[] [நூலகவாசியின் குறிப்புகள்] நூலகவாசியின் குறிப்புகள் அரசு கார்த்திக் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை நூலகவாசியின் குறிப்புகள் பதிப்புரிமை © 2014 இவரால் / இதனால் Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - நூலகவாசியின் குறிப்புகள் - 1. என் பெயர் ராமசேஷன் - ஆதவன் - 2. நடந்து செல்லும் நீரூற்று- எஸ்.ராமகிருஷ்ணன் - 3. அவஸ்தை - 4. சொல்லில் அடங்காத இசை - 5. இரு நாவல்கள் - 6. சதத் ஹசன் மண்ட்டோவின் படைப்புகள் பற்றி… - 7. ஆர். எல் ஸ்டீவன்சனின் ‘ஆள்கடத்தல்’ - 8. அலெக்சாண்டர் டூமாசின் ‘பிரபு மாண்டி கிறிஸ்டோ’ - 9. சித்திலெப்பை மரக்காயர் எழுதிய அஸன்பே சரித்திரம் - 10. ‘ஹெய்டி’ - 11. ஜோனாதன் ஸ்விப்ட் எழுதிய ‘கலிவரின் பயணங்கள்’ - 12. கால்வினோவின் சிறுகதைகள் - 13. தி. ஜானகிராமனின் ‘அடி’ - 14. அ. முத்துலிங்கம் - 15. ‘ராதையுமில்லை, ருக்மணியுமில்லை’ - 16. ‘மலை மேல் நெருப்பு’ - அனிதா தேசாய் - 17. ‘சுவாமியும் நண்பர்களும்’ - 18. தகழியின் ‘இரண்டுபடி’ - 19. ‘செம்மீன்’ - 20. ‘சீமானின் திருமணம்’ – ஐவான்துர்கநேவ் - 21. சார்லஸ் டிக்கன்சின் ‘டேவிட் காப்பர்பீல்டு’ - 22. மால்கோஷ் - 23. தாகூரின் ‘கோரா’ - 24. ‘சிப்பியின் வயிற்றில் முத்து’ - 25. ‘படிப்படியாக தியானம்’ - 26. ‘உயரப்பறத்தல்’ சிறுகதைகள் - 27. நீலபத்மநாபன் - 28. தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’ - 29. ‘குழந்தைப்போராளி’ – சைனா கெய்ரெற்சி - 30. ‘நீந்திக்களித்த கடல்’ - 31. ‘கோதை சிரித்தாள்’ – க.நா.சு - 32. ‘விசாரணை’ – ப்ரான்ஸ் காப்கா - 33. தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன் - 34. ஜே.ஜே சில குறிப்புகள் –சு.ரா - 35. ‘சங்கச்சித்திரங்கள்’ – ஜெயமோகன் - 36. ‘கடலும் கிழவனும்’ – எர்னஸ்ட் ஹெமிங்வே - 37. ‘ஜூதான்’ - ஓம்பிரகாஷ் வால்மீகி - 38. ‘முதலில்லாததும், முடிவில்லாததும்’ –ஸ்ரீரங்க - 39. சத்தியசோதனை - 40. இங்க்மர் பெர்க்மனின் ‘ஏழாவது முத்திரை’ - 41. கிருஷாங்கினி கதைகள் - 42. ‘மஞ்சள் வெயில்’ - 43. ஜெ.பிஸ்மி எழுதிய ‘களவுத்தொழிற்சாலை’ - 44. ‘த்ரீ மிஸ்டேக்ஸ் ஆப் மை லைப்’ - 45. ‘அந்நியன்’ – ஆல்பெர் காம்யூ - 46. ‘வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்’ - 47. ‘கடற்புறத்து தேசம்’ – அனிதா தேசாய் - 48. ‘ஷோபாவும் நானும்’ – பாலுமகேந்திரா - 49. ‘புத்துயிர்’ - 50. ‘வாழத்தெரிந்தவன்’ - மாப்பசான் - 51. ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டுள்ளது’ - 52. ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ - 53. வானம் முழுவதும் – ராஜேந்திர பிரசாத் - 54. சிவப்பு தீபங்கள் – மாதவிக்குட்டி - 55. ஏமாற்றப்பட்ட தம்பி – பலிவாடா காந்தாராவ் - 56. வர்ணஜாலம் – எண்ட மூரி வீரேந்திநாத் - 57. சிப்பியின் வயிற்றில் - முத்து போதி சத்துவ மைத்ரேய - 58. நிச்சயதார்த்தம் - தெலுங்கு நாவல் - 59. ரிவல்யூசன் 2020 – சேட்டன் பகத் - 60. அ.முத்துலிங்கத்தின் சிறுகதைத்தொகுப்பு - 61. திருமணமாகாதவள் - சரத் சந்திர சட்டோபாத்யாய - 62. அன்பே ஆரமுதே – தி. ஜானகிராமன் - 63. தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்ல - 64. தாகூர் எழுதிய ‘மூவர்’ - 65. நிழலைத்தேடி – மகரிஷி - 66. எர்னஸ்டோ சேகுவேரா – ஐ.லாவ்ரெட்ஸ்கி - 67. பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் - திரும்பி வராத காலம் - 68. நட்ஹாம்சன் எழுதிய ‘பசி’ தமிழில்: க.நா.சு - 69. போர்க்களம் – நிகோலாய் கோகல் - 70. கி.ராவின் ‘குழந்தைப்பருவக்கதைகள்’ - 71. காம்ரேட் – யஷ்பால் - 72. டோரிஸ் லெய்சிங் இலக்கிய ஆளுமைகள் - 73. ருஷ்யப் புரட்சி 1917 என்சிபிஹெச் வெளியீடு - 74. பெரியார் ஈ.வெ.ரா – ஆறு. அழகப்பன் சாகித்திய அகாதமி - 75. பெத்தவன் – இமையம் பாரதி புத்தகாலயம் வெளியீடு - 76. வண்ணதாசனின் கதைகள் பற்றி பேசுவோம்… - இறுதியாக ஒரு சொல் - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 நூலகவாசியின் குறிப்புகள் [noolagavasi_poster2]   இவை நான் வாசித்த நூல்கள் பற்றிய சிறிய அறிமுக சுருக்கமாகும். படித்தவரின் அனுபவத்தையும், காலத்தையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட ஒன்றே. நூல்களின் மீதான இறுதித் தீர்ப்பாக இவை கூறப்படவில்லை  என்பதை மனதில் கொள்ள வேண்டும். குறிப்புகள்: அரசு கார்த்திக் தொகுப்பு: அரசமார்     sjarasukarthick@rediffmail.com அன்பரசு சண்முகம்   வீட்டு முகவரி: 57, கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ), ஊஞ்சலூர்(வழி), ஈரோடு – 638152   மின்னூலாக்கம் : த.சீனிவாசன் மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   [pressbooks.com] 1 என் பெயர் ராமசேஷன் - ஆதவன் என் பெயர் ராமசேஷன் படித்துவிட்டேன். இப்போது சேட்டன் பகத் எழுதும் ஆங்கில நாவல்களை போல அப்போதே எழுதியிருக்கிறார் ஆதவன். ஒரு கல்லூரி, ஒரு காதல், உடலுறவு என செல்லும் நாவலில் ராமசேஷன் மாலா, கி. ராம், பிரேமா, ராம்பத்ரன், வி.எஸ்.பி என கதாபாத்திரங்கள் குறைவு. பிராமண இளைஞன் செய்யும் காஸனோவா செயல்கள்தான் கதை. மிக சுவாரசியமான கதை. மறுக்கவே முடியாது. எப்போது எந்த வருடம் படித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியும் இந்தக் கதையை. 2 நடந்து செல்லும் நீரூற்று- எஸ்.ராமகிருஷ்ணன்   நடந்து செல்லும் நீரூற்று எனும் சிறுகதைத் தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன் . இந்த நூலிலுள்ள அனைத்து கதைகளிலும் இயந்திரமாகி பின் தொலைத்த ஏதோவொன்றை தேடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள் நிறைந்துள்ளார்கள் . அவர்கள் குறையாக பிழையாக யாரையும் கூறவில்லை என்றாலும் அவர்களது கதை சில மனிதர்களின் மன குரூரத்தை அப்பட்டமாக கூறுகிறது . ‘ பி . விஜயலட்சுமியின் சிகிச்சைக்குறிப்புகள்’ எனும் சிறுகதை சிற்சில குறிப்புகளாக அவள் மனபிளவிற்கு உள்ளான கதையை எளிமையாக விளக்கிச் செல்கிறது . 3 அவஸ்தை அவஸ்தை இன்று காலையிலேயே படித்து முடித்துவிட்டேன் . கிருஷ்ணப்ப கௌடாவின் வாழ்க்கையே அவஸ்தை . அவரை யாருக்கும் எளிதில் பிடித்து விடுகிறது . அவர் கேட்காமலேயே அனைத்து உதவிகளும் தேடிவரும் தெய்வீக சக்தி பெற்ற ஆளுமை . வாழ்வின் முன்பகுதி மற்றும் பின்பகுதி அக , புற நேர்மை பற்றிய நிகழ்ச்சிகள் அவரது மனதை அமாவாசை கடல் போலாக்குகிறது . நல்ல சுவாரசியமான தொடர்ந்து வாசிக்க வைக்கும் சிறப்பான மொழியாக்கம் . 4 சொல்லில் அடங்காத இசை   சொல்லில் அடங்காத இசையை படித்து பின் குறிப்பெடுத்துக்கொண்டு இருப்பதால் வேகமாக படிக்க முடியவில்லை . இந்த வாக்கியமே பிழை . இசையை எப்படி வாசிக்க ? உணர , உயிரில் உணர மட்டுமே முடியும் . பல்வேறாக இசையின் வடிவங்கள் , நுட்பமான இசை கேட்பதற்கான விஷயங்கள் என பரந்துபட்ட விஷயங்கள் வாசிக்கும் போது தெரியவருகின்றன . நம் ஊரின் செவ்வியல் இசை தாண்டி பல்வேறுபட்ட நாட்டிலுள்ள மக்களின் உயிரின் உணர்வாகிய இசையைக் கேட்க விருப்பமேற்பட்டுள்ளது . என்னை பயமுறுத்தியது அந்நூலிலுள்ள தற்கொலைப் பாடல்தான் . பாடலைக் கேட்டவரெல்லாம் ஒரு சூழலில் அதை தனக்கும் மற்றவருக்கு நினைவுறுத்திவிட்டு துயரம் தாங்காது உயிர்துறந்து விட்டார்களாம் . அப்பாடலை எழுதிய இசையமைப்பாளர் உட்பட . 5 இரு நாவல்கள் அலெக்சாந்தர் பூஷ்கினின் ‘கேப்டன் மகள்’ படித்துக்கொண்டிருக்கிறேன். இன்று காலையில்தான் சரத் சந்திர சட்டோபாத்யாய எழுதிய ‘தேவதாஸ்’ சு. கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பில் படித்து முடித்தேன். காலச்சுவடு வெளியீடு. காதலின் துயரம் சரளமாக பக்கத்திற்கு பக்கம் தேவதாசன் இறக்கும் வரை தொடர்கிறது. வேறு அதிக விவரங்கள் இல்லை. தேவதாஸ், சந்திரமுகி, பார்வதி என மூன்று கதாபாத்திரங்கள் கொண்ட சிறு நாவல். எளிமையாக பல பக்கங்களை அதிக பிரயத்தனமின்றி படிக்கமுடிந்தது 6 சதத் ஹசன் மண்ட்டோவின் படைப்புகள் பற்றி…   நந்துவிடமிருந்து மண்ட்டோ படைப்புகளை நினைவுறுத்தி பெற்று வந்து படித்துக்கொண்டிருக்கிறேன் . மதம் பற்றிய ஆழமான வெறுப்பு அவரது கதைகளில் பகிரங்கமாகவே வெளிப்படுகிறது . முன்பு ஆதியில் ஒன்றாக இருந்த மனிதர்கள் இப்படி பிரிவுபட்டு நிற்பது மதம் என்ற ஒன்றினால்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை . மதக்கலவரம் என்ற பெயரில் தன் மனதின் வக்கிரங்களை , குரூரங்களை நிறைவேற்றிக் கொள்ளும் கூட்டங்கள் அவற்றின் செயல்பாடுகள் , மதம் அவர்களின் மூளையை மழுங்கடித்துக்கொண்டிருப்பது என இவரது கதைகளைப் படிக்கும்போது நம் மதத்தின் மீது எழும் குரோதம் அளவிடமுடியாத ஒன்றாக உள்ளது . மண்ட்டோவை இப்படித்தான் புரிந்து கொள்ளவேண்டுமோ ! இல்லையென்றால் நமக்கு எல்லாமே மரத்துப்போய்விட்டது என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான் . 7 ஆர். எல் ஸ்டீவன்சனின் ‘ஆள்கடத்தல்’   ஆர் . எல் ஸ்டீவன்சனின் ‘ஆள்கடத்தல்’ என்ற நாவலைப் படித்துவிட்டேன் . டேவிட் என்பவனின் தனது சொத்துக்கான தேடல் சாகசங்கள்தான் கதை . டாக்டர் ஜெக்கியூம் , மிஸ்டர் ஹைடும் என்ற கதையில் சமுதாயத்தில் நல்ல மனிதன் என்ற அடையாளத்திற்கான உருவத்தையும் , தன்னுடைய மகிழ்ச்சி மற்றும் கோபத்தை வேறு ஒரு உருவத்தில் வெளிப்படுத்தி வாழ நினைக்கும் ஒரு மருத்துவரின் சாகசக்கதை இது . சிறந்த சாகச நாவல் இது . அமேசிங் ஸ்பைடர் மேன் கதையில் வரும் டாக்டர் மிருகமாகி பிரச்சனை தருவாரே அது போன்ற கதைதான் . 8 அலெக்சாண்டர் டூமாசின் ‘பிரபு மாண்டி கிறிஸ்டோ’   தொடர்ந்த பயணங்களினூடே இரு புத்தகங்கள் படித்தேன் . அலெக்சாண்டர் டூமாசின் ‘பிரபு மாண்டி கிறிஸ்டோ’ நான்கு பேர் செய்யும் சூழ்ச்சிகளால் ஒருவன் தன் காதலியை இழந்து சிறையில் பதினான்கு வருடங்கள் கழிக்க நேர்கிறது . பின் வெளியே வந்து பார்க்கும்போது அவன் ஒரே உறவான தந்தையும் பசியில் உயிர் விட்டிருக்கிறார் . அவன் எப்படி தன் வாழ்வை உருக்குலைத்த நான்குபேரையும் பழிவாங்குகிறான் என்பது மீதிக் கதை . ஒரே மூச்சில் இடைவேளை இல்லாமல் படித்து முடித்தேன் . சிவனின் மொழியாக்கத்திற்குத்தான் என் முதல் பாராட்டு . பரபரப்பு , திகில் என வேகம் .. வேகம் . 9 சித்திலெப்பை மரக்காயர் எழுதிய அஸன்பே சரித்திரம்   சித்திலெப்பை மரக்காயர் எழுதிய அஸன்பே சரித்திரம் இது தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்கிறார்கள் முன்னுரையில் . அஸனின் சொத்துக்காக ஏற்படும் சதிகள் , தான் யார் என்று தெரிந்துகொள்ள அலையும் தேடல்கள் இவைதான் கதை . 10 ‘ஹெய்டி’   ‘ஹெய்டி’ எனும் ஜோஷன்னா ஸ்பைரி எழுதிய குழந்தைகள் நாவல் வாசித்தேன். அடல் ஹெய்டி எனும் சிறுமி தன்னைச் சுற்றியுள்ள உலகை அன்பினால் எப்படி நெய்கிறாள் என்பதுதான் கதை. அவளை எல்லோருக்கும் பிடிக்கிறது. தன்னைவிட மற்றவரின் நலத்தை , அகத்தை விரும்புகிறாள். இவளின் அன்பு, காதலால் கிளாரா எனும் கால் ஊனமுற்ற சிறுமி நோய்மையைத் துறக்கிறாள். 11 ஜோனாதன் ஸ்விப்ட் எழுதிய ‘கலிவரின் பயணங்கள்’   ஜோனாதன் ஸ்விப்ட் எழுதிய ‘கலிவரின் பயணங்கள்’ நாவல் படித்தேன் . பயணங்கள் என்றாலே சுவாரசியம்தானே . இதில் கலிவர் பயணிக்கும் பயணத்தில் தீவுகள் , விசித்திர மனிதர்கள் என புனைவுலகை உருவாக்கி அங்கதச்சுவையை அள்ளித்தெளிக்கிறார் . குள்ள மனிதர்களின் தீவு , உயர மனிதர்களின் தீவு , பறக்கும் மனிதர்கள் தீவு , குதிரைகளின் தீவு என செல்லும் கதையில் கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் பகடி வயிறு வலிக்க வைக்கிறது . குதிரை தீவுகளில் யாகூ எனும் மனிதக்குரங்கு கூட்டத்தை வேலையாளாக வைத்திருக்கும் குதிரைகளின் நேர்மையை வியந்து கலிவர் தன்னை குதிரையாகவே மாற்றிக்கொண்டால் என்ன என்று அது போல நடந்துகொள்ள விரும்புவது மனிதனின் மேலுள்ள வெறுப்பு போலவே படுகிறது . 12 கால்வினோவின் சிறுகதைகள்   கால்வினோவின் சிறுகதைகள் படித்து விட்டேன் . இவரைப் பொறுத்தவரையில் மிகச் சிக்கலான கதைகள் எல்லாம் எதுவும் இல்லை . ஒரு குளியலறை ஷவரில் வெளிவரும் நீர் பற்றி இப்படியெல்லாம் யோசித்து எழுதமுடியுமா என்று யோசிக்க வைக்கும் கதை . இதைத்தான் எழுதவேண்டும் என்றில்லாமல் , கதை அதன் போக்கிலே நீளுகிறதான் புதுமை . இது போலவே முன்பு எளிய அடையாளமாக இருந்த தன் முகத்தை பார்வைக்குறைபாட்டினால் அணியும் ஒரு கண்ணாடி எப்படி சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துகிறது என்று கூறும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது . என் கதையும் அதுதானே !. 