[]     நாடி நாடி நரசிங்கர் தரிசனம் (அஹோபில யாத்திரை)     கைலாஷி  muruganandam.subramanian@gmail.com         மின்னூல் வெளியீடு :    FreeTamilEbooks.com        அட்டைப்படம், மின்னூலாக்கம் :   பிரசன்னா udpmprasanna@gmail.com    உரிமை :   Creative Commons Attribution - ShareAlike 4.0 International License.  பொருளடக்கம் முன்னுரை :  ஸ்ரீஅஹோபில திவ்யதேசத்தின் பெருமை  எம்பெருமானின் ஐவகை நிலைகள்  எம்பெருமானின் இன்றியமையா பண்புகள்  நரசிம்ம அவதாரம்   கருடனின் தவம்  அஹோபில யாத்திரை  கீழ் அஹோபில திருக்கோயில்கள்  காரஞ்ச நரசிம்மர் தரிசனம்  மேல் அஹோபிலம்  பாவன நரசிம்மர் தரிசனம்  மாலோல நரசிம்மர் தரிசனம்  ஜ்வாலா நரசிம்மர் தரிசனம்  நரசிம்மரின் வடிவங்கள்  முக்கிய நரசிம்மத் தலங்கள்  நரசிம்ம துதிகள்  எங்களைப் பற்றி...  உங்கள் படைப்புகளை வெளியிடலாமே...            முன்னுரை : மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருப்பதிகள் நூற்றெட்டாகும். இவற்றுள் இரண்டு திருப்பதிகள் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று நரசிம்ம க்ஷேத்திரமான அஹோபிலம் ஆகும். சீரிய சிங்கப்பிரான் உறைகின்ற திருக்கோவில் இச்சிங்கவேள் குன்றம் என்ரழைக்கப்படுகின்றது. திருமங்கையாழ்வார் பாடிப் பரவி மகிழ்ந்த திருத்தலம் இத்திவ்யதேசம். இத்திருப்பதி எம்பெருமான் நரசிங்கமூர்த்தியாய் தம் பக்தன் பிரகலாதன் பொருட்டுத் தோன்றி அவனை நைந்து வந்த தந்தை இரணியணை தனது வஜ்ர நகங்களால் பிளந்து மாய்த்த இடம் என்று திருமங்கையாழ்வார் கொண்டாடுகின்றார். இங்கே பெருமாள் நவநரசிம்மராய் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீராமனும், வேங்கடேசரும் வழிபட்ட பெரிய பெரிய பெருமாள் அஹோபிலம் நரசிம்மர், பெரிய திருவடியாம் கருடன் தவம் செய்து நரசிம்மர் தரிசனம் பெற்ற திருப்பதி, கபாலிகர்கள் ஆதி சங்கரை கொல்ல முயன்ற போது அவரை காத்து ஸ்ரீநரசிம்ம கராவலம்பம் பாட வைத்த கருணாமூர்த்தி இவர் வேதங்கள் தவம் செய்த தலம். வைணவம் வளர பாடுபட்டு வரும் அஹோபில மடம் அமைந்துள்ள க்ஷேத்திரம். உக்ர க்ஷேத்திரம், வீர ஷேத்திரம், அஹோபிலம், அஹோபலம், சிங்கவேள்குன்றம் என்று பல நாமங்களினால் அறியப்படும் அஹோபிலம் என்று இத்திருப்பதியின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். சிங்கத்தை நாம் எங்கே சந்திக்க முடியும் அதன் குகையில்தானே? அதுபோலத்தான் சிங்கபெருமாள்களை மலைக்குகைகளில் சென்று சேவிக்க நாம் அஹோபிலம் செல்ல வேண்டும். இரண்டு தளங்களாக அடிவாரத்திலும் மலைகளிலும் நவநரசிம்மர் சன்னதிகள் அமைந்துள்ளன. காடு, மலை, ஆறு, அருவி என்று அலைந்தால்தான் நாம் அனைவரையும் சேவிக்க முடியும். மலையேற்றமும் அவசியம். அவனருளால் இவ்வாறு மூன்று நாட்கள் சுற்றி நவநரசிம்மர்கள் அனைவரையும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே இந்நூல். மேலும் நரசிம்ம வழிபாடு பற்றி அடியேன் படித்து மற்றும் கேட்டு அறிந்து கொண்ட பல தகவல்கள் அன்பர்களின் உதவிக்காக இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த யாத்திரை செல்லும் போது மேல் அஹோபிலத்தில் பவநாசினி ஆற்றின் அருவியில் குளித்து மகிழலாம், காட்டின் இடையே மூலிகை காற்றை சுவாசித்துக்கொண்டே மலையேறிச் சென்று பெருமாளை சேவித்து விட்டு வரலாம், மலையேறி உக்ரஸ்தம்பம் செல்லலாம். சம்சார தொல்லைகளை மறந்து விட்டு பகவத் சிந்தனையிலேயே நேரத்தை கழிக்கலாம் ஏனென்றால் கைப்பேசி கூட உங்களை இங்கு தொந்தரவு செய்யாது. உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண்வெதும்ப வேற்றோனகலம்வெஞ்சமத்து பிளந்து வளைந்த உகிரானின் - திவ்ய தரிசனம் பெற உடன் வாருங்கள் அன்பர்களே. ஸ்ரீஅஹோபில திவ்யதேசத்தின் பெருமை   []அஹோபிலம் நவநரசிம்மர்கள்      வேதத்தின் சாரத்தை பக்தர்கள் அனைவருக்கும் புரியும் படி அமுதத் தமிழில் அளிப்பீர் என்ற,  அஞ்சன வண்ணன், ஆயர் பெருமான், அடியவர்க்கு மெய்யன், அமரற்கரிய ஆதி பிரான், உம்பர் கோன், எம்பெருமானின்  ஆணைப்படி,  நீளாதேவி, பஞ்சாயுதங்கள்- சார்ங்கம் என்னும் வில், சுதர்சனம் என்னும் சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, நாந்தகம் என்னும் வாள், கௌமோதகி என்னும் கதை, ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம், வனமாலி, அனந்தன், கருடன், மற்றும் சேனை முதலியார் பன்னிருவரும், கலியுகத்தில் பூமியில் தோன்றி பரந்தாமனின் கல்யாண குண வைபவம் என்னும் கடலை மேகங்களாக்கி அந்த அருள் மேகத்தை பக்தி மழையாக நமக்கு பொழிந்து நமது நெஞ்சங்களிலெல்லாம் பேரானந்தம் பொங்க செய்தார்கள்.    எம்பெருமானின் பக்தியில் ஆழ்ந்து இருந்ததால் இவர்கள் “ஆழ்வார்கள்” எனப்பட்டனர்.  ஜீவன் பக்தியால் பரமாத்மாவை நெருங்கி, பக்தி பெருக்கினால் தன்னிலும் மேலான பகவானை வாழ்த்துகின்றான் இதுவே மங்களாசாசனம், இவ்வாறு மயர்வற மதி நலம் அருளிய தேவாதி தேவனை, திருமகளும் மண்மகளும் இருபாலும் திகழ  மூவுலகும்  தனிக்கோல் செலுத்தும் அலையாழி அரிதுயிலு மாயனை மங்களாசாசனம் செய்தவர்கள் ஆழ்வார்கள்.  இந்த ஆழ்வார்கள் அருள் மிகுத்ததொரு வடிவானவர்கள். 1. அருள் வடிவு : ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீ, பூமி, நீளா சமேதனாய் வீற்றிருந்து ஏழுலகமும் தனிக்கோல் செலுத்தும் பிரான், பொங்கோதம் சூழ்ந்த  புவனியும் விண்ணுலகமும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் வடிவிற்கு “அருள் வடிவு” என்று பெயர். 2. அருள் மிகுத்த வடிவு : ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து தோன்றிய ஸ்ரீநரசிம்ம, ஸ்ரீராம, ஸ்ரீகிருஷ்ண திவ்ய அவதாரங்களின் வடிவிற்கு “அருள் மிகுத்த வடிவு” என்று பெயர். 3. அருள் மிகுத்ததொரு வடிவு : எம்பெருமானுடைய திவ்யாபரணங்கள், திவ்யாயுதங்கள், நித்ய சூரிகள் இவர்களுடைய  அபிநவ தசாவதாரம் என்று போற்றப்படும் ஸ்ரீ ஆழ்வார்களின் அவதார வடிவு “அருள் மிகுத்ததொரு வடிவு” என்று போற்றப்படுகின்றது.   இப்படி அருள் மிகுத்ததொரு வடிவாய் தோன்றின ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் மூலமாக நாம் தெளியாத மறை நிலங்கள் அனைத்தும் தெளியப்பெற்றோம். இவர்கள்  வேதாந்த தத்துவத்தையும், பகவத் கீதையின் உபதேச மொழிகளை   திவ்ய பிரபந்தங்களின் மூலம் தேனினும் இனிய தமிழ் மொழியில் போதித்த பரமனடியார்கள். இவ்வாறு ஆழ்வார்கள் பன்னிருவரால்  மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலங்கள்  திவ்யதேசங்கள் ஆகும்.  108 திவ்யதேசங்களுள் ஸ்ரீவைகுண்டமும், திருப்பாற்கடலும் மானிட உடலுடன் நாம் சென்று  சேவிக்க முடியாதவை, ஏனென்றால் அவை பூவுலகில் இல்லை. மற்ற 106 திவ்யதேசங்களுள் பெரும்பாலான திவ்யதேசங்கள்  நமது தமிழ்நாட்டில் உள்ளன. வடநாட்டில் பெரும்பாலும் எம்பெருமான் தோன்றி தன் லீலைகளை நடத்திய பத்ரி, மதுரா, அயோத்தி, நைமிசாரண்யம், சாளக்கிராமம், முதலிய திவ்யதேசங்கள் உள்ளன. நமது அண்டை மாநிலமான,  ஆந்திர மாநிலத்தில் இரண்டு திவ்யதேசங்கள் உள்ளன அவற்றுள் முதலாவது  கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் வேங்கடவனாய் , பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கும்   திருமலை திருப்பதி,  இரண்டாவது  திவ்ய தேசம்  அஹோபிலம். ஆகும்.  அஹோபிலத்தில் பெருமாள்  நரசிம்மராய் எழுந்தருளி  அருள்  பாலிக்கின்றார்.      கிழக்கு தொடர்ச்சி  மலையில்  அமைந்துள்ள கருப்பு  மலையில் (தெலுங்கில் நல்ல கொண்ட) நவநரசிம்மராய் சேவை சாதிக்கின்றார் பெருமாள். மரங்களால் சூழ்ந்து அடர்ந்த காடாக இருள் அடர்ந்து கருங்கானகமாய் இருந்த காரணத்தால் இந்தப் பெயர் வந்தது எனச் சொல்கின்றனர். இப்போதும் மரங்கள் அடர்ந்தே காணப்படுகின்றது. சிறுத்தை, கரடி போன்ற  காட்டு மிருகங்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். இந்த நவநரசிம்மர்களையும் சேவிக்கும் அவா கொண்ட அன்பர்கள் தாசனுடன் வர விண்ணப்பிக்கின்றேன்.  பெருமாள் எடுத்த பத்து அவதாரங்கள் தசாவதாரம் என்று மிகவும் பிரபலம் ஆனால் பெருமாள் மொத்தம் 22 அவதாரங்கள் எடுத்தார் என்பது ஐதீகம். அவையாவன மச்சம், கபிலர், கூர்மம், தன்வந்திரி, மோகினி யக்ஞர், தத்தாத்ரேயர், வேதவியாசர், புத்தர், நரநாரயணர், ஹயக்ரீவர், ரிஷபர், அன்னம், ப்ருது, வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி. இவற்றுள் ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் வராக, நரசிம்ம, வாமன, இராம, கிருஷ்ண அவதாரங்கள் ஐந்தும் மிகுதியாக கூறப்பட்டுள்ளன.   இவ்வவதாரங்களில் பெருமாள் நரசிம்மராக தோன்றிய இடம் தான் அஹோபிலம்.  இந்த கருப்பு மலையில்தான்  கிருத யுகத்தில்  இரணியகசிபுவின் கோட்டை இருந்தது என்றும், ஒரு பிரதோஷ காலத்தில், தன் மகன் விஷ்ணு பக்தன், “ஓம் நமோ நாராயணா” என்று ஓதிக் கொண்டிருக்கும் பிரகலாதனை கொல்ல அவன் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து விட கோபத்தின் உச்சியில் “எங்கிருக்கிறான் உன் நாராயணன்”? என்ற  இரணியனின் கேள்விக்கு, “என்னுள்ளும் உள்ளான் உன்னுள்ளும் உள்ளான், எல்லாவாற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் அவன்.  “தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்” பதில் கூறிய தன் குழந்தை பக்தனின் சொல்லை நிரூபிக்க உடனே அந்த க்ஷணமே கருடன் மேல் வந்தால் கூட தாமதமாகி விடும் என்பதால் உடனே,  தனது மாளிகையின் ஆயிரம் தூணில் ஒரு தூணை  இரணியன் கதையால் ஓங்கி அடிக்க அந்த தூணை பிளந்து கொண்டு நரசிம்மராய் தோன்றி,  இரணியன் பிரம்மாவிடம்  பெற்ற வரத்தினை மீறாமல், மனிதனாகவோ, தேவராகவோ, மிருகமாகவோ, பறவையாகவோ இல்லாமலும், நிலத்திலோ, ஆகாயத்திலோ இல்லாமல் தன் தொடையில் வைத்தும், பகலாகவோ இரவாகவோ இல்லாத சந்தியா வேளையில், உள்ளேயோ, வெளியேயோ இல்லாமல் வாசற்படியில் அமர்ந்து, எந்த வித ஆயுதமும் இல்லாமல் தனது வஜ்ர நகங்களினால் இரணியனுடைய வயிற்றைக் கிழித்து அவன் குடலை மாலையாக இட்டுக் கொண்டு அவனை வதம் செய்து, பிரகலாதனது பக்தியின் பெருமையை உலகுக்கு காட்டிய அவதாரம் ஸ்ரீநரசிம்ம அவதாரம். அந்த ஜ்வாலா நரசிம்மராகவும் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தலம் தான் அஹோபிலம்.  வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்,  பெருமாளின் எளிமையை இவ்வாறு மங்களாசாசனம் செய்கின்றார்.  எங்குமுளன் கண்ணனென்ற மகனைக் காய்ந்து இங்கில்லையாலென்று இரணியன் தூண் புடைப்ப அங்கப்பொழுதே அவன் வீயத்தோன்றிய  என் சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே. பெருமாளின் அவதாரங்களிலேயே மிகவும் குறுகிய காலம் இருந்த அவதாரம் இந்நரசிம்மவதாரம். எந்தத் தூணைத் தட்டுவான் உடனே அங்கிருந்து நாம் தோன்றலாம் என்று பெருமாள் எங்கும் வியாபகமாய் அண்டம் முழுதும் எங்கே தட்டுவான் என்று காத்திருந்தாராம்.   பிரகலாதன் வார்த்தைக்காக. “ஓம் நமோ நாராயணா” என்னும் திருநாமத்தை நிலை நாட்டிய அவதாரம், பக்தியின் பெருமையை  உணர்த்திய அவதாரம்.  இரணியனுக்கு உக்ரம் அதே சமயம் பிரகலாதனுக்கு அவரே  கருணை வடிவம். அது போல  இரணியனுக்கு பலி பீடமான பெருமாளின் தொடை மஹாலக்ஷ்மித் தாயாருக்கு மலர்ப் பீடம்.   சிலர் நரசிம்மரைப் பார்த்து இவ்வளவு உக்ரமாக உள்ளாரே என்று பயப்படுவார்கள், சுத்தமாக தேவையில்லை, கொடியவர்களுக்குத்தான் அவர் பயங்கரன் ஆனால் தன்னுடைய பக்தர்களுக்கு அவர் பத்ரன் – மங்களங்களை அருளுபவர். “ஸ்வபோதமிவ கேஸரீ” என்றபடி சிங்கம் மற்ற பிராணிகளைத்தான் குரூரமாகப் பார்க்கும் ஆனால் தன் குட்டியை அன்புடன் பார்க்கும் அத்தகைய பக்தவத்ஸலான நரஹரியை பெரியாழ்வார் தம்முடைய திருப்பல்லாண்டிலே இவ்வாறு மங்களாசாசனம் செய்கின்றார்.    ……..அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை  பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே. மாலைப் பொழுதில் நரம் கலந்த சிங்க உருவில் தோன்றி  இரணியனை அழித்த பெருமாளின் நடுக்கம் தீர பல்லாண்டு பாடுங்கள் என்று கூறுகின்றார். எதற்காக பெருமாளுக்கு நடுக்கம்,  இரணியனை வதம் செய்ததற்காகவா? அதுதானே பெருமாளின் மறக்கருணை, தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்ற யுகங்கள் தோறும் நான் தோன்றுவேன் என்று கூறிய பெருமாளுக்கு அதற்காக எதற்கு நடுக்கம் வர வேண்டும். ஆனால் “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தையே தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த பிரகலாதனுக்கு,  இரணியன் செய்த  கொடுமைகளினால் உண்டான கோபத்தில் தான் பெருமாள் இவ்வாறு நடுக்கம் கொண்டார்.  இரணியனை வதம் செய்வதற்கு முன் பெருமாள் அவனது மார்பை தனது வஜ்ர நகங்களால் கிழித்து எங்காவது ஒரு சிறு மூலையிலாவது சிறிது ஈரம் உள்ளதா என்று துழாவிப் பார்த்தாராம் ஆனால் கிஞ்சித்தும் கருணையே இல்லாததால்தான் இறுதியாக அவனை பெருமாள் வதம் செய்தார் என்று பெருமாளின் கருணையை ஆச்சார்யர்கள் தங்கள் வியாக்கியானங்களில் விளக்கியுள்ளனர். வைணவத்தின் சிறப்புக் கொள்கைகளுள் ஒன்று பகவானைக் காட்டிலும் பாகவதர்கள் உயர்ந்தவர்கள் என்பதாகும். அது போல பகவத அபசாரத்தை வித பாகவத அபசாரம் கொடிய அபசாரமாகும் இதை வலியுறுத்தும் வகையில் பிரகலாதானை துன்புறுத்திய  இரணியனை கொன்று பக்த பிரகலாதனை காத்த அவதாரம் அரிமுக  அவதாரம். பெருமாள் சர்வ ஸக்தன் ஆயினும் பிரம்மதேவர்  இரணியனுக்கு கொடுத்த வரத்திற்கும் மதிப்புக் கொடுக்க இவ்வாறு நரம் கலந்த சிங்கமாக  அவதாரம் எடுத்தார். மகாவிஷ்ணு இரண்யகசிபுவின் கொடுமையில் இருந்து பிரகலாதனைக் காப்பாற்றவும், இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்கவும் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரமாகும். பக்தனோ, பகைவனோ யாராயினும் சரி எவர் காட்டிய இடத்திலும் தான் இருப்பதை மெய்ப்பிப்பதற்காகவே நரசிம்ம மூர்த்தி தூணிலிருந்து தோன்றுகிறார்.  பல்-இன இணை-உருவங்கள் இருக்க முடியும் என்றும், அவற்றாலும் இறப்பு ஏற்படலாம் என்றும் அறியாததால் இரண்யகசிபுவும், இணை உருவாக அவதரித்த நரசிம்ம மூர்த்தியால் அழிகிறான். தொன்று தொட்டு, சிலர், தானே தெய்வமெனவும், தனக்கு மேலான சக்தியில்லை; யாவரும் தன்னை மட்டுமே வழிபட வேண்டும் என்றும் கூறி, பல்லோரை, பல்வகையிலும் பயமுறுத்தி, பலாத்காரப்படுத்தி வந்துள்ளனர். அவர்களில் இரண்யகசிபுவும் ஒருவன். அத்தகையவரின் போக்கைக் கண்டிப்பதற்காகவும், களைவதற்காகவும் பரம்பொருள் எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. நமக்கு ஆசைப்படவும் தெரியவில்லை; அழியக் கூடிய நிலைகளும் தெரியவில்லை. நம் சிற்றறிவுக்கு எட்டியதே முழுமை - உண்மை என்று நினைத்து, செயல்பட்டு, சீரழிவதை விட நம்மை உருவாக்கிய சக்தி, நமக்கு நன்மையானதையே நவிலும் என்பதை உணர்த்திட நிகழ்ந்தவையே, அனைத்து அவதாரங்களும் ஆகும்.    அஹோபிலத்தைப் பற்றிய குறிப்புகள், விஷ்ணுபுராணம், பிரம்மாண்டபுராணம், மற்றும் பாகவதபுராணத்தில் உள்ளன. கலியுகத்தில் ஏழு மலையானுக்கு  திருக்கல்யாணம். ஸ்ரீநிவாசனுக்கு, ஆகாசராஜனின் மகள் பத்மாவதியை சம்பந்தம் பேசி முடித்தார் வளர்ப்புத்தாய் வகுளாதேவி. வைகாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் திருக்கல்யாணம். ஆகாசராஜனின் தலைநகரம் நாராயணபுரத்திலும், திருமலையிலும், களை கட்டியது. பார்வதி-பரமேஸ்வரர், நாமகள்-பிரம்மா, இந்திராணி-இந்திரன் முதற்கொண்டு முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் வந்து குவிந்தனர். ஊரெங்கும் அலங்காரம் செய்யப்பட்டன. திருமணத்திற்கு எல்லோருக்கும் விருந்தளிக்க உணவும் தயார். முதலில் மூலப்பரம்பொருளுக்கு  முறைப்படி பூஜித்து, நைவேத்யம் செய்த பிறகு தானே பந்தி பரிமாற வேண்டும், ஆனால் இங்கு அந்த பரம்பொருளே மணமகனாக வீற்றிருக்கின்றார் யாருக்கு நைவேத்தியத்தை சமர்ப்பணம் செய்ய? எல்லோரும் குழம்பி நிற்க, தாயார் அலர்மேல்மங்கை கூறினாள்.. அஹோவீர்யம் அஹோசௌர்யம் அஹோபாஹப்ராக்ரம | நாரசிம்மம் பரம் தெய்வம் அஹோபலம் அஹோபிலம். || அதாவது ஸ்ரீநரசிம்மனே பரதெய்வம். அஹோபிலத்தில் அருளும் அவரை வழிபட்டு, நைவேத்யம் சமர்பித்துவிட்டு வருவோம் என்றாள் பிராட்டி. அதனை ஏற்று அனைவரும் அஹோபிலம் வந்து ஸ்ரீநரசிம்மரை வணங்கி சென்றார்கள். ஏழுமலையான் திருக்கல்யாணமும் சுபமாக, கோலாகலமாக நடந்து முடிந்தது. திருவேங்கடவன் மட்டுமா? சீதையைத் தேடி வந்த ஸ்ரீராமனும் அஹோபில நரசிம்மரை வழிபட்டு சென்றதாக விவரிக்கின்றன புராணங்கள். இவ்வாறு ஸ்ரீராமனும், ஸ்ரீவேங்கடவனும் வழிபட்ட பெரிய பெரிய பெருமாள் அஹோபில ஸ்ரீநரசிம்மர். இந்த பெரிய பெரிய பெருமாளை நவநரசிம்மராய் அருளும் அற்புதத்தை அஹோபிலத்தில் சேவிக்க   கோடி கோடியாய் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இத்திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த சிங்கவேள் குன்ற திவ்ய தேசத்தில் சீரிய சிங்கப் பெருமாள் சுயம்பு மூர்த்தியாக தோன்றி அருள் பாலிக்கின்றார். இத்திருப்பதி எம்பெருமான் நரசிம்மமூர்த்தியாக தம் பக்தன் பிரகலாதன் பொருட்டு தோன்றி, அவனை நைந்து வந்த அவன் தந்தை இரணியனை பிளந்து மாய்த்த இடம் என்று திருமங்கையாழ்வார் பத்து பாசுரங்களால் அரிமுகன் அச்சுதனை கொண்டாடுகிறார். இத்திவ்ய தேசம் மலையும் மலை சார்ந்த (குறிஞ்சி நிலம்) பகுதியுமாக அமைந்து திகழ்கின்றது. திருமால் நரசிங்கமதாகி இக்குன்றின் மீது மிக்க வேட்கையோடு வந்து அமர்ந்ததால் இக்குன்றம் சிங்கவேள் குன்றம் எனப்படுகின்றது. நரசிங்கம் என்ற வேள் வந்து அமர்ந்ததால் சிங்கவேள் குன்றம் என்பாரும் உண்டு. வேள் என்றால் யாவராலும் வேட்கை கொள்ளப்படுபவர் என்றும் பொருள்படும். இத்தலத்து நரசிம்மப் பெருமான் தோற்றத்தாலும், ஏற்றத்தாலும், தன் பக்தன் பிரகலாதன் பொருட்டு ஓடி வந்து தூணில் தோன்றிய எளிமையாலும், இரணியனை வகிர்ந்து அழித்த திறத்தாலும், எல்லாருடைய விருப்பினையும் வேட்கையினையும் பெற்று விளங்குவதால், அவன் உறைந்த குன்றம் சிங்கவேள் குன்றமென்றானது.   [] அஹோபில நரசிம்மர் ஆலயம்  அகோபலம் என்பாரும் உண்டு. பெருமாள் மிகுந்த பலமுடன் தோன்றியதால் ஆஹா பலம், ஆஹா பலம் என்று தேவர்கள் அனைவரும் போற்றியதால் அஹோபிலம் ஆனது. கிழக்குத் தொடர்ச்சி மலை  என்னும் ஒரு பெரிய மலைத் தொடர்ச்சியின் நடுவே  அமைந்துள்ளது இந்த அற்புத திவ்ய தேசம். ஆதி சேஷனே இம்மலைத்தொடர்,  தலைப்பகுதி திருவேங்கடம், வால் பகுதி  ஸ்ரீ சைலம், முதுகு  அதாவது உடற்பகுதி அஹோபிலம் என்பது ஐதீகம். திருமலையில் திருமலையில் தற்போது வெங்கமாம்பாள் அன்னக்கூடத்தில் இந்த  கிழக்கு தொடர்ச்சிமலை ஆதி சேஷன் போல் விளங்குவதையும் அதில் பல்வேறு புண்ணிய  அமைந்துள்ளதையும் விளக்கும் ஓவியம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது அனைவரும் கண்டு களிக்கலாம்.  இம்மலை ஏழு குன்றங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இதை சிங்கவேழ்குன்றம் என்றும் பெயர் சூட்டி அழைத்தனர். திருப்பதி மலையாகிய திருமலை எழு மலைகளை கொண்டிருப்பது போல் இக்குன்றமும் ஏழு குன்றங்களைக் கொண்டிருப்பதால் இதை சின்ன எழுமலை என்று பெயர் சூட்டி வழங்கலாம். சில திவ்ய தேசங்களில் நதியிருக்கும், ஆனால் காடும் மலையும் இருக்காது, மற்றொரு திவ்ய தேசத்தில் மலை இருக்கும் ஆனால் காடும் ஆறும் இருக்காது. இத்தலத்தில் மூன்றும் ஒருங்கிணைந்து காணப்படுகின்றது. புஷ்கரத்திலே எம்பெருமான் “தீர்த்தரூபியாய் சேவை சாதிக்கின்றான், அவரே திருமலையில் பர்வத ரூபியாய் திகழ்கிறார். நைமிசாரண்யத்தில் “அரண்யரூபியாய்” விளங்குகிறான். இத்தலத்தில்  மூன்றும் இருப்பதனால் இது புஷ்கரம், திருமலை, நைமிச்சாரண்யம் என்ற மூன்று திவ்ய தேசங்களையும் சேவித்த பலனைத் தருகின்றது. ந நரசிம்ஹாத் அதி கச்சதேவோ ந தீர்த்தம் ந்யத் பவநாசஹேதோ:| ந கருடாத்ரே: அபரோஸ்திகைகோ ந பக்தஜந்தோ உபரோஸ்தியோகீ:|| நரம் கலந்த சிங்கத்தைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் கிடையாது. பவநாசினி என்ற தீர்த்தத்தைக் காட்டிலும் உயர்ந்த தீர்த்தம் கிடையாது. கருடாசல மலையை விட சிறந்த மலை கிடையாது. இந்த தலத்தில் வசிக்கின்ற உயர்ந்த தெய்வமான நரசிம்மனிடத்தில் பக்தி செலுத்துகின்றவரைக் காட்டிலும் உயர்ந்த யோகி யாருமில்லை. அஹோபிலத்தை அடைந்து பவநாசினியின் தீர்த்தத்தை பார்த்தால் கூட கோடிக்கணக்கான பிறவியில் செய்த  பாவத்தினின்றும் விடுபடுகின்றான். கயை, பிரயாகை, காசி, கங்கை இவைகளைக் காட்டிலும் நூறு மடங்கு அதிக பிரபாவம் பெற்றது. பித்ருக்களுடைய பிரீதியின் பொருட்டு கயைக்குச் செல்ல வேண்டும். உடலை விட்டு நற்கதியைப் பெற கங்கையை அடைய வேண்டும். மந்திரோபதேசத்தின் பொருட்டு காசிக்குச் செல்ல வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த மூன்று விதமான பலனையும் அஹோபிலத்தில் பெறலாம் என்று அஹோபில மஹாத்மியம் என்ற நூல் கூறுகின்றது.  