[] [cover image] நான் தனிப்பிறவி நீயும்தான் நிர்மலா ராகவன் FreeTamilEbooks.com CC0 நான் தனிப்பிறவி நீயும்தான் 1. நான் தனிப்பிறவி நீயும்தான் 1. முன்னுரை 2. கோபம் பொல்லாத வியாதியா? 3. உறவுகள் பலப்பட 4. உண்மையாக இருத்தல் 5. வித்தியாசமாக இருப்பவர்கள் 6. உதவினால் உற்சாகம் வரும் 7. பழகத் தெரியவேண்டும் 8. நான் தனிப்பிறவி… நீயும்தான்! 9. சிரத்தையான அப்பா அம்மா 10. எல்லைகள் 11. தாம்பத்தியத்தில் தோழமை 12. வசப்படுத்தும் இசை 13. உலகில் பிறரும் உண்டு 14. எழுதப்படாத விதிமுறைகள் 15. மகிழ்ச்சி எங்கே? 16. பொறுப்பே கிடையாது 17. அரசியல்வாதிகளும் பொறுப்பும் 18. போலிப்பணிவும் அகந்தையே 19. ஒரு வட்டத்துக்குள் 20. மென்மை பலகீனமா? 21. நொண்டிச்சாக்கு ஏன்? 22. மதிப்பெண்கள் மட்டும் போதுமா? 23. பதவி போதுமே, பண்பு எதற்கு? 24. மூக்கை நுழைக்கலாமா? 25. உலகைக் காக்கும் பொறுப்பு 26. வாழ்க்கை எனும் மிதிவண்டி நான் தனிப்பிறவி நீயும்தான் நான் தனிப்பிறவி நீயும்தான்   நிர்மலா ராகவன்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/naan_thanippiravi_neeumthan} முன்னுரை மனிதர்கள் எந்தச் சமயத்தில் எப்படி நடப்பார்கள் என்று அறிவது கடினம். அவ்வளவு சிக்கலானவர்கள் நாம். தாமும் குழம்பி, பிறரையும் குழப்புவது பலருடைய குணமாக அமைந்துவிடுகிறது. ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று யோசித்தே நானும் குழம்பி, என் சித்தம் சுவாதீனத்திலேயே இருக்கும்பொருட்டு என் எண்ணங்களை எழுத்தில் வடித்திருக்கிறேன். இக்கட்டுரைகளைப் படித்து, உங்கள் குழப்பம் சற்றாவது தீரட்டுமே! அன்புடன், நிர்மலா ராகவன் கோபம் பொல்லாத வியாதியா? பிறருக்கு என்ன துன்பம் வந்தபோதிலும், அதைக் கண்டும் காணாமல் அசட்டை செய்வது பயந்தவர்களின் சுபாவம்.    இவர்கள், ‘நான் பிறர் வழிக்கே போகமாட்டேன்!’ என்று பெருமையாகப் பேசிக்கொள்வர். ‘எதுக்கு வீண் வம்பு! நீ உண்டு, உன் வேலை உண்டுன்னு இரு!’ என்று பிறர்க்கும் அறிவுரை வழங்குவார்கள். இன்னொரு சாரார் தர்மத்துக்குப் புறம்பான நடப்புகளைக் கண்டு பொங்கி எழுவார். இத்தகையவர்கள் பாராட்டும், புகழும் எதிர்பார்ப்பதில்லை. இவர்களுக்கு வன்முறை இல்லாத ஆக்ககரமான செய்கைதான் முக்கியம். மகாத்மா காந்தியும் நெல்சன் மண்டேலாவும் கத்தியையா தூக்கினார்கள்? இவர்களுடையது தார்மீக கோபம். தார்மீக கோபமா, என்ன அது? பிறர் படும் அவதிக்கு, துயரத்திற்காக நாம் அடைவது. சாத்வீக குணம்தான் சிறந்தது என்று மதங்கள் போதிக்கலாம். ஆனால் மற்றவருக்கு அநீதி இழுக்கப்படும்போது வாளாவிருக்கலாமா? பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்களின் துன்பம் புரியும். ‘பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற பயமோ, தயக்கமோ எழாது. “அவன் சொன்னதைக் கேட்டு, எனக்குச் சரியான கோபம்!” “எனக்குக் கெட்ட கோபம் வந்தது!” என்றெல்லாம் கேட்டிருக்கிறோம். கோபத்தில் எது நல்லது, எது கெட்டது? கதை கடந்த ஜனவரி மாதம் பினாங்குத் தீவருகே இருக்கும் Nibong Tebal (நிபோங் தெபால்) என்ற ஊரில் நடந்த சம்பவம் மலேசிய நாட்டையே உலுக்கியது. பதினான்கு வயதான வசந்தப்ரியா என்ற அழகிய பெண் தன் கைத்தொலைபேசியைத் திருடிவிட்டாள் என்று ஆசிரியை ரெமாலா ராமன் பழி சுமத்தி, ஐந்து மணி நேரம் அம்மாணவியை ஓர் அறையில் வைத்துப் பூட்டியிருக்கிறாள். (அதற்கு இரு தினங்களுக்குமுன்தான் அந்த ஆசிரியையின் பிறந்த நாளுக்காக சகமாணவிகளிடமிருந்து பணம் வசூல் செய்து, விருந்து வைத்திருக்கிறாள் அம்மாணவி). தான் அப்பொருளை எடுக்கவில்லை என்று எழுதிவைத்துவிட்டு, தன் அறையில் தூக்கு மாட்டிக்கொண்டாள் சிறுமி. சில தினங்கள் கோமா நிலையில் இருந்தவள் நினைவு திரும்பாமலேயே இறந்துபோனாள். சம்பந்தப்பட்ட ஆசிரியையோ, மேசையில் உட்கார்ந்து செய்யும் வேறு வேலைக்கு மாற்றப்பட்டாள். அவ்வளவுதான். பதின்ம வயதினர் பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்கள். அதுகூடப் புரியாது, பல மணி நேரம் அவளை வதைத்தது என்ன நியாயம்? அற்பப் பொருள் ஒன்றுக்காக ஓர் உயிர் போயிருப்பது அநியாயம். இந்த அநியாயத்தைக் கண்டு பொங்கியெழுவது தார்மீக கோபம். சமூகம் சிறப்பாக நடக்க அவசியமானதும்கூட. எது சரி, எது தவறு என்று பிரித்துப் பார்க்கும் திறமையை நாம் வளர்த்துக்கொண்டால் இது சாத்தியமாகும். கோபம் எழுந்தால், ஒருவரது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மன இறுக்கம், தலைவலி என்று பல்வித உடல் உபாதைகளும் ஏற்படலாம். நம் கோபம் தகுந்த நேரத்தில் வெளிப்பட வேண்டும். தகுந்த காரணத்துக்காக வெளிப்பட வேண்டும். அதற்குப் பலன் இருக்க வேண்டும். அப்போதுதான் கோபப்படுபவர் உடல் ரீதியில் பெரிதளவில் பாதிக்கப்படுவதில்லை. ‘எங்கேயோ, யாரோ, எப்படியோ இறந்துபோனால் நமக்கென்ன!’ என்று இருந்தால், இம்மாதிரியான கொடுமைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பிறருக்கு விளைவிக்கப்படும் அநீதியால் கோபம் வந்தால், அது நாம் பிற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டுகிறது. தார்மீக கோபம் உள்ளவர்கள் தமது கோபம் தணிந்தபின் செயலில் ஈடுபடுவதால் இங்கு வன்முறை கிடையாது. சிலருக்கு இத்தகைய கோபம் புரிவதில்லை. ‘எழுதினால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?’ இப்படிக் கேட்பவர்கள் தம் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்று திருப்தி அடைபவர்கள். தமக்கு ஏதாவது சிறு துன்பம் நேர்ந்தாலும் இவர்களால் தாங்க முடியாது. ‘உங்கள் எழுத்தால் ஏதாவது மாறப்போகிறதா, என்ன?’ என்று அலட்சியத்துடன் கேட்பார் இன்னொரு சாரார். கதை சில வருடங்களுக்குமுன், கணவரால் உடல் ரீதியில் வதைபட்ட பெண்கள் இருக்கும் ஒரு சமூகநல இல்லத்திற்குப் போனேன். இருபத்தேழு ஆண்டுகள் வதைபட்டும் பொறுமை காத்த குமுதா கூறினாள், “அவர் மாறிடுவார்னு நம்பிக்கையா இருந்தேங்க!” அவள் உடலில் பல எலும்புகள் நொறுங்கி இருந்தன. (‘படித்தவர்கள் இப்படியெல்லாம் செய்வதில்லை!’ என்பவர்களுக்கு: குமுதாவின் கணவர் அரசாங்க நிறுவனம் ஒன்றில் இரண்டாவது இடம் வகித்த பெரிய அதிகாரி). அந்த இல்லத்தில் தங்கியிருந்த பல பெண்களுடன் பேசியதில், தம் அனுபவித்த இன்னல்களை, அதனால் எழுந்த துயரத்தை, வெளிப்படுத்தும் நிலையில் அவர்கள் இல்லை என்று புரிந்தது. சிலர் காலை விந்தி, விந்தி நடந்தார்கள். பற்களை இழந்தவர்கள் பலர். எல்லாம் கணவன்மார்களின் உபயம். (என் அதிர்ச்சியும், துயரமும் நீங்க இரு தினங்களாகின). அவர்கள் சார்பில், நான் அவர்களைப்பற்றி எழுதினேன். நிறைய எழுதினேன், ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று நம்பும் பெண்களின் மடமையைப்பற்றி. நமக்குச் சிறுவயதிலிருந்து போதிக்கப்பட்ட அகல்யா, அருந்ததி போன்ற ‘பத்தினித் தெய்வங்களின்’ தாக்கம் நம் பெண்களை எங்கு கொண்டு விட்டிருக்கிறதென்று. நான் எழுதியதை மேற்கோள் காட்டி, அதிர்ச்சியுடன் பல பெண்களும் தொடர்ந்து எழுதினார்கள். இறுதியில், கணவன் மனைவியை அடித்தால் தண்டனை என்று சட்டம் விதிக்கப்பட்டது. கத்தியைவிட பேனாவால் நிறையவே சாதிக்க முடியும். கோபத்திற்கும் சரியான இலக்கு இருத்தல் அவசியம். சமீபத்தில், எவனோ ஒருவன் தற்கொலை செய்துகொண்ட பெண் படித்த பள்ளிக்கூடத்தில் பெரிய கற்களைத் தூக்கி எறிந்திருக்கிறான். அவ்வளவு ஆத்திரமாம்! இதனால் யாருக்கு என்ன பயன்? பிடிபட்டால், அவன்தானே சட்டத்தால் தண்டிக்கப்படுவான்? இம்மாதிரிதான் வெளிநாடுகளில் பணி புரிவோர் தம்மில் ஒருவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், ஒன்று திரண்டு தம் எதிர்ப்பை வன்முறையால் வெளிப்படுத்துவார்கள். இன்னொரு முட்டாள்தனம். கதை சிங்கப்பூரில் இருக்கும் அந்த இடத்திற்குப் பெயர் லிட்டில் இண்டியா. இந்தியர்களும், பங்களாதேஷிகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெருவாரியாக இங்கு காணப்படுவார்கள். அவர்கள் திரள பிற காரணங்கள்: கோயிலைத் தவிர, மதுபானக் கடைகளும் உண்டு. டிசம்பர் 2013-ல் அந்த இடம் வேண்டாத பெருமை பெற்றது. திடீரென்று ஒருவன் தெருவின் குறுக்கே வர, அவன்மேல் தனியார் பேருந்து ஏற, அவன் தலத்திலேயே மாண்டு போனான். (அவன் குடிபோதையில் இருந்தான் என்று அப்போது வெளியிட்டிருந்தார்கள்). அங்கிருந்த 400 தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆத்திரம். சிங்கப்பூரில் நாற்பது வருடங்களாகக் காணாத கலவரம் அவர்களால் மூண்டது. பத்து காவல்துறையினர் காயமடைந்தனர். காவல்துறை வாகனங்கள், பேருந்து, ஆம்புலன்ஸ் என்று எல்லாவற்றின்மேலும் கற்களை எறியப்பட பெருஞ்சேதம் உண்டாகியது. பிடிபட்டவர்களில் 22 பேருக்கு சிறைத்தண்டனை. 57 பேர் தாய்நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த கோபத்தினால் அவர்கள் சாதித்தது என்ன? இந்திய கீழ்மட்டத் தொழிலாளிகளை ஏற்க ஒரு நாடே அஞ்சிவிட்டதுதான் கண்ட பலன். ‘சிங்கப்பூரிலேதான் எங்களை விட மாட்டேங்கிறாங்களே!’ என்று அண்மையில் ஒரு தையல்காரர் என்னிடம் புலம்பினார். அங்கு கூடுதல் சம்பளம் கிடைத்திருக்கும். சிலரது அவசர நடத்தையால் பலரது கனவுகள் பாழாகிவிட்டன. தம் செயலால் எழக்கூடும் விளைவை கலகக்காரர்கள் எக்காலத்திலும் எண்ணிப் பார்ப்பதில்லை. கோபம் அடங்காமலே, ஆத்திரத்துடன் ஒருவர் செயல்பட்டால், அவரிடம்தான் ஏதோ கோளாறு. அவரது செயலால் எந்த பலனும் விளையப்போவதில்லை. கோபத்தை அறவே தணிப்பதென்பது இயலாத காரியம். ஆனால் கோபம் வரும்போது, ஆழ்ந்த மூச்சு, உலாவப்போதல், உடற்பயிற்சி போன்றவற்றால் அதை ஆறப்போடலாம். ஆக்ககரமாக என்ன செய்வது என்ற தெளிவு தானே பிறக்கும். உறவுகள் பலப்பட ‘கணவன்-மனைவியாகட்டும், ஒன்றாக வாழும் இரு ஆண்களாகட்டும், அவர்களது உறவைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. பத்து நிமிடங்களுக்குள் அவர்களுக்குள் சண்டை வருகிறதா என்று பாருங்கள்!’ ஓர் உளவியல் நிபுணர் எனக்குத் தந்த குறிப்பு. இரு மனிதர்கள் நெருக்கமாக வாழ்ந்தால், சிறு சண்டை பூசல்களைத் தவிர்க்க முடியாது. இதனால்தான் ஓரிரு தலைமுறைகளுக்குமுன் தம்பதிகளைப் பிரித்து வைப்பார்கள் – ஆடி மாதம், கர்ப்பமாகி ஐந்தாம் மாதம் என்று ஏதேதோ சாக்கில். சில தினங்களோ, மாதங்களோ அப்படிப் பிரிந்திருந்து, பிறகு புகுந்த வீட்டுக்கே ஒரு பெண் திரும்பி வரும்போது, மறைந்துபோன ஈர்ப்பு தம்பதிகளுக்குள் மீண்டும் தலைதூக்கும். சில காலமாவது நிலைத்திருக்கும். பத்து நாட்களுக்குள் மீண்டும் ஏதாவது அபிப்ராய பேதம் வரலாம். ‘குழந்தைகள்மேல் உனக்கு இருக்கிற அக்கறை எப்பவும் என்மேல் கிடையாது!’ என்று சாடுவான் கணவன். இந்த வாக்கியத்தில் ‘எப்பவும்’ என்று இருப்பதைத் தவிர்த்தால் சண்டை பெரிதாக வளராது. ‘நீங்கள் மட்டுமென்ன? முன்பொருமுறை..,’ என்று மனைவி எதிர்த்து வாதாட இது வழி செய்துவிடுகிறது. இப்படி இருவரும் மற்றவரது குறைகளையே, அல்லது தமக்குப் பிடிக்காதவற்றையே, பெரிதுபண்ணிக் கொண்டிருந்தால், இல்வாழ்க்கையில் அமைதி ஏது? பணம் = அதிகாரம் குடும்பத்தில் வரவு செலவைக் கவனித்துக்கொள்ளும்வரைதான் தன் அதிகாரம் நிலைத்திருக்கும் என்று கணக்குப்போடுவார்கள் சிலர். துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவன் பத்து பேரைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டு வருவதில்லையா, அது போல! கதை மனைவி சம்பாதிப்பதை அப்படியே வாங்கிக்கொண்டுவிடுவான் அகிலன். அவள் கொடுக்க மறுத்தால், அவள் நடத்தையைக் கேவலமாகப் பேசுவான். அது பொறுக்காது, ‘கேவலம், பணம்தானே! தொலையட்டும்!’ என்று கொடுத்துவிடுவாள் தாராவும். அகிலனின் அதிகாரத்தில், ஓயாத கட்டுப்பாட்டில், தாராவின் மன இறுக்கம் அதிகரித்தது. ‘என்னுடன் படித்தவன் என்மேல் உயிராக இருந்தான். அவன் கேட்டபோது, அவனையே கல்யாணம் செய்துகொண்டிருக்க வேண்டும்!’ என்று அவள் யோசனை போயிற்று. கணவன்மேல் அதிருப்தி, காழ்ப்பு இருக்கலாம். ஆனாலும், இத்தகைய எண்ணத்தால் என்ன பயன்? குழப்பம்தான் விளையும். காதலனாக இருப்பவன் கணவனானபின்பும் அப்படியே இருப்பான் என்று சொல்வதற்கில்லை. அதோடு, அவள்மேலும் குறை இருந்ததே! எதற்காக அவ்வளவு தூரம் விட்டுக்கொடுத்துப்போனாள்? விவாகரத்து செய்யலாமா என்று அடுத்த யோசனை வந்தது. புதிய பாதையில் இன்னும் என்னென்ன இடர்கள் இருக்குமோ, இருக்கிறதையே செப்பனிட்டுக்கொள்ளலாம் என்று தோன்றிப்போயிற்று. கணவனை மாற்ற முடியாவிட்டாலும், நாம் மாறலாமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது தாராவிற்கு. ‘நான் சம்பாதிப்பதை உங்களுக்கு எதற்குக் கொடுக்க வேண்டும்?’ என்று திமிறினாள். இவளுடன் சண்டை போட்டு வெல்ல முடியாது என்று புரிந்துகொண்டான் அகிலன். ‘நமக்குள் என் பணம், உன் பணம்னு என்னம்மா வித்தியாசம்?’ என்றான் குழைவாக. அதிகாரம் நிலைத்திருக்க வேண்டுமானால் கட்டுப்படுத்தும் முறைகளை மாற்ற வேண்டும். தாரா இணங்கவில்லை. மீண்டும் வாய்ச்சண்டை. இறுதியில், ஒரு மாதத்தில் மொத்த செலவு எவ்வளவு என்று உத்தேசமாகக் கணக்கிட்டு, அதை இருவருமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவள் ஓர் உபாயம் கூறினாள். அகிலனின் தந்தை மட்டுமே சம்பாதித்தபோது, அவரது கட்டுப்பாட்டில் குடும்பம் இருந்திருக்கலாம். ஆனால், காலம் மாற, மாற, அதற்கேற்ப மாறினால்தான் அமைதியோ, மகிழ்ச்சியோ தழைக்கும் என்றவரைக்கும் அவனுக்குப் புரிந்தது. புதிய ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டான் – அரைமனதாகத்தான்! அதன்பின், இருவருக்குமே பொருளாதார சுதந்திரம் இருந்தது. மனைவியிடம் தன் தவற்றை ஒத்துக்கொண்டான்: “கணவனுக்கு மனைவி அடங்கி நடக்க வேண்டும், அவன் சொல்வதையெல்லாம் கேட்பவள்தான் நல்ல மனைவி என்று நினைத்திருந்தேன்!” (1981- ல், பிரிட்டிஷ் இளவரசி டயானா தன் கல்யாணத்தின்போது, ‘கணவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன்,’ என்று சபதம் செய்ய மறுத்துவிட்டதாகச் செய்தி வந்தபோது, அவளுடைய துணிச்சல் பெரும் புரட்சியாகக் கருதப்பட்டது). உடலுறவும் சோர்வும் உடல் சோர்வடைந்திருக்கும்போது, வேறு உறவில் எப்படி நாட்டம் போகும்? சீக்கிரமே படுத்துத் தூங்கிவிடுவது தாராவின் வழக்கமாக இருந்தது. ‘ஏதாவது நடந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!’ என்று கூறிப்பார்த்தான் அகிலன். ‘வெளியிலும் வேலை, வீட்டிலும் வேலை. எப்பவும் களைப்பாக இருக்கிறது!’ என்று தாரா அலுத்துக்கொண்டாள். கனமான வேலைகள் அவனுடையது, சமையல் அவள் பொறுப்பில் என்று பிரித்துக்கொண்டார்கள். ‘வீட்டு வேலை மாறுதல் இல்லாமல், ஒரேமாதிரி இருக்கிறதே! இவ்வளவு சலிப்பைத் தருவதாக இருக்கும் என்று நான் நினைத்ததே கிடையாது!’ என்று ஆச்சரியப்பட்ட அகிலன் மனைவியைப் புரிந்துகொண்டான். ‘ஓயாமல் என்ன வேலை! இன்று வெளியில் போகலாம், வா!’ வாரத்தில் ஒரு நாளாவது அவர்கள் தனித்து வெளியில் போனதால், நெருக்கம் அதிகரித்தது. நண்பர்களுடனேயே காலத்தைக் கழிப்பவர்கள், முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்ளும் மனைவியிடம், ‘என் முகத்தையே பார்த்துப் பார்த்து உனக்குப் போரடிக்கவில்லை?’ என்று விளையாட்டுப்போல் கேட்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருப்பதால் ஏற்படும் சலிப்பைப் போக்க இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். புதிய இடங்களுக்குப் பயணம் செய்தால், மனம் புத்துணர்ச்சி அடையுமே! பேசும்போது கவனி வாய் திறந்து பழிக்காவிட்டாலும், சில செயல்கள் தாம்பத்திய உறவில் ஏமாற்றத்தை விளைவிக்கின்றன. மனைவி ஏதாவது சொல்லும்போது, நாளேடு, கைத்தொலைபேசி என்று ஏதாவது சாதனத்தில் மூழ்கி, ‘சொல்லு. காதில் விழுகிறது!’ என்பான் கணவன். இருந்தாலும், ஒருவர் பேசும்போது, கண்களைக் கவனித்துக் கேட்பது போலாகுமா? ஓருயிர், ஈருடல்? இது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாது. ஒவ்வொருக்கும் தனிப்பட்ட இலக்கு இருந்தால்தான் அவருக்கு நிறைவாக இருக்கும். இல்லாவிட்டால், எதையோ இழந்த உணர்வைத் தவிர்க்க முடியாது. இதற்காக, ஒரே குடும்பத்தில் இருக்கும் இருவர் வெவ்வேறு திசைகளில் பயணிக்க வேண்டுவது அவசியமில்லை. ஒருவரது தோற்றத்திலும் செய்கையிலும் மற்றவர் சிறிதளவு ஆர்வம் காட்டினாலே போதும். இப்போது வேண்டாம்! ‘நான் சொல்வதை நீ அப்படியே கடைப்பிடித்து நடக்க வேண்டும்!’ என்று கணவர் சொல்வாரோ என்று பயந்து, படித்த பெண்கள் தற்காலத்தில் திருமணம் என்றாலே அஞ்சுகிறார்கள். முப்பது வயதுக்குமேல்தான் மணமுடிக்க இசைகிறார்கள் – நிறைய நிபந்தனைகளுடன். அதில் முக்கியமானது – கணவரது பெற்றோர் அவர்களுடன் சேர்ந்து இருக்கக்கூடாது. ஏன் தனிக்குடித்தனம்? கூட்டுக்குடும்பத்தில், ‘நான் செய்த தவற்றை நீங்களும் செய்துவிடக்கூடாது!’ என்று ‘நல்ல மனதுடன்,’ எந்தச் சிறிய காரியத்தையும் எப்படிச் செய்வது என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருப்பார் ஒருவர். வயதும் அனுபவமும் இருப்பதாலேயே ஒருவர் தலைவராக முடியாது. அதைக் கேட்டு நடப்பவருக்கு ஆத்திரமும் குழப்பமும்தான் எழும். நாளடைவில் சுயமாக எதையும் செய்யும் ஆர்வமும் திறனும் அற்றுப்போகலாம். அவரவர் காரியத்தை முடிந்த அளவுக்குச் சுயமாகச் செய்தால்தான் நிறைவாக இருக்கும். உதவி தேவையென்றால் மட்டும் பிறரை நாடலாம். கல்யாணம் ஆனதால் மட்டும் ஒருவர் தன் தனிமனித சுதந்திரத்தை இழந்துவிட வேண்டுவதில்லை. அவ்வுணர்வு அளவு மீறினால்தான் பிரச்னை. உண்மையாக இருத்தல் ‘உண்மையைச் சொல். என் கதை நன்றாக இருக்கிறதா?’ அரும்பாடுபட்டு, ஒரு கதை எழுதி அது பிரசுரமும் ஆனபின், எழுத்தாளராகும் கனவுடன் பலரும் கேட்கும் கேள்வி இது. நானும் கேட்டேன், ‘நன்..றாக இருக்கு!’ என்று யார் கூறுவார்கள் என்று தேடி! ஒரு தோழி மாட்டிக்கொண்டாள். தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று புரிந்து, அவளும் ஆமோதித்தாள். ‘சும்மா சொல்றே!’ என்றாலும், பெருமையாகத்தான் இருந்தது. புகழவேண்டும் என்றுதானே அவளைத் தேடிப் பிடித்தேன்! ‘எப்பவோ வந்தமாதிரி இருக்கே!’ ‘நம்ப குடும்பத்திலே நடக்கறதையே எழுதியிருக்கா!’ என்றெல்லாம் நமட்டுச்சிரிப்புடன் உண்மையைச் சொல்பவர்களை நமக்குப் பிடிக்காமல் போகும். புள்ளி விவரங்கள், நாம் காண்பது, கேட்பது எதிலுமே உண்மை கிடையாது. நுண்கலைகளில் பொய் உண்டு. ஆனால், அவைமூலம் உண்மையை அறியலாம். கதை ஊர் சுற்றிப்பார்க்கவென்று தன் தூரத்து உறவினரான முரளியின் வீட்டுக்குப் போயிருந்தாள் பூரணி. போனவள் ஒரு மாத காலம் தங்கிவிட்டாள். அவளை எப்படிக் கிளப்புவதென்று முரளிக்கும், மனைவிக்கும் புரியவில்லை. வாக்குவாதம் நிகழ்ந்தது. ‘நான் என்ன ஹோட்டலா நடத்தறேன்! ஓயாம சமைக்க வேண்டியிருக்கு! நான் சமைக்கிறதிலேயும் ஆயிரம் லொட்டு லொசுக்கு!’ என்று மனைவி கத்த, ‘வந்தவளை எப்படிப் ’போ’ன்னு சொல்றது!’ என்று முரளி தயங்கினார். இதன் சம்பந்தமாக அடிக்கடி அவர்களுக்குள் தகறாறு எழுந்தது. ஒரு வழியாக அங்கிருந்து புறப்பட்ட விருந்தாளி பூரணி, பார்ப்பவர்களிடமெல்லாம், ‘பாவம், நம்ப முரளி! பெண்டாட்டி பிசாசு! எப்பவும் கத்தறா!’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். யாராவது அபூர்வமாக, ‘இதை ஏன் எங்கிட்ட சொல்றே?’ என்று முகத்தைச் சுளித்தால், ‘உண்மையைத்தானே சொல்றேன்!’ என்பாள் பூரணி. யாருக்கும் பயனில்லாத உண்மையை, பிறருக்குச் சங்கடம் விளைவிக்கும் உண்மையை, சொல்லாதிருப்பதே மேல். பூரணியிடம் ஒரு சமாசாரத்தையும் சொல்லக்கூடாது, ஒன்றைப் பத்தாக்கிவிடுவாள் என்ற பயம் அவள் உறவினருக்கு வந்தது. பொய்யைப் பரப்புகிறவர்கள் நீண்ட காலம் நிலைப்பதில்லை. நன்மை விளையும் என்றால், பொய்யே சிறந்தது. உடல் நிலை மோசமாக இருக்கும் ஒருவரைப் பார்த்து, ‘சீக்கிரமே குணமாகிவிடுவீர்கள்!’ என்று ஆறுதல் சொல்வதில்லையா, அதுபோல்தான். கதை நான் அடிக்கடி போகும் வாசகசாலையில் இருந்த காதரீனுக்கு முப்பது வயதுக்குள்தான் இருக்கும். சில சமயம், குழந்தைமாதிரி அன்புடன் பழகுவாள். பிற சமயங்களில் மரியாதை இல்லாது கத்துவாள். ஒரு முறை, என்னிடம் மன்னிப்பு கேட்கும் பாவனையில், “எனக்கு மனநிலை சரியில்லை. மருந்து சாப்பிடுகிறேன்,” என்றாள். சில மாதங்களுக்குப்பின், அவளுக்குப் பதில் அவ்விடத்தின் சொந்தக்காரி மேரிதான் இருந்தாள். “காதரீன் இல்லையா?” என்று கேட்டாள் புத்தகம் இரவல் வாங்க வந்த ஒருத்தி. “இப்போதெல்லாம் வருவதில்லை,” என்று பதில் வந்தது. காதரீனின் நிலைமை மோசமாகி, அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டார்கள் என்று எனக்குத் தெரியும். “இப்போ எங்கே வேலை செய்கிறாள்?” (தெரிந்து இவளுக்கு என்ன ஆகப்போகிறது!) “தெரியாது!” வெடுக்கென்று சொல்லிவிட்டு, “என்னிடம் சொல்லவில்லை,” என்று சமாளித்தாள் மேரி. மேரி உரைத்தது பொய்தான். ஆனாலும் உண்மையைச் சொன்னால் அவதூறு பேசுவதுபோல் ஆகிவிடாதா! அவள் செய்தது சரிதான் என்றே தோன்றியது. உண்மையே பேசுகிறாளாம்! காந்தி என்ற நினைப்பு! மன நிறைவுக்கு உண்மை அவசியம். உண்மை எப்போதும் ஒன்றுதான். மாறுவது கிடையாது. தனக்குத்தானே உண்மையாக இருப்பவர்கள் பிறரிடமும் உண்மைதான் பேசுவார்கள். இக்குணத்தால் நிறைய எதிரிகளைச் சந்திக்க நேரலாம். இருந்தாலும் அவர்கள் மாற விரும்புவதில்லை. இப்படியெல்லாம் அவதிப்பட்டுக்கொண்டு எதற்காக உண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் பலருக்கும் தோன்றிப்போகிறது. தம்மைப்போல் இல்லாதவர்களைப் பழிக்கிறார்கள். முகமூடி மனிதர்கள் தம்மைப்பற்றிய கசப்பான உண்மைகளை ஏற்க முடியாதவர்கள் பிறர் தம்மை எப்படி ஏற்பார்கள் என்பதற்கேற்ப நடக்கிறார்கள். அதாவது, மனிதருக்கு மனிதர் மாறுகிறார்கள்; வெவ்வேறு முகம் காட்டுகிறார்கள். அப்படிச் செய்தால்தானே பிறரது பாராட்டு கிடைக்கும்! கதை சங்கரின் இளமைக்காலம் பொறுக்க முடியாததாக இருந்தது. சிறு வயதிலிருந்தே, முடிந்தவரை வீட்டில் தங்காது, நண்பர்களுடன் பேசி, விளையாடுவதிலேயே கழிக்க ஆரம்பித்தான். அவன் போக்கிற்காகத் தந்தை தண்டிக்க, இன்னும் விலகிப்போனான். மகிழ்ச்சி என்றால் தெரிந்தவர்களுடன் ஓயாது, உரக்கப் பேசிச் சிரிப்பது என்று தோன்றிப்போயிற்று. பெரியவன் ஆனதும், தன்னைப்பற்றிச் சிறிதும் நினைக்க விரும்பாது, பிறருக்குத் தன் சக்திக்குமீறி உதவி செய்து, அவர்களது புகழ்ச்சியில் ஆறுதல் பெற்றான். ‘இவன் சரியான ஏமாளி!’ என்று பலரும் சங்கரைப் பயன்படுத்திக்கொண்டனர், ஏமாற்றினர். வருத்தம் மிகுந்தது. யாரையும் நம்ப முடியவில்லை. இருந்தாலும், அவனால் மாற முடியவில்லை. பிறரிடம் ஒருவர் பொய்முகம் காட்டிவருவது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுபோல்தான். தன்னையே புரிந்துகொள்ள முடியாது போய்விடும். இதனால் சுற்றி நடப்பவைகளையும் புரிந்துகொள்ள முடியாது போகிறது. அனுபவித்துச் செய்வது சமீபத்தில் ஒரு நடன நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அடிக்கடி எழுந்த கைதட்டல் பலமாக ஒலித்தாலும், என் முகத்தில் ஏன் மகிழ்ச்சியுடன் கூடிய புன்னகை வரவில்லை என்று யோசித்தேன். பிறரை எப்படிக் கவர்வது என்று யோசித்துச் செய்ததுபோல் இருந்தது. அதாவது, நாட்டியமணியின் அங்க அசைவுகள் அவள் மனத்தின் ஆழத்திலிருந்து வரவில்லை! காதலியின் பாவத்தைக் காட்ட, அவளாகவே மாறும் திறமை, முயற்சி, இருக்க வேண்டும். இதேபோன்று, இசை, நடிப்பு, எழுத்து எல்லாமே ஒருவர் அனுபவித்துச் செய்யும்போதுதான் பிறரிடமும் அதன் எதிரொலி எழும்பும். கதாபாத்திரமாக நம்மையே எண்ணிக்கொள்ளும்பொது அவர்களுடைய உணர்ச்சிகளை நடிப்பிலோ, எழுத்திலோ வடிக்க இயலுகிறது. நமக்கே உண்மையாக இருக்க ‘நான் ஏன் இப்படி இருக்கிறேன்?’ என்று கேட்டுக்கொண்டால், நமக்கு உண்மையான விடை கிடைக்கும். ‘எனக்கு ஏன் வருத்தமாக இருக்கிறது?’ என்று உங்களையே கேட்டுப்பார்த்தால், உங்களை எது பாதிக்கிறது என்று புரியும். என்றோ நடந்தது இன்னமும் உங்களைப் பாதித்தால், அதைத் தாண்டி வரும் துணிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். அறியாப்பருவத்திலிருந்தே பலவகைத் துயரங்களுக்கு ஆளாகியிருப்போம். காரணமில்லாமல் பெற்றோர் அல்லது ஆசிரியை தண்டித்தது, உறவினர் செய்த பாலியல் வதை, உற்ற நண்பரின் துரோகம் – இப்படி. நடந்து முடிந்ததை மாற்ற முடியாது என்ற நிலையில், தீமை இழைத்தவர்களை மன்னித்து, மறக்கலாம். ‘நான் என்ன, மகாத்மாவா?’ என்று கோபிப்பவர்களுக்கு: வேண்டாதவர்கள் நினைவை மானசீகக் குப்பை மேட்டில் சேர்த்துவிடலாம். அல்லும் பகலும் ஒருவரது நினைவு உங்களைக் கடுமையாகப் பாதித்தால் அதைப் போக்கும் வழி: பாறாங்கல்லில் அவரைக் கட்டி, கடலில் எறிந்துவிடுவதுபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள். மீண்டு வரமாட்டார். (இதெல்லாம் நான் எப்போதோ படித்து, பின்பற்றி, மனப்பாரத்தை இறக்கிவைத்த வழிகள்). அன்றாட வாழ்க்கையில் சுடுசொற்களாலும் செயல்களாலும் நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் பொறாமையால்தான் அப்படிச் செய்கிறார்கள். ‘நம் மீது குற்றம் இல்லையே,’ என்று தெளிந்தாலே போதும். அமைதி குன்றாது. இதேபோல், ‘மனம் லேசாக, மகிழ்ச்சியாக இருக்கிறதே, எப்படி?’ என்று கேட்டுக்கொள்வதும் நம்மை நாமே புரிந்துகொள்ள வழிவகுக்கும். நான் ஒரு முறை அப்படி கேட்டுக்கொள்ள, நான் ஆசையாக நட்டுவைத்த செடியின் கிளை பிழைத்து, அதில் துளிர் விட்டிருக்கிறதுதான் காரணம் என்று புரிந்தது. சிறு குழந்தை முதன்முதலாக முகம் பார்த்துச் சிரிக்கும்போது, தவழும்போது என்று எத்தனை மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகள் இல்லை நம் வாழ்வில்! இவைகளை விடுத்து, வேண்டாத நினைவுகளை ஏன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்! வித்தியாசமாக இருப்பவர்கள் ‘உங்கள் மகள் ரேவதி வகுப்பில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, எல்லாரும் எழுதி முடித்தபின், அவசரமாகத் தன் வேலையைச் செய்து முடிக்கப் பிரயத்தனப்படுகிறாள்!’ ஆரம்பப்பள்ளிப் பருவத்தில் தானும் அம்மாதிரி நடந்து ஆசிரியைகளிடம் திட்டு வாங்கியது நினைவுக்கு வந்தது தாய்க்கு. மகளிடம், ‘வகுப்பிலே இனிமே கவனி, என்ன?’ என்பதோடு நிறுத்திக்கொண்டாள். குழந்தைகளோ, பெரியவர்களோ, எங்கோ யோசனை நிலைத்திருக்க, பகல் கனவு காண்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு கற்பனை சக்தி அதிகம். ஒழுங்கீனமா? ஒழுங்குமுறை என்றால் சாமான்கள் எல்லாம் இருந்த இடத்தில் இருக்க வேண்டும், எடுத்தால் அதை அந்தந்த இடத்திலேயே திரும்பவும் வைக்கவேண்டும் என்று சிறு வயதிலேயே சொல்லிக்கொடுத்திருப்பார்கள். ஒருவரது மேசையில் எல்லா சாமான்களும் வைத்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தால், அவரைப்பற்றி அறியலாம். இவருக்குப் பத்திரமாக இருப்பது முக்கியம். இவர் செய்வது அனைத்தும் பிறர் ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் இருக்கும். ரேவதி போன்றவர்களுக்கு அப்படி நடப்பது மிகக் கடினம். ஏதெனில், புதிதாக ஒரு விஷயத்தைப்பற்றி யோசிக்கையில், ஒழுங்காக எந்தப் பொருளையும் எடுத்த இடத்தில் வைக்கவேண்டும் என்பது இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. இது புரியாது, பிறர் அவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பர். கதை தன் சகோதரி வீட்டுக்குப் போன அருணா எப்போதுமே புத்தகமும் கையுமாக இருப்பாள். சில நிமிடங்களே உள்ளே போய்விட்டு வரும்போது, அவள் படித்த இடத்திலேயே வைத்துப்போன புத்தகம் மறைந்திருக்கும். ‘புத்தகம் என்றால், அலமாரியில்தான் வைக்கவேண்டும். இது என்ன பழக்கம், நாற்காலியில் திறந்தபடி வைத்துவிட்டுப் போவது?’ என்று சகோதரி கடிந்துகொண்டாள். (அவளுக்குப் படிக்கப் பிடிக்காது என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா?) ஓயாது படிப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்து, பக்கத்தைப் பிரிப்பது நேரத்தை வீணடிக்கும் காரியம். சுவாரசியம் குன்றிவிடும். சிலர் அறைக்கு ஒரு புத்தகமாக வைத்துக்கூடப் படிப்பார்கள்! இம்மாதிரியானவர்கள் பிறரது அனுபவங்களிலிருந்து (அவை கதாபாத்திரங்களே ஆனாலும்) அவர்களிடமிருந்து புதிது புதிதாகக் கற்கிறார்கள். இதனால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாற முடிகிறது. ஞாபகசக்தி குன்றாது வளர்வதோடு, எந்த விஷயத்திலும் ஊக்கம் காட்ட முடிகிறது. இவர்களிடமுள்ள குறைபாடு தம்மைச் சுற்றிலும் நடப்பவைகளில் அதிகக் கவனம் செலுத்துவது இவர்கள் குணம். ஆகவே, அவசியமில்லாத ஒலிகளால் பாதிக்கப்படுகிறார்கள். பிறர் உணவருந்தும்போது, நாக்கை நீட்டிச் சாப்பிடுவது, விரல்களை நக்குவது, பெரிய ஒலியுடன் உறிஞ்சுவது ஆகியவை இவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். அதேபோல், பேனாவின் பின்புறத்தை அமுக்கி இடைவிடாத, ஒரேமாதிரியான ஓசை எழுப்புவது. சிந்தனையாளர்கள் பிறரைவிடச் சீக்கிரமாகவே படுக்கப்போய்விடுகிறார்கள். உடனே தூங்கி விடுவார்கள் என்பதில்லை. இரவில்தான் யாருடைய தொந்தரவும் இல்லாது எதையாவது யோசிக்க முடியும். அதனாலேயே பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவர்களாக விளங்குகிறார்கள். வாழ்வில் தினமும் எவ்வளவோ பிரச்னைகள், சிறியதும், பெரியதுமாக. ஒரு சாமானை எங்கே வைத்தோம் என்பதிலிருந்து, தினமும் பள்ளிக்கூடத்திற்கோ, அலுவலகத்திற்கோ நேரங்கழித்துப்போய், தண்டனை வாங்குகிறோமே என்பதுவரை நாம் மூளையைக் கசக்கிக்கொள்ள எவ்வளவோ நிகழ்வுகள். கதை மண்ணெண்ணை அடுப்பைப் பற்றவைக்க தீப்பெட்டி பயன்படுத்திய காலம் அது. அவசரத்திற்குக் கிடைக்காது எங்காவது மறைந்திருக்கும். ‘ஒவ்வொரு சாமானையும் தேடவே பாதி நாள் போய்விடுகிறது!’ என்ற ஆயாசம் எழுந்தது எனக்குள். அடுத்த முறை, ‘பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்!’ என்று ஞாபகமாகச் சொல்லிக்கொண்டேன். உரக்கவே. அது தேவைப்பட்டபோது, பாக்கெட் எங்கேயிருக்கிறது என்று சற்று யோசிக்க வேண்டியிருந்தது! வீட்டில் அணியும் சட்டையில் பாக்கெட் இருந்தது நினைவு வந்தது. ‘இங்கே வைக்கிறேன்!’ என்று இம்மாதிரி நாமே சொல்லிக்கொள்ளும் முறை எந்தப் பொருளையும் தேடி வீணடிக்கும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. முக்கியமாக, மூக்குக்கண்ணாடி. பிரச்னை சிறியதாக இருந்தாலும் குழப்பத்தை விளைவிக்கிறது. பெரிய பிரச்னையாக இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தீர்வு காணமுடியும். அவை என்னவென்று ஆராய்வது முதல் படி. கதை இடைநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த லீலா வழக்கமாக பள்ளிக்குத் தாமதமாகப் போவாள். தண்டனை: பள்ளி வளாகத்திலிருக்கும் குப்பைகளைப் பொறுக்கவேண்டும். ‘பலரும்தான் தாமதமாகத்தான் வருகிறார்கள்!’ என்று முதலில் அலட்சியமாக அத்தண்டனையை ஏற்றாலும், முதலாவது பாடமாக அமைந்த கணக்கு கற்பிக்கப்படுகையில் அவள் வகுப்பில் இருக்க முடியாமல் போயிற்று. அதனால் எதுவும் புரியவில்லை. உரிய நேரத்துக்குள் எப்படி வருவது என்று யோசித்தாள். தனக்குத் தோன்றிய வழிகளை எழுதினாள்: நேரம் கழித்து எழுந்திருப்பது தவறு. ஏன் சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை? பதில்: இரவு நெடுநேரம் தொலைகாட்சி அல்லது கணினி விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பதால். மிகுந்த பிரயாசையுடன் தன்னை மாற்றிக்கொண்டாள் லீலா. அப்படியும் நேரத்தோடு செல்ல முடியவில்லை. காலையில், அன்றைய பாட புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொள்ளவும், சீருடையை இஸ்திரி செய்யவும் சிறிது நேரம் செலவழிந்தது. ‘இவைகளை முதல் நாளே செய்துகொள்ளலாமே!’ என்ற எண்ணம் உதிக்க, அதன்படி நடந்துகொண்டாள். ஆனாலும் கணக்கில் வாங்கும் மதிப்பெண்களில் மாறுதல் இல்லை. “கணக்குப் பாடத்தை சரித்திரம்போல சும்மா படித்தால் போதாது. எழுதிப் பழக வேண்டும்!” என்று ஒவ்வொரு நாளும், ஆசிரியை வகுப்பில் கூறியதைக் கடைப்பிடித்தாள் லீலா. “போட்ட கணக்கைப் பார்த்து, அதை அப்படியே எழுதவேண்டும். அதன்பின், மேலெழுந்தவாரியாக அதை ஒருமுறை பார்த்தாலே போதும். விளங்கிவிடும். எளிதில் மறக்காது. அதன்பின், புத்தகத்திலுள்ள அதேபோன்ற பிறவற்றைப் போடுவது கடினமாக இருக்காது. விஞ்ஞானமும் இப்படித்தான்,” என்றெல்லாம் ஆசிரியை விரிவாகக் கூறியிருந்தார். பழக்கமில்லாமல் கடுமையாக உழைப்பதற்காக எவரும் சிலவற்றைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும். விளையாட்டு, நண்பர்களுடன் ஊர்சுற்றுவது அல்லது வெட்டிப்பேச்சு என்று எத்தனை இல்லை! ஆனால், எப்பவும்போல் தண்டனை பெறாது, நினைத்ததற்கு மேலாகவே கணக்கில் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் லீலாவின் வருத்தமெல்லாம் மறைந்தே போயிற்று. வீட்டிலிருந்து பள்ளிக்கு பேருந்தில் பயணம் செய்யும் சமயம் கண்களை மூடிக்கொண்டதால் அவளுடைய கண்களும் ஓய்வுபெற்றன. இப்படி ஒவ்வொரு பிரச்னைக்கும் பலவித தீர்வுகளை யோசித்து, அதில் சிறந்ததாகப்படுவதைப் பின்பற்றினால் சாதிக்கமுடியும். பிறரிடமிருந்து வித்தியாசப்படுகிறவர்கள் எல்லாரும் அஞ்சத்தக்கவர்களோ, தீயவர்களோ அல்லர். இவர்கள் கற்பனை மிகுந்தவர்கள். ‘ஏன் இப்படி இருக்கிறது?’ ‘இதை எப்படி எளிதாக்கலாம்?’ என்று பலவாறாக யோசித்து, குழப்பத்தை உண்டாக்கும் நடைமுறைக்குத் தீர்வு காண்கிறார்கள். சிலர் அவர்கள் காலத்தில் தமது வித்தியாசத்திற்காக கேலிக்கு ஆளாகி இருக்கலாம். அல்லது தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், தனக்குச் சரியென்று தோன்றிய பாதையிலிருந்து ஒருவர் வழுவாது இருந்ததால்தான் நிறைவு கிடைக்கும். வெற்றியும் அடையலாம். கணினியைக் கண்டுபிடித்தவரின் கதை தெரியும்தானே? அதிகாரம் எதற்கு? ‘அவனைப் பார்த்தால் இருபத்து நான்கு வயதுபோல் தெரியவில்லையே! சின்னக்குழந்தைமாதிரி அல்லவா நடந்துகொண்டான்?!’ ‘பாட்டியிடம் வளர்ந்த பிள்ளை அவன்!’ ‘ஓ! மேலே சொல்லாதீர்கள். புரிகிறது’. இந்த உரையாடலில் குறிப்பிடப்பட்ட இளைஞன் இந்திரன். அவனது நடத்தையைக் கண்டு அதிசயப்பட்டு என்னிடம் விசாரித்தவர் ஒரு மருத்துவர். பாட்டி, தாத்தாவைவிட எந்தக் குழந்தையும் மிகச் சிறியதுதான். அதற்காக, ‘பாவம், குழந்தை!’ என்று விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் இப்படித்தான் ஆகிவிடுகிறது. இந்திரன் தான் தனக்காகச் செய்ய வேண்டிய வேலைகளிலிருந்து தப்புவதற்காக நெளிந்து, குழைவான். பாட்டிக்கு மனம் இளகிவிடும். தானே அதைச் செய்துமுடிப்பாள். அவன் என்ன தவறு செய்தாலும், ‘சின்னப்பையன்! அவனுக்கு என்ன தெரியும்!’ என்று உடனே மன்னிப்பு கிடைத்துவிடும். இப்படி வளர்ந்தவனுக்கு பிறருடன் பழகத் தெரிநாது போயிற்று. எல்லாரும் அவனுக்கு விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தான். பிற சிறுவர்கள் அவனுடன் விளையாட விரும்பாது ஒதுங்கிப்போனார்கள். பதின்ம வயதில், இந்திரன் மனம்போனபடி நடக்க ஆரம்பித்தான். எது சரி, எது தவறு என்று தெரியவில்லை. யாரிடம் எப்படிப் பழகுவது என்று புரியாததால், ‘மரியாதை தெரியாதவன்!’ என்று பெயரெடுத்தான். அவனைப்போன்ற பிறரிடம் பழகி, தீய நடத்தை கொண்டவனாக மாற, ‘எவ்வளவு அருமையாக வளர்த்தேன்!’ என்று அவனுடைய பாட்டி வருந்தினாள், அதுதான் தான் செய்த தவறு என்று புரியாது. ஒருவன் பெரியவன் ஆனதும் எப்படி நடக்கவேண்டுமோ, அக்குணங்களைச் சிறு வயதிலேயே புகட்டவேண்டியது அவசியம். ‘நீ இப்படி நடந்தால், அவர்களுக்குப் பிடிக்காது,’ என்று பிறர் வீட்டுக்குப் போகுமுன்னர் அவனை யாரும் எச்சரித்து வளர்க்கவில்லை. ‘அங்கே உரக்கப் பேசக்கூடாது. அவர்கள் வீட்டுச் சாப்பாடு நன்றாக இல்லையென்றாலும் வாயைத் திறக்காதே! அரைமணிக்கொருமுறை, ’காப்பி!’ என்று அதிகாரம் செலுத்தாதே! கோபம் வந்தாலும் வெளியே காட்டாதே! மரியாதையாக இரு!’ என்று பலவாறாக அறிவுரை கூறப்பட்டு வளர்ந்த குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை கிடையாது. கதை ஒரு வயதாக இருந்த பேரனுடன் நான் எங்கோ போயிருந்தபோது, ஒருவர் என்னிடம், “நீங்க செல்லம் குடுத்துக் கெடுக்கறீங்களாக்கும்!” என்றார், விளையாட்டாக. உடனே, நான் தப்பாக நினைத்துக்கொள்ளப்போகிறேனோ என்று, “எங்க வீட்டில அப்படித்தான் நடக்குது!” என்று சேர்த்துக்கொண்டார். நான் சிரித்தபடி, “நானில்லை, என் பெண்தான் அப்படி நடக்கிறாள்,” என்றேன். பக்கத்திலிருந்தவரிடம், “Very strict teacher!‘(மிகவும் கண்டிப்பான ஆசிரியை) என்று சிலாகித்தார். தகுந்த வளர்ப்புமுறை இல்லாததால் எவரிடமும் மரியாதையற்று, அல்லது மிகவும் பயந்த சுபாவமாக ஆகிவிடுகிறார்கள் சிறுவர்கள். ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தம் குழந்தைகளும் பிறர் குறை கூறும்படி அம்மாணவர்கள்போல் ஆகிவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துவிடுகிறது. அதனால், அளவுக்கு அதிகமாகவே கண்டிப்பாக இருப்பார்கள்! ஆனால், எல்லா ஆசிரியைகளும் இப்படி நடப்பதில்லை. ’என்னைச் சிறுவயதில் மிகவும் கண்டிப்பாக வளர்த்தார்கள். பெரியவர்கள் முன்னால் நிற்பதற்கே நடுங்குவேன். அதனால், இப்போது என் மகளும் அப்படிக் கஷ்டப்படக்கூடாது என்று அவளை வளர்த்திருக்கிறேன்!’ என்பாள் கமாரியா. இதை அவள் பெருமையுடன் சொல்லவில்லை. ஏனென்றால், கடைசிக்குழந்தையான அவள் மகளுக்கு – அளவுக்கு மீறிய செல்லத்தினால், சுதந்திரத்தினால் – யாருக்கும் மரியாதை கொடுத்து நடக்கத் தெரியவில்லை. எதிர்த்துப் பேசுவாள். சக ஆசிரியைகளிடமிருந்து ஒரே புகார் வர, கமாரியாவுக்கு வருத்தம் மிகுந்தது. பெண்ணை எப்படி அடக்குவதென்றும் தெரியவில்லை. குழந்தைகள் ஒழுங்காக வளர சில வழிமுறைகளைச் சிறு வயதிலிருந்தே சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம். அவை: 1) நிலைமையைப் புரிந்து நடப்பது 2) உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது 3) பிரச்னைகள் எழுந்தால், அவைகளுக்குப் பொருத்தமான தீர்வைக் கண்டுபிடித்து, அதன்படி நடப்பது. இக்கட்டில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க எந்த வயதானாலும், ஒரு புதிய சூழ்நிலையில் பிறருடன் எப்படிப் பழகுவது என்று புரியவேண்டும். இருப்பினும், நம்மை அளவுக்கு மீறி துன்புறுத்துபவர்களின் தொடர்பை அறுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கதை நான் ஆசிரியப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, வள்ளி என்பவள், ‘நான் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறேன், மந்திரி எங்கள் குடும்ப நண்பர்,’ என்றெல்லாம் ஒரேயடியாக அலட்டிக்கொள்வாள். அவளைப்போலவே, சிற்றூரிலிருந்த வந்திருந்த சிலர் அவளைத் தலைவியாக ஏற்றனர். அவள் சொற்படிதான் எல்லாரும் நடக்கவேண்டும் என்று மிரட்டுவது அவள் வழக்கம். அந்த சர்வாதிகாரம் பிடிக்காது, நான் மட்டும் அவளிடமிருந்து விலகிப்போனேன். வள்ளிக்கு ஒரே ஆத்திரம். காரணமின்றி என்னிடம் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள். இறுதிவரை நான் பொறுமை இழக்காமல் அவளிடம் பேசியது அவளுடைய ஆத்திரத்தை அதிகப்படுத்த, ஒரு சமயம் ஒரேயடியாக இரைந்தாள். வேறொருவர் வந்து அவளை விலக்கும்படி நிலைமை மோசமாக ஆயிற்று! மனம்போனபடி எல்லாரையும் நடத்தலாம் என்று எண்ணி நடந்தது வள்ளி செய்த தவறு. உணர்ச்சிகளை அடக்கத் தெரியாததால் வந்த வினை. ஒருவருடைய நட்பு வேண்டுமானால் உதவிக்கரத்தை நீட்டினாலே போதுமே! அதிகாரமும் அலட்டலும் எதற்கு? இப்படி நடக்காமலிருக்க, சிறு வயதினரை பலர் கூடும் இடங்களுக்கு அழைத்துச் செல்கையில், ‘அவர் எப்படி சந்தோஷமா நடக்கிறார், பார்!’ ‘பொம்மையை அந்தக் குழந்தை எப்படி உற்றுப் பார்க்கிறது, வேறு எந்த நினைப்பும் இல்லாமல்!’ என்று எதிர்ப்பட்டவர்களைக் காட்டி விளக்குவது பிறரது உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும். “பதின்ம வயதினர் தம் வயதொத்தவர்களுடன்தான் வெளியில் போகப் பிரியப்படுகிறார்கள், அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நடப்பதால்தான் கெட்டுப்போகிறார்கள்!” பெரியவர்களின் புகார். இதைப்பற்றி நான் விசாரித்தபோது, ‘எங்கள் தந்தையுடன் வெளியில் போனால், அங்கே இங்கே திரும்பாமல், அவர் பின்னாலேயே நடக்கவேண்டும் என்கிறார்! அவரது பின்புறத்தையேதான் பார்த்தாகவேண்டும்!’ என்று அலுத்துக்கொண்டாள் ஒரு மாணவி. பிற மாணவ மாணவிகளும் அவளை ஆமோதித்துத் தலையாட்டினார்கள். ‘நான் சொல்கிறபடியே நட!’ என்று மிரட்டினால், முதலில் பயந்திருப்பவர்கள்கூட ரகசியமாக பெற்றோருக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வார்கள். அதற்காக தண்டித்தால் விவகாரம் முற்றும். அப்பா கத்த, மகனும் கத்த, செய்யக்கூடாத காரியத்தில் பற்று அதிகமாகிவிடும் அபாயம் உண்டு. கதை எட்டு வயது மகன் தாயின் சம்மதத்துடன் தன்னுடைய I pad-ஐக் கையில் எடுத்துக்கொண்டு, பெற்றோருடன் காரில் நீண்ட பயணம் செய்யப் புறப்பட்டான். சில நிமிடங்கள் கழித்து, “போதும் விளையாடியது. மூடு,” என்றாள் தாய். மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்த பையன் காதில் அது விழவில்லை. அவளுடைய குரல் ஓங்கிக்கொண்டே போயிற்று. அவனும் எதிர்த்துக் கத்தினான். தாய் ஒரேயடியாக மிரட்ட, “இந்தா!” என்று குரலில் வெறுப்புடன், அவள்மேல் தன் விளையாட்டுச்சாமானைத் தூக்கி எறிந்தான். “ஒனக்கு இருக்கு, வீட்டிலே!” என்று தாய் கறுவினாள். நாங்கள் சிலரும் காரில் இருக்க, பிறர்முன் மகன் தலைகுனிய வைத்துவிட்டானே என்ற அவமானம் அவளுக்கு. இந்தச் சூழ்நிலையை எப்படித் தவிர்த்திருக்கலாம்? ‘காரில் போகும்போது, ஆடும். வெகு நேரம் ஒன்றையே உற்றுப் பார்த்தால் தலை வலிக்கும். கண்ணும் கெட்டுவிடும்," என்று முதலிலேயே எச்சரித்துவிட்டு, ’இவ்வளவு நேரம்தான் பார்க்கலாம். நான் சொல்கிறபோது நிறுத்திவிட வேண்டும்,’ என்று ஒரு வரையறை வகுத்திருக்க வேண்டும். அவள் தெளிவாக, கண்டிப்பாக முதலிலேயே விளக்காது, தன்னை மகன் மதிக்கவில்லையே என்று ஆத்திரப்படுவது என்ன நியாயம்? ஒரு குறிப்பிட்ட செயலுக்கான தண்டனை எப்போதும் ஒரேமாதிரி இருக்கவேண்டும். சில முறை திட்டுவது, பல முறை அலட்சியம் செய்வது என்பது சிறியவர்களைக் குழப்பத்திற்குத்தான் ஆளாக்கும். உடற்குறையுள்ள குழந்தைகளையும் இதே கண்டிப்புடன் வளர்ப்பதுதான் சரியான முறை. பரிதாபப்பட்டு, அல்லது குற்ற உணர்ச்சியுடன், அவர்கள் என்ன செய்தாலும் வளர்ப்பவர்கள் பொறுத்துப்போகலாம். வளர்ந்தபின், உலகமும் அவர்களை அப்படி நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? உதவினால் உற்சாகம் வரும் ‘வயதாகிவிட்டதா! ஒரே மறதி!’ பலரும் அலுத்துக்கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். ஓர் அறைக்குள் சென்று, அல்லது ஐஸ்பெட்டி அருகே போய் நின்று, அங்கே எதற்காக வந்தோம் என்று மறந்து நிற்பது வயோதிகர்களுக்கு சகஜம். இது ஒன்றும் பெரிய வியாதி இல்லை. நாற்பது வயதுகூட ஆகாத சிலர்கூட ஒரே இடத்தில் ஒன்றும் செய்யாது உட்கார்ந்திருந்தால் ஏதோ பெரிய பதவியிலிருப்பதுபோல் எண்ணிக்கொள்வார்கள். மூளையும் மந்தமாகிக்கொண்டே போகும். மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தால்தானே அது சுறுசுறுப்பாக இயங்கும்? வேலை என்றால் கையால், காலால் செய்வது மட்டுமில்லை. கையால் ஒரு சாமானை எடுக்க வேண்டும் என்றால், மூளைதானே அதற்கு அந்தக் கட்டளையை இடுகிறது? ஐம்புலன்களுக்கும் பயிற்சி கொடுத்துக்கொண்டே இருப்பது மூளைக்குப் பயிற்சி கொடுத்ததுபோல்தான். சில கலாசாரங்களில், எந்த நற்காரியத்தையும் வலது கையால்தான் செய்யவேண்டும் என்று சிறு வயதிலிருந்தே பழக்கியிருப்பார்கள். ஒரு பூட்டையோ, கதவையோ திறக்க அவ்வப்போது இடதுகையையும் பழக்கினால், அதுவே மூளைக்கு ஓர் உந்துதலாக ஆகிறது. கதை ‘நான் வலது கையை மட்டும்தான் உபயோகிப்பேன்! ஒரு கோப்பையைக்கூட இடக்கையால் தூக்க முடியாது’ என்று சிறு வயதில் நான் பெருமை கொண்டிருந்தேன். எல்லாம் வலக்கரத்தின் மகிமையைப் பிறர் சொல்லக் கேட்டதால்தான்! ஆனால், நீந்தக் கற்கும்போது அப்பழக்கத்தால் அனர்த்தம் விளைந்தது. உடல் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. மிகவும் பிரயாசைப்பட்டு இடது கையைச் சுழற்ற வேண்டியிருந்தது. சில நாட்களிலேயே, ‘நீந்தினால் சுறுசுறுப்பு வருகிறதே!’ என்ற ஆச்சரியம் எழுந்தது. மூளைக்குப் பயிற்சி கொடுக்கிறோம் என்பது அப்போது புரியவில்லை. நீச்சல் மட்டுமின்றி, நடைப்பயிற்சியும் மூளையைச் சுறுசுறுப்பாக்கும். வயோதிகர்கள் பூங்காவிலோ, கோயிலிலோ, கடைவீதிகளிலோ தம்மை ஒத்த பிறருடன் உரக்கப் பேசி மகிழ்வதைப் பார்க்கலாம். ‘சாயந்திரம் ஆனா, எங்க வீட்டுக்காரர் ஒரு கைத்தடியோட வாக்கிங் போயிடுவார்!’ என்று ஏளனமாக ஒரு மூதாட்டி சொன்னார். நடப்பது, பிறருடன் பேசுவது இரண்டுமே மன இறுக்கத்தைக் குறைக்கும் என்று அவருக்குப் புரியவில்லை. உடல் உபாதைகளைப்பற்றியோ, ‘இனி என்ன இருக்கிறது! நம் காலம் முடிந்துவிட்டது!’ என்றோ நினைத்து வருந்தாது, ஆக்ககரமாக நடக்கிறாரே என்று மகிழ்ச்சிகொண்டிருக்கலாமே! உட்கார்ந்த நிலையில் காலை ஆட்டுவது படிக்கவோ, கணினிமுன் உட்கார்ந்து விளையாடவோ ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் காலை ஆட்டியபடி தம் வேலையைக் கவனிப்பார்கள். ‘இது என்ன கெட்ட பழக்கம்?’ என்று திட்டு வாங்கினாலும், அவர்கள் அப்படியே செய்துகொண்டிருப்பார்கள். இயல்பாகவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, புத்தகம் படிப்பது, காலுக்குப் பயிற்சி கொடுப்பது அனைத்துமே மூளையை அயராது வேலை செய்ய வைக்குமென்று. இப்பழக்கத்தால் ஞாபகசக்தி பெருக வாய்ப்பிருக்கிறது. குறிப்பிட்ட இடத்துக்கு அனுதினமும் ஒரே வழியில் நடக்காது, வெவ்வேறு வழிகளில் நடக்க முயற்சித்தால், சிறிது யோசிக்க வேண்டியிருக்கும், அல்லவா? அதுவும் கற்பனை சக்தியையும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றலையும் பெருக்குகிறது. ’உங்கள் நாட்டிலிருந்து வரும் நகைகள் எப்படி அவ்வளவு துல்லியமான வேலைப்பாடுடன் அமைந்திருக்கிறது? என்று நான் கேட்டபோது, என் கொரிய நண்பர் தெரிவித்த செய்தி: சாப்பிடும்போது, ஓரிரு அங்குல நீளமே கொண்ட மிகச் சிறிய “சாப் ஸ்டிக்” பயன்படுத்துவார்களாம் அந்நாட்டவர்கள். அதனால் அவர்கள் நுண்ணிய கைவேலைகளில் சிறந்திருப்பார்கள். கை, கால், கண் ஆகியவை மூளையை சுறுசுறுப்பாகவே வைத்திருக்க வழி செய்கின்றன. சரி, பிற புலன்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது? ‘மூக்கிற்கும், நாக்கிற்கும் பயிற்சியா!’ என்று அயர வேண்டாம். கண்ணை மூடிக்கொண்டு, இன்னொருவரை உங்கள் மூக்கின் அருகே ஒரு சாமானை, அல்லது உணவை கொண்டுவரச் சொல்லுங்கள். அது என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா? (பள்ளியில், விஞ்ஞான பாடத்தின்போது இந்தப் பரிசோதனையைச் செய்யச் சொல்வதுண்டு). எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் தேகப்பயிற்சி ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. காலையில், அன்றைய தினப் பாடங்கள் ஆரம்பிக்குமுன்னர் யோகா கற்றுக்கொடுப்பதும் உண்டு. மூளை சுறுசுறுப்பாக, எவ்வித இறுக்கமுமின்றி இயங்க, மாணவர்கள் தூங்கி வழியாமல் இருக்கத்தான் இப்பயிற்சிகள். இதன் முக்கியத்துவம் புரியாது, பலரும் அரைமனதுடன் ஈடுபடுவார்கள்! “நான் ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தபோது, மாணவர்கள் ஒளிந்துகொண்டு விடுவார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவே நேரம் போய்விடும்!” என்று என் சக ஆசிரியர் ஒருவர் அயர்ச்சியுடன் கூற, எல்லாரும் சிரித்தோம். வயது முதிர்ச்சியால் உபாதைகள் அறுபது வயதுக்குமேல், பெண்மணிகளுக்கு ஆர்தரைடிஸ் வருகிறது. இடுப்பு, முழங்கால், பாதம் எல்லாவற்றிலும் வலி உயிர் போகும். ‘நான் குண்டாகக்கூட இல்லை. இருந்தாலும் காலில் பொறுக்க முடியாத வலி!’ என்று புலம்பிப் பயனில்லை. நாம் அதிகம் பயன்படுத்தாத, அல்லது மிகையாகப் பயன்படுத்தும் எந்தப் பாகமும் விரைவில் வலுவிழந்துபோகும். இள வயதினர்களாக இருந்தாலும், கணினிமுன் நீண்ட நேரத்தைக் கழிப்பவர்களுக்கு தோள் மற்றும் மணிக்கட்டில் பொறுக்க முடியாத வலி ஏற்படுகிறது. அந்தந்த பாகங்களுக்கு உரிய பயிற்சி உண்டு. ‘பள்ளி நாட்களிலேயே நான் உடற்பயிற்சி என்றால் ஓடி ஒளிவேன். இப்போது யார் செய்வார்கள்!’ என்பவர்களுக்கு விமோசனமே கிடையாது. வலியால் மன இறுக்கம் அதிகரிக்க, வலியை மறக்க, தங்களுக்குக் கீழ் இருக்கும் அபாக்கியவான்களை ஓயாமல் சாடுவது என்ன நியாயம்? இசையைச் செவிமடுப்பதன்மூலம் அமைதியை நாடலாம். நம்மைச் சிரிக்கவைக்கும் திரைப்படங்கள், புத்தகங்கள் ஆகியவைகளும் அமைதியை அளிக்கவல்லன. தனிமையில் இனிமை காண முடியாதவர்கள் பிறருடன் கலந்து பழக, வாழ்க்கையில் பிடிப்பு வரும். சமீபத்தில் ஒருவர் தினசரியில் எழுதியிருந்தது: ‘நான் மன இறுக்கத்தால் அவதிப்பட்டேன். பிறருக்கு உதவி செய்தால், அது குறைந்துவிடுகிறது. ’நம்மாலும் பிறருக்கு உதவி புரிய முடிகிறதே!’ என்று உணரும்போது, மனம் உற்சாகமாகிவிடுகிறது’. உடற்பயிற்சியா, உதவியா? இரண்டுமே அவசியம்தான். உடல் திடகாத்திரமாக இருந்தால்தானே பிறருக்கு உபத்திரவம் அளிக்காது, உதவியாக இருக்க முடியும்? பழகத் தெரியவேண்டும் “எனக்குப் பல பெண்களுடன் நட்புடன் கூடிய தொடர்பு இருந்தது. ஆனால், எதுவுமே கல்யாணத்தில் முடியவில்லை!” என்று ஏக்கத்துடன் கூறினார் ஒருவர். பிறருடன் சரியான முறையில் பழகத் தெரியாததுதான் காரணம். ‘வாழ்நாள் முழுவதும் இப்படி ஒருவருடன் கழிக்க முடியுமா!’ என்று அயர்ந்தே பெண்கள் இவருடன் நீண்டகாலத் தொடர்பு வேண்டாமென ஒதுக்கியிருப்பார்கள். வெற்றிகரமான உறவுகள் அமைய வேண்டுமானால், பிறருடன் எப்படிப் பழகுவது என்று சிறுவயதிலிருந்தே போதிப்பது அவசியம். மூன்று வயதுக் குழந்தையிடம், ‘வணக்கம் சொல்லு!’ என்று சொல்லிக்கொடுப்பதில் ஆரம்பிக்கிறது இப்பழக்கம். ‘அப்பாவின் கையைமட்டும் குலுக்குகிறாரே!’ என்று தானே வலியப்போய் கையை நீட்டும் குழந்தை கலகலப்பானவனாக, பிறர் மெச்ச வளரும். ஏழு வயதானாலும், தாயின் பின்னால் ஒரு சிறுவன் ஒளிந்துகொண்டால் எங்கோ பிழை. “வெளியில் வந்தால் வெட்கப்படுவான்!’ என்று அவனை ஆதரித்துப் பேசும் பெற்றோர் அவனுக்கு நன்மை செய்வதில்லை. கதை “எனக்கு எப்படிப் பேச வந்தது?” என்று ஆச்சரியப்பட்டாள் நான்கு வயதான லதா. “நாங்கள் உன்னுடன் பேசுவதைக் கேட்டு, தானே வந்துவிட்டது”. இந்த விளக்கத்தைக் கேட்டபின், லதா எங்கு போனாலும் தன் ’லேடி பொம்மை’யை எடுத்து வருவது வழக்கமாகப் போயிற்று. போகும் வழியில் அதனுடன் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பாள். “என்ன செய்யறே?” என்று யாராவது கேட்டால், “நான் பேசினா, அப்புறம் என்னோட பொம்மையும் என்கூட பேசும்!” என்று பதிலளித்தாள் சிறுமி. நமக்கு வேடிக்கையாக இருந்தாலும், அந்த வயதில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. அடுத்த வருடம் அதை மறந்துவிட்டாள். வயதாக ஆக, குழந்தைகளின் தன்மையும் மாறுகிறதே! கதை நான்கு வயதான பாபு அவனுடைய இரண்டு வயதுத் தங்கையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவான். ஆண்பிள்ளை. அதிலும் வயதில் பெரியவன். நிச்சயம் அவன்தான் வெற்றி பெறுவான் என்று ‘பந்தயத்தை’ நடத்திய தந்தைக்குப் புரிந்துவிட்டது. “தங்கை, பாவம், சின்னக்குழந்தை! அவள் முதலில் ஓட ஆரம்பிக்கட்டும்,” என்று தந்தை சொல்ல, ஏற்றுக்கொண்டான் பாபு. அவள் பாதி தூரம் போனதும், “இப்போ நீ ஓடு!” என்று பச்சைக்கொடி காட்டப்பட்டது. இருவரும் ஒரே சமயத்தில் இறுதிக்கட்டத்தில் வர, “இரண்டுபேருக்கும் வெற்றி!” என்று தந்தை மகிழ்ச்சியுடன் கூவினார். சற்று விழித்துவிட்டு, பாபுவும் அதை ஏற்றுக்கொண்டான், அப்பா சொன்னால் சரியாகத்தான் இருக்குமென்று. தினமும் பாபுவுடன் உட்கார்ந்து விளையாடுவாள் அவன் தாய். ‘இரு. இப்போது நான் ஆடவேண்டும். அப்புறம் நீ!’ என்று காத்திருக்க வேண்டிய அவசியத்தை மறைமுகமாக உணர்த்தினாள். பாலர் பள்ளியில் சேர்ந்தபோது, “என் மேசைக்கு வந்து கலர் பென்சில்களை எடுத்துப் போங்கள்,” என்று ஆசிரியர் அறிவித்தபோது, பாபு மட்டும் முண்டியடித்துக்கொண்டு ஓடவில்லை. “ஜெண்டில்மேன்!” என்று ஆசிரியர் புகழ்ச்சியாகச் சொன்னதன் அர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை. ஏதோ பாராட்டுகிறார் என்றவரை புரிந்தது. “நீ என்ன செய்தாய்?” என்று வீட்டில் கேட்டபோது, “Wait my turn!” என்றான். இப்படி வளரும் குழந்தைகள் சிறுபிள்ளைத்தனமாக பிறருடன் போட்டி போடுவது கிடையாது. சிறு வயதிலேயே விட்டுக்கொடுத்துப் போவார்கள். இதனாலேயே பல நண்பர்கள் வாய்ப்பார்கள். பெற்றோருக்கு ஒரே குழந்தையாக வளர்பவர்களுக்கு பிறருக்கு விட்டுக்கொடுக்கும் அவசியம் இருப்பதில்லை. இதனாலேயே நல்ல நட்பை இழக்கக்கூடும். கதை சகோதரர்கள் இருவர் ஒற்றுமையாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அடுத்த வீட்டிலிருந்த பையன் அவர்களைவிட சற்றே சிறியவன். அவனும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வரும்போது, “சீக்கிரம் ஆரம்பி. அப்போதான் பாதி விளையாட்டிலே சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லலாம்,” என்று பெரியவன் கூற, இருவர் மட்டுமே அவசரமாக விளையாட ஆரம்பித்தார்கள். “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? பாவம்!” என்று நான் பரிதாபப்பட, “அவன் தப்பு தப்பா ஆடுவான். ஆனா, அவன் செய்யறதுதான் சரின்னு சண்டை பிடிப்பான், அழுவான்!‘என்று பதில் வந்தது. இவர்களுக்குச் சண்டை போட்டுப் பழக்கமில்லை. எல்லோருடனும் மரியாதையாகப் பழகவேண்டும் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. மரியாதையாகப் பேசுவது பெற்றோரோ, வயதின் மூத்தவர்களோ மரியாதையாகப் பேசினால், குழந்தைகள் தாமே அப்படி நடப்பார்கள். நாம், ’Please," என்று ஒரு வேலை சொல்லி, அதைச் செய்து முடித்த சிறுவனிடம் ’thank you," என்று தவறாமல் நன்றி கூறினால் அவனுக்கும் அந்தப் பழக்கம் தன்னையுமறியாமல் வந்துவிடும். ’நான் பெரியவன்! ஒரு குழந்தைக்கு நன்றி சொல்வதா!’ என்ற மனப்பான்மை பெரியவர்களுக்கு இருந்தால், எப்படி குழந்தைகளுக்கு நற்புத்தி புகட்டுவது? நம்மைப்போல்தானே பிறரும்? தன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது சிறுபிள்ளைகளின் இயல்பு. ஆறு அல்லது ஏழு வயதில் பிறரது உணர்ச்சிகளும் புரியவேண்டும். புரிய வைக்கவேண்டியது பெற்றோரின் கடமை. புத்தகங்கள் படிக்கும்போதும், திரைப்படங்கள் படிக்கும்போதும் தென்படும் பாத்திரங்களைத் தாமாகவே பாவிக்கும்போது, பிறருடைய உணர்ச்சிகள் புரிந்துபோகும். மாறுபட்ட கருத்துக்களையும் ஏற்கும் பக்குவம் உண்டாகும். புதிய இடங்களுக்குப் போகும்போது பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் குழந்தைகளுடன் அப்படி எங்காவது செல்லும்போது, அவன் வயதொத்த குழந்தைகளுடன் பழக வழி செய்யலாமே! ”ஹலோ!" என்ற புன்சிரிப்புடன் ஆரம்பித்தாலே போதும். இன்னொருவர் மகிழ்ச்சியுடன் பேசுவார். ‘நீ எங்கிருந்து வந்தாய்? என்ன படிக்கிறாய்?’ என்று பேச்சை வளர்த்தினால், நட்பு வளரும். ஒன்றாகப் பிரயாணம் செய்யும்போது, ‘இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கிறது!’ ‘இங்கு எல்லாரும் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்!’ என்று பொதுப்படையாகப் பேசுவது பிறரை நம் பால் ஈர்க்கும். புறம் கூறலாமா? எட்டு வயதானபோது, “ஐயே! இவள் என்ன மாதிரி டீச்சர்!” என்று தன் வகுப்புத்தோழிகள் ஏளனமாக ஓர் ஆசிரியைப்பற்றிக் கூறுவதாக என்னிடம் தெரிவித்தாள் என் மகள். “ஒரு டீச்சரைப் பார்த்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது,” என்று கண்டித்தேன். “நான் சொல்லலே. மத்த பொண்கள்தான்,” என்றாள் அழுத்தமாக. புறம் கூறினால், பிறர் நம்மைக் கவனிப்பார்கள் என்று தோன்றிப்போகும் பலருக்கும். இது கீழ்த்தரமான புத்தி. “அதைத் திரும்பக்கூடச் சொல்லாதே. ஒங்கம்மாவும் டீச்சர். என்னைப்பத்தி மத்தவா அப்படிப் பேசினா ஒனக்கு எப்படி இருக்கும்?” என்றேன் சூடாக. இருப்பினும், புறம் கூறுவதுகூட சில சமயங்களில் நன்மை பயக்கலாம். எப்போதென்றால், ஒருவரின் செய்கையால் அவருக்கோ, பிறருக்கோ தீங்கு விளையக்கூடும் என்னும்போது. கதை ஆரம்பப்பள்ளியில் படித்துவந்த சங்கர் பேரங்காடிகளுக்குச் சென்று ரப்பர், பென்சில் போன்ற சிறு சாமான்களை நோட்டமிடுவதுபோல் அபகரித்துவிடுவான். அவைகளைத் தன்னுடன் படிக்கும் பிற பையன்களுக்குக் கொடுப்பான். அவனுக்கு அப்பொருட்கள் தேவையே இல்லை. ஆனால், சாமர்த்தியமாக கடைக்காரர்களை ஏமாற்றுகிறோம் என்ற பெருமைக்காக அப்படிச் செய்துவந்தான். கோபி என்ற அவனுடைய சகமாணவன் தன் தாயிடம் விஷயத்தைச் சொல்ல, அவள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தாள். நடந்தது தவறு என்று தெரிந்து, அதை நிறுத்த அச்சிறுவன் எடுத்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. நட்பு நிலைக்க வேண்டும் என்பதற்காக அநீதிகளைப் பொறுத்துப்போக வேண்டியதில்லை. யாரை ஒதுக்கலாம்? பிறருடன் பழகுவது நல்ல குணம் என்றாலும், சிலரை விலக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான், ‘புதிய இடத்தில் முன்பின் தெரியாதவர்களிடம் உன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்காதே!’ என்று குழந்தைகளைப் பழக்குகிறோம். ஆகாயவிமானத்தில் தனியாகப் பயணம் செய்யும் இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தால், பராமுகம்தான் பதிலாகக் கிடைக்கும். ‘புதியவர்களை நம்பாதே!’ என்று அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியிருப்பார்கள்! முதல் முறையாகச் சந்திக்கும்போதே நம்மிடம் மிகுந்த நட்புடன் இனிமையாகப் பேசுகிறவர்களிடம் கவனமாக இருத்தல் நலம். நான் தனிப்பிறவி… நீயும்தான்! அன்பாக வளர்க்கப்படும் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர்கிறார்கள். பிறரிடம் அன்பாக அவர்களால் நடக்க முடிகிறது. பெற்றோர் சொல்வதைக் கேட்டு நடந்தால் நற்பெயர் எடுக்க முடியும் என்று அவர்களுக்குத் தோன்றிப்போகிறது. சற்றே பெரியவர்களானதும், பிறரது எதிர்பார்ப்பின்படி நடந்தால்தான் அவர்களுக்கும் நம்மைப் பிடிக்கும் என்று அதன்படி நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், பலர் பாராட்டினாலும், மனத்துள் ஒரு வெறுமை. ஏனென்றால், அவர்கள் தமக்குப் பிடித்ததுபோல் நடக்கத் தவறிவிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன உகந்தது என்றே அறியாது நடக்கிறார்கள். ‘நீ என்ன, இப்படி இருக்கிறாயே!’ என்று வித்தியாசமாக இருப்பவரைப் பிறர் கேலி செய்வார்கள். அவர்களை அலட்சியம் செய்வதுதான் சிறந்த வழி. ஏன் இப்படி இருக்கிறோம் என்று அனைவருக்கும் விளக்க வேண்டுவதோ, ‘ஏனோ இப்படி ஆகிவிட்டேன்!’ என்று வருந்துவதோ வேண்டாத காரியம். பெரும்பாலும் இளைய வயதினர்தாம் பிறர் ஏற்க மாட்டார்களோ என்ற அச்சத்தால் கண்மூடித்தனமாக மற்றவர்களைப் பின்பற்றுவார்கள். தமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, எங்காவது கிரிக்கெட் பந்தயம் நடக்கும்போது, அதைப்பற்றி விவாதிப்பார்கள் கல்லூரி மாணவிகள். எதுவும் புரியாவிட்டாலும், அல்லது ஆர்வம் இல்லாவிட்டாலும் கலந்துகொள்ள வேண்டும். வகுப்பிற்கு மட்டம் போட்டாவது வானொலியில் வர்ணனையை ரசித்துக் கேட்பார்கள். பிரபல நடிகர் அஜித் ஒரு படம் முழுவதிலும் வேஷ்டி அணிந்து நடிக்க, பண்டிகைக்கு எல்லா இளைஞர்களும் வேஷ்டி வாங்கினராம்! ‘புகழ்பெற்ற திரைப்படத்தில் கதாநாயகி இந்தமாதிரி புடவையைத்தான் அணிந்திருந்தாள்!’ என்ற விளம்பரத்துடன் விற்பனைக்கு வரும் புடவைகளுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. பிறரைப் பின்பற்றி நடந்தால் தம்மை யாரும் பழிக்க மாட்டார்கள், சங்கடம் எதுவும் வராது என்று அதிகம் யோசியாது எதையும் செய்பவர்கள்தாம் காப்பி அடிக்கிறார்கள். பிரபலமானவர்களின் உடையையோ, தலையலங்காரத்தையோ பின்பற்றினாற்போல், நாம் பிறர்போல் சிறந்துவிட முடியுமா? ‘புடவை அழகாக இருக்கிறதே!’ என்று வாங்குவது வேறு. ‘எல்லாரிடமும் இருக்கிறது. நான் மட்டும் வாங்கக்கூடாதா?’ என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமான போட்டி. இதைத் தவிர்க்க, ‘பிறர் கூறுவது எதையும் ஏற்காது எதிர்த்தால்தான் வெற்றி பெறலாமா?’ என்று யோசனை போனாலும் ஆபத்துதான். நம் குணத்திற்கும் திறமைகளுக்கும் எது உகந்தது என்று புரிந்து நம்பகமான பிறரது அறிவுரையை ஏற்பதே சிறந்தது. நம்மை எதற்காகப் பழிக்கிறார்களோ, அதுவே வெற்றிக்கு வித்தாகலாம். கதை என் பதின்ம வயதில், என் பாட்டி என்னை ‘நோணாவட்டம்’ என்று பழிப்பார். இயற்கையாகவே, எதிலும் என்ன குறை என்று உடனே என் யோசனை போய்விடும். அதை எப்படித் தீர்ப்பது என்று கேட்டால் அதற்கும் பதில் தயாராக இருக்கும். (இக்குணம் ஆசிரியர்களுக்கும் விமரிசகர்களுக்கும்தான் ஏற்றது). என் மாமி ஒருத்தர் மிகச் சுமாராகச் சமைப்பார். விடுமுறை காலங்களில், நாத்தனார்களும் மைத்துனர்களும் கேலி செய்யப்போக, வெட்கமும் பயமும் எழுந்தன. ஒவ்வொரு நாளும் ரகசியமாக என்னைச் சமையலறைக்குக் கூப்பிட்டு அனுப்புவார். நான் ஒவ்வொன்றையும் ருசி பார்த்து, ‘சாம்பாரில உப்பு அதிகம்! ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து, கொஞ்சம் கொதிக்க விடுங்கள்,’ ‘வெண்டைக்காய் (பயத்தங்காய்) பொரியலில் எண்ணை அதிகம். கொஞ்சம் ஓட்ஸ் போட்டு வதக்குங்கள்,’ என்று பலவாறாகக் கூறுவேன். பிற்காலத்தில், இந்திய பாரம்பரிய இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் விமரிசகராக இருக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். ‘நான் எழுதுவது blunt ஆக இருக்கும்,’ என்று மறுத்தேன், சிரிப்புடன். ‘இல்லை. நீ honest!" என்று வற்புறுத்தினாள் கலைப்பகுதியின் ஆசிரியை. குறைகாணும் தன்மைகூட சில சமயங்களில் உபயோகமாகிவிடுகிறது. பிறர் ரசிக்கிறார்களே என்று எல்லாரையும்போல பாராட்டிவைத்தால் கலைஞர்கள் எப்படி முன்னேறுவார்கள்? காற்றின் எதிர்த்திசையில் பறக்கும் பட்டம்தான் உயரத்திற்குச் செல்ல முடிகிறது. எதிர்ப்புகள் வரலாம். அவைகளைக் கண்டு மனம் தளராது இருப்பதுதான் வெற்றிக்கு வழி. ஒரு சிறுவனுக்குச் சற்று விவரம் புரிந்ததும், பெற்றோர் கூறுவதை அப்படியே கடைப்பிடிக்காது, தன் எண்ணம்போல் செய்ய முயற்சிக்கும்போது தடை விதிக்காது, அல்லது கேலி செய்யாது இருந்தால் தன் திறமையில் அவனுக்கு நம்பிக்கை எழும். அவன் செய்ததில் வெற்றி கிடைக்கிறதோ, இல்லையோ, சுயமாக யோசிக்கும் திறனைப் பெறுகிறான். குழப்பம் வரும்போது, எங்கே தவறு நேர்ந்தது என்று அவனுடன் அலசலாமே! மாறாக, ’நீ இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படி இருக்கக்கூடாது!’ என்று ஒவ்வொருவர் கூறுவதையும் கேட்டு நடந்தால், சுயபுத்தியை உபயோகிக்கும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. பிறர் ஒப்பாததால் நாம் செய்வது தவறு என்றாகிவிடாது. பிறருக்கு நம்மைப் பிடிக்கலாம். ஆனால் நமக்கே நம்மைப் பிடிக்காமல் போகும் அவல நிலை வரலாமா? ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போதே அது மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தாழ்வு மனப்பான்மைக்கு வித்தாகிவிடும். ஒரு வெற்றி அடைந்தவுடனேயே அடுத்து என்ன சாதிக்கலாம் என்று வெறி பிடித்து அலையாது, அவ்வப்போது சிறிது ஓய்வு பெறுவது அவசியம். எப்படிச் செய்தால் வெற்றி அடைய முடிகிறது, ஏன் சுணக்கம் ஏற்படுகிறது என்று அவ்வப்போது அலசுவது நன்று. தவறு இழைத்துவிட்டோமா? அதனால் என்ன! நாம் என்ன, கடவுளா, தவறே செய்யாதிருக்க! ‘இதை எப்படி செய்து முடிக்கப்போகிறோம்!’ என்று மலைக்காது, ஒரு காரியத்தில் ஈடுபடுவதே உற்சாகத்தை அளிப்பதாக இருந்தால் என்றாவது வெற்றி கிட்டும். வாழ்வில் மகிழ்ச்சி இல்லாது போவதற்கு போட்டி, பொறாமை, தன்னிரக்கம் ஆகியவை முக்கிய காரணங்கள். ‘எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!’ ‘கலிகாலத்திலே நல்லவர்கள்தான் அதிகமாகக் கஷ்டப்படுவார்களாமே!’ என்று பலவாறாகப் புலம்பிக்கொண்டு, ‘என்னால் இப்படி இருக்க முடியவில்லை, அவளைப்போல் எல்லாம் செய்ய முடியவில்லை!’ என்று பிறருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, தன்னைப் பார்த்துப் பரிதாபப்படுகிறவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? ஒருவரிடம் திறமை இருந்தாலும், பிறர் பாராட்டவில்லையே என்ற தாபம் இருந்தால் இந்த நிலைமைதான் வரும். குறைகளுடன் தம்மைத்தாமே ஏற்றுக்கொள்பவர்களால்தான் ஆரோக்கியமான உறவுகளை அடைய முடிகிறது. இவர்களை எளிதில் வீழ்த்திவிட முடியாது. (ஆனால், குறைகளைப் பிறரிடம் சொல்லி, அவர்கள் நம்மை இளக்காரமாக நினைக்கச் செய்ய வேண்டாமே!) Papa, he loves Mama. Mama, she loves Papa. என்றிருக்கும் ஓர் ஆங்கிலப்பாடலை, என் குழந்தை மூன்று வயதில் இப்படிப் பாடினான்: Papa, he loves Sashi. Mama, she loves Sashi! அகம்பாவமா? இல்லை. ‘என்னை எனக்குப் பிடிக்கிறது , மற்றவர்களுக்கும் பிடிக்கிறது,’ என்ற எண்ணம் இருந்தால்தான் மகிழ்ச்சி நிலைக்கும். நாம் நம்முடன்தான் எப்போதும் இருக்கிறோம். அந்த அருகாமை மகிழ்வூட்டுவதாக இருக்க வேண்டாமா? சிரத்தையான அப்பா அம்மா படிப்பு, உத்தியோகம், திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது, பலருக்கும். உரிய காலத்தில் எல்லாமே நடந்துவிட்டாலும், அவை சிறப்பாக அமைகின்றனவா? படிப்பை எடுத்துக்கொள்வோம். தங்களுக்குப் பிடித்த பாடம், அல்லது நிறைய பொருள் ஈட்டக்கூடிய கல்வி என்று சில பெற்றோர், ‘நீ இந்தப் பாடங்களைத்தாம் தேர்ந்தெடுக்க வேண்டும்,’ என்று பிள்ளைகளுக்கு யோசிக்கவோ, முடிவு செய்யவோ இடம் கொடுக்காது தீர்மானித்துவிடுவார்கள். அப்படிச் செய்யாவிட்டாலும், தமது எதிர்பார்ப்பின்படி நடக்காத பிள்ளைகளைக் கண்டு மனம் நொந்துபோவார்கள். கதை இங்கிலாந்தில் ஒரு பிரபல விஞ்ஞானியின் மாணவர் அந்த மலேசியர். முதுகலைப்பட்டம் பெற்று, கோலாலம்பூரில் ஆசிரியராக இருந்தார். “என் மகள் விஞ்ஞானமே வேண்டாம் என்று, இடைநிலைப்பள்ளியில் ஆங்கிலம், சரித்திரம் என்று என்னென்னவோ எடுத்துப் படிக்கிறாள்,” என்று என்னிடம் அரற்றினார், ஏதோ தன்னையே அவள் விலக்குவதுபோல் பாவித்து. “என் பெண் அறிவில் என்னைக் கொள்ளவில்லை,” என்று அவர் திரும்பத் திரும்ப பேசியதைக் கேட்டு, நான் அப்பெண் மக்கு என்ற முடிவுக்கு வந்தேன். அண்மையில், தனக்குப் பிடித்த துறையில் அப்பெண் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறாள் என்று அறிந்தேன். தந்தையின் எதிர்பார்ப்புக்கும் விருப்பத்திற்கும் அவள் இணங்கியிருந்தால், தன் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி இருக்க முடியாதே! செய்ததில் திருப்தியும் கிடைத்திருக்காது. நல்ல வேளை, மகளைத் தன் அதிகாரத்திற்குப் பணியவைத்து, அவளைச் சுயமாக சிந்திக்கவிடாது செய்யவில்லையே என்று நண்பரைப் பாராட்ட வேண்டியதுதான். பெற்றோரின் குறுக்கீடே இல்லாது வளர்பவர்களுக்கோ வேறு விதமான பிரச்னைகள். தாம் பெற்ற குழந்தைகளின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்கள் பிறருடன் எப்படிப் பழகுவது என்று வழி காட்டாது இருக்கும் பெற்றோரை இருவகையாகப் பிரிக்கலாம்: பெரிய உத்தியோகத்தில் நிறைய சம்பாதித்து, இன்னும் எப்படி மேலே போகலாம் என்பதுபோல் நடப்பவர்கள். ‘அதுதான் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறோமே! அங்கே பார்த்துக்கொள்வார்கள்!’ என்ற அலட்சியம். வேறு சில பெற்றோர், அவர்களும் அதிகம் படித்திருக்க மாட்டார்கள். அவர்களுடைய பெற்றோர் அவர்களை நடத்தியதுபோலவே, தம்மையும் அறியாது தம் பிள்ளைகளை அசிரத்தையுடன் நடத்த முற்படுவார்கள். நான் இப்படிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் போதித்தபோது, பெற்றோருக்கு மகன் எந்த வகுப்பில் படிக்கிறான், என்ன பாடம் எடுத்திருக்கிறான் என்பதுகூடத் தெரியாது. இந்த அலட்சிய மனப்பான்மை கட்டொழுங்கு ஆசிரியர்களுக்குச் சாதகமாகப் போயிற்று. எந்த ஒரு தவற்றுக்கும் வன்முறையைப் பயன்படுத்தித் தண்டிப்பார்கள். பெற்றோரோ, ‘இந்தப் பள்ளிக்கூடத்தில் வெரி குட் டிசிப்ளின்’ (very good discipline!) என்று ஒருவருக்கொருவர் சிலாகித்துக்கொண்டு, ‘இந்தவரைக்கும் நம் பொறுப்பைக் கழித்தார்களே!’ என்ற நிம்மதியுடன் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மாணவர்களுக்காக பரிதாபப்படத்தான் என்னால் முடிந்தது. பணக்காரப் பெற்றோர் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு, ‘இனி ஆசிரியர்கள் பாடு!’ என்று நிம்மதியாக இருப்பார்கள். இன்னொரு வகை, தனித்து வாழும் தாய் அல்லது வறுமையில் வாடும் தந்தை. குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய நிலை. குழந்தைகளுக்கான உணவு, உடை, படிப்புச்செலவு ஆகியவற்றிற்குத் தேவையான பொருளை ஈட்டுவதிலேயே இவர்களுடைய காலம் கழிந்துவிடுகிறது. கதை பதினைந்து வயதிலேயே ஜரீனா பள்ளியில் அடங்காது இருந்தாள். ஓயாமல் ஆண்களைப்பற்றித்தான் அவள் பேச்சு இருக்கும். ஆசிரியைகள் கொடுத்த எந்த வேலையையும் செய்யமாட்டாள். அப்படியே செய்தாலும், அரைகுறையாக இருக்கும். அவளால் பிற மாணவிகளும் அதேபோல் நடக்கும் நிலை. அவளுடைய தந்தை என்னைச் சந்திக்க வந்தார். “நான் டாக்சி ஓட்டுகிறேன். பெரிய குடும்பம். காலையிலிருந்து இரவு வெகு நேரம் வீட்டிலே இருக்கமுடியாது. என் மகளை எப்படி அடக்குவதென்றே தெரியவில்லை. தயவுசெய்து உதவுங்கள், டீச்சர்!” என்று கெஞ்சினார் அந்த மலாய்க்காரர். (அவரைப் போன்றவர்களுக்கு ஆசிரியர்கள் என்றால் பெருமதிப்பு). அடுத்த முறை ஜரீனா என்னை எதிர்த்தபோது, “உன் அப்பாவை வரவழைக்கட்டுமா?” என்று மிரட்டினேன். பயந்து, அடங்கினாள். அவ்வப்போது கண்டிக்க யாருமில்லாது, அளவுக்கு அதிகமான சுதந்திர உணர்வு அவளை மனம்போனபடி நடக்க வைத்திருந்தது. பெற்றோருக்கும், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கும் புரிவதில்லை, வீட்டில் ஒழுக்கம் கற்பிக்கப்படாத சிறுவர்களைத் திருத்துவது மிகக் கடினம் என்று. அத்தகைய பெற்றோர், ‘குழந்தைகளுக்குத் தேவையானவைகள் எல்லாவற்றையும்தான் கொடுக்கிறோமே! போதாதா?’ என்று திருப்தி அடைபவர்கள். குழந்தைகளுக்கோ, ‘இதெல்லாம் பெற்றோரின் கடமை!’ என்ற அலட்சியம்தான் உண்டாகிறது. ஆனால், அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெற்றோர் வேண்டுமே! பெற்றோரிடம் தம் அதிருப்தியைக் காட்டத் துணியாது, ஆசிரியர்களை எதிர்க்க முனைகிறார்கள். ‘வீட்டில் யாருமே நம் உணர்வுகளை மதித்து நடத்துவதில்லை!’ என்ற ஆத்திரம் உள்ளுக்குள் எழும். ‘யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை!’ என்று நிச்சயம் செய்துகொள்வார்கள். இதனால் சுயமதிப்பு குன்றிப்போக, படிப்பிலும் சோடையாகிவிடும் அபாயமும் உண்டு. இவர்களுக்கு ஒத்த மனமுடைய நண்பர்களுக்கா பஞ்சம்! இப்படித்தான் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள். சில மாணவர்களே என்னிடம் கூறியிருக்கிறார்கள், ‘வீட்டில் யாரும் எங்களைக் கவனிப்பதில்லை. நண்பர்களுக்குத்தான் எங்களைப் புரிகிறது. அதனால் அவர்களுடன் காலத்தைக் கழிக்கிறோம்,’ என்று. நீலப்படங்களைப் பார்ப்பதைக்கூட விவரித்திருக்கிறார்கள். எது நல்லது, எது கெட்டது என்று அறியாத பருவம். பெற்றோருக்குத் தம் பிள்ளைகளுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பே கிடையாது. அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதிலும் அக்கறை செலுத்தமாட்டார்கள். எந்தவித வழிகாட்டலும் கிடையாது. இளைய வயதினர் திசை மாறுவது யாருடைய தவறு? சில பெற்றோருக்கு எப்படி வழிகாட்டுவது என்று புரிவதில்லை. ஒரு தாய் என்னைச் சந்தித்து, “என் மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க எனக்குத் தெரியவில்லை. அதுதான் குறைந்த மதிப்பெண்கள் வாங்குகிறான். அந்தக் காலத்திலே படிப்பு வேறு விதம் இல்லையா?” என்று சப்பைக்கட்டு கட்டினாள். நானும், “ஆமாம். ஆமாம்,” என்று ஆமோதித்தேன். அப்போதுதானே அவள் நான் அடுத்துச் சொல்லப்போவதைக் கவனிப்பாள்! “தினமும் ஒரு மணி நேரமாவது அவனைப் படிக்கச் சொல்லுங்கள். அப்போது பக்கத்தில் உட்கார்ந்து, உரக்கப் படிக்கச் சொல்லுங்கள். அவ்வளவுதான்! நீங்கள் வேறு எதுவும் செய்யவேண்டாம்,” என்றேன். (என் மகள் முதல் வகுப்பு படிக்கையில், “நீ ரொம்ப டிஸ்டர்ப் பண்றே! என்னாலே படிக்க முடியலே,” என்று குற்றம் சாட்டினாள். நானோ, வாய்பேசாது, ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தேன்! “நான் என்ன செய்யணும்?” “என் பக்கத்திலே உட்காரேன்!” அப்போதுதான் புரிந்தது, தாம் செய்வதில் பெரியவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்ற குழந்தைகளின் எதிர்பார்ப்பு). அம்மாவுக்குத் தன் முன்னேற்றத்தில் எவ்வளவு அக்கறை என்ற பூரிப்பில் பையன் கடுமையாக உழைத்தான். அம்மாவை மாற்றிய என்னையும் பிடித்துப்போனது! பொது இடத்தில் பாருங்கள். எத்தனை பெற்றோர் பிள்ளைகளுடன் பேசுகிறார்கள்? சிறிய குழந்தைகளானால், பார்ப்பதையெல்லாம் விளக்குகிறார்கள்? ‘உன்னை ஹோட்டலுக்கு அழைத்து வந்திருக்கிறேனே! அதற்காக சந்தோஷப்படு!’ என்பதுபோல், தன் கைப்பேசியில் ஆழ்ந்திருக்கும் தந்தையோ, தாயோதான் அதிகம் இருப்பார்கள். கதை பல ஆண்டுகளுக்கு முன்னர், நானும் என் உறவினர் ஒருத்தியும் காரம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தோம். என் பாட்டி உள்ளே போய் பார்த்துவிட்டு, “குழந்தைக்கு நல்ல பசி. உங்களுக்கு என்ன விளையாட்டு?” என்று இரைந்தார். “நான் போட்டுவிட்டு வந்தேனே!” என்றேன். “எதுக்கு அவ்வளவு கஷ்டப்படணும்? ‘நீயே எடுத்துப் போட்டுண்டு சாப்பிடுடி,’ என்றால் சாப்பிட்டுவிட்டுப்போகிறாள்!” அவள் மூன்று வயதுக்குழந்தை! இருவரும் குற்ற உணர்ச்சியுடன் முழித்தோம். அன்று நான் கற்ற பாடம்: ஒருவர் உணவருந்தும்போது கூடவே இருப்பது நல்லது. குழந்தைகளானால் கதை சொல்லலாம். வளர்ந்தவர்களிடம் அன்றைய நடப்புகளை, முதல்நாள் பார்த்த திரைப்படத்தைப்பற்றிய விமரிசனத்தை, இப்படி எதையாவது பகிரலாம். உறவுகள் பலப்படுவது இப்படித்தான். எல்லைகள் இரண்டு வயதானதும் ஒரு குழந்தை ‘எனக்கு நடக்கத் தெரியவில்லையா, பாட்டிலில் பால் குடிக்கிறேனா?’ என்றெல்லாம் தான் பெரியவனாக வளர்ந்துவிட்டதைப்பற்றிப் பெருமை கொண்டிருக்கும். சுயமாகச் சாப்பிடக்கூட முடியும், கீழே வாரி இறைத்தாலும்! தன்னை ஏன் அம்மா இன்னும் குழந்தைமாதிரி நடத்துகிறாள்? வெளியில் அழைத்துப்போனால், சில சிறு குழந்தைகள் டயாபரை அவிழ்த்துப்போடுவார்கள். ஆத்திரத்தை எப்படித்தான் காட்டுவது! இரண்டு வயதில் முரண்டு என் மகளுக்கு இரண்டு வயதானபோது, “அம்மா குளிக்கச் சொல்றா!” என்று சுயபரிதாபத்துடன் தன் பாட்டியிடம் முறையிடுவாள், என்னமோ நான் அவளைக் கொலை செய்ய ஆயத்தமாவதுபோல். அனேகமாக எல்லாக் குழந்தைகளும், ‘குளி’, ‘சாப்பிட வா!’ என்று என்ன ஆணை பிறப்பித்தாலும், ‘மாத்தேன், போ!’ என்று முரண்டு பிடிக்கும். ‘இவன் என்னை இப்படி எதிர்க்கிறானே!’ என்று தாய் அயர்ந்து, ‘ஏன் இப்படிப் படுத்தறே!’ என்று திட்டுவாள். இம்முறை பயனில்லாவிட்டால், கெஞ்சலிலும் இறங்குவாள். ஆனால், தனக்கு யார் மிக நெருக்கம் என்று குழந்தை கருதுகிறானோ, அவர்களிடம்தானே தன் ‘கைவரிசை’யைக் காட்ட முடியும்? தாயின் அதிகாரத்தை எதிர்ப்பதில்லை குழந்தையின் நோக்கம். தன்னுடைய சுதந்திர உணர்வை வெளிப்படுத்தும் முயற்சி அது. தான் இன்னும் அம்மாவின் இன்னொரு அங்கம் இல்லை என்று உணர்த்தும் செய்கை. இது புரிந்து, தாய் சில விஷயங்களில் குழந்தையே தனக்கு எது வேண்டுமென்று நிச்சயிக்கும் வாய்ப்பை அளிக்கிறாள். ’உனக்கு இன்னிக்கு சிவப்பு சட்டை வேணுமா, இல்லை, சூபர்மேன் சட்டை போட்டுக்கறியா?’ என்று கேட்டால் போதும், அவனுக்குப் பெருமையாகிவிடும், தன்னையும் மதிக்கிறார்களே என்று. வெளியில் அழைத்துப் போனாலோ, சிறு குழந்தையாகிவிடுவான். அம்மாவின் இடுப்பிலிருந்து இறங்க மறுத்துவிடுவான். இந்த சமயங்களில், ‘நான் இறக்கிவிடறபோது, நீ நடக்கப்போறியா, ஓடப்போறியா?’ என்று முடிவை அவனுக்கே விட்டால், அந்த தாய்க்கு வெற்றி கிடைக்கும். இரண்டில் ஒன்றைத் தானே தேர்ந்தெடுப்பான். “இது என் சட்டை! நானேதான் ம(டி)ச்சு வெப்பேன்!” என்னும் மூன்று வயதுக் குழந்தையை அதன் போக்கில் விடுங்கள். கையில் துணியைச் சுற்றிச் சுற்றி, சும்மாடுபோல் ஆக்கிவிட்டு, பெருமையாகச் சிரிக்கும். அப்போது புகழ வேண்டியதுதான். ‘ஐயோ! கசக்கறியே!’ என்று பதறுவது அவன் பெருமுயற்சியெடுத்து செய்த காரியத்தைச் சிறுமைப்படுத்துவதுபோல் ஆகிவிடாதா! கோபத்தின் வெளிப்பாடு நம்மைப்போல்தான் குழந்தைகளுக்கும் அவ்வப்போது கோபம் எழும். அதை எதன்மேலாவது காட்டுவார்கள். ‘இந்த துப்பாக்கி அசடு. தூக்கிப் போடு!’ என்று தன் விளையாட்டுச் சாமானை குப்பையில் போடும் குழந்தை அறியாது அதை ஒளித்துவைத்தால், ‘அம்மா! என் துப்பாக்கி இங்க ஒளிஞ்சுண்டு இருக்கு!’ என்று சில நாட்கள் கழித்து பெருமகிழ்ச்சியுடன் கொண்டுவந்து காட்டுவான்! சுதந்திரத்தை நாடும் குழந்தை, ‘அம்மா! மழையிலே விளையாடப் போகட்டா?’ என்று கேட்பான். அனுமதி கிடைக்காது என்று தெரியும். இருந்தாலும், அம்முயற்சி எந்தவரை வெற்றி அளிக்கும் என்று ஆராயும் ஆவலால் எழும் கேள்வி அது. ‘போ. ஜூரம் வரும். டாக்டர்கிட்ட அழைச்சுண்டு போய், பெரிய ஊசியா குத்தச் சொல்றேன்!’ என்று தாய் சிரித்தால், அதன்பின் அந்த முயற்சி கைவிடப்படும். இதெல்லாம் குழந்தையின் மூளை வளர்ச்சி அடைகிறது என்பதற்கான அறிகுறிகள். தன்னால் எவ்வளவு தூரம் போகமுடியும் என்று தன் எல்லையைப் பரிசோதித்துப் பார்க்கும் முயற்சிகள். நமக்கு அயர்ச்சியாக இருந்தாலும், மகிழ வேண்டியதுதான். எப்போதுமே கைக்குழந்தைபோல் இருந்தால் எப்படி இருக்கும்? சிறு குழந்தைகள் நாம் சொல்வதற்கு எதிரான பொருளைப் புரிந்துகொள்வார்கள். உதாரணத்திற்கு, “மெத்தைமேல் ஏறிக் குதிக்காதே!” என்று எச்சரித்தால், முதலில் அந்த எண்ணமே எழாவிட்டாலும், ஏறிக் குதிப்பார்கள். “சொல்லிக்கொண்டே இருக்கிறேனே!” என்று வைதால், அவர்களுக்கு குழப்பம்தான் விளையும். இதைத் தவிர்க்க, அவ்வப்போது அணைத்து, குழந்தையால் செய்ய முடிந்த (அல்லது முடியாத) சிறு வேலைகளைக் கொடுக்கலாம். ஐந்து வயதுக்குழந்தையால் கீரை நறுக்க முடியும். பெரிதும் சிறிதுமாக இருந்தாலும் வேகாதா, என்ன! எல்லையைக் கற்பிக்க மெல்ல மெல்ல எல்லையைக் கடக்க கற்றுக்கொடுத்தால், அதை மீறமாட்டான். நாம் செய்யும் சில வேலைகளில் குழந்தையையும் ‘உதவி’ செய்ய அழைத்தால், அவனுடைய சுயமதிப்பு பெருகும். நான் தெரியாத்தனமாக, என் மூன்று வயதுப்பிள்ளையிடம் “பூரி இட்டுக் கொடுக்கிறாயா?” என்று சொல்லப்போக, அவன் பெருமையுடன் அப்பளக்குழவியைப் பலகையில் அழுத்தித் தேய்த்தபடி இருந்தான். ‘போதும், போதும்,’ என்று கெஞ்சியபோதும், ‘இன்னும் கொஞ்சம் பண்ணணும்!’ என்று உற்சாகமாக, நிறுத்தாது வேலை செய்தான். அவற்றை சுத்தப்படுத்துவது பெரும்பாடாகிவிட, அடுத்த முறை ரகசியமாகச் செய்தேன்! வயதுக்கேற்ற காரியம் கொடுத்தால் இத்தகைய தொல்லையெல்லாம் வராது. அதைவிட்டு, ‘இதைச் செய்யாதே! இதை இப்படிப் பண்ணு,’ என்று ஓயாமல் தொணதொணத்தால், அடுத்த முறை எதுவும் செய்ய முன்வர மாட்டார்கள். இல்லையேல், வேண்டுமென்றே ஒன்று கிடக்க ஒன்று செய்வார்கள். இது பொதுவான மனித குணம். புக்ககம் செல்லும் சில பெண்கள் அவர்களுக்குப் பழக்கமான விதத்தில் ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது, மாமியாரோ, நாத்தனாரோ பழிக்கும்போது எரிச்சல்தான் உண்டாகும். நன்றாக வேலை செய்யும் மருமகளைப்பார்த்து, ‘உனக்கு ஒரு வேலையும் தெரியவில்லையே!’ என்று பழிப்பார்கள், தம் மேலான நிலையை நாட்டிக்கொள்ள. இவளோ, அதன்பின் எதுவும் முனைந்து செய்யமாட்டாள், எப்படியும் கண்டனம்தானே கிடைக்கப்போகிறது என்ற எரிச்சலில்! எல்லை ஏன்? ‘இது என் எல்லை!’ என்று புரிந்துகொண்டால்தான் தன்னம்பிக்கை வளரும். ஆறு வயதுக்குமேல் எல்லா வயதினருக்கும் இது பொருந்தும். ஒருவரது எல்லையை தம் விருப்பத்திற்கேற்ப பிறர் மாற்ற முயலும்போதுதான் தகராறு வருகிறது. கதை மலேசியாவில் மிகப் பிரபலமான கார்ட்டூன் வரைபவர் ஒருவரை ‘சிடுமூஞ்சி’ என்று பலரும் பழிப்பார்கள். (இவரது சித்திரங்கள் விமானங்களைக்கூட அலங்கரிக்கின்றன). அவருடைய வாதம்: “சிரிக்க வைக்கும் படங்களை வரைவதால், நான் என்னைச் சந்திக்க வருகிறவர்களையெல்லாம் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்க முடியுமா?” பலரது எதிர்பார்ப்பும் இப்படியே இருக்க, அவருக்குக் கோபம் எழுந்திருக்கிறது. தன் எல்லையைக் கடக்காது, அல்லது கடக்கவைக்கும் பிறரது முயற்சிகளுக்கு இடங்கொடுக்காது அவர் இருந்திருக்கிறார். இது அவருடைய துணிச்சலைக் காட்டுகிறது. இம்மாதிரி நிலையில், கோபத்தை வெளிக்காட்டாது, அல்லது பிறர்மேல் பழி சுமத்தாது மெல்ல விலகிவிடலாம். பிறர் நம்மை மதிக்க வேண்டுமேயென்று நம் எல்லைகளிலிருந்து விலகினால், நம்மையே நாம் மதித்துக்கொள்ளத் தவறுகிறோம். ஒரு குடும்ப நிகழ்ச்சியில், நான் கலகலப்பாக எல்லாரிடமும் பேசினேன். (எப்போதாவதுதான் இந்த ‘மூட்’ வரும்). ‘நன்னாப் பேசுவா!’ ‘நன்னாப் பழகறா!’ என்று முணுமுணுத்தபடி, எல்லாரும் ரசித்தபடி இருந்தார்கள். அதன்பின் ஒவ்வொரு முறையும் அதேபோல் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். எனக்கு ஓய்ந்துவிட்டது. நான் வாயே திறக்கவில்லை. “மாறிட்டா!” என்ற விமர்சனம் வந்தது, ஏமாற்றத்துடன். என் சக்தியின் எல்லையை, என்னால் எது முடியும், முடியாது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். பிறரை மகிழவைக்க அதை மீறுவதில் எனக்கு உடன்பாடில்லை. (பாடகிகள் கச்சேரிக்குமுன் அதிகம் பேசாது இருந்தால்தான் குரல் ஒத்துழைக்கும். இனிமையாக இருக்கும். இது புரியாது, அவர்களுடன் பேச்சுக்கொடுத்து, அவர்கள் மௌனம் சாதித்தாலோ, இல்லை, ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்தாலோ, ‘கர்வி’ என்று நிச்சயிக்க முடியாது. இது அவர்கள் எல்லை). குட்டிக்கதை ஒரு சாயந்திர வேளையில், “பாட்டு கத்துக்க வா,” என்று எங்கள் வீட்டிலிருந்த என் பேத்தியை அழைத்தேன். இருமணி நேரம் தாமதமாக வந்தாள். “உன் நேரம் முடிந்துவிட்டது. நான் காத்திருந்தேன். அவ்வளவுதான்!” என்றதும், அதிர்ச்சியுடன் தன் தாயைப் பார்த்தாள் சிறுமி. பெரியவள் தலையை அசைத்தாள், என்னை ஆமோதிப்பதுபோல். இளம் வயதிலேயே பிறருடைய எல்லையை மதிக்கக் கற்றுக்கொடுத்தால், தானே தன் எல்லையையும் புரிந்து, நிர்ணயிக்கும் குணம் வரும். தன்னம்பிக்கையும் வளரும். ‘பிறருக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடுமோ?’ என்று பயந்து, விட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பவர்களுக்குத் தம் எல்லை எது என்பதே தெரிய வாய்ப்பில்லை. நமக்குப் பிடிக்காததை, நம்மால் முடியாததை, செய்தாவது பிறரது பாராட்டைப் பெறவேண்டுமா? எது முக்கியம்? தன்னம்பிக்கையா, பிறரது ஆமோதிப்பா? தாம்பத்தியத்தில் தோழமை கல்யாணம் எதற்கு? நான் இக்கேள்வியைக் கேட்டபோது, ஆண் ஒருவர், ‘முறையான உடலுறவுக்கு,’ என்ற பதிலை அளித்தார், தர்மசங்கடத்துடன். (“Let us face it. I can’t think of having sex any other way!”) பெண்களோ, “பாதுகாப்பு’ என்றார்கள். நிற்பது, நின்றிருந்தால் உட்கார்வது, நடப்பது எல்லாமே முதுமையில் பெருமுயற்சியாகிவிடுமே! அப்போது, ‘காமத்துக்குத் துணைபோகாத வாழ்க்கைத்துணையால் என்ன பயன்?’ என்று யோசனை போகுமா? திருமணம் செய்துகொள்வது எதற்கு என்பதில் மட்டுமல்ல, மணமுடித்தபின், ஆண்களின் எதிர்பார்ப்பும், பெண்களின் எதிர்பார்ப்பும் வெவ்வேறு விதமாக இருக்கிறது. ஒரு பெண் கணவன் தன்னுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். ஆணுக்கோ, அந்நிலை மூச்சுமுட்டுவதுபோல் இருக்கும். இயன்றவரை பிற ஆண்களுடன் பொழுதைக் கழிப்பதுதான் ஆணுடைய சுபாவம். இதைப் பெண்கள் புரிந்துகொண்டாலே போதும். பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். தம்பதிகள் என்றால், கணவன் சொற்படி மனைவி நடக்கவேண்டும், தனக்கென ஆசைகள் இருந்தால் அவற்றை அவள் மறந்துவிட வேண்டும் என்பதுபோல்தான் கடந்த சில தலைமுறைகளில் நடந்துவந்தது. அதைப் பார்த்து இக்காலப் பெண்கள் மிரள்கிறார்கள். அதனாலேயே ஏதேதோ நிபந்தனைகளை விதிக்கிறார்கள். ”எனக்கு வரப்போறவரோடு Companionship (தோழமை) இருக்கணும் என்கிறாள் அபி. அப்படின்னா என்ன?" என்று என்னைக் கேட்டாள் நடுத்தர வயதான ஒரு மாது. முப்பது வயதாகியும் மணம் செய்துகொள்ளத் தயங்கிய மகளின் நிபந்தனை அவளுக்குப் புரியத்தானில்லை. “நாங்களெல்லாம் அப்படியெல்லாம் பார்த்தா கல்யாணம் செய்துகொண்டோம்?” என்று பொருமினாள். ஒரே பார்வையில் எவருடனும் நட்பு பெருகிவிடாது என்பது சில இளம்பெண்களுக்குப் புரிவதில்லை. புதிதாக மணமான தம்பதிகள் ஒன்றாக வாழ நேரிடும்போது மற்றவரின் வேற்றுமைதான் பூதாகாரமாகத் தெரிகிறது. அதைப் பழிப்பதால் இடைவெளி விரிவடையும் என்பதைப் புரிந்துகொள்ளாது, கேலி செய்பவர்களும் உண்டு. நண்பர்கள் கேலி செய்தால் பொறுத்துப்போகலாம். ஆனால் கணவனோ, மனைவியோ பழிப்பதை ஏற்க முடிவதில்லை. மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியில் கூறினால், பாதிக்கப்பட்டவர் சிறுமைப்படுத்தப்படுகிறார். ஆத்திரம் பெருகுமே! ‘தாம்பத்தியத்தில் ஒரு நாளைக்கு ஆறு முறையாவது சொல்ல வந்ததைச் சொல்லாமலிருக்க வேண்டும்,’ என்கிறார் திரு.அனுபவசாலி. ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!’ என்று திரைப்படத்தில் காதலர் பாடலாம். நடைமுறையில், ’soulmate" என்ற ஒருவருடன்தான் இது சாத்தியம். உரிய காலத்தில் அப்படி ஒருவரைச் சந்திப்பதே துர்லபம். வாழ்க்கைத்துணையாக அடைவதோ..! ஒருவர் தன் மனைவியிடம், “உன்னை என்னைப்போலவே மாற்றிவிட இந்த இருபத்து ஐந்து வருடங்களாக முயன்று பார்த்துவிட்டேன். அது நடக்காத காரியம் என்று இப்போதுதான் புரிகிறது!” என்று கூறினார், அனுபவம் அளித்த விவேகத்துடன். “எல்லாம் இந்த தமிழ்சினிமாவால் வந்த வினை!” என்று காலங்கடந்து நொந்துகொண்டார்! அப்பாமாதிரி இல்லையே! இளம்பெண்கள் தம் தந்தையுடன் கணவரை ஒப்பிட்டுக்கொள்கிறார்கள். ‘அப்பா எப்படி அம்மா சொல்வதைக் கேட்பார்! இவர் என்ன, பிடிவாதமாக இருக்கிறாரே!’ என்று ஆத்திரப்படுவது வீண். திருமணமான புதிதில் அப்பா இப்படியேவா இருந்திருப்பார்? அம்மாவை மாற்ற முயன்றிருப்பார். பிறரை மாற்றுவதைவிட தன்னையே மாற்றிக்கொள்வது எளிது என்று முடிவெடுத்திருக்கலாம். ‘இந்தப் பெண்களைப் புரிந்துகொள்ளவே முடியாது! மனைவி என்பவள் ஒரு பிரச்னை இல்லை, அவள் இருப்பதுபோலவே ஏற்றுக்கொண்டால்தான் வாழ்க்கையில் அமைதி நிலவும்,’ என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கும். கணவரை மாற்ற முயலும் பெண்களும் தம் முயற்சியில் வெற்றி பெறமுடியாது. ஆத்திரப்பட்டால், அவர்கள் உடல்நிலைதான் கெடும். நிலைமை என்னவோ மாறப்போவதில்லை. உத்தியோகம் முதல் மனைவியா? விவாகரத்து கோருவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். கணவர் தங்களுக்குப் போதிய நேரம் ஒதுக்குவதில்லை, எப்போதும் உத்தியோகமேதான் நினைப்பு என்பது அவர்கள் வாதம். வேலை கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும் இந்நாளில் கடிகாரத்தைப் பார்த்தபடி வேலை செய்பவன் எப்படி முன்னேற முடியும்? இரவு நெடுநேரம் உழைக்க வேண்டியிருக்கும். அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டிய உத்தியோகமும் அமையலாம். செலவச்செழிப்பான வாழ்க்கை அமைய வேண்டும், ஆனால் கணவனுடைய அருகாமையும் எப்போதும் வேண்டும் என்றால் நடக்கிற காரியமா? (ஒரேமாதிரியான உத்தியோகத்தில் இருப்பவர்கள் கணவன் அல்லது மனைவியின் இக்கட்டான நிலையை ஓரளவு புரிந்துகொள்ளக்கூடும்). எங்கும் பிரச்னைதான் வீட்டிலோ, வெளியிலோ, பிரச்னை இல்லாத இடமே கிடையாது. வீட்டில் நாள்பூராவும் வேலை செய்து, குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளும் பெண்ணானவள் கணவன் வேலை முடிந்து வீடு திரும்பும்போதே குற்றப்பத்திரிகை படித்தால், அவனுக்கு எப்படி இருக்கும்? அவன் அலுத்துச் சலித்து வீடு திரும்பும்போது, இன்முகமாக வரவேற்க வேண்டாமா? அப்படி இல்லாவிடில், தன் பங்குக்கு அவனும் கத்துவான், இல்லை, உடனே வெளியில் போய்விடுவான். பாராட்டுங்கள்! பொதுவாக, பெண்கள்தாம் உணர்ச்சிபூர்வமானவர்கள். தம் இயலாமையை வெளிப்படுத்த சண்டை பிடிப்பார்கள், இல்லையேல் அழுவார்கள். அவ்வப்போது, ‘மௌன விரதமும்’ உண்டு! (ஒரு சிறு பெண்ணிடம்கூட இந்தக் குணத்தைக் காணலாம்). இது புரிந்து, ஆண்கள் மனைவிக்கும் சிறிது நேரத்தை ஒதுக்கி, பாராட்டுதலால் தம் அன்பை வெளிக்காட்டினால் பிரச்னையே கிடையாது. நண்பர்களிடம் கூற நினைப்பதை மனைவியிடமும் கூறலாமே! அதைவிட்டு, ‘நான் நம் குடும்பத்திற்காகத்தானே உழைக்கிறேன், என்னை நீ பாராட்டுவதே இல்லையே!’ என்று குற்றம் சாட்டுவது அவர்களிடையே உள்ள இடைவெளியை இன்னும் பெரிதாக்கும். வாயை மூடு, செவியைத் திற! தம்பதிகளின் உரையாடல் நடக்கையில்: “கணவன் காதில் வாங்கிக்கொள்வது பாதி, புரிந்துகொள்வது கால் பங்கு, சிந்திப்பது பூஜ்யம், பதிலளிப்பதோ இரு மடங்கு!” (திரு. அனுபவசாலி). மனைவி அன்றைய தினம் தன்னைப் பாதித்த சமாசாரங்களைப்பற்றிக் கூறிவருகையில், ‘நான் நீயாக இருந்தால் இந்த சந்தர்ப்பத்தில் என்ன சொல்லி இருப்பேன், தெரியுமா?’ என்று கணவன் ஆரம்பித்தால், எந்த மனைவிக்குத்தான் எரிச்சல் வராது? ‘நான் நீங்களில்லையே!’ என்று சொல்லத்தான் தோன்றும், தன் பிரச்னைகளைத் தனக்குத் தோன்றிய விதத்தில், தானேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவளால். அம்மாதிரி சந்தர்ப்பங்களில், எதுவும் பேசாது கேட்பது உத்தமம். தீர்வை எதிர்பார்த்து அவள் சொல்லவில்லை. சும்மா பகிர்ந்துகொள்கிறாள். அவ்வளவுதான். அத்துடன், பெண்களும் ஆண்களைப்போலவே யோசிக்கமாட்டார்களே! பிரச்னையா, துணையா? திருமணமான புதிதில், ஒருவரது வாழ்க்கை முறையை மற்றவர் புரிந்துகொண்டு, அதன்படி நடப்பது எளிதல்ல. ஆனால், வாழ்க்கைத்துணையைவிட பிரச்னை முக்கியமானதல்ல என்று புரிந்துகொண்டு, அதைப்பற்றிப் பேசினாலே போதும். தீர்த்துவிட முடியும். ஐம்பது வயதுக்குமேலாகிய, மெத்தப் படித்த ஒரு மாது என்னிடம் கூறினார், “நானும் என் கணவரும் தினமுமே சண்டை போடுவோம்!” அவர் குரல் சாதாரணமாகத்தான் இருந்தது. அதில் வருத்தமோ, கோபமோ இருக்கவில்லை. அவள் ‘சண்டை’ என்று குறிப்பிட்டது கைகலப்பில்லை. அபிப்ராயபேதம். இருவரும் ஒரேமாதிரி யோசிக்க முடியுமா? ஒரு பொருளைப்பற்றி விவாதித்து, யார் கூறுவதில் உண்மை இருக்கிறது என்று ஆராய்கிறார்கள். கல்யாணமாகி சுமார் முப்பது வருடங்களாகியும் வாய்ச்சண்டை தொடர்ந்துகொண்டே இருக்கிறதென்றால், அவர்கள் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று அர்த்தம். ‘நாங்க ரெண்டுபேரும் அதிகமா பேசிக்கறதே கிடையாது!’ என்று அலட்சியமாகச் சொல்வது வெறுப்பைக் காட்டுவதைவிட மோசமானது. ‘நீ எப்படியோ தொலை!’ என்பதற்குச் சமானம். கசப்பை ஏன் அவ்வளவு தூரம் வளரவிட வேண்டும்? வசப்படுத்தும் இசை இசையே சிம்ரன் (அதாவது, தியானம்!) இசையை ரசிப்பவர்கள் ஒருவித தியான நிலைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்கள். இவர்களால் பாடகர்களுக்கும் உற்சாகம் வரும். கதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரில் ராமநவமி உற்சவத்தை ஒட்டி, இலவச இசைக்கச்சேரிகள் நடக்கும் – நாற்பது நாட்களுக்குமேல். பிரபல வித்வான்கள் கலந்துகொள்வார்கள். சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பித்து, சிலர் அடுத்த நாள் காலைவரைகூடப் பாடியிருக்கிறார்கள். ‘கடைசி பஸ் போயிடும்,’ என்று அம்மா கவலைப்பட, ‘பரவாயில்லே. நடந்தே போகலாம்,’ என்று நான் சமாதானப்படுத்துவேன். சுமார் மூன்று மைல் வீட்டுக்கு நடப்போம். எங்களைப்போல் பலரும் கூட நடப்பார்கள். ‘இங்கிருக்கும் ரசிகர்களைப்போல் வேறு எங்கும் கண்டதில்லை! அவர்களுக்காகப் பாடுவதே சுகம்!’ என்று மகிழ்ந்து பாராட்டுவார்கள் சங்கீத வித்வான்கள். அவர்களுக்குச் சன்மானம் கிடையாது. இருந்தாலும், வருடந்தவறாது வந்து, உற்சாகமாகப் பாடுவார்கள். சங்கீதம் என்பது ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும், காசுக்காக மட்டுமே அல்ல என்பதற்கு இன்னொரு கதை. அடுத்த நாள் கல்யாணம். வீடே பரபரப்பாக இருந்தது. முதல்நாள் மாப்பிள்ளை வீட்டார், “இன்றிரவு பாட்டுக்கச்சேரி இருக்கவேண்டும். இல்லாவிட்டால், கல்யாணம் நடக்காது!” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்கள். பெண்ணின் தந்தை மிரண்டுபோய்விட்டார். கடைசி நிமிஷத்தில் சங்கீத வித்வான் ஒருவரை எங்குபோய் தேடுவது? அப்போது யாரோ, “அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் கச்சேரி செய்ய நம் ஊருக்கு வந்திருக்கிறார்,” என்று தெரிவித்தார்கள். தந்தை பாடகரிடம் போய் நடந்ததைச் சொல்லி, கலங்கியிருக்கிறார். அபயகரம் அளித்த ஐயங்கார் அன்று மாலை கல்யாண வீட்டில் நீண்ட கச்சேரி செய்தாராம். ஆனந்தமும் நன்றியும் பெருக, “ஏதோ, என்னால் முடிந்தது!” என்று பெண்ணின் தந்தை நூறு ரூபாயைத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்க, பிரபல சங்கீத வித்வான் ஒரு ரூபாயைத் தன் சன்மானமாக எடுத்துக்கொண்டு, “உங்கள் பெண்ணுக்கு ஏதாவது நகை வாங்கிப்போடுங்கள்!” என்றுவிட்டார். கர்னாடக இசையில், ஸ்ருதி மாதா, லயம் பிதா என்பார்கள். ஸ்ருதியா, என்ன அது? பொதுவாக குழந்தைகளுக்கும், சிறு பெண்களுக்கும், பன்னிரண்டு வயதுவரை ஆண்பிள்ளைகளுக்கும் குரல் கீச்சுமூச்சென்று இருக்கிறதல்லவா? அவர்களுக்கு ‘மேல் ஸ்ருதி’ என்கிறோம். வயதாக ஆக, பெண்களின் குரல் கட்டையாகிவிடுகிறது. (ஈஸ்ட்ரோஜன் என்ற பெண்களுக்கான ஹார்மோன் குறைவால்). அதனால் ஸ்ருதி இறங்கிவிடக்கூடும். ஸ்ருதியைக் குறிக்க எண்களைப் பயன்படுத்துகிறோம். ஐந்து கட்டை என்பது பெண்களுக்கு சாதாரணமாக அமைவது. மூன்று கட்டை ஸ்ருதி என்றால் கீழ் ஸ்ருதி. ஆண்களுக்கு ஒரு கட்டைகூட உண்டு. லயம் லயம் என்பது தொடையில் கையால் அடித்துப்போடும் தாளத்தைக் குறிக்கிறது. இது கணக்கைச் சேர்ந்தது. ஆகையால், இசை கற்கும் இளவயதினர் கணக்கில் நல்ல தேர்ச்சி பெறமுடியும். பொதுவாகவே, இசை வல்லுனர்கள் கணக்கிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். மிருதங்கம், கடம், கஞ்சிரா போன்ற தாளவாத்தியங்கள் வாசிப்பவர்கள் கணக்கில் புலியாக இருக்கவேண்டும். எந்த வாத்தியமாக இருந்தாலும், வாசிப்பவர்களின் கண்ணும், கையும் ஒருங்கே வேலைசெய்யும். வெறும் பொழுதுபோக்கல்ல ரத்த அழுத்தத்தைக் குறைக்கவல்லது கர்னாடக இசை. பாடும்போது, முதலில் மூச்சை நன்கு உள்ளே இழுத்துக்கொண்டு, வெளியே விடும்போது குரல் ஒலிக்கவேண்டும். இதனால் மன இறுக்கம் குறைந்து, அமைதியாகும். ஆசிரியர் ஒரு பாட்டைக் கற்பிக்கையில், மாணவி கூர்ந்து கவனிக்கவேண்டும் அல்லவா? இத்தகைய கவனிப்பு பிற துறைகளிலும் பரவு, அறிவுத்திறன் விருத்தியடைகிறது. வேண்டாத யோசனைகள் வராது. பாடுபவர்களுக்கு மட்டுமல்லாது, ரசிப்பவர்களுக்கும் இசை நல்ல பயனைத் தருகிறது. ‘என்ன ராகம்?’ என்று தெரிந்த பாடல்களுடன் ஒப்பிட்டு, சரியாகக் கண்டுபிடிப்பது ஞாபகசக்தியை வளர்க்கிறது. பாட்டை ரசித்துக் கேட்பவர்களை முதுமை அண்டாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பொழுதுக்கேற்ற ராகங்கள் கர்னாடக இசையில், ஒரு தினத்தின் வெவ்வேறு வேளைகளுக்கேற்ற ராகங்கள் உள்ளன. (உதாரணம்: அதிகாலையில், கோயிலில் திருப்பள்ளியெழுச்சிக்கு இசைக்கப்படும் ராகம் பூபாளம். உறங்கவைக்க நீலாம்பரி). சில ராகங்கள் எப்போதும் பாடக்கூடியவை. நவரசங்களைக் குறிக்கும் ராகங்களும் உள்ளன. (‘ப்ரோசேவாரெவருரா’ என்று சங்கராபரணம் படத்தில் வரும் பாடல் கமாஸ் ராகத்தில் அமைந்தது. சிருங்காரத்திற்கு இந்த ராகம் ஏற்றது). கற்பனைத்திறன் குருவிடம் சில பாடல்களைக் கற்று, அப்படியே திரும்பப் பாடுவதோடு நின்றுவிடுவதில்லை கர்னாடக இசை. ஒரு பாடலுக்குமுன், ‘ததரின்ன..’ என ராக ஆலாபனை செய்கிறார்களே! குறிப்பிட்ட ராகத்தை இசைப்பவர் தன் மனோதர்மத்துக்கு ஏற்ப அதைப் பாடவேண்டும். (சில பாக்கியசாலிகள் எந்த குருவிடமும் கற்காது, கேள்வி ஞானத்தைக்கொண்டே இதைச் செய்வார்கள்). பாடலின் நடுவே ஓரிரு வரிகளை குறிப்பிட்ட காலப்பிரமாணத்திற்குள் வித விதமாக மாற்றிப் பாடுவது ‘நிரவல்’. அதன்பின், கற்பனை ஸ்வரம். இது ஒருவரின் ராக, தாள ஞானத்தை வெளிப்படுத்துவது. ‘ஞானம்’ என்பது இயற்கையிலேயேயே அமைந்திருப்பது. இதை வலுக்கட்டாயமாக ஒருவருள் புகுத்த முடியாது. ஸ்ருதி சுத்தமாக ரசித்துப் பாடுவதும், இன்ன ராகம் என்று கண்டுபிடிப்பதும் ஞானத்தைப் பொறுத்தது. வயது, குரல் வளம், ஆர்வம் ஆகியவற்றிற்கும் ஞானத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஞானம் ஒரு வரம். எல்லாருக்கும் அமைவதில்லை. மிருகங்களுக்கு இயற்கையிலேயே இசை ஞானம் அமைந்திருக்கிறது. எல்லாப் பூனைகளும் நாம் பாடும்போது அசையாது செவிமடுக்கும். வேறு சில, ஸ்ருதி தவறாமல், நாம் பாடும் ஸ்வரத்தை, நம்மையே பிரமிக்கவைக்கும் வகையில், திரும்பப் பாடும். வாலால் தாளம் போடும் பூனைகளும் உண்டு! அத்தருணங்களில் அவைகளுடன் விளையாட இன்னொரு பூனை வந்தால்கூட கவனம் கலையாது, இசையை ரசிக்கும். இது எங்கள் வீட்டில் வளர்ந்த, வளரும், பூனைகள் எனக்குக் கற்பித்த பாடம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர் அல்லாதவர்களும் கர்னாடக இசையை ரசித்துக் கேட்கிறார்கள். இந்தியர்களுக்கோ, நம் கலாசாரத்தை விடாமல் இருக்கவேண்டும் என்ற முனைப்பு. “We are more Indian in America than in India!” என்றாள் ஒரு மங்கை, மகிழ்ச்சியுடன். அங்கு பல குழந்தைகள், வீட்டில் ஆங்கிலத்தில் பேசினாலும், தேவாரம் பயில்கிறார்கள், கர்னாடக இசை கற்கிறார்கள். இசைக்கும் ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாடல்கள்மூலம் இதிகாச புராணக்கதைகளைக் கற்க முடிகிறது. இதனால் மொழிவளம் கூடும். (முறையான உச்சரிப்புக்குச் சற்று பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்). செய்யக்கூடாதது சிறு குழந்தைகள் இயல்பாக, நிமிர்ந்து உட்கார்ந்து, தலை அசங்காது பாடுவார்கள். இதுதான் சரியான முறை. அதைவிட்டு, பார்ப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்குமே என்று தலையையும், கையையும் மிகையாக ஆட்டியபடி பாடுவதால் சக்திதான் விரயமாகிறது. பாடும்போது தொண்டையைக் கனைத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள் குரல் வள நிபுணர்கள். அதற்குப் பதிலாக, அவ்வப்போது ஒரு தேக்கரண்டி நீர் குடித்தால் குரல் வறளாது. மூச்சுப்பயிற்சி நன்மை பயக்கும். பக்தியுடன், வார்த்தைகளின் அர்த்தத்தையும் புரிந்துகொண்டு பாடினால்தான் பாட்டில் பாவம் இருக்கும். கேட்பவருக்கு ராகமோ, பாட்டின் அர்த்தமோ புரியாவிட்டால்கூட, அப்படி ஒருவர் பாடுவதுதான் மனதைத் தொடும். பாடகரின் குரல்வளம் இரண்டாம்பட்சமாகிவிடுகிறது. சமீபத்தில், ஒரு பத்து வயதுச்சிறுமி மிக நன்றாகப் பாடியதைப் பாராட்டினேன். “என் ஆசிரியை எப்போதும் என்னைத் திருத்துவார்!” என்றாள். தான் அதிபுத்திசாலி என்று கர்வம் கொள்ளாது, அல்லது, ‘ஓயாமல் தப்பு கண்டுபிடிக்கிறாரே!’ என்று ஆசிரியைமேல் கோபம் கொள்ளாது பேசிய அச்சிறுமியின் அடக்கம் எனக்கு வியப்பை அளித்தது. அகங்காரம் இருந்தால், எந்தக் கலையும் நம்மை விட்டுப்போய்விடும் அபாயம் இருக்கிறதே! உலகில் பிறரும் உண்டு ஒரு தாய் தன் மகளுக்குச் சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த இன்னொரு பெண், “ஐயே! இவ என்ன குழந்தையா? ஊட்டி விடறியே!” என்றாள் கேலியாக. “என் குழந்தைக்கு ரொம்ப ஜூரம்!” என்று பரிந்தாள் தாய். ’குழந்தை என்று அவள் குறிப்பிட்டது எட்டு வயதான பெண்ணை. அக்காட்சியைப் பார்த்து அதிசயித்தவளுக்கோ நான்கு வயதுதான். அவள் பெருமையாக, “எனக்கு ஜூரம் வந்தாலும், நானேதான் சாப்பிடுவேன்!” என்றாள். ஊட்டுவது எப்போதுவரை? ஒரு வயதோ, இரண்டு வயதோ ஆன குழந்தைகளுக்கு ஊட்டிவிட வேண்டியது தவிர்க்க முடியாதது. அந்த வயதுக் குழந்தைகள் வாயைத் திறக்கவே படுத்தும். அப்போது, பூனையோ, நாயோ அருகில் இருந்தால், அந்தப் பிராணிகளுக்கு ஒரு வாய் போட்டு, குழந்தை வாயிலும் போடலாம். மூன்று வயதானதும், ஒரு ஸ்பூனில் உணவை வைத்து, நாம் கண்ணை மூடிக்கொண்டால், குழந்தை சுயமாகச் சாப்பிடும். பக்கத்தில் மிருகங்கள் படம் போட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு, “ஐயோ! கரடி சாப்பிட்டுப் போயிடுத்து,” என்று அதிர்வதுபோல் பாவனை செய்தால், குழந்தை பெருமையாகத் தன் வாயைச் சுட்டிக்காட்டும். அடுத்த கவளத்திற்கு, குரங்கின்மேல் பழி போடலாம். நான்கு வயதிற்குமேல், ஒரு சிறுமியின் வாயில் போவதைவிட அதிகமாகவே தரையில் விழும். கூடவே அமர்ந்து கதை சொன்னால், சாப்பிடும் பிரக்ஞையே இல்லாமல் சாப்பிட்டு முடித்துவிடுவாள். உதவியா, உபத்திரவமா? குழந்தை செய்யக்கூடிய எந்த வேலையும் அரைகுறையாகத்தான் இருக்கும். அதற்காகப் பரிதாபப்பட்டோ, அவனுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டோ, அல்லது தன் அன்பை வெளிக்காட்டும் விதமாகவோ ஒருவர் அந்த வேலையைத் தானே முனைந்து செய்தால், என்றாவது, ‘எங்கு தவறு செய்தேன்?’ என்று வருந்த நேரிடும். ‘நான் ஊட்டினால், விரைவாகச் சாப்பிடுவான். அதோடு, சுத்தப்படுத்தும் வேலையும் மிச்சம்!’ என்னும் தாய் தன் சௌகரியத்திற்காகப் பார்க்கிறாள். குழந்தையோ, தன்னைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது என்று தவறாகப் புரிந்துகொள்வான். தன் விருப்பப்படிதான் எல்லாமே நடக்கவேண்டும் என்ற பிடிவாதம் எழுகிறது. அவன் எதிர்பார்த்தபடி ஏதாவது நடக்காவிட்டால், வீட்டில் அதிகாரம் தூள்பறக்கும். பதின்ம வயதில் இப்போக்கு அதிகரிக்கையில், ‘வயதுக்கோளாறு!’ என்று அலட்சியப்படுத்திவிடுகிறோம். எல்லா பதின்ம வயதினருமே இப்படி நடப்பதில்லையே என்று பார்த்தால், அவர்களுக்கு அந்தந்த வயதுக்கேற்ற வேலையும், சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது புலனாகும். நான்தான் முக்கியம் ஒரு கல்யாணத்தை முன்னிட்டு, இருபது பேருக்கு மேற்பட்ட நெருங்கிய உறவினர்கள் கூடியிருந்தார்கள் அந்த வீட்டில். பதினான்கு வயதான ஆனந்த் வீட்டுக்கு ஒரே மகன். தன் விருப்பப்படி எதையும் செய்யலாம் என்ற எண்ணம் அவனுக்கு. பிறர் வீட்டில் அப்படி நடக்கக்கூடாது என்று அவனுக்குப் பெற்றோர் சொல்லிக்கொடுக்கவில்லை. அதனால், நாள் முழுவதும் தொலைகாட்சியை அலற விட்டான். பிறர் எவ்வளவு சொல்லியும் ஒலியைக் குறைக்கவில்லை. பொறுக்க முடியாமல் போக, எண்பது வயதான தாத்தா எழுந்துபோய், தொலைகாட்சியை நிறுத்தினார். அவ்வளவுதான். ஆத்திரம் பீறிட்டது ஆனந்துக்கு. “நீ டி.வி. பாக்கறச்சே, நான் நிறுத்தறேன் பாரு!” என்று உறுமினான். நான் திகைப்புடன் அவனுடைய தாயை நோக்கினேன். ‘பெரியவர்களிடம் மரியாதையாகப் பேசு!’ என்று சொல்லிக்கொடுக்க மாட்டாளோ, ஒரு தாய்? அவளோ, “அவன் நீதிமான் (righteous) என்றாள், பெருமையாக. அதாவது, அவனுக்கு ஒரு நியாயம், அளவுகடந்த ஓசையைச் சகிக்க முடியாத தாத்தாவிற்கு ஒரு நியாயம் என்பதை எதிர்ப்பானாம்! கதை லல்லி ஒரே குழந்தை இல்லை. ஆனாலும், உடற்குறையுடன் பிறந்தவள் என்பதால், பாட்டி வீட்டில் வளர்ந்தவளுக்கு விசேட கவனிப்பு அளிக்கப்பட்டிருந்தது. வேறு இடத்தில் இருந்த தாய்வீட்டுக்கு வந்தபோது, ‘எல்லாரும் என் தேவைகளைத்தான் கவனிக்க வேண்டும்,’ என்பதுபோல் நடந்துகொண்டாள் லல்லி. அவள் (மிக உரக்க) பேசுவதைத்தான் எல்லாரும் கவனிக்க வேண்டும். பிறருக்குப் பேச வாய்ப்பு கிடையாது. தன் விருப்பப்படி எல்லாம் நடக்காவிட்டால், ஆத்திரத்துடன் கத்துவாள். உடன்பிறந்தவளுடன் எதையும் பங்கு போட்டுக்கொள்ளவும் சம்மதிக்கவில்லை. விளைவு: லல்லிக்கும் பெற்ற தாய்க்கும் அவள் அதிகாரப் போக்கைக் குறித்து ஓயாத சண்டை. பகிரப் பழக்குவது பிறருடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தை இரண்டு வயதிலேயே ஏற்படுத்த முடியும். ஒரு தட்டில் சில பிஸ்கோத்துகளைப் போட்டு, ‘எல்லாருக்கும் குடுத்துட்டு, நீயும் எடுத்துக்கோ,’ என்று அதை ஒரு சிறுவன் கையில் கொடுத்துப் பாருங்கள். தான் ஏதோ பெரிய வேலை செய்யும் பெருமிதத்துடன் அப்படியே செய்வான். யாராவது எடுத்துக்கொள்ள மறுத்தால், தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று அழுகை வரும். பிறவி நடிகன் என் மாணவனான அப்துல் குடும்பத்தில் கடைசிக்குழந்தை. அம்மாக்கோண்டு என்ற ரகம். பள்ளிக்கூட நாடகங்களில் திறம்பட நடிப்பான். ‘அதனால் பெண்களுக்கு என்னைப் பிடிக்கிறது,’ என்று என்னிடம் வெட்கத்துடன் தெரிவித்திருக்கிறான். பிரச்னை என்னவென்றால், தாயைப்போலவும், உடன் பயிலும் பதின்ம வயதுப்பெண்களையும்போல் எல்லாருமே தன்னைக் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவனிடம் இருந்ததுதான். யாராவது ஆசிரியர் திட்டிவிட்டால், ‘மூச்சு விட முடியவில்லை!’ என்று ஒரேயடியாகத் திணறுவதுபோல் நடிப்பான். ஒரு முறை நானே அவனை அவன் வீட்டில் உடனடியாகக் கொண்டுவிட நேர்ந்தது. அவனுடைய அண்ணன் உத்தியோகம் பார்ப்பவர். முகத்தில் வெறுப்புடன், ‘எல்லாம் அம்மா கொடுக்கும் இடம்!’ என்று முணுமுணுத்தார். பதறியவளாக, அருமைப்பிள்ளையின் முதுகைத் தடவிக்கொடுத்தாள் தாய். இம்மாதிரி பல முறை அவன் நடந்திருக்கிறான் என்று பிறகு தெரியவந்தது. பிறருக்குத் தன்மேல் இரக்கம் சுரந்தால், அதை அன்பு என்று நினைப்பவர்கள் இந்தப் பையன் அப்துலைப் போன்றவர்கள். ஒரு குடும்பத்திலோ, பள்ளியிலோ மிக புத்திசாலி என்று கருதி, ஒரு குழந்தைக்கு மட்டும் விசேட சலுகைகள் கொடுத்தால் இப்படித்தான் அதிகாரம் செய்வான். இத்தகையவர்களுக்கு அவர்களுடைய சுகம், சௌகரியம் – இதெல்லாம்தான் முக்கியம். பிறரைப்பற்றிய அக்கறை அறவே கிடையாது. அளவு கடந்த சலுகைகளை அளிக்கும் பெற்றோர், அடிப்படை சலுகைகளை மூர்க்கத்தனமாக மறுக்கும் பெற்றோர் – இருவகையினருமே குழந்தைகளுக்குத் தீங்கு இழைக்கிறார்கள், தம்மையும் அறியாது. கதை மன் லீ என்ற சீனப்பெண்ணின் பெற்றோர் தனியார் பள்ளிக்கூடத்தில் அவளைச் சேர்த்திருந்தார்கள். அவர்களுக்கு அதிகப் படிப்பில்லை. ஆனால் செல்வம் குவிந்திருந்தது. தங்களைப்போல் இல்லாது, மகளாவது கல்வியில் உயர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதுதான். அதற்காக, எந்நேரமும் ‘படி, படி!’ என்றால், என்ன ஆகும்? தாம் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறாத மகளை மூன்று தினங்கள் ஓர் அறையில் பூட்டிவைத்த தாய், மகள் தலையில் இரும்புத்தடியால் அடிக்க முயன்ற தாய் ஆகியோரை நான் அறிவேன். இப்பெண்கள் ஒரு முறை நல்லவிதமாகத் தேர்ச்சி பெற்றுவிட்டால், தாய்க்கு கர்வம் எழும். ஆனால், அடுத்த முறை எல்லாவற்றிலும் மிகக் குறைந்த மதிப்பெண்கள்தாம் வாங்குவாள் மகள். அவ்வளவு மன இறுக்கம். மன் லீக்குத் தன்னைப்போல் அடியோ, திட்டோ வாங்காத பிற மாணவிகளைக் கண்டால் பொறுக்காது. அவர்களுக்கு நேரிலும். இயலாவிட்டால் தொலைபேசிமூலமும் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பாள். பாதிக்கப்பட்ட ஒரு பெண் தலைமை ஆசிரியையிடம் புகார் செய்ய, ‘உனக்கு எதனால் பாதிப்பு?’ என்று அன்புடன் விசாரித்தாள் அவள். அப்பெண் அழுதபடி, தன் அவலக்கதையைக் கூறினாள். (மன இறுக்கத்தால் பாதிக்கப்படும் சிறுவர்களிடம் பேசினாலே போதும். தாமும் ஒரு பொருட்டு என்று பிறர் கருதவேண்டும் என்ற ஏக்கம்தான் அவர்களை ஆட்டுவிக்கிறது). பொறுப்பாகச் செயல்படுவது சில இல்லங்களில், ‘பெரியவன் ஆனதும், தானே தெரிந்துவிட்டுப்போகிறது!’ என்று எதையும் பழக்கமாட்டார்கள். எந்தப் பழக்கமும் தானே வருவதில்லை. தொலைகாட்சியில் நல்ல படம், அல்லது வீடியோ விளையாட்டுகளில் ஆழ்ந்துபோனதில் வீட்டுப்பாடம் செய்ய மறந்துவிட்டது என்று காலங்கடந்து உணர்ந்து, ஆசிரியர் திட்டுவாரே என்று பயப்படும் சிறுவனுக்காக வக்காலத்து வாங்குவது ஏன்? அவன் தண்டனை பெறட்டும். அப்போதுதான் இன்னொரு முறை மறக்கமாட்டான். ‘கணினி, நண்பர்களுடன் உரையாடுவது – எதுவாக இருந்தாலும், வீட்டுப்பாடம் செய்த பிறகுதான்,’ என்று ஒரு வரையறை வகுத்திருக்கலாமே! எழுதப்படாத விதிமுறைகள் ஒரு கணவனாக, மனைவியாக, பெற்றோராக, பொதுவாக, எந்த பொறுப்பான நிலையிலும் செய்யக்கூடாதவை பொய், பித்தலாட்டம், வன்முறை ஆகியவை. ஆனால், எத்தனை பேர் இதையெல்லாம் கடைப்பிடிக்கிறார்கள்? முப்பது ஆண்டுகளுக்குமுன் ஓயாமல் சண்டை பிடித்துக்கொண்டு, பின்பு விவாகரத்து பெற்றனர் அத்தம்பதி. மூத்தவளான டெய்ஸி தந்தையுடன் வளர, இளையவள் தாயின் பொறுப்பில் விடப்பட்டாள். அதற்கு முன்னர் பாசம் என்றால் என்னவென்றே அறியாது வளர்ந்திருந்தனர் இருவரும். பெற்றோர் மறுமணம் செய்துகொண்டார்கள். டெய்ஸி காதல் வயப்பட்டு மணந்துகொண்டாள் – தன்னையும் அறியாது, தந்தை தாயை வதைத்ததுபோன்று வன்முறையைக் கைப்பிடிக்கும் ஒருவனை. சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவனது கொடுமை தாங்கமுடியாதுபோக, மீண்டும் தந்தையின் வீட்டில் சரண் புகுந்தாள். சிற்றன்னை அவளது நிலைமையைப் புரிந்துகொண்டு, அன்புடன் ஆதரவு அளித்தாள். ‘இவள் வேறு எங்கு போயிருக்கப் போகிறாள்!’ என்று அவளைத் தேடி வருவதை வழக்கமாகக் கொண்டான் அவள் கணவன். வன்முறை தொடர்ந்தது. டெய்ஸியின் மனநிலை பெரிதும் பாதிப்படைய, எதைக் கண்டும் அஞ்ச ஆரம்பித்தாள். காற்றில் கதவோ, ஜன்னலோ ஆடினால்கூட, கணவன்தான் வருகிறான் என்ற படபடப்பு ஏற்பட்டது. அவளைப் பார்க்க வந்த தங்கை, “என் அக்காளுக்கு இங்கு போதிய பாதுகாப்பு இல்லை. நான் அவளை என் தாய் வீட்டுக்கே அழைத்துப் போகிறேன்,” என்று சிற்றன்னையுடன் வாதாடினாள். சிற்றன்னை சம்மதிக்கவில்லை. இருவருக்கும் பலத்த வாக்குவாதம் நடக்க, ஏற்கெனவே குழம்பியிருந்த டெய்ஸிக்கு நடப்பது என்னவென்றே புரியவில்லை. ஒரு கத்தியால் சிற்றன்னையைக் குத்திக் குதறினாள் – இருபது தடவைக்குமேல். ‘கொலையாளி!’ என்று சட்டம் அவளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. (இக்கதையை எனக்குச் சொன்னவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்). இப்போது, ‘அன்பான சிற்றன்னையை நானே கொன்றுவிட்டேனே!’ என்று டெய்ஸி வருந்தாத நாளில்லை. இதில் யார் குற்றவாளி? சிறுவயதில் அன்போ, அரவணைப்போ அளிக்காது வளர்த்த பெற்றோரா? ‘மனைவி’ என்றால் தன் மனம் போனபடி அவளை நடத்தலாம் என்றெண்ணிய கயவனா? இவர்கள் தம் பொறுப்பிலிருந்து வழுவிவிட்டதால்தான் எத்தனை விபரீதம்! அலட்டல் ஏன்? அலுவலங்களில் அதிகமாக அலட்டிக்கொள்பவர்கள் பெரிய பதவிகளில் இருப்பவர்களாக இருக்காது. இவர்கள்தாம், ‘எனக்கும் அதிகாரம் இருக்கிறது!’ என்று தம்மையே ஏமாற்றிக்கொண்டு, அதைப் பிறருக்கும் உணர்த்த விரும்புகிறவர்கள்போல் நடப்பார்கள். தம்மைத் தாமே தாழ்வாக நினைப்பதால் வந்த வினை! கதை செல்வந்தர் ஒருவரின் வீட்டுக்கு வேலை செய்ய வந்தபோது, வேணி சிரித்தமுகமாய், சுறுசுறுப்பாக இருந்தாள். அவளை மிக மிக மரியாதையாக நடத்தியது அக்குடும்பத்தினர் செய்த பெரிய பிழை. ‘இவர்களுக்கு நம்மைவிட்டால் வேறு யாரும் கிடைக்கமாட்டார்கள்’ என்ற திமிர் ஏற்பட்டது வேணிக்கு. பத்து வருடங்களுக்குப்பின், தனக்குச் சம்பளம் கொடுப்பவர்களையே அதிகாரம் செய்ய ஆரம்பித்தாள். தன் கவனிப்பில் இருந்த முதியவளுடன் ஓயாமல் தொலைகாட்சி பார்த்ததில், கையையும், தலையையும் ஆட்டிக்கொண்டு, ‘வீராங்கனை’போல் பேசும் பழக்கம் வந்தது. விருந்தினர் ஒருவர் அந்த வீட்டுக்குப் போய் தங்கியபோது, ’நான்தான் இந்த வீட்டு எஜமானி!’ என்பதுபோல் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டாள். அவர் ஏன் பொறுப்பார்? “சும்மா வாயாடாதே! உள்ளே போய், வேலை இருந்தா பாரு!” என்று பதிலுக்குக் கத்த, பயந்து, உள்ளே ஓடினாள் வேணி. “அம்பது வயசுக்குமேல எனக்கு வாயாடிப் பட்டம்!” என்று முனகினாள், தன்னிரக்கத்துடன். அக்குடும்பத்து இளைஞனும் துணிந்து அவளை எதிர்க்க, “நான் வேலையை விட்டுப் போயிடுவேன்..,” என்று மிரட்ட ஆரம்பித்தாள். “நீ போனா, ரெண்டு நாள் கஷ்டப்படுவாங்க. அப்புறம் வேற ஒருத்தி கிடைக்காமலா போவா? யார் போனாலும், உலகம் நடக்காம போறதில்லே. வேண்டியவங்க போயிட்டா, நாம்ப சாப்பிடறதில்லையா, புதுத்துணி வாங்கறதில்லையா?” என்று யாரோ உணர்த்தினார்கள். (அது நானில்லை என்றால், நம்பவா போகிறீர்கள்?) வெகு காலத்திற்குப் பிறகு, வேணி தன் உண்மை நிலையைப் புரிந்துகொண்டாள். எண்ணையில் போட்டு எடுத்ததும் பூரி உப்பியிருக்கும். சிறிது நேரத்தில் அமுங்கிவிடும். அதுபோல் வேணியின் பூரித்திருந்த செருக்கு அடங்கியது. அதன் பின்னர், “நான் இந்த வீட்டிலே வேலை செய்யறவதான். எதுவா இருந்தாலும், ஐயாகிட்ட கேளுங்க,” என்று கம்மிய குரலில் கூறப் பழகிக்கொண்டாள். மருத்துவர்கள் ஆரோக்கியக் குறைவால் அவதியுறும் நோயாளிகளைப் பார்த்து, ‘வேடிக்கை!’ என்று சிரிக்கும் டாக்டரைப் பார்த்திருக்கிறீர்களா? கோலாலம்பூரில் அப்படி ஒருவர் இருந்தார். பெயரா? கம்சன் என்று வைத்துக்கொள்ளலாம். ‘என்னால் எந்த வியாதியையும் குணப்படுத்திவிட முடியும்!’ என்ற செருக்குடன் செயல்பட்டார். ‘தோளில் வலி,’ என்று அவரிடம் போனேன், யாரோ செய்த சிபாரிசை நம்பி. ஒருமாதக் குழந்தைக்கும் அவரிடம் ஒரே வகை வைத்தியம்தான். உடலில் பல பாகங்களில் மெல்லிய மின்சாரத்தைச் செலுத்துவார். அதிர்வு உண்டாகும். வரிசையாக எட்டு பேரை உட்காரவைத்து, கம்சன் தனது ‘வைத்தியத்திறனை’ காட்டும்போது, ‘டாக்டர்! நான் பயந்தவள்!’ என்று சிலர் கெஞ்ச, பெரிதாகச் சிரிப்பார். மின்னதிர்ச்சி தாக்கியதும், சிரிப்பு இன்னும் பலக்கும். ஒரு முறை, என் அனுமதியைப் பெறாது தலையில் சற்று அதிகமான மின்சாரத்தைச் செலுத்த, எதிர்பாராத அதிர்ச்சியாலும், வலியாலும் அலறித் துடித்தேன். எந்தச் சிறிய சிகிச்சைக்கு முன்னரும் நோயாளிக்கு அதன் தன்மையை விளக்கவேண்டும் என்பது விதி. இம்மாதிரி வைத்தியத்திற்கு இந்நாட்டில் அனுமதி கிடையாது என்று தெரிந்துபோனதும், மருத்துவத்துறையினரிடம் நான் புகார் செய்ய, ஐந்தாண்டுகள் வழக்கு நடந்தது. முதலில் இறுமாப்பாக நடந்துகொண்டார் கம்சன். அவர் சம்பாதித்திருந்த லட்சங்களெல்லாம் வக்கீல்களுக்குப் போயிற்று. ‘எனக்கு வக்கீல் கிடையாது!’ என்றுவிட்டேன். நான் உண்மையே பேசுகிறேன் என்று புரிந்து, அவருடைய வக்கீல், “என் தொழிலைத்தான் செய்கிறேன்,” என்று தனிமையில் என்னிடம் மன்னிப்பு கோரினாள். போகப்போக, அவர் பிறருக்கு விளைவித்த அச்சம் அவரையே தாக்கியது. அந்த நடுக்கத்தைக் கண்டு எனக்குள் அலாதி திருப்தி பிறந்தது. இறுதியில், அவரது உரிமம் ஓராண்டு காலத்திற்கு பிடுங்கப்பட்டு, மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்தார்கள். ‘நீங்கள் எப்படி ஏமாந்தீர்கள்?’ என்று என்னை நன்கு அறிந்த சிநேகிதி ஒருத்தி ஆச்சரியப்பட்டு, பிறகு, ‘ஓ! உங்களால்தான் அவருடைய நாட்பட்ட, அடாத செயலுக்கு ஒரு முடிவுகட்ட முடியும் என்றே இப்படி நடந்திருக்கிறது!’ என்றாள். நன்மை விளைந்தாலும், எனக்கு ஏற்பட்ட தாக்கத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகள் வக்கீல், வழக்கு சம்பந்தப்பட்ட எந்த ஆங்கிலப் புதினங்களையும் படிக்க முடியவில்லை. இங்கு அரசாங்க மருத்துவமனைகளில் மிக நல்ல கவனிப்பு. ஐம்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களை மிக மரியாதையாக நடத்துவார்கள். ஏழையோ, பணக்காரரோ, எல்லாரும், ‘அங்கிள், ஆன்ட்டி’தான். எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும், ’நாம் செய்யும் வேலை இழிவானது,’ என்ற தாழ்வு மனப்பான்மை இல்லாது, சிரித்த முகத்துடன் நம்முடன் பேசுவார்கள். அவர்களுடைய தலைவர் பொறுப்பானவராக இருக்கவேண்டும். அந்த மனிதர் கம்சனின் போதாத காலம், நான் அங்கு சென்றிருக்கிறேன். இனி, தன்னிச்சைபோல் நடக்கத் துணியமாட்டார். அரசியல்வாதிகள் அரசியலில் பெரிய பதவி வகித்து, ‘மக்கள் பணம் என் பணம்’ என்பதுபோல் நடந்துகொள்பவர்கள்… போதும், போதும். உங்களுக்குத் தெரியாததா! எந்த ஓர் உத்தியோகத்திலும், எந்நிலையிலும் செய்யக்கூடியது, செய்யக்கூடாதது என்று சில எழுதப்படாத விதிமுறைகள் இருக்கின்றன. அவைகளைக் கடைப்பிடித்தால்தான் நிம்மதியும் மரியாதையும் நிலைக்கும். இது ஏன் பலருக்கும் புரிவதில்லை? பிறரைப் பார்த்தும் இவர்கள் ஏன் கற்பதில்லை? சரித்திரம் மீண்டும் மீண்டும் தலைதூக்கும் என்பது இதுதானோ? மகிழ்ச்சி எங்கே? உங்களுக்கு எப்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது? மாணவர்: பரீட்சையில் நிறைய மதிப்பெண்கள் பெறும்போது. கலைஞர்: எனது நிகழ்ச்சி பெரிதும் பாராட்டப்படும்போது. எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்: நான் எதிர்பார்த்ததிற்கு மேலேயே என் படைப்பு வெற்றி பெற்றால். இவர்கள் எல்லோருடைய பதில்களிலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அனைவருமே கடுமையாக உழைத்துப் பெற்ற வெற்றியால்தான் மகிழ்வடைகிறார்கள். மாணவரை எடுத்துக்கொண்டால், குருட்டாம்போக்கில் எவரும் பரீட்சைகளில் சிறப்பான தேர்ச்சி பெற முடியாது. எத்தனை நேரம் படித்திருக்க வேண்டும்! இரண்டு அல்லது மூன்று மணிநேர கலைநிகழ்ச்சிக்காக ஒருவர் வருடக்கணக்கில் பயிற்சி பெறவேண்டுமே! வாசகர் பத்தே நிமிடங்களில் படித்து முடிக்கும் கதையை எழுத ஒரு எழுத்தாளர் ஆராய்ச்சி செய்திருப்பார், நிறைய சிந்தித்திருப்பார். அத்துடன், அதை எழுத நேரத்தையும் சக்தியையும் செலவழித்திருப்பார்! ஆனால், வெற்றி பெறுகையில், பட்ட கஷ்டங்களும் செலவிட்ட நேரமும் பெரிதாகப்படுவதில்லை. பொறுக்க முடியாதவைகளையும் அனுசரித்துப்போனால்தான் நன்மையோ, வெற்றியோ கிடைக்கும்போது திருப்தியுடன் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வாழ்வில் பிரச்னைகளே இல்லாமல், மகிழ்ச்சி மட்டுமே தொடர்ந்து வரவேண்டும் என்றால் நடக்கிற காரியமா? பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதில்தான் முதிர்ச்சி இருக்கிறது. சிந்திப்பதும் பேசுவதும் பெண்கள் தமக்குப் பிடித்ததைப்பற்றியே பேசுவார்கள், ஆண்கள் தமக்குத் தெரிந்ததைப்பற்றிப் பேசவே பிரியப்படுகிறார்கள் என்று கூறுவதுண்டு. ‘பிடித்தது’ என்றால் அதில் வேண்டாத விஷயமும் இருக்கும். ஓயாமல் தொல்லை கொடுக்கும் மாமியார், எல்லாவற்றிலும் தப்பு கண்டுபிடிக்கும் மேலதிகாரி அல்லது கணவன் – இப்படி யார் தலையையாவது உருட்டிக்கொண்டிருப்பார்கள். நமக்குப் பிடிக்காத உத்தியோகமோ, வாழ்க்கைத்துணையோ அமைந்துவிட்டால், அதையே எண்ணிக் குமைவதால் என்ன பலன்? ‘அப்படிச்செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கக்கூடாது’ என்றெல்லாம் காலங்கடந்து யோசிப்பதால் நடந்ததை மாற்ற முடியுமா, என்ன! நான் விளையாட்டுப் பொம்மையா? யாரோ நம்மை இழிவாகப் பேசினால்கூட ஆத்திரம் எழுகிறது. ஒரு நிமிடம் ஆத்திரப்பட்டால், அறுபது வினாடிகள் நம் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறோம். இதைத்தானே அவரும் எதிர்பார்க்கிறார்! பொம்மைக்குச் சாவி கொடுப்பதுபோல் பிறர் நம்மை ஆட்டுவிக்க நாமே ஏன் அனுமதி கொடுக்கவேண்டும்? ஒருவரது மகிழ்ச்சியைப் பறிக்க நினைப்பவர் தம்மால் அப்படி மகிழ முடியவில்லையே என்று ஏங்குபவராக இருக்கலாம் என்று புரிந்து, அதைப்பற்றி அதிகம் சிந்திக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். நமக்குத் தொந்தரவு கொடுப்பவர்களைப்பற்றிச் சிந்திக்கும்போதும், பேசும்போதும் நம் முகம் எப்படி இருக்கும்? அவர்கள் எதிரில் இருப்பதாகப் பாவித்துக்கொண்டு சிடுசிடுக்கிறோம். முகத்தில் மலர்ச்சி எப்படி வரும்? கதை இரண்டு வயதுக் குழந்தை கௌதம் கீழே விழ, நெற்றியில் காயம் பட்டு, வீங்கிவிட்டது. நான் பரிவுடன் அவன் கன்னத்தைத் தடவினேன். அப்போதுதான் வலி அவனுக்கு உறைக்க, “இந்தப் பாட்டிதான் அடிச்சா!” என்று என்மேல் குற்றம் சாட்டிவிட்டு அழுதான். சிறிது பொறுத்து, “பாட்டி அடி, அடின்னு அடிச்சா! வலி!” என்றான். பிறகு அதுவே மூன்று முறை நான் அடித்ததாக ஆக, அழுகை பலத்தது. ஒரு பிரச்னையைப்பற்றி இடைவிடாமல் பேசினால், இப்படித்தான் பூதாகாரமாக உருவெடுத்துவிடும். ‘எனக்குச் சந்தோஷமே இல்லை!’ என்பது இதனால்தான். மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்பி, வேண்டாத எண்ணங்களையும் நடைமுறையையும் பிறருடன் பகிர்ந்துகொள்வது வீண். நல்லது செய்தால் மகிழ்ச்சி ஒரு முறை, நான் இரண்டு வெள்ளி டிக்கட்டுக்கு பத்து வெள்ளியை அளிக்க, பேருந்து ஓட்டுநர் பாக்கிப் பணத்தைக் கூடுதலாக கொடுத்துவிட்டு, முன்னால் போய்விட்டார். சிறிது பொறுத்துத்தான் கவனித்தேன். நான் பின்னால் உட்கார்ந்திருந்தேன். நின்றுகொண்டிருந்த என் மகளிடம், அவரிடமிருந்து தவறாகப் பெற்றுக்கொண்ட பணத்தைத் திருப்பி அளிக்குமாறு கூறினேன். பலரையும் தள்ளிக்கொண்டு போக அவள் தயங்கினாள். “அம்மா கொடுக்கச் சொன்னதாகச் சொல்லு,” என்று அனுப்பினேன். நான் கடைசியாக இறங்கும்போது, அந்த மனிதர் என்னைப் பார்த்து நன்றியுடன், மகிழ்ந்து சிரித்தார். நான் கொடுத்திருக்காவிட்டால், அவர் கைப்பணத்தைப்போட்டு ஈடுகட்டி இருக்க நேரிட்டிருக்கும். சிறு சமாசாரம்தான். ஆனாலும், ஒருவரை மகிழ்வித்த மகிழ்ச்சி என் மனதில் நிலைத்திருக்கிறது. மனமுவந்து பாராட்டுங்கள்! ஒரு மருத்துவசாலையில் வேலைபார்த்த இளம்பெண், ‘குறைந்த சம்பளத்தில் ஓயாத வேலை!’ என்று சிடுசிடுப்பாக இருப்பாள். ‘சரியான சிடுமூஞ்சி!’ என்று எவர்மீதாவது குற்றம் கண்டுபிடிப்பதால் நாம் உயர்ந்துவிடுவதில்லை. தகுதியான பாராட்டுக்குத்தான் ஒருவரை மகிழ்விக்கும் சக்தி உண்டு. ஒரு முறை, தான் கொடுக்கவேண்டிய மாத்திரைகளை எண்ணும்போது, அவள் கை இயந்திரகதியில் வேலை செய்ததைப் பார்த்து நான், “ஐ..யோ! என்ன வேகம்!” என்று வியந்தேன். சட்டென தலை நிமிர்ந்து, “பழகிப்போச்சு!” என்றாள். முகம் புன்னகையில் மலர்ந்தது. (‘ஏன் இந்த சிடுசிடுப்பு? கொஞ்சம் சிரியேன்!’ என்றால் அவள் முகம் மலர்ந்திருக்குமா?) முக மலர்ச்சியும் அழகும் ஒருவரது கண், மூக்கு, வாய் போன்ற அவயவங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றனவோ, இல்லையோ, முகத்தில் மலர்ச்சி இருந்தால், முகம் அழகாகத் தென்படும். எவ்வளவுதான் அலங்காரம் செய்துகொண்டாலும், சுயநலம் கொண்டவர்களாக இருப்பவர்கள், அல்லது தெரிந்தே பிறருக்கு இன்னல் விளைவிப்பவர்கள் போன்றவர்கள் பிறர் கண்களுக்கு அழகாகத் தென்படமாட்டார்கள். நல்லதை மட்டும் எடுத்துக்கொள்! வெளிநாட்டுப் பூங்கா ஒன்றில் மரத்தின்கீழ் ஒரே குப்பையாக இருந்தது. உடன் வந்திருந்த என் மகள் முகத்தைச் சுளிக்க, “கீழே பார்க்காதே, மேலே பார்!” என்றேன். மரக்கிளைகளில் கண்கவரும் மலர்கள்! குப்பையா, மலர்களா? எதைக் கவனித்தால் மனம் மகிழும்? மரம் மட்டுமல்ல, மனிதர்களும் அப்படித்தான். நம்மை வாட்டும் ஒருவரது குறையையே எண்ணி மனம் நோகாமல், அவரிடம் ஏதாவது நல்ல குணம் இருந்தால் அதைக் கவனிக்கலாமே! அப்படி எதுவும் தென்படவில்லையா? விட்டுத்தள்ளுங்கள்! பிறரைப்பற்றிய வேண்டாத யோசனையில் நம் அமைதியை, மகிழ்ச்சியை, பறிகொடுப்பானேன்! பொறுப்பே கிடையாது இரண்டே வயதான குழந்தை தன் தலையில் வாசலிலிருந்த மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது. அம்மாவுக்குத் தெரியாமல்தான்! “அம்மா திட்டமாட்டா?” என்று தன்னைவிடச் சற்றே பெரியவளாக இருந்த அக்காளிடம் முன்னெச்சரிக்கையாகக் கேட்டுக்கொண்டாள். “திட்டினா, திட்டட்டுமே!” என்று தைரியம் வழங்கப்பட்டது. உள்ளே ஏதோ வேலையாக இருந்த தாய் ஓடோடி வந்தாள். அதற்குள் காரியம் கெட்டுவிட்டது. “இவதான் சொல்லிக் குடுத்தா!” என்று அக்காளின் பக்கம் கையை நீட்டினாள் குழந்தை. விவரமறியாத அந்தச் சிறு குழந்தையை அடிக்கவோ, திட்டவோ பெற்றவளுக்கு மனம் வரவில்லை. பெரியவளைக் கண்டித்தாள். “நான் ஒண்ணுமே பண்ணலே!” என்று அவளும் வாதாடினாள், இடுப்பை ஆட்டி ஆட்டிக்கொண்டு, மனோரமா ஸ்டைலில். “என்னைப்போய் திட்டறியே!” சகோதரிகள் ஒற்றுமையாக இருந்து, எனக்கு எதிராகச் செயல்பட்டதை இப்போது நினைவுகூர்ந்தால் சிரிக்கிறார்கள். இன்னொரு முறையும் அப்படி ஏதோ ‘செய்யக்கூடாத’ விஷமம் செய்த சிறியவளைக் கண்டித்தபோது, அதே சாக்குதான். அக்காளின் பக்கம் கையை நீட்டினாள். “அவ சொல்லிக்குடுத்தா, நீ ஏன் கத்துக்கறே?” என்று, சிரிப்பை அடக்கியபடி நான் கேட்டதற்குப் பதில் இல்லை. விழித்தாள். நான்கு வயதில் அச்சிறுமியிடம் கொஞ்சம் காசைக் கொடுத்து, “எதிர்க்கடையில் பிஸ்கோத்து வாங்குக்கோ. சாக்லேட் கூடாது. பல் கெட்டுப்போயிடும்,” என்று சொல்லி அனுப்பினேன். சிறிது நேரத்தில் கையில் சாக்லேட்டுடன் வந்தாள், முகத்தைக் கோணிக்கொண்டு. “நான் பிஸ்கேட்தான் .கேட்டேன். அவன் என்னமோ சாக்லேட் குடுத்துட்டான்,” என்ற சாக்கு வேறு! (பொய் சொல்வது தவறு என்று அவளுக்குத் தெரியும். அதனால்தான் முகம் மாறியிருந்தது). “பொய் சொல்லாதேடி, கழுதை!” என்று திட்டினேன். செய்யப்போகும் காரியம் தப்பு என்று தெரிந்தே செய்துவிட்டு, பழியை இன்னொருவர்மேல் சுமத்தினால், தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று சிறுபிராயத்திலிருந்தே தெரிந்துவிடுகிறது. அந்த வயதில் கண்டிக்காது விட்டுவிட்டால், அதே நடத்தை பிற்காலத்திலும் தொடரும். ஆசிரியரிடம், ‘என் வீட்டுப்பாடத்தை எங்கள் வீட்டு நாய் கடித்துவிட்டது!’ ‘அலாரம் அடிக்கவில்லை. அதனால் நெடுநேரம் தூங்கிவிட்டேன்,’ என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்வது இதனால்தான். அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சாதித்தால் தண்டனை அவ்வளவு கடுமையாக இருக்காது என்று பலரும் நம்புகிறார்கள். நண்பர்களுடன் கும்மாளமடித்துவிட்டு, ‘நேத்திக்கு ஆபீசில ஒரே வேலை! அந்த மானேஜர் மீட்டிங் வேற வெச்சுட்டான்!’ என்று மனைவியை (அடிக்கடி) நம்பவைக்கும் கணவன்மார்களும் இதில் சேர்த்தி. தம்பதிகளும் பொறுப்பைத் தட்டிக்கழிக்க ஒருவரையொருவரைப் பயன்படுத்திக்கொள்வதுண்டு. “அப்பா ஆபீசிலிருந்து வரட்டும். ஒனக்கு இருக்கு!” என்று குழந்தையை மிரட்டுவாள் தாய். மகனின் நடத்தையில் திருப்தி இல்லாத தந்தையோ, “நீ ஒன் மகனை வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பார்!” என்றுவிடுவார், தனக்கு அவன் விஷயத்தில் சம்பந்தமே இல்லாததுபோல்! அரசியல்வாதிகளும் பொறுப்பும் பதவிக்கு, அதனால் கிடைக்கும் அதிகாரத்திற்கு, பலரும் ஆசைப்படுகிறார்கள். என்னென்னவோ முயற்சிகள் எடுத்துக்கொள்கிறார்கள். தேர்தலில் தங்கள் கட்சி தோற்றபின், அதற்குமுன் எதிர்க்கட்சியாக இருந்த ஆளுங்கட்சி இவர்கள் செய்த அட்டூழியத்தைத் தட்டிக்கேட்கும்போது, ‘எனக்கு மேலே இருந்தவர்களின் ஆணைப்படிதான் நடந்துகொண்டேன்!’ என்று அரசியல்வாதிகள் சாதிப்பார்கள். நடப்பது சட்ட விரோதம் என்று புரிந்தும், அதை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தவர்களும் இதையே சொல்லி, தம்மேல் எந்தக் குற்றமும் கிடையாது என்பார்கள். ‘நான் செய்தது தவறு,’ என்று ஒத்துக்கொள்ள எத்தனை பேருக்குத் தைரியம் இருக்கிறது? தாம் செய்த செயலுக்குப் பிறர்மேல் பழியைச் சுமத்துகிறவர்கள் இவர்கள். ‘பொறுப்பு’ என்ற வார்த்தையின் அர்த்தமே புரியாதவர்கள். அண்மையில் மலேசியாவில் தேர்தல் நடந்து முடிந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 1957-ல் சுதந்திரம் அடைந்திருந்திருந்த நாடு இது. ‘அரசியல்வாதிகள் ஏதோ செய்துவிட்டுப் போகட்டும். நமக்குத்தான் வசதிகள் தாராளமாக இருக்கிறதே!’ என்று ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குமேலும் விட்டேற்றியாக இருந்தனர் குடிமக்கள். விலைவாசி கண்டபடி எகிறியபோதுதான் விழித்துக்கொண்டார்கள். தம் பொறுப்பு என்னவென்று அவர்களுக்குப் பிடிபட்டது. ஆளுங்கட்சியில் லஞ்சம், இன்னும் என்னென்னவோ ஊழல் என்று இணையத்தில் விரிவாக வந்தது. ஆளுங்கட்சியினரின் அளப்பரிய சொத்து (உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்), பங்களா எல்லாம் நம் பணம் என்று எல்லாரும் கொதித்தெழ, அக்கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அது மலாய், சீனர், இந்தியர் ஆகிய மூவினத்தோரையும் இணைத்த கட்சி. இப்போது அனேகமாக அனைவரும் இணைந்து அதை எதிர்த்தார்கள். பிரதம மந்திரியின் மனைவி ஐந்நூறு கைப்பைகள் வைத்திருந்தாள்; ஒவ்வொன்றின் விலையும் பல லட்சம் (தங்கம், வைரம் பதித்தது), அவைகளுக்குள் பல கோடி உள்நாட்டு, அயல்நாட்டு நாணயம் இருந்தன என்றெல்லாம் தினசரிகள் அம்பலப்படுத்தியபோது, ‘நல்லவேளை, நாம் இப்போதாவது விழித்துக்கொண்டோமே!’ என்ற நிறைவு மக்களுக்கு எழுந்தது. ‘புதிய மலேசியா’ என்று இப்போது வர்ணிக்கப்படும் நாடு ஒரு தேர்தலால் மாறியது விந்தையல்ல. இதுவரை ஓட்டிச்சாவடி பக்கமே போகாதவர்கள்கூட தம் பொறுப்பை உணர்ந்து நடந்துகொண்டதன் நல்விளைவு இது. நாட்டுத் தலைவர்கள் மட்டுமின்றி, வீட்டுத் தலைவர்களுக்கும் பொறுப்புணர்ச்சி அவசியம் தேவை. ‘பெரியவர்கள் சொல்வதை அப்படியே இம்மிபிசகாமல் கடைப்பிடிக்கவேண்டும்!’ என்பதுபோல் நடக்கும் பெற்றோர்கள் பிள்ளைகளின் சுய சிந்தனையைப் பறிக்கிறார்கள். ‘நாம்தான் வாழ்க்கையில் பல தவறுகள் செய்துவிட்டோம். நம் குழந்தைகளும் அப்படி நடக்காது பாதுகாக்கிறோம்!’ என்று அவர்கள் எண்ணமிடலாம். ஆனால், இம்மாதிரி வளர்க்கப்பட்டவர்கள் சிறிது சுதந்திரம் கிடைத்தாலும் தம் மனம்போனபடி நடப்பார்கள். தம் செயல்களுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். கதை பல தீய பழக்கங்கள் கொண்ட ஒரு பெரியவர் என்னிடம் சிரித்தபடி கூறினார், “எங்கம்மா செல்லம் குடுத்து என்னைக் கெடுத்துட்டா! எட்டு வயசுவரைக்கும் என்னை இடுப்பிலே தூக்கி வெச்சுப்போ! அப்பா என்னைத் திட்டவே விடலே!’ பிற்காலத்தில் அவரது குடும்பம் நிர்க்கதியாகப் போயிற்று. அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. குற்ற உணர்ச்சியும் கிடையாது. ஏனெனில் தன் சுகமே பெரிது என்று நினைக்கும்படி வளர்க்கப்பட்டிருந்தார். அவர் மரணத்தைத் தழுவியபோது, உண்மையாகத் துக்கப்பட்டவர்கள் எவருமில்லை. அதுவே அவர் பெற்ற தண்டனை. தான் செய்தது தவறாக இருந்தாலும், அதற்குப் பொறுப்பேற்க ஒரு தலைவன் தயாராக இருக்கவேண்டும். அப்போதுதான் நினைத்ததைச் சாதிக்க இயலும். பிறரும் அவனை நம்புவர். உன் வெற்றி-தோல்விக்கு நீயே பொறுப்பு ‘தோல்வி என்றால் அவமானம்!’ என்று பயந்து, எதுவுமே செய்யாதிருப்பதைவிட தவறு செய்து அதிலிருந்து கற்பது மேல். வெற்றியை நோக்கி நடக்கும்பொது, அவர்களை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்த பிறரை எதிர்பாராது, தம் செயலுக்குத் தாமே பொறுப்பேற்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். அப்படியே தவறு நேர்ந்தாலும், அதை ஒப்புக்கொள்ளும் தைரியமும் பொறுப்புணர்ச்சியும் ஏற்படும். கடுமையாக உழைத்தாலும், தான்தோன்றித்தனமாக நடப்பது சராசரி மனிதனின் குணம். ஆடம்பரமாக நடந்து, பார்ப்பவரை பிரமிக்க வைக்கவேண்டும் என்று நினைப்பவருக்கு மகிழ்ச்சி நிலைக்காது. கதை ஒரு தனியார் நிறுவனத்தின் மேலதிகாரியாக இருந்த நடராஜன், ‘இதுவரை ஏழ்மையில் உழன்றது போதும்,’ என்று நினைத்தவர்போல், ஆடம்பரச் செலவுகள் செய்தார். மனைவியுடன் அடிக்கடி சொந்தக் காரில் சுற்றுலா செல்வது அவருக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. ‘மாதம் பிறந்தால், சம்பளம் வந்துவிட்டுப்போகிறது!’ என்று மெத்தனமாக இருந்ததில், சேமிப்பு அறவே கிடையாது. நாற்பது வயதுக்குள் அவர் மரணம் எய்த, குடும்பம் நிர்க்கதியாக ஆனது. மனைவிக்கோ அதிகக் கல்வி கிடையாது. மூன்று குழந்தைகளும் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. எதிர்பாராத தாக்கத்தால் எல்லாருக்குமே மன உளைச்சல் ஏற்பட்டது. உளவியல் சிகிச்சையும் தேவைப்பட்டது. ‘குடும்பத் தலைவர்’ என்ற பொறுப்புடன் நடராஜன் நடந்துகொண்டிருந்து, ‘நாளை நடப்பதை யாரறிவார்!’ என்று சிறிதாவது சேமித்திருந்தால், அவருக்குப்பின் அவரது குடும்பம் திண்டாடி இருக்குமா? “வாழ்க்கைக்கு அன்பும் உழைப்பும் மட்டும் போதாது. பொறுப்பும் அவசியம் இருக்கவேண்டும்”. (உளவியல் நிபுணர் ஃபிராய்ட், FREUD) போலிப்பணிவும் அகந்தையே “மத்தவங்களுக்குக் கெட்டது செய்யறவங்களைத் தட்டிக்கேட்டா, நம்மை ரௌடிம்பாங்க!” அண்மையில் வெளியான காலா படத்தில் ரஜினி இப்பொருள்பட ஒரு வசனத்தைப் பேசியிருப்பார். ‘பணிவு’ என்றால், எந்த அநியாயத்திற்கும் அடங்கிப்போவதென்பதில்லை. தலைவனுக்கு அவசியமாக இருக்கவேண்டிய குணம் இது. இப்படிப்பட்ட தலைவனுக்கு பொறுப்புணர்ச்சி அதிகம். தன் கீழிருப்பவர்களுக்கு எது நல்லது என்பதையே சொல்பவன். சொன்னபடி செய்யவும் செய்வான். இவ்வுலகில் அகந்தை கொண்டவர்கள்தாம் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள். தமக்குத் தொண்டு செய்வதற்குத்தான் பிறர் இருக்கிறார்கள், ‘அவர்கள் எப்படிப் போனால் என்ன!’ என்பதுபோல் எண்ணம் கொண்டு நடப்பார்கள். இவர்கள் தம் புகழைப் பாடுவதைக் கேட்டு மயங்குபவர்கள் இவரைப் பின்பற்றினால், தாமும் முன்னேறலாம் என்று கணக்குப்போட்டு நடக்கும் சுயநலவாதிகள். இத்தகைய தலைவர் ஒருவரின் ஆணைப்படி நடக்கையில் எங்காவது தவறு நேர்ந்தால், பழியை வேறொரு இடத்திற்கு நகர்த்திவிடுவார். இவருடைய ஆயுதம் ஆத்திரம். சிறிய தவறு நேர்ந்தாலும், எல்லாரும் தன்னை வதைப்பதுபோல் நாடகமாடுவார். இது வீரமல்ல. கோழைத்தனம். ஒரு தலைவருக்கு அதிகாரம் செய்ய மட்டும் தெரிந்தால் போதுமா? பொறுப்பை ஏற்கவேண்டாம்? கதை எங்கள் பள்ளிக்கூடத்திற்குப் புதிதாக வந்தாள் தலைமை ஆசிரியை ஜரீனா. அவளுக்கு அப்பதவி கிடைத்தது கணவர் கல்வி இலாகாவில் அதிகாரியாக இருந்ததால். தன் கீழிருந்த ஆசிரியர்களையும் ஆசிரியைகளையும் ஓயாது விரட்டுவாள் ஜரீனா. தினமும் காலை பள்ளியில் நுழையும்போதே யாருக்காவது அர்ச்சனை நடக்கும். அவள் சிரித்தோ, சமாதானமாகப் பேசியோ யாரும் கேட்டதில்லை. பள்ளியில் ஆண்டுவிழா நடந்தபோது, “ஒலிபெருக்கியில் கேட்பது யாருடைய குரல்?” என்று பக்கத்திலிருந்த என் சக ஆசிரியரிடம் கேட்டேன். அவர் நம்பமுடியாது என்னைப் பார்த்தார். நான் திரும்பக் கேட்டதும், “ஜரீனாதான் பேசுகிறாள்,” என்றார், ‘இதென்ன கேள்வி!’ என்ற முகபாவத்துடன். “அவள் ஆத்திரத்துடன் இரைந்தே கேட்டிருப்பதால், இயல்பான குரலைப் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்று நான் உண்மையைக் கூற, அவர் சிரித்தார். அவளுடைய அதிகாரப்போக்கை ஒருவராலும் சமாளிக்க முடிந்ததில்லை. குரல் மாற, அலறுவாள். ஆண்கள் கூனிக்குறுகிப் போவார்கள். (ஆத்திரத்துடன் பேசும்போது ஒருவரது குரல் மாறினால், அவருக்கு மனநிலை சரியாக இல்லை என்று அர்த்தமாம்). அந்நிகழ்ச்சி முழுவதும் அவள் சிரித்த முகமாக இருந்தது மற்றுமொரு அதிசயமான காட்சி. அவளைவிடப் பெரிய பதவியிலிருந்தவர்கள் விருந்தினர்களாக வந்திருந்தனரே! தான் எவ்வளவு இனிமையானவள் என்று காட்டிக்கொள்ள வேண்டாமா! ஜரீனா காட்டியது போலிப்பணிவு. அகந்தை இல்லாமலா எவரும் பொறுக்க முடியாதபடி அப்படி விரட்டினாள்! இக்குணத்தை அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திப்பவர்களிடம் ஒரு சிறிய அளவில் காணலாம். கதை மூன்று அண்ணன்களுக்குப்பின் பிறந்த கடைக்குட்டி என்பதால் மங்களம் செல்லமாக வளர்ந்தாள். அவளுடைய மூத்த அண்ணனின் கல்யாணத்தை விசாரிக்கப் போயிருந்தோம். “என் புடவை ரொம்ப சிம்பிள்!” என்றபடி உள்ளே போய் அதை எடுத்துவந்து காட்டினாள். ஒரு முழ சரிகை! “இது சிம்பிளாம், பாரேன்!” என்று என் தாய் அப்பாவித்தனமாக வியக்க, எனக்கு எரிச்சலாக இருந்தது. எதுவும் சொல்லாமல் அப்புடவையைக் காட்டியிருந்தால், நான் வியந்திருப்பேன். இப்போது பிரமிக்கத் தோன்றவில்லை. அடக்கமாவது! தன் தற்பெருமையை வெளிக்காட்டிக்கொண்டாள் அந்த நடத்தையால். பணிவைக் காட்டுவதுபோல் நடப்பதும் ஒருவித கர்வம்தான். அரசியலும் சமூக சேவையும் அரசியலில் அப்போதுதான் நுழைந்திருந்த ஒரு பெண்மணி சமூக சேவை ஆற்றிக்கொண்டிருந்தவள். இன்னும் நிறைய பேருக்கு உதவ முடியுமே என்று அரசியலுக்கு வந்திருந்ததாகக் கூறினாள். விரைவிலேயே அவளுக்கு இரண்டு துறைகளுக்குமிடையே இருந்த வித்தியாசம் புலப்படாமல் போகவில்லை. “சமூக சேவையில் பிறருக்காக உழைப்போம். அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும்போது திருப்தி கிடைக்கும். உயர்வு தாழ்வின்றி எல்லாரையும் மதிப்போம். அரசியலிலோ தலைகீழாக இருக்கிறது!” என்று அதிசயப்பட்டாள். “அரசியலில் எங்களுக்கு ஒரே எண்ணம்தான் எப்போதும். வோட்டு, வோட்டு!” இதை என்னிடம் பகிர்ந்துகொண்டவள் ஆளுங்கட்சியில் ஒரு பகுதியின் தலைவியாக இருந்தவள். இப்படிப்பட்டவர்கள் எத்தனை காலம்தான் பெரிய பதவியில் நிலைக்க முடியும்? பதவி பறிபோனதும், இப்படிப்பட்டவர்களின் உலகமே இருண்டுபோகிறது. முகத்தில் சிரிப்பு மறைந்துவிடுகிறது. மீண்டும் என் தலைமை ஆசிரியை ஜரீனாவின் கதைக்கு வருவோம். நான் மேற்பயிற்சிக்காக ஓராண்டு வேறிடத்திற்குச் சென்றபோது, தலைமை ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப்பற்றிக் கற்றேன். அப்போதுதான் ஜரீனாவின் நடத்தை எவ்வளவு தவறானது என்று புரிந்தது. ‘அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் பலருக்கு மன நிலை சரியாக இல்லை!’ என்று ஒரு தகவல் அச்சமயத்தில் வெளியாகியது. ஜரீனா செய்ததையெல்லாம் நான் நீண்ட ஒரு கடிதத்தில் எழுதியது ஆங்கில தினசரியில் வெளியாகி, பரபரப்பை உண்டாக்கியது. மேலிடத்தில் அவளை வறுத்தெடுத்திருக்க வேண்டும். மீண்டும் நான் பள்ளிக்கு வந்தபோது, என்னைப் பார்த்து நடுங்கினாள். எனக்கு அவள்மேல் கோபம் வரவில்லை. பரிதாபம்தான் எழுந்தது. இறுதியில் அவள் சிறியதொரு பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். அங்கு அவள் தன் அறையைவிட்டே வெளிவருவதில்லை என்று கேள்வி. தகுதி இல்லாதவர்களுக்கு உயர்பதவி கிடைத்தால் இந்த கதிதான். பணிவது இழிவில்லையா? ‘பணிவு’ என்றால் நம்மை நாமே இழிவாக நினைப்பதில்லை. இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, நம்மை மட்டமாக நடத்த முனைபவர்கள் முட்டாள்கள். நம்மைப்பற்றிய சிந்தனையோடு நின்றுவிடாது, அத்துடன், பிறரைப்பற்றியும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும், அவர்களுக்கு எந்தவிதமாகவாவது உதவ முடியுமா என்றெல்லாம் யோசிக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும், பிறரும் மனிதர்கள்தாம் என்ற எண்ணம் பலரையும் ஈர்க்கும் சக்தி உடையது. இக்குணத்தைச் சிறுபிராயத்திலிருந்தே பழக்கலாம். ஒரு குழந்தை கடைக்காரரிடமிருந்து மிட்டாய் பெற்றுக்கொண்டால், ‘நன்றி சொல்லும்மா!’ என்று கனிவுடன் பழக்குவது அம்மாவின் கடமை. அதைவிட்டு, ‘அம்மாதான் காசு கொடுக்கிறாளே! இதற்கு எதற்காக நன்றி சொல்ல வேண்டும்?’ என்ற குழந்தையின் இயல்பான அலட்சியப்போக்கு மமதையில் கொண்டுவிடும். பெரியவளானபின்பும், ‘ஏய்! அதைக் காட்டு!’ என்று ஒரு பொருளைச் சுட்டி, மிரட்டுவதுபோல் அதிகாரம் செய்தால், சொல்பவர் வேண்டுமானால் பெருமையாக உணரலாம். கடைக்காரர் அக்குரலைக் காதில் வாங்காததுபோல் இருப்பார், இல்லையேல், விலையை உயர்த்துவார். ‘குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும்படி ஆகிவிட்டதே!’ என்று அவர்களே நொந்திருப்பார்கள். அவர்கள் மனம் நோகும்படி வாடிக்கையாளர்களும் அவமரியாதையாகப் பேசினால்? “பணிவு நல்லொழுக்கத்தின் அடித்தளம்!” (சீன தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ், CONFUCIUS). கதை நாட்டிய நிகழ்ச்சிக்குப் பாட ஒரு பாடகரை ஏற்பாடு செய்து, பயிற்சி நடந்துகொண்டிருந்தது. ஆசிரியையின் மகள், அரைகுறையாக இசை பயின்றிருந்தாள். தாளம்கூட சரியாக நிற்காது. தன்னைவிட்டு, வேறொருவரைப் பாட தாய் ஏற்பாடு செய்துவிட்டார்களே என்ற ஆத்திரம் அவளுக்கு. பாடகரைக் கண்டபடி ஏசுவாள். அவருக்கோ இசைதான் ஜீவனம். எல்லா அவமரியாதையையும் பொறுத்துப்போனார். “அவர் வயசிலே பெரியவர். இப்படியெல்லாம் நீ திட்டக்கூடாது,” என்று அம்மா அதிருப்தி தெரிவித்தாள். “நாம்தான் காசு கொடுக்கிறோமே!” என்று திமிராகப் பதில் வந்ததாம். (அந்தத் தாயே என்னிடம் சொல்லிக் குறைப்பட்டுக்கொண்ட சமாசாரம். நம் கை உயர்ந்திருக்கும்போது அகம்பாவம். பிறரிடமிருந்து எதையாவது பெறுகையில் கை தாழ்ந்திருக்கும். இதுவா பணிவு? ஒரு வட்டத்துக்குள் சின்னஞ்சிறு குழந்தைகள் சிரித்த முகத்துடன் தென்படுவார்கள். அவர்களைப் பார்த்தாலே நமக்கும் மகிழ்ச்சி பெருகும். அந்த வயதில் மகிழ்ச்சியடைய உணவு, உறக்கம், அன்பு எல்லாமே போதுமானதாக இருக்கிறது. அவர்களுடைய உலகமே அந்தச் சிறிய வட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. பெரியவர்களானதும் அந்தச் சிரிப்பு மறைந்துவிடுகிறது. நீண்ட காலம் ஒரே நிலையில் இருப்பது ஒருவித பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கலாம். ஆனாலும், அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்தால், என்னென்ன சவால்களைச் சந்திக்க நேரிடுமோ என்று பயந்து, பலரும் மாற்றமில்லாத வாழ்க்கையில் காலத்தைக் கழிக்கிறார்கள். ‘செக்குமாடு!’ என்று தம்மையே குறைகூறிக்கொண்டாலும், அதை மாற்றி அமைத்துக்கொள்ள இவர்கள் எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை. அதைவிட்டு வெளியே வரும்போதுதான் தெரியும், அது அப்படி ஒன்றும் நிம்மதியைத் தரவில்லை என்று. இவர்களுக்குத் தம்மால் பிறரைப்போல் இருக்க முடியவில்லையே என்ற தாபம் ஏற்படக்கூடும். அதை மறைத்துக்கொண்டு, ‘எனக்கென்ன! சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்!’ என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் ஏதாவது குறை தென்பட்டால், அதைப்பற்றிப் பேசிப் பேசியே தாம் அவர்களைவிட சிறந்துவிட்டதாக நினைப்பதும் உண்டு. பொருட்களினால் மகிழ்ச்சியா? மகிழ்ச்சி என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். எப்போதோ ஒரு கதையில் படித்தேன், ‘அவளுக்குத் திருமணமானதும் சோபா, பாங்கில் பணம், வீட்டில் பளிங்கினால் ஆன தரை எல்லாம் இருந்தன. ஆனால் மகிழ்ச்சி இருக்கவில்லை,’ என்று. இவை மட்டும் போதுமா மனமகிழ? வெகு சிலர்தான் உயிரற்ற பொருட்களால் மகிழ்ச்சி அடைவார்கள். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எத்தனை கிடைத்தாலும், நிறைவடைவதில்லை. இதுவும் ஒருவித மனநோய்தான். (மலேசியாவின் முன்னாள் பிரதமரின் இல்லங்களில் 12,000 வகையான விலையுயர்ந்த நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன!). நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இன்னொரு தடை போட்டி மனப்பான்மை. பிறருடன் தங்களை ஒப்பிட்டுக்கொண்டே இருப்பவர் உயர்வாகவோ, அல்லது தாழ்வாகவோ உணர்வார். கதை என் உறவினர் ஒருவர் சில காலம் துபாயில் உத்தியோகம் பார்த்தார். நான் நிரந்தரமாக மலேசியாவில் இருப்பது அவர் கண்களை உறுத்தியது. “ஐயே! நீ மலேசியாவில் இருக்கிறாய். அங்கு இந்தியர்கள் வசதி குறைந்தவர்கள். நாங்கள் தினமும் சாயந்திர வேளைகளில் கிளப்பில் கழிப்போம்!” என்றார். “அதனால் என்ன? அங்குள்ளவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்வதற்காகத்தான் நான் இருக்கிறேன்,” என்று அலட்சியமாகப் பதிலளித்தபோது எனக்கு அவர் உள்நோக்கு புரியவில்லை. பிறருடன் கலந்து பேசியபோது, ஒரு வார்த்தை அடிபட்டது: ‘போட்டி!’ அவர் என்னைவிட செல்வந்தராக இருக்கலாம். ஆனால், தான் தான் சந்திக்கும் பலரையும்விட ஏதோ வகையில் உயர்ந்தவன் என்று தனக்குத்தானே உறுதிப்படுத்திக்கொள்ளும் தேவை அவருக்கிருக்கிறது. இம்மாதிரி எப்போதும் பலருடனும் போட்டி போட்டுக்கொண்டு, தாம் அமைத்துக்கொண்ட வட்டத்திலேயே சுழலுபவர்களுக்கு மகிழ்ச்சி என்பது அவர்களைப் பார்த்துப் பிறர் பொறாமைப்பட்டால்தான்! ‘உயர் பதவியில் இருக்கிறேன். எல்லாரும் என்னை மதிக்கிறார்கள்!’ என்று பெருமிதம் கொள்பவர்கள் பதவி போனதும், அத்துடன் தம் பெருமையையும் மகிழ்ச்சியையும் இழக்கும் அபாயம் இருக்கிறதே! புதிதாக ஆரம்பி ‘இது என்ன வாழ்க்கை! தினமும் காலையில் எழுந்து, சமைத்து, சாப்பிட்டு, தூங்கி என்று ஒரேமாதிரியாக இருக்கிறது!’ என்று சிலர் சலிப்புடன் பேசுவார்கள். செய்த காரியத்தையே செய்துகொண்டு, அதில் வெற்றி கண்டாலும்கூட, புதிதாக எதையாவது புதிதாகக் கற்பது மனத்திற்கு உற்சாகமூட்டும். இலக்கு எதுவுமில்லாது, ஒரு குறுகிய வட்டத்துள் சுழலும் வாழ்க்கையால் அலுப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதை மாற்றி, மறைந்த உற்சாகத்தை மீண்டும் பெற புதிதாக ஏதாவது செய்ய ஆரம்பிக்க வேண்டியதுதான். ‘புதிதாக ஆரம்பிப்பதா! அதில் வெற்றி கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்?’ என்ற அயர்ச்சியை முதலில் வெல்ல வேண்டுவது அவசியம். ‘என்னால் முடியுமோ?’ என்ற சந்தேகம் எழுந்தால், நம் திறமையை நாமே சந்தேகிப்பது போல் ஆகிவிடும். பலவற்றிலும் துணிந்து ஈடுபட்டால், நமக்கேற்ற ஏதாவது ஒன்று தட்டுப்படாதா! பயந்துகொண்டே இருந்தால், ‘சமயம் கிடைத்தபோது, அதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே!’ என்ற குறை எதற்கு? சவாலே, சமாளி சவால்கள்தாம் நம்மை நல்லவிதமாக மாற்றக்கூடியவை. ஆனால் யார் சவால் விடுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். (இளவயதினர் மகிழ்ச்சியைத் தேடி, மது, போதை என்று நாடுவது அவர்களுக்குத் தக்க இலக்கு இல்லாத காரணத்தால்தான். கூடாத சேர்க்கையால், ‘உனக்குத் தைரியம் இல்லையே!’ என்று அவர்கள் செய்யும் கேலியைச் சவாலாக எடுத்துக்கொள்வது முட்டாள்தனம். அது அழிவுப் பாதைக்குத்தான் வழி). உடற்பயிற்சி, நீச்சல், கடுமையான விளையாட்டு என்று எதை எடுத்துக்கொண்டாலும், உடல்வலியைத் தவிர்க்க முடியாது. ஆரம்பத்தில் மனம் தளர்ந்தாலும், அதையே சவாலாக ஏற்றால், சிறிது நாட்களுக்குப்பின் நல்ல பலன் கிடைக்கும். ‘நானா சாதித்தேன்!’ என்று பெருமகிழ்வு உண்டாகும். கதை பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்திருந்த நாட்டியப் பட்டறை, அதைத் தொடர்ந்து நாட்டிய வகுப்பு, இரவில் ஒரு சிறந்த நாட்டிய நிகழ்ச்சி என்று ஓய்வில்லாமல் ஒரு நாள் முழுவதும் அலைந்திருந்தாள் அப்பெண். இரவு வெகுநேரம் கழித்துத்தான் வீடு திரும்ப முடிந்தது. ‘உடலெல்லாம் ஒரே வலி!‘ என்று மறுநாள் காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியாது முனகினாள் ’நேற்று ஆடியவர்களுக்குப் பயிற்சி காலத்தில் உடல் வலி இல்லாமல் இருந்திருக்குமா?’ என்று தாய் கேட்டபோது, மேலே எதுவும் பேசாது, நமட்டுச்சிரிப்புடன் எழுந்தாள். கற்பனையும் சிறு வட்டமும் கற்பனைத்திறனுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த பாதுகாப்பு உணர்வு. ஒரு வரி எழுதுவதற்குள், ‘இப்படி எழுதினால், அம்மா கோபிப்பார்களோ, படிப்பவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்றெல்லாம் எழுத்தாளர்களுக்கு யோசனை எழுந்தால், எழுத்தில் என்ன சுவை இருக்கும்? நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், நம்மைப்பற்றி அவதூறாகப் பேச நான்குபேர் இருக்கத்தான் போகிறார்கள். அவர்கள் வாயை மெல்லவும் ஏதாவது வேண்டாமா, பாவம்! பாதுகாப்பான வட்டத்திலிருந்து வெளியே வந்து, சும்மா எழுதிப்பாருங்கள்! ஒரு நாள் காலை கண்விழித்ததும், ‘இன்று என்ன செய்ய வேண்டும்?’ என்று நிர்ணயித்துக்கொண்டு, இரவு தூங்குமுன் நினைத்ததை ஓரளவாவது நிறைவேற்றிவிட்ட திருப்தி எழுந்தால், மகிழ்ச்சி அடையலாம். சிறுகச் சிறுக நம் வட்டம் பெரிதாக, வெற்றியும் உறுதி. வெற்றி என்பது இறுதிக்கட்டம் இல்லை. நம் குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரும் முயற்சிதான். அது தொடர்ந்துகொண்டே இருக்க, வட்டமும் பெரிதாகும். மென்மை பலகீனமா? அந்த வகுப்பில் ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. “இவன் கவனிக்காது, தப்பு தப்பாகப் பண்ணுகிறான். அடிக்கலாமா?” என்று அவர் வகுப்பை விளையாட்டாகக் கேட்க, “அடியுங்கள், மாஸ்டர்!” என்று எல்லாக் குரல்களும் ஒருங்கே ஒலித்தன. தன் கையால் மாணவனது பிட்டத்தில் பயிற்சியாளர் ஓங்கித் தட்டுவதுதான் தண்டனை. டேக் வான் டோ என்ற கொரியா நாட்டுத் தற்காப்புக்கலை போதிக்கும் அந்த இடத்தில் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் இருந்தார்கள். நாளை அவர்களுக்கும் அடி விழலாம். இருந்தாலும், சகமாணவன் ஒருவன் தண்டனை பெறுவதைப் பார்க்கும்போது ஒருவித உற்சாகம்! ‘நாம் தப்ப வேண்டும்,’ என்ற முனைப்பும் எழும். இந்த மனப்போக்கைதானே பயிற்சியாளரும் எதிர்பார்த்தார்! இப்படிப் பல வருடங்கள் பயின்ற மாணவ மாணவிகளை நான் சந்தித்தபோது, அவர்கள் பிற உயிர்களிடம் மிக அன்பாக இருப்பதையும், சக மனிதர்களிடம் மரியாதையாகப் பழகுவதையும் கவனித்தேன். பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார்கள். “உங்களால் எந்தச் சூழ்நிலையிலும் எப்படி இவ்வளவு அமைதியாக, மென்மையாக இருக்க முடிகிறது?” என்று அப்படிப்பட்ட ஓர் இளைஞனிடம் கேட்டேன். “தற்காப்புக்கலை பயின்றால் ஒருவித அமைதி ஏற்பட்டுவிடுகிறது. தியானம் செய்ததுபோல் இருக்கும்,” என்ற பதில் வந்தது. இன்னொருவர் கூறினார்: “குருவைப் பொறுத்துத்தான் எங்கள் குணமும் அமைகிறது. எங்களைப் பயில்வித்தவர் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியை இழக்காதவர். ஆனால், கண்டிப்பானவர். எங்கள் ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று போதித்திருந்தார்”. இவர்கள் அதிர்ந்து பேசுவதும் கிடையாது. அளந்துதான் பேசுவார்கள். மொத்தத்தில், அடி, உதை, குத்து என்று வன்முறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மென்மையானவர்களாக இருந்தார்கள். மென்மையில்தான் வலிமையும் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டிருப்பவர்கள் இவர்கள். பொதுவாகவே, ஆண்கள் வீரமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதென்றால், உரக்கப் பேசுவது, எதற்கும் ஆத்திரப்படுவது என்று என்ற எண்ணம்தான் எவருக்கும். அதை நம்பி, இவர்களிடம் மோதும் ஆண்கள் விரைவில் பயந்து விலகிவிடுவார்கள். உன்னிடமே மென்மை காட்டு மனிதர்களிடமோ, பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளிடமோ கருணையும் மென்மையும் காட்டுமுன் நம்மிடமே அப்படி நடந்துகொள்ளவேண்டாமா? ஒரு சிறு தவறு செய்துவிட்டாலும், நம்மேலேயே ஆத்திரமோ, எரிச்சலோ வந்தால், மென்மை எங்கிருந்து வரும்? ‘நம்மால் இயன்றது இவ்வளவுதான்!’ என்று குறைகளுடன் நம்மை ஏற்றால் அமைதி கிடைக்க, முன்னேறுவது எளிது. வன்முறை கண்டிப்பின் அடையாளமா? நம் அதிகாரத்தின்கீழ் இருக்கும் ஒருவர் ஒரு காரியத்தைச் சிறப்பாகச் செய்ய கண்டிப்பு அவசியம்தான். அத்துடன், மென்மையான, ஊக்குவிக்கும் வார்த்தைகளும் அவசியம். பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் ‘கண்டிப்பு’ என்று எண்ணி, சுடுசொற்களாலும், வன்முறையைப் பிரயோகித்தும் சிறுவர்களை முன்னுக்குக் கொண்டுவர முயல்வார்கள். ஏனெனில், வன்முறை எளிது. ஆனால், சிறிய தவற்றுக்கும் பொருத்தமில்லாது, மிகக் கடுமையாகத் தண்டிப்பது எதிர்மறையான விளைவைத்தான் உண்டாக்கும். மைக்கல் ஜாக்சனின் தந்தை அப்படி நடந்துகொண்டதில், சிறு வயதில் அவரைப் பார்த்தவுடனேயே அப்பிரபல பாடகருக்கு வாந்தி வந்துவிடுமாம். தந்தையைக் கண்டாலே பிடிக்காமல் போயிற்று. பெரும் செல்வந்தராக இருந்தும், தன் உயிலில் அப்பாவின் பெயரைச் சேர்க்கவில்லை! அவ்வளவு வெறுப்பு! மென்மை பெண்களுக்குத்தானா? மென்மையாக இருப்பது ‘மெல்லியலாள்’ என்று வர்ணிக்கப்படும் பெண்களின் குணமென்று ஆகிவிட்டது. உண்மையில், ஆணோ, பெண்ணோ, குரலை உயர்த்தாது, அமைதியை இழக்காது பேசுவதே வெற்றியை அளிக்கும். அப்போதுதான் பிறர் தவறு செய்தாலும், ஏன் அப்படி நடக்கிறார் என்று புரிந்துகொள்ள முடியும். நான் ஒரு மேற்பயிற்சிக்குச் சென்றிருந்தேன். அது முடியும் தறுவாயில், ஆசிரியை ஒருத்தி என்னிடம், “நீங்கள் soft and gentle,” என்றாள், சற்று பரிதாபப்பட்டவளாய். மென்மையானவர் என்றால் ஏமாந்தவர், பலகீனமானவர் என்றெல்லாம் பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். புரியாதவர்களிடம் இதை விளக்கவேண்டிய அவசியமில்லை. நம் சொற்களும் செயல்களும் மென்மையாக இருந்தால், அவை நம் மன உறுதியை, பிரதிபலிக்கின்றன. இது புரியாது, என்னிடம் மோதினார்கள் என் மாணவ மாணவிகள். கதை அந்த வகுப்பில் இருந்தவர்களுக்குப் பதினாறு வயதுதான். ஆனால் தம்மைவிட மூத்தவர்களிடம் எதிர்த்துப் பேசுவது, எகத்தாளமாகப் பேசுவது என்ற குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். (இப்படிப்பட்டவர்களை, ‘பணிப்பெண்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்’ என்போம். பெற்றோரின் சரியான பராமரிப்போ, அன்போ கிடைக்காது, தம்மைப்போன்ற பிறருடன் சேர்ந்துகொண்டு, தமக்கு மேலிருந்தவர்களிடம் மோதுவார்கள்). நான் அவர்கள் போக்கைக் கண்டுகொள்ளவில்லை. பாடத்தை மட்டும் நடத்தினேன். மற்ற வகுப்புகளில் செய்ததுபோல் கதைகள், நகைச்சுவை எதுவும் கிடையாது. ஒரு நாள் அந்த வகுப்பிற்குள் போனதும், எல்லாரும் பரமசாதுவாக இருந்தார்கள். சற்று அதிர்ந்தாற்போலவும் இருந்தது. “என்ன அதிசயம்! இன்று நீங்கள்கூட ஒழுங்காக இருக்கிறீர்களே!” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை என்னால். எல்லோருடைய தலையும் குனிந்தது. சற்று விழித்தேன் பிறகு அவர்கள் கொட்டம் அடங்கியதன் காரணம் பிடிபட்டது. அதற்கு முதலாண்டு நடந்த பள்ளி இறுதிப்பரீட்சையின் முடிவை காட்சிப்பொருளாக த்திருந்தார்கள். பௌதிகம், நான் ஒருத்தியே நடத்திய பாடம், அதில் தலைசிறந்ததாக இருந்தது. “ஓ! ரிசல்டைப் பார்த்தீர்களா!” என்றேன் கேலியாக. தலைகள் இன்னும் குனிந்தன. நான் கண்டிப்பாக இருக்கிறேன், நிறைய வேலை வாங்குகிறேன் என்று ஆத்திரப்பட்டவர்களுக்கு இப்போது புரிந்தது – அது அவர்களுடைய நன்மைக்காகத்தான் என்று. இதையெல்லாம் சரியாகப் புரிந்துகொள்ளாது, பெண்ணியம் பேசும் பெண்கள் சண்டை பிடித்தால், ஆண்களுக்குச் சமமான உயர்நிலை அடைந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். மனிதர்கள் மட்டுமென்ன, ஒரு நாட்டின் சட்டங்கள் மென்மையாக இருந்தால்கூட பலரும் அவைகளை மதிப்பதில்லை. “இவ்வுலகை மாற்ற மூன்று முக்கியமான குணங்கள் உண்மை, பயமின்மை மற்றும் மென்மை”. (மகாத்மா காந்தி) அதாவது, உண்மையை உரைக்க தைரியம் வேண்டும். (அப்போது பிறர் நம்மைப் பார்த்து அஞ்சுவார்கள்!) அந்த உண்மையை உரக்கச் சொல்லவேண்டுவது இல்லை. பலரும் இப்படி நடக்க அஞ்சுவது ஏன், தெரியுமா? அவர்களுடைய பெற்றோர், ‘உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்ளாதே!’ என்று சிறு வயதிலேயே எச்சரித்திருப்பார்கள். ஒரு வேளை, தமது கசப்பான அனுபவங்களால், மாறியிருக்கக்கூடும். பெற்றோர் உண்மையே பேசி நடந்தால் குழந்தைகளும், தம்மையும் அறியாமல், அவர்கள் வழி செல்வார்கள். ஆசிரியர்களும் கண்டிப்புடன் கனிவையும் சேர்த்தால், மாணவர்கள் பயனடைவார்கள். ‘அந்த ஆசிரியர் இல்லாவிட்டால், நான் உருப்பட்டிருக்கவே மாட்டேன்!’ என்று எக்காலத்திலும் நன்றியுடன் நினைவுகூர்வார்கள். நொண்டிச்சாக்கு ஏன்? “நான் ஏன் மற்றவர்களைப்போல இல்லை?” “என்னை யாருக்குமே பிடிக்கலே!” “எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!” இப்படிக் கூறுபவர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று வாக்கியங்களிலும் நான், என்னை, எனக்கு என்ற வார்த்தைகளுக்குத்தான் முக்கியத்துவம். சுய பரிதாபம் மிகுந்தவர்கள் இவர்கள். ஒருவர் எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னைப் பொருத்திக்கொண்டு பார்த்தால் இப்படித்தான் ஆகும். இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய பிரச்னைகள்தாம் புரியும். தம் நலன் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். அவர்களால் பாதிக்கப்படும் பிறருடைய மனப்போக்கைப்பற்றிய கவலை கிடையாது. ஒருவர் தம் கண்ணோட்டத்திலிருந்துதான் எதையும் அலசுவதால்தான் இந்தக் கோளாறு எழுகிறது. கதை ராவ் நன்றாகப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் இருந்தார். இருந்தாலும், போட்டி மனப்பான்மை அதிகம். பிறரைத் தாழ்த்திப் பேசினால், தான் உயர்ந்துவிட்டதாக எண்ணி அற்ப சந்தோஷம் அடையும் அறிவிலி. யாரைப் பார்த்தாலும், அவர்களுடைய குறை என்று அவர் நினைப்பதைப் பெரிதுபண்ணி, கேலி செய்வார். இதனாலேயே அவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்று எவரும் இருக்கவில்லை. அவருடைய புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்டு சற்று நெருங்குபவர்கள் அவரது ஓயாது குற்றம் கண்டுபிடிக்கும் தன்மையால் விரைவிலேயே விலகிவிடுவார்கள். தவறு தன்மேல்தான் என்று உணராது, ‘ஏனோ என்னை யாருக்குமே பிடிப்பதில்லை!’ என்று மறுகுவார். புத்திசாலியோ, முட்டாளோ, மனிதராகப் பிறந்த எவரையும் கவலைகள், துன்பங்கள், விட்டு வைப்பதில்லை. ஆனால், என்றோ பட்ட துன்பத்தையும், துயரத்தையும் விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது அறிவீனம். எனக்கு நன்கு அறிமுகமான ஒரு மாது, பார்ப்பவர்களிடமெல்லாம்,“எனக்கு ஒடம்பே முடியலே!” என்று முகமன் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வாள். எந்தவித உடற்குறையும் தென்படவில்லை. எல்லாருக்கும் அவளுடைய அந்த வசனம் கேலியாகப் போயிற்று. அவள் இறந்தாள் – நாற்பது வருடங்களுக்குப்பின்! அத்தனை காலமும், தனக்காகப் பரிதாபப்பட்டே வாழ்ந்து, மகிழ்ச்சி இல்லாது காலத்தைப் போக்கி இருக்கிறாள்! நாம் அனுபவித்த துன்பங்களைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தால், அதைச் செவிமடுக்க நேர்ந்தவர்கள் முதலில் அனுதாபம் காட்டலாம். அதன்பின், சலிப்படைந்து விலகி விடுவார்கள். நம்மைப் பாதித்தவைகளைப்பற்றியே பேசினாற்போல், வேண்டாத அனுபவங்கள் நீங்கி விடுமா, என்ன? கதை மூன்று வயதுக் குழந்தை கலா கீழே விழுந்து காலில் சிறு காயம் பட்டுக்கொண்டாள். அம்மா உடனே பிளாஸ்திரி போட்டபோது, அந்த கவனிப்பை ‘அன்பு’ என்று எண்ணிய வயது அது. அன்றையிலிருந்து, அனுதினமும், “இங்கே வலிக்கிறது. பிளாஸ்டர் போடு,” என்று கையையோ, காலையோ காட்டி, நச்சரிக்க ஆரம்பித்தாள். அதற்குத் தேவையே இருக்காது. அது புரிந்து, அவளுடைய தாய், “அதைவிட நல்ல மருந்து ஒண்ணு இருக்கு,” என்று முகத்திற்குப் பூசும் பௌடரை அந்த இடத்தில் தூவ, சிறுமி சமாதானமானாள். உறவினர் இல்லங்களுக்குப் போகையில், “இங்கே வலி. அம்மா பிளாஸ்டர் போட மாட்டேங்கறா!” என்று தன்னிரக்கத்துடன் குற்றம் சாட்ட, அம்மா சிரித்தபடி, “ஒங்க வீட்டில சகல ரோக நிவாரணி இருக்கோ?” என்று கேட்பாள். உறவினர் விழிக்க, “பௌடர்!” என்று சிரிப்பாள் மெல்ல. சிறுவர்களாக இருக்கும்போது, பெற்றோர் அளவுக்கு மீறி காட்டும் கரிசனம் பெரியவர்களான பின்னர், பிறரும் தம்மிடம் அப்படியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. பிறர் நம்மீது காட்டும் பரிதாபம் அன்பல்ல. நோயாலோ, வேறு ஏதாவது இழப்பாலோ பிறர் துயரப்பட்டால்தான் சிலருக்கு அவர்களிடம் அருமையாக நடந்துகொள்ள முடியும். கதை சிறு வயதில் அன்பைப் பெறாது, வன்முறை பிரயோகித்த கணவரையும் அடைந்த துர்பாக்கியசாலி நாகலட்சுமி. தான் பெறாததைப் பிறருக்கு கொடுப்பது நடக்கும் காரியமா? அவள் தான் பெற்ற குழந்தைகளிடம் எப்படி அன்பாக இருக்க முடியும்? தான் ஏதாவது சொல்லி, அதன்படி குழந்தைகள் நடக்காவிட்டால், ‘நான் உங்களுக்காக எவ்வளவோ பண்ணி இருக்கிறேன். ஆனால், யார் நான் சொன்னபடி கேட்கிறீர்கள்?’ என்று பெருமூச்சுடன், தன்மேல் பரிதாபம் எழச் செய்து, காரியத்தைச் சாதித்துக்கொள்வாள். அக்குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் மட்டும் ஆதரவாக இருப்பாள். அதனால், தாயிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்கள் துன்பப்படுவதுபோல் நடிப்பது வழக்கமாகப் போயிற்று. தம்மையுமறியாது, தாயிடமிருந்தே சுய பரிதாபத்தைக் கற்றார்கள். எனக்குத் தெரிந்த பல முதுமையான பெண்களுக்கு Depression என்கிறார்கள். பிறருடைய மனப்போக்கை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனதாலா, இல்லை, தாம் சொல்வதை இளையவர்கள் கேட்க மறுக்கிறார்களே என்ற ஆதங்கமா? கதை லட்சுமி அம்மாள் தனது எழுபதாவது வயதில் கீழே விழுந்து, சில மாதங்கள் படுக்கையிலேயே கழிக்க நேரிட்டது. அதன்பின் கால் குணமாகி, மருத்துவரும், ‘நீங்கள் பழையபடி நடமாடலாம்,’ என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார். ஆனாலும், பத்து வருடங்களுக்கு மேலாக ‘படுக்கையைவிட்டு எழுந்தால் மீண்டும் கீழே விழுந்துவிடுவேன்,’ என்று பிடிவாதமாக இருக்கிறாள் அந்த அம்மாள், எவ்வளவோ சௌகரியங்கள் செய்துகொடுத்த பின்னரும். இப்படி, தான் மட்டுமே முக்கியம் என்றிருப்பவரால் உடன் இருப்பவர்களுக்கு மிகத்தொல்லைதான். ஆனால், பிறரது உணர்ச்சிகளைப்பற்றிக் கவலைப்படாது, வேண்டாத பயத்துடன் தன்மேலேயே பரிதாபப்பட்டுக்கொண்டு, தன் வாழ்வை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்களைப்பற்றி என்ன சொல்ல! இப்போக்கினால் நெருங்கிய உறவினர்களை மட்டுமா, நிம்மதியையும் இழக்கும் அபாயம் இருக்கிறதே! சிறு வயதில் அன்பு கிடைக்கப் பெறாதவர்கள் தம்மைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது இயற்கை. இவர்கள் மாற்றங்களை எதிர்கொள்ளப் பயந்தவர்களாக இருக்கலாம். வேறு சிலர், முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் குறுக்கு வழியை நாடுவார்கள். இச்சகத்தால் மேலதிகாரியை கைக்குள் போட்டுக்கொள்வார்கள். பிறருக்கு அடிமைபோல் நடந்து, எதிர்பார்த்த அளவு முன்னேற இயலாதுபோக, அதனாலேயே தம்மீது இரக்கம் கொள்வதும் உண்டு. பரிதாபத்திற்கு எதிர்மறையான குணம் சுய கௌரவம். இது திமிரோ, கர்வமோ அல்ல. நம்மைப் பிறர் தாழ்த்தும்போது அந்த அவமானத்தைப் பொறுத்துப் போகாத இயல்பு. முன்னேறுவதற்கு இன்றியமையாதது. நம் மகிழ்ச்சிக்கோ, முன்னேற்றத்திற்கோ பிறரை எதிர்பார்ப்பது வீண். நம் நலனில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை? அத்துடன், பிறர் அளிக்கும் அறிவுரையும் வழிகாட்டலும் நம் திறமைக்கு ஏற்றதாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்? தன் தோல்விகளுக்கு ஏதாவது நொண்டிச்சாக்கு கூறுவது அற்ப திருப்தியை உண்டாக்குவதால், இவ்வழியை அடிக்கடி கடைப்பிடிக்க வைக்கிறது. ஒரு விதத்தில், இதுவும் போதைதான். ‘எனக்கு ஊக்கமளித்த பெற்றோர், செல்வச் செழிப்பு இதெல்லாம் அமையவில்லை. அதுதான் முன்னுக்கு வரமுடியவில்லை,’ என்று என்றோ நடந்ததையே நினைத்து மறுகிக்கொண்டிருந்தால், எதிர்காலம் செழிப்பாகிவிட முடியுமா? இது கோழைத்தனமன்றி வேறென்ன? நாம் அனைவருமே ஏதாவது தருணத்தில், ‘எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்துவிட்டது?’ என்று நம்மீதே இரக்கம் பாராட்டுவோம். அப்போது, ‘வேண்டாம் இந்த சுய பரிதாபம்!’ என்று ஒதுக்கினால், உடனே அடுத்து வரும் சவாலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிடுகிறோம். (துணிவு இல்லாவிட்டால், கிடைத்ததை ஏற்கும் மனப்பக்குவத்தையாவது வளர்த்துக்கொள்ளலாம்). தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியில், நாற்பத்திரண்டு வயதான ஒருவர் பங்கேற்றார். ஆறு மாதங்களுக்குமுன்னர், ஸ்ட்ரோக் வந்து, மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. பிழைப்பதே சந்தேகம் என்ற நிலை. பிழைத்ததும், ‘இனி உடற்பயிற்சி செய்யலாம்,’ என்று மருத்துவர்கள் கூற, இடைவிடாத முயற்சி செய்ய ஆரம்பித்தார். அன்றைய நிஞ்சா (NINJA) நிகழ்ச்சியில், நாலடி தாவி, முப்பதடி சறுக்கு மரத்தில் ஏறிக் குதித்து, என்று பார்ப்பவர்களை அதிரவைக்கும் சாதனைகளைச் சில நிமிடங்களிலேயே செய்து முடித்தார். ஆரோக்கியமாக இருந்த எல்லாரையும் வெல்ல அவர் ஒருவரால் மட்டுமே முடிந்தது. துணிவுடன் எதையும் எதிர்கொண்டால், ‘வாழ்க்கை என்பது இவ்வளவுதானா!’ என்ற சிரிப்பு எழும். நம்மைப் பார்த்து நாமே சிரிக்கும் முதிர்ச்சியும் ஏற்படும். மேற்கண்டவர்போல், பிறருக்கு நல்ல உதாரணமாக அமையலாம். மதிப்பெண்கள் மட்டும் போதுமா? லாவண்யா வகுப்பில் எப்போதும் முதலாவதாக வருவாள். பேச்சுப்போட்டியில் அவளை யாராலும் வெல்ல முடியாது. ‘பள்ளிக்குப் பெருமை சேர்க்கிறாள்,’ என்று ஆசிரியைகளும், தலைமை ஆசிரியையும் அவளைக் கொண்டாடுவார்கள். பெற்றோரும் அப்படித்தான். விளைவு: அவள் செய்வதை யாராவது கண்டித்தால், கோபம் தலைக்கேறும். எவராக இருந்தாலும் – அது ஆசிரியையாகவே இருந்தாலும், மரியாதை இல்லாது பேசுவாள். அவர்களும் அடங்கிப்போவார்கள். எங்கு தவறு நேர்ந்தது? ஓயாது புத்தகங்களைப் படித்து, அதன்வழி பல விஷயங்களையும் தெரிந்துகொண்டால் புத்திசாலித்தனம் வளரலாம். ஆனால், தனது சொந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் நுண்ணறிவு வளரவில்லை லாவண்யாவுக்கு. பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியே வந்தபின், பாடங்களில் வாங்கிய மதிப்பெண்களை மட்டும் வைத்துக்கொண்டு உலகைச் சமாளிக்க முடியுமா? பிறருடன் எப்படிப் பழகவேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டாமா? எப்போதும் சிறுபிள்ளைத்தனமாக, தன் உணர்வுகளுக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து நடந்தால், சிறு விஷயங்களுக்குக்கூட ஆத்திரம் எழும். தலைவனாக வேண்டுமா? உணர்ச்சியைக் கட்டுப்படுத்து! தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு இந்தத் தன்மை இல்லாவிட்டால் மதிப்பை இழக்க நேரிடும். கதை ‘இவனுக்குத் தெரியாததே இல்லை!’ என்று பிறர் மெச்சும்படி இருந்தான் அக்கல்லூரி மாணவன். விரிவுரையாளர்கள் மட்டுமின்றி, ரங்கனுடன் பேசுவதே தமக்குப் பெருமை என்பதுபோல் சகமாணவிகளும் நடந்துகொண்டதில், அவனுக்குக் கர்வம் தலைக்கேறியது. அவனுக்குப் பயந்தோ, இல்லை மதித்தோ, எல்லாரும் விட்டுக்கொடுத்தே பழகிவிட்டதால், தான் நினைத்தது நடக்காவிட்டால் எளிதில் கோபம் எழ ஆரம்பித்தது. கடினமான சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது எதிர்ப்பட்டவர்களின்மீது தன் இயலாமையைக் காட்டுவான். ஆத்திரமே அவனது தலையாய குணமாகியது. நல்ல படிப்பு, பெரிய உத்தியோகம் என்றான பின்னரும், ‘நானே ராஜா,’ என்பதுபோல் நடக்க, விரைவில் எல்லாரும் விலகிப்போனார்கள். கல்லூரி நாட்களில் அவனுடைய சிறப்புகளைக் கண்டு மணந்த காதல் மனைவியும், ‘இது நான் பார்த்து மயங்கியவர் இல்லை!’ என்று கண்டவர்களிடம் எல்லாம் புலம்பினாள். மனைவி மட்டுமின்றி, அவனுடைய குழந்தைகளுக்கும் அவனைப் பிடிக்காமல் போயிற்று. ரங்கனுக்குத் தன் உணர்வுகள் புரியவில்லை. அதனாலேயே பிறரையும் புரிந்துகொள்ள இயலவில்லை. பிறருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டால்தானே அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதும் விளங்கும்? ரங்கனுக்கு இதெல்லாம் புரியாததால், நாளடைவில், உத்தியோகத்தில் அவனுக்குக் கீழே வேலை பார்த்தவர்களுக்கு பதவி உயர்வும், பரிசுகளும் கிடைக்க, தன்மேலேயே பரிதாபம் எழுந்தது. வீட்டிலோ, வெளியிலோ, தனது உரிமை என்று அவன் எதிர்பார்த்த மரியாதை கிடைக்காததால் ஆத்திரம் அதிகரித்தது. தீய பழக்கங்களுக்கு அடிமையானான். நம் உணர்வுகளை எப்படிப் புரிந்துகொள்வது? கதை கடைக்குட்டியான அந்த மூன்று வயதுச் சிறுவனை அவனுடைய சகோதர சகோதரிகளுடன் ஒப்பிட்டுத் தாய் சிலாகிக்கும்போது அவனுக்கு மகிழ்ச்சி தாங்காது. அதை வெளிக்காட்டாது மறைக்க, தலையைக் குனிந்து, வாயை உப்பிக்கொள்வான். “யாருக்கோ ரொம்ப பெருமை!” என்று தாய் அறிவிக்க, எல்லாரும் அவன் பக்கம் திரும்பி, பாசத்துடன் புன்னகைப்பார்கள். அடிக்கடி இந்த வாக்கியத்தைக் கேட்டு, அடுத்த முறை எதற்காவது மகிழ்ச்சி ஏற்படும்போது, “அம்மா! நான் பெருமை!” என்று தெரிவிப்பான். யாராவது புகழ்ந்தால், மகிழ்ச்சி பெருகுகிறது. சிறுவனுக்குத் தன் மனம் புரிந்தது. (புகழ்ச்சி மனதுக்கு உகந்ததாக இருப்பதால்தான் பலரும் அதை உபயோகப்படுத்தி தம் காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார்கள். முக்கியமாக, சிறுமிகளையும் இளம்பெண்களையும் கவர முயற்சிக்கும் கயவர்கள். யார் எதையும் நாடாது புகழ்கிறார்கள் என்பதை ஆராயும் அறிவு இருந்தால், வெற்றுப்புகழ்ச்சியில் மயங்கமாட்டோம்). மாறாக, நம்மிடம் யாராவது குறை கண்டுபிடித்துவிட்டாலோ ஆத்திரம் எழுகிறது. ‘மற்றவர் அவர் வழியில் யோசிக்கிறார். நமக்கு உகந்த வழியில் நாம் போவோமே!’ இந்த சிந்தனை எழுந்தால், கோபம் எழுந்த வேகத்தில் அடங்கிவிடும். என் சிநேகிதி ஜூலியான், “நான் எப்போது கடைக்குப் போய் தலைமுடி வெட்டிக்கொண்டாலும், என் கணவர் கத்துவார்,” என்றாள், பேச்சுவாக்கில். அவளுடைய கணவர் பலமுறை கோபித்தபோது, உடனே ஆத்திரப்பட்டவளுக்கு, சற்று நிதானமாக யோசித்தபோது அவரது போக்கின் காரணம் பிடிபட்டது. அலுப்புடன், “உங்களுக்கு முடியெல்லாம் கொட்டிப்போய் வழுக்கையாகி விட்டதால் என்னிடம் குறை காண்கிறீர்களோ?” என்று ஒரு முறை இவள் கேட்க, அவரது குறுக்கீடு நின்றுபோயிற்று. தன்னம்பிக்கை உள்ளவர்கள் தம்மை உணர்ந்தவர்கள். இவர்களே தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவர்களாக இருப்பார்கள். சிபாரிசில் வருபவர்கள்… கதை அரச வம்சத்தில் வந்தவள் என்பதால் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டவள் ஆஸ்மா. தன் சாதனைகளால், புத்திகூர்மையால், அப்பெரிய பதவிக்கு வந்திருப்பதாக எண்ணிக்கொண்டாள். அந்த எண்ணத்தால் விளைந்த கர்வத்தில், தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றாள். கட்டுக்கடங்காத சூழ்நிலை ஏற்பட்டபோது, அதை எப்படி சமாளிப்பது என்று ஆஸ்மாவுக்குப் புரியவில்லை. திரும்பவும் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாதே என்று பயந்தவளாக, தன்கீழ் வேலை பார்த்தவர்களை ஓயாது விரட்டினாள். அவளுக்குப் பின்னால் அவர்கள், ‘ரொம்பத்தான் காட்டாதே!’ என்று பரிகசித்தது அவளுக்குத் தெரியாது! “சிலபேர் ஏன் இப்படி ஆடுகிறார்கள்?” என்று என்னைக் கேட்டார்கள். “தகுதி இல்லாதவர்களுக்கு அவர்களுக்கு மீறிய பொறுப்பைக் கொடுத்தால் இப்படித்தான்!” என்றேன், சிறிதும் யோசியாது. ஆதாயத்தை எதிர்பார்த்து அவள் பக்கம் சார்ந்திருந்தவர்களுக்கு முகம் சுண்டிப்போயிற்று. மற்றவர்களுக்கோ, ஆஸ்மா ஏதாவது தவறு செய்தால், அதைப் பெருந்தன்மையுடன் மன்னிக்க முடியவில்லை. ஏளனமாகப் பேச ஆரம்பித்தார்கள். அவளிடம் ஏற்பட்ட அவநம்பிக்கையால், தம் வேலையிலும் முழுமனதுடன் ஈடுபடத் தோன்றவில்லை. தன் குறை நிறைகளைப் புரிந்திருந்தால், ஆஸ்மாவுக்குப் பிறரது உணர்வுகளையும் மதிக்கத் தெரிந்திருக்கும். அவர்களது மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருப்பாள். அமைதிப்படுத்த ஒரு பயிற்சி ‘உங்கள் குழந்தை புத்திசாலியாக வளர..’ என்று பாலர் பள்ளிகளில் விளம்பரப்படுத்துவார்கள். குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு வந்தாலும், பல விஷயங்கள் கற்பிக்கப்பட்டாலும், நல்ல சுற்றுச்சூழலில் வளர்ந்திருந்தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்பது எவ்வளவு தூரம் உண்மை? கதை (படித்தது) வன்முறைக்குப் பெயர்போன பகுதி அது. அருகிலிருந்த ஆரம்பப் பள்ளியில் படித்த குழந்தைகள் அனைவருமே கொலையைக் கண்ணால் பார்த்தவர்கள். முதலில் அச்சமோ, வருத்தமோ எழுந்திருந்தாலும், அவ்வுணர்ச்சிகளிலேயே மூழ்கிவிடவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து வந்த சிறுவர்கள் பாடத்தில் கவனம் சிதறாது இருந்ததைக் கண்டு வியந்த சிலர் ஆராய்ச்சி செய்தபோது, ஓர் உண்மை தெரியவந்தது: தினமும் காலையில், தங்களுடைய அபிமான பொம்மையை வயிற்றின்மேல் வைத்து, படுத்த நிலையில் மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளியே விடும்போதும் மூன்றுவரை எண்ண வேண்டும் என்று அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் உன்னிப்பாக எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடிந்தது. ஒரு நாள் அந்தப் பயிற்சி செய்யாவிட்டாலும், அமைதி குலைய, அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விடுமாம். சூழ்நிலை நமக்குச் சாதகமாக இல்லாவிடினும், திறமையை வெளிக்காட்ட நம் உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஒத்துப்போவது வெற்றிக்கு அறிகுறி தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவி என்னிடம் கூறினார், “எங்களிடம் தற்காலிகமாக வேலைக்கு வருகிறவர்களின் மதிப்பெண்கள் இரண்டாம்பட்சம்தான். (உலகளாவிய எல்லா கம்பெனிகளிலும் இப்படித்தான்). அவர்களுடைய ஆடை, மரியாதையாகப் பேசும் தொனி முக்கியம். பல விஷயங்களையும் புரிந்து வைத்திருப்பதோடு, பிறருடன் எப்படி இணைந்து பழகுவது என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தால்தான் நிரந்தரமாக ஆக்குவோம். வேலையில் சிறந்து, ஆனால் பிறருடன் சண்டை பிடித்துக்கொண்டே இருந்தால், யார் அவர்களுடன் ஒத்துப்போவார்கள்?” எந்த துறையானாலும், பிறருடன் ஒத்துப்போகிறவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். கிடைக்கும் வெற்றியும் நிலைக்கும். பதவி போதுமே, பண்பு எதற்கு? “ஏ குரங்கே!” ஒரு சிறுவன் இன்னொருவனை நோக்கிக் கூவினான். அவனும் அதேபோல் கூவினான். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது என்றாலும், கெட்ட வார்த்தை என்று அவர்கள் நினைத்ததைப் பிரயோகிப்பதில் தனி மகிழ்ச்சி அந்த மூன்று வயதுச் சிறுவர்களுக்கு. அவர்களைப் பொறுத்தவரை, ‘ஹலோ!’ என்று சொல்வதற்கு ஒப்பான முகமன் இம்முறை. சிறு வயதில் மட்டுமில்லாது, இக்குணம் ஆண்கள் வளர்ந்தபின்னும் தொடரும். தாங்கள் ஏசிப் பேசுவதை நண்பர்கள் தப்பாக எடுத்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான். எந்த வயதானாலும், சற்றும் யோசியாது, ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வார்கள். ஒருவரது பேச்சிலிருந்து குணத்தை அறிந்துகொள்ளலாம் என்றாலும், அவர்கள் இப்படி ஒருவரையொருவர் பழித்துக்கொள்வதில் உள்ளர்த்தம் எதுவும் கிடையாது. இது ஒருவர் மற்றொருவரை நெருங்கும் உத்தி. நற்பண்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பெண்கள் இப்படிப் பேசிப்பார்த்தால் தொலைந்தார்கள். “ஒன்னோட பாவாடை (அல்லது வளை) அழகா இருக்கு!” என்பதுபோல் ஏதாவது புகழ்ந்தால்தான் இன்னொருத்தி அப்படிக் கூறுபவளை சிநேகிதியாக ஏற்பாள். என்னுடன் வேலை பார்த்த ஓர் ஆசிரியை, தினமும்,‘உன் புடவை அழகாக இருக்கிறது!’ என்பாள், என்னிடம். ஏதோ ஒரு நாள் கூறினால், அவள் கூறுவதில் உண்மை இருக்கிறதென்று நம்பலாம். ஆனால், தினமுமேவா? நான் ஏன் மகிழ்ந்து புன்னகைக்கவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. போலியான புகழ்ச்சியால் நம்மை அடிமைப்படுத்த நினைப்பவர்களை எப்படி நம்பமுடியும்? கதை: யாரிடம் பணிவு? எங்கள் பகுதியிலிருக்கும் கறிகாய் மார்க்கெட்டில் பூனைக்குட்டிகள் வளைய வந்துகொண்டிருக்கும். அதை ஒட்டி இருக்கும் சாப்பாட்டுக்கடையில் மிகுந்துபோன உணவைச் சாப்பிட்டு, அவை காலந்தள்ளிக்கொண்டிருந்தன. கறிகாயைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒருவன், தன் காலருகே வந்த பூனைக்குட்டியை உதைத்தான். அதற்கு அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று புரியவில்லை. அவனருகிலேயே நின்று, உதை வாங்கிக்கொண்டிருந்தது. அவ்வளவு சிறியது – பிறந்து இரண்டு, மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும். (அவன் வீட்டுச் சிசுவை இப்படி உதைப்பானா?) அருகிலிருந்த பிறர் அவன் செயலைத் தவறாக எண்ணவில்லை. ‘யாருக்கும் சொந்தமில்லாத பிராணிதானே!’ என்ற அலட்சியமாக இருக்கலாம். அல்லது, பிறர் செயலில் குறுக்கிடக்கூடாது என்ற ‘நாகரிகம்’ கருதி சும்மா இருந்தார்கள். அருகில் திகைத்து நின்றிருந்த என் பேரனை, “இதைத் தூக்கி வெளியில் விடு,” என்றேன், கடுமையாக. (எரிச்சல் பூனைமேல் இல்லை). எதிர்க்க முடியாத பிராணிகளையும் மனிதர்களையும் அலட்சியமாக நடத்துபவர்கள் தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம், ‘இவர்களால் எனக்கு ஆதாயம் கிடைக்கும்,’ என்று தோன்றினால், அப்படி நடப்பார்களா? கதை மட்டமானவர்களிடம் நேர்மையை, நற்குணத்தை எதிர்பார்க்க முடியாது. எப்படியாவது பெரிய பதவிக்கு உயர்ந்தால் போதும் என்று கணக்குப்போட்டு, அதன்படி செயலாற்றுபவர்கள் இவர்கள். பதின்ம வயது மாணவன் ரஃபி ஒரு கூட்டத்திற்குமுன், நாற்காலிகளை வரிசையாக எடுத்துப்போட்டு, இன்னும் பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தான். ‘ஆகா! என்ன சுறுசுறுப்பு!’ என்று அங்கிருந்த ஆசிரியைகள் பாராட்ட, சில நாட்களில் PREFECT (நிர்வாகம் செய்பவர்) என்ற பதவி அளிக்கப்பட்டது. பிற மாணவர்களின் கட்டொழுங்கை கவனிக்க வேண்டிய பெருமையில், அவனுடைய சுறுசுறுப்பும் ஒழுங்கும் காணாமல் போய்விட்டதுதான் பரிதாபம். படிப்பு சம்பந்தமாக அளிக்கப்பட்ட வேலைகளைக்கூடச் செய்யாது, அலட்சியமாக இருந்தான். தன்னைப்பற்றிய அலாதி கர்வத்தில் எல்லோருடனும் சண்டை போட்டான். முதல் முறை கிடைக்கும் வெற்றி திறமையால் ஆனாலும், அது நிலைத்திருக்க நற்குணம் அவசியம் என்று அவனுக்குப் புரியவில்லை. அவனுடைய பொறுப்பாசிரியரிடம், ‘ரஃபியை அடக்கிவைங்கள். ’எனக்குப் பாடம் கற்பிக்கிறவர்களைவிட நான் உயர்ந்தவன்!’ என்பதுபோல் மரியாதை இல்லாமல் பேசுகிறான்!" என்றேன். மூத்தவர்களிடம் மரியாதையாக நடக்கவேண்டுவது மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியம். ‘இன்றைய தலைமுறை இப்படி இல்லையே!’ என்று பெரியவர்கள் அரற்றுகிறார்கள். அடுத்த முறை என் வகுப்பில் ரஃபியின் தலை நிமிரவேயில்லை. குரலும் எழும்பவில்லை. பதவி பறிபோய்விடுமோ என்று அவ்வளவு பயம்! எந்த வயதிலும், மமதையாலோ, பொறாமையாலோ பிறரை இழிவுபடுத்தி, வலுச்சண்டை போடுவது சிலரது வழக்கமாக இருக்கிறது. வேறு சிலருக்கு இது நல்ல பொழுதுபோக்கு. பேரக்குழந்தைகள் பெற்றுவிட்ட இந்த தம்பதியைப் பாருங்கள். கணவர்: “உன்னைக் கல்யாணம் செய்துகொண்டதால்தான் எனக்கு இவ்வளவு வியாதிகள்!” மனைவி (அயராது): “நம் கல்யாணத்தின்போது உங்களுக்கு எழுபது வயதா?” குணமும் குழந்தைத்தனமும் மகிழ்ச்சிகரமாக வளர்க்கப்படும் சிறுகுழந்தையின் கண்களைப் பார்த்தால், அதில் அப்பாவித்தனம், உண்மை தெரியும். (பயமோ, வருத்தமோ இருக்காது). அதற்குப் போலியாக நடிக்கத் தெரியாது. வளர, வளர பல்வித இன்னல்களை அனுபவிக்க நேர்கிறது. வெளியுலகில் பழக்கமில்லாத அனுபவங்கள் வேறு. இதையெல்லாம் எப்படி ஒருவர் எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது குணாதிசயம் அமைகிறது. வயதானாலும் தன்னைச் சுற்றி நடப்பதில் அவருடைய ஆர்வம் குன்றாது இருக்கும். குழந்தைத்தனம் மாறாது இருப்பவர் எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக இருக்கிறார். இது சிறுபிள்ளைத்தனம் இல்லை. எவ்வளவு சறுக்கினாலும் தன்னைத்தானே ஏற்பது. கதை: கர்வம் குணக்கேடு கண்ணபிரான் தலைமைப்பொறுப்பில் இருந்தார். பல கலைகளில் பாண்டித்தியம் உண்டு. அவரது புகைப்படம் பல முறை பத்திரிகையில் வெளிவந்திருந்தது. அத்துடன் திருப்தி அடையாது, பத்திரிகை ஆசிரியரைக் கூப்பிட்டு, ‘அடுத்த இதழில் இந்த இடங்களில் என் படத்தைப் போடுங்கள்!’ என்று பணித்துவிட்டு, மூன்று முறை வந்த தன் படத்தைப் பார்த்து பெருமகிழ்ச்சியும் கர்வமும் அடைந்தார். அவரைப்போல் தன் பெயரையும் புகழையுமே பரப்பும் முயற்சிகளில் இறங்குகிறவர்கள் விரைவில் அவற்றை இழக்கிறார்கள். (‘இவரா பண்பாளர்!’ என்று ஆசிரியர் வருந்தி எழுதியிருந்தார்). “குணம் மரம் என்றால், நற்பெயர் நிழலாகும்” (ஆப்ரஹாம் லிங்கன்). ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. கண்ணபிரானைப் போன்றவர்கள் தன்னைவிட சிறப்பானவர்கள் இருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கவும் விரும்புவதில்லை. பிறர் இவரிடம் காட்டும் மரியாதை பயத்தால் இருக்குமே தவிர, அன்பினால் இருக்காது. பிறரை ஊக்குவித்து, அவர்கள் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடையும் ஒருவரே தன்னைப்போன்ற நல்ல தலைவர்களை உருவாக்குகிறார். மூக்கை நுழைக்கலாமா? “உங்கள் கணவர் எதுவரை படித்திருக்கிறார்?” நேர்முகத் தேர்வில் ஒரு இளம்பெண்ணைக் கேட்டார்கள். “அதற்கும் நீங்கள் விளம்பரம் செய்திருக்கும் வேலைக்கும் என்ன சம்பந்தம்?” என்று எதிர்க்கேள்வி கேட்டவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் அவள் செய்தது சரியென்றே தோன்றுகிறது. பிறர் என்ன செய்கிறார்கள் என்றறியும் வேண்டாத ஆர்வம் உடையவர்கள்தாம் அத்தகைய கேள்விகளைக் கேட்பார்கள். இவர்களுக்கு யாராவது நிம்மதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருந்தால் பிடிக்காது. எப்போதும் அவர்களது அதிகாரமே ஓங்கியிருக்க வேண்டும். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது இவர்களுக்கு. கதை ராஜன் ஒரு படித்த முட்டாள். நாம் குடித்துவிட்டு, வெகு நேரம் கழித்து வீட்டுக்குப் போனோமே, நம்முடன் இருந்த நண்பனும் அப்படித்தானே வீட்டில் ‘பாட்டு’ வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பான்?‘என்று அறியும் நப்பாசை அவனுக்கு. தொலைபேசியில் நண்பனின் வீட்டை அழைத்து, “நேற்றிரவு உன் அப்பா எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தார்?” என்று நண்பனின் மகளைக் கேட்டான் – மிக முக்கியம்போல்! “ஐந்து மணிக்கு என்று என்னிடம் சொல்கிறார். பொய்தானே?” “உங்களிடம் அப்பா சொல்வதை நம்பாமல், என்னிடம் கேட்கிறீர்களா? நல்ல நண்பர் நீங்கள்!” என்று சாடி, தந்தையின் கௌரவத்தைக் காப்பாற்றினாள் மகள். சரிதான், வேறு திசையில் தன் கைவரிசையைக் காட்டலாம் என்று முடிவெடுத்தான் ராஜன். “என் மனைவி உன் மனைவியைவிட கண்டிப்பானவள்!’ என்று பெருமை பேச ஆரம்பித்தான் நண்பனிடம்.”நான் குடித்துவிட்டு வந்தால், எப்படிக் கத்துவாள், தெரியுமா?" பிறரது வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கவே சிலர் இம்மாதிரி பேசுகிறார்கள் என்பது புரிந்தால், அலட்சியப்படுத்தலாம். ஏன் அப்படிச் செய்கிறார்கள்? ராஜனைப்போல் பிறரது விவகாரங்களில் அநாவசியமாக மூக்கை நுழைப்பவர்கள் தம் பிரச்னைகளை நினைக்கவும் விரும்பாதவர்கள் . ஏதோ காரணத்தால் நிம்மதி குலைந்து போயிருக்கலாம். பிறர் நன்றாக இருந்தால் மட்டும் எப்படிப் பொறுப்பார்கள்? தாம் உற்ற நண்பர்தான் என்று நம்பவைப்பதுபோல், சாமர்த்தியமாக அவ்வப்போது வீட்டுக்கு வந்து, பரிசுப் பொருட்கள் கொடுக்கவும் தவறுவதில்லை இவர்கள்! இத்தகைய சிலர் நண்பர்களின் துணைவியரையும் விட்டு வைப்பதில்லை. வேடிக்கை என்றெண்ணி, சீண்டிப் பார்ப்பர். ’நேற்று உங்கள் கணவர் இரண்டு, மூன்று பெண்களுடன் காரில் போவதைப் பார்த்தேனே!’ வாகன வசதி இல்லாதவர்களுக்கு உதவியாகப் போயிருக்கலாம். அல்லது, அவர்களில் ஒருத்திக்கு உடல்நலக் குறைவாக இருக்கலாம். பிறரது குடும்ப விவகாரத்தில் தலையிடும் இதுபோன்ற நபர்களின் பேச்சை அலட்சியம் செய்வது நல்லது. அதைவிட்டு, கணவரிடம் அதுபற்றி சந்தேகத்துடனோ, கோபத்துடனோ பேசினால் ஒன்றுமில்லாத சமாசாரம் பூதாகாரமாக வெடிக்கும். வாழ்க்கைத் துணைவரையோ, பெற்றோரையோ, உற்றவரையோ அவமரியாதையாகப் பேசுபவரின் உறவைத் துண்டித்துக்கொண்டால்தான் நிம்மதி நிலைக்கும். இல்லாவிட்டால், சிறுகச் சிறுக நம்மை அவர் பக்கம் சாய்க்கப் பார்ப்பார். தம்பதியரின் பிணைப்பு இருவருக்குள் மட்டுமே இருக்க வேண்டியது தாம்பத்திய உறவு. பலருடனும் தமது உறவை, அதன் குறைகளைப்பற்றிப் பேசுபவர் தன்னையும் அறியாது பிறரது குறுக்கீட்டை வரவேற்று, நிலைமையை இன்னும் மோசமாக்குகிறார். பிறரின் குறுக்கீடு எப்போதும் நன்மையை விளைவிப்பதாக இருக்காது. ‘மகனுக்குத் தன்மேல் இருந்த அன்பில் பங்கு கேட்க வந்துவிட்டாளே!’ என்ற பொருமலுடன், மருமகள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் குறுக்கிடும் மாமியாரும், “எல்லாரும் உன்னைப்போல் பெண்டாட்டிதாசனாக இருப்பார்களா!’ என்று கேலி செய்யும் நாத்தனாரும் ஒரு குடும்பம் இன்பமாக வாழவிடாது தடுக்கும் எதிரிகள். இவர்கள் ஏன் அப்படி நடக்கிறார்கள் என்று தம்பதியர் அமைதியாக ஆராயும்போது, அவர்கள் உறவு பலப்படுகிறது. பொறுக்க முடியாது போய்விட்டால், நம்பகமான ஒருவருடன் பகிர்ந்து, தீர்வைத் தேடலாம். மூக்கை நுழைப்பதால் நன்மையா? சில சமயங்களில், குறுக்கீடுகூட நன்மை விளைவிப்பதாக இருக்கிறது. கதை எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஏலியம்மாவின் வாசற்கதவு எப்போதும் தாளிடப்பட்டிருக்கும். அக்கம்பக்கத்தில் யாருடனும் பேச்சு வைத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. ஒவ்வொரு இரவும், பத்து மணிக்குமேல் தன் மூன்று வயதுக் குழந்தையை அடிப்பாள் ஏலியம்மா. குழந்தை, எமிலி, ‘அம்மா! அம்மா!’ என்று கதறும். என்னால் பொறுக்கவே முடியவில்லை. பகலிலும் வாய் ஓயாது எமிலியைத் திட்டுவாள். எந்தத் தாயாவது இப்படிச் செய்வாளா? யார், எப்படி குறுக்கிடுவது? ஒரு முறை, அவளுடைய கணவரின் குரல் கேட்டது: “ஏய்! சும்மாச் சும்மா பிள்ளையை விரட்டாதே!” (எமிலி தந்தையின் சாயல்). “பால் குடிக்காம தூங்குதுங்க! எப்படிச் சும்மா விடறது?” என்ற ஆத்திரக்குரல் கேட்டது, இரவின் நிசப்தத்தில். அந்தக் குழந்தையோ இளைத்துக்கொண்டே போயிற்று. ஒரு சாயந்திர வேளை, எங்கள் வீட்டின் இன்னொரு பக்கத்தில் இருந்த இளம்பெண்ணிடம் இதுபற்றி பேசினேன். “எனக்கும் கேட்டிருக்கிறது, அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது, அந்தக் குழந்தையின் பரிதாபமான குரல் கேட்கும்,” என்று அவள் கலக்கத்துடன் ஆமோதித்தாள். குடும்ப விவகாரம், நாம் என்ன செய்வது என்று எங்கள் கையாலாகாத்தனத்தை எண்ணி வருந்தினோம். அன்றிரவு. “Hey, next door lady!” என்று என்னைக் கூவி அழைத்தாள் ஏலியம்மா. ‘நான் உன்னுடன் பேச வேண்டும்,’ என்றாள், அதிகாரமாக. தமிழச்சிதான். ஆனாலும், ஆங்கிலத்தில் கத்தினாள். “உனக்குப் பேச வேண்டுமானால், நீ இங்கே வா!” என்றேன், அலட்சியமாக. அவள் வரவில்லை. நான் ஏன் அவள் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டும், பிறருடன் அவளைப்பற்றிக் கண்டபடி பேசுகிறேன் என்றெல்லாம் கத்திக்கொண்டே இருந்தாள். என்னை மிரட்ட முடியவில்லையே என்று மறுநாள் என் மூன்று வயது மகளை ஒரேயடியாகத் திட்ட, பயத்தில் அவளுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. என் கணவர் அவள் வீட்டுக்குப் போய், “என் குழந்தைக்கு ஏதாவது ஆனால், உன்னைச் சும்மா விடமாட்டேன்!” என்று திட்டிவிட்டு வந்தார். “உங்கள் மனைவி மிக நல்லவள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்! அவளோ..!” என்று அவள் கத்தியது என் காதில் விழுவதற்காகவே என்று எனக்குப் புரிந்தது. “எனக்கு என் மனைவியை நன்றாகத் தெரியும்!” என்று சொல்லிவிட்டு வந்தாராம். (பிறர்முன் தம்பதியர் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் இருந்தால், அவர்கள் பிணைப்பு இறுகும்). மறுநாளிலிருந்து ஒரு நல்ல திருப்பம். அதற்குமுன் எப்போதும் கிழிந்த ஆடைகளில் காணப்பட்ட குழந்தை எமிலி பட்டுப்பாவாடையில் மிளிர்ந்தாள். தினமும், என் குழந்தைகளுக்கு எங்கள் வீட்டில் பூத்த டிசம்பர் பூவைத் தொடுத்து தலையில் சூட்டுவேன். ஏலியம்மாயும் தேடிப் பிடித்து அதே மலர்களை வாங்கி, தன் குழந்தையின் தலைகொள்ளாமல் வைப்பாள்! அன்பாக நடத்துகிறாளாம்! ஏலியம்மா மகப்பேறில்லாதவள், மைத்துனரின் குழந்தையை தத்து எடுத்துக்கொண்டிருக்கிறாள் என்று பிறகு கேள்விப்பட்டேன். பொதுவாக, பிறரது விஷயங்களில் குறுக்கிடுவது நல்லதல்லதான். இதனால் சண்டை மூளும். நிம்மதியும், அமைதியும் சிறிது காலம் பறிபோகும். இவைகளைத் தவிர்க்கவே பலரும் தம் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால், நன்மை விளையுமானால், துணியலாம். யாரும் குறுக்கிடாவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகுமே! (மலேசியாவில், சில வருடங்களுக்குமுன் இதேபோல், அடுக்குமாடி வீடொன்றில் ஒரு குழந்தை இரவு பகலாக ஓயாது அழ, அக்கம்பக்கத்தினர் அதைக் கேட்டும் கேளாததுபோல் இருந்துவிட்டார்கள். அந்தச் சிறுவன் உடலெல்லாம் தீயால் சுட்ட காயத்தால் இறந்ததும் அவர்கள் குற்ற உணர்வால் துடித்துப்போயினர். அதன்பின்னர் குழந்தை வதை செய்பவர்களைத் தண்டிக்க சட்டம் அமலுக்கு வந்தது). அடுத்த வீட்டு விவகாரத்தில் நான் செய்ததில் எனக்கு வருத்தமோ, அவமானமோ கிடையாது. எப்போதாவது அந்தக் குழந்தை எமிலியின் நினைவு வரும். தாய் தனக்கு இழைத்த கொடுமை மாறி, எப்படித் தன்மீது இப்படி (போலியாகவாவது) அன்பைப் பொழிகிறாள் என்று அதற்குத் தெரிந்திருக்காது. அதற்காக எனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது ஒரு சிறு சிரிப்பு எழும். உலகைக் காக்கும் பொறுப்பு அம்மாணவன் பிறருடன் தோழமையுடன் பழகினான். கவர்ச்சிகரமாக இருந்தான். எங்கள் பள்ளிக்கூடத்தில் நான் பொறுப்பேற்றிருந்த சங்கத்திற்குப் பிறர் ஏகமனதாக அவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தனர். (அதற்காகத்தானே அவ்வளவு சிநேகிதமாக இருந்தான்!) பல சங்கங்களிலும் அவனே தலைவனாக இருந்தான். வருட இறுதியில், மாணவத் தலைவர்களுக்கெல்லாம் சான்றிதழ் அளிக்கும் வைபவம் நடந்தது. நான் கையெழுத்திட்ட சான்றிதழ் அவனுக்குக் கிடைக்கவில்லை. குழப்பத்துடன் என்னிடம் வந்தான். “டீச்சர்! நம் சங்கத்தின் சான்றிதழ்..?” நான், “நீ எதுவுமே பண்ணவில்லையே?” என்றபோது, அவன் அதிர்ந்தான். பெரும்பாலான தலைவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். பதவி, அது அளிக்கும் அதிகாரம், பெருமை எல்லாம் வேண்டும். ஆனால், பொறுப்பாக நடக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். செய்யவேண்டுவதைத் தாமே கவனித்துச் செய்பவர்கள்தாம் தலைவர்களாகும் தகுதி பெறுகிறார்கள். வீடு, சங்கம், நாடு – இவற்றில் எதன் தலைவராக இருந்தாலும் சரி, அவர் தன் கடமையைச் சரிவர ஆற்றாவிட்டால் அது ஆட்டங்கண்டுவிடும். கதை “எங்கப்பா எப்பவும் குடிச்சுட்டு, கத்திக்கிட்டே இருப்பார். படிச்சதெல்லாம் மறந்து போயிடுது!” என்றாள் என் மாணவி மீனா. “ஏதாவது வாசகசாலைக்குப் போய் படி. பள்ளிக்கூடத்திலேயே ஓய்ந்த நேரத்தில் சில தோழிகளுடன் கலந்து படி. அதிகம் பேசாதே!” என்று ஆலோசனை கூறினேன். “அப்பாவை விடு! இது உன் வாழ்க்கை. நன்றாகப் படித்து முன்னுக்கு வருகிற வழியைப் பார்! இல்லாவிட்டால், உன் அப்பாவைப்போலவே ஒருவனை மணந்து, அவனிடம் அடிபட்டுச் சாகவேண்டும்!” நான் கூறியது கடுமையாக இருந்தபோதிலும், மீனா அதில் பொதிந்திருந்த உண்மையைப் புரிந்துகொண்டு ஏற்றாள். தனக்கென ஓர் இலக்கை வகுத்துக்கொண்டாள். ‘இந்தமாதிரி ஒரு குடும்பத்திலே பிறந்துட்டு, நீயெல்லாம் உருப்பட்டுவிட முடியுமா?’ என்று அக்கம்பக்கத்தினர் பழிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்தாள். பிறர் தன் மனத்தைத் தளர வைப்பது பொறாமையால் என்று புரிந்தபின், அவர்களின் கேலியை அலட்சியம் செய்தாள். சிறு வயதிலேயே நிறைய துன்பம் அனுவித்திருந்ததால், தன் வாழ்க்கை நல்லவிதமாக மாறவேண்டும் என்ற துடிப்பு மீனாவிடம் இருந்தது. பொறுப்புடன் தன் இலக்கை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தாள் அப்பெண். எப்போதும் பிறர் சொன்னபடியே நடந்து, அவர்களை மகிழ்விப்பவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ, தமக்குரிய பொறுப்பை ஏற்க மறுப்பவர்கள். பின், எப்படித்தான் தம் செயலால் விளைந்த வீழ்ச்சிகளுக்கு பொறுப்பு ஏற்காது, பிறரைக் குற்றம் சாட்டுவது! வித்தியாசமாக இருந்தால் தனித்துத் தெரிவோம் என்ற பயத்தில், ‘நான் பயந்தாங்கொள்ளி, சோம்பேறி!’ என்பவர்களுக்கு நிறைய நண்பர்கள் வாய்ப்பதுண்டு. எல்லாருமாகச் சேர்ந்து, தம்மைப்போல் இல்லாதவர்களைக் கேலிசெய்து சமாதானம் அடைவார்கள். கதை என் சக ஆசிரியை மேரி, “எனக்கு ஒரே மூச்சில் ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டும். அதிகம் படித்தால் தலைவலி வரும்,” என்று தெரிவித்தாள். ‘நீ அதிகம் படிப்பதில்லையா?’ என்று நான் அவளைக் கேட்டிருக்கமாட்டேன். அவளுக்கே ஏதோ தாழ்மை உணர்ச்சி – ஆங்கில ஆசிரியையாக இருந்துகொண்டு தான் இவளைப்போல் படிப்பதே இல்லையே, பத்திரிகைகளில் எழுதுவதும் கிடையாதே என்று. “ஒரு வரி எழுதி முடித்தவுடன், இதை இப்படி எழுதியிருக்கலாமோ என்று பல முறை திருத்துவேன். அதுதான் எழுதுவதில்லை,” என்று மேலும் கூறினாள். எடுத்த எடுப்பில் நமக்குப் பிடித்தமாதிரி எழுதுவது, (ஏன், எதையும் செய்வது) இயலாத காரியம். தோன்றுவதையெல்லாம் எழுதி முடித்துவிட்டு, அதன்பின் பல முறை திருத்த வேண்டியதுதான். கனவு பலிக்க பல ஆண்கள், ‘நாற்பது வயதுக்குள் நான் லட்சாதிபதி ஆகவேண்டும்,’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், பொறுப்புடன் அதற்கான முயற்சியில் இறங்கமாட்டார்கள். கனவு கண்டால் மட்டும் போதுமா? முதலில், அதை எப்படி நிறைவேற்றுவது என்று யோசிக்க வேண்டும். பல இடைஞ்சல்கள், எதிர்ப்பு, வரத்தான் செய்யும். எதற்கும் தளராது, முயற்சியைக் கைவிடாமல் இருந்தால்தான் வெற்றி கிட்டும். பிற நல்ல பழக்கங்களைப்போல, பொறுப்புணர்ச்சியையும் சிறு வயதிலேயே பழக்கமுடியும். குட்டிக்கதை சுமார் பத்து சிறு குழந்தைகளைப் பகல் வேளைகளில் பார்த்துக்கொண்ட இல்லத்தரசி ஸிதி (SITI) தான் ஓயாமல் குனிந்து, நிமிர்ந்து இடுப்பை ஒடித்துக்கொள்ளாமல் இருக்க ஓர் உபாயத்தைப் பின்பற்றினாள். கையை ஒரு முறை ஓங்கி தட்டி, “ஒழுங்குபடுத்து” என்று கூவுவாள். அவள் கண்காணிப்பிலிருந்த என் மகன் எங்கள் வீட்டுக்கு வந்தபின்னரும், தன் விளையாட்டுச் சாதனங்களை எடுத்து வைக்க ஸிதி செய்ததுபோலவே கையைத் தட்டி, “KEMAS!” என்று மலாய் மொழியில் ஆணையிட்டுக்கொள்வான்! ‘குப்பையைக் கண்ட இடத்தில் வீசாதே!’ என்று பள்ளிக்கூடங்களில் விதி இருந்தாலும், சிலர் வீடுகளிலும் அதைப் பின்பற்றத் தவறிவிடுகிறார்கள். ‘நம் வீடுதானே!’ என்ற தம் பொறுப்பை அலட்சியம் செய்வார்கள். அத்தருணங்களில், மூத்தவர்கள் பரிவு காட்டாது, ஆனால் குரலை உயர்த்தாது கண்டித்தால் பொறுப்பு வரும். வீட்டை மட்டுமல்ல, இப்பரந்த உலகையும் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி மிக்க ஒருவரைச் சந்திப்போமா? 62 வயதான ராபர்ட் ஸ்வான் (ROBERT SWAN) என்ற ஆங்கிலேயரை உலகம் ‘பைத்தியக்காரன்’ என்று கேலி செய்தது. யாராவது வடதுருவம், தென்துருவம் இரண்டு இடங்களிலும் நடந்து போவார்களா? தென்துருவமான அன்டார்ட்டிகாவில் நாம் அறிந்தபடி நிலம் கிடையாது. பனிப்பாறைதாம். அங்கு வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் வசதியும் கிடையாது. அதன்மேல் கால்நடையாக தனது இருபதாவது வயதில், மற்றும் இருவரின் துணையுடன் போனார் ராபர்ட். அதற்கான செலவை (அமெரிக்க டாலர் 50 லட்சம்) சேகரிக்க ஏழாண்டுகள் பிடித்தன. 900 மைல் நடந்தார்கள். ஒரு நாளைக்கு ஒன்பது மணி என்று 70 நாட்கள்! ஒவ்வொருவரின் முதுகிலும் 180 கிலோகிராம் எடைகொண்ட சாமான்கள்! 77 டிகிரி செல்ஷியஸ் குளிரில் வியர்வை உறைந்துவிடுமாம். (குளிரில் வியர்க்குமா என்ற யோசனை வருகிறதா? உடலை இந்தப் பாடுபடுத்தினால்?) ஒருவருக்குக் குதிகால், இன்னொருவருக்கு கால் பெருவிரல் இரண்டும் சிதைந்துவிட்டன. ராபர்ட்டின் எடையில் 33 கிலோ குறைந்தது. கண்களின் நீல நிறம் வெளிறியது. முகத்தின் சதை பிய்ந்தது. கடந்த பதினைந்து வருடங்களில், 3,500 பேரை (இந்தியா. சீனா போன்ற உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்தவர்கள்) 22 முறை இத்துருவங்களுக்கு அழைத்துப்போயிருக்கிறார். பல பெண்களும் இதில் அடங்குவர். பல்வேறு தாவர, விலங்கினங்களைத் தன்னிடத்தே அடக்கியிருக்கும் அழகான அன்டார்ட்டிகாவை ரசிப்பதுடன், அதைக் காக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். சரி, இதில் பொறுப்பு எங்கே வந்தது, என்கிறீர்களா? உலகின் 90% சுத்தமான நீர் அன்டார்ட்டிகாவில்தான் உள்ளது, பனி வடிவில். 4,500 மீட்டர் நீளத்திலுள்ள பனிப்பாறைகள் உருக ஆரம்பித்தால்..? இவ்வாறு உலகம் அழியாது காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் ராபர்ட் ஸ்வான். எட்டு ஆண்டுகள் பிரயத்தனப்பட்டு, 1,500 டன் (TON) எஃகு குப்பையை அகற்றி, அதை மறுசுழற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார். (இந்த ‘குப்பை’ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் விட்டுப்போனது). நம்மால் பிறரது நலனுக்கென இப்படியெல்லாம் உழைக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், பிளாஸ்டிக் சாமான்களையும், தகர டப்பாக்களையும் அதற்கென வைக்கப்பட்டு இருக்கும் குப்பைத்தொட்டிகளில் போட்டு மறுசுழற்சிக்கு அனுப்பலாமே! வாழ்க்கை எனும் மிதிவண்டி “சௌக்கியமா?” ஒருவரைச் சந்திக்கும்போது கேட்கப்படுகிற உபசார வார்த்தை. சிலர் புன்சிரிப்புடன் தலையாட்டுவார்கள். வேறு சிலர், “என்னமோ இருக்கேன்!” என்று வேண்டாவெறுப்புடன் பதிலளிக்க, “ஏனடா இவரைக் கேட்டோம்!‘என்று ஆகிவிடும். இவர்கள் அனைவரும் உடலைத்தான் குறிப்பிடுகிறார்கள். உண்மையில், பிறருடன் சுமுகமாகப் பழகுவதும், திருப்தியும்கூட ஆரோக்கியத்தில் அடங்கும். மனநிறைவு இருந்தால் ஆரோக்கியமும் தொடர்ந்து வருமே! “உனக்கு ரொம்பத்தான் சுயநலம். உன்னை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்கிறாய்!” என்று பழிப்பவர்களுக்கு ஒன்று புரிவதில்லை. நம்மை நாமே சரிவர கவனித்துக் கொள்ளாவிட்டால், பின் யாரை நோவது? அத்துடன், நாம் நன்றாக இருந்தால்தானே பிறரது நலனில் அக்கறை செலுத்தமுடியும்? தெளிவான, உறுதியான மனத்திற்கு தன்னைத்தானே கவனித்துக்கொள்வது முக்கியமில்லையா! ஒருவரது சிந்தனை, கூறும் வார்த்தைகள், நடத்தை எல்லாமே செம்மையாக இருக்கவேண்டும். நாம் சொல்வதால் பிறரும் மகிழ்ந்து சிரிப்பது மகிழ்ச்சிகரமான விஷயம். ஆக்ககரமான சிந்தனை, அடுத்த நாள் செய்யவேண்டியதைப்பற்றிய திட்டங்கள் ஆகியவை உடல், மனம் இரண்டையும் உற்சாகப்படுத்த வல்லவை. பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் சிந்திக்கிறார்கள், ’நாளைக்கு ரவி என் சிநேகிதனாக இருப்பானோ?’ என்று. இருவரும் இன்று நட்புடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். இருந்தாலும், இரவு தூங்கப்போகுமுன், நாளையைப்பற்றிய கவலையும் எழாமல் இராது. நமக்கும் இதுபோல்தான் வேண்டாத கவலைகள் எழுகின்றன. நமக்கு நடப்பது 20% என்றால், அவை நல்லபடியாக நடக்குமோ என்றெல்லாம் நாம் அநாவசியமாக யோசிப்பது 80%! கதை “நான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறேன், ஆன்ட்டி” என்று குறைப்பட்டாள் சுகந்தா. அவளுக்கு நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். நல்ல உத்தியோகத்தில் இருக்கிறாள். “அதில் என்ன தவறு? உனக்கு மகிழ்ச்சியுடன் பெரிதாகச் சிரிக்கவும் தெரிந்திருக்கிறது, பிறருக்காக வருந்தவும் முடிகிறது. இரண்டும் இல்லாமல், ஜடம் மாதிரி இருக்கப்போகிறாயா?” அவள் முகம் மலர்ந்தது. “அதானே!” என்றாள், நிம்மதியுடன். சிறு வயதில் நிறைய கஷ்டங்கள் அனுபவித்திருக்கும் சுகந்தா அவைகளால் தளர்ந்துவிடாது, எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்திருக்கிறாள். குடித்துவிட்டு முகத்தில் கத்தியால் கீறிய தந்தை, அருமையாகப் பேசிப் பேசி, வேலைக்காரிபோல் நடத்திய உறவினள், சிறு வயதிலேயே பாலியல் வதை! அவள் அனுபவிக்காத துயரமே கிடையாது எனலாம். கடந்துபோனதையே எண்ணி வருந்தி, அல்லது ‘மீண்டும் அப்படி ஒரு நிலை வந்துவிடுமோ!’ என்று பயப்படாது, உறுதியுடன் எல்லாவற்றையும் ஒதுக்கி நடந்திருக்கிறாள் சுகந்தா. “வாழ்க்கை என்பது மிதிவண்டி போன்றது. கீழே விழாமலிருக்க நகர்ந்தபடி இருத்தல் அவசியம்,” என்று சரியாகத்தான் சொல்லிப்போனார் ஐன்ஸ்டீன். ஆரோக்கியம் கெட்டபின்தான் அதன் அருமை புரிகிறது. “மனுசனாப் பிறந்தா, என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கு!” என்று ஒரு மாது சலித்துக்கொண்டதைக் கேட்டேன், அண்மையில். அறுபது வயதில் உடல் நலம் குன்றிப்போக, நாள் தவறாது உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்ததில் எழுந்த சலிப்பு அது. கவலையை அகற்ற ஏதேதோ வழிகள். ‘எனக்கு ஏதாவது கவலை வந்தால், சாப்பிட்டால் அது குறைந்துவிடும்!’ என்பார்கள் சிலர். வருத்தத்திற்கு மாற்றுமருந்து உணவா! எடை கூடிக்கொண்டே போகிறதே என்ற கவலையில் இன்னும் அதிகமாகச் சாப்பிடத் தோன்றாதா? உடற்பயிற்சி அதைவிட நல்ல பலனளிக்குமே! ஆனால், எல்லாருமே சாப்பிடுவதில் நிறைவு கண்டுவிடுவதில்லை. கதை வேலை நிமித்தம் மலேசியாவிற்கு வந்திருந்தவள் அனிதா. “என் ஒருத்திக்காக என்ன சமைப்பது! தினமும் கடையில்தான். இல்லாவிட்டால், நூடுல்ஸ்! எனக்குக் கறிகாய்கள் பிடிக்காது!” என்றாள். அவள் கொள்ளை அழகு. இப்போது உடல் இளைத்து, சக்தி குன்றி இருந்தவளைப் பார்த்து, “தினமும் என்ன சாப்பிடுகிறாய்?” என்று முகத்தைச் சுளித்தபடி நான் கேட்ட கேள்விக்குப் பதில் அது. “உன் கணவர் வீட்டில் சாப்பிட மாட்டாரா?” என்று மேலும் துளைத்தேன். “நல்லவேளை, அவருக்கு வெளியூரில் வேலை கிடைத்துவிட்டது! இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன்!” திருமணமாகி இரண்டு வருடங்களுக்குள்ளேயே இல்வாழ்க்கை அலுத்துவிட்டதா! “அவர் கூட இருந்தவரை, நான் வெளியில் எங்கும் போகக்கூடாது. யாருடனும் பேசக்கூடாது. அவருக்கு நண்பர்களே கிடையாது. நானும் அப்படி இருக்க முடியுமா?” என்று பொரிந்தாள். “வேலை முடியும் சமயம் வந்துவிடுவார், என்னை அழைத்துப்போக. எப்பவும் வீட்டிலேயேதான்! வீட்டிலேயேதான்!” அனிதா அழாதகுறை. மெல்லச் சிரித்தேன். “நீ ரொம்ப அழகாக இருப்பதால்தான்! இப்போது என்ன செய்கிறாய்?” “சிநேகிதிகளுடன் ஊர் சுற்றுகிறேன். பேசிக்கொண்டே வெளியில் சாப்பிடுவோம்! தினமும் கூப்பிட்டுக் கேட்கிறார், இன்று என்ன செய்தாய் என்று!” கசப்பான மருந்துகள் பலனளிப்பதைப்போல, நம்மை வெகுவாகச் சோதிக்கும் அனுபவங்கள்தாம் நம்மைப் புடம் போடும். அவைகளிலிருந்து எப்படி வெளிவருகிறோம் என்பதில்தான் நம் வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது. “வாழ்க்கை எளிதாக இருக்கவேண்டும் என்று கடவுளைத் துதிக்காதே. கடினமானதைத் தாங்கும் சக்தி வேண்டும் என்று வேண்டிக்கொள்!” (ப்ரூஸ் லீ) திருமணத்திற்குப்பின் சில பெண்களின் உடல்நிலை கெட்டுவிடும். பிறந்தகத்தில் கிடைத்த சலுகையை புக்ககத்தில் எதிர்பார்க்க முடியுமா! புதிதாக ஓர் உத்தியோகத்தில் அமர்ந்த பின்னரும் வித்தியாசமான நபர்களுடன் பழக முதலில் கஷ்டமாக இருக்கும். அவர்களால் உண்டான பாதிப்பையே நினைத்துக்கொண்டிராது, நமக்குப் பிடித்ததை, நம்மால் இயன்றதை, சரிவர செய்துவந்தால் நாளடைவில் புதிய சூழல் பழகிப்போகும். இரு பெண்கள், ஒரே கதை சுவேதா வசதி குறைந்த பெற்றோருக்கு மூன்றாவது மகள். நாளேட்டில் வந்த ‘மணமகள் தேவை’ விளம்பரத்தைப் பார்த்து அவளுக்குக் கல்யாணம் செய்துவைத்தனர். கணவர் அரசாங்க உத்தியோகத்தில் பெரிய பதவியில் இருந்தார். வரதட்சணையும் கேட்கவில்லை. வேறு என்ன தடை! அதிகம் விசாரிக்காமல் அக்கல்யாணத்தை முடித்தனர். சுவேதாவுக்கு வாய்த்தவரோ மனநிலை சரியில்லாதவர். உத்தியோகம் பார்க்கமுடியுமே தவிர, பிறருடன் பழகத் தெரியாது. எப்போதும் தனிமைதான். ‘நீ பைத்தியம்!’ என்று வார்த்தையாலேயே மனைவியை வதைத்தார். கணவரை விட்டுப்போவது பெற்றோருக்கு வருத்தத்தைத் தரும் என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டாள் சுவேதா. அவருக்குச் சரியாக எதிர்த்து வாதாடினால் தானும் அவரைப்போலவே ஆகிவிடும் அபாயம் என்று புரிந்து, அவருக்கு நேர் எதிராக இருக்க ஆரம்பித்தாள். அதாவது, அமைதியைத் தன் ஆயுதமாக ஆக்கிக்கொண்டாள். அவர் என்ன ஏசினாலும் அதைக் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாள். ‘நான் அவருடைய ஓர் அங்கமல்ல. எனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது!’ என்று துணிந்தாள். சிரிப்புடன் வளையவந்தாள். ஆரோக்கியம் குன்றவில்லை. கிட்டத்தட்ட அதேபோன்ற ஒருவரை மணந்த கமலா படித்தவள். பரம சாது. தனக்கென எதைக் கேட்கவும் அவளுக்கு உரிமை இல்லை. உத்தியோகம் பார்க்கக்கூடாது, பிறருடன் பழகவும் முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள். ‘கணவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!’ என்று நம்பியவள் தானும் அவரைப்போலவே பித்துப்பிடித்தவளாக ஆனாள். இயற்கை மருத்துவம் நமக்கு ஏதாவது உடற்கோளாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரைத் தேடிப்போகிறோம். அவசியமே இல்லை. “ஆறு சிறந்த மருத்துவர்கள்: நீர், காற்று, சூரிய ஒளி, சத்தான உணவு, ஓய்வு மற்றும் உடற்பயிற்சி,” என்கிறார் திரு.அனுபவசாலி. ஓய்வு ஒழிச்சல் இல்லாது வேலை செய்யும்போதும், அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து குருட்டு யோசனை செய்யும்போதும் மனம் தளர்ந்து, வேண்டாத கவலைகள் சூழ்ந்துகொள்கின்றன. “ஆச்சு! ரிடையர் ஆக இன்னும் பதினைஞ்சே வருஷம்தான் இருக்கு!” என்ற அற்ப திருப்தி அடைந்துவிடுவார்கள் சிலர். வாழ்க்கையில் இனி எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதுபோல் வாழ்வதில் என்ன சுகம் இருக்க முடியும்? எந்த வயதானாலும், ஒத்த மனதினருடன் பழகுவது, இசை, நடனம், படிப்பது என்று பிடித்தது எதிலாவது மனத்தைச் செலுத்தினால் புத்துணர்ச்சி பிறக்குமே! நாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிறரது கட்டாயம் நம்மைப் பாதிக்க விடலாமா? **