13 தி. ஜானகிராமனின் ‘அடி’   தி . ஜானகிராமனின் ‘அடி’ உணர்ச்சிக்கும் , அறிவுக்குமான போராட்டத்தை எளிமையாக நேர்மையாக விவரிக்கும் படைப்பு . கதையில் அவனும் , அவளும் அதை உணர்ந்தே மனம் ஒருமைப்பட்டே ஈடுபடுகிறார்கள் . அது பற்றிய அச்சமும் அவர்களிடம் இருந்தாலும் ஏதோ ஒன்று அவர்களை ஒரே சரடில் இணைக்கிறது . மனைவி அவனை மெல்ல அதிலிருந்து மீட்டெடுக்கிறாள் . அதுதான் அடி . இன்று உளறுவதெல்லாம் உண்மை என்று பஞ்சாயத்து நடந்து ஏதோ ஒரு கப் பஞ்சாயத்து போல ஒரு தீர்ப்பு எழுதுகிறார்கள் . ஆணுக்கும் , பெண்ணுக்குமான உறவுச்சிக்கல்கள் என்றும் முடியாத ஒன்று . பெரும் சுவர் இருவருக்கும் இடையில் நிற்கின்ற வரை ஆணுக்குப் பெண்ணைப்பற்றியும் , பெண்ணுக்கு ஆணைப் பற்றியும் அறிந்தே தீரும் ஆவல் தீரவே தீராது . 14 அ. முத்துலிங்கம்   அ . முத்துலிங்கம் பற்றிக் குறிப்பிடவேண்டும் . புனைவா , அனுபவமா என்று மயங்கும் வடிவத்தில் சுவாரசியமான தணியாத அங்கதமான நடை கொண்ட எழுத்துக்கள் கொண்டவர் அவர் . எந்த ஒன்றும் அவருடைய எழுத்தில் அற்புதமான அனுபவமாக மாறுவது குறித்து எனக்கு ஆச்சர்யம்தான் . அது எப்படி என்று புரியவில்லை . அ . முத்துலிங்கத்தின் பகடி குறையாதது . வியத்தலும் இலமே முழுக்க கதை எழுதுபவர்கள் பற்றிய ஒரு முழுமையான பதிவாக இருக்கிறது . எழுத்தாளர்களின் நேரடிப்பகிர்வை எழுதுகிறார் . ஒரு எழுத்தாளர் ஒரே சமயத்தில் ஐந்து நூல்களைப் படிக்கிறாராம் . 15 ‘ராதையுமில்லை, ருக்மணியுமில்லை’   இப்போதுதான் ‘ராதையுமில்லை , ருக்மணியுமில்லை’ எனும் அம்ருதா ப்ரீதம் எழுதிய நாவலைப் படித்துமுடித்தேன் . முழுக்க அகவய உணர்வுகளின் சித்தரிப்பு இந்நூலில் அதிகம் . அனைத்துமே ஹரிகிருஷ்ணனின் நினைவுகளின் வழி கதை உயருகிறது . ஓவியத்தின் வண்ணங்கள் மூலமாக அவனுக்கு ஆன்ம தரிசனம் கிடைத்துவிடுகிறது . 16 ‘மலை மேல் நெருப்பு’ - அனிதா தேசாய்   ‘மலை மேல் நெருப்பு’ எனும் அனிதா தேசாய் எழுதிய நாவல். இதனை அசோகமித்திரன் மொழிபெயர்த்திருக்கிறார். இது முன்னதிற்கு எதிர்ப்பதமான நூல். புறவயமான காட்சி வழியாக மன உணர்வுகளை சித்தரிக்க அனிதாதேசாய் பெருமுயற்சி செய்கிறார். திரைப்படம் செய்ய இது உதவியாக இருக்கும். நந்தா கௌல், ராக்கா, ஈலாதாஸ் என மூன்று பேர் வசிக்கிறார்கள் கரிக்னோ மலை மீது. ஈலாதாஸின் வாழ்க்கை மிகவும் துயர் வடியும் பகுதி. அவளது வறுமை, பட்டினி, ஒட்டுப்போட்ட பை, உடை என அவளை விவரித்து பின் அவள் தன் தோழியான நந்தாவிடம் உரையாடும் காட்சியில் எனக்கு கண்ணீர் நிற்காமல் பெருகி வழிந்தது. உண்மையில் அவள் தெருவில் நடக்கும்போது அவளது உருவம் கேலிக்குள்ளாகும் தருணம், அவளது அவல வாழ்வு முடிந்துபோனால்தான் என்ன எனும்போது, திருமணமாகாத அவள், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவனால் கற்பழிக்கப்பட்டு தாக்கி கொல்லப்படுகிறாள். அதை ஏற்றுக்கொள்ள மனம் ஏற்கனவே தயாராகிவிடுகிறது. துயரமான சாவு இல்லையா? நந்தா கௌலின் மனதில் துயரச்சுமை எரியத் தொடங்குவதுடன் கதை நிறைவுறுகிறது. 17 ‘சுவாமியும் நண்பர்களும்’   தற்போதுதான் ‘சுவாமியும் நண்பர்களும்’ நூலைப்படித்து முடித்தேன் . மிகச்சரளமான நடை . அட்டை ஓவியம் , பக்கங்களுக்கு இடையேயான ஓவியங்கள் மீண்டும் பார்க்கும்படி உள்ளன . சுவாமி , மணி , ராஜம் என மூன்று நண்பர்களின் கதை . குழந்தைகளின் அறிவை வெளிப்படுத்தும் உரையாடல்கள்தான் இந்நூலின் பெரும்பலமே . ஏறத்தாழ அவர்களது புரிந்துகொள்ளல் தொடர்பான தடுமாற்றம்தான் நகைச்சுவையே . ஒரு கிராமத்து பள்ளியில் இதைக்காட்டிலும் கூடிய விஷயங்கள் நடக்கும் என்றாலும் , மால்குடியின் சூழல் , கதை மாந்தர்கள் என வாழ்ந்த அயர்ச்சி வருகிறது இல்லையா அங்குதான் நூலின் வெற்றி கண்சிமிட்டுகிறது . 18 தகழியின் ‘இரண்டுபடி’   தகழியின் ‘இரண்டுபடி’ நாவலைப் படித்தேன் . கோரன் , சிருதை ஆகியோரது வாழ்வு , நிலப்பண்ணைக்காரர்களால் , எப்படி சிதைக்கப்படுகிறது என்பதே கதை . தகழியின் வசனங்களின் இழைப்பின்னல் நம் மனதில் நூலாடுகிறது . சமூகத்தின் கடையர்களாக ஒதுக்கப்பட்ட பறையர்கள் , பள்ளர்கள் பற்றிய கதை இது . 19 ‘செம்மீன்’   ‘செம்மீன்’ படித்து முடித்துவிட்டேன். கறுத்தம்மா, பரீக்குட்டி என காதலிக்கும் இருவேறுபட்ட மதங்களில் பிறந்தவர்களை அந்த மதங்களே பிரிக்கிறது. ஆனால் அதன் பின்னான அவர்களது சமூக வாழ்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், கடும் வசைகளிலும் தூற்றலிலும் திகைத்து நிற்கிறது. கறுத்தம்மா தொடர்ந்து ஏன் ஒரு குழந்தை பிறந்த பிறகும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது தன் கணவனிடமும், ஊராரிடமும். ஏன் குப்பத்து மக்களிடம் தனி அந்தரங்கம் என்பது கிடையாது. ஒருவரின் வாழ்வு மற்றவரோடு நேரடியாக தொடர்புடையது. இறுதியில் பரீக்குட்டியும், கறுத்தம்மாவும் கேள்விகள், சந்தேகங்களால் சூழப்பட, இருவரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கறுத்தம்மா பரீக்குட்டியின் தோள்சாயும் நேரம் மீன்பிடிக்கச்சென்றிருக்கும் அவள் கணவன் பழனி கடலலையினால் இழுத்து செல்லப்படுகிறான். மனைவியின் கற்பே கணவனைக் கடலில் காப்பாற்றும் என்கிற தகழியின் கருத்து எனக்கென்னவோ ஒப்பவில்லை. 20 ‘சீமானின் திருமணம்’ – ஐவான்துர்கநேவ்   ‘சீமானின் திருமணம்’ – ஐவான்துர்கநேவ் எழுதிய குறுநாவல் படித்தேன். 95 பக்கங்களில் சொல்லாத காதல் கதையினை துயரத்துடன் பகிர்கிறது. ஆஸ்யா மிகுந்த எண்ணக்கொதிப்புகள் கொண்ட பெண். அவளை வர்ணிப்பதாகட்டும், அடைமழை போன்று பெருகியோடும் அவளின் காதலையாகட்டும் வெகு நேர்த்தியாக கூறியிருக்கிறார் ஆசிரியர். இதை முக்கியமாக கருத என்வயதும் ஒரு காரணமாயிருக்கக் கூடும். கதையில் மூன்று கதாபாத்திரங்கள்தான் காகின், ஆஸ்யா, நான் என கதை கூறும் நபர். 21 சார்லஸ் டிக்கன்சின் ‘டேவிட் காப்பர்பீல்டு’   சார்லஸ் டிக்கன்சின் ‘டேவிட் காப்பர்பீல்டு’ தமிழில் சிவனின் தேர்ந்த மொழிபெயர்ப்பில் படித்தேன் . டேவிட் தன்னைப்பற்றித் தானே கூறுவது போலத்தொடங்கி , தன் வாழ்வின் இளைஞனாவது வரை நீளும் நாவலில் பெற்றோர் மறைவு , பள்ளிப்படிப்பு தண்டனை , தன் அத்தை பெஸ்டி டிரஸ்வுட்டிடம் சேருவது என பல நிகழ்வுகள் இருந்தாலும் , துயரத்தை வர்ணிப்பதில்தான் ஆசிரியருக்கு முழுத்திறன் இருக்கிறது என்பதை கண்டுகொள்ள முடிகிறது . 22 மால்கோஷ்   மால்கோஷ் எனும் வங்க சிறுகதைகளையும் படித்துக்கொண்டிருக்கிறேன் . படித்துறை சொல்லும் கதை எனும் தாகூர் எழுதிய கதை பிடித்திருந்தது . பிற கதைகள் பெரும் போதனை போல் இருந்தது . வலிய துயரை ஏற்படுத்தும் குணங்கள் அதில் நிரம்பியிருந்தன . தாகூரின் கதையில் பால்ய மணம் புரிந்து கணவன் மரித்தபின் இளவயது பெண் தன் காமத்தை ஆற்றில் கரைக்க முயற்சித்து கைகூடாது , துறவி ஒருவரின் மீது காதலுற்று அதுவும் தோற்று , ஆற்றில் மூழ்கி தன்னை மாய்த்துக்கொள்வதுதான் கதை . எளிமையான சிறுகதைகள்தான் அனைத்துமே . 23 தாகூரின் ‘கோரா’   தாகூரின் ‘கோரா’ நாவல் த . நா குமாரசாமி மொழிபெயர்ப்பில் படித்துக்கொண்டிருக்கிறேன் . முடிவுறும் தருவாயில் உள்ளது . மதம் பற்றிய சர்ச்சையே நூல் முழுவதும் வியாபித்து நீக்கமற உள்ளது . இரு பாத்திரங்கள் சந்தித்த இரண்டாம் நொடி தர்க்க , மத விவாத மகாயுத்தம் தொடங்கிவிடுகிறது . இரு வேறு மதங்களைச் சார்ந்த மனிதர்கள் இருவரும் மதம் , தர்க்கம் , கர்வம் குலைத்து எவ்வாறு கொள்கை ரீதியாக ஒன்றிணைகிறார்கள் என்பதே 600 பக்க நாவலின் கதை . நாட்டின் சீரழிந்த நிலை , தலைவர்களில்லா சூழல் , சுயநலம் நிச்சயமற்ற அன்றாட வாழ்வு , பேராசை என பல்வேறு சீற்றமான நிலையில் கோராவின் சொற்கள் நிச்சயம் நம்பிக்கையைத் தருகின்றன என்பது உண்மை . கோராவின் மனதின் அழியாத அறவுணர்வே இந்நாவலை தொடர்ந்து படிக்கச்செய்யும் வழுவாத இழையாக உள்ளது . நம்பிக்கையை ஊற்றாகப் பெருகச் செய்யும் நூல் என்பேன் . 24 ‘சிப்பியின் வயிற்றில் முத்து’   போதி சத்வ மைத்ரேய எழுதிய ‘சிப்பியின் வயிற்றில் முத்து’ தமிழில் சு . கிருஷ்ணமூர்த்தி செய்திருக்கிறார் . மீனவர்களின் வாழ்க்கையை முடிந்தவரை மறைக்காது சொல்ல முயன்றிருக்கிறார் . கிறிஸ்தவர்கள் மீதான விமர்சனங்களும் இந்நாவலில் உண்டு . இன்றைக்கும் படிக்க சுவாரசியம் குறையாத வாழ்வை தரிசிக்கமுடிகிறது என்பது ஆசிரியரின் , மொழியாக்கம் செய்தவரின் ஆகிய இருவரின் உழைப்பை ஒருங்கே உணர முடிகிறது . வங்க எழுத்தாளர்கள் வாழ்வினை , அனுபவங்களை சிறப்பாக சித்தரிக்கிறார்கள் . நூலகத்தில் தொடர்ந்து படித்து வருவது அவர்களுடையதே . பெரிதும் த . நா குமாரசாமியின் மொழிபெயர்ப்பில்தான் . 25 ‘படிப்படியாக தியானம்’ கடவுளின் இடைமுகமாக நமக்கு இருக்கும் பாதிரிமார்களின் கூற்றாக இருப்பது வேறு . இயேசு கூறிய பாடல்கள் வேறு என்று ஓஷோ கூறுகிறார் . நாம் ஏன் வாழ்வை குற்றவுணர்ச்சியினால் மூழ்கடித்துக் கொள்ளவேண்டும் ? தற்போது ஓஷோவின் ‘படிப்படியாக தியானம்’ படித்துக் கொண்டிருக்கிறேன் . 26 ‘உயரப்பறத்தல்’ சிறுகதைகள் வண்ணதாசனின் எழுத்துக்கள் நாம் பார்க்கின்ற மனிதர்கள் , செடிகள் , கொடிகள் என அனைத்தையும் நேசிக்க கற்றுக்கொடுக்கும் எழுத்துக்கள் . எந்த எதிர்மறை பேச்சுக்களோ , கதாபாத்திரங்களோ இல்லாமல் நேசிப்பையும் , அன்பையும் கொண்டு அக்கறையாக எழுதப்பட்ட எழுத்துக்கள் . இவரின் முகவரி தெரியவில்லை . இருந்தால் ஒரு கடிதம் எழுதிவிடலாம் என்று நினைத்தேன் . என்றாவது ஒருநாள் இதற்கு அவரிடம் நன்றி தெரிவிக்கவேண்டும் . 27 நீலபத்மநாபன்   சென்னை பதிப்பகங்களிலிருந்து நீலபத்மநாபனின் நாவல்கள் அவர் சாகித்ய அகாதமி விருது பெற்றும் கூட திரும்பி வந்து விடுகின்றனவாம் . பல நூல்களை தானே பதிப்பித்து இருப்பதால் , வலி கூடிய எழுத்துக்களாக இருக்கின்றன பல கட்டுரைகளில் . இவரின் எழுத்தில் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவலை காலச்சுவடின் வெளியீட்டில் நூலகத்தில் படித்திருக்கிறேன் . தமிழின் வெளியீட்டு சிரமம் காரணமாக மலையாளத்தில் எழுதத் தொடங்கியிருப்பதாக கூறுகிறார் . 28 தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’   தி . ஜானகிராமனின் ‘மரப்பசு’ இப்போதுதான் படித்துமுடித்தேன் . அம்மணி என்ற பெண்ணை உறுதியான பெண்ணாக வார்த்திருக்கும் முக்கியப் படைப்பு இது . சமூகத்தின் கட்டுப்பாடுகள் , ஒழுங்குவிதிகள் என அனைத்தையும் தகர்த்து விட்டு தன் மனதின் கொள்கைகளுக்கேற்ப வாழும் சுதந்திரத் தன்மை கொண்ட கதாபாத்திரம் இது . உலகத்திலுள்ள அனைவரையும் ஒருமுறையாவது தொட்டுப்பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சங்கீத வித்வான் ஒருவரோடு வாழும் அம்மணி எதிர்கொள்ளும் அனுபவங்கள் , உணர்வுகள்தான் கதை . 324 பக்கங்களில் அவளின் நாற்பது வயது வரை கதை பயணிக்கிறது . பெண்ணிற்கும் , பசுவிற்குமான ஒப்பீடு கடைசிப்பக்கங்களில் நடைபெறுகிறது . பசுவின் பால் முழுவதையும் உறிஞ்சிவிட்டு , வயதான பின் இறைச்சி கூடத்தில் அதை எறிவது போல் பெண்ணிற்கும் ஏற்படுகிறது . 29 ‘குழந்தைப்போராளி’ – சைனா கெய்ரெற்சி   ‘ குழந்தைப்போராளி’ – சைனா கெய்ரெற்சி எழுதிய சுயசரிதை நூலைப் படித்தேன் . கருப்பு பிரதிகள் வெளியீடு ரூ .180. நூலைப்படித்து முடித்து இந்த கடிதம் எழுதும்வரை என் உடல் நடுக்கம் , பயம் , பதட்டம் குறையவில்லை . சைனா கெய்ரெற்சி என்ற உகாண்டா நாட்டுப் பெண்ணின் குடும்ப வாழ்வு , அப்பாவின் சித்திரவதை , வன்முறை , குழந்தைப்போராளியாக என்ஆர்ஏ வில் இணைவது , அதிகாரிகளால் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவது , உறவுக்கு மறுக்கும் தருணத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாவது , பின் டென்மார்க் தப்பிச் செல்ல யுஎன்ஓ உதவுவது என பேரதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் குழந்தையிலிருந்து இளம்பெண் பருவம் வரை உளநிலையை பிறழ்ந்து போகச் செய்யும் நிகழ்ச்சிகள் என இந்நினைவுகளி - லிருந்து மீளவே நான் பெரும்பாடு பட்டேன் . ராணுவத்திலுள்ள அதிகார வெறி பிடித்தவர்களால் , பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக குழந்தைகள் பிரிக்கப்பட்டு ராணுவத்தில் முதல் படையணிவீரர்களாக சேர்க்கப்படும் காட்சி வர்ணனைகள் உறக்கத்திலும் கனவாக வருமோ என்று பயமுறுத்தும் நிஜங்கள் . குழந்தை போராளியாக மாற்றப்பட்டவர்கள் பிற எதிரி படையினரை செய்யும் சித்திரவதைகள் என அது தனியாக விவரிக்கப்படுகிறது . இத்தனை துயரங்கள் , வலிகள் , குரூரங்கள் தாண்டி ஒரு பெண் வாழ விரும்பினால் அது ஏன் ? எப்படி அது சாத்தியம் என்ற கேள்விகள் உங்கள் மனதில் தோன்றினால் நிச்சயம் இந்த நூலை படித்துதான் ஆக வேண்டும் . பேராசைக்காரர்களின் கையில் சிறுகுழந்தைகள் எப்படி நசுக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக தன் வாழ்விலிருந்தே கூறுகிறார் சைனா . போரில் ஈடுபடும் குழந்தைகளின் வாழ்வு பின்னாளில் எப்படி உளவியல் பாதிப்பு ஏற்பட்டு என்றுமே கண்ணில் உறுத்தும் சதையாக இருக்கப்போகிறது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள் என்று கூறும் சைனா இன்று வரை அந்த வேதனையை எதிர்கொண்டு தாங்கிக்கொண்டு வாழ்கிறார் . வாழ்வின் கவர்ச்சியே அதுதானே ! 30 ‘நீந்திக்களித்த கடல்’   . ‘ நீந்திக்களித்த கடல்’ –குறும்பனை சி . பெர்லின் எழுதிய நூலை என்சிபிஎச் வெளியிட்டுள்ளது . பனிரெண்டு சிறுகதைகள் நேர்த்தியான பதிவுகளாக மீனவர்களது வாழ்வினை உப்புக்காற்றும் , மீன் கவுச்சியுமாக நம்மேல் வீசுவது போல் எழுதியுள்ளார் . கடல் நீவாட்டு கீழாட்டு , காணா கனவு , ஆனி ஆடி ஆத்தலும் , தூத்தலும் என்ற சிறுகதைகள் முக்கியமானவையாக கருதுகிறேன் . 31 ‘கோதை சிரித்தாள்’ – க.நா.சு ‘கோதை சிரித்தாள்’ – க.நா.சு எழுதியுள்ள இந்த நாவல் நடைமுறை வாழ்விற்கான பள்ளியைக் கட்டமைக்க உழைக்கும் இருபெண்களின் அர்ப்பணிப்பான வாழ்வைக் கூறுகிறது. ‘ 32 ‘விசாரணை’ – ப்ரான்ஸ் காப்கா   ‘விசாரணை’ – ப்ரான்ஸ் காப்கா, தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன் என இரு நூல்கள்தான் அவை. விசாரணை நாவலைப் படிக்க மனவலிமை அதிகம் தேவை. நீண்டு கொண்டே கனவின் புதிர்த்தன்மை கொண்ட பாதையாய் விரிந்து செல்லும் முற்றுப்புள்ளிகளில்லாத உரையாடல்கள் பெரும அயர்ச்சியைத் தருகிறது. விசாரணை ஏற்படுத்தும் கடும் மன உளைச்சலை படிக்கும் வாசகனுக்கும் ஏற்படுத்துவது ஆசிரியனின் திறமையாக, இலக்காக கூட கொண்டிருக்கலாம். க என்பவரின் மீது தொடுக்கப்படும் வழக்கும் அதன் நீட்சியாகத் தொடங்கும் வழக்கு விசாரணைகளும். இதன் விளைவாக க எதிர்கொள்ளும் குழப்பங்களும், கவலைகளும், சிக்கல்களும், வேதனைகளும் இறுதியில் க விற்கு என்ன நேருகிறது என்பதை படித்து அறியுங்கள். நீங்கள் இதனை முன்பே படித்திருப்பீர்கள். 33 தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன்   தேசாந்திரி நூலை விசாரணையின் அயர்ச்சி போக இடையில் படிக்கத் தொடங்கி , முழுமையாக படித்து முடித்துவிட்டேன் . சிறந்த பயண நூல்தான் இது . இடம் பற்றிய விவரிப்பு , இன்றைய நிலைமை , நமது எண்ணங்கள் என உயிரோட்டமான எழுத்து பயணத்திற்கு செல்ல நம்மை ஆயத்தப்படுகிறது . சாரநாத் ஸ்தூபி , ஆர்மீனியன் தேவாலயம் , அடையாறு ஆலமரம் , சித்தன்ன வாசல் , வானம் , வெயில் , மணல் என்று பார்த்த விஷயங்களையே இன்னும் நுட்பமாக , ஆழமாக எப்படி பார்ப்பது என்று தூண்டும் அற்புதமான எழுத்து . 34 ஜே.ஜே சில குறிப்புகள் –சு.ரா   ஜே . ஜே சில குறிப்புகள் –சு . ரா எழுதிய நாவலைப் படித்தேன் . திரும்ப , திரும்ப படிக்கத் தூண்டும் வசீகரமான நாவல் . பகடி , எள்ளல் , எனப் பயணிக்கும் மிக கச்சிதமான எழுத்து நடை , ஜோசப் ஜேம்ஸ் எனும் எழுத்தாளரின் இறப்பைக் கூறி முதல் அத்தியாயம் தொடங்குகிறது . கதையைக் கூறுபவர் பாலு என்றும் , அவரறிந்த ஜே . ஜே பற்றிய உருவம் மெல்ல புலப்படுகிறது . பின் ஜே . ஜே வின் நாட்குறிப்புகளின் வழி அவரது வாழ்வு , எண்ணங்கள் என தெளிவாகவே செல்கிறது . ஜே . ஜேவைப் பற்றி மற்றவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக , அவரைப்பற்றிய நூலை பாலு எழுத முயற்சிப்பதுதான் கதை . சு . ராவின் மிகச்சிறந்த எழுத்தை இந்நூலில் தரிசிக்க முடிகிறது . எழுத்து அதோடான அகநேர்மை என்ற ஒன்றுதான் சு . ராவை இன்றும் படிக்கத் தேர்ந்தெடுக்க உதவுகிறது . 35 ‘சங்கச்சித்திரங்கள்’ – ஜெயமோகன்   ‘சங்கச்சித்திரங்கள்’ – ஜெயமோகன் எழுதிய சங்கப்பாடல்களை வாழ்வனுபவங்களோடு இணைத்து புதிய பரிணாமம் தரும் விதமான எழுத்தை இந்நூலில் சந்திக்கலாம். நம் மரபின் பாடல்களை படிக்க பெரும் ஈடுபாட்டை ஏற்படுத்த முயற்சிக்கும் முக்கியமான படைப்பு. ‘ கோமாளியும் காதலனும்’ என்று 31 வது அத்தியாயம் தொடங்கும் . தன்னைப் பேச அனுமதித்து , இயல்பாக பேசுபவனிடம் பெண்ணுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது என்று கூறி சங்கப்பாடல் ஒன்றையும் கூறுவார் . கடைவீதியில் நீங்கள் கூறிய சிலப்பதிகாரப் பாடல் நினைவுக்கு வந்தது . வாழ்வனுபவங்கள்தான் கவிதையோ , கதையையோ முளைக்கச் செய்யும் மண்ணாக இருக்கிறது . ‘ எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ என்று ஔவையார் அதியமானின் வாயிற்காவலனிடம் கூறுவதைப் படித்து கண்ணீர் வழிந்தது துடைக்க துடைக்க . இது பாடப்படுவது வாயிற்காவலனிடம் என்பதுதான் பரிதாபமே . புலமை என்றும் அவமானப்படுத்தலின் உரத்தில்தான் வளருகிறதோ !. 36 ‘கடலும் கிழவனும்’ – எர்னஸ்ட் ஹெமிங்வே   ‘ கடலும் கிழவனும்’ – எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய நோபல் பரிசு பெற்ற நாவல் படித்தேன் . மீன் பிடிக்கச் செல்லும் கிழவர் ஒருவருக்கு கடலின் மையத்தில் நிகழும் சம்பவங்கள்தான் கதை . யோகி என்பவரின் நேர்த்தியான மொழிபெயர்ப்பு . வாசிக்கும் காலம் , மனநிலை பொறுத்து வெவ்வேறான வாசிப்பை , அனுபவத்தை தரும் பிரதி இது . 37 ‘ஜூதான்’ - ஓம்பிரகாஷ் வால்மீகி   ‘ ஜூதான்’ எனும் ஓம்பிரகாஷ் வால்மீகியின் வலி நிறைந்து மன உளைச்சல் தரும் சுயசரிதையைப் படித்து முடித்தேன் . பால்யம் தொடங்கி இன்றைய காலம் வரை ஒரு அடையாளமாக காணப்படும் தன் ஜாதி பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் . காந்தி பற்றிய தனது விமர்சனம் ஒன்றினையும் , பகவத் கீதை படிப்பது பற்றிய கருத்தினையும் தெரிவிக்கிறார் . இவர் கூறியுள்ள பலவற்றை நீங்கள் எப்படி உணர்வீர்களோ ? ஆனால் எனக்கு இந்த நிகழ்ச்சிகள் பலவற்றில் ஒத்திசைவு உண்டு என்பதால் பெரும் மனச்சோர்வு ஏற்படுத்திய படைப்பு என்பேன் . 38 ‘முதலில்லாததும், முடிவில்லாததும்’ –ஸ்ரீரங்க   ‘முதலில்லாததும், முடிவில்லாததும்’ –ஸ்ரீரங்க எழுதிய கன்னட நாவல் உணர்ச்சிக்கும், அறிவுக்குமான நீடித்த போராட்டத்தைப் பற்றி பேசுகிறது. ராமண்ணா, சரளா, குமுதா, மோகன் என்ற நான்கு பேரே உள்ள 250 பக்க நாவல் இருபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ராமண்ணா தன் மனைவி சரளாவை நேசிக்கிறபோதே, அவள் அழைத்துவந்த அத்தை மகளான குமுதாவையும் சிறிதுசிறிதாக நேசிக்கத் தொடங்குகிறான். சரளா நோயுற்று மரணப்படுக்கையில் இருக்கும்போது, ராமண்ணா குமுதாவுடன் உடலுறவில் ஈடுபடுகிறான். சரளாவின் இருப்பு இவ்விருவரையும் கடும் குற்றவுணர்வுக்கு உள்ளாக்க முதலில்லாதது நிறைகிறது. முடிவில்லாதது எது காமமா, காதலா என்பதை கண்டறிய முயலும் ராமண்ணா, குமுதாவின் பிற்கால வாழ்வுதான் இறுதிப்பகுதி. ராமண்ணாவுக்கும், குமுதாவுக்கும் திருமணமாகி மோகன் என்ற சிறுவன் இருக்கிறபோது உடலைத்தாண்டிய ஒன்று அவ்விருவரையும் பிணைக்கிறது. முதலில்லாததும், முடிவில்லாததும் நினைவுச்சுழல்களாக சொல்லப்படுகிறது. சரளாவின் இருப்பு , வாழ்வு ராமண்ணா , குமுதா இருவரின் பழைய நினைவுகள் என மாறி மாறி பயணிக்கும் வாழ்வு சிறிது அயர்ச்சியைத் தருகிறது . முடிவில்லாதது பகுதி முடியாதோ என அச்சம் கொள்ளும் அளவு வெகுநீளம் . புதிய புதிய சம்பவங்கள் , மனிதர்கள் இல்லை . வீடு , படுக்கையறை , சமையலறை , இவற்றை இடமாகக் கொண்டு நகரும் காட்சிகள் , முழுக்க அக உணர்வுகளின் அருவி போன்ற வீழ்ச்சிதான் முதலில்லாததும் , முடிவில்லாததும் நாவல் . 39 சத்தியசோதனை காந்தியினுடைய 622 பக்க சுயசரிதையைப் படித்தேன் . தன் வாழ்க்கையை நேர்மையாக வாழ்ந்த ஒரு மனிதனின் பதிவுகளாக நம்பிக்கையூட்டுகிறது . தாய்மொழிக்கல்வி , நீர்சிகிச்சை , கதர் உற்பத்தி , தன்வேலைகளைத் தானே செய்துகொள்வது , என மிக எளிய வாழ்வு வாழ்ந்த மனிதரின் மனம்தான் ஆச்சர்யப்படுத்துவது . 40 இங்க்மர் பெர்க்மனின் ‘ஏழாவது முத்திரை’   இங்க்மர் பெர்க்மனின் ‘ஏழாவது முத்திரை’ எனும் திரைப்படத்தின் திரைக்கதையை வெங்கட் சுவாமிநாதனின் தமிழாக்கத்தில் படித்தேன் . இது திரைப்படம் என்றாலும் நாடகத்தின் சாயல் விலகவில்லை . சொல்லும் விஷயம் மிக அர்த்த ஆழம் கொண்டது . அந்தரங்கத்தில் மட்டும் உணரக்கூடிய ஒன்று . பிறப்பிற்கும் , இறப்பிற்கும் இடையில் உள்ள வாழ்வில் மனிதர்கள் சந்திக்கும் அவலங்களே கதை . 41 கிருஷாங்கினி கதைகள் கிருஷாங்கினி கதைகள் நூலை இப்போதுதான் வாசித்து முடித்தேன் . எழுதியுள்ள சிறுகதைகள் அனைத்துமே அக உணர்வுகளை தெளிவாக தெரிவிப்பனவாக உள்ளன . சிறுசிறு கதைகள் , அதிலும் கூற வந்ததை சொற்சிக்கனமாக இரண்டே கால் பக்கத்தில் கூறிவிடுகிறார் . 42 ‘மஞ்சள் வெயில்’   யூமா வாசுகி எழுதிய ‘மஞ்சள் வெயில்’ இப்போதுதான் படித்து முடித்தேன் . சிறிது கவனமாக இல்லையென்றால் வார்த்தை சுழல்களில் நம்மை உள்ளிழுத்து பெரும் துயரத்தை மனதில் ஏற்றி நம்மை நாமே இழந்துவிடும் வாய்ப்பு கொண்ட நாவல் . மனமும் உடலும் ஒன்றிணைந்து நலமாக இருக்கும் தருணத்தில் மட்டும் படித்தேன் . பெரும் வலியையும் , நிராசையும் உணரும் எனக்கென உள்ள இரவுப்பொழுதினில் படித்ததனால் , படைப்பு மொழியின் மயக்கத்தினால் பெரிதும் பாதிக்க நேர்ந்தது . நிறைவேறாத காதலின் துயரத்தைக் கூறினாலும் , தனித்து ஒவ்வொருவருக்குமான படைப்பு மனதின் யதார்த்த வெம்மையில் துடிக்கும் நிலையைக்கூறும் படைப்பு இது . 43 ஜெ.பிஸ்மி எழுதிய ‘களவுத்தொழிற்சாலை’   ஜெ . பிஸ்மி எழுதிய ‘களவுத்தொழிற்சாலை’ எனும் போதி பதிப்பகத்தின் வெளியீடான நூலைப்படித்தேன் . சினிமா எனும் ஊடகத்தைப் பற்றி கடும் விமர்சனத்தை முன்வைக்கிற நூல் இது . அறமின்மை எப்படி உட்புகுந்திருக்கிறது என்று நடிகர்கள் , இயக்குநர்கள் , கலை , ஒளிப்பதிவாளர்கள் , விநியோகம் செய்பவர்கள் , தயாரிப்பாளர்கள் , சங்கம் என விலாவரியாக சாட்டையை சுழற்றிப் பேசும் நூல் இது . 44 ‘த்ரீ மிஸ்டேக்ஸ் ஆப் மை லைப்’   ‘த்ரீ மிஸ்டேக்ஸ் ஆப் மை லைப்’ புத்தகம் கோவிந்த், ஓமி, இஷான் என்ற மூன்று இளைஞர்களின் கதை. மூன்று பேரில் கோவிந்த் என்பவன் செய்யும் மூன்று தவறுகள் அவர்களின் மூவரின் வாழ்விலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இஷான் முஸ்லீம் சிறுவனை சிறந்த கிரிக்கெட் வீரனாக்க முயலும் முயற்சிகள் பின்னாளில் கடும் சிக்கலை விதைக்கிறது. குஜராத்தில் நிகழும் கோத்ரா ரயில் எரிப்பு, இஸ்லாமியர் மீதான தாக்குதல்கள், படுகொலைகள், பூகம்பம் என நிகழும் சம்பவங்களில் இஸ்லாமியர் மீதான தாக்குதலில் ஓமி இறந்து போகிறான். கோவிந்த் டியூசன் சொல்லிக்கொடுக்க, இஷானின் வீட்டிற்குப் போக, அங்கு அவனின் தங்கை மீது காதல் வருகிறது. அது இஷான், கோவிந்த் நட்பில் விரிசலை ஏற்படுத்துகிறது. கோவிந்த் தூக்கமாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயற்சிக்க, மருத்துவமனையில் சே.பகத்திடம் கதை கூறுவது போல நாவல் நகருகிறது. இளைஞர்களுக்கான மொழியைக் கண்டறிந்திருக்கிறார் என்பதால்தான் நம்பர் 1 எழுத்தாளராக சேட்டன் பகத் இருக்கிறார். கோவிந்த் இஷானின் தங்கை வித்யாவிடம் பேசும் உரையாடல்களெல்லாம் இளமைக் கொண்டாட்டம்தான். புரிந்துகொள்ளும்படியான ஆங்கிலத்தில் எளிதான நூல்தான் இது. 45 ‘அந்நியன்’ – ஆல்பெர் காம்யூ   ‘அந்நியன்’ – ஆல்பெர் காம்யூ எழுதிய நாவலைப் படித்தேன். சமூகம் பற்றிய எந்த கவனமும் இல்லாத ஒருவனை அவன் விபத்தாக செய்யும் ஒரு தவறு, சமூகத்தின் முன் குற்றவாளியாக்கி, மரணதண்டனை வரை கூட்டிச்செல்கிறது. காட்சி ரீதியான வர்ணனைகள் வீடு, நீதிமன்றம், கடற்கரை என இடம் பற்றிய கவனத்தை ஊட்டுகிறது. இவ்வளவு சிறிய புத்தகம் நோபல் பரிசு பெற்றிருப்பது 1000 பக்கத்திலிருந்து, லட்சம் பக்கம் என அடுத்த நாவலுக்கு திட்டமிடும் எழுத்தாளர்களுக்கான செய்தியாக இருக்குமோ!. 