[] []       நினைவில் நீ   - நாவல்    ஜி. எம் பாலசுப்பிரமணியம்    gmbat1649@gmail.com        அட்டைப்படம் : N. Sathya - experimentsofme@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை :  Creative Commons Attribution Non Commercial 4.0 international license  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.          பொருளடக்கம் அத்தியாயம் ஒன்று 5  அத்தியாயம் இரண்டு 8  அத்தியாயம் மூன்று 10  அத்தியாயம் நான்கு 12  அத்தியாயம் ஐந்து 15  அத்தியாயம் ஆறு 18   அத்தியாயம் ஏழு 22  அத்தியாயம் எட்டு 25  அத்தியாயம் ஒன்பது 27  அத்தியாயம் பத்து 30  அத்தியாயம் பதினொரு 34  அத்தியாயம் பன்னிரண்டு 36  அத்தியாயம் பதின்மூன்று 39  அத்தியாயம் பதினான்கு 41  அத்தியாயம் பதினைந்து 46  அத்தியாயம் பதினாறு 48  அத்தியாயம் பதினேழு 52  அத்தியாயம் பதினெட்டு 56  அத்தியாயம் பத்தொன்பது 63                          நாவல் பிறந்த கதை பதிவுலகிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் கூட முடியவில்லை என் சுய திருப்திக்காக எழுதிக் கொண்டிருந்த எனக்கு உடல்நலமில்லாமல் தேறி வந்து கொண்டிருந்தபோது இம்மாதிரி வலையில் எழுத முடியும் என்ற தகவல் ஆனந்தவிகடனில்வெளியான ஒரு கட்டுரையில் இருந்து தெரிந்து கொண்டேன்இப்பொழுதும் எனக்கு கணினி பற்றிய ஞானம் மிகவும் குறைவு. ஏதோ எழுதுகிறேனே தவிர இன்னும் பல சூட்சுமங்கள் பிடிபடவில்லை 1960-/ களில் எழுதத் துவங்கினேன். எந்த பத்திரிகைக்கும்அனுப்பியது கிடையாது. காதல் வசப் பட்டிருந்தபோது கவிதை எழுத முயற்சித்தேன். நாடகங்கள் பல எழுதி இயக்கி நடித்திருக் கிறேன். சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். 1966-/ ம் வருடம் கலைமகள் இதழில் நாராயணஸ்வாமி அய்யர் நினைவு நாவல் போட்டி அறிவித்திருந்தார்கள். நான் ஏன் பங்கு பெறக்கூடாது என்னும் எண்ணம் எழவே, ஒரு நாவல் எழுதினேன். பெற்றஅனுபவங்களும் என் மன அபிலாக்ஷைகளுமாக கருஉருவாக்கிஒரு நாவல் எழுதினேன். அதை தபாலில் போதிய ஸ்டாம்புகளுடன் ( அவர்கள் திருப்பி அனுப்ப ஏதுவாக )பதிவுத் தபாலில் Ack .Due என்னும் முறையில் அனுப்பினேன். ஒரு வாரம் கழிந்தும் அவர்கள் பெற்றுக்கொண்டதற்கான ஆதாரமாக ACK. DUE FORM அவர்கள் கையெழுத்துடன் வராததால் தபால் நிலையத்தில் விசாரித்தேன். என்ன கொடுமை.!அது அனுப்பப்படாமல் அங்கேயே இருந்தது. கடைசி நாளும் முடிந்திருந்தது. தபால் நிலையத்தாருடன் சண்டை போட்டதுதான் மிச்சம். ஒரு மாதத் துக்கு மேல் உழைத்தது வீணாகி இருந்தது. இப்போது அதனை தூசு தட்டி என் வலைப் பூவில் பதிவிடுகிறேன். ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் வாரம் இரண்டு அத்தியாயங்கள் பதிவிட உத்தேசம் . முன் கூட்டியே ஆதரவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.                           அத்தியாயம் ஒன்று    (கலைமகள் நாராயணசாமி அய்யர் நினைவு நாவல் போட்டிக்காக 1966-/ ம் வருடம் எழுதியதை தூசு தட்டிப் பதிவிடுகிறேன் ) மூக்கில் ஆக்ஸிஜென் ட்யூபும், உடலின் சோர்வும்,உள்ளத்தின் பளுவும், இருண்ட எதிர்காலத்தின் நினைவை ரங்கசாமியின் நினைவில் நிறுத்தியது.இருட்டில் ஒளியைத் தேட கடந்த கால நிகழ்ச்சிகளை அசை போட்டவரின் கண்களில் நீர் அரும்பியது. எண்ணத் தறியில் கடந்த நிகழ்ச்சிகள் இழையோட இழையோட, எதிர்காலத்து சோபை,விடி வெள்ளிபோல் தென்படும் தறுவாயில், தறி அறுந்தது., நர்ஸின் நடையோசை கேட்டு. விரிப்பை சரி செய்து, ஆக்ஸிஜென் ட்யூபை மாற்றிப் பொருத்தி”டக், டக்,”என்ற மிதியோசை வெளிப்படக் கடந்து சென்ற நர்ஸின் விருப்பு வெறுப்பற்ற கடமை உணர்வைக் கண்டதும், காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை என்ற உண்மையும் தெள்ளெனத் தெரிந்தது. “ காலத்துடன் காலனும் போட்டி போடுகிறானோ” என்ற நினைவு உதித்ததும் உள்ளம் வெதும்பியது. “ ஆண்டவனே நான் சாகக் கூடாது.எனக்கு இன்னும் எவ்வளவொ கடமைகள் இருக்கிறதே. காலனே என்னை அண்டாதே “என்று வேண்டலும் வெதும்பலுமகக் கிடந்தவரின் நினைவுத் தறி மீண்டும் ஓட ஆரம்பித்தது. த்றியின் இழையோட்ட எண்ணங்கள் பாபுவை சுற்றியே பின்னப் படுகிறது. ஏன்.?இருண்ட எதிர்காலத்தின் விடி வெள்ளியாக பாபுவைத்தான் காண்கிறாரோ.? அன்று வேலை தேடிசென்ற பாபு ஒரு மாதகாலத்துக்கு திரும்பி வரவேயில்லையே. அந்த இள வயதிலேயே எதிர்பாராத ஏமாற்றத்தின் ஏகபோக உரிமைக்கு ஆளாக்கப் பட்டுவிட்டான் பாபு. வேலை தேடி வந்தவனைக் கண்டதும் வேலை இருக்கிறது என்று சொன்னவர்கள் எள்ளி நகையாடினர். உடல் வளர்ச்சி குறைவு என்று நிராகரித்தனர். ஏமாற்றம் அவன் உள்ளத்தை வைரமாக்கியது. வேலையில்லாமல் திரும்ப மாட்டேன் என்று உறுதியாய் இருந்தவன் முயற்சியெல்லாம் முக்கால்தோல்விதான்,வேலை கிடைக்கவில்லை என்ற நிலையைப் பொறுத்தவரையில்.ஆனால் கால் பங்கு வெற்றி,உலகத்தின் நடவடிக்கைகளை அந்த இடைக் காலத்தில் உணரக் கிடைத்த வாய்ப்பினால்.  கடைசியில் வீடு வந்து சேர்ந்தவன் எடுத்த காரியங்களை எண்ணிய விதத்தில் முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்ற உண்மை உணர்த்தப் பட்டவனாக இருந்தான். தந்தையைக் கண்டதும் தாங்க முடியாத வேதனையாலும் அவமானத்தாலும் நிலை குன்றிப் போனான். அப்படி அன்று மனமொடிந்து வந்தவன் இன்று வாழ்வின் அடிப்படியில் காலெடுத்து வைத்திருக்கிறான். அவனை ஒளிவட்டமாகக் காண்பதில் தான் பெரிய  தவறு செய்கிறோமோ என்று ரங்கசாமி உருகினார்.அவர் அப்படி நினைக்கக் காரணமுண்டு. தன் மூத்த பிள்ளைகளால் ஏமாற்றப் பட்டு பழிக்கப் பட்ட அவர் சுட்ட பால் குடித்த பூனையாயிற்றே. தன்னைப் பழிப்பவர் சுற்றாரும் உற்றாரும் மட்டுமா? உலகமுமா.?அப்படி என்ன பழிதான் செய்துவிட்டோம் தன் இரு மூத்த பிள்ளைகள் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. தான் வேண்டியதில்லை என்று நினைத்தால் நடக்காதென்ற காரியமாயிருந்தால் இப்படி ஒரு நிலையே ஏற்பட்டிருக்காதே. கஷ்ட நஷ்டங்களைப் பற்று வரவு பார்க்கும்போதும் சில சமயங்களில் ஒரு அலாதியான திருப்தி ஏற்படுகிறது. நிவர்த்திக்கப்பட முடியாத காரியங்களிலும் சில நன்மைகள் தெரிகிறது. தன் காரியங்களைப் பழித்துதனக்கெதிராக கிளம்பியுள்ள பிள்ளைகளால் நன்மைகள் ஏதும் ஏற்படாவிட்டாலும் துன்பங்களாவது தவிர்க்கப் பட்டு விட்டதே.இல்லையென்றால் என்றும் ஒரே போராட்டமாயிருந்திருக்கும். இப்போதும் போராட்டம் இல்லையென்றல்ல. இப்போதைய போராட்டங்கள் வாய்க்கும் வயிற்றுக்கும் பாதையமைக்கும் பணியில்தான். மற்றபடியிருந்தால் கூடவே மனப் புகைச்சல்களும் பூசல்களும் கூடவே இருந்திருக்கும். தன் சுய கௌரவமும் எண்ண ஈடுபாடுகளும் செயல்களும்பிறருக்காக விட்டுக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும். விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் சந்தோஷ்மிருந்திருக்கும் இரு பக்கமும் அந்த எண்ணமிருந்திருந்தால். இரு கையும் சேரும்போதுதானே ஓசைதான் எண்ணியபடி இரண்டாம் முறை மணந்தது தவறு என்றால், தவறு எது சரி எது என்று நிர்ணயிக்கப் படமுடியாத ஒரு சந்தர்ப்பத்தினால் ஏற்படும் ஒரு முடிவேயாயிருக்கும். எந்த ஒரு கொள்கைக்கும் இரண்டு வாதம் இருக்கும். அது சந்தர்ப்ப சூழலால் அவரவர் ஏற்கும் முடிவைப் பொறுத்தது. தான் செய்தது தவறு அல்ல என்ற எண்ணம் இறக்கும் தருவாயிலும் இருப்பது தன் கொள்கையின் , முடிவின் சரித்தன்மையைக் காட்டுகிறது. மேலும் தன் இரண்டாம் மனைவி தன் மூத்தாள் பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் கவனித்தது எல்லோரும் அறிந்ததே. அறிந்ததை இல்லையென்று நிரூபிக்க முயல்வது செயல் நிகழ்த்தியவரைப் பழிப்பதற்கே ஆகும். அது யார் குற்றமுமல்ல. மேலும் இருந்த ஒரே பெண்ணும் மணமுடிந்து குடியும் குடித்தனமுமாக எங்கோ இருக்கிறாள். .இவர்கள் எல்லோரும் தன் சாவுக்காவது வருவார்கள். வந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால் அவர்களின் அறியாமையும் மன்னிக்கப்படும். ஆனால் சாவை எதிர்பார்க்கும் நிலையிலா ரங்கசாமி இருந்தார்.?வளர்ந்த பிள்ளைகள் வளர்க்கப்பட்ட விதத்திலாவது வளர்ந்து வரும் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டுமே.. அதற்கு பற்றுகோல் போல் பாபுவை நாடுவது சரியா. பாபுவோ சுயமாக வாழ இப்போதுதான் வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கிறான். தன்னாலேயே தாங்க முடியாத வறுமைப் பிணியை அந்த இளம் பிள்ளை தாங்குமா.? தெய்வமே தனக்கு சாவு வரக் கூடாது என்ற பிரார்த்தனையே அடிக்கடி எழுந்தது. பிரார்த்திக்கும்போதெல்லாம் பாபுவையே கோடி காட்டும் தெய்வம் அவனிடமே தன் பொறுப்புகளை சுமத்தச் செய்யுமா.? சிந்தனைகள் சிக்கலில் சுழலச் சுழல எண்ணம் தடை படுகிறது. நெஞ்சு வலிக்கிறது. இதோ....டாக்டர் போகிறாரே...அவரை கூப்பிடலாமா “ டாக்டர் “ வாழ்க்கையில் கிடைத்த பெரும் வெற்றி பாபுவுக்கு அவனைப் பொறுத்தவரை அவனாகவே தேடிப் பெற்ற வேலைதான். வேலை என்பதைவிட பயிற்சி என்பதே சரியாகும் மூன்று வருஷங்களில் ஒரு வருஷத்தை ஓரளவு முடித்தாயிற்று. தான் சம்பாதிக்கும்போது தன் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியடையும். அப்பாவுக்கு சரி நிகராகப் பணிக்குப் போகலாம். தன்னையும் தந்தையை மதிப்பது போல் தம்பிகள் மதிப்பார்கள்.. அம்மாவும் ஒருவித ஸ்பெஷல் கவனிப்பைக் காட்டுவாள். ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் அப்பா ரிடையர் ஆகிவிடுவாரே. அப்போது இந்தக் குடும்பம் ஒருவன் சம்பாதித்து வாழ வேண்டி இருக்குமே. வித்தியாசம் தந்தைக்குப் பதில் தான் பொறுப்புகளை ஏற்பதாகத்தான் இருக்கும். வறுமை ஒழியாது. சந்தோஷம் இருக்காது. எண்ணியது நடக்காது மொத்தத்தில் வாழ்க்கையே சுவைக்காது. நடக்காத செயல்களை நடப்பதாக பாவித்துஇன்பமும் துன்பமும் அடைபவர்கள் ஏராளம். ஆனால் வறுமையிலேயே பிறந்து வறுமையிலேயே வாழும் பாபுவுக்கு இன்பத்தை பற்றியும் சுக வாழ்வு பற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.இதனைவிட கஷ்டமில்லாமல் இருந்தால் சரி என்ற துறவு உணர்ச்சியே அந்த இள வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. எதிர்காலத்தை எதிர் நோக்கும்போது எதிர்பாராதது ஏதும் இருக்கலாகாது என்ற கொள்கை அவனை அறியாமலேயே அவனிடம் இருந்தது.,அவனது பிற்காலத்தில் பெரிதும் உதவியது. ரங்கசாமியும் பாபுவுக்கு அடிக்கடி கூறும் அறிவுரை “நல்லதை எதிர்பார். அல்லாததற்கும் தயாராய் இரு “என்பதுதான். ” பாபு உனக்கு அர்ஜெண்டாக ஒரு செய்தி வந்திருக்கிறது. உன் அப்பா, ஆஸ்பத்திரியில் கொஞ்சம் சீரியசாம்...உடனே போ.” செய்தி சொன்னவன் முடிக்கவுமில்லை., பாபு பறந்து விட்டான். ஆஸ்பத்திரி வாசலில் தடை செய்த காவலர்களையும் சட்டை செய்யாமல் பதறிச் சென்ற பாபுவை ரங்கசாமி புன்னகையுடன் வரவேற்றார்,தாயும் தம்பிகளும் இருந்தனர். பயங்கரமான சூழ்நிலையை எதிர்பார்த்துச் சென்ற பாபுவுக்கு ரங்கசாமி இருந்த விதம் ஆறுதல் தந்தது. “என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன்.நீங்களானால் அரச தர்பாரில் இருக்கிறமாதிரி இருக்கிறீர்களே. உடம்பு பரவாயில்லையா அப்பா, டாக்டர் என்ன ச்ப்ல்கிறார்.? டாக்டர் எங்கே.?” “டேய், டேய், பதட்டப்படாதே.!ஏதோ உங்களை எல்லாம் பார்க்கணும் போல இருந்தது. டாக்டரிடம் சொன்னேன். உனக்கும் செய்தி அனுப்பினார்கள்.கவலைப்பட எதுவுமேயில்லை. “  முசு முசு என்று வரும் மூச்சுக் காற்றையும் கட்டுப்படுத்த முயன்று முழ பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றார் ரங்கசாமி. அணையும் தீபச்சுடர் நின்றெரியும்போது ஏற்படும் பிரகாசம் அலாதியாக அவர் முகத்தில் தெரிந்தது. தெரிவித்ததை உணரும் வயதில்லையே பாபுவுக்கு. அவனும் நம்பினான். சிறிது நேரம் எல்லோருமாகப் பேசிக் கொண்டிருந்தனர். வீட்டுக்குப் போக நேரமாகிவிட்டது என்று உணர்த்தப் பட்டார்கள். பிக்னிக் வந்த பிள்ளைகள் போல் துரு துருவென்று இருந்தனர் தம்பிகள்.கல்யாணி அம்மாவுக்கு ஏதோ தெரிந்தும் தெரியாதது போன்ற பிரமை. அந்த பிரமையிலேயே கட்டுப்பட்டுக் கிடக்க ஏங்கியது உள்ளத்தின் ஒரு பகுதி. மூடுபனி போன்ற சூநிலை தெளியத் தொடங்கினால் அங்கு தெரியும் காட்சி...அப்பப்பா .பயங்கரம் தெய்வமே.. வேண்டாம் இந்த நிலை.. எதையும் கோடி காட்டாதே எண்ணுவதெல்லாம் எண்ணமாகவே இருக்கட்டும் கணவனை மறுமுறை கூர்ந்து நோக்கினாள் கல்யாணி அம்மா. அவர் முகத்தில் கண்ட அசாதாரண அமைதி கல்யாணி அம்மாவுக்கு உறுதியைத் தந்தது. கண நேரம் தான் நினைத்து கலங்கி விட்ட பைத்தியக் காரத்தனத்தை நினைத்துச் சிரித்தாள் சிரிப்புடன் விடையும் பெற்று வீட்டுக்குக் கிளம்பினார்கள். அவர்கள் அனைவரும் சிறிது தூரம் சென்றதும் பாபுவை மட்டும் விளித்தார் ரங்கசாமி. மற்றவர்கள் தயங்கி நின்று மறுபடியும் தொடர்ந்து சென்றார்கள். அருகில் வந்து நின்ற பாபுவை தன் அருகில் அமரச் செய்தார் ரங்கசாமி. என்னென்னவோ பேசத்துடித்தது மனம். எண்ணியதை எல்லாம் சொல்லில் கொட்டினால் கொட்டியவற்றின் முழு சக்தியையும் பாபு தாங்குவானா.?சில சமயம் தாங்கும் சக்தி இல்லாதவர்களிடமும் தாங்க முடியாத சுமைகள் தவிர்க்க முடியாத சமயங்களில் ஏற்றப்படும்போது, பெரும்பாலும் ஆண்டவனே அதை ஏற்றுக்கொள்கிறான்., ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை வேண்டும். பல விஷயங்களை மறைக்க முயன்றார் ரங்கசாமி. முடியவில்லை. ஒரு பெருங்கதையே அவனுக்குக் கூறினார்.சொல்லப்பட்ட விஷயங்களெல்லாம் கேட்ட பாபுவுக்கு தன் தந்தை எவ்வளவு பொறுமையோடு வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைத் தாங்கி வந்திருக்கிறார் என்று தெரிந்தது. வறுமையிலும் வாழ்வின் எதிர்ப்பிலும் தனக்கு சரியென்று பட்டவற்றை மனிதாபிமான உணர்ச்சியுடன் செய்து வந்து  முடிக்க முடியாத நிலையில் உடலுக்குப் பிணி வந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவர் ஏற்ற கடமையை அவர் விட்ட இடத்தில் தொடர அவர் குணம் அறிந்த ஒருவர் வேண்டும்ரங்கசாமிக்கு பாபுவிடம் ஒரு தனிப் பற்றுதல். தந்தை தனயன் என்ற நிலைக்கும் அப்பாற்பட்டது. தனக்கு சமமானவன் என்ற எண்ணம். இது பாபுவின் விஷயத்தில் நன்மைக்காக அமைந்தாலும் மற்றவர்கள் விஷயத்தில் , முக்கியமாக மூத்த பிள்ளைகள் விஷயத்தில் மாறாக அமைந்தது. சமத்துவம் கொடுக்கப் பட வேண்டிய இடத்தில் பெறுபவர் தன்மையறிந்து தரப்பட வேண்டும். மூத்த பிள்ளைகள் தற்கால முற்போக்கு சந்ததியினரின் பிரதிநிதிகள் தனி வாழ்வு எனும் கொள்கையில் மட்டும். கடைசியாக ரங்கசாமி பாபுவிடம் கேட்டது பாபுவை அதிர வைத்து விட்டது. “ பாபு ! எனக்குப் பிறகு உன் சித்தியையும் உன் தம்பிகளையும் உன்னை நம்பித்தான் விட்டுப் போவேன். அவர்களைக் கை விட மாட்டாயே பாபு..’ கெஞ்சாத குறைதான். ஏனப்பா இப்படியெல்லாம் கேட்டு வருத்துகிறீர்கள்.நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் இகழ்ந்தவர்கள் ஏற்றிப் பேசும் அளவுக்கு என் தம்பிகளும் தாயும் வள மடைவார்கள் வளமடையத்தான் வேண்டும். ஒரு பாவமும் அறியாதவர்களை ஆண்டவன் சோதிப்பான் ,அவர்களை ஆண்டவனே சோதனையிலும் வெற்றியடையச் செய்வான் என்றும் கூறியிருக்கிறீர்களே. உங்களுக்குப் பிறகு என்றெல்லாம் பேசி ஏன் மனம் உடைகிறீர்கள். நீங்கள் என்னிடம் அப்படிக் கேட்கும்போது என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ என்று எண்ணத்தூண்டுகிறது. உங்கள் மகன் உங்களை ஏமாற்ற மாட்டான்”---விம்மி வெடித்தது பாபுவின் நெஞ்சம். –ஒரு சமயம் அப்படியும் நேர்ந்து விட்டால்.... ...நேர்ந்து விடாது.. நேரக் கூடாது. இது உறுதி.!இந்த உறுதி என்னிடம் கலையுமானால், நான் உங்களுக்குப் பிறக்கத் தகுதி அற்றவன் என்று இந்த உலகம் என்னை காறி உமிழட்டும். அப்போது என் உயிர் என் உடலில் தங்காது...சொல்லாத வார்த்தைகள் நினைக்கப் பட்டன. ரங்கசாமியும் அமைதியிலாழ்ந்தார். பேசாத நேரம் சொற்பமே ஆனாலும் பேசிய நேரத்தால் ஏற்பட்ட சோர்வு அவருடைய தளர்ந்த உடலை நித்திரையில் ஆழ்த்தியது. உறங்கி விட்ட தந்தையிடம் விழித்த மனம் பெற்ற தனயன் மானசீகமாக விடை பெற்று வெளியேறினான்.           அத்தியாயம் இரண்டு மதி மயங்கும் மாலை நேரம். வெள்ளி நிலா முழு ஒளி வீசி உதிக்கும் வேளை .புள்ளினங்கள் தத்தம் கூடு நோக்கி விரைகின்றன. கிராமமாக இருந்தால்தான் இயற்கையை ரசிக்க முடியுமா.?பெங்களூரில் லால்பாகில் இயற்கை எழிலும் செயற்கை எழிலும் ஒன்றோடு ஒன்று போட்டி போடும் விதம் ஒன்றை ஒன்று தழுவி இருப்பதில் தெரியாமல் போய்விடும். இரண்டும் லயித்திருக்கும் காட்சி கண் கொள்ளாதது. பரபரப்பற்ற ஒரு அமைதி அது ஒரு ஞாயிற்றுக் கிழமை என்பதை தெளிவு படுத்தியது. கண்ணனுக்கு ஏமாற்றம்.சுற்றுப் புறத்தை ரசிக்கும் சூழலில் அவனில்லை.அமைதியை நாடி வந்தான்.புற உலகு அமைதியாய் இருந்தது.உள்ளமோ புகைந்திருந்தது. ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். இர்ண்டு முறை புகை இழுத்து  வெளிவிட்டான்.ஆத்திரம் அதிகமாயிற்று. சீற்றத்தை சிகரெட்டிடம் காட்டும் முறையில் வீசி எறிந்து ஷூ காலால் நசுக்கினான். ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு ஏதோ தீர்மானித்தவனாய் நடக்கத் தொடங்கினான். நடந்தவனுக்கு அருகில் நடப்பவைகளில் நாட்டம் இல்லையாதலால் எதையும் காணவில்லை. “ வீட்டுக்குப் போகலமா.?” அப்படி உரிமையுடன் வீடென்று சொல்லிக் கொள்ள எந்த இடமிருக்கிறது. கையில் பணமிருந்தவரையில் சரி உற்றாரும் ஊராரும் கண்ணன் எங்கள் கண்ணன் என்று வாய் கிழியப் பேசினார்கள். இப்போது.? இப்போது மட்டுமென்ன பேச வைக்க முடியாதா.?அதையும்தான் பார்ப்போமே. கண்ணன் எடுப்பார் கைப்பிள்ளை. இதனை அவனைச் சுற்றி இருந்தவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். அவர்களின் செயல்வழிகளுக்கு கண்ணன் ஒரு கருவி. எதிரியே மறைந்து விட்ட பிறகு கருவி எதற்கு.?ஆனால் கண்ணனுக்கு இதெல்லாம் தெரியாது. நடந்து சென்றவன் கால் வலிக்கவே, அவனை அறியாமலேயே ஆட்டோவைக் கூப்பிட்டு ஏறிக் கொண்டான். “குக் டௌன் போப்பா வீடு வந்து சேர்ந்தவன் ஆட்டோவிற்கு பணம் கொடுக்கப் பர்சைப் பார்த்தான். அது காலியாயிருப்பதைப் பார்த்தவன், ‘ கொஞ்சம் நில் “என்று ஆட்டோ ட்ரைவரிடம் கூறி “ பாட்டீ “ என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே சென்றான். பாட்டி இல்லை .எங்கோ வெளியில் போயிருந்தார்கள்.. மாமியிடம் கேட்கலாம் என்றால் கொஞ்சம் கூச்சம். ஆனால் அதற்குள் மாமியின் பெண் ஆஷாவே வெளிப்பட்டு “என்ன அத்தான் “ என்று கேட்கவே தன் காலி பர்சையும் வெளியில் நின்ற ஆட்டோ ட்ரைவரையும் காட்டினான். அவள் விஷயத்தைப் புரிந்து கொண்டு ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துத் திரும்பினாள். திரும்பினவளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தவன் உள்ளம் அசுர வேகத்தில் ஏதேதோ கணக்குப் போட்டு ஒரு முடிவுக்கு வந்தது. “ஆஷா” திரும்பிச் சென்றவளின் நடை தடைபட்டு நின்றது. “ ஆஷா.. இங்கே வாயேன் ..” என்றும் இல்லாத ஒரு குழைவு அந்தக் குரலில் தென்பட்டது. ஆஷாவுக்குப் புரிந்து விட்டது. அவள் தயங்கி நின்றாள். “ ஆஷா, இந்த வீட்டில் பரிவு காட்ட நீ ஒருத்தியாவது இருக்கிறாயே. !இது உணர்ந்த மாத்திரத்தில் எனக்கு வேலை போனால்தான் என்ன, பணமில்லாவிட்டால்தான் என்ன.?இரண்டும் இல்லாத என்னை நீ நேசிக்கிறாயென்ற உணர்வு போதும். ASHA, I LOVE YOU. “என்று கூறி அவளருகில் சென்றவனை மறைந்து பார்த்திருந்த ஆஷாவின் தம்பி “ அம்மா, அம்மா, அக்காகிட்ட அத்தான் சினிமால லவ் பண்ற மாதிரி என்னவோ சொல்றாரம்மா” என்றான். ஓடி வந்து பார்த்த சரஸ்வதி, “கண்ணா.! ஆஷா !” என்று இரைந்தாள்.ஆஷா ஓடி விலகி விட்டாள். கண்ணன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.மேலும் சரஸ்வதி ஏதோ கூற வாயெடுத்தவள் கண்ணனின் பாட்டி, தன் மாமியார் வருவதைக் கண்டவுடன்.,தன் எண்ணத்தை மாற்றி உள்ளே சென்று விட்டாள். கண்ணன் இருந்த விதம், சரஸ்வதி நின்றிருந்த தோரணை, ஆஷாவின் தொய்ந்த நடை எல்லாவற்றையும் ஒரே வினாடியில் கணக்கெடுத்து நடந்ததை யூகித்தறிந்த பாட்டி, முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் ஹாலுக்குச் சென்று ஊஞ்சலில் அமர்ந்தாள். பெரும் அமைதி புயலுக்குப் பின் தோன்றியதா, இல்லை வரப் போகும் பூகம்பத்துக்கு அறிகுறியா,?எதுவும் நிகழவில்லை.   சில நிமிஷங்களில் சுந்தர ராமன், கோபாலன், ராகவன் ஆகிய மூவரும் அட்டகாசமாக உள்ளே நுழைந்தனர். வீட்டில் என்றுமில்லா அமைதி நிலவக் கண்டு அவர்களும் திடு திப்பென்று அமைதியாயினர். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. “சுந்தர ராமா ஆஷாவின் கல்யாணத்துக்கு நீ ஏதாவது முயற்சி செய்கிறாயா.?” யாரும் எதிர்பாராத கேள்வி. தாயிடம் இருந்து வெளிப்பட்ட கேள்விக்கு ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ என்று சுந்தர ராமன் யோசிப்பதற்குள் ,”ஆஷாவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைப்பதுதான் நல்லது.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ “ என்று கூறியபடியே சரஸ்வதி வந்தாள்.கண்ணனுக்கு தீயின் மேல் நிற்பது போல் இருந்தது. வெளியே செல்ல முயன்றவனை, “ கண்ணா! நீயும் ஒரு வேலைபார்த்துக் கல்யாணத்துக்கு தயாராய் இருக்கும்போது வா. நானே உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.இப்போது இங்கிருந்து போய்விடு “என்ற பாட்டியின் குரல் அவனை அயர வைத்தது. தான் கேட்கும் வார்த்தைகளின் முழு அர்த்தததையும் தாங்கிக் கொள்ள அந்த வினாடியில் அவனுக்கு முடியவில்லை. ஏதோ கேட்க முயன்றவனுக்கு அர்த்தம் விளங்க ஆரம்பித்ததும் விர்ரென்று தன் உடைமைகளை பெட்டியில் போட்டுக் கொண்டு அந்த இரவில் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினான். பாட்டியம்மாள் மெள்ள முறுவலித்தாள். சரஸ்வதி சந்தோஷத்தில் சிரிக்க உள்ளே சென்றாள். சுந்தர ராமனுக்கு விஷயம் விளங்க ஆரம்பித்ததும், “நன்றாக விரட்டினீர்கள் அம்மா, அந்த தண்ட சோற்று ராமனை” என்றார். பெட்டியுடன் வெளியேறிய கண்ணனுக்கு எங்கு போவதென்றே விளங்கவில்லை. எங்கு போனால் அகமும் முகமும் மகிழ்ந்து தன்னை வர வேற்பார்களோ அங்கு மட்டும் போகப் பிடிக்கவில்லை. எந்த நிலையில் இருந்தவன், எந்த மாதிரி வார்த்தைகளைப் பேசியவன், எந்த முகத்துடன்சென்று அவர்களைப் பார்ப்பது.?ஒரு சமயம் அப்படியே அங்கு போனாலும் அவர்களும் தன் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். அது சரி. தன் மிது அன்பையே பொழிந்து கொட்டிய பாட்டியும் மாமாக்களும் ஏன் தன்னை ஒதுக்குகிறார்கள்.தான் ஒரு நல்ல நிலையில் இருக்கும்போதுதான் தனக்கு மதிப்பா.?பணமில்லாத ஓட்டாண்டியாகி விட்டால் உலகமே தூற்றும் என்பது எவ்வளவு சரி. தான் நல்ல நிலையில் இருந்தபோது தன்னிடம் உதவி கோரி வந்தவர்களை எந்த மாதிரி எல்லாம் பேசி இருப்போம். இப்போது அடிமரமே சாய்ந்து விட்டதே. தான் பேசிய பேச்சுகள்மன்னிக்கப் பட்டிருக்குமா. ..தான் பேசிய பேச்சுகள் மன்னிக்கத்தக்கதா... ஏன்.?பேசியதிலும் நடந்ததிலும் என்ன தவறு.?எதற்கு மன்னிக்கப் பட வேண்டும்.?துள்ளித் திரிய வேண்டிய பருவத்தில்  மூலை முடுக்கில் பதுங்கிக் கிடக்க வேண்டி இருந்ததே. அரை வயிற்றுக்கு கிடைப்பதாயிருந்தாலும் எவ்வளவு பேர் பங்கு.?இவ்வளவு பேர் இருந்திருக்கா விட்டால் எல்லோரும் ஒன்று கூடி தலைமேல் தூக்கி வைத்து ஆடியிருப்பார்களோ.இந்த நிலையிலே இக்கட்டிலேயே வளர்ந்து ஏதோ சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்த பிறகாவதுதன் ஆசை அபிலாக்ஷைகளை நிறைவேற்றலாம் என்றால் அதிலும் பங்கு கேட்க வந்தால் யாராயிருந்தால்தான் என்ன... ஒதுக்கித் தள்ள வேண்டியதுதான். தான் செய்த செய்கை ஒதுக்கப் பட்டவர்கள் மட்டும்தானே தவறு என்றனர். பாட்டி மாமா எல்லோரும் சரி என்றுதானே கூறினர். அன்று சரி என்று கூறி, இன்று தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் புறக்கணிக்கும் இவர்கள் தான் நல்ல நிலையில் இருந்திருந்தால், “ஆஷாவை நீயே கல்யாணம் பண்ணிக்கொள் ‘என்று போட்டி போட்டுக் கொண்டு கூறி இருக்க மாட்டார்களா...இந்த ஆஷா இல்லாவிட்டால்இன்னொரு உஷா...தான் பார்க்காத பெண்களா....இருக்கட்டும் .இப்போதைக்கு எங்கு போவது,? கண்ணனுக்கு தன் நண்பன் அருள் வீடு அருகிலிருப்பது நினைவுக்கு வந்ததும் அங்கேயே ஆஜரானான்.கண்ணனும் அருளும் நல்லது பொல்லாதது எல்லாவற்றிலும் சம பங்கு எடுத்து வாழ்க்கையை அனுபவித்தவர்கள். அருளுக்கு கண்ணன் அங்கு வந்து தங்குவதில் ஆட்சேபணை இருக்கவில்லை.       அத்தியாயம் மூன்று   ஜனவரி 26-ம் நாள். பம்பாயில் குடியரசு தின விழா கோலாகலப்பட்டுக் கொண்டிருந்தது..எங்கு பார்த்தாலும் ஜனத் திரள், எங்கு பார்த்தாலும் ஒளி வெள்ளம்.எங்கு பார்த்தாலும் உள்ள நிறைவை பிரதிபலிக்கும் முகங்கள். உண்மையில் உள்ள நிறைவு இருக்கிறதோ இல்லையோ,குறைந்தது குடியாட்சி தினத்திலாவது மக்கள் தங்கள் முகங்களை இனிமை திகழ மேக்கப் போட்டுக் கொண்டிருந்தனர்.ஆடவரும் பெண்டிரும் முதியவரும் சிறியவரும், பட்டாம் பூச்சிகளும் வண்டுகளும் என, யுவதிகளும் இளைஞர்களும் விக்டோரியா டெர்மினசிலிருந்து மலபார் ஹில்ஸ் வரை இரண்டறக் கலந்திருந்தனர்.விழாவைக் காணவென்றே முப்பது நாற்பது மைல்கள் சுற்றிலுமிருந்து வந்திருந்த மக்கள் கூட்டத்தில் எள் போட்டால் எண்ணையாய்த்தான் விழும். அந்த ஜனத்திரள் இந்தியாவின் ஒருமைப் பாட்டை ஒருங்கே கொணர்வது போல் எதிரி எவன் பார்த்தாலும் திகிலுறச்செய்யும் வண்ணம் இருந்தது கூட்டத்தில் ஒருவனாக உள்ளத்து உணர்ச்சிகளை ஓரளவு மறைத்த வண்ணம்  சென்று கொண்டிருந்த பாபுவுக்கு உண்மை எது அல்லாதது எது என்று புரியாத நிலை இந்த எக்களிப்புகளும் களியாட்டங்களும் அங்கு கூடியிருந்த லட்சோப லட்ச மக்களின் உள்ளத்தில் உருவாகியிருக்கும் உண்மையான நிலையா.?இருக்காது. இருந்திருந்தால் தன்னைப் போல ஒரு நிலை படைத்த ஒருவனுக்கு அங்கு இடமிருக்காது.இடமிருக்கிறது என்ற ஒரே காரணத்தாலேயேதன்னைப் போன்றவர்கள் பலரும் அங்கிருக்கிறார்கள் என்ற நிலை வெட்ட வெளிச்சம். ஒளிமயமான பம்பாய் நகரத்தின் உண்மை ஒளியை, அதாவது உள்ளத்து ஒளியை உணர்ந்தவர்களும்,உணராத தன்னைப் போன்றவர்கள் உணர முற்பட்டும் ,அங்கு விழைந்திருப்பதின் நோக்கமும் இந்த உலகம் ஒரு நாடக மேடை என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துணர்த்தியது பாபுவுக்கு உள்ள நிறைவு கொண்டவர்களாவது , எல்லொரும் தங்களைப் போல் இருக்கிறார்களா என்று ஒரு கணம் சிந்திக்க முற்பட்டால் குடியாட்சி உண்மையிலேயே அந்த வார்த்தையின் முழு அர்த்தத்தைப் பெற்று விளங்குவதாயிருக்கும். ஆனால் உலகமோ சுயநலக் கூட்டுவாதிகளின் ஏகபோக உரிமைக்கான உறைவிடம். இதில் தன்னைப் போன்றவர்கள் எந்த அளவுக்கு எண்ணப் படுவார்கள்.? ஏன் ..தன்னை போன்றவர்களாலேயேஇந்த சுயநலக் கும்பல்கள் உருப் பெறுகின்றன. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எண்ணப் படுவதும் நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று முழங்கப் படுவதும் உண்மையான நிலையாக உருவெடுத்தால்........இன்று இங்கு காணும் காட்சி உண்மையான நிலையின் பிரதி பலிப்பாக இருக்கும். ஏங்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு இரக்கமும் பரிவும், ஏற்றமான வாழ்வுக்கு வழிமுறையும் அமைத்துக் கொடுக்கும் ஒரு அழகானசமுதாயத்துக்கு நிலைக் களனாக,நமது பாரதம் விளங்கும். அங்கு வறுமை இருக்காது, சோம்பல் இருக்காது குரோதம் இருக்காது, அன்பே சிவமாய், அருளே சக்தியாய் உண்மையான ஒளிமயமான சமுதாயமாக விளங்கும். விளங்கத காரணம் இவற்றைப் பற்றி சிந்திப்பவர்கள் குறைவு. செயல்படுபவர்கள் அதிலும் குறைவு. ஏன்...இந்தக் குறைந்த வகுப்பினரின் உருப்படியில் ஒன்று தன்னால் அதிகரிக்கட்டுமே. சிந்தனையில் மூழ்கியே ஜனத்திரளால் தள்ளப்பட்டு மறுபடியும் விக்டோரியா டெர்மினசின் முகப்புக்கு வந்து விடுகிறான் பாபு. ”பாபு, சமுதாயத்தை சீர் செய்யும் பணி பிறகிருக்கட்டும்.தந்தை இழந்த பிள்ளைகளுடன் திக்குத் தெரியாத வாழ்வின் ஒரு முனையில் நிற்கும் உன் தாயையும் உன் தம்பிகளையும் கதியேறச் செய்வது உன் முதல் கடமை.பிறகு யோசிக்கலாம் உன் புறத்தொண்டு பற்றி......” “ அப்பா...!கத்திவிடுகிறான் பாபு. தந்தை இல்லையென்ற நிலையே உண்மை என்று ஒப்புக் கொள்ளும் பக்குவம் கூட அடைந்திருக்கவில்லை பாபுவுக்கு.தந்தையின் குரல் கேட்டது போன்ற பிரமை. தான் கடமை உணர்ச்சி தவறி விட்டோமோ என்ற ஒரு வினாடி சிந்தனையின் சவுக்கடி. . ” அரே, ஏக் ஆத்மி கிர் கயா.( அடே ஒரு மனிதன் விழுந்து விட்டான் ) என்று கூட்டத்தினரின் கலவரம் மிகுந்த குரல் கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் இருந்தது பாபுவுக்கு. . அவன் விழித்தெழுந்தபோது, ஆளரவம் அடங்கிய நிலை. அறையின் ஒரு மூலையில் வைக்கப் பட்டிருந்த டேபிள லாம்பின் ஒளி பரவாதிருக்க பல்பை மறைத்தபடி ஷேட் பொருத்தி வைக்கப் பட்டிருந்தது. இல்லாவிட்டாலும் ஒளி அவ்வளவு பிரகாசமாகாந்த விடிகாலை நேரத்தில் இருந்திருக்காது. விளக்கு அணைக்கப் பட்டிருந்தது. மலங்க விழித்தவனுக்கு ஏதோ கனவுலகிலிருந்து நனவுலகுக்கு வருவது போல் இருந்தது. அவன் புரண்டு படுத்தான், சுற்றுப்புறத்தை நோட்டம் இட. கட்டில் கிறீச்சிட்டது. “ அப்பா அவர் எழுந்து விட்டார் “ என்ற ஒரு கீச்சுக் குரல். உடனே சுமார் நாற்பத்தைந்து வயது நிரம்பிய ஒரு மனிதர்,லக்ஷ்மிகளையே உருவெடுத்து வந்தால் போன்ற ஒரு பெண்மணி,இவர்களுக்குப் பின்னால் மேகக் கூட்டத்திடையே புகுந்து வெளிப்படும் சந்திரன் போன்ற ஒரு முகம், இன்னும் இரண்டு மூன்று வாண்டுகள், எல்லோரும் கட்டிலை சூழ்ந்து கொண்டனர். எழுந்து நிற்கப் பிரயத்தனப்பட்ட பாபுவை தடுத்து நிறுத்தினார் அப்பெரியவர்.