[] 1. Cover 2. Table of contents நாயன்மார்கள் நாயன்மார்கள்   ஷக்திப்ரபா   prabha2talk2@yahoo.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/nayanmargal மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc முன்னுரை ஈசனின் அன்புக்கு பாத்திரமான அறுபத்தி மூவரைப் பற்றிய சிறு-குறிப்புகள் தாங்கிய மின்நூல். நாயன்மார்களின் சரிதத்தை மிகச் சுருக்கமாக விவரிக்கும் எளிய முயற்சியிது. அன்னார் கடைபிடித்த சிவத்தொண்டு, அவர்களது வாழ்வின் முக்கிய சில நிகழ்வுகளை மட்டும் குறிப்பிட்டு, அறுபத்திமூவரின் சரித்திரத்திற்குப் பிறகு பெரியபுராணம் உருவாகக் காரணமான செக்கிழாரைப் பற்றியும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி பற்றியும் குறிப்பிட்டு முற்று பெறுகிறது. இந்த மின் நூல் பெரும் பண்டிதர்களுக்கானதல்ல. சிறுவர்களுக்கும், இளம் தலைமுறையினருக்கும், நமது மண்ணில் வாழ்ந்த ஞானிகளின் வரலாற்றையும், பக்த சிரோன்மணிகளின் கதைகளையும் அறிந்து கொண்டால் நூலைப் பதிவேற்றிய நோக்கம் முற்றுப் பெற்றதாகக் கருதுவேன். பக்தியினால் விளையும் பெரும்பேற்றை உணர்ந்து, விலைமதிப்பிலா மனிதப் பிறவியை பக்திநெறியில் செலுத்தும் முயற்சி செய்வொம். எம்பிரான் ஈசனுக்கும், நாயன்மார்களுக்கும், சிவத்தொண்டர்களுக்கும், அடியவர்களுக்கும், இந்த நூலை சமர்ப்பிக்கிறேன். அன்புடன், ஷக்திப்ரபா அதிபத்தர் ஆவணி ஆயில்யம் அதிபத்தர் பரதவர் குலத்தில் பிறந்த மீனவர். அன்றாடம் தமது வலையில் சிக்கும் சிறந்த மீனை பக்தியுடன் சிவனாருக்கு அற்பணித்து வருவதை கொள்கையெனக் கொண்டு வாழ்ந்தார். ஒரேயொரு மீன் பிடிபட்டாலும் அதை இறைவனுக்களித்து பட்டினியில் இருந்து விடுவார். பலநாட்கள் வறுமையிலும் பட்டினியிலும் வாடினார். அவர் பக்தியை எம்பெருமானார் சோதிக்க எண்ணினார். திருநாள் ஒன்றில் ரத்தினங்கள் பொதிந்த மீன் ஒன்று அதிபத்தருக்கு வசப்பட்டது. அதைத் தவிர வேறெந்த மீனும் சிக்காத நிலையில், பல நாட்கள் பட்டினிக்குப் பிறகு அம்மீன் மட்டுமே கிடைத்தாலும், பட்டினியை ஒரு பொருட்டென கருதாது, அம்மீனை இறைவனுக்கு அளித்தமையால், மகிழ்ந்த சிவனார் உமையவளுடன் காட்சி தந்து முக்தியும் அளித்ததாக வரலாறு. ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய அப்பூதியடிகள் திருநாவுக்கரசரின் சமகாலத்தவர் அப்பூதியடிகள். நாவுக்கரசரையே தமது மானசீக ஆசானாகவும், இறைவனாகவும் வரித்து, குருபக்தியில் சிறந்து விளங்கினார். அப்பூதி அடிகள் அந்தணர் குலத்தில் பிறந்து கிருஹஸ்தாசிரமத்தில் செவ்வனே கடமையாற்றியவர். நாவுக்கரசரின் பெயரில் அன்னதானங்களும் நற்பணிகளும் செய்து வந்தார். நாவுக்கரசரை கண்டிராமலே அவரிடம் பக்தி கொண்டிருந்தார். தற்செயலாக தமது இல்லத்திலேயே நாவுக்கரசரை சந்திக்க நேர்ந்த அதிர்ஷ்ட்த்தை எண்ணி அவரும் அவரது மனைவியும் திக்குமுக்காடிப் போனார்கள். தங்களது இல்லத்தில் உணவருந்த நாவுக்கரசரை வேண்டி நின்றார்கள். நாவுக்கரசர் ஆலயம் தொழுது வருவதற்குள் விருந்து சமைத்து உபசரிக்க தயாராக இருந்தனர். அவருக்கு விருந்து படைக்க வாழை இலை பறித்து வரும் வெளையில் அப்பூதி அடிகளின் குலக்கொழுந்தை, அரவு தீண்டி அவன் இறந்து விடுகிறான். தமக்கு நேர்ந்த துன்பத்தை தம்பதிகள் இருவரும் மறைக்க முயன்றும், நாவுக்கரசருக்கு நடந்த உண்மைகள் விளங்கிவிட்ட்து. தமை அண்டியவர்களுக்கு துக்கம் நேர்ந்து விடக்கூடாதென்று, இறைவனிடம் மன்றாடி, எம்பெருமானை நோக்கி பாடல்கள் பாடி, சிவபெருமான் கருணையால் அப்பூதி அடிகளின் மகனை மறுபடி உயிர்பித்து, அவரை புத்திர சோகத்திலிருந்து, நாவுக்கரசர் மீட்டெடுத்தாகப் புராணம். அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் நாவுக்கரசரின் புகழ்பாடியே இறைவன் திருவடி சேர்ந்தனர். பகவானைக் காட்டிலும் அடியவர் தொண்டே சிறந்தது என்ற கருத்தை மெய்ப்பித்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய அமர்நீதி நாயனார் அமர்நீதி நாயனார் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழர். வாணிபத்தில் பெரும் பொருளீட்டி, அப்பொருளையெலாம் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதில் செலவிட்டார். சிவனடியார்க்கு அமுதும், ஆடையும் கோவணமும் அளித்து சேவை செய்து வந்தார். சோதித்த பிறகே அருள் சுரக்கும் பெருமானும், திருவிளையாடல் புரிய திருச்சித்தம் கொண்டார். சிவனடியாராகத் தோன்றி, நாயன்மார் வீட்டை அணுகி, அமுதுண்ண இசைந்து, தமது கோவணத்தை பாதுகாப்புடன் வைத்திருக்கக் கோரி காவிரியில் நீராடச்சென்றார். இறையனார் தனது திருச்சித்தப்படி, கோவணத்தை மறையச் செய்து நாயன்மாரை பரிதவிக்கச் செய்தார். நாயன்மார் அளிக்க முன்வந்த வேறொரு கோவணத்தை ஏற்க மறுத்த இறைவன், தனது இன்னொரு கோவணத்தை தராசில் இட்டு, இழப்பிற்கு ஈடு செய்யுமாறு கட்டளையிட்டார். நாயன்மாரும் பணிந்து, அவர் கொணர்ந்த கோவணத்திற்கு இணையாக தராசில் வேறு கோவணங்கள், மேலும் ஆடைகள் வைத்து பின்னும் தட்டு சமன்படவில்லை. பொன்னும் பொருளும் கொட்டியும் தட்டு சமன்படவில்லை. அமர்நீதி நாயனார், தனது மனைவி, மகனையும் தராசில் வைத்தார். தராசு அசைந்து கொடுக்கவில்லை. இறுதியாக சிவநாமத்தை ஜபித்து அவரே தராசில் ஏறி அமர்ந்தார். தட்டு இளகிக்கொடுத்து சமநிலைப் பட்டது. வந்திருந்த உமாபதி, உமையவளுடன் காட்சி தந்து, தராசையே விமானமாக்கி அடியாரின் குடும்பத்திற்கு சிவலோகப் பிராப்தியருளி முக்தியளித்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய அரிவட்டாயர் சிவபக்திக்கு பேர்பெற்ற கண்மங்கலம் எனும் கிராமத்தில் வாழ்ந்த சோழ வேளாளர் பரம்பரையைச் சேர்ந்தவர் அரிவட்டாய நாயனார். அன்றாடம் சிவ வழிபாட்டுக்கு செந்நெல் அரிசியும், கீரையும், மாவடுவும் இறைவனுக்கு அமுதாகப் படைத்து வந்தார். அவ்விடத்தில் குடிகொண்ட நீள்நெறிநாதர் இவரை சோதனைக்கு உட்படுத்தி, வளம் குன்றச் செய்தும், திருப்பணியை மறவாது செய்து வந்தார். கூலிக்கு வேலை செய்து, உடம்பை வருத்தி, பொருளீட்டி பெருமாளுக்கு தொண்டு செய்தார். சிறு கீரையும், சில நேரம் வெறும் நீரும் மட்டுமே தமக்கு வாய்த்த போதும் இறைவனுக்கு மறவாமல் படையலிட்டு வந்தார். திருநாளாம் பெருநாள் ஒன்றில், இறைவனுக்கு எடுத்துச் சென்ற அமுது, மட்கலம் உடைந்து, அத்தனையும் வழியிலேயே சிதறியது. இறைவன் பசியாற அமுதளிக்க முடியாமல் மிக நொந்து மனம் உடைந்தவராகி, தமது கழுத்தை அரிவாளால் அரிந்து உயிர் விடத் துணிந்தார். நீள்நெறிநாதனானவரும் உடன் இரங்கி, அவரை தடுத்தாட்கொண்டு ரிஷப வானகனாக காட்சிதந்து சிவலோக பிராப்தியருளி இவரது தொண்டை உலகோர் உணரும் வண்ணம் நீங்கா புகழ்பெறச் செய்தார். நாயன்மார்களில் சிலர் செய்த தொண்டு, சிறுதொண்டாயினும் அத்தொண்டை வறுமையிலும் தொடர்ந்தமையாலும், தம் பசியை பொருட்டாக கருதாமல் இறைவனுக்கே வாழ்வை அற்பணித்ததாலும், உயிர் துறந்தேனும் இறைவனுக்கு தொண்டாற்ற எண்ணிய சீரிய பக்தியாலும் அவை மகுடமாக ஜொலிக்கின்றன. ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய ஆனாய நாயனார் பெருமைமிக்க இந்நாயன்மார் திருமங்கலம் எனும் சோழர் திருத்தலத்தில் பிறந்த இடையர். ஆனிரை மேய்த்தவரென்பதால் ஆனாயனார். வெய்ங்குழலை ஊதுவதில் வல்லவர். அல்லும்-பகலும், அனுதினமும், நொடிப்பொழுதும், இறைச் சிந்தனையை விட்டு விலகாதவர். ஆனிரை மேய்க்கும் பொழுதும் குழலூதி அதில் சிவனைத் துதிக்கும் ஐந்தெழுத்து மந்திரத்தைப் பாடலாக்கி இசைத்திருப்பார். இவர் பாடலை மாடுகளும் கேட்டுய்ந்து களிப்புறும். இவரது இசைக்கு மக்கள் மட்டுமன்றி மாக்களும் மயங்கி தம் நிலை மறப்பர். ஒரு திருநாளில் கேசம் அலங்கரித்து, மலர் அணிந்து, மலர்மாலை சூடி ஆனிரை மேய்க்கப் புறப்பட்டார். அங்கு கண்ட காட்சியில் தமையிழந்தார். எங்கும் பூத்துக்குலுங்கும் எழில் சோலையில் முல்லையும் நறுமலர்களும் கொன்றை மலர்களும் உள்ளம் கவர்ந்து மெய்மறக்கச் செய்தன. கொன்றை மரத்தில் மலர் முகிழ்ந்திருந்தது, சிவனார் கொன்றை மலர் மாலையணிந்து காட்சிதருவது போல் அவர் கண்ணுக்கு புலப்பட்டது. சிவனாரின் ஐந்தெழுத்தே இசையாகி ஒலித்தது. அவ்விடத்து எழில் அனைத்தும் அவர் குழலிசை வழியே தம் வனப்பை வெளிப்படுத்தின. ஊதிய குழலொலிக்கு ஆனிரையும் மயங்கியது. மான்களும் மயிலும் களிநடம் புரிந்தன. அனைத்து ஜீவனும் தம் பகை மறந்து ஒருமைப்பட்டு அன்பொழுக இசையில் இன்பம் பருகின. காற்றும் மரமும் அருவியும் சலனமற்று அவரது கானம் கேட்டவண்ணமிருந்தன. கல்லும் கரையும் தேவ கானம் பொழியக்கண்டு தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், என அனைவரும் இறங்கி வந்து இசைக்கு வசப்பட்டு நின்றிருந்தனர். இத்தகைய தேவகானம் சிவபெருமான் செவியில் இன்னமுதென விழுந்து, அவரை புறப்பட்டு வரச்செய்தது. உமையவளுடன் காட்சி தந்தவர் ஆனாய நாயனரை குழலூதியபடியே தமை வந்தடைய அருளினார். பூமழை பொழிய, முனிவர்களும் தேவர்களும் துதிக்க, குழலூதிக்கொண்டே இறைவனுடன் ஜோதியில் கலந்து திருக்கையிலை சென்றடைந்தார். இவர் வாழ்ந்த காலப்பகுதி கிபி ஏழிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் என தோராயமாக கணிக்கப்பட்டிருக்கிறது. ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய இசைஞானியார் சடையநாயனார் இசைஞானியார், ஞான-சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். திருமணப்பருவம் எய்தியவரை, அவரது தந்தை சிவச் சிந்தனையுடையவரான சடையநாயனாருக்கு மணமுடித்து வைத்தார். சடைய நாயனார் சிவபெருமானின் அடிமைக்கு அடிமை பூணும் இலக்கு உடையவராய் திகழ்ந்தார். ஆதிசைவ குலத்தவர்கள் இருவரும் திருமுனைப்பாடியிலிருக்கும் திருநாவலூரில் வாழ்ந்து வந்தனர் . சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்ற பேற்றிற்கே இசைஞானியாரையும் சடையநாயனாரையும் நாயன்மார்களாகக் கொண்டாடி மகிழும் பாக்கியம் பெறுகிறோம். ஈன்ற பொழுதை விட சான்றோன் என்ற சொல்லுக்கே பெரிதுவக்கும் தாய், தந்தையருக்கு சுந்தரமூர்த்தியைப் போன்ற இறையம்சம் நிரம்பிய அருளாளர் மகனாகப் பிறந்த பெருமையே இருவரையும் சிவகதிக்கு இட்டுச் செல்ல போதுமானதாய் இருந்தது. நாயன்மாராகக் கொண்டாடப்படும் மூன்றே மூன்று நங்கையரில் இசைஞானியாரும் ஒருவர். திருமுனைப்பாடியிலுள்ள நரசிங்க முனையர் எனும் செல்வந்தர் (இவரும் நாயன்மார்களில் ஒருவர்) நம்பியாரூரன் என்றழைக்கப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரின் அழகில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து அவரை வளர்க்கும் பாக்கியத்தை சடையநாயனாரிடமும் இசைஞானியாரிடமும் வேண்ட, பற்றற்றவர்களான அம்மேன்மக்கள், உயர்ந்த மகனை ஈன்ற உன்னதமான பெற்றோர், உடனெ தம் மைந்தனை அவருக்கே வார்த்து, நெடிதுயர்ந்து நின்றனர். நன் மக்களைப் பெறுதலும், முறையாக வளர்த்தலுமே பேசற்க்கறிய அருளை பெற்றுத்தரும் என்பது இதனால் சான்று. ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய இடங்கழி நாயனார் நாயன்மார்கள் பலரை சோழத் திருநாட்டினர்களாகவே நாமும் காண்கிறோம். இடங்கழியாரும் கொடும்பாளூரில் சிறப்பாட்சி புரிந்தவர். சிவனுக்கும் அவனது அடியார்க்குமேயன்றி வேறு எவர்க்கும் அடிபணியாதவர் . சைவத்தின் வளர்ச்சிக்கும் அன்றாட கோவில் திருப்பணிகள் தடையின்றி நடப்பதற்கும் ஆவன செய்தார். சிவனடியார்களுக்கு உணவிடுவதையே மேலான பணியெனக் கொண்ட அடியார் ஒருவர், அமுது படைக்க தானியம் இன்றிப்போகவே செய்வதறியாது வருந்தி, மன்னரின் நெற்கிடங்கிலிருந்து களவாடினார். பிடிபட்ட அடியாரும் மன்னனிடம் தாம் திருடியதற்கான காரணத்தை உரைக்க, மிக்க மெச்சிய மன்னன், இவரன்றோ சிறந்த அடியார் என்று பாராட்டி, மன்னனின் நெற்பண்டாரம் மட்டுமன்றி நிதியும் கூட சிவனடியார்களுக்காக எவரும் கவர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்தார். பக்தியின் எல்லை விரியும் பொழுது உலக நாட்ட்த்தில் பற்றும் குறைந்து வரும். உலகத்தின் பார்வைக்கு பொன்னாகவும் பொருளாகவும் அருளாகவும் தெரியும் தன சம்பத்துக்கள் பக்தர்களுக்கு ஒரு பொருட்டாகாது. ஈசனுக்கோ அவன் அடியவருக்கோ கிட்டாத பொருள், கிடங்கில் தேங்கிக் கிடந்தும் பயனென்ன? இப்புவியின் பிறப்பும் சிறப்பும் தனமும் அவன் அருளியது அவனுக்கே சென்று சேர்வதற்காக பணிக்கப்பட்டவை என்பதே பக்தர்களின் எண்ணமாயிருக்கும். அரச போகத்திலும் செருக்கிலும் திளைத்த பேரரசர்கள் மத்தியில் இப்படியும் ஒரு அரசர்! அதனால் நாயன்மாராகவே உயர்ந்தார். திருநீரின் மகிமை தழைக்க நெடுங்காலம் சிறந்த ஆட்சி புரிந்து முக்தி அடைந்தார். . ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய இயற்பகை நாயனார் சோழ நாட்டில் காவிரிபூம்பட்டினத்தில் வைசியர் குலத்தில் பிறந்தார். பெரும் பொருளீட்டி செல்வந்தாராக நல்வாழ்வு வாழ்ந்திருந்தார். இல்லற தர்மத்தை செவ்வனே கடைபிடித்து சிவனடியார்களுக்கு இல்லையென சொல்லாமல் அவர்கள் விரும்பியவற்றை வழங்கி பணி செய்திருந்தனர். இவர்தம் பெருமையை உலகறியச் செய்ய திருச்சித்தம் கொண்டு, ஈசன் திருவிளையாடல் புரிந்தான். தம்பதியரின் வீட்டிற்கு அந்தணர் வடிவத்தில் வருகை தந்தருளினார். இயற்பகை நாயனாரும் அவரை உபசரித்து, வணங்கி, தம்மிடம் இல்லையென்று ஆகாமல் இருக்கும் ஒன்றை விரும்பிக் கேட்டு, தமக்கு அருளுமாறு வேண்டினார். இறையனார், பக்தரின் மனைவியை விரும்பிப் பெற்றுச்செல்ல வந்திருப்பதாக உரைத்தார். அது கேட்டு பெரும் மகிழ்ச்சியுற்று, மனைவியை மலர்ந்த முகத்துடன் அந்தணருக்கு மனமுவந்து அளித்தார். மனைவியாரும் சில நொடிப்பொழுதே மனம் வெதும்பினாலும், உடன் தெளிந்து மணாளனின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் பொருட்டு அவருடன் புறப்பட்டார். அதோடு நில்லாமல், வந்திருந்த அடியார் இன்னொரு விண்ணப்பம் செய்தார். ஊராரும் உற்றாரும் தடுத்து இடையூறு விளைவிக்க வாய்ப்புள்ளது என்பதால், ஊர் எல்லை வரை இயற்பகையாரே உடன்வந்து, துணைநின்று பாதுகாத்து தமை அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்தார். சிவனடியார்கள் பிறப்பித்த கட்டளையை சிவனே பிறப்பித்த கட்டளைக்கு சமமாகக் கருதிய நாயன்மாரும், உடனே அதற்குச் செவி சாய்த்தார். செல்லும் வழிதனில் அடியவரையும் தடுத்து உபதேசித்த ஊராரை, விரட்டினார். சிவனடியாரை வசைச்சொல் கூறி அவருடன் சண்டையிட்ட உறவினர்களையும் உற்றவர்களை பகைத்துக் கொண்டார். பயந்தோடியவர்களைத் தவிர மற்றோறை வாளால் வெட்டி சாய்த்து, ஊர் எல்லை வரை துணைநின்று அனுப்பிவைத்தார். திரும்பப் போகலாம் என்ற கட்டளை பிறந்ததும், அந்தணரை ஸ்தோத்திரம் செய்து மறுமுறை திரும்ப பாரமல் சஞ்சலமின்றி வந்த வழி சென்றவரை, இறைவன் தடுத்து, உம்மையும் உன் மனைவியுடம் எம்மிடத்திற்கே இட்டு செல்ல வந்தோம் என்றருளி, சிவலோக பிராப்தியளித்தார். அவர்களுக்காக சண்டையிட்டு உயிர் துறந்த மித்ர-பந்துக்களுக்கும் வானுலக இன்பம் அருளினார் என்று கூறியருள்கிறார் சேக்கிழார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய இளையான்குடி மாற நாயனார் இளையான்குடியில் பிறந்த வேளாளர். உழவுத்தொழில் இக்காலம் போலன்றி செழித்திருந்த காலம். மதிப்பும் மேன்மையும் கொண்டிருந்த காலம். பெரும் செல்வந்தாராக திகழ்ந்தவர் இளையாங்குடி மாற நாயனார். தமது செல்வத்தை வீண் வழியில் வீசி இறைக்காமல், சிவனடியார்களை அழைத்து, பூசை செய்து உணவளிப்பதில் முனைந்தார். அதுவே தம் கொள்கையென வாழ்ந்தார். வறுமையிலும் அவர் உள்ளம் செழித்திருக்கும் அதிசயத்தை உலகறியச் செய்ய நினைத்த ஈசன், வளத்தைக் குறுக்கினான். வளம் குறுகியது, ஆனால் நாயன்மாரின் மனமும் அவர் மனையாளின் குணமும் குன்றவில்லை. அத்தனை செல்வத்தை விற்றும் தம் சேவையை தொடர்ந்து செய்தார். சிறிய குத்தகை நிலத்தில் விதை-நெல் விளைவித்திருந்தார்.  அன்று பெருமழை. வீட்டிலோ சிறு தானியமும் இல்லை. இறையனார் சிவனடியாராக அவர் வீட்டுக் கதவை நள்ளிரவில் தட்டினார். தம்பதியரும், அடியவருக்கு இன்முகம் காட்டி வரவேற்று, நற்பூஜை செய்து சிறப்பித்து, அவரை அமரச்செய்தனர். உணவருந்தச் செய்ய குந்துமணி நெல்லும் இல்லை. செய்வதறியாது சற்று திகைத்தவர்கள், உடனே சுதாரித்து, விதைத்திருந்த விதைநெல்லையே பெருமழையில் சேகரித்து வந்தார் நாயன்மார். விட்டுப்போயிருந்த மேற்கூரைக் கட்டைகளை உடைத்து விறகாக்கினர். வீட்டுக் கூரையை விறகாக்கி, தோட்டத்துக்கீரையை உணவாக்கி, விதைநெல்லை சுத்தம் செய்து இடித்து அமுதாக்கி அடியவருக்கு படைத்தனர். கருணை கொண்டு இச்சிறியோரின் உணவை ஏற்றருள வேண்டும் என்று விண்ணப்பிக்க, அங்கு அடியவர் மறைந்து, உமாபதி உமையவளுடன் ஜோதி வடிவில் வானளாவ காட்சி தந்தார். இம்மையில் பெரும் செல்வவளம் நிரம்ப பல காலம் பெருவாழ்வு வாழ்ந்து, பக்தித் தொண்டாற்றி, அதன் பின் மறுமையில் சிவபதவி அடைய திருவாய் மலர்ந்தருளினார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய உருத்திர பசுபதி நாயனார் உருத்திர பசுபதி நாயனார், சோழ வளநாட்டில் திருத்தலையூர் எனும் நல்லூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். சிவனைச் சிந்தையினால் தழுவியிருத்தலும், அவன் நாமம் ஓதியிருத்தலுமே பெரும் செல்வமெனக் கருதி வாழ்ந்தார். வேத சாஸ்திரங்களிலும் அறநெறிகளிலும் புலமையும் அறிவும் பெற்றிருந்தார். ஸ்ரீருத்ரத்தை மிகுந்த சிரத்தையும் அன்பும் மேவ ஓதி வந்தார். ஸ்ரீருத்திரம் ஜபித்து வந்ததால் இவர் உருத்திர-பசுபதி என்ற காரணப்பெயரால் சிறப்புற்றார். அனுதினமும் இரவென்றும் பகலென்றும் கருதாது தாமரைத் தடாகத்தில் கழுத்தளவு நீரில் நின்று, கைகளை உயர்த்திக் குவித்து ஈசனைத் தவிர வேறெவரையும் வேறொண்றையும் மனத்தினாலும் தீண்டாது, ஸ்ரீருத்திரம் ஜபித்து வந்தார். ஜகதீசன், கருணை மேலிட்டு, மகிழ்ந்துருகி இவருக்கு சிவலோகப் பிராப்தியருளி, இறைவனின் திருவடி நிழலில் தங்கியிருக்கும் பெரும் பேற்றை நல்கினார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய எறிபத்த நாயனார் சிவனடியார்களுக்கு இடர் நேரா வண்ணம் காத்தருள்வதை தம் பணியாக்கிக் கொண்டிருந்தார் எறிபத்த நாயனார். கருவூரில் பிறந்த இவர், அவ்வூர் தெய்வமான திரு-ஆனிலைக் கோவில் பசுபதீஸ்வரரை தினம் தொழுது அடியவர்களுக்குத் தொண்டும் செய்து வந்தார். அடியவர் எவருக்கேனும் தீங்கு நேர்ந்தால் உடன் சென்று, முன்னின்று அவர்கள் இடர் களைவதை முதல் கடமையாக செய்து வந்தார். சிவனடியார்க்கு தீங்கி விளைவிப்போரை தண்டிக்கும் பொருட்டு கையில் மழுவுடன் உலா வருவார். ஒரு நாள், அவ்வூரிலே சிவனுக்கு சேவை செய்த சிவகாமியாண்டார் என்ற அடியவர், தூயநீராடி நறுமலர்களை பூக்கூடையில் சேகரித்து ஆண்டவனுக்கு அர்பணிக்கும் பொருட்டு புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். புகழ்சோழன் என்ற அரசரின் பட்டத்து யானை மிகுந்த அலங்காரத்துடன் பவனி வரும் வேளையில் மதம் கொண்டு பாகனுக்கு அடங்காமல் அங்குமிங்கும் ஓடி, பின்னர் சிவகாமியாண்டாரின் கையிலுள்ள பூக்கூடையை தரையில் வீசியது. அதனை அலட்சியம் செய்த யானைப் பாகரும், அவ்விடத்தே விட்டு நகர, தம் இயலாமையை எண்ணி வருந்தினார் சிவகாமியாண்டார். இதனை கண்ணுற்று துணுக்குற்ற எறிபத்த நாயனார், இறைவனுக்கு சூட்ட வேண்டிய மலரும், அவன் அடியவரும் மண்ணில் வீழ்ந்திருப்பதை காணச் சகியாமல், யானையையும் அதன் பாகனையும் வெட்டிச் சாய்த்தார். இச்செய்தி அறிந்த புகழ்சோழன் மிகுந்த சினம் கொண்டு தமது பட்டத்து யானைக்கும் பாகனுக்கும் தீங்கு செய்தவர் எவர் என்று தேடி அறிந்தார். நடந்தனவற்றை கேட்டறிந்து மனம் வெதும்பினார். சம்பவத்துக்கு காரணமானவர்கள் அடியவர்கள் இருவர் என்று உணர்ந்து திகைத்து நின்றார். சிவனடியார்களுக்கு தீங்கிழைத்த எமது யானையும் பாகனும் தவறு செய்தவர்களே ஆவர். இந்த சிறு தண்டனை போதாது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று தானும் மடிந்து போக வேண்டுமெனக் உரைத்து, தமது வாளைக்கொண்டு தம்மையும் வீழ்த்தும்படி எறிபத்த நாயன்மாரை வேண்டினார். இதைக் கேட்ட எறிபத்தரோ துடித்தார். இப்படிப்பட்ட சிவபக்தனான புகழ்சோழனுக்கு தீங்கிழைத்தேனே என்று மிக்க மனம் வருந்தி, அவரது வாளால் தமது உயிரை போக்கிக் கொள்ளத் துணிந்தார். இனியும் வாளாயிருப்பானோ இறைவன்? உடன் தரிசனம் தந்து, உயிரிழந்த அனைவரையும் உயிர்ப்பித்து, சிவனடியார்களின் புகழ்சிறக்க தாம் ஆடிய விளையாடல் என்று அருள் கூர்ந்தார். யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் (பகவத்கீதை) (எங்கெல்லாம் தர்மம் குறுகி அதர்மம் ஓங்குகிறதோ அங்கெல்லாம் நான் என்னை