[] []   நாலம்பல  யாத்திரை   []   ஆசிரியர் : கைலாஷி ஆசிரியர் மின்னஞ்சல் முகவரி : muruganandams@rediffmail.com  மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com  மின்னூலின் காப்புரிமை: Creative Commons Attribution -NonCommercial-ShareAlike ( யாரும் பகிரலாம், விற்பனை கூடாது)  அட்டைப்படம் : மு. பிரசன்னா  மின்னஞ்சல் : udpmprasanna@gmail.com   மின்னூலாக்கம் : சு.ஜெயஶ்ரீ  மின்னஞ்சல் : jayasrijai3@gmail.com  பொருளடக்கம் முன்னுரை 4  1.திருப்பிரயார் இராமசாமி ஆலயம் 8  2.இரிஞ்ஞாலக்குடா பரதன் ஆலயம் 20  3.திருமூழிக்களம் லக்ஷ்மணப்பெருமாள் ஆலயம் 32  4.பாயம்மல் சத்ருக்னன் ஆலயம் 43  5.திருச்சூர் வடக்கு நாதர் ஆலயம் 51  6.திருச்சூர் பரமேக்காவு பகவதி ஆலயம் 69  7.திருச்சூர் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் 73  8.குருவாயூரப்பன் ஆலயம் 77  9.கொடுங்கல்லூர் பகவதி ஆலயம் 84  10.திருஅஞ்சைக்களம் மஹாதேவர் ஆலயம் 88  11.காலடி தரிசனம் 99  12.பொக்குளங்கரை பகவதி பூரம் 107  13.ஆயிரங்கண்ணி பூரம் 113  FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி 123                    முன்னுரை []   நமது தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு.  ஆடி மாதம் அம்மன் மாதம் என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அம்மன் ஆலயங்களில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் கூழ் வார்த்தல் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதற்கு காரணம் ஆடி மாதம் அயன மாதம் ஆகும். சூரியன் தனது வடக்கு நோக்கிய யாத்திரையை முடித்து தெற்கு நோக்கிய யாத்திரையை துவக்கும் மாதம்  இது. அதாவது தக்ஷிணாயணம் துவங்கும் மாதம். தக்ஷிணாயனக் காலம் தேவர்களின் இரவு நேரம் என்பதால் ஆடி மாதம் தேவர்களின் சாயரட்சை அதாவது கோதூளிக் காலம் என்பது ஐதீகம். பித்ருக்களுக்கு மிகவும் உகந்த காலம். “ஆடிப்பட்டம் தேடி விதை”, “ஆடி காற்றில் அம்மியே பறக்கும்” என்பதெல்லாம் ஆடி மாதத்தைப் பற்றிய பழமொழிகள்.  ஆடியில் தென் மேற்கு பருவ மழை ஜோராக பெய்யும் மாதம் எனவே பல தொற்று நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளதால் அதை தடுப்பதற்காக வேப்பிலை, வெங்காயம், கலந்து கேழ்வரகு கூழ் படைத்து அம்மனை வழிபாடு செய்வதை ஏற்படுத்தினர் முன்னோர்கள். வான் முகில் வளாது பெய்து, பூமி குளிர்ந்து, நிலம் செழித்து பயிர்கள் நன்றாக வளர்ந்தது சூல் கொண்டு இருப்பதை உணர்த்தும் விதமாக அம்பாளே சூல் கொண்டிருப்பதாக பாவித்து ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளை காப்பு நடத்திக் கொண்டாடும் மாதம், பூமி தேவியின் அம்சமான பூமாலையும், பாமாலையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் அவதரித்த நாளும் அதுவே. ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்திற்கு மிகவும் உகந்த நாள். ஆடி பௌர்ணமியன்றுதான் ஹயக்ரீவர் அவதாரம் செய்தார். ஆடிக் கிருத்திகையும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பெரிய திருவடியாம் கருடாழ்வார் அவதாரம் செய்தது ஆடி சுவாதியில்தான். ஆடி பதினெட்டாம் பெருக்கன்று வான் பொய்ப்பினும் தான் பொய்யா பொன்னி நதியாம் காவிரி நதியைப் போற்றிக் கொண்டாடி அவளை பூசிக்கும் நாள். நமது தமிழகத்தில் இவ்வாறு என்றால் அண்டை மாநிலமான கேரளத்தில் ஆடி மாதம் இராமாயண மாதம் என சிறப்பாக கொண்டாடுகின்றனர். தமிழகத்தை விட பல மடங்கு தென் மேற்கு பருவக் காற்றால் மாரி கேரளத்தில் பொழிகின்றது. எனவே இவர்கள் இம்மாதத்தை மிகவும் கடினமான மாதமாக கருதுகின்றனர்.  மழைக்காலம் என்பதால் பயிர் சாகுபடி மிகவும் சிறப்பாக இருக்கும், எனவே இம்மாதத்தில் தொற்று நோயை தவிர்க்கும் வண்ணம் தினமும் இராமாயணத்தை வீட்டில் பாராயணம் செய்யும் வழக்கில் உள்ளது. கேரளத்தில் இராம சகோதரர்கள் நால்வருக்கும் தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒரே நாளில் நான்கு தலங்களிலும் சென்று நான்கு சகோதரர்களையும் பக்தர்கள்  வழிபடுகின்றனர்.  இந்த நான்கு தலங்களுக்கும் மற்றும் அருகில் உள்ள சில தலங்கள் மற்றும் இரண்டு அம்மன் கோவில்களின், கேரளத்தின் சிறப்பு மிக்க யானைகள் அணிவகுத்து கொண்டாடும் பூரம் உற்சவத்தையும் காணும் பாக்கியம் அடியேனுக்கு வாய்த்தது.  அவ்வனுபவத்தை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்நூல்.  வம்மின் அன்பர்களே இராம சகோதரர்கள் நால்வரையும் திவ்யமாக சேவிக்கலாம். இராமாயண சகோதரர்களுக்கான ஆலயங்கள் எங்கு அமைந்துள்ளன, அவை யாவை. அங்கு செல்லும் பாக்கியம் எப்படி கிட்டியது. மேலும் எந்தெந்த ஆலயங்களை தரிசித்தோம் என்ற தகவல்களை முதலில் காணலாம். பாரத நாட்டில் இரண்டு மாநிலங்களில் இராமாயண சகோதரர்களான  இராமர், பரதன், இலக்குவன் மற்றும் சத்ருக்னன் ஆகிய நால்வருக்கும் ஆலயங்கள் அமைந்துள்ளன.  முதலாவது கேரளத்தில் திருச்சூர் மற்றும்  கொச்சி இடைப்பட்ட பிரதேசத்திலும், இரண்டாவது உத்தராகண்ட் மாநிலத்தில்  தேவ பிரயாகை  மற்றும் ஹரித்வார் - ரிஷிகேஷ்  தலங்களிலும் இவ்வாலயங்கள் அமைந்துள்ளன. வடக்கில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் தேவப் பிரயாகையில் இராமபிரானுக்கும், லட்சுமண ஜுலாவில் இலக்குவனுக்கும், ரிஷிகேசத்தில் பரதன்,  மற்றும் சத்ருக்னனுக்கும் ஆலயங்கள் உள்ளன. அது போலவே கேரளாவிலும் நான்கு சகோதரர்களுக்கான ஆலயங்கள் அமைந்துள்ளன.  இவை குருவாயூரிலிருந்து தெற்கே செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் (NH-17) அருகே  அமைந்துள்ளன.  இவ்வாறு நான்கு கோவில்கள் கேரளத்தில் உள்ளதற்கான ஐதீகம். விஷ்ணு பக்தரான வக்கேகைமால் என்பவர் கூடல் மாணிக்கம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்தார். இவரது கனவில் வந்த பெருமாள் கடற்கரையில் ஒரு புதையல் உள்ளது என்று கூறி அழைத்து சென்றார்.  அவர் காட்டிய இடத்தில் நான்கு அற்புத சிலைகள் ஒன்று போலவே இருந்தன. துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பூமிக்கு வந்த போது பூஜித்த மூர்த்தங்களான அச்சிலைகள் தசரத புத்திரர்களின் சிலைகள் ஆகும். அவர்களை அவர் திருப்பரையார்,  இரிஞ்ஞாலக்குடா, திருமொழிக்களம், பாயம்மால் ஆகிய நான்கு தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.  அவை “நாலம்பலம்” என்றழைக்கப்படுகின்றன  திருச்சூர் திருப்பிரயாரில் இராமர் ஆலயம் – எர்ணாகுளம் குருவாயூர் தேசிய நெடுஞ்சாலையில் குருவாயூரில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.   இரிஞ்ஞாலக்குடாவில் பரதர் ஆலயம்  - திருச்சூர் கொடுங்கல்லூர் சாலையில் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ உள்ளது. திருமூழிக்களத்தில் லக்ஷ்மணன் ஆலயம் ஆலுவாய்க்கும் மாளுக்கும் இடையில் உள்ளது. இத்தலம் நம்மாழ்வாரல் பாடல் பெற்ற   திவ்யதேசம் ஆகும். பாயம்மாலில் சத்ருகனர் ஆலயம் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. இராம சகோதரர்கள் நால்வரையும் தரிசித்தால் தர்மநெறியில் பொருள் தேடி, நல்வழியில் இன்பம் அனுபவித்து இறுதியில் மோட்சமும் அடையலாம் என்பது ஐதீகம். நான்கு சகோதர்களும் நான்கு வேத ரூபமாக அருள் பாலிக்கின்றனர் என்பது ஐதீகம். ஆடிமாதத்தில் இந்நான்கு கோவில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதை “நாலம்பலம் தொழல்” என்கின்றனர் இவர்கள். திருப்பிரயாற்றில் நிர்மால்ய தரிசனத்தையும், இரிஞாலக்குடாவில் உஷத் கால பூஜையையும், திருமூழிக்களத்தில் உச்சிக்கால பூஜையையும், பாயம்மல்லில் அத்தாழ பூஜையையும் சேவிக்க வைகுண்டப்பேறு பெறுவர் என்பது ஐதீகம். எனவே பல பக்தர்கள் ஆடி மாதத்தில் ஒரே நாளில் நடந்தே சென்று இந்நான்கு ஆலயங்களிலும் தரிசனம் செய்கின்றனர். இத்தலங்களில் உள்ள பெருமாள்களை வழிபட எதிரிகளால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அடியேன் ஒரு முறை மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை சென்ற போது திருமூழிக்களத்தில் இலக்குவனை முதலில் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது அப்போது இவ்வாறு இராம சகோதரர்கள் நால்வருக்குமான ஆலயங்கள் கேரளத்தில் அமைந்துள்ளன என்ற தகவல் தெரிய வந்தது. அப்போதே அவன் அருளால் நான்கு தலங்களையும் சேவிக்க வேண்டும் என்ற அவா தோன்றியது. மற்றொரு முறை சோட்டாணிக்கரை செல்லும் போது திருப்பிரயாரில் இராமபிரானை மட்டும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. எப்போதாவது நாலம்பலத்தையும் ஒரே தடவையில் தரிசிக்கும் பாக்கியம் கிட்ட வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டிக்கொண்டிருந்தேன். அவரருளால் அவ்வாய்ப்பு கிட்டியது. ஒரு சமயம் அடியேனது நண்பர் திரு.சுந்தர் அவர்கள் திருச்சூரில் உள்ள ஒரு நண்பரின் இல்லத்திற்கு சென்று மூன்று நாட்கள் தங்கிவிட்டு வந்தேன்.  அருகில் உள்ள பல ஆலயங்களை தரிசித்தோம். பிப்ரவரி மாதம் அவர்கள் இல்லத்தின் அருகில் உள்ள இரு  அம்மன் ஆலயங்களில் பூரம் உற்சவம் சிறப்பாக நடக்கும் அதற்கும் வரச்சொல்லி என்னை  அழைத்தார்கள் என்றார். அப்போது அடியேனையும் உடன் அழைத்துச் செல்ல முடியுமா? முடிந்தால்  நாலம்பலத்தையும் தரிசிக்கலாம்,  கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். அவரும் அவர்களிடம் கலந்து பேசி,  செல்லலாம்  என்றார்.  ஒரு நான்கு  நாட்கள் யாத்திரையாக திட்டமிட்டு தொடர்வண்டியில் முன்பதிவு செய்தோம். இந்த யாத்திரையின் போது திருச்சூர் வடக்கு நாதர் ஆலயம், திருப்பிரயார், குருவாயூர், இரிஞ்ஞாலக்குடா, பாயம்மல், கொடுங்கல்லூர், திருஅஞ்சைக்களம், காலடி,  திருமூழிக்களம், திருச்சூரில் திருவம்பாடி கிருஷ்ணர் மற்றும் பரமக்காவு பகவதி ஆலயங்கள் மற்றும் பொக்குளங்கரை என்ற ஊரின் உள்ள அம்மன் ஆலயத்தின் பூரம் உற்சவம் மற்றும் ஆயிரங்கண்ணி அம்மன் ஆலயத்தின் பூரம் உற்சவம் ஆகியவற்றை சேவித்தோம். மேலும் கேரளத்தின் காயலில் படகு வலமும் வந்தோம்.  வாருங்கள் அன்பர்களே ஒவ்வொரு ஆலயமாக தரிசித்து கேரளத்தின் பூர உற்சவம் எவ்வாறு சிறப்பாக சில  ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது என்பதையும் காணலாம்.                               அத்தியாயம் – 1  1.திருப்பிரயார் இராமசாமி ஆலயம் []                                   கேரள மாநிலத்தில் திருச்சூர் நகருக்குத் தென்மேற்கே சுமார் இருபது கி.மீ. தொலைவில் கொடுங்கலூருக்கும் குருவாயூருக்கும் இடையில் திருப்பிரயார் இராமர் ஆலயம் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு திருச்சூரிலிருந்தும் குருவாயூரிலிருந்தும் நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. ஒரு காலத்தில் இவ்வாலயத்தை மூன்று பக்கமும் ஆறு சூழ்ந்திருந்ததாம் (திரி-மூன்று, புற-பக்கம், ஆறு- நதி)  எனவே திரிப்புறஆறு என்பதே  திருப்பிரயார் என்று மருவியது என்பர். இராமாயண சகோதரர்களை கண்டெடுத்த வக்கேகைமாலுக்கு ராமபிரானை திருப்பிரயாரில் எந்த இடத்தில் பிரதிஷ்டை செய்வது என்ற குழப்பம் நீடிக்க, முடிவில் இது பற்றி தேவ பிரசனம் கேட்டபோது, ‘ஒரு மயில் ஆகாயத்தில் பறக்கும். அது பறக்குமிடத்திற்கு நேர் கீழே பிரதிஷ்டை செய்’ என்று அசரீரி சொன்னது. அப்படியே செய்யத் தீர்மானித்து, பிரதிஷ்டா வைபவத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து மயிலின் வருகைக்காக காத்திருந்தார்களாம். வெகுநேரமாகியும் மயில் வரவேயில்லையாம். ஆனால், திடீரென்று பக்த கோடிகளில் ஒருவர் ஒரு கொத்து மயிலிறகுகளை வைத்துக்கொண்டு கூட்டத்தினரிடையே இருப்பது கண்ணில் பட்டதாம். அதையே மயிலாகப் பாவித்து, அவர் நின்ற இடத்திலேயே இராமரைப் பிரதிஷ்டை செய்தார்களாம். ஆனால், இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட உடனேயே பிரசனத்தில் சொன்னபடியே  ஒரு மயில் ஆகாயத்தில் தோன்றியதாம். அதன் நிழல் விழுந்த இடத்தில் கோயிலின் ‘பலிக்கல்லைப்’ பதித்தார்களாம். அதனால் இத்தலத்தில் பலிக்கல்லும் மூலஸ்தானத்திற்கு நிகரானதாக கருதப்படுகிறது. பல ஆண்டு காலம் அப்பலிக்கல் சுழன்றுகொண்டே இருந்ததாம். அதன் காரணம் என்ன என்று யாருக்கும்  தெரியவில்லை. ஒருசமயம் ‘நாரணத்து பிராந்தன்’ என்ற துறவி இக்கோயிலுக்கு வந்தார். இவ்வாறு  பலிக்கல் சுழல்வதைப் பார்த்துவிட்டு, கோயில் பூசாரியை அழைத்து வரச் செய்து, அந்தக்கல் மீது ஒரு ஆணியை அடிக்கச் சொன்னாராம். ஆணி அடித்தபோது சில மந்திரங்களை உச்சாடனம் செய்தாராம். ஆணி அடித்ததும் பலிக்கல் சுழல்வதை நிறுத்திவிட்டதாம். இன்றும் அந்தப் பலிக்கல்லும், அதில் ஆணி அறைந்திருப்பதையும் காணலாம். இவ்வாறு இராமபிரான், திருபிரயார் திருத்தலத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். கோயிலுக்கு முன்னால் ஓடும் ஆறும், கரையில் செழித்தோங்கியுள்ள தெங்கு மரங்களும், இவ்வாலயத்தை வளமும் வனப்பும் கொழிக்கும் சிருங்கார நந்தவனமாகவும், அழகும் அமைதியும் தவழும் திருத்தலமாகவும் மிளிரச் செய்கின்றன. இத்தலத்தில் இராமரோடு அவருக்கு வலப்புறம் ஸ்ரீதேவியும், இடப்புறம் பூதேவியும் எழுந்தருளி இருக்கின்றனர் அதற்கான காரணம். பலிக்கல் சுழல்வதை நிறுத்திய நாராணத்து பிராந்தன்தான் ஆலயத்தில் உள்ள துர்ச்சக்திகளின் உக்கிரத்தைக் குறைக்க மூலவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்தார் என்பது ஒரு ஐதீகம். எனவே அதிசயமாக சீதாதேவி இவ்வாலயத்தில் இடம் பெறவில்லை. []   தீவ்ரா நதிக்கரையில் எழிலாக இராமர் ஆலயம் இன்னொரு ஐதீகம்? கேரளத்தில் புகழ் பெற்ற வில்வ மங்கலம் சுவாமிகள் ஒருசமயம் இத்தலத்திற்கு  வந்தாராம். அவர் இராமர் சந்நதி முன் நின்றபோது, மேற்கு வாசல் வழியாக ஸ்ரீதேவியும், பூதேவியும் சுவாமியைப் பூஜிப்பதற்கு வருவதைக் கண்டாராம். அவர்கள் இருவரும் இங்கே இருப்பதுதான் முறை என்று நினைத்த வில்வ மங்கல சுவாமிகள் சட்டென்று, அவர்கள் திரும்பிப் போக முடியாதபடி மேற்கு வாசலை மூடித் தாளிட்டு விட்டாராம். போகும் முன் ஸ்ரீதேவியையும், பூதேவியையும் இராமருக்கு இருபுறமும் பிரதிஷ்டை செய்துவிட்டுப் போய்விட்டாராம். அவர்கள் இருவரும் மீண்டும் வெளியே போகாமலிருப்பதற்காக மேற்கு வாசல் இன்றும் மூடியே இருக்கின்றதாம். இத்திருப்பிரயார் இராமரை ‘‘திருப்பிரயார் தேவர்’’ என்றே அழைக்கின்றார்கள். இவருக்கு நிறைய சொத்துகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவை கிடைத்ததே ஒரு அதிசயமான சம்பவத்தினால்தானாம். ஒருசமயம் திருப்பிரயார் கோயிலுக்கு திப்புசுல்தான் விஜயம் செய்தாராம். அப்போது அவரிடம் சிலர், ‘‘இந்த சுவாமி மகா சக்தி வாய்ந்தவர்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘‘என்ன சுவாமி, வெறும் கற்சிலைதானே?’’ என்று எண்ணிய திப்பு, கையிலிருந்த கழியால், பெருமானுடைய ஒரு கையில் லேசாக ஒரு தட்டு தட்டினாராம். தட்டின இடத்தில் உடனே ரத்தம் கொப்பளித்துப் பெருகியதாம். திடுக்கிட்டுப் போய் உடனே தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்ட திப்பு, பிராயச்சித்த அபராதமாக, ஏராளமான நிலபுலன்களை கோயிலுக்கு மான்யமாக அளித்தாராம்.   இத்தலத்தில் ஆஞ்சநேயருக்குத் தனிச்சந்நதி இல்லை, ‘கண்டேன் சீதையை’ (திருஷ்ட சீதா) என்று ஆஞ்சநேயர், இராமபிரானிடம் வந்து ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும் கூறிய தலமாக கருதப்படுகிறது.  இவையெல்லாம் இத்தலத்துடன் கூடிய சில ஐதீகங்கள். []   ஆலய  மேற்கு  நுழைவாயிலில் உள்ள ஒரு அற்புத ஓவியம் வாருங்கள் ஸ்ரீராமரை சேவிக்கலாம். நெடுஞ்சாலையில் இருந்து உள்ளே சென்றவுடன் அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது. மேற்கு ஆலய கோபுரம் கேரளப்பாணியில் எளிமையாக அமைந்துள்ளது அருமையான இராமபட்டாபிஷேகம் மற்றும் இராமேஸ்வர கடற்கரை ஓரத்தில் இலங்கைக்கு பாலம் கட்ட வானரங்களுடன் இராமபிரான் ஆலோசனை செய்யும் ஓவியங்கள் கோபுர சுவற்றில் கேரள பாணியில் அருமையாக வரைந்துள்ளனர்.  அவற்றை இரசித்துக் கொண்டே ஆலயத்தை வலத்தை துவக்குகின்றோம். கோபுர வாயிலை கடந்தவுடன் மூடியுள்ள மேற்கு வாயிலையும் அதற்கு மேலே அனுமன் இராமனிடன் சீதா தேவியிடம் பெற்று வந்த சூடாமணியை அளிக்கும் கேரள பாணி ஓவியத்தையும் கண்டு களிக்கலாம். சுற்றம்பலம் எனப்படும்  இக்கோயிலின் வெளிப்பிராகாரம் மிக  விலாசமாக அமைந்திருக்கிறது. இப்பிரகாரத்தில் இராமாயணம் முழுவதையும் ஒவியங்களாக அமைத்திருக்கின்றனர் என்பது ஒரு சிறப்பு.   வடக்குப் பிராகாரத்தில் ஒரு  பெரிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. கோசாலா   கிருஷ்ணருக்கும் தனி சந்நிதி உள்ளது. பல பக்தர்கள் அங்கு அமர்ந்து இராம நாமம் ஜெபித்துக் கொண்டிருந்தனர்.  []   பள்ளியோடம் வடகிழக்கு மூலையில் பள்ளியோடம் இருப்பதை காண்கிறோம். பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ள அப்பள்ளியோடத்தின் ஒரு புறம் வாலில் மணி தொங்க, மண்டியிட்டு அமர்ந்த கோலத்தில்  திருக்கரங்களை கூப்பி அமர்ந்த கோலத்தில் அனுமனை தரிசிக்கின்றோம். இப்பள்ளியோடத்தில் மீன மாதம்(பங்குனி)  இராமசந்திர மூர்த்தி தீவ்ரா நதியை கடந்து தேவமேளா என்றழைக்கப்படும் ஆறாட்டுபுழா தர்மசாஸ்தா ஆலயத்திற்கு பூரம் உற்சவம் காண எழுந்தருள்கின்றார். []                                         இவ்வாலயம் கொச்சி தேவஸம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கொச்சி அரசர்கள் தங்களை சூரிய குலத்தோன்றல்களாக கருதுகின்றனர். இராமபிரானும் சூரிய குலத்தவர் தானே. எனவே கொச்சி மகாராஜா தான் கட்டிய ஆறாட்டுப்புழா தர்மசாஸ்தா ஆலயத்தின் பூரத்திருவிழாவிற்கு இராமரை எழுந்தருள செய்வித்தார். அது இன்று வரை தொடர்கின்றது. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித்தீருமே இம்மையே இராம என்னும் இரண்டெழுத்தினால்  - என்றபடி  இராமன் தாரக பிரம்மம் தனது நாமத்தை உச்சரித்தாலே இந்த சம்சாரக்கடலை கடத்த வைக்கின்ற இராமன் இப்பள்ளியோடத்தில் தீவ்ரா நதியைக் கடக்கின்ற போது அவருடன் கடப்பவர்களுக்கு மறு ஜென்மம் இல்லை என்பது ஐதீகம்.   கர்ப்பகிரகத்திற்கு எதிரே  கிழக்குப் பக்கம் திருப்பிரயாறு ஓடுகின்றது பார்க்க பார்க்க அருமையான காட்சி. ஆற்றின் மறு கரையில் தென்னை மரங்கள் காற்றில் அசைந்தாட, தென்னங்குலைகள் ஏராளமாக காய்த்துத் தொங்க  நுப்பும் நுரையுமாக தீவ்ரா என்றும் அழைக்கப்படும் திருப்பிரயாறு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதே ஒரு பரவசம். ஆற்றுக்கு சென்று நீராட கோவிலிலிருந்து படிகள் அமைத்துள்ளனர். இவ்வாற்றில் உள்ள மீன்களுக்கு உணவிடுவது சிறப்பாக “மீனூட்டு” என்றழைக்கப்படுகின்றது. தென்பிரகாரத்தில் வெடிசாலை உள்ளது. இத்திருக்கோயிலில் வெடி வழிபாடு மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இங்கே காணிக்கை செலுத்தினால், வெடியை நம் கண் முன்னேயே வெடிக்கிறார்கள். ஒற்றை வெடியிலிருந்து ஆயிரம் வெடி வரையில், ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப பிரார்த்தனை செய்துகொண்டு, பணம் செலுத்தி வெடி வழிபாடு நடத்துகிறார்கள். வெடி வழிபாடு இங்கு முக்கியத்துவம் பெறக் காரணம் அனுமன்தான். ராமபிரானின் கட்டளைப்படி, சீதாதேவியைச் தேடிச்சென்ற அனுமன், இலங்கையில் ராவணனிடம் சிறை பட்டிருக்கும் நிலையைக் கண்டு வந்து தன் தலைவனிடம் ‘கண்டேன் சீதையை’ என்ற இன்பச் செய்தியை அதிர்வேட்டுப் போட்டார் போல சொல்லி மகிழ்ச்சியை ஏற்படுத்தினாராம். அதன் பொருட்டே, அந்த மகிழ்ச்சியைத் தாமும் பெற வேண்டும் என்பதற்காகவே பக்தர்களும் அதிர்வேட்டுப் போட்டு அறிவிப்பதாக ஐதீகம்.  கருவுற்ற பெண்மணிகளின் சுகப்பிரசவத்திற்கும் இந்த ‘வெடி வழிபாடு’ சிறந்ததாகக் கருதப்படுகிறது. இத்தெற்கு பிரகாரத்தில் ஐயப்பன் சன்னதி அமைந்துள்ளது. அழகே உருவாக சாஸ்தா பால உருவில் கையில் பால் கிண்ணத்துடன் அருள் பாலிக்கின்றார்.      []   வெளிச்சுற்றை முடித்து விட்டு ஸ்ரீகோவிலின் உள்ளே செல்லும் போது  பன்னிரெண்டு பிரமாண்டமான தூண்களைக் கொண்ட மண்டபத்தை கடக்கின்றோம். இம்மண்டபத்தில் தசாவதாரக் காட்சிகள் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன, உயரமான நில விளக்கு ,துலாபாரம் ஆகியவை இம்மண்டபத்தில்  உள்ளன. விளக்கில் கருடன் இல்லை ஆனால்  அனுமன் அருள் பாலிக்கின்றார், அவரும் கதகளியில் எப்படி இங்கு வேடமணிவார்களோ அது போல அமைத்துள்ளது ஒரு சிறப்பு. ஸ்ரீகோவிலின் உள்ளே நுழையும் வாயிலில் நுணுக்கமான மரவேலைப்பாடுகளுடன் கூடிய முகப்பு, வலப்பக்கம் அனுமனையும், இடப்பக்கம்  தாமரை மாலையுடன் இராம பிரானையும் கதகளி கோலத்தில் எழிலாக அமைத்துள்ளனர். இக்கோவிலின் நமஸ்கார மண்டபத்தில் இன்றும் ஹனுமன் அரூபமாக  எழுந்தருளியுள்ளதாக ஐதீகம். அன்று பிராட்டியை தேடச்சென்ற மாருதி திரும்பி வந்த அன்னையைக் காணாதச் சோகத்தில் இருந்த இராமபிரானிடம்  "கண்டனன் கற்பினுக்கு  அணியைக் கண்களால் தெண் திரை அலைகடல்  இலங்கைத் தொல் நகர் அண்டர் நாயக இனித்  துறத்தி ஐயமும்  பண்டுள துயரும்’ என்று அநுமன் பன்னுவான். – என்று கம்ப இராமயணத்தில் கவி சக்கரவர்த்தி கம்பர் பாடியபடி, ”திருஷ்ட சீத (கண்டேன் சீதையை)” என்று கூறினாராம்.   []                                 கண்டேன் சீதையை சிரஞ்சீவியாக இன்றும் இம்மண்டபத்தில் இருந்து கண்டேன் சீதையை என்று கூறிக் கொண்டிருக்கிறாராம். எனவே இவ்வாலயத்தில் ஹனுமனுக்கு தனி சன்னதிக் கிடையாது.    மண்டபத்தில் இராமயணத்துடன் தொடர்புடைய நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய 24 மரச்சிற்பங்கள் கொள்ளை அழகு. தினமும் மாலை வேளைகளில் இராமதூதனுக்கு அவல் நைவேத்தியம் படைக்கிறார்கள்.  வட்ட வடிவ (ஸ்ரீகோவில்) கருவறையைச் சுற்றிலும் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. செப்பு தகடால் வேயப்பட்ட விமானம், அபிஷேக தீர்த்தம் வரும் கல்குழாயைப் பூதகணம் ஒன்று தலையில் தாங்கியிருப்பது போன்ற அமைப்பு அபூர்வமானது, அழகானது. இவ்வாலயம் அற்புதமான ஓவியங்கள், நுணுக்கமான வேலைப்பாடுடைய மரச்சிற்பங்கள் என்று ஒரு கலைக்கூடமாக விளங்குகின்றது. மூலவர் இராமபிரான் திரிப்பிரயாரப்பன் என்றும் திரிப்பிரயார் தேவர் என்றும் அழைக்கப்படுகின்றார். சதுர்புஜ விஷ்ணு திருக்கோலத்தில் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கோதண்டம், அக்ஷமாலையுடன் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார் இராமபிரான். திருமார்பில் ஸ்ரீவஸ்தமும் கௌஸ்துபமும் அலங்கரிக்கின்றன. கரன் என்ற அரக்கனை வென்ற கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றாராம். திருக்கரத்தில் வில் உள்ளதாலும், கருடன் இல்லாததாலும் இராமபிரானாக வழிபடுகின்றனர். திருக்கரங்களில் அக்ஷமாலை இருப்பதால் பிரம்மாவின் அம்சமாகவும், மேலும் தெற்கு நோக்கி லிங்க ரூபத்தில் தக்ஷிணாமூர்த்தியும் எழுந்தருளியிருப்பதால் இவர் மும்மூர்த்தி ரூபராகவும் வணங்கப்படுகிறார். மூலவர் இராமர் மிக அழகாக இருக்கிறார். அந்த அருள் சிந்தும் கமல இதழில் பரவும் புன்னகை பரவசப்படுத்துகிறது. கழுத்திலே கௌஸ்துபமும் தரித்திருக்கிறார். மார்பிலே வத்ஸம் இலங்குகிறது. கோதண்டமும், குளிர் முகமும், கருணைக் கண்களும் சங்கும், சக்கரமுமாகப் பொன்னொளி வீசி நிற்கும் பெருமானைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். இன்றும் மூலவிக்ரகத்தை பொன் தகட்டால் மூடியிருக்கிறார்கள். ஏனென்றால் அதன் உள்ளே உள்ள கல்லாலான சிலை வெகு பழமையானதாகையால் அதை எடுத்துவிட்டு, புதிதாக ஒன்றைச் செய்து வைக்க ஒருசமயம் விரும்பினார்கள் ஆலயத்தார். பிரசன்னம் பார்த்தபோது, ‘‘என்னைத் தொடாதே!’’ என்று பதில் வந்ததாம். எனவே சிலை பழுதுபட்டு விடாமல் காக்க பஞ்ச லோகத்தால் ஒரு கவச உறை செய்து அதை மூலவர் மீது பதித்திருக்கிறார்கள். மூலவரைப் பார்த்தால் கற்சிலை போலவே தோன்றாது. பஞ்ச லோக விக்ரகம் போலத்தான் இருக்கும்.  விநாயகர், ஐயப்பன், கோசாலை கிருஷ்ணருக்கு சன்னதிகள் உள்ளன. தினந்தோறும் ஐந்துகால பூசையும் மூன்று சீவேலிகளும் முறையாக நடைபெறுகின்றன அவற்றுள் அதிகாலை நிர்மால்ய தரிசனமும், இரவு அத்தாழ பூசையும் விசேஷம். அத்தாழ பூசையின் போது தேவர்களும் ரிஷிகளும் பெருமாளை சேவிக்கின்றனர் என்பது ஐதீகம்.   []   திருப்பிரயார் ஸ்ரீராமர் ஸ்ரீகோவில் எழிலார்ந்த முகப்பு விருச்சிக மாத (கார்த்திகை) சுக்லபக்ஷ ஏகாதசி மற்றும் மீன மாத(பங்குனி) பூரம் மற்றும் கன்னி மாத (புரட்டாசி) திருவோண  “இராமர் சிற” எனப்படும் சேதுபந்தனம் ஆகியவை இவ்வாலயத்தின் முக்கிய உற்சவங்கள் ஆகும். இங்கு உற்சவங்கள் தொடங்குவதற்கு முன் ஆலயத்தில் கொடியேற்றுவதில்லை. ஆறாட்டு விசேஷம் மட்டும் ஒருவாரம் நடைபெறுகிறது. ஏழு நாட்கள் இராமபிரான் கோயிலை விட்டுப் புறப்பட்டு ஊர்வலம் வந்து திரும்புகிறார். கார்த்திகை ஏகாதசிக்கு இருவாரங்களுக்கு முன்பிருந்தே தினமும் ஆலயம் பூராவும் நிறைய மலர் மாலைகளால் அலங்கரிக்கிறார்கள். அதற்கு ‘நிறை மாலை’ என்று பெயர். அச்சமயத்தில் இலட்சதீபமும் ஏற்றப்படுகின்றது.  