46 ‘வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்’   தற்போது எஸ் . வி ராமகிருஷ்ணனின் ‘வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்’ எனும் கட்டுரைத்தொகுப்பை படித்துக்கொண்டிருக்கிறேன் . தாராபுரத்தை தாரை என்றே அழைக்கிறார் இவர் . அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை பார்க்கையில் பல சுவாரசியங்களைக் கூறினாலும் , தனது சமுதாயத்தைப்பற்றி , ஜாதி பற்றிய பெருமைகளை கிடைக்கிற வாய்ப்புகளிலெல்லாம் திணிக்கிறார் . தாராபுரத்திற்கு ரயில் இல்லை என்பதுதான் முதல் கட்டுரை . 47 ‘கடற்புறத்து தேசம்’ – அனிதா தேசாய்   ‘கடற்புறத்து தேசம்’ – அனிதா தேசாய் எழுதிய குழந்தைகள் நாவலைப் படித்தேன். ஒரு இந்திய கிராமம் எவ்வாறு தன் இயற்கைச் சமநிலையை இழந்து அங்கு வாழும் மனிதர்கள் அதையொட்டி தம் வாழ்வை மாற்றிக்கொள்கிறார்கள் என்று கூறும் நாவல் இது. 48 ‘ஷோபாவும் நானும்’ – பாலுமகேந்திரா   ‘ஷோபாவும் நானும்’ – பாலுமகேந்திரா எழுதி குமுதத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகள் வலதுசாரி எம்எல்சியாரின் உதவியினால் கிடைத்தது. ஷோபா, பாலு என இருவருக்குமான நேசம், திருமணம் குறித்து எப்படி நிகழ்ந்தது என கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார் பாலுமகேந்திரா. 49 ‘புத்துயிர்’   லியோ டால்ஸ்டாயின் ‘புத்துயிர்’ மாப்பசானின் ‘வாழத்தெரிந்தவன்’ என இருநூல்களை படித்தேன் . முன்னது அறம் , அறத்திற்கான நெருக்கடியை பல நிலைகளில் பொருத்திப் பார்த்திட முயலும் படைப்பு என்று கொள்ளலாம் . காடுஷா , நிக்லியுடாவ் ஆகிய இருவரின் வாழ்வே காட்சியாக நம் கண் முன் நிற்கிறது . குற்றவாளியாக நிற்கும் காடுஷாவைக் காப்பாற்ற நிக்லியுடாவ் செய்யும் முயற்சிகள்தான் கதை . இறுதியில் நாம் உணர்வது அனுபவங்களாக வேறுவிதமாக இருக்கும் . 50 ‘வாழத்தெரிந்தவன்’ - மாப்பசான்   ‘ வாழத்தெரிந்தவன்’ எனும் கதை இன்றைய உலகில் வாழ ஒருவன் எப்படி தன்னை தயார்செய்து கொள்கிறான் என்பதை அப்பட்டமாக கூறும் நாவல் . முன்னாள் ராணுவ வீரனான ஜார்ஜஸ் தன் கவர்ச்சிகரமான தோற்றம் காரணமாக தன்னிடம் விட்டில் பூச்சிகள் போல மயங்கும் பெண்களை உறவு கொண்டுவிட்டு , அவர்களை , அவர்களின் சமூக அந்தஸ்துவைப் பயன்படுத்தி தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்கிறான் . பல பெண்களின் மூலமே அரசியல் , பொருளாதாரத்தின் உச்சாணியை எட்டிப்பிடிக்கிறான் . அறம் பற்றி ஒரே ஒரு இடத்தில் கூறப்படுகிறது . இருண்மை கொண்ட மனிதனின் முகத்தை பல சூழல்களில் திரும்ப , திரும்ப பார்க்கிறோம் . இதில் வருபவர்கள் ஆண்கள் , பெண்கள் என அனைவருமே ஒருவரையொருவர் உறிஞ்சிக்கடித்து துப்புகிறார்கள் . இந்நாவல் எழுப்பும் பல கேள்விகளை நீங்கள் படித்தால்தான் உணரமுடியும் . உயிர்ப்பான இந்நாவல் திரைப்படமாக வந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் . மணிவண்ணனின் ‘அமைதிப்படை’ உள்ளதல்லவா , அத்தகைய கருவின் ஆழமான செயல்பாடுகளே படம் . 51 ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டுள்ளது’   அ . முத்துலிங்கம் தொகுத்துள்ள ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டுள்ளது’ நூலில் மனம் கவர்ந்த படைப்புகளைப் பற்றி எழுத்தாளர்கள் பேசுகிறார்கள் . இந்திரா பார்த்தசாரதி பரிந்துரைத்த ‘ Double’ – Jose saragamo, சுகுமாரனின் பரிந்துரையான ‘ Badin Summer’ முத்துலிங்கத்தின் பரிந்துரையான ‘ TeacherMan’ – Frank Mccourt என இவற்றைப் படிக்கக் கூடிய புத்தகங்களாக கருதுகிறேன் . 52 ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’   ‘ ஒரு கடலோர கிராமத்தின் கதை’ தொடர்ந்து சரிந்துவரும் மதிப்பீடுகள் , நம்பிக்கைகள் , எண்ணங்கள் ஆகியவற்றின் தளையவிழ்ப்பை கோடு காட்டி விட்டு செல்கிறது . வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு பல்வேறு அநியாய செயல்பாடுகளால் சொத்து சேர்த்தவர் . மஹ்மூது எனும் சுறாப்பீலி விற்பவனால் அவரது ஆணவம் இடிந்துபோகிறது . தொடர்ந்து ஊரில் ஆங்கிலப்பள்ளி வருகை , மகளின் திருமணத்தோல்வி என அகமதுவின் அதிகாரம் தளர்ந்துபோகிறது . அவர்மீது பரிதாபம் தோன்றுகிற சமயம் ஆசிரியர் திடீரென ஒரு பத்தியைச் சேர்க்கிறார் . அகமதிற்கு நடந்தது சரி என வாசகன் நம்பவைப்பதற்கான முயற்சி . ஆனால் அது உறுத்தலாகவே கடைசிவரை இருந்தது . புதிய மாற்றங்களை அவ்வூர் மக்கள் ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் . அகமது மனம் பிறழ்ந்துபோக , மகள் தற்கொலை செய்வதோடு கதை நிறைவடைகிறது என்றாலும் இன்னும் நிறைவடையவில்லை என்றே படுகிறது . இஸ்லாமிய வாழ்வை இயல்பாக சித்தரிக்கும் நாவல் இது . 53 வானம் முழுவதும் – ராஜேந்திர பிரசாத்   ராஜேந்திர பிரசாத் எழுதியுள்ள வானம் முழுவதும் நாவலை ஞானம் மொழிபெயர்ப்பில் படித்தேன் . திரைப்படமாகவும் எடுக்கப்பட்ட இலக்கிய பிரதி இது என முன்னுரையில் கூறப்பட்டுள்ளது . கதை என்னவென்றால் சமருக்கு பனிரெண்டாவது வயது முடிந்தவுடன் பிரபாவுடன் திருமணமாகிவிடுகிறது . பிரபா பத்தாவது வரை படித்துள்ளவள் . சமர் மேலே படிக்க விரும்புகிறேன் . ஆனால் அவனை கட்டிப்போடும் விஷயமாக பிடிக்காமல் நடைபெறும் நிகழ்ச்சியாக திருமணம் நிகழ்கிறது . அவனுடைய பல லட்சியவாதங்களில் ஒன்று பிரம்மச்சாரியாக வாழ்வது . தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டுவிடுகிறது . சமர் , பிரபா என இருவருக்குமிடையேயான ஊடல்களும் , கூடல்களுமே மிச்சமுள்ளது . அதுவே மையம் . சமர் , மனைவி இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சட்டதிட்டங்கள் கொண்ட அந்தக்காலத்திலிருந்து இன்று வரை மாறாத கொள்கை கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர் . பிரபா தலையை முக்காடிடக்கூடாது என்று நினைக்கும் சுதந்திரம் எடுத்துக்கொள்ளும் பெண் . இவர்களுக்கு இடையே நிகழும் உறவு சிக்கல்கள் , புரிந்துகொள்ளுதல்களே வானம் முழுவதும் நாவல் எனலாம் . கூட்டுக்குடும்பத்தின் சாதகங்களை மனதில் இருத்திக்கொண்டவர்கள் நிச்சயம் ஷிரிஷ் கதாபாத்திரத்தை வெறுப்பார்கள் . மாற்று சிந்தனையை முன்வைத்து சமரை புதிய பாதையில் பயணிக்க வைக்கிறார் . ஆனாலும் சமரால் அந்த துணிச்சலான் கருத்துக்களுக்கு ஆதரவான ஒரு நிலையைக் கூட அமல் படுத்த முடியவில்லை . காரணம் அவனுக்கு வேலை இல்லை . வீட்டினரின் கடும் பொறுமல்களிலே கொண்டுபோய் விடுகிறது . சமூகத்தோடு இணைந்துதான் நாம் முன்னேற முடியும் என்பதை உணர்த்தும் பல உரையாடல்கள் இதில் உண்டு . ஓரளவு தன்னை மாற்றிக்கொள்ளும் சமர் முழுமையாக தன்னை சூழலிலிருந்து தப்பித்து வைத்துக்கொள்ள முயன்று தவிக்கிறான் காற்றில் அலைவுறும் துரும்பு போல . எந்தப்புற சார்பும் இன்றி நடுநிலையாக எழுத முயற்சித்திருக்கிறார் ஆசிரியர் . சமர் துணிச்சல்காரனில்லை . கோழைதான் . எனவேதான் அவன் சிக்கலான முடிவெடுக்கும் காலகட்டங்களில் கோயில் படிகளில் அமர்ந்திருக்கிறான் . அவனுக்கென மணமாகி ஒரு பெண் மனைவியாக இருந்தபோதும் , அவன் அவளை இறுதிவரை புரிந்துகொள்வதே இல்லை . அவள் அவனைவிட்டு ஓடிவிட்டால் போதும் என்று நினைக்குமளவு அவனின் கையறு நிலையிலான பொருளாதாரம் துரத்துகிறது . தனித்த தனக்கென்ற ஆளுமை , செயல்திறனற்று வெறுமையாக கூட்டுக்குடும்ப கண்ணியினால் அதில் பிணைக்கப்பட்ட மனிதர்கள் மாறிவிடுவதை ஷிரிஷ் கூறுவதை முக்கியமாக கொள்ளலாம் . ஒரு நெருக்கடி நிலையை சந்திக்கும்போது ஒருவனது முழுத்திறமையும் வெளிப்படும் என்பது உண்மைதான் . ஒரு தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கூட உறவுகள் சூழ இருப்பவனுக்கு அதைத்தீர்க்க ஆலோசனைகளும் , உதவிகளும் மிக இணக்கமாக இருக்கலாம் . ஒருவர்தான் கப்பலுக்கு கேப்டனாக இருக்கமுடியும் . இதை கூட்டுக்குடும்பத்திலும் அனுசரிக்க வேண்டி இருக்கும் . வேறு வழியில்லை . அமைப்பை தக்க வைக்க செய்ய வேண்டிய விஷயம் இதுதான் . குடும்பத்தொழிலை செய்ய சகோதரர்கள் ஒன்றிணைந்து பெரிய குடும்பமாக இருக்கவேண்டும் . மேலும் பின்னாளில் தொழிலை அடுத்த தலைமுறை அப்படியே தொடர வேண்டிய நிர்பந்தம் எப்போதும் உண்டு . குஜராத்திகளுக்கு இது முழுக்க பொருந்தும் என்று நம்புகிறேன் . ஒவ்வொரு மனிதரை மதித்தும் , பெண்களுக்கு அங்கீகாரம் அளித்தும் , யாரின் சுயத்தையும் பாதிக்காமல் நடந்துகொள்ளும் மனிதர்களுக்கு என்றுமே சிக்கல் இல்லை . தனியே , கூட்டாக எப்படி வாழ்ந்தாலும் அவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் . கதையின் இறுதியில் வாழ்வின் கடும் அழுத்தத்தினால் தற்கொலை வாழ்வுக்கு நிம்மதியை தருமோ என்று அதற்கு முயற்சி செய்தாலும் , அது கைகூடாமல் சென்றுகொண்டிருக்கும் இரு ரயில்களுக்கு இடையில் நின்று உரக்க கத்துவது என நிறைவுபெறுகிறது . சமூகமும் , பொருளாதாரமும் , உறவுகளும் எப்படி ஒருவனது தனித்த வாழ்வினை நெருக்கடிக்கு உட்படுத்தி அழிக்கிறார்கள் என்பதாகவும் இதனைக் கொள்ளலாம் . உண்மையில் நெருக்கடிகளை சமாளிக்கும் திறனை பெறாத ஒருவனை கடுமையான வேலைகளுக்கு பொறுப்பேற்க செய்யும் நிலையில் என்னவாகிறது அவன் மனநிலை என்ற நிலையிலும் இதனை கொள்ளலாம் . முக்கியமான உளநிலைகளை விவரிக்கின்ற நூல் இது என்பேன் . 54 சிவப்பு தீபங்கள் – மாதவிக்குட்டி மாதவிக்குட்டி எழுதிய சிவப்பு தீபங்கள் மிகுந்த வேதனை மன உளைச்சலை ஏற்படுத்திய படைப்பு . இரு நாவல்கள் இதில் உண்டு . நீலக்கடல் மற்றும் சிவப்பு தீபங்கள் . லட்சுமி ஆயி விலைமாதுக்களின் தலைவி . அவளது பெண்கள் சிந்துத் தாயி , போட்டி விடுதி நடத்தும் கௌசல்யா , இன்ஸ்பெக்டர் என போலியான அனைத்து சமூக திரைகளையும் கலைத்து விடுகிறது . மிக வீரியமான கருத்துக்களை , உண்மையை பேசுகின்ற நாவல் இது . ருக்மணி , சீதா இருவருமே பதின்பருவ சிறுமிகள் . இதில் சீதா குடல்வால் வளர்ச்சி காரணமாக சிகிச்சை இல்லாமல் , முரட்டு வைத்தியத்தின் மூலமாகவும் ரத்த சேதமாகி உயிர்விடுகிறாள் . இந்நாவல் சில இடங்களில் அவல நகைச்சுவையாகவும் விரிகிறது . ‘’ இன்னும் எந்திரிக்கலையா , ஒரு வழி பண்ணிட்டானா வந்தவன் ? என துயரத்திலும் ஏளனப்படுத்திவிடும் உரையாடல்கள் உள்ளன . உடலை விற்கும் பெண் எது குறித்து வெட்கப்படுவாள் , அனைத்தைப் பற்றியும் ஒளிவுமறைவே இல்லாமல் பேச ஒரு தைரியம் வந்துவிடும் இல்லையா ? உன்னைக் காதலிக்கிறேன் , கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று அவ்வப்போது மிக அணுக்கமாக உடல் இணங்க கூறப்படும் வார்த்தைகளின் போது அதனை பெண் எப்படி எடுத்துக்கொள்கிறாள் ? கல்லூரி மாணவன் ஒருவனின் மூலம் மீராவுக்கு ஏற்படுகிறது . உடலின் அந்நியத்தன்மையை உடைக்க கூறும் இந்த வார்த்தைகளை நம்பியே மீரா அனைத்தையும் இழக்கிறாள் . இருந்தும் அவள் அவனை குறையோ , குற்றச்சாட்டோ கூறுவதில்லை . அன்பினை மட்டும் வேண்டுகிறாள் . அதுவும் கைநழுவிப்போகிறது . நீலக்கடல் குறுநாவல் கடல்போலவே தவிப்பூறிய , உணர்ச்சிகளின் கொந்தளிப்பைக் கொண்ட வயதான என்றாலும் நிறைவுறாத காமத்தின் விளைவாக கடும் மனச்சலனங்கள் கொண்டவளாக மாறி அலைவுற்று இறந்து போகும் ரேணுகாவின் கதையைப் பேசுகிறது . விரும்பும் ஆணுடன் கொள்ளும் உடல் உறவே அவளுடைய வாழ்வை பூரணமாக்கிவிட , பிறகு உடலுக்கு புவியில் என்ன வேலை ! அவள் மகிழ்ச்சியுடன் இறந்துபோகிறாள் . இறுதியில் ரேணுகாவின் பெட்டியில் ஆண்களின் ஜட்டி ஒன்றை எடுத்து குப்பையில் போட்டுவிட்டு ரேணுகாவின் தங்கை மகள் சொல்லும் ‘பாவம் பெரியம்மா’ எனும் வார்த்தை இந்தக்கதையை வெற்றிகரமாக ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஒற்றைச்சொல்லாக மாற்றி மனதை வருத்துகிறது . வெந்நீர் போல கொதிக்கும் உடல் பற்றி பலர் பேசவே பயப்படுகிறார்கள் . அவமானம் என்கிறார்கள் . ஆனால் எதை நினைத்து பயப்படுகிறோமோ அந்த விஷயத்தை அச்சமில்லாமல் செய்து கடக்கும்வரை அதை மனதில் சுமந்திருக்க வேண்டும் . மிகப்பெரிய சுமையாக அழுந்தும் . இயற்கையான ஒன்றிற்கு சமூகத்தின் எதிர்பார்ப்பிற்கேற்ப நடக்க வேண்டிய நிர்பந்தம் மனிதனை அழுத்திக் கொல்கிறது . பல எதிர்ப்புகளை இது சந்தித்திருக்க கூடும் என்றாலும் தன் மனதிற்கு நேர்மையான ஒரு விஷயத்தை கள்ளமில்லாமல் எழுதியிருக்கிறார் ஆசிரியர் என்று கூறுவது மிகையானதல்ல . எழுத்தின் நேர்மைதான் படைப்பை காலத்தின் இரக்கமில்லாத தன்மையில் தன்னை காத்துக்கொள்கிறது . 