைப் பராமரிப்பதற்கென்றே மன்னார்குடி அருகே யுள்ள கோட்டூரில் கொடை நிலங்கள் அளிக்கப்பட்டன. இங்கு பூசை செய்யத் தனி அந்தணர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். மராட்டிய மூத்த இளவரசர் மரபிற்குச் சொந்தமான கலையழகு மிக்க கைலாச மகால் இன்று தனியார்கள் ஆத்திரமிப்பில் அழிந்து கொண்டிருப்பது கவலைக்குரியது. இராசகோபால பீரங்கி கீழவாசலின் வடபுறம் கோட்டையின் கீழைக் கொத்தளம் என்னும் பகுதியில் மிகப்பெரிய பீரங்கி ஒன்றுள்ளது. அவ்விடம் பீரங்கிமேடு என அழைக்கப்படுகிறது. டாஸ் மேடு என்றும் அதனைக் குறிப்பர். முன்பு அப்பகுதி மணி அறிவிப்பு மேடையாகப் பயன்படுத்தப்பட்டது. நாயக்கர் காலத்தில் டேனிஷ் நாட்டுத் தொழில் நுட்பத் திறத்துடன் செய்யப்பட்ட பீரங்கி. 1650 வாக்கில் அப்பீரங்கி செய்யப்பட்டிருக்கலாம். ‘சரபராச விலாசம்’ என்னும் நூல் கொத்தளத்தின் மேல் அக்கினியந்திரம் இருப்பதாகக் கூறுகிறது. அது பீரங்கியே ஆகலாம். வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பீரங்கி இன்று அமைதியாக உறங்குவதுபோல் காணப்படுகிறது. மகர்நோன்புச் சாவடி தஞ்சையின் புறநகர்ப் பகுதியுள் ஒன்று. துளசா மன்னர் சின்னக் கோட்டையைச் சேர்ந்த பெரிய தேவாலயக் கிறித்தவர்கட்குக் குடியிருக்க இங்கு இடமளித்தார். அரசரின் குதிரை கட்டும் இடம், சிவராயர் தோட்டம் ஆகியவை இதில் அடங்கும். ஸ்வார்ட்ஸ் முதலில் கட்டிய சிலுவை வடிவத் தேவாலாயம் இங்கு உள்ளது. இங்குள்ள தூய பேதுரு ஆலயத்தில் ஸ்வார்ட்ஸ் கல்லறை உள்ளது. ஸ்வார்ட்ஸைப் பற்றிச் சரபோசி மன்னர் எழுதிய ஆங்கிலப் பாடல் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்வார்ட்ஸின் புகழ் வாய்ந்த வண்ண ஓவியம் இங்கு உள்ளது. ஜி.யு.போப் குளம் வெட்டியதைத் தெரிவிக்கும் கல்வெட்டு 1852) இங்கு உள்ளது. வேதநாயக சாஸ்திரி வீடு, கல்லறை ஆகியன உள்ளன. மராட்டியர் காலத்தில் சௌராஷ்ட்டிரர்கள் இங்கு குடியேறினர். இங்கு நவநீத கிருஷ்ணன் கோயில், விஜயமண்டபம் தியாகராசர் கோயில் ஆகியவை உள்ளன. விஜயதசமியில் அம்புசேவை நடைபெறும் சாவடி என்பர். மானாம்புச் சாவடி என்றும் பெயர் வழங்குகிறது. கண்டிராஜா அரண்மனை 1798இல் ஆங்கிலேயர் இலங்கையில் கண்டியைக் கைப்பற்றினர். கண்டி அரசர் விக்கிரமராசசிங், அவர் தாயார், நான்கு மனைவியர், ஐம்பது உறவினர் சிப்பந்திகள் ஆகியோரைப் படகிலேற்றிச் சென்னைக்கு நாடுகடத்தி அனுப்பிவிட்டனர். வேலூரில் தங்கிய சிலர் பின்பு தஞ்சை வந்தனர். தஞ்சை வந்தவர் எண்ணிக்கை 44 பேர். அரசரின் தம்பி கீர்த்திசிம்மராசாவும் அதில் அடங்குவார். அவர்கள் தங்கிய இடம் தஞ்சை பழைய மாரியம்மன் கோயில் சாலையில் கண்டி ராஜா அரண்மனை’ என்று இன்றும் அழைக்கப்படுகிறது. அவர்களில் பலர் இறந்ததற்கு மராட்டிய அரச குடும்பத்தினர் (கோரி) சமாதி கட்ட நிதிஉதவி செய்துள்ளனர். மோடி ஆவணங்கள் பலவற்றில் கண்டி அரசர் பற்றிய சில சுவையான குறிப்புக்கள் வருகின்றன. இக்குடும்பத்தைச் சேர்ந்த இராசரத்தின சிம்மள கமுசளாதேவி என்பவர் தஞ்சையில் 1839இல் காலமானார். கீர்த்தி சிம்மராசாவின் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு ஒரு சமாதிக்கோயில் எடுக்கப்பட்டது. அதைச் சிங்கள நாச்சியார் கோயில் என்பர். தஞ்சாவூர் அரசினர் இராசா மிராசுதார் மருத்துவமனை தஞ்சை நகரின் பெரிய அரசு மருத்துவமனை அரசினர் இராசா மிராசுதார் மருத்துவமனை ஆகும். அரசு மருத்துவமனைப் பெயரில் இராசா, மிராசுதார் பெயர் எப்படி இணைந்தது? 1875ஆம் ஆண்டு தஞ்சையில் மருத்துவப்பள்ளி ஒன்று தொடங்கப் பெற்றது. அப்பள்ளிக்கு இந்தியாவை ஆட்சிபுரிந்த இங்கிலாந்து நாட்டின் இளவரசர் பெருமானின் அப்போதைய தென்னிந்திய வருகையை ஒட்டி ‘வேல்சு இளவரசர் மருத்துவப் பள்ளி’ என்று பெயரிடப் பெற்றது. இப்பள்ளி தஞ்சைவாழ் மக்களின் பொருள் உதவியால் கட்டப் பெற்றது. சிறப்பாக இயங்கிய இப்பள்ளி 1933ஆம் ஆண்டு மூடப்பட்டது. பின்னர் என்றி சல்லிவன் தாமசு அவர்கள் 1876ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோது தஞ்சையில் மருத்துவமனை ஒன்று பெரிய அளவில் கட்டவேண்டுமென்று விரும்பினார் அப்போது தஞ்சை மராட்டிய அரச குடும்பத்தின் தலைவியாக விளங்கிய சிவாசி மன்னரின் மனைவியார் காமாட்சியம்பா பாயி தனக்குச் சொந்தமாக இருந்த ‘இராணி பூங்கா’ என வழங்கப்பெற்ற இடத்தில் இருந்த சுமார் 40 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார். பெரும் பொருளையும் கொடையாக வழங்கினார். திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர் தவத்திரு இராமலிங்கத் தம்பிரான் சுவாமிகள், பூண்டி வீரையா வாண்டையார். கபித்தலம் துரைசாமி மூப்பனார், பொறையாறு தவசிமுத்து நாடார், டி கோபால கிருஷ்ண பிள்ளை போன்ற பலர் பெரும் பொருட் செலவில் பல கட்டிடங்களைக் கட்டித் தந்தனர். இன்றும் அவர்கள் 1876இல் செய்த கொடையை விளக்கும் கல்வெட்டுக்கள் மருத்துவமனைப் பகுதிகளில் ஆங்காங்கு உள்ளன. அவர்களின் ஓவியங்களும் மருத்துவமனை முதல்வர் அலுவலக அறையில் உள்ளன. 1876இல் கட்டிய கட்டிடங்களின் மதிப்பு ரூ.60,000 ஆகும். பின்னர் மருத்துவமனையின் பல பகுதிகள் 1914-18 முதல் உலகப் பெரும்போர் வெற்றியின் நினைவாகவும் பின் வேறு பல ஆண்டுகளிலும் விரிவாக்கப்பட்டன. அரசின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் என்றி சல்லிவன் தாமசு முயற்சி செய்தமையாலும், மராட்டிய அரச குடும்பத்தினர் நிலமும் பொருளும் அளித்தமையாலும், தஞ்சை மாவட்டப் பெருமக்களாகிய மிராசுதார்கள் பலர் பற்பல கட்டிடங்கள் கட்டப் பெரும் பொருளை வழங்கியமையாலும் இத் தஞ்சை மருத்துவமனைக்கு ‘அரசினர் இராசா மிராசுதார் மருத்துவமனை’ என்று பெயர் வைக்கப்பட்டது. ஏறக்குறைய 120 ஆண்டுகளாக இப்பெயர் மாறாமல் வழங்கி வருகிறது. மையப் பகுதி அந்நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் பெயரால் ‘தாமசு ஹால்’ என்று வழங்கப்படுகிறது. அங்குள்ள கல்வெட்டு. “This hospital was built on the site presented by Her Highne the Prince of Tanjore 10c1 by the voluntary contributions of the inhabitants of the District A.D.1879”. கோனேரிராசபுரம் மிராசுதார் கே.எஸ். நாராயணசாமி அய்யர் பிராமண நோயாளிகட்கு மட்டும்’ என்ற பெயரில் தனி வார்டு கட்டிக் கொடுத்தார். இன்றும் அதற்குரிய விளம்பரப்பலகை இருப்பது வியப்புக்குரியது. மணிக்கூண்டு இம்மருத்துவ மனையின் கீழ்புறம் ‘இராணி கோபுரம்’ எனப்படும் மணிக்கூண்டு உள்ளது. 1883 இல் உருவாக்கப்பட்டது. 