ஏகாதசிக்கு  ஒருவாரம் முன்பிருந்தே, சங்கீதக் கச்சேரிகளும், கதா காலேட்சபங்களும், கதகளி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகளும் கலையரங்குகளில் குதூகலமாக நடைபெறுகின்றது, ஏதாதசியன்று விடியற்காலை இராமபிரானை தரிசிப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர். அன்று காலை, நண்பகல், இரவு காலங்களில் பதினொன்றுக்கும் குறையாத யானைகள் அலங்கரிக்கப்பட்டு, அவற்றில் பெரிய யானையின் மீது சுவாமி எழுந்தருளி, பல்வகையான இன்னிசை வாத்தியங்களுடன் ஆலயத்தைச் சுற்றி பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஓணம் பண்டிகையின் போது  ஆற்றில் படகு போட்டிகளும் நடைபெறுகின்றது.  திருபிரயாரிலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள அவணங்காட்டு சாத்தனுக்கும், இராமர் கோயிலுக்கும் பிரிக்க முடியாத பந்தங்கள் இருக்கின்றன. இந்த சாத்தனை இங்கே இராமனின் திருமகனாகவே பக்தர்கள் கருதுகிறார்கள். சாத்தனின் உபத்திரவங்களால் தீர்க்கப் பெற்றவர்கள் இராமபிரானைச் சரணடைந்து, வழிபட்டு, தக்க காணிக்கை செலுத்தி நிவர்த்தி பெறுகிறார்கள். திருப்பிரயார் கோயிலில் உச்சிகால பூஜை முடிந்த பிறகே, அவணங்காட்டில் சாத்தனுக்கு பூஜை நடைபெறுகிறது. அப்போது தெய்வ அருள் வந்து பூசாரி பக்தர்களுக்கு நல்வாக்குக் கூறுவதும், நடைபெற்று வருகின்றன. வாக்கு கேட்க பல பக்தர்கள் வருகிறார்கள். இந்த இராமர் கோயிலில் ஒரு காலத்தில் தமிழ் பிரபந்தங்கள் பாடப்பெற்றனவாம். பிரபந்தம் பாடுவதும் அபிநயிப்பதும் இங்கே இருந்திருக்கிறது. அதை இங்கே ‘கூத்து’ என்கிறார்கள். ஆரம்பத்தில் பிரபந்தக் கூத்து என்றே அதை அழைத்தார்கள். பிரபந்தக் கூத்திலே பாட்டு, அபிநயம் இரண்டும் சேர்ந்திருக்கும். ஆனால், பிற்காலத்தில் பாட்டு நின்றுவிட்டது, கூத்து மட்டும் தொடர்கிறது. கூத்து முடியும்வரை,  எதிரே உள்ள கருவறையின் கதவுகளைத் திறந்தே வைத்திருப்பார்களாம். இங்கு வரும் பக்தர்கள் மற்றும் யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதியாக கோயில் நிர்வாகத்தார் பெரிய சத்திரம் ஒன்று கட்டி வைத்திருக்கிறார்கள்.  நாலம்பல தரிசனத்தில் முதலில் திருப்பிரயார் இராமரை சேவித்தோம். வாருங்கள் அடுத்து இரிஞாலக்குடாவில் பரதனை சேவிக்கலாம்.                   அத்தியாயம் - 2 2.இரிஞ்ஞாலக்குடா பரதன் ஆலயம் []                                 கூடல் மாணிக்கம் - சங்கமேஸ்வரர் பரதனை சேவிப்பதற்கு முன்னர் நான்கு இராம சகோதரர்களும் எவ்வாறு திருமந்திரத்தை உணர்த்துகின்றர் என்று அடியேன் படித்ததை பகிர்ந்து கொள்கிறேன் அன்பர்களே. ஓம் : சேஷத்வம்  நமோ : பாரதந்த்ரியம்  நாராயணா : கைங்கர்யருசி  - என்றவாறு கொள்ள வேண்டும்.  “ஓம் நமோ நாராயணா”  என்பது அட்டாட்சரம். இதில்....  ஓம் என்பது ப்ரணவம். நமோ என்பது பல்லாண்டு. நாராயணா என்பது நமது பகவானின் திருநாமம். இந்த அட்டாட்சரம் வேண்டியன அனைத்தையும் தரவல்லது. வேண்டுதலின்றியும் அன்றாடம் நாம் இம்மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இம்மூன்று சொற்களின் பொருளினை விளக்குவதற்கும் நினைவில் நிறுத்துவதற்கும் இராமாயணத்தின் மூன்று கதாபாத்திரங்களை எடுகோலாக கூறலாம்.... லக்ஷ்மணனின் பிறப்பின் பயனாக அவன் என்ன செய்தான்?.... பரதனின் பிறப்பின் பயனாக என்ன நிகழ்த்தினான்?.... சத்ருக்கனன் என்ன நிகழ்த்தி காட்டினான்? அவர்களின் செயல்களை புரிந்து கொண்டால் “ஓம் நமோ நாராயணா” என்னும் திருமந்திரத்தை  இலகுவாக புரிந்துகொள்ள இயலும்.  சேஷத்வம் : பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்தல். நான் எம்பெருமானுக்கே அடிமை என்று இருத்தல். ஆதிசேஷன் என்று கூறுகிறோமே. நான் எல்லா வகையிலும் பெருமானுக்கு அடிமை என்று அவனை சேஷியாக அதாவது ஆண்டானாக நாம் சேஷனாக அதாவது அடிமையாக இருத்தல்.  பாரதந்த்ரியம் : நான் பகவானையே சார்ந்திருப்பவன். அவராலேயே காப்பாற்றப்படுபவன். அவரே தஞ்சம். எனக்கு நான் பிரதானமல்ல. எனக்கு பகவானே பிரதானம். நான் என்னை காப்பாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் செய்வதில்லை. அதை பகவானே செய்கிறார். பகவான் சுதந்த்ரர். நாம் பாரதந்த்ரர் என்று வாழுதல்.  கைங்கர்யருசி : தொண்டு செய்வதில் பேரார்வம். பகவானுக்கும் பகவத் அடியார்க்கும் தொண்டு செய்வதே கடன் என்று வாழுதல்.   இம்மூன்று தத்துவங்களையும் ஒருவர் புரிந்து கொண்டாலே பெரும் வேதாந்த இரகசியம் வெளிச்சமாகிவிடும். பின் நாமும் இறைவனுக்கு அருகே செல்லப்போகின்றோம். அதுதானே நம் அனைவரது அவா.  இவ்வாறு ஓம் நமோ நாராயணா என்ற அட்டாட்சரத்தில் இராமன் பகவான். லக்ஷ்மண, பரத, சத்ருக்கனர்கள் எவ்வாறு மற்ற தத்துவத்தை விளக்கினர் என காண்போம். முதலில் லக்ஷ்மணன். இராமபிரானுக்கு அடிமையாகவே இருந்தார். வனவாசம் என்றதும் கூடவே சென்றார். பதினான்கு ஆண்டுகள் ஊண், உறக்கமில்லை. தன்னை இராமபிரானின் அடிமையாகவே எண்ணி பணி செய்தார். இது சேஷத்வம். அடுத்தது பரதன். நாட்டில் இரு என்றதால் இருந்தார். காட்டிற்கு வா என்றால் வந்தார். இராஜ்யத்தை கவனிப்பாயாக என்றால் கவனித்தார். அவர் இராமபிரானிடம் எந்த பிடிவாதமும் பிடிக்கவில்லை. நானும் உடன் காட்டுக்கு வருவேன் என அடம் பிடிக்கவில்லை. எல்லாம் அவன் சொல்வதே சரி. நான் ஒன்றும் செய்வதில்லை. அவன் சொல் என் கடமை என்று வாழ்ந்தார். இது பாரதந்த்ரியம். இறுதியாக கைங்கர்யருசி. சத்ருக்கனன் பரதனுக்கு தொண்டன். கைங்கர்யம் செய்வதே கடன். பகவானுக்கோ அல்லது பகவானின் அடியவனுக்கோ. அதனால் பரதனின் தொண்டனாக வாழ்ந்தான் சத்ருக்கனன். பரதனின் உடைவாளைப்போல நிழலைப்போல எப்போதும் தொண்டாற்றினான். ஆக ஓம் என்பதற்கு லக்ஷ்மணன் வாழ்வே சாட்சி. நமோ என்பதற்கு பரதனே சாட்சி. நாராயணா என்பதற்கு சத்ருக்கனன் சாட்சி.  இம்மூன்றையும் சேர்த்து நாம் தினம் பாராயணம் செய்யும் போது நாம் பகவானிடம் கூறுகிறோம். நான் உன் அடிமை. நான் உன்னையே சார்ந்திருக்கிறேன். நான் உனக்கு அடிமையாவது போலவே உன் அடியாருக்கும் அடிமை என்று கூறுகின்றோம். இனி பொருள் தெரிந்து உள்ளார்ந்த மனதோடு உறுதியோடு சொல்வோம்.    இனி பரதனின் சிறப்புகளைப் பற்றி காணலாம் அன்பர்களே. துளசிதாசர் தமது “ஹனுமான் சாலீசா” என்ற ஸ்துதியில் ஸ்ரீராமர்  அனுமனை  ரகுபதி கீனீ பஹுத் படாயீ   தும் மம ப்ரிய பரத சம பாயீ   பொருள்:  “அனுமனே நீயும்  பரதன் போன்று எனக்கு  ஒரு பிரியமான சகோதரன் என்று போற்றினார்” என்று பாடியுள்ளார், அது போலவே இராஜகோபாலாச்சாரியார் தமது “சக்கரவர்த்தி திருமகன்” என்ற இராமாயண நூலில் பரதனை தியானிப்பவர்களுக்கு ஞானமும் பக்தியும் தானே பெருகும் என்று கூறுகின்றார். []   பறவைப் பார்வையில் கூடல் மாணிக்கம் ஆலயம் தன்னலமின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு பரதன் ஆவான்.  பொதுவாக அனைவரும் தாங்கள் செய்த தவறையே இல்லை என்றுதான் சொல்வர்கள் .ஆனால் தான் செய்யாத தப்பையே செய்ததாக ஒப்புக்கொண்ட உயர்ந்தவன் பரதன்.   ஸ்ரீராமர் கானகம் சென்ற பின் பரதனும் சத்ருகனனும் பேசிக்கொண்டிருந்த போது பரதன் கூறுகின்றான். சத்ருக்கனா இவ்வாறு நடந்ததற்கு தாயார் கைகேயியோ, தந்தை தசரதரோ, அண்ணன் இராமனோ காரணம் அல்ல  நான்தான் காரணம், எனக்காகத் தானே தாயார் இராச்சியம் வேண்டுமென்று வரம் கேட்டார் என்று பெரும் பழியை சுமந்த பெருந்தன்மையாளன் பரதன்.   இப்பண்பை சூடிக்கொடுத்த  சுடர்க்கொடியாள் ஆண்டாள் தனது திருப்பாவையில் எல்லே இளங்கிளியே பாசுரத்தில் “நானே தானாயிடுக” என்று தான் செய்யாத தவறை ஒத்துக் கொள்கிறாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இருக்கவேண்டிய ஒரு முக்கியமான லட்சணம் இதுவாகும் எனவேதான் ஆண்டாளின் இப்பாசுரம் திருப்பாவை பாசுரம் என்னும் சிறப்புப் பெற்றது.  அனைவரும் இவ்வாறு இருந்தால் எந்தவிதமான சண்டை சச்சரவும் இராதே.  மகாவிஷ்ணு, பூலோகத்தில் இராமனாகப் பிறப்பெடுத்த போது, வைகுண்டத்தில் அவரைத் தாங்கும் அனந்தன் எனும் அரவு, இலட்சுமணனாகப் பிறந்து, எப்போதும் அவருக்குத் துணையாக இருந்து அவருக்கு கைங்கரியம் புரிந்தது. விஷ்ணுவின் திருக்கரங்களில் விளங்கும் சங்கு பரதனாகவும், சக்கரம் சத்துருக்கனனாகவும் பிறந்து அவருக்கு  கைங்கரியம் புரிந்தனர். இராமனின் மூன்று சகோதரர்களுமே, இராமனின் மீது அதிகமான அன்பு கொண்டிருந்தனர். அவர்களில், இலட்சுமணன் பிறந்தது முதல் இராமனின் நிழலாகவே வாழ்ந்து வந்தான். இராமன் காட்டுக்குச் சென்ற போதும், தன்னுடைய மனைவியைப் பிரிந்து, இராமருடன் காட்டுக்குச் சென்றான். மேலும் காட்டில் இராமனுக்கும் சீதைக்கும் பாதுகாப்பாகவும், பணிவிடை செய்பவனாகவும் இருந்தான். இராமனின் மனைவியான சீதையைக் காட்டிலும், இராமனுடன் அதிகக் காலம் உடனிருந்தவன் என்ற பெருமை இலட்சுமணனுக்குக் கிடைத்தது. இராமனை உடனிருந்து பார்த்துக் கொண்ட இலட்சுமணனை விட, பரதனே உயர்ந்தவன் என்று பாரதம் பகர்கிறது. பரதன் ஆசையே இல்லாதவன், அண்ணன் காடு சென்றதும், அவனுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்திருக்கலாம், அரசனாகி இருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், அண்ணனின் பாதுகைகளைப் பெற்று வந்து, அதையே அரியாசனத்தில் வைத்து நாட்டை ஆண்டவன் அவன். பக்தனைப் பாகவதன் என்பர். பகவானை விடப் பாகவதனே உயர்ந்தவன் என்பதை உணர்த்தியவன் பரதன். சகோதர பாசத்திற்கும், தன்னலமின்மைக்கும், பொறுமைக்கும் சிறந்த இலக்கணமாக திகழ்பவன் பரதன். பதினான்கு ஆண்டுகள் நந்தி கிராமத்தில் இராமனை எதிர்பார்த்து காத்திருந்த கோலத்தில் பரதன் இக்கூடல் மாணிக்கம்  ஆலயத்தில் சேவை சாதிக்கின்றார்.  பரதனுக்கு நமது பாரத தேசத்தில் உள்ள தனிக்கோவில்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று என்பது  ஒரு தனி சிறப்பு. அது மட்டுமல்ல இன்னும் பல சிறப்புகளும் உள்ளன அவை என்னவென்று காணலாமா அன்பர்களே ? பரதன் தவக்கோலத்தில் இருப்பதால் பூஜையின் போது வாசனைத் திரவியங்கள் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் கிடையாது. பூஜைக்கு ஊதுபத்திகள் மற்றும் கற்பூரம் பயன்படுத்தப்படுவதில்லை இவரே பரப்பிரம்மாக விளங்குவதால் கணேசர் உட்பட வேறு எந்த உபதெய்வமும் இக்கோவிலில் கிடையாது.   தாமரை மலர், துளசி, மற்றும் தெச்சி பூக்கள் மட்டுமே பூஜைக்கு பயன்படுத்துகின்றனர். வேறு எந்த மலரும் சார்த்துவதில்லை. இவ்வாலயத்தில் உள்ள  துளசி செடிகளில் விதைகள் தோன்றுவதில்லையாம். தல விருட்சமும் கிடையாது.   []                                 நந்திகிராமத்தில் இராமபிரானின் பாதுகைகளை  பரதன் பூசிக்கும் காட்சி பொதுவாக கேரளாவில் அனைத்து  ஆலயங்களிலும் ஐந்து வேளை பூஜைகள் நடைபெறும் ஆனால் இக்கோவிலில் மட்டும்  மூன்று வேளை பூஜைகள் நடைபெறுகின்றது. உஷத் பூஜை மற்றும் பந்தீரடி பூஜைகள் நடைபெறுவதில்லை. அது போலவே அனுதின  சீவேலியும் நடைபெறுவதில்லை. சித்திரை உற்சவத்தின் போது மட்டுமே  சுவாமி வெளியே வருகிறார். ஐப்பசி மாதம் திருவோணத்தன்று புத்தரிசி நைவேத்தியம் உண்டு. புதிதாக அறுவடையான அரிசி உணவு நிவேதிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மறுநாள் முக்குடி என்ற பிரசித்தி பெற்ற வயிற்று வலியை போக்கும் பிரசாதமும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பிரசாதம் பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் இரகசியம் காத்து தயாரிக்கிறார்கள். இவ்வாலயத்தில் கத்திரிக்காய் சிறப்பு  நைவேத்தியம் என்று பல சிறப்புகள் உள்ளன. []   கூத்தம்பலம் இவ்வாலயத்தை அடைய புகைவண்டி மூலம் வருபவர்கள் இரிஞ்ஞாலக்குடா புகைவண்டி நிலையத்தில் இறங்கி பின்னர் ஆட்டோ அல்லது பேருந்து மூலம் 9 கி.மீ தூரத்தில் உள்ள கோவிலை அடையலாம்.   இத்திருக்கோவில் கொடுங்கல்லூரிலிருந்து திருச்சூர் செல்லும் பாதையில் திருச்சூரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட பரதன் ஆலயம் “கூடல் மாணிக்கம் ஆலயம்” என்றும் அழைக்கப்படுகின்றது. இனி இத்தலத்தின் புராணத்தை பற்றிப் பார்ப்போமா?  ஆதி காலத்தில் அடர்ந்த வனமாக இருந்த இவ்விடத்தில் குலிப்பிணி என்ற மஹரிஷியின்  தலைமையில் பல ரிஷிகள் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்திற்கு மெச்சி மஹாவிஷ்ணு அவர்களுக்கு பிரத்யக்ஷமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அவர்களும் தாங்கள் இங்கேயே கோவில் கொள்ள வேண்டும் என்று கேட்க அவ்வாறே வரம் அளித்தார். பின்னர் முனிவர்கள் கங்கையை வேண்ட அவள் அங்கு தோன்றினாள். அவ்வெள்ளத்தில் மூழ்கி முனிவர்கள் அனைவரும் பரமபதம் அடைந்தனர். இன்றும் கோவிலின் உள்ளே உள்ள  குலிப்பிணி தீர்த்தத்தில் கங்கை இருப்பதாக ஐதீகம். இக்குளத்தின் நீரே பெருமாளுக்கு நைவேத்தியத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. பூஜை செய்யும் நம்பூதிரிகள் மட்டுமே இக்குளத்தில் நீராடுகின்றனர்.  []   கூத்தம்பலத்தின் படிகளில் உள்ள அருமையான கற்சிற்பம் ஆதிகாலத்தில் சாலக்குடி ஆறும், குருமலி ஆறும்  சங்கமம் ஆகும் கூடுதுறையில் இக்கோவில் அமைந்திருந்ததால் கூடல் மாணிக்கம் என்றழைக்கப்படுகின்றது என்பது ஒரு ஐதீகம். இரு சால் கூடல் என்பதே இரிஞ்ஞாலகுடா ஆனது என்பர்.  மற்றொறு ஐதீகம். ஒரு சமயம் பெருமாளின் சிரசிலிருந்து ஒரு அற்புத ஓளி தோன்றியது அப்போதைய காயங்குளம் அரசனிடம் இருந்த அற்புத விலை மதிப்பற்ற மாணிக்கத்தின் ஒளியை இவ்வொளியுடன் ஒப்பிட கொண்டுவந்த போது அம்மாணிக்கம் பெருமாளின் திருமேனியில் மறைந்து விட்டது எனவே கூடல் மாணிக்கம் ஆயிற்று என்பர்.   []                   கூரையில் உள்ள அற்புத மரசிற்பம் []                   மூன்றாவது ஐதீகம் ஒரு சமயம் தலிப்பரம்பா என்ற ஊரின் ஒரு முதியவர் பல் வேறு ஆலயங்களின் சான்னியத்தை ஒரு சங்கில் ஏற்று  தன் ஊரில் உள்ள மூர்த்திக்கு மாற்ற ஆலயம் ஆலயமாக சென்று  வரும் போது இவ்வாலயத்தை அடைந்தார். அப்போது அவர் கையில் இருந்து அச்சங்கு கீழே  விழுந்து சுக்குநூறாக உடைந்து அதில் இருந்த தெய்வ சக்திகள் அனைத்தும் இப்பெருமாளில் இணைந்ததால் இவர் கூடல் மாணிக்கம் என்றழைக்கப்படுகின்றார். கேரளபாணியில் மூன்று பக்கமும் வாயில்களுடன் பிரம்மாண்டமாக  பத்து ஏக்கர் பரப்பளவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. கேரள பாணியில் அமைந்துள்ள கிழக்கு கோபுரத்தின் சுவர்களில் புடைப்பு சிற்பங்கள்   வரையப்பட்டுள்ளன. ஆலயம் முழுவதும் ஓவியங்களும், அற்புத கற்சிலைகளும், மரச்சிலைகளும் நிறைந்திருக்கின்றன. விசாலமான விளக்கு மாடம் மேலும் எழில் சேர்க்கின்றது.  ஸ்ரீகோவில் வட்ட வடிவில் உள்ளது.    விமானம் உயரமாக சிறப்பாக இரண்டடுக்கு கூம்பு வடிவத்தில் உள்ளது. விமானத்தில் இராமாயணம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மர சிற்பங்களாக எழிலாக இடம் பெற்றுள்ளன. கூரையைத் தாங்கும் மரச்சட்டங்களையும் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. விமானத்திற்கு தாமிர தகடு சார்த்தியுள்ளனர். கலசம் ஆறு அடி உயரம். உயர்ந்த மதிற்சுவர் ஸ்ரீகோவிலைச் சுற்றி உள்ளது,  விளக்கு மாடம், முன் புறமும் பிறமும் உயர்ந்த மண்டபங்கள் நான்கு குளங்கள் என்று மிகவும் பிரம்மாண்டமாக ஆலயம் அமைந்துள்ளது.   ஆலயத்தை சுற்றி நான்கு திருக்குளங்கள் அமைந்துள்ளன. இவற்றுள்  புனிதமான குலிப்பிணி தீர்த்தம் கோவில் வளாகத்திற்குள் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குட்டன் குளம் என்ற பெரிய குளம் கிழக்கு பிரகாரத்திற்கு வெளியே அமைந்துள்ளது.   கோயிலுக்கு வெளியே உள்ள "குட்டன் குளத்தில்" தங்களைத் தூய்மைப்படுத்திய பின்னரே பூசாரிகள் விழாக்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். பின்னர் கருவறைக்குள் நுழைவதற்கு முன்பு "குளிப்பிணித் தீர்த்தம்" நீரில் மூழ்க வேண்டும். மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சுவருக்கு வெளியே உள்ள குளத்தை "பதின்ஜரக் குளம்" என்றும், தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வளாகத்திற்கு வெளியே உள்ள குளம் "தெக்கே குளம்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று நீர்நிலைகளும் கோயிலின் அளவைப் போலவே குறிப்பிடத்தக்க பகுதியைக் கொண்டுள்ளன.  தெற்கு பிரகாரத்தில் பெரிய கூத்தம்பலமும் உள்ளது. கூத்தம்பலத்தின் கூரை மிகவும் உயரமாகவும், சாய்வாகவும் அமைந்துள்ளது. உட்புறம் பிரம்மாண்ட மரத்தூண்கள் மற்றும் அழகிய மரச்சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கூத்தம்பலத்தின் வாயிற்படிகளின் இருபுறமும் எழிலான கஜலக்ஷ்மி கற்சிற்பம் அலங்கரிக்கின்றது.  இக்கூத்தம்பலத்தில் கதகளி, துள்ளல், கூத்து, கூடியாட்டம் முதலியன சிறப்பாக நடைபெறுகின்றன. பலி பீடம் சுமார் 7அடி உயரம் அருகில் நெடிதுயர்ந்த தங்கக் கவசம் பூண்ட கொடி மரம் இவ்வாலயத்தின் பிரம்மாண்டத்திற்கு தக்கவாறே அமைந்துள்ளது.  இத்தலத்தில் பரதன் சதுர்புஜ விஷ்ணுவாகவே சேவை சாதிக்கின்றார். நின்ற தவத்திருக்கோலம், சதுர்புஜங்கள், வலமேற்கரம் தண்டம், கீழ்க்கரம் அக்ஷமாலை, இடமேற்கரம் சக்கரம். கீழ்க்கரம் சங்கம். தீபவழிபாடு, அவல் பாயச வழிபாடு, வெடிவழிபாடு, புஷ்பாஞ்சலி வழிபாடு இத்தலத்தில் பிரபலம். 14 வருடங்கள் கழித்து எப்போது இராமன் திரும்பி வருவார் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கோலம். வனவாசம் முடித்து இராமன் திரும்பி வந்த போது அன்று பரதன் முகம் எவ்வளவு மலர்ச்சியாக இருந்ததோ அவ்வளவு மலர்ச்சியாக பரதன் இன்றும்  அருள் பாலிக்கின்றார் என்பது ஐதீகம்.    பெருமாளுக்கு சங்கமேஸ்வரர் என்றொரு நாமமும் உண்டு.  101 தாமரை மலர்களுக்கு அதிகமாக எண்ணிக்கையில் 12 அடி நீளமான தாமரை மலர் மாலை பெருமாளுக்கு சார்த்தினால், தடைகள் எல்லாம் விலகும் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும் என்பது இங்குள்ளவர்கள் நம்பிக்கை.   மேலும் தீராத வயிற்று வலியை நீக்கும் தன்வந்திரிப் பெருமாளாகவும் இவர் விளங்குகிறார். தீராத வயிற்று வலியால் ஒரு பக்தர் அவதிப்பட்டு வந்தார் அவர் கனவில் தோன்றிப் பெருமாள் அவரது தோட்டத்தில் விளைந்த 101  கத்திரிக்காய்களை நைவேத்யமாக சமர்பிக்குமாறு வேண்டினார். அதற்குப்பின் அவரது வயிற்று வலி மாயமாக மறைந்தது. இது போல பல பக்தர்களின் நோயை தீர்த்து வைத்துள்ளார் பரதப்பெருமாள்.  பதினான்கு வருடம் கழித்து  இராமன் வர தாமதமானபோது வந்து நந்திகிராமத்தில் காத்திருந்த பரதன்  தீ மூட்டி அதில் இறங்க தயாரான போது விரைந்து வந்து இராமபிரான், இராவணனை வென்று வாகை சூடி, பிராட்டியுடன் திரும்பி வருகிறார் என்று கூறிய ஹனுமன் திடப்பள்ளியில் (மடப்பள்ளி) இன்றும் அரூபமாக  வசிப்பதாக நம்புகின்றனர்.    மேட மாதம் (சித்திரை) பூரம் தொடங்கி திருவோணம் முடிய பெருவிழா மிகவும் சிறப்பாகவும் வேத தந்திரீக முறை வழுவாமலும்  நடைபெறுகின்றது. கேரளாவின் மற்ற கோவில்களை விட இங்கு நடக்கும் திருவிழா மிகவும் வித்தியாசமானது. தினமும் காலையும், மாலையும் 17 யானைகளோடு சுவாமி எழுந்தருளுவார். அதைக் காணக் கண் கோடி வேண்டும். பவனியின் போது நூற்றுக்கணக்கான வாத்தியக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.   சீவேலியின் இரண்டு அம்சங்கள் கூடல்மாணிக்கம் கோயிலுக்கு தனித்துவமானவை: முதலில் இரண்டு குழந்தை யானைகள் ஊர்வலத்தில் சேர்க்கப்படும். ஒன்று தெய்வத்தை சுமந்து செல்லும் யானையின் ஒவ்வொரு பக்கத்திலும் நிற்கும். இரண்டாவதாக, ஏழு யானைகளின் தலைக்கவசங்கள் ('நெட்டி பட்டம்') தூய தங்கத்தால் செய்யப்பட்டவை, மீதமுள்ளவை தூய வெள்ளியால் செய்யப்பட்டவை. திருவிழாவின் கடைசி இரண்டு நாட்களில்  பஞ்ச வாத்யம் இடம்பெறுகிறது.   கேரளாவில் உள்ள சுமார் 3,000 கோயில்களை நிர்வகிக்க ஐந்து தேவசம் போர்டுகள் உள்ளன. குருவாயூர், திருவிதாங்கூர், மலபார், கொச்சி, கூடல் மாணிக்கம் என ஐந்து தேவசம் போர்டுகள் அம்மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றன. கூடல்மாணிக்கம் கோயிலின் முந்தைய வரலாற்று குறிப்பு கி.பி 854 தேதியிட்ட  சேர மன்னர் ஸ்தானு ரவி வர்மனைப் பற்றி எழுதப்பட்ட ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. இதில் கோயிலுக்கு ஏராளமான நிலங்களை நன்கொடையாக அளித்தது பற்றி குறிப்பிடுகிறது. அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு அருமையான கோவில் கூடல் மாணிக்கம் சங்கமேஸ்வரர் கோவில் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.  வாய்ப்புக் கிட்டினால் அவசியம் சென்று சேவியுங்கள்.                                          அத்தியாயம்  -3 3.திருமூழிக்களம்  லக்ஷ்மணப்பெருமாள்  ஆலயம் []                     ஆடி மாத நாலம்பல தரிசன வரிசையில் அடியோங்கள் தரிசித்த அடுத்த தலம் திருமூழிக்களம் என்னும் திவ்யதேசம் ஆகும். இவ்வாலயம் நெடும்பாதையிலிருந்து  சிறிது உள்ளே உள்ளது  வழி விசாரித்துக் கொண்டே செல்ல வேண்டி இருக்கும். சாலையில் இருந்து கோவிலுக்கு செல்லும் இடத்தில் எழிலான  தோரண வாயில்  அமைத்துள்ளனர்.   தோரண வாயிலில் சீதாராமர் இலக்குவனை சேவிக்கலாம். வழியெங்கும் கேரளத்தின் இயற்கை எழிலை மா, பலா, வாழை மரத்தோப்புகளையும், வானத்தை ஒட்டடை அடிக்கும் கொத்துக் கொத்தாக காய்கள் தொங்கும் கமுகு மரங்களையும், இரப்பர் தோட்டங்களையும், தண்ணீர் நிறைந்த பல குளங்களையும் கண்டு களித்துக் கொண்டே இத்திவ்யதேசத்தை அடையலாம்.   நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். எனவே இத்தலம் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும்.  அவ்வற்புதத் தரிசனத்தை பகிர்ந்து கொள்ள  வம்மின் அன்பர்களே.  இத்தலம் எர்ணாகுளத்திற்கு அருகில் உள்ளது. அலுவாயிலிருந்து பேருந்தில் சென்றடையலாம். திருச்சூரிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஷொரனூர் எர்ணாகுளம் புகைவண்டி மார்க்கத்தில் அங்கமாலியில் இறங்கி பின்னர் 5 கி.மீ தூரத்தில் உள்ள இத்தலத்தை அடையலாம்.   தக்கிலமே கேளீர்கள்! தடம் புனல்வாய் இரை  தேரும்  கொக்கு இனங்காள் குருகு இனங்காள் குளிர்மூழிக்களத்து உறையும்  செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனிவாய்  அக்கமலத்து இலைப் போலும் திருமேனி அடிகளுக்கே  (தி.வா 9-7-3)  என்று எம்பெருமானது வடிவழகில் ஈடுபட்ட பராங்குச நாயகியாய்  நம்மாழ்வார் பெருமானது வடிவழகையே பற்றுக்கோடாகக் கொண்டு தலைவியாக  திருமூழிக்களத்திற்கு  பறவைகளை தூது விடும் பாவத்தில் 11 பாசுரங்களால் பல்லாண்டு  பாடியுள்ளார்.   பொருள்: அகன்ற நீர்நிலைகளில் இரை தேடும் கொக்குக் கூட்டங்களே! உடன் உள்ள குருகுகளே!  குளிர்ந்த திருமுழிக்களத்திலேயுள்ள எம்பெருமானிடம் சென்று அவன் அழகில் ஆட்பட்டு இழந்துள்ள நாங்கள் அவனுக்கு தகுதியற்றவர்களோ? என்பதை உறுதியாகக் கேளுங்கள்.   அவ்விறைவனின் திருக்கண், திருக்கரங்கள், திருவடிகள் ஆகியவை செந்தாமரை மலர்ப் போல் அழகுள்ளவை; அவருடைய திருவாய் சிவந்து கனிந்தது. அவர் திருமேனியோ, தாமரையின் இலைபோலப் பசுமை உடையது. இப்படிப்பட்ட அழகனைக் காண எங்களுக்குத் தகுதியில்லையா? என்று வினவுகிறார் ஆழ்வார்.   இவ்வாறு திருமூழிக்களம் என்று ஆழ்வார்கள் பாடிய இத்தலம் ஒரு காலத்தில் திருமொழிக்களம் என்று அறியப்பட்டிருக்கின்றது. விசுவாமித்திர முனிவரின் மகன்  ஹாரீத முனிவர் இங்கு மஹாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய்ய அவர் தவத்திற்கு மெச்சிப் பெருமாள் தோன்றி,  என்ன வரம் வேண்டும்?  என்று கேட்க இப்பூவுலகில் உள்ளவர்கள் உய்ய வழி கூற வேண்டும் என்று  முனிவர்  விண்ணப்பிக்க  பெருமாளும் வர்ணாஸ்ரம தர்மம், யோக சாஸ்திரம், திருமந்திரம் ஆகிய  ஸ்ரீஸூக்திகளை அதாவது திருமொழிகளை  அருளினார்,  அவற்றை நூலாக எழுதுமாறும் பணித்தார். எனவே இத்தலம் திருமொழிக்களமானது பின்னர் மருவி தற்போது  திருமூழிக்களமானது என்கின்றனர்.  வடமொழியில் பெருமாள் ஸ்ரீஸூக்தி நாதன் என்றழைக்கப்படுகின்றார்.  கொடிய கைகேயி வரம் வேண்ட,  குலக்குமாரனும்  காடுறைய வந்து சித்ரகூடத்தில் பிராட்டியுடனும், இளவல் இலக்குவனுடனும் தங்கியிருந்தான். அப்போது பரத நம்பி அண்ணனின் பாதம் பணிய வந்தான், பெரும் படை வருவதை கண்டு இலக்குவன்,  பரதன்  அண்ணன் மேல் படை எடுத்து  வந்திருக்கின்றானோ? என்று அவன் மேல் கோபம் கொண்டான்.    ஆனால் பரதனோ ஸ்ரீராமன் பாதம் பணிந்து பாதுகைகளை பெற்று சென்று நந்தி கிராமத்தில் தங்கி அண்ணனின் பிரதிநிதியாக ஆட்சி செய்தான்.   உண்மையை உணர்ந்தான் இலக்குவன். ஆனாலும் வெளிப்படையாக பரதனிடம் மன்னிப்புக் கேட்காத குறை இலக்குவன் மனதில் இருந்தது, ஒரு சமயம் பரதனும் இலக்குவனும் இத்தலத்திற்கு வந்து வணங்கிய போது ஹாரீத முனிவர் அவனது அக்குறையை கூறினார். இலக்குவனும் அருகில் இருந்த பரதன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.  ஆனால், பரதனோ, ‘இதில் மன்னிப்புக் கேட்க எதுவுமே இல்லை, இலக்குவா,  இராமனின் அத்யந்த தம்பி நீ, இராமனுக்கு எந்த குறையுமின்றி, கானகத்திலேயே அவரை கண்ணிமைக்காமல் காத்தவன் நீ. ஆகவே சித்ரகூடத்தில் என் மீது நீ கோபம் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. உண்மை தெரிந்த பிறகும், என் மீதான உன் சந்தேகம் நீங்காததற்கு உன்னுடைய சிறப்பான இராம பக்தியே காரணம். ஆகவே அதற்காக நீ குற்ற உணர்வு கொள்ளாதே என்று மிகுந்த பெருந்தன்மையுடன் கூறினான்.  