[] [cover image] 1. Cover 2. Table of contents நிமிர்ந்து நில் நிமிர்ந்து நில்   அ.இம்ரான் ஹக்   imranhak78@gmail.com   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Nimirndhu_Nil}   This book was produced using pandoc மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: அ.ஷேக் அலாவுதீன், தமிழ் இ சர்வீஸ் - tamileservice17@gmail.com மின்னூலாக்கம்: அ.ஷேக் அலாவுதீன், தமிழ் இ சர்வீஸ் - tamileservice17@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: A.Shaik Alauvdheen - tamileservice17@gmail.com Ebook Creation: A.Shaik Alauvdheen - tamileservice17@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks This Book was produced using LaTeX + Pandoc ஆசிரியர் குறிப்பு திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் கடத்தூரை சேர்ந்தவர் இம்ரான் ஹக். சிறு வயதில் இருந்தே தமிழ் மீது பற்று கொண்டவர். திண்டுக்கல் மாவட்டம் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் முடித்தவர். தற்போது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் முதுகலை தமிழிலக்கியம் பயின்று வருகிறாா். கல்லூரி அளவிலான போட்டிகள் மற்றும் கவிதைவாசிப்பு நிகழ்வுகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். மேலும் நிலாத்தோழன் என்ற பெயரில் www.nilatholan.blogspot.com-ல் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறாா். என்னுரை எண்ணங்களையெல்லாம் அப்படியே விட்டு விடாமல் எட்டிப்பிடித்து குப்பிக்குள் அடைத்தது தான் இந்த வரிகளெல்லாமே. எனது கவிதைகள் ஒவ்வொன்றும் நான் கண்டது, கேட்டதில் உண்டான தாக்கத்தின் எதிர்வினையே. இந்த வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ வளைவுகள் அதில் எண்ணற்ற காட்சிகளும் ,பாடங்களும் ஆனால் அவை அனைத்துமே கருவாகி உருவாவதில்லை காலம் தான் படைப்புகளை தீர்மானிக்கிறது.“நான் பிரசவித்தது என்று இதனை ஒரு போதும் சொந்தங் கொண்டாட இயலாது ஏனெனில் இது என் வழிப் பிரசவித்தது” அவ்வளவே. எனது சகோதரரின் வழி க்ரைம் நாவல்கள்,வார,மாத இதழ்கள் மூலமாகவே வாசிப்பு எனக்கு அறிமுகப்பட்டது. பள்ளிக் காலம் முதலே எனக்கு இலக்கியத்தின் மீது ஆர்வமிருந்த போதும் அதோடு முழுதாக பயணிக்கக் கூடிய வாய்ப்பு கல்லூரிக் காலத்தில்தான் கனிந்தது. குறிப்பாக பேரா.மீனா சுந்தர் ஐயா தான் படைப்புலகில் என் கரம் பற்றி உலாவச் செய்தார் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதே போல படைப்புகளை ஆவணப்படுத்துவதும் அதன் முக்கியத்துவம் குறித்தும் உணர்த்திய பேரா.லட்சுமிப் பிரியா, பேரா.ராசாத்தி செல்வக்கனி ஆகியோருக்கும், ஒவ்வொரு கல்லூரிக்கும் உரத்த குரல்களாக மட்டுமல்லாது கனத்த சொற்களாக ஒவ்வொரு நாயகர்கள் இருப்பார்கள் அது போல இருக்கும் எமது தாய்க் கல்லூரியான அருள்மிகு பழனியாண்டவர் கலை(ம) பண்பாட்டுக் கல்லூரி பேராசிரியர்.ஐயா, கு.மணிகண்டன் மற்றும் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்.ஐயா மு.மதியழகன் அவர்களுக்கும், இந்த கவிகள் உருவாக சந்தர்ப்பமளித்த நிலவாகியவளுக்கும், முகிலானவளுக்கும் மின்னூலாக உருவெடுக்க உதவிய என் சகோதரர் அ.