100 படிகளைக் கடந்து மேல் சென்றால் நான்கு புறமும் இயங்கும் அக்காலக் கடிகாரம் உள்ளது. முன்பு மணி ஒலித்தது. மீண்டும் மலேசிய இளைஞர் குமணன் முயற்சியால் மணி ஒலி கேட்கிறது. இராஜப்பா பூங்காவினுள் இம்மணிக்கூண்டு உள்ளது. தஞ்சையில் ஒரு நீலகிரி தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகம், அதன் எதிர்ப்பகுதி, சுற்றுப்புறம் அடங்கிய பகுதிகளுக்கு ‘நீலகிரி’ என்று பெயர். நீலகிரியிலிருந்து மரங்கள் கொண்டு வந்து வளர்க்கப் பெற்றதாலும், கோடை காலத்தில் சோலை சூழ்ந்த இப்பகுதி நீலகிரி போல் இன்பம் தருவதாலும் நீலகிரி எனப்பட்டது. தஞ்சை அரண்மனை அரசர்கள். உயர் அலுவலர்கள், இளவரசர்கள், அரசிகள், வேட்டையாடவும், பொழுது போக்கவும், உல்லாசமாகக் காற்று வாங்கவும் வந்த இடம் நீலகிரி நாயக்கர் காலத்திலிருந்தே இப்பகுதிக்கு அரண்மனைத் தொடர்பு உண்டு. சில பகுதிகட்கு நாயக்கர்காடு என்று பெயர் வழங்குகிறது. ஐரோப்பிய பென்ஷன்தார் பெண் குழந்தைகள் படித்த இலவசப்பள்ளி இங்கே இருந்தது. இதன் மேற்குப் பகுதியில் வழவழப்பான உருண்டைக் கூழாங்கற்கள் கிடைக்கின்றன. மேற்குத் தோட்டம் என்னும் பகுதிக்கு முன்பு ‘லட்சத்தோப்பு’ என்று பெயர் வழங்கியது. லட்சம் மரங்கள் வளர்க்கப்பட்டது என்பர். மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயருக்கு லட்சத்தோப்பு ஆஞ்சநேயர் என்று பெயர். நீலகிரியின் ஒரு பகுதிக்கு மானோஜிப்பட்டி என்று மராட்டிய மன்னர் பிரதாபசிங்கின் தளபதியாகவும், அமைச்சராகவும் விளங்கியவர் மானோஜி ஜெகதாப் அப்பா என்னும் பெருவீரர். இவ்விபரம் அறியாத மக்கள் சோலையில் மான்கள் மிகுதியாக இருப்பதால் மானோஜிப்பட்டி என்று பெயர் வந்ததென்று கூறுகின்றனர். மானோஜிப்பட்டி கரையாம்பட்டி, இராமநாதபுரம். வடக்கு மானோஜிப்பட்டி, மேற்கு மானோஜிப்பட்டி, நடுத்தெரு. புதுத்தெரு. பழைய தெரு என ஏழு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சரபோசி மன்னர் காலத்தில் இராமப்பா என்பவர் இங்கு தண்ணீர்ப்பந்தல் ஏற்படுத்தி சிவாலயம் ஒன்றை ஏற்படுத்திச் சத்திரம் கட்டிச் ‘சரபேந்திரபுரம்’ என்று பெயர் வைத்தார். இதன் எச்சங்கள் இன்னும் உள்ளன. அருகில் உள்ள சுமைதாங்கியில் ’ராசு உடையார் உபயம் என எழுதப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெளிவரும் வழியில் உள்ள மண்டபத்துக்குக் ‘குரங்கு மண்டபம்’ என்று பெயர். இங்கு கலையழகு மிக்க ’உப்பரிகை மண்டபம் ஒன்று உள்ளது. உப்பிலிய மண்டபம் என்று அழைக்கின்றனர். 18 படிகள் கொண்டது. தெற்கு நோக்கிய அகன்ற வாயில் உள்ளது. 11 சன்னல்கள் உள்ளன. படிகளில் ஏறி உள் நுழைந்தால் எண்கோள வடிவில் வட்டத் தூண்களுடன் ஒரு மண்டபம் உள்ளது. அதைச் சுற்றிவர வழியும் உள்ளது. இராமர் பட்டாபிஷேகக் காட்சி அழகிய சுதைச் சிற்பமாக இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கலைப் பெட்டகமான இம்மண்டபம் தனியார் வசப்பட்டு அழிந்து வருகிறது. நீலகிரியில் முருகன் கோயில், சீதாராமர் கோயில், காளி கோயில், ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில், விபுலாநந்த விநாயகர் கோயில், முனியாண்டவர் கோயில், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. காளியை சியாமளா என்றும் அழைக்கின்றனர். பிள்ளையார்பட்டி தொன்மையான பிள்ளையாரால் பெயர் பெற்ற ஊர். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள ஆலயத்துப் பிள்ளையாரைப் போன்றது. பெரிய கோயிலுக்காகக் கொண்டு சென்ற பிள்ளையார் இங்கிருந்து நகரமறுத்து இங்கேயே இருந்துவிட்டார் என்பர். நாயக்கர் காலத்தில் தெலுங்கு பேசும் ரெட்டியார்கள் இங்கு குடியமர்த்தப்பட்டனர். இங்குள்ள பிள்ளையாருக்கு நந்தி வாகனமாக உள்ளது. பரிவார தெய்வமாகப் பைரவர் மட்டும் உள்ளார். மாரியம்மன். ஆஞ்சநேயர், கருப்பண்ணசாமி, சுப்பிரமணியர், முனியாண்டவர். செல்லியம்மன், அய்யனார், எல்லம்மன் கோயில்கள் உள்ளன. எல்லம்மன் (ரேணுகா) இங்குள்ள பொக்கிஷக் கொல்ல வடுகர் வழிவந்த நாயக்கர்களுக்குக் குலதெய்வம். கோவை மாவட்டத்தில் இக்கோயிலுக்குரியவர்கள் உள்ளனர். பிள்ளையார்பட்டியில் அம்மாரம்மன், பாப்பாயம்மாள், மங்கம்மாள், தீ மிதித்த அம்மாள் ஆகிய சதிக் கோயில்கள் உள்ளன. வல்லம் செம்பராங்கல்லைத் தஞ்சை மாவட்டம் முழுவதும் ஏற்றிச் சென்ற ‘புள்ளையார்பட்டி இரயில்பாதை’ தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தினுள் வரை இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது விமானப்படையினர் இங்கு தங்கினர். வல்லம் வல்லம் மிகவும் தொன்மையானதோர் ஊர். அகநானூற்றில் வல்லம் கோட்டை குறிக்கப்படுவதுடன் அது சோழர்க்குரியது என்றும் சொல்லப்படுகிறது (336,356). வல்லத்திற்குரிய நல்லடி என்பான் குறிக்கப்படுகிறான். தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறையினர் இங்கு அகழாய்வு நடத்தி இவ்வூர் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் இருந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளனர். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வல்லம் முத்தரையர்க்குரிய ஊர் என்று செந்தலைக் கல்வெட்டுக் கூறுகிறது. வல்லம் தஞ்சையுடன் மிகவும் தொடர்புடையது. வல்லம் கோட்டை விழுந்தால் தஞ்சைக் கோட்டை தானே விழும்’ என்பது பழமொழி. தஞ்சையின் நுழைவாயிலாக வல்லம் உள்ளது. 17-18ஆம் நூற்றாண்டுப் போர்கள் சிலவற்றில் வல்லம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு முறை தஞ்சை நாயக்கர்கள் தங்களுக்குச் சொந்தமான திருச்சிக் கோட்டையை மதுரை நாயக்கர்கட்குக் கொடுத்துவிட்டு அவர்களுக்குச் சொந்தமான வல்லம் கோட்டையைப் பெற்றுக் கொண்டனர். 