ஆனாலும், தன் குற்றத்துக்குப் பிராயச்சித்தம் செய்ய விரும்பிய இலக்குவன், முனிவர் யோசனைப்படி, இத்தலத்தை, திருமொழிக்களத்தான்  கோயிலைப் புதுப்பித்து, பெருமாளை வணங்கி, தன் மனக்குறை நீங்கப் பெற்றான். இப்படி இலக்குவன் புதுப்பித்தத் தலத்தில் உறையும் பெருமாளை எனவே  ‘லக்ஷ்மணப் பெருமாள்’ என்று அழைக்கிறார்கள்.   இராமாயண சகோதரர்கள் நால்வருக்கும்  கேரளத்தில் தனித்தனி கோயில் இருந்தாலும், பெருமாள் என்ற பெருமை லக்ஷ்மணனுக்கு மட்டுமே உண்டு.  பொன்னானாய் பொழிலேழும் காவல் பூண்ட   புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்  என்னானாய் என்னானாய் என்னல் அல்லால்  என்னறிவேனேழையேன் உலக மேத்தும்  தென்னனாய் வடவானாய்குட பாலானாய்  குணபால தாயினாய் இமையோர்க் கென்றும்  முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி  திருமூழிக் களத்தனாய்முதலா னாயே  (தி.நெ 10)  பொருள்: உலகம் முழுவதும் துதிக்கத்தக்க தென்திருமாலிருஞ்சோலை மலையில்  நின்ற யானை போன்றவனே! வடதிருவேங்கடத்தில் நின்ற யானை போன்றவனே! மேற்றிசையில் திருவேங்கடத்தில்  திருக்கண் வளரும் யானை போன்றவனே!  கீழ்த்திசையில் திருக்கண்ணபுரத்தில் மதயானை போன்றவனே! எக்காலத்தும் நித்யசூரிகள் கண்டு அனுபவிக்கும்படி முன் நிற்பவனே! அவதாரத்திற்கு பிற்பட்டவர்கள் வணங்கத்தக்க சோதியாய் திருமூழிக்களத்தில் வாழ்பவனே!  உலக முதல்வனே! பொன் போன்றவனே! எழுலகங்களையும் காத்தருள்வதால் வந்த புகழுடையவனே! இகழ்வையே வடிவாக உடைய  தொண்டனான அடியேன் என்னுடைய  யானையே! என்று சொல்லுவதல்லாது வேறு என்னவென்று சொல்ல அறியேன். என்று திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருநெடுந்தாண்டகப் பாசுரத்தில் இராமனை  அவரது பின்னவர்களான பரதன்,  லக்ஷ்மணன் வணங்கிய செய்தியை  நமக்கு கூறுகின்றார். இத்திவ்யதேசத்தில்  மூலவர்: லக்ஷ்மணப்பெருமாள், திருமூழிக்களத்தான்.  தாயார்: மதுரவேணி நாச்சியார்  விமானம்: சௌந்தர்ய விமானம்.  தீர்த்தம்: சங்க தீர்த்தம், சிற்றாறு தீர்த்தம்.  மங்களாசாசனம்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்.  தாயார் ஊர்மிளை இத்தலத்தில் மதுரவேணி நாச்சியாராக சேவை சாதிக்கின்றாள். மலை நாட்டு திவ்ய தேசங்களில் திருநாவாயில் மட்டுமே தாயாருக்கு தனி சன்னதி உள்ளது மற்ற ஆலயங்களில் பெருமாளின் திருமார்பில்தான் தாயார் அகலகில்லேன் இறையுமென்று வாசம் செய்கிறாள்.  இவ்வாலயம்  சாலக்குடி ஆற்றின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது.    ஸ்ரீகோவில் வட்ட வடிவிலும் விமானம்  துவிதள அதாவது இரண்டடுக்கு   கூம்பு வடிவில், தாமிரத் தகடு போர்த்தப் பட்டு  எழிலாக அமைந்துள்ளது. கூரையை தாங்கும் கரங்களில் யானை மரச்சிற்பங்கள் அருமையாக உள்ளன.    இரிஞாலக்குடா ஆலய விமானம் போலவே இத்தலத்தின் விமானமும் இரண்டு தலத்துடன் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. மேலும் பலி பீடமும், கொடி மரமும்  மதிலும் பிரம்மாண்டமானதாகவே அமைந்துள்ளது சிறப்பு.   ஆதி சேஷன் அம்சமான  லக்ஷ்மணப் பெருமாளும் சதுர்புஜ விஷ்ணுவாகவே சேவை சாதிக்கின்றார்.    இடது திருக்கரம் சங்கம் ஏந்தியிருக்க, வலது திருகரத்தில் உள்ள சக்கரம் எந்தக் கணமும் பாயத் தயாராக இருக்கும் பிரயோக சக்கரமாக விளங்குகிறது. தன் பக்தர்களுக்கு ஏதேனும் துயரென்றால் அதை உடனே தீர்த்து வைக்கும் சுறுசுறுப்பை அது உணர்த்துகிறது. வல கீழ் கரத்தில் கதை, கீழ் இடதுகரம் அரவணைக்கும் தோரணையில் நின்ற கோலத்தில் திவ்யமாக சேவை சாதிக்கின்றார்.  []                           இராம பட்டாபிஷேகம் ஓவியம் நமஸ்கார மண்டப விதானத்தில் மரத்தால் அழகாக செதுக்கப்பட்டுள்ள அஷ்டதிக் பாலகர்கள் கண்ணுக்கு விருந்து. இரண்டாம் பிரகாரத்தின் உள் சுவர்களில் அருமையான இராமயண ஓவியங்கள் உள.  அதில் இராம பட்டாபிஷேக ஓவியம் கண்ணை விட்டு அகல மறுக்கின்றது.   ஒரு ஓவியத்தில் அனைத்து இராமயண நிகழ்வுகளையும் கொண்டு வந்துள்ள பாங்கு மிகவும் அருமை. இன்றும் பழமை மாறாமல் இயற்கை மூலிகை வர்ணங்களையே பயன்படுத்துன்றனர். பெரிய தூண்கள் நிறைந்த தலம். கருவறை வெளிப் பிராகாரத்தில் ராமன் – சீதை - அனுமன் ஆகியோர் தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள். லட்சுமணன் தனியே மூலவராக விளங்குவதால் இந்த சந்நதியில் அவர் இடம் பெறவில்லை போலும்!  கணேசன், சிவன்-பார்வதி, யக்ஷியம்மன், தர்ம சாஸ்தா, கோகுல கிருஷ்ணன் ஆகியோரும் தனித்தனியே சந்நதி கொண்டு அருள்பாலிக்கிறார்கள். சாலக்குடி ஆறு கோயிலின் தீர்த்தமாக பெருமையுடன் ஓடுகிறது. கருவறையில் லட்சுமணப் பெருமாள் என்ற திருமூழிக்களத்தான் பேரழகுடன் ஜொலிக்கிறார். இந்தப் பெருமாளை நம்மாழ்வார் ஒளிச்சுடராகவே கண்டு மகிழ்ந்திருக்கிறார். திருமேனி அடிகளுக்கு தீவினையேன் விடுதூதாய்  திருமூழிக்களம் என்னும் செழுநகர் வாய்அனிமுகில்காள்  திருமேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்  திருமேனி ஒளி அகற்றித் தெளிவிசும்பு கடியுமே  என்பது அவரது பாசுரங்களில் ஒன்று. பெருமாளைத் தன் நாயகனாகவே பாவிக்கும் ஒரு கன்னியின் மனதைச் சொல்லும் நெகிழ்ச்சி மிக்கப் பாடல் இது. ‘திருமூழிக்களம் என்று அழைக்கப்படும் இந்த திவ்ய தேசத்தில் குளுமையாக சூழ்ந்திருக்கும் மேகங்களே, எனக்காக என் தலைவன் திருமூழிக்களத்தானிடம் தூது செல்லுங்கள். அவனிடம், தன்னுடைய பேரழகான ஒளியை, அவன் பிரிவால் தளர்ந்து வாடியிருக்கும் எனக்கு அவன் அருள வேண்டும் என்று கேளுங்கள். அப்படிக் கேட்டால் உங்களுடைய ஒளியை அழித்து உங்களை வானிலிருந்தே விரட்டி விடுவானோ என்று அஞ்சாதீர்கள். அவன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான்’ என்று நெக்குருகுகிறார். []   நேர்த்தியான கூரையைத் தாங்கும் யாழி வரிசை திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில்  பனியேய்ப்பரங்குன்றின் பவளத்திரளே! முனியே! திருமூழிகளத்து விளக்கே! இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே! உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே! (பெ.தி 7-1-7) பொருள்: பனி படர்ந்த இமயமலையில் திருப்பிரிதியில் எழுந்தருளியுள்ள பவளங்கள் திரண்டாற்போல அழகியவனே! அடியாருடைய நன்மைகளைச் சிந்திப்பவனே! திருமூழிக்களமென்னும் திருப்பதியில் விளக்குப்போல விளங்குபவனே! இனிமையானவனே! தொண்டவரான அடியோங்கள் பருகுவதற்கு உரிய இனிய அமுதமானவனே! கனி போன்றவனே! உன்னைச் சேவித்து  பிழைத்துக் கொண்டேன்  என்றும்,  பெரிய திருமடலில் என்னை மனங்கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை மூழிக்களத்து விளக்கினை....... (பெ.தி.ம 129) பொருள்: நித்திய சூரிகளின் தலைவனாய் திருமூழிக்களத்தில் விளக்குப் போல் சுடர் வாய்ந்து நிற்பவன் என்றும் இப்பெருமாளை ஜோதி வடிவினனாக   மங்களாசாசனம் செய்துள்ளார்.   இலக்குவன் இத்தலத்தில் அறியாமை என்னும் இருளை அகற்றி ஞானம் வழங்கும் பெருமாளாக சேவை சாதிக்கின்றார். தீபம் எவ்வாறு தன்னையும் சுற்றியுள்ளவற்றையும் பிரகாசிக்கின்றதோ அது போல பெருமாள் தன்னையும் தர்ம சாஸ்திரங்களையும் இத்திவ்யதேசத்தில் காட்டிக் கொடுத்தார்.   கணபதி, ஸ்ரீராமர்-சீதை-இலக்குவன், பகவதி, சாஸ்தா, சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி ரூபமாகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கோசாலா கிருஷ்ணர் சன்னதியும் உள்ளது.  கிழக்கு வழியாக நுழைந்து பெருமாளை வணங்கி பிறகு தெற்கு பக்கம் கணபதி, சிவனை வணங்கி பின்னர் உபதேவதைகளை வணங்கி இரண்டாவது  முறையாக பெருமாளை வணங்க வேண்டும் என்பது நியதி. பெருமாளுக்கு பால் பாயசம் வழிபாடு, கணபதிக்கு அப்பம், பகவதிக்கு மஞ்சள் பொடி, சாஸ்தாவிற்கு நீராஞ்சனம் வழிபாடு மிகவும் சிறப்பு. இப்பெருமாளை வழிபட இதயநோய் உள்ளவர்களுக்கு அந்நோய் நீங்கும், குழந்தை இல்லாத குறை தீரும். வேண்டுபவர்களின் துயர் களைபவர் திருமூழிக்களத்தான். திருவோணத்தன்று ஆராட்டுடன் மேஷ(சித்திரை) மாதம் 15  நாள் திருவிழா நடைபெறுகின்றது. []   இரண்டடுக்கு (துவி தள) ஸ்ரீகோவில் இத்திருக்கோவிலில் இரண்டாம் சுற்றில் விளக்கு மாடம் எழிலாக அமைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான விளக்குகள் வெகு நேர்த்தியாக அமைந்துள்ளன. மாலை நேரம் சென்றதால் அத்தீபங்கள் அனைத்தும், சுடர்விட்டு எழிலாக  பிரகாசிக்க பெருமாளின் ஆரத்தியும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.   நான்கு வாயில்களிலும் கல் சர விளக்குகள் அமைத்துள்ளனர். சுற்றம்பலத்தின் கூரைகளை யாழிகள் தாங்குகின்றன, மரத்தால் ஆன இந்த யாழிகளுக்கு நேர்த்தியாக வெள்ளை வர்ணம் பூசியுள்ளனர். ஒரே நேர் கோட்டில் அனைத்து யாழிகளும் அமைந்துள்ள காட்சி அருமையாக இருந்தது.  இத்தலம் கேரளாவில் அந்தணர்கள் வசிக்கும் 32 கிராமங்களில் ஒன்று.    திப்பு சுல்தானின் படையெடுப்பின் போது மூலவர் திருமேனி சேதப்பட்டதாம்,  இரு திருக்கரங்களும் சேதமடைந்தன காலிலும் விரிசல் உண்டாகியது. எனவே வெள்ளியில் ஒரு கவசம் செய்து அணிவித்த அன்றே, அது  திருட்டுப் போய் விட்டதாம். பின்னர் தேவ பிரசன்னம் பார்த்த போது மூலவருக்கு அங்கி தேவையில்லை என்று வந்ததாம். எனவே இன்றும்  அவ்வாறே உடைந்த கோலத்தில்  சேவை சாதிக்கின்றார் பெருமாள்.  []   பலி பீடம் ஒழிவின்றி திருமூழிக் களத்துறையும் ஒண்சுடரை ஒழிவில்லா அணிமழலைக் கிளிமொழியாள் அலற்றியசொல் வழுவில்லா வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த அழிவில்லா ஆயிரத்து இப்பத்தும் நோயறுக்குமே (தி.வா 9-7-11)  பொருள்: ஒளிமயமான பெருமாள் திருமூழிக்களத்தே நீங்காமல் எழுந்தருளி இருக்கின்றான். அவனைப்பிரிந்த நிலையில் விரகதாபத்தால் துன்பப்பட்ட தலைவி பேசும் பேச்சாகக் குருகூர்ச் சடகோபர் பாசுரம் அருளியுள்ளார். இனிய மழலை ததும்பும் கிளியின் பேச்சுப் போல மொழிய வல்ல நாயகியின் துன்பக்குரலாக உள்ள குற்றம் அற்ற இப்பத்து பாசுரங்களும் அவர் அருளிய அழிவில்லா ஆயிரத்துள்  வருவன. இவற்றைக் கற்பார்க்கு இவை பிரிவுக்குக் காரணமான பிறப்பாகிய நோயினை அறுத்துப் பிரிவில்லாத   தேசத்திலே புகும்படி செய்யும் என்று திருமூழிக்களத்தப்பனை ஆழ்வார்களின் பாசுரங்களை இனிமையாக பாடிக்கொண்டு சேவித்தால் தீராத பிறவி நோயும் தீரும் என்று  உறுதியாக கூறுகிறார் நம்மாழ்வார்.   []                     நம்மாழ்வாருக்கு பெருமாள் ஒவ்வொரு கல்யாண குணத்தை காட்டி அருளினார் என்பது ஐதீகம். அவ்வாறு இத்திருமூழிக்களத்து எம்பெருமான் நம்மாழ்வாருக்கு “அன்பர்களுக்கு அருளும்  மிருதுத் தன்மை” என்னும் கல்யாண குணத்தை  காட்டி அருளினான் என்று ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் அன்ன புகழ் முடும்பை அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் கூறியுள்ளார். இங்குள்ள சான்றோர்கள் மற்றும் பக்தர்களை விட்டுப் பிரியாமல் எம்பெருமான் இருந்து கொண்டு ஆழ்வாரை மறந்து விட, பிரிவாற்றாமையினால் ஆழ்வார் தன்னை நாயகியாக பாவித்து பறவைகளை தூது விடுகின்றார். அதன் பின் எம்பெருமான் தனது சௌந்தர்யத்தையும் லாவண்யத்தையும் காட்டியபடி ஆழ்வாருக்கு சேவை சாதித்தார் என்பார்கள் பெரியோர்கள்.  []   காண்கின்ற ஐம்பூதங்கட்கும் இரு சுடர்க்கும் சேண்கலந்த இந்திரற்கும், தேவர்க்கும், - மாண்கரிய பாழிக்களத்தாற்கும், பங்கயத்து நான்முகற்கும் – மூழிக்களத்தான் முதல். (நூ தி. 62) பொருள்: கண்ணுக்குப் புலப்படுகின்ற ஐம்பூதங்களுக்கும், சூரிய சந்திரர்களுக்கும், இந்திரனுக்கும் மற்றும் ஏனைய தேவர்களுக்கும்,, விடமுண்டு கருத்த கண்ட ஈசனுக்கும், தாமரை மலரில் வசிக்கின்ற பிரம்மனுக்கும், திருமூழிக்களத்தில் எழுந்தருளியுள்ள திருமாலே மூலகாரணமாவார், என்று திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது 108 திருப்பதி அந்தாதியில் இத்திவ்யதேசத்தைப் பற்றிப் பாடியுள்ளார். அடுத்து நாம் இராம சகோதரர்களின் இளையவரான சத்ருக்னனை பாயமல்லில் தரிசிக்கலாம்.          அத்தியாயம் – 4 4.பாயம்மல் சத்ருக்னன் ஆலயம் []   []   கேரளாவின் நாலம்பலம் என்று அழைக்கப்படும்  இராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில்  நாம் நிறைவாக தரிசிக்கப் போகின்ற கோவில் பாயம்மல் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் சத்துருக்னன் கோவில் ஆகும். இந்த ஆலயத்தில் உள்ள பெருமாளை வழிபடுபவர்களுக்கு எதிரிகளால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். []   சத்ருக்னன் கோவில் அமைந்திருக்கும் பாயம்மல், பரதன் கோவில் அமைந்திருக்கும் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த திருத்தலத்திற்குச் செல்ல இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பாயம்மலில் அமைந்திருக்கும் சத்ருக்னன் கோவில், திருப்பிரையார் இராமர், இரிஞ்ஞாலக்குடா பரதன், திருமூழிக்களம் இலட்சுமணர் கோவில்களைப் போல் பிரம்மாண்ட கோவில் இல்லை. சிறிய அளவிலான ஆலயமாக இருந்தாலும், மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதைப் போல, இத்தல இறைவனின் சக்தியும் பெருமைக்குரியதுதான்.   []   அடியோங்கள் சென்ற போது இவ்வாலயம் புதிப்பிக்கப்பட்டு சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கும் போல தோன்றியது. ஆலய மதில் சுவர் மற்றும் கதவுகளில் பிரசாத கட்டிடத்தில் சக்கரத்தாழ்வார் வரவேற்றார். பலி பீடம் மற்றும் நுழை வாயில் புதிதாக வேயப்பட்ட பொன் தகடுகளால் மின்னிக் கொண்டிருந்தது. பலி பீடம் ஒரு அழகான கலை நுணுக்கம் கொண்ட தூண்களுடன் கூடிய மண்டபத்தில் அமைந்துள்ளது. ஆலயம் முழுவதும் புதிதாக பூசப்பட்ட வர்ணக்கலவையினால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. எங்கெங்கு காணினும் “ஓம் சத்ருக்னாய நம:” என்னும் மந்திரம் கண்ணில் பட்டது. ஆலயத்திற்கு எதிரே பிரம்மாண்டமான அரசமரம். இவ்வாலயத்தின் கருவறை சிறியதாக செவ்வக வடிவிலும், மேற்கூரை பிரமிடு வடிவத்திலும் அமைந்துள்ளது. ஆலய கருவறையில் நின்றிருக்கும் சத்துருக்ன பெருமாள் சதுர் புஜ விஷ்ணுவாக நான்கு திருக்கரங்களுடன், வலதுபுறம் மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் தாமரை மலர், இடதுபுறம் மேற்கரத்தில் சங்கு, கீழ் கரத்தில் கதை ஆகியவைகளைக் கொண்டு, நின்ற நிலையில் சேவை சாதிக்கின்றார். இந்தக் கோவில் வளாகத்தில் கணபதி,  அனுமன் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலயத்திற்குள் பின் புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. []                                       தங்கக் கவசம் பூண்ட பலி பீடம் ஸ்ரீமஹாவிஷ்ணு, பூலோகத்தில் இராமனாகப் பிறப்பெடுத்த போது, வைகுண்டத்தில் அவரைத் தாங்கும் ஆதிசேஷனே, இலட்சுமணனாகப் பிறந்து, எப்போதும் அவருக்குத் துணையாக இருந்து அவரைக் காத்தார். விஷ்ணுவின் திருக்கரங்களில் விளங்கும் சங்கு பரதனாகவும், சக்கரம் சத்துருக்கனனாகவும் பிறந்து அவருக்கு சேவை செய்தனர்.  இலக்ஷ்மணன், சத்ருகனன் இருவரும் இரட்டையர் தசரதரின் மூன்றாவது மனைவி சுமித்ரைக்கு பிறந்தவர்கள். இராமனை உடனிருந்து பார்த்துக் கொண்ட லட்சுமணனை விட, பரதனே உயர்ந்தவன். பரதன் ஆசையே இல்லாதவன், அண்ணன் காடு சென்றதும், அவனுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்திருக்கலாம், அரசனாகி இருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், அண்ணனின் பாதுகைகளைப் பெற்று வந்து, அதையே அரியாசனத்தில் வைத்து நாட்டை ஆண்டவன் அவன்.  பக்தனைப் பாகவதன் என்பர். பகவானை விடப் பாகவதனே உயர்ந்தவன் என்பதை உணர்த்தியவன் பரதன். பகவான் ராமனுக்குப் பாகவதனானப் பரதன் சேவை செய்தான் என்றால், அந்தப் பாகவதனுக்குச் சேவை செய்தவன் சத்துருக்னன். பரதன், இராமன் மேல் கொண்ட பக்தியை வழிமொழிந்து வாழ்ந்தவன் சத்ருக்னன் என்றால் அது மிகையல்ல. காட்டுக்குச் சென்ற இராமன், பதினான்கு ஆண்டுகள் கடந்தும் அயோத்திக்கு வராததால், மனமுடைந்த பரதன் நெருப்பில் விழுந்து உயிர் விடத் துணிந்தான். நெருப்புக் குண்டத்தில் குதிக்க தயாரான நிலையில், சத்ருக்னனைப் பார்த்து, ‘நீயே இனி இந்த நாட்டை ஆள வேண்டும்’ என்றான் பரதன். ஆனால் மண்ணின் மீது ஆசையில்லாத சத்ருக்னன் பேசாமல் இருந்து அமைதி காத்தான். அவன் அதிகம் பேசியதில்லை. ஆனாலும் கூட தான் கொண்ட இராம பக்தியை அமைதியாக இருந்த உயர்வாக்கிக் காட்டியவன் என்கிறது இராமாயண இதிகாசம். இராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பின் இலவணாசுரனை வென்றவர் சத்ருகனன் ஆவார்.  மது என்ற அரக்கன் சிவனைக் குறித்து தவம் செய்து ஒரு சூலம் பெற்றான். உனக்கும், உன் மகன் இலவணனுக்கும் எதிரிகளை ஒழிக்க இது உதவும் என்று கொடுத்தார். இலவணனின்  காலத்திற்குப் பிறகு சூலம் என்னிடம் வந்துவிடும் என்று சிவபெருமான் கூறி விட்டு, மறைந்து விட்டார் மது நல்லவனாயிருந்தான். மகன் நேர் எதிர். துஷ்டனான இலவணனை அழிக்க இராமர் சத்ருக்னனிடம் சொல்கிறார். அண்ணலின் ஆணை கேட்டு அதை நிறைவேற்றத்தயாராக, கோப வடிவத்தில் இத்தலத்தில் நிற்கிறார் சத்ருக்னர் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்பு வாய்ந்த சத்ருக்னனுக்கு, கேரளாவின் பாயம்மலில் தனியாகக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே கருதப்படுகிறது. []   குலசேகரப்பெருமாள் தமது பெருமாள் திருமொழியில் திருசித்ரகூட பாசுரத்தில் (இராமயண சுருக்கம்) இவ்வரலாற்றை இவ்வாறு பாடியுள்ளார். செறி தவச் சம்புகன்  தன்னைச் சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த நிறை மணிப்பூண் அணியும் கொண்டு  இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத் திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னுள் தில்லை நகர்த் திருசித்ரகூடந் தன்னுள் உறைவானை மறவாத உள்ளந்தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே ( பெரு.திரு. 10.9) பாயம்மலில் இருக்கும் சத்ருக்னன் கோவில் அதிகாலை 4.30 மணி முதல்  10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் தினமும் உஷா பூஜை, உச்சி கால பூஜை, அத்தாழ பூஜை என்னும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. சத்ருக்னன் என்றால் சத்ருக்களை (எதிரிகளை) வெல்பவன் என்று பொருள். பொதுவாக, இவரை வழிபடுபவர்களுக்கு எதிரிகளால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்கின்றனர்.   []   காணுமிடமெங்கும் சக்கரத்தாழ்வார் சத்ருக்னன் விஷ்ணுவின் கையிலிருக்கும் சக்கரத்தின் அம்சம் என்பதால், இக்கோவிலில் இவரைச் சுதர்சன மூர்த்தியாகவே வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு சுதர்சன மலரஞ்சலி, சக்கர சமர்ப்பணம் ஆகியவை முக்கியமான வழிபாடுகளாக இருக்கின்றன. மனிதனின் பல்வேறு பாதிப்புகளுக்குக் காரணமாக இருக்கும் கடன், நோய், எதிரி ஆகியவைகளால் துன்பமடைபவர்கள் இவ்வழிபாடுகளில் கலந்து கொண்டால், அனைத்துத் தொல்லைகளும் நீங்கி மன அமைதியோடு நல்ல பலனையும் பெற முடியும். நமஸ்கார மண்டபத்தில் சுதர்சன சக்கர யந்திரங்கள் உள்ளன, விரும்புபவர்கள் அதை பெருமாளின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்து பெற்றுக் கொண்டு சென்று தங்கள் இல்லங்களில் வைத்து வழிபடுகின்றனர்.இந்தத் திருத்தலத்தில் கும்பம் மாதத்தில் (மாசி மாதம்) பூசம் நட்சத்திர நாளில் தொடங்கி ஐந்து நாட்கள் விழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இந்நாட்களில் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கேரளாவில் ஆடி மாதம் முழுவதையும் இராமாயண மாதம் என்று சொல்கின்றனர். இந்த மாதம் முழுவதும் நாள்தோறும் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இம்மாதத்தில் ஆலயத்துக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். கேரளாவின் பாயம்மல் தவிர, உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷிலும் சத்ருக்னனுக்கு ஒரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் இராம் ஜூலா எனும் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோவில் ‘ஆதி பத்ர நாராயணன் கோவில்’ என்றும் ‘ஸ்ரீ சத்துருக்னன் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது. திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே ‘சக்கரத்தாழ்வார்’. இவர் திருமாலுக்கு இணையானவர் என்கின்றது புராணங்கள். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சனாழ்வார் என்று வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். விஷ்ணு கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கு என்று தனிச் சன்னிதி அமைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். பெரியாழ்வாரும் தமது திருப்பல்லாண்டில் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின் சேவடி செவ்வி திருகாப்பு அடியோமொடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு  வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைப்போர் புக்கு முழங்கும் பாஞ்சசன்யமும் பல்லாண்டு - என்று சக்கரத்தாழ்வாரையும் மங்களாசாசனம் செய்துள்ளார்.  சக்கரத்தாழ்வாரைத் தினமும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால், கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் கூட அழிந்து போவர். மனதில் தோன்றும் பயம் அனைத்தும் இல்லாமல் போகும். தீர்க்க முடியாத நோய்களும் குணமாகும். திருமணத்தடைகள் நீங்கும்,வறுமை ஒழிந்து செல்வம் குவியும். சமயம் கிட்டும் போது கேரளா சென்று இராம சகோதரர்கள் நால்வரையும் சேவித்துவிட்டு வாருங்கள். இனி இந்த யாத்திரையின் போது தரிசித்த மற்ற சில ஆலயங்களைப் பற்றியும் அடியேன் இந்த யாத்திரை செல்ல காரணமாக இருந்த   இரு அம்மன் ஆலயங்களின் பூர உற்சவத்தைப் பற்றியும் காணலாம் அன்பர்களே. அத்தியாயம் – 5 5.திருச்சூர் வடக்கு நாதர் ஆலயம் []                                   கொடி மரத்தில் அருள் பாலிக்கும் வடக்குநாதர் இந்நாலம்பல யாத்திரையில் திருச்சூரை சுற்றி உள்ள இன்னும் பல ஆலயங்களையும் தரிசித்தோம். அவற்றுள் ஒரு முக்கிய ஆலயம் திருச்சூர் வடக்குநாதர் ஆலயம். அடியேன் பள்ளி பருவத்தில்  இருந்தே பல முறை கேரளம் சென்றிருந்தும் திருச்சூர் சென்று சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. அவனருளால் இந்த யாத்திரையில் அப்பாக்கியம் கிட்டியது. வாருங்கள் பூரம் உற்சவத்திற்கு பெயர் போன கேரளத்தின் புகழ் பெற்ற வடக்கு நாதரை தரிசிக்கலாம். இமயமலை சென்று திருக்கயிலை நாதரை தரிசிக்க முடியாதவர்கள் திருச்சூர் வந்து வடக்கு நாதரை தரிசிக்க திருக்கயிலை நாதரை தரிசித்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் பரசுராமர். இவர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். ஜமதக்னி முனிவரிடமிருந்த காமதேனுப் பசுவின் சிறப்புகளை அறிந்த கர்த்தவீரியன் என்ற மன்னன், அந்தப் பசுவைத் திருடிச் சென்று விட்டான்.   கர்த்த வீரியனை அழித்துப் பசுவை மீட்டு வந்தார் பரசுராமர். இதனால் கர்த்தவீரியனின் மகன்களுக்கும், பரசுராமருக்கும் பகை ஏற்பட்டது. இதனால் அவர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னியை கொன்றனர். இதையடுத்து அரச குலத்தவர் மீது கோபம் கொண்ட பரசுராமர், கர்த்த வீரியன் புதல்வர்களை அழித்ததுடன் நிற்காமல்  21 தலைமுறை க்ஷத்திரியர்கள் பலரையும் அழித்தார்.   அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க நினைத்த பரசுராமர், சிவபெருமானுக்குப் பல கோவில்களை நிறுவ விரும்பினார். அதற்காகக் கடல் அரசனிடம் சென்ற அவர், சிவபெருமான் கோவில்களுக்காகப் புதிய இடத்தை உருவாக்க உதவும்படி வேண்டினார். பரசுராமர் வருணனிடம் இருந்து பெற்ற பரசுவைக் கொண்டு கடலை ஒதுக்கி உருவாக்கிய கேரள தேசத்தில் திருக்கயிலை நாதர் வந்து கோவில் கொள்ள வேண்டுமென்று விழைகின்றார். எனவே அவர் திருக்கயிலை சென்று சிவபெருமானிடம் மனம் உருக விண்ணப்பிக்கின்றார்.   புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில், சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைத்தார். சிவபெருமான், தன்னுடைய சிவ கணங்களில் ஒன்றான சிம்மோதரன் என்பவனை, கோவிலுக்குள் நடைபெற்று வரும் பணிகளை கவனித்து வரும்படி அனுப்பினார். ஆனால் போனவன் திரும்பி  வரவில்லை. அங்கிருந்த அமைதி அவனை கட்டி இழுத்தது. அங்கேயே அமர்ந்து தியானத்தில் மூழ்கினான்.  நீண்ட நேரமாகியும் சிம்மோதரன் வராததால், உள்ளே சென்றார் சிவபெருமான். தன்னிலை மறைந்திருந்த சிம்மோதரனை தன் காலால் உதைத்தார். அதன் பிறகு அங்கிருந்த தூணில் ஒளிமயமாகி நின்றார். கோவில் பணி நிறைவடையாத நிலையில், இறைவன் கோவிலுக்குள் வந்து விட்டதை உணர்ந்த பரசுராமர், இறைவனின் கோபத்தைக் குறைப்பதற்காக அவரை நெய் கொண்டு குளிர்வித்தார். இதனால், இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது. 12 அடி உயரம், 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த இலிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது.  சிவபெருமான் எழுந்தருளியதால் “திருச்சிவப்பேரூர்” என்றழைக்கப்பட்ட ஊர் இன்று திருச்சூர் என மருவியுள்ளது. வடகயிலை நாதர் இவர் என்பதால் ஸ்ரீவடக்கு நாதர் என்றழைக்கப்படுகின்றார். மேலும் ரிஷபாத்ரிபுரம் என்றும் தென் கயிலாயம் என்றும் அறியப்படுகின்றது.   []   திருச்சூர் நகரத்தின்  மையப்பகுதியில் சற்று உயர்ந்த குன்றுப்பகுதியில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இப்புராதான ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான இவ்வாலயம் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் எழிலாக விளங்குகின்றது.  பிரம்மாண்டமான மதிலுடன் நான்கு திக்குகளிலும் கோபுர வாயிலுடன் அமைந்துள்ள இவ்வாலயத்தின் வடக்கு மற்றும் தெற்கு வாயில்கள் பொதுவாக மூடி வைக்கப்பட்டுள்ளன. கேரளப்பாணியில் ஓடுகள் வேயப்பட்டு தேக்கு மரச்சட்டங்கள் தாங்கிப்பிடிக்கும் படகு போன்ற அமைப்பில் மூன்று  நிலை மேற்கு  கோபுரம் அப்படியே சொக்க வைக்கின்றது.   இக்கோவிலில் ஒரு சிறப்பான வழிபாட்டு முறை உள்ளது. அதன் பிரகாரம்,  முதலில் நாம் மூலஸ்தானத்தை வணங்க வேண்டும். அது என்ன மூலஸ்தானம் என்று வியக்கின்றீர்களா? ஸ்ரீவடக்கு நாதர் பரசுராமரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து ஜெகத்ஜோதியாய் இலிங்க வடிவில் ஒரு ஆல மரத்தடியில் தோன்றினார். இந்த ஆலமரமே ஸ்ரீமூலஸ்தானம் என்றழைக்கப்படுகின்றது. வெகு காலம் இம்மரத்தினடியிலேயே பக்தர்கள்  சிவனை வழிபட்டு வந்துள்ளனர்.   கொச்சின் இராச்சியத்தின் அரசன், பின்னர் இலிங்கத்தை மிகவும் வசதியான இடத்திற்கு மாற்றி ஒரு கோவிலில் வைத்து வழிபட முடிவு செய்தார். தெய்வத்தை புதிய இடத்தில் மீண்டும் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதில் ஒரு சிரமம் இருந்தது.   ஆலமரத்தின் ஒரு பெரிய பகுதியை வெட்டாமல் இலிங்கத்தை அகற்ற முடியவில்லை. மரத்தின் கிளைகளை வெட்டும்போது, அதன் ஒரு பகுதி சிலை மீது விழுந்து, சிலை சேதமடையும் அபாயம் இருந்தது. ஆட்சியாளருக்கும் மற்றவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாது திகைத்த போது, யோகதிரிப்பாடு ஒரு தீர்வோடு முன்வந்தார். அவர் தெய்வத்தை முழுவதுமாக மூடி மறைக்கும்படி படுத்துக் கொண்டு, மரத்தை வெட்டும்படி ஆட்களிடம் கேட்டுக் கொண்டார். வெட்டுதல் தொடங்கியது. அனைவரும் அதிசயிக்கும்படி மரத்தின் ஒரு துண்டு கூட தெய்வத்தின் அருகே எங்கும் விழவில்லை. தெய்வம் அனைத்து உரிய சடங்குகளுடன் நகர்த்தப்பட்டு புதிய இடத்தில் நிறுவப்பட்டது, அது இப்போது வரை உள்ளது. பின்னர் சாஸ்திரங்களில் வகுக்கப்பட்ட விதிகளின்படி இக்கோயில் கட்டப்பட்டது. பின்னர் கோவில் எழுப்பி சிவபெருமானை வேறிடத்தில் பிரதிஷ்டை செய்தாலும் இன்றும் இலிங்கம் தோன்றிய இடத்தை புனிதமானதாக கருதி போற்றி வணங்குகின்றனர்.  மேற்கு வாயிலுக்கு எதிரே உள்ள மூலஸ்தானத்தை விழுந்து வணங்கி விட்டே ஆலயத்தின் உள்ளே செல்கின்றனர் பக்தர்கள்.   இக்கோயில் பெரும்தச்சன் காலத்தில் கட்டப்பட்டது. பெரும்தச்சன் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது; எனவே இவ்வாலயத்தில் உள்ள கூத்தம்பலம் 1,300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இக்கோயில் புத்த மதம், சமண மதம் மற்றும் வைணவம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது. ஆரம்ப நாட்களில், பரமேக்காவு பகவதியும் வடக்குநாதன் ஆலயத்தின் உள்ளே இருந்தார். ஆனால் கூடல்மாணிக்கம் கோயில், கொடுங்கல்லூர் பகவதி கோயில் மற்றும் அம்மதிருவாடி கோயில், வடக்குநாதன் கோயிலை விட பழமையானது என்று கோயில் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.   காலடியைச் சேர்ந்த சிவகுரு மற்றும் ஆர்யம்பா ஆகியோருக்கு வடக்கு நாதனுக்கு முன்பாக அவர்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஆதிசங்கரர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இவர்கள் கோவிலில் 41 நாட்கள் கடும் விரதம் இருந்தனர்.  சிவபெருமான் ஆர்யாம்பாளின்  கனவில் தோன்றி, "ஆயுள் குறைந்த நல்ல சற்புத்திரன் வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளுடன் திறமை இல்லாத முட்டாளாக ஒரு புத்திரன் வேண்டுமா?" என்று வினவ, அன்னையும் தனக்குப் புத்திசாலியான சற்புத்திரன்தான் வேண்டும் என்று மொழிய, அவரும் ‘அப்படியே நடக்கும்’ எனக் கூறி மறைந்து விட்டார். சிவனின் நினைவாக, அவர்கள் மகனுக்கு சங்கரன் என்று பெயரிட்டனர். இந்தக் கோயிலின் வழிபாடு முழுவதையும் ஸ்ரீஆதிசங்கரரே முறைப்படுத்தி வைத்திருக்கிறார்.  கோபுர வாயிலுக்கு எதிரே பிரம்மாண்டமான பித்தளை  நில விளக்கு அதன் கூர்ம பீடமும், அஷ்ட நாகங்களும், மான் மழு ஏந்திய சிவபெருமான் சிற்பமும் எழிலாக விளங்குகின்றன.  அருகில் ஸ்ரீவடக்கு நாதரின் படத்திற்கு முன் நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள்.     []                                 மேற்கு கோபுரம் கோபுரத்தில் மிளிரும் “ஓம் நமசிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்துக் கொண்டே மூன்றடுக்கு கேரளபாணி பிரம்மாண்ட கோபுர வாயிலைக் கடந்து சுற்றம்பலத்திற்குள் (வெளிப்பிரகாரத்திற்குள்) நுழைகின்றோம். உயரமான மதிற்சுவற்றுக்கும் நலம்பலத்திற்கும் இடையே ஒரு காலத்தில் அடர்ந்த தேக்கு மரக்காடு இருந்துள்ளது. ஆனால் இன்று சில தேக்கு மரங்களே எஞ்சியுள்ளன. ஆங்காங்கே அரசு, ஆல், வேம்பு, வில்வம், பாரிஜாத மரங்கள் உள்ளன. இனி சுற்றம்பலத்தை வலம் வரலாமா அன்பர்களே. முதலில் இக்கோவிலில் எப்படி வழிபட வேண்டும் என்பதைக் கூறும் அறிவிப்புப் பலகையைக் காண்கிறோம். அதன் பிரகாரமே நாமும் தரிசிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் கூத்தம்பலம் எனப்படும் நாட்டிய மண்டபம் உள்ளது.   இம்மண்டபத்தில் தான் கோயில் திருவிழாக்களின் போது கதகளி, மோகினியாட்டம், தெய்யம் உள்ளிட்ட நாட்டியங்களும், இசைக் கச்சேரிகளும் நடைபெறுகின்றன. அருகில் கோசாலை கிருஷ்ணர் சன்னதி.  கிருஷ்ண பரமாத்மா வல திருக்கரத்தில் சாட்டையும், இடது திருக்கரத்தில் சங்கமும் ஏந்தி பார்த்தசாரதியாக எழிலாக தரிசனம் தந்தருளுகின்றார். வில்வ மங்கலம் சுவாமிகள் ஸ்ரீகிருஷ்ணரின் சான்னியத்தை இங்கு  தரிசித்து இச்சன்னதியை அமைத்தாராம்.    கீதாச்சார்யனை வணங்கி பிரகார வலத்தை தொடர்ந்தால் வடக்குப் பிரகாரத்தில் அர்ஜுனன் வில்குழியைக் காண்கிறோம். அர்ஜுனன், வடக்கு நாதரின் அபிஷேகத்திற்காக கங்கை நீர்  வேண்டி, தனது வில்லால் கீறி உருவாக்கிய தீர்த்தம் இது. ஊற்றுள்ள  இடத்தைச் சுற்றி சதுர வடிவத்தில் கிணறு போல கட்டி கம்பி வலை போட்டு பாதுகாக்கின்றனர்.   சற்று தள்ளி வடக்குப் பிரகாரத்தில் மதில் சுவர் அருகே கிழக்கு நோக்கிய  ஒரு சிறு சன்னதியில்  “திசை காப்பான் நந்தி அருள் பாலிக்கின்றார். ஒவ்வொரு திசையாக சுற்றி அமர்ந்து வருவதால் இந்நந்தியெம்பெருமானுக்கு இத்திருநாமம். ஆதி காலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த இவர் சிறிது சிறிதாக சுற்றி தென் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருந்தாராம். தற்போது தென்மேற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார்.   வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி வலத்தை தொடரும் போது ஸ்ரீவடக்கு நாதரை இத்தலத்தில்  பிரதிஷ்டை செய்த பரசுராமருக்கு சிறுமாட வடிவில் ஒரு சன்னதி உள்ளது. இவ்விடத்தில்தான் பரசுராமர் தனது அவதாரம் நிறைவு பெற்ற பிறகு பூமியில் மறைந்தாராம். இவ்விடத்தில் இருந்து கோபுரத்தை பார்த்து வணங்க வேண்டும் என்பது  நியதி.   கிழக்கு பிரகாரத்தின் நடுவில் சிம்மோதரன் சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தை காவல் காக்கும் பூத கணமான இவர் சிம்ம முகத்துடனும் பானை வயிறுடனும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார்.   அவருடைய வயிறு சிம்மத்தின் வயிற்றைப் போல நீண்டு இருப்பதால் இப்பெயர்.  இவரை தரிசித்த பின் வடக்கு திசை நோக்கி நின்று  காசி விஸ்வநாதரை மனதில் தியானித்து வணங்கிய பின், சிம்மோதரன் சன்னதிக்கு எதிரே, மதிற்சுவரில் உள்ள சிறு முக்கோண துளை வழியாக ஸ்ரீவடக்கு நாதர் விமானத்தின் தகழிக்க குடத்தை (கலசம்) பார்த்து வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.   சிம்மோதரனின் திருநாமம் சர்வகன், நந்தி தேவரிடம் மல்யுத்தம் பயின்ற மாணவன், சிவபெருமானின் தொண்டன், கேரளத்தில் தான் கோயில் கொள்ள தகுந்த தலத்தை தேர்ந்தெடுக்க  சிவபெருமான் அனுப்பியதாகவும், சுற்றி அலைந்து  களைத்து இங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது சிவ பார்வதி இங்கு கோவில் கொள்ள தோன்றி சிம்மோதரனை இங்கு உதைத்துத்  தள்ளியதாக ஐதீகம்.      அடுத்து தென்கிழக்கில் உள்ள சம்புதார என்ற  மேடையில் ஏறி நின்று கிழக்கு நோக்கி நின்று  சிதம்பரத்தில் உள்ள நடராஜரையும் தெற்கு நோக்கி நின்று  இராமேஸ்வரம் இராமநாதரையும்  மனதில் நினைத்து வணங்க வேண்டும். நந்திகேஸ்வரரின் அறிவுரைப்படி ஆதிசேஷன் இம்மேடையில் அமர்ந்து சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்தாராம். அந்த  நின்ற நாதர் என்றழைக்கப்படும் நடராசரின் ஓவியத்தை நாலம்பலத்தின்  வாயிலுக்கு அருகில் தரிசிக்கலாம். வலத்தை தொடர்ந்து தெற்கு கோபுர வாயிலுக்கு வந்தவுடன் தெற்கு நோக்கி நின்று கொடுங்கல்லூரில் உள்ள பகவதியை மனதில் தியானித்து வணங்க வேண்டும். கோபுர வாயிலின் வலப்புறம் உள்ள அம்ம தாரவில்  ஏறி நின்று   இரிஞ்ஞாலக்குடா கூடல் மாணிக்கம் பெருமாளையும் (பரதன்),  ஆதியில்  பரதனை ஸ்ரீராமரின் சன்னதிக்கு அருகில் பிரதிஷ்டை செய்ய உத்தேசித்திருந்தார்களாம் வக்கேகைமாலின் வேண்டுகோளின்படி பின்னர் இரிஞ்ஞாலக்குடாவில் பிரதிஷ்டை செய்தார்களாம்.  ஊரகத்தம்மனின் திருவடிகளையும்  தியானித்து வணங்க வேண்டும். தினமும்  பின்னர் வடக்கு நோக்கி திரும்பி வடக்குநாதரின் தகழிக்கக் குடத்தைப் பார்த்து வணங்க வேண்டும். அங்கிருந்து வியாச சிலாவிற்கு சென்று “ஹரி ஸ்ரீகணபதியே நம:” என்று எழுதி வியாசரை வணங்க வேண்டும். அடுத்து ஒரு சிறு சன்னதியில் அருள் பாலிக்கும்  தர்ம சாஸ்தாவை வணங்க வேண்டும். அடுத்து ஸ்ரீம்ருத சஞ்சீவினிக்கு சென்று அதை வணங்கி மேற்கில் அமைந்துள்ள நாகராஜாவை வணங்கவேண்டும்.   அடுத்து ஆதி சங்கரரையும் சன்னதியில் உள்ள சங்கு சக்கரங்களை வணங்க வேண்டும் இவ்வாறு வெளி சுற்றை முடித்துவிட்டு நலம்பலம் என்றழைக்கப்படும் உள் சுற்றுக்குள் செல்லவேண்டும்.   நலம்பலத்தின் நுழைவாயிலில் வாசுகி சயனர் மற்றும் நின்ற நாதர் இருவரும் ஓவிய வடிவில் அருள் பாலிக்கின்றனர் கேரளத்தின் ஓவிய பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு இவ்வோவியங்கள். அவர்களை வணங்கிய பின்னர்  நந்தி தேவரை  வணங்க வேண்டும்.   சிவபெருமான் கோவில்களில் பொதுவாக நந்தி, மூலவரை நோக்கியபடி அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் நந்தி எதிர்புறம் இல்லாமல், விலகி தனி மண்டபத்தில் இருக்கிறது. பிரதோ‌ஷக் காலங்களில் மட்டும் சிவபெருமான் இந்த மண்டபத்தில் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருளும் நிகழ்வுகள் நடத்தப்பெறுகின்றன. பின்னர் சுற்றம்பலத்திற்குள் நுழைந்து வேட்டைக்கொரு மகனை வணங்கவேண்டும். முதலில் சுற்றம்பலத்தில் அமைந்துள்ள சன்னதிகள் எவை என்று காண்போம் பின்னர் நலம்பலத்தில் இச்சன்னதிகளை வணங்கவேண்டிய முறையைப் பற்றிக் காணலாம்.   நலம்பலத்தில் சிவ-பார்வதி மற்றும் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட இராமர், சங்கரநாராயணர், கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக வழிபாடு நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பாகும். வடக்கில் அமைந்துள்ள வட்ட வடிவத்திலான ஏக தள, தாமிர தகடுகளால் வேயப்பட்ட  சாய்ந்த தொப்பி வடிவ விமானத்துடன் கூடிய  கருவறையில், சிவபெருமான் மேற்கு நோக்கிய நிலையிலும்,  பின்புறம் அமைந்திருக்கும் சன்னிதியில் பார்வதிதேவி கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கின்றனர். இந்த ஸ்ரீகோவில் அனைத்திலும் பெரியது.  வடக்குநாதரின் சன்னதிக்கு எதிரே சதுர வடிவ, பிரமிட் கூரையுடன் அமைந்த நமஸ்கார மண்டபம் உள்ளது. உள் சுற்றில் அழகிய வேலைப்படுகளுடன் கூடிய நான்கு தூண்களும், வெளிச்சுற்றில் பன்னிரண்டு தூண்களும் உள்ளன. உட்கூரையிலும், ஸ்ரீகோவில் சுவற்றிலும் சைவ வைணவ பேதம் இல்லாமல் அழகிய சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.   நடுவில் உள்ள துவி தள வட்ட வடிவ ஸ்ரீகோவிலில் சங்கரநாராயணர் அருள் பாலிக்கிறார்.  எதிரே  எட்டு தூண்களுடன் கூடிய சிறு நமஸ்கார மண்டபம் உள்ளது. வடக்கு நாதருக்கும் ஸ்ரீராமருக்கும் இடையில் அமைந்துள்ளதால் மத்யநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இச்சன்னதியில் பிரசாதம் ஏதும் வழங்கப்படுவதில்லை. மூன்றாவது ஸ்ரீகோவில் ஸ்ரீராமருக்குரியது. இவரது  ஸ்ரீகோவில் துவி தள கூரையுடன் சதுர வடிவில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய  பதினாறு தூண்களுடன் கூடிய முக மண்டபத்துடன் எழிலாக அமைந்துள்ளது. திடபள்ளிக்கு எதிரே வடக்குநாதர் மற்றும் சங்கரநாராயணர் சன்னதிக்கிடையில் சிறிய மஹாகணபதி சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது.   மேலும் வடக்கில் தெற்கு நோக்கி வேட்டைக்கொரு மகன் சன்னதியும் நலம்பலத்தில் அமைந்துள்ளது.  அனைத்து சன்னதிகளிலும் அழகிய சிற்பங்கள் கண்ணுக்கும் மனதிற்கும் விருந்து. இனி வேட்டைக்கொரு மகன் யார் என்று காணலாம் அன்பர்களே. சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரத்தைப் பெற விரும்பிய அர்ச்சுனன், அடர்ந்த காட்டுக்குள் சிவபெருமானை நினைத்து கடுமையான தவம் இயற்றினான். அவனது தவத்தைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பிய சிவபெருமான் கிராதக வேடமொடு கிஞ்சுக வாயவளுடன் அங்கு எழுந்தருளினர்.   சிவன் வேடுவனாகவும், பார்வதிதேவி வேடுவப் பெண்ணாகவும் அங்கு வந்த சமயம், அர்ச்சுனனின் தவத்தைக் கலைத்து, அவனைக் கொல்லும் நோக்கத்தில் துரியோதனன் அனுப்பிய மூகன் எனும் அரக்கன் பன்றி உருவமெடுத்து அங்கு வந்தான். அதனையறிந்த அர்ச்சுனன் அந்தப் பன்றியைக் கொல்வதற்காக அம்பு எய்தான். அதே வேளையில், அங்கு வேடுவனாக வந்த சிவபெருமானும் அந்தப் பன்றியைக் கொல்ல அம்பு எய்தார். இரு அம்புகளும் பாய்ந்த நிலையில் அந்தப் பன்றி இறந்து விழுந்தது. இந்நிலையில், அந்தப் பன்றியை யாருடைய அம்பு முதலில் குத்திக் கொன்றது என்பதில் அர்ச்சுனனுக்கும் வேடுவனாக வந்த ஈசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அர்ச்சுனன் வேடுவனை நோக்கித் தன் அம்பைச் செலுத்தினான். வேடுவன் அந்த அம்பைத் தனது அம்பால் எளிதில் வீழ்த்தினான். இப்படியே, அர்ச்சுனனிடம் இருந்து வந்த அம்புகள் அனைத்தும் வேடுவனால் வீழ்த்தப்பட்டன. பின்னர் இருவரும் மல்யுத்தம் புரிந்தனர். தன்னிடம் அம்புகள் எதுவுமில்லாமல் போனதால் கவலையடைந்த அர்ச்சுனன், அங்கிருந்த மலர்களை எடுத்துச் சிவலிங்கத்தின் மேல் தூவி, வேடுவனை எதிர்க்கத் தேவையான ஆயுதத்தை வழங்கிட வேண்டினான். அப்போது, அவன் சிவலிங்கத்தின் மேல் தூவிய மலர்கள் அனைத்தும் வேடுவனின் காலடியில் சென்று விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். அதன் பிறகுதான் அவனுக்கு வேடுவன் உருவத்தில் இருப்பது இறைவன் சிவபெருமான் என்பது தெரிந்தது. உடனே அவன், இறைவன் என அறியாமல் எதிர்த்துச் சண்டையிட்டதற்காக வருந்தி மன்னிப்பு வேண்டினான். அவனை மன்னித்த இறைவன், அவன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தை வழங்கினார்.  அர்ச்சுனனுக்கு இறைவன் வேடுவன் உருவில் காட்சியளித்த தோற்றமே கிராதன் (வேடுவன்) தோற்றம் என்றும், இவ்வடிவில் இருக்கும் இறைவனைக் கிராதமூர்த்தி (வேடுவமூர்த்தி) என்றும், பாசுபதமூர்த்தி என்றும் சொல்லி வழிபடுகின்றனர் என்று புராணக்கதைகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் வேடுவன் உருவத்தில் இருக்கும் இறைவனைக் கிராதமூர்த்தி (வேடுவமூர்த்தி), பாசுபதமூர்த்தி என்ற பெயர்களில் அல்லாமல், ‘வேட்டக்கொருமகன்’ (வேட்டைக்கொரு மகன்) என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். அதற்குக் காரணமாக, அங்கு முந்தைய புராணக்கதையின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கதை சொல்லப்படுகிறது. []                               வேட்டைக்கொரு மகன் அர்ச்சுனனுக்குப் பாசுபத அஸ்திரத்தை வழங்கிய சிவபெருமானும், பார்வதிதேவியும் அந்தக்காட்டில் வேடுவர்களாகத் தொடர்ந்து சில காலம் இருந்தனர். அப்போது அவர்களுக்குப் பிறந்த ஒரு ஆண் குழந்தையை அந்தக் காட்டிலேயே விட்டுச் சென்றுவிட்டனர். வேடர்களின் தலைவன் அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தான்.வேடர்களின் தலைவன் பராமரிப்பில் வளர்ந்த அந்தக் குழந்தை சிறுவனாக இருந்த போதே, அம்பு எய்தல், எதிரிகளை வீழ்த்துதல் என்று பல்வேறு திறன்களை வளர்த்துக் கொண்டது. அதோடு மட்டுமில்லாமல் குறும்புகளையும் அதிகமாகச் செய்யத் தொடங்கியது. அவன் செய்த குறும்புகளால் அந்தக் காட்டுக்குள் வாழ்ந்து வந்த முனிவர்கள் தவமியற்ற முடியாமல் தவித்தனர். அவனது தொல்லைகளால் பெரும் பாதிப்படைந்தனர்.   அதனால் கவலையடைந்த முனிவர்கள், அந்தச் சிறுவனால் ஏற்படும் தொல்லைகளைப் பற்றிப் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். அதனைக் கேட்ட பிரம்மா, சிவபெருமானிடம் சென்று தெரிவிக்கும்படிச் சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.  முனிவர்கள் அனைவரும் சிவபெருமானைச் சென்று பார்த்தனர். அவர், சிறுவன் விளையாட்டாகச் செய்வதைப் பெரிதுபடுத்த வேண்டாம். அவன் பெரியவனாக வளர்ந்ததும் சரியாகிவிடுவான் என்று சொன்னார். அவர்களுக்கும் சிவபெருமான் சொல்வது சரி என்று தோன்றியதால், அங்கிருந்து மீண்டும் அந்தக் காட்டிற்குத் திரும்பி வந்து விட்டனர். அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனான பின்பும் தனது குறும்புகளை நிறுத்திக் கொள்ளவில்லை, அங்கிருந்த முனிவர்கள், அவர்களைத் தேடி வருபவர்கள் என்று அனைவருக்கும் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தான். அவனுடையத் தொல்லைகளைப் பொறுக்க முடியாத முனிவர்கள், இம்முறை விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அதனைக் கேட்ட விஷ்ணு, அவனுடைய தொல்லை இனி இருக்காது என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார். அதன் பிறகு விஷ்ணு, அவனுக்கு முன்பாக அந்தணர் உருவில் தோன்றித் தன்னிடமிருந்த தங்கத்திலான உடைவாள் ஒன்றைக் காட்டினார். அதன் அழகிய வேலைப்பாடுகளில் மயங்கிய அவன் விஷ்ணுவிடம், தனக்கு அந்த உடைவாளைத் தரும்படி கேட்டான். உடனே விஷ்ணு, ‘உடைவாளை எப்போதும் வலது கையிலும், வில் அம்பை இடது கையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லி வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட அவன், அந்த உடைவாளை வலது கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டியிருந்ததால், இடது கையில் இருக்கும் வில், அம்பைப் பயன்படுத்த முடியாமல் போனது. அதனால், அவன் செய்து வந்த குறும்புகள் அனைத்தும் குறைந்து போனது மட்டுமின்றி, அவனால் பிறருக்கு ஏற்பட்டு வந்த தொல்லைகளும் இல்லாமல் போனது. இந்நிலையில் அவன் முன்பு தோன்றிய சிவபெருமான், அவனைத் தென்பகுதிக்குச் சென்று, அவனை ஏற்குமிடத்தில் காவல் தெய்வமாக இருக்கும்படி அனுப்பி வைத்தார். அங்கிருந்து கிளம்பிய அவன், பல்வேறு பகுதிகளைக் கடந்து கேரள மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்தவர்கள் அவனுக்கு வரவேற்பளித்தது மட்டுமின்றி, அவனைத் தங்கள் காக்கும் கடவுளாக இருக்கவும் வேண்டினர். அவனும் அதற்குச் சம்மதித்தான். அவர்கள் அவனுக்கு அங்கு கோவில் அமைத்து ‘வேட்டக்கொருமகன்’ எனும் பெயரில் வழிபடத் தொடங்கினர். இக்கோவிலுக்கு முதன் முதலாக வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள வியாசமலையில் ‘ஹரி ஸ்ரீகணபதியே நமஹ’ என்று தங்களது கைகளால் எழுதி மஹா கணபதியை வேண்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு வேண்டிக்கொண்டால் அடுத்த முறை இந்த ஆலயத்திற்கு வரும்போது, தன்னுடைய வாழ்வில் உயர்ந்த நிலையை பெற்றிருப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது. இனி நலம்பலத்தில் அமைந்துள்ள இச்சன்னதிகளை எவ்வாறு வழிபடவேண்டும் என்று காணலாம் அன்பர்களே. முதலில் வடக்குநாதன் சன்னதியில் மணி வடிவில் விளங்கும் வாசுகியை வணங்கிய பின் வடக்குநாதரை வணங்கி பின்னர் இடமாக சென்று அவருக்கு பின்புறம் உள்ள பார்வதி அன்னையை வணங்க வேண்டும், பொதுவாக கேரள ஆலயங்களில் கோமுகியை தாண்டி செல்வதில்லை என்ற சம்பிரதாயம் இக்கோவிலும் கடைபிடிக்கப்படுவதால் கோமுகி வரை சென்று விட்டு பின் வலமாக வந்து மஹாகணபதியை வணங்க வேண்டும், அடுத்து சங்கரநாராயணரை வணங்கி, ஸ்ரீராமரை வணங்கிய பின் திரும்பி வந்து சங்கரநாராயணர், மஹா கணபதி, பார்வதி – வடக்குநாதர்,  மஹா கணபதி, சங்கரநாராயணர், ஸ்ரீராமர் சங்கரநாராயணர், ஸ்ரீராமர்   சங்கரநாராயணர், மஹா கணபதி, பார்வதி – வடக்குநாதர் என்ற முறையில் வணங்க வேண்டும்.     இவ்வாறு வடக்குநாதரையும் இராமரையும் நான்கு முறையும், சங்கரநாராயணரை ஆறுமுறையும் வணங்கவேண்டும். இவரது சன்னதியில் பிரசாதம் எதுவும் வழங்குவதில்லை . ஆலயத்தின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பாதுகாவலர் இவரே.  சீதையை மணந்த பின்னர் இராமர் மிதிலையிலிருந்து அயோத்திக்கு சென்று கொண்டிருந்த போது அவரை பரசுராமர் எதிர்கொண்டார், அவர் வைத்த போட்டியில் வென்று அவரது சக்தி அனைத்தையும் இராமபிரான் பெற்றார்.  அப்போது இராமர் சூரியபகவான் அளித்த தேரில் பயணித்துக்கொண்டிருந்தார் என்பதால் தெற்கு பக்கம் உள்ள சூரியரையும், சுவற்றில் வரையப்பட்டுள்ள   நரசிம்மரையும் வழிபடுகின்றனர். வடக்குநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய் அப்படியே உறைந்து உள்ளது திருக்கயிலாய பனி மலை போல காட்சி அளிக்கின்றது, அதன் மேல்  கேரளத்தில் சிவபெருமானுக்கு அலங்காரம் செய்யும் முறையில்  முக்கண்கள், பதிமூன்று பிறைகள் மற்றும் நாகங்களுடன் எழிலாக அலங்காரம் செய்திருக்கின்றனர். ஐயனை தரிசனம் செய்யும் போது நாம் நம்மையே மறக்கிறோம், மனம் ஆனந்தப்படுகின்றது.  இலிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கிச் சாப்பிட்டால், நாள்பட்ட நோய்கள் தீரும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத் திறன் அதிகரிக்கும் என்பது ஐதீகம். பார்வதி தேவி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார்.    மஹா கணபதி சன்னதி வெண்மாடக்கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. மஹா கணபதிக்கு அப்பம் நெய்வேத்யமாக சமர்ப்பிக்கப்படுகின்றது. ஒரு காலத்தில் வடக்கு நாதருக்கு உத்தராயண காலத்தில் 12 நாட்கள் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது, பல்வேறு காரணங்களால் அவ்வுற்சவம் நடைபெறாமல் போனது. ஒரு சமயம் கஜானா காலி ஆகிப்போன சமயம் யோகாதிரிப்பாடு அவர்கள் கனவில் தோன்றிய படி மஹா கணபதி சிலையை அகற்றிப் பார்த்தபோது கீழே ஒரு நிலவறை இருப்பது தெரிந்தது. அதில் நிறைய  பொன்னும்,  நகைகளும், இருந்தது, நிலவறையில் ஒரு தங்கப்பல்லி ஒளிர்ந்ததாம் அதை குறிக்கும் வகையில் பல்லியின் சிற்பம் உள்ளது, பக்தர்கள் செல்வம் வேண்டி அப்பல்லியை தொட்டு வணங்குகின்றனர். மூலவருக்கு, இரவு எட்டு மணிக்கு மேல் நடைபெறும் ‘திருப்புகா வழிபாடு’ எனும் வழிபாட்டைத் தொடர்ந்து, 41 நாட்கள் பார்த்து வந்தால், வழிபடுபவர்கள் நினைக்கும் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும். இந்த இரவு நேர வழிபாட்டிற்குத் தேவலோகத்தினர் பலரும் வருவதாகவும், அவர்கள் வருகைக்கு இடையூறு எதுவும் செய்து விடக்கூடாது என்பதற்காக, இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் வழிபாட்டிற்கு இடையில் கோவிலுக்கு வெளியேச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இரவு வழிபாடு முடிவடைந்த பின்னரே கோவிலை விட்டு வெளியேற முடியும். இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு, அவர்களின் மகிழ்ச்சிக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அமிர்தம் கிடைக்க தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். அந்த பாம்பு வடக்குநாதர் கருவறை முன்பிருக்கும் வாசலில், மணியாக இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இதனால், பிரதோ‌ஷக் காலங்களில் இந்த மணியைத் தலைமை அர்ச்சகர் மட்டும் அடித்து ஒலி எழுப்புவார்.  முற்காலத்தில் வாசுகியானது இம்மணியில் அமர்ந்து பூசையை தரிசித்துக் கொண்டிருந்தது. அதனால் பக்தர்கள் அச்சம் கொண்டனர். ஒரு சமயம் ஒரு கரட்டு நம்பூதிரி வாசுகியை அங்கிருந்து அகற்ற முயற்சி செய்தார் அவர் வாசுகியின் வாலைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார் ஆனால் அது வளர்ந்து கொண்டே சென்றது.  வடக்கு கோபுரத்தை அடுத்து உள்ள கோகர்ணியில் கொண்டு அவரைத் தள்ளிய வாசுகி குளம் முழுவதையும்  தன் உடலால் நிறைத்தது. வேறு வழியில்லாமல் கரட்டு நம்பூதிரி கருடனை வேண்டினார். கருடன் தோன்றி வடக்கு கோபுரத்தின் மேல் அமர்ந்தார். கருடனைக் கண்டவுடன்   வாசுகி மறைந்தது. அதற்குப்பிறகு வாசுகி மணியில் வருவதில்லை. எனவே அம்மணியே இன்றும் வாசுகியாக வணங்கப்படுகின்றது.  