[]           நியூசிலாந்து பயண நினைவுகள்          ஆசிரியர் : கோ.ந. முத்துக்குமார சுவாமி kumaran388@hotmail.com        மின்னூல் வெளியீடு :   FreeTamilEbooks.com     அட்டைப்படம், மின்னூலாக்கம் :   பிரசன்னா udpmprasanna@gmail.com    உரிமை :   Creative Commons Attribution - ShareAlike 4.0 International License.        []              நூலாசிரியர்   முனைவர் கோ.ந. முத்துக் குமார சுவாமி பேரூர் தவத்திரு சாந்தலிங்க்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகவும் முதல்வராகவும் முப்பதாண்டுகள் பணி. 2002ல் நியூசிலாந்தில் ஓராண்டு காலம் தங்கியிருந்தபோது கண்டதும் கேட்டதும் படித்ததும் கொண்டு இந்நூலை எழுதியுள்ளார்.       []                      பொருளடக்கம் []   1. நியூசிலாந்து பயண நினைவுகள் I  2. நியூசிலாந்து பயண நினைவுகள் II  3. நியூசிலாந்து பயண நினைவுகள் III  i.   நியூசிலாந்தும் நிலக்கோட்டையும்  ii. ‘நட்சத்திர மனிதர்கள்’       நியூசிலாந்து பயண நினைவுகள் I []   புவியியல்படி நியூசிலாந்து பழமையான நாடு. ஆனால், வரலாற்றின்படி பார்த்தால், உலகில் உள்ள பிறநாடுகளைவிட இதுமிகவும் இளமையான நாடு. 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மனிதர்கள் வாழ்ந்திருந்ததற்கு உரிய அடையாளம் எதுவுமே இல்லை எனப்படுகின்றது.  உலகத்தின் பிற பாகங்களில் நாகரிகம் வளர்ந்தும் அழிந்தும் மாற்றங்கள் அடைந்தும் வரலாறு படைத்துக் கொண்டிருக்கும்போது , இந்த நாட்டில் மன்பதை தோன்றவே இல்லை. இந்த நாட்டைப் பற்றி மக்கள் அறிந்திருக்கவும் இல்லை. கிரிக்கெட்டின் தயவால் இன்று நியூசிலாந்து என்னும் நாட்டைப் பற்றிப் பலரும் கேள்விப்பட்டுள்ளோம். நியூசிலாந்து , உலகத்தின் தெற்குப் பாகத்தில், ஆஸ்திரேலியாவுக்குத் தெற்கே ஏறக்குறைய 1200 மைல் தூரத்தில் உள்ளது. இது இரண்டு பெரிய தீவுகளும் ஒரு மிகச் சிறியதீவும் அடங்கிய நாடு. ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் உள்ள கடற்பகுதி ‘டாஸ்மன் கடல்’ என்று அழைக்கப்படுகிறது.ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் வடக்கிலும் மேற்கிலும் நீண்டதொலைவில் இந்த தீவுக்கண்டத்துக்கும் நியூசிலாந்துக்கும் இறங்கி வரும் படிக்கட்டுக்களைப்போல் ஆசியாவும் மலேசியத் தீபகற்பமும் ஜாவா சுமத்திரா முதலிய தீவுகளும் தோற்றம் அளிப்பதைப் பூகோளப்படங்களில் காணலாம். கிழக்குத்திசையில் பசிபிக் மகாசமுத்திரம் தென்அமெரிக்கக் கரைகளைத் தழுவிக்கொண்டு பரந்துள்ளது. வடகிழக்குத் திசையில் பசிபிக் சமுத்திரத்தில் பூகோளப்படத்தில் இடம்பெற முடியாத அளவுக்குச் சிறுபுள்ளிகளைப் போலச் சிறுசிறு தீவுக்கூட்டங்கள் உள்ளன. சமோவா, ஃபிஜி, தோங்கா என்பனபோல ஒருசிலவே பெயரிட்டுக் கூறத்தக்க தீவுகள்.இந்தத் தீவுக்கூட்டங்கள் அனைத்தும் பாலினீஷியத் தீவுகள் என்ற பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. நியூசிலாந்துக்குத் தெற்கே 1600 மைல்களுக்கு அப்பால் பனி உறைந்துள்ள அண்டார்டிக் கடற்பகுதியாகிய தென்கோடி உள்ளது. விரிந்து பரந்துள்ள கடலுக்கு நடுவே நியூசிலாந்து மிகச்சிறிய தீவுகளைப் போலத் தோன்றும்.  இந்நாடு நிலப்பரப்பில் நம் இந்திய மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறியது. நியுசிலாந்து 270,534 சதுர கிலோமீட்டர் பரப்புள்ளது. வடதீவின் தென்கோடியில் உள்ள வெலிங்டன் இந்நாட்டின் தலைநகர். வடதீவின் நடுவில் இருக்கும் ஆக்லந்து வணிகநகரம். சர்வதேச விமான நிலையம் இங்குதான் உள்ளது. 1350ல் பாலினீஷியத் தீவுகளிலிருந்து ‘மவுரி’ என்னும் இனத்தவர் இங்கு வந்து குடியேறியதாக மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. வாய்மொழியே வழங்கும் அவர்களுடைய பாடல்களும் கதைகளும் இக்குடியேற்றத்தைப் பற்றிப் பேசுகின்றன. அவர்களுடைய மூதாதையர்களின் நாடு, பசிபிக்கடலில் உள்ள ‘ஹவாய்க்கி’(Hawaiki)த் தீவு. அங்கு அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் போர்களால் மக்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. எனவே, ‘நகாயுவே’ என்னும் தலைவன் அவனுடைய பகைவர்களிடமிருந்து உயிர் பிழைக்க நாட்டை விட்டு வெளியேறத் துணிந்தான். (இவன் பெயர் கூப்பே என்றும் சில கதைகள் கூறுகின்றன). தோணியில் தன் துணைவர்களுடன் புகலிடம் தேடிப் புறப்பட்டான். மாதங்கள் பல கழிந்தன. மக்களுக்கு நகாயுவே பற்றிய நினைவுகள் மறையத் தொடங்கின. நீண்ட இடைவெளிக்குப்பின் ஒருநாள், யாரும் சற்றும் எதிர்பாராதபோது, அவன் அங்குத் தோன்றிச் சுற்றத்தாருக்கு அதிர்ச்சி அளித்தான். நெடுந்தொலைவில், தான் கண்டு வந்த, – மக்களே இல்லாத தீவுகளையும் உறைபனி மூடிய மலைகளையும் இனிய நீரோடைகள், ஆறுகளைப் பற்றியும் அடர்ந்த காடுகள், சோலைகள், விலங்குகள், பறக்கவியலாத பெரிய பறவைகள் முதலியன பற்றியும் கதைகதையாகக் கூறினான். தான் கூறும் செய்திகள் உண்மையானவையே என்று மெய்ப்பிக்க அவன், தான் கொண்டுவந்த ஒளிமிக்க பச்சைக்கற்களையும்(Green Jade), ‘மோவா’ப்(Moa) பறவைகளின் இறகுகள், எலும்புக் கூடுகள் முதலியவற்றையும் காட்டினான்.   உறவினர்களும் தோழர்களும் அவன் நிகழ்த்திய சாகசங்களை ஆர்வமுடன் கேட்டனர். தம் நாட்டில் நிலவிய துன்பமயமான உள்நாட்டுக் கலவரங்களிலிருந்து தப்பிக்க விரும்பிய அவர்கள் , நகாயுவே கூறிய நெடுந்தொலைவிலுள்ள,- மக்கள் வாழாத அத்தீவுகளுக்குச் சென்று குடியேற முடிவு செய்தனர். அங்கு இயற்கையில் கிடைக்கும் உணவுகள், மதிப்புயர்ந்த பச்சைக் கற்கள், பிறசெல்வங்கள் முதலியன பற்றி நகாயுவேயிடமிருந்து அறிந்த செய்திகள் அவர்கள் எண்ணத்திற்கு ஊக்கமூட்டி விரையச் செய்தன. ஆண்பெண் குழந்தைகள் என எண்ணூறுபேர் ஒளிமிக்க வளமான வாழ்க்கையை நாடிப் புறப்படத் தயாராயினர். இரண்டு அணியாக நூறுபேர் வரிசையாக அமர்ந்து இயக்கும்படியான நீண்ட தோணிகளை(Canoes) அமைத்துக் கொண்டனர். உணவுக்கும் விதைக்கும் என உருளைக்கிழங்கு, சர்க்கரைவல்லிக் கிழங்கு முதலியவற்றைச் சேகரித்து எடுத்துக் கொண்டனர். மரம் அறுக்க, வெட்ட, தோண்டப் பயன்படும் கருவிகளை நகாயுவே கொண்டு வந்த உறுதியான பச்சைக் கற்களிலிருந்து சமைத்துக் கொண்டனர். மவுரிகள் கற்கால நாகரித்தவர். இரும்பின் பயனை இவர்கள் அறிந்திருக்கவில்லை. சுமார் 100 அடி நீளம் உள்ள எட்டுத் தோணிகளில் இவர்கள் புறப்பட்டனர். இந்த எட்டுத் தோணிகளுக்கும் பெயர் கூறப்படுகின்றது. இந்தத் தோணிகளின் பெயர்களே அவற்றில் பயணித்து வந்த மவுரிகளின் சந்ததியினருக்குப் பெயராக மரபுவழி வழங்கப்பட்டு வருகின்றது. ‘தனரோவா’(‘Tanaroa’is the God of Ocean) எனும் கடல் தெய்வத்தின் துணையுடன் அவர்கள் தாம் கருதிப் புறப்பட்ட தீவுகளைக் கண்டனர். நீண்டு நெடிய மேகக் கூட்டத்தால் மூடப்பட்டிருந்த அத்தீவுகளுக்கு ‘ஒடியரோவா’(Aotearoa –The long white cloud or the long light) என்று பெயரிட்டு அழைத்தனர். இதற்கு நீண்ட மேகம் அல்லது ஒளிக்கற்றை என்று பெயர்.    திடீரென்று தோன்றிய புயலால் எட்டுத்தோணிகளும் திசை திருப்பப்பட்டு, முன்பே தமக்குள் பேசி வைத்துக் கொண்டாற்போல, தீவுகளின் எட்டு  இடங்களில் கரை சேர்ந்தன. அவர்கள் ஏறி வந்த எட்டுத் தோணிகளின் பெயர்களே, தனித்தனி அவற்றில் பயணித்தவர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் அவர்கள் குடியேறிய இடத்திற்கும் பெயராயின. இக்கூட்டத்தினர் கரை சேர்ந்த இடமே இவர்களின் பூர்வீகபூமி என வழங்கப்படலாயிற்று.   ‘டாஸ்மன்’ (Tasman) என்னும் டச்சுக்காரர்தான் ஒடியோராவை முதன்முதலிற் கண்ட ஐரோப்பியர். டாஸ்மன் இத்தீவுகளைக் கண்டாரே ஒழிய இங்குக் கால் பதிக்கவில்லை. இத்தீவுகளை , இவர் , புதுநிலம் என்னும் பொருளில் ,’நொவோ ஜிலேண்டிய’ (Novozelandia) என்றழைத்தார். இதன் ஆங்கில வடிவம்தான் ‘நியூசிலாந்து’ என்பது. நியூசிலாந்தில் முதன்முதல் கால்வைத்த ஆங்கிலேயர் ‘கேப்டன் குக் ‘ என்பவர். இவர் தம்முடைய ‘எண்டோவர்’ (Endeavour) என்னும் கப்பலில் ‘தஹிதி’ தீவுகளை நோக்கிச் செல்லும் வழியில் 1769 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6ஆம் தேதி இங்கு இறங்கினார். கேப்டன் குக் மூன்றுமுறை நியூசிலாந்து வந்து சென்றதாக வரலாறு கூறுகின்றது. குக்கின் வருகையின்போது மவுரிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 150,000 இருக்கும் என அவருடைய அறிக்கை கூறுகின்றது. மவுரிகள் வீரர்களுக்குரிய வலுவான உடல் உடையவர்கள் என்றும், பழுப்பு நிறம் வாய்ந்தவர்கள் என்றும் குக் கூறுகின்றார். உணவுக்காக மவுரிகள் உருளைக்கிழங்கு , வல்லிக்கிழங்கு ஆகியவற்றைப் பயிரிட்டனரென்றும் மீன் எலி பறவைகள் புழுக்கள் முதலியவற்றைப் பிடித்து உணவாகக் கொண்டனர் என்றும் தங்கள் முன்னோர் கொண்டு வந்த நாய்களின் சந்ததிகளையும் இறைச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் குக் கூறுகின்றார். நியூசிலாந்துக்கு உரியதெனச் சிறப்பாகக் கூறத் தக்க விலங்கு ஒன்றும் இல்லை. ‘மோவா’ என்னும் ஒருவகைப் பறவையும் ‘கிவி’ எனும் ஒருவகைப் பறவையும் நியூசிலாந்துக்கு உரியன. மோவா இனம் இப்பொழுது அழிந்துவிட்டது. மோவாவின் பரிணாமமே இப்பொழுது ஆஸ்திரேலியாவில் தீக்கோழியாகவும் (Ostritch) நியூசிலாந்தில் கிவியாகவும் வளர்ச்சிமாற்றம் அடைந்துள்ளன. மவுரிகள் அருவி, ஓடைகளின் தாகம் தணிக்கும் குளிர்நீர் சுவை அறிந்திருந்தார்களே யன்றி போதை அளிக்கும் வேறு ‘குடி’ சுவை அறியார், என்கிறார், குக்.     கேப்டன் குக் நியூசிலாந்திற்கு வழி கண்டபின் இங்கு ஐரோப்பியர்களின் குடியேற்றம் நிகழத் தொடங்கியது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காத்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் முதலில் இங்குக் குடியேறத் தொடங்கினார்கள். மீன்பிடிக் கப்பல்கள் (Sealers and Whalers) மரவியாபாரிகள் (Timbers) மூலம் இக்குடியேற்றம் நடைபெற்றது. கத்தோலிக்கருக்கு அஞ்சிய புரொட்ஸ்டண்டு கிறித்துவர்களும் இவர்களில் அடக்கம். இன்றும் இங்கு ப்ரொடஸ்டண்டுகளே அதிகம். இங்கு ஐரோப்பியர்களின் பண்டைக்குடியேற்றம் பற்றி இத்தாலிய கத்தோலிக்கப் பாதிரியார் எழுதிய புத்தகம் ஒன்று படித்தேன். அதில் ப்ரொடஸ்டண்டு சமயத் தலைவர்கள் மவுரிகளை எப்படி ஏமாற்றிச் சுரண்டி சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள் எனப் புள்ளி விவரங்களுடன் விளக்கியிருந்தார். படிக்கச் சுவையாக இருந்தாலும் நமக்கு அந்நியமான விஷயம் என்று அதைக் கவனத்தில் கொள்ளாமல் இருந்து விட்டேன். 1800களில் இங்குக் குடியேறியவர்கள் , தாம் குடியேறிய இந்த நாட்டையே தம்முடைய தாய் நாடாகப் பாவிக்கத் தொடங்கினர். இவர்கள் இந்த நாட்டின் வளத்தைச் சுரண்டிப் பணக்காரராகித் தம் சொந்த நாட்டிற்குத் திரும்பி வளமாக வாழ எண்ணியவர்கள் அல்லர். தொழிற்புரட்சியின் காரணமாகப் பண்பட்ட தங்கள் தாய் நாட்டின் சூழ்நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட நிலைமையை இங்குக் குடியேறியவர்கள் சந்திக்க வேண்டியதாயிற்று. இங்கு வாழ்க்கை என்பது, அவர்களுக்குப் புதிய நிலத்தைத் தங்கள் வாழ்வுக்கு ஏற்றதாக மாற்றியமைக்க நடத்தும் போராட்டமாகவே இருந்தது. மைக்கேல் கிங் என்னும் நியூசிலாந்து வரலாற்று ஆசிரியர் கூறியுள்ள செய்தி ஒன்றை இங்கு எடுத்துக் காட்டவிரும்புகின்றேன். தமக்குத் தம்முடைய தந்தைவழி தாய்வழிப் பாட்டிமார் இருவரும் கூறியதாக அவர் கூறும் அச்செய்தியது..   அச்செய்தி, அக்காலத்தில் தங்களுடைய சொந்த நாட்டை விட்டுப் பல்லாயிரம் மைல் கடந்து பலதுன்பங்களுக்கு இடையில் இத்தீவுகளில் குடியேறியவர்களின் மனநிலையை விளக்குவதாக உள்ளது. “சமவாய்ப்பு உள்ள பிரதேசத்தில் உழைப்பால் நல்லவளமான சிறந்த குடும்பங்களை உருவாக்கவும், பிறந்த குடியின் செல்வாக்காலன்றிக் கடின உழைப்பால் எங்கள் திறமையால் தகுதியால் எங்களுக்கு ஒரு அடையாளத்தை அடையவுமே நாங்கள் இங்கிலாந்தை விட்டு இங்கு வந்தோம்” ( I was reminded frequently by both grandmothers why they had abandoned United Kingdom :to raise healthy families in a land of open option.; and to achieve identy and status on the basis of what they did rather than on the circumstances of their birth) இத்தகைய கருத்தே இன்றும் நியூசிலாந்தின் குடியேற்றக் கொள்கைக்கு (Immigration Policy) அடித்தளமாக உள்ளது. ஆங்கிலேயரைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாட்டவரும் இங்குக் குடியேறத் தொடங்கினர். இங்கு வாழ்கின்ற ஐரோப்பியர்கள் அனைவரும் தம்மைக் குடியேறிகள் அல்லது குடியேறியவர்களின் சந்ததியினர் என்று கூறிக் கொள்ளத் தயங்குவதில்லை. ஆனால், தங்களை நியூசிலாந்தினர்  என்ற தனி அடையாளம் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்.; ஆங்கிலேயர் என்றோ ஐரிஷ்காரர் என்றோ கூறிக் கொள்ள விரும்புவதில்லை. அனைத்து இனத்தினரும் கூடியதால் உருவான Aotearoa/ Newzealand culture தங்கள் மூதாதையரின் நாட்டுக் கலாச்சாரத்தினின்றும் வேறுபட்டது எனக் கூறித் தங்களை நியூசிலாந்துடன் அடையாளம் காட்டுகின்றனர். வாழும் உரிமையில், முன்னர்க் குடியேறியவருக்கும் அண்மையில் குடியேறியவருக்கும் இடையே எத்தகைய வேறுபாட்டையும் காட்டுவதைப் பொதுவாக இவர்கள் விரும்புவதில்லை. குடியுரிமை பெற்று இங்கு வாழும் ஐரோப்பியர்களை மவுரிகள் ‘பாஹியா’ (Pakeha)  என்று அழைக்கின்றனர். பாஹியா , மவுரி இருவரும் நியூசிலாந்தினர் என்பதில் இவருக்குள் கருத்து வேற்றுமை இல்லை. பாஹியா என்பது மவுரி மொழியில் வெள்ளைப் பன்றியைக் குறிக்கும் என்றும்  தங்களை இழித்துக் கூறும்  இப்பெயரைச் சட்ட பூர்வமாகச்த் தடை செய்ய வேண்டும் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர் சிலர் விரும்பினர். ஆனால், நியூசிலாந்து அறிஞர்கள் pakeha என்பது பிற ஐரோப்பியர்களிடமிருந்து வேறுபடுத்தித் தம்மைச் சரியாக அடையாளம் காட்டும் மரியாதை மிக்க சொல்லே என்று கருதுகின்றனர்.   