[] []     நீட்சி பா ரவி   அட்டைப்படம் - கே.ஆர். இளவேனில்  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை : CC-BY-SA  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                      நீட்சி பாரவி சிறுகதைகள்   உரித்தாக்கல்... தன் அனுபவங்களை விளக்கிப் படிப்பித்த அப்பா, ஆதாரத் தமிழும் உயிர்ப் பண்பும் ஊட்டிய அம்மா, சரியான இலக்கியத்தடத்தில் கால் பதிக்க படிப்பித்த காஞ்சிபுரம் 'தமிழொலி முன்னோடிகள் சகோதரர் திரு பா.கணேசன், திரு வ. பா. சடகோபன் தீபப்ரகாசன்), இலக்கியம் வாழ்க்கை இரண்டிலும் கலந்த பிரக்ஞை நண்பர்கள், எனது முதல் விமர்சகராகிய அன்பு வாழ்க்கைத்துணை திருமதி கற்பகவல்லி மற்றும் நான் என்றும் மறவா மதிப்பிற்குரிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும்...                   இயல் வெளியீடு   []   உரித்தாக்கப்படும் எழுத்து ... பாரவியாகிய எனது முதல் சிறுகதைத் தொகுப்பு இது. பள்ளி மாணவப்பருவத்திலிருந்து இன்றுவரை இலக்கியம் என்பது எது என இதுதான் என நாற்பது ஆண்டு காலப் படிப்பு அனுபவமும் படைப்பு அனுபவமும் என்னை ஊடாடாமல் நிலைநிறுத்தியிருக்கின்றன . எந்த ஒரு இலக்கிய வாசகன் அல்லது படைப்பாளிக்கும் இது நேர்வது பொது. இலக்கியம் படைப்பவர்கள் முழுமையாக அறிவார்ந்த நிலையில் இயங்கும் மனிதர்கள். மனித மன அமைப்பின் விசித்திர இயல்புகளைப் புரிந்து படைப்பதில் தங்களுக்கு உள்ள தனி அல்லது தேர்ந்த திறமையால் மற்ற மனிதர்களிடமிருந்து வித்தியாசமானவர்களாக படைப்பாளிகள் இருப்பார்கள். இத்திறமையோடு வாழ்வை அணுகுகையில் தங்களுக்கு ஏற்படும் அனுபவங்களினால் பதப்பட்டு ஒரு சகிப்புத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டியவர்கள் இவர்கள் என்பதெல்லாம் உண்மையா? சகிப்பு என்பது எதையும் ஏற்கும் அல்லது பொறுத்துக் கொண்டு சுரணையற்றுக் கிடப்பது எனில் பொய்யாகுமா. தற்காலத் தமிழிலக்கியம் பரந்துபட்டதல்ல. குறுகிய எல்லைகளுக்குள் குறுகிய மனிதர்களாக இயங்கிக்கொண்டு, சமகாலத்து இலக்கியத்தின் எல்லைகளை, போக்குகளை, கதியை நிர்ணயித்து முடித்துவிடும் அவசர வேலையில் பணியில் காரியத்தில் இறங்கி முடிந்துவிடுவதாகத்தான் தொடர்கிறது. தமிழ்ச் சமூகத்தின் எந்தத் துறையிலும் பரிணாம ரீதியாக சீரான வளர்ச்சி நிகழ்வதில்லை. சிந்தனை மரபும் வெகுகாலமாகவே சவலைக்குழந்தையாகவே உள்ளது. உலக இலக்கியம் நம்மைத் தாக்கிப் பாதிக்கும் அளவு நாம் உலக இலக்கியத்தைப் பாதிக்கவில்லை . இது ஏன்? உலக அளவில் எந்த நாட்டிலும் எந்தவொரு மொழியிலும் நாம் படிக்கத்தக்க ஒவ்வொரு இலக்கியப் படைப்பாளியும் தன் இலக்கியக் கொள்கை, அதன் தத்துவ அடிப்படை முதலியன குறித்து தீவிரமாக சிந்திப்பது, சிந்தனையை வெளிப்படுத்துகையில் தன்னை, தன் படைப்பை சரியாக மதிப்பிட படிப்பவருக்கு வாய்ப்பளிப்பது என நிற்கிறார். தனக்கு முந்தைய படைப்பாளி களிடமிருந்து ஏதும் பெறாத கற்காத படைப்பாளிகள் இருக்க முடியாது. ஆனால் இங்கே நடந்தது என்ன? நடப்பது என்ன? தேடலினால் சுயவிமரிசனத்தினால் துருப்பிடித்த வேலிகளை உடைத்து, தனக்கான மதிப்பீடுகளை தானே உருவாக்கும் தன்மை கொண்டதாகத் தமிழ்ச்சிந்தனை, சிந்தனை மரபு உருவாக வேண்டியதன் தேவையை நாம் உணர வேண்டியுள்ளது. இந்த மண்ணில் வேரூன்றி பிறக்காது, உலக சிந்தனையின் நிழலில் வளர்ந்த செடியாக உள்ள நம் சிந்தனை, எழுத்து, படைப்பு பற்றி ஒப்பிடுதல் சரியாகுமா? சமகால மனித இனத்திற்கான உணர்நிலையில் பங்குகொள்ளாத தன்மை நம்மிடம் உள்ளது. இதனால், இன்றைய மனிதரின் வழிதெரியாத பரிதவிப்பு, தேடல் ஆகியவற்றை நம் இலக்கியத்தில் பிரதிபலிக்கச் செய்யாத நிலையில் உள்ளோம். எழக்கூடிய விவாதங்களும் தொடர்ந்த வெளியீட்டுச் சாதனங்களும் இல்லாததால், (இலக்கிய) சிறுபத்திரிகைகள் ஜீவ மரண போராட்டங்களில் சிக்கிவிட, படைப்பாளிகள் - வாசகர்களிடையே தொடர்பின்மை உருவாகி விடுவதும் நமது இன்றைய நிலைக்குக் காரணம் (பிரக்ஞை, 16, 1976). ழீன் பால் சார்த்தர் சொன்னார்: "எழுத்தாளன் தான் தொடங்கிய பணியை முடிக்க வாசகனையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வாசகனின் விழிப்புணர்வால் மட்டுமே தன் படைப்பின் தகுதியை நிரூபிக்கக்கூடியவனாக (படைப்பாளி) இருக்க வேண்டியவனாகிறான். படைப்பு வாசிப்பில் தான் முழுமை காணமுடியும்" (Why Write). இங்கே வாசகத்தேர்ச்சி குறைவு காரணமாக, தேர்ந்த வாசகத்தன்மை இல்லாத காரணத்தால் படைப்புத் தேர்ச்சி அல்லது தேர்ந்த படைப்பு வெளிப்படுத்தப்படவில்லையா. தேர்ந்த வாசக அனுபவத்திற்கு தேர்ந்த படைப்பினை அறிமுகப்படுத்த விமர்சன அமைப்புகள் விமர்சகர்கள் தவறியதன் காரணமாக தேர்ந்த வாசகர் தேர்ந்த படைப்பை அடையாளப்படுத்தத் தவறும் நிலைக்கே தமிழ்ப் படைப்புலகம் ஆளானதா, அல்லது இரண்டுமே உண்மையா. மேற்சொன்னவை யாவும் அன்னியப்பட்டதாகத் தோன்றுவதாக சிலர் கருதக்கூடும். ஆனால் எல்லாவிதத்திலும் அன்னியப்பட்டுக்கிடக்கும் நமக்கு நமது மொழிகூட அந்நியப்பட்டு வருகிறது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வார்களெனவேக் கருதுகிறோம். எனினும், சித்தாந்த சனாதனிகளாக இருந்த சக எழுத்தாளர்களிடமிருந்து விலகி மாறுபட்டு, தாங்கள் எதிரொலிச்சான் கோயில்களாக இருக்க முடியாது எனப் புறப்பட்ட ஒரு எழுத்துமரபும் படைப்புலகமும் இங்கே தமிழில் 'மணிக்கொடி’ காலத்திலிருந்து தொடர்கிறது என்பதுதான் தேர்ந்த வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்கும் உள்ள சிறுமகிழ்ச்சி. உயிரூற்று. நீரோட்டம். போலி, கபட, பாசிச மனோபாவ படைப்புச் சூழல்களிலிருந்து விடுபட்டு, எதிரொலிச்சான் கோயில்களைத் தகர்க்கப் புறப்பட்ட பரிசோதனைக்காரர்கள், நவீன தமிழ் எழுத்தாளர்கள் படைப்பாளிகள் வரிசையில் பாரவியாகிய என்னையும் ஒரு துளியாக இணைத்துக் கொண்டுள்ளேன். இவ்வெளியீட்டை 'இயல்’பானதாக்கி, இயலுமெனத் துணை நிற்கும் எழுத்தாளர் - விமர்சகர் - நாடக, திரைப்படக் கலைஞர் நண்பர் திரு. எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி. சேகரித்து வைத்திராத என் படைப்புகளைத் தேடி எடுத்து பிரதி செய்து அனுப்பிய மூத்த எழுத்தாளர் திரு. வே.சபாநாயகம் உள்ளிட்ட பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை வெளியிட்ட இலக்கிய இதழ்களுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் என் நன்றி. இத்தொகுப்பில் இன்னும் சில சிறுகதைகளை 'உன்னதம்’ இதழில் வந்த ’ரெட்டை', 'கண்ணதாசன்' இதழில் வந்த 'குட்டித்திமிங்கலம்' மற்றும் சில இலக்கிய சிறுபத்திரிகைகளில் வந்தவற்றை, அவை கிடைக்கப் பெறாமையால் சேர்க்க இயலவில்லை. முகப்போவியம் மற்றும் சில உள் ஓவியங்களும் வரைந்து தந்த இளம் ஓவியனும் எனது மகனுமாகிய திரு. கே. ஆர். இளவேனில், பிரக்ஞை இதழ்களில் வெளியான நவீன ஓவியங்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்த ஆசிரியர் குழுவினருக்கும் ஓவியர்களுக்கும் நன்றி. இச்சிறுகதைத் தொகுப்பினை ஒளி அச்சு செய்து வடிவமைத்து தந்த நண்பர் திரு. சூரிய சந்திரன் அவர்களுக்கும், அளித்த இடர்களைப் பொறுத்து சிரமம் பாராது அச்சிட்டு அழகுற அளித்த 'தரமணி அச்சகம்' அருமை நண்பர் திரு. ஏ.ரபீக் அவர்களுக்கும் அவரது நேரம் காலம் கருதா உழைப்பாளத் தோழர்களுக்கும் நன்றி. பாரவி ஜனவரி 2010 சென்னை - 600 004       பொருளடக்கம் 1.வரப்பு 8  2. உண்மையிலும் உண்மை கதை 13  3. ஊடுபாவு 15  4. பாம்பு 22  5. பிய்க்கப்படாத சிறகுகள் 25  6. ஒரு நெல்லின் மரணம் 27  7. நிர்ப்பந்தங்கள் 34  8. சிலுவை 37  9. சூரியகாந்தி 43  10. கருவாடு 47  11. பற்கள் 49  12. செவ்வகம் 51  13. வளமை 54  14. வாய் அரிசி 57  15. நீட்சி 62  16. நிறம் 72  17. எல்லை 75  18. தீனி 78  19. இருட்டு 82  20. ஜெல்லுவுக்கு பச்சைக் கண்கள் ஏன் வந்தது 86  21. தாவல் 91  22. உயிரி 94  23. விடியாத ஒரு கதை 98  24. ஒரு கற்பிதத்திலிருந்து 101  25. நெடும் பயணம் 109                            1.வரப்பு   []     டே தனபாலு கல்லாணம் கட்டிக்கினு இன்னாடா செய்வே மாமங் கால் தடால்னு வாரிட்டு மாமியாள் பாத்துக்கு வேங். அறுவடையில் இருந்தவர்கள் சிரித்தனர். அரிவாளால் முதுகை சொரிந்து இன்னொருத்தி கேட்டாள்: பொண்டாட்டிய இன்னாடா செய்வே பேமானிப் பையா. இது யின்னா கேழ்வி . வாரத்துக்கு வுட்டுட்டு ஜம்முனு ஒக்காந்துகினு சாப்டுவேன். ந்த அறுப்பு ரோதன இல்லாம. அட ஒக்காளப் பாத்தவன... த்தூ . இன்னாமே ஒக்கான்றே எக்கா. இன்னாடா கயிலாத்து எக்காக்கிக் கால்லாம் வச்சிக்காத கன்னங் கதெ பாடிபூடும் ஆமா. அடேங்கப்போவ் சொல்றத சொல்லிட்டு சும்மா ரேங்க வாணாம்னு சொல்லு மாமோவ். டே டே அறப்ப கிள்ளிக்கினே பேசுடா. எங்கனா ஒம்மனையிலே முடிச்சிருக்கியா பாரு. நிலத்துக்கார மாமன் வேலையையும் கூடவே நினைவூட்டினான். தனபால் பையன் குனிந்தான். பதினெட்டு - இல்லை - பத்தொன்பது இருப்பான். வாயைக் கிண்டிய முப்பதை எட்டுபவள் சிரித்தாள். நல்லா ஒட்டிக்க சொல்லு மாமோவ்! பையனுக்கு ஒண்ணும் புடிபடலையாங் காட்டியும். உச்சத்தில் நின்று சூரியன் முதுகைப் பிளந்து கொண்டிருப்பதை மறந்து அறுவடை செய்ய இந்த எதிர்விளைவில்லாத கிண்டலும் சிரிப்பும் இவர்களுக்கு உதவின போலும். சித்திரையின் கத்திரி வெயிலில் அந்த ஆற்பாக்கம் கிராம திருத்துவின் பலநூறு ஏக்கர்களில் நவரை - இரண்டாம் போகம் - கார் அறுவடை அங்கங்கே நடந்து கொண்டிருந்தது. இவர்களின் கேலியில் பேச்சில் கலக்க முடியாதவனாய் கையில் பெரிய குடையுடன் வரப்பின் மேல் வெயிலின் வேக்காட்டில் வியர்வை வழிய இளங்கோ கண்காணியாய் இருந்தான். இளங்கோவுக்கு அப்படி சாதாரணமாக அல்லது பச்சையாக பேச வராது என்பதும் அத்தோடு அவன் நிலத்தின் அப்பாவுவாக இருக்கிறான் என்பதும் கூடப் பேசுவதைத் தடை செய்தது. எச்சிலைத் திரட்டி விழுங்கினான். நாக்கும் தொண்டையும் வறண்டிருந்த நிலையில் சிறிது மட்டாய்த் தெரிவித்தன. அவர்களுக்கென்ன தாக மெடுத்தால் பக்கத்தில் ஓடும் மதகுக் கால்வாயில் அள்ளியெடுத்துக் குடிப்பதுடன் நாலு கை நீரையும் முதுகில் யானை மாதிரி வீசிக்கொள்கிறார்கள். அவனுக்கு குடிக்கவே பயமாயிருந்தது. கண்ட தண்ணியும் குடித்தால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. கையோடு ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலில் ஊர்க்குளத்து நீரை எடுத்து வந்திருந்தான். சாப்பிட்ட பிறகு வேண்டியதை நினைத்து அடக்கிக் கொண்டான். இப்படிக் காய்வதற்கு கடைசியில் நெல் அளக்கும்போது ஒரு மரக்கால் கங்காணக்கூலி கிடைக்கும். சுற்றிலும் வெறித்தபடி வேடிக்கையான அவர்களின் பேச்சை ரசித்து கூடவே சரியான அறுவடையை கவனித்து இருந்தான். அந்த தனபால் வயசுதான் இளங்கோவுக்கும் இருக்கலாம். தாகத்தை மறந்து காதில் விழும் அவர்களைக் கேட்பது வெறுமையைக் குறைத்தது. தனபால்தான் கிண்டலெடுத்துக் கொண்டிருந்தான். எனக்கின்னாமே பசிச்சா சோறு மொளச்சா மொட்ட. இது இன்னடா புது திம்மாப்பு மொளச்சா மொட்ட பசிச்சா சோறு பொம்மனாட்டி கழுவி ஊத்தாம குடிக்கிற கம்மினாட்டியாடா நீ ஓ அளப்புல பொட்ட நா குசு வுட. அதின்னாக்கா பொட்ட நா ஆம்பள நா வுடாதா இன்னா . ஆங் பொட்ட நா வுட்டதா இவுனுக்கு மணுக்கும். நீதா பாத்தே அட பொறம்போக்கு பெத்ததே. ஆருடா பொறம்போக்கு. என்ன பத்தி எந்த பேமானின்னா சொன்னான்னா அவுங்கக்கா தங்கச்சிங்களை அவுனே பாக்கறவங். தே என்னப் பத்தி எதுவோன்னாலும் சொல்லிக்கமே அக்கா தங்கச்சிங்கள இசுத்தே ரொம்ப பொல்லாத கோவக்காரனாயிருப்பேன். நா வுன்ன சொன்னா கேட்டுக்க என்னெ இசுக்கிறவனுக்கு ஆவுது. அட ஓக்காட்டாம் பெத்ததுங்களெ ஒங்களுக்கு அறுவுகிறுவு கீதா அப்பாவு ஒக்காந்துகினு கீறாரேன்னு எங்கனா மான ரோசம்... சேச்சேச். பொழுதாவரங் காட்டியும் வூட்டுக்கு போவானாம் மடமடன்னு கீறுங்க பேச வந்துட்டாங்க. பேச டே தனபாலு தாளெ படியப் புடிடா தாளெ படியப் புடிங்க. நிலத்தைப் பயிரிடும் மாமன் ஏச்சு விட்டுக்கொண்டே மளமளவென்று அறுத்தான். அரிவாள்கள் சரசரத்தன. இந்த வேகம் கொஞ்ச நேரத்திற்குதான். இடுப்பு வலி, முதுகு ஊறலுக்கு நிமிர்வதாய் மறுபடியும் சீண்டல். இளங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். எதிரில் ஏரிக்கரையோரம் நின்ற பனை மரங்கள் உண்டாகியிருப்பதைக் குலைகுலையாய்க் காட்டிக் கொண்டன. பறந்து பறந்து பூச்சி பொட்டுக்களைத் தின்னும் வாலாட்டிக் கருங்குருவி கூடக் காணோம். பனைகளின் சரசரக்காத ஓலைகளின் இடுக்குகளிலிருந்து பிரதிபலிக்க முடியாத கூவல்களை வெளிப்படுத்தி அவன் காதுகளில் பறவைகள் மோதிக்கொண்டன. அவ்வப்போது ஏரிக்கரை ரோடின் மேல் விமான இரைச்சலாய் பஸ் லாரிகள் மெதுவாக ஊர்வதாய் பட்டன. பக்கத்துக் களத்து மேட்டில் கட்டடிக்கும் சத்தமும் கூடவே பிணையடிக்கும் மாடுகளை விரட்டும் குரல் தனித்துக் கேட்டது. அனலின் போர்வையில் நெடுக மஞ்சளும் பச்சையுமாய்த் தெரிந்தும் பாலைவனமாய் அவன் உணர்ந்தான். மார்பில் வழியும் ஈரத்தை அப்படியே சொக்காயால் அழுத்தி எடுத்தான். வேட்டி முனையால் முகத்தை ஒத்தினான். எரிந்தது. எருமை போல அப்படியே அம்மணமாய் மதகுக் கால்வாயில் ஊற வேண்டும் போல... அவர்களைப் பார்த்தான். உப்பின் லேசான வெளுப்பு திட்டாய்த் தெரிந்தது. தோலின் அடியில் துளிர்த்திருக்கும்போதே ஆவித்துக் கொண்டே இருக்கும் போலும். அவர்கள் தலைத்துணியை வட்டமிட்டுக் கட்டி முதுகில் விட்டிருந்த விதம் சவூதி அரேபிய மன்னரை நினைக்க வைத்தது. மணி எவ்வளவிருக்கும்.... இதோ ராமதிலகம் போறானே பதினொன்னரை ஆயி போச்சி. சூரியந் தலைக்கி மேலே வந்துட்டா(ன்) செர்த்தான். லோகலு போனான்னா மணி பன்னண்டரதா. பஸ்கள், சூரியன் போக்கை வைத்து அவர்கள் சரியாகவே மணி சொல்லிச் செய்தார்கள். இளங்கோவுக்கு ரேடியோ கேட்டுத்தான் மணி சொல்லவரும். மணி ஒன்றாகியிருக்கும். கையிலிருந்து அரிவாள்களை சூடேறாமல் இருக்க செருகி விட்டு சாப்பிடக் கிளம்பிவிட்டனர். இன்னா அப்பாவு சாப்பிட வரீங்களா? கூதாங்கீது குடிப்பம் ஒருத்தி கேட்டு இவன் பதில் சொல்வதற்குள் தனபால் முந்திக்கொண்டான். தே நீ கொண்ணாந்து கீற கூவ காவாயில் கலக்கு அல்லாருமா குடிக்கலாங். வுன்ன எவடா கூப்ட்டா ? வாலு பெரிய மயிர்புடுங்கி மகாராஜா. சோத்திலேயே பொறள்றவரு, கூவ பார்த்திருப்பாரா? அடடே நீ எப்பவோனுமின்னாலும் எங்கூட்டுக்கு வந்து பாத்துக்க கூவா சோறான்னு அத்தவுட்டுட்டு. டே பையா ரொம்பதா பீத்திக்காத . ஒவ்வோலு ஜம்பத்த எவன்னா சோறு துன்னாத சோப்ளாங்கிவிட்ட அவுத்து வுடு. இன்னமோ . அப்பன்னா எங்கூட்ல சோறே பாக்கல்லேன்றியா. அடப் போடா மோளம். எங்கூட்லல்லாஞ் சோற பாத்தமா யின்னா போயி துன்னுட்டு வாங்கடான்னா பொம்மனாட்டி கூட சார்வாதம் போட்டுக்கினு கீறாங். போ போங்க சீக்கிரமா . அட போயே ங். காற்றின் எதிர் வீச்சால் அவர்கள் பேச்சை அதற்கு மேல் கேட்க முடியவில்லை . மதகின் எதிர் கரையில் நகர்வது தெரிந்தது. திடீரென்று காதில் எங்கேயும் வெறுமையில் ஒலி ரீங்கரித்தது அவனுக்குப் புரிந்தது. அவர்களைப் பார்த்துக்கொண்டே தான் கொண்டு வந்திருந்த டிபன் பாக்சையும் தண்ணீர் பாட்டிலையும் கைப்பையிலிருந்து எடுத்தான். ஒரு வாய் நீரில் கொப்பளித்து உமிழ்ந்தான். பாட்டில் நீர் வெந்நீராகி யிருந்தது. டிபன் பாக்சிலிருந்து மோர் சாதமும் எலுமிச்சை ஊறுகாய்த் துண்டும் அவனுக்கு தினம் மதியம் பள்ளிக்கூடம் படித்த வரையில் சாப்பிட்டதை நினைவூட்டின. காலேஜுக்குப் போனதிலிருந்து கொண்டு போவதில்லை. சைக்கிளை மிதித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவான். டிபன் பாக்சை சுமந்து கொண்டு காலேஜுக்குப் போவது நினைக்க முடியாததாய் இருந்தது. பசிக்கும் போதாது. ஆனாலும் பல பேர் காலேஜில் சாப்பிடத்தான் செய்தார்கள். சைகிள் இல்லாவிட்டாலும், வீடு தூரமாயிருந்தாலும் என்ன செய்வது? அவன் வீடு கூட ஒரு மைல் தூரமிருக்கும். ஆனாலும் .... சூரியனுக்கு நேராக குடையை வரப்பில் சார்த்திப் பிடித்து சாப்பிடுவது கஷ்டம்தான். இருந்தாலும் வேறு வழியில்லை. ஆனாலும், வழக்கத்தால் வேகமாக சாப்பிட்டான். சொக்கலிங்கம் மூன்றரைக்கு வருமாம். அதைப் பார்த்துவிட்டுத்தான் அவர்கள் எழுந்து வருவார்கள். அது வரையும் எதைப்பற்றியாவது சீண்டிக் கொண்டிருப்பார்கள் போலும். இல்லை, புதிதாக டவுணுக்குப் போய் பார்த்துவிட்டு வந்த சினிமாவைப் பேசலாம். அதற்கு கண் காது மூக்கு வைத்து எடுத்து விவரிப்பார்கள். கூத்துப் பாட்டுத்தான் அவர்களுக்குச் சொந்தமாயிற்றே. அதை ஒருத்தருக்கொருத்தர் பாடிக் காட்டுவார்கள். வயதானதால் சிலரும், பழக்கத்தால் சிலரும் சிறிது கண்களை மூடவும் செய்யலாம். இளங்கோ தான் பிடித்திருந்த குடையின் நிழலளவே வரப்பின் மேல் இருந்தான். நிழற்படாத அடுத்த துளி வரப்பும் சுட்டது . சூனியத்தின் வெறுமையான தவயோகியா அவன் என்பதை நினைக்க வேடிக்கைப் பட்டுக் கொண்டான். குடைத் துணியால் கிரணங்கள் தடுக்கப்பட்ட கோபத்தால் சூரியன் நிறைய வெம்மையை அந்தக் கருப்புத் துணியுள்ளே செலுத்துகிறான் போலும். கொஞ்சம் காற்று வந்தது. மூன்றரை மணி நெருங்கியது போலும். வாங்க போய் பொயுது சாஞ்சாச்சி. நிலத்துக்கார மாமன் இங்கே வந்து கத்தினான். அங்கிருந்து ஒருத்தன் உரக்க முணுமுணுத்தான்: இதுங்காட்டியுமா மூணர? செத்த ஒடம்ப பொரட்டறுதுங் காட்டியும். எல்லா(ம்) ஆச்சிடா வாங்கடான்னா தூங்கணும்னா வூட்லகீறது. இளங்கோ கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தான். மெதுவாக அரிவாள்கள் சரத்துக் கொண்டன. வாயைத் திறந்தாள் ஒருத்தி. திருட்டு மாடு பூந்தாப்பல கீறறையே துன்னது ஜெரிக்குமாடா வாலு. யார்மே திருட்டுமாடு? எங்கிட்டயே வம்புக்கு வராங்கடோய் மூணாளு மனைய நா ஒர்த்தனே கீறிக்கினு வரேங், ந்த பொட்டப் பசங்க ரெண்டுமில்லே திம்மாதூண்டு மனைய புடிக்குதுங்க அத்த வுட்டுட்டு. நிமிர்ந்து இவனைப் பார்த்துவிட்டு நிலத்துக்கார மாமன் இரைந்தான். காலைல்லாம் பேசியாச்சி ன்னுமின்னா எல்லா(ம்) ஒரே சரியா சீக்கிரமா முடிச்சீங்க... பொயுதோட வூட்டுக்கு போலாம். இல்லன்னா எனக்கின்னா... அப்பாவுவ இருட்டறதுக்கு முந்தி அனுப்பிச்சுடணும். நாலு மடிப்பு மடமடன்னு புடிச்சா ஆச்சி. ஆளுக்கு ரெண்டு மூணு நடெ. இன்னா கட்டாயிடப் போவுது. யாரும் பேசாமல் இரண்டாவது தளையும் அறுத்து முடிந்தது. இன்னும் இரண்டு துண்டு நாளைக்குதான். அது முடிந்தபிறகு கட்டடிக்கவேண்டும். இன்னும் இரண்டு நாட்களை இதே கதையாய் நினைத்துக்கொண்டான் இளங்கோ. டே தனபாலு பிரிய போட்டு, மடிச்சிக்கினே வாடா, ந்த ஜாரி பாதிப்பேரு அந்த ஜாரிக்கி பாதிப்பேரு. கபகபான்னு ஆவுட்டும். எறைக்காம அரிவாரேம்மே. இன்னா அரிவாரரே. நாலு நெல்லு மண்ணுல போனா ஆரு துன்னபாடு. தே, சின்னப்பொண்ணு பக்கத்தில கீறதையும் வாரிவாயேன். இன்னமோ தளுக்கா வாரிவரே. பாரு மாமோவ் பன்னியாட்டம் போட்டு அமுக்கி அமுக்கி கட்டறாங். ஆரு தூக்கறது கட்டெ. மாடா மனுசாளா. ஆங் இத்த ஒரு பொம்மனாட்டி தூக்கலேன்னா பொறவு அவ எதுக்குதா லாயக்கு. அதாந் தாள்லாம் சொடத்து போய்க் கீதே. பாத்துக் கட்டுடா. ஆவட்டும் ஆவட்டும்... கட்டுங்களெ எண்ணிக்கினியா அப்பாவு. தூக்குங்கடா மடமடன்னு. பொயுது போச்சி. ஒரே ஓட்டா சந்துவுடாம மூணு ஜாரியா போடுங்க கட்டுங்களெ. டே வெள்ளெ அங்கயே நின்னு கட்டுங்களெ சரியா வாங்கிப் போடு. மாமன் வேகமாய் கட்டுகளை ஆட்களின் தலையில் தூக்கிவிட்டாலும் சூரியன் மறையும் வேகம் பொழுதாகி விட்டதை சிவப்பாய்க் காட்டியது. மணி ஆறாகிவிட்டிருக்கும். வெட்ட வெளியாயிருக்கவே இன்னும் இருள் மூடவில்லை. ஊரில் விளக்கு வைப்பார்கள். கட்டுகளை எண்ணிக்கொண்டு பக்கத்து களத்து மேட்டில் கட்டு போடும் இடத்திற்கு நடந்தான் இளங்கோ. மேடு பள்ளமான வரப்பில் ஓடி ஓடி அவர்கள் கட்டுகளை போட்டு வந்தனர். கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து நடந்தால் உடனே வரப்பு ஒரு பக்கம் சறுக்கியது. மூன்று ஜாரியாக கட்டுகள் போட்டு முடிந்தன. தலைத் துணியை உதறிவிட்டு கூலியாட்கள் மதகில் கைகால் கழுவினர். ஆண்கள் துணியை சுருட்டி வைத்துவிட்டு குளிக்கலாயினர். பயிரிடும் மொழுதியப்பன் கட்டுகளை மேல் தலைப் பின்னலால் இணைத்தான். ஈரமண்ணை அங்கங்கே பிடிப்பிடியாய் வைத்து வந்தான். இளங்கோ எழுத்து பொறித்த முத்திரைப் பலகையால் தட்டி அடையாளப்படுத்தி வந்தான். எல்லாம் ஒரு அத்துக்குதான். நாளைக்கி காலையில வந்துடறீங்களா அப்பாவு. வரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவனுக்காக திரும்பி சிரித்து சொன்னான். பின்னே . வந்துடறேன். போய் வரட்டுமா. இவனுக்காக அவன் தலையாட்டினான் சரியென்று. மதகில் குளித்துவிட்டு ஆட்கள் தூரத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். பயிரின் சுனையோடு ஈரமாக காற்று அழுத்தி வீசுவது முகத்தில் பட்டது. அவன் மதகில் இறங்க, மடக்கிய குடையை ஒப்புக்காக எதிரில் ஊன்றி வரப்பில் நடக்கலானான் இளங்கோ. வக்கா கொக்கு நீர்க் காக்காய்கள் குரலெழுப்பிக் கொண்டு சரமாய்ப் பறந்தன. அங்கங்கே காவலுக்கு எஞ்சியிருந்த சிலரின் குரல் எங்கேயும் வியாபித்திருப்பதைக் கேட்டான். போயி ராவிக்கி சாப்பாடு கொண்ணாந்துடு. டோய் புல்லறுத்தது போறும் மாட்டெல்லாம் ஓட்டிட்டியா. அந்த மண்ண ரவெ தூத்தேன். நாலு நெல்ல பொறுக்கிக்கினு போறே(ன்). அட சூடு சொரண கீதாம்மே நல்ல ஜென்மமார்ந்தா ஒறைக்கும் இவ நெலமாட்டம் உருவுறா. குரல்களை பின்னுக்குத் தள்ளி நடந்தான் இளங்கோ. இன்னும் இருட்டுவதற்குள் ரோடுக்குப் போய் விடவேண்டும். பாம்பு பொட்டுகள் வேறு ஊருமே .... இன்னும் வேகமாக நடந்தான் அவன் சறுக்காமல் இருக்க ஜாக்கிரதையாக நடக்க வேண்டியிருந்தான். மிகவும் தாகமாக வேறு நினைப்பு வந்தது. போனதும் முதலில் ஒரு நாலு டம்ளர் தண்ணியாவது குடிக்கணும். தவளைகள் சுவர்க்கோழிகளாய்க் கத்தின. தவளை கத்தினால் பாம்பு வரும். எரிச்சலாய் வந்தது. வரப்பு ஏன் இன்னும் முடியமாட்டேன் என்கிறது. காலையில் இது இவ்வளவு நீண்டிருந்திருக்கவில்லை என்ற நினைப்பு அவனுக்கு வந்தபோது இன்னும் வியர்த்துப்போனான் அவன். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் பரிசுக்கதை, ஆண்டு மலர் 1972 தமிழொலி கையெழுத்து ஏடு, 1970                                           2. உண்மையிலும் உண்மை கதை   []     {எச்சரிக்கை : இக்கதை உண்மை கதை எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் மட்டும்} "சார், என் கதையே ரொம்ப மோசமானது சார். நீங்க சுலபமா கேட்டுட்டீங்க. அதை நெனைச்சாலே அழுகை தான் வருது சார். ஆனா நீங்க உண்மையிலும் கேக்கறீங்க. எங் கதையெச் சொன்னா என்னாட்டம் உண்மை கதை கீறவங்க ஜாக்கிரதையா இருப்பாங்க இல்லையா சார். எனக்கும் மனசு கொஞ்சம் நிம்மதி . எம் பேரு ஊரெல்லாம் மாத்திதானே போடுவீங்க? அதான் சார் கரெக்ட். ஏன்னா தொழில்ல தொல்லை வரக் கூடாது பாருங்க. எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க. டேய் விஜி, விஜயாக்கண்ணான்னு தான் கூப்பிடுவாங்க. ஆமா சார் நான் அவங்களுக்கு ஒரே பொண்ணு. ரொம்ப செல்லமா வளத்துட்டாங்க. ஆனா எங்க கிளாஸ்லே என்னை பிச்சைக்காரின்னும் குப்பைக்காரின்னும் கேலி செஞ்சாங்க சார். என்ன சார் அப்பா அம்மா? அவர் வந்தார். நான் தினமும் விதம் விதமாக டிரஸ் பண்ண ஆரம்பிச்சேன் சார். அவர் ஸ்கூல் பக்கத்திலே பங்க் கடைக்கு சிகரெட் பிடிக்க வருவார். ஒரு நாள் நடந்து வருவார். ஒரு நாள் சைக்கிளில் வருவார். இன்னொரு நாள் டபிள்ஸ் வந்தும் வருவார். ரொம்ப நல்லவர் சார். சிம்பிள். சாக்லேட், பிஸ்கட், ரிப்பன், சோப்பு, பெளடர்... இப்படி வாங்கி வருவார். ரொம்ப நாள் வரைக்கும் யாருக்கோன்னு நெனைச்சி அவர் பக்கமே பாக்காம வந்தேனா. ஒரு நாள் நான் வீட்டுக்கு போவச்சே பக்கத்தில் வந்து, 'நான் தினமும் உனக்கோசரம் தானே என்னெல்லாமோ வாங்கி வரேன். கவனிக்க மாட்டியான்னாரு. அவ்வளவு அன்பா பேசி நான் யார்கிட்டேயும் கேட்டதில்லை சார். நான்தான் முன்னாடியே சொன்னேனே சார். எங்கப்பா அம்மா ராட்சசங்கன்னு. அடடே, ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் சார். எங்கம்மா திடீர்னு செத்துப்போனாங்க. சாவறதுக்கு முந்தி என் கையை பிடிச்சுக்கினு அழுதாங்க சார். 'பாவி மகளே, கிளியாட்டம் வளத்த உன்னை இந்தப் பாவிகிட்ட விட்டுட்டுப் போறேனே. அவன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கினா, வர்றவ உன்னை சித்ரவதை செய்வாளேன்னு. அப்பாவைப் போய் அவன் இவன்னு பேசறாங்களேன்னு எனக்கு ரொம்ப கஷ்டம் சார். ஆனா அம்மா போயி நிஜமாகவே சித்தி வந்தா. என்னெ கொலை செய்யாம கொலை செஞ்சா சார். அப்பா பாத்தும் பாக்காமே போறார். அப்பத்தான் அம்மா சொன்னதோட உண்மை எனக்குப் புரிஞ்சது சார். அன்னிக்கு பூராவும் அம்மா படத்துக்கிட்டயே அழுதேன் சார். சித்தி பாத்தா. 'அந்த செத்துப்போனவ முன்னாடி என்னாடி அழுகைன்னு’ அம்மா படத்தை தூக்கிப் போட்டு உடைச்சா சார். சித்தின்னு கத்தினேன். என்னாடி கத்தறேன்னு சொல்றதுக்கென்ன சார். தொடையிலே சூடு இழுத்தா சார். தோ பாருங்க சார் (என்று திடீரென்று தொடையைக் காட்டினாள். மூன்றரை அங்குல நீள கருப்பான வடு. அந்த வாழைத்தண்டு போன்ற தொடையில்...! சே, அந்த சித்தி எவ்வளவு கிராகதி. இவள்தான் எவ்வளவு வெள்ளை உள்ளம் கொண்டவள்! நான் ஒரு வெளியாள், அதுவும் ஆண் என்று கூட பார்க்காமல் தொடையை.....!) அத்தோட தொடப்பத்தாலே நல்லா விளாசிட்டா . அப்பத்தான் சார், அவரோட - அதான் சார் ரமேஷ்நாத்... - அன்பு புரிஞ்சுது. உடனே அங்கே ஓடினேன் சார். அவர் பார்வையிலே கருணை தெரிஞ்சுது. இனிமேல் நான் வீட்டுக்குப் போவமாட்டேன். ’நீங்கதான் காப்பாத்தணும்'ன்னேன் சார். ரமேஷ் சிரிச்சார். 'எங்கப்பா ரொம்ப கோவக்காரர். ரெண்டு பேரா போனா மூணா வெட்டிப் போடுவார். நான் ஒரு ரூம் ஏற்பாடு பண்ணறேன். நீ இருக்கலாம். ரெண்டு பேரும் சுகமா இருக்கறதுக்கு இதுதான் வழி"ன்னார் சார். நான் ஒத்துக்குனேன். எவ்வளவு பரந்த உள்ளம் அவருக்கு. கூடவே ஸ்கூலுக்கும் போனேன். எல்லாரும் இன்னாடீன்னாங்க. நான் யாரையும் சட்டை பண்ணலை. அவ அவ யோக்யதை பத்தி எனக்குத் தெரியாதா! சரிதான், போங்கடீன்னேன். ரொம்ப துணிச்சல்காரின்னு எங்க டீச்சர் புகழ்ந்தாங்க சார். எஸ்ஸெல்சி எழுதப் போறேன். வயித்திலே மூணு மாசம். அவர் ரொம்ப அன்பா கவனிச்சார் சார் . ரமேஷ், நீங்க உங்க குழந்தைக்கு அப்பான்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டார் சார். நிறைய மாத்திரை, மருந்தெல்லாம் வாங்கிவந்தார். சாப்பிட்டேன். ரெண்டே நாள்லே குறைப்பிரசவமாயிடிச்சி சார். அவர் அழாத குறையா கஷ்டப்பட்டார். நான்தான் அவரை தேத்தினேன் சார். அவ்வளவு குழந்தை மனசு சார் அவருக்கு. நானிருந்த ரூமுக்கு பக்கத்து ரூமில் ஒரு ஆள் இருந்தான். வயது முப்பது இருக்கும். கட்டை குட்டையாய் இருந்தான். திடீர்னு ஒருநாள் அவன் வந்து, 'எப்படியிருக்கே’ன்னான். நான் பயந்துபோய் ரமேஷ்கிட்டே சொன்னேன். அப்ப நான் திரும்பியும் உண்டாயிருந்தேன். ரமேஷ் ரொம்பவும் கோபப்பட்டார். ஒரு வாரம் வரவேயில்லை. அப்புறம் வந்தார். திடீர்னு அவங்கம்மாவுக்கு மூளை கெட்டுப் போச்சாம். கல்யாணம் பண்ணினாத்தான் சரியாகும்னாங்களாம். அம்மா உயிரைக் காப்பாத்தணும்னு அவங்க அத்தை பொண்ணை அஞ்சு நாள் முன்னாடிதான் கட்டிக்கினாராம். அப்படியே சொன்னார் சார். ரொம்ப வெள்ளை மனசு. பக்கத்து ரூம் ஆள் இப்ப எப்படின்னார். ரொம்ப ஒத்தாசை. தங்கச்சி தங்கச்சின்னுன்னேன். அப்பா ஒரு கவலை வுட்டதுன்னார். உடனே திடீர்னு விம்மினார். என்னாங்கன்னேன், பயந்துபோய். அவர் பொண்டாட்டி காஷ்மீர் போய் மூணு மாசம், காசி போய் ரெண்டு மாசம், அப்படியே நேபாளம் போய் அதுக்கு பக்கத்திலே அண்ணாநகர்லேதான் குழந்தை பெக்கணும்னு பிரார்த்தனையாம் சார். நான் யோசிச்சேன். அவரை போக வாணாம்னு தடுக்கறதுக்கு நான் யாரு? மனசை தைரியமா வச்சிக்கினு போய் வாங்க. அண்ணாச்சி பாத்துக்குவார். ஆனா வந்தவுடனே என்னெ வந்து பாத்துக்கணும்ன்னேன். அதைச் சொன்னதுமே அவருக்கு ரொம்ப சந்தோஷம். என் கையைப் பிடிச்சி குலுக்கினார். கட்டிப்பிடித்து கன்னத்தில் (கோஸ்லா கமிட்டி சிபாரிசால் நான் 'கட்' செய்துள்ளேன்) வந்தவுடனே என் கண்ணைப் பார்க்காம விடமாட்டேன். பைபைன்னார். டாடான்னேன். இப்ப அவர் வந்து மூணு வருஷமாச்சி சார். டாடா சொன்னோமே, பை பைன்னாரேன்னு தெனம் நினைக்கிறேன். அண்ணாச்சிதான் காப்பாத்தினார். அண்ணாச்சின்னா பேரே அண்ணாச்சியாம் சார். அப்பறம் ரெண்டு பசங்க. மூணைக் கலைச்சிட்டேன். பணம் வேணும் வாழறதுக்கு. என்ன சார் பண்றது? இப்பத்தான் சார் அந்த அயோக்கியன் ரமேஷ் பை பைன்னதுக்கு அர்த்தம் புரியுது. விக்கச் சொல்லிட்டான் சார் என்னை விக்க... (அவள் விம்மி அழுதாள். என்னுள் இரக்கம் பெருக்கெடுத்தோடியது.) இந்த உலகமே அயோக்கியமானது சார். எங்கப்பா அம்மா சரியாயிருந்தா நான் இப்படி ஆவேனோ சார்? இப்படி நான் வாழறதின் மூலம் அவர்களை நான் பழி வாங்கறேன் சார் பழி வாங்கறேன். (எனக்கு மெய்சிலிர்த்தது. மெரீனா பீச்சில் சிலம்போடு நிற்கும் கண்ணகிதான் இவள் உருவாய்த் தெரிந்தாள்.) என்ன சார் அண்ணாச்சியா? அந்த ரோட்ரோலரும் - ஆமா சார் அவனும் ஒரு அயோக்கிய தடியன் - என்னை ஏமாத்திட்டான் சார். எம் பசங்களா சார்? நான் இப்படி பொழைச்சாலும் அதுங்களை நல்லபடியா வாழ வைப்பேன். கான்வென்ட்டிலே படிக்க வைக்கிறேன் சார். என்ன லட்சியம்ன்றீங்களா சார்? என்னிக்காவது ஒரு நாள் ரமேஷ்நாத் வருவார். என்னை கட்டாயம் கல்யாணம் செய்துக்கினு எல்லாரையும் போல வாழ வைப்பார். இது சத்தியம் சார். (கை கடிகாரத்தைப் பார்க்கிறேன். மணி எட்டு. அவளைப் பார்க்கிறேன். மெய் சிலிர்க்கிறது. பார்க்கிறேன். சிலிர்க்கிறது.) கணையாழி, 1971       3. ஊடுபாவு   []     மாசியின் பின்பனிக் குளிருக்கு இதமாக ராத்திரி அணைத்த பாதிப் பீடியை வாயில் இடுக்கிப் பற்ற வைத்தான் வரதன். நோஞ்சல் உடம்பு ஒரு முறை குலுங்கி நொறுங்கி நின்றது குளிரில். "இந்த தபா கார்த்தியிலேயே எலும்பு உலுக்கிடிச்சி குளிரு. தையும் போயி தோ மாசி வந்தாச்சி. வுட்ட பாடில்லே. நாயரு பாட்டு யோகந்தா. ஸ்ட்ராங்கா சக்கர சாஸ்தியா சிங்கிள்யா நாயரே.'' டீக்கடை நாயர் கருமமே கண்ணாக வழக்கமான பாதி கிளாஸ் அடித்துத் தந்தான். வரதன் ஒரு வாய் வைத்துவிட்டு கிளாஸை நீட்ட, அரை ஸ்பூன் சர்க்கரையை அதில் லொட லொடத்தான் நாயர். எங்கேயோ வெறித்தபடி மரத்துப் போன நாக்கில் உறிஞ்சினான் சுழற்றி . சின்ன காஞ்சிபுரத்தின் மெயின் ரோட்டின் ஒரு பகுதி திருக்கச்சி நம்பித் தெரு. அதில் மூன்றாம் திருவிழா மண்டபத்திற்கு எதிரில் பச்சையப்பன் கிளைப் பள்ளி. அதற்கு நேர் எதிரே நாயரின் டீக்கடை. அந்த டீக்கடையின் பெஞ்சியில் குந்தியபடி டீயை உறிஞ்சியபடி தானே முணு முணுத்துக் கொண்டான் வரதன். "கோத்து வாங்கற கயுத வராக் காட்டி ... நேத்திக்கே மொறச்சிக்கினான். சாதாவாட்டு போடவராத கம்மினாட்டி; சொட்டிக்காரன் போல போன்னுவான்... பொறய இன்னிக்கு முடிக்கலேன்னா .... ம்ம்...'' ` கண்ணாடி கிளாசில் ஒட்டிக் கொண்டிருந்த துளியையும் கவிழ்த்து உறிஞ்சி விட்டு, கூடுகட்டி ஒட்டியிருந்த வயிற்றின் வேஷ்டிமுனையை அவிழ்த்து பீடித் துண்டுகளைத் தள்ளி, பைசாக்களைப் பிடித்து பத்து பைசாவாக்கி அதையும் நாலு தடவை தலையைச் சொரிந்து எண்ணி நீட்டினான். நாயர் அலட்சியமாக, அடுத்த டீக்குத் தண்ணீர் பிடித்தபடி இடது கையால் வாங்கி பெருங்காய டப்பியில் போட்டான். அங்கு கெளரவப் பிரச்னைக்கே இடமில்லை. தோள் பட்டையை இறுக்கக் கட்டிக் கொண்டு 'எதிர்க்க' பச்சையப்பாஸ்கூலின் நீண்ட வெளித் திண்ணையில், ஏற்கனவே அங்கிருந்த சிலருடன் இணைந்தான் வரதன். பாதி பீடி மீண்டும் புகைந்தது.   இன்னும் சரியாகப் பொழுது விடியவில்லை. பால் டெப்போவுக்கும், ஓட்டலுக்கும் செல்லும் பசு, எருமைகளுடன், கண்களை மட்டும் வெளிக்காட்டி அவைகளின் பால் கேன்களும் பின்னால் நடந்தனர். குளிரில் வெடவெடத்தபடி சில வண்டிகளும் நகர்ந்தன. சில்லறை இருந்தவர்கள் காமாட்சி பவனுக்கும், வரதனைப் போன்றவர்கள் நாயர் டீக்கடைக்கும் குளிரை விரட்ட அடைந்து கொண்டிருந்தார்கள். காலைக் கட்டிக் கொண்டு ஒட்டிய கன்னத்தில் குச்சிகைகளைத் தாங்கி பார்த்தும் பார்க்காமலும் தவமிருந்தான் வரதன். முப்பதிலிருந்து ஐந்து கூடியுமிருக்கலாம். பார்க்க இருபத்தைந்திலேயே மூப்படைத் தவனைப் போல ஒரு தோற்றம். முக்காட்டுத் துணிக்குள்ளே கருப்புடன் வெள்ளை இழைகள் செம்பட்டையாய் முறைக்கும். கண்களைப் பின்னே தள்ளி நிற்கும் முக எலும்புகள். வெளுத்த முகத்தில் மயிரே முளைத்திராத மழப்பு. சின்ன காதுகள், மூக்குதான் அவனை முகமுள்ளவனாக ஆக்கியது. அதன் கீழே அதே சொரசொரப்பு ஊசிகள். அதை விட்டால் முகவாய்க் கட்டையில் சிறு குத்து. பீடி குடித்து குடித்து முன்னே தள்ளி நிற்கும் மார்பெலும்பு. அவனைப் போன்றவர்களில் அவன் ஒருவன். ஏகாம்பரம் முதலியாரிடம் முதல் தறிபுனைந்ததிலிருந்து இன்று எல்லாரையும் பார்த்துவிட்டு சொஸைட்டியில் நெய்யும் போதும் சரி, பஞ்சம் அவனை விட்ட பாடில்லை. ஒரு சிலுப்பை இரண்டு சிலுப்பை 'மார்வாடி’யிடம் வைத்து வாங்குவது முதல், இருக்கும் ஒன்றிரண்டு நகை, பாத்திரம் வைத்து வாங்கினாலும் அதில் கிடைக்கும் தொகை ஆசைப்படும் சில்லரைச் செலவு களுக்கே சரியாகி விடும். கப் டீ , ஓட்டல் டிபன், சினிமா. ஒரு சிகரெட் - அவ்வளவுதான். பழையபடி பாதி பிடிக்கும், சிங்கிள் டீக்கும் 'லோல் பட' வேண்டியதுதான். " இன்னாடா... யிது! மின்னெல்லாம் சோத்த கட்டிக்கினு எங்கடா வேல கெடைக்கும் ... காலணா சம்பாரிப்போமுன்னு திரிவாங்க இப்ப நாம துட்ட குடுத்து தேடணுமா கீது... வூட்ல பசங்க வளரலே எங்க வூட்ல நாங்க நாலு பேரு ஆம்பள பசங்க பொட்டச்சிங்க மூணு . எங்க கெயவன் ராசாவாட்டம் நாலு தறி போட்டு வக்கணையா செஞ்சான் கெயவி தாலியறுத்தா .... எல்லாஞ் செதறிப் போச்சி... டே... டே பேமானி... பாத்தும் பாக்காம போறியாடா... வரல்லே...'' "என்னாய்யா! நீ என்ன வெலக்கி வாங்கிப் பூட்டுது கெட்டுப் போச்சு? நா இன்னா ஒங்கூட்டு வேலக்காரனா...?'' பேமானி என்றதால் வேலைக்காக 'அப்படி வந்த பையன் திமிறினான். "பாத்துக்க மோலியாரே... தோ ஏகாம்பரம் பையனுக்கு வர்ற கோவத்த. சர்த்தாண்டா வூட்டுக்கு வா. இன்னிக்கு அந்த சொர்க்கம் பேட்ட முடிக்கணும். மோட்டுத் தெருவுக்கும் சுக்ல பாளைத்துக்குமா நீயுந்தா அலையறே... எந்த மோலி காத்துக்கினுகீறான்? பயப்படறாங்க. தலையில் துணியப் போட்டுக்கப் போறோமின்னு ... ஆட்சம்பேட்டை லேன்னாடான்னா ஆரணிப் பொடவையைக்கூட ஏமாந்தா அசல் காஞ்சிரம்னுன்னு லைட்டு வெளிச்சத்ல காட்டிடறாங்க. சொஸைட்டிக்காரங்கன்னா ஊராம் பணத்த ஏப்பம் போடலாமான்னு பாக்கறானுங்க. கச்சிங்க பூந்துக்கினு செகரட்டிரியோட கூட தகறாரு... கவர் மெண்டோட தொல்ல... இன்னா மோலியாரே நாஞ்சொல்றது...'' இன்னொரு மூலையில் இடுங்கிக் கொண்டிருந்த கெளரவமாக முதலியார் என்றழைக்கப்பட்ட இன்னொரு நெசவாளர் ஏதோ முணுமுணுத்தார். அவர் பேச்சுக்காக அங்கே யாரும் காத்திருக்கவில்லை. "பாம்..... பாம் .... ப்பபவ்வாம் ..... பாம் .... மெட்றாஸ் .... மெட்றாஸ்...'' வீடு வீடாகக் கதவைத் தட்டிக் கூப்பிடுவது போல எஸ். எல். என். எஸ் - சோ சஞ்சீவியோ போனான். "மணியாவுது... இன்னா வரீயா ...?'' "வரேம்பா... எங்க செஞ்சா இன்னா? சுத்தமா செய்யணும். வேலைக்கேத்த கூலி வாங்கணும். வவுறு கீதே..." சுருதி இறங்கியது. “டே டே... வவுத்தப் பத்தி எனக்கு சொல்றியா ...ந்த பேமானிப் பேச்சித்தான் வாணாங்றது...''. பிராஞ்ச் ஸ்கூல் அருகில் இருந்த முனிசிபல் குழாயில் அங்கிருந்த சாம்பலில் வாய் முழுதும் எச்சிலாக்கித் தேய்த்தான் காவிப்பற்களை. வாய்க்குள் விரலை விட்டு 'லோ' என்று வயிற்றைக்குமறி, கோழை எடுத்தான். கை கால் முகம் கழுவிக் கொண்டு வெடவெடத்துக் கொண்டே வேஷ்டி முனையால் அழுத்தித் துடைத்து, கால்களை அகட்டி அகட்டி நடந்தான், பையன் தொடர.  'ஆமா நேத்திக்கி எங்கடா காணும்...' "அந்த சிங்கார மோலி ... அதாம்பா அந்த எடத்தெரு .... தாங்கி தாங்கி நடப்பானே.... கூப்ட்டான். ஒரு பொண்ணு வந்துக்கினு இருந்திச்சாம்... எல்லாம் பெரிசானதுதான். கூடால வேல செஞ்ச ராமய்யன இசுத்துக்கினு ஓடிடுச்சா மின்னு... அதாங்...'' "நீ மொதுவா தூண்டி வுட்டு பாக்கிறதுதானே..." "ச்சே... இம்மாம் பெரிய காஞ்சிரத்திலே வேற பொண்ணா இல்ல .... அந்த நத்தப் போட்ட கொரங்க புடிக்க...'' "அப்ப வேற புடிச்சிட்ட...'' பையன் பேசவில்லை . வரதனுக்கு இந்த மாதிரி விஷயமெடுத்தாலே எல்லாத் தெம்பும் வந்து விடுமென்பது அவனுக்குத் தெரியும். பேசாமல் தொடர்ந்தான். மூன்றாந்திருவிழா மண்டபத் தெருவை விட்டு சேர்மன் நாயுடு தெருவை அடைந்து வரதனின் சின்ன வீட்டில் புகுந்தார்கள். உயரமில்லாத ஓட்டுக் குடைக் கூரை. மூங்கிலாலானது. நடுநடுவே செத்துப் போன மூங்கில்களுக்கேற்ப வளைந்தும் நிமிர்ந்தும் இருந்தது அது. ஒரு சின்ன சமையலறை அதுவே படுக்கை, சாமான் அறைகளுங்கூட. இந்தப் பக்கம் சின்ன திறந்த வெளி வாசல் ஓட்டு எரவாணத்தில் காலி பரூட்டங் (பருவட்டம்) களும், ஆஸ்களும் சொருகியிருந்தன. சுமாரான நீளமுள்ள தாழ்வாரம் அல்லது கூடத்தில் மேடை கட்டி ஒரு தறியும், பள்ளத்தில் ஒரு தறியுமாக இரண்டு. சாணியால் மெழுகப்பட்ட குண்டுங் குழியுமான அழுந்திய மண் தரையில் அங்கங்கே குச்சிகள் அடிக்கப்பட்டிருந்தன. 'பேக்கடை' (புழக்கடை) என்று ஒன்று இல்லை. தேவையுமில்லை, பக்கத்தில் அலாபாத் ஏரி இருக்கும்போது. நாலு வீடு தள்ளியிருக்கும் தெருக்குழாயில் சண்டை போட்டு தண்ணீர் பிடித்து வந்தாள் வசந்தா, வரதனின் மனைவி. தொழில் கூட்டாளியுங்கூட. "யாருமே பச்ச மொளகா .. ஒங்கப்பனா வச்சாங் கொயா?..ன்னா' வந்துட்டியா ..... எங்கயோ பொறுக்கன வள்ளாம்... போணியில் இடியாப்பங்காரங்கிட்ட ரெண்டு புட்டு வாங்கிக்கிறேன் துன்னுட்டு தறியில் ஒக்காரு... ஒரு தட போயி வரேன்.... பையன கூட்டிக்கினு வந்திருக்கியா? டே... தார்லே அந்த செவந்த மண்ண சுத்துடா... அந்த பரூட்டன்டா... முண்ட போனாளோ கீறாளோ...'' ஒரு அங்குல நீள அகலத்தில் சிலிண்டராய் இரண்டு ஐந்து பைசா புட்டு சர்க்கரை தெளிக்கப் பட்டிருந்தது. அதை இரண்டு வாயில் போட்டுக் கொண்டு கேட்டான்: "எதுன்னா குடிச்சிட்டு வந்தியாடா?” "ஆச்சிபா... எங்கூட்ல இன்னி வரைக்கும் பட்னி இல்ல ...''எவ். பையன் ஏப்பம் விட்டு காட்டினான். இடுப்புத் துணியை உதறி தறி மேடையில் போட்டு கோமணத்தோடு எம்பி உட்கார்ந்து கால்களைத் திருப்பி தறியைப் பார்த்து உட்கார்ந்தான். "இன்னாடா...'' அச்சு விழுதிலிருந்த பாவை இறுக்கினான். "தோ ... பா...'' சிவந்த மண் உடம்பில் சொர்க்கம் பார்டர். 'முந்தி’யில் பொன்மரம். பத்து முழம் நெய்தாயிற்று. இன்னும் ஒரு முழம், வரதனின் கால்கள் சீராக மெறிகட்டைகளில் ஜதிபோடலாயிற்று. மாறி மாறி, கை கோத்தாற்போல அச்சு விழுதிலிருந்து பாவு கோலம் காட்டியது. கைகள் வேகமாக லாவகத்துடன் நடுநாடாவை வாட்டு போட்டு, கர நாடாவை கோத்து வாங்கின. அடிக்கடி போட்டு சுங்கிலும் மணிகள் குலுங்கின. ஒரு பஸ் - விமான ஓட்டிக்குள்ள கூர்மை, திறமை, உடல் இயக்கத்திற்கு இங்கு ஒன்றும் குறைந்துவிடவில்லை . 'தடக் தடக்...' குறுக்கிழைத்த இழைகளை நெசவு பலகையால் தட்டி அவ்வப்போது நெருக்கினான் துணியாக. தடக் தடக் தடக் தடக் தடக் தட். தெருவில் சவுக்கு மிளாறு வண்டிக்காரனிடம் சுருங்கிப்போன கட்டுக்காகவும், பெருகிப் போன 'துட்டு’க்காகவும் போராடி வாங்கிய மிளாறுகளை சாமர்த்தியத்தோடு எரிய வைத்து எதுவோ ஒரு அரிசியை சோறாக்க முனைந்தாள் வசந்தா. இருபத்தைந்து வயதிருக்கலாம். அவளுக்கு சட்டென்று சொல்ல வராது. ரத்தமில்லாத வெளுப்பை அரைத்துப் பூசியிருந்த குளிப்பு மஞ்சள் ஒளித்தது. வீச்சு வீச்சென்று நடை, குரல். ஒல்லியாக இருந்ததால் குள்ளம் தெரியவில்லை. சாயம் போகும் நூல் சேலை. ஏழு வருஷத்துக்கு முன் அவள் அவனைக் கட்டிக் கொண்டபோது அவனுடைய முதலாளி ரூபாய் தள்ளிக் கொடுத்த ஒரே பட்டுப் புடவை அவளிடம் இருந்தது. பிறகு இன்றுவரை நூல்தான். அவ்வப்போது விழும் பட்டுத் துண்டுகளை கூட வந்த விலைக்கு விற்று விடுவாளே தவிர தனக்கென்று ரவிக்கை தைத்ததில்லை. ஐந்து பிரசவத்தில் மூன்று தங்கியதொன்றும் அதிசயமில்லை. சூம்பிய வயிறுகளுடன் இடுப்பின் கீழே ஜட்டியுடன், அந்தச் சூம்பலில் மட்டும் பச்சை நரம்புகளின் கோலம், மண்டை மட்டும் தெரிய, அப்பனை இப்போதே நடையில் கொண்டு திரிவதுதான் உண்மை. சாயங்கால வேளைகளில் பக்கத்திலிருக்கும் மணி கண்டீஸ்வரன் கோயில் தெருப்பிள்ளையாரே கதி. 'சூறக்கா’ வந்தால் ஆரவாரம். கோயில் குருக்கள் விரட்டி வந்தாலும் ஆரவாரம். சில சமயம் தேங்காய், பழத் துண்டுகளோடு செருப்பு, எண்ணெய்க் கிண்ணங்களும் வந்தாலும், "வெள்ளாட்டுக்கார பசங்க... அந்த பாப்பான் இதுங்க வந்தாலே எரியறான்...''என விடுவது - ஒரு தனிக்கதை. ஆறு - அதன் இடுப்பில் இரண்டு - கூட நான்கு .... அப்புறம் ஒன்னு ரெண்டு தக்காம்" போனது. ஆறுவயதுப் பெண்தான் கூடமாட ஒத்தாசை. திடீரென்று தலை கை காலெல்லாம் பொங்கிவிடும். நான்கு வயதுப்பையனுக்கு சதா இரண்டு காதிலும் சீழ் வடியும். 'போன கார்த்தி ஞாயித்துக் கெயமதான் கச்சாமுச்சாங் கோயில்ல மண்ட வெளக்கு போட்டு சுத்தி வந்தது’ ... இரண்டு வயதுப் பையனுக்கு சதா அழுகைதான். அமுல் பேபியா - க்ளாஸ்கோ பேபியா? வெறும் டீத்தண்ணி பேபி. இவ்வளவு வயதாயிற்றே என்று இவளை மட்டும் கைச்சிரங்கு விட்டு வைக்காமல் ஆண்டுக்கு ஒரு முறை பிடுங்கியது. வரதனோ திடீரென 'லொக்கத் தொடங்கிவிடுவான். முடிந்தால் 'பயாஸ்பத்திரிக்கு' இல்லா விட்டால் செட்டித்தெரு முனுசிபாலிட்டி ஆஸ்பத்திரி. பெரிய புட்டியாப் எடுத்துப் போவாள். ‘எல்லாத்துக்கும் சேத்து ரெண்டு நாளக்கி இனிப்போ, கசப்போ, விறு விறுப்போ - வாங்கி வந்து விடுவாள் வசந்தா, காதில், கையில் பூச பொடிகளுடன். "மாருக்கெட்டுல இன்னா பதார்த்தம் கீது. மொச்சக்கொட்ட முள்ளங்கி அரச்சி ஊத்தின காரக்கொயம்புதா ...''மோர் பழக்கமில்லை. அதுவும் இந்த பனிக் காலத்தில்! அதுவும் 'ராத்திரி வெறுங் கொம்பு சோறுதான், மோருகீரு ஊத்திக்கின ஜலுபு புடிச்சிக்கும்.'' வசந்தா போக வரப் பார்த்தாள். வந்த பையன் ஆடினான். "மொதல்லியே கூலி கேக்கத் தெரியல்லே?... இதுக்கு புத்தி கீதா? வாங்கற பிசாத்துத் துட்ட தூங்கு மூஞ்சிகளுக்கு குடுத்துடு வவுறு ரொம்பிடும்.'' கொஞ்சம் நிமிர்ந்த பையன் பழைய சோற்றின் துணையால் மீண்டும் ஒடிந்து மந்தமாக நாடாவை கோத்து வாங்கினான். தினம் கேட்டு மரத்தாயிற்று. இன்னும் மட்டமாகக் கூட. சூரியன் உச்சிக்கு வந்து கொண்டிருந்தான். வாயிலிருந்த வெற்றிலை எச்சில் தெறிக்குமென்ற எண்ணத்தால் கண்களால் மட்டும் முறைத்தான். அது இருந்தால் தானே? இன்னும் இடுங்கியது தெரிந்தது. மூக்குப்பொடி போட்டதனால் மீசையில் லேசாக கறுப்பு நீர் துளிர்த்து நின்றது. பையன் நேற்று வராத ஆத்திரத்தையும் வைத்து பட்டென்று தொடையில் ஒன்று வைத்தான். கூடவே வாயை மேலே தூக்கி குழறினான்: "இன்னிக்கு இந்தப் பொற முடிஞ்சாவனுனடான்னா.... எகஜாமா காட்டிக்கினு கீறே... கூலிக்கு மாரடிக்கிறவன்னு காட்றியா... எழ தயங்குது... எங்கனா போவறது...'' ஓய்ய்.ய்ய்ங்... முனிசிபல் சங்கு உரத்துத் தேய்த்தது. மணி பனிரெண்டு. வேலை நடந்த விதம் பிடிபடவில்லை. இன்னும் பிட்னி ஏத்தி ஒரு மொழம் கம்பி போட்டு சேலய அறுக்கணும். பட மரத்திலேர்ந்து பிரிச்சி தொத்து எழ பாத்து கோல் போட்டு மடிச்சில்ல... சொட்டிக்கி... ஆடிசன் பேட்டையில்தான் வரதனின் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சொஸைட்டியும் நன்றாகப் பெயர் எடுத்து விட்டதால் புது மெம்பர் சேரவே மிகவும் கெடுபிடி . பக்கத்தில் அகன்ற காந்தி ரோட்டின் இருமருங்கிலும் ரோட்டின் ஒளிவிளக்கு களாலும், "வாங்கம்மா நம்ம கடைக்கி வந்துதான் பாருங்க .... அசல் காஞ்சிபுரம் சேரீஸ்! சார்... வாங்க.'' கையில் விளம்பர நோட்டீஸ்களுடன் கிராக்கி பிடிப்பவர்களாலும் அழைக்கும் ஜவுளிக் கடைகளிடையே உள்ளடங்கி இருந்தாலும், பொறுக்கான வெளியூர் ஆசாமிகளாலும், தெரிந்தவர்களாலும் சீரான வியாபாரம் அங்கு. பல வெளியூர் கைத்தறி விழா அரங்குகளில் பங்கு கொண்டு பரிசுகள் பெற்றது, அவ்வளவு ஏன்? பல வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் இந்தியப் பிரதமருக்கும் கூட இங்கிருந்து சிறந்த பட்டுப் புடவைகள் சென்றன என்று வரதனுக்கு ரொம்ப பெருமை. இப்போது அவன் நெய்யும் ரகத்தில், அந்தப் பொறையின் கடைசி புடவையும் ஒரு கவர்னரின் ஆர்டரின் பேரில் தான். அவனிடம் எந்தப் பெரிய வேலையையும் நம்பிக் கொடுக்கலாம் என்று பெயர் கிடைத்ததே திருப்தி. ஆனால், ‘இந்தப் பாழாப்போன கட்சிக்காரங்களும் தொழிலும் தெரியாதவங்களும் வந்து பூந்துக்கினு எல்லாத்திலேயும் ஒரேயடியா சுகுர் பண்றது’தான் அவனை அலுக்க வைத்தது. கூட இருமல் வேறு. தட்... தட்... தடக் தட்... "தே வாயேன். சோறு அவுலா ஆறிப்போவுது. எப்ப சங்கு புடிச்சான்...'' அவன் எச்சிலைத் துப்பச் சென்றான் கொழத்தபடியே. "உம். கிண்ணிய கயுவிவையேந்... டே, தூங்குமூஞ்சி. துன்னப்போடா. சோத்துக்கு கடிச்சிக்க வெங்காயமா மொளகாவா? ஏம்மே பாவம். மொச்ச கொட்ட நாலு இவுனுக்குங்காட்டேன்" ஒரு நாளைக்கும் சேர்த்து காரக்குழம்புச் சோற்றை உறிஞ்சி ஒரு பிடி பிடித்தான். எரிச்சல் குறைக்க கொஞ்சம் நேத்து நீராகாரச் சோறு காய்ந்து கருப்பேறியிருந்த உப்பு மாங்காய் ஊறுகாயுடன் பொடித்த பற்களில் கூசியது. "ஏம்மே... பங்கடைலேர்ந்து அஞ்சி பைசா எல்ம்ச்சிங்கா எண்ண ஊறுக்கா வாங்கியார்ந்தா...'' அவள் பேசாமல் இன்னும் ஒரு கரண்டி மொச்சை கொட்டையை வழித்து இறுத்துப் போட்டாள். எல்லாம் நாக்கை உறிஞ்சியவாறு புறங்கையும் விடாமல் சூம்பல் வயிறு இன்னும் பலூன் போல தெரிய சாப்பிட்டான். பாதி பீடி மீண்டும் புகைந்தது, இடுக்கியபடி. "தோ... வரேம்பா.'' பையன் பதிலைப் பார்க்காமல் அலாபாத் ஏரிக்கு ஓடினான். நிஜாரைப் பிடித்தபடி. சட்டி பானைகளை ஏறக்கட்டி விட்டு பள்ளத்தறியில் நேற்றுதான் புனைந்திருந்த பொறைக்காக உட்கார்ந்தான். ஆறு வயதும் கூடவே வாட்டுபோட அமர்ந்தது. மனைவியின் அசைவுகைளப் பார்த்தபடி இருந்தான் அவன். "சரியா வாச்சாம்மே நமக்குன்னு. துன்னா துணிய அவுத்துக்கின்னு ஏரிக்கரைக்கி ஓடறான்" நினைத்துக் கொண்டு சிரித்தான் வரதன். "தோ. இவ கீறாளே அப்படியே... ஒவ்வார்சு.'' ` "முக்காலே மூணு வீசம் முடிஞ்சி போச்சி... பிட்னி போட்டு கம்பி ஏத்திட்டா அறுத்துக்கினு போவலாம். அப்பத்தான் துட்டு, கல்லோ மண்ணோ வாங்கியாறது.'' "என்னாத்த கூலி வாங்கப்போற. சொசட்டில பட்ட கடனுக்காகவே காவாசி புடிக்கப் போறாங்க. வாங்கியாந்தா அரிசி வாங்கிக்கினு சக்கர வள்ளிக்கெயங்கும் வாங்கியா... பசங்க பிக்குதுங்க. பாத்தியா மறந்தே பூட்டேன். இன்னிக்கு ராவிக்கி காமாட்சி கோயில்ல வெள்ளித் தேரு. பசங்கள கூப்டுக்கினு நான் பெரீ காஞ்சிரம் போயி பாத்துட்டு வந்துடறேன். இன்னா கேக்குதா.'' "இப்பன்னா வெள்ளித்தேரு? வர மாசமில்லே.'' "ஆங். இப்ப மாசில அம்மனுக்கு வரமாசம் ஏகாம்பரநாதர் வெள்ளித்தெரு. அல்லாத்தையும் மறந்துட்டியா? காலைல அறுவத்தி மூவரு. ராவிக்கி வெள்ளித் தெரு.'' "ஊம். பாத்து ரெண்டு மூணு வருசமாயிடிச்சில்ல.... கியாபகமில்ல. இந்த தபா பார்க்கலாம். நம்ப பெருமாள் கோயில்ல உச்சவம்" "அது இன்னா கிட்டவா கீது? மாசி பங்குனி சித்திர வைகாசி…யில... உச்சவம் மூணா நாளு ஜேஜேன்னு கருடசேவ. ஏயா நாளு ஆட்சம்பேட்ல ஆஞ்சநேயர் கோயிலண்ட கீற பெரிய தேரு.'' தேரோடும் நினைவுகள் லயிக்கவைக்க கொஞ்ச நேரம் அங்கு மெளனம் இருந்தது. வசந்தா கலைத்து அவனை இழுத்தாள். "இன்னா எப்ப சொட்டிக்கி போவப் போறே.'' “தோ பையன் வந்துட்டான்னா ஜல்தியா முடிஞ்சி பூடும்...ன்னா .... பிட்னி ஏத்தி கம்பிபோட்டு அறுத்து தொத்து எழ எடுத்துட்டா ... போது போறதுங்காட்டியும் போயி வந்துட் மாட்டனா. ஆமா வரப்ப மார்வாடி கிட்ட கீற ஓங்காது கம்மூல மூட்டாந்துடுவா...?” "அதுக்குதாங் கேட்டன். மொதல்ல நீ டெவுசாவ மூட்டுக்கினு வா. கம்முல மொல்லமா பாத்துக்கலாம். அவுசரம் முழுவிப் போவல்ல. தேருக்கு போட்டுக்கினு போவ அல்லாம் போனவாட்டி வாங்ன பித்ளகீது....ந்த பசங்க பிச்சிப் புடுங்குதுங்க .... பொறி ஓச்சகடலனு.'' "செர்த்தான். அப்படின்னா நா பஜார்ல நிக்கறேன். நீ போவச்சே துட்டு வாங்கிக்கினு போ. எனக்கு ராவிக்கு டீயும் பொறயும் போதும். எங்கோன்னாலும் துன்னுக்கலாம். ரெட்ட மண்டபத்தாண்டே வெள்ளித் தேர பாத்துக்கறேன்." "வூட்ட பூட்டிக்கினு நா போறேன். எதனா ஓட்டல்ல கீட்டல்ல ரெண்டு இட்லி முழுங்கினா போச்சி. தேரு பாத்துட்டு நீ முன்னாடி வந்தூட்டினா ஸ்கோலு திண்ணையிலே நீட்டிக்க ... இன்னா ?'' தலையை ஆட்டினான் வரதன். ஏரிக்குப் போன பையன் வந்து தறி மேடைக்கு எம்பினான். 'பொறைய கீறிட்டா பளுவுடும்" என்ற எண்ணத்தில் தேரெல்லாம் மறைய தறி தடக் தடக்கலாயிற்று. புடவையை அறுத்து தொத்து இழை பார்த்து, மடித்து, கைப்பையில் எடுத்துக் கொண்டு சொஸைட்டிக்குக் கிளம்பினான் வரதன். பையன் தலையைச் சொறிந்தான். "அட! ஒந்துட்ட தூக்கிக்கினா ஓடிடுவேன்?.... இப்பத்தானே முடிஞ்சிது... அதுங்காட்டியும்... அல்லாம் நாளைக்கி வா...'' வசந்தா எரிச்சலோடு பார்த்தாள். 'கிளம்பறச்சே பூனயாட்டம்'. பையன் கிழக்கே நடை போட, வரதன் சேலையோடு மேற்காக ஆடிசன் பேட்டைக்கு கிளம்பினான். "இன்னா வரீயா ...'' “அல்லாம் கியாபகம் கீது. மொச மொசன்னு நிக்காம ஜல்தியா போ...'' இருந்த நூல் புடவைகளில் சற்று நிறமாயிருந்ததை சுற்றிக் கொண்டு, செம்பட்டை மயிரை வாரி முடிந்து, பசங்களுக்கு எதையோ மாட்டி, இரண்டு வயது இடுப்பிலும், நான்கு வயது கையோடும் வர, ஆறு வயது பின் தொடர்ந்தது. இந்த அலங்காரப் புறப்பாட்டுக்கே மணி ஆறாகி விட்டது. வெள்ளித்தேர் ஒன்பதுக்கானாலும், அது மட்டுமே வா பார்க்கப் போவார்கள்? வழியில் ஓட்டல்களைப் பார்த்து நாக்கு பரபரத்தது. மூன்றும் வேறு சிணுங்கின. டீத் தண்ணியாவது... ஆட்சம்பேட்ட பஜார்கிட்ட நிக்க சொல்லிச்சே. காணல. 'இது எப்பத்தான் அயுவு ... தேவாங்காட்டம்...' "இந்தா ... அரரூபா போதுமா...'' "எப்படி போறும். தே, நீ ஆனாலும் மோசம். அல்லாத்துக்கும் டீத்தண்ணிக்காவுமா...'' வசந்தா எரிந்து விழுந்தாள். வரதன் பேசாமல் ஒரு ரூபாயாகக் கொடுத்தான். அவளும் வாங்கிக் கொண்டு 'அந்த சச்சரவால்' போரேன்னு கூட சொல்லாமல் வேகமாக நடந்தாள். வரதனுக்கு வயிற்றில் சுரீர் சுரீர்ரென்றது. 'மத்தியானம் ஜாஸ்தியா கார கொழும்பு சோத்த துன்னது.'' ஒன்றுமே செய்ய முடியாது போல தோன்றியது. "என்னடாது. ஆம்பள சொணக்கமா கீறானே... இன்னா ஏதுன்னு கேப்பாளாங்காட்டியும்னு பாத்தா... தெவுடியா முண்டயாட்டம் ஓட்றாளே...' வந்த எரிச்சலில், வீடு வேறு பூட்டியிருக்கும் நினைப்பில் மெதுவாக பச்சையப்பன் கிளைப்பள்ளியின் நீண்ட திண்ணையில் மூலையில் சுருண்டு கொண்டான் வரதன். இருக்கிற உடம்புக்கு டீத்தண்ணி ஊத்தினாதான் இஞ்சின் ஓடும் போல இருந்தது. தேராவது மண்ணாங்கட்டியாவது... பொழச்சிக் கெடந்தா அல்லாம் அடுத்த தபா அப்புறம் பாத்துக்கலாம் .... பாழப் போன குளிரு வேற... ஜொரமா ....'' ஏதேதோ முனகிக்கொண்டே, டீக்கும் எழுந்து போக முடியாமல், கட்டியிருந்த வேஷ்டியையே அவிழ்த்து போர்த்திக் கொண்டான் வரதன். குளிர் விடவில்லை. "சனியங்க..... பேஜார் புடிச்சதுங்க.... எந்தாலிய அறுக்குதுங்க .... ந்த மனுசனுக்கின்னா ஜாலியா எங்க தேர பாக்கறானோ. பாடைங்க..... பாவி மனுசன்...'' சிடுசிடுத்துக்கொண்டே இருந்த மூன்றினாலும் வந்த கோபத்தில் ஆறு வயதை ஒரு பொத்து பொத்தினாள் வசந்தா. அது அலறிக்கொண்டே தூர ஓடியது. முன் ஜாக்கிரதையாக நாலு வயது அதைப் பின்தொடர், கையில் இருந்த இரண்டு வயதின் தலையில் நறுக்கென குட்டினாள் வசந்தா . தூரத்தில் வெள்ளித்தேர் வந்து கொண்டிருந்தது. தீபம், 1972                                                       4. பாம்பு     []   அந்தப் பாம்பு மெதுவாக ஊர்ந்தது. மணி ஆறாகியிருக்கும் மாலையிலேயே கிராமம் அடங்கி விட்டிருந்தது. பாம்பு ஒவ்வொரு வீட்டு வாசற்படியையும் நிமிராமல் பார்த்து ஊர்ந்து வந்தது. அக்கம் பக்கத்தில் ஆளரவே கேட்கவில்லை. ஊர்க் கோவிலுக்குப் போயிருக்க வேண்டும். ஆனால், முப்பதுக்குள்ளானவர்கள் வேறு எங்கும் போயிருக்கவே செய்வார்கள். செய்திகளுக்காகவும், பசங்கள் இன்னும் எங்கயேனும் மறைந்து பிடிக்கிற விளையாட்டு விளையாடவும் போயிருக்க வேண்டும். நிசப்தம். இளங்கோ எங்கேயும் போகாமல் திறந்த உள்வாசலில் பெஞ்சின் மேல் மல்லாந்திருந்தான். குளிர்கால வானம் சில்லென்ற நட்சத்திரங்களைக் காட்டியது. நீளமான பாம்பு ஊர்ந்து இவன் வீட்டின் படியின் மேல் தலைதூக்கிப் பார்த்தது. கொஞ்ச நேரம் சென்றது. சிறு தவளைகள் எங்கேயும் வியாபித்தனவாய்க் கத்தின. திறந்த கதவினால் சில உள்ளே வந்து குதித்திருந்தன. பாம்பு இன்னும் தலையை தூக்கிப் பார்த்தது. படம் விரிந்து சுருங்கியது. நல்ல பாம்பு. மல்லாந்திருந்தவன் கண்களில் வாசலில் ஒரு மின்தெறிப்பு படர்ந்து சுருங்கியது. கண்களில் விரிந்த வியாபகத்தின் நடுவில் மௌனத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தி அமைதி இழக்கச் செய்தது. இளங்கோ இரு கைகளையும் இணைத்து, தலையை தூக்கச் செய்து நிமிர்ந்து பார்த்தான். வாசலின் மரப்படியின் சிறிது தூரம் விஸ்தரித்த இருட்டு ஒன்றையும் காணாமல் செய்தது. இளங்கோ இருளைப் பழகி வந்தான். படியின் இருளைத் தாண்டி பாம்பு வேகமாகவே உன் நுழைந்தது. உள் நுழைவதற்கு முன் ஒரு கதவு. ஒரு மரக்குறுக்கு தடை. தவளையெனத் தோற்றமெடுக்குமாறு அதில் தலைவைத்து நிலைத்தது சிறிது. பலகையின்மேல் படுத்திருந்தவனின் கண்கள் வானத்தை ஊடுருவி உடலின் புறவற்றைச் செயலிழக்கச் செய்திருந்தன. அந்தப் பனியின் குளுமையுனூடே அவன் அந்த இருப்பிடத்தை இழந்திருந்தான். அடுத்த வினாடியிலிருந்தும் கூட எந்த வேலையையும் செய்ய உடன்பாடு மறுத்து இந்த மோனத்தில் சூழவேத் தீர்மானித்திருப்பவனாய் மேலே சென்றிருந்தான். இன்பியல்களின் ஆழலின் ஆதிக்கத்தின் பல்கிட்டிப்பை குளிர்ந்து வெடக்கும் நிலையைக் கிட்டினான். பிணத்தின் உடலென, மூடல் அற்ற வெளியில் நிர்வாணித்து மேலானவனென. பாம்பு முற்றம் உள்ளே வந்திருந்தது. திறந்த முற்றத்தின் ஓரங்களில் நெளிந்து வந்தது. அந்தப் பிணத்தின்மேல் பின் அருகில் இறங்கி தலையருகில் கழுத்தின் மேல். ஏதோ ஒரு நெளியும் இது எங்கே இங்கு ... என் பின்னோடு வந்தது .... இவன் அந்தரத்தில் மிதந்திருந்தபோது நான்கடி நீளத்துக்கும் மேல் எது எங்கிருந்து என அறியா குறுக்கில். சூழலின் மெளனத்தை இழந்து அதிர்ந்து அந்தப் பிணத்துக்கு உயிருள்ளதாய்க் காட்டிக் கொள்ள இறங்கினான். ஒரு பாம்பு, நல்ல பாம்பு என்மேல் ஊர்கிறது. இதோ கழுத்தருகில் அது வந்ததை அணுஅணுவாய் உணர்ந்தவனாய் விழிப்புக் காட்டாமல் அடங்கி காட்டுவதானான். அது கீழிறங்கியது, நடுவில் படமெடுத்து நின்றது. அதன் கண்கள். அதன் படம். ஏன் இவ்வளவு உயரம் தூக்கி நிற்கிறது. இப்போது நாக்குகள் இல்லை, பிளவுபட்ட ஒரு கரு நாக்கு துடிப்பு கரு நாக்கு. இது என்ன பாம்பு கருநாகமோ கோதுமை நாகமா பார்ப்பார நாகமா கண்களைப் பரக்க விழித்துப் பார்க்கிறான். என்ன பாம்பென அவனால் அறிய முடியாமல் அது ஒரு பாம்பு - நல்ல பாம்பு - என்றே சலனிந்திருத்தது. அதன் உடல் முழுவதையும் பார்த்தான். ஒரு சீரான ஒளிக்கோட்டில் அடங்கி எழுந்து யௌவனமாய்த் தோற்றமும் காட்டியது. கண்களின் கோடியில் வால் நுனி தடிப்பாய் முன்பு அந்த இருளன் சொன்னதை நினைக்கச் செய்தது. வாலு மொட்டையார்ந்தா முன்னாடியே அது ஆராரையோ கடிச்சிருக்குதுங்க சாமி, கூரார்ந்தா கடிக்கலேன்னு தெரிஞ்சுக்கலாம். இதன் வால். வால் தடித்து குறைந்து மொட்டையாகத்தான் காண்பித்திருந்தது. யாரையோ கடித்திருந்தது. சூம்பல் வயிற்றை சுமந்து எலும்புக் கால்களில் இடறிய ஒரு மாடு, மனிதராகவும் கூடும். பயந்தால் மனிதன் செத்திருப்பான், மாடு விஷத்தாலும், இது கடித்திருக்கும் பாம்பு. பாம்பு பக்கத்தில் தரையில் யார் யார் படுத்திருக்கிறார்கள் மாமா, அப்புறம் அண்ணன்.... அவர்களை அது... பாம்பு கீழே இறங்கியது. பாம்பு பாம்பு அவர்கள் பக்கம் சரிந்து எழுப்பி, மாமா பாம்பு கணேசா பாம்பு எனக் கத்துவதில், மாமா திடுக்கிட்டெழுந்து எதோவெதோ என மிரண்டு கைத்தடியை தலைமாட்டிலிருந்து எடுத்தார். இவன் மிகவும் அரண்டவனாய் அதோ மாமா பாம்பு அந்த ஓரம்.... என, - அது சரம் சரமாய் நெளிந்து நான்கு பக்கமும் துளை தேடியது. அதோ மாமா பாம்பு சீக்கிரம் சாக்கடை சந்தில் போய் விடும் அதோ அதோ. வானம் மிகவும் தாழ்ந்து வெளிறிக் காட்டியது. எதோடா காட்டு காட்டு. நகரு நகரு. தூக்கக் கலக்கத்தில் அவர்கள் கண்ணைக் கசக்கி மீண்டும் பாம்பைத் துழாவி தரையில் அடித்து வானங்களைக் குடைந்தனர். வானம் நீலத்தில் நட்சத்திரங்களை பிரசவித்தது. பெரிய பாம்பு மாமா. நல்ல பாம்பு என் கழுத்து மேலே ஏறி உங்க பக்கம் இறங்கி அதோ மூலையிலே நெளியுதே மாமா அதோ. இவன் காட்டிய மூலையிலே அவர்கள் காணாது பயத்துடன் எரிச்சலில் இவனைத் தட்டினர். பாம்பு காணாமல் போனது. கண்களின் விரிவில் அந்த முற்றத்தில் படமெடுத்த நல்ல பாம்பு எப்படியோ மறைந்திருந்தது. சாக்கடைத் துளை வழியாக போய்விட்டிருக்குமோ. அடைத்த கல்லை எடுத்துப் பார்த்து கணேசன் சொன்னான் மாமா இவன் கனவில் அலறியிருக்கிறான் பாம்புமில்லே, கீம்புமில்லே! மாமாவுக்கும் அது சரியெனப் பட்டிருக்கும் போலும். இவன் முதுகில் மீண்டும் தட்டி, ஏன்டா இளங்கோ கனவு கண்டியா என்றார். கனவு கனவு கனவு மணி இப்ப ராத்திரி 12க்கும் மேல் ஆகியிருக்கும். மாலை இல்லை. மாலை நேரத்தில் வீடு வீடாகப் பார்த்து வந்த பாம்பு. மல்லாந்து படுத்திருந்தும் அது பார்த்து வந்தது. இவன் கண்கள் காணாமல் அதன் மெல்லிய மெளனமான செய்கைகளை அறிந்து இல்லை - பார்த்த - கண்கள். எழுந்து அவர்களை எழுப்பித் தேடுமளவும் அதோ அதோவெனக் காட்டியிருந்த அந்தக் கண்கள் இப்போது நான் விழித்தேனா. பிளவு பட்ட நாக்கு கருநாகம் கோதுமை நாகம் பாப்பார நாகம்? வால் தடிப்பு அடங்கி எழுந்த உடல் - வயிறு. தான் பாம்பு பாம்பு வென கத்தியது பயத்தால் இல்லை என இவன் உணர்ந்தபோது பின் எதற்கு என வினாவிக் கொண்டான். தனக்காக இல்லை இவர்களுக்காக எனவும் தோன்றியது மொட்டை வால். தடிப்பு. மாமா காலையில் நாம் வரப்பு காவா ஓரமா போனபோது நிறைய தண்ணி பாம்பெல்லாம் பாத்தானில்லே. அதுதான், கனவு கண்டு ஒளறியிருக்கான்; கணேசன் தூக்கக் கண்களின் குரலில் கரடாய்ச் சொன்னான். காலையில் பார்த்த வரப்போரக் கா(ல்)வாயில்தான் எத்தனை பாம்புகளென நினைப்பு வந்தது. கைதட்டி கைதட்டி அவற்றை மேலும் வேகமாய் அடர்ந்த நீர்ச்செடிக் குத்துக்களில் புதையச் செய்தான். எல்லாம் இரண்டு முழ நீளத்திற்குள்ளான நீர்பாம்புகள். அவை கடிக்காது. தீண்டும் . தீண்டினாலும் சுண்ணாம்பு தடவினால் போதும். அவற்றில் இந்தப் பாம்பு எங்கிருந்தது நல்ல பாம்பு , இவன் நினைவுற்றபோதும் இதை எங்கும் காணவில்லை முன்னால் எனவே உறுதி செய்தான். பேசாமல் நின்றவனை, 'சரிடா தூங்கு பயப்படாம’ என இருவரும் படுத்தனர். இவனும் இரவின் விடியாச் சூழலின் நிர்ப்பந்திப்பால் சாய்ந்தான். அதன் வால் ஏன் மொட்டையாய் இருந்திருக்க வேண்டும். அடுத்தமுறை வரும்போது கூரான வாலோடு வா. ஓணான் வாலின் மெலிவின் கடைசித்தூளியும் குறைவுபடாமல் வா . பிணமாய்க் கிடக்கும் உடல் மேல் ஏறு. கழுத்தின் மீது. பக்கத்தில் நடுவில் படம் தூக்கி, கத்த மாட்டேன். தூண்டாதபடி நீயிருந்தால். இந்த ஊரின் ஒவ்வொரு படியையும் நீ பார்த்து வருவதைச் சொல். வானத்தின் மீது இருப்பிடத்தை இழந்தவனென அடுத்த வினாடியிலிருந்தும்கூட இவன் எந்த வேலையையும் செய்ய உடன்பாடு மறுத்து இந்த மோனத்தில் சூழவே தீர்மானித்திருப்பவனாய் மிதந்து சுயமானான் விஸ்தரித்து பல்கிட்டித்து. இன்று, 1972       5. பிய்க்கப்படாத சிறகுகள்   []   அந்த வண்ணத்துப்பூச்சி சிறகடித்துக் கொண்டிருந்தது. அது ஏன் 20 அடி உயரத்தில் பறக்க வேண்டும் அல்லது பறக்காமல் பூக்களிலேயே இருந்திருக்கக் கூடாது.... எனக்குத் தெரியாது. அது ஒரு கருப்பாக, பழுப்பாக இல்லாமல் மயிலிறகின் எல்லாமாக என் கிட்டத்தில் வந்தபோது பார்த்தேன். கீழே தேனை லஞ்சமாக்கிப் பூக்கும் பூஞ்செடிகள் இல்லாமல் முள் செடிகளும் அவற்றின் மஞ்சள் நிறப் பூக்களும் எந்தக் கவலையுமில்லாமல் இருந்தன. அந்தப் பூக்களுக்குள்ளும் வண்டுகள் தடுமாற்றத்தோடு கருப்புப் பொட்டுக்களாய் அசைந்திருந்தன. வண்ணத்துப் பூச்சி மெதுவாகப் பறந்ததோ இல்லை அதன் வேகமே அவ்வளவுதான் போலும். கழிவு நீர் சாக்கடையோடும் கரைகளில் எந்த தேன் பூ சிலிர்க்கும் - எனக்குத்தெரியவில்லை. அதற்கும் தான் போலும் சாக்கடையின் மேல் பாலம் என் வீட்டுக்கு தெருவுக்கு இட்டுச் செல்லும் ரோடுமில்லாத சந்துமில்லாத ஒரு பேரில்லா வழி. மழை பெய்து நீர்பெருகி விட்டால் அந்த சாக்கடை சுழித்துக்கொண்டு ஓடும். செடி செத்தை மட்டை பன்றிக் குட்டிகளை அடித்துச் செல்லும். 'வெள்ளம்' சிறிது குறைந்த பிறகு அதில் குறுக்கே ஓடும் சின்ன - ஏன் - துளித்துளி எறாக்களை தென்னங்குச்சிகளால் பின்னப்பட்ட, தூக்கணாங் குருவிக்கூடு போன்ற கூடையை எதிர் வைத்து சிக்குவதை வெளிக்கூடையில் சாய்த்துத் தட்டுவார்கள். ஆனால், இப்போது சாதாரணமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. கருப்பாக படைபடையாக நுரையாக அழுக்கு ஏடாய்க் கட்டி மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட ஓடைக்கரையில் என்ன பூ பூக்கும் என்று அந்த வண்ணத்திப்பூச்சி திரிகிறது. ஒரு அரை வட்டம் வரைந்து கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கீழே சிறகுகளைத் தொய்யப் போட்டு இறங்கி பறந்தது. பிளவுபட்ட தோகையை ஆட்டிக்கொண்டு ஒரு கருங்குருவி அந்த ஓடைக்கரை சிறு பூச்சிகளை வண்டுகளைப் பிடித்துப் பறந்து சென்று மட்டையில் தட்டி விழுங்கிவிட்டு திரும்பியும் வந்து திரும்பியும் போய் திரும்பியும் வந்து... வாலை ஆட்டிக் கொண்டு தேடிக்கொண்டிருந்தது. அந்த வண்ணத்திப்பூச்சி சற்று தென்னை மரப்பக்கமாய்ப் பறந்தது. பார்த்துக் கொண்டிருந்தேன். அதைக் கையில் பிடிக்க முடியுமா என்றில்லாமல் அது இறங்கி வர அதன் இறகை கிட்ட பார்க்க வேண்டும். கிழே இறங்குமா பார்த்துக் கொண்டிருந்தேன். கீழ்ப்பாயும் குருவி. மின்னலின் ஒரு துளி நேரம். மீள அந்தக் கருங்குருவி தென்னை மரத்தின் ஓலையில் அந்த வண்ணத்திப் பூச்சி...? குருவியின் கருமை அலகுகளின் இடையில் எது? அந்த நேரம் வரை கருங்குருவி ஒரு வண்ணத்துப்பூச்சியை அது பறக்கும்போதே அடித்துப் போகக்கூடும் என்பது எனக்குத் தெரியாத சங்கதியாயிருக்க வேண்டும். அதிர்வா பதைப்பா எது மிகுந்தது என்னுள். உள்ளம் அதிர எதையோ இழந்த வேகத்தில் ஓடையில் ஒற்றையடித் தடத்தில் இறங்கி தென்னை மரத்துக்காய் ஓடினேன். ஓடி நின்று அண்ணாந்து பார்த்தேன். ஒரு புழுவாய் வண்ணத்து பூச்சி நெளிந்து கொண்டிருந்தது. கையை வீசினேன் - ச்சூ... சூ... குருவி என்னைப் பார்க்கவில்லையா எதையோ சிந்திப்பது போல அப்படியே இருந்தது. அருகில் குனிந்து கையில் கிடைத்த ஓட்டாஞ் சல்லியை வீசினேன். பக்கத்து ஓலையில் பட்டது. கொஞ்சம் திரும்பி திடுக்கிட்டிருக்க வேண்டும் குருவி. அந்தச் சிறு இடைவெளியில் நெளிந்து வெளி வந்து விட்ட வண்ணத்துப் பூச்சி, விபத்துக்குள்ளான சிறு விமானத்தைப் போல காற்றில் சுழன்றபடி பாதி உயரம் விழுந்தது. காற்றின் ஸ்பரிசம் அதை உயிர்ப்பித்திருக்கும் போலும். விழுந்த பாதி உயரத்திலேயே சாய்வாக மெல்ல சிறகடிக்கவும் செய்ய, கீழே விழுந்தால் தாங்கும் ஆவலோடு ஓடினேன். இதன் பரப்பில் லயித்த ஒரு நொடியின் முடிவுக்குள் போர் விமானப் பாய்ச்சலுடன் அரை வட்டத்தில் திரும்பவும் அந்தக் கருங்குருவி சாடி மில அதை இடுக்கிப் போனது. திகைத்து நின்ற அடுத்த வினாடிக்குப்பின் மீண்டும் ஒரு கல்லை எடுத்து வீச ஓங்கிய நொடியில், ஒரு பட்டுப் போன்ற இறக்கை காற்றில் சுழன்று சுழன்று... கீழே விழும் முன் கல்லை கீழே போட்டு தாவிப் பிடித்தேன். மயில் இறகின் கண் போன்ற சிங்காரிப்போடு கூடிய அந்த வண்ணத்திப்பூச்சியின் ஒரு சிறகு. அதே நோடியில் எதையோ புரிந்து கொண்ட அவசரத்தில் அவசரமாய் அந்தக் கருங்குருவி மற்ற சிறகுகளையும் பிய்த்துப் போட்டது. அழகான நான்கு சிறகுகளும் என் உள்ளங்கைகளில். அழகாய் இருந்தன. அந்தப் பூச்சி அது ஏன் 20 அடி உயரத்தில் சிறகடிக்க வேண்டும் அல்லது பறக்காமல் பூக்களிலேயே இருந்திருக்கக்கூடாது... நினைவுகள் சிதற அந்த நான்கு இறகுகளை சட்டைப் பையில் வைத்து கையால் மூடிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தேன். அந்தக் கருங்குருவி தின்ற திருப்தியில் கூரான கரு அலகை மட்டையில் மீண்டும் திருப்பித் திருப்பித் தீட்டிக் கொண்டிருந்தது, சட்டைப்பையைத் திறந்து ஒரு முறை பார்த்து பறக்காத இறகுகளை பறக்காதிருக்க மூடிக்கொண்டு நடந்தேன். சந்தோஷம் தோன்றியதை நினைத்து வெட்கமாகவும் இருந்தது. வருடங்களின் தேய்வில் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அந்த அழகான நான்கு சிறகுகள் என்னிடம் இல்லை. ஆனால் அவை சிறகடிக்கின்றன. வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறது. அது ஏன் உயரத்தில் பறக்க வேண்டும். அல்லது பறக்காமல் பூக்களிலேயே இருந்திருக்கக்கூடாது... ஞானரதம், 1972                       6. ஒரு நெல்லின் மரணம்   []   அந்தச் சிறுநெற்பூ பால் கட்டி காயாகப் பார்த்தபோது... பாளமாய் வெடி நஞ்சை மண்ணில் மாண்டுதிர... புதிதாகத் தோண்டப்பட்ட பெரிய கிணறு புது சிமெண்ட்டின் புதுநிறங்காட்டிக் கொண்டிருந்தது. உள்ளே நிறமற்றிருந்தது புது ஊற்று. சுற்றிலும் பரந்திருந்த சில ஏக்கர் நிலங்களுக்கு அது தெம்பு காட்டுவதாயிருந்தது. பக்கத்தில் அரைகுறையாகக் கட்டப்பட்ட ஒரு நாலுக்கு நாலு ஷெட். அருகில் தரையில் கிடந்த இரு நீண்ட சிமெண்டுக் கம்பங்கள், மின் இணைப்புக்காக. அதன் மேல் சோர்ந்து உட்கார்ந்திருந்தான் மொழுதி யப்பன். இடுப்புத் துணியைத் தலையில் முண்டாசாய்ச் சுற்றியிருந்தான். அவன் இடுங்கிய கண்கள் மேலும் இடுங்கி சாவியாகிக் கொண்டிருக்கும் ஐ.ஆர். 8ன் மேல் நிலைத்திருந்தன. அவனால் யோசிக்க முடியவில்லை. வாய் ஜன்னி கண்டதாய் முனகியிருந்தது. பாழாப்போன மழை மூணு தண்ணி வெச்சா கைக்குத் தேறிடும். மூணு தண்ணி வெச்சா கைக்குத் தேறிடும். மூணு தண்ணி வெச்சா கைக்குத் தேறிடும். மூணு தண்ணிக்கி எங்க போவுறது. ஏரி காஞ்சி ஒரு மாசமாச்சு. பம்பு செட் போட்டா... ன்னான்னு பாத்தா... 'மூட்ட எடு இவ்ளோ போடு அவ்ளோ போடுன்னு... தண்ணியயில்லாம எங்கடா கொட்றது .... எந்தலையில.... கரன்ட்டு ... நீம் அலய தெம்பில்லடா சாமி... *** …..ன்னாங்க சாமி. ஒங்களத்தாங் கடவுளா நினைச்சிக்கிறேன். நம்ப கெணத்துக்கு சீக்கிரமா கரண்டு குடுத்தீங்கன்னா வொர்க் ஆர்டருக்கு பணம்லாங் கட்டிட்டியா அது அப்பவே கட்டியாச்சுங்களே. சீட்டுக் கூட கொண்ணாந்து காம்பிக்க சொன்னீங்க. எழுவத்தஞ்சி ரூபாவுக்கு கட்டியாந்து காம்பிக்கச் சொன்னீங்க கட்டி கொணாந்து காம்பிச்சேனுங்களே பம்பு செட்டுல்லாம் ரெடியா அதாங்க லோனுல பாங்கிலேர்ந்து வாங்கி நம்ப வூட்டில் வச்சி கீறேனுங்களே வூட்டுல வச்சிருந்தா எனக்கெப்படிய்யா மணக்கும்? நான் பார்த்தாயில்லே சீக்கிரமா கனெக்ஷன் தரமுடியும். சும்மா சொல்றியான்னா. நெஜமா சொல்றேங்க. இதுல யின்னா புளுவு, வாங்கியாச்சி தோ பாருங்க. கடெ சீட்டு. வாங்கியிருந்தா சரிதான். சரி கெணத்தாண்ட ஒரு கொட்டாயாவது போட்டு பம்ப்ப அங்க கொண்டாந்து வை. நான் வந்து, இன்னிக்கு இன்னா புதனா, நாளைக்கும் முடியாது. வெள்ளிக்கிழமை அந்த ஊருக்குப் போகணும். சனிக்கிழமை செகன்ட் சாட்டர்டேவா போச்சி. ஆபீசு லீவு அப்புறம் ஞாயிறு. சரிய்யா. அடுத்த புதங்கிழமை கட்டாயம் வந்து பார்க்கறேன். ன்னாமோ ஓங்க தயவுதான் சாமி. பயிரு பூமி காஞ்சி கீறதால எடுப்பா கீது. ஒரு வாரம் தாக்கு புடிக்கும். அதுக்குள்ள செஞ்சிட்டீங்கன்னா. எனக்கின்னாய்யா. எங்க வேலய நாங்க முடிச்சிடுவோம். சாமான்ங்களெ மேல சீக்கிரமா கொடுத்தா ஏன் டிலே ஆகப்போகுது. நீயுங் கூடக்கூட ஒத்தாசையா நடந்துக்கணும். அப்பப்ப இங்கே ஊருக்கு வரப்போ இங்கேயும் வா. பார்ப்போம். மொழுதியப்பன் கும்பிட்டு விட்டு மோவாயைச் சொறிந்து கொண்டு நகர்ந்தான். அசிஸ்டெண்ட் எஞ்சினியரிடமிருந்து வந்திருந்த 'சீக்கிரம்' மெமோவுக்கு ’பணிவுடன்' எழுதினார் அந்தக் கட்டுமான சூபர்வைஸர் '..... இந்த இரண்டு பார்ட்டிகள் மட்டுமே இருப்பதால் அங்கு உடனடியாகக் கனெக்ஷன் கொடுப்பது நம் போர்டுக்கு லாபகரமானதாயிருக்காதாகையால் இன்னும் சில பார்ட்டிகள் சேர்ந்ததும் ஆவன செய்ய இயலும் என்பதை தங்கள் பார்வைக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .....' அசிஸ்டென்ட் எஞ்சினியர் டிவிஷனல் எஞ்சினியருக்கு எழுதினார். டிவிஷனல் எஞ்சினியர் சூபரின் டெண்டிங் எஞ்சினியருக்கு எழுதினார். லாபகரமானதாயிருக்காதாகையால். அடுத்த புதன்கிழமை ஜீப்பில் வந்து இறங்கினார் சூபர்வைஸர். 'அப்பா என்ன வெயில்' அவர் சரீரத்துக்கு வேர்த்துக் கொட்டியது. அவருடன் வந்த போர்மேன், 'என்னாய்யா நிக்கறியே. ஐயாவுக்கு ஏதாச்சும் குடிக்க கிடிக்க மோரு எளனி எதுவும் இல்லே' என மொழுதியிடம் உரக்கச் சொல்வதாய் இரைந்தான் தள்ளி நின்று. வாங்க மொதல்ல ஷெட்டுக்குள்ளார போவோம் - என்று பல்லெல்லாம் தெரிய மொழுதியப்பன் கிணற்றின் பக்கத்தில் அவசரமாய்க் கட்டியிருந்த புது ஷெட்டுக்குள் அழைத்தான். அவர்கள் நகர்ந்தனர். புதிய பம்ப்செட் குங்குமப் பொட்டு சந்தனம் பூ எல்லாம் வைத்து கோணி பரப்பி அதன் மேல் வைக்கப்பட்டிருந்தது. என்ன மேக்? இன்னாதுங்க... உனக்கின்னாய்யா தெரியும். போர்மேனக் கேட்டேன். என்னைங்களா. ஹி ஹி. ன்னாமோ புதுக் கம்பெனியா... ஃபைவ் எச்பி தானேய்யா. அதாங்க போலக்கீது. ஏய்யா இந்தப் பக்கத்திலே வேறயாரும் கெணறு எடுக்கலியா. அதோ .....ங்க. நம்ம மச்சாம் பயதான் புதுசா எடுக்கறான். மதவுக்கா மோலியாரு எடுக்கறாரு புச்சா வேற யாருங்க எடுக்கப் போறான். அவுங்களுதும் முடிஞ்சாப் போலத்தாங். யாரு யாரு அப்ளை பண்ணியிருக்கீங்க. நா ஒருத்தன் தாங்க. அவங்க ரெண்டு பேரையும் கேட்டுப் பாத்தியா. கேட்டேங்க. ஒங்கெணத்துக்கு மொதல்ல வந்துட்டா. அப்பிடியே ஜூலுவா நம்புத்துக்கும் கரண்டு இசுத்துக்கலாம் டான்றாங்க. சூபர்வைஸர் புன்முறுவலில் பல்லைக் காட்டினார். 'நல்ல வேடிக்கையா கீதே' என போர்மேன் பெரிதாகச் சிரித்தான். எதுக்கு இவுங்க சிரிக்கறாங்க' எனத் தெரியாமல் மொழுதி அசட்டுச் சிரிப்பை சிரித்தான். `சரி போவலாமா? என்று அசையாமலேக் கேட்டார் சூபர்வைஸர், போவலாமே என்றான் போர்மேனும் அசையாமல், கண்களை விழித்து மொழுதியைப் பார்த்தான். ன்னாய்யா ஐயா போவலாம் ன்றாரு. கொஞ்சம் திகைத்து நின்ற மொழுதியப்பன் பிறகு படபடத்துச் சொன்னான். ரவ இருங்க சாமி. நம்ப பையன் மோரு எடுத்தார் போயிருக்கான். காடிகீடியா இருக்கப் போவுதுய்யா சனியன். ஆங். இல்லீங்க. நம்பவூட்டு பசும் மோரு. அய்யாவுக்குப் போயி கண்டதக் குடுப்பேங்களா. எங்கே ந்த அவுங்கப்பனுக்குப் பொறந்த பயலக் காணும். டே ஏஏ... வெள்ளெ சீக்கிரமா கொண்டா டோய். தோ ஓஓ.. வரேம் போவ். சட்னு வா டோய். தோ வந்துட்டான்ங்க. நம்பூட்ல அலுமோனிய கெளரசுதாம்பா கீதா . அதாலே சோமு கலுரு கடைலேர்ந்து கெளரசு டம்ப்ளரு வாங்கியாந்தேன். தரேன்னானு ... தோ செத்த நாயிய்யா.... பெரிய ஆபிசருங்கள்ளாம் வந்து கீறாங்கய்யான்னு சொல்லி. பையன் பெருமையாய்ச் சொன்னான். கூட இரைப்பு வேறு. சூபர்வைஸர் மோர்மொடாவை முகஞ்சுளித்துப் பார்த்தார். 'இளநீர் இல்லே ...' இந்த சுத்து வட்டாரத்தில கீறதுல்லாம் பனெமரங்க தானுங்களே. கூட நம்பளுக்கு ஏதுங்க மரம். இதுக்கின்னாங்க ஓட்ட. நம்ப வூட்டு பசும் மோரு. மொடாவைக் கலக்கி கிளாசில் நிறைய ஊற்றி சூபர்வைஸரிடம் தரப்போனான். போர்மேன் அதை வாங்கி தான் அவரிடம் தந்தான். ஒரு வினாடி மோரை உற்றுப் பார்த்தார் அவர். வெண்ணெய் மிதந்தது அதில் . வாயில் வைத்துக் குடித்தார். மூன்று கிளாஸ். ஜீப் டிரைவர் இரண்டு மீதி. ஆறு கிளாஸ் குடித்து மொடாவை போர்மேன் காலி பண்ணினான். ஜீப் புறப்பட்டது. ன்னாங்க... சீக்கிரமா கரண்டு குடுத்துடுவீங்களா . பயிர பாத்தீங்கள்லே. மண்ணு காஞ்சிடுச்சி. ஒரு வாரம் தாக்கு புடிக்கும். அதான்யா. அய்யா ஆபீசிலேயே சொன்னாரே. சொம்மா இன்னா சொல்லிக்கினு. வர்க் ஆர்டர் போட்டு சாங்கஷன் ஆயி எஸ்டிமேட்டு ஸ்கெட்சில்லாம் போட்டு சாமானுங்களெ ரிக்யு சேஷன் போட்டு வாங்கி ஏத்தியாந்து போட்டா... அது இன்னாமோ சீக்கிரமா கரண்டு குடுக்கணுங்க. போன போகமே காஞ்சிப் போச்சிங்க. அதாலதான் இந்த மழெய ஏரிய நம்பி புரியோஜனம் இல்லேன்னு கடனோவுடனோ பட்டு கஸ்டத்துக்கு கஸ்டம் இதெப் போடறுதுங்க.... எல்லாருக்கும் கஷ்டந்தாய்யா . கஷ்டப் படாம துன்ன முடியுமா? சாமானுங்களுக்கு செலவுக்கு ரூபா தயார் பண்ணி வெச்சிக்க. ஐயாவை அப்பப்ப வந்து ஆபீசாண்ட பாரு. போர்மேன் சொல்லியதற்கு சூபர்வைஸர் தலையாட்டினார். மொழுதியப்பனும் தலையாட்டிக் கொண்டான். புழுதி கிளப்பி ஜீப் சென்றது. என்னப்பா சொல்றாங்க ஆபீசரு. தோ கரண்டு தராங்களாம். ஒங்காத்தா கிட்ட சொல்லி புது கெணத்துக் கல்லுக்கு பொட்டு வச்சி இருட்டறப்போ பொங்க வெக்கச் சொல்லணும். பையன் ஹையாவென்று காலி மொடாவையும் கிளாசையும் எடுத்துக் கொண்டு ஓடினான். ராவிக்கி பொங்க, எந்த கோழிய குளுப்பாட்டி மஞ்சா குங்குமம் வெக்கலாம். அந்த நொண்டி செவுலதான். அவனுக்கு கோழிக்கறி சாப்பிட்டு நாளாகியிருந்ததால் நீர் சுரந்தது. ஒருவாரம் போய் இரண்டாவது வாரம் வந்தது. மொழுதியப்பன் துவண்டு ஆபீஸில் தலையில் கைவைத்து ஓரமாய்க் குந்தியிருந்தான். முதலில் போர்மேன் வந்தான். இவனைப் பார்த்ததும், ன்னய்யா மோரு குடுத்தே. ஒரே பேஜாராப் போச்சி. ஜலுப்பு புடிச்சுக்கினு கரகரான்னு பேச முடியல்லே. எனக்கு மோர் என்னாலே சோத்துக்குக்கூட ஊத்திக்கமாட்டேன். அன்னிக்கு என்னமோ நீ ஆசையா குடுத்தியேன்னு நல்லாகீதுன்னு குடிச் சிட்டேன் ரெண்டு கிளாசு . மொடாவ கழுவாம கொண்டாந்தியா’ என்று மூக்கை உறிஞ்சினான். 'சரி சரி. அப்பால போயி ஒக்காரு மொதல்ல. கப்பலு கவுந்து போன மாறி தலையில கை வச்சிக்கினு ஒக்காந்துட்டே. ஓங்கூடான்னா ஐயா வந்தா உன்ன கோவிச்சிக்க மாட்டாரு. நம்பள தாங் கேப்பாரு. சரியான முசுடு. இவன்ல்லாம் ஆபீசரா வந்து நம்ப கழுத்து அறுக்கறானுங்க... என்னங்க! என்றவாறு சூபர்வைஸர் டெரிகாட் பேண்ட் ஆட வந்தார் சிரித்து. போர்மேன் சமாளித்து, தோ...ந்த ஆளு....ங்க. காலங்கார்த்தாலே தலையிலே கைய வச்சிக்கினு ஒக்காந்துகுனான் வழியிலே' என்று அவனைப் பார்த்துக்கொண்டே, சூபர்வைஸரின் பின் நடந்தான். படுபாவி சரியான நேரத்துக்கு வந்து தொலைச்சான். கேட்டுட்டு இருப்பானோ. முன்னாடியே கருபுருன்னு கீறான். சூபர்வைஸர் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து முன்னால் இருந்த பேப்பர்களைப் புரட்டினார். 'இன்னைக்கு எங்க வேலை?’ போர்மேன் யோசனையிலிருந்தவன் திடுக்கிட்டு, நிமிர்ந்து, என்னெக் கேட்டீங்களா. களக்கா நத்தம் பக்கத்தில போல்ங்க நடணும். பக்கத்திலேயே ஜம்பரு போட்டு கனெக்ஷன் குடுக்க நீங்க வரணும். இல்லே, இன்னிக்கு ஸ்டோருக்கு போவாங்களா. அலாட்மெண்டுங்கள் எடுக்க வேணாம். அதுக்கு ஒரு கேங்கு. இங்க ஒரு கேங்கு பூரா கேங்கும் சரியாப் பூடும். லாரி வாருங்களா. இன்னைக்கு ஏது லாரி. நமக்கு வெள்ளிக்கிழமைதானே. சனிக்கிழமை பொது. மெட்டீரியல்ஸ் இன்னைக்கு எடுக்க முடியாது. மொத்த ஆளுங்களையும் நத்தத்துக்கே அனுப்பி வேலைய சீக்கிரம் முடியுங்க, எனக்கு இங்கே வேலை இருக்கு. ஜீப் வந்தா ரெண்டு மூணு மணிக்கா அங்கே வரேன். எல்சி வாங்கி வேலை செய்யுங்க. ஆஃப்லே தானே இருக்குதுன்னு செய்யாதீங்க. டிஇ வேற வந்து பார்க்கச் சொல்லியிருக்காரு. நீங்க வேலைய ஒழுங்கா முடிச்சா அங்கே போய் சமாதானம் சொல்ல வேண்டியிருக்காது. சரி. போங்க. அந்த ஆளைக் கூப்பிடுங்க. மணியாகுது. காலையிலே வரச்சேவே மூஞ்சப்பாரு கல்லு மாதிரி. எங்க கொஞ்சம் சாந்தமா காம்பிச்சா இவனுங்க தலைக்கிமேலே ஏறிக்குவாங்களோன்னு பயப்படறான். நல்லா வாய்ச்சாண்டா சள்ளுபுள்ளுன்னு என நினைத்துக் கொண்டே போர்மேன் நகர்ந்தான். மணி பார்த்தான். எட்டரைக்கும் மேல், கிளம்ப ஒம்பதாயிடும். நகர்ந்து வெளியே வந்து 'டே, நாகப்பா அந்த ஆளெக் கூப்புடு ஐயா கூப்புடறார்னு' என்று உரக்கச் சொன்னான். அந்த ஆள் போய் சொல்லி, மொழுதியப்பன் எழுந்து வந்தான். மூன்று முறை கும்பிட்டும், சூபர்வைஸர் பார்க்காமல் ஃபைலைப் பார்த்திருந்தார் சாமி வணக்கம். வணக்கங்க. அவர் நிமிராமலேயே தலையை ஆட்டி ஏற்றார். ‘இன்னாய்யா விஷயம்.' அதாங்க நீங்க சொன்னாப்ல நாம்ப செய்ய வேண்டிய துல்லாம் செஞ்சாச்சி. நீங்கதாம் பாத்தீங்களே . சுரண்டுங்க... பயிறு தீஞ்சிகினே வருதுங்க. சூபர்வைஸர் தலை நிமிர்ந்து, அவன் முகத்தைக் கூர்ந்து பார்ப்பதாய் பாவனைக் காட்டினார். அது வெறுமையாயிருந்தது. 'என்ன பண்றது. ம்ம்...' முணுமுணுத்தவர், "மொதல்லே யெல்லாம் சும்மாயிருந்துட்டு இப்ப வந்து பயிரு தீஞ்சிப் போச்சி. உங்களாலே தான் டிலேன்னு சுளுவா சொல்லிடறீங்க என்று உரக்கச் சொல்லி, 'இப்பத்தான் நாலு பார்ட்டிங்களுக்கு சேத்து சாங்ஷன் கெடைச்சிருக்குது என்று முணுமுணுத்து, தலையை ஆட்டி ஒரு புருவத்தை ஏற்றி உரக்க 'சரிய்யா. நடறதுக்கு கம்பல்லாம் தந்துட்டாங்க, அதை நட்டுட்டு . ஆமா நீ வொயரிங்ல்லாம் பண்ணிட்டியா... (அவன் தலையாட்டினான்) அப்ப சரி. போலங்களை நட்டுட்டு கனெக்ஷன் கொண்டார வேண்டியதுதான். முதல்லே போயங்களை கொண்டு போகணுமே . லாரி வெள்ளிக்கிழமைதான் நமக்கு வரும். அப்பக்கூட வேற எங்கயாவது முக்கியமான வேலையிருந்தா அங்கே போயிடும். இப்பல்லாம் பார்டிங்கதாம்பா கம்பங்களை அவங்களே வண்டி கட்டியார்ந்து கொண்டு போறாங்க. சீக்கிரமா வேலை முடியணும்னா நீயும் அப்படித்தான் செஞ்சாகணும். இல்லேன்னா லாரி அடுத்த வாரம்தான் கெடைக்கும். அப்பக்கூட நிச்சயமில்லை. என்ன சொல்றே....! என மறுபுருவத்தையும் உயர்த்தினார். மொழுதியப்பன் அசட்டுத்தனம் நிரம்பியவனாய் காட்சி யளித்து தலையைச் சொறிந்தான். நெளிந்தான். எதற்கோ பல்லைக் காட்டினான். சூபர்வைஸர் இதெல்லாம் பழக்கமாகியிருக்கவே கல் போல முகத்தை வைத்துப் பார்த்தார். 'கம்பம் வேணும்னா நீயே எடுத்துக்கினு போ. இல்லேனா அப்புறம் எப்ப அவங்க தராங்களோ அப்பதான் உனக்கு கிடைக்கும் எனக்கு நிறைய வேலை இருக்குது. சும்மா மசமசனு நின்னு பிரயோஜனம் இல்லை. நேரமாவது...' மொழுதிக்கு கொஞ்சம் உறைத்தது. நீங்க வேலை செய்யிங்க சாமி. நா ஏந் தடுக்கறேன். அப்ப நீங்க சொல்றாப்பல வண்டி ஒட்டியாந்து எடுத்துக்கினு போறேன். எங்கெ கீதுன்னுங்கீன்னா நாளைக்கி காலியிலேயே வறேன். எத்தினி கம்பங்க. மூணுய்யா. பெரிய கோவிலுக்குப் பக்கத்திலே பேட்டையில்லே, அங்கேதான் ஸ்டோர்லே இருக்கு. நா சீட்டு எழுதித் தரேன். அத அங்க இருக்கிறவங்க கிட்டே காண்பிச்சிட்டு எடுத்துக்கலாம். அவர்களே எது எதுனு காட்டுவாங்க. வரேங்க. நாளைக்கி காலமேயே வந்துடட்டுங்களா. காலையிலே எட்டு மணிக்கே வந்துடு சீட்டு தரேன். கூட ஆளுங்களையும் இட்டுக்கினு வா. இங்கே ஆளுங்க இருக்க மாட்டாங்க. அப்படியேங்க. அப்ப வரட்டுங்களா. சூபர்வைஸர் ஃபைலில் குனிந்து கொண்டு, தலையாட்டினார். வரேனுங்க. கும்பிட்டு நின்றான். அவர் தலையாட்டவும் இல்லை. இப்படி அப்படிப் பார்த்து நின்று, மேலே போர்த்தி யிருந்த பழுப்படைந்த வேட்டியை விரித்து, மீண்டும் போர்த்திக் கொண்டு நகர்ந்தான். வெளியே போர்மென் நின்று கொண்டிருந்தான். 'இன்னாய்யா. ஆபிசரு என்னை சொல்றாரு' என எகத்தாளமாய்ப் புகைபடிந்த பற்களைக் காட்டினான் சொல்றாரு. அவுரு போல இன்னா மிஸ்டீக்கு சொல்லுங்க. நாம்ப குடுத்து வெச்சது எம்மாவோ அம்மாந்தானே நடக்கும். நீங்கதாஞ் சொல்லுங்களேன். சீக்ரமா கரண்டு கெடைக்கிறதுக்கு பண்றதின்னான்னு. மிகவும் புத்திசாலித்தனமாய்க் கேட்பதாய் எண்ணம் மொழுதிக்கு. அவனுக்கு யாரோ சொல்லியிருந்தார்கள். இப்படிக்கேட்கணும் என்று. ஆனால் போர்மேன் எத்தனை பேர்களையோப் பார்த்தவன் இருவது வருட சர்வீசில். பார்க்கும் ஒவ்வொருவனுக்கும் புதியவனாகவேத் தோன்றினான். போர்மேன் சுற்றும் முற்றும் பார்த்தான். 'சரி வா. காபி சாப்பிட்டு பேசலாம்' என்று முன் நடந்தான். சற்று தள்ளி எதிரே ஒரு அவ்வப்போது உயிர்க்கும் ஓட்டல். ஏம்பா சர்வர். முறுகலா ரெண்டு சொட்டு தோசை சாம்பார். அதுக்குள்ள ரெண்டு செட் போண்டா சாம்பார் கொண்டா. மொழுதியப்பன் விழித்தான். துட்டு இல்லியான்னா. நாந் தரேய்யா. அய்யய்யோ அதெல்லாங் கீதுங்க. நீங்க சாப்டுங்க. போர்மென் போண்டாவை சாம்பாரில் கரைத்து ருசித்தான். 'ன்னுங் கொஞ்சம் சாம்பார் கொண்டாய்யா. சாப்பிடுய்யா சாப்பிடறதுக்குத் தானே சம்பாதிக்கிறோம். வேலை செய்யறோம். என்ன நாஞ் சொல்றது.' ஆமாங்க, ஆமாங்க. தோசை சாம்பார் . ஸ்ட்ராங் சக்கரை ஜாஸ்தி காபி. வழக்கமான சர்வர் பில்லை மொழுதியப்பனிடம் தந்தான். போர்மென் எழுந்து சென்று வெளியில் இருந்த பங்க்கில் சிகரெட் இரண்டு வாங்கி ஒன்றைப் பற்ற வைத்தான். பீடிதான் எப்பவும் பிடிப்பது என்றாலும் ஒரு 'சேஞ்ஜ்' இது. சிகரெட். அதற்கும் மொழுதியப்பன் சில்லறை தந்தான். வாய் மூக்கெல்லாம் புகை வழிய, 'நாஞ் சொல்றதைக் கேளுய்யா. எதுவும் செய்றாப்போல செஞ்சாதான் வேலை நடக்கும். சுக்காஞ் செட்டியா துட்ட கோமணத்திலே முடிச்சி போட்டு அமுக்கிக்கினு ஒக்காந்திருந்தா ஒன்னுமே நடக்காது. (குரலை அடக்கி) ஆமா அய்யாவுக்கெல்லாம் ரெடி பண்ணிட்டியா. பயப்படாதேய்யா நா யாரிடமும் மூச்சு வுடமாட்டேன், ஆபீசருக்கு மாலை மரியாதி பண்ணி அம்பது நூறுன்னு கூட குடுத்திருக்காங்கையா நெறைய பேரு, அப்படியே நம்பளுக்கும் இருபது முப்பதுன்னு தருவாங்க. இதெல்லாம் சந்தோஷமா செய்ய வேண்டியதுய்யா. அப்புறம் மூணு போகம் அறுத்தா எங்களுக்கா தூக்கிக் குடுக்கப் போறே. இல்லீங்க அப்படி சொல்லிட முடியுங்களா. பின்னெ? என்று நிறுத்தி எங்கேயோ பார்த்தான் போர்மென். மொழுதியப்பனுக்கு எதுவும் நியாயமென்றேப்பட்டது. முன்னால் பம்பு செட் போட்டவர்களும் சொல்லக் கேள்விதான். எனவே உண்மைதான் என்று தலையாட்டினான். இப்ப கையில் ஒண்ணுமில்லீங்க. கொண்ணாந்தது செரியாப் போச்சிங்க ஓட்டலுக்கு. செரி செரி. ஒன் இஷ்டம். இப்ப ஒண்ணும் அவசரமில்லே. ஆனா மறந்துடாதே. அப்பிடிக்கூட மறந்துடுவேனுங்களா. நம்பள அப்பிடி நெனைச்சுடாதீங்க. ஏங்க சுரண்டு எப்பங்க வரும் பயிரு தீயுதுங்க. அதான் ஆபிசரு சொல்லியிருப்பாரேய்யா. ஆமாங்க. அதும்படிக்கி செய்யி. எங்கூட்லயா கீது கரண்டு? நீ கேட்டாக்கா ஒடனே இந்தாங்றதுக்கு ம்ம். நெசந்தானுங்க. அப்ப போயிட்டு வரட்டுங்களா. செய்யி. போர்மேன் சைக்கிளில் ஏறி வடக்காய்ப் போனான். ஏதாவது தெரிந்த வண்டி வருகிறதா என்று மொழுதியப்பன் பார்த்திருந்தான். அவன் கிராமத்துக்காய்ப் போகும் பஸ் அவனைக் கடந்தது. ஆனால் அதில் ஏற காசு வேண்டும். ஆளுக்கு ரெண்டு ரூபாய் சாப்பாடு என்று கூலி பேசி ஆறு ஆட்களும் வண்டியுமாக மறுநாள் காலையில் மொழுதியப்பன் வந்தான். கும்பிட்டான். 'போய் எடுத்துக்க' சூபர்வைஸர் சீட்டு தந்தார். அங்க சொல்லீட்டீங்களா சாமி. அவர் பேசவில்லை. மட ஜன்மங்கள். காலையில் எரிச்சலைக் கிளப்புகிறான். போர்மேன் உரக்கச் சொன்னான். இன்னாய்யா. ஓங்க வூட்டு ஆளுங்க இங்க கீறவங்கன்னு நினைச்சியா. போயி பேட்டையில எடுத்துக்க ஒரு தபாதாஞ் சொல்லுவாங்க. நல்ல வறீங்கய்யா எங்களுக்குன்னு. அங்கிருந்து மூன்று மைல் பேட்டை பேட்டையிலிருந்து ஊர்க்கிணறு ஒன்பது மைல். இரண்டு நடை போய் வந்து எடுத்துப் போக அந்த ஒரு நாள் சரியாயிருந்தது. மறு நாள் காலையில் வந்து ஆபிசரைப் பார்த்துச் சொன்னான். சரி கொண்டு போயிட்டேயில்லை. கம்பம் நடறதுக்கு ஆளுங்க வருவாங்க அப்புறம் ஒயர இழுத்து கனெக்ஷன் தருவோம் போ. அங்கேயே இரு. போர்மேன் வெளியில் வந்து சொன்னான். கம்பம் நட வர்ற ஆளுங்களுக்கு சாப்பாடு போடுவேயில்லை. நம்பளாட்டம் மனுசங்க தானேயா அவுங்களும். இன்னா. மொழுதியப்பன் தலையை ஆட்டினான் எல்லாமே வாஸ்தவமாகவேத் தோன்றி அவனைப் பேச முடியாமல் செய்தன. 'ஆராருக்கு எம்மாந் தொல்லைங்களோ. பயிரு அடி தீஞ்சி வருதுங்க. ரெண்டு மூணு நாள்லே குடுத்தீங்கன்னா படிக்கிபாதியாவது தேறும். எல்லார்க்கும் இங்க வரச்சேதான்யா. அவுசரம். பயிருதீயுது. எல்லாம் போவுதுனு. உன்னாட்டம் எவ்வளவோ பேருக்கு கரண்டு தரோம். போர்மேன் திரும்பி நடந்தான். இதுவே ஒரு எம்.எல்.ஏ. ரெகமண்டேஷனோட வந்திருந்தா நீ இன்னேரம் உருப்பட்டிருப்பே. ஆனா நீ பொழைக்கத் தெரியாதவன் போ.' என ஒரு நிமிடம் நினைத்துக் கொண்டான். ஆனால், எல்லாமே அந்த ஒரு நிமிடத்தோடு சரி என்பது அவன் கொள்கை. மொழுதியப்பன் திரும்பினான். கம்பங்களைப் போட்டு ஒரு வாரம் ஆனது. வேர் காய்ந்த சுருக்கில் பயிர் துளித்துளிக் கதிர் வாங்கி பூத்தது . நஞ்சை விரிசல் கண்டிருந்தது. அவன் தினமும் காலையிலேயே வந்து ஆட்களை எதிர்பார்த்தான். வரக்காணோம் போய் ஆபீசரைப் பார்த்து சொல்லவும் பயமாக இருந்தது. ஆனால், அந்த மூன்று ஏக்கர் பரப்பின் ஐ.ஆர். 8 பயிர் யாருக்காகவும் காத்திருக்காமல், எந்தப் பசுமைப் புரட்சியும் காட்டாமல் கருகியது. *** புது நிறங்காட்டியிருந்த கிணற்றின் மேட்டில் நாலுக்கு நாலு ஷெட்டின் பக்கத்தில் கிடந்த இரு நீண்ட சிமெண்டுக் கம்பங்கள் மின் இணைப்புக்காக. அதன் மேல் உட்கார்ந்திருந்தான் மொழுதியப்பன், ணங்கியபடி அவன் இடுங்கிய கண்கள் மேலும் நொடித்து உள்ளாழத்தில் சாவியாகி வறண்டிருந்தன. ஒவ்வொரு வாரங்களின் கழிவிலும் ஒவ்வொன்றும் நடக்கும். ஆட்கள் வரலாம். ஒருநாள் முழுவதும் கம்பம் நடலாம். ஒயர் இழுத்து, ஜம்பர் போட்ட பிறகு ஒரு முகூர்த்த ஆபிசர் வந்த வேளையில் கனெக்ஷன் தரலாம். அவர் முகத்தில் காத்து நின்றதால் கோபம் தெரியும். அதைவிட போர்மேன் முகத்தில். மொழுதியப்பனுக்குப் பதிலாக அவன் பையன் நின்றிருப்பான். 'இங்க குடிக்கிறதுக்கு இந்தக் கெணத்துத் தண்ணிதாங்க' என்று. மோர் கொடுத்த குதூகலம் இல்லாமல். அந்தச் சிறு நெற்பூ காயாகப் பார்த்தபோது, பாளமாய் வெடி நஞ்சை மண்ணில் மாண்டது. தெரியாமல் தவணை தவறியதால் கடன் கொடுத்த பாங்க்காரர்கள் அட்டாச் செய்ய வருவார்களோ? தீபம், 1972                   7. நிர்ப்பந்தங்கள்    []   நடேசன் ரொம்ப நல்லவனாகத்தான் இருக்கட்டும் பொல்லாதவனாகத்தான் இருக்கட்டும். அவன் ஏன் தன்னை விட்டுவிட்டு கமலாவுக்காக பேசவேண்டும் - தெரியவில்லை அல்லது அதிகப் படியாக மனத்துள் சிரிக்க வைப்பதாயிருந்தது.   "இதோ பார் இளங்கோ . யாரு எது வேணும்னாலும் என்னெப் பத்தி சொல்லட்டும். ஐ டோன்ட் கேர். பட் ஒரு பொண்ணு அதுவும் கல்யாணமான ஒரு பொண்ண சம்பந்தப்படுத்தி பேசறது நல்லால்லே "என்றான் ஒரு காலை ஏழு மணியில். திண்ணையில் 'இந்து’வை பிரித்து படிக்கப் போனவனைக் கூப்பிட்டு, அவன் 'தினமணி'யை விரித்துப் போட்டு, "எதைப் பத்தி கேக்கறே நீ" "அதாம்பா. எங்க பக்கத்து வீட்டு கமலாவ நாம் பாக்கறதா பேசறாங்களாமே...'' "அப்படியா'' "போன வாரம் கந்தசாமி வீட்டுக்கா போயிருந்தப்போ அவன்ங்க பேசிட்டிருந்தாங்க. என்னாடா பேசறீங்கன்னேன். ஒண்ணுமில்லேன்னான். அட சீ எதுவார்ந்தாலும் சொல்லுடான்னேன். இப்படின்னான். எனக்கு பக்குனு போச்சி. யாரு சொன்னதுடான்னா, ரொம்ப நேரம் இழுத்து இழுத்து ரங்கநாதன் பேரை சொன்னான் ரங்கநாதந்தான் சொன்னானாம். நீ சொன்னேன்னு..." நிறுத்தினான் அவன். இவனுக்குச் சிரிப்பாய் வந்தது. "நீ சொல்ற விஷயமே புதுசாயிருக்குதே நாம ரெண்டு பேரும் பாக்கறதோட சரி. பழக்கமே கிடையாது. உன் போக்கு பேச்சு நடத்தை எப்படின்னு நாங் கவலைப்படறவனேயில்லை...'' அவன் தொடர்ந்தான். "என்னப் பத்தி கவலையே இல்லேன்றேனே. நா எல்லாத்தையும் பேசறவன். கண்டவ பின்னாடில்லாம் சுத்தனவன். ஆனா பேசற அளவு போயிருந்தா இன்னிக்கு என் வொடம்பில துளி ரத்தம் இருக்காது.''   இவன் சிரித்து, “இதுவும் எனக்கு புது விஷயம்தான்'' என்றான். "ஆனா பாரு. நாங் கமலா விஷயத்தில் அப்படி நடக்கவே யில்லை. அவ ரொம்ப நல்ல பொண்ணு. அவ ஆத்தா அக்கா இப்படி குடும்பமே கெட்டுப் போன ஓடிப்போற நாயிங்கதான். இவ சேத்துல மொளச்ச செந்தாமரை மாதிரி. அவ குடும்ப விஷயம் பூரா எனக்குத் தெரியும்." அவன் உவமையை நினைத்து இவன் சிரித்துச் சொன்னான்: "இதுவும் எனக்கு புது விஷயம்தான்.'' 'பாவம் நடுவுல மாட்டிக்கினு கமலா அவஸ்தைப் படறா. பக்கத்து வீடு வேறு. என்ன சொல்றே?' "சரி" "அப்படி இருக்கச்சே அந்த நல்ல பொண்ணை அவ பேரை கெட வைக்கிறதில... அதில பாரு என்னெ விட்டுடு. அவளப் பத்தி தான்..." இழுத்தான் அவன். "நடேசா நீ என்ன சொல்ல வரேன்னு புரியுது. உன்னாட்டம் - இல்லை - உன் ஜமாவாட்டம் பேசிப் பழக்கமில்லை. ரங்கநாதன் உங்களோடல்லாம் பழகினாலும் எங்கூட குளோசா மூவ் பண்றான். அவன் என்னோடப் படிச்சவன். வர்றப்போதெல்லாம் எது எதுவோ சொல்வான். நாங்கேட்டுக்கறதில்லே. பதில் சொல்றப்பழக்கமுமில்லே. எனக்கு அதுக்கு நேரமும் விஷயமும் கிடையாது.'' " நீ சொல்லியிருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் இளங்கோ. ஆனா பாரு...'' "அதான் சொல்றேனே. எந்த விஷயமும் உங்களோடதைப் பத்தியெல்லாம் எனக்கு புதுசாதான் இருக்கும். உன்னைப் பத்தி நாங் கவலைப்பட்டால்லே நீ யாரைப் பாக்கறே இல்லேன்னு கவனிக்கப்போறேன். ரங்கநாதன் சொல்லியிருக்கான். எதையும் சொன்னா புரூப்போட உங்க ஜமாவில சொன்னாதான் நம்புவீங்கன்னு. அதனாலே எம்பேரை இழுத்திருப்பான்.” அவன் கொஞ்சம் சும்மா இருந்தான். பிறகு சொன்னான். 'இருக்கும். வரட்டும் வரட்டும். இதிலே பாரு. அவனவன் அவன் வீட்டுல நடக்குற சங்கதியயெல்லாம் மறந்துடறாங்க. அவன் தங்கச்சியிருக்காளே அவ ஏன் யாருக்கும் தெரியாம பக்கத்து தெரு சுந்தரம் பயலுக்கு ரூபா பத்து இருபதுன்னு தரணும்? அதுவும் வீட்டுல யாரும் இல்லாதப்போ ..." "நீ சொல்றது புதுசாத்தான் இருக்குது இதுவும் எனக்குத் தெரியாது.'' "அப்புறம் அந்த கந்தசாமியிருக்கானே, அவனோட அக்கா ரொம்ப நாளா வாடிக்கையா ரிக்ஷா மிதிக்கிறவனோட ஓடிப் போயிட்டாளே எல்லோருக்கும் அது தெரியாது?'' இவனுக்கும் அது தெரியும். தெருவுக்கே தெரியும். சும்மா இருந்தான். ஒரு நிமிடம் இவனை அவன் உற்றுப் பார்த்துவிட்டு, "இப்படியெல்லாம் எவ்வளவோ மூட்டய வச்சுக்கினு மூணாம் மனுசனைப் பத்தி பேசறதுன்னா நாக்க தொங்க போட்டுக்கினு வந்துடறானுங்க. இது வேடிக்கையாயில்லே!'' இளங்கோ சிரிக்க வேண்டுமாதலால் உதடுகளைத் திறந்து மூடலானான். "எதுக்கு சொல்ல வரேன்னா பாவம் ஒண்ணுந் தெரியாத அவளைப் போயி சம்மந்தப்படுத்தி...'' "இது ரொம்ப சுவாரசியமான விஷயந்தான். எல்லோருக்குமே மத்தவங்களைப் பத்தி பேசறதுக்கு பிடிக்குதுன்னு தெரியுது." அவன் ஆச்சரியமாய்ப் பார்த்தான். "அதான் நானும் சொல்றேன். நீ அப்படில்லாம் பேசறவனில்லையின்னுதான் கேட்டேன்" என்றான். "எப்ப சொன்னானாம் அதை.'' " அவன் பேசி ஆயிட்டிருக்குமே பாஞ்சி நாளு உன்னே தற்செயலா பாக்கவே அது ஞாபகத்துக்கு வந்தது. வேறொன்னுமில்லே. நீ என்னை தப்பா நெனைச்சிக்கக்கூடாது'' என்றான் நடேசன் குரலைத் தாழ்த்தி. "இதிலே என்ன தப்பு? சந்தேகம்னா கேக்க வேண்டியதுதான். அப்படி பேசியிருந்தா ஒண்ணு நான் பதுங்கணும், உன்னைப் பாக்கச்செல்லாம். இல்லே ஆமாம்யா பேசனேன். என்ன பண்ணிடுவேன்னு துணிஞ்சு கேக்கணும். ரெண்டுமில்லே. நீ சொன்னதெல்லாம் புது சாத்தான் இருக்குது. ஆனா இதுவும் தெரியவேண்டியதுதான்.'' இளங்கோ சிரித்துக் கொண்டான். பட்டால்தான் அனுபவம் போலும். "நீ என்னை தப்பா நெனைக்கக்கூடாது. இளங்கோ" நான் உன்னைக் கூப்பிட்டுக் கேட்டுட்டேன்னு வருத்தப்பட்டுக்கக் கூடாது. அந்த பசங்களுக்கு வேற பேச்சே இல்லேபா. எவன் ஆப்புடுவான்னு பாக்கறானுங்க. நீ போய் அவங்களை கேக்க வாணாம். நாங்கேட்டுக்கறேன். ஏன்னா அவ நல்லவ...'' இளங்கோவுக்கு இப்போது சங்கடம் தோன்றலாயிற்று. அவனை சமாதானப்படுத்துவதாய், "ஆமாம். உன்னை ஏன் தப்பா நினைக்கிறேன். கவலைப்படாதே" என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டு தன் வீட்டின் திண்ணையிலேயே விரித்துப் போட்டுப் போயிருந்த 'இந்து’வை எடுத்துக் கொண்டு உள்ளே போனான். “டேய் இளங்கோ உங்க எதர்க்க இருக்கிற நடேசன் அவன் பக்கத்து வீட்டில இருக்கற கமலாவப் பத்தி நிறைய சொல்றான்டா. அவ இவனை அப்பப்ப பாக்கறாளாம். வெளித் திண்ணையில் எப்ப உட்கார்ந்தாலும் கதவுக்காய் வந்து நிற்கிறாளாம். சமயம் ஆப்ட்டா விட மாட்டேன்றான்டா. கந்தசாமி வீட்டிலே நேத்து ராத்திரி நாங்கள்லாம் இருக்கச்சே அளந்தானே. உண்மையாடா... பாக்கறியேல்லியோ?'' என்று ரங்கநாதன் இவனைக் கேட்டது பல நாட்களுக்கு முன்பு, நடேசன் கூப்பிட்டுக் கேட்க ஆரம்பித்தபோதே, நினைவுக்கு வந்தது. ரங்கநாதன் சாயங்காலம் வரும் போது வீட்டில் இருக்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். தெருவுக்கு போய் அவள் வெளியே வந்திருக்கிறாளா என்ன செய்கிறாள் என்று பார்க்க வேண்டும் போல இருந்தது. பேப்பரை மடித்து எறிந்துவிட்டு தெருவுக்கு வந்து கோடி வரைப் பார்த்தான். எதிரில் யாரும் இல்லை. நேரங்காலம் தெரியாதவன் என்று தலையில் அடித்துக் கொண்டான். வண்ணங்கள், 1973                                         8. சிலுவை   []     அம்மாவை வைத்தாகி விட்டது. கல்லறையில் கடைசியில் அவள் முகம் என்ன காட்டிக் கொண்டிருந்தது. சோகம். ஆமாம். அவள் கடைசி நாட்கள் யாவும் சோகமானவை. வீழ்ச்சி. சோகத்தின் முடிவில் கிடைத்த விடுதலை. ஆம். விடுதலை. அவளுடைய உடம்பு மிகவும் நொந்து போனது. அவளுடைய நோய் அவளுக்கு வரக்கூடாது. உடம்பிலிருந்து நீராய் வடிவதும் ஒரு நோய். அவன் முன்பு மிகவும் சாமாரணதாய் இருந்தாள். சொல்லப்போனால் ஒடிசல் அல்லது ஒல்லி. அப்படியும் ஒரு வருடத்தில் படுத்தாள். கடைசி ஒரு மாதம் அவள் உடம்பில் நீர் கசியலானது. அம்மாவுக்கு மரணத்தினால் விடுதலை, சுகம். மரணம் அவளுக்கு. நோவுக்குப் பலன் சம்பளம்; கூலி. "பாவத்தின் சம்பளம் மரணம்.'' இல்லை. எது சரி. எது இல்லை. மரியதாஸ் சிலுவைக் குறியிட்டான். அம்மாவுக்காக. இந்த நினைப்புக்காக. அவன் மிகவும் அம்மாவின் இழப்பால் துன்பப்படுபவன். மரியதாஸ் செயலை, அவன் அம்மாவின் கணவனான அருள்நேசர் நிலைகுத்திய விழிகளால் காண்பவராய் இருந்தார். இவன்தான் அவளின் அன்புக்கு முழுமையானவன். இவனுக்கு எதற்கும் அம்மா வேண்டும். பதினேழு வயதிலும் அவள்தான் எல்லாம் செய்ய... ஒரு வருடமாய் கேட்டு.... அவர் முகத்தில் கைகளை அழுத்திக் குலுங்கினார். அறுபது வயதில் அவரால் எந்த சிறு துன்பத்தையும் தாங்குவதில்லாமல் தளர்ந்திருந்தார். கோயிலுக்கு வரும் பாவ வார்த்தைகளைக் கேட்கவும், கண்ணீர் பெருகுகிறது இந்த ஒரு வருடமாய். ரோஸிக்கு ஏன் இப்படி ஆனது? ஆகவேண்டும். மிகவும் கதறியிருந்தார். அவள் முகம். அந்த முகம். உடம்பு குலுங்கி பலவீனத்தால் நடுங்கியிருந்தது. உள் அறையில் ரோஸியின் இரு மகள்களும் அவர்கள் கணவன்களும் சில உறவினர்களும் கூடி எதையோ தீவிரமாக யோசித்திருந்தனர். சுசீலாவின் கணவனும் முதல் மாப்பிள்ளையுமான பிலிப்பு தன் மனைவியின் வாயோடு வாய் கிசுகிசுத்திருந்தான். சிலர் சுற்றி கண்கள் வெறித்து காது நீட்டி முகம் வினாவியிருந்தனர். சுசீலா சொன்னாள். அம்மாவை அடக்கம் செய்து இவ்வளவு நேரம் போனது. யார் எடுத்திருப்பார்கள். அப்பாவா, மரீயா எலிசியா? நீங்கள் கவனிக்காதிருந்தது பெரிய தவறு. அவள் கணவன் முகம் சுளித்தான். நீ கவனிப்பதுதானே. மணி எட்டானது. எலிசி. இரண்டாவது பெண் மறுகோடியில் முனகிக் கொண்டிருந்தாள் தன் கணவனிடம். ராத்திரியாகிறது. சீக்கிரம் தெரியவேண்டும். சுசீயா, அப்பாவா, மரியா யார் எடுத்திருப்பார்கள்? அவள் கணவனின் தம்பி எட்வர்ட் முரட்டுத்தனமான உடம்புடையவன். தன் அண்ணியைக் கேட்டான். அவர் தானே கடைசியில் தாலியை கையில் பிடித்து சொல்லியிருக்க வேண்டும். ஆமாம். அப்பாதான் அம்மாவின் தாலியைக் கையில் பிடித்துச் சொல்லியிருப்பார். நான் இந்த தாலியை உனக்கு அணிவித்தது முதல் இந்நாள் வரை என் சுகதுக்கங்களில் பங்கு பெற்றாய்... அப்பா சொன்னாரென்றால் அவர்தான் கழற்றியிருக்க வேண்டும். சுசீலாவுக்கும் இது ஞாபகம் வந்தது. அப்பாதான். எலிசியும் சுசீலாவும் கண்மூடி சேரில் சாய்ந்திருந்த அருள் நேசரிடம் அணுகினார்கள். அப்பா ! அவர் கண்களை மெதுவாக அவிழ்த்தார். என்னம்மா இரண்டு பேருக்கும். அம்மாவின் நகைகளை நீங்கள்தானே.... என்னதும்மா. வளையல் கம்மல் செயின். அப்புறம் தாலி எல்லாம்.... என்னதும்மா. தாலியெல்லாமா? தாலி வாங்கச் சொல்லவே மறந்துட்டேம்மா . அவர் குலுங்கி குலுங்கி அழுதார். எல்லாமே மறந்து போச்சும்மா. நானே ஒரு இதுவா இருந்தும் செய்ய மறந்து போச்சும்மா. மற்ற ஆண்கள் விரைவில் அருகில் வந்து திடுக்கிட்டதாய்க் கேட்டார்கள். என்ன தாலி வாங்கலியா? அப்ப நகைகள்? பெட்டியிலேவா? யாருக்கும் ஞாபகம் இல்லை. மரியதாஸ் ஒன்றும் கவனியாமல் முழங்கால்களில் தலை கவிழ்ந்திருந்தான். டேய் மரி - யாரோ கத்தினார்கள். அம்மா போட்டிருந்த நகை எல்லாம் எடுக்கல்லே. என்னடா கவனிச்சே. அப்பாக்குத்தான் வயசாச்சு. நாங்கதான் வேற வேலையில் கவனிக்காம மறந்துட்டோம். மரியதாஸ் பெட்டிக்குள் வைத்த அம்மாவின் முழு உருவையும் நினைத்தான். நகைகள் இருக்குமிடம் இவைதான் என உணர்ந் தாலும் அவை என்ன என்பதை நினைவுபடுத்த இயலாத வனானான். எதிரே நின்றவர்களை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தான். அம்மா என்ன போட்டிருந்தாங்க. என்ன சுசி. உனக்கு ஞாபகம் இருக்கா - அவள் கணவன் கேட்டான். மூணும் மூணும் ஆறு வளையல்கள். ரெண்டு கம்மல். மூக்குத்தி. ரெட்டை வடம் செயின், டாலரோட தாலி. ஒவ்வொன்றாய் சுசீக்கும் எலிசிக்கும் ஞாபகம் வந்தது. ரூபாய் மதிப்பு போட்டு மனசில் பார்த்தார்கள். என்ன செய்வது? அருள்நேசர் கண்மூடி சாய்ந்திருந்தார். மரி பழையபடி முழங்கால்களில் தலை கவிழ்ந்திருந்தான். எட்வர்ட் வாட்சைப் பார்த்தான். ஒன்பதாகப் போகிறது. சொன்னான், மணி ஒன்பது. ஏதாவது செய்வதாயிருந்தால்... தோண்ட வேண்டியதுதான் போய். ஒவ்வொருவரும் சிறிது நேரம் குழம்பி முடிவுக்கு வந்தார்கள். இதற்குள் ஒன்றும் அவ்வளவு கெட்டிருக்காது. அப்பாவைக் கேள். சீக்கிரம். என்ன பதில் சொல்வது. அருள்நேசர் மனைவியை நினைத்து எப்படி மறந்தது என்று நினைத்து ஒன்றும் சொல்ல முடியாதவரானார். அவர் அப்படித்தான் இருப்பார். இதைப்போல் அவரிடம் கேட்கணுமா? இடிஞ்சு போய் இருப்பவரிடம். வயசானால் இப்படித்தான். எல்லாம் சரி. யார் பெட்டியைத் திறந்து இந்த ராத்திரியில் கல்லறையில் பெட்டியில் கைவிட்டு பிணத்தின் மேலிருந்து.... என்னதான் அம்மாவானாலும் பிணம். இறந்து ஒரு நாளாகும் அழுகல் முன்பே நீர் மிகவும் ஒழுகியது. முதலில் எவனுக்கு தைரியம் இருக்கிறது. சுசியின் கணவன் திணறினான். எலீசியின் கணவனும். நகைகள் வேண்டுமா வேண்டாமா. வேண்டாமென்றால் யாருக்கும் அதை யோசிக்க பெரிய இழப்பாயிருந்தது. எட்வர்ட் மணி பார்த்தான். பத்து நெருக்கம். சரி. நீங்கள் பயந்தால் நான் செய்யத் தயார். அவன் எப்போதுமே துணிச்சல்காரன். சாதாரணமாய்ச் சொல்லப் போனால் முரட்டுத்தனமான உடல் செயலுள்ளவன். இன்னும் கல்யாணமாகாதவனாச்சேடா. ஏதாவது ஆகப் போகிறது. அப்படியானால் நகை... ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். சரி. அப்பாவைக் கூப்பிட்டுக் கேள். எல்லாரும் முடிவான தீர்மானத்திற்கு வந்திருந்தார்கள். நகைகளை எடுக்க வேண்டியதுதான். எட்வர்ட் தயார் ஒருவன் போய் இரண்டு தோண்டுபவர்களையும் காஸ் லைட்களையும் அழைத்து வந்தான். விசயம் சொல்லாமல் திரும்பியும் ஏதோ உள்ளே வைக்கவேண்டும். பிடித்தமானது. கல்லறைக் காவல்காரன் ஒன்றும் தலையிட மாட்டான். சுசியின் கணவன், எலீசியின் கணவன், எட்வர்ட் இன்னும் மூன்று ஆண்கள், கடப்பாரை மண்வெட்டியோடு லைட்டுகளோடு கிளம்பினார்கள். அருள்நேசர் ஒடுங்கி கூட நடந்தார். சரியான அப்பா. மணி பதினொன்று சுற்றிலும் சிலுவை சின்னங்களுடன் கல்லறைகள். செடிகுத்துக்கள். மரங்கள். சில்லென்ற சத்தம். பயம். நள்ளிரவில் ஒருவர் பின் ஒருவர் உரக்க ஜபித்து நின்றனர். பயம். ஆவிபயம். இன்னும் சரியாக அழுந்தாத மண்ணை இரண்டு பேரும் பரபரவென்று தோண்டிப் போட்டனர். சவப்பெட்டி தெரிந்தது. லைட்டை நன்றாகத் தெரியும்படி வைத்தார்கள். பள்ளம் தோண்டியவர்கள் தூரப் போய் உட்கார்ந்து பீடி கொளுத்தினார்கள். யாரும் ஒன்றும் கவனிக்கவில்லை. எட்வர்ட் குழியுள் இறங்கினான். பெட்டியை சுத்தியும் ஸ்க்ரூ பண்ணியிருப்பார்களே .... என்றான் ஒருவன் பதட்டத்துடன். எட்வர்ட் அவசரமாய் மூடியை அசைத்துப் பார்த்தவன், கத்தி விட்டான். அதுகூட செய்யலைபா இவங்க. அதுவும் இப்ப நல்லதுக்குத்தான். மூடியை கொஞ்சம் திறந்தான். குடலே வெளி வருவதுபோல் ஆகி மூக்கையும் வயிற்றையும் பிடித்துக் கொண்டு வேகமாய் பின்னுக்கு நகர்வதாய் ஓடினார்கள் . ப்பா... மகா பயங்கரமான நாற்றம். அருள்நேசர் அசையாமல் வெறித்து நின்றார். தன் மனைவியின் குழியையே திரும்பவும் தோண்டி ... பாவம் பாவம் அம்மா. அந்த வெளிச்சத்தில் பெட்டியின் விளிம்பில் ஏதோ திரவம் வழிந்து துர்நாற்றத்தைத் தொடர்ந்து வீசியது. எட்வர்ட் வாயில் கர்சீப் அடக்கி சமாளித்து பெட்டியின் தலைமாட்டருகில் உட்கார்ந்தான். பெட்டியின் மூடியை முழுவதும் திறக்காமல் ஒரு கை நுழையுமளவு திறந்தான். கழுத்து முகம் எட்டுமளவுக்கு இடது கையை விட்டான். விட்டதும் மீண்டும் கத்தினான்: ஐயய்யோ . பெட்டி பூரா பொணத்து நீரு நெரம்பிக் கிடக்குது, கொழகொழன்னு. கைக்கு ஏதாவது ஆகுமோ, வியாதிப் பிணம். மூக்கைப் பிடித்தவர்கள் ஒன்றுமே பதில் பேசவில்லை. கழுத்திருக்குமிடத்தில் கையைத் துழாவினான். இழுத்தான். மார்பின் மீது வைத்த கைகளின் நைந்த சதையெல்லாம் உருவி எலும்பின் மெலிவில் வளையல்களைக் கழட்டினான். காதுகளின் மெல்லிய தோல் ஒன்றும் கடினம் தரவில்லை. மூக்குத்தியின் மேல் பாகம் மட்டுமே வந்தது. அடித்திருகு இருக்குமிடம் தெரியவில்லை. எல்லாவற்றையும் கையில் சுற்றி மண் மேட்டின் மேல் வீசினான். கொழகொழவென்று ஏதோ சுற்றிப் பிசுபிசுவென எதையோ நினைவுபடுத்தி பிண்டமாய் மண்ணில் அவை கிடந்தன. யாரும் அதை எடுக்கவில்லை. அம்மாவைப் பார்க்க என ஒருவன் கடைசியாய் மூடியை ஒருமுறை முழுவதும் திறக்கச் சொன்னான். எட்வர்ட் திறந்தான். அம்மா .... அருள்நேசர் அடங்கலிழ்ந்து கதறினார். பெட்டி முழுவதும் ஏதோ ஓர் வண்ணக் கலவையில் நீர் நிறைந்திருந்தது. பெட்டி முழுவதும் உடல் அடைத்திருந்தது. முகம் பூதமாய் பெருகியிருந்தது. பெட்டியில் வைத்தபோது, பாதிக்கும் குறைவாய் இருந்த உடல், முகம் அவர் கதறினார். இருவர் அவரைத் தாங்கிப் பிடித்தனர். மறு வினாடியில் எட்வர்ட் மூடியை அறைந்து மூடினான். மேலே வந்து நகைக்குவியலை மண்ணில் புரட்டினான். இடது கை முழங்கை வரை மண்ணில் திருப்பித் திருப்பித் தேய்த்தான். தோண்டியவர்களைக் கொண்டு குழியை பழைய படிக்குச் செய்தார்கள். சுசியும் எலீசியும் நகைகளைக் கண்டார்கள். எட்வர்ட் அவற்றைக் கழுவினான். நூல் நூலாக நிறையப் போய் கொண்டிருந்தது. சரி. நாளைக்கு சுத்தமாய் வாஷ் செய்யலாம். எட்வர்ட் முழங்கைவரை பலமுறை அழுத்தித் தேய்த்தான். பிறகும் ஏதோ பிசுபிசுவென இருந்தது. சிலருக்கு அந்தக் கை ஏதோ நிறம் மாறியிருப்பதாகவே கண்களில் உறுத்தியது. அருள்நேசர் மீள ஈஸிசேரில் சாய்ந்ததும் குலுங்கியிருந்தார். மரியதாஸ் நிமிரவும் இல்லாமல் முழங்காலில் மீளக் கவிழ்ந்து கொண்டான். அம்மாவுக்கு நோவிலிருந்து விடுதலை மரணத்தால். நல்லதுதான். இன்னும் வேதனைப்படாமல், துடிக்காமல், அப்படியானால் அம்மா... அம்மா நோய்க்கு கூலி சாவு. "பாவத்தின் சம்பளம் மரணம்'' இல்லை. பாவத்திற்குத்தான் அது. அம்மாவுக்கு இல்லை. எது இல்லை . எது சரி. மரி.... அம்மாவின் இறுதி நாட்களின் குரல் அழைப்பு. அம்மா....? என்றான் மரி, இருளைத் துழாவி. இருட்டின் முனையில் வெளிச்சம் பட்டது. உள்ளே மற்றவர்கள் பின் இரவின் கழிவில் நன்றாக உறங்கத் தொடங்கியிருந்தார்கள். சுதேசமித்திரன் - தீபாவளி மலர், 1973                                 9. சூரியகாந்தி   []     மஞ்சள் மஞ்சள் ஆனந்த்ஜி ஜன்னல் வழியாகப் பார்த்திருந்தான். சாலையோரங்களில் சில ஏக்கர் களில் மட்டும் மஞ்சள் பூத்திருந்தது. இவன் எல்லையற்ற வெளியில் மஞ்சளின் தலையாட்டலைக் கொணர்ந்தான். பரந்த வெளியில் மஞ்சள் பரந்திருப்பது கவர்வதுதான். ஆனால் நீலாம்பர பூக்கள் இவ்வாறு பூத்திருக்குமானால் அது மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கக்கூடும். சில கார்களின் அலங்கார பஸ்களின் பின்னே கவரும் விதமாய் எரியும் நீலவிளக்குகளை விட இந்த பூக்கள் அதிகமாய் இவனைக் கவர்வனவாய் இருந்தன. இப்போது இந்த சில ஏக்கர் வயல்களிலே பூத்திருக்கும் எண்ணெய் வித்து என்பதாக சூரியகாந்திகள். முன்பெல்லாம் சில இடங்களில் அலங்காரத்திற்காக ஆறடி உயரம் வளர்ந்து பெரிசாய் ஒன்று இரண்டென பூத்திருக்கும் சூரியகாந்திகளை அப்போது அதன் மஞ்சள் நிறத்துக்காக அன்றி வகுப்புகளில் கூறப்பட்ட சூரியன் இருக்கும் திசைகளில் முகம் காட்டி நிற்கிறதா என்பதைப் பார்ப்பதற்கு மட்டுமே எனப் பார்த்திருந்ததாய் நினைப்புற்றான். ஆனால் இப்போது இவை ஓரடியிலிருந்து இரண்டடி உயரத்திற்குள் நிறையப் பூத்திருக்கும்போது திசை நோக்கம் மறந்து நிறம் நினைவுக்கு நிற்பது இவன் வளர்ந்துள்ளதாலும் இருக்கக்கூடும். இச்சூரியகாந்தி செடிகளில் நடுநடுவே சில காய்ந்து போயிருந்தன. சில பூக்கள். மற்றும் பல தண்டுகள். இதற்குக் காரணம் இச்செடிகளுக்கு வேண்டிய தண்ணீர் இல்லாதிருக்கலாம். அல்லது மண்வளம், உரம், சத்து குறைவாய் இருப்பதாலும் இருக்கலாம். தான் மண்வள நிபுணன் அல்ல, தனக்கு வேண்டியது வீர்யமான பூக்கள் என முணுமுணுத்தான். இந்தப் பூக்கள் இங்கில்லாவிட்டால் என்ன இருந்திருக்கும். கடலைக்காய் செடிகள் சின்னஞ்சிறு குத்துக்களாய் படர்ந்திருப்பதுபோல் இருக்கலாம். அல்லது நிலத்துக்காரன் வெறுத்துப்போய் சவுக்குக் கன்றுகளை நட்டிருப்பான். இவையிரண்டாலுமே அவனுக்கு லாபம் கிடைப்பதாயிருக்கலாம். ஆனாலும் அவைகளை உண்டாக்க அவன் செலவழிக்க வேண்டியதிருக்கும். அவைகளுக்கும் சில வசதிகள் தேவையிருந்தாலும் அவை நெல்லைப்போல சீக்கிரம் செத்துவிடாது. போனாலும் அதிக நஷ்டமில்லை. கொஞ்சம் நஷ்டமும் இப்போது சூரிய காந்தி போட்டதால் ஏற்பட்டிருக்காது. இந்த சூரியகாந்தி மலர்களை உண்டாக்க விதையும் முன் பணமும் தந்திருக்கக்கூடும். அட, சும்மாயிருக்கும் மண்ணில் கவர்மெண்டாய் தர்றதை போட்டு வையேண்டா என பஞ்சாயத்துக்காரர்கள் சொல்லியிருக்கக் கூடும். நிலத்துக்காரனும் மானம் பார்த்த பூமியில் ஒரு சமயம் வெள்ளம் காட்டும் மழையை நம்பி கைக்காசு நஷ்டமில்லை என எண்ணியிருக்கக்கூடும். இப்போது ஓரடியிலிருந்து இரண்டடியுள்ள செடிகள் மஞ்சள் பூக்கள். இவனுக்கு சூரியகாந்தியின் உயரம் தெரிய அவசியமில்லை . மேலும் இவை ஏதேனும் கலப்பினக் குட்டையினமாகவும் உண்டாக்கப்பட்டிருக்கலாம். இவைகளுக்கு வறண்ட மண் தேவையாயிருக்கலாம். இவனுக்குத் தெரியாது. இவற்றின் தண்டுகள் பச்சையாயிருக்க வேண்டுமென உணர்ந்தாலும் இவை பெரும்பாலும் கருப்பாகவே இருந்தன. ஒருவேளை... இல்லை, ஏதேனும் காரணமும் இருக்கக்கூடும். பயிர் விவகாரம் என்ன தெரியும் தனக்கு எனக்கேட்டுக் கொண்டான். கூடவே ஒரு வார்த்தை நினைவுக்கு வந்த போதும். சூரியகாந்தி எண்ணெயினால் தலைக்குக் கூட முழுகலாம் என யாரோ சொல்லியிருந்தார்கள். இவன் தம்பி ஒருமுறை கடலை யெண்ணெய் தேய்த்துக்கொண்டு தவறுதலாய்க் குளித்திருக் கிறான். எல்லாரும் சொல்லி, அதனால் அவன் எதையேனும் உணரச் செய்யப்பட்டிருக்கக் கூடும். சூரியகாந்தி எண்ணெய் ஐநூறு குடுப்பா என சொல்லிப் பார்த்துக்கொண்டான். சில தண்டுகள் மட்டும் அப்போது தோன்றின. ஆடு மாடுகள் மேய்ந்திருக்குமா. நகரத்து மாடுகள் கதம்பச்சரம் கூடத் தின்று பார்த்திருக்கிறான். கிராமத்து மாடுகளின் ருசி தெரியவில்லை. ஆனாலும் சில திருட்டு மாடுகள் நீண்ட நாக்கால் எட்டி வளைத்து பயிர்களை உருவிக்கொண்டு வரப்போரத்தில் புல் மேய்வதுண்டு. சூரியகாந்தியை மேயும் எந்த மாட்டையும் இவன் இன்னும் கண்டதில்லையாதலால் அவை பற்றிக் கருத முடியவில்லை. கிராமத்து சிறுமிகள் புதுசாய்ப் பார்த்து ஜே ஜே ஜே என்று சாமி தூக்கிப் போயிருக்கலாம். ஒண்ணு வாயால் பீப்பீப்பீ டும் டும் என்று சொல்ல நான்கு இவ்வாறு செய்யக்கூடும். இல்லை, அதற்குள் எள் காயைத் தின்பது போல சூரியகாந்தி விதைகளைத் தின்ன அறிந்திருக்கலாம். வரப்போர மாடுகளை விரட்டும் சாக்கில் செம்பட்டை பரட்டை மயிர் பறக்க கருத்த சின்ன மார்பையும் வயிற்றையும் காட்டிக் கையில் கொம்புடன் மடித்துக் கட்டிய பழைய சீட்டிப் பாவாடையில் திருட்டுப்பார்வை பார்க்காமல் சட்சட்டென்று சிலதைப் பறித்துப் போட்டுக் கட்டி மாடுகளை விரட்டியபடி புளியமர நிழல்களுக்குப் போய் கால்களை விரித்துப் போட்டு உட்கார்ந்து பாவாடையை முன்னால் பரப்பி பூக்களை கொண்டை சிலுப்பித் தின்றிருப்பார்கள். தின்னும் அவர்களைப் பார்த்து எங்கேயோயிருந்து சில மாடு மேய்க்க வந்த பையன்கள் அதில் உரிமை கோரக்கூடும். ஏய் ஏய் தாமே தரமாட்டேம் போடா தாமே ப்போடோ தாமேன்னா பையன்களுக்கு இப்பவே தெரியும் தங்களுக்கு பொம்மனாட்டிப் பசங்க கீழதான்னு. இவர்களை விட்டால் யார் பறிக்கக்கூடும். சில புதுப் பெண்கள் பறிக்கலாம். தலைக்கு வைத்துக்கொண்டு ஆம்பளையோட டவுனுக்குப் போய் அவளுக்கு புது சினிமா பார்க்கப் போயிருக்கக்கூடும். இதையெல்லாம் விட சிலரிடம் இருக்கும் பழக்கமும் காரமாகலாம். மற்றவர்கள் தலையில் குட்டுவது. கேட்டால் இளிப்பு. கையில் தட்டுப்படும் இலையை கொடி நுனியை பயிர் முனையை பூ மொக்குகளை பூக்களைக் கிள்ளிச் செல்வார்கள், ஏதோ அடுத்து அவசர வேலை இருப்பது போல. இப்படிப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனவியாதி என்ன என்பதை அறிய இவன் மிகவும் விருப்பம் கொண்டான். அவர்கள் பலஹீனர்களாயிருக்கக் கூடும். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாயிருக்கக்கூடும். ஏமாற்றமுற்றவர்களாகவும், இல்லை, பக்கக்கிளை கிளைக்கவேண்டும் என்பதற்காக நுனி கிள்ளும் அக்ரிகளாக இருக்கக்கூடும். இந்த ஆட்களை இவன் வெறுக்க விரும்பினான். சுற்றியும் தலையில் பூக்களுடன் ஆடும் மற்ற செடிகளிடையே பூக்களிழந்த செடிகள் என்ன மனப்பான்மையடையும். இவை தன் ஜீவ சத்தை கிள்ளிய இடத்திலிருந்து வடித்து காயத்தை ஆற்றத் தொடங்கலாம். சில பக்கப் பூக்களை சிறுத்துப் பூத்து எதிர்க்கக்கூடும். இல்லை, தண்டை காயவைத்து வேர்களை செயலற்றுப் போகச் செய்தும் மடியலாம். இந்த செடிகளின் செய்கைகள் பல சமயங்களில் இந்த மனிதர்களை தோற்கடிக்கச் செய்வன. இவன் இவைகளைத் தெரிய, தெரிவிக்க அதுவாய் ஆக விரும்பினான். இவைகள் குதூகலத்தை உண்டாக்குபவன். பறவைகள், பூச்சிகள். எந்த புழு அல்லது பூச்சி அல்லது கிளிகள் இதைத் தாக்கும் என அவர்கள் அறிவித்திருக்கலாமென நினைத்தான். இந்த எச்சரிக்கை வாசகங்களே மிகவும் சிரிப்பூட்டுவன. தாக்கும் அரிக்கும் தின்னும் இதற்காக அவர்கள் மருந்துகளை உற்பத்தி செய்கிறார்கள். விவசாயிகளே! இந்த - டாலை உபயோகியுங்கள், மாட்டுக்கோ மனிதர்களுக்கோ அபாயமில்லை. இது வேரிலிருந்து தளிர்வரை ஊடுருவும் புழு பூச்சிகளை அடியோடு நாசம் செய்கிறது. உங்கள் பயிர் பாதுகாப்புக்கு எங்கள் பணி. இவன் வர்த்தக ஒலிபரப்பு பாணியில் இன்னொரு முறை விவசாயிகளுக்கு அறிவித்து சிரித்தான். இந்தக் கலப்பினப் பயிர் எதிரிகளை சமாளிக்கிறது. பயிரிடுங்கள். யார் எதிரிகள். எதன் எதிரிகள். யாருக்கு. அவைகளின் உணவை அவை ஜீரணிக்க வருவதில் இவன் எவ்வித தப்பையும் உணர முடியவில்லை. இந்த வயிற்றுச் சாமிகளுக்கு, அவைகளின் வயிறு தெரியாமலே இல்லை தெரிந்தும் மரத்துப்போய், எதிரி என்பதை இவனால் நியாயப் படுத்த முடியவில்லை. மனிதர்கள் பெருகி நெருக்கிக் கொள்கிறார்கள். குழந்தைகள் சாகின்றன. கிழடுகள் சாகின்றன. நசுங்கி திணித்து நசுங்கி மனிதர்கள் சாகிறார்கள். எங்குமே மண் தெரியவில்லை. ஒருத்தன் முகம் நசுங்கிக் கிடக்கிறது. ஒருத்தன் இன்னொருத்தனை அமுக்கி நின்றபோது, இன்னுமொருத்தன் அவன் தலையை மிதித்து இருவரும் கீழே விழ அவர்கள் மேல் சமதளம் கிடைத்த மகிழ்ச்சியோடு பத்து நூறு ஆயிரம் மனிதர்கள் திணிகிறார்கள். இந்தப் பூச்சிகள் கண்ணுக்குத் தெரியும் கிருமிகளாகப் பறந்து அந்தக் காட்டை உணவாக்குகின்றன. ஒரு பூச்சி பறந்து போய் தன் உறவினர்களை நூறாயிரக்கணக்கில் இதோ விருந்து இதோ விருந்து என்று அழைத்து ... வானம் தெரியாமல் படை. இவன் சூழலை மறந்து வாய்விட்டு சிரித்தான் தான் அந்தப் பூச்சிகளிடையே இருப்பதாக சொல்லிக் கொண்டு சுற்றிலும் பார்த்தவர்களை பூச்சியாக பறந்து பார்த்தான். எங்கேடா உங்கள் பூச்சி மருந்துகள். சிரித்தான். பூச்சி எப்படி சிரிக்கும். இந்த சூரியகாந்திப் பூக்களைக் கேட்டால் தெரியும். ஒரு சூரியகாந்திப் பூ மற்றொன்றிடம் சொல்லக்கூடும். எனக்குத் தெரியாது. நான் சூரியகாந்தியாக ஆகவேண்டும். அது சொல்வதைக் கேட்டு, அதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டே நான் ஆனந்த்ஜியாக மாறவேண்டும் என இவன் நினைப்புற்றன். வீட்டுத்தோட்டத்தில் டிசம்பர், கனகாம்பரம் என செடிகள் சில காலங்களில் பூத்தாலும் அவை வறட்சியான நிறத்தினால் வெறுமையைத் தோற்றுவிக்கின்றன. சில மல்லிகைச் செடிகளும் பூப்பதுண்டு என்றாலும் அவை மொக்குகளாக இருக்கும் போதே பறித்து தண்ணீரில் மிதக்க விடுவதால் அவை பூத்து பார்க்கும் போது மஞ்சளேறி தரையில் கிடக்கின்றன. ஆனால் நிறைய மரங்கள். வேப்பமரம் மூன்று. பற்பொடி ஆகிவிட்டுத் திண்டாடும் நாட்களில் குச்சி ஒடிக்க முடிகிறது. தேன்காய் மரம் இரண்டு. பாதம் இலை மரம் இரண்டு. வாழை மரங்கள். கொருக்காப்புளி மரம், கிச்சிலி மரம். புங்கமரம், அசோக மரம். வெயில் காலங்களில் இவற்றின் கீழ் இருப்பது மிகவும் யோகத்தைக் கொடுக்கக்கூடும். இவன் பெற முடிவதில்லை . ஞாயிறுகளில் நண்பர்களைத் தேடி. மற்ற நாட்களில் மின்சார வெட்டினால் ஓடாத மின் விசிறிகளின் கீழே மாடியின் அனலில் வேலை செய்ய இருப்பது. இந்தக் கணங்களின் தொய்வை மாற்ற தினம் காலையில் தோட்டத்தில் ஒரு மணி நேரமளவு இருப்பது பூர்த்தி செய்வதாயிருக்கலாம். அழகான சிறுபறவைகள், வண்டுகள், பட்டாம்பூச்சிகள், அணில்கள், மரவட்டைகள், நத்தைகள், புழுக்கள், எறும்புகள், அப்போது இவன் அமானுஷ்யனாகிறான், அவைகள் பரபரக்கின்றன. அவைகளின் தேடலிலே உலகிலே இவன் தனித்திருக்கிறான். இவை என்னை மூழ்கடிக்கக்கூடும் துளித்துளியாக கரைத்து விடக்கூடும். இவன் கரையாமல் காப்பாற்றுவதாய் மரங்களில் சின்னக் குருவிகள் இலைக் காம்புகளில் தாவி இவனை இவனாக்குகின்றன. மரத்தைத் தட்டும் மரங்கொத்தி தன்னை நோக்கி வரும் அணிலுக்கு பயப்படாமல் வழி கொடுக்காமல் இருக்கத் தெரிந்திருக்கிறது. அணில் சுற்றி வளைத்து வந்து மூக்கை நீட்டுகிறது. மரங்கொத்தி அலகால் குத்தும் போது முகத்தை இழுத்து விடுவதன் மூலம் அணில் தப்பி மரத்தில் அந்தக் குத்து பதிகிறது. அணிலின் முகத்தில் அந்தக் குத்துப் பட்டிருக்குமானால் - இவன், முகத்தில் ரத்தம் பெருக கீச்கீச் சென்று கத்தி தரையில் விழுந்து சிதறி தாறுமாறாக ஓடும் அணிலை நினைப்புறுகிறான். இவன் நினைவை நடக்க முடியாமல் இரண்டாவது முறையும் அவை இதைச் செய்கின்றன. அணில் ஒரு தாவில் மேலே போய் விடுகிறது. இந்த மரங்கள் வெட்டப்பட்டு இந்த இடங்கள் கட்டிடங்களாவது இன்னும் பத்து வருடங்களில் நிகழ்ந்துவிடுமா . இந்த ஊரில் இப்போது புதுப்புது நகர்களென உண்டாக்கப் படுகின்றன. அப்போது இந்த நிகழ்ச்சிகளை கற்பனை செய்பவனும் இருக்க மாட்டான். அவனுக்கென்று பல்லிகளும் கொசுக்களும் ஈக்களும் மூட்டைபூச்சிகளும் கரப்பான்களும் பாச்சைகளும் எலிகளும் கிருமிகளும் அணுக்களுமே மிகுந்து நிற்கும் பறவைகளும் பிராணிகளுமாகலாம். இவனால் இந்த மரங்கள் அழிவதைத் தடுக்க முடியாது. இந்தச் சிறு பறவைகளும் அணில்களும் இல்லாமற் போவதை நிச்சயம் தடுக்க முடியாது. பட்டை பட்டையாய் உயரமான சிமென்ட் கட்டிடங்கள். நீண்ட சாலைகள், வேகமாய்ப் பறக்கும் வாகனங்கள், யந்திரங்கள். இவன் சின்ன அறையில் இவனை உண்டாக்கி இவனுக்காய் எழுதி இவனுக்காய் அவர்களுக்காய் எழுதியவர்களைப் படித்து இவன் சாகக்கூடும். இதோ பரந்திருக்கும் சூரிய காந்திப் பூக்களை இவன் காணாமற் போகலாம். வேறு ஏதேனும் நிலத்தில் வேறு ஏதேனும் நிறத்தில் எந்தப் பூ இருப்பதென இவன் தேடிப் போகக்கூடும் பங்களாக்களின் முன்பும் ஹோட்டல்களிலும் தொட்டிகளில் பூத்திருக்கும் செடிகளின் சோகை இவனை செய்யக் கூடியது என்ன என்பதை உணர முடியவில்லை. காடுகளை அழிக்க அழிக்க மறுபக்கம் காடுகளை உண்டு பண்ணுவதாகக் கூறப்படும் சம்பலின் பேஹட்டுக்களில் புகுந்தாலென்ன. இந்தக் கூட்டங்களை ஆரவாரங்களை வேஷங்களை இவன் கொல்ல முடியும். இவன் இவனை அடைய முடியும். இவனுக்கு நிறமில்லை. பேரில்லை. இவன் அப்போதுதான் மனிதனென உணரப்படுவானென நினைப்புற்றான். யாரால் உணரப்படக் கூடுமென்பது விந்தையாகக் கூடும். இவனோடு ஸ்பரிசம் காணும் நண்பர்களாலயா, இவனால் ஸ்பரிசப்படுபவர்களாலயா. சில நேரம் கண்களை மூடி தன்னை நிலைப்படுத்துபவனாகத் தோன்றியவன் மீண்டும் பஸ் ஜன்னல் வழியே பார்த்த போது அங்கே பெரிய ஆற்றுப் படுகை தோன்றியிருந்தது. நடுவில் ஒளிக்கீற்றாய் நீர் ஒழுகியிருந்தது. லாரிகளிலும் வண்டிகளிலும் எந்தக் கட்டிடத்திற்காகவோ ஆட்கள் வேகம் வேகமாய் மணலை கூடைகளில் வாரி நிரப்பு வதாயிருந்தனர். ஆட்கள் வேகம் போதாது. மெஷின் சுரண்ட மணல் காணாமல் போகலாம். நீர் காணாது போகும். பின், ஆறும். இவனும்தான். ஒரு சின்னப்பையன் தலையில் சும்மாடு வைத்து அதன் மேல் துணிகட்டிய பாத்திரத்தை, ஒரு கையால் அதைப் பிடித்துக் கொண்டு, மறுகையால் போட்டிருந்த நிஜாரை அடிக்கடி தூக்கிவிட்டபடி கால்கள் மணலில் புதையப் புதைய மறுகரைக்கு போக்கு காட்டினான். பரந்த மணல் வெளி இயற்கையாயிருந்தது. சில சமாதிக் கற்கள் தோன்றின. எரிந்து கிடந்த சாம்பல். ஆற்றோரமாய் ஏதோ கிராமம். இவன் தான் அணியும் வேஷங்களைப் பற்றி நினைப்பில் கொணர்ந்தான். ஏன் இவன் நினைக்கும் எண்ணங்களெல்லாம் ஒரு வேஷமாயிருக்கக் கூடாது. பாதை திருப்பத்தில் நிலை தவறி பஸ் கவிழ்ந்தது. ஜன்னல் ஓரத்தில் இருந்த இவன் மீது நிறைய பேர் விழுந்தனர். இறங்க வேண்டுமெனச் சொல்லி நடுவழியில் இவன் அவசரம் அவசரமாக இறங்கி வந்த வழியே நடக்க முற்பட்டான். ஆற்றைக் கடந்தால் அவை தெரியக்கூடும். பூக்கள். சோதனை, 1973                               10. கருவாடு   []   நீம கருவாட்டு லோனு போட்டுதாங் கருவாடு வாங்கணும் போலக்கீது.... என்றாள் ஒருத்தி. ஹேய். டுர்ரர் - என மாடு விரட்டுவதாய்ச் சிரித்தான் வாலு. ஒரு பத்து இருவது நாம் பொறுத்துக்கயேன். நாங்க இன்னா ராவோட ராவா குருவிக்காரங்க போல ஓடிப் போறவங்கன்னு நெனச்சியா - என்றாள் மற்றொருத்தி. ... செர்த்தான். அப்பிடியேப்பட்ட கருவோடு வோணும்னு இங்க யார்னா காஞ்சிகினா. கீறாங்க. போயேம் மே - மீசையை முறுக்கியபடி, அவள் இடுப்பில் வைத்திருந்த கருவாட்டுக் கூடையில் மூடியிருந்த கோணியைத் திறந்து பார்த்து முகர்ந்தவன் நாகப்பனென்பவன். ஒரு குடிசை தள்ளி, நிலம் பயிரிடும் எல்லன் வீட்டுத் திண்ணையில் உட்காந்திருந்த இளங்கோவுக்கு அதன் நாற்றம் வயிற்றைப் புரட்டியது. மூக்கைப் பிடித்து பிடித்து விட்டான். கூடிய சீக்கிரம் பிராணாயாமத்தில் தேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையும் அவனுள் துளிர்த்தது. சுற்றியும் நின்று மொய்ப்பவர்களின் வார்த்தைகளைச் சவடாலென ஆக்குபவளாய் முகவாய்க் கட்டையில் விரலூன்றி நின்று அதிசயிப்பவளாய், அந்தக் கூடைக்காரி இடுப்பின் பாரத்தைக் குறைக்கக் கூடையை மண்ணில் வைத்து மூச்சு விட்டாள். அந்த மூச்சில் விரிந்த பெரிய மூக்கு பொட்டு வாய் பற்கள் உடம்பு தெரிந்தது. ஒங்களுக்கு கடனெ குடுத்துட்டு நா ஈரத்துணிய தலையிலும் வவுத்திலயும் போட்டுக்கணுந்தான். என்னெப் பாத்தா நீமயும் வந்து விக்கறவளா தெரியலியா. கடனுக்கு வித்து மொதலுக்கு ஆர்கிட்ட போவறது. நல்லா கேட்டுட்டீங்களே சமுசாரிங்க - அத்தனை பேரையும் சாய்த்தவளாய், பல்லிடுக்கில் வெத்தலை சுண்ணாம்பு சிவப்பை மண்ணில் பீச்சி, பக்கத்தில் உட்கார்ந்தாள். ஒரு கணம் மௌனித்திருந்தவர்களும் தெம்பு பெற்று இனி எழ மாட்டாளிவளென உணர்ந்தவர்களாய், கூடையின் பக்கலில் குத்திட்டு, கோணியை விலக்கி உப்பு பூசி வெளுத்திருந்த நீளம் நீளமான மீன் சவங்களைப் புரட்டலானார்கள், பெரிசு தேடி. பத்துபலம் இரண்டு எனக் காட்டியது. முதலில் போணி செய்த பெருமையில், வாங்கியவள் விசித்திரமாய் நடை போட்டு தன் எதிர்க் குடிசையுள் நுழைந்தாள். பின் வரவேயில்லை. சற்று புதியவளென தோற்றத்தில் காண்பிக்கும்படியான மற்றவள் இருபது பலம் கேட்டாள். நீளமானவைகளை கோணியில் ஒதுக்கி கூடையினுள் சப்பையாக்கப்பட்டு அகன்றிருந்த மீன்சவங்களை அவள் ஆறு பெற்றாள். பின் மற்றுஞ்சிலர் பத்து, ஐந்து பலமென வாங்கிப் போயினர். ரெண்டு ரூபாவுக்கு வாங்கிப் போனவளென அதற்குள் பேசப்பட்ட, அவள் திரும்பி வந்தாள். தட்டைகள் வேண்டாமென நீளங்களையே பொறுக்கினாள். பத்துக்கு இரண்டென நின்ற அது இருபதுக்கு ஐந்தென நிறுத்தது. மீளச் சென்றவள் பின் வரவில்லை. விலை பெற, பத்து நாட்களுக்குப்பின் நெல்லுக்கே வருவது ஆதாயமெனுஞ்சித்தமிவள் போலும். இப்போது சிறிசுகளைத் தவிர, யாரும் வருவாரில்லையென சில நிமிடங்கள் நிதானித்திருந்தவள், தன் கூடையை மூடி, எழுந்து, இடுப்பில் அதை எடுத்துப் பொருத்தி அடுத்த தெருவெனும் சந்துக்குப் போகலானாள், இளங்கோவைக் கடந்து. கருவாடு என்பது வெறும் நாற்றமடிக்கக்கூடியது மட்டுமல்ல வென்பதோடு மணமுமிருப்பதாக நினைப்புற்றவனாய் ஆழ்ந்து வெளிக்காற்றை சுவாசித்தானிவன். அக்காற்று பெருமளவு அதன் மணங் கலந்து கனத்து நிலைத்திருந்தது. சில நிமிடங்கள் தொடர்ந்து சுவாசிப்பதில் பிரியமுள்ளவனாய் இருந்தான். பின் காற்று வறண்டது சாதாரணமென. ஞானரதம், 1973                                                   11. பற்கள்   []   இன்னிக்குத்தான் ஃபைனல்ஸ் என்றான் அவன். ஏன் என்றேன் நான், என் வேலையில் கவனித்திருந்து. என்னது, ஏன்? போன வாரம் செமி பைனல்சில் எங்க டீம் வின் பண்ணி இப்போ ஃபைனல்ஸ் இன்னொரு டீமோட. வரியா சாயங்காலம் அஞ்சு மணிக்கு. வாலிபாலா புட்பாலா என்று நான் கேட்க நினைத்தேன். ஆனாலும் புட்பால் மிகவும் விறுவிறுப்பான ஆட்டம் என்பதாக, அதுதான் என்று சொல்லிக் கொண்டேன். இரவில் அதை விளக்கு வெளிச்சங்களில் ஆடுகிறார்களா... இல்லையென்றுதான் தோன்றுகிறது. அப்போது வாலிபாலாக இருக்கக்கூடும். அவன் ஏதோ பேசி நின்றான். இந்த விளையாட்டுக்கள் நேரில் ஏமாற்றம். ஆறு மணியாகியும் அவன் ஏன் போகாமல் இருக்கிறான். அப்போது கவனித்தேன். அவன் கறுப்புநிற அரைநிஜார் பனியன் போட்டிருந்தான். தலை கலைந்து முகம் வெறுமையுடன் எண்ணெய்ப் பசையுடன் கறுத்திருந்தது. மணி ஏழாகியிருக்கும் எனத் தோன்றியது. நான் வீட்டுக்கு வந்தேன். உள்ளே அரவம் கேட்டது. மற்றவர்கள் யாரும் காணக் காணோம். முன் உள் அறையில் வளர்க்கும் கறுப்பு பூனைக் குட்டி எதையோ சீண்டி சீண்டி விளையாடியிருந்தது. அந்தப் பொருள் ஒரு பெரிய எலியாயிருக்குமென நினைத்தேன். அருகில் சென்று பார்த்தபோது அது மற்றொரு பூனைக்குட்டியோ என்ற நினைப்பின் மறுவினாடியே அது ஒரு நரிக்குட்டியோ நாய்க்குட்டியோ போலத் தோன்றியது. சின்னஞ்சிறு நாய்க் குட்டிதான். நாட்டு நாய்க்குட்டி. மயிர் முளைத்திராத மண்டையோடு மேடிட்ட கொஞ்சம் நீளமான முகம். அதுதான் நரிக்குட்டியின் தோற்றம் காட்டியது. அதன் கழுத்தின் ஒரு பக்கத்தில் பூனைக்குட்டி கடித்து ரத்தம் வழிந்திருந்தது. அது சத்தம் போடவும் இயலாமல் மிரள மிரள விழித்தது. கையில் எடுத்தேன். பூனைக்குட்டியை விட இது ஒரு மாதம் சின்னதாயிருக்கவேண்டும். பூனைக்குட்டி வாலை என் மீது உரசிக் கொண்டு, என் கையிலிருந்த நாய்க்குட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தது. நாய்க்குட்டியின் கழுத்து வலியால் ஒரு பக்கம் துவண்டு சாய்ந்திருந்தது. சுற்றிலும் பார்த்தேன். வீடு கழுவும் தென்னந்துடைப்பம் புதிதாக மூலையில் சாய்ந்திருந்தது. எழுந்து அதை எடுத்தேன். அதனால் பூனைக்குட்டியை ஒரு முறை அடித்தேன். அது விளையாட்டுப்போல தென்னங்குச்சிகளை இழுத்து பிறாண்டியது. ஆவேசம் வந்தாற்போல அதை அடிக்கலானேன். மூலையில் அது பதுங்கியது. ஓடாமல் நின்ற அதைக் கண்டதும், இன்னும் கோபத்துடன் வால் பதுங்கியிருந்த பின்னங்கால்களின் மீது ஓங்கி ஒரு அடி அடித்தேன். அது கத்தக்கூடச் செய்யாமல் அவ்வளவு மெதுவாக செல்வது ஒரு சாந்தத்தைக் கொடுக்க, அதை உதடுகளைக் குவித்துக் கூப்பிட்டேன். அது திரும்பவில்லை. நாய்க்குட்டி விழித்திருந்தாலும் சலனமற்றிருந்தது. அந்தக் காயத்திற்கு பெனிசிலின் ஆய்ன்மென்ட் போடலாமென்று நினைத்தேன். பிறகு அதை எடுத்துச் சென்று உபயோகப் படுத்தாத பின்பக்க தண்ணீர் தொட்டியில் சத்தைகளின் மீது விட்டேன். அது வலியினால் சுழன்றது, வட்டமடித்தது. இன்னும் கழுத்தை உடைத்துக்கொள்ளப்போகிறது. அதை அதட்டினேன். பேசாமல் மூலையில் படுத்துக் கிடயேன். அதட்டலுக்கு பயந்தாற்போல் மூலையில் கால்களில் முகத்தை வைத்து என்னைப் பார்த்து படுத்தது. பூனைக்குட்டியைத் தேடினேன். அது சமையல் கட்டில் அம்மியின் மீது குழவியின் மேல் சாய்ந்து உட்கார்ந்து வெறித்திருந்தது. அதன் தலையில் தடவி விட்டேன். அது ஓசையேதும் கூட கொடுக்க மறுத்தது. அதன் கண்களில் இமையோரத்தில் நீர். அதன் இமையை அழுத்தி வழித்தேன். கண்ணீர் உருண்டு விழுந்தது. அதை கெஞ்சினேன், மன்னித்து விடும்படி . மிகவும் பலமாக அடித்து விட்டேன். அதன் உதடுகளைப் பிரித்து அதன் மகிழ்வான ஓசையை வெளிக்கிளப்ப முயற்சித்தேன். வாயை இறுக்க மூடியிருந்தாலும் இரு பக்க சிங்கப்பல் மட்டும் தெரிந்தது. மேலும் அன்புடன் முயற்சித்து, அதன் வாயைத் திறக்க முற்பட்டேன். அது மிகவும் பிடிவாதம் காட்டுவதாயிருந்தது. யார் செயலை யார் மறந்தார்களென இருவரும் மறப்போமென காதருகில் மெதுவாகச் சொன்னேன். மீள தலை முதுகு நீவி விட்டு முகவாயைத் திறக்க முயற்சித்தேன். உதடுகள் பிரிந்ததும் அதன் பற்கள் அதன் அழுகையை வெளிக்காட்டின. அவை பழுப்பேறியிருந்தன. அதனுடன் சேர்ந்து நான் அழுபவனாய் உணர்ந்தேன். அதன் ஊசி ஊசியான பற்களுக்கும் பின்னால் இன்னொரு கடைவாயில் வரிசையில் அழகான பற்கள் தெரிந்தன. மற்றவையனைத்தும் தோற்றமழிய அவை அழுதிருந்தன. என் பற்களின் உள்ளேயும் இன்னொரு கடைவாயும் பற்களும் உள்ளனவா என சந்தேகம் வரவும் திகைப்புற்றேன். அந்த உள் பற்கள்.... சந்தேகமில்லை. மேலும் திகைத்தவனாய்க் குழம்பினேன். என் வெளிப் பற்களிள் உள்தள்ளி இன்னொரு கடைவாயும் பற்களும் இருக்கவேண்டும் எனும் நினைப்பின் தோற்றம், என் பற்களை தாண்டி விரலை விட்டு நீவினேன். மற்றொரு வரிசை நிரடியது. அவை நான் காணத் தெரிந்தனவாய்த் தோன்றின. அந்தப் பற்களுடன் இந்தப் பற்களும் அழுதிருந்தனவாய்ப் பார்க்க நான் உருவிழந்தேன். நான் எங்கே என யார் எங்கிருந்து அலறுகிறான்... பற்களும் பற்களும் வியாபித்தன. வெண்மையாய் அந்த சூழ்ந்த இருளில் பற்கள் மட்டும். பற்கள் பற்கள் பற்கள் யாரோ உள்ளிருந்த குரலில் தீனமாய் ஜபிக்கிறான் பற்கள் பற்கள் பற்கள் ஞானரதம், 1973                         12. செவ்வகம்   []     இதுவும் பெட்டை நாய்க்குட்டியாகப் போய்விட்டது . என்று சொல்லப்பட்டபோது எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆண் நாயாக இல்லையே என்று. ஆண் குழந்தையாகப் பிறக்கவில்லையே என்ற வருத்தமும், ஆண் குழந்தையாகப் பிறக்க கர்ப்பிணிகளுக்கு வாழ்த்தும் ஏளனச் சிரிப்பைத் தரும் நிலையில் இவ்வருத்தம் வந்ததற்கு அதை ஆணாக முன்பு சொல்லக் கேட்டிருந்தேன். மனிதர்களைப் போலில்லாமல் ஆண் பெண் உறவு பற்றிய விழிப்புமில்லாமல் இது வளர்ந்து நான்கைந்து குட்டிகளைப் பெற்றுத் தள்ளுமே என்பதும் இயலாமைக்கான வருத்தமளித்தது. ஆனாலும் நண்பன் ஏகாம்பரம் தஞ்சையில் பாலுவின் அண்ணா குழந்தை செளம்யாவிற்கு சொன்ன நாய்க்கதை உண்மையானால் இதற்கு வருத்தப்படத் தேவையில்லை. ஒவ்வொரு நாயும் குதிரை உயரம். எதற்கும் அவன் அசைய வேண்டாம். ஒரு நாய் தண்ணீர் கொண்டு வரும். இன்னொன்று டூத் பிரஷ்ஷில் பேஸ்டை அழுத்திக்கொண்டு வந்து பல் தேய்த்து விடும். இன்னொன்று வெந்நீர் போட்டு உடம்புக்கு ஊற்றித் தேய்த்து விடும். இன்னொன்று துடைத்து விட்டு டிரஸ்ஸெல்லாம் மாட்டிவிடும். கண்களை அகல விரித்து என்னையும் பாலுவையும் செளம்யா பார்த்தது. சிரிக்கக்கூடாது. நாய் முதுகில் ஏறிக் கொண்டுதான் ஆபீஸிற்குப் போய் வருவேன். ராத்திரி பெட் போட்டு படுக்க வைத்து முதுகில் தட்டித் தூங்க வைக்கும். இன்னும் எல்லாமே. செளம்யாக்கண்ணு மாமா சொல்றது பொய் என்றான் பாலு. இல்லை உண்மைன்னேன் நான். மிஸ் என்னை அடிச்சா ஒங்க நாய் திருப்பி அடிக்குமா என்று ரொம்ப சந்தோஷத்தோடு குழந்தை கேட்டது. ஆனாலும் இந்த நாய்க்குட்டி சேர்க்கையும் சுமப்பதும் பெறுவதும் கூச்சப்பட்ட அல்லது வெட்கப்படத் தக்கதென நினைக்குமா . ரோட்டில் வளைய வரும் நாய்களைப் பார்க்கும் போது அப்படியில்லையென உணர வைக்கப்படுகிறேன். மனிதர்களுக்கு அறிவு வளர்ந்ததால் கூச்சமா அறிவு வளராததால் கூச்சமா தெரியவில்லை. மாம்பிஞ்சுகளுக்காகக் கல்லெறியும் சிறுவர் சிறுமியர் ஒவ்வொரு பிஞ்சும் விழுந்தபோது நானடித்த கல்லில்தான் விழுந்ததென உரிமை கொண்டாடினர். தினமும் இங்கு வரும் நீ நான் வருவதற்கு முன் என்ன செய்திருந்தாய் என்கிறான் நண்பன். நீ வருவதற்கு முன்பும் இதையே செய்து கொண்டிருந்தேன் என்கிறேன். நாம் பேச வேறு என்ன தடையாக இருக்கிறது. சரியான இடத்தில் வந்துவிட்டாய், ஆனால் எது தடுக்கிறது, எந்த நிழல், நிழல்கள் எதிரெதிரே கூடுமே. கொடுக்கப் படாதவை எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பேசு அல்லது பேசுகின்றேன். வா அல்லது வருகிறேன். கொடுக்க ஆரம்பித்து விடு. நானும், இந்த மாலை நேரங்களை தவறாமல் சினிமா போகும் ஒருவனுடன் போக்கிவிடலாம். படிக்கத் தெரிந்த ஒருவனுடன் ஒப்படைத்துக் கொள்ளலாம். ரேடியோவைத் திருகி, தெருவை வேடிக்கை பார்த்து, பார்க்கப் போய் பார்க்கப்பட்டு, இரண்டு பேரும் ஒன்றாக வந்தால் போனால் தெருவில் வீடுகளில் தலைகள் முளைப்பதும் உண்மை . முகவாயைத் திருப்பி அவனா அவளாவெனக் கேட்கும் கிழவிகள். உண்மை . நாங்கள் போனால் கூட, நீ கேட்கிறாய். நீ போனால், நீ போனாலும் பார்ப்பவர்களைக் கவனிக்க எனக்கு நேரமில்லை. இது உண்மையா. பல நேரங்களில் உண்மை. தனியனாய்ப் போகும் நான் யார் யாரால் யார் யாராக உணரப்படக்கூடும். தெரு நாய்கள் அருகே வந்து துணியை முகர்ந்து என் முகத்தைப் பார்க்கின்றன. என் கண்களைக் கண்டு விலகின. முகர்ந்து பார்க்க முடியாது கட்டப்பட்டவை சங்கிலியை இழுத்துக் கொண்டு குரைத்து எக்கின. நான் கடந்துவிடுகிறேன். தெரு முனையில் அரையிருளில் இருக்கும் இளைஞர்கள் வீட்டு வாயிலில் நிற்கும் பெண்கள். திண்ணையில் பேசும் ஆண்கள். இவர்களை நான் உணர்வதால் பார்க்கிறேன். என்னைப் பார்க்கிறார்கள். பார்க்காதது போல் இரு சாராரும் செய்து கொண்டிருக்கிறோம். நான் செல்வது அசந்தர்ப்பமான நேரமென உணரும் வேளையிலேதான் அவர்கள் பார்க்கிறார்கள். நீ கொஞ்சமும் அலட்டிக்கறதேயில்லை என்றான் வழியில் ஒருவன். நான் பார்க்கப்படுவதை உணராமலே சென்ற கணத்திலே இது நிகழ்ந்தது. ஒரு அதிர்ச்சி. எனினும் நான் சூழலை மறந்து செல்கிறேன். சூழல் என்னைக் கவனிப்பதாயிருந்தாலும், கவனிப்பதாய் சொல்வது பொய்யானாலும், யார் யாரை எது எதை நிகழ்த்துகிறார்கள் நிகழ்த்துகிறது. என்னுடைய வேலை என்ன, நான் என்ன செய்ய வேண்டும், நான் வசிக்கும் உலகை யுத்தத்திலிருந்து காப்பாற்றவேண்டுமா? சேரவேண்டுமா? எது லட்சியம்? உலகத்திலிருந்து விழுந்து என் வயிறு பசிக்கிறதென அலையும் நான் வேறு எதற்கு அலைவேன்? பசியைத் தீர்த்துக் கொண்டதும் எழும் உணர்வுளைத் தணித்துக் கொள்வதற்கு. பிறகு, எனக்கு வயது அதிகம். நேரம் அதிகம். பறவைகள் மிருகங்கள் மரங்கள் என்ன செய்கின்றன. உணவைத் தேடி அலையும் உயிர்களை அலட்சியம் செய்துவிட்டு எதை நிவர்த்திக்க அலைகிறேன். எத்தனையோ நூற்றுக்கணக்கான ஆயுளைப் பார்த்திருக்கும் இந்த மண்ணில் இத்தனை நூற்றுக்கணக்கான ஆண்டுகளை யார் அனுபவித்தார்கள். நான் மேன்மை அடைந்திருக்கிறேன் என்பது உண்மையானால், நான் மேன்மை அடையவில்லை என்பதும் உண்மையாகிறது. நடந்ததெல்லாம் பொய்யாகிறது. நான் நடப்பது பிறகு பொய்யாகி விடும். ஆனாலும் எனக்குப் பொழுதைப் போக்கவேண்டும். என் முடிவு தெரியாத ஆயுளை முடித்துக்கொள்ள வழிகளைத் தேடுகிறேன். அதில் என்ன உன்னதமானது, ஒரே காட்சியின் கால்மணிப் போதில் நவரசங்களையும் காட்டி எனக்கு அசடு வழியும் நாடகமும் பலருக்கு ரசனையாய் இருக்கிறது. நான் அவர்களுக்குப் புரியவில்லை எனில், நான் எதனுடைய கோணம், அவர்கள் எதனுடைய கோணம், மற்ற உயிர்களுக்கு இல்லாத உருவான பிரச்சினைகள் மனிதனுக்கு உண்டா? ரேடியோ நாடகங்கள் பத்திரிகை அணுகுண்டு இல்லாத காலத்திலும் மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்ததா. மனிதன் தான் வளர்ச்சியடைந்திருக்கிறான் அல்லது மாறிக்கொண்டே இருக்கிறான். மற்றவை மனிதனின் மாற்றத்தையொட்டி சூழல்களை மட்டுமே மாற்றமாக்கப்பட்டு அதையும் உணர்ந்தனவா உணரப்பட செய்யப்பட்டனவா தெரியவில்லை. இருந்து வருகின்றன. ஆனால், மனிதர்களின் பாதிப்பில்லாத புத்திசாலித்தனமான ஆரவார பேச்சுகளையும் நடத்தையையும் பார்க்க அருவருப்பாய் இருக்கிறது. என் காலடியில் வளைய வரும் நாய்க்குட்டி நிறைவைத் தருகிறது. வேஷம் போடாத்தன்மை. எத்தனை நூற்றாண்டுகளாகியும் மற்ற உயிரினத்தின் உரிமையாய் இருக்கிறது. நான் யோசிக்கத் தெரிந்தவன். சிரிக்கத் தெரிந்தவன். எழுதத் தெரிந்தவன். வாகனங்களை கொள்கைகளை ஆயுதங்களை ஆக்கங்களை அழிவை உண்டாக்க தெரிந்தவனுக்கு இந்த இயல்பை ஏன் பெறத் தெரியவில்லை. அடையவில்லை. மனிதனின் இயல்பு என்ன. எவ்வாறு அது நிகழும். மனிதனின் இயல்பு காட்டுமிராண்டி நிலை அல்லது அதிலிருந்து வளர்ந்த நிலை எனில் இவற்றினூடே இருக்கும் இயல்பு என்ன . ரசனை அழகு கலை பேச்சு வாழ்வு வெட்கம் சண்டை நீதி தெரிந்து கொள்ளும் பகுதி விகுதி தெரிந்து கொள்ளும் பூஜ்யம் தெரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் மட்டுமேயா? மீண்டும் இவ்வுலகை புதிய பார்வையோடு வியக்க குழந்தையாக வேண்டுமெனில் குழந்தைதான் வளர்ச்சியா, இயல்பா. மலை முகட்டில் ஆற்று வெளியில் கடல் பரப்பில் சிறையில் பின் என்னெதிரே உயரமான மதில் சுவற்றின் உச்சியிலிருந்து மயக்கமான வெளிச்சத்தினூடே வளரும் நிலவை ஏன் விஞ்ஞானம் மறைக்கவில்லை என் கண்களிலிருந்து. ஒவ்வொன்றும் எந்திர பூர்வமாய் ஆவதிலிருந்தும் எது நிறுத்துகிறது. அந்த எதுவை இன்னும் எது எது மறைத்து மனிதனை இயல்பை மாற்றியுள்ளது. என்னுடைய இயல்பு என்ன. என்னை எவை எவையோ உருவாக்கி வரும்போது எனக்கு இயல்பு தனியாக உண்டா. நான் உரிமைகளைப் பற்றிச் சிந்திக்கிறேன். வாழ்வைப் பற்றி, சாவைப் பற்றி, வறுமைப் பற்றி, மந்திரி பற்றி, தெருவில் போவதைப் பற்றி, அடுத்த பத்தாண்டுகளைப் பற்றி. இவை எப்படி என்னைப் பாதிக்கின்றன. நான் என்னைப் பற்றிச் சிந்திப்பதுதான் இயல்பா. என் கொள்கைகளை மற்றவர்கள் ஏற்க வேண்டுமென்பதா. நான் மறைந்தாலும் என் பிணத்தை மற்றவர்கள் சுமக்க வேண்டுமென்பதா. உணவுக்காக காலைச் சுற்றும் நாய்க்குட்டி தலையைக் கால்களுக்குள் புதைத்து பக்கத்தில் சரிந்திருக்கிறது. இது நான் பார்த்து வளரும் எத்தனையாவது நாய்க்குட்டி. நான் யார் பார்த்து வளரும் எத்தனையாவது மனிதன். பிரக்ஞை, 1975                                             13. வளமை   []     ஊரில் இன்னும் மழை சரியாக பெய்யவில்லை. ஏரியில் இருக்கும் தண்ணீர் ஒரு வாரத்திற்குக் காணாது என்றான் மொழுதி. இங்கே டவுனில் தினம் மழைதான். எதற்காகப் பெய்கிறது, இங்கே போய் என்றான் இளங்கோ. முன்போல பருவத்தில் எதுவும் நடப்பதில்லை. காலம் கெட்டுக் கிடப்பது போல் தூறல் விழுவதும் கெட்டுப்போயிற்று. உள்ளடியில் இருக்கும் நிலத்துக்காரர்களாவது கொஞ்சம் தூறினால் கூட பிழைத்துக் கொள்வார்கள். ஏரிக் கால்வாயில் தண்ணீர் வந்துவிடும். திருத்துவில் மேட்டுக்கு அப்படியும் வராது. என்றைக்கு ஆற்றிலிருந்து காவாய் வெட்டிவந்து ஏரிக்கு வந்து... மூச்சு விட்டார்கள் இருவரும். கிராமத்தில் ஒவ்வொரு குடும்பமும் சிதறிவிட்டதும், சிதறுவதுமாய்யார் நிலத்தை கவனிக்கிறார்கள். இனிமேல் போய் படித்து உத்தியோகம் பார்க்க முடியாதவர்களும் மாடு கன்று வீடு மனை காடுகரம்பு சொந்தப் பயிரென்று இருப்பவர்களும்தான் கிராமத்தில் இருக்கிறார்கள். கூட முக்கால்வாசிப்பேர் வாத்தியார்களாகிவிட்டு எந்தெந்த கிராமங்களுக்கோ போக வேண்டியதாகி விட்டது. அப்படியும் இப்படியும் பார்த்தால் வயசானவர்களும் வெளியே போகாதவர்களும்தான் கிராமத்தில் அதிகமாக இருப்பார்கள் போலிருக்கிறது. இந்த அழகில் யார் இனிமேல் போய் அங்கு உட்கார்ந்து கொண்டு நிலத்தையும் பயிரையும் கவனிக்கப் போகிறான். உழறவன் கணக்குப் பாத்தா உழவுக் கூலிகூட மிஞ்சாது என்பது இப்போதுதான் மிகவும் பொருந்தி வருகிறது. எல்லாவற்றுக்கும் பணத்தை முதலில் வைக்க வேண்டும் என்றால், கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு காகிதத்திற்கு எங்கே போவது? கூலி முதற்கொண்டு ரூபாயாகத் தரவேண்டுமென்பது சம்சாரிகளால் முடியாத காரியம். நெல்லாக கொடுத்துத்தான் பழக்கம் இத்தனை மரக்கால் கூலி என்று. நிலத்தில் காலை வைத்து விட்டு மணிபார்த்து வேலை செய்ய முடியுமா. வரவர இந்த ஆட்கள் ஆபீசிற்கு போகிறாற்போல பத்து மணிக்கு இறங்குகிறான். மத்தியானம் வேறு இரண்டு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறான். எப்போதுடா வெயில் இறங்குமென்று பார்த்துக்கொண்டே கரையேறி விடுகிறான். எப்படி இப்படியிருந்தால் உருப்படுவது. இவ்வளவு நேரம் கண்டிப்பாய் வேலை செய்ய வேண்டுமென்று சட்டத்தைக் காணோம். மீதிக்கு மட்டும் நான் முன்னே என்று வந்து விடுகிறார்கள். ம்... ம்... ஆமாம். அந்தப் பயல் என்ன ஆனான். இரண்டு வருடத்திற்கு முன்பு எருவிற்கு பணம் இல்லையென்று வாங்கிப்போனான், முதல் போகத்தில் தந்து விடுகிறேனென்று. ஆளும் மாறியாயிற்று, நிறைய விளைய வேண்டும் என்று அக்கறையோடு பாடுபட்டால் தானே... ஏதோ வந்தவரைக்கும் நீ பாதி நான் பாதி என்று இருந்தால், ஆமாங்க, நீங்க சொல்றது வாஸ்தவம்ங்க. ஆமாங்க. சரிங்க. நீங்க சொல்றது வாஸ்தவம்ங்க, எங்கேங்க நடக்குது. ஆமாங்க. ஆமாங்க. அப்பிடித்தாங்க சொல்றாங்க. என்னங்க செய்யிறது யாருங்க கேக்கறது. கலி முத்திப் போச்சிங்க. இஷ்டம் போலத்தாஞ் செய்வோம்ன்றானுங்க ஆமாங்க. அப்பிடித்தாங்கயிருக்குது. நம்பளுக்கு எங்கேங்க புரியுது. என்னமோ சொல்லிக்கிறாங்க. நோவாம நோம்பு கும்பிட முடியுமா. கஷ்டப்பட்டாதாம் பூமாதேவி கண்ணெத்தொறப்பா. ஆமாங்க. ஆமாங்க. ஆமாங்க. ஆமாங்க. இருவருக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது அறுபதை நெருங்க சில வருடங்கள். வெறும் கையில் முழம் போட்டு என்ன லாபம் என நினைத்துக்கொண்டே பேசினார்கள். வர்ற வரைக்கும் லாபம். சண்டை போடாமல், கெடுபிடி செய்யாமல் எது செய்வதாயிருந்தாலும் சொல்லிவிட்டு செய்வதுதான் முறை. யாருடைய கஷ்டமும் யாருக்கும் வேண்டாம். இதிலே மறைத்தா பணக்காரனாகி விடப்போகிறோம். நீ நூறு நான் நூறு, எதுவாகயிருந்தாலும் பாதிப் பாதி. மற்ற கூலி வகையறாவெல்லாம் பொது இல்லை அவன் பாதியிலிருந்து கொடுக்க வேண்டியதுதான். அதுதான் ஊர் நடைமுறை. சும்மாயிருந்தால் இரண்டு பேரும் தானே பட்டினி கிடக்க வேண்டும். இரண்டு வருடத்திற்கு முன்னால் மழையில்லாமல் போய் அரிசி வாங்கி சாப்பிடும்படியாகிவிட்டது. விதை நெல்லைக் கூட விட்டு வைக்கவில்லை. மாட்டுக்கு வைக்கோல் கூட இல்லாமலாகி விட்டது. பாங்குகளில் கடன் வாங்கியவர்கள் கடனும் திருப்ப முடியாமல் வட்டியும் செலுத்த முடியாமல் கொஞ்சம் நிலத்தை விற்று விட்டார்கள். அவர், அவர்கூட, அவர்கூட. கிராமம் என்றால் எல்லாரும் வளமையாகயிருக்கிறதென நினைத்துக் கொள்கிறார்கள். டவுனிலிருப்பவர்களாவது காசு கொடுத்து வேண்டியதை எப்படியாவது வாங்கிக் கொள்ளலாம். இங்கே பணமும் இருக்காது. இருந்தாலும் எதையும் வாங்க முடியாது. மாடும் மனிதர்களும் குன்றிப்போய் உலவிவருவதே பெரும்பாடு. தண்ணீருக்கு படும் அவஸ்தை. வாயில்லா ஜீவன்கள் பாடு மிகவும் கேவலம். இரண்டு பேர் உடம்பிலும் வலு குன்றிவிட்டது. தாலி கட்டின பெண்டாட்டி மாதிரி. விற்கவும் முடியாமல் ஓடவும் முடியாமல் கெளரவப் பிழைப்பு. சேரியே காலியாகிவிட்டது. எங்களைப்போல் சம்சாரி ஓட முடியாமல் இருந்தது போல மற்றவர்களுக்கு இல்லை. நிலத்தைப் பாராட்டியிருந்தவனெல்லாம் கூட எங்கேடா கூலி வேலை கிடைக்கும், மூட்டை தூக்கும் வேலை கிடைக்குமா. எந்த வேலை கிடைக்குமென குழந்தை குட்டிகளோடு அப்படி அப்படியே குடிசைகளை குட்டிச்சுவர்களாக விட்டுவிட்டுக் கிளம்பிப் போயிருந்தார்கள். போனவர்களில் பாதிப்பேர்கூட பழைய ஆசாமிகள் வரவில்லை. தினம் அல்லது மாதம் ரூபாய் நோட்டுகளைக் கையில் பார்த்தவுடன், கிராமத்திற்கு ஏன்டா போக வேண்டும் வருடம் 365 நாளும் பாடுபட்டாலும் ஒழுங்காக கூழ் கூட குடிக்க முடியவில்லை என்ற நினைப்பு வந்துவிட்டது. கொஞ்சம் நிலம் சொந்தமாக வாங்கியிருப்பவன்தான் திரும்பவும் மண்ணைக் கிளறிப் பார்க்கலாம் என வந்திருக்கிறான். திரும்பவும் என்னடா வென்றால் சோதனை போல சரியாக மழை இல்லை. தாக்குப் பிடிக்கும் போலத் தெரிந்தாலும் பழையவற்றை நினைத்தால் பயமாக இருக்கிறது. புதிது புதிதாக என்னென்னமோ சொல்கிறார்கள். புரியவும் இல்லை. ஒன்றும் செய்ததாகவும் காணோம். நேரம் காலம்தான் வீணாகப் போய்க் கொண்டே யிருக்கிறது. என்ன செய்தோம். என்ன செய்கிறோம். ஒன்றும் புரியவில்லை. சரியாக சொன்னாய். கரெக்ட். ஆமாம். என்ன பண்றது. அப்படித்தான்யிருக்குது. புரியல்லே போ. என்ன செய்யலாம்ன்றே என்னமோ செய்ங்கய்யா. எங்கேயும் அப்படித்தான்யிருக்குது. கஷ்டத்தை சொன்னா கேக்க முடியாது. ஒன்றும் புரியல்லே. என்னமோ செய். "மகிழ்ச்சி! மிக்க மகிழ்ச்சி!! விவசாய பெருங்குடி மக்களே, எங்கள் வேண்டுகோளுக்கிணங்க தாங்கள் இந்த பருவத்தில் நாற்று விட்டிருப்பது காண மகிழ்ச்சி! எங்களுடன் ஒத்துழைத்தமைக்கு நன்றி. மேலும் செய்ய வேண்டிய பயிர் பாதுகாப்புக்கு கீழ்க்குறித்தபடி உரமிடுங்கள். அல்லது எங்கள் அலுவலரை ஆலோசனை பெற சந்தியுங்கள்." விளம்பர காகிதத்தை யாரோ வினியோகித்து சென்றான். இன்னொரு தபா படிப்பா. படித்தார்கள். ன்னா அப்பாவு. நாம்பளும் இங்கதானே கீறோம், நம்ப கிராமத்துல வெதப்பாடு தான். நாத்து நடவுன்னா அவுங்க சொல்றத கேக்கலாம். நாம்ப யின்னா செய்றது. ஆரப்போயி பாக்கணுமாம். வாங்கிப் போடறாப்பலயா மூட்டெ எருவு விக்குது. என்றைக்கு ஊரில் விதைக்கப் போகிறார்கள். கார்தானே. அதுதான் மண்ணுக்கு எடுக்கும். கடைசியில் விதைக்கக் கூடாது. பார்க்கலாம். மழை பெய்யாமலா போகப் போகிறது. எத்தனை வண்டி எரு அடித்தது. இருபது போதுமா. கூட ஒவ்வொரு துண்டுக்கும் இரண்டு மூன்று வண்டி அடித்தால் நன்றாயிருக்கும். பசுந்தழை அடிக்கலாம். இவனுக்கு அவனுக்கு என்று துண்டு துண்டாக போன தடவை போல விடக்கூடாது. முடிந்தால் மொத்தமும் பயிரிட வேண்டும். எல்லா துண்டிலும் ஒரே சமயத்தில் விதைக்க வேண்டும் அப்புறம் அறுவடையின்போது எடுபக்கம் பச்சையாயிருக்கிறது. ஒரு வாரம் போகவேண்டும் என்றாகிவிடக்கூடாது. மூட்டை எடுக்கும்போது வந்து பாதி பணத்தை வாங்கிப் போய் மூட்டையை நேராக கழனிக்கு எடுத்துப் போக வேண்டும். மாமாவைப் பார்த்தால் விசாரித்தேன் என்று சொல். சரி, சாப்பிடுகிறாயா குழம்பும் பழையதும் நிறைய இருக்கிறது. இலை போடும்மா என்றான் இளங்கோ . வேண்டாம் சாமி என்றான் மொழுதி. ஏன். நம் வீட்டுக்கு வந்தால் யாரும் சாப்பிடாமல் போக மாட்டார்கள். எங்கள் வீட்டிலேயே நான் பழையது சாப்பிடுவதில்லை. உடம்பிற்கு ஒத்து கொள்வதில்லை என்றான் மொழுதி. அப்ப வரட்டுமா. வா. சதங்கை, 1976                                             14. வாய் அரிசி   []     மூன்று மாதத்திற்கு முன் நன்றாக இருந்த இவனப்பாவின் பெரியம்மா ஒரு வாரமாய்ப் படுத்திருந்து செத்துப்போனதாக கிராமத்திலிருந்து ஆள் வந்திருந்தது. சாதாரணமாக ஒவ்வொரு முறையும் எந்த ஒரு கல்யாணம், விசேஷம் அல்லது சாவு பற்றிய செய்தியின் போதும் யார் போய் வருவது என்பது சிறு பிரச்சனையாகவே இருந்தது. இம்முறையும் எழுந்தது. அம்மா எங்குமே போவதில்லை. அப்பா போனால் உடம்புக்காகாது. யாரும் போகாமலும் விட முடியாது. பெரிய சாவு. கடைசியில் இவன்தான் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு போக வேண்டிய தாயிற்று. கிராமத்திற்குப் போவதை இவன் எப்போதும் விரும்புபவனாயிருந்ததால் இந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த முடிந்தது. மேலும் இவனுக்கு புத்தி தெரிந்து கிராமத்தில் நடக்கும் ஒரு சாவுக்கு போவது இதுதான் முதல் தடவையாக இருந்தது. பத்து மைல் தொலைவிலுள்ள கிராமத்திற்கு சைக்கிளில் போகலாம். ஆனால் போகும்போது இருக்கும் எதிர்க்காற்றை உத்தேசித்து பஸ்சிலேயே போனான். ஊரின் எல்லையில் இருக்கும் மண்டபத்தருகில் இறங்கி கிட்டத்தட்ட ஒரு மைல் நடக்க வேண்டும். இவன் சாவு நடந்த வீட்டை அடைந்தபோது இவனைப்போல் பலரும் ஆங்காங்கிருந்து வந்து கொண்டிருந்தார்கள். இவனுடைய மாமா இவனைக் கண்டு தலையாட்டினார். இவன் அவரருகில் போய் என்ன மாமா என்றான். சாப்பிட்டியா என்றார். ஆச்சு என்றான். மாமாவின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு நின்றான். இருவரும் சிறிது நேரம் பேசாமல் நின்றனர். உள்ள போய் வரணுமா என்றான். போய் வா என்றார். போய் தலையைக் காண்பிச்சுட்டு இங்க வந்துவிடு. இவனும் தலையாட்டி விட்டு சாவு நடந்த வீட்டின் முன்புறம் சென்றான். இவனுக்கு அண்ணன் முறையாக வேண்டிய செத்துபோன பாட்டியின் மகன் வாசல் திண்ணையில் சோர்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார். இவன் போய் அவரருகில் நெருங்கி உட்கார்ந்து எப்போ என்றான். நேத்துல்லாம் கூட நல்லார்ந்தாங்க தம்பி. காலையில்தான். ஆனா ஒரு வாரமா கொஞ்சம் மோசம்தான். வயசாச்சி என்றார். வேறு ஒன்றும் விசாரிக்கத் தோன்றவில்லை. தெரியவில்லை என்றும் நினைப்புற்றான். உள்ளேயிருந்து பெண்களின் அழுகை பெரிதாகக் கேட்டது. இன்னும் சிலர் உள்ளே புதிதாக நுழைந்திருந்தார்கள். ஊர் குடியானவப் பெண்களும் ஆண்களும் வாசலில் ஒருபக்கமாக கையைக் கட்டிக்கொண்டும், முகவாயில் கையூன்றியும் அவ்வப்போது ஓரமாக வெத்திலை எச்சிலை பீச்சி பாவமாய் நின்றிருந்தனர். மேலும் கூட்டம் அதிகமாவதற்குள் உள்ளே போய் வந்துவிட வேண்டும் எனத் தோன்றியது. அதற்குள் அண்ணனே போய் பாட்டியப் பார்த்துட்டு வந்து உக்காந்துக்க தம்பி என சொல்லிக் கொடுத்தார். இதனால் தயக்கம் இன்னும் அதிகமாக மேலும் சில நிமிடங்களை உள்ளே எட்டிப்பார்த்து கூட்டத்தை அளவெடுப்பவன் போல செலவழித்துப் பின் உள்ளே நுழைந்தான். நின்றிருந்த சில பெண்கள் விலகி வழி கொடுத்து இவனை யாரென்று ஊன்றிப் பார்ப்பதாய்த் தெரிவித்தார்கள். கூடத்தில் தரையில் பாய் தலையணை மேல் பிணம் இருந்தது. அந்தப் பாட்டி குள்ளம் என்பது இப்போதும் தெளிவாகத் தெரிந்தது. சதையெல்லாம் சுருங்கிப் போய் பல்லில்லாத வாய் சிறு குமிழ் போலவும் வயிறு மட்டும் மேடிட்டும் இருந்தது. கையிரண்டும் மார்பிற்கு மேலாக வைக்கப்பட்டிருந்தன. போட்டிருந்த தங்க வளையல், கழுத்தில் மூணுவடம் செயின் எல்லாம் பளபளவெனத் தோன்றின. நெற்றியில் விபூதி மூன்று கீறாக வெளுத்திருந்தது. இதுவரை சூழ்ந்திருந்த ஊதுவத்தி மணத்தையும் மீறி ஏதோ ஒரு வாசனை கலந்திருந்ததை உணர்ந்தான். பிணத்தைச் சுற்றியும் உட்கார்ந்திருந்த மகள், மருமகள், தங்கைகள் பாட்டியின் பெருமைகளை இவனுக்குணர்த்தும் வகையில் குரலெடுத்துப் பாடி அழுதனர். ஈயொன்று வாயுதட்டில் உட்கார்ந்தது ஒருத்தி அதை கையை விசி விரட்டினாள். கைமேல் உட்கார்ந்தது. அங்கிருந்தும் அதை கையை வீசி விரட்டினாள். மற்ற கைமேல் உட்கார்ந்தது. அங்கிருந்தும் அதை விரட்டி, முழங்கையில் துணியை இழுத்து செருகினாள். அந்த முழங்கையில் ஒரு அங்குல நீளத்திற்கு ஏதோ வோர் ரணம் இருந்து நீர் கசிவதை அப்போது இவன் பார்த்தான். ஏம்மா அந்த சென்டு பாட்டிலை எடு. இன்னுங் கொஞ்சம் ஊதுவத்தியக் கொளுத்து. ஒரு நிமிஷம் பாட்டை நிறுத்தி அவள் ஒரு பெண்ணிடம் சொன்னாள். இவன் திரும்பி வெளியே வந்து மறுபடியும் திண்ணையில் அமர்ந்தான். அம்மா யாரும் வரலியா என்றார் அண்ணன். இவரை முன்பெல்லாம் எல்லாரையும் கூப்பிடுவது போலவே மாமா மாமாவென்று கூப்பிட்டு வந்ததும், பிறகு யாரோ அண்ணனாக வேண்டுமென சொல்லியதின் பேரில் அண்ணனென்று அழைப்பதையும் நினைவூட்டிக் கொண்டு, வழக்கமாக சொல்வதை மீண்டும் சொன்னான். ஒடம்பு சரியில்லே அண்ணே போவணும்னுதான் சொன்னாங்க. ஆனா வந்தா திரும்பியும் ஏதாவது ஆகப்போகுதுன்னுதான். அது சரி. இப்ப பரவாயில்லே யில்லே என்று கேட்டு விட்டு மெளனமானார் அவர். மெதுவாக எழுந்து மாமா நின்றிருந்த இடத்திற்கு நகரலானான். எங்கேயும் போயிடாதே என்றார் அண்ணன். தலையாட்டிக் கொண்டே மாமாவிடம் போனான். கையெல்லாம் ரணமா இருக்கு மாமா. எப்படியாச்சி. மாமா இவனைப் பார்த்து, வயசாச்சில்லே என்று ஒரு நிமிஷம் சும்மாயிருந்து, மீண்டும், ஒருமாசமா எப்பப் போவுதுன்னுல்லே காத்துக் கொண்டிருந்தாங்க என்றார். அவன் பொண்ணுக்கு வேற நிச்சயதார்த்தம் பண்ணான். நல்லகாலமா நேத்து தள்ளிட்டா கிழவி. எப்பவாம் கல்யாணம். வர மாசம் பதினேழாம் தேதி. என்ன மாமா இது ஒரு மாசங்கூட யில்லே. இவன் ஸ்வீகாரம் போனவனில்லே. அதனாலே தீட்டு இல்லே. அந்தப் பெண் பார்க்கும்படியாகவே இருந்தாள். அண்ணன் மகளாகவும். இவன் சித்தப்பா ஆகிறானெனத் தெரியாமலோ அவளும் ஒருவிதமாய்ப் பார்த்துச் சென்றிருந்தாள். சீக்கிரம் தூக்கினா வேளைக்கு எல்லாம் முடிக்கலாம். யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். சங்கு மட்டும் அவ்வப்போது ஒலித்து ஓய்ந்தது. வெட்டியானும் அவனுடைய ஆட்கள் இருவரும் பாடை கட்டுவதில் ஈடுபட்டிருந்தனர். வெறும் தட்டுப் பாடைதான் வழக்கமென்பதால் அவர்களுக்கு வேலை அதிகமில்லை. இரண்டு நீளமான கைபருமன் கொம்புகளும் குறுக்கே ஏணி மாதிரி நாலைந்து சிம்புகளும் வைத்து கட்டி விட்டனர். வைக்கோல் பந்தில் தலையணையும் பச்சை தென்னங்கீற்றில் பாயும் முடையப்பட்டு தயாராயிருந்தன. தீச்சட்டியில் நெருப்பு உண்டாக்கப்பட்டு புகைந்தது. பழைய சந்தனக்கட்டையை யாரோ கொணர்ந்து கொடுக்க அதை துண்டுகளாக்கி அவன் மடியில் கட்டிக் கொண்டான். வாழையிலை அடிமட்டையை சாண் நீளத்திற்கு துண்டுகளாக்கி அதன் ஒரு நுனியில் துணிப்பந்துக்களைக் கட்டினான். உள்ளிருந்து கொணர்ந்த பசும் நெய் கமகமவென்று மணம் வீசி நாக்கில் நீர் ஊறச் செய்தது. ஐந்து பலம் நெய் வீணாக்கப்படுவது இவனுக்கு வருத்தமளிப்பதாயிருந்தது. வெட்டியான் சிறிதும் வேறு பாவனையின்றி துணிப்பந்து சுற்றிய ஒவ்வொரு வாழைமட்டைத் துண்டையும் நெய்க்கிண்ணத்தில் விட்டு நன்றாக பூசினான். சங்கு மீண்டும் விம்மியது. ஒரு நீளமான பெஞ்ச் நடுத்தெருவில் போடப்படுவது இரண்டு பெரிய அண்டாக்களில் நீர் நிரப்பப்பெறுவது. சில உள்ளூர் உறவினர்கள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டனர். உம். உம். யாரும் அழக்கூடாது. ஆச்சா. வரிசை எடுத்து வர தாம்பாளத்தில் எல்லாத்தையும் வையுங்க. இந்தாப்பா சீக்கிரம் வா. ஒரு தாம்பாளத்தில் எண்ணெய் சீக்காயிலிருந்து பழம், தேங்காய், இளநீர், பூ, காவிவர்ணத்தில் ஒரு புடவை இத்தனையும் வைக்கப்பெற்று சற்றுத் தள்ளியிருந்த பஜனை கோயில் வரை எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து சங்கு ஒலிக்க வரிசை வந்தது. அழுகை சற்று ஓய்ந்திருந்தது. யாரும் அழக்கூடாது. அபிஷேகம் ஆகப்போகிறது. இருவர் உள்ளிருந்து பாட்டியைப் பிடித்து வந்தனர். ஒரு அடி சுற்றளவு பருமன் கூட இருக்குமா என ஒடுங்கியிருந்தது அது. குளிப்பாட்டும்போது தலைக்கு உயரமாக வைக்கவோ பெஞ்சு தலை மாட்டில் உயர்த்தி வைக்கவோ சரியான வசதியைத் தேட முடியாத அவசரத்தில் மருமகன் பெஞ்சின் மீது ஏறி மாமியாரை சாய்ந்தாற் போல் பிடித்து கால்களில் தாங்கி, தலையை நேர்ப்படுத்தி நின்றான். அனுபவமிக்க ஒரு கிழவர் எடுத்து தர எண்ணெய் சீக்காய் எலுமிச்சம்பழம் பால் தயிர் பஞ்சாமிர்தம் இளநீர் கந்தப் பொடி என தலையும் உடம்பும் நனைந்து வெளுத்த மூஞ்சி மஞ்சள் கலந்து தெரிந்தது. நனையாத கால்களின் மீது தண்ணீரை ஊற்றி முடிந்தது. பிணத்துக்கு அபிஷேகம் ஆனதை விட தாங்கி நின்ற அந்த மருமகனின் கால்களுக்கு முட்டியிலிருந்து இப்போதே அபிஷேகம் ஆனது வேடிக்கையாயிருந்தது. நெற்றியில் திருநீறைப் பூசி காவி நிற புதுப்புடவையை அப்படியே சுற்றினர். கதம்ப சரம் மாலையாகப் போடப்பட்டது. கற்பூரம் ஏற்றப்பட்டு காட்டி நெருப்புச்சட்டியில் போட்டனர். அதுவரை நெய்ப்பந்தம் பிடித்து பாட்டிக்கு வழி காண்பித்துக் கொண்டிருந்த பேரன் பேத்திகளிடமிருந்து அவை வாங்கப்பட்டு அவையும் நெருப்புச் சட்டியில் போடப்பட்டன. அழக் கூடாது. யாரும் அழக்கூடாது. அவளுக்கென்ன, கல்யாண சாவு. திருப்தியாக போயிருக்கா. பெரியவர்கள் சொன்னாலும் ஏதோவோர் காரணத்துக்காக பெண்கள் அழுது நின்றனர். முடைந்த பச்சைப்பாயில் உடல் வைக்கப்பட்டு அப்படியேத் தூக்கிப் போய் பாடையில் வைத்து நாடாவால் கட்டப்பட்டதும் கிராமத்திலிருக்கும் உறவினர்களில் நால்வர் முன்வந்து எடுத்துத் தோள்களில் வைத்தனர். சங்கு ஊதியது. தேங்காயில் கற்பூரம் ஏற்றப்பட்டு சுற்றித் தரையில் சிதறியது. சற்றுத் தள்ளி திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களும், நின்றிருந்தவர்களும் கும்பலாக நின்றனர். அம்மா போறியா எங்கள் வீட்டுட்டுப் போறியே பாட்டி முகத்தில் அறைந்து கொண்டு மருமகளும் கிழவியின் சக தோழிகளும், மற்றும் சிலரும் ஓவென அரற்ற அவர்களை அகற்றிக்கொண்டு ஒரு வேகத்தில் பாட்டி புறப்பட்டாள். சிலர் தரையில் உருண்டு அழுதனர். அவர்களை சிலர் தூக்குவதாய்த் தேற்றினர். சங்கு தேய்ந்தது. தோளில் போட்டு அழுக்கேறிய துண்டு காற்றில் பறக்க கன்னம் புடைக்க அவன் சங்கூதிச் சென்றான். அண்ணன் நெருப்புச் சட்டி புகைய எடுத்து இருவரணைப்புடன் நடந்தார். பஜனை கோயில் பக்கம் திரும்பி ஊர்க்குற்றங்கரை அம்மன் கோயிலைத் தாண்டி ஒரு கும்பல் தொடர பாடை கடந்தது. ஊரிலிருந்து சுடுகாடு ரொம்பத் தொலைவில்லை. மிஞ்சினால் இரண்டு பர்லாங் இருக்குமெனத் தோன்றியது. சின்ன வெட்டவெளி தென்பட கன்னிக்கோயிலுக்குப் பின் அரிச்சந்திரன் கோயில் அருகில் பாடை தரையில் இறக்கப்பட்டது. சங்கு உரத்தது. ஒரு பித்தளை பூஜை தட்டில் நல்ல பச்சரிசியும் கடலைப் பருப்பும் கலக்கப்பட்டு சிறிது வெல்லமும் போட்டு மூன்று பாறைகளில் வெட்டியான் கைப்பிடி கைப்பிடியாக மூன்று முறை வைத்தான். வந்த வழி அடையாளத்திற்காக வைக்கப்படுவது. இதுவென இவனாகவே நினைத்துக் கொண்டான். காக்காய் குருவிகள் தின்று விடுமாதலால் பிணத்தின் ஆவி மீண்டும் வீட்டுக்கு வர நினைத்தாலும் வழி தெரியாமல் திகைத்து நின்றுவிட இந்த அரிசி கடலைப் பருப்பு அடையாளம் என இவன் நினைப்புற்றதை யாரிடமும் கேட்க முனையவில்லை. அரிச்சந்திரனுக்குச் சேர வேண்டியதைச் செலுத்தி விட்டு மீண்டும் பாடை தூக்கப்பட்டு மீண்டும் ஐம்பதடி தள்ளி எரிக்குமிடத்தினருகில் இறக்கப்பட்டது. புளியங்கட்டைகளும் வேலிகாத்தான் கட்டைகளும் பச்சையாக அடுக்கப்பட்டன. அதன் மீது வறட்டிகள் பரப்பப்பட்டன. பிணத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கட்டுகள் கத்தியால் அறுக்கப்பட்டன. பச்சை ஓலையோடு பிடித்து தலைமாட்டில் ஒருவரும் கால்மாட்டில் ஒருவரும் பிடித்து தூக்கிப்போய் சிதையில் வைத்தனர். கூட வந்தவர்கள் பலரும் தள்ளித்தள்ளிப் பனை மர நிழல்களின் கீழ் உட்கார்ந்து பேசலாயினர். அண்ணனும் கிராம ஊராட்சித் தலைவரும், ஊர்ப் பெரியவர்கள் சிலரும் சில இளைஞர்களும் மட்டும் சடங்குகளுக்கு உதவி நின்றனர். இவன் பதினைந்து அடிதூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு புதுப்பானையில் நீர் மொண்டு வரப்பட்டு அண்ணன் அதைத் தலையில் தாங்கி இடம் வலதாக வலம் வரச் செய்யப்பட்டார். ஒரு இடவலம் வந்ததும் ஒரு கல்லால் பானையில் ஒரு பக்கத்தில் அடிக்கப்பட்டு ஓட்டை வழியே நீர் பீச்சி அவரே நனைந்து போனார். அந்தப் பானையை பின்பக்கமாக வாங்கி சற்றுத்தள்ளிக் கீழே நொறுக்கப்பட்டது. வெட்டியான் பிணத்தின் கால்மாட்டிலிருந்து தலைவரை மறைக்கும்படியான நீளத்தை மட்டும் விட்டு மீதியிருந்த புடவையின் பகுதியை கிழித்து சுருட்டி பக்கத்திலிருந்த தன் ஆளை பிணத்தின் தலை மாட்டில் விடப்பட்டுள்ள துணியை இரு கைகளாலும் பிரித்து பிடிக்க வைத்து நின்றான். கொள்ளிச்சட்டி ஒரு பக்கம் வைக்கப்பட்டு புகைந்து கொண்டிருந்தது. வாய்க்கரிசி போடுப்பா. அண்ணன் இரண்டு கைகளிலும் சேர்த்துப் பிடித்து மூன்று முறை முறத்திலிருந்த அரிசியை எடுத்து பிடித்திருந்த புடவைத் தலைப்பில் சொரிந்தார். ஒரு முறை சிதையைச் சுற்றி வந்து கால்களைத் தொட்டு வணங்கினார். பின், பெரியவர், ஊராட்சி மன்றத் தலைவர், இரண்டொரு பெரியவர்கள். தள்ளி உட்கார்ந்திருந்தவர்களும் மெதுவாக எழுந்து வரலாயினர் முறத்திலிருந்த அரிசி முழுவதும் தலைப்பில் போடப்பட்டிருந்தது. தலைப்பிலிருந்த அரிசியை மீள முறத்தில் தாழ்த்திக் கொண்டே வெட்டியான் உரக்கக் கூவினான். வாய்க்கரிசி போட வாங்க. வாய்க்கரிசி போடணும் வாங்க. தூரத்தில் உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து வந்தனர். வயது வித்தியாசமின்றி அனைவரும் மூன்று பிடி அரிசி எடுத்து சொரிந்து ஒரு முறை வலம் வந்தனர். சில பேர் கும்பிட்டு விலகினர். சிலர் நெளிந்தவாறு சென்றனர். இரண்டு முறை புடவைத் தலைப்பிலிருந்து அரிசி முறத்துக்குப் போயிற்று. அப்படியும் வெகுசிலர் மிஞ்சினர். வெட்டியான் யாரையும் விடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு மீண்டும் கூவினான். வாய்க்கரிசி போடுங்க வாங்க. இவனை சில பேர் பார்த்தார்கள். இவன் மட்டும்தான் எஞ்சி நின்றான். இவனால் நகர்ந்துபோய் வாய்க்கரிசி போட முடியுமெனத் தெரியவில்லை . மீண்டும் மீண்டும் பிணத்தின் மடியான வாயில் போடப்பட்டு எடுக்கப்பட்ட அரிசியைத் தொட்டு எடுத்து இவனால் போட முடியாதென்றே உணர்ந்தான். அதன் வாய்க்குள் கையை விட்டு போடப்பட்டுள்ளதை எடுத்து மீண்டும் இவனும் போட வேண்டுமென்பது இவனால் முடியாது. நகராமல் பார்த்து நின்றான். சிறிது நேரம் பார்த்த வெட்டியான் இனியும் காக்க முடியாதென்பதை உணர்ந்து தலைப்பிலிருந்து அரிசியை முறத்தில் கொட்டி எடுத்துச் சென்று தூர வைத்தான். தலைப்பை முகத்தை மூடி தலையடியில் சொருகினான். சதங்கை, 1976                                                     15. நீட்சி   []     முச்சந்தியில் இவன் நின்று கொண்டிருந்தான். எங்கேயாவது போய் வந்து கொண்டிருந்தானா, இல்லை, வீடு பக்கத்தில்தான் இருப்பதாய் காற்றாட வெளியில் நிற்கிறானா. மாலை வேளையெனத் தோன்றியது. ஒரு பெரிய சுற்றிலும் கண்ணாடிச் சுவர்களின் மூலம் உள்ளே நடப்பதை வெளிக் காட்டும் ஹோட்டலைக் கடந்து இப்போது வந்திருப்பதாய் உணர்ந்ததன் மூலம் சற்று தொலைவு நடந்துதான் வந்திருக்கிறானெனத் தெரிந்தது. பின் இரவின் சில மணி நேரங்கள் தவிர மற்றெப்போதும் அங்கு சர்வீஸ் உண்டாதலால் நிறைய மனிதர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். இருவகை உணவுகளுடன் மதுபானங்களும் டேபிளில் சர்வ் செய்யப்படுவதும் கூட்டம் அதிகம் வருவதற்கு காரணமாயிருக்கும். வழக்கமான சர்வர்களிடம் வந்து அமரும் வாடிக்கையாளர்களிடம் சர்வர் முதுகைத் தட்டுவதும்கூட நிகழ்ந்தாலும் முதலாளி பொம்மை போலிருந்தான். மற்ற நேரங்களில் என்ன நிகழுமென்பது இவன் மற்ற நேரங்களில் செல்வதில்லையாதலால் தெரியவில்லை. அந்தச் சூழலை விட்டு இவன் முச்சந்தியில் நிற்பதாய் உணர்ந்தபோது சற்று இருட்ட ஆரம்பித்திருந்தது. முன்னைவிட ரோடு நெருக்கமாகவும் ஆகிவிட்டிருந்தது. பக்கத்திலிருந்த ஒரு மாவுமில் இன்னும் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தது. அதை யொட்டியிருந்த நீளமான திண்ணையில் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். அதில் மூன்று காக்கி உடையணிந்த கூலியாட்கள் போன்று காணப்பட்ட கிழவர்கள் எதற்காகவோ காத்திருப்பதைப்போலக் குத்துக்காலிட்டும் எழுந்து நின்றும் நிலையின்றி இருந்தார்கள். யாரோ இருவர் ஒரு முனிசிபல் கழிவு நீர் வண்டியை இழுத்து வருவது கிழக்கிலிருந்து புலப்பட்டது. கிழவர்கள் எழுந்து நின்று கொண்டனர். பெரிய பீப்பாயை சுற்றிலும் சட்டமிட்டு வண்டியான அதன் தலைமாட்டில் வெள்ளை சட்டையும் காக்கி அரைக்கால் நிஜாரும் அணிந்திருந்தவன் முதலில் தெளிவானான். தலையில் தொப்பியுடன் தோன்றிய அவன் ட்ராபிக் கான்ஸ்டபிள் எனத் தோன்றினான். அவன் பின்னால் தலையில் சிவப்புக் கந்தல் முண்டாசுடன் வழக்கமான வண்டியோட்டி பையன் இழுத்து வந்தான். முச்சந்தி வந்ததும் வண்டியிருப்பதை நிறுத்தி கான்ஸ்டபிள் வண்டிச் சட்டத்தின் கீழ் தொப்பியை ஒரு கையால் பிடித்தபடி குனிந்து வந்தான். அவன் வெளியே வந்ததும் பையன் ஒருவனே அந்த வண்டியை மேலே இழுத்துப் போனான். டிரஸ்சை சரிசெய்து கொண்டு ஓரமாய்க் கிடந்த வட்டமான பெரிய மேடையை நடு ரோடுக்குக் காலால் தள்ளிச் சென்றான். பின் அதன் மேல் ஏறி நின்று சுற்றிலும் பார்த்தான். சுறுசுறுப்படைந்து இதற்காகவே காத்திருந்தது போல இருந்த மூன்று கிழவர்களும் தரையில் கிடந்த ஒரு பெரிய வட்டமான கறுப்பு தகரத் தகட்டை நடுரோடில் தள்ளினார்கள். பார்த்து நின்றிருந்த இவன் அதிர்ச்சியடைந்து ' நீங்க ஏன் இதைச் செய்யறீங்க. அவன் திட்டப் போறான்' எனக் கத்தினான். அவர்கள் இவனை ஏதோ போலப் பார்த்தார்கள். ஒரு கிழவன் உதட்டைச் சுழித்துச் சொன்னான். 