1771 முதல் 5 ஆண்டுகள் வல்லம் ஆர்க்காட்டு நவாப் வசம் இருந்தது. வல்லம் கோட்டை ஏறக்குறைய 800 மீட்டர் நீளமும் 500 மீட்டர் அகலமும் கொண்டு கோழிமுட்டை வடிவில் இருந்தது. வல்லம் செம்பராங்கல்லும் (கட்டிடம் கட்டப் பயன்படுவது) வெண்கல்லும் (கண்ணாடி செய்யப் பயன்படுவது) புகழ் வாய்ந்தவை. சோழர் காலத்தில் இங்கு அரண்மனையும் கோட்டையும் இருந்தது. சோழ அரசர்கள் பகல் நேரத்தில் இங்கு தங்கினர். ‘பகலிருக்கை பள்ளிக்கட்டில்’ என்று கல்வெட்டுக் கூறுகிறது. தஞ்சை அரசரின் கருவூலம் இங்குதான் இருந்தது. கருவுகல்வல்லம், கருவூல வல்லம் என்ற வழக்கு இருந்தது. மராட்டிய மராட்டிய அரசர்களும் ஆங்கிலேய ரெசிடெண்டுகளும் இங்குதான் தங்கியிருந்தனர். முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இங்கு இருந்தது. அதன் அடிப்பகுதிகள் உள்ளன. கோட்டையினுள் வச்சிர தீர்த்தமும், தாமரைக்குளம் எனப்படும் வெள்ளைக் குளமும் உள்ளன. வெளியே அருணாங்குளம், ஊருணிக்குளம், சமுத்திரக்குளம், பாதிரிக்குளம், மந்திரக்குளம், செம்மண்டிகுளம், நரிக்குளம், குமணாங்குளம், ராவுத்தன்குளம். ஏகௌரிகுளம் ஆகியவை உள்ளன. அதனால் இப்பகுதி ஏரியூர் நாடு எனப்பட்டது. இராசராசன் கல்வெட்டில் தஞ்சாவூர் ஏரியூர் நாட்டுத்தளி குறிக்கப்படுகிறது. இங்குள்ள ஏகௌரியம்மன் கோயில் மிகவும் பழமையானது. முதல் பராந்தகன், இராசராசன் கல்வெட்டுக்கள் உள்ளன. வல்லம் வச்சிரேசுவரர் கரிகாலசோழ ஈஸ்வரமுடையார் என்றும் அரிகுலகேசரி ஈஸ்வரமுடையார் என்றும் அழைக்கப்படுவார். இங்குள்ள பெருமாள் விக்கிரம சோழ விண்ணகர் ஆழ்வார் எனப்படுவார். ‘வல்லம் பெரியோர் அவையுடைத்து’ என்று சோழமண்டல சதகம் கூறுகிறது. கள்ளர் மரபில் ‘வல்லத்தரையர்’ என ஒரு பிரிவினர் உள்ளனர். வஸ்தாத் சாவடிகள் பட்டுக்கோட்டைச் சாலையிலும், திருச்சி-புதுக்கோட்டைச் சாலைகள் சந்திக்கும் இடத்திலும் இரண்டு ‘வஸ்தாத் சாவடிகள்’ உள்ளன. அவை முறையே கீழ் மேல் வஸ்தாத் சாவடிகள் எனப்படும். குத்துச்சண்டை போடுவதற்கும். உடற்பயிற்சிகள் செய்து காட்டுவதற்கும் மல்லக ஜட்டிகள் என்னும் இனத்தார் தஞ்சைக்கு மராட்டிய அரசர்களால் வரவழைக்கப்பட்டனர். அவர்களில் பல குடும்பத்தார் சாமந்தான்குளம் அருகில் குடியமர்த்தப்பட்டனர் அவர்கள் அரண்மனைக் காவலர்களாகவும் பணிபுரிந்தனர். அவர்கள் உடற்பயிற்சி வித்தைகள் காட்டுவது போன்ற சில ஓவியங்கள் அரண்மனை தர்பார் மண்டபத்தில் உள்ளன. மல்லக ஜட்டிகள் ‘வஸ்தாத்’ என்றும் அழைக்கப் பெறுவர். அரண்மனையின் தெற்கே ‘கரடிகூடம்’ என்ற இடத்தில் அவர்கள் பயிற்சி பெற்றனர்-கற்றுத் தந்தனர். 1803ஆம் ஆண்டு மோடி ஆவணம் ஒன்று ‘மகாராஜா சபையில் 10 ஜோடி மல்லு ஜட்டிகள் குஸ்தி போட்டதற்கு இனாம் 720 சக்கரம்’ என்று கூறுகிறது. நவராத்திரி முதலிய விழாக்காலத்தில் பொதுமக்கள் காணுமாறு மேடையிட்டு குத்துச் சண்டையிட்டுக் காட்டுவர். இந்த வஸ்தாத்துகள் பெருகியபோது குடியேறி வாழ்ந்த இடங்களே வஸ்தாத் சாவடிகள், அரசர்கள் வஸ்தாத்துக்களுக்குக் கொடையாக அளித்த இடம். அங்குக் குடியேறிய வஸ்தாத்துகள் பல அறக்கொடைகள் அளித்துள்ளனர். பல்கலை விநாயகர் தமிழ்ப் பல்கலைக் கழகக் குடியிருப்பு வளாகத்தில் பல்கலை விநாயகர் கோயில் உள்ளது. தஞ்சைத் தெருக்கள் தஞ்சைத் தெருக்கள் பல சுவையான பெயர்களை உடையவை. அவற்றுள் பல நாயக்கர், மராட்டியர் கால வரலாற்றுச் செய்திகளை நமக்குக் கொடுக்கக் கூடியவை. அவற்றின் பெயர்க் காரணங்களைப் பற்றி மிக விரிவாக ஆய்வு நடைபெறவேண்டியது அவசியம். ஐயன் கடைத்தெரு, மானோஜியப்பா தெரு, சகாநாயக்கன் வீதி. முத்தோஜியப்பா சந்து, தாத்தோஜியப்பா சந்து, தவே சந்து, பாலோபா சந்து, ஐயாவையன் தெரு, பச்சண்ணா சந்து, காகா வட்டாரம், அப்ஜண்ணா வட்டாரம், சின்ன பியால் தெரு, பெரிய பியால் தெரு என்பன அவற்றுட்சில. ஐயன் என்பது முதல் மூன்று நாயக்க அரசர்களின் மதியமைச்சராக விளங்கிய கோவிந்த தீட்சிதரின் பெயராகும். இங்குள்ள ஐயன் குளமும் அவர் பெயரில் அமைந்ததே. மானோஜியப்பா புகழ்வாய்ந்த பிரதாபசிம்மனின் (1739-1763) தளபதி ஆவார். சந்தா சாயபுவை வீழ்த்தியவர். மற்ற தெருக்களும் வரலாற்றுப் புகழ்பெற்றன. தவே என்பவர் குஜராத்தியர். பியால் என்றால் மராட்டியில் அரிசி என்று பொருள்படும். இரண்டு அரிய மேனாட்டுச் சிற்பங்கள் இங்கிலாந்தில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற சிற்பி ஜான் ஃபிளாக்ஸ்மென் (1755-1826) வடித்த இரண்டு எழிலார்ந்த சிற்பங்கள் தஞ்சையில் உள்ளன. அவை மேனாட்டு வெண்பளிங்கால் ஆனவை. சிவகங்கைக் குளம் அருகேயுள்ள கிறிஸ்துநாதர் தேவாலயம் 1779இல் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரால் கட்டப்பட்டது. அங்கு ஸ்வார்ட்ஸின் மரணப்படுக்கைக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது முதற் சிற்பமாகும். 13.2.1798 இல் இரண்டாம் சரபோசி அரசுகட்டிலேறச் சில திங்களுக்கு முன்னால் ஸ்வார்ட்ஸ் இறந்தார். சிற்பத்தில் படுக்கையில் ஸ்வார்ட்ஸ் உள்ளார். அவரைச் சரபோசி வந்து பார்க்கிறார். அருகே கேரிக் பாதிரியார் நிற்கிறார். சரபோசியுடன் வந்த அலுவலர்களும். கேரிக் பாதிரியாரின் பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் நிற்கின்றனர். நேரில் நிற்கும் மனிதர்களை நாம் காண்பது போல அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் ஆங்கிலக் கல்வெட்டு உள்ளது. 1801இல் சரபோசி வேண்டிக் கொண்டபடி 1807இல் இச்சிற்பம் செய்து முடிக்கப்பட்டது. வேதநாயக சாஸ்திரியார் குறிப்பொன்றில், என் குமாரத்தி ஞானதீபம் பிறந்த பிரசோத்பத்தி வருஷமாகிய 1811 சீமையிலிருந்து வந்த சங் தகப்பனார் சுவார்ச்சையருடைய சுரூபமும், சரபோசி மகாராசாவினுடைய சுரூபமுந் தீற்றப்பட்ட வெள்ளைக் கற்சிலை சின்னக் கோட்டையிலிருக்கும் பெரிய தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டது’ என்று காணப்படுகிறது. இரண்டாவது சிற்பம் சரபோசியின் (1798-1832) முழு உருவச் சிலை ஆகும். 1803இல் தம் உருவச்சிலை செய்யுமாறு ஃபிளாக்ஸ்மெனை சரபோசி வேண்டிக் கொண்டார். சிலை மதிப்பு 60,000 ரூபாய் ஆகும். அரண்மனையில் ஜீராத்கானா எனப்படும் ஆயுதமகாலை ஒட்டியுள்ள நாயக்கர் தர்பார் ஹாலில் கலைக்கூடத்தின் உள்ளே சிலை உள்ளது. 21.1.1823இல் ரெசிடெண்ட், அவர் உதவியாளர், கலெக்டர் காட்டன். இஞ்சீனியர். மற்ற துரைகள் முதலியோர் அச் சிலையைப் பார்வையிட்டதாகவும், 30.3.1826இல் பிஷப் ஹீபர் பாதிரியார் அச் சிலையைப் பார்வையிட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. எனவே சரபோசி காலத்திலேயே சிலை அமைக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. முன்பு அச் சிலைக்கு முக்கோணி மரத்தினால் செய்த முண்டாசு சிந்துர வண்ணத்தில் அமைக்கப்பட்டிருந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகம் உயர் ஆய்வு நிறுவனமாகிய தமிழ்ப பல்கலைக் கழகம் 15.9.1981இல் தொடங்கப்பட்டது. ஐந்து புலங்களில் 24 துறைகள் இயங்குகின்றன. அருங்காட்சியகம், பாராளுமன்ற வடிவிலான நூலகம், வள்ளுவர் மணிமண்டபம், மகரத்தோரணவாயில் காணத்தக்கவை. தமிழும் தஞ்சையும் தஞ்சையில் போப் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய ஜி.யு. போப் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவைகளை மொழிபெயர்த்தார். தன் கல்லறையில் ‘போப் - தமிழ் மாணவன்’ என்று எழுதச்செய்தார். தமிழை உலகத் தமிழாக்க அரும்பாடுபட்ட போப்பிற்கும் தஞ்சைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இங்கிலாந்து நாட்டில் 24.4.1820இல் பிறந்த ஜார்ஜ் யுக்ளோ போப் தன் 19ஆம் வயதில் இந்தியாவுக்குச் சமயப் பணியாற்ற வந்தார். 