55 ஏமாற்றப்பட்ட தம்பி – பலிவாடா காந்தாராவ் கிராமத்து வாழ்க்கை வாழும் அப்பாவிகள் நகரத்தில் சென்று பிழைக்க முற்பட்டு பிச்சைக்காரர்களாக மாறுவதுதான் கதை . மிகுந்த மனச்சோர்வை , வாழ்வனுபத்தை தந்த கதை இது . எழுதப்பட்ட காலம் முன்னது என்பதால் பெரிய வாசிக்க அதிக ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியது என்று கூறமுடியவிட்டாலும் வாழ்வின் மீது , எளியவர்களின் மீது பரிவு கொண்டவர்கள் தொடர்ந்து படிக்கலாம் . 56 வர்ணஜாலம் – எண்ட மூரி வீரேந்திநாத்   எண்டமூரி வீரேந்திரநாத்தினை முதலில் ஆர்வமாக படித்தாலும் , சிறிது நேரத்திலேயே மாலைமதி , ராணிமுத்து தரத்தில்தான் எழுதிவருவார் போல என்று முடிவெடுத்து சிறிதுகாலம் படிக்காமல் மனதில் தடைசெய்து வைத்திருந்தேன் . ஏமாற்றமில்லை வர்ணஜாலம் நாவல் . ஓரளவு திருப்தியைத் தந்த நாவல் இது ஒரே மூச்சில் 600 பக்க நாவலான இதனை 457 பக்கங்களை படித்துமுடிக்கும்போது இரவு ஒன்றேகால் ஆகிவிட்டது . தொலைக்காட்சி சீரியலுக்கான கதை இது என்று உறுதியாக கூறுவேன் . சிறந்த அறச்சிந்தனைகளை இரு பாத்திரங்கள் கூறுகிறார்கள் . முழுக்க வாழ்வின் மீது நம்பிக்கையும் , எதிர்பார்ப்பும் கூடுவது போலிருந்தது இந்த நாவலை படித்ததும் . ஸ்ரீகல்யாணி வசதியான செல்வந்தரின் மகளான இவள் , ஒருவருடன் உறவு என்ற ஒன்று ஏற்படுவதே அவரவருக்கான சுயலாபம் என்ற சிந்தனையில்தான் என தீவிரமாக நம்புவள் . செயல்படுபவள் . கார்த்திகேயன் மனசாட்சிக்கு மட்டும் பயப்படும் பசிக்கு ஒரு வேலை செய்து விட்டு கற்ற கலையான ஓவியத்தின் மூலம் மனதின் துக்கங்களுக்கு வடிகால் தேடி பயணிப்பவன் . மனிதர்கள் மீது குறையாத நம்பிக்கை கொண்டிருப்பவன் . இந்த நேர் எதிர் கதாபாத்திரங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து பின் இணைந்து வாழ்வை எதிர்கொள்ளும் சிக்கல் முடிச்சுகளே கதையின் மையம் . மிகுந்த உணர்வெழுச்சி கொண்டது இதன் கூர்மையான திறன் கூடிய ஈர்க்கும் வசனங்கள்தான் . நான் அதற்கே இந்நாவலில் முக்கிய இடம் தருவேன் . மிகுந்த நம்பிக்கையும் , வாழ்வைக் கண்டு மருளாத திறனும் கொண்ட கார்த்திகேயன் பேசும் வசனங்கள் மிக தேர்ச்சியாக கவனமாக அவனின் குண இயல்பை ஒட்டி வழுவாது எழுதப்பட்டு உள்ளன . ஒரு வியாபாரியின் பேச்சு எப்படி என்றும் , இவ்வுலகின் ஒவ்வொரு உயிரையும் தன்னைப்போல எண்ணும் ஒரு வெகுளியின் பேச்சு எப்படி இருக்கும் என ஸ்ரீகல்யாணி மற்றும் கார்த்திகேயன் உரையாடும் பல இடங்களைக் குறிப்பிடலாம் . வசனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு . சிக்மா தலைவர் ஸ்ரீகல்யாணியிடம் மகள் திருமணத்திற்கும் , மகனின் படிப்பிற்கும் பிரதாப் என்கிறவர் பணம் கேட்கிறார் . அதற்கு கல்யாணி ‘’ அட்வான்சாவா இல்ல கடனாவா ’’ ‘’ இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? ‘’ என்று கேட்க, அதற்கு கல்யாணி ‘’ ம், வட்டி ‘’ என தடாலடியாக கூறுகிறாள். மூன்றாவதாக முக்கிய கதாபாத்திரம் அனுஜா . மிகுந்த குறும்பும் , தைரியமும் , அன்பும் , திறமையும் கொண்டவள் . இவள் வந்தபின்தான் கதையே சிறிது வேகமாகிறது . கார்த்திகேயனுக்கு ஓவியம் வரைய உளவூக்கம் தருவது அனுஜாவே . ஸ்ரீகல்யாணி கார்த்திகேயனின் அருகாமையை விரும்புகிறாள் . ஆனால் கார்த்திகேயனுக்கோ அவளை மணந்தபின் ஓவியம் வரைவதற்கான ஊக்கமும் , நேரமும் கிடைக்கவே இல்லை . அனுஜாவை கார்த்திகேயனும் விரும்பத்தொடங்குகிறான் என்றாலும் ஸ்ரீகல்யாணியை மணந்துகொண்டிருப்பது அவளுடன் பழக , விரும்ப பெரும் தடையாய் மனதை உறுத்துகிறது . அனுஜா கார்த்திகேயன் இருவரின் காதல் பத்திகள் , சந்திப்பு ஆகியவை மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறது . வாழ்வின் இன்பம் போல சிறிய காலம்தான் அதுவும் நீடிக்கிறது . வசனங்கள் , கதாபாத்திர உருவாக்கத்தில் எண்டமூரி வெற்றி பெற்றுவிட்டார் . எனது கணிப்பின் படி , நிச்சயம் இவரது கதைகள் தெலுங்கு நெடும்தொடர்களாக எடுக்கப்பட்டிருக்கும் . அல்லது எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் . ஏன் இவரே திரைக்கதையாசிரியராக இருக்கலாம் . அதற்கான பல விஷயங்களை இவர் நாவலில் பார்க்க முடிகிறது . உணர முடிகிறது . 57 சிப்பியின் வயிற்றில் - முத்து போதி சத்துவ மைத்ரேய   இந்நாவல் எழுதப்பட்ட காலம் தாண்டியும் படிக்க ஆர்வமூட்டுவதாகவும் இருக்க காரணம் அந்த வாழ்வுக்கான ஆழமான விவரணைதான் . மீனவர்கள் பற்றிய விவரணைகள் ஒரு அறிக்கை போல நீள்கிறது . ரோட்ரிகோ பாத்திரம் ஆசிரியர் தகவல்களை முழுக்க சொல்ல பயன்படுத்திக்கொண்டுவிட்டார் . ஊடகங்களின் மூலம் இந்தியாவை , அதன் மக்களை அணுகுபவர்கள் எப்படி யோசிப்பார்களோ , போவார்களோ அப்படியே இருக்கிறது சாட்வின் பெர்ணான்டோவின் பிள்ளையாகிய அந்தோணி பெர்னாண்டோவின் எண்ணங்கள் , செயல்பாடுகள் . கிறிஸ்துவம் பற்றிய கருத்துக்கள் , மிக வலிமையாக விமர்சனரீதியாகவும் தர்க்கரீதியாகவும் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் சிறப்பாக வெளிப்படுகிறது . இயற்கைக்கு மாறான வழிமுறைகளை மட்டும் கிறிஸ்துவ மதபாதிரிகள் கடைபிடிக்கிறார்கள் இப்போதும் . கன்னியாஸ்த்ரீ பற்றிய விவரிப்புகளை நாவலில் எழுதியதால் போதி பிழைத்தார் . எளியவனுக்கும் சென்று சேர்வதாக இருந்தால் ஊடகத்தில் போராட்டம் , ஊர்வலம் , கண்டனப்பேரணி என இந்தியாவே அல்லோகல்லோகப்பட்டிருக்கும் என்பது நிச்சயமான உண்மை . சோபியா ஒரு பரிதாபமான பாத்திரம் . இறைவனுக்காக தன்னை அர்ப்பணிப்பது என்பது உடல் இன்பங்களை கடந்து செல்லும் நிலையில்தான் சாத்தியம் . காதலையோ , காமத்தையோ வெறுப்பது என்பது மனதினுள் அதனை ஆழ விரும்புவதை காட்டுகிற ஒன்றேயாகும் . கிறிஸ்தவத்தில் இணைவது என்பது மீனவர்களில் ஒரு பாதுகாப்பு , வறுமை என்ற நிலைமைகளில் மட்டுமே நிகழ்கிறது . எளிய மனிதர்களிடம் கிறிஸ்தவம்தான் செல்கிறது என்பது உண்மை . பீட்டர் பாத்திரம் மனிதர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாழும் ஒருவனாக காட்டப்படுகிறது . மனிதர்களுக்கான சேவையிலேயே இறைவனை தரிசிக்க முயற்சிப்பவன் . அவனது அப்பாவும் இதுபோலவே . மோஸஸ் தன் மக்களின் அறியாமை , சோம்பல் ஆகியவற்றை எதிர்த்து எழுப்பி அதன் பலனாக எதிரிகளால் நெஞ்சு பிளக்கப்பட்டு கொலையுறுகிறார் . இரண்டு மூன்று இடங்களில் இந்தக் காட்சி விரிகிறது . வசனங்கள் இவ்வளவு கடுமையாக வெளிப்படையாக அரசை விமர்சித்து எழுதப்பட்டிருந்தாலும் இதை அரசு நிறுவனமே வெளியிட்டிருப்பது ஆச்சர்யம்தான் . கம்யூனிஸ்ட் பற்றியும் காங்கிரஸ் பற்றியும் இப்போது எனக்கு சந்தேகங்கள் எழுவது பற்றி மைத்ரேய அன்றே எழுதி வைத்துவிட்டார் . காட்டமான கசப்பான உண்மைகள் என்றால் அது மிகையில்லை . எந்த அமைப்புமே ஒருகட்டத்தில் மக்களுக்காக தொடங்கப்பட்டு பின் அவர்களை விட்டு விலகிப்போய் விடுகிறது . மேடையினிலே தலைவர்கள் நின்றுவிடுகிறார்கள் . தனக்கென்று ஒரு வாகனம் , வீடு என்று மக்கள் சூழ்ந்த சூழலை தவிர்த்துவிட்டவர்கள் கட்சித்தலைவர்கள் ஆவர் . இதில் இருக்கும் அறமே , உண்மையே , வாழ்வே தூய்மையே இவ்வளவு ஆண்டு கழித்து படித்தாலும் நம்மை ஆட்கொண்டு சிந்திக்க வைக்கிறது . மனதை வெற்றிடக் காற்றாய் , பல கலவையான உணர்வுகள் சூழ கனக்கவைக்கிறது . இசையின் மையமான கோதண்டராமன் பாத்திரம் இதில் உள்ள நம்மை வேறுபக்கம் இழுத்து செல்லும் கிளைக்கதை . தேவதாசிப் பெண்ணை ராமன் மணப்பதுமாக ஆசிரியரின் எழுத்து பிரகாசிக்கிறது . கமலாவை தன் மகள் என்று கடைசி கட்டத்தில் ராமன் ஆசிரியராக இருக்கும் பொழுதிலும் அறிய முயற்சிப்பதில்லை . சிறு ஐயத்துடனே அவர் தம்மகளை அறியாது அவளது அருகினிலே இறக்கிறார் . இருவரும் சந்திப்பார்கள் என்று நினைத்தேன் . நடக்கவில்லை . பீட்டர் கடல்புரத்தின் ஆட்கள் இருவரை யாரும் அடையாளம் தெரியாதவாறு கொல்வதோடு கதை நிறைவுறுகிறது . கடல் , இசை , பறவர் , மீனவர் என பல விஷயங்களை ஆழமாகவும் , அகலமாகவும் , தீர்க்கமாகவும் ஆராய்ந்து எழுதப்பட்ட மிகச்சிறந்த கிளாசிக் நூல் சிப்பியின் வயிற்றில் முத்து ஆகும் . 58 நிச்சயதார்த்தம் - தெலுங்கு நாவல்   கதை நிச்சயதார்த்தத்தில் தொடங்கி அதிலே தொடர்ந்து பயணித்து அதிலேயே முடிகிறது . லால் குடும்பத்திற்கும் , நாத் குடும்பத்திற்கும் ஒரு திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது . நாத் குடும்பத்தினர் வியாபாரம் செய்து செழிப்பான நிலைக்கு முன்னேற , லால் குடும்பம் பழைய நிலையிலேயே இருக்கிறது . நாத் குடும்பத்தினர் பழைய நிச்சயதார்த்தத்தை முறிக்க எண்ணுகிறார்கள் . தங்களது வசதிக்கேற்ற மாப்பிள்ளையை தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள் . பழைய நிச்சயதார்த்தம் ஒரு குற்றவுணர்வை நாத் குடும்பத்திற்கு ஏற்படுத்த குடும்பத்தின் மூத்தவரான மோட்டாநாத் ஒரு தந்திரம் செய்கிறார் . லால் குடும்பத்தில் நிச்சயம் செய்த மாப்பிள்ளையான சுக்லாலை மும்பைக்கு வரவைத்து சில தகுதிகளை பெற வைப்பதாய்க் கூறி அனுப்பி வைக்க சுக்லாலின் தந்தையிடம் கடிதம் எழுதுகிறார் . மும்பை வரும் சுக்லாலை மிக அடிமட்ட வேலையாளாக நடத்தி அனைவரின் முன்னிலையில் வசைகளை வீசி கேவலப்படுத்துகிறார்கள் . கடினமான வேலைகளின் காரணமாக சுக்லாலுக்கு உடல்நலம் கெட்டுவிட , அரசு மருத்துவமனையில் இலவச பிரிவில் அவனை மோட்டோ நாத் சேர்த்துவிடுவதோடு அவனைப்பற்றி மறந்துவிடுகிறார் . சுக்லாலின் மீது அவனுக்கு நிச்சயதார்த்தம் செய்த நாத் குடும்பத்து பெண்ணான சுசீலாவுக்கு பரிதாபம் பிறக்க , சில நாட்கள் கழித்து அவளது வீட்டாருக்குத் தெரியாமல் பார்க்க மருத்துவமனை வருகிறாள் . அங்கு லீலா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது . லீனா மருத்துவமனை செவிலி . யாருமே சுக்லாலை அவனை சேர்த்ததிலிருந்து பார்க்கவருவதேயில்லை என்பதால் மிகவும் கவனமாக பராமரிக்கிறாள் . அவன் மீது ஈர்ப்பும் , பரிவும் பிறக்கிறது . அப்போது சுசீலா !!! நீங்கள் படித்து தெரிந்துகொள்ளுங்களேன் . 59 ரிவல்யூசன் 2020 – சேட்டன் பகத்   நாவல் கடினமான ஆங்கிலத்தையெல்லாம் கொண்டில்லை . எளிமையான நாம் பேசும் , சிறிது முயன்றால் புரிந்துகொள்ளக்கூடிய ஆங்கிலம்தான் . கோபால் மிஸ்ரா , ராகவ் காஷ்யப் , ஆர்த்தி பிரதான் ஆகிய மூவரைச்சுற்றியும் , பற்றியும் நகரும் கதை இது . வாரணாசியில்தான் கதை தொடங்குகிறது . வாரணாசி பற்றியும் பல இடங்களில் அதன் மக்கள் , நீரின் தூய்மை கெடுவது , அங்கு செய்யப்படும் திட்டங்களின் மீதான ஊழல் , அரசியல்வாதிகள் என இறத்தலும் , இருப்பும் இடையறாது தொடர்ந்து இருக்கும் இடத்தில் தொடங்கும் மனிதர்களின் வாழ்வு பற்றியது இந்நாவல் . கோபால் மிஸ்ரா , ராகவ் காஷ்யப் , ஆர்த்தி ஆகிய மூவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள் . நண்பர்களாக இருந்தாலும் , கோபாலும் , ஆர்த்தியும் இருக்குமளவு ராகவ் அவர்களிருவருடனும் நெருக்கம் கொள்ளாமல் இருக்கிறான் . ஆர்த்தியின் கனவு விமானப்பணிப்பெண்ணாக மாறி உலகம் சுற்றுவது . கோபாலுக்கு வாழ்வின் ஒரே குறிக்கோளாக இருப்பது எப்பாடு பட்டாலும் பணக்காரனாக மாறிவிடவேண்டும் என்பதே . ஆனால் ராகவின் கனவுகள் முதலில் எதுவும் கூறப்படுவதில்லை . ஆனாலும் அவன் பின்னாளில் பத்திரிக்கையாளனாக மாறி தொடங்கும் பத்திரிக்கைதான் ரிவல்யூசன் 2020. அதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் , அரசியல் கட்சிகள் , வாரணாசியில் நிகழ்த்தும் ஊழல்களை , சூழல்கேடுகளை மக்களுக்கு பரப்பி , அவர்களை போராட வைக்கும் புரட்சிக்காரனாக மாறுகிறான் . கோபால்தான் இதில் முக்கியமான மையம் என்பேன் . மிகுந்த பகடியோடு கிண்டல்களோடு ஆர்த்தியின் உடனான உரையாடல்கள் பெரும் சுவராஸ்யப்பகுதிகள் . ஏஐஇஇஇ தேர்வில் தோல்வியடைந்து பின் ஜேஇஇ தேர்வுக்காக கோட்டா சென்று படிக்கிறான் கோபால் . அங்கும் ஆர்த்தியின் மீதான காதலால் படிப்பில் கவனம் சிதறி , தேர்வில் தோல்வியுற்று வீடு திரும்புகிறான் . கோபாலுக்கும் , அவன் தந்தைக்கும் இடையே நிகழும் உரையாடல்கள் அவனின் பொருளாதார நிலையைக் கூறி அவன் பின்னாளில் செய்யும் அனைத்தையும் மன்னித்துவிட செய்கின்றன . அவன் தன் தோல்வியைக் கூற அவன் தந்தை அந்த வருத்தத்திலும் , வாங்கிய கடன்களை நினைத்தும் கவலையில் இறந்துவிடுகிறார் . பொறியியல் படிக்க மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்க தந்தையின் கைவசம் உள்ள நிலத்தை கேட்க , அவர் அப்போது மறுத்துவிடுகிறார் . அந்த நிலம் அவன் தன் லட்சியத்தை அடைய உதவுகிறது . கோபாலுக்கு கடும் ஏமாற்றங்கள் தொடர்ச்சியாக நிகழுகின்றன . தேர்வு , வாழ்க்கை என ஏன் அவன் பணக்காரனான போது அதைப்பார்த்து சந்தோஷப்பட அவன் தந்தை கூட இல்லை . கோபால் அவன் தந்தை என இருவரின் உரையாடல்கள் சூழல்கள் என நம் மனக்கண் முன் வந்து நிற்கும் காட்சிகளே எழுத்தாளராக சேட்டன் பகத்தின் பெரும் வெற்றி . ராகவ் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து பொறியியல் படித்தாலும் , அவன் ஆர்வம் பத்திரிக்கைத் துறையில் உள்ளது . அதன் காரணமாகவே அவன் ஐ . டி நிறுவன வேலையை மறுத்து பத்திரிக்கையில் நிருபராக வேலைக்கு சேர்கிறான் . கோபால் படிக்க கோடா சென்றுவிட்ட நேரத்தில் ராகவுடன் ஆர்த்தி நெருக்கமாகி அவனை காதலிக்கத்தொடங்குகிறாள் . கோபால் ஆர்த்தி மீது கொண்ட காதலா , நட்பா போராட்டம் தேர்வுமுடிவை விட பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது . ராகவ் , ஆர்த்தியின் நெருக்கமான காதலை அறிந்து ராகவ் படிக்காமல் பிரதாப் என்பவனோடு மதுவருந்தித் திரிகிறான் . அவனது நிம்மதி அதோடு பறிபோகிறது . படிப்புக்காக அவன் தந்தை வாங்கிய கடனை தரச்சொல்லி தந்தை இறந்தபின் கடன்காரர்கள் அவனை நெருக்குகிறார்கள் . அவனுக்கு சொந்தமான நிலம் அவனது பெரியப்பாவினால் வழக்குக்குள்ளாகி பயனில்லாமல் கிடக்கிறது . சுனில் என்பவனை சந்தித்து தன் கஷ்டங்களைக் கூறுகிறான் . அவன் தனக்கு நிலம் இருக்கிறது என்று கூற , சுனில் , கல்லூரி கட்ட நிலம் தேவைப்படுகிறது என்று அரசியல்வாதி ஒருவரிடம் கூட்டிச்செல்கிறான் . தனக்கு பத்து சதவீதம் கமிஷன் என விதியைக் கூறி ராமன் சுக்லா என்ற எம்எல்ஏவிடம் அழைத்துபோகிறான் . ராமன் சுக்லா தனது பதவியின் மூலம் சம்பாதித்த பணத்தை ஏதாவது தொழிலில் முதலீடு செய்ய நினைத்து , கோபாலை இயக்குநராகக்கொண்டு , அவனது பதினைந்து ஏக்கர் நிலத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றினைக் கட்ட முயற்சிக்கிறார் . கோபால் அவர் கூறுவதை நம்ப முடியாமல் ஆச்சர்யமாக பார்க்கிறான் . சிறுவயதில் நினைத்த லட்சியம் இருபத்துநான்காம் வயதில் முழுமையாக நிறைவேறுகிறது . அந்த சமயத்தில் ராகவ் தனது கல்லூரியில் நாளிதழ் பணியில் மும்முரமாக இருக்க , ஆர்த்தி அவனோடு பேச நேரம்கிடைக்காது கோபாலிடம் பேசத்தொடங்குகிறாள் . பின் இருவருக்குள்ளும் சந்திப்புகள் அதிகம் நிகழ்கிறது . ஒருநாள் ஆர்த்தியுடன் அவள் ரிசப்ஷனிஸ்டாக பணிபுரியும் ஹோட்டல் அறையினுள்ளே சங்கமம் சாத்தியப்படுகிறது . பின் தன்னைத்தானே கேள்விகளுக்கு உட்படுத்திக்கொள்ளும் கோபால் , எப்போதும் ராகவைவிட தன்னை உயர்த்திக்காட்ட , மேலானவனாக காட்டிக்கொள்ள முயற்சித்தது நினைவுக்கு வருகிறது . ஏறத்தாழ அவனையும் மிஞ்சும் அளவு தன்னை அவன் உயர்த்திக்கொள்கிறான் என்பது உண்மை என்றாலும் கடும் குற்றவுணர்வு ஆர்த்தியோடு உடலுறவு கொண்ட நாளிலிருந்து துரத்துகிறது . எனவே ஆர்த்தியை விட்டு விலக அவள் பார்க்கும்போது இரு பெண்களோடு இருக்குமாறு காட்சிகளை அமைக்கிறான் . ஆர்த்தி அவன் நினைத்தது போல பிரிந்து சென்று ராகவை மணந்துகொள்கிறாள் . கோபால் மனவலியோடு ஆர்த்தி கொண்டுவந்த அவன் பிறந்த நாளுக்கான பரிசுகளை பிரித்துப் பார்க்கிறான் . இந்தக் நிகழ்வு என்னை கடுமையாக பித்து பிடித்தவன் போல திருப்பியும் வாசிக்க வைத்த ஒன்று . எனக்கு கோபால் என்ற கதாபாத்திரம் மிகவும் பிடித்துப்போனதால் ஏறத்தாழ கதை முழுக்கவே கூறிவிட்டேன் . ஆனால் சொல்லாத கதை ஒன்று உள்ளது . அதுதான் ராகவிற்கும் , கோபாலிற்கும் நிகழும் மறைமுகப்போர் . ராகவ் நாளிதழில் சேர்ந்து கோபாலின் கல்லூரி எப்படி எழும்பியது , கங்கை அதனால் எப்படி பாதிக்கப்படுகிறது என்று கட்டுரை எழுதி வெளியிட , நண்பர்கள் இருவரும் கடும் பகைவர்களாக மாறுகிறார்கள் . ராகவ் நிருபராக மாறி தொடர்ந்து கோபாலின் கல்லூரி , எம்எல்ஏ குறித்தும் கடுமையான குற்றச்சாட்டுகளை அள்ளி வைக்க , பணபலம் படைத்த கோபால் என்ன செய்கிறான் , ராகவ் தன் நிருபர் வேலையைக் காப்பாற்றிக் கொண்டானா என்பதெல்லாம் இதன் சாகசத்தன்மை . நிகழுபவை அனைத்தையும் நாவலில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள் . 60 அ.முத்துலிங்கத்தின் சிறுகதைத்தொகுப்பு   எழுபத்தைந்து சிறுகதைகளில் இலங்கைப்பகுதி வாழ்வைக் கூறுபவை நான்கு சிறுகதைகள்தான் . மற்ற அனைத்து அல்லது பெரும்பாலான கதைகள் ஆப்பிரிக்க , கனடா , ஐக்கிய அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பற்றிய கதைகள்தான் . ஆப்பிரிக்க , கனடா கதைகள் பகடியில் மற்ற கதைகளை விடவும் மேலானதாக உள்ளது . முத்துலிங்கம் பயன்படுத்தும் உவமைகள் யாரும் பயன்படுத்தியிருப்பார்களா என்று ஐயம்தான் . இரண்டு ஆடுகளிடம் பால் குடித்த குட்டிபோல ஆகிருதியாய் இருந்தான் என வரும் வரிகள் சிறிய எ . கா . தன் தகப்பனைப் பற்றி கூற முயலும் கதை ஒன்றில் குடிப்பழக்கமோ , சுருட்டு , பீடி பிடிக்கும் பழக்கமோ , சீட்டாடும் பழக்கமோ இல்லாதது போலவே வேலைக்குப்போகும் பழக்கமும் இல்லை என்று சீண்டல் அங்கதமாய் ஒளிரும் சொற்றொடர்கள்தான் இவரின் பெரும் பலம் . நாளை சிறுகதை இலங்கை அகதி முகாம்களில் உணவு தேடி அலையும் அண்ணன் தம்பி என இருவரின் அவல வாழ்வை முன்வைக்கிறது . பருத்தி கதை மக்களுக்கு பயன்படாது போகும் அரசுத் திட்டங்கள் பற்றிப் பேசுகிறது . நேர்மையாக இருப்பவனை அவனது குடும்பமே ஏளனம் செய்கிறது . பறவைகளும் , சிறு பூச்சிகளும் மனிதர்களின் பெருக்கத்திற்கு சமமாக முத்துலிங்கத்தின் சிறுகதைகளில் பரவி நிறைந்து கிடக்கிறார்கள் . பஷீரின் கதைகளில் இதுபோல நிகழும் . கடன் சிறுகதை ஒரு முதியவரின் உடல் சிரமங்களையும் , சந்திக்கும் தனிமையினையும் பேசுகிறது . நல்ல நேசக்கதையாக இருப்பது அனுலா கதைதான் . அனைத்து கதைகளும் எழுத்தாளரின் வலது கையினால் எழுதப்பட்டாலும் எனக்குப்பிடித்த கதைகளை நான் கூறிவிடுகிறேன் . அம்மாவின் பாவாடை , துரி , தில்லை அம்பலம் , பிள்ளையார் கோயில் , மகாராஜாவின் ரயில்வண்டி , தொடக்கம் , எதிரி , பூமத்திய ரேகை எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை என இவற்றைக் கூறுவேன் . அற்புதமான எழுத்துக்கள் தொடர்ந்து ஆவலைக்கூட்டி படிக்க வற்புறுத்தும் எழுத்து நடை என இதன் விலையை விட அதிக மதிப்பு மிக்கது இந்நூல் என்பது ஐயமில்லை . எளிமையான அங்கதமான சொல்லாடல்களுக்கு இடையே வரும் பழந்தமிழ் பாடல்கள் என அற்புதமான படித்து முடித்தும் இன்னும் ஒரு கதை என்று தேடிப்பார்க்கத்தூண்டும் கதைகள் . 61 திருமணமாகாதவள் - சரத் சந்திர சட்டோபாத்யாய   திருமணமாகாதவள் நாவல் கரிய நிறமான பெண்ணின் தள்ளிப்போகும் திருமணவாழ்வு பற்றிய கதைதான் இது . சமூகத்தில் என்றும் மாறாத சந்தை திருமணத்திற்கான சந்தை . ஏறக்குறையாக மாட்டுச்சந்தைக்கு நிகரான அதையும் மீறிய அத்தனை பிரயத்தனங்களும் பிரயோகிக்கப் படுகின்றன . திருமணமாகாமல் இருக்கும் பதிமூன்று வயது ஞானதாவுக்கு இதற்கும் மீறிய பலவும் நடைபெறுகின்றன . தாயே தன் மகளை வெறுத்து ஒதுக்குமாறு கிராமத்தினர் தூண்டுகின்றனர் . அக்கறைப்படுவது போல் நடித்து தாய் துர்க்காவும் , மகள் ஞானதாவும் சிரமப்படுவதை மனம் அமைவதை கண்டு மகிழ்கிறார்கள் . இந்த நிலையில் ஞானதாவின் தந்தை இறக்கும் தருணத்தில் , அவளுக்கு பிரியமான அதுல் அவளை மணக்க சம்மதித்து தானே ஞானதாவுக்கு பொறுப்பு என அவளுக்கு வாக்களிக்கிறான் . அதுல் இப்படிச் செய்தது ஞானதா ஒருசமயம் அவனுக்கு கடும் நோய்வாய்ப்பட்ட நிலைமையில் இருந்து அவனை மீட்க , குணப்பட உதவுகிறாள் . ஆனால் அப்போதும் அவனுக்கு அவளிடம் தோன்றுவது நன்றியுணர்வே . அவளது முகமே அழகே நினைவுக்கு வருகிறது . கண்ணாடி வளையலில் அழகிய வேலைப்பாடுகள் செய்திருந்த பரிசொன்றை நேசிக்கின்ற காலத்தில் ஒரு கணத்தில் ஞானதாவுக்கு அணிவிக்கிறான் . துர்க்காவின் பெரிய அண்ணி , சிறிய ஓரகத்தி என அனைவரும் ஞானதாவின் திருமணச்செலவு குறித்து கவலைப்பட்டுக்கொண்டு , துர்க்காவை அவளது அண்ணன் சம்புவிடம் அனுப்புகிறார்கள் . அங்கு அவர்களுக்கு பாமினி என்ற அண்ணியிடம் மட்டும் அனுசரணை கிடைக்கிறது . அவர்களது கிராமமும் ஞானதாவை திருமணம் செய்துகொடுக்காததை பற்றி பேசுகிறார்கள் . சம்பு தன் நிலத்தை மீட்கவென கடன் வாங்கிய ஒருவனிடம் ஞானதாவை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் . துர்க்கா மறுக்கிறாள் . துர்க்கா , ஞானதா என இருவருக்கும் அடுத்தடுத்து மலேரியா காய்ச்சல் பற்றுகிறது . அந்த நோய் ஞானதாவின் உடலை பாதித்து நோய் கடுமையில் தலையின் முன்பகுதி முடி கொட்டிப்போய்விடுகிறது . உடல் வற்றிப்போகிறது . துர்க்கா அந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில்லாமல் உயிர் விடுகிறாள் . ஞானதாவுக்கு தாயின் சிதைக்கு எரியூட்டும் உரிமையும் மணமாக நிலையினால் பறிபோகிறது . துர்க்காவின் இறப்பிற்கு முன் ஒரு சமயத்தில் அதுல் தன் நேசத்தை ஞானதாவிடமிருந்து எடுத்துக்கொண்டு , வேறொரு அழகான பெண்ணை காதலிக்கத் தொடங்குகிறான் . அதை ஞானதாவிடமும் , அவள் தாய் துர்க்காவிடமும் கிண்டலாக கூறிவிடுகிறான் . துர்க்காவின் இறப்பிற்குப் பின் ஆற்றுக்கு அருகில் ஞானதா அமர்ந்திருக்க , அதுல் அவள் பற்றிய அனைத்தும் நினைவுக்கு வர , தன்னை மன்னிக்க வேண்டி , அவளை அழைத்துச்செல்வதோடு கதை நிறைவு பெறுகிறது . இந்த நாவலில் ஞானதாவை நாற்பது வயது , அதைத் தாண்டிய வயதுடையவர் வரும்போது அவள் தன்னை அலங்கரித்துக்கொண்டு வரும் காட்சி போதும் அவளின் நிர்க்கதியான வாழ்வை வாசிப்பவர்கள் அறிந்துகொள்ள . கண்ணீர் பெருக வைக்கும் நிகழ்வு அது . துரதிர்ஷ்டம் பிடித்தவள் என்று தாய் , சுற்றம் , ஊர் என அனைவரும் கூற , ஞானதா அப்போதும் வாழத்தூண்டும் கவர்ச்சி எது ? வாழ்வு மீது கொண்ட ஆசை . நாளை அதிசயம் நடக்கும் என்ற மனதா ? தினந்தினம் துயரத்தின் வெக்கை கூடிக்கொண்டே போகிறது . பல நெடுங்கதைகளை இதில் இருந்து நிகழ்வுகளை கோர்த்து உருவாக்க முடியும் . அனேகமாக நான் தாமதித்து விட்டேன் . பலதும் உருவாக்கியிருப்பார்கள் . 62 அன்பே ஆரமுதே – தி. ஜானகிராமன்   அனந்தசாமி கதாபாத்திரம்தான் அனைத்து உறவுகளையும் கைபிடிக்காமல் ஏற்றுக்கொண்டு வழிநடத்துகிறார் . அனந்தசாமி தன் திருமணம் தன்னை மீறி நடப்பதைக் கண்டு பயந்து ரயில் ஏறி ரிஷிகேசம் போய் சாமியார்களிடம் உபதேசம் பெற்று வைத்தியம் கற்று பத்து வருடங்களுக்கு பிறகு ஊருக்கு அம்மாவைப் பார்க்க வருகிறார் . அப்படியே தங்கி விடுகிறார் . திருமணத்தில் தவிக்க விட்டுவந்த பெண்ணை சிலசமயம் நினைக்கிறார் . வைத்தியம் பார்க்க செல்லும் இடங்களில் நாகம்மாளின் வீடும் ஒன்று . அங்கு ருக்மணியை சந்திக்கிறார் . அவள் டில்லியில் படித்து லெக்சரராக பணிபுரிந்து வருகிறாள் . அவள்தான் தான் மணம் செய்யாமல் தவிர்த்த பெண் என்பதை உணர்ந்து அவரை தவிர்த்துவிடுகிறார் . இதற்கிடையே நாகம்மாளின் மகள் சந்திராவை ரங்கன் காதலித்து கைவிட்டு விடுகிறான் . அவனை மறக்க முடியாமல் சந்திரா திண்டாடுகிறாள் . ருக்மணிக்கும் திணறலாக இருக்கிறது . முப்பது வருடத்திற்கும் பின் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் கிடைத்திருக்கிறது என்று அனந்த சாமியுடன் வாழ , டில்லி பணியை ராஜினாமாவை செய்து விட்டு சென்னையில் பணி தொடர்கிறாள் . அனந்தசாமிக்கு காசிலிங்கம் ( எ ) அருண்குமாரோடு அறிமுகம் ஏற்படுகிறது . சினிமாவில் நடிக்கும் இவனுக்கு மகனின் காலில் ஏற்படும் நோய்க்கு வைத்தியம் செய்யப்போகிறார் . அவனைப்பற்றி சிறிது சிறிதாக அறிகிறார் . சந்திராவின் துயர்போக்க ரங்கனைத் தேடி அலையும் அனந்தசாமி அவனுடன் வண்டியில் பயணிக்க , ராஜாங்கம் , அவரது மகள் டொக்கி அறிமுகம் நடக்கிறது . டொக்கியின் தாய் அவளை சினிமாவில் நுழைக்க எடுக்கும் முயற்சியில் காசிலிங்கம் டொக்கியோடு உடலுறவு கொள்கிறான் . அனந்தசாமி இதுபற்றி அவனிடம் கேட்கிறபோது , அவனுக்குள் மாற்றம் முளைவிடத் தொடங்குகிறது . ஒரு சமயம் சந்திரா யார் என டொக்கியிடம் கூற நேரிடுகிறது . அதனால் டொக்கி ரங்கனை வெறுத்து ஒதுக்குகிறாள் . இது ரங்கனை வேதனைப்படுத்த , இதற்கெல்லாம் காரணம் சாமிதான் காரணம் என அவரையும் ருக்மணியையும் தூற்றுகிறான் . பின் காசிலிங்கத்திடமும் அப்படியே பேசுகிறான் . பின் தோற்றுப்போனதை உணர்ந்து அனந்த சாமிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு , தற்கொலை செய்துகொள்கிறான் . டொக்கி தொடர்ந்து படிக்க விரும்புவதாகச் சொல்ல , அவளை படிக்க வைக்கிறார்கள் அனந்தசாமியும் , ருக்மணியும் . சந்திரா மாமாவின் மகன் , மனைவி குழந்தைகளுடன் வெளிநாடு படிக்க கிளம்புகிறான் . அனந்தசாமி , ருக்மணி ஆகிய இருவரும் தங்களது மகள்கள் போல நினைக்க கதை நிறைவடைகிறது . 