கருடனின் எடை தாங்காமல் வடக்கு கோபுரம் சிறிது சாய்ந்து விட்டதாம்.   திருச்சூர் வடக்குநாதர் கோவில் ‘பெருந்தச்சன்’ என்பவரது காலத்தில் கட்டுமானம் செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. அவரது காலத்திற்குப் பின் நம்பூதிரிகளின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இந்த நம்பூதிரிகளில் இருந்து ஒருவர் ‘யோகதிரிப்பாடு’ எனும் பெயரில் நிர்வாகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, நிர்வாகம் நடைபெற்றது. அதன் பிறகு, கொல்லம் ஆண்டு 981–க்குப் பின் கொச்சியை ஆண்ட மன்னன், ராஜா சக்தன் தம்புரான் என்பவரது காலத்தில், இந்த நடைமுறை மாற்றப்பட்டுக் கோவிலைப் பொதுமக்களே நிர்வகிக்கத் தொடங்கினர். மன்னரின் காலத்தில், கோவிலைச் சுற்றிலும் அமைந்திருந்த தேக்கு மரக்காட்டை அழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அப்பகுதி மக்கள், அங்கிருந்த மரங்களெல்லாம் சிவபெருமானின் சடைமுடியாகத்தான் இருக்கும். அதை அழிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்புகளை மீறி அங்கிருந்த காடு அழிக்கப்பட்டது. அதன் பிறகு இந்தக் கோவிலில் நாற்பத்தியொரு நாட்கள் வரை நடத்தப்பட்டு வந்த திருவிழா நடத்த முடியாமல் போய்விட்டது என்கின்றனர். கருடன் அமர்ந்ததால் வடக்கு கோபுரம் சிறிது சாய்ந்துள்ளது என்று முதலில் பார்த்தோம், இனி மற்ற கோபுரங்களின் சிறப்பைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.  தெற்கு கோபுரம் கொடுங்கல்லூர் அரசரால் கட்டப்பட்டதால் அதன் அருகில் இருந்து பக்தர்கள் கொடுங்கல்லூர் பகவதியை வழிபடுகின்றனர். ஒரு காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் இவ்வாயில் வழியாக கொலைக் களத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர் என்பதால் இவ்வாயில் வழியாக யாரும் செல்வதில்லை பூட்டியே இருக்கின்றது. திருச்சூர் பூரத்தின் மட்டுமே ஒரு நாள் திறக்கப்படுகின்றது.  ஒரு திருக்கார்த்திகை தினத்தன்று வில்வமங்களம் சுவாமிகள் வடக்குநாதரை தெற்கு கோபுரத்தின் அருகில் உள்ள மதிலில் குமாரநல்லூரில் நடைபெறுகின்ற திருக்கார்த்திகை உற்சவத்தை பார்த்துக்கொண்டிருந்தாராம், எனவே திருக்கார்த்திகையன்று வடக்கு நாதருக்கு  ஒரு பூஜை இங்கு நடைபெறுகின்றது. கிழக்கு கோபுரத்தில் உள்ள அறையில் ஒரு போத்தி இரகசியமாக ஒரு பூஜை செய்து வந்தாராம், என்ன பூஜை என்று அறிய விரும்பிய ராஜா ஒரு ஒற்றனை அனுப்ப அவரும் இரகசியமாக பூஜையை பார்த்தாராம், பகவதி சேவையைதான் அவர் செய்தாராம். பூஜையின் நிறைவில் ஒரு சக்தி தோன்றியதாம் அதில் அந்த ஒற்றனின் கண்கள் குருடாயின. அதற்குப்பின் அவ்வறை மூடப்பட்டுள்ளதாம். மேற்கு கோபுரத்திற்கு வெளியே கொடி மரம் மற்றும் மூலஸ்தானம் அமைந்துள்ளது.   திருச்சூர் பூரம் திருவிழா கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவில் அமைந்திருக்கும் தேக்கின்காடு பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ நடத்தப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு எதிரில் உள்ள பாரமேக்காவு பகவதி, திருவம்பாடி பகவதி ஆகியோர் வடக்குநாதரைப் பார்க்கும் பூரம் நாள் தான் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ என்கின்றனர். இந்தத் திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. திருச்சூர் பகுதியின் இரண்டு மண்டலங்களின் சார்பாக இவ்விரண்டு கோவில்களும் பூரம் திருவிழாவில் பங்கேற்பது 200 வருடங்களாக தொடரும் மரபாக அறியப்படுகிறது. வாண வேடிக்கைகளுடன் தங்க முலாம் அணிகள் பூட்டிய யானைகள் ஊர்வலமாக வருவது இந்த திருவிழாவின் கண்கொள்ளா காட்சியாகும். உலகில் மிகச்சிறந்த கோலாகலத் திருவிழாக்களில் ஒன்றாக திரிசூர் பூரம் திருவிழாவை ‘யுனெஸ்கோ’ அமைப்பு அங்கீகரித்திருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.  பரமேக்காவு, திருவம்பாடி ஆலயங்கள் தவிர இன்னும் 8 சிறிய ஆலயங்கள் தங்கள் சார்பாக, பூரம் திருவிழாவில் தலா 3 முதல் 14 யானைகள் வரை பங்கேற்கச் செய்கின்றன. நெய்த்தலக்காவு பகவதி, கரமுக்கு பகவதி, அய்யன் தோள் பகவதி, லல்லூர் பகவதி, சூரக்கோட்டுக் காவு பகவதி, செம்புக்காவு பகவதி, பாணா முக்கும்பள்ளி சாஸ்தா, கணிமங்கலம் சாஸ்தா ஆகியவையே பூரம் திருவிழாவில் பங்கேற்கும் ஏனைய சிறு ஆலயங்கள்! ஒரே இடத்தில் சுமார் 65 யானைகளுக்கு மேல் - அழகிய ஆபரணங்கள், அணிகலன்கள், வண்ணக் குடை சகிதம் ஊர்வலமாகச் சென்று, வடக்குநாதன் ஆலய வளாகத்தில் வரிசையாக நின்று அற்புதமாகக் காட்சி தரும் அழகைப் பார்ப்பதற்கென்று உலகெங்கிலுமிருந்தும் பக்தர்கள் வந்து குவிகின்றனர்.   []     சுமார் 36 மணி நேரம் நடைபெறும் இத்திருவிழாவில் யானைகளின்  அலங்காரம் மற்றும் வண்ணமயமான முத்துக்குடைகள் ஆகியவற்றைக் காண்பதற்காகவும், பஞ்ச வாத்தியம், மற்றும் பாண்டி மேள இசையை இரசிக்கவும், அற்புதமான வாண வேடிக்கையை கண்டு இன்புறவும்  கேரளா, தமிழகம் மட்டுமில்லாமல், கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒலி மற்றும் வண்ணத்தின் கவர்ச்சியூட்டும் வெளிப்பாடு என்பதோடு, தன்னுடைய அற்புதக் காட்சியால் இது அனைவரையும்  கவர்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் சக்தன் தம்புரான், வடக்கு நாதர் திருக்கோவிலை ஒட்டி இருந்த தேக்கு காட்டினை அழித்து பெரிய மைதானத்தை உருவாக்கி இப்பூரவிழாவை ஆரம்பித்தார். இதில் பரமேக்காவு மற்றும் திருவம்பாடி ஆகிய இரு பகவதி ஆலயங்களுக்கு இடையில் நடைபெறும் முத்துக்குடை மாற்றும் போட்டியாகும். சக்தன் தம்புரான் வடக்குநாதன் கோயிலைச் சுற்றியிருந்த பத்து கோயில்களை ஒருங்கிணைத்து திரிச்சூர் பூரம் விழாவை ஒரு பெரிய மக்கள் திருவிழாவாகக் கொண்டாடும்படி உருவாக்கினார். அவர்  இக்கோயில்கள் மேற்குக் குழு என்றும் கிழக்குக் குழு என்றும் பிரிக்க உத்தரவிட்டார். மேற்குக் குழு திருவம்படியாக கனிமங்கலம், லல்லூர், அயன்தோல், நெத்திலக்காவு மற்றும் முக்கியமான திருவம்படி கோயிலை உள்ளிட்டிருந்தது. பரமேக்காவு எனப்பட்ட கிழக்குக் குழு மேற்கொண்டு பரமேக்காவு கோயில், காரமுக்கு, செம்புக்காவு, சூரக்கோட்டக்காவு மற்றும் பலமுக்கம்பள்ளி ஆகியவற்றை உள்ளிட்டிருந்தது. இந்தப் பூரம் வடக்குநாதன் கோயிலை மையமாகக் கொண்டிருந்தது, எல்லாக் கோயில்களும் தங்களுடைய பூரங்களை (முழு ஊர்வலத்தை) குலதெய்வமான சிவனுக்கு மரியாதை செலுத்த அன்று திருச்சூர் எழுந்தருளுகின்றனர் என்பது ஐதீகம். பூரம் திருவிழாவிற்கு ஏழுநாட்களுக்கு முன்னர் பரமேக்காவு பகவதி கோயில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களில் பூரம் திருவிழா கொடியேற்றம் நடைபெறும். கொடியேற்றத்தை தொடர்ந்து நான்காவது நாள் , கிழக்கு அணியும் ,மேற்கு அணியும் ஸ்வராஜ் ரவுண்ட் என்கிற மைதானத்தில் கூடுவார்கள். மாலை 7.15 மணிக்கு வாணவேடிக்கை ஒரு மணிநேரம் நடைபெறும். இதில் இரண்டு அணிகளும் பல புதுமையான வாணங்களை வீசி மக்களின் கைதட்டலுக்கு போட்டி போடுவார்கள். திருவம்பாடி அணியும், பரமேக்காவு அணியும் அடுத்து அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பை நடத்துவார்கள். பரமேக்காவு அணி அக்கரசாலாவிலும், திருவம்பாடி அணி சர்ச் மிஷன் சொசைட்டி பள்ளி மைதானத்திலும் இந்த வர்ண ஜால அணிவகுப்பை நான்காம் நாளும், ஐந்தாம் நாளும் நடத்துவார்கள். இதில் யானைகளின் நெற்றிப்பட்டம், அதன் முதுகில் விரிக்கப்படிருக்கும் வண்ணக்கம்பளம், மயிலிறகாலும், துணியாலும் செய்யப்பட்ட சமயம், ஆலவட்டம் ,வெண்சாமரம் என்று கண்ணுக்கு விருந்தாக அமையும். பூரம் திருவிழா அன்று 20க்கும் மேற்பட்ட கோயில்களிலிருந்து விக்கிரகங்கள் அணிவகுத்து வந்து திருச்சூர் வடக்கும்நாதன் கோயிலில் கூடும். திருச்சூர் பூரம் திருவிழாவின் மற்றொரு முக்கியமான அம்சம் யாதெனில், செண்டை, மத்தாளம், எடக்கா, திமிலா மற்றும் கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்படுவது ஆகும். பஞ்சவாத்தியம் அல்லது பஞ்சரிமேளம் அடிப்படையிலான இசை நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இசைநிகழ்ச்சி, பார்க்கும் அனவரையும் மெய்மறக்க செய்துவிடும். வடக்கும்நாதன் கோயிலின் முன் இலஞ்சிதாரா மேள வாத்தியம் இசைக்கப்படுவது முக்கியமான நிகழ்வாகும். இந்த இசை நிகழ்ச்சியை, பெருவனம் குட்டன் மரார், மூன்று தலைமுறைக்கும் மேலாக அரங்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 100க்கும் மேற்பட்ட யானைகளின் அணிவகுப்பை காணவும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இந்த திருவிழாவிற்கு வருகை தருகின்றனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் 30 யானைகளும் மற்ற சிறு சிறு நிகழ்வுகளில் 70 யானைகளும் பங்கேற்கின்றன. யானைகள் தங்கள் முகப்பகுதியில் அணியும் தங்க ஜரிகைகளால் ஆன நெற்பட்டம், மயிலிறகுகளாலான ஆலவட்டம், எருதின் முடிகளால் ஆன வெஞ்சாமரம், முத்துகளால் தொகுக்கப்படும் முத்துகுடா இவைகள் யாவும் யானைகளின் மீது அமரும் அம்பாரிகளால் பார்வைக்கு வைக்கப்படும். இந்த கலைநயமிக்க ஆபரணங்கள் யாவும் பரமேக்காவு மற்றும் திருவம்பாடி கோயில்களில் வடிவமைக்கப்படுகின்றன. மேஷ மாத (சித்திரை) பூரத்தன்று அதிகாலை கணபதி ஹோமம், காலை ஏழு மணியளவில்  கனிமங்கலத்து சாஸ்தா முதலாக யானை மேல்   எழுந்தருளி தெற்கு கோபுர நடை வழியாக நுழைந்து வடக்குநாதரை வணங்கி பூரத்தின் உச்சகட்டத்தை துவக்கி வைப்பார். பின்னர் இப்பூரத்தில் கலந்து கொள்ளும் பகவதிகள் ஒவ்வொருவராக  பஞ்ச வாத்திய முழக்கத்துடன் அலங்கரிக்கப்பட்ட யானை மேல் ஆரோகணித்து 14 யானைகளுடன்  ஊர்வலமாக வந்து  வடக்குநாதரை வணங்கி பின்னர் தம் கோவிலுக்கு திரும்பிச் செல்கின்றனர். மதியம் 2  மணி வரை இவ்வாறு பகவதிகள் வடக்கு நாதரை தரிசிக்கின்றனர். அடுத்தது ‘மடத்தில் வரவு’ எனும் பஞ்சவாத்திய மேளம்.  200 கலைஞர்கள் திமிள், மத்தளம், டிரம்ப்பட், சிம்பல், எடக்கா போன்ற வாத்தியங்களை முழக்குவார்கள். மதியம் இரண்டு மணிக்கு வடக்கு நாதன் கோவிலுக்குள் “இளஞ்சித்தர மேளம்” ஒலிக்கத் துவங்கும். கூடவே முரசு ,ட்ரம்பட், கொம்பு, என்று ஏகப்பட்ட வாத்தியங்கள் இணைந்து வனம் அதிர இசை முழங்கும். மதியம் 2:30 மணியளவில்  பரமேக்காவு பகவதி 15 யானைகளுடன்  புறப்பட்டு  மேற்கு வாசல் வழியாக வந்து வடக்குநாதரை வணங்கி, பஞ்ச வாத்திய கச்சேரிக்கு பின் தெற்கு கோபுரத்தின் வழியாக வெளியே போந்து வடக்கு நோக்கி அணிவகுத்து நிற்கின்றன. பின்னர் திருவம்பாடி பகவதி 15 யானைகளுடன் வடக்கு நாதரை வணங்கிய பின்னர்  தெற்கு கோபுர வழியாக வெளியே வந்து பரமேக்காவு பகவதியின் யானைகளின் அணிவகுப்புக்கு எதிரே அணி வகுக்கின்றனர். அந்தி சாயும் பொன் மாலைப் பொழுதில் இருவருக்கும் இடையிலான குடை மாற்றும் போட்டி ஆரம்பமாகின்றது.  வாரணங்கள் ஆடாமல் அசையாமல் தங்களின் காதுகளை மட்டும் அசைத்தவாறு நிற்க அதன் மேல் நின்றிருப்பவர்கள் அழகிய வண்ண வண்ணக் குடைகளை மாற்றுகின்றனர், ஒருவர் ஆலவட்டத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கிறார், ஒருவர்  வெண் சாமரங்களை  நேர்த்தியாக வீசுகின்றார். சுமார் இரண்டு மணி நேரம் இந்த முத்துக்குடை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திருச்சூர் பூரம் திருவிழாவின் உச்சக்கட்ட வர்ணகளேபரம் இதுதான். இதைத் தொடர்ந்து மேற்கு கோபுரம் அருகிலிருக்கும் நிலப்படுத்தரவில் விழா நிறைவு பெறும். குடை மாற்றம் நிகழ்ச்சி முடிந்த பின் பரமேக்காவு பகவதி தன் ஆலயம் திரும்புகிறாள்.   மறுபடியும் இரவு 11 மணியளவில் 7  யானைகளுடன், பஞ்ச வாத்தியங்களுடன் புறப்பட்டு மணிகண்டல் என்ற இடத்தை இரவு 2  மணியளவில்  அடைகிறாள். 3 மணியளவில் இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக வாணவேடிக்கை நிகழ்ச்சி துவங்குகின்றது வண்ண வண்ண  வாணங்கள் இரவை பகலாக்குகின்றன, அதிர் வேட்டுகள், பல விதமான வாண வேடிக்கைகள் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறுகின்றது. இல்லங்களின் மாடியில் அமர்ந்து இந்த அற்புத ஒளி -  ஒலி காட்சியை  கண்டு களிக்கின்றனர் பக்தர்கள்.   திருசூர் பூரத்தில் மொத்தம் நான்கு முறை வாண வேடிக்கை நடைபெறும். அதில்  ஏழாம் நாள் நடக்கும் ‘சாம்பிள் வெடிக்கட்டும்’, நிறைவு நாள் மாலை, மற்றும் தெய்வங்கள் விடைபெற்று தத்தமது இருப்பிடத்துக்கு திரும்பும் போது, அதிகாலையில் நடக்கும் வாணவேடிக்கையும் புகழ் பெற்றவை. இவ்வாறு உலகப்புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இத்தலத்தில் சிறப்பாக  நடைபெறுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் முதல் நாளில் இக்கோவிலில் அஷ்ட திரவிய மஹா கணபதி ஹோமமும் அதைத் தொடர்ந்து ‘யானையூட்டு விழாவும்’ சிறப்பாக  நடத்தப்படுகிறது. இவ்விழாவின் போது, இக்கோவிலின் தெற்குக் கோபுர வாசலில் அணிவகுத்து நிற்கும் யானைகளுக்குக் கஜவழிபாடு செய்யப்படும். இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள், யானைகளுக்கு உணவளித்து மகிழ்ச்சியடைகின்றனர். நான்கு வருடத்திற்கு ஒரு முறை கஜபூஜையும் நடைபெறுகிறது. இக்கோவிலில் சிவராத்திரி நாட்களில் கோவிலைச் சுற்றிலும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இதுவரை வடக்குநாதர் ஆலயத்தை தரிசனம் செய்தோம், வாருங்கள் இனி திருச்சூரில் அமைந்துள்ள பூரத்தின் முக்கிய கோவில்களான பரமேக்காவு பகவதி மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் ஆலயங்களை தரிசிக்கலாம்.               அத்தியாயம் - 6 6.திருச்சூர் பரமேக்காவு பகவதி ஆலயம் []                                 கேரளத்தின் பகவதி ஆலயங்களில் மிகப்பெரியது இவ்வாலயம். நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள இக்கோயிலைப்பற்றி ஏராளமான புராணக்கதைகளும் கூறப்படுகின்றன. இத்தலம் வடக்குநாதர் ஆலயத்திற்கு அருகில்,  திருச்சூரின் பிரசித்தமான ஸ்வராஜ் ரவுண்ட் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் காலை 5 மணியிலிருந்து 11 மணி வரை திறக்கப்படுகிறது. பிரசித்தமான திருச்சூர் பூரம் திருவிழாவில் பங்கு பெறும் இரண்டு முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.  பாறை மேல் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றதாம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயம் என்றாலும் கோபுரம் புதிதாக மிளிர்கின்றது. “தேவி சரணம்” என்ற வரவேற்பு எழுத்துக்கள் நம்மை வரவேற்கின்றன.    []   இவ்வாலயத்தின் தல புராணம் இதோ. குருப்பால் தரவாட்டு குடும்பத்தின் கர்ணவர் நாயர், திருமடக்குன்னு பகவதியின் அத்யந்த  பக்தர் (திருச்சூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற சப்த மாதா கோயில்). இவர் அங்கு சென்று  பகவதியை தவறாமல்  தரிசித்துக் கொண்டு வந்தார்.  வயதானதால் இவ்வளவு தூரம் வந்து தரிசிக்கமுடியாமல் போகுமே என்று இவர் கலங்கி நின்ற போது, பகவதி கவலைப்படாதே, நீ என்னை தரிசிக்க இங்கே வர வேண்டாம், நான் நீ இருக்கும் இடத்திற்கு  நானே வருகிறேன் என்று அவரது தாழங்குடையில் அமர்ந்து திருச்சூர்  வந்தாளாம்.  முதலில் வடக்குநாதர் ஆலயத்தில் இருந்த அம்மன் சன்னதி தற்போது உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது.      பகவதி அஷ்டபுஜ துர்க்கையாக வாள், கேடயம், மணி, திரிசூலம், அரக்கனின் தலை, தண்டம், சூரி, கபாலம் தன் திருக்கரங்களில் தாங்கி. வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்ட கோலத்தில்  தங்க கவசத்தில் எழிலாக சர்வாபரண பூஷணியாக    அருட்காட்சி  தருகின்றாள். அசுரன் தலையை தாங்கியிருந்தாலும் அசர வைக்கும் அமைதியான திருமுகம் கொண்டு அருள் பாலிக்கின்றாள் பகவதி. எட்டுக் திருக்கரங்களில் பல் வேறு ஆயுதங்களை தாங்கிய வண்ணம் எப்போதும் என் பக்தர்களை காக்கின்றேன் என்று உணர்த்திய வண்ணம் ஓங்கி உயர் வடிவமாக  அன்னை   விளங்குகின்றாள். பத்ரகாளிதான் இங்கு பகவதியாக இருக்கிறாள். ‘உக்கிரமூர்த்தி’ என்பது அவள் இயல்பு காரணமாகக் கூறப்படும் பெயர். ஆனால், இங்கு பகவதி சாந்த வடிவில் காட்சியளிக்கிறாள்.  அம்பாளின் சிலை மரத்தால் (தாரு) ஆனது. 1977ம் ஆண்டு புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.   அம்மனுக்கு எதிரே மேலக்காவு பகவதி சன்னதி அமைந்துள்ளது. அவ்வம்மன் சன்னதியில் வரிசையில் பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். எதற்காக என்று விசாரித்தப் போது அச்சன்னதியில் வெளிச்சப்பாடு பிரசன்னம் கூறுகிறார் அதற்கான வரிசை என்றார்கள்.  பக்தர்கள் கொண்டு வரும் தேங்காயை உதைத்து அது உடையும் விதத்தை வைத்து பலன் கூறிக்கொண்டிருந்தார் வெளிச்சப்பாடு.   ஆலயத்தில்  கணபதி, வீரபத்திரர், நாகர் சன்னதியும் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் பலியும் குருதி பூஜையும் நடந்துள்ளது. தேவிக்குப் பல திருவிழாக்கள் இருந்தாலும் ‘வேலா திருவிழா’தான் மிக முக்கியமாகக் கொண்டாடப்படுகிறது. இது ஜனவரி முதல் வாரம் தொடங்கி 41 தினங்கள் நடக்கிறது. மீன ராசியில், ரோகிணி நட்சத்திரத்தில் பகவதியின் பிறந்த தினம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மேலும்  நவராத்திரி, மாசி(மகர) செவ்வாய்கள், மற்றும் சிவராத்திரி இவ்வாலயத்தில் சிறப்பாக  கொண்டாடப்படுகின்றது.  []   இவ்வாலயத்திற்கு மொத்தம் ஐந்து ஆண் யானைகள் சொந்தமாக உள்ளன. திருவிழா சமயத்தில் வேறு கோயில்கள், அல்லது யானை வளர்ப்பவர்களிடமிருந்து கூடுதலாகப் பத்து யானைகள் வாடகைக்குப் பெற்று மொத்தம் 15 யானைகளை (15 யானைகள் வரைதான் அனுமதி!) பரமேக்காவு பகவதி ஆலய சார்பில் ஊர்வலமாக வடக்குநாதன் கோயில் வளாகத்துக்கு சென்று  திருச்சூர் பூரத்தில் கலந்து கொள்கிறார்கள்.  அடியோங்கள் சென்ற சமயம் ஆலயத்தின் அருகில் உள்ள அரங்கத்தில் கதகளி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. கலா க்ஷேத்திரமாகவும் இவ்வாலயம் விளங்குகிறது செண்டை, திமில், கதகளி, முதலிய கேரள பாரம்பரிய வாத்தியங்கள் வாசிக்கும் பயிற்சி மற்றும் இசை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஆலயத்தின் சார்பில் ஒரு கல்லூரி மற்றும் கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் கொண்ட சி.பி.எஸ்.சி. பள்ளி ஆகியவை நடத்தப்படுகின்றன. சுமார் 200 பேர் பயிலும் ஜோதிடப்பள்ளி ஒன்றும் ஆலய சார்பில் நடந்து வருகின்றது. இவ்வாறு ஆன்மீக கேந்திரமாக மட்டுமல்லாமல் கலை, கல்வி வளர்க்கும் கேந்திரமாகவும் இவ்வாலயம் விளங்குகின்றது. பரமேக்காவு பகவதி கோயிலுக்கு வந்து பகவதியைத் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு தாயின் பரிவோடு அவர்கள் கேட்பனவற்றை அருளுவாள் பகவதி என்பது மக்களின் அழுத்தமான நம்பிக்கை!’’  பரமேக்காவு பகவதி தரிசித்தோம் வாருங்கள் இனி திருவம்பாடி கிருஷ்ணரையும் தரிசிக்கலாம்.                                   அத்தியாயம் - 7 7.திருச்சூர் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் []   இவ்வாலயமும் வடக்குநாதன் ஆலயத்திற்கு அருகில் ஸ்வராஜ் ரவுண்டிற்கு அருகில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் இக்கிருஷ்ணர் ஆலயம் திருச்சூரில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு ஊரில் இருந்தது. அங்கிருந்து அவர் திருச்சூர் எழுந்தருளியதும் தன் பக்தர்களுக்காக தன் வடிவழகையும் மாற்றிக்கொண்டதும் ஒரு சுவையான வரலாறு அது என்ன என்று முதலில் காணலாம் அன்பர்களே. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் எடக்களத்தூர் என்ற குக்குராமத்தில் பார்த்தசாரதியாக இவர்  அருள் பாலித்து வந்தார். ஒரு சமயம் மதக்கலவரம் ஏற்பட்ட சமயம் சில பக்தர்கள் பகவானை அங்கிருந்து இரவில் திருச்சூரில் உள்ள கஞ்சனப்பள்ளி இல்லத்து நம்பூதிரி தம்பதிகளிடம் ஒப்படைத்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத அவர்கள்  அக்கண்ணனை தங்கள் குழந்தையாக பாவித்து சீராட்டி வழிபட்டு  வந்தனர். அவர்களின் பக்தியின் காரணமாக ஸ்ரீகிருஷ்ணர் தனது சாட்டையை மறைத்து ஒரு கையில் புல்லாங்கழல் தாங்கி மறு கையில் தனது வளர்ப்பு பெற்றோர்களிடமிருந்து வெண்ணையை தனது திருக்கரங்களில் வாங்கும் உண்ணி கிருஷ்ணன் கோலத்திற்கு மாறினார். அதற்குப்பின் அவரை தற்போது உள்ள ஆலயத்தில் அத்தம்பதிகள் தங்கள் இல்லத்தின் அருகில் சாலை அமைப்பில் ஒரு சிறு கோயிலைக் கட்டி ஸ்ரீஉண்ணிகிருஷ்ணனை அங்கு  பிரதிஷ்டை செய்தனர்.  இன்றும் அக்கோலத்தில் சேவை சாதித்து பக்தர்களுக்கு அருளுகின்றார். இவ்வாலயத்தில் பகவதியும் அருள் பாலிக்கின்றார்.  அம்மன் இவ்வாலயத்திற்கு வந்த வரலாறும் சுவையானது அதுவும் என்ன என்று காணலாம் அன்பர்களே. கண்ணனின் வளர்ப்பு பெற்றோர்கள் கொடுங்கல்லூர் பகவதியின் பக்தர்கள், பரமேக்காவு பகவதியைப் போலவே இவர்களின் வயதான காலத்தில் பகவதி  இவர்களுக்காக இங்கே எழுந்தருளினாள். இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணரும் அவருடைய தங்கையான துர்க்கையும் சேர்ந்து அருள் பாலிப்பது திருக்கோவிலூரை நினைவுபடுத்துகின்றது. ஸ்ரீகிருஷ்ணர் தேவகியின் திருவயிற்றில் சிறைச்சாலையில் பிறந்த சமயம், யசோதையின் கர்ப்பத்தில்  பெருமாளின் மாயையின் அம்சமாக  பிறந்தவள்  இவள். நள்ளிரவில் யமுனையைக் கடந்து ஆய்ப்பாடி சென்று ஸ்ரீகிருஷ்ணரை அங்கு விட்டு விட்டு அங்கிருந்த பெண் குழந்தையை சிறைச்சாலைக்கு கொண்டு வந்தார். கம்சன் அக்குழந்தையை கொல்ல எத்தனித்த போது அக்குழந்தை பகவதியாக ஆவிர்பவித்து உன்னை கொல்லப் பிறந்தவன் வேறு இடத்தில் பாதுகாப்பக உள்ளான் என்று கூறி மறைந்தாள் என்பது பாகவதம் கூறுகிறது. பகவதியம்மன் இவ்வாலயத்திற்கு வந்த வரலாறு பரமேக்காவு பகவதியின் வரலாறு போலவே உள்ளது. கஞ்சனப்பள்ளி தம்பதியர் கொடுங்கல்லூர் பகவதியின் பக்தர்கள் மாதம் ஒரு முறை கொடுங்கல்லூர் தவறாமல் நடந்தே சென்று (40 கி.மீ)   பகவதியை தரிசித்து வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு வயதான போது இனி உன்னைக் தரிசிக்க வரமுடியாதே என்று அம்மனிடம் அழுது முறையிட, ஒரு தாய் தன் குழந்தையை இரட்சிப்பது போல   அம்மனின் சானித்தியம் அவர்களை தொடர்ந்து வந்து இவ்வாலயத்தின் ஒரு தூணில் குடி கொண்டது. கிருஷ்ணனுக்கு இடப்புறத்தில் ஒரு தனி ஸ்ரீகோவிலில் பகவதியை பால பத்ரகாளியாக பிரதிஷ்டை செய்துள்ளனர். திருச்சூர் பூரத்தின்போது வடக்குநாதர் ஆலயத்திற்கு எழுந்தருளுபவர் இப்பகவதியே. மேலும் கணபதி, தர்ம சாஸ்தாவிற்கும் தனி சன்னதிகள் உள்ளன. 2011ம் ஆண்டு அஷ்டமங்கல பிரச்சனத்தின்படி கிருஷ்ணரின் ஸ்ரீகோவில் புனரமைக்கப்பட்டு விமானத்திற்கு பொன் வேயப்பட்டது. இவ்வாலயத்தில் பல பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது அவையாவன ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி. அன்று ஐந்து யானைகள் மற்றும் இவ்வாலயத்தற்குரிய பஞ்சரி மேளத்துடன் உச்ச சீவேலி நடைபெறுகின்றது. நவராத்திரி பத்து நாட்களும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சரஸ்வதி மூன்று நாட்கள் தனி சன்னதியில் அருள் பாலிக்க பாட பத்தகங்களை வைத்து வழிபடுகின்றனர். விஜயதசமியன்று குழந்தைகளுக்கு வித்தியாப்பிசாயம் செய்து வைக்கப்படுகின்றது. விருச்சிக(கார்த்திகை) மாதப்பிறப்பன்று மண்டல பூஜை துவங்கி நடைபெறுகின்றது  கலம் பாட்டு நடைபெறுகின்றது. அம்மனின் திருவுருவம் மூலிகைப் பொடிகளால் தினமும் வரையப்படுகின்றது. வெளிச்சப்பாடு அப்படத்தை சுற்றி சன்னதம் வந்து ஆடி பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றார்.   வேளா உற்சவத்துடன், பஞ்சவாத்தியங்களுடன் இரவு ஒன்பது மணியளவில் மூன்று யானைகள் உடன் வர பகவதி வடக்கு நாதர் ஆலயத்திற்கு புறப்படுகின்றாள். வடக்குநாதர் கோயிலை அடையும் போது அது ஏழு யானைகளாக உயர்த்தப்படுகின்றது, பஞ்ச வாத்தியம் பாண்டி மேளமாக மாற்ற்ப்படுகின்றது. வடக்குநாதரை தரிசித்தபின் அதிகாலை மூன்று மணியளவில் பகவதி தன் ஆலயம் திரும்புகிறாள். வைகுண்ட ஏகாதசி பத்து நாள் சங்கீத உற்சவமாகவும், ஏகாதசியன்று சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச வாத்தியத்துடன் யானைகள் ஆலயத்தை சுற்றி வருகின்றன.  பல வகையான  தீபங்கள் ஏற்றப்படுகின்றன.   []   ஆண்டு திருவிழா கும்ப (மாசி) மாதத்தில் நடைபெறுகின்றது. மாசி பூசத்தன்று தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகின்றது. தினமும் யானையில் ஸ்ரீகிருஷ்ணர் அருகில் உள்ள இல்லங்களில் எழுந்தருளுகின்றார். அவர்கள்  தானியங்களை அளக்கப்பயன்படும்  வள்ளத்தில் (மலையாளத்தில் – பறை) நெல் நிரப்பி, தென்னம்பாளையால் அலங்கரித்து ஸ்ரீகிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கின்றனர் இது பறையெடுப்பு என்றழைக்கப்படுகின்றது. பூரத்தன்று காலை கிருஷ்ணர் எழுந்தருளும் போது சாலையின் இருபுறமும் இவ்வாறு பறையெடுப்புடன் விளக்குகளும் ஏற்றி வழிபடுகின்றனர். இப்பறையெடுப்பை ஆலயத்தில் வந்து செய்பவர்களும் உள்ளனர். மஹோற்சவ திருநாட்களில் இறைவன்  மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார், வேண்டுபவர்களுக்கு வேண்டும் விதம் அருள் பாலிப்பவராக இருப்பார் என்பது ஐதீகம். இப்புனித நாட்களில் கேரள ஆலயங்களில் இறைவனின் அருட்கடாட்சத்தைப் பெற செய்யப்படுகின்ற ஒரு காணிக்கைதான் நிறைபணி சமர்பித்தல். வெடி வழிபாடு, நீராஞ்சனம் போல் நிறைபணியும் கேரள ஆலயங்களுக்கே உரிய ஒரு சிறப்பு வழிபாடாகும். நிறைபணி சமர்ப்பணம் நெல், அரிசி, மலர், பொரி, புஷ்பம், நாணயம், அவல்,தேங்காய் மஞ்சள் முதலிய பொருட்களால் தனித்தனியாகவோ அல்லது இவை அனைத்தையும் சேர்த்து கூட்டுப் பறையாகவோ செய்யலாம்.  