1851 முதல் 1858 வரை தஞ்சை மகர்நோன்புச் சாவடி தூய பேதுரு ஆலய குருவாகவும், தஞ்சை வடக்கு வீதியில் உள்ள தூய பேதுரு மேல்நிலைப் பள்ளியை முதல்நிலைக் கல்லூரியாக உயர்த்தி அதன் முதல்வராகவும் பணிபுரிந்தார். தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் வீட்டுக் குறிப்புக்கள் இவரை "சங்.சீ.யு. போப்பையர்’ என்று குறிக்கிறது. அப்போது தஞ்சைச் சபையில் சிலரால் சாதிவேறுபாடு காட்டப்பட்டது. போப் அதனை நீக்க முற்பட்டார். வேதநாயக சாஸ்திரியார் போப்பையர் உபத்திரா உபத்திரவம்’ என்று நூலைப் பாடினார். தஞ்சையில் போப் இருந்தபோது மராட்டிய மன்னர் சிவாசியுடன் (1832-1855) நெருங்கிப் பழகினார். இராமாநுச கவிராயர், ஆரியங்காவுப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் கற்றுத் தேர்ச்சிபெற்ற போப் தஞ்சைப் புலவர்களிடமும் பயிற்சி பெற்றார். சிவாசி மன்னர் அளித்த பெரும்பொருள் உதவியால் 1852இல் மகர் நோன்புச் சாவடி தூய பேதுரு ஆலய வளாகத்தில் பெரிய குளம் ஒன்றை வெட்டினார். அக்குளம் 1923இல் மூடப்பட்டது. ஜி.யு. போப் குளம் வெட்டி வைத்ததை அறிவிக்கும் கல்வெட்டு குளக்கரைச் சுவரில் அழியும் நிலையில் உள்ளது. THIS TANK WAS BUILT AT THE EXPENCE OF HIS HIGHNESS SEVAJEE MAHARAJA OF TANJORE 1852. J.F. BISHOP ESQ COLLECTOR REVD. G.U. POPE MISSIONARY’ தஞ்சையில் இரு தமிழ்ச் சங்கங்கள் 1902ஆம் ஆண்டு தஞ்சையில் பாப்பாநாடு குறுநில மன்னர் சாமிநாத விசயதேவர் தலைமையில் ஒரு தமிழ்ச் சங்கம் தோன்றியது. கலியாண சுந்தரம் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இராசமையங்கார் செயலாளராக இருந்தார். இச் சங்கம் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தது. எல்.உலகநாதபிள்ளை இச்சங்கத்தோடு தொடர்புடையவராக விளங்கினார். அரித்துவாரமங்கலம் வா.கோபாலசாமி ரகுநாத இராசாளியார் ஒரு முத்தமிழ்க் கொடைவள்ளல். டாக்டர் உ.வே. சாமிநாதய்யருக்குப் புறநானூறு ஏட்டுப்பிரதி அளித்தவர். 1901ஆம் ஆண்டு பாண்டித்துரைத் தேவர் மதுரைத் தமிழ்ச் சங்கம் அமைக்க உடனிருந்து உதவியவர். பாண்டித்துரைத் தேவர் வேண்டிக் கொள்ளத் தஞ்சையில் ‘தமிழ்ச்சங்கம்’ ஒன்றை நிறுவினார். ‘தமிழகம்’ என்ற இதழையும் தொடங்கினார். 1911 இல் டெல்லியில் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டிக் கொண்டபோது தஞ்சை மாவட்டத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர். கரந்தைத் தமிழ்ச் சங்கம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்நலம் காத்து, தமிழர் நலம் போற்றித் தனித்தமிழ் வளர்ச்சியையே எழுத்திலும், பேச்சிலும் பரப்பி வருவது கரந்தைத் தமிழ்ச் சங்கம். திரு. திருவாளர், அவைத் தலைவர், சொற்பொழிவு போன்ற பல சொற்களை நடைமுறைக்குக் கொண்டுவந்து அறிமுகப்படுத்திப் பரப்பியது இச்சங்கமேயாகும். 14.5.1911 அன்று த.வே இராதாகிருட்டிணப்பிள்ளை, பி.ஏ., அவர்களால் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. அவர் தனுஷ்கோடியில் சுங்கத்துறை அலுவலக மேற்பார்வைப் பணியில் இருந்ததால் தமையனார் த. வே உமாமகேசுவரனார் சங்கத் தலைமைப் பதவியேற்று முப்பது வருட காலம தலைவராக விளங்கிப் பல பணிகளைச் சிறப்புடன் செய்தார். 1914 ஆம் ஆண்டு முதல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான சுந்தரம் பிள்ளையின் ‘நீராரும் கடலுடுத்த’ என்ற பாடலை முழுமையாகப் பாடிவருவது சிறப்புக்குரியது. வெள்ளையர் ஆட்சியில் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கப்பட்டு ஆங்கிலமுறையில் நடைபெற்றது. சங்கம் கட்டணம் இன்றித் தமிழ்வழியில் பள்ளியை நடத்தியது வரலாற்றுச் சிறப்புமிக்கது. 1916இல் தொடக்கப்பள்ளி, 1922இல் நடுநிலைப்பள்ளி, 1950இல் உயர்பள்ளி, 1978இல் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. சங்க வெள்ளிவிழாவில் 1938இல் புலவர் கல்லூரியை ஞானியார் சுவாமிகள் தொடங்கி வைத்தார்கள். மாணவர்கள் பல்துறைக் கல்வியும் கலைகளும் கற்கவேண்டி 1987இல் புலவர் கல்லூரி கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வராத தமிழ் அறிஞர்களே கிடையாது. யாழ்நூல் உள்ளிட்ட பல சிறப்புமிகு நூல்களை வெளியிட்டுள்ளனர், 68 ஆண்டுகளாகத் ‘தமிழ்ப்பொழில்’ மாத இதழ் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மழலையர் பள்ளியிலிருந்து முனைவர் பட்டப் படிப்புவரை 4000 மாணவர்கள் பயிலும் வண்ணம் பல நிறுவனங்கள் ஆல்போல் தழைத்து நிற்கின்றன. ‘கரந்தைத் தமிழ்ச் செம்மல்’ ச. இராமநாதன் அவர்கள் தலைமையில் பழம்பெருமை மிக்க இந்நிறுவனம் மிகச் சிறப்புடன் இயங்கி வருகிறது. வரலாற்றுப் புகழ்வாய்ந்த சோழரின் கரந்தைச் செப்பேடுகள் இங்கு உள்ளன. த.வே.உமாமகேசுவரனார் கரந்தையில் வேம்பப்பிள்ளை காமாட்சியம்மை தம்பதியருக்கு மகனாக 7-5-1883இல் தோன்றினார். வழக்கறிஞராகி ‘தமிழ் வரலாறு’ ஆசிரியர் கே. சீனிவாசப்பிள்ளையிடம் பணிபழகும் வழக்கறிஞராகச் சேர்ந்தார். தஞ்சை வட்டக் கழகத்தின் முதல் தலைவராகிப் பன்னிரு ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக விளங்கினார். சாலை. வசதிகளைப் பெருக்கினார். புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆனார். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் தோன்றிய நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். திருவையாறு சமஸ்கிருதக் கல்லூரியில் தமிழுக்கும் இடம் அளித்து அரசர் கல்லூரியில் தமிழ் இடம் பெறச் செய்தவர் உமாமகேசுவரனார் ஆவார். தஞ்சை சிரேயசு சத்திரத்தை மாணவர் தங்கிப்படிக்கும் இடமாகச் செய்தார். வேலைவாய்ப்புத் தரும் தொழிற்கல்வியை மாணவர்க்கு வழங்கினார். தமிழுக்கெனத் தனியாகப் பல்கலைக்கழகம் வேண்டும் என்று 1925ஆம் ஆண்டிலேயே கூறியவர். 1911ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகத் திகழ்ந்தவர் 1934இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். 1933 இல் ஞானியார் அடிகளால் செந்தமிழ்ப் புரவலர் பட்டம் பெற்றார். ’தமிழவேள் பட்டமும் பெற்றார். கரந்தை நிறுவனங்களை நன்கு நடத்த தாகூரின் சாந்தி நிகேதனைப் பார்த்து வரும்போது வழியில் 9.5.1949ஆம் ஆண்டு காலமானார். கே.எஸ். சீனிவாசப் பிள்ளை (1852-1929) தஞ்சையின் புகழ்பெற்ற வழக்கறிஞர். அரியலூரை அடுத்த கீழ்க்கொழூர் ஊரினர். சோழநாட்டுத் திருமடங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். கூட்டுறவு இயக்கத்திற்கு உழைத்தவர். மூன்றுமுறை தஞ்சை நகராட்சி மன்றத் தலைவராக விளங்கியவர். ‘தமிழ் வரலாறு’ என்னும் நூலை முதல் முதலாக இரு பகுதிகளாக எழுதியவர் (1924) தஞ்சை பிரம்ம ஞான சங்கத்தின் தலைவராக விளங்கியவர். 