குடியேற்றங்கள் நிகழ்ந்த காலத்தில் , ஏற்கெனவே குடியேறிய ஒருவன், புதிதாகக் குடியேறியவனை முதலில் சந்தித்தபொழுது, ‘நீ நம்மாள் தானே’? எனக் கொச்சைமொழியில் கேட்டு நட்புக் கொள்கின்ற முறையில், ‘Bugger,Yea’ எனக் கேட்டான். அது மவுரி காதில் விழுந்தது. தன் காதில் விழுந்த அந்தச் சொல் ஐரோப்பியர் இனத்தைக் குறிக்கும் என நினைத்தான். ‘Bugger,  yea’ மவுரியின் உச்சரிப்பில், ‘Pakeha’ என ஆயிற்று. இவ்வாறு இச்சொல்லின் தோற்றத்திற்குச் சமாதானமும் கூறினர். எவ்வாறாயினும்  பாஹியா, மவுரி இருவருக்கும் இன்று நியூசிலாந்தைத் தவிர வேறு சொந்த நாடு இல்லை. இந்த இரு இனத்தவரில் மவுரி முந்தி வந்தவர் என்ற காரணத்தால், அவர்களுக்கு உரிய சில சிறப்பு உரிமைகளை இவ்விரு இனத் தலைவர்களும் கூடி ‘வைத்தாங்கி’ (Waitangki) என்னு இடத்தில் 1840ல் செய்து கொண்ட உடன்படிக்கை (Treaty of Waitangki) தெளிவாக்குகின்றது. இந்த உடன்படிக்கை ஏற்பட்ட நாளைத் தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாடுகின்றனர். ஐரோப்பியர் குடியேற்றத்தினாலும் அதனைத் தொடர்ந்த போர்களினாலும் மவுரிக்கு நிலவுடைமை இழப்பு ஏற்பட்டது. இழப்புக்கு ஈடு செய்யவும். மவுரியின் மொழி, பண்பாடு மற்றும் பிறவுரிமைகளுக்கும்   வைத்தாங்கி உடன்பாடு வழிவகை செய்கின்றது. இன்று மவுரி மொழி நியூசிலாந்தின் தேசிய மொழியாக, ஆங்கிலத்துடன் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது. வரிவடிவம் இல்லாத இம்மொழி ஆங்கில எழுத்துக்களால் எழுதப்படுகின்றது.   ஊர்ப்பெயர்கள் மவுரிகள் வழங்கியவாறே வழங்கப்படுகின்றன. பிற்காலத்தில் ஆங்கிலப்பெயர்களாக மாற்றப்பட்டனவும் கூட வரலாற்று முக்கியத்துவம் பெறாதன மீண்டும் சட்டப்படி மவுரி வழங்கியவாறே பெயர் மாற்றம் பெற்றன. மக்களவை, ஊராட்சி மன்றங்கள் முதலிய அமைப்புக்களில் மவுரிக்கு உரிய சிறப்பு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டுள்ளது. அரசு சுற்றறிக்கைகள் இருமொழிகளிலும் வெளியிடப்படுகின்றன. மவுரியின் நலன்களைக் கவனித்துக் கொள்ள Maori Affairs எனத் தனிஅமைச்சகம் உள்ளது. குழந்தைகள் காப்பகமும் மழலையர் பள்ளிகளும் டூரிசமும்(Tourism) பெரும்பாலும் மவுரிகள் வசமே உள்ளன 200 ஆண்டுகளுக்கு முன்னர் நரமாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகளாக இருந்த சமுதாயம் இன்று அடைந்துள்ள நாகரிகத்தைப் பார்க்கும்போது , பாஹியா சமுதாயம் எத்துணைப் பெருந்தன்மையுடனும் கடமை உணர்வுடனும் நடந்து கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இன்று நூற்றுக்கு நூறு சுத்தமான மவுரி இல்லை. கலப்பினம்தான் உள்ளது. தாய் அல்லது தந்தை வழியில் ஐரோப்பியர்களின் கலப்பு இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. பழைமையான மவுரி சமயமும் சமயச் சடங்குகளும் ஒழிந்துவிட்டன. மவுரிகள் அனைவருமே இன்று கிறித்தவர்கள். ஆயினும், இவர்களுக்கு எனத் தனிக் கிறித்துவக் கோட்பாடுகளும் சர்ச்சுகளும் உண்டு.; சமயபோதகர்களும் உண்டு. மவுரிகள் ஆங்கிலத்தைத் தாய்மொழிபோலப் பேசுகின்றனர்.   கடந்த நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுகளில் நியூசிலாந்தில் ஐரோப்பியர்களேயன்றி, உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் குடியேறியுள்ளனர். மலேயாத் தீபகற்பம், சமோவா, தோங்கா, தஹிதி முதலிய பசிபிக் தீவுகளிலிருந்தும், சீனா இந்தியா பாகிஸ்தான் முதலிய ஆசிய நாடுகளிலிருந்தும் மக்கள் பெரிய அளவில் இங்குக் குடியேறியுள்ளனர். இப்படிக் குடியேறியவர்களுக்கு வேடிக்கைப் பெயர்களும் உண்டு. பசிபிக் தீவுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் தேங்காய் மிகுதியாக உண்பார்கள். அதனால் அவர்களுக்குத் ‘தேங்காய்கள்’ என்று பெயர். ஆசியர்கள், குறிப்பாக இந்தியர்களின் உணவில் உறைப்பான மசாலா இருப்பதால், அவர்களுக்கு ‘மசாலா மன்சீஸ்’ (Masala munchis) என்று பெயர். சீனர்களுக்குச் ‘சிங்கீஸ்’ (chingis)என்று பெயர். இப்பெயருக்குக் காரணம் தெரியவில்லை. கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் நியூசிலாந்தில் முதலீடு செய்தும் தொழில் நுட்பம் உதவியும் நாட்டை வளப்படுத்தும் திறம்கொண்டோரை இந்நாடு வரவேற்றது. இதனால், இந்தியர்கள் 1947 தொடங்கியே இந்தியாவிலிருந்தும் ஃபிஜி தீவுகளிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் இங்குக் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இத்தகையோரில் குஜராத்தியினர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இலங்கையிலிருந்து ஐ.நா.வின் உதவியோடு தமிழர்கள் அகதிகளாக இங்கு வந்துக் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், இவ்வாறு குடியேறியவர்களால் தங்கள் வாழ்க்கையும் வாழ்வுரிமைகளும் பாதிக்கப் படுவதாகச் சில பாஹியாக்களும் மவுரிகளும் கருதி, குடியேற்றத்தை அனுமதிக்கும் அரசின் போக்கைக் கண்டித்து வருகின்றனர். முக்கிய எதிர்க்கட்சியாகிய Newzealand First என்னும் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் வின்ஸ்டன் பீட்டர் என்பவர். இவர் நியூசிலந்தின் பாராளுமன்ற உறுப்பினருமாவார். இவரொரு கலப்பின மவுரி. அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையால், அரசு ஒதுக்கும் வீடுகளும் மருத்துவ உதவிகளும் இவைபோன்ற பிற சலுகைகளும் வந்தேறிகளே எளிதில் பெற்றுவிடுகின்றனர்; சொந்தநாட்டு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது; தங்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கும் இக்குடியேற்றச் சட்டத்தை மாற்ற வேண்டும் என இவர் கடுமையாக வாதாடி வருகின்றார். மேலும், இந்தியா – பாகிஸ்தான், சிங்களர் – தமிழர் போன்று பகை உணர்சி உடையவர்களை ஒருசேர இங்குக் குடியேற அனுமதிப்பதால் உலகில் எங்கெங்கோ நடக்கும் சண்டைகள் இங்கும் நிகழ அரசு வாய்ப்பளிக்கின்றது என்றும் வின்ஸ்டன் பீட்டர் சாடுகின்றார். இவருடைய தாக்குதல் கணைகளுக்குக் குறி இந்தியர்களும் சீனர்களுமே. வின்ஸ்டன் பீட்டரின் கருத்துக்குக் கணிசமான ஆதரவு உள்ளது. புதிதாகக் குடியேறுபவர்களால் இங்கு ஏற்கெனவே வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கைத் தரம், பணிநிலை, உழைப்புச் சந்தை ஆகியன பாதிக்கப் படுகின்றன; பணிக்கு அமர்த்துபவர்கள் , நியூசிலாந்தினருக்குப் பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்துவதற்குப் பதிலாக ஏற்கெனவே அத்துறையில் பயிற்சி பெற்றுள்ள குடியேறிகளை அப்பணியில் நியமிக்கிறார்கள். புதியதாகக் குடியேறியவர்கள் குறைந்த ஊதியத்திற்குப் பணி செய்ய ஒத்துக் கொள்கிறார்கள். இத்தகைய போக்கினால், ‘கிவிக்கள்’ பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று கருதப்படுகின்றது.   ஆங்கிலத்தைத் தாய்மொழி போலப் பேசுவோரையும், ‘கிறித்துவ அறத்தில்’ (Christian Ethics) ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களையும் மட்டுமே குடியேற அனுமதிக்கலாம், அவர்களே நியூசிலாந்தின் நீரோட்டத்தில் எளிதில் கலந்து கரைந்து விடுவர் என்ற கருத்தும் நிலவுகின்றது. இது, பிற மதத்தவர்களின் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று சொல்லாமற் சொல்லுவதாகும். சீனர்களும் ஜப்பானியர்களும் இங்குப் பெரிய அளவில் பொருள் முதலீடு செய்கின்றனர். ஜப்பனியர்கள் உல்லாசப் பயணிகளாக அதிக அளவில் இங்கு வருகின்றனர். இங்குப் பொருள் செலவிடுகின்றனர். நியூசிலாந்தின் பொருளாதாரத்திற்கு இவ்விருநாடுகளின் உறவு மிக இன்றியமையாதது. எனவே, இவர்களை அரசு கட்டுப்படுத்த விரும்புவதில்லை. இந்தியர்கள் பணி தேடியே இங்குக் குடியேறுகின்றனர்.; வளமான வாழ்வினை நாடியே இவர்கள் இங்கு வருகின்றனர். இவர்கள் இங்குத் தங்கள் தொழில் திறமையைப் பணமாக்கிக் கொள்கிறார்களே யன்றிப் பொருள் முதலீடு செய்வதில்லை என்ற கருத்து நிலவுகின்றது. அதனால், அரசு குடியேற்றச் சட்டத்தில் கொண்டு வரும் மாற்றங்கள் இந்தியர்களையே பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகின்றது.   நியுசிலாந்துக்கு மீன் பிடிப்பவர்களாகவும் மரவணிகர்களாகவும் எப்போது வெள்ளையர் வரத் தொடங்கினரோ அன்றுதொட்டே மவுரிக்கலப்பினம் தோன்றி விட்டது. இன்று மவுரிகளில் 60 சதவிகிதம் ஆங்கிலேயரின் கலப்பும் ஏனைய நாற்பது சதவிகிதம் ஏனைய ஐரிஷ் , ஸ்காட்டிஷ், ஐரோப்பியக் கலப்பும் உள்ளது எனக் கூறப்படுகின்றது. கப்பல் கரைக்கு வந்தவுடன் சிலமாலுமிகள் மீண்டும் புறப்படும் வரை அருகில் உள்ள காடுகளில் மறைந்திருந்தனர். கப்பல் மீண்டும் கிளம்பிப் போய்விட்டதென உறுதியாகத் தெரிந்த பின்னர் வெளிப்பட்டு நியூசிலாந்தின் நிரந்தரக் குடிகள் ஆயினர். மவுரிப் பெண்களை அவர்கள் மனந்து கொண்டனர். திருமணத்தைப் பொறுத்த வரையில் மவுரிப் பெண்கள் பூரண சுதந்திரம் உடையவர்கள். சிலசமயங்களில், கப்பல்கரையில் நின்றுகொண்டிருக்கும்போது, காட்டிலும் கரையிலும் வேட்டையாடிக் கொண்டிருந்த மாலுமிகள் மவுரிப் பெண்களோடு தற்காலிகக் குடும்பம் நடத்துவதும் உண்டு. இத்தகைய உறவுகளால் கலப்பினக் குழந்தைகள் பிறந்தன. கப்பல் கரைகளை விட்டுத் தத்தம் நாட்டுக்குத் திரும்பியபோது, குழந்தைகளின் தந்தையரும் போய்விட்டனர். குழந்தைகள் மவுரித் தாய்மார்களிடம் மவுரிகளாகவே வளர்ந்தனர். மவுரிகளின் சமூக அமைப்பும் (Tribal Organaisation) மவுரிப் பெண்ணுக்கு இருந்த சில உரிமைகளும் கலப்பினக் குழந்தைகள் தந்தையின்றியும் வாழ வசதி அளித்தன. ஜே.எஃப்.எச். ஊஃலர் (J,F.H.Whooler) என்னும் ஜெர்மானிய மிஷனரி ஒருவர், 1844ல், தெற்குத்தீவின் தெற்கிலுள்ள ஃபோவியாக்ஸ் ஜலசந்தியில் (Foveaux) உள்ள ருவாபுகே (Ruapuke) என்னும் சிறிய தீவில் தங்கியபோது மவுரிப்பெண்களுக்கும் வெள்ளையருக்கும் பிறந்த அழகிய கலப்பினக் குழந்தைகளைக் கண்டதாகவும், அந்தக் குழந்தைகளின் பெற்றோர் இன்னார் என அறியத்தக்க அடையாளம் இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். ஒருசமயம் ஒரு மவுரிப்பெண்ணிடம் அவளுடைய குழந்தையின் தந்தையை அடையாளம் காட்டச் சொன்னபோது, அவள் மீன்பிடிக் கப்பலைச் சுட்டிக் காட்டிக் கேப்டன் முதல் சமையற்காரர் வரை அனைவரையும் திகைக்க வைத்தாளாம். ஊஃலரால் வளர்க்கப்பட்ட இக்குழந்தைகள் மவுரி மொழியை ஜெர்மன் மொழி ஒலியழுத்தத்துடன் பேசினவாம். பாஹியா – மவுரி திருமண உறவில் , மவுரி மனைவியர் வெள்ளைக்காரக் கணவருக்குப் பாதுகாப்பாக இருந்தனர். நியூசிலாந்தில் கணவனுக்குக் குடியுரிமையும் நிலவுரிமையும் பெற்றுத் தந்தனர். சில கலப்பினச் சந்ததியினருக்குப் பிரிட்டீஷ் அரசமரபினருடன் சம்பந்தம் உண்டெனக் கூறப்படுகின்றது.  பாஹியாவுக்கும் மவுரிக்கும் இடையே இவ்வளவு நெருக்கம் இருக்கும்போது காதல் கதைகளுக்கா பஞ்சம்? இதோ கதையான உண்மைச் சம்பவம். வடக்குத் தீவில் ‘தீவுகள் விரிகுடா’ (Bay of Islands)  என்றொரு நிலப்பகுதி உள்ளது. அதன் மவுரித் தலைவனுக்கு ‘ஹூயா’ (Huia) எனப் பெயருடைய அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். (ஹூயா – நியூசிலாந்தில் உள்ள அழகிய பறவையின் பெயர். நம் கிளி போல) அவள் பேரழகி; நல்ல உயரம்;மெல்லியள்; கம்பீரமான தோற்றம் உடையவள். மவுரி இளைஞர் பலர் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தனர். எவ்வளவு உயர்குடி மகனாக இருந்தாலும் அவள் மறுத்து வந்தாள். சிலநாட்களில் பிரிட்டீஷ் படையிலுயர்பதவி வகிக்கும் இளைஞன் ஒருவன் தீவுகள் விரிகுடாவுக்கு வந்தான். ஹூயாவின் பேரழகைக் கண்டு மயங்கினான். அவளும் அவனை விரும்பினாள். அவளுடைய தந்தையும் உயர்குடி வெள்ளையனான (Rangatira Pakeha) அவ்விளைஞனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தான். அவளும் அவனுக்கு உண்மை அன்புடை மனைவியாக இருந்தாள். இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அப்பொழுது வடதீவின் தென்பகுதியில் உள்ள ‘வங்கனூயி’ (Wangnui) என்னும் இடத்தில் ஏற்பட்ட கலகத்தை அடக்க அவ்விளைஞன் தன்படையுடன் செல்லும்படி உத்தரவு வந்தது. போர் நடக்கும் இடத்திற்குப் பெண்களை அழைத்துச் செல்ல இராணுவ விதி அனுமதிக்காது. எனவே, அவன் ஹூயியைச் சமாதானப்படுத்தி அங்கேயே இருக்கச் செய்து போருக்குப் போனான். ஹூயா தனித்துப் புலம்பிக் கொண்டிருந்தாள். அந்தக் காலத்தில் அஞ்சல் வசதிகளோ, தொலைபேசியோ கிடையாது. தீவுகள் விரிகுடாவுக்கும் வங்கனூயிக்கும் நெடுந்தூரம். வங்கனூயியில் இருந்து எப்பொழுதாவது செய்தி வரும். அச்செய்திகளில் எல்லாம் பாஹியாப்படை (வெள்ளையர்களின்படை) மவுரிகளிடம் செமத்தையாக உதைபடுவது தெரிய வந்தது. மவுரிகளின் தாக்குதலுக்கு வெள்ளையரின் படை பெரிதும் பலியாகிவிட்ட செய்தியும் தெரிய வந்தது. தன்னுடைய மவுரி இனம் வெற்றி பெறுவது குறித்த மகிழ்ச்சி, தன் கணவன் தலைமை தாங்கிச் சென்ற படையின் அழிவு குறித்த சோகம் என்ற இரண்டு மாறுபட்ட உணர்ச்சிகளில் சிக்கி ஹூயா தவித்தாள். இனித் தன்னால் தனியாக இருக்க முடியாது என உணர்ந்தாள்.      