உடன் வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம், வெல்லம் ஆகியவற்றையும் சமர்ப்பிக்கின்றனர்.  இனி உற்சவ திருநாட்களில்  பக்தர்கள் சமர்ப்பிக்கக்கூடிய பறைகள் மற்றும் அவற்றுக்கான பலன்கள் என்னவென்று காணலாம். தேங்காய்ப்பறையினால் காரியத்தடைகள் அகன்று வெற்றி குவிந்திடும். மலர்ப்பறை சமர்ப்பிப்பதால் வியாதியிலிருந்து சுகம் பெறலாம். நெல்பறையினால் குடும்பத்தில் சகலவித சுபகாரியங்களும் மங்களகரமாய் நிகழும். அரிசிப் பறையினால் சகல ஐஸ்வரியங்களும் கிட்டும். மஞ்சள் பறையினால் தகுந்த வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்கும். அவல் பறை சமர்ப்பணம் செய்ய ஏழ்மை விலகும் சுபிட்ச வாழ்வு கிட்டும், நாணயப்பறையினால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும், மலர்ப்பறையினால் நீடித்த மாங்கல்ய பாக்கியம் அமையும் என்பது ஐதீகம். உற்சவத்தின் நிறைவாக பள்ளிவேட்டையும், ஆறாட்டும் நடைபெறுகின்றது. பிரதிஷ்டா தினமும், மற்றும் தனுர்(மார்கழி மாதத்தின் முதல் புதன் கிழமை  குசேலர் தினமாகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாத அமாவாசைக்கு அடுத்த ஞாயிறன்று இளம்நிறை உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அறுவடை செய்த  புது நெல்லுக்கு லட்சுமி பூசை செய்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர். அதை வாங்கிச் சென்று இல்லத்தில் வைக்க லட்சுமி கடாட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.  ஒரு தங்கக்கொடி மரமும் தினமும் மூன்று வேளை யானையில் சீவேலிக்காக பெருமாள் எழுந்தருளுவதும் இவ்வாலயத்தின் சிறப்புகளாகும். இனி அடியோங்கள் தரிசித்த மற்ற ஆலயங்களின் சிறப்புகளைப் பற்றி காணலாம் அன்பர்களே அவற்றுள் முதலாவது குருவாயூர் ஆலயம், வாருங்கள் கேரளத்தின் சிறப்பு மிகுந்த பல அதிசயங்கள் நிகழ்த்தும் உண்ணிக் கிருஷ்ணரை முதலில் தரிசிக்கலாம். காலடி சென்று ஆதிசங்கரர் பிறந்த இடத்தில் சிருங்கேரி மடத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தையும் அவர் வழிபட்ட ஸ்ரீகிருஷ்ணரையும் தரிசித்தோம் அவ்வாலயங்களைப் பற்றியும் அடுத்துக் காணலாம் அன்பர்களே.     அத்தியாயம் - 8 8.குருவாயூரப்பன் ஆலயம் []   இத்திருத்தலத்தின் சிறப்பை அனைவரும் நன்றாக அறிவர் என்பதால் இங்கு விரிவாக கூறவில்லை. நாள் ஒன்றுக்கு இங்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய கோயில் ஆகும். குருவாயூரப்பன் ஆலய வரலாறு மிகவும் பழைமை வாய்ந்தது. நாரத புராணத்தில் இக்கோவிலின் வரலாறும், தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன. தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகின்றது. துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணரே வழிபட்ட இவ்விக்கிரகத்தை,  தனது  அவதார காலம் முடிந்து வைகுண்டம் திரும்பும் போது உத்தவரிடம் கொடுத்து ஒரு புனிதமான இடத்தில் பிரதிஷ்டை செய்யக் கூறினார்.  துவாரகையை கடல் கொண்டபின் குருவும் வாயுவும் இணைந்து பரசுராமரின் வழிகாட்டுதலின் படி இங்கு பிரதிஷ்டை செய்தனர். எனவே இத்தலம் குருவாயூர் என்றழைக்கப்படுகின்றது. அப்போது ருத்ர தீர்த்தத்தின் இக்கரையில் இருந்த  சிவபெருமானும் பார்வதியும் பெருமாளுக்கு இத்தலத்தை கொடுத்துவிட்டு மறு கரையில் உள்ள மம்மியூருக்கு சென்று விட்டனராம்.  ஆகவே குருவாயூர் யாத்திரை வருபவர்கள் மம்மியூர் சென்று சிவனை தரிசித்தாலே யாத்திரை முழுமையடையும் என்பது நம்பிக்கை. தற்போது பகவதி சன்னதியை சுற்றி வரும் போதே மம்மியூர் உள்ள வடப்பக்கம் திரும்பி நின்று வழிபாடு செய்கின்றனர் பக்தர்கள். பெருமாள் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சதுர்புஜராக நின்ற கோலத்தில் பால ரூபத்தில் சேவை சாதிக்கின்றார், மேலிரண்டு திருக்கரங்களில் சங்கு மற்றும் சக்கரமும், கீழிரண்டு திருக்கரங்களில் கதையும், தாமரையும் கொண்டு துளசி, முத்துமாலைகள் கழுத்தில் தவழ, கிரீடம், மகரகுண்டலம், கேயூரம், கங்கணம், உதரபந்தனம் அணிந்து, வலப்பக்க மார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் மருவும், வைஜயந்தி மாலையும், கௌஸ்துப மணியும் இலங்க எழிலாக சேவை சாதிக்கின்றார் குருவாயூரப்பன்.  மிகவும் புனிதமானது எனக்கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது. மலைநாட்டு திவ்யதேசங்களில் சதுர்புஜத்துடன் நின்ற கோலத்தில் பல பெருமாள்களை சேவிக்கும் போது குருவாயூரப்பனை சேவித்தது போலவே இருக்கும்.  குருவாயூரப்பனுக்கு சார்த்தும் அம்மயிற்பீலி கிரீடமும், மலர் அலங்காரம் மற்றும் மயிற்பீலி விசிறி அலங்காரமும் எப்போதும் நம் கண்ணில் நிற்கின்றன. குருவாயூரப்பனை சேவிக்கும் போது குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள் என்ற பாடல் வரிகள் நம் காதில் ரீங்காரமிடுகின்றதல்லவா? கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் குருவாயூரப்பனிடம் நாமும் சரணமடைவோம். கிழக்கு வாசல், மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும், கிழக்கு நோக்கிய வாசல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.   வெளி கோபுரத்திற்கு முன்னர் நெடிதுயர்ந்த பித்தளை விளக்குக் கம்பம். கேரள பாணி கோபுரத்தின் சுவர்களில் கண்ணனின் லீலைகள் எழில் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன.   கோபுரத்திற்குள் நுழைந்து  ஆலயத்தின் உள்ளே சென்றதும், தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும் உயரமான  தீபஸ்தம்பங்கள்  கண்களைக் கவர்கின்றது. இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும் போது காணக் கண் கொள்ளா காட்சியாகும். கொடிமரத்திற்கு அருகே துலாபாரம் உள்ளது குருவாயூரப்பனுக்கு துலாபாரம் செலுத்துபவர்கள் அநேகம். அருகே ஒரு பெரிய உருளியில் வன்னிக் காய்கள் அதுவும் இவ்வாலயத்தின் ஒரு பிரார்த்தனைப் பொருள். குழந்தைகளுக்காக வேண்டிக்கொண்டு இக்காய்களை கொடிமரத்தில் சமர்ப்பிக்கின்றனர்.  வெளிப்பிரகாரத்தை வலம் வந்து உண்ணி கிருஷ்ணரை வணங்க உள்ளே செல்லும் போது வாயிலின் மேலே ஒரு யானனையின் உருவப்படத்தையும் தந்தங்களையும் காணலாம், ஐந்தறிவுள்ள மிருகமாக இருந்தும் கூட ஸ்ரீகிருஷ்ணரை தான் இருந்தவரை தாங்கிய, ஏகாதசி விரதம் அனுஷ்டித்த கேசவன் என்ற யானையின் தந்தங்கள் மற்றும் படம் அவை.   []   ஸ்ரீகோவிலுக்கு எதிரே நான்கு தூண்களுடன் கூடிய நமஸ்கார மண்டபம்.  சிறிய சதுர வடிவ ஸ்ரீகோவிலின் ஈரடுக்கு சாய்ந்த கூரைகளில் தங்க ஓடுகள் மின்னுகின்றன. சுவர்களில் அருமையான கண்ணனின் பால லீலைகளை விளக்கும்  இயற்கை ஓவியங்கள் இன்றும் புதிதாக காட்சி தருகின்றன. உள் சுற்றில் கன்னி மூலையில் கணபதி சன்னதி அமைந்துள்ளது. சுவற்றில் கிருஷ்ண லீலைகளை விளக்கும் பல சிற்பங்களை காணலாம். இச்சுற்றில் அருமையான அனந்த பத்மநாபச்வாமி கேரள பாணி ஓவியத்தை இரசிக்கலாம். கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில் சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.  மாலை நேரத்தில் இவற்றில் தீபம் ஏற்றப்பட்டு  இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் போது மனத்தில் பரவசம் ஏற்படுகிறது. சுற்றம்பலம் யானைகள் சீவேலியின் போது வலம் வரும் விதமாக உயரமாக அமைந்துள்ளது. அதன் பிரம்மாண்ட தூண்களில் தசாவதார சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. வட கிழக்கு மூலையில் தேவி சன்னதியும், தெற்கு பிரகாரத்தில் சாஸ்தா சன்னதியும் அமைந்துள்ளது. தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவந் தானே தமருகந்தது எப்பேர்மற் றப்பேர் – தமருகந்தது  எவ்வண்ணம் சிந்தித்து  இமையா திருப்பரே அவ்வண்ணம் ஆழியா னாம் (மு.தி 44) என்று பொய்கையாழ்வார் பாடியபடி அவரவர்களுக்கு தகுந்தபடி சேவை சாதிக்கின்றார்  குருவாயூரப்பன். ஞானிகளான மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி, பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி போன்றோர் குருவாயூரப்பனை மஹாவிஷ்ணுவாக வழிபட்டனர். பூந்தானம், வில்வமங்களம் சுவாமிகள், மானதேவன், குரூர் அம்மையார் ஆகியோர் பாலகிருஷ்ணனாக வழிபட்டனர். ஆயினும் குருவாயூரப்பனை ஒரு குழந்தையாக பாவித்து, இங்கு வழிபடும் பக்தர்களே அதிகம்!. உண்ணி கண்ணன், உண்ணி கிருஷ்ணன், பால கிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ணன், குருவாயூரப்பன் என்றெல்லாம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வத்தை பலவாறு அழைத்து மகிழ்கின்றனர் பக்தர்கள். தரிசனம் காண இங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் சொல்லி மாளாது. குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்!  இரவு மூன்றாம் யாமம் முடிந்ததும் மூன்று மணிக்கு நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர். நிர்மால்ய தரிசனத்தின் போது குருவாயூரப்பனுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக்காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர்.  விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். தைலாபிஷேகத்துக்குப் பின் அத்தெய்வத் திருமேனியை வாகைத் தூளால் தேய்ப்பர். இதற்கு ‘வாகைசார்த்து’ என்று பெயர். அடுத்து சங்காபிஷேகம் நடைபெறும்.   அப்போது புருஷஸூக்தம் சேவிக்கப்படுகின்றது. இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் திருமஞ்சனம் நடை பெறுகின்றது. இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியம் செய்கின்றனர் .அப்போது உண்ணிக்  கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன்.  இதன் பின் ஆரம்பமாகும் காலை நேர உஷத்பூஜை நடைபெறுகின்றது. இப்பூஜையின் போது நெய்ப்பாயசமும்,  அன்னமும் பிரதான நைவேத்தியம். இது முடிந்து நடைதிறக்கும் போது பகவான் திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் திலகம், இடையில் பொன் அரைஞாண், திருக்கரங்களில் ஓடக்குழல், மஞ்சள்பட்டு ஆகிய ஆபரண அலங்காரங்களுடன் அற்புதமாக தரிசனம் தருவார். அழகான சிருங்காரத்தில் எழிலாக தரிசனம் தருகிறார் குருவாயூரப்பன்.  குருவாயூரப்பனுக்கு சாயங்காலம் (சந்தியாகாலம்) மட்டும் தீபாராதனை செய்கிறார்கள். ஏழடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரிவிளக்கு என்று பல தீபங்கள் ஏற்றி ஆராதனை செய்து, கடைசியில் கற்பூர ஆரத்தி நடக்கும். சுற்றம்பல அனைத்து விளக்குகளும் மங்கலமாக எரிய பெருமாளின் ஆரத்தி சேவிப்பதே ஒரு ஆனந்தம். மங்கள ஆரத்தியின் போது முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்து குருவாயூரப்பனை வணங்குவதாக ஐதீகம்.   இதற்கு அன்னமும், சர்க்கரை, பாயசமும் ஆகியவை  நைவேத்தியம். ஸ்ரீகுருவாயூரப்பனுக்குப் பிடித்த நைவேத்தியம், பால்பாயசம், நெய்பாயசம், சர்க்கரை பாயசம், அப்பம், திரிமதுரம், மற்றும் பழவகைகள்.   []   தினமும் ஐந்து பூசைகளும் மூன்று சீவேலிகளும் நடைபெறுகின்றது. இரவு நடைபெறும் அத்தாழ  சீவேலி மிகவும் சிறப்பாக மூன்று யானைகளுடன் நடைபெறுகின்றது நாதஸ்வர இசையுடன் மூன்று முறை சுற்றி வருகிறார் உற்சவ மூர்த்தி. அஷ்ட கந்த புகையிட்டு நடையை அடைப்பதை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆலயத்தின் மதிற்சுவரை ஒட்டியே நாராயண தீர்த்தம் அமைந்துள்ளது.  துலாபார நேர்ச்சைக் கடன் இக்கோவிலில் மிகவும் பிரசித்தம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை எடைக்கு எடை செலுத்துகிறார்கள். அது போல் குழந்தைகளுக்கு அன்னப்பிரசனம் என்னும் முதல் அன்னம் ஊட்டும் நிகழ்ச்சி இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அக்குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்றும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை.   எனவே, தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இங்கே அன்னம் ஊட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  குருவாயூர் என்றவுடன் நாராயணீயத்தை பற்றிக் கூறாமல் இருக்க முடியாது. தனது குரு வாத நோயால் துன்பப்படுகிறார் என்று அதைத்தான் வாங்கிக் கொண்ட  நாராயண பட்டத்திரி, குருவாயூரப்பன் சந்நிதிக்கு முன் அமர்ந்து நின்று தினம் நாராயணீயத்தின் பத்து ஸ்லோகங்கள் வீதம் நூறு நாட்கள் பாடினார். ஆயிரம் ஸ்லோகங்கள் பாடியதும் வாத நோய் நீங்கிவிட்டது.   நாராயணீயத்தின் முதல் ஸ்லோகத்திலேயே பட்டத்திரி ”குருபவன புரே ஹந்தபாக்யம் ஜனானாம்” அதாவது ஏ! குருவாயூரப்பா உன்னை அனுதினமும் அதிகாலை நிர்மால்ய தரிசனம் துவங்கி இரவு நடை அடைக்கும் வரை பல் வேறு அலங்காரத்தில்  உன்னை தரிசனம் செய்யும் பக்தர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்று பட்டத்திரி பாடுகின்றார். குருவாயூர் கிருஷ்ணனை முன்னிலைப்படுத்தி பாகவதத்தின் சாரத்தை சம்ஸ்கிருதத்தில் பக்தி சொட்டச் சொட்ட நாராயண பட்டத்ரி பாடினார். பட்டத்ரி ஸ்ரீநாராயணீயம் சொல்லச் சொல்ல... அந்த குருவாயூரப்பன் ‘ஆமாம் ஆமாம்’ என்று தலை அசைத்து அவற்றை ஏற்று ஆனந்தமாகக் கேட்டு ரசித்ததாகத் தன் உபன்யாசத்தில் கூறுவார் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர்.   கர்நாடக இசை வித்துவான் செம்பை வைத்தியநாத பாகவதர், சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீட்சிதர் ஆகியோர் குருவாயூரப்பனின் அருள் பெற்ற பரம பக்தர்கள் ஆவார்கள்.  கல்யாண ரூபாய கலௌ ஜனானாம் கல்யாண தாத்ரே கருணா ஸுதாப்தே கம்ப்வாதி திவ்யாயுத ஸத்கராய வாதாலயாதீஸ நமோ நமஸ்தே பொருள்: நன்மையை அருளும் மங்கள(கல்யாண) ரூபத்தில், திருக்கரங்களில் சங்கு போன்ற திவ்யாயுதங்களை ஏந்தியவரும், கலியுகத்தில் பக்தர்களுக்கு வற்றாத நல்வளங்களை வழங்குபவரும், கருணா அமிர்தத்தின் சாகரமானவரும் (சமுத்திரம்) ஆன குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்  என்று பாடி வணங்குகின்றனர் பக்தர்கள்.  குருவாயூர் கோயில் பாரம்பரியமான கேரள வகை கோயில் கட்டிடக்கலை அமைப்பில் நுழைவு வாயிலிலிருந்து மூலவரை தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளது.  கேரளாவின் மலையாளப் புத்தாண்டு விஷு நன்னாளில் சூரியனின் கதிர்கள் குருவாயூரப்பனின் கால்களை அலங்கரிக்கும்.   நாலம்பலத்தின்  நுழைவாயிலில், யானையாக இருந்தாலும் ஏகாதசி விரதம் அனுஷ்டித்த, கஜராஜன் என்ற பட்டம் பெற்ற கேசவன் என்ற யானையின் தந்தங்களும், படமும் இருப்பதை கண்டு பிரமிக்கிறோம். இந்த கோயிலின் ஸ்ரீகோவிலானது  கி.பி 1638 இல் கட்டப்பட்டது. அதன் பிறகு இந்த துணைக் கண்டத்தின் புகழ்பெற்ற புனிதத்தலமாக மாறியது. கிபி 1716 இல் டச்சுக்காரர்கள் கோயிலைக் கொள்ளையடித்து தீ வைத்தனர். அதன் பிறகு மீண்டும் தற்போதுள்ள கோயில் அமைக்கப்பட்டது. குருவாயூரப்பனின் ஸ்ரீகோவில் சதுர வடிவில் பிரமிட் விமானத்துடன் எழிலாக அமைந்துள்ளது. விமானம் தங்க கவசத்தில் மின்னுகின்றது. ஸ்ரீகோவிலின் சுவற்றில் பாகவத கதைகளை விளக்கும் அருமையான கேரள பாணி ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.  எங்களை அழைத்துச் சென்றவர்களுக்கு தெரிந்த ஒரு போத்தி அச்சமயம் சன்னதியில் இருந்ததால் சற்று நேரம் பொறுமையாக நின்று குருவாயூரப்பனை  தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. வடக்கு பிரகாரத்தில் கணபதி, அனந்த பத்மநாபன் சன்னதிகள்  அமைந்துள்ளன. உன்னி கிருஷ்ணனுக்கு பால் பாயசம் மிகவும் பிடித்தமான நைவேத்யம். ஏகாதசி தினங்கள், கிருஷ்ண ஜெயந்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் ஏகாதசியை ஒட்டி பெருவிழா நடைபெறுகின்றது.  குருவாயூரப்பனை தரிசித்த பின்னர் வாருங்கள் கொடுங்கல்லூர் பகவதி அம்மனை தரிசிக்கலாம்.                                 அத்தியாயம் - 9 9.கொடுங்கல்லூர் பகவதி  ஆலயம் []                             சக்தி வழிபாடு என்பது ஆதிகாலம் தொட்டே இருந்து வந்துள்ளது. அம்மன், அம்பாள் என்று சைவர்களும், தாயார், நாச்சியார், பிராட்டி என்று வைணவர்களும் வழிபடும் அன்னையை கேரளத்தில் பகவதி என்று வழிபடுகின்றனர்.   கேரளத்தில் அமைந்துள்ள சிறப்புப் பெற்ற பகவதி ஆலயங்களுள் ஒன்று இக்கொடுங்கல்லூர் பகவதி ஆலயம். ஆதி காலத்தில் இத்துறைமுக நகரம் கொடுங்கோளூர் என்ற பெயரில் சேர மன்னர்களின் தலைநகரமாக திகழ்ந்திருக்கின்றது. யவனர்களுடன் கடல் வணிகமும் நடந்திருக்கின்றது. இந்நகரத்தில் அமைந்துள்ளது குரும்ப பகவதி காவு  என்றழைக்கப்படும் கொடுங்கல்லூர் பகவதி அம்மன் ஆலயம். காவு என்றால் சோலை. ஆனால் தற்போது கோவிலை சுற்றியுள்ள பெரிய மைதானத்தில் சில பெரிய மரங்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன. அம்பாள் பத்ரகாளி அல்லது மஹா காளியாக வணங்கப்படுகிறாள். கேரளத்தின் 64 காளி ஆலயங்களுள் ஒன்று .  ஆதி காலத்தில் பரசுராமர் கடலிலிருந்து இந்த பரசுராம க்ஷேத்திரத்தை உருவாக்கியபின் தாருகன் என்ற அசுரனை வதம் செய்ய சிவபெருமானை வேண்டினார். அவரது சக்தியான பார்வதிதேவி பத்ரகாளியாக ஆவிர்பவித்து தாருகனை வதம் செய்தார். பின் பரசுராமர் அத்தேவியை இங்கு பிரதிஷ்டை செய்தார் என்பது ஒரு  ஐதீகம். மதுரையில் பாண்டியன் அரண்மணையில் தேரா மன்னா!  என்று வழக்குரைத்து தன் கணவன் கோவலன் சிலம்பைத் திருடிய குற்றவாளி அல்ல என்று நிரூபித்து மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகிக்காக சேரன் செங்குட்டுவன் அமைத்த ஆலயமே இவ்வாலயம் என்பாரும் உண்டு.  இவ்வாறு கண்ணகி நிறைவாக வந்தமர்ந்த தலம்.  அதே உக்கிரத்துடன் அம்மன் அமர்ந்திருக்கின்றாள் என்பர்.  அம்மை இங்கே அஷ்டபுஜ பத்ரகாளியாக அசுரனின் சிரம், வாள், சிலம்பு, திரிசூலம், பாசம், நாகம், மணி, அக்ஷய பாத்திரம் தாங்கி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். அம்மன் 7 அடி உயரத்தில்  பலா மரத்தில்  ஆன மூர்த்தம் என்பதால் தங்க கவசம் அணிவித்துள்ளனர். அம்மை வடக்கு நோக்கிய திருமுகத்துடன் அருள் பாலிக்கின்றாள். மேலும் தங்க நகைகளால் அம்மனுக்கு அற்புதமாக அலங்காரம் செய்துள்ளனர். அம்மனின் காலடியில் சிவலிங்க ரூபம் உள்ளது. அம்மனுக்கு இடப்புறம் பிராம்ஹி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டா ஆகிய சப்த மாதர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஆகவே ஆலயம் நீளவாக்கில் அமைந்துள்ளது.. இவ்வகையாக பிரதிஷ்டை செய்வது ருருஜுத்வதானம் என்றழைக்கப்படுகின்றது. ஆதிசங்கர பகவத்பாதாள் அம்மன் முன் சக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளதாக ஐதீகம். மேலும் கணபதி, சிவன்  மற்றும் பைரவர் சந்நதிகளும் உள்ளன  இவ்வாலயத்தில் சிவபெருமானுக்கும் தனி சன்னதி உள்ளது தனி வாயில் முகப்பு மண்டபம் ஆகியவையும் உள்ளன ஆனால் கதவம் அடைக்கப்பட்டுள்ளது.  சிவபெருமான் விஸ்வநாதராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஆதி காலத்தில் சிவாலயமாக இருந்திருக்கலாம் பின் பகவதி வந்து சேர்ந்தாள் என்பாரும் உண்டு.   மிகப்பெரிய மைதானத்தின் மையத்தில் கோவில் அமைந்துள்ளது. மற்ற ஆலயங்கள் போலல்லாமல் ஒரே ஒரு உள் சுற்று மட்டுமே உள்ளவாறு கோவில் அமைந்துள்ளது. கொடிமரமும் கிடையாது. உள்ளே நுழையும் போதே அம்மே சரணம் என்ற வாசகம் நம்மை வரவேற்கின்றது. ஆலயத்தின் முகப்பில் ஒரு பிரம்மாண்டமான  கூர்ம  தீபம் அமைத்துள்ளனர். இத்தலத்தில் மலையாள மீன மாதம் (பங்குனி மாதம்) நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. விழாவின் நிறை மூன்று நாட்கள் காவு தீண்டல்  என்று வித்தியாசமாக கொண்டாடப்படுகின்றது.   அக்காலத்தில் கீழ் சாதியினர் கோவிலுக்குள் சென்று வழிபட முடியாத நிலையை மாற்றி முதன்முதலில் அவர்களும் ஆலயத்தினுள் சென்று வழிபட அனுமதித்ததை கொண்டாடும் வகையில் இந்த காவு தீண்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது என்பாரும் உண்டு.  []                           சிவன் சன்னதி கதவு கொடுங்கல்லூர் அரசர் வந்து ஆல மரத்தடியில் நின்று குடையை உயர்த்தியவுடன் காவு தீண்டல் நிகழ்ச்சி தொடங்குகின்றது. சிவப்பு ஆடை, கையில் வளைந்த வாள், கையில் சிலம்பு, இடையில் அரை மணி  காலில் சலங்கை அணிந்த வெளிச்சப்பாடுகள்  என்றழைக்கப்படும் குறி சொல்பவர்கள் மருளுடன் கோவிலை சுற்றி வருகின்றனர், அப்போது தெரிப்பாட்டு என்றும் பரணிப்பாட்டு என்றழைக்கப்படும் பாடல்களை பாடுகின்றனர், மஞ்சள் தூள், மிளகு, சேவல்கள் ஆகியவற்றை கோவிலுக்குள் வீசுகின்றனர்.   சிலர் வாளினால் தங்கள் தலையில் வெட்டிக்கொண்டு இரத்தம் சொட்ட சொட்ட வலம் வருகின்றனர். இவ்வாறு மூன்று முறை கோவிலை சுற்றி வந்த பின் அரசரை விழுந்து வணங்கிவிட்டு திரும்பிச் செல்கின்றனர். ஆதி காலத்தில் பலி கொடுத்திருக்கின்றனர் தற்போது அதற்கு பதிலாக சிவப்பு ஆடையை சமர்ப்பிக்கின்றனர். இதற்குப்பின் ஆலயம் சுத்தம் செய்வதற்காக ஒரு வாரம் அடைக்கப்படுகின்றது.   க்ஷேத்ரபாலகர் என்று பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. வெடி வழிபாடு இக்கோவிலின் சிறந்த வழிபாடு ஆகும். மதியம் உச்சப்பூஜைக்குப் பின் அனைவருக்கும் பாயசம் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. கொடுங்கல்லூர் பகவதியை திவ்யமாக தரிசித்த பின் திருஅஞ்சைக்களம் (ஸ்ரீவஞ்சிக்குளம்) என்றழைக்கப்படும்  திருக்கோவிலை தரிசித்தோம்.   எம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி நாயனாரும், அவரின் தோழர் சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் இங்கிருந்து சென்றார்கள் என்ற சிறப்புடைய தலம். வம்மின் தொண்டர்களே திருஅஞ்சைக்களத்தப்பரையும் தரிசிக்கலாம்.                                          அத்தியாயம் - 10 10.திருஅஞ்சைக்களம் மஹாதேவர் ஆலயம் []                                     ஸ்ரீகோவில் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் அமைந்திருக்கும் ஒரே சிவத்தலம் இந்த திருவஞ்சிக்குளம் மஹாதேவ சுவாமி கோவில் ஆகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான ஆலயம். சேரமான் பெருமான் நிர்வாக நகரம். கயிலை நாதர் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம்.    வெள்ளை யானையில் சுந்தரரையும், வெள்ளைக் குதிரையில்  சேரமான் பெருமாளையும் திருக்கயிலை மலைக்கு அனுப்பி வைத்த புண்ணிய தலம், மலைநாட்டில் பள்ளியறை பூஜை நடைபெறும் ஒரே தலம், இந்திய தொல்லியல் துறையின் தலம் என்ற பல சிறப்புகள் இத்தலத்திற்கு உள்ளது. தலைக்கு தலைமாலை அணிந்ததென்னே சடைமேற்கங்கைவெள்ளம் தரித்த தென்னே  அலைக்கும் புலித்தோல் கொண்டுஅசைத்ததென்னே  அதன் மேற் கதநாகங் கச்சு ஆர்த்ததென்னே  மலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு  அலைக்கும் கடல் அங்கரை மேல் மகோதை அணியார்பொழில் அஞ்சைக்களத்தப்பரே.   பொருள்: மலைக்கு நிகராகிய தன்மையினால் தம்மில் ஒப்பனவாகிய  வலிய அலைகள் வலம்புரி சங்குகளைப் பற்றி ஈர்த்து வந்து எறிந்து முழங்கி மோதுகின்ற  கடலினது அழகிய கரையில் மகோதை எனும் நகரத்தின் கண் அமைந்துள்ள எழிற் சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் எனும் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள என் தந்தையே சிவபெருமானே! நீர் தலைக்கு அணிகலனாக தலைமாலையை அணிந்தது ஏன்? விரிசடையின் மேல் கங்கை ஆற்றை தாங்கியது ஏன்? கொல்லும் தன்மையுடைய புலியினது தோலை அரையில் உடுத்தது ஏன்? அவ்வுடையின் மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாக கட்டியது ஏன்?  என்று வண்தொண்டர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தலம். தேவாரப்பாடல் பெற்ற ஒரே  மலைநாட்டு  திருத்தலம். பரசுராமர் தன் தாயைக் கொன்ற  பாவம் தீர சிவனை வழிபட்ட தலம்.   கொடுங்கல்லூரிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். ஆலயத்தின் மேற்கு வாயில் தேசிய நெடுஞ்சாலை-17ல் அமைந்துள்ளது. எம்பிரான் தோழர் சுந்தரரின் தோழரான “கழறிற்றறிவார் நாயனார்” என்றழைக்கப்படும் சேரமான் பெருமாள் நாயனார் வழிபட்ட தலம் இத்தலம்.   பல்லாண்டுகளுக்கு முன்பு வரை புஞ்சை நிலத்தில் இருந்த சுவாமி விக்கிரகம், ஒரு முறை வயலை உழும் போது கிடைத்ததாம், அவ்விடத்திலேயே ஆலயம் அமைக்கப்பட்டது. புஞ்சைக்களம் என்பதே மருவி அஞ்சிக்களமானது. தேவாரத்தில் அஞ்சைக்களம் என்று பாடப்பட்டுள்ளது. தற்போது திருவஞ்சிக்களம் என்றழைக்கப்படுகிறது.   முதலில்  சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றைப் பற்றிக் காணலாம் அன்பர்களே. மலை நாட்டில் பெரியாற்றங்கரையில் மற்றும் கடற்கரியில்   சேரமான் பறம்பு என்ற இடத்தை தலையிடமாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தனர். அப்போது   மகோதை என்றும் கொடுங்கோளுர் என்றும் அழைக்கப்பட்ட இத்தலத்தில் சேரர் மரபில் தோன்றிய  பெருமாக்கோதையார் என்பார் சிவத்தொண்டு புரிந்துவந்தார். இவர் அஞ்சைக் களத்தப்பர் மேல் அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.  []   மூன்றடுக்கு கோபுர வாசல் அப்போது அங்கு ஆட்சி செய்து வந்த “செங்கோற் பொறையன்” என்னும் அரசன் நாட்டைத் துறந்து தவம் செய்து சிவபெருமானின் திருவடிகளை அடையும் பொருட்டு காட்டை அடைந்தார். அறிவு மிக்க அமைச்சர் பெருமக்கள் ஆராய்ந்து இனி பெருமாக்கோதையாரே சேரமானாக அரசு செய்ய வேண்டும் எனத் தெளிந்தார்கள். திருஅஞ்சைக்களம் அடைந்து நாயனாரை அவ்வாறே வேண்டினார்கள். நாயனார் இறைவன் திருவுள்ளம் அறிந்து வருவேன் என உரைத்து இறைனிடம் விண்ணப்பித்தார். அஞ்சைகளத்தப்பர் “நீ அரசு பதவியேற்று உயிர்கள் வாழும் வண்ணம் நல்லாட்சி செய்வாயாக! எல்லா உயிர்களும் பேசுவனவற்றை அறியும் ஆற்றல் உனக்கு அளித்தோம்” என அருளினார். இதனால் அவருக்கு “கழறிற்றறிவார்” என்ற பெயர் தோன்றியது.  மகுடாபிஷேகம் ஆன சேரமான் பெருமான் யானை மீது நகர் வலம் வந்தார். அப்பொழுது துணி வெளுப்பவன் ஒருவன் மீது உவர் மண் காய்ந்து அவன் உடல் முழுவதும் திருநீறு அணிந்தவர் போல் தோன்றினான். அவனை முழுநீறு பூசிய முனிவராகக் கண்டச் சேரமான் யானையை விட்டு இறங்கி அவனை வணங்கினார். வணங்கியவுடன் அவ்வண்ணான் மனம் கலங்கி, “அரசே! என்னை யார் என்று எண்ணினீர்கள்.   அடியேன் அடி வண்ணான்” என்றான். நாயனாரும் “அடியேன் அடிச்சேரன் .நீங்கள் வருந்தாமல் செல்லுங்கள்” என்றார். சேரமான் பெருமானின் அடியார் பக்தியைக் கண்ட அனைவரும் அதிசயத்தார்கள். எனவே  இவரை “வண்ணானைக் கும்பிட்டார்”  என்று போற்றுகின்றனர்.  சேரமான் பெருமான் தாம் நாள் தோறும் செய்யும் பூசையின் முடிவில் நடராஜப் பெருமானின் சிலம்பு ஓசையைக் கேட்கும் பேறு பெற்றவர். ஒரு நாள் சிலம்போசை பூசை முடிவில் கேட்கப் பெறவில்லை. நாயனார் மிக வருந்தி உயிர்விடத் துணிந்தார். பெருமான் சிலம்போசை கேட்பித்தார்.   “ஐயனே! முன்பு நான் கேளாமற் போனதற்கு காரணம் என்னவோ” என நாயனார் இறைவனிடம் முறையிட்டார்.  []   அம்பலவாணர் “அன்பனே வருந்தற்க! கனகசபையில் நம் முன்னே சுந்தரன் வழிபட்டு செந்தமிழால் எம்மைப் பாடினான். அது கேட்டு அதன் சுவையில் ஈடுபட்டதால் உன் பூசையில் சிலம்பிசைக்க தாமதித்தோம்” எனக்கூறினார்.  சேரமான் பெருமான்  சுந்தரர் பெருமையை உணர்ந்து பொன்னி நாட்டை நோக்கிப் புறப்பட்டார். சிதம்பரத்தில் வந்து கனகசபையில் அம்பலவாணரை வழிபட்டார். அவரைப் போற்றி  பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக்கொண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே. பொருள்: எம்பெருமானின் திருமேனி பொன்வண்ணம்.  அவரது திருச்சடைகளோ  மின் வண்ணம், அவரது வாகனமான மால் விடையோ  வெண்மை  நிறம்.  என் மனத்தின் வண்ணம் எப்போதெல்லாம் எப்படி எப்படி இருக்கிறதோ அப்படியெல்லாம் காட்சி தருகிறான் என் ஈசன்! என்று துவங்கி  பொன் வண்ண திருவந்தாதி பாடினார். பிறகு திருவாரூர் சென்று தம்மை எதிர் கொண்டு வரவேற்கும் சுந்தரரை வணங்கி பின் தியாகராசரையும் வணங்கினார். சேரமான் பெருமானோடு நட்பு கொண்ட சுந்தரரை அடியார்கள் “சேரமான் தோழர்” என்றும் அழைக்கலானார்கள்.  சேரமான் பெருமான் திருவாரூர் பெருமான் மீது ஒரு மும்மணிக் கோவை பாடினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பொருட்டு இருமுறை திருஅஞ்சைக்களம் வந்துள்ளார்.  முதல்முறை சேரமானுடன் சுந்தரர் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழ நாடு, கொங்கு நாடுகளில் உள்ளத் தலங்களை வழிபட்டு பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கல்லூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடியும் தமிழகத்தலங்களுக்கு  திரும்பி வந்து பதிகம் பாடினார்.  []   இரண்டாம் முறை சேரநாடு வந்த சில நாட்களில் சுந்தரர் திருக்கயிலை சென்று இனி இறைவனோடு இருக்க வேண்டும் என விரும்பினார். “தலைக்கு தலை மாலை”என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப் பதிகம் இதுதான். இறைவனும் ஐராவளம் என்னும் நான்கு தந்தங்களைக் கொண்ட தன்னுடைய வாகனமான வெள்ளை யானையையும், இந்திரன், மஹாவிஷ்ணு, நான்முகன் ஆகியோரையும், மற்ற தேவர்களையும் சுந்தரரை திருக்கயிலாயம் அழைத்து வர  அனுப்பினார். இறைவனின் பட்டத்து யானையில் சுந்தரர் கயிலைக்குப் புறப்பட்டார். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர்.  உடனே  சேரமான் பெருமான் திருவைந்தெழுத்தை தம் குதிரையின் காதில் ஓத, குதிரை யோக சக்தி பெற்று பறக்கத் தொடங்கியது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் செல்லும் யானையை மூன்று முறை  வலம் வந்து  சுந்தரருக்கு முன் திருக்கயிலையை அடைந்தது. சுந்தரர் இறைவனின் மாப்பெரும் கருணையை நினைத்து  வானில் செல்லும் போது   தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ளமத்த யானை அருள் புரிந்து ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே – என்று தொடங்கி நொடித்தான் மலை’ பதிகத்தைப் பாடினார். இறைவனின் உத்தரவுப்படி வருண பகவான் இப்பதிகத்தை திருவஞ்சிக்குளம் மஹாதேவர் ஆலயத்தில் சேர்பித்தார்.  திருக்கயிலையில் இறைவன் சந்நிதிக்கு சுந்தரர் சென்ற பின் இறைவனிடம் தன் தோழர் சேரமான் பெருமாளையும் திருக்கயிலாயத்தில் அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். இவ்வாறு நட்புக்கு ஒரு இலக்கணமாக திகழ்ந்தார் எம்பிரான் தோழர். இறைவனும் அனுமதி அளித்தார், சேரமான் பெருமான் இறைவன் முன் வந்து வணங்கினார். அங்கு அப்பொழுது ஆசு கவியாக ஓர் உலா ஒன்று இறைவன் மீதுப் பாடினார். இப்பதிகம் திருக்கயிலாய உலா என்று சிறப்புப் பெற்றது.  தமிழ்க் காப்பியங்களில் உலா ஒன்று முதன் முதலாகப் பாடியவர் சேரமான் பெருமான் நாயனார் ஆவார். பின் இருவரையும் தனது தொண்டர் கணங்களில் இணைத்துக் கொண்டார் சிவபெருமான் தனது பூலோக அவதார நோக்கம் நிறைவேறிய பின்  சுந்தரரும், அவரின் தோழர்  சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் சென்றது இத்தலத்தில் இருந்துதான். கோயிலுக்கு எதிரே ஒரு மேடை உள்ளது அம்மேடைக்கு யானை வந்த மேடை என்று பெயர்.  மேலும் இவர்களுடன் அன்றைய தினம்  திருக்கயிலையில் கமலினி மற்றும் அநிந்தினி என்னும் பார்வதி தேவியின் சேடிகளாக இருந்து பூலோகத்தில் பரவை மற்றும் சங்கிலியாக பிறந்து சுந்தரரை மணந்த பெண்கள்  இருவரும், பெருமிழலைக் குறும்பரும் திருக்கயிலாயம் சென்றனர்.   விநாயகர் பூஜை செய்து கொண்டிருந்த ஔவையாரும் விநாயகர் அகவல் பாடிய பின், விநாயகர் இவர்களுக்கெல்லாம் முன்பாக தன்  தும்பிக்கையினால் தூக்கி ஔவையாரை திருக்கயிலாயத்தில் வைத்தார் என்றொரு கதையும் உண்டு.   இந்நிகழ்வைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி அன்று சுந்தரர் திருக்கயிலை செல்லும் விழாவினை கோவை சேக்கிழார் திருக்கூட்டத்தார் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். இவர்கள் ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இவ்வொரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது. விழாவின் முதல் நாள் இரவன்று கொடுங்கல்லூர் பகவதியம்மன் ஆலயத்திலுள்ள சுந்தரர், சேரமானின் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை செய்து, யானை மற்றும் குதிரை வாகனத்தில் அமர வைத்து மேள தாளங்களுடன் அஞ்சைக்களத்திற்கு ஊர்வலமாக அழைத்து வருவர். மறுநாள் காலை சுந்தர மூர்த்தி நாயனாருக்கு கோலாகலமான குருபூஜை விழா நடைபெறுகின்றது. மேலும் அன்றைய தினம் திருஅஞ்சைக்குளத்திலுள்ள அத்தனை உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றது.  ஒரு காலத்தில் கொச்சி அரசர்களின் வழிபடும் மற்றும் முடி சூட்டிக்கொள்ளும்   ஆலயமாகவும் இவ்வாலயம் இருந்துள்ளது தற்போது கொச்சி தேவசம் போர்ட் கட்டுப்பாட்டில் கீழ் உள்ளது. இத்திருக்கோயில் சுமார்  2 ஏக்கர் நிலப்பரப்பில்,  28 துணை சன்னதிகளைக் கொண்டு பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. []   கொடி மரத்தில் அஷ்ட பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர் வம்மின் தொண்டர்களே இவ்வளவு சிறப்புகள் பெற்ற ஆலயத்தை தரிசனம் செய்யலாம். மற்ற கேரள ஆலயங்களைவிட பிரஏம்மாண்டமாக மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது திருஅஞ்சைக்களம் ஆலயம். கேரள சிற்பக்கலை அம்சத்தை ஒட்டிக் கட்டப்பட்ட ஆலயம். தற்போது  தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிழக்கு கோபுரம் மூன்று அடுக்குகள் கொண்டது. மேற்கு திசையில் வாயில் இருந்தாலும் அங்கு கோபுரம் கிடையாது. கிழக்கு  கோபுரத்தைக் கடந்தால் நாம் காண்பது பலிபீடம், அடுத்து உயரமான துவஜஸ்தம்பம் பல அடுக்குகளைக் கொண்ட அதன் உச்சியில் நந்தி சிலை உள்ளது. பொதுவாக கொடி மரத்தில் அஷ்ட லக்ஷ்மிகள் அல்லது அஷ்ட திக் பாலகர்கள் இடம் பெற்றிருப்பார்கள். சிறப்பாக இத்தலத்தில் அஷ்ட பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர்.   கருவறை நிலப்படிமானம் கருங்கற்களால் கட்டப்பெற்று, மர விட்டங்கள் முகட்டைத் தாங்கி உள்ளன. மேல் முகடு செப்புத் தகட்டினால் வேயப்பட்டிருக்கிறது. விமான கூரையில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மரச்சிற்பங்கள் அலங்கரிக்கின்றன, கணபதி, பைரவர், யோக நரசிம்மர் சப்த மாதர்கள் சிற்பங்கள் அவற்றுள் சிறப்பித்துக் கூறலாம். கீழ்ப் பகுதி தேரைப் போல அமைந்துள்ளது. பல யாழி சிற்பங்கள் நிறைந்துள்ளன.    இவ்வளவு சிறப்புகள் பெற்ற சுந்தரர் பாடிய இத்தலத்தின் மூலவர்:  மஹாதேவர், அஞ்சைகளத்தீஸ்வரர்  அம்பாள் : உமையம்மை  தல விருட்சம்: சரக்கொன்றை  தீர்த்தம்:  சிவகங்கை தீர்த்தம்.  பதிகம்: சுந்தரர்.  சிவபெருமான் லிங்க வடிவில் அம்மையுடன் சதாசிவ மூர்த்தமாக ஆனந்தமாக  அருள் பாலிக்கின்றார். ஈசன், மகாதேவன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். மூலவர் சுயம்பு லிங்கம்.  கேரளாவில் முக்கண்கள் கொண்டு அலங்கரிப்பது போல் தங்கத்தில் ஐயனுக்கு அருமையான அலங்காரம்.    ஐயனுக்கு அருகில் அம்மையும் அமைந்துள்ளது சிறப்பு. இவர்  சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக ஒரு  கல்வெட்டு கூறுகிறது. ஸ்ரீகோவிலில் இடது பக்கம் கலைமகள் சமேத நான்முகனும், வலது பக்கம் திருமகள் சமேத விஷ்ணுவும் வீற்றிருப்பது மிகவும் விசேஷமானது.  தீர்த்தக் கிணறு கருவறை அருகேயே உள்ளது. இங்குள்ள தீர்த்தம்தான் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.  முதல் சுற்றில் தெற்கு நாலம்பலத்தில்  தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள்.  அதன் முன் உள்ள மண்டபத்தில் சுந்தரர் பாடிய இத்தலப்பதிகங்களை கல்வெட்டுகளாகப் பதித்துள்ளனர். ஆதி காலத்தில் இவர்களை சேரன்- சேரத்தி என்றே பகதர்கள் வழிபட்டுள்ளனர். பின்னர் கொச்சி அரசரிடம் திவானாக இருந்த சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் இதனை ஆராய்ந்து  அது சேரத்தி அல்ல சுந்தரர் என்று உலகறியச் செய்தார். இவரது முயற்சியால் ஆடி சுவாதி உற்சவமும் துவங்கியது என்கிறார்கள்.   ஆலயத்தின்  சுற்றுப்பிரகாரத்தில் கணபதி, சுப்பிரமணியர், துர்கா பகவதி, தட்சிணாமூர்த்தி, சக்தி பஞ்சாட்சரி,   ஐயப்பன்,  நந்திகேஸ்வரர், கங்கை, நாகராஜா, நாகயட்சி, அனுமன்   ஆகிய  தெய்வங்கள் தனித்தனி சன்னனதிகளில் அருள் பாலிக்கிறார்கள். மற்றும் சந்தியா வேளைக்கல் சிவன், ஈசன் தளபதியான பிரிங்கீரடி, பள்ளியறை சிவன், நடுவெளி நாதர், வெளிநாதர் என்று பல சிவலிங்க சன்னதிகள் உள்ளன. நடராஜப் பெருமானுக்கு தனி சன்னதியும் உள்ளது. பஞ்சலோக மூர்த்தம்   ஐயனின் திருவடியின் கீழே "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்று எழுதப்பட்டுள்ளது. நமஸ்கார மண்டபத்தில் நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கிழக்கு ராஜகோபுர நுழைவாயில் அடித்தளத்தில் யானை மீதமர்ந்த சுந்தரர் கோலமும், குதிரை மீதமர்ந்த சேரமான் கோலமும் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.   பக்கக்கற்சுவற்றில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் நமஸ்கார மண்டபம் 16 தூண்களுடன் இரண்டடுக்கு (துவி தள)  கூரைகளுடனும் அருமையான மரச் சிற்பங்களுடனும் அமைந்துள்ளது இத்தலத்தின் ஒரு தனி சிறப்பு. மேற்கு கோபுரத்திற்கு வெளியே வீதியின் நடுவே உள்ள பெரிய மேடை யானை மேடை என்றழைக்கப்படுகிறது.  இத்தலத்தின் தல விருட்சம் சரக்கொன்றை மரம். கேரள ஆலயத்தில் தல மரத்தை மூலஸ்தானம் என்று அழைத்து சிறப்பாக வணங்குகின்றனர். ஆதி காலத்தில் சிவலிங்கத்திருமேனி இம்மரங்களின் அடியில்தான் இருந்துள்ளது. பின்னர் ஆலயங்கள் விரிவடைந்த போது தனி ஸ்ரீகோவில்களில் இறைவனின் திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபடும் வழக்கும் ஏற்பட்டது.   தற்போது மூலஸ்தானமான கொன்றை மரம் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. இதனடியில் கொன்னகோல் சிவன் சன்னதி அமைந்துள்ளது.  அருகில் ஊட்டுப்புரா என்னும் அன்னதானக்கூடம் இம்முறை இவ்வாலயத்தில் பிரசாதம் சுவீகரிக்கும் பாக்கியம் கிட்டியது. ஊட்டுப்புரத்தில் இருந்து ஸ்ரீகோவில் விமானத்தை நன்றாக சேவிக்கலாம். துவி தளமாக மேல் தளத்தில் சற்று வித்தியாசமாக நான்கு பக்கமும் சிறு புடைப்புகளுடன் நுணுக்கமான சிற்பங்களுடன் அமைந்துள்ளது ஒரு சிறப்பு.     []                               மூலஸ்தானம் – சரக்கொன்றை மரம் சேரமான் பெருமாள் நாயனாருக்கும் தில்லை சிதம்பரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதால், இத்தலத்தை மேலைச் சிதம்பரம் என்றும் கூறுவர். மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி 8 நாள் உற்சவமாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இத்திருவிழாவின் போது யானையோட்டமும் நடைபெறுகின்றது. அமாவாசையன்று ஆறாட்டு வைபவம்.   இத்தலத்தில் மாலை வேளையில் நடைபெறும் தம்பதி பூஜை சிறப்பானது கேரளாவிலேயே பள்ளியறை பூஜை நடக்கும் ஒரே தலம் இதுவாகும் இப்பூஜையை தரிசனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும், பிரிந்த தம்பதியினர் ஒன்றாக சேர்வார்கள், கணவன் மனைவி ஒற்றுமை பெருகும் என்பது ஐதீகம். அதுவும் பௌர்ணமியன்று செய்யும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் இப்பூஜைக்கு முன்பதிவு நடைபெறுகின்றது.   மற்ற கேரள ஆலயங்கள் போலவே இக்கோவிலிலும் வெடி வழிபாடு நடைபெறுகின்றது. திருவாதிரையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  மேலும் ஏகாதச ருத்ரம், சங்காபிஷேகம்,   மிருத்யுஞ்சய ஆஹாவனம் முதலிய வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. []   இவ்வாலயத்தில் தினமும் அன்னதானம் நடக்கின்றது. அதற்காகவே மூலஸ்தானத்திற்கு அருகில் ஒரு அன்னதான கூடம் உள்ளது.  அடியோங்களுக்கு சிவபெருமானின் பிரசாதம் சுவீகரிக்கும் பாக்கியம் கிட்டியது.  இவ்வாறு சுந்தரர் திருக்கயிலாயம் சென்ற திருஅஞ்சைக்களத்தி தரிசித்த பின்  அடியோங்கள் சேவித்த புனிதத்தலம் காலடி ஆகும், வாருங்கள்  அதன் சிறப்பு என்பதை காணலாம் வாருங்கள் அன்பர்களே.                 அத்தியாயம் -11 11.காலடி தரிசனம் []   சதாசிவ சமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் – என்பது சைவர்களுக்குரிய குரு பரம்பரை ஸ்லோகம். சிவபெருமானின் அம்சமாக கேரளத்தில் காலடியில் அவதரித்து சனாதன தர்மமான இந்து சமயத்தை புனருத்தாரணம் செய்தவர்  ஸ்ரீசங்கராச்சாரியார். அவர்  அவதரித்த திருத்தலம் கேரளத்தில் உள்ள காலடியாகும். காலடி எர்ணாகுளத்திற்கு அருகே அமைந்துள்ளது இந்த யாத்திரையின் போது காலடி செல்லும் பாக்கியம் சித்தித்தது. இங்கு ஆதிசங்கரர் பிறந்த இடமான பூர்ணா நதிக்கரையில் ஒரு மடமும், காலடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஒரு ஸ்தம்ப மண்டபமும் உள்ளது.  பௌத்தமும் சமணமும் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இந்து மதத்துக்குப் புத்துயிர் அளித்தார். இரண்டு சமயத்தினருக்கும் பகை நிலவிய ஒரு காலகட்டத்தில் ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபட்டு, விவாதங்களில் பங்குபெற்று நாடு முழுவதும் பிரிந்திருந்த சமயங்களை ஆறு மதங்களாக தொகுத்தவர் இவர். முதலில் சுருக்கமாக ஆதி சங்கரரின் வரலாற்றிக் காணலாம். []                                       கனகதாரா ஸ்தோத்திரம் பாடி பொன் மழை பொழிந்த வரலாறு இனி ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி சுருக்கமாக காணலாம். முன்னரே திருச்சூர் வடக்கு நாதர் ஆலயத்தை வலம் வரும் போது வடக்கு நாதரின் அருளால் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு குழந்தையாக ஆதி சங்கரர் வந்து அவதரித்தார் என்று பார்த்தோமல்லாவா? சங்கரரின் சிறு வயதிலேயே சிவகுரு இறைவனடி சேர்ந்தார். ஆர்யாம்பாள் அவருக்கு உபநயனம் செய்வித்து வேத அத்யயனமும் செய்து வைத்தார். ஒரு துவாதசி  நாள் அயாசகன் என்பவர் இல்லத்திற்கு  பிக்ஷைக்கு சென்ற போது அவ்வீட்டு எழைப் பெண்மணி தான் வைத்திருந்த ஒரு நெல்லிக் கனியை பிக்ஷையிட கனகதாரா ஸ்தோத்திரம் பாடி மஹாலக்ஷ்மி அவர் இல்லத்தில் பொன் மழை பொழிய வைத்தார்.    தனது அன்னைக்காக பூர்ணா நதியை தம் இல்லத்திற்கு அருகில் ஓடச்செய்த சங்கரரை முதலை பிடிக்க அதிலிருந்து தப்பிக்க தன் தாயின் அனுமதி பெற்று  சன்யாசம் மேற்கொண்டார்.  காலடியிலிருந்து புறப்பட்ட சங்கரர்  தமக்கான குருவை தேடியலைந்து நர்மதை    நதிக்கரையில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்களை பயின்றார். சனாதன தர்மம் தழைத்தோங்க இவர் மூன்று பணிகளை செய்தார் முதலாவது , பிரஸ்தான த்ரயம் என்றழைக்கப்படும் மூன்று அடிப்படை நூல்களான உபநிடதங்கள், பகவத் கீதை மற்றும் வியாசரின் பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதி அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம்  அதாவது  இரண்டற்றது என்ற தத்துவத்தை நிலை நாட்டினார். விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு விளக்கவுரை எழுதினார், சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், கனகதாரா ஸ்தோத்திரம், சுப்பிரமண்ய புஜங்கம்,  சித்தாந்த   சாங்கியம், விவேக சூடாமணி முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். இரண்டாவதாக தமது காலடி தோய பாரத தேசமெங்கும் மூன்று முறை சுற்றி வந்து மற்ற சமயத்தாரை  தம் வாதத் திறமையால் வென்று அவர்களை அத்வைதிகளாக மாற்றினார். பல ஆலயங்களை புனருத்தாரணம் செய்து அவற்றின் வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தார். பல் வேறு முறைகளாக இருந்த  வழிபாட்டு முறைகளை பகுத்து அறு சமயங்களாக தொகுத்துக் கொடுத்தார்.  ஆகவே ஷண்மத ஸ்தாபகர் என்ற சிறப்பையும் பெற்றார். தனது ஞான திருஷ்டியினால் தன்னிகரற்ற தர்ம நெறிமுறைக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து, பாரத பூமிக்கே உரிய வேத முறை பாதுகாக்கப்பட வேண்டும் என்று பாரத தேசத்தின்  நான்கு திசைகளிலும் புண்ணிய திருமடங்களை ஸ்தாபித்தருளினார். தனது சீடர்களை அதன் பீடாதிபதியாக்கினார்.    சங்கரர் நிறுவிய அத்வைத பீடங்கள் தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் காளிகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், பூரி. காஞ்சியில் சர்வக்ஞ பீடத்தை நிறுவினார்.  தமது 32ம்  வயதில் சனாதன தர்மத்திற்கு புத்துயிர் அளித்த பிறகு  கேதாரத்தில் இருந்து திருக்கயிலாயம் ஏகினார். இன்று  காலடியில்  ஆதிசங்கரருக்கான ஆலயம் ஒன்று பெரியாறு நதிக்கரையில் உள்ளது. சிருங்கேரி மடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு இரண்டு முக்கிய சன்னிதிகள் உள்ளன. ஒன்று ஆதிசங்கரருக்கானது மற்றொன்று சரஸ்வதியின் அம்சமான  சாரதாம்பாளுக்கானது. கேரளாவில் இருந்தாலும் இந்த ஆலயத்தில் பூஜை செய்பவர்கள் தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள்தான்.ஆதிசங்கரரின் அன்னை ஆர்யாம்பாளின் சமாதியும் இங்கு உள்ளது. ‘’நான் இறக்கும் தறுவாயில் நீ என்னிடத்துக்கு வரவேண்டும். வந்து எனக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும்’’ என்று சங்கரர் துறவறம் ஏற்றுக் கொள்ளும் போது வேண்டினார் அவரது  அன்னை. அவருக்கு அளித்த வாக்குறுதியைத் துறவியான போதிலும் நிறைவேற்றினார் ஆதிசங்கரர். அன்னை இறந்தபோது ஊர் மக்கள் அவருக்கு இறுதி மரியாதை செய்ய முட்டுக்கட்டை போட்டனர். ‘’துறவியாக இருக்கும் ஒருவர் தன் அம்மாவுக்கு இறுதிக் காரியம் செய்யத் தகுதியற்றவர்’’ என்றனர். அமைதியுடன் இதைக் கவனித்த ஆதிசங்கரர் அந்த வீட்டின் பின்புறம் தன் அன்னைக்கு சிதையை அடுக்கினார். அக்னி தேவதையை அழைத்தார். சிதை தீப்பற்றியது. மகனின் உதவியால் முக்தி நிலையை எய்துவது எவ்வளவு பெரிய பாக்கியம்! அது ஆர்யாம்பாளுக்குக் குறைவறக் கிடைத்தது.சிருங்கேரி பீடத்தின் 33-வது சங்கராச்சாரியர் ஸ்ரீநரசிம்ம பாரதி. ஆதிசங்கரரின் அவதாரத் தலமான காலடி தனித்துவமும் மகத்துவமும் பெற வேண்டும் என ஆர்வம் கொண்டார். அவரது ஆர்வத்தை மதித்த திருவாங்கூர் மகாராஜா ஸ்ரீரவிவர்மா, காலடியின் ஒரு பகுதியை சிருங்கேரி மடத்துக்கு ஒப்படைத்தார். அங்கு சாரதாம்பாள், ஆதிசங்கரர் இருவருக்குமான ஆலயங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் வேதாந்த வகுப்புகளும் வேத பாடசாலையும் அங்கு அமைந்தன. []                     ஆதிசங்கரர் வாழ்வில் பூர்ணா நதிக்கு (அதன் தற்போதைய பெயர்தான் பெரியாறு) தனி இடம் உண்டு. அந்த இரு சம்பவங்களிலுமே அவரது அன்னைக்கும் தொடர்பு உண்டு. ஆர்யாம்பாளுக்கு வயது முதிர்ந்து விட்டது. பூர்ணா நதியோ வீட்டிலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்தது. அன்னையின் வசதிக்காக வீட்டுக்கு அருகிலேயே நதி வரவேண்டும் என்று பாலகன் சங்கரன் ‘மனமுருகிக் கட்டளையிட அந்நதி ஒரு சிறு கிளையாகப் பிரிந்து அவர்கள் வீட்டுப் பக்கமாக வரத் தொடங்கியது.பூர்ணா நதியில் நாம் ஸ்நானம் செய்யும் போது ஏதோ ஒரு முதலை அருகில் இருப்பது போல ஒரு பிரமை. முதலையின் பிடியைப் போலவே தேகத்தினுடையதும் சொந்தங்களுடைய பிடியும் வலுவானதே. பூர்ணா நதியில் குளித்துக் கொண்டிருக்கையில் முதலை ஒன்று சங்கரனின் காலைப் பற்றிக் கொண்டது. அங்கிருந்தவர்கள் ‘’உன் மகன் சன்யாசம் மேற்கொள்ள நீ சம்மதித்தால்தான் முதலையின் பிடியிலிருந்து உன் மகனை தப்ப வைக்கலாம்’’ என்றனர். அதாவது இந்தப் பிறவியில் சங்கரனை தன் பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அந்த முதலையின் தலைவிதி. அப்போது தானே அவரது அவதார நோக்கம் நிறைவேறும். சன்னியாசம் என்பது மறுபிறவி. எனவே அந்த மறுபிறவியில், அந்த முதலைக்குப் பங்களிப்பு ஏதும் இல்லை. வேறு வழியின்றி சங்கரனின் தாய் இதற்கு உடன்பட, முதலை சங்கரனை விடுவித்தது. முதலக்கடவு என்ற பெயரில் அந்தப் பகுதி இப்போதும் அழைக்கப்படுகிறது. ஆதி சங்கரரின்  வாழ்க்கையில் இவை முக்கியமான நிகழ்வுகள். அதே நதிக்கரையில் அவருக்கான ஆலயமும் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. []                     சங்கரர் துறவறம் ஏற்கும் காட்சி அழகான கேரள கிராமச்சூழலில் இரு புறமும் பச்சைப் பசேலென்ற பாசி படர்ந்த சுற்றுச்சுவர்களையும், பெரிய  நுழை வாயில்களையும், நான்கைந்து பலா மரங்களையும் கொண்ட வீடுகள், அங்கங்கே தென்னை மரங்கள் என விளங்கும்  கேரள கிராமத்தில்  பெரியாற்றின் கரையில்ம் அமைந்திருக்கிறது ஆதி சங்கரர் ஆலயம். ஆதிசங்கரர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு நடுகல்லும் அதற்கருகிலேயே ஆதிசங்கரரின் அன்னையும் சமாதியும் இருக்கிறது. அதைச் சுற்றிலும் சிருங்கேரி மடத்தால் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஆதிசங்கரர், சாரதா தேவி இருவருமே பெரியாற்றைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். ஸ்ரீசாரதாம்பாள் ஆலயத்தை அணுகுகிறோம். முன்வாசல் வடக்குப்புறம். நுழைவாயிலின் இரு புறமும்  ஆதி சங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடிய பின் மஹாலக்ஷ்மி தங்க மழை பொழியும்  சரிதமும்,  சங்கரரை முதலை பற்றிக் கொள்ள அவர் தான் சந்நியாசம் ஏற்றுக் கொள்ள தன் அன்னையிடம் வேண்டும் சரிதமும் அழகிய கேரள   உணர்த்தும் அருமையான கேரள பாணி ஓவியங்கள் நம்மை வரவேற்கின்றன. ஒரு புறம்  சாரதாம்பாளின் திருச்சன்னதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. தக்ஷிணாமூர்த்தி ரூபிணியாக இங்கு சாரதாதேவி குடியிருக்கிறாள். விமான மண்டபத்தின் வெளிச் சுவரில் பல தேவி அம்சங்கள் பிராஹ்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டா  என்ற சப்த மாதர்கள்  அருட் காட்சியளிக்கின்றனர். அடுத்து உள்ளது ஆதிசங்கரரின் திருச்சன்னதி மண்டபம். தென்திசை நோக்கி ஞானமுத்திரையுடன் காட்சி தருகிறார் ஆதிசங்கரர். பெரிய விக்ரகம். அருகில் சிறிய உற்சவமூர்த்தி. பாரத தேசமெங்கும் மூன்று முறை சுற்றி வந்த திருப்பாதுகைகள். பட்டர் இருந்தார் ஆரத்தி காட்டினார். ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்   என்று ஆச்சார்யரை வணங்கினோம்.  முன் மண்டபத்தில் ஆதி சங்கரரின் வாழக்கை நிகழ்ச்சிகளை விளக்கும் சுதை சிற்பங்கள். அம்மண்டபத்தில் அமர்ந்து தோடகாஷ்டகம் பாராயணம் செய்தோம். அந்த மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போது குளிர்ந்த காற்று ஆற்றிலிருந்து கிளம்பி நம்மைத் தொட்டுச் செல்கிறது. நீண்ட நேரம் கண்மூடி அமர்ந்து தியானம் செய்ய ஏற்ற இடம்.   மேற்கில்  சிறிது தூரத்தில் சங்கரரின் குலதெய்வமான  ஸ்ரீகிருஷ்ணன் கோயில் உள்ளது. தங்க மழை பொழிந்த தலம் இது. காலடியில் உள்ள கிருஷ்ணர், காலடியப்பன் என்று அழைக்கப்படுகிறார். கருவறையில் உள்ள கண்ணன், ஒரு கையில் வெண்ணெய் ஏந்தியும், மறு கையை இடுப்பில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார். ஆலய கருவறையை 'கிருஷ்ண அம்பலம்' என்று அழைக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே வலதுபுறம் சிவன் சன்னிதியும், இடதுபுறம் சாரதாம்பிகை சன்னிதியும், சக்தி விநாயகர் சன்னிதியும் அமைந்துள்ளன. தல விருட்சம் பவளமல்லி.   ஆதி சங்கரர் சன்னதிக்கு அருகில் அணையா தீபம் ஓளிர்கின்றது.  வளாகத்தில் ஐயப்பனும், நமஸ்கார மண்டபத்தில் பரசுராமரும் அருள் பாலிக்கின்றனர். ஆலய முகப்பில் ஆதி சங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி காலடியப்பன் அருளால் பொன் மழை பொழிய வைக்கும் சுதை சிற்பம் மற்றும் ஆதி சங்கரரின் சுதை சிற்பம் அலங்கரிக்கின்றது.   இக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு ஆண்டுதோறும் கனகதாரா யாகம் நடக்கிறது. அப்போது பக்தர்கள் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி காலடியப்பன், ஆதி சங்கரரை வழிபடுகின்றனர். []   கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஆதி சங்கரர் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தது ஓர் அட்சய திரிதியை நாளில் நடந்ததாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் அட்சயதிரிதியை நாளன்று காலடியில் உள்ள திருக்காலடியப்பன் கோயிலில் மகாலட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம் செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சுவாமிக்கு வெண்ணெய் சார்த்துகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் குழந்தையுடன்  வந்து தொட்டில் கட்டுகின்றனர். அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது ஆதிசங்கரர் கீர்த்தி மண்டபம். இது ஒரு சிற்பக்கூடம். எட்டு அடுக்கு  கொண்டது இம்மண்டபம். சுமார் 150 அடி உயரத்தில் காட்சியளிக்கும் மண்டபம். மகாபெரியவர் என அறியப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் விருப்பதின் பேரில் உருவான நினைவுத் தூண் இது. இதன் நுழைவுப் பகுதியில் இரண்டு யானை உருவங்கள் உள்ளன. ஆதிசங்கரர் பாதுகைகளின் பிரதிபலிப்பாக இரு வெள்ளிக் குமிழ்கள் இங்கு உள்ளன. படிகளில் ஏறிச்செல்லும்போது ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாக விரிகிறது. ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கான மிக எளிமையான, அழகான வழியாக இந்த மண்டபம் திகழ்கின்றது. உச்சியில் எட்டாவது தளத்தில் ஆதிசங்கரர் சிலையைப் பார்ப்பது மிக ரம்மியமான, தெய்விகமான அனுபவமாக இருந்தது. சிலையைச் சுற்றியிருக்கும் ஜன்னல் வழியே மொத்த காலடியும் தென்னை மரங்களால் நாற்புறமும் சூழப்பட்டிருந்தது மிக அழகாகத் தெரிந்தது. இது வரை இந்த யாத்திரையின் போது இரு நாட்களில் அடியோங்கள் தரிசித்த நாலம்பங்கள் மற்றும் திருச்சூருக்கு அருகில் அமைந்துள்ள ஆலயங்களை பற்றிக் கண்டோம். இனி முத்தாய்ப்பாக அடியோங்கள் அனுபவித்த இரு பகவதி ஆலயங்களின் பூரம் உற்சவங்களை பற்றிக் காண்போம் அன்பர்களே.                                     அத்தியாயம் -12 12.பொக்குளங்கரை பகவதி பூரம் []   எந்த விழாவை தரிசிப்பதற்காக இந்த யாத்திரையை மேற்கொண்டோமோ அதற்கான நாளும் மகிழ்ச்சியாக விடிந்தது. கேரளத்தின் பூரம் திருவிழாவை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் நிறைவேறப்போகிறது என்று ஆனந்தமாக கிளம்பினோம். அன்றைய தினம் அடியோங்கள் தங்கிய இல்லத்தில் உள்ள பெரியவருக்கு பிறந்த நாள் என்பதால் அந்த கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டது. அவரது  பிறந்த நாளை கொண்டாட மதிய விருந்தளித்தனர். உண்ட மயக்கம் இருந்தாலும் பூரவிழாவை தரிசிக்க ஆலயம் வந்து சேர்ந்தோம்.   கூடுதலாக பல ஆலயங்களை தரிசிக்கும் பாக்கியமும் கிட்டியது. []                   அலங்கரிக்கபட்ட கம்பீர யானையில் பகவதி இயற்கை எழில் கொஞ்சும் கேரளத்தின் திருச்சூர் மாவடத்தில் எண்கண்டியூர் என்ற ஊரின் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் பொக்குளங்கரை. அக்கிராமம் திருச்சூரில் இருந்து வாடனப்பள்ளி வழியாக சுமார் 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அக்கிராமத்தில் அமைந்துள்ள பகவதி ஆலயத்தின் பூரம் நிகழ்ச்சியைத்தான் தரிசிக்க  வந்தோம். இவ்வாலயம் தேசிய நெடுஞ்சாலை 66 ல் அமைந்துள்ளது , ஆலயத்தின் வலது புறமும் ஒரு பாதை செல்கின்றது. []   யானைகளில் தெய்வங்கள் கேரளத்தின் ஆலயங்களின் பிரம்மோற்சவத்தின் ஒரு நாள் விழாதான் பூரம் திருவிழா, மொத்தம் பத்து நாட்கள் பொதுவாக திருவிழா நடைபெறுகின்றது. முதல் நாள் கொடியேற்றம், பத்து நாட்களும் தாந்திரீக முறையில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. ஒன்பதாம் நாள் பூரம் திருவிழா, அலங்கரிக்கப்பட்ட  யானைகளின் அணிவகுப்பு, பஞ்ச வாத்தியம், குடை மாற்றம்  காவடிகள், வாண வேடிக்கை என்று மிக  சிறப்பாக நடைபெறுகிறது.  திருச்சூரில் சித்திரை மாதம் இவ்விழா சிறப்பாக நடைபெறுவதால் அனைத்து ஆலயங்களில் இவ்விழா பூரம் திருவிழா என்றே அழைக்கப்படுகின்றது. பத்தாம் நாள் காலை ஆறாட்டு எனப்படும் தீர்த்தவாரி மற்றும் கொடியிறக்கம் என்று திருவிழாக்கள் அல்லோலகல்லோலப்படுகிறது.  பொக்குளங்கரை பகவதியின் பூரம் மலையாள கும்ப மாதம் ( மாசி)  ரோகிணியன்று நடைபெறுகின்றது. பூரத்தன்று அருகில் உள்ள ஆலயங்களில் உள்ள தெய்வங்கள் அவ்வாலயத்திற்கு வந்து தெய்வத்தை வணங்கி செல்வதாக ஐதீகம். பொக்குளங்கரை பகவதி ஆலயம் முக்கிய சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. சதுர வடிவ சிறிய ஸ்ரீகோவில், பிரமிட் விமானம், முன்னர் ஒரு மண்டபம் என்று ஆலயம் சிறிதாகத்தான் அமைந்துள்ளது. சுற்றிலும் பிரம்மாண்டமான மைதானம், மைதானத்தில் பெரிய ஆலமரங்கள் உள்ளன.  கஅருகிலேயே திருக்குளமும் உள்ளது அதில் தாமரை மலர்ஆலயமும் மரங்களும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அருமையாக அலங்கரிக்கப்படிருந்தன.  பூரத்தன்று ஆலயத்தை சுற்றிலும் பல கடைகள் முளைத்திருந்தன. இனிப்பு பண்டங்கள், பொரி கடலை, சுண்டல்கள் விற்கும் கடைகள், பலூன் விற்பவர்கள் என்று ஒரு விழாவிற்கான அனைத்து அம்சங்களையும் காண முடிந்தது. []   மக்கள் கூட்டம் மெல்ல மெல்ல வர ஆரம்பித்திருந்தது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் தங்கள் கோப்பைகளை உலகத்தினர்களுக்கு காண்பிப்பது போல   புதிதாக கல்யாணமான பல பெண்கள் தங்கள் கணவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு நாணத்துடன் வந்த காட்சி இவரை நான் வாழக்கை முழுவதற்கும் சிறைப் பிடித்து விட்டேன் என்று உலகிற்கு காண்பிக்கும் விதமாக உலா வந்து கொண்டிருந்தனர். சிறு குழந்தைகள் பலூனுக்கும், ஐஸ் கிரீமிற்கும் அடம் பிடிக்க பெற்றோர் அவர்களை சமாதானம் செய்யும் காட்சிகளையும் காண முடிந்தது. எங்கும் ஒரே ஆரவாரம் ஒரே மகிழ்ச்சி.  ஆலயம் சாலையை அடுத்தே அமைந்திருந்தும் கூட போக்குவரத்தை நிறுத்தவில்லை. ஒரு பக்கம் வாகனங்கள் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருந்ததை பார்த்து ஆச்சரியமாக இருந்தது.   ஆலயத்திற்கான ஐந்து அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகள் மைதானத்தின் நடுவே நின்றிருந்தன. மைதானத்தில் ஒரு கட்டிடம் இருந்தது அதன் கூரையில் சென்று அமர்ந்து கொண்டோம். அடியோனுடைய நண்பர் சுந்தர் அவர்கள் புகைப்படம் எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார். மெல்ல மெல்ல மற்ற யானைகள் வர ஆரம்பித்தன, வந்த யானைகள் நின்றிருந்த யானைகளின் இரு புறமும்  சென்று ஒரே வரிசையில் நின்று கொண்டன. இப்பூர விழாவில்   15 யானைகள் கலந்து கொண்டன.    அருகில் இருந்த உயர்ந்த கட்டிடங்களின் கூரையிலும், ஏன் மரக்கிளைகளிலும் கூட மனிதத் தலைகள்.  உயரத்தில் இருந்து பார்க்கும் போது இவ்வளவு கூட்டத்தையும் முழுதாக பறவைப் பார்வையில் காண முடியுமல்லவா? []   யானைகள் அனைத்தும் அணிவகுத்து நின்ற பின்னர் பஞ்ச வாத்தியத்தை  மெல்ல  இசைக்க தொடங்கினர்.  வாத்திய கலைஞர்களை சுற்றி நின்று பலர் அவர்களை ஊக்குவித்துக் கொண்டிருந்தனர். சிலர் கையில் இருந்த துண்டினை தாளத்திற்கேற்ப   மேலே  வீசி  வீசி அவர்களுக்கு  ஊக்கமளித்தனர், சிலர் பலூன்களை வீசிக் கொண்டு பஞ்ச வாத்திய   வாசிப்பை வெகுவாக ரசித்தனர். சிலர் கையால் தாளமிட்டு அவர்களை ஊக்குவித்தனர். சமயம் செல்ல செல்ல வாசிப்பின் வேகமும் முறையும் மாறிக்கொண்டே சென்றது. நடு நடுவே எக்காளங்கள் மற்றும் கொம்புகள் ஊதப்பட்டன,  மகுடி கேட்ட நாகம் போல பக்தர்கள் அனைவரும் கட்டுண்டு நின்றனர்.  பலர் இசைக்கேற்ப நடனம்  ஆடத்தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாசித்தனர் இவ்வளவு சத்தத்திலும் யானைகள் மிரளாமல் அப்படியே நின்றன. அந்தி சாயும் நேரத்தில் முத்துக் குடைகள் மாற்றப்பட்டன, சாமரங்களை ஒருவர் வீச, மயிற்பிலீ விசிறிகளை ஒருவர் அசைக்க வண்ண வண்ண குடைகளை  அழகாக சுற்றினர், அந்தி வெயிலில் குடைகளில் இருந்த தங்க தொங்கட்டான்கள் மின்னியது அற்புதமாக இருந்தது. மெல்ல மெல்ல இருள் கவ்வியது பஞ்ச மேளமும் நின்றது. ஒவ்வொன்றாக வெளியிலிருந்து வந்த யானைகள் தத்தம் இருப்பிடம் திரும்பின ஆலயத்தின் ஐந்து யானைகள் ஸ்ரீகோவிலை சுற்றி வந்து வணங்கிச் சென்றன. முடிந்தது என்று நினைத்து இல்லம் திரும்பலாம் என்று நினைத்த போது பூரம் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பான நிகழ்ச்சி துவங்கியது. ஆம் வாண வேடிக்கைகள் ஆரம்பமாயின, கேரளம் வாண வேடிக்கைக்கு பெயர் பெற்றதல்லாவா?  முதலில் அதிர் வேட்டுகள் அவை டமால், டமால் என்று வெடித்து  காதுகளை நிறைத்தன. கேரளத்தில் வெடி வழிபாடு சிறப்பு. நமது தமிழ்நாட்டிலும்  சுவாமி புறப்பாடு நடைபெறும் போது அதிர் வேட்டு போடும் வழக்கம் உண்டல்லவா? அது உங்களுக்கு நயன தீட்சை அருள எம்பெருமான் திருக்கோவிலிருந்து வெளிப் போந்து விட்டார் அனைவரும் வந்து அவரை வழிபட்டு அருள் பெறுங்கள் என்று அறிவிக்கும் ஒரு வழி அது. எம்பெருமான் எவ்விடத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கிறார் என்பதை உணர்த்தும் ஒரு சமிக்ஞையும் அதுவாகும். அங்கு விரைவில்  சென்று அவரை தரிசிக்க அது உதவுகிறது. அடுத்த இருண்ட வானத்தை பகலாக்கும் பல் வேறு விதமான வாண வேடிக்கை துவங்கியது. நிலத்திலிருந்து சீறிக்கொண்டு பாய்ந்த வாணங்கள் மேலே சென்று வெடித்து பல வர்ண பூக்களாக விரிந்து கண்களுக்கு விருந்தளித்தன. பச்சை, மஞ்சள், சிவப்பு என்று பல வண்ணங்களில் பூக்கள் வானத்தில் காட்சியளித்து மறைந்தது அருமையான ஒரு ஒலி-ஒளிக் காட்சியை கண்டு களித்தோம்.  இன்று வீடுகள் பெருகி விட்டதால் தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதால் திருவிழாக்களில் வாண வேடிக்கைகள்  மிகவும் குறைந்து விட்டன. []   மின்னொளியில் ஆலயம் மிளிரும் அழகு  சிறு வயதில் உடுமலைப்பேட்டையில் மாரியம்மன் தேர்த்திருவிழாவின் நிறைநாள் குட்டை மைதானத்தில் கண்டு களித்த வாண வேடிக்கைகளை இன்றைய தினம் நினைவு கூர்ந்து கொண்டேன். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு அற்புதமான வாணவேடிக்கையை நேரில் கண்டு களிக்கும் பாக்கியம் கிட்டியது. சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற அவ்வாண வேடிக்கையை கண்டு களித்தது ஒரு மறக்க முடியாத அற்புத அனுபவமாக அமைந்தது. இவ்வாறு  பொக்குளங்கர பகவதியின் பூர உற்சவம் சிறப்பாக நிறைவு பெற்றது. அடுத்து இன்னும் சிறப்பாக நடைபெறவுள்ள ஆயிரங்கண்ணி அம்மனின் பூரத்திருவிழாவை காண்போம் அன்பர்களே.             அத்தியாயம் -13 13.ஆயிரங்கண்ணி பூரம் []   []   முப்பது யானைகளுடன் ஆயிரங்கண்ணி பகவதியின் பூரத்திருவிழா இன்னும் சிறப்பாக நடைபெறும் என்று கூறியிருந்தனர் ஆகவே அதற்காக அதிகாலையிலேயே எழுந்து தயார் ஆனோம். கேரளத்திற்கு வந்து விட்டு கடற்கரைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி என்று அருகில் உள்ள கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர். அரபிக்கடலோரம் சென்று  சற்று காற்று வாங்கி வந்தோம்.  அக்காலத்தில் கேரள இல்லங்கள் அனைத்தும் நிறைய மரங்களுடன், காவு எனப்படும் வீட்டின் வழிபாடு இடத்துடன் இருந்தன, தற்போது புதிதாக கட்டப்படும் வீடுகளில்  இவை இடம் பெறுவதில்லை. அடியோங்கள் தங்கிய வீட்டினரின்  ஒரு பழைய காவுடன் கூடிய  பாரம்பரிய இல்லம் சென்று பார்த்துவிட்டு வந்தோம். வரும் வழியெங்கும் பூரத்திற்கு வரும் பக்தர்களை வரவேற்க வாழை, கமுகு, தென்னங்குலைகள் கட்டிய வரவேற்பு வளையங்கள் பல அமைத்திருப்பதைப் பார்த்தோம். ஓரிடத்தில் பூரத்தில் பங்கு பெறும் ஒரு யானையின் நிஜ உயர பொம்மை ஒன்றை அமைத்திருந்தனர். ஓரிடத்தின் கேரளத்தின் சினிமா நடிகரின் உருவ பொம்மை ஒன்றை அமைத்திருந்தனர். காலை முதலே ஆயிரங்கண்ணி அம்மனை தரிசிக்க சாரி சாரியாக பக்தர்கள் வேட்டி துண்டு அணிந்து கொண்டு சென்று கொண்டிருந்தனர். []                             ஆயிரங்கண்ணி பகவதி ஆயிரங்கண்ணுடையாள் என்று மாரியம்மனை நாம் தமிழகத்தில் அழைப்பது போல இவ்வாலயத்தில் பகவதியை ஆயிரங்கண்ணி என்று அழைத்து வழிபடுகின்றனர்.  எண்கண்டியூர் என்ற ஊரில் கிழக்கு திப்பு சுல்தான் சாலைக்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. பொக்குளங்கரை பகவதி ஆலயம் போலவே சதுர ஸ்ரீகோவில், பிரமிட் கூரை நாலம்பலத்துடன் அமைந்துள்ளது. நாலம்பலத்தின் சுவற்றில் தெய்வ திருவுருவங்கள் பித்தளை கவசத்தில் மிளிர்கின்றன.   கோவிலை சுற்றிலும் பெரிய மைதானம். நெடிதுயர்ந்த கொடி மரம் தங்க கவசம் பூண்டுள்ளது ஆலயத்தின் உள்ள ஆயிரங்கண்ணியின் மேல் வைத்துள்ள   பக்தியை  பறைசாற்றுகிறது.  கொடிமரத்திற்கு முன்னே உள்ள கல் விளக்கிற்கு கூரை அமைத்துள்ளனர். ஆலயத்திற்கு அருகில் அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது.  இடப்புறம் நாராயண குரு அவர்களின் சிலை அமைந்துள்ளது, ஆனால் அவரை கூண்டு அமைத்து சிறைப் படுத்தியுள்ளனர். மைதானத்தில் பல பிரம்மாண்ட மரங்கள் உள்ளன. அவற்றிலும் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. மின் விளக்கு அலங்காரம் செய்திருந்தனர். பகவதி இவ்வாலயத்தில் மாரியம்மன் போல் ஜடாமகுடத்துடன் அருள் பாலிக்கின்றாள். []   மலையாள கும்ப மாதம்(மாசி) மிருகசீரிட நட்சத்திரத்தன்று நடைபெறுகின்ற பூரத்திருவிழாவில் யானைகளின் அணிவகுப்பு மற்றும் குடை மாற்றுதல் மற்றும் பஞ்ச வாத்திய மேளம் சிறப்பு. அவற்றைப் பற்றி சிறிது காணலாம்.  கேரள ஆலய வழிபாட்டில் யானை வெகுவாக பயன் படுத்தப்படுகின்றது. யானை, மலை மற்றும் கடல் எத்தனை முறை பார்த்தாலும் இன்பமளிக்ககூடியது என்று கூறுவர். குறிப்பாக குழந்தைகள் யானைகளை மிகவும் விரும்புவர்.  யானை என்றவுடன் அடியேனுக்கு பள்ளிக் காலத்தில் படித்த இப்பாடல் நினைவிற்கு வருகிறது, இப்பாடல்  அந்தகக்கவி வீரராகவ முதலியார் பாடியது,  இம்பர்வான் எல்லை இராமனையே பாடி  என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி வம்பதாம் களபம் (சந்தனம்) என்றேன் பூசும் என்றாள் மாதங்கம் (பொன்) என்றேன் யாம் வாழ்ந்தோம் என்றாள் பம்புசீர் வேழம் (கரும்பு) என்றேன்  தின்னும் என்றாள் பகடென்றேன் (மாடு) உழும் என்றாள் பழனம் தன்னை கம்பமா (கம்பு மாவு) என்றேன் நற்களியாம் என்றாள் கைம்மா(கையை உடைய விலங்கு - யானை) என்றேன்  சும்மா கலங்கினாளே .   இப்பாடலிலிருந்து பெருஞ்செல்வர்களும், அரசர்களும் மட்டுமே யானைகளை வைத்து பரிமாரிக்க முடியும் என்பதை அறியலாம். அக்காலத்தில் அரசர்கள் நால் வகைப் படைகளில் யானைப்படையையும் வைத்து பரிமாரித்து வநதனர். சுமார் 300 ஆண்டுகளாக யானைகள் ஆலயங்களின் உற்சவங்களில் பங்களித்துள்ளன என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  பல ஆலயங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட யானைகளை சொந்தமாக கொண்டுள்ளன. குருவாயூர், சோட்டானிக்கரை, எரிமேலி சாஸ்தா ஆலயங்களில் தினமும் சீவேலி கூட யானையில் மேல் உற்சவர் வலம் வந்தே நடைபெறுவதை அடியேன் தரிசித்துள்ளேன். குருவாயூரில் அவ்வாலயத்திற்கு சொந்தமாக சுமார் 200  யானைகள் உள்ளன. இவ்வாலயத்தில் நடைபெறும் யானையோட்டமும் மிகவும் பிரசித்தம். பூரத்தன்று தங்க முகப்படாம் அணிந்த யானைகளின் அணிவகுப்பு நடைபெறுகின்றன. மிகவும் உயரமான யானைகளுக்கென்று பல இரசிகர்கள் உள்ளனர். பிரசித்த பெற்ற யானைகளைப் பற்றி பள்ளியில் போதிக்கின்றனர். திருவம்பாடி சந்திரசேகரன், தெச்சிக்கோட்டுக்காவு ராமசந்திரன், செருபுல்லச்சேரி பார்த்தன், சுள்ளிபரம்பில் விஷ்ணுசங்கர், புதுப்பள்ளி  கேசவன் ஆகிய யானைகள் சில பிரசித்தமான யானைகள். பூரம் விழாவிற்கு விளம்பரம் செய்யும் போது பங்கெடுத்துக்கொள்ளும் யானைகளின் பெயர்களுடன் விளம்பரம் செய்கின்றனர். அணிவகுப்பில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு தங்க முகப்படாம் அணிவிப்பதுடன்  கழுத்தில் மலர் மாலை, மணி மாலை கால்களிலும் சலங்கை, மற்றும் மலர் சரங்களை கொண்டும் அலங்கரிக்கின்றர். பிரசத்திபெற்ற யானைகள் அதன் பெயரைத் தாங்கி வலம் வருகின்றன. அடுத்து செண்டை பஞ்ச வாத்தியத்தைப் பற்றி ஒரு  சிறு குறிப்பு.    செண்டை  என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தாள இசைக்கருவியாகும். இக்கருவி பரவலாகக் கேரளம். கர்நாடக  மாநிலத்தின் துளு நாடு பகுதி மற்றும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. துளு நாட்டில் இது செண்டே என்று அழைக்கப்படுகிறது.  []   பஞ்ச வாத்திய இசைக் கலைஞர்கள் செண்டை மேளம் பண்டைய தமிழ் இசை தோற்கருவி    கொடுகொட்டி  என்பதன் பரிணாம வளர்ச்சியே ஆகும். செண்டை 18ம் நூற்றாண்டில் முழுமையான தற்கால வடிவம் பெற்றது. செண்டை நீண்ட உருளை வடிவத்திலுள்ள மரக்கருவியாகும். இது இரண்டு அடி நீளமும் ஓரடி விட்டமும் கொண்டது. இதன் இரண்டு முனைகளும் செண்டை வட்டங்களால் மூடப்பட்டிருக்கின்றன. பொதுவாக இது பசு மாட்டின் தோலால் உண்டாக்கப்படுகிறது. காளை மாட்டின் தோல் இதற்கு பயன்படுத்தப்படுவதில்லை. தரம் மிக்க ஒலிக்காக பசு மாட்டின் அடி வயிற்று தோல் பயன்படுத்தப்படுகிறது. செங்குத்தாக வைப்பதற்காக வாசிப்பவர்களின் தோளிலிருந்து தொங்கவிடப்படுகிறது. செண்டையின் மேல் பகுதியில் மட்டும் கோல் கொட்டப்படுகிறது. செண்டை மேளம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. செண்டை மேளத்தில் செண்டை, இலைத்தாளம், குழல் மற்றும் கொம்பு உட்பட நான்கு வாத்தியங்கள் உள்ளன. செண்டை மேளத்தில் உள்ள மேள வகைகள்: 1. பஞ்சாரி மேளம் 2. பாண்டி மேளம் 3. சம்ப மேளம் 4. செம்பட மேளம் 5. அடந்த மேளம் 6. அஞ்சடத மேளம் 7. த்ருவ மேளம் மேல்கண்டவற்றில் முதல் ஆறு மேளங்கள் "செம்பட" மேளத்தினுள்ளிலும் வருகின்றன.  இவைகளை தவிர கேரளத்தில் மேலும்  3 மேளங்கள் உள்ளன கல்பம், ஏகதசம் மற்றும் நவம். சிங்காரி மேளம் மேளக்கலைகளில் சேர்க்கப்படுவதில்லை. செண்டையும், இலைத்தாளமும்   தனியாக அரங்கேற்றியால் அதற்கு பெயர்  தாயம்பகை. அடியேன் சென்னையில் உள்ள ஒரு ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூசையின் போது தாயம்பக வாசிப்பை இரசித்துள்ளேன். பஞ்ச வாத்தியத்தின் தாளக் கட்டுகள் பிரமிட் அமைப்பில் வேகம் கூடிக்கொண்டே செல்லும் வகையில் அமைந்துள்ளது. இரண்டு மணி நேரம் வரை நீளுகின்றது. செண்டை ஒலியின் அதிர்வு அருகில் இருப்போருக்கு ஒரு அதிர்வை தானாகவே உருவாக்கி விடும். அந்த இடமே   அதன்  ஒலியால் ‘திடும் திடும்’ என அதிரும்.    முன்னதாகவே சென்று ஒரு கட்டிடத்தின் மேல் அமர்ந்து கொண்டோம்.  முழுதும் அலங்கரிக்கப்பட்ட பிரதான யானை வந்தவுடன் அதன் மேல் ஆயிரங்கண்ணி அம்மனின் திருவுருவத்தை (திடும்பு) ஏற்றும் போது  அம்பிலி உற்சவ கமிட்டியினர் ஒரே நிற மேற்சட்டையுடன் நின்று அம்மனை வரவேற்றனர். மலர் தூவி வழிபட்டனர். அதிர் வேட்டுகள் அதிர்ந்தன. செண்டை மேளம்  மங்கள இசை இசைத்தனர். பின்னர் கோவிலை சுற்றி வந்து மையத்தில் தனக்கான இடத்தில் நின்றது. பின்னர் ஒவ்வொன்றாக மற்ற யானைகள் வந்து சேர்ந்து கொண்டன. ஒவ்வொரு யானையின் முகப்படாமும் வேறு வேறாக இருந்தது. மைதானத்தில் முப்பது யானைகளும் ஒரே வரிசையாக  நிற்க முடியாது என்பதால் ’’ப” வடிவத்தில் நிறுத்தியிருந்தனர். இரு பக்கமும் ஐந்து , ஐந்து யானைகளையும், கோவிலைப் பார்த்தவாறு இருபது யானைகளையும் நிறுத்தியிருந்தனர். யானைகள் அணிவகுத்தபின் செண்டை மேளக் கச்சேரி துவங்கியது.  பக்தர் கூட்டம் முந்தைய நாளை விட அதிகமாகவே இருந்தது. செண்டை மேளக் கச்சேரியையும் இரசித்தோம், அதை இரசிக்கும் அன்பர்களின் சேஷ்டைகளையும் இரசித்தோம். அதுவும் ஒரே விதமான பலூனை கையில் உயர்த்திப் பிடித்துக்கொண்டு இசைக்கேற்றவாறு நூற்றுக்கணக்கானோர் ஆட்டி இரசித்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.   []   30 யானைகள் ப வடிவில் அணிவகுத்து நிற்கும் அழகு []   இவ்வாலய பூரத்தின் சிறப்பு என்னவென்றால் யானை அணிவகுப்பு முடிந்த பின்னர் தொடங்கிய கலை நிகழ்ச்சிகள்தாம். இரவு சுமார் எழு மணிக்கு துவங்கிய கலை நிகழ்ச்சிகள் மறு நாள் மதியம் ஆறாட்டு முடியும் வரை நீடித்தது. ஒவ்வொரு கலைக் குழுவினருக்கும் அரை மணி நேரம் ஒதுக்கியிருந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு மைதானத்திலிருந்து புறப்பட்டு வந்து ஆலயத்தின் மைதானத்தில் அம்மனுக்கு முன்னர் தங்களுடைய ஆட்டங்களை காண்பித்து விட்டு பின்னர் திரும்பி சென்றனர். பிரம்மாண்டமான சுவாமி உருவத்தினர் இந்த கலை நிகழ்ச்சியை துவக்கினர், கணேசர், சிவன், பகவதி, நரசிம்மர், இராமர் போன்று பல் தெய்வ உருவத்தினர் வந்து சென்றனர். அடித்து பிரம்மாண்டமான கரகங்களை சுமந்த குழுவினர் வந்து ஆடி விட்டு சென்றனர், தெய்யம் அணியினர் வந்து தங்கள் திறமையினை காட்டி விட்டு சென்றனர். கேரளத்தில் தான் எத்தனை வித கலை வடிவங்கள் உள்ளன என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. நாதஸ்வரம், மேளத்துடன் நமது காவடி ஆட்டக்குழு ஒன்றும் இதில் கலந்து கொண்டனர்.  கலை நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் இருந்ததால் வாண வேடிக்கை இருக்கவில்லை. இவ்வாறு ஆயிரங்கண்ணியின் பூரத்தையும் கண்டு களித்தோம். []     []   கேரளம் தனது கழி முகத்திற்கு( Back Water) பெயர் பெற்றதல்லவா? இப்பயணத்தின் போது கழிமுகத்தில் படகு பயணம் செய்யும் வாய்ப்பும் கிட்டியது. பொக்குளங்கரைக்கு அருகில் கழி முகத்தில் இராஜா தீவு என்னும் ஒரு சிறு தீவு உள்ளது அதையொட்டி ஒரு பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது. நாலம்பல யாத்திரையின் நிறை நாள் காலை படகில் பயணம் செய்து அத்தீவு வரை சென்று விட்டு வந்தோம். தீவு முழுவதும் தில்லை(Mangrove) மரங்களால் நிறைந்திருந்ததால் அங்கு இறங்க முடியவில்லை. படகில் இருந்தே சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். இவ்வாறு இந்த யாத்திரை மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றது. []   அடியேனது நண்பர் திரு.சுந்தர், இப்புத்தகத்தில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் அவர் கை வண்ணம், அவரது நண்பர் திரு. பரசுராமன் மற்றும் அவரது மனைவி திருமதி. வத்சலா அவர்களுக்கு அனந்த கோடி நன்றி. திருமதி. வத்சலா அவர்களின் சொந்த ஊர்தான் பொக்குளங்கரை, அவர்களின் தாய் வீட்டில்தான் சென்று தங்கி இந்த யாத்திரையை மேற்கொண்டோம். அருமையான விருந்தோம்பலுடன் எங்களை கௌரவித்தனர். .  கேரளத்தைப் பற்றியும், அதன் பாரம்பரியத்தையும் பற்றியும் பல தகவல்களை இந்த யாத்திரையின் போது அறிந்து கொண்டோம்.    அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த நன்றியுடன் இப்புத்தகத்தை நிறைவு செய்கின்றேன் .                                     FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G +: https://plus.google.com/communities/108817760492177970948  நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.    தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.    எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?  நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - email : reetamilebooksteam@gmail.com   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948         இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?  குழு – https://freetamilebooks.com/meet-the-team/  Supported by  - Free Software Foundation TamilNadu, www.fsftn.org   - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/