1904ஆம் ஆண்டு சங்கத்திற்குச் சொந்தமாக இடம் வாங்கி பெசன்ட் லாட்ஜ் கட்ட மூலகாரணமாக இருந்தவர். அங்கு இவர் படம் வைக்கப்பட்டுள்ளது. இவர் பெயரில் தஞ்சையில் ஒரு தெரு உள்ளது. சரசுவதி மகால் நூலகம் சென்னை செல்லாமல் காத்தவருள் ஒருவர். இராவ்பகதூர் பட்டம் பெற்றவர். பண்டித எல். உலகநாதப் பிள்ளை தஞ்சைத் தமிழாசிரியர். வடமொழியும் நன்கு கற்றவர். திருவையாறு வடமொழிக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். 1921 இல் டெல்லியில் நடைபெற்ற வேல்ஸ் இளவரசர் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டுத் தங்கத் தோடா பரிசு பெற்றவர். முதலாவது இராசராசன். கரிகால பெருவளத்தான், கன்றும் கனியுதவும். அநுமான் இராமதூதன், கற்புடைய மகள் சாவித்திரி போன்ற நூல்களை மாணவர் விருந்து என்னும் தலைப்பில் எழுதியவர். 1934இல் ஓய்வு பெற்றார். சரசுவதி மகால் செயலாளராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்து அங்கு விளக்க அட்டவணை அச்சாகக் காரணமாக இருந்தவர். ஐந்தாண்டுகள் கரந்தைத் தமிழ்ப் பொழிலுக்குக் கூட்டு ஆசிரியராக இருந்தார். பரமோபதேசம், பதிபசுபாசப் பனுவல் முதலிய சைவ சித்தாந்த சாத்திர நூல்களைப் பதிப்பித்தார். முருகன் போற்றித் திரு அகவல் என்னும் நூலைப் பாடியுள்ளார். குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழை இவர் பதிப்பித்துள்ளார். நீ. கந்தசாமிப் பிள்ளை (1898-1977) தஞ்சையை அடுத்த பள்ளியக்கிரகாரத்தில் பிறந்தவர். கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளராகவும், தமிழ்ப்பொழில் ஆசிரியராகவும் பணியாற்றியவர். தமிழ்,ஆங்கிலம், பிரெஞ்சு மொழி வல்லுநர். பாண்டிச்சேரி இந்தியவியல் ஆய்வின் பிரெஞ்சு நிறுவனத்தில் பத்தாண்டு பணிபுரிந்தவர். அலெக்சாண்டர் கிரேயின் ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அதற்கு ’இடுகாட்டில் எழுதிய இரங்கற்பா என்று பெயர் கொடுத்தார். மர்ரே எஸ். ராஜம் இலக்கியப் பதிப்புக்களுக்கு இவரே ஆலோசகர். பிரெஞ்சு நிறுவனத்தார் இவருடைய திருவாசகப் பதிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழ் உலகின் கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தவர். ‘மதுரா விஜயம்’ என்னும் நூலை மொழிபெயர்த்துள்ளார். நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் (1884-1944) நான்காம் வயதுடன் பள்ளிப்படிப்பை முடித்துத் தம் தந்தையாரிடம் தமிழ் பயின்ற நாட்டார் அவர்கள் 1905, 1906, 1907ஆம் ஆண்டுகளில் மதுரை பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகியவற்றில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றார். பரிசாகத் தங்கத்தோடா பெற்றார். திருச்சி, கோவை, அண்ணாமலை நகர் ஆகிய இடங்களில் பணிபுரிந்த நாட்டார் அவர்கள் கரந்தைப் புலவர் கல்லூரி முதல்வராகத் திகழ்ந்தார். அப்போது எழுதப்பெற்றவையே சிலப்பதிகார உரை. அகநானூறு உரை, மணிமேகலை உரை 26 காதைகட்கு மட்டுமே நாட்டார் எழுதினார். எஞ்சியவைகளை உரைவேந்தர் ஔவை சுதுரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதி முற்றுப் பெறுவித்தார்கள்) சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினர் நாவலர் பட்டமளித்தனர். பரணர், நக்கீரர் முதலிய பல நூல்களை எழுதியவர். இலக்கணம் இராமசாமிப்பிள்ளை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவர். இவரைப் பற்றி உவே. சாமிநாதய்யர் தம் ’என் சரித்திரத்தில் எழுதியுள்ளார் ($247. இவர் துறவியாகி அருள் பரானந்தர் எனப் பெயர் பெற்றார். இலங்கையில் புகழ்பெற்று விளங்கிய சேர். பொன்னம்பலம் அவர்களின் ஞான ஆசிரியராகத் திகழ்ந்தார். பொன்னம்பலம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலில் இவரது படம் சேர்க்கப்பட்டுள்ளது. சோழன் போக்குவரத்துக் கழகப் பணிமனையின் தெற்கேயுள்ள பாலோபா நந்தவனத்தில் இவருடைய சமாதி உள்ளது. கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை (1886 - 1955) கந்தர்வ கோட்டைக்கு அருகேயுள்ள மோகனூரைச் சேர்ந்தவர். தஞ்சை தூய பேதுரு பள்ளியில் படித்தவர். தஞ்சை சுப்பிரமணிய அய்யரிடம் தனியாகத் தமிழ் பயின்றார். கோனார்பற்று என்னும் ஊரிலும், தஞ்சை தூயபேதுரு பள்ளியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பணிபுரிந்தார். 1938இல் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழாவில் கரந்தைக் கவியரசு பட்டம் பெற்றார். கரந்தைக் கல்லூரியிலும் பணிபுரிந்தார். இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அமைச்சராக விளங்கிய போதே ’தமிழ்ப் பொழில் தொடங்கப்பட்டு இவரே முதல் ஆசிரியர். வேதநாயக சாஸ்திரியார் திருநெல்வேலி புட்டாரத்தி அம்மன் கோயில் தெருவில் சைவ வேளாளர் மரபைச் சேர்ந்த அருணாசலம் பிள்ளையின் மகனாக 7-9 1774 அன்று பிறந்தார். அருணாசலம் பிள்ளை கிறித்தவராக மாறி தேவசகாயம் ஆனார். அவர் மகன் வேதநாயகம் தன் 12ஆம் வயதில் கிறிஸ்டியன் ஃபிரடரிக் சுவார்ட்ஸ் அவர்களுடன் தஞ்சைக்கு வந்தார். இரண்டாம் சரபோசி 11798-1832)யுடன் நெருங்கிப் பழகி அவைக்களப் புலவர்போல விளங்கினார். மாதச் சம்பளமும் அவருக்கு அளிக்கப்பட்டது. ‘நோவாவின் கப்பல்’ நூலைப் படித்துக்காட்டியபோது சரபோசி 100 வராகன் பரிசளித்தார். அண்ணாவியார், தமிழ் வாத்தியார் உபதேசியார். சுவிசேட கவிராயர், கவிச்சக்ரவர்த்தி என்றெல்லாம் அழைக்கப்பட்டார். ‘நான் சோழமண்டலத்தின் பிரதான கவிராயர்’ என்று ஓரிடத்தில் அவர் தன்னைப் பற்றிக் குறித்துள்ளார். சாஸ்திரியார் 148 நூல்கள் எழுதியுள்ளார். 24.1.1864 அன்று காலமானார். ஆபிரகாம் பண்டிதர் 1860ஆம் ஆண்டு சூலை மாதம் 31ஆம் நாள் திருவாங்கூர் மாநிலத்தில் உள்ள சம்பூர் வடகரை என்னும் ஊரில் பிறந்தார். தஞ்சை லேடி நேப்பியர் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்ந்தார். பண்டிதர் துணைவியார் ஞானவடிவு பொன்னம்மாள் அவர்கள் அப்பள்ளியின் தலைமையாசிரியர். பண்டிதரின் தாய், தந்தை வழிப் பாட்டன்மார் இருவரும் சித்த மருத்துவர்கள். பண்டிதரும், சித்த மருத்துவச் சேவையில் ஈடுபட்டார். பண்டிதருக்குச் சுருளிமலை கருணானந்த ரிஷிஎன்பவர் குருவாக விளங்கினார். தஞ்சையில் தாம் நிறுவிய நிலையத்திற்குக் கருணானந்தர் வைத்தியசாலை என்று பெயரிட்டார். பண்டிதரின் தயாரிப்பான சஞ்சீவி மாத்திரை, சஞ்சீவி தைலம், மகா கோரோசனை ஆகியவை உலகத் தமிழரிடை புகழ்பெற்றது. 25.6.1909 இல் ’இராவ் சாகிப் பட்டம் பெற்றார். 1911இல் லாலி பெயரில் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார். 1912இல் தஞ்சாவூர் சங்கீத மகாசன சங்கம் நிறுவினார். கருணாமிர்த சாகரத் திரட்டு என்னும் நூலை 1907இல் வெளியிட்டார். 1917இல் கருணாமிர்த சாகரம் என்ற இசைத்தமிழ் நூலை வெளியிட்டார். பெருவுடையார் உலா கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பாடியது. சிவக்கொழுந்து என்பது திருச்சத்திமுற்றச் சிவன் பெயர். இரண்டாம் சரபோசி மன்னர் காலத்தில் 11798-1832) அரண்மனைப் புலவராகவும் ஏட்டுச் சுவடிகள் தேடித் தொகுப்பவராகவும் விளங்கினார். இவர் சரபோசி மன்னரின் மருத்துவ முறையைக் கவிகளில் நூலாக்கியுள்ளார். ‘பார்க்கண்வளர் நகர்க்கெல்லாம் உயர்ந்த புகழ்த் தஞ்சை’ என்று சரபேந்திரர் வைத்திய நூலில் தஞ்சையைப் புகழ்வார். பெருவுடையார் உலாவைத் தஞ்சை உலா என்றும் கூறுவர். 313 கண்ணிகள் கொண்டது. ‘ஏர்வளரும் தஞ்சை இராசரா சேச்சுரத்தில் பேர்வளர மன்னும் பெருவுடையான்’ (13) என்று தொடங்கிப் பெருவுடையார் புகழ்பாடுவது உலா நூலாகும். தஞ்சையைச் சோழநாட்டின் முகம், எனக் குறித்துத் ‘தென்வளரும் தார்வளவர் தேசமெனும் பொறிபாவை தன்வதன மாயஉயர் தஞ்சை’ (261) என்று பாடுகிறார் தேசிகர் சரபோசி மன்னனை, ‘நானிலமும் செங்கோல் நடத்தும் எழில் தஞ்சை மாநகர மன்னன்’ என்று சிறப்பிக்கிறார். சரபேந்திர பூபாலக் குறவஞ்சி இந்நூலும் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பாடியது. 77 இசைப்பாடல்கள் அமைந்த நூல். அவைகட்கு மெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கீர்த்தனை (39), வெண்பா 3), அகவல் (2), விருத்தம் (25), கொச்சகக் கலிப்பா (2) அடங்கியது. ‘பொன்னுலகு என்னப் புவிபுகழ் சிறப்பு மன்னிய சோழ வளநாடு’ எனச் சோழநாடு புகழப்படுகிறது பெரியகோயில் ஆண்டுவிழாவான 18 நாள் சித்திரைத் திருவிழாவில் 9ஆம் நாள் அஷ்டக் கொடியன்று சரபேந்திர பூபாலக் குறவஞ்சி பெருவுடையார் கோயிலில் நடிக்கப்பட்டது. அக் குறவஞ்சி மேடை இன்றும் உள்ளது. ஸ்ரீ ராஜராஜ விஜயம் முதலாம் இராசராச சோழனின் வெற்றிச் சிறப்புக்களைக் கூறும் ஒரு நூல். இக் காவியத்தை விசேட காலங்களில் படிப்பதற்காக ஸ்வர்ணன் ஆன நாராயணன் பட்டாதித்தன் என்பார்க்கு நிலம் இறையிலியாக விடப்பட்டது என்பதைக் கல்வெட்டு மூலம் அறிகின்றோம். நாராயணன் பட்டாதித்தனே இந்நூலை இயற்றியிருக்க வேண்டும் என்றும், இந்நூல் தமிழில் எழுதப்பட்டிருக்கலாம் என்று மு. இராகவையங்கார் கருதுகிறார். இராஜராஜேசுவர நாடகம் முதல் இராசராசன் காலத்தில் இயற்றப்பட்ட நூலாகும். இராசராசன் தஞ்சையில் எடுத்த ஒப்பற்ற பெருங்கோயிலின் சிறப்புக்களையெல்லாம் எடுத்துரைக்கும் நாடகமாக இது விளங்கியிருக்கலாம். இந்நாடகத்தைச் சாந்திக் கூத்தன் விசைய ராசேந்திர ஆச்சார்யன் என்பவன் நடித்துள்ளான் என்று கல்வெட்டுக் கூறுகிறது. வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி, சகசிராசன் குறவஞ்சி. விசயராகவ நாயக்க ஐயன் முளைப்பாட்டு. கரந்தைக் கோவை, தஞ்சைத் தலபுராணம் போன்ற பல இலக்கியங்கள் தஞ்சைக்கு உண்டு. வாழையடி வாழையென இன்றும் பல அறிஞர்கள் தமிழ்ப்பணி செய்துவருகின்றனர் - 1892இல் இலங்கையில் தோன்றி மதுரைப் பண்டிதம் தேர்ச்சி பெற்று பொறியாளராகவும், விஞ்ஞான ஆசிரியராகவும் திகழ்ந்தவர் மயில்வாகனன் என்ற இயற்பெயருடைய விபுலானந்த அடிகளார். இலங்கையில் 17 கல்விநிலையத்தைத் தோற்றுவித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர். சில சமயம் அண்ணாமலையில் இடைக்காலத் துணைவேந்தராகவும் விளங்கியவர். - அவர் எழுதிய புகழ்மிக்க நூல் யாழ்நூல். அந்நூலை அவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தங்கியே எழுதினார். யாழ்நூல் நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருக்கொள்ளம்புதூரில் 5.6.1947 அன்று அரங்கேற்றப்பட்டது. அதே ஆண்டு விபுலானந்தர் மறைந்தார். அந்நூலைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது. - சேலம் வரதநஞ்சைய பிள்ளை பெரும்புலவர். அவர் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ என்னும் நூல் 1938ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச்சங்க வெள்ளி விழாவில் வெளியிடப்பட்டது. - தென் ஆர்க்காடு மாவட்டம் அவ்வையார் குப்பம் ஊரினரான உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை (1902-1981) அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திய செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். - தஞ்சை மாவட்டம் நாகேசுவரத்தைச் சேர்ந்த பேராசிரியர் க.வெள்ளைவாரணர் (1917-1989) அவர்கள் கரந்தைக் கல்லூரியில் பணியாற்றியவர். - தஞ்சை பிரம்ம ஸ்ரீ சாரதாமந்திர வெ. குப்புசாமி ராஜு என்பவர் பல அத்வைத நூல்கள் எழுதியுள்ளார். - தஞ்சை டி.வி. சடகோபாலச்சாரியார் என்ற அரசு வழக்கறிஞர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தார். - நீதிக்கட்சியின் தலைவராகவும், தஞ்சை மாவட்டக் கழகத் தலைவராகவும் விளங்கிய ஏ.டி. பன்னீர்செல்வம் பெயரில் ஏற்பட்டதே யன்னீர்) செல்வம் நகர். - 1841ஆம் ஆண்டு ரஷிய இளவரசர் அலேகசிஸ்ஸாலடமாப் என்பவர் அரசு விருந்தினராகத் தஞ்சை வந்தார். - காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் தஞ்சை மேற்கு வீதி பங்காரு காமாட்சியம்மனுக்கு மாலைக்காலப் பூசைக்காக 1842 ஆம் ஆண்டு கொடையளித்துள்ளார். - தஞ்சை தெற்கு வீதியில் வராகப்பையர் சந்தில் உள்ள தியாகராசன் என்பவர் வீட்டில் சங்கீத மேதை தியாகராசர் வழிபட்ட இராமர். சீதை செப்புப் படிமங்கள் உள்ளன. தியாகராசர் ஆராதனை காலத்தில் பலர் இங்குள்ள இராம்பெருமானை வழிபட்டுத் திருவையாறு இசை விழாவுக்குச் செல்வர். - யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி முதல்வராகவும், இலங்கை அமைச்சராகவும் விளங்கிய வழக்கறிஞர் சு. நடேச பிள்ளை தஞ்சையைச் சேர்ந்தவர். கொடைக்கானலுக்கு வந்த இலங்கை பொன்னம்பலம் இராமநாதன் நடேசபிள்ளையைத் தம் இலக்கிய உதவியாளராக இலங்கைக்கு அழைத்துச் சென்றார். தனித்தமிழ்க் கல்லூரி தமிழ் வளர்த்த தஞ்சையில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்ற தனித்தமிழ்க் கல்லூரி இயங்கிவருவது சிறப்புக்குரியது. கலைப்பொருட்கள் தஞ்சை என்றவுடன் நமது நினைவுக்கு வரும் சில கலைப்பொருட்கள் உள்ளன. வீணை (பிற இசைக்கருவிகள்), கலைத்தட்டு, ஓவியம், மாலை, கண்ணாடித் தட்டு, தலையாட்டிப் பொம்மை என்பன அவை. இவை வேறு ஊர்களில் இத்தகு