சேக் அலாவுதீன் மற்றும் என் வாழ்வின் நட்சத்திரங்களாகிய சதீஸ்,மணிகண்டன்,முத்தரசு, போகராஜ்,எஸ்தர் ஆகிய யாவர்க்கும் எனது நெஞ்சாரந்த நன்றிகள் பல…. இந்நூலின் வரிகள் நிச்சயம் உங்களைத் தூண்டும், நிமிர்ந்து நிற்கச் செய்யும்,பின் உங்கள் மனதோடு ஏதேனுமொன்றை கதைக்கும் அந்த நெகிழ்வை என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டி விரும்பியவனாய்…. அ.இம்ரான் ஹக் 19.04.2020 முன்னுரை ‘நிமிர்ந்து நில்’ கவிதைத் தொகுப்பின் மூலம் நம்மோடு நிறைய விடயங்களைக் கதைக்கிறார் கவிஞர் இம்ரான் ஹக். “தம்பி நான் ஒரு கதை எழுதியிருக்கேன், படிச்சுப் பார்த்து கருத்துச் சொல்லு” எனக் கூறிக் கொண்டிருந்த அவர் திடீரென “என் கவிதைகளை தொகுத்து நூலா போடலாம்னு இருக்கேன் தம்பி, படிச்சிட்டு முன்னுரை எழுதி தா” எனக் கேட்கும் போது அவ்வளவு ஆச்சர்யமும் ஐயமும் எனக்கு. முன்னுரை எழுதி நல்ல தொகுதியை கெடுத்து விட மனமின்றி வேண்டாமென மறுத்த போது “நீ தான் எழுதனும்” என அவர் உரிமையோடு சண்டையிட்ட போது உள்ளமெல்லாம் பூரித்துப் போகச் செய்தது எனக்கு.நல்ல கவிதை என்பது காற்றடித்த பந்தைப்போல, எவ்வளவு தான் நீருக்குள் அமுக்கினாலும் கட்டாயம் அது வெளிவந்தே தீரும். அப்படிப்பட்ட கவிதைகள் தான் இம்ரானுடையதும். மனிதனுக்கு சிறகுகள் இல்லை என்ற குறையைத் தீர்க்கவே கவிதை என எழுத்தாளர் கந்தர்வன் நா.முத்துக்குமாரின் “நியூட்டனின் மூன்றாம் விதி”நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டார். அதனை இத்தொகுப்பை வாசிக்கும் போது உண்மை தானென உணர்வுப்பூர்வமாக அறிய முடிகிறது. “ஏழ்மையைத் தந்த இறைவா வறியவரைக் காட்டி உள்ளம் கலங்கப்பட வைப்பதேனோ இரக்கப்பட மனம் உண்டு கொடுக்கத்தான் பொருளில்லை" (பயணச்சீட்டு) எனும் வரிகளில் இல்லாதவன் தான் இல்லாதவனை எண்ணிப் பார்ப்பான் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார். “சுற்றுப்புறத்தின் சூடான நாக்கு மற்ற மனிதர் செயலையெல்லாம் சுவைக்க நித்தம் எண்ணுகிறது உற்று நோக்க நாடுவதில்லை தன் உள்ளார்ந்த குணத்தினை " (நாக்கு) “ஊருக்கு மட்டுமே உபதேசம்” என்ற பாணியில் புறம்பேசும் மனிதர்களின் முகத்தினை இந்த வரிகளெனும் ஆணிச் சாட்டையால் விளாசிக் கிழிக்கிறார். “இலேசாகக் கிடைத்ததாலோ எதையும் வீணாக்காதே எதுவும் இல்லாதோர் இங்கு அதிகம் இருக்கிறார்" (ஈரக் காகிதம்) என நாட்டின் பொருளாதாரம், சிக்கனம் எனப் பேசும் இவர் அதற்கு பதிலுரைப்பதாய் “புரட்சியின்றி வளர்ச்சி இல்லவே இல்லை” (வளர்ச்சி) என்று சோசலிசத்தையும் பேசுகிறார். “சீதை இறங்கிய செந்தீயில் எங்கள் தேசப்பற்று நிரூபிக்கப்பட அய்யோ அல்லாஹ் என அலறுகிறான் அயோத்தி ராமன்" (அயோத்தி ராமன்) எனும் வரியெல்லாம் கவிதையின் உச்சம், நிதர்சன உண்மை. காதலைப் பேசாத கவிஞனா?