குறிப்புணர்ந்து கொணர்வது பொன்ற பாவனையில் ஒரு “சா “ கோப்பை வெளிப்பட்டது., பின்னாலிருந்த பெண்ணின் கையிலிருந்து. உடற் களைப்பு வேண்டாம் என்று சொல்லக் கூடத் தோன்றாமல் பாபுவை டீ வாங்கி குடிக்க வைத்தது. அவன் மயங்கி விழுந்த நிலையையும் அவர்கள் வீட்டுக்கு அவன் கொண்டு வரப்பட்டதையும் ராம்பிரசாத் (அதுதான் அந்தப் பெரியவரின் பெயர் ) விளக்கிக் கூறியவர் தன்னுடைய குடும்பத்தாரையும் பாபுவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவள் என்னுடைய மனைவி. இது என் தங்கையின் பெண்.பெங்களூரில் பெற்றோருடன் இருக்கிறவள் இங்கு கொஞ்ச காலம் எங்களுடன் இருக்க வந்திருக்கிறாள். இந்த மூன்று பெண்களும் என் குழந்தைகள்.  அறிமுகம் ஆங்கிலத்தில் நடந்தது. பாபுவும் தன்னைப் பற்றி எவ்வளவு சுருக்கமாகக் கூற முடியுமோ அவ்வளவு சுருக்கமாகக் கூறினான்.தான் அங்கு ஒரு கம்பனியில் ட்ரெயினிங்காக வந்ததும்  இன்னும் ஒரு மாதத்தில் பெங்களூர் செல்ல இருப்பதாகவும் கூறினான். பெங்களூரில் எங்கே என்று அந்தப் பெண் கேட்டாள். அலசூர் என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னான் பாபு. இவர்களும் கேவல்ரி ரோட் அருகில்தான் இருக்கிறார்கள் என்று ராம் பிரசாத் கூறிய்தும் பாபு ஒருமுறை  அந்தப் பெண்ணைக் கூர்ந்து நோக்கினான்.ஒரே பார்வையே என்றாலும் யுகாந்திரகாலமாகப் பழகிப் புணர்ந்த ஒரு நேசபாவம் அதில் குடி கொண்டிருந்தது. மறு வினாடியே அந்த விரசபாவத்தை மற்றவர்கள் அறிந்து விடுவர்களோ என்ற துடிப்பில் பார்வையை மீட்டான்.இருந்தாலும் உள்ளத்தின் ஒரு பகுதி லேசாவது போன்றதொரு உணர்ச்சி. சமய சந்தர்ப்பம் இல்லாமல் அன்பே.! யானும் நீயும் இசைந்து அயல்ல் எவரும் அறியாமல்-வன்பே உருவாம் விதியினையும் வளைத்துள்ளாக்கி முயல்வோமேல், துன்பே தொடரும் இவ்வுலகில் துண்டு துண்டாய் உடைத்துப்பின் இன்பே பெருகி வளர்ந்திடுமோர் இடமாய்ச் செய்ய இயலாதோ.?” என்ற பாடல் நினைவுக்கு வந்தது. சிறிது நேரத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துத் தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தான் பாபு. இரண்டு வருடங்களைத் தள்ளிவிட்ட பாபுவுக்கு மீதம் இருந்த ஒரு மாதத்தைப் போக்குவது என்பது மிகவும் பிரயாசையாய் இருந்தது. அம்மா எப்படி இருக்கிறார்களோ.?தம்பிகள் எல்லோரும் எப்படி இருப்பர்கள்.? இவர்கள் எல்லாம் படித்து ஒரு நிலைக்கு வர எவ்வளவு காலமாகும். எவ்வளவு காலமானால்தான் என்ன.?தந்தைக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். அவர் இல்லையே என்ற ஏக்கம் இல்லாதபடி அவர்கள் வளர வேண்டும். பிறகுதான் அவன் ஆசை அபிலாக்ஷைகள் எல்லாம். எண்ணக்குவியலில் மூழ்கியெழுந்து நாட்களைக் கழிக்கலானான் பாபு. அத்தியாயம் நான்கு   ”அடடா.!இதுகள் அடிக்கிற கொட்டத்தில் அடுத்து இருப்பவர் என்ன பேசுகிறார் என்றே தெரிவதில்லை. என்ன சொன்னேள்.? கண்ணன் வீட்டை விட்டு ஓடிட்டானா.? உங்களுக்கு யார் சொன்னது.? பாட்டி ரொம்பவே நொந்திருப்பார்களே.”—கமலத்தின் கணவன் கொண்டு வந்த அந்த செய்தி அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது, இந்தக் காலத்துப் பெண்களின் ஒரு தனிப் பிரதிநிதி இந்தக் கமலம். வாழ்க்கையில் தன் சுயப் போராட்டங்களில் கொஞ்சம் கவனமாக ஈடுபாடு கொடுத்துக் கவனித்தால் ஓரளவு நிம்மதியாய் வாழ்க்கை அமைந்திருக்கும்.. பெண்களே இல்லாத குடும்பத்தில் ஒரே பெண்ணாகப் பிறந்து வளர்ந்தவளுக்கு பெண்மை என்பது மண வாழ்க்கை நடத்திப் பிள்ளைகளைப் பெறுவது ஒன்றுதானென்று ஐயப்படும் விதத்தில் குணம். அதைக் கொண்டவனுக்காவது மாற்றியமைக்கும் சக்தி உண்டா என்றால் அதுவும் இல்லை. கமலத்தின் குண விசேஷ வேறுபாடுகளை கண்டறிந்தவன், அதனால் தனக்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்று தோன்றினால் அதனை ஊக்குவிப்பவன். ஊரார் பேச்சுகள் ,உள்ளூரின் பற்று வரவுகள் இவற்றை ஒரு நீதிபதி கோர்ட்டில் விசாரித்தறிந்து தீர்ப்பு கூறுவதுபோல, வாதி, பிரதிவாதி வக்கீல்கள் இல்லாமலெயே தீர்ப்பு கூறி கமலத்தை சீண்டுவான். தன்னுடைய கணவனின் தீர்ப்பில் அலாதி நம்பிக்கை உண்டு கமலத்துக்கு. ஆனால் அதே அளவு நம்பிக்கை பாட்டியின் தீர்ப்பிலும் அவளுக்குண்டு.அதனால் பாட்டியின் தீர்ப்புகளோடு தனது தீர்ப்பும் ஒத்துப் போக வேண்டும் என்ற கவனம் கமலத்தின் கணவனுக்குண்டு. "கண்ணன் வீட்டை விட்டு வெளியேறியதைப் பாட்டியாலேயே தடுத்திருக்க முடியாது இருந்திருக்க வேண்டும். இல்லை பாட்டியின் விருப்பப்படியே கண்ணன் வெளியேறி இருக்கிறான், அல்லது வெளியேற்றப்பட்டு இருக்கிறான். பாட்டியால் தடுக்க முடியாத சம்பவம் இருக்க முடியாது. அதாவது கண்ணன் வெளியேறியதில் பாட்டிக்கு ஆட்சேபணை இருந்திருக்காது. ஆகவே தவறு கண்ணன் மேல்தான் இருக்க வேண்டும். உங்கள் கண்ணன் நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை. ஏதோ நாலு பேர் மத்தியிலே நல்லது பொல்லது செய்யாமே சிவனேன்னு இருக்கத் தெரியாது.எங்கேயோ சரியா மாட்டிண்டு இருக்கான்.அப்பாவைப் பகைச்சாச்சு;இப்போ பாட்டி மாமாமார்;இன்னும் கொஞ்ச நாள்ல உலகத்தையே பகைச்சிட்டாலும் ஆச்சரியமில்லை..” " எங்க கண்ணன் ரொம்ப நல்லவனாக்கும். அப்பாவப் பகைச்சிட்டது அவன் தப்பில்லை.அவனாகவும் பகைச்சுக்கலை. அப்பாதான் அந்த இரண்டாம் தாரத்தோட ஆட்டத்துக்கு சரியா மாட்டிட்டார். அவளைப் பகைச்சிட்டப்போ அப்பாவும் பகையாயிட்டார். அது யார் தப்புங்கறேன்? கண்ணன் இன்னைக்கும் அப்பாவை நினைச்சுப் புலம்புவான். இந்த அப்பாவுக்கும் ஆசை அன்புங்கற்து எல்லாம் அவள் ஒருத்திகிட்ட மட்டுந்தான். எதுக்கும் இல்லாதவரைப் பத்திப் பேசறது நன்னாயில்லை. ஆனா கண்ணன் பாட்டிகிட்ட அப்படி நடந்திருக்கக் கூடாதுதான்.”----பாட்டியிடம் கண்ணன் பயமில்லாமல் ஏதோ தவறாக நடந்திருக்கிறான் என்பது கமலத்தின் தீர்ப்பு “ அதுசரி....கண்ணனும் உங்கண்ணா சுந்தரமும் நீயும் உங்க பாட்டியும்தான் உங்கப்பாவையும் உங்க சித்தியையும் பத்தித் தவறாப் பேசறேள். ஆனால் உன் தம்பி பாபு அவாளை எல்லாம் தலைமேல வெச்சு ஆடறானே. ஆமா.. உங்க சித்திக்கு என்ன வயசிருக்கும்னு சொன்னெ.?” " ஏன் என்னோட வயசைவிட ஒண்ணு ரெண்டு வருஷம் கூடுதலாயிருக்கும்.” “ ஒரு சமயம் அப்படியுமிருக்குமோ.?” இல்லாத ஒன்றை இருப்பதாகத் தான் முடிவு செய்து அதனை சூசகமாக வெளியிட்டால், கமலம் எப்படி புரிந்து கொள்கிறாள் என்று பார்க்கிறான்..புரியாததை புரிந்த மாதிரி காட்டிக்கொள்ளும் இனத்தவள்தானே கமலம். ”என்ன எழவோ யார் கண்டா.?.மருந்து கிருந்து கொடுத்து அவனைக் கைக்குள்ளே போட்டிருப்பாள் அவள். நமக்கெதுக்கு வம்பு தும்பெல்லாம். காப்பிப் பொடியில்லை, சக்கரையில்லை. காப்பியில்லாமல் உங்களுக்கும் எனக்கும் முடியாது. என்ன பண்றது.?” ” என்னைக்கேட்டா...உங்க பாட்டிகிட்ட போய் ஒரு பத்து ரூபாய் வாங்கி வாயேன். மேலும் கண்ணனோட விவரங்களையும் தெரிஞ்சுண்டு வரலாம். இந்தா.. பஸ்ஸுக்கு சில்லறை.” பொறுப்புகளை பெண்டாட்டியிடம் சுமத்திவிட்டுச்சென்றான் அந்தப் பேர்வழி. கமலத்துக்கு காப்பிப் பொடி, சர்க்கரை ஞாபகம் மறந்து விட்டது. கணவன் சொன்ன செய்தி, தங்களுக்குள் நடந்த பேச்சு இவற்றை சிறிது நேரம் அசைபோட்டாள். வானம் இருண்டு ஒன்றிரண்டு மின்னல்களும் தோன்றி,இடி இடித்ததும்தன் நிலைக்கு வரப் பெற்றவள் இருட்டி விட்டதை உணர்ந்து,கொல்லையில் காயப் போட்டிருந்த துணிகளை வீட்டுக்குள் எடுத்து வந்தாள்..சமையல் வேலை முடிந்திருந்தது.பிள்ளைகள் கும்மாளம் மழையைக் கண்டதும் அதிகரிக்க ஆரம்பித்தது.அவர்களை அடக்கி ,விளக்கைப் பொருத்தியவள் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். அன்றைக்கும் இதுபோல் ஒரு சாயங்காலம். கண்ணன், சுந்தரம், பாபு, கமலம் நால்வரும் வீட்டிலிருந்தார்கள். அப்பா “ அவள் “ ஊருக்குப் போயிருந்தார்.அவளது ஏதோ ஒரு பிரசவ காலம். அன்று மாலை அப்பா வருவதாகச் சொல்லியிருந்தார். அப்போதெல்லாம் மனம் நிறைய சாப்பாடு என்ற பேச்சே கிடையாது. சாப்பாடு டிபன், காப்பி எல்லாமே வயிறு முட்டக் கஞ்சியும் கருவேப்பிலைத் துவையலும்தான். அப்பா மட்டும் இரவில் ஒரு டம்ளர் பால் குடிப்பார். எட்டுமணி வரை காத்திருக்கப் பொறுமையின்றி ஏழு மணிக்கே சாப்பாட்டை முடித்தாயிற்று. அப்பா வர இன்னும் ஒன்றிரண்டு மணி நேரமாகலாம். அதுவரை நால்வரும் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். அண்ணா சுந்தரத்துக்கு வேலையில்லை.கண்ணன் படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தான். பாபு சின்னவன். கமலத்துக்குக் கலியாணப் பேச்சு துவங்கலாமா என்றிருந்த நேரம். பேசிக் கொண்டிருந்தவர்கள் பேசப்பேச, பேசப்படும் செய்தி என்னவோ திரும்பத் திரும்ப இருக்கும் நிலையைபற்றியதாகவே இருந்தது. தூங்கப் போகலாமென்றால் தூக்கம் வரவில்லை, நேரமுமாகவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அப்பாவும் வருவார். அப்பாவின் வரவிலோ, ஊரிலிருப்பவளின் நலனிலோஅக்கறை கொண்டு யாரும் விழித்திருக்கவில்லை. அப்பா வரும்போது ஏதாவது சாப்பிடக் கொண்டு வருவாரா என்னும் நப்பாசைதான். இடியும் மின்னலும் வலுக்கவே சுந்தரம் குடையெடுத்துக் கொண்டு அப்பாவைக் காண ஸ்டேஷனுக்குக் கிளம்பினான். சென்றவன் இரண்டு மணி நேரம் கழித்துத் தனியாக வந்தான். அப்பா வரவில்லை. “ அப்பா இன்னிக்குத்தான் இரவு வ்ண்டியில் வருவதாகச் சொல்லியிருந்தார். நல்லாப் பார்த்தியா அண்ணா. மழை வேற பலமா இருக்கு.... “அவ்வளவு நேரம் பேச்சில் அதிகம் கலந்து கொள்ளாத பாபுதான் முதலில் சுந்தரத்திடம் கேட்டான். எனக்குத் தெரியும் போடா... வெளிலே மழையில போய் வந்திருக்கேன்.எனக்கில்லாத அக்கறை உனக்கு. நல்லாத்தான் பார்த்துட்டு வந்தேன். அப்பா இன்னிக்கு வர மாட்டார். அவருக்கு அவளைப் பார்த்ததும் நம்ம ஞாபகமே மறந்திருக்கும். சே..!சுத்த யூஸ்லெஸ் அப்பா..” வெறுப்பை உமிழ்ந்தான் சுந்தரம். “ அப்போ, அப்பா வரலேன்னா ..அவருக்கு வெச்சிருக்கும் பால் இருக்கே..அது..” கமலத்துக்கு திடீர் சந்தேகம். “ ஏன்.. நம்ம நாலு பேர் இல்லையா.. ஒரு நாளைக்காவது பால் குடிக்கிறது...” இது கண்ணனின் முடிவும் அபிப்பிராயமும். . “ எனக்குப் பால் வேண்டாம்... .இல்லை எனக்கும் கொடுங்கள். ஒரு சமயம் அப்பா வந்தால் என் பங்காவது அவருக்கிருக்கட்டும் “ என்றான் பாபு. " அதெல்லாம் முடியாது.பங்கு வேணும்னா உடனே சாப்பிடணும் இல்லைன்னா உன்னை கணக்கிலே சேர்க்க மாட்டோம்.”தந்தைக்குப் பிறகுள்ள தனயனின்  அதிகாரம் சுந்தரத்தின் வார்த்தைகளில் தொனித்தது. தீர்ப்புக்குக் கட்டுப் பட்டவர் இருவருக்கும் பால் கிடைத்தது. கட்டுப்படாத பாபுவுக்கு இல்லை. இனியென்ன செய்வது.? செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் முடிக்கப் பட்டன. எல்லோரும் படுக்கச் சென்றனர். அரை மணி நேரமிருக்கும் ரங்கசாமி மழையில் தொப்பமாக நனைந்து வந்து கதவைத் தட்டினார்.தூக்கம் வராத பாபு ஓடிச் சென்று கதவைத் திறந்தான். அப்பாவுக்குத் தலை துவட்ட டவல் எடுத்துக் கொடுத்தான். எல்லா விவரங்களையும் கேட்டான். எல்லா சம்பவங்களையும் கூறினான். ரங்கசாமிக்குப் பிரயாணக் களைப்பு. பசிபோக்கப் பாலை எதிர்பார்த்தவர் பாபு சொன்னது கேட்டு ஏமாந்தார்.தோளுக்கு மேல் வள்ர்ந்த பிள்ளைகளை எதுவும் கேட்க முடியவில்லை.ஆனால் தந்தையிடம் கோள் சொல்கிறான் பாபு என்ற ஆத்திரத்தில் சுந்தரம் பாபுவை அடித்து விடுகிறான்.  ரங்கசாமிக்கு இந்த செய்கை ஆத்திரத்தை மூட்டி விட்டது. அதை அடக்கக் கூடியவரை அடக்கினார். அடக்க முடியாதவற்றை “ ஏண்டா அவனை அடிக்கிறே. அந்த அடியை நீயே அடிச்சுக்கோ. வளர்த்துப் பெரியவனாக்கி ஆளாக்கின என்னையும் மீறி என்னடா அவ்வளவு பெரிய வயிறு உங்களுக்கு. சே...! ரோஷம் வேற வருதா இதுல.” என்று கூறி வெளிப்படுத்தினார். ஆமா...பெரிசா வளர்த்து ஆளாக்கிட்டீங்க . அரை வயிறு கஞ்சி கொடுக்க வக்கில்லை. ..எல்லாம் “அவ” மேலிருக்கிற மோகம். இருக்கிறதுக்கே சோத்துக்கு வழியில்லை. இதுல வேற அடிஷன்ஸ்  பங்குக்கு. “ கூறக் கூடாதவற்றைக் கூறினான் தனயன் பொறுக்க முடியாமல் தவித்தார் ரங்கசாமி. “ அவளை ஏண்டா கரிச்சுக் கொட்டறீங்க, அவ உங்க கிட்ட பரிவா அன்பா நடந்துக்கறதில்லையா.. என் போறாத காலம். வாழ்க்கையை சுகமா நடத்த முடியலெ. நான் என்ன வேணும்னா உங்களைக் கஷ்டப் படுத்தறேன். “ “ அவள் இங்கிருக்கிறதுதான் பெரிய கஷ்டம். அவளை நீங்க கல்யணம் செய்திருக்கலைன்னா இன்னும் எவ்வளவோ சௌகரியமா இருந்திருப்போம். வந்தவளும் ஒரு எச்சிக்கலை “என்றான் கண்ணன். சுந்தரம் ,கண்ணா உங்க ரெண்டு பேருக்கும் சொல்றேன். இது என்னுடைய சொந்த விஷயம். இதுலெல்லாம் உங்க கிட்ட அனுமதி வாங்கத் தெவையில்லை எனக்கு. இதுல யாரும் தலையிடறது எனக்குப் பிடிக்கலை. உங்களை வளர்த்து இந்த நிலைக்குக் கொண்டு வந்தாயிற்று இல்லையா. இனிமே உங்ககிட்ட நானும் கையேந்தி நிக்கப் போறதில்லை. மனசுக்குப் பிடிக்கலைன்னா நீங்க எங்க வேண்டுமானாலும் போகலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை.” . ஆத்திரத்தில் கூறப்படும் சொற்கள், ஆத்திரம் அடங்கிய பின் நினைத்துப் பார்க்கப் பட்டால், அவற்றின் தவறுகளும் உள்ளர்த்தங்களும் எதிர்பார்க்காத அளவு தொக்கி நிற்பது தெரியும். ஆனால் அவற்றைக் கூறுவதோ கேவலம் சாதாரண மனிதர்கள் தானே.சிந்தித்துப் பேசுபவர்கள் மிகக் குறைவு. அது யாருடைய தவறு.?. அந்த சம்பவத்துக்குப் பிறகு சுந்தரமும் அதிக நாள் வீட்டிலிருக்கவில்லை. அந்த சம்பவத்தன்று இருந்த அந்த நான்கு பேருடைய மனநிலையும் , அந்த நால்வரின் குணாதிசயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தது. அன்று போலவே இன்றும் அந்த நால்வரும் நாலு விதம். இதில் யார் சரி, யார் தவறு.? கமலத்துக்கு விடை தெரியவில்லை. தெரியாதவற்றை தெரிந்ததுபோல் இந்த நிலையில் யாரிடமும் காட்டிக் கொள்ளத் தேவையில்லை. இருந்தாலும் கண்ணனின் விவகாரம்.........?பாட்டியிடம் பத்து ரூபாய் வாங்கப் போகும்போது தெரிந்து கொள்ளலாம்.                 அத்தியாயம் ஐந்து   ”அம்மா அண்ணா வர நேரமாயிடுத்து. நான் ஸ்டேஷனுக்குப் போய் கூட்டி வருகிறேன் “ என்றான் ராஜு. “அம்மா, அண்ணா கார்ல வருவானா,நடந்து வருவானா.” என்று கேட்டான் சந்துரு. “ போடா,அண்ணா கார்லதான் வருவான் இல்லியா விசு. “என்றான் ரவி. “ ஏண்டா பறக்கறே.அண்ணா ஆட்டோல வந்தாலும் வரலாம்” என்றான் விசு, எதையும் தீர யோசித்துப் பேசுபவன் போல. கல்யாணி அம்மாவுக்கு கை ஓடவில்லை, கால் ஒடவில்லை. இயந்திர கதியில் வேலை செய்து கொண்டிருந்தவள் ஓரோர் சமயம் தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஆறப் போட்ட காயத்தை ஆற்றும் பணியைக் காலம் செய்து கொண்டிருந்தது .பூராவும் ஆற முடியாத காயம். ஆறினாலும் அதன் வடு அதை ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும். இருந்தாலும் அதனுடே சில பசுமையான எண்ணங்களும் தோன்றத்தான் செய்யும். இந்தப் பசுமை நினைவுகள்தான் காயத்தையும் வடுவையும் மறக்கச் செய்கிறது. டேய் ராஜு ,சீக்கிரம் போடா நீ போறதுக்குள்ள வண்டி வந்துடப் போறது,என்று கூறியவளை , :”என்ன மாமி வீடே அமர்க்களப்படறது. யார் வரா.?” என்ற குரல் திரும்ப வைத்தது. திரும்பியவளின் பார்வையில் என்றுமில்லாத தீட்சண்யத்தை உணர்ந்தாள் சியாமளா. “ என்ன மாமி ,அப்படிப் பார்க்கறேள். நாந்தான் சியாமளி. “  “இல்லையடி, சியாமளி. உன்னை எவ்வளவோ தடவைப் பார்த்திருந்தாலும், இன்னிக்கிப் பார்க்கறப்போ ஏதோ ஒரு கணக்குப் போட்டது என் மனசு.அது சரி என்ன இன்னிக்கிக் கார்த்தாலயே வந்துட்டியே” ” எப்பவும்போல பள்ளிக்கூடம் முடிஞ்சு போரப்போதான் உங்களப் பார்க்கணுமா.?என்னவோ இன்னக்கி காலையிலேயே உங்களைப் பார்க்கணும்போல இருந்தது.வந்துட்டேன். ஆமா, நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலியே. இன்றைக்கு யார் வரா... என்ன டிபன்...அடடா, பூப்போல இட்லியா...யாருக்கு என்ன சமச்சாரம். ?” ”இன்னும் கொஞ்ச நேரத்தில் பாபு வந்துடுவன்.அவனுக்காக ஸ்பெஷலா இட்லி பண்றேன். நீயும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல். நல்லாயிருக்கா.?” “ என்னவொ காந்தி ,நேருன்னு சொல்ற மாதிரி மொட்டையா பாபுன்னா யாருக்குத் தெரியும்.? நீங்க பாபுன்னதும் எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் ஞாபகம் வந்தது.அவர் பம்பாயில இருக்காராம். இந்தப் பக்கத்து ஆள்தான் போலிருக்கு. “  ” இந்த பாபு என் பிள்ளை.,உனக்குத் தெரியாது. நீ பார்த்ததில்லை. நீ சொல்ற பாபு யாரோ எனக்குத் தெரியாது.” “உங்க பிள்ளையா....அப்படின்னா ராஜுவுக்கு மேலயா...எனக்குச் சொல்லவே இல்லையே.” எல்லாத்தையும் சமயம் வரும்போதானேம்மா சொல்லலாம்.உனக்குத் தெரிந்ததைவிட தெரியாததே அதிகம். பாபு என் மூத்த பிள்ளை .இப்போதைக்கு இது போதும் பின்னே சொல்றேன்.:”சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு சொல்லிக் கொள்ளாமலேயே கண்களில் நீர் வந்து விட்டது. துடைத்துவிட முயன்றவள் துடைக்கத் துடைக்க ஆறாகப் பெருகியது கண்ணீர். சியாமளாவுக்கு எதுவும் விளங்க வில்லை. கேட்கக் கூடாத ஏதோ ஒன்றைக் கேட்டு கல்யாணி அம்மாவைக் கலங்க வைத்துவிட்டோமோ என்று சஞ்சலம். பதட்டத்துடன் கைகளை பிசைந்தவாறு நின்றிருந்தாள். “ ஆமாம் சியாமளி..என் பிள்ளை. என் மூத்த பிள்ளை பாபு. அவன் வருவதைக் காணக் கொடுத்து வைக்காமல் அவர் போயிட்டார். இந்த நிலையிலே பாபு வரதப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையிருந்தது. அவரும் இருந்திருந்தா.....” பேச்சை மாற்ற விரும்பிய சியாமளா, “ அப்போ இன்னிக்கு சந்துருவும் ரவியும் ஸ்கூலுக்கு மட்டமா.?” என்றாள். ” மட்டமில்லை டீச்சர் .இன்னிக்கு லீவு..அண்ணாவே லீவ் லெட்டர் எழுதித் தருவார்” என்ற சந்துரு தொடர்ந்தான்.” அம்மா முகம் கழுவிக்கட்டுமா.? புதுச் சொக்காய் தரியாம்மா” “ புதுத் துணி போட்டு எங்கே போறீங்க.” “ எங்கயும் போகலை டீச்சர். அண்ணா வரும்போது அழகா இருக்க வேண்டாமா... அதுக்குத்தான். சியாமளா சந்துருவின் முதுகைத் தட்டிக் கொடுத்து, கல்யாணி அம்மாவிடம் விடை பெற்றாள். அவள் வாசலில் இறங்குவதற்கும் பாபுவும் ராஜுவும் ஆட்டோவிலிருந்து இறங்கவும் சரியாயிருந்தது. பாபுவைப் பார்த்த சியாமளா ஒரு கணம் திகைத்து விட்டாள். பாபுவும் சியாமளாவைப் பார்த்து ஒரு கணம் தயங்கினான். வெளியே போகக் கிளம்பிய சியாமளாவை ஏதோ ஒரு எண்ணம் பின் தங்கச் செய்தது. சிறிது நேரம் பிரிந்தவர் கூடிய களிப்பு நிலவியது. பம்பாயிலிருந்து அல்வா வாங்கி வந்திருந்தான் பாபு. அதை எல்லோருக்கும் கொடுத்தவன் சியாமளாவை கவனித்து” இவர்களை உனக்குத் தெரியுமா அம்மா “ என்று கேட்டான். “ தெரியுமாவாவது... இவள் தான் சியாமளா. சந்துரு ரவியோட டீச்சர். இதாம்மா என் மூத்த பிள்ளை.” “ நான்சொன்னவரும் இவர்தான் மாமி “ என்றாள் சியாமளா. “உங்களுக்கு ஒருவரை ஒருவர் முன்னமே தெரியுமா ?” “ தெரியும்னு சொல்றத விட ,பார்த்திருக்கோம் என்பதுதான் சரியம்மா” என்றான் பாபு. அவனுக்கு ஏனோ சியாமளாவை முன்பே தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் அவ்வளவு விருப்பமிருக்கவில்லை. சியாமளாவும் அதை அவ்வளவாக விரும்பி இருக்க மாட்டாள் .காலம் செல்லும் கோலத்தில் ஒருஆணும் பெண்ணும் பார்த்துப் பேசினாலே கதைகள் பல கட்டிவிடும் உலகில் அதை நன்கு புரிந்து கொண்டிருந்தன இரண்டு ஜீவன்கள் .ஆனால் பாபு சொல்லாததும் சியாமளா விரும்பாமலிருப்பதும் அவர்கள் அத்தனை அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள் என்ற காரணத்தால் அல்ல. ஆனால் சமயங்களில் சரியாக நடப்பிக்கும் ஒரு உள்ளுணர்வுக்குக் கட்டுப் பட்டவர்கள். அப்போது நடந்த சிறிய அறிமுகப் படலமும் தொடர்ந்து நடை பெற்ற பேச்சு வார்த்தைகளும் இதையே காட்டின. சிறிது நேரத்தில் சியாமளா விடை பெற்றுச் சென்றாள். பாபு எதிர்பார்த்த அளவுக்கு யாரும் வளர்ந்திருக்கவில்லை.ஆனால் அதே சமயம் யாரும் அதிக கஷ்டத்துக்கு உள்ளானவர்கள்போல் தோன்றவில்லை.ஒரு அதீதமான திருப்தி ,சோபை, இவை உள்ளத்திலிருந்து எழும்புகிறது. அதனை முகம் காட்டுகிறது. கல்யாணி அம்மாவும் பிள்ளைகளும் இருந்திருக்க வேண்டிய பயங்கர நிலையைவிட, இருக்கும் ஓரளவு சாதாரண நிலையில் திருப்தி அடைந்தனர். ஒன்றுமே இல்லாதவனுக்கு ஒரு வேளைச் சோறு பெரிதல்லவா.? இந்த நிலைக்காவது தன்னை விட்டுச் சென்ற கணவனை எண்ணி விம்மியது அவள் உள்ளம். ஆனால் இதே நிலை நீடிக்க வேண்டுமானால், இனி அதை நீடிக்கச் செய்வது பாபுவின் கையில் தான் இருக்கிறது. அதையேதான் ரங்கசாமியும் அறிந்திருந்தார். ஆனால் உலகில் ஒருவரையே நம்பி ஒருவரை ஆண்டவன் இருக்க விடுவதில்லை. நிலைமை அப்படியிருக்குமானால் எண்ணற்ற குடும்பங்கள் வேரோடு சாய்ந்திருக்கும். கஷ்டமும் நஷ்டமும் வாழ்வின் சோதனைகள். மலைபோல் நம்பி இருக்கப் படுபவர்கள் பொசுக் என்று போய் விடுவதால், நம்பி இருக்கிறவர்கள் வாழாமல் போய் விடுவார்களா என்ன.? இந்த எண்ணம் உதவுபவர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். ஆள்வதும் அனுபவிப்பதும் நம் செயல்கள் அல்ல. ஆனால் பகுத்தறிவு கொண்ட நாம் அதனை பரிபூரணமாக உபயோகித்தால் குடும்பங்கள் செழிக்கும் சமுதாயம் சீர்திருந்தும், நாடு வளரும். பாபு கல்யாணி அம்மாவையும் அவன் தம்பிகளையும் ஆதரிக்கும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டான் என்றால், அது அவன் பகுத்தறிவை சுயமாக உபயோகித்தறிந்த முடிவின் பலனாகும்.இப்படி ஒரெயடியாகக் கூறுவதும் பாபுவின் குணத்துக்கு அவதூறு விளைப்பது ஆகும். தாய் தம்பிகள் என்ற பாசம், தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி மேலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் சம நோக்குடன் ஆராயும் குணம் ஆகியவற்றின்  கூட்டு பலன் , அன்று முதல் கல்யணி அம்மாவின் மன சஞ்சலத்தை ஓரளவு போக்க உதவியது.அதாவது பற்றுகோல் ஒன்று கிடைத்தது. பாபுவுக்கு எண்ணற்ற ஆசைகள். சிதறிய குடும்பத்தை ஒட்டுவிப்பதே தன் முதல் கடமை என்று கருதினான். தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்த தொழிற்சாலைக்கு மாடாக உழைக்க எண்ணினான். பம்பாயில் குடியரசு தின விழாவில் ஏற்பட்ட சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்க விரும்பினான். உயர்ந்த எண்ணங்களும் பரந்த உள்ளமும் களங்க மற்ற உள்ளுணர்வுமே பாபுவிடம் இருந்த கருவிகள். அவன் எதிர்த்துப் போராட வேண்டியிருந்ததோ.........உறவின் பூசலும்  ஏசலும் , உண்மை உழைப்பை ஏமாளித்தனமாகக் கருதி நசுக்கும் நய வஞ்சக சமுதாயம், ஜாதி மதப் போர்வைக்குள் புகுந்து வெளிப்படும் உலுத்தர்கள் கூட்டம்......அம்மம்மா......ஏராளம், ஏராளம்..!                                                   அத்தியாயம் ஆறு   கண்ணன் அருள் வீட்டில் தங்க ஆரம்பித்ததில் முதலில் அருளுக்கு ஆட்சேபமிருக்கவில்லை. என்றாலும் கண்ணனின் பர்ஸ் காலி என்று தெரிந்ததும் ஓரளவு மனத்தாங்கல் ஏற்படத்தான் செய்தது. என்னதான் நண்பன் என்றாலும் காலம் இருக்கிற நிலையில் ,விலைவாசிகள் ராக்கெட் போல் மேலேறும் காரணத்தால் கண்ணன் ஒரு பாரமாகத்தான் இருந்தான்.அருளுக்கு மெல்லவும் முழுங்கவும் முடியாத நிலை. அடித்துப் பேசி கண்ணனை விரட்டியிருக்கலாம். ஆனால் அருளிடம் இருந்த ஒரு நல்ல குணம், எவ்வளவு கெட்ட குணங்களிருந்தாலும் ,நன்றி மறவாத தன்மை ஒன்றுதான். எவ்வளவு நாட்கள் கண்ணன் அருளைப் பராமரித்திருப்பான்.! தன் சகோதரர்கள் மேலுள்ள பாசத்தை ஒரு வீம்புக்காக உதறியெறிந்திருந்தவன், அவர்கள் ஞாபகம் வரும்போதெல்லாம், அருளையும் மற்ற நண்பர்களையும் சகோதரர்களைப் போல் பாவித்து, அவர்களுக்கு உதவுவதை தன் தம்பிகளுக்கு உதவுவதுபோல் எண்ணி சமாதானம் அடைவான். அது அருளுக்குத் தெரியுமோ என்னவோ, கண்ணன் உதவி இருந்ததை மட்டும் அவன் மறக்கவில்லை. அதற்காக கண்ணனை என்றைக்கும் பராமரிக்கும் நிலையிலும் இருக்கவில்லை. மெல்ல பிட்டுப் பிட்டு விஷயத்தை விளக்கினான்.விளக்கியவனுக்கு சங்கடமாகத்தான் இருந்தது என்றாலும் விளக்கப் பட்டவனுக்கு விரக்தியே மேலிட்டது. விளங்கியதைப் பட்டவர்த் தனமாக ஒப்புக்கொண்டான். முடிவில் அவன் படிப்புக்கும் அந்தஸ்துக்கும் பங்கம் விளைவிக்கும் முறையில், ஒரு ஆட்டோ கராஜில் மெகானிக்காக சேர்ந்தான். இந்த வரைக்குமாவது நிலைமை சமாளிக்கப் பட்டு விட்டதில் அருளுக்கு சந்தோஷம்தான். அருளுக்கும் கண்ணனுக்கும் இருந்த பல குணாதிசய வேறு பாடுகளுள் முக்கியமானது, அருளின் நிதானமும் கண்ணனின் படபடப்பும்தான். எந்த நிலையிலும் தன்னிலை மறவாத அருள் பல தடவை அதை மறந்த கண்ணனை சுய நிலைக்குக் கொண்டு வந்தவன். கண்ணனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படச் செய்தால், அவனைப் போல் ஒரு நல்லவனைப் பெறுதல் மிகவும் கஷ்டம். கண்ணன் அன்புக்காக ஏங்கினான். ஏக்கத்தில் எடுப்பார் கைப் பிள்ளையானான். ஏமாளியானான். சுற்றியிருந்தவர்கள் சுரண்டுவதற்கென்றே ஏற்படுத்தப் பட்ட சுரங்கம் என்ற நிலையில் அவனை மதிப்பதாகக் கணக்கும் போட்டான். அவனிடம் எதையும் பொருளாக ஏற்காத பாட்டியையும்  மாமாக்களையும் தெய்வமெனக் கருதினான். ஆனால் பொருளுக்காக மட்டும்தானா உறவு கொண்டாடுகிறார்கள்.?ஒருவனுடைய சன்னமான உணர்வுகளால் அவனை கருவியாக்கி விளையாடுபவர்கள் எத்தனை பேர்கள்தான் இல்லை.?இதைக் கண்ணன் உணர வில்லை. உணர்ந்திருந்தால் அவனுடைய வாழ்க்கையே மாறுபட்டிருந்திருக்கும். தெரிந்தோ தெரியாமலோ கண்ணன் தந்தையைப் பழித்துக் கொண்டான்.அவர் இறந்த பிறகு, அவர் இருக்கும்போது தான் உதவ வில்லையே என்ற உணர்வால் உருக்கப் பட்டான். இருந்தாலும் தன் தவறை ஒப்புக் கொள்ள முடியாத ஒரு வீம்பு ,தான் செய்ததுதான் சரி என்று அவனைப் பேச வைத்தது. நாவிலிருந்து வெளிவருவது அவன் நினைப்புதான் என்றறிந்தவர்கள்தானே ஏராளம். ஆக அன்றிருந்த கண்ணந்தான் என்றும் என்று எல்லோரும் நம்பினார்கள். இந்த நிலையில்தான் பாபு பெங்களூர் வந்ததை கண்ணன் அறிந்தான்..அறிவித்ததோ அவன் பாட்டி. பாட்டிக்கு ஒரு பயம். தன் செல்வாக்குக்குக் கட்டுப்பட மறுத்த பாபு, எங்கே மற்றவர்களையும் அதிலிருந்து பிரித்து விடுவானோ என்ற திகில். பாட்டி உலகையறிந்தவள். மனிதர்களை நன்கு படித்தறிந்தவள். எந்த இடத்தில் எந்த சொல்லைச் சொன்னால் அதற்கு மிக அதிகம் சக்தி இருக்கும் என்ற வித்தை தெரிந்தவள். சுருங்கச் சொன்னால் , வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல மற்றவர்களிடம் தன் கருத்தை பதிய வைப்பவள். பாபு வந்து விட்டான். கண்ணனும் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டதால் நொந்திருப்பான்.இந்த நேரத்தில் பாபுவின் பேச்சு கண்ணனுக்குப் புரியும். ஆனால் புரிய வைக்க விடக் கூடாது. அப்படியானால் அவர்கள் எல்லோரும் சேர்ந்து விடுவார்கள். சேச்சே ! அது நடக்கவே கூடாது.! ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்யும் செயல்கள்தான் சரி என்ற எண்ணம். அதன்படி செய்யப்படும் செயல்கள் எல்லாமே சரியாகத்தான் இருக்க வேண்டும்; இருந்திருக்கும், சரியானதெது, தவறானதெது என்பதை அளக்கும் அளவுகோல் இருந்திருந்தால்.ஒருவருக்குச் சரியானது மற்றவருக்குத் தவறான தாகிறது.இதற்கு ஒரே காரணம் அவரவர்கள் இருக்கும் சுற்றுப்புற சூழ்நிலையும், வளரும் சமுதாய சட்ட திட்டக் கட்டுப் பாடுகளும்தான். மாறுபட்ட சந்ததியினர் வளர்ந்து வருவது, மாறாமல் வளர்ந்த சந்ததியினரின் செல்வாக்குக்கு இழுக்கு, அவர்களது அட்சியின் பிடிப்புக்குஒரு வழுக்கு. பாட்டிக்கு ரங்கசாமியின் மீது ஒரு தனி மதிப்பு இருந்தது. ,அவர் பாட்டியின் மகளுக்குக் கணவன் என்றிருந்த வரையில்..மகளோ நான்கு மக்களைப் பெற்று வாழ்ந்த வாழ்வு தொடங்கு முன்பாகவே சுமங்கலியாகச் சென்று விட்டாள். சென்றவளுடைய இடம் நிரப்பப் பட்டது. ஆனால் நிரப்பப்பட்ட விதம்தான் பாட்டிக்குப் பிடிக்கவில்லை. மகளே சென்ற பிறகு மாப்பிள்ளையிடம் பற்றுதல் குறைந்திருந்தாலும் பேரப் பிள்ளைகளிடம் அன்பு வளர்ந்திருக்கலாம். வளர்ந்துமிருக்கும் என்றுதான் பாட்டி நம்பினாள்.,ரங்கசாமி மட்டும் அப்படி ஒரு காரியத்தை செய்திருக்கா விட்டால். என்னமாக ஏமாற்றி விட்டார். ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற எரிச்சலே பாட்டியின் புகைச்சலுக்கு மூலக் காரணம். சென்ற மகளின் இடத்தை இருக்கும் இன்னொரு மகள் நிரப்பட்டுமே என்று பாட்டி விரும்பினாள். விரும்பியதை வெளியிடவும் செய்தா.ள். ஆனால் கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் சுபகாரியம் அல்லவா. ! கேவலம் மனிதனின் ஆசாபாசங்களுக்குக் கட்டுப் பட வைக்க முடியுமா.? ரங்கசாமியாவது வேண்டாம் இல்லை என்று மறுத்திருக்கலாம்.ஆனால் மழுப்பி மறுத்தவர், அதோடு நிற்காமல் வேற்று ஜாதிப் பெண்ணையுமல்லவா இரண்டாம் தாரமாக மணந்தார்.! அதனால் பாட்டியின் மதிப்பும் கௌரவமும் எவ்வளவு குறைந்து விட்டது. ரங்கசாமி செய்த தவறுக்கு அவர் தண்டனை பெற வேண்டும்.