'நீ சும்மாயிருந்தா போதும். அவங்களால எங்களுக்கு பயமில்லே. உன்கிட்டதான். நீ சொல்லிக்கினு திரியப் போறே எல்லார் கிட்டயும்னுதான். நீ பாட்டுக்கு போயேன். வந்துட்டான்.' இவன் பார்த்திருக்கும் போதே மூன்று பேரில் இருவர் தகட்டின் மேல் உட்கார்ந்து ஏதோ செய்வது போலிருக்க, மற்றவன் போகும் வாகனங்களை நிறுத்தி போகச் சொன்னான். பின் போலீசுக்கு நோட்டுகளும் கிழவன் தகட்டில் சில்லறைகளும் போட்டு பஸ் லாரிக்காரர்கள் சென்று கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் பார்த்து நின்றிருந்தவன் மேலும் இருட்டியதாய் உணர்ந்து இவன் வீட்டுப்பக்கம் நகர்ந்தான். விரும்பாத ஆபீஸ் டைபிஸ்ட் பெண்ணின் தொடைகளை கைகளால் அழுத்திப் பிடித்திருந்தாய் உணர்ந்து திடுக்கிட்டான். இதுவரை இவன் ஆபீசிலிருந்தானா இல்லை ரோடிலிருந்தானா என பேதலித்து விழித்தான். ரோடில் கண்ட ஹோட்டல், கிழவர்கள், போலீஸ் இவர்களுடன் நினைவு கூர்ந்தபோது, இவன் விரும்பாத அவளின் தொடைகளின் கல் தன்மையை உள்ளங்கைகள் குறுகுறுத்து நடந்ததாய் உணர்த்தின. இவன் வியர்க்க தடுமாற்றத்துடன் முகம் நிமிர்த்தியபோது அவளின் சிரிப்பு அருவருப்பூட்டியதும் உணர்ந்து மீண்டும் அருவருப்படைந்தான். ஆனால், இவன் நடந்து வந்த போதே இதைச் செய்திருப்பதாய்த் தோன்றியது. பார்த்தவைகளா அவள் தொடையை உணர்த்தின. இவன் வீட்டை நெருங்கியபோது தெருவே மௌனத்தில் இருந்து இவன் வருகையை அசாதாரணமாக்கியது. தலை காதோரங்களிலும் ஆங்காங்கும் நரைத்து வயது நாற்பத்தைந்தாகி விட்டதெனத் தனியே தோன்றியது. மனைவி ஜன்னலோரமிருந்து உரக்க முணுமுணுத்தாள். 'அப்பா, நல்ல காலம் அந்த மோகினிப் பிசாசு கிளம்பச்சே எதிரே வராம இருந்தீங்களே ! யார் செத்துப் போய் மோகினிப் பிசாசாக உலவுகிறாள் என இவன் நினைவுக்குத் தோன்றவில்லை. பக்கத்து வீட்டில் இருந்த குப்தப் பெண் செத்துப்போய் விட்டதாக இவன் மனைவி சொல்லியிருப்பதாய் ஒரு நினைவு தோன்றியது. அவள் அழகு எனவும் தோன்றியது. குப்தப் பெண்கள் அழகு என சொல்லிக் கொண்டான். வீட்டுக் குறட்டிலேயே நின்று தெருக்கோடி வரை வெறித்துப் பார்த்தான். தெருக்கோடியில் அவள் போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய சர்வாலங்காரம் இவனால் பூரணமாய்ப் பார்க்கப்படுவதாய் உணர்ந்தான். வேகமாய்த் தெருவில் இறங்கிக் கத்தினான். 'மோகினி தேவி. அவள் திரும்பினாள். 'ஓ . நீங்கள் வந்து விட்டீர்களா.' அவள் அழகில் இவன் திக்கித்து நின்றான், இவனை நோக்கி உடம்பெல்லாம் சிரிப்பாக அவள் வந்து கொண்டிருந்தாள். பிரக்ஞை, 1974 II (சுருக்கம்) "உடம்பெல்லாம் ஒளியாக மோகினியின் உடல் வானத்தில் கிடந்தது. இல்லை. வானத்தைப் பார்த்து மாடியில் கிடந்தது... டாக்டர் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உறவின்றியே தங்கள் தங்கள் உடல் திசுக்களிலிருந்து கார்பன் காபிகளை உண்டாக்க முடியும் என்கிறீர்கள். அப்படித்தானே, பிறகு உறவு என்பது என்ன? ஆன்ம விடுதலை போலல்ல... விஞ்ஞான பூர்வமாக, உன் பேரனுக்கு எத்தனையோ பேரனும் மோகினிகளால் தூக்கியெறியப்பட்டுக்கொண்டே..... என் இறப்புக்கு கட்டாயம் நீங்கள் வரவேண்டும் என்பது போல... அடுத்த வேலை சோற்றுக்கு வழி சொல்லுங்கள்... நான் கேவலமடையாமல்... பலே, சோற்றுக்கு வந்துவிட்டாய் பிரக்ஞை, 1975 III யாரும் கவலைப்படாமல் ரோடோரத்தில் கிடந்த அந்தக் கிழவன் உடம்பே பெரிய நோயாகத் தோன்றினான். இடுப்பில் கிடந்த அழுக்குத் துணி பொருத்தமின்றிக் கிடந்தது. நரைத்த பிசுக்கேறிய தாடி. மீசைக்குள் புதைந்துக் கிடந்த முகத்தில் கண்கள் உயிரின்றி வெளுத்திருந்தன. கைகளை பின்னுக்கு ஊன்றி கால்களை முன்பக்கம் விரித்து வைத்தும் அவன் உடல் எழும்ப முடியவில்லை. எவ்வளவு நேரமாக அவன் இப்படிக் கிடக்கிறான்? அவனால் பேச முடியுமென்பது அவ்வப்போது சற்றுக் குரலெழுப்பியதிலிருந்து தெரிந்தது. ரோடில் போய்க் கொண்டிருந்த வாகனங்கள் சற்று ஒதுங்கி அவன் மனிதன் என்பதை ஒப்புக் கொண்டனவாய்ப் புரிய வைத்தன. குறுக்கே ஓடிவரும் நாய் பூனை பன்றிகளின் மீது ஏற்றி இறக்குவதை தவிர்க்காவிட்டாலும் ஒரு மனித உடம்பின் மீது ஏற்றி விட்டுச் செல்ல தங்களுக்காக பயப்படுகிறார்களாதலால், அவன் இன்னும் உயிரோடு கிடந்தான். மேலும் பகலாகயிருந்தது அவனுக்கு பாதுகாப்பளித்தது. அவனுக்கு என்ன வேண்டும், எழுந்து நடக்க வேண்டுமா, சாப்பிட்டு எத்தனை நாட்களாகியது என்பதை யாரிடமாவது, கடைகளிலாவது சொல்லிக் கேட்க அவன் நடப்பது அவசியமாகிறது. அலுவலகங்களுக்குச் செல்வோரும், கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும் நின்று கேட்டு உதவிச் செய்யக்கூடிய நேரம் உள்ளவர்களாக இல்லாதது அவனை மேலும் அரற்றச் செய்தது. தெளிவில்லாத குரல் யாராவது அவன் கைகளைப்பிடித்துத் தூக்கி நிறுத்தி சாலையோரத்தில் நடக்க விட்டுவிட்டால் போதுமா ஆனால் அதற்கும் யாருக்கும் நேரமில்லை என்பதோடு அவன் உருவத்தை பார்க்க நோயாளியாக இருக்கவே தொட்டுத் தூக்கி விட அருவருப்படைந்து சென்றார்கள் என்பது சரியாயிருக்கும். ரோடோரத்தில் கிடக்கும் நோயாளிகளைத் தூக்கிவிடவும் பசி என்றால் தின்னக் கொடுக்கவும் பாதுகாப்பாக இருக்கவும். எல்லாரும் தயாராக இருக்கவேண்டும் என்பது இயலாதது. அதற்காக அரசாங்கம் இருப்பதாக மனிதர்களும் சமூக சேவைக்காரர்கள் இருப்பதாக அரசாங்கமும், கடவுள் மட்டுமே இருப்பதாக அவனும் கருதுவதாக ஒரு ஆள் அந்த வேகத்திலும் கருத்து சொல்லிவிட்டுப் போனான். அந்த ஆளை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் கிழவன் கிடக்கவே அவனால் நன்றி சொல்ல முடியவில்லை. நீங்கள் அந்த மனிதராக நாங்கள் நினைப்பதால் எங்களுக்கு பேட்டியளிக்க ஒப்புக் கொண்டதற்கு மிகவும் நன்றி திரு. குமாரசாமி அவர்களே, கேள்விகளை ஆரம்பிக்கலாமா. நன்றி . ஆரம்பிக்கலாம். நீங்கள் எத்தனை வயதிலிருந்து பொடி போடுகிறீர்கள்? என்னுடைய பதின்மூன்றாவது வயதிலிருந்து. எதற்காகப் போடுகிறீர்களென கேட்கமாட்டீர்களென நம்புகிறேன். (சிரிப்பு) (சிரிப்பு) இல்லை. உங்கள் நம்பிக்கையை சிதற அடிப்பதாயில்லை. ஒரு நாளைக்கு எத்தனை கிராம் பொடி போடுகிறீர்களென சொல்ல முடியுமா சராசரியாக. சராசரியாக ஐந்து கிராமிருக்கக்கூடும். உங்கள் இத்தனை வருடப் பொது வாழ்வில் அறுநூற்று ஐம்பத்தேழு கிலோ முப்பது கிராம் பொடி போட்டிருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எப்போதும் உபயோகிக்கும் காரம் மணம் குணம் நிறைந்த கிராமம் விலாஸ் மூக்குப் பொடி கம்பனி சார்பில் "செம்மூக்குச் செல்வர்” எனும் வீர விருதையளித்து மலர் கிரீடம் சூட்டுகிறோம். இடையில் இன்னொரு கேள்வி. உங்கள் மனைவி பொடி போடுவதுண்டா. இல்லை. பெண்கள் பொடி போடுவதை நான் எதிர்க்கிறேன். புகையிலை சிகரெட் உபயோகிப்பதில் ஆட்சேபணையில்லை. கடைசியாக இக்கால இளைஞர்களுக்கு நீங்கள் அருளக் கூடிய பொன் மொழியை பொடி மொழியாகச் சொல்ல இயலுமா. தாராளமாகச் சொல்ல இயலும். பொடி இல்லாமல் புரட்சி இல்லை. *** புதிதாக வந்து ஐம்பத்தியேழு வாரங்களே ஆகியிருந்த அந்தப் படத்திற்கு மீண்டும் டிக்கெட் கிடைக்காமல் சலிப்புடன் நின்றான் குமாரசாமி. அவனைப் போன்ற இளைஞர்களை மிகவும் கவர்ந்திழுக்கும்படியாக அது தயாரிக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு முன்கூட்டியே வந்தும் பத்து ஆள் இருக்கும்போது மூடிவிட்டான். நாளைக்கு அரை வேளை மட்டம் போட்டுவிட்டு வந்து நின்றுவிட வேண்டியதுதான் என நினைத்தபடி சுற்றிலும் அர்த்தமின்றிப் பார்த்தான். சற்றுத் தள்ளி எதிரில் ஒரு கட்சிப்பொதுக்கூட்டத்திற்காக சினிமாப் பாட்டு அலறிக் கொண்டிருந்தது. முகத்தை சுளித்தபடி பக்கத்தில் ஒரு தியேட்டரில் ஓடும் ஏற்கெனவே ஏழெட்டு முறைப் பார்த்த பாடாவதி படத்திற்கு காலியாகத் தானிருக்குமென அந்தப் பக்கம் விரைந்தான். டிக்கெட் கௌண்டர் திறந்திருந்தது. *** கொடி கம்பத்திற்கான நடுகல்லை திறந்துவிட்டு தானைத்தலைவர் கூட்ட மேடையில் ஏறினார். இதோ கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடியில் பிறந்த நாலரைக்கோடித் தமிழர்களும் தமிழச்சிகளும் விரும்பும் உலகத் தலைவர் பெருந்தகை குமாரசாமி அவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களை உங்கள் தாகம் தீர்க்க கொள்கை விளக்க மாரி பொழிய பொற்பாதம் தொட்டு அழைக்கிறேன். அதை நான் வழி மொழிகிறேன். தலைவர் அவர்களே! புளியம் பழம் உலுக்கிய புனிதத் தலைவருக்கு எங்கள் தொன்னூறாம் வட்டம் முப்பத்தேழாம் கிளை மன்றம் சார்பாக இந்த மலர் மாலையை பொன்மாலையாக... (தலைவர் பிடுங்கி கழுத்தில் போடுவதாய் கீழே எறிகிறார்.) நண்பர்களே, தோழர்களே, பெரியோர்களே. தாய்க்குலமே நாட்டின் வருங்காலக் கலகக் கண்மணிகளே இந்தக் குமாரசாமியைப் பற்றி அவன் சொல்கிறானாம் இவன் யாரென்று தெரியாதா. இவன் பணக்காரனானது எப்படியென்று தெரியாதா என்று. எனக்குத் தெரியாதா உங்களுக்குத் தெரியாதா. தாய்க் குலத்துக்குத் தெரியாதா யாருக்கும் தெரியாதா அவன் எப்படி வயிறு வளர்த்தானென்று. இன்று நாட்டில் அரசோச்சுவது நானென்பதால் நீங்களென்பதால் நம்மைப் போங்களென்கிறான். (கைதட்டல்) இந்த உலகமே ஒன்று என்பது எங்கள் கொள்கையாயிருக்கும்போது, அவன் இங்கு வந்து சாப்பிடுவதால்தான் அரிசிப் பஞ்சம் வந்திருக்கிறதென்பது நமக்கெல்லாம் தெரியாதா. தண்ணீர்ப் பஞ்சம் வந்திருப்பது யாராலெனத் தெரியாதா (கைதட்டல்). ஆகையால் என்னருமை தாய்க்குப் பிறந்தவர்களே அந்நியர்களை விரட்டி சுயாட்சி பெறுவோம் (ஆரவாரம், கைதட்டல்). பெறுவதுதான் பஞ்ச நிவாரணம். அதற்காக எங்கள் தேர்தல் நிதிக்குப் பெருமளவில் நிதி அளித்து வரும் முறையும் நாங்களே அரியணையிலமர்ந்து தமிழ்ச் செங்கோல் ஏந்தி நடாத்த நீங்கள் உறுதிமொழி பூண வேண்டும் பூணுவீர்கள் என்பதைக் கூறி, நானின்னும் நூறு கூட்டங்களுக்கும் மேலாகச் சென்று கொள்கை விளக்கம் தரவேண்டியிருப்பதால் இத்துடன் விடை பெற்று அமர்கிறேன். நன்றி, வணக்கம்.  {விசில். கைத்தட்டல்} *** மீண்டும் பேட்டி . சுயாட்சி என்பது பொடி போடும் விஷயமோ அல்லது பேசுகிற விஷயமோ அல்ல. உங்களைவிடத் தீவிரமானவர்கள் தீர்க்கமானவர்கள் இருப்பது தெரியும். நீங்கள் என்ன செய்கிறீர்கள். நாங்கள் எவ்வளவோ செய்கிறோம். நீங்கள் சொல்லுங்கள். எதையாவது விட்டு விட்டோமென்று. அதையும் செய்திருப்போம். ஆனால், நீங்கள் செய்துள்ளதாகக் கூறியவற்றில் பௌதீகமான பாதிப்பு ஒன்றும் உணரப்படவில்லையே. விரைவில் உணர்வீர்கள். எவ்வளவோ செய்கிறோம். அந்தக் கிழவனைத் தூக்கி நடக்க விட்டீர்களா. எத்தனையோ கிழவர்கள். அந்தக் கிழவன். அந்தச் சாலையில் நடக்க முடியாமல். அந்தச் சாலையில் நானின்னும் போகவில்லை. எனினும், எங்கள் ஆட்களில் ஒருவர் நிச்சயம் தூக்கிவிட்டிருப்பார். மேலும் நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். இவ்வாறு தனிப்பட்ட ஆட்களைத் தூக்கி விடுவதில் பயனேதுமில்லை என்பது எங்கள் கருத்து. எல்லாக் கிழவர்களும் எல்லா சாலைகளிலும் தூக்கிவிடப்படுவதற்காக விழுந்து கிடக்க வேண்டுமென்கிறீர்களா? நாங்கள் ஆகாய விமானங்களில் எப்போதும் போவதில்லை யாதலால் போகாதபோது தூக்கி விடுவோம். அப்படியானால் எல்லோருக்கும் மலிவு விலை ஜடாயு விமானங்கள் தயாரித்தளிப்பீர்களா. இத்திட்டம் ஏற்கனவே பரிசீலனையில் இருக்கிறது. எனினும், அந்தரத்தில் யாரும் விழுந்திருக்க முடியாதாகையால் போக்குவரத்தோ நேரமோ தடைப்படாது என்பதும் எங்கள் அசைக்க முடியாத நிலை. பார்க்க பயன்படுத்துவோம். *** பிற்பகல் நீண்டு முடியாத நிலையாக மாலை ஐந்து மணிக்கும் வெயில் அதிகமாய் இருந்தது. இருப்பிடங்களுக்குச் செல்லும் நேரமென்பதால் நடந்து செல்வாரும் மிகுதியாயினர். புளிய மரங்கள் அடர்ந்து வளர்ந்த ரோடாக இருந்ததால் நிழல் இருந்தும் சூரிய வெப்பத்தைக் குறைக்கவில்லை. கிழவன் சாகாமல் கிடந்தான். நடுவில் யாரோ இரக்கப்பட்டது இறைந்து கிடந்த சோற்றின் மூலம் தெரிந்தது. அப்படியும் அவன் காய்ந்து முனகிக் கொண்டிருந்தான். தூக்கி விடும்படிக் கைகளை நீட்டினான். நோயாளி போலிருந்த அவனைத் தூக்கி விடுவதென்பது அருவருப்பைத் தரும். பக்கத்தில், எதிரில் வருபவர்கள் பார்ப்பதை சகிக்கவேண்டி வரும். கையில் காலேஜ் புத்தகங்களோடு குமாரசாமி குழம்பியபடி சில அடிகள் அவனைத் தாண்டிப் போனான். கிழவனின் குரல் இன்னும் தீனமாய் கொஞ்சம் தூக்கி நிறுத்தி விட்டுப் போகும்படி கெஞ்சியது. மேலும் நடக்க ஒப்பாமல், ஒரு நிலையில், திரும்பி வந்து கிழவனுடைய நீட்டிய இரு கைகளையும் பிடித்துத் தூக்கி நிறுத்தினான். முதுகில் கூனுடன் வெடவெடக்க கிழவன் நின்றான். மறுவினாடி கூடத்திரும்ப கீழே விழுந்துவிடலாம் போலத் தோன்றிய அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து குமாரசாமி வேகமாய் மேலே நடந்தான். மணி ஆறு. சீக்கிரம் வீட்டிற்குப் போக வேண்டும். *** என் கூடப் பத்து பேர் வேண்டாம். ஒருத்தன் வரட்டும். உண்மையாக நினைக்கிறத செஞ்சி காட்டறேன் என்றான் குமாரசாமி. ஏற்கெனவே சில தடவைகள் நண்பர்களிடம் விவாதிக்கும் போது இம்மாதிரி சொல்லியிருந்தது நினைவுக்கு வராமலே ஒவ்வொரு தடவையும் சொல்லி வருகிறான். மிகத் தீவிரமாக அரசியலையும் சமுதாயத்தையும் ஆட்சியையும் விவாதித்து முடிவாகச் சொல்வது இது போலிருக்கும். நல்ல வேலையில் சம்பளத்தில் இருக்கும் அந்த நண்பர்கள் அதற்கு மேல் தீவிரமாய்ப் பேசமாட்டார்கள். உடனே சொல்லி விடுவார்கள். ஒரு மாற்றம் வரத்தான் போகிறது. புரட்சி வந்த பிறகு நாங்களும் அதில் கலந்து கொள்வோம். மீண்டும் குமாரசாமி கேட்பான்: ஏன் ஆரம்பிப்பவர்களாய் இருக்கக் கூடாது. கணையாழி, 1976 IV ஏங்க ஒரு கை புடிச்சி ஜன்னலுக்கா வெளிய தள்ளிடுங்க என்று அந்த சின்ன பையன் பெட்டியிலிருந்த ஒவ்வொரு ஆளாய் கெஞ்சினான். பக்கத்து பெரிய ஊரிலிருந்து நடுவில் ஒரு ஊர் ஸ்டேஷனில் பாசஞ்சர் டிரெயின் நின்றபோது எதிரில் வந்த இன்னொரு புகைவண்டியிலிருந்து ரயில்வே ஸ்குவாடினர் இறங்கி வேகமாக ஒவ்வொரு பெட்டியிலும் புகுந்த போது அரிசி கொண்டு செல்லும் ஆண்களும் பெண்களும் பரபரப்படைந்து ஓட முற்பட்டனர். ஸ்கோடு பூந்துட்டான் ஸ்கோடு என்று ஒருத்திதான் வைத்திருந்த இரு சிறிய அரிசி பைகளின் மீது சாய்ந்து மறைத்தபடி உட்கார்ந்து வெற்றிலை போடலானாள். டிக்கிட்டு வாங்காத கஸ்மாலங்கதா யிப்பிடி. அதுயின்னாடி அப்பிடி துட்டு. எம் பொணாத்தும் மேல் போடற துட்டு. கோணிகளில் தைக்கப்பட்டு ஒழுங்காக பத்து மூட்டை அரிசி வழியை அடைத்து சற்று முன்தான் ஒரு பெரிய ஆளால் ஏற்றப்பட்டிருந்தது. ஏம்பா ஏம்பா வர்ற டேசன்ல வண்டி நிக்கும் இதத் தூக்கி அப்பிடி போட்டுடுங்க. பையனிடம் டிக்கட்டும் இல்லை. இது யாருது இது யாருது என்று கேட்டு கம்பார்ட்மென்ட் முழுவதும் ஒரு வேகத்தில் பார்த்து முடித்த ஸ்குவாட் ஆட்களிடம் யாரும் முழு அளவில் ஒப்புக் கொள்ளவில்லை. லெட்ரினுக்குள் புகுந்திருந்த சிலரும் வெளியே கொண்டு வரப்பெற்றனர். பத்து மூட்டைக்கும் லக்கேஜ் சார்ஜ் நாற்பது ரூபாய் என நிர்ணயித்ததற்கு பேசாமல் பணங்கட்டினான். அந்த பெரிய ஆள். அவ்வளவு அரிசி மூட்டைகளை வழி கூட இல்லாமல் ஆள் உட்காரவும் வசதியில்லாமல் போட்டது குறித்தோ, போடலாமா என்பது குறித்தோ யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏழெட்டு அரைசிப்பங்களுடன் மாட்டிக்கொண்ட கிராமத்து இளைஞன் தனக்கு போடப்பட்ட லக்கேஜ் சார்ஜ் இருபது ரூபாய் அதிகமென அவர்களுடன் கொச்சையாக வாதாடலானான். அவனுடைய பேச்சு எரிச்சல் மூட்டக்கூடியதாகவும் அதிகாரிகளை அவமதிப்பதாகவும் குற்றத்தை மறுப்பதாகவும் தோன்றியது. சின்னபையன் இந்த கலாட்டாவின் நடுவே தனது அரை மூட்டையை வேகமாக மறுபக்க சீட்டுக்கடியில் தள்ளிவிட்டு ஒதுங்கி நின்று கொண்டான். பக்கத்து ஊரு வந்துடப்போவுது சார். என்னால் தூக்கிப் போட்டுட்டு வெளிய ஓட முடியாது சார். வரிசையாக கெஞ்சினான். ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்திருந்த இருவர் அவனுக்காக மூட்டையை தூக்கி வெளியில் போட ஒப்புக்கொண்டனர். டேய் ஒழுங்கா பணத்தக் கட்டிடு. எங்களெப் பாத்தா நீங்க யாரு பணங்கேக்கறதுக்குன்னு கேக்கறே. ஸ்குவாடுடா. வந்து போற கார்டு போலீகன்னு ஒன்னு ரெண்டு குடுத்தா போயிடறாபோலன்னு நினைச்சிக்கினுகீறியா. பத்துதான் கீதுன்னா. இதுன்னா கத்தரிக்கா வியாபாரம்னு நெனைச்சிக்கினியா. ரசீது இருபதுக்கு போட்டாச்சி. கட்டுவியா மாட்டியான்னு சொல்லு. நாங்க மேல செய்யறத செஞ்சிக்கறோம். ஒழுங்கா காலையில பால்வண்டியில் போய்கினு யிருந்தியே. இன்னா ஆச்சி ஒனக்கு. அரிசி வியாபாரின்னு நெனச்சி இம்மா நேரம் மரியாதையா பேசறேன். இல்லேன்னா நடக்கறதே வேற. ஆமா. அடுத்த சின்ன ஸ்டேஷன்ல வந்தது. வண்டி நின்று புறப்படும் சில நிமிடங்களுக்குள் அரிசி சிப்பங்கள் மறு ஜன்னல் வழியாக வெளியே தள்ளப்பட்டன. தயாராய் நின்ற ஆட்கள் மூட்டைகளை எடுத்து ஓட முற்பட்டனர். ஸ்குவாடினர் ஓடி மடக்கினர். வண்டி கிளம்பியபோது பெட்டியில் பாதி மூட்டைகள் இல்லாமல் போயிருந்தன. சில ஆண்களும் பெண்களும் குறைந்திருந்தனர். பெரிய கைகளைப் பிடித்ததோடு ஸ்குவாடினர் தங்கள் பிடியைத் தளர்த்தியிருக்க வேண்டும். தகறாறு செய்த கிராமத்தானும் தனது ஏழு சிப்பத்தில் ஐந்தை வெளியே தன் ஆட்களிடம் தள்ளிவிட்டிருந்தான். எந்த ஐயாடா ஒன்னை வெளிய மூட்டைங்களை தள்ளச் சொன்னது. பொய்யா சொல்றே. இவனெ சும்மாவுடக் கூடாது சார். வேஷ்டிய வுடுடா. இவனுங்களெ கட்டிப் போட்டு இழுத்துக்கினு போனாத்தான். ஏமாத்தலாம்ன்னா பாக்கறே. இருபது ரூபா கட்டித்தான் தீரணும்டா. இப்ப நாங்க நூறு ரூபா கட்டச் சொன்னாலும் கட்டணும்டா. பொறுக்கி பையா. அடாவடியா பண்றே. ஒன்னு நாஞ்சொல்றேன் கேளு. இல்லே நீ பேசறத பேசு நாங் கேக்கறேன். அதெல்லாம் எதுவும் பேசாத. செஞ்சது பூராவும் அயோக்கியத்தனம். கட்டுவியா மாட்டியா. கட்டப் போறியா இல்லியா. கட்டப் போறியா இல்லியா. நீ கட்டப் போறதுல்லே. ஒவ் வேஷ்டிய அவுத்து உன்னெ கட்டிப் போட வேண்டியதுதான். கோமணமில்லேன்னாயின்னா . இப்பிடிப் பண்ணாத்தான் புத்தி வரும். மானமின்னாடா ஒனக்கு. அவ்ளோ மானம் பாக்கறவனாகீறவன் பணத்த கட்டு. இவனெ கட்டி இழுத்துப் போக வேண்டியதுதான் சார். கட்றா மாதிரியில்லே. ஸ்குவாட் போலீஸ்காரர் அவனுடைய வேஷ்டியை பலவந்தமாக பிடித்து இழுத்து ஒரு முனையால் ஒரு புஜத்தில் இறுக்கிக்கட்டி மறு புஜத்தையும் இழுத்துக்கட்ட முற்பட்டார். அவன் காக்கி அரை நிஜார் போட்டிருந்தான். கைகளை விடுவித்துக் கொள்ளத் திமிறினான். பக்கத்திலிருந்த அவனைப் போன்ற ஆட்களிடம் பணம் கேட்டான். நாற்பது ரூபாய் கட்டிய பெரிய ஆள் உதவிக்கு வந்தான். எதுக்கு திமிர்றே. ஒழுங்கா சொல்றபடி கேளேன். நாங்கள்லாம் கட்டல்லே. நாள் மத்தா நாளைக்கு வியாபாரம் செய்யணும்னு கீறியாயில்லியா. கையில் எவளொவெச்சிருக்கே பத்தா. பத்து கேக்கறியே. காலையில் குடுத்துடுவியா. ஏய்யா அவனாளுங்கதானே நீங்க. மசமசன்னு கீறிங்களே. அது செரி. அவங்குடுத்தா வாங்கி இப்ப நீங்க கட்டுவீங்க. டேய் மோதிரம் போட்டுகினு கீறியேயில்ல. கழட்டு, காலையில் ரூபாய் குடுத்துட்டு வாங்கிக்க. தோ பாருங்க சார். இவனுக்கு பத்து ரூபா குடுத்திருக்கேன். நீங்கதான் சாட்சி. பெரிய ஆள் கொடுத்த பத்து ரூபாயுடன் அவன் வைத்திருந்த ரூபாயையும் சேர்த்து கட்டி ரசீதை வாங்கிக் கொண்டு போலீஸ்காரரை முறைத்தான். புஜத்தில் இறுக்கிக் கட்டியிருந்த வேஷ்டியை அவிழ்த்துவிட்டு, தன் ஆபீசருடன் நகர்ந்தார் அவர். அவர்கள் மறு கம்பார்ட்மென்டிற்கு போனதும் தெவுடியா மக்க, எங்கைய கட்டறதுக்கு இவனுங்க ஆருன்னு கேக்கறேன் என இன்னும் திட்டியபடி தன் மூட்டைகளை எடுத்து கதவருகில் வைக்கலானான் அவன். போய்ச் சேரவேண்டிய ஜங்ஷன் வந்தது. நண்பனுடன் குமாரசாமி வண்டியிலிருந்து இறங்கி நடக்கலானான். எதிரில் நின்ற சென்னை வண்டிக்கு அரிசி மூட்டைகள் ஓடின. நீ பார்த்தியா. உள்ளேர்ந்து மூட்டெய தள்ளினாங்கள்ளே தள்ளினவங்க பாக்க முடியல்லே அவசரத்தில் மூட்டை சரியா அந்த சின்னபையன் கழுத்து மேலயே விழுந்தது. ஆனா சமாளிச்சிட்டான். மூட்டையோட தப்பிச்சிட்டானே அதான் பெரிய விஷயம். இவங்களுக்கெல்லாம் வேற நல்ல வேலை கொடுத்தா இதுக்கு வர மாட்டாங்க இல்லே என்றான் நண்பன். சொல்ல முடியாது என்றான் குமாரசாமி. அது சரி. லக்கேஜ் சார்ஜை கட்டிட்டதாலேயே அந்த பெரிய ஆள் நியாயஸ்தன் மாதிரி நடந்து கிட்டதுதான் வேடிக்கையாயிருக்குது. நடக்க விட்டதும்தான் வேடிக்கை. ஆனா நாம இதிலே அந்த ஆளையோ ஸ்குவாடையோ குறை சொல்லிக்கிட்டிருக்கிறதுனால எந்த பிரயோஜனமுமில்லே. வீடு கோணலில்லே வாசல்தான் கோணல்ன்றாப் போல. என்ன சொல்ல வர்றே நீ நீ நெனைக்கறதைத்தான். வாசல் மாத்தி கட்டறத வீட்டெ இடிச்சிக் கட்டு. என்ன. *** வீட்டப் பத்தி உங்கப்பா எப்போ கவலைப்பட்டார். அம்மாயில்லே. அப்பவே வீடுன்னு நினைப்புயில்லாம ஓடினது ஓடியாந்தது போலவே இப்பவும் என்றாள் அம்மா. V இப்படித்தான் பேசாதேன்றது. குமாரசாமி கண்களை மூடி ஈஸிசேரில் சாய்ந்து கொண்டான் தான் உருவானதென்பது இயற்கையா வேடிக்கையா எனத் தோன்றியது. ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு நகரத்திலிருந்த வீடு கடை முதலியனவற்றை இழந்து இந்த நகரத்திற்கு அவனப்பாவுடன் வந்தபோது பத்து வயதுக்குள்ளிருக்கும். அம்மா முகம் ஞாபகமில்லை. கிராமத்திலிருந்த கொஞ்சம் நிலம் வயிறு காயாமலிருக்க உதவியது. அப்பாவுடன் கிராமத்திற்கு போனான். கிராமத்தில் இரு. நான் இந்த நெல்லை போட்டுவிட்டு வருகிறேன். இந்த சின்னம்மா வீட்டில் சாப்பிட்டு நிலத்தை கூட கவனி. சொல்லும் வேலைகளைச் செய். என்னடா. சிறு பின்னல் தலையை சரிசரியென ஆட்டி கருப்புக் கண்களை உருட்டினான் மெலிந்த வெளுப்பான பையன். ஏரிக்கரை காவாக்கரையின்னு சுற்றக் கூடாது. புளியம்பழம் பொறுக்க ஊர்ப்பையன்களுடன் போகாதே. தம்பியோடு விளையாடு. பக்கத்து வீட்டு மாமாவிடம் ஆனா ஆவன்னா படி. எழுது. தன்னை வேடிக்கை பார்த்த சிறுவர்களை அவன் பார்த்தான். காலையில் சீக்கிரம் எழுந்து காவாய் கரைக்குப் போய் நீயே எல்லாம் செய்து கொள்ள வேண்டும். சின்னம்மாவை தொல்லை படுத்தக் கூடாது. பையன்கள் சிரித்தார்கள். பதிலுக்கு பல்லைக் காட்டினான். சின்னம்மாவும் சித்தப்பாவும் அம்மா அப்பா மாதிரி. சின்னம்மா சொல்லும் வேலைகளை தட்டாமல் செய்ய வேண்டும். ஓடி ஓடிப் போகக்கூடாது. வெயிலில் கண்ட இடத்திலும் சுற்றக்கூடாது. விளையாடப் போகக்கூடாது. அடம் பிடிக்கக்கூடாது. என்ன சரியா . வாயை திறந்து சொல்லேன். சரிப்பா. எம்பேராடா குமாரசாமி உம்பேரு. சரி, போய் கைகால் கழுவிவிட்டு விபூதி பூசி பிள்ளையாரை குட்டிக்கொண்டு வா. சாப்பிட இலையை போடம்மா. இருட்டி விட்டது. நான் நாளைக்கு காலையிலேயே போகிறேன். அடுத்த வாரம் வருகிறேன். போனால்தான் முடியும். சாப்பிடப் போறோம்டா காலையில் வரியா. ஒருத்தனுக் கொருத்தன் தலையாட்டிக் கொண்டான். காலையில் புதுப்பையன் ஊர்க்காவாய். கோயில், பஜனை கோயில், ஏரிக்கரை, சுடுகாடு , புளியமரம், ஊர் எல்லாம் பார்த்தான். புளியம்பிஞ்சு தான் இருந்தது. பல் கூச புளியம்பிஞ்சுகளை நாக்கு எரியும் வரை தின்றார்கள். வெயில் உச்சிக்கு வந்திருந்தது. காலையில் அப்பா கிளம்பியபோது தானும் கிளம்பியது. புளியம்பிஞ்சுகளும் காவாய் நீரும் வயிற்றை என்னவோ செய்வதாய்ப் பட்டாலும் பசியும் எடுத்தது. சின்னம்மா பயம் வந்தது. என்னடாப்பா நேற்றெல்லாம் பதவிசாய் அப்பாவிடம் ஒண்டி நின்றதேன்னு பார்த்தேன். அந்தக் குடும்பத்து பையன்களுக்கே கால் தரிக்காதே. வா. போய் கைகால் கழுவிவிட்டு சாதம் பிசைஞ்சி வைத்து கவிழ்த்து மூடியிருக்கிறேன். சாப்பிட்டுவிட்டு தட்டை கழுவி வை. சீக்கிரம் வா. சித்தப்பா நிலத்துக்குப் போயிருக்கிறார். சாதம் எடுத்துக் கொண்டு போகவேண்டும். பழையது இப்பவும், உப்பு ஊறுகாய், அப்பா வேறு இல்லை. அழுகை வந்தது. சின்னம்மாவுக்கு பயந்து வேகமாய் விழுங்கினான். எத்தனை நாட்கள். எவ்வளவு நேரம் தின்னுவாய் பொம்மனாட்டியாட்டம். வயிறு ரொம்பிவிட்டால் எடுத்து வைத்துவிட்டு சாப்பிடேன். அடைக்கணுமா. முழியைப் பாரு. அதுக்குள்ளே அழுகை. அதுதான் அம்மாவை அப்பவே விழுங்கியாச்சே. எதுக்கு அழுகை. இங்கேயும் விழுங்கவா. சாதம் போதுமா. போதாதா. இன்னும் பசிக்கிறாற்போலவும் இருந்தது. செத்துப் போன அம்மா தம்பி பாப்பாவால் செத்துப்போனதாய் சொல்லியிருந்தார்கள். அப்புறம் முறைக்கலாம் தட்டை. சீக்கிரம் கிளம்பு. சித்தப்பன் காத்திருக்கும் பசியோடு கொடுத்துட்டு வந்து மாடுங்க வரும் கொட்டாய திறந்துவிட்டு தண்ணிகாட்டி கட்டி வைக்க போடணும். அவசரத்தில் நிஜாரை தூக்கி விட்டுக் கொண்டு உயரம் உயரமான வாசக் கால்களைத் தாண்டியபோது, பெரிய தூக்கு அதில் இடித்தது. தலையில் நறுக்கென குட்டினாள் சின்னம்மா. அம்மா . அங்கயிருந்த வரைக்கும் பள்ளிக்கூடத்துக்கு எங்க போனார் உங்கப்பா. அவளுக்கு பயந்து மாடு மேய்க்கவும் ஏரடிக்கவும் வெயில்ல காயவும். எல்லாம் அந்தக் கிழம் செஞ்சது. பொல்லாத கிழம். அப்படி சொல்லாதே அவங்களால முடிஞ்சத செய்தாங்க. நம்ம தலையெழுத்து அப்படி. யாரையும் குத்தம் சொல்லக்கூடாது. இப்ப கெட்டா போயிட்டோம். ஆனால் வீடு. அதே புத்தி. அதே கோணல். எப்படியோ கொஞ்சம் படித்து அவனவனுக்கு ஓடாய் உழைத்து என்ன லாபம். ஆமாம். ஊரானுக்கு உழைக்கும்போதெல்லாம் உடம்பில் வலுவிருந்தது. காலுக்கு செருப்பாய் தேய்ந்தாயிற்று. பணத்தையும் மோசடி செய்ததோடு கை தூக்கியும் விடவில்லை யாரும். நானாய் எழுந்து நின்றபோது என் உடம்பில் வலு இல்லை. தலைவிதி அவ்வளவுதான் பாக்யம். சொன்ன போதெல்லாம் கேட்டால்தானே . இவ போய் நமக்கு சொல்றதான்னு. எப்படியோ அது இது நடந்து படிச்சு போவுதுங்க. இனி நடக்க வேண்டிய பாக்கணும். தனக்கு தலை நரைத்து விட்டது போல அவளுக்கும்தான் தலை நரைத்து விட்டிருக்கிறது. ஏன் நடந்ததையெல்லாம் சொல்லி வேதனைப்பட வேண்டும். உடம்பால் இனி முடியாது. இரண்டு பேராலும், என் பலம். என் உழைப்பு. என் வேகம் என் முயற்சிகள். இப்பவும் தன்னைப் பற்றித்தான் நினைப்பு. அப்பவும் இதே தான். எந்தலையெழுத்து. நானாயிருக்கவே மனுசன் குடும்பம் கெளரவம்னு இருக்கிறார். எல்லாம் செய்தாயிற்று. இனி முடியாது. நான் வாழ்ந்தது பொய்யா. எப்படி திடீரென்று தான் தன் பிள்ளைகளுக்கு அறிவில் குறைந்தவனாகவும் உலக அனுபவம் இல்லாதவனாகவும் ஒன்றுமில்லாதவனாகவும் ஆகிவிட்டான் என்பதை நினைக்க அவன் துயரமுற்றான். உடல் பலமிழந்ததில் மனமும் நிலையிலில்லை. பையன்களின் கனவுலகமாய் இருந்த பட்டினத்திற்கு அழைத்துப்போய் இதுதான் உயிர் காலேஜ். இதுதான் செத்த காலேஜ். இதுதான் ஆலமரம் எனக் காண்பித்து பெரிய ஓட்டலில் டிபன் வாங்கிக் கொடுத்து ஆட்டோவில் ஏற்றி எலெக்ட்ரிக் டிரெயினில் அனுபவப்படுத்தி பயத்தினால் பின்வாங்கி விழாமல் பின்னால் நின்று, அவ்வளவு தண்ணியும் அலைகளாக ஆர்ப்பரித்து காலடி மணலை பறித்து செல்வதை பயப்படாமல் நின்று ரசிக்கவும், கடல் நீரை நாக்கில் துளிவிட்டு எப்படி உப்புவெனத் தெரிய வைத்து, தூரத்தில் கப்பலைக் காட்டி. அவனுடைய வழியில் நேர்மையாய் நடப்பதாய் நினைத்து ஏதோ சம்பாதித்து, தான் அலைந்ததைப் போல தன் பிள்ளைகள் அலையக் கூடாதென நினைத்தது உண்மையில்லையா. வாழ்க்கை என்பது என்ன. அலைச்சல். நிம்மதியின்மை. கவலை. உழைத்தும் பேரில்லாமல் போவது. இரவில் சரியாய் தூக்கம் வராதது. நோய். தன் ராசி தான் காரணம். எல்லாம் கை மீறிவிட்டது. எதிலும் முழு நம்பிக்கையில்லை. தன் எண்ணங்களை, விருப்பங்களை வெளியில் சொல்லவும் அவநம்பிக்கை தோன்றுகிறது. ஏற்பார்களா. சிறுவயதிலிருந்து தான் பழகிய, வாழ்ந்த வாழ்க்கையும் இப்போது இருப்பதும் ஒன்றில்லையா. தன்னை ஒதுக்க முயல்கிறார்களா. நான் இவ்வளவுதான் என்பது எப்படி. தன் அனுபவத்தில் தெரிந்து கொண்டது, உண்மையெனச் சொல்வது ஏளனத்திற்குரியதாகிவிட்டது. பணம் சம்பாதிக்காததுதான் காரணம். தன்னோடு வளர்ந்து வாழ ஆரம்பித்தவர்களில் பலர் பணக்காரர்களாயிருக்கும் போது தன்னால் ஆகமுடியாததற்கு தான் மட்டுமே காரணமா. பிறருமில்லையா எப்பவும்தான் தான் தான். தான் நினைக்கறாப்போலதான் எதுவும் செய்யணும், குணமும் முரடு. அதோட எல்லாரையும் நம்பி நம்பி ஏமாந்துடறது. எப்பனா நான் சொன்னத எடுத்துக்கின நாள் உண்டா. மனதில் வெறுப்பு வழிந்தது. நீ சொல்லாதே. நீயே சொல்லாதே. நீ சொல்லாதே. கண்கள் அயர்ந்தன. இரவு. பழைய தப்பு சரிகளை பேசி ஆத்திரப்பட்டு வெறுப்பேற்பட்டு இதுதானா குடும்ப வாழ்க்கை. எந்த விதத்தில், திட்டமிட்டா பையன்களும் பெண்களும் வளர்ந்தார்கள், வளர்க்கப்பட்டார்கள். எப்படியோ வளர்த்தார்கள் என்பதுவா உண்மை. வெளி உலகில் நடந்த நிகழ்ச்சிகள் யாரை எப்படி பாதித்தன. வெளி உலகில் நடந்த நிகழ்ச்சிகள் யாரை எப்படி பாதிக்கும் அல்லது பாதிக்கவேண்டும் என்கிறாய். மூன்று காலங்களையும் என்னால் எப்படி உணரமுடியும். 47 வரை மகாத்மா காந்தியின் போராட்டத்தில் அவன் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று காரணமோ சமாதானமோ நான் எப்படி இன்று 76ல் சொல்ல முடியும், பழைய உணர்ச்சிகள் பாதிப்புகளாய் மாறி நிற்கும்போதே பலர் சூன்யங்களாய் திண்டாடி விழிக்கும்போது, அப்படியானால் அரசியல் போராட்டங்களில் ஈடுபடாமல் குடும்ப போராட்டங்களில் மனிதன் தன்னை அழித்துக் கொண்டே போவதை நீ விரும்புகிறாயா. குடும்ப போராட்டத்தில் ஜெயிக்காததுதான் இன்னும் விடியவேயில்லையென அரற்ற வைக்கிறது என்றுதான் சொல்ல வா றேன். போராட்டம் என்பதை இன்னமும் கொச்சையாகவே புரிந்து கொண்டிருப்பதுதான் வேதனை என்றான் குமாரசாமி. உள்ளும் புறமுமாகப் போராட்டம் பிரக்ஞை, 1976                                       16. நிறம்   []   தொலைவில் வரும் போதே அந்த எருமை பார்ப்பவர் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. முன்னால் ஒரு எருமை பின்னால் மற்றொரு எருமையென நடுவே கிழவனொருவன் ஓட்டி வந்தான். எருமைகளை விட அவன் மூப்படைந்தவனாகவும், தளர்ச்சியடைந்தவனாகவும் தோற்றமளித்தான். தடம் தேய்ந்த வழியில் சென்று வரும் போக்குள்ளவையென அவற்றின் நிதான நடைகாட்டியது. அந்தக் காலை வேளையில் ஓரளவே போக்குவரத்திருந்த அச்சாலையில் ஊர்திகளின் தடத்திற்குள் எருமைகள் நடை பிசகி சென்றுவிடக் கூடாதென்பதில் மட்டும் அக்கிழவன் கவனமாயிருப்பதாய்த் தோன்றியது. முதல் எருமையின் முகத்தில் சடாரெனப் புலப்பட்ட சிகப்புக் குழம்புதான் பார்ப்பவர் கவனத்தைக் கவர்வதாயிருந்தது. கருத்த எருமையின் முகத்தில் வழிவது ரத்தம்தானா என உறுதி கொள்ள மீண்டும் பார்க்க வைத்தது. ரத்தம்தானென உணர்வு மீளவும் அதன் மீது பார்வையை ஈர்த்தது. துர்க்கையின் கருத்த மார்பில் சிகப்புச் சேலையின் மேலாக சிகப்பினைச் சொரிந்திருந்தது போல அந்தச் சிகப்புச் சொரியல். குங்குமச் சிவப்பாக ரத்த விளாறு. மண்டையிலோ, முகத்திலோ ஒருவன் பலத்த அடியால் நெற்றி, கண், மூக்கு, வாய் மீதாக ரத்தம் வழிய வருவதைப் போல அது. அந்த எருமையின் நடு முகத்தில் பெரிய சிகப்பு வட்டத்தில் இருந்து ரத்தம் ஒழுகி இருப்பது அது இன்னும் சற்று அருகே வரப் புலப்பட்டது. தனியார் மருத்துவ இல்லம் முன் மருத்துவர் வரவை எதிர்நோக்கி குமாரசாமியும் கல்பாவும் படியருகே சாலையை நோக்கி அமர்ந்திருந்தனர். குமாரசாமியின் உடல்நிலையின் பொருட்டு சற்று காலையிலேயே சென்றால் கூட்டம் குறைவாக இருக்குமென சென்றுவிட்டது, சாலையைப் பார்க்கவைத்தது. அப்போதுதான் ரத்தத்தின் சிகப்பு வீச்சு வந்த எருமையை கவனத்திற்கு கொணர்ந்தது. தொன்றுதொட்டு எல்லா மிருகங்களையும் விட மாடுகள் தான் ஒவ்வொரு காலத்திலுமே மனிதரின் செல்வங்களுள் ஒன்றாக கருதப்படுபவனவாயுள்ளன. மாடுகளிலும் எருமைகள் எல்லாக் காலநிலையிலும் அதிக பொருள் வரவைத் தருவனவாய் உள்ளன. எனினும் ஏனோ எருமைகள் அவற்றின் தனியான குணாதிசயங்கள் காரணமாய் புராண கதைகளிலும் மனிதரின் நோக்குகளிலும் இரண்டாம் இடத்தை அல்லது மறுப்பு முனையைப் பெற்றுள்ளன. பசுக்கள் பராமரிப்பு மிகுந்த செலவைத் தருவது நோய்வாய்ப்படும் கூறு மிகுதி கவனம் அதிகம் தேவை எனவெல்லாம் இருப்பினும் அவைதான் செல்வத்திற்கு குறியீடான தேவதையின் இருப்பிடமாகக் கருதி பூசனை பெறுகின்றன. எருமைகள் அரக்கத்தனத்தின் குறியீடாக்கப்பட்டு பலி கொள்ளத்தக்கவை என உருப்பெற்று விட்டன. இது எப்படி நிகழ்ந்தது. பெரும்பாலும் பால் பாற்பொருட்களை விற்பதைத் தொழிலாகக் கொண்டோர் மட்டுமே அதிகமாக எருமைகளைப் பராமரித்து வருவதாய்த் தோன்றுகிறது. ஓரிரு மாடுகளை பராமரித்தாலும் வீடுகளில் பசுக்களை மட்டுமே பாலுக்காக வளர்ப்பது தொடர்ந்து உள்ளது. குமாரசாமியின் வீட்டிலும் ஒரு பசுமாடு இருப்பதென்பது நிகழ்ந்து வந்தது. அப்பாவுக்கு பால் ராசி இல்லை எனும் அம்மாவின் வெளிப்படையான குற்றச்சாட்டினையும் மீறி ஏதோ ஒரு பசு வீட்டில் இருந்தது. மூக்கு, வாய் முழுதும் கறந்த பாலின் நுரை படிய நெய் சாய்ச்சிக் குடிக்கும் தம்பிப்பயலுக்குப் போட்டியாகத் தானும் குடிக்க இவனும் போட்டியிட்டதுண்டு. வெள்ளிக்கிழமைகளில் இருக்கும் பசு குளிப்பாட்டப்படும். தலையிலிருந்து வால் வரை மஞ்சள் தடவி, குங்குமப் பொட்டு வைத்து தீபம் காட்டும் அம்மா. தீபத் தட்டில் இருக்கும் வாழைப்பழம் அந்தப் பசுவுக்கே தரப்பட்டுவிடும். சாமி தட்டில் இருக்கும் பழத்தை போலல்லாது. எருமை ஒன்று எந்த காலத்திலும் இருந்ததாகவோ வழிபடப்பட்டதாகவோ நினைவில்லை. இத்தனைக்கும் ஒரு சில வீடுகள் தள்ளி இருந்த பால் வியாபாரம் செய்தவர் வீட்டில் பசுக்களுடன் அதிகமாக எருமைகளும் இருந்தன. எருமைப்பால் கெட்டியாக இருக்கும். பசுவின் பால் சற்று நீர்த்து இருக்குமென்பதுதான் முதலில் தெரிந்தது. பசு வெண்ணெய், பசும்நெய் கோரப் பட்டனவே தவிர, எருமை வெண்ணெய், எருமை நெய் தனியே இருப்பது தெரியவில்லை. எருமைகளின் பால் பாலாகவே விற்பனையாகிவிடும் போல ஒரு தோற்றம். ஆனால், எருமைப்பாட்டுப் பாலின் விலை மட்டும் பசுவின் பாலை விட அதிகமாய் இருந்தது. காபி சாப்பிடுபவர்கள் மட்டுமே அது கெட்டியாக இருப்பதற்கும், எவ்வளவு தண்ணீர் சேர்த்தும், எத்தனை பேருக்கும் வழங்கலாம் என்பதற்குமாக அதிகம் விரும்புவதாய்த் தோன்றியது. பொருள் லாபம் தருவதில் எருமைகள் முன் நின்றாலும் கூட, அந்த நந்தர்களின் தலைவனாக கூறப்பட்டவனின் நிழலில் கூட பசுக்களையும், பசுங்கன்று களையுந்தான் எழுதியவர்கள் சேர்த்திருந்தார்களே தவிர, எருமைகளை ஏன் அவற்றின் கன்றுகளையும் கூட அருகே சேர்க்க விரும்பவில்லை. ஆனாலும், வள்ளல் பசுக்கள் என்றதோடு கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி என்றதால் ஆண்டாள் பாவையின் காலப்போக்கு எருமைகள் நினைந்து முலை வழியே நின்று பால்சோர நனைத்தில்லம் சேறாக்குவதால் நற்செல்வ ரிருந்ததைக் காட்டுகிறது. என்றாலும், அந்தப் பசு மிக நல்லதடி பாப்பா என ஒருவரும்; தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு என மற்றவரும் குழந்தைகளுக்கு ஊன்றுவதுதான் நிற்பது. எருமையின் மந்த கதி குளிரும் மழையும் வெயிலும் சட்டை செய்யப்படாதனவாய்க் கருதப்படுவதும், எருமைத் தலைகளுடன் மகிஷர்களாய் அரக்க மாந்தர்கள் உருவெடுத்ததால் கடவுள் மாந்தர்கள் சாய்த்த கதைகள் இவற்றுக்கெல்லாம் அதன் உருவத்துடன் நிறம் கூட எதிரியாக்கி இருக்கலாம் எனத் தோன்றுகிறது. கருத்த முகம், கருத்த வளைந்த கொம்புகள், குட்டைக் கால்கள், படர்ந்த முதுகு, பருத்த வயிறு, சிம்பு வால், பழுப்பு முடி எல்லாம் கருப்பு. கருத்த எமனின் ஊர்தியாக கருத்த எருமை. சிவந்த துர்க்கையின் காலடியில் கருத்த எருமைத் தலை. நாய், பன்றி, ஆடு மாடுகளை விரட்டி அவை ஓடும் மகிழ்ச்சியின் பின்னால் விரட்டியோடும் சிறு வயதில் கூட எருமைகள் எளிதில் ஓடியதில்லை. நின்ற நிலையில் கழுத்தை மட்டும் வளைத்து பெரிய கண்களுடன் வளைந்த கொம்புகளுடன், தலை தாழ்த்தி நிலைத்துப் பார்க்கும் எருமைகள் பயத்தைத் தந்திருக்கின்றன. அவை என்ன செய்யுமோ என்ற கிலி அடிவயிற்றில் பரவும். விரட்டி ஓட வைப்பதை விட்டு அச்சத்துடன் பின் வாங்க வைக்கும். ஆனாலும், மாடு மேய்க்கும் சிறுவர்கள் எருமைகளின் படர்ந்த முதுகில் உட்கார்ந்து சிறு கொம்புகளுடன் மேய்க்கும் போதும், அவற்றை விரட்டி அவை ஓடும்போதும், விழாமல் பற்றியிருக்கும்போதும் பார்த்தால் அவை பய உணர்வைத் தோற்றிவிப்பதில்லை. எருமைகளுள் கொம்புகள் முட்ட மண்டை மோதி சண்டை நடக்கும். மனிதரை முட்டியதாக கேள்விப்பட்டதில்லை. எருமைத்தனம் அடுத்தவரிடம் இருப்பதாக ஒருவர் மற்றவரைப்பற்றிக் கருதுவதும் என்று ஆரம்பித்ததெனத் தெரியவில்லை. பசுமாட்டுத்தனம் என்பது பரவலாகக் காணப்படவில்லை. கட்டின பசுமாதிரி இருப்பதாக பெண்கள் நிலைப் பற்றிப் பேசமட்டும் பசுக்களைப் பயன்படுத்துவதும் மங்கி வருவதாயுள்ளது. சிறு வயதிலிருந்தே எருமை என மொழியப்பட்டு ஆசிரியராலும் உறுதி செய்யப்பட்டு அப்படியே வளர்ந்து நிற்பவர்கள் அதிகமெனவும் தோன்றுகிறது. இந்நிலைதான் அதாக மாறுவது வருத்தத்திற்குரியது. எருமைகளில் இருவகை இருப்பதாக அவ்வகையொன்றில் தன்னையும் சேர்த்துக்கொண்டு ஒருவர் சொன்னார்: ஒருவகை எவ்வளவு மழைக் கொட்டினாலும் நின்ற இடத்திலேயே நகராது நின்று கொண்டிருப்பது. பாதிமழையில் திடீரென உற்சாகம் கிளம்பி சேற்றைக் கிளப்பி மூங்காரமிட்டு தலையை ஆட்டிக்கொண்டு நாலுகால் பாய்ச்சலில் தப்பத்து தப்பத்து என ஓடுவது இரண்டாம் வகை. இந்த இருவகையாலுமே பயன் ஏதுமில்லை. நீங்களும் அதுபோல. எருமை வகை ஒன்று எருமை வகை இரண்டு என முன்னிருந்த வர்களை வகைப்படுத்தி, இருவகை எருமைகளுமே எங்கே கோபித்துக்கொள்ளப் போகின்றனவோ என அஞ்சி, தாமும் அதில் ஒருவகையென சேர்த்துக்கொண்டார். கேட்டு நின்ற இரு வகைக்கும் ஒருவகைத் திருப்தி. சொன்னவரும் சொல்லப்பட்டவர்களும் எருமைகளாகவே இருப்பதில். எருமை மாட்டுத்தனம் எனப்படுவது ஒரு தேசிய குணமாகியுள்ளது வருத்தப்படக்கூடிய ஒன்றா அல்லது மகிழ்ச்சிக்குரிய நிலையா. எனினும் சில எருமைகள் பல எருமைகளை அடக்கி ஆள்வது தொடர்ந்த நிகழ்வாய் உள்ளது. தாங்களும் எருமை அவர்களும் எருமை எனப் பன்மையின் சகதிக்குளியலில் மந்தம் திளைக்கும் மகிழ்ச்சி. தடித்த தோலுடையன சேற்றில் திளைப்பதை அல்லது சேற்றை உண்டாக்கி திளைப்பதை வழியாகக் கொண்டுள் ளனவாய் தோன்றுகிறது. பன்றி, யானை, காண்டாமிருகம்... அப்புறம் எருமைகள் சேற்றில் புரண்டு எழுந்தால்தான் என ஒரு தவிப்பு, வேகம், தேடல். எதிலிருந்தோ எதையோ காப்பாற்ற அவற்றுக்கு சேற்று பூச்சு தேவையாகலாம். மனிதர்களுக்கு வேறு மாதிரி தேவைப்படலாம். ஆறாவது அறிவு உள்ளவர்களாயிற்றே. இதை மறுப்பவர்களும் இருக்கலாம். எப்படியோ எருமை என ஒன்றைக் குணமாக்கி மேலும் வினோதமானக் குணங்களைக் கற்பித்து, பின் குற்றஞ்சாட்டி, அவற்றை பலிகடாவாக்குவது இத்தோற்ற உருவாக்கத்தில் கொடூரஞ்சேர்ந்து காலங்காலமாக இலட்சக்கணக்கான எருமைகள் மண்டை சிதறடிக்கப்படுவது. ரத்தம் கொட்டி நாக்கு வெளித்தள்ளி கால்கள் மடிந்து வீழ்கின்றன இம்மானுடர்களால் தாங்கள் புனைந்த கதைகளைக் கண்டு தாங்களே அஞ்சி, மற்றவரையும் பயமுறுத்தி, பயம் நீக்க தேவதைகளை ரத்தத்தில் குளிப்பாட்டி குளிரவைக்க கத்திக்கும் சூலத்திற்கும் மாண்ட எருமைகள் எண்ணப்பட இயலாதன். பத்து பதினாறு எருமைக்கடாக்களை வரிசையாகக் கட்டி கழுத்தை ஒரே வீச்சில் வீழ்த்துவதால் கொட்டும் ரத்தத்தை அப்படியே வாய்வைத்து உறிஞ்சிக்குடிக்கும் ஒரு கூட்டத்தின் வழிபாடு பற்றி அறிந்தபோது சிறுவயதில் அச்ச உணர்வு மேலோ தற்போது? ரத்தந்தான் வழிகிறது என்பது அந்த எருமை அருகே நெருங்கியபோது உறுதியானது. கல்பா அந்த எருமையின் அசைவுகளை இமைக்காது பார்த்து பேச இயலாது குமாரசாமியின் தோளைப் பற்றினாள். கெட்டியானத்தம் நிறம் கருத்த முகம் பின்னணியாகக் காண அதிர்ச்சித்தருவதுதான். வலியும் வேதனையும் அதன் கண்களில் தெரிகிறதா. ஏன் அது வலியால் அரற்றாமல் நடக்கிறது. தலையை சற்று மேல் தூக்கியபடி நாக்கை இடமும் வலமும் மாற்றி மாற்றி மூக்கின் மேலும் உள்ளும் புறமும் எட்டும் வரை நீட்டி நக்கித் துடைப்பது இடைவிடாது நடக்க அது நடந்து வந்தது. நெற்றியின் நடு மேட்டில் வட்டச் சிகப்பிலிருந்து ஒழுகும் ஓரடி நீள ரத்தக்கசிவில் நாக்கு தொடுவது கொஞ்சம்தான். காயத்தை சுற்றி சிவந்த வீக்கம் கறுத்த தோலையும் மீறித் தெரிந்தது. குமாரசாமியின் முன்னே அது வந்தபோது இவன் விதிர்விதிப்புற்றான். சில வினாடிகளில் அந்த எருமைகளும் கிழவனும் கடக்கும் நிலையில் ஏதும் கேட்கத் தோன்றாது நிலைப்புற்றான். என்னயிது. ஏன். சூலத்தால் குத்துப் பெற்ற மகிஷத் தலைபோல. யார் தடியாலடித்திருப்பார்கள் இப்படி. முள்வேலியில் தலையை நுழைத்து எதையோத் தின்னப் போய் கிழிக்கப்பட்டிருக்குமா. மூக்கு முழுவதையும் கழுநீர்த்தொட்டியில் நுழைத்து ஊறிய பிண்ணாக்கை அவசரமாய்த் தேடி கழுநீரை வீணாக்கி கட்டையால் அடிவாங்கியிருக்குமா. ஆனாலும் அந்தக் காயமும் அதிலிருந்து ஒழுகும் ரத்தமும் எந்தச் சமாதானத்தையும் ஏற்காது. கோபம் மேலிட எருமை பற்றிச் சென்ற அந்தக் கிழவனைப் பார்த்து இரைந்தான் குமாரசாமி. என்னய்யா இவ்வளவு ரத்தம் ஒழுகுது ரணத்திலிருந்து. இப்படியா அடிப்பார்கள். அது டாக்டர்கிட்ட இட்டுப் போகலே. கிழவன் மெதுவாய் இவனைத் திரும்பிப்பார்த்தவன் சில வினாடிகள் கழித்து தலையைத் தாழ்த்தி சொன்னான். அடியில்லீங்க. அழுத்தமா கயிறு கட்டி கட்டி காயங்க. அதுவா சரியாப்பூடும். வேறு பேச்சுக்கு முன் கிழவன் எருமைகளுடன் பக்கத்து சந்தில் திரும்பி மறைந்தான். குமாரசாமி செயலற்றவனாய் அந்த சந்தின் வெறுமை முனையை வெறித்தான். சற்றும் நிறுத்தாது இடமும் வலமுமாக தன் நாக்கை நீட்டி எட்டிய வரையில் ஒழுகும் ரத்தத்தை நக்கி சுத்தப்படுத்தும் எருமைக்கு அதற்கு எட்டாத, நாக்கு படமுடியாத நெற்றிமேட்டில் ரணம் ஏற்பட்டிருந்ததுதான் மேலும் வருத்தத்தருவதாயிருந்தது. தன் நாக்கு எதுவரை எட்டும். காலச்சுவடு, 1989 17. எல்லை   []   வான் ஓடிவரும் ஆட்டுக் குட்டி கோழி குரைத்து விளையாடும் நாய்களைப் பார்த்து கைகொட்டிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் என் முகத்தையும் ஆராய்ந்தான். ஓங்கிக் கேட்ட நாய்க்கூச்சல் இருவரின் கவனத்தையும் அப்பக்கம் திருப்பியது. விளையாடிக் கொண்டிருந்தவை எப்போது சண்டையிட ஆரம்பித்தன. எது எதோடு எதற்காகக் குறைப்பு என்பதைப் பார்க்கப் போய் வாண்டு வானுக்குப் பதிலாக நான் அவற்றைப் பின்தொடர்வது நடந்தது.  இருந்த இரண்டு நாய்களுக்கு இடையே புதிதாய் ஒரு அரைக்குட்டி நாயொன்று நோஞ்சானாய் மாட்டிக் கொண்டிருந்தது. சுற்றி வளைத்துத் தாக்க முற்பட்ட பெரிய நாய்களுடன் உருண்டு எழுந்து கத்தி பல்லைக் காட்டி பயமுறுத்தியும் பயந்தும் ஒடுங்கி வெட வெடத்தது. மண்ணில் புரண்டும் வெளிவாங்கி பின்னால் நகர்ந்தும் அந்தத் தெரு எல்லையைக் கடப்பது அதன் எண்ணமாயிருக்குமென புலப்பட்டது. இரு பெரிய நாய்கள் தவ்விக்குதித்து பின்னங் கால்களால் தரைப் புழுதியைக் கிளப்பி முன்னும் பின்னும் பாய்ந்து உறுமி எப்படியும் மாட்டிக்கொள்வதைப் பிடுங்காமல் விடுவதில்லையெனச் சுற்றித் தாக்கின. பதிலுக்கு கடி வாங்கிவிடக் கூடாதெனும் எச்சரிக்கையும் அவற்றுக்கிருந்தது தெளிவானது. கடித்துக் குதறுவதைவிட அச்சுறுத்துவதுதான் நோக்கமெனவும் தோன்றியது. எல்லை ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் வெளி ஊடுருவலை உடனே விரட்டி அடிப்பதும் எவ்வளவு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஊடுருவல் ஆதிக்கமாவதும் நிகழ்வதுதான். கூடாது. அடர்ந்த வனங்களில் இந்த எல்லை விளிம்பும் மீறலும் ஊடுருவலும் கடுமையாகப் பார்க்கப்பட்டன. தன்னால் ஆதிக்கம் செலுத்த முடியுமெனத் தோன்றுமளவு வனப்பரப்பு எல்லைகளாக உறுதிப்பட்டன. இந்த ஆதிக்கம் நிலப்பரப்பை ஆளவா அல்லது மற்ற வலுக்குன்றியவற்றை ஆளவா அல்லது பெண்ணடிமை செய்ததை நிலைநாட்டிக் கொள்ளவா . எத்தனை ஆண்டுகள். ஆனால் இரை தேடலும் பசிதீர்வதும் எல்லைகளை வரையறுக்கவில்லையா. தீர்மானிக்கவில்லையா. மண்ணில் உயிர்ப்பட்ட நொடி என்பது முதல் எரியும்பசியைத் தணிப்பது முடிவென வாழும் வரை நடப்பது. நிலம் நீர் வெளி முழுவதையும் கவந்தக் கைகளால் உட்படுத்தி விழுங்கிடும் ஆத்திரம். முடியாத தன்மையில் கண்படும் தொலைவரை கால் ஓடிக் களைக்கும் வரை உட்படுத்தி உள்ளே விளையும் இரை தனக்குத்தான் தனக்கு மட்டும்தான் என்பது உறுதி பட்டதும் மற்ற ஆதிக்க உணர்வுகள் அரசாள்வதும் அடிபணிய வைப்பதும் முறையாகிறது. தன் எல்லைக்குள் இரைத் தட்டுப்பாடு ஏற்பட்டாலோ, ஏற்படுமென்பதைத் தவிர்க்கவோ, ஏற்படாமலிருக்கவோ அடுத்த எல்லைக்குள் நுழைவதும் அடிமைப்படுத்துவதும் அடிமையாவதும். வாழ்வது பின் அழிவது. எப்படியும் இரைதேடல் எல்லைகளை வகுத்தது. உடைத்தது. புதிய எல்லை. குறுகிய வட்டம். புதுப்புது உத்தி ஆதிக்கம். இரை. எல்லை. புதுவலை. காட்டு விலங்கிலிருந்து விடுபட்டு நாட்டு மிருகமாகி அதுவும் வீட்டு நாய்களாகிவிட்ட பின்னும் இரை எல்லை காத்துக் கொள்வதும் ஊடுருவுவதும் கோட்டைத் தாண்டிச் சென்று அடிப்பதும் கோட்டுக்குள்ளாகவே அடி வாங்குவதும் நிலைபெற்ற தென்பதை புழுதி கிளப்பிக் கொண்டிருந்த நாய்கள் காட்டின. இப்பொழுதும் தற்காப்பு முதன்மையானதாகயிருந்தது. வாலை பின்னங்கால்களுக்குள் இடுக்கி தலையைத் தாழ்த்தி பற்களைக் காட்டி உறுமி அடிபட்டது போல் கத்தி சிறுசிறு வளைய மிட்டவாறு அந்தக் குட்டி நாய் தப்பிக்க இடம் பார்த்தது. வெளிமுனைக்குப் பின்வாங்கிக்கொண்டிருந்தது. தன் இனம் என்பதால் மட்டுமே இன்னொரு வெளிநாயை ஏற்க உரிமை நாய்களும் தயாராக இல்லை. துரத்தி அடிக்காவிட்டால் தாங்கள் துரத்தப் படலாம். கிடைக்கும் இரையின் பங்கு குறையும் அல்லது கிடைக்காமல் போகலாம் என்பதை அவையும் உணர்ந்திருந்தன. இருக்கக்கூடிய ஒன்பது அல்லது வாழும் சிறிய வயதுக்குள், பிறந்து ஆறு மாதமானதென்றாலும் வயதின் ஒரு பகுதியை அந்தக் குட்டி நாய் கடந்துவிட்ட நிலையில், அதற்கு என ஒரு இடம் பகுதி எல்லை இரை உறுதி செய்து கொண்டாக வேண்டும். வலுவான இடத்தில் அடிபட்டாலும் வலுக்குறைந்த பகுதியோ ஆளற்ற எல்லையோ கிடைக்காமல் போகாது என ஊடுருவல். தெருப்புழுதியில் பிறந்து வளரப் போராடும் அதன் வயதில் வீடுகளின் உடமையாளர்களால் வளர்க்கப்படும் சிறந்த இன நாய்கள் அல்லது நாட்டு நாய்களின் வளர்த்தி அதிகமாயிருக்கும். உடமைக்காரர் அவரது நாயை சங்கிலியில் பிணைத்து உடன் நடத்தி வந்தாலும் அந்தப் பகுதியில் கோலோச்சும் நாய்கள் மோப்பம் பிடிக்காமல் விடுவதில்லை. உறுமலுக்கு இலக்கானாலும் பிணைத்துவரும் மனிதரைக் கருதி வீட்டு நாய்கள் விரட்டப்படாமலோ போகும். சில நேரம் இழுத்துப் பிடிக்கும் சங்கிலியை மேலும் இழுத்து முன்னங்கால்கள் உயர கண்களில் கோபம் பீறிட தெருநாய்களின் மீது பாய முற்படும் உயர்ந்த இன வீட்டு நாய்களும் உண்டு. அப்போது அந்த தெருநாய்கள் தெரு ஓரங்களில் பதுங்கி வெளிவாங்கி எதிர்புறம் ஓடி விடுவதும் நடக்கும். ஆனால், புரவலர் இல்லாத குட்டி நோஞ்சான் தெருநாய் விரட்டப்பட்டாலும் கடிபட்டாலும் ஏதோவோர் பகுதியில் வாழ்நாள் முடிக்கப்படும் வரையிலும் ஊடாடியாக வேண்டும். தேடு. இரை தேடு. இரை. தங்கள் கோட்டை கைமாறிவிடக்கூடிய எதிர்கால நிகழ்வை ஆபத்தை வரும்போதே தடுக்க, தன்முனைப்பு பேட்டை தாதாக்கள் தளபதிகள் மாவீரர்கள் வீரர்கள் அஞ்சா நெஞ்சர்கள் கொள்கை மறவர்கள், ஏவும் எஜமானர்கள் இல்லாத நிலையிலும் பாய்ந்து பாய்ந்து தாக்கி குரைத்து கடிக்க முற்பட்டு மண்ணைக் கீறி புழுதி கிளப்பி கட்டம் கட்டி கொண்டிருந்தன. ஆனால் கடிக்கும் போக்கைவிட துரத்தியடிக்கும் தந்திரமே ஓங்கியிருந்தது. கிராமமாகவும் இல்லாது நகரமாகவும் எவ்வித ஒழுங்குமின்றி வளர்ந்துவிடும் ஊரின் நெருக்கமான தெரு சந்துக்களில் ஆள் ஊர்தி நடமாட்டம் அருகிய அளவில் இந்த ஆதிக்கச் சண்டை நடப்பதைத் தெளிவாக உணரமுடிகிறது. பெருநகரங்களில் நீண்டு அகன்ற சாலைகளில் யாரும் பிழைத்துப் போவதே பாடாக இருப்பதால் இது சட்டென புலப்படுவதில்லை. யாரோ யாரையோ கடித்தால் நமக்கென்ன நம்மேல் விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரியெனும் அச்சஓட்டம் நிலவும். அங்கும் வெளித்தெரியாது பல்கியிருக்கும் திடீர் நகர்களில் வளர்ப்பவை காலூன்றியிருப்பவை அப்பகுதியை காத்துக் கொள்வதும் அண்டை நகர்களுக்கு எல்லையை விரிவாக்கிக் கொள்வதும் நிகழாததல்ல. பெருஞ்சாலை ஓரக்குடியிருப்போரை அண்டியிருக்கும் நாய்கள் விரையும் ஊர்திகளுக்கும் இடையே நுழைந்துவிட்ட வெளிநாய் ஒன்றை அந்தச் சாலை முடிவு வரை துரத்தி ஓட்டியதை ஒருமுறை பார்க்கமுடிந்தது. பிடிக்கப்பட்டு கம்பியால் வாய் கட்டப்பட்ட நிலையில் தப்பி ஓடிவந்த வெளிநாய் கடிக்க முடியாமலும் பயமுறுத்த முடியாமலும் வெளியேற நேர்ந்தது. எப்படியும் எல்லை பாதுகாக்கப்பட்டு விட்டது. இப்போது அந்த குறுகலான சந்து இணையும் தெருவுக்குள் போராட்டம் சென்றிருந்தது. வான் என்ன புரிந்து கொண்டானோ, நாய்களின் குரைப்பும் கத்தலும் சண்டையும் அறிமுகமாகும் திகைப்பில் சிறிது அச்சமும் தெரிய சிறுகண்களை அகலவிரித்து கைக்கொட்டவும் மறந்தவனாய் அவற்றைப் பார்ப்பதும் அணைத்து நிற்கும் என் முகத்தைப் பார்ப்பதுமாகவும் இருந்தான். குழந்தைக்கு புதிதாக இருக்கக்கூடியது மரபாகிப் போன எனக்கு திகைப்பை அளிக்க முடியாதது இன்று வியப்புக்குரியதல்ல. அந்த விரட்டலின் முடிவு அறிவதில்தான் ஆவல். தள்ளி நிற்கும் எனக்கு.   சந்து இணையும் பெரிய தெருவின் பாதியில் அந்த குட்டி நாய் வெற்றிகரமாக பின்வாங்கியிருந்தது. அந்தத் தெருவின் முடிவை எட்டும்வரை அதை விரட்டியடிக்காமல் பெரிய நாய்கள் விடா என்பது என் எண்ணம். அல்லது எதிர்ப்பார்ப்பு. அப்போது விரட்டும் இரண்டுடன் மூன்றாவதாக ஒரு கழுத்துப்பட்டி கட்டிய நாய் சேர்ந்து கொண்டது. தன் தலையை உயர்த்தி குறுகிய அடிகளில் வேகமாய் வந்து விறைப்பாக செல்லகுரைப்புடன் வந்த புதுநாயை, சிறிது வாலாட்டி வரவேற்று முகர்ந்து சேர்த்துக் கொண்டன மற்ற இரண்டும். புது வலு கூடிய வேகத்தில் தாக்குதலின் வேகம் குரைப்பின் அளவு விறுவிறுப்பானது. இருமுனைத் தாக்குதலை சமாளித்து பின்வாங்கி வந்த குட்டி நாய் மும்முனை தாக்குதலுக்குள்ளானது. வெளியேறக்கூட விடாது வீடுகளின் சுவர் முனைகளில் ஓட்டி குறுகிய குட்டியை கடிபடாமல் எதுவும் உடைபடாமல் அனுப்பக்கூடாது என்பது வலு கூடியதின் திட்ட முடிவு போலப் புலப்பட்டது. என்றாலும், பிறந்ததில் இருந்து வளர்ந்து ஆறு மாதம் அல்லது ஓராண்டு வயதுவரை உயிரோடு வளைய வர முடிந்த அந்த குட்டி நாய்க்கு இந்த தாக்குதல் போல பல தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கக் கூடிய அனுபவம் இருப்பது அதன் தற்காப்பு நடவடிக்கைகள் பின்வாங்கல் தந்திரங்களிலிருந்து தெரிந்தது. ஓரிடத்தில் காலூன்றி அதற்குப் பின்னரும் உயிரோடு இருந்து இரையும் நாளும் கிடைத்து வாழ்வது எப்படி எனக் கற்பது முடியாதுதான். வாழ்ந்தால் அதன் வழித்தோன்றலுக்கு கற்பிக்கலாம் தொடர் ஓட்டம். சிறிது ஓய்ந்து நின்ற மூன்றும் தயங்கிய நேரத்தை எதிர்பார்த்து இருந்த குட்டி நாய் சற்று நிமிர்ந்து வேகமாய் வெளியே ஓடியது. மூன்று நாய்களிலும் பெரிதாக வலுமிக்கதாக இருந்த ஒன்று சற்று அலட்சியமாய் குரைப்பதையும் பாய்வதையும் நிறுத்தி வெளியே ஓட முயன்று கொண்டிருந்த குட்டி வெளிநாயை வெறித்து நின்றது. இரண்டாவது நாயும் புதிதாக சேர்ந்த மூன்றாவதும் தலைவரின் அசைவை உணர்ந்தவையாய் அவற்றின் தாக்குதல் வேகத்தை குறைத்து வெளியேற்றுவதை மட்டும் விரைவு படுத்தும் வகையில் செயல்பட்டன. சிறுகுரைப்பு வேகமில்லாத பாய்ச்சல் போக்கு. கடிக்க முற்படாது விரட்டும் ஆட்டம். குட்டி நாய் வெளிநாய் ஓட தெருமுனைப் பக்கம் திறந்துவிடப் பட்டது. இந்த மாற்றத்தை உணர்ந்ததை அதன் செயல் மாற்றத்தின் மூலம் காட்டிய குட்டி நாயின் கூர்மை வியப்பா யிருந்தது. அதுவும் குரைப்பை நிறுத்தியது. நேராய் நின்றது. சிறிது ஓடி தலையை மட்டும் திருப்பி நிலைமையை ஆய்ந்தது அது. உர்ரென்ற சிறு உறுமலுடன் நிலைத்து நின்று வெளியே தப்பித்து ஓடுவதை மேலும் விரட்டுவதாய் பாவனைச் செய்து வெவ்வேறு கோணங்களில் இருந்த எதிரிகளை பார்த்தவாறு குட்டி நாயும் நின்றது. அவற்றின் ஆதிக்க எல்லை எதுவரை என்பதை அதுவும் உணர்ந்ததாகத்தான் செய்கை காட்டியது. தங்கள் ஆதிக்கத்தை மேலாண்மையை ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டிய கர்வத்துடன் அந்த மூன்றும் நின்றன. கால்களை முன்னே வைத்து தலையையும் வாலையும் அவற்றைப் பார்க்க, மெல்ல வெளியேறியவாறிருந்தது குட்டி நாய். சற்று நிற்கும் அவற்றின் செய்கையில் நிலைப்பில் மாற்றமுள்ளதா எனக்கவனிக்கும். ஓடும். ஓடும் குட்டி நாயை கண்காணிப்பதை நிறுத்தி முன்னங்கால்களை தரையில் நீட்டி கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தபின் தலையை உடல் குலுங்க உதறி முதல் நாய் திரும்பி நடக்கலானது. மற்ற இரண்டும் தலைவரை பின்பற்றி திரும்பி நடந்தன. சற்று நின்று சிறிது திரும்பி குட்டி நாய் மீண்டும் உள்ளே வருகிறதா எனவும் உறுதி செய்ய நின்றன. ஒன்றையொன்று குலவிக் கொண்டன. அவற்றின் கொஞ்சலை மாறிவிட்ட சூழலை பார்த்தவாறு குட்டி நாய் சிறிது நின்றது. உடனடியாக வேகமாக ஓடினால் இளப்பமாகி விடுமென்பதை அது உணர்ந்ததாய்த் தோன்றியது. ஒரு நிலைக்குப்பின் மேலும் நிற்காமல் திரும்பி ஓடியது. இதுவரை தன்னை யாரும் துரத்தியதே இல்லை . எதுவுமே நடக்கவில்லை போல அதன் ஓட்டம். மூன்று நாய்களும் அதைப் பார்ப்பது கூட இல்லை என்பதை அறிந்ததாய் வாலை உயர்த்தி கொண்டு அந்த குட்டி நாய் தெருவெளி விளிம்பிற்கு ஓடியிருந்தது. எல்லாமே சட்டென அறுந்து அமைதியாகிப்போன வெற்றிட உணர்வு தாக்கியதாலோ மழலைக் குரலை எழுப்பி வான் நிலை கொள்ளாமல் எம்பினான். அவனை இறுகப்பற்றி வான் வான் அதோ கோழி ஆட்டுக்குட்டி குருவி எனத் தெருவில் தோன்றியவற்றை காட்ட முற்பட்டேன். அவனுக்கு சண்டை வேண்டியிருந்தது. அழ ஆரம்பித்தான். எனக்கும்.   சதங்கை, 1997   18. தீனி   []   என்ன செய்வதெனத் தோன்றாமல் திகைத்திருந்தான் குமாரசாமி. கல்பாவும் திகைத்தாள். இந்த மிருகங்கள் இப்படிச் செய்யுமென ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. கட்டுப்பட்டவை. போடுவதைப் போட்ட நேரத்தில் தின்னும். குரலுக்குக் கட்டுப்படும் எனயிருந்தது தவறாகப் போய் விட்டது போலத் தோன்றியது. யானை, புலி, சிங்கம், கரடி, மான், குரங்கு, பாம்பு, பறவைகளென எங்கும் அறியக்கூடியவைதான் அங்கும் இருந்தன. இதுநாள்வரை எல்லாம் ஒரு ஒழுங்கில் இருந்தாற்போலத்தான் உணர்வு. ஏன் இப்படி? என குமாரசாமியும், இது எப்படி? என கல்பாவும் கேட்டுக் கொண்டு நின்றனர். எப்போது முதல்? அந்த மிருகங்கள் அவ்வவற்றின் இயல்பாய் ஆடிக் கொண்டும் உரசிக்கொண்டும் முகர்ந்து கொண்டும் உறுமிக் கொண்டும், தாண்டிக் கொண்டும், குதித்துக்கொண்டும் தாவியும் விழித்தும் படுத்தும் நின்றும் தங்களைப் பார்ப்பவர்களைத் தாங்கள் பார்த்துக் கொண்டும் இருந்தனவாய்த்தான் தோன்றின. போட்ட தீனியை அவை ஒதுக்க ஆரம்பித்திருந்தன. ஏதோ எங்கேயோ பிசகிவிட்டிருக்கிறது. எங்கே எது எப்படியென பயிற்சி மூலப் பாடங்களை மூளைக்குள் படம் விரித்துக் கசக்கிப் பார்த்தும் ஏதோ பிசகி விட்டதாகத்தான் தோன்றியதே தவிர, எங்கேயெனக் குறிப்பாகத் தோன்றவில்லை. சரி இப்போது தின்னாவிட்டால் பரவாயில்லை. மறுவேளைக்குப் பயன்படுத்தலாமெனவும் விடமுடியாது. அடுத்த வேளைக்கு அடுத்த உணவுப் பொதிகள் காகிதக் கட்டுகளாய்த் தோன்றிக் குவிந்துவிடும். ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு தேவை எனத் துல்லியமாகக் கணக்கிட்டு ஒன்று இரண்டு மூன்று ஐந்து பத்து பின் பத்துக்களாய்க் கட்டுகள் காகித அமைப்பில் உள்ளடங்கிய ஊட்டத்தோடு வந்து விழுந்துவிடுமளவு நிர்வாகம் வேகமாய் இருக்கும். தொன்றுதொட்டு இருந்த தீனி வகைகளான இறைச்சி, மீன், கறி, எலும்பு, முட்டை , தழை, புல், பால், பழம், கொட்டைகள் எல்லாம் அப்படியே அளிக்கப்படுவது மாற்றப்பட்டு தின்னக்கூடிய இனத்தின் ருசிக்கேற்ப தேவைக்கேற்ப வாசனை நுகர்வுடன், கூழாகத் தருவதும் மாறி, கனத்த அட்டைகளாய் வந்த நிலையும் பழசாகி, பளபளக்கும் வண்ணக் காகிதங்களாய் அவற்றின் ஈரம் காய்வதற்குள் கட்டுகளாய் பெரிதும் சிறிதுமாக வாய்க்கு அடக்கமாக அளிக்கப்படும் தற்போதைய நடைமுறை வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு செயல் முறைக்கு வருவதற்கு எத்தனை எத்தனை ஆண்டுகள் நிர்வாகம் சிரமப்பட்டது என்பதை கல்பாவும் குமாரசாமியும் பிரமிப்புடன் நினைவு கூர்ந்தார்கள். எவ்வளவு நன்றாய் இருக்கிறது எல்லாம் என்பதுதான் அவர்களுடன் உழைக்கும் பணியாட்களுடைய கருத்தும். மீளவும் பச்சை இறைச்சித் துண்டங்களையோ மற்ற இரைகளையோ அப்படியே போட்டால் இந்த மிருகங்கள் முகர்ந்து கூடப் பார்க்குமா எனவும், அவர்கள் பேசிக்கொண்டார்கள். தொடமாட்டா என்பதை ஆராய்ச்சிக் கூடங்களின் தொடர்ந்து வரும் முடிவுகள் காட்டின. நூற்றாண்டுகள் முன்னேற்றம் உள்ள மேலைச் சரகங்களில் இச்சரக முறையைவிட மிகவும் முன்னேறிய உணவுமுறைகள் தீனி வகைகள் சிறு குப்பிகளாகவும் பதிவு நாடா முறையிலும் ஒலி ஒளிப்பேழைக் குறிகளாகவும் கணினி வலைதளங்களாகவும் இம்மிபிசகாத தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் யந்திரக் கைகள் தொழிலாற்ற அளிக்கப்படுவது நடைமுறையில் இருப்பதை இங்கும் அறிவார்கள். எனினும், பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் கைவிடுவதைவிட பிற்பட்ட நிலையினர் என பரிகசிக்கப்பட்டாலும் மிருகங்களின் ஆன்மாக்களின் அமைதியும் ஆன்மீகச் செறிவும் காப்பாற்றப்படுவதன் மூலம் மேலைச்சரகங்களுக்கே வழிகாட்டும் தன்மை உடையது இச்சரகம் எனப் பெருமிதம் கொள்ள சரக நிர்வாக அமைப்பு பேசியது. சரகப் பணியாட்கள் பேசினர். கல்பாவும் குமாரசாமியும் பேசினர். சரகத்துக்குள் இருந்த எல்லா வகை உயிரினங்களும் பேசுவதாய் கல்பாவும், குமாரசாமியும் மற்ற ஆட்களுக்குத் தெரிவித்தனர். மற்ற ஆட்கள் வழியே நிர்வாகம் தெரிந்து கொண்டு உலகம் எங்கும் பறைசாற்றியது. இந்த நிலையில் தீனியாய் போட வேண்டி குவியும் கட்டுகள் தேங்கத் தொடங்கி, சில நாட்களாய் தேங்குவது அதிகமாகி இருந்ததுதான் கலக்கம் அளிப்பதாய் இருந்தது. அந்தந்த வேளைக்கு அளிக்கப்பட வேண்டிய தீனியை அனுமதிக்கப்பட்ட அளவு கழிவு விகிதாச்சாரம் போக மீதமில்லாது தின்னச் செய்யப்பட வேண்டுமென்பது கண்டிப்பான சட்டம், உத்தரவு. விதிகளுக்கு முரணாக தீனி செலவாவது குறைந்ததென்பது தெரியவந்தால் கடுந்தண்டனைக்கு உரியவர்கள் கல்பாவும், குமாரசாமியும். இந்நினைப்பே மேலும் கலக்கந் தருவதாய் இருந்தது. உங்களுக்கு என்ன வந்துவிட்டது சனியன்களே. என்ன கேடு ஏற்பட்டுவிட்டது? நடைமுறையில் ஏதும் பிசகா. இல்லையே. ஒவ்வொன்றுக்கும் அத்து தீனி எடுத்துக் கொள்ளக்கூடிய அளவுபடி பிசகாதும் சில நேரங்களில் அவற்றின் உணர்வுகளைத் தூண்டி கூடுதலாகவும் கூட செலவாகி இருக்கிறது. உற்சாகக் குரல் எழுப்பி, நேரத்திற்கேற்ப சுவையைக் கூட்டியுள்ளதாய்க் கிளர்ந்தெழச் செய்து, அதீதமாக தீனி அளித்தமைக்காக பரிசுகளும் பெற்றதுண்டு. பெற்ற பயிற்சியைவிட நடைமுறையின் வேகம் கூடக்கூட நேரத்துடன் போட்டிபோட்டுக் கொண்டு செலவழியும் தீனியும் சுமை அளவை கூடுதலாக்கும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்த தெல்லாம் இப்போது உதவிக்கு வராதது போல தோன்றும் உணர்வும் குமாரசாமியை செயலற்றவனாக்கும் போல சோர்வைத் தந்தது. பாரம்பரியமான தீனிவகைகளெனக் கேள்விப்பட்டிருந்த எவையும் அவனுக்குத் தெரிந்து போடப்படவில்லை. குமாரசாமி, கல்பா மற்றும் இதர சரக பணியாட்களின் தலைமுறையைச் சேர்ந்த இந்த மிருகங்களுக்கும் அவை ஞாபகத்தில் இருக்கும் எனத் தோன்றவில்லை. மெத்தப் புதிதாக எதுவும், யாரும் சுவை காட்டி இருப்பார்களா. இப்படி யோசிப்பது கூட பெரும் தண்டனைக்குரியது என்பதை உணர நடுக்கமேற்பட்டது. யானையைப் பார்த்தான். காதுகளையும், தும்பிக்கையையும், தலையையும், உடம்பையும் வாலையும் ஆட்டிக்கொண்டு கால்களை மாற்றி மாற்றி வைத்து அசைந்து பழுப்புக் கண்களை பாதி மூடி குமாரசாமியை காணாதது போல நின்றது. முன்னங்கால்களுக்கு முன்பு போடப்பட்டிருந்த தீனிக்கட்டுகளை வேறு அவ்வப்போது காலால் அசட்டையாக தட்டி உருட்டியது கோபத்தைத் தூண்டுவதாய் இருந்தது. கல்பாவின் பங்கிலிருந்த சிங்கமும் புலிகளும் அவள் நின்ற பக்கம் தவிர வேறெல்லா பக்கமும் நடந்து மூலைகளில் முட்டி தரையில் தலைதாழ்த்தி உறுமிக் கொண்டன. வாலை சுழற்றி வீசின. இந்த மான்களுக்கும் என்ன கேடு வந்ததென எரிச்சல் பட்டாள். அள்ளி வீசப்பட வேண்டிய தீனிக் காகிதங்கள் கட்டுகளாய் தேங்கி இருந்தன. நிலைகொள்ளாமல் எதிர் எதிர் பக்கங்களில் ஓடி தலைதூக்கிப் பார்த்து துளி வால்களை வேகமாய் ஆட்டி இப்படிப் போனால் அப்படியும் அப்படிப் போனால் இப்படியும் நின்றன அவை. பார்வை மட்டும் அவர்களைப் பார்த்திருக்க உடம்பு எதிர் பக்கம் நின்றது. செயற்கை மரங்களின் உச்சிக்கு ஏறி தொலைவில் தெரிந்த முகடுகளை வெறித்திருந்த குரங்குகள் இறங்குவதாய்த் தோன்றவில்லை. உங்கள் அலுப்பூட்டும் எரிச்சல் தரும் செயல்களை நிறுத்துங்கள் எனக் கத்தினாள் கல்பா. குமாரசாமி திடுக்கிட்டு ஓடிவந்தான். உன் சிரிப்பான முகத்தைக் கைவிடாதே என எச்சரித்தவாறே. நாம் நிதானமிழக்கக்கூடாது. நமக்குத்தான் அசட்டை செய்யும் செய்கை தெரியும் என்பதை மறவாதே. நமக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சியும் நமது வேலை அனுபவமும் கொண்டு நெறிப்பட்ட மூளையை பயன்படுத்தி யோசிப்போம். இந்த வேளை போகட்டும். அடுத்த வேளை தீனியை இந்தப் பாழாய் போன மிருகங்கள் முழுவதுமாய்த் தின்ன வைப்பதை யோசிப்போம். சரகத்தின் வேறு பகுதிகளிலுள்ள மற்றவர்கள் இந்நிலையில் என்ன தந்திரம் செய்கிறார்களென்பதை வெளிப்படையாக அறிவது கேவலமென மறைந்திருந்து ஒற்றுப் பார்த்து அறிய முயன்ற வேளையில் மற்ற பகுதி ஆட்களும் அதேபோல அவர்களும், மற்ற பகுதியை ஒற்றுப் பார்க்க முயன்று கொண்டிருப்பது புலனாயிற்று. எங்கிருந்து, எப்போதிருந்து ஆரம்பித்தது இந்த நிராகரிப்பு அலட்சியம் எதிர்ப்பு ஆம். எதிர்ப்பு . போடும் தீனியை முழுமையாகத் தின்ன மிருகங்கள் தவறிவிட்டதாக முதலில் தோன்றியது. ஆனால், நாட்கள் போகப் போக தின்னாமல் கிடக்கும் தீனிகூட, கழிக்கப்படக்கூடிய விகிதத்திற்கும் அதிகமாய் கழிக்கப்படுவனவற்றை தள்ளிவிடவும் முடிந்தது. அதற்கு மேலும் கழிக்கப்படும் தீனி காகிதமலையாய் எழும்பியபோதுதான் வேறு காரணமும் இருக்கலாமோவென ஐயம் தோன்றியது. கழிக்கப்படும் மிச்சங்கள் மாறுபட்ட செயலாக தோன்றாததும், இயல்பாய் போய்விடும் செயல்கள் எப்படி நிகழ்ந்தன என்பதை மறந்துவிடுவதும் காரணமாகலாம்தான். எப்படி அதிகப்படுத்திக் கொண்ட உற்சாகத்துடன் எப்படியும் ஒதுக்கப்பட்ட தீனி முழுவதையும் மிருகங்களின் வாய்க்குள் திணித்துவிட முயன்றதை கல்பா விவரித்தாள். கட்டுகளைப் பிரித்து காகிதச் சுருள்களாக மடித்தும் விளையாட்டுக் காட்டியும் அவை வாய்க் கொள்ளுமளவு கடைவாயில் ஊட்டியதையும் செல்லமாய் கொஞ்சி கூப்பிட்டு தடவித் தந்தும் இரைகொள்வது குறைந்து கொண்டே வந்து இப்போது அதிர்ச்சி தரக்கூடிய எல்லையை எட்டி இருப்பதை சொல்ல பயமாகவும் இருந்தது. கேடுகாலந்தான் என சினந்தாள் அவள். அவர்களுக்குத் தெரியாமல் வேறு யாரும் எதுவும் தீனி எதுவும் போட்டிருக்க முடியுமா? முன்பெல்லாம் வேலைக்கு வருவார்கள். அந்தந்த மிருகங்களுக்கான தீனி கட்டுகளை கட்டாகவே சுருட்டி எறிந்துவிட்டுப் போனாலே போதுமானதாய் இருந்தது. மீள அடுத்த வேளைக்கு வந்தால் போதுமென மீதி நேரங்களில் கேலி பேசி சிரித்து ஓடிப்பிடிக்கவும் இருந்த மகிழ்ச்சி மிக்க காலங்கள் அவை. மிருகங்கள் அமிருகங்களாக மாறாத காலம் அது. சிக்கல் தோன்றாமல் இரு தரப்பினரும் காலத்தைக் கடத்தி இருப்பதாகத்தான் தோன்றியது. கடந்த சில வேளைகளாகத்தான் போட்ட கட்டுகள் முழுமையாக தின்னப்படாமலும் தின்பதற்குப் பதிலாக கடித்துக் குதறப்பட்டும் அரைகுறையாக மேயப்பட்டும் இருப்பதைக் கவனித்தார்கள். இருவரும் அதை சிக்கலாகவோ அல்லது பெரிய அபாயத்தின் அடையாளக் குறியாகவோ முதலில் கருதவில்லை. அவற்றின் உடலில் ஏதோ கோளாறு மாற்றம் காலநிலை பசியின்மை இப்படி ஏதும் இருக்கலாமென என தின்னாது கழிக்கப்பட்டவற்றை கூட்டி அள்ளி குப்பையில் திணித்தார்கள். கூடும் குப்பைகளின் அளவு குறித்து நிர்வாகம் காரணம் கேட்டபோதுதான் எங்கோ ஏதோ கோளாறு என்பது உதித்தது. சரக மருத்துவர்கள் சோதித்து சில மாறுதல்களைச் சொன்னார்கள். குப்பை கூடுவது குறையவில்லை. இது கண்காணிக்கப்பட்டு, இருவரின் வேலைத்திறமை வேகம் புத்திசாலித்தனம் குறைந்ததெனக் கண்டிக்கப்பட்டு, எப்படியும் அவர்கள் பங்குத்தீனிக் கட்டுகள் முழுவதும் தின்று தீர்க்கப்பட வேண்டுமெனவும் அதற்கான சான்று தந்த பிறகே குடியிருப்புக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்களெனவும் எச்சரிக்கப்பட்டனர். நிர்வாகத்தின் மிரட்டலை இருவரும் தங்கள் பகுதி மிருகங்களிடம் அதே வேகத்தில் காட்ட முயன்று தோற்றனர். தீனி முழுவதும் தின்று முடிக்கும் சில மிருகங்களுக்கு மற்றவற்றின் வீணாக்கப்பட்ட பங்கு தீனியைத் திணித்து குப்பையைக் கூட்டாமல் இருக்க முயன்றதும் வரவரக் கடினமாகிப்போனது. காகிதத் தகடுகளாக அவற்றில் சுவை அனைத்தையும் அம்மிருகங்களுக்கு தேவை எனச் சேர்த்து அழகு சேர்த்து கட்டுகளாக்கி தின்னத் தயாராக வரும் தீனி எவ்வளவு இன்றியமையாதத் தேவை. உணவு மூலச்சத்து என்பதை மூத்தவர்களும், அறிவுமிக்கவர்களும் ஆய்வாளர்களும் ஏன், சரகத் தலைமையும் தெரிவிப்பதை, அது எவ்வளவு உண்மை என்பதை அம்மிருகங்கள் உணர மறுப்பதென்பது விசித்திரமானது. வேதனையானது. ஆதங்கத்துடன் கூடிய கோபம் மேலிட வைப்பது. மட ஜன்மங்கள் ஐந்தறிவு பெட்டகங்கள். கல்பா வெளிப்படையாகவே வசை பொழிந்தாள். நீங்கள் இதையெல்லாம் உணர மறுப்பதும், தின்னாமல் கழிப்பதும் உங்களுக்குத்தான் இழப்பே தவிர தீனி அளிக்கும் எங்களுக்கோ உற்பத்திக் கூடங்களுக்கோ, நிர்வாகத்திற்கோ அல்ல என்பதை நீங்கள் உணரத்தான் போகிறீர்கள். தண்டிக்கப்படத்தான் போகிறீர்கள். அளிக்கப்படும் தீனியில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதைப் பட்டியலிட ஆரம்பித்தான் குமாரசாமி. நீங்கள் அறியாவிட்டாலும் அறிய மறுத்தாலும் நாங்கள் சொல்லித்தான் தீருவோம். நாங்கள் உங்களது அருகாமையில் இருப்பவர்கள். நலன் பேணுபவர்கள். நண்பர்கள். இது புரிகிறதா? உங்களுக்கு நஞ்சா தருவோம். உங்களது பாரம்பரியத் தீனி காலத்திற்கேற்ப எவ்வளவு சிறப்பாய் உழைப்புடன் காகிதத் தகடுகளாய், தகடுகள் இணைந்த பொதிவுகளாய் எத்தனையோ அம்சங்களை அடக்கி நாளுக்கு நாள் கூடும் புதிய விசயங்களைச் சேர்த்து கவர்ச்சி சுவை மேலிட அளிக்கப்படுகிறது தெரியுமா? புதிய புதிய அம்சங் களினால் விளைந்த விளையும் விளையப்போகும் கணக்கற்ற பயன்கள் இதோ. குமாரசாமி பரவசமாய் பேசிக்கொண்டே போனான். அவன் பேசுவது தான் சொல்வதுதான் உண்மையென அவனுக்கே தோன்றத் தொடங்கியது. கல்பா தான் பேசுவதையும் மறந்து அவனைப் பார்க்கத் தொடங்கினாள். கொஞ்சங்கூட பலனேற்படாதிருக்கவா அவற்றின் நலன் கருதாமலா அளிப்பார்கள். தரம் நயம் செய்முயற்சி இடையிடையே கவரும் சுவை எதுதான் இல்லை? எதுதான் தரப்படாது. இந்த மிருகங்கள் மேலும் எதைத் தேடுகின்றன? இருட்டுக் காடுகளில் இருந்து மீட்டு, வேட்டைக் காரர்களிடமிருந்து காத்து, இயற்கைக் கொடூரங்களிலிருந்து விடுவித்து, இருக்க இடம், தின்ன தீனி உறுதி செய்து கட்டியங்கூறிய முதல் தகடுகளும் முதல் தீனிக் கட்டுகளும் இன்னும் பல மிருகங்களால் அரிதானவையாய் காக்கப்பட்டு வருவதை நன்றியுடன் நினைவுகூரப்பட்டு வருவதை குமாரசாமி நெகிழ்வுடன் சுட்டிக் காட்டினான். இந்தப் புதுமை இந்தக் கற்காலச் சனியன்களுக்கு ஏற்கப்பட முடியாததாக இருப்பது வேடிக்கைதான். என்ன தேவை? தேடல் மீண்டும் அடர்ந்த வனாந்திரங்களில் தண்ணீரையும் உணவையும் தேடி அலையும் நிலையையா? அதுவா விடுதலை? சரகத்துக்குள் உறுதி செய்யப் பட்ட தீனி கிடைக்கும் போது என வினவினாள் கல்பா . பேசிக் கொண்டே சென்றவள், தன்னுணர்வு இழந்தவள் போல தன் பங்கிலிருந்த மிருகங்களுக்கான தீனிக் கட்டிலிருந்து ஒரு மடலை எடுத்து ஓரமாய்க் கடித்து மெல்லவும் தலைப்பட்டாள். பார்த்திருந்த குமாரசாமி அதிர்ச்சியும் வியப்பும் மேலிட, பேசி களைத்து செயலிழந்த நிலையில், பொறாமையும் தோன்ற கத்தினான். "யேய், இது நமக்கு அனுமதிக்கப்பட்டதில்லை. என்ன செய்கிறாய் என்பதை உணர்ந்துதான் நீ செய்கிறாயா? இப்படி பேசுவது, செய்வது இவற்றின் பின் விளைவுகளை முழுதும் அறிந்தால் இப்படிச் செய்ய நீ துணிந்திருக்க மாட்டாய் என வேகமாய் அவளை இழுத்து, தீனியை மெல்லும் தாடையைப் இறுக்கினான். அவன் கையைத் தட்டிவிட்ட கல்பா மேலும் ஒரு தீனிக்கட்டிலிருந்து ஒரு தகடை இழுத்து சுருட்டி தின்னத் தொடங்கினாள், திகைப்பும் கலக்கமும் மறைந்த தன்மையில் சிரித்து. குமாரசாமிக்கு மிருகங்களைச் சுட்டிக்காட்டினாள். சரக அடைப்புக்குள் அவை நடந்தும் படுத்தும் அலைந்தும் உறுமியும் போட்ட தீனியை ஒதுக்கினவாய் அவர்களை வெறித்திருந்தன. விருட்சம், 1991 இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் (கலைஞன் வெளியீடு, பகுதி - 3, 1993)               19. இருட்டு   []   "கண்ணு தெரியுதாய்யா?” "தெரியலீங்க.'' "எந்தக் கண்ணு தெரியலே?''  “ரெண்டு கண்ணும் தெரியலீங்க .'' "கை அசையறது கூடவாத் தெரியலே?'' "இல்லீங்க" "வெளிச்சம் எந்தப் பக்கத்திலேர்ந்து வருதுன்னு சொல்லு.'' "தெரியலீங்க.''  "மேலேர்ந்துவருதா? கீழேர்ந்து வருதா?'' "தெரியலே.'' அந்த இளம் கண் மருத்துவன் மேலும் எரிச்சல் கொண்டான். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. மாலை நேரத்தில் மற்ற நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க விரைவாய் வருவதாய்ச் சொல்லியிருந்தான். இது முதல் இடம் அல்ல. முதல் குப்பக்காட்டானும் இல்லை. இந்தத் தலை காய்ந்தவர்களுடைய தந்திரம் அவனுக்கு ஏற்கனவே புரிந்துவிட்ட பாடம். உரக்க அலுத்துக் கொண்டான், "தோ பாருய்யா. ஒரு மண்ணுமே தெரியலேன்னா ஆபரேசன் இல்லே. கண்ணாடி கெடைக்காது. இந்த ஆளுக்குப் பண்ண முடியாது. அடுத்த ஆளு வா, பொற முத்திருச்சா?'' அழைத்து வரப்பட்டிருந்த முப்பது, நாற்பது பேர்களில் அறுவை செய்ய ஐந்தாறு பேர்கூடத் தேறவில்லை. நேரம் கடக்கிற தெனும் பரபரப்பும், அடுத்த கிராமத்திற்குச் செல்ல வேண்டிய வேகமும் இருந்தாலும், இன்று ஒரு நாளில் எவ்வாறு நிர்ணயித்த இலக்கின்படி நோயாளிகளைக் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்க முடியும் எனும் தவிப்பு, முகாம் ஏற்பாடு செய்திருந்த குழுவினருக்கு ஏற்பட்டது. இந்த மருத்துவ இளைஞன் ஆட்களைக் கழிக்கும் வேகத்தைப் பார்த்தால் ஒரு நூறு பேர்கூடத் தேறுவது கடினமாகிவிடும் போலிருக்கிறது. "தோ பாரும்மா. உனக்கு யாரோ தப்பா சொல்லியிருக்காங்க, ரெண்டு கண்ணும் தெரியலேன்னு சத்தியம் பண்ணிச் சொன்னாதான் கண்ணாடி கொடுப்பாங்கன்னு. அது தப்பு. பொற முத்தி யிருந்தாக்கூட கண்ணுல கொஞ்சமாவது கையசைவு நெழலு வெளிச்சம் தெரிஞ்சாத்தான் பொறயக் கீறிட்டு போட்டுக்க கண்ணாடி கொடுப்பாங்க. டாக்டரு கேக்கற கேள்விக்கு நெதானமா பதட்டப்படாம பதில் சொல்லு. இப்ப பாரு. வெளிச்சம் எந்தப் பக்கத்திலேர்ந்து வருது? சோத்துக்கை பக்க மிருந்தா, பீச்சக்கை பக்கத்திலேர்ந்தா?'' ஆட்கள் தேறவேணும் என்னும் தவிப்புடன் முகாம் குழுவில் ஒருவர் விளக்கினார். கிழவி தலையை ஆட்டினாள். எங்கே யிருந்தோ வெளிச்சம் நெழலாட்டம் தெரிவதாகச் சொன்னாள். "சரியா சொல்லு, எந்தப் பக்கத்திலேர்ந்து?'' என இடப்பக்கமாக டார்ச் ஒளியை அசைத்துக் காட்டிய பின் அவள் மிரட்சியிலிருந்து ஓரளவு தெளிந்தாள். "பீச்சக்கைக்கா வருதுங்க.'' மருத்துவ இளைஞன் இந்த மாதிரி ஆட்களின் வேலைகள் முன்பே தனக்குத் தெரிந்ததுதான் என்பதாகச் சிரித்தான். மற்றவர்களும் சிரிப்பு காட்டினார்கள். "இதப் போலக் கேட்டுக்கிட்டிருந்தா சரிப்படாது. ஒண்ணும் தெரியலேன்னு சொன்னா உடனே போயிட்டுவான்னு அணுப்பிடணும். சரியா? அடுத்தது வா. என்னா உனக்கு? கண்ணுல தண்ணி வருதா? இந்தா, இந்த சீட்டுல எழுதிக் கொடுக்கிற மருந்தை வாங்கிப் போடு. இந்த மாதிரி சும்மா கண்ணெக் காமிக் கணும்னு வர்றவங்களெயெல்லாம் நிக்க வைக்க வேணாம். தேர்ற கேசா இருந்தா வரிசையில நிக்கட்டும். வரட்டும் வரட்டும்.'' வரிசையில் வந்தவர்களை ஓரிரு நொடிகளில் பார்த்து முடித்த அந்த இளம் மருத்துவன் போடப்பட்டிருந்த நாற்காலியில் சரிந்து உட்கார்ந்து வலது கையில் மணி பார்த்தான். பிற்பகல் நெருங்கிக் கொண்டிருந்தது. முகாம் குழுவினரில், வந்தவர்களில் யார் கண் மருத்துவர், யார் பொறுப்பாளர் எனத் தெரிய முடியாமல், எல்லாரும் மருத்து வர்களா அல்லது கண்ணாடி வழங்கும் அதிகாரம் உடைய வர்களா, கீழ்ப்பணியாளர்களா என்பதும் அறிவதற்கஞ்சு பவர்களாய், ஒவ்வொருவரையும் 'சார்' போட்டர்கள். 'ஐயா' என்றார்கள். 'சாமி' எனக் கும்பிட முனைந்தார்கள். ‘டாகுட்டர்' என்றழைத்தும் பணிவைக் காட்ட முற்பட்டார்கள். இந்தக்குக்கிராம மக்களைக் கொண்டுவருவதை, இழுத்து நிறுத்தி வைப்பதைப் பார்க்க வேடிக்கையாகிவிடலாம். யார் வேடிக்கை பார்க்கிறார்கள் எனப் புரிவதற்கு முன். காலை ஒன்பது மணிக்குக் கூடி கிராமம் கிராமமாகச் சென்று பிற்பகல் வந்து கொண்டிருந்தது. வாங்கி இருபது ஆண்டு களாகியிருந்த ஈப்பு (ஜீப்) அந்த இளம் கண் மருத்துவமனையும் முகாம் பொறுப்பாளர்களில் சிலரையும் சுமந்து கொண்டு புழுதி கிளப்பியது. இருட்டுவதற்குள் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமங்களை முடித்துவிடக் கட்டளை. இரண்டு நாட்கள் கழித்து தொடங்கவுள்ள இலவச மருத்துவ முகாமுக்கு குறைந்தது இருநூறு நோயாளிகளைக் கண்டறிந்தாக வேண்டும். சென்ற முகாமின்போது நூற்றுக்கும் குறைவான ஆட்களையே அனுப்ப முடிந்தது கண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இருமடங்கு இலக்கு உள்ள நிலையில் போகும் போக்கு உற்சாகம் தருவதாய் இல்லை. என்ன மருத்துவனோ. ஒரு மருத்துவரைப் போலத் தோன்றாமல் விடுமுறையைக் கழிக்க வந்த இளைஞனைப் போல, கோடு போட்ட வண்ண பனியன் சட்டையில் கழுத்தில் தொங்கிய தங்கச் சங்கிலி மேலே தெரிய, கையில் வார ஏடுகளுடன் டார்ச் ஒன்றை மட்டுமே கருவியாகக் கொண்டு வந்திருந்த அந்தக் கண் மருத்துவ இளைஞனின் அவசரம் வேறு, தெரிவு செய்யப்படும் நோயாளி களின் எண்ணிக்கையைக் கூட்டும் வகையில் இல்லை. அவன் கேட்பவற்றிற்கு உடனுக்குடன் பதில் சொல்லாமல் இழுக்கும் பேர்கள் கழிக்கப்படுவதைக் குறைக்க வேண்டும். 'உங்களையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும், வேலையைப் பாருங்கள்' என சொல்லாமல் சொல்லும், நடப்பில் அசட்டை காட்டும் மருத்துவ இளைஞனிடம் ஏதும் சொல்ல யாரும் முயலவில்லை. இவன் எவ்வளவோ தேவலை. சென்ற முறை வந்த அந்த வயதான மருத்துவன் இப்படிக்கூடப் பார்க்கவில்லை. யார் யாரை அறுவைக்கு முதிர்ச்சியடைந்த நோயாளிகள் என்று சொன்னோமோ அவர்கள் பெயர்களையெல்லாம் கிறுக்கிக் கொண்டு அவர்களை நேராக முகாமுக்குக் கொண்டுவரச் சொல்லி எரிந்து எரிந்து விழுந்தான் என மூத்த முகாம் குழு உறுப்பினர் சொன்னார். அடுத்த சிற்றூருக்கு ஊர்தி புறப்பட்டது. ஊர்ச்சாலை புழுதி பறந்தது. பெரிய பெரிய கருங்கல் ஜல்லி மட்டுமே சில இடங்களில் இருந்தது. பாறைச் சக்கைகள் பரப்பப்பட்டவை எப்படி சாலை - அதுவும் ஜல்லி சாலையாகுமென்பதும் புலப்படாதது. மேலே போட்ட செம்மண்ணும் கரைந்து போய், கானலில் புழுதி கிளப்பிய சாலையில் மேடும் பள்ளமுமாய், ஊர்தி உள்ளே இருந்தவர்களை இடித்துக்கொள்ளச் செய்தது. தெரியும் பசுமை இழந்த சிறு குன்றுகளும், நின்ற பனைகளும், குத்து குத்தான புதர்களும் இருந்த தகிப்பைக் குறைப்பனவாய் இல்லை. சில காக்கைக் கரைதல்களும், கருங்குருவிகளின் பரப்பும் தவிர, தலையில் துணியை முக்காடிட்டுச் சென்ற ஓரிரு ஆட்களும், ஆடுகளும், கொம்பு மட்டும் பெருத்த மாடுகளும் மேடும் பள்ளமும் ஒடித்து ஒடித்து வரும் வண்டியைப் பார்த்து மிரண்டு ஒதுங்குவதும்தான் நேர்வது. "என்னுடைய நகரத்தில் இவ்வளவு வெயில் தெரிவதில்லை. அது என்ன மலை? எங்கே இளநீர் கிடைக்கும்?" என நிழலில் வளரும் மருத்துவ இளைஞன் அவ்வப்போது ஏதோ சொன்னான். அடுத்துவரும் கிராமத்தில் நிச்சயம் இருக்குமென உறுதி சொல்லப்பட்டது. காயும் வெயிலில் இருக்கும் தென்னைகளிலும் காய்ப்பு குறைந்துவிட்டிருந்தது. காய்ப்பவையும் நகர மக்களின் தாகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. சரியான மழையுமில்லாதது காய்களை சிறுக்க வைத்தது. ஆனால் வரக்கூடிய பெரிய மனிதர்களுக்கு எப்படியும் இளநீர்க் காய்கள் கொண்டு வரப்பட்டாக வேண்டும். அந்தக் காய்களுக்கான விலையை யார் கொடுக்கிறார்கள் என்று யாரும் கவலைப் படுவதில்லை. யாரோ வெட்டுகிறார்கள்; யாரோ குடிக்கிறார்கள். நல்லவேளையாய் வந்து சேர்ந்த கிராமத்து ஊழியன் சொல்லிவைத்தபடி இளநீர்க் காய்களை வைத்திருந்தான். கிராமத்துத் தண்ணீரைக் குடிக்காமல் வறண்டு வந்த மருத்துவனை மேலும் எரிச்சலடையாமல் செய்ததற்காகப் பாராட்டு பெற்றான். நோயாளிகளும் அதிகமிருந்தனர். 'இப்படியும் கெட்டிருக்குமா!' என அதிர்ச்சியைத் தரும் கண்களுடன் அந்த இளம் பெண் விடாமல் பேசிக்கொண்டே நின்றிருந்தாள். மங்கிப்போய் நைந்த புடவையை ஏத்தலும் தாழ்த்தலுமாய் மேலாக்கு போலச் சுற்றிருந்தாள். அவள் கை பிடித்து துணைக்கு ஒரு பஞ்சடைந்த கிழவி. "வயசு இருவதுக்கு ஆவுதுங்க. நா சின்னதா இருக்கப்போ ஒரு கண்ணுல பார்வ தெரிஞ்சுது. பொறவு அம்ம வாத்திச்சா, அந்தக் கண்ணும் போயிடிச்சி. ஆயாதான் கஞ்சி ஊத்துது. எனக்கு கண்ணு தெரிய வெச்சீங்கன்னா ஏதோ பொயப்பேன். கண்ணாலங்காய்ச்சின்னு எங்கனா ஒதுங்கினா, ஆயா மண்டயப் போட்டாலும் பொயச்சிப்பேன். எனக்கு கண்ணு வருங்களா?' அந்தப் பெண்ணின் இடது கண் சிறுத்து குழியில் புதைந்து வெள்ளையாயிருந்தது. அழுக்கும் தள்ள, மற்றது வெளித் தள்ளி வெள்ளைப் படலம் பூத்து கண்மணியும் தெரியாமல் அச்சம் தந்தது. பத்து வருசமா கும்பிடாத சாமி இல்லே. ஒரு டார்ச் வெளிச்சத்தை அடித்துக் காட்டி அவளுடைய கண்களை சோதித்து குணமாக்குவது பற்றிக் கூறுவதும், விடிவு காலமாய் கல்யாணத்தை விரைவுபடுத்த முடிவதும் முடியுமா? ஆனாலும் அப்பெண்ணின் ஆவலான எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் யாரையும் அசைப்பதாய் இருந்தது. மருத்துவ இளைஞன் பார்க்கும் போதே சொல்லிவிட்டான்: "இங்க எதுவும் பண்ண முடியாது. நகரத்துக்கு வா, கண் ஆஸ்பத்திரிக்கு வந்தா எதாவது செய்ய முடியுதான்னு பார்க்கலாம். ஞாயித்துக் கிழமை வராதே. மத்த நாள்லே காலையில வா.'' ஒரு சீட்டில் நகரத்திலுள்ள பெரிய கண் மருத்துவனைக்கு பரிந்துரைத்து குறிப்பு எழுதிக் கொடுத்ததை கிழவி வாங்கி கையில் சுருட்டிக் கொண்டாள். தனக்கு கண் பார்வை அளிக்கப்பட்டால் எப்படியெல்லாம் அவள் வாழ்க்கை சீர்படும். செய்பவர்களுக்கு எவ்வளவு புண்ணியம் என்பதையெல்லாம் யாரோ அக்கறையுடன் காது கொடுத்துக் கேட்பது போல செம்பட்டையாய்ப் பறந்த முடியை ஒரு கையால் தடவிக் கொண்டே அந்தப் பெண் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிழவியால் இழுத்துச் செல்லப்பட, முகம் ஒரு பக்கமும் உடம்பு ஒரு பக்கமும் பார்க்க நகர்ந்தாள். தொலைவில் தள்ளியிருக்கும் பெரிய நகரத்திற்கு யார் அழைத்துச் செல்வார்கள்? ஆகும் செலவை செய்பவர்கள் யார்? ஓடும் நேரத்துடன் போட்டிபோட்டு ஓடவே யாருக்கும் நேரமிருந்தது. "அடுத்தது வா .... மசமசன்னு நிக்காமல்.'' மான் விழி, மீன் விழி, கோலவிழி, கயல்விழி, கோபவிழி எல்லாம் இந்தக் குக்கிராமங்களில் இல்லையா? எவர் அவற்றையெல்லாம் மொத்தமாகக் குத்தகை எடுத்துக் கொண்டனர்? இப்படியுமா இப்படியுமாவென பார்வையிழந்த கண்களுடன் நிறம் போன சேலைக் கந்தல்களையும் பழுப்பேறிய கிழிசல் வேட்டிகளையும் சுற்றியவாறு உடன் வந்தவர்கள் இழுத்து இழுத்து நிற்க வைக்க தடுமாறி வந்து நிற்பவர்கள் முனங்கிய வார்த்தைகள் மிகவும் கலக்கந் தருவன. நீர் பெருகும் கண்கள். எதுவும் தெரியாத கண்கள். எதையும் தெரிந்து கொள்ளத் தடுக்கப்பட்ட கண்கள். தன் வேலையை செய்து கொள்ளவாவது பார்வை கிடைத்தால் போதும். என்ன கிடைக்கப்போகிறது. கண்பார்வை, கண்ணாடி, உணவு, துணி, பணம் - எது கிடைக்கும்? சாப்பாடு போட்டு, துணியும் கொடுத்து, கண்ணை சரியாக்கி கண்ணாடி போட்டுவிடுவார்களென்றுதான் சொல்லப்பட்டு மூலை முடுக்குகளில் முடங்கிக்கிடந்தவர்களுக்கு ஆசை காட்டப்பட்டிருந்தது. கொண்டு செல்ல, திரும்பவிட வண்டியும் இருக்கலாம்; அல்லது பஸ் செலவு கொடுக்கப்படலாமெனவும் பேசிக்கொண்டார்கள். அழைத்து வந்து உடனிருக்கும் ஆட்களுக்கு உணவு, பஸ் செலவுக்குப் பணம் உண்டாகிடையாதா என்பது அங்கங்கு குழப்பத்தை அதிகமாக்கியது. எது கொடுக்கப்பட்டாலும் ஏமாந்த சோணகிரிகளான தங்களுக்கு எதுவுமே எப்போதுமே வந்து சேருவதில்லையெனவும் அரைகுறையாய் முணுமுணுப்புகளும் கேட்டன. "கூச்ச போட்டீங்கன்னா எப்படி பாக்க முடியும்? எங்க வந்தாலுஞ் சோத்துக்கு அலையுங்க. போயி சேர்மானமா நில்லு.'' அதட்டல் போடுவதை உரியவர்கள் கேட்க வேண்டுமேயென்ற கவலையுடன் தான் இருப்பதை உணர்த்த ஊர்ப்பெரிய மனுசன் குரல் கொடுத்தான். வந்திருக்கும் பட்டணத்து டாக்டர் பேருக்காவது தன் கண்களையும் டார்ச் அடித்து பார்க்க வைக்கவும் தனிக் கவனிப்பு கிடைப்பதை ஊர்க்காரர்கள் பார்க்க வைப்பதும் வேறு அவனது நோக்கமாயிருந்தது. வெளுத்த முழுக்கை சட்டை - வேட்டி அணிந்து வந்த ஓய்வு பெற்ற உள்ளூர் ஆசிரியர் ஆங்கிலத்தில் அவரது பார்வைக் குறைபாட்டையும் கேடராக்ட் பற்றியும் தெரிவிக்க முற்பட்டது பலனளிப்பதாயிருந்தது. நாற்காலியிலிருந்து எழுந்து தலை வெளுத்த அந்த முன்னாள் ஆசிரியரின் கண்களை தன் விரல்களால் அகட்டிப்பார்க்கவும் மேலும் கேட்கவும் முனைந்தான் அந்த மருத்துவ இளைஞன். முன்பு நாள்தோறும் செய்தித்தாள் படிக்க முடிந்ததையும், ஒரு கண்ணில் அரைகுறை பார்வையும் மங்கி வருவதையும், நகரத்துக்கு வந்தால் தங்களைக் காணயியலுமா எனக் கேட்டும், போட்டிருந்த கண்ணாடியைக் கழட்டியவாறு அவர் தெளிவாகக் கூறி வந்தார். மற்றவர் களிடமிருந்து ஒதுங்கி தனியே நின்ற அவருக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் தனி முனைப்பு காட்டப் பெற்று கண்களை சோதித்துக் கொள்ள முடிந்ததே நிறைவைத் தந்தது. ஓய்வு பெற்ற ஆசிரியரின் ஐயத்தை மருத்துவ இளைஞனும் உறுதி செய்தான். அறுவை சிகிச்சை செய்ய இன்னும் முற்ற வேண்டும். தற்போது புதிய உத்திகள் வந்திருப்பதால் நகரத்தில் சிறப்பான வைத்தியம் சிறிது கூடுதலான செலவானாலும் பெறலாமென்பதை அவரும் ஏற்றுக் கொண்டார். எனினும் அப்போதைக்கு போடக்கூடிய துளிகள் அடங்கிய மருந்தின் பெயரை சீட்டில் எழுதி வாங்கிக் கொண்டே இளம் மருத்துவனுக்கு வாழ்த்தும் வணக்கமும் நன்றியும் தெரிவித்து விலகினார். மீண்டும் அனைத்தும் இயங்கத் தொடங்கின. தள்ளல், நெருக்குதல், முனகல், முணுமுணுப்பு, இரைச்சல்: திருத்தவே முடியாத கூட்டம். கண் இருந்தால் மட்டும் என்ன கிழித்து விடுவார்களென யாரோ அலுத்துக் கொண்டு கொட்டாவியும் விட்டார்கள். இரண்டு நாட்களில் முடிக்க வேண்டியதை எல்லா கிராமங்களுக்கும் செல்ல வேண்டிய இலக்கை ஒரே நாளில் முடித்து விடலாமென சொல்லப்பட்டதை வரவேற்பதாய் முதல் முறையாக சிறிது சிரிப்பைக் காட்டினான் அந்த மருத்துவ இளைஞன். மற்றவர்களும் பதிலுக்கு சிரித்து அவனுடன் தலையை ஆட்டினர். மதிய உணவு நேரம் கடந்து விட்டிருப்பதை அப்போதுதான் கவனித்தது போல ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் மணி கேட்டனர். ஓரளவு சுத்தம் செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தில் இருந்த அரைகுறை அறையில் அவனுக்காகப் போடப்பட்டிருந்த நாற்காலி மேசை மேல் தேடிக் கொண்டுவந்து போடப்பட்ட வாழை இலைக்கு முன் கைகளைக் கழுவிய பின் சாப்பிட உட்கார்ந்தான் மருத்துவ இளைஞன். இருந்த ஓட்டை ஜன்னல்களின் கதவுகளை இன்னும் திறந்து விட்டு, எப்போதும் வராத மின்சாரத்தைத் திட்டுவதாய்க் காட்டி, கிழிந்த விசிறியால் அவனுக்கு விசிற ஒரு ஆள் நின்றான். கழுத்திலும் நெற்றியிலும் முன் கைகளிலும் அவ்வப்போது வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக் கொள்வதும் விசிறிக் கொள்வதுமாயிருந்த அந்த இளம் கண் மருத்துவனைப் பார்க்க பரிதாபமாகத்தானிருந்தது. பெசலாய் சொல்லி சமைத்த கறி சோறு மணத்தது. இவர்கள் சாப்பிட்டு முடித்து முன் நின்றால்தான் மீதி வேலையும் முடியும். புளியமர நிழலில் வெப்பந்தான் அதிகமாய் இருந்தது. இருட்டுவதற்குள் எல்லா ஊர்களுக்கும் சென்றுவிட முடியுமா? காலை பத்து மணிக்கே எல்லாரும் வந்து குழுமிவிட வேண்டுமென அந்தப் பகுதியின் அனைத்து ஊர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. விடிந்தும் விடியாத காலையில் குடித்திருந்த பழங்கஞ்சியும் ஆவியாகி, மேலும் பஞ்சடைந்த கண்களுடன் அங்கங்கே காக்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு கூட்டம் ஓரமாய். காத்திருக்கப் பழகிய கூட்டம். அடுத்த இலக்குக்குப் புறப்பட்டது வண்டி. கவிதாசரண், 1998                                             20. ஜெல்லுவுக்கு பச்சைக் கண்கள் ஏன் வந்தது   []   நாவலோ நாவல் வாதம் எதிர்வாதம் அல்ல கழுவேற்றும் வாதம் மீள பதினெண்ணாயிரம் பேருக்கா . எதன் பேரில். அந்த வாதமே அல்ல இந்த விவாதம் ஏதோவொன்று இது வந்தது எப்படி ஏனோ எப்படியோ இதுவா கேள்வி எது கேள்வி. இது. இவர்கள். இவர்கள்தான் கேள்வி. ஆரம்பி. பார்க்கும் முகங்களில் எல்லாம் இவர்கள்தான் என்றால் எப்படி இவர்கள். எனில் எவர்கள். எவராகவும் இருக்கக் கூடுமா. அவர்களாகவும் இருக்கலாம் பக்கத்தில் பார்க்க இருப்பதால் உனக்கு அவர்கள் இவர்களாகி விட்டார்கள், அவர்களென்று பார். உனக்குத் தெரியாத இவர்கள் அறிந்துணராதவர்கள். அவர்களாய் இருந்தால் என்ன . இது அவர்கள்தான். அவர்கள் என்று சொல்லும்படிக்குத்தான் அவர்கள் இருக்கிறார்கள். இருந்தார்கள் என்றால் தான் அவர்கள். இருக்கிறார்கள் என நீயே சொல்வதால் இவர்கள் தானே. மேலும் கண்கள், தொலை நோக்கும் பார்வை, அவர்களெனக் காட்டவில்லையே. அவர்களாக இல்லாதபோது இவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்ளேன். தீவிரம் வாய்ந்த நிலைத்த கண்கள். பூனைப்பார்வையின் வீச்சு. ஆனால் நீ சொல்லும் இவர்களின் தொலைதூரம் ஊடுருவும் பார்வை தொன்மை காட்டுவதாய் அவர்களாக்குமே இன்னொன்று, என்ன சொன்னாய். தீவிரமா, வீச்சா, எங்கே பூனைப்பார்வையிலா. கண்களில் பாய்ந்து முகத்தில் தோய்ந்து காது மடல்களில் துடித்து விடைத்த மூக்கு நுனிகளிலும் இறுகித் தடித்த உதடுகளிலும் புடைத்து எழுந்த முதுகெலும்புகளிலும் வழிந்து தீவிரம். வீச்சு. பார்க்க மறுக்காதே பார். அலுக்கும் வாதம் ஒழி. அருகிருந்து தள்ளி நின்று குனிந்து பின் தள்ளி நிற்குமுனைக் கோணங்களால் ஊடுருவி. பார்த்தாகிவிட்டது. உன் பார்வையில். ஏன் உன் பூனைப் பார்வை மூலமும். சிரிப்புதான். சிரி. நீ சிரிக்காவிட்டால் எப்படி. பிறவி அவநம்பிக்கை பதரே. நெற்றியில் கொம்பு முளைத்த (கொம்புக்கு பாடபேதம்: கை உயர்த்தினான் பூமணி) அவர்கள் உலகில் இவர்கள் உலவிக்கொண்டிருந்தனர். மார்பில் தங்கிய மஞ்சளோ சந்தனமோ எதுவோ மேல் குப்பாயம் மறைத்தும் மறைக்காமலும் நுனி உதடுகளில் மீசை துளிர்த்து நடை பயிலும் போதே கொம்பு முளைத்ததை மறைக்க வேண்டிய ஒன்றாகவும் கூறி, வெளிக்காட்டவும் வேண்டுமெனக் காட்ட முற்பட்ட போதுதான் எங்கும் நடந்திடும் வேடிக்கை நிகழ்ந்தது. வேடிக்கைதான் வேறு என்ன என்று குரல். கழுத்துக்கும் கீழே வயிற்றைத் தொட்டு நான்கு ஐந்து வடம் தங்கச் சரடுகளின் படமும் முகப்பும் பொதியப்பட்ட வெள்ளை நீல சிகப்பு கற்கள் ஜொலிப்பதைக் காட்டியும், மறைப்பதுபோல மறைக்காமலும், பட்டுத் துகிலின் கெட்டிச் சரிகை முந்தாணியை கவனமாக இழுத்து மூடுவதுபோல மூடாமலும் விடுவதுமாய் சென்ற அம்மாக்கள்தான் முதலில் கண்டு மாய்ந்து முகவாயில் விரல் வைத்து வேடிக்கைதான் என்றது. என்ன இது நெற்றியிலே கொம்பு. புராணங்களில்தான் சொல்லியிருக்கிறது. முன்னொரு வேறு யுகத்திலே நெற்றியில் ஒற்றைக் கொம்பும் முதுகில் இரண்டு இறக்கைகளுமாய் இருந்தனவென். அல்லது அரக்கர்களுக்கு இருந்ததாக. நல்ல கூத்து, நல்ல வேடிக்கை இப்போது நமக்கு. சிரிப்புதான். சிரிப்பு. சிரிக்கமாட்டார்களா. தெரிந்தவர்களுக்குச் சிரிப்பு. நீ சிரித்தாயா. சிரிக்க முடியுமா. சிரித்தாயோ. முற்பட்டாயோ. ஆயிரம் சுக்கலாய் வெடித்து சிதற வேண்டும் தலையென தன்முன் தோன்றி மகிழ்ந்த பெரும்பூதத்திடம் சடைமுடி முனி கேட்டுப் பெற்ற வரம், வாக்கு பலிக்காமல் போய்விடாது. எச்சரிக்கை. எச்சரிக்கை. சாமி எச்சரிக்கை. ராசாதி ராசா எச்சரிக்கை. சிரிப்பார்களா. சிரிப்பாயா. சிரிக்கவாவது. என்ன இப்படியாகிவிட்டது. எது எப்படியாகிவிட்டது. இது இப்போது போய். எது எப்போது போய். மங்கிய ஒளியுனுடே தட்டென்று ஓர் ஒலி . தட். மேலிருந்து போட வேண்டிய சாளர கம்பியை கீழிருந்து மேலாக செருகியது யார் யாரென்று கேட்கிறோமே. யாரென சொல்ல மாட்டீர்களா. ம்யாவ். யாரோ கத்தினார்கள். மியாவ். கீழ் மேலாக போட்ட தாழ் . சாளரம். மாற்றிப் போட்டு இறுகிப் போன தாழ்ப்பாள் இரட்டைத் தாழ்ப்பாள் தலைகீழ். மியாவ். கீழ் மேலாக. மியாவ். சிக்கியது யார். மியாவ். தாழ் திறக்க முடியவில்லையெனில், என்ன சாளர இடுக்கு அடைத்தா போய்விட்டது. இண்டு இடுக்குகள் இல்லாதா போய்விடும், இருளின் இடுக்கு வழியே பூனை ஒற்றைக்கோட்டு பார்வை செல்லாதா. மியாவ். பார்த்தால் சாளர அடைப்புதான் நிற்கிறது. யார் எப்படி அடைத்தார்கள் என பார்த்தால்தான் திறப்பது எளிது. வெளியே ஓடுவதும் எளிது. மியாவ். போதும். மேலும் கடிக்காதே. நகைப்புத்தான் வருகிறது என்றாள் கல்பா - இடுக்கண் வர நகைக்க முற்பட்டு நகுதலுக்குட்பட்டாயிற்றே நீ. ஓகோ. அப்படியானால் முன்னும் இன்னமும் கடிபடுவதும் கடிப்பதும்தானா நீ. கடித்தோ, சிரித்தோ, சாளரங்கள் மட்டுமின்றி கதவுகளும் பார்க்க திறப்பது இல்லையா கடைசியில். கடைசியில் என்ன பெரிய கடைசியில். திறப்பன இல்லையா, பார். முயன்று பாரேன் என்றான் குமாரசாமி. பார். திபுதிபுவென முகங்கள். பார்த்த முகங்கள். நெற்றியில் இருந்தவை. இல்லாதவை. கடித்தவை. கடிபட்டவை. நகுபவை. நகைக்கப்பட்டவை. நகை முகப்பு படாம் வடம் எல்லாம் அம்மாவின் அக்கால மோஸ்தர் நகையாயிற்று. நகை. நகு. தேங்கியது தொலைவு. பூனைப்பார்வை. அவர்கள் இவர்கள். விட்டுத்தொலை வாதத்தை. வாதத்தையா. விவாதத்தையா. ஏதோவொன்றை விடு. விட்டாயிற்று விட்டது. காற்றுக் கூட இல்லாததுபோல வெற்றிடம். பேச்சரவம் கேட்டிலையோ எனக் கேட்கவும் அஞ்சி கிடந்தவனை கல்பா உலுக்கினாள். ஆமாம். நீ கவனிக்கவில்லையா ஜெல்லு பார்வையை. இரண்டு கண்களும் பச்சை நிறமாக மாறிவருவதை. வீட்டில் இருக்கும் பூனை ஜெல்லுவின் கண்களின் நிறமாற்றங்காட்டி, கவலையுடன். வட்ட பழுப்பில் பகலின் கீற்றாய், தெரியும் கருப்புக்கோட்டின் பார்வைப் புள்ளியும் காணாது, இரு கண்களும் பளபளக்கும் பசுந்தங்கம் படிந்த பச்சை நிறமாய் மாறி வந்தது. பார்வை தடுமாற்றம் நடமாற்றத்தில் இடிபடுதல் இயற்கையாய் தேடும் தீனியும் கிடைக்காது இளைப்பு என்ன செய்யலாம். பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாய் வீட்டில் ஒரு ஆளாய் இருப்பதற்கு இப்படி ஆவது பற்றி எப்படி கவலைப்படாமலிருக்க முடியும். தன் சிறுவயதிலிருந்து பார்த்த யாரும் வளர்த்த எந்தப் பூனையின் பார்வையிலும் இப்படி நிறமாற்றத்தை பசுந்தங்கக் கண்ணாடிப் பளபளப்பை பார்த்ததில்லை. இல்லை. படித்தேனா அல்லது ஏதேனும் செய்திச்சுருள் ஒளிபரப்பில் பார்த்ததேனா. நினைவில்லை. பச்சை நிற பளபளப்பு தங்க கண்களைப்பெறும் பூனைகளை தாய்லாந்தில் அதுவும் பாங்காங்கில் கடவுள் அவதாரமாக செல்வங்கொழிக்க வைக்க வந்ததாக வழிபடுகிறார்கள் என்பதாக. பூனைக் கடவுள் எகிப்து பிரமீட்டிலும் உண்டு. ஜெல்லு பாங்காங்கில் இருக்கக் கூடாதா. அங்கு அனுப்பிவிடலாமா. நம்பிக்கையே சான்று. கேள்விக்குள்ளாக்குவது துரோகம். கர்ணமே ஆதாரமெனும் இற்றை சூது வாது கூச்சல். தங்கக்கண் பூனைக்கு வழிபாடு அங்கு மட்டுந்தானா. ஏன் உனக்கும் பச்சைக் கண்கள் வந்தால் அங்கு அனுப்பி விடுகிறேன். நான் கேட்க நினைத்தது வேறு. ஜெல்லுவுக்கு பச்சைக் கண்கள் ஏன் வந்தது. எப்படி. ஏன் வந்தது. எப்படி வந்தது. கவலையும் கோபமும் கலந்த கல்பா. விவாதத்திற்கு இதுவா நேரம். இப்போதுமா. சரி. கைகளை தூக்கியாயிற்று. உயர்த்திய கொடியை இறக்கியாயிற்று. கட்டு கடையை. பன்னிரெண்டு வயது என்பது மனிதனுக்கான வயதாகும் தன்மையில் பூனைக்கும் நாய்க்கும் எவ்வளவு என்பதை விளக்கி ., இது நேரக்கூடியதுதான். வரக்கூடாததல்ல. வியப்பிற்குரியதல்ல., பாங்காங் பற்றி தெரியாது எனவும் சொல்லி, ஆனாலும் தங்களால் செய்யக்கூடியது மிகவும் குறைவு என நீலச்சிலுவை சங்கத்தினை அணுகியபோது வருந்தியதால், முயற்சியைத் கைவிடாது, விலங்குகளுக்கான பல்கலைக்கழக மருத்துவ மனையைக் கேட்டதில் பூனைகளுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவில் ஜெல்லுவை உள்நோயாளியாக சேர்க்க முடிந்தது. ஆளரவங்குறைந்த உலகம். தனித்தனி அறைகளில் நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நாய்களின் அவ்வப்போது குரைப்புகள். மற்றவை மறக்க. தினமும் சென்று பார்க்க முடியாததில், வாரத்தில் ஒரு நாள் ஞாயிறு அல்லது விடுமுறை நாளில் ஜெல்லுவுக்குப் பிடித்த முட்டை தோசை , குட்டி இதய வடிவ பிஸ்கட்டுகள் பால் அளித்து பார்த்து வருவதும் மருத்துவ வல்லுநர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எனும் ஆலோசனையை கேட்பதும் செய்கிறாயே தவிர, ஜெல்லுவுக்கு அறுவை சிகிச்சை செய்து கண்களில் உள்ள பசுந்தங்கப் பளபளப்பு படலத்தை நீக்க முடியுமா என்று கேட்டாயா. பச்சைக்கண்கள் வர என்ன காரணம் என கேட்டாயா. எல்லா பூனைகளுக்கும் வரும் என்கிறார்களா . கேட்கிறேன். கேட்டாயா. கேட்கிறேன். பூனைக்கு மட்டுந்தான் வருமா . நாய்களுக்கும் வருமா. கேட்கிறேன். நமக்கு வராதா. கேட்கிறேன். கல்பாவின் கேள்விகளுக்கு குமாரசாமியால் கேட்கிறேன் என்பதைத் தவிர்த்து வேறு தெளிவான பதில் தர முடியவில்லை. என்றைக்குத்தான் நீ தெளிவாக பேசி இருக்கிறாய் கேட்டு இருக்கிறாய். அறுவைச் சிகிச்சை செய்ய முடியுமா முடியாதா. முடியா தென்றுதான் நினைக்கிறோமென பல்கலை விலங்கு மருத்துவமனை நிபுணர் என்ன மொழியில் சங்கேதமாய் முணுமுணுத்தார் என்பதைத் தெரிவிப்பது முடிவாகுமா. அப்போது எதற்கு மருத்துவமனை மருத்துவர்கள், நமக்கு செய்ய முடியும் என்றால் ஜெல்லுவிற்கும் முடியாதா. இங்கு எல்லா வற்றிற்கும் ஒரே முடிவுதானா? ஜெல்லுவின் பக்கத்து படுக்கைக் கூண்டில் சேர்க்கப்பட்டிருந்த மற்றொரு பூனையின் இல்லத்துக்காரர், அதற்கு வேகவைத்த சிறு மீன் துண்டங்களை அளிக்கும்போது வெறும் பால் பிஸ்கெட் முட்டை யென வாய் செத்துப்போயிருக்கும் ஜெல்லுவுக்கும் சில துண்டங்களை அளித்ததாகவும், ஜெல்லுவும் ஆவலுடன் விழுங்கியதாக ஒரு ஞாயிற்றுக்கிழமை பார்வையாளர் நேரத்தின்போது குமாரசாமியிடம் தெரிவித்தார். அதுவும் சரியென்று அவரிடமிருந்து சில மீன் துண்டங்களை வாங்கி ஜெல்லுவுக்கு அதன் தட்டில் வைத்து அழைத்தான். வாசனைக்கு வந்தது. இவன் விரல்களையும் நக்கியது. அடுத்த ஞாயிறு குமாரசாமியின் குரல் கேட்டதும், பதில் குரலெழுப்பி, இளைத்த உடலுடன் தடுமாறி எழுந்து, தட்டில் பிஸ்கெட்டுகளை போட்டு முடிப்பதற்குள் இவன் விரலையும் சேர்த்து பரபரப்பாய்க் கடித்தது ஜெல்லு. தங்கம் மிளிரும் பச்சைக் கண்களில் இவன் முகம் பளபளக்க. விரலில் ரத்தம். அந்த மருத்துவமனைப் பிரிவில் இவனுக்கு தடுப்பூசி போடயியலாதெனினும், வளர்ப்புப்பூனை என்றாலும், அதன் பல் பட்டிருப்பதால் உரிய ஊசி போட்டுக்கொள்ள வேண்டுமெனும் ஆலோசனை பெற்றுக்கொண்டு, வெளியே சாலைக்குச் சென்று மருந்துகள் கடையில் ஊசி மருந்து வாங்கி அதே சாலையின் கோடியில் இருந்த மனிதர்களுக்கான மருத்துவமனையில் மருந்தையும் பணத்தையும் கொடுத்து ஊசி போட்டுக் கொண்டதை வீட்டிற்கு வந்த பிறகு சொன்னான். கல்பா உச்சுக் கொட்டினாள். பாவம் ஜெல்லு. அது பாவம், நானில்லையா. ஏன் எரிச்சல்படுகிறாய். நாவலோ நாவல் மறைந்தது பூனை பார்வை மறைத்தது பூனை பார்வை ஆரம்பி. கணையாழி, 2002                                                 21. தாவல்     []   அவன் மிக உறுத்துபவனாக குமாரசாமிக்கு முன்னே நின்றான். அடித்துப்பிடித்து மாநகரப் பேருந்துக்குள் ஏறிப்பின் பின்னாலிருந்து முன் நகர ஆண் பெண் இழுக்க மூச்சு முட்டும். ஓட்டுநர் அருகே முன் நிற்க மூச்சுவிட கொஞ்ச மிருக்கும் இடம். அந்த இடத்தை இலக்கை அடைவதற்குள் குமாரசாமிக்கு ஏனிப்படி என எவற்றுக்கெதிராகவும் எழும் முனையும் குரலும் மழுங்கி விடும். சகி அல்ல சா . பள்ளி நேரம். அலுவலக நேரம். கூட்ட நேரம். சகி அல்லது ஒரு முழங்கை குமாரசாமியின் தலையை இடித்து பின்னங்கழுத்தை குனிய வைத்தது. பின் முகம் நேராகவும் தோளின் மீதும் உரசி சுளிப்பை அதிகமாக்கி இடிப்பவன் யாரென அவனைப் பார்க்க வைத்தது. எரிச்சல் சுளிப்பை மீறி . அவனது நிறத்துக்குப் பொருந்தாத கருப்புக் கண்ணாடி ஒரு வேளை பார்வையிழந்தவனாக இருப்பானோவென அவனைப் பேசுவதிலிருந்தும் தடுத்தது. கருப்பு கோட் உட்சட்டை சற்று இறுக்கமான கால் குழாய் அல்லது சராய். ஆனால் கையில் கம்பில்லாதவனாக இரு கைகளாலும் கைப்பிடிக் கம்பியைப் பிடித்து ஊசலாடுபவனாயிருந்தான். என்ன ஆள். அண்டை மாநிலக்காரனா அல்லது மாலை நேர மருந்து விற்பவனா, அவனது உடை நிறம் முறை எண்ணெய்ப் பிசுபிசுக்கும் முகம் படிய வாரி கெட்டித்தட்டி கலைத்த முடி. சற்று மெலிந்த உயரம் கூடித் தெரியும் உடல். யாரிவன். என்ன வயதிருப்பான். முப்பது. நாற்பது. குமாரசாமி தலையை உலுக்கிக் கொண்டான். அடையாளம் உணர மறுக்கும் மூளை. யாராகவும் இருக்கட்டும். ஒரே நேரத்தில் கிளம்பி குறிப்பிட்ட இலக்கு களுக்குப் பயணப்படும் சிலரை மட்டுமே பார்த்து நேரத்தைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். பேருந்துள் ஏறி இறங்கும் யாரையும் உணர முடியாது. ஆனாலும் முன்னும் நகராமல் பின்னும் போகாமல் இறங்கும் வழி நோக்கி யாவும் இருக்க தொங்கும் கைகள் இடிப்பது எப்படியும் அவனைப் பார்க்க வைத்தது. குமாரசாமியின் எரிச்சல் சுளிப்பு எதையும் அறிபவனாக உணர்பவனாக அவன் இல்லை. முகத்தின் கண்ணாடியில் பார்ப்பவர் முகம் காட்டி படம் ஓடியது. முகமூடி. மூச்சு விட்டு சாலையைப் பார்க்கும் தன்னுணர்வில் கால்களை அனலாக பேருந்து எஞ்சின் ஓட்டை வழி வெளிக் காற்று தாக்கி, கோடை தொடங்குவதை உணர்த்தியது. இன்னும் கோடையில் பகலில் அங்கு நிற்பதல்ல உட்காருவதுகூட முடியாது. ஒரு நிலையில் நில்லாது உடலைக் கால்களைத் திருப்பிக் கொண்டிருந்த கோட்டுக்காரன் குமாரசாமியின் கால்களை அனல் தாக்குவதைத் தடுக்கும் முன் கால்களாகவும் இல்லை. வளைந்து முன் குனிந்து சாலை முன்னிலும் பக்கங்களிலும் பார்த்து தவிப்பவனைப் போல அவன். தவிப்பு? என்ன ஆள். அவனும் அவன் எல்லாமும். எதற்காகவோ வண்டியை உடைத்துத் திருப்பி தடையை அழுத்தி விடுவித்து பேருந்து ஓட்டுநர் நிற்பவர்களைக் குலுக்கி வெற்றிடத்தை நிரப்பினார். நிறை இழந்த மிதப்புணர்வு கிறக்கத்தின் போதுதான் அது நடந்திருக்கும். நடந்திருந்தது. முன்னே ஊசலாடியிருந்தவன் சாலை ஓரத்தில் மண்ணில் இருந்தான். திடீர் ஓடிப்பில் தூக்கியெறிப்பட்டானா தாவிக் குதித்து உருண்டானா என உணருமுன்னேயே அவன் தாவியிருந்தான். குமாரசாமிக்கு அப்போதுதான் உறைத்தது அவன் தாவியிருக்க முடியுமென். அவன் நின்ற கால்களின் அழுத்தம். தாவித்தானிருக்க வேண்டும். என்ன ஆள். ஓடும் வண்டியிலிருந்து வெளித்தாவுவது. கட்டாயம் அடிபட வைப்பது. பேருந்தின் பின்னே இடுக்கு தெரிந்தாலும் நுழைந்து முன் போகத் தவிக்கும் மூன்று சக்கர இரு சக்கர வண்டிகள் புகுந்து வீரிட்டிருந்தால், யாரையும் பழிப்பதற்குள் எதுவும் ஆகியிருக்கும் . வெளித்தாவி தடுமாறி நிற்கும் அவனையா. யாரையோ வஞ்சந் தீர்ப்பதாய் வேகத்தடையை அழுத்தி அழுத்தி விட்டு தொங்க வைக்கும் ஒட்டுநனையா. எப்படியும் நேரத்திற்குள் போய்ச் சேரவேண்டும் எனும் தவிப்பில் ஏறிய தன்னையேயா. குமாரசாமி மேலும் பழிக் கோர்வையை எண்ணி முடிப்பது சிதற அந்தக் கோட்டுக்காரன் மீள பேருந்துக்குள்ளே தாவி விட்டான். வெளித்தாவிய வேகத்துடனேயே உள்ளேயும் தாவியிருந்தான் அவன். ஓடும் வண்டியின் விரைவை விடவும் அவனது தாவல் வெளியும் உள்ளும் வேகமானதாகயிருக்கவேண்டும். உள்ளே நிற்பவர் மீது மோதி ஓரிருவர் குமாரசாமியின் மீது விழுந்த வேகம் அதை உணர்த்துவதாயிருந்தது. அவர்கள் இரைய, உள்ளே தாவியவன் ஒன்றும் நிகழாதது போல மேலும் குமாரசாமியை முன்னால் தள்ளி, மேல் கம்பியைப் பிடித்துத் தொங்கி மீண்டும் அலை பாயலானான். செய்கை வேகத்தில் வியர்வை வழிவதும் மூச்சு இரைப்பதும் கோட்டினுள் சட்டைக்குள் வாயால் ஊதிக் கொள்ள முற்பட்டதும்தான் அவன் ஏதோ செய்ய முற்பட்டவன் என்பதைக் காட்டியது. என்ன முற்பட்டான். எதைச் செய்தான். என்ன ஆள். அவன். எங்கோ எதுவோ சரியில்லை. மற்ற மற்ற நிற்பவர்களும் குமாரசாமியைப் போலத்தான் பார்த்தார்களா. நடப்பதுதான் பார்ப்பதுதான் என மற்ற பயணிகள் வெறுமையாய் நிற்பதாய்த் தோன்றியது. குறுகிய சாலை கடந்து அகன்று நீளும் சாலைக்குள் பேருந்து வந்திருந்தது. இரு பக்கமும் உயர்ந்த கட்டிடங்கள் பெருவணிக மையங்கள். விலையுயர்ந்த விடுதிகள். வண்ண ஒளிக் கோலங்காட்டி நிற்பன. வாகனங்களும் இருபுறமும் விரையும் புகை கக்கி. எங்கு. நடப்பவர் அருகிய சாலை. இன்னுஞ் செல்ல வேண்டிய நேரத்தை பார்த்தபோது கோட்டுக்காரன் மீண்டும் பரபரப்புற்றிருந்தது குமாரசாமிக்கு உறைத்தது. பஸ் ஓடியாக வேண்டிய சாலையின் இரு பக்கமும் எதிரெதிராய் விரைந்தோடி மறையும் கட்டிடங்களை தலையைத் திருப்பி உடலைக் கோணி அவற்றின் உச்சிவரை பார்த்து அவன் என்ன ஆள். அவன் கட்டுப்படாதவனாய் அடுத்தவனை இடித்தும் உணராதவனாய் அவன் போக்கில் எதைப் பார்க்கிறான். தேடுகிறானா. ஆனால் எதையும் காட்ட மறுக்கும் கண்ணாடி. தன்மையிழந்த கோட்டு.ஷூ. இவை விரையும் வேகத்தைச் சாடி வெளித்தாவும் எதிர். எதிர்ப்பு. எதை எதிர்த்து. உடன்பட ஆனால் இருப்பை உணர்த்தத் தவிக்கும் தவிப்பு. எப்படியும் உணர்த்த செய்ய முடியாததை செய்வதை செய்ய தாவ காட்ட காட்டிவிட அப்படியா. வண்ணத்தின் ஒளி வீச்சு வெட்ட குமாரசாமியும் குனிந்து எங்கிருந்து அதுவெனப் பார்த்தான். உயரே. அடுக்குகள் உயர பக்கத்திலுள்ளவற்றை பழசாக்கி புது வண்ணம். படிப்படியாய் அடுக்குகள் குவிய மேல் உச்சி வரை மெல்ல உயர்ந்து மேல் செலுத்தும் மின்தூக்கி. மின் தூக்கியை கண்ணாடி சுவர்கள் முழுசாய் வெளிக்காட்டி வண்ணமாய் ஒளிர்ந்திருந்தன. உயரே சென்று கீழ் விரையும் வண்ணக் குழல்களின் ஒளி கட்டிடம் முழுவதையும் உணரவைத்தது. செல்பவரைப் பார்க்க வைத்து நிலைப்பது. மீண்டும் பார்க்க... மீண்டும் பார்க்க குனிந்தபோது குமாரசாமியைத் தள்ளிவிட்டு கோட்டுக்காரன் வெளியே.... பாய்ந்திருந்தான். வெளியே பாய்ந்தவன் பார்க்கையிலேயே அக்கட்டிட வெளிக்கம்பித் தடுப்பை தாவியேறி உள்குதித்து அதன் கண்ணாடிக் கதவைத் திறந்து, மின் தூக்கி, அடுத்திருந்த சுருளாய் மேல்செல்லும் படி தாவி ஓடிக்கொண்டிருந்தான். திடுக்கிட, ஏய் ஏய் எனக் கத்தக்கூடயியலாது செயலழிய குமாரசாமி. அவன் அக்கட்டிடத்தின் உச்சிக்குப் போயிருந்தான். போனவன் அதன் உச்சிக் கண்ணாடி உடைத்துக் கீழ்த்தாவி பாய்வதும் அகன்று உயர்ந்த அக்கட்டிட வெளியை பேருந்து கடப்பதும் எல்லாம் நடந்துவிட்டது. பேருந்துக்குப் பின்னால் சாலையில் தட்டென விழுந்தான் அவன் குமாரசாமியின் வீறிடலும் விழுந்த சத்தமும் வேறாய்த் தோன்ற பேருந்தை கீறிச்சிட நிறுத்தி ஓட்டுநன் கேட்டான், செத்தானா . மேலிருந்த கண்ணாடி வழி பேருந்து உருண்டவர்களைப் பார்த்து. பேருந்தின் கண்ணாடி சாளர ஓட்டைகள் வழியே தலைகள் வெளிநீட்டி சாவைத் தேடினபிற கண்கள். மனம் பதியா விரையும் நேரம். கூடும் நேரம். நடத்துனன் விசில் தந்து கத்தினான், போகலாம் போ. வண்டியிலிருந்து விழவில்லை அவன். வண்டி ஏறியும் போ போ . போகும் பேருந்து. குப்புறக் கிடந்த முகம் மறைந்த அந்தக் கோட்டுக்காரனை மீளப்பார்ப்பது முடியாதென குமாரசாமி ஓட்டுநனைப் பார்த்து சொல்லவாரம்பித்தான், ஏதோ அவன் கேட்டது போல. வெளித்தாவி கட்டிட உச்சி ஏறியவன் பேருந்துக்குள்ளேயே உள் குதிக்கப் பார்த்தவன் தான், சற்று நிதானித்திருந்தபோது, பேருந்து வேகங் கூட்டி ஓட்டப்பட்டதால் நேரக்கணக்கீடு தப்பி பேருந்துக்குப் பின்னால் விழுந்தான். கோட்டுக்காரன் சாக முயன்றதாகத் தோன்றவில்லை தனக்கு. அவனது முன் செயல்கள் இதை உணர்த்தும். ஆமாம். உள் தாவத் தெரிந்தான். அவ்வளவே. வண்டி விரைய மெளனம் சூழ்ந்தது. பேச்சு நின்று சென்றிறங்கும் தடம் புரள இரு விசில் .... குமாரசாமி பேருந்திலிருந்து வேகவேகமாய் இறங்கினான், ஒரு கால் சற்று மடங்கி விழாமல் நிமிர்ந்து நடந்தான். நள்ளிரவின் இடுக்குகளில் ஒளிக்கீற்று தோன்றி மறையும்போது, கல்பா கேட்டாள் குமாரசாமியை. யாரும் செய்ததில்லையா. யாரும் செய்ததில்லையா என்றால்? யாரில்லை. மேலடித்து கீழ் வீழும் மின்னல் காற்றைக் கிழித்து மேலேறும் பட்டம் அடடே, பிறகு ? எனது எதிரொலி . நான் ஒலித்து நான் கேட்க விழையும் காம்பு பற்றும் கனி. சரிடா. விழு எழு. ஆனால் தெரியவேண்டுமே. எழு சரிதான். எழத்தான் மண்ணில் விழும் குழந்தை. செய்து காட்டு. தவ்வு. தாவு. தாவேன். சமவெளி, 2009                               22. உயிரி   []   மூச்சு வருவது உண்மைதான் அல்லது உண்மையில்லை எனும் எதிர்மறை ஐயங்களுடன் நிற்பது பரிதவிப்பையும் பரபரப்பையும் வியர்த்தலையும் தருவதாயிருந்தது. மூச்சுதான் வருகிறதா அல்லது தோன்றுகிறதா. எல்லா செயற்பாடும் நின்றுவிட்டது என உறுதி செய்யப்பட்ட பின் அப்பாவின் உடல் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது உண்மைதான். சின்ன வயதிலிருந்து யார் இறந்து போவதையும் பார்க்கத்தான் இருக்கக்கூடாது எனும் தான்தோன்றி மனவோட்டத்தினூடேயே நெருக்கமான நண்பன், சுற்றியிருப்போர், சுற்றத்தினர் பின் அம்மா என கணக்குக் கூட்ட பயந் எண்ணிக்கையில் உடல்கள் காணாமல் போவது நடந்து முடிந்துவிட்டபோது, சிறு வயது எண்ணப்படி இல்லாது இறுகி விட்ட, சக விலங்கு அருகில் கிழித்துத் தின்னப்படுவதை பார்த்தாலும் வலியிலியாய் தலையை ஆட்டி ஈக்களை விரட்டி வெளிமேயும் விலங்கின் இயல்பு தன் இயல்பானதாகத் தான் உணர , குமாரசாமி தவிப்புறவும் செய்தான். இப்போது அப்பா எண்பத்தி நான்கு வயதில், போதும்பா இந்நிலை என வாய்விட்டுப் பின் இமைக்காது பார்த்து கண்களை மூடிக் கொண்டார். எனினும், பல மணி நேரம் கழித்து அவரது உடலின் கூற்றில் மூச்சு விடுதல் நிகழ்வதாய் உணர்வதும் அப்பழைய விருப்பில் தானோ என்ற ஐயம் உடன் தலைக்காட்டி தவிப்பைக் கூட்டி மற்றவர்களுக்கு விண்டிலனாக்கி, தான் கிடந்தான், நடப்பது எதுவென முரண்பட்டு புரள்பவனாயும். என்ன மணி இருக்கும் எனப் பார்க்க முயற்சிக்கும் எண்ணத்தை செயல்படுத்த உடல் முனையாததாயிற்று. அசந்திருந்த கண்களுக்குள் மணிகள் உருண்டன. அறிதுயிலோவென ஒளிக் கூறுகளைப் பிரித்துக் காதுகள் கேட்பது அனிச்சையாகவே நடந்து உணரவும் முற்பட, பொழுது புலர்வில்லை. இரவின் விடியலின் ஒவ்வொரு யாம இருப்புக்கும் கடப்புக்கும் ஒலிகளின் கேட்டுப் பழகிய தன்மை இன்னதாகயிருக்கும் நேரமென சொல்லிக் கொண்டிருந்தது. தேன் சிட்டுக்களோ, குருவிகளோ, காகக்கரைதலோ நடைப் பேச்சொலிகளோ கேட்காத நிசப்தத்தில் இடைவெளியிட்ட சிறுவர்கள் இரைச்சல்களுக்கும் கூர்மை கூட்டிக் கேட்க செவிகள் முனைந்தாலும் ஆயாசமிக வலுவிழந்த உடல் குமாரசாமியை எழவும் விடவில்லை. இயங்குவது எங்கு யாரென நேரமெதுவோ எனவும் முயங்கியவனாய் விடுபடாத நிலையிலும், விரைவு விரைவாக அப்பாவின் மூக்கில் மூச்சு இழைவதாய்த் தானுணர்வதை அண்ணனுக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்திவிட வேண்டும் என்ற தவிப்பு மிக, இவன் தந்தையின் தலைமாட்டருகில் சென்று குனிந்து மூச்சசைவும் அது காரணமாக மார்பு அசைவை தொடர்பாய் கண்களின் அசைவை ஏன் தலையின் அசைவையும் உணர்ந்து உணர்வதை உணர்த்தி விட வேண்டும் எனும் பதைப்பினூடே நிற்பதும் நிகழ்வதாயிருந்தது.   நினைவு கடந்த நிலையில் தீர்க்கமாய்ப் புரியாது முற்றிலும் இறக்காதவரை இறந்தவராகக் காட்டிவிடும் பொறுப்பற்ற அசட்டை ஏனோதானோவில் நிகழ்ந்து விட்டிருந்த ஓரிரு கர்ண செய்திகள் அல்லது கதைகள் உண்டு. ஏன் உடலில் கடைசி கடைசியாக , நீரை ஊற்றியபோது நெருப்புபட்டபோது, மூடுமுன் மண்ணில் என் மூச்சு திணற முனகிய உடல்களால் அழுகை ஆரவாரமாக மாறியதாகவும், காட்டுக்குப் போய் எழுந்து உட்கார்ந்தால் திரும்ப வீட்டிற்கு வரக்கூடாதென அப்படியே ஊர் கடந்து போக வேண்டுமெனக்காணாது போனவர்கள் உண்டு எனவும் அளப்பக் கேட்டதெல்லாம் தன் உணர்தலுக்கும் காரணமோவென குமாரசாமி திகைத்துத் தடுமாறினாலும், மூச்சு வருகிறது உண்மை என்பதை சொல்லாமல் விடுவது என்பதும் கூடாது என "அய்யய்யோ இங்கே பாருங்கள் மூச்சு வருகிறது. மேற்கொண்டு உடலுக்கு செய்ய முனையும் எதையும் செய்து விடாமல் கொஞ்சம் கவனியுங்கள்" என நடுக்கமுறு குரல் குளறக் கூறிக்கொண்டேயிருப்பதை நிகழ்த்துபவனாகவும், உடன் நிகழ்வதை உணர்பவனாகவுங்கிடந்தான். அண்ணனோ மற்றவர்களோ குமாரசாமியின் குரலைக் கேட்டார்களா என்பதும் தெரியாமல் அவரவர் போக்கில் அடுத்தது அதற்கடுத்ததென முறை செய்ய முற்படுபவர்களாயிருந்தது. மேலும் தவிப்பைக் கூட்டியது. மூச்சு மட்டுமல்ல. இப்போது யானையின் சிறு பழுப்பு நிறக் கண்கள் போன்று இமைகளின் சிறிது திறப்பில் மங்கிய சிறுகண்மணிகள் அப்பாவின் முகத்தில் கண்டவனாய்க் கூவினான் "அப்பா சிறிது கண்களைத் திறந்தும் பார்க்கிறார் பாருங்கள்''. இப்படியும் அசட்டை செய்வார்களோ, என்ன ஒரு வேடிக்கை. முடிவு கட்டிய செயல் தொடர் . இயங்காது கிடக்கும் இரு காலின் கட்டை விரல் நுனியிலிருந்து தொடங்கிய சில்லிப்பு முழங்கால் கடந்து தொடை ஏறி இடுப்பின் மேல் வயிற்றில் கூடி பின் எலும்பில் சிதறி மார்பு இயக்கம் நிறுத்தி நுனிவிரல் தெறிப்படங்க, கண்களில் பரவி, மூளைச்சூட்டின் ஆறுதலுக்குப் பின்னும் கபாலத்தினுள்ளிருந்து காலம் மீண்ட உயிர்க்குஞ்சு நெற்றிமேட்டை சூடாக்கி, கண்களுக்கும் மூச்சுக்கும் ஆணையிட்டிருக்குமானால், நின்று போன இயக்கத்தை உந்தித்தள்ளுவதா இயலாது போகும். மலைப்பு மலைப்பு தோன்றி ஆயாசத்துள் முங்கி அசதியில் உடல் துவங்கி கிடக்கும் தன்மையுள்ளும் உள்ளம் ஆர்ப்பரிக்கும். எழுந்தாயிற்று போக்கொழித்து பார். பாரேன். பார்க்க முயலுங்களேன். கண்களை இமைக்காது தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனும் உணர்வின் நுகர்வில் குனிந்தமர்ந்திருந்தவன் தலையைத் திருப்பி என்னப்பா என்று கேட்கையில், ஒன்றுமில்லை என அப்பா பார்வை மாற்றிக்கொண்டதானது சற்று கழித்து உறுத்தியது. ஏன் கேட்டோம். அந்தப் பார்வையை இழந்துவிட்டோமேயென மனதுள் தன்னைக் குட்டிக்கொண்டே, அவருணராமல் அவர் பார்க்காமல் தான் பார்க்க முனைந்தாலும் பார்வைகள் கூட கூடவில்லை. நினைவுடன் கூடிய உயிர்ப்பார்வை உள்நுழைந்து தாக்கி காதங்கள் பின் சென்று உள்உலுக்கி பேச மறந்தவற்றை உதறி முன்போட்டு, அடே அடே இதோ இக்கூறு மரக்கிளை உளுக்கி கொட்டிச் சிதற்றும் நாவற்பழம் பொறுக்கு என கை நிறைக்கும். எறிந்த கல் மரக்கிளை பட்டு விழ, கீழ் நின்ற இளம் மண்டையின் உச்சியும் தாக்கி ரத்தம் முடிநனைத்து முகத்தில் வழியும். ஐயோ ரத்தமென அறியாத போக்கில் குடம் குடமாய் நீர் கொட்ட நிறந்தான் குறைந்தது. நிற்காத ரத்தத்தின் முனை மேல் துணி எரித்த கரியை அப்பி காலங்கடந்த பின்னும் வடுவாக்கியது போலும் நிழல்களை முன் உதிர்த்து பொறுக்கச் சொன்ன பார்வையை நிறுத்தச் சொன்னது. சொன்னது யார். நான்தானா . நான் மட்டுந்தானா. விபத்து. நள்ளிரவின் துவக்கத்தில், வீடு அடையும் விரைந்த நோக்கின் வேகம் பற்றா ஊர்தி . தலைக்கவசம் உச்சியில் உடைந்து மூளை விளிம்புகளில் ரத்தம் தீற்ற காலங்கடத்தும் உறைந்த மருத்துவம். இளமையின் கட்டுக்கோப்பில் அடிபடா இதயம் நாட்கள் கடத்த நண்பன் கண் திறக்க மாட்டானா? ஒரு நாள் கண்களைத் திறந்திருந்தான். நோவு கடந்த அமைதியின் ஆழத்திலிருந்து பார்வை. அதிர்வுகளைக் காணோமே. சந்தியேன் என் பார்வையை என அரற்றி "டாக்டர் டாக்டர் சீக்கிரம்" எனக் கூவ குவியத்தினுள் டார்ச் அடித்து இடம் வலம், மேல் கீழ் அருகு தொலைவெனக் காட்டி ஒன்றுங் கூறாது மருத்துவர் சென்றதன் பார்வை பொருள் இரண்டு நாட்கள் கழித்து தெரிந்தது, தொலைவே அழைத்துச் சென்ற நண்பன் தோளில் குமுறியபோது அருகிருந்து பார்த்த இரண்டாவது, மலையின் உச்சியிலிருந்து உருளும் உணர்வின் வியர்ப்பில் சிறிதுயர படுக்கையினின்றும் எழ முயன்று சரிந்த கல்பாவின் அப்பா முதல் வலியின் தாக்கினை தானுண்டு வாங்க எப்படி இருக்கீங்க எனும் உதடு பிரியா கோட்டுச் சிரிப்பில் கேட்க, அப்போதும் அப்படியும் அழகை ரசிக்க வைக்க முடியுமா? அவரால் முடிந்தது. கிடந்தது கிடக்க, அலைப்புற்றது இவன். என்ன இது எப்படி இப்படியென மாயும் நேரங்கள் ஒன்றைக் காப்பாற்ற மற்றொன்று என விரையும் உள்ளியங்குவன கூடுதல் வேலைப்பளுவின் அழுத்தத்தில் ஓயும் விரைவதும் என மருத்துவர் எளிமையாய்ச் சொன்னது எப்போது புரிகிறது. இறக்கக்கூடிய வயதெதுவெனத் தோன்றாது இவ்வயது. அதற்கான வயதெல்லவெனப் புலம்பும் வாய். அழக்கூடாது ஆண் எனும் வாய்கள். ஆனாலும் உரியவருக்கு அளிக்க மறுத்த எதிர்பார்ப்புகளை குறைந்த அளவு விருப்பு வெறுப்புகளையும் மூப்பின் முதிர்ச்சியால் உணராத மகன்களிடம் வாய்விட்டு கேட்பதும் தவிர்த்து, ஒடுங்கிய தன்மைக்காகவோ அளிக்க மனஞ்சுருங்கிப்போன ஆற்றாமையின் தன்னிரக்கமாகவோ பொங்கி உடைப்பெடுக்கும் ஒரு நேர அழுகை. அற்றதற்கன்றி ஆற்றாமைக்கும் புலம்பல். அப்போது அல்ல ஆண்டுகள் கழிந்தும் மாறிச் சுழலுவதில்தானா தன் நினைவு நனவு கனவு? ஓட்டம்? ஒன்றுக்கொன்று போட்டியிட்டு அவயங்கள் அடங்கி வரும் வேளை. ஒரு நாள் காலை அவர் கண்திறந்தார். இனி கவலையில்லை என அழுத்தங்குறைந்து மனம் மேலெழும்ப அழைக்க. மருத்துவர் வந்தாயிற்று. அறைக்கதவை யார் திறந்து நுழைந்தாலும் அங்கே பார்க்கிறார் நோயின் வலி குறைந்தவராய் காட்டுகின்ற கண்கள் தெளிவு மகிழ்ச்சி தருகிறது என ஆவலாய் கூறிக் கொண்டிருந்தவனின் பதற்றத்தினூடே, அப்படியா என தலையாட்டி, நோயாளியைத் தீவிரமாகப் பார்த்து கண்களைச் சோதித்து தானும் அசைந்து பார்வையின் அசைவை நோக்கி இவனை முதுகில் மெல்லத் தட்டிச் சிரித்துப் பார்க்கலாம் என வல்லுநர் வெளிச் சென்றார். குமாரசாமிக்கும் கல்பாவுக்கும் மகிழ்ச்சியும் குழப்பமும் ஒன்றாய்த் தருவதாய் இருந்த அருகாமை தீண்டல் ஓரிரு நாட்களுக்குள் என்கிறது நினைவு. நினைவு தப்பிய நிலைக்குத் தாவிய பின் மாலையில் அவரது கண்களில் களிம்பு போல் ஒன்று தடவி காலைக்குள் என் மகனிடம் மெல்லியதாய்க் கூறிச் சென்ற மருத்துவர் சுட்டார். வெலவெலப்பு. மூன்றாவதாய் அம்மா. மூன்று நாட்கள் போதுமானதாய் இருந்தது அம்மாவுக்கு. எழ முடியாத உடலை அசைக்கவும் இல்லாமல் கட்டுக்களையும் குழாய்களையும் உதறி ஊருக்கு வீட்டுக்கு ஓடி திண்ணையில் அக்கடாவென சாய்வதாக விட்டுவிடுங்களென்னை என வாய் ஓட்டம். மன ஓட்டம். குரலின் உறுதி உடலுக்கின்றி நினைவு தப்பி பின் அவர்கள் கண் பார்த்தபோது, குமாரசாமிக்கு முன் இரண்டு நிகழ்வும் அடியில் தாக்க, மரத்தின் சருகாய் காற்றில் சுழன்று மண் விழுந்து காணாது போக அம்மாவும் தயாராகிவிட்டாரென. முன்னிரு முறை கொண்ட ஆவலையும் எதிர்பார்ப்பையும் களிப்பையும் காணாததாக்கி, இது நடப்பது எதிர்கொள்ளென மண்டையில் அடித்தது உண்மையாயிற்றென்பதையும் குமாரசாமி இப்போது உணர்ந்தான். எனினும், அவற்றின் பொருட்டு இப்போது அப்பா கண் திறந்து பார்க்கிறார் என்பதை பதைப்புடன் நடுக்கும் குரலில் கூறாதிருக்க இயலாதவனாயும் இருந்தான். இது வேறு தன்மைத்தது. அப்பாவின் இக் கண்திறப்பு இறப்பின் சில மணிகள் கழிந்த நிகழ்வு. முன் நிகழ்வுகள் போலில்லை. இது நிகழாததில்லை. நீ கேட்டிருக்கவில்லையா. கேட்டிருக்க வில்லையா. பாரேன், பார்க்கக்கூட முனையாமல் என்ன செய்து கொண்டே இருக்கிறீர்கள். அடுத்து அடுத்து என அடுத்து நிகழ்த்த உள்ளதை நிறுத்தாவிட்டால் இமைகள் திறந்த நீரோட்டமிழந்த பழுப்புக் கண்களின் வீச்சு உன் கண்களைத் தீண்ட அனுமதிக்காவிட்டால் எப்படிப் பார்க்க உணர. அரற்றல் இயல்பற்றதாய் கேட்கப்படாததாய் காற்றில் மிதந்து போனது. இடைவிடாத அரற்றலும் அணுக்கமானதில் பேச்சிழந்தது. பார்த்து நிற்கும் மற்றமற்றவர்க்கு வேடிக்கைப் பொருளாகிறாய் நீ . எச்சரிக்கை. இங்கும் இப்படி இருவெனக் கட்டிப்போடும் தன்னுணர்வின் விழிப்பில் நிற்பது. நிகழ்வதாய் விழிகள் உருண்டன. தவிப்புறும் உடல். வாயில் குழறியதா சொற்கள், கண்களின் திறப்பால் மூச்சு, மூச்சின் முட்டலில் விழிப்பா. யாரில் யார், அப்போது பார்த்தாய் இப்போது பார்ப்பதும் நீ மட்டும்தானா அவரில்லையா குமாரசாமி குராமசாமியெனுங் குரலுடன், இவனை பார்த்து கல்பா. ஒரு பொழுதா, ஒரு நாளா, மூன்று நாட்களா, ஓராண்டுக்குப் பின்னர் உயிர்ப்பு காண்பது காட்ட முனைவது ஏன். பல ஆண்டுகளுக்கும் பின்னாலும் அறிந்தவரை புரிந்தவர் காணும் வரையும் அறியாதவர்களால் பல நூற்றாண்டுகளுக்கும் காணப்பட்டு தூசித்துகள் காலவெளியின் கருப்புக் குறுக்கத்தில் கலக்கச் சிதறியோடும் பெரு ஓட்டம் முடிவுறா ஓட்டம் . பிறிதொரு அண்டக்கோளின் பனியில் உறையும் மீள்வோர் உயிர்ப்பு. அதில் அவர் நான் நீ இருப்போமே கல்பா என்றான் குமாரசாமி, முழு விழிப்புற்றவனாய்.   உறைவதாயிருக்கட்டுமே. உயிர்ப்பதாயும். நீயும் நானுமாய்த்தான் உணர முடிபவர்களாய் அதோடு அதைக் காணமுடிபவர்களாயும் இருக்கவேண்டுமென நீ நிலைக்க முயல்வது முற்படுவது வேடிக்கை. உன் என்றைக்குமான இருப்பை இறவாத உயிர்ப்பை உள்ளடக்கிய உன் அவாவேட்கை சிரிப்பு தருகிறது குமாரசாமி. இல்லாது போகும் ஏதோ ஒன்றை நிறுத்த நிலைவழி நிற்க, உள்ளாயிருந்தாலும் பேயென உருவாக்கியும், எதுவும் நீ நீயாகத்தான் இருக்கவேண்டுமாய் எல்லா பிறப்பும் பிறந்திளைத்த பின்னும் பின்னரும் கூட அழிவு உண்டோ ஓவெனும் அச்சத்தில் உன்னுயிர் அடைய அலகிலா ஓர் அருவத்திலேனும் உருவத்திலேனும் போய்ச் சேர்ந்து நீடித்து விடியலில் நிற்க வேண்டுமென நீ நீங்கள் நான் படும்பாடு. போடா போ எனச் சிரித்தாள் கல்பா. அலங்க மலங்க விழித்த எட்டு வயது மகன் இளவேனிலும் உடன் சிரித்தான். முன்னர் அப்பாவின் உடல் முன் குமாரசாமி அழுதபோதும் சிரித்தவன் இவன். கணையாழி, 2003                                                   23. விடியாத ஒரு கதை   []     எப்போது கண் அயர்ந் தார்கள் என்பது கூட தெரியாமல் இரவு நெடுநேரம் வரைக்கும் குமாரசாமியும் ஆதி மாமாவும் விடியாத ஒரு கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பாக்கத்தில் முன்பிருந்த உயிரோட்டம் இப்போது காணாமல் போய்விட்டது. எல்லாமே வறண்டு வருகிறது. வறட்சி. இருக்கும் நான்கைந்து தெருக்களில் பாதி வீடுகள் பூட்டப்பட்டுக் கிடந்தன. அவற்றில் சில மண்சுவர்கள் சரிய சிதிலமடைந்து விட்டன. பாறைகளின் வெப்பமும் வறண்ட மரங்களின் அனலும் சரசரக்கும் முட்புதர்களின் வேலிகாத்தான்களின் அசைவும் ஊரை மேலும் வசிக்க இயலாத இடமாக மாற்றிக் கொண்டிருந்தன. சுற்றிலும் இருந்த வயல்களால் ஊர் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. நிலத்தின் மீது மண்ணின் மீது ஆதிக்கம் மூலம் ஊரை நாட்டை ஆண்ட அதிகாரத்தின் மிச்ச சொச்ச குணம் இன்னமும் பாக்கத்தில் சிலரை நிலத்துடன் கட்டிப்போட்டிருந்தது. நிலம், மண், வெளி, காற்று, நீர். நீரைவிட மண் நெருக்கத்தை தந்தது. தருவது. கொலைக்களன்களின் மண் ஊசிமுனை மண் செவ்விந்தியர்களில் மண் என எந்தப் புலத்திலும் எந்த மண்ணுமே அதிக அழிவு தந்தது. பெருமுச்சு. அந்த மூச்சில் கருகுவன பல. ஆண்டுக்கு ஓரிரு முறை பெய்யக்கூடிய மழையில் நிரம்பக்கூடிய கொட்டாங்கச்சி ஏரி என மற்ற ஊர்க்காரர்கள் கேலி செய்யும் ரெட்டேரியின் கசிவில் ஒரு போகம் சம்பா விளையும் முன்பு. நவரை என்பது ஏரி மதகடியின் உள்ளடி நிலக்காரர்களுக்குதான். அதுவும் இப்போது தவறி வருகிறது. சிறிது காலமாக கிணறுகள் தோன்றத் தொடங்கியிருந்தன. நீர் இறைக்க யந்திரங்களும், யந்திரங்களுக்கு மின்சாரமும் என யந்திரங்களும் பாக்கம் எட்டிப்பார்க்க நேர்ந்திருப்பது வேடிக்கைதான். வேடிக்கையில்லை வேதனைதான். விடியும் வேளையில் மதகைத் திறந்ததும் வாய்க்கால் வழியாக நீர் விரையுமுன் துள்ளித் தாவி மேல் ஏறும் மீன்கள். திரும்பவும் பயணிக்குமோ. இரு வரப்புகளைக் கரையாகக் கொண்ட மண் வாய்க்கால்கள் சிமெண்ட் கால்வாய்களாக மாறியிருந்தான். எப்படி வெட்டுவது மடைமாற்றுவது அடைப்பது. வரப்புயருமா. அதெல்லாம் பழங்கதை என்றார் ஆதி மாமா. கணுக்காலையும் முழங்கைகளையும் சொறிந்தவாறு, "எல்லாம் உனக்குத் தெரிஞ்சதுதான். கடன். பயிரில்லை , மீண்டும் கடன், வேறு பிழைப்பு இல்லை. விட்டுவிட்டு எங்கு ஓடுவது. நீ அங்கே வந்து எந்த வீட்டிலாவது திடீரென்று நுழைந்தாயானால் திணறி விடுவோம். முண்டக்கா தண்ணி சோத்துக்கு தொட்டுக் கொள்ளக்கூட இருக்காது. கடனை உடனை வாங்கி எதோ இருக்கிறோம். மானத்துக்காக துணி உடுத்தி". இதிலென்ன புதுக்கதையிருக்கிறது. எல்லாம் பழைய கதைதான். நகரத்திலிருந்து வருபவர்கள் காபி குடிப்பவர்களாயிற்றே என்று காபி வில்லைகளை வெந்நீரில் கரைத்து பாலென்ற பெயரில் ஏதோ சேர்த்து காபித்துகள் மிதக்க கசப்பாக கட்டாயமாகத் தரும் ஒன்றை குடித்துத் தொலைத்த இளம் வயது பள்ளி விடுமுறை கிராம பயண நாட்கள் நினைவுக்கு வராமலில்லை. யார் மாமா ஆகிறார்கள், யார் சித்தப்பா, யார் தங்கை என்பதெல்லாம் தெரியாமல் உறவுமுறைகளை மாற்றி மாற்றி அழைத்து, இந்தக் காலத்து பையன்களுக்கு எங்கே உறவுமுறை தெரிகிறது. என் மேலாக வருந்தி தங்கள் உறவுமுறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் வீடுகளுக்கு சென்றபோதும் பெரிதாக ஒன்றும் கிடைத்துவிடவில்லை சிறுவயதில் குமாரசாமிக்கு. வெறிச்சோடிக் கிடக்கும் ஊரும் வறண்ட காற்றும் அடிக்கும் வெள்ளை வெயிலையும் தவிர மற்றவற்றை அப்போதும் தேடிப்பிடிக்க வேண்டிதான் இருந்தது. ஓரிரு புளியன்களும் - ஒற்றைப் பனைகாகக் கரைதலும் தவிர. “ஆட்கள் மாறிவிட்டதாக இப்போது அதிகம் பேச்சு". " உனக்குத் தெரியாது. நீதான் ஊர்ப்பக்கம் வருவதேயில்லையே” என சிரித்தார் ஆதி மாமா, வெறுமையாக. “குளத்து நீரும் காய்ந்து, ஏரியும் வற்றி குடிப்பதற்கு சித்தாறு தண்ணீர்தான். இப்போது அதுவும் சுவை மாறிவிட்டது. ஆனால், உனக்குத் தெரியுமா, வயக்காட்டு கிணறுகளின் நீரை விற்கிறோம் இப்போது.'' "சொன்னார்கள்.'' "முன்பு பால், காய்கறி, கீரை, முட்டை , தயிர், வெண்ணெய், சொசைட்டிகாரனுக்கு இல்லையென்றால் முன்பணம் என்ற பெயரில் கடன் கொடுத்த மேலத்தெருவான் மூலம் பெரிய சந்தைக்கு சாயந்தரமும் காலையிலும் எல்லாம் போய்விடும் உன்னைப் போல கூட்டாளிகள் திடீரென வந்துவிட்டால் நாளைக்கு திருப்பித்தரேன் என்று சொல்லக்கூட பக்கத்து அண்டையில் அவசரத்துக்கு வாங்க முடியாது.'' "ஞாபகம் இருக்கிறது.” “இப்போ வெளைச்சலும் இல்லை. கிணறு எடுத்து மோட்டாரும் போட்டதில் கடன். நிலத்து மேலே கடன். வட்டி கட்ட கடன், கரண்ட் பில் கட்டக்கூட தம்பிடி கிடையாது.'' "தம்பிடி எல்லாம் போய் எவ்வளவோ நாளாயிற்றே. கடன் வாங்கியாவது டவுனுக்கு வந்து சினிமா பார்ப்பதும், ஓட்டலில் சாப்பிடுவதும் குறையவில்லையே. இப்பவும் அப்படித்தானே.'' "வேடிக்கையா இருக்குதா எங்க பாடு. இப்பல்லாம் யாருப்பா சினிமா பார்க்க, ஓட்டலில் தின்ன வருகிறார்கள், அது ஒரு காலம் அதான் வீட்டுக்கு வீடு நேரம் காலம் இல்லாமல் கேபிள் டிவிக்காரன் இந்த டிவி அந்த டிவின்னு 24 மணி நேரமும் டான்சும் பாட்டுமாய் கூத்தடிக்கிறானே. அது அது வீட்டிலேயே முடங்கி விடுகிறது. கடன்தான் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் தண்ணீரை விற்கிறோம். ஒரு மணிநேரம் மோட்டார் ஓடினால் இவ்வளவு ரூபாய் என்று மாதத்திற்கு கரண்ட் பில்லும் போக கையில் காசு நிற்கிறது. வெளச்சல் இல்லையென்றாலும் பயிரே இல்லையென்றாலும் நெல்லை விற்று வருவதை விட லாரிக்காரன்களுக்கு தண்ணீரை விற்பது சம்சாரிக்கு லாபம்தான்." "தண்ணீ ரை விற்பது பாவம்.'' "ஆமாம் பாவம்தான். இப்போது யார் விற்கவில்லை.'' “எல்லோரும் பம்ப் போட்டு உறிஞ்சிவிட்டால் தண்ணீர் கீழே போய்விடுமே.'' "போய்விடுமே என்ன? போய்விட்டது. அவனவன் அஞ்சு எச்.பி. எல்லாம் போய் பத்து எச்.பி. என்று போய்ட்டு யிருக்கிறான். இன்னும் 100 அடி கீழே குழாய் இறக்கி ஆயிற்று. மழையில்லை. புஞ்சை ஆக்கவும் ஊர் ஒத்துவரவில்லை. ஆற்றிலும் மணல் எடுக்கிறேன் பேர்வழி என்று மம்மட்டியும் கையும் போய் அஞ்சடி பத்தடி ஆழத்துக்கு அப்படியே அள்ளுகிறது பொக்லைன் கை. ஆத்துல் நீரோட்டம்தான் இல்லை என்று ஆகிவிட்டது. என்றால் இப்போ ஊத்தோட்டமும் போய் அடிவறண்டு மடியிலும் கால் வைத்துவிட்டார்கள். யார் கேட்பது மனசாட்சி வேண்டாமா.'' "மனமாவது சாட்சியாவது'' "யாருக்கு மணல் இப்போ கப்பலிலே வெளிநாட்டுக்குக்கூட போகிறது தெரியுமா?'' "சொல்றாங்க. உனக்குத் தெரியுமா நம்மூர் தண்ணீ நம்ம ஊர் மட்டுமில்லை சுத்துவட்டாரம் தண்ணீர் எல்லாமே வெளியேதான் போவுது.'' "தெரிஞ்சதுதானே" "பாட்டில் கேன் தண்ணியாய் திரும்ப வந்து இப்ப நாங்களே வாங்குறோம்.'' “இது நீ சொல்லித்தான் தெரியவேண்டுமா . எங்களுக்கென்ன. எந்த ஊர்த் தண்ணீராக இருந்தாலும் காசு கொடுத்தால் தண்ணீர் கிடைக்கிறது. மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தண்ணீருக்கு மட்டும் ஆகிறது தெரியுமா நம் வீட்டிற்கு.” "அப்படியா. மோசமாக இருக்கிறதே. 100 ரூபாய்க்கூட தருவதில்லை எங்களுக்கு, அந்த லாரிக்காரத் திருடன். சரி நான் வரட்டுமா. ஊருக்கு போகும் ஒரு பஸ்ஸும் தவறிவிடப் போகிறது.'' "சரி. என்ன மாமா சொல்கிறாய். விடுமுறைக்கு வாண்டுகளை ஊருக்கு அனுப்பாதே என்கிறாயா?'' "ஆமாம் குமாரசாமி. ஊரில் ஒன்றும் சரியில்லை . குளிக்க கொள்ளக்கூட நல்ல தண்ணீர் என்பாடு உன்பாடாக இருக்கிறது. வீட்டுக்கிணற்றில் தண்ணி சுண்டி உப்பு வேறு. வெயிலில் ஊரே பொட்டல் காடாய் அனல் வீசுகிறது. குழந்தைகள் வந்து என்ன செய்ய. இங்கேயாவது இவன் வீடு இல்லையென்றால் அவன் வீடு, கடற்கரை, பொருட்காட்சி, விளையாட்டு அப்படி இப்படி என்று பொழுதும் லீவும் போய்விடும். இப்ப வேணாம். மழை பெய்யட்டும்.'' ஆதி தாத்தாவுடன் இந்த முறை வயல் பாக்கத்திற்குப் போய் குஞ்சு குளுவான்களுடன் ஊரை கலக்கலாம் என்று காத்திருந்த சிறுசுகளுக்கு ஏன் ஊருக்குப் போகக் கூடாது என்பது புரிய வில்லை. தண்ணீர் இல்லையென்றால் என்ன வாங்கிக் கொள்ளலாமே. அது மட்டுமே காரணமில்லை என்றால் அவர்களுக்குப் புரியுமா . "சரி ஆதி மாமா. நீ சாப்பிட்டுவிட்டு புறப்படு. நீ சொல்வது சரிதான். அடுத்த பெரிய விடுமுறையில் பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஒன்றும் புரியாது. அப்புறம் ஊரைவிட்டே போய் விட்டார்களே அந்த குட்டி சித்தப்பா வீடும் இடிந்துவிட்டதுனா சொல்றே.'' "அதையேன் கேட்கிறாய். அவனது மட்டுமா?' என்று ஆரம்பித்த ஆதி மாமாவை இடைமறித்தாள் கல்பா . "சரி சரி சாப்பிட்டுக்கொண்டே பேசலாம். இங்கேயே இரவும் தங்கிடுங்க. எல்லாம் பேசி காலையில் போய்க்கொள்ளலாம் மாமா.'' "அதுவும் சரிதான்'' என்றார் மாமா. எதுவும் சரிதான் என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் குமாரசாமி. என்ன சொன்னே என்ற மாமாவுக்கு ஒண்ணுமில்லை மாமா சாப்பிட்டப்புறம் பேசலாம் என்றான் குமாரசாமி. சாப்பிட்டதுமே அசதியில் தூங்கிவிழுந்தார் மாமா. மாமா படுங்க விடிந்ததும் பேசிக்கலாம் என்று அவரை படுக்கவைத்து நகர்ந்தான். எப்பவும் நடப்பதுதான். காலையில் என்ன செய்வதென கவலை ஆரம்பித்தது முன்னிரவிலேயே. வறட்டு இருமலுடன் புரண்டார் மாமா எழுந்து உட்கார்ந்து குடிக்க கொஞ்சம் தண்ணீ குடு என, நீட்டிய பிளாஸ்டிக் பாட்டிலிலிருந்து தண்ணீரைக் குடித்துக்கொண்டே பாட்டிலின் லேபிலை பார்த்தவாறே மீள பேசலானார். என்ன மாமா என்றபடி அவர் முகத்தை பார்த்தான் குமாரசாமி. இன்னும் எத்தனை விசயம் சொல்லப்போகிறார். வந்து போக முடியும் வரைக்கும் தானே என்று தோன்றியது. கடினம்தான். பழக்கத்தில் மணிக்கட்டை திருப்பி கண்கள் பார்த்தான். என்ன தூக்கம் வருதா என்ற மாமாவை சமாளிக்க, இல்ல மாமா இது ஒரு பழக்கம் ஆயிடுச்சி நீ என்ன சொன்னே ஆமாம் ஆமாம். நீ செய்றது சரிதான் சொல்லு என்றான். யார் சொல்கிறார்கள் யார் கேட்கிறார்கள் எனப் புரியாத மோன நிலையில். பயிற்சிக்கூடவிவாதக் கதை, 2005   24. ஒரு கற்பிதத்திலிருந்து   []   எல்லாமே இங்கு நன்றாகத் தானிருக்கிறது. யார் எது நன்றாக இல்லை. வேறு ஏதாவது சொல்ல உங்களுக்கு இருக்கிறதா? நான் போக வேண்டும். வேறு ஒரு இடத்தில் முக்கியப் பணி ஒன்று காத்திருக்கிறது. நேரந்தவறாமை என்பது மிக முக்கியமான பண்பு என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் எனக் கருதுகிறோம். ஆனாலும் இங்கு நான் வரும்போது இரு மணித்துளிகளுக்குச் சற்று மேல் தாமதப் பட்டுவிட்டது என்பதற்கு நான் சமாதானம் சொல்லித்தான் தீரவேண்டும். உங்களுக்காக இல்லாவிட்டாலும் நேரம் தவறாமை ஒரு பண்பு எனக் கருதும் எனக்காகவாவது. இப்படித்தான் இங்கு நீங்கள் தாமதப்படுத்துவது போல உங்களுக்கு முன் சென்றிருந்த இடத்திலிருந்தவர்களும் தாமதப்படுத்தினார்கள். ஆனாலும் நேரத்தைக் கடைப்பிடிப்பவனாக நான் இருக்கவேண்டும் என்பதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது என்பதை நான் கூறவேண்டுவதில்லை. எனவே, தற்போது உங்களையும் நான் கடந்து சென்றிருக்கிறேன் என்பதை மட்டும் நீங்கள் நினைவில் கொண்டால் போதும். அதுதான் முக்கியம் என்பதை நாம் இரு தரப்பாருமே ஒப்புக் கொள்வோம் என்றால்,அதுதான் எனக்குத் தேவை. நான் .... நேரமாவதால்... படம் போடப்படும்.…   []   ஊர்திகள் ஊளையிட்டுக் கொண்டு கூட்டத்தைப் புறந்தள்ளி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. நான் .... பிறகு நான் என்ன சொன்னேன்? படமா என்ன படம் என்பதைக் கேட்க நீ பொறுமை காட்டுவதாயில்லை. அல்லது மற்ற இரைச்சல்கள் கேட்பதைத் தேய்த்துவிட்டன என்பது காரணமாகலாம். எல்லாமே நன்றாகத்தானிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே நீ பேச ஆரம்பித்தபோது நான் எங்கிருந்தேன் என்பதும் தெளிவாக இல்லை. என்ன படம். "கற்பிதத்திலிருந்து" என்ன எங்கே எப்போது. எந்த கற்பிதத்திலிருந்து? இரைச்சலும், புழுதியும் எந்தவித கட்டுப்பாட்டுக்கும், ஒழுங்குக்கும், உட்படாமல், பலவித ஊர்திகள் உருவிற்கேற்கே முன்னால் பின்னால் செல்பவர்களையும், ஓரத்தில் நடப்பவர்களையும், வழிவிட மறுப்பவர்களையும் உராய்ந்தும், இடித்தும், ஏறியும், இறங்கியும் செல்லும் வழக்கத்தால் பழக்கப்பட்டு போன நானும், நீயும் கடக்கும்போது, கால்களில் புழுதி ஏறியும், உடைகள் கிழிந்தும், கிழியாமலும், கையில் பிடித்திருக்கும் பிளாஸ்டிக் பை தோளில் தாங்கியிருக்கும் உணவு டப்பா , தண்ணீர் குடுவை மிக முக்கியமெனத் திணிக்கப்பட்ட, மீண்டும் பார்க்காத காகிதக்குப்பைகளடங்கிய தொங்கு பை அறாமலும் நடக்கக்கூடிய, அதே நேரத்தில் விரையும் நம்முன்னே மட்டும் மெதுவாக நடப்பதற்கென்றே இடம் வலமாய் செல்பவர்களை இடித்தும், இடிக்காமலும் கடந்து செல்ல வேண்டியதாகிறது. ஊர்தியின் விரைவு காரணமாக விரைய வேண்டிய தேவையில் நீயும் நானும், மேடும் பள்ளமும், குப்பையும் புழுதியும், நிறைந்த சாலையைக் கடக்க முற்படும்போது, சாலை நடுவில், தோளில் உணவுப் பையும், கைகளில் காய்கறி அல்லது வீட்டு மளிகைப் பொருட்கள் வாங்கிய பிளாஸ்டிக் பை கிழியாமலும், அறாமலும் சர்க்கஸ்காரர்களைப் போலச் செல்வது எரிச்சலை அதிகமாக்கும். பின்னால் வரும் எந்த வண்டியையும் உதாசீனப்படுத்தும் உன்னையும், என்னையும் இடித்துத் தள்ளிச் செல்ல வேண்டுமென வெறி வந்தாலும் பழக்கப்பட்டுப் போன வண்டித்தடத்தில் விரைய முற்பட்டோம். இந்த இரண்டு கால் நீயும் நானும் நான்கு கால் ஊர்தியில் பறக்க முற்படும் உன்னையும் என்னையும் எவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள் என்பது படுபவர்களுக்குத்தான் தெரியும். தொலையட்டும். இதோ படம்.   []     மேலே சொன்னதெல்லாம் நீ நான் உனக்கு அல்லது எனக்கு ஒரு பொருட்டேயில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. நீங்களும் பொருட்படுத்துபவர்களில்லை என்பது அவரவர் கைகுட்டைகளை எடுத்து முகத்தில் படிந்த தூசியை, வியர்வையுடன் அழுத்தித் துடைத்து மீண்டும் உள்பக்கமாக மடித்து வைத்து விரைவதன் மூலம் தெரியும். ஆனால் வாய் வாய்கள் மனம் மூளை எல்லாமே ஒன்றை முணுமுணுத்திருப்பதை தவிர்க்கவில்லை... எல்லாமே நன்றாகத்தானிருக்கிறது. நன்றாகத் தானிருந்தது. இருக்கிறது. இருக்கும். நன்றாக இருப்பதை நோக்கி உறிஞ்சுகொடிகளைப் போல விரல்கள் இறுக்கிப் படர்ந்தன. நெருக்கிப் பரவும் வெளுத்த வேர்கள், துளையிட்டு ஊடுருவி உள்ளே உள்ளேவென உறிஞ்சி ஒன்றை அழித்து ஒன்றையென நெரிப்பு. நெரிப்பா நெளிப்பா? ஆராய்ச்சியாளர்கள் ஆய்ந்தோ, ஆயாமலேயோ எழுதிக் குவித்த ஆய்வுகள் ஆய்வுப்படுத்தி முனைந்தவர்கள் முனைவர்கள் ஆயினர். முனையாதவர்கள் முனிவர்களானார். முனிந்தவர்கள் முடங்கினார்கள். முனியாதவர் முடக்கப்பட்டார் பிறகென்ன. சிரிப்புதான். மகிழ்ச்சிதான். என்ன ஒரு வளம்! கற்பனையிலும், கருத்திலும், சொல்லிலும், எழுத்திலும், பேச்சிலும், நடையிலும். எங்கே மிதந்து கொண்டிருந்தாய் நீ. நான் மிதந்து கொண்டிருக்கிறேன்? உனக்கு மிதப்பு. எனக்கு மிதத்தல். எவ்வளவு நன்றாயிருக்கிறது மிதப்பது. எடையற்ற நிலையில் வெற்றிடம் காற்றில்லாததால் ஒலியற்று எல்லாம் மிதந்து கொண்டிருந்தன. மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த பரவச நிலை பக்தர்களுக்கல்லவா கிட்டும். இந்நிலையை மனிதர்களாகிய நீ நான் நாம் மட்டுமல்லவா எய்த முடியும். உனக்கும் எனக்குமல்லவா கிட்டும். அழகுதான். வேறு உயிரினங்கள், விலங்குகள், தாவரங்கள் தங்களை ஒருவர் அரியணையில் அமர்த்தி அழகு பார்க்கிறார் என்பதற்காக, என்பதற்கான பரவச நிலையை அடைவது, அடைவதை உணர்வது, உணர்ந்ததை விளம்புவது, விளம்புவதை பதிப்பது உண்டா பதிப்பதை….. வேண்டாம். முடியாது. எவ்வளவு அழகான தன்மை. இழக்க முடியுமா. யாரும் எதுவும் எவரையும் எங்கும் அமர்த்தி அழகு பார்க்க வேண்டாம். அமர்த்தி அழகு பார்க்கப்படும் என்ற எண்ணமே மிதக்க வைக்கிறது. துன்பத்தை நீக்குகிறது. துயரத்தைப் போக்குகிறது. இயலாமையை எத்துகிறது. சிற்றின்ப அல்லது பேரின்ப நிலை எய்தி உய்விக்க வைக்கிறது. துய்ப்பு, பானைக்கு பதில் பாத்திரம், பாத்திரப் பருக்கைக்கு ஒரு பருக்கை பதம். இப்படித்தானா எல்லாமும் இருக்கவேண்டும். இருக்கிறது. மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒன்று கலக்கும் இடம். உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. சொல்லுங்க. நான் சொல்வது (நான் சொல்வது) உண்மையைத் தவிர (உண்மையைத் தவிர) வேறு இல்லை (வேறு இல்லை) வலதுகை தொட புத்தகம் என்ன புத்தகம் இது. என்ன படம் இது. கூண்டிற்கு அருகே வந்து கேள்விகள் கேட்பவனின் வாய் அல்லது மூச்சுக் காற்றில் வெத்திலை பாக்கு தாம்பூல வாசனையை மீறி அழுகிய பழவாடை அடித்தது. மெலிதாக குடித்து விட்டு வருவானா? எப்படி இது சாத்தியம்.   என்று வியந்து கொண்டிருக்காமல் கேட்பதற்குப் பதில் சொல். வாடை என்று சொன்னால் விளக்குவதும் மெய்ப்பிப்பதும் முடியாது. கூடாது. மெய் விலக்கப்பட்டது. மெய்யா மொய்யா. இந்த மாதிரி ஆட்களிடம் கேள்விகளுக்குப் பதில் பெறுவது கடினம் என அலுத்துக் கொண்டான் அவன். எதிர்பார்க்கும் பதில் பெற என்று சொல். நீ எதிர்பார்க்கும் பதிலை சொல்வதற்காக நான் இங்கு நிற்கவில்லை. சலித்துப் போய் அலுத்துப் போய் கொட்டு. ஆமென்பதற்கு ஆமென். இல்லை என்பதற்கு இல்லையென. பதில் வரவழைக்க உதவும் உத்தியில் கேள்வி எழுப்பேன் என சட்டக் காவலன் எடுத்துக் கொடுப்பான். பிறகு, பிறகு? நான் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென நீ சொல்வாய். அடுத்த அடுத்த அடுத்த போதும் நீ நீயாக , நான் நீயாக இருக்க முடிவு. பிறகு ? பிறகு, பரவச நிலை எய்தித் திளைப்பது மிக முக்கியம். முக்கியம்! என்ன ஆச்சரியக்குறி போடுகிறாய்? ஏன் கேள்விக்குறி போடுகிறாய்? போடு இரண்டையும் !?!? எல்லாவற்றையும் விட்டுக்கொடு. ஒத்துப் போ . ஏற்றுக்கொள். பேசாதே. நான் சொல்வதைச் சொல். கொடுப்பதை உண். கழி. என்ன வாசனை. என்ன நாற்றம். மூக்கை பொறுத்து. நுகர்வைப் பொறுத்து மூக்கைப் பொருத்து. மூக்கைப் பொருத்திக் கொண்டாயா. தலையாட்டினான் குமாரசாமி. கைகளில் மூக்கு. எங்கே சொல். எல்லாம் நன்றாக இருக்கிறது. (எல்லாம் நன்றாக இருக்கிறது.) எல்லாம் ஒழுங்காக இருக்கிறது. அமைதியாக இருக்கிறது. (சொன்னான்.) நீயும் அமைதியாக இருக்கிறாய். (நீயும் அமைதியாக இருக்கிறாய்.) இங்கே நீயும் என்று நீ சொல்லக்கூடாது. நானும் என்று சொல்ல வேண்டுமென்பதுதான் எதிர்பார்க்கப் படுகிறது. நீயும் என்று சொல்லி எனக்கு குணமேற்படுத்தக்கூடாது. புரிகிறதா? தலையாட்டுவதா வேண்டாமா. பேசுவதா. கூடாதா. வெறுமையில் புகுந்தான் குமாரசாமி. வெற்றிடம். வெற்று இடம். அமைதிப் பூங்கா. அருமையான இடம். காற்று பேசாது. சிறு பறவைகள் பேசாது. மரஞ்செடி கொடி. பூக்கள், காய்கள், கனிகள் பேசாது. நிறங்கள் பேசாது. அமைதிப் பூங்கா. இதைக் குலைக்க யாருக்கும் உரிமை கிடையாது. குலைக்க உரிமை என்ற சொற்கள் / வார்த்தைகள் பிடிக்கவில்லையெனில் எதுவெல்லாம் உனக்குப் பிடித்தமானதாயிருக்குமோ அதையெல்லாம் போட்டுக்கொண்டு சொல். இது அமைதிப் பூங்கா . இதை ... யாருக்கும் ... கிடையாது. யாரும்...... விடமாட்டோம். பறவைகள் பறந்து போயின. காற்றின் திசை திரும்பியதால். இலைகள் சலசலப்பை விட்டுச் சரிந்தன. அணில்கள் சிறு பிராணிகள். எழுதினான். "... அவ்வப்போது ஒன்றுக்கிருந்து”. நெருக்கடி பிறப்பிக்கப்பட்ட அமைதிப் பூங்காவில். எப்படி அவன் எழுதலாம். நீ படிக்கலாம். அவ்வப்போது ஒன்றுக்கும் இருக்காமல் இரு என்று சொல்ல, நான் ஒன்றும் அவ்வளவு கொடூரமான ஆள் இல்லை என நீ நம்பவில்லையா? அடக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் நோய் பற்றி சில நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு படம், இப்போது. இதன் மூலம் நாங்கள் எவ்வளவு மென்மையான அன்பான ஆதரவான அரவணைக்க விரும்பும் முயலும் உத்தமமான மேலானவன் என்பதைப் புரிந்து கொள். இன்னுமொன்றையும் நீ புரிந்து கொள்ளவேண்டும். படத்தை பார்ப்பதற்கு முன் . என் முன்னால் இருக்கும் உனக்காகத்தான் இது. ஒரு வன்மத்துடன், பழி வாங்கும் உள் குணத்துடன் இருக்கிறாய் நான் என நீ என நான் கருதுவதாகக்கூட நீ எண்ணிக் கொள்வது கூடாது என்பது என்னைப் போலவே உனக்குப் புரிந்திருக்கவேண்டும். ஏமாற்றுக்காரன் ஏமாற்றுக்காரி என எந்த நேரமும் உள்ளுக்குள் கருதி வருகிறோம் என்பதை நீ மறக்கவேண்டும். நான் மறப்பது கூடாது என்பதை ஏற்றுக் கொள்வதன் மூலம் தான் எத்தனையோ விடியல்களைப் பகிர்ந்து கொள்ள வைத்திருப்பவர்களைப் போல நீயும் நானும் இருக்கலாம். ஆனாலும் ஒன்றை மட்டும் உறுதியாக நிச்சயமாக நீ புரிந்து கொள்ள வேண்டும். நீ யார் என்பது எனக்கு ஒரு பொருட்டே அல்ல. நான் யார் என்பது உனக்கு ஒரு பொருட்டாக இருந்தே ஆக வேண்டும். அது அப்படித்தான். யார் யாராய் இருந்தாலென்ன என்பது நீ. யார் யாராக இருக்கவேண்டும் என்பது நான் . நீ நானாக மாறும்போது, எதுவும் நிகழ்ந்து விடலாமென, உன்னைவிட எனக்கு நன்றாகவே தெரியும். நீ தெரிந்து கொள்ளாத வரையிலும் தெரிந்து கொள்ளத் தெரிபவனாக எனக்கு நீ புலப்படாத வரையிலும் நீ அவ்வப்போது ஒன்றுக்கிருக்க எங்கே எப்போது வேண்டு மானாலும் கழிக்க , உன்னை அனுமதிப்பதில் எந்தத் தடையும் இல்லை. சொல்லிக்கொள்ள எனக்கு மட்டுந்தான் இருக்கிறது   []     எனக் கற்றுக்கொள். என் முன்னே நீ இருக்கிறாய் என நான் கற்பித்துக்கொண்டுதான் சொல்கிறேன். என் தேவையான கற்பிதத்தில் என் முன்னிருப்பவனே உனக்கு வேறு வழி மார்க்கம் போக்கு மூலம் இருக்கவில்லை. கற்பிதத்திலிருந்து விடுதலை கிடைத்தால் தவிர என முணுமுணுப்பவர் யார்? யாரது? முன்னே வா. சொல். இது ஒரு நன்மைப்பூங்கா . (நன்மைப்பூங்கா) நன்மையைத் தவிர விளைவதற்கு ஒன்றுமில்லை. (ஒன்றுமில்லை ) விசுவாசி. பாராட்டு. தெண்டனிடு. வணங்கு விழுந்து நெடுங்சாண்கிடையாக. கேட்டது கிடைக்கும். என்ன தர வேண்டுமென்று. எப்போது நன்மை புரிவதென. எங்கே அமர்த்தி உன்னை அழகு பார்ப்பதென . என்ன கால்களைப் பின்னிக் கொள்கிறாய்? முட்டிக் கொண்டு வருகிறதா . நீ எங்கிருக்கிறாய் எந்த இடத்தில் எனத் தெரியாத நிலையிலும், நீ ஆணாயிருந்தால் எங்கும் நின்றுவிடும் ஆதிக்கம் உனக்கு அனுமதிக்கப்பட்டது. பெண் என்பதானால் இருட்டை, புதர்களை தேடும் புரிந்த நிலைதான். புரிந்தால் சரி அடக்குவதன் மூலமாக ஏற்படக்கூடிய நோய்கள் பற்றிய படம் இப்போது. ஓடும் போதே சரசரவென யாரோ விரையும் படபடப்பின் எதிர்பார்ப்பின் உச்சியில் வெடியோசை. டுமீல் டுமீல் டுமீல் வெடிச்சத்தத்தில் அலறிப் புடைத்து, வெளியே பார்த்தால் நீயும் நானும். டமால் டமால் டமால் அல்லது பட்டமார் என்றால் பட்டாசு . டுமீல் அல்லது டுமீல் டுமீல் என்றால் துப்பாக்கி வெடிச்சத்தம். யாரோ சரிந்தார்கள். யாருடையதோ அலறல். தம்பி அண்ணனையோ, அண்ணன் தம்பியையோ சுட்டு விட்டார்கள். ஒரே கிசுகிசுப்பு. யாரும் சாகவில்லையா. யாராவது செத்து போய் விடுங்கள், செத்தால்தான் மனக்குரூரம் அமைதி பெறும். உனக்கும் எனக்கும் அது பற்றி கவலையில்லை . நம் கவலையெல்லாம் அண்ணன் நானா தம்பி நீயா அல்லது தம்பி நானா அண்ணன் நீயா என்பது பற்றி . என்ன காரணம் காரணம் என்னவாம் காரணம் இல்லாமல் இருக்கமுடியாது. எதற்கும் ஒரு காரணம் இருக்கும். ஒரு நியாயம் இருக்கும். ஒரு நியாயம். அப்படியானால், நீ என்ன நியாயவாதியா, அப்போது நான் ? நியாயவாதி யார் என்பது குறித்து முடிவு செய்ய, சீட்டு குலுக்கிப் போடுவது என முடிவு செய்யப்பட்டது. இரண்டு சீட்டிலும் நீ என்று, நீ எழுதமாட்டாய் என்பது என்ன நிச்சயம். நம்பிக்கையில்லை. மூன்றாவது ஆள் வரட்டும். அவரே எழுதி குலுக்கிப் போட்டு எடுக்கக்கூடாது என்பதால், நான்காவது ஆளை அழைத்து எடுக்கச் சொல்வோம். ஆனால் அந்த மூன்றாவதும் நான்காவதுமான நபர்களும், நீயும் நானுமாகவோ அல்லது நானும் நீயுமாகவோத்தான் இருக்கிறோம் என்பதனால் நானும் நீயுமே பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பேச்சு தொடர்வதன் மூலம் முடிவுக்கு வரலாமெனும் முடிவுக்கு வர, இனி பேச்சு. நீதான் . நானிருக்க நியாயமில்லை நானா . நீதான் இருக்க காரணமிருக்கிறது. நானல்ல. நீ அல்லவென்றால் நானா . நல்ல கதை. திகைப்பூண்டை மிதித்துவிட்டாயா நீ. நீ பார்த்தாயா. நான் மிதிக்கவில்லை. அலையும் நீ மிதித்திருப்பாய். ஊரைச் சுற்றி திகைப்பூண்டு மிதிபட்டது. ………………… ……………….. ………………… போதும் பேச்சு. இப்போது படம் டோய்... படங் காட்றாங்க .... டோய்.... எங்கடா .... ஊர் மந்தையில... ஓடியா ஓடியா. ஓடிவராமலா இருப்போம் நான் நீ சிறுசுகளும் பெருசுகளும் குஞ்சுகளும், குளுவான்களும்   []     இன்னா படமாம். கற்பிதத்திலிருந்து விடுதலை என்னது கற்பிதத்திலிருந்து ? என்னது விடுதலை ? விடுதலையா. கற்பிதத்திலிருந்தா. கற்பிதத்திலிருந்து விடுதலை. ஒரு கற்பிதத்திலிருந்து மற்றொரு கற்பிதம். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நல்ல படம் புரியறாப்பல சொல்லு இன்னா படம் வெளக்கமா சொன்னாதானாக்கும். சொல்லாட்டா பாக்க மாட்டாயாக்கும். ம்ம்... சொன்னா சொல்லு. சொல்லாட்டியும் போ. படம் போட்டா பாக்கிறோம். முணுமுணுப்பு செரி செரி. கொஞ்சம் ஒதுக்கி குந்திக்கோ. சொல்லிட்டேன். ஏனாம். இல்ல. அப்பப்ப எனக்கு ஒன்னுக்கு முட்டிக்கும், ஒனக்குதான் தொந்தரவு. நடுவால குந்தாம ஒரு ஓரமா குந்திக்கினா எயுந்து போயிவரல்லாம்.... உடுறியா. ஓசனக்கார கெழம். மாத்திரம் இப்பிடியே ஒக்காந்துகினு இருப்பியாங்காட்டியும் .... ஸ்ஸ்ஸ் ..... அடக்குங்கடா. ஆத்திரத்த அடக்குனாலும்... யாருடா யாருமே பழமொழில்லாம் உதிர்க்கிறது. கப்சிப். அடங்கு. அடக்கு. அடங்கினார்கள். அடங்க முடியாது என்று சொல்லாதே. அடக்குவோம் சும்மா இருந்தா அப்பப்ப ஒன்னுக்கிருக்க அனுமதி அப்பாடா இப்போது படம். அதே படமா. வேறவா. பேரு என்ன. 'ஒரு கற்பிதத்திலிருந்து...' என்னது?  என்னதுன்னா? ஒன்னுலேர்ந்து இன்னொன்னுக்கு. ஒரு படம் போய் இன்னொன்னு வராப்போலயா எல்லாம் ஒன்னாத்தான் இருக்குது. இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம் மாத்தி கீத்தி போட்டு ஏமாத்தறாங்க. அவ்வளோதான். அவ்வளவுதான். யுகமாயினி, 2008             25. நெடும் பயணம்   []     உடல் சிதற்றும் குண்டுகள் . வெளி உள் முனைகளையெல்லாம் துருவி துகள்களாய் சிதறும் உரு. எந்தவொரு சதைக் கூற்றிலும் கூட உணர்வேதும் ஒட்டிக் கொண்டிருப்பதும் கூடாது எனும் திட்டமிட்ட வெறி கொண்ட எதிரி வீசும் கொத்துக் குண்டுகள் கனவுகளையும் நனவுகளையும் சிதைப்பன. வலி வேதனை வீறிடல் விக்கல் குரல். தொகையறுநிலை. இந்த விக்கித்த தன்மை யார் யாருக்கெல்லாம் எவை எவற்றுக்கெல்லாம் மேலாதிக்க குரூர நகைப்பை அளித்திருக்கும் என சிந்தித்திருந்தது சிதறாதிருந்த பிழைத்த மூளை ஒன்று. அதற்கான உடல் துணிக்கப்பட்ட போது உடன் சிதையாது தப்பி, மண்டை ஓட்டுக்கூரை ஒட்டிவர துண்டித்து விழுந்திருந்தது. விலங்குகளின் மூளையைக் கறியாகத் தின்கையில், மனித மூளையை அதுவும் தெறித்து விழுந்ததை தின்னமாட்டார்களா . தின்றால் தின்னப்படும் மூளையின் தன்மையை தின்பவர் மூளை பெறுமென்றால், அடையு மென்றால் இது இந்நேரம் அள்ளிக்கொள்ளப்பட்டிருக்கும். இல்லையென்பதாலோ இது பிழைத்தது. பிழைத்ததன் வழியாக தன் வேலையை உள்வாங்கி வெளி அனுப்புதலை செய்து கொண்டிருந்தது. அழிக்க வீசப்பட்ட குண்டுக் கொத்துக்கள் தன்னை அழிக்கவில்லையென்பதையும் தகவலாகப் பெற்றிருந்தது. உணர்விலி வலியில் துடிப்பிலி என்பதாக இருந்தாலும், விழியுணர்வு செவியுணர்வு வாயுணர்வுகள் மூலம் வரவேண்டிய விவரங்கள் வந்து கொண்டிருப்பதை உணர்ந்து தெரியத்தக்க வகையில் குணமாற்றம் செய்து வெளி அனுப்பும் தன் வேலையைதான் செய்து கொண்டிருப்பதை பிழைத்த இம் மூளை உணர்ந்திருந்ததா . இவ்வாறு விடப்பட்டி ருப்பது குறித்து வியப்போ அல்லது வேறு ஏதும் குறிப்போ மூளை அடைந்ததாக தெரியவில்லை. காளான் குடை போல நிறம் காட்டியதன் செயல்பாட்டுக்குத் தேவையான செந்நீரைப் பெறுவதில் தடை ஏதும் ஏற்படாததும் இது இயங்க உதவியிருந்தது. சுற்றிலும் கணக்கின்றி சிதைவுறும் உடலங்களின் இதய ஓட்டைகள் ஊற்றுக்கண்களாக கொப்பளிக்கும் செந்நீர் சூடு குறையாது உறையாது ஊறத் தொடங்கி, சிறு சிறு பெருக்குகளாக உருவெடுத்த நிலையில், தனக்குத் தேவையான உணவை, ரத்தத்தை மண்டையோட்டுடன் தொங்கிப் புரளும் நாளங்களின் வழிவர உறிஞ்சும் நாளங்கள் அப்பணியிலேயே தொடர உத்தரவிட்டு தொன்றுதொட்டு வரும் இயல்பினதாக உணர்வுகளை சிந்திக்கொண்டிருந்தது குறுமூளை. வற்றாத ரத்த ஆற்றுப் பெருக்கில் உறிஞ்சுவேர்களாய் தனது அறுபடாத சிறுநாளங்கள், நரம்புகள் அலைய உட்புகும் செந்நீர் குடித்து அது உயிர்வாழும் வித்தை கைவரப் பெற்றிருந்ததும் புலனாயிற்று. மண்டையோட்டு முன்நிலையில் குழியாகாது நிணச்சகதியில் அரைகுறையாய் விழித்துப் பார்க்கும் ஒன்றும், காணமுடிவதாய் மற்றொன்றும் என கண்கள். சுண்டும் மேட்டிமை மூளையின் ஆணைக்கு தங்களை ஆட்படுத்தி முன்குறித்த அத்துணை தகவல்களையும் உள் அனுப்பின. படுகின்றவற்றையெல்லாம் அனுப்பினாலும், படங்களாய் பதிவுகளாய் எவை அடைகின்றன என்பது பற்றி அவற்றுக்கு அக்கறை இருப்பதில்லை. தொடரச் சொல்வதை தொடரும் பணி பாதிப்புக்குள்ளாவது பற்றியும் தகவல் அனுப்பாலில்லை அவை. கட்புலனுடன் செவிப்பு லனின் உணர்வும் இருந்தால் போதுமென தன் வேலையில் ஈடுபட்டவாறிருந்தது மூளை. பார்த்துப் பார்த்து பழகிய உருத்தோற்றமிழந்திருந்த குறுமூளையின் இருப்பு யாரையும் குறிப்பாக எதிரிகளின் கவனத்தை ஈர்க்காது எனும் புரிதல் வாய்த்திருந்ததில் மேலும் உரங்கொண்டதானது. மிதக்கும் சதைப் பிண்டம் போல உருக் கொண்ட கருவி. வீழும் ஒவ்வொரு இதய ஊற்றிலிருந்தும் கொப்பளித்து பெருகும் வற்றாத குருதி ஆற்றில் மிதந்து பயணப்பட அதற்கு துயரமேதுமில்லை. உணர்வுகளை ஊட்டுவதுதான் தன் வேலை.தான் உணர்ந்து உளைவதல்ல என்பதை அறிந்திருக்கும் கிரியா ஊக்கி. பெரும் ஒலி ஒளிகளுடே எதிர்ப்படும் தடைகளூடே பயணப்பட பயணப்படதான் அடையும் குறிப்புகளை பிறர் அறியும் குறியீடுகளாக மாற்றித் தருவது எவ்வாறு, இத்தனை கொடுமைகளும் போய்ச்சேர எவற்றைப் பயன்படுத்துவது என்பன மட்டுமே தன்னை குறுமூளையை கேள்விக்குறிக்குட்படுத்துவதாய் கருதியிருப்பதாயுமிருக்கலாம். சரிந்து விழுமுன் தன்னைச் சுமந்திருந்த உடல் எதுவோ அது பற்றியும் அதற்குக் கவலையில்லை. துண்டித்து விழுமுன்வரையும் உணர்வு முடிச்சு வழி வந்திருக்க வேண்டிய தகவல்கள் விவரங்கள் பெற்று விட்டது அது. துடித்து அடங்கும் உடலுக்கு சிதறித்தெறித்து பேர் இழந்த நிலையிலும் தெரிவிக்க வேண்டியதை வலி அதிர்வில் மூளையின் உட்படுத்திவிட்டோ மென்பது தெரிந்திருக்குமா. இழந்த உடல் மூலமாக இருக்கும்வரை பெற்றவைதான் செய்திகளா. உயிரணுக்களின் சேர்க்கையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பயணப்பட்டு உள்வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கும், தொகுக்கப்பட்டிருக்கும் தலைமுறை தலைமுறைப் பதிவுகளை தானும் பதிந்து கொண்ட தனக்கு, தன்னைச் சற்றுமுன்வரை தாங்கியிருந்து தற்போது சிதைவுற்றுப்போன உடலின் அந்தப் புதிய உடலின் இழப்பு எவ்வகையில் பார்த்தாலும் ஒரு இழப்பேயில்லை எனவும் கருதுவதாயிருக்கலாம். கொண்ட பதிவுகளை உள் ஆழ்ந்து தூண்டித்துழாவி வெளிப்படுத்தி நுகரும் தூண்டில்கள் தான் தனது இப்போதைய தேவை. தூண்டிற் கைகள் இருந்தால் போதும் என் ஆழ்மனதின் பதிவுகளை நீ உணர என்றே அந்தக்குறுமூளை தன் இறப்பை மறுத்து, பல்கிப் பெருகிக் குமிழிட்டு வரும் குருதியாற்றின் செந்நீர்ப் பருகி, தான் இருக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியவாறு பயணிக்குமா , பேர் பெற்ற குரங்கு பொம்மைகளாய் கண் காது வாய் பொத்தியிருப்பதோடு அதற்கு காரணமும் சொல்லப்படும் அவலச்சுழல் பெருக்கெடுத்து வரும் குருதி ஆறு வற்றும் வற்றும் என மேலும் வாய் வார்த்தைகள். இடையே, வடவிலங்கை துஞ்சும் குழந்தைகளின் பெண்டிரின் ஆடவரின் இன்னும் பிற பிற உயிர்களின் உடலங்கள் ஊற்றுக்கண்களாகி சொரியும் உறையாத செந்நீர் ஊற்றுக்கோடுகள் ரத்த ஆறாகப் பெருக அதில் மிதந்து வந்தது இந்தக்குறு மூளை. துளைக்கப்பட்ட நெஞ்சுக் குழிகளிலிருந்து ஊறிப் பெருகிய குருதி ஆற்றின் வரலாற்றை உணர்ந்து உள்வாங்கி சேமிக்கும் இடமாய் நிறைந்து பயணிக்கும். இந்த ரத்த ஆறு புதிதல்ல. இதில் அடித்துச் செல்லப்படுவதற்கு முன்பும் கூட பல ரத்த ஆறுகளில் பயணப்பட்ட குருதிவாசம் வீசும் நினைவுகளைப் பதிந்திருந்தது அது. தன்னில் பதிந்திருக்கும் குருதியின் நெடி வீச்சம் உன்னால் முகரப்படக் கூடமுடிவில்லையா. என்னுள் புதைந்திருக்கும் கணக்கற்ற அழித்தல்களை குரல்களை கூக்குரல்களை அழுகை அகம்பாவம் ஆணவம் அழிவுகளை நீ அறிந்தாயா. நீ அறிய வேண்டுமென்பதற்காகத்தான் நீ உருவாக்கிய இந்த வற்றாத ஜீவநதியில் குருதிப் பேராற்றில் நிணநீர் குடித்து மிதந்து கொண்டிருக்கிறேன். காணவில்லையா. என்ன பலனுக்காக நீ மற்றவர்களை அழித்துக் கொண்டிருக்கிறவர்களுக்குத் துணையாய் நெட்டை மரமாய் நிற்கிறாய் உணர்வாயா அற்பமே அறிவிலியே. என் பதிவை அழிக்க முடியுமா உன்னால். குருதிப் பெருங்கடல் சூழ்ந்த சிறு சிறு நிலப்பரப்புகளிலிருந்து ஆங்காங்கே ஊறித் ததும்பிப் பெருகிக் கடல் சேரும் ரத்த ஆறுகளில் ஈழ ரத்த ஆறு வற்றாத நதியாக மாறியிருப்பது ஏன் என்பதை உணர்ந்தாயா நீ. பல கிளைகளாய்ப் பெருகிப் புரளும் ரத்த ஆறுகள். பதிவுகளை சொல்ல மிதந்து வரும் பலப்பல குறு மூளைகள். தொப்புள்கொடிக் கரைகளிலோ அழிவுதடுக்கா போலிப்புலம்பல். நெட்டை மரங்கள். அவற்றின் வேர்க்கூறுகள் எதை உறிஞ்சுகின்றன. அவற்றின் கிளைகள் எங்கே கிளைத்திருக் கின்றன. அவற்றின் இலைகள் எதை சுவாசித்துக் கொண்டிருக் கின்றன. மொட்டுகள் மலர்களாகி பிஞ்சுகளிட்டு காய்களாகி கனிகளைத் தருமா. எத்தகைய கனிகளைத் தரும் அவை. கனிகளின் வாய்ச்சுவைக்கேற்ப தின்னப்படுவனவற்றிலிருந்தும் உதிர்க்கப்படும் விதைகள் எத்தகையன. எத்தகைய விதைகள் உதிரும். உதிரும் விதைகள் சூல் கொள்ளப் போகும் மண்வளம் எது . முளைக்கும் விதைக் குருத்துகள் அறிந்திருக்குமோ இந்த ரத்த ஆற்றின் ஊற்றுக் கண்களை. வரலாற்றை . பெருமூச்சு விட்டது மிதக்கும் குறுமூளை. உணர்த்தத் தவித்தது. மூழ்காமல் தான் பிழைக்க இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும். அதற்குள் நீ என்னைப் படி . விரைந்து படி. உணர். செயல்படும். குருதியாற்றும் மூளை தத்தளித்தது. கரை சேர்வதல்ல அதன் நோக்கம். பதிவை கரைசேர்ப்பதுதான் தன் வேலை என்பதை உணர்ந்திருக்கும் உணர்விலி. உணரப்படுதற்குமுன் குருதி மாக்கடல் ரத்தப் பெருங்கடல் அனைத்து மனிதப்பரப்பையும் மூழ்கி விடுமா. விரிந்து பரந்த செந்நிற வானம். பல்கிப் பெருகி மண் விழுங்கப் போகும் சூரியக்குருதி. கடல் விண்ணைப் பிரதி பலித்ததா . மண் விண்ணை பிரதிபலித்ததா . உணர யாருமின்றி உணர்த்த எதுவுமின்றி மூழ்கிவிடுவனவா குறுமூளைகள். குறுமனிதர்கள் உருவாக்கும் குருதி ஆற்றில் புதைந்திடுமா யாவும் பஃறுளி ஆற்றோடு பன்மலை அடுக்கத்து புதிய கோடுகள் யாவும் மீள குருதிமாக்கடலால் கொள்ளப்படுமோ . தான் மட்டும் மிதக்க மீளவோர் நெடும் பயணம் மேற்கொள்ளுமுன் தன் பயங்கள் பொய்யாக, யாரும் யாரேனும் தன் உணர்வு நாளங்களைத் தீண்ட வேண்டுமே. ரத்த ஆறுகளில் குறுமூளைகள் மிதப்பது தன்னோடு முடிய வேண்டுமே. அலை பாயும் அது. ஆறாய்ப் பெருகி கடலில் கலப்பது செந்நீர் என உணரேன். ரத்தங் குடித்தவர்களும், ஆக்கைக் குருதி பூசி துகில் முடித்தவர்களும், ஆரிய ரத்தமே மேலென்றவர்களும் முடிந்தது ரத்த ஆற்றில்தான் என்பதையும் உணரேன். உணர். தன் உணர்த்து வேர்களை எங்கும் பரவவிட்டபடி பயணிக்கும் குறுமூளை. பயணிக்கும் நெடும்பயணம். யுகமாயினி, 2009                             இயல் வெளியீடு நீட்சி பாரவி சிறுகதைகள்   "உடம்பெல்லாம் ஒளியாக மோகினியின் உடல் வானத்தில் கிடந்தது. இல்லை, வானத்தைப் பார்த்து மாடியில் கிடந்தது. டாக்டர் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உறவின்றியே தங்கள் உடல் திசுக்களிலிருந்து கார்பன் காபிகளை உண்டாக்க முடியும் என்கிறீர்கள், அப்படித்தானே, பிறகு உறவு என்பது என்ன? ஆன்ம விடுதலை போலல்ல..., விஞ்ஞானப் பூர்வமாக, உன் பேரனுக்கு எத்தனையோ பேரனும் மோகினியால் தூக்கியெறியப் பட்டுக் கொண்டே... என் சாவுக்கு கட்டாயம் நீங்கள் வரவேண்டும் என்பது போல... அடுத்த வேளை சோற்றுக்கு வழி சொல்லுங்கள்... நான் கேவலமடையாமல்... - நீட்சி தீனி எவ்வளவு இன்றியமையாத தேவை. உணவு மூலச் சத்து என்பதை மூத்தவர்களும் அறிவு மிக்கவர்களும் ஆய்வாளர்களும் தான் ஏன் சரகத் தலைமையும் தெரிவிப்பதை, அது எவ்வளவு உண்மை என்பதை அம் மிருகங்கள் உணர மறுப்பதென்பது விசித்திரமானது. மட ஜன்மங்கள், ஐந்தறிவுப் பெட்டகங்கள், கல்பா வெளிப்படையாகவே வசை பொழிந்தாள். நீங்கள் இதையெல்லாம் உணர மறுப்பதும் தின்னாமல் கழிப்பதும் உங்களுக்குத்தான் இழப்பே தவிர தீனியாசரிக்கும் எங்களுக்கோ உற்பத்திக் கூடங்களுக்கோ நிர்வாகத்திற்கோ அல்ல என்பதை நீங்கள் உணரத்தான் போகிறீர்கள், அளிக்கப்படும் தீனியில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதை பட்டியலிட ஆரம்பித்தான் குமாரசாமி. நீங்கள் அறியாவிட்டாலும் அறிய மறுத்தாலும் நாங்கள் சொல்லித்தான் தீருவோம். நாங்கள் உங்களது அருகாமையில் இருப்பவர்கள், நலன் பேணுபவர்கள், நண்பர்கள். இது புரிகிறதா. - தீனி எருமைகளில் இருவகையிருப்பதாக அவ்வகையொன்றில் தன்னையும் சேர்த்துக் கொண்டு ஒருவர் சொன்னார் - ஒரு வகை எவ்வளவு மழைக் கொட்டினாலும் நின்ற இடத்திலேயே நகராது நின்று கொண்டிருப்பது. பாதிமழையில் திடீரென உற்சாகம் கிளம்பி சேற்றைக் கிளப்பி... ஓடுவது இரண்டாம் வகை, நீங்களும் அது போல். எருமை வகை ஒன்று எருமை வகை இரண்டு என முன்னிருந்தவர்களை வகைப்படுத்தி இரு வகை எருமைகளுமே எங்கே கோபித்துக் கொள்ளப் போகின்றனவோ என அஞ்சி, தாமும் அதில் ஒருவகையென சேர்த்துக் கொண்டார்... - நிறம்