இவள் இருப்பதோ தீவு வளைகுடாவில்; கணவன் இருப்பதோ வங்கனூயியில். இரண்டு இடங்களுக்கும் இடையில் கிட்டத்தட்ட 500மைல் தூரமாவது இருக்கும். அந்தக் காலத்தில் இவ்விரு இடங்களுக்கும் இடைப்பட்ட அப்பகுதி இருண்ட அடர்ந்த காடுகளும் காட்டாறுகளும் சதுப்பு நிலங்களும் கொண்டதாக இருந்தது. சரியான பாதையும் கிடையாது. நதிகளைக் கடக்கப் பாலங்களும் இல்லை. வழித்துன்ப மிக்க அப்பகுதியைத் தான் தன்னந்தனியளாகக் கடந்து சென்று கணவனை அடைவது என அவள் தீர்மானித்துக் கொண்டாள். துன்பமிக்க அப்பயணத்தை ஹூயா மேற்கொண்டாள். வைரோவா (wairoa) ஆற்றைக் கடந்து ஹூயா கைபாரா (kaipara)என்னும் இடத்தை அடைந்தாள். அங்கிருந்து வைக்காடொ (Waikato) ஆற்றைத் தொடர்ந்து தெளபோ (Taupo) ஏரியை அடைந்தாள். அவள் சென்ற வழி ஆபத்துக்களும் வருத்தமும் நிறைந்தது. என்றாலும் வழியில் அவள் சந்தித்த மவுரிகள், பரம்பரையாக அவளுடைய இனத்தாரோடு பகைமை கொண்டவர்களே என்றாலும், அவளை அன்புடன் உபசரித்துப் பாசத்தைச் சொரிந்தனர். பெண்ணொருத்தி, தன்னந்தனியே, கடியவழியில் , தன் கணவனைத் தேடிச் செல்கின்றாள் என்ற பரிதாபத்தோடு அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். மவுரித் தலைவனின் அன்புமகள் காதலுக்காக இப்படிப்பட்ட துன்பத்தை அனுபவிக்க நேர்ந்ததே என்று மரியாதையுடன் அவளுக்குப் பணிவிடை செய்தனர். சிலர் வழித்துணையாக அவளுடன் வந்து வழிகாட்டி உதவினர். இப்படி 60 பேர் வழிகாட்ட ஹூயி ஒருவழியாக வங்கனூயி வந்து சேர்ந்து கணவனை அடைந்தாள். வங்கனூயியில் இரண்டாண்டுகள் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தாள். அவளுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் அவள் கணவனுக்கு இங்கிலாந்திலிருந்து ஒரு செய்தி வந்தது. அவனுடைய தந்தை இறந்து விட்டதாகவும் , அவர் விட்டுச் சென்ற எஸ்டேட் முதலிய பெருஞ்சொத்துக்களுக்கு வாரிசான அவன் உடனே இங்கிலாந்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்றும்  அத்தகவல் அவனுக்குத் தெரிவித்தது. அவன் இங்கிலாந்துக்குச் செல்ல நீண்ட விடுப்புக்கு விண்ணப்பித்தான். விடுப்பு அனுமதி கிடைத்தவுடன், ஹூயாவைத் தனியே தவிக்கவிட்டுவிட்டு இங்கிலாந்து போய்ச் சேர்ந்தான். இங்கிலாந்து சென்று சொத்துக்களைத் தன் வசமாக்கிக் கொண்டபின் அவளையும் மகளையும் அழைத்துக் கொள்வதாக உறுதிகூறிச்சென்ற அவனை நினைத்து நினைத்து ஏங்கி ஹூயா காத்திருந்தாள். காத்திருப்பதே கடமையாயிற்று. இனி அவன் வரமாட்டான் என்பது உறுதியாயிற்று. ஹூயா பிறந்த குடி வீரமிக்க ஆண்களையும் அன்புமிக்க பெண்களையும் உடையது. அந்தக் குடிப்பண்புக்கு ஏற்ப , அவள் தன்னுடைய பெண்குழந்தையையும் எடுத்துக் கொண்டு மீண்டும் தீவுவிரிகுடா வந்து தன் தந்தையை அடைந்தாள். தந்தையின் பராமரிப்பில் தன்னுடைய எஞ்சிய காலத்தைக் கணவனைக் குறித்த வருத்தத்திலேயே கழித்தாள். அழகும் இளமையும் உடையவளாக இருந்தும், மவுரி சமுதாய ஒழுக்கம் அனுமதித்தும், அவள் மறுமணம் செய்து கொள்ளவில்லை. கணவன் நினைவிலேயே சில ஆண்டுகளில் உயிரைவிட்டு, அவளுடைய மூதாதையர்கள் சென்ற இடத்துக்கு அவளும் போய்ச் சேர்ந்தாள்.  ஹூயாவின் மகள், ‘நொடா’(Nota)  என்பது அவள் பெயர், ஆங்கில மவுரிக் கலப்பினத்துக்கு ஒத்த மிகச் சிறந்த அழகுள்ளவளாக வளர்ந்து, தன்னுடைய தாய்வழிப் பாட்டன் சொத்துக்கு வாரிசானாள். இப்படியாகச் சென்றது ஹூயாவின் காதல்கதை. மீன் பிடிக்கவும் மரம் வெட்டவும் கப்பலில் வந்த மாலுமிகளால் மவுரி சமுதாயம் முழுவதையுமே கலப்பினமாக மாற்ற முடிந்ததென்றால் அதற்கு மவுரிகளின் திருமணஅமைப்பும் ஒரு காரணமாகும். மவுரி சமூக அமைப்பில் பிறப்பு முதல் இறப்பு முடிய எல்லாப் பருவ நிகழ்ச்சிகளுக்கும் சடங்குகள், சமுதாய நிகழ்ச்சிகள் உண்டு.ஆனால், திருமணத்திற்கு மட்டும் எந்தவொரு சடங்கும் இல்லை. இது ஒருவனும் ஒருத்தியும் மட்டும் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சி. ஒருவன் ஒருத்தியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து அவளும் அவனுடைய விருப்பத்தை ஏற்று உடன்பட்டால் போதும். அவனும் அவளும் கணவன் மனைவியாகி விடுவர். அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தால் சமுதாயமும் அவர்களுக்குக் கணவன் மனைவியென்னும் தகுதியைஅளித்துவிடும். பெண் ஆணின் வீட்டுக்குப் போய் ஓரிரவு தங்குவதுதான் திருமணச் சடங்கு. அது நடந்துவிட்டால் அவர்கள் கணவனும் மனைவியுமாவர். பெண், தனக்கு விருப்பமானவனை வரித்துக் கொள்வது பாரதப் பண்பாட்டுக்கு முரணானதன்று. யாழோர் கூட்டம் (கந்தருவத் திருமணம்), களவுத் திருமணம் என்று தமிழ் இலக்கியங்கள் இதனைக் கூறும். களவு கற்பில்தான் முடியவேண்டும்.  கற்பு என்பதற்குப் பிற்காலத்தில் பலவிதமாகப் பொருள் கூறப்பட்டாலும் தொல்காப்பியம் கூறுவதே உண்மைப் பொருள். பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் ‘கொடைக்குரி மரபினோர்’ பெண்ணைக் கொள்ளுவதற்குரியவனுக்குச் சடங்கு(கரணம்)களின் வழியே கொடுப்பக் கொள்ளுவது கற்பு. கரணம் இன்றிக் கற்பு இல்லை. கரணங்களாகிய சடங்குகள் ஏன் விதிக்கப்பட்டன? தொல்காப்பியம் காரணம் கூறுகின்றது. “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” ஒருவன் ஒருத்தியுடன் உறவு கொண்டாடிவிட்டுச் சில காலத்திற்குப் பின் இவளை அறியேன் என்று உதறிவிட்டுச் செல்லும் பொய்யும் வழுவும் பரவலாகத் தோன்றிய பொழுது ஊரறிய உலகறியச் செய்யும் திருமணச் சடங்கின்வழி பெண்ணுக்குச் சமூகப் பாதுகாப்புக் கொடுப்பதற்காகப் பெரியோர்களால் உருவாக்கப்பட்டன இக் கரணங்கள். கரணம் திருமணப்பதிவாளரிடம் பதிவு செய்வதாகவும் இருக்கலாம், அக்கினி சாட்சியாகச் செய்யப்படுவதாகவும் இருக்கலாம். இத்தகைய சடங்குகளின்றிச் செய்யப்படும் திருமணங்களில் பெண்ணுக்கும் அவள் வழி அவளுடைய குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நேரிடக் கூடிய அவமான அழிவுகளின் சாத்தியக் கூறுகளைக் கருதியே ‘கரணம் தப்பினால் மரணம்’ என்னும் பழமொழியும் தோன்றியது போலும்! இத்தனையும் மவுரி கலப்பினம் ஆனதை நோக்கி எழுந்த எண்ணங்கள். மவுரியின் கலியாணத்துக்குத்தான் சடங்கு இல்லையே ஒழிய, குழந்தை பிறந்தால், ஆணோ பெண்ணோ வயதுக்கு வந்தால், இறப்பு ஏற்பட்டால், மரம் வெட்டினால், விதைத்தால், அறுவடை செய்தால், புதிய தோணியை மிதக்கவிட்டால், வேட்டைக்குப் போனால், சண்டைக்குப் போனால், விருந்து வந்தால் என வாழ்க்கை முழுவதும் சடங்குகள் நிறைந்துள்ளன என்பதுதான் வேடிக்கை.   இன்று நியூசிலாந்தில் திருமணப்பந்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் ‘பார்ட்னர்’ உடன் வாழும் போக்கு அதிகரித்து வருகின்றது. ‘மணமக்கள் தேவை’ விளம்பரங்கள் போல ‘Wanted male partner’, Wanted fmale partner’ விளம்பரங்கள் அதிக அளவில் வெளிவருகின்றன. ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உடையோர் ‘Gay partner’ எனப்படுகின்றனர். நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அமைச்சர்களும் உறுப்பினர்களுமாகப் பன்னிருவருக்குக் குறையாமல் gay partner உள்ளனராம்.   நியூசிலாந்து பயண நினைவுகள் II []   மவுரிப் பழங்குடியினரிடத்தில் பண்பட்ட சமுதாய அமைப்பு, சடங்குகள், நம்பிக்கைகள் நிலவின. கேப்டன் குக் மவுரிகளிடம் திட்டவட்டமான சமூக நிர்வாக அமைப்பு இருந்ததாகக் கூறுகின்றார். குடும்பங்கள், குடிகள், குலங்கள் எனப் பிரிவுகள் இருந்தன. குலத்தலைவன்(Tribal Head) ‘அரிகி’(Ariki) எனப்பட்டான். அரிகியிலும் பலநிலைகளுண்டு. நீண்ட பாரம்பரியம் உள்ளவன் ‘அரிகி ரங்கி’ (Arikirangki) என்று அழைக்கப்பட்டான்.’ரங்கி’ என்றல் வானம் என்று பொருள். ‘அரிகி’க்கு அடுத்த நிலையில் இருப்பவன் ‘தன’ (tana) எனப்படுவான். மவுரிகளில் உயர்குடியினர் ‘ரங்கதிர’ (Rangkatira) என்றழைக்கப்பட்டனர். அவர்களில் பலதார மணம் உண்டு.பொதுவாக முதல் மனைவி ஒத்தகுடியில் பிறந்தவளாக இருப்பாள். கணவன் வீட்டில் எல்லாப் பாத்தியதைகளுக்கும் உரிமைகளுக்கும் பெருமைகளுக்கும் அவளே உரிமை உடையவள். பின்னால் கணவனால் சேர்த்துக் கொள்ளப்பட்ட மனைவியர் முதன்மனைவிக்கு அடங்கியவராகவே இருப்பர். சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுமாறு, ‘தொன்முறை மனைவி’ , ‘பின்முறைவதுவை’ என்னும்  முறைபோலத் திருமணமுறை அமைப்பு காணப்படுகின்றது. ‘தோவுங்கா’(Tohunga) என்பது மவுரிப் புரோகிதனின் பெயர். ‘தோவுங்கா’ என்பது குலகுரு போன்றதொரு பதவி. மவுரி சமூகக் கூட்டமைப்பிலும் நிருவாகத்திலும் தோவுங்காவுக்கு முக்கிய பங்கு உண்டு. இவனே மவுரிகளின் நன்றுதீது அறிந்த அறிவன்; எதிர்காலம் அறிந்த கணியன்;பிணி தீர்க்கும் மருத்துவன்;மெய்ப்பொருள் அறிந்த ஞானி; வரலாற்றறிஞன்; புலவன். இன்னும் என்னென்னவோ.! இவனே மவுரித்தலைவனின் மக்களுக்குக் குடிவழி வரலாறு (Geneology), குலப்பெருமை, குலச்சடங்குகள், பாட்டுக்கள், சமூகநெறிமுறைகள், அறங்கள் முதலியவற்றைப் போதிக்கும் ஆசிரியன்.   நல்ல நினைவாற்றலும் பாட்டு இட்டுக் கட்டும் ஆற்றலும் உடையவனே நல்ல ‘தோவுங்கா’ ஆக முடியும். ‘நங்கதங்க ரங்கதிரா’(Nangtanga Rangatira) என்று அழைக்கப்படுபவர்கள் மவுரியின் உயர்குடி மக்கள். நம் உழுவித்து உண்ணும் வேளாளர்களைப் போல. இவர்கள் ‘அரிகி’க்குத் துணை நிற்பவர்கள். ‘நங்கதுதுவா’ (Nga Tutua) என்பவர்கள் நடுத்தர மக்கள்.;போர்வீரர்கள். ‘நங்கவரே’Nga Ware) என்பவர்கள் தாழ்குடிகள். இவர்கள் அனைவருமே சுதந்திரமும் சமூக உரிமைகளும் உடையவர்கள். ‘ நங்க தவ்ரிக’ (Nga Taurekareka) போரில் தோற்றுச் சிறைபிடிக்கப்பட்டு அடிமையானவர்கள். உயர்குடிமக்களுக்கும் பிறருக்கும் ஊழியம் செய்யக் கடமைப்பட்டவர்கள். இவர்களுக்குச் சமூகத்தில் எந்தவித உரிமையும் கிடையாது. இன்று மவுரிகளிடம் தோவுங்கா, நங்கவரே, தவ்ரிகரிகா முதலிய பிரிவுகள் இல்லை. சமூக மாற்றத்தில் அவையெல்லாம் ஒழிந்து போயின. ‘மானம்’ என்னும் உயரிய பண்பு பற்றித் தமிழிலக்கியங்கள் பேசுவதை அறிவோம். தன்னிலைமையில் தாழாமையும் தாழ்ந்தால் உயிர் வாழாமையும் மானத்தின் இலக்கணமாகக் கூறப்படும். தமிழில் நாம் ‘மானம்’ என்ற சொல்லை எப்பொருளில் வழங்குகின்றோமோ , ஏறக்குறைய அதே பொருளில் மவுரிகளின் மொழியிலும் ‘மனா’(Mana)  என்ற சொல் வழங்குகிறது. ‘மனா’ என்னும் மவுரிச் சொல்லுக்கு ஆங்கிலத்தில் honour,influence, personality, power ,prestiege,  எனப் பல பொருள் கூறுவர். இவையெல்லாம் அந்தச் சொல் குறிக்கும் விரிந்த பொருள்களின் சில கூறுகள்தாம். மவுரித் தலைவர்கள் தங்கள் குடிப்பண்பினாலும் பாரம்பரியத்தாலும் மனாவைப் பெற்றுள்ளனர். பாரம்பரியம் எவ்வளவு பழமையும் தொன்மையும் வாய்ந்ததோ அந்த அளவுக்கு ‘மனா’வும் உயர்ந்ததாக இருக்கும். ‘தோவுங்க’(புரோகிதன்) , அவன் பிறந்த குடியினாலும், அறிவாலும், இயற்கையைக் கட்டுப்படுத்தும் புலனுக்கு எட்டாச் சக்தியாலும் (Mystic Power) ‘மனா’வைப் பெறுகிறான். நம் பார்ப்பனப் புரோகிதனைப் போல. வீரத்தாலும் வெற்றியாலும் ‘மனா’ விரிவடையும். ‘மனா’ குறித்து மவுரிகளின் மனப்பான்மையும் பெருமையும் அவர்கள் தங்களுக்குள் போரிட்டு ஒருவரை யொருவர் கொன்றழித்துக் கொள்ளப் போதுமானதாக இருந்தது. பழிக்குப்பழி வாங்கவும் மானத்தைக் காத்துக் கொள்ளவும் இழந்த மானத்தை மீட்டுக் கொள்ளவும் அவர்கள் போரிட்டனர். மானத்தை முன்னிட்டுத் தங்களுக்குள் இரக்கமின்றிக் கொடுமையாக நடந்து கொண்ட மவுரிகள், ஆங்கிலேயக் குடியேறிகளுடன் போரிட்டபோது, ‘இன்று போய் நாளைவா’  என மிகுந்த பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதை ஆங்கிலேயர்களே பாராட்டி எழுதி வைத்துள்லனர். துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் அறிமுகம் ஆகுமுன் மவுரி நீண்ட தடிகளையும் குறுந்தடிகளையும்(Clubs) போராயுதங்களாகப் பயன்படுத்தினான். மரத்தாலும் பச்சைக் கற்களாலும் (Jade) ஆன இந்த ஆயுதங்கள் ஆபத்தில்லாதவைபோலத் தோன்றினாலும் மவுரியின் கைகளில் பயங்கரமாகச் செயல்பட்டன. வில், அம்பு மவுரி அறியாதவை. வில்லம்புகளுக்கு உரிய மூலப்பொருள்க்ள் இங்குக் கிடைப்பனவாக இருந்தும் இந்தப் போர்க்கருவியைப் பற்றி மவுரி அறியாது இருந்தது கவனிக்கத் தக்கது. மவுரி கற்கால நாகரிகத்திலிருந்து திடீரென தற்கால நாகரிகத்திற்கு வந்து விட்டான். மவுரியைத் ‘தபு’(Tapu) என்னும் ஒருவகை நம்பிக்கை அலைக்கழித்தது. ‘தபு’என்பது , இந்துக்களிடம் நிலவும் புனிதம், தீட்டு நம்பிக்கைகளைப் போன்றது. மக்கள், விலங்கு, மரம், வீடு, தோணி, மரப்பொம்மை, உயிருடைப் பொருள்கள், உயிரிலாப்பொருள்கள் போன்ற எதிலும் ‘தபு’ இருந்து தன்னைப் பாதிக்கும் என மவுரி நம்பினான். ‘தபு’வைப் போற்றுதலும் உண்டு; அஞ்சுதலும் உண்டு. ‘தபு’வைப் போற்றுதலால் வரும் நன்மையைவிட , அதனால் விளையக் கூடிய தீங்கை நினைந்து அஞ்சுவதே மிகுதி. மவுரி, தான் இருக்கும் கிராமத்திலிருந்து தொலைவில் உள்ள தன் உருளைக்கிழங்குத் தோட்டத்தில் ‘தபு’ செய்துவிட்டானேயானால் ஒரு கிழங்கும் கூடத் திருட்டுப் போகாது. ஆடுகளுக்குக் கூடத் ‘தபு’ செய்துவிடுவார்கள். ‘தபு’ செய்யப்பட்டுள்ள பொருளைத் தீண்டுவதால் விளையக்கூடிய தீங்குக்கு அஞ்சி யாரும் அதைத் தொடமாட்டார்கள். இவ்வாறு ‘தபு’வின் உதவியினால் மவுரி தன் உடைமைகளைப் பாதுகாத்துக் கொண்டான். ‘தபு’ செய்யப்பட்டதற்கு அடையாளம் ஒன்றை வீடு, தோணி, தோட்டம், ஆட்டுமந்தை என எங்கு வைத்தாலும் அது துப்பாக்கி ஏந்திய காவலாளியைக் காட்டிலும் பலமடங்கு பாதுகாப்பினை அளித்தது. ‘தபு’ செய்யப்பட்ட தோட்டம் என அறியாது மவுரி எவனாவது காலைவைத்து விட்டுப் பின்னர் அது, ‘தபு’ செய்யப்பட்டது என அறிய வந்தால், பயத்திலேயே அவன் உயிரை விட்டுவிடுவான். சிந்தித்துப் பார்த்தால், நம் நாட்டிலும் ‘பகுத்தறிவு’, நாத்திகவாதம் பரவுவதற்கு முன் பாவபுண்ணியம்,தெய்வக்குற்றம், தெய்வதண்டனை பற்றிய அச்சம் குற்றங்கள் பரவாமல் தடுத்தன என்னும் உண்மை தெரிய வரும். மவுரித் தலிவனின் தலைமுடி ‘தபு’(புனிதம்) உடையதாகக் கருதப்படது. முடிவெட்டிக் ‘கிராப்’ வைத்துக்கொள்ளும் நாகரிகம் வந்துவிட்ட பின்னரும் கூட மவுரித் தலைவனின் முடித்துகள்களைத் திரட்டிப் புதைத்து விடுவார்களாம். ஏனெனில், பகைவர்களின் கையில் ஒருமுடி அகப்பட்டாலும், அதன் மூலம் சூனியம் செய்து தீங்கு விளைத்து விடக் கூடுமாம். மவுரி கண்ட இடத்தில் எச்சில் துப்பமாட்டான். அது நாகரிகமும் தூய்மையுமான பழக்கம் என்பதைவிட வேறு முக்கியமான காரணம் உண்டு. தன்னுடைய எச்சிலின் மூலம் எதிரி பில்லி சூனியம் வைத்துத் தனக்குத் தீங்கு விளைவித்துவிடக் கூடும் என்ற பயமே அந்த நல்ல பழக்கத்துக்குக் காரணம். மவுரி உணவை மிச்சம் வைக்காமல் முழுதையும் உண்டுவிடுவானாம். மிச்சமானால், அதைக் கையோடு எடுத்துச் சென்றுவிடுவானாம். அவன் தொட்டுச் சாப்பிட்ட மிச்சம் வைத்த உணவின் வழியே விரோதி அவனுக்குக் கேடு விளைவித்துவிடக் கூடுமாம். தபு செய்யப்பட்ட இடத்தைத் தீண்ட விரோதி அஞ்சுவான் என்பதால் எச்சிலான உணவு, தலைமுடி, வெட்டிய நகம் போன்றவற்றை மவுரி ‘தபு’ உள்ள இடத்தில் புதைத்துவிடுவானாம்.    