சிறப்புடன் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீணை இந்திய இசைக்கருவிகளில் சிறப்புமிக்கதும் தொன்மையானதும் வீணையே மெட்டுடன் கூடிய தந்தி வாத்தியம் தகுதியான பலா மரத்தைத் துண்டாக்கிப் பானை வடிவில் குடைந்து பலகையால் மூடி வேலைப்பாடுகள் செய்து மரம் அல்லது தந்த மெட்டு அமைத்து வெண்கலம் அல்லது வெள்ளிப்பட்டை பொருத்தி தண்டு, யாளிமுகம் சேர்த்து யாளிமுகத்தைத் தாங்கும் சுரைக்குடுக்கையுடன் வீணை தயாராகிறது. யானைத் துதிக்கை போன்ற தண்டி குடையப்பட்டுப் பலகையால் மூடப்படுகிறது. பதம் பண்ணிய மெழுகு, அரக்கு ஆகியவற்றால் மேடாக்கப்படுகிறது 24 உலோகக் கட்டிகளை அருகில் சந்தம் பார்த்துப் பொருத்துகின்றனர். இதற்கு மேளம்கட்டல் என்று பெயர். யானைத் தந்தம், மான்கொம்பு, சுரைக்குடுக்கை ஆகியவற்றிற்குப் பதிலாக இப்பொழுது பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. சுரைக் குடுக்கைக்காக காகிதம், பைபர் பயன்படுத்தப்படுகிறது. ஏகாண்ட வீணை, ஒட்டு வீணை, கமல்வீணை என வீணைகள் வகைப்படுத்தப்படுகின்றன. அண்மையில் கஜேந்திர வீணை என்பதும் தோன்றியுள்ளது. பாவை, தண்டு ஒரே மரத்தால் ஆனது ஏகாண்ட வீணை தனித்தனியாக அமைத்து ஒட்டி இருப்பது ஒட்டு வீணை. கமல வீணை- சரசுவதி வீணை எனப்படும் இதைத் திருத்தி அமைத்தவன் தஞ்சை நாயக்க மன்னன் இரகுநாதன் என்பர். நீளம், அகலம், உயரத்திற்குத் தக்கவாறு முழுவீணை, முக்காலே அரைக்கால், முக்கால் வீணைகள் என வழங்கப்பெறும். இப்போது பலாமரம் கிடைப்பது அரிதாக உள்ளது. கிடைத்தாலும் விலை உயர்வாக உள்ளது. எடுத்து வருதலும் சிரமம். மேளம் கட்டுதலுக்குத் தகுந்த பயிற்சி அளித்தல் வேண்டும். தம்புரா வீணையில் செய்முறையிலேயே செய்யப்படுகிறது. இவையன்றித் தஞ்சையில் முக்கியமான இசைக்கருவிகளாக மிருதங்கம். தவில், நாதசுரம், ஜால்ரா ஆகியவைகளும் செய்யப்படுகின்றன. கலைத்தட்டு தஞ்சாவூர்க் கலைத்தட்டு உலகப்புகழ் பெற்றவை. அதன் தோற்றத்திற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சரபோசி மாமன்னர் அரண்மனைக்கு வரும் விருந்தினர்க்கும் பிறநாட்டவர்கட்கும் அளிக்க அரியதோர் கலைப்பொருள் செய்க என்று தஞ்சை விசுவகர்ம மக்களிடம் கூற அவர்கள் கலைத்தட்டை உருவாக்கினர் என்பர். சிலர் சரபோசி மன்னர் காசியிலிருந்து வாங்கிவந்த பித்தளை, செம்பால் ஆன ஆ பித்ரித் தட்டு மூலம் தஞ்சைக் கலைத்தட்டு ஏற்பட்டது என்பர். வேறுசிலர் தஞ்சை மன்னர்க்கு எகிப்து அரசன் கொடுத்த குடத்தைப் பார்த்தும், வடநாட்டு உலோக வேலைப்பாட்டைப் பார்த்தும் தஞ்சைத் தட்டு தோன்றிற்று என்பர். முன்பு பித்தளையில் மட்டும் கலைத்தட்டுகள் இருந்தன. பித்தளைத் தட்டின் நடுவே ஈய அச்சுக் கட்டையில் உருவாக்கப்பட்ட உருவத்தைப் பதிப்பர். அதன் உள்ளே அரக்கு இருப்பதால் உருவம் நசுங்குவதில்லை. செம்பு, வெள்ளி உலோகத் தகடுகள் கலையமைப்புடன் பதித்துக் கலைத்தட்டு உருவாக்கப்படுகிறது. பித்தளை, செம்பு, வெள்ளி ஆகிய உலோகங்களின் மேல் உலோகங்களைப் பதித்து மூன்று உலோகக் கலையாகத் தட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கப்பட்ட தட்டை, கரித்தூள், நெல்உமி தூவித் தேய்த்து புளி, பூவந்திக்கொட்டை ஊறவைத்த தண்ணீரில் கழுவி மெருகேற்றி விற்பனைக்குத் தயார் செய்கின்றனர். மராட்டிய அரச குடும்பம் ஆட்சி உரிமை இழந்தது. பின்னர் மேனாட்டுப் பொருட்கள் வரவே தட்டு தன் புகழை இழந்தது. வேறு தொழில் தெரியாத இக்கலைஞர்கள் தட்டை உருவாக்கிப் புகைவண்டி நிலையம், பேருந்து நிலையம் கொண்டு சென்று சுற்றுலாப் பயணிகளிடம் விற்றனர். போதுமான வருவாய் கிடைக்கவில்லை. 1939-44 இல் தஞ்சைப் பகுதியில் தங்கிய விமானப்படையினர் கலைத்தட்டுக்கு ஆதரவு தந்தனர். இன்று இயந்திரங்கள் சில பணிகட்குப் பயன்படுத்தப்படுகின்றன. அரசு கவின்கலைகட்குக் கொடுத்த ஆதரவால் மீண்டும் உயிர்பெற்ற இத்தொழிலில் இன்று சுமார் 100 பேர் ஈடுபட்டுள்ளனர். கலைச்சிறப்புடன் தட்டுக்கள் செய்யப்படுகின்றன. ஓவியம் தஞ்சை என்றவுடன் நினைவுக்கு வருவது ஓவியமே. தஞ்சை ஓவியம் உலகப் புகழ் பெற்றது ராஜா என்ற பட்டப்பெயரையுடைய ஒரு சில குடும்பத்தார் மட்டுமே இதனைச் செய்து வந்தனர். இப்போது பிறரும் செய்து வருகின்றனர். கீழவாசல் அருகேயுள்ள கொண்டிராஜபாளையம் சித்திரக்காரர்கட்கு அளிக்கப்பட்ட ஊர் என்பர். பலா மரப்பட்டையில் புளியங்கொட்டைப் பசையைத் தடவி பைண்டிங் செய்யப் பயன்படும் அட்டையில் ஒட்டுவர். இவற்றின் மேல் புளியங்கொட்டைப் பசை, மட்டி. இவைகளைக் கலந்து தடவி மல்துணியை ஒட்டுவர். தோப்புக்கல் என்ற கல்லைக் கொண்டு தேய்த்து வழவழப்பு ஏற்படுத்தி வேண்டிய சித்திரம் வரைவர். பெரும்பாலும் தெய்வீக ஓவியங்களே வரையப்படுகின்றன. சித்திரக்காரன், சித்திரக்காரி பற்றிய குறிப்புக்கள் மராட்டிய ஆவணங்களில் பயின்றுவருகிறது. மாலை அழகுமிக்கதும், வாடாததும், மணம் மிக்கதுமான மாலை தஞ்சை மாலையாகும். நெல், அரிசி, கிராம்பு. சந்தனம், ஜவ்வாது, ஏலக்காய் ஆகியவற்றில் மாலைகள் செய்யப்படுகின்றன. இவைகளைத் தனித்தனியாகவும், கட்டாகவும் தயாரிக்கப்படுகின்றன. கூட்டாகச் செய்யப்படுபவை கதம்பமாலை எனப்படும். ஐந்து பொருளில் செய்தால் பஞ்சமாலை எனப்படும். 1953 இல் தஞ்சையில் கவின்கலைப் பொருட்காட்சி ஒன்று நடைபெற்றது. தஞ்சை மாவட்ட ஆட்சியாளராக விளங்கிய டி.கே. பழனியப்பன் அவர்கள் பார்த்தால் வியக்கும் வண்ணம் தஞ்சையை மறக்கமுடியாத அளவுக்கு ஒரு கலைப்பொருள் உருவாக்குக என்று கூற வேணுகோபால் நாயுடு அழகிய தஞ்சை மாலையை உருவாக்கினார் என்பர். ஆனால் தஞ்சைப் பகுதியில் முதல் அறுவடையின்போது நெல் கைச்செண்டு செய்வர். தாம்பாளத்தில் நெல்லைக் கோர்த்து வைப்பர், நெல் பொம்மை செய்வர். இவைகளே தஞ்சை மாலையின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தன என்பர். சம்பா நெல்லைப் பொறுக்கித் தூய்மையாக்கி மஞ்சள் நிறமேற்றி ஈர்க்குச்சிகட்கு இடையே பூத்தொடுப்பது போல் நெல்மணிகளை னவத்துச் சோடியாக்கி மாலை தயார் செய்வர். ஜவ்வாது சந்தனத்தை உருண்டையாக உருட்டித் துவாரம் செய்து கோர்த்து மாலையாக்குவர். ரோஜா, மல்லிகை மாலை போன்று நெட்டியிலும் செய்வர். இம்மாலைகள் பல பொருட்காட்சியில் பரிசு பெற்றுள்ளன. மாலைகளைச் சிறியவை. நடுத்தரம், பெரியவை என மூன்று வகையாகப் பிரிப்பர். மாலை செய்ய அத்தர், ஜவ்வாது. சரிகை இறக்குமதி செய்யப்படுகின்றன. ’உமர்சா சாயபு அரசருக்கென்று சவ்வாது மாலை செய்து கொடுத்தார்" என்று மராட்டியர் ஆவணம் ஒன்று கூறுவதால் முன்பே இக்கலை இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. கண்ணாடித்தட்டு அலுமினியத் தட்டில் நிறமேற்றிய கண்ணாடியைக் கொண்டும், ரசக் கண்ணாடித் துண்டுகளைப் பதித்தும் கையினால் செய்யப்படுவது. சுக்கான் மாவுப்பசையும், தங்க நிறத்தாளும் மூலப் பொருட்கள். 5 அங்குலம் முதல் 14 அங்குல வட்டம் வரை பல்வேறு அளவுகளில் தட்டுக்கள் செய்யப்படுகின்றன. நான்கைந்து தலைமுறைகளாகத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வெல்வெட்டுத் துணி, நடுவே பதிக்கும் பொம்மைகள் வெளியூரிலிருந்து இறக்குமதி செய்வதில் சிரமம் உள்ளது. ஏறக்குறைய கண்ணாடித்தட்டு முறையைப் பின்பற்றியே (i) பூரண கலசம், (2) பருப்புக் கூடு. 3) நகைப்பெட்டி, (4) கண்ணாடி மண்டபம், (5) செவ்வக வடிவத் தட்டு ஆகியவை செய்யப்படுகின்றன. பூரண கலசத்திற்கும், கண்ணாடி மண்டபத்திற்கும் கலியான முருங்கைக் கட்டை தேவைப்படுகிறது. பருப்புக்கூட்டிற்குத் துத்தநாகத் தகடு வேண்டும் இவைகளைச் செய்ய மிகுதியான நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கேற்ற வருமானம் இல்லை. ஏழெட்டுக் குடும்பங்களே இப்போது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. தலையாட்டி பொம்மை கனமான அரை உருண்டை அடிப்பாகத்தையும் மேலே கனமற்ற இலேசான பகுதியையும் கொண்டு எப்படிச் சாய்த்தாலும் நேராக நிற்கும் அதிசய பொம்மை தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மை. இப் பொம்மைகள் வேறு எங்கும் செய்யப்படுவதில்லை. பொம்மைகள் ஆண், பெண் முகம் கொண்டு அதற்கேற்ற உடை, அணிகளுடன் காணப்படும். இப்போது அரசன், அரசி, செட்டியார், கோமாளி வடிவத்திலும் செய்கின்றனர். வெண்காரை (அரைத்த சுண்ணாம்பு). கிழங்கு மாவுப்பசை, புளியங்கொட்டைப் பசை, துருசு (மயில் துத்தம்), காகிதம்,நீர் சாயவண்ணம், சாக் பவுடர் ஆகியன மூலப்பொருள். உருவ அச்சில் வார்த்தெடுத்த பொம்மையில் மேல்பகுதியில் 9 காகிதங்களை ஒட்டிக் களிமண்ணைத் தட்டி எடுத்துவிடுவர். உறுப்புக்கள் புடைப்பு, புடைப்பு இன்றி இருவகையாகச் செய்யப்படும். களிமண்ணுக்குப் பதிலாகக் காகிதக் கூழையும் பயன்படுத்துகின்றனர். வண்ணம் பூசிக் கண் திறந்து, வார்னிஷ் அடித்து விற்பனைக்குத் தயாராகிறது. மழைக்காலத்தில் பொம்மைகள் செய்ய இயலாது. போட்டியாகப் பிளாஸ்டிக் பொம்மைகள் வந்துவிட்டன. குடிசைத் தொழிலாக 30 குடும்பங்கள் இத்தொழிலைச் செய்து வந்தன. இப்போது நான்கைந்து குடும்பங்களே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. ‘உருட்டுச்சட்டி பொம்மையிது உருண்டுருண்டு ஆடுமிது தஞ்சாவூர் இரயிலடியில் தம்பிப்பாப்பா அழுதபோது சின்னஅத்தான் வாங்கித்தந்த சீரான பொம்மையிது’ (50 ஆண்டுகட்கு முன் திருப்பூர் கருவம்பாளையம் நகராட்சி ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பில் நூலாசிரியர் கற்ற பாடல்) [ரதி (சரஸ்வதி மஹால்)] ![(./photo/media/image3.png){width=“3.78125in” height=“5.3375in”} [முக்தாம்பாள் ஓவியம்]](./photo/media/image4.png){width=“3.613888888888889in” height=“3.9208333333333334in”} [தஞ்சை அரண்மனை] [1798-இல் தஞ்சை பெரிய கோயில்] [இராஜகோபால பீரங்கி] மாபெரும் பணிகள் எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டையொட்டிப் பழமை படிந்துகிடந்த தஞ்சைமாநகர் புதுமைக்கோலம் பெற்றுவிட்டது. தமிழக அரசின் தாராள நன்கொடையால் பற்பல பணிகள் மிகச் சிறப்புடன் திட்டமிட்டுச் சீரிய முறையில் நடைபெற்று முடிந்துள்ளன. புதிய குடியிருப்புக்கள், புதிய பேருந்து நிலையம், சுற்றுச்சாலை அமைப்பு, சாலை விரிவாக்கம், மேம்பாலம், கீழ்பாலம், விளக்கு வசதி. கழிப்பிட வசதி, தோரண வாயில்கள், நினைவு மண்டபம், நினைவுத் தூண், சாலைத் தடுப்புகள். விடுதி வசதிகள், பூங்காக்கள். சதுக்கங்கள், முனைகள், சிறப்புமிகு சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கருத்தரங்கு நிகழும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலைநுணுக்கம் மிக்க அழகிய மகரத்தோரண வாயில், மேல்நிலை நீர்த்தொட்டி வள்ளுவர் மணிமண்டபம், விருந்தினர் விடுதி, 1200 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காணும் வண்ணம் பெரிய கூடம், அறைகட்குக் குளிர்சாதன வசதி சிறப்புடன் செய்யப்பட்டுள்ளன. மழைக்காலம் தோறும் ஆண்டுதோறும் ஒவ்வொரு பகுதியாக இடிந்து விழுந்து கொண்டிருந்த அரண்மனைப் பகுதிகள் இதுவரை ஒருவராலும் கவனிக்கப்படாமல் இருந்தது. தமிழக அரசு அளித்த 15 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம், ஆயுத கோபுரம் ஷார்ஜான் மகால் எனப்படும் சதர் மாடி, தர்பார் ஹால் ஆகியவை வலிமையுடன், அழகுத் தோற்றத்துடன் எழிலாக, பழைமை கெடாதவாறு புதுப்பிக்கப் பெறுகின்றன. மையத் தொல்லியல் துறையின் சென்னை வட்டம் திரு. பிநரசிம்மையா அவர்கள் தலைமையில் சுறுசுறுப்பான அலுவலர்கள் பயிற்சிப் பெற்ற பணியாளர்களைக் கொண்டு மிகச் சிறப்புடன் புதுப்பித்துள்ளார். இப்பணி மற்ற பகுதிகட்கும் தொடர்ந்து நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். பற்பல அழகிய அரண்மனைப் பகுதிகள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் பொதுப்பணித் துறையினரும் அரண்மனையி பல்வேறு சிறப்புமிக்க ஆக்கப் பணிகள் செய்து வருகின்ற கட்டிடங்களைப் புதுப்பித்தல், தேவையற்ற பகுதிகளை நீக்கல், கழி வெளியேறும் வசதி ஆகியவைகளைச் சிறப்புடன் செய்து ப ஆண்டுகட்குப் பின் எல்லாப் பகுதிகட்கும் வெள்ளையடிக்கு செய்துள்ளனர். இரவு பகலாக நடைபெற்று முடிந்த இப்பணிகள் 40 பாராட்டுதற்குரியது. பழுதடைந்த சங்கீத மண்டட பழுதுபார்க்கப்பட்டுள்ளது. தஞ்சையில் உள்ள முக்கியச் சாலைச் சந்திப்புகளுக்கு இராசராச சோழன் சதுக்கம், இராசேந்திர சோழன் சதுக்கம், தொல்காப்பியர் முனை, நக்கீரன் சதுக்கம் எனப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. தஞ்சையை நோக்கி வரும் ஏழு சாலையில் அழகுமிகு ஏழு தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதியமான் தோரணவாயில் இராசராசன் தோரணவாயில் கபிலர் தோரணவாயில் கரிகாற் சோழன் தோரணவாயில் குந்தவை தேவியார் தோரணவாயில் சேரன் செங்குட்டுவன் தோரணவாயில் வேலுநாச்சியார் தோரணவாயில் என அவை பெயர் பெற்றுள்ளன. இவை பண்பாட்டு எழுச்சிக்கும். பழம்பெருமைச் சிறப்புக்கும் காரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை இப்பணிகட்கெல்லாம் மூல காரணமாக இருந்த தமிழக அரசும் மாண்புமிகு முதல்வர் அவர்களும் மிகமிகப் பாராட்டுக்கு உரியவர்கள் தஞ்சைத் தரணி அவர்கட்கு நெஞ்சார நன்றி பாராட்டுகிறது. [முதலாம் இராசராசன்] கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account