[] [நான் பெண்தான் (மலேசிய சிறுகதைகள்)] நான் பெண்தான் (மலேசிய சிறுகதைகள்) நான் பெண்தான் (மலேசிய சிறுகதைகள்) நிர்மலா ராகவன், மலேசியா மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. This book was produced using Pressbooks.com. Contents - நான் பெண்தான் (மலேசிய சிறுகதைகள்) - முன்னுரை - 1. நான் பெண்தான் - 2. ஒரு எழுத்தாளர் மனைவி ஆகிறாள் - 3. ராஜா மாதிரி - 4. வாரிசு - 5. வேண்டாம் இந்த அம்மா - 6. பூ மரம்கூட புது தினுசுதான் - 7. தனக்கு வரும்போது... - 8. அனுபவத்தைத் தேடி - 9. எனக்கொரு துணை - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் 1 நான் பெண்தான் (மலேசிய சிறுகதைகள்) [Cover Image] கதை உருவாக்கம்: நிர்மலா ராகவன், மலேசியா மின்னஞ்சல்: nirurag@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். 2 முன்னுரை வணக்கம். எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் இத்தொகுப்பைப் படிக்க உட்கார்ந்திருப்பீர்கள். முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வகையினரைப் பாருங்கள். 1              ஆண்கள் தவறே செய்யாதவர்கள்; அப்படியே தவறு செய்தாலும், ஒரு எழுத்தாளருக்கு அதைச் சுட்டிக்காட்ட எந்த அதிகாரமும் கிடையாது என்று ஆணித்தரமாக நம்புகிறவர். (ஆண்கள் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்தப் பெண் எழுத்தாளர்கள்தாம் பெண்ணியம்,  அது, இது என்று கிறுக்குப்பிடித்து அலைகிறார்கள்!) 2              பெண்களுக்கு உணர்ச்சிகளே கிடையாது, அல்லது இருக்கக் கூடாது என்று நினைப்பவர். 3              பெண்களுடைய உணர்ச்சிகளை — ஆண்களுக்கே அச்சம் விளைவிக்கும் விதத்தில் — விவரிப்பவர்கள் அனைவரும் (வேறு யார், பெண்கள்தாம்!) கண்டனத்துக்கு உரியவர் என்ற ஆணித்தரமான கொள்கை உடையவர். இவைகளில் ஏதாவது ஒன்றோ, இல்லை மூன்றுமே உங்களை வர்ணிப்பதைப்போல் இருக்கிறதா? மேலே படிக்காது, உருப்படியான வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள்! படித்துவிட்டு, என்மேல் ஆத்திரப்படுவானேன்!   பணிவுடன், நிர்மலா ராகவன் மலேசியா [pressbooks.com] 1 நான் பெண்தான் என்றாவது வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பது எதிர்பார்த்திருந்ததுதான். இன்றா, நேற்றா, முதன்முதலில் பெரியக்காவின் பாவாடை சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, கண்ணாடிமுன் நின்றபடி அழகுபார்த்தானே, அன்றே அவன் மனதில் அந்த எண்ணம் புதைந்துவிட்டது. “நாலு பொம்பளைப் புள்ளைங்களுக்கப்புறம் ஒரு ஆம்பளைப் புள்ளையாவது பொறந்திச்சேன்னு நான் எவ்வளவு சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கேன்!  நீ இப்படி ஒரு காரியம் செஞ்சுட்டு நிக்கிறயேடா!” நடக்கக் கூடாதது நடந்துவிட்டமாதிரி அம்மா அதட்டியபோது, எதுவும் விளங்காது விழித்தான். தான் எதைக் கேட்டாலும் மறுக்காத அம்மா இப்போது தனக்கு மகிழ்ச்சி தரும் இந்தக் காரியத்தால் ஏன் தானும் மகிழவில்லை? அந்த மூன்று வயதுக் குழந்தைக்குப் புரியத்தான் இல்லை. அம்மா அதோடு நின்றிருந்தாலாவது தேவலாம். “இங்க வந்து பாருங்க இந்த அநியாயத்தை!” என்று அப்பாவையும் அல்லவா துணைக்கு அழைத்தாள்! எப்போதும்போல, அம்மா கோபித்தால் அப்பாவும், அப்பா திட்டினால் அம்மாவும் பரிந்து பேசுவார்கள் என்ற நம்பிக்கையுடன், சிறுவன் புன்சிரிப்பு மாறாமல் நின்றுகொண்டிருந்தான். ஆனால், நடந்ததென்னவோ..! அம்மா வாய் வார்த்தையாகத்தான் திட்டினாள். அப்பாவோ, ரோத்தானால் (ROTAN, மலாய் மொழியில், மெல்லிய பிரம்பு) கண்மண் தெரியாது அடித்து நொறுக்கினார், “இன்னொருவாட்டி இப்படிச் செய்வியா? செய்வியா?” என்று கத்தியபடி. `அப்பா, அம்மா இருவருக்குமே என்னைப் பிடிக்கவில்லை!’ என்ற வடு மனதின் ஆழத்தில் பதிந்தது அன்றுதான். அச்சம்பவத்தால் வயதுக்கு மீறிய சூட்சுமம் பிறந்தது: நான் பெண்மாதிரி இருந்தால், யாருக்குமே பிடிக்காது!   பிறருக்குப் பிடித்ததோ, இல்லையோ, அவனுக்கு அதுதான் வேண்டியிருந்தது. அதனாலேயே தனித்துப் போனான். பெற்றோர் மற்ற குழந்தைகளை சினிமா, லேக் கார்டன்ஸ் என்றெல்லாம் அழைத்துப் போனபோது, ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி, வீட்டிலேயே தங்கிவிடுவான். அம்மா அவிழ்த்துப் போட்டிருந்த புடவையைக் கட்டிக்கொள்ள இதைவிட நல்ல சந்தர்ப்பம் ஏது! `பதின்மூன்று வயதில்தான் எத்தனை பாடுபட்டோம்!’ நினைக்கும்போது இன்றும் உடல் நடுங்கியது. இடுப்பை ஆட்டி ஆட்டி நடப்பதும், கழுத்தை ஒடித்து மிகையான கையசைவுடன் பேசுவதும் அவனது இயல்பு. இதை ஏன் பிறர் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்ற தாபம் எழுந்தது. தனக்கு மட்டும் மார்பகம் பெரிதாக வளரவில்லையே என்று பெண்களின்மேல் பொறாமை. `நான் பெண்தான்! எனக்கு ஏன் பொருத்தமில்லாமல் இந்த ஆண் உடம்பு!’ சுயவெறுப்பு கிளர்ந்தது. இரவில் காமக்கனா கண்டு எழுச்சி ஏற்பட்டபோது தற்கொலை செய்து கொள்ளலாம்போல இருந்தது. காலிடுக்கில் துணியைச இறுகக் கட்டிக்கொண்டு தூங்கப்போனான். இந்த அவலம் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமே என்ற பதைப்பு வேறு. சின்னக்கா அரைத்து வைத்திருந்த மருதாணியை சுண்டு விரல் நகத்தில் ஆசையோடு இட்டுக்கொண்டான். ஒரு வளையலை எப்போதும் தன் புத்தகப் பையில் வைத்திருந்து, அதை அவ்வப்போது அணிவதில் அற்ப சுகம் ஏற்பட்டது. அவனது போக்கை முதலில் கண்டித்த ஆசிரியர்கள்கூட அவன்மேல் எழுந்த பரிதாபத்தாலோ, இல்லை அவன் நன்றாகப் படித்ததாலோ, அவனைச் சும்மா விட்டுவிட்டார்கள். ஆனால், சகமாணவர்களும், ஏன், ஆசிரியர் ஒருவருமே கண்ணை விஷமமாகச் சிமிட்டியபடி, அவனைத் `தொட்டுப் பார்க்க’ விரும்பியபோது, `செத்துப் போய்விடலாமா!’ என்ற விரக்தி எழுந்தது. மகனை இனி மாற்ற முடியாது என்பது திட்டவட்டமாகப் புரிந்துபோக, `தங்களுக்கு ஒரு மகன் பிறக்கவே இல்லை’ என்பதுபோல் நடந்துகொண்டார்கள் அவனைப் பெற்றவர்கள். அவனுடைய அத்தியாவசியமான செலவுகளைக் கவனித்துக் கொண்டதுடன் தம் பொறுப்பு தீர்ந்துவிட்டதுபோல நடந்து கொண்டார்கள். குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை அறவே அற்றப் போக, `எனக்கு யாருமேயில்லையே!’ என்று அவன் மனம் அழுதது.   ஒருவழியாக பள்ளிப் படிப்பு முடிந்துபோக, `சுதந்திரம்’ என்று உள்ளம் ஆர்ப்பரித்தது. எப்போது வீட்டைவிட்டு வெளியேறுவோம் என்று, அந்த நன்னாளை எதிர்பார்த்து ஏங்கியிருந்தவன்தானே! எவரிடமும் சொல்லிக் கொள்ளாது புறப்பட்டான். இவனைப் போன்ற பலர் கோலாலம்பூர் மத்தியில், ஒரு காலத்தில் `லிட்டில் இண்டியா’ என்று அழைக்கப்பட்ட நீண்ட கடைவீதி ஒன்றில் அடுக்கு மாடியில் குடியிருந்தனர். “இங்கே ஒன் இஷ்டப்படி இருக்கலாம். இனிமே ஒன்னைத் திட்டவோ, அடிக்கவோ யாருமில்லை!” என்று உற்சாகப்படுத்திச் சிரித்தான் நண்பன்.  ஆணுமில்லாது, பெண்ணுமில்லாததால் அடையாளக் கார்டு வாங்க முடியாது. வேலை கிடைப்பதும் எளிதாக இல்லை. வேறு வழி இல்லாது, அங்குள்ள பலரும் உடலை விற்றுப் பிழைத்தனர். ஏதோ, அவர்களால் முடிந்தது! வயிறு என்ற ஒன்று இருக்கிறதே! அழகு நிலையம் ஒன்றில், இவனைக் கேள்வி எதுவும் கேட்காமல் சேர்த்துக் கொண்டார்கள். வேலை முடிந்து அறைக்குத் திரும்பியதும், முதல் வேலையாக, தான் வாங்கிச் சேர்த்திருந்த பெண்கள் உள்ளாடைகளை அணிந்து அழகு பார்த்தான். “எனக்கு இந்த ஒடம்பு வேணாம்டி. எப்பவுமே இப்படி பிரா போட்டுக்கிட்டு, சூடிதாரும், சேலையும் உடுத்த முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்!” என்று பெருமூச்செறிந்தான். அதற்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது. தான் உடல் ரீதியில் பெண்ணாக வேண்டும். நடக்கிற காரியமா? பல்லாயிரக்கணக்கான ரிங்கிட்டுக்கு எங்கே போவது! ஒரு வழிதான் புலப்பட்டது. “ஏண்டா! இப்படியே இருந்திட்டுப் போவியா! என்னமோ ஒரு நாளைக்கு ஒரே வேளை சாப்பிட்டுக்கிட்டு, சினிமா, ஹோட்டலுன்னு பணம் செலவழிக்காம, ஏதோ தவம் பண்றாப்போல சேமிக்கிறியே!” என்று கேலியும், அக்கறையுமாக அவனையொத்த நண்பர்கள் கூறியபோது, அவன் மனம் தளரவில்லை. அவனுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் மலேசிய நாட்டின் வட எல்லையைத் தாண்டியவுடன் இருந்த ஸோங்க்லா என்ற ஊருக்கு. தாய்லாந்தில் அவனைப் போன்றவர்கள் சர்வ சாதாரணமாக இடுப்புக்குக் கீழே முழு நிஜாரும், இடுப்புக்கு மேல் நின்றுவிடும் டி-சர்ட்டுமாக, வயிறு தெரிய உடுத்தி இருந்தனர். முகத்தில் நாடகத்தில் நடிக்கப் போவதுபோல் மிகையான ஒப்பனை. ஆனால் குரல் மட்டும் ஆணைப் போன்றது. `இவர்களும் மனிதர்கள்தாம்!’ என்று பிறர் அவர்களிடம் வித்தியாசம் பாராட்டாமல் நடந்துகொண்டதைப் பார்க்க மகிழ்ச்சியும், `நானும் இந்த சொர்க்கத்தில் பிறந்திருக்கக் கூடாதா!’ என்ற ஏக்கமும் ஒருங்கே எழுந்தன. `என் துயரெல்லாம் முடியும் நாள் தூரத்தில் இல்லை!’ என்ற நம்பிக்கையோடு கழித்தான் அடுத்த சில வருடங்களை. காசு சேரச் சேர, அவ்வப்போது அங்கு அறுவைச் சிகிச்சைக்காகப் போய்வந்தான். உடல் மாற்றத்துடன், கூடவே பெண்களுக்கான ஹார்மோன்களும் உடலில் ஏற்றப்பட்டதில், இப்போது இவன் சோமு அல்ல, சாந்தினி. பிறந்ததிலிருந்து முப்பது ஆண்டுகளாக அனுபவித்த குழப்பமும் வேதனையும் விலக, அளப்பரியா நிம்மதி பிறந்தது.   தலையைப் படியப் படிய வாரி, நிறையப் பூ வைத்துக்கொண்டாள் சாந்தினி. வண்ண வண்ண வளையல்கள், தங்கமாகவே மின்னிய நெக்லஸ், வெள்ளிபோல் ஜொலித்த கொலுசு, நைலக்ஸ் புடவை என்று பேராசையுடன் எல்லாமே வாங்கிக்கொண்டாள். ஆனாலும் மனதில் ஒரு வெறுமை. அது ஏன் என்று அதிகம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “அம்மா! நான்தாம்மா பேசறேன்,” என்று தொலைபேசியில் அழைத்தாள் ஒருமுறை. பத்து வருடங்களுக்குமேல் ஆனதினாலோ, அல்லது எத்தனையோ பயிற்சியின் பயனாக பெண் குரலில், மேல் ஸ்ருதியில் பேசினதாலோ, தாய்க்கு முதலில் புரியவில்லை. “யாருங்க?” என்றாள், குழப்பத்துடன். “நான்தாம்மா… சோமு..,” சொல்லும்போதே அடிநாக்கில் கசந்தது. அவசரமாக, “இப்ப நான் சோமு இல்ல. சாந்தினி. பேரில மட்டுமில்லம்மா, ஒடம்பாலேயும் பொண்ணாயிட்டேன்!” என்று பெருமையுடன் தெரிவித்தாள். அம்மா அடைந்த அதிர்ச்சி தொடர்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டதில் தெரிந்தது. தான் அப்படிப் பிறந்தது தன் குற்றமா? வாய்விட்டு அழுதாள் சாந்தினி. `அம்மா! அம்மா!’ என்று கதறியபோது, தான் என்றுமே அம்மாவாகவும் ஆக முடியாது என்ற உண்மை உரைக்க, அந்தப் பெண்ணின் அழுகை பலத்தது. (1960-களின் இறுதியில், ஆசியாவில் –சிங்கப்பூரில்–  இருபது முறைகளுக்குமேல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அவரிடம் மன்றாடிய ஓர் ஆணை — நீண்டகால மனோதத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு — அரசாங்க அனுமதியுடன் முதன் முதலாக அறுவைச் சிகிச்சைவழி  பெண்ணாக ஆக்கிய டாக்டர் ரத்னம் என்பவருடன் நான் நிகழ்த்திய பேட்டியினால் உதித்தது இக்கதை). 2 ஒரு எழுத்தாளர் மனைவி ஆகிறாள் அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்திருந்தார் நடராஜன். “என் நாடகத்தைப்பத்தி எல்லாரும் என்ன சொன்னாங்க?” எரிச்சலூட்டும் கேள்வி, மனைவியிடமிருந்து. “அதான் ரேடியோக்காரங்க ஏத்துக்கிட்டு, பணமும் குடுக்கறாங்கல்ல? அப்புறம் என்ன? சும்மா தொணதொணத்துக்கிட்டு..!” கணவர் களைப்புடன் வீடு திரும்பியவுடன் தான் சுயநலத்துடன் பேச்சுக்கொடுத்தது  தவறுதான் என்று, உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே போனாள் வசந்தா. சிறிது நேரத்தில் அவள் கொண்டுவைத்த தேத்தண்ணீரை வெறித்துப் பார்த்தார் நடராஜன். அவர் உள்ளம் அதைவிட சூடாக இருந்தது. மனைவி நாடகம் எழுத, அவளுடைய கற்பனையில் உருவான ஐந்து பாத்திரங்களில் தானும் ஒரு சிறிய அங்கமானது குறித்து அவமானம் ஏற்பட்டது. அவளுடைய பெயர்மட்டும் சற்று உரக்க அறிவிக்கப்பட்டதோ? `என்னங்க, நடராஜன்! பேருக்கு ஏத்தமாதிரி, சக்திக்கு அடங்கின சிவனா ஆயிட்டீங்களே! இனிமே நீங்கதான் பேரை மாத்தி வெச்சுக்கணும் — மிஸ்டர் வசந்தா அப்படின்னு!’ வேடிக்கையாகச் சொல்வதுபோல், சகநடிகர்கள் உசுப்பேற்றினார்கள். அந்தக் கைலாய பரமசிவன் தன் உடலில் பாதியை பார்வதியுடன் பகிர்ந்துகொண்டு, அவளுடன் ஒன்றாக இயங்கினாராம். யாரோ புராண காலத்துக்குப் போய் பார்த்தமாதிரிதான்! அட, அந்தக் காலத்திற்கு அது சரியாக இருந்திருக்கலாமோ, என்னவோ! இப்போதோ, ஆணுக்கு நிகராக உரிமை கொண்டாடும் வசந்தா போன்ற பெண்களால்தான் குடும்ப நிம்மதியே போய்விடுகிறது. நண்பர்களுக்குத்தான் எத்தனை கேலிப்பொருளாக ஆகிவிட்டோம்!   கோலாலம்பூரில், அங்காசாபுரி (ANGKASAPURI) என்ற பெரிய வளாகத்துள் எதிரெதிரே இருந்தன மலேசிய தொலைகாட்சி,  வானொலி நிலையங்கள். நாடகத்தில் நடித்து முடித்ததும், எப்போதும்போல் காண்டீனில் அமர்ந்து, அரட்டையே முக்கிய குறிக்கோளாய், ஆனால் மீ பிரட்டலை (நூடுல்ஸ்) சாப்பிடுவதுபோல் பாவனை செய்ய இன்று அவர் மனம் ஒப்பவில்லை. பிறரது தலையை உருட்டும்போது இருக்கும் சுவாரசியம், `நான் அவர்களைவிட மேலானவன்!’ என்று அப்போது எழும் கர்வம், தானே பிறரது வாய்க்கு அவலாக மாறும்போது கிடைப்பதில்லையே! அவர்களிடமிருந்து கத்தரித்துக்கொண்டு வந்தாலும், தன்னையும், வசந்தாவையும்பற்றித்தான் பேசுவார்கள் என்று நன்றாகவே தெரிந்திருந்தது நடராஜனுக்கு. என்ன பேசுவார்கள்? `இவரும்தான் முப்பது வருஷமா `நடிகன்’னு பேரை வெச்சுக்கிட்டு காலந்தள்ளறாரு! பளபளப்பான சட்டையும், அதிலே எக்கச்சக்கமா செண்டும் போட்டுக்கிட்டு, நாலுபேர் கூடற எல்லா எடத்துக்கும் தப்பாம வந்து, ஏதாவது சண்டை இழுத்து, அதனாலேயே எல்லாருக்கும் தன்னைத் தெரியறமாதிரி செய்துக்கிட்டிருந்தா ஆச்சா?’ என்று பழித்துவிட்டு, அதே மூச்சில், `அதுவே, அந்தம்மா இருக்காங்களே! குடத்துக்குள்ளே இருக்கிற விளக்கு!’ என்று வசந்தாவை எங்கோ கொண்டு வைப்பார்கள். அவர்கள் பேசுவதை இவர் ஒன்றும் கற்பனை செய்து பார்க்கவேண்டி இருக்கவில்லை. சாடைமாடையாக, இவர் எதிரிலேயே பல முறை பேசி வந்ததுதானே!   வசந்தா முதன்முதலாக எழுத ஆரம்பித்தபோது, `இவள் என்ன பெரிசா கிழிச்சுடப்போறா!’ என்று தான் அசிரத்தையாக இருந்தது தப்பு என்று இப்போது, காலங்கடந்து யோசனை வந்தது. அப்போதெல்லாம் அவரிடமே பிறர் அவளைப் பாராட்டிப் பேசியபோது, பெருமையாகத்தான் இருந்தது. நண்பர்களுடையதைவிட விலை அதிகமான விளையாட்டுச் சாமான் தன்னிடம் இருப்பதற்காகப் பெருமை கொள்ளும் சிறுவனது மனநிலைக்கு ஆளானார். மனைவி தன் உடைமை.  ஆகவே, தான் அவளைவிட மேலானவன் என்பதுபோல் நடந்துகொண்டார். அதுவும் பொறுக்கவில்லை பிறருக்கு. பலவாறாகத் தூபம் போட்டார்கள். `உன் மனைவி பேரும் புகழுமாக இருந்தால், அதில் அவளுக்குத்தான் பெருமை. உனக்கென்ன வந்தது?’ `நீ இப்படியே அவளை வளரவிட்டால், நாளைக்கு உன்னையே மதிக்கமாட்டாள், பார்!’ நடராஜனுக்குப் பயம் வந்தது. இப்போது இவள் எழுதி என்ன ஆகவேண்டும்? அலுவலக உத்தியோகத்துடன், அவ்வப்போது மேடை, வானொலியில் நடிப்பதாலும் தனக்குக் கிடைப்பதே போதாது? அட, பணத்தைப் பெரிதாக எண்ணியா தான் நடிக்கப் போனோம்? எல்லாரையும்போல, `கலைக்குத் தொண்டு செய்கிறேன்!’ என்று வெளியில் மிதப்பாகச் சொல்லிக்கொண்டாலும், செய்யும் தொண்டு தனக்கேதான்; தன் பெயர் பிரபலமாக வேண்டும் என்ற சுயநலத்தால்தான் என்று அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. இதில் என்ன கேவலமாம்? எல்லாம் வல்ல இறைவனே புகழ்ச்சிக்கு அடிமை! கடவுளைப் புகழ்ந்து வேண்டுபவருக்குத்தான் நல்லது நடக்கிறது. அவனுடைய படைப்பான தான் மட்டும் எப்படி வித்தியாசமாக இருக்க முடியும் என்று தன்னைத்தானே சமாதானமும் செய்துகொண்டார். அபூர்வமாக, எவளாவது, `நான் உங்கள் விசிறி!’ என்று இளிச்சவாய்த்தனமாக சொல்லும்போது, என்னவோ கடவுள் ஸ்தானத்துக்கே உயர்ந்துவிட்டமாதிரி பிரமை ஏற்படும் நடராஜனுக்கு. மெனக்கெட்டு வருவித்துக்கொண்ட பெரியமனிதத்தனத்துடன், தலையைச் சற்றே அண்ணாந்து, எங்கோ பார்த்தபடி ஓரிரு வார்த்தைகள் பேசுவார். வீட்டுக்கு வந்ததும், வாய் ஓயாமல், தன்னைப்பற்றி தன் ரசிகைகள் என்ன நினைக்கிறார்கள், என்னவெல்லாம் சொன்னார்கள் என்று ஒன்றைப் பத்தாக்கி மனைவியிடம் கூறுவார். அவர் எது சொன்னாலும், புன்னகையுடன் கேட்டுக்கொள்வாள் வசந்தா. இப்போதும், நண்பர்கள் தன்னை ஓயாது மட்டந்தட்டுவதைச் சொன்னார், மிகுந்த ஆற்றாமையுடன் — `விழுந்துட்டேம்மா!’ என்று தாயிடம் வந்து அழும் குழந்தையைப்போல. “விட்டுத் தள்ளுங்க!” என்றாள் வசந்தா. “நானும் அதான் நினைச்சேன். அவங்க பெண்டாட்டி எல்லாம் ஒரே மக்கு. அதான் அவங்களுக்கு வயத்தெரிச்சல்!” என்றவர், “எனக்கு அதிர்ஷ்டம்! ஒன்னைமாதிரி புத்திசாலியான பெண்டாட்டி வாய்ச்சிருக்கு!” வசந்தாவுக்கும் பூரிப்பாக இருந்தது. இன்னும் நிறைய எழுதி, கணவனுடைய பெருமையை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டாள்.   வேலை முடிந்து, அப்போதுதான் வீடு வந்திருந்தார் நடராஜன். “பிளாஸ்கில் டீ வெச்சிருக்கேன்,” என்ற குரல் அசரீரியாகக் கேட்டது. தன்னைக் கவனிக்காது, தன்பாட்டில் எழுதிக்கொண்டிருந்த மனைவியின் போக்கு உறுத்தியது. கட்டின கணவனைவிட இவளுக்கு எழுதுவதால் கிடைக்கும்  பெயரும், புகழும்தானே பெரிதாகிவிட்டன என்ற ஆத்திரத்துடன், “அந்த டீயை நீ வந்து எடுத்துக் குடுத்தா கொறைஞ்சு போயிடுவியோ?” என்று கத்தினார். எதுவும் பேசாது, பேனாவை மூடி வைத்துவிட்டு எழுந்தாள் வசந்தா. அன்றையிலிருந்து அவர் பார்க்க அவள் எழுதவில்லை. ஆனால், அவளுடைய எழுத்துப் படிவங்கள் என்னமோ வெளியாகிக்கொண்டுதான் இருந்தன. நடராஜன் தன் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார். “வீணா ஒடம்பைக் கெடுத்துக்காதேம்மா. இந்த தள்ளிப்போன நாட்டில, எழுதறதுக்கு ஒரு பயல் காசு குடுக்கறதில்ல. அப்புறம் எதுக்காக எழுதறது? கண்ணுக்குக் கீழே எப்படிக் குழி விழுந்துபோச்சு, பாரு!” என்றார், அன்பு சொட்டச் சொட்ட. அவருடைய கரிசனம் வசந்தாவுக்கு வேண்டியிருந்தது. ஆத்திரப்பட்டவர் இப்படி மாறி விட்டாரே! “பொழுது போகணுமே!” என்றாள் அப்பாவித்தனமாக. “சினிமா, கச்சேரின்னு நாலு எடத்துக்குப் போயிட்டு வா. இல்லே, ஓய்வா, வீட்டிலேயே வீடியோ பாரு!” சில நாட்கள் கணவர் சொன்னதுபோல் செய்துபார்த்தாள் வசந்தா. மனதில் ஏதோ வெறுமை. எதையோ இழந்ததுபோல் இருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்து, மீண்டும் எழுத முயன்றாள். இப்போது ஏதேதோ பயம் எழுந்தது. கணவர் வீடு திரும்புவதற்குள் எழுதி முடிக்கவேண்டும். அவருக்குச் சுடச்சுட தேநீர் போட்டால்தான் பிடிக்கும். இல்லையேல், மௌனமாக அமர்ந்து, பெருமூச்சாலேயே தான் கவனிப்பாரின்றி வாடுவதை உணர்த்துவார். அவளுக்கு அவரை அப்படிப் பார்க்க பரிதாபமாக இருக்கும். தான் தன் கடமையிலிருந்து தவறிவிட்டோம் என்ற உறுத்தல் உண்டாகும். இப்போது ஒவ்வொரு வரி எழுதியபிறகும், கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். உருப்படியாக எதுவும் எழுத முடியவில்லை. இரவில் அவர் தூங்கியபின் எழுதினால், இந்தக் குழப்பங்கள் எழாது என்று தீர்மானித்தாள். தூக்கக் கலக்கத்தில் கையை விசிறிப் போட்டபோதுதான் அவள் தன் பக்கத்தில் இல்லாததை உணர்ந்தார் நடராஜன். தூக்கம் கலையாமலேயே, அசைந்து அசைந்து அவளைத் தேடி வந்தார். “இப்படித் தனியா படுக்கிறதுக்கா வசந்தி, ஒன்னைக் கட்டிக்கிட்டேன்?” என்று அவர் கேட்டது அவள் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. வசந்தாவுக்கு இப்போது குழப்பமில்லை. அவளுக்குப் புரிந்தது. `ஆண்’ என்பவன் உருவத்தில் மட்டும் பெரிதாக வளர்ந்திருக்கும் குழந்தை! சிறு வயதில் அம்மாவின் ஏகபோக கவனிப்புக்காக தம்பி, தங்கைகளுடன் போட்டி போட்டதைப்போல, இப்போது மனைவியின் பரிபூரண கவனிப்பும், அக்கறையும் தன் ஒருத்தனுக்காகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் புத்தி அவனுக்கு! அத்துடன், ஒரு பெண் தனக்கு அடங்கி இருப்பதைத்தான் சராசரி ஆண் விரும்புகிறான். இது கற்காலத்திலிருந்து வரும் நியதி. கொடிய விலங்குகளைத் தனியே எதிர்க்கும் சக்தியின்றி, தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை ஆணிடம் ஒப்படைத்தாளே, பெண்! அப்போது அவனுக்கு ஏற்பட்ட பெருமிதம் இன்றும் அவனுக்குத் தேவைப்படுகிறது. தன்னை நாடாது, தன்னை மீறி அவள் ஏதாவது செய்ய ஆரம்பித்தால், அடிப்படை ஆண்மையிலேயே சந்தேகம் தோன்ற, அந்த எண்ணத்தின் பயங்கரத்தில் அவள் வீழ்ச்சி காண வழி வகுக்கிறான்.   இப்போதெல்லாம் யாராவது வசந்தாவை, “ஒங்க கதைகளைப் பாக்க முடியறதில்லியே?” என்று உள்ளூர மகிழ்ச்சியுடன், ஆனால் வார்த்தைகளில் கரிசனம் சொட்டக் கேட்கும்போது,  `ஆமா! ஒரு காசுக்குப் பிரயோசனம் இல்லை இதால! (100 ஸென் (காசு) = 1 மலேசிய ரிங்கிட்). நேரம்தான் தண்டம்,’ என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறாள். வெளியே,  “எங்கே! வீட்டு வேலையே சரியா இருக்கு. அதோட, எங்க வீட்டுக்காரர் கைப்பிள்ளை மாதிரி. அவருக்குத் தேவையான ஒவ்வொரு காரியத்தையும் நான்தான் பாத்துப் பாத்து செய்யணும்!” என்று பெருமை பேசுகிறாள். தன்னைப்போன்று, `குடும்பமே பெண்ணாகப் பிறந்ததின் லட்சியம்’ என்ற கொள்கையுடைய மற்ற பெண்களுடன் சேர்ந்து வெளியே போகிறாள், அரட்டை அடிக்கிறாள். அவர்களைப்போல் இல்லாது, கணவரை மீறிக்கொண்டு புகழ்ப்பாதையில்  பீடுநடை போடும் யாராவது அபூர்வமான பெண்ணைப்பற்றி மட்டந்தட்டிப் பேசுகையில், ‘நல்ல வேளை, எனக்குப் புத்தி வந்ததே!’ என்று திருப்திப்பட்டுக் கொள்கிறாள். விமரிசனம்: ஆண்களுக்கே உள்ள இயற்கையான மனப்போக்கை இடித்துக்காட்டி எழுதியுள்ளார். ஆண்களை நன்றாகவே புரிந்துவைத்து, ஒளிவு மறைவு இல்லாமல் விளக்கமாகவே எழுதியுள்ளார். அன்புராயன்லோகநாதன், பெட்டாலிங்ஜெயா 3 ராஜா மாதிரி “இந்தப் புடவை நல்லா இருக்கா, பாருங்க!” தியாகு முகத்தைச் சுளித்தான். முப்பது வயதுகூட ஆகவில்லை. இப்போதே பிடித்து, பழுப்பிலும், அரக்கு நிறத்திலுமா உடுத்துவார்கள்? “வேற நல்ல கலராக் கிடைக்கல? இது என்ன, வயசானவங்க கட்டறமாதிரி!“ லதா கலீரெனச் சிரித்தாள். “என்னடா ஒங்க மூஞ்சி அப்படிப் போச்சேன்னு பாத்தேன். எனக்குன்னு நினைச்சீங்களா? அத்தைக்கு!“ அவன் முகம் மேலும் இறுகியது, அம்மாவின் பெயரைக் கேட்டதுமே. ஒரு கார் வாங்கக்கூட வக்கில்லாமல் இருக்கிற இருப்புக்கு, படுத்த படுக்கையாக இப்போது இருக்கும் நிலையிலும் அம்மாவை ஆள் வைத்துக் காப்பாற்றுகிறானே! அதுவே பெரிது. ஓரவஞ்சனை காட்டாது, தம்பி சூரியாமேல் காட்டிய அன்பில் பத்தில், இல்லை, நூற்றில் ஒரு பங்கைத் தன்மேல் காட்டியிருந்தால்கூட எவ்வளவோ முன்னேறி இருக்கலாம். மழை பெய்தால் ஒழுகும் இந்த வாடகை வீட்டில் திண்டாடிக்கொண்டு இருக்கவேண்டாமே! தன்னையும் அறியாமல் வலது கை கட்டைவிரலையும், ஆள்காட்டி விரலையும் முன்பற்கள் இரண்டின்மேல் வைத்து அழுத்திக்கொண்டிருந்த கணவனை ஏதும் விளங்காதவளாய் பார்த்தாள் லதா. “புடவை நல்லா இல்லியா?“  குரலில் ஏமாற்றம். முகம் வாட, “வயசானவங்களுக்குன்னு கேட்டு எடுத்தேன்“. சிறுவயதில் தான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்! எத்தனை எத்தனை அவமானங்கள்! இதெல்லாம் புரியாது, இவள்கூட அம்மா பக்கம் சாய்ந்துவிட்டாளே என்ற வருத்தம் வந்தது தியாகுவுக்கு. “எனக்கு எதுவும் வாங்கி இருக்கமாட்டியே?“ என்று ஆற்றாமையுடன் கேட்டவனைக் குறும்புடன் பார்த்தாள் லதா. “ஏன்? அப்புறம் அதுவும் கலர் நல்லா இல்லேன்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்கவா?“ அவளது கேலி புரியாது, “அது என்னமோ, என்னைக் கண்டா யாருக்குமே பிடிக்கறதில்லே!“ என்று அரற்றினான், வளர்ந்த குழந்தையாக. அவன் தோளைச் செல்லமாக அழுத்தினாள் மனைவி. “என்னங்க இது! ஒங்களுக்குச் சாமான் வாங்கற சாக்கில இன்னொருவாட்டி ஷாப்பிங் போகலாம்னு நினைச்சா..!“ தன் மன உளைச்சலிலேயே அமுங்கிவிட்டிருந்தவனுக்கு அவள் பேச்சு காதில் விழவில்லை. தன்பாட்டில் பேசிக்கொண்டு போனான். “அம்மாவுக்கு எப்பவுமே என்னைக் கண்டா ஆகாது, லதா. சூரியா நல்ல கலரா இருப்பான். அதனால, அப்பா, அம்மா ரெண்டுபேருக்குமே அவன்தான் செல்லம்,” என்றவன், தானறிந்த காரணத்தையும் விளக்கினான்: “அவன் சிகப்பு, நான் கறுப்பு. அதான்!“ அவள் அலட்சியமாக அப்பால் சென்றாள், “விடுங்க! எப்பவோ சின்னப்பிள்ளையா இருக்கிறப்போ நடந்து முடிஞ்சுபோன சமாசாரம்!“ என்றபடி. போகிற போக்கில், “நாலு நாளா மழையைக் காணோம். ஒரே வெயில்! நான் போய், ரோஜாச் செடிங்களுக்கு ஐஸ்கட்டி போடணும்,“ என்றாள். கடந்தகால நினைவுகளிலிருந்து விடுபட முடியாது, திக்பிரமையாக அமர்ந்திருந்தான் தியாகு. சுய பச்சாதாபத்துடன் அடிக்கடி வெளியாகிய பெருமூச்சும், கூடவே ஒலித்த சிறு முனகலும்தான் அவனுக்குத் துணையாக இருந்தன.   `தம்பிப் பாப்பா பாத்தியாடா? எப்படிச் செக்கச்செவேல்னு ராஜாமாதிரி இருக்கான்!’ என்று பெற்றவள் பெருமைபொங்கக் கூறியபோது, ஆறு வயதுச் சிறுவன் தியாகுவும் அவளுடைய பூரிப்பில் பங்குகொண்டான். பாப்பாவின் பட்டுக் கன்னத்தை ஒரு விரலால் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தான். அப்போது அவனுக்குத் தெரியவில்லை, தன் நிறமே தனக்கு எதிரியாகிவிடும் என்று. நாட்கள் செல்லச் செல்ல, தனக்கு நினைவு தெரிந்த நாளாக மாறி மாறிக் கொஞ்சிய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் திடீரென்று தன்னைப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் தம்பிதான் என்றவரை புரிந்தது. அவன் ராஜாமாதிரி இருப்பதால்தானே பெருமையாக அவனை எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போகிறார்கள், தன்னை வீட்டிலேயே விட்டுவிட்டு? அன்று யாரோ சிநேகிதர் வீட்டில் பாடிக் காட்டினானாமே! அதற்கு எல்லாரும் கைதட்டினார்களாமே! அம்மா அதைக் கதை கதையாகச் சொல்லும்போது, அந்தக் காட்சியை மனக்கண்ணால் பார்த்த தியாகுவுக்கு தான் பல படி தாழ்ந்துவிட்டதுபோல் இருந்தது. தன்னை மட்டும், `ஒக்காந்து படிடா. ஓயாம, என்ன விளையாட்டு?’ என்று மிரட்டத்தானே அப்பாவுக்குத் தெரிந்தது! தன்னையொத்த பிற பையன்களைப் பார்த்துவிட்டு, ஆசையை அடக்க முடியாது, தனக்கும் சைக்கிள் வாங்கித் தரும்படி கேட்டபோது, `இவரு பெரிய இவரு! இதோ இங்கே இருக்கிற ஸ்கூலுக்கு நடந்து போகமுடியலியோ? வெயில்லே போனா, ஐயா கறுத்துடுவீங்களோ?’ என்று அப்பா நையாண்டி செய்தபோது, அம்மாவும் சேர்ந்து சிரித்ததுதானே அவனை வெகுவாகப் பாதித்தது! சில ஆண்டுகள் கழித்து, சூரியா கேட்காமலேயே அவனுக்குப் புதிய சைக்கிள்! தியாகுவுக்கு அழுகை வந்தது. வெயிலில் அலைந்தால் சூரியா கறுத்துவிடுவானோ என்றுதானே இப்போது வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்? அது ஏன் தானும், ‘ராஜா மாதிரி‘ சிவப்பாக இல்லை? நான் பிறந்தே இருக்கக்கூடாது.   பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் மேற்படிப்பு படிக்க விரும்பினான் தியாகு. `வயசுதான் ஆகுதே தவிர, அதுக்கேத்த புத்தி இல்லியே! நீ ஒருத்தன் படிச்சு மேல போயிட்டா போதுமாடா? சூரியாவுக்கு இப்பத்தான் பன்னண்டு வயசாகுது. அவனுக்கு டியூஷன், டென்னிஸ், பாட்டு கிளாசுன்னு எவ்வளவு செலவு! வீட்டுக்கு மூத்தவனா, லட்சணமா, சம்பாதிச்சுப் போடுவியா..!’ என்று ஒரேயடியாக அவன் வாயை அடைத்துவிட்டார் அப்பா. அதன்பின், சூரியாவை பதினைந்து வயதிலேயே அண்டைநாடாகிய சிங்கப்பூருக்குப் படிக்க அனுப்பியபோதும், அவன் கேட்டபோதெல்லாம் பணத்தை அனுப்பியபோதும் தான் சிறுகச் சிறுகச் சாவதைப்போல இருந்தது தியாகுவிற்கு. தட்டிக்கேட்பவர் எவரும் இல்லாததால் மனம் போனபோக்கில் நடந்த சூரியா, சில வருடங்களிலேயே உடலெல்லாம் வியாதியுடன் வந்து நின்றான். அம்மாதான் ஒரேயடியாக அழுதாள். `தங்க விக்கிரகம் மாதிரி இருப்பியே! இப்படிப் போயிட்டியேடா, கண்ணா!’  என்று. தியாகுவுக்கும் வருத்தமாக இருந்தது. தனக்காக என்றாவது இப்படி உருகி இருப்பார்களா இந்த அம்மா? இளைய மகன் தீய வழியில் போகிறான் என்று சந்தேகமறப் புரிந்தாலும், `வயசுக் கோளாறு!’ என்று அம்மா அவனுக்கு மன்னிப்பு அளித்தாள். கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தாள். அது போதாது, தனது போதைப்பழக்கத்தின் தேவைக்காக வீட்டிலேயே திருட ஆரம்பித்தான் சூரியா. அதன்பின் வீட்டுக்கு வருவதே அபூர்வமாகி, இறுதியில், அவன் போன இடமே தெரியாமல் போயிற்று. அப்போது அதிர்ச்சியில் படுக்கையில் விழுந்தவள்தான். அடுத்தடுத்து, நடமாட்டம், பேச்சு என்று ஒவ்வொன்றாக இழந்தாள் அம்மா.   “இன்னுமா அப்படியே ஒக்காந்திருக்கீங்க?“ புன்சிரிப்புடன் வந்து அவனருகே அமர்ந்துகொண்டாள் லதா. கள்ளம் கபடில்லாமல் இருக்கும் இவளையும் தன்னுடன் கலங்க வைப்பானேன் என்று தோன்ற, “உனக்கு எதுவும் எடுக்கலே?“ என்று கேட்டுவைத்தான் தியாகு. “அது கிடக்கு! அத்தையை நினைச்சா பாவமா இருக்குங்க! ஒரேயடியா செல்லம் குடுத்து, தானே சின்னவரைக் கெட்டழிய வைச்சுட்டோமே அப்படின்னு உள்ளுக்குள்ளேயே அழுதுக்கிட்டு இருக்காங்க. வாயைத் திறந்து சொல்லவும் வழி இல்லாம போயிடுச்சு, பாவம்!” என்று அடுக்கிய லதா, சட்டென ஏதோ தோன்ற, “நல்லவேளை, உங்களுக்கும் செல்லம் குடுக்கல. இல்லாட்டி, நீங்க இப்படி கஷ்டப்பட்டு உழைச்சு முன்னுக்கு வந்திருக்க முடியுமா? இல்லே, நான்தான் ஒங்களுக்குக் கிடைச்சிருப்பேனா?” விளையாட்டாககத்தான்  கேட்டாள். ஆனால், திடுக்கிட்டவனாய் அவளைப் பார்த்தான் தியாகு. தன்னைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததில், பிறரது துயரங்கள் புரியாது போய்விட்டதா? “சரி. வாங்க,” என்று அழைத்தவளை எதுவும் புரியாது பார்த்தான். “ஒங்களுக்கு ஒரு சட்டை பாத்து வெச்சுட்டு வந்திருக்கேன். போய் வாங்கிட்டு வரலாம். அதைப் போட்டா, ராஜா மாதிரி இருப்பீங்க!” “வேணாம்பா. நான் தியாகுவாவே இருந்திட்டுப்போறேன்,” என்றான் தியாகு. விமரிசனம்: அப்பப்பா, என்ன அறிவுரைகள், என்ன ஆலோசனைகள்! ஒரு சிறுகதையின்கீழ் எத்தனை தீர்வுகள்! மாறுபட்ட முடிவு. நல்ல படைப்பு. எம்.எஸ்.கீத்தா, தாமான் டேசா, ஜாவி 4 வாரிசு “இந்தப் பைத்தியத்துக்கு காசோ, பணமோ குடுத்து விலக்கி வெச்சுடுடா. வேற பொண்ணுங்களா இல்ல இந்த ஒலகத்திலே?” வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த மகனிடம் முறையிட்டாள் தாய். ராசுவின் உடலும் மனமும் ஒருங்கே சுருங்கின. முப்பது வயதுவரை கல்யாணத்தைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதிருந்தவன் அப்படியே இருந்து தொலைத்திருக்கக் கூடாதா? நண்பர்களின் கேலியோ, அல்லது அகல்யாவின் அழகோ அவனை வெல்ல, பிரம்மச்சரியத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான். அப்படித்தான் நினைத்தான் முதலில். ஆனால், ஓரிரு மாதங்களிலேயே, பருவ வயதில்கூட தனக்குப் பெண்களைக் கண்டு எந்தக் கிளர்ச்சியும் ஏற்படாத விநோதம், தனது பெண்குரல் இவற்றுக்கான காரணம் புரிய, மனைவியைவிட்டு உடலளவில் விலகிப்போனான். பதினெட்டே வயதாகியிருந்த அகல்யாவுக்கு எதுவும் புரியவில்லை. தான் அவரைப்போல் அதிகம் படிக்காதவள் என்று அலட்சியம் காட்டுகிறாரோ? ஏழை என்று தெரிந்துதானே, தானே கல்யாணச் செலவைக்கூட ஏற்றுக்கொண்டார்? தன்னைப் பார்த்தாலே விலகும் கணவனை என்ன கேட்பது, எப்படிக் கேட்பது என்று புரியாது அகல்யா தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான் இந்திரன் அவர்கள் வீட்டுக்கு வந்தான். “பெரியக்கா மகன்,” என்று அறிமுகம் செய்தான் ராசு. “இவன் என்னோட மாமான்னு பேருதான். என்னைவிட ஒரே வயசுதான் பெரியவன். நாங்க ரெண்டுபேரும் ஒண்ணா வளர்ந்தோம்,” என்று அகல்யாவைப் பார்த்து சிநேகிதமான புன்னகையுடன் தெரிவித்தவன், ராசுவின்புறம் திரும்பி, “ஒங்க கல்யாணத்துக்கு நான் வரமுடியல. அதுக்காக, எனக்கு இவ்வளவு அழகான அத்தை இருக்காங்கன்னு ஏண்டா முந்தியே சொல்லல?” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டான். ஒரே ஒருவன் வருகையால்தான் வீடு எவ்வளவு கலகலப்பாகிறது! “இப்போ எங்கடா வந்தே?” என்று கேட்டான் ராசு. கோலாலம்பூரிலிருக்குத் தெற்கே, 123 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது சரித்திரபூர்வமான  மலாக்கா. “என்னை இங்க மாத்திட்டாங்க. அதுவும் நல்லதாப்போச்சு. கடைச் சாப்பாடு சாப்பிட்டு அலுத்துப்போச்சு!” புன்னகைத்தான் ராசு. “சுத்தி வளைக்காதேடா, தடியா. `இங்கதான் தங்கப்போறேன்’னு பட்டுனு சொல்லிட்டுப்போயேன்!” “அம்மாதான் சொன்னாங்க, ஒங்களுக்கு ஒத்தாசையா நான் இருக்கலாம், நீ ரொம்ப சந்தோஷப்படுவேன்னு!” “சும்மா அளக்காதே. `வெளியில சாப்பிட்டா, வயிறு கெட்டுப் போகுது! கல்யாணம் பண்ணி வைங்கம்மான்னு இதைவிட வெளிப்படையா ஒருத்தன் எப்படிச் சொல்வான்?’னு கேட்டிருப்பியே?” சிரித்தான் ராசு. அதிசயத்துடன் கணவனைப் பார்த்தாள் அகல்யா. அவன் இவ்வளவு பேசுவானா? தன்கூட மட்டும் ஏன்..? “கல்யாணமா! சுதந்திரமா இருக்கிறவன்லாம் மாட்டிக்கணும்னு பார்ப்பான். மாட்டிக்கிட்டவன் எப்படிடா வெளியே வர்றதுன்னு முழிப்பான். என்ன சொல்றீங்க, அத்தை?” என்று அகல்யாவைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினான் இந்திரன். தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஒருவன் பேசியது அகல்யாவுக்கு நிறைவை அளித்தது. ஆனால், பதில் கூற அஞ்சி, சற்றே பயந்தவளாக கணவனை ஏறிட்டாள். அவன் கவனித்ததாகவே தெரியவில்லை.   தம்பதிகள் இருவருக்கும் இடையே இருந்த பிளவைப் புரிந்துகொள்ள இந்திரனுக்கு நாளாகவில்லை. ஒரு நாள் பகல் பத்து மணி இருக்கும். ஆண்கள் இருவரும் வேலைக்குப் போய்விட்டிருந்தனர். சமையலை முடித்துவிட்டு, இந்திரன் அவளுக்கென்று வாங்கி வந்திருந்த காதல் புதினத்தை சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்தாள் அகல்யா. வாயிற்கதவு தட்டப்பட்ட சப்தம் கேட்டது. எழுந்துபோய் திறந்தாள். கதவைத் தாழிட்டபடி உள்ளே நுழைந்த இந்திரனைப் பார்த்து, “எதையாவது மறந்து வெச்சுட்டுப் போயிட்டீங்களா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டவளுக்குப் பதில் கூறாது, அவளுடைய கண்களை ஊடுருவுவதுபோல பார்த்தான் இந்திரன். நெருக்கமாக வந்தவனின் தலைமுடியில் பூசப்பட்டிருந்த கிரீமின் வாசனையும், முகச் சவரத்துக்குப்பின் தடவியிருந்த குடிகுரா பவுடரின் மணமும் ஒன்றுசேர்ந்து அவளுடைய உணர்வுகளைத் தாக்கின. அவளுடைய உடலும் மனமும் படபடத்தன. மூச்சு வேகமாக வந்தது. “பைத்தியக்காரன்!” முணுமுணுப்பாக வந்தது அவன் குரல். “கோவில் சிலைமாதிரி இருக்கிற ஒங்க அருமை அந்த மடையனுக்குப் புரியுதா!” என்றபடி அவனது கை…! பயந்து பின்வாங்கினாள் அகல்யா. அவளுடைய செயலை எதிர்பார்த்திருந்தவனாக, அவளுடைய தோள்களை அழுத்தி, தன்னருகே கொண்டுவந்தான். அகல்யா உறைந்தே போனாள். இந்திரன் வெளியேறி வெகுநேரம் கழிந்தபின்தான் அகல்யாவுக்கு நடந்து முடிந்ததன் விபரீதம் மெள்ள உறைக்க ஆரம்பித்தது. தான் ஏன் அவனைப் பிடித்துத் தள்ளவில்லை? அவனுடைய உணர்வுகளின் எதிரொலி ஏதோ ஒரு சிறிய அளவில் தன்னுள்ளும் எழுந்ததோ? இரு கண்களையும் இறுக மூடி, மூச்சைப் பிடித்துக்கொண்டு, அவனுடைய உடலின் ஒவ்வொரு அசைவையும் மனக்கண்ணால் உணர்ந்து, சவம்போல உறைந்து கிடந்ததற்கு என்ன அர்த்தம்? கத்திக் கூச்சலிட்டிருக்கலாமே? அப்போது என்ன ஆயிற்று எனக்கு? அடுத்து வரும் தினங்களில் நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று அகல்யா திகிலடைந்தாள். கூடியவரை தன்னுடைய அறைக் கதவைத் தாழிட்டுக்கொண்டு, உள்ளேயே இருக்கத் தலைப்பட்டாள். தன் கழுத்தில் தாலி கட்டியவர் எல்லாக் கணவர்களையும்போல இயங்கியிருந்தால், தான் இந்தப்பாடு படவேண்டியிருக்குமா என்று எண்ணம் போக, கணவன்மேலும், அவனை மணந்த பாவத்திற்காகத் தன்மீதும் ஆத்திரம் பொங்கியது. ஆத்திரம் ஒரு வடிகாலைத் தேடியது. தனிமையில் அழுகை பீறிட்டது. மனைவியிடம் ஏதோ மாற்றம் தெரிகிறதே என்று ராசு, அவளை பரிசோதனைக்கு அழைத்துப் போனான். “வாழ்த்துகள்! நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள்!” என்று போலியான மகிழ்ச்சியுடன் டாக்டர் தெரிவித்தபோது, அகல்யாவின் பார்வை வெறித்தது. ஒரு தடவை! ஒரே ஒரு தடவை! அதிகபட்சம் பத்து நிமிடங்கள் இருக்குமா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? கோபத்தாலும், அவமானத்தாலும் சிவந்த முகத்தோடும், நெறிந்த புருவங்களுடனும் தெருவிலேயே கவனத்தைச் செலுத்த முயன்றபடி, அவள் பக்கமே திரும்பாது காரை ஓட்டினான் ராசு. பதினெட்டு வயதுக்குள் இந்திரன் வெம்பிப்போயிருந்தது யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றும் இல்லை. ஏன், அவனே அதைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்வான். ஆனால், உண்ட  வீட்டுக்கு இரண்டகம் செய்யவும் துணிவான் என்பதை ராசு நினைத்தும் பார்த்திருக்கவில்லை. வாரம் ஒன்று நகர்ந்தது. கணவனாக ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்த்த அகல்யா, அவனது நீடித்த மௌனத்தால் மேலும் கலங்கிப்போனாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, வயிற்றின்மேல் ஒரு கை பதித்து, முகசாடையாகவே கேட்டாள். “வேணாம்!” அவளை நிமிர்ந்து பார்க்காமலே பதிலளித்தான். நினைத்துப் பார்க்கும்போதே அகல்யாவுக்குக் கலக்கமாக இருந்தது. குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குச் செய்த துரோகத்தால் தான் துடிக்க வேண்டும் என்றே அந்த முடிவுக்கு வந்திருப்பான் என்றுதான் அவளுக்குத் தோன்றியது. அழ ஆரம்பித்தாள். அதைப் பொருட்படுத்தாது, “ஆபீசிலே என்னை லண்டனுக்குப் போகச் சொல்லி உத்தரவு வந்திருக்கு,” என்று முகத்தை எங்கோ திருப்பியபடி தெரிவித்தவன் சற்றே யோசித்தான். “ஒன்னை அலோர் ஸ்டாரில, அம்மாகிட்ட கொண்டு விடறேன்,” என்றான். மலேசிய நாட்டின் வடகோடியில், கடாரம் என்று முன்பு அழைக்கப்பட்ட இன்றைய கெடாவின் தலைநகரம். கோலாலம்பூரிலிருந்து  நானூறு கிலோமீட்டர்களுக்குமேல் தொலைவு. இந்திரனும் அவளும் நெருக்கமாக இருக்க முடியாது என்று கணக்குப் போட்டிருந்தான். இப்படியும் ஒரு பொறுமையா! தன்னிடம் ஆத்திரப்படாது, பொறுப்பைத் தட்டிக் கழிக்காது..! அதே வீட்டில் பழையபடி சேர்ந்திருந்தால், இந்திரனை கட்டுப்படுத்த முயல்வதோ, வீட்டைவிட்டு வெளியேறச் சொல்வதோ ரசாபாசத்தில் முடிந்துவிடும் என்றே, பிரச்னையை எதிர்கொள்ளும் சக்தியின்றி, கணவன் ஓடி ஒளிகிறான் என்பது அகல்யாவிற்குப் புரியவில்லை. இன்னொருவராக இருந்தால், தெரிந்தோ, தெரியாமலோ சோரம் போன மனைவியை அடித்தே கொன்றிருப்பார்கள். இல்லை, விலக்கியாவது வைத்திருப்பார்கள். சட்டென பொறி தட்டியது. இவரும் விலக்கித்தான் வைக்கிறார். யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவண்ணம். ஓயாது சுழன்ற தனது குற்ற உணர்விலேயே மூழ்கிப்போனாள் அகல்யா. அதன் உறுத்தல் தாங்காது அழுதாள். மீண்டும்… மீண்டும்… . மீண்டும்… `அழுதுக்கிட்டே இருக்காளே!’ என்று மாமியார் அதிசயப்பட்டாள். `புருஷன்மேல அவ்வளவு பிரியமா!’ கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடலில் சாதாரணமாக ஏற்படும் ரசாயன மாற்றங்களின் விளைவு போலும் என்று சமாதானம் அடைந்தாள். ஆனால், பிரசவத்திற்குப் பின்னரும் அகல்யாவின் நிலை மாறவில்லை. குழந்தை தன்பாட்டில் கதறிக்கொண்டு இருக்கும். அவள் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பாள்; இல்லை, விம்மி விம்மி அழுதுகொண்டிருப்பாள். `ஹிஸ்டீரியா வந்திருக்கு! தாம்பத்திய உறவில் ஏதோ கோளாறு!’ என்று உளவியல் நிபுணர்கள் அபிப்ராயப்பட, “கல்யாணமாகி, அடுத்த வருஷமே பிள்ளை! என்னமோ சொல்றாங்க!” என்று நொடித்தார்கள் மாமியாரும், நாத்திகளும். பிள்ளையிடம் காட்டிய அதே பராமுகத்தைத் தன் உடலைப் பராமரிப்பதிலும் கைப்பிடித்தாள் அகல்யா. “பிள்ளை பிறந்ததும் வயிற்றைக் கட்டி இருக்கக்கூடாது? இப்படி தொந்தி போட்டிடுச்சே!” என்று நாத்தனார் ஒருத்தி கரிசனத்துடன் கேட்க, `அப்பாடா! இனிமே, அழகு, அழகுன்னு எந்தப் பயலும் என்கிட்ட வாலாட்ட மாட்டான்,’ என்ற ஏற்பட்டிருந்த நிம்மதி குலைவது போலிருந்தது அகல்யாவுக்கு. “வயத்தைக் கட்டறதா! என்ன அசிங்கம் அதெல்லாம்?” என்று கத்த ஆரம்பித்தவள், அழுகையில் நிறுத்தினாள். “அதுகிட்ட எதுக்குடி வாய்குடுக்கறே? எல்லாத்துக்கும் ஒரு கத்தல், ஒரு அழுகை! பிசாசு!” என்று வெறுத்துப்போய் கூறிய மாமியார்க்காரி, “ராசு, பாவம்! அதிர்ந்துகூடப் பேசமாட்டான். உடம்பு அழகுன்னு மயங்கிப்போயிட்டான். இவளோட தொல்லை தாங்கமுடியாமதானே வெளிநாட்டுக்கு ஓடிட்டான்! இங்கே, நான் கிடந்து அல்லாடறேன்!” என்று நீட்டி முழக்கினாள்.   தான் மணந்த அழகுப் பதுமையா இது! மூன்று ஆண்டுகள் கடந்ததும் திரும்பிய ராசுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கூடவே, `நல்லவேளை, பிள்ளை அம்மா சாயலிலே இருக்கு!’ என்ற சந்தோஷமும் எழாமலில்லை. “ஒன் பிள்ளை என்னடா இடது கையில சாப்பிடுது! ஒங்க ரெண்டுபேருக்குமே வலதுகைப் பழக்கம்தானே?” என்று அவனுடைய தாய் அதிசயப்பட்டுக் கேட்டபோதே உண்மை புரிந்துபோக, அவளுடைய கை தன்னிச்சையாக வாயை மூடியது. அருகே அமர்ந்திருந்த அகல்யாவுக்கும் அவ்வார்த்தைகள் கேட்டன. அவளுடைய குழம்பிய மனத்தினடியிலிருந்து ஒரு தெளிவான எண்ணம் மேலெழுந்தது: இந்திரனின் இடது கை அவளுடைய திரண்ட மார்பைப் பிடித்து அழுத்துகிறது! அந்த நினைவின் தாக்கத்தைப் பொறுக்கமுடியாது, `வீல்’ என்ற அலறலுடன் தரையில் விழுந்தவள், வெறித்த கண்ணும் விறைத்த கைகால்களுடனும் அப்படியே கிடந்தாள். அப்போதுதான் உபதேசித்தாள் தாயார், “இந்தப் பைத்தியத்துக்கு காசோ, பணமோ குடுத்து விலக்கி வெச்சுடுடா,” என்று. உடனே பதிலளிக்க முடியவில்லை ராசுவால். `நீ ஒழுங்காக நடந்துகொண்டிருந்தால், இவள் இன்னொருத்தனை அனுமதித்து இருப்பாளா?’ என்று குத்தியது மனசாட்சி. பெரிய மனது பண்ணுவதுபோல், “அது சரியில்லேம்மா. எனக்கு ஒரு வியாதி வந்தா, என்னைப் பாத்துக்காம, இவ விட்டுட்டுப் போயிருப்பாளா?” என்றான். உள்மனமோ, `நான் பொட்டைன்னு கேலி செய்தவங்க என் வாரிசைப் பாத்து அசரப்போறாங்க!’ என்று குதூகலித்தது. 5 வேண்டாம் இந்த அம்மா டேய் பத்மா! இந்த ஒரு தடவையாவது எங்களோட வாடா!” நண்பர்கள் வற்புறுத்தினார்கள். “அவன் வரமாட்டாண்டா. எந்தச் சனிக்கிழமைதான் நாம்ப கூப்பிட்டு அவன் வந்திருக்கான்?” பத்மராசனுக்கு அழுகைதான் வந்தது. அவர்களிடம் உண்மையைச் சொல்ல முடியுமா? அது ஏன் இவனுடைய அம்மா மட்டும் எல்லா அம்மாக்களையும்போல் இல்லை? பாலாவின் அம்மாவைப் பார்த்தால், யாரும் அவளுக்கு மீசை முளைத்துக்கொண்டிருக்கிற மகன் இருக்கிறான் என்றால் நம்பமாட்டார்கள். ஏன், ஒரு தடவை அவர்கள் நண்பர்களிலேயே சற்று தடியாக இருந்த அர்ஜூன் சொல்லவில்லை, `கூட்டாளியோட அம்மாவாப் போயிட்டாங்க! இல்லாட்டி, `சைட்’ அடிச்சிருப்பேன்,’ என்று? இவன் மட்டும், அம்மா உயிரோடு இருந்தும், இறந்துவிட்ட அப்பாவோடேயே போய்விட்டதாக நினைவுதெரிந்த நாள்முதல் சொல்லித் தொலைக்க வேண்டிய நிலை. அட, அழகும், இளமையும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. இப்படி, பேச்செல்லாம் குளறிப்போய், கண்களில் சிறிதுகூட ஒளி இல்லாமல், ஆண்பிள்ளைபோல் குட்டை முடியுடன், முழங்கால்வரையே தொங்கும் கவுனைப் போட்டுக்கொண்டிருந்த அந்த உருவத்தை `அம்மா’ என்று ஏற்றுக்கொள்ளவே எவ்வளவு கடினமாக இருந்தது!   அப்பா தவறிப்போனபோது அவனுக்கு ஒரு வயதுகூட நிரம்பவில்லையாம். அக்காதான் சொல்வாள். அவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் அம்மா. தெரு ஓரமாக நடந்துகொண்டிருந்த அப்பாமேல் போதையிலிருந்த பஸ் டிரைவர் தனது வாகனத்தை ஏற்ற, தலத்திலேயே அப்பாவின் உயிர் பிரிந்ததை காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறக் கேட்டு, கைக்குழந்தையை நழுவவிட்டு, பித்தான்கள் நீக்கப்பட்டு இருந்த ஜாக்கெட்டை புடவைத் தலைப்பால் மறைத்துக்கொள்ளும் பிரக்ஞைகூட இல்லாது, அலறியபடி வெளியே ஓடியவள்தான் அம்மா. அவளைக் கட்டுப்படுத்த முடியாது, சில மாதங்களுக்குள் தஞ்சோங் ரம்புத்தானிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டார்கள் தாத்தாவும், பாட்டியும். கோலாலம்பூரின் வடக்குப் பகுதியில், பேராக் மாநிலத்தில் இருந்த தஞ்சோங் ரம்புத்தானில் 1911 ஆண்டு மனநிலை சரியாக இல்லாதவர்களுக்காகவென ஆஸ்பத்திரி துவங்கப்பட்டது.  அந்த இடத்தின் பெயரைக் கேட்டாலே, விவரம் புரியாத பலரும் கேலிச் சிரிப்பு சிரிப்பார்கள். `இவன் சரியான தஞ்சோங் ரம்புத்தான்!’ என்று சிறுவர்கள் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்வதும் உண்டு. இதெல்லாம் புரிந்து, வேறு ஊருக்கு மாறினார்கள். பாட்டி மட்டும் மாதம் தவறாது, அம்மாவைப்போய் பார்த்து வருவாள். அப்போதெல்லாம், “ராசா, ராசான்னு ஒம்மேல உசிரையே வெச்சிருந்தாளே, பாவி! இப்படி, தன் பேருகூடத் தெரியாம ஆகிட்டாளே!” என்று  புலம்புவாள். பத்மராசாவுக்குத் தர்மசங்கடமாக இருக்கும். எப்போதாவது அக்காவும் பாட்டிக்குத் துணையாகப் போவாள். “நீ அம்மாவைப் பாத்ததே இல்லியே, பத்மா. எங்ககூட வாடா,” என்று அக்கா ஒருமுறை இழுத்துப்போனாள் அவனை. “நம்ப ராசா பாத்தீங்களாம்மா? எவ்வளவு பெரியவனா ஆயிட்டான்! ஸ்கூலுக்குப் போறான்ல!” வலிய வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன், பெற்றவளுக்கே மகனை அறிமுகப்படுத்தினாள், அக்கா. எங்கோ வெறித்தபடி உட்கார்ந்திருந்த அம்மா சட்டெனத் திரும்பினாள். விரைந்து வந்து மகனை அணைத்தாள். அவளுடைய பிடியின் இறுக்கத்தில் சிறுவன் மிரண்டு போனான். அம்மா முத்தமாரி பொழிய ஆரம்பித்ததும், அழ ஆரம்பித்தான். அதைக் கவனிக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. “ராசாக்குட்டி!  ராசாக்குட்டி!” வெறிபிடித்தவளாய் கத்தினாள். உபயோகமற்று இருந்த குரல் கரகரப்பாக இருந்தது. ஆனால், அடைந்து கிடந்த உணர்வுகள் வெளிப்பட்டதால், நாளடைவில் அவளுடைய நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. அம்மாவை வீட்டுக்கே திரும்ப அழைத்து வந்தார்கள். கணவருடனேயே அவளுடைய புத்தி ஸ்வாதீனம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு விட்டது என்பது பிறகுதான் புரிந்தது. ஆடை அணிய மறுத்தாள். வாழ்நாள் பூராவும் மருந்து சாப்பிடவேண்டும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறினாள். `எனக்கு விஷம் கொடுத்து கொல்லப் பாக்கறீங்களா?’ என்று, கத்தியைக்  கையில் எடுத்துக்கொண்டு அவள் மிரட்ட, வேறு வழியின்றி, ஆஸ்பத்திரியிலேயே மீண்டும் கொண்டுவிட்டார்கள். அங்கு, உச்சந்தலையில் மின் அதிர்வு வைத்துச் சிகிச்சை அளித்து சாதுவாக்கிய அம்மாவை, `மீண்டும் வீட்டுக்கே அழைத்துப் போகலாம்,’ என்று தகவல் கொடுத்தார்கள். `அவளை எங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லையே!’ என்று பாட்டியும், அக்காவும் போய் மன்றாட, அருகிலிருந்த ஒரு இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்தார் பெரிய டாக்டர்.   `இவர்களால் பிறருக்கு ஆபத்து இல்லை,’ என்ற நிலையிலிருந்த பிற பெண்கள் தங்கியிருந்த இடம் அது. எல்லாருமே மனநிலை பிறழ்ந்து, தீவிர சிகிச்சைக்குப்பின் அங்கு அனுப்பப்பட்டவர்கள். நாள் தவறாது, மூன்று வேளை மருந்தும், மாதம் ஒரு ஊசியுமாக, ஒருவித போதை நிலையிலிருந்த பிறருடன் அம்மாவும் ஒருத்தியாகிப் போனாள். “ஒன்னைப் பாக்கிறதுக்காகவே ஒங்கம்மா உசிரை வெச்சுக்கிட்டிருக்கா, ராசா. வாரம் தவறாம போய் பாத்துட்டு வா. வேற என்னதான் இருக்கு அவளுக்கு, பாவம்!” மரணப் படுக்கையிலிருந்த பாட்டி சும்மா போகாமல், சத்தியம் வாங்கிக்கொண்டுதான் போனாள். அப்போது பத்மராசாவுக்கு பத்து வயது. இருபது வயதான அக்கா தனது கல்யாணத்தைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்தாள். வேலைக்குப் போனாள். மாதாமாதம் அம்மாவுக்காக ஒரு பெருந்தொகையை எடுத்துவைக்க வேண்டுமே! சற்று விவரம் புரிய ஆரம்பிக்க, பத்மராசாவுக்கு அம்மாவின்மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தன் வயதுப் பையன்களெல்லாம் ஒன்று சேர்ந்து சினிமா, மெகா மால், கெந்திங் ஹைலாண்ட்ஸ் என்று சுற்றிக்கொண்டு உல்லாசமாகக் கழிக்கையில், தன் விதி மட்டும் ஏன் இப்படிப் போயிற்று? வாரம் பூராவும்தான் பள்ளிக்கூடமும், டியூஷனும் இருக்கவே இருக்கின்றன. ஒவ்வொரு சனியன்றும் பஸ் பிடித்துப்போய், அந்த அழகான அம்மாவைத் தரிசனம்! அந்தக் கசப்பிலிருந்து மீள அடுத்த நாளும் அனேகமாக விரயமாகிவிடும். தன்னைப்பற்றி மறக்கவேபோல், ஓயாது படித்ததில், வகுப்பில் இவன்தான் முதல். ஆனால், நண்பர்களிடமிருந்து இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் உண்மையை மறைக்க முடியும்! உண்மை வெளியாகிவிட்டால், `பைத்தியத்தோட பிள்ளை டோய்!” என்று ஏளனம் செய்வார்களோ?   “இப்படி முகத்தை சிடுசிடுன்னு வெச்சுக்கிட்டு அம்மாவைப் பாக்கவந்தா நல்லாவேயில்ல, பத்மா!” ரகசியக் குரலில் அக்கா அதட்டினாள். உதட்டைச் சுழித்துக்கொண்டான் பையன். பத்து வயதுவரை அம்மாவிடம் தலை வாரிப் பின்னிக்கொண்டு, அம்மா கதை கதையாகச் சொல்ல சாப்பிட்டு, தரையில் அமர்ந்து வீட்டுப்பாடம் பண்ணிய நினைவுகளையெல்லாம் அக்கா பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். தானும் அவளும் ஒன்றா? அவனைப் பார்த்ததும் லேசாகச் சிரித்தாள் அம்மா. “நல்லாப் படிக்கிறயாமே, ராசா?” என்று எடுத்த எடுப்பிலேயே விசாரித்தாள். “அக்காவுக்கு நான்தான் பாடம் சொல்லிக் கொடுப்பேன்!” அவளுடைய பழைய நினைவு சற்றே திரும்பியிருந்தது. “இப்ப அவனுக்கு நான் சொல்லிக் குடுக்கிறேம்மா!” அக்கா முந்திக்கொண்டாள், அநாவசியமான வருத்தத்தால் அம்மாவின் நிலை மறுபடியும் மோசமாகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்தவளாக. “எனக்கு ஒங்ககூடவே வந்துடணும்போல இருக்கு. ஆனா, இங்க இருக்கிறதுங்க வேலை செய்யறதுக்காக என்னைப் பிடிச்சு வெச்சிருக்குங்க!” தனது உண்மை நிலை புரியாது பேசியவளைப் பார்த்தால் பாவமாக இருந்தது பத்மராசாவுக்கு. ஆறுதலாக ஏதாவது சொல்லவேண்டும் என்று தோன்றியது. “இங்கே எவ்வளவு அழகா தோட்டம் போட்டிருக்காங்க! ஒரே போகன்விலா செடியில எத்தனை கலர் பூ!” என்று வியந்தான். அம்மாவின் கண்களில் அபூர்வமாக ஒரு ஒளி. “ஆர்கிட் தோட்டம்கூட இருக்கு. பாக்கறியா கண்ணு?” எதிரே இருந்த ஐந்தரை அடி மகனை, தான் என்றோ விட்டு வந்த குழந்தையாகவே பாவித்து, ஆசையோடு அவன் முகவாயைப் பிடித்தாள் அம்மா. “காட்டறேன், வா!” இவளுடன் தான் நடப்பதா? அந்த எண்ணமே கோபம், பயம், அருவருப்பு, இன்னும் ஏதேதோ உணர்வுகளைத் தோற்றுவிக்க, `வேண்டாம்,’ என்பதுபோல் வேகமாகத் தலையாட்டிவிட்டு, அவளுடைய கையை முரட்டுத்தனமாக விலக்கியவன், சட்டென எழுந்து, திரும்பிப் பாராது வாயிலை நோக்கி நடந்தான். அம்மா வெறி பிடித்தவளாக ஏதோ கத்தியது அவனைப் பாதிக்கவில்லை. அவ்வாரமே, தன் தலைமுடியை வெட்ட வந்தவளின் கையிலிருந்த கத்தரிக்கோலைப் பிடுங்கி, என்ன நடக்கிறதென்று பிறர் புரிந்துகொள்ளுமுன், அதைத் தன் வயிற்றில் செருகிக்கொண்டாள் பத்மராசாவின் அம்மா. பெற்ற மகனுக்கே வேண்டாதவளாகப் போய்விட்டோம், இனி உயிரோடு இருந்துதான் என்ன பயன் என்று அவளுக்கு மிச்சம் மீதியிருந்த அறிவுக்குப் புலனாகிவிட்டதோ! உலகம் அறியாத அவனுடைய அம்மாவுக்கு சொற்ப ஈமக்கடன்களைச் செய்து முடித்தான் மகன். அழுகைதான் வரவில்லை. உள்ளத்தில் பீறிட்ட நிம்மதியாவது வெளியே தெரியாமல் இருக்க வேண்டுமே என்று அவன் எடுத்துக்கொண்ட முயற்சி இறுகிப் போயிருந்த முகத்தில் தெரிந்தது. விமரிசனம்: நிர்மலா! நீங்கள் நிர்மலமாக எழுதுகிறீர்கள். ‘பிரக்ஞைகூட இல்லாது’ – அது ‘இல்லாமல்’ நின்று விட்டால் தான் பைத்தியம். ‘சத்தியம் வாங்கிக்கொண்டுதான் போனாள்.’ அது தான் சாத்தியமான வழி. ‘நினைவுகளையெல்லாம் அக்கா பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்’ – அது தான் பொக்கிஷம். இன்னம்பூரான் 6 பூ மரம்கூட புது தினுசுதான் விமானத்தில் தனது இருக்கையைத் தேடியபடி, மேலே இருந்த எண்களைப் பார்த்தபடி நடந்தாள் சுபத்ரா. அவள் ஒருவழியாக அமர்ந்ததும், பக்கத்திலிருந்தவர் புன்னகையுடன் அவளை வரவேற்றார். “ஸ்டேட்ஸுக்கா?” அனாவசியமாகக் கேட்டாள். கோலாலம்பூரில் புறப்பட்டால், அந்த மாஸ் விமானம் அங்குதான் போகிறது — வழியில் ஒரு மணி நேரம் துபாயில் நிற்பதைச் சேர்க்காவிட்டால். தலையை ஆட்டினார் அந்த இளைஞர். “நானும்தான்!” என்றாள் பெருமையுடன். “என் பெண் — ஒரே பெண்தான் எனக்கு — அங்கே போய் பத்து வருஷமாச்சு…,“ முதன்முறை விமானப் பயணம் என்பதால் உண்டான படபடப்புடன் மூச்சு விடாமல் பேசினாள் சுபத்ரா. ஏதோ, மரியாதைக்குச் சிரித்துவைத்தால், வரப் போகும் இருபது மணி நேரத்திற்குமேல் இவள் பேசித் துளைத்து விடுவாளோ என்ற பயம் எழுந்ததோ, என்னவோ, அவள் பக்கம் திரும்பாது, முன்னிருக்கையின் பின்பகுதியிலிருந்த பையைத் துழாவி, விமானத் தொலைகாட்சியைப் பற்றிய விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை எடுத்து முகத்துக்கு நேராகப் பிடித்துக்கொண்டார் சகபயணி. அதை அவமானம் என்று நினைக்காமல்,  சுபத்ராவும் கைப்பைக்குள் எதையோ தேடி எடுத்தாள். வெளிர் நீலக் காகிதம் — விமானத் தபாலில் வந்த வேற்று நாட்டுக் கடிதம் என்பதைப் பறைசாற்றியது. இரண்டே வாக்கியங்கள்தாம்: அன்புள்ள  அம்மா, இத்துடன் ஒரு டிக்கட் அனுப்பி இருக்கிறேன். முதலில் விசா எடுத்துக் கொள்ளவும். சாரு பத்து வருடங்களாக அவள் எங்கே, எப்படி இருக்கிறாள் என்பதுகூடத் தெரியாது. தான் தவித்த தவிப்பு மகளுக்குப் புரிந்திருக்குமா? எல்லாவற்றிற்கும் பிராயச்சித்தமாகத்தான் இப்போது — தாயின் கடைசிக் காலத்தில் — அவளைத் தன்னுடன் வைத்துக்கொள்ளத் தோன்றியிருக்க வேண்டும். கடந்துபோனதை நினைக்கும்போது, கோபமோ, வருத்தமோ எழவில்லை. எத்தனையோ அழுதாகிவிட்டது. மனம் மரத்துப் போயிருந்தது. என்ன நடக்கும், ஏன் நடந்தது என்பதே புரியாததுதான் வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் அர்த்தம் தேடிக் கொண்டிருந்தால், அமைதி கெடுவதுதான் மிச்சம். மாற்ற முடியாததை ஏற்பதுதான் விவேகம். ஐம்பது வருட வாழ்க்கை அவளுக்குக் கற்றுக் கொடுத்திருந்த பாடம் அது.   கைக்குழந்தையுடன் பூவிழந்து நின்றிருந்தவளைத் தன்னுடன் சிற்றூரில் வைத்துக்கொண்டால், அவள் சமூகத்தின் வாயினாலேயே சிறுகச் சிறுகச் சாகடிக்கப் படுவாள் என்று புரிந்துகொண்டிருந்த தந்தை செய்த உபகாரம் அவளை நகர்ப்புறத்தில் இருந்த பெண்கள் விடுதியில் சேர்த்து, மேற்படிப்பு படிக்கவைத்தது. உத்தியோகம் கிடைத்து, ஒரு வாடகை வீட்டில் குடிபுகுந்தாள். வயிற்றுப்பாட்டைச் சமாளிக்க முடிந்தது. ஆனால், இருபத்து இரண்டே வயதாகி இருந்தவளின் உணர்வுகளால், `உன்னை அனுபவிக்க கணவன் இல்லை. எல்லா ஆசாபாசங்களையும் துறந்துவிட்டு, கருமத்திலேயே கண்ணாக இருந்து, போகிற வழிக்குப் புண்ணியம் தேடிக்கொள்!’ என்னும் எழுதப்படாத நிர்ப்பந்தத்தை ஏற்கத்தான் முடியவில்லை. வெள்ளை ஆடையும் விபூதியும் அணிந்தால் மட்டும் ஆசாபாசங்கள் ஒழிந்து விடுமா? வேலை, வீடு, இந்த இரண்டையும் விட்டால், வாழ்க்கையில் வேறு எதுவுமே கிடையாதா என்ற சலிப்பு எழுந்தது சுபத்ராவுக்குள்.   அவ்வீட்டின் ஓர் அறையில் குடியிருந்தான் அவன். “ரொம்ப திண்டாடறீங்களே!  நீங்க வீட்டு வேலை செய்யறப்போ, பாப்பாவை நான் பாத்துக்கிறேன்! எனக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்!” என்று வலிய வந்து நட்பு கொண்டபோது, அவனைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை. தனியாளாக இருக்கிறான், பாவம்! அதுதான் பிறருடைய ஆதரவு வேண்டியிருக்கிறது என்றுதான் எண்ணினாள். “சாருக்குட்டி ஒங்க சாயல் இல்லீங்க. அவங்கப்பா மாதிரியோ?” என்பான் கலகலப்பாக. `அவருடைய முகம்கூட எனக்குச் சரியாக நினைவில்லை!’ என்று சொல்லவா முடியும்! அசட்டுச் சிரிப்பு சிரிப்பாள். “குழந்தைக்கு உடம்பு இப்படி கொதிக்குதே! இனிமே டாக்ஸி பிடிச்சு, டாக்டர்கிட்ட போக நேரமாகிடும். வாங்க! என் பைக்கில போகலாம். அட, ஆபத்துக்குப் பாவமில்லீங்க!” அவனுடைய வற்புறுத்தலில் அவளுடைய தயக்கம் சிறிது குறைந்தாலும், அவன் தோளில் ஒரு கை பதிக்கையில் சுபத்ராவின் உடல் லேசாக அதிர்ந்தது. “குழந்தைக்கு டிப்தீரியா. கொஞ்சம் தாமதமா வந்திருந்தா..,” என்று டாக்டர் பயமுறுத்தியபோது, ஆபத்பாந்தவனாக வந்த அவன்மேல் நன்றி சுரந்தது. தனக்கு நெருங்கியவன் என்று தோன்றிப் போயிற்று. அதை உணர்ந்தவனாக அவனும், “இந்தக் காலத்திலே யாராவது ஒங்கமாதிரி எப்பவும் வெள்ளைப் புடவையே கட்டுவாங்களா? அப்படி என்ன வயசாகிடுச்சு ஒங்களுக்கு, ஒலகத்தையே துறக்க?” என்று உரிமையுடன் கோபித்தான். பல வருடங்களுக்குப்பின், நீலவண்ணத்தில் சிவப்பு ரோஜாக்கள் போட்டிருந்த புடவையை அணிந்தபோது, பயமும் வருத்தமும் மகிழ்வும் கலந்து வந்தன. பட்ட மரம் புத்துயிர் பெற்றது போலிருந்தது. எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தவன், அவளைக் கண்டதும், விழிகள் விரிய நின்றான். “நீங்களா! யாரோன்னு நினைச்சேன்!” சுபத்ராவுக்குப் பெருமையும், வெட்கமுமாக இருந்தது. மறுநாள் அவள் வேலைக்குப் புறப்பட்டபோது, “வாங்களேன்! நானே கொண்டு விடறேன்,” என்று அவன் அழைத்தபோது, ஏனோ மனம் துள்ளியது. `பஸ்ஸில் கும்பலில் இடிபட்டுக்கொண்டு, பலரும் உரசப் போகும் கண்ராவிக்கு இது தேவலை!’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டாள். அவளது கை தோளில் பதிந்தபோது, திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தான் அவன். அவனுடைய குட்டையான, குண்டு உடலுக்கு அப்பால் இருந்த எதுவோ அவளை அவன்பால் ஈர்த்தது. அவர்கள் உறவில் எப்போது, எப்படி நெருக்கம் ஏற்பட்டது என்றெல்லாம் அவள் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அவளது மனக்குமுறலை வாய்திறவாது கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, இறுதியில் ஆதரவுடன் அவன் ஏதாவது சொல்வதைக் கேட்கும்போது, வாழ்க்கை அவ்வளவு தனிமையாக, வரண்டதாக இல்லை. அவனுடைய அணைப்பில் படுத்திருக்கும்போது எழுந்த குற்ற உணர்ச்சி கோபமாக மாறியது. தன்னை இப்படி நிராதரவாக விட்டுப்போனது யாருடைய குற்றம்? விவரம் தெரிந்த நாளாய், ஒரு பெண் தனியாக வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்று, ஒப்புக்கு தம்பியையாவது துணைக்கு அனுப்பிய தாயின் குற்றம். `ஆண்கள் சாப்பிட்டபின்தான் பெண்கள் சாப்பிடலாம்; ஆண்கள் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது; அவர்கள் செய்வது தப்பாகத் தோன்றினாலும், அதை வெளிப்படையாகச் சொல்லிவிடக் கூடாது; ஆண்கள் பிற பெண்களை மட்டம் தட்டினால், அதை ஆமோதிப்பதுபோல் சிரித்துவைக்க வேண்டும்’ — இவ்வாறு சிறு சிறு வழிகளில் தம்மையும் அறியாது, `ஆண்களைச் சார்ந்து நிற்க வேண்டும்’ என்று கற்பிக்கப்படுகிறார்கள் பெண்கள்  — இப்படி எல்லாம் யோசித்தபோது இந்த சமூகத்தின்மேலேயே ஆத்திரம் எழுந்தது. தன்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது, அனுசரணையாக இருந்தவனின் உறவு சுபத்ராவுக்கு வேண்டியிருந்தது. இதனால் மற்றுமொரு நெருங்கிய உறவு துண்டித்து விடலாம் என்பதை அவள் நினைத்துப் பார்க்கவுமில்லை.   “நான் அமெரிக்கா போறேன், அடுத்த வாரம்!” `நீயுமா என்னைத் தனியா விட்டுப் போறே?’ என்று கேட்க நினைத்த சுபத்ரா, அதை அடக்கிக்கொண்டு,  “எதுக்கு சாரு?” என்று ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டாள். “என்னால தாங்க முடியலேம்மா. இந்தக் கண்ராவியைப் பாக்கக் கூடாதுன்னுதான் அப்பா போயிட்டார்,” என்று பொருமினாள். எதையும் பதிலாக அளிக்க முடியாமல், அத்தாயால் அழத்தான் முடிந்தது. கணவர் இருந்திருந்தால், அவள் ஏன் இப்படி இழிந்து போயிருக்கப்போகிறாள்! அழுகையினூடே வாதமும் சமாதானமும் செய்துகொண்டாள். சாருவுக்கு இன்னும் விவரம் புரியவில்லை. தாயைப்போல் தானும் சமுதாயம் பழிக்கும் வண்ணம் நெறி தவறி நடந்து விடுவோமோ என்ற பயம் இந்தப் பருவத்தில் ஏற்படுவது சகஜம்தான். தானே நாலு இடங்களுக்குப் போய், பலதரப்பட்ட மனிதர்களோடு பழகினால், அப்போது புரியும் — தான் செய்யாத குற்றத்துக்கு எவ்வளவு துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது ஒரு தமிழ்ப் பெண் என்று!   யாரோ தோளில் தட்ட, நினைவுலகத்துக்கு மீண்டாள் சுபத்ரா. “விரைவில் உங்கள் உணவு வருகிறது. தயவுசெய்து நேராக உட்காருங்கள்!” பெண்மையின் வளைவுகளை ரசனையுடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்த, உடலை ஒட்டிய பாத்தேக் உடையில், மாறாத புன்முறுவலுடன் நின்றிருந்தாள் விமான பணிப்பெண். `அது எப்படி சிலருக்கு எப்போதும் சிரித்த முகமாக இருக்க முடிகிறது? அவர்களுக்கெல்லாம் துயரமே கிடையாதோ?’ என்று யோசித்தாள் சுபத்ரா. உப்பு சப்பில்லாத சாப்பாட்டை விழுங்கி வைத்தாலும், உட்கார்ந்த நிலையில் தூங்குவது எளிதாக இல்லை. விட்ட இடத்திலிருந்து நினைவுகள் நீண்டன.   சாரு போன மறு ஆண்டிலேயே, “வீட்டிலே எனக்கு கல்யாணம் நிச்சயிச்சு இருக்காங்க,” என்று சுவற்றைப் பார்த்தபடி கூறிவிட்டு, அவள் திகைப்பைக் கவனியாதவன்போல, அறையைக் காலி செய்துகொண்டு போனான் அவன். நாற்பது வயதுக்காரியுடன் இனியும் என்ன சல்லாபம் என்று நினைத்தானோ! அவனைத் தட்டிக் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது! தாலி கட்டியவளாக இருந்தால், இப்படி எளிதாக உதறிவிட்டுப் போக முடிந்திருக்குமா? என்னுடைய இளமையையும், தனிமையையும் அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு…ஹூம்! நடந்ததற்கு அவன் மட்டுமா குற்றவாளி? அடுத்தடுத்து வந்த வருடங்கள் கசப்பிலும் சுயநிந்தனையிலும் கரைந்தன. சாருவின் கடிதம் அதை மாற்றியது. இனி வரப்போவது புதிய, இனிமையான வாழ்வு! உற்சாகத்துடன் பாத்ரூமில் தலை வாரி, அங்கே வைக்கப்பட்டிருந்த லோஷனை வரண்டிருந்த முகத்தில் பூசிக்கொண்டாள் சுபத்ரா. ஒரு நாள் பொழுதுக்கும் மேலாக விமானம் விண்வெளியில் பறந்தபோது அமைதியாக உட்கார்ந்திருந்த பயணிகள், அது தரையைத் தொட்டதும் அதற்கு மேலும் பொறுக்காதவர்களாக, நெருக்கியடித்து அதன் வாசலுக்கு வந்தார்கள். கூட்டத்தைப் பின்தொடர்ந்தாள் சுபத்ரா. சுங்கப் பரிசோதனை முடிந்து, வெளித்தளத்திற்கு வந்தாள். தெரிந்த மொழிதான். ஆனாலும், பேசும் விதத்தில் மாறுபட்டு, வேற்றுமொழியாகக் கேட்டது. எல்லாருமே எதையோ பிடிக்க ஓடுவதுபோல் தோன்றியது. `இந்தக் கும்பலில் சாருவை எப்படித் தேடுவது?’ என்ற அச்சம் எழுந்தபோதே, இரு கைகள் அவளைப் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டன. “அம்..மா!” தொனி மேலிருந்து கீழே இறங்கிற்று, கொஞ்சலாக. யார், சாருவா இது?! ஒரு உபசாரத்திற்குக்கூட சிரிக்கத் தோன்றாது, தாய்மைப் பூரிப்புடன் இருந்த மகளின் உருவத்தையே விறைத்துப் பார்த்தாள் சுபத்ரா. “எப்போ கல்யாணம் ஆச்சு?” ஏக்கமாகக் கேட்டாள். `இதைக்கூட எனக்குத் தெரிவிக்காமல் இருந்துவிட்டாய், பார்த்தாயா?’ என்ற குற்றச்சாட்டு அதில் தொக்கி இருந்தது. “ஆகலே!” மகள் புன்னகைத்தாள். தாயின் திகைப்பைக் கண்டு சிரித்தாள். “இங்கே அப்படித்தாம்மா. ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தா, சேர்ந்திருக்கலாம். கல்யாணம் செய்துக்கிட்டு, அப்புறம் சண்டை பிடிச்சுக்கிட்டு, டிவோர்ஸ், அது, இதுன்னு திண்டாடறது பெரிய முட்டாள்தனம். மனக்கசப்பு ஏற்பட்டா, சுமுகமா பிரிஞ்சு, ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம். மனசுக்குப் பிடிச்சவரா, இன்னொருத்தர் கிடைக்காமலா போயிடுவார்?” “குழந்தை?” “மூணு வருஷம் சேர்ந்திருந்தா, கூட இருக்கிற பார்ட்னர்தான் அதோட அப்பா”. அவளையும் அறியாமல், சுபத்ராவின் நினைவில் அவன் வந்து போனான். “ரொம்ப முன்னேற்றமான நாடும்மா இது. நீங்க இனிமே இங்கேயே இருக்கலாம். அங்கே சமைக்கிறதை இங்கே சமைச்சுட்டுப் போங்களேன்! பேரனைக் கொஞ்சிய மாதிரியும் இருக்கும்!” நைச்சியமாகப் பேசினாள் சாரு.  “இல்லாட்டி, நான் பச்சைக் குழந்தையை யார்கிட்டேயாவது விட்டுட்டு, வேலை முடிஞ்சபிறகு ராத்திரி அழைச்சிட்டு வரணும். ஏகப்பட்ட செலவு, அலைச்சல்!” சுபத்ராவின் உற்சாகம் மறைந்தது. தாய்மீது உள்ள பாசத்தால் தன்னை நாடு விட்டு நாடு வரவழைக்கவில்லை இவள். பிறக்கப் போகும் குழந்தைக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரி, ஆயா நான்! “என்னம்மா, பேச்சே காணோம்?” வெளியில் பார்வையை ஓடவிட்டு, “இங்கே எல்லாமே — பூ, மரம்கூட — நான் இதுவரைக்கும் பாக்காத தினுசா இருக்கு!” என்று பெருமூச்செறிந்தாள் சுபத்ரா. 7 தனக்கு வரும்போது... தீபாவளி நெருங்கிவிட்டதை அறிவிப்பதுபோல பட்டாசு சத்தம். சுற்றுச்சூழலின் மாசு அதிகரிப்பதாலும், குழந்தைகள் பலர் கண்ணையும், கையையும் இழக்க நேரிடுகிறது என்பதாலும் பட்டாசு வெடிப்பது சட்ட விரோதம் மலேசியாவில். பெயருக்குத்தான். போதைப்பொருள், தங்கம், போலி சிகரெட்டு, பாதுகாக்கப்பட்ட யானை, எறும்புதின்னி முதலிய மிருகங்கள்போல பட்டாசும், வாண வெடிகளும் எப்படியோ நாட்டுக்குள் கடத்தப்பட்டுதான் இருந்தன. புவனாவின் பருத்திருந்த வயிற்றுக்குள்ளும் அவ்வொலி எட்ட, அதைத் தாங்காத கரு அவளை எட்டி உதைத்தும், வேகமாக உருண்டும் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. “சித்த முந்தி இந்தப் பக்கம் நீட்டிக்கிட்டு இருந்திச்சு, இப்போ அங்கே சப்பையா இருக்கே!” சிறுபிள்ளையைப்போல் அதிசயித்த பாஸ்கரின் கரத்தைப் பற்றி, முன்னால் துருத்திக்கொண்டிருந்த வயிற்றுப் பாகத்தில் வைத்தாள். அவளுடைய புன்சிரிப்பு அவனையும் தொற்றிக்கொண்டது. தந்தையின் கைபட்ட அதிர்ச்சியில் குழந்தையின் தலை இன்னொரு பக்கத்துக்குத் தாவ, “என் பையன் இப்பவே என்ன ஓட்டம் ஓடறான்!” என்று பெருமிதம் கொண்டான். “பிரசவத்தை இங்கேயே வெச்சுக்கலாம், புவனா. நீ இல்லாம, வீடு வீடாவே இருக்காது,” என்றான் கெஞ்சலாக. “ஒங்கம்மாவை இங்க வரச் சொல்லிட்டாப் போச்சு!” “நல்லா வருவாங்களே எனக்காக!” பாஸ்கருக்குப் புரியத்தான் இல்லை. தன்மீது அன்பும், மரியாதையுமாக இருப்பவளுக்குப் பெற்ற தாயின்மீது இப்படி ஒரு கசப்பா! “எந்த வேளையில அந்தக் கடங்காரன் — எல்லாம் என் தம்பியைத்தான் சொல்றேன்,” அவன் முகத்திலெழுந்த குழப்பத்தைப் பார்த்துவிட்டு விளக்கியவள் தொடர்ந்தாள்: “அப்பவே நன் எங்கம்மாவுக்கு வேண்டாதவளா ஆகிட்டேன். அந்த வீட்டில நான் வேலைக்காரியாத்தான் இருந்தேன்!” புவனாவின் தாய் லட்சுமியின் முகத்தை ஒரு கணம் நினைவில் கொண்டுவந்தான் பாஸ்கர். அவளைக் கொடுமைக்காரியாக நினைத்துப் பார்க்க முடியவில்லை.   முதன் முதலாக அமைதியே உருவான அத்தாயையும், அழகான மகளையும்  மாரியம்மன் கோயிலில் பிரதட்சணம் செய்யும்போது பார்த்தபோதே, `இவர்களுடன் தான் முன்பே இணைந்திருக்கிறோம்!’ என்கிறமாதிரி ஒரு நெருக்கம் உண்டாகவில்லை? தீப ஆராதனை,  அர்ச்சனை எல்லாம் முடிவதற்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வந்தவனாக, தனியாகத் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த முதியவளிடம் வந்து, “வணக்கங்க!” என்ற ஆரம்பித்தான்.   “முன்பின் தெரியாத எவனோ வந்து, `ஒங்க மகளை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்வானாம். நீங்களும் சரிம்பீங்களாம்! என்னம்மா இது, அநியாயமா இருக்கு!” என்று படபடத்தாள் புவனா. அதை எதிர்பார்த்திருந்த தாய் பொறுமையாகப் பேசினாள். “நம்ப குடும்பம் இருக்கிற இருப்பில, ஒனக்கு `கல்யாணம்’ -னு ஒண்ணு நடக்குமான்னு பயந்துக்கிட்டு இருந்தேன், புவனா. கோயில் சந்நிதியில கடவுளே வந்து இவரைக் கைகாட்டி விட்டிருக்காரு!” புவனா யோசிக்கத் தொடங்கினாள். “அனாதை ஆஸ்ரமத்திலே வளர்ந்தவராம். பாசத்துக்கு ஏங்கியிருக்காரு, பாவம்! கண்ணில கபடம் இல்ல. எதிரே இருக்கிறவங்களோட கண்ணை நேருக்கு நேர் பாக்கற உண்மை இருக்கு!” வேறொரு சந்தேகம் எழுந்தது. “தம்பியைப் பத்தி அவர்கிட்டே சொன்னீங்களா?” “மறைக்கிற சமாசாரமா அது!” லட்சுமி பெருமூச்செறிந்தாள்.   முப்பத்தைந்து வயதுக்குமேல் பிறந்த ஒரே மகன்! அவன் பிறந்தபோதுதான் அவள் எவ்வளவு ஆனந்தப்பட்டாள்! ஆனால், நான்கு வயதாகியும் அவனால் சரியாகப் பேசவோ, பிடித்துக் கொள்ளாமல் நடக்கவோ முடியாமல் போனபோது கலக்கம் உண்டாயிற்று. `நெருப்பு சுடும்’ என்று எவ்வளவு முறை அடித்துச் சொன்னாலும், அடுப்பின் நீலப்பிழம்பில் கை வைத்துவிட்டு அலறுவான். டாக்டர்கள், `இது மூளைக் கோளாறு இல்லை! ஆடிசம் என்ற வியாதி!’  என்றார்கள். ‘கர்மவினைதான் இது! நீ  எப்போதோ செய்த பாவத்தை ஒரே ஜன்மத்தில் தொலைக்கத்தான் இப்படி ஒரு மகன் உனக்குப் பிறந்திருக்கிறான்!’ என்றார்கள் சிலர், எல்லாம் தெரிந்தவர்கள்போல். இனி ஆயுள் பரியந்தம் விவரம் தெரியாத குழந்தையாகப் பாவித்து, ஒவ்வொரு கணமும் இவனைக் கட்டிக் காக்க வேண்டும்! இதைக் குணப்படுத்தவே முடியாது என்றறிந்து லட்சுமி துடித்துப்போனாள்.   நெருப்பைக்கொண்டு பொன்னைப் புடம் போடுவதைப்போல, தாங்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளால்தான் மனிதர்கள் குணசாலிகள் ஆகிறார்களாம். லட்சுமியின் அதிர்ச்சியும் நாளடைவில் மறைய, அளவிலா அன்பும், அமைதியும் அவ்விடத்தை ஆட்கொண்டன. மகனையே எந்நேரமும் கவனித்துக்கொண்டிருந்த மனைவியின் போக்கு கணவனுடைய ஆண்மைக்கு சவாலாக அமைந்தது. ஏதோ, அவள் செய்த தவற்றால்தான் மகன் இப்படி அவமானகரமாக இருக்கிறான் என்று போயிற்று அவன் புத்தி. “இத்தனை வருஷம் கழிச்சு ஒரு ஆம்பளைப் புள்ளையைப் பெத்தியே! அதையாவது ஒழுங்கா செய்தியா?” என்று ஓயாமல் அவளைப் பழித்தவன், ஒரு நாள் கண்காணாமல் போனபின், அவளுக்கு ஏற்பட்டது என்னவோ நிம்மதிதான். கணவன் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டிய வேலைகளை மகள்மேல் திணித்தாள். வேறு வழியிருக்கவில்லை. `புவனா! தம்பியோட கால்சட்டை நனைஞ்சிருக்கே! மாத்தக்கூடாது?’ `புவனா! தம்பி என்ன செய்யறான், பாரு! தண்ணித் தொட்டியில விழுந்துடப்போறான்!’ அம்மா என்றாவது இப்படி தன்மீது பாசத்தைக் கொட்டி இருப்பார்களா? மூன்று வயதிலிருந்தே தானாகவே குளித்து, சாப்பிட்டு..!   திருமணமாகி தனிக்குடித்தனம் வந்தும்கூட புவனாவின் ஆற்றாமை குறையவில்லை. அம்மாவின் பராமுகத்துக்கு நேர் எதிரிடையாக பாஸ்கர் இருந்தது எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. “குங்குமப்பூ வாங்கிட்டு வந்தேனே, புவனா! எங்கே வெச்சிருக்கே? எடுத்துக் குடு. பாலில கரைச்சுத் தரேன்!” “படுத்தா, எழுந்திருக்க முடியாம திண்டாடறியே! சாய்வு நாற்காலி வாங்கிட்டு வந்திருக்கேன், பாரு. சாய்ஞ்சாப்பல ஒக்காந்து, அப்படியே தூங்கிடலாம்!” இலக்கு இல்லாது இத்தனை காலமும் தேக்கி வைத்திருந்த பரிவும், பாசமும் கணவனிடமிருந்து பீறிட, புவனாவுக்குப் பயம் வந்தது. இதெல்லாம் நிலைத்திருக்குமா? திடீரென அழ ஆரம்பித்தவளைக் கண்டு பதறிப் போனான் பாஸ்கர். “என்ன புவனா? ஏம்மா?” “என்னை விட்டுட்டுப் போயிட மாட்டீங்களே?” “சீ, பைத்தியம்!” அவனது கொஞ்சலைக் காதில் வாங்காது, “பிறக்கப்போற பிள்ளை தாய் மாமன் மாதிரி இருந்தட்டா..?” என்று, அந்த நினைப்பையே தாங்கமுடியாது  விம்மினாள். “அசடு! இதெல்லாம் நம்ப கையிலேயா இருக்கு? நம்ப சந்தோஷத்துக்கு சாட்சி இது. கையில பிள்ளையை எடுத்தா அதுதான் தோணும். காக்கைக்குத் தன் குஞ்சு.. கேட்டதில்ல நீ?” பொறியில் அறைபட்டதுபோல் இருந்தது புவனாவிற்கு. ஓர் ஆண்மகன்! கணப்பொழுதின் உணர்ச்சி வேகத்தில், தன் காதலுக்குப் பாத்திரமானவளுக்குள் தன் வித்தை நட்டுவிட்டான். அதுகூட, அவனே அறியாது, இயற்கையாக நடந்தது. அவனுக்கே இன்னும் பிறவாத குழந்தைமேல் இவ்வளவு பாசம் என்றால், ஒரு தாய் விழித்திருந்தாலும், தூங்கிக்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு வினாடியும் தான் அவளுக்குள் இருப்பதை நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறதே கரு! அது கண், காது, தலைமுடி என்று முழு உருவமாக வெளிவரும்போது, அந்த தாய் அதனை அளவின்றி நேசிப்பதில் என்ன தவறு? அதோடின்றி, குறையோடு பிறந்துவிட்டதற்கு எப்போதும் தான் தேவைப்படுகிறோம் என்ற உணர்வே அளவற்ற அன்பாக மாறுகிறதோ! கட்டிய கணவன்கூட அம்மாவுக்குப் பக்கபலமாக இருக்கவில்லை, பாவம்! புவனாவின் அழுகை பலத்தது. அலறலும் கேவலுமாக வெளிப்பட்டது அவள் குரல்: “எங்கம்மாவை இப்பவே பாக்கணுங்க!” 8 அனுபவத்தைத் தேடி “இன்னிக்கு ஏதாவது விசேஷமா? வீட்டு வாசலிலே தோரணம் தோரணமா கலர் லைட்டு தொங்குதே?” டாக்ஸி டிரைவர் பெரிதாகச் சிரித்தார். “இங்க தினமும் விசேஷந்தாங்க! நித்ய கல்யாணின்னு சொல்றதில்ல? அவங்க இருக்கிற தெரு இது!” சாமிநாதன் விழிப்பதைக் கண்டு, “இப்படி லைட் போட்டிருந்தா, இந்த வீட்டிலேருந்து இன்னிக்கு ராத்திரி ஒரு பொண்ணு டான்ஸ் ஆடப் போயிருக்குன்னு அர்த்தம். நிறையப் பணம் கிடைக்குமில்ல? அந்த சந்தோஷத்தை இப்படிக் காட்டிக்கறாங்க!” ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டதைப்போல் தன்னைக் குறுக்கிக்கொண்டார் சாமிநாதன். இந்தமாதிரி அனுபவத்தைத் தேடித்தான் அவர் மும்பைக்கு வந்திருந்தார் என்பது வேறு விஷயம்!   எழுத்தாளர் என்று பெயர்தான். ஒரு பட்டம், ஒரு பொன்னாடை? ஊகும். எதற்கும் வழியைக் காணோம். அவரும்தான் என்ன செய்வார், பாவம்! ஓடுகாலியான தகப்பனைப்போல் மகனும் ஆகிவிடக்கூடாது என்று தாய் அரும்பாடுபட்டு சாமிநாதனை வளர்த்திருந்தாள். ஆரம்பப் பள்ளி ஆசிரியராக, குழந்தைகளோடு குழந்தையாகவே ஆயுளில் பெரும்பகுதியைக் கழித்துவிட்டார். இதனால் நண்பர்களுக்கு சற்று குறைதான். அனைவரும் மலேசியாவின் வடகோடியில் இருந்த ஜித்ரா என்ற இடத்தில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். தங்களில் ஒருவருக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருந்தால், அவருக்கு அனுபவம் அளிக்கும் `நல்லெண்ணத்தோடு,’ புகிட் காயு ஹிதாம்  (BUKIT KAYU HITAM) என்ற இடத்துக்கு அழைத்துப் போவார்கள். தாய்லாந்துக்கும், மலேசியாவிற்கும் இடையிலிருந்த அவ்விடத்தில் வரி இல்லாது சகல பொருட்களும் கிடைக்கும். பெண்களும் கூடத்தான். சாமிநாதன் மட்டும், ஆண்பிள்ளையாய் லட்சணமாய்,  ஒரு முறைகூட  அவர்களுடன் சேர்ந்து வர நிர்தாட்சணியமாக மறுத்துவிட்டதில் அவர்களுக்கு வந்த ஆத்திரத்தில், அவருக்கு `சாமியார்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள்.   கொஞ்ச காலமாகவே சாமிநாதனுக்கு ஒரு குழப்பம். `நான் ஆபாசமா எழுதவே மாட்டேம்பா!’ என்று பெருமை பேசிக்கொள்ளலாம். ஆனாலும், உலக அனுபவம் பரிபூரணமாக இல்லாததால்தான் தன் கதைகள் எல்லாமே நேர்மை, நாணயம், தன்மானம் என்று ஒரே மாதிரியாக அமைந்து விடுகின்றனவோ? இதை மாற்ற வழி? ஏதாவது புதிய இடத்திற்குச் சென்று, அபூர்வமான மனிதர்களைச் சந்தித்தால்? தீர யோசித்ததில் வந்ததுதான் இந்த இந்தியப் பயணம். `அந்தமாதிரிப் பெண்களை’ப் பார்த்துப் பேசிவிட்டு– வெறுமனே பேச மட்டும் பேசி — அந்த அனுபவத்தை உணர்ச்சிபூர்வமாக எழுதினால் என்ன? போகும் இடமானது, மக்கள் ஓடிக்கொண்டே இருப்பதுபோல அவசரச் சூழ்நிலை கொண்டதாகவும், பிறரைப்பற்றி அநாவசியமான அக்கறை எடுத்துக் கொள்ளாததாகவும் இருக்க வேண்டும். தாய்லாந்து மிக அருகில் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் எவர் கண்ணிலாவதுபட்டுத் தொலைக்க நேரிடலாம். அப்படியெல்லாம் யோசித்து, மும்பை வந்து சேர்ந்தாலும், வெளிப்படையாக, `இந்த மாதிரி இடத்துக்குப் போங்க!’ என்று வாடகைக் காரோட்டியைக் கேட்க வாய் வரவில்லை. “பாக்க என்னென்ன இருக்கோ, அங்கேயெல்லாம் சுத்திக் காட்டுங்க!’ என்றவரின் நெற்றியில் பட்டை பட்டையாக இருந்த விபூதியைக் கவனித்த கந்தசாமி, “மஹாலட்சுமி கோயில் இங்க ரொம்ப விசேஷம்!’ என்று அழைத்துப் போனார்.   தெருவை ஒட்டி, அட்டைகளைக்கொண்டு எழுப்பப்பட்டிருந்த `வீடு’களின் வெளியே குளித்ததே கிடையாது என்று அறிவிப்பதுபோல் புழுதியும், சடையுமான தலையும், நிர்வாணக் கோலமும் கொண்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், மேற்கத்திய பாணியில் உடையணிந்து, பெரிய பெரிய பங்களாக்கள் நிறைந்த அகலமான தெருக்களில் உயர்ந்த ஜாதி நாய்க்குட்டியை உலவ அழைத்துப்போகும் `பெரிய’ மனிதர்கள், அவலமான இந்த மனித வாழ்க்கையைச் சகிக்க பொறுமையை வேண்டிக் கொள்வதைப்போல் ஒரு கோயிலுக்குள் நுழைய நூற்றுக் கணக்கானோர் தெருவெல்லாம் அடைத்துக்கொண்டு நின்ற கியூ வரிசை — இப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத பல வகையான காட்சிகளைக் கண்விரிய பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் டாக்ஸி அந்த வண்ணத் தெருவுக்குள் நுழைந்திருந்தது. `கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி!’ என்ற ஒரு சிறு மகிழ்வு சிலிர்த்தெழ, `சீச்சீ! எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுவது!’ என்று மானசீகமாக கன்னத்தில் போட்டுக்கொண்டார். “இதுக்கு பேரு ஃபாரஸ்ட் ரோடு. ஆனா, வேற பேரு சொன்னாத்தான் எல்லாருக்கும் தெரியும்!” சட்டென நிமிர்ந்தார் சாமிநாதன். மனத்துடிப்பு வெளியில் தெரியக்கூடாதே என்ற பதைப்பு உண்டாயிற்று. “பாத்தா நல்லவராத் தெரியறீங்க! ஒங்களைப் போய் கெடுப்பானேன்!” அப்போது எழுந்த பெருமையில், அது என்ன பெயர் என்று கேட்க நினைத்தது அடங்கிப் போயிற்று. ‘பாத்தீங்களா? இந்தப் பொண்ணுங்கதான்!” கார் போன வேகத்திலோ, படபடப்பிலோ, சரியாக எதுவும் பிடிபடவில்லை. “கொஞ்சம் மெதுவாப் போறீங்களா?” கேட்பதற்குள் வியர்த்துவிட்டது சாமிநாதனுக்கு. இப்போது தெரிந்தது. தெருவை ஒட்டி, மாடியும் கீழுமாய் இருபுறமும் காம்பவுண்டு இல்லாத வீடுகள். வாசற்கதவு அகலமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குப் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் நெருக்கமாகப் பத்துப் பதினைந்து பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். எல்லாவற்றையும் மீறி, அவர்கள் முகத்திலிருந்த அலுப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. அதற்குமேல் பார்ப்பதற்குள், கார் நகர்ந்து விட்டிருந்தது. வீடுகளின் வெளியேயும் ஆங்காங்கே சிறு சிறு கும்பல்களாய் பெண்கள். கூடவே ஒரே ஒரு ஆள். எல்லாப் பெண்களுமே வெள்ளை வெளேர் என்று பவுடர் பூசியிருந்தார்கள். `ஒரு புடவைகூட காணோமே!’ என்ற எண்ணம் வந்தது சாமிநாதனுக்கு. எல்லாருமே பின்புறத்தைப் பெரிதாகக் காட்டும் பாவாடை, உடலை இறுக்கிப் பிடித்த, இடுப்புக்கீழ் தொங்கும் சட்டை அணிந்திருந்தார்கள். நீண்ட தலைமுடியைப் பின்னாது, `புஸ்’ஸென்று பரத்தி விட்டுக்கொண்டு இருந்தனர். பூவும் கிடையாது. ஆனால், மலிவான, நிறைய நகைகள் என்ற் பார்த்தமாத்திரத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார் நமது எழுத்தாளர். குறுகலான அத்தெருவில் கையெட்டும் தூரத்தில் நின்றிருந்த அந்த இளம்பெண்களை — பதினேழு வயதுக்குமேல் இராது — ஆர்வத்துடன் பார்த்தார். டாக்ஸி கடக்கும்போது, சாமிநாதனைப் பார்த்து தோழமையுடன் சிரித்தாள் ஒருத்தி. அழைப்போ? வெடுக்கென தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டார். அவரது பதட்டத்தை உணர்ந்தவர்போல், “நல்ல குடும்பத்துக்காரங்க யாரும் இங்க வரமாட்டாங்க. ஒங்களைமாதிரி, வெளிநாட்டிலிருந்து வர்ற டூரிஸ்டுங்கதான் வேடிக்கை பாக்க வருவாங்க!” என்றார் கந்தசாமி. இப்போது டாக்ஸி வேறு ஒரு தெருவில் போய்க்கொண்டு இருந்தது. “அந்த வீட்டில பாத்தீங்களா?” பார்த்தார். நாற்பது வயதுக்குமேல் இருக்கும் அந்தப் பெண்மணிக்கு. “மும்பையில நல்ல பொம்பளைங்க இப்படி வீட்டுத் திண்ணையில வந்து ஒக்கார மாட்டாங்க. இது வாடிக்கைக்காக காத்திருக்குன்னு அர்த்தம்!” விஷயம் இவ்வளவு சுவாரசியமாகப் போகிறதே, சம்பந்தப்பட்டவர்களையே பார்த்துப் பேசினால், இன்னும் எவ்வளவு விஷயம் கிடைக்கும் என்று சாமிநாதன் யோசிக்க ஆரம்பித்தார். வித்தியாசமான தகவல்களை வெளியிட்டால், மீட்டருக்குமேல் நிறையப் பணம் கொடுப்பார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்த கந்தசாமி தன்பாட்டில் பேசிக்கொண்டே போனார். “முந்தி இந்த வீட்டிலேருந்து வாடிக்கையா  ஒரு பொண்ணை தினம் ராத்திரி கிளப்புக்குக் கூட்டிட்டுப் போவேன், ஸார். டான்ஸ் முடிஞ்சதும், திரும்பக் கொண்டு வந்து விட்டுடுவேன்”. சிறிது நேரம், ஏதோ நினைப்பில் ஆழ்ந்துபோனார். “ஒரு தடவை பாருங்க, அதை வீட்டுக்கு வெளியே இறக்கி விடறேன், ரெண்டு குண்டனுங்க எங்கேயிருந்தோ பாய்ஞ்சு வந்து, பக்கத்தில தயாரா நின்ன காரில தள்ளி விட்டுட்டாங்க. கார் பறந்திடுச்சு!” “ஐயையோ!” ஒரேயடியாகப் பதறினார் சாமிநாதன். “போலீசுக்குச் சொன்னாங்களா?” “நீங்க வேற! போலீஸ் எங்கேன்னு போய் தேடும்?” ”கடத்திட்டுப் போனாங்க, சரி. அப்புறம் என்ன செய்வாங்க?” கூசியபடி கேட்டார். உலகம் என்றால் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கத்தான் செய்யும்! அம்மா இப்படியா வளர்ப்பார்கள் தன்னை, உலகில் கெட்டதே கிடையாது என்று நம்பும் அளவுக்கு! தனக்கு `சாமியார்’ என்ற பெயரை சிநேகிதர்கள் சூட்டியிருப்பது நியாயம்தான் என்ற வருத்தம் லேசாக எழுந்தது. “யாராவது பணக்காரன்கிட்ட வித்துடுவாங்க. அடிக்கடி நடக்கிறதுதான்!” அலட்சியமாகச் சூள் கொட்டினார். “இப்ப வர்ற பொண்ணோட காவலுக்கு ரெண்டு ஆளும் வருது. சில பேர் இங்கேயே நேரே வந்து, அவங்களுக்குப் பிடிச்ச அழகான பொண்ணாப் பாத்து வாங்கி, அதுக்குத் தனி வீடு, காருன்னு நல்லா வெச்சுப்பாங்க”. படித்தவன் என்று பெயர்தான். தனக்குத் தெரியாத எவ்வளவு விஷயங்களை இந்த ஏழைத் தொழிலாளி தெரிந்து வைத்திருக்கிறான் என்ற பொறாமை எழ, “நீங்களும் ஒரு பொண்ணுக்காக தினமும் இங்க வர்றதாச் சொன்னீங்களே!” என்றார். எண்ணியதைவிட இளக்காரமாக வந்தது அவர் குரல். “அது வேலைக்காக, ஸார்!” அழுத்தந்திருத்தமாகப் பதில் வந்தது. “என் வேலை டாக்ஸி ஓட்டறது. அந்தப் பொண்ணோட வேலை டான்ஸ் ஆடறது. அதுக்குமேல எங்களுக்குள்ளே வேற ஒரு சம்பந்தமும் கிடையாது!” குரலில் சிறிதும் கோபம் காட்டாது, தன் வாதத்தை டிரைவர் எடுத்துச்சொல்ல, சாமிநாதன் வெட்கினார். இம்மாதிரியான பெண்களுடன் எவ்வகையிலோ தொடர்பு வைத்திருப்பவர்கள் எல்லாரும் தகாத நடத்தை கொண்டவர்கள் என்று நினைப்பது எவ்வளவு மடமை! ஏன், இப்போது தானே இல்லையா? இப்படிப்பட்ட தெருவில், விளக்கு வைக்கும் நேரத்தில் போகிறோமே, அதனால் `கெட்டவன்’ என்ற் அர்த்தமா, என்ன! “எல்லாருமே ஹிந்திக்காரங்களா?” பேச்சைத் தொடர, ஏதோ கேட்டுவைத்தார். “எதுக்கு ஸார் கேக்கறீங்க?” “சும்மாத்தான்!” என்றார் அவசரமாக. `இந்த மாதிரி சற்றி வளைத்துப் பேசுகிறவர்கள் எத்தனை பேரை நான் பார்த்திருப்பேன்!’ என்பதுபோல் கந்தசாமி அவரைத் திரும்பிப் பார்த்தார். சாமிநாதன் அவசர அவசரமாக, “நான் கதையெல்லாம் எழுதறவன். நல்லது, கெட்டதுன்னு பாக்கிறதில்ல. எல்லா விஷயமும் எனக்கு ஒண்ணுதான்!” என்று சப்பைக்கட்டு கட்டினார். “அப்படிங்களா? கேரளாவைச் சேர்ந்தவங்க ஒருத்தர் இருக்காங்க. சுமாரா தமிழ் வரும். மத்த மேடம் எல்லாம் ஹிந்திதான்!” “தென்னிந்தியாவிலேருந்துகூட இங்க வர்றாங்களா!” “நல்ல பணமில்ல? நேபாளத்தைச் சேர்ந்த பொண்ணுங்ககூட இருக்கு. ஆனா, கேரளப் பொண்ணுங்களுக்கு கிராக்கி அதிகம்!” `ஏன்?’ என்று சாமிநாதன் கேட்கவில்லை. அந்தக் காலத்து லலிதா, பத்மினி, கே.ஆர்.விஜயாவிலிருந்து, இன்றைய நயன்தாராவரைக்கும் வரிசையாகப் பல திரையுலகத் தாரகைகள் அவர் கண்முன் வந்து மறைந்தார்கள். அப்படிப்பட்ட அழகி ஒருத்தியுடன்.. சீ.. என்ன நினைப்பு இது, ஆராய்ச்சி செய்வதற்கென்று வந்த இடத்தில்! `சும்மா பேசினால் என்ன வந்துவிடப் போகிறது!’ என்று மனம் எதிர்வாதம் செய்தது.   சாமிநாதனுடைய உள்ளுணர்வைப் புரிந்து கொண்டவள்போல் அந்த மேடம் கூறினாள்: “அம்பிகைகூடப் போங்க. எது வேணுமானாலும் கேட்டுக்குங்க!” பொடி வைத்துப் பேசுகிறாளோ? அவளைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது அவருக்கு. பிறர் உழைப்பில் உட்கார்ந்து தின்றே பருத்த உடல். ஐம்பது வந்திருக்கும். ஆனால், வயதுக்கு மீறிய அலங்காரம். யோசியாது, அவள் கேட்ட பணத்தை எடுத்துக் கொடுத்தபோது, தன்னிச்சையாகப் புத்தி அதை மலேசிய ரிங்கிட்டுக்கு மாற்றிப் பார்க்க, `பரவாயில்லை. கொஞ்சம்தான்!’ என்ற திருப்தி ஏற்பட்டது. முகமெல்லாம் பூரிப்பாக வந்தாள் அம்பிகா. சிறிய அந்த அறையின் கதவை உள்ளே தாளிட்டுவிட்டு, உரிமையுடன் கட்டிலில் அவர் பக்கத்தில் வந்தமர்ந்தாள். ஒரு பெண்ணுடன் இப்படி தனித்து இருப்பதே ஏதேதோ உணர்வுகளைத் தோற்றுவிக்க, மிக நெருக்கமாக, இடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளைப் பார்க்கவும் திராணியின்றி, அதீதமாகத் தலையைக் குனிந்துகொண்டார் சாமிநாதன். ஒருவழியாக, கேள்விக் கணையைத் துவங்கினார். “நீ எப்படி இங்க வந்து சேர்ந்தே?” “எங்கம்மாதான் அனுப்பினாங்க’. சாமிநாதன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. “படிச்சிருக்கியா?” “எங்கே! நாங்க எட்டு பிள்ளைங்க. அப்பா எங்கேயோ ஒழிஞ்சு போயிட்டாரு. மேடம் எங்க கிராமத்துக்காரங்கதானே! அம்மாகிட்ட சொன்னாங்க, `மொதல்ல ஐயாயிரம் ரூபா குடுத்து  இவளை கூட்டிட்டுப் போறேன். ஆறு மாசம் கழிச்சு, மாசம் பத்தாயிரம் அனுப்பறேன்’னு. இப்ப அம்மா சொந்த வீடு வாங்கி இருக்காங்க!” பூரிப்புடன் சொன்னாள். “நான்தான் படிக்காத முட்டாளாகிட்டேன். ஆனா,  தம்பி, தங்கச்சிங்க எல்லாம் ஸ்கூலுக்குப் போறாங்க. வயிறு நிறையச் சாப்பிடறாங்க!” அவள் பட்டினி கிடந்த நாட்களை நினைவில் கொண்டு சொன்னாள். இவள் செய்யும் தொழில் தெரிந்தால், உடன்பிறந்தவர்கள் இவளை ஏற்பார்களோ என்ற சந்தேகம் எழ, “அப்புறம் நீ ஒங்க வீட்டுக்குப் போனியா?” என்று கேட்டார். “வேலையை விட்டுட்டு எங்கே போறது!” சற்று யோசித்துவிட்டு, “இந்தமாதிரி தொழிலுக்கு வந்திருக்கியே! வியாதி வந்து வெச்சா?” என்று கேட்டார். “அதான் வாராவாரம் டாக்டர் வருவாரே! நாளைக்குக்கூட வருவாரு!” “ஆனா.., வியாதி வராம.. பாதுகாப்பா..,” விஷயத்தைப் பிட்டுச் சொல்ல முடியாது விழித்தார். “ஓ!” என்று விளங்கிக் கொண்டவள், சாமிநாதன் சற்றும் எதிர்பாராதவண்ணம் தன் பாவாடையை வலதுகால் தொடைக்குமேல் உயர்த்தினாள். அதில் நீண்டதொரு வடு. “ஒரு தடவை சொல்லிப் பார்த்தேன். `எனக்கே புத்தி சொல்ற அளவுக்குப் போயிட்டியாடி?’ன்னு, கழட்டிப் போட்டிருந்த பெல்ட்டாலேயே விளாசிட்டாரு ஒருத்தர். இங்க வர்றவங்களைப் பகைச்சுக்கிட்டா எப்படி பிழைக்க முடியும்!” என்று பெருமூச்சு விட்டவளின் முகம் சற்றே மலர்ந்தது. “அவர் சினிமா டைரக்டராம். எனக்கு சான்ஸ் குடுக்கிறதா  சொல்லி இருக்காரு!” எதிர்காலத்தைப்  பற்றிய நம்பிக்கையில் அவள் கண்கள் ஒளிர்ந்தன. இவ்வளவு பேசியதே அதிகம் என்று களைப்புற்றவள்போல, “பேசியே பொழுதைக் கழிக்கிறீங்களே!” என்றாள். அவர் தொடைமேல் படர்ந்தது அவளது கரம். அதை மெல்ல விலக்கினார் சாமிநாதன். இருந்தாலும், மயங்கிவிடப் போகிறோமோ என்ற பயம் எழுந்தது. “இதெல்லாம் தப்புன்னு ஒனக்குத் தோணலியா?” அவள் சற்று கோபமாக, “என்ன ஸார், பெரிய தப்பு? நாங்க வாங்கற காசுக்கு வஞ்சனை இல்லாம உழைக்கிறோம். பெரிய மனுஷங்க ரகசியமா செய்யறதை நாங்க பகிரங்கமா செய்யறோம். இது எங்க தொழில். சரி, தப்பு எல்லாம் மனசிலதான் இருக்கு!” என்றாள். யாரோ சொன்னதைக் கேட்டு, அப்படியே ஒப்பிக்கிறாள் என்று நினைத்தார் சாமிநாதன். ஒருக்கால், அனுபவம் இந்த இளம் வயதிலேயே இவளுக்கு அறிவு முதிர்ச்சியை அளித்துவிட்டதோ! மேலே எதுவும் கேட்கத் தோன்றாது, கட்டிலிலிருந்து எழுந்தார் சாமிநாதன். மனம் கனத்திருந்தது.   அதற்கடுத்த சில வாரங்கள் பழனி, மதுரை, ராமேஸ்வரம் முதலிய இடங்களில் உள்ள கோயில் பிரகாரங்களைச் சுற்றினார். அம்பிகை அவரைச் சுற்றிச் சுற்றி வந்தாள். அவளுடைய மெத்தென்ற கரம் தன் தொடைமேல் ஒரு வினாடி இருந்தது அடிக்கடி நினைவில் வந்துபோக, உடல் சிலிர்த்தது. அப்படியொரு அவலமான வாழ்க்கையிலும் நிறைவைக் கண்டு, பிறர் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறாள், பாவம்! இதில் பரிதாபம் என்ன வந்தது, அவளே சந்தோஷமாக இருக்கையில்? அவசரப்பட்டுக் கிளம்பி இருக்க வேண்டாம், அவ்வளவு பணத்தைக் கொட்டி அழுதுவிட்டு! புகையாகச் சுழன்று சுழன்று எழுந்த யோசனைகளை நிறுத்த ஒரே வழிதான். இனி எப்போது இந்தமாதிரி வாய்ப்பு கிடைக்கப் போகிறது!   சற்றும் தயக்கமின்றி அதே வீட்டின்முன் போய் நின்றார், மறுபடியும். அலைச்சலில் உடம்பு ஓய்ந்திருந்தாலும், மனம் துள்ளியது. `முதலிரவுக்குப் போகும் புது மாப்பிள்ளைக்கும் இப்படித்தான் இருக்குமோ?’ என்று எண்ணமிட்டார் அந்த கட்டைப் பிரம்மச்சாரி. வீட்டு மாடியில் சுவரே இல்லாது, இரும்புக் கிராதிகள். அவற்றின் பின்னால் பெண்கள். ஒரே பார்வையில் தான் தேடி வந்தவள் அங்கு இல்லை என்று தெரிந்துவிட்டது. “அம்பிகையா? அது இல்லீங்க. வேற ஒண்ணு..,” வந்த வியாபாரத்தை விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தாள் மேடம். “இல்ல. அவதான் வேணும்”. தன் குரலிலிருந்த உறுதி அவருக்கே ஆச்சரியமூட்டியது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, குரலைத் தழைத்துக்கொண்டாள். “அதுக்கு எய்ட்ஸ். டாக்டரே சொன்னப்புறம் இங்கே வெச்சிருக்க முடியுமா? இங்க இருக்கிறவங்கல்லாம் நல்ல பொண்ணுங்கிற நம்பிக்கையிலதானே பெரிய மனுஷாள் எல்லாம் வர்றாங்க?” அந்தப் பெரிய மனிதர்கள், தாம் நாடி வரும் பெண்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏதாவது நோயிருந்தால், அதை இந்த அபாக்கியசாலிகளுக்கு அளிக்கத் தயங்குவதில்லை. அப்படி சுயநலம் மிகுந்திருப்பவர்கள்தாம் பலம் கொண்டவர்களாக ஆக முடியுமோ? சாமிநாதனுக்கு உலகம் புரிந்தமாதிரி இருந்தது. தாய் காட்டிய பாதை சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி வந்த அம்பிகா. தான் சம்பாதித்து அனுப்பிய பணத்தில் உடன்பிறந்தோர் படிக்கிறார்கள், அம்மா சொந்த வீடு வாங்கிவிட்டார்கள் என்று பூரித்த, பொறுப்பான அம்பிகா. சினிமா நடிகையாகி பெரிய அளவில் பெயரும், புகழும் சம்பாதிக்கலாம் என்ற அவளுடைய கனவு கனவாகவே போய்விட்டது. அவள் வாழ்வு அவ்வளவுதான். பிஞ்சிலேயே கருகிவிட்டது. அழுகை வரும்போல இருந்தது சாமிநாதனுக்கு. இந்த உலகில் ஆண்களே இருக்கக்கூடாது. எல்லாரையும் கொன்றுவிட வேண்டும். ஆத்திரம் எழுந்தபோதே, `நல்ல வேளை, அன்று சபலப்படாததால் நான் பிழைத்தேன்!’ என்ற ஒரு திருப்தியும் கிளம்பியது. “என்ன சாமிநாதன்! `ஊருக்கு’ப் போனீங்களே! அங்கே என்னென்ன பாத்தீங்க?” ஒரு நண்பர் கேட்க, சாமிநாதனை முந்திக்கொண்டு, இன்னொருவர் இடக்காகப் பதில் சொன்னார்: “சாமியார் என்ன செய்வாரு? கோயில், குளமெல்லாம் போய் சுத்திட்டு, புண்ணியம் தேடிட்டு வந்திருப்பாரு. என்னங்க?” “அதேதான்!” என்றார் சாமிநாதன். 9 எனக்கொரு துணை காலை எழுந்ததும், முதல் வேலையாக வீட்டு வாசலுக்கு வந்தேன். ராத்திரி பூராவும் மழை. இந்த பேப்பர்காரன் அங்கு தேங்கிக் கிடக்கும் தண்ணீரிலேயே தினசரியைப் போட்டுவிட்டுப் போயிருந்தான். ‘எவ்வளவு தடவை சொன்னாலும் தெரியாது, பேப்பரை போட்டுவிட்டு, வாசல் மணியை அழுத்துங்க என்று!’ முணுமுணுத்தபடியே குனிந்தவள், ஏதோ ஆரவாரம் கேட்டு, தெருவுக்கு வந்தேன். எப்போதும் அமைதியாக இருக்கும் அகன்ற தெரு. சொந்தத் தொழில் புரிபவர்கள், அல்லது வெளிநாட்டில் தங்கி பணம் சம்பாதித்துக் கொண்டுவந்தவர்கள் — இப்படிப்பட்டவர்கள்தாம் இங்கு வீடு வாங்கிக்கொண்டு வந்தார்கள். நன்றாகவே இருந்த வீட்டை தம் விருப்பப்படி இடித்துக் கட்டினார்கள். கைநிறைய பணம் இருக்கும் பெருமையை வேறு எப்படித்தான் காட்டுவது! கோலாலம்பூரின் வட எல்லையில் இருந்த அப்பகுதியில் கடைகண்ணி, மருத்துவமனை போன்ற எந்த வசதிகளும் வருமுன் நாங்கள் வீடு வாங்கிவிட்டதால், கையைக் கடிக்கவில்லை. பக்கத்து வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்குமுன்தான் ஒரு சீன முதியவரும், அவருடைய குடும்பமும் குடியேறினார்கள். மனைவி இருக்கவில்லை. அதனால்தானோ என்னவோ, அவர் முகம் எப்போதும் சிடுசிடு என்று இருந்தது. பெண்டாட்டி  என்று ஒருத்தி இருந்தால், வயதுக்காலத்தில், அவளிடம் ஓயாது எரிந்து விழலாம். மலச்சிக்கல், மூட்டுவலி போன்ற உடல் உபாதைகளோ, சாவு பயமோ அந்த வேளைகளில் அலைக்கழைக்காது. ஆண் பிள்ளை பயந்தவனாகத் தென்பட்டான். பெண்ணைப் பார்த்தால் சண்டைக்காரி என்று தோன்றியது. ‘பாவம் அவன்!’ என்று கரிசனப்பட்டேன். அவர்கள் வீட்டை அழகுபடுத்த வந்தவன்தான் சொன்னான், ‘அவர்கள் இருவரும் பெரியவரின் பிள்ளைகள்தான். இருவருக்குமே கல்யாணம் ஆகவில்லை. ஒரு தொழிற்சாலையை நடத்துகிறார்கள்,’ என்று.   பேரன், பேத்திகளுடன் எங்கள் வீடு எப்போதும் கலகலப்பாக இருந்தது. நேர்மாறாக, அவர்கள் வீட்டில் கேட்கும் ஒரே சப்தம் டாமியின் குரைப்புதான். கொல்லைப் புறத்தில் துணி உலர்த்த நான் போகும்போதோ, தோட்டத்தில் மலர் கொய்யப் போகும்போதோ, இரு வீடுகளுக்கும்  இடையே இருந்த குட்டைச் சுவற்றின் மறுபக்கத்தில் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி நின்று, டாமி குரைக்கும். ‘எனக்குப் பயமாயிருக்கு, டாமி. அப்படிக் குரைக்காதே!’ என்பேன் முதலில். அந்த வீட்டு மனிதர்களின் பெயர்கள் தெரியாவிட்டாலும், அவர்கள் கொஞ்சியதைக் கேட்டு, அந்த நாய்க்குட்டியின் பெயரைத் தெரிந்து வைத்திருந்தேன். வாலை ஆட்டியபடி குரைத்தால், நாய் நட்பு பாராட்டுகிறது என்று யாரோ சொன்னார்கள். என்னிடம் தோழமையுடன் பழகிய டாமி, என் பக்கத்தில் என் பேரன் வந்து நின்றால், பயங்கரமாகக் குலைக்கும். எனக்கு அதன் மனநிலை புரிந்தது. நான் அதற்கு மட்டுமே உகந்தவளாக இருக்க வேண்டும். பிற ஆண்களுடன் நான் பேசும்போது முறைக்கும் கணவர் போலத்தான்! மனிதனோ, மிருகமோ, எல்லா ஆண்களுக்குமே இது பொதுவான குணமோ! ‘என்ன டாமி! உனக்கு இவனைத் தெரியாதா? பேசாம போ!’ என்று நான் செல்லமாக அதட்டுவேன். சொன்னபடி கேட்கும். ‘ஹை! டாமிக்கு தமிழ் புரிகிறது!’ என்று குழந்தைகள் ஆர்ப்பரிப்பார்கள். ஈராண்டுகள் கழிந்தன. செல்ல நாயை அவ்வீட்டு ஆண்மகன் முன்போல் முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சவில்லை. காலையிலேயே பெரியவரைத் தவிர மற்ற இருவரும் தனித் தனி காரில் வெளியே போய்விடுவார்கள். கொஞ்சநாளாக டாமி என்னைத் தொடர்ந்து தோட்டத்தில் நடக்கவில்லை. அவர்கள் வீட்டு வாசலில் ‘நாய் ஜாக்கிரதை’ என்ற புதிய பலகை.  நிறைய குரைத்தது. இல்லை, சோர்ந்துபோய் படுத்திருந்தது. நான் கூப்பிட்டாலும், திரும்பவோ, வாலை ஆட்டவோ இல்லை. நேற்று பெரியவர் நாற்பது வயதுக்கு மேல் ஆகியிருந்த தன் குழந்தைகளை பெரிய குரலெடுத்துத் திட்டிக் கொண்டிருந்தார். ஜன்னல்வழியே எட்டிப் பார்த்தேன். டாமியை அவர்கள் வீட்டு வாசலிலோ, தோட்டத்திலோ காணவில்லை. வீட்டுக்குள் நுழைந்து, ஏதோ அட்டகாசம் பண்ணியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.   இன்று காலை வீட்டுக்கு வெளியே வந்தவள், நான்கு வீடு தள்ளி ஏதோ கும்பல் சேர்ந்திருப்பதைப் பார்த்து, அதை நோக்கி நடந்தேன். உள்ளாடை எதுவும் இல்லாமல், வெறும் நைட்டி மட்டும் அணிந்திருந்தேன். அப்போது அதெல்லாம் நினைவில் எழவில்லை. தெரு ஓரத்தில் ஒரு மூதாட்டி. நான் உலாவச் செல்லும்போது, ‘குட்மார்னிங்’ என்று பொய்ப்பற்கள் தெரிய சிரிப்பவள். அவள் அலங்கோலமாக, உடலெல்லாம் ரத்தம் வழிய தெருவில் கிடந்தாள். பக்கத்தில் உறுமியபடி டாமி! அதன் வாயிலிருந்து நுரை தள்ளிக்கொண்டிருந்தது. உடலுறவுக்குத் தயாராக இருந்ததென்று அதைப் பார்த்ததுமே விளங்கியது. சோனியாக இருந்த ஒரு பெட்டை நாய் வாலைச் சுருட்டிக்கொண்டு, என்னைத் தாண்டி ஓடியது அப்போது மனதில் பதியவில்லை. பக்கத்து வீட்டுப் பெண்மணி ஓடி வந்தாள். “ஸாரி. ஸாரி. நேத்து நான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சு, காரை நிறுத்தறதுக்குள்ளே டாமி திறந்திருந்த கதவு வழியே தெருவுக்கு ஓடிடிச்சு. எங்கே தேடியும் கண்டுபிடிக்க முடியல!” என்றாள் ஆங்கிலத்தில். (ஓ! அதற்குத்தானா இரைந்துகொண்டிருந்தார் அவர்கள் தந்தை?) ‘உலாவப் போன முதிய மாதைக் கடித்துக் குதறிய நாய்!’ என்று டாமியின் புகைப்படம் தினசரிகளில் முதல் பக்கத்திலேயே வந்தது. ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளேயே அவள் உயிர் போயிருந்ததாம். போட்டிருந்தார்கள். ‘கடிப்பது நாயின் குணம். அதற்காக எங்களுக்கு அந்த நாயின்மேல் எந்த வருத்தமும் இல்லை,’ என்று இறந்தவளின் மகன் தெரிவித்து, நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருந்தான். ‘அந்தக் கொலைகார நாயைக் கொன்றுவிட வேண்டும்!’ என்று வாசகர்கள் ஏகோபித்த கருத்து தெரிவித்திருந்ததை ஒட்டி, டாமி பிடித்துச் செல்லப்பட்டது, கதறக் கதற. எனக்கு வயிற்றைப் பிசைந்தது.   ஒரு வாரம் கழித்து, பக்கத்து வீட்டுக்காரனிடம், துக்கம் விசாரிக்கும் வகையில், முதன்முதலாகப் பேசினேன். “டாமி எனக்கும் ஃப்ரெண்ட்தான். வருத்தப்படாதீர்கள். வேற நாய் வாங்கிக்கலாம்!” என்று ஏதோ உளறினேன். “வேண்டவே வேண்டாம்!” என்றான் அவன். அக்காளும், தம்பியும் துணை இல்லாமல் இருப்பதுபோல, அவர்கள் வளர்க்கும் நாயும் பிரம்மச்சரியம் பூண வேண்டும் என்று எதிர்பார்த்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று காலங்கடந்து புரிந்துகொண்டிருக்கிறான், பாவம்! விமரிசனம்:  மிக யதார்த்தமான சிறுகதை.   நல்ல நடை. வாசிக்க இனிமையான அனுபவம். (பவளா) மனம், உணர்ச்சிகள் போன்றவை விலங்கிற்கும் மனிதருக்கும் பொதுவானவை. மிக நுணுக்கமாக கோர்த்த கதை. (தமிழ்த்தேனீ) புதுமையான கதைக்களம். மிக நல்ல, மனதைத் தொடும் நடையில் அருமையானதொரு சிறுகதை. பகிர்வுக்கு மிக்க நன்றி. (பார்வதி இராமச்சந்திரன்) அழகான கதை. அருமையாக நடத்திச்சென்றிருக்கிறீர்கள். (சாந்தி மாரியப்பன்)     முற்றும் 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி ! 3 கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் 1. பதிப்புரிமை பதிப்புரிமை (Copyright) என்பது ஓர் எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், பயன்படுத்துதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை உரிமையாளருக்குப் படைப்பின் மீதான கட்டுப்பாட்டினையும் இலாபமீட்டும் உரிமையையும் தருகிறது. சில சந்தர்ப்பங்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம். இந்த அனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம். பதிப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிப்பாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஓவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. முந்திய காலங்களில் பதிப்புரிமைச் சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது. காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம். பதிப்புரிமையின் சாதக பாதகங்கள் பதிப்புரிமையின் முக்கியமான சாதக அம்சம் பொருளாதார ரீதியில் எழுத்தாளர்களுக்கு பயன் கிடைப்பதனை உறுதி செய்வதே ஆகும். அதாவது ஒரு நூல் எத்தனை பிரதிகள், எந்தப் பதிப்பகத்தால், எப்போது வெளியிடப்படலாம் என்ற முடிவுகளை எழுத்தாளர் எடுக்க முடிகிறது. விற்பனையாகும் நூல்களின் இலாபத்தில் சிறு பகுதியினை எழுத்தாளர் பெற்றுக் கொள்ளவும் முடியும். பதிப்புரிமையின் மூலம் இலாபம் பெறுவதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ள போதிலும் அறிவு பரவுதலும் அறிவு விருத்தியும் பெருமளவில் தடுக்கப்படுகின்றன. இதற்கான காரணம் பதிப்புரிமையின் இறுக்கமான கட்டுப்பாடுகளே ஆகும். ஓர் எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகளின் பின்னரேயே அவரது படைப்புக்கள் பொதுவெளிக்கு வருகின்றன. அதுவரை அப்படைப்புகள் மறுபதிப்புச் செய்யப்படாவிடினும் அல்லது படைப்புக்கு உரிமை கோர எவரும் இல்லாவிடினும் கூட வேறெவரும் பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. சமூக நலன் கருதிய படைப்புக்கள் கூட – அவை சென்று சேர வேண்டிய மக்களைச் சென்றடையாமல் – பதிப்புரிமையின் பெயரால் தடுக்கப்படுகின்றன. எழுத்தாளர்களை மையமாகக் கொண்டு அச்சமூகங்களில் உருவாகவேண்டிய சிந்தனைப் பள்ளிகள் தோன்றாமலேயே போய்விடுகின்றன. தமது சிந்தனைகள் மூலமாக – அவை அவர்களுக்கு பின்பான தலைமுறைகளால் கடத்தப்படுவதனூடாக வரலாற்றில் தொடர்ச்சியாக வாழ வேண்டிய சிந்தனையாளர்கள் பதிப்புரிமையினால் கட்டுப்படுத்தப்படுவது கவலைக்குரியது. அறிவின் பல்கிப்பெருகும் தன்மையே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கக்கூடியது. சமூகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு சமூக அறிவு சகலராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் பதிப்புரிமையின் கட்டுப்பாடுகள் அதற்கு இடம் தருவதில்லை. தற்போதைய பதிப்புரிமை வடிவத்தின் பாதகமான அம்சங்களை எவ்வாறு சாதகமான அம்சமாக மாற்றுவது? படைப்பாளியின் நலன் பாதுகாக்கப்படவும் வேண்டும் அதேவேளை அப்படைப்பாளியின் கருத்துக்களாலும் சிந்தனைகளாலும் அச்சமூகமும் பயன்பெற வேண்டும். சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இப்புள்ளியில் நின்று சிந்தித்து அதற்கான தீர்வைப் பெற வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டதே கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – படைப்பாக்கப் பொதும உரிமங்கள் ஆகும். இந்த உரிமங்கள் கொண்டதாக வெளியிடப்படும் நூல்களின் இலாபமீட்டும் உரிமை படைப்பாளியிடமே இருக்கும். அதேநேரம் படைப்புகளை யாவரும் பகிர்தல், அறிவைப் பரவலாக்குதல், விருத்தி செய்வதற்கான வழிகள் திறக்கப்படுகின்றன. படைப்பாளியின் உரிமையில் எதுவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது, அறிவு விருத்தியில் மக்கள் சார்ந்து நிற்பதற்கு இவ்வுரிமங்கள் வழிவகை செய்துள்ளன. இவ்வுரிமங்களில் ஒன்றினைப் பயன்படுத்துவதன் மூலம் ஆவணப்படுத்தல், அறிவுவிருத்தி, கல்வி மேம்பாடு ஆகிய சமூகநல நோக்குகளுடன் இயங்கிவரும் நூலக நிறுவனம், விக்கிபீடியா போன்ற அமைப்புக்களும் தொடர்ச்சியாக இயங்கக் கூடியதாக இருக்கிறது. 2. கிரியேட்டிவ் காமன்ஸ் – படைப்பாக்கப் பொதுமங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – படைப்பாக்கப் பொதுமங்கள் என்பது ஆக்கங்களை சட்டப்படி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளலை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். இது 2001 இல் லோறன்ஸ் லெசிக் என்பவரால் தொடங்கப்பட்டது. http://creativecommons.org இது படைப்பாளர்களுக்கும் பயனர்களுக்கு இடையேயான ஒரு பாலமாக அமைகிறது. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தாமல், அளிப்புரிமையை ஊக்குவிக்கின்றன. எந்த உரிமையை அளிப்பது என்பது (அதாவது முழுவதையும் காப்புரிமைக்கு கட்டுப்படுத்தலில் இருந்து முழுமையாகப் பொதுவில் விடுதல் வரையான பல்வேறு தெரிவுகள்) படைப்பாளர்களுக்குச் சாத்தியமாகின்றது. இது முழுமையான கட்டற்ற படைப்பு உரிமங்களுக்கும் முழுமையான காப்புரிமை உரிமங்களுக்கும் இடைப்பட்ட ஒரு மிதவாதத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. தற்போது எல்லாப் படைப்புகளுக்கும் அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை என்ற சட்டம் தீவிரவாத நிலைப்பாட்டை உடையதாகும். பெரும்பாலான நேரங்களில் பயனர்களின் சமூகத்தின் நியாயமான பயன்பாட்டிற்கு இது தடையாக அமைந்து விடுகிறது. பல சந்தர்ப்பங்களில் ஆக்கர்களே அவ்வாறு தமது படைப்புக்களை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. ஆகவே இந்த தடையை நடைமுறையில் தளர்த்துதவற்காக உருவாக்கப்பட்டதுதான் படைப்புப் பொதும உரிமங்கள் என்று லோறன்சு லெசிக் கூறுகிறார். இந்த நிறுவனமானது இதற்கென பல்வேறு வகையான காப்புரிமை உரிம ஒப்பந்தங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வுரிம ஒப்பந்தங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் (படைப்பாக்கப் பொதுமங்களின்) உரிமங்கள் என அறியப்படுகின்றன. இந்த உரிமைகள் படைப்பாளர்கள் அவர்கள் தெரிந்தெடுக்கும், அவர்களுக்கு ஏற்ற உரிமங்களோடு தமது படைப்புக்களை வெளியிடுவதைச் சாத்தியமாக்குகின்றன. பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான கட்டுப்பாடுகளுடன் ஆறு உரிம ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிரியேட்டிவ் காமன்ஸ் – படைப்பாக்கப் பொதும உரிமங்கள் ஒருவருடைய படைப்புகளை இணையத்திலும் வேறு வடிவங்களிலும் பகிர்வதற்காக கிரியேட்டிவ் காமன்ஸ் அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தங்கள், கிரியேட்டிவ் காமன்ஸ் (படைப்பாக்கப் பொதும) உரிமங்கள் எனப்படுகிறன. கிரியேட்டிவ் காமன்ஸ் அமைப்பானது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்களை தயாரித்து வழங்கியிருக்கிறது. மூல உரிமங்கள்     Attribution குறிப்பிடுதல் / Attribution (by) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, பகிர, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தகுந்த முறையில் அல்லது வேண்டப்பட்ட முறையில் படைப்பாளிகள் குறிப்பிடப்படுதல் வேண்டும். மூல படைப்பாளி மற்றும் மூல படைப்பு கிடைக்கும் இடம் போன்ற தகவல்களை அளித்தே பகிர வேண்டும்.     Non-commercial இலாபநோக்கமற்ற / NonCommercial (nc) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இலாப நோக்கமற்ற நோக்கங்களுக்கு மட்டுமே. விற்பனை செய்யக்கூடாது.     Non-derivative வழிப்பொருளற்ற / NoDerivatives (nd) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் வழிபொருட்களை உருவாக்குவதற்கான உரிமை தரப்படவில்லை.     Share-alike அதே மாதிரிப் பகிர்தல் / ShareAlike (sa) வழிபொருட்களை முதன்மை ஆக்கத்துக்குரிய அதே உரிமங்களோடே விநியோகிக்க முடியும். ஆறு முதன்மை உரிமங்கள் ஆக்கப்பணி ஒன்றினை படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமைப்படி வழங்கும்போது தெரிவு செய்யப்படக்கூடிய முதன்மையான ஆறு உரிம ஒப்பந்த வகைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன. குறைந்த கட்டுப்பாடுகள் கொண்ட உரிமத்தில் இருந்து கூடிய கட்டுப்பாடுகள் கொண்டது வரை இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 1. Creative Commons Attribution BY – குறிப்பிடுதல் (CC-BY) [] படைப்பாக்கப் பொதுமங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் இதுவே கட்டுப்பாடுகள் குறைந்த ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின் படி நீங்கள் உங்கள் ஆக்கத்தினை வழங்கும்போது, உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய, பயன்படுத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அத்தோடு உங்கள் ஆக்கத்தினை அல்லது மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் அனுமதி உண்டு. உங்கள் ஆக்கத்தினை எது வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் என்ன செய்தாலும் உங்கள் பெயரை குறிப்பிட்டாகவேண்டும். அதுவே இந்த ஒப்பந்தத்தின் ஒரேயொரு கட்டுப்பாடு. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும் என்றில்லை. மாற்றங்கள் செய்த பின் பயனர் வேறு உரிமத்திலும் பகிரலாம்.   2.Creative Commons Attribution-ShareAlike குறிப்பிடுதல் – அதே மாதிரிப் பகிர்தல் (CC-BY-SA) [] இந்த ஒப்பந்தமானது உங்கள் ஆக்கப்பணியினை மாற்ற, திருத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க என்று சகலதிற்கும் மற்றவரை அனுமதிக்கிறது. புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு பகிரப்படும் வேளையில் உங்கள் ஆக்கமோ அல்லது அதனை அடிப்படையாககொண்டு உருவாகும் புதிய ஆக்கமோ உங்கள் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்தோடு நீங்கள் பயன்படுத்திய உரிம ஒப்பந்தத்தை அப்படியே பயன்படுத்தவேண்டும். சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும்.   3. Creative Commons Attribution-NoDerivs குறிப்பிடுதல் – வழிப்பொருளற்ற (CC-BY-ND) [] உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்யாமல், உங்கள் பெயரை காட்டாயம் குறிப்பிடும் வரைக்கும் வர்த்தக ரீதியான அல்லது வர்த்தக நோக்கம் அல்லாத எந்த தேவைக்காகவும் உங்கள் ஆக்கத்தினை மீள விநியோகிக்க, பகிர்ந்துகொள்ள இவ்வொப்பந்தம் அனுமதியளிக்கிறது. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை.   4. Creative Commons Attribution-NonCommercial குறிப்பிடுதல் – இலாப நோக்கமற்ற (CC-BY-NC) [] இந்த உரிமம் வர்த்தக நோக்கம் தவிர்ந்த தேவைகளுக்காக உங்கள் ஆக்கத்தினை திருத்த, வடிவம் மாற்ற, மீள்சுழற்சிக்குட்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தத்திலும் உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட வேண்டும், வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம், உங்கள் ஆக்கம் தாங்கியுள்ள உரிம விதிகளுக்கு அமைவாகத்தான் புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தையும் விநியோகிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை. 5. Creative Commons Attribution-NonCommercial-ShareAlike குறிப்பிடுதல் – இலாப நோக்கமற்ற – அதே மாதிரிப் பகிர்தல்(CC-BY-NC-SA) [] இந்த ஒப்பந்தம், மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தை மீள்சுழற்சிக்குட்படுத்த, மாற்றங்கள் செய்ய, தொகுக்க, உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாக வைத்து புதிய ஆக்கங்களை செய்ய அனுமதிக்கிறது. ஆனால் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் புதிய ஆக்கம், உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும் அத்தோடு இதே அனுமதிகளை அப்புதிய ஆக்கமும் வழங்க வேண்டும். மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தினை தரவிறக்கவும் பகிர்ந்தளிக்கவும் முன்னைய ஒப்பந்தம் போன்றே இதுவும் அனுமதிக்கிறதென்றாலும், உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய அனுமதிப்பதே இவ்வொப்பந்தத்தின் சிறப்பு. உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கங்களும் நீங்கள் வழங்கிய உரிமத்தினடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதால் புதிய உருவாக்கங்களையும் வர்த்தகத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும்.   6. Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND) [] இதுவே முதன்மையான ஆறு உரிம ஒப்பந்தங்களிலும் கட்டுப்பாடுகள் கூடியதாகும். இது மீள் விநியோகத்தை அனுமதிக்கிறது. இவ்வுரிம ஒப்பந்தம் “இலவச விளம்பர” ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் ஆக்கவேலையை தரவிறக்கவும், மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் இது எல்லோரையும் அனுமதிக்கிறது. ஆனால் பகிரப்படும்போது உங்களது பெயர், உங்களுக்கான தொடுப்பு போன்றவற்றையும் வழங்க வேண்டும். பகிர்பவர்கள் உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் முடியாது. மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் இயல்பாகவே உங்கள் ஆக்கத்தினை பகிரும்போது இதே உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விநியோகம் நிகழும். சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும். இந்த ஆறு உரிமங்களில் ஒன்றை உங்கள் படைப்புகளுக்கு அளிப்பதன் மூலம், அவை பலரால் பகிரப்பட்டு சாகாவரம் பெறுகின்றன. உங்கள் வலைப்பதிவுகள், கட்டுரைகள், புகைப்படங்கள், காணொளிகள் என எந்த படைப்பையும் இந்த கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமைகளில் வெளியிடலாம். இந்த இணைப்பின் மூலம், உங்களுக்கு தேவையான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையை தெரிவு செய்யலாம். http://creativecommons.org/choose/ உங்கள் படைப்புகளை பலரும் பகிரும் போது, உங்கள் அறிவு பலரையும் சென்றடைகிறது. எழுத்தாளருடைய பதிப்புரிமை எப்போதும் அவரிடமே இருக்கும். படைப்பாளியின் பதிப்புரிமையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், குறித்த படைப்பாளியின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் சகல மக்களுக்கும் கொண்டு சென்று சேர்த்து புதிய சிந்தனைப்போக்குக்கள் உருவாக்கத்திற்கான அறிவுப் பரவலாக்கத்தை மாத்திரமே கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை செய்கின்றது. இந்த அனுமதியின் நன்மைகள் படைப்பாளர்களுக்கு படைப்பாளரது படைப்பு, வாசகர் அனைவருக்கும் பகிரும் உரிமை உள்ளதால், உலகெங்கும் உள்ள வாசகர்களைச் சென்றடைகின்றது. இதன் மூலம் படைப்பாளருடைய அறிவும் கருத்துக்களும் சிந்தனைகளும் வளர்ந்து வரும் படைப்பாளர்கள் மத்தியிலும் தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலும் சென்றடைகின்றன. ஒரு படைப்பாளரைப் பொறுத்தவரை அவருடைய கருத்துக்கள் சிந்தனைகள் பரந்துபட்ட மக்களைச் சென்றடைவதே அவருடைய முதன்மை நோக்கம் என்ற வகையில் அவருடைய எண்ணம் நிறைவேறுகின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் உள்ளவர்களையும் படைப்புக்கள் சென்றடைவதன் மூலம் அவர்களது கருத்துக்களிலும் சிந்தனைகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் நிலமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஒரு படைப்பாளருடைய படைப்பு/கருத்து/சிந்தனை வாசகர்கள் மத்தியில் தாக்கத்தைச் செலுத்தும் போதும் வாசகருடைய வாழ்வியலிலும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் போதும் அப்படைப்பாளி சாகாவரம் பெற்று தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்றார். வாசகருக்கு வாசகர் தாம் படிக்கும் நூல்களை நண்பருடன் பகிர்ந்து கொள்ளலாம். தமது வலைப்பதிவில் பகிரலாம். தாம் விரும்பிய புகைப்படத்தை தமது அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். சமுக வலைத்தளங்களில் பகிரலாம். மின்னூலாக்கி பல கருவிகளில் படிக்கலாம். மாற்றங்கள் செய்யும் உரிமை இருந்தால், விரும்பியவாறு மாற்றயும் பகிரலாம். வணிக உரிமை இருந்தால், விற்பனையும் செய்யலாம். பகிர்தல் என்பது மனித குலத்தின் அடிப்படைப் பண்பு. நாம் விரும்பும் எதையும் பகிர்வது நம் உரிமை. புகைப்படங்கள் Flickr.com, commons.wikimedia.org போன்ற தளங்களில், நீங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பகிரலாம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பகிரப்பட்ட படைப்பகளை தேடி, அவற்றை உங்கள் நூல்களில், வலைப் பதிவுகளில் பயன்படுத்தலாம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உள்ள படங்களுக்கான தேடுபொறி இதோ. http://search.creativecommons.org/ அடுத்த முறை உங்களுக்கு ஒரு படம் தேவைப்படும் போது, சும்மா கூகுள் தேடுபொறியில் தேடி, உங்களுக்கு உரிமை இல்லாத படத்தை பயட்படுத்துவதை விட, இங்கே தேடி, பகிரும் உரிமை உள்ள படங்களை பயன்படுத்துங்கள். கல்யாண் வர்மா என்ற புகழ்பெற்ற வன விலங்கு புகைப்பட நிபுணர், தமது அரிய புகைப்படங்கள் யாவையும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டதால், தாம் பெற்ற சிறப்புகளையும், பயன்களையும் பற்றி இந்த காணொளியில் பேசுகிறார். http://www.inktalks.com/discover/117/kalyan-varma-free-art-is-profitable   மின்னூல்கள் – FreeTamilEbooks.com திட்டம் பல தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் ‘காப்புரிமை உள்ளது’, ‘எங்கும் நகலெடுத்து பகிரக் கூடாது’ என்று பார்த்திருப்பீர்கள். இதனால் வாசகருக்கு எந்த உரிமையும் இல்லை. இணைய செலவை சேமிக்க, நீங்கள் அந்த வலைப்பதிவுகளை சேமித்து வைத்து, பிறகு படிக்கலாம் என்று நினைப்பது முடியாது. ODT, PDF, DOC கோப்புகளாக மாற்றக் கூடாது. சில ஆண்டுகளில் அந்த வலைத்தளம் மூடப்பட்டால்,அவ்வளவுதான். அதில் இருந்த தகவல்களை யாரும் வைத்திருக்க முடியாது. கூடாது. இதுபோல் அழிந்த வலைத்தளங்கள் ஏராளம். தமிழில் புகழ்பெற்று விளங்கிய ‘அம்பலம்’ மின்னிதழ் போல, காப்புரிமை கொண்டு, அழிந்த பின் Backup கூட இல்லாத தளங்கள் பல. இவ்வாறு காப்புரிமை கொண்டுள்ளதால், எழுதியவருக்கு நட்டம் அதிகம். பல வாசகரை அடைய எழுதிய படைப்புகள், வலைத்தளம் தவிர வேறு வடிவங்களில் வாசகரை அடைய முடிவதில்லை. இப்போது, படிப்பதற்கென கிண்டில், டேப்லட் என பலவகை கருவிகள் உள்ளன. இவற்றில் யாரும் வலைத்தளங்களை படிப்பது கடினம். ஆனால் இவற்றில் படிப்பதற்கேற்ப epub, mobi, PDF என பல வகை கோப்புகள் உள்ளன. வலைத்தளங்களை இது போன்று மின்னூலாக்கினால், வாசகர்களை எளிதில் படிக்க வைக்கலாம். ஆனால் இது போன்று மின்னூலாக்கி பகிர்வதை ‘காப்புரிமை’ தடுக்கிறது. ஆனால், சிலர் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் தமது வலைப்பதிவுகளையும், நூல்களுயும் வெளியிட்டுள்ளதால், FreeTamilEbooks.com திட்டக் குழுவினர், அவற்றை மின்னலாக்கி வெளியிடுகின்றனர். இந்த நூல்களை யாவரும், படிக்கலாம். பகிரலாம். இதுவரை சுமார் 100 மின்னூல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு மின்னூலும் குறைந்தநு 100 பதிவிறக்கங்கள், சில மின்னூல்கள் 15,000 பதிவிறக்கங்கள் என உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களை இந்த மின்னூல்கள் அடைகின்றன. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையால் மட்டுமே இது போன்ற புது முயற்சிகள் சாத்தியமாகின்றன. இது போல, மேலும் புது வகை முயற்சிகளுக்கும் வாய்ப்பளிக்கின்றது. ஏட்டில் இருந்து அச்சு நூலுக்கு வந்ததே, அதிகம் பேரே சென்றடைய. அச்சிலிருந்து இணைய வடிவிற்கு மாறியது உலகெங்கும் சென்றடைய. ‘காப்புரிமை’ கொண்டு இந்த பரவலை தடுக்காதீல்கள். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உங்கள் படைப்புகளை வெளியிட்டு, உங்கள் வாசகருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்யும் உரிமை கொடுங்கள். வாசகர்கள் உங்களை வாழ்த்திக் கொண்டே படிப்பர். பகிர்வர். உங்கள் படைப்புகளும் சாகாவரம் பெறும்.   மேலும் படிக்க. https://creativecommons.org/licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101   http://creativecommons.org/videos/get-creative http://www.slideshare.net/DonnaGaudet/creative-commons-32865734 http://www.assortedstuff.com/stuff/?p=413 http://thepowerofopen.org/     நன்றி – நூலக நிறுவனம் வெளியிட்ட கையேடு ‘படைப்பாக்கப் பொதுமங்கள் – எழுத்தாளர்களுக்கான அறிமுகம்’ உரிமை – Creative Commons Attribution/Share-Alike License http://creativecommons.org/licenses/by-sa/3.0/