63 தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்ல   நூலைப்படித்து மூன்று நாட்கள் முடிந்து விட்டன என்றாலும் , சுக்ல கையாண்ட கடுமையான பரிகாசத்தொனி காரணமாக எதுவும் மறக்கவில்லை . கதை சிவபால்கஞ்ச் எனும் கிராமத்தில் நடைபெறுகிறது . அந்த கிராமத்தின் நிர்வாகம் மற்றும் அமைந்துள்ள சங்கராமல் வித்யாலயம் எனும் கல்லூரியில் நிகழும் ஊழல் , சுரண்டல் , விவசாயிகளின் கூட்டுறவு சங்க ஊழல் என இவைகளை கடுமையாக சாடி ஊழல்வாதிகளின் மகன்களுக்கு இந்த நிறுவனங்களில் உள்ள பதவிகள் கை மாறுவதோடு கதை நிறைவடைகிறது . நிறைவுறும் தருவாயில் நாம் இதுபோன்ற உலகில்தான் வாழவேண்டியிருக்கிறது . எங்கும் ஓடிச்சென்று தப்பிக்கவெல்லாம் முடியாது என்றும் ஆசிரியர் கூறிவிடுகிறார் . நாவலை படிக்கத்தூண்டும் காரணிகள் எதுவென்றால் வரிக்குவரி பெருகியோடும் நையாண்டிதான் என்று கூறுவது நான் கூறும் பெரும் பொய் என்றால் அது தவறு . படித்து பாரும் ஓய் ! வாய்விட்டுச் சிரிப்பீர் . பின் வருத்தப்படுவீர்கள் . ஊழல் , சுரண்டல் , போதைப்பொருட்கள் என மிகவும் மோசமான சூழ்நிலைகளை விவரித்தும் அதில் எந்த போதனைகளும் இல்லாமல் எழுதி இருப்பதும் , வேறுபட்ட அங்கதமொழி கொண்ட கட்டுரை போலவும் தோன்றுவது இதன் செவ்வியல்தன்மைக்கு ஒரு சான்று . மீண்டும் , மீண்டும் இதனைப் படிக்கத்தூண்டுவது குறையாத அங்கதம்தான் . எந்தக் காலத்திலும் இந்த நாவல் படிக்கத்தூண்டுவதாக இருப்பது என்று கூறுவதற்கு காரணம் நம்மிடையே உள்ள சில போக்குகள்தான் . இந்தக் கதை எழுதப்பட்ட காலம் தொடங்கி , இன்றைய காலம் வரை அரசியல் போக்குகள் , ஊழல் என எதுவும் மாறிவிடவில்லை . பெரும் ஊழல்களை செய்துவிட்டு , அதை மக்களிடம் மறைக்க அவர்களுக்கு பங்கி எனும் பொருளைத் தந்து அவர்களை மழுங்கடிக்கிறார்கள் . மக்களுக்கு மட்டுமல்ல இறைவனுக்கும்தான் . அவல நகைச்சுவையாய் விரியும் கதையில் இன்று மாறியிருப்பது போதைப்பொருட்களுக்குப் பதிலாக பிரியாணி , பணம் , இட்லி , சாம்பார் , டிவி , லேப்டாப் , ஆடுமாடு , அரிசி என மாறிவிட்டது . அரசு உரியவிலையில் தரமான பொருட்களாக நியாய விலைக்கடையில் தருவதைத்தவிர்த்து மற்ற விலையில்லாத அனைத்தும் போதைதான் . புரிந்துகொள்ளும் திறனுள்ளவர்கள் படிக்கவேண்டிய அங்கதச்சுவை கொண்ட செவ்விலக்கியம் இது . என்பிடி வெளியீடு . தேடிப்பார்த்து வாங்கி படியுங்கள் . 64 தாகூர் எழுதிய ‘மூவர்’   மூன்று கதைகள் கொண்ட நூலில் இறுதிக்கதையான கடைசி வார்த்தை சிறிது பரவாயில்லை ரகம் கொண்ட கதையாக உள்ளது . மற்ற கதைகள் லேபரட்டரி , ரவிவாரம் என இரண்டு கதைகள் . ஆனால் உண்மையில் அவை கதைகளா நிகழ்வுகளா என்றால் இல்லை என்பேன் . உரையாடல்கள் நீட்சி . பெரிதினும் பெரிய உரையாடல்கள் . மிக நன்றாக படித்த அறிவுஜீவிகள் தான் இங்கே விவாதிக்கிறார்கள் . மிக கனமான , ஆழமான நீண்ட உரையாடல்கள் . அடுத்தநாள் நாம் உயிரோடு இருப்போம் என நம்பிக்கை கொண்டிராது இன்றே பேசி முடித்துவிடவேண்டும் என்று பேசுபவர்கள்தான் இக்கதைகளில் உள்ளார்கள் . அதிக உணர்வுகள் , திருப்பங்கள் இல்லாத வெற்றான வார்த்தைகள் கடும் அலுப்பு ஊட்டுகின்றன . உப்புசப்பற்ற நூல் என்பதினாலோ என்னவோ , ஆசிரியரின் மற்ற நூல்களை விட அதிகம் இதை அதிகம் படித்திருக்கிறார்கள் . விட்ருப்பா என அயர்வை பக்கத்திற்குப் பக்கம் ஊட்டிய நூல் இது . 65 நிழலைத்தேடி – மகரிஷி   மாலைமதி , ராணிமுத்து இதழ்களில் வரக்கூடிய , வந்திருக்கலாமே என்று நினைக்கக்கூடிய கதை . வெகுசன மக்களுக்கான எளிமையான அலங்காரங்கள் கொண்ட கதை இது . பெரிய கவனமின்றி எளிமையாக ஒருபக்கம் படிக்காவிட்டாலும் எது மாறிவிடாத கதை என்றாலும் , சுவாரசியமான ஆரம்பங்களும் , திடும் என்ற திருப்பங்களும்தான் இவரது பலம் என்று கொள்ளலாம் . உடலுறவு தொடர்பான செய்திகளைக் கொண்டு தி . ஜாவின் சாயல் தொனித்து பின் க்ரைம் ரிப்போர்ட் போலாகி முடிகிறது . 66 எர்னஸ்டோ சேகுவேரா – ஐ.லாவ்ரெட்ஸ்கி   நூலை எழுதியவர் சேவின் அப்பா , நண்பர்கள் அனைவரிடமும் அவரைப்பற்றிய விஷயங்களை கேட்கிறார் . நூல் தொடங்குவது இப்படி நண்பர்கள் கூறும் சொற்களின் வார்த்தையில்தான் . சேவின் வாழ்வு , புரட்சிகர வாழ்வு , போராட்டம் என நெருங்கியவர்களின் சொற்களின் வழி தீட்டப்பட்டு தெளிவாகும் சித்திரம் அழகாகவும் , அவ்வுத்தி சிறப்பானதாகவும் இருக்கிறது . என்சிபிஎச் வெளியீடு . ரூபாய் 200. நூலகத்தில் இருக்கும் . எடுத்துப்படித்துவிட்டு அவரின் படமிட்ட டீசர்டை உடுத்திக்கொள்ளுங்கள் . மனம் நிறைந்து இருக்கும் . மனதிலும் சே நிறைந்திருப்பதை உணர்வீர்கள் . 67 பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் - திரும்பி வராத காலம்   மிகுந்த உணர்வெழுச்சியான காதல் உரையாடல்களைக் கொண்டுள்ள நூல் இது . நாவலின் முன்பக்கத்தில் மையக்கதாபாத்திரத்தின் குணநலன்களை பற்றி புரிந்துகொள்ள உதவுகிறது . நாஸ்தென்யாவுடனான உரையாடல்களில் தன்னைப்பற்றிய விளக்கங்களாக விரியும் சொற்கள் சிறிது அயர்வையே ஏற்படுத்துகின்றன என்று ஒப்புக்கொள்கிறேன் . உலகத்திற்கு சற்றும் பொருந்தாத ஒருவன்தான் இதில் நாயகன் . காலையில் எழுந்ததும் சிறிது சிறிதாக மறையும் கனவு போல காதலும் மூன்று நாட்களில் மறைந்துவிடுகிறது . அந்த உணர்வுகளையும் , காதலையும் நினைத்துக்கொண்டே நான் வாழ்வேன் என்று நாயகன் கூறுவதோடு கதை நிறைவுபெறுகிறது . 68 நட்ஹாம்சன் எழுதிய ‘பசி’ தமிழில்: க.நா.சு   வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் பசியோடு கையில் காசில்லாமல் அலைந்து திரிந்து பூங்காவில் படுத்துறங்கிய அல்லது அதுபோலான ஒரு சிரமமான காலகட்டத்தை நினைவுபடுத்தும் படைப்பு ‘பசி’ . பசி ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்களையும் பெருகும் மன வன்மத்தையும் கூட கருத்தில் கொள்ள முடியும் . கிறிஸ்டினா நகரில் இருக்கும் , வாழும் , அலையும் , ஓடும் , உறங்கும் கட்டுரையாளன் ஒருவனின் பசிதான் இந்த நாவல் . பசி பற்றிய விவரிப்புகள் மிகவும் அனுபவப்பட்ட ஒருவரின் குறிப்புகளாகவே நீளுகிறது . கட்டுரையாளன் பசியினால் தனது நேர்மையை பறிகொடுக்கும் கதை , கேக் விற்பவனிடம் தானமாகப் போட்ட பணத்தின் மதிப்பிற்கு கேக் கேட்பது , காதலி முன் பிச்சைக்காரனாக மதிக்கப்பட்டு , அவள் உறவுக்கு ஒத்துழைக்காமல் விரட்டுவது என யதார்த்தமான வாழ்வை அதன் வெக்கை குறையாமல் பத்திரிக்கைத் தொழிலை இணைத்துக் கூறுகிறது நாவல் . க . நா . சுவின் தமிழ் மொழிபெயர்ப்பு வாழ்வை வாழ்ந்த களைப்பை மூலத்திற்கும் குறையாது தருவதில் வெற்றி பெற்றிருக்கிறது . வாசிப்பனுபவம் கிடைக்க இந்த நாவல் மட்டுமில்லாமல் க . நா . சு மொழிபெயர்த்த மற்ற நூல்களையும் படிக்கவேண்டும் . எ . கா மதகுரு , நிலவளம் , விலங்குப்பண்ணை , 1984, தபால்காரன் என பட்டியல் நீள்கிறது . 69 போர்க்களம் – நிகோலாய் கோகல்   போலாந்து நாட்டுக்காரர்களுக்கும் , கஸாக் எனும் மக்களுக்கும் நிகழும் சமயப்பிரச்சனைகள் பெரும் போராக வெடிக்கிறது . இதில் புல்பா என்பவர் தன் இருமகன்களையும் ஈடுபடுத்தி தானும் அதில் பங்கேற்கிறார் . அவரது இளைய மகன் எதிரியின் மகளை காதலிப்பதால் அவனை புல்பா சுட்டுக்கொல்கிறார் . பாதிப்படை கொள்ளை முயற்சியைத் தடுக்க சென்று விடுவதால் முழுமையாக வெற்றி பெற முடியாமல் தன் முதல்மகனை இருக்கும் ஒருவனையும் எதிரிகள் சிறைபிடித்துச் செல்ல புல்பா அடிபட்டு வீழ்கிறார் . பின் மீண்டும் உடல்நலம் தேறி படை திரட்ட முயற்சிக்கும்போது , மகனின் நினைவு குறுக்கிட அவனை பார்த்து வர புறப்படுகிறார் . தன் மூத்தமகன் சித்திரவதை செய்து கொல்லப்படுவதைக் கண்ணால் காண்கிறார் . தன் மகனைக் கொன்றவர்களை பூண்டோடு அழிக்க சபதமிட்டு படையெடுத்து பல நகரங்களை அழிக்கிறார் . பின் எதிரிகளிடம் பிடிபட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார் . அவரது படையினர் எதிரிகளிடமிருந்து படகில் தப்பி யோடுவதோடு கதை நிறைவு பெறுகிறது . இதில் முக்கியமான மைய கதாபாத்திரம் புல்பாதான் . தன் லட்சியத்தை உருக்குலைக்கும் எதனையும் சகித்துக்கொள்ளாதவர் . தன் மகனாக இருந்தாலும் சரி என்னும் போக்கு அவரை குறிப்பிட்ட நிலைகளுக்கு இழுத்துச் செல்கிறது . 70 கி.ராவின் ‘குழந்தைப்பருவக்கதைகள்’   கி . ராவுக்கு எப்படி பள்ளியோ அதுபடியே அவரது குழந்தைகளும் அதாவது நாயகர்களும் பள்ளியின் மீது கசப்புணர்வு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் . பள்ளியை விட வெளியுலகில் மரங்களிடம் , பறவைகளிடம் , காற்றிடம் , மலைகளிடம் , கற்றுக்கொள்ள புரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன என நம்புகின்றனர் . கதவு மிகச்சிறந்த உள்ளடக்க சித்திரத்தை மென்மையாகக் கொண்டுள்ள கதையாக நினைக்கிறேன் . கதவுதான் நாயகன் . கதவின் ஊசலாட்டம் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது . கதவு வரிபாக்கிக்காக பிடுங்கிச்செல்லப்படும்போது அக்குழந்தைகளின் ஒரு விளையாட்டுப் பொருள் அவர்களின் கையில் இருந்து பிடுங்கிச்செல்லும் வேதனை எழுகிறது . பின் கதவை செல்லரித்த நிலையில் காணும்போது , குழந்தைகளுக்கு பசி கூட மறந்துபோய்விடுகிறது . மிகச்சிறந்ததாக இதனைத் தொகுப்பில் கூறுவேன் . 71 காம்ரேட் – யஷ்பால்   கீதா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் . பத்திரிக்கை விற்றுக்கொண்டிருக்கும் அவளைப் பார்க்கும் பாவரியா என்பவன் அவளை தன்னை காதலிக்க வைப்பதாக கூறுகிறான் . பந்தயம் வெறியேற வைக்க அவளிடம் நெருங்கி பழகத் தொடங்குகிறான் . அவனின் நோக்கம் அவளுக்குத் தெரிந்தாலும் அவனை கம்யூனிஸ்டாக மாற்ற முயல்கிறாள் . ஒரு கட்டத்தில் கீதாவுக்கும் , பாவரியாவுக்கும் மோதல் ஏற்படுகிறது . பாவரியாவிற்கு கீதாமேல் காதல் பூக்கிற அந்தப்பொழுது தன் கெட்ட பழக்கங்களை கைவிட முயற்சிக்கிறான் . கீதாவை காங்கிரஸ் குண்டர்களிடமிருந்து காப்பாற்றுகிறான் ஒரு தருணத்தில் . சிறிது சிறிதாக சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டுமென்று நினைக்கிறான் . ஆங்கிலேயர்கள் ஒரு ஊர்வலத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள் . அதைத்தடுக்க முயலும் பவாரியா குண்டடிபட்டு இறந்துபோகிறான் . அவனின் உடலைக்கட்டிப்பிடித்து கீதா அழுவதோடு கதை நிறைவுறுகிறது . தனிநபர் சொத்தை எதிர்க்கும் , தொழிலாளர் , விவசாயிகளின் ஆதரவாளர்களாக இருக்கும் கம்ப்யூனிஸ்டகாரர்களுக்கு எதிர்ப்புகள் அதிகம் இருக்க வாய்ப்புகள் எப்போதும் அதிகம்தான் அதுதான் இயல்பும் கூட . காம்ரேட் என்ற வார்த்தை பாவரியாவிற்கு சூட்டப்படுவதோடு கதை முடிகிறது . 72 டோரிஸ் லெய்சிங் இலக்கிய ஆளுமைகள் டோரிஸ் லெய்சிங் என்ற எழுத்தாளரின் வாழ்க்கை வரலாறு படித்தேன் . தனது நாவலுக்காக இலக்கிய நோபல் பரிசு வாங்கியுள்ள இவர் மனிதர்கள் வாசம் குறைவாக உள்ள பறவைகள் அதிகம் உள்ள புறநகர்பகுதியில் வாழ்ந்து வருகிறார் . எண்பத்தொன்பது வயதான இவர் பல்வேறு நாவல்கள் எழுதியுள்ளார் . முதன்முதலில் எழுதிய த கிராஸ் ஈஸ் சிங்கிங் எனும் நாவல் கறுப்பின மக்களின் பிரச்சனைகளை அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி எழுதப்பட்டு இருந்த காரணத்தினால் இவரது சொந்த நாடான ஜிம்பாவேயில் 1980 வரை , 1940 ல் எழுதப்பட்ட இந்நாவல் தடை செய்யப்பட்டு இருந்தது . பின் இது விலக்கிக்கொள்ளப்பட்டதாம் . ஆண் , பெண் குழந்தைகளுக்கான வேறுபாடு இவரது குடும்பத்திலும் நிகழ்கிறது . ஆண் குழந்தையை விரும்ப பிறக்கும் பெண் குழந்தையான டோரிசை , முழுமையான வாரிசாக இவரது பெற்றோர் கருதவில்லை . அன்பையும் வழங்கவில்லை . பின் , தம்பி ஹாரி பிறந்தவுடன் வெளிப்படையாகவே இவரை பெற்றோர் புறக்கணிக்கத்தொடங்குகின்றனர் . அதுவே இவரை புத்தகங்கள் மீதான காதலுக்கு காரணமாகிறது . இந்த உறவு மட்டுமே கசப்பில்லாமல் இவரை இறுதி வாழ்வு வரை தொடருகிறது . டோரிசிற்கு இரு திருமணங்கள் நடந்திருந்தாலும் , அவை டோரிசை சூனியமாக்க முயற்சிக்கவே , தன் மூன்று குழந்தைகளை விடுத்து அவ்வுறவில் இருந்து விலகி விடுகிறார் . பறவைகளின் ஒலிகளை ரசித்தபடி வாழ்வது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறும் இவர் , அமைதியான , புகார் இல்லாத , வலி இல்லாத வாழ்வை திருமண பந்தத்திலிருந்து வெளியேறிய பின்னே அனுபவிப்பதாக கூறுகிறார் . வயதின் காரணமாக ஏற்படும் தள்ளாமை கணந்தோறும் மரணம் பற்றிய சிந்தனைகளை தனக்கு ஏற்படுத்துகிறது என்று கூறுகிறார் . கவனிக்கப்படாத , அடையாளமில்லாது புறநகர் ஒன்றில் வாழ்கிறது உறவுகளின் பிணைப்புகளில் களைத்த இதயம் ஒன்று . 73 ருஷ்யப் புரட்சி 1917 என்சிபிஹெச் வெளியீடு   ருஷ்யப்புரட்சி 1917 என்ற நூல் ரஷ்யாவில் ஏற்பட்ட கம்யூனிச ஆட்சி மாற்றங்களை காமிக்ஸ் வடிவில் விளக்குகிறது . இது ஒரு நல்ல வழி . கடுமையான இருநூறு பக்கங்களில் எழுதும் நூல்களை எளிதில் படமாக வரைந்து விட முடியும் அல்லவா ? விவசாயிகள் , தொழிலாளர்களை அரசன் முதலாளித்துவ கரங்களின் மூலம் கசக்கிப்பிழிகிறான் . அந்த கொடுமைகளே மக்களை புரட்சி நோக்கி உந்தித்தள்ளுகிறது . இவர்களுக்காக குரல் கொடுத்து தலைமையேற்பவர்தான் வி . இ லெனின் . கம்யூனிசத்திற்கு கம்யூனிசம் ஒன்றைத்தவிர அனைத்துமே எதிரிகள்தான் அல்லவா . அதுபோலவே கம்யூனிச திட்டங்கள் நிறைவேற , நிறைவேற பல்வேறு சதிகள் வெளிநாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை குலைக்க நடைபெறுகின்றன . 1917 ஆம் ஆண்டு ஏற்படும் கம்யூனிச சோவியத் போல்ஷிவிக்குகளின் ஆட்சிக்கு உள்நாட்டு முதலாளிகள் வெளிநாடுகளோடு சேர்ந்து பல்வேறு சதிகளின் மூலம் நாட்டை பிளவு படுத்த முயல்கின்றனர் . எலும்புகூடாய் நிற்கும் நாட்டை வளப்படுத்த ஏன் சரிசெய்ய சிறிதும் நேரமில்லாது தொழிலாளர்களை , விவசாயிகளை ஒன்று படுத்தி போருக்கு தயாராகின்றனர் . நிலச்சீர்த்திருத்தம் ரஷ்யாவில் உழைப்பாளர்களுக்கு ஆதரவாக அமல்படுத்தப்ப்படுவதால் அனைத்து முதலாளித்துவ நாடுகளும் , அதனைத் தடுக்க பல சதிகளில் ஈடுபடுகின்றன . தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சாப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்குமாறு அண்டைநாடுகள் தடைகளை ஏற்படுத்துகின்றனர் . ரஷ்யா சமாதானம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு வருகிறது . நாட்டின் பல பகுதிகள் ஆதிக்க நாடுகள் கைவசம் ரஷ்யாவின் தோல்வியால் சென்றுவிடுகின்றன . அதோடில்லாமல் அந்த பகுதிகளில் தமது ராணுவத்தினரை கொண்டு வந்து நிறுத்துவதால் முதல் உலகப்போர் உருவாகிறது . போல்ஷிவிக்குகள் கொண்ட லெனின் குழு கல்வியை இலவசமாக தர முடிவு செய்கின்றனர் . அனைத்தும் அரசு வசம் இருக்கின்ற முறையில் நாடு வளம் பெற தொடங்குகிறது . ரஷ்யப் புரட்சி பற்றி அறிய சிறந்த நூல் இதுவென என்சிபிஎச் வெளியிட்டுள்ள கிராபிக் நூலான இதனைக் கூறலாம் . 74 பெரியார் ஈ.வெ.ரா – ஆறு. அழகப்பன் சாகித்திய அகாதமி   மற்ற வெறித்தனமான நிராகரிப்பு அரசியல் கொண்ட ஆட்களின் எழுத்தை வாசித்து பயந்திருந்த எனக்கு இந்நூல் ஆசுவாசமாக இருந்தது . சிறப்பாக , சுருக்கமாக எளிமையாக ஒரு சமுதாய சீர்திருத்தவாதியை கலகக்காரரை அறிமுகம் செய்ய ஏற்ற நூல் என கொள்ளலாம் . மொழி , பண்பாடு , எழுத்து சீர்திருத்தம் , பத்திரிகையாளர் என பல தளத்திலும் பெரியாரின் திறமைகள் , ஆர்வங்கள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிற இந்நூல் சாய்வில்லாத குறிப்புகளாக கவனம் ஈர்க்கின்றது . பெரியாரைப்பற்றி முழுமையான நூலாக வாழ்வு , அரசியல் என்று அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் இலக்கியத்திற்கு பெரியாரின் பங்கு பற்றி மட்டும் எழுதுவதால் அது பற்றி மட்டுமே தெரிந்துகொண்டாலும் , தொடர்ந்து பெரியாரின் எழுத்துக்களை அறிய இவை ஆர்வமூட்டுகின்றன என்பதில் எவ்வித ஐயமுமில்லை . முன்னோடிகளைப் பற்றிய அறிய சிறந்த தேர்வாக பெரியார் பற்றி சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள இந்நூல் உதவக்கூடும் . 75 பெத்தவன் – இமையம் பாரதி புத்தகாலயம் வெளியீடு நம்மை நாமே கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டிய பலவிஷயங்களை இந்த குறுநாவல் நினைவுபடுத்துகிறது . கடும் குற்றவுணர்வை ஏற்படுத்துகிற படைப்பு இது என்று கூறலாம் . உண்மை நிகழ்வின் காணாத பகுதி ஒன்றினை கதைக்களமாக கொண்டு புனைவாக எழுதப்பட்டிருக்கும் குறுநாவலான இது கூறப்பட்டுள்ள விஷயங்கள் தாண்டி வேறெப்படி என்ன நடந்திருக்க முடியும் என்று யோசிக்கத் தூண்டும் ஒரு படைப்பே . எதையும் கருதாது , சம காலத்தை கருத்தில் கொள்ளாது படித்தாலும் கவனம் ஈர்க்கும் அப்பட்டமான உண்மை இருப்பதனால் வெகு எளிதில் மனதை கொடும் ரணமாக்குகிறது . ஆதிக்க சாதியினரின் கொடூரங்களும் , அதை தட்டிக்கேட்க முடியாமல் பெண்ணின் எளிய அப்பாவி தந்தையின் பாத்திரம் குறித்தும் நிறைய பேசப்படுகிறது . ஊரிலுள்ளவர்களின் பேச்சுக்கள் , வசைகளை , தூற்றல்களை தாங்க முடியாது பாலிடாலை பெண்ணின் தந்தை குடிக்கும் இடம் வாசிக்கின்றவர்களுக்கே தொண்டையில் எரித்துக்கொண்டு கசப்பூறிய வெம்மை கொண்டு மருந்து கரித்து இறங்குவது போல் தோன்றும் . அப்படி ஒரு வீரியமான உண்மையைப் பேசும் எழுத்து . அதனால் நிகழும் சம்பவங்கள் அனைத்தும் காட்சியாக விரியும் சாத்தியம் பெறுகிறது . ஊரில் பேசுகின்ற ஆதிக்க சாதியினரின் பெருமை பேசும் பேச்சுக்களின் வழியாக சாதிமறுப்பு திருமணம் புரிந்த பலரும் விஷமூற்றியும் , பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டும் கொலை செய்யப்படும் கதைகள் பதட்டம் கூட்டுகின்ற பகுதியாக உள்ளன . பழனியின் மகளைக் கொல்ல ஊர் கூடி சத்தியம் வாங்கும் முதல் காட்சியே எதுவும் பேசாமல் , படிக்க முடியாமல் திகைக்க போதுமானதாக இருந்தது . அவ்வளவு வன்மம் , வெறுப்பு , குரூரம் என பக்கத்திற்கு பக்கம் தொடர்ந்து படிக்கவே அதிக மனதிடம் , வலிமை தேவைப்படுகிறது . அதிலும் ஆண்களை விட பெண்களிடம் உள்ளூறும் குரூரத்தைக் காட்டும் பகுதிகளைப் படித்தால் பெண்களின் கன்னத்து மென்மை குறித்தெல்லாம் கவிதை எழுதவே தோன்றாது . நம் சமூகம் , வாழ்வு , உறவு என ஒவ்வொன்றும் தனிமனிதனின் மீது ஏற்படுத்தும் அழுத்தம் பற்றி அப்போதுதான் யோசித்தேன் . முற்றிலும் எரியவிட்டு சாம்பலையும் நீரை வைத்து கழுவி சேர்த்துவிடும் திட்டங்கள் பற்றி நினைத்தால் பெரும் பயம் சூழ்கிறது . பெண்களுக்கு நிகழும் மோசமான வன்கலவிகள் , வன்முறைகள் இதனைப் பேசுவதைவிட இதனை நியாயப்படுத்தி , ஏற்றுக்கொள்ளும் விதமாக , சொரணையற்று இருக்கும் விதமாக அல்லது இந்த செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள செய்யும் கருத்தியல் எப்படி மக்களின் மனதில் தோன்றியது என்பதை ஆராய வேண்டியது மிக முக்கியம் . 76 வண்ணதாசனின் கதைகள் பற்றி பேசுவோம்… இங்கு குறிப்பிட்டுள்ளவை எனக்கு ஒரு தொகுப்பில் பிடித்த கதைகள் மட்டும்தான் . வண்ணதாசனின் ஒவ்வொரு எழுத்துமே ஒரு கதையைக் கூறும் வல்லமையைப் பெற்றுள்ளது . ஒரு நெருங்கிய உறவுக்காரரின் உள்ளங்கைகள் என் தோளின் மீது படர்ந்து இருப்பது போல் இருக்கும் தன்மையை , நெஞ்சார உணர்ந்திருக்கிறேன் . வாழ்க்கையை , மனிதர்களை , சிறு உயிரை நேசிக்க வைக்கும் எளிய செயலையே கல்யாணியின் எழுத்துக்கள் செய்கின்றன . எளியதுதான் . அதனால்தான் நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம் . உயரப்பறத்தல் கதை கணவன் , மனைவிக்கிடையேயான ஒளிவு மறையவில்லாத உறவினை பேசுபொருளாக கொண்டுள்ளது . தினகரிக்கு ஜோசப் என்கிற நண்பன் திருமண வாழ்த்தை திருமணமாகி நான்கு மாதங்கள் கழித்து அனுப்புகிறான் . அதைப்படிக்கும் தினகரி அந்த கடிதத்தைப் பற்றி கணவனுக்கு சொல்லலாமா ? வேண்டாமா ? என யோசிக்கிறாள் . அப்போது அங்கு வரும் அவளது மாமா தன் ஸ்னேகிதி ஒருத்தியைச் சந்தித்து பேசி பின் அவள் , அவளது கணவன் என மூவரும் கல்லூரியைச்சுற்றிப் பார்த்துவிட்டு பழைய நண்பர்களைப் சந்தித்து உரையாடிவிட்டு வருகிறார் . பின் இந்த சந்திப்புகளை தன் மனைவியிடமும் பகிர்ந்து கொள்கிறார் . தினகரி அவள் மாமாவை ஜோசப் அனுப்பிய கடல் படத்தில் பறக்கும் பறவை போல் நினைத்துப்பார்க்க கதை நிறைவு பெறுகிறது . கட்டுடைத்த உண்மைகளை நான் விரும்புவதில்லை . குறியீட்டுத்தன்மை கொண்ட கதைகள்தான் வெகுகாலம் அதன் தனித்துவத்தன்மையான புதிர்க்காகவே வாசிக்கப்படுகிறது . இதுவும் அப்படியே . ‘அழைக்கிறவர்கள்’ கதை அலர்மேலு நரசையா என்ற நாற்பத்தைந்து வயதான பெண் ஒருவரை சந்தித்து தன் பெண்ணின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க அவரது இல்லத்திற்கு செல்லும் அவரது ஆண் நண்பர் ஒருவரின் அனுபவத்தைப் பேசுகிறது. இக்கதையில் பேசுகின்ற உரையாடல்கள், சொற்கள் எல்லாமே மென்மையாக பேசுபவரின் மனதை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, வருகிறேன் என்றுதான் சொல்லுவேன் ஆனால் வரமாட்டேன்’ என்று அலர்மேல் நரசையா கூறுவது. பிறகு ‘அழைப்பிதழ் என்பதே ஒருவரை அழைக்கத்தானே கொடுங்கள் என்று அலர்மேல் நரசையா வாங்கிக்கொள்வது என குறும்புபோல மென்மையான மனதை இளக்கும் பல வசனங்கள் கதை முழுவதும் நிறைந்து உள்ளன . படியுங்களேன் . சூழல் நமக்கு இதுபோல இருந்தாலும் இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டால் யார் கோபித்துக்கொள்ளப் போகிறார்கள் . சொல்லுங்கள் . ‘கிணற்றுத்தண்ணீரும் ஆற்றுமீனும்’ என்ற கதை இரு முதிய தம்பதிகளின் தனிமையைப் பேசுகின்ற கதை. விடுமுறைக்கு வந்து சென்ற அவர்களது பேரனின் இருப்பு, நினைவு அவன் திரும்பிப் போன பின்பும் அவன் விளையாடிய, எடுத்த பொருட்களில் மிச்சமாகி அவர்களை வருத்துகிறது. யாரிடமாவது பேசவேண்டும் , விளையாட வேண்டும் என்று தவிக்கும் ராமையா , வேலம்மாள் என இருவருக்கும் பேரனின் வருகை மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார் கல்யாணி . இனிய நிகழ்வுகளை நினைவுபடுத்திக்கொண்டே வாழ்வதுதானே நிகழ்காலமாக இருக்கிறது . பேரன் விளையாண்ட மீன்களை ஆற்றில் கொண்டுபோய் விட ராமையா செல்வதுடன் கதை நிறைவு பெற்றாலும் இக்கதை ஏற்படுத்தும் பாரம் , நம் மனதில் அவ்வளவு எளிதில் போவதாக இல்லை . 1 இறுதியாக ஒரு சொல்   நூலகவாசியின் குறிப்புகள் நான் இத்தனை நூல்களைப் படித்துள்ளேன் என்று யாரிடமும் நிரூபணம் செய்ய எழுதப்படவில்லை . இவை புதிய வாசகர்களிடம் படிக்கவேண்டிய நூல்கள் குறித்த ஒரு தேர்வை கைக்கொள்ள வேண்டிய தேவையை உணர்த்தக்கூடும் . நூல்கள் குறித்த அறிமுகம் நான் வாசிக்கும்போது யாரும் எனக்கு வழங்கவில்லை . அதனை இந்த குறிப்புகளை வாசிக்கும் யாரும் எளிதில் உணர முடியும் . பின் பலர் நல்ல நூல்களை பரிந்துரைத்தார்கள் என்பது முக்கியமாக குறிப்பிட விரும்புகிறேன் . எளிதாக உணர முடிகின்ற விஷயத்தை படித்து பின் தொடர்ந்து தேடல்கள் நிகழ்த்தி அதே வழியில் இயல்பாக நவீன இலக்கியம் வருவது சிறந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன் . தொடர்ந்த வாசித்தல் எழுத்தை நோக்கி நிச்சயம் நகரும் . சவாலான நூல்களை வாசித்தல் என்பது சில நாட்களில் கைகூடாது . தொடர்ந்த மனவலிமை , குறையாத வாசிப்பினால் அக்கனவு கைகூடும் . வாசிப்பினால் என்ன நிகழும் ? என்ன பிரயோஜனம் என்ற கேள்வியுள்ளவர்கள் அணிந்திருக்கும் டீஷர்டில் வரையப்பட்டிருக்கும் சேகுவேராவையே அவர் அதில் இருக்கிறார் என்பதற்காகவாவது மதிப்பவர்களாக இருந்து அவரை சிறிது தெரிந்துகொண்டால் நல்லது . இவர்கள் போன்றவர்களுக்காக இந்தக் குறிப்புகள் எழுதப்படவில்லை . வாழ்வனுபவங்களைத் தேடுபவர்கள் மட்டும் இதனைப் படித்தால் போதும் . யாரையும் வற்புறுத்துவது பெரும் வன்முறை . பல்வேறு கேள்விகளைக் குறைக்க , பல பதில்கள் இந்த நூல்களில் ஒவ்வொருவரின் வாழ்வை பொறுத்து இருக்கலாம் . நூல்களின் சிறிய அறிமுகச்சுருக்கம்தான் இது . முழுமையானதல்ல . நூல்களின் வழி காணும் தரிசனம் காலம் , அனுபவம் , சூழல் என வாசிப்பவர் பெறும் அனுபவங்கள் மாறுபடும் . வாழுங்கள் . வாசியுங்கள் . நன்றி ! பிரியங்களுடன் அரசுகார்த்திக் 2 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ 3 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !