[] நான் கி.பிரேமாமோனி மின்னூல் வெளியீடு : freetamilebooks.com உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com என்னுரை வணக்கம்! சிறு காகிதங்களில் மட்டுமே அடைக்கலம் கொண்டு சிதறிக் கிடந்த என்றன் கவிதைக் கிறுக்கல்களுக்கு முதன்முறையாக உருவமும். உயிரும் கொடுத்து உங்கள் கைகளில் சிறு மின் புத்தகமாக உருவெடுக்கக் காரணமாக இருந்த இறைவனுக்கும். இறைவனடி சேர்ந்த என் தந்தைக்கும். வாழும் தெய்வமாய் திகழும் தாய்க்கும். தந்தை அன்பை நிறைவு செய்த தமயனுக்கும். என்னை மேன்மேலும் கவிதை எழுதிட ஊக்கமளித்த நண்பர்களுக்கும் இப்புத்தகத்தை சமர்ப்பணம் செய்கிறேன், என்கவிதைகளை அச்சிட்டு வெளியிட உதவிகள் வழங்கிய திரு. லெனின் குருசாமி அவர்களுக்கும் எனக்கு அறிவுரைகள் பல வழங்கி வழிகாட்டிய திரு, கா,பாலபாரதி அவர்களுக்கும் என் நன்றிகள், இப்படிக்கு. கி.பிரேமாமோனி premamoni7@gmail.com [] கி.பிரேமாமோனி [] 1. நான் அழகானேன் - உன் பார்வை என்னில் பட்டபோது.... நான் ஆனந்த சிறகை விரிக்கிறேன் நீ என்னருகேவந்தபோது.... நான் இதயவானில் பறக்கிறேன் உன் விரல் எனைத் தீண்டியபோது... இவையுணர்ந்த நான், உணரவில்லை - நீ என் மனம் கவர்ந்ததை.... [] 2. என் விருப்பம் நிறைவேற சிறகிருந்தும் சிக்கித் தவிக்கிறேன் பாசக்கூண்டில்... கூண்டுக் கிளியாக நான்.... [] 3. தன்னலமறியாப் பேதை நான்... சுயநலவாதியாக்கியது உன் அன்பு.... [] 4. என் ஐந்து  நிமிடப் பேருந்துப் பயணம் புனிதப் பயணமானது.... உன்னருகே நான்.... [] 5. உன்னைநேசித்த என்னை - நீ நேசிக்காவிட்டாலும் காயப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.... காயத்தின் மருந்து உன் அன்பு.... அறிந்தும் பெற முடியாமல் நான்... [] 6. ஒப்பிட்டுப் பார்த்தேன் நீ ஏற்படுத்திய காயத்தையும் நீ கொண்ட நேசத்தையும்.... விண்ணாக உன்நேசமும்... மண்ணாக என்காயமும்... நான் விண்ணோக்கிப் பயணிக்கிறேன் மண்ணைப் புறக்கணித்து... [] 7. நான்... உன்னருகில் என்னை மறந்தும் உன் பிரிவில் என்னை மறைத்தும்.... [] 8. கல்லாத மூடன் நான் கவிஞனானேன் உன் காதலால்.... [] 9. காணுமிடமெலாம் நீயேத் தெரிந்தும் - நான் தேடுகிறேன் உண்மையான உன்னை.... [] 10. எத்தனை முறை வெட்டினாலும் உன்னுடனே வாழும் நகம் நான்.... [] 11. குற்றங்கள் பல புரிந்தவர் ஏதேதோ சிறைகளில்.... நான் உந்தன் விழிச் சிறையில்... உன் கண்கள் கண்ட குற்றத்தால்.... [] 12. கானல் நீரென நினைத்தேன் - நான் உன் காதல் காட்டாற்று வெள்ளமாகும் வரை... [] 13. உன்னோடு வாழ்ந்த நான் நீ இன்றியும் வாழ்கிறேன்... உன் நினைவுகள் உடனிருப்பதால்.... [] 14. மறக்க வழியின்றி மறைத்து வாழ்கிறேன் நான்... என் காதலையும்.... அவன் பிரிவையும்…. [] 15. நான் உலகை மறந்த நொடி... நீ - உன் காதலை உரைத்த நொடி... [] 16. விண்ணைத் தாண்டி வருவாயா என்றுன்னை அழைக்கவில்லை... நான் வருகிறேன் என் காதலை - நீ உணருகையில்.... விண்ணைத் தாண்டி உன்னைத் தேடி... [] 17. நொடிப்பொழுதும் கிடைக்கவில்லை உன்னோடு நேரில் வாழ... யுகம்பல கடந்து வாழ்கிறேன் நான் கனவில்... [] 18. காதல் சிறையில் கைதியானேன் - நான் உனை உண்மையாய் நேசித்தக் குற்றத்திற்காக... [] 19. நான் வேறொருவன் தன் கரம் பற்றியது உனை மறந்தன்று... எனக்குள் உன்னை மறைத்து என்னைப் புதைத்து... [] 20. மிருகமாய் வாழ்ந்த நான் மனிதனானேன் - நீ உடனிருந்ததால்... மனிதன், நடைபிணமாகிறேன் - நீ நீங்கியதால்.... [] 21. நான்... செல்லுமிடமெலாம் உனையேக் காண்கிறேன்... கண்டும் பேச வழியின்றித் தவிக்கிறேன்.... தவிப்பை உணர்த்தத் தூது விடுகிறேன் தென்றலை... அறிந்தால், அறிந்ததுப் புரிந்தால் மாற்று தென்றலை மழையாக.... [] 22. நீ திட்டுவாய் என்பதறிந்தும், மீண்டும் மீண்டும் அழைக்கிறேன் நான் அலைபேசியில்.... உன் செல்லத் திட்டல்களைக் கேட்க விரும்பி.... [] 23. உன்னை நினைத்து மகிழும் ஒவ்வொரு தருணமும் என்னை நினைத்து வேதனை கொள்கிறேன்... நாம் பிரிய ''நான்'' காரணமானதால்.... [] 24. வீசும் தென்றலுக்கு வளைந்து கொடுக்கும் மூங்கில் நான், காற்றோடு செல்லும் சருகானேன்.... காற்று, நீயென்பதால்.... [] 25. நான் நினைத்திருந்தேன்... கண்ணீரினும் பெரும் ஆயுதமில்லையென... என் எண்ணம் பொய்யானது - உன் புன்னகை கண்ட நொடியில்... [] 26. உனைக் காணும் வரை எனைப் பற்றியே சிந்தித்த நான், உன்னைப் பற்றியே சிந்திக்கிறேன்.... உனைக் கண்ட கணம் முதல்.... [] 27. உன்னை மறக்க முடிவெடுத்த பின்னும் மறக்க முடியாமல் தவிக்கிறேன்... உன்னுடன் வாழ்ந்த நொடிகளை... [] 28. நான்... மகிழ்ந்தேன் என் மன வானில் நீ மேகமான போது... நெகிழ்ந்தேன் நீ வடிவங்கள் பல கொண்டபோது... மறந்தேன் நீ என் தற்காலிகம் என்பதை... அதனால் இறந்தேன் நீ மழையாய் மாறி விலகியதும்... [] 29. மகிழ்ச்சி கொண்டேன்... உலகமே நெருப்பாய் மாறி வாட்டியபோதும்... உன் நிழலில் நான்.... [] 30. நான் என்னை மறந்து யோசிக்கும் பலவற்றை மறந்தேன் - உன் புன்னகை காண்கையில்... [] 31. உன் நட்பு, உன் பார்வை, உன் அன்பு, உன் புன்னகை, உன் கோபம் இவற்றை ரசித்த நான், ரசிக்க முடியாமல் தவிக்கிறேன் உன் பிரிவை... [] 32. தண்ணீரில் கண்டம் கொண்டவளாய் நீர் கண்டஞ்சிய நான், தண்ணீரின் காதலியானேன் அவன் எனக்காய் சிந்திய முதல்துளி கண்ணீர்... [] 33. தமவேயாம் என்றெண்ணி வாழ்ந்த உறவுகள், இன்றெனக்கு உணர்த்திச் செல்கின்றன... நான் தனிமையின் காதலி என்பதை... [] 34. நான் உன்னுடன் வாழ ஏங்கிய நாட்களை தினந்தினம் வாழ்ந்துத் திளைக்கிறேன் கனவில்..... [] 35. நான் ஈருயிர் கொடுத்த ஓருயிரையும் விடத் துணிந்தேன்... அவன் கொடுத்த உள்ளத்திற்காக... [] 36. ஆயக்கலைகளையும் ரசிக்கா மனங்கொண்ட அசுர குலப் பெண் நான், தந்தையின் திகட்டாத் திட்டல்களையும் ரசித்து ருசிக்கும் ரசிகையாகிறேன் - அவன் பார்வை எனைத் தீண்டிய நொடிமுதல்..... [] 37. விளம்பரங்களை நாடிச் சென்றவள் நீ உன்னில் பிறந்ததால் விளம்பரப் பொருளாக மாற்றப்பட்டவள் நான்.... [] 38. வாழ்வில் சில நேரங்களில் சிரிப்பை உமிழ்ந்தும் பல நேரங்களில் தனிமையை உட்கொண்டும் நான்... [] 39. உன்னருகே வாழும் ஒரு நொடிக்காக காலம் கடந்தக் கண்ணீர் சிறையில் காத்திருக்கிறேன் நான்.... [] 40. உன் கை கோர்க்கும் ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன் நான் யாருமற்ற எனக்கு அனைவரும் இருப்பதாய்... [] 41. பிரம்மனின் ஓவியம் உனைக் கண்டதும் மாற்றம் பெற்றேன் நான் எனக்கேப் புரியா ஓவியமாய்.... [] 42. நான் ஆயிரம் உறவுகளின் அன்பு கண்டேன் - என் உயிரில் கலந்த உன் உருவில்... [] 43. நான் தெரியாமல் தொலைத்த உன் அன்பிற்காய் தெரிந்தே தொலைக்கிறேன் என் உயிரை... [] 44. சந்திக்கும் ஒவ்வொரு நொடியும் என்னை மறந்து உன்னைப் பற்றியே சிந்திக்கிறேன் நான்... [] 45. நான் காதல் கொண்டேன் மனிதனை மனிதனாய் நேசிக்கும் தன்னலமறியா நின் தாயுள்ளத்திடம்... [] 46. நான் உன்னைத் தேடிவரும் போது ஓடி ஒளியாதே... நீ தேடி வரும்போது நான் இல்லாமல் கூடப் போய்விடலாம்... உன்னை விட்டு அல்ல உலகை விட்டு..... [] 47. நான் பல ஆண்டுகள் வாழ நினைத்தேன் உன்னோடு... முடியவில்லை... சில நொடி வாழ்ந்த நிம்மதியில் மரணிக்க விரும்புகிறேன் உன் மடியில்… [] 48. நான் உனக்காக உன்னை நினைத்து வாழ்ந்த வாழ்வு சில காலமெனினும் மறக்க மடியாமல் பயணிக்கிறேன் மரணத்தைநோக்கி... மரணம் உன்னைப் போலன்றி - என் மனதறிந்து எனை ஏற்றுக்கொள்ளுமெனும் நமபிக்கையில்… [] 49. என் பொழுதுகள் விடிவதில்லை உன் முகம் காணாது... என் இரவுகள் கழிவதில்லை உன் கனவுகள் இன்றி... என் நாட்கள் நகரவில்லை உன் நினைவுகள் இன்றி... என் மனம் அமைதி கொள்ளவில்லை உன் விழிகள் என்னோடு பேசாமல்….. இமை இமைக்க மறந்து. இதயம் துடிக்க மறந்து காத்திருக்கிறேன் – நான் உன்னைக் காண... [] 50. நான் கலைந்து போகிறேன் காற்றோடு அலைமோதும் உன் கூந்தலுடன்..... நான் கரைந்து போகிறேன் -உன் கண்ணோடு வழியும் கரு'மை'யுடன்... நான் கண்கள் திறந்து கனா காண்கிறேன் உன்னருகில் ..... நான் கண்மூடித் தவமிருக்கிறேன் நான் காத்திருப்பின் தலைவியாகிறேன் உன் வருகைக்காக..... நான் தூறலாகத் தூர்ந்து போகிறேன் உன்மீது பட்டு தெறிக்கும் மழைத் துளிகளில்.... நான் மலைச்சரிவின் சாரலாகிறேன் -உன் சாந்த முகத்திடம்... நான் மேருமலையில் மேகமாகிறேன்உன் சுவாசம் தீண்டும்போது.... நான் மூங்கில் குழன் மெல்சையாகிறேன் உன் மெல்ய புன்னகை கண்டு ..... நான் காற்றில் அலையும் சிறகாகிறேன் உன் நுனிவிரல் தீண்டிய நொடி முதல் .... நான் வானவில்லன் வண்ணமாகிறேன் உன் வெண்சட்டையில் குடியேற... நான் காற்றோடு சிறகடிக்கும் சருகாகிறேன் உன் சந்தன வாசம் கண்டு... நான் பிளவுகளாகப் பிரிந்து புள்ளிகளாகிறேன் உன் கண்கள் செய்யும் கோலத்தின் அங்கமாக.... நான் எழு சுவரங்களின் இசையாகிறேன் உன் இனிய குரல் கேட்டு ..... நான் என்னை மறந்து நீயாகிறேன் உனை சிந்திக்கும் போது.... [] 51. நான் பிறந்ததும் எனை ஈன்றவளினும் அதிகம் மகிழ்ந்தாய், என் கண்ணில் தூசி பட்டாலும் உன் இதயத்தைத் துளைத்ததாய் துடித்தாய்.... என் காலில் தைத்த முள்ளையும் உன் நெஞ்சில் தைத்ததாய் எண்ணித் தவித்தாய், உன்னால் காக்கப்பட்ட நான். கண்ணீர் விடுகிறேன் உன் கல்லறையில், கண்ணீர் துடைக்க கரம் தர மாட்டாயா எனும் ஏக்கத்துடன்..... [] 52. உன் கண்கள் வீசிய காதல் வலையில் சிக்கிக் கொண்டேன், என்னை அறியாமல். உன்னை அறிந்து... உன் காதலால் எனைக் கொலை செய்வாய் என்பது தெரிந்து.... உன் மடியில் என் மரணம் ஏற்படும் நொடி பார்த்துக் காத்திருக்கிறேன் நான். [] 53. சின்ன சங்கீதம் கேட்கும் எந்நாளும்.... மல்லிப் பூவாசம் வீசும் உன்மேனி. சென்று சேராதோ எந்தன் பொன் நெஞ்சம், பிஞ்சுக் கைநீட்டிப் பேசும் சிறுவார்த்தை. அஞ்சி என் பின்னே தங்கும் உன் நெஞ்சம். எனைக் கண்டும் காணாமல் தேடும் உன் கண்கள். கொஞ்சி நீ பேச கெஞ்சும் என் நெஞ்சம். எல்லாம் கொண்டேனே கனவில் கண்டேனே நான் நாளும் உன்னோடு வாழும் என் வாழ்வை.... [] 54, திண்ம மனங்கொண்டு வாழ்ந்தவளென்னை ஒரு துணை தேட வைத்தது எந்தை பிரிவு.... மேற்கொள்கிறேன் துணைதேடும் முடிவின் பயணத்தை... வாழ்வெனும் ஒற்றையடிப்பாதை, நான் மட்டும் தனிமையில், வழியில் சந்திக்கும் மனிதர்கள் வெறும் வழிப் போக்கர்களாக மட்டுமே கடக்கையில். வழித் துணையுமற்ற வாழ்க்கைத் துணையுமற்ற நெடும் பயணத்தில் நான்,, தேடலை மட்டும் துணையாகக் கொண்டு.… [] 55. கற்பனை வெள்ளம் கரைபுரள. சிந்தனை ஊற்றுப் பெருக்கெடுக்க. கவிதை எழுத அமர்கையில் எனை மறந்து எழுதினேன் நான் உன் பெயரை .... [] 56. உன் சிறு பிரிவும் ஏற்க மனமில்லை, ஏற்கும் துணிவும் என்னிடம் இல்லை..... இருந்தும் உன் நிரந்தரப் பிரிவை சகித்து வாழ்கிறேன் நான்,,, நம் பிரிவேநின் மகிழ்ச்சி என்பதால்.... உந்தன் புன்னகை போதும் எந்தன் உயிரையும் தருவேன் நான் உனக்காக..... [] 57. மாலை சூட்டும் மன்னவன் தன் வருகை எண்ணி மாலை வேளையில் காத்திருக்கிறேன் நான் வாயிற்படியில் மாலை தொடுத்துக் கொண்டு…. [] 58. நான் உனக்காக. உன்னைக் காண உன்னுடன் பேச மேற்கொண்ட பயணங்கள் முடிவடைகின்றன நீ இன்றி... [] 59. படர்கொடி மலர் இதழ் விரிக்கக் காத்திருக்கும் வண்டாய் நான்..... சுடர்கொடி மலர் இதழ் விரித்து சம்மதம் சொல்லும் ஒரு நொடிக்காக... [] 60. நான் கொண்ட காயமோ உள்ளத்தில்..... நீங்கள் அளிக்கும் மருந்தோ உடலில் ..... என் காயத்தின் மருந்தைத் தேடிச் செல்கிறேன் தனியாக.... உறவுகளுக்காக என் உள்ளம் சிதைந்தது போதும் உயிர் சிதையும் முன் செல்கிறேன் சிலந்த உள்ளத்தை ஒன்றுசேர்க்க.... தேடிச் செல்கிறேன் என் வாழ்க்கையை,,, நாடிச் செல்கிறேன் என் தேடல் பணத்தை தேடி அல்ல.... பிற மனத்தைத் தேடியும் அல்ல.... நான் காதக்கும் என்னைக் காதக்கும் எனை ழுழுதும் புரிந்து கொண்டுள்ள முப்பொழுதும் மூன்று காலமும் என்னோடு துணை நிற்கும் தனிமையைத் தேடி..... என் காயத்தின் மருந்து நான் விரும்பும் தனிமை.... புறப்படுகிறேன் என்றும் நீங்கள் மட்டும் வாழும் மனதைக் கல்லாக்கி.… சம்சார பந்தத்தில் நாட்டமில்லை நான் நாட்டம் கொண்ட பந்தத்தில் உந்தன் விருப்பமில்லை, சென்று விடுகிறேன் யாரையும் சங்கடத்தில் ஆழ்த்தாமல் சந்நியாசியாக,.. என்றும் உங்களுடன் இருக்க விரும்புகிறேன் உங்கள் நினைவுகளுடன்..... என் எண்ணங்கள் கனவு. ஆசை. விருப்பு. வெறுப்பு. இலட்சியம். நட்பு. பாசம். காதல். இன்பம். துன்பம். கவலை. கண்ணீர். புன்னகை. கவிதை. வார்த்தை. வாழ்க்கை அனைத்தும் மறைத்தே வாழ்ந்தேன். உங்களுடன் இத்தனை நாட்கள்... என்றேனும் ஓர் நாள் எந்தன் மனமுங்களுக்குப் புரியமெனும் நம்பிக்கையில்.... நான் கொண்ட நம்பிக்கையின் பரிசு ஏமாற்றம்... இனியும் பயனில்லை என் வாழ்விற்குப் பயனளிக்கப் புறப்படுகிறேன், சில காலம் இங்கிருந்தால் என் வாழ்வையும் மறைத்து மரித்து விடுவேனோ எனும் அச்சத்தில்.... நிச்சியம் திரும்புவேன் நான் உங்களிடம் என் தேடல் முழுமையடைந்ததும்.... 22