சிருஷ்டித்துக் கொள்வேன்.) நமது எறிபத்தரும் அதர்மம் தலை தூக்கும் இடத்திலெல்லாம் தம்மை முன் நிறுத்திக் கொண்டு, பக்தர் இடர் களைந்தார். எறிபத்த நாயனார், தமது சொச்ச வாழ்வையும், இறைவனின் அடியவர்கள் துயர் தீர்த்து, அடியவர்களுக்குத் துயரெனில் அது இறைவனுக்கே நேரும் இழுக்கு என்றெண்ணி அங்கெல்லாம் தமது பங்களிப்பை தவறாது செய்து, சிறந்த தொண்டாற்றி, வினை முடிந்த பின் இறைவனடி சேர்ந்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய ஏயர்கோன் கலிகாம நாயனார் திருப்பெருமங்கலம் என்ற சோழத்திருவூரில், ஏயற்குடியில் பிறந்த வேளாளர். சிறந்த சிவபக்தி செய்து அடியார்களைத் தொழுவதே தவமென்று ஏற்றிருந்தார். அவருக்கேற்ற குணவதியை மணந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவரே சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார், இறைவனை பரவை நாச்சியாரிடம் தூது அனுப்பியதை கேட்ட கலிக்காமனார் மிகுந்த சினம் கொண்டு ‘இறைவனை ஏவுதற்கு பக்தனுக்கு ஏற்புண்டாகுமோ’ என்று வெதும்பினார். கடவுளே இசைந்தாலும் பக்தன் அவரை ஏவலாமா, இப்படிப்பட்ட பக்தனை நேரே கண்டால் சினம் மேலிட்டு தகாத செயல் செய்யவும் துணிந்துவிடும் அளவிற்கு பெரும் கோபம் கொண்டிருந்தார். இச்செய்தி அறிந்த சுந்தரர், இறைவனிடம், கலிக்காம நாயனாரை சமாதனம் செய்து தங்கள் இருவரின் நட்புக்கும் வழி வகுக்குமாறு வேண்டினார். திருநீலகண்டன், தீரா சூலை நோயை கலிக்காம நாயனாருக்கு உண்டு பண்ணி, அது தீரும் பொருட்டு, அவரை சுந்தரரை தரிசிக்க வலியுறுத்தினார். சுந்தரரால் தான் இந்த நோய் தீரும் என்பதானால், அந்த நோய் தீராமல் தொடர்ந்து வாட்டட்டும் என்று சொல்லி விடுகிறார் கலிக்காமனார். சுந்தரரிடத்திலும் சிவனார் இது பற்றி உரைத்து ஏயற்கோனின் நோய் தீர்க்கப் பணித்தார். சுந்தரர் வருவதை அறிந்த கலிக்காம நாயனார், அவரால் தன் நோய் தீருமென்றால் அதற்கு மரணமே மேலெனக் கருதி தன்னை மாய்த்துக்கொண்டார். அவர் மனையாளும் உடன் உயிர்விடத் துணியும் நேரம், சுந்தரர் வந்து விடுகிறார். சிவனடியாருக்குறிய மரியாதை செய்வித்து, தன் கணவன் இறந்ததை மறைத்து, அவர் நலமுடன் இருப்பதாக மனைவி உரைத்தாலும், கலிக்காமரை தாமே நேரில் காண விழைகிறார் சுந்தரர். உள்ளே கலிக்காமனாரின் சடலத்தைக் கண்ட சுந்தரர், மனம் மிக வருந்தி தானும் உயிரைப் போக்கிக் கொள்ள எத்தனிக்கிறார். அனைவருக்கும் இறைவன் காட்சி தந்து, கலிக்காம நாயனாரின் பகையறுத்து அருளி, அன்பு மேலிடச் செய்தமையால், மிகுந்த அன்பு கொண்டு இருவரும் ஆரத்தழுவி நண்பர்கள் ஆனதாக வரலாறு. தமது இன்னுயிர் உள்ளவரை இறைவனை வழுவாது பக்தி செய்து, திருத்தொண்டுகள் புரிந்து, பின் சிவலோகப் பதவி அடைந்தார் கலிக்காம நாயனார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய ஏனாதி நாதர் வாள்படை பயிற்ச்சியாளராகப் பணிபுரிந்தவர் ஏனாதிநாத நாயனார். சோழப் பெருநாட்டிலுள்ள எயினனூரில் பிறந்தார். போர் பயிற்சியளித்து அதனால் பெறும் வருமானத்தை சிவ கைங்கர்யங்களில் செலவிட்டு அடியார்களைப் போற்றினார். ஓருவனின் வெற்றி இன்னொருவனின் தோல்வி. ஒருவனின் திறமை இன்னொருவனின் வறுமை. இது தானே உலக இயல்பு! ஏனாதிநாதரின் தாய்வழி உறவனிரான அதிசூரனும் அதே தொழில் செய்து வந்தாலும், பலரும் ஏனாதியாரையே நாடியதால் அதிசூரனின் வருவாய் குறைந்தது. வன்மம் பெருகியது. பெருஞ்சேனை திரட்டி போருக்கு அரைக்கூவல் விடுத்தான் அதிசூரன். இருபெரும் சேனைகள் போர்புரிய, இறுதியில் வெல்வாரே வாட்பயிற்சி அளிக்க வல்லார், மற்றவர் தோல்வியை ஒப்புக்கொண்டு அரசரின் சேனைக்கு பயிற்றுவித்தலை கைவிட வேண்டும் என்று முழங்கினான். அவ்வாறே இருபெரும் படைகள் போரிட்டன. அதிசூரன் தோற்றுப் பின்வாங்க, ஏனாதிநாதர் சிறப்புற வெற்றி பெற்றார். தோற்றவனுக்கு ஆத்திரமும் அவமானமும் அதிகமானது. வஞ்சம் தீர்த்தேனும் வெற்றி பெற வேண்டும் என்ற தவறான நோக்கத்தோடு துணையேதுமின்றி தனியே இருவரும் போரிட்டுப் பார்க்கலாம் என மறுபடி அழைத்தான். சிவனடியார்களுக்கு தலைவணங்கி நிற்பவரல்லவா நாயனார்! திருநீறு பூசிய நெற்றியைக் கண்டால் கரம் கூப்பி மரியாதை செலுத்துவாரேயன்றி கொல்லத்துணிய மாட்டார். அதை கருத்தில் கொண்டு என்றுமே திருநீறு அணியாத அதிசூரன், அன்று நீறணிந்த நெற்றியினனாக போர் புரியச் சென்றான். சிவனுக்கு அடிமையாகிவிட்ட அதிசூரனை கொல்லத் துணியாத ஏனாதி நாதரும் அவனை தாக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். ஆயுதமில்லாதவனை கொன்ற பாபத்திலிருந்து அதிசூரனை காக்கும் நல்லெண்ணத்துடன், ஆயுதமேந்தி போர் புரிபவரைப் போல் கேடயமும் வாளும் கையிலேந்தி நிற்க இதுவே சரியான தருணமென ஏனாதியாரை வெட்டிச் சாய்த்தான் அதிசூரன். ஈசன் ஏனாதிநாதர் முன் தோன்றி, நீறணிந்த நெற்றியைக் கண்டதுமே, போர் துறந்து வாளாயிருந்த பக்தியை மெச்சி தம் திருவடியில் இடமளித்து நற்கதி அருளினார். நீறில்லா நெற்றி பாழ், என்பர் ஆன்றோர். திருவெண்ணீற்றின் மகிமை உணர்ந்தேத்துவோம். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பல்லவ மன்னனாக பேராட்சி புரிந்த அரசர் காடவர்கோன். காடவர் என்பது பல்லவ மன்னர் குடியைக் குறிக்கும். குறையேதும் நேராமல் நீதிநெறி வழுவாமல் சிறப்புற ஆட்சி செய்த மன்னன். வடமொழியும் தமிழ்மொழியும் சிறக்கும்படி இலக்கியங்களைப் போற்றி கலைத் தொண்டாற்றி வந்தார். சிவ வழிபாட்டை கண்ணெனக் கருதியவர் நாடெங்கும் சிவநெறி தழைத்தோங்கும் விதம் அரசாண்டார். கைலாசநாதர் திருக்கோவிலை எழுப்பிய இராஜசிம்ம பல்லவனின் தந்தையாக ‘பரமேசுவரவர்மன்’ எனும் ‘ஐயடிகள் காடவர்கோன்’ அறியப்படுவதாக ’திருத்தொண்டர்-தொகை’யில் சுந்தரர் குறிப்பிடுகிறார். சாளுக்கிய மன்னன் புலிகேசியின் மகனான விக்கிரமாதித்தனை, பரமேசுவரவர்மன் திருச்சியருகே, போரிட்டு வெற்றிகண்டு விக்கிரமாதித்தனை புறமுதுகிட்டு ஓடச்செய்ததாக கைலாசநாதர் கோவில் கல்வெட்டு உணர்த்துகிறது. சிறந்த மன்னனாக விளங்குவது மட்டுமே பரமேசுவரவர்மன் குறிக்கோளாக இருக்கவில்லை.அரசப்பதவியும் புகழும் வீரமும் நிரம்பியிருந்தும், இறைவனைப் பாடும் தணியாத் தாகத்திற்கு அரசக் கடமையே சுமையென்றிருப்பதை உணர்ந்தவர், தம் மகனுக்கு முடிசூட்டி, துறவறம் பூண்டார். சிவஸ்தலங்களை யாத்திரை செய்து வழிபட்டு ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் ஒரு வெண்பா பாடியிருக்கிறார். அவர் பாடியவைகளில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவை “க்ஷேத்திர(சேத்திர) திருவெண்பா” என்றுபோற்றப்படுகிறது. இயற்றிய பாடல்களில், நிலையாமைத் தத்துவம் மேலோங்கியிருப்பதன் மூலம், இவரது துறவு மனப்பான்மையும் பற்றற்ற போக்கும் தெளிவாகிறது. பதினோறாம் திருமுறைப் பிரபந்தங்களை அருளிய நாயன்மார்களில் இவரும் ஒருவர். ‘ஐயனவன் அடிகள்’ என்பது ‘ஐயடிகள்’ என வழங்கலாயிற்று. ஈசனை சுந்தரத்தமிழில் போற்றி வெண்பா இசைத்து, ஆலயத் திருப்பணிகள் பல செய்து, இறுதியில் பரமசிவன் திருவடியடைந்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய கணநாதர் சீர்காழியில் அந்தணர் குலத்திலே பிறந்து, எம்பெருமானுக்குத் திருத்தொண்டாற்றியவர் கணநாதர். சீர்காழியில் வழங்கி வரும் இறைவன் திருத்தோனியப்பரிடம் அன்பு மிகக் கொண்டு திருப்பணி செய்து வந்தார். தம்மை நாடி வருபவர்களை, அவரவகள் விருப்பத்திற்கும் திறனுக்கும் ஏற்றவாறு திருப்பணியில் ஈடுபடச் செய்தார். திருப்பணிகளை, மலர் பறித்தல், மாலை கட்டுதல், திருமஞ்சனத்திற்கு உதவுதல், அலகிடுதல், மெழுக்கிடுதல், விளக்கு ஏற்றுவது, கோவிலை கூட்டுவது, திருமுறை எழுதுதல், ஓதுதல், நந்தவனம் அமைத்தல் என வகுத்து, அவற்றை அவர்களுக்கு முறையே பயிற்றுவித்து, அவர்களை அடியவர்களாக மாற்றும் பெரும்பணி செய்து வந்தார். இல்லற தர்மம் சிறப்புற பேணி அடியார்களை வழிபட்டு வந்தார். எப்பொழுதும் திருஞ்சானசம்பந்தரை வணங்கி, வழிபட்டு வந்த பலனாக ஜீவகாலம் முடிந்ததும், கைலாயமடைந்து கணங்களுக்கு நாதர் ஆனார் என்கிறது பெரியபுராணம். ‘அடியார்க்கும் அடியாராகிய கணநாத நாயனார்’ என்று திருத்தொண்டத்தொகையில் குறிப்பிடுகிறார் சுந்தரர். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய கணம்புல்லர் இருக்குவேளூர் என்ற ஊரின் தலைவராக வாழ்ந்தார் கணம்புல்ல நாயனார். பெரும் பொருட்செல்வத்துக்கும் சிவபெருமான் அருட்செல்வத்துக்கும் பாத்திரமானவர். அன்றாடம் ஊர்க்கோவிலில் திருவிளக்கு ஏற்றும் பணி செய்து ஆண்டவன் திருவடி பற்றியிருந்தார். நாளடைவில் செல்வம் குன்றி வறுமை புகுந்தது. வளத்தையெல்லாம் விற்று ஊரை விட்டு சிவஸ்தல யாத்திரை மேற்கொண்டார். ஒவ்வொரு ஊராக பயணித்து திருவிளக்கு ஏற்றியவர் தில்லையை வந்தடைந்தார். மேற்கொண்டு பயணிக்காமல் தில்லையிலேயே தங்கி திருப்பணியைத் தொடர்ந்தார். தில்லையிலிருக்கும் திருப்புலீச்சரம் என்னும் சிவன் கோவிலில் திருவிளக்கிட்டு வந்தார். வறுமை விடாது துரத்த, செல்வமெல்லாம் கரைந்தது. தம்மிடத்திலிருக்கும் மிச்ச பொருட்களையெல்லாம் விற்று, திருப்பணி தொடர்ந்த வண்ணமிருந்தார். விற்கவும் பொருளின்றி செல்வம் சற்றும் ஒட்டாமல் விட்ட நிலையில், யாசிக்க உள்ளம் இடம்கொடாத்தால், கணம்புல் என்ற வகைப் புல்லை அறுத்து அதனை விற்று காசாக்கி விளக்கேற்றி வந்தார். அன்றொரு நாள் கணம்புல்லை வாங்க ஆளின்றி போனது. துயரத்தை உள்ளத்தில் வைத்து, எப்படியும் விளக்கேற்றியே தீருவது என்ற உறுதியுடன், கணம்புல்லையே திரியாக்கி விளக்கேற்றினார். ஆனால் குறிப்பிட்ட ஜாமம் வரை திருவிளக்கு எறிய புல்லின் அளவு போதாது போகவே, அன்பு மேலிட்டு தனது முடியையே காணிக்கையாக்கி விளக்கை ஏற்றத் தொடங்கினார். விளக்கேற்றினால் இம்மையிலும் மறுமையிலும் இருள் நீங்கி ஒளி கூடும் என்று நம்பியவர், எப்பாடு பட்டாவது தமது கடமையெனக் கொண்ட திருவிளக்குப் பணியை சிரமேற்கொண்டு செய்தார். பெருமான் ரிஷப வாகத்தில் சிவ சக்தியாக சமேதராக்க் காட்சியளித்து அவர் நினைந்த வண்ணமே நலம்நல்கி, பெருங்கருணை புரிந்து ஜீவமுக்தியும் சிவலோக பிராப்தியும் வழங்கியருளினார். கணம்புல்லை எரித்து திருப்பணியாற்றியதால் கணம்புல்லர் என்று பொற்றப்பட்டார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய கண்ணப்பர் வேடுவர் குலத்தில் பிறந்து சிறந்த வில்லாளனாக திகழ்ந்த இவரது இயற்பெயர் திண்ணன். . நண்பர்களுடன் வேட்டையாட சென்றவருக்கு பூர்வ வினையால், அடர்ந்த காட்டின் நடுவே சிறிய சிவன் கோவில் இருப்பதை காண நேர்ந்தது. காட்சியைக் கண்ட க்ஷணத்தில், ஊழ்வினையது கரைய, சிவன் மேல் காதல் கொண்டார் திண்ணன். தன்னிடமிருந்த எதையானும் அர்பணிக்கும் தணியாத் தாகம் அவரை ஆட்கொண்டது. வேட்டையாடிய மாமிசத்தையே படைத்து வணங்கிச் சென்றார். சிவனைக் காண மறு நாளும் ஆவல் எழுந்தது. இம்முறை நிறைய மாமிசம் கொண்டு சென்று, ஆசை தீர பேசிவிட்டு வந்தார். ஈசனின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் ஆவல் மேலிட்டு, தன்னிடம் பாத்திரங்கள் ஏதும் இல்லாததால் வாயினால் நீர் கொணர்ந்து, இறைவனின் திருமேனியில் உமிழ்ந்து, தனது பக்தியை வெளிப்படுத்த, அதுவே திருமஞ்சனம் என இறைவன் ஏற்றார். கூடைகள் இல்லாததால் மலரை தன் தன் தலையில் சேகரித்து அதைக் கொண்டே இறைவனை பூசித்தார். அடர்காட்டில் அமைந்திருந்த அக்கோவிலை அந்தணர் ஒருவர் பராமரித்து வந்தார். கண்ணப்பர் சென்ற பிறகு அந்தணர் வருவதும், இறைவனின் கோலத்தைக் கண்டு தாங்கொணா துயர் அடைந்து மறுபடி சுத்தம் செய்து பூஜிப்பதுமாக நாட்கள் சென்றன. இப்படியொரு அவச்செயலை செய்வது யார் என்று துக்கம் மேலிட இறைவனிடம் அன்றாடம் முறையிட்டவருக்கு, உமாபதி, தனது பக்தனின் மேன்மையை மறைந்திருந்து காணப் பணித்தார். மறு நாள் கண்ணப்பர் வந்த போது சிவலிங்கத்திலிருந்து ஒரு கண்ணில் குருதி பெருக்கேடுத்தது. பச்சிலை வைத்தியம் செய்தும் பயனின்றி போகவே சற்றும் தயங்காமல் தனது கண்ணை அம்பினால் பெயர்த்தெடுத்து சிவனுக்கு பொருத்தினார். இரத்தம் வருவது நின்றது. ஆனால் அது க்ஷண நேர திருப்தி. உடன் மற்றொரு கண்ணில் குருதி வழிந்தது. இம்முறை நாயனார் தனது காலை லிங்கத் திருமேனியின் குருதி வழியும் கண்ணின் மேல் வைத்து அடையாளப்படுத்தி, தனது இன்னொரு கண்ணையும் பெயர்த்தெடுக்கும் வேளையில் “நில் கண்ணப்ப” என்று மும்முறை கூறி தடுத்தாட்கொண்டார் இறைவன். இழந்த பார்வையை அருளியவரிடம் தன்னையே அர்பணித்து பக்தியில் சிறந்து விளங்கினார். கண்ணப்பர் என்ற பெயர் காரணம் சொல்லாமலே விளங்கும். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய கலிய நாயனார் கலிய நாயனார் என்பவர் திருவொற்றியூரில் வணிகர் குலத்தில் தோன்றி செல்வந்தராய் வாழ்ந்தார். பெரும் சிவபக்தராக விளங்கினார். இவ்வுலக வாழ்வின் நிலையாமையையும், உடலை வெறும் கூடென்றும் உணர்ந்து சிவபதமே சிறந்தது என்று தெளிந்தமையால் அன்றாடம் திருவொற்றியூர் கோவிலில் உள்ளும் புறமும் திருவிளக்கு இடும் பணியை செய்து வந்தார். கொடிது கொடிது வறுமை. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பதெல்லாம் நமைப் போன்றோருக்கு. தொண்டாற்றுவதில் சிறந்த பக்தர்கள் இறைவனின் தொண்டே பெரிதென நினைப்பர். வறுமை வந்து சேரும்படி இறைவன் விதிக்க, வறுமையிலும் பணியை தொடர்ந்து விடாமல் செய்யும் எண்ணத்தால், மற்றவர் தரும் எண்ணையை வாங்கியும் விற்றும், அதில் சேர்ந்த செல்வத்தில் விளக்கேற்றியும் வந்தார். அத்தொழிலில் பெருகி வந்த போட்டியில் வாய்ப்பை இழந்தவர் செக்கு இழுத்து பொருளீட்டினார். நாளடைவில் அவரை கூலிக்கு அமர்த்திக் கொள்ளவும் யாருமின்றி போக மிக நொந்து தன் மனைவியை விற்று பணமீட்டி பணியை தொடர நினைத்தார். எனினும் வாங்குவார் யாருமில்லாமற் போனதால் திருவிளக்கு பணி தடைபட்டு விட்டதே என்ற ஆதங்கம் தாங்காமல் தமை அறுத்து அக்குருதியில் விளக்கேற்றத் துணிந்தார். தக்க சமயத்தில் பரமசிவனார் கருணைக் கண் திறந்து தடுத்தாட்கொண்டு, ரிஷப வானகத்தில் காட்சி தந்து, திருக்கைலாயத்தில் ஒளிர்ந்திருக்க அருள் செய்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய (சேரமான்பெருமாள்நாயனார்) கழறிற்றறிவார் மகோதை என்று பெயர்கொண்டு திகழ்ந்த கொடுங்கோளூரில் சேரர் குலம் தழைக்க அவதரித்தார் கழற்றிற்றறிவார் நாயனார். பெருமாக்கோதை என்ற பெயருடன் விளங்கி வந்தார். சிறுவயது முதல், அரசாட்சி செய்ய உதவும் பயிற்சிகள் எதையும் கொள்ளாமல் சிவ வழிபாட்டில் கவனம் செலுத்தினார். நந்தவனம் அமைத்து, மலர் கொய்து மாலைகள் சாற்றி, திருவெண்ணீறணிந்து இறைவனை பாடிப் போற்றும் பணியிலேயே மனம் செலுத்தினார். சேரகுலத்து அரசன் செங்கொற்பொறையன் அரச வாழ்வை துறந்து துறவரம் மேற்கொள்ளும் பொருட்டு கானகம் சென்றான். மந்திரிகளின் விண்ணபத்தின் பேரில், பெருமாக்கோதையார், அரச வாழ்வால் தமது தவத்துக்கு ஊறு விளையுமோ என முதலில் தயங்கினாலும், பிறகு சிவபெருமானின் ஆக்ஞை ஏற்று, அடுத்ததாக சேர அரியணையை அலங்கரித்து, சேரமான்பெருமான் ஆனார். அரியணை ஏற்று நகர் உலா வரும் நேரம், வண்ணான் ஒருவன் உடம்பில் வியர்வையுடன் கலந்து படிந்திருக்கும் உவர்மண் வெளுத்திருக்க, அது திருவெண்ணீர் சாற்றிய சிவனடியாரைப் போல் காட்சியளிப்பதென மிக்க மகிழ்ந்து மன்னன் யானையை விட்டு கீழிறங்கி அவனை வணங்கி சிறப்பித்தான். இப்படிப்பட்ட ஒரு சிவப்பேரருளானை அரசனாகப் பெற்றமைக்கு மக்களும் சிவபக்தர்களும் அமைச்சர்களும் பேருவகை கொண்டனர். யாரும் / யாதும் கழறியவற்றை(சொல்வது, தெரிவிப்பது) அறியும் திறன் ஈசனருளால் கைவரப் பெற்றதால் கழற்றிற்று அறிவார் என்று அறியப்பட்டு, பெருமைப்படுத்தபட்டார். இவர் அரசு செலுத்தும் காலத்தில் பகைமை அற்று சிவநெறி தழைத்தோங்கும்படி அரசாட்சி செய்தார். சோழரும் பாண்டியரும் நண்பர்களாயிருந்தனர். பல தேசத்து சிற்றரசர்கள் மிகுந்த மதிப்புடன் கப்பம் கட்டி வந்தனர். நாள்தவறாது தூப தீபம் சந்தனம், திருநீறு அளித்து அமுது படைத்து, சிறந்த முறையில் பூஜை செய்து வந்த பக்தியிலும் அன்பிலும் மெய்மறந்த சிவனார், அன்றாடம் பூஜை முடியும் தருணம் தனது கால் சிலம்பொலியின் திருவோசையை அரசர் கேட்டு மகிழுமாறு அருளினார். பாணபத்திரர் என்ற புலவரின் கனவில் தோன்றி, அவரை சேரமான்பெருமானிடம் ஸ்ரீமுகம்(அறிமுகம்) செய்து கொண்டு வேண்டிய பொருள் பெற்றுக் கொள்ளும்படி அருளினார் ஈசன். அறிமுக ஓலையை கொண்டு சென்று மன்னரிடம் நிதி கேட்க, ‘இறைவன் தன்னை பணித்த கருணை தான் என்னே’ என்று பரவசம் அடைந்தார் சேரமான்பெருமான். மன்னன், நவநிதியும் யானையும் குதிரையும் தன் பொருளனைத்தையும் மூட்டை மூட்டையாய் கட்டி யானையிலும் குதிரையிலும் வாகனங்களிலும் தர முற்பட, மன்னனின் கொடையை வாழ்த்தி தனக்கு தேவையானவற்றை எடுத்துச் சென்றார் பாணபத்திரர். இன்னிகழ்ச்சி, மன்னர் ஈசன் மேல் கொண்ட பக்தி, அன்பு மற்றும் செல்வத்தின் மேல் கொள்ளாத அபிமானத்தை எடுத்துரைக்கிறது. சிறப்பாக பூஜை நடந்த பின்னர், ஒரு நாள் சிலம்பொலி கேட்காதிருக்க, மிக்க துன்பப்பட்டு, தனது பிழையை பொறுத்தருள வேண்டி, பூஜையினால் சிவனை மகிழவைக்காத வாழ்வு தமக்கு வேண்டாமென தன் உயிரை மாய்த்துக்கொள்ள முனைந்தார். சிவனார் அதிவேகமாக சிலம்பொலியை தொடர்ந்து ஒலிக்கச் செய்து தடுத்தாட்கொண்டார். சுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்)எனும் தன் தோழரின் இனிய தென்-தமிழ் பாடல்களில் தமை ஒரு கணம் மறந்துவிட்டதாக இறைவன் உரைத்தார். இத்தகைய பக்தரைக் காணாத வாழ்வும் வீணே என நினைத்து, சுந்தரரை தரிசிக்கும் பேராவல் கொண்டார் சேரமான். அரசாட்சியை அமைச்சர்களிடம் ஒப்படைத்து விட்டு சுந்தரைக் காணப் புறப்பட்டார். வழியில் பல சிவஸ்தலங்களையும் தரிசித்து பாக்கள் இயற்றினார். சுந்தரரை திருவாரூரில் கண்டு மகிழ்ந்து இருவரும் பெரும் அன்பில் கட்டுண்டிருந்தனர். இறைவனை பாடி பக்தி செய்வதில் மகிழ்ந்திருந்தனர். சுந்தரரும் சேரமானும்பல சோழ, பாண்டிய சிவத்தலங்களை சேர்ந்து தரிசித்து, பாக்கள் இயற்றி துதித்தனர். சுந்தரர், சேரமான் விருப்பத்திற்கிணங்கி சேரமான் அரசாளும் கொடுங்கோளூரையும் அடைந்து அங்கு மன்னருடன் பல காலம் தங்கியிருந்தபிறகு, திருவாரூர் புறப்பட்டார். சுந்தரரின் பிரிவாற்றலைத் தாங்க முடியாத சேரமான் பெருமான் போகாதபடி தடுத்தும் சுந்தரர் கேளாததால், சுந்தரரை என்றும் மறவாத சிந்தையினராக அவர் ஆணைப்படியே கொடுங்கோளூரை சிறந்த முறையில் ஆட்சி புரிந்தார். பல காலத்திற்குப் பிறகு சுந்தரர் திருக்கையிலாயம் போக சிவபெருமானால் அனுப்பபட்ட வெள்ளை யானை மேல் ஆகாய-வழியில் புறப்படுவதை அறிந்து, தாமும் தம் குதிரையின் செவியில் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து ஆகாய மார்க்கமாக சென்றதாக ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர். அரசர் கண்முன் ஆகாய வீதியில் மறைந்ததை கண்ட படை வீரர்கள் சிலர் உடன் உயிர் துறந்து அவர்களை பின் தொடர்ந்து கைலாயம் சென்றனர் என்றும் கருத்து உண்டு. சுந்தரர் சிவனை வணங்கி நிற்க, பின்னே சென்ற சேரமானை “நாம் அழையாதிருக்க நீ எங்கனம் வந்தாய்” என ஈசன் கேட்கிறார். ஈசனிடமும் கொண்ட அன்பை உரைத்து “திருக்கைலாயஞான உலா” பாடினார் சேரமான் நாயனார். "திரு-வுலாப் புறம்’ என்று இன்னூலை பெரிய புராணம் குறிப்பிடுகிறது. பாடலை கேட்டு அகமகிழ்ந்த என்பெருமான், சேரமான் நாயன்மாரை தமது கணங்களுக்கு தலைவராக்கினார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம்நமச்சிவாய கழற்சிங்கர் பல்லவ குறு-நில மன்னராக சிறப்புடன் அரசாண்டு வந்த கழற்சிங்க நாயனார், பரமசிவனின் நாமத்தையும் அவரது கீர்த்தியைப் பாடுவதையும் தலையாய கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர். ஒரு சமயம், பல சிவஸ்தலங்களை தரிசித்துக் கொண்டு, திருத்தொண்டுகள் புரிந்து, திருவாரூர் கோவிலை சென்றடைந்தார். அவருடன் அவரது தேவியும் உடன் சென்றிருந்தார். கோவிலை வலம்வந்தவர் பூஜைக்கென்று கொய்து சேகரித்திருந்த மலரொன்று தவறி நிலத்தில் வீழ்ந்திருந்ததைக் கண்டு, அதன் அழகில் மயங்கி, , ஆவலோடு முகர்ந்தாள். இதனை கண்ணுற்ற செருத்துணை நாயனார் எனும் பக்தர், இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக பறித்த மலரை முகர்வதா, என வெகுண்டு, முகர்ந்த மூக்கை அறுத்தார். அரசியார் வலியின் மிகுதியால் துடித்துப் புலம்ப அதனை கேட்டு வெளியே வந்த கழற்றி நாயனார், இக்கொடுஞ்செயலை செய்தவர் எவரென வினவ, மூக்கை அறுத்த சிவனடியார் காரணத்தை உரைத்தார். உடனெ நாயனார், “பூவை எடுத்த கையைத் தானே முதலில் வெட்டியிருக்க வேண்டும்” எனச் சொல்லி, உடைவாளை உருவி அரசியாரின் கைகளைத் துண்டித்தார். இத்தகைய அரிய பக்திக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர் கழற்சிங்க நாயனார். திருத்தொண்டு புரிந்த வண்ணம் சிவநெறி தழைத்தோங்க கழற்சிங்க நாயனார் நெடுங்காலம் ஆட்சி புரிந்தார். அவர் பக்தியின் நெகிழ்ந்த எம்பெருமான் அவருக்கு சிவப்பதம் அருள, திருக்கையிலாயம் அடையும் பெரும்பெறு பெற்றார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய காரி நாயனார் திருக்கடவூரில் அந்தணர் குலத்தில் தோன்றிய தமிழறிஞர் காரி நாயனார். மிகுந்த மொழிவல்லமை உடையவர். அவர் நாவில் சரஸ்வதியும், உள்ளத்தின் ஈசனும் நொடிப்பொழுதும் அகலாது குடி கொண்டிருந்தனர். தொல்காப்பிய நூல், திருச்சிற்றம்பலக் கோவை முதலிய ஆதி நூலகளுக்கும், அருந்தமிழ் புகழ் கூறும் காவியங்களுக்கும் மறைபொருள் விளக்கம் அளித்தார். புனையப்பட்டிருக்கும் புறநிலை இன்பம் கூறும் பாடல்களிலும் மறைந்திருக்கும் அகத்து இன்பத்தை சுட்டிக்காட்டி பொருள் விளக்கி தமது பெயரில் “காரிக் கோவை” என்று நூல் இயற்றினார். அந்த நூலை, சேர-சோழ-பாண்டியராகிய மூவேந்தர்கள் முன் விளக்கி பெரும் புகழும் செல்வமும் பெற்றார். பெற்ற செல்வத்தைக் கொண்டு சிவாலயங்கள் எழுப்புவதிலும், சிவப்பணி ஆற்றுவதிலும், அடியார்களுக்கு பொருள் அள்ளி வழங்குவதிலும் கருத்தாய் இருந்தார். திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர், அபிராமவல்லியை பூக்களாலும் பாக்களாலும் தினம் துதித்தார். சிவ நாமம் க்ஷணப்பொழுதும் மறவாமலும், பல திருத்தோண்டு ஆற்றியபடி தமது வாழ்வை செவ்வனே வாழ்ந்தமையால் மகிழ்ந்த இறைவன் புகழுடம்புடன் திருக்கயிலாயம் சேர்பித்து தமது திருவடியில் இடமருளினார். ॐ ॐ ॐ ॐ ॐ .ஓம் நம: சிவாய காரைக்கால் அம்மையார் மூன்றே மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரான இவரின் பெருமை சொல்லில் அடங்காது. புனிதவதி என பெயர்சூட்டப்பட்டு பெரும் சிவபக்தையாக காரைக்காலில் வாழ்ந்து வரும் காலத்தில் பரமதத்தன் என்பவரை, பெற்றோர் மணமுடித்து வைத்தனர். சிவனடியாருக்கு சமர்பித்த மாம்பழத்தை, தம் கணவருக்காக கடவுளிடத்தில் வேண்டி பெற்றதை கண்ணாறக் கண்டு அதிசயத்த பரமதத்தன், தமது மனைவி தெய்வாம்சம் பொருந்தியவர் என உணர்ந்து, அவர்களிடம் தமக்கிருந்த இல்லற உறவை அறுத்தார். வேறு பெண்ணை திருமணம்செய்து அவர்களுக்கு பிறந்த பெண்ணுக்கு புனிதவதி என்று பெயர் சூட்டி தமது மரியாதையை செலுத்தினார். இதை உணர்ந்த புனிதவதியார், கணவனுக்கில்லாத அழகும் இளமையும இனி தேவையில்லை என்றுணர்ந்து, சிவபூதகண வடிவமான பேயுருவை வேண்டிப் பெற்றார். எம்பெருமானை இசையால் துதித்து பாடல்கள் இயற்றுவதில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் எழுதிய பாணியை ஒட்டியே பிற்கால தேவாரப் பாடல்களும் புனையப்பட்டது. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மாலை, அற்புத திருவந்தாதி, முதலிய இலக்கியங்களைப் புனைந்து தமிழுக்கு பெருமை சேர்த்தார். இறைவன் இருக்கும் திருக்கையிலாயத்தை காலால் தடம் பதித்தால் புனிதம் கெட்டு விடுமென்று தலையால் ஏறிச்சென்று தரிசித்தார். இறைவனே இவரை தமது அன்னை என்று உரைக்கும் பேறு பெற்றார். வரமாக, பிறவாமை வேண்டுமென்று இறைஞ்சி, இறைவனின் தாண்டவத்தின் பொழுது அம்மையார் அவரடியின் கீழ் பணிந்து பாடிக் கொண்டிருக்கும் வரம் கேட்டு உய்ந்தார். திருவலங்காட்டில் தமது திருநடனத்தை தரிசிக்க்ச் செய்து, திருவடியில் இடமளித்தருளினார். இவரது புகழ் உணரப்பட்டு, வாழ்ந்த பெருவாழ்வை நினைவு கொள்ளும் வண்ணம், இன்றும் கரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது ॐ ॐ ॐ ॐ ॐ .-cஓம் நமச்சிவாய குங்கிலியகலய நாயனார் மார்க்கண்டேயருக்கு வாழ்வளித்த பெருமான் திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரராக வீற்றிருக்கிறார். பெருமைவாய்ந்த திருக்கடவூர் திருத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்த்தார் குங்கிலியக்கலய நாயனார். திருக்கடவூரில் பிறந்து அங்கு குடிகொண்டுள்ள அமிர்தகடேஸ்வரருக்கு தூபம் இடுவதை திருப்பணியை அன்றாடம், நாள் தவறாமல் செய்து வந்தார். செல்வச்செழிப்பு குன்றிய பொழுதிலும் தமது அன்றாட ஆடம்பரங்களையும் செலவுகளையும் குறைத்தாலும் குங்கிலியம் இடுவதை தவறாமல் ஆற்றினார். வறுமையின் காரணமாக சில நாட்கள் மக்களும் மனைவியும் உணவின்றி வாடும் நிலைமைக்கு ஆளானார்கள். பொற்தாலியை விற்றுப் பணம் பண்ணி நெல் வாங்கி வரும்படி மனைவி பணித்தமையால் அதை விற்க எடுத்துச் சென்றார். வழியெங்கும் குங்கிலியம் இடுவதற்கு இனி பணத்திற்கென்ன வழி என்று யோசித்து வருந்தியபடியே சென்றவருக்கு, குங்கிலியப் பொதி விற்றுக்கொண்டு வரும் வணிகன் கண்ணில் தென்பட தாங்கொணா இன்பம் அடைந்து பொற்தாலிக்கு குங்கியம் வாங்கி, உடன் இறைவனுக்கு குங்கிலியம் ஏற்றி சேவை சாதித்து, தமை மறந்து சிவனாரையே சிந்தித்தபடி கோவிலில் தங்கிவிட்டார். . பசியால் வாடிய மனைவி மக்கள், வயிறு ஒட்டியும் பட்டினியால் துவண்டு அழுத கண்ணீரோட உறங்கிவிட, கருணை ததும்ப மனைவியின் கனவிலும் தோன்றிய ஈசன், பொன்னும் மணியும் நெல்லும் பல செல்வங்களும் நிறைத்து அருளினோம் என்று கூறி மறைந்தார். உறக்கம் கலைந்த மனைவி இல்லம் முழுதும் வளங்களால் நிரம்பியிருக்கக் கண்டு இறைவனின் கருணை எண்ணி கண்ணீர் சொறிந்தாள். “பசியுடன் இருக்கும் நீயும் வீடு திரும்பி பால் சோறு உண்டு பசி நீங்கப்பெருவாய்” என்று குங்கலிய நாயனாருக்கு உமையொருபாகன் உரைத்து அருளினான். இல்லம் வந்த நாயனார் இறைவனின் எல்லையில்லா அன்பை எண்ணி கைகூப்பி தொழுதார். செல்வத்தைக் கொண்டு தம்பதிகள் இருவரும், சிவத்தொண்டுகளை இன்புற செய்து கொண்டும், அடியார்களுக்கு இன்னமுதளித்தும் நல்வாழ்வு வாழ்ந்திருந்தனர். திருப்பனந்தாளில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானின் லிங்கத்திருமேனி, முன்பொரு சமயம் தாடகை என்ற பெண்ணொருத்தியின் மாலையை சுவீகரிக்கும் பொருட்டு சாய்ந்து இடம் கொடுத்திருந்தது. அந்த நிகழ்வுக்கு பின்னர் லிங்கமானது சாய்ந்தே இருந்தது. லிங்கத்தை நிமிர்த்த பெரும் சேனைகொண்டு முயன்றும் சோழமன்னன் தோல்வியுற்றான். அரசனின் வருத்தமறிந்த குங்கிலிய நாயனார், உடன் புறப்பட்டு திருப்பனந்தாளில் தனது நாதனை நேராக்கும் பொருட்டு, பெரிய கயிற்றினை தம் கழுத்தில் பூட்டிக்கொண்டு லிங்கத் திருமெனியை இழுக்க எத்தனித்து, தமது உடலை வருத்திக் கொள்ளலானார். பக்தரின் சிரமத்தைக் காணப் பொருக்காத ஈசன் தாமே இளகி, சாய்ந்த மேனியை நேராக்கி, நேர்-நின்று அருளினார். இப்பேற்பட்ட அரிய பக்தியையும் பரமனின் கருணையும் கண்ணாரக் கண்ட தேவர்களும் பூமழை தூவினர். சில காலம் திருப்பனந்தாளில் இறைவனுக்கு சேவை செய்த நாயனார், பின்னர் திருக்கடவூர் சென்றார். பின்னாளில் ஞானசம்பந்தர் பெருமானுக்கும் நாவுக்கரசருக்கும் தமது இல்லத்தில் திருவமுதளித்து அவர்களின் பேரருளுக்கும் ஈசனின் கருணைக்கும் பாத்திரமானார். பலகாலம் சிறப்புற வாழ்ந்து இறுதியில் சிவபதமடைந்து பேரின்ப வாழவு கிடைக்கபெற்று இன்புற்றார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய குலச்சிறை நாயனார் பாண்டியநாடு பெற்ற முத்துகளில் ஒருவர் குலச்சிறை நாயனார். குலமென்றும் குணமென்றும் பாராமல் சிவனடியார்கள் என்று கூறி வருவோர்க்கும், ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதும் பெரியோர்க்கும் அமுதளித்தும், பெருமைப் படுத்தியும், சிவ வழிபாட்டின் வழி நின்றவராயிருந்தார். சிவபெருமானின் உயர்வை தாங்கிப் பிடிக்கும் சைவம் எனும் வழியை தனதாக்கிக் கொண்டதோடன்றி அதன் வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபாட்டார். பாண்டி நாட்டு மன்னன் நேடுமாற பாண்டியனுக்கு பிரதம அமைச்சராக பணியாற்றி வந்தார். பாண்டிய மன்னன் அந்நாட்களில் சமணக் கொள்கைகளை பெரிதும் மதித்து, சமண மதத்தை தழுவியிருந்தார்.  அவரின் துணைவியார் மங்கையர்கரசியார் சைவத்தின்-பால் வழுவாமல் நின்றிருந்ததால், குலச்சிறையார், மங்கையர்கரசியாரின் துணை கொண்டு பாண்டி நாட்டில் சமணர்களின் வீழ்ச்சிக்கு பெரிதும் காரணமானார்.  திருஞானசம்பந்தர் பெருமானை மதுரைக்கு வரவேற்று, சைவக் கொள்கைகளை பரப்புவதற்குக் காரணமானர். தனக்கு வந்த பேரிடரிலிருந்து தமைக் காத்த சம்பந்தரின் அருட்கொடையாலும் சைவத்தின் பெருமையை நன்கு உணர்ந்த பாண்டிய மன்னன், பின்னாட்களில் குலச்சிறையாருக்கு பெரிதும் துணை நின்றார். குலச்சிறையார், மன்னரின் ஆதரவையும், மங்கையர்கரசியாரின் உதவியுடனும், பெருகி வந்த சமண கொள்கைகளையும், பொய்வாதம் செய்யும் சமணவாதிகளையும் இல்லாதொழித்து, திருநீற்றின் மகிமையும் பெருமையும் பாண்டி நாடெங்கும் பெருகச் செய்தார்.  சுந்தரமூர்த்தி நாயனாரும், ஒட்டக்கூத்தரும் பெருநம்பி என குலச்சிறையாரைக் குறிப்பிட்டு, அவர் சைவத்திற்கு ஆற்றியபெரும் பங்களிப்பை பாராட்டிப் பாடியுள்ளார்கள்.  இறையனாரின் நாமத்தில் சித்தம் பரிகொடுத்து, பெருவாழ்வு வாழ்ந்த நாயனார், புவியுலகை நீத்த பிறகு, எம்பெருமானார் பாதமலரடியை அடைந்து பேரின்பம் பெற்றார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய கூற்றுவநாயனார் குறுநில மன்னர் ஒருவர் முக்கண்ணனது திருநாமம் ஓதி, அவர் பேரருளுக்கு பாத்திரமானார். அவரே கூற்றுவ நாயனார். நாமம் ஓதியும் அடியார்களைப் போற்றியும் சிவபணிகள் செய்து வந்தார். சிவபக்தி கொண்டவர், மிக்க போர்வீரமும் கொண்டு நாற்புறமும் வெற்றிகண்டு குறு நிலத்தை பெரு நிலமென விரியச் செய்து நல்லரசாண்டார். ரத- கஜ- துரக- பதாதிகளுடனான பெரும் சேனை கொண்டு பல நாடுகளை தமது குடையின் கீழ் கொணர்ந்தார். கூற்றுவன் என்றால் யமதர்மராஜனைக் குறிக்கும். எதிர் நிற்போருக்கெல்லாம் கூற்றுவன் போல் தெரிந்ததால் கூற்றுவர் என்றழைக்கப் பட்டார். மூவேந்தர்களான சேர-சோழ-பாண்டியர்களையும் வென்றார். மூவேந்தர்களை ‘முடியுடை மூவேந்தர்கள்’ என்று உயர்த்திப் போற்றுவர். அவர்களையும் வென்ற நாயன்மார் மணிமுடி தரித்து ஆள வேண்டும் என்ற ஆவல் கொள்கிறார். மணிமுடி தவிர மற்றனைத்தையும் பெற்றநிலையில், மணிமுடி சூட்டி கௌவரவிக்கும்படி தில்லையில் வாழும் அந்தணர்களிடம் விண்ணப்பம் செய்கிறார். சோழக் குலத்தவருக்கே உண்மையாக விளங்குபவர்களான அவர்கள் சோழ மன்னர்களைத் தவிர வேறு எவருக்கும் முடி சூட்ட முடியாது என்று மறுத்துரைத்து, கூற்றுவரிடம் உள்ள பயத்தின் காரணத்தால் சேரநாட்டுக்கு சென்று விடுகின்றனர். (சோழ மன்னர்கள் தில்லை, உறையூர் முதலிய ஊர்களில் முடி சூட்டிக்கொள்வது வழக்கம்) அதட்டி மிரட்டி மணிமகுடத்தை பெறவிரும்பாத நாயன்மார், மன வருத்தம் தாளாமல் சிவனாரை சிந்தனையில் நிறுத்தி, “எம்மை அந்தணர்கள் தலைவனாக ஏற்று மகுடம் அணிவிக்க மறுத்தாலும் ஐயனே உமது நடமாடும் திருவடியே எனக்கு மணிமுடியாக அருளல் வேண்டும். அதுவே எமக்கு பெரும் நிறைவத் தரும்” என்றெண்ணியவாறு உறங்கிப் போனார். கனவில் எம்பெருமான் அவர் நினைத்தவாறே தம் ஆடும் பாதத்தை திருமுடியாக்கி அணிவித்தார். கண்விழித்த மன்னன் தாம் பெற்ற வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றியாக இறையனாரின் அருளமுதை எண்ணி நெகிழ்ந்தார். வென்ற பெரு நிலத்தையெல்லாம் ஒரு கொடியின் கீழ் ஆண்டு, இறையனாரின் திருப்பாதத்தையே முடியாகக் கொண்டு ஆட்சி செய்தார். சிவத்தொண்டுகள் புரிந்து, கோவில்கள் சிறக்கவும், ஆகமவிதிப்படி பூஜைகள் தவறாது நடக்கவும், ஆவன செய்தார். நல்வாழ்வு வாழ்ந்து இறைவனின் பாதகமலத்தில் சேர்ந்து இன்புற்றார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய கலிக்கம்ப நாயனார். திருப்பெண்ணாகடம் என்ற ஊரில் வணிகர் குலத்திலே பிறந்து சிறந்த சிவபக்தராக விளங்கினார் கலிக்கம்ப நாயனார்.  அந்நகரில் துங்கனைமாடம் எனும் சிவன்கோவிலில் குடிகொண்டிருக்கும் கங்காதரனை பக்திசெய்து வாழ்ந்து வந்தார்.  அடியார்களை பேணிகாத்து, உணவளித்து, வேண்டிய பொருளும் அளித்து வந்தார். அடியார்களை சிறப்பிக்காத இறைவழிபாடு குறைவுள்ளது என்று நம்பி, அடியார்களின் வழி நின்றலும், அவர்களை காத்தலுமே இறைவனுக்கும் மிக உகந்ததெனக் கொண்டார். சிவ அடியார்களை உபசரிப்பதைத் தவிர வேறு சிந்தனையும் பற்றும் அற்றவராக இருந்தார்.  பின்பொரு சமயம், சிவ பக்தர்களை உயர்ந்த பீடத்தில் அமர்த்தி, பாத பூஜை செய்து,  இன்னமுதளிக்கும் வெளையில்,  வந்திருக்கும் அடியவர்களுள் ஒருவர் கலிகம்ப நாயனாரிடம் பணியாளாக முன்பு பணி செய்து, அந்த வேலையை துறந்தவர். இதைக் உணர்ந்த கலிகம்பரின் மனைவியார்,  தம்மிடம் வேலை செய்தவர் என்பதால், இருமனம் கொண்டவராக அடியவராக வந்திருந்தவருக்கு நீர் வார்க்க சிறிது  தயங்கினார் .  அடியார்க்கு நீர்வார்க்க தவறிய மனைவியின் செயல் அவருக்கு பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் அளித்தது, அடுத்த நொடி அங்கிருந்த வாளெடுத்து மனைவியின் கைகளை துண்டித்து அது பற்றிய சலனமேதும் இல்லாதவராக பாதபூஜையைத் தொடர்ந்தார் நாயன்மார்.  ரத்தம் ஆறாய் பெருக மயக்கமுற்றார் மனைவி.  பேரொளியாக சிவன்-பார்வதி தம்பதி சமேதராக எழுந்தருளி அடியவர்க்கு தொண்டு செய்யும் அவரது புகழ் ஓங்கவே திருவிளையாடல் புரிந்தோமென உரைத்து மனைவியின் மயக்கம் தீர்த்து, ஊனம் நீக்கி இருவரையும் வாழ்த்தி மறைந்தார். நாயன்மார் நெடுங்காலம் மனைவியுடன்  இனிய தொண்டுகள் புரிந்தபின் கைலாயப் பிராப்தி அடைந்தார்.  ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய கோச்செங்கட் சோழன் செங்கட்சொழரை தெரிந்து கொள்வதற்கு முன், திருவானைக்காவின் ஸ்தல புராணத்தை நினைவு படுத்திக் கொள்ளுவோம். ஒரு அடர்ந்த காட்டில் வெண்-நாவல் மரமொன்று சிவலிங்கத்திற்குக் குடையாகி நின்றிருந்தது. தவப்பயனால் மிக்க பக்தி கொண்ட யானை, அன்றாடம் காவிரி நீரால் திருமஞ்சனம் செய்து, கொத்து மலர் உருவி, அதனால் இறைவனை வழிபட்டு வந்தது. சிவலிங்கத்தின் மேல் பக்தி கொண்ட சிலந்தியொன்றும் இறைவன் மேலுள்ள காதலால், அவருக்கு குடையென வலை பின்னியது. மரத்திலிருந்து சருகு உதிராதவாறு, இன்ன பிற பறவைகளின் எச்சமும் படாதவாறு கவனத்துடன் அழகிய பந்தலைப் போன்று வலை பின்னியது.  யானைக்கு அவ்வலை அழகான பந்தலைப்போல் தோற்றம் தரவில்லை போலும், நீரால் அதை சுத்தப்படுத்தி, தனது பூஜையை தொடர்ந்தது. நீர் அபிஷேகம் செய்யும் பொது, யானையின் துதிக்கை தவறி அமைத்த வலையை சிதைத்திருக்கும் என்றேண்ணிய சிலந்தி, மறுபடி அழகிய பந்தலைப் பின்னியது. அடுத்த நாளும் யானை வலையை அழிக்க, சிலந்தி சினம் தாளாமல் யானையின் துதிக்கையின் உடுபுகுந்து கடித்து துன்புறுத்தியது. வேதனையை தாளாத யானை துதிக்கையை நிலத்தில் மோதி உயிர் நீத்தது. அதனுள் இருந்த சிலந்தியும் இறந்து போனது. இறையனார் அருளால் யானைக்கு முக்தியும், சிலந்திக்கு சீரிய பிறப்பும் கிடடியது.  இறந்து போன அந்த சிலந்தியின் தொடர்ச்சி தான் இந்த நாயன்மார் வரலாறு. வலை பின்னி பக்தி செய்த சிலந்திக்கு அரும்பிறப்பு அருளிய இறைவன், கமலவதி எனும் சோழ பட்டட்தரசிக்கு மகனாக பிறக்கச் செய்தார். பிரசவ நேரத்தில், அரசியின் வயிற்றுக் கரு, இன்னமொரு நாழிகை கழித்து ஜனிக்குமானல், உலகாளும் பேரரசனாக விளங்குவான் என்று கணித்த ஜோதிடர்களின் வாக்கில் நம்பிக்கை கொண்டு, தன் இரு கால்களையும் பிணைத்து தலைகீழாக தொங்கவிடும் படி வேண்டிக் கொண்டாள். ஒரு நாழிகை கழித்து பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. “கோ செங்கண்ணானே” என்று பாசம் மேலிட அழைத்தவாறே அரசி உடல் உகுத்தாள்.  பக்தியிலும் வீரத்திலும், மேம்பட்டு விளங்கினான் செங்கட்சோழன். தக்க பருவம் வந்ததும், அவனுக்கு முடிசூட்டி, கானகம் சென்று தவமியற்றி சிவலோகம் அடைந்தார் அவன் தந்தையாகிய சோழமன்னன் சுபதேவன்.  சிறந்து ஆட்சி செலுத்திய சோழனுக்கு இறைவன் அருளால் பூர்வஜன்ம வாசம் மிகுந்திருந்தது. முற்பிறப்பில் கொண்ட பக்தியும் தப்பாது நினைவில் இருந்தது. திருவானைக்கா எனும் இடத்தில் தனது சிலந்தி வாழ்வின் தொடர்ச்சியே இப்பிறவி என்று அறிந்து, சிலந்தியால் கட்டமுடியாத பந்தலை, செங்கட்சோழனாக, வெண்-நாவல் மரத்தின் கீழுள்ள சிவனாருக்கு திருக்கோவில் அமைத்தார். நாடெங்கும் வெவ்வேறு இடங்களில் கோவில் கட்டுவித்தார் . அனைத்து ஆலயங்களிலும், பூசைகளும் அன்றாட ஆகம விதிப்படியான வழிபாடுகளும் நடக்கும்படி செய்தார். தில்லையில் வாழும் அந்தணர்களுக்கு மாளிகைகள் கட்டுவித்தார். பல போற்றத்தகுந்த திருப்பணிகள் செய்தபடி சிவபக்தியில் ஈடுபட்டு சிவநெறி வழுவாது சிறந்த ஆட்சியும் செய்தார்.  . செங்கட்சோழன் பக்தியில் மட்டுமின்றி சிறந்த அரசனாகவும் பெரும் போர்வீரனாகவும் திகழ்ந்தார். ஒரு சமயம், சேர மன்னனை கழுமலம் என்ற ஊரில் போரிட்டு வென்றார். அப்போரில் தோற்ற சேரனை கைது செய்தார். சேரனின் உற்ற நண்பரும் அவைப்புலவருமான பொய்கையார் சோழனின் படைவலிமையைப் போற்றி “களவழி நாற்பது” எனும் நூலில் செங்கட்சோழன் புகழ் பாடி அதன் பரிசாக சேரமன்னனை மீட்டுச் சென்றார் என்பது வரலாறு.  திருவானைக்காவில் வேதமே நாவல் மரமாக இருந்து சிவனை வழிபட்டதாகவும் ஸ்தல வரலாறு.  ஆலயங்கள் பல கட்டியும் சிவனை துதித்தும் நல்லறம் வளர்த்த செங்கட் சோழர் பெருவாழ்வு வாழ்ந்து இறைவன் திருவடி சேர்ந்தார்.  . குறிப்பு: அப்பர் சம்பந்தரால் பாடப் பட்டவர். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்டவர். சைவத்திற்கும் வைணவத்திற்கும் பொதுவில் நின்றவர் என்பதால் விஷ்ணு ஆலயங்களும் கட்டினார். இவரது காலம் 200-225 என்று தோராயமாகக் கூறலாம்.  . (சிவகணங்களுள் இருவரான புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் அகங்காரத்தின் வெளிப்பட்டால் தவறு செய்துவிட, யானையாகவும் சிலந்தியாகவும் பிறந்தனர் என்றும் குறிப்பு)  ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய கோட்புலி நாயனார் அழகிய எழில்மிகு சோழ வளநாட்டில் நாட்டியத்தான் குடியில் தோன்றியவர் கோட்புலி நாயனார். வேளாளர் குலத்தில் தோன்றி, சோழ அரசனின் படைத்தலைவராக சிறப்பாக வாழ்ந்திருந்தார். கணக்கிலடங்கா வீரதீர செயல்கள் செய்து பகைவரை வீழ்த்தியதால் கோட்புலி என்ற பெயர் வர காரணமாயிருக்கலாம். வீரதீர பராக்ரமத்தில் பெயர் பெற்ற கோட்புலியார், பெரும் சிவபக்தராகவும் விளங்கினார். சுந்தரரை பெரிதும் போற்றி வணங்கி தம் இல்லம் எழுந்தருளும் படி வெண்டிய நாயனார், அவருக்கு பாத பூஜை புரிந்து துதித்தேத்தி, சுந்தரரை தம் புதல்விகளான சிங்கடி, வனப்பகை இருவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். இருவரையும் தமது மடி மீது அமர்த்தி, அவர்களை தமது புதல்விகளாக ஏற்று உயர்த்தினார் சுந்தரர். கோட்புலியாரின் மேன்மையை பாடும் சுந்தரர், தம்மை சிங்கடியப்பன் எனக் கூறி, உறவின் முறையை விளக்கி நெகிழ்கிறார். சேனாதிபதியாக ஈட்டிய பொருட்செல்வத்தை சிவனாரை போற்றும் பணிகளுக்கு செலவிட்டு வந்தார். பொருளைக் கொண்டு நெல் வாங்கி திருவமுது செய்வித்தார். வீட்டில் மலையளவு நெல் குவித்து, கோவில் திருவமுது பணிக்கென சேமித்திருந்தார். போர் மூண்டு போர்முனைக்கு செல்லும் முன், உறவினர் அனைவரையும் வருவித்து, இறைவனுக்கென நெல் சேமித்து வைத்திருப்பதை உபயோகிக்க வேண்டாமென அறிவுறுத்தி தாம் திரும்பும் வரை அவற்றை பத்திரப்படுத்திச் சென்றார். இறைவன் திருவிளையாடலினால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. சுற்றதார்களுக்கு குந்துமணி அரிசி, நெல் இல்லாமையாலும், பசியால் மடிந்து விடுவோமென்ற நிலையில், நெற்குவியலை உபயோகிக்க துணிந்தனர். அதற்கெற்ப பரிகாரம் செய்து இன்னும் அதிகம் அற்பணித்து விடலாம் என்று ஒருவருக்கு ஒருவர் சமாதானம் கூறிக்கொண்டு நெற்குவியலை உணவுக்கு உபயோகித்தனர். சில நாட்களில் பகைவரை வென்று நாடுதிரும்பிய கோட்புலியார் இச்செயல் அறிந்து வெகுண்டார். இறைவனுக்கென சேமித்திருந்த உணவை மனிதர் உண்ணத் தகுமோ என்றெண்ணி, அதனை உபயோகித்து உண்ணத் துணித அத்தனை சுற்றத்தாரையும் அவர்கட்கு துணை செய்தோரையும், தந்தை தாய் உறவினர் எனும் பாராது வெட்டிச் சாய்த்தார். பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்க மனமின்றி, இதுவும் நெல் உண்டவளின் முலைப்பாலை அல்லவோ குடித்திருக்கும் என்று வாளால் துண்டாக்கினார். . சோதித்தது போதுமென்று இரங்கிய ஈசன் கோட்புலியாருக்கு காட்சிதந்து, “சுற்றத்தார் அத்தனைபேரும் பாவங்கள் நீங்கி உயர்ந்த நிலை அடைந்து, பிறவா வரம் பெற்றனர் என்றருளி நீயும் நம்முடனே திருக்கைலாயம் வருவாய்” எனத் திருவாய் மலர்ந்து தம்முடன் சேர்த்துக்கொண்டார். . -cॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய சண்டேசுவர நாயனார் சோழத்திருநாட்டில் தான் அத்தனை நாயன்மார்களும் பிறக்கவேண்டும் என்று ஆவல் கொண்டார்கள் போலும். சண்டேசுவரரும் சோழ நாட்டில் பிறந்தவர். எச்சதத்தன் பவித்திரை என்ற இருவருக்கும் சேய்ஞலூரில் பிறப்பால் அந்தணராகப் பிறந்தவர் சண்டேசுவர நாயனார். பெற்றோர் இவருக்கு ‘விசாரருமா’ என்று திருப்பெயரிட்டு அருமை பெருமையாக வளர்த்து வந்தனர். சிவனன்றி வேறாரும் சிந்தையில் நுழையாமல் அவரையே படைப்பின் முதற் காரணமாகப் போற்றி வந்தார்.  மழலைப்பருவத்தில் விளையாட்டில் சக தோழர்களுடன் ஈடுபட்டிருந்த சமயம், பசுவொன்று தன்னை முட்ட வந்த காரணத்தால் அதனை மேய்க்கும் இடைச்சிறுவன் பசுவை நையப்புடைத்து விட்டான்.  பசுவின் வேதனை பொறுக்காத நாயனார், இடைச்சிறுவனுக்கு பசுவின் மேன்மையை போதித்தார். வெண்ணை பால் தயிர் போன்ற உயிரமுதங்களை ஈன்ற பசு தாய்க்கு சமானம். திருநீறு, பஞ்சகவியம் என்ற அனைத்தையும் நமக்கு தரும் பசு தெய்வத்திற்கு ஈடு. பசுவினது உடலில் தெய்வங்களும் தேவர்களும் வசிக்கின்றனர் என்ற பேருண்மைகளை எடுத்துக்கூறிய விசாரருமருக்கு அப்போது பத்து வயது கூட நிரம்பவில்லை.  இப்படிப்பட்ட வியத்தகு அறிவை பெற்றிருக்கும் விசாரருமரிடமே ஆநிரை மேய்க்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு விலகினான் இடைச்சிறுவன்.  சேய்தனை பேணிகாக்கும் தாயைப் போல பரிவு காட்டி ஆநிரைகளை நன்கு பேணி வந்தார் விசாரருமர். பசுக்கள் முன்பை விட அதிகம் பால் சுரந்தது. இத்தனை பால் பெருகுவதை கண்டவர் ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் ஆவல் கொண்டார். அத்திமரத்தின் கீழ் சிவலிங்கமொன்றை மணலினால் அமைத்து, அபிஷேகம் செய்து பூஜித்து ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தார். இதனை கேள்வியுற்ற மாட்டின் சொந்தக்காரர் பால் வீணாவதாக உணர்ந்து விசாரருமரின் தந்தையான எச்சதத்தனை தமது மகனை கண்டிக்கும்படி அறிவுறுத்தினார். விசாரருமரை கண்காணித்தார் தந்தை. கண்டித்தார். பலனற்றுப் போனது. விசாரருமரை தொடர்ந்து சென்றார். மண்ணினால் ஆன லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பால் வீணாக்குவதை கண்ணுற்ற தந்தை சினம் மிகுந்து, அபிஷேக பால் குடங்களையும் பூஜை பொருட்களையும் எட்டி உதைத்தார்.  எம்பெருமானுக்கு வைத்திருந்த பால்குடத்தை எட்டி உதைத்து சிவ அபராதம் செய்த தந்தையை தமக்கு முன் கிடந்த கோலை எடுத்து தந்தையை நோக்கி வீசி, தனது பூஜையை சலனமின்றித் தொடர்ந்தார் நாயனார். தந்தையை நோக்கி சென்ற கோல் மழுவாக மாறி அவர் காலை வெட்டி, ஜீவனை பிரித்தது.  உமையொருபாகனாக அவ்விடத்தில் பெருஞ்சோதியென காட்சி தந்த பகவானை தொழுது வணங்கினார் சண்டேசுவரர். “எம் பொருட்டு தந்தை இழந்த உமக்கு நாமே இனி தந்தையானோம்” என்று அணைத்து அருளினார். “எமக்கு அளிக்கப்படும் பரிவட்டமும், மாலைகளும், உடுப்பவை, சூடுபவை அனைத்தும் உமக்கும் உரிமையாகும்” என்றார். தமது தொண்டர்களுக்கு தலைவனாக்கினார். சண்டீச பதவி வழங்கினார். முடிமேல் கொன்றை மாலையைச் சூட்டி சண்டேஸ்வர நாயனார் ஆக்கினார். சிவ அபராதம் செய்தும் சண்டீசரால் தண்டிக்கப்பெற்று பாசம் நீங்கிய எச்சதத்தன் சிவலோகம் அடைந்தார்.  (மேலும் ) சிவன் கோவிலில் அமர்ந்திருக்கும் சண்டீஸ்வரரை முழுவலம் செய்தற் கூடாது என்று நம்பிக்கை. மும்முறை மெதுவாக கைதட்டி முக்குற்றங்களால் விளையும் தீங்கை (தன்னால் வரும் துன்பம், சூழலால் வரும் துன்பம், இயற்கையால் வரும் துன்பம்) விலக்கிக்கொள்கிறோம் என்பது நம்பிக்கை. பெருமையும் பழமையும் வாய்ந்த ஒரு சிவாலயத்தின் சிவாச்சாரியார், சண்டிகேஸ்வரர் தியானத்தில் இருப்பவர், அவரை கை தட்டி எழுப்புதல் வேண்டேமென்றும் மும்முறை “ௐம் நமச்சிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திர உச்சாடனமே அவரை திருப்தி படுத்தும் என்று விளக்கினார்.) ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய சத்தி நாயனார் வரிஞ்சையூரில் வேளாளர் பரம்பரையில் அவதரித்த சத்தி நாயனார், கைலாச நாதனின் திருவடிகளையே எண்ணி கசிந்துருகுபவராக இருந்தார். அடியார்களை பணிந்து மரியாதை செலுத்தியவரானார். எவரேனும் கொடும் அபராதமாகிய சிவனடியார்களை நிந்திப்பதை துணிந்து செய்தால் அவரது நாவை தமது குறடு கொண்டு பற்றி, அறிந்து விடுவார். இதனால் இவருக்கு சத்தி நாயனார் என்று பெயர் ஏற்பட்டது. தமது ஆயுட்காலம் தொட்டும் இப்பணியை வழுவாதும் அன்புடனும் செய்திருந்து, பின்னர் இறைவன் நிழலைப் பற்றி இன்புற்றார். ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய சாக்கிய நாயனார் எல்லா உயிர்களிடத்திலும் அடியவர்களிடத்திலும் பேரன்பு கொண்டவராக திகழ்ந்த சாக்கிய நாயனார், திருச்சங்கமங்கை எனும் ஊரில் வெளாண்குடியில் பிறந்தவர். உயிரின் நிலை, ஜனன - மரண தொடர்ச்சி முதலியவற்றை தினம் சிந்தித்தவராக பல நூல்களை ஆராய்ந்து தகுந்த வழிகாட்டலை தேடும் பொழுது காஞ்சி நகரத்தில் தங்கியிருந்த பௌத்தர்களிடம் தமது சம்சயத்திற்கு தீர்வுண்டென்று எண்ணி பௌத்த மதத்தை தழுவினார். நெடுங்காலம் பல சமயத்து நூல்களை ஆராய்ந்தவராக எதிலும் திருப்தியுறாமல், எம்பெருமான் பெருங்கருணையால் சிவநெறி முறைகளையும் ஓதித் தெளிந்தார். சிவ வழிபாட்டில் ஈடுபட்டு நூல்களை ஆராய்ந்ததில் தேடலின் விடை புலப்பட்டது. - ஜீவனாகிய சித்தும் (chit /jeeva/ soul particle) - அது செய்யும் வினையும் (deeds / action) - வினைப்பயனும் (destiny / karma) - கர்ம-பல-தாதா ஆகிய இறைவனும் (God principle) என்று சைவ சமயத்தில் கூறபட்டுள்ள நான்கு ஆதாரங்களை அறிந்து, பிறவிப் பெருங்கடலை கடப்பதற்கு வழிவகுப்பது இத்தத்துவமே என்றுணர்ந்தார். அல்லும் பகலும் இறைவன் திருவடி மறவாது புத்தமத அடையாளங்களைக் களையாமல், சிந்தனையில் சிவஅன்பு ஒழுக நித்தம் எம்பெருமானை தியானித்திருந்தார். சிவலிங்கத்தின் தத்துவம் உணர்ந்தவர் தினமும் லிங்கத்தை தரிசித்து வழிபட்ட பின்பே உணவுண்ணும் நோன்புற்றார். ஒரு சமயம் வெட்டவெளியில் சிவலிங்கம் பூசையின்றி கிடந்ததை கண்டார். லிங்கத்தைக் கண்ட மகிழ்ச்சியில் அன்பின் பெருக்கால் அருகிலிருந்த கல்லை எடுத்து அதன்மேல் எறிந்தார். சிறு பிள்ளைகளின் அன்பை பெருமகிழ்ச்சியோடு ஏற்கும் பிரபஞ்சத் தந்தையானவர், அதனை உவப்புடன் மலரென கருதியேற்றார். மறுநாள், முந்தைய தினம் தான் லிங்கத்தின் மேல், செங்கல் எறிந்ததை எண்ணி, இது நிகழ்ந்தது இறைவனின் கருணை என உணர்ந்து அதையே நித்திய வழிபாடாக செய்து வந்தார். மறந்து போஜனம் செய்யப்போன ஒரு நாள், அடடா மறந்தேனே என்று மிக பக்தியுடன், பதபதைத்து, விரைந்தோடி சிவலிங்கத்தின் மேல் அன்பு மேலிட பஞ்சாட்சர மந்திரம் ஓதி கல்லை எறிந்தார். அக்கல்லானது இறைவனின் திருக்காட்சியை அவர் கண்முன் கொணர்ந்தது. ரிஷப வாகனத்தில் அம்பாள் சமேதராக இறையனார் ஆகாயத்தில் காட்சியளித்து நாயனாருக்கு பிறவா பேரின்பம் அருளினார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய சிறப்புலி நாயனார் திருவாக்கூர் எனும் அறமிக்க திருவூரில் அறம் வளர்க்கும் அந்தணர் மரபில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இளமை முதல் மாறாத பக்தியுடன் கல்யாண சுந்தரனை துதி பாடி வந்தார். அடியார்களுக்கு அமுது செய்விப்பதும், அவர்கள் தேவையறிந்து பூர்த்தி செய்யும் தாராள குணமும் மிக்கவராகினார். மேலும், எண்ணற்ற வேள்வி யாகங்கள் சிவ ஆகம முறைப்படி செய்தும் செய்வித்தும் சேவை புரிந்தார். பஞ்சாக்ஷர மந்திரமோதி பல சிவ தொண்டுகள் செய்து, பிறரிடம் எல்லையில்லா பேரன்பு கொண்டு, இன்சொல் சொல்லி பக்தி வளர்த்தார். பலரும் இவர் மேல் அன்பு பூண்டு இவரை தொழுதற்குறியவராக கண்டனர். பல்லாண்டு சிறப்பாக வாழ்ந்தவர் சிவபதவி அடைந்து பெருமான் திருவடியை நித்தம் சேவிக்கும் பெரும்பேறு பேற்றார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய சிறுதொண்டர் நாயனார் பரஞ்சோதி என்பது இவரது இயற்பெயர். நரசிம்ம பல்லவரின் படைத்தலைவனாக பணியாற்றிய பரஞ்சோதியாரைப் பற்றி சரித்திர நிகழ்வுகளை படித்தறியும் பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. வாதாபி நகரை படையெடுத்து அதில் வெற்றி வாகை சூடி, அங்கு நிறைந்திருந்த பொன்னும் மணியும் முத்தும் நவரத்தினங்களும், போரில் வென்ற யானை குதிரைகளையும் பல்லவ மன்னனிடம் கொணர்ந்து குவித்தார். அருகிருந்த அமைச்சர்கள் இவரது பெருமையினை எடுத்துரைப்பவராக, யானையேற்றம் குதிரையேற்றம் தோள்வலிமை போர்திறன் மிக்க நம் சேனாதிபதி, சிவத்தொண்டராக பெரிதும் மதிக்கதக்கவர். அவரது திருத்தொண்டினை புகழ்ந்து கூறக்கூற, ‘இப்படிப்பட்ட ஒரு சிவத்தொண்டனை படைத்தலைவனாக்கி போர்முனைக்கு அனுப்பியிருந்தேனே என் மடமையை என் சொல்வேன்’ என மிக வருந்திய பல்லவ வேந்தன், பல திரவியங்களும் பொருட்களும் செல்வங்களும் பரிசாக வழங்கி, சிவத் தொண்டினையே அனுதினமும் இசைந்து செய்வீர் எனக்கூறி படைத்தலைவர் பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து அனுப்பினான். வேதங்களும் வடமொழி நூல்கள் பலவும் கற்றவராக சிவத்தொண்டினையே சதா காலமும் சிந்தித்திருப்பவராக விளங்கினார். திருவெண்காட்டு நங்கையை திருமணம் செய்து இல்லறத்தை நல்லறமாக நடத்திவந்தார். சிவத்தொண்டு செய்தும், அமுதளித்தும், இன்பம் கண்டார். சிவனடியார்களுக்கு பணிவுடன் சிறுதொண்டனைப் போல் பணிந்து தொண்டு செய்தலால் சிறுதொண்டர் என்று பெயர் வரப்பெற்றார். அடியார்களுக்கு உணவளித்த பிறகு உண்ணும் விரதமிருந்தார். இத்தம்பதிகளுக்கு அருமை மைந்தன் பிறந்ததும் சீராளன் என்று பெயரிட்டு சீராட்டி வளர்த்தனர். சிறுதொண்டர் பெருமை உலகெலாம் அறிய திருவுள்ளம் கொண்ட இறைவன், பைரவ அடியார் வேடம் தாங்கி குடில் வாசலில் தோன்றிபார். தனது செம்மேனிக்கு கருப்பு அங்கியணிந்து, சடாமுடியை முடித்து, இடது கையில் சூலம் தாங்கி, தும்பைப்பூ சூடியவராக வந்து “அடியார்க்கு அமுதளிக்கும் சிறுதொண்டர் இருக்கிறாரோ” என்றழைத்தார். அதுவரை அடியார் எவரையும் காணாது, அதன் பொருட்டே அடியவரை தேட சென்றுள்ளார் என்றுரைத்த மனைவியிடம் தாம் ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருப்பதாக கூறிச் சென்றார். எவரும் அடியவரைக் காணாது மனம் வருந்தி வீடு வந்த சிறுதொண்டருக்கு, அவரது மனைவி அடியார் ஒருவர் வந்த்தைக் கூறியதும், தனது பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். ஆத்தி மரத்தடிக்கு ஓடி அடியாரைக் விருந்துக்கு வருந்தி அழைக்க, பைரவ அடியாரோ, தாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் உண்பதாகவும், தனக்கு உணவு சமைப்பது கடினம் என்று கூறினார். ஐந்து வயது மிகாத நரப்பசுவை உணவாக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். ஊனம் எதுவும் இல்லாதவனாகவும், அப்பாலகன் தாயாருக்கு ஒரே பிள்ளையாகவும் இருக்க வேண்டும். தாயார் பிள்ளையை பிடித்திருக்க தந்தை அரிந்து கொடுக்க, அதனை பக்குவமாக குறையேதுமின்றி சமைத்த உணவையே உட்கொள்வதாக கூறினார். வேறெவரும் செய்யத் துணியாத இச்செயலை, சிறிதும் தயங்காது இத்தம்பதியினர் மேற்கொண்டனர். பள்ளி சென்றிருந்த தமது மகனை அழைத்து அவனையே உணவாக்கினர். அடியவருக்கு உணவிடும் போது, நாம் தனியே உண்ண மாட்டோம் நம்முடன் சிவனடியார் இன்னொருவரும் உணவு உண்ண வேண்டுமென்றார். வேறு அடியவர் எவரும் வேண்டாம், உம்மை விட சிறந்த அடியவர் உளரோ, நீரே எம்முடன் உண்ண வேண்டும் என்று சிறுதொண்டரை தம்முடன் உணவு உண்ண அழைத்தார். அதற்கும் ஈடுகொடுத்து அருகில் உண்ண அமர்ந்த போது, நாம் உண்ணும் முன் உமது மகனை அழைத்து வாரும் அதன் பின் மூவருமாக உண்போம் என்றார். அடியார் எங்கே உண்ணாமல் சென்று விடுவாரோ என்று பதைத்தை தம்பதியர், மகன் இப்பொழுது வருவது கடினம் என்றுரைத்து, அவரை உண்ண இறைஞ்சினார்கள். அடியார் விடுவதாக இல்லை. பிடிவாதமாக மகனை அழையும் அவன் வந்தாலேயன்றி நாம் உண்ணோம் என்றார். புறத்தே சென்று “அருமை மகனே சீராளா சிவனடியார் உணவு உண்ண அழைக்கிறார், உடன் வா என் கண்ணே” என்றழைக்க, பேராச்சர்யமாக பள்ளி சென்ற சீராளன் ஓடி வந்தான். கையில் வாரியணைத்து “அடடா அடியார் அமுது உண்ணும் பாக்கியம் பெற்றோம்” என்று மகிழ்ந்த தம்பதியர் வீட்டிற்குள் செல்ல அங்கு அடியாரோ அமுதோ காணாமல் மனம் மிகவும் நொந்தார். அமுதளிக்கும் பேறு இழந்தோமே எங்கு சென்றார் என்று துடித்த தம்பதியருக்கு வீட்டின் வெளியே பேரொளி புறப்பட்டதை கண்டனர். அம்பிகை சமேதராக ஈசன் முருகப்பெருமானுடன் காட்சியளிக்க பேருவகை அடைந்தவர்கள் நெடிது நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். அவர்களின் சிறந்த தொண்டால் மகிழ்ந்த இறைவன், தம்பதிகளுடன் அவர் மைந்தனையும், அவர்களுக்கு பெருந்துணையாய் இருந்த சந்தனத் தாதியையும் உடன் அழைத்து தமை விட்டு அகலாதபடி கைலாயப்பேறு அருளினார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய சுந்தரமூர்த்தி நாயனார் சிவ வழிபாட்டு முறையை பின்பற்றும் எவருக்கும் சுந்தரர் எனும் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றி தெரியாமல் இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆசிரியர், அரசன், தாய், மூத்தவர்கள் போன்ற உயர்ந்தோரை தமிழகராதியில் குரவர் எனக் குறிப்பிடுவதுண்டு. சமயக்குரவர்கள் என்று போற்றபடும் நால்வருள் ஒருவர் சுந்தரர் எனும் சுந்தரமூர்த்தி நாயனார். இவரது இயற்பெயர் நம்பியாரூரர். இசைஞானியார் சடையனார் எனும் திருத்தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரைப் பெற்ற பேற்றுக்கே இருவரும் நாயன்மார்களாக உயர்ந்ததை முன்னர் நினைவு கூர்ந்தோம். சுந்தரர் பெயருக்கேற்ப அகத்திலும் புறத்திலும் மிகுந்த அழகராக இருந்தார். அவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது அவரது அழகில் மனம் பறிகொடுத்த அரசர் நரசிங்கமுனையரையர் தாமே சுந்தரரை வளர்க்கப் பிரியப்பட்டு தம்பதிகளின் சம்மதம் பெற்று, பல கலைகளையும் கல்விகளையும் கற்பித்து சிறந்த முறையில் வளர்த்தார். சுந்தரருக்கு தகுந்த வயதாகும் போது, சடங்கவி சிவாச்சாரியாரின் புத்திரிக்கும் அவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தின் போது சிவனார் வயோதிக வேடத்தில் தோன்றி திருமணம் நடவாமல் தடுத்தாட்கொண்டார். சுந்தரர் பரம்பரையே தமக்கு அடிமைப்பட்டுள்ளதாக சான்றுரைத்து திருவெண்ணை நல்லூரின் திருவருட்டுறைக் கோவிலுள் சென்று அந்தர்தியானமானார். அசாரீரி ஒலித்து சுந்தரர் தமைப்பாடவே இப்பிறவி எடுத்ததை நினைவூட்டியது. பித்தன் எத்தன் என்றெல்லாம் வன்மையான சொற்களில் நிந்தனா-ஸ்துதி பாடியதில் உளம் மலர்ந்த இறையனார். சுந்தரரை ‘வன்றொண்டன்’ என்று அன்போடு அழைத்து, பித்தன் என்ற அழைத்த சொல்லையே முதலடியாக எடுத்துக்கொடுத்தார். அவர் பாடிய முதல் திருப்பதிகம் “பித்தா பிறைசூடி” என்றமைந்தது. பித்தா பிறைசூடி என்று அன்பொழுக நின்ற சுந்தரர், அதன் பிறகு பெம்மானை பாடுவதே பெரும் பணியாகக் கொண்டார். பற்பல சிவஸ்தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதும் பதிகம் பாடுவதுமே அவர் பிறவிப் பயனாகிப் போனது. இறைவன் மேல் “தோழமை” பூண்டு பக்தியில் நிறைந்திருந்தார். தோழனை உரிமையோடு பேசலாம், கேட்கலாம், செல்லமாக்க் கோபிக்கலாம், அன்பினால் கட்டுண்டிருக்கலாம் என என்னென்ன உணர்வுகளை நாம் தோழமையுடன் தொடர்பு படுத்துவோமோ, அது அத்தனையும் சிவனாரிடத்தில் சுந்தரர் கொண்டிருந்தார். நாவுக்கரசர் வழிபட்ட தலமான திருவதிகையை காலால் மிதிக்க கூனிக்குறுகி, ஊர் எல்லையில் இருக்கும் ஒரு மடத்தில் படுத்துறங்கும் போது, இறைவனே பிராமணன் வடிவில் மடத்தில் நுழைந்து, அவரது திருவடிகளை சிரசின் மீது வைத்ததாக வரலாறு. வந்தது இறைவனே என்றுணர்தவர் “தம்மானை அறியாத சாதியாருளரே” என்று பாடித் துதித்தார். காதலுக்கு இறைவனையா தூது அனுப்பவது? தூய்மை இருந்தால் எதுவும் சாத்தியமே, என்று உணர்த்துகிறது இறைவன் இவருக்காக பரவை நாச்சியாரிடமும் சங்கிலி நாச்சியாரிடமும் தூது போன நிகழ்வு. இருவரும் உமாதேவியாரின் தோழியராக இருக்கும் சமயத்தில் இறையனாரின் தொண்டரான ஆலால சுந்தரர் இருவரின் அழகில் மெய்மறக்க, தோழியர் இருவருமே சுந்தரரை கண்டு நாணி நின்றனர். அதன் பொருட்டே மூவருக்கும் பிறவி வாய்த்ததாக வரலாறு. . திருவாரூரில் வாழ் அடியவர்கெல்லாம் ‘தமது அடியவன் சுந்தரன் வருகிறான்’ என்று உணர்த்தியதும், பின் அசரீரியாக “உமக்குத் தோழரானோம்” என்றுரைத்தபடியால் சுந்தரரை “தம்பிரான்தோழர்” என்று குறிப்பிடுவதுண்டு. வேளாளராகிய குண்டையூர்கிழார் என்பவர் அனுதினமும் நெல்மணிகளை சுந்தரருக்கு சமர்பித்து வந்தார். பஞ்சம் வந்த போது நெல்வளம் குன்றி, நெல்மணிகளை அனுப்ப இயலாமல் போனதற்காக வருதும் போது, ஈசனே சுந்தரருக்கு நெல்மணிகளை தரும் பொருட்டு குண்டையூர் முழுவதிலும் நிரப்பி அருளினார். அந்த அதிசயத்தை கண்ட சுந்தரனார் “நீள நினைந் தடியே” என்று பதிகம் பாடி துதிக்க அன்றிரவே திருவாரூர் முழுதும் நெல்மணிகளை நிறைக்க கருணை மனம் கொண்டு அசரீரியாக அருளினார். சுந்தரரிடம் தோழமை பூண்ட சேரமான்பெருமான் பிரியமாகப் பொன்னும், மணியும் ரத்தினங்களையும் பரிசளித்தார். தமையன்றி எவரும் சுந்தரருக்கு இத்தனை சொத்துக்கள் அளிக்ககூடாது என சிவனார் கருதியதாலோ, என்னவோ வேடுவராக பூதகணங்களை அனுப்பி, பொக்கிஷங்களை களவாடச் செய்தார். வருந்திய சுந்தரர், “கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்” எனப் பதிகம் பாடி, பொருளை மீட்டார். கொங்கதேசத்தில் திருப்புக்கொளியூரில் பலகாலம் முன் முதலையின் பசிக்கு மகனை இழந்து வாடும் தம்பதியருக்கு, அருளும் நோக்கம் கொண்டு, மகனை இழந்த நீர்கரைக்குச் சென்று “உரைப்பா ருரையுகந் துகள்கவல்லார் தங்களுச்சியா” என்ற பதிகம் பாட முதலை வாயினின்று என்றோ மரணித்த மழலை, இழந்த பருவங்களின் வளர்ச்சியுடன் பாலகனாக மீண்டது கண்டு வானில் தேவரும் அமரரும் பூமாரிப் பொழிந்தனர். பலகாலம் சிவனையன்றி வெறோன்றும் அறியாது சிறப்புற வாழ்ந்து, சிவன் சன்னிதானத்தில் இப்புவி வாழ்வு போதுமென்று கசிந்துருகி, “தலைக்குத் தலைமாலை” என்ற திருப்பதிகம் பாடினார். சுந்தரன் இங்கு வருகிறான் என்று இறையனார் வெள்ளை யானையை அனுப்பி, சுந்தரரை அழைத்து வரச்செய்தார். இதையறிந்த அவரது உற்ற தோழரான சேரமான்பெருமாள் பஞ்சாட்சர மந்திரம் ஓதி, விரைந்து குதிரையில் ஏறி ஆகாயத்தில் விரையும் வெள்ளையானையுடன் இணைந்தார் திருக்கையிலாயம் அடைந்தார். சுந்தரர் ஆலால சுந்தரராக கையிலாயத்தில் திருத்தொண்டுகள் தொடர்ந்தார் என்பது நிகழ்வு. சுந்தரர் வாழ்வில் பாகமாகி சிவத்தோண்டு செய்த நாயன்மார்கள் பலர். கோட்புலி நாயனார் தமது பெண்களை தந்தருள, அப்பெண்களை புத்திரிகளாக்கிக் கொண்டதும், கலிக்காம நாயனார் இறைவனை தூது அனுப்பியதற்கு கோபித்து பின் உணர்ந்து நட்பாகியதும், சேரமான்பெருமானிடம் கொண்ட ஆழ்ந்த நட்பும், சுந்தரராலேயே நாயன்மார்களாக உயர்த்தப்பெற்ற தாய் தந்தையராகிய இசைஞானியார் மற்றும் சடையனாரும், வளர்த்த நரசிங்கமுனையரைய நாயனாரும், சுந்தரர் வாழ்வில் பங்குகொண்டு உயர்ந்தும் உயர்த்தியும் நின்ற நாயன்மார்கள். சுந்தரர் பாடிய ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு அற்புத நிகழ்வும், இறைவனின் தரிசனமும் கிட்டியதென்றால் அது மிகையல்ல. இறையனாருடன் அன்றாடம் அளவளாவி அவரை வாழ்வின் இணைபிரியா அங்கமாக்கி வாழ்ந்தார் என்றால் ஆலாலசுந்தரர் எனும் தொண்டரின் பெருமை சொல்லவும் தகுமோ! ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய செருத்துணை நாயனார் தஞ்சாவூர் மருகனாட்டில் பிறந்த சிவத்தொண்டர், உள்ளன்போடு சிவத்தை வழிபட்டு தொண்டுகள் புரிந்து வாழ்ந்திருந்தார். பல்லவ அரசரான கழற்சிங்கர் தனது பட்டத்து ராணியுடன் சுவாமி தரிசனம் செய்து சிவத்தோண்டுகள் புரிய திருவாரூர் கோவிலுக்கு வருகை தந்திருந்தார். சிவ பூஜைக்கென சேகரித்த மலர் விதிவசமாக கீழே விழுந்திருந்தது. அதை அறியாத அரசியார், கீழே விழுந்த மலரை எடுத்து அதன் எழிலிலும் நறுமணத்திலும் மனதைப் பறிகொடுத்து அதனை முகர்ந்தார். அதனை கண்டு சிவ அபராதம் நிகழ்ந்துவிட்டதென துடித்து அரசியாரின் மூக்கினை அரிந்துவிட்டார். சிவ அபராதம் பொறுகாத அபிரீமிதமான அன்பை இறைவன் பால் கொண்டிருந்து, மேலும் பல காலம் வாழ்ந்து சிவபதம் அடைந்தார். (பல்லவ அரசரான கழற்சிங்கரும் ஒரு நாயன்மார். இவரது வரலாற்றை முன்னமே நினைவுகூர்ந்தோம்) ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய சோமாசிமாற நாயனார் திருவம்பர் என்பது சோழப் பெருநாட்டிலுள்ள நல்லூர். இவ்வூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் சோமாசிமாற நாயனார். சிவமந்திரத்தை அன்போடு ஓதி வெள்விகள் யாகங்கள் வளர்த்து ஈசனிடம் மிகுந்த அன்புகொண்டொழுகினார். மந்திர ஜபங்கள், நித்திய வழிபாடுகளை குற்றமற்று நேர்த்தியாக்ச் செய்து, நல்வாழ்வு வாழ்ந்திருந்தார். எக்குலமாயினும், எக்குணம் கொண்டிருந்தாலும், சிவனடியார்கள் என்று இறைவன் பெயரை அன்புடன் ஓதுவார்க்க்கு திருவமுது செய்வித்து பணிந்தார். புகழின் மயக்கத்தில் வீழாமல் பயனெதுவும் கருதாமல் கர்மயோகம் செய்து காமம் க்ரோதம் முதலிய குணங்களை விட்டொழித்தவராய் விளங்கினார்.  சோமாசிமாற நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவடிகளை பக்தியுடன் பணிந்து அதனால் மேலும் சிறப்புற்று, ஈடு இணையில்லா சிவபதம் அடைந்தார்.  ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய தண்டியடிகள் திருவாரூரின் பெருமைக்கு இன்னொரு மணிமகுடம் தண்டியடிகளின் பிறப்பு. பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர், சிவனை அகக் கண்களைக் கொண்டு தரிசித்து பூஜித்து வரலானார். சதா பஞ்சாட்சரம் ஓதி திருவாரூர் பேராலயத்தில் குடி கொண்ட தியாகராஜரை வலம் வந்து இடையறாது பக்தி செய்து வந்தார்.  திருவாலையத்தின் மேற்கு திசையில் குளத்தங்கரை எங்கும் சமணர்களின் ஆட்சி பெருகி வந்தது. மடங்கள் கட்டிக்கொண்டும் தமது கொள்கைகளை பரப்பிக்கொண்டும் இருந்தமையால், ஆலய திருக் குளமருகே பெருகி வரும் சமணர்கள் ஆதிக்கம் கண்டு அஞ்சி, தம்மாலான திருத்தொண்டு புரிவதற்கு கமலாலய திருக்குளத்தை மேலும் தூர் வாறி, அதன் ஆழம் பரப்பளவை முன் போல் பெரிதாக்க திருவுள்ளம் கொண்டார் நாயன்மார். கண்பார்வையற்ற நாயன்மார், குளத்தின் மேட்டில் ஒரு தறி நட்டு, நடுக்குளத்தில் இன்னொரு தறி நட்டு, இரண்டையும் கயிற்றில் இணைத்து, மண்வெட்டியால் மண்ணை வாறி, கயிற்றின் உதவியுடன் கூடையில் சுமந்து சுமந்து மேலேற்றி கொட்டி சீரமைக்கும் பணியினை தனியொருவராக செய்து கொண்டிருந்தார். இதனை கண்ணுற்ற சமணர்கள், மண்வெட்டியால் தோண்டுவதால் அங்கு உயிர்வாழும் சிறு உயிரினங்கள் இன்னலுக்கு உட்பட்டு இறந்து போகும் என்று அறிவுறுத்தினர். சிவத்தொண்டின் அருமை உங்களுக்கு விளங்காது என்று மறுத்துக்கூறி தண்டியடிகள் பணியைத் தொடர்ந்தார். . ‘மந்த புத்தியுடன் கூடிய நீ கண்ணற்றவன், அதனுடன் காதும் கேளாமல் போனதோ’ என்று இடித்துரைத்து கேலி செய்தனர். மனம் வருந்திய நாயன்மார், சிவனாரின் திருவடியன்றி எதனையும் நான் காணேன். அவர் திரு நாமத்தை காதால் கேட்கிறேன். என் ஐம்பொறிகளாலும் அவரையே துதிக்கிறேன் அவர் அருளால் என் கண்கள் ஒளிமிகுந்து, உங்களுக்கு கண் அற்று போனால் என்ன செய்வீர்கள் என்று வினவினார். அவ்வாறு நேர்ந்தால் தாங்கள் திருவாரூரை விட்டு அகலுவதாக உரைத்த சமணர்கள் அவரது மண்வெட்டி கயிற்றை பிடுங்கிக்கொண்டு அவர் செய்யும் தொண்டிற்கு ஊறு விளைவித்தனர்.  பெரும் வருத்தம் கொண்டு திருக்கோவிலை நாடி, இறைவனிடம் முறையிட்டார். இரவு கனவில் காட்சி தந்தருளிய பெருமானார், தண்டியடிகளுக்கு பார்வை அருளி, அவரது தொண்டிற்கு துணை நிற்பதாக திருவாய்மொழிந்து மறைந்தார். அன்றிரவே சோழமன்னர் கனவிலும் தோன்றி, தண்டியடிகளுக்கு துணை நின்று நியாயம் வழங்குமாறு கூறி மறைந்தார்.  ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற ஆவன செய்த மன்னன், தண்டியடிகளையும் சமணர்களையும் அழைத்து நடந்ததை இருசாராரும் சொல்லக் கேட்டறிந்தார். சமணர்கள் சபதத்தில் தாங்கள் தோற்றால் ஊரை விட்டு அகலுவதாக மீண்டும் உறுதி செய்தனர். சிவபக்தரான தண்டியடிகள் பஞ்சாட்சர மந்திரம் ஓதி, திருக்குளத்தில் மூழ்கி எழுந்தார். ஒள்வீசும் கண்கள் பெற்றவராய் கோபுரத்தை வணங்கி அன்பின் பேருக்கால் கண்ணீர் மல்க இறைவனை துதித்தேற்றினார். சமணர்கள் கண்கள் இழந்தவர்களாக அரசாணையை ஏற்று அனைவரும் ஊரை விட்டு விலகினர். தண்டியடிகள் மன்னர் பேராதரவுடன், திருக்குளத்தை கட்டி முடித்து மேலும் பல தொண்டுகள் புரிந்து பல காலம் சிறப்புற்று வாழ்ந்து பொன்னார் மேனியன் திருவடி நிழலில் நற்கதி அடைந்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் வண்ணார் மரபில் பிறந்த திருக்குறிப்புத் தொண்டர் வரலாறு, எளிமையின் மூலம் எட்டாத உயரத்தை எட்டலாம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. சிவனடியார்கள் உள்ளத்து திருக்குறிப்பை உணர்ந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்ததால், இவர் ‘திருக்குறிப்புத் தொண்டர்’ என்ற சிறப்புப் பெயர் உடையவரானார். அடியார்களின் துணிகளை வெளுத்துக் கொடுப்பதன் மூலம் ஜீவாத்மாவிடம் மண்டிக் கிடக்கும் மூன்று விதமான (ஆணவம் கன்மம் மாயை) கறைகள் தூய்மை ஆகுமெனக் கருதினார். அவர் செய்த தொண்டின் மூலம் அவரது முக்குண குப்பைகள் அகல, மிகுந்த தூய்மையும் பக்தியும் பெற்று விளங்கினார். இவரது பெருமையை உலகிற்கு உணர்த்த திருவுள்ளம் பூண்டான் இறைவன். நலிந்த சிவனடியாராக அழுக்கு படிந்த கந்தலைக் உடுத்திக்கொண்டு அடியவர் முன் எழுந்தருளினார். நாயன்மார் மிகுந்த பணிவன்புடன் சிவனடியாரின் துணியை தான் துவைத்து உலர்த்திக் கொடுக்கும் திருத்தொண்டு புரிவதற்கு அருளும்படி வேண்டினார். அடியவராக வந்திருந்த ஆண்டவனோ, தாம் குளிர் பொறுப்பது கடினம், அதனால் மாலைக்குள் துணிகள் திரும்ப கிடைக்க வேண்டுமென உறுதி செய்து கொண்டு, தமது ஆடைகளை நாயன்மாரிடம் கொடுத்துச் சென்றார். குளத்தில் துவைத்து அழுக்கு போக்கி காய வைத்து தருவதற்கு முனையும் போது பெருமழை பெய்யத் துவங்கி, நிற்காமல் தொடர்ந்தது. மாலை நெருங்கும் வேளையிலும் மழை தொடர்ந்து நீடித்ததால் தம்மால் துணியை காய வைக்க இயலவில்லையே என்று துடித்துப்போனார். குளிர் தாங்காமல் அடியவர் வந்து உடுத்திய துணி கேட்டால் யாது செய்வேன், என் பணியில் குறையும் நேர்ந்ததே என்று வருந்தினார். மழை நிற்கும் அறிகுறியும் இல்லாது விடாமல் பெய்தது. குளிரால் நடுங்கும் அடியவர்க்கு சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் கொடுஞ்செயல் புரிந்தேன் என்று வருத்தம் மிகுந்து சலவைக்கல்லில் தலையை மோதி உயிர் விட எத்தனித்தார். தக்க நேரத்தில் கல்லிலிருந்து எம்பெருமான் திருக்கை எழுந்து அவரை தாங்கிக் கொண்டது, விடாது பெய்த மழை நீங்கி, மலர் மழை பொழிந்து அடியவரை ஆட்கொண்டது. உமையம்மையுடன் காட்சி தந்த பெருமான், அடியவர் புகழை உலகறியச் செய்தற் பொருட்டு திருவிளையாடல் புரிந்ததை உணர்த்தி, அவருக்கு திருக்கைலாயப் பதவி அளித்தார். -cॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய திருஞானசம்பந்தர் பிறவிப் பெருங்கடலில் மெல்ல மெல்ல மேலெழுந்து, இறைவன் பால் அன்புகொண்டொழுகி, படிப்படியாக பக்தி செய்து உயர்ந்தோர் பலர். மானுடன் உய்ய கருணை கொண்டு, பூமியில் அவதரித்து, தர்மம் பக்தி போன்ற நற்குணங்களை வேறூன்ற செய்து வழிகாட்டியாக தோன்றுபவர்களோ இறைவனின் அம்சம். நால்வர்கள் என்று போற்றப்படும் சமயக்குரவர்கள் உயர்பிறப்புக்கள். தெய்வாம்சம் பொருந்தியவர்கள். ஞானசம்பந்தரை முருகனின் திருவம்சமாக வள்ளலார், அருணகிரி நாதர் முதலியவர்கள் கருதுகின்றனர். முருகப்பெருமான் பிஞ்சுபாதம் புவியிற் பட்டதால், நிலமகளும் மகிழ்ந்தார். ஏழாம் நூற்றாண்டு சீர்காழியில் அந்தணர் வழித் தோன்றலாக சம்பந்தர் அவதரித்தார். மூன்று வயதாகும் பொழுதே அன்னை அபிராமி பிள்ளைக்கு பாலூட்டியுள்ளது இவரே முருகன் என்ற கருத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையாக அமைந்தது. சிறு பிள்ளையை கரையில் அமர்த்து விட்டு குளிக்கச் சென்ற பெற்றோரைக் காணாமல் அழுத குழந்தைக்கு உமையவள் காட்சி தந்து ஞானப்பாலூட்டினாள். கரையேறி வந்த பெற்றோர் பிள்ளையின் வாயினின்று பால் வடிவதை கண்டு வெகுண்டு யாதென்று வினவ, உடனே குழந்தை சம்பந்தர் இறைவனின் சன்னிதியை சுட்டிக்காட்டி, “தோடுடைய செவியன்” என்ற முதல் தேவாரத்தை அப்பொழுதே மழலை மொழியில் அருளினார் என்பது வரலாறு.  மறு நாள் ஈசன் நினைவு மாறாத பாலகனாக திருக்கோலக்கா எனும் தலத்தில் தமது கைகளை தாளம் தப்பாமல் தட்டி இசைத்து பதிகம் பாடியதை கேட்டுருகிய பரமன் சிறு பாலகனின் பிஞ்சுக் கைகள் நோகுமே என்று நமச்சிவ என பொறிக்கப்பெற்ற பொற்றாளத்தை அளித்தருளினார். (குறிப்பு: பொற்றாளம் என்பது தாளமிட உபயோகிக்கும் இசைக்கருவி)  பல திருத்தலங்களை தரிசித்து வந்த பிஞ்சு கால்கள் நோகாமல் இருக்க, அவருக்கு களைப்பின் சுவடு தெரியாமல் இருக்க, அரத்துறையில் இருக்கும் ஈசன், அங்குள்ள அந்தணர்கள் கனவில் தோன்றி முத்துப்பல்லக்கு, முத்துக்குடை, சின்னம் முதலியவை தந்தருளியிருப்பதைக் கூறி, அவற்றை சம்பந்தருக்கு அளிக்குமாறு திருவாக்கு மலர்ந்தார். அவ்வாறே சம்பந்தர் கனவிலும் தோன்றி அதனை பெற்றுக்கொள்ளுமாறு பணித்தார். இறைவனின் கருணையை எண்ணி “எந்தை ஈசன் எம்பெருமான்” என்ற பதிகம் பாடி, இறைவன் நாமம் ஓதி, வணங்கி அதனை ஏற்றதாக வரலாறு. . ஏழு வயதாகும் போது உபநயனம் செய்வித்து அந்தணர்கள் வேதம் நான்கினை ஓத, இவையனைத்தையும் ஓதாமலே் உணர்ந்த சம்பந்தர் அவர்களுக்கு வேதத்தின் சாரம், பொருள் உணர்த்தி அவர்கள் ஐயங்கள் தீர்த்து வைத்து, ஐந்தெழுத்தின் பெருமையை உணர்த்தினார்.  ஞானசம்பந்தர் பெருமையை கேள்வியுற்ற திருநாவுக்கரசர் அவரை காணும் பொருட்டு சீர்காழி வருவதை அறிந்த சம்பந்தர், நாவுக்கரசரை எதிர் கொண்டு அழைத்து, அன்பின் மிகுதியாலும், மரியாதையாலும் “அப்பர்” என்று உரையாடி மகிழ்ந்தார். அப்பரும் சம்பந்தருமாக பல திருத்தலங்கள் சென்று பதிகம் பாடினர். யாத்திரையின் போது திருமறைக்காட்டின் (வேதாரண்யம்) அருகே ஆலயக் கதவுகள் திறக்கப்படாதிருக்க, அக்கதவு திறக்க அப்பர் பல பாடல்கள் பாடி, எம்பெருமான் அப்பாடல்களில் மெய்மறந்து இறுதியில் கதவு திறந்தருளினார். தரிசனத்திற்கு ஏதுவாக இனி கதவு திறந்து மூட லகுவாகும்படி சம்பந்தர் ஒரே பதிகம் பாடியதும் கதவு மூடிக்கொண்டது. இதனை எண்ணி அப்பர், இத்தனை திருவருள் நிறைய தான் எத்துணை தவமிருக்க வேண்டுமென்று எண்ணிக் சம்பந்தரை மேலும் கொண்டாடினர். திருவாய்மூர் எனும் இடத்தில் தமது ஆடல் காட்சியை க்ஷணத்தில் சம்பந்தருக்கு காட்டியருளிய இறைவன், “தளிரென வளரென” என்று சம்பந்தர் பதிகம் பாடிய பின்னர், அப்பருக்கும் அக்காட்சி அருளினார். பட்டீஸ்வரம் அருகே சம்பந்தர் யாத்திரை சென்ற போது வெயிற் மிகுதியால் வாட நேரிடுமே என்று இறைவன் சிவ பூதங்களை வானத்தினின்று முத்துபந்தல் சுமந்து நிழல் கொடுக்க ஆணாய்யிட்ட்தாக வரலாறு. இறைவன் கருணையைவணங்கி “பாடல் மறை” என்ற பதிகம் பாடினார். . பதினாறு வயதாகிய சம்பந்தருக்கு மணம் பேசி நிச்சயித்தனர். நம்பியாண்டார் என்பவரின் மகளை திருமணம் செய்த பின், (கல்வெட்டு தகவலின்படி ஞானசம்பந்தர் மனைவியின் பெயர் சொக்கியார் எனத் தெரிகிறது) வினைக்கு வித்திடும் இல்லறம் எமை சூழ்ந்து கொண்டது, இனி இவளுடன் சிவன் தாளே வந்தடைவேன் என்று நினைந்து “கல்லூர் பெருமணம் வேண்டா” என்று பதிகம் பாட, இறைவன் அசரீரியாய் புறப்பட்டு வரும்படி அருளினார். பரவச மிகுதியில் “காதலாகி கசிந்து” என்ற பதிகம் பாடியவுடன் லிங்கத்தின் முன் ஜொதிப்பிழம்பு தொன்றி அதன் வழியே வாசல் தோன்றியது. திருவாசல் வழியே தமது மனைவியுடன், திருமணம் காண வந்தோர் அனைவருடனும் அஜ்ஜோதியில் கலந்து இறைவன் திருவிடம் அடைந்தார்.  ஞானசம்பந்தர் அப்பருடன் சிவஸ்தலங்களை தரிசித்து பதிகங்கள் பாடி மகிழ்ந்திருந்த காலங்களில் திருவாரூரில் இருக்கும் திருவீழிமிழலை எனும் ஊருக்கு இருவரும் எழுந்தருளி இருந்த போது அங்கு பஞ்சம் ஏற்பட்டு பயிர் செழிக்காமல் உணவின்றி தவிக்கும் நிலை அங்கிருந்த மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. இதைக் கண்டு அப்பரும் சம்பந்தரும் மிக வருந்தி செய்வது யாது என்று சிந்தித்திருக்கும் போது இருவர் கனவிலும் சிவபெருமான் தோன்றி இருவருக்கும் படிக்காசு அருள்வதாக கூறி மறைந்தார். கிழக்கு மேற்கு பலிபீடங்களில் படிக்காசு இருவரும் பெற்று அவரவர் மடங்களில் மக்களுக்கு அமுதளித்து தொண்டு புரிந்தனர். இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில், அப்பர் மடத்தில் நேரத்தே உணவிட்டு வருவதும், தமது மடத்தில் உணவு தயாராக சற்றே தாமதம் ஆகுவதை கண்ட சம்பந்தர், காரணம் வினவினார். மெய்வருத்தி உழவாரப் பணி செய்து வரும் அப்பருக்கு உயர்ந்த குற்றமற்ற காசு கிடைப்பதால் விரைவில் உணவுப் பொருள் பெற்று அமுதளிக்க முடிகிறது. தமக்கு அளிக்கபடும் காசு குற்றமற்றதா என்று சோதித்த பின்னரே பொருள் பெற முடிவதை உணர்ந்தார். “வாசிதீரவே காசு நல்குவீர்” என்று இறைவனை நோக்கி இறைஞ்சி குற்றமற்ற படிக்காசு பெற்று அமுதளித்ததும் அற்புத வரலாறு. பின்னர் இறையருளால் சில தினங்களில் பெருமழை பெய்து பஞ்சம் தீர்ந்து மக்கள் சுகித்தனர். சமண மதம் அவர்களுக்குறிய நெறிமுறைகளை பரப்பி ஆங்காங்கே சமணப் பள்ளிகள் நிறுவி சைவ மதத்திற்கு பெரும் சவாலாக இருந்த காலகட்டம். மதுரையை ஆண்ட மன்னன் பாண்டியன் (கூன்பாண்டியன்) சமணத்தை தழுவியிருந்த போதும் அவரது அமைச்சரான குலச்சிறை நாயனாரும் (இவரது வரலாற்றை முன்னமே நினைந்தோம்) மதுரை மன்னரின் மனைவியாரும் அறுபத்திமூவரில் ஒருவரான மங்கையர்கரசியாரும் சைவ மதத்தை நிலை நாட்ட பாடுபட்டு வந்தனர். சம்பந்தரை பாண்டி நாட்டிற்கு வர அழைப்பு விடுத்தனர். அவருடன் இருந்த அப்பர், நாளும் கோளும் நன்றாக இல்லை, பின்னர் செல்லலாமே என்று விண்ணப்பம் செய்ய, இறைவன் துணையிருந்தால் நாளும் கோளும் ( நவகிரஹ சஞ்சாரங்கள்) என் செய்யும் என்றுணர்த்த “வேயுறு தோளி பங்கன்” என்ற கோளறு திருப்பதிகத்தை பாடியருளினார். அப்பரை வேறு தலங்களுக்கு யாத்திரை செய்ய பணித்து விட்டு, மதுரைக்கு பயணமானார். மதுரை செல்லும் வழியின் எல்லையாக விளங்கும் திருபுவனம் அருகை வைகை ஆற்றை கடக்க முயல, அங்கு ஆற்று மணலெல்லாம் சிவலிங்கமாகவே சம்பந்தருக்கு தென்பட்டது. கால் வைக்க முடியாமல் திகைத்து, பதிகம் பாடியவுடன், சிவனார் நந்தியை சாய்ந்து நின்று வழிவிடச்சொல்லி அங்கிருந்தே சம்பந்தருக்கு காட்சி தந்தார். திருப்புவனக் கோவிலில் நந்தி சாய்ந்திருப்பதை இன்றும் காணலாம்.  சமணர்கள் சம்பந்தர் மடத்திற்கு தீ வைத்ததை அறிந்து இறைவனை நோக்கி பதிகம் பாடியதும், இக்கொடுஞ்செயலுக்கு காரணமான மன்னரை வெப்பு நோய் தாக்கியது. பின்னர், சம்பந்தரை பணிந்த மன்னனின் நோயை “மந்திரமாவது நீறு” என்று பதிகம் பாடி நீறு கொண்டு நீக்கியருளினார். சமணர்களுடன் அடுத்து தொடர்ந்த அனல் வாதத்திலும் (மதக்கோட்பாடுகளை எழுதி தீயில் இட்டுசோதிக்க, சைவ மத கோட்பாடுகள் எரியாதிருக்க, சமணர்கள் ஏடுகள் எரிந்து சாம்பலாயின) , புனல் வாதத்திலும் (மதவழிமுறைகளை ஏட்டில் எழுதி ஆற்றில் விட்டாலும் நீரோட்டததை எதிர்த்து சைவ மத ஏடு நின்றது, சமணர்களின் ஏடு ஆற்றோடு வெள்ளத்தில் ஓடியது) வென்றார். பாண்டிய மன்னனின் கூனை நீக்கி, நின்றசீர் நெடுமாறனாக்கி அருளினார்.  புத்தமத பிரசாரங்களும் ஓங்கியிருந்த காலங்கள். அவர்களில் பலரை வென்று அனைவரும் சைவம் தழுவுதற்கு காரணமானார். தமது தந்தை வேள்வி செய்வதற்குப் பொருள் வேண்ட, இறைவனருளால் பொற்கிழி கிடைக்கப்பெற்றார். எடுக்க எடுக்க குறையாத உலவாக்கிழியாக இறைவன் அளித்து அருள, அதனைக் கொண்டு வேள்விகள் பல செய்து, தொண்டாற்றினார். கணவனை இழந்து கதறிய நங்கைக்கு “சடையாய் எனுமால்” என்று பாடி, அவள் கணவனை உயிர் பெறச்செய்தார். அதே போல் திருமயிலாப்பூரில் வாழ்ந்த செட்டியாரின் மகள் பூம்பாவை நாகம் தீண்டி மரணம் அடைந்தாள். அப்பெண்ணின் உடல் எலும்புகளை குடத்திலிட்டு சம்பந்தரிடம் சமர்பிக்க, அவளை உயிர்பித்து தமது மகளாக்கிக் கொண்டார் சம்பந்தர். முயலகன் என்ற நோயில் அவதியுற்று உணர்வற்றிருந்த குறுநில மன்னரது மகளை உணர்வு பேறச்செய்து அருளினார்.  கொள்ளம்புதூர் இறைவனை வழிபட மறுகரைக்கு செல்ல வேண்டியிருந்தது. வெள்ள மிகுதியால் ஓடங்களை படகோட்டிகள் செலுத்தாத போதும், “கொட்டமே கமழும்” என்ற திருப்பதிகம் பாட, ஓடம் சம்பந்தர் பெருமானையும் அவரது அடியார்களையும் தானே அக்கரைக்கு அழைத்துச் சென்றது.  ஒவ்வொரு பதிகத்திற்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து அடுக்கிக் கொண்டே போகலாம். மூன்று வயது பாலகனுக்கு அன்னையே மனமுவந்து அமுதளித்தாளென்றால், வந்திருந்தது அழகன் முருகன் என்றால், இதுவெல்லாம் நிகழ்ந்தது எதுவும் ஆச்சரியபடுவதற்கு இல்லை, அல்லவா!  ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய திருநாவுக்கரசர் (அப்பர்) கடலூர் மாவட்டத்தில் மருள்-நீக்கி என்ற இயற்பெயருடன் விளங்கிய நாவுக்கரசர், முதலில் சமண மதத்தைத் தழுவியிருந்தார். அதுமட்டுமின்றி சமண மதத் தலைவராகவும் இருந்து தருமசேனர் என்று அழைக்கப்பட்டார். பௌத்தர்களை வாதத்தில் வென்று சமணமதப் பெருமைகளை நிலை நாட்டினார். இவரது தமக்கையார் இறைவனிடம் இறைஞ்சி சைவத்தின் பெருமையை தம்பியாருக்கு விளங்க வைக்குமாறு வேண்ட, சூலை நோய் தாக்கி அவதியுற்றார். சமண மடங்களிலும் அதன் தலைவர்களாலும் கொடுக்கபப்ட்ட சிகிச்சைகள் பலனின்றி போனதால், சிவனை வழிபடுவதால் நோய் தீரும் என்ற தமக்கையின் வாக்கை ஏற்று துதிபாடல் பாடி, நோய் தீர்க்கப்பெற்றார். இன்னிசையால் பதிகம் பாடி இறைவனை தொழுததால் நாவுக்கரசர் என்று ஈசன் அசரீரியாக திருநாமம் சூட்டினார். சமண மதத்தை துறந்த தருமசேனர் என்ற நாவுக்கரசரை கொடுந்தண்டனைக்கு ஆளாக்க சமண குருமார்களும் அவர்களது அரசரும் முனைந்தனர். “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” எனப் பாடி அவர்களுடன் செல்ல மறுத்தார். வற்புறுத்தி அழைத்துச் சென்ற சமணர்கள், நாவுக்கரசருக்கு தண்டனை வழங்க பல்லவ அரசனுக்கு பரிந்துரைத்தனர். ஏழு நாட்கள் சுண்ணாம்பு காளவாயில் அடைத்து வைக்கப் பட்டார். இறைவன் அருளால் அது குளிர்ந்து வசந்தம் வீச, “மாசில் வீணையும் மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே” என்று பாடியபடி மகிழ்ந்திருந்தார். தண்டனை பலிக்காமல் போனதால் ஆத்திரம் அடைந்த சமணர்கள், கொடிய நஞ்சினை புகட்டி நாவுக்கரசரை வீழ்த்த எண்ணினர். அதனாலும் தீது அண்டாமல் பட்டொளி வீசி உயிர்த்தார். அதன் பின்பு யானையை இடறச் செய்த போதும், யானை அவரை தலை வணங்கிச் சென்றது. மேலும் கொடுஞ் செயல் புரியத் துணிந்து, கல்லில் அவரைப் பிணைத்து நடுக் கடலில் எறிந்தனர். “கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” என்று பதிகம் பாட, பிணைத்த கல்லின் மேல் மிதந்தபடி கரை சேர்ந்தார். மகேந்திரபல்லவ மன்னனும் பெருங்குற்றம் புரிந்ததை உணர்ந்து நாவுக்கரசரை பணிந்து சைவம் தழுவி பின்னாளில் சமணப் பள்ளிகளை ஒழித்து கோவில்கள் கட்டியதாக வரலாறு. சமண மதத்தை போற்றியிருந்த உடலுடன் உயிர் வாழ விருப்பமில்லை, உயிர் தரிக்க வேண்டுமென்றால் சிவ அடையாளங்கள் தம் உடம்பில் பொறிக்கப்பட வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பிக்க, அவரது தோள்களில் சூலமும், ரிஷபமும் பூதகணங்கள் பொறித்தனர். விண்ணவர் மலர் மாரிப் பொழிந்தனர். சைவ சமயத்தின் பெருமையை பற்பல திருத்தலங்கள் தரிசித்து பதிகம் பாடிப் போற்றினார். நால்வருள் ஒருவரான சம்பந்தரின் சமகாலத்தவர். இவர் பேரில் அன்பு கொண்ட சம்பந்தர் இவரை அப்பர் (மரியாதை) என்று அழைத்து பெருமை படுத்தினார். இருவரும் அரும்பல க்ஷேத்திரங்கள் தரிசித்து பாடல்கள் பாடி வழிபட்டனர். சம்பந்தருடன் சேர்ந்து இறைவனிடம் படிக்காசு பெற்று பக்தர்களுக்கு உணவளித்ததும், திருக்கதவு திறக்க பாடியதும், இரு பெரும் தொண்டர்களும் இணைந்து செய்த அற்புத நிகழ்வுகள். ஒரு சமயம் சமணர்கள், கோவில் விமானம் ஒன்றினை, தங்களுடையது என்று பொய்யுரைத்து, சிவலிங்கத்தை மறைத்து, அக்கோவிலை தமதாக்கிக் கொண்டிருந்தனர். அந்தக் கோவிலைத் தொழாது அமுதுண்ணோம் என்று பட்டினி கிடந்தார் அப்பர். உடன் இறைவன் சோழமன்னர் கனவில் தோன்றி அப்பருக்கு உதவ ஆணையிட்டதனால், மறைத்து வைக்கபட்டிருந்த சிவலிங்கம் வெளிப்பட்டது, சமணர்களை அங்கிருந்து விரட்டி, திருக்கோவிலை மீண்டும் புதுப்பித்தார் சோழமன்னர். இத்தனை உயர்ந்த பக்தருக்கு அருந்தொண்டர் ஒருவர் இருந்தார். அவர் தான் அப்பூதி அடிகள் (இவர் வரலாற்றை நாம் ஏற்கனவே நினைவு கூர்ந்தோம்). நாவுக்கரசர் பெயரில் நலத்திட்டங்கள் ஏற்பாடு செய்து தொண்டாற்றி வந்தார். திங்களூருக்கு தலயாத்திரை சென்ற அப்பர் தமது பெயரில் தருமம் செய்து வரும் அப்பூதி அடிகளைப் பற்றி கேள்வியுற்றார். தொண்டரின் வீட்டை அடைந்த நாவுக்கரசரை, அப்பூதிஅடிகள் பெரும் மரியாதையுடன் வரவேற்பளித்து அமுதுண்ண விண்ணப்பம் செய்தார். வாழையிலை பறித்து வரச் சென்ற அப்பூதி அடிகள் மகனை அரவு தீண்டி மரணம் தழுவ நேர்ந்த போது, இறைவனை நோக்கி பதிகம் பாடி அவனருளால் நஞ்சினை அகற்றி பாலகனை உயிர்பித்தார். . அய்யனைக் காண திருக்கையிலாயம் செல்லும் திட்டம் கொண்டு புறப்பட்ட அப்பருக்கு உடல் வருந்தியதால் கால்கள் துவண்டு இடம் கொடுக்க மறுத்தன. கைகளால் தோள்களால் உந்திச் சென்றார். அதுவும் வலுவிழக்கவே மார்பால் முன்னே முனைந்தார். உடல் முழுக்க புண்ணாகின. இறைவன் அசரீரியாக அருளி, உடலின் வருத்தம் நீக்கி, அங்கு தடாகத்தை உண்டு பண்ணினார். அத்தடாகத்தில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள தடாகத்தில் எழுமாறு அருளினார். உலகெலாம் வியக்க காசியருகே மூழ்கி திருவையாற்றில் எழுந்து அங்கு ஞானக்கண் கொண்டு திருக்கையிலாய தரிசனம் பெற்றார். பற்பல ஆண்டுகள் தொடருந்து பாமாலைகளால் இறைவனைப் பாடி, உழவாரப்பணிகள் செய்து (திருவாலயங்களை தூய்மை படுத்தும் தொண்டு) வந்தமையால் ‘உழவாரத் தொண்டர்’ என்று அன்போடு அழைக்கப் பெற்றார். அப்பரின் பற்றற்ற பெருமை உலகம் உணர, உழவாரப்பணி செய்யும் இடங்களில் பொன்னும் மணியும் இறைவன் கிடைக்கப் பெறச் செய்தான். அப்பரோ தூய்மை செய்து ஏனைய கற்களுடன் அவற்றையும் எறிந்தார். அழகிய ரம்பைகளின் அழகிலும் அவர்கள் ஆடல்களின் மயக்கத்திற்கும் ஆட்படாமல், உம்மால் எனக்கு ஆகப்பெறுவது ஒன்றுமில்லை" என்ற கருத்துணர்த்தி “பொய்மாயப் பெருங்கடலில்” என்ற பாடல் பாட அவர்களும் அப்பரை வணங்கிச் சென்றனர். நிறைவாழ்வு வாழ்ந்த அப்பர், இறைபக்தியில் திளைத்து பின்னர் அவனடி சேர்ந்து இன்புற்றார். கைலாயத்தில் தவமியற்றியிருந்த வாகீச-முனிவர் நந்திதேவனால் சபிக்கப்பட்டதால் திருநாவுக்கரசராக புவிமீது பிறந்தருளினார் என்று குறிப்பு. ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய நந்தனார் (திருநாளைப் போவார் நாயனார்) நினைவு தெரிந்த நாள் முதல் சிவ சிந்தனையில் தவமியற்றியவரின் சரித்திரமே நந்தனார் சரித்திரம். ஆதனூர் எனும் ஊரில் புலையர் என்றழைக்கப்படும் பிற்படுத்த வகுப்பினராக அந்நாட்களில் வரையறுக்கப்பட்ட குலத்தில் பிறந்தார். அக்குலத்திற்கென கோட்பாடுகளை அக்கால வழக்கப்படி கடைபிடித்து வந்தார். ஆலயத்துள் சென்று வழிபட இயலாவிட்டாலும், வெளியிலிருந்து வழிபட்டு ஆடிப்பாடி மகிழ்வார். பக்திப் பெருக்கினால், கோவில் பேரிகைகளுக்கு விசிவார், போர்வைத்தோல் முதலியனவும், அர்ச்சனைக்கு கோரோசனையும் வழங்கி வந்தார். திருப்புன்கூருக்கு சென்று இறைவனை தரிசிக்க எண்ணினார். தம்மால் உள் நுழைய முடியவில்லை என்றாலும் நேரில் இறைவனை தரிசிக்க ஆசை கொண்டார். இதனை அறிந்த பெருமானார், நந்தியை விலகச் செய்து நேரே தரிசனம் அளித்து அருளினார். இன்பம் கரைபுரண்டு ஆடிப்பாடி மகிழ்ந்த நாயன்மார் அங்கு குளம் தோண்டி தொண்டு செய்தார். பல ஊர்களில் பெருந்தோண்டுகள் செய்து வந்தார். இப்படியிருக்குங்கால் தில்லை அம்பலவாணனை தரிசிக்கும் ஆவல் மிகுந்தது. தில்லையின் பெருமையை நினைத்தும் தம் குலப்பிறப்பை நினைத்தும் மறுகி, தயங்கி பின் போகாமல் நின்று விடுவார். மீண்டும் ஆவல் எழும் போதெல்லாம் “நாளைப் போவேன்” என்று சமாதானப்படுத்திக் கொள்வார். (இக்காரணத்தால் பின்னாட்களில் “திருநாளைப் போவார்” என்ற திருப்பெயரால் அன்போடு பேசப்பட்டார்). துணிவு கொள்ளாமல் தயங்கியபடியே நாட்களைக் கடத்தியவர், ஒரு நாள், துணிந்து தில்லையின் எல்லைவரை சென்று விட்டார். எல்லையில் தங்கி அங்கு எழும் ஹோமப் புகைகள், யாக மண்டபங்களைக் கண்டார். வேத மொழிகளை இனிது கேட்டார். உள்ளே செல்லுதற்கு அஞ்சி எல்லையில் நின்று விட்டார். கைதொழுதும் தில்லையம்பதியை வலம் வந்து ஆடிப் பாடி நின்றவர், உள்ளே செல்லுதற்கு மிகுந்த அச்சம் கொண்டவராக வருத்தம் மேலிட துயில் கொண்டிருக்கையில், இறைவன் இவர் வருத்தம் போக்க திருவுள்ளம் கொண்டார். நந்தனாரின் கனவில் தோன்றிய ஈசன், “இப்பிறப்பின் கருமம் கழிய வேள்வித் தீயில் புகுந்தெழுந்து முப்புரி நூலணிந்து திகழ்வாய்” என்று திருவாய் மலர்ந்தார். அதே சமயத்தில் அங்குள்ள அந்தணர்கள் கனவில் தோன்றி வெள்வித்தீ மூட்ட ஆணையிட்டு மறைந்தார். விழித்தெழுந்து அந்தணர்கள் நந்தனாரை தேடியடைந்து, ஆலயம் முன் வேள்வித்தீ அமைத்து தந்தோம் என்றுரைத்து அழைத்துச் சென்றனர். இறைவன் திருவடியல்லாது வேறொன்றை நினையாது வேள்வித்தீயை துதித்து வலம் வந்து அதனுள் புகுந்தார். புகுந்தவர் மறையோதும் அந்தணர்களும் முனிவர்களும் வாழ்ந்த, ஒளிவீசும் பிரம்மதேவனைப் போல் எழுந்தார். வானவர் வாழ்த்தி மலர் பொழிய, வேத மந்திரங்கள் ஒலித்த்து. ஐந்தெழுத்து மந்திரம் ஓதி ஆடிப்பாடி இறைவனை தரிசிக்க ஆலயத்துள் சென்றார். ஆடும் தில்லையம்பதியை காணச் சென்றவர் தில்லை வாழ் அந்தணர்கள் அதிசயயிக்க பின் ஐய்யனின் திருவடியில் கலந்து மறைந்தார். நந்தனார் இறைவனின் நிழலில் பேரின்ப வாழ்வு பெற்றார்.. ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய திருநீலகண்ட நாயனார் தில்லையம்பதி தமிழுக்கும் பக்திக்கும் ஈன்றுள்ள நாயன்மார்களுள் ஒருவர் நீலகண்ட நாயனார். குயவர் தொழில் புரிந்த இவரின் இயற்பெயர் அற்றுப்போகும் அளவிற்கு தில்லை நடராஜனிடம் பக்தி பூண்டிருந்தார். ஈசனின் நாமங்கள் பலவற்றுள் “திருநீலகண்டன்” எனும் திருப்பெயரையே மந்திரமாக உச்சரித்து “திரு நீலகண்டம்” என்று கூறுவதால், திருநீலகண்ட குயவர் என்றே வழங்கப்பட்டார். குயவனாகிய இவர் தாம் படைத்த உயர்ந்த ஓடுகளை இறைவனின் அடியவர்களுக்கு அமுது படைக்க அளித்து தொண்டாற்றி வந்தார். இடையறாது சிவச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவரின் உயர்குணத்திற்கு ஈடு கொடுக்கும் நல்லாளாக இல்லாள் அமைந்திருந்தாள். இப்படி வாழும் காலத்தே விதி வசத்தால் சிற்றின்பத்தில் மனம் நாடுபவராகி. பரத்தை ஒருவளிடம் தன் இளமையை பங்கிட்டு இன்புற்றார். இதனையறிந்த மனைவி மிகவும் மனம் வருந்தியவளாக, கணவன் தமை நெருங்கும் வேளையில் “எமை தீண்டாதீர் திருநீலகண்டம்” என்று இறைவன் மேல் ஆணையிடுகிறாள். எமை என்று கூறியதால் இனி எந்தவொரு மாதையும் மனதாலும் தீண்டேன் என்று சபதம் மேற்கொண்டு வாழலானார். இல்லறத்திலும் துறவறம் மேற்கொண்டு இறைச் சிந்தனையன்றி இன்னொன்று இல்லாது இருவரும் வாழ்ந்து முதுமை எய்தினர். பக்தர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்த எண்ணிய இறைவன் திருவிளையாடல் புரிந்தான். அடியவர் எனறு தமை அறிமுகப்படுத்திக் கொண்டு, நாயன்மாரை அண்டினார். அடியவரை வரவேற்று, அமுதளித்து, தம்பதியர் இனிது உபசரித்தனர். யாத்திரிகனான தம்மிடம் ஒரு அபூர்வ திருவோடு உள்ளதென்றும் அது கல்ப தருவைப் போன்று பெருமை வாய்ந்தது, அத்திருவோட்டை இவர்களிடம் பாதுகாப்பாக விட்டுச் செல்வதாக கூறி, யாத்திரை முடிந்து திருவோட்டை மீட்டுக் கொள்வதாக கூறிச் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு அவர் வீட்டை அடைந்து திருவோட்டை திரும்பத் தருமாறு கேட்டார். பாதுகாப்பாக வைத்த திருவோடு இறைவன் லீலையால் மாயமாக மறைந்திருக்க, தம்பதியினர் திகைத்தனர். அடியவராக வந்திருந்த சிவனார், நாயன்மார் பொய்யுரைப்பதாக பெருங்கோபம் கொண்டு, அவர் பொய்யுரைக்கவில்லை என்றால் தமது மகனின் மீது ஆணையிடச் சொல்கிறார். தனக்கு பிள்ளைகள் ஏதுமில்லை என்ற நாயன்மாரிடம், மனைவி மீது ஆணையிடும்படி கூற அதற்கும் தயங்கியவர் தாம் மனைவியை தீண்டுவதில்லை எனக் கூறுகிறார். பொய் மேல் பொய்யுரைக்கும் உன்னை அந்தணர் முன் அழைத்து வழக்காடப் போகிறேன் என வெகுண்டார். தில்லை அந்தணர் சபையில் தமது அந்தரங்கம் வெளிப்படும் வகையில் உண்மை கூறி தாம் மனைவியை தீண்ட முடியாது என்றுரைத்து மூங்கில் கழியின் ஒருபக்கத்தை நாயனாரும் மறுபக்கத்தை மனைவியும் பிடித்து குளத்தில் மூழ்கி சபதம் செய்தனர். மூழ்கி எழுந்தவர்கள் முதுமை நீங்கி இளமைப் பொலிவோடு எழுந்தனர். எதிரே சினம் மிகுந்த அடியவருக்கு பதில் சங்கரியுடன் சங்கரனார் ரிஷப வாகனனாக புலனின்பம் வென்ற தம்பதியரை வாழ்த்தி, நீளாயுள் அருளி மறைந்தார். இருவரும் நீண்ட நாட்கள் இறைப்பணிகள் செய்து, பின்னர் சிவலோகம் சென்று நீங்கா இன்பம் பெற்றனர். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழ் இசைத்தல் பாணர் குலத்தின் சிறப்புக்கலை. யாழ் இசைத்த பாணர் என்பதால் யாழ்ப்பாணர் எனப்படுகிறார். திருஎருக்கத்தம்புலியூர் எனும் தலத்தில், பாணர் குலத்தில் பிறந்து, சிவனாரின் அரும்புகழை யாழ்மீட்டி, பண் இசைத்து, தொண்டாற்றினார். திருத்தலங்கள் தோறும் யாத்திரை செய்து இவர் யாழ் இசைக்க, இவரது மனைவியார் மதங்கசூளாமணி, திருப்பாடல்கள் பாடி இருவரும் இறைவனுக்கு இசைமாலை சூட்டி வழிபட்டனர். அக்கால வழக்கப்படி பாணர்கள் கோவிலினுள் செல்ல அனுமதி இல்லை. அதனால் ஆலயத்தின் புறத்தே நின்றே இறைவனை துதித்து வந்தனர். சோழ நாடெங்கும் தலயாத்திரை செய்தவர்கள், பாண்டி நாட்டின் மதுரையை அடைந்து திருவாலவாய் கோவிலில் இறைவனுக்கு பண் இசைத்தனர். இறைவன் தொண்டர்கள் கனவில் தோன்றி அவர்களை தம் முன் அழைத்து வரும்படி ஆணையிட்டார். பாணரும் இறைவன் விருப்பப்படி திருவாலவாய் கோவிலில் இறைவன் புகழை இசைத்திருக்க, தரையிலமர்ந்து  பண் இசைத்தால் சீதம் தாக்கி, யாழ் நரம்பு தளர்ந்துவிடுமென்று பலகை கொண்ரும்படி அசரீரி ஒலித்தது. அவ்வாக்கை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தொண்டர்கள் பலகையில் பாணரை அமரச்செய்தனர். பாணரின் இன்னிசை ஆலயமெங்கும் முழங்கியது. பின்னர் திருவாரூரை அடைந்த பாணர் தம்பதியர் தமது மரபுப்படியே புறத்தே நின்று வழிபட்டனர். இன்னிசைக்கு இரங்கிய இறையனார், வடத்திசையில் வேறு வாயில் அருளி நாயனாரும் மனைவியும் அதனுள் சென்று யாழ்ப்பண் இசைத்து மகிழ்ந்தனர். யாழ்பாண நாயனார் திருஞானசம்பந்தரின் மேலான சிறப்பை உணர்ந்து அவரைக் காணும் ஆவல் கொண்டார். அவர் இயற்றும் பதிகத்திற்கு யாழ் இசைக்கும் விருப்பமும் கொண்டவராகி, சம்பந்தர் சென்ற இடமெல்லாம் உடன் சென்று இன்னிசைத் தொண்டாற்றினார். யாழ்பாணர் இசையினால் தான் சம்பந்தர் பாடல்கள் திறம்பட அமைகிறது என்ற சுற்றத்தினரின் பேச்சினால் மனம் வருந்தியவர், தம்மால் வாசிக்க முடியாதபடி பதிகம் இயற்ற சம்பந்தரை வேண்டினார். அவ்வாறே சம்பந்தர் “மாதர் மடப்பிடியும்” என்ற பாடல் பாட, அதன் நுணுக்கங்களை யாழில் இசைக்க முடியாமல் யாழை முறிக்க முயன்ற நாயன்மாரை தடுத்து தேறுதல் சொன்னதாகக் குறிப்பு. இவ்வகைப் பண்ணை யாழ்முறிப்பண் என்று கூறிவந்தனர். அதனையே இப்பொழுது நீலாம்பரி என்று சிலரும் அடாணா என்று சிலராலும் வழங்கப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது. திருநீலநக்க நாயனார், சம்பந்தர் சொல்லுக்கிணங்கி தமது வீட்டின் நடுவில் வேள்வி செய்யும் நித்தியாக்கினி வேதிகை அருகே யாழ்பாணருக்கும் அவர் மனைவியாருக்கும் இடம் அமைக்க, வெள்வித்தீ மேலும் சுடர் விட்டெரிந்து இவர்களை பெருமைப்படுத்தியது. ஈடில்லா இசைத்தொண்டாற்றியவர் தமது துணைவியார் மதங்கசூளாமணியுடன் சம்பந்தர் திருமணத்தில் கலந்துகொண்டு, பெருஞ்ஜோதியில் கலந்து ஈஸ்வரன் திருவடியில் இணையிலா பெருவாழ்வு பெற்றார். . -cॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய திருநீலநக்க நாயனார் சோழமண்டல சாத்தமங்கை எனும் ஊரில் அந்தணராக பிறந்தார் திருநீலக்கர். வேதத்தின் உட்பொருளான சிவனை பூஜித்தல், அர்ச்சிதல், தொழுதல், அவனடியார்களை சிறபித்தல், அமுதளித்தல் முதலியனவையே உய்யும் வழி என்றுணர்ந்து தினமும் வேதாகம முறைப்படி சிவனை பூசித்து இறைத்தொண்டு ஆற்றி வந்தார். ஒரு சமயம், அவர் பிறந்த திருவூரான சாத்தமங்கையிலிருக்கும் அவயந்தி என்ற கோவிலில் அருள்சுரக்கும் பரமேஸ்வரனை பூஜிக்க விரும்பி, பூசனைக்குறிய பொருட்களைக் கொண்டு, தம் மனைவியாருடன் ஆலயம்சென்று, மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்தார். அச்சமயம் சிலந்தி ஒன்று சர்வேஸ்வரனின் லிங்கத் திருமேனியில் விழுந்தது. பூஜைக்கு அழுக்கு நேருமோ என்றேண்ணிய மனைவி, அதனை தமது வாயினால் ஊதி போக்கினார். இதனைக் கண்டு வெகுண்ட நாயனார், எங்கனம் கீழ்மையான இச்செயலை செய்யத் துணிந்தாளென்று என்று வருந்தி, வேறொரு வகையில் நீக்காமல் எச்சில் கொண்டு ஊதி நீக்குவது பெரும்பாவச் செயல். அச்செயல் புரிந்த உம்முடன் இனி நான் வாழுதற்கில்லை, உமைத் துறந்தேன் என்றுரைத்துச் சென்றார். அது கேட்ட மனைவியும் அஞ்சி ஒதுங்கி ஆலயத்திலேயே தங்கி விட்டார். இரவு துயில் கொண்ட பின் கனவில் இறைவன் எழுந்தருளி,. உமது மனைவி ஊதிய இடம் நீங்கலாக மற்ற இடமெங்கும் சிலந்தியினால் ஏற்பட்ட கொப்புளத்தைப் பாரென்று, ஊதிய இடத்தைத் தவிர கொப்புளமாகியிருந்த திருமேனியை காட்டி கூறியருளினார். விழித்த நீலநக்கர் இறைவனின் கருணையை, வள்ளல்தன்மையை, மனதில் கொண்டவராக ஆடிப்பாடி கூத்தாடி, ஆலயம் சென்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். சம்பந்தரைப் பற்றி கேட்டுணர்ந்து, அவரை தரிசிக்கவும் திருப்பாதம் தோழவும் ஆவல் மேலிட்டவரானார். அப்பொழுது சம்பந்தர் பல்வேறு ஸ்தலங்களுக்குச் சென்று இறைவனை பாடி, சாத்தமங்கையை வந்தடைந்தார் என்று அறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டவராக, தமது சுற்றம் சூழ அவரை அழைத்து, விருந்தோம்பல் செய்து திருவமுதளித்து மகிழ்ந்தார். அவருடன் வந்த திருநீலகண்ட யாழ்பாணருக்கும் அவரது துணைவி மதங்கசூளாமணியாருக்கும் நடு வீட்டில் தாம் வேள்வி செய்யும் வேதிகை அருகே இடம் கொடுத்து உயர்ந்த மரியாதையை செய்தார். இவரது செயலால் அகமகிழ்ந்த சம்பந்தர் மறு நாள் பெருமானைப் பாடிய பதிகத்தில் இவரையும் சிறப்பித்து பாடினார். ஞானசம்பந்தரிடம் பெரும் பக்தி பூண்டு அவருடன் தாமும் புறப்பட முயன்றார் எனினும் சம்பந்தர் அவரை அவயந்தி பெருமானை பூஜித்து அத்திருத்தலத்தில் இருக்கும்படி பணித்தமையால் அதனை மீறாமல் அவரது ஊரிலேயே தங்கி விட்டார். சம்பந்தரிடம் பெரும் பக்தி கொண்டதால் அவரை தினம் அன்புடன் தினமும் நினைந்தார். திருஞானசம்பந்தரின் திருக்கல்யாணத்திற்கு வேதியராக புரோகிதம் செய்தவர் அப்பெருஞ்சோதியில் தாமும் உட்புகுந்து, இறைவன் திருவடி சேர்ந்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய திருமூலர் திருமூலர் பதினெண்-சித்தர்களில் தலையாய சித்தராக அறியப்படுபவர். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் எனும் பேறு பெற்றவர் ஆகிறார். இவரது பிறப்பின் மூலத்தை அறிய முற்படுவோம். நந்தித்தேவரின் அருள் பெற்ற மாணவர்களுள் சுந்தரநாதர் என்ற சிவயோகி ஒருவரும் இருந்தார். இவர் அணிமா லகிமா முதலிய அஷ்டமா சித்திகளை கையாளும் அருள் பெற்றிருந்தார். அகத்திய மாமுனியின் நண்பராக இருந்தார். இவர் கைலாய பரம்பரையில் வருபவர். (இவருடைய பதினாறு சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலை சித்தரும் வெகுவாக அறியபடுபவர்கள். காலங்கி சித்தரின் சீடரே பழனியில் நவபாஷாணத்தால் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்த போகர் ஆவார்) சுமார் 8000 வருடங்களுக்கு முன்னர், அகத்திய மாமுனியைக் கண்டு அவருடன் சில காலம் இருந்துவர தென்திசை நோக்கிப் புறப்பட்டார். காஞ்சி சென்று, பின்னர் தில்லையை தரிசித்து, பல ஸ்தலங்களில் சிவனை நினைந்து அன்பொழுக பக்தி செய்து, காவிரியில் நீராடி, அதன்பின் உமையவள் பசுவின் வடிவில் இறைவனை நோக்கி தவமியற்றி கோமுக்தீஸ்வரரால் ஆட்கொள்ளப்பட்ட திருவாடுதுறை வந்தடைந்தார். இறைவனை தரிசித்து, அவர்பால் பக்தியில் கட்டுண்டு விலக இயலாதவராக சில காலம் தங்கினார். திரும்பச் செல்லும் காலத்தில் காவிரி கரையின் சோலையில் இரை மேய்ந்திருந்த பசுக்கள் வருந்தி அழுவதைக் கண்டார். சாத்தனூரில் இடைக்குலத்தவனான மூலன் அப்பசுக்களை மேய்த்து ரக்ஷித்து வருபவன். அவன் தன் உடலை உகுத்து விண்ணகம் புகுந்ததால், பசுக்கள் வருந்தி அழுவதை உணர்ந்தார். பசுக்களின் மேல் கருணைக் கொண்டதனால், மூலனின் உடலில் தம் உயிரை செலுத்தி, தம் உடலை பாதுகாப்பாக வேறிடத்தில் விட்டு, கூடு-விட்டு-கூடு பாய்ந்து பசுக்களை வீடு ஓட்டிச் சென்றார். நெடு நேரமாகி வீடு திரும்பாத கணவனை எண்ணி கவலையுற்றிருந்த மூலனின் மனைவி, திருமூலரை தன் பதியென்றெண்ணி மகிழ்ந்தாள். தமைத் தீண்ட அனுமதி மறுத்த மூலர், தாம் திருமூலர் என்பதை ஆட்டின் உடலில் புகுந்து நிரூபித்தார். மூலனின் மனைவியை ஊரார் ஆறுதல் கூறினர். சித்தர், தமது மேனியில் புகுதற்கு தாம் பாதுகாப்பாக  விட்டுச்சென்ற உடலைத் தேடினார். அது அங்கில்லாமல் மறைந்திருக்கவே அதன் காரணத்தை யோகத்தின் மூலம் அறிந்து, அதுவே இறைவன் சித்தமென தெளிந்தார். அது முதல் திருமூலர் என்றழைக்கப்பட்டார் சாத்தூரிலிருந்து மீண்டும் திருவாடுதுறை அடைந்து பல காலம் அங்கு தங்கி தவமியற்றினார். கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் அரச மரத்தடியில் தவமியற்றியவர் ஆண்டுக்கொரு முறை கண்விழித்து பாடல் இயற்றி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். இவ்வாறு மூவாயிரம் வருடங்கள் தவமியற்றினார். இவர் தொகுத்த பாடல்கள் “தமிழ் மூவாயிரம்” என்று வழங்கப்பட்டது. பின்னர் வந்த சான்றோர் இதனை திருமூலர் அருளிய திருமந்திரம் என வகை செய்தனர். இவ்வாறு திருமந்திரம் அருளியவர் அதனை வெளியிடாமல் ஆலயத்தின் கொடிமரத்தின் அடியில் புதைத்து, அங்கிருந்து சிதம்பரம் சென்று தமது குரு நந்தீசரைப் (நந்தி பகவான்) பணிந்து, தில்லையம்பதியுடன் கலந்தார். பல்லாயிரம் வருடங்கள் பின்னால் தோன்றிய சம்பந்தர், எம்பெருமான் அருளால் இங்கு தமிழ் மந்திரங்கள் உளதென்று உணர்ந்து, அதனை உலகிற்கு வெளியிடச் செய்தார். இவரது பெயர், பிறப்பு முந்தைய நிலை எதுவும் பெரியபுராணம் தொகுத்த சேக்கிழாராலோ, திருத்தொண்டர் திருவந்தாதி இயம்பிய நம்பியாண்டார் நம்பியாலோ குறிப்பிடப்படவில்லை. எனினும், இவரே நாயன்மார்களில் மூத்தவர் பல காலத்திற்கு முன்னவர், சைவத்திற்கு முதல் நூலைத் தந்தவர் என்று கூறலாம். இவர் எழுதிய நூலை திருமந்திரம் எனும் பத்தாம் திருமுறையாக நம்பியாண்டார்-நம்பி தொகுத்தார். இவர் நந்தியின் சீடர் என்பது அவர் எழுதிய “நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர் என்றிவ ரென்னோ டெண்மரு மாமே” (திருமந்திரம்-67) திருமூலர் வாய்மொழியாலேயே நன்கு தெளியப்படும். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய நமிநந்தியடிகள் ஏமப்பேறூரில் பிறந்த அந்தணர் குலத்தவர் நமிநந்தியடிகள். மகேஸ்வரனின் ஐந்தெழுத்தை அன்புடன் உணர்ந்து இடைவிடாது சிந்தித்திருப்பதும் பூஜிப்பதும் தொண்டுகள் செய்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தார். நாள்தோறும் திருவாரூர் பெருங்கோவிலில் குடிகொண்டுள்ள பெருமானை தரிசித்து வழிபடுவதை தமது தலையாயதிருப்பணியாகக் கொண்டிருந்தார். எழுந்த அன்பின் பெருக்கால், ஒரு மாலைப்பொழுதில் ஈசனுக்கு விளக்கேற்றித் துதிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. விளக்குக்கு நெய் ஏமப்பேறூர் வரை தமது இல்லம் சென்று எடுத்த வர தாமதமாகிவிடும் என்பதால் அங்கு குடியிருக்கும் வீடுகளில் விளக்கேற்ற நெய் வேண்டிப்பேற்றுக்  கொள்ளும் எண்ணத்தில், அருகிலுள்ள ஒரு வீட்டை அணுகினார். அவர் சென்ற வீடோ சமணர்கள் வாழ்ந்த வீடு. “விளக்கேற்ற நெய் தாருங்கள்” என்று விண்ணப்பித்தவரிடம், “அனலேந்தி நிற்கும் உங்கள் சிவனாருக்கு விளக்கு ஏற்ற வேண்டுமென்றால் நீரை ஊற்றி ஏற்றுங்கள்” என்று பரிகசித்தார்கள். மனம் பொறுக்க மாட்டாமல் இறைவனிடம் முறையிட்டழுத அடிகளை இறைவன் கருணை கொண்டு “அருகேயுள்ள குளத்தில் நீரெடுத்து வந்து ஏற்றும்” என்று ஆகாயமார்க்க அசரீரியாக அருளினார். தமது பாக்கியத்தை எண்ணி பேருவகை அடைந்து, குளத்தில் நீர் அள்ளி, ஐந்தெழுத்தோதி திருவிளக்கேற்றினார். ஆலயம் முழுவதும் சுடர்வீட்டு ஜோதியென ஒளிர்வது கண்டு ஊரெல்லாம் அதிசயிக்க, விளக்கேற்றி இறைவனின் பெருமையை உலகறியச் செய்தார். சமணத்தவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். இந்நிகழ்வுக்குப் பிறகு தொடர்ந்த நாட்களிலும் நீரூற்றி ஆலயமெங்கும் விளக்கேற்றும் திருப்பணி செய்து, பின்னர் தமது ஊர் சென்று பூஜைகளில் ஈடுபடுவதை வழக்கமெனக் கொண்டிருந்தார். இப்பெருமை ஊரெங்கும் பரவ, சோழ மன்னன் பெருங்க்கொடையளித்து ஆகம விதிப்படி பூஜைகளும் நித்ய ஆராதனைகளும் பங்குனி உத்திர விழாவும் நடைபெறுவதற்கு வழி செய்து அதற்கு தலைமை ஏற்க நந்தியடிகளை நியமித்தார். ஒரு சமயம் பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது மணலி என்ற ஊரில் இறைவன் உலா எழுந்தார். அங்கு பலதரப்பட்ட மக்களும் பல்வேறு ஜாதி இனத்தவர்களும் சிவனாரை வணங்கிச் சென்றனர். அடிகள் இறைவனை மகிழ்ந்து பூஜித்த பின், தமது ஊரை அடைந்தார். வீட்டினுள் செல்லாமல் வெளித் திண்ணையில் தங்கிவிட்டார். மனைவியார் வீட்டினுள் வந்து பூஜை செய்யவேண்டுமென நினைவூட்டினார்கள். மணலியில் நான் இறைவனின் உலா கண்டு சேவித்திருந்தேன். அங்கு பல ஜாதியினர் வந்து வழிபட்டதாலும், தமக்கு தீட்டு உண்டாயிற்று அதனால் நீராட ஏற்பாடு செய்யப் பணித்தார். மனைவியார் அகன்றதும் மீண்டும் திண்ணையில் படுத்தவருக்கு எம்பெருமான் கனவில் காட்சிதந்தார். “திருவாரூரில் பிறந்த அனைவரும் கணங்கள். அதை நீ உணர்வாய்” என்று அறிவூட்டினார். உறக்கம் கலைந்தவர் தாம் செய்த பிழையால் வருந்தனார். உடன் சென்று பூஜைகள் தொடர்ந்தார். மறு நாள் பொழுது புலர்ந்ததும் திருவாரூர் சென்றார் அங்கு அத்தனை பக்தர்களும் சிவ ஸ்வரூபமாக தோன்றுவதைக் கண்டு, பிழை பொறுக்க இறைவனை இறைஞ்சி, ஜாதி வேறுபாடுகளை கடந்தார். நெடுங்காலம் இறைவனுக்கும் அடியவர்களுக்கும் திருத்தொண்டுகள் புரிந்து, சிறப்புற வாழ்ந்து இறைவன் திருவடி சேர்ந்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய நரசிங்கமுனையரைய நாயனார் நரசிங்கமுனையரைய நாயனார்  திருமுனைப்பாடி நாட்டின் குறுநில மன்னர் ஆவார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக துதித்தேற்றப்படுபவர். சிவனடியார்களை பணிந்து போற்றிக் காத்தலை தவறாது செய்து வந்தார். பகைவரிடமிருந்து நாட்டினை காத்து ரக்ஷித்து சிறப்புற பேணி வந்ததுடன், சிவ நாமம் உரைக்கும் அடியவருக்கெல்லாம் வள்ளலாக விளங்கினார். கோவில் செல்வங்களை சிறப்புற பேணச் செய்து, அவற்றை அற வழியிலும் ஆகம வழியிலும் செலவிடப் பணித்தார். அடியார்களின் குறிப்பறிந்து தொண்டாற்றினார். அடியார்களுக்கு பொன்னும் பட்டும் வழங்கி சிறப்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். ஒரு முறை சிவபூஜை முடிந்த பின், அங்கு வந்திருக்கும் அடியார்க்கு பொன் வழங்கி அமுதளிக்கும் தருவாயில், காம நோயினால் பீடிக்கப்பட்டு பிறரால் அருவெறுத்து ஒதுக்கப்பட்ட ஒருவரும் அடியவராக வந்திருந்தார். சசிசேகரனிடம் கொண்ட அன்பின் பெருக்கால் அவரையும் ஆரத்தழுவி வரவேற்றார். நல்லொழுக்கம் பேணாதவராயினும் திருநீறு துலங்கும் அவரது நெற்றியைக் கண்டதும் அன்பொழுக அமுதளித்து அவருக்கு இரட்டிப்பு பொன்னளித்து, விருந்தோம்பல் செய்து கவுரவித்தார். நரசிங்கமுன்னரைய நாயானர் வீதி வலம் வரும் பொழுது, எழில் ரூபனாக தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுந்தரரை கண்டார். மிகுந்த பிரியத்தினால் ஆட்கொள்ளப் பட்டு, சடையனாரிடம் கொண்ட நட்பின் உரிமையில், சுந்தரரை வளர்க்கும் பெரும்பேற்றை கேட்டுப் பெற்றார். சுந்தரரின் திருமணப்பருவம் வரை அரச போகத்துடன் சீறும் சிறப்புமாக தாமே வளர்த்தார். நம்பியாரூரரான சுந்தரரை வளர்த்த பெருமைக்கும், சிவனடியார்களை பேணிப் போற்றிய சிறந்த பக்திக்கும் இறைவனைப் பிரியாது உடனுரையும் கையிலாயப் பெறு பெற்றார். . ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய நின்றசீர் நெடுமாற நாயனார் சீரும் சிறப்புமாக மதுரை ஆண்ட பாண்டிய மன்னனின் இயற்பெயர் நெடுமாறன். நீதி தவறாத ஆட்சியும் உயிர்களிடத்தில் அன்பும் கொண்டு திகழ்ந்தார். இவருக்கு முதுகு கூன் விழுந்ததால் கூன் பாண்டியன் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. வடநாட்டிலிருந்து போர்முரசு கொட்டி வந்த பகைவர்களை திருநெல்வேலியில் தோற்கடித்த பெருமைக்கு நெல்வேலி வென்ற நெடுமாறன் என்று போற்றபட்டார். சோழ இளவரசி மங்கையர்கரசியை தமது அரசியாக்கினார்.  மங்கையர்க்கரசியாரும், நெடுமாறனின் நீதிதவறாத அரசின் அமைச்சரான குலச்சிறை நாயனாரும் சிவ பக்தர்களாக சைவத்தின் பால் ஈடுபட்டிருக்க, மன்னன் நெடுமாறன் சமணர்களின் கருத்துடன் மெல்ல மனம் மாறி சமண மதத்தை தழுவியிருந்தார். அரசன் மதம் மாறியதால், மெதுவே குடிகள் சிலரும் சமண மதத்தை தழுவினர். சைவம் தழைத்தோங்கிய மதுரை மாநகரம் சமணத்தை தலைவணங்கி வரவேற்றது. திருஞானசம்பந்தர் பாண்டி நாடு எழுந்தருளிய போது மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் அவரை நாடி, சைவம் தழைத்தோங்க வேண்டிக்கொண்டனர். ஞானசம்பந்தரின் வருகை அறிந்த சமணர்கள் அரசரிடம் ஒப்புதல் வாங்கி, அவர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர். அத்தீயை ஏவியவருக்கே திருப்பியனுப்ப பதிகம் பாடியதால், அரசருக்கு சுரநோய் வந்து அவதியுற்றார். சமணர்களால் தீர்வு காண முடியாமல், சம்பந்தர் “மந்திரமாவது நீறு” என்று பாடி திருநீறு பூசி குணமாக்கினார். சைவத்தை தழுவிய மன்னனின் கூனை நிமிர்த்தி ‘நின்றசீர் நெடுமாற’ நாயனார் ஆக்கினார் சம்பந்தர். சமணர்களை அனல்-வாதம் புனல்-வாதம் மூலம் வென்ற சம்பந்தருக்கு பெரும் மரியாதை செய்தார். சிவ ஆகம முறைகளும் பூஜைகளும் ஆலயத்திருப்பணிகளும் முன் போல் நடைபெற ஆவன செய்தார். உடன் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் துணை நிற்க, அடியார்களை உபசரித்து, சிவத்தொண்டுகள் பல காலம் புரிநதிருந்து, அவனருளாலே அவன் தாள் பணிந்து நற்கதி எய்தினார். ‘-cॐ ॐ ॐ ॐ ॐ .-cஓம் நமச்சிவாய நேச நாயனார் காம்பீலி எனும் ஊர் கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி அருகே உள்ளது. துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்த செழிப்பு மிகுந்த இவ்வூரின் விருபாக்ஷீஸ்வரர் கோவில் அப்பர் பெருமானால் பாடப்பெற்றது. இத்தலமே நேசர் எனும் நேச நாயனார் பிறந்து, இருந்து, வழிபட்டு, தொண்டாற்றிய ஊர். தமிழின் பெருமை எங்கெல்லாம் பரவி இருந்திருந்தது என்பதற்கு இவையெல்லாம் சான்று. நேசர் செல்வ செழிப்பு மிக்கவராக இருந்தார். சாலியர் குலத்தில் தோன்றி தமது குலத் தொழிலைக் கொண்டே இறைவனுக்கு தொண்டு செய்தார். அவர்களது வழக்கப்படி ஆடைகளும் கீழ்க்கோவணமும் நெசவு செய்து சிவனடியார்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். நாளும் ஈசன் நாமம் சிந்தையாலும் வாக்கினாலும் உரைத்திருந்தார். நீளாயுள் வாழ்ந்து, தமது பணிவாலும் பக்தியாலும் உயர்ந்து இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறினார். (குறிப்பு: சாலி என்றால் துணி. துணி நெய்தல், உருவாக்குதல், தைத்தலை குலத்தொழிலாக கொண்டவர்களை சாலியர் என்று குறிப்பிடுகிறார்கள்) ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய புகழ்ச்சோழ நாயனார் உறையூர் அரசர் புகழ்சோழர், படைகள் பலகண்டு, தேசங்கள் பலவென்று செங்கோலாட்சி் நடத்தி வந்தார். சிவபக்தராக திகழ்ந்த மன்னர், ஆலய திருப்பணிகள் செவ்வனே நடக்க வழி செய்தார். அடியார்கள் நலம் நல்கினார். சிவநெறி சோழ நாடெங்கும் பரவச் செய்தார். அவர் வென்ற நாடுகள் தோறும் அறநெறி தழைக்கச் செய்தார். சிவகாமி ஆண்டார் என்ற அடியவர், இறைவனுக்கு சூட கொணர்ந்த மாலையை, புகழ்சோழரது பட்டத்து யானையும் அதன் பாகனும் செருக்கின் மிகுதியால் இடறி விட, அவர்களை எதிர்த்து கொன்ற எறிபத்த நாயனாரின் செயல் அறிந்து சிவ அபராதத்திற்கு மனம் வருந்தி, அடியவர் மனம் கோண தமது யானையும் பாகனும் நடந்ததற்காக தமையே பலியிடத் துணிந்தார். பின் ஈசன் அருளால் வினை தீர்க்கப்பெற்றார். புகழ்சோழன், தமது கீழ் அரசாளும் சிற்றரசனாகிய அதிகன் என்பவனை திறைவரி செலுத்தாத காரணத்திற்காக முற்றுகையிட்டு சேனை திரட்டி தாக்கினார். அதிகன் தப்பிவிட்டாலும், பல வீரர்கள் மடிந்தனர். வெற்றி கண்ட சோழப் படையினர், ஜய பேரிகை கொட்டி யானைகளை குதிரைகளை கைபற்றி வெட்டுண்டவர்கள் தலைகளை அரசர் முன் கொணர்ந்தனர். அக்குவியலில் சிவனடியார் ஒருவரின் சடாமுடி தரித்த தலை தென்பட்டது. மெய்யுடல் நடுங்கி, பெருந்தீங்கு இழைத்ததை உணர்ந்தார் சோழ மன்னர். புகழ்சோழர் என்ற பேருக்கு இலங்க சிவத்தொண்டில் சிறந்து விளங்கிய நாயன்மார், சிவ அபராதம் செய்ததை பொறுக்காது, தனது மகனுக்கு முடிசூட்டி, போரில் உயிர் துறந்த சிவனடியாரின் தலையை பொன்தட்டில் ஏந்தி, அதனை தனது தலை மேல் சுமந்து, செந்தீ வளர்த்து, அதுனுள் தானும் புகுந்து இறைவன் திருவடியில் இணைபிரியாது இணைந்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய புகழ்த்துணை நாயனார் சிவவேதியர் குலமெனும் குலத்தின் தோன்றல்கள் வழி வழியாக ஆகம விதிப்படி சிவனுக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியர்கள் ஆவர். இவர்களை ஆதிசைவர்கள் என்றும் சிவப்பிராமணர் என்றும் குறிப்பிடுகின்றனர். சைவ பக்தர்களுக்கு சிவதீக்ஷை அளிப்பது, பூஜை செய்வது, செய்விப்பது, சிவ பரிபாலனம் அனைத்தும் இம்மரபினரின் தொண்டாகும். அதன் வழி வந்த சிவவேதியரே புகழ்த்துணை நாயனார். பூஜையும் ஆகமமும் சிவ வழிபாடும் பிரியமாக செய்து வந்தார். சிவபெருமானை தத்துவ நெறிப்படி வழிபட்டு வந்தார். பஞ்சம் வந்து ஊரெங்கும் துவண்ட போதும் சிவ வழிபட்டை கைவிடாமல், நறும்பூக்கள் கொண்டும் தூய நீர் கொண்டும் வழிபட்டு வந்தார். ஓரு சமயம் பசியால் நலிந்த அவர் மேனி, சுமந்து வந்த கலசத்தின் பாரம் தாங்காமல் கை தவற, திருமஞ்சனம் செய்ய கொணர்ந்த நீர்குடம் இறைவன் திருமுடியின் மேல் விழுந்தது. சிவ அபராதம் செய்தோமென்று அஞ்சி, வருந்தி, மயக்கமுற்றார். அப்போது நித்திரை அவரை ஆட்கொண்டது. பக்திக்கு இரங்கி, நித்திரையில் எழுந்தருளிய ஈசன், ‘பஞ்சம் ஏற்பட்டிருக்கும் காலம் முழுதும் உணவுக்கென ஒரு காசு தருவோம்’ என்று கூறியருளினார். நித்திரை கலைந்த எழுந்த நாயன்மார் பீடத்தின் மீது திருக்காசு ஒன்று இருப்பது கண்டு களித்தார். அவ்வாறே பஞ்சம் போகும் வரை இறைவன் நாள்தோறும் காசு அளித்தமையால் பசி நீங்கப்பெற்று நெடுங்காலம் சிவ அடிமை செய்திருந்து, பின்னர் இறையுலகில் இன்பம் எய்தினார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய பூசலார் நாயனார் திருநின்றவூரில் அவதரித்தவர் பூசலார். மறையோதும் அந்தணர் குலத்தோன்றல். அடியார்களுக்கு பணி செய்வதும், ஐயன் அடி போற்றுவதும், இறைவனை சிந்தையில் சதா இருத்துவதும் பிறவிப் பயனென கருதினார். பெரும் செல்வந்தராக இருந்திருந்தால் இன்னும் பொருட்களை வாரி வழங்கும் வள்ளலாக விளங்கியிருப்பார். ஆனால் இறைவன் அவரை செல்வந்தராக பணிக்கவில்லை. பெரும் பொருளில்லாவிடினும் ஈட்டும் சிறு பொருளை அடியவர்க்கு ஈந்தார். இப்படிப்பட்ட பக்தருக்கு இறைவனுக்கு ஆலயம் எழுப்ப வேண்டுமென்ற பேராவல் எழுந்தது. எப்படித் தேடியும் பொருள் தேரவில்லை. சிறுகக் கட்டி சேர்க்க நினைத்தாலும், அத்தனை பெரிய நிதி பெற இயலாதவர் ஆனார். சிவன் ஆலயம் எழுப்பும் ஆவல் பெருகிக் கொண்டே போனதால், தமது தூய மனத்தின் அரும் பீடத்தில், கோவில் எழுப்பி, இறைவனை எழுந்தருளச் செய நினைத்தார். தினம் சிறு சிறு வேலைகளை மனக்கண் கொண்டு செய்யத் துவங்கினார். ஆலயப்பணிக்கென தேவையான ஆட்களை சேர்த்தார், கருங்கற்களை, கட்டும் பொருட்களை சேர்த்தார். நாள் குறித்தார், ஆலயம் எழுப்பும் கிரமப்படி, பணியைத் துவங்கினார். அஸ்திவாரம் இட்டார். விமானம் அமைத்தார், சிகரம் செதுக்கினார். ஸ்தூபி நட்டார். பின்னர் கிணறு, திருக்குளம், மதிலும் கூட எழிலுற அமைத்தார். இவ்வாறு இரவு பகலென தினமும் பணிகளை பக்தியுடன் செவ்வனே நினைவாலே ஆலயம் கட்டி முடித்த பின், இறைவனை எழுந்தருள ஒரு நல்ல நாளும் தேர்வு செய்தார். சூட்சுமமான மனதின் மேன்மையை, மனத்தூய்மையின் முக்கியத்துவத்தை, மனம் உடலைக் காட்டிலும் உயர்ந்தது என்பதை பக்தர்களுக்கு தெளிவிக்கும் சித்தம் கொண்டார் இறைவன். அந்நாட்களில் பல்லவ வேந்தரும் நாயன்மார்களில் ஒருவருமான ஐயடிகள் காவர்கொன் காஞ்சி நகராண்டு கொண்டிருந்தார். மன்னர், காஞ்சியிலே இறைவனுக்கு பெரும் ஆலயம் எழுப்பியிருந்தார். பெரும் பொருட்கள் கொண்டு எழுப்பப்பட்ட ஆலயம் இறைவன் எழுந்தருள்வதற்கு தயாராக பட்டொளி வீசிக் கொண்டிருந்தது. மன்னரும் தமது நகரத்தில் ஆலயத்திற்கு இறைவனை எழுந்தருளச் செய்து குமபாபிஷேகம் செய்ய பூசலார் குறித்த நாளையே தேர்வு செய்திருந்தார். உமையொருபாகன் மன்னார் கனவில் தொன்றி, " திருநின்றவூர் அன்பன் பூசலார் அமைத்த ஆலயத்தில் நாளை புகுவோம், நீ பிறிதொரு தினம் எமை எழுந்தருளச் செய்வாய்" என கூறியருளினார். மன்னர் பூசலாரின் ஆலயத்தை காண பேராவல் கொண்டு திருநின்றவூர் சென்றார். அங்கு பூசலார் அமைத்த கோவில் யாதெனக் கேட்க, அனைவரும் அப்படி ஒரு கோவில் இங்கில்லை என்று மறுத்தனர். பின்னர் பூசலார் யார் என்று கேட்டு, அவர் வீடு தேடிச் சென்று ‘உமது திருக்கோவில் எங்குள்ளது இறைவன் அக்கோவிலில் முதலில் எழுந்தருள்வதாக எமக்கு உரைத்தனுப்பினார், அக்கோவிலை காண பெரும் விருப்பம் கொண்டிங்கு வந்தேன்’ என்றார். அதைக் கெட்டு வியப்புற்ற பூசலார், நெகிழ்ந்துருகி பரவசமானார். என்னையும் கருணா மூர்த்தி தம் கடைக்கண்ணால் கருதினாரே என்று ஆனந்தித்தாடினார். தான் மனதால் பக்தியுடன் தினமும் கட்டிய ஆலயம் என்றுரைத்து, இறைவனை நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினார். ஆடிப் பாடினார். அரசரும் ஆச்சர்யமும் பேரன்பும் பெருக ஈசனையும் நாயனாரையும் வணங்கிப் புறப்பட்டார். . நிச்சயித்த நாளில் அவர் கட்டிய மனக்கோவிலில் சிவன் எழுந்தருளி அனுக்ரஹித்தார். பூசலார், சிறப்புடன் பல வருடம் வாழ்ந்து சிவப்பணிகள் செய்து உய்ந்து, நற்பேறு பேற்றார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய பெருமிழலைக் குறும்ப நாயனார் காவிரிக்கரையின் வடகரையில் இராஜேந்திர சிம்ம வளநாட்டில் உள்ள மிழிலை நாடு என்றொரு இடத்தில் மிழிலைக்குறும்பர் அவதரித்தார். இது சங்க காலத்து ஊர். தற்போது இவ்வூர், மானபாடிக்கு தென்மேற்கே கோவிலாச்சேரி என்ற கிராமத்தில் அமைந்த சிறு உட்கிராமமாக உள்ளது. குறும்பனார் தமது காலத்தில் பெருமிழிலை என்ற இவ்வூரின் தலைவராக விளங்கினார். சிவனடியார்களை நெஞ்சகத்தே அன்பொழுக நிறுத்தி அவர்களுக்கு செவ்வனே பணி செய்வதே தமது நல்வழிக்கு உகந்தது என்று உணர்ந்திருந்தார். சிவநாமம் தனை க்ஷணப்பொழுதும் மறவாமல் மனதுள் நிறுத்தி சிவபக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். சிவனடியார்களைப் போற்றும் இயல்புடையவர் குறும்ப நாயனார், ஆரூரரின் புகழைக் கேள்வியுற்று வாளாயிருந்திருப்பாரா? நம்பியாரூரரை தனது ஆசானாக்கிப் பணிந்தார். சிவனடியார்களைத் தொழுதல் முக்திக்கு வழி என்று உணர்ந்தார். ஆரூரர் திருவடியை வணங்கி வாழ்த்தி சிவ நெறியில் வழுவாமல் நின்றார். நம்பியாரூரர் என்ற சுந்தரரின் திருவடியை நினைந்து சிவ நாமம் நிறுத்தியதால் அணிமா மஹிமா முதல் அஷ்டமா சித்திகளை தமது வசமாக்கினார். சுந்தரமூர்த்தி நாயனார் மறுநாள் கயிலை அடையும் பெரும்பேறு பெறப்போகிறார் என்பதை தமது யோக சக்தியின் மூலம் ஒரு நாள் முன்பே உணர்ந்து, அவரைப் பிரிந்து நான் வாழேன் என்று மனதால் உறுதி செய்து, ஒரு நாள் முன்பே, தவ நெறியில் கருத்தை நிறுத்தி, பிரமநாடி வழியே உடலினின்று உயிரை உகுத்து, யோக சித்தியால் சிவன் தாள் சென்றடைந்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய மங்கையர்கரசியார் நாயனார் சோழ இளவரசியாக பிறப்பெடுத்த மங்கையர்கரசி, பாண்டியன் நின்றசீர் நெடுமாறனைத் திருமணம் செய்து இருவரும் சிறப்புற சிவத் தொண்டாற்றினர். ஞான சம்பந்தரை தமது வழிகாட்டியாகவும் குருவாகவும் வரித்து அவர் வகுத்த பாதையில் பயணித்து நெடுங்காலம் சைவம் தழைக்க பெரிதும் பணியாற்றினார். இடைப்பட்ட காலத்தில், பாண்டிய மன்னன் சமணத் தொடர்பினால் சைவத்தை பெரிதும் வருத்தினார். இதனால் மங்கையர்க்கரசியார் பெரிதும் மனம் வெதும்பி வாடினார். தமது அமைச்சர் குலச்சிறையார் துணை கொண்டு சைவத்திற்கு தம்மாலான தொண்டு ஆற்றிய வண்ணமிருந்தார். சம்பந்தர் பாண்டிய நாடு வந்தது கேட்ட மங்கையர்க்கரசியார், குலச்சிறையாருடன் அவரை நெடுது விழுந்து வணங்கி பக்திப்பெருக்குடன் வரவேற்று உபசரித்தார். சமண துறவிகள் மன்னரின் ஆணை பெற்று ஏவிய தீயானது, மன்னனுக்கே வெப்பு நோயாக வந்திரங்க, அதனை “மந்திரமாவது நீறு” என்று பதிகம் பாடி சம்பந்தர் விரட்டினார். அனல் புனல் வாதத்தில் சமணர்களை வென்று கூன்பாண்டியனை நின்றசீர் பாண்டியனாக்கி அருளினார் சம்பந்தர். வேற்று சமயத்தின் தாக்கத்தால் சைவம் குன்றியிருந்த நிலமையிலும் தொண்டாற்றிய மங்கையர்கரசியாரை வாழ்த்தினார் சம்பந்தர். சைவம் தழுவி திருநீறணிந்தார் பாண்டிய மன்னன். (இன்னிகழ்வுகளை சம்பந்தர் வரலாற்றில் விரிவாக பார்த்தோம்) . சம்பந்தர் எங்கெல்லாம் சென்று சிவபெருமானை வழிபட்டாரோ அவ்விடமெல்லாம் அரசியாரும் சென்று சம்பந்தர் திருவடிகளை பற்றி இறைவனை பக்தி செய்துய்ந்தார். திருத்தலங்கள் பலவற்றிற்கு மங்கையர்க்கரசியாரும், மன்னரும், குலச்சிறையாரும் பிள்ளையுடன் சேர்ந்து வழிபட்டு வந்தனர். தாம் விடை பெரும் வேளையில் பாண்டி நாட்டை சிவநேறி தழைத்தோங்கும்படி ஆள அருளிச் சென்றார் சம்பந்தர். அதன் வழியொழுகி, மதுரையம்பதியில் நிலைகொண்டு பாண்டி நாடெங்கும், சைவம் தழைக்கச் செய்தனர். ஆலய வழிபாடுகளும் ஆகம நெறிகளும் வளர்த்தனர். திருநாவுக்கரசரை தரிசித்து பாதம் பணியும் பாக்கியமும் பெற்றார். நெடுங்காலம் குறைவிலா அரசாட்சி புரிந்த மன்னருக்கு துணையிருந்து மன்னரோடு சிவனார் திருவடி எய்தினார். . -cॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய மானக்கஞ்சாற நாயனார் சிவபக்தியில் சிறந்து விளங்கிய மானக்கஞ்சாற நாயனார் கஞ்சாறு எனும் ஊரில் வேளாளர் குடியில் பிறந்தார். மானக்காந்தன் என்பது இயற்ப்பெயர், இவருக்கு கல்யாண சுந்தரி என்ற மனைவி இருந்தாள். சிவன் தாள் பணிதலும், அவன் புகழ் நினைந்தலும், அடியார் தொண்டில் ஈடுபடுவதும், வீடுபேற்றை அருளும் என்ற பேருண்மை உணர்ந்தவராக இருதார். அரசர்க்கு சேனாபதியாகப் பணியாற்றும் குலத்தினர். ஆகையால் மன்னருக்கு பணி செய்திருந்தார். வேளாண்மை தந்த செல்வத்தால், செல்வம்  வளம் உடையவராக பெருவாழ்வு வாழ்ந்திருந்தார். அடியார்கள் குறிப்பறிந்து சேவை செய்தார். பேறுகள் பல பெற்றிருந்தும், நெடுநாள் பிள்ளை வரம் இல்லாது வாடிய இத்தம்பதியினர், அரிய பல உபாசனைகளும் பூஜைகளும் உகந்தளித்து சிவனாரை திருப்தி செய்தபின்னர், அவர் அருளால் அழகிய பெண் குழந்தை அருளப் பெற்றனர். அப்பெண் குறைவற்ற செல்வத்துடன் சிறப்பற வளர்க்கப்பட்டாள். சிவ நேறிகளை போதித்து, அறிவுடன் வளர்தனர். எழிலுருவானவள் மணப்பருவம் எய்தினாள். சிறந்த சிவபக்தரான ஏயர்கோன் கலிக்காம நாயனார் பெண்ணின் அறிவு, அழகைக் கேள்வியுற்று, மானக்கஞ்சாற நாயனாரின் பெருமை உணர்ந்தவர், முதியோர் சிலரை அனுப்பி அப்பெண்ணை தனக்கு மணமுடிக்க விண்ணப்பம் செய்ய, அவருக்கே மணம் பேசி நற்திங்களில் முகூர்த்த நாள் குறித்தனர். சுற்றம் சூழ ஏயர்கோன் கலிக்காம நாயனார் சுபதினத்தில் கஞ்சாறுக்கு புறப்பட்டார். அவ்வாறு திருமணம் நாள் நெருங்கும் நேரத்தில், உலகுக்கு மானக்கஞ்சாற நாயனாரின் பெருமையை உணர்த்த திருவுள்ளம் கொண்டார் இறைவன். ஈசன் மாவிரதி கோலம் கொண்டு மானக்கஞ்சாற நாயனார் வீட்டை அடைந்தார். மாவிரதி என்பவர்கள் சிவனாரின் அடியவர்கள். ஆண்டிக்கோலம் பூண்டவர்கள். மாவிரதி அங்கு நடைபெறும் திருவிழாக் கோலத்தை கண்ணுற்று அங்கு என்ன விழாவிற்கான ஆயுத்தம் என்று வினவ, தமது மகளுக்கு திருமணம் என்று பணிவுடன் எடுத்துரைத்தார் மானக்கஞ்சாறர். அனைவரையும் ஆசீர்வதித்த மாவிரதி முன், தமது மகளை கொணர்ந்து நிறுத்தி அவரை பணியும் படி செய்தார் நாயனார். வணங்கி எழுந்த பெண்ணின் நீள் கருங்கூந்தலை கண்டு ஆண்டியார், “இப்பெண்ணின் நீள் முடி எமது பஞ்சவடிக்கு ஆகும்” என்று மொழிந்தார். பஞ்சவடி என்பது முடியினால் பட்டையாக செய்யப்பட்டு மார்பில் பூணூலைப்போல் தரிக்கப்படுவது. மகிழ்ந்த நாயனார், உடன் வாளை உருவி, அலங்கரிக்கப்பட்ட அவள் நீள்முடியை வெட்டி “என்ன புண்ணியம் செய்தோமோ” என்று பூரித்து ஈசனிடம் சமர்பிக்க, இறைவன் ரிஷப வாகனனாக உமாதேவியான கௌரியுடன் தோன்றி அனைவருக்கும் அருள்பாலித்து “உம் புகழ் விளங்கச் செய்தோம்” என்றருளினார். நெடிது வணங்கி எழுந்த நாயனார் பரவசமிகுதியில் கட்டுண்டிருந்தார். இறைக்காட்சி மறைந்த சில கணங்களில் ஏயர்க்கோன் கலிக்காமர் திருமணம் கோலத்தில் வந்து சேர்ந்தார். அங்கு நடந்த நிகழ்வை கேட்டறிந்து மகிழ்ந்து ஆனந்தித்தார். துக்கித்தார். இறைவனின் கோலத்தை நான் காணாது போனேனே என வருந்தினார். அசரீரியாக இறைவன் அருளி நல்வார்த்தைகள் மொழிந்தபின் துக்கம் நீங்கப்பெற்றார். மணப்பெண்மீண்டும் நீள்முடி வளரப்பெற்றவளாகி, எழில்ரூபம் கொண்டவள் இனிதே அலங்கரித்து, நன்கு திருமணம் நிகழப்பெற்று சிறப்புற வாழ்ந்தாள். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய முருக நாயனார் அறுபத்து மூவருள் ஒருவர் முருக நாயனார், திருப்புகலூரில் பிறந்த அந்தணர் குலத்தவர். சிவனாரிடம் கொண்ட பேரன்பினால் நீராடி அன்றாடம் நந்தவனத்தில் நறுமலர்கள் கொய்வார். பல்வகைப் பூக்களை செகரித்து கூடைகளில் கொணர்ந்து, தனித்தனியே வகை வகையாக வண்ணவண்ண மாலைகள் தொடுப்பார். வர்த்தமானீச்சரம் எனும் ஆலயத்தில் இருக்கும் ஈசனுக்கு மாலைகள் சூட்டி அழகு பார்ப்பார். நறுமணம் கமழும் எழில் வண்ண மலர்களால் அர்ச்சனை செய்வார். பஞ்சாட்சர மந்திரம் ஜபித்து ஈசனுடன் இடையறாது இணைந்திருந்தார். பூக்களில் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ நிலப்பூ என நால்வகைகள் உண்டென குறிப்பு. நீர்ப்பூ நீரில் முகிழ்ப்பன. நிலப்பூவும் கொடிப்பூவும் முறையே நிலத்திலும் (செடிகளில்), கொடியிலும் பூக்கும் வகைக்கள். கோட்டுப்பூ என்பன மரக்கொம்புகளில் பூக்கும் பூக்கள். திருஞானசம்பந்தர் வருகை தந்த போது அவருடன் அன்பு பூண்டு கொண்டாடினார். சம்பந்தருடன் வர்த்தமானீஸ்வர ஈஸ்வரனை வழிபடும் பேறு பெற்றார். நாவுக்கரசரை சந்திக்கும் பாக்கியம் பெற்றார். நாவுக்கரசரும், சம்பந்தரும் சில காலம் முருகனாருடன் தங்கியிருக்குங்கால், நீலநக்கர் மற்றும் சிறுத்தொண்டர் நாயன்மார்களும் அங்கு வந்தமையால் அனைவருடனும் அளவளாவி இறைபக்தியில் ஈடுபட்டு இன்பத்தில் திளைத்திருந்தார். தாம் செய்த பூஜாபலனால், சம்பந்தருக்கு இனிய நண்பராகும் பெருமை பெற்ற முருக நாயனார், அவர்தம் திருநல்லூர் பெருமணத்தில் கலந்துகொண்டு, ஜோதியில் இணைந்து இறைவனடியில் மீளா இன்பம் அடைந்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய முனையாடுவார் நாயனார் சோழநாட்டிலுள்ள திருநீடூரில் அவதரித்து, வேளாளர் முனையாடுவார் நாயனார், அவ்வூருக்கு பெருமை சேர்த்தார்.  முக்கண்ணனாம் எம்பெருமானிடம் மாறாத பற்றுடன் அவர் திருத்தொண்டில் அதிகம் ஈடுபாடு கொண்டு, பெருநிதி திரட்டி அவற்றையெல்லாம் அடியார்களை பேணுதற்கே செலவிட்டார்.  பகைவரை போரில் வென்று அதனால் ஈட்டிய பொருளைக் கொண்டு இறைவனின் அடியவர்களுக்கு ருசிமிக்க உணவை அன்புடன் அளிக்கும் நெறியை போற்றி வந்தார். பகைவரிடம் தோற்றவர்கள் நிதி கொடுத்து, இவரது துணை வேண்டி நிற்பாரெனில், நடுநிலை மாறாது பாரபக்ஷமின்றி பகைக்குரிய காரணம் அறிந்து, அவருக்காக போர் முயற்சியில் ஈடுபடுவார். அதனால் பெற்ற கூலியை பெருஞ்செல்வமாகினும் அதனை அடியவர்களுக்கே கொடுத்து மகிழ்ந்தார். திறனுடன் போர் புரிந்து வெற்றி வாகை சூடியதால் முனையாடுவார் என்று திருப்பெயரின் சிறப்புக்கு உரியவர் ஆனார். பல காலம் திருத்தொண்டு புரிந்து, ஈசன் திருநீலகண்டனின் அருளுக்கு பாத்திரமான நாயன்மார், சிவ லோகம் சென்றமர்ந்து அங்கு மீளாத இன்பம் அமையப்பெற்றார்.  ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய மூர்க்க நாயனார் திருவேற்காடு எனும் தொண்டை நாட்டிலுள்ள திருத்தலத்தில் வாழ்ந்தவர் மூர்க்க நாயனார். வேளாண்குடியில் பிறந்தவர். தமது பொருளையெல்லாம் கொண்டு சிவனைத் தொழுதிருத்தலும், அடியவர்களுக்கு விருந்தளிப்பதும் முக்கியமான நோக்கமென கொண்டு வாழ்ந்தார். திருநீற்றின் மகிமை கொண்டாடி சிவ பூஜை செய்து வந்தார். பெரும் விருந்தளித்து அடியாரை பேணும் இவர் பெருமைக்கு நாளும் பலப் பல அடியவர்கள் பெருகிக் கூடினர். தம் செல்வத்தை எல்லாம் செலவழித்தார். வறுமை வந்தடைந்த பின்னரும், தமது பொருளத்தைனையும் விற்று அச்செல்வம் கொண்டு விருந்தளித்தார். பொருளீட்டுவதற்கு வழியாதென சிந்தித்து, தனக்கு பெரிதும் உதவும் சூது விளையாடி பொருளீட்டினார். சூது விளையாட்டில் மிக வல்லவராக திகழ்ந்தவராகையால், வெற்றி ஈட்டி, அதனால் பொருள் திரட்டிவிடுவார். திரட்டிய பொருளையெல்லாம சிவ பூஜையிலும் அடியவர்களுக்கு வேண்டியவற்றை அன்புடன் வழங்குவதிலும் செலவிடுவார். அடியவர் உண்ட பின்பே தாம் உண்ணும் வழக்கம் தவறாது கடைபிடித்தார். முதல் சூதில் தோற்றும் பின்னர் அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றி பெற்றும் சூதில் பொருளீட்டினார். தான் ஆடும் சூதில் அதற்குறிய ஒழுக்கம் கடைபிடித்தார். கள்ளாட்டம் ஆடக் கூடாதென்ற நியமம் கொண்டிருந்தார். தோல்வி உறுதி எனத் தெரிந்ததால் அவருடன் சூதாட பலரும் தயங்கினர். மேலும், எவரேனும் பொய்யாட்டம் ஆடினால் அவர்களை உடைவாள் கொண்டு குத்திவிடுவதால், மூர்க்க நாயனார் என்று வழங்கப்பட்டார். இவ்வாறு பல காலம் சிவபூஜை செய்து அடியவரை வணங்கப்பெற்றதால் இடரும் குற்றமும் களையப் பெற்று சிவபதம் எய்தினார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய மூர்த்தி நாயனார் மதுரையம்ப்தியில் பிறந்தவர் மூர்த்தி நாயனார். சிவப்ரீதியுடையவராக ஈசன் திருவடி பற்றியிருந்தார். குற்றமற்ற பக்தியின் திருவுருவமாக திகழ்ந்தார். சோமசுந்தரருக்கு அன்றாடம் சந்தனக்காப்பு கொடுக்கும் திருப்பணி செய்துவந்தார். விதி வசத்தால் பாண்டிய நாட்டை கர்னாடக தேசத்து அரசன் முற்றுகையிட்டு வெற்றி கண்டான். பாண்டிய மன்னனை வென்று நாட்டை கைப்பற்றினான். சமண மதம் தழுவியிருந்த அவ்வரசன், சிவனடியர்களுக்கு துன்பம் கொடுத்துவந்தான். பலரும் வேறு வழியின்றி சமண மதத்தை தழுவும் நிலையை உருவாக்கினான். அவ்வாரே நாயன்மாருக்கும் தொல்லைகள் பெருக்கினான். இடர் பெருகி வரினும் தமது நிலையிலிருந்து வழுவாது பணியைத் தொடர்ந்தவண்ணமிருந்தார் மூர்த்தி நாயனார். சந்தனகாப்பு கொடுக்க சந்தனக் கட்டைகள் கிடைகாதவாறு செய்தான். பல இடங்களிலும் தேடி அலைந்து கிடைக்கப்பெறாமல் மிக துக்கம் கொண்டவராக, இவ்வரசன் மரித்து, சைவம் தழைக்கும் நாளும் எந்நாளோ என சிந்தை வருந்தி, தமது முழங்கை முட்டியை கட்டையில் தேய்க்கலானார். எலும்பும் நரம்பும் தோலும் பிறழ்ன்று வருத்தும் அளவு தேய்தார். இறைவன் அசரீரியாக கருணை பொழிந்தார். அன்பின் மிகுதியால் இவ்வாறு தேய்த்தலை விட , நீயே இந்நாட்டை கைபற்றி கொடுமை நீங்கச் செய்து நாடெங்கும் சிவபரிபாலனம் செய்வாய் என்று பணித்தார். மூர்த்தியார் அதைக் கேட்டு தேய்த்தலை நிறுத்தினார். அவர் மேனி குற்றமற்று முன்போல் ஒளிர்ந்தது. அன்று இரவு அரசன் உயிர் துறந்து சிவபாதகம் செய்தமையால் நரகத்தில் விழுந்தான். மந்திரிகள் கூடி அரசர்க்கு வாரிசு இல்லாததால், யானையால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏந்திவரும் பெருமகனை அரசர் என கொள்ள முடிவு செய்தனர். யானையானது மதுரையம்பதி வீதியெங்கும் திரிந்து இறைவனை அன்புப் பெருக்கினால் வணங்கி கோவில் முன் நின்ற நாயன்மாரை தேர்ந்தெடுத்தது. இதுவே கடவுள் சித்தமென்றால் நான் சிறப்புற நாட்டை ஆள்வேன் என்று உறுதி பூண்டார் மூர்த்தி நாயனார். மறை முழக்கம் ஒலிக்க திருநீற்றை அபிஷேகத் தீர்த்தமாக்கி, ருத்ராக்ஷத்தை ஆபரணமாக்கி, சடாமுடியே முடியென சூடிக்கொண்டார். மதுரையிலும் பாண்டி நாடெங்கிலும் முன்போல் சிவ நாமம் ஒலிக்கத் துவங்கியது. பெண்ணாசை பொன்னாசை வெல்லப்பெற்றவராக, துறவொழுக்கத்துடன் புலன்களை வெற்றி கண்ட அரசர், பலகாலம் சிறப்புற நாடு காத்து தொண்டுகள் புரிந்து உய்ந்தார். ஆயுட்காலம் முடிந்ததும் உடல் உகுத்து இறைவன் திருவடியில் நீங்கா இடம் பெற்றார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய மெய்ப்பொருள் நாயனார் திருக்கோவலூர் என்னும் ஊரை ஆண்ட குறுநிலமன்னராக இருந்தவர் மெய்ப்பொருள் நாயனார். ஈசன் அடி போற்றுவதும், அவன் பணி செய்து கிடப்பதும், சிவ மந்திரம் ஓதுவதுமே நற்கதிக்கு வழி என்பதை உணர்ந்தவராக இருந்தார். சிறப்புற அரசாண்டு, பகைவர்களால் இன்னல் நேராமல் திருநாட்டை காத்தார். நாடெங்கிலும் சிவ வழிபாடுகளும் பூஜைகளும் ஆகம முறைப்படி நடப்பதற்கு வழி செய்தார். அடியார்களிடத்தே அபரிமிதமான அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார் என்பது இவரது சரித்திரத்தின் மூலம் விளங்குகிறது. தனது நாட்டை கண்ணெனக் காத்தவர், பகைவர் முற்றுகையிட்டால் அவர்களை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். பல முறை மெய்ப்பொருளாரிடம் தோற்ற முத்தநாதன் என்ற மன்னன், நாயன்மாரிடம் மிகுந்த பகையுணர்வும் வெறுப்பும் கொண்டிந்தான் . வல்லமையினால் அவரை வீழ்த்த பலமுறை முயன்று தோல்விகண்டவன், வஞ்சத்தால் பழி தீர்க்க எண்ணினான். சிவனடியார்களை தொழுது நிற்கும் நாயன்மாரை, அடியார் வேடத்தில் அணுகினான். நீறணிந்த நெற்றியுடன், மேனியெங்கும் நீறு பூசி, சடாமுடி தரித்து, ஆயுதத்தை புத்தக முடிப்பு ஒன்றில் மறைத்து எடுத்துச் சென்றிருந்தான். அரண்மணை அடைந்தவனை சிவனடியார் என்று நினைத்து வாயில் காவலர்கள் அனுமதித்தனர். அரசர் பள்ளியறை வாயிலை அடைந்தவனை தத்தன் என்ற காவலர் தடுத்தும், தாம் மன்னனை காண்பது அவசியம் என்று வலியுறுத்தினான். சிவனடியவரான தம்மிடம் ஆகமம் ஒன்று இருக்கிறது அதனை உரைப்பதற்கே வந்திருப்பதாக கூறினான். துயில் கொண்டிருந்த அரசரை அரசி எழுப்பினார். எவரும் அறியாத அரிய தகவல் கொண்ட சிவ ஆகமம் கொண்டர்ந்திருப்பதாக உரைத்தான். அவரிடம் அதுபற்றி தனியே பேச வெண்டும் எனக்கூற அரசியாரை அப்புறம் செல்லுமாறு பணித்து, அடியவர் எனக்கருதி மிக மகிழ்வுடன் வரவேற்று மகிழ்ந்தார் நாயன்மார். ஆசனமளித்து அமரச் செய்து தாம் தரையில் அமர்ந்துபணிவுடன் ஆகமம் கேட்கலானார். வலிமையில் குறைந்த கொடிய அம்மன்னன் புத்தக முடிப்பில் மறைந்திருந்த உடைவாளை உருவி நாயன்மாரை வீழ்த்தினான். இதை சற்றும் எதிர்பாராதவராக இருந்தவர், குத்துண்டு விழுந்த நிலையில்கும் சிவ வேடத்தினைக் கண்டு மெய்ப்பொருள் எனத் தொழுதார். விழிப்புடன் இருந்த தத்தன், உடனே பாய்ந்து அக்கொடிய மன்னனை வாளால் வீழ்த்த முனைந்த போதும் நாயன்மார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து முத்தநாதனை பத்திரமாக எல்லை தாண்டி விட்டுவரப் பணித்தார். வழியெங்கும் கொதித்து போயிருந்த மக்களை சமாதானப்படுத்தி அரசரின் ஆணை எடுத்துக்கூறி எல்லை வரை பாதுகாப்பாக விட்டு வந்தான் தத்தன். அரண்மணை வந்தவன் நாயன்மாரிடம் தம் பணி நிறைவேறியதைக் கூற, மெய்ப்பொருள் நாய்னார், “நீ இப்பொழுது செய்ததை எனக்கு யார் செய்ய வல்லவர்கள்” என்று அன்புடன் உரைத்து நன்றி கூறினார். அரசுரிமையை வாரிசுக்கு வழங்கி, நீறுநெறி போற்றி அரசாளப் பணித்து, ஈசனை நினைந்தார். . இறைவன் அம்மையப்பராக நாயனாருக்கு காட்சிதந்து அருள்செய்து தம் திருவடியில் இடையறாது தொழுதிருக்க இணைத்துக் கோண்டார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய வாயிலார் நாயனார் அறுபத்து மூவருள் ஒருவராக போற்றபடும் வாயிலார், சென்னையில் மயிலாப்பூரில் அவதரித்தவர். இவர் வாழ்ந்த காலகட்டத்தை சரிவர அறிய இயலவில்லை, பெரியபுராணத்தின் வாயிலாகவும், திருத்தொண்டர் தொகையிலும் இவர் பேசப்படுவதால் இவர் சுந்தரர் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னமே வாழ்ந்ததாக தோராயமாகக் கொள்ளலாம். வெளாளர் குடியில் பிறந்ததாக பெரிய புராணம் குறிப்பிடுகிறது. வாழும் காலம் தோறும் மௌனமாக இருந்ததால் ‘வாய்-இலார்’ - வாயிலார். மௌனமாக இருந்ததால் வரலாறும் மிக சுருக்கமானது. சிவன் ஒருவனைத் தவிர சிந்தையில் ஏதுமில்லை. வாயினின்று சொல் தேவையில்லை என சிவ நாமத்தையும் சிந்தையுள் ஜபித்தே, அகந்தை என்பது மருந்துக்கும் இல்லாதவராக, ‘நான்’ அகன்ற நிலையில் மெய்ப்பொருளுடன் ஒன்றி வாழ்ந்தார். இத்தகைய தவ வாழ்வு வாழ்ந்தவர், நெடுங்காலம் சிவனை சிந்தையிலேயே நிறுத்தி தவமியற்றியதற்கு அம்மையும் அப்பனுமான ஈஸ்வரனும் உமையளவளும் தம் அருகில் சிவபதம் அருளி இணைத்துக் கொண்டனர் என்பதை சொல்லினாலோ அல்லது எழுத்தினாலோ கூறவும் வேண்டுமோ! சென்னையிலுள்ள திருமயிலை கபாலிஸ்வரர் கொவிலில் தனி சன்னதி அமைக்கப் பெற்று வாயிலார் நாயனார் வணங்கப்பட்டு வருகிறார். . ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய விறன்மிண்ட நாயனார் செங்குன்றூரில் தோன்றிய விறன்மிண்டார் சிவனாரை சிந்தையில் நிறுத்தி, புறப்பற்றுகள் அறுத்து, சிவ பற்றைத் தவிர பிறிதொன்றை எண்ணாதிருந்தவர். சென்ற இடமெங்கும் அடியார்களை பணியும் இயல்புடையவராக இருந்தார். அடியார்களை வணங்கும் பண்புடையவர் என்பதால் ஆலயம் உள் நுழையும் முன்னர், அங்கு திரண்டிருக்கும் பக்தர்கள் கூட்டத்தை வணங்கிவிட்டு பின்னரே ஆலயம் செல்லும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.  நாயன்மார் அவதரித்த செங்குன்றூர் சேரநாட்டில் இருக்கும் திருத்தலம். திருத்தலங்கள் பல சென்று ஈசனை வழிபடும் பேராவல் கொண்டதால் சேரநாட்டு ஆலயங்களை தரிசித்து முடித்த பின்னர், சோழமண்ணில் துலங்கியுள்ள ஆலயங்களை வழிபடும் ஆவலால் சோழ நாடெங்கும் பயணம் மேற்கொண்டார்.  அவ்வாறு பயணிக்கும் காலத்தில், திருவாரூரை வந்தடைந்தார். அப்பொழுது சுந்தரர் அங்கு இறைவனை தரிசிக்க வந்திருந்தார். ஆலய கூட்டத்தை கண்டு சற்று ஒதுங்கியவாறு சென்றவரை சுந்தரரைக் கண்டவர், ‘திருக்கூட்டத்தை வணங்காது சென்ற இவனும் புறகு, இவனை ஆளும் சிவனும் புறகு’ என்று உரைத்தார். (புறகு என்றால் புறம்பானவன் என்று பொருள்) விறன்மிண்டரின் பெருமை அறியக் கேட்டார் சுந்தரர். ஆலயத்துள் எம்பெருமானை வணங்கி, “இவ்வடியவர்களுக்கெல்லாம் யான் அடியேன் ஆகும் நாளும் என்றோ என்று உருகினார். ‘அடியாரைப் பாடு’ என்று கருணை கொண்டு எம்பெருமானாரே,”தில்லைவாழ் அந்தணர்" என்று அடியெடுத்துக் கொடுத்தார். அடியார்களைப் போற்றும் திருத்தொண்டர்த்தொகையை “தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று முதலடி அமைத்து மெய்யுருகப் பாடி நின்றார் சுந்தரர்.  திருத்தொண்டத்தொகை அமையக் காரணமான விரன்மிண்ட நாயனார், அடியாரை பாடும் சுந்தரரைக் கண்டு மகிழ்ந்தார்.  சிறப்புற வாழ்ந்து சிவ நெறி போற்றி இறுதியில், எம்பெருமான் திருவடி நிழலடைந்து கணங்களுக்கு தலைவரானார். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய நாயன்மார்களும் பெரியபுராணமும். (நிறைவுப் பகுதி) பிற-மதநெறிகள் ஓங்கி, சைவம் தடுமாறும் போதெல்லாம் அவதார புருஷர்கள் சைவத்தை நிலை நாட்டி செல்வது பாரத மண்ணின் பெருமை. அவ்வாறு வந்தவர்கள் ஆதிசங்காராச்சாரியார் உட்பட பலர். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் சிலரும் சைவநெறி மேலோங்க பெரிதும் காரணமாயிருந்தனர். சைவ சமயத்தை முன்னிருத்தியவர்களுள் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் சைவக் குரவர்கள் என்று போற்றபடுபடும் அப்பர், சுந்தரர், நாவுக்கரசர், மாணிக்க வாசகர் எனும் நால்வர். சுந்தரர் இயற்றிய் திருத்தொண்டர் தொகை சுந்தரர் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு. மாணிக்க வாசகருக்கு முன் தோன்றியதால் அவரைப் பற்றிய குறிப்பு தமது திருத்தொண்டர் தொகையில் எழுதவில்லை. சுந்தரர் எழுதியதை பின்பற்றியே பெரியபுராணம் எழுதப்பட்டதால் நால்வருள் மூவரே நாயன்மார்களாக பாடப் பெறுகிறார்கள். சுந்தரர் திருத்தொண்டர் தொகை பாடுதற்கு, விறண்மிண்ட நாயன்மார் காரணமானார். அடியவர்களுக்கெல்லாம் அடியேன் என்று தமை தாழ்த்தி, அடியவரை வாழ்த்திப் பாடினார். சுந்தரர் அறுபது நாயன்மார்களை தொண்டர்த் தொகையில் குறிப்பிடுகிறார். அவரது திருத்தொண்டர் தொகையை மூல நூலாகக் கொண்டு சற்றே விரிவு படுத்தியவர், நம்பியாண்டார் நம்பி என்பவர். நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி நம்பியாண்டார் நம்பி திருநாரையூரில் பத்தாம் நூற்றாண்டு அவதரித்தவர். நம்பிகளின் தந்தை வெளியூர் செல்ல நேரிட்ட போது, நம்பிகள் பிள்ளையாருக்கு தானே நிவேதனம் செய்தார். ஆலயத்துள் எழிற்கோலம் கொண்ட பிள்ளையார் பல முறை அழைத்தும், நிவேதனத்தை ஏற்கவில்லை என வருந்தி, தன் பூஜையில் தவறு நேர்ந்ததோ என பதறி சுவற்றில் தலையை மோதி தமை வருத்திக்கொண்டார். தடுத்தாட்கொண்ட பிள்ளையார், நிவேதனைத்தை ஏற்று அருளினார். இவ்வளவு பெருமைக்குறிய நமது நம்பி, திருவந்தாதி அமைத்த நிகழ்வை சிந்திப்போம். இவரது பெருமை அறியப்பெற்ற அபயகுலசேகரன் என்ற சோழ மன்னன், தமிழும் சைவமும் விளங்க, மூவர் அருளிய தேவாரம், திருமுறைகள், தொண்டர்கள் வரலாறுகளை, தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் சென்றடைய வேண்டும் என்று ஆவல் கொண்டு பிள்ளையாரின் அருள் வேண்டி நம்பியிடம் தமது கோரிக்கையை வைத்தார். பிள்ளையாரும், தில்லையில் தேவாரத் திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளதென அருளி திருத்தொண்டர் வரலாறை தாமே நம்பிக்கு உணர்த்தியதாக நிகழ்வு. தில்லையை அடைந்த மன்னரும், நம்பிகளும், தேவாரம் திருமுறைகள் அடங்கிய பூட்டப்பட்டுள்ளா அறையின் கதவை திறக்க வேண்டினர். அந்தணர்கள் மூவர் வந்தாலன்றி அக்கதவு திறப்பது இயலாதென்று உரைத்தனர். மன்னர் மூவரின் திருவுருவங்களை பூஜித்து முறைப்படி கதவின் எதிரே நிறுத்தி, கதவு திறக்கப் பெற்றார். சமய நூலகள் கறையான் அரித்து புற்று மூடி வீணாகியிருந்ததால் அனைவரும் துக்கித்தனர்.அப்போது, ‘இக்காலத்திற்கு ஏற்ற ஏடுகளை மட்டும் விட்டு வைத்திருக்கிறொம் அஞ்ச வேண்டாம்’ என்று இறைவன் அசரீரியாக அருளினார். அவற்றை எடுத்து நம்பிகள் பதினொன்று திருமுறைகளாக வகுத்து உணர்த்தினார். சுந்தரரின் திருத்தோண்டர் தொகையை, பிள்ளையார் உணர்த்தியதற்கேற்ப நாயன்மார்களின் வரலாற்று செய்திகளையும் சேர்த்து குறிப்பிட்டு, ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ என்று இயற்றி அருளினார். நம்பிகள் எழுதிய நூல்களும் பதினொன்றாம் திருமுறையில் அடங்கும். ॐ ॐ ॐ ॐ ॐ சேக்கிழாரும் இயற்றிய பெரியபுராணம் நம்பிகளுக்கு பின் தோன்றி 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சேக்கிழார். சேக்கிழார் அறுபத்தி மூவரைப் பற்றி எவ்வாறு எழுதினார் என்பதும் சுவாரஸ்ய நிகழ்வு. சமண மதத்தின்கோட்பாடுகளிலும், கேளிக்கை விளையாட்டிலும் தம் மனதை செலுத்திய மன்னரை சைவத்தின் பெருமையை எடுத்துரைக்க ஆசை கொண்டார் சேக்கிழார். சேக்கிழார், இளமைப் பருவத்தில் இருந்த போது, அநபாய சோழனின் பெருஞ்சந்தேகங்களைத் தீர்த்து, அமைச்சர் பதவியை பெற்ற பெருமை கொண்டவர். இம்மைக்கு மட்டுமின்றி மறுமைக்கும் வழிதேட வேண்டுமென மன்னனுக்கு வலியுறுத்தி,தொண்டர்கள் பெருமையை விளக்க முற்பட்டார். தில்லை நடராஜர் முன் வணங்கி நின்றார். இறைவனே சேக்கிழாருக்கு “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுத்து அருளியதாக நிகழ்வு. சித்திரை திருவாதிரையில் இயற்றத் துவங்கி, சரியாக ஒருவருட காலம் எடுத்து அடுத்த வருடம் அதே சித்திரை திருவாதிரையில் பெரியபுராணம் இயற்றி நிறைவு செய்தார். சுந்தரர் நாயன்மார்களை பாடிய வரிசையே பெரியபுராணத்திலும் அமைத்து பாடினார். சுந்தரர் குறிப்பிட்ட நாயன்மார்கள் அறுபது. சேக்கிழார் பெரியபுராணத்தில், சுந்தரரையும், சுந்தரரின் பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் சேர்த்து அறுபத்து மூவர்களாக்கி நமக்கு சமர்பித்தார். முதல் நூலாக சுந்தரரின் திருத்தொண்டர்த் தொகையைக் கொண்டவர், நம்பிகளின் திருவந்தாதியிலிருந்து குறிப்பெடுத்தார். ஊர் ஊராகச் சென்று கல்வெட்டுகள், செவிவழி செய்திகள், நாட்டுப்புற பாடல்கள், என்று பலவகையில் செய்திகள் திரட்டினார். அச்செய்திகளை எல்லாம் திரட்டி, பெரிய புராணமாக்கி இன்றும் நம் போன்றவர்கள் க்ஷண நேரமேனும் சிவ சிந்தனையில் ஈடுபட அருளிச் சென்றார். ॐ ॐ ॐ ॐ ॐ ஈசனும் நாமும் உமையொரு பாகனை வில்வத்தைக் கொண்டும், மலர்களைக் கொண்டும் அர்ச்சிக்கலாம். வாசனை திரவியங்கள், குங்கிலியம் போன்றவை சமர்பித்து நம் அன்பை செலுத்தலாம். ’ஆனாய நாயனாரை’ப் போல், இசையால், சிவனையன்றி வேறொன்றை சிந்திக்காது துதிக்கலாம். ’பூசலாரை’ப் போல் ’வாயிலாரை’ப் போல் மனதில் பெரும் சாம்ராஜ்ஜியம் கட்டி, அதில் கொலுவைத்து நமது தந்தையென போற்றி பூஜிக்கலாம். நால்வரைப் போல், இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதவன் என்றும் உணரலாம். பித்தனே என்றும் அன்பாக அதட்டி உருகலாம். காயத்தினால் மட்டுமன்றி வாக்காலும் மனதாலும் பேரறிவாலும் சிவனை சிந்தித்து, அவர் அருளால், குருவருளால், பிறவி பெருங்கடல் நீந்தி, அரிதிலும் அரிதான மானுடப் பிறப்பின் பெரும்பயன் உணர்ந்து முழுமை பெறுவோம். ॐ ॐ ॐ ॐ ॐ ஓம் நமச்சிவாய (நிறைவுற்றது) FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.