எப்படி தண்டிப்பது.? ஏன், அவர் பெற்றெடுத்த செல்வங்கள்தான் இருக்கின்றனவே. அவர்களாலேயே அவரது செய்கை தவறு என்று உணர்த்துவதுதான் சரியான தண்டனை. பாட்டி எந்த அளவுக்கு ரஙகசாமியின் தவறை உணர்த்த நினைத்தாரோ, அந்த அளவுக்கு அவருக்கு அவருடைய செய்கையின் சரித்தன்மை உணர்த்தப் பட்டது. ரங்கசாமி வேண்டுமென்றே  ஒரு வேற்று ஜாதிப் பெண்ணை மண்ந்தாரா.? மனம் லயித்தவர் மணத்தில் முடித்தாரே. ,அதுவே ஒரு பண்பல்லவா. இருந்தாலும் நிகழ்ந்தது நடந்திருக்கக் கூடாது. நடந்ததால் ரங்கசாமி அதன் பலனை அனுபவிக்க வேண்டும். பாட்டியின் கணக்கும் தீர்ப்பும் ரங்கசாமி இருந்தவரை அவரை சஞ்சலப் படுத்தியதைவிட அவர் இறந்த பிறகு கல்யாணி அம்மாவை அதிகமாகத் தாக்கவேண்டும் என்பதே. அதையும் தூள் தூளாக்க முயல்கிறான் நேற்று முளைத்த இந்த பாபு. அதற்காகத்தான் விரட்டியடித்த கருவியான கண்ணனிடம் பாட்டி செய்தி தெரிவிக்க வந்தாள். அவள் போதாத காலம் அவள் அங்கு இருக்கும்போதேபாபுவும் கண்ணனைக் காண வந்திருந்தான். “ வாடா ,பாபு, ரொம்பப் பெரியவனாயிட்டே.பம்பாயிலிருந்து வரதக் கூடத் தெரியப் படுத்தக் கூடாதா.”.என்று கண்ணன் கேட்டான். “நான் கடிதம் போட்டிருந்தேன் அண்ணா.ஆனால் நீதான் விலாசமிட்ட இடத்தில வாங்கக் கூட இருக்கலை போலிருக்கு. வந்தவுடன் விஷயம் தெரிந்ததும் உன்னைப் பார்க்க  நேரிலே வந்துட்டேன்.”வந்த இரண்டு நிமிடங்களிலேயே பாபு தன்னை உதாசீனப் படுத்தி விட்டான். உதாசீனப் படுத்தப் பட்டதாக கண்ணன் நினைக்கக் கூடாது என்று துரிதமாகக் கணக்குப் போட்ட பாட்டி,” நீ கண்ணனுக்கு எழுதிய கடுதாசி இன்னக்கிதான் கிடச்சுது.உடனே சேதி சொல்ல வந்தேன்.சௌக்கியமா இருக்கியா பாபு.” என்று துணிந்து பொய் சொல்லிக் கேட்டாள் பாட்டி. வலுவிலே வந்து பேசுபவரை இனம் கண்டு கொள்ளாமல் இருக்கும் அளவுக்கு பாபுவுக்கு யாரிடமும் வெறுப்பு கிடையாது.மனிதர்களை அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக வெறுக்கும் குணத்தை விட அவர்கள் மீது பச்சாதாபமே மேலிடும் வர்க்கத்தவன் ஆதலால் அவனும் பாட்டி கேட்ட கேள்விக்கு “சௌக்கியம் “ என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னான். கண்ணனின் க்ஷேமலாபங்களை விசாரித்தான்.கண்ணனும் விட்டுக் கொடுக்காமல் பேசினான்.” அண்ணா ஆழ்ந்து யோசித்துப் பார்த்த பிறகு நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.சிதறி இருக்கும் நம் குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும். என்ற ஆசையால் உந்தப்பட்டு ஓடோடி வந்திருக்கிறேன். “ “என்னவோப்பா, நீ இந்த மாதிரிஒரு பாசத்தோட பேசறதக் காணக் குடுத்து வைக்காத உன் அம்மா போயிட்டா. உங்களையெல்லாம் பெரியவாளாப் பார்க்கும்போது என் பாழும் மனசு உங்க அம்மாவை நெனச்சுப் புலம்பறது. ஏனோ தானோன்னு வளர்த்தின உங்க அப்பாவும் போயிட்டான் இனிமேயாவது உங்களுக்கு நல்ல காலம் வரட்டும்.கிடைக்கிற சம்பளத்தை செட்டு சிக்கனமாச் செலவு செய்து,மிச்சமிருக்கிறத அழகாச் சேத்து வெச்சுகூடிய சீக்கிரத்திலேயே குடியும் குடித்தனமுமா நீங்க வாழறத என்னக்கித்தான் பார்ப்போமொன்னு இருக்கு. “ பாட்டி உண்மையாகவும் போலியாகவும் பேசியதிலும் உள்ளர்த்தம் இருப்பது பாபுவுக்குப் புரிந்தது.முகம் கடுமையாக மாறியது.. கண்ணனுக்குப் புரியவில்லை. கலங்கி விட்டான். “ஆமாண்டா பாபு, இப்பத்தான் என் மனசு ஏதோ நிம்மதி அடைந்த மாதிரி இருக்கு.பாட்டி சொல்றது எவ்வளவு உண்மை. “என்றும் கூறினான் அண்ணா, நிம்மதி அடைந்த மாதிரி தோன்றுவது தப்பில்லெ. உண்மையாகவே நிம்மதி அடைய முடியும். போயிட்ட அம்மாவப் பத்தி பாட்டி புலம்பறா.அது அவங்களுக்குப் பொருந்தும். ஆனா, நினைவு தெரியறதுக்கு முன்னாடி போன அம்மாவை நினைத்துப் புலம்பறத விட நம்மை வளர்த்து ஆளாக்கின ,இருக்கிற அம்மாவப் பத்தி எண்ணறதும் அதிலே நிம்மதி அடையறதும்தான் நமக்குப் பொருந்தும். அப்பா இருக்கிற போதில்லாத நல்ல காலம் அவர் பொன பிறகாவது நமக்கு வேணும்னா, அவர் விட்டுப் போயிருக்கிற கடமைகளை தொடர்ந்து செய்யறதுலதானே வரும். அதுக்குத்தான் நானும் துடிச்சுக் கிட்டு இருக்கேன்.பழசை எல்லாம் மறந்து என் கூட வா அண்ணா.வாழவும் விடாம சிந்திக்கவும் விடாமபிரிச்சுப் பார்க்கற இந்தப் பாழும் சொந்தங்களை நம்பாதே.அண்ணா! நம்பி இதுவரை வாழ்ந்ததுல உனக்கு உண்மையா மனத்திருப்தி ஏற்பட்டிருக்கா? சொல்லு அண்ணா.!” கண்களில் நீர் மல்கக் கெஞ்சினான் பாபு. “அப்பவே நான் சொல்லலயா கண்ணா..நீ ஏமாளி, நீ இப்பொ சுதந்திரமா ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருக்கிறது, அந்த நீச சாதிப் பொம்மனாட்டிக்குப் பிடிக்கலை. உன்னைச் சுரண்ட பாபுவை அனுப்பி இருக்கிறாள் பாபுவும் பாவம்..ஏதோநல்லது செய்யறதா தவறா எண்ணிட்டு பாம்புக்குப் பால் ஊத்தறான்.அது போறாது அதுக்கு மேல தன்னால முடியாதுன்னு தெரிஞ்சு, அவ பேச்சைக் கேட்டு உன்னையும் அந்தச் செயலை செய்யக் கூப்பிடறான்.நீ போவியோ என்னவோ அது உன் இஷ்டம்.ஆனா நீ ஒரு ஏமாளி உன்னை இப்படி எல்லாரும் படுத்தறத நெனச்சுதான் எனக்குப் பாவமா இருக்கு. “ பாட்டியும் விட்டுக் கொடுக்காமல் முந்தானையால் கண்ணைத் துடைத்து ,மூக்கை சிந்தி புலம்பினாள். கண்ணனுக்கு எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை. மதில் மேல் பூனையை ஒத்ததாய் இருந்தது அவன் நிலை. இல்லை இப்படியும் சொல்லலாம். ஓட்டுக் கேட்க வந்த இரண்டு வேட்பாளர்களில் யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற புரியாத நிலை படைத்த பாமரனாய் நின்றான். இல்லை அண்ணா இல்லை. உன்னை ஏமாளி என்று அறிந்தவர்கள் இவர்கள்தான்.அதனால் நீதான் நன்றாக ஏமாற்றப் பட்டிருக்கிறாய்.உன்னை இதுவரை சுரண்டியது யாரண்ணா.? என்றைக்கு நீ படிக்கும்போது லீவில் இவர்கள் வீட்டுக்கு வந்து போனாயோ அன்றையிலிருந்துதானே அண்ணா உனக்கு அம்மா மேல் கோபம். அதுவரைக்கும் என்னைவிட நீயும் அவர்கள்மேல் அன்பு செலுத்த வில்லையா...அவர்களைப் பராமரிக்க முடியாம உன்னை உதவிக்கு அழைக்கிறதா யாராவது சொன்னா அதைப் பொல ஒரு அபாண்டம் வேற இருக்காது. உனக்கு வேலை போன பிறகு எவ்வளவு நாள் உன் பாட்டி வீட்டில் இருந்தாய் அண்ணா... உனக்கு புத்தி சொல்ல எனக்கு வயசாகலை. நம் குடும்பம் இப்படி சின்னாபின்னமாக இருக்கிறத எண்ணி நொந்துபோய் உன்னைப் பார்க்க வந்தேன். வந்த இடத்தில் பார்க்க விரும்பாதவங்களையும் பார்த்தேன். என் வாதம் உனக்குப் புரியுமா புரியாதா என்பது எனக்கு நாளைக்குத் தெரியும்..புரிஞ்சிருந்தா நாளைக்கு நீ நம் வீட்டுக்கு வருவாய். இல்லையென்றால் புரிந்தபிறகு கட்டாயம் வருவாய். பாட்டி.. இப்படி உங்களைக் கூப்பிடவே வெட்கமா இருக்கு.சொந்தத்துக்காக அல்ல. உங்க வயச நெனச்சு கூப்பிடுகிறேன் அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். உங்களுடைய தீவினைகளுக்கு நன்றாக தெய்வம் பதில் சொல்லும். சாகிற சமயத்திலாவது உங்கள் தவறு உங்களுக்கு புரியணும்.ஆண்டவன் அதைப் புரியவும் வைப்பான். உங்க பெண் விட்டுப் போன இடத்திலே இருக்கிற பெண்ணை உங்க பெண் மாதிரி நீங்க நினைத்திருக்க வேண்டியதுதான் முறை. அதைச் செய்யாத நீங்கள் ....எனக்கு எப்படி சொல்வதுன்னே தெரியலே. அண்ணா நான் வரேன் “...ஆத்திரம் கோபம் வெறி மேலிட வார்த்தைகளை வீசி எறிந்துவிட்டுச் சென்றான் பாபு.   பார்த்தியாடா, பார்த்தியாடா.. அந்தப் பிள்ளை எப்படி எல்லாம் பேசிட்டுப் போறதை” “இது ஒண்ணும் பிரமாதம் இல்லை பாட்டி. இதை விடக் கேவலமா எங்கப்பாவை நான் பேசி இருக்கேன் இதுக்கே நீ இப்படி எண்ணினா, எங்கப்பா எப்படி வருத்தப் பட்டிருக்கணும்.ஹூம்.!எனக்கு எதுவுமே புரியலை. பாபு பெசியதை கேட்டு என் மனசு ரொம்பவே குழம்பிக் கிடக்கு. “ என்றான் கண்ணன். “ நீ பாவம்டா கண்ணா....உன்னை யாருக்கும் தெரியாது. எனக்கு நன்னாத் தெரியும். நீ சாப்பிட்டுப் படுத்துத் தூங்கு. ஏதாவது மனசுக்கு கஷ்டம் வந்தா என்னை நெனச்சுக்கோ.எல்லாம் சரியாயிடும்.” பரிவுடன் கண்ணன் தலையைக் கோதியபடி ஆதரவளித்தாள் பாட்டி.. பாட்டிக்குத்தான் கை வந்த வேலையாயிற்றே அது..!போலி அன்பில் கட்டுப்பட்டு கண்ணன் பாட்டியைப் போலொருவர் வேறில்லை என்று நினைத்தான். கண்ணனுக்கு பாட்டி தன்னை மறைமுகமாக வீட்டை விட்டுப் போ என்று சொன்னது கூட தன் நலனில் அக்கறை கொண்டு சொன்னதாகத்தான் இப்போது எண்ண முடிந்தது. இல்லையென்றால் தன் இடம் தேடி பாட்டி வர வெண்டிய அவசியம் இருந்திருக்காதே. பாபுவோ பாவம் ஏமாளி.. என்னைப்போய் ஏமாளி என்கிறானே. பாட்டி அப்படிச் சொல்வது நான் ஏமாந்து விடுவேனோ என்ற பயத்தால்தான்.பாட்டியை ஏமாற்றக் கூடாது. பாபு மேடையில் உணர்ச்சி வசப் பட்டுப் பேசுவது போல் பேசுகிறான். அவன் ஒருமேடை நடிகன்தானே. எத்தனையோ நாடகங்கள் நடத்தி இருக்கிறான். இப்போது உணாமையாகவே நாடகமாடுகிறான். இவன் நடிப்பில் ஏமாந்து நாளை நான் அவள் வீட்டுக்கு –அதை நம் வீடு என்கிறானே.—போக வேண்டுமாம். நானா போவேன்? எனக்கா தெரியாது.?” பாட்டி சொல்லும் முன்பாகவே கண்ணன் முடிவெடுத்து விடுகிறான். எடுத்த முடிவைப் பாட்டியிடம் தெரியப் படுத்தவும் செய்தான். புன்னகைப் பொலிவுற பாட்டியும் விடை பெற்றாள்..                                        அத்தியாயம்  ஏழு   ( இது ஒரு லோயர் மிடில் க்ளாஸ் இளைஞனின் குடும்பக் கதை,மனித மனங்களின் உணர்வுகள்,ஆசாபாசங்கள்,அபிலாக்ஷைகள்,அறியாமைகள் கோப தாபங்கள் விருப்பு வெறுப்புகள்என்பனவற்றைக் கதையின் போக்கிலேயே எழுதி இருக்கிறேன் தொடர்ந்து படித்தால் தெளிவாகத் தெரியும்..இருந்தாலும் இதுவரை பதிவிட்ட ஆறு அத்தியாயங்களில் வந்த கதையின் ரத்தினச் சுருக்கம் இதோ.   ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரங்கசாமிக்கு மூத்த தாரத்தில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும், இரண்டாம் தாரத்தால் நான்கு பிள்ளைகளும் இருக்கின்றனர். முதல் இரு பிள்ளைகளும் பெண்ணும் முதல் தார உறவினர்கள் பேச்சைக் கேட்டு அப்பாவுக்கு எதிராக இருக்கிறார்கள். முதல்தாரத்தின் கடைசி பிள்ளை பாபுவிடம் அவருக்குப்பின் அவந்தான் பொறுப்பேற்று எல்லோரையும் கரையேற்றவேண்டும் என்று உறுதி பெறுகிறார். மூத்தவன் சுந்தரம் ஒரு மனஸ்தாபத்துக்குப் பிறகு எங்கோ சென்று விடுகிறான். இரண்டாம் மகன்  கண்ணன், வேலையிலிருக்கும்போது பாட்டி முதலான உறவினர் சொல் கேட்டு தந்தைக்கு எதிராக இருந்தவன் வேலை போன நிலையில். பாட்டியின் வீட்டை விட்டு அகற்றப்படுகிறான். பெண் கமலம் மணம் புரிந்து குழந்தை குட்டிகளுடன் கஷ்ட ஜீவனம் நடத்துகிறாள. தன் இறந்த மகளின் இடத்தில் இருக்கும் ஒரு மகளை ரங்கசாமிக்கு மணம் முடிக்க முயற்சித்து, அது நடக்காமல் போகவும், யாரும் எதிர்பாரா வகையில் ஒரு வேற்றுசாதிப் பெண்ணை மணந்தவரை மன்னிக்க முடியாமல்,அந்தக் குடும்பத்தை எதிர்த்து நிற்பதில் எல்லா வழிகளையும் பாட்டி கையாண்டாள். பயிற்சி முடிந்து திரும்பி வரும் பாபு,பம்பாயில் எதேச்சையாக அறிமுகமான சியாமளாவை பெங்களூர் வீட்டில் சந்திக்கிறான் பம்பாயில் இருந்து திரும்பிய பாபு, முதல் வேலையாக, கண்ணன் இருக்கும் இடம் சென்று குடும்பம் ஒன்றாயிருக்க வேண்டுகிறான். அங்கு வந்திருந்த பாட்டியின் பேச்சால் பாபுவை அவன் வீட்டில் சந்திக்க மாட்டேன் என்று பாட்டியிடம் தெரிவிக்கிறான். .பாட்டி வேண்டியதும் அதுதானே.) பாபு, இன்னைக்கும் நாளைக்கும் மட்டும்தான்வீட்டில் இருக்கும் அரிசி வரும்.உனக்குச் சம்பளம் வரவோ இன்னும் பத்து நாட்களுக்கும் மேலே இருக்கு.ஏதாவது வழி பண்ணணும்,” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் கல்யாணி அம்மா. காதில் விழுந்ததைக் கேட்காத மாதிரி வெளியில் புறப்பட ஆயத்தமானான் பாபு. “ விசுவுக்கும் உடம்பு சரியில்லை.சுரம் அடிக்கிறது.அவனானால் சட்டை செய்யாமல் இரண்டு நாட்களாக சுரத்துடன் ஸ்கூல் போய் வருகிறான் டாக்டரிடம் போகலாமென்றாலொ பணமும் இல்லை. அவனும் உங்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் என்று படுத்துக் கொண்டிருக்கிறான். “ என்னை என்னச் செய்யச் சொல்கிறாய்” பாபு கோபம் மீறிக் கேட்டான். இப்படிக் கேட்டால் என்னடா பதில் சொல்வது.ஹூம் ! இதைச்செய் அதைச் செய் என்று சொல்லும் நிலையிலா என்னை விட்டுப் போனார் உங்கப்பா.?” கல்யாணி அம்மாவுக்குக் கண்ணீர் வந்தது.அதைக் கண்டதும் பாபு, “அரிசி இல்லையென்றால் பட்டினி கிடவுங்கள் .உடம்பு சரியில்லை என்றால் செத்துத் தொலையுங்கள். என் உயிரை எடுப்பதால் அரிசி வருமா, டாக்டருக்குப் பணம் வருமா. ?இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன்” என்று வெடித்தான். கல்யாணி அம்மாவுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.இருப்பது இல்லாதது அறிந்து கொண்டு தரும் வீட்டுக்குத் தலைவன் இல்லை.அந்த நிலையில் இருக்கும் தான், வளர்த்த பிள்ளையிடமே சுடு சொல் கேட்க வேண்டி இருக்கும் விதியின் கொடுமையினைக் கண்டு குமுறினாள்.கணவன் இருந்தவரை மட்டும் இல்லை என்றில்லாமல் இருந்ததில்லை உள்ளது இல்லாதது என்பவற்றை சம உரிமையுடன் தெரியப் படுத்திஅதற்கேற்ற முறையில் செயல் படுத்த இருவருமாக முடிவெடுக்கலாம்.இப்போது அந்த உரிமை போய் விட்டது யாசகம் கேட்கும் நிலையாகி விட்டது. பெற்ற பிள்ளையானால் பெறுவது உரிமை எனலாம்.என்னதான் இருந்தாலும் பாபு கல்யாணி அம்மா வயிற்றுப் பிள்ளை இல்லையே.உள்ள வேதனை நினைவுகளால் வெதும்பிற்று பாபுவுக்கும் என்னவோ போலிருந்தது. தனக்கு இப்படி அடிக்கடி ஆத்திரம் வருவது ஆக்க வேலை ஏதுமில்லாமல் இயந்திர கதியில் நாட்களைக் கடத்துவதால் தானென்று அவன் எண்ணினான் அன்று கண்ணனின் வீட்டுக்குச் சென்றிருந்த போதும் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு வார்த்தைகளை வீசி எறியாமல் இருந்திருந்தால் ஒரு சமயம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். இன்றும் அம்மாவிடம் கோபப் படாமல் இருந்திருந்தால்,அவருடைய துயர நினைவு இந்த நேரத்தில் எழாமல் தடுத்திருக்க முடியும். தான் இனிமேல் தன்னிலை தவறுவதில்லை என்றும் உறுதி எடுத்துக் கொண்டான். அம்மா.. அம்மா. நான் இங்கு வந்து ஆறு மாதங்களாகிறது இல்லையா அம்மா. இந்த ஆறு மாத காலத்தில் உங்களை ஒரு நாளாவது பட்டினி என்று இருக்க விட்டிருக்கேனா. எனக்குத் தெரியாதா வீட்டு நிலை. விசுவுக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் அழைத்துப் போடா என்றல்லவா நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். என்னிடமோ பணம் இல்லை என்ற நிலை.அது சுட்டிக் காட்டப் படும்போது ஏற்படும் கோபத்தில் உங்கள் மனசை புண் படுத்தி விட்டேன்..என் அம்மா.! கொஞ்சம் சிரியுங்களேன்” என்று கூறி முடிக்கையிலேயே பாபுவால் கட்டுப் படுத்த முடியவில்லை. அவனால் தாய்க்கு ஏற்பட்ட வேதனையின் வெம்மையை  கண்ணீரால் நனைத்துக் குளிர வைத்தான்.சிறிது நேரத்தில் தன் வசமானான். “ விசு உடம்புக்கு எப்படி இருக்கிறது.?உன்னால் வரமுடியுமென்றால், பரவாயில்லை என்றால் என் கூட வா . உனக்குத் தெரியாத ஒன்றை தெரிவிக்கிறேன் “என்று புதிர் போட்டான். விசுவும் பெரும் உபாதையையும் சிறு தூசாக மதிக்கும் சிறுவன் அண்ணனைத் தொடர்ந்தான். “ எங்கேடா இப்படி... காப்பி கூடக் குடிக்காமல்...” கல்யாணி அம்மா முடிக்கும் முன்னே, “ ஆமாமாம். காப்பி. மறந்தே போய்விட்டேன்.” என்று திரும்பி வந்து காப்பி அருந்தி புறப்படத் தயாரானான் பாபு. சற்று முன்னிருந்த நிலைக்கு இப்போது புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. அந்த அமைதியில் அவரவர் எண்ணங்களை அசை போட்டவாறு சில நிமிஷங்களைக் கழித்தனர்.அந்த அமைதியைக் கலைக்காமலேயே சைகையால் தாயிடம் விடை பெற்றுச் சென்றனர் பாபுவும் விசுவும். எனக்குத் தெரியாத ஒன்றை தெரிவிப்பதாகச் சொன்னீர்களே என்னண்ணா அது” விசு கெட்டான். “சொன்னால் சுவை போகும் சங்கதியடா தம்பி .அதைக் கண்டு புரிது கொள்வதே நல்லதடா தம்பி.” என்று நாடக பாணியில் கூறி சிரித்தான் பாபு. உண்டு உடுத்து உறங்குவதோடு தன் ஆக்க உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்க விரும்பிய பாபு அரசியல் கட்சிகளைத் தேர்ந்தெடுக்கவில்லை.கலை மன்றங்களை நாடினான் நாடியவனின் உண்மை உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட பலர் அவனுக்கு உற்சாகமூட்டி மதிப்பும் கொடுத்தனர். சொற்ப காலத்திலேயே பாபுவின் பேச்சென்றால் அதற்கு தனி மவுசு என்று பலர் கூறுமளவுக்கு அவன் புகழ் வளர ஆரம்பித்தது. தன்னுடைய வெளியுலக நடவடிக்கைகளை தன் குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமலேயே மறைத்து வைத்து இருந்தான் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அவர்களுக்குத் தெரிந்து தானே ஆகவேண்டும். தெரிவிக்கும் பணி விசுவுக்குக் கிடைத்தது. பாட்டுக்கு ஒரு புலவன் பாரதிக்கு விழா எடுக்க விழைந்திருந்த தமிழ் கலை மன்றத்தினர் பாபுவையும் பேச அழைத்திருந்தனர்.அந்தக் கூட்டத்துக்கு விசுவையும் அழைத்துப் போனான் பாபு.”பாரதியின் கண்ணோக்கு “என்ற தலைப்பில் பேச பாபு எழுந்தபோது கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.பேச்சுத் துவங்கும் முன்னே இவ்வளவு வரவேற்பு என்றால் அண்ணா பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று நினைத்தான் விசு. “ இந்த மனிதரா பேசப் போகிறார் “ என்று ஆச்சரியத்தில் நிலை குத்தி நின்றாள் சியாமளா.. இவனென்ன பேசப் போகிறான் என்று அலட்சிய பாவத்தோடு இருந்தாலும் இவனுக்கு இவ்வளவு மதிப்பா என்று பொருமினாள் பாட்டி. இவனுடைய நாடகமெல்லாம் பள்ளியில்தான் செல்லுபடியாகும் என்றிருந்தேனே –இங்கும் கூடவா.?இருந்தாலும் என் தம்பி அல்லவா என்று உள்ளத்துப் பொறுமலை உறவால் கட்டுப் படுத்த முயன்றான் கண்ணன். இவ்வளவு பெரிய கூட்டத்தில் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் முகத்தில் அமைதி நிலவ, கண்களில் ஒளி படர கொண்ட எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க ஒரே மூச்சாக எழுந்து நின்ற பாபு, கம்பீரமான குரலில், “ பெரு மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, சகோதர சகொதரிகளே’ என்று ஆரம்பித்ததும் சியாமளாவுக்கு விவேகாநந்தரின் நினைவே யெழுந்தது. கூட்டத்தில் அமைதி நிலவியது. பாரதியின் கண்ணோக்கு என்ற தலைப்பில் பேச எழுந்துள்ள நான் ,பேசும் முன்பாக உங்கள் அனைவரையும் வேண்டுவது, அவர் விரும்பிய புதியதொரு சமுதாயத்தைத் தோற்றுவிக்க எழுப்பப்படும் அஸ்திவாரத்தின் ஒரு கல் இந்தக் கூட்டம் என்று எண்ணி ,எண்ணியதை எண்ணியதாங்கு செயல் படுத்தும் முயற்சியில் இகழ்ச்சி அடைய விடக் கூடாது என்பதுதான் “ என்று ஆரம்பித்தவன் பாரதியின் எண்ணத்தில் ஏற்பட்ட எழுச்சியை அவர் இயற்றிய பாடல்களை மேற்கோள் காட்டி விளக்கினான். “ மனித குல உணர்வும் நாட்டுப் பற்றும் பாரதியின் பாடல்களில் இரண்டறக் கலந்து விளங்குகிறது.நிலை கெட்ட மனிதரைக் கண்டு நெஞ்சு பொறுக்காத பாரதி தனி மனிதனுக்குணவிலை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று வஞ்சினம் எடுக்கிறார். ஆற்றல் நிரம்பப் பெற்ற சமுதாயத்தை சிருஷ்டிக்க விரும்புபவன் மனித்ருணவை மனிதர் பறிக்கும் கேடுகெட்ட இந்த ஜகத்தையே அழிப்போம் என்கிறான்.இந்த அழிவு குஞ்சு வெளிவர முட்டை ஓடு அழிக்கப் படும் தன்மையுடைத்தாய்தான் இருக்கும் பயிர் செழுமையாக வளர கள்ளியும் காளானும் வேரோடு ஒழிக்கப் படத்தான் வெண்டும். ஆள்பவன் ஆளப் படுபவன் என்ற பேதமற்ற சமுதாயத்தில் பெயரளவுக்கு இந்நாட்டு மன்னர் என்றில்லாமல் உண்மையிலேயே மனிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஒவ்வொருவருடைய கடமையாகும்.கடமையை செவ்வனே செய்ய இடம் தராத இன்றைய சமுதாயம் கடந்த கால பழக்க வழக்க சட்ட திட்ட கோட்பாடுகளிலிருந்து மீட்சி பெற வேண்டும் மீட்சி பெற சாதி பேதமற்ற சமுதாயம் வளர வேண்டும். மூட நம்பிக்கைகளின் நிலைகளன் இந்தியா என்ற சொல்லுக்கு இழுக்கு வர வேண்டும். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக,உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்ய வேண்டும் அப்போதுதான் புதிய சமுதாயம் பிறக்கும் அப்போதுதான் நாம் பழம் பெரும் பாரத நாட்டின் புதல்வர் என்ற சொல்லுக்கு அருகதையாவோம்.பெருமை தருவோம் வாழ்க பாரத தேசம். வளர்க பாரதிகண்ட சமுதாயம்.” என்று கூறி பாபு பேச்சை முடித்ததும் கைதட்டல் ஆரவாரம் அடங்க சில நிமிடங்கள் ஆயிற்று. விழா முடிந்து கூட்டம் கலைய ஆரம்பிக்க இரவு ஒன்பது மணியாகிவிட்டது. விசுவுக்கு கொஞ்சம் தெம்பு இருந்தது என்றால் அது பாபுவின் பேச்சைக் கேட்ட பெருமையால் வந்ததாகும். டௌன்ஹாலிலிருந்து அலசூர் செல்வது எப்படி என்ற எண்ணம் கூட்டம்கலைந்த பிறகு தான் பாபுவுக்கு எழுந்தது. நடந்து செல்வது என்றால் குறைந்தது நான்கு மைல்களாவது இருக்கும். தனக்காவது பரவாயில்லை.விசுவையும் நடத்திச் செல்வது என்பது முடியாத காரியம். பஸ்ஸில் செல்லலாம் என்றால் கையில் காசில்லை. எச்சரிக்கை இல்லாமல் விசுவைக் கூட்டி வந்த பாபுவுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது.எப்படியும் வீடு போய்ச் சேர்ந்தாக வேண்டும் முன்பே யாரிடமாவது சொல்லி இருந்தால் அவர்களாவது ஏதாவது வழி செய்திருப்பார்கள். இப்பொழுது என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே விசுவையும் கூட்டிக் கொண்டு நடையைக் கட்டியவன் சிறிது தூரம் சென்றதும் சம்பங்கி டாங்க் அருகில் பஸ்ஸுக்காக காத்திருந்த நண்பர்கள் சிலரையும் சியாமளாவையும் அவள் கூட வந்த பெண்மணியையும் –ஒரு சமயம் சியாமளாவின் தாயாக இருக்கலாம்- கண்டான். பஸ்ஸுக்கு நிற்காமல் மேலே தொடர்ந்து சென்றவனை தடுத்து நிறுத்தி விளக்கம் கேட்டார்கள். நண்பர்கள். பிடி கொடுக்காமல் பேசிய பாபுவிடம் பர்ஸ் காலி என்பதையறிந்த அவனுடைய ஆருயிர் நண்பன் கான்விடாப்பிடியாக வற்புறுத்தி பாபுவுக்கும் விசுவுக்கும் சேர்த்தே டிக்கட் வாங்கினான்.கானுக்கு பாபுவை நன்றாகத் தெரியும். பாபுவின் உள்ளத்தில் எழும் எண்ணங்களை அவன் வெளியிடாமலேயே உண்ரும் அளவுக்குத் தெரியும். அவ்வளவு அத்தியந்த நண்பர்கள். பஸ்ஸிறங்கி வீடு செல்லும்போதுஅன்று மாலை நடந்த நிகழ்ச்சிகளை கான் துருவித் துருவிக் கேட்டு கிரகித்துக் கொண்டான். பாபுவுக்கு அதனால் அந்த பற்றாக்குறை நிலை சமாளிக்கும் பொறுப்பு சுலபமாகி விட்டது.”யூ ஆர் எ ஃப்ரெண்ட் இன் டீட், அண்ட் ஸோ  இண்டீட்(You are a friend in  deed  and so indeed.) என்று கூறி கானிடம் விடை பெற்றான் பாபு. அத்தியாயம்  எட்டு   ” ஆஷா,உலகத்து இன்பங்களை எல்லாம் நீயும் நானும் இப்படி சேர்ந்து இருக்கும்போது அனுபவிப்பது போன்ற ஒரு உணர்ச்சி.அழகுக்கு இலக்கணம்  வகுத்தவள் நீ.உன் பார்வை ,செயல், நடை,  ஹூம்.! எல்லாம் என்னைப் பித்தனாக்குகிறது.”- குடிபோதையில் குமாரின் பிதற்றல். ”அதுதானே என் லட்சியம். அந்த அளவுக்கு உங்களை நினைக்கச் செய்கிறேன் என்பதே பெருமையல்லவா” –அருகில் இருப்பவனை ஆட்கொண்டுவிட்ட ஆஷாவின் மதர்ப்பு. “ எனக்கு புகழ்ந்து பேசத்தெரியாது ஆஷா.ஆனால் ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது.உன் இதழொடு என் இதழைச் சேர்க்கும்போது இந்த உலக நினைவே இல்லை. இன்னும் ஒரு முறை என்னை சொர்கத்துக்கு அழைத்துச் செல் ஆஷா”—கிடைத்ததை மேலும் பெற புகழ் பேசத் தெரியாத ராஜனும் பேசுகிறான். “ என் ராஜனுக்குக் காரியத்திலேயே கண்:- செல்லமாகக் கடிந்து கொண்டாலும் கேட்டவனுக்கு இல்லை என்று சொல்லவில்லை ஆஷா. “ மருத்துவம் படிக்கிறேன் டார்லிங், ஆனால் எனக்குள்ள வியாதிக்குத்தான் மருந்து தெரியவில்லை. நீ அருகிலிருக்கும்போது, உனது மென் கரம் என் மேனியில் படும்போது குளிருகிறது, ஜுரமடிக்கிறது. இருந்தாலும் அதிலும் ஒரு இன்பம். எனக்கு என்ன மருந்து ப்ரிஸ்க்ரைப் செய்கிறாய் ஆஷா?” மருத்துவ மாணவன் மோஹனுக்கு ஆஷா தரும் மருந்து.” வள்ளுவரின் காமத்துப்பாலில் ஒரு டோஸ், லேடீ சாட்டர்லீஸிலிருந்து  ஒரு அத்தியாயம். இதிலும் குணமாகவில்லை என்றால், அதிக ஃபீஸுக்கு இன்னொரு மருந்து இருக்கிறது. அது...” கல்லூரி மாணவர்கள் முதல் கில்லாடி ரங்கன்கள் வரை எல்லோரும் ஆஷாவுக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் அசிங்கமானதை அழகாகச் சொல்வதென்றால் பல வகை வண்டுகளுக்கும் தேன் சொரிந்து கொடுக்கும் வண்ண மலர் ஆஷா. உள்ளபடி சொல்லப் போனால் பேதமின்றி தங்கிச் செல்லும் ருபாய் நோட்டு ஆஷா. ஆஷாவுக்கு அவளுக்கு இருக்கும் பெயரிலேயே தனிப் பெருமை. நாகரிகமான பெயர் கொண்ட நங்கை. தான் இந்த நாகரிக உலகின் தனிப் பிரதிநிதி என்ற எண்ணம் அவளுக்கு. அடிக்கடி எழும். எண்ணத்தின்படி செயலாற்ற , நாகரிக கேளிக்கைகளில் மூழ்கி விளையாடி இன்புற வேண்டும் என்னும் ஏக்கம் அவளை வாட்டும். ஆனால் கட்டுப்பாடு மிகுந்த குடும்பத்தில் பிறந்த அவளுக்கு நினைத்தபடி வாழ முடியவில்லை. பருவத்தின் கவர்ச்சி , தன் அழகின் மேலுள்ள பெருமை, அதை அனுபவிக்கத் துணை தேடித் தவிக்கும் நிலைமை எல்லாம் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. அன்று கண்ணன் எத்தனை ஆர்வத்துடன் ஐ லவ் யூ என்று கூறினான். அந்த வார்த்தைகளை கேட்டதும் எவ்வளவு இன்பம் அடைந்தாள். இந்தப் பாழாய்ப் போன அம்மா மட்டும் வந்திருக்கா விட்டால்....கண்ணனாவது வீட்டிலிருந்தவன். அன்று வரை அவளிடம் மனம் விட்டுப் பேசக் கூடத் தயங்கியவன். காலேஜ் வாசலிலே தன் வருகைக்காகக் காத்திருக்கும் இள வட்டங்களின் முகங்களில் ஏற்படும் ஏக்கங்கலந்த பார்வைகள்.; தன் ஒரு கண் அசைவுக்காகக் காத்திருக்கும் அத்தனை பேர்களும், இசைவினை அறிந்தால் எத்தனை மகிழ்ச்சி அடைவார்கள். அனைவரும் தன் காலடியிலே வந்து விழ மாட்டார்களா/! ச்சே..! என்ன வாழ்க்கை இது. ! கற்பனையில் காலத்தை ஓட்டுவதைவிட உண்மை வாழ்க்கையை உணர வேண்டும்.. பாட்டியாவது தாத்தாவாவது...!அம்மா அப்பா யாராயிருந்தால் என்ன.?என் உரிமையை விட்டுக் கொடுத்துக் கட்டுப் பட்டு வாழ முடியாது. ---- நளினமான நினைவுகள் தோன்ற வேண்டிய இடத்தில் புரட்சிகரமான எண்ணங்கள் எழுந்தன. பலன்.? கட்டப் பட்ட தளைகள்த் தகர்த்து எறிந்து தாந்தோன்றித் தனமாக நடக்க ஆரம்பித்தாள். . முதலில் பயமாக இருக்கத்தான் செய்தது. நாளா வட்டத்தில் பயம் போய் உறுதி வளர்ந்தது. பாரதியின் புதுமைப் பெண்ணைப் பற்றிப் படித்திருந்தவள். தவறுதலாக தன்னை ஒரு புதுமை பெண்ணாகக் கற்பனை செய்து கொண்டாள். எவ்வளவு விரைவில் மன மாற்றமடைந்தாளோ அவ்வளவு விரைவில் , சுருங்கச் சொன்னால், கெட்டுப் போனாள். பெண்மையைப் பறி கொடுத்தாள். நிலைமை மோசமாகிக் கொண்டே போக மறைக்க முடியாத அளவுக்கு அவளின் செயலின் தவறு வெளிப்பட்டது. சரஸ்வதி சுந்தர ராமன் இருவரும் எல்லாவிதமான யுக்திகளையும் உபயோகித்து ஆஷாவை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் யார் என்று  அறிய முயன்றனர்,யாரென்று தெரிவித்தால் அவனையே அவளுக்கு மணமுடித்து வைப்பதாகக் கெஞ்சினர். ஆஷாவுக்குப் பதிலே சொல்ல முடியவில்லை. அவளுக்குத் தெரிந்தவரை இன்னவன்  தான் என்று இனங்கண்டு கொள்ளக் கூட முடியாத அளவுக்குத் தவறி யிருந்தாள். ஆனால் மனசிலே எங்கோ ஊர்ஜிதப் படுத்த முடியாத ஒரு சந்தேகம். “ அவர் ஒரு ஆங்கிலோ இந்தியர் என்று நினைக்கிறேன் . ஏற்கனவே திருமணமானவர்” தட்டுத் தடுமாறி திக்கித் திணறி சொல்லி முடிக்கும் முன்பே மின்னல் பாய்வது போன்ற ஒரு உணர்ச்சி.,இடி இடித்து உலகமே இருண்டது போன்ற ஒரு அதிர்ச்சி.! பீறிட்டு எழுந்த ஆத்திரத்தில் அடித்த அடி தாங்காமல் விழுந்து கிடந்த ஆஷாவின் கழுத்தை , அடங்காத கோபத்தில் நெரித்துக் கொன்றே போட்டார் அவள் தந்தை சுந்தர ராமன். கணவனை விலக்க முடியாத சரஸ்வதிக்கு உயிர் பிரிந்த பெண்ணின் உடலே கிடைத்தது. பெற்ற பெண் களங்க மடைந்து விட்டாள் , அதுவும் துணிந்து கெட்டுப் போனாள் என்ற எண்ணத்தில் எழுந்த வெறியின் விளைவு சுந்தர ராமனின் செயல்.அது சரியா தவறா என்பது சட்டம் என்னும் கழுதையின் பொறுப்பு. அதுவும் வாளாவிருக்க வில்லை. சுந்தர ராமனை நன்றாக உதைத்து விட்டது. உலகில் ஒருவரது செயல் அவரை மட்டும் பாதிக்கிறது என்று இருந்து விட்டால் அது நாடக மேடை என்றே அழைக்கப் பட்டிராது.அழைக்கப் படுகிறது என்பதே மற்ற கதா பாத்திரங்களும் அதனால் பாதிக்கப் படுகிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும். பாட்டிக்கு இடி விழுந்த மாதிரி ஆகிவிட்டது.கிளை விட்டுப் படர்ந்திருந்த ஒரு பெரிய கௌரவமான குடும்பத்தின் நிகரற்ற தலைவி தான் என்று அவள் கொண்டிருந்த இறுமாப்புக்குக் கிடைத்த சவுக்கடி போல ,அடுத்தடுத்து நிகழும் நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சம் தன் உள்ளத்தை அலசி அழுக்கிருக்கிறதா என்று நோக்கச் செய்தது. அவளைப் பொறுத்தவரை அவள் இதுவரை மன சாட்சிக்கு விரோதமாய் நடந்ததில்லை என்றே நம்பினாள். கொள்கைகளின்-அது சரியா தவறா என்று நினைத்துக்கூட பார்த்திராதவள்—காரணமாக எழும் செயல்களே மன சாட்சியின் பிரதி பலிப்பு என்ற அளவுக்கு ஏதோ நினைக்கத் தெரிந்தவள், தனது செயல்களே சரியானது  அதனால் தனது மனசாட்சிக்கு விரோதமாக நடந்தது கிடையாது என்றே எண்ணினாள். அந்த எண்ணத்தின் அஸ்திவாரத்துக்கே ஆட்டம் கொடுக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சிகள் அவளைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. மேலும் அன்று பாபு “ அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் “என்று கூறியதை நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு உள்ளம் நடுங்கியது. மூட நம்பிக்கைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரட்டு கௌரவம் காரணமாக தான் ஒரு குடும்பத்தை தகர்த்து எறியக் காரணமானவள் என்று கூட அவளால் நினைக்க முடிய வில்லை. நினைத்து வருத்தப்படத் தெரிந்திருந்தாலாவது ஒரு சமயம் நடந்த நிகழ்ச்சிகள் தவிர்க்கப் பட்டிருக்கும்—ஆண்டவனின் மன்னிப்பால்.! காலங்கடந்து ,நடந்த காரியங்களுக்குக் காரணம் காண நினைத்த பாட்டி, தன் வினை தன்னைச் சுடுகிறதோ என்று ஐயப்படத் துவங்கியதும் அரைப்பைத்திய நிலைக்கே தன்னை ஆளாக்கிக் கொண்டாள்.வரைந்து முடித்துவிட்ட வட்டத்தின் ஆரம்பப் புள்ளியை நிர்ணயம் செய்ய முயலும் அறியாமையின் விளைவே தன் நிலைக்குக் காரணம் என்று அவளுக்குப் புரியவில்லை.             அத்தியாயம் ஒன்பது   கண்ணனுக்குக் கல்யாணம்..! உறவில் பிணக்கோலம் கண்டவன் மணக்கோலம் பூண விரும்பினான். ஒட்டு பற்றற்ற தன் வாழ்வின் விளை நிலத்தில் மனசின் அடிதளத்தில் சுரந்த அன்பின் ஊற்று நீரால் மணங்கமழும் மலர்வனத்தைத் தோற்றுவிக்க மணக்கோலமே சிறந்த வித்து என்று கண்ணன் எண்ணினான் .எண்ணியவனின் எண்ணத்துக்குச் சிறந்த உரமாக நின்றான் அருள். அந்த வரைக்கும் அருளுக்கு அவன் என்றென்றைக்கும் கடமைப் பட்டுள்ளதாக அடிக்கடி அவனிடம் தெரிவித்து தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான் கண்ணன். கல்யாணம் எளிய முறையில் சிறப்பாக நடந்தது. சிறப்பாக எனும்போது, மனத்தாங்கல்கள் தவிர்க்கப் பட்ட ஒரு சுப காரியமாக நடந்தது என்று பாபு நினைத்தான். அன்பு நண்பன் இன்ப இல்லற வாழ்வு தொடங்கும் சடங்கு என்பதால் சிறப்பானது என்று அருள் எண்ணினான். உடன் பிறந்தவனின் ஒரே சகோதரி, தன் ஒருத்தியால் சோபித்த சுபகாரியம் என்பதனால் சிறந்தது என்று கமலம் கருதினாள்.இழவுக்குப் பின் நடக்கும் இனிய வினை என்று எண்ணித் தன்னையே தேற்றி கொண்டாள் பாட்டி. ஒளிமயமான வாழ்வின் விடிவெள்ளி என்று மகிழ்ந்தாள் மணப் பெண் மாலதி. யார் யார் எப்படி எப்படி எண்ணினாலும் நடந்த்ததென்னவோ ஆயிரக் கணக்கில் நிகழும் திருமணங்களில் ஒன்று என்றாலும் , இந்த மணம் கண்ணனை ஒரு புதிய பிறவி எடுக்கச் செய்தது. கண்ணனுக்கு இறைவனிடம் அதிக பற்றுதல் ஏற்படச் செய்தது. ஏற்பட்ட பற்றுதலை உணர்த்த உள்ளம் தன் மதத்திலும் குலத்திலும் தோய்ந்து நின்றது. திருமண நாளின் முதலிரவு. எண்ணற்ற கற்பனைகளில் மனம் லயித்து, இன்ப நினைவுகளில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த மாலதிக்கு இன்பம் இதுதான், இது இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்து மகிழும் நேரத்தையும் சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே மேலிட்டது,.பூமணங்கமழும் புது மண மக்களுக்கே உரித்தான முதலிரவு. என்று இருந்தும் அந்த இரவில் அந்த இன்பம் மாலதிக்கு இல்லாமலேயே போய்விட்டது. ஒரு சமயம் இல்லாத ஒன்றை இருப்பதாக எல்லோரும் ஸ்தாபிக்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. உள்ளத்து ஆதங்கத்தை உணர்த்தித் தெரியப் படுத்த முடியாதபடி, ஒருவரை ஒருவர் உணர்ந்திருந்த குறுகிய காலம் தடையாக இருந்தது. மாலதியின் எண்ணங்களைப் பற்றி கண்ணன் ஒரு கணமேனும் சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை. சற்றே அவளை உற்று நோக்கியவன் முகம் சற்றே கடுத்து மறைந்தது. “ மாலதி, இன்று முதல் என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் செய்து கொள்ள விரும்புகிறேன். இதுவரைக்கும் எனக்கு எதிலும், யார் மீதும் அக்கறை இருக்கவில்லை. எல்லோரும் என்னை ஒதுக்கித் தள்ளினார்கள். தட்டிக் கேட்க ஆளில்லாத நான் தட்டுத் தடுமாறி நிலை கெட்டுப் போயிருந்தேன்.இதுவரையில். உனக்கு இது முதலிரவு .ஆனால் எனக்கோ......சொல்லிக் கொண்டே வந்தவன் மாலதியின் உதடுகள் துடித்து அழுகை வெடித்து விடும் என்று உணர்ந்ததும் நிறுத்தினான் ”உன்னைப் புண் படுத்த எதுவும் சொல்லவில்லை, மாலதி.என்னை நீ நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன் இந்த நேரத்தில் ,இன்றைக்கு என்னை நானே அடக்கிக் கொள்வதாகத் தீர்மானித்திருக்கிறேன்..அது உன்னை ஏமாற்றத்துக்கு ஆளாக்கக் கூடாதே என்று சொல்ல வந்தால், ......சரி, சரி. எனக்கு இதெல்லாம் பிடிக்காது. விளக்கை அணைத்துப்படுத்துத் தூங்கு. “  ஆதரவாகப் பேசிகொண்டே போனவனின் உள்ளத்தில் , திடீரென ஆதரவை முதலிலேயேக் காட்டினால், நாளைக்கே தன் மனைவி தன் ஆதிக்கத்துக்கும் அதிகாரத்துக்கும் ஒரு சமயம் கட்டுப் படாமல் போகலாம் என்ற சந்தேகம் எழுந்தது.அன்பினால் கட்டுப் படுத்த முடியும் என்பது அறியாததால் கண்ணன் கடுப்பாக முடித்தான். மாலதிக்கு ஒன்றுமே புரியவில்லை. வாழப் போகும் வாழ்க்கை தான் எண்ணாத முறையில் அமைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக அவளுக்கு உறக்கமே வரவில்லை. நித்திரை இல்லாமல் காலம் கடந்து செல்லச் செல்ல இமைகள் கனத்து கண்கள் அவளை அறியாமலேயே செருகிக் கொண்டன. விடியற்காலையில் விழித்துப் பார்த்த கண்ணனுக்கு மாலதி இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்னும் நினைவு கோபத்தைக் கிளப்பியது. இருந்தாலும் தன்னை அடக்கிக் கொண்டு, காலைக் கடன்களை முடித்துக் குளித்து, நெற்றியில் பட்டை பட்டையாக விபூதியை தீற்றிக் கொண்டு, அவன் திரும்பவும் , மாலதி எழுப்பப் பட்டு விட்டாள். எழுப்பிய கமலம், “ நன்னாயிருக்குடி, இப்படித் தூங்கினால்;..புருஷன் எழுந்துக்கறதுக்கு முன்னாலே பொம்மனாட்டி எழுந்திருந்து காரியங்களை சட்டுப்புட்டுன்னு கவனிக் கறதைத் தான் நான் பார்த்திருக்கேன். நாங்கள்ளாம் இப்படியா இருந்தோம்.?”என்று நீட்டி முழக்கி சுப்பிரபாதம் பாடினாள்.  மாலதிக்கு தன் பேரிலேயே கோபம் வந்தது. “சே.! ராப்பூராவும் வராத உறக்கம் விடியற்காலை வந்து பெயரை கெடுக்கிறதே “ என்று மனதுக்குள் தன்னையே வைது கொண்டாள்.” உடம்பு அசதியாலே ... “ என்று மெல்லச் சமாதானம் சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் புகுந்தாள். அன்றைக்கே மாலதி இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கண்ணன் கண்டிப்பாக வரையறுத்துச் சொன்னான். ”கார்த்தாலெ எழுந்ததும் குளித்து , பூஜைக்கு வெண்டியதை எடுத்துவைத்து, சமையலுக்கு வேண்டியதைச் செய். பூஜை முடிந்த பிறகுதான் தண்ணீர் குடிப்பது கூட. ..ஆம்மா. .. இன்னொண்ணு மாலதி. நீ இந்த ஆறு கஜப் புடவை எல்லாம் ஒதுக்கி வைத்து, மடிசார் வைத்துக் கட்டிக் கொள்ள வெண்டும். அப்போதுதான் லட்சுமீகரமாக இருக்கும்.” மாலதிக்கு இந்த கட்டுப் பாடுகளை எல்லாம் கேட்கவே பயமாக இருந்தது. பழையன கழிந்து புதியன புகுதலென்று உலகமே மாறிக்கொண்டிருக்கும்போது .இவர் என்னடா என்றால்...... இருந்தாலும் அவர் விருப்பப்ப்டி, நடக்க வேண்டியதுதானே முறை. இந்த மாதிரி நடந்தால் அவர் அன்பின் அரவணைப்புக்குப் பாத்திர மாகலாம் என்றால் அப்படி நடப்பதுதான் நல்லது. உள்ளவரையில் இருப்பதைக் கொண்டு கணவன் விரும்பியபடி வாழ்வது தானே ஒரு இந்தியப் பெண்ணுக்குச் சிறந்தது என்றெல்லாம் எண்ணி ,எடுத்த முடிவை செயலிலும் காட்டத் துவங்கினாள். ஒரு சில நாட்களில் கண்ணன் எதிர்பார்க்காத அளவுக்கு மாலதி தன்னை மாற்றிக் கொண்டாள். கண்ணன் தனியாக இருந்தவரை அவனுக்குக் கிடைத்த சம்பளம் போதுமானதாக இருந்தது. திருமணம் முடிந்து தனிக் குடித்தனம் என்று துவங்கியதும் கொண்டுவந்து போடுவதைக் கொண்டு குடும்பம் நடத்தத் தெரிய வில்லை என்று மாலதியைக் கண்டிக்க ஆரம்பித்தான். இருந்தாலும் மாலதி கூடியவரை பொறுத்துக் கொண்டு இனிய முகத்துடன் வசவுகளையும் வரவு வைத்துக் கொண்டாள். தனக்கு இல்லையென்றாலும் கணவனுக்கு ஒரு குறையும் வைக்க வில்லை. அதனால் கண்ணனுக்கு இருப்பது இல்லாதது தெரியாமல் போயிற்று. ஒரு நாளிரவு உணவை முடித்துக் கொண்டு, இளைப்பாறிக் கொண்டிருந்த கண்ணன் திடீரென்று எழுந்த ஏதோ ஒரு சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள சமையல் அறைக்கு மாலதியைத் தேடி நுழைந்தான். அவன் வந்ததை அவள் கவனிக்க வில்லை. சாப்பிட்டுக் கொண்டிருப்பாள் என்று எண்ணி வந்தவன், மாலதி வடித்த கஞ்சியில் உப்பு போட்டுக் கலக்கிக் குடிபபதைக் கண்டான். ” என்ன மாலதி இது.?ஏன் ..சாப்பாடு இல்லையா.?எதற்கு கஞ்சி குடிக்கிறாய்” என்று கேட்டான். வந்தவன் வரவைக் கவனிக்காத மாலதி, ஏதோ குற்றம் செய்து விட்டவள் போல விழித்தாள். அவளையும் துலக்கி வைத்திருந்த பாத்திரங்களையும் கண்ட கண்ணன் , “ எவ்வளவு நாளாக இது மாதிரி நடக்கிறது.?நானும் ,என்னடாப்பா இவள் இப்படி மெலிந்து கொண்டே வருகிறாளே என்று கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறேன். இதுதான் கரணமா “ என்று கேட்டவன் தன்னுடைய கடந்த காலத்தை நினைத்துக் கொண்டான். இப்ப்டி வாழ்க்கை நடத்துவதில் எவ்வளவு மனக்கசப்பு இருக்கும் என்று உணர்ந்தவன் கண்களில் அவனறியாமலேயே நீர் பெருகியது. ”மாலதி உன்னை இந்த நிலையிலா வைத்துக் கொண்டிருக்கிறேன் என்னிடம் சொல்லாமல் இவ்வளவு நாள் ஏன் மறைத்து வைத்தாய்.” என்று ஆதரவுடன் அணைத்துப் பிடித்துக் கேட்டான். உண்மையான உள்ளன்பை முதன் முதலாக உணரப் பெற்ற மாலதி, அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள். ”அத்தான் உங்களுக்குத் தெரிஞ்சா மனசு கஷ்டப்படுமேன்னுதான்,இவ்வளவு நாள் மறைச்சேன். இதற்கு மேல் சிறப்பாக வாழ இந்த வருமானம் போதாது அத்தான்” என்று கஷ்டப் பட்டுக் கூறினாள். எது எதிர்பார்க்கவில்லையோ அது கண்ணனுக்குத் தெரியப்படுத்தப் பட்டதும், அவன் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தான்.அவனுக்கு எந்த வித முடிவும் தோன்றவில்லை.இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடலாம் என்றால், வேறு வேலை கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்று அனுபவத்தால் உணர்ந்தவன். வேறு வேலை கிடைக்கும்வரை இப்படியேதான் இருக்க வேண்டுமா என்று குழம்பினான். ”அத்தான் ஒன்று செய்தால் என்ன.? நாம இப்படி தனியா இருக்கிறதால படர கஷ்டங்களை ஒன்றாய் சேர்ந்து இருந்தால் தவிர்க்கலாமே “என்றாள் மாலதி. “ என்ன சொன்னே.?” கேட்கும்போதே உஷ்ணம் பொங்கியது கண்ணன் குரலில். .தெளிவாக எதுவுமே தெரிந்து கொண்டிராத மாலதி தெளிவாகவேக் கூற்னாள். “ இப்படித் தனிக்குடித்தனம் வைத்துக் கஷ்டப் படுவதை விட , உங்க தம்பி பாபுவோட , உங்க குடும்பத்தோட சேர்ந்திருந்தால் பார்க்கவும் நன்றாயிருக்கும், கஷ்டத்தையும் தவிர்க்கலாமே என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. “  ‘ ‘ அந்தக் கோத்திரங் கெட்டவ கூடப் போய் இருக்கலாம்னு சொல்றியா.? பிராம்மண குலத்துக்கே இழுக்கில்லையாடி அது.? “ கேட்டவனின் வார்த்தைகளில் விருப்பம் இருக்காவிட்டாலும் குரலில் சற்றே மாற்றம் தெரிந்தது. “ என்ன இருந்தாலும் நீங்க சின்ன வயசில வளர்ந்த இடம்தானே. குலம் கோத்திரம் என்றெல்லாம் எண்ணி நம்மை நாமே கஷ்டப் படுத்திக் கொள்வதைவிட, சேர்ந்திருந்தா அதைத் தவிர்க்கலாம். அப்படி சேர்ந்திருக்கறதுனால நீங்க ஒண்ணும் நம்ம ஆசார முறையை விட்டுக் கொடுக்கணும்னு நான் சொல்லலியே. உங்களுக்கும் ஒரு மதிப்பு கிடைக்கும் . நமக்கும் இதுல லாபம் தான் இருக்கும். “ – இடம் கிடைத்தவுடன் சொல்ல வேண்டியதை முறைப்படி கண்ணனுக்கு  உறைக்கும்படி கூறினாள். கண்ணனின் அடிப்படைக் குணம்தான் தெரிந்ததாயிற்றே. வளைக்கும் விதத்தில் வளைக்கப் பட்டதால் விட்டுக் கொடுத்தான். அதுவும் சரிதான். பாபுவும் அன்னைக்கே சொன்னான். பாட்டி வேண்டாம்னு சொன்னதால நானும் கேட்கலை. இப்ப போறதுலயும் பாபு சந்தோஷ்மடைவான். போனதும் அவனைப் பூணூல் போட்டுக்கச் சொல்லணும். அம்மாவும்—அதான் எங்க சித்தியும் கூட சந்தோஷப் படுவாள். மாலதிக் கண்ணு, உன்னைப் பத்தி என்னவோ நினைத்திருந்தேன். இப்போதான் தெரியுது. அடேயப்பா.! உங்கிட்ட எவ்வளவு சரக்கு இருக்கு. “ என்று அவளை இறுக்கிப் பிடித்து அணைத்து  அன்புடன் கூறி மகிழ்ந்தான். கல்யாணி அம்மாவை நினைக்கும்போது அம்மா என்றுதான் கூற வருகிறதே அல்லாமல் சித்தி என்று கூறப் பழக்கிக் கொள்ள வேண்டி இருப்பதைக் கண்ணன் உணர்ந்தான். இதை மாலதியும் கவனிக்காமல் இல்லை. இருந்தாலும் தன் கணவன் வேண்டுமென்றேதான் வஞ்சம் பாராட்டுகிறான் என்று நினைக்கத் தோன்றினாலும் , அப்படி தான் நினைப்பது தவறு என்ற எண்ணத்தால் அதை அடக்கிக் கொண்டாள்.                        அத்தியாயம் பத்து   கல்யாணி அம்மாவுக்குக் கண்ணனின் கல்யாணத்துக்கு அழைப்பிருக்கவில்லை .பாபுவும் வற்புறுத்திக் கூப்பிடவில்லை. வரவேற்பில்லாத இடத்துக்கு வலுவில் சென்று ஒதுக்கப் படுவதை விட போகாமலிருப்பதே மேல் என்று பாபு எண்ணினான். தம்பிகளை அழைத்துப் போக விரும்பினான். மூத்தவர்கள் ராஜு, விசு இவர்களுக்குப் போக விருப்பம் இருக்கவில்லை. தன் தாய்க்கு எதிரிகள் தங்களுக்கும் எதிரிகள் என்றே எண்ணினார்கள். ஆனால் பாபுவிடம் அப்படிச் சொல்ல முடியாது.. ஆகவே ஏதோ சாக்குப்போக்குச் சொல்லி தப்பித்துக் கொண்டார்கள்..இளையவர்கள் போக விரும்பினாலும் கல்யாணி அம்மா தடுத்துவிட்டார். இதில் பாபுவுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். மனிதர்களுடைய குரோத, விரோத மனப் பான்மைகளுக்கு ஒனறுமே தெரியாத அந்தக் குழந்தைகளும் இலக்காவதை எண்ணி வருந்தினான். பிரிந்த குடும்பம் ஒன்றாக சேர்ந்து வாழாவிட்டாலும் ஒரே குடும்பம் என்ற அன்பாவது விளையுமேயானால் அதுவே போதும் என்று எண்ண ஆரம்பித்தவன், நடந்த நிகழ்ச்சிகளைத் தன்னாலும் தவிர்த்து நல்லுறவு ஏற்படச் செய்ய முடிய வில்லையே என்று ஏங்கினான். இதனால் கண்ணனுக்கும் அவன் செய்கைதான் சரியென்று எண்ண ஏதுவாகும் என்று நினைத்தவன், கண்ணனும் மாலதியும் வந்ததைக் கண்டபோது தன் கண்களையே நம்ப முடியாமல் திகைத்தான். யாருமே எதிர்பார்க்காத வரவு. பாபுவுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “ வா அண்ணா, வாங்க அண்ணி; அம்மா, யார் வந்திருக்கான்னு பாரேன்..ஆச்சரியப்பட்டுப் போவாய். ராஜு,விசு, சந்துரு, ரவி இது யார் தெரியுமாடா. நம்ம அண்ணா கண்ணன்;ஞாபகமிருக்கா.?இது அண்ணி. “  சொந்த அண்ணனையே சொந்தத் தம்பிகளுக்கு, அறிமுகப் படுத்தவும் ஞாபகப் படுத்தவும்வேண்டிய நிலையை எண்ணி பாபுவின் கண்கள் குளமாயின. சமாளித்துக் கொண்டே,”அண்ணா ! எனக்கு எவ்வளவு சந்தோஷ்மா இருக்குத் தெரியுமா? தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா... அண்ணாவைக் கூட்டி வந்ததுக்கு அண்ணியையா, இல்லை அண்ணியைக் கூட்டி வந்ததுக்கு அண்ணாவையா ..யாரைப் புகழறதுன்னு தெரியலை. அம்மா ! கண்ணன் கிட்ட க்ஷேமலாபங்களை கேளம்மா.?” கண்ணனை எதிர்பார்க்காத கல்யாணி அம்மாவுக்கு இவ்வளவு நாட்கள் கழித்து அவனைக் கண்டதும் ,இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் இன்னதுதான் பேச வேண்டும் என்று ஒன்றுமே தெரியவில்லை. அவளுக்கு அடக்க முடியாத அழுகைதான் வந்தது. கணவனின் நினைவும் இந்த பிள்ளைகளால் அவர் பட்ட மனக் கஷ்டங்களும் நினைவுக்கு வந்தது. இவனிடம் அன்பாக என்ன பேச முடியும். என் கையால் சோறு தின்று வளர்ந்த இவன் என்னைப் பார்த்து அம்மா என்று கூப்பிடக் கூடத் தயங்குகிறானே. நான் ஏதாவது கேட்கப் போய், அவன் அசம்பாவிதமாகப் பேசிவிட்டால்.... என்றெல்லாம் எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு பாபுவின் கெஞ்சாத குறையாகக் கேட்கப் பட்ட வேண்டுகோள் தடு மாற்றத்தை அளித்தது. “ நான் விசாரித்துத்தான் தெரிந்து கொள்ளணுமா...கண்ணா எங்களை எல்லாம் நீ மறக்கலியே அதுவே எனக்குத் திருப்தி.வாம்மா, மாலதி ,உள்ளே வா. “  வந்தவர்களை முதலில் வாவென்று கூட வரவேற்க வில்லையே என்று தடுமாறிக் கொண்டிருந்த மாலதிக்கு கல்யாணி அம்மாவின் அன்பான வாஞ்சையான வரவேற்பு  மிகவும் இதமாக இருந்தது. உள்ளே போகலாமா என்று உத்தரவு கேட்பது போல் கண்ணனை நோக்கினாள். கண்ணனின் சரியென்ற தலை அசைவு கிடைக்கப் பெற்ற பின் உள்ளே சென்றாள். ராஜுவுக்கும் விசுவுக்கும் கண்ணனை நன்றாக ஞாபகம் இருந்தது. சந்துருவுக்கும் ரவிக்கும்தான் தெரிய வில்லை. தெரியப் படுத்தப் பட்டவுடன் இருவரும் கொஞ்சம் சங்கோசத்துடன் கண்ணன் அருகில் சென்றனர். அவர்கள் இருவரையும் ஒரு முறை நோக்கிய கண்ணனுக்கு ஒரு கணம் ஒன்றுமே தோன்ற வில்லை. ஆனால் மறுகணமே  இருவரையும் வாரி அணைத்து முத்தமாரி பொழிந்தான். கண்ணன் அண்ணா ரொம்பக் கெட்டவன் என்று எண்ணிக் கொண்டிருந்த ராஜுவும் விசுவும் இதைப் பார்த்ததும் அவன் மீது ஒரு தனி அன்பு வளருவதை உணர்ந்தனர். தாங்கள் இதுவரை எண்ணி வந்தது தவறு என்று தெரிந்து வெட்கப் பட்டனர். நீ எத்தனையாவது படிக்கிறாய் ராஜா என்று கண்ணன் கேட்டதும் டெந்த், என்று ராஜு பதில் சொன்னான்..” விசு நீ?’ “நானும் டெந்த்” என்றான். “ ஏண்டாபாபு இரண்டு பேரும் ஒரே க்ளாஸ் படிக்கிறார்கள்.?” ” ஆமாண்ணா.. ராஜுவுக்கு உடல் நலம் சரியில்லாமல் ஒரு வருடம் போயிடுத்து. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் வேலைக்குப் போகத் தயாராயிருப்பார்கள். அதே சமயத்தில் நம்ம கஷ்டமும் ஒரேயடியாக் கொறஞ்சிடும்”. “ அது சரியில்லை பாபு. நாமதான் மேல் படிப்பு படிக்க முடியாம திண்டாடினோம்னா, இவர்களும் அப்படியே இருக்கணுமா. இவர்களையாவது நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். ” கண்ணன் கூறிவந்ததைக் கேட்டவுடன் விசுவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவன் வகுப்பில் முதலாவதாக வருபவன். எப்படியும் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்.ஆனால் பாபு அண்ணாவால் முடியாதே என்ற கவலை இருந்தது. அது இப்போது கண்ணன் பேச்சைக் கேட்டதும் ஓடி மறைந்து விட்டது. பாபுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. . ” என்ன அண்ணா, சொல்கிறீர்கள்.... எனக்கு மட்டும் இவர்களை படிக்க வைக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில்லையா.? நம் நிலைமை இருப்பதைப் பார்த்துதான், வீணாக இவர்களுக்கு ஆசையூட்ட விரும்பவில்லை.”  ”போடா... ரொம்பத் தெரிந்தவன் மாதிரி பேசாதே. நம்ம நிலைக்கு என்ன குறைச்சல்.? நீ சம்பாதிக்கிறாய். நானும் சம்பாதிக்கிறேன். எல்லோரும் ஒன்றாக இருந்தால் கஷ்டமே இருக்காது. அதைச் சொல்லத்தான் நானும் மாலதியும் வந்தோம் இல்லையா மாலதி.?” உட்புறம் மாலதி இருந்த திக்கை நோக்கிக் கேட்டான். கல்யாணி அம்மாவும் எல்லாப் பேச்சுவார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு தானிருந்தாள். அவளுக்கு இந்த திடீர் வரவும் கொண்டு வரப்பட்ட செய்தியும் ஏதோ ஒரு சந்தேகத்தை எழச் செய்தது. பாபுவுக்கும் இந்தச் செய்தி கண்ணன் எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சி தரவில்லை. “ அண்ணா நீங்க தனியா இருந்தவரை நம்ம குடும்பத்தோட சேர்ந்திருந்து ,பிறகு கல்யாணம் பண்ணியும் கூட அப்படித் தொடர்ந்திருந்தா, எல்லாம் சரியாயிருந்திருக்கும். ஆனால் இப்போ நிலைமை வேற. எதையும் ஆலோசித்துத்தான் செய்ய வேண்டும். “—பட்டும் படாமலும் பாபு கூறியதைக் கேட்கவும் கண்ணனுக்குக் கோபம் வந்தது. இருந்தாலும் இப்போது கோபப்பட்டுப் பிரயோசனம் இல்லை. வந்த காரியம் சரியாக முடியாவிட்டால், அதனால் பாதிக்கப் படப் போவது தான் தான் என்று உணர்ந்து, மிகவும் சாதுரியமாகப் பேச்சை மாற்ற் முயன்றான். ” பாபு நீ அன்னிக்கி கூப்பிட்டபோதே நான் வரலைன்னு தானே உனக்குக் கோபம்..இதப் பாரு. அப்போ எனக்கு பாட்டியாலே எவ்வளவோ காரியங்கள் ஆக வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் நான் அவர்களைப் பழித்துக்கொள்ள விரும்ப வில்லை. இப்போ நான் ஒரு தனிக் காட்டு ராஜா. யாரையும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை. நானும் மாலதியும் நன்றாக யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். .உனக்கும் இப்போது உதவி தேவைப் படாதா என்ன..அதுக்கு மேலெ எனக்குன்னு சில கடமைகள் வேறே இருக்கு. பிராம்மண குலத்தில பிறந்து இன்னும் பூணூல் போடாத சூத்திரன் போல இருக்கிறது பார்க்க நல்லாவா இருக்கு.?அப்பாவுக்கும் அம்மாவுக்கும் செய்ய வேண்டிய பித்ரு கடன்களை செய்யவும் முடியாது.அதெல்லாம் ரொம்ப அவசியம் பாபு.”நீண்ட பிரசங்கம் செய்வது போல் கண்ணன் பேசினான் .உள்ளிருந்து வந்த மாலதி ,” பாபுவுக்கு மட்டும் இதெல்லாம் செய்யணும்னு ஆசையில்லையா என்ன.”இருந்தாலும் இருக்கிற இடத்துலே அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னுதான் இப்படியே....” ”நிறுத்துங்க அண்ணி. இது எங்கள் குடும்ப விவகாரம். இதுலே உங்க ஆராய்ச்சிக்கெல்லாம் இடமில்லை. “ என்று யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் மாலதியை அடக்கினான் பாபு. “ அண்ணா நீங்க சொல்ற பாயிண்டுக்கு வரேன். பிராம்மண குலத்திலே பிறந்ததுக்கு வேண்டி ஒரு பூணூல் மாட்டிக்கோடா பாபுன்னுதானே சொல்ல வறீ.ங்க.. நான் பிராம்மண குலத்திலே பிறந்தவன் மற்றவரிடம் இருந்து வேறுபட்டு நிற்பவன் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பலை. வர்ண பேதங்கள் எல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது அண்ணா... பிராம்மணனுடைய கடமையே அந்த காலத்து முறைப்படி, பரமனுக்கும் பாமரனுக்கும் பாலமாய் இருக்க வேண்டும் என்பதுதான். அந்தக் காலத்துப் பிராம்மணன் ஈசுவர விசாரத்திலேயே ஈடு பட்டிருப்பான். அவனுக்கென்று பொருள் ஈட்ட மாட்டான். மற்ற வர்ணத்தவர்கள் அவர்களுக்கு என்று  ஏற்படுத்தப் பட்ட தொழில் முறையைக் கடை பிடித்து வந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் குல ஆசாரம் என்ற முறைப்படி பார்க்கப் போனால் எல்லோரும் வைசியர்களும் சூத்திரர்களும் தான். அதன்படி நீயும் ஒரு சூத்திரன், நானும் ஒரு சூத்திரன்.இப்படி இருக்கும்போது குலம் ஆசாரம் என்ற பேச்சுக்கு அர்த்தமேயில்லை. மேலும் நீங்க சொல்ற பித்ரு கர்மாக்களை, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் செய்ய வேண்டியதை தாராளமாக நானும் செய்து கொண்டு தானிருக்கேன். ஆனால் நீங்க சொல்லும் முறையில் அல்ல. அப்பா இருந்திருந்தா என்ன செய்ய நினைத்திருப்பாரோ அதைச் செய்வதே அவருக்கு நான் செய்யும் நினைவு வழிபாடு. அம்மாவுக்கு என்னும் பேச்சுக்கே இடமில்லை. உன்னையும் என்னையும் பெற்றெடுத்த புண்ணியவதி,நமக்கு நினைவு தெரியும் முன்பே போய் சேர்ந்துட்டா. ஆனால் நமக்கு நினைவு தெரிந்த பிறகு அம்மா என்று கூப்பிடும் ஸ்தானத்தில் இருக்கும் நம்மை வளர்த்திய இந்த அம்மாவை மனம் வாடாதபடி பார்த்துக் கொள்வதுதான் இறந்து போன அம்மாவுக்கு நாம் செய்யும் நினைவு தின வணக்கங்கள்.” பாபு இவ்வளவு தூரம் பேசுவான் என்று கண்ணன் எதிர் பார்க்க வில்லை. அவனைப் பொருத்த வரையில் யார் என்ன செய்தாலும் அது அவர்கள் மற்றவரிடம் கொண்டுள்ள அபிப்பிராய பேதத்தை தெரியப் படுத்தவே என்று எண்ணிக் கொண்டிருந்தான். அதற்குப் பின்னால் , ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எழுந்த ஒரு கொள்கை வெறி இருக்கும் என்று நினைக்க வில்லை. இருந்தாலும் பாபு பிராம்மண குலத்தையே பழிக்கிறான் என்ற தவறான எண்ணம் கண்ணனை ஆத்திரப் படுத்தியது. ”பாபு நீ மேடை ஏறி பிரசங்கம் பண்ணுவதில் கை தேர்ந்தவன் என்று எனக்குத் தெரியும். அதை இங்கே ஸ்தாபிக்க வேண்டாம். மேடையிலே பெசினா நாலு பேர் பொழுது போச்சேன்னு கை தட்டுவா. அதுதான் பெருமைன்னு தவறா நெனச்சிட்டு இருக்கே. பேசற பேச்செல்லாம் வாழ்க்கை நடைமுறைக்கு ஒத்து வராதுனு உனக்குப் புரியலை. புரியவும் புரியாது. இந்த பிள்ளைகளுக்குப் பதிலா பெண்களாப் பிறந்திருந்தால் அப்பா செய்த தவறின் தன்மை உனக்குத் தெரிஞ்சிருக்கும்.அந்த விதத்திலே நீ லக்கி. எல்லோரும் பிரிஞ்சிருக்கோமென்னு நீ அவதிப் படறது உண்மை என்று நம்பி, அந்தக் குறையைத் தீர்க்கலாம்னு வந்தேன். நீ என்னடான்னா செயல்ல மட்டுமில்லாம வாக்கிலயும் சூத்திரனா மாறிட்டே. எனக்கு அப்படி வாழ முடியாது. நம்ம முன்னொர்கள் வகுத்த வழிமுறைகளெல்லாம்  சுத்த்ச் ஹம்பக் என்று நீ சொல்ற மாதிரி என்னால் நினக்க முடியாது. அப்படியானா நமக்கு முன்னாலே பிறந்து இந்த நாட்டிலே வளர்ந்த எல்லோரும் ஒண்ணுமே தெரியாத முட்டாள்களா.?நீ ஒருத்தன் மட்டும்தான் எல்லாம் தெரிஞ்ச புத்திசாலியா.? இல்லை எனக்குத் தெரியாமல் தான் கேட்கிறேன். “  ”அண்ணா நான் சொல்றத நீங்க சரியாப் புரிஞ்சுக்கலை வாழ்க்கையிலே குலம் கோத்திரம் எல்லாம் மனசைப் பொறுத்தவரை சரியா இருந்தா நல்லதண்ணா. ஆனால் அதுவே ஒரு சில வகுப்பாளுங்க தரமில்லாமலேயே உயர்த்தப் படறதும், மத்தவங்க நசுக்கப் படற்துக்கு ஒரு கருவியா, எண்ணமா சமுதாயத்துலே ஒரு நிலை அடைஞ்சிருக்கிறது தப்புன்னுதான் நான் சொல்ல வரேன். நீங்க வணங்கற தெய்வத்தைதான் நானும் வணங்குகிறேன்.மற்ற சாதிக்காரங்களும்--.ஹிந்துக்களை—வணங்கறாங்க. இதுலே உயர்வு தாழ்வுக்கு இடம் எங்கேன்னுதான் புரியலை. இதையெல்லாம்தான் விவேகாநந்தர் முதல் பாரதி வரை சொல்லி இருக்காங்க. அவங்க சொன்னதைக் கேட்டு அந்த சமயம் கைதட்டிப் பொழுது போக்கின கூட்டம் இருக்கலாம். ஆனால் எனக்கு அதுதான் சரின்னு ஒரு உறுதி பிறந்திருக்கு. என்னைப் போல எவ்வளவோ பேருக்கும் பிறந்திருக்கலாம். அது நன்மையாய்தான் முடியும். என்னைப் பொறுத்தவரை வாழ்ந்து காட்ட ஒரு சந்தர்ப்பமும் கிடைச்சிருக்கு.இதையெல்லாம்தான் நான் முக்கியமா நினைக்கிறேன். பிரிஞ்ச குடும்பம் ஒன்றாயிருக்கணும்னு நான் விரும்பறத செயல் படுத்த வந்ததாகச் சொன்னீர்கள். அதைக் கேட்டதும் உண்மையிலேயே சந்தோஷப் பட்டேன். ஆனால் நீங்க கொண்டிருக்கிற எண்ணங்களை இந்த இடத்தில் நிறை வேற்ற முயன்றால் வீணா மனஸ்தாபமும் வேற்றுமையும்தான் வளரும். அதுதான் வேண்டாம் என்கிறேன்.” ” பாபு நீ ரொம்ப சாமர்த்திய சாலின்னு உனக்கு நினைப்பு. உன்னைப் போல் மற்றவர்களும் சாமர்த்தியசாலிகளாய் இருக்கலாம் என்ற சந்தேகமே உனக்கு இல்லை. என்னுடைய உதவி தேவை ஆனால் என் எண்ணப்படி செயலாற்ற எனக்குத் தடை. நீ சம்பாதிக்கறத எங்கிட்டக் கொடுத்துட்டு நான் சொல்றபடி நடடா—ன்னு எங்கிட்ட மறைமுகமாக் கேட்கறே. இதுக்கு காதுலே பூ வெச்சவன் யாராவது இருப்பான். போய்ப்பாரு. உன் குணம் எனக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு. நீ ஒரு சுய நலப் புல்லுருவி. உன் கூடவும் இவர்கள் கூடவும் வாழ எனக்கென்ன பைத்தியமா.! மாலதி வாடீ.. இங்கே ஒரு நிமிஷங்கூட இருக்கக் கூடாது. வீட்டுக்குப் போனதும் குளிச்சு  இந்த உறவுக்கே முழுக்குப் போட்டுடணும்.” வந்த காரியம் கை கூடவில்லை என்ற ஆத்திரத்தில் இன்னதுதான் பேசுகிறோம் என்று கூட உணராமல் கண்ணன் மாலதியைக் கூட்டிக் கொண்டு வெளியேறி விட்டான். கொஞ்ச நேரம் தலை சுற்றுவதுபோல் இருந்தது பாபுவுக்கு. அவனுக்கு சற்று முன் நடந்த நிகழ்ச்சிகள் கனவோ என்று கூட சந்தேகம் ஏற்பட்டது. அவன் உள்ளம் புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தது.கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டோமோ என்று அடிக்கடி தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். இருந்தாலும் கண்ணன் அந்த அளவுக்குப் பேசிப் போகும் படி தான் எதுவும் சொல்லவில்லை என்று நம்பினான். அமைதியைக் கலைத்தவன் ராஜுதான்.”இங்கே வரும்பொது இவர்களுக்கு எண்ணம் வேறெதோவாக இருந்திருக்கும். ஆனால் பேச்சு போன விதத்திலே வந்த எண்ணத்தை சரியா வெளிப்படுத்த முடியலை.ன்னு எனக்குத் தோணுது .டேய் விசு, பெரிசாப் படிக்கலாம்னு கொஞ்ச நேரத்திலெ நெனச்சியே. .பாபு அண்ணா மனசு வெச்சாத்தான் உனக்கு மேல் படிப்பு. “ என்றான். ”எனக்கு இந்த திடீர் வரவும் அக்கறையும் சந்தேக மாக இருந்தது. நாளைக்கே எங்களை இந்த சித்தி வீட்டை விட்டுப் போகச் சொன்னா என்று கதை மாறினாலும் மாறலாம். ஹூம்.! ராஜு சொல்றாப்போல வந்த நோக்கமே இதாயிருந்திருக்காது. சண்டை போடறதுக்குன்னு வந்த மாதிரி அல்லவா இருந்தது. அந்தப் பெண் நல்ல பெண்ணாத் தெரியறா. இப்போ அவளும் மாற்யிருப்பா. இதையெல்லாம் பெரிசா நெனச்சா முடிவே கிடையாது. இதைவிட பெரிய மனஸ்தாபங்களையும் சண்டைகளையும் உங்க அப்பா காலத்திலேயே பார்த்தாச்சு.  நீ எதுக்கடா பாபு எண்ணி எண்ணி மாயறே. சாப்பிட வா நேரமாச்சு. நல்ல வேளை உங்க போர் ஆரம்பிக்கறதுக்கு  முன்னாடியே வந்தவர்களுக்கு காப்பியெல்லாம் கொடுத்தேன். இல்லைன்னா அந்தப் பழி வேற எனக் கிருந்திருக்கும். “ என்று சொல்லிக் கொண்டு போன கல்யாணி அ,ம்மாவை பாபுவின் கூச்சல் அடக்கிற்று. ”உனக்குப் பழி வரக் கூடாதுன்னு நீ ரொம்பத்தான் அலட்டிக்கிறே. வரதென்னவோ வரத்தான் செய்யுது. கொஞ்ச நேரம் பேசாமத்தான் இருங்களேன். “  பாபுவுக்கு சாப்பாடு செல்லவில்லை.உறக்கம் கொள்ள வில்லை. நடு ராத்திரியில் திடீரென்று விளக்கை பொருத்தி  ஒரு தாளையெடுத்துப் பட பட வென எழுதினான். ”அண்ணா,இன்று நடந்த சம்பவங்கள் நமக்குள்ள அபிப்பிராய பேதத்தைத் தெரியப் படுத்துவதாக மட்டும் இருக்கட்டும். உறவுக்கும் அன்புக்கும் முழுக்குப் போட்டதாக நீங்கள் சொல்லிச் சென்றது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வருகிற ஞாயிறு மாலை நான் உங்களை வந்து பார்க்கிறேன்.”----ஏதோ மனப் பளு கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது.. விடிந்ததும் எழுதிய கடிதத்தைத் தபாலில் சேர்த்தான். நேரிலேயே சென்று விளக்கி இருக்கலாம். ஆனால் புகைச்சல் ஏற்பட்ட மனம் நிதானத்துக்கு வருவது நல்லது. அதுவரை சும்மா இருக்கலாம் என்று எண்ணியவன் தான் செல்லும் நேரத்தில் கண்ணன் அங்கிருக்க வேண்டுமே என்பதற்காக அந்தக் கடிதத்தை அனுப்பினான். மறு தபாலில் வந்த பதில் பாபுவின் உள்ளத்தை இன்னும் வருந்தச் செய்வதாக இருந்தது. “வருவதாயிருந்தால் தனியாக வா. நீ என் உடன் பிறந்த பிராமணன் என்பதற்காக இந்தத் தனிச் சலுகை.”.-----கண்ணன்.           அத்தியாயம் பதினொரு   பாபு இரண்டு மூன்று நாட்களாக வேலைக்குப் போகவில்லை. உடல் நிலை சரியாயிருந்தாலும் மன நிலை சரியாக இருக்கவில்லை.. இரவில் வெகு நெரம் விழித்து உறங்கப் போவது, காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருப்பது, பகற்பொழுதில் வெறிச்சென்று உட்கார்ந்திருப்பது, என்று பார்க்கப் பார்க்க கல்யாணி அம்மாவுக்குப் பொறுக்கவில்லை. “ என்னடா இது, ..நானும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நீயே இப்படி மனசு ஒடிஞ்சு போயிட்டா, வீட்டிலே எப்படிடா சந்தோஷம் இருக்கும்.? குழந்தைகள் வேறு உன்னைப் பார்த்தாலே பயந்து சாகிறதுகள். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் எல்லோருக்கும் சரியெது தப்பெது என்று தெரியத்தான் போகுது. நீ வேலைக்குப் போய் சாதாரணமாய் இரு. எல்லாம் சரியாயிடும்.,“ என்று தான் மிகவும் பயந்து சொல்ல வந்ததை ஆறுதல் அளிக்கும்படிக் கூறினாள். பாபுவுக்கும் அதுதான் சரியெனப் பட்டது. மேலும் சும்மா இருக்கும் நேரத்தில் மன உளைச்சல் படுவதைவிட, அதை ஏதாவது ஆக்க வழியில் பயன் படுத்தினால், அதுவும் லாபகரமானதாய் இருக்கும் என்று தோன்றியது. கலை இலக்கியங்களுக்கு என்று ஏற்படுத்தப் பட்ட தமிழ் மன்றத்தை தற்கால இயல்புகளுக்கு ஏற்றபடி மாற்றலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதும், மன்றத்து காரியக்குழு உறுப்பினர்கள் தேர்வு அன்று மாலை நடக்க இருப்பதும் நினைவுக்கு வந்தது. தானும் போட்டி போடுவது, தேர்ந்தெடுக்கப் பட்டால் தன் எண்ணங்களை செயல் படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆதவனின் கிரணம் பட்டு விலகும் பனி போல பாபுவின் கவலைகள் அவனை விட்டு சற்றே விலகியது. பழைய பாபுவாக தன்னம்பிக்கை மிகக் கொண்டவனாக மாறினான். காரியக் குழு உறுப்பினர் தேர்தலில் பாபு போட்டியிடுகிறான் என்ற செய்தி தெரிய வந்ததும், அமோகமான வெற்றியைத் தேடித் தந்தனர் பாபுவின் நண்பர்கள். அதோடு மட்டுமல்லாமல் குழுவின் தலைவனாகவும் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டான். பாபுவின் பேச்சுத் திறமையை மட்டுமே அறிந்திருந்த மன்றத்து உறுப்பினர்கள், மன்றத்தின் வருங்கால செயல் முறைகளை பாபு விளக்க முற்பட்டதும், பாபுவே எதிர்பார்க்காத முறையில் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கலை இலக்கியம் சம்பந்தப்பட்ட முத்தமிழின் வளர்ச்சிக்கென்று உருவாக்கப்பட்ட மன்றத்தை அன்றாடம் நடக்கும் வயிற்றுப் பாட்டு விவகாரத்தில் முக்கிய பங்கு ஏற்க வேண்டும் என்று பாபு கூறியதே எதிர்ப்புக்குக் காரணம். கலையை வளர்க்கிறோம், தமிழ்ப் பணி புரிகிறோம், என்று சொல்லிக் கொண்டு, பழைய கம்ப ராமாயணச் சர்ச்சையிலும், வள்ளுவத்தின் மகத்துவத்தை மற்றவர் அறியச் செய்வதிலும், பாரதியின் பாட்டுப் புலமையை சிலாகிப்பதிலும் நேரத்தை செலவிடும் நம் மன்றம், உண்மையில் தமிழை வளர்க்கிறதா.? கலையை வளர்க்கிறதா,? இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. பொழுது போக்கு மன்றமாகவே செயல் புரிகிறது. கம்பனும் வள்ளுவனும், இளங்கோவும் பாரதியும் தமிழுக்குத் தொண்டாற்றினார்கள். அதை அனைவருக்கும் உணர்த்த வேண்டியது அவசியம். ஆனால் அதுவே தமிழை வளர்க்கும் பணியென்று சொல்வது முறையா,? இன்னொன்று கேட்கிறேன் நண்பர்களே, ! சற்று முரண்பாடாகத் தோன்றினாலும் உண்மை தெரிய வரும். தமிழ்ப் பணி என்று கூறி, மன்றம் நடத்தி, வளர்ந்த தமிழை வளர்க்கிறோம் என்று பெருமைப் படுவதைவிட , சற்றே பரந்த மனங்கொண்டு தமிழ் சமுதாயத்துக்குத் தொண்டாற்றும் மக்கள் மன்றமாக இதை மாற்றினால் இன்னும் நன்றாகத்தானே இருக்கும். மன்றம் நிறுவப் பட்டிருக்கும் இந்தப் பகுதி, பெங்களூருக்கே சிற்ந்த உதாரணமாகத் திகழ, வழி வகுக்கப்படக் கூடாதா,?ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குடும்பத்துப் பிள்ளைபோல் பணி ஆற்றக்கூடாதா.? எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை நாடாமல் நம் தேவைகளை நாமே ஓரளவுக்காவது பூர்த்தி செய்யக் கூடாதா. ? அந்த முறைக்கு அந்த வழியில் பணியாற்றும் மக்கள் மன்றமாக இது திகழக் கூடாதா.? இதுதான் என் கேள்வி. தனி மனிதனால் ஆகாத விவகாரங்கள் இவை. இவற்றுக்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் நல்லெண்ணமும்  ஆசிர்வாதமும் தேவை. நான் கொண்ட எண்ணங்களில் தவறிருந்தால் திருத்தப்படத் தயாராயுள்ளேன். “ பாபு அஸ்திவாரத்தையே மாற்ற விரும்புவதாக எல்லோரும் எதிர்த்தார்கள்.   ‘”தலைவர் கூறுவதுபோல் மக்கள் மன்றமாக மாற்றப் பட்டால் நாம் என்னதான் சாதிக்க முடியும். ?பசித்தவனுக்குச் சோறு போடும் அன்னதான மண்டபமாகக் காண்கிறாரா நம் மன்றத்தை. அப்படியானால் ஒவ்வொரு உறுப்பினரும் பிச்சை எடுத்துத்தான் மன்றம் நடத்த வேண்டி இருக்கும்.”  பொழுதுபோக்கு மன்றமா இது என்ற பொருள் தொனிக்கக் கேட்கிறார் தலைவர். நான் கூறுகிறேன். ஆம்.! ஆயிரக்கணக்கான குடும்ப விவகாரங்களைக் கொஞ்ச நேரமாவது மறந்திருக்கலாமே என்றுதான் இந்த மன்றத்தின் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் வருகிறார்கள். சமூகத் தொண்டாற்றுகிறோம் என்று நாம் துவங்கினால், எள்ளி நகையாடப் படுவோம். நான் இதை வன்மையாக எதிர்க்கிறேன். “  “சமூகத் தொண்டாற்றும் மன்றமாக மாறலாம் என்று சொல்வதைக் கேட்க என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் அது என்ன என்று வரையறுக்கப் படாத வரையில் நாம்புரிந்து கொண்டு வருவதும் சமூகத் தொண்டுதான் என்பது என் அபிப்பிராயம். “  எல்லாவிதமான எதிர்ப்புக் கருத்துக்களும் தெரியப் படுத்த்ப் பட்டன. பாபுவுக்கு, ”ஏன் என்னைப்போல் நினைக்கும் ஒருவராவது இங்கில்லையா.? இல்லை ,நான் நினைக்கும் விதமே இயற்கைக்கு முரண்பாடாக உள்ளதா.?” என்ற ஐயமே மேலிட்டது. கடைசியாக விட்டுக் கொடுக்கும் எண்ணத்திலும், ஒரு சிலவற்றையாவது மன்றத்தின் முன் வைத்து செயல் படுத்தக் கடைசி முயற்சி என்ற விதத்தில் “ சமூகத் தொண்டென்பது இன்னதுதான் என்று வரையறுக்கப் பட வில்லை என்றார் ஒரு நண்பர். பிச்சை யெடுக்க வேண்டி இருக்கும் என்றார் இன்னொருவர். யாருமே நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டார்கள் என்றார் மூன்றாமவர். நான் கூற வந்ததென்னவோ, தமிழ் மன்றத்தின் பணியில் ,இன்னும் சிலவற்றை சேர்க்கலாம் அதுவும் சமூகத் தொண்டு என்ற பரந்த நோக்கத்தில் இருக்கட்டும் என்பது தான். பாரதியைப் பற்றிப் புகழ்கிறோமே தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினவன், ஆஹா என்கிறோமே , அந்தக் கள்ளிகளையும் களான்களையும் அழிக்கும்வகையில் ஒரு முயற்சி நாம் செய்யக் கூடாதா என்றேன். அதற்காகப் பிச்சை எடுத்து அன்னதான மண்டப மாக்கவும் வேண்டாம்.பள்ளிகள் துவக்குவோம். அங்கு பிஞ்சு உள்ளங்களில் பாரதியின் ” இனி ஒரு விதி செய்வோம்” என்ற ஊக்கத்தை புகட்டுவோம். ஏமாற்று காரர்களும் எத்தர்களும் நிறைந்த நம் சமூகத்தில் ஏய்த்துப் பிழைப்பவர்களை காட்டிக் கொடுக்கும் வகையில் கூட்டுறவு பண்டக சாலைகள் நிறுவுவோம்.  இதற்கான முதலுக்கு இருக்கவே இருக்கிறது நமது முத்தமிழ். நாடகங்கள் நடத்துவோம், நல்லதை உணர்த்துவோம். ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு பத்து பேராவது நம்மோடு சேர மாட்டார்களா. ? நமது மன்றம் வலுக்காதா.? மக்கள் குரல் ஓங்காதா.? நம்மைப் பிடித்திருக்கும் சோம்பலை ஒழிக்க ,மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய, இந்த மன்றம் வழி வகுக்கக் கூடாதா.?அஸ்திவாரத்தையே நான் மாற்ற விரும்புகிறேன் என்றால் அது ஓரளவுக்குத்தான் உண்மை.அந்த அளவுதான் நம் சக்தி என்று எண்ணுகிறேன். பாரதியோ ஒழித்துக் கட்டு என்றல்லவா முழங்கினான். இந்த எண்ணங்க்ளுக்கு உயிர் கொடுக்கவே நான் போட்டியிட்டேன். உணர்த்தப் படாத எண்ணங்களும் உணர்ச்சிகளும் இலை பழுத்து உதிர்ந்து சருகாகிப் போகும் நிலைமை போலாகி விடக் கூடாதே என்றுதான் என் எண்ணங்களை உங்கள் முன்னிலையில் வைத்தேன். எதிர்ப்பு இருந்தாலும் அது இப்போது மறைந்திருக்கும் என்றே நம்புகிறேன் “என்று அழுத்தமாக ,ஆணித்தரமாகக் கூறினான். மொத்தத்தில் பாபு தமிழ் மன்றத்தை வலுவுள்ளதாகச் செய்யத்தான் மக்கள் மன்றமாக மாற்றச் சொல்லுகிறான், என்று உணர்ந்த மன்றத்து உறுப்பினர்கள், பாபுவின் தீர்மானத்தை ஆதரித்தார்கள் இது பாபுவுக்குக் கிடைத்த வெற்றிகளில் ஒன்று என்று அவனே எண்ணினான். அந்த எண்ணம் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழியை நிரூபிக்கச் செய்யும் வகையில் இருந்ததால், பாபு முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று உறுதியாக நம்பினான். ஏற்படுத்திய மாற்றத்தை வெள்ளோட்டம் விட ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தார்கள். முத்தமிழும் இடம் பெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க பெரிய மனிதர் ஒருவரைத் தேடி அலைய வில்லை. அவர்கள். உள்ளூரில் நல்லவர் என்று பெயரெடுத்த ஒரு சாதாரணமான வரையே அழைத்தனர். அலசூரிலேயே நிகழ்ச்சிகளைக் கொண்டாட திட்டமிட்டனர். ஏற்பாடுகளைக் கண்டும் கண்காணித்தும் வந்த பாபுவுக்கு ஒரு புது வேகமும் உற்சாகமும் ஏற்பட்டது. நிகழ்ச்சியை மிகப் பெரிய அளவில் நடத்தி கணிசமான தொகையைத் திரட்டி ஆரம்பத்தில் ஒரு பள்ளிக்கூடம் நடத்துவதென்பதும், அதில் பணியாற்ற ஊதியம் பெற விரும்பாத நல் உள்ளத்தவரைத் தேடிக் காண்பதும் பாபுவின் சுமையாகி விட்டது. அத்தியாயம் பன்னிரண்டு   கண்ணன், பாபு தன்னை வேண்டுமென்றெ அவமானப் படுத்திவிட்டதாக எண்ணிப் பொறுமினான். பாபுவின் வாதப் பிரதி வாதங்கள் கவைக்குதவாதது என்று திடமாக எண்ணினான். செய்யப் பட்ட செயலின் .குற்றத்தை மறைக்க, ஏமாற்றுகிறவர்கள் எழுப்புகிற குரலில் உண்மை உள்ளதென்று பாபு தவறாக எண்ணுகிறான் என்றும் வேதனைப் பட்டான். ”ஆண்டவன் வழிபாடு, அர்ச்சகம் செய்வது இவற்றுக்கென்றே ஏற்படுத்தப் பட்டதுதான் பிராமண குலம் என்றல்லவா பாபு கூறுகிறான்.!அப்படிச் செய்யாதவர்களெல்லாம் சூத்திரர்களாம். ! நாக்கில் நரம்பில்லாமல் பெரியவன் என்ற பேதமில்லாமல் என்னையே எடுத்தெறிந்து பேசிவிட்டானே. சே..! இதெல்லாம் இந்த புத்தி கெட்ட மாலதியின் பேச்சைக் கேட்டதால் வந்த வினையல்லவா,! தான் கஞ்சி குடிக்க தன் கணவன் மட்டும் ஒன்றும் அறியாமல் வேளா வேளைக்கு தின்று போகிறானே என்ற வேதனையில் அவள் என்னிடம் ஏதாவது சொல்லியிருந்தால், அவளுக்குச் சோறு போட வகையிருக்கிறதா என்று பார்ப்பது, இல்லையென்றால் நானும் கஞ்சி குடித்துவிட்டுப் போகிறேன் என்றிருக்காமல், அவள் பேச்சைக் கேட்டு அங்கு போனதே என் மடத்தனம் “ கண்ணனுக்கு ஏற்பட்ட மனப் புகைச்சல் எளிதில் அடங்குவதாக இல்லை. என்னென்னவோ எண்ணித் தன்னையே குறை கூறிக் கொண்டான்.. பிராமணீயத்தை எதிர்க்கும் அந்த அற்பனுக்கு,அதன் மகத்துவத்தைக் காட்டியே தீருவது என்று சங்கல்பித்துக் கொண்டான். இன்றைக்கு வந்து வேறு உயிரை வாங்கப் போகிறான்..என்னென்னவோ சொல்லிக் குழப்புகிறான். நானாவது பேசாமல், ஒன்றாக வாழ விரும்பி வந்திருக்கிறோம் என்பதோடு நிறுத்தி இருக்கலாம். பிறகு நடப்பவற்றைப் பிறகு கவனித்திருக்கலாம். சே.!அதைவிட அவன் குணம் இப்போது தெரிந்ததே எவ்வளவோ மேல். ! இல்லையென்றால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்திருக்கும். ஹூம்.! வரட்டும். என்னதான் சொல்கிறான் பார்ப்போம்.”—பாபு வரும் நேரம் நெருங்க நெருங்க கண்ணன் குட்டி போட்ட பூனை மாதிரி அமைதி இழந்து தவித்தான்.பாபுவும் வந்து சேர்ந்தான். ”பெரிய துரை.! லெட்டர் எழுதிப் போடறானாம்,நான் காத்திருக்க வேணுமாம். .தெரியப்படுத்தாம வரக்கூடதோ.?சரி, வந்த விஷயம் என்ன,?”—கண்ணன் மன நிலை மாறியிருக்கவில்லை என்று பாபு கணக்கெடுத்து விட்டான். தன் மன உறுதியைக் காட்டுபவன் போல ,ஒன்றுமே இதற்கு முன்பு நடக்காத மாதிரி மிகவும் சகஜ பாவத்தில்,”இல்லையண்ணா. நான் வர சமயத்தில் ஒரு சமயம் நீ வீட்டில் இல்லாது போனால்... அதுவுமில்லாமல் நான் வரேன்னு தெரிஞ்சிருந்தால் அண்ணியும் எனக்காக ஏதாவது ஸ்பெஷ்லாகச் செய்திருப்பார்கள்” என்றான். “ இல்லையா அண்ணி.”என்று கேட்டு மாலதியும் மனமாற்றம் அடைந்திருக்கிறாளா என்று அறிய விரும்பினான். மாலதிக்கு தர்ம சங்கடமாக இருந்தது. என்பதன் கூட, பாபுவை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற எண்ணமும் கலந்திருந்தது. மெல்லச் சிரித்து மௌனமாக இருந்தாள். அந்தச் சிரிப்பே அவளுடைய நிலையை எடுத்துக் காட்டியது. பாபுவுக்கு என்னதானிருந்தாலும் தான் ஒரு அன்னியப் பெண்ணிடம் அன்றைக்குக் கடிந்து பேசியது தவறு என்றே தோன்றியது.ஆத்திரத்தை அடக்கி அவ்ளை அலட்சியம் செய்திருக்கலாம்..ஆனால் இந்தப் பாழாய்ப் போன,நல்லது கெட்டது, சரி தவறு முதலியவற்றை ஆராயும் குணங்கள் எல்லாம் நடந்து முடிந்து போன பிறகல்லவா தெரிய வருகிறது.,என்று தன்னையே நொந்து கொண்டான். கண்ணன் எப்படியாவது பாபுவைத் தாக்க வேண்டும், அவனை அவமானப் படுத்த வேண்டும், என்று சதா எண்ணிக் கொண்டிருந்தான்.எண்ணிக் கொண்டிருந்தவன் கிடைத்த வாய்ப்பையும் நழுவ விடத் தயாராயிருக்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல நடிக்கத் தனக்கும் தெரியும் என்று காட்டிக் கொள்ளும்.பாபுவை வார்த்தைகளால் தாக்கவும், தன் இருப்பிடத்தில் தான் வைத்ததே சட்டம் என்பதை நிரூபிக்கவும்,” ஸ்பெஷ்லாகச் செய்து போட வேண்டும் என்ற ஆசை இருந்தால் போதுமா பாபு.? அதை அனுபவித்து உண்ணுபவர்களும் அன்புக்குப் பாத்திரமானவர்களாகவும் இருக்க வேண்டும் அல்லவா.? நீ என் தம்பி. அதனால் என் அன்பு உனக்குண்டு. குளித்து பூஜை முடித்த பிறகுதான் இங்கு சாப்பாடு. நீ தயாரானால் குளித்து விட்டு ஸ்பெஷ்லாகச் சாப்பிடலாம்..ரெடியானால் வா சாப்பிடலாம் “என்று கூறினான்.   ”.ஓ.! நான் குளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். பூஜைகள் முடித்துக் கொள்ளுங்கள். நான் அதுவரை வெண்டுமானால் காத்திருக்கிறேன்”---பாபு இடக்காகப் பேசி தன்னை மடக்குவதாக கண்ணனுக்குப் பட்டது. அவனுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ,” சரி.கொஞ்ச நேரம் இரு பூஜை முடியட்டும்” என்று கூறி , விபூதியைக் குழைத்துப் பூசிக்கொண்டு, விளக்கேற்றி ஸ்வாமி படத்தின் முன்னால் போய் அமர்ந்தான். தன் அண்ணனுக்கு இவ்வளவு பக்தியா என்று எண்ணி பாபு ஆச்சரியப் படட்டும் என நினைத்து, சாதாரணமாகப் பத்து வினாடிகள் ஆண்டவனைத் துதி செய்யும் நேரத்தை அன்று வேண்டுமென்றே ஒரு மணி நேரமாக நீட்டினான். பாபுவுக்கு கண்ணன் வேண்டுமென்றே காலத்தைக் கடத்துவது நன்றாகத் தெரிந்தது. இருந்தாலும் அதை வெளிக் காட்டாமல், பொறுமையாக அங்கிருந்த பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் கவனத்தைச் செலுத்தினான்.ஒரு வழியாகக் கண்ணன் பூஜையை முடித்துக் கொண்டு, அதே சமயத்தில் மாலதிக்கு சைகையால் “ ஒன்று “ என்று தெரிவித்து முன் அறைக்கு வந்தான். சிறிது நேரத்தில் ஒரு தட்டில் உப்புமாவும், ஒரு க்ளாசில் பாலும் மாலதி கண்ணன் முன் வைத்துவிட்டு உள்ளே சென்றாள். பாபு பத்திரிகையிலிருந்து தன் தலையைச் சற்றே தூக்கி நோக்கியவன், ஒருவருக்கு மட்டும் கொண்டு வரப் பட்ட உண்டியைக் கண்டு, தன்னைக் கண்ணன் நன்றாக அவமானப் படுத்த திட்ட மிட்டிருக்கிறான் என்பதை யூகித்துக் கொண்டான். கண்ணனின் இந்த அற்ப சந்தோஷத்துக்கு தான் ஈடு கொடுக்க வேண்டும் என்று எண்ணியவன், மனம் வேதனையால் வாடியது..கண்ணன் பாபுவை ஒப்புக்குக்கூட அழைக்காமல் கொண்டு வரப் பட்டிருந்த சிற்றுணவை முடித்துக் கொண்டு, “பாபு வந்த விஷயத்தைச் சொல்” என்றான். அவன் முகத்தில் வெற்றிப் பெருமிதம் தாண்டவமாடியது.பாபுவின் வேதனை அடைந்த முகம், அவமானத்தின் சாட்டையடி பட்டு துவண்டு போய் விட்டது என்று நினைத்து சந்தோஷப் பட்டான். ”அண்ணா, வந்த விஷ்யமிருக்கட்டும்.எனக்கொரு சந்தேகம்..அதை முதலில் தெளிவித்துக் கொள்கிறேன் ‘’ என்று பாபு கூறியதைக் கேட்டதும் ,அவன் சற்று முன்பு நடந்த நிகழ்ச்ச்க்கு விளக்கம் கேட்கப் போகிறான் என்று நினைத்துக் கண்ணனும் தன்னை போருக்கு ஆயத்தப் படுத்திக் கொண்டான். :” ஆண்டவன் வழிபாட்டை இப்படி படத்தின் முன்னால் உட்கார்ந்து ஒரு மணி நேரம் புரியாத வார்த்தைகளைச் சொல்லுவதன் மூலம் தானா வெளிப் படுத்த முடியும்.?” “ அது சுத்த நாஸ்திகக் கேள்வி. தூணிலும் இருப்பவன் துரும்பிலும் இருப்பவன் கடவுள். அவன் புகழ் பாடவே ஏற்படுத்தப் பட்ட மொழி சம்ஸ்கிருதம். புரிவதும் புரியாததும் அவனவன் ஞானத்தைப் பொறுத்தது. பிராமணன் ஞானி. ! நான் ஒரு பிராமணன் . பூஜை புனஸ்காரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு செய்கிறேன். உன்னை மாதிரி நாஸ்திக சர்ச்சைகளில் ஈடுபட எனக்கு நேரமில்லை. “  ‘’அண்ணா, ஆண்டவன் என்றழைக்கப்படும் ஒரு அத்யந்த சக்தியை வழிபட பூஜை புனஸ்காரங்களே வேண்டாமே. மலர்மாலை அணிவிப்பதும், மங்கலப் பொருட்களை நைவேதனமாகப் படைப்பதும், மந்திரங்களை உச்சாடனம் செய்வதும்தான் பூசனையா.? நான் சொல்லுகிறேன். ஆண்டவனின் படம், பலனை மனதில் கொண்டு, அதையடைய ,தன் புலன்களை அடக்கி, சிந்தனையைக் கட்டுப் படுத்தி சக்தியின் உருவில் லயிக்கச் செய்ய உதவும் ஒரு சாதனம். THAT IS AN OBJECT TO CONCENTRATE YOUR THOUGHTS. பிரதிபலனை அடைய விரும்புபவனும், பரம்பொருளும், மலர் மாலைகளாலும் மங்கலப் பொருட்களாலும் உள்ளத்தின் எண்ணத்தில் இரண்டறக் கலப்பதே பூஜையின் முக்கிய நோக்கம். அர்ச்சிப்பவனின் உள்ளத்திலேயே, அர்ச்சனைப் பொருட்களே இல்லாமல் ஆண்டவனின் சக்தியை ஒருங்கே கொண்டு வந்து, பலனை எதிர்பார்க்காது, உண்மையில் மனம் உருகி கண்ணீர் சிந்துவதே முன்னதை விட உயர்ந்தது.ஆனால் அதற்கு நல்லெண்ணம் கொண்ட தூய்மையான எண்ணம் வேண்டும். இதைத்தானே அன்பே சிவம் என்கிறார்கள். இல்லாதவர்களுக்குத்தானே படமும் ,சிலையும், பக்திப் பிரசாதங்களும்.இதுவும் கூட என் நாஸ்திக வாதம் என்று நினைத்து விடாதே. இது ஞானிகளையும் ,மறைகளையும் நான்புரிந்து கொண்ட வரை தான் எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது.” ”உனக்கும் கூடக் கடவுள் பக்தி உண்டு என்று நீ சொல்லித்தான் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முடியும். பாபு உன்னுடைய விதண்டா வாதங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. பிறரை தூஷிப்பதற்கென்றே பிறந்துள்ளவர்களில் என் தம்பியும் ஒருவன் என்று எண்ணும்போது தான், எனக்க மிகவும் மனக் கஷ்டமாக இருக்கிறது. “   உண்மையிலேயே தன் பேச்சும் போக்கும் கண்ணனுக்குப் புரியவில்லை, அதனால் பிடிக்கவுமில்லை. அந்த விதத்தில் கண்ணன் தன்னிடம் வருத்தப் பட்டதும் அதை எடுத்துக் காட்ட , எடுத்துக் கொண்ட முறையும் சரியோ தவறோ தன்னிடம் கண்ணனுக்கு அன்பு இருந்தது என்பதை நிரூபிக்கிறது என்றே பாபு எண்ணினான். அந்த அன்பிலேயே கண்ணனை வென்றுவிட முடியும் என்று பாபு மனக் கோட்டை கட்டினான். ”அதிருக்கட்டும் அண்ணா. ! அன்றைக்கு நான் பெசிய பேச்சுகளால் உங்கள் மனம் புண் பட்டிருக்குமானால் அது என் தவறல்ல.நான் கொண்டுள்ள கொள்கையின் தவறாயிருக்கலாம். ஆனால் அது தவறு என்றுதான் எனக்குத் தோன்ற மாட்டேன் என்கிறது.மேலும் அன்றைக்கு நீங்கள் கடைசியாக வரும்போது கூறிவிட்டு வந்த “உறவுக்கு முழுக்குப் போடுவது “ என்ற வார்த்தைகள். என்மனசை மிகவும் வருந்தச் செய்தது. உலகில் உறவு என்பது நாம் விரும்பிக் கிடைக்கப் பெறும் ஒன்றல்ல. நாம் வேண்டாமென்றால் விட்டுப் போகக் கூடியதும் அல்ல. நமக்குள் அபிப்பிராய பேதங்கள் இருக்கிறது “ “ அதுதானே உறவையே வெறுக்க வைக்கிறது.” “அதைத்தானே வேண்டாமென்கிறேன், விளக்க வந்தேன். அபிப்பிராய பேதங்கள் இருப்பது இயற்கை. நம் கையில் இருக்கும் விரல்களும் கூட வேறுபட்டுத்தானே இருக்கிறது. அதற்காக விரல்களை வெட்டிப் போடுகிறோமா என்ன..வித்தியாசப் பட்டாலும் நம் கை விரல்கள் என்றுதானே எண்ணுகிறோம். உண்மை இது அல்லாதது இது. என்று வரையறுக்கப் பட்டு எல்லோரும் ஒப்புக் கொள்ளும் நிலை வரும்வரை, எண்ண வேறுபாடுகள் இருப்பது சகஜம். கொள்கையை எதிர்த்தாலும் அதைக் கொண்டுள்ளவரை வெறுப்பது என்பது என்னவோ எனக்குச் சரியாகப் படவில்லை. நமது கொள்கைகள் ஒத்து வர வில்லை என்ற எண்ணத்தில் மட்டுமே நமக்குள் ஒற்றுமை இருக்கிறது. உன்னை என் கொள்கைகளிலும் என்னை உன் பக்கம் இழுத்துக் கொள்ளவும் போட்டி போடுகிறோம். இது அன்பினால் ஏற்படுவது. அந்த அன்பும் அதற்குக் காரணமாயிருகிறதென்று நீ நினைக்கும் நமது உறவும் பிட்டுப்பிரித்துத் தள்ளப் பட வேண்டாம் என்று உன்னிடம் வேண்டிக் கொள்ளவே வந்தேன். சொல்லியும் விட்டேன் இனி உன்னிஷ்டம். நான் இங்கு அடிக்கடி வருவேன். உனக்கும் நம் வீட்டில் என்றும் வரவேற்பு உண்டு. .வருகிறேன்.” விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டான் பாபு. அவன் இவ்வளவு தூரம் வந்து பேசிப் போனதே அவனுடைய பண்புக்கு எடுத்துக் காட்டு என்று மாலதி நினைக்கத் தொடங்கவும் “  “அடிபட்ட புலி சீறுது. அடிக்கடி வேறு வருவானாம். ! யார்தான் வரவேற்கத் தவங்கிடக்கிறார்களோ.தெரியலை “ என்று கண்ணன் உறக்கவே தன் ஆத்திரத்தைக் கொட்டிக் கொள்ளவும் “ தாயே என் கணவனுக்கு நல்ல வழி காட்டு, அவரை நல்ல எண்ணங்களுக்கு உறைவிட மாக்கம்மா.”என்று தியானிக்கவும் வேண்டிய தாயிற்று.                         அத்தியாயம் பதின்மூன்று   பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்று தெரியாமலா சொல்லி இருக்கிறார்கள். .அனுபவ பூர்வமாக உணர்ந்து கூறப்பட்ட வார்த்தைகள் அல்லவா.. .ஆஷாவின் மரணமும், -கொலையென்று எண்ணவே நடுங்கியது—மகனுக்குக் கிடைத்த தண்டனையும் பாட்டியை ஒரேயடியாக ஆட்டிவிட்டிருந்தது, என்பதோடு கூட தன்னுடைய மற்ற இரு பிள்ளைகளின் அலட்சியமும் அவளை வெகுவாக பாதித்தது. கல்யாணமான பிறகு கண்ணனும் கூட பாட்டியை லட்சியம் செய்து ஆதரவு காட்ட வில்லை. நல்ல விளை நிலத்திலே புல்லும் பூண்டும் தன் காலத்திலேயே விளைந்து மண்ணின் வளத்தையே கொள்ளை கொண்டு போகிறதே. ஒரு சமயம் தான் விளைத்ததே இந்தக் கள்ளியும் காளான்களும்தானோ. என்றெல்லாம் உள்ளம் உருகத் துவங்கிய பாட்டி, நாளாவட்டத்தில் படுத்த படுக்கையாகி விட்டாள். செல்வாக்கும் பதவிசும் இருக்கிற காலத்திலேயே அவள் எதிர்பார்க்காத ஏகப்பட்ட எதிர்ப்புகளிருந்த தென்றால், எல்லாம் இழந்த நிலையில் அவளை சீந்தக் கூட ஒரு ஜீவன் இல்லாமல் போய் விட்டது. துயரத்தால் உருகி, உடலில் வலுவிழந்து பாதிக்கப் பட்ட பாட்டிக்கு , பேசவோ நடக்கவோகூட முடியாதபடி,உடலின் அங்கங்கள் எல்லாம் கட்டுப் படுத்தக்கூட திராணி இல்லாமல் முடங்கிப் போயிற்று. இந்த நிலையில் ஒடுங்கிக் கிடந்தவள் அடுத்துள்ளவர்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி இருந்தபோது, வாய்விட்டு  ஆண்டவனை துணைக்கு அழைக்கவும் முடியாத துன்பத்தில் துவண்டு போனாள். தன் அந்திம காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்ற எண்ணம் தனக்குச் சீக்கிரம் விடிவு ஏற்படும் என்ற நம்பிக்கையை வளரச் செய்தது. வாழ்வின் பல கோணங்களை தன் நிலையில் இருந்து தான்  ரசித்து அனுபவித்த விதம் அடிப்படையிலேயே தவறு அவள் எண்ணும்போது, தன்னை அறியாமலே கண்களில் நீர் வழிய ஆண்டவனை மனசால் துணைக்குக் கூப்பிடுவாள். அப்போது ஒரு அலாதியான அமைதி கிடைப்பதையும் உணர்வாள். கடைசி காலத்தில் இந்த நிலையில்தான் ஆண்டவனை உளங்கனிந்து வழிபடுகிறோம் என்று தெரிய வந்தபோது  ஆயுட்காலம் பூராவும் வீணாக்கப் பட்டு விட்டதே என்று குமுறி மனம் நொந்தாள். அவள் செய்த குற்றங்களுக்கும்,கொண்டிருந்த எண்ணங்களுக்கும் தகுந்த தண்டனை கொடுத்தாகி விட்டது என்றே கடவுளுக்குத் தோன்றி இருக்க வேண்டும். ஒரு நாள் யாரும் அறியாமலேயே அவளுடைய உயிர்ப் பறவை சிறகடித்துச் சென்றிருந்தது. கண்கள் திறந்த நிலையில் நாக்கு உலர்ந்திருந்த முறையில் யாரும் கவனிப்பார் இல்லாது கிடந்த அந்த சடலத்தை முதன் முதலில் கண்ட சரஸ்வதிக்கு பயமாகவே இருந்தது. அவளது மரத்துக் கிடந்த உணர்வுகளுக்கு இன்னுமொரு உயிர் போயிற்று என்றே சாதாரணமாகவே எண்ணத் தோன்றிற்று. பாட்டியின் சவ அடக்கத்துக்குச் சென்று திரும்பி இருந்த பாபு அவள்து முடிவை எண்ணி மனம் வருந்தித் திரும்பும்போது கல்யாணி அம்மா கூறிய செய்தி அவனை ஆத்திரத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது..ராஜுவுக்கும் விசுவுக்கும் சிக்கென் பாக்ஸ் போட்டிருந்தது. முத்துமாரி அம்மன் விளையாடுகிறாள்; சுத்தமாக இருக்க வேண்டும். என்று பாபுவிடம் கல்யாணி அம்மா கேட்டுக் கொண்டாள். பாபு சாவு வீட்டிலிருந்து வந்தவன் குளிக்காமல் தன் தம்பிகளைக் காணவும் கூடாது என்று தடை போட்டாள். பாபுவுக்கு அது பைத்தியக் காரத்தனமாகத் தோன்றியது. கிருமிகளாலும் உடல் வெப்பத்தாலும் ஏற்படும் வியாதியை ஆண்டவனின் முத்து என்று மரியாதையுடன் அழைக்கும் மூடத்தனம் கண்டு மனம் வெம்பினான். சொல்லிப் புரிய வைக்கலாம் என்றால் சொல்லவே இடம் கொடுக்க வில்லை கல்யாணி அம்மா. பாபு தீவிரமாகத் தம்பிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றான்.அதை கல்யாணி அம்மா மூர்க்கமாக எதிர்த்து, தன் பிள்ளைகளைக் கவனிக்கும் முதல் பொறுப்பு தன்னுடையது, பிறகுதான் மற்றவருக்கு என்ற முறையில் பேசியது பாபுவை மிகவும் வருந்தச் செய்தது/ தனக்குத் தம்பிகளின் நலனில் அக்கறை கொள்ள அருகதை இல்லை என்று ஏசிவிட்டார்களே என்று வெதும்பினான். தடுக்க முடியப் பெறாதவைகள் அனுபவிக்கப் பட வேண்டியது தானே. என்று சமாதானம் செய்து கொண்டான். தன் மனக் குறைகளையும் சஞ்சலங்களையும் தன் உற்ற நண்பன் கானிடம் கூறி நிம்மதியடைய அவனைக் காணச் சென்றான்.ஒரு எதிர்பார்க்காத நிகழ்ச்சி அவனை எதிர் கொண்டழைத்தது. கானும் அம்மை வாய்ப்பட்டிருந்தான். அதுவும் அநாதரவான நிலையில்.பாபுவுக்கு சட்டென என்னதான் தோன்றியதோ நண்பனை வற்புறுத்தித் தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான். “ அம்மா, என் கூடப் பிறக்காத ஒரு சகோதரன் கான்..அவனையும் கவனிப்பது உன் பொறுப்பு” என்று கூறி கல்யாணி அம்மாவைத் திகைக்கச் செய்து விட்டான். அம்மனின் ஆட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப் படும் ஆட்களும் நல்லவர்களே என்று எண்ணிய படியே கானையும் கவனிக்கத் தொடங்கினாள். அம்மா ,எனக்கு மட்டும் இந்த வியாதி வரட்டும் அப்போது தெரியும். சுத்த முட்டாள்தனமாக ஒரு வியாதியைக் கடவுளாகக் காண மாட்டேன். நீங்கள் நினைப்பதுபோல் இந்த வியாதி கடவுளானால் அது எனக்கும் வரட்டும். நான் எதிர்க்கிறேன். வியாதிதான் என்றால் அதை விரட்டி வெற்றி காண்பேன். இல்லையென்றால் நான் அழிக்கப் படட்டும். என்று பலமுறை கட்டுப்படுத்தியும் கட்டுக்கடங்காத எண்ணச் சுமைகளை வெளிப் படுத்தினான். அடுத்த நாள் காலையிலேயே உடலில் குறு குறுப்பான ஒரு உணர்ச்சி. மூட்டுகளெல்லாம் குடைச்சல்.இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேலைக்கும் சென்றான். வேலை செய்ய முடியாதபடி ஒரு சோர்வு. அசதி தன்னை ஆட்கொள்ளுவதை உணர்ந்தான். தன் எண்ணங்களே சரி என்று நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று விட்டதாக எண்ணிக் குதூகலித்தான். வியாதியா, கடவுளா பார்க்கலாம் ஒரு கை. என்று சவால் விட்டுக் கொண்டான்.மாலை வீடு திரும்பொயதும் முதல் வேலையாக பாத் ரூமுக்குச் சென்று தன் உடலை நன்றாக சோதனை போட்டான். சிவப்பு முத்துக்கள் பரவிக் கிடந்தன.சட்டை செய்யாமல் குளிர்ந்த நீரை வாரிக் கொட்டிக் கொண்டு குளித்தான்.உடற்சோர்வு அவனை அடக்கி ஆண்டது. கல்யாணி அம்மாவுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. “ தாயே என் பிள்ளையை மன்னித்து விடம்மா. அறியாமல் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கரை தேற்றம்மா.” என்று மனம் உருகி வேண்டிக் கொண்டாள். ராஜுவும் விசுவும், கானும் குணமடைந்து வர வர பாபுவின் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வந்தது. அவனும் விநாடிக்கு ஒரு முறை அம்மனின் ஆட்டம் என்றழைக்கப் படும் அம்மை வியாதியிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தா.ன். தான் பேசப் பேச தன் தாய் மனம் வாடுகிறாளே என்ற உணர்வே இல்லாமல் வியாதியை அருவருத்துப் பழித்துப் பேசினான் ஒரு நாள் மாலை அடக்கமுடியாத எரிச்சல், தாங்க முடியாத தலைவலி இவற்றால் தாக்கப் பட்ட பாபு இறுதி வெற்றி யாருக்கு என்று தெரியும் நிலை வந்து விட்டது என்று உணர்ந்து, தன் சக்தியெல்லாம் ஒருங்கே திரட்டிக் கொண்டு போராட்டத்துக்கு தயாராகி விட்டான். வேதனைகளின் உபாதைகளோடு கூட, உள்ளத்துப் போராட்டத்தின் வேகம் போட்டி போட்டது. கட்டுப் படுத்த முடியாத நிலையில் பாபு “ ”ஆண்டவனே, மூடப் பழக்கங்களை எதிர்த்து, அன்பே கடவுள் என்று நான் வணங்கும் நிலை சரியானால்,இந்த வியாதி என்னைவிட்டு ஓடட்டும். இல்லை ஒன்றே குலம் ,ஒருவனே தேவன் என்ற வாக்கு பொய்யாகி, வியாதியும் ,வீம்பும், அகங்காரமுமே ஆண்டவன் வடிவென்றால், நான் சாகத் தயாராயிருக்கிறேன் “ என்று வேண்டிக்கொண்டான்.மற்ற மூவரும் கூட அம்மையால் பாதிக்கப் பட்டார்கள். ஆனால் கஷ்டம் சிறிதுமே கூட இல்லாமல் தேறி விட்டார்கள். யாரும் உடல் எரிச்சல் என்று ஒரு முறை கூடக் கூறவில்லை. தனக்கு மட்டும் எரிதணலில் இருப்பது போன்ற எண்ணம் ஏன் என்று பாபுவுக்குப் புரிந்து அனுமானித்துக் கொள்ள முடியவில்லை.  நேரம் செல்லச் செல்ல, தலைவலி மண்டையைப் பிளந்தது. உடல் எரிச்சல் உச்சஸ்தாயிக்குப் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று பாபு தான் தோற்றுக் கொண்டிருப்பதாக எண்ணினான். தோல்வியடையக்கூடாது, தான் சாகக் கூடாது என்ற உத் வேகத்தில் தன்னைச் சுற்றிப் பின்னப் படும் இருளுக்குள்ளிருந்து வெளியே வர முயன்றான். தன்னால் முடியவில்லை, இனி முடியாது என்று எண்ணும்போது பாபுவுக்குக் காது கேட்கவில்லை, கண் தெரிய வில்லை,நாக்கு எழவில்லை உடல் லேசாவது போன்ற உணர்ச்சி.உண்மையில் சாவு இதுதான் என்ற நினைவு. கண்களில் நீர் வழிய கீழே விழுந்து அதல பாதாளத்தில் உருண்டு போவது போன்ற உணர்ச்சி. “நான் செத்துப் போய்க் கொண்டிருக்கிறேன், ...நான் செ..த்..து........” கண் விழித்த போது கல்யாணி அம்மா பாபுவுக்கு உப்பில்லாத கஞ்சி புகட்டிக் கொண்டிருந்தாள்.அந்த இரவு நேரத்தில் கெம்பம்மா கோவிலுக்கு உப்பும் தயிரும் கொண்டு சென்று அங்கிருந்து விபூதி கொண்டு வந்திருந்தாள். அதைப் பூசியவுடன் பாபு விழித்துக் கொண்டான். விளக்கம் கேட்டு விளங்கப் பெற்றவன் தன் தாயின் நம்பிக்கை தன்னைக் காப்பாற்றியது என்று உணர்ந்தான். சாவின் பயங்கரத்தை தெரிந்தவன், இன்னுமொரு முறை அந்த உணர்வுகளுக்கு தன்னால் ஈடு கொடுக்க முடியாது என்று அறிந்தான். ஆண்டவனைப் பல கோணங்களில் கண்டாலும் நம்பிக்கைதான் முக்கியம் என்று தெரிந்து கொண்டவன், அசாதாரண முறையில் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான். அத்தியாயம் பதினான்கு   பாபு வந்த பிறகும்,அவனது பேச்சுகளைத் தான் கேட்ட பிறகும், சியாமளாவுக்கு அவன் மேல் ஒரு அலாதியான மதிப்பு ஏற்பட்டிருந்தது. அவள் கல்யாணி அம்மா வீட்டுக்கு வருவதை மிகவும் குறைத்துக் கொண்டிருந்தாள். அப்படியே வந்தாலும் பாபு இல்லாத சமயம் பார்த்து வருவாள். அவளுக்கு பாபுவின் வீட்டில் நடந்த விவகாரங்கள் எல்லாம் ஓரளவுக்குத் தெரிய வந்தது. ஒன்றிரண்டு முறைகள் அவள் இருக்கும்போது பாபு திரும்பினால், அவளுக்கு பேச்சு வராது, நிலை கொள்ளாது மனம் அடித்துக் கொள்ளும் .இந்த மாதிரியதான ஒரு உணர்ச்சி அவளுக்கே புதுமையாக இருந்தது. இதற்கு காரணங்காணத் தன் உள்ளத்தை வெகுவாக ஆராய்ந்தவளுக்கு விடை ஏதும் கிடைக்க வில்லை. வீட்டில் அம்மை வந்திருந்தபோது ,கல்யாணி அம்மா அவள் வருவதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள வேண்டி இருந்தாள். அது மிகவும் சரியானதென்றே அவளுக்குத் தோன்றியது. இருந்தாலும் பாபுவுக்கு உடல் நிலை சரியில்லை என்று கேட்ட போது, அவனைப் பார்க்க வேண்டுமென்று ஒரு ஆசை அவள் மனதில் ஆல விருட்சமாய்ப் படர்ந்தது. சந்துரு, ரவியிடம் அவ்வப்போது விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவள் பாபு தேறிவிட்டான் என்று அறிந்ததும் அடக்க முடியாத ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள அவர்கள் வீட்டுக்குச் செல்வதென்று முடிவு செய்தாள் பாபுவுக்கு தமிழ் மன்றம்,மக்கள் மன்றமாக மாறும் பணி தன்னால் தடை பட்டுக் கொண்டிருக்கிறதே என்ற ஏக்கம் அதிகரித்து வந்தது. உடல் நிலை சரியானதும், செய்ய வேண்டிய காரியங்களில் முழு மூச்சுடன் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். துவக்க வேண்டிய பள்ளியில் பணியாற்ற வேண்டிய ஆட்களை சேகரிப்பது அவ்வளவு கடினமாகத் தோன்ற வில்லை.அவனுக்கு. தன்னுடன் கானும் வருவான், இன்னும் ஒருவர் கிடைத்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு சியாமளாவின் நினைவே எழுந்தது. அவளைப் பார்த்து நாட்கள் ஆகிவிட்டன என்று அறிந்த போது அவளைக் காண வேண்டும் என்ற ஒரு உத்வேகம் அவனிடம் ஏற்பட்டது. சியாமளாவுக்கும் பாபுவுக்கும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே மற்றவர் மீது அன்பேற்பட்டது. அது எந்த அள்வுக்குச் சரியானது என்று இருவருமே தீவிர மாக சிந்திக்கவில்லை. சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. பாபுவுக்கு சியாமளாவைக் காண வேண்டும் என்ற நினைவு வந்ததும் சியாமளாவே அவன் வீட்டுக்கு வருகை தந்தது அவனுக்கு மிகவும் இதமாக ஆறுதலாக இருந்தது. “ டேய், இந்த லெட்டரை உங்க டீச்சர்கிட்டக் கொடு, “என்று பாபு ஒரு உறையை ரவியிடம் கொடுத்ததும்.” லீவ் லெட்டரா அண்ணா ” என்று அவன் கேட்டான்..” லீவ் லெட்டருமில்லை, லவ் லெட்டருமில்லை,சொன்னதைச் செய் .போ” நினைத்துப் பார்க்காமலேயே சொல்லப் பட்ட வார்த்தைகள் தான் என்றாலும், உண்மையிலேயே லவ் லெட்டரைக் கொடுத்தால் சியாமளா என்ன நினைப்பாள், எப்படி அதை ஏற்றுக் கொள்வாள் என்ற எண்ணங்கள் பல அவனுள் எழுந்தது. நினைத்ததைச் செயலில் காட்ட தைரியம் போதவில்லை. ரவி கொண்டுவந்த உறையைக் கண்டதும் சியாமளாவுக்கு எழுந்த முதல் எண்ணமும், “ ஏதடா இது. ! எதையாவது கன்னா பின்னா என்று எழுதி இருப்பாரொ”என்ற சந்தேகம் தான். பிரித்துப் படித்துப் பார்த்ததும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. கன்னா பின்னா என்று எழுதப் பட்டிருக்கக் கூடிய கடிதமாய் இருக்கக் கூடாது என்று படிக்கும் முன் பயந்தவள், அப்படி இல்லையே என்று வருத்தப் பட்டாள். வேண்டாம் என்று எண்ணிய மனமே இல்லை என்று அறிந்ததும் ஏங்கிற்று. கல்யாணி அம்மாவும் எதிர் பார்க்கவில்லை. வீட்டிற்கு வந்த ஒரு பெண்ணிடம் தன் பிள்ளை இப்படியொரு கடிதத்தை தன் முன்னாலேயே கொடுக்கச் சொல்கிறானே என்று கோபம் வந்தது. ஆனால் அதை சியாமளா பிரித்துப் பார்த்துப் படிக்கக் கேட்டதும் தன் சந்தேகமே உண்மையாய் இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்கத் தோன்றியது. இருவருக்கும் உள்ள பொருத்தத்தைப் பார்த்ததும் , தான் அப்படி நினைத்துப் பார்ப்பதே தவறு என்று அவளுக்குத் தோன்றியது. “ பாபு ஒரு பிராமணப் பிள்ளை.சியாமளாவோ மராத்தியப் பெண். வேண்டாமடாப்பா வெண்டாம்.! என்னால் ஏற்பட்ட புகைச்சலே பெரிசா இருக்கு. நாளைக்கு இந்த மாதிரி ஏதாவது நடந்தால் வேறு வினையே வேண்டாம். நான் தான் அப்படி நடக்கத் தூண்டினேன் என்று பழிப்பார்கள். “  இல்லாத ஒன்று எல்லார் மனசிலும் இருப்பதாகத் தோன்றியதே, வரப் போகும் நிகழ்ச்சிகளுக்கு அறிகுறி என்று யாருக்குமே சந்தேகம் எழவில்லை. “தமிழ் மன்றத்தின் சார்பில் துவங்கப் பட இருக்கிற பள்ளிக்கு மாலை நேரத்தில் ஊதியமில்லாமல் உங்களால் உழைக்க முடியுமா, என்பதைத் தெரிவிக்கவும். சாதாரணமாக நடத்தப் படும் பள்ளிகளிலிருந்து முற்றிலும் மாறு பட்டதாக விளங்கப் போகும் இப்பணியில் பணியாற்ற ஒப்புதல் தெரிவிக்கும் முன், அது துவக்கப் படும் நோக்கத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று உங்கள் உள்ளத்தை அலசி ஆராய்ந்து முடிவைத் தெரியப் படுத்த விரும்புகிறேன். இப்படிக்கு –பாபு.” பாபுவால் தொடங்கப் படும் எதுவும் சிறந்த தாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் “ ஒப்புதல். நம்புகிறேன். சியாமளா.”என்று ஒரே வரியில் அதே கடிதத்தில் பதிலையும் அப்போதே எழுதிக் கொடுத்து விட்டாள். ” என்னவோம்மா.! ஆண் பிள்ளைகள் ஆரம்பித்திருக்கிற காரியங்களிலே பெண்கள் கலந்துக்கிற போது கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். “  “ஆரம்பிக்கிறது ஆண்பிள்ளைகளாக இருந்தாலும் படிக்கப் போறதென்னவோ பச்சைப் பிள்ளைகள் தானே மாமி. ஒரு நல்ல காரியத்துலெ பங்கு எடுத்துக்கிறோம்  என்கிற நிறைவு ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாய் இருக்குமா என்ன..?” “ சரியாகச் சொன்னீர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்கு உண்டு என்பது பேச்சோடு மட்டும் இருக்கக் கூடாது. செயலிலும் இருக்க வேண்டும்.பெண்களெல்லாம் பாரதி கண்ட பெண்களாயிருந்தால் நம் நாடு எவ்வளவு முன்னேறி இருக்கும்.”-எதிர் பார்க்காத முறையில் பாபுவும் பேச்சில் பங்கு கொண்டான். ”அம்மா, ரஷ்யாவிலே எல்லாம் நாங்க இங்கே செய்யற கஷ்டமான இயந்திர வேலைகளை எல்லாம் பெண்களும் ரொம்பத் திறமையாகச் செய்யறாங்களாம்.” ” அப்படியானா, பெண்களுக்கே சொந்தமான ஒரு நளினம் கெட்டுப் போயிடுமேடா.” “அதுவும் சரிதான். அதனால்தானோ மேல் நாட்டுப் பெண்களை அடையாளம் கண்டு பிடிப்பதே கஷ்டமாயிருக்கு. “  “இங்கு சியாமளா அக்காவைச் செய்யச் சொல்லும் வேலை டீச்சர் வேலைதானே அண்ணா.அதனால் அவங்க பயப்பட வேண்டாம் இல்லையா.?”—விசுவும் பேச்சில் கலந்து கொண்டான். ” மேலை நாடுகளுக்கு எதுக்கண்ணா போகணும். இந்த பெங்களூரிலேயே ,கஷ்டப்பட்டு  வேலை செய்யாத எவ்வளவோ நம்ம நாட்டுப் பெண்களையே அடையாளம் கண்டுக்க முடியலை. அதுதான் இப்போ ஃபாஷன். ஆண் பெண்ணைப் போல இருக்கறதும் பெண் ஆணைப் போல இருக்கறதும்....”ராஜுவும் விட்டு வைக்க வில்லை. சியாமளாவுக்குத் தன் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் ஏதோ ஒன்று அவளைப் பேச விடாமல் தடுத்தது. பாபுவுக்கு சியாமளா என்ன சொல்லுவாள் என்ற ஆர்வம் அதிகரித்தது. இருந்தாலும் பலனிருக்க வில்லை. ” நாம் முதன் முதலில் ஆரம்பிக்கப் போகும் பள்ளிக் கூடம் இது. இதற்குப் பிறகு வாழ்வாதாரக் கைத் தொழில்கள், கூட்டுறவு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் இத்தியாதி, இத்தியாதி வகைகளை நடத்த நிறைய ஆட்கள் தேவைப் படும்” “ அண்ணா, நீங்க சொல்வது சரியில்லை.தமிழ் வளர்க்கும் மன்றத்தின் காவலன் ஆங்கிலச் சொற்களைப் பயன் படுத்தலாமா.? கைத் தொழிலகம், கூட்டுறவு பண்டக சாலை என்றல்லவா கூறி இருக்க வேண்டும்..” விசு நாடக பாணியில் நீட்டி முழக்கியதைக் கேட்டதும் எல்லோரும் சிரித்தனர். “ இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. முத்தமிழ் விழா நடந்து முடிந்த கையோடு, செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமிருக்கிறது. சியாமளா நீங்கள் ஆசிரியைத் தொழில் துவங்க உங்கள் வீட்டில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அம்மாவை கொண்டு அவர்களை கேட்கச் சொல்கிறேன். “- பாபு சீரியஸாக மறுபடியும் சியமளாவைப் பேச வைக்க முயன்றான். “ ஆட்சேபணை இருக்கோ இல்லையோ நான் எதுக்கும் அவ அம்மாகிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுட்டு வருவதுதான் முறை. நீ என்ன சொல்றே சியாமளா “ என்று கல்யாணி அம்மா கேட்டாள். சியாமளாவும் சரியென்று தலை ஆட்டியது தவிர எதுவும் பேசாதது பாபுவுக்கு மிகவும் ஏமாற்றமாயிருந்தது. அடிக்கடி சியாமளா வருவதும், அவள் வரும் சமயத்தில் பாபுவும் தன்னை ஆஜராக்கிக் கொள்வதும் சகஜமாகப் போய்விட்டது. கல்யாணி அம்மாவுக்கு மட்டும் ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் தானாக விஷயம் வெளிப்படாத வரை தான் வீணாக எதையும் அனுமானித்துக் கொள்ள வேண்டாமென்றே அவளுக்குத் தோன்றியது. சியாமளாவைக் காணும்போதும் ,அவள் பேச்சைக் கேட்கும்போதும் ,பாபுவுக்கு ஒரு அலாதியான இன்பம் கிடைக்கும். தான் அவளைப் பற்றி எண்ணுவது போல அவளும் தன்னைப் பற்றி சிந்திக்கிறாளா என்றறிய அவன் உள்ளத்தில் அடக்க முடியாத ஆசை எழுந்தது. கண்டதும் காதல் என்பதில் பாபுவுக்கு நம்பிக்கையே கிடையாது. காதல் என்பது ஒரே சமயத்தில் இருவர் உள்ளத்திலும் ஒருவருக்காக மற்றவர் தோற்றுவிக்கும் அன்பின் எழுச்சியே என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் மட்டும் அவளிடம் அன்பு கொண்டு ஏங்குவது, அவளுக்கு அந்த எண்ணமே இல்லாமல் இருந்தால் பைத்தியக்காரத்தனமானது என்று எண்ணியதால்தான அளிடம் அவன் அன்பு கொள்வது முறையா என்ற கேள்வி அவன் உள்ளத்தில் அடிக்கடி எழுந்தது. எந்தப் பெண்ணையும் காணும்போது ஏற்படாத நெகிழ்ச்சி, ,பரிதவிப்பு, ஏக்கம் ,ஆதங்கம் எல்லாம் ஒரே சமயத்தில் சியாமளாவைக் காணும்போது மட்டும் எழுவது அவனுக்குப் புரியாததாக , வேடிக்கையாக இருந்தது..அவள் அவனிடம் அன்பாகப் பேசுகிறாள் என்று கனாக் காணும்போது கூட உள்ளம் வெட வெடக்கும், மூச்சுத் திணறும் , பேச்செழும்பாது. இன்பமான மௌன நிலையில் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்வதே  காதலின் பேரின்பம் என்றெல்லாம் எண்ணுவான். எண்ணத்திலேயே இன்புறுவான்.உண்மையில் அனுபவிப்பது எப்போது என்று ஏங்குவான். இந்த மாதிரி நினைவுகள் எழும்போதெல்லாம் பாபுவுக்கு பயமாய் இருக்கும். அவனை அறியாமலேயே அவன் உள்ளத்தில் அவன் அதிக நாட்கள் வாழ மாட்டான் என்ற எண்ணம் சிறுகச் சிறுக அடிக்கடி எழுந்து, நிரந்தரமானதாகவெ குடி கொண்டு விட்டது..அதுவே உண்மையானதாகவும் நடக்கும் என்று தீவிரமாக நம்பினான். அதனால்தான் சியாமளாவைப் பற்றி எண்ணுகையிலேயேதான் அவளுக்கு ஒரு சமயம் இன்பத்துக்குப் பதில் துன்பத்தை கொடுத்து விடுவோமோ என்று அஞ்சினான். விளக்க முடியாத இந்த உணர்ச்சி ஒரு சமயம் தனக்கு வாழ்க்கையில் உள்ள பற்று இல்லாத தன்மையைக் காட்டுகிறதோ,,அது ஒருக்கால் மாறி, அன்பு துணை கிடைக்கப் பெற்றால் தன்னுடைய இந்த அர்த்தமற்ற கற்ப்னை உணர்ச்சி, வாடி சருகாகலாமோ என்றும் அடிக்கடி அவன் சிந்தித்தான். எப்படி இருந்தாலும் சியாமளா அவனைப் பற்றி என்ன நினைக்கிறாள்,அவன் மீது அவளுக்கு அன்பு உண்டா என்றெல்லாம் அறியத் துடித்தான் பாபு..உறங்கினால் கனவில் உருவாகவும், விழித்திருந்தால் நினைவில் உருவாகவும், எங்கும் எதிலும் சியாமளாவை கண்டான் பாபு. வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை வெள்ளைத்தாளில் எழுதி ஓரளவு வெளிப்படுத்த முயன்றான்..இலக்கணமே இல்லாத கவிதைகள் பல உருவாயின. அவற்றுள் ஒன்றை அவனுக்கு சிறந்தது என்று தோன்றியதை ஒரு நாள் சியாமளாவிடம் சேர்ப்பித்தும் விட்டான். வாங்கும்போதே உள்ளிருக்கும் செய்தி இதுதான் என்று யூகித்து அறிந்து கொண்டாள் சியாமளா..மனம் வேண்டாம் தவறு என்று தடுத்தாலும், அதைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பள்ளி சம்பந்தப்பட்ட ஏதாவது இருக்கும் என்றுதான் போலியாக நம்பிக்கொண்டே, நொண்டி சமாதானம் கூறிக் கொண்டு அதை பத்திரப் படுத்திக் கொண்டாள். நடுங்கும் கைகளையும், நிலம் நோக்கும் பார்வையையும் கண்ட பாபு, அவள் மேல் இரக்கம் கொண்டு தான் அவளைப் புண் படுத்தி விட்டோமோ என்று தன்னையே நொந்து கொண்டு அவ்விடத்தை விட்டகன்றான். முடிவு தெரியாத மாணவனின் மனக் குழப்பத்தைவிட அதிக மாயிருந்தது பாபுவின் சஞ்சலம். உடனே படித்துப் பார்த்து பதிலையும் கூறி விடுவாள் என்று முதலில் எண்ணினாலும்,அவள் ஒரு மென்மையான பெண், அவளால் அப்படிக் கூற முடியாது என்றுதான் திடமாகத் தோன்றியது.அவளது முடிவை அறிய கடிதத்தில் அவன் குறிப்பிட்டிருந்த தேதி வர வேண்டும். கடிதத்தைப் பெற்றுக் கொண்டவளுக்கு அது மறைத்து வைக்கப் பட்டிருந்த இடத்தில் மிகவும் உறுத்தியது. வழக்கத்தைவிட சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டாள். யாரைப் பார்த்தாலும் எல்லோரும் சந்தேகக் கண்களோடு தன்னைக் காண்கிறார்களோ என்ற அச்சம் அடிக்கடி எழுந்தது. யாராவது தன்னைக் கண்காணிக்கிறார்களோ என்று அச்சம் ஏற்பட்டது. தூரத்தில் யாராவது வந்து கொண்டிருக்க அது பாபுவாக இருக்குமோ, அவர் ஏதாவது தன்னைக் கேட்பாரோ என்றெல்லாம் எண்ணி அல்லல் பட்டவள்.,அருகில் வந்த அந்த மனிதனைக் கண்டு, பாபு அல்ல என்று தெரிய வந்ததும், நிம்மதியும், கூடவே அது பாபுவாக இருக்கவில்லையே என்ற ஏக்கமும் கொண்டாள். ஒரு வழியாக தனிமையில் அந்தக் கடிதத்தைப் பிரித்தவளொரு வரிதான் படித்திருப்பாள் ;வேர்த்துக்கொட்டத் தொடங்கியது. அதை அப்படியே மடித்து வைத்து  தன் சிந்தனைக் குதிரைக்குக் கடிவாளம் இட்டு, மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்குள், போதும் போதும் என்றாகி விட்டது. கடிதத்தை நடுங்கும் கைகளால் பிரித்தவள் முகத்தில் செம்மை படர்ந்தது.இமை படபடத்தது.நாக்கு உலர்ந்து விட்டது போன்ற உணர்ச்சி. ஒரு முறை படித்து முடித்தாள். ஒரு கூஜா தண்ணிரைக் குடித்து முடித்த பிறகுதான்,ஓரளவு சுய நிலைக்கு வரப் பெற்றாள்.இந்த முறை படிக்கும்போது  நிதானம் இருந்தது.                   நிலவைப் பழிக்கும் முகம்                   நினைவைப் பதிக்கும் கண்கள்                   நிலமடந்தை நாணும் எழில்-முத்துச்                   சரம் விரித்த முல்லைச் சிரிப்பு-சிந்தக்                   கமலமலர் செவ்விதழ் விரிப்பு-கொண்டு                   படர்கொடி வெல்லும் துடியிடை-என்                   இடர் சேர்க்க இடையிடையாட-மென்னடை                   நடந்தென்முன் நிற்கும் –இன்பக்                   கனவினை நனவாக்க எண்ணி-வந்தக்                   கற்பனைக் கண் கண்ட கன்னி,   நீயென்றால்,அன்பு சியாமளா, டபுள் ரோட் காஃபி பார் அருகே காத்திருப்பேன் ,சந்திப்பாயா.?( வருகிற ஞாயிற்றுக் கிழமை மாலை 4-30 மணிக்கு )----பாபு. ” சமாச்சாரம் இதுதான். தனியாக சந்திக்க வேண்டுமாம். நான் அங்கு போக வேண்டுமாம். என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.? ஒரு ஆடவன் என்னை வந்து பார் என்று சொல்வதற்குள் போக வேண்டுமா. ? நன்றாகக் கேட்கப் போகிறேன். அட....அப்படிக் கேட்கக் கூடப் போகத்தானே வேண்டும்.? போகிறேன். கேட்கிறேன். கேட்டுத் திரும்பி வந்து விடுகிறேன்.இல்லை நான் போகாமலெயே இருந்து விட்டால்......தன் மேல் அன்பில்லை என்று தவறாக நினைத்துக் கொள்வாரோ.? எண்ணினால் எண்ணிக் கொள்ளட்டும். சேச்சே.! அது மட்டும் கூடாது. பாவம் .எவ்வளவு நல்லவர்..ஹும்.! போய்ப் பார்க்கலாமே. எதற்குப் பயப்பட வேண்டும். ? கரடியா. புலியா.?ஆனால் நிச்சயம் இதுதான் முதலும் கடைசியும் ஆன தனிச் சந்திப்பு. என்பதை மட்டும் திட்டமாகத் தெரிவித்து விட வேண்டும்..அது பிறகுள்ள பிரச்சினை. போவது என்று முடிவு செய்தாகி விட்டது. என்ன பேசுவது.? எந்த உடை அணிந்து கொள்வது.?அவருக்கு எப்படிப் போனால் பிடிக்கும்.?.....எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தேட இன்னும்தான் நாட்களிருக்கிறதே. “                                                                  அத்தியாயம் பதினைந்து           பாட்டி இற்ந்து போன பிறகு கமலத்துக்கு உறவினர்களின் க்ஷேம லாப நஷ்டங்களைப் பற்றி செய்தி கிடைப்பது மிகவும் அரிதாயிருந்தது. மேலும் அவ்வப்போது கிடைத்துவந்த கணிசமான உதவிகளும் நின்று போயிற்று. பாட்டியின் பெருமைகளைப் பற்றி பிரலாபித்துப் பேசியே கிட்டத்தட்ட  ஒரு மாத காலத்தை ஓட்டிவிட்டாள். கணவன் கொண்டு வந்து கொடுக்கும் பணம் போதாத போதெல்லாம் பாட்டியின் ஞாபகமே அவளுக்கு வந்தது. கண்ணன் கல்யாணமான பிறகு அவளை வந்து பார்ப்பதைக் கூட நிறுத்தி இருந்தான்.பாபுவைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்.முன்பும் அவன் அடிக்கடி வருபவனல்ல. இப்போதும் கிடையாது. எப்போதாவது அவனைப் பார்க்க நேர்ந்தால் “என்னடா பாபு, உன் அக்காளின் ஞாபகமே உனக்கு இல்லை. யாருக்கெல்லாமோ. என்னவெல்லாமோ செய்கிறாயே ஒரு முறை வந்தாவது, அக்கா ஏதாவது என்னால் ஆகணுமான்னு, கேட்டிருப்பாயா.? நானென்ன அப்படி உங்கிட்டேதான் ஏதாவது இதுவரைக் கேட்டிருப்பேனா” என்று தொண தொணப்பாள். பாபுவும் சாதுரியமாக “ உனக்கு நான் ஏதாவது வேண்டுமா என்று கேட்பதே அத்திம்பேரை அவமதிப்பதாய் இருக்கும். அவரிருக்கும்போது உனக்கென்ன குறை” என்று கேட்டே மடக்கி விடுவான்.       பாபுவுக்கு பெயரும் புகழும் அதிகமாகிக் கொண்டு வருவதாகக் கேள்விப் பட்டிருந்தாள், அதுவும் அரையும் குறையுமாக தன் கணவனிடமிருந்து. எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளா விட்டால் மண்டை வெடித்து விடும் போலிருந்தது அவளுக்கு. அதற்காகவே கண்ணனின் வீட்டுக்கு ஒரு நடை வந்தாள்.. அவள் வந்த நேரம் சரியாக இருக்கவில்லை.. அதற்கு முந்தின தினம்தான் கண்ணனும் மாலதியும் பாபுவின் வீட்டுக்குச் சென்று கோபப் பட்டு திரும்பி இருந்தனர்.       கமலத்தைப் பார்த்ததும் கண்ணன் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டான்.. வாவென்று கூடச் சொல்லவில்லை. அந்த ஆத்திரம் கமலத்துக்கு மாலதியிடம் திரும்பியது.           நான்கைந்து நண்டும் சிண்டுமான வாண்டுகளுடன் கமலம் வந்ததும் மாலதிக்குப் பகீரென்றது. “ இதுகளுக்கு காப்பி, பலகாரம் இத்தியாதி வகையறாக்களுக்கு எங்கே போவது.ஏற்கனவே அரைப் பட்டினியாகக் காலம் தள்ள வேண்டி இருக்கு.இன்றைக்கு முழுப் பட்டினி என்றே அவள் எண்ணம் ஓடியது. அதனால் அவளுக்கு கமலத்தை வா என்று வரவேற்கவும் மறந்து போயிற்று. அது கண்டு “ என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்.? நான் வந்தது கூடத் தெரியாமல் பிரமிச்சு நிக்கறேளே. கல்யாணம் ஆனதற்கப்புறம் கண்ணன் ரொம்பவே மாறிட்டான்.அதுக்கு முன்னால் அக்கா, அக்கான்னு உயிரையே விடுவான். இதுக்குத்தான் சொல்றது; நல்லது பொல்லாது தெரியாமே ஒரு வீட்டிலேருந்து பொண் எடுக்கக் கூடாதுன்னு. டேய். சனியன்களா வந்த இடத்திலேயாவது வாலைச் சுருட்டிண்டு இருக்க மாட்டேள். “            ”அக்கா, நான் பண்ணிண்ட கல்யாணத்தில் ஒண்ணும் குறைச்சல் இல்லை.. எல்லாம் நம்ம குடும்ப தோஷந்தான்.அண்ணா தம்பிகள் மாதிரியா இருக்கு. சேச்சே.! சுத்த மோசம். எல்லாருக்கும் கொடுக்கிற வரைக்கும்தான் நல்லவன். இல்லாட்டா பொல்லாதவன். அப்பா விஷயத்திலேயும் அப்படித்தான். இப்போ உன் விஷயத்துலேயும அப்படித்தான்.”            கமலத்துக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்து விட்டது. மெள்ள மெள்ள எல்லா சமாச்சாரங்களையும் கறந்து விட்டாள். பாபுவுக்கும் க்ண்ணனுக்கும் மனத்தாங்கல்.இதுக்குக் காரணம் கண்ணன் பாபுவிடம் உதவி கேட்கப் போயிருக்கிறான். அவன் கண்ணனைக் கன்னா  பின்னா வென்று பேசியிருக்கிறான்  அவன் இதையும் செய்வான் இதுக்கு மேலேயும் செய்வான். எல்லாம் அந்த சாதி கெட்டவளோட வேலையாய்த் தானிருக்கும். பாபுவுக்கு ரொம்ப நல்ல பெயராமே. ஹூம்.! எப்படி எப்படி எல்லாம் பேசி யாரையெல்லாம் ஏமாற்றுகிறானோ. ! அதுக்கு மட்டும் அவனுக்கு கொள்ளை சாமர்த்தியம். ..... என்றபடியெல்லாம் முடிவுக்கு வந்து, பொருமியும் ,சிலாகித்தும் தனக்குள்ளேயே எண்ணிக் கொண்ட கமலம், மாலதி பயந்ததுபோல் அவர்களை முழுப் பட்டினி யாக்கிவிட்டுத்தான், அங்கிருந்து போனாள்.          வீட்டிற்கு திரும்பியவள் காட்சி, அவளாலேயே நம்ப முடியவில்லை. அவளுடைய கணவன் கட்டிலில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தான். அருகில் பாபுவும் இன்னொருவனும் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.         முதலில் கமலம் பதறிப்போனாள். கணவனுக்கு என்னவோ ஏதோ என்று கலங்கினவளுக்கு, அருகில் சென்றதும் எழுந்த நெடியும் கணவன் கிடந்த நிலையும் அவன் நன்றாகக் குடித்துவிட்டுப் போதையிலிருக்கிறான் என்று தெரிய வைத்தது. கணவன் குடிப்பது கமலத்துக்குத் தெரியாததல்ல. இருந்தாலும் நினைவு தவறும்வரைக் குடித்து வந்து பார்த்ததில்லை.       அவளுக்கு பாபுவிடம் என்றுமில்லாத ஒரு தனி அன்பு அன்று ஏற்பட்டது. நிலை தவறி விழுந்து கிடந்த கணவனை வீட்டில் சேர்ப்பித்தவன் என்பதற்காக மட்டுமல்லாமல் இப்படி நடந்த நிகழ்ச்சி யாருக்கும் தெரியாமல் போகப் பண்ணியவன் என்பதாலும் அவளுக்கு அவனிடம் மதிப்பும் சற்றே கூடியது.      ”அக்கா, நான் எதுவும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. நீயே யூகித்திருக்கிறாய். அத்திம்பேருக்கு இந்தப் பழக்கம் உண்டு என்று எனக்குத் தெரியாது. நல்ல காலம்.! நான் பார்த்திருக்காவிட்டால், அவர் இந்நேரம் லாரியில் அறைபட்டு ஆஸ்பத்திரியில்தான் இருந்திருப்பார். ஹும். அது போகட்டும். இனிமேலாவது அவர் இந்த வழிக்குப் போகாமல் நீதான் தடுக்க வேண்டும். நானும் அடிக்கடி வந்து பார்ப்பேன். இப்போதுதானே தெரிகிறது, நீ ஏன் கஷ்டப் படுகிறாய் என்று. அவரை இந்தப் பழக்கத்திலிருந்து நீதான் மாற்றி திருத்தணும். நேரமாயிட்டது. நாளை வந்து பார்க்கிறேன். “ என்று கூறிவிட்டு பாபு சென்றுவிட்டான். அவனைப் பற்றி அவளுக்குக் கிடைத்த தகவல்களவன் அவளுக்குச் செய்த உதவி, இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது கமலத்துக்கு ஒன்றுமே புரியவில்லை.         “ இந்தப் பிள்ளைக்குத்தான் எவ்வளவு நல்ல குணம். இது எப்படி எனக்குத் தெரியாமல் போயிற்று. “ என்று முதன் முதலில் தனக்குத் தெரியாதது ஒன்றும் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டாள். பாபு போன பிறகு தன் கணவனைக் கண்ட போது அவளுக்கு ஒருவித அருவருப்பு கலந்த பயமும் ஏற்பட்டது. தன்னுடைய தலை விதி என்று விதியின் மேல் பழியைப் போட்டு சமாதானம் அடைந்து கொண்டாள்.       மறுநாள் பாபு வந்தபோது, அவனைப் பார்க்கவே கமலத்துக்கும் அவள் கணவனுக்கும் வெட்கமாயிருந்தது. பக்குவமாகப் பேசி பாபு தன் அத்திம்பேரின் தவற்றை சுட்டிக் காட்ட, ஏதாவது பதில் சொல்ல வாயெடுத்த தன் கணவனை கமலம் பார்த்த பார்வையில் அவர் அடங்கி விடுவதை பாபு கவனித்தான்.இனிமேல் இந்த மாதிரி தவறான வழிக்குச் செல்லாமலிருந்தால், தன்னால் கூடிய மட்டும் உதவி செய்வதாகவும் வாக்களித்தா.ன்..அதற்கு இருவரும் சரி என்று தலை அசைக்கவே இருபத்தைந்து ரூபாய்களை கமலத்திடம் கொடுத்துவிட்டு பாபு சென்று விட்டான்.       அவன் எதிர்பார்த்த பலன் கிடைத்து விட்டதாக ஏமாந்துதான் போனான். கமலத்தால் கணவனைக் கட்டுப் படுத்தவும் முடியவில்லை. அவனால் குடிக்காமல் இருக்கவும் முடியவில்லை. பாபு வரும்போதெல்லாம், கேட்கும்போதெல்லாம், ”குடிப்பதை ஒரேயடியாக நிறுத்தி விட்டேன். அப்போதாவது ஏதாவது கஷ்டம் வரும்போது குடியில் மறந்து போயிருந்தேன். ஆனால் குடிதான் மறைந்து விட்டதே தவிர கஷ்டம் வடியவில்லை” என்று கூறி பாபுவிடம் அனுதாபத்துடன் பணமும் பெற்று வந்தான்-இன்னும் குடிப்பதற்கு               அத்தியாயம் பதினாறு           ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்றரை மணிக்கே பாபு டபிள் ரோடில் காத்துக் கொண்டிருந்தான் சியாமளாவின் வருகைக்காக.வருகிற பஸ் ஒவ்வொன்றிலும் ஏறித் தேடாத குறைதான். அவள் வருவாளா, வர மாட்டாளா என்ற சந்தேகம் வேறு அடிக்கடி எழ ஆரம்பித்தது. அவள் வரக் கூடாது, வருவது தவறு என்றுதான் அவள் எண்ணுவாள்,;இருந்தாலும் என்மீது அவளுக்கு அன்பிருக்குமானால் என்னை ஏமாற்ற மாட்டாள், தவறு என்று சுட்டிக் காட்டும் மனதையும் மீறி வருவாள். வராவிட்டால்......? அவளுக்கு என்மீது அன்பில்லை என்று நினைக்கலாமா.?சேச்சே... அதெப்படி.?அவளுடைய நிலையையும்தான் யோசிக்க வெண்டுமே. ! அவளோ பாவம் பெண்..! எதற்காக இப்படி மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டும். இன்னும் அரை மணியில் தெரிந்துவிடும். ---என்றெல்லாம் எண்ணிக் கொண்டும், தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டும், விடையளித்துக் கொண்டும் அரை மணி நேரத்தைப் போக்கி இருப்பான். இதன் கூடவே அவனுக்கு இன்னொரு சங்கடமும் ஏற்பட்டது.” வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாயிற்று. வந்தால் என்ன பேசுவது.? வந்தவுடன் “ நான் உன்னை மனதாரக் காதலிக்கிறேன்.நீயும் என்னை நேசிக்கிறாயா.?” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கேட்கலாமா? அப்படி ஒரேயடியாக விஷயத்துக்கு வர முடியுமா.?அப்படியே கேட்டால் அவள் என்னைப் பற்றி ஒரு சமயம் தவறாக எடை போட்டு விட்டால்... எண்ண எண்ண குழப்பம்தான் அதிகரிக்கிறது.வரும்போது வரட்டும் பேசுவது பற்றி பிற்கு யோசிக்கலாம். நான் காத்திருப்பதே அவளுக்குத் தெரியாமல் இந்த காஃபி பார் உள்ளிருப்பது. வந்து அவள் என்னைத் தேடட்டும். என்னைக் காணாமல் அவள் சந்தோஷப் பட்டால், அவளைப் பார்க்காமலேயே திரும்பிப் போய் விடுவது. ஏமாற்றமடைந்து வருத்தப் படுவதுபோல் தோன்றினால் அவளைப் போய்ப் பார்ப்பது”. இந்த முடிவுக்கு வந்ததும் அதை செயல் படுத்த அருகில் இருந்த காஃபி பாருக்குள் பாபு நுழைந்தான். தன் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொள்ள ஒரு காஃபியும் வாங்கி அருந்தினான். பத்து நிமிடங்கள் கழிந்து விட்டன. இரண்டு பஸ்க்ளும் வ்ந்து போய் விட்டது. சியாமளா வரவில்லை. பாபுவுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. அவனை அறியாமலேயே அடுத்திருந்த கடைக்குள் நுழைந்தான்.உயர்ரக சாக்லெட்டுகளும் மிட்டாய்களுமாக கொஞ்சம் வாங்கிக் கொண்டான். ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டான். இரண்டு முறை புகையை இழுத்துவிட்டிருப்பான். பிறகுதான் அவனுக்கு திடீரென்று நினைவுக்கு வந்தது. சிகரெட் புகைப் பதில்லை என்ற தன்னுடைய தீர்மானம் தன்னை அறியாமலேயே மறந்து சிகரெட் புகைத்து விட்டோம் என்ற எண்ணம் வந்ததும் அதை நசுக்கி எறிந்தான். 16-ம் நம்பர் பஸ் வந்தது. சியாமளா அதிலும் இருக்க மாட்டாள் என்று நினைத்தான் என்றாலும் கண்கள் அதிலிருந்து இறங்குபவர்களைக் காணத் துடித்தது. இம்முறையும் ஏமாற்றம்தான் என்று நினைக்கும்போது பாபுவுக்கு தன் நெஞ்சே வாய்க்குள் வந்து விட்டது.போன்ற எண்ணம். கைகால்கள் சற்றே நிதானமிழந்து வெட வெடக்க ஆரம்பித்தது. காரணம் அவனுக்குப் புரியவில்லை. ஆயிரக் கணக் கானவர்கள் முன்பு நிதானம் தவறாமல் நினைவு சிதறாமல் எண்ணிய வற்றை ஒழுங்காக,அழகாக, கோர்வையாக எடுத்தியம்பும் திறன் பெற்ற பாபு, சியாமளா பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ,அவளைக் கண்டதும் தன் நாக்கு உலர்ந்து மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு விட்டதைப் போன்ற உணர்ச்சி யடையப் பெற்றதும் ,நினைவு கூர்ந்தது, அவன் எங்கோ எப்போதோ படித்த ” ஒவ்வொரு காதலனும் தன் காதலியைக் காணும்போதெல்லாம் முகம் வெளிறி நிற்பான்” என்ற வரிகள்தான். எனக்கே இப்படி என்றால் அவளுக்கு.......என்ற எண்ணம் வந்ததும் அவன் அவனைச் சுதாரித்துக் கொண்டான்.மீண்டும் ஒரு சிகரெட் வாங்க கடைக்குத் திரும்பினான்.     பஸ்ஸிலிருந்து இறங்கிய சியாமளா சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள். பாபுவைக் கணவில்லை. அவளுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. ஒரு சமயம் நான் எப்பேற்பட்டவள் என்று சோதிக்க வேண்டி இங்கு வரச் சொல்லி இருப்பாரோ.? நான் வந்ததால் ஒரு சமயம் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டால்......சே.! நான் வந்திருக்கவே கூடாது. என்று எண்ணிக் கொண்டு திரும்பிப் போக பஸ் வருகிறதா என்று நோட்ட மிட்டவளின் கண்களுக்கு பாபு தென் பட்டான். இருந்தாலும் தான் அவனைக் கண்டு விட்டதாகக் காட்டிக் கொள்ளாமலிருக்க வேறு திசையை நோக்கினாள். தன்னைப் பார்த்துப்பேச தன்னிடம் தேடி வரட்டும் என்று எண்ணினாள்                   பாபுவும் சியாமளாவைக் கண்டதும அவளே அவனை நோக்கி வருவாள் என்று எண்ணிக் கொண்டு அங்கேயே நின்றான்.ஒருவர் அருகே ஒருவர் செல்லாததால் இருவருக்குமே கொஞ்சம் கோபமேற்பட்டது. ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். பாபு அவனை மறந்து சியாமளாவின் அருகே போய்க் கொண்டிருந்தான். அருகே சென்றவன் ஏதும் பேசவில்லை. பஸ்ஸுக்குக் காத்திருப்பது போல் அவனும் நின்றான். உண்மையில் அவன் அப்போது பஸ்ஸைவிட ஆட்டோ ரிக்‌ஷாவையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் அவளும் அருகிலிருக்கும் லால்பாக் போய் அங்கே ஆற அமரப் பேசிக் கொள்ளலாம் என திடீர் திட்டம் வகுத்து விட்டான். அதை நிறைவேற்ற ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவைக் கூப்பிட்டான். சியாமளா இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. பாபுவுடன் ஆட்டோவில் செல்வதைக் கூட அவளால் நினைக்க முடியவில்லை. ஆட்டோ வந்ததும் வேண்டாம் பஸ்ஸிலேயே போகிறோம் என்று பாபுவுக்கும் ட்ரைவருக்கும் பொதுவாகவே சொன்னாள். ஆட்டோ ட்ரைவர் ஏதோ முணு முணுத்துக் கொண்டே சென்று விட்டான். .     ”என்ன சியாமளா.. அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்.? நாமிருக்கும் நிலையும் பழகும் விதமும் ,எல்லோருக்கும் நம் மீது சந்தேகப் படத் தூண்டும். சகஜமாக இருந்தால் யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள்”—பேசப் பேச அது போகும் விதம் திருப்தி அளிப்பதாகத் தோன்றவே தனக்குத்தானே ஒரு ஷொட்டுப் போட்டுக் கொண்டான். மனதிற்குள்ளாக அந்த சந்தோஷத்தில் ஒரு வசீகரமான புன்னகையும் வெளிப்பட்டது.     பாபுவையே பார்த்துக் கொண்டிருந்த சியாமளா அவனுடைய அந்த தன்னம்பிக்கை நிறைந்த புன்சிரிப்பில் மயங்கினாள். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாதவள் போல் அதை மறைக்கவே “ எதற்காக என்னை இங்கு வரச் சொன்னீர்கள்? வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் வந்திருக்கிறேன். நேரமானால் தேடுவார்கள்.” என்றாள்.    “ ஆஹா..! வந்ததும் வராததுமாக விஷயத்தைப் புட்டு வைடா என்கிறாய். சியாமளா உன்னிடம் எனக்கு நிறையப் பேசவேண்டும். இங்கேயே நின்று பேசுவதென்றால் முடியாத காரியம். லால் பாக் வரை போய் விஷயத்தை நன்றாகப் பேசுவோம். ஆட்டோவைக் கூப்பிடட்டுமா.?”       ” வேண்டாம் ,வேண்டாம், நடந்தேபோகலாம். போகும்போது பேசிக் கொண்டே போகலாம்.”       ” நடந்து கொண்டு பேசும்போது பேசுவதில் கோர்வை இருக்காது. மனசும் செல்லாது. எங்காவது ஓரிடத்தில் இருந்துதான் பேச முடியும்.”        “ அப்படியானால் இங்கேயே இப்படியே நின்று சொல்லுங்கள் “        “இங்கேயேவா.? ப்ரைவஸி கொஞ்சம் கூட இல்லையே ஹூம்.! சரி நடந்து கொண்டே பேசலாம். முக்கிய விஷயம் பேசும்போது அங்கேயே நின்று விடுவேன். சரிதானே?”        “ எனக்கு சரிதான், பேசுங்கள்..கேட்கிறேன். “         ” என்ன பேசுவது ,எப்படிப் பேசுவது என்றே மறந்துபோச்சு சியாமளா.உன்னிடம் ஆயிரமாயிரம் பேச வேண்டும் என்று மனசு துடிக்குது. கண் உன்னையே பார்த்துக் கொண்டு இருப்பேன் என்கிறது. வாய் சத்தியாக்கிரகம் செய்கிறது. “         “ சத்தியாக்கிரகத்திலும் சண்டித்தனமான சத்தியாக்கிரகம் போலிருக்கு. “  சியாமளாவுக்கும் பாபுவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதற்கு தைரியம் வந்தது. பேச்சும் வளர்ந்தது.        “ என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், சியாமளா..?”        ” என்ன நினைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை நினைக் கிறேன்.”        ” விளையாட்டுக்குச் சொல்ல வில்லையே. ?”        ” இல்லை.”        ” நிச்சயமாக...?” :        ” நிச்சயமாக.”        “ சியாமளா, எனக்குத் தாயாக, தாதியாக, துணையாக,நண்பனாக, சேயாக எல்லாம் நீ இருக்க வேண்டும் என்று நான் மனதார ஆசைப் படுகிறேன். சுருங்கச் சொன்னால், என்னில் உன்னையும் , உன்னில் என்னையும் காணத் துடிக்கிறேன். அந்த எண்ணம் உனக்குண்டா, சியாமளா.?”        பேசிக் கொண்டே நடந்து சென்றவன் உணர்ச்சிவசப்பட்டு நின்று விட்டான். அவன் கண்களில் நீர் பனித்திருந்தது.       சியாமளா பதில் பேசவில்லை.அவளால் முடியவில்லை.. பாபு தன்னை அழைத்ததன் காரணம். அவள் ஓரளவுக்கு யூகித்திருந்தாலும் உணர்ந்து கொள்ள முடியாத ஒரு சஞ்சலம் இருந்தது. உணர்த்தப் பட்ட பின்போ, அதன் இன்பச் சுமையில் இயந்திரியங்கள் எல்லாமே செயலிழந்து நின்றன.       வீதியில் சென்று கொண்டிருந்த சிலர் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுப் போவதைக் கவனித்த பாபு,உடனே தன்னிலை வரப் பெற்றான்.       “ ஐ ஆம் சாரி, சியாமளா. உன் மனதை என் பேச்சாலும் செய்கையாலும் புண் படுத்தி விட்டேன். உண்மையாகவே நான் வருத்தப் படுகிறேன். என்னை மன்னித்து விடு. சியாமளா. “        “ஏன் இப்படி என்னென்னவோ மாதிரிப் பேசறீங்க.?நான் என்னதான் அப்படி தவறு செய்தேன். ?”       “ என் பேச்சு உனக்குப் பிடிக்கவில்லை என்று உன் மௌனத்திலேயே தெரிஞ்சு போச்சே.! அதுவே என் தவறுதானே.”       “ மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பார்களே.. அது மாதிரி இருக்கக்கூடாதா.?”       ” வாட்.? சியாமளா நான் கேட்பது, பொய்யில்லையே “       எளிதில் உணர்ச்சி வசப் படும் பாபுவுக்கு, அதை எளிதில் அடக்க மட்டும் தெரிய வில்லை. சந்தோஷத்தின் எல்லைக் கோட்டுக்கே சென்றவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து சற்று முன்பு வாங்கிய சாக்கலெட்டுகளை சியாமளாவிடம் அள்ளிக் கொடுத்தான். அவனுடைய செய்கைகளை எல்லாம் அவளால் அனுமானிக்க முடியவில்லை. சில சமயம் குழந்தைத் தனமாகப் பட்டது. சில சமயம் உணர்ச்சி வசப் படுத்தியது      உங்கள் மேல் எனக்கு ஒரே கோபம். தாயாக, தாதியாக, துணையாக, நண்பனாக, சேயாக என்றெல்லாம் நினைக்க விரும்பும் நீங்கள் முக்கியமாக ஒரு பெண் விரும்பும் ஸ்தானத்தை எனக்குத் தர விரும்ப வில்லை. உங்களுக்கு மனைவியாக என்று மட்டும் கேட்க வில்லை. அதற்கு எனக்கு அருகதை இல்லை என்று உணர்த்தி விட்டீர்கள். “ சியாமளாவுக்கு சொல்லும்போது அழுகையே வந்து விட்டது.     “ சியாமளா என்னை நீ தவறாகப் புரிந்து கொண்டாய். உன்னை மனைவியாக அடைய நான் பெரும் பேறு செய்திருக்க வேண்டும். நான் அப்படிக் கேட்க வில்லை என்றால் அது எனக்கே விளங்காத புதிர் போன்ற உணர்ச்சியால்தான் சியாமளா. எல்லாம் நல்ல படியாக ஆண்டவன் அருளால் நடக்கும் என்றால் இன்னும் ஒரு வருஷம் கழிந்ததும் உரிமையொடு உன்னைக் கேட்பேன்..நீதான் என் மனைவி என்று பெருமையாகப் பேச ஒரு வருஷம் அவகாசம் தேவை. அதுவரைக்கும் என்னால் அப்படி நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது.”      ” உங்களைப் புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது. எதற்கு ஒரு வருஷம் அவகாசம் தேவை என்று நான் தெரிந்து கொள்வதில் தவறு இருக்காதே.?”             வேண்டாம் சியாமளா,இன்ப வானில் சிறகடித்துப் பறக்கும் நான் உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிட்டால் அது உனக்கும் சரி எனக்கும் சரி துன்பத்தைத்தான் தரும். தயவு செய்து என்னை வற்புறுத்தாதே.”      முக்கியமாய் கேட்க வேண்டியதை பாபுவால் கேட்க முடிய வில்லை என்றால், அதற்கு முக்கிய காரணம்,பாபுவுக்கு விளங்காத எச்சரிக்கையை அவன் மனம் அவனுக்கு அளித்தது.தான். தான் இன்னும் ஒரு வருஷத்தில் இறந்து விடுவோம் என்ற இனம் தெரியாத புதிர்தான் சியாமளாவை மனைவியாகும்படி அவனால் கேட்க முடியாமல் செய்தது. நிகழ் காலத்தின் கட்டுப் பாட்டுக்கு அடங்க மறுக்கும் கற்பனையின் வேகம்தான், அவனுடைய உணர்ச்சியின் வேகத்துக்குத் தடை போட்டது. சியாமளாவைப் பொறுத்தவரை புதிர் புதிராகவே நின்றது. அது விடு படாத வரைக்கும் அவளுக்கு மன அமைதி இருக்காது. இருந்தாலும் பாபுவின் வேண்டு கோளுக்கு இணங்கி அவள் அதற்கு மேல் ஒன்றும் கேட்க வில்லை. ஒருவரைப் பற்றிய ஒருவர் சிந்தனையில் இருவரும் லயித்தவராக அவர்கள் நடந்து கொண்டே வந்தனர்.. இருந்தாற்போலிருந்து பாபு ,” சியாமளா, நீ என்னோடு இருக்கும்போது எனக்கு பாரதியின் – காற்றிலேறியவ் விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக் கண் பார்வையிலே—என்ற பாடலின் நினைவுதான் வருகிறது. அது எவ்வளவு உண்மை என்று புரிகிறது, “ என்றான்.                ”எனக்கு நேரமாகிவிட்டது.வீட்டில் தேட ஆரம்பிப்பார்கள் “ என்றாள் சியாமளா.        பாபுவுக்குப் பிரிய மனமில்லை என்றாலும் விடை கொடுத்துத்தான் தீரவேண்டும் என்ற நிலையில் அங்கு வந்த ஒரு ஆட்டோவில் அவளை ஏற்றி அனுப்பினான். அவள் சென்ற திக்கிலேயே மனம் பறிகொடுத்து நின்றவன் திரும்பியதும், கமலத்தின் கணவன் சிவராமன் தன் அருகில் நின்று கொண்டு விஷமமாகச் சிரிப்பதைக் கண்டான்.        “பலே, பாபு, என்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன். பெரிய ஆசாமிதான் நீ. உனக்குத் தெரியாத வித்தையே இல்லை போலிருக்கே.”         தன் தமக்கையின் கணவன் என்ற நினைப்புதான் பாபுவைக் கட்டுப் படுத்தியது. சிவராமன் பார்த்த விதம் அவன் நின்று கொண்டிருந்த தோரணை மேலே பேசிய பேச்சுக்கள் ஒன்றுமே பாபுவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் அவன் பெசிய போது வீசிய வாடை  வேறு அவன் நன்றாகப் போட்டு விட்டு வந்திருக்கிறான் என்பதையும் உணர்த்தியது.குடியின் பிடியில் சிக்கி இருப்பவனின் வார்த்தைகளை அலட்சியம் செய்வதுதான் சிறந்தது என்று பாபுவுக்குத் தெரிந்திருந்தாலும், சில வினாடிகள் கழித்து “ அது சரி, யார் அந்தக் குட்டி.?எங்கிருந்து பிடித்தாய்.?” என்று அவன் கேட்டதும், பாபுவால் அவனையும் மீறி வந்த கோபத்தை அடக்க முடிய வில்லை.      “ சிவராம், கொஞ்சம் ஜாக்கிரதையாய்ப் பேசுங்கள்..யாரிடம் என்ன பேசுகிறோம் என்பது நினைவிருக்கட்டும். குடிப்பதில்லை என்று வாக்குக் கொடுத்து விட்டு, அதையும் மீறிக் குடித்து விட்டு அனாவசியமாகப் பிதற்ற வேண்டாம். “       முதன் முறையாக பாபு தன்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டதே சிவராமனுக்கு அந்த நிலையிலும் உறைத்தது. மரியாதை, பணிவு எல்லாம் குறைந்து, தன்னை மிரட்டும் தொனியில் பாபு பேசியது அவன் கோபத்தைக் கிளறியது. மனிதனுக்கு தன்னுடைய மதிப்பில் பிறர் ஏற்படுத்தும் களங்கத்துக்கு காரணம் தானாகவே இருக்கலாம் என்றே தெரிவதில்லை. சிவராமனுக்கும் தெரியவில்லை.      “சரிதான் போடா...ஊருக்கு உபதேசம் செய்கிறாய்.நீ சரியாக இருக்கப் பழகிக் கொள். இவளைப் போல எத்தனை பெண்களை இப்படிக் கெடுக்கத் திட்டம் போட்டிருக்கிறாயோ. சொல்ல வந்தால் கோபம் வேறு வருகிறதோ.? தான் இருக்கிற கேட்டில் மற்றவர்களுக்கு வேறு உபதேசம். நான் குடிப்பேன். அப்படித்தான் குடிப்பேன்.உங்க தாத்தா வீட்டுக் காசிலா குடிக்கிறேன்.!”       அவன் பேசி முடிப்பதைக் கேட்டு அதற்கு பதில் சொல்ல பாபு அங்கிருக்க வில்லை. இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் நிலைமை மிகவும் அசம்பாவிதமாக முடியுமென்று தெரிந்ததால் வேகமாக அங்கிருந்து பாபு சென்றுவிட்டான்.               அத்தியாயம் பதினேழு         தமிழ் மன்றம் மக்கள் மன்றமாய் மாறும் நாள் நெருங்க நெருங்க அதில் சம்பந்தப் பட்டவர்களின் வேலையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. பிரமாண்டமான முறையில் மூன்று நாள் விழாக் கொண்டாட திட்டமிட்டு அதன்படி செயல் நடத்தும்போதுதான்,இது எதிர்பார்த்த சுபிட்ச பாதையில் முன்னேற , அந்தப் பாதையின் துவக்கம் என்பதை எல்லோரும் உணர்ந்தனர்.       நிகழ்ச்சியின் முதல் நாளும் வந்தது. ஊரே திரண்டு வந்து ஆதரவு கொடுத்ததைக் கண்டபோதுதான், தாங்கள் பட்ட கஷ்டத்தின் பயனை அடைந்ததாக ஒரு நிறைவு ஏற்பட்டது.முத்தமிழ் விழாவில் இயல் இசை நாடகம் எல்லாம் பங்கு பெற்றன. பட்டிமன்றமும் கவி அரங்கமும் ,ஆடலும் பாடலும், நாடகமும், ஓவியமும் எல்லாம் கண் கொள்ளாக் காட்சியாக அமையப் பெற்றதோடு, அவர்கள் கொண்ட லட்சியத்தின் அடிப்படையில் எழுந்ததால், அவ்விடத்தில் தமிழ் மன்றம் ஒரு புரட்சியையே தோற்றுவித்து விட்டது.      வீட்டிற்கு வீடு சென்று எல்லோரையும் அழைத்தனர். தாங்கள் எடுத்துக் கொண்டிருந்த திட்டங்களை விவரமாக எல்லோருக்கும் எடுத்துரைத்து அதில் எல்லோரும் பங்கு பெறுவதான ஒரு திருப்தியை எல்லோருக்கும் அளித்தனர்.     எந்தக் காரியத்திலும் ஒவ்வொரு தனி மனிதனும் பங்கு பெறுகிறான் என்ற உணர்ச்சியை ஏற்படுத்தினால்தான் அந்தக் காரியம் வெற்றி பெறும் என்பதை நன்கு உணர்ந்திருந்த பாபு ,திட்டங்களை நிறைவேற்ற சீரான வழி முறைகளை வகுத்துக் கொடுத்திருந்தான். அதையும் அவரவர்களே உணர்ந்து செயவது போன்ற ஒரு சூழ் நிலையையும் ஏற்படுத்தி இருந்தான். எந்தக் காரியத்துக்கும் ஒரு காசு கூட தராத மகாப் பிரபுக்கள் எல்லோரும் அவரவர்கள் சக்திக்கும் மீறி உதவினார்கள் என்றால் அது அவர்களுக்கே மனதில் பட்ட குறைகளை சீர் திருத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பின் காரணம் என்றே திட்ட வட்டமாகக் கூறலாம்..      இன்ன காரணத்துக்காக விழா நடைபெறுகிறது, இன்னின்ன பிரச்சினைகள் தீர்வு காணப் பெறப் போகின்றன என்றெல்லாம் ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும் அவை இந்த அளவுக்கு வெற்றிகரமாக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன், மன்றத்து உறுப்பினர்களேகூட எதிர் பார்க்கவில்லை., பாபுவைத் தவிர.. பாபுவுக்கு இதையும் விட நன்றாகச் செய்ய முடிய வில்லையே என்ற குறைதான் மேலோங்கி இருந்தது. ஊண் ஒழித்தான், உறக்கம் ஒழித்தான், உடலின் உபாதைகளையே மறந்தான் தான் செய்யும் பணியில் ஆண்டவனைக் கண்டான். லட்சியக் கனவு ஈடேறுகிறது என்று அறியும்போது, ,--ஆண்டவனே இந்தப் பணி சீரான பாதையில் சென்று ,இந்த சமுதாயம் ஓரளவு நன்மை பெறுகிறது என்றால், அது தொடர்ந்து நடக்க அதில் சம்பந்தப் பட்டவர்கள் அனைவருக்கும் உன் ஆசிகள் தேவை. நல்லெண்ணத்தில் எழும் காரியங்களை செயல் படுத்த மனோ திடமும், உடல் தெம்பும் எங்களுக்குக் கொடுப்பாய் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் பணிகளை செய்ய எவ்வளவு பிறவிகள்  எந்த இன்னல்களிலும் , வேண்டுமானால் எடுக்கத் தயாராய் இருக்கிறேன் ---என்று அடிக்கடி வேண்டிக் கொண்டான்    பாபுவுக்கு இரு கரங்களாகவும் , கண்களாகவும்,சியாமளாவும் கானும் பணி புரிந்தனர். பட்டி மன்றத்தில் விவாதம், “ சமுதாயம் வளர்வது தனி மனிதன் முயற்சியாலா, அல்லது கூட்டுறவாலா “ என்ற தலைப்பில் நடந்தது. சான்றோர்களும் பாமரர்களும் பங்கு கொண்ட விவாதம் சூடு பிடித்தது.      “ கூட்டுறவு என்பதே தனி மனிதனின் முயற்சியின் அடிப்படையில் எழுந்ததுதானே. ஒவ்வொருவனும் சமுதாயத்தின் சீர்கேட்டை உணர்ந்து அதற்கு நிவர்த்தி தேடும்போது, தேடும் பாதையாகக் கூட்டுறவு கொள்கை உருவாகிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களென்ற அளவில் எல்லோரும் செயல் படுவது , அவரவர்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துஆட்சிக்கு அனுப்புவதில் மட்டும் இருக்கக் கூடாது. ஒவ்வொருவனுக்கும் உள்ள கடமைகளை தன்னைச் சார்ந்தவர்கள் அதனால் பாதிக்கப் படுகிறார்கள் என்ற உணர்வில் செய்தால், அது நன்மையாகத்தான் முடியும். ஆக அந்த உணர்வோடு செயல்படும் தனி மனிதனின் முயற்சியால்தான் சமுதாயம் வளரும் என்று ஒரு கட்சியினர் சான்றுகளும் மேற்கோள்களும் காட்டி விவாதித்தனர். மேலும் ஒவ்வொருவனும் அவனது கடமைகளை ,உடைமைகளைப் பெருக்கும் விதத்தில் செயலாற்று கையில் சமுதாயம் தானாக வளரும் என்றும் விவாதித்தனர்.      கூட்டுறவு முயற்சி என்பது பல தனிப்பட்ட மனிதர்கள் தங்களது தனிப்பட்ட பல கருத்துகளை ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து,, அடுத்தவர்களை வாழ வைப்பதோடு தாங்களும் வாழ வேண்டும் என்ற கொள்கையில் எழுந்தால், சீர் கேடுகள் நிறைந்த சமுதாயம் சீர்திருத்தப் பெறும் பலரது கூட்டுறவால் விளையும் பலனும் அதிகமாகும். நான் எனது என்ற அகங்கார எண்ணம் மாய்ந்து , நாம் நமது என்ற பரந்த எண்ணம் விரியும். அதனால் சோம்பல் ஒழியும் கட்டுப் பாடு அதிகரிக்கும்.விட்டுக் கொடுத்து வாழும் சமூகத்தில் அன்பே மலரும், போட்டி பொறாமை குறையும் .எல்லோரும் ஓர் குலம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற நிலையை ஏற்படுத்தும். உலகில் சமதர்மம் சிறப்பாக நிலை பெறும். –என்றெல்லாம் மற்ற கட்சியினர் விவாதித்தனர்     தீர்ப்போ,தனி மனிதன் வளர்ந்தான் என்றால் சமூகம் வளர்ந்தது என்ற நிலை சரியாகத் தோன்றினாலும் எல்லோரும் ஒரே காலத்தில் மேன்மையடைவது என்பது இயலாத காரியம் ஆதலால், அவ்வளவு சரியெனக் கொள்ள முடியாது. ஆனால் தனி மனிதனின் கட்டுப் பட்ட வளர்ச்சி கூட்டுறவால் விளைந்தால் வளர்ந்த வளர்ச்சி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும். ஆதலால் அதுவே சிறந்தது என்று இருந்தது.      கவி அரங்கம் கூடி இருந்த மக்களின் அறிவுக்கு விருந்தாகவும் ,வளர்ந்து வரும் சமுதாயத்தின் சிறப்பை உணர்த்துவதாகவும் இருந்தது.. ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நமது கலை வளர்ச்சியை எடுத்துக் காட்டும் முறையில் இருந்தது. நாடகமோ நல்லது கெட்டது என்பன போன்றவற்றை நகைச் சுவையோடு வெளிப் படுத்துவதாக அமைந்தது.      நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் எல்லோரும் நிறைவு பெற்றனர். நினைத்ததை நினைத்தபடி எடுத்துரைக்கவும், எடுத்துரைக்கப் பட்டவற்றை சீர்தூக்கி முடிவுக்கு வரவும் அவர்களால் எளிதில் முடிந்தது என்றால்,,எடுத்துரைக்கப் பட்டவை அனைத்தும் ஒவ்வொருவரையும் பாதிப்பதாகவும் சார்ந்ததாகவும்  இருந்ததாகும்      நிகழ்ச்சிகளாலும் நன்கொடைகளாலும் ரூபாய் ஐம்பதாயிரம் திரட்டினர். அதுவே மக்கள் மன்றத்தின் தொடக்க ரொக்கமாக அமைந்தது.     ” என்னடா பாபு, வேளா வேளைக்குச் சாப்பிடாமல்,தூங்காமல் இப்படி உழைத்தால் உடம்பு என்னத்துக்காகும்? சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும். என்பார்கள். முதலில் உடம்பு ஆரொக்கியத்தைப் பார்த்துக் கொள்ளணும்டா” தன் மகனின் தன்மை உணர்ந்த கல்யாணி அம்மாவின் பேச்சில் கனிவோடு, பரிவும் ஆதங்கமும் கலந்திருந்தது., பாபுவின் தளர்ந்த உடம்புக்கு இதமாகத்தான் இருந்தது.இருந்தாலும் இதே போன்ற உள்ளுணர்வோடு இதே தாயால், தன்னோடும் தன்னைவிடவும் அதிகமாக உழைத்த தன் நண்பர்களிடம் பரிவு காட்ட முடியுமா என்றே அவன் எண்ணினான். இவர்களாவது வளர்த்த பாசத்தால் எழும் உணர்ச்சிகளைத் தன் மகனிடம் காட்டுகிறார்கள். இந்த அனுபவம் இல்லாத சியாமளாவால் எல்லோரையும் ஒரே மனத்தோடு நேசிக்க முடியுமா, கனிவு காட்ட முடியுமா என்றும் அவன் சிந்தித்தான். சியாமளாவின் நினைவு வந்ததும் அவனது உடற்சோர்வும் உள்ளச் சோர்வும் அவனிடமிருந்து சற்றே விலகிச் செல்வது போல்ஒரு பிரமையும் அவனுள் எழுந்தது. அவள் நினைவே இப்படி என்றால் ..அவள் அருகில் இருந்தால்....?அருகில் இல்லாமலா இருந்தாள்.? விழாவின் பெரும் சுமையைத் தாங்கினவர்களில் அவளும் ஒருத்தி அல்லவா.விழாவே இவ்வளவு சிறப்பாக நடந்தது என்றால் அதில் பெரும் பகுதி பெருமை அவளையே சாரும். என்றெல்லாம் எண்ணத்தொடங்கிய பாபுவுக்கு அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவளிடம் தனிமையில் பேச வேண்டும் போல இருந்தது. அவளோடு காதற் பண் பாட வேண்டும் போல இருந்தது.      கல்யாணி அம்மாவைத் திருப்திப் படுத்தவென்றே ஒன்றிரண்டு கவள்ம் சோறு சாப்பிட்டு, சியாமளாவைக் காணப் புறப்படத் தயாரானான்.வாசல்படி அருகே வந்தவன் திடுக்கிட்டான். அவன் அங்கு கனவிலும் கமலத்தை எதிர் பார்த்திருக்க மாட்டான்.அவளது தோற்றம், நடை அதில் கண்ட பரபரப்பு எல்லாம் பாபுவுக்கு ஏதோ எதிர்பாராத சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று உணர்த்தியது.        வந்தவள் அந்த நிலையிலும் வீட்டுப்படி ஏற வில்லை. வாசலில் இருந்தபடியே பாபுவைத் தன்னோடு வரும்படி அழைத்தாள்.     “ உள்ளே வா, அக்கா. விஷ்யத்தைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லேன் .அம்மாவும் தம்பிகளும் ரொம்ப சந்தோஷப் படுவார்கள்.”     “ நான் இப்போது இருக்கும் நிலை எல்லோரும் சிரிக்கும்படித்தான் இருக்கு. பாபு நான் இப்போது உள்ளே வரதா இல்லை.உனக்கு உன் அக்கா மேல் அன்பிருந்தால் உடனே என் கூட வா. “       வெளியே புறப்பட்ட பாபு யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டதும் கல்யாணி அம்மா வெளியே வந்து பார்த்தாள்., கூடவே ராஜுவும் விசுவும் வெளியே வந்தனர். வந்தவர்களைக் கண்டதும், கமலம் எதுவும் பேசாமல் வெளியே சென்று விட்டாள். பாபுவுக்கு எதுவும் புரிய வில்லை. கல்யாணி அம்மாவுக்கு கமலம் வந்ததும், அவள் தன்னைக் கண்டும் எதுவும் பேசாமல் திரும்பிச் சென்றதையும் பார்த்த போது மனசை என்னவோ செய்தது போல இருந்தது. ”அவள் வந்து என்னிடம் பேசியதைக் கேட்கும்போது, ஏதோ கலவரம் நடந்த மாதிரித் தெரிகிறது. என்னவென்று விசாரித்து வருகிறேன் அம்மா” என்று தெரிவித்தவனுக்கு  ஏனோ தானே குற்றவாளிக் கூண்டில் நிற்பது போல் இருந்தது. தாயிடம் தமக்கை நடந்து கொள்ளும் விதம் இதுவல்ல என்று அவன் உள்மனம் கூறியது. தாயென்றே அவள் ஏற்க வில்லையே என்று மறு புறம் சமாதானம் கூறிக் கொண்டது.    “ இந்தப் பெண்ணுக்கு என்னிடம் ஏன் தான் இந்த வெறுப்போ.” என்று நினைத்துக் கொண்ட கல்யாணி அம்மா, பாபு சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே காட்டிக் கொள்ள வில்லை. ராஜுவுக்கும் விசுவுக்கும் பற்றிக் கொண்டு வந்தது. “ வீடு வரை வந்தவளுக்கு வீட்டுக்குள் மட்டும் வரப் பிடிக்க வில்லை என்றால் வராமலேயே இருந்திருக்கலாம்” என்றான் ராஜு.      “ உன்னையும் என்னையும் காண வரவில்லை அவர்கள். பாபு அண்ணாவைப் பார்க்க வந்தார்கள். பார்த்தார்கள்,பேசினார்கள் போய் விட்டார்கள். ஏதோ இழவுக்கு சொல்லிக் கொள்ள வந்த மாதிரி இருக்கு “ என்றவனை மேலே பேச விடாமல் “கண்டபடி உளறாதேடா விசு. தமாஷுக்கும் அரட்டைக்கும் கூட அந்த மாதிரிப் பேசக் கூடாது” என்று கல்யாணி அம்மா தடுத்து விட்டாள்.      கமலத்தை தொடர்ந்து சென்ற பாபு, அவளோடு அவள் வீட்டை அடையும்போது குழந்தைகள் எல்லாம் பயந்து போய் வெளியில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நடந்த சம்பவங்களை ஓரளவு கேட்டுத் தெரிந்து கொண்டான் பாபு.    ” நேற்றைக்கு இவர் வீட்டுக்கு வரும்போதே ராத்திரி பத்து மணிக்கு மேலாயிடுத்து. நீ அன்றைக்கு கொண்டு வந்த மாதிரி நேற்றைக்கு யாரோ கொண்டு வந்து சேர்த்தார்கள். வந்ததும் வாந்தி எடுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து ராத்திரி பூரா மூன்று நாலு தடவை வாந்திதான். ரொம்ப துவண்டு போனவருக்கு காலையிலேருந்து நல்ல சுரம். என்னென்னவோ சொல்றார். எனக்கு ரொம்ப பயமாயிடுத்து. கண்ணனைக் கூப்பிடலாம்னு போனா அவன் அங்கிருக்கலை.பாட்டியும்தான் இல்லையே. டாக்டர் கிட்டே காட்டலாம்னா கையிலெ கொஞ்சங்கூடப் பணமில்லை. கடைசிலே உங்கிட்ட வந்தேன். பாபு இந்த தடவை எப்படியாவது உதவி பண்ணு. அப்புறம் உதவின்னு நீ இருக்கிற திக்குலே கூடத் தலை வைத்துப்படுக்க மாட்டேன்.”      கமலம் பேசிய விதமே பாபுவுக்குப் பிடிக்க வில்லை. வேறு கதி இல்லையே  என்று அவனிடம் வந்த்ததாகக் கூறியவள் நடந்து கொண்ட முறையிலும் அதேதான் தெரிந்தது. எந்த வார்த்தைகளை எப்படி உபயோகிப்பது என்று கூடத் தெரியாமல் இருக்கிற திக்குலே கூட தலை வைக்க மாட்டேன் என்கிறாள்     அறியாதவர்கள் அறியாமல் செய்யும் பிழைகள் பொறுக்கப் படட்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டவன், சிவராமனை நன்றாகக் கூர்ந்து கவனித்தான். மூடிய கண்களிலும் குழி விழுந்து கரு வளையம் மூடிக் கொண்டிருந்தது. உயர்ந்த உருவம் குறுகிய் மார்பு ஒட்டிய கன்னம் எல்லாவற்றையும் பார்த்தவனுக்கு சிவ ராமனின் உதடுகளும் நாசியும் புரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் பாவனையில் இருப்பது போல் தோன்றியது. அதிலும் ஒரு குரூரத் தன்மை, மூச்சுவிட்டு இழுக்கும்போது மூக்குடன் சேர்ந்தியங்கும் உதடுகளில் இருப்பது தெரிந்தது.    “ பாபு உன்னை என் கூட வரச் சொன்னேன். நீயும் வந்தாய். விவரங்களும் புரியும்படி சொல்லி யாயிடுத்து.நீ என்னடான்னா, பேசாமலேயே இருக்கே. என்ன பண்றதுன்னு சீக்கிரம் சொல்லு. எனக்கென்னவோ பகீர் பகீர்ன்னு அடிச்சுக்கிது. “    “அளவுக்கு மீறி குடிச்சதுனால ஏற்படற ஆஃப்டர் எஃபெக்ட்ஸ். அன்னக்கே நான் சொன்னேனே. அத்திம்பேர் இந்தப் பழக்கத்த நிறுத்தப் பண்றது உன் பொறுப்புன்னு. நீ கேட்கலை. என்ன உதவி என்னாலே இப்போ செய்ய முடியும்னு நீ நெனைக்கிறே. அவருக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லை. மயக்கம் தெளிஞ்சா எல்லாம் சரியாயிடும். உடம்பு சூடு குடிச்சதனாலே ஏற்பட்டது. சுரம் அல்ல. நீயும் வீணா மனசைக் குழப்பிக்காதே.நான் வரேன்.” என்று வெளியேறியவனை கமலம் தடுத்து நிறுத்திக் கேட்டாள்..      “என்ன பாபு பேசாமப் போறியே. உன் அக்காள் இருக்கும் நிலையில் அவளுக்கு உதவணும்னு கூடத் தோணலியா. வராத இடத்துக்கு வந்து உதவி கேட்டவளை இப்படித்தான் நடத்திறதா.?”      . கோபமும் ஆத்திரமும் மேலிடப் பேச ஆரம்பித்தவளுக்கு, அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. பாபுவுக்கும் தான் செய்வது சரியல்ல என்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால் மறுகணமே அவன் மனம் மாறிவிட்டது.ஏமாற்றுகாரர்களின் வலையில் தான் வந்து விழ இருந்த நிலை பூரணமாகப் புரிய ஆரம்பித்தது. அவன் கண்கள் வீட்டு சன்னலிலிருந்து இங்கு நடப்பதை ஆராய்ந்து கொண்டு இருந்த சிவராமனைக் கண்டன. ஒரு நாடகமே தன் முன்னால் நடிக்கப் ப்டுகிறது என்று ஒரு நொடிப் பொழுதில் யூகித்துக் கொண்டான்.       “ அக்கா ...நான் உனக்கு உதவினால் அது உபத்திரவமாகத்தான் முடியும். குடியைக் கெடுக்கும் குடிக்குப் பணாம் கொடுத்து உதவ என்னிடம் காசில்லை. பணத்துக்காக இந்த நாடகம் நடித்திருக்கவும் தேவை இல்லை. “என்று கூறிக் கொண்டே சென்றுவிட்டான்.        சென்று கொண்டிருந்தவன் காதில் “அவன் கிடக்கிறான் மடப் பயல் “ என்ற சிவராமனின் குரல் தெளிவாக விழுந்தது.                                   அத்தியாயம் பதினெட்டு       புது முறையில் துவக்கப்பட்ட பள்ளியில் சேர வந்தவர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்ள இடமிருக்கவில்லை. தொடங்கப் பட்ட சில நாட்களிலேயே விஸ்தரிக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்தது. சாதாரண முறையில் அமைக்கப் படாததால், அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.இருந்தாலும் படித்துத் தேறுவதை வாழ்க்கை வியாபாரத்துக்கான முதலீடு என்று எண்ணாதவர்கள்,,சாதாரணன பள்ளிக்கு தம் குழந்தைகளைக் காலையில் அனுப்பினாலும் மாலையில் இந்தப் பள்ளிக்கும் அவர்களையே அனுப்பினார்கள். பிள்ளைகளுக்கும் சிறை வாசம் என்றில்லாத முறையில் நல்ல கருத்துக்கள் விளையாட்டாகவே போதிக்கப் பட்டன. அவர்களும் விரும்பிக் கற்றனர்.      கூட்டுறவு முறையில் தொடங்கப் பட்ட பண்டக சாலைகளும் எதிர் பார்த்ததைவிட பலன் அளிப்பதாக இருந்ததால் ,எதிர் பார்க்காத முறையில் வளர்ச்சி அடைந்தது.     பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மக்கள் மன்றத்தில் நடத்தப் பட்ட , நடத்தப்பட வேண்டிய காரியங்கள் செயல் முறைகள் எல்லாம் நன்றாக விவாதிக்கப்பட்டு ,திட்டமிடப் பட்டு நடத்தப் பட்டன. வேலையில்லாத இளைஞர்களுக்கு இதுவே ஒரு வேலையாய்ப் போய் பலனளிப்பதாயும் இருந்தது.          பாபுவுக்கு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டே இந்தப் பணிகளையும் கவனிப்பது இயலாமல் போயிற்று .தொழிற்சாலையில் ராஜினாமா கொடுத்து வீடு வந்தவன் செய்தியைச் சொன்னதும் கல்யாணி அம்மா விக்கித்துப் போனாள்.    ”இருக்கிற வேலையை இப்படி விட்டுட்டு வந்தால் குடும்பம் எப்படிடா நடக்கும் பாபு.?வேலையோட இருக்கிற வரைக்கும் தானே உனக்கும் மதிப்பு. ராஜுவுக்கும் விசுவுக்கும் இன்னும் படிப்பு முடியலை. நீ செஞ்சது கொஞ்சங்கூட நல்லா இல்லை.”என்று பொரிந்து தள்ளினாள்.    பாபுவுக்கும் கல்யாணி அம்மாவின் எண்ணங்கள் புரிந்தது. இருந்தும் சாதாரணமானவர்கள் நடத்தும் வாழ்க்கையைத் தன்னால் தொடர்ந்து நடத்த முடியவில்லை என்று அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?அன்றாடங் காய்ச்ச வழியில்லாம போய்விடுமே என்னும் பயம் அவர்களுக்கு. ஒருவரை நம்பியா ஒருவர் வாழ்கிறார்கள் இந்த உலகில்.? தான் வேலைக்குப் போகாவிட்டால் குடும்பம் நடக்காதா.? இந்த நிலையில் உள்ளவர்கள் மேலும் உயர வேண்டும் என்றுதானே எண்ணுகிறார்கள். அல்லாமல் இதே நிலையில் எல்லோரும் வளர்ச்சி அடைந்திருக்கிறார்களா என்று மட்டும் ஏன் சிந்திப்பதில்லை.?     இவற்றையெல்லாம் அவர்களுக்கு எடுத்துரைப்பது இயலாத காரியம். தான் செய்ய வேண்டிய காரியங்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. ஆனால் இவர்களோ. பாரதி சொன்னது போல                      தேடிச் சோறு நிதம் தின்று-பல                     சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்                     வாடித் துன்பம் மிகவுழன்று-பிறர்                     வாடப் பல செயல்கள் செய்து-நரை                     கூடிக் கிழப் பருவம் எய்தி-கொடுங்                     கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் –பல                                                                                                                                   வேடிக்கை மனிதரைப் போல “   வாழ்ந்து வீழ வேண்டும் என்று நினைக்கிறார்களே, இது முறையா ,முடியுமா என்றெல்லாம் நினைத்துக் குழப்பத்தைக் குறைத்துக் கொள்ள முயன்றான்.      முடிவெடுத்து செயலாற்றத் தொடங்கிய பிறகு அந்த முடிவைக் குறித்து சிந்தனை செய்தால் அது இன்னும் குழப்பத்தை அதிகரிக்கத்தான் செய்யும். பாபுவால் சிந்தனை செய்யாமல் இருக்க முடியவில்லை. தாயாரை சமாதானப் படுத்தித்தான் தீரவேண்டும் அவர்கள் கஷ்டப்படாமல் இருக்கச் செய்வது தன் பொறுப்பு என்பதை அவர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.   “ அம்மா, உங்களுக்கு என்னைத் தெரிந்ததுபோல வேறு யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் உங்களுக்கே என்னை சரியாகப் புரியவில்லை என்றால் எல்லோருக்குமே நான் ஒரு புதிராய் இருப்பது ஆச்சரியமில்லை. நான் ஒன்று கேட்கிறேன். நீங்களே சொல்லுங்கள் அப்பா இற்ந்த பிறகு அவர் இருந்த காலத்தில் நீங்கள் இருந்த நிலையைவிட குறைந்த நிலையில் உங்களை விட்டிருக்கிறேனா.? இனிமேல் அப்படி ஆகிவிடுவோமோ என்ற சந்தேகம் உங்களுக்கு இருப்பதால்தான் வீணாக வருத்தப் படுகிறீர்கள். இதுவரைக்கும் நான் யாரிடமும் சொல்லாததை சொல்லுகிறேன். நான் அதிக நாள் இருப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் இருக்கும் காலத்துக்குள் என்னால் இயன்றதை செய்யத் துடிக்கிறேன். அதற்கு தொழிற்சாலை வேலை தடங்கலாயிருந்ததால் ராஜினாமா செய்து விட்டேன். இதனால் நம் குடும்பம் கஷ்டப் படாத வகையில் நடத்துவது என் பொறுப்பு.” என்று என்னவெல்லாமோ கூறி, தாயாரை சமாதானப் படுத்த வேண்டும் என்று எண்ணினவனுக்கு எண்ணியதை சொல்ல முடியவில்லை. சொல்லப் போனால் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதை யாகலாம்.    ”எல்லாவற்றையும் யோசித்துத்தான் அம்மா இந்த முடிவுக்கு வந்தேன்.தயவு செய்து என்னை கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்க விடுங்கள்” என்று சிடுசிடுக்கத்தான் முடிந்தது. கல்யாணி அம்மாவுக்கு இன்னும் ஒரு சோதனைக் காலத்தைக் கடக்க வேண்டும் என்ற விரக்தி மனப் பான்மையே மேலோங்கி நின்றது     எண்ணற்ற கவலைகள் எண்ணத்தில் உதயமாகும் போதெல்லாம் உள்ளத்தின் ஒரு கோடியில் முணுக் முணுக் கென்று ஒரு சிறு ஒளி தோன்றி மறைவதுபோல பாபுவுக்குத் தோன்றும். அந்த ஒளியை நன்றாக ஆராயும்போதெல்லாம் நிழல் போல் ஒரு உருவம் அதில் மங்கலாகத் தெரிவது மேலும் தெரியும். இதே ஆராய்ச்சியில் ஈடுபட்ட பாபுவுக்கு கலங்கரை விளக்குத்தான் நினைவுக்கு வரும். கரையின் அண்மையைச் சுட்டிக் காட்டும் கலங்கரை விளக்கம் தானோ உள்ளத்தில் உணரும் அந்த சிறிய ஒளி.?    ஒளியைப் பெரிதாகவும் அதில் தெரியும் உருவத்தை சியாமளா வாகவும் கற்பனை பண்ணிப் பார்ப்பதில் மகிழ்ச்சியடையும் பாபு, அதுவே உண்மையாகவும் இருக்கக் கூடாதா என்றும் ஏங்குவான். ஆனால் மறுகணமே வாழ்க்கைக் கரையின் ஒளியில் சியாமளாவைக் காணவே அவன் உள்ளம் நடுங்கியது.    இருந்தாலும் சியாமளாவைக் காண வேண்டும் என்ற உத்வேகம் அப்போது அதிகமாகும். அன்றும் அதே நிலையில் இருந்த பாபு மனதில் எழுந்த அந்த உருவத்துக்கு ஏற்கெனவே வரிவடிவம் கொடுத்திருந்தாலும் மறுபடியும் அதை நினைவுபடுத்தி எழுதத் துவங்கினான்.            நிலவைப் பழிக்கும் முகம்      நினைவைப் பதிக்கும் கண்கள்      நிலமடந்தை நாணும் எழில்-முத்துச்      சரம் விரித்த முல்லைச் சிரிப்பு-சிந்தக்      கமலமலர் செவ்விதழ் விரிப்பு-கொண்டு      படர்கொடிவெல்லும் துடியிடை- என்      இடர் சேர்க்க இடையிடையாட –மென்னடை      நடந்தென் முன் நின்றாள்-இன்பக்      கனவினை நனவாக்க எண்ணி-வந்த      கற்பனைக் கண் கண்ட கன்னி.     எழுதி முடித்து ஒருமுறைப் படித்துப் பார்த்துக் கொண்டு திருப்தியடைந்து எழுந்தவனை எழவொட்டாமல் தோள்களை அமுக்கியது இரு கரங்கள்.      ” யாரப்பா அந்த கற்பனைக் கண் கண்ட கன்னி.?நான் தெரிந்து கொள்ளலாமா.?” கானின் குரல் கேட்டதும் பாபுவுக்கு புதுத் தெம்பு வந்தது போல் இருந்தது.      “ கான், அப்பாடா... யாரோன்னு நெனச்சிட்டேன். என்ன சமாசாரம் ?ஏதாவது முக்கிய விஷயமில்லாமல் வீட்டுக்கு நீ வர மாட்டியே.”        “என் நண்பன் என்னடா ஒரு மாதிரியாக இருக்கிறானே ,என்ன காரணம் என்றெல்லாம் நான் குழம்பிக் கொண்டிருந்தேன்.எனக்கு மூக்கில் வியர்த்து வந்து பார்த்தால் அல்லவா தெரிகிறது உனக்கு காதல் நோய் பிடித்திருக்கிற விஷயம். இன்னும் யாரந்த பாக்கியவதி என்று சொல்ல வில்லையே.”      “அதெல்லாம் காலம் வரும்போது தெரியும்  இப்போ வந்த விஷயத்தை உடை.” பாபுவின் பிடிவாதம் கானுக்குத் தெரிந்ததுதான்.வந்த காரணத்தை விளக்கினான்.     ” எந்த நேரத்தில் தமிழ் மன்றம் மக்கள் மன்றமாக மாறியதோ அந்த நேரத்தில் நாம் நரி முகத்தில் விழித்திருக்க வேண்டும். பல லட்ச ரூபாய்கள் மூலதனமாகக் கொண்ட ஒரு ஆலையின் அதிபதி நம்மைத் தேடி வந்திருக்கிறார். மன்றத்தின் தோற்றம் வளர்ச்சி இவற்றைப் பற்றிக் கேள்விகள் கேட்டு என்னைத் திணற அடித்து விட்டார். அவர் கேட்ட கேள்விகளின் தோரணையை ஆராய்ந்து பார்த்தால் அவரால் மன்றத்துக்கு மிகவும் சாதகமான காரியங்கள் பல ஆகலாம். என்றே தோன்றுகிறது. வரவேற்பறையில் விட்டு வந்திருக்கிறேன்.சகோதரி சியாமளாவால் அவரை நன்றாக சமாளிக்க முடியும். கூட நீயும் இருந்தால்தான் முறையாக இருக்கும். மன்றத்துத் தலைவரை ஆலை அதிபதி சந்திக்கவும் விரும்புகிறார். உன்னைக் கையோடு கூட்டிக் கொண்டு போவதுதான் நான் வந்த நோக்கம்.”      ” கான், நானும் உன்னையும் சியாமளாவையும் பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். எதற்கென்று அவரை அனுப்பியவுடன் சொல்கிறேன். “        பாபுவும் கானும் மன்றத்துக்குள் நுழைந்தனர்.வந்திருந்த மனிதரைக் கண்டதும் பாபுவுக்கு அவரை எங்கோ பார்த்தது போலிருந்தது.வந்திருந்தவரும் பாபுவை உற்றுப் பார்த்துக் கொண்டே” உங்களை எங்கோ...... “என்று இழுக்கவும், பாபுவும் “எனக்கும் உங்களை எங்கோ பார்த்ததுபோல் நினைவிருக்கிறது.” என்று சற்று யோசித்தவன், “உங்கள் பெயர் சுப்பிரமணியம், கோயமுத்தூரில் ஆலை அதிபர் அல்லவா நீங்கள் ?” என்று கேட்டான். “ ஆமாம் , நீங்கள் யாரென்று......” “பனிரெண்டு வருஷங்களுக்கு முன் உங்களிடம் வேலை தேடிக் கொண்டு வந்த ஒரு சிறுவனை கையில் பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தீர்களே.அந்தச் சிறுவன் பாபு நான்தான்.”      ”ஆமாம் ,ஆமாம், இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. அப்போதே உன்மேல் எனக்கு ஒரு அலாதியான பாசம் தோன்றியது. உண்மையிலேயே வேலை ஏதும் காலி இருக்கவில்லை. மேலும் அப்போது நீ ஒரு குழந்தை போல் இருந்தாய்.ஹூம்.! அன்றைக்கு நான் செய்ததும் சரிதான்  இல்லையென்றால் இந்த பெங்களூரில் இந்த நிலையில் உன்னைக் காண இவ்வூர் மக்கள் கொடுத்து வைத்திருக்க மாட்டார்கள்.பாபு உன் மன்றம் என் மனசை தொட்டு விட்டது. “      “உன் மன்றம் என்று தவறாகச் சொல்கிறீர்கள் சார்.உங்கள் மன்றம் என்றால்தான் சரியாயிருக்கும். “      “சரியாகச் சொன்னாய் பாபு. ஏராளமான சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற நான் உன் மன்றத்தை, சாரி, உங்கள் மன்றத்தைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டேன். வாரிசில்லாத சொத்துக்கள் உங்கள் மன்றத்துக்கு உபயோகம் ஆகும் என்றால் என்னையும் ஒரு அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்’”       பாபுவுக்கும் கானுக்கும் சியாமளாவுக்கும் தங்கள் காதுகளையே நம்ப முடியவில்லை. கான் தான் முதலில் சமாளித்துக் கேட்டான்.       “ நீங்கள் நன்றாக யோசித்து வந்த முடிவுதானே இது.? இளைஞர்கள் நாங்கள் போகும் வழி புரட்சிப் பாதை. நீங்கள் விரும்பாததும் எதிர்பார்க்காததும் இங்கே நடக்கலாம்”     “  நான் இங்கு வந்து நேரில் கண்டதும் கேட்டதும்தான் என்னுடைய இந்த முடிவுக்குக் காரணம். அதுவும் பாபுவைப் பார்த்ததும் தீர்மானம் ஆனதாகப் போய்விட்டது. குழந்தை சியாமளா எனக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னாள். கோயமுத்தூரிலிருக்கும் ஆலையை விற்றுவிட்டுப் பணத்துடன் வருகிறேன்” என்றவரை பாபு இடைமறித்து “ அதை விற்க வேண்டிய அவசியமே இல்லை சார். சீரான முறையில் நடத்தப் படும் ஆலையில் வேலை செய்யும் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் சீரான முறையில் வாழவும் வகை செய்யுங்கள்.. இந்த மன்றம் பெங்களுரில் உள்ளது போல வேறு இடங்களிலும் செயல்பட வழி செய்யலாமே.” என்றதும் சுப்பிரமணியமும் ஒப்புக் கொண்டார். மேலும் அவரே மன்றத்துக்கான எந்த உதவியையும் செய்வதாக வாக்களிக்கவும் செய்தார்.      பாபுவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் கண்களில் நீர் துளித்தது. சுப்பிரமணியத்தின் உருவில் தன் தந்தையை மானசீகமாக வணங்கினான்..தன்னைப் போலவே கானும் ,சியாமளாவும் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவதைக் கண்டான். சுப்பிரமணியத்துக்கும் தன் மனசில் இருந்து ஒரு பெரிய பளு இறங்கின மாதிரி இருந்தது. பள்ளிக்கூடம் பண்டகசாலை,படிப்பகம் எல்லாவற்றையும் அவருக்குக் காண்பித்தனர். ஒவ்வொன்றைப் பற்றியும் அவை வளர்ந்த விதம் பற்றியும் விரிவாக விவரித்தனர். சிறிது நேரத்தில் தினமும் வருவதாகக் கூறித் தன் விலாசத்தையும் கொடுத்துவிட்டு சென்றார் சுப்பிரமணியம்.      “கான்,நல்ல காரியங்களுக்கு ஆண்டவனின் அருள் என்றைக்கும் உண்டு என்று நன்றாகத் தெரிகிறதல்லவா.? இளைஞர்கள் நம்மோடு வயது முதிர்ந்தஅனுபவசாலி ஒருவர் சேருகிறார்.. அவர் அன்றைக்கு என்னிடம் காட்டிய பரிவை என்னால் மறக்க முடியாது. ஆயிரக் கணக்கான முகங்களை கண்டாலும் ஒரு சிலருடைய உருவம் சில நிமிஷ நேரமே சந்திப்பு என்றாலும் அழியாது பதிந்து விடுகிறது. ஏனென்றே விளங்கவில்லை. ” அது அந்த மனிதரின் தனித்தன்மையை விசேஷ முறையில் வெளிப் படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது” என்றாள் சியாமளா.     அதுவரை சியாமளா அருகில் இருந்தும் அவளைக் காணாது காண்பது போல் திடீரெனப் பாபுவுக்குப் பட்டது. மனதில் பட்டதைக் கூறவும் செய்தான்..      “ காண்பது, பார்ப்பது என்ற இரண்டு வார்த்தைகளும் ஒரே பொருள் கொண்டிருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் மாறுபட்ட பொருளையே குறிக்கும். காண்பது கண்ணின் செயல். பார்ப்பது கண்ணின் செயலோடு உள்ளமும் செயல்படும் தன்மையைக் காட்டுவது. ஆங்கிலத்தில் to see,  to look  என்பதுபோல. இதுவரை உன்னைக் கண்டு கொண்டிருந்தேன். Now I am looking at you. என்று விளக்கம் கூறி பாபு சியாமளாவைப் பார்த்த போது, பாபுவின் கற்பனைக் கண் கண்ட கன்னி யார் என்று கானுக்குப் புரிந்து விட்டது. புரிந்ததும் மெல்ல நழுவத் தொடங்கியவனை கவனித்த பாபு, “ கான் எங்கே போகிறாய் ?”என்று கேட்டான். “ எனக்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய வேலை ஒன்றிருக்கிறது. முடித்துவிட்டு உன்னைத் தனியாகக் கவனிக்கிறேன் “ என்று, தனியாக என்ற வார்த்தையை அழுத்தமாக உச்சரித்துவிட்டு கான் சென்றான்.     ” சியாமளா.....”    ”  .....................”     ”சியாமளா “     “ ஹூம்......”     ” உன்னைப் பார்த்துப் பேச வேண்டும் என்று முயன்ற போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. இப்போதிருந்த தடங்கலும் தானாக விலகி விட்டது.” பேச ஆரம்பித்தவனுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. பேசுவதற்கு விஷயங்கள் இல்லாமல் அல்ல. சொல்ல வேண்டியவற்றை முதலிலேயே நன்றாக சிந்திக்க வேண்டியது அவசியம் என்று பாபுவுக்கு அடிக்கடி தோன்ற ஆரம்பித்ததால் தெரிவிக்க விரும்பிய ஆசை அன்பு மொழிகள் தெரிவிக்கப் படாமலேயே தொக்கி நின்றன. சியாமளாவுக்கு எதுவும் சரியாகப் புரியா விட்டாலும் ,பாபு எதையோ எண்ணி மனதில் புழுங்குகிறான் என்பது மட்டும் விளங்கிற்று. அவன் தன்னிடம் எதையோ சொல்லத் துடிக்கிறான்,ஆனால் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கவும் செய்கிறான் என்று உணர்ந்தபோது, பாபுவிடம் அவளுக்குப் பரிவு மேலோங்கியது.      ”பாபு, நீங்கள் என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள்.உங்கள் போக்கு ,பேச்சு எல்லாமே புதிராக இருக்கிறது.என்னைக் கண்டு பேச முயலும் போதெல்லாம் எதையோ பறி கொடுத்தது போல் தோன்றுகிறீர்கள். என்னால் உங்கள் சஞ்சலத்தைப் போக்க முடியுமென்றால் நான் எதற்கும் தயார். சொல்லுங்கள் பாபு.”      “இதுவரை நான் எதையும் பறி கொடுக்கவில்லை சியாமளா. ஆனால் நாளாக ஆக, என் உயிரைவிட மேலாக நான் விரும்பும் உன்னை,யே பறி கொடுத்து விடுவேனோ என்ற மன உளைச்சல்தான் என்னைப் பைத்தியமாய் அடிக்கிறது.”      “உங்களுக்கு வாழ்க்கையின் உறு துணையாக நான் இருக்கப் பெரும் பேறு செய்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கொடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. அதை நீங்கள் நிறைவேற்ற சாதி, சமுதாயம், அந்தஸ்து ஆகிய எல்லா எதிர்ப்புகளையும் தாங்க வேண்டி இருக்குமே என்றுதான் நினைத்து நான் என்னையே கட்டுப் படுத்திக் கொள்கிறேன்.”     ” சியாமளா, துன்பங்களையும் எதிர்ப்புகளையும் கண்டு அஞ்சுகிறவன் நானல்ல. அவற்றை எதிர்த்துப் போராடுகின்ற முயற்சிக்குப் பெய்ர்தானே வாழ்க்கை. என் சஞ்சலமும் சங்கடமும் அதல்ல.நான் எண்ணியவற்றை செயலாற்ற வாய்ப்பே தராமல் ஆண்டவன் என்னை ஏமாற்றிவிடுவான் என்று என் உள்ளத்தின் ஒரு பகுதி அடிக்கடி எச்சரிக்கிறது..சியாமளா ஒன்று மட்டும் நிச்சயம்..என் வாழ்க்கையில் மணவினை என்றுஒன்று இருந்தால், அந்த சடங்கில் என்னுடைய மறு பாதியாக நீதான் வீற்றிருப்பாய். அது நிறைவேற மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆண்டவனின் கிருபைதான் வேண்டும். ஒருக்கால் அது அப்படியில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் சித்தம் என்றால் நீ என்னை மறந்து விட வேண்டும். உனக்குப் பிடித்த ஒருவனோடு நீ இல்லறம் நடத்த வேண்டும். இதைச் சொல்லத்தான் நான் காத்திருந்தேன்..கற்பனை எண்ணங்களில் உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ள மாட்டாய் என்று எனக்கு உறுதி கொடு, சியாமளா.”     “ பாபு உங்களை நான் அடையத்தான் போகிறேன்.அதுதான் ஆண்டவனின் சித்தமும். நீங்கள்தான் ஏதேதோ கற்பனை எண்ணங்களில் உங்களையே ஏமாற்றிக் கொண்டு வருகிறீர்கள். இனி உங்களை ஒரு உல்லாச புருஷ்னாகச் செய்வது என் பொறுப்பு.” என்ற சியாமளா,கான் வருவதைக் கண்டதும் விடை பெற்றுக் கொண்டு சென்றாள்.      “ கங்கிராஜுலேஷன்ஸ் ,பாபு,! பிடித்தாலும் புளியங்கொம்பாய்த்தான் பிடித்திருக்கிறாய். என்னுடைய கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. வாழ்க உங்கள் காதல்.! வளர்க அதன் அடிப்படையில் எழும் உங்கள் இல்லறம்.”    கானுக்கு உண்மையிலேயே,பாபுவையும் சியாமளாவையும் இணைந்து காண்பதில் சந்தோஷம்தான். அதுவே உண்மையான நிலை என்று அறிந்ததும் அது பதின்மடங்காயிற்று.       கான். என் உயிர் நண்பன் நீ. உன்னிடம் மறைப்பதில் எனக்கேதும் லாபமில்லை.. ஆனால் ஒரு சமயம் அப்படி நடக்காமல் போனால், அனாவசியமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாய்ப் போகும். இந்த விஷயம் உன்னோடு இருக்கட்டும்.இன்னொன்று நாம் எண்ணுவதுபோல் நடப்பது ஆண்டவனுக்குப் பொறுக்க வில்லை என்றால்,சியாமளா அவளுக்குப் பிடித்த ஒருவனோடு வாழ்க்கை நடத்த வேண்டும். அவளை உன் சகோதரியாக பாவித்து அதை நீ செய்வது உன் கடமை.”     “ என்னய்யா உளர்றே நீ.! சியாமளாவுக்கும் உனக்கும் திருமணம் நடப்பது ஆண்டவனுக்குப் பொறுக்காதா.? ஆண்டவனே எதிர்த்தாலும் அது நடந்தே தீரும்.அபயம் அளிக்கிறேன் பக்தா.....கலங்காதே.!”     “ விளையாடும் நேரமல்ல கான். இது நான் உனக்குச் சொல்வது, நீ கேட்க வேண்டியது. அவ்வளவுதான்.”       வீட்டுக்கு வந்த பாபுவுக்குத் தன் மனப்பளு சற்றே குறைந்த மாதிரி இருந்தது. வேலையை ராஜினாமா செய்தது பற்றி அவன் யாரிடமும் எதுவும் சொல்ல வில்லை. கல்யாணி அம்மாவிடமும் சொல்லி இருக்க வேண்டாம் என்று தோன்றியது.        கண்ணனைக் காண வேண்டும் போலிருந்தது பாபுவுக்கு. உடற்சோர்வையும் பொருட்படுத்தாமல் போனான்.கண்ணன் வழக்கம்போல் பூஜையறையில் அமர்ந்திருந்தான். மாலதி பயபக்தியுடன் நின்றிருந்தாள். ஓசைப் படுத்தாமல் ஷூவைக் கழற்றி வெளியில் வைத்து உள்ளே நுழைந்த பாபுவை கண்ணன் சற்றும் எதிர்பார்க்கவில்லை..அப்போது பூஜையை முடிக்க இருந்தவன் வேண்டுமென்றே காலத்தைக் கடத்தினான்.பாபு எதையும் பொருட்படுத்தவில்லை. சற்று நேரம் தன் அண்ணனையும் அண்ணியையும் பார்த்துக் கொண்டிருந்தவன்,பிறகு எழுந்து போகப் புறப்பட்டான்.       “பூஜை முடியும் வரைக்கும் காத்திருக்க நேரமில்லை உனக்கு..இரு வரேன்.”ஆண்டவனை வேண்டிக் கொண்டிருந்தவன் பாரவை பாபுவின் பொறுமை எந்த அளவுக்குச் சோதிக்கப் படுகிறது என்று அளந்து கொண்டு இருந்ததால், அவன் புறப் பட்ட போது காத்திருக்கச் சொன்னான்.     “ நேரமில்லை அண்ணா. உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் போலிருந்தது .வந்தேன். பார்த்தேன். போகிறேன்.வேறு விசேஷமாக எதுவுமில்லை. வருகிறேன்”.      பாபுவின் வரவைக் கண்ணனும் மாலதியும் எதிர் பார்த்திருக்க வில்லை என்றால்,வந்தவன் இப்படி நடந்து கொள்வான் என்று கனவிலும் கருத வில்லை. பாபுவை அவமானப்படுத்தக் கண்ணன் கொண்ட முயற்சிகளிலெல்லாம்  அவனுக்குத் தோல்வியே கிடைத்தது. மேலும் சில சமயங்களில் அவனே அவமானப் படவும் வேண்டி இருந்தது.       வருகிறேன் என்று சொல்லித் திரும்பிய பாபுவுக்கு எப்போது என்று மட்டும் நிச்சயமாக சொல்லி இருக்க முடியாது. வருவோமா, வரமுடியுமா என்ற கேள்வியே அவனைத் திணற அடித்தது.அவனுக்கே அவனது எண்ணங்களின் போக்குக்குப் பொருள் விளங்க முடியவில்லை. அவன் நடந்து கொண்டு வந்த விதமும் செய்து வந்த செயல்களும் ,அவனுள்ளிருந்து அவனுக்கே புரியாமல் அவனை ஆட்டி வைக்கும் ஒரு சக்தியின் கட்டுப் பாட்டுக்கு அடங்கியதாக இருந்தது.       வீடு வந்து சேர்ந்தவன் கல்யாணி அம்மா சற்றும் எதிர்பார்க்காத முறையில் இரவு சாப்பிட்டான்.சாதாரணமாக சாப்பிட உட்காருபவன் சாப்பிட்டு எழுவது கூடத் தெரியாது. ஆனால் அன்று தம்பிகளுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டவன் அவர்கள் எப்படி எப்படி எல்லாம் விளங்க வேண்டு மென்று அறிவுறுத்தினான்..குறிப்பாக ராஜுவும் விசுவும் நடந்து கொள்ள வேண்டிய வழி முறைகளை எல்லாம் விளக்கினான்.      கல்யாணி அம்மாவும் தம்பிகளும் பாபு சந்தோஷமாக இருக்கிறான் என்பதை அறிந்த போதே மகிழ்ச்சியுற்றனர். எல்லாமே இருந்தும் ஒன்றுமே இல்லாதவன் போல் பாபு வாழ்கிறான் என்று மற்றவர்கள் தவறாக நினைத்தாலும் இருப்பதையும் சரியாக அனுபவிக்காமல் மனம் வாடுகிறான் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களுக்கு பாபுவின் மனமாற்றம் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது.     பாபுவுக்கு பொது வாழ்வில் கிடைத்தவை பெரும்பாலும் வெற்றிதான் என்றாலும் அவன் குடும்பத்தைப் பொறுத்தவரை பெரும் தோல்விதானென்று அவன் கருதினான். நான்கு சுவர்களுக்கிடையே நடத்தும் ஆட்சியில் சுவருக்கொரு கட்சியாக குடும்பத்தவர் பிரிந்திருந்ததைத் தவிர்க்க முடியாத அவனது கொள்கைகளிலேயே சில சமயம் அவனுக்கு சந்தேகம் ஏற்படும்..தவிர்க்க முடியாதவைகள் அனுபவித்தே தீரப் படவேண்டும் என்ற விரக்தி மனப்பான்மையில்தான் அவனால் வாழ்க்கை நடத்த முடிந்தது..     கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்ச்சிகளில் எல்லாம் மனம் செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு, ஒரு அற்ப ஆசை ஏற்பட்டது.       “அம்மா,இப்போதிருக்கும் இந்த நிலை காட்சி மாறி,நான் ஒரு குழந்தையாகத் தவழ வேண்டும்போல் இருக்கிறது.அப்படி நடக்குமானால் துன்பங்களே நிறைந்த இந்த வாழ்க்கை இருப்பதே அறியாத, நல்லது பொல்லாதது என்ற உணர்வே இல்லாத,பயம் கோபம் என்ற உணர்ச்சிகளே இல்லாத ,அன்பே தெய்வம் எனத் துலங்கும் எண்ணம் ஒன்றே உடையதான,கள்ளங்கபடம் இல்லாத பக்குவமான மனம் கொண்டவனாக மாறலாம் அல்லவா..அந்த நடக்க முடியாத காட்சியை மானசீகமாகவேனும் உணர வேண்டும் போல் இருக்கிறது..நான் ஒரு குழந்தையாம். உங்கள் மடியில் படுத்துக் கொள்கிறேனாம்” என்று கூறிக் கொண்டே, கல்யாணி அம்மாவின்மடியில் தலை வைத்துப் படுத்தான். கண்களை சற்றே மூ.டிக் கொண்டான்.பாபுவுக்கு ஏற்பட்ட இந்த ஆசையில் மனம் நெகிழ்ந்த கல்யாணி அம்மாவும் அவன் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தாள்.     கண்களை மூடியபடி படுத்திருந்தவன் புற உலகக் காட்சிகளைக் காணவில்லை. ஒளிமயமான உல்லாசபுரியின் அரியணையில், லட்சோப லட்சம் மக்கள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டான்.ஒரே அரியணை என்றாலும் எல்லோரும் இடம் பெறக் கூடியதான புதுமையுடையதாக இருந்தது.அங்கு கண்டவர்கள் எல்லோரும் குழந்தைகள்.அன்பின் அரவணைப்பில் கட்டுப் பட்டவர்கள். மெல்லத் தவ்ழ்ந்து சேருகிறது இன்னொரு குழந்தை. அது பாபுவின் சாயலையே கொண்டிருக்கிறது.       இன்பமான கற்பனையில் கிடந்தவன் உதடுகள் சற்றே விரிகின்றன. கல்யாணி அம்மா, ராஜு, விசு, சந்துரு ,ரவி, அனைவரும் பாபுவின் இந்தப் புதுமையான ஆசை நிறைவேறிக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்தவர்கள் அந்தப் புன்னகையையும் கண்டனர்.     ” அண்ணாவுக்குக் குஷி. குழ்ந்தை சிரிக்கிறது “-ரவியின் குரல் கேட்டதும் பாபு கண்களைத் திறந்து கொண்டு,பார்க்கிறான். தன்னைச் சுற்றிலும் அனைவரும் இருப்பதைப் பார்த்ததும் ஒரு அலாதியான திருப்தி ஏற்படுகிறது.        ”அம்மா, குழந்தை அழுகிறேனாம்.! நீ பால் புகட்டுவாயாம் ! அம்மா...ஆ ஆ  ஊ ஊ”     “ என்ன பாபு விளையாட்டு இது. “     “ நீ பால் தரலைன்னா நான் அழுவேன்.அம்ம்ம்மாஆ ஆ”  விளையாட்டின் பூரண சுவையை அனுபவித்துக் கொண்டிருந்த ரவி, ஓடிப் போய் பாலாடையும் பாலும் கொண்டு வந்தான்..      கல்யாணி அம்மாவும் பாலைப் புகட்டினாள் பாபுவுக்கு. இரண்டு மிடறு விழுங்கியவன் போதும் என்று சைகை காட்டினான். சுற்றும் ஒரு முறை எல்லோரையும் பார்த்துக் கொண்டான்.சற்றே கண்களை திருப்தியுடன் மூடினான். மறுபடியும் அதே காட்சி.! புதிய குழந்தை....பாபு....மெல்லத் தவழ்ந்து குழந்தைகள் உலகிற்குச் செல்கிறான்.முகத்தில் மீண்டும் புன்னகை.!     இந்தப் புன்னகை என்றுமே அழியாத புன்னகை.! உலகின் குரோத, விரோத கட்டுப் பாடுகளிலிருந்து விடுதலை தேடித் தந்த புன்னகை. !     ஆடவேண்டிய விளையாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டுக் களைப்பே இல்லாமல் படுத்துக் கிடந்த பாபுவை கண்ட கல்யாணி அம்மாவுக்கு உலகமே இருண்டு விட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. ஆயிரமாயிரம் சம்மட்டிகள் கொண்டு ஆயிரமாயிரம் பேர் இடிப்பதைப் போன்ற ஒரு வேதனை. அலறி விடுகிறாள்.     “ பாபு... பாபு...... “     “ அண்ணா.... அண்ணா.... “ சுந்தரபுரி போல் இருந்த இடம் மயானபுரியாகி விட்டது.                 அத்தியாயம்  பத்தொன்பது                                         அமர கவி பாரதிக்கு சமர்ப்பணம் (அன்றிரவு படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தேன். உறக்கம் வருவது போல் இருந்தாலும் உள்ளுணர்வு மட்டும் விழித்துக் கொண்டு தான் இருந்தது. அன்று மாலை  நடந்த பாரதி விழா நிகழ்ச்சிகளை எண்ணிக்கொண்டே இருந்தவன் எப்போது உறங்கினேன் என்றே தெரிய வில்லை. உடல் உறங்கிய நிலையில் உள்ளம் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த விழித்த நிலையில் நான் இந்தக் வையமே ஒரு கோள வடிவில் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டேன். மாறி மாறி இருளிலும் ஒளியிலும் இயங்கும் கோளத்தில் அந்தந்த தன்மைக் கேற்ப நிகழ்ச்சிகளும் நடக்கக் கண்டேன். இருளில் பொறாமை, குரோதம், அறியாமை இன்னது போன்ற பேய்களின் கூக்குரலும் ,ஒளியில் அன்பு ,நல்லெண்ணம்,அறிவாளியின் சந்துஷ்டி போன்ற மெய்ஞானப் பொலிவும் மாறி மாறிக் காட்சியளித்தது. இது மாறிவரும் உலக இயல்புகளைத் தெளிவுறத் தெரிவிப்பது போல் இருந்தது. சுற்றி கொண்டிருந்த கோளம் மெல்ல தன்னிலைக்கு வந்து நின்றபோது கோளத்தில் ஒரு பகுதி இருளிலும் ஒரு பாதி ஒளியிலும் இருக்கக் கண்டதும் நிகழ் கால நிகழ்ச்சிகள்தான் என் நினைவுக்கு வந்தது..விழித்துப்பார்த்ததும் கண்ட கனவுக்கு விளக்கம் காண முயன்றதன் விளைவே இந்த சிறிய எளிய என் முதல் நாவல். கண்ட விளக்கம் சரியா இல்லையா என்பதை இதைப் படித்துப் பார்த்த வாசக நண்பர்களுக்கே விட்டு விடுகிறேன். )       எங்கு பார்த்தாலும் உன் பேச்சு. எங்கு பார்த்தாலும் உன் நினைவுகள்.எங்கு பார்த்தாலும் நீ நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி இருக்கிறாய். பாபு.! மக்கள் மன்றத்தின் இந்த ஆண்டு விழா.மக்கள் உள்ளங்களில் களிப்பு விழாவாக இருந்திருக்கும் நீ நீயாக எங்கள் மத்தியில் இருந்திருந்தால்.....!      சிந்திப்பவன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், சிந்திக்காதவன் சிந்திக்கத் துவங்க வேண்டும் என்று எங்களுக்கெல்லாம் கூறி வந்த நீ சிந்தித்தே மறைந்து விட்டாயே..! அதனால் தானே உன் பேச்சும் செயலும் புரியாத புதிராக இருந்தது.     ஆயிரக் கணக்கானவர்கள் கூடும் கூட்டங்களிலெல்லாம் தனி மனிதன் என்ன நினைக்கிறான் எப்படி வாழ்கிறான் என்றெல்லாம் எண்ணிக் குழம்பும் நீ குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளத்தான் எல்லோருடைய நினைவிலும் கலந்து விட்டாயா,? பாபு.! இந்தியா பெற்ற சுதந்திரம் ஒருவரால் கிடைக்கப் பெறாதது. அதுபோல் இந்த சமுதாய மாற்றமும் ஒருவரால் ஆகாது என்று எண்ணித்தான் உன்னையே அதற்காக அர்ப்பணித்துக் கொண்டாயா.? புகழ் பெற்று வளர்ந்திருந்த நம் மக்கள் அரித்தெடுக்கப் பட்ட ஓலைச் சுவடிகளாக மாறி வருவது காணப் பொறுக்காமல் புதிய நகல் எடுத்துப் புதுப்பிக்க முயன்றாயே. உன் முயற்சி வெற்றி அடைந்து வருவதை நீ காண்கிறாயா.? உனக்கு அது முடியும் ஏனென்றால் நீதான் நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி எங்கும் இருக்கிறாயே. !      கற்பூரப் பாத்தி கட்டி, கத்தூரி எரு போட்டுக் கமழ் நீர்ப் பாய்ச்சிப் பொற்பூர உள்ளியதனை விதைத்தாலும் அதன் குணத்தையே பொருந்தக் காட்டும் என்று உணர்ந்தவன் நீ, உன் தொண்டெல்லாம் விழலுக்கிறைத்த நீர் போலாகுமோ என்று கலங்கித்தான் காலனிடம் சென்று விட்டாயா.?      தூங்கிக் கனாக் காண்பவர்களுக்கு வாழ்க்கை இன்ப வெள்ளமாகத் தோன்றும். விழித்துப் பார்ப்பவர்களுக்குத்தான் வாழ்க்கை ஒரு கடமைக் கடலாகத் தோன்றும் என்பாயே.! அந்தக் கடமைக் கடலிலேயே மூழ்கி விட்டாயே.! பாபு. ! நியாயத்தின் மாறி வரும் மதிப்புகளை வாழ்வில் புரிந்து கொள்ளாவிட்டால்.அது துன்ப மயமாகவே விளங்கும் என்று அறிவுறுத்துவாயே, புரிந்து கொண்ட உன் வாழ்க்கை இன்பமய மானதாகத்தான் இருந்ததா.?     பசித்திருப்பவன் முன்பு ஆண்டவன் சோற்று உருவில்தான் வர முடியும் என்ற காந்தியின் வாக்கை நினைவுறுத்துவாயே ,உன்னால் அவர்கள் முன் உன் உருவில் வர முடியாது என்றுதான் நீ  நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி விட்டாயா. ?       பாபு எண்ண எண்ண சித்தம் கலங்குகிறது.மனத்தை இருள் சூழ்கிறது. இருண்ட வாழ்வின் விடி வெள்ளியாகத்தான் உன்னை நீயாக இல்லாமல் உன் நினைவாகக் காண்கிறோமா.!    பாபு,! அஞ்சா நெஞ்சம் படைத்தவன் நீ உன் சொந்த வாழ்க்கையில் தோல்விகளைக் கண்டு அஞ்சி விட்டாயா.? உன் மறைவாவது அந்தத் தோல்வியை வெற்றிப் பாதையில் திருப்பும் என்றுதான் நீ நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறி விட்டாயா.?    பாபு, ! நீயாக இல்லாமல் நினைவாக எங்கள் உள்ளங்களில் நந்தா விளக்காக எரியும் உனக்கு, நீ நினைத்த வற்றை முடிப்பதே நாங்கள் செய்ய வேண்டிய கடமை. ! நடத்தி முடிப்போம் என்று உறுதி கூறுகிறோம். அதுவே எங்கள் நினைவில் என்றைக்கும் இருக்கப் போகும் உனக்கு நாங்கள் செய்யும் அஞ்சலி.! “  ------------------------------------------------------------------------                            நிறைவடைந்தது