நம் நாட்டிலும் ஜோசியர், சாமியார்கள் யாராவது இது போன்றதொரு அச்சத்தைத் தீவிரமாகக் கிளப்பிவிட்டால் பேருந்து நிலையம், சாலைகள் மற்றும் பொது இடங்களின் தூய்மை காக்கப்படுமல்லவா! மவுரி, தலையில் படும்படியாக உணவுப் பொருள்களைத் தொங்க விடமாட்டானாம். அந்த உணவைச் சாப்பிடுபவன் அவனுடைய தலையையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடுவானாம். இப்படியொரு பயம். ‘வளமை விரிகுடா’ (Bay of Plenty) என்னும் இடத்தில் ஒருமுறை வெள்ளைக்கார வணிகர்கள் வியாபார நிமித்தம் ‘கிடங்கி’ அமைத்திருந்தனராம். அப்பொழுது , பொழுது போகத மவுரிகள் வேடிக்கை பார்க்கக் கூட்டம் கூட்டமாகக் ‘கிடங்கி’க்குள் தம் விருப்பத்துக்கு அலைந்து திரியத் தொடங்கினராம். அந்தப் பொழுது போகாத கூட்டத்தினரால் தங்களுடைய வேலைகளுக்கு இடையூறு நேர்வதைத் தடுக்க வெள்ளையர்கள் ஒருதந்திரம் செய்தனராம். கிடங்கியைச் சுற்றிலும் விட்டங்களிலும் குறுக்குச் சட்டங்களிலும் தலையில் படும் உயரத்தில் இறைச்சித் துண்டங்களைத் தோரணமாகத் தொங்க விட்டனராம். கம்பிவேலியும் தரமுடியாத பாதுகாப்பை இந்தத் தோரணம் தந்து மவுரிகளை அப்புறப்படுத்தியதாம். ஆங்கிலக்கல்வி பெற்றுக் கிறித்துவர்களாக மாறிய மவுரிகளையும் சகுனம் பில்லி சூனியம் பற்றிய அச்சமும் நம்பிக்கையும் விட்டு வைக்க வில்லை என மிஷனரிகள் தங்கள் குறிப்புக்களில் எழுதி வைத்துள்ளனர். மாதிரிக்கு ஒரு நிகழ்ச்சி.: “செல்வாக்குள்ள மவுரித் தலைவன் ஒருவன் இறந்து போனான். அவனைச் சர்ச்சில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவப்பெட்டியைக் குழியில் இறக்கும்போது, அதைச் சுமந்து வந்த வாலிபர்களில் இருவர் தரை வழுக்கிக் குழியில் விழுந்து விட்டனர். சுற்ற நின்றவர்கள் ‘ஐயோ’ என்று கூச்சலிட்டனர். அது வெறும் பச்சாதாபத்தால் எழுந்த குரல் அல்ல. வாலிபர்கள் சவப்பெட்டி மீது குழியில் விழுந்த நிகழ்ச்சி அவர்களுக்குத் தீய சகுனமாகப் பட்டது. அதன் பலன் சாவுதான் என அவர்கள் மிகவும் அஞ்சினார்கள். அது வெறும் தற்செயல் நிகழ்ச்சிதான் என்று மிஷனரிகள் எவ்வளவு வலியுறுத்தித் தேற்றியும்  அவர்கள் மனந்தேறவில்லை. செத்துப்போன மவுரி தங்களுக்கு விடுத்த அழைப்பே அது என நம்பினர். அவர்கள் தங்கள் வீடு திரும்பி அச்சத்தோடு படுக்கையில் விழுந்தனர். ஊணும் உறக்கமும் இன்றிச் சில நாட்களில் உயிர் விட்டனர்.   நம்நாட்டில் ஞானியர் பலர் தங்களுடைய பூத உடலைவிட்டு விண்ணுலகத்துக்குச் செல்லும் நாளையும் நேரத்தையும் முன்னதாகவே அறிந்து அறிவித்துள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளோம். அத்தகைய நிகழ்ச்சிகள் மவுரிகளிடமும் உண்டு. அத்தகைய நிகழ்ச்சி ஒன்றினை டான் (Donne) என்னும் ஆங்கிலேயர் தம்முடைய புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார்.  “ மவுரி தான் விரும்பும்போது தன்னுடலைக் கீழே போட்டுவிட்டு இறந்துவிடுவான் என்ற நம்பிக்கை நியூசிலாந்தில் பரவலாக உள்ளது. வெள்ளையரும் கூட இவ்வாறு நம்பினர். இந்த நம்பிக்கை எந்த அடிப்படையில் தோன்றியது என்று தெரிய வில்லை. இந்த நம்பிக்கைக்கு வலுவூட்டும் செய்தி ஒன்றை நானறிவேன். ஒருநாள் காலை மவுரி ஒருவன் என்னிடம் வந்தான். அவ்ன் நல்ல தோற்றப் பொலிவுடன் எடுப்பாக இருந்தான். அவன், திரைப்படத்தில், ஆபிரஹாம் அல்லது மோசசின் வேடத்திற்கு ஏற்ற அழகிய வெண்தாடியுடன் இருந்தான். அவன் தன்னைப் புகைப்படம் எடுத்துக் கொடுக்கும்படி என்னிடம் கேட்டான். காலை நேரத்தில் அவன் என்னிடம் இப்படி வேண்டியது எனக்கு அசாதாரணமாகப்பட்டது. காரணம் கேட்டேன். அதற்கு அவன், ‘நான் இதுவரையில் புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை. வருகின்ற திங்கட் கிழமை புகைவண்டியில் வெலிங்டன் செல்லுகின்றேன். செவ்வாய் புதன் கிழமைகள் அங்கு என் குடும்பத்தாரோடு கூடி இருப்பேன்.  மறுநாள் வியாழக் கிழமையன்று இறந்துவிடுவேன்’ என்று எவ்விதச் சலனமுமின்றி வெகுசாதாரணமாகக் கூறினான். அவன் ஏதோ உளறுகின்றான் என்று அவன் கூறியதைப் பொருட்படுத்தாது விட்டேன். தேக ஆரோக்கியமும் உடல்வாகும் மனத்தெளிவும் உடைய அவன் இன்னும் ஒரு பத்து ஆண்டுகளாவது உயிரோடு இருப்பான் என அவனுக்கு உறுதி கூறினேன். புகைப்படம் எடுத்துக் கொள்ள அவனுக்கு உதவினேன். சாவு பற்றிய எண்ணமின்றி அவன் மகிழ்ச்சியடையக் ‘கிவி’ப்பறவையின் இறகுகளால் ஆன அங்கி ஒன்றைப் பரிசளித்தேன். அவன் என்னிடம் கூறியபடி , திங்கட் கிழமை வெலிங்டன் நகருக்குச் சென்றான். வெள்ளிக் கிழமை எனக்குத் தந்தி ஒன்று வந்தது.,- வெள்ளிக்கிழமை வெலிங்டன் போய்ச் சேர்ந்த அவன் நேற்று உயிரை விட்டான் என்று. (T.E. Donne, C.M.G. The Maoris)        பண்டைய மவுரிகள் சிங்காரித்துக் கொள்வதில் மிகுந்த விருப்புடையவர்களாக இருந்தனர். மவுரி ஆணும் பெண்ணும் தங்களுடைய தலைமுடியை நீளமாக வளர்த்து உச்சியில் கொண்டையாக முடித்துக் கொண்டனர். மவுரித் தலைவனின் கொண்டை ‘ஹூயா’ப்பறவையின் வெண்மை நுனி கொண்ட சிறகுகளாலும் வெண்கொக்கின் சிறகுகளாலும் அலங்கரித்தனர். சுறா மீனின் எலும்பிலான சீப்பினைக் கொண்டையில் அலங்காரமாகச் செருகிக் கொண்டனர். இன்றும் ‘கோட்டு சூட்டில்’ உச்சிக் கொண்டை முடிந்துள்ள மவுரிகளை வெலிங்டன் நகரில் காணலாம். மணமான மவுரிப் பெண்கள் தலைமுடியைக் கொண்டையாக உச்சியில் முடிந்து கொள்ள, மணமாகாத பெண்கள் கூந்தலைத் தொங்க விட்டுக் கொள்ளுதல் சமூகப் பழக்கமாக இருந்தது. திருமணம் ஆன பெண்ணையும் ஆகாத பெண்ணையும் இக்கூந்தல் முடியும் முறை வேறுபடுத்தி அடையாளம் காட்டியது. மவுரி வாலிபர்களுக்கு ‘ஹக்கா’ என்னும் போர்க்கூத்துப் போல மவுரிப் பெண்களுக்குப் ‘போய்’(Poi) என்னும் ஒருவகைக் கூத்து உரியதாகும். ‘போய்’க்கூத்து ஆடும் பெண்கள் உயரத்திற்குத் தக்கபடி வரிசையாக அணியணியாக் நிற்பர். ஃபேக்ஸ்(Fakes)  நாரினைத் திரித்துச் சுமார் 9’’ நீளமுள்ள கயிற்றில் டென்னிஸ் பந்து போன்ற பந்துகளை இருபுறமும் கோத்துக் கையில் ஏந்தியிருப்பர். அந்த பந்து ‘புல்ரஷ்’ என்னும் ஒருவகைச் செடியின் இலைகளைத் திரட்டிச் செய்யப்படுவதாகும். அந்த பந்துக்குத்தான் ‘போய்’ என்று பெயர். ‘போய்’ களிமண்ணைத் திரட்டிச் செய்யப்படுவதுமுண்டு. அணித்தலைவி வரிசையின் ஓரத்தில் நின்று கொண்டு ஆடல் அசைவுகளுக்கு உத்தரவு கொடுப்பாள். ‘போய்’ ஆட்டத்தில் பெரும்பாலும் காதல்பாட்டுக்களே  பாடப்பெறும். ஒருகையாலும் இரண்டு கரங்களாலும் ‘போய்’ பந்தினைச் சுழற்றிக் கொண்டே இவர்கள் பாடி ஆடுவது செவிக்கும் கண்ணுக்கும் விருந்தாக இருக்கும். மவுரியின் குழந்தைப் பருவத்திலேயே காது குத்தும் பழக்கம் இருந்தது. பின்னர், மரத்துண்டுகளைச் செருகித் துளையைப் பெரிதாக்கிக் கொள்ளுவர். திருநெல்வேலி ஆச்சிகள் பாம்படம் அணிந்த காதுகளைப்போல நீண்ட தொள்ளைக்காதுகளை இவர்கள் அழகெனக் கருதினர். தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களால் ஆன நகைகளையோ வைரம் போன்ற விலைமதிப்புள்ள கற்களையோ இவர்கள் அறியார். Jade என்னும் பச்சை நிறக் கல்லே இவர்களுக்கு விலை மதிப்பு மிகுந்தது. வலது காதில் ஜேட் பச்சைக் கல்லையும் இடது காதில் ஷார்க் மீனின் கூரிய வெண்பல்லையும் தொங்கட்டானாக அணிந்து கொள்ளுவர். பலவகை மலர்க்கொத்துக்களையும் பறவைகளின் சிறகுகளையும் சிறுபறவைகளின் தலைகளையும் கால்களையும் காதணிகளாகச் செருகிக் கொள்ளுவதும் உண்டு. ஆண்கள் மூக்குத் தொளைகளின் இடையில் ஓட்டையிட்டு அதில் அழகிய பறவைகளின் வண்ணமிகு சிறகுகளைச் செருகிக் கொள்வது ’ஃபேஷன்’ ஆக இருந்தது. சிலசமயங்களில், பெண்கள், தங்கள் இறந்துபோன கணவனின் கடைவாய்ப்பற்களை எடுத்துக் காதணியாக அணிந்து கொண்டனர். தலைவனின் பல் மிகப் புனிதமானதாகவும் விலைமதிப்புடையதாகவும் கருதப்பட்டது. தலைவனின் தலையிலிருந்து எடுக்கப்பட்டதாதலால் பல் உயர்ந்த ‘தபு’ உடையதாகும். ‘பெட்டொனி’ (Petoni) என்பது வெலிங்டன் நகரின் ஒரு பகுதி. வெள்ளையர்கள் முதன்முதலில் இங்குதான் குடியேறினர். 1890ல் இங்கு ‘ஈபுனி’ என்றொரு மவுரித் தலைவன் இறந்து போனான். அவனுடைய மனைவி ‘ரங்கி ஈபுனி’ (Rangi E Puni) இறந்துபோன கணவனின் கடைவாய்ப் பற்களை எடுத்துத் தங்கத்தில் பதித்துக் ( வெள்ளையராட்சியில் தங்கம் நியூசிலாந்துக்கு வந்துவிட்டது) காதணியாக அணிந்து கொண்டாளாம். அவளுடைய இந்தக் காதணியைப் ‘பாகியா’ நண்பர்கள் பாராட்டினால் அவள் மிகவும் மகிழ்ந்து போவாளாம். ஆனால், அதைத் தொட்டுப் பார்க்கமட்டும் யாரையும் அனுமதிக்கமாட்டாளாம். ஏனெனில், அந்தக் காதணியாகிய ‘பல்லணி’ நிறைந்த ’தபு’ வாய்ந்ததல்லவா? உலகத்தில் உள்ள பழங்குடியினர் அனைவரிடமும் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் உண்டு என அறிவோம். அந்தப் பழக்கம் மவுரிகளிடமும் உண்டு.ஆண்மவுரிகள் முகத்தில் பச்சை குத்திக் கொள்வர். உண்மையில் அது பச்சி குத்திக் கொள்வது அல்ல; அது பச்சை வெட்டுவது.  பச்சைக்கல்லால் (jade) செய்யப்பட்ட உளி போன்ற கூரிய கருவியால் பச்சை செதுக்கப்படுகிறது. தலையிலிருந்து தாடை வரையும், ஒருகாதிலிருந்து மற்றொரு காதுவரையும் ‘டிசைன் டிசைன்’ ஆக செதுக்கப்படுவது மவுரியின் பச்சை. இது ‘மொகோ’ (Moko)எனப்படும். இடுப்பிலும் தொடையிலும் பிட்டத்திலும்பச்சை குத்திக்கொள்ளுவதும் உண்டு. இது ‘ரோகி’ (Roke) எனப்படும் . பெண்களும் பச்சை குத்திக் கொள்வதுண்டு. ஆனால், ஆண்கள்போல முகத்தில் அல்ல. பெண்கள் மேலுதடு, கீழுதடு, முகவாய் மூன்றையும் பச்சை குத்திக் கறுப்பாக்கிக் கொள்ளுவர். கறுப்பிதழ்தான் மவுரியைக் கவரும் இதழகு. ‘செந்துவர் வாய்’, ‘பவளவிதழ்’ என மவுரிப் பெண்ணின் இதழகை கவிஞர்கள் வருணிக்க முடியாது. சிவப்பு, ரோஜா நிற உதட்டுச் சாயங்கள் இங்குப் பயன்படா. பெண்கள் மார்பிலும் தோளிலும் பச்சை குத்திக் கொள்வது அழகாகக் கருதப்படுகிறது.  பச்சை குத்துவது, அதாவது செதுக்குவது மவுரிப்புரோகிதனின் புனிதமான பணிகளில் ஒன்று. இப்பொழுது முகத்தில் பச்சை வெட்டுள்ள ஆண்மவுரிகள் தென்படுவதில்லை. ஆனால், ‘வைதாங்க் நாள்’ போன்று மவுரிகளுக்குச் சிறப்பான நாட்களிலும் வேறு சிறப்பான நிகழ்ச்சிகளிலும் சாயத்தினால் ‘மோகோ’ வரைந்து கொள்கின்றனர். 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர் முகத்தில் பச்சை வெட்டுள்ள ஆண்மக்களை வெலிங்டனில் காண முடிந்தது என்கிறார்கள். மவுரியின் நரமாமிசப் பழக்கம் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். மவுரி நர மாமிசம் தின்றது, சமயச் சடங்கே; நரமாமிசத்தின் சுவைக்காக அல்ல. இந்தப் பழக்கம் மவுரிகளிடம் தோன்றியது பற்றிப் பல கதைகள் உண்டு. மவுரியின் போர்க்கடவுள் ‘து’(Tu) சண்டையில் பகைவர்களைச் சாப்பிட்டாராம். அந்தக் கடவுளைத் திருப்திப்படுத்த மவுரிகளிடம் இந்தப் பழக்கம் தோன்றியதாம். இது ஒரு கதை. மவுரிகளின் மூதாதையரில் ஒருவன், அவனைக் கேலி செய்த ஒருவனைப் பழி வாங்க அவனைக் கொன்று சாப்பிட்டுவிட்டானாம். அதிலிருந்து ஒருவனை மிகவும் கேவலப்படுத்த அவனைக் கொன்று தின்றுவிடுவது வழக்கமாக வந்துவிட்டதாம். இது மற்றொருகதை. மவுரியை ஒருவன், ‘நீ நரமாமைச பட்சிணி’ என்று திட்டினாலும் பொறுத்துக் கொள்வானாம். ஆனால், ‘உங்களப்பனை ஒருவன் தின்றுவிட்டான்’ என்று கூறினால் அந்த அவமானத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியாதாம். இன்னும் ஒருகதை. சுறாமீனுக்குத் ‘தூதுனூயி’ (Tutunui) எனும் மவுரிக் கடவுளின் அம்சம் உண்டாம். அத்தகைய சுறாமீன் ஒன்று கடற்கரையில் ஒதுங்கியதாம். அது தெய்வாம்சம் உடையதென்று அறிந்திருந்தும் பண்பாடற்ற மவுரி ஒருவன் அதனைத் தின்று விட்டானாம். ‘தூதுனூயி’யை வணங்கும் ஒருவனுக்கு அச்செயல் பொறுக்க முடியாத அவமானமாக இருந்தது. அதனால், அவன், ‘தூதுனூயி’யைத் தின்ற அந்த பண்பாடற்ற மவுரியைக் கொன்று தின்று ‘மனா’வைக் காப்பாற்றிக் கொண்டானாம். இந்த நிகழ்ச்சி , தின்னப்பட்ட மவுரியின் சந்ததிக்கு அவமானமானதால், இவன் தன் ‘மனா’வைக் காப்பாற்றிக் கொள்ள அவன் சந்ததியில் ஒருவனைக் கொன்று தின்றானாம். இப்படி, ‘இன்றுநீ, நாளை நான்’ என்று ஒருவரை ஒருவர் கொன்று தின்று ‘மனா’வைக் காத்துக் கொள்ள மவுரி இனமே நரமாமிசம் தின்னும் கூட்டமாக மாற்றம் அடைந்ததாம். போரில் தோல்வி அடைந்தவர்களை மேலும் கேவலப்படுத்தி இழிவு செய்வது உலகெங்கும் போர்வீரர்களிடம் காணப்படும் நாகரிகம்!?. இது வீர இலக்கியங்களிலும் காணப்படுகின்றது. சங்க இலக்கியத்தின் புறத்திணைப் பாடல்களும் இதற்கு விலக்கன்று. மவுரியின் நரமாமிசம் தின்னும் பழக்கம் போரில் தோற்றவனை மேலும் அவமானப்படுத்தத் தோன்றியது. ஆதலால், இப்பழக்கம் மவுரி ஆண்மக்களிடம் மட்டும்தான் இருந்தது. பெண்மவுரியிடம் இந்தப் பழக்கம் இல்லை. நரமாமிசம் பெண்களுக்குத் ‘தபு’. போரில் முதலில் கொல்லப்படும் பகைவீரன் போர்த்தெய்வத்தின் முதல்மீன் (the first fish of Tu) எனப்படுவான். வென்ற வீரர்கள் அவனது உடலை நெருப்பில் சுட்டுத் தின்பராம். மவுரிகளின் நரமாமிசம் தின்னும் இந்தக் கொடூரமான பழக்கம் பற்றிக் கேப்டன் குக் முதல் கிறித்துவ மிஷனரிகள் வரை பலரும் இரத்தம் உறைந்து போகக் கூடிய நிகழ்ச்சிகள் பலவற்றைக் குறித்து வைத்துள்ளனர். நகைச்சுவை இழையோடும் சோகமான சம்பவம் ஒன்றோடு  மவுரியின் நரமாமிசப் புராணத்தை முடித்துக் கொள்ளலாம். இது நீண்ட காலத்துக்கு முன் நடந்த நிகழ்ச்சி. குக் ஜலசந்திக்கு வடக்கே ‘அழகு விரிகுடா’(Pretty Bay) என்னும் இடத்தில் , ஒரு மீன்பிடி கப்பல் கரைக்கு வந்தது. அதிலிருந்து நல்ல தண்ணீருக்காகப் பலர் கரைக்கு வந்தனர். அருகிலிருந்த நீரோடையிலிருந்து பீப்பாய்களில் நல்ல நீரை நிரப்பிக் கொண்டனர். அவர்களில் ‘பார்னீ’( Barney) என்பவ்னும் ஒருவன். இளம் வயதினன். ஐரிஷ்காரன். அவ்ன் செந்நிறமான தலைமுடியும் வெண்ணிறமான தோலும் உடையவன். அழகாக இருப்பான். வேடிக்கை பார்க்க வந்த மவுரித்தலைவனின் கண்ணில் அவன் பட்டு விட்டான். அந்த மவுரித் தலைவன் பீப்பாய்களை உருட்டிக் கப்பலில் ஏற்ற உதவி செய்தான். மிகவும் மகிழ்ந்து போன மாலுமிகள் , பீப்பாய்களை ஏற்றிய பின்மவுரியிடம் கை குலுக்கி விடை பெற்றுக் கொண்டனர். இறுதியாக வந்தவன் பார்னீ. கைகுலுக்குவது போலப் போக்குக் காட்டிப் பார்னியைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டு, மறைத்து வைத்திருந்த குறுந்தடியால் ஒரு போடு போட்டான். பார்னி சுருண்டு விழுந்தான். அவனை மீட்க வந்த மாலுமிகளை நோக்கி மவுரி பயங்கரமாகக் கத்தினான். அவர்கள் பயத்தால் உறைந்து போனார்கள். அந்த பயம் அவர்கள் ஓடிச்சென்று கப்பலிலி ஏறித் தப்பிக்கத் தடையாக இருக்கவில்லை. மவுரியின் இந்த வஞ்சகமான கொலைக்கு அவன் தரப்பில் ஒரு சமாதானமும் சொல்லப்பட்டது. முதலாவது, செம்முடி கொண்ட இதுபோன்ற செம்பரட்டைத் தலையினை மவுரி இதற்கு முன் கண்டதில்லை. செம்பரட்டைத் தலையழகு மவுரியை மயக்கிவிட்டது. ஒரே வகையான உணவினை உண்டுவந்தவனுக்கு மாறுதலான உணவின்மேல் ஆசை பிறந்துவிட்டது. பார்னீ புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவன். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவனின் மாமிசம் அருவருப்பான துர்நாற்றம் வீசும். அதனால், அது மவுரிக்குப் பிடிக்காது. சென்ற நூற்றாண்டில், மவுரி நரமாமிசம் தின்பவனாக இருந்ததுவும் ஒருவகையில் நன்மையே. இல்லாதபோனால் , குப்பையைக் கொண்டு வந்து கொட்டுவதுபோல, பிரிட்டீஷ் அரசு கிரிமினல் குற்றவாளிகளைக் கொண்டுவந்து நியூசிலாந்தை நிரப்பியிருக்கும். அத்தகைய நிலைமையில், நியூசிலாந்து இன்றிருப்பது போன்று நல்லகுடி மக்களை உடையதாக இருந்திருக்குமோ என்பது ஐயமே.     நியூசிலாந்து பயண நினைவுகள் III []      அனைத்துலக உல்லாசப் பயணிகளையும் நியூசிலாந்துக்கு ஈர்ப்பது இங்குள்ள புவியியல் அதிசயங்களே. (Geological நியூசிலாந்து தோன்றியதே புவியியல் அற்புத நிகழ்ச்சியின் விளைவால் என அறிய வேண்டும். பல மிலியன் ஆண்டுகளுக்கு முன் பூமியின் அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் அசைந்து நகர்ந்தமையால், பூமியின் மேற்பரப்பில் பல மாற்றங்கள் விளைந்தன. பூமியின் அடியில் பாறைகள் உருகி எரிமலைகளாக வெளியில் கக்கின. அந்த அடுக்கடுக்கான சாம்பல் மலைகளையே நியூசிலாந்து எங்கிலும் காண்கிறோம். கற்பாறைமலைகள் மிகக் குறைவே. நியூசிலாந்தின் வடதீவில் இருக்கும் ‘ரொற்றுவா’(Rotrua) மாவட்டம் இன்றும் எரிமலைகளின் செயல்பாடுகளுக்கு இருப்பிடமாக உள்ளது. வெலிங்டன் நகரைத் தாண்டி ரொற்றுவா செல்லும் வழியெல்லாம் பச்சைப்பசேல் எனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகள்; பண்ணை வீடுகள்; ஆட்டுமந்தைகள்; பால்பண்ணைகள். அடர்ந்த காடுகள். [Screenshot from 2018-03-18 15-37-11]         வழியில் ஆங்காங்கே பயணியரின் வசதிக்காகச் சாலையோரப் பூங்காக்கள் உள்ளன. சாலையோரப் பூங்காக்கள் அனைத்திலும் கழிப்பறை வசதி உள்ளது. இதனை ‘லூ’(Loo) என்கின்றனர். அதனருகிலேயே கழிவுகளைப்போடும் பாதுகாப்பான குப்பைத் தொட்டியும் உள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியானாலும் திறந்த வெளியில் அசிங்கம் செய்வதோ குப்பை போடுவதோ இங்கு அறவே இல்லை. விடியற்காலையில் வெலிங்டனை விட்டுப் புறப்பட்ட நாங்கள் காலை 11மணியளவில் ‘தெளபோ’(Taupo) என்னும் ஏரியை அடைந்தோம். இது நியூசிலாந்தின் மிகப்பெரிய ஏரி. 240 சதுரமைல் பரப்பு உள்ளது. 25மைல் நீளமானது. ஏறக்குறைய சிங்கப்பூரின் பரப்பளவைக் கொண்டது. பார்ப்பதற்குக் கடல் போலக் காட்சியளிக்கின்றது. மிக அழகான சூழலைக் கொண்டுள்ளது. பார்ப்பதற்கு மிக அழகாகவும் அமைதியாகவும் தோற்றம் அளிக்கும் இந்த ‘தெளபோ’ ஏரி , நீரால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் எரிமலை என்று அறிகிறோம். இந்த எரிமலை கடைசியாக 1810ல் வெடித்துச் சிதறியது. இதன் பாதிப்புச் சீனாவின் வெப்பநிலையிலும் மாற்றம் விளைவித்ததாம். அப்பொழுது தோன்றியதுதான் இந்த ஏரி.                          [Screenshot from 2018-03-18 15-38-55]                                     இந்த ஏரியின் தென்கரையில் மும்மூர்த்திகளைப்போல மூன்று எரிமலைகள் உள்ளன. அவை ’ருவாபெகு’(Rua Pehu), ‘தொங்கரியரோ’(Tongariro), ‘நங்கரொசொ’(Nagarohoe)         என்பன. இவை பனிபடர்ந்த எரிம்லைகள். ஆனால் இவற்ரின் அடிவாரம் புல்பூண்டற்ற பாலைவனம். இவற்றின் அருகில் செல்லும் நெடுஞ்சாலைக்குப் ‘பாலைவனச் சாலை’ (Desert Road) என்று பெயர் வழங்குகிறது.. [] []          ‘ருவாபெகு’(Rua pehu) 1996l குமுறியது. அதிக அழிவை விளைவிக்காமல் புகையையும் புழுதியையும் மட்டும் கக்கி அடங்கியது. இந்த மலைத்தொடரில் ஃவக்கப்பாப்பா(Whakkapapa), ‘துரோவா’ (Turova), ‘துகினொ’(‘Thukino )         என்னும் மலைச்சாரல்களில் பனிச்சறுக்கு விளையாட்டு மைதானங்களுள்ளன. வசந்த காலம் முழுவதும் இங்கு பனிபடர்ந்து இருக்கும். குவியும் பனியைத் ‘தூற்றுவான்’(Blower)         கொண்டு சமதளம் ஆக்குகிறார்கள். மழையால் களிமண்பூமி சேறாவதுபோல் இங்குப் பனிச்சேறு கண்டேன்.         கண்கொள்ளாக் காட்சி. நண்பகல் ‘ரொற்றுவா’ வை அடைந்தோம். ரொற்றுவாவை நெருங்க நெருங்க கந்தகமணம் மூக்கைத் தொளைத்தது. ரொற்றுவாவுக்குக் ‘கந்தகநகர்’ (Sulphar City) என்றொரு பட்டப் பெயரும் உண்டு.         இந்த நெடியை அழுகிய முட்டையின் மணத்துக்கு இணையாகக் கூறுவர். நீண்டநேரம் மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. சீக்கிரம் பழகிப்போய்விடும். செல்லும் வழியெல்லாம் ஆங்காங்கே கந்தகமணத்துடன் பூமியிலிருந்து புகை பொத்துக் கொண்டு வருவதைக் காணலாம். நிலத்தின் அடியிலிருந்து வரும் இந்த வெப்பமான வாயுவைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ரொற்றுவாவில் வாழும் மக்களிடமும் கந்தக நெடி வீசும் எனத் ’தமாஷ்’ செய்வதுண்டு. உள்ளூர் மக்களும் அதை நகைச்சுவையோடு ஏற்றுக் கொள்வர். ரொற்றுவா மவுரிகளுக்கு முக்கியமான ஒரு நகரம். மவுரிகள் இன்றும் அங்கு பெரும்பான்மையராக வாழ்ந்து வருகின்றனர். உலகின் பிறநாடுகளிலிருந்து மவுரிகளின் கலாச்சாரத்தைக் காணப் பல்லாயிரம் பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர். நாங்கள் முதலில் ‘வக்கவரேவரேவா’ (Whakarewarewa) என்ற இடத்திற்குச் சென்றோம். ஹவாய்க்கித் தீவிலிருந்து எட்டுத்தோணிகளில் புறப்பட்ட மவுரிகளில், ‘அரவா’ (Arawa)         என்னும் பெயருடைய தோணியில் வந்த மவுரிகள் இப்பகுதியில் குடியேறிப் பெருகினர். மவுரிகள் அனைவரும் கலப்பினத்தராகிப் பண்பாட்டு மாற்றம் எய்தி, நகர்களுக்குக் குடியேறிவிட்டதால், உல்லாசப் பயணிகள், மவுரியரின் பண்டைய வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்துகொள்ள, ‘வக்கரேவரேவா’வில் மவுரியரின் ‘மாதிரி கிராமம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.         150- 200         ஆண்டுகளுக்கு முற்பட்ட மவுரியின் வாழ்க்கையை அங்குக் கண்டு அறிந்து கொள்ள முடியும். நுழைவுச் சீட்டு வாங்கி உள்ளே சென்றவுடன் அனைவரையும் வரவேற்பு அறையில் அமர்த்தி ஒரு மவுரிப்பெண் அழகான ஆங்கிலத்தில் அனைவரையும் வரவேற்று மவுரியின் வாழ்க்கையை விளக்குகின்றாள். மவுரியின் கிராமம் அல்லது குடியிருப்பு ‘பா’(Pa) எனப்படும். ‘பா’ பெரும்பாலும் குன்றின் உச்சியில் இருக்கும். அங்கிருந்து அடிவாரத்தில் உள்ளோர் நடமாட்டத்தைக் காணும்படியாக இருக்கும். ‘பா’வைச் சுற்றிலும் வேலி போடப்பட்டு இருக்கும். அதைச்சுற்றி அகழி வெட்டப்பட்டிருக்கும். பகைவர் நடமாட்டத்தை அறிய உயர்ந்த பரணும் மறைவாக அமைக்கப்பட்டிருக்கும். []          மவுரியின் குடிசைக்கு,’வரே’(Whare) என்று பெயர். ‘வரே’ தாழ்ந்த , உயரம் குறிந்த வாயில் உள்ளதாக இருக்கும். சமையல் திறந்த வெளியில்தான் நடக்கும். சட்டி, பானை போன்ற பாண்டங்கள் பயன்பாட்டில் இல்லை. நெருப்பில் காய்ந்த கற்குவியல்தான் அடுப்பு, சமையல்பாத்திரம் எல்லாம். குடியிருப்பில் உள்ளோர் அனைவருக்கும் பொதுவாகவே உணவு சமைக்கப்படும். வக்கரேவரெவாவில் உள்ள மாதிரி கிராமத்திலும் பெரிய உணவு விடுதிகளிலும் உல்லாசப்பயணிகளின் மகிழ்ச்சிக்காக இத்தகைய உணவு சமைத்து (சுட்டு) உண்ணுவது மவுரிகளால், பொழுதுபோக்குக் கேளிக்கையாக நடத்தப்பட்டு வருகின்றது.                 உணவைச் சேமித்து வைக்கப்படும் வீட்டுக்குப் ‘பதகா’(Patka) என்று பெயர். இது நான்கு பெரிய தூண்களுக்குமேல் நான்கு அல்லது ஐந்தடி உயரத்தில் எலி முதலியனவற்றிற்கு எட்டாதவாறு அமைந்திருக்கும்.         ‘பா’ வின் நடுவில், தலைவனின் வீட்டுக்கு அருகில் ‘மராய்’         (Marae)         எனப் பெயர் உடைய இல்லம் அமைந்திருக்கும். கலை உணர்ச்சியுடன் கட்டப்பட்டிருக்கும் இந்தப் பெரிய இல்லம், மவுரி சமூகப் பண்பாட்டு அமைப்பில் மிகப் புனிதமானதும் முக்கியமானதுமாகும். ஐரோப்பியர் வருகைக்கு முன் ‘மராய்’ மவுரிகள் அனைவரும் நாள்தோறும் கூடி முடிவெடுத்துச் செயல்படும் சமூக மையமாகும்(Community Centre)                                                                                                                                                          []          மராய் கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் நெடிய சடங்குகள், இந்தக்கட்டிட அமைப்பு எத்துணைப்புனிதமும் முக்கியமும் வாய்ந்தது என்பதைக் காட்டும். பலருடன் கலந்து பேசி, நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே மராய் கட்டுவதற்கு உரிய இடம் தேர்வு செய்யப்படும். இதில் புரோகிதனுக்குப் பெரும் பங்கு உண்டு. மராய் வடக்குப் பார்த்த வாயிலை உடையதாக அமைக்கப்படும். மராய் கட்டுவதற்குத் தேவையான மரங்களை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுப்பர். மரங்களை வெட்டுவதற்கு முன்னும்         மராய் கட்டும்போதும் ‘கராக்கி’ (Karaki) என்னும் மந்திரப்பாடல்களைப் பாடுவர். பழங்காலத்தில் மராயிக்கு அடிக்கல் நாட்டுவது நரபலியோடு கூடிய சடங்காக இருந்தது. கிராமத்தில் செல்வாக்குள்ள குடும்பத்து இளைஞன் ஒருவன், அவன் மவுரித்தலைவனுடைய மகனாகக் கூட இருக்கலாம், -பலியிடப்படுவான். அவனுடைய இருதயத்தை எடுத்துச் சமைத்து, அதாவது, நெருப்பில் சுட்டு, புரோகிதன் தின்பான். அதன்பின், முறைப்படி பலசடங்குகளைச் செய்வான். பலியிடப்பட்ட இளைஞனின் பெருமை, புகழ் , செல்வாக்கு என்பன்வற்றிற்கேற்ப மராயின் புனிதமும் அமையும் என நம்பப்பட்டது. குடியின் பழைமையன சின்னங்கள் (Tribal relics) , பழைய கருவிகள் போன்றன முன்வாயிலில் உள்ள தூணுக்கு அடியில் புதைக்கப்படும். மராய் கட்டும் பணியில் பெண்மக்களை விலக்கியே வைப்பர். மராய் கட்டி முடிந்தவுடன், கிராமத்தார் முன்னிலையில், தங்கள் குடியுடன் தொடர்புடைய பெயரை மராய்க்குச் சூட்டுவர். அதன், பின்னர், புரோகிதனான ‘தோகுங்கா’ கட்டிடத்தின் மீது உள்ள ‘தபு’ அல்லது தீட்டினைப் போக்கும் சடங்கினைச் செய்வான். இந்த முக்கியச் சடங்கு செய்யும்போது, மராய்க்குத் தொடர்புடைய குடிகள் அனைவரும் சூழ இருப்பர். நம்நாட்டில் புரோகிதர்கள் சடங்குகளுக்குத் தர்ப்பைப் புல்லைப் பயன்படுத்துவதைப் போல மவுரிப் புரோகிதன் ‘கராமு’ (Karamu) என்னும் ஒருவகைச் செடியின் தழைக்கொத்தினைப் பயன்படுத்துவான். இந்தத் தழைக்கொத்து புனிதமானதாகக் கருதப்பட்டது. உரிய மந்திரப்பாடல்களை (கராக்கி) ஓஒதிக்கொண்டு, கராமுவின் கொத்தினால் மராயின் பாகங்களைப் புரோகிதன் தடவித் ‘தபு’வினை நீக்குவான். []          மராயின் விட்டம் 100 நீளம் வரைக்கும் இருக்கும். விட்டத்தின் முன்புற முகப்பில், தலைவாசலுக்கு மேலே, கடுகடுத்த முகத்துடன் ஒரு பதுமை வைக்கப்படும். நம்மூர் கண்திருஷ்டிப் பொம்மையைப் போல . துருத்திக் கொண்டு இருக்கும் அதன் கண்களில் ‘பெளவா’ என்னும் வெள்ளி போன்ற பிரகாசமான சிப்பி பொருத்தப்பட்டு இருக்கும். மரத்துண்டில் குடைந்து செய்யப்பட்டிருக்கும் இந்த பதுமைக்கு,’தெக்கொதெக்கொ’ (Tekoteko) என்று பெயர்.இந்த பொம்மை மராயின் வாசல் முகப்பில் இருந்து கொண்டு தீய ஆவிகள் உள்ளே நுழைந்து விடாமல் தடுக்கும் பணியினைச் செய்யும். புரோகிதன் இந்தப்பொம்மைமேல் ‘கராக்கி’ மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டு ‘கராமுக்’கொத்தினால் தடவுவான். இதனால், அந்தத் ‘தெக்கொதெக்கோ’ தீயனவற்றைத் தடுக்கும் ஆற்றலைப் பெறும். இதன் பின் மராயில் இருக்கும் ஒரே சாளரம் வழியாக உள்நுழைந்து வாயில் கதவினைத் திறந்து வெளிவருவான். அன்றைய நிகழ்ச்சி அத்துடன் நிறைவுறும். [] [] []          அடுத்தநாள் விடியற்காலை, விடிவெள்ளி (கோப்பு Kopu) தோன்றியவுடன் , நற்குடிப் பிறப்பும் உடல்நலமும் வாய்ந்த வயதில் மூத்த பெண்கள் மூவர் ‘கராக்கி’ எனும் பாடல்களைப் பாடிக்கொண்டே வாயிலின் வழியாக மராயின் உள்புகுந்து புதுமனை புகுதலைச் செய்வார்கள். இந்தச் சமுதாயக் கூடத்தைக் காக்கும்படி அவர்கள் தெய்வங்களை வேண்டுவார்கள். பெண்கள் புதுமனைபுகும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே, மரயின் உள்ளெ பிறர் வருவர். இது நம்மூர்க் ‘கட்டுக்கழுத்தி’ப் பெண்களுக்கு உள்ள சிறப்பினைப் போன்றது. மராய் பற்றிய செய்திகள் சற்று நீண்டு விட்டன. இதனை விரித்து எழுதியதற்குக் காரணம் உண்டு. மவுரிகள் இன்று கலப்பினமாகிப் பழைய பண்பாடுகளை இழந்து வரும் நிலையில், தம்முடைய பழமைத் தொடர்பினைப் புதுப்பித்துக் கொள்ள மவுரிகளுக்கு இன்றும் துணையாக நிற்பது ‘மராய்’ என்னும் இந்த அமைப்பே. மவுரிகள் கிறித்துவர்களாக மதம் மாறிய பின்னரும் அவர்கள் தங்களுக்கென உருவாக்கிய சர்ச்சுகளில் ‘மராய்’யினை அமைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுடைய சர்ச்சு நடவடிக்கைகளில் மராய் முக்கிய பங்கு வகிக்கின்றது.          மாராய் மரத்தால் ஆன வெறும் கட்டிடமல்ல.அது மவுரிக்கு அவனுடைய மூதாதையரின் இருப்பிடம். (Wharetipura – ancestral house). மராய் மூதாதையரின் உருவமுமாகும். மராயின் முகப்பில் அமைக்கப்படும் ‘கொருகு’ எனும் உருவம் மூதாதையரின் தலையைக் குறிக்கும். முகப்பில் விட்டத்தோடு பொருத்தி அமைக்கப்படும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பலகை (Barge Boards) ,’மாய்கி’(Maiki) மூதாதையரின் கரங்களைக் குறிக்கும். அதன்முனையில், நீட்டிய விரல்களைப்போல் அமைந்திருக்கும் உறுப்புக்கு ‘ரபரப’(Raparapa) என்று பெயர். அது ஒருவரை அணைக்கும்போது விரல்கள் நீண்டு இருப்பதைக் குறிக்கும். முன்புறத்தில் உள்ள தூண்கள் ‘அமோ’ எனப்படும். அவை மூதாதையரின் கால்களைக் குறிக்கும். விட்டம் முதுகெலும்பையும், குறுக்குச் சட்டங்கள் விலா எலும்புகளையும் குறிக்கும். மராயின் முகப்பில் உள்ள தோரணவாயில் ‘ரோரோ’(Roro) எனப்படும். அது மூதாதையரின் மூளையைக் குறிக்கும். மராயின் உள்ளே சிற்ப வேலைப்பாடுகளோடு கூடிய தூண்கள் குல முன்னோர்களைக் குறிக்கும். எனவே, மராயினுள்ளே நுழைவோர், மூதாதையரின் அன்புக்கு உரியோராவர் என்பது கருத்து. அதற்குத் தகுதி உடையவர்களே உள்ளே அனுமதிக்கப்படுவர். கிராமத்திற்கு விருந்தினர் வந்தால் அவர்களை ‘மராயி’யில்தான் வரவேற்பர்.                                                                                                         அதற்கென ஒரு சம்பிரதாயமுறை உண்டு. அது இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றது. மராயினுள் உணவு உட்கொள்வதோ காலணி அணிந்து செல்வதோ கூடாது. மியூசியத்தில் உள்ள மாதிரி மராயிலும் கூட இந்த நடைமுறை உள்ளது. நியூசிலாந்துக்கு வெளிநாட்டுப் பிரமுகர்கள் வருகைதரும்போது அரசுமுறையில் இராணுவ வரவேற்போடு , பொதுமக்கள் வரவேற்கும் முறையில் மராயில் மவுரி சம்பிரதாயத்தோடு வரவேற்பு அளிப்பது இந்நாட்டுப் பண்பாக உள்ளது                                                                                         மராய்க்குச் சொந்தமான , அதாவது, தாயாதிகளும் கிளையினரும் ‘தங்கத்தாவெந்நுவா’ (Tangata whenua) எனப்படுவர். விருந்தினர் ‘மனுகிரி’(Manuhiri) எனப்படுவர். மராய்க்கு வருகை தரும் மனுகிரியிடம் அவர்கள் சமுதாயத்துக்குரிய ‘தபு’ இருக்கும். அது, ‘தங்கதவெந்நுவா’வுக்குத் தீங்கு இழைக்கக் கூடியதாகவும் இருக்கக் கூடும். அதைப் போக்குவதற்கு, மனுகிரியாகிய விருந்தாளிகள் முறையான சடங்கு ஒன்றினுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் அதன் மூலம் விருந்தாளிகள் மராயினுட் புகத் தூய்மையாகின்றனர். அவர்களை ஒட்டிக் கொண்டு வரும் தீயசக்திகள் தவிர்க்கப்படுகின்றன. விருந்தினர் மராய் எல்லையினுள் வந்தவுடன் ’தங்கதாவெந்நுவா’ வீரன் ஒருவனோ பலரோ நீண்ட கழியைச் சுழற்றிக் கொண்டு, துருத்திய நாக்கும் உருட்டிய கண்ணுமாகச் சண்டைக்கு வருவாரைப் போல் உரக்கக் கூவிக் கொண்டு வேகமா வருவர். அவர்கள் ஆடிவருகின்ற கூத்தின் பெயர் ‘ஹக்கா’ (Hukka). என்பதாம். கழியை விருந்தினர்கள் முன்பு நீட்டிக் கொண்டு தரையில் ஃபெர்ன் (fern) இலையையோ அது போன்ற ஒன்றையோ வைப்பர். தோழமையுடன் வரும் மனுகிரி அதி எடுத்துக் கொள்வர். அதை எடுத்துக் கொள்ளாதவர் பகையெனக் கருதப்பட்டுக் கொல்லப்படுவர். விருந்தினர் அதை எடுத்துக் கொண்டவுடன் மூதாட்டியான மவுரிப்பெண் ஒருத்தி, உரத்த குரலில், ‘கராகி’ ஒன்றை இசைப்பாள். அது விருந்தினர்கலை மராயினுள் அனுமதிக்கும் அறிகுறியாகும். அந்தப் பெண்மணி இசைக்கும் ‘கராயி’யினால் விருந்தாளியின் ‘தபு’ நீக்கப்படுகிறது அல்லது செயலிழக்கச் செய்யப்படுகிறது. விருந்தாளிகள் அமைதியாக மராயி வாயிலில் நிற்க வேண்டும். ‘வெந்நுவா’(host) ‘மனுகிரி’(visitor) ஆகியோரின் இறந்துபோன மூதாதையர்களுக்கு வணக்கம் செலுத்தியபின், வரவேற்பு உரை நிகழ்த்தப்படும். மவுரித் தலைவன் அமர்ந்த பின்னர் அனைவரும் அமர்வர். ‘தங்கத்த வெந்நுவா’ , ‘மனுகிரி’யின் மூக்கின் மீது தன் மூக்கை வைத்து மெல்ல அழுத்தி அசைப்பார். இது, விருந்தினருக்குச் செய்யும் வணக்கமும் மரியாதையும் ஆகும். இப்படிச் செய்யும் மரியாதைக்கு ‘ஹோங்கி’ (Hongi) என்று பெயர். இச் சடங்கு இப்பொழுது உல்லாசப்பயணிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் நிகழ்த்திக் காட்டும் கலைநிகழ்ச்சி, நாடகம் போலாகிவிட்டது.         1990ஆம் ஆண்டு ‘வைத்தாங்கி உடன்படிக்கை நாள்’ விழாவுக்குப் பிரிட்டீஷ் அரசியார் இராணி எலிஸபெத் வந்திருந்தார். அவருக்கு மவுரி சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின் அடிப்படையை அறியாத ஸ்விஸ் நாட்டு நிருபர் ஒருவர், ‘அரசியாரின் வருகையை விரும்பாத மவுரிகள் அவருக்கு எதிராகக் கலகம் செய்து போருக்கெழுந்தனர்’ என்று தம்முடைய பத்திரிக்கைக்குச் செய்தி அனுப்பினார் என்றால் , அந்த வரவேற்பு ‘ஹக்கா’ எப்படி இருந்திருக்கும்? அந்த நிருபர் அனுப்பிய செய்தி: “It was not exactly a friendly welcome the English Queen Elizebeth receive in Newzealand , for a welcome , a woman demonstrator trew a flagpole in her direction, and about 500 chieftains of the original Maori population led a war dance, poking out their tongues and threatening her with spears, “go home,Queen’. The Queen tried to sooth the Maoris, but , they only replaced with scoffs and war cries” மவுரி மாதிரி கிராமத்தில் , மவுரி மரச்சிற்பப் பயிற்சிக்கூடம் ஒன்றும் கத்தாழை போன்ற ஃபேக்ஸ் எனும் செடியிலிருந்து நாரெடுத்து ஆடை நெசவு செய்யும் கட்சிக்கூடம் ஒன்றும் உள்ளன. மவுரிகள் பரம்பரையாக மரத்தைக் குடைந்து சிற்பங்கள் செய்வதில் வல்லவர்கள். சிற்பங்கள் என்றால் நம் நாட்டுக் கோவில்களில் உள்ள தேர்களில் காணப்படும் சிற்பங்களைப்போல என நினைத்துவிடக் கூடாது. பழங்குடி மக்களின் சமயச்சின்னங்களுடன் தொடர்புடையன, அம்மரச் சிற்பங்கள். அதற்கேற்ற உறுதியான மரங்கள் நியூசிலாந்தில் மிகுதியாக இன்றும் உள்ளன. ஈட்டி, தேக்கு போலக் ‘கவுரி’(kowri) என்னும் ஒருவகை மரம் நியூசிலாந்தின் இயற்கைச் செல்வம். உறுதியானதும் மிக உயரமாக வளரக் கூடியதுமான இவ்வகை மரம் அருகி வருகின்றது. இதனைப் பாதுகாக்க அரசு மிகுந்த அக்கறை கட்டி வருகிறது. மவுரியின் நீண்ட தோணிகளும் குடி சிற்பங்களும் இவ்வகை மரத்தில் அமைக்கப்பட்டவை. ஃபேக்ஸ் என்னும் செடி தாழை போன்ற வடிவமுடையது. பழங்காலத்தில் ஃபேக்ஸ்சின் தாழையினைக் கிளிஞ்சில் போன்றதொரு சிப்பியினால் சுரண்டி, சோற்றுப்பசையினைப் போக்கியபின் மரத்தால் அடித்து நாராக்கி அதனைப் பாய்போல் முடைந்து மவுரி உடுத்துக் கொண்டான்.. இவ்வாறு ஃபேக்ஸின் பயன்பாட்டுச் செயல்விளக்கம் மவுரி கிராமத்தில் காட்டப்படுகிறது. ரொற்றுவாவிலுள்ள ‘தெர்மல்’ அதிசயங்களில் ‘வக்கரேவரேவா’ வெந்நீர் ஊற்றுக்கள் முக்கியமானவை. நிலப்பிளவுகளிடையிலிருந்து வெந்நீர் ஊற்று, புகைப்படலத்துடன், பத்துப்பதினைந்தடி உயரத்திற்குப் பீச்சி அடிக்கின்றது. அப்பகுதி முழுவதும் கந்தக நெடியுடன் கூடிய புகைமண்டலமாகக் காட்சியளிக்கின்றது. கொதிக்கும் நீரானதால், பார்வையாளர்கள் அதனருகில் மிக நெருங்கி விடாதபடி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் வெந்நீர்க் குளமாக அப்பகுதி இருப்பதால், குட்டையான புதர்களைத் தவிர வேறு செடிகொடிகள் ஒன்றும் அங்கு இல்லை. [Screenshot from 2018-03-18 15-40-29]                வெந்நீரூற்றுக்குச் சற்று தூரத்தில், வெப்பமான களிமண் குட்டை (Mud Pool) ஒன்று உள்ளது. அதில் குமிழ்கள் தோன்றிப் பெரிதாக விரிந்து ‘டப்’ என்ற ஒலியோடு வெடிக்கின்றன. அதிலிருந்து அலைகள் வட்ட வட்டமாகத் தோன்றி விரிகின்றன. இவ்வாறு வெடிக்கும் குமிழ்களிலிருந்து தோன்றி மலர்ந்து விரியும் அலைகள் அழச்கிய இயற்கை ஓவியமாகக் காட்சி அளிக்கின்றது. இந்தக் களிமண் குட்டையைச் செல்லமாகக் ‘கஞ்சிக்கலயம்’ (Porridge Pot) என்கின்றனர். வெந்நீரூற்றுக்கு அருகில், நியூசிலாந்தின் தேசியப் பறவையாகிய கிவிப்பறவைகளை , அதன் இயற்கைச் சூழலில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். கிவி மிகவும் கூச்சமான பறவை. சிறிய பறவை. மனிதர்களீன் பார்வைக்கு எட்டாத இடங்களில் பகலெல்லாம் மறைந்திருந்து, இரவில் மட்டும் உணவு தேடவெளிப்படும். இதற்குப் பறக்க இயலாது. ஒருகாலத்தில் இது பறக்கும் இனமக இருந்ததற்கு அடையாளமாக இரண்டு சிறகுகள் உண்டு. அது, ‘கிவி’ பறவை இனம் என்பதற்கு அடையாளமே ஒழிய பறப்பதற்கு உதுவுவது இல்லை. கிவிக்கு நீண்ட தொலையுடைய காது உண்டு. மெல்லிய ஒலியையும் நொடியில் அறிந்து கொள்ளும். புழு பூச்சி போன்ற உணவினைப்பெற மண்ணையும் குப்பைகூளங்களையும் கிளறுவதற்கு ஏற்ற நீண்ட அலகு இதற்கு உண்டு. உணர்வு உறுப்பாக மீசையும் (whiskers) உண்டு. கண்பார்வையால் அன்றி மணத்தால் இரையை அறிந்துகொள்ளும். அதற்கு ஏற்ற வகையில் இதற்கு நாசி அலகின் நுனியில் உள்ளது. நாசி அலகின் நுனியில் இருக்கும் ஒரேபறவை கிவிதான். []          கிவிப் பறவையின் இன்றைய நிலைமை அதன் பரிணாம வளர்ச்சியின் ஒருகட்டம். ‘கோண்டுவானா’(Gonduwana) நிலப்பகுதியிலிருந்து நியூசிலாந்து தனியாகப் பிரிந்த பொழுது, இங்கு ‘மோவா’ என்றொரு பறவை இனம் இருந்தது. உருவத்தில் அது மிகவும் பெரியது. அது வேகமாக ஓடும்.         ஓடும்போதே தாழ்ந்த உயரத்தில் அது பறக்கவும் செய்யும். அதனுடைய வழித்தோன்றல்தான், ஆஸ்திரேலியாவில் காணப்படும் நெருப்புக்கோழி (Ostritch). இதன் மிகப்பெரிய உருவமே இதற்குப் பகையாக ஆனது. நியூசிலாந்தில் மிகப் பெரிய கழுகு இனமும் ஒன்றிருந்தது. அந்தக் கழுகு இனத்திற்குப் பெயர் Harpagonis moora. மோவாவின் பெரிய உருவம் பறந்து வந்து தாக்கும் மிகப்பெரிய கழுகினத்திற்கு எளிதில் கிடைக்கும் இரையாயிற்று. பெரிய உருவுடைய இந்த இருவகைப் பறவைகளுக்கும் நடந்த போராட்டத்தில் இரண்டுமே அழிந்தொழிந்தன. எஞ்சிய மோவாப் பறவை, கழுகுக் கூட்டத்திற்குத் தப்பிப் பிழைக்க உடலைக் குறுக்கி ஒளிந்து ஒளிந்து வாழ்ந்து காலப்போக்கில் அதனுடைய பரிணாமத்தில் இன்று ‘கிவி’யாக மாற்றம் அடைந்துள்ளது. போராட்ட உணர்வினை இழந்து கூச்ச சுபாவம் உடையதாயிற்று. பகலில் வெளியில் உலவுதலைத் தவிர்த்து இரவில் உணவு தேடும் பழக்கம் உடையதாயிற்று.          ரொற்றுவா நகரிலிருந்து சுமார் 150 கி.மீ தூரத்தில் ‘வைடாமோ’(Waitomo) என்னும் ஓரிடம் உள்ளது. இந்த இடத்தில் இருக்கும் சுண்ணாம்புப் பாறைக்குகைகள் உலக உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் மிகச் சிறந்த புவியியல் அதிசயமாகும். பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி உயிரினங்கள் நிறைந்த கடலாக இருந்தது. நிலத்தின் மேற்பகுதியில் நிகழ்ந்த மாற்றத்தால் , கடலழிந்தது. உய்ரினங்கள் நிலத்தில் புதையுண்டன. அவற்றின் எலும்புகள் காலப்போக்கில் சுண்ணாம்புப் படிவங்கள் ஆயின. நில அதிர்வுகளால் பிலங்கள் உண்டாயின. நிலத்தின்மேல் எப்போதுமிருக்கும் ஈரப்பசை ஊறிஊறிச் சுண்ணாம்புப்படிவங்கள் மெலிதாகக் கசியத் தொடங்கின. சுண்ணாம்புப் படிவங்களின் அதிசய வடிவங்கள் இயற்கையன்னையின் திறத்தால் உருவாயின. ‘வைடமோ’ குகைகளின் இருப்பு 1887ல்தான் அறியப்பட்டது. ஃப்ரெட்மேஸ்(Fred Mace) என்னும் ஆங்கிலேயரும் ‘தனே தினேரு’(Tane Tinorao) என்னும் மவுரியும் இக்குகைகளைக் கண்டு ஆராயத் தொடங்கினர். குகையின் அடியில் நீரோடை இருந்தது. சிறிய ஓடத்தில் , மெழுகுவத்தி வெளிச்சத்தின் துணையோடு குகைக்குள் சென்றனர். இப்பொழுது மரப்பலகையில் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மெல்லிய மின்விளக்குகள் தேவையான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. மவுரி வழிகாட்டி உடன் வருகிறார். அதிகஒலி, ஒளி இரண்டும் குகை அமைப்பைப் பாதிக்கும் என்பதால் குகையைவிட்டு வெளியே வரும்வரை யாரும் பேசக் கூடாது என்று முன்னதாக அறிவித்த பின்னரே குகைக்குள் பார்வையாளர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மங்கிய ஒளியில் வெண்ணிறமான படிவங்கள் ஏதோ ஆவியுலகத்துக்குள் நுழைந்துவிட்ட மருட்கையினையும் அச்சத்தையும் அளிக்கின்றன. இன்றைய நிலையிலேயே நமக்கு இத்தகைய உணர்வினை இக்குகை தருகின்றதென்றால் , பேயுலகத்தை முழுதும் நம்பும் மவுரியுடன் மெழுகுவத்தி வெளிச்சத்தில் சென்ற அந்த வெள்ளைஆய்வாளரின் நிலை எப்படியிருந்திருக்கும் எனச் சற்றுக் கற்பனையில் கண்டு நாமும் அனுபவிக்கலாம். ஒளியும் ஒலியும் குகையின் கட்டமைப்பைப் பாதிக்கும் என்பதால் நம் பயணம் முழுவது அமைதியாகவே நடைபெறுகின்றது.                           பின்னர், குகையினுள் படகில் நம் பயணம் தொடருகின்றது. கும்மிருட்டில், ஓரத்தில் பொருத்தியுள்ள கம்பிக் கிராதியைப் பற்றிக் கொண்டு, ‘வழிகாட்டி’         உந்திஉந்திப் படகைச் செலுத்துகிறார். துடுப்புப் போட்டால் தண்ணீரில் சத்தம் உண்டாகும் என்று         இவ்வாறு செய்யப்படுகிறது. திடீரென , விண்மீண்கூட்டம் நிறந்த நீலவானம் நம் கைக்கு எட்டும் தூரத்தில் வந்து விட்டது போன்ற தோற்றம்! உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கண்கொள்ளாக் காட்சி. அத்தனையும் ஒருவகை மின்மினிப் புழுக்கள்(Glow worm). ஈரப்பசையுள்ள சுண்ணாம்புப் படிவங்களின் மீது வந்து ஒட்டும் சிறுபூச்சிகளே இந்தப் புழுக்களுக்கு உணவு. ஓளிவீசும் புழுக்கள் நிறைந்திருப்பதனால் இந்தக்குகைக்கு ‘Glow worm Caves) என்று பெயர்.படகு நீரில் மிதந்து நழுவிச் செல்லும் ஓசையும் மேலிருந்து கசிந்து நீர் சொட்டும் ஓசையும் அல்லது வேறு ஓசையே இல்லை. ஒருவகையான திகிலுணர்வுடன் இந்தக் குகையைக் கடந்து வெளியே வந்தவுடன் ‘அப்பாடா’ என்று பயணிகள் எல்லோரும் கைதட்டி ஆரவாரித்து மகிழ்ந்தனர்.          [] ‘வைடோமோ’ மின்மினிப்புழுக்குகையிலிருந்து 3கிமீ தூரத்தில் ‘அரனூயி’ (Aranui) என்னும் இடத்தில் மற்ரொரு குகை உள்ளது. இது 1911ல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அரனூயி என்னும் மவுரியால் கண்டு பிடிக்கப்பாட்டது. அதனைக் கண்டுபிடித்த மவுரியின் பெயரே அந்தக்குகைக்குப் பெயராயிற்று. ரொற்றுவாவில் உள்ள மூன்று சுண்ணாம்புப்படிவக் குகைகளிலும் இதுவே மிக அழகானதாகக் கருதப்படுகின்றது. நம் கயிலை மலையைச் சுற்றி வருவோர் , எந்தெந்த வடிவத்தை நினைக்கிறார்களோ அந்த வடிவங்களைக் கண்முன் காண்பார்கள் என்று கூறுவார்கள். அதைபோலவே, இங்கு, எனக்கு, வெண்பளிங்கினால் செதுக்கப்பட்ட அழகிய சிற்பங்கள், தூண்கள், கோயில் கோபுரங்கள், மண்டபங்கள்,, இராமேசுவரத்தில் உள்ள அழகிய திருச்சுற்றுக்கள் போலக் காட்சியளித்தன. Stalactities என்னும் மென்மையான சுண்ணாம்புப் படிவங்கள் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த திரைச்சீலைகள் போல இருக்க , அவற்றின் பின்னல் அமைக்கப் பெற்றிருந்த ஒளிவிளக்குகள் இயற்கை அழகுக்கு வண்ணஒளி அளித்தன. வெள்ளிச்சரிகையில் செய்யபட்ட நுண்ணிய கலைவடிவங்களைப் போல இயற்கையன்னையின் கவண்ணங்கள் அமைந்திருந்தன. Stalagmite         என்னும் சுண்ணாம்புத் திடப்படிவங்கள் பெரிய பெரிய தூண்களைப் போலவும் பெரிய பெரிய மரங்களைப் போலவும் காட்சியளித்தன. சில இடங்கள் பெரிய தூண்களை உடைய பிரம்மாண்டமண்டபங்களாகக் காட்சியளித்தன.          இந்தக் குகைகளின் அழகை வருணிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.         இந்தக் குகைகளுள் இருக்கும் போது விட்டலாச்சாரியா படங்களில் வருவது போன்ற மாயக்குகைகளுள் இருக்கின்ற அச்சம் உண்டானபோதிலும் அருகில் மக்கள் இருப்பதால் கலக்கம் உண்டாவதில்லை. இந்தக்குகைகளில் உள்ள படிமங்கள் கணந்தோறும் வளர்ந்துகொண்டே இருக்கின்றனவாம். இரு கியூபிக் சென்டிமீட்டர் வலர 100 ஆண்டுகள் ஆகுமாம். ஒரு அங்குலம் வளர 500 ஆண்டுகள் ஆகுமாம். அப்படியென்றால் இன்று காட்சியளிக்கும் அளவுக்கு வளர எத்தனை நூறு ஆண்டுகள் ஆயிருக்கக் கூடும்? மலைப்பாக இருக்கின்றது. சுற்றுலாப்பயணிகளின் வருகையால் , சுற்றுச்சூழல் மாசுபட்டு, இயற்கையன்னையின் கலைப்படைப்பாகிய இந்தக் குகைகள் சிதைந்து போகாமல் காப்பதற்கு இந்த நாட்டரசு மேற்கொண்டுவரும் கடுமையான நடைமுறை ஒழுங்குகள் பெரிதும் பாராட்டத் தக்கனவாகும். ‘ரொற்றுவாவுக்கு அருகில் ‘வைரோவா’(Wairoa)         என்றொரு சுற்றுலாத்தலம் உள்ளது. 120 ஆண்டுகளுக்கு முன் இங்குச் சுறுசுறுப்பான வளமான கிராமம் ஒன்று இருந்தது. அருகில் ‘தரவேரா’ என்றொரு ஏரியும் (Lake Tarawera) “ரொட்டொமஹானா” (Rotomahana) என்றொரு ஏரியும் இருந்தன. தரவேரா ஏரியை ஒட்டி ‘தரவேரா’ மலையும், மலைச்சாரலில் தேனடைகள்போல நீராவியுடன் கூடிய வெந்நீர் ஊற்றுக்களும் இருந்தன. இந்த கிராமத்துக்கு இருந்த மற்றொரு சிறப்பு, இங்கு எட்டு ஏக்கர் அளவுக்குப் பரவியிருந்த இளஞ்சிவப்பு, வெண்ணிறமான பாறை அடுக்குகள் (Pink Terrace, White Terrace). சுமார் 800அடிக்கு மேலிருந்த வெந்நீர் ஊற்றுகளிலிருந்து நீர் இந்த அடுக்குகளின் மேல் வீழ்ந்து தவழ்ந்து வந்தது. மழம்புழா போன்ற அணைகளில் , படிக்கட்டுக்கள் போல அமைத்து உயரத்திலிருந்து நீரைத் தவழவிட்டு, மின்னொளியில் செயற்கையாகக் காட்டும் வண்ண ஜாலத்தை இங்கு இயற்கையன்னை கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வண்ணமுடையதாகச் சமைத்திருந்தாள். கதிரவனின் ஒளியில் இப்பாறை அடுக்குகள் இளஞ்சிவப்பாகவும் வெண்பளிங்கு போலவும் சுடர்விட்டுப் பிரகாசித்தன. கந்தகம் கலந்த வெந்நீர் நீலநிறத்தில்         படிக்கட்டுகளில் தவழ்ந்து ஒழுகி அழகை மேலும் கூட்டின. இயற்கையின் இந்தக் கோலத்தைக் காண உலகெங்கும் இருந்து பயணிகள் வந்தனர். அவ்வாறு வந்த பயணிகள் முதலில் தங்குவது, ‘வைரொவா’ என்னும் இந்தக் கிராமத்தில்தான். இங்கு மவுரிக் குடியிருப்பு ஒன்றும் இருந்தது. பயணிகள் தங்க ‘ரொடொ மஹானா’ (Hotel Rotomahana) என்னும்         இரண்டடுக்குக் கட்டிட உணவு விடுதியும் இருந்தது. 1850களில் ‘டூரிச’ வணிகம் இங்கு அமோகமாக நடந்தது. 1886 ஆம் ஆண்டு ஜூன்மாதம் 9 ஆம் நால் இரவு வைரோவா மக்கள் நிலத்தடியில் நிகழும் குமுறல்களைச் சற்றும் அறியாதவர்களக அன்றைய வாழ்க்கையை நினைந்து மகிழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்தேறியது. விடியற்காலை 1-40மணி. நிலம் அதிர்ந்தது. ‘தவேரா’ மலையின் வயிற்றிலிருந்து நெருப்புக் கோளங்கள் சீறிப் பொங்கி வெடித்துச் சிதறின. சிலமணி நேரத்தில் கிராமம் முழுவதுமே புதையுண்டு காணமல் மறைந்து ஒழிந்தது. ‘தவேரா ஏரி’ சுவறித் திடர்ப்படு மேடாயிற்று. மலைச்சாரலிலிருந்த காடுகள் எரிந்து அழிந்து போயின. நீல நிறத்தில் இருந்த ‘நீல ஏரி’(Blue Lake’)                 பயத்தால் வெளிறிப்போய்விட்டது போலச் சாம்பல் கலந்து வெண்ணிற ஏரி ஆகிவிட்டது.                  உலகத்தின் பிற எரிமலைகளால் நேர்ந்த அழிவுகளையும் உயீரிழப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ‘தவேரா’ எரிமலையால் நேர்ந்த உயிரிழப்பு மிகக் குறைவுதான். ஆயினும், தரவேராவில் விலைந்த அழிவு உலகைக் குலுக்கியது. காரணம், இயற்கை அன்னை தன்னுடைய கைவண்ணத்தால் தானே உருவாக்கி உலகத்தையே மயக்கிக் கவர்ந்திழுத்த இளஞ்சிவப்பு மற்றும் வெண்பளிங்குப் பாறை அடுக்குகள் இரண்டையும் தன்னுடைய ஆத்திரத்தால் அழித்தொழித்தது போல, அவை இரண்டும் அன்றிரவு சில மணி நேரத்தில் தொலைந்து காணாமற் போயின. உலகத்தின் நிலையாமையை மெய்ப்பிப்பது போல.          120 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்டுபோன ‘வைரொவா’ கிராமத்தை வரலாற்று அறிஞர்கள் , அகழ்ந்தெடுத்து மீட்டுருவாக்கம் செய்து வைத்துள்ளனர். கொல்லன் பட்டறையொன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. துருத்தி, சம்மட்டி, உலைக்கூடம் முதலிய கருவிகள் காட்சிப்பொருள்களாக உள்ளன. இது குதிரைகளுக்கு இலாடம் அடிக்கும் பட்டறையாகவும் வண்டிப்பட்டறையாகவும் இருந்திருக்கக் கூடும். மவுரி ‘தோஹுங்கா’(Tohungga மவுரிப்புரோகிதன்)வின் வீடு (Whare) ஒன்றும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இவன் இக்கிராமம் அழியப்போகின்றது என்று முன் கூட்டியே அறிவித்திருந்தானாம். 110 வயதான இவன் 100 மணி நேரம் மண்ணில் புதையுண்டிருந்தானாம். மீட்டு எடுக்கப்பட்டபின் சிலநாட்கள் உயிரோடிருந்து இறந்து போனானாம். மவுரி குடிசை, தோஹூங்கா குடிசை, மதுக்கடை, ரொட்டிக்கடை, ரொட்டி சுடும் அடுப்பு, உணவு விடுதி ஆகியன அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அததற்குரிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தக் கிராமம் எப்படி இருந்திருக்கக் கூடும் என ஒருவாறு கற்பனை செய்து கொள்ளலாம். நம் நாட்டில் மொஹஞ்சதாரோ, ஆதிச்சநல்லூர் முதலிய இடங்களில்நிகழ்ந்த அகழ்வாய்வுகளோடு ஒப்பிட்டால் ‘வைரொவா’ அகழ்வாய்வு ஒன்றும் பெரிதில்லைதான். ஆனால், அண்மைக்காலத்தில், வளமாக மக்கள் வாழ்ந்து, புதையுண்டுபோன மண்ணின்மீது நிற்கின்றோம் என நினைக்கும்போது ஒருவித சோக உணர்ச்சிக்கு ஆளாகிறோம். புதையுண்ட கிராமத்தில் ஒரு வீட்டின் எல்லைக்காக நடப்பெற்று இருந்த Aspon Poplars என்னும் மரக்கன்றுகளிற் சில , நிலநடுக்கத்திலும் மலைச்சரிவிலும் எரிமலைச் சீற்றத்திலும் அழிந்துபோகாமல் , இன்று நெடிதுயர்ந்த மரங்களாக அழகுடன் நிமிர்ந்து நிற்கும் அதிசயத்தையும் கண்டோம். புதையுண்ட மவுரி கிராமம் வைரோவாவில் ஒரு சிறிய மியூசியம் இருந்தது. அதில் மவுரி பண்பாட்டுத் தொடர்பான பொருள்கள் விற்பனைக்கு இருந்தது. பச்சைக்கல்லில் மனித வடிவில் செதுக்கப்பட்ட ஒன்றை என்மகள் வாங்கிக் கொடுத்தாள். மவுரிகள் அனைவரும் அதுபோன்ற ஒன்றைக் கயிற்ரில் கோத்துக் கழுத்தில் அணிந்திருப்பதைக் கண்டேன். அது மவுரியால் ம்கவும் மதிக்கப்படும் ‘திக்கி’(Tiki) எனப் பெயருடைய அணி. ‘திக்கி’ மவுரியின் மூதாதையரைக் குறிக்கும் அடையாளம். குடும்பங்களில் தலைமுறைதலைமுறையாகப் பாதுகாக்கப்படும் ‘திக்கி’ மிகச் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.          அன்றிரவு ரொற்றுவாவில் தங்கிவிட்டு , மறுநாள் காலை உணவுக்குப்பின் வெலிங்டனுக்குப் புறப்பட்டோம். வெலிங்டன் அருகில் வரும்போது மாலையாகிவிட்டது. மூன்றுநாட்கள் தொடர்ந்து விடுமுறையாதலால், வெலிங்டன் மக்கள் பெரும்பாலோர் வெளியூர் சென்றுவிட்டு மீண்டு வருகிறார்கள் போலிருந்தது. சாலையில் போக்குவரத்து நெரிசல். பல இடங்களில் நின்றுநின்று செல்ல வேண்டி இருந்தது. போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க ஆங்காங்கே போலிசார் ஒரு உத்தியைக் கையாண்டனர். சாலயோரப் பூங்காக்களில் ‘டீ’ விநியோகம் செய்தனர். லாரி போன்ற கனரக வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களை டீ அருந்திச் செல்லும்படி உபசரித்தனர்.          நியூசிலாந்தும் நிலக்கோட்டையும் []   நான் நியூசிலாந்தில் இருந்தபோது அக்டோபர் 2002ல் ஆசியா 2000 என்னும் அமைப்பு நடத்திய தீபாவளிக் கொண்டாட்டத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்குக் ‘கருணை இல்லம்’ என்ற பெயர்ப்பலகையுடன் ஒரு ஸ்டால் கண்டேன். வெள்ளை மாது ஒருவர் சில துண்டு அறிக்கைகளைக் கொடுத்தார். ஏதோ கிறித்துவ அமைப்பு நன்கொடை வசூலிக்கின்றது என எண்ணிப் பேசாது இருந்துவிட்டேன். சிலநாள்கள் கழித்து அந்தத் துண்டுச் சீட்டுக்களைப் படித்தபோது, ‘மகாத்மா கருணி இல்லம்’ என்பது தமிழகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை எனும் ஊரில் நிறுவப்பட்டுள்ள ‘அநாதைகள் விடுதி’ என்பதும், அதனை நிறுவியவர் ஜீன் வாட்சன் (Jean Watson) எனும் பெண்மணி என்றும், அவர் நியூசிலாந்தின் இன்றைய பெண் எழுத்தாளர் என்றும் அறிந்தேன். அவர் ‘கருணை இல்லம்’ என்னும் பெயரில் தாம் நிறுவியுள்ள அநாதை இல்லம் பற்றிய நூல் ஒன்று எழுதியுள்ளதாகவும் அறிந்தேன். வெலிங்டனில் உள்ள பெரிய நூல் நிலையத்தில் அந்தப் புத்தகத்தைத் தேடியபோது, அவர் எழுதிய வேறுசில புத்தகங்களும் கிடைத்தன. அவற்றுள் மூன்று புத்தகங்கள் என்னைக் கவர்ந்தன. அந்த மூன்று புத்தகங்கள்: 1. Karunai Illam – The Story of An Orphanage in India 2. Three Sea Stories. 3. Address to a King. முதல் புத்தகத்தில் ஜீன் வாட்சன் தாம் இந்தியாவுக்கு வர நேர்ந்த சூழ்நிலையை விரிவாக எழுதுகிறார். “ என் இளையமகன் தன் இளம் வயதில் 1970ல் இறந்துபோகாமல் இருந்திருந்தால் மனித வாழ்க்கையின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொள்ளவோ, அத்வைத வேதாந்தத்தைப் பயிலவோ முற்பட்டிருக்கமாட்டேன். பகவத் கீதை 7:15ல் பகவான் கிருஷ்ணர் ,’நால்வகைப் புண்ணியம் உடையோர் என்னைத் தொழுகின்றனர். ஓ அருச்சுனா!, துன்பத்தில் அழுந்தியுள்ளவன்; ஞானத்தைத் தேடுபவன்; ஞானியாக இருப்பவன், பாரதபுத்திரனே” எனக் கூறுகின்றார்.1970ல் நான் கிருஷ்ணர் குறிப்பிடும் முதல்வகையைச் சார்ந்தவளாக இருந்தேன்.” கத்தோலிக்க மதத்தில் பற்றுக்கொண்ட இவருடைய தோழி ஜாய்க்கும் (Joy) இவருக்கும் பிஜித் தீவில் உள்ள சுவாமி இராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்த துறவி ஒருவருடன் நட்பு ஏற்படுகின்றது. மூவரும் வேறுவேறு மதக்தைச் சார்ந்தவர்கள் எனினும், மெய்ப்பொருளாகிய ஒரு பரம்பொருளை நாடும் சனாதன தருமத்தைச் சேர்ந்தவர்களே என்று வாட்சன் கூறுகிறார். இத்தொடர்பினால் இந்தியாவைத் தரிசிக்க வேண்டும் எனும் ஆவலில் இவரும் தோழி ஜாயும் 1984ல் இந்தியாவுக்கு வருகின்றனர்.  இந்தியாவில் காஷ்மீர், டெல்லி முதலிய இடங்களைக் கண்டனர். இரண்டு வாரங்களில், ஜாய், அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு துக்க நிகழ்ச்சியின் காரணமாக நியூசிலாந்து திரும்பிட, ஜீன்வாட்சன் மட்டும் தம் பயணத்தைத் தொடர்ந்தார். காசியைத் தரிசித்தபின் அலகாபாத் புகை வண்டி நிலையத்தில் இவர் அமர்ந்திருந்தார். 50 வயதான வெள்ளைக்காரப் பெண்மணி தனியாக ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட பெரியவர் ஒருவர், இவரிடம் ஏதாவது உதவி வேண்டுமா எனக் கேட்டார். இவர் தம்முடைய பயணத்தைப் பற்றிக் கூறவே, அவர், அடுத்து எங்கு செல்ல உத்தேசம் என வினவினார். அதைப் பற்றித்தான் யோசிப்பதாக இவர் கூற, ‘காஷ்மீரைக் கண்ட நீங்கள் கன்னியாகுமரியையும் காணவேண்டும். அப்பொழுதுதான் பாரத தரிசனம் முழுமையாகும் ‘ எனக் கூறியதோடு, இந்தியாவை வரைந்து குமரி இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டி, அலகாபாத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் புகைவண்டிகள் பற்றிய விவரங்களையும் உதவினார். இவ்வாறு ஜீன்வாட்சனுடைய கன்னியாகுமரிப் பயணம் தொடங்கியது.     ஜீன் வாட்சனின் வேதாந்தப் பயிற்சி அவரைப் பாரத நாட்டிற்குப் பயணஞ்செய்ய ஊக்கியது. பாரதத்தின் தென்கோடியில் நித்தம் தவம் செய்யும் குமரியைக் கண்டார். குமரியில் சிலநாள்கள் தங்கினார். அப்பொழுது சுப்பையா என்பவர் அவரைச்சந்தித்து ‘ஒத்தைப்புளி’ என்னும் இடத்தில் இருக்கும் அநாதை விடுதிக்கு நன்கொடை கேட்டார். வாட்சன் சுப்பையாவுடன்சென்று அந்த விடுதியைப் பார்வையிட்டார். விடுதிக் குழந்தைகள் பயிலும் பள்ளிக்குச் சென்று பள்ளியின் நிலைமையைக் காண்டார். தம் நாட்டுக்குத் திரும்பிவந்து அவ்வப்பொழுது விடுதிக்குப் பொருளுதவிசெய்து வந்தார்.  இரண்டாண்டுகள் கழித்து 1986ல் மீண்டும் வாட்சன் கன்னியாகுமரிக்கு வந்து மூன்று மாதங்கள் தங்குகின்றார். சுப்பையாவுடன் நெருங்கிய நட்பு ஏற்படுகின்றது. ஏழையாக இருந்தும் தம்முடைய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் சுப்பையாவின் சேவை மனப்பான்மையும் நாணயமும் ஜீன் வாட்சனுக்கு அவர்மீது இருந்த மதிப்பைக் கூட்டின. சுப்பையாவின் இறந்துபோன தங்கையின் நினைவு நாள் திவச நிகழ்ச்சியில் வாட்சன் கலந்து கொள்கிறார். சுப்பையாவின் உற்றார் உறவினர் ஊரார் ஆகியோரிடம் வாட்சனுக்குப் பழக்கம் ஏற்படுகின்றது. அங்கு, ஏழைகளின் துயரம் துடைக்க ஆசிரமம் அமைக்க எண்ணம் ஏற்படுகிறது. இவ்வாறு உருவானதுதான் நிலக்கோட்டை ‘மகாத்மா கருணை’ இல்லம்’. ஜீன் வாட்சன் நியூசிலாந்தின் தலைநகராகிய வெலிங்டனில் உள்ள பெரிய நூலகத்தில் ஒரு பணியாளராகத்தான் இருந்தார். செல்வர் அல்லர். தம்முடைய வீட்டை விற்று ‘கருணை இல்ல’த்தை நிறுவினார். அவர்க்கு மக்கள் இருக்கிறார்கள். என்றாலும் அவ்ர்களுக்குச் செல்வம் சேர்க்க வேண்டும் எனும் நிலை அங்கு இல்லை. ஓரளவு வயது வந்தவுடன் பிள்ளைகள் பெற்றோரைச் சார்ந்திருப்பதில்லை ஆதலாலும், வேலையற்றோருக்கும் முதியோருக்கும் நியூசிலாந்து அரசு உதவித் தொகை கொடுப்பதினாலும் ஜீன்வாட்சன் தம்முடைய வீட்டை விற்றுக் கருணை இல்லத்திற்கு அளிக்கத் தயங்கவில்லை.   