காதலைப் பேசாதவன் கவிஞனா?? “காதலோடு காதலை காதல்படுத்தி வைப்பது தானே காதல்" (காதல்) என்றவாறு காதலுக்கே காதலிக்கக் கற்றுத் தருகிறார் கவிஞர். “பூமியின் மார்பகம்”,“உழைப்பு”, “சிறை மரணம்”,“முரண்” போன்ற கவிதைகளெல்லாம் யதார்த்தமாய் உன்னதமாய் இயல்புகெடாமல் இருக்கிறது. பாலை ஓலம் எனும் கவிதை நான் எழுதி சர்ச்சையில் சிக்கிய “ருஸ்யா மீது கடைக்கண் திறந்த காளி செவிடு போலும் சிரியா குழந்தைகளின் அழுகை” எனும் கவிதையை எனக்கு நினைவூட்டியது. “வண்ணத்தை வசீகரத்தை சுண்ணத்தால் சுடரால் புனைந்து பூத்திட என் பேனாவில் மையில்லை” (என் பேனாவில் மையில்லை) என அவர் பொய் சொல்லுகிறார். அது சரி கவிதைக்கு பொய் அழகு தானே?? “அதிகாரம் நசுக்கிட்டால் அழிந்து போகும் கனி விருட்சமாகும் விதை” (நிமிர்ந்து நில்) விதையாவோம் என கூறிய படியே முன்னுரை எனச் சொல்லக் கூசி முதலுரையான இவ்வுரையை முதல் வாசகனின் உரையென எடுத்துக் கொள்ளும்படி ஆரத் தழுவி முத்தமிடுகிறேன். சகோதரத்துடனும், தீராப் பிரியங்களுடனும், இளவல், கோகுல் சுப்ரமணியன். 19.04.2020 முள்ளங்கி வலசு சென்னை செந்தமிழ் தென்னாட்டில் பிறந்த வண்ண மலரே மனமகிழ்ச்சியால் விருந்தளிக்கும் இனிய குரலே உன் சிரிப்பினில் நான் சிக்கிக் கொண்டேன் உன் எழுத்தினில் தான் மனமகிழ்ச்சி கண்டேன் அல்லிப்பூ உனது கண்களோ!! அழகு வானவில் உனது புருவமோ வானத்து நட்சத்திரம் உனது வாய்ப்பற்களோ தென்னாட்டுச் செந்தமிழ் உனது சொற்களோ ஊட்டி மலரெடுத்து உன் இதழ் அமைத்தவனைப் போற்றிப் புகழ்கிறேன்.. பயணச்சீட்டு எளிமையைப் படைத்து எமக்கு ஏழ்மையை தந்த இறைவா வறியவரைக் காட்டி உள்ளம் கலங்கப்பட வைப்பதேனோ இரக்கப்பட மனம் உண்டு கொடுக்கத்தான் பொருளில்லை எடுக்கத்தான் கைவிட்டேன் என் பையில் எஞ்சியிருந்ததும் பயணச்சீட்டே….. கட உள் வண்ணமாய் மின்னுகிறது ஆலயங்கள் இன்னுமா இவர்கள் காணவில்லை இறைவனை ஏழையின் சிரிப்பில். சிறை நிலவு இரவின் அழகு இளைய நிலா என்று பலரும் கூறுவர் அதை பார்த்து விடத் தான் ஆசைப்படுகிறேன் ஆனால் பகலில் மட்டும் தான் பரோல் கொடுக்கிறது இந்திய அரசு வளர்சி முயற்சியின்றி பலனில்லை ஒற்றுமையின்றி வலிமையில்லை உழைப்பின்றி ஊதியமில்லை மார்க்கமின்றி மனிதனில்லை விதையின்றி செடியில் இல்லை பூக்களின்றி மனமில்லை புரட்சியின்றி வளர்ச்சி இல்லவே இல்லை. மழை மங்கை வயல் வெளியில் மழை பெய்ய மங்கையவள் கண்முன்னே ஈர்த்திடும் அவள் கண்ணருகே இடியோசை இசையாகியது கனமழை கானம் பாடியது பளிச்சிடும் மின்னல் காதல் மௌனத்தின் விளக்குகளாயின மலர்முக மங்கையின் சிவந்த இதழினில் சிதறிய மழைத்துளியால் சிறைப்பட்டது என்னுள்ளம் அவளது இருதயத்தில். கனவுக் காதலி அவள் என் கற்பனைக் காதலி தான் கனவுகளில் என்னோடு கை கோர்ப்பவள் உணர்வுகளில் உள்ளூரக் கலந்திருப்பவள் உள்ளச் சோர்வினை உள்ளிருந்து விரட்டியடிப்பவள் மெல்லக் கண்ணயர்ந்ததும் கூட வந்து ஒட்டிக்கொள்பவள் உறக்கத்தினில் தான் ஒன்றிணைந்தோம் உடலாலும் நிகழ்வாலும் அல்ல இறைவனது நாட்டமிருந்தால் இவ்வுலகினிலே ஒன்றிணைவோம் இல்லையேல் கவலையில்லை மறுமையில் காத்திருப்பேன் மங்கையவள் வரவிற்காக…… அவள் பெயர் இரவு ஒளிர்கிறது வெண்ணிலவால் என் இதயம் மகிழ்கிறது உன் வரவால் உன் பெயரைச் சொன்னால் “ரோஜாப் பூ வாசம்” அந்த எழுத்துக்களின் மீதோ “இனிப்புச்சுவை வீசும்” வெண்மைக் காகித மேனியை என் பேனாவின் உதடுகள் தீண்டும் போது அது தானாக மொழிகிறது அவள் பெயரை… கம்பனே எழு பருவம் என்ற சொல்லே பயனற்றுப்போனதோ கற்பு என்ற வார்த்தை காலாவதியானதோ சீதையெல்லாம் எங்கே சென்றொளிந்து விட்டனரோ இராமனெல்லாம் இங்கே இராவண உருவம் பூண்டு விட்டனரோ காமனது பார்வை கானகம் வலம்வந்து தொடு திரையில் மானுட உயிர் குடிக்கும் முன்னே கம்பனே நீ எழுந்து காப்பியம் படைத்திடு முகநூலில் அதை எழுதி முடிந்தளவு பரப்புவோம்…. தவிப்பு மலர்களோடு மௌனமொழி பேச வேண்டும் காதல் ரணத்தினை சுமக்கும் என்னால் பூக்களின் முகத்தினில் விழிக்க எப்படி முடியும் பூஞ்சோலை காதலர்களின் உணர்வுக் கோட்டை குளிர் காற்று ஊடலின் தாலாட்டு எரியும் சூரியனுக்கு அங்கு வேலையில்லை தவிக்கும் சந்திரனை விட்டு வர கொதிக்கும் தென்றலுக்கோ விருப்பமில்லை….. பெண் சிலம்பு ஏந்தா பெண்ணவள் தினமும் கற்பிழக்கும் கலைமகள் விலகிடும் உடையினை கருவிழிகள் தேடும் முழுதும் மறைத்திட்டால் அடிமையென ஏசும் சிரித்துப் பேசிட்டால் சிங்காரி எனக் கூவும் முறைத்து உமிழ்ந்திட்டால் மூதேவி எனப் பரிகசிக்கும் பருத்த மார்பை சிறுத்த இடையை பருந்துக் கண்கள் துளைத்தெடுக்கும் பூமியில் பிறந்த பெண்ணவள் பாவம் பூக்கின்ற மலர்கள் கொடுத்த சாபம்…… நிதர்சனம் கருமேகம் சூழ மலர்ப்படுக்கை வேய்ந்து வண்ணமாக அன்னம் அசைந்து பொன்னிற நீர்த்துளி மண்ணைத் தீண்டுதல் கற்பனை சாம்பல் மேகம் கண்டு விளையாத விலை நிலத்தில் காலுடைந்த மயில் தடுமாறி சரடான சாரல் சேற்றினைச் சென்றடைதல் நிதர்சனம்…… பிரிவு காலம் செய்த தவறுதான் பிரிக்கப்பட்டோம் நானும் நீயும் சூரிய சந்திரன் பசி குடல் பசிக்கு கொதித்த பண்டம் உடல் பசிக்கு வளர்ந்த மங்கை அறிவுப்பசிக்கு அளவேதுமில்லை அருந்திப் புணர அடங்குவதுமில்லை நாக்கு சுற்றுப்புறத்தின் சூடான நாக்கு மற்ற மனிதர் செயலையெல்லாம் சுவைக்க நித்தம் எண்ணுகிறது உற்றுநோக்க நாடுவதில்லை தன் உள்ளார்ந்த குணத்தினை புரண்டு புரண்டு ஆடுவதால் நாக்கு புகழ்பெற்றிடுமா அமைதியாக ரசிக்கும் உள்ளம் மண்ணில் வீழ்ந்து செத்திடுமா அறியாயோ மனிதா உன் அறியாமைப்பிழையா நிமிர்ந்து நில் வளைந்து கொடுக்கும் நாணலை விட நிமிர்ந்து நிற்கும் ஆலமரமே நிழல் தருகிறது உணர்ந்துகொள்ளும் மனிதா நீ நிமிர்ந்தே நிற்க முதுகுத்தண்டு வேண்டும் மண்ணையும் விண்ணையும் கண்டு இரும்பையும் எரும்பையும் பார்த்து சிந்தனையைக் கேள் கடித்திட்டால் கரும்பு இனிக்கிறது வழிமறித்திட்டால் யானையைக் கூட எறும்பு கடிக்கிறது மண்ணில் சிறந்த தாது சோதனையின் வேதனை தாங்கி இரும்பாய் நிலை நிற்கிறது எழுத்தாணியை விட என்ன வேண்டும் உதாரணம் களைப்பில்லாமல் கம்பீரமாய் நிமிர்ந்தே உழைக்கிறதே ஆனாலும் ஏன் அச்சப்படுகிறாய் அச்சத்தின் மரணமே உச்சமென்று தெரியாதா அதிகாரம் நசுக்கிட்டால் அழிந்துபோகும் கனி விருட்சமாகும் விதை துணிந்தே செல் அனைத்துலகும் சேர்ந்தாலும் ஆற்றலை அழித்துவிட முடியாது நிமிர்ந்தே நில்… ஆழ்குழாய் கிணறு. முகஞ்சுழிக்காமல் முலைப்பாலூட்டிய வளர்ப்புத் தாயின் காம்பினை அறுத்துப் பார்த்தான். ஆறறிவுக்காரன் பூமியின் மார்பகம் கட்டிய கோவணமும் ஒட்டிய வயிற்றில் கழன்று விழ காணவந்த மேகமும் கண்ணீர் வற்றி காலமாக கயவர்கள் கையிலோ கசங்கித் தவிக்கிறது பூமியின் மார்பகம் வாசனை பயணத்தின் பாதியில் பாவையவள் வசிப்பிடம் பார்வையால் தேடினேன் பாதைவழி வந்தது அவள் மேனியின் வாசனை. அதனதன் வழியில் மணக்கும் சந்தனம் மலைக்குப் பயணளிப்பதில்லை