[] 1. Cover 2. Table of contents நாட்டு நலப்பணித் திட்டம் நாட்டு நலப்பணித் திட்டம்   ஏற்காடு இளங்கோ   yercaudelango@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/national_service_scheme மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reading - Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation என்னுரை      மாணவர்கள் கல்வி பயின்றால் மட்டும் போதாது. தான் பிறந்த நாட்டிற்கு ஏதாவது ஒரு வகையில் சமூகத் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காகவே நாட்டு நலப்பணித் திட்டம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் ஆகியோர் நாட்டு நலப்பணித் திட்டத்தில் சேரலாம். சமூக சேவை எண்ணம் கொண்ட மாணவ-மாணவியர்கள் இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இணைகின்றனர். இவர்கள் தங்களால் முடிந்த அளவு சேவையை சமூகத்திற்கும்,நாட்டிற்கும் செய்கின்றனர்.      நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி சுருக்கமாக நான் எழுதி உள்ளேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு உதவிகள் புரிந்த திருமிகு.இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றி. இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. மேலும் இந்தப் புத்தகத்தை வெளியிட்ட கௌரா குழுமத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகளுடன் - ஏற்காடு இளங்கோ   இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே, ஆன்றோர் பலர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.பலர் கைது செய்யப்பட்டு,சிறையில் கொடுமைகளையும், சித்திரவதைகளையும் அனுபவித்தனர். இதனால் பலர் சிறையிலேயே உயிரிழந்தனர், பலர் தூக்கிலிடப்பட்டனர்.         அன்று, தன் நலன் பெரிதல்ல,நாட்டின் நலனே பெரிது என போராடினர். ஒன்றுபட்டப் போராட்டத்தின் விளைவாகவே இந்திய நாடு சுதந்திரம் அடைந்தது. இதை நாம் சமூக சேவை என்று கூறி விட முடியாது. இது முழுக்க முழுக்க நாட்டின் விடுதலைக்கானத் தியாகம் சார்ந்தது ஆகும். சமூக சேவை          எனவே சமூகம் என்பது மக்கள் பல்வகைத் தொழில் புரிவோர் சேர்ந்து வாழ்கின்ற ஓர் அமைப்பாகும் சமூக சேவை என்பது பணம்,பொருள் போன்ற எவ்வித இலாபமும் எதிர்பார்க்காமல் மக்களுக்காக செய்யக்கூடிய ஒரு நல்ல பணியாகும். இது சமூகத்தையும், நாட்டையும் முன்னேற்றக் கூடிய ஒரு நற்பணியாகக் கருதப்படுகிறது. இது நலன்புரி சேவை மற்றும் சமூகப் பணி எனவும் அழைக்கப்படுகிறது. […] சமூக நலன், சமூகத்தின் மேம்பாடு,சமூக மாற்றம்,மக்களின் அதிகாரம் மற்றும் விடுதலை ஆகியவற்றை ஊக்குவிக்கும் செயல்களே. ஒரு கல்வித்துறையில் சமூகப் பணி என்கின்றனர். சமூக நீதி,மனித உரிமைகள்,கூட்டுப் பொறுப்பு மற்றும் பன்முகத்தன்மைக்கான மரியாதை ஆகிய கொள்கைகளே சமூகப் பணியின் மையக் கருத்தாகும். சமூகப் பணி என்பது மனிதனின் சமூகச் செயல்திறனை உருவாக்குவதாகும் என வெர்னர் வில்லியம் போஹம் (Werner William Boehm) என்ற அறிஞர் கூறுகிறார். இவர் ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்தவர்.இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சமூகப் பணிக்கான கல்வி வழிகாட்டுதல்களை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார்.         மக்கள் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவு செய்துக் கொள்வது மற்றும் தங்களுக்கு ஏற்படக்கூடிய  இன்னல்களுக்குத் தாங்களே முடிவு கண்டு,அதை வென்று,முன்னேறுவது என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுவது தான் சமூகப் பணி என ஹெர்பட் ஹெவிட் ஸ்ட்ரூப் (Herbert Hevitt Stroup) என்ற அறிஞர் கூறுகிறார். இவர் அமெரிக்க சமூகப் பணியின் வரலாறு என்ற நூலை எழுதியவர் ஆவார்.          சமூக சேவை என்பது விஞ்ஞான அறிவு மற்றும் மனித உறவுகளில் திறமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழில் முறை சேவை என அமெரிக்க சமூக நல நிபுணர் மற்றும் கல்வியாளர் வால்டர் பிரைட்லேண்டர் கூறுகிறார்.       சமூகப் பணி என்பது இயல்பாகவே அரசியல் சார்ந்தது என்று மாக்சியம் கூறுகிறது. மார்க்சீயத்தில் வழக்கமான இந்நடைமுறையானது அதன் அரசியல் பங்களிப்பு ஒப்புக் கொள்ளப்பட்டாலும், இல்லாவிட்டாலும் அது முழு அரசியலாகும். இருப்பினும் அது வழங்கும் சேவைகள் பழமைவாதமானவை. வரலாறு         சமூகப் பணியின் வரலாறு என்பது மிக நீண்டது. இப்பணி, ஏழைகளுக்கு வழங்கும் சேவை என்பது அனைத்து மதங்களின் தத்துவங்களிலும் உள்ளது. தொண்டு நம்மை பற்றிய கருத்து பண்டையக் காலத்திற்கு கொண்டு செல்கிறது. சமூகப் பணியானது வறுமை மற்றும் சமத்துவமின்மை பிரச்சினையைத் தீர்க்கப் பாடுபடுகிறது. சமூகப் பணி தொண்டு பணியின் யோசனையுடன் சிக்கலானதாக இணைக்கப்பட்டது.ஆனால் இதைப் பரந்த அளவில் புரிந்து கொள்ள வேண்டும்.       சமூகத் தொழில் முறை சமூகப் பணி 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உருவானது.தொழில்துறையில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது. நகரமயமாகுதல் என்பது மிக வேகமாக வளர்ந்தது. அதன் விளைவாக வறுமை ஏற்பட்டது. இதை எதிர்த்து பல நாடுகளில் வெகுஜன போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் ஆரம்பக் கால சமூகப் பணிகளின் முக்கிய மையமாக வறுமை இருந்தது. எனவே வறுமை ஒழிப்புத் தொண்டு சமூகப்பணியில் மிக முக்கியமானதாக இணைக்கப்பட்டது. சமூக சேவையின் தந்தை        கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1898 ஆம் ஆண்டு கோடை காலத்தில் முதல் சமூகப் பணிக்கான வகுப்பு நடைபெற்றது. சமூக ஆர்வலர்கள் மற்றும் சேவை செய்ய தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களை உருவாக்க இது வழிவகுத்தது.இதன் பிறகு சமூக சேவையாளர்கள் சமூகத்தின்  தேவைகளை உணர்ந்து, தொடர்ந்து நிவர்த்தி செய்து, தமது நாட்டின் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முன் வந்தனர். […]         சமூகப் பணியின் முன்னோடியாக லாரா ஜேன் ஆடம்ஸ் (Laura Jane Adams) கருதப்படுகிறார். இவர் சீர்திருத்தவாதி,சமூக சேவகர், சமூகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அமெரிக்காவில் சமூகப் பணி மற்றும் பெண்களின் வாக்குரிமை வரலாற்றில் மிக முக்கியமான தலைவராக இருந்தார்.இவர் 1889 ஆம் ஆண்டில் ஹல் ஹவுஸ்(Hull House) என்னும் நிறுவனத்தை சிக்காகோ நகரில் உருவாக்கினார்.இவருக்கு உதவியாக எலன் கேட்ஸ் ஸ்டார் இருந்தார்.        இதன் மூலம் இவர் அமெரிக்காவில் சமூகப் பணித் தொழிலின் நிறுவனராக அங்கீகரிக்கப்பட்டார். இவர் குழந்தைகளின் நலன்,பொது சுகாதாரம், உலக அமைதி போன்ற சேவைகளில் ஈடுபட்டார்.இவர் அர்ப்பணிப்புடன் சமூக சேவை மற்றும் உலக அமைதிக்காகப் பாடுபட்டார். இதற்காக 1931 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.       மேலும் இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.  சமூக சேவையின் முன்னோடியாக இவர் விளங்கியதால் இவர் சமூக சேவையின் தந்தை மற்றும் தாய் எனப் போற்றப்படுகிறார்.        சமூகப் பொறுப்புணர்வு கருத்துக்கள் 20 ஆம் நூற்றாண்டில் உருவாகி பரவியதால் சமூக சேவைகள் செழித்து வளர்ந்தன. இன்று கஷ்டத்தில் அவதிப்படும் ஒருவருக்கு சேவை அல்லது உதவி புரிந்தாலே அது சமூக சேவை என மிக எளிதாக மாறிவிட்டது. சர்வதேச அமைப்பு       சர்வதேச சமூகப் பணியாளர்களின் கூட்டமைப்பு(International Federation of Social Worker) என்பது தொழில் முறை சமூகப் பணிக்கான உலகளாவிய ஒரு அமைப்பாகும்.இதில் 116 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் உலகளவில்  மூன்று மில்லியனுக்கும் அதிகமான சமூகப் பணியாளர்கள் உள்ளனர்.ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற உலகளாவிய அமைப்புடன் முறையான அந்தஸ்தை இது பெற்றுள்ளது. […]       சமூக சேவை என்பது சமூக மாற்றம், சமூக வளர்ச்சி,சமூக ஒருங்கிணைப்பு, மக்களின் அதிகாரம் மற்றும் விடுதலை ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒர் அறிவு சார்ந்த கல்வித்துறையாகும். சமூக நீதி,மனித உரிமைகள், கூட்டுப் பொறுப்பு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை இதன் அடிப்படைக் கொள்கைகளாகும். இது சமூக பணியாளர்களின் சர்வதேச கூட்டமைப்பின் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டு,உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இனம், வர்க்கம், மதம், மொழி,பாலினம், இயலாமை,கலாச்சாரம் போன்ற பல்வேறு அளவுகோலில் இருந்து எழும் ஒடுக்கு முறைகளை ஆராய வேண்டும். இதன் மூலம் புதிய அணுகு முறை கண்டறிந்து மக்களை இதிலிருந்து விடுவிப்பது மற்றும் அதிகாரம் அளிப்பது இதன் மையப் பணியாகும்.சமூகப் பணி வறுமையைப் போக்கவும், ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களை விடுவிக்கவும் பாடுபடுகிறது. மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியைப் பாதுகாப்பது சமூக சேவைகளின் சட்டப்பூர்வமான மற்றும் உலக ரீதியான முக்கிய கொள்கை என சமூகப் பணியாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு கூறுகிறது. இந்தியாவின் தந்தை        மகாத்மா ஜோதிராவ் பூலே என்பவர் சமூக ஆர்வலர், சிந்தனையாளர், சாதி எதிர்ப்பாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கல்வி அளிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இவர் இந்தியாவில் முதன் முதலில் 1848 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக பள்ளி ஒன்றைத் தொடங்கினார். தன் மனைவி சாவித்ரிபாய் பூலே அவர்களுக்கு கல்வி புகட்டி ஆசிரியராக ஆக்கினார்.     இவர்கள் இருவரும் இந்தியாவில் பெண்கள் கல்வியின் முன்னோடிகளாக இருந்தனர்.மேலும் இவர் அனைத்து சாதி பெண்களுக்கும் 1851 ஆம் ஆண்டில் பள்ளியைத் தொடங்கினார்.1855 ஆம் ஆண்டில் மாலை நேரப் பள்ளியையும் ஆரம்பித்தார். இவருக்கு 1888 ஆம் ஆண்டு மே 11 அன்று மகாத்மா என்ற பட்டம் சூட்டப்பட்டது.இவர் 1890 ஆம் ஆண்டு மறைந்தார்.பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டதன் காரணமாக மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்கள் இந்தியாவின் சமூக சேவையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். […] நாட்டு நலப்பணித் திட்டம்        நாட்டு நலப்பணித் திட்டம்(National Service Scheme) என்பது இந்திய அரசுத் துறையின் ஒரு பொதுச் சேவைத் திட்டமாகும்.இது என் எஸ் எஸ்(NSS) என பிரபலமாக அறியப்படுகிறது. இது இந்திய அரசின் இளைஞர் விவகார அமைச்சகம் மற்றும் விளையாட்டு துறையால் நடத்தப்படும் ஒரு திட்டமாகும். இது தேசிய சேவைத் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. வரலாறு       இந்திய விடுதலைக்குப் பிறகு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வும்,சமூக சேவை எண்ணமும் வளர வேண்டும் என பிரதமர் நேரு அவர்கள் விரும்பினார். டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் தலைமையில் பல்கலைக்கழகக் கல்வி வாரியம் 1948 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு தன்னார்வ அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் சமூக சேவையை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைத்தது. […]      இதன் பிறகு பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் சமூக சேவையின் அனுபவங்களை பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 1950 ஆம் ஆண்டு  ஜனவரி மாதத்தில் நடந்த மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில் தன்னார்வ அடிப்படையில் மாணவர்கள் தங்களது நேரத்தின் ஒரு பகுதியை சமூகத்திற்குச் செலவிட வேண்டும் எனக் கூறியதுடன். இதற்கு ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்த வரைவு (Draft)1952 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.      முதல் ஐந்தாண்டு திட்டத்தின் வரைவில் இந்திய மாணவர்களுக்கு சமூக மற்றும் தொழிலாளர் சேவையின் அவசியத்தை வலியுறுத்தியது. 1958 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அவர்கள் அனைத்து முதலமைச்சர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார். பட்டப்படிப்புக்கு சமூக சேவை ஒரு முன் நிபந்தனையாக இருக்க வேண்டும் என தனது கருத்தை முன் வைத்தார். இதை அறிமுகப்படுத்துவதற்குரிய பொருத்தமானத் திட்டத்தை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். […]       மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் மாநாடு 1959ஆம் ஆண்டில் நடைபெற்றது, இம்மாநாட்டில் ஒரு வரைவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த திட்டத்தை நிறைவேற்ற ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவின் தலைவராக சிந்தாமன் துவாரகநாத் தேஷ்முக்(C.D.Deshmukh) 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று நியமிக்கப்பட்டார்.      இவர் 1950 முதல் 1956 ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் நிதி அமைச்சராகப் பணியாற்றினார்.பின்னர் பல்கலைக்கழக மானியக் குழுமத்தின் தலைவராகவும் பணியாற்றினார். அதன் பிறகு தில்லிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1962 - 1967 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.        மாணவர்கள் மத்தியில் ஒன்பது மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை தேசிய சேவையை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என குழு பரிந்துரை செய்தது.ஆனால் நிதி ஒதுக்குதல் மற்றும் செயல்படுத்துவதில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இது அமலாகவில்லை.       உலகின் பல்வேறு நாடுகளில் மாணவர்களின் தேசிய சேவை எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி ஆராய குவாஜா குலாம் சையதீன்(Khwaja Ghulam Saiyidain) என்பவரை இந்திய அரசாங்கம் 1960 ஆம் ஆண்டில் நியமித்தது.இவர் இந்திய கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவர் ஆவார். […]        இவர் உலக நாடுகளில் செயல்படும் மாணவர் தேசிய சேவை எவ்வாறு செயல்படுகிறது என்று ஆராய்ந்து நம் நாட்டில், செயல்படுத்த வேண்டி இளைஞர் தேசிய சேவை என்ற தலைப்பின் கீழ் ஒரு திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்தார். அதன் பின்னர் டாக்டர் டவுளத் சிங் கோத்தாரி (D.S.Kothari) தலைமையில் கல்வி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இவர் 1961ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் 1964 -66 ஆம் ஆண்டு வரை இந்தியக் கல்வி ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.         கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் சமூக சேவையுடன் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும் என கல்வி ஆணைக்குழு பரிந்துரைத்தது. மேலும் பணி அனுபவம் மற்றும் தேசிய சேவை ஆகியவை கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் எனவும் கூறியது. துவக்கம்      பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ பிரதிநிதிகளின் தேசிய மாநாடு 1969 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றது. இது கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவினால் நடத்தப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டிற்கான ஒரு கருவியாக தேசிய சேவைத் திட்டம் இருக்க முடியும் என்பதை இம்மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.     நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்டத்திற்கென 5 கோடி நிதி ஒதுக்க திட்டக் குழு அனுமதி அளித்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் என் எஸ் எஸ் ஒரு முன்னோடி திட்டமாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. […] நாட்டு நலப்பணித் திட்டம் 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று துவங்கப்பட்டது. அப்போதைய கல்வி அமைச்சர் டாக்டர் வீ.கே. ஆர்.வீ. ராவ் (V.K.R.V. Rao) அவர்கள் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 37  பல்கலைக்கழகங்களில் நாட்டு நலப்பணித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது 40,000 மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தில் சேர்ந்தனர். நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நூற்றாண்டு விழா 1969 ஆம் ஆண்டில் நடைபெற்றது. தன் வாழ்நாள் முழுவதும் தேசிய நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் மகாத்மா காந்தி ஆவார்.அவர் பிறந்த நூற்றாண்டு விழா காலத்தில் நாட்டு நலப்பணி திட்டம் தொடங்கியது மிக மிகப் பொருத்தமான ஒரு தொடக்கமாகும். நோக்கம்      நாட்டு நலப்பணித் திட்டத்தின் முக்கிய நோக்கம் சமூக சேவை ஆகும். இதன் மூலம் மாணவர்களுக்கு ஆளுமைத் திறனை வளர்ப்பது ஆகும். இந்தத் திட்டம் மாணவர்களிடையே சமூக நலன் பற்றிய ஆழ்ந்த எண்ணத்தை கற்பிக்கிறது.மேலும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சமூகத்திற்கு நல்ல சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.      உதவி தேவைப்படுபவர்களுக்கு தக்க நேரத்தில் உதவி புரிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் மேலும் அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்கும் என் எஸ் எஸ் திட்டம் உதவுகின்றது. இது இரவு பகல் பாராமல் உழைக்கிறது.கிராமங்களில் வாழும் மக்களிடம் போதிய வளங்கள் இல்லாத போதிலும்,இருப்பதைக் கொண்டு எவ்வாறு நல்ல வாழ்க்கையை நடத்துவது என்பதையும் கற்றுத் தருகிறது.       இயற்கை சீற்றங்கள்,பேரழிவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு,உடை ,முதலுதவி மற்றும் மருத்துவ உதவி ஆகியவை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மனிதனால் ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்தும் மக்களுக்கு உதவிகள் புரிவது திட்டத்தின் சேவை ஆகும். முக்கிய நோக்கங்கள் 1.அவர்கள் பணி புரியும் சமூகத்தைப் புரிந்து கொள்வது 2. தங்கள் சமூகம் தொடர்பாக பங்களிப்பில் தங்களைப் புரிந்து கொள்வது 3. சமூகத்தின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளைக் கண்டறிந்து, பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அவர்களை ஈடுபடுத்துவது 4. தங்களுக்குள் சமூக மற்றும் குடியுரிமைப் பொறுப்புகளை வளர்த்துக் கொள்ளுதல் 5. தனிநபர் மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளைக் கண்டறிதல், அவர்களின் அறிவைப் பயன்படுத்துதல் 6. குழுவாக வாழ்வதற்கும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் தேவையான திறனை வளர்த்துக் கொள்ளுதல் 7. சமூகப் பங்கேற்பைத் திரட்டுவதில் திறன்களைப் பெறுதல் 8. தலைமைப் பண்புகளையும்,ஜனநாயக மனப்பான்மையையும் பெறுதல் 9. அவசர நிலை மற்றும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளுதல் 10. தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டுதல்    இவை நாட்டு நலப்பணித் திட்டத்தின் 10 முக்கிய நோக்கங்கள் ஆகும். இந்த நோக்கங்களைப் புரிந்து கொண்டு, நாட்டு நலப்பணித் திட்ட தொண்டர்கள் சமூக சேவை செய்கின்றனர். குறிக்கோள் […]      நாட்டு நலப்பணித் திட்டத்தின் கருத்தியல் என்பது மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்ககப்பட்டது ஆகும். தனக்காக இல்லாமல் பிறருக்காக முடிந்ததை செய்ய வேண்டும் என்ற கருத்தாக்கத்தை இத்திட்டம் முன்மொழிகிறது.       தன்னலமின்றி பொது நோக்கத்துக்காக பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் “எனக்கு அல்ல உனக்காக”(NOT ME BUT YOU)என்ற குறிக்கோள் நிறுவப்பட்டுள்ளது. இது ஜனநாயக வாழ்க்கை உயர்ந்த முறையின் சாரத்தைப் பிரதிபலிக்கிறது. இது  தன்னாலமற்ற சேவையின் தேவையை நிலை நிறுத்துகிறது.        இது பிற உயிரினங்கள் மீது அக்கறை காட்ட உதவுகிறது.ஒரு தனி நபரின் நல்வாழ்வு ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனையே சார்ந்துள்ளது என்பதை இந்த தத்துவம் பிரதிபலிக்கிறது. “எனக்கு அல்ல உனக்காக”என்பது நாட்டு நலப்பணித் திட்டத்தின் முக்கிய தாரக மந்திரமாக உள்ளது. சின்னம்       ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் சூரியக் கோவிலில் (Konark Sun Temple) உள்ள தேர்ச் சக்கரத்தைத் தன்னுடைய சின்னமாக நாட்டு நலப்பணித் திட்டம் கொண்டுள்ளது. இந்தக் கோவில் 13 ஆம் நூற்றாண்டில் முதலாம்             […] நரசிம்ம தேவன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது ஆகும்.        இக்கோவில் சிவப்பு மணற்பாறை மற்றும் கருப்பு கிரைனைட் கற்களால் கட்டப்பட்டது. இது 100 அடி உயரமான ஒரு பெரிய தேரின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய மாலுமிகள் இந்தக் கோவிலை கருப்பு பக்கோடா(The Black Pagoda)எனப் பெயர் சூட்டி அழைத்தனர்.ஏனெனில் இது ஒரு பெரிய அடுக்குக் கோபுரம் போல இருந்தது.        இது சூரிய பகவானுக்காக எழுப்பப்பட்ட கோவில் ஆகும். இந்தக் கோவில் இந்திய கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் உள்ளது. இது இந்திய 10 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரியச் சின்னமாக 1984 ஆம் ஆண்டில் அறிவித்தது. […]      தேர் போன்ற அமைப்புடைய இக்கோவிலின் சுவர்களில் 12 ஜோடி கல் சக்கரங்கள் தாங்கி நிற்பது போன்று பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக 24 சக்கரங்களைக் கொண்ட தேராக இக்கோவில் உள்ளது. ஒவ்வொரு சக்கரமும் மிகப் பெரிய வடிவம் கொண்டது.இவை 12 அடி விட்டம் கொண்டவை. மேலும் சக்கரத்தில் 8 ஆரங்கள் உள்ளன.        விடியல் மற்றும் சூரிய உதயத்தின் போது நிலப்பகுதியிலிருந்து பார்க்கும்போது இத்தேர் வடிவக் கோயில் சூரியனைச் சுமந்து செல்வது போல் தெரியும்.இது நீலக்கடலின் ஆழத்திலிருந்து வெளிப்படுவது போல் காட்சியளிக்கும்.     தேசிய சேவை திட்டத்தின்  சின்னமான இச்சக்கரம் உருவாக்கம்,பாதுகாத்தல் மற்றும் வெளியீடு ஆகியவற்றின் சுழற்சியைச் சித்தரிக்கிறது.இது காலம் மற்றும் இடம் முழுவதும் வாழ்வின் இயக்கத்தைக் குறிக்கிறது. இதன் மூலம் சின்னம் தொடர்ச்சியையும்,மாற்றத்தையும் குறிக்கிறது.சமூக மாற்றத்திற்கான தொடர்ச்சியான முயற்சிகளை இந்தச் சின்னம் சித்தரிக்கிறது.      இச்சக்கரத்தில் உள்ள 8 ஆரங்கள் ஒரு நாளின் 24 மணி நேரத்தைக் குறிக்கிறது. அதாவது 24 மணி நேரமும் சமூகப் பணியாற்றத் தயார் நிலையில் இருப்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது. இச்சக்கரம் சின்னமாக தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம்,இடைவிடாத தொடர் செயல்பாடுகள் மூலம் சமூக முன்னேற்றத்திற்கும், நலிவுற்றோர் மேம்பாட்டிற்கும் பாடுபட வேண்டும் என்பதாகும். […] […] இந்தத் திட்டத்தில் ஈடுபடுபவர்கள் துடிப்பு மிக்க இளைஞர்கள் ஆவார். இவர்கள் எந்தவிதப் பணியையும் சவாலாக ஏற்றுச் சுறுசுறுப்புடன் திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். ஆகவே தான் சிவப்பு வர்ணம் இதில் இடம் பெற்றுள்ளது.      இந்தச் சின்னத்தில் நீல நிறமும் இடம் பெற்றுள்ளது. பிரபஞ்சம் நீல நிறமானது. இதில் ஒரு சிறு துளி தான் நாட்டு நலப்பணித் திட்டம். இது சிறு துளியாக இருந்தாலும்  செயல்பாடுகள் மூலம் எண்ணிலடங்கா சாதனைகள் மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திட முடியும் என்பதைக் குறிப்பிடுவதற்காக நீல நிறம் அமையப் பெற்றுள்ளது. அடையாள அட்டை […]       நாட்டு நலப்பணித் திட்டத்தின் சின்னமே இதன் அடையாள அட்டையில் பொறிக்கப்பட்டுள்ளது. சமூக சேவை செய்யும்போது என் எஸ் எஸ் தொண்டர்கள் இந்த அடையாள அட்டையை அணிய வேண்டும்.என் எஸ் எஸ் தொண்டர்களுக்கு என தனி உடை கிடையாது. இச்சின்னம் பொறித்த அடையாள அட்டை அணிவதன் மூலம் அவர்கள் அடையாளம் காணப்படுவர். தலைமையகம்       நாட்டு நலப்பணித் திட்டத்தின் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. தேசிய அளவிலான செயல்பாடுகள்,கொள்கைகள் ஆகியவற்றை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் திட்டமிடுகிறது. இது திட்டத்தைச் செயல்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்வதைக் கவனித்துக் கொள்கிறது.    இதன் திட்ட ஆலோசகர் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் உதவுகிறார். மேலும் தேசிய சேவைத் திட்டங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுப் பணிகளை ஊக்குவிப்பதிலும் ஈடுபடுகிறார். இத்திட்டத்தின் அதிகாரம்(Nodal Authority) என்பது நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது. இத்திட்டத்திற்கு என தனி இயக்குனர் உள்ளார். தற்போது (2022 ஆம் ஆண்டு)ஸ்ரீ பங்கஜ் குமார் சிங் இதன் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். Website. https://nss.gov.in மண்டல மையங்கள்      இந்தியாவில் 15 பிராந்திய மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மாநில அளவில் தேசிய சேவை திட்டத்தைத் திறம்பட செயல்படுத்துவதை கவனித்துக் கொள்கின்றன. பிராந்திய மையம் என்பது தேசிய சேவை திட்டத்தின் ஒரு பகுதி மையமாகும். இதற்கு நாடு முழுவதும் 15 பிராந்திய இயக்குநர் அலுவலகங்கள் உள்ளன. பிராந்திய சேவைத் திட்டங்களைச் செயல்படுத்துவது, வெவ்வேறு மாநில அரசாங்களுடன் தொடர்பு கொள்வது  இதன் பொறுப்பாகும்.      மாநிலத் தொடர்பு அலுவலர் மாநில அளவில் என் எஸ் எஸ் தலைவராக உள்ளார். மாநில தொடர்பு அலுவலர்,மாநில பட்ஜெட்டில்,தேசிய சேவைத் திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடுகள் செய்யப்படுவதை உறுதி செய்கிறார்.மாநில என் எஸ் எஸ்  சார்பாக இதன் அலுவலர் பல்வேறு தேசிய சேவைத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மாநில முகவர் மற்றும்  துறைகளை ஒருங்கிணைக்கிறார். பிராந்திய இயக்குநரகங்கள் பிராந்தியத்தின் தலைமையிடம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களின் பட்டியலைக் காண்போம் இயக்குநரகம் மாநிலங்கள் 1. அகமதாபாத்    - குஜராத், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 2. பெங்களூரூ     -   கர்நாடகா 3. போபால் - மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் 4. புவனேஸ்வர்   -  ஒடிசா 5. சண்டிகர்   -  இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், சண்டிகர் 6. சென்னை    -     தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 7. டெல்லி     -  ஹரியானா, ஜம்மு & காஷ்மீர், யூனியன் பிரதேசம் டெல்லி & லடாக் 8. கவுகாத்தி     -  அசாம், திரிபுரா, மேகாலயா,  அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் 9. ஹைதராபாத்  -  ஹைதராபாத், தெலுங்கானா 10. ஜெய்ப்பூர்    -   ராஜஸ்தான் 11. லக்னோ     -  உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் 12. பாட்னா    -   பீகார், ஜார்கண்ட் 13. புனே         -  மகாராஷ்டிரா, கோவா 14. கொல்கத்தா   -   மேற்கு வங்காளம் 15. திருவனந்தபுரம் - கேரளா, இலட்சத்தீவு அமைப்பு   டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த கே.கே.குப்தா என்பவர் தான் இந்தத் திட்டத்தின் முதல் உறுப்பினர் ஆவார்.இதில் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக அளவில் படிக்கும் பட்டதாரிகள் மற்றும் முதுகலை மாணவர்கள் தொண்டர்களாக உள்ளனர்.இது தவிர அரசு மற்றும் உதவி பெறும் நிறுவனங்கள் தன்னார்வ என எஸ் எஸ் பிரிவுகளைக் கொண்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் கூட என் எஸ் எஸ் திட்டப் பிரிவுகளை அமைக்க அறிவுறுத்தப்படுகின்றன.      ஆரம்பத்தில் கல்லூரி மாணவிகள் மட்டுமே இதில் சேர முடிந்தது. அதே சமயத்தில் முதுகலை மாணவர்கள் தன்னார்வமாக சேருவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றனர்.அதன் பிறகு மேல்நிலை வகுப்பு மாணவர்களும் என் எஸ் எஸ் திட்டத்தில் சேர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு சோதனை முயற்சியாக கர்நாடகா,கேரளா,தமிழ்நாடு,கோவா,மேற்கு வங்காளம்,தாமன் மற்றும் டையூ போன்ற மாநிலங்களில் +2 நிலை மாணவர்களை இத்திட்டத்தில் சேர்த்தனர். […] இதில் +2 நிலை மாணவர்களைச் சேர்க்கும் திட்டம் 1985 ஆம் ஆண்டில் துவங்கியது. இந்த சோதனை முயற்சி நல்ல பலனைத் தந்தது. அதன் பிறகு 1992 ஆம் ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களையும் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பிரிவு    ஒர் அடிப்படை பிரிவு (Unit) பொதுவாக 20 முதல் 40 மாணவர்கள் வரை உள்ளடக்கியதாக இருக்கும். பெரிய கல்வி நிறுவனங்களில் 100 பேர் கொண்ட பிரிவும் உள்ளது.  என் எஸ் எஸ் பிரிவின பொறுப்பில் இருப்பவர் நிரல் அதிகாரி ஆவார்.இதில் ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களே நிரல் அதிகாரியாக செயல்படுகின்றனர். இவர்களே என் எஸ் எஸ் பிரிவின் அமைப்பு மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பொறுப்பாவார். பிராந்திய அளவில்      நாட்டு நலப்பணித் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக, கல்லூரி கவுன்சில்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் பல பிராந்திய மையங்கள் செயல்படுகின்றன. இது மாநிலத்தின் அளவு மற்றும் வலிமையைப் பொறுத்து, என் எஸ் எஸ் மண்டல மையம் நிறுவப்பட்டுள்ளது. பிராந்திய மையத்தின் தலைவர் உதவி திட்ட ஆலோசகர் அல்லது துணை திட்ட ஆலோசகர் ஆவார்.       மாநில அளவில் என் எஸ் எஸ் செல் (Cell)செயல்பட்டு வருகிறது.இது மாநிலத் தொடர்பு அதிகாரி தலைமையில்  செயல்படுகிறது. மாநில என் எஸ் எஸ் செல் அமைப்பதற்கு இந்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. இது மாநில அரசின் துறைகளில் ஒன்றில் இடம் பெற்றுள்ளது. பல்கலைக்கழக அளவில்        பல்கலைக்கழகங்களில் இருக்கும் என்எஸ்எஸ் திட்டம் ஒரு என் எஸ் எஸ் செல் மூலம் கண்காணிக்கப்படுகிறது.10,000 க்கு மேல் இருந்தால் முழு நேரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பல்கலைக்கழகங்களில் உள்ளனர்.10,000 க்கும் குறைவாக இருந்தால், பகுதி நேர ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். அடிப்படைக் கூறுகள்       நாட்டு நலப்பணித் திட்டத்தின் அடிப்படை கூறுகள் நான்கு மட்டுமே ஆகும். அவை - மாணவர்கள் - ஆசிரியர்கள் - சமூகம் - திட்டம்  தொண்டரின் கடமை     நாட்டு நலப்பணித் திட்டத்தின் தன்னார்வத் தொண்டர்கள் பொதுவாக  ஒரு கல்வி ஆணடில் 120 மணி நேரம் பணிபுரிகின்றனர். ஒரு தொண்டர் என் எஸ் எஸ் இல் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். ஒரு தொண்டர் இரண்டு ஆண்டுகளில் 240 மணி நேரம் சமூக சேவை புரிவது அவசியமாகும். திட்டத்தின் செயல்பாடுகள்      ஒவ்வொரு கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கி வரும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் செயல்பாடுகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.அவை 1. தினசரி செயல்பாடுகள் (NSS Regular Activities) 2. சிறப்பு முகாம் செயல்பாடுகள் (Special Camp Activities) தினசரி செயல்பாடுகள் […]     மாணவர் தொண்டர்கள் தான் பயிலும் பள்ளி,கல்லூரி வளாகங்களில் செயல்படுவது முதல் பணியாகும். இத்திட்டத்தின் மூலம் தத்தெடுக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் கல்வி நிறுவனம் அமைந்துள்ள பகுதிகளில் செயல்படும் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்கள் போன்றவற்றில் வாரத்தின் இறுதி நாட்களில் அல்லது கல்லூரி முடிந்த பின் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவர்.இவை அனைத்தும் அவர்களின் தினசரி செயல்பாடுகள் ஆகும்.      நாட்டு நலப்பணித் திட்டத்தின் தினசரி செயல்பாடுகள் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அதற்கான கால அளவும் ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஆற்றல் படுத்துதல்      மாணவத் தொண்டர்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்காக 20 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. 1. பொது நோக்குநிலை (General Orientation) 2. சிறப்பு நோக்குநிலை (Special Orientation) 3. நிரல் திறன் கற்றல் (Program Skill Learning) இந்தப் பயிற்சியின் போது விளக்க உரைகள், கருத்தாய்வுகள், படக்காட்சிகள் மற்றும் கள ஆய்வுகள் நடைபெறும். வளாக வேலைகள்      மாணவத் தொண்டர்கள் அவர்கள் சார்ந்துள்ள கல்வி நிறுவனங்களில் மரம் நடுதல்,தோட்டம் போடுதல்,விளையாட்டுத் திடல்களைத் தூய்மைச் செய்தல் போன்ற பணிகளைச் செய்வர்.மேலும் போதை ஒழிப்பு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு அளித்தல் போன்ற செயல்களையும் செய்வார்கள்.      தொண்டர் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 மணி நேரம் இது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். பள்ளி, கல்லூரி வளாகங்கள், வளாகங்களை ஒட்டிய         # சமுதாயத் தொண்டுகள்     சமுதாயத் தொண்டுகள் புரிவதற்காக 70 மணி நேரத்தைச் செலவிடுகின்றனர். தத்தெடுக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளில் தனியாகவோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற சமூக ஆர்வலர்களுடன் இணைந்து சமூக சேவை செய்கின்றனர். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இது சிறப்பு முகாம் செயல்பாடுகள் ஆகும். திட்டங்களும், பணிகளும்       சமூக சேவைகள் கீழ்க்கண்டவாறு திட்டங்களாகவும்,பணிகளாகவும் பிரிக்கப்படுகின்றன. - கிராமப்புறத் திட்டம் - நகர்ப்புறத் திட்டம் - இயற்கைச் சீற்றங்கள் மற்றும் நாட்டின் அவசர சூழ்நிலைகள் - தேசிய விழாக்கள் - தேசியத் திட்டங்கள் - பெண்கள் நலம் - குழந்தைகள் நலம் - முதியோர் நலம் கிராமப்புறத் திட்டம்      என் எஸ் எஸ் தொண்டர்கள் கிராமங்களுக்குச் சென்று கல்லாமையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அறிவொளி இயக்க காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுத்தறிவைப் போதித்தனர். சாதி ஒழிப்பு மற்றும் சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடுதல் போன்ற பணிகளையும் இவர்கள் மேற்கொள்கின்றனர்.       கிராமப் புறங்களில் நீர் மேலாண்மை, மழை நீர் சேமிப்பு,தரிசு நிலங்களை மேம்படுத்துதல்,வேளாண்மை,சுகாதாரம், தாய் சேய் நலம், குடும்ப நலக் கல்வி அளித்தல் போன்ற சேவைகளிலும் ஈடுபட வேண்டும். நாட்டுப்புறத் திட்டம்      நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கிராமப்புறங்களில் மட்டும் செய்யும் பணிகளைத் தவிர நகர்ப்புறங்களில் பல்வேறு சேவைப் பணிகளை மேற்கொள்கின்றனர்.முதலுதவி,எச்சரிக்கை கம்பங்களை நிறுவுதல், […] போக்குவரத்துக் கட்டுப்பாடு, குடிசையில் வாழும் மக்களுக்கான நலப் பணிகள், மருத்துவமனையில் சேவை செய்தல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.      ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களைப் பராமரித்தல் போன்ற சேவைகளையும் செய்கின்றனர்.சுற்றுப்புற சூழல்,மக்கள் தொகைக் கல்வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு போதைக்கு எதிரான விழிப்புணர்வு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நகர்ப்புற மக்களுக்காக இவர்கள் செய்ய வேண்டிய பணிகள் ஆகும். இப்பணிகளைச் செய்வதற்கான திட்டங்களைத் திட்ட அலுவலர்கள் வகுத்துத் தருகின்றனர். இயற்கை பேரிடர்கள்     இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரழிவு காலங்களிலும், செயற்கையாக ஏற்படும் பேரழிவு மற்றும் அவசர காலங்களிலும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பல்வேறு சேவைகளைச் செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாத்தல், விடுவித்தல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் ஆகியவை என் எஸ் எஸ் இன் முக்கிய பணிகள் ஆகும்.இது போன்ற நிலைகளில் என் எஸ் எஸ் திட்ட அலுவலர்கள் மாணவர்களை சேவை செய்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்கின்றனர். புயல், வெள்ளப்பெருக்கு, வெள்ளை சேதம், பூகம்பம், சுனாமி மற்றும் வறட்சி போன்ற பேரழிவு சமயத்தில் மக்களுக்கு சிறந்த சேவை புரிகின்றனர். தேசிய விழாக்கள்      தேசிய விழாக்களைக் கொண்டாடுவதும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் பணிகளில் ஒன்றாகும். இதன் நோக்கம் தேசிய விழாக்கள் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதை மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.அந்த விழாக்களின் நோக்கத்தையும் செயல்படுத்தும் கருவியாக மாணவர்கள் உருவாக வேண்டும்.எனவே நாட்டு நலப்பணித் திட்டத்தின் தொண்டர்கள் தேசிய விழாக்களைக் கொண்டாடுவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தேசிய திட்டங்கள்      நமது நாட்டில் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் சிறப்பு வாய்ந்த திட்டங்களாக மூன்று திட்டங்கள் கருதப்படுகின்றன. 1. மக்கள் கல்வித் திட்டம் 2. எய்ட்ஸ் விழிப்புணர்வுத் திட்டம் 3. நீர் மேலாண்மை மற்றும் தரிசு நிலத்தை மேம்படுத்துதல் திட்டம் பெண்கள் நலம் - பெண் சிசுக்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல். - பெண் குழந்தைகள் இளம் வயது திருமணத்தைத் தடுத்து நிறுத்துதல். - கர்ப்ப காலப் பராமரிப்பினை முறையாக தொடர்ந்து கடைபிடிக்க நல்ல ஆலோசனைகள் வழங்குதல். - குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல். இவை பெண்கள் நலன் சார்ந்த மிக முக்கியமான சேவையாகக் கருதப்படுகின்றன. குழந்தைகள் நலம்       பிறந்தக் குழந்தைகளை சரியாக பதிவு செய்வதற்கான ஆலோசனையை பெற்றோர்களுக்கு வழங்குகின்றனர். குழந்தைகளுக்கு அரசின் மூலம் இலவசமாக போடப்படும் நோய் தடுப்பு ஊசிகளை உரிய காலத்தில் போடுவதற்காக அறிவுரைகளை வழங்குகின்றனர்.பள்ளி படிப்பிலிருந்து இடை நிற்றல் மாணவர்களைக் கண்டுபிடித்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் பணியையும் செய்கின்றனர். முதியோர் நலம்      பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு ஆறுதல் கூறுதல் மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தல். முதியோர் இல்லங்களில் வாழும் பெரியவர்களுக்கு ஆறுதலாக வாரத்திற்கு ஒரு முறை அங்கு சென்று அவர்களிடம் உரையாடி வருதல் மற்றும் உதவி செய்தல். அரசின் மூலம் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகையை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருதல். அரசு போக்குவரத்து நிறுவனங்கள் இயக்கும் பேருந்துகள் மற்றும் ரயில் மூலமாக பயணம் செய்வதற்கானக் கட்டணச் சலுகைகளைப் பெற்றுத் தருதல். இது போன்ற பல சேவைகளை முதியோர்களுக்கு என் எஸ் எஸ்  தொண்டர்கள் செய்து வருகின்றனர். கிராமங்களில் சேவை       தொண்டர்கள் சமுதாய பணி செய்வதற்காக முதலில் கிராமங்களை தேர்வு செய்ய வேண்டும்.இதுதான் அவர்களின் முதல் பணியாகும். நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒவ்வொரு அணியும் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து,தத்தெடுக்க வேண்டும்.அந்தக் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக செயல்படுவது இவர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். தத்தெடுப்பதன் நோக்கம்     கிராமங்களைத் தத்தெடுத்தல் என்பது நாட்டு நலப்பணி திட்டத்தில் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.அதிகமான கிராமங்களை தேர்ந்தெடுத்து,அங்கு அனைத்து சேவைகளும் செய்வது என்பது இயலாத காரியம்.ஏனென்றால் அக்கிராமங்களைத் தொடர்ச்சியாக பராமரிக்க முடியாமல், பாதியில் பணியை விட்டு விடும் நிலை ஏற்படலாம்.ஆகவே ஒரு கிராமத்தை மட்டுமே தத்தெடுத்து,அங்கு உள்ள தேவைகளைப் புரிந்துக் கொண்டு சேவையில் தொடர்ந்து ஈடுபடுவது சிறந்ததாகும்.இது கிராமம் முன்னேற்றம் அடைய உதவுகிறது.      கிராமத்தைத் தத்தெடுப்பதன் நோக்கம் என்னவென்றால் கிராமத்தினருக்கு வளர்ச்சிப் பாதையை அடையாளம் காட்டுவது ஆகும். அதன் வழி அவர்களை முன்னேற்றம் அடையச் செய்ய முடியும். ஒரு முறை அவர்களின் நம்பிக்கையைத் தொண்டர்கள் பெற்றுவிட்டால்,அவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண என் எஸ் எஸ் ஐ நாடுவார்கள். வழிமுறைகள்      கிராமங்களைத் தத்தெடுப்பதன் முதற்படியாக ஒரு சில கிராமங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.பிறகு அவற்றில் தலைமை சிறப்பாக உள்ள ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.இதில் முக்கியமாக தெரிவு செய்யப்பட்ட கிராமமானது மாணவர்கள் பயிலும் கல்வி நிலையத்தில் இருந்து குறைந்த தூரத்தில் இருக்க வேண்டும்.இதன் மூலமே பணிகளைச் சிறப்பாக           […] செய்ய முடியும். செயல்பாடுகள்       நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒரு கல்வியாண்டில் 70 மணி நேரத்தை தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் மற்றும் குடியிருப்புகளில் சேவை மேற்கொள்கின்றனர். நாட்டு நலப்பணித் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தின்படி ஒரு மாணவத் தொண்டர் சமுதாயத்துடன் சிறந்த தொடர்பு வைத்திருக்கிறார். இதன் மூலம் ஒரு மாணவத் தொண்டர் சமுதாயத்தில் உள்ள மக்களின் தேவையைச் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது.மேலும் தாங்கள் பணி மேற்கொண்ட இடத்தை நன்கு புரிந்து கொள்ள இது உதவுகிறது.       கிராமத்தில் சிறப்பான தலைமை இருந்தால் அங்கு சேவைப் பணிகளைப் செய்து முடிப்பது மிகவும் எளிதாக இருக்கும்.அங்கு பணி முடிந்த பின்பும் தொடர்ந்து அக்கிராமத்தை கண்காணிக்க அது ஏதுவாக இருக்கும். எனவே தேர்வு செய்யப்பட்ட கிராமங்களின் கிராமத் தலைவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.இது என் எஸ் எஸ் பணியினை எளிமையாக்கும்.       கிராமத்தில் சமூக சேவை செய்யும்போது, கிராமம் அமைந்துள்ள வட்டாரத்தின் வட்டார அலுவலர்,மாவட்ட பஞ்சாயத்து அலுவலர், மாவட்ட மருத்துவ அலுவலர்,கல்வி அலுவலர் ஆகிய அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் அவர்களின் உதவியைப் பெற்று பணிகளைச் சிறப்பாகச் செய்யலாம். மதிப்பீடு செய்தல்      ஒரு கிராமத்தை தத்து எடுப்பதற்கு முன்பாக,கிராமத்தின் தலைவர் மற்றும் நிர்வாகம் செய்யும் அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.அந்தக் கிராமத்தைப் பற்றி மதிப்பீடு செய்ய வேண்டும்.கிராமத்தில் என்னென்ன பிரச்சனைகள் மற்றும் தேவைகள் உள்ளன என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.    இதன் அடிப்படையில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட முடியும். இதன் பிறகு கிராமம் வளர்ச்சி அடைய களப்பணிகளில் ஈடுபட வேண்டும். இதனால் தொண்டர்களுக்கு ஆழ்ந்த சிந்தனையும்,எதையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்ற மன நிலையும் உருவாகும். மேலும் பிரச்சனைகளை அடையாளம் காணும் திறனையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள ஏதுவாகும்.      களப்பணியின் போது அரசின் திட்டங்களையும் கிராம மக்களுக்கு எடுத்துக் கூறுகின்றனர். ஊட்டச்சத்து,சுய உதவிக் குழுக்கள்,வருவாய் பெருக்கும் திட்டங்கள், அரசு உதவிகள்,நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய தகவல்களும் மக்களிடம் பரிமாறப்படுகிறது. இதன் மூலம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே நல்ல தொடர்பை என் எஸ் எஸ் தொண்டர்கள் ஏற்படுத்துகின்றனர். மதிப்பீடுகள்      திட்ட அலுவலர் திட்டங்களைக் கவனமாக தெரிந்துக் கொள்ள வேண்டும். திட்டங்கள் கட்டாயம் முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.முடிவு சிறப்பானதாக அமைந்தால் மட்டுமே சமுதாயத்தின் நம்பிக்கை மற்றும் பாராட்டுகளைப் பெற முடியும்.       அனைத்துத் திட்டங்களும் அவை முடிக்கப்பட்ட பின் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.சமுதாய அங்கத்தினர்கள்,அரசு அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்கள் மூலம் மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும். இந்த மதிப்பீடு மூலம் திட்டத்தில் இருந்த நிறை குறைகளை நன்கு அறிந்து கொள்ள முடியும். அடுத்த திட்டத்தை உருவாக்கும் போது இதில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு,திட்டம் சிறப்பாக வடிவமைக்க இது உதவும். குடியிருப்புகளைத் தேர்ந்தெடுத்தல்       மக்கள் நெருக்கடி மிகுந்த நகரப் பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் வசிக்கக்கூடிய இருப்பிடங்களைச் சேரிகள் என்று அழைக்கின்றனர்.அதிகமான கல்வி நிறுவனங்கள் நகரம் சார்ந்தப் பகுதிகளில் அமைந்துள்ன.எனவே இந்த நிறுவனங்களில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட, மாணவ அணியினர் கிராமங்களைத் தேர்வு செய்வதை விட்டு விட்டு குடியிருப்புப் பகுதிகளைத் தேர்வு செய்கின்றனர். ஆகவே கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டம் தவிர்க்கப்படுகிறது. […] செய்ய வேண்டிய பணிகள்     மக்கள் தொகை அதிகமாக உள்ள குடியிருப்புப் பகுதிகளை தேர்வு செய்கின்றனர். அதன் பிறகு தொண்டர்களுக்கு உரிய பணிகள் வழங்கப்படுகின்றன.     குடியிருப்பு பகுதிக்குச் சென்று அங்கு வாழும் பலதரப்பட்ட மக்களை சந்திப்பது தொண்டர்களின் முதல் பணியாகும். அங்கு வாழும் மக்கள் செய்யும் வேலை மற்றும் வாழ்க்கை முறை போன்ற தகவல்களைச் சேகரித்து ஒரு தகவல் தொகுப்பை  உருவாக்கிட வேண்டும்.      குடியிருப்புப் பகுதியில் உள்ள தலைவர்கள், நகராட்சி,மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பகுதி மக்களுக்கு என்ன சேவைகள் தேவைப்படுகிறது என்பதை அவர்கள் மூலம் அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.      இப்பகுதி மக்களுக்கு நல்ல குடிநீர் வசதி இலவச பஸ் பாஸ், ஊட்டச்சத்து, குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு,ஊட்டச்சத்து விழிப்புணர்வு,இளைஞர் மற்றும் முதியோர் கல்வி,நோய் தடுப்பு சுகாதார மையம் கழிப்பிட வசதி, குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆகியவற்றை அமைக்க உதவ வேண்டும்.மேலும் இளைஞர் குழுக்கள் மற்றும் பெண்கள் குழுக்கள் ஆகியவற்றை அமைப்பதற்கு உதவிகள் செய்யலாம்.        குடியிருப்பு வாழ் மக்களின் நன் மதிப்பையும்,நம்பிக்கையையும் பெறும் வகையில் சேவை புரிய வேண்டும். அதன் பிறகு அவர்களை ஒரு குழுவாக உருவாக்கி, வேற்றுமைகளைக் களைய வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வழி காணச்செய்தல் வேண்டும். தொண்டு நிறுவனங்கள்       நாட்டு நலப்பணித் திட்டத்தினர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது மிக மிக அவசியம் ஆகும். இவர்களின் ஒத்துழைப்பு நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு மிகவும் தேவைப்படுகிறது.      கிராமங்களைத் தத்தெடுத்தல், குடியிருப்புகளைத் தத்தெடுத்தல்  மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பணம் அதிகம் தேவைப்படுகிறது. அதை ஈடுகட்டும் நிதி ஆதாரம் நாட்டு நலப்பணித் திட்டத்தில் இல்லை.எனவே தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியவற்றுடன் சிறந்த தொடர்பில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் இருக்க வேண்டும்.       இதனால் திட்டத்தை முடிப்பதற்கு தேவையான நிதி உதவிகள் மற்றும் பிற உதவிகளை அவர்களிடம் இருந்து பெற முடியும். அரசின் பல துறைகளான வனத்துறை, வேளாண்மைத் துறை, முதியோர் கல்வித்துறை, சுகாதாரத்துறை,குடும்பம் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆகியவற்றிடமிருந்து பல உதவிகளைப் பெற முடியும்.      தொண்டு நிறுவனங்கள் மூலம் கிராம மக்களிடம் ஒரு சிறந்த அறிமுகத்தைப் பெற முடியும். முதியோர் கல்வி,சுய உதவிக் குழுக்கள், பெண்கள் அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் நாட்டு நலப்பணித் திட்ட  பணிகளை சிறப்பாகச் செய்ய முடியும். மேலும் சமுதாய மையங்கள், உண்டு உறைவிடப் பள்ளிகள்,ஊனமுற்றோர் நலப் பணிகள் ஆகியவற்றின் மூலமாகவும் சிறந்த பணிகளைச் செய்ய இயலும்.         முன் வரையறுக்கப்பட்ட அல்லது முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட பணிகள் என்று எதுவும் கிடையாது.சாத்தியமான எல்லா வகையிலும் சேவையை வழங்குவது தன்னார்வலர்களின் பொறுப்பில் உள்ளது. முகாம் செயல்பாடுகள் முகாம் நடத்துதலை ஒரு நாள் முகாம் மற்றும் சிறப்பு முகாம் என இரண்டு வகைளாகப் பிரிக்கின்றனர். ஒரு நாள் முகாம்      நாட்டு நலப்பணித் திட்டத் தொண்டர்கள் 120 மணி நேரம் சேவையில் ஈடுபடுவது அவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என சில பல்கலைக்கழகங்கள் கருதுகின்றன. எனவே கல்வி பாதிக்காத வகையில் ஒரு நாள் முகாம்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.      இதில் ஒரு நாளில் 8 மணி நேரம் பணி மேற்கொள்வர்.இந்த ஒரு நாள் முகாம்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தப்படும். இதன் மூலம் இரண்டு வாரங்களில் 16 மணி நேரம் பணி மேற்கொள்ள முடியும்.ஆனால் மிக அவசியம் எனக் கருதப்படும் நேரங்களில் மட்டுமே இம்முகாம்கள் நடத்தப்பட வேண்டும். சிறப்பு முகாம்        சிறப்பு முகாம்கள் நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு ஒரு சிறந்த பரிணாமத்தைத் தந்துள்ளன.இந்த முகாம்கள் மூலம் மாணவர்கள் கிராமங்களில் தங்கிருந்து,அம்மக்களின் சூழ்நிலைகளை அறிந்து கொண்டு, அவர்களுக்குச் சேவை செல்வதற்கு ஏற்ற சிறந்தச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.               […]            இவை இளைஞர்களுக்கு இடையே புதுமையான எண்ணத்தைத் தருகின்றன.அவர்களிடையே குழு வாழ்வு,ஒற்றுமை,புரிந்துக் கொள்ளுதல், உதவி செய்தல். விட்டுக் கொடுத்தல் சகிப்புத் தன்மை மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவைகளை ஏற்படுத்துகின்றன. இந்தச் சிறப்பு முகாம்கள் மூலம் மாணவர்கள் அமைதியுடன் 7 நாட்கள் ஒரே கிராமத்தில் தங்கிருந்து சேவை புரிகின்றனர். இவை உண்டு,உறைவிட முகமாக நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் முன்னர் 10 நாட்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.       இந்த முகாம்கள் பல்வேறு நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்றன. தேசிய அளவிலும்,மாநில அளவிலும், மேல் நிலைப் பள்ளிகள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் அளவிலும் நடக்கின்றன.ஒவ்வொரு சிறப்பு முகாம்களும் சில குறிப்பிட்ட இலக்கை மையமாக வைத்து நடத்தப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு என் எஸ் எஸ் அணியிலிருந்து 50 சதவீதம் மாணவர்கள் சிறப்பு முகாமில் கட்டாயம் பங்கு ஏற்க வேண்டும். சிறப்பு முகாம் செயல்பாடுகள்     நாட்டு நலப்பணித் திட்டத்தின் தொண்டர்கள் 70 மணி நேரம் இச்சிறப்பு முகாம்களின் மூலம் குறிப்பிட்ட கிராமங்களில் தங்கி பணி செய்தல் வேண்டும்.சிறப்பு முகாம்கள் இளைஞர்களை 7 நாட்கள் சமுதாயத்தோடு சேர்ந்து வாழச் செய்து கிராம மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்துக் கொள்ள வழிவகை செய்கின்றன. ஒவ்வொரு முறையும் சிறப்பு முகாம்கள்,ஒவ்வொரு குறிப்பிட்ட செயல்களை மையமாக வைத்து நடைபெறுகின்றது. பொதுவான செயல்பாடுகள் […] மரங்களை நடுதல் அவற்றைப் பாதுகாத்து வளர்த்தல். குறிப்பாக ஒவ்வொரு என் எஸ் எஸ் அணியும் குறைந்தது 100 மரக்கன்றுகளைப் பராமரிக்க வேண்டும். - என் எஸ் எஸ் பூங்கா மற்றும் வனங்களை உருவாக்குதல். - கிராமத்து சாலைகள் அமைத்தல்,கழிவுநீர் ஓடைகளை உருவாக்கி கிராம சுகாதாரத்தை மேம்படுத்துதல். - வீடுகள் தோறும் கழிவறைகளை ஏற்படுத்துதல், தூய்மையைப் பேணச் செய்தல், - புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்த கிராம மக்களை ஊக்குவித்தல்.மேலும் அவற்றை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ளுதல். - சுற்றுப்புற சுகாதாரம்,குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளைச் செய்தல். மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து அகற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல். - மண்ணரிப்பைத் தடுத்தல் மற்றும் மண் வள மேம்பாட்டை ஊக்குவித்தல். - நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் களர் நில மேம்பாடு அடைய மக்களிடையே விழிப்புணர்வு உருவாக்குதல். - கலாச்சார சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை மக்களிடம் மேம்படுத்துதல். சுகாதாரச் செயல்பாடுகள் - உடல் நலம்,குடும்ப நலம் மற்றும் ஊட்டச்சத்துச் சத்து பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துதல். - சுகாதாரத் துறையின் மூலமாகச் செயல்படுத்தப்படும் மக்கள் நோய்த் தடுப்பு திட்டங்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். - மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஊட்டச்சத்துப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். - உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான எளிமையான நல்ல வழிமுறைகள் மூலம் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். *எய்ட்ஸ் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பெண்களுக்கான சேவை - பெண்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதி அடிப்படையில் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். - சமூகத்திற்கு தாங்களும் ஆண்டுகளுக்கு நிகராக துணைபுரிய முடியும் என்ற நம்பிக்கையைப் பெண்களிடம் ஏற்படுத்த வேண்டும். - சுயமாகத் தொழில் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெண்களிடம் ஏற்படுத்த வேண்டும். - பெண்களுக்கு தையல்,எம்ப்ராய்டரி போன்ற பயிற்சிகளைக் கற்றுத் தர வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல் வேண்டும். சமூக சேவை - மருத்துவமனை வார்டுகளில் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெறும் நோயாளிகளின் படுக்குகளைச் சுத்தம் செய்து,அவற்றை சரி செய்துக் கொடுத்தல். நோயாளிகளோடு அன்பாக உரையாடி, அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்தல்.வெளி நோயாளிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் மருத்துவமனை விதிமுறைகளை நோயாளிகளுக்கு எடுத்துரைத்தல் போன்ற சேவைகளை மருத்துவ அதிகாரிகளின் அனுமதியுடன் செய்ய வேண்டும். - குழந்தை நல மையங்கள், உடல் மற்றும் மன வளர்ச்சிக் குன்றியோருக்கு சேவை உள்ளத்தோடு பணபுரிய வேண்டும். - இரத்ததான முகாம்களில் பணியாற்றுதல் மற்றும் இரத்த தானம் செய்தல் வேண்டும். - கண் சிகிச்சை முகாம்களில் பணியாற்றுதல் - குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உதவி செய்தல். - தொண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுதல் வேண்டும். விவசாயிகளுக்கான சேவைகள்      வேளாண் துறையின் மூலமாகச் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.பூச்சி தடுப்புத் திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். களைச் செடிகளைத் தடுப்பது மற்றும் அகற்றுவதற்கான புதிய யுக்திகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கூட்டுறவு மையங்களை உருவாக்கி அதன் வாயிலாக பயன்பெற விழிப்பு ஏற்படுத்துவது அவசியம் ஆகும்.   புதிய வேளாண் கருவிகள் அரசு மானியத்தில் கிடைப்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.பண்ணை வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்துதல் வேண்டும்.வங்கிகளில் விவசாய கடன் பெறுவதற்கு அவர்களுக்கு உதவிகள் புரிய வேண்டும். பேரிடர் கால மீட்பு பணிகள்       இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தல் மற்றும் மறுவாழ்வு அளிப்பதன் மூலம் அவர்களின் துயரங்களைப் போக்க முடியும்.இது போன்ற நிகழ்வுகளில் பங்குபெறும் போது அவர்கள் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும்.இது போன்ற கோர நிகழ்வுகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு பல்வேறு சேவைகள் அளிப்பது மிக மிக அவசியமாகும். செய்ய வேண்டிய சேவைகளில் சில….. - பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குதல். - அவர்களுக்கு முதலுதவி அளித்தல் மற்றும் நோய்த் தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ளுதல். - சாலைகள மற்றும் மறுகட்டுமானப் பணிகளில் இணைந்து செயல்படுதல். - பழைய உடைகள் மற்றும் சமையல் பொருள்களைச் சேகரித்து அவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குதல். […] கல்வி மற்றும் பொழுதுபோக்கு - எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு கல்வி கற்பித்தல். - குழந்தைகளுக்கு கல்வி கற்கும் ஆர்வத்தை உண்டாக்குதல். - பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளை நடத்துதல். - கிராமப்புற மாணவர்கள் மேற்கொண்டு கல்வி பயல அவர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலும் அளித்தல். - கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துதல்.மக்களையும் அவற்றில் ஈடுபடச் செய்தல். இதன் மூலம் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தல். - இளைஞர் குழுக்களை உருவாக்குதல்,நேரு யுவகேந்திராவுடன் இணைந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை இலக்கியப் போட்டிகளை நடத்துதல் வேண்டும். - மூடநம்பிக்கை,தீண்டாமை,சாதியம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்குவது இன்றைக்கு மிக மிக அவசியமாகும். - நுகர்வோர்க்கு விழிப்புணர்வு அளித்தல்.     இது போன்ற பணிகளை மேற்கொள்வதோடு,இதனுடன் தொடர்புடைய பிற பணிகளையும் சேவையாகச் செய்யலாம். மற்ற திட்டங்கள்    போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது, கோயில்களை சுத்தப்படுத்துதல்,கோவில்களில் வரிசையாக செல்ல மக்களை வலியுறுத்துவது, விழாக்களில் கூட்ட நெரிசலை தடுப்பது போன்ற செயல்பாடுகளையும் என் எஸ் எஸ் மாணவர்கள் செய்கின்றனர்.இது தேசிய மாணவர் படை,சாரணர் படை மற்றும் தேசிய நலனுக்காக உருவாக்கப்பட்ட மற்ற திட்டங்களுக்கு சமமாகக் கருதப்படுகிறது. விழிப்புணர்வு      விழிப்புணர்வு பெறாத சமூகம் முன்னேற்றத்தின் முதல் படியைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது என்கின்றனர். அதனால் தான் சமூக ஆர்வலர்களும், நாட்டு நலப்பணித் திட்ட தொண்டர்களும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துகின்றனர்.இவர்கள் கல்வி நிலையம் முதல் கடைவீதி வரைக்கும் பரப்புரை செய்கின்றனர். தான் கண்டது, கேட்டது, வகுப்பறையில் படித்தது போன்றவற்றின் கூட்டுக் கலவையை இச்சமூகத்திற்கு அர்ப்பணிக்கின்றனர்.      தனி மனித ஒழுக்கம் சிதைவுற்று போனதால் சமூகத்தின் வாழ்வியலும் திசை மாறிப் போனது.போதை,கொலை,கொள்ளை, பாலியல் வன்மம் இந்த நான்கும் இன்றைய சூழலில் சமூகத்தை அச்சுறுத்தும் முக்கிய காரணிகள்.           […] இது குறித்த விழிப்புணர்வை கலை நிகழ்ச்சிகள் மூலம் பரப்பப்படுகிறது.        போக்குவரத்து விதிகள், தலைக்கவசம் அணிதல், பெண் கல்வியின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் ஒழிப்பு, கழிப்பறையை பயன்படுத்துதல்,சட்ட விதிகள், சுகாதாரம் போன்றவை குறித்து விரிவான அளவில் இத்திட்டம் மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. இதன் மூலம் தன்னார்வ தொண்டர்களும் விழிப்புணர்வு அடைகின்றனர். அவர்கள் சார்ந்திருக்கும் சமூகமும் விழிப்புணர்வு கொள்கிறது. கிராமம், நகரம்,ஏழை,வசதி படைத்தவர் போன்ற பல்வேறு நிலைகளில் இருந்து வந்த மாணவர்களின் குழுவே நாட்டு நலப்பணித் திட்டத்தில் பயணிக்கிறது. அன்றாடப் பணிகளின் நோக்கம்     நாட்டு நலப்பணித் திட்டத்தில் அன்றாட பணிக்காக ஒதுக்கப்பட்ட மொத்த கால அளவு என்பது 120 நேரம் ஆகும். இக்கால அளவின் அடிப்படையில் ஒரு ஆண்டுக்கான தினசரி செயல்பாடுகளை அமைத்தல் வேண்டும். இந்த தினசரி செயல்பாடுகள் கீழ்கண்ட நோக்கங்களை மையமாகக் கொண்டு அமைகின்றன எனலாம். - நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஆளுமைப் பண்பு உடையவர்களாக இருக்க வேண்டும். - மாணவத் தொண்டர்களைத் தன்னலமில்லாச் சேவை மனப்பான்மை உடையவர்களாக உருவாக்குதல். - கல்வி நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குதல். - சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தனக்காக வாழவதுடன், மற்றவர்களுக்காகவும் வாழக்கூடிய எண்ணத்தை வளர்த்தல். - சமுதாயத்தில் ஆதரவற்றோருக்காக உதவிகளைச் செய்தல். - போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல். - சிறியோர், பெரியோர் மற்றும் இளைஞர்களின் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதற்கான விழிப்புணர்வை வழங்குதல். - நோயற்ற வளமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுதல். சிறப்பு முகாம்களின் நோக்கங்கள் - சிறப்பு முகாம்களின் முக்கிய நோக்கம் இளைஞர்களை சமுதாயத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ள வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஆகும். - அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ற கல்வியை மக்கள் பெறுமாறு செய்ய வேண்டும். பல்கலைக்கழகம்,கல்லூரி,பள்ளிகளின் பாடங்களை மக்களின் வாழ்க்கை முறையோடு தொடர்புடையதாக மாற்ற வேண்டும். - மாணவர்களே திட்டங்களை வகுத்து அவற்றைச் செயல்படுத்த வழி செய்தல். இத்திட்டங்கள் கிராமப்புறம் மற்றும் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்களின் நலனுக்காக மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துபவையாக இருத்தல் வேண்டும். - இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.இதன் மூலம் அவர்களிடையே ஒழுக்கம்,ஒற்றுமை உணர்வு,சமூக உணர்வு ஆகியவற்றை வளர்க்க இயலும். - முகாமில் உள்ள மாணவத் தொண்டர்கள் மற்றும் உள்ளூர் தொண்டர்களிடையே ஒரு தலைவரை தேர்ந்தெடுங்கள்.இதன் மூலம் அவர்களிடையே உற்சாகம் ஏற்படும்.உள்ளூர் இளைஞர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மேலும் சிறப்பாக அமையும். - உழைப்பின் முக்கியத்துவம்,தன்னம்பிக்கை, ஒன்றாய்ச் சேர்ந்து செயல் ஆற்றலை பலத்தை வெளிப்படுத்துவதன் மூலம் கிடைக்கக்கூடிய வெற்றி ஆகியவற்றை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். - இளைஞர் நாட்டு வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாகவும்,சுயநலம் அற்றவர்களாகவும் உருவாக்குவது இந்த முகாம்களின் தலையாய நோக்கமாகும். சூழலுக்கு ஏற்ப வாழ்தல்        என் எஸ் எஸ் முகாம்கள் பெரும்பாலும் கிராமங்களை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. சராசரி அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடத்தில் அனைத்து மாணவர்களும் வாழப் பழகிக் கொள்கின்றனர்.புதிய இடம், அறிமுகம் இல்லாத மனிதர்கள், புதிய வாழ்விடச் சூழல், சாப்பிட்டுப் பழகாத உணவு வகைகள்,இப்படி தன் வசதிக்கு ஏற்ப இல்லாவிட்டாலும் அந்தச் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கின்றனர்.வசதியும்,வறுமையும், , நகரமும், கிராமமும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் வகையில் இந்த முகாம்கள் உள்ளன.      ஏசி அறையில் வசித்துப் பழகிய மாணவன், கிராமத்தில் கிடைக்கும் இடத்தில் படுத்துத் தூங்கி எழுகிறான்.தனக்கு கிடைக்கும் உணவை உண்டு வாழப் பழகிக் கொள்கிறான்.உடல் உழைப்பே இல்லாத ஒருவன் உழைக்க கற்றுக் கொள்கிறான். இப்படி சூழலுக்கு ஏற்ப வாழ ஒவ்வொரு மாணவத் தொண்டனும் இந்த முகாம் மூலம் கற்றுக் கொள்கிறான். சமத்துவம் […]       சாதி மற்றும் மதமற்ற சமூகத்தை நாட்டு நலப்பணித் திட்டம் அடையாளப்படுத்துகிறது. சிறப்பு முகாம் மற்றும் சமூக சேவை  செய்யும் போது என்ன சாதி,என்ன மதம் என்று யாரும் பார்ப்பது கிடையாது. தொண்டர்கள் அனைத்து மத கோவில்களையும் சுத்தம் செய்யகின்றனர். நாட்டு நலப்பணித் தொண்டர்கள் அனைத்து மக்களிடமும் எந்த பாகுபாடும் இன்றி சமமாக பழகுகின்றனர். பதவி,பணம்,எதிர்பார்ப்பு என்று எதையும் பார்க்காமல்,சேவை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். உயிரைக் காப்பாற்றும் உதிரத்தைத் தானாகக் கொடுக்கும் உயர்ந்தப் பண்பும் இவர்களிடத்தில் உள்ளது தேசிய ஒருங்கிணைப்பு முகாம்       தேசிய ஒருங்கிணைப்பு முகாம் (NIC) ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படுகிறது ஒவ்வொரு முகாமும் 7 நாட்கள் பகல் -இரவு ,உறைவிடம் மற்றும் தங்கி சேவை செய்யும் வகையில் நடக்கிறது. இந்த முகாம்கள் நாட்டின் பல்வேறு பகுதியில் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு முகாமிலும் 200 என்எஸ்எஸ் தொண்டர்கள் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இது நடத்தப்படுகின்றது. சாகச நிகழ்ச்சி     ஒவ்வொரு ஆண்டும் முகாம்கள் சீராக நடத்தப்படுகின்றன.இதில் சுமார் 1500 என் எஸ் எஸ் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். குறைந்தபட்சம் 50 சதவீத தன்னார்வலர்கள் பெண் மாணவியர்களாக உள்ளனர். இந்த முகாம்கள் வடக்கில் இமயமலைப் பகுதியிலும், வடகிழக்குப் பகுதியில் அருணாச்சலப் பிரதேசத்திலும் நடத்தப்படுகின்றன. இந்த முகாமின் போது மலையேற்றம், நீர் ராஃப்டிங்,பாரா-செய்லிங் மற்றும் பனிச்சறுக்கு போன்ற சாகச நடவடிக்கைகளில் தொண்டர்கள் ஈடுபடுகின்றனர். குடியரசு தின அணிவகுப்பு […]        என் எஸ் எஸ் தொண்டர்களின் முதல் குடியரசு தின முகாம் 1988 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்த முகாம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஒன்று முதல் 31 வரை டெல்லியில் நடைபெறுகிறது.ஒழுக்கம், அணிவகுப்பு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் 200 என் எஸ் எஸ் தொண்டர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.    தேர்வு செய்யப்பட்ட என் எஸ் எஸ் தன்னார்வத் தொண்டர்களின் குழு, பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் கோரிக்கையின்படி நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று புதுடில்லி ராஜ்பாத்தில்,குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். கொடி       என் எஸ் எஸ் இயக்கத்திற்கென்று தனிக்கொடி உள்ளது. குடியரசு தின அணிவகுப்பின் போது இந்தக் கொடியை ஏந்திச் செல்கின்றனர். இந்த கொடியில் என் எஸ் எஸ் அமைப்பின் சின்னம் இடம்பெற்றுள்ளது. நிதி       மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து சமூக சேவை செய்வது இத்திட்டத்தின் முக்கிய கொள்கையாகும். இது தேசிய வளர்ச்சிக்கான பணிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு என் எஸ் எஸ் மாணவருக்கும்,ஆண்டிற்கு 120 ரூபாய் ஆரம்ப கட்ட நிதி வழங்கப்பட்டது. அந்த நிதி உதவியை மத்திய அரசு மற்றும் மாநில அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும்.      இது 7:5 என்ற விகிதத்தில் இருக்கும். அதாவது மத்திய அரசு ரூபாய் 70.00, மாநில அரசு ரூபாய் 50.00 என 120 ரூபாய் ஒரு மாணவருக்கு ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இப்போது சிறப்பு முகாமிற்கான தொகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.      இந்தத் திட்டத்தின் மூலம் தினசரி செயல்பாடுகள் மற்றும் சிறப்பு முகாம்கள் என இரண்டு வகைகளில் சேவை செய்யப்படுகின்றன. தினசரி செயல்பாட்டிற்காக ஒரு தன்னார்வ தொண்டருக்கு,ஓராண்டிற்கு ரூபாய் 250 என நிதி ஒதுக்கப்படுகிறது. 7 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கு பெறும் ஒரு தொண்டருக்கு ரூபாய் 450 என நிதி விடுவிக்கப்படுகிறது. என் எஸ் எஸ் பிராந்திய இயக்குனரங்கங்கள்,மாநில என் எஸ் எஸ் செல்கள் மற்றும் எம்பேனல் பயிற்சி நிறுவனம்( ETI) ஆகியவற்றை இயக்க,இந்திய அரசு 100 சதவீத நிதி உதவி வழங்குகிறது. மாணவர் சேர்க்கை - என் எஸ் எஸ்  இயக்கத்தில் சேர மாணவ- மாணவிகள் பதிவு செய்ய வேண்டும். - மேலும்  நேர்மையான பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது பள்ளியில் படிப்பவர்களாக இருக்க வேண்டும். - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எந்த மாணவரும் தன்னார்வலராக என் எஸ் எஸ் இயக்கத்தில் சேரலாம். - நாட்டு நலப்பணித் திட்டத்தில் தன்னார்வத் தொண்டராகச் சேருவதற்கு பதிவு கட்டணம் எதுவும் இல்லை.  பணிக்கால அட்டவணை       என் எஸ் எஸ் சிறப்பு முகாமின் போது தொண்டர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட மாதிரி அட்டவணை உள்ளது. 1. துயில் எழுதல்   காலை 5 மணி 2. காலை அசெம்பிளி மற்றும் உடல் பயிற்சிகள் 6 முதல் 6.30 மணி வரை 3. காலை உணவு மற்றும் கருவிகள் சேகரிப்புகள் போன்றவை 6.30 மணி முதல் 7. 15 மணி வரை 4. திட்டப்பணி   7.30  முதல் 12.30 மணி வரை 5. தனிப்பட்ட சுகாதாரம் 12.30 முதல் 13.00 மணி வரை 6. மதிய உணவு 13.00 மணி முதல் 14.00 மணி வரை 7. ஓய்வு 14.00 மணி முதல் 15.00 மணி வரை 8. பிரபல பார்வையாளர்களின் பேச்சுக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் 15.00 மணி முதல் 17.00 மணி வரை 9. சமூக வருகை 17.00 மணி முதல் 19.30 மணி வரை 10. பொழுதுபோக்கு மற்றும் சமூக கலாச்சார நிகழ்ச்சி 19.00 மணி முதல் 20.00 மணி வரை 11. இரவு உணவு 20.00 மணி முதல் 21.00 மணி வரை 12. நாள் வேலையின் மதிப்பீடு 21.00 மணி முதல் 21.30 மணி வரை 13. விளக்கு அணைப்பு 22.00 மணி மற்றும் துயில் கொள்ளல். தொண்டர்களின் எண்ணிக்கை         நாட்டு நலப்பணித் திட்டம் 1969 ஆம் ஆண்டில் துவங்கிய போது 40,000 தன்னார்வ தொண்டர்கள் மட்டுமே சேர்ந்தனர். அப்போது 37 பல்கலைக்கழகங்களில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தன்னார்வத் தொண்டர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.இதன் வளர்ச்சி என்பது ஆண்டிற்கு10 சதவீதம் ஆகும். ஆண்டுகள்                தொண்டர்கள் 1980-1981                         4.75 இலட்சம் 1985-1986                          6.10 இலட்சம் 1990-1991                        10.97 இலட்சம் 1995-1996                         11.36 இலட்சம் 1997-1998                          13.52 இலட்சம் 2013                                    20 இலட்சம் 2018 மார்ச்                         30.8 இலட்சம் […]        நாட்டு நலப்பணித் திட்டத்தில் 2020 ஆம் ஆண்டு ஜூலை வரை,பதிவு செய்யப்பட்ட தன்னார்வத் தொண்டர்களின் எண்ணிக்கை சுமார் 40 இலட்சம் ஆகும். இன்று 396 பல்கலைக்கழகங்கள்,பாலிடெக்னிக்குகள் மற்றும் + 2 அளவிலான 47 கவுன்சில்களில் 40 இலட்சத்திற்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் உள்ளனர். மாநில அளவில் தொண்டர்கள்    அந்தமான் நிக்கோபார் தீவில் 128 தன்னார்வ தொண்டர்கள் மட்டுமே உள்ளனர். 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை என் எஸ் எஸ் இயக்கத்தில் சேர்ந்த மாணவர்களின் பட்டியல். அசாம்            -             4459 பேர் பீகார்                -            40561 பேர் சண்டிகர்        ‌    -         17059 பேர் சத்தீஸ்கர்           -        23783 பேர் டெல்லி  ‌             -          19946 பேர் கோவா             -             11417 பேர் குஜராத்           -            10602 பேர் ஜார்க்கண்ட்         -     17266 பேர் கேரளா                -         199345 பேர் மேகாலயா              -     13330 பேர் மிசோரம்              -         24471 பேர் நாகலாந்து          -          1890 பேர் ஒடிசா                 -             6642 பேர் புதுச்சேரி              -          5238 பேர் மேற்கு வங்காளம்    -    40403 பேர்        ஆறு மாநிலங்கள் மட்டும் தலா 2 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வளர்களும்,14 மாநிலங்களில் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் உள்ளனர்.4 யூனியன் பிரதேசங்களில் தலா 2000 க்கும் குறைவான தொண்டர்களும் உள்ளனர். கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆண் என் எஸ் எஸ் தொண்டர்களின் எண்ணிக்கையை விட பெண் என் எஸ் எஸ் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழ்நாடு       நாட்டு நலப்பணித் திட்டத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமான என் எஸ் எஸ் தன்னார்வத் தொண்டர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளன.     நாடு முழுவதும் 39695 மேற்பட்ட யூனிட்கள் உள்ளன. இந்த அமைப்பு நாடு முழுவதும் 29152 நிறுவனங்களில் உள்ளன. மொத்தம் 391 பல்கலைக்கழகங்கள் மற்றும் 12000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் என் எஸ் எஸ் அமைப்புகள் உள்ளன.       தமிழ்நாட்டில் 5000 க்கும் மேற்பட்ட யூனிட்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3798 யூனிட்கள்,கேரளா 2478 யூனிட்கள் உள்ளன. ஏழு மாநிலங்கள் மட்டுமே 2000க்கும் மேற்பட்ட என் எஸ் எஸ் அலகுகள் உள்ளன.15 மாநிலங்களில் 1000 க்கும் மேற்பட்ட அலகுகள் உள்ளன. பெரிய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் 664 அலகுகள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டில் என் எஸ் எஸ்       இந்தியாவிலேயே நாட்டு நலப்பணித் திட்டச் செயல்பாடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையிலும், முதன்மையாகவும் இருந்து வருகிறது. இது நாம் அனைவரும் பெருமை கொள்ள படத்தக்க ஒரு தகவலாகும். இரத்ததானம் வழங்குவதில்  என் எஸ் எஸ் தொண்டர்களின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது.     சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள், மகாமகம், கோவில் திருவிழா, பண்டிகை கால நெருக்கடிகள் போன்ற சமயங்களில் நேரம் காலம் பார்க்காமல் இவர்கள் சேவை புரிகின்றனர். எந்தவித பலனும் எதிர்பாராமல் கடமை ஆற்றுவதில் என் எஸ் எஸ் மாணவரகள் சிறந்து விளங்குகின்றனர்.  தேசிய இளைஞர் விழாக்கள்       தேசிய இளைஞர் விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 முதல் 16 வரை நடைபெறுகிறது. இந்திய அரசு,இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநில அரசுடன் இணைந்து இந்த விழாக்களை நடத்துகின்றன.தேசிய இளைஞர் விழாக்களில்  சுமார் 1500 தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியின் போது உரையாடுதல்,புகழ்பெற்ற விருந்தினர்கள், பேச்சாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் என பலர் அழைக்கப்படுகின்றனர். தேசிய இளைஞர் தினம் […]      தேசிய இளைஞர் தினம் ஜனவரி 12 அன்று கொண்டாடப்படுகிறது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 அன்று தேசிய இளைஞர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கம் 1984 ஆம் ஆண்டில் இந்த நாளை தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.அதன் பிறகு 1985 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.       சுவாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாள் கொல்கத்தாவில் பிறந்தார். இவர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் இயற்கையை எய்தினார். எனவே என் எஸ் எஸ் இயக்கத்தின் சார்பில் தேசிய இளைஞர் தினம் ஒவ்வொரு ஆண்டும் சுவாமி விவேகானந்தரை நினைவுகூறும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது. என் எஸ் எஸ் தினம் மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் அமைந்த மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சர் வி கே ஆர் வி ராவ் அவர்களால் 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று நாட்டு நலப்பணித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.      இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது இளைஞர்கள் செய்த பெரும் தியாகங்களைப் போன்றே எதிர்காலத்திலும் செயலாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இளைஞர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட ஒரு சீரிய திட்டமே நாட்டு நலப்பணித்திட்டம் ஆகும்.இது ஒவ்வொரு ஆண்டும் என் எஸ் எஸ் தினமாக செப்டம்பர் 24 அன்று கொண்டாடப்படுகிறது. […]      நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக இத்தினம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வினாடி வினா,நாடகம்,விளக்கக் காட்சி, விளையாட்டு மற்றும் பேச்சு போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. வருடாந்திர காலண்டர்      நாட்டு நலப்பணி திட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கென கடைபிடிக்க வேண்டிய வருடாந்திர செயல்பாட்டு காலண்டர் உள்ளது.சர்வதேச தினங்கள், தேசிய தினங்கள் மற்றும் வாரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதனைக் கடைபிடிக்க வேண்டும். 1. தேசிய இளைஞர் தினம்     - ஜனவரி 12 2. குடியரசு தினம்                       - ஜனவரி 26 3. தியாகிகள் தினம்                   - ஜனவரி 30 4. சர்வதேச மகளிர் தினம்       - மார்ச் 8 5. உலக சுகாதார தினம்              - ஏப்ரல் 7 6. பயங்கரவாத எதிர்ப்பு தினம்    -மே 21 7. உலக புகையிலை எதிர்ப்பு தினம் - மே 31 8. உலக சுற்றுச்சூழல் தினம். - ஜூன் 5 9. உலக மக்கள் தொகை தினம்   - ஜூலை 11 10. சுதந்திர தினம்                            - ஆகஸ்ட் 15 11. சர்வதேச எழுத்தறிவு தினம்   - செப்டம்பர் 8 12. சர்வதேச அமைதி தினம்       - செப்டம்பர் 15 13. என் எஸ் எஸ் தினம்                - செப்டம்பர் 24 14. காந்தி ஜெயந்தி.                ‌ ‌‌.    - அக்டோபர் 2 15. உலக எய்ட்ஸ் தினம்               -  டிசம்பர் 1 16. மனித உரிமைகள் தினம்       - டிசம்பர் 10 வாரம் 1. தேசிய இளைஞர் வாரம்        - ஜனவரி 12-19 2. சர்வதேச எழுத்தறிவு வாரம்  - ஜூலை 14- 18 இவை தவிர வேறு சில முக்கிய தினங்களும், முக்கியத்துவம் வாய்ந்த வார விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.  பாடல்      என் எஸ் எஸ் இன் வெள்ளி விழா ஆண்டு 1994 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அப்போது என் எஸ் எஸ் இயக்கத்திற்காக ஒரு பாடல் இயற்றப்பட்டது." உத்தேன் சமாஜ் கே லியே உதென் உத்தேன் …."  என்பது இப்பாடலாகும்.இது என் எஸ் எஸ் நிகழ்வுகளின் போது  தன்னார்வத் தொண்டர்கள் இந்த கொள்கைப் பாடலை பாடுவார்கள். இந்தப் பாடல் இந்தி மொழியில் உருவாக்கப்பட்டது.இது என் எஸ் எஸ் அமைப்பின் தேசிய கீதமாகக் கருதப்படுகிறது. கீதம் இது ஒவ்வொரு தன்னார்வத் தொண்டர்கள் கீதம் ஆகும். உதென் சமாஜ் கே லியே உத்தேன்- உதென், ஜகென் ஸ்வராஷ்டிர கே லியே ஜாகென்-ஜகென் ஸ்வயம் சஜே வசுந்தரா சன்வார் டென் – 2 ஹம் உதென்- உதேகா ஜக் ஹமாரே சங்  சத்தியோ ஹம் பதென் தோ சப்;பதேங்கே அப்னே ஆப் சத்தியோ ஜமின் பே ஆஸ்மான் கோ உதர் டென் – 2 ஸவயம் சஜே வசுந்தரா சன்வார் டெ – 2 உதசியோன் கோ தூர் கர் குஷி கோ பந்தே சலேன் காவ் அவுர் ஷஹர் கி துரியோ கோ பட்டே சலென் கியான் கோ பிரச்சார் தே  பிரச்சார் தே விக்யான் கோ பிரச்சார் தே பிரசார் டென் ஸ்வயம் சஜே வசுந்தரா சன்வார் டென் – 2 சமர்த் பால் வாரித் அவுர் நாரியன் ரஹேன் சதா ஹரே பரே வானோ கி ஒளததி ரஹே தாரா தரக்கியோன் கி ஏக் நயி கட்டார் டென் – 2 ஸ்வயம் சஜே வசுந்தரா சன்வார் டென் – 2 யே ஜாதி தரம் பொலியோன் பனே நோ ஷூல் ராஹ் கி வதாயென் பெல் பிரேம் கி அகண்டதா கி சாஹ் கி பாவனா சே யே சமன் நிகர் டென் சத்பாமா சே யே சமன் நிகர் தே ஸ்வயம் சஜே வசுந்தரா சன்வார் டென் – 2 உதென் சமாஜ் கே லியே உத்தேன் – உதென் ஜாகென் ஸ்வராஷ்டிரா கே லியே ஜாகென் – ஜாகென் ஸ்வயம் சஜே வசுந்தரா சன்வார் டென் – 2 ……. ஜெய் ஹிந்த் …… […] கேரளா      மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நாட்டு நலப்பணிப் திட்டத்திற்கான தனி,தனி மாநிலப்பாடல்கள் உள்ளன. கேரளா மாநிலத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீதம் என்பது “மனசு நன்னவெதே, மதமேதெங்கிலும் ஆவத்தே” என்பதாகும். எந்த மதமாக இருந்தாலும் மனம் தூய்மையாக இருக்கட்டும் என்பது இந்தப் பாடலின் அர்த்தமாகும். இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்பட அனைவரும் கைகோர்த்து, வாழ்தல் மற்றும் அனைத்து உயிரினங்களின் நன்மையே இலக்காகக் கொள்ள அழைப்பு விடுக்கிறது இந்த பாடல்.1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு என் எஸ் எஸ் இயக்கம் கேரளாவில் வேகமாக வளர்ச்சி பெற்றது.அப்போது இந்தப் பாடல் என் என் எஸ் தொண்டர்கள் மத்தியில்,மாநிலம் முழுவதும் பிரபலமடைந்தது. […] இந்தப் பாடல் சேவை இயக்கத்தின் இலட்சியங்களை வலியுறுத்துகிறது.இது அனைத்து என்எஸ்எஸ் கூட்டங்களிலும் பாடப்பட்டது. அப்போதைய UDF அரசாங்கம் பள்ளிக் கூடங்களில் இந்தப் பாடலை பாட வேண்டும் என்று விரும்பியது.ஆனால் இது செயல்பட்டு வரவில்லை.       மதச்சார்பற்ற மதிப்புகள் கொண்ட பாடலை கேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வ  கீதமாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் பினராய் விஜயன் 2018 ஆம் ஆண்டு அழைப்பு விடுத்தார். கலாச்சாரத் துறை மற்றும் கேரள சாகித்திய அகாடமி ஆகியவை நூற்றுக்கணக்கான பாடல்களைப் பெற்றன. அவற்றில் பத்துக்கும் குறைவானப் பாடல்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன.      அதன் பிறகு நாட்டு நலப்பணி திட்டத்தின் கீதம்,கேரளாவின் கீதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. என் எஸ் எஸ் அமைப்பில் இருந்து கேரளா மாநிலத்திற்கு ஒரு பாடல் கிடைத்தது. இது உண்மையில் என் எஸ் எஸ் அமைப்புக்கு கிடைத்த ஒரு சிறந்த மரியாதை என்று என் எஸ் எஸ் அதிகாரி ஜஸ்டின் ஜெர்ரி கூறியுள்ளார்.       பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள ஆயிரக்கணக்கான என் எஸ் எஸ் தொண்டர்களுக்கு இந்தப் பாடல் ஒரு உத்வேகமாக இருந்தது.இந்த பாடலை எழுதியவர் யார் என்பதில் குழப்பம் உள்ளது. இந்தப் பாடல் தங்களது என்று 5 ஆசிரியர்கள் உரிமை கோரியுள்ளனர். இன்று வரை பாடல் ஆசிரியர் யாரெனக் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தப் பாடலுக்கு மாவோலிக்கார கோபிநாத் (Mavelikkara Gopinath) என்பவர் இசையமைத்துள்ளார்.      மத நல்லிணக்க செய்திகளைப் பரப்பும் இந்தப் பாடல் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு விழாக்கள் அனைத்திலும்  மாநிலக் கீதமாகப் பாடப்படுகிறது. We Shall Overcome […]        வி ஷல் ஓவர்கம் என்பது ஒரு நற்செய்திச் பாடல் ஆகும்.இது ஒரு போராட்ட குணம் கொண்ட பாடல்.இது அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தின் முக்கிய பாடலாக மாறியது. ஐ வில் ஓவர்கம் சம்டே (“I’ll Overcome Some Day”,) என்ற பாடல் வரிகளில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பாடலை சார்லஸ் ஆல்பர்ட் டிண்ட்லி (Charles Albert Tindley) என்பவர் 1901 ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளியிட்டார்.      அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள சார்லஸ்டன் சிகரெட் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 1945-1946 ஆம் ஆண்டில் நடைபெற்றது. தொழிலாளர்களின் போராட்டம் லூசில் சிம்மன்ஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது தற்போதைய நவீன பாடல் வரிகள் பாடப்பட்டன.     வி ஷல் ஓவர்கம் என்ற பாடல் 1947 ஆம் ஆண்டு “மக்கள் பாடல்களின் வெளியீடு”என்ற பதிப்பில் வெளியானது. இந்தப் பாடல் 1959 ஆம் ஆண்டு ஆண்டில் சிவில் உரிமைகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக மாறியது.இது விரைவில் இந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ கீதமாக மாறியது.     இந்தப் பாடல் பேரணிகள்,நாட்டுப்புற விழாக்கள் மற்றும் கச்சேரிகள் என பல்வேறு இடங்களில் பாடப்பட்டது. உலக அளவில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் போதும் இந்தப் பாடலைப் பாடினார்கள். இது உலக அளவில் பிரபலமானப் பாடலாக மாறியது. மக்கள் பாடல்களின் வெளியீடு சார்பில் வெளிவந்த இந்தப் பாடலின் பதிப்புரிமை 1976 ஆம் ஆண்டில் காலாவதியானது.ஆனால் ரிச்மண்ட் அமைப்பு 1960 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வி ஷல் ஓவர்கம் பாடல் வரிகளுக்கு பரிப்புரிமை உறுதி செய்யப்பட்டது. We Shall Overcome We shall overcome, We shall overcome, We shall overcome someday. Oh deep in my heart, I do believe, We shall overcome someday. We will walk hand in hand, We will walk hand in hand, We will walk in hand someday, Oh deep in my heart, I do believe, We will walk hand in hand someday. We are not afraid, We are not afraid, We are not afraid today; Oh deep in my heart, I do believe, We are not afraid today. We shall live in peace, We shall in peace, We shall live in peace some day; Oh deep in my heart, I do believe, We shall live in peace someday. We shall meet again, We shall meet again, We shall meet again, Oh deep in heart, I do believe, We shall meet again someday. தமிழ்நாடு […] தமிழ்நாட்டிற்கு என்று தனி என் எஸ் எஸ் பாடல் எதுவும் கிடையாது.இருப்பினும் We shall overcome எனத் தொடங்கும் ஆங்கிலப் பாடலை தமிழில் மொழிபெயர்த்து இசைக்கப்படுகிறது. இந்தப் பாடலை என் எஸ் எஸ் தொண்டர்கள் பாடுகின்றனர்.வேறு சில அமைப்புகளும் இந்தப் பாடலை பாடுகின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இந்தப் பாடலைப் பாடுகின்றனர்.  இந்தப் பாடலைப் பாடுபவர்கள் தங்களுக்கு ஏற்ப சில வார்த்தைகளை மாற்றி அமைத்துக் கொள்கின்றனர்.     தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட பாடல். நாம் வெல்லுவோம் நாம் வெல்லுவோம் நாம் வெல்லுவோம் நாம் வெல்லுவோம் ஓரு நாள். எம் நெஞ்சமெல்லாம் முழு நம்பிக்கை நாம் வெல்லுவோம் ஒரு நாள். நாம் ஒருவரல்ல நாம் ஒருவரல்ல நாம் ஒருவரல்ல இந்நாள். எம் நெஞ்சமெல்லாம் முழு நம்பிக்கை நாம் வெல்லுவோம் ஒரு நாள். வாழ்வோம் அமைதியாய் வாழ்வோம் அமைதியாய் வாழ்வோம் அமைதியாய் ஓர் நாள். எம் நெஞ்சமெல்லாம் முழு நம்பிக்கை நாம் வெல்லுவோம் ஒரு நாள். விடுதலை வரும் விடுதலை வரும் விடுதலை வரும் உண்மையால். எம் நெஞ்சமெல்லாம் முழு நம்பிக்கை நாம் வெல்லுவோம் ஒரு நாள். நாம் அஞ்சவில்லை நாம் அஞ்சவில்லை நாம் அஞ்சவில்லை இந்நாள். எம் நெஞ்சமெல்லாம் முழு நம்பிக்கை நாம் வெல்வோம் ஒரு நாள். மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் ஓர் நாள். எம் நெஞ்சமெல்லாம் முழு நம்பிக்கை நாம் வெல்லுவோம் ஒரு நாள். இந்தப் பாடல் என் எஸ் எஸ் தொண்டர்கள் மத்தியிலும்,பொதுமக்கள் மத்தியிலும் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும்.  சேவைத் திட்ட விருதுகள்        இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்,என் எஸ் எஸ் தன்னார்வலர்கள்,திட்ட அலுவலர்கள், என்எஸ்எஸ் பிரிவுகள் மற்றும் பல்கலைக்கழகம்/மூத்த இரண்டாம் நிலை கவுன்சில் ஆகியவற்றின் தன்னார்வச் சேவையை அங்கீகரிக்க தேசிய சேவைத் திட்ட விருதுகளை நிறுவி உள்ளது. இந்த விருதுகள் 1993-1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.அப்போதிருந்து,இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் வழங்கப்படுகின்றன.  *என் எஸ் எஸ் தேசிய விருது *மாநில அளவிலான விருதுகள் *பல்கலைக்கழக அளவிலான விருதுகள் *மாவட்ட அளவிலான விருதுகள் *கல்லூரி அளவிலான விருதுகள் என ஐந்து வகையான விருதுகள் வழங்கப்படுகின்றன. இது தவிர திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன் விபரம் மாநில என் எஸ் எஸ் விருதுகள் 1. பல்கலைக்கழக என் எஸ் எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் 2. மாவட்ட என் எஸ் எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் 3. என்எஸ்எஸ் திட்ட அலுவலர் மற்றும் என் எஸ் எஸ் பிரிவு 4. என்எஸ்எஸ் திட்ட அதிகாரி மற்றும் என் எஸ் எஸ் பிரிவு விருதின் நோக்கம்      பல்கலைக்கழக என் எஸ் எஸ் செல், திட்ட அலுவலர்கள், கல்லூரி, பிளஸ் 2 என் எஸ் எஸ் பிரிவுகள் மற்றும் சமூக சேவையில் ஈடுபட்ட என் எஸ் எஸ் தன்னார்வத் தொண்டர்களின் சிறந்தப் பங்களிப்பை அங்கீகரிக்கவும், பாராட்டவும் இந்த விருது வழங்கப்படுகிறது.     இளம் என் எஸ் எஸ் தன்னார்வத்  தொண்டர்களைச் சமூக சேவை மூலம் தங்கள் ஆளுமை வளர்த்துக் கொள்ளவும்,சமூக மனப்பான்மை மற்றும் நல் மதிப்புகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுக்கான தகுதி     பல்கலைக்கழகம்,என் எஸ் எஸ் அலகுகள், திட்ட அலுவலர்கள் மற்றும் என் எஸ் எஸ் தொண்டர்கள் என ஆகியோர் விருதுகளைப் பெறுவதற்கு, பல்வேறுத் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகம் 1. கடந்த 5 ஆண்டுகளாக என் எஸ் எஸ் திட்டத்தைத் தொடர்ந்துச் செயல்படுத்தி வரும் பல்கலைக்கழகம் மட்டுமே பரிசீலிக்கப்படும். 2. அத்தகைய நிறுவனத்தில் குறைந்தபட்ச தன்னார்வலர்களின் எண்ணிக்கை 1000க்கும் அதிகமாக இருக்க வேண்டும். 3. நிறுவனம் அதன் திட்ட அறிக்கைகள் மற்றும் நிதி அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் மிகவும் ஒழுங்காகவும், குறிப்பிட்ட நேரத்துக்குள் வழங்குவதாகவும் இருக்க வேண்டும். 4. என் எஸ் எஸ் விருது பரிசீலிக்கப்படும் ஆண்டிற்கு முந்தைய குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு உண்மையான சேர்க்கை மற்றும் சிறப்பு முகாம் இலக்குகள் முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். 5. அனைத்து என்எஸ்எஸ் பிரிவுகளும் அனைத்து சுற்று வளர்ச்சி மற்றும் மொத்த கல்வி அறிவுக்காக கிராமங்கள்,சேரிகள், உள்ளூர்களைத் தத்தெடுத்திருக்க வேண்டும். 6. என் எஸ் எஸ் செல்லுக்கு எதிராக எந்த விஜிலென்ஸ் வழக்கு மற்றும் விசாரணைகளும் நிலுவையில் இருக்கக் கூடாது. என் எஸ் எஸ் அலகுகள் 1. விருது பரிசீலிக்கப்படும் ஆண்டிற்கு முந்தைய 5 ஆண்டுகளுக்கு என் எஸ் எஸ் பிரிவு தொடர்ந்து இருந்திருக்க வேண்டும். 2. பிரிவு(கள்) கடந்த 3 ஆண்டுகளாக அதன் சேர்க்கை மற்றும் சிறப்பு முகாம் இலக்குகளைத் தொடர்ந்து அடைந்திருக்க வேண்டும். 3. ஒன்றுக்கும் மேற்பட்ட என் எஸ் எஸ் அலகுகள் உள்ள கல்லூரிகள்/ பள்ளிகள், அத்தகைய அலகுகள் தங்கள் சேர்க்கை மற்றும் முகாம் இலக்குகளை முழுமையாகவும்,தொடர்ந்தும் அடைந்திருக்க வேண்டும். 4. ஒவ்வொரு என் எஸ் எஸ் யூனிட்டும் கிராமம்/ சேரி/ உள்ளூர்களைத் தத்தெடுத்து அவற்றின் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக செய்திருக்க வேண்டும். 5. தத்தெடுக்கப்பட்ட கிராமம்,நகரப்புற சேரி, சமூகத்தில் என் எஸ் எஸ் பிரிவு நீடித்த சொத்துக்கள் மற்றும் சாதனைகளை உருவாக்கி இருக்க வேண்டும். திட்ட அலுவலர்கள் 1. அனைத்து என் எஸ் எஸ் அலகுகளுக்கான திட்ட அலுவலர்கள், என் எஸ் எஸ் வழிகாட்டுதல்களின்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். 2. அவர்/TORC/TOC இல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விருதுக்கான பரிசீலனைக்கு முன் திட்ட அதிகாரியாக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும். 3. எம் எஸ் எஸ் திட்ட அலுவலர் விருது,அதே ஆண்டுக்கான என் எஸ் எஸ் யூனிட் விருதைப் பெற்றுள்ள திட்ட அதிகாரிக்கு வழங்கப்படும். 4. அவருக்கு எதிராக எந்த விஜிலென்ஸ் வழக்கும்/விசாரணையும் நிலுவையில் இருக்கக் கூடாது. என் எஸ் எஸ் தொண்டர் 1. ஒரு என் எஸ் எஸ் இல் ஒரு தன்னார்வத் தொண்டு பணியைக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும். 2. அவர் குறைந்தபட்சம் 2 சிறப்பு முகாம்  திட்டங்களிலும்,தில்லியில் RD அணிவகுப்பு முகாம்,தேசிய ஒருங்கிணைப்பு முகாம்கள்,தேசிய ஊக்க முகாம்கள், மாநிலங்களுக்கு இடையிலான இளைஞர் பரிமாற்றத் திட்டம் போன்றவற்றில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது பங்கு பெற்றிருக்க வேண்டும். 3. அவர் 18 வயதுக்குக் குறைவாகவும், 25 வயதுக்கு மிகாமலும் இருக்கக் கூடாது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் மூன்று ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். அதன்படி இப்போது எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 28 ஆக இருக்க வேண்டும். 4. அவர் தொடர்ந்து 2 வருடங்களுக்கு தன்னார்வத் தொண்டு செய்யும் போது 240 மணி நேர சமூக சேவையை முடித்திருக்க வேண்டும். 5. அவருடைய கல்விச் செயல்திறன் நியாயமான அளவில் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். விருதுகளின் எண்ணிக்கை 1.பல்கலைக்கழகம்/ + கவுன்சில்         - 2 2.என் எஸ் எஸ் பிரிவு                              - 10 3.திட்ட அலுவலர்கள்                               - 10 4. என் எஸ் எஸ் தொண்டர்                    - 30 விருதின் மதிப்பு முதல் விருது    முதல் விருது ரூபாய் 3 இலட்சம் ஆகும். என் எஸ் எஸ் திட்ட மேம்பாட்டிற்காக பல்கலைக்கழகம்/ + கவுன்சிலுக்கு கோப்பையுடன்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுகிறது. இரண்டாவது விருது     ‌ இரண்டாவது விருது ரூபாய் 2 இலட்சம் ஆகும். இது என் எஸ் எஸ் திட்ட மேம்பாட்டிற்கானது. பல்கலைக்கழகம்/ +  கவுன்சிலுக்கு கோப்பையுடன்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுகிறது.       ஒவ்வொரு பிரிவுக்கும் 10 விருதுகள் வழங்கப்படுகின்றன. இவை என் எஸ் எஸ் திட்ட மேம்பாட்டிற்காக வழங்கப்படுகின்றன.ஒரு கோப்பையுடன் விருது மற்றும் ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.      திட்ட அலுவலர் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு திட்ட அலுவலருக்கும் ஒரு சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும் ரூபாய் 70,000 வழங்கப்படுகிறது.      ஒவ்வொரு ஆண்டும் என் எஸ் எஸ் தொண்டர்கள் 30 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு தொண்டருக்கும் ரூபாய் 50,000/-, சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படுகின்றன. தேர்வுக் குழுக்கள்      ஒவ்வொரு விருதுக்கும் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க அதற்கு என தேர்வுக் குழுக்கள் உள்ளன. கல்லூரி / பள்ளி நிலை       கல்லூரி/பள்ளியின் முதல்வர்(தலைவர்), திட்ட அலுவலர் (கன்வீனர்) மற்றும் ஒரு சிறந்த நபர் ஆவர், பல்கலைக்கழகம்/ + 2 கவுன்சில் நிலை     துணைவேந்தர்/ +  கவுன்சிலின் தலைவர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் (கன்வீனர்), மாணவர் நலன் டீன்/கல்லூரி மேம்பாட்டு கவுன்சில் இயக்குநர் மற்றும் 2 பிரபலங்கள் ஆவர். மாநில நிலை      என் எஸ் எஸ் இன் பொறுப்புச் செயலாளர் (தலைவர்),மாநில என் எஸ் எஸ் அதிகாரி (கன்வீனர்) மண்டல இயக்குநர்,என் எஸ் எஸ், உயர் மேல்நிலை/பள்ளிக் கல்வி இயக்குநர், சம்பந்தப்பட்ட ETI (களின்) இயக்குநர்/ ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 புகழ்பெற்ற நபர்கள் ஆவர். தேசிய நிலை செயலாளர், இளைஞர் விவகாரங்கள் (தலைவர்),இணைச் செயலாளர், இளைஞர் விவகாரங்கள், என் எஸ் எஸ் இயக்குனர், செயலாளர், UGC, செயலாளர் AIU மற்றும் 2 பிரபலங்கள். துணைச் செயலாளர், என் எஸ் எஸ் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். விருது வழங்குபவர் […]      நாட்டு நலப்பணித் திட்ட விருதுகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் வழங்கப்படுகிறது.இந்த விருது செப்டம்பர் 24 அன்று,ஜனாதிபதி அவர்களால் ராஷ்டிரபதி பவனில் வழங்கப்படுகிறது என்பது இதன் சிறப்பாகும். சான்றிதழ்     நாட்டு நலப்பணித் திட்டத்தில் சேவைப் புரிந்த அனைத்து தன்னார்வத் தொண்டர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. குறிப்பாக 240 மணி நேரம் பணியை முடித்திருக்க வேண்டும்.மேலும் 2 ஆண்டுகளில் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட தன்னார்வத் தொண்டர்கள் என் எஸ் எஸ் சான்றுகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவர்.         இந்தச் சான்றிதழ் உயர் படிப்புகளுக்கு வெயிட்டேஜ் தருவதுடன்,பொதுப் பணிகளில் நியமனம் செய்வதற்கானக் கூடுதல் தகுதியாகவும் உள்ளது. பல்வேறு அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க உதவுகிறது. காவல்துறை உள்ளிட்ட அரசு தேர்வுகள் எழுதுவதற்கும், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) போன்றவற்றிக்கும் என் எஸ் எஸ் சான்றிதழ் அவசியம் உதவுகிறது. பயன்கள்      இது தன்னார்வத் தொண்டர்களுக்கு தேவையானத் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. இது தலைமைப் பண்புகளையும்,ஜனநாயக மனப்பான்மையையும் பெற உதவுகிறது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்கு சமூக சேவையின் மூலம் அவர்களின் ஆளுமையை வளர்த்துக் கொள்ள இது பலதரப்பட்ட வாய்ப்புகளை வழங்குகிறது.      கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநிலங்கள் ஆகியவற்றுக்கிடையே நடைபெறும் முகாம்களில் பங்கேற்க வாய்ப்பு தருகிறது. பிற கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மாநிலங்களைச் சேர்ந்த என் எஸ் எஸ் மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் இது வாய்ப்புகளை வழங்குகிறது. சாகச முகாம்கள்,பயிற்சி பட்டறைகள்,கலாச்சார நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிகிறது. […]       கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களைப் புரிந்துக் கொண்டு அவர்களுக்கு சேவை செய்ய ஒரு சிறந்த வாய்ப்பை என் எஸ் எஸ் இயக்கம் வழங்குகிறது.மேலும் பல்வேறு தரப்பு மக்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இதன் மூலம் சமூகத்தை நெருக்கமாகப் பார்க்கவும் பழகவும் நல்ல வாய்ப்பைப் பெற முடிகிறது.      என் எஸ் எஸ் தொண்டர்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் வளர உதவுகிறது. நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக மாறுவதற்கு என் எஸ் எஸ் உந்துதலாக உதவுகிறது. என் எஸ் எஸ் இயக்கம் தன்னார்வத் தொண்டர்களுக்கு, நாட்டுப்பற்றை ஊட்டி வளர்க்கிறது. இதன் காரணமாக நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் தேச நலன் மிக்கவர்களாக இருக்கின்றனர். Reference 1. இணைய தளம் 2. நாட்டு நலப்பணித் திட்டம் - தினமணி நாளிதழ் 3. நாடு போற்றும் நாட்டு நலப்பணித் திட்டம்- தினமலர் (மு. ஜெயமணி, உதவி பேராசிரியர், காரைக்குடி) 4. Directorate of School Education,Tamilnadu. National Service Scheme, Volunteer’s Work Diary. 5. UPSC pathshala 6.About national Service Scheme (NSS) 6. NSS - Vikaspedia 7. FAQs - NSS 9.tneducation info.com/nss.activities in/tamil 10.tnpscthervupettagam.com 8. Kerala gets official song from NSS - Deccan Chronicle 9. The Hindu - Anthem of National Service Scheme shortlisted for Kerala Geetham.  ஆசிரியர் பற்றிய குறிப்பு     தமிழ் மொழியில் நல்ல அறிவியல் நூல்கள் இல்லாத குறையைக் களைவதில் ஏற்காடு இளங்கோ முக்கியப் பங்காற்றுகிறார்.2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது முதல் நூல் அதிசயத் தாவரங்கள். அன்றிலிருந்து 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நூல்களை எளிய தமிழில் எழுதி வருகிறார்.       தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட உதவிச் செயலாளாராக 12 ஆண்டுகளும், மாவட்டச் செயலாளராக 8 ஆண்டுகளும் பணிபுரிந்துள்ளார். பின்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவர் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய காரணகர்த்தாவாகவும் உள்ளார். […]        இவருடைய பழங்கள் மற்றும் செவ்வாய்க் கிரகமும் ,செவ்வாய் தோஷமும் ஆகிய இரண்டு நூல்கள் “அனைவருக்கும் கல்வி இயக்கம்” என்ற அமைப்பின் சார்பாக 38,000 பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.       இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் துளிர்  அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர்.       இவர்  எழுத்துச் சிற்பி, அறிவியல் மாமணி, வல்லமைமிகு எழுத்தாளர், உழைப்பாளர் பதக்கம் ஆகிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.      1992 ஆம் ஆண்டு ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரைகளை,மாணவர்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் பொது மக்கள் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, நீக்கி ஏரியைத் துப்புரவு செய்தார்.       இணையதளம் பொதுவகத்தில் 23 துணைப் பகுப்புகளின் மூலம் 20311 படங்களை இணைத்துள்ளார்.       ஏற்காடு மலையில் உள்ள தாவரங்களை, வகைப்படுத்தி, பெயரிட்டு, அனைத்து புகைப்படங்களையும் இணையதளம் பொதுவகத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை 2662 தாவரங்களின் 10,095 படங்களை இணைத்துள்ளார்.       பிரிதிலிபி என்னும் இணையத்தில் 122 கட்டுரைகளை எழுதி உள்ளார். இதுவரை 22,418 பேர் கட்டுரைகளைப் படித்துள்ளனர். பிரிதிலிபி தளத்தில் 1,00,000 வார்த்தைகள் எழுதியமைக்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.       ப்ரீ தமிழ் இ புக்ஸ் மூலம் 37 புத்தகங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் 2015 டிசம்பர் 2022 வரை 8 லட்சத்திற்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.      சிறிய அளவிலும், பெரிய அளவிலும் 108 புத்தகங்களை  இதுவரை எழுதியுள்ளார். தொடர்ந்து அறிவியல் நூல்களை எழுதி வருகிறார்.  இவர் சிறந்த அறிவியல் எழுத்தாளர் ஆவார். கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account