இந்த வரலாற்றுக்கு நடுவே சில சுவையான செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அதில் முதன் முதலாகத் தமிழகத்துக்கு வந்த வெள்ளைக்காரப் பெண்மணியின் கலாச்சார அதிர்ச்சி (Cultural shock) குறிப்பிடத் தக்கது. மேலை நாடுகளில் வயது, பதவி முதலிய நிலைகளைக் கருதாது அனைவரையும் பெயர் சொல்லி அழைத்தல் அவர்கள் பண்பாடாக உள்ளது. பள்ளியில் மாணாக்கர் ஆசிரியரைப் பெயர் சொல்லி அழைப்பர். அதிகாரிகளைப் பணியாளர் பெயர் சொல்லிப் பேசுவர். மனைவியர் கணவனின் பெயரைச் சரளமாகக் கூறுவர். இவ்வாறு பெயரைச் சொல்லுவதை மரியாதைக் குறைவாகக் கருதுவதில்லை. எனவே, இங்கு தன்னை, ‘அக்கா’ என்றும் ‘சிஸ்டர்’ என்றும் ஊரார் அழைத்தது ஜீன் வாட்சனுக்குப் புதுமையாக இருந்தது. விடுதிக் குழந்தைகள் அவரை, ‘ஆண்டி’(Auntie)’  என்று அழைத்தபோது அது அவருக்கு வித்தியாசமாக இருந்தது. அண்ணன் , தம்பி, அக்கா, தங்கை என்னும் முறைப் பெயர்களால் இரத்த உறவு இல்லாதவர்களையும் அழைக்கும் மரியாதை இவருக்குப் புதுமையானதொன்றாக இருந்தது. தமிழகத்தில் விருந்து உபசரிக்கும் முறையில் உள்ள வேறுபாடு இவருக்கு மற்றொரு அதிர்ச்சி.. பொதுவாக, மேலைநாடுகளில் விருந்துக்கு அழைத்தவர்களும் விருந்தாளிகளும் ஒருசேர அமர்ந்து உண்ணும் முறை நாகரிகமாகக் கொள்ளப்படுகின்றது. சுப்பையாவின் வீட்டுக்கு விருந்துண்ன இவர் சென்றபோது, விருந்தினரான இவர் தனியே உண்ண நேரிடுகின்றது. உடன் அமர்ந்து உண்ண இவர் சுப்பையாவை அழைக்கிறார். விருந்தினர் உண்ட பின்னரே தாமுண்ண வேண்டும் இதுதான் தமிழகத்தில் விருந்துபசரிக்கும் பண்பாடு என்று சுப்பையா மறுத்து விடுகிறார்.(வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி, மிச்சில் மிசைவான் புலம்- குறள் 85). வீட்டில் ஆண்கள் உண்ட பின்னரே பெண்கள் உண்ணுகின்றனர். வாட்சனுக்கு இதுவும் ஒரு அதிர்ச்சி. நம்மவர்கள் ஆங்கிலச் சொற்களைக் கையாளும் முறையிலும் இவருக்கு ஒரு அதிர்ச்சி.  உணவு உண்ணுவதை நம்மவர்கள் ஆங்கிலத்தில் கூறும்போது பொதுவாக, ‘உணவு எடுத்துக்கொள்ளுவது’ ‘taking meals’ என்று கூறுவது உண்டல்லவா? அந்த முறையில் நண்பகல் உணவு உண்ணத் தம் வீட்டுக்கு ஜீன் வாட்சனை அழைத்த சுப்பையா, ‘உணவு உண்டபின் நீங்கள் அங்கு செல்லலாம்’ எனும் கருத்தில், ‘Take your meals before going there’ என்று கூறினார். உணவு உண்ண அழைத்துவிட்டு ‘Take your meals’ என்கிறாரே, என்ற குழப்பம் வாட்சனுக்கு ஏற்படுகிரது. ஏனெனில், ‘Have your lunch before going there’  என்று கூறுதல்தான் அவருடைய ஆங்கில மரபு. மேலும், உணவுக்கடைகளிலிருந்து வீட்டுக்கு வாங்கி எடுத்துச் செல்லுதலைத்தான் ‘Take away meals’ என்று குறிப்பிடுவது நியூசிலாந்து மரபு. சாப்பிட அழைத்துவிட்டு உணவை எடுத்துச் செல்லும்படி கூறுகிறாரே என்ற திகைப்பு இவருக்கு ஒரு அதிர்ச்சி. கடைகளில் பேரம் பேசுதல் இவருக்கு ஒரு அதிர்ச்சி. ஏனெனில் நியுசிலாந்துக் கடைகளில் எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட விலைகள்தாம். கன்னியாகுமரியில் இவருடைய அனுபவங்களைக் கற்பனையுடன் கலந்து மூன்று கதைகளாக எழுதியுள்ளார். அவை Three Sea Stories. என்னும் பெயரில் ஒரு புத்தகமாக வெளிவந்துள்ளன. இக்கதைகளுக்கு நட்சத்திர மனிதர்கள் (Star people)   என்ற தலைப்பில் முன்னுரையொன்று எழுதியுள்ளார். முழுவதும் மாறுபட்ட பண்பாட்டுச் சூழலில் திடீரென வந்திறங்கியதும் தோன்றிய அதிர்ச்சியையும் பின்னர் பண்பாட்டை அடையாளம் கண்டுகொண்டு அதிர்ச்சி நீங்கித் தெளிவு பெற்றதையும் இம்முன்னுரையில் உருவகப்படுத்தியுள்ளார். நான் படித்துச் சுவைத்த இப்பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்  .   ‘நட்சத்திர மனிதர்கள்’ []   புதியதொரு நகருக்கு அவள் வந்து சேர்ந்தாள். ஊரைச் சுற்ரிப் பார்த்தாள். மக்களை நெருக்கமாகக் அவதானித்தாள். அவர்கள்மேல் இன்னதென்று சொல்லமுடியாத ஆனால் அழுத்தமான ஈர்ப்பு உண்டாவதை அவள் உணர்ந்தாள். காதல் வயப்பட்டவர்கள் தங்கள் காதலரைப் பற்றிய விவரங்களை அக்கறையுடன் சேகரிப்பதைப் போல , அவள், அந்த மக்களின் தோற்றம், நடை உடை, பழக்க வழக்கங்களைக் கண்டு மனதில் பதிந்து கொண்டாள். அவள் அவர்களை வேற்றுலகிலிருந்து வந்த ‘நட்சத்திர மனிதர்’களாகக் கருதினாள். அவர்கள் தங்களுடைய நெற்றியிலும், சில சமயங்களில் கழுத்து, மார்பு முதலிய உறுப்புக்களிலும் பிரகாசமான குறிகளைத் தீட்டியிருந்தனர். இதனால் அவர்கள் இவளுக்கு நட்சத்திர மனிதர்களாகத் தோன்றினார்கள். அந்தக் குறிகள் மிகுந்த பிரகாசத்துடன் ஒளிர்ந்தன. அவை அவளுக்கு நட்சத்திரங்களை நினைவூட்டின. அவளுக்கு அவர்கள் வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களைப் போலத் தன்னிலிருந்து முழுதும் வேறுபட்டவர்களாகத் தோன்றினார்கள்.         ஆகாயத்தில் உள்ள விண்மீன்களைப் போல அவர்கள் அவளுக்கு  அருகில் இருந்தும் எட்ட முடியாத தூரத்தில் இருந்தனர். அவர்கள் மொழியைப் பேச அவள் அறியாள். அவர்களில் சிலர் அவளுடைய மொழியைப் பேசினர். மெதுவாக, வார்த்தைகலை அளந்து, இடைவெளிவிட்டு, முறையான சொற்களைக் கையாண்டு அவளுடைய மொழியைப் பேசினர். மூலைக்கடையில் சோப்பு வாங்கியபோது, கடைக்காரர், “ Do you require anyother item”? என நீட்டி முழு வாக்கியமாகக் கேட்டார். இதையே அவளுடைய நாட்டில், “Anything else?” என்றுதான் தெறித்தாற்போலக் கேட்பார்கள். நட்சத்திரங்கள் பலவகையாக இருந்தன. சிறிய பெரிய வட்டங்கள்; சிறிய சிவப்பு வட்டம்; அதைச்சுற்றிப் பெரிய வெண்மையான வட்டம்; அல்லது வெண்மைத் தூசு படிந்தது போன்ற நட்சத்திரம். சிலர் வெள்ளைக்கீற்றுக்களை எடுப்பாக நெற்றியில் தீட்டியிருந்தனர். சிலர் இரண்டு வெள்ளைக் கோடுகளின் நடுவில் ஒரு சிவப்புக் கோட்டினைத் தீட்டியிருந்தனர். சிலர் ஒற்றை மஞ்சள் கீற்று அல்லது சிவப்புக் கீற்று மட்டுமே உடையவர்களாக இருந்தனர்.   பெண்கள்கூட்டம் நிறைந்த பேருந்தில் அவள் சென்றபோது, அவர்கள் பட்டுப்போல மினுமினுப்பக இருப்பதைக் கவனித்தாள்.  தலையில் மல்லிகைப்பூவைச் சூடியிருந்ததனால் அவர்கள் மல்லிகை மணம் கமழ்ந்தார்கள். எண்ணெய் பூசப்பட்டிருந்த அவர்களின் தலைமுடி மிகக் கருமையாக இருந்தது. அதனைச் சிலர் பின்னலிட்டுத் தொங்க விட்டிருந்தார்கள். அதன் இறுதி சுழன்று நீண்டிருந்தது. சிலர் குழந்தைகளை மடியில் வைத்திருந்தனர். குழந்தைகளின் நெற்றியிலும் நட்சத்திரம் இருந்தது.   ஆண்கள் சுருண்ட முடி உடையவர்களாக இருந்தனர். 1940களில் இருந்த திரைப்பட நடிகர்களைப் போலச் சிலர் அலையலையான தலைமுடி வைத்திருந்தனர். அவர்கள் இடையிலுடுத்தியிருந்த ஆடை மேசை விரிப்பைப் போல இருந்தது என அவள் நினைத்தாள்.வெள்ளைப் பருத்தியாடை, வண்ணக் கரை அல்லது கட்டம் போட்டது அல்லது வண்ணத்துப்பூச்சியின் சிறகு போன்ற பலநிறங்களை உடையது எனப் பலநிற ஆடைகளை அவர்கள் உடுத்தியிருந்தனர். அவற்றை இடுப்பில் சுற்றி ஒருபக்கம் செருகிப் பாதம் வரை தொங்க விட்டிருந்தனர்.சிலர் முழங்கால் வரை மடித்துக் கட்டியிருந்தனர். ஆடை செருகியிருந்த இடையில் சாவிக்கொத்து அல்லது பணப்பையை வைத்திருந்தனர். அது, சாதாரணமாக உடுத்திருந்த ஆடைக்கு ஒரு கவுரவத்தை (formality) அளித்தது. அவர்கள் ஆடையை இடுப்பில் செருகிக் கொண்டோ அல்லது இறுக்கிக் கொண்டோ நடந்தனர். அவர்கால் பாதம்! ஓ! அடிக்கடி அவள் அவர்களுடைய பாதங்களை வெறித்துப் பார்த்தாள். அவர்கள் எப்போது சிலசமயங்களில்தான் பாதங்களுக்குச் செருப்பு அணிகிறார்கள். அவர்களுடைய பாதங்கள் அக்லமாகவும் விரல்களுக்கு இடையே சந்து உடையனவாகவும் மேல் பகுதி கறுத்தும் அடிப்பகுதி வெளிறியும், குதிகால் வெடிப்பு நிறைந்தும் காணப்பட்டன. பெண்கள் வெறுங்காலினராய்க் கணுக்காலில்  நகை அணிந்திருந்தனர். அவர்களுடைய நடவடிக்கைகளைக் காண்பதில் அவள் மிகமகிழ்ந்தாள். சிலர் கைவண்டிகளைத் தள்ளிக்கொண்டிருந்தனர். சிலர் சைகிளில் ஏறிச் சென்றனர்; சிலர் உருட்டிச் சென்றனர். வண்டிகளில் விற்பனைக்குப் பாய்களோ, பிளாஸ்டிக் பொருள்களோ தேநீர் தயாரிக்கும் சாதனங்களோ ஏற்றப்பட்டிருந்தன. தொடக்கத்தில் அவள் அவர்களைக் கூட்டம் கூட்டமாகக் கண்டாள். எங்கும் அவர்கள் கூட்டம். நட்சத்திர மனிதர்கள். கறுநிறத்தவர்; மாநிறத்தவர்; வெள்ளை ஆடையர்; கட்டம்போட்ட சட்டையர்; பழுப்பு நிறக்கையினர்; வெளிறிய உள்ளங்கையினர். ஆயிரமாயிரம் கால்கள் நடந்துகொண்டே இருந்தன; பொறுமையுடன் நடந்து கொண்டே இருந்தன. சிலர் தலைச்சுமை தாங்கியிருந்தனர். மீன்கூடைகள், திராட்சைத் தட்டுக்கள், மாம்பழக்கூடைகள், வாழைப்பழத் தட்டுக்கள், வெள்ளரிக்கீற்றுக்கள் எனப் பலவகை சுமைகள். சிலநாள்கள் கழிந்த பின்னர், அவள் நட்சத்திரமனிதர்களை நெருக்கமாகத் தெளிவாகப் பார்க்கத் தொடங்கினாள். தீவை நோக்கிப் படகில் வரும்போது மரங்கள் , பிற தாவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாதலைப் போல அவள் நட்சத்திரத் தனிமனிதர்களின் வாழ்க்கையைக் காணத் தொடங்கினாள்.   திகைப்போடு தனித்து நின்ற அவள் தன் நினைவினூடே கலக்கத்திற்குக் காரணம் பண்பாட்டு வேறுபாடே என்று அறிந்தாள். பின்னர் நட்சத்திர மக்களின் நடுவே பழகித் திரிந்தாள். அவர்கள்மீது ஒருவித பிடிப்பினை வளர்த்துக் கொண்டாள். அவர்கள் மீது மரியாதை கொண்டாள். நாட்கள் பல கழிந்தன. மக்கள் தன்னுடன் பேச விரும்புவதைக் அறியத் தொடங்கினாள். “ஹல்லோ ! சிஸ்டர்! வாங்க! கிளிஞ்சல்களைப் பாருங்க!”. அழைத்தவர்கள் கடற்கரை நடைபாதையில் கிளிஞ்சல் விற்பவர்கள். தெருவின் இருபுறமும் வெப்பமான சூரியவொளியில் வெள்ளீ என ஒளிவீசும் கிளிஞ்சல் , சங்கு முதலியன விற்கப்படும் கடைகள் இருந்தன. அவர்களுடைய மொழியில் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அதை அவள் கேட்டாள். “ “இவர்கள் பேச்சைப் படமாக்கினால் ... ... தெரித்து விழும். சுருள் (spiring) போலச் சுருண்டு சுருண்டு விழும், மிக வேகம்”. இவ்வாறு அவள் தன்னுள் நினைத்துக் கொண்டாள். அவர்கள் மொழியைப் புரிந்து கொள்ளாததில் ஒருவசதியும் இருந்தது; சங்கடமும் இருந்தது. பொருளைப் பற்றிக் கவலைப் படாமல் ஒலியை மட்டும் கேட்கும்போது ஒருவகை மனநிறைவு கிடைத்தது. ‘டீ’ கொண்டு வர ‘ஆர்டர்’ செய்வது போன்ற சாதாரண உரையாடலும் கூட ஏதோ மந்திரமொழியைப்போல அவளுக்கு முக்கியமாகப்பட்டது. மொழி புரியாமையின் சங்கடம்- வெளிப்படையானது. முக்கியமான செய்திகளை அறிய முடியாமல் போய்விடுகின்றது. அன்று அப்படித்தான். பேருந்தில் பயணிகளுக்குள் ஏதோ வாய்ச்சண்டை. சண்டையின் காரணத்தை அறிந்து கொள்ள அவள் எத்துணை ஆர்வமாக இருந்தாள்? சொற் பரிமாற்றங்களின் பொருளை அறிந்துகொள்ள எத்துணை ஆசையாக இருந்தது? அடுத்தவர்களுக்கு அதனை விளக்குவது ஒருபக்கம் இருக்கட்டும். தனக்கே அதனைப் புரிந்துகொள்ள இயலவில்லையே! நட்சத்திர மனிதர்களை அவள் எவ்வளவு நேசித்தாள்? ஆனால், அவர்களை ஏன் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது, ஏன் அப்படி இருந்தது? அது, தன் இன மக்களுடன் வேற்று இன மக்களுடன் இருப்பதன் அனுபவ வெளிப்பாடா?   எப்படி இருந்தாலும், அவர்களும் மனிதர்கள் தானே? நெற்றியில் நட்சத்திரம் உள்ள அந்த மக்கள் அஞ்சல் அலுவலகத்தில், வங்கிகளில், அரசு அலுவலகங்களில் பணிசெய்தார்கள்.  தேநீர் விற்பனை செய்தார்கள். பேருந்து, வாடகைக் கார் ஓட்டினார்கள். அவளுடைய நாட்டில் மக்கள் என்னென்ன தொழில்களைச் செய்வார்களோ அந்தப் பணிகளை நட்சத்திர மனிதர்களும் செய்தனர். கனவு காண்பதுபோல அவள் அங்கே அம்மக்களைக் கண்டும் கேட்டும் திரிந்தாள். விடியற்காலையில் தெருவில் நடந்தபோது, பெண்கள் வீட்டு வாசலில் செம்மண் தரையில் புழுதிக் குப்பையைப் பெருக்கிக் குளிர்ச்சிக்காக நீர் தெளிப்பதைக் கண்டாள். குறுக்குக் கால்போட்டு மக்கள் அமர்ந்து கொண்டு சுண்ணாம்புக் கப்பியில்  கட்டங்கள் வரைந்து கல் வைத்து விளையாடுவதைக் கண்டாள்.பாண்டியாடும் கட்டங்களைப் போல. ( Hopscotsh dens). அது அவளுக்கு இளமைப் பருவத்தை நினைவூட்டியது. வயதேற ஏற, நாளுக்கு நாள், அந்த இளமை அனுபவம் சேய்மைப்பட்டுப் போனாலும் அண்மையில் இருப்பதைப் போன்ற நினைவின்பத்தை அளித்தது. இதுவும் ஒரு புதுமையான அனுபவந்தான். பாண்டியாட்டம் --- --- பாண்டியாட்டம் அவள் ஆடியிருக்கிறாள். கிராமத்தில், மரப்பலகைகளால் கட்டப்பட்ட பள்ளிக் கூடத்தில் பாண்டியாட்டம் ஆடியிருக்கிறாள். இறுகிய கரிய தார் வேயப்பட்ட தரையில் கட்டம் வரைந்து அவள் பாண்டியாட்டம் ஆடியிருக்கிறாள். அது இங்கு உள்ளது போலச் செம்மண் தரை அல்ல. இங்கு நீர் தெளித்துத் தரையை வழித்துக் கான்கிரீட் போல இறுகச் செய்தால்தான் சுண்ணாம்புக் கட்டியால் கட்டம் வரைய முடியும். நட்சத்திரமனிதர்கள் ... ..., அவள் நினைத்தாள், --- தெருவைப் பெருக்குகிறார்கள். நித்தம் நித்தம் நிலத்தை வாரியினால் பெருக்குகிறார்கள். பெருக்கிச் சுத்தம் செய்வதில் மகிழ்கிறார்கள். பின்னர், நாள் செல்லச் செல்ல அவளுக்கு நட்சத்திரமக்களின் நெருக்கம் கிடைக்கின்றது. நீண்ட தொடர்பில் தனித்தனி உறவுகள். தொலைவிலிருந்து, அறிமுகமான ஒருவர் கையை அசைத்து, “ வாங்க சிஸ்டர்! டீ சாப்பிடுகிறீர்களா?” என அழைக்கும்போது அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தபோது, கரையில் பத்திரமாக ஒதுங்கியது போன்ற நிம்மதியை அது அவளுக்கு அளித்தது. இனம் புரியத அவளுடைய மனக்கலக்கம் விலகத் தொடங்கியது. புதுமையாக இருந்த எல்லாம் அவளுக்குச் சாதாரணம் ஆகிவிட்டன. அவர்கள் எல்லாம் , உண்மையில், ‘நட்சத்திர மனிதர்கள்’ அல்லர். அவர்கள் அனைவரும் இந்தியத் தமிழர்கள். அவர்கள் நெற்றியில் இருந்தது, நட்சத்திரம் அல்ல; அது, கோவிலில், சாமி கும்பிடச் சென்றபோது அர்ச்சகர் ஆசியுடன் பூசிவிட்ட சந்தனமும் குங்குமமும். வாழை இலையில் சாப்பிடுவது இப்பொழுது அவளுக்குப் பழக்கமாகி விட்டது. சீனாத் தட்டும் பீங்கான் கோப்பையும் முள்ளும் கத்தியும் இப்பொழுது அவளுக்கு விகாரப்பட்டு அந்நியமாகிப் போய்விட்டன. அவளுக்குப் புதுமை எல்லாம் இப்பொழுது பழகிப் போய்விட்டதால், அவளும் பழகிப்போன புதியள் ஆகிவிட்டாள்.          []   [] []      Jean Watson               Joyce       [] நன்றி  []