கடலின் முத்து சிப்பிக்கு அழகு தருவதில்லை வெள்ள அபாயத்திற்கு மீனைச் சிறையெடுத்தல் நியாயமா கடல் கொந்தளித்தால் கலத்தை சற்று மீட்கலாம் கையசைய கடல் இயங்க கட்டளையிட்டால் நிகழுமா அதனதன் வழியில் அழகுப் புறாக்களை விட்டுவிடுங்கள் சிரமங்களை அவை செரித்து விழுங்கி சிறகடிக்கட்டும் உங்கள் சலிப்புகள் சங்கடங்கள் பிரதிபலிக்கும் முன் உழைப்பு உழைப்பென்னும் தலைப்பிற்கு உவமைகளை நெருங்கித் தேடினேன் உரிமைநிலத்தை அடகிட்டு உரத்தை வாங்கிக் கொட்டியவன் சுருங்கிய வயிற்றோடு சூரியக் குளத்தில் தினமும் குளிப்பவன் என்சதைப்பிடிப்பு ஒவ்வொன்றிற்கும் ஆற்றலை அநியாயவிலைக்கு விற்றவன் மூத்தமகன் பட்டதாரியாக முதுமையிலும் வீட்டைச் சுமப்பவன் உள்ளங்(கை)கள் சிவக்க உழைப்பின் உருவகமாக உயிர்ப்புடனிருக்கும் என் அப்பனை விட்டு எதை நான் பூட்டுவேன் உழைப்பென்னும் தலைப்பில் நீலத்திரை திரையினில் களைபட்ட ஆடைகளால் எங்கள் விறைகளில் வறட்சி விதைகள் உடைகளுக்கு விடைகொடுக்கும் காணொளிகளால் ஊர்தோறும் கசக்கிச் செருகுபட்ட நிர்பயாக்கள் கர்ப்பம் தாங்கா கழிவறைகளில் காமக்கனாக்களின் சுருங்கிய கன்னத்தில் வெடித்துத் துப்பும் விந்துச்சீல்கள் இனியுமென்ன எதிர்பார்ப்பு படுக்கையறையிலே பளிச்சிடும் அலைபேசிகளின் கருப்பு ஒளிகளே மிச்சம் எலும்பில்லா உறுப்பிற்கு களவாடும் பாம்பின் விகாரக் குணமேற்றி உலகமெங்கும் உல்லாசப்போர் வெடித்து பெண்களின் குருதியிலே மூழ்கி மூச்செறியும்போது உணருங்கள் ஆணும் பெண்ணும் ஆடைகளின் உயிர்ப்பு ஓவியமென்று சாதாரணம் சகலமும் சாதாரணமாகிவிட்டது அதிசயத்தையும் அவசரமாகவே கடக்கிறோம் கட்டைவிரலுக்குக் கீழ் காட்சிகளால் கண்களுடனே முடிந்துவிடுகின்றன கனவுகள் நடப்பவை நீந்துபவை பறப்பவை பலவுமே பார்வையில் இறைச்சிதான் குப்பைகள் கோபுரம் மீதேற காகிதங்கள் கொடிகளாய் மின்ன சகலமும் சாதாரணமாகிவிட்டது அசட்டை அனிச்சையாகிவிட்டது ஈரக் காகிதம் மாதந்தோறும் நீ இழக்கும் இரத்தம் போதாதா ஏன் காகிதத்தில் என்னை ஈரமாக்குகிறாய் ஈராக்கும் காஷ்மீரும் இறுக்கிப் பிடித்திருக்கும் துளிகள் இலேசாக கிடைத்ததாலோ எதையும் வீணாக்காதே எதுவும் இல்லாதோர் இங்கு அதிகம் இருக்கிறார். சிறை மரணம் மயக்கும் மாலைக் கதிரவனின் காரிருள் கண்கட்டிய போது கடவுளிடம் சென்றுவிட்டாய் நீ முதல்நாள் கூடினார்கள் மறுநாள் அழுதார்கள் மூன்றாம் நாள் பேசினார்கள் நான்காம் நாள் விலகினார்கள் நாம் நெருங்கியிருந்த நாட்கள் குறைவுதான் யாரறிவார் நெஞ்சுக் கூட்டுக்குள் நீ அமர்ந்திருக்கும் நாற்காலியை…. இரும்புக் கம்பிக்குள் இன்னோர் மரணம்…… இவர்களுக்கென்ன தேர்தல் வரவில்லை அவர்களுக்கென்ன குழப்பம் தீரவில்லை இதயத்தில் வடிகிறது இளைஞர்களுக்கு இரத்தம் எத்தனை நாளுக்கு மொத்தமாய் விஷவாயு செலுத்தி சுத்தமாய் அழித்துவிட்டு தொப்பிகளைக் காட்டி தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள் மிச்சமிருந்தால் கட்சிக் கொடியாவது கபனிற்கு……… பதுக்கல் உனக்கென சிலதை பதுக்கியிருக்கிறேன் உனக்கு மட்டுமானதாய் எவரும் அறியமாட்டார் என் படுக்கையருகே படர்ந்திருக்கும். உன் மார்பகங்களை முனகலில் மூச்சைப் பறிகொடுத்த நிமிடங்களை மீசைக்குள் வீசிடும் உன் வாசனையை உனக்கென பதுக்கியிருக்கிறேன் உனக்கு மட்டுமானதாய். பாலை ஓலம் சிவப்பு நதியை குடித்து துப்பும் சதைத் துண்டை சம்மட்டியால் அடித்தது போலிருந்தது உங்கள் மௌனமே எங்கள் மரணத்திற்கு காரணமென்ற சிரிய சிறுவனின் ஓலத்தில். காதல் வெட்டப்பட்ட எனது விரல்களில் மோதிரத்தின் சுவடுகள் காதல் நினைவு. மருதாணி ஓரிரவில் உடைகள் அவிழ்ந்து சிலநிமிட வாசனை தந்து சிலகாலம் உருவம் பதித்த மருதாணி கணக்கு காட்டுகிறது காதலின் ஆயுளினை. என் பேனாவில் மையில்லை கரையும் இரவுகளில் தொலையும் கனவுகள் நான்கு கால்களின் மேல் நிகழ்ந்த நாடகத்தில் மூழ்கியெழுந்த உணர்வுகள் எண்ணியென்னிப் பார்த்தாலும் திண்ண மறுக்கிறது காலம் வண்ணத்தை வசீகரத்தை சுண்ணத்தால் சுடரால் புனைந்து பூத்திட என் பேனாவில் மையில்லை.. நினைவுகள் கிணற்றில் விழுந்த நிலவுக் கண்கள் கீறிட்ட தழும்பு போல் அகல நெற்றிச் சந்தனம் சுருளாய் மல்லிகைக் கொடிக் கூந்தல் மயக்க வீசும் மௌனப்புன்னகை திக்கற்ற எனது பார்வையில் காட்சிகளாக உந்தன் முகம் கடக்கவும் கண்ணீர் விடவும் ஈரம் இல்லாது வற்றிப் போனது இருதயம். கொன்றிருக்கலாம் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்த இடத்தில் புலம்புகிறது மனம்… கடைசி பேருந்து காலியான இருக்கைகள் போலியில்லாத குளிர்காற்று காலையில் பரபரப்பாய் தொடங்கி இரவினில் மயானமாய் நிறைவு பெறும் நாட்களில் சிலர் வருவார் பலர் போவார் நிரந்தரமாய் நிலைப்பதில்லை நினைப்பதுமில்லை…. முடிவு மூன்று சக்கரத்தில் பயின்ற நடை இரண்டு சக்கரத்தில் தொடங்கிய பயணம். நான்கு சக்கரத்தில் கடந்த பாதைகள். எட்டுச் சக்கரத்திலிருந்து இறங்குகிறது முடிவுரைக்குள். மரணம் கூரிடும் அதன் பார்வையால் நடுங்கும் தேகம் தாகம் மூண்டதென கருதி இடம் விலகும் நினைவு மோகக்காட்டு யுத்தத்தில் ஆடிக்களைத்த நாவும் தீராத வேட்கையும் சங்கிலியாய் காலின் கீழ். நிரந்தர பயணம் உள்ளங்கை மீது முதல் படுக்கை உந்துதலாய் நிலத்தின் மீது நிற்றல் நடனம் பஞ்சுமெத்தையில் பாதி உறக்கம் பாவை நெஞ்சின் மீது மீறும் கிரக்கம் வந்த வேலை முடிந்தால் இதோ வாகனம் வா போகலாம் மண்மடியில் நிரந்தர மயக்கம் நிலவும் முகமும் சரடான என் வீடும் கரடுமுரடான முகவரியும் சிலர் கண்டு உச்சுக் கொட்டுகின்றனர் அதோ அந்த நிலவைப் பாருங்கள் அதன் நிஜமே என் கன்னக்குழி தான் நிழலும் என் உடல் மொட்டு தான் அனலையே கக்கினாலும் பொழியும் குளிரைத் திரும்பத் தரும் தனிமையே என்றாலும் உறவுகளின் நினைவுகளை மீட்டுதல் போல உணர்வு படாத ஒன்று மழலையர் பசியை நீக்கும் இலை மறையாய் நின்று முரண் நெருஞ்சி முள்ளாய் நகங்கள் பரிணாமப்பட்டன குறிஞ்சித் தலைவன் மருத கட்டிலில் மாயமானான் நெய்தல் தலைவி பாலையில் ஈரமானாள் இரங்கற்பா காவலாய் காத்துக்கிடக்கும் கருப்பி கானலாய் கரைந்தது ஏனோ நெஞ்சோர நினைவு அந்தோ மழைக்காலம் நானும் நண்பனும் தூக்கிவந்து தத்துக் கொடுத்தோம் தாகமும் பசியும் தெருவே உனக்கு தீர்த்து வைத்தது பழைய சோறும் பிரியாணியும் பிசைந்து தின்றாய் வீதிக்குள் யானை போல நகர் வலம் வருவாய் கருஞ்சிறுத்தையாய் கடத்தூரை காத்த நீ கடலில் ஊசியாய் காலமானாயே இருளில் இனி யாரைத் தேடுவோம் மின்னும் கண் வெளிச்சம் இரசித்து செல்லக் குழந்தைகளுக்கு சோறூட்ட உணர்வுப்பண்டம் குடல் பசியும் உடல் பசியும் மென்று செரிக்கும் பண்டமாய் பந்தியில் கிடக்கிறது ஆன்மா ஆன்மா நான் ஆடையேராத ஆதாமின் அருகே செல்கிறேன் அது கோதுமைக் கனி பூவாக இருந்த காலம் அங்கு வார்த்தைகளுக்கு அர்த்தமில்லை உரித்துப் போட்ட பாம்பின் தோலாய் உணர்ச்சிகளின் உற்சவத்தில் காலடியில் ஒட்டிக்கிடக்கிறது ஆன்மா. விதைகள் விதை போல் மூடிய வரிகளில் விடுவிக்கப்பட்ட கதைகள் நிறைந்துள்ளன அவை தன்னுணர்ச்சியின் நிறைவயிற்று ஏப்பம் அதில் தேடுவதற்கு ஏதுமில்லை தேவைப்பட்டால் மீட்டுங்கள் வாழ்வின் வாசனை புலப்படும் எல்லா மக்களுக்கான மண்ணல்ல இது விதை சில விளைச்சல்களுக்காக மட்டும் குழப்பம் மூட்டப்பட்ட கற்களிடையே கரைகின்ற காற்றாக உள்ளம் தகிக்க கொட்டுகின்ற அருவியின் மீட்சியாக நினைவுகள் பின்னே நடக்க கூடடைந்த புறாக்கள் என் இளமைப் பசிக்கு வாசனை பூசுகின்றன பேனாவும் கத்தியும் ஒன்றாக இருக்க புனைவா புணர்வா குழப்பத்திவ் நெஞ்சோடு அடைத்துக்கொண்டேன் திணறிச் சாகட்டும் இல்லை தின்று சாகட்டும் சு தந்திர தினம் எல்லையில் ஏறும் மூவர்ணக் கொடியில் செந்நிறச் சாயம் ஏறி நடக்கும் வீரர் பாதையில் பச்சைத் தசைகள் பகையாகப் பார்த்து முறுக்கிடும் மீசையில் உதிர்கின்றன நீளமுடிகள் இனிய சுதந்திரமென இன்னிசை ஒலிக்க காகிதக் கொடிகளோடு கலக்கிறேன் நானும்…. அயோத்தி ராமன் சீதை இறங்கிய செந்தீயில் எங்கள் தேசப்பற்று நிரூபிக்கப்பட அய்யோ அல்லாஹ் என அலறுகிறான் அயோத்தி ராமன் சரியும் முக்காடு கள்ளமற்ற சிரிப்போடு கண்களை உருட்டுகிறாள் ஒருத்தி சரியும் முக்காட்டை சரி செய்தவாறே பிறையாக மிளிர்கிறாள் இன்னொருத்தி காகிதத்தையும் பேனாவையும் கையுள் கொடுங்களேன் தவிக்கிறது என் மனம் வாழ்க்கை மழைக்காலத்து வத்திக்குச்சியாக வாசனை தருகிறாய் பற்றுவது போல நகைப்பதும் பரவாமலேயே அணைவதுமாக பாசாங்கு செய்யும் உன்னை குப்பைத்தொட்டியில் போடவா கோபுரத்தில் ஏற்றவா விதியிடம் ஒப்படைப்பதை விடவும் சிறந்ததாக எதுவும் இல்லை குறிஞ்சி அழகன் கார்த்திகைப் பெண்டிர் பயின்றெடுத்த அழகா பூசணமும் பற்றித் தழுவுதே குமரா மலையாள மயிலெல்லாம் தொய்யில் விளையாட மலையரசன் உன் மார்பைத் தேடுது பார் பின்னிரவில் பொதினி மலை நோக்கி மக்கள் அலை சாந்தும் ஜவ்வாதும் மணக்கும் சுவை தென்னாட்டுப் பூமியில் தென்றல் வலை ஓங்கி முழங்குது ஆதிப்பறை வடிவேலன் முகங்காண தொடுக்கும் நடை குறிஞ்சித் தலைமகனுக்கு ராஜா அலங்கார உடை எதிர்ப்பொலி இடது பக்க மார்பில் பனிக்காற்று ஊடுருவுகிறது சன்னலோர நிலவு மார்கழியின் மௌனம் பெருக்குகிறது அப்புறம் என்ற முற்றெட்சத்தில் இதழ்கள் மீட்டபடுகின்றன இடையே பறித்துவிட்டதாய் ஒருவன் பரிகசிக்கிறான் இழந்துவிடுவமோயென காற்றசைத்து நானும் எதிர்க்கிறேன் காய்ந்த உதடுகளிலிருந்து எதிர்ப்பொலி வேகமெடுக்கிறது போட்டி என்னிரு தோகைகளும் வலுவோடு விரிவடைகின்றன எல்லையில்லா வானத்தில் ஏறி நின்றதாய் துள்ளியாடும் சிலரோடு நானும் போட்டிபோடுகிறேன் காதல் நெருப்பில் குளித்து நிலவில் காய்ந்து காற்றில் உலர்ந்தவாரே “புறப்படத் தொடங்கினேன்” கதவோரம் ஒடுங்கிய காமம் குறுகி நிற்க பூசிய அன்போடு கொத்துப் பூச்செண்டோடு அனுபவ சிகிச்சையின் அடையாளப் புன்னகையோடு அலாதியான இன்பம் அது அன்போடு அன்பை இணைப்பதில் உண்டான அன்பு காதலோடு காதலை காதல்படுத்தி வைப்பது தானே காதல் புன்னகை ஒரு புன்னகையோடு எதிர்கொள்ள எனக்கு நிறைய இருக்கிறது ஒரு நாளின் முடிவு நெருங்கிய நண்பனின் பிரிவு காதலியின் திருமணம் போதாமையின் வரவு ஆசையின் இறப்பு அழுகையின் தொடக்கம் காமத்தின் கடைசி பருக்கை அன்றாடம் நிரப்பப்பட்ட தோட்டாக்களாய் சில நேரம். அவிழ்ந்து நிரம்பிய வாசனையாக சிலநேரம். இப்படியாக செறிக்கப்பட்ட ஆற்றலை செலவழித்தவாறே முடிவடைகிறது என் அன்றாடம் அந்தி இருட்டு வாய் திறவாமலிருக்க எழுத்துக்களை மறக்கடித்தார்கள் தப்பி ஓடாமலிருக்க தவழுவதே ஆரோக்கியமென்றார்கள் வயிற்றின் பசியை நாவின் தாகத்தை புனிதப் போர்வையால் இறுகக் கட்டி நிறுத்தியவர் முன் இயற்கை ம(+உ)லையாய் பருத்தது உயிர் க(+உ)டலாய் பரவியது கோதுமைக் கனி பூப்பெய்தாத ஆதாமின் ஆண்மை வெளிப்படாத அந்தி இருட்டில் நானும் ஒளிந்து கொண்டேன் நெற்றி முத்தம் நிறைந்த வகுப்பறையில் நிஜமாக நீ மட்டுமே தெரிந்தாய் எழுந்து அருகில் வந்தேன் தொலைந்து மீண்ட ஏவலின் ஆத்ம உச்சத்தில் நெற்றியோடு முத்தமிட்டேன் தொலைந்தது கனவு முப்பொழுதும் நீ எப்பொழுதாவது எழுதுகிறேன் முப்பொழுதும் நீயே வார்த்தையாகிறாய் அப்போதிலிருந்தே ஆண்மையின் பலவீனமென்பது பெண்மைதானாம் இப்பொழுதும் மீட்டிப் பார்க்க ஆதாமின் செயல் சரியாகவே இருக்கிறது பூனைக்குட்டி இறுகப்பற்றி சாலையைக் கடக்கையிலும் இதயப்பக்கம் தலைசாய்த்து சிரிக்கையிலும் நினைவைத் தொலைத்த பூனைக்குட்டியாகிறேன் உன் மனதில் உனக்காக இறந்து சென்றாவது இரந்து கேட்பேன் இறைவனிடம் அவள் கருவில் உருவாகி கரத்தில் விளையாடி இருதயத்தில் உறவாடும் இன்னொரு வரத்தையும் எனக்கே கொடுவென்று நிரந்தரமும் தொலைதூரம் நீயிருந்தும் இமைகளுக்குள் மட்டுமல்லாது இருதயத்துக்குள்ளும் உனது பிம்பம் உலகின் தராசில் பொன்(+ண்)னும் பொருளும் குவிந்தாலும் நீ மட்டுமே போதுமென்கிறது மனம் உச்சிநுகர்தலில் புறங்கை முத்தத்தில் நெஞ்சம் சாய்கிற பொழுதில் நிரந்தரமும் திறக்கவேண்டும் உன் மடியில்………. சித்தனின் பித்து **1 மடலேறுதலை மறுத்தவனாய் மறு காதல் தேடி மருதநிலஞ் சேராது கடலேறிக் கானகம் சென்றே காமனை நீரோடு கவிழ்த்தினோமென்று ஆடு பாம்பே **2 கேணியில் நீராடி கெடும் பழமிரண்டுஞ் சுவைத்து வானம் பறந்து சுழிநீர் இறைத்து பின் நாளும் தெளிந்தே ஞானமடைந்தோம் என்று சொல்லி ஆடு பாம்பே **3 வேல்விழியும் வெற்றுடலும் வெந்தணலில் வேகத்தான் என்றறிந்த பின்னே கற்றறிந்தோம் கரணந் தப்பினோம் ஞானக் கண்கொண்டு உற்றுணர்ந்தோமன்றாடாய் பாம்பே.. **4 வெட்டுண்ட காயம் போன்றதனை விரும்பிப் போற்றுகின்ற போக்கெல்லாம் கட்டுடைந்து போனாலோ காலாவதியாகும் கண்ணுங் குழியாகும் காட்சியெல்லாம் ஊழ் வினையாகும் காலன் வருமுன்னே உறுதியெடு மனமே உண்மையில் ஒன்றாகிடு அக்கணமே **5 கருங்கூந்தல் வெளிரும் கவர்ந்திழுத்த தோலும் சுருங்கும் மையிட்ட கண்கள் குழிவிழும் பரந்த நெற்றியும் குறுகுமென்றே உணர்ந்து அகப்பேய்தனை விரட்டி அகமகிழ்ந்தோம் ஆதியின் பக்கம் விரைந்தோம் என்றாடாய் பாம்பே க கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account