மேலும் காசியில் ஆயிரம் யுகமும், பிரயாகையில் இருபது யுகமும், கயையில் நூறு யுகமும் வசித்தால் மனிதன் எப்பலனைப் பெறுவானோ அப்பலனை அஹோபில தலத்தில் ஒரு தினம் வசித்த மாத்திரத்தில் பெறுகிறான். கயையில் ஒருவன் பத்தாயிரம் பாகவதர்களுக்கு அன்னமளித்தால் எந்த பலனைப் பெறுவானோ, பிரயாகையில் இலட்சம் பாகவதர்களுக்கு போஜனமளித்தால் எந்தப் பலனைப் பெறுவானோ, காசியில் இரண்டு இலட்சம் பேருக்கு அன்னமளித்தால் எந்தப் பலனைப் பெறுவானோ அந்த பலனை அஹோபிலத்தில் ஒரு பருக்கை அளித்த மாத்திரத்தினாலேயே பெற்று விடுகிறான். ஒரு பருக்கை  அன்னதானத்திற்கே இப்படி பலன் என்றிருந்தால் பரிபூர்ணமாக அன்னமிட்டாலோ, அநேக பாகவதர்களுக்கு அன்னமிட்டாலோ எவ்வளவு பலனை அடைவான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? என்றும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது.  இரண்டு தளங்களாக அமைந்துள்ளது  நவநரசிம்ம அஹோபில க்ஷேத்திரம். கீழ் அஹோபிலத்தில் பிரதானமாக  பிரகலாத வரதர் ஆலயமும், மேல் அஹோபிலத்தில் அகோர நரசிம்மர் ஆலயமும்  அமைந்துள்ளன. மலையடிவாரம் கீழ் அஹோபிலம் என்று அழைக்கப்படுகின்றது. அடிவாரத்திலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்று அழைப்படுகின்றது. மகத்துவம் மிக்க நவநரசிம்மர் ஆலயங்கள் மலைச்சாரலின் மடிப்புகளில் மறைவான குகைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.  மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உண்மையான உடல் உறுதியும், எல்லாப் பெருமாள்களையும் சேவிக்க வேண்டும் என்ற மனத்திண்மையும் இருந்தால் மட்டுமே நவநரசிம்மர்களையும்  சேவிக்க முடியும். எனவே தான் திருமங்கையாழ்வார் தமது பாசுரத்தில் "தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்!" என்று பாடியுள்ளார். மொத்தம் மூன்று நாட்கள் தங்கி இருந்தால் தான்  அனைத்து நரசிம்மர்களையும் திவ்யமாக சேவிக்க முடியும்.   பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்த போது கருடன் மேல் வராததால், நரசிம்மமூர்த்தியை தரிசிக்க வேண்டி கருடன் இத்தலத்தில் தவம் செய்ய  கருடனுக்காக பெருமாள் அஹோபில நரசிம்மராக சேவை சாதித்தார்.  காபாலிகர்களால் கை வெட்டப்பட்ட ஆதி சங்கர பகவத் பாதாள் அகோர நரசிம்மரை ஸேவித்து  லக்ஷ்மி ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம் பாட இழந்த கரம் மீண்டது. ஆதி சங்கரர் ஸ்தாபித்த சிவலிங்கமும், நரசிம்ம சுதர்சன சக்கரமும் இன்றும்  இத்தலத்தில்  உள்ளன.  மேலும் மஹாலக்ஷ்மித் தாயார் இங்கு இப்பகுதியில் வசிக்கும் செஞ்சு என்னும் ஆதிவாசி குலப்பெண்ணாக செஞ்சுலக்ஷ்மியாக சேவை சாதிக்கின்றாள்.  அஹோபில மடம் உள்ளதும் அஹோபிலத்தில்தான். 1379ம் ஆண்டு  ஸ்ரீநிவாச்சாரியாரின் 19வயதில் நரசிம்ம சுவாமி அவரது கனவில் தோன்றி அஹோபிலம் அழைத்து,  குருவாக வந்து வேதாந்தம் கற்பித்து நரசிம்ம மந்திரத்தை உபதேசித்து, திரிதண்டம், சங்கு சக்ரம் வழங்கி “சடகோபயதி” என்று நாமம் வழங்கி முதல் ஜீயராக்கினார். இவருடைய பூர்வாசிரமப் பெயர் கிடாம்பி ஸ்ரீநிவாஸாச்சார் என்பதாகும். காஞ்சியில் உள்ள கடிகாசதம் அம்மாளின் மாணாக்கர் ஆவார் இக்குன்றின் மேல் உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளி இருக்கும் "ஸ்ரீமாலோல நரசிம்ம மூர்த்தியை" திருவாராதனைப் பெருமாளாக கொண்டு ஆதிவண் சடகோப யதீந்த்ர மஹா தேசிகர் என்னும் ஜீயரால் அஹோபில மடம் நிறுவப்பட்டு இன்று வரை சிறப்பாக ஸ்ரீவைஷ்ணவம் உலகெங்கும் ஓங்கி வளர சேவை செய்து  வருகின்றது.  அறுநூறு வருடங்கள் முன்னால் ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று வரையில் அடுத்தடுத்து வரும் ஜீயர்களால் தொடரப்படுகின்றது. அஹோபிலம் வந்த ஸ்ரீநிவாஸாச்சாரியாரை மலைக்குகையில் ஒரு முதிய யோகி சந்தித்து அவருக்கு வேதாந்தங்களைக் கற்பித்து, நரசிம்ம மந்திரத்தைக் உபதேசித்து, த்ரிதண்டத்தையும், சங்கு சக்கரங்களையும் வழங்கியதாகவும் சொல்கின்றனர். அந்த யோகி நரசிம்மரே அன்றி வேறு யாரும் இல்லை எனச் சொல்லப் படுகின்றது. தமிழில் அழகிய சிங்கர் என அழைக்கப்படும் இந்த முதல் ஜீயரால் நம்மாழ்வாரின் மறைக்கப் பட்ட கோயில் ஆழ்வார் திருநகரியில் மறு ஸ்தாபிதம் செய்யப் பட்டது. இன்றைக்கும் மடத்தில் முதல் பொறுப்பேற்றுக் கொள்ளும் புதிய ஜீயர்கள் முதலில் ஆழ்வார் திருநகரி சென்று நம்மாழ்வாரைத் தரிசனம் செய்து வருவது வழக்கமாய் இருந்து வருகின்றது. ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நான்கு நூற்றாண்டுகளாய்க் முழுமையடையாமல் இருந்த இராஜகோபுரம் 1979-ல் அப்போதைய 44-வது ஜீயர் அவர்களால் கட்டி முடிக்கப் பட்டது. ஜ்வாலாஹோபில மாலோல க்ரோடாகாரச்ச பார்கவ: யோகாநந்தச் சத்ரவட  பாவனோ நவமூர்த்திய:   என்பது அஹோபில நவநரசிம்ம ஸ்தோத்திரம்.  இனி இத்திவ்ய தேசத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் மேலே சொன்னபடி  நவநரசிம்மர்கள்  எவ்வாறு சேவை சாதிக்கின்றனர் என்று பார்ப்போமா? []   ஸ்ரீ ஜ்வாலா நரசிம்மர்:   எங்கிருக்கிறான் உன் நாராயணன் என்ற  இரணியனின் அறை கூவலுக்கு பதிலாக தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்! என்றவுடன், கோபத்தின் உச்சியில் அவன் தன் கதையினால் தனது ஆயிரம் தூண்கள் கொண்ட அரண்மனையின் ஒரு தூணைத்  தாக்க அதே நொடி சிம்ம முகமும், மனித உடலும், வஜ்ர நகங்களும் கொண்டு தோன்றிய கோலமே ஜ்வாலா நரசிம்மர்.  தற்போது வேத கிரியில் உக்ர ஸ்தம்பத்தின் கீழே  ஒரு குகையில் அமைந்துள்ளது ஜ்வாலா நரசிம்மர் சன்னதி.  உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் | ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம் ||   என்ற ஸ்லோகத்தின் படி உக்ரராகவும், வீரராகவும், ஜ்வாலா நரசிம்மராகவும், மஹாவிஷ்ணுவாகவும் சேவை சாதிக்கின்றார். முதலாவது  தூணில் இருந்து பிரகலாதன் வார்த்தையை மெய்பிக்க நரசிங்கமாக வெளி வரும் கோலம். இரண்டாவது  இரணியன் பெற்ற வரத்தை முறியடிக்க அவனுடன் போரிட்டுக் கொண்டே அவனது தலை முடியைப் பிடித்து அவனை இழுத்துக் கொண்டு உள்ளும் இல்லாமல் வெளியும் இல்லாத தலை வாயிலுக்கு அவனை இழுத்து செல்லும் கோலம். மூன்றாவது கோலம் எட்டு கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி இரு மேற் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி இரு கரங்களினால்  இரணியன் காலை அழுத்திப் பிடித்துக் கொண்டு இரு கரங்களால் அவனது குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொள்ளும் உக்ர கோலம்.  பெருமாள் உக்ரத்துடன் ஸ்தம்பத்தில் இருந்து வெளியே வந்ததால் இவர் ஜ்வாலா நரசிம்மர் என்று அழைக்கப்படுகின்றார். ஸ்ரீமஹா மிருத்யுஞ்ஜயர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு.  அசுர குரு சுக்ராச்சாரியாரும் மஹாவிஷ்ணுவும் உடன் சேவை சாதிக்கின்றனர். இவர் சனி பகவானின் தோஷங்களைப் போக்குகின்றார். தீராத கடன்கள், தீராத நோய்கள், பகைவர்களின் தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து காத்தருள்கின்றார்.   ஸ்ரீஅஹோபில (உக்ர) நரசிம்மர்: மேல் அஹோபிலத்தின் முக்கிய கோவில் அஹோபில நரசிம்மர் கோவிலாகும். இவர் உக்ர நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகின்றார். கருடன் செய்த கடும்  தவத்திற்கு மெச்சி இரணியனை தனது மடியில் போட்டு வதை செய்யும் கோலத்தில் சக்ராசனத்தில்  சத்திய சொரூபனாக மலைக்  குகையில் நெருப்பின் உக்கிரத்தோடு சுயம்புவாக தோன்றிய மூர்த்தி. உக்ர நரசிம்மரின் எதிரே கருடனையும் சேவிக்கலாம். ஆதிசங்கரர் ஸ்தாபித்த சீதாராம பரமேஸ்வர  லிங்கம், நரசிம்ம சுதர்சன சக்கரம் மற்றும் செஞ்சு லக்ஷ்மி  தாயாரை இக்கோவிலில் சேவிக்கலாம்.  பிரம்மாவும் மற்ற தேவர்களும் இத்திருத்தலத்திற்கு வந்து ஸ்ரீநரசிம்மப்பெருமானை வணங்கியதாகப் புராணங்கள் பகர்கின்றன. சுக்கிர தோஷத்தினால் ஏற்படும் துன்பங்களை உடனடியாக போக்கியருள்கின்றார் ஸ்ரீ அஹோபில நரசிம்மர்.   ஸ்ரீமாலோல நரசிம்மர்: மாதவன் போல மாலோலன். மா – என்றால் திருமகள், லோலா – என்றால் காதல்.  அதாவது லக்ஷ்மி மேல் காதல் கொண்டவர்.  மஹாலக்ஷ்மித்தாயாருடன் ஸ்ரீய:ப்பதியாய் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார் பெருமாள். பெருமாளின் இடத்தொடையில் தாயார் அமர்ந்து   இருக்க, ஆலிங்கன கோலத்தில் சுகாசனத்தில் அமர்ந்து ஆனந்தமாக சௌம்ய ரூபத்தில் சேவை சாதிக்கின்றார். இரணியகசிபுவைக் கொன்ற கோபத்தில் இருந்து தணியாத நரசிம்மரின் கோபத்தை அடக்க முடியாமல் தவித்த தேவர்கள், பிரகலாதனையே வேண்ட அவனும் நரசிம்மத்தின் கோபம் தணியப் பிரார்த்திக்கின்றான். அவனுக்காக எழுந்தருளிய கோலமே இது. கோபம் தணிந்து ஸ்ரீ எனப்படும் அன்னையுடன் எழுந்தருளி இருக்கின்றார் நரசிம்மர்.  அஹோபில மடத்தின் திருவாதாரன மூர்த்தி இவரே. தானே கனவில் வந்து  காட்சியளித்து சந்தேகம் தீர்த்தவர் இவர். அஹோபில மட ஜீயர் சுவாமிகள் தாங்கள் செல்லும் இடமெல்லாம் மாலோல நரசிம்ம உற்சவ மூர்த்தியை தங்களுடன் கொண்டு சென்று தினப்படி ஆராதனை செய்கின்றனர். மாலோல நரசிம்மர்  செவ்வாயினால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் போக்கி அருள்கின்றார். மனதில் ஏற்படும், சஞ்சலம், பயம் அனைத்தையும் போக்கி மனோ தைரியத்தை உண்டு பண்ணுகின்றார்.     ஸ்ரீக்ரோடா நரசிம்மர்: க்ரோடா என்றால் கோரைப்பல். வராக நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகின்றார். கோல வராகமாக தோன்றி   இரணியனின் தமையன் ஹிரண்யாக்ஷன் பாதாளத்தில் ஒளித்து வைத்த மண்மகள், தனது  பிராட்டியாரை தன் கோரைப் பற்களில் எந்தி வந்து தாயாருக்கு  சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அருகில் லக்ஷ்மி நரசிம்மரும் சேவை சாதிக்கின்றார். வராக நரசிம்மர் குருவால் ஏற்படும் சகல தோஷங்களையும் போக்குபவர். இயல், இசை, நாடகம் போன்ற சகல கலைகளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும் வல்லமை பெற்றவர். நீதித்துறை, வேதங்கள் ஆகியவற்றில் உயர்ந்திருக்கும் நிலையை அருளுவார்.   ஸ்ரீகாரஞ்ச நரசிம்மர்: காரஞ்ச என்றால் தெலுங்கில் புங்க மரம் என்று பொருள் அனுமன் செய்த தவத்திற்க்கு மெச்சி இராமனாக சேவை சாதிக்க   வனத்தில் சுயம்புவாக தோன்றிய நரசிம்மர். விஷ்ணுவாக அல்ல இராமனாகவே தரிசிக்க விரும்புகின்றேன் என்று அனுமன் வேண்ட, வில் அம்பு தாங்கி இராமராகவும், ஆதி சேஷன் குடை பிடிக்க வைகுண்ட நாதனாகவும்  சேவை சாதிக்கின்றார் பெருமாள்.  இராவண வதத்திற்காக  மெச்சி  பெருமாள் அனுமனை ஆலிங்கனம் செய்ததால் அனுமனின் கரங்களில்  சங்கு சக்கரங்கள் உள்ளன. கராஞ்ச நரசிம்மர் கேதுவினால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர். இவர் ஞானம், வைராக்கியம், தீவிர பக்தி ஆகியவற்றை அருளுவார். ஞானிகள், மருத்துவ மாமேதைகள் உருவாவதற்கும் இவரின் கடாட்சம் தேவை என்று சொல்லப் படுகின்றது. கருடாத்ரி மலையின் மேற்குப் பகுதியில் காரஞ்ச மரத்தினடியில் சேவை சாதிக்கின்றார்.   ஸ்ரீபார்கவ நரசிம்மர்: பார்கவர் என்ற முனிவரை எல்லாரும் அறிவோம், திருமகள் தன் குழந்தையாக வர வேண்டும் என்று தவம் செய்து ஸ்ரீயை மகளாகப் பெற்ற சிறப்புடையவர். இவர்  பெருமாளை நரசிம்ம மூர்த்தியாக தரிசிக்க வேண்டும் என்று தவம் செய்ய  தோன்றிய மூர்த்தி பார்கவ நரசிம்மர்.  கீழ் அஹோபிலத்தில் உள்ளது  இத்திருக்கோவில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. பார்கவ புஷ்கரணியும் குன்றின் அடிவாரத்தில் உள்ளது.  இரணியனை தன் மடியில் படுக்க வைத்து அவனது குடலை எடுத்து மாலையாகப் போடும் உக்ர நரசிம்மராக சேவை சாதிக்கின்றார் பார்கவ நரசிம்மர். மேலும் தசாவதார சேவையும் கொடுத்ததால் தாசாவதார அம்சங்களை பிரபையில்  சேவிக்கலாம்.  அருகில் கை கூப்பி பெருமாளின் கருணையை வியந்த வண்ணம் பிரகலாதன் நிற்கின்றான்.  இரணியனின் வலக்கரத்தில் அவனது வாளை காணலாம். பார்கவ நரசிம்மரைத் தரிசித்தால் சந்திரனால் ஏற்படும் சகல தோஷங்களும் விலகும் என்று சொல்கின்றார்கள். பாவங்கள் தொலைந்து மனதில் நிம்மதி உண்டாகும். கற்பனைத் திறன், கதைகள் எழுதும் ஆற்றல், கவிதை எழுதும் ஆற்றல், குடும்பத்தில் மனமகிழ்ச்சி, கவலை இல்லா மனம், நோயற்ற வாழ்க்கை, வெளிநாடு செல்லும் சந்தர்ப்பம் போன்றவை கிட்டும் எனச் சொல்கின்றனர்.      ஸ்ரீயோகானந்த நரசிம்மர்:  பிரகலாதனுக்கு குருவாக அமர்ந்து யோகநெறி கற்பித்த நரசிம்மர். ஆதி சேஷன் மேல் கால்களை மடக்கி யோக கோலத்தில் யோக முத்திரையில் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.  இரணிய வதம் முடிந்ததும், நரசிம்மரால் பிரகலாதனுக்குச் சில யோக முத்திரைகள்  கற்பிக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. அதன் ஒரு நிலையே இங்கு எழுந்தருளி இருக்கும் கோலம். தென் திசை நோக்கி நரசிம்மர் வீற்றிருக்கின்றார். மேற்கரங்கள் இரண்டும் சங்கு, சக்கரங்களோடும், கீழ்க்கரங்கள் இரண்டிலும், இரு கால்களிலும் யோக முத்திரைகள் காட்டியும் அமர்ந்திருக்கும் திருக்கோலம். புதன் கிரகத்தால் ஏற்படும் சகல பாவங்களையும் தோஷங்களையும் போக்கும் வல்லமை கொண்டவர். பக்தப்பிரகலாதனுக்கு யோக குரு. வேதாத்திரி மலையின் மேற்குப்பகுதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவர் சன்னதி அருகில் அன்னதானக்கூடம் உள்ளது. அக்கூடத்தில் 24 மணி நேரமும் அன்னதானம்  நடந்து கொண்டிருக்கின்றது. காசி ரெட்டி அன்னதாதா கட்டிய யோக நரசிம்மர் சன்னதியும், இராமர் சன்னதியும்  அருகில் உள்ளன.       ஸ்ரீசத்ரவட நரசிம்மர்: சத்ரம் என்றால் குடை,  வடம் என்றால் ஆலமரம்.  ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில்  ஆனந்தமாக அமர்ந்து  ஹாஹா ஹூஹூ என்னும் இரு கந்தவர்களின் இனிமையான சங்கீதத்தை செவி மடுத்துக் கொண்டு சேவை சாதிக்கும் சாந்த நரசிம்மர். பத்மாசனத்தில் அமர்ந்து கந்தவர்களின் இசைக்கேற்ப இடது தொடையில் தாளம் போடும் கோலத்தில் சங்கு, சக்கரங்களைத் தரித்துக் கொண்டு. வலதுகீழ்க்கரம் அபய முத்திரையுடன்  அற்புதமாக சேவை சாதிக்கின்றார் பெருமாள், அவரது சிரிப்பு நம்மை வா என்று அழைத்து நலம் விசாரிக்கும் கோலமாக உள்ளது. கந்தர்வர்கள் இருவரும் பெருமாளின் கொந்தளிக்கும் கோபம் தணிய இசை பாடிக்கொண்டிருப்பதாக ஐதீகம்.   நவ மூர்த்திகளிலும் பெரிய மூர்த்தி இவர்தான். இச்சத்ரவட நரசிம்மர் சூரியனால் ஏற்படும் சகல தோஷங்களையும் போக்கும் வல்லமை கொண்டவர் எனச் சொல்கின்றார்கள். நாட்டின் தலைமைப் பதவி, மற்றவர்களுக்கு ஆணையிடும் அதிகாரம், நீதிபரிபாலனம் போன்றவற்றைத் தவறாமல் செய்யும் வல்லமை போன்ற சிறப்புகளை வழங்கும் பெருமை கொண்டவர்.   ஸ்ரீபாவன நரசிம்மர்: நம்முடைய வினைகளை தீர்த்து இந்த பவசாகரம் என்னும் சுழலில் இருந்து நம்மை கரையேற்றி இப்பிறவிப் பிணியிலிருந்து நம்மை காப்பாற்றுபவர். மாலோல  நரசிம்மர் போல லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிப்பவர். லக்ஷ்மித்தாயார் செஞ்சு லக்ஷ்மி, ஆம்  மால் மருகன்,  முருகன் வேடர் குலப் பெண் வள்ளியை திருமணம் செய்து கொண்டது போல  செஞ்சு இனத்தில்  பிறந்த பெண்ணை திருக்கல்யாணம் செய்து கொண்ட பெருமாள். தனியாக உயர்ந்த மலையில் கோவில் கொண்டுள்ளார். இன்றும் வேடர் குல மக்கள் தங்கள் குல வழக்கப்படி சனிக்கிழமை தோறும் தாயாருக்கு  மாமிசம் படைத்து வழிபட அதை ஏற்றுக் கொண்டு அருள் கொடுக்கும் பெருமாள். இப்பாவன நரசிம்மரைத் தரிசித்தால் ராகுவால் ஏற்படும் தோஷங்கள் விலகுகின்றன. தேவையற்ற கற்பனைகள், கெட்ட எண்ணங்கள், கொடுங்கோலாட்சி மற்றும் இஷ்டத்துக்கு நடப்பது போன்ற கெட்ட குணங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர்.   இந்நவநரசிம்மர்கள் அல்லாது கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதர், சாந்த நரசிம்மர், என்னும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயமும் உள்ளது. மூன்று பிரகாரங்கள்,  புஷ்கரணி, ஜெயஸ்தம்பம் என்று விஸ்தாரமாக அமைந்துள்ளது இத்திருக்கோவில்.   இவ்வாறு பெருமாள் பிரகலாதனுக்காக தூணிலிருந்து வெளி வந்த உக்ர ஸ்தம்பம்,  இரணியன் வதம்,  இரத்தம், ஆக்ரோஷம்,  அடங்காமல் கர்ஜனை செய்தது பின் பிரகலாதனுக்காக சாந்த நரசிம்மராக சேவை சாதித்தது, செஞ்சு இனப் பெண்னைக் திருமணம் செய்து கொண்டு மாப்பிள்ளைக் கோலத்தில் அருள் பாலித்தது,  என்று எல்லா கோலங்களிலும் இத்திவ்ய தேசத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.   மற்றும் பிரகலாதன் படித்த பள்ளி, அவன் எழுதிய மந்திரங்கள் ஆகியவற்றையும் தரிசிக்கலாம்.  இதுவரை அஹோபில திவ்ய தேசத்தின் பெருமையையும் அதில் எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமான்களையும் பற்றி சுருக்கமாக கண்டோம். இனி இந்த அற்புத திவ்ய தேசத்தை யாத்திரை செய்யும் அனுபவத்தை பற்றிக் காண்போம் அதற்கு முன் ஸ்ரீமந்நாராயணன் ஐவகை நிலைகளில்  அருள் பாலிக்கும் அழகை  காண்போமா?     அத்தியாயம் - 2 எம்பெருமானின் ஐவகை நிலைகள் 1.பரத்துவம்: ஸ்ரீவைகுண்டத்தில் திருமகளும் தானுமாக, அயர்வறும் அமரர்களான அனந்தன், கருடன், சேனை முதலியார் போன்ற நித்ய சூரிகள் தன்னை வழிபட்டு பணிவிடை செய்து மகிழுமாறு திருவோலக்கம் இருக்கும் நிலையே பரத்துவம் ஆகும், ஆதி சேஷனில் பெரிய பிராட்டி, வலமும், மண்மகளும், நீளாதேவியும் இடப்புறமுமாக வீற்றிருக்க பரவாசுதேவனாய் எழுந்தருளி அருள் பாலிக்கும் நிலை. “ஆதியஞ்ஜோதி உரு” என்பார் சுவாமி நம்மாழ்வார். நீர் வேட்கை உடனே நீக்கிக் கொள்ள விரும்பும் ஒருவனுக்கு அண்டத்திற்கு வெளியே உள்ள ஆவரண ஜலம் எவ்வாறு பயன்படாதோ அது போன்றது இது என்பார் பிள்ளை லோகாச்சாரியார். “ஆவரண ஜலம் போல பரத்வம்”. 2.வியூகம்: வைகுந்தத்தை காட்டிலும் அருகில் உள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களை நிறைவேற்றும் பொருட்டு அன்பர்களுக்கு வீடுப்பேற்றை அளிக்கவும், உலகியல் இன்பங்களை விரும்பி வாழ்வோர்க்கு அவர்களுடைய பகை அழித்து அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற பரவாசுதேவனே, வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு மூர்த்திகளாக எழுந்தருளியுள்ள நிலை. பாற்கடலில் யோக நித்திரை செய்து உயிர்களைக் காப்பது கருதி சித்திக்கும் நிலை.கூக்குரல் இடுவோரின் குரலுக்கு செவி கொடுத்து கேட்கும் இடம் இது என்பதால் “கூப்பிடு கேட்கும் இடம்” என்றார் பிள்ளை லோகாச்சாரியார். மணவாள மாமுனிகளும் “சீரார் வியூகமுமாய்” என்றார். கடல் அருகில் இருந்தாலும் அந்நீர் அவனுக்கு எவ்வாறு பயன்படாதோ அது போன்று இப்பாற்கடல் இருப்பு. நமக்கு உடனடியாக பயன் கொடுக்கும் நிலை இல்லாதது என்பதே “பாற்கடல் போலே வியூகம்”. 3.விபவம்: அவதாரங்களை குறிக்கும். தீயோரை அழித்து நல்லோரைக் காத்து அறத்தை நிலை நாட்டும் குறிக்கோளுடன் இறைவனால் எடுக்கப் பெறுபவை அவதாரங்கள். இவை நிகழ இறைவனின் விருப்பமேயாகும். “துய்ய விபவமுயாய்” என்பார் மணவாள மாமுனிகள். “ நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுள்ளே” என்றபடி அந்த அவதார காலங்களில் வாழும் பேறு பெற்றோர் பெற முடியுமேயொழிய மற்றவர் அந்தப்பயன்களை பெற முடியாது என “பெருக்காறு போல விபவங்கள்” என்றார் பிள்ளை லோகாச்சாரியார். 4.அந்தர்யாமித்வம்: ஆன்மாவினுள்ளே புகுந்து அனைத்து செயல்களையும் ஏவுகின்றவனாய் இருக்கும் இருப்பை அந்தர்யாமித்வம் என்றார் பிள்ளை லோகாச்சாரியார். இறைவன் தன் இயல்பினால் ஆன்மாக்களின் உள்ளே மறைந்து அவர்களை தூண்டி வாழ்தல் ஒரு நிலை. மற்றொன்று தன் அழகிய வடிவுடன் ஆன்மாக்களின் உள்ளத்தில் திகழ்ந்து அவர்களை தூண்டி வாழ்தலாகும். “பூதக ஜலம் போலே அந்தர்யாமித்துவம்” அதாவது நிலத்தடி நீர். தோண்டு கருவிகளைக் கொண்டு முயன்று உழைத்த பிறகு அன்றோ நிலத்தில் மறைந்துள்ள நீரை வெளிக் கொணர முடியும். அது யோக முறையில் அகக் காட்சியின் வாயிலாகத் தான் உள்ளுறை அழகனைக் காண முடியும். 5.அர்ச்சாவதாரம்: கோயில்களிலும், இல்லங்களிலும் எழுந்தருளி இருக்கும் நிலை. ஓர் உருவமோ பெயரோ இன்றி தன் அடியார்கள் விரும்பிய உருவத்தை தன் உருவமாகவும் அவர்கள் விரும்பிய பெயரையே தன் பெயராகவும் கொண்டு எளிமைக்கு எல்லை நிலமாக இருப்பதே அர்ச்சை நிலையாகும். அனைத்தும் அறியவல்ல முற்றறிவினனாய் தான் இருந்தும், ஒன்றும் அறியாதானைப் போன்றும், அனைத்தையும் இயற்றவல்ல ஆற்றலுடையவனாய் இருந்தும், இயலாதவனைப் போன்றும், நிறைவானவனாய் எக்குறையும் இல்லாமலிருந்தும் கொடுப்பாரிடம் ஒன்றை எதிர்நோக்கும் இயல்புடையான் போன்றும், அனைத்து உலகையும் காப்பவனாய் இருந்தும் அடியவரால் காக்கப்பெறுபவன் போன்றும், உடையவனாய் இருப்பவன் உடமையாய் மாறியும் தன்னைத் தாழ விட்டுக் காக்குமிறை நிலையின் பெருநிலையே இது. பிள்ளை லோகாச்சாரியார் “பரமபதத்துள் எம்பெருமானின் பண்புகள் பகல் விளக்குப் போலே ஒளி மழுங்கி இருக்கும் என்றும், அர்ச்சாவதரத்தில் இருட்டறையில் விளங்கும் விளக்குப் போலே பேரொளி பெற்று விளங்கும் என்றும் கூறினார். நீர் வேட்கை கொண்டவனின் விடாய் தீர உடன் பருகக் கூடிய அளவில், நீர் தேங்கி இருக்கும் மடுக்கள் போன்று மற்ற நான்கும் போல அரியனவாக இல்லாமல் மிக எளிமையாக அர்ச்சாவதாரமே பயன்படுகிறதாம், “அதிலே தேங்கிய மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்” என்றார். ஐந்து நிலைகளுக்கும் உரியவன் ஒருவனே: ஒரே அரசன் நாளவையில் கோப்புடைய சீரிய சிங்காதனத்தில் அண்டங்கள் அனைத்துக்கும் அரசனாய் பரமபதத்தில் விற்றிருக்கின்றான். அதே அரசன் மாறு வேடம் பூண்டு யாரும் அறியாமல் நகர சோதனை வரும் போது அனைவர் உள்ளத்திலும் அந்தர்யாமியாக உள்ளான். பின் அதே மன்னன் அரசியல் அலுவல்களை சிந்தித்து பாற்கடலில் அரவணையில் அரிதுயில் கொண்டுள்ளான். பின் தீய விலங்குகளை வேட்டையாடுவது போல, பக்தர்களைக் காப்பதற்காக அவதாரங்கள். பின்பு அம்மன்னன் தன் களைப்பு தீர தன் தேவியுடன் மலர் சோலைகளில் விளையாடுதல் 108 திவ்ய தேசங்கள் என்கிற சோலைகளில் அர்ச்சை நிலையில் விளங்குகிறார் என்கிறார் மணவாளப் பெருமாள். இவ்வாறு அஹோபிலம் என்னும் மலர்ச்சோலையாம் திவ்ய தேசத்தில், தசாவதாரம் போல தசவித விபவ நரசிம்ம ரூபத்தில் அச்சாவதார மூர்த்தியாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் எம்பெருமானின் யாத்திரைத் தொடங்குவதற்கு முன் அவருடைய இன்றியமையா பண்புகளைப் பற்றி பிள்ளை லோகாச்சாரியார் என்ன கூறியுள்ளார் என்று காண்போமா? அத்தியாயம் - 3 எம்பெருமானின் இன்றியமையா பண்புகள் 1.வாத்சல்யம்: தாய் அன்பு . ’வத்சம்’ என்றால் ஆவின் கன்று. கன்றின் மேல் தாய்ப்பசு கொள்ளும் அன்பே “வாத்சல்யம்”. இறைவன் தன்னை அடைந்த அடியார்களின் குற்றங்களை குணமாகக் கொண்டு அவரை உயர்த்தும் நிலையே வாத்சல்யம். “ குற்றங் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம்” (முமுட்சு) 2, சுவாமித்துவம்: இறைவனாகிய தன்னைப் பற்றாமல் உலகியல் வாழ்வை பின் பற்றி வாழும் ஒருவனை விடாது பின் தொடர்ந்து சென்று, தன் கடமையாகிய அவனை காப்பது உடையவரின் பண்பு. “காரியம் செய்யும் என்று துணிகைக்கு சுவாமித்துவம்”. 3.ஸௌசீல்யம்: இராமாவதாரத்தில் “ஏழை, ஏதலன், கீழ் மகன் என்னாது இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து” என்றபடி குகனுடன் இராமன் கொண்ட உறவு இதற்கு சான்று. தன்னை அடைந்தவனின் இழித் தன்மையையும் பாராமல் அவனுடன் வேறுபாடு இன்றி கலந்து உறவாடும் நிலையே சௌசீல்யம். “சுவாமித்துவம் கண்டு அகலாமையே சௌசீல்யம்” 4.சௌலப்பியம்: காண்பதற்கு இயலாத தன் உருவை யாரும் காணுமாறு செய்தருளும் எளிமைப் பண்பே இங்கு சௌலப்பியம் எனப்படும். இராம கிருஷ்ண அவதாரங்களையும், எளிமைக்கு எல்லையான அர்ச்சாவதாரத்தையும் இந்த நிலைக்கு சான்றுகளாகக் கொள்ளலாம். இதனை “கண்டு பற்றுகையே சௌலப்பியம்”. 5.ஞானம்: ஆன்ம கோடிகள் இது வரையில் பெற்ற துன்பங்களையும் அதற்கான காரணங்களையும் அந்நிலையினின்று அவ்வுயிர்களை காக்கும் வழிமுறைகளையும் அறியும் அறிவே ஞானம் எனப்படும். 6.சக்தி: தன்னை அடைந்த உயிர்க் கூட்டங்களின் குற்றங்களை நீக்கி குணமுள்ளவர்களாக மாற்றி அவர்களை ஆட்கொண்டு காத்தற்குரிய ஆற்றலே ’சக்தி’ எனப்படும். ஞானம் சக்திக்கு விளக்கமாக “விரோதியைப் போக்கி தன்னை கொடுக்கைக்கு ஞான சக்தி”. இவ்வாறு சௌலப்பியத்தின் எல்லை நிலமாக பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுக்க காரணமாக இருந்த இரணியகசிபுவின் விருத்தாந்ததை முதலில் காண்போம். அத்தியாயம் -4 நரசிம்ம அவதாரம் நஞ்சு தாம் நம் வினைக்கு நாராயணா என்னும் நாமம், நலம் தரும் சொல் என்றெல்லாம் சிறப்பித்து ஆழ்வார்கள் பாடிய எட்டெழுத்து மந்திரமான “ஓம் நமோ நாராயணா” என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம். பிரகலாதனின் அசஞ்சல பக்தியை உணர்த்திய அவதாரம் நரசிம்ம அவதாரம் இது நடந்தது இந்த அஹோபில ஷேத்திரத்தில் இப்போது மலையாக உள்ள இடம் தான் இரணியனின் கோட்டையாக இருந்தது. இன்றும் பெருமாள் தோன்றிய தூண் உக்ர ஸ்தம்பமாக விளங்குகின்றது. பிரம்ம தேவரின் மானச புத்திரர்களான சனகாதி முனிவர்கள் சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர் ஆகிய நான்கு பேர்களும் எங்கு வேண்டுமென்றாலும் தடையற்று செல்பவர்கள். அவர்கள் ஒரு சமயம் வைகுண்டம் வந்த போது வைகுண்டத்தின் துவார பாலகர்களான ஜெய, விஜயர்கள் அவர்களை தடை செய்தனர். அதனால் கோபம் கொண்டு சனகாதி முனிவர்கள் இவர்களை சபித்து விட்டனர். "எதிலும் ஆசையற்றுப் பகவானையே தியானம் செய்யும் எங்களை காரணமின்றி ஏன் தடுத்தீர்கள்? கெட்ட அபிப்பிராயத்துடன் வருபவர்களைத் தடுப்பதற்கன்றோ உங்களை இந்த ஸ்தானத்தில் வைத்திருப்பது? குற்றமற்ற எங்களை நீங்கள் தடுத்தபடியால் பெரிய பாவம் செய்தவர்களாகிவிட்டீர். எனவே அசுரப் பிறவியை அடைந்து துன்புற வேண்டும்" என்று சபித்தனர். பின் பெருமாளே ஏழு பிறவிகள் எனது பக்தர்களாகவோ அல்லது மூன்று பிறவிகள் எனக்கு எதிரிகளாகவோ பிறந்து பின் வைகுண்டம் வந்தடையலாம் என்று கூற இருவரும் மூன்று பிறப்புகளில் பெருமாளுக்கு எதிரியாக பிறக்க விருப்பம் தெரிவிக்க முதல் பிறப்பில் இரணியாக்ஷன், இரணியகசிபு ஆகவும், இரண்டாவது பிறப்பில் இராவணன் கும்பகர்ணனாகவும், மூன்றாவது பிறப்பில் சிசுபாலன் தந்தவக்ரன் எனப் பிறந்து பெருமாள் கரத்தாலேயே வதம் செய்யப்பெற்று சாப விமோசனம் அடைந்து முன் போல வைகுண்டத்தின் துவார பாலகர்களாக பெருமாளுக்கு சேவை செய்து வருகின்றனர். காச்யபருக்கு இரு மனைவிகள் அதிதி மற்றும் திதி, இதில் அதிதி மஹாவிஷ்ணுவையே மகனாக பெற வேண்டும் என்று கடும் தவம் செய்து வந்தாள். ஆனால் திதியோ தேவர்களையும் வெல்லும் மகன்கள் வேண்டும் என்று சூரியன் மறையும் நேரத்தில் தன் மணாளனை கூட அழைக்க, விதியின் வழிப்படியே எல்லாம் நடக்கும் என்று காச்யபர் சம்மதிக்க பிறந்தவர்களே இரண்யாக்ஷன் மற்றும் இரணியகசிபு. அசுரர்களான அவர்கள் உலகத்தை நடுங்க செய்தனர். பயங்கரமான ரூபத்தை பெற்றனர். தேவர்களைக் கலங்க செய்தனர். பிரம்மாவை தவத்தினால் ஆராதித்தனர். அவர் கொடுத்த வரத்தினால் கர்வம் கொண்டனர். ஹிரண்யாக்ஷன் மிகவும் பலவானாக இருந்தான் ஒரு சமயம் ஆணவத்தினால் பூமி தேவியை எடுத்து சென்று பாதாளத்தில் ஒளித்து வைத்துவிட பெருமாள் வராகரூபம் எடுத்து அவனைக் கொன்று பூமிதேவியை மீட்டார் .. இரணியகசிபு மிக்க புத்திமானாக இருந்து, பிரம்மாவை ஆராதித்து வரம் பெற்று, எல்லோரையும் அடக்கினான். அவனது பலத்தைக் கண்டு அனைவரும் அஞ்சினர். அவன் மூன்று லோகத்தையும் வென்றான். தேவர்களையும் அசுரர்களையும் கந்தர்வர்களையும் அடக்கி ஆண்டான். ஆணவம் கொண்ட அவுணன் சொன்னான் -- "நானே ஈச்வரன், எல்லாப் போகங்களையும் நானே அநுபவிப்பவன். சித்தியைப் பெற்றவனும் நானே. மிக்க பலம் கொண்டவனும் நானே. விஷ்ணு, பிரம்மா, சிவன் எல்லாம் நானே. படைப்பதும், காப்பதும், அழிப்பதும் எல்லாம் என்னுடைய தொழில். நமக்கு எல்லாவிதத் திறமை இருக்க பிறரை ஏன் துதிக்க வேண்டும்? மற்றொரு தேவதையை முன்னிட்டு அக்னிஹோத்ரம் முதலியவற்றை செய்ய வேண்டாம். வேதாத்யயனம், வஷட்காரம், வேள்வி முதலியவற்றை யாரும் செய்யக்கூடாது. என்னை உத்தேசித்தே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். வேள்விகளில் கொடுக்கும் ஹவிர்பாகத்தை நானே பெறுவேன். பயனைக் கொடுப்பவனும் நானே. பகவானையோ, நான்முகனையோ, பரமசிவனையோ ஆராதிக்க விரும்பி வேள்விகளைச் செய்பவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று. கொக்கரித்தான்" இப்படி சொல்லி, இந்த அசுரன் பூமி அனைத்தையும் ஆண்டு வந்தான். இவனது பயத்தால் தேவதைகளும், இந்திரனும் மனம் கலங்கித் தங்கள் குருவான பிருகஸ்பதியை சரணமடைந்தனர். குலகுருவான பிருகஸ்பதி இந்திரனை பார்த்து "பாற்கடலின் கேசவன் எழுந்தருளியிருக்கிறார். அந்த மகாவிஷ்ணுவை நீங்கள் எல்லோரும் சேர்ந்து துதிப்பீர்களாக. உங்களது துதிக்கு மகிழ்ந்து அவர் அந்த அசுரனை கொல்ல வழி வகுப்பார்" என்றார். தேவர்கள் இதை கேட்டு சந்தோஷித்து பாற்கடலுக்கு சென்றனர். பலவிதமான ஸ்தோத்திரங்களினால் பகவானை பூஜித்தார்கள். பரமசிவனும் மிக்க பக்தியுடன் பகவானான ஜனார்த்தனனை புண்ணிய நாமங்களை கொண்டு ஸ்தோத்திரம் செய்தார். இரணியகசிபுவை நான் ஸம்ஹரிக்கிறேன். தேவர்களும் அவரவர்களின் இடத்தை அடையட்டும். தேவசத்ருவான அந்த அசுரனை ஸம்ஹரிக்க நான் வழி வகுக்கிறேன்" என்று பெருமாள் அபயம் அளித்தார். தேவர்களும் மகிழ்ச்சியுடன் தங்கள் லோகம் திரும்பினர்.. இரணியனுக்கு நான்கு புதல்வர்கள் உண்டானார்கள். அநுக்ஹ்லாதன், ஹ்லாதன், ஸம்ஹ்லாதன், பிரஹ்லாதன் என்று. சரீர பலத்தாலும், மனோ பலத்தாலும், மற்றக் குணங்களாலும் இவர்கள் உயர்ந்தவர்களாக இருந்தனர். பிரகலாதன் இவர்களில் எல்லா விதத்திலும் மேன்மை பெற்றவன்; தர்மம் அறிந்தவன், நீதி மார்க்கத்தில் செல்பவன், அசுர வம்சத்தை மேல் மேல் சந்ததிகளால் வளர்த்தவன். எல்லோரிடத்திலும் சமமான பற்றுதலை உடையவன். பகவானிடத்தில் பக்தியை செலுத்துபவன். அவன் பால்யத்திலேயே விவேகமுள்ளவனாக இருந்தான். இவன் கயாதுவின் கர்பத்தில் இருந்த போதே நாரத முனிவர் இவனுக்கு அஷ்டாக்ஷர மந்திர உபதேசம் அளித்து சிறந்த ஹரி பக்தனாக மாற்றி இருந்தார். எனவே அவன் குரு சொல்வதை பின்பற்றவில்லை, எப்போதும் ஹரி நாமத்தையே ஜபித்துக் கொண்டிருந்தான் , மற்ற ஆசிரம பிள்ளைகளையும் அவ்வாறே மாற்றினான். சில காலம் சென்றதும் குருவுடன் பிரகலாதன் தந்தையின் வீட்டிற்குச் சென்றான்; குடிவெறியினால் மதம் பிடித்த தந்தையின் கால்களில் விழுந்து வணங்கினான். தந்தை புதல்வனைக் கைகளால் அணைத்து நிற்க வைத்தான். பிறகு தர்மம் அறிந்த பிரகலாதனைப் பார்த்து, "குழந்தாய்! இது வரையில் உன் ஆசார்யன் கற்பித்த விஷயங்களில் எது மிகவும் சாரமானதோ அதை எனக்கு சொல்ல வேண்டும்" என்று கேட்டான். பிரகலாதன், "தந்தையே! உமது உத்தரவின் பேரில் நான் அறிந்த சாரத்தைக் கூறுகிறேன். வெகு நாளாக என் மனத்திலேயே நிலையாக இருந்து வந்தது இதுதான். ஆதியும், நடுவும், அந்தமும் இல்லாததும், அழிவற்றதும், ஏற்றச் சுருக்கம் இல்லாததும், எல்லா உலகத்துக்கும் முதற் காரணமுமானதும், எப்பொழுதும் ஆனந்த ரூபமுமான பரப்ரஹ்மத்தை வணங்குகிறேன்." என்றான். இதைக் கேட்டதும் இரணியன் கோபத்தால் கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, எதிரில் வணக்கத்தோடு நின்ற குருவைப் பார்த்து, "ஆசார்யரே! என்ன அநியாயம்? மூடனான என் புதல்வன் எனக்கு எதிரியான ஹரியின் நாமத்தை சொல்லி புகழ்கிறானே! எப்பொழுதும் சிறு குழந்தைகள் அறிவில்லாமையால் மூடர்களாக இருப்பர். உம்மால் சிக்ஷிக்கபட்டு அவன் பெருமூடனாகிவிட்டான்" என்றான். அதற்கு குரு அசுரசிரேஷ்டரே! காரணமில்லாமல் என்னிடத்தில் கோபம் கொள்ள வேண்டாம். நான் பள்ளியில் சொல்லும் வார்த்தைகளில் எதையும் உமது புதல்வன் சொல்வதில்லை என்றார். எனவே இரணியன், ப்ரஹ்லாதனே! உன் குரு என்னால் கற்பிக்கப் பட்டதன்று இந்த வார்த்தை என்கிறார். அப்படியிருக்க யார் உனக்கு இதை கற்பித்தது? என்று கேட்க அதற்கு பிரகலாதன் எல்லா உயிர்களுடைய உள்ளத்திலும் பகவானான நாராயணன் வாசம் செய்கிறான். அந்த பரம்பொருளைத் தவிர வேறு யாரால் எவன்தான் கற்பிக்கப்பட முடியும்? அந்த பகவானை விட்டு எவனும் ஒருவராலும் பூஜிக்கப் பெறமாட்டான். அவனை அல்லவா நாம் ஆராதிக்க வேண்டும்? என்று பதிலளிக்க, இரணியன் மூவுலகுக்கும் ஈச்வரனாக நான் இருக்க, என்னை விட்டு விஷ்ணு என்று ஒருவன் உள்ளதாக ஏன் வீணாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என்று ஆணவமாக கூறுகின்றான். அதற்கு பிரகலாதன் ஸூக்ஷ்மம் அறிந்தவனும், எங்கும் பரவியவனும், ஒருவராலும் அறியப்படாதவனும், தன்னையே தரும் கற்பகம் போன்றவனும் சொற்களால் சொல்லப்படாதவனும் உலகங்கள் எல்லாவற்றிலும் பரந்து இருப்பவனுமான பகவானே மகாவிஷ்ணு. அவன் தான் ஈச்வரன். கோபம் கொண்டு குருவை மிரட்டிய இரணியன் மீண்டும் குருகுலம் சென்று சரியாக கற்று தருமாறு அனுப்பினான். வெகு காலம் சென்றது. இரணியன் தன் புதல்வனை அழைத்து வரச் சொன்னான். புத்திரனைக் கண்டதும் "ஓர் அழகிய சுலோகத்தைச் சொல்" என்று கேட்டான். பிரகலாதன் சொல்லத் தொடங்கினான் எவனிடமிருந்து பிரகிருதி, ஜீவாத்மா, பிரபஞ்சம் உண்டாயிற்றோ, அந்த தேவன் எல்லாவற்றுக்கும் காரணப் பொருள். அவன் அருள்புரிய வேண்டும். இதைக் கேட்ட இரணியன் கடுஞ்சினம் கொண்டு "இவனை கொல்லுங்கள்! இவனது பிழைப்பு வீண். தன் குலத்தையே அழிக்கக் கூடியவன் இவன்" என்றான். இதைக் கேட்டதும் அசுரர்கள் ஆயிரக் கணக்கில் ஒன்று சேர்ந்து, நெருப்பை உமிழ்கின்ற பல அம்புகளை வீசினர். ஆனால் எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக விஷ்ணு இருப்பதால் அவையெல்லாம் பிரகலாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலும் கோபம் கொண்ட இரணியன் கொடிய விஷம் நிறைந்த நாகங்களை விட்டு பிரகலாதனை தீண்டச் செய்தான். வேதாத்மாவான கருடன் மேல் அமர்ந்துள்ள மகாவிஷ்ணுவை பிரகலாததன் தியானித்தான். பாம்புகளால் ஏற்பட்ட பயங்கரமான வேதனையயும் அவன் அறியவில்லை. நாகங்கள் இரணியனை பார்த்து, "எங்களுடைய இதயத்தில் தாபம் உண்டாயிற்று. பற்கள் சிதறி விழுந்தன. உன் புதல்வனில் உடம்பில் நாங்கள் கடித்த அடையாளமே தெரியவில்லையே! என்றன. பிறகு தேவ விரோதியான இரணியன் அனுப்பிய மதயானைகள் மலைகளில் உச்சிகளிலிருந்து பிரகலாதனைப் பூமியில் தள்ளின. பயங்கரமான தந்தங்களை கொண்டு அந்த சிறுவனை குத்தின. கோவிந்தனிடத்தில் மனத்தை செலுத்திய பிரகலாதன் இதனால் சிறு கஷ்டத்தையும் அடையவில்லை. யானையின் தந்தங்கள் உடைந்தன. தந்தை இரணியனை பார்த்து பிரகலாதன் "எல்லோருக்கும் ஆத்மாவான பகவானின் பிரபாவத்தால் இவையெல்லாம் ஏற்பட்டன. வஜ்ராயுதம்போல் மிகக் கூர்மையான யானைத் தந்தங்கள் உடைந்து விழுந்தன. இதற்கு நான் காரணமன்று" என்றான். பின் மூர்க்கனான இரணியன். பிரகலாதனை நெருப்பில் இட்டான். அதில் தள்ளப்பட்ட குழந்தை, தகப்பனை பார்த்து, "இந்த நெருப்பு என்னை கொளுத்தவில்லை, தாமரை மலர்கள் பரப்பின படுக்கையில் நான் அமர்ந்திருக்கிறேன்" என்றான். இதனால் அசுரன் கோபத்தால் சிவந்த கண்ணினனாய் சமையற்காரர்களை அழைத்து, "ஹாலஹால விஷத்தோடு சேர்த்து அவனுக்கு அன்னத்தைக் கொடுங்கள். யமலோகம் சென்று விடுவான்" என்றான். அப்படி அவர்கள் கொடுத்த அன்னத்தை பிரகலாதன் பகவானை மனத்தில் நினைத்துக் கொண்டு சாப்பிட்டான். அதுவும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதைக் கேட்ட அசுரன் புரோகிதர்களைப் பார்த்து "பெரும் பூதத்தை உண்டு பண்ணி இவனை அழியச் செய்யுங்கள்" என்றான். புரோகிதர்கள், மிக்க அடக்கம் கொண்ட பிரகலாதனிடம் "நீ உயர்ந்த குலத்தில் பிறந்துள்ளாய். உன் தகப்பனோ எல்லோருக்கும் அரசர். அற்பமான பலத்தையுடைய தேவர்களோ, மகாவிஷ்ணுவோ, பரமசிவனோ இந்த அரசரிடத்தில் என்ன செய்ய முடியும்? ஆகவே விரோதியான விஷ்ணுவைத் துதிக்காதே" என்றனர். . பிரகலாதன், "நீங்கள் சொல்லுவது உண்மையல்ல. மகாவிஷ்ணு என்ன செய்ய முடியும் என்று நீங்கள் கூறியது உண்மையாகாது. நம் அனைவருக்கும் நன்மையையோ, தீமையையோ அவன் ஒருவன்தானே உண்டு பண்ணுகிறான்? அறம், பொருள், இன்பம், வீடு என்ற பலன்களை அனைவர்க்கும் அளித்து காப்பாற்றுகிறவன் அனந்தன் ஒருவனே. என்றான். இதைக் கேட்டு கோபமடைந்த புரோகிதர்கள் நான்கு பக்கங்களிலும் நெருப்பைக் கக்கும் பெரும் பூதத்தை உண்டு பண்ணினார்கள். பயங்கரமான அந்த பூதம் மூன்று உலகத்தையும் அழிக்கும் தன்மையில் கிளம்பி கூரிய சூலத்தால் பிரகலாதனை அடித்தது. பிரகலாதனது சரீரத்தில் நுழைந்த சூலமும் பயனற்றதாகி விட்டது. சூலமும் உடைந்தது. இரணியனும் ஆச்சரியமடைந்து "பிரகலாதனே! நீ மிக பிரபவசாலியாக இருக்கிறாய். இது எப்படி உனக்கு உண்டாயிற்று?" என்று கேட்டான். பிரகலாதன் தந்தையின் காலில் விழுந்து வணங்கி "எனக்கு இது இயற்கையாக உண்டானதுமல்ல; மந்திரத்தால் ஏற்பட்டதுமல்ல. எல்லோருக்கும் இது பொதுவாக உண்டாகக் கூடியதே. எவனுடைய ஹ்ருதயத்தில் கேசவன் வாஸம் செய்கிறானோ அவனுக்கு இது உண்டாகக் கூடியது . எந்த உயிரினிடத்திலும் நாம் பாவச் செயலை நினைக்கக் கூடாது. அப்படி உள்ளவனுக்கு பாவமே ஏற்படாது. நான் பிறர் குற்றங்களையும் பிறரிடத்தில் தீமையையும் நினைப்பதில்லை. எல்லா இடத்திலும் உள்ள பகவான் ஒருவனையே தியானம் செய்கிறேன். அவன் எல்லோருக்கும் ஈச்வரன். அவன் எல்லாப் பூதங்களிலும் வாசம் செய்கிறான். பண்டிதர்கள் அவனிடத்தில் பக்தி செய்ய வேண்டும்" என்றான். இதைக் கேட்டு, மாடியின் மேல் உள்ள இரணியன், கண்களால் இரத்தத்தைக் கக்கிக் கொண்டு, "நூறு யோஜனைக்கு மேல் உள்ள இந்த மாடியினின்றும் இவனைக் கீழே தள்ளுங்கள்" என்றான். அப்படியே கிங்கரர்கள் செய்தனர். ஹ்ருதயத்திலே வாசம் செய்கிற பகவானை கைகளால் பிடித்துக் கொண்டு பிரகலாதன் கீழே விழுந்தான். பூமி தேவி அவனுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாதபடி தாங்கிக் கொண்டாள். புதல்வனுக்கு ஓரிடத்திலும் அடிபடாமல் அபாயமில்லாமல் இருப்பதை அறிந்த அசுரன், சாம்பரன், என்ற அசுரனை ஏவினான்: "நீ பெரிய சக்தியுள்ளவன். ஆயிரக்கணக்கான மாயைகளை உண்டு பண்ணுகிறவன். என் புதல்வனையோ ஒருவனும் ஜெயிக்க முடியாது. இவன் திறத்தில் உன் வலிமையைக் காட்ட வேண்டும்" என்றான். இதைக் கேட்ட சம்பரன், "என் மாயா பலத்தைப் பார். ஒன்று ஆயிரம் கோடி என்ற கணக்கில் மாயைகளை படைத்து இவனை யமலோகம் அனுப்புகிறேன்" என்று சொல்லி பல மாயைகளை ஸ்ருஷ்டித்தான். இதைக் கண்ட பிரகலாதன் தன்னை நலிய வந்த அசுரனிடத்திலும் கோபம் கொள்ளாமல் பரிசுத்தமான மனத்துடன் பகவானைத் தியானம் செய்தான். பகவான் ஆயிரம் சூரியர்களின் ஒளியைப் பெற்றதும், ஆயிரம் முகங்களையுடையதும், ஹாரம் கேயூரம் முதலிய ஆபரணங்களைப் பெற்றதும், ராக்ஷஸர்களை அழிப்பதும், பெரும் ஓசை கொண்டதும், துஷ்டர்களைத் தீய கண்களால் பார்ப்பதும், வணங்கினவர்களின் கஷ்டத்தை போக்கடிப்பதும், சிவந்த மாலைகளையும் வஸ்திரங்களையும் அணிந்ததும், ஸுகந்த சந்தனத்தால் பூசப் பட்டதும், சிவந்த கண்களையுடையதுமான ஸ்ரீசுதர்சனத்தை அனுப்பினான். சம்பரனுடைய எல்லா மாயைகளையும் சக்கரத்தாழ்வான் அறுத்துத் தள்ளினான். மாயையுடன் சம்பரன் அழிந்ததும், இரணியகசிபு சோஷக வாயுவை பிரகலாதனிடத்தில் அனுப்பினான். அந்த காற்றுக்கும் சோஷகமான பகவானை பிரகலாதன் நினைத்தான். அதுவும் அழிந்தது. இதைக் கேட்ட இரணியன், "இந்த சிறுவன் நம் குலத்தையே அழிப்பவன். நல்ல சுபாவமற்றவன். இவனை நாக பாசங்களால் நன்றாகக் கட்டிப் பயங்கரமான நடு சமுத்திரத்தில் தள்ளிவிடுங்கள்" என்றான். கிங்கரர்கள் சிறுவன் எப்படியும் கரையேறி வர முடியாதபடி சமுத்திரத்தில் தள்ளிவிட்டார்கள். பெரிய மரங்களையும் மலைகளையும் சமுத்திரத்தில் விழுந்த அவன் மேல் தள்ளினார்கள். பிரகலாதன் பரிசுத்த மனத்துடன், பகவானை நினைத்தான். ஒரே கணத்தில் கரையை அடைந்து விட்டான். எந்த விதமான துன்பத்தையும் அடையவில்லை. பிரகலாதன் பரிசுத்தமான மனத்துடன் சமுத்திரக் கரையிலிருந்து மிகவும் சந்தோஷத்துடன் இரணியகசிபுவின் வீட்டை வந்தடைந்தான். தந்தையான அந்த அசுரனின் பாதங்களை மிக்க கெளரவத்துடன் பிடித்து வணங்கினான். இரணியகசிபு புதல்வனை எழுப்பி உட்காரவைத்துப் பரிவுடன் அனைத்து உச்சி மோந்து கோபத்தை அடக்கிக் கொண்டு "பிரகலாதனே! நீ அடிக்கடி பகவானை புகழந்து பேசுகிறாயே அவன் எங்கு இருக்கிறான்?" என்று கேட்டான். பிரகலாதன் "அந்த பகவான் உன்னிடத்தில் இருக்கிறான். என்னிடத்திலும் இருக்கிறான். எல்லா ஜந்துக்களிடத்திலும் இருக்கிறான். இப்படி எங்கும் இந்த நாராயணன் உள்ளானபடியால் பிரம்மா முதலிய எல்லா தேவர்களும், மனிதர்களும், பசுக்களும், ஸ்தாவரம், ஜங்கமம் முதலிய எல்லாமும் நாராயண ஸ்வரூபம் என்பதில் சந்தேகமில்லை. அந்த கடவுள் பூமியிலும், நீரிலும், சந்திரனிடத்திலும், சூரியனிடத்திலும், நெருப்பிலும், திசைகளிலும், உபதிசைகளிலும், காற்றிலும், ஆகாயத்திலும், திக்குகளிலும் மற்றுமுள்ள பொருள்களிலும், சத்தியத்திலும், ஸார, அஸார பொருள்களிலும், உள்ளும், வெளியும் இருக்கிறான். எங்கும் இருக்கிறான். எப்பொழுதும் இருக்கிறான். இதில் அதிகம் கூற வேண்டியதில்லை. உன்னிலும் உளன், என்னிலும் உளன்." என்றான். இதைக் கேட்டதும் தானவ அரசன் பரபரப்புடன் பிரகலாதனை பார்த்து "நீ சொல்லுகிறபடி மகாவிஷ்ணு எல்லா இடங்களிலும் இருப்பது உண்மையானால் இந்த ஸ்தம்பத்தில் குழந்தாய், எனக்கு அவனை அவசியம் காட்ட வேண்டும்" என்று கூறி, அந்த கம்பத்தை அடித்தான். ஓங்கி தூணை அடித்தவுடன் கும் கும் என்ற சப்தம், பிரம்மாண்டத்தை பிளந்துகொண்டு உலகங்களுக்கு உள்ளும் புறமும் அச்சத்தை கொடுக்கக் கூடியதாய், பெரியதாய் உண்டாயிற்று. அந்த கம்பத்தின் நடுவில், எல்லோராலும் பூஜிக்க பெற்ற மகாவிஷ்ணு நரசிம்ஹ ஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டவராயும், பிடரி மயிருடன் கூடியவராய், பயங்கரமான தொனியை உண்டு பண்ணுகிறவராயும், கோரப்பற்களால் பயங்கரமான காட்சி அளிப்பவராயும், பார்த் தமாத்திரத்திலேயே இரணியகசிபுவுக்கு பீதியை உண்டு பண்ணுகிறவராயும், வஜ்ராயுதம் போன்ற கூர்மையான நகங்களோடு விளங்கிய திருமேனி உடையவராயும், எல்லா இடங்களிலும் பரந்த கைகளையுடையவராயும், முள் போன்ற அசுரர்களை அழிப்பவராயும், பதினாயிரம் வஜ்ராயுதம் மேலே விழுந்தால் ஏற்படும் அட்டகாசத்தைவிட உக்கிரமான அட்டகாசத்தை செய்துகொண்டு இரணியகசிபுவை பிளப்பதற்கு வெளியே வந்தார். நசை திறந்து இலங்க பொங்கி நன்று நன்று என்ன நக்கு விசை திறந்து ருமு வீழ்ந்த தென்ன ஒர் தூணின் வென்றி இசை திறந்து உயர்ந்த கையால் ஏற்றினான் ஏற்றலோரும் திசை திறந்து அண்தம் கீற சிரித்தது அச்செங்கண் சீயம் பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல மற்றும் அளந்த்தப் புறத்துச் செய்கையார் அறிந்து அறையகிற்பார் கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும் மன்றல் அம்துளபமாலை மானுட மடங்கல் வானில் சென்றது தெரிதல் தேற்றாம் சேவடிபடியில் தீண்ட நின்றதோர் பொழுதின் அண்ட நெடுமுகட்டுஇருந்த முன்னோன் அன்று அவன் உந்தி வந்தானாம் எனத்தோன்றினனால் எத்துனை போதும் கை என்றியம்பினால் எண்ணற்கு ஏற்ற வித்தகர் உளரே அந்தத் தானவர் விரித்த சேனை பத்து நூறு அமைந்தகோடி வெள்ளத்தால் பகுதி செய்த அத்தனை கடலும் மாளத் தனித்தனி அள்ளிக்கொண்ட ஆயிரங்கோடிவெள்ளத்தயில் எயிற்று அவுணர்க்கு அங்கு அங்கு ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம் இரட்டிப்பொன் தோள் தீஎனக் கனலும் செங்கண் சிரம்தொறும் மூன்றும் தெய்வ வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும். என்று கம்பர் சீரிய சிங்கத்தின் வருகையை கம்ப இராமாயணத்தில் பாடுகின்றார். அப்பொழுது அசுர கூட்டத்தினர் பயந்தனர். ரிஷிகளும் திகைத்தனர். இப்பொழுதே உண்மையில் பிரளயகாலம் வந்துவிட்டது. இதில் சிறிதளவும் சந்தேகமில்லை. நாம் எங்கே செல்வோம்? இந்த சமயம் நம்மை யார் காப்பாற்றுவார்? என்றெல்லாம் நடுங்கிய மனத்துடன் தேவர்கள் பல இடங்களுக்கு ஓடினார். பிறகு, கூர்மை பொருந்திய கைகளால் அந்த மகாவிஷ்ணு அசுரனை பிடித்துக் கொண்டார். அசுரனும் பகவானை தன் கைகளால் பிடித்துக் கொண்டான். இருவருக்கும் அப்பொழுது யுத்தம் ஏற்பட்டது. சங்கம், சக்கரம், கதை முதலிய ஆயுதங்கள் பகவானுடையவை. இவை தவிர மற்ற ஆயுதங்கள் அவனுடையவை. கத்திக்குக் கத்தியும், பாசத்திற்கு பாசமும், என்று இப்படைகளில் எல்லா ஆயுதங்களும் ஒன்றுடன் ஒன்று மோதின. பகவான் விட்ட ஆயுதங்களை விட அசுரராஜன் எய்த அம்புகள் அதிகமாகவே இருந்தன. ஆயினும் அவை பயனற்றவையாகிக் கீழே விழுந்தன. எங்கெங்கே அசுரன் ஓடினானோ அங்கங்கே அவன் மேல் விழுந்து நரசிம்ம பகவான் ஓடினார். இரணியகசிபுவின் அவஸ்தையை பார்த்து பகவான் ஓய்வடையவில்லை. இரணியகசிபுவின் இரத்தத்தில் ஒவ்வொரு திவலையும் எங்கெங்கு விழுந்ததோ அங்கங்கே நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் இந்த அசுரனுக்கும் மேற்பட்ட வலிமையுள்ள அசுரர்கள் தோன்றினர். ஒவ்வொர் அசுரனையும் வெல்வதற்கு நூற்றுக்கணக்கான உருவங்களை பகவான் எடுத்துக் கொண்டார். அசுரர்களின் இரத்தம் பூமியில் விழுந்த இடங்களில் நூறு நூறு அசுரர்கள் உண்டாயினர். பல நரசிம்மர்களும் தோன்றினர். பகவானும், அசுரராஜனும் கைகளாலும் கால்களாலும் மார்புகளாலும் போர் செய்தனர். ஒருவருடைய பலத்தையும் அறிய முடியவில்லை. "தேவனே, ஜகந்நாதனே, உலகத்தை காப்பவனே நீ நன்றாக விளங்க வேண்டும், இந்த சத்ருவை வெல்வாயாக. ஏன் நீ இந்த விஷயத்தில் தாமதிக்கிறாய்? புருஷோத்தமனே, உன் நினைவு மாத்திரத்தில் இந்த உலகம் படைக்கப்படுகிறது. உன்னிடத்திலேயே லயத்தையும் அடைகிறது. நீதான் உலகத்துக்கு தந்தை. தேவமானத்தால் ஆயிரம் வருஷங்கள் சென்றன. தேவகாரியத்தை தாமதமின்றி செய்வாயாக." இப்படி தாழ்மையுடன் தேவர்கள் துதித்த வார்த்தைகளை பகவான் கேட்டு பெரிய அட்டகாசம் கொண்டு அண்டத்தையே பிளக்கிறவராக இரணியகசிபுவை பிடித்து மடியில் வைத்து அவன் முகத்தை நோக்கி தம் வஜ்ர நகங்களாலேயே பிளந்தார். சில வார்த்தைகளை சொல்லி கொண்டு ஹா ஹா என்ற சப்தத்தை அடிக்கடி செய்தார். கோபத்தால் சிவந்த கண்களுடன் நெருப்பை கக்கிக் கொண்டு எல்லா உலகத்தையும் இருள் சூழ செய்தார். ஒரு முகூர்த்த நேரம் அனைத்து உலகமும் சமுத்திரத்தில் மூழ்கிவிட்டது போல் இருந்தது. பிறகு தேவர்களும், கந்தர்வர்களும் பகவானை துதித்தனர். "செந்தாமரைக்கண்ணா உனக்கு நமஸ்காரம். உலகத்தை படைப்பவனே நம: இந்திரியங்களை அடக்குபவனே, மகாபுருஷனே, முதலில் தோன்றியவனே, உலக ஸ்வரூபியே, கூர்மை பொருந்திய உயர்ந்த ஆயுதம் பெற்றவனே, உலகத்துக்கு நன்மை கொடுப்பவனே, கிருஷ்ணனாகவும், கோவிந்தனாகவும் இருக்கும் பெருமானே, உனக்கு நமஸ்காரம். நீ இம்மாதிரி ரூபத்தை எடுக்காவிட்டால் உலகம் இருளடைந்துவிடும். உயர்ந்த செயலை செய்தாய். அசுரன் இறந்தான். அவரவர்களுடைய ஸ்தானங்கள் நிலைநின்றன. கோபத்தை அடக்கிக் கொள். பக்தர்களை காக்கவும். அசுரர்களை அழிக்கவும், இத்தகைய ரூபத்தை எடுத்துக் கொண்டாய்." என்று கை கூப்பிய வண்ணம் எல்லாத் தேவர்களும் முனிவர்களும் புருஷோத்தமனை துதித்தனர். பிறகு தெளிவடைந்த பகவான், தமது ஸ்வரூபத்தை வெளிப்படுத்தியவராய் பிரம்மா, ருத்திரன், முதலிய தேவர்களை பார்த்து பேச தொடங்கினார்: "எல்லா தேவர்களும் பலம் பொருந்திய மகரிஷிகளும் அறிவில்லா பாவியான இரணியனால் பிடிக்கப்பட்டார்கள். இப்பொழுது பகைவன் இறந்தான். நமது நோக்கம் கைகூடி விட்டது. அவரவர் ஸ்தானத்தை அடைந்து மனக்கவலையின்றி சந்தோஷத்துடன் இருப்பீர்களாக" என்று சொல்லி பகவான் எல்லோரையும் அனுப்பிவிட்டார். நேரிலுள்ள பிரகலாதனை பார்த்து பகவான் "உன்னுடைய அசஞ்சலமான பக்தியைப் பார்த்து தெளிவடைந்தேன். உன் இஷ்டப்படி என்னிடம் வரத்தைப் கேட்பாயாக என்றார். பிரகலாதன் "நான் எந்த எந்த பிறவியில் பிறக்கிறேனோ அந்த அந்த பிறவிகளில் உம்மிடத்தில் எனக்கு எப்பொழுதும் பக்தி இருக்க வேண்டும்" என்றான். பகவான் "பரமேச்வரருக்கு என்னிடத்தில் எவ்வாறு பக்தி உள்ளதோ அப்படியே உனக்கும் உள்ளது. உன்னைப் பார்த்து மகிழ்வுற்றேன். சந்தேகமில்லை. முள் போன்ற உன் தகப்பன் இறந்தான். தகப்பனுடைய ராஜ்யத்தை நீ பெற்று ஆட்சி புரிவாயாக. உனக்கும் யாரும் விரோதி இங்கு இல்லை. சந்திர சூரியர்கள் உள்ள வரையிலும், பூமி உள்ள வரையிலும் தேவர்கள் இந்திரனுடன் உன்னைப் புகழ்வார்கள். புதல்வன், மனைவி, பேரன்மார், சுற்றத்தார், நண்பர்கள் எல்லோருக்கும் நன்மையை செய்து வாழ்வாயாக. எதிலும் பற்றுதல் அற்று தர்மங்களை செய். நான் செய்கிறேன் என்ற அகங்காரத்தை விடு. நியாயமான வழியில் பணத்தை சம்பாதிப்பாயாக. தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பூஜை செய். சாஸ்திரம் இசைந்த வழியில் சுகங்களை பெறுவாயாக. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் என்னிடத்தில் பக்தி உள்ளவன் அடைவான். அவன் கஷ்டப்படமாட்டான். கடைசியில் இவற்றிலுள்ள தோஷங்களை அறிந்து வைராக்கியம் பெற்று என்னுடைய ஸ்தானத்தை அடைவாயாக என்று அருளினார். "இந்த அஹோபில க்ஷேத்திரம் நான் தோற்றமளித்ததையே காரணமாகக் கொண்டு மகா புண்ணியமுடையதாக ஆயிற்று. இது முதற்கொண்டே உலகத்தினர். 'அஹோபிலம்' என்று கூறுவர். எனது ஒப்பற்ற வலிமையை அறிந்த தேவர்கள் இம்மாதிரி போற்றினார்கள் அஹோ வீர்யம், அஹோ செளர்யம், அஹோ பாஹுபராக்ரம : | நாரஸிம்ஹ : பரம் தைவம், அஹோ பலம் அஹோ பலம் || "ஆகையால் அஹோபில க்ஷேத்திரம் என்று ஆயிற்று. நான் இங்கே கஜகுண்டத்தின் சமீபத்தில் வசிக்கிறேன். பவநாசினியில் கரையில் நான் இருக்கிறேன். எனக்கு எதிரில் நீ இருப்பாயாக. நீ இங்கு வசித்துக் கொண்டு எல்லா செல்வமும் பொருந்திய ராஜ்யத்தை அநுபவிப்பாயாக. ரிஷிகள், பித்ருக்கள், தேவர்கள் அனைவரும் என்னை இங்கே துதிப்பார்கள்." பகவான் இவ்விதம் நரம் கலந்த சிங்க உருவை எடுத்துக் கொண்டு எல்லா உலகத்துக்கும் முள் போன்றிருந்த அசுரராஜனை கூரிய நகங்களினால் பிளந்து அவனுடைய புதல்வனான பிரகலாதனை உயர்ந்த விசாலமான ராஜ்யத்தில் அபிஷேகம் செய்வித்தார். பவநாசினி என்ற நதியின் கரையில் எல்லாரும் வழிபட லக்ஷ்மி நரசிம்மராகவும் இன்னும் பல கோலங்களிலும் இக்கலியுகத்தில் சேவை சாதிக்கிறார். அத்தியாயம் – 5 கருடனின் தவம் [] கருடாத்ரி பிரகலாதாழ்வான் சொன்ன வார்த்தையை மெய்பிக்க பெருமாள் அதே நொடியில் இரணியனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் பெருமாள் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வந்தார். அதனால் மிகவும் துக்கம் கொண்ட கருடன், பெருமாளிடம் தனக்கு நரசிம்ம அவதார சேவையை காட்டி அருளுமாறு வேண்டினான். கருடனின் பெருமையை உலகத்தோர்க்கு அறிய செய்ய திருவுளம் கொண்ட பெருமாள் நீ அஹோபிலம் சென்று தவம் செய் தக்க சமயத்தில் நான் வந்து சேவை சாதிக்கின்றேன் என்று அருளினார். பெருமாள் “கூடாவிரணியனைக் கூருகிரால மார்பிட” அவதாரம் செய்த புண்ணிய பூமியாகிய அஹோபிலத்தில் வந்து கருடன் பெருமாளின் தரிசனம் வேண்டி தவம் செய்ய ஆரம்பித்தான். அவ்வளவு கடுமையாக தவம் செய்தான் கருடன், அவனுடைய தவத்தீயால் பூலோகம் ஸ்தம்பித்தது, தேவலோகத்தையும் அது விடவில்லை . தேவேந்திரனுக்கு பயம் பிடித்துக் கொண்டு விட்டது, ஒரு காலத்தில் தேவ லோகம் வந்து தேவர்கள் அனைவரையும் தோற்கடித்து அமிர்தத்தை எடுத்து சென்றவனல்லாவா கருடன்? எனவே இந்திரன் கருடனின் தவத்தை அறிந்து தன் லோகத்துக்கு தீங்கு வந்து விடுமே என்று ஐயம் கொண்டான். நான்கு பக்கங்களிலும் கண்ணைச் செலுத்தினான். அழகாலே எல்லாரையும் மயக்கும் இயல்பு பெற்றுக் கர்வம் கொண்ட ஊர்வசி அவனருகில் நின்றாள். அவளைப் பார்த்தும் மனத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்த இந்திரன், "ஊர்வசியே! தேவர்களின் நன்மைக்காக உடனடியாக ஒரு தந்திரம் செய்ய வேண்டும். கருடன் முனிவேடம் தரித்து அஹோபிலத்தில் தவம் புரிவது உனக்குத் தெரிந்ததே. அங்கே சென்று பல விலாசங்களைக் காட்டி அவனை உன் மீது மையல் கொள்ளச் செய்ய வேண்டும். அவனது தவத்தைக் கெடுக்க வேண்டும். மகரிஷிகளும், உன் மோக வலையில் சிக்கினவர்கள். கருடனும் உன் மீது மோகம் கொள்வான் என்பதில் சந்தேகம் இல்லை, என்று சொல்லி அனுப்பினான்." ஊர்வசியும் இந்திரனின் உத்திரவின்படி பல அப்ஸர ஸ்த்ரீகளுடன் அஹோபிலம் என்னும் மலைக்கு வந்து சேர்ந்தாள். மதுரமான வார்த்தைகளை பேசத்தொடங்கினாள். அழகிய கீதங்களையும் பாடினாள். தன்னுடன் வந்த பெண்மணிகளோடு நர்த்தனம் செய்யவும் ஆரம்பித்தாள். கருடன் அவளை பார்க்கவும் இல்லை. மதிக்கவும் இல்லை. 'இந்திரன் அனுப்பி வந்தவள் நான். ஊர்வசி என்பது என் பெயர். ஒரே கணத்தில் எல்லோரையும் என் வசமாக்க சக்தி உடையவள். என் கண்ணுக்கு இலக்கானவர்கள் எல்லோருமே எல்லா துன்பங்கினின்றும் விடுபட்டவர்கள் ஆவார்கள். பெண்ணின் உருவத்தை நேரில் பார்த்ததும், அதை ஆதரிக்காமல் வேறு பொருளை விரும்புகிறவன் மிக்க தாகத்தோடு இருந்தும் கையில் கிடைத்திருக்கும் தண்ணீரை விட்டு ஆகாயத்தில் உள்ள மேகத்தை எதிர்பார்ப்பவனுக்கு சமானமாகிறான்' என்று பரிவுடன் கூடிய ஆயிரக்கணக்கான வார்த்தைகளால் கச்யபருடைய புதல்வனான கருடனை ஏமாற்ற முயன்றாள். "இத்தகைய அபத்தமான கேவல ஆடம்பரம் உபயோகமற்றது. தீமையைக் கொடுக்கக்கூடியது. கேட்பவர்களுக்கும் முரணானது' என்று நினைத்து முதலில் கருடன் பேசாமல் இருந்து விட்டான். பிறகு மறுபடியும் இரக்கத்தால் கருடன் சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்; "ஏ ஊர்வசியே! கொடிய பெண்ணே! நீ உன் இருப்பிடம் செல். உன்னுடைய விருப்பம் என்னிடத்தில் பயன் பெறாது. கொட்டு மழையால் தாக்குண்டாலும் மலைகள் எப்படித் துன்பத்தை அடைவதில்லையோ அதுபோல் பகவானிடத்தில் மனத்தைச் செலுத்தியவர்கள் எந்தவிதத்திலும் துன்பப்படமாட்டார்கள். அச்சுதனிடத்தில் ஈடுபட்ட மஹா மனஸ்விகளின் உயர்ந்த குணம் எங்கே? பெண், புதல்வன், மனைவி, பணம் இவ்விஷயத்தில் அறிவிலிகள் கொள்ளும் பற்றுதல் எங்கே? தம் விருப்பப்படி இந்தப் பூலோகத்தில் ஏற்படும் சுகங்களில் ஈடுபட்டு நன்மை தீமை ஒன்றும் அறியாத ஆண்களுக்குத் தீங்கும் இன்பமாகப் படுகிறது. கையில் சிரங்கு வந்த போது அதை சொறிந்தால் மேல் தீமை ஏற்படும் என்றறிந்தும் தற்காலத்தில் உண்டாகும் இன்பத்துக்காக சொறிவது போல் உள்ளது மக்களின் செயல். ஆக தீங்கும் இன்பமாகத் தோன்றும். "பவவ்யதா ஸுகாயதே" ஆகையினாலன்றோ மாமிசம், ரத்தம் முதலியவற்றின் சேர்க்கையைப் பெற்ற கொடிய அழுக்கு உடம்பினிடம் மூடர்கள் ஆசை காட்டுகின்றனர்! இப்படிப் பட்டவர்கள் நரகத்திடமும் ஈடுபாடு கொள்வார்கள். வெறுப்புக் காட்டமாட்டார்கள். பெண்கள் சிலரிடத்தில் சிநேகம் பாராட்டுவார்கள். சிலரை மயக்குவார்கள்; ஓரிடத்திலும் நிலையுடன் இருக்கமாட்டார்கள். இவர்களுடைய மனத்திலேயே ஒரு நிச்சயமும் ஏற்படாது. இப்படிப் பலவகையில் வினதையின் சிறுவனான கருடன் ஊர்வசியை கடிந்து கூறி, ஹரியின் திருவடிகளில் மனத்தைச் செலுத்தி பெருமாளை நரசிம்மராய் தரிசிக்க வேண்டி ஒரே மனதுடன். ஆடியாடி அகம்கரைந்து இசை பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும் நாடி நாடி நரசிங்கா! என்று ஊனும் உள்ளமும் உருக கடும் தவத்தை தொடர்ந்தான் வைனதேயன். ஊர்வசியும் வெட்கத்தால் முகந்தாழ்ந்து தேவேந்திரனிடம் திரும்பிச் சென்றாள். இந்திரனைப் பார்த்து "ஓ புரந்தரா! முன்பு பல இடங்களுக்கு என்னை அனுப்பியிருக்கிறாய். தபோ லோகத்திலோ, பிரம்ம லோகத்திலோ, அதற்கும் மேலான உலகத்திலோ, பாதாளம் முதலிய உலகங்களிலோ, என்னுடைய திறமையைக் காட்டி உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் இந்த கருடனிடம் என் முயற்சி பலன் அளிக்கவில்லை. மதங்கொண்ட யானையைத் தாமரைத் தண்டின் நூலால் எப்படிக் கட்ட முடியாதோ, உக்ரமான கிரணங்களை உடைய சூரியனை இருட்டால் எப்படி அழிக்க இயலாதோ, சமுத்ர ஜலத்தால் பாடவாக்கினியை (வடவைக் கனலை) எப்படி அணைக்க முடியாதோ, சமுத்திரத்தின் ஒலியை தவளையின் கூச்சலால் எப்படி அடக்க முடியாதோ, அவ்வாறே பகவானிடத்தில் எல்லா புலன்களையும் செலுத்தி பேரறிவைப்பெற்ற மகான்களின் மனத்தை அழிக்க முடியாது" என்றாள். மேலும், "கருடன் தேவ லோகத்தையோ உன்னுடைய பதவியையோ பிரம்மாவின் ஸ்தானத்தையோ விரும்பித் தவம் புரியவில்லை. பகவானின் திருவடித் தாமரைகளை காணவேண்டும் என்று விரும்பியே தவம் புரிகின்றான். இதை நான் நன்கு அறிவேன்" என்று சொல்லி இந்திரனுடைய பயத்தை ஒருவாறு போக்கினாள் ஊர்வசி. கருடனின் திட பக்தியைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் சத்திய சொரூபனாய் மலைக்குகையில் நெருப்பின் உக்ரத்தோடு அவன் விரும்பியபடியே உக்ர நரசிம்மராய் அன்று எவ்வாறு இருந்தாரோ அது போலவே சேவை சாத்தித்தார். பிரகலாதன் கை கூப்பி நிற்க ஹிரணியணை மடியில் போட்டுக் கொண்டு உக்ரமாய் அவனது மார்பைப் பிளக்கும் கோலத்தில் முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் என்ற படி பெருமாள் கருடாழ்வாருக்கு சேவை சாதித்தார். சங்கம், சக்கரம், கதை முதலிய ஆயுதங்களை தரித்தவரும், நான்கு கைகளை உடையவரும், இந்திரன் முதலிய தேவ கணங்களால் பூஜிக்கப்பட்டு நீர் கொண்ட மேகத்திற்கு ஒப்பானவரும் செந்தாமரைக்கண்ணை உடையவரும் ஒரே சமயத்தில் உதித்த கோடிக்கணக்கான சூரியர்களின் ஒளியைப் பெற்ற கிரீடத்தால் விளங்கியவரும், அழகிய உன்னதமான மூக்குடன் கூடியவரும் கருத்த கேசங்களுடன் கூடியவரும் அழகிய தளிர் போன்றவரும், குண்டலதாரியாய் கெளஸ்துபம் உடையவரும், பீதாம்பரதாரியுமான பகவானை கருடன் தன் கண்களால் கண்டு ஆனந்த பரவசனாய் நின்றான். பர்வதங்களின் உயரத்தில் மாபெரும் குகையில் நரசிம்மராக எழுந்தருளிய இறைவனைச் சேவித்த கருடன் பரவசமடைந்தான். அஹோபிலம், மஹாபலம் என்று துதித்து பணிந்தான். இக்காரணத்தால் அஹோபிலம் (பிலம் என்றால் குகை) என்று பெயர் வந்தது. நட்சத்திர மண்டலத்தோடு கூடிய சந்திரன் போலவும், மேருமலையின் நடுவிலுள்ள சூரியன் போலவும், அனந்தன் முதலிய சுரகணங்களோடு சேவை அளிக்கும் பகவான், கருடனின் முன் வந்து அழகிய வார்த்தை சொல்லத் தொடங்கினார். "குழந்தாய்! விநதையின் மனத்துக்கு இனியவனே! உனது உக்கிரமான தவத்தால் மகிழ்ச்சியுற்றேன். எழுந்திருப்பாய். உன் விருப்பம் என்ன? நான் அதை நிறைவேற்றுகிறேன்" என்றார். இதைக் கேட்டதும் கருடன் பல தடவை பகவானை வணங்கி அபூர்வமான அவரது ரூபத்தைக் கண்டு மலர்ந்த கண்களைப் பெற்றவனாய் உடல் முழுவதும் மயிர்க்கூச்சலடைந்தவனாய் கடவுளை துதி செய்ய ஆரம்பித்தான். "எல்லா உலகத்தையும் ஆக்கவும், நிலைபெறுக்கவும், அழிக்கவும், திறமைப்பெற்ற உன்னை நமஸ்கரிக்கிறேன். காரிய காரண ரூபனான உன்னை நமஸ்கரிக்கிறேன். பல ரூபங்களை எடுத்து எங்கும் வியாபித்த உன்னை வணங்குகிறேன். சார்ங்கம் முதலிய ஆயுதங்களை ஏந்திய உன்னை வணங்குகிறேன். அடியவர்களிடத்தில் இரக்கமுள்ளவனே! உன் மகிமையைச் சொல்லி துதி செய்ய யாருக்குத்தான் சக்தி உண்டு? ஜகத்குருவே! மந்தமதியுள்ளவனான நான் எப்படித் துதிப்பேன்? என் நாக்கு எப்படி முன் வரும் ?. என்று கருட பகவான் துதி செய்து வினயத்துடன் நின்றான். மிகத் தெளிவு பெற்ற முகத்துடன் பகவான் கருடனைப் பார்த்து சொல்லத் தொடங்கினான். "விநதையின் புதல்வா! நான் உன் தவத்தை மெச்சுகிறேன். உனக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். உன் விருப்பம் என்ன? சொல்வாய்! அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்" என்றார். கருடன் "தேவ தேவா! நான் பூமியிலோ மூன்று உலகங்களிலோ ஜயம் பெற விரும்பி தவம் புரியவில்லை. இன்று முதல் வாகனமாக எனது தோளில் தேவரீர் அமர வேண்டும். இதுதான் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது. எல்லாவற்றுக்கும் ஆதாரனான உனக்கு நான் ஆதாரமாக வேண்டும். இந்த மகிமை எவற்கும் கிடைக்கத் தகுந்ததன்று. இந்த பெரும் பாக்கியம் எனக்கு கிட்டவேண்டும்" என்றான். பின்பு அவன் மேலும் சொல்லத் தொடங்கினான். "புருஷோத்தமா! இந்த மலையில் இருந்துகொண்டு நான் கடும் தவம் புரிந்தேன். இங்கே என் தவம் வெற்றி அடைந்தது. உன்னை தரிசிக்கும் பாக்யத்தை கொடுத்தபடியால் இந்த மலைக்கு ஒரு பெருமை ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு கருடமலை என்ற பெயர் வழங்க வேண்டும் தாங்களும் இந்த கருடாசலத்தில் எனக்கு சேவை சாதித்தது போலவே எப்போதும் சேவை சாதிக்க வேண்டும் . இந்த இரு வரங்களையும் கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான். பகவான், "கருடா! நீ இளம்பிராயம் உள்ளவனாக இருந்த போதிலும் புத்தியால் பெரியவனாக விளங்குகிறாய். உன்னைக்காட்டிலும் உயர்ந்தவன் யாரும் இல்லை. பல முனிவர்கள் தவம் புரிந்தனர். நானும் அவர்களுக்கு சேவை சாதித்தேன். அவர்கள் வேறு எதையோ பலனாக விரும்பி வேண்டிக் கொண்டார்களே தவிர தங்களை எனக்கு வாகனமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. நீ விரும்பியபடி இரு வரமும் தந்தேன். உன்னை கருடன் என்றும், சர்ப்பங்களுக்கு சத்ரு என்றும், வேத ஸ்வரூபி என்றும், பக்ஷீராஜன் என்றும், நாராயண ரதம் என்றும் சொல்லி அழைப்பார்கள்" என்று சொல்லி, பகவான் அங்கேயே அந்தர்த்தியானமானார். கருடன் தவம் செய்ததால் இம்மலை கருடாத்ரி, கருடாசலம், கருட சைலம் என்றழைக்கப்படுகின்றது. கருடன் தன் சிறகுகளை விரித்த கோலத்தில் நின்றிருப்பது போன்று தோற்றமளிக்கும் கருடாத்ரியில் ஒரு குகையில் பெருமாள் அஹோபில நவ நரசிம்மர்களுள் முக்கியமானவராக அஹோபில நரசிம்மராக, உக்ர நரசிம்மராக இன்றும் சேவை சாதிக்கின்றார். குகையில் பெருமாளுக்கு எதிரே கருடன் தவ நிலையில் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு பெருமாள் அவதாரம் செய்த தலத்தில் நாம் எல்லோரும் உய்ய பெருமாள் கோவில் கொள்ள காரணமாக இருந்தார் கருடன். இவ்வாறு மாறாத பக்தி கொண்டு பகவான் சேவையே பிரதானம் என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் அவரது திருவடிகளைத் தாங்கும் பேறு பெற்றதால், கருடாழ்வார் என்று போற்றப்படுகின்றார் விநதையின் சிறுவன். இதுவரை ஸ்ரீமந்நாராயணின் இன்றியமையா பண்புகளையும், பெருமாள் எடுத்த நரசிம்ம அவதாரத்தின் மகிமையையும் கருடன் செய்த தவத்தின் காரணமாக பெருமாள் வந்து அஹோபில நரசிம்மராக கோவில் கண்டதையும் கண்டோம். இனி இத்திவ்ய தேச யாத்திரையைத் தொடரலாம் வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் – 6 அஹோபில யாத்திரை நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிட்டும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக்கொள்பவர்களுக்கு அனைத்து திக்குகளிலும் புகழ் கிடைக்கும். நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகின்றது. நரசிம்மரை நரசிங்கம், சிங்கப்பிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி என்று பலவாறாக பாடி பரவியுள்ளனர் ஆழ்வார்கள். நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர் ஆவார். எல்லா பொருட்களிலும் நான் இருக்கிரேன் என்பதை உணர்த்த எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று பொருள். இவரது வலக்கண்ணாக சூரியனும், இடக்கண்ணாக சந்திரனும், புருவ மத்தியில் அக்னியும் திகழ்கின்றனர். நரசிம்மரின் தேஜஸ் காயத்ரி மந்திரத்தில் இருப்பதாக ஐதீகம். மகாலக்ஷ்மிக்கு பத்ரா என்றும் ஒரு திருநாமம் உண்டு, எனவே நரசிம்மரை பத்ரன் என்றும் அழைப்பார்கள். இதற்கு மங்களமூர்த்தி என்று பொருள். இராமாயணம், மஹாபாரதம், பாகவதம், பதினென்புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மரின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. நரசிம்மரை வழிபடும் போது “ஸ்ரீநரசிம்ஹாய நமஹ: என்று கூறி ஒரு பூவை இட்டு வணங்கினால் எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும். நரசிம்மரை “ம்ருத்யுவே ஸ்வாஹா” என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். “அடித்த கை பிடித்த பெருமாள்” என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு விநாடியே உதவுபவன் என்று பொருள். வாருங்கள் அன்பர்களே நரசிம்மரை பல கோலங்களில் தரிசிக்க அஹோபிலம் செல்வோம். உக்ர ஷேத்ரம், வீர ஷேத்ரம், அஹோபிலம், அஹோபலம், சிங்கவேள்குன்றம் என்று பல நாமங்களினால் அறியப்படும் அஹோபிலம், ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் நந்தியால் என்னும் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அஹோபிலம் சென்னையிலிருந்து சுமார் 426 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. திருப்பதியிலிருந்து 276 கி,மீ, நந்தியாலிருந்து சுமார் 80 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மற்ற முக்கிய இடங்களிலிருந்து தூரம் ஸ்ரீசைலம் – 236 கி.மீ மந்திராலயம் – 245 கி.மீ கடப்பா – 112 கி. மீ அல்லகட்டா – 24 கி. மீ சென்னையிலிருந்து பேருந்து/கார் மூலம் செல்லும் போது திருத்தணி, ரேணிகுண்டா, கடப்பா, நந்தியால். அல்லகட்டா வழியாக நாம் கீழ் அஹோபிலத்தை அடையலாம். இரயிலில் செல்பவர்கள் சென்னை- மும்பை மார்க்கத்தில் உள்ள கடப்பா இரயில் நிலையத்தில் இறங்கி பின் பேருந்து மூலம் அஹோபிலத்தை அடையலாம். அருகில் உள்ள விமான நிலையம் திருப்பதி. சென்னையிலிருந்து அஹோபிலத்திற்கு தினமும் பேருந்து சேவை உள்ளது. நவநரசிம்மர்களையும் தரிசனம் செய்ய மூன்று நாட்களாவது வேண்டும். அது மட்டுமல்லாது சிறிது மலையேறவும் வேண்டும், அதற்கு மேல் அஹோபிலத்தில் தங்க வேண்டும். இன்றைய முக்கியப் பொருளான செல்பேசி கூட உங்களை மேல் அஹோபிலத்தில் உங்களுக்கு தொந்தரவு கொடுக்காது. இயற்கையுடன் இயைந்து நீர் வீழ்ச்சிகளில் நீராடி, மலையேறி, பெருமாளை தரிசனம் செய்து, எப்போதும் அவருடைய திருவடிகளையே சிந்தித்து கொண்டு இருக்க வேண்டுமென்றால் இந்த யாத்திரை மிகவும் உகந்தது. திருக்கோவில்கள் அனைத்தும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளதால் முறையான ஒரு வழி காட்டி மிகவும் அவசியம். வழிகாட்டி இல்லாமல் சென்றால் ஒரே மாதிரி இருக்கின்ற மலைப்பாதைகளில் வழி தவறிப் போய் விட வாய்ப்பு உண்டு. பெருமாளை முழுதுமாக சேவிக்க பட்டாச்சாரியர்களிடம் முதலிலேயே சொல்லி வைக்க வேண்டும். அடியேனுக்கு இந்த யாத்திரை செய்ய கிடைத்ததும் அவர் அருளால்தான் என் நண்பர் ஒருவர் அஹோபில யாத்திரை செல்லப் போகிறோம் நீங்கள் வருகிறீர்களா? என்று கேட்டார், அடியேனும் வெளியூர் செல்கிறேன் வந்து சொல்கின்றேன் என்று கூறினேன். திரும்பி வந்து கேட்ட போது வேன் நிறைந்து விட்டது இடம் இல்லை என்று கூறினார். ஆயினும் நான் எப்படியும் வருகின்றேன் என்றவுடன் அவரும் அவர்களது நண்பர்களும் நின்று கொண்டு எனக்கு உட்கார இடம் கொடுத்தார்கள் அதற்காக அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த திருமலை சுவாமிகள் அவர்கள் இந்த யாத்திரையை நடத்தி கொடுத்தார். அவர் 106 திவ்ய தேசங்களையும் பல முறை தரிசனம் செய்தவர். வருடத்தில் ஒரு முறை திருமலைக்கு ஆடி மாதம் பாத யாத்திரைக்கு ஒரு குழுவினரை அழைத்து சென்று வருகிறார். அவர் பலமுறை அஹோபிலம் சென்று வந்தவர் என்பதால் உணவு, தங்குமிடம் ஆகிய அனைத்து ஏற்பாடுகளையும் அவரே கவனித்துக் கொண்டார். முதல் நாள் இரவு 9 மணியளவில் சென்னை மடிப்பாக்கத்தில் இருந்து வேன் புறப்பட்டது, அடியேனும் மற்ற நண்பர்களும் நங்கநல்லூர் பிரிவு எதிரே உள்ள சித்தி விநாயகர் கோவிலின் அருகில் வேனில் ஏறிக்கொண்டோம். அடியேன் அதிகப்படியாக சென்றதால் எப்படியோ அனுசரித்து கொண்டுதான் பயணம் செய்ய வேண்டி வந்தது, ஆந்திர மாநிலம் செல்ல வேண்டுமென்பதால் பூந்தமல்லியில் ஆந்திர மாநில அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு திருவள்ளூர், திருத்தணி வழியாக திருப்பதியை அடைந்தோம். போக்குவரத்து சோதனைச் சாவடியில் சோதனை நடைபெற்றது. அதுவரை விழித்திருந்த அனைவரும் அப்படியே உறங்கிவிட்டோம். காலை விடிந்த போது நந்தியாலை நெருங்கிக் கொண்டிருந்தோம். மஹாநந்திக்கு 15 கி. மீ முன்னர் ஜோதிர்லிங்க ஸ்தலமான ஸ்ரீசைலத்திற்கு ஒரு பாதை பிரிந்து செல்கிறது. நந்தியாலில் சுவாமிகள் எங்களை மஹா நந்தீஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்து சென்றார். அஹோபிலம் செல்லும் பக்தர்கள் வெளியிலிருந்தே பல் விளக்க, குளிக்க ஏதுவாக குளத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் வசதி செய்திருந்தது அற்புதம். இக்கோவிலில் அருமையான இரண்டு குளங்கள் உள்ளன கிழக்கு தொடர்ச்சி மலையிலிருந்து ஓடி வரும் அருமையான மூலிகை கலந்த நீரில் குளித்து மஹா நந்தீஸ்வர சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து காலை சிற்றுண்டி முடித்து, மஹா நந்தியையும் தரிசனம் செய்தபின் கீழ் அஹோபிலத்திற்கு புறப்பட்டோம். சுமார் 11:30 மணியளவில் கீழ் அஹோபிலத்தை அடைந்தோம். முதலில் கீழ் அஹோபிலத்தில் சாந்த நரசிம்மரை சேவித்து விடலாம் என்று திருமலை சுவாமிகள் கூறியதால் முதலில் கீழ் அஹோபிலம் திருத்தலம் சென்றோம். பின்னர் பல வருடங்கள் கழித்து இன்னுமொருமுறை அவர் அழைத்தார் இம்முறை ஒரே நாளில் ஒன்பது நரசிம்மர்களையும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. எந்த ஊரிலிருந்து வந்தாலும் அல்லகட்டா என்ற ஊரைக் கடந்தே அஹோபிலத்தை அடைய முடியும். அல்லகட்டாவிலிருந்து சுமார் 24 கி.மீ தூரத்தில் உள்ள அஹோபிலம் செல்ல பேருந்துகள் மற்றும் வேன்கள் உள்ளன. புகைவண்டி மூலம் செல்பவர்கள் கடப்பா வரை சென்று பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் செல்ல வேண்டும். சென்னையிலிருந்து பேருந்து மூலம் செல்பவர்கள் கர்நூல் அல்லது நந்தியால் செல்லும் பேருந்தில் சென்று அல்லகட்டாவில் இறங்கிக் கொள்ளலாம். அஹோபிலம் இரு தளமாக அமைந்துள்ளது. கீழ் அஹோபிலத்தின் மையத்தில் சாந்த நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த அஹோபில மடம் கீழ் அஹோபிலத்தில்தான் உள்ளது. இங்கும் யாத்திரிகள் தங்குவதற்கு மடங்கள் உள்ளன, பெரிய தங்கும் ஹோட்டல்கள் இன்னும் வரவில்லை, சிறு உணவகங்கள் மட்டுமே உள்ளன. கீழ் அஹோபிலத்திற்கும் மேல் அஹோபிலத்திற்கும் இதையே சுமார் 8 கி.மீ தூரம். எனவே கீழ் அஹோபிலத்திலும் தங்கிக் கொள்ளலாம் . இங்கே திருப்பதி தேவஸ்தானத்தின் சத்திரம், ஆந்திர சுற்றுலாத் துறையினரின் தங்கும் விடுதி மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் உள. எங்களுக்காக சுவாமிகள் மேல் அஹோபிலத்தில் தங்க மடம் ஏற்பாடு செய்திருந்தார். இரண்டாவது முறை சென்ற போது கீழ் அஹோபிலத்தில் ஆந்திர சுற்றுலாத்துறையினரின் விடுதியில் தங்கினோம். இனி முதலில் கீழ் அஹோபில பிரகலாத வரதர் ஆலயம் மற்றும் மற்ற திருக்கோவில்களையும் வலம் வருவோமா? அத்தியாயம் -7 கீழ் அஹோபில திருக்கோயில்கள் ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம் அபய ஹஸ்தாங்கித கருணா மூர்த்தே ஸர்வ வியாபிதம் லோக ரக்ஷகாம் பாப விமோசன துரித நிவாரணம் லக்ஷ்மி கடாக்ஷ ஸர்வாபீஷ்டம் அநேகம் தேஹி லக்ஷ்மி ந்ருஸிம்ஹா || [] என்றபடி பிரகலாதனுக்கு அனுக்கிரகம் செய்த பிரகலாத வரதனாய், இரணியனைக் கொன்ற உக்கிரம் தணிந்த சாந்த நரசிம்மராய், பெரிய பிராட்டியார் மஹா லக்ஷ்மித் தாயாரை தன் இடது தொடையில் தாங்கிய லக்ஷ்மி நரசிம்மராய் பெருமாள் சேவை சாதிக்கும் திருக்கோவில் கீழ் அஹோபிலத்தில் அமைந்துள்ளது. ஆலயத்தில் நுழையும் முன் தெற்கே புஷ்கரணி. சதுர வடிவக் குளத்தைச் சுற்றி பாறைகள் ஆன படிகள். ஏழு நிலை ராஜகோபுரத்துடனும் மூன்று பிரகாரங்களுடன், அற்புதமான சிற்பங்கள் நிறைந்த மண்டபங்கள், உயர்ந்த மதில்களுடன் விளங்குகின்றது திருக்கோவில். கோவிலின் முன்னே ஒரு நெடிதுயர்ந்த 85 அடி ஜெயஸ்தம்பம் (வெற்றித் தூண்) உள்ளது. இந்தத் தூணை 30அடி ஆழம் தோண்டி நிறுவியுள்ளார்களாம். இத்தூணின் முன்னர் நின்று நாம் வேண்டும் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. முஸ்லிம்கள் ஏழாவது ஜீயர் காலத்தில் இக்கோவிலை ஆக்கிரமித்துக் கொண்ட போது, விஜய நகரத்தை ஆண்ட ரங்கதேவராயர் அவர்களுடன் போரிட்டு ஆலயத்தை மீட்டுக் கொடுத்தார் அதன் நினைவாக இத்தூண் எழுப்பப்பட்டது. பெருமாள் தானாக தோன்றிய ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் இத்தலம். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் கருட கம்பம் என்னும் கொடி மரத்தை காணலாம். அடுத்து ரங்க மண்டபத்தை காணலாம். 16ம் நூற்றாண்டின் அற்புத தூண்கள், நரசிம்மரின் பல்வேறு விதத் தோற்றங்களோடு இசைக்கலைஞர்களும், நாட்டிய மங்கைகளும் வெவ்வேறுவிதமான நாட்டியக் கோலங்களில் காட்சி அளிக்கும் சிற்பங்கள் நிறைந்த அற்புதமான மண்டபம். ஒவ்வொரு தூணிலும் ஒருவிதமான கலைப் படைப்பைக் காணலாம். விஜய நகர பாணியில் அற்புதமாக அமைந்துள்ளன. ஆலயம் முழுவதும் பல நுணுக்கமான வேலைப்பாடுகளை உடைய சிற்பங்கள் கண்ணுக்கு விருந்து, கம்பீரமான தோற்றம், சிற்பங்களின் நகங்கள், ஆடைகளின் மடிப்புகள், அணிகளின் நுண்ணிய வேலைப்பாடு, முகங்களில் தெரியும் உணர்ச்சிகள் என்று பார்ப்பவர்களை சிலிர்க்க வைக்கின்ற அற்புதமான கலைப் படைப்புகள் ஆலயம் முழுவதும் பரந்து கிடக்கின்றன. [] கீழ் அஹோபிலம் லக்ஷ்மி நரசிம்ம சுவாமி ஆலய இராஜகோபுரம் மற்றுமொரு கல்யாண மண்டபமும் உள்ளது இம்மண்டபத்தில் பெருமாள் கல்யாணக் கோலத்தில் எழுந்தருளுவாராம். திருப்பதியிலிருந்து வெங்கடாஜலபதி இங்கு எழுந்தருளி பத்மாவதித் தாயாரின் கல்யாணத்திற்கு முன் நரசிம்மரிடம் ஆசி பெற்று சென்றாராம். வெங்கடாசலபதிக்கு தனி சன்னதியும் உள்ளது அவை ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். கோதண்டராமருக்கும் ஒரு தனி சன்னதி உள்ளது, சீதா பிராட்டியுடனும், இளைவன் இலகுவனுடனும் சேவை சாதிக்கின்றார் சக்கரவர்த்தித் திருமகன். பெருமாளின் சன்னதி கர்ப்பகிரகம், முகமண்டபம், ரங்கமண்டபம் என்று மூன்று பகுதிகளாக விளங்குகின்றது. மூலவர் சாந்த நரசிம்மர், பிரகலாத வரத லக்ஷ்மி நரசிம்மர், அமர்ந்த கோலத்தில் சுகாசனத்தில் சங்கு சக்ரதாரியாய், வலதிருக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடதிருக்கரம் இடது தொடையில் அமர்ந்திருக்கும் மஹாலக்ஷ்மித் தாயாரை அனைத்த கோலமாகவும் புன்னகையுடன் சேவை சாதிக்கின்றார். பிரகலாதன் வேண்ட உக்ரம் விடுத்து சாந்த நரசிம்மராய் அமர்ந்த பெருமாள். இவர் கருடனுக்கும், அஹோபில மட முதல் ஜீயர் அழகிய சிங்கருக்கும் பிரத்யக்ஷம். உற்சவர்கள் உபய நாசியார்களுடன் விஷ்ணு ரூப ப்ரஹலாத வரதர், நரசிம்ம ரூபத்தில் லக்ஷ்மி நரசிம்மர்(பாவன நரசிம்மர்), பத்துதிருக்கரங்களுடன் ஜ்வாலா நரசிம்மர் என்று மூன்று கோலத்தில் சேவை சாதித்து அருளுகின்றனர். ஆதி வண்சடகோபர் பெருமாளை சேவித்தவாறு எழுந்தருளியுள்ளார். மாரிமலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கும் கோளரி மாதவனை, அரிமுகன் அச்சுதனை, இருளரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத் துத்தியணி பணமாயிரங்களார்ந்த அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்னும் அணிவிளங்குமுயர் வெள்ளையணை மேவிய சாந்த நரசிம்மரை, பிரஹலாத வரதரை, லக்ஷ்மி நரசிம்மரை, சக்கரவர்த்தி திருமகனை கண்களில் நீர் வழிய சேவிக்கின்றோம் அகலகில்லேன் இறையுமென்று பெருமாள் வலமார்பில் உறைகின்ற மஹாலக்ஷ்மி தாயாருக்கு இடப்புறத்தில் தனி சன்னதி. தாயார் திருநாமம் அமிர்தவல்லி தாயார். பத்மத்தில் அமர்ந்த கோலத்தில் தாமரை கையில் ஏந்தி அபய வரத ஹஸ்தங்களுடன் சேவை சாதிக்கின்றாள் அன்னை மஹாலக்ஷ்மி, சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாளுக்கும் தனி சன்னதி உள்ளது. ஆண்டாளை சேவிக்கும் பொது அவளது வாரணமாயிரம் பாசுரத்தின் வரிசிலைவாள் முகத்து என்னைமார்தாம் வந்திட்டு எரிமுகம்பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகனச்சுதன் கைம்மேலென் கைவைத்து பொருமுகந்தட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான் என்னும் பாடல் மனதில் தோன்றியது. ஆழ்வார், ஆச்சாரியர்களும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். நவ நரசிம்மர்களின் உற்சவ மூர்த்திகளும் இக்கோவிலில்தான் உள்ளனர். கோவிலின் தென் கிழக்கு மூலையில் சதுர வடிவ புஷ்கரணி உள்ளது. நடுவில் கிணறு உள்ளதால் யாத்திரிகள் புஷ்கரணியில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாசி மாத பிரம்மோற்சவமும், நரசிம்ம ஜெயந்தியும் இக்கோவிலின் முக்கிய திருவிழாக்கள் மற்றும் பாவனவாரம் உற்சவம், ஆனி சுவாதி கருட சேவை, புரட்டாசி மாதத்தில் ஸ்ரீமதாதி வண் சடகோபர், ஸ்ரீவேதாந்த தேசிகர் திருநட்சத்திர உற்சவம், திருவாடிப்பூரம், ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி, இராமானுஜர் திருநட்சத்திர உற்சவங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. சுவாதியன்று நவநரசிம்மர்களுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகின்றது. ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்பராப்தம் ம்ருத்யும் சத்ருகணாந்விதம் | பக்தாநாம் நாசயேத்யஸ்து ம்ருத்யும்ருத்யும் நாமம்யஹம் || என்று ம்ருத்யுவிற்கும் ம்ருத்யுவானவன் ஸ்ரீநரசிம்மன் அவரை விட சிறந்த தெய்வம் இல்லை என்னும் ம்ருத்யுஞ்ஜயரான பரமேஸ்வரன் சிவபெருமான் அருளிய மந்திரபத ஸ்தோத்திரத்தை பிராகாரத்தில் பொருளுடன் பொறித்து வைத்துள்ளனர். ஈச்வரனுக்கும் ந்ருஸிம்ஹருக்கும் உள்ள இன்னும் சில ஒற்றுமைகள் இருவருக்கும் பிரதோஷ காலம் உகந்தது, இருவருக்கும் முக்கண்கள். ஸ்வாமி ஸ்ரீதேசிகன் தாம் அருளிய ஸ்ரீகாமாஸிகாஷ்டகத்தில் சூரியனை வலது கண்ணாகவும், சந்திரனை இடது கண்ணாகவும், அக்னியை நெற்றியில் உடையவனாகவும் நரசிம்மன் விளங்குகிறார் என்று பாடுகிறார். அடி பணிந்தோரின் பகைவர்களை அறவே பூண்டோடு அழித்திடுபவர். தனது சிம்ம கர்ஜனையினால் அண்டங்கள் அனைத்தையும் அதிரச் செய்தவர், அப்படிப்பட்ட எங்கும் பரவி நின்ற உக்ர ரூபியான எம்பெருமானை நான் வணங்குகின்றேன். வரத்தால் வலி மிக்க அசுரன் இரணியகசிபுவை வஜ்ர நகத்தாலே தகர்த்தெரித்த வீரன் ஸ்ரீ நரசிம்மன்(அஹோபில). திருவடி பாதாளத்திலும், திருமுடி ஆகாயத்திலும், திருக்கரங்கள் எட்டு திக்குகளிலும் பரவி நின்ற மஹா விஷ்ணு இவரே. ஒளி பொருந்திய சூரிய, சந்திர, நட்சத்திரங்களுக்கு ஒளியாக விளங்குபவர். இவருடைய ஓளியினால் இவையெல்லாம் ஒளி பெறுகின்றன. இப்படிபெற்ற ஒளிமயமாக ஜொலிக்கின்றவரை நான் வணங்குகின்றேன். எல்லாவற்றையும், எங்கும், எப்பொழுதும், புலன்களின் உதவியின்றி தானே அறிபவர், முழு முதலான எங்கும் முகமுடைய ஸ்ர்வதோமுகரை நான் வணங்குகிறேன். நரங்கலந்த சிங்கமதான திருவுருவத்துடன் தோன்றிய மஹாத்மாவானவரை, மாபெரும் பிடரியுடனும், பற்களுடனும் காட்சியளுக்கும் ஸ்ரீ நரசிம்மரை வணங்குகிறேன். யாருடைய பெயரை நினைத்தாலே பூதங்கள், பிசாசங்கள், இராக்ஷஸர்கள் நடுங்கி ஒடுவார்களோ, தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்தொழியுமோ அப்படிபட்ட பயங்கரமானவரை நான் வணங்குகிறேன். எல்லோரும் எவரை அடிபணிந்து எல்லாவிதமான மங்களங்களையும் அடைகின்றனரோ, மங்களமானவளான ஸ்ரீமஹா லக்ஷ்மியுடன் உடனுறையும் மங்களமானவரை நான் வணங்குகிறேன். காலத்தில் வந்து பக்தர்களின் சத்ருக்களுக்கு ம்ருத்யுவானவனான, ம்ருத்யுவிற்கும் ம்ருத்யுவானவனை நான் வணங்குகிறேன். அவர் திருவடிகளில் நம: என்று கூறி ஆத்ம நிவேதனம் செய்துவிட்டால் அவர் யாராயினும் காத்திடுவான், துயர் கெடும். இன்னல்கள் இடிபட்டோடும். இத்தகைய நலன்களை அருளும் எம்பெருமானை நான் வணங்குகிறேன். எல்லோரும் அவரது தாசர்களே, இயற்கையிலேயே தாசர்கள், நானும் அவருக்கு தாசர்தான் என்பதை நன்குணர்ந்த நான் அவரை வணங்குகிறேன் என்று பரமேஸ்வரன் 11 ஸ்லோகங்களால் ஸ்தோத்ரம் செய்து பன்னிரெண்டாம் ஸ்லோகத்தில் இவ்வாறு பலன் கூறுகின்றார். இந்த மந்திரங்களுக்கெல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திரராஜத்தின் பதங்களின் தத்வநிர்ணயம் சங்கரனான என்னால் மிகவும் உகந்து வெளியிடப்பட்டது. இந்த ஸ்ரீமந்த்ரராஜ பத ஸ்தோத்திரத்தை தினமும் காலையில், மதியத்தில், மாலையில் யார் உகந்து உரைக்க வல்லார்களோ, அவர்களுக்கு நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும், நீண்ட ஆயுளும் நலமுடன் விளங்கும் என்று பலச்ருதியும் கூறி முடிக்கிறார் ஸ்ரீ ஈச்வரர். இந்த ஸ்தோத்திரம் இந்நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரின் சிங்கவேள்குன்றப் பாசுரங்கள் அனைத்தும் நரசிம்மாவதாரத்தைப் பற்றியவை என்பது ஒரு தனி சிறப்பு. எனவே ஒவ்வொரு நரசிம்மரை தரிசனம் செய்த பின்னும் ஆழ்வாரின் சிங்க வேள் குன்ற பாசுரம் ஒன்றை அனுபவிக்கலாம் அதன்படி முதல் பாசுரமும் விளக்கமும் இதோ: அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓராளரியாய் அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் பைங்கணானைக் கொம்புகொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச் செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே. (1) பொருள்: பிரகலாதன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றவுடன் இரணியன் ஒரு தூணை கதையால் தட்ட அதே இடத்தில் அழகிய இப்பூமியில் உள்ளோரெல்லாம் பயப்படும்படி அபூர்வமான நரஸிம்ஹரூபியாய் தோன்றி அதைக் கண்டு ஹ்ரண்யன் கோபத்துடன் சண்டையிட அவனுடைய மார்பை வஜ்ர நகங்களால் பிளந்த பரிசுத்தனான சர்வேச்வரன் இடமாவது சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை, பச்சைக் கண்களையுடைய யானைகளின் கொம்புகளை பறித்துக் கொண்டு பகவத் பக்தியாலே அவரது திருவடியிலே சமர்ப்பிக்கின்ற சிங்கவேள் குன்றமாகும். திவ்யமாக சாந்த நரசிம்மரை தரிசித்து வெளியே வந்தவுடன், பார்கவ நரசிம்மர் சன்னதி கீழ் அஹோபிலத்தில் உள்ளதால் அவரை தரிசனம் செய்து விட்டு வந்து விடலாம் என்று கூறினார் திருமலை சுவாமிகள் எனவே பார்கவ நரசிம்மர் சன்னதிக்கு ஆட்டோவில் கிளம்பினோம். பார்கவ நரசிம்மரை காண சென்ற ஆட்டோ பயணம் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாதது அது என்ன என்று பார்போமா அன்பர்களே? அஹோபில நவநரசிம்மர்களுள் முதல் நரசிம்மராக பார்கவ நரசிம்மரின் தரிசனம் காண சென்றோம். இக்கோவில் கீழ் அஹோபிலத்தில் அமைந்துள்ளது. பிரகலாத நரசிம்மர் ஆலயத்திலிருந்து சுமார் மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இக்கோவில் ஆனால் முறையான பாதை இல்லை இக்கோவிலை சென்றடைய, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று சொல்வார்களே அது போல கரடு முரடான பாதைதான். நாங்கள் சென்ற வேன் அங்கு செல்ல முடியாது என்பதால் அங்குள்ள ஜீப்கள் இரண்டு மற்றும் ஒரு ஆட்டோவில் ஏறிக் கொண்டு புறப்பட்டோம் சிறிது தூரத்திற்கு பாதை சரியாக இருந்தது அதற்கப்புறம் அது காட்டு வழிதான் மரங்களின் வழியே வண்டிகளை ஓட்டிநர்கள் எவ்வாறு ஒட்டிச் சென்றனர் என்றே விளங்கவில்லை இரதம் போல, ( ஆம் இடி தாங்கி ) இல்லாத இரதம் போல வண்டிகள் சென்றன எலும்புகள் குலுங்கின. ஆகஸ்ட் மாதம் நாங்கள் சென்றிருந்தோம், மழை வேறு பெய்து பாதை முழுவதும் செம்மண் சகதியாக இருந்தது, ஓரிடத்தில் தண்ணீர் அதிகமாகி ஆட்டோ சிக்கிக் கொண்டது அனைவரும் கீழே இறங்கி ஆட்டோவை தள்ளி மேலே கொண்டு வந்தோம். இந்தப் பாதையிலும் அவர்கள் வண்டிகளை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றதால் ஓரிடத்தில் சக்கரம் வழுக்கி ஆட்டோ குடை சாய்ந்தது. அதில் இருந்தவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் அது அந்த நரசிம்மரின் அருள்தான். இறுதியாக அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதி வந்தவுடன் வண்டிகள் நின்றன. சுமார் அரை கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டி வந்தது. வண்டுகளின் ரீங்காரம், கட்டெறும்புகளின் அணி வகுப்பு, பறவைகளின் கீச் கீச் ஒலிகளை இரசித்துக் கொண்டே திருக்கோவிலை அடைந்தோம். [] பார்கவ புஷ்கரணி கோவில் சிறிய குன்றின் மேலே உள்ளது. சுமார் 132 செங்குத்தான படிகள் ஏறிச் செல்ல வேண்டும் பார்கவ நரசிம்மரை தரிசிக்க. அடிவாரத்தில் அக்ஷய தீர்த்தம் என்னும் புஷ்கரணி அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீர் எப்போதும் வற்றுவதில்லை என்பதால் இப்பெயராம். நீர் நிறைந்து, தாமரை, ஆம்பல் மலர்கள் நிறைந்து இரம்மியமாக காட்சி தந்தது புஷ்கரணி. கொக்குகள் அதன் நீரில் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன, பாசி படர்ந்த நீரில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் “ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள” என்னும் ஓங்கி உலகளந்த உத்தமனின் பாசுரம் மனதில் தோன்றியது. சதுர வடிவ தீர்த்தத்திற்கு நான்கு புறமும் கற்படிகள் வேயப்பட்டுள்ளன. . பெருமாள் அருமையான காட்டுப்பகுதியைத்தான் இருப்பிடமாக கொண்டுள்ளார் என்று நினைத்துக் கொண்டே ஜாக்கிரதையாக கால்களை அலம்பிக்கொண்டு மலையேறினோம். மலை ஏறும் போது அப்படியே திருநீர் மலை போலவே இத்திருத்தலம் உள்ளது போல ஒரு உணர்வு தோன்றியது. நீர்வண்ணப் பெருமாளையும் மனதில் நினைத்துக் கொண்டோம். ஒரு பிரகாரத்துடன் கூடிய மலைக்கோவிலில் சேவை சாதிக்கின்றார் பார்க்கவ முனிவர் தவம் செய்ததின் பலனாக சேவை சாதித்த பெருமாள். முனிவர் வேண்டிக்கொண்டதற்கிணங்க தசாவதாரங்களையும் திருமால் காட்டியருளியதாக ஐதீகம். இரணியனை மடியில் போட்டுக்கொண்டு அவன் வயிற்றைக் கிழிக்கும் உக்ர நரசிம்மர் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மேற் கரங்களில் சங்கு சக்கரம். வலக்காலை கீழே தொங்கவிட்டு அதிலே கிடுக்கிப்பிடியாக இரணியனின் வாள் ஏந்திய வலக்கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு இடக்காலை மடக்கி அதில் இரணியனை தாங்கி இருக்கிறார் பெருமாள். பெருமாளின் கருணையை வியந்தபடி அருகிலேயே கை கூப்பி பிரகலாதன் நிற்கின்றான். பார்கவ முனிவருக்குக் காட்டிய தசாவதாரங்களும் சிற்பத்தில் தோரணத்தில் பதிவாகி உள்ளன. மஹா விஷ்ணுவின் சிலை ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இரணியன் நரசிங்கத்தை வெட்டுவதற்கென உயர்த்திய வாள் உயர்த்திய வண்ணமே காட்சி அளிக்கின்றது. வியப்பில் உறைந்து போன முகத்தோடு இரணியன்!. நரசிங்கம் தன்னை மடியில் கிடத்திக் குடலைக் கிழித்து எடுப்பதை உணர்ந்து, தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் உணர்ந்ததால் மட்டும் அல்ல. வந்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்ட வியப்பு, சாட்சாத் பகவான் கையாலேயே தனக்கு மரணம் சம்பவிக்கிறதை எண்ணி வியப்பு! இந்த அசுரனுக்காக பகவானே தூணில் இருந்து கீழே இறங்கி வந்துவிட்டானே என்ற வியப்பு! இதை அறியாத நிர்மூடனாய் இருந்து விட்டோமே என்ற வியப்பு! அனைத்தும் ஒரு சேரக் காட்சி அளிக்கின்றது இரணியன் முகத்தில். அருகே பக்த பிரகலாதன் நடப்பது அனைத்தும் தனக்காவே என்ற எண்ணம் சிறிதுமின்றி அடியாரிலும் அடியாராகக் கை கூப்பித் தொழுத வண்ணம் நிற்கின்றான். நாங்கள் சென்ற போது சன்னதி மூடியிருந்தது வெளியே நின்று சந்து வழியாகவே மோட்சம் அளிக்க வல்ல பெருமாளை தரிசனம் செய்தோம். கூடாவிரணியனைக் கூருகிரால் மார்பிடந்த ஓடா வடலரியை உம்பரார் கோமானை தோடார் நறுந்துழாய் மார்வனை ஆர்வத்தால் பாடாதார் பாட்டொன்றும் பாட்டல்ல கேட்டாமே என்று திருமங்கைமன்னன் பாடிய பெருமாளை திருமகளார் தனிக்கேள்வனை, சுடராழி, புரிசங்கம் அங்கை கொண்டானை, அயர்வருமமரர்கள் அதிபதியை, பூவில் நான்முகனை படைத்த பூமன்னு பொருது மார்பனை, தேனும், பாலும், நெய்யும், கன்னலும், அமுதுமானானை, சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகலமார்வம் கீண்ட நரசிம்மனை மனதார வழிபட்டோம். பட்டாச்சாரியர்களை நாம் முன்னரே சொல்லி அழைத்துச் சென்றால்தான் கற்பூர ஹாரத்தியுடன் சேவை கிடைக்கும். பார்கவ முனிவர் மட்டுமல்ல வசிஷ்டர் முதலிய முனிவர்களும் இவரை வழிபட்டு பிரம்மரிஷி பட்டம் பெற்றுள்ளனர். நவக்கிரகங்களில் சூரியன் வழிபட்ட மூர்த்தி இவர். மலைப்படி ஏறும் போதும் இறங்கும் போதும் குரங்குகள் தொல்லை உண்டு கவனமாக பிரசாதங்களை எடுத்து செல்லவும். திரும்பி வரும் போது அவ்வளவு சிரமம் இருக்கவில்லை எங்கெங்கு தண்ணீர் தேங்கியுள்ளது என்பது தெரிந்ததால் ஓட்டுனர் கவனமாக கொண்டு வந்து பிரகலாத வரதர் கோவில் அருகில் கொண்டு வந்து சேர்த்தார். ஆலிநாடனின் இரண்டாவது பாசுரத்தை அநுபவிப்போமா? அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம் மலைத்த செல்சாத் தெறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்பச் சிலைக்கை வேடர் தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே. (2) பொருள்: (சீற்றத்தினால்) அலைகின்ற நாக்கைக் கொண்ட பெரிய வாயையும், பெரிய ஒளி பொருந்திய கூரிய பற்களையும், ஒப்பற்ற மிடுக்கையும் உடைய சிம்மமாய் தோன்றி, கொலை செய்வதையே வழக்கமாகக் கொண்ட கையை உடையவனான அசுரன் இரணியனுடைய மார்பை பிளந்த வஜ்ர நகங்களையுடைய சர்வேஸ்வர்ன் நித்ய வாசம் செய்யும் இடமாவது, (வேடர்களால்) தாக்கப்பட்ட தீர்த்த யாத்திரை செல்ப்வர்களின் கூட்டமானது போட்ட சண்டையில் உடுக்கை சப்திக்கவும் வில்லை கையிலே தாங்கிய வேடருடைய ஆரவாரம் எப்போதும் மாறாத சிங்கவேள் குன்றமாகும். பார்கவ நரசிம்மரை திவ்யமாக சேவித்து முடித்தபின் கீழ் அஹோபிலத்தில் உள்ள மற்றொரு நரசிம்மரான சத்ரவட நரசிம்மரை தரிசிக்க சென்றோம், ஆனால் சன்னதி அடைக்கப்பட்டிருந்தது ஆகவே மதிய உணவிற்காக யோகானந்த நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் உள்ள அன்னதானக் கூடத்திற்கு செல்லலாம் என்று சுவாமிகள் கூறினார். கீழ் அஹோபிலத்தில் அன்னதாதா அவதூதர் நாகி ரெட்டி அன்னையா என்பவர் இந்த 24 மணி நேர அன்னதான கூடத்தை ஆரம்பித்தார். வரும் யாத்திரிகளிடமிருந்து அவர் இரண்டு தம்படிகள் வாங்குவாராம் அதில் ஒன்றை அவர்களிடமே திருப்பித் தந்து விடுவாராம். அவருக்கு பின் அவர்கள் சந்ததியினரும் அதே சேவையை செய்து வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் அன்னம் கிடைக்கும். நாங்களும் அங்கு சென்று உணவு உண்டோம். அப்போது மழை ஆரம்பித்து விட்டதால் அருகில் கட்டியுள்ள அன்ன தாதா கோவிலுக்கு சென்று தங்கினோம். பக்கத்திற்கு 30 படிகள் வீதம் 60 வருடங்களை குறிக்கும் வண்ணம் மொத்தம் 60 படிகள் உள்ளன. இருபக்கமும் சப்த மாதாக்கள், நவகிரகங்கள், விநாயகர், முருகர், கருடன், அனுமன், தசாவதாரம், அஷ்ட லக்ஷ்மிகள் என பல் வேறு தெய்வ திருமூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நடு நாயமாக அவதூதர் சன்னதி யோக முத்திரையுடன் நின்ற கோலத்தில் கண்களை மூடி, திருவடிகளில் சங்கு சக்ர ரேகைகளுடன் காட்சி தருகின்றார் காசி ரெட்டி அன்னதாதா அவதூதர், சுற்றிலும் அனைத்து பிரம்மாண்டமும் அடக்கம் என்று உணர்த்தும் வகையில் அனைத்து தெய்வ உருவங்களும் உள்ளன. சாயி பாபா கோயில் போல 24 மணி நேரமும் அக்னி எரிந்து கொண்டு இருக்கின்றது. கீழே நவக்கிரகங்கள் துளசி மாடங்கள் போல அமைத்திருந்தது புதுமையாக இருந்தது. மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. அங்கேயே அமர்ந்து ஸ்ரீநரசிம்மரின் மாப்பெரும் கருணையை நினைந்து எப்போது மழை குறையும் நம் பயணத்தை தொடரலாம் என்று காத்திருந்தோம். காலையில் இருந்து ஓடிக்கொண்டே இருந்ததால் இது ஒரு நல்ல ஓய்வாக அமைந்தது. மழை நின்ற பின் யோகானந்த நரசிம்மரை சேவிக்க சென்றோம். எத்தனையோ யுகங்கள் மாறியும் பிரகலாதன் இங்கே இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாயும், அவை மாறவில்லை எனவும் கூறுகின்றனர். வேதாத்திரி மலைத் தொடரின் மேற்கே தொலைவாய் மரங்கள் அடர்ந்த பகுதியில் அமைந்துள்ளது யோக நரசிம்மரின் ஆலயம். யோக கோலத்தில் ஆதிசேஷன் மேல் கால்களை ஊன்றி யோக பட்டையுடன் மேல் கரத்தில் சங்கு சக்கரம் ஏந்தி கண்களை மூடிய நிலையில் தெற்கு முக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார் யோகானந்த நரசிம்மர் ஸ்ரீபிரகலாதாழ்வானை தன் திருமேனியிலேயே கொண்டு பிரகலாதனுக்கு யோக நெறி கற்பித்தவர் இவர் என்பது ஐதீகம். புதிதாக ஒரு நரசிம்மர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. புதபகவான் வழிபட்ட இவரை வழிபட புதனின் தொல்லை குறையும். இவரை வரத்தால் வலிநினைந்து மாதவநின்பாதம் சிரத்தால் வணங்கானாமென்றே – உரத்தினால் ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை ஓரரியாய் நீ யிடந்த தூண் என்று பொய்கையாழ்வார் பாசுரம் சேவித்து வணங்கினோம், அருகிலேயே அவதூதர் ஸ்தாபித்த யோகனந்த நரசிம்மர் ஆலயமும் உள்ளது. அங்கு அன்னதானத்திற்கு நன்கொடை கொடுப்பவர்கள் கொடுத்தார்கள். இப்போதும் அவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை குங்கும பிரசாதத்துடன் திருப்பி அளித்தனர். அதை வீட்டில் வைத்திருந்தால் என்றும் அன்னத்திற்கு பஞ்சம் ஏற்படாது என்பது பக்தர்கள் நம்பிக்கை. அடுத்து சீதாராமர் சன்னதி உள்ளது. இதோ நீலன் அவர்களின் மூன்றாவது பாசுரம் ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் வாய்ந்த ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம் ஓய்ந்தமாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால் தேய்ந்த வேயு மல்லதில்லாச் சிங்கவேள் குன்றமே. (3) பொருள்: வடிவுக்குத் தக்க பெருத்தவாயையும் வாள் போன்ற பற்களையும் ஒப்பற்ற மிடுக்கையும் உடைய நரசிம்ம கோலத்தில் வந்து அசுரராஜன் இரணியனுடைய வளர்ந்த சரீரத்தை கூரிய நகங்களாலே பிளந்த சர்வேஸ்வரனுடைய இடமாவது, காய்ந்த நிலத்தில் சஞ்சரிப்பதாலே ஒய்ந்து கிடக்கின்ற மிருகங்களும், உடைந்த சிறு குன்றுகளும் அதன் மேல் தானே உண்டான நெருப்பால் கொள்ளிக் கட்டை ஆகிக் கிடக்கின்ற மூங்கில்களையும் தவிர வேறு ஒன்றுமில்லாத சிங்கவேள் குன்றமாகும். அடுத்து நாங்கள் சேவிக்க சென்றது சத்ர வட நரசிம்மரை. கீழ் அஹோபிலத்திலிருந்து செல்லும் வழியிலேயே இக்கோவில் அமைந்திருந்தாலும் நாங்கள் சென்ற போது கோவில் பூட்டியிருந்தால் திரும்பி வந்து சத்ர வட நரசிம்மரை சேவித்தோம். அன்று ஆலிலையில் துயில் கொண்டு ஞாலமேழுமுண்ட மாயன், ஸ்ரீ வில்லிபுத்தூரிலே இன்றும் வடபத்ர சாயியாய் ஆலிலைகளின் நிழலில் பாம்பனையில் பள்ளி கொண்ட பரமனாய் சேவை சாதிக்கின்றார். அந்த பாரிடந்து, பாரையுண்டு, பாரையளந்த மாயவனே இங்கே அந்த குடை போன்று பரந்து விரிந்த ஆலமர நிழலில் மிகவும் ஆனந்தமாக அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார் சத்ர வட நரசிம்மராக. இவரது சிரிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஒன்பது நரசிம்மர்களிலே அளவில் பெரியவர் இவர்தான். இவர் அழகை நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் இவர் அக்காரகனி, ஆராவமுது, எவ்வளவு பருகினாலும் திகட்டவே திகட்டாது. மய்யோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ, ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகு என்று ஆழ்வார் பாடியபடி அற்புதமான வடிவழகு கொண்டவர் சத்ரவட நரசிம்மர். ஆறுகால் முக மண்டபம். தூண்களில் ஆஞ்சநேயரின் அழகிய சிற்பங்கள், மற்றும் நரசிம்மரின் வெவ்வேறு கோல சிற்பங்கள், துவாரபாலகர்கள் கருவறையில் பத்மாசனத்தில் அமர்ந்து மேற்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, வலக்கரத்தால் அபயம் வழங்கி இடக்கரத்தால் தொடையில் தாளம் போட்டபடி ஹாயாக அமர்ந்திருக்கின்றார் குடை போன்ற ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் நரசிம்மர். இவர் தாளம் போட்டுக்கொண்டு இருக்கிறார் என்று கூறினீர்களே யார் பாட்டுப் பாடுவது என்று கேட்கிறீர்களா? ஒரு தடவை தேவேந்திரன் மற்ற முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ வந்து நரசிம்மரை சேவித்த போது ஹாஹா ஹூஹூ என்ற இரு கந்தவர்கள் அருமையாக பாடினார்கள் அவர்களது இசையில் மயங்கிய நரசிம்மர் அவர்கள் இருவரும் அங்கேயே இருந்து தன்னை இசையால் மகிழ்விக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆகவே அவர்கள் இருவரும் இன்றும் பாடிக்கொண்டிருப்பதாகவும் அதைக் கேட்டு மகிழ்ந்து சத்ரவட நரசிம்மர் தாளம் போட்டுக் கொண்டு பிரசன்ன வதனத்துடன் ஆனந்தமாக சேவை சாதிக்கின்றார் என்பது ஐதீகம். இவரது சுந்தர ரூபத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கந்தர்வர்கள் இருவரின் உருவங்களும் சந்ந்தியின் முன்னர் சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. இவர் நவநரசிம்மர்களில் எட்டாமவர். இக்கோவிலில் நாங்கள் சென்ற போது பட்டர் ஒருவர் இருந்தார் அவர் அற்புதமாக பெருமாளை சேவை செய்து வைத்து தீர்த்த பிரசாதமும் வழங்கி சடாரி சேவித்து வைத்தார். முன்நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூவுலகில் மன்னரஞ்சும் மதுசூதனன் வாயில் குழலினோசை செவியைப்பற்றி வாங்க நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தந்தம் வீணை மறந்து கின்னரமிதுனங்களும் தந்தம் கின்னரம் தொடுகிலோமென்றனரே. எம்பெருமான் கண்ணனாக மணிவண்னனாக குழல் கொண்டு ஊதிய போது நாரதர், தும்புரு முதலானவர்கள் அந்த இசையில் மயங்கி தங்கள் வீனையை மறந்தவர்களாய் நின்றார்கள். கின்னரர்களும் அப்படியே இனி நாங்கள் குழலையே தொடமாட்டோம் என்று கூற இனிய குழலூதி சகல புவனங்களையும் தனது மயக்கும் மாயக் கண்ணன் யாரெனில் முன்னர் நரங்கலந்த சிங்கமாகி அவுணன் முக்கியத்தை முடித்தவன் என்னும் பெரியாழ்வர் பாசுரம் மனதில் தோன்றியது. இவ்வாறு மயக்கிய அந்த மோகனன் நமக்காக இங்கு தானே மயங்கிய நிலையில் சேவை சாதிக்கும் அழகை என்னவென்று சொல்ல. சென்று சேவியுங்கள் அப்போதுதான் அந்த சுகம் உங்களுக்கும் புரியும். நரசிம்மர் என்றாலே உக்கிரம் பார்க்க பயமாக இருக்கும் என்றெல்லாம் நினைப்பவர்கள் இவரைப் பார்த்தால் தங்கள் மனதை நிச்சயம் மாற்றிக்கொள்வார்கள் என்பதில் ஐயம் சிறிதளவுமில்லை. சிங்கம் மற்ற மிருகங்களுக்குத்தான் பயங்கரமானது அதுவே தன் குட்டிகளுக்கு எப்போதும் அதுவும் ஒரு தாய்தானே அது போலத்தான் நரசிம்மரும், கூடாருக்கு அவர் உக்கிரமானவர் ஆனால் அதன் பக்தர்களுக்கு அவர் ஆபத்பாந்தவர். அவரை சரணமடைந்தவர்களை அவர் என்றுமே கைவிட்டதில்லை. தற்போது அனைத்து நவநரசிம்மர் ஆலயங்கள் போலவே இந்த சன்னதியும் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. ஹாஹா ஹூஹூ என்ற இரு கந்தவர்களும் சுதை சிற்பங்களாக காட்சி தருகின்றனர். தற்போதைய அஹோபில மட ஜீயர் 46வது ஸ்ரீமத் அழகிய சிங்கரின் முயற்சியால் அனைத்து சந்நிதிகளிலும் திருப்பணிகள் நடைபெற்று சம்ப்ரோக்ஷணமும் நடைபெற்றிருப்பதை காண முடிந்தது, கேது வழிபட்ட சத்ரவட நரசிம்மரை பிரிய மனமில்லாமல் பிரிந்து மேல் அஹோபிலம் செல்லும் வழியில் உள்ள காரஞ்ச நரசிம்மரை சேவிக்க புறப்பட்டோம். சத்ரவட நரசிம்மரை சேவித்த மகிழ்ச்சியில் குமுதவல்லி மணாளரின் நான்காவது பாசுரத்தை சேவிப்போமா? எவ்வும் வெவேல் பொன்பெயரோன் ஏதலன்னின்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம் கவ்வுநாயும் கழுகும் உச்சிப்போதொடு கால் கழன்று தெய்வமல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றமே (4) பொருள்: துக்கத்தை உண்டாக்கும் கொடிய வேலையுடைய சத்ருவான இரணியனுடைய உயிரை பறித்து அவனுடைய சரீரத்தை வஜ்ரம் போன்ற கூரிய நகங்களால் கிழித்த சர்வேஸ்வரனுடைய இடமானது, கண்டாரை எல்லாம் கவருவதுமான நாய்களும், கழுகுகளும் சூரியனும் கூட கால் தடுமாறும் உயர்ந்த மலையாகிய, தன்னை விரும்பித் தொழும் அன்பர்கள் அல்லாத மற்றவர்கள் சென்று கிட்டவொண்ணாத சிங்கவேள் குன்றமாகும். இவ்வாறு கீழ் அஹோபிலத்தில் அமைந்துள்ள நரசிம்மர்களை சேவித்தபின் மேல் அஹோபிலத்திற்கு புறப்பட்டோம். அத்தியாயம் – 8 காரஞ்ச நரசிம்மர் தரிசனம் [] காரஞ்ச நரசிம்மர் மேல் அஹோபிலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது துர்வாச முனிவரால் சபிக்கப்பட்ட கபில முனிவர் வழிபட்ட காரஞ்ச நரசிம்மர் ஆலயம். ஞானம் பெற இவரை வணங்க வேண்டும். இத்தலத்தில் உயர்ந்த நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கின்றவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கும் என்பது பெருமாள் வாக்கு. மேல் அஹோபிலம் செல்லும் பாதையில் பவநாசினி ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது இப்பாதை. பாதையின் மறுபுறம் கோயில் அமைந்துள்ளது. இங்கு பவநாசினி ஆற்றில் குளிப்பவர்கள் அல்லது குளிக்க நினைப்பவர்கள் விரும்பிய பலனைப் பெறுவர். புங்க வனத்தில் அனுமன் தவம் செய்ய அவருக்காக நரசிம்மர் இங்கே சேவை சாதித்தார். ஸ்ரீமந்நாராயணன் சிறிய திருவடியான தன் பக்தனோடு சற்றே விளையாட நினைத்தார். நரசிம்மர். அழகிய சிங்கராய்க் காட்சி அளித்தான், ஆஞ்சநேயர் முன்னே. ஆஞ்சநேயர் அசரவில்லை. “எனக்கு வேண்டியது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம். நீ யார் சிங்க முகத்துடன்?” என்று கேட்டார். நரசிம்மம் பதில் சொன்னது. “இது என்னுடைய இடம். நரசிம்ம க்ஷேத்திரம். இங்கே நீ நரசிம்மரைத் தான் காண முடியும். நானும், ராமனும் ஒன்றே! என்னில் ராமனைக் காண்பாயாக!” என்று சொல்கின்றார். ஆனால் ஆஞ்சநேயர் ஒத்துக்கொள்ளவில்லை. “ஆஹா, நீ என்ன சிங்க முகத்தோடும், மனித உடலோடும் வந்து நீயும், ஸ்ரீராமனும் ஒன்றே என்கின்றாய்? யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? என் ஸ்ரீராமன் எத்தனை அழகு? எவ்வளவு செளந்தரியம்? முகத்தில் என்ன சாந்தம்? கண்களின் கருணையைச் சொல்லவும் முடியுமோ? இது என்ன உன் கைகளில் இவ்வளவு நீண்ட நகங்கள்? இவை எல்லாம் என் ஸ்ரீராமனுக்கு இல்லவே இல்லையே? மேலும் தன் கைகளைப் போன்ற நீண்ட வில்லைத் தரித்துக் கொண்டு, என் ஸ்ரீராமன் இன்னமும் தனக்கு அழகு சேர்த்துக் கொண்டல்லவோ காண்பான்? வில்லில்லாமல் அவனைக் காணவும் முடியுமோ? என் ராமனையே நான் காண விரும்புகின்றேன்.” எனச் சொல்ல, நரசிம்மர், “ஆஞ்சநேயா, உன் பக்தியை நான் மெச்சுகின்றேன். நானே நாராயணன், நானே நரசிம்மன், நானே ஸ்ரீராமன், என்னை நன்றாய்ப் பார்ப்பாயாக! என்னில் ஸ்ரீராமனைக் காண்பாய் நீ!” என்று சொல்லவும், உடனேயே ஆஞ்சநேயர் கண்களில் வில்லும், அம்பும் ஏந்திய ஸ்ரீராமன் தென்பட்டான். ஆஞ்சநேயர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கே ஒரு கணம் ஆதிசேஷன் படமெடுத்துக் குடை பிடிக்க ஸ்ரீமந்நாராயணன், தோன்ற, உடனேயே அதே ஆதிசேஷன் படமெடுத்த குடைக்கீழேயே நரசிம்மர் வலக்கையில் சக்ரத்தோடும், இடக்கையில் வில் அம்புகளுடன் இராமராகவும், சிம்ம முகம் மூன்று கண்களுடன் நரசிம்மராகவும், ஒற்றைத்தலை நாகம் குடைப் பிடிக்க விஷ்ணு ரூபராகவும் ஒரே சமயத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காரஞ்ச நரசிம்மராக சேவை சாதித்தார். ஆஞ்சநேயருக்கு உண்மை புரிந்தது. இந்த வித்தியாசத் திருக்கோலத்துடன் கராஞ்ச நரசிம்மர் காட்சி அளிக்கின்றார். பெருமாளுக்கு எதிரே கருடன் எப்போதும் போல் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார். அருகே அனுமனுக்கு ஒரு தனி சன்னதி அதில் அனுமன் பெருமாளை நோக்கிய திருமுகத்துடன் சங்கு சக்ரங்களுடன் சேவை சாதிக்கின்றார். ஆனால் இரண்டும் இடம் மாறியிருக்கின்றனவே, இராவண வதத்திற்காக ஸ்ரீநரசிம்மமூர்த்தி அனுமனை ஆலிங்கனம் செய்ததால் பெருமாள் கையில் இருந்த சங்கு சக்ரங்கள் இப்படி நமக்கு காட்சி அளிக்கின்றன. சந்திரன் வழிபட்ட பெருமாள், நவநரசிம்மர்களில் ஐந்தாமவர் இவர். சங்கு சக்கரங்களுடன் சேவை சாதிக்கும் அனுமனை அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்றாராக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் பொருள்: பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் திருக்குமாரன் சுந்தரன் அனுமன், பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கத்தில், பஞ்ச பூதங்களில் ஒன்றான கடலைக் கடந்து, பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமிப்பிராட்டியாரின் திருமகளான சீதாப்பிராட்டியை கண்டு, பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை வைத்தான், அப்படிப்பட்ட பெருமையுடைய மாருதி நம்மை எல்லாம் காக்கட்டும் என்று போற்றி வணங்கினோம். முக்கூர் சுவாமிகள் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன் மாருதி, பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவை தனக்கு அதிதேவதையாகக் கொண்ட சுவாதி நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர் ஸ்ரீ நரசிம்மர், பஞ்ச பூதங்களில் ஒன்றான கடலைக் கடந்தவர் மாருதி, பஞ்ச பூதங்களில் ஒன்றான கடலைக் கடைந்து, அக்கடலை தனக்கு இருப்பிடமாக கொண்டவர் ஸ்ரீநரசிம்மர், பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் பறந்தவன் மாருதி, அவ்வாயுவுமானவர் ஸ்ரீநரசிம்மர், பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணில் தோன்றிய சீதையைக் கண்டவன் சுந்தரன், அம்மண் மடந்தை மணாளன் ஸ்ரீ நரஹரி, பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை இலங்கையில் வைத்தவன் மாருதி அந்த அக்னியையே தனது நெற்றியில் கண்ணாகக் கொண்டவர் ஸ்ரீந்ருகேஸரி என்று அருமையாக இப்பாடலுக்கு விளக்கம் கூறுவார். இங்கு காரஞ்ச நரசிம்மர் ஆலயத்தில் இருவரையும் ஒன்று சேர தரிசித்த போது இவ்விளக்கம் மனதில் தோன்றியது. மாருதியை வணங்கிக் கொண்டிருக்கும் போதே இந்த முதல் நாள் எங்களை தொடர்ந்து கொண்டிருந்த மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்து விட்டது. அனைவரும் வேகமாக ஒடி வேனில் ஏறி கொண்டு அந்த கொட்டும் மழையில் மேல் அஹோபிலம் சென்று சேர்ந்தோம். இது வரை கீழ் அஹோபிலத்தில் உறையும் நரசிம்மர்களின் தரிசனம் கண்டோம் இனி மேல் அஹோபில வைபவம் தொடரும். கீழ் அஹோபில எம்பெருமான்களை தரிசித்த மகிழ்ச்சியில் மங்கை வேந்தனின் ஐந்தாவது சிங்கவேள் குன்ற பாசுரம் சேவிப்போமா? மென்றபேழ்வாய் வாலேயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்ற ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் நின்ற செந்தீ மொண்டு சூறை நீள்விசும்பூதிரியச் சென்று காண்டற்கரிய கோயில் சிங்கவேள் குன்றமே. (5) மெல்லா நின்றுள்ள பெரிய வாயையும் வாள் போன்ற பற்களையும் மிடுக்கையும் உடைய அற்புத நரசிம்மமாக அவ்வடிவைக் கண்டு போதே நடுங்கிய அசுரனான இரணியனுடைய சரீரத்தை கூரிய வஜ்ர நகங்களாலே இருபிளாவாகும்படி பண்ணிய சர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கின்ற இடமானது, குறைவற்றுக் கிடக்கின்ற சிவந்த தீயை சுழல் காற்றானது முகந்து கொண்டு பரந்த ஆகாயத்தில் கொண்டு சென்று சிதற அடிக்கையில், அருகே சென்று காண இயலாத சிங்கவேள் குன்றமாகும். அஹோபில யாத்திரை அக்காலத்தில் அவ்வளவு கடினமான யாத்திரையாக இருந்ததால் பல பாசுரங்களில் செல்வதற்கு அரிய கோவில் சிங்கவேள் குன்றம் என்று பாடியுள்ளார் இப்பாசுரத்தில் சென்று காண்டற்கரிய கோயில் என்று பாடுகின்றார். அத்தியாயம் – 9 மேல் அஹோபிலம் [] பவநாசினியின் அருவி கீழ் அஹோபிலத்திலிருந்து எட்டு கி.மீ பயணத்திற்கு மேல் அஹோபிலத்தை அடையலாம். கடல் மட்டத்திலிருந்து 2800 அடி உயரத்தில் மேல் அஹோபிலம் அமைந்துள்ளது. யாத்திரையின் முதல் நாள் மாலை ஐந்து மணியளவில் மேல் அஹோபிலம் வந்து சேர்ந்த போதும் மழை ஜோராகக் கொட்டிக்கொண்டிருந்தது. அப்புதுவெள்ளம் பவநாசினி ஆற்றின் நீர் வீழ்ச்சியில் எம்பெருமானின் கருணை வெள்ளம் போல் கொட்டிக்கொண்டிருப்பதை வேனில் இருந்தே கண்டு களித்தோம். ஆம் ஒரு அருமையான ஆனால் ஆழமான (சென்று குளிக்கமுடியாத) நீர் வீழ்ச்சி மேல் அஹோபிலத்தை அடைந்தவுடன் நம்மை வரவேற்கின்றது. நீர் வீழ்ச்சி மட்டுமா? வானரங்களும் தான், இராமாவாதாரத்தில் பெருமாளின் சேனைகள் இந்த வானரங்கள் தானே?. மழை நின்றதும் கீழே இறங்கி நீர் வீழ்ச்சியின் அழகை ரசித்தோம். மேல் அஹோபிலத்தில் தங்கும் வசதிகள் உள்ளன. அங்குதான் உணவு உட்கொள்ள வேண்டும் தனியாக உணவகங்கள் இல்லை. சிறுபெட்டிக் கடைகள், தேநீர் விடுதி மட்டும் உள்ளது. நாங்கள் ஆர்யவைஸ்யர்கள் மடத்தில் தங்கினோம். மடமெங்கும் இம்மடத்திற்காக நன்கொடை அளித்த அன்பர்களின் குடும்ப புகைப்படங்களை மாட்டி வைத்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாங்கு அருமையாக இருந்தது. ஒருவர் தங்கக்கூடிய அறைகளும் இருவர் தங்கக்கூடிய அறைகளும் உள்ளன. அறையிலிருந்து நீர் விழ்ச்சியின் காட்சி அருமையாக கிடைக்கின்றது. உணவு நாம் சொல்லுகின்ற வகையில் செய்து தருகின்றனர். அருகில் உள்ள நகரத்தில் இருந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு வருகின்றனர். சரியான சமயத்தில் உணவு உண்ண வேண்டியது அவசியம். அனைவரும் அமர்ந்து முதலில் அமர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்த பின்னரே உணவு பரிமாறப்படுகின்றது. நடக்க முடியாதவர்களுக்கு டோலிகள் கிடைக்கின்றது. அஹோபில நரசிம்மர், க்ரோடா நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர் மற்றும் மாலோல நரசிம்மர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொண்ட பின் அஹோபில நரசிம்மரை சேவிக்க சென்றோம். திருக்கோவில் மாலை ஆறு மணி வரைதான் திறந்திருக்கும் என்பதால் சீக்கரமே சென்றோம். மடத்திலிருந்து வெளியே வந்தால் அருகில் ஒரு குளம் ஆனால் அதில் அதிக தண்ணீர் இருக்கவில்லை. எதிரே பெரிய மலை அதில் பல விதமான குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன, பின் செங்குத்தான படிகளில் ஏறி வலம் திரும்பினால் அகன்ற வீதி அதன் இறுதியில் அஹோபில நரசிம்மர் ஆலயம். மேல் அஹோபிலத்தில் மிக எளிதாக சேவிக்கக்கூடிய நரசிம்மர் இவர். இருபுறமும் சுதை சிற்பங்கள் நிறைந்த கோபுரங்களுடன் எழிலாக அமைந்துள்ளது உக்ர நரசிம்மர் ஆலயம். அருகிலேயே பவநாசினி ஆறு ஓடுகின்றது. ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கவும், பாவன நரசிம்மரை தரிசிக்கவும் இக்கோவிலை கடந்து செல்ல வேண்டும். இக்கோடியில் திருக்கோவிலுக்கு எதிரே உற்சவ மண்டபம் உள்ளது. பிரம்மோற்சவ காலங்களில் இவ்வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இம்மண்டபத்தில் எறி நின்று கருடாத்திரி-வேதாத்திரி மலைகளின் அழகை இரசிப்பது ஒரு சிலிர்ப்பான விஷயம்! ஐந்து நிலை கோபுரம் நம்மை வா வா என்று அழைக்க திருக்கோவிலின் உள்ளே சென்றோம், ஒன்பது நரசிம்மர்களின் ஓவியங்களையும் இக்கோவிலில் முதலில் தரிசித்தோம். கற்சிற்பங்கள் இக்கோவிலிலும் நிறைந்திருக்கின்றன. பின்புற இராஜ கோபுரம் மூன்று நிலை கோபுரம். மலைப் பிரதேசம் என்பதால் ஆலயம் அதற்கேற்றார்ப் போல அமைந்துள்ளது. பல மண்டபங்கள் ஆலய வளாகத்தில் அமைந்துள்ளன. இராமானுஜருக்கு தனி சன்னதி சிறப்பாக அமைந்துள்ளது. பாஷ்யக்காரரை தரிசித்து விட்டு திரும்பினால் பலிபீடம் கொடிமரம் கருடன் சன்னதி. இரண்டு வாயில்கள் இரண்டிலும் துவார பாலகர்கள், மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும் நடுவில் யாருடைய காலும் படாதபடி சிறிது இடத்தை பாதுகாத்து வைத்திருந்தனர். விசாரித்த போது 1513ம் ஆண்டு 6ம் ஜீயர் ஸ்ரீசெஷ்ட பராங்குச யதீந்திர மஹா தேசிகர் குகைக்குள் திருநாட்டிற்கு ஏகியதால் அங்கு யார் பாதமும் படக்கூடாது என்று வேலியிட்டு வைத்திருக்கின்றனர். பக்தர்கள் இங்கு நின்று மனமுருக வழிபட்டு குருவருள் பெற்று செல்கின்றனர். []உக்ர நரசிம்மர் - செஞ்சு லக்ஷ்மி இம்மண்டபத்தில் ஆதி சங்கரர் ஸ்தாபித்த சீதா பரமேஸ்வர லிங்கமும், அவருக்கு சேவை சாதிக்கும் லக்ஷ்மி நரசிம்மரையும் சேவிக்கின்றோம். சீதையைத் தேடி இராமர் அலைந்த போது இங்கே வந்து நரசிம்மரை பூஜித்து வணங்கினார். இச்சிங்கவேள்குன்றப்பெருமாளை சக்கரவர்த்தித் திருமகன் பஞ்சாம்ருத ஸ்தோத்திரத்தினால் வழிபட்டாராம். ஆதி சங்கரர் உக்ர நரசிம்மரை தரிசிக்க வந்த சமயம் கபாலிகர்கள் இவரது கையை வெட்டி விட, ஸ்ரீ நரசிம்ம கராவலம்பம் பாடி ஆதி சங்கரர் பெருமாளை துதி செய்ய அவர் கை மீண்டும் வளர்ந்தது. எனவே ஆதி சங்கரர் இங்கு சிவ லிங்கத்தை ஸ்தாபித்தார். அந்த நேரத்திலும் சிறிது கூட்டம் இருந்தது, சிறிது நேரம் வரிசையில் நின்று கருடனுக்காக குகையில் வந்து சேவை சாதித்த உக்ர நரசிம்மரை சேவிக்க திறந்த முதலையின் வாய் போன்ற குறுகலான குகையினுள் சென்றோம். அங்கே எம்பெருமான் அளித்த தரிசனம் இவ்வாறு அற்புதமாக இருந்தது. சாலக்கிராம மாலையுடன், தன் மடியில் இடந்திரட்டிரணியன் நெஞ்சை இரு பிளவாக தன் வஜ்ர நகங்களால் பிளக்கும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார் அஹோபில உக்ர நரசிம்மர். நரங்கலந்த உருவத்தில் சக்ராசனத்தில், சங்கு சக்கரம் தாங்கி, ஜடை, பிடரி மயிருடன் கூடியவராய், அசுர கூட்டத்தை வேருடன் அழிக்கும் பெருமாள் கோரைப் பற்கள் தெரிய கர்ஜிக்கும் கோலத்தில் மூன்று கண்களுடன், நெற்றிக் கண்ணில் தோன்றிய தீ முவ்வுலகங்களையும் அழிக்கும் விதமாகவும், அதே சமயம் அருகில் கை கூப்பி நிற்கும் பிரகலாதன் மேல் அமுத பார்வையை வர்ஷிக்கும் கோலத்தில் அற்புதமாக, ஆனந்தமாக, திவ்யமாக சேவை சாதிக்கின்றார். கருட பகவான் செய்த கடும் தவத்திற்கு இரங்கி சத்திய சொரூபனாக மலைக்குகையில் நெருப்பின் உக்கிரத்தோடு தோன்றிய பெருமாள் வெள்ளி கவசத்தில் மின்னுகின்றார். காணக்கண் கோடி வேண்டும் பெருமாளை கண்ணாரக் காண. இவர் பிரகலாதனுக்கும் பிரத்யக்ஷம். அஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவமக்ஷிணி” என்ற சாம வேத உபநிஷத்தான ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்தில் “தாமரைத் தடாகத்திலே நீண்ட தண்டுடன் விளங்கும் தாமரை சூரியனைக் கண்டதும் எப்படி மலர்கின்றதோ அது போல திருமுக மண்டலமும், திருக்கண்களும் கொண்டவன் எம்பெருமான். அந்த அமிர்தம் பொழியும் திருக்கண்களால் எல்லோரும் குளிரக் கடாக்ஷித்தருளும் பரந்த கண்ணழகு மிக்கவன் என்று போற்றப்படும் பெருமாளின் திருக்கண்களுக்கு மட்டும் தங்க கண்ணடக்கம் சாத்தியுள்ளனர். திருப்பாணாழ்வார், கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய என்று அநுபவித்த பெருமாளின் திருக்கண்களை இங்கேயும் கண்டோம். அருகிலேயே ஆதி சேஷன் குடைப்பிடிக்க லக்ஷ்மி நரசிம்மர் உற்சவராய் எழுந்தருளியுள்ளார். அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீ ஆதிவண் சடகோபர் மாலோலப் பெருமாளை கரத்தில் ஏந்திய கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கண்குளிர, மனம் உருக அந்த கருணா மூர்த்தியை சேவித்தோம். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கருணை வெள்ளமே எல்லோரையும் காத்தருள் என்று கருடனுக்காக தோன்றி சேவை சாதிக்கும் பெருமாளை வேண்டிக் கொண்டோம். குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லவெங்கோவே மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன் மைந்தா! இடந்திரட்டிரணியன்நெஞ்சை இருபிளவாக முன் கீண்டாய்! குடந்தை கிடந்த (அஹோபிலம் அமர்ந்த) கோவே! குருக்கத்திப்பூ சூட்ட வாராய். என்று பெரியாழ்வாரின் பாசுரம் சேவித்து திவ்யமாக சேவித்தோம். குகையில் பெருமாள் ஏன் எழுந்தருளியுள்ளார். சிம்மம் குகையில் வசிக்கும் அதனாலா? சூடிக் கொடுத்த சுடர்க்கொடியும் அவ்வாறு தானே மாரி முலை முழஞ்சில் மன்னி கிடந்துறங்கும் சீரிய சிங்கம் என்று பாடியுள்ளாள். வேதங்கள் பர்வதங்கள் என்றால் குகைகள் வேதாந்தம் அதாவது உபநிஷத்துக்கள். எனவே வேதாந்த சாரமே பெருமாள்தான் என்பதை உணர்த்த பெருமாள் குகையில் சேவை சாதிக்கின்றார். “எம்பெருமானின் குகை வாசமே நமது ஹ்ருதய வாசம் என்பதை நாம் உணர வேண்டும். எல்லா ஜீவராசிகளிலும் அந்தர்யாமியாக நாராயணன் விளங்குகின்றான் என்பதை உணர்த்தவே இந்த குஹா வாசம்”. இந்த அஹோபில மஹா ஷேத்திரத்தில் எம்பெருமான் இருக்கும் இருப்பே நம்மள்ளும் அவர் இருக்கும் இருப்பு. எனவே கடினமான மலைக்குகையில் அமர்ந்திருக்கும் நரசிம்மப் பெருமாளே இங்கு ஓடி வந்து எங்கள் இருதய குகையிலும் நித்யவாசம் செய் என்று மனமார வேண்டிக்கொண்டோம். பெருமாளுக்கு எதிரே கைகூப்பிய நிலையில் கருடன் ஆனந்தமாக சேவை சாதிக்கின்றான். குகையை விட்டு வெளியே வந்து ஆதி சங்கரர் ஸ்தாபனம் செய்த நரசிம்ம சுதர்சன சக்கரத்தை சேவித்தோம். அடுத்து செஞ்சு லக்ஷ்மி தாயார் சன்னதி. செஞ்சு என்பது இந்த நல்ல மலைகளில் வசிக்கும் ஆதிவாசி மக்களின் பெயர். இந்த செஞ்சு இனப்பெண்ணை நரசிம்மர் மணந்து கொண்டதால் தாயாருக்கு இத்திருநாமம். தாயார் பத்மாசனத்தில் இரு மேற்கரங்களில் தாமரை மலர் தாங்கி வைர கிரீடம் வைர தடாகங்கள் அணிந்து சர்வலாங்கர பூஷிதையாக சேவை சாதித்தாள். அன்னையை, அகலகில்லேன் என்று பெருமாளை பிரியாத அலர்மேல் மங்கையை, அலை கடலில் தோன்றிய அமுதத்தை மனதார வழிபட்டோம். ஆலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தின் மேல் தளத்தில் அழகிய சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய பதினாறு கால் மண்டபம். அங்கிருந்து பெருமாள் மற்றும் தாயாரின் விமானங்கள் மற்றும் இரண்டு ராஜகோபுர தரிசனமும் பெறலாம், அங்கு நின்று சுற்றிலுமுள்ள பர்வதங்களின் அழகையும் காணலாம். பின் வெளியே வந்து அமர்ந்து திருமங்கை மன்னன் அருளிய சிங்கவேள் குன்ற பாசுரம் எரிந்த பைங்கண் இலங்கு பேழ்வாய் எயிற்றோடு இது எவ்வுருவென்று இரிந்து வானோர் கலங்கியோட இருந்த வம்மானதிடம் நெரிந்தவேயின் முழையுள் நின்று நீள்நெறிவாய் உழுவை திரிந்தவானைச் சுவடுபார்க்கும் சிங்கவேள் குன்றமே (6) பொருள் : சீற்றத்தாலே எரியா நின்ற பசுமையான கண்களையும் கோரைப் பற்களையுடைய விளங்கா நின்றுள்ள பெரிய வாயையும் கொண்டு, இது என்ன வடிவு என்று அஞ்சி தேவர்கள் எல்லாம் சிதறி ஒடும்படியாக எழுந்தருளிய சர்வேஸ்வரனின் இடமானது, ஒன்றோடு ஒன்று மூங்கிலின் வழியாக புலிகள் பெரிய வழிகளிலே யானைகள் சென்ற மோப்ப சக்தியாலே அடையாளத்தை பாரா நின்றுள்ள சிங்கவேள்குன்றமாகும் என்று சேவித்து பெருமாளை வணங்கி விட்டு அப்படியே காலார நடந்து வந்து விடுதியை அடைந்து உணவு அருந்தி விட்டு அடுத்த நாள் அதிகாலையிலேயே பாவன நரசிம்மரை சேவிக்க செல்ல வேண்டும் என்பதால், இன்று அருமையான தரிசனம் தந்ததற்காக நரசிம்மருக்கு நன்றி தெரிவித்து உறங்கச் சென்றோம். இவ்வாறு யாத்திரையின் முதல் நாள் திவ்ய தரிசனம் கண்டோம். இரண்டாம் நாள் அனுபவம் என்ன எந்த நரசிம்மரை தரிசனம் செய்தோம் என்று அறிய ஆவலாக உள்ளதா? சூரியன் உதயமாகும் வரை சற்றுப் பொறுங்கள் அன்பர்களே. அத்தியாயம் -10 பாவன நரசிம்மர் தரிசனம் பாவன நரசிம்மரை தரிசனம் செய்ய வேண்டுமென்றால் கருட மலையில் ஏறிச் செல்ல வேண்டும் அரை நாள் ஆகும், ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்க சென்றால் வேதகிரியில் ஏறிச் செல்ல வேண்டும் அப்படியே உக்ரஸ்தம்பமும் தரிசனம் செய்யலாம் எங்கு செல்லலாம் என்று சுவாமிகள் கேட்டார். நாங்கள் பாவன நரசிம்மரை தரிசிக்க மலையேற்றம் சிறிது கடினம் என்பதால் பாவன நரசிம்மரை முதலில் சேவிக்க முடிவு செய்தோம். காலையில் சீக்கிரமே கிளம்பினால் வெயிலுக்கு முன்னர் திரும்பி வந்து விடலாம் என்பதால் காலை ஐந்து மணிக்கே எழுந்து தயாராகி விட்டோம், அதனால் அருவிக்கு குளிக்க செல்லவில்லை. சூரிய உதயம் ஆனவுடன் கையில் தடி எடுத்துக் கொண்டு கிளம்பினோம், பாவன நரசிம்மருக்கு தளிகைக்காக பொருட்கள் எடுத்து சென்றதால் மந்திகளிடமிருந்து அவற்றைக் காப்பாற்ற தடி தேவைப் பட்டது. அஹோபில நரசிம்மர் கோவிலுக்கு பின் புறம் இருந்து பாதை துவங்குகின்றது, முதலில் செங்குத்தான படிகள் சுமார் 300 ஏறவேண்டும். ஏறும் போது எதிரே உள்ள வேதகிரி மலையில் மாலோன் சன்னதியை மஞ்சள் நிறத்தில் அருமையாக தரிசித்தோம். அதற்கு பிறகு சிறிது கடினமான பாதைதான். சிறிது தூரம் சென்றதும் காட்டு ஒற்றையடிப் பாதை துவங்கியது. சுற்றிலும் தேக்கு, மூங்கில் மரங்கள், பறவைகள் கீச் கீச் என்று ஒலி எழுப்பிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. பட்டாம் பூச்சிகள் வண்ண வண்ண சட்டைகளில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக பறந்தன. வண்டுகளின் ரீங்காரம் காதுக்கு இனிமையாக இருந்தது. சாரை சாரையாக பல்தரபட்ட எறும்புகள் ஊர்ந்து கொண்டு சென்றிருந்தன. காடு முழுவதும் கரையான் புற்றுகள் நிறைய தென்பட்டன. பல்வேறு கரையான்கள்களும் சாரை சாரையாக சென்று கொண்டிருந்தன. அடர்ந்த காடு, நடு நடுவே காட்டாறுகளின் தாரைகள் மழைக் காலத்தில் கவனமாக செல்ல வேண்டியிருக்கும். காலணி இல்லாமல் ஏறியதால் மெதுவாகவே மலை ஏறினோம். “ஓம் நமோ நாராயணா“ என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தையும், ”ஜெய் நரசிம்மா“ என்று அவரை துணைக்கு அழைத்துக் கொண்டும் மெல்ல மெல்ல ஏறினோம். மொத்த தூரம் 7 கி. மீ மூலிகைக் காற்றை அனுபவித்துக் கொண்டே நடந்தோம். மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள், நம் பாதங்களை தழுவும் குளிர்ச்சியான நீரோடைகள், மூலிகை வாசம் நிறைந்த காற்று என்று வனச்சூழல் ஒரு புறம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறு புறம் செங்குத்தான மிரட்டும் மலைத்தொடர். பாவன நரசிம்மரை சேவிக்க இதன் ஊடே நடந்தோம். அதுவும் ஒரு சுக அனுபவம்தான். எங்களுடன் வந்த குடும்பத்தினரின் இரு குழந்தைகள் கீர்த்தனா மற்றும் சாயி அர்விந்த எங்களுடன் வந்தனர் அவர்கள் இருவரும் அருமையாக உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸ்ர்வதோமுகம் | நரசிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் || (சிம்ம ரூபத்தை கொண்டவரானதால்) உக்ரமாகவும், வீரானாயும், மேலானவாயும், (சர்வவ்யாபியாயுமிருப்பதால்) மஹா விஷ்ணுவாயும், ஜ்வலிக்குமவனாயும், எல்லா இடங்களிலும் முகத்தை உடையவராயும், நரசிம்ம ரூபியாகவும் பயங்கரனாகவும், மங்களகரனாகவும், ம்ருத்யுவிற்கும் ம்ருத்யுவானவரான உம்மை வணங்குகின்றேன் என்னும் நரசிம்ம அனுஷ்டுப் மூல மந்திரத்தை கூறிக்கொண்டு வந்தனர், நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம். சிறிது தூரம் சென்ற பின் திருப்பாவை பாசுரங்களை சேவித்துக் கொண்டே நடந்தோம். நாங்கள் நரசிம்மா என்று கூவிய அந்த ஒலி அப்படியே எதிரொலியாகி ஆயிரம் நரசிம்மர்களாக திரும்பி வந்தது. இந்த கருப்பு மலை, செஞ்சு இன மக்கள் வாழும் பகுதி, சிலர் கரடிகளை மாலை வேளைகளில் பார்த்திருக்கின்றனர். மரங்களிலிருந்து உதிர்ந்த இலைச் சருகுகள் காய்ந்து கால்டியில் மொட மொடக்கின்றன. ஆகாயத்தில் மேகங்கள் பல்வேறு உருவங்கள் காட்டுகின்றன. நாங்கள் சென்ற போது போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் முன்னும் பின்னும் பல்வேறு வீரர்கள் பாதுகாப்பு தர பாவன நரசிம்மரை தரிசிக்க சென்றார். பின்னர் கீழே சென்று மடத்தில் விசாரித்த போது நக்ஸல்வாதிகள் உள்ள பகுதி எனவே போலீஸ் ரோந்தில் ஈடுபடும் போது நரசிம்மரை தரிசிக்க வருவார்கள். புனிதமான இப்பகுதியை நக்சல்வாதிகள் கொடுமை செய்வதை ஏன் நரசிம்மர் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். மேலும் செம்மரங்கள் இம்மலைத்தொடரில் அதிகமாக இருப்பதால் செம்மர கடத்தல்காரர்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது என்று கூறினார். கருட மலையின் ஒரு இறகில் ஏறி பின்னர் மற்றொரு இறகில் இறங்கி சுமார் இரண்டு மணி நேரம் நடைப்பயணம் செய்த பின் பாவன நரசிம்மர் ஆலயத்தை அடைந்தோம். சீக்கிரமே சென்று விட்டதால் கூட்டம் அதிகம் இருக்கவில்லை, நேரம் செல்ல செல்ல கூட்டம் சேர்ந்தது. அதில் சிலர் கீழிருந்து ஜீப்பில் வந்திருந்தனர். பார்கவ நரசிம்மரை தரிசிக்க சென்ற போது எப்படி சென்றோமோ அது போல கரடு முரடான பாதையில் கற்களின் மேல் ஜீப்பை ஒட்டிக் கொண்டு வந்தார்களாம், எலும்புகள் எல்லாம் ஆட்டம் கண்டு விட்டன, சற்று கடினமான பயணம்தான் என்று அவர்கள் கூறினர். ஒரு ஜீப்பிற்கு 6 பேர் வரை ஏற்றிக் கொள்கின்றனராம். முழு ஜீப்பிற்கு வாடகை ரூபாய் 1200 ஆகியது என்றனர். மலை ஏற இயலாதவர்கள் இவ்வாறு வந்து பெருமாளை சேவிக்கலாம், இவையெல்லாம் எல்லாரும் சென்று சுலபமாக பெருமாளை தரிசிக்க முடியாது அவர் அருள் இருந்தால் மட்டுமே அவரை சேவிக்க முடியும் என்பது தெள்ளத் தெளிவு. முன்பு பரத்வாஜ முனிவர் தம் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக்கொண்ட தலம். பெரும் பாதகர்களும் இங்கு வந்து பெருமாளை வணங்கினால் அவர்கள் பாவம் விலகும். பிறவி என்னும் பெரும் கடலிலிருந்து மீள்வார்கள் என்பது திண்ணம். சுற்றிலும் நெடிதுயர்ந்த மலைகள் நடுவில் பள்ளத்தாக்கு போல இருக்கின்ற பகுதியில் பாவன நரசிம்மர் ஆலயம் எழிலாக அமைந்துள்ளது. ஒரு மஹா மண்டபம், சிறு அர்த்த மண்டபம் கர்ப்பகிரகம் என்று எழிலாக அமைந்துள்ளது மாப்பிள்ளை சுவாமியின் ஆலயம். ஆம் செஞ்சு லக்ஷ்மியை மணந்த கோலத்தில் முறுக்கு மீசையுடன், தாயாருடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள். அம்மை ஐயனை நோக்கிய அற்புத கோலம். மற்ற இடங்களில் தாயார் முன்னே நோக்கி அமர்ந்த கோலத்தில் சேவை சாதிப்பார் ஆனால் இங்கு காதல் பொங்க பெருமாளை நோக்கும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இடது தொடையில் அம்மையை அனைத்த வண்ணம், சங்கு, சக்கரம் மேற்கைகளில் தாங்கி அபய ஹஸ்தத்துடன் பெருமாள் அளிக்கும் சேவை அத்தனை அருமை. புது மண தம்பதிகளுக்கு ஆதிஷேசன் ஏழு தலைகளுடன் எழிலாக குடை பிடிக்கின்றான். பெருமாளின் மீசையின் அழகை என்னவென்று சொல்வது. நெளிந்து நெளிந்து செல்கின்றது மீசை. தாயாரின் பாத சேவை இங்கு விஷேசம். அனைத்து பாவங்களையும் போக்குபவர் பாவன நரசிம்மர். இக்கோவிலில் சுயம்பு மூர்த்தியுடன் பிரதிஷ்டா மூர்த்தியும் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சிவலிங்கம், வேணு கோபாலர் மூர்த்தங்களும் உள்ளன. திருமலை சுவாமிகள் முதலிலேயே கூறியிருந்ததால் பெருமாளுக்கு வேஷ்டி, அங்க வஸ்திரம், தாயாருக்கு புடவை, நெய்வேத்தியத்திக்கு அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை எடுத்துக் கொண்டு சென்றிருந்தோம். தளிகை அங்கேயே தயார் செய்து பெருமாளுக்கு படைக்கின்றனர் பட்டாச்சார்யர்கள். எங்களுக்கு முன் சென்றவர்களின் தளிகை தயார் ஆகிக்கொண்டிருந்ததால், நாங்கள் மஹா மண்டபத்தில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் திவ்யமாக சேவித்தோம். பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் அருமையாக அலங்காரம் செய்து அற்புதமாக சேவை செய்து வைத்தார் பட்டர். நரசிம்மருக்கு உகந்த பானகமும் பிரசாதமாக அளிக்கின்றனர். அஹோபில கருடாசைல மத்யே | க்ருபாவஸாத் கல்பித சன்னிதானம் || லாமியா சமா அலிங்கித வாம பாகம் | லக்ஷ்மி நரசிம்ம சரணம் ப்ரப்த்யே || என்று மனதார புதன் வழிபட்ட ஒன்பதாவது நரசிம்மரை வாளுகிர்ச்சிங்க உருவாய் உளந்தொட்டிரணியன் ஒண்மார்பகலம் பிளந்திட்ட கைகள் உடைய எம்பெருமானை, கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியனை, அதிரும் கழல் பெருந்தோள் இரணியனாகம் பிளந்தரியாய் உதிரமளந்த கையோடிருந்தவன், நாதனான நரசிங்கன், கோளரி மாதவனை, அரிமுகனை, அச்சுதனை, மையார் கருங்கண்ணி கமலமலர்மேல் செய்யாள் திருமார்வினில் சேரும் திருமாலை, அல்லிமாதரமரும் திருமார்பினனை, தயரதன் பெற்ற மரகத மணித்தடத்தினை, திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலை, பின்னை தோள் மணந்த பேராயனை மனங்குளிர சேவித்தோம். பின்னர் வெளியே உள்ள ஒரு மண்டபத்தின் மேல் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார். பெருமாளின் அருளினால் நல்ல அற்புதமான சேவை கிடைத்தது. வேடுவ குலமான செஞ்சு இனம். ஏழ்மையான மலை வாழ் மக்கள், காட்டில் வேட்டையாடி பசி தீர்த்துக் கொள்ளும் இனம். இக்குலத்தில் பிறந்த ஒரு பெண் நரசிம்மர் மேல் மிகவும் காதல் கொண்டு ”மானிடர்களுக்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் காண் மன்மதனே“ என்று திடமாக இருந்தாள். பெருமாளும் அவளை மிகவும் விரும்பினார். அவளை தன் துணையாக்கி மலை வாழ் மக்களுக்கு பெரிய அந்தஸ்த்தை அளித்தார். செஞ்சு லக்ஷ்மிக்காக பெருமாள் மிருகங்களை வேட்டையாடி மாமிசங்களைக் கொண்டு வந்து கொடுத்தார் என்கின்றனர். இவ்வாறு இருந்த செஞ்சு லக்ஷ்மியை பெருமாள் மணந்து கொண்டார். இன்றும் வேடுவர்கள் தங்கள் மகளுக்கு (தாயாருக்கு) சனிக்கிழமைகள் தோறும் அஹோபிலம் வந்து மாமிசம் படைத்து வழிபடுகின்றனர் பெருமாளும் அளவற்ற கருணையினால் அதை எற்றுக்கொள்கின்றார். பெருமாள் கோவிலிருந்து ஒரு ஒற்றையடிப்பாதையில் ஏறிச் சென்றால் செஞ்சு லக்ஷ்மியின் தனிக் கோவிலை சென்றும் சேவிக்கலாம். எல்லா வளங்களையும் நலங்களையும் அனைவருக்கும் நல்கும் அன்னை ஒரு குகையில் தாமரை மலரை கையில் ஏந்தி பிரசன்ன முகத்துடன், அழகிய புன்னகையுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றாள். அன்னைக்கு எதிரே காவலாக சிறிய திருவடி. குகையிலிருந்து வெளியே வர இன்னொரு பாதை உள்ளது. தாயின் கர்பத்திலிருந்து குழந்தை வெளியே வருவது போல தவழ்ந்து வெளியே வரவேண்டும். தாயாரையும் பெருமாளையும் நன்றாக சேவித்த மகிழ்ச்சியுடன் திரும்பி நடந்து வந்தோம் மலையேற்றம் போல் இறக்கம் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. வரும் வழியில் பல வயோதிக தம்பதிகளும் காலில் காலணி இல்லாமல் பெரும் பக்தியுடன் நடந்து வருவதைக்கண்டு அவர்களின் பக்தியை எண்ணி கண்ணில் நீர் பெருகியது. சுமார் பன்னிரண்டு மணியளவில் கீழே மடத்தை வந்து அடைந்தோம். இரண்டாவது தடவை சென்ற போது பாவனா நரசிம்மரை தரிசிக்க ஜீப் மூலம் சென்றோம். சுமார் ஒரு மணி நேரம் ஆகின்றது மலைப்பாம்பு போல பாதை வளைந்து வளைந்து செல்கின்றது. மூங்கில் புதர்கள் அதிகம். கரையான் புற்றுகளும் வழியெங்கிலும் பார்க்கலாம். செம்மரங்களுக்கு அடையாள எண் இட்டிருக்கின்றனர். செம்மண் பூமி புழுதியை கிளப்பிக்கொண்டே குலுங்கிக்கொண்டு மலைப் பாதையில் அடர்ந்த காட்டின் இடையே சீர்படாத பாதையில் சுருண்டு படுத்திருக்கும் மலைப்பாம்பின் உடல் மீது ஊர்ந்து ஏறிச் செல்லும் கட்டெறும்பு போல் பயணம் செய்கையில் ஏற்ற இறக்கங்கள் ஒரு தனி அனுபவம்தான். இத்தடவை ஜீப் மூலம் பாவன நரசிம்மரை சேவிக்கச் சென்றதால் ஒரே நாளில் பத்து நரசிம்மர்களையும் தரிசிக்க முடிந்தது. அதிகாலை ஆறு மணிக்கு கிளம்பி ஜீப் மூலம் முதலில் பாவன நரசிம்மரை சேவித்து வந்து அடுத்து உக்ர நரசிம்மரை தரிசனம் செய்த பின் பவ நாசினி ஓரமாக மலையேறி சென்று க்ரோடா நரசிம்மரையும், உக்ர நரசிம்மரையும் சேவித்து அப்படியே வேறு வழியாக மாலோல நரசிம்மரை சேவித்தோம். மேல் அஹோபிலத்திலிருந்து திரும்பி வரும் போது காரஞ்ச நரசிம்மரை சேவித்து பின் சத்ரவட நரசிம்மரை சேவித்தோம். அடுத்து அதே ஜீப் மூலமாக யோகானந்த நரசிம்மரையும் சேவித்து திரும்பி வந்து கீழ் அஹோபில பிரகலாத நரசிம்மரையும் சேவித்தோம். ஜீப்பிற்கும் வழி காட்டிக்குமாக பணம் வசூலித்துக் கொள்கின்றனர். பெருமாள் புறப்பாடையும் சேவிக்கும் பாக்கியம் இத்தடவை சித்தித்தது. இத்தடவை சனிக்கிழமையன்று சென்றதால் மலையேற முடியாதவர்களை டோலியில் உக்ர நரசிம்மர் ஆலயத்தில் துவங்கி, க்ரோடா நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், மாலோல நரசிம்மர் ஆலயம் அழைத்துச்சென்று உக்ர நரசிம்மர் ஆலயம் திரும்பி அழைத்து வருவதைப் பார்த்தோம். இத்தடவை, டிராக்டர் மூலம் முதல் நாள் இரவே குடும்பம் குடும்பமாக வந்து தங்கி சனிக்கிழமையன்று தாயாருக்கு கோழிகளையும், சேவல்களையும் பலி கொடுக்கும் கிராம மக்கள் பலர். பாவன நரசிம்மர் சன்னதி அருகே மட்டும் அல்ல, அஹோபில நரசிம்மர் மற்றும் காரஞ்ச நரசிம்மர் அருகிலும் படையல் போடுபவர்களைக் கண்டோம். சனிக்கிழமைகள் மற்றும் சுவாதி நட்சத்திரத்தன்றும் இது போல சரியான கூட்டமாக இருக்கும் என்று வழிகாட்டி கூறினார். நரசிம்மருக்கு பலி சற்று ஆச்சிரியமாகத்தான் இருந்தது.??? இனி கலியன் சொன்ன இன்தமிழ் மாலையின் ஏழாவது பாசுரத்தை அநுபவிப்போமா? முனைத்த சீற்றம் விண்சுடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆளரியாய் இருந்த அம்மானதிடம் கனைத்த தீயும் கல்லுமல்லாவில்லுடை வேடருமாய்த் தினைத்தனையும் செல்லவொண்ணாச் சிங்கவேள் குன்றமே. (7) (பொருள்): ஆகாயத்தை சுடும்படியாக மிகுந்த கோபம் கொண்டு, மூன்று லோகங்களில் உள்ளவர்களும், மற்ற லோகங்களில் உள்ளவர்களும் பயப்படும்படியாக நரசிம்ம ரூபியாய் எழுந்தருளியிருக்கின்ற சர்வேஸ்வரனுடைய இடமாவது, அனையா நின்றுள்ள தீயும், கற்களும், இவற்றைக்காட்டிலும் குரூரமான வில்லைக் கையில் ஏந்திய வேடர்களும் உடைய, சிறிது நேரமாவது யாரும் அருகில் செல்ல முடியாத சிங்கவேள் குன்றமாகும். மலையெங்கும் வானரங்களின் ஆட்சிதான், இந்த மந்திகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பாடம் ஒன்று உள்ளது. குரங்கு குட்டிகளை நாம் பார்த்தோமென்றால் அவை தாய்க் குரங்கை கெட்டியாக பற்றிக்கொள்கின்றன. அவை எங்கு தாவினாலும் அவை தாயை விட்டு விடுவதில்லை. இதுதான் “மர்க்கட கிசோர நியாயம்” எனப்படுகின்றது. இதனால் நாம் பெறும் பாடம். குட்டிக் குரங்கானது தன் முயற்சியால் தானேத் தாவி தன் தாயைப் பற்றிக் கொள்ள வேண்டும் – தாய்க்குரங்கை குட்டி இவ்வாறு பற்றிக் கொண்டால்தான் அது செல்லுமிடமெல்லாம் அதுவும் உடன் செல்ல முடியும். இது போலவே ஜீவாத்மாவும் முயற்சி செய்யவேண்டும். சென்று சரணாகதி செய்து பெருமாளின் திருத்தாள்களை பற்றிக் கொள்ள வேண்டும், அப்போதுதான் அவன் நம்மை காப்பாற்றுவான், அவனைப் பற்றாதாரிடம் அவனுக்கு பற்று ஏற்படாது. எனவே தான் பகவானும் பகவத் கீதையில் “என்னையே சரணமாகப் பற்று, நான் இளைப்பாறுதல் தருவேன்” என்று கூறுகின்றார். எனவே நம் கடமை அவர் திருவடிகளைப் பற்றுதல், அவர் கடமை நம்மைக் காத்தல். நான் உன்னையின்றி இல்லை கண்டாய் நாரணனே! நீ என்னையின்றி இல்லை என்று பாடுகிறார் திருமழிசைப் பிரானும். எனவே நாமும் “புகலொன்றுமில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்று அவரிடம் சரணடைவோமாக. இனி இன்றைய தினம் மற்ற எந்த நரசிம்மர்களை சேவித்தோம் என்று அறிய ஆவலாக உள்ளதா? நரசிம்மர்களை மட்டுமல்ல பிரகலாதன் பள்ளியையும் அவன் எழுதிய ஸ்லோகங்களையும் கண்டோம் சற்று பொறுங்கள் உணவருந்தி விட்டு வந்து தொடர்வோம். அத்தியாயம் – 11 மாலோல நரசிம்மர் தரிசனம் பாவன நரசிம்மர் மற்றும் செஞ்சு லக்ஷ்மித்தாயாரின் அற்புதமான சேவைக்கு அப்புறம் மடத்திற்கு திரும்பி வந்து மதிய உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் மலையேறின களைப்பு தீர ஓய்வெடுத்தோம். சுமார் மூன்று மணியளவில் பின் மற்றுமுள்ள நரசிம்மர்களை சேவிக்கப் புறப்பட்டோம். காலையில் நாம் சென்றது கருட மலையில் ஆம் கருடனே இங்கு மலையாக நிற்க அதன் குகையில் பெருமாள் உக்ர நரசிம்மராக சேவை சாதிக்கின்றார் இன்னொரு பகுதியில் பாவன நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இன்று நாம் சேவிக்கும் நரசிம்மர்கள் கோவில் கொண்ட மலை வேத மலை. இந்த இரண்டு மலைகளுக்கும் இடையில்தான் பவநாசினியாறு ஒடுகின்றது. இம்மலை வேத மலை என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்று முதலில் பார்ப்போமா? முன்பு கிருதயுகத்தில் சோமகன் என்ற கொடிய அசுரன் வேதங்களைப் பிரம்மாவிடமிருந்து திருடிக்கொண்டு சென்று விட்டான். இதனால் மூன்று உலகமும் என்ன செய்வதென அறியாமல் குழப்பம் அடைந்தன. எல்லா அறங்களும் தடுமாறின. விஷ்ணு சோமகன் என்னும் ராக்ஷஸனைக் கொன்று வேதங்களை மீட்டுக் கொடுத்தார் பிரம்மாவிடம். பிறகு வேதங்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஆலோசிக்கத் தொடங்கின. 'நமக்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கப் பிரம்ம தேவர் சக்தியற்றவர். எனவே நாம் தவம் புரிந்து சர்வேச்வரனான பகவானைக் கண்டு வரம் பெற வேண்டும். ஒருவரிடமும் நாம் தோல்வி அடையக்கூடாது. அனைவரையும் நாம் வெல்ல வேண்டும். அசுரர்கள். தேவர்கள், மனிதர்கள், நாஸ்திகர்கள், புராணங்கள், ஸ்ம்ருதிகள், இதிகாசங்கள் இவை மூலமாக நமக்கு எப்பொழுதுமே பரிபவம் ஏற்படக் கூடாது. அதற்காக நாம் முயற்சி செய்ய வேண்டாமா? என்று எண்ணி தவம் செய்வதற்குரிய இடத்தைத் தேடி சென்றன. ஒவ்வொரு காட்டையும் அடைந்தன. பிறகு அந்த வேதங்கள் நரசிம்மருடைய இந்த மலையின் மேல் பாகத்தில் ஏறிச் சென்றன. இதுதான் தவத்துக்குரிய ஸ்தலம் எனத் தீர்மானித்து உக்கிரமான தவத்தை அங்கே புரிந்தன. பிரசன்னரான பகவான், ஜடை தரித்துத் தவம் புரியும் வேதங்களைப் பார்த்து, 'உங்களது விருப்பம் என்ன?' என்று வினவினார். வேதங்கள், 'எல்லாம் அறிந்த பகவானே! உலகத்துக்கு நாதனே! எங்களது விருப்பத்தை நீர் அறியவில்லையா? எங்களது நன்மை தீமையை நன்கு அறிந்தும் அறியாதவர் போல் கேட்கின்றீரே!' என்றன. பகவான், 'உங்களது மனத்தில் உள்ள விருப்பத்தை அறிந்தேன். இந்திரன் முதலிய தேவர்களாலும், அசுரர்களாலும், மற்றவர்களாலும் எப்பொழுதுமே உங்களுக்குத் தீமை உண்டாகாது. உங்கள் மார்க்கத்தை (வேத மார்க்கத்தை) தூஷிப்பவர்கள் பாஷண்டிகள். உங்களுக்கு முரணான சாஸ்திரம், புராணம், இதிகாசம், ஸ்ம்ருதிகள் முதலியவை எத்தனையேனும் பிராமணங்கள் ஆகமாட்டா. எல்லாம் நிர்மூலமாகிவிடும். இது முதற்கொண்டு நீங்கள் இங்கே கடுந்தவம் புரிந்தபடியால், இந்த மலையை வேதமலை என்று இவ்வுலகம் அழைக்கும்' என்று சொல்லி மறைந்தார். இக்காரணத்தால் அது முதற்கொண்டு இவ்விடத்தை வேதாசலம் என்று அனைவரும் அழைக்கத் தொடங்கினார். மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் எப்பொழுதும் இங்கு விழுகிறபடியால் கனிகள், மலர்கள் கொடி, நெடிதுயர்ந்த மரங்கள் முதலியவை சூழ எப்போதும் பசுமையாய் இம்மலை விளங்குகிறது.. இம்மலைக்கு செல்ல பவநாசினி ஆற்றை கடந்து செல்ல வேண்டி வந்தது, அஹோபில நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் ஒரு இரும்புப் பாலம் இவ்வாற்றின் குறுக்காக கட்டப்படுள்ளது. அஹோபிலத்தில் உள்ள பல மரப்பாலங்களை T.V.S நிறுவனத்தினர் அமைத்துக் கொடுத்ததாக வழி காட்டி கூறினார். ஆற்றைக் கடந்து ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றோம் செல்லும் வழியில் பாழடைந்த ஒரு மண்டபத்தைக் கண்டோம். முற்காலத்தில் அதாவது வாகனங்கள் செல்லும் வசதியில்லாத காலத்தில் யாத்ரீகர்கள் பவநாசினி ஆற்றங்கரையோரமாகவே வந்து பெருமாளை சேவித்து விட்டு செல்வார்களாம் அவர்கள் தங்கி சிரமப்பரிகாரம் செய்து செல்வதற்காக கட்டிய இம்மண்டபங்கள். ஆதி வண்சடகோபர் இம்மண்டபங்களை தனது பிரவசனங்களுக்கும் பயன்படுத்தினாராம். இப்போது பாதைகள் போடப்பட்டதாலும் பாலங்கள் கட்டப்பட்டதாலும் இப்போது யாரும் பயன்படுத்தாமல் பாழடைந்து விட்டன செடிகள் முளைத்து கிடக்கின்றன. . அந்த காலத்தில் ஆதி சங்கரரும், திருமங்கை மன்னனும் எவ்வாறு வந்திருப்பார்கள் என்று என்ணினால் அவர்களின் பக்தியின் மேன்மை நமக்கு புரியும். ஆகவே தான் ஆலிநாடன் தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும் என்று தம் பாசுரத்தில் சிங்கவேள் பெருமாளை மங்களாசாசனம் செய்தாரோ? நாங்கள் .முதலில் சேவிக்க சென்றது இவ்வேத மலையின் கிழக்குப் பாகத்தில் ஒரு குகையில் சேவை சாதிக்கும் க்ரோடா நரசிம்மரை. பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள்’ மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே! என்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் பாடிக் கொடுத்தபடி இரணியனின் சகோதரன் இரணியாக்ஷன் பூமி பிராட்டியை எடுத்துக் கொண்டு பாதாளத்தில் ஒளித்து வைத்து விட, பெருமாள் கோல வராஹமாய் அவதாரம் எடுத்து தன் கோரைப் பற்களில் பூமிப் பிராட்டியை ஏந்தி, தாயாருக்கு சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அருகிலே லக்ஷ்மி நரசிம்மரும் சேவை சாதிக்கின்றார். இவரது பாதங்களை பவநாசினி ஆறு வருடிக்கொண்டே ஒடுகிறது, குகைக்கு முன்னர் ஒரு மண்டபம் உள்ளது. சேவார்த்திகள் அதில் அமர்ந்து பெருமாளை சேவிக்கலாம். சிலம்பிடைச்சிறுபரல்போல்பெரியமேரு திருக்குளம்பில்கணகணப்ப திருவாகரம் குலுங்க நிலமடந்தைதனை இடந்துபுல்கி கோட்டிடைவைத்தருளிய எங்கோமான்கண்டீர் …. பெருமாள் எடுத்த இவ்வராக அவதாரத்தை திருமங்கை மன்னன் இவ்வாறு பாடுகின்றார். அதாவது பெருமாள் வாமன அவதாரம் எடுத்து திரிவிக்ரமனாக நெடிதுயர்ந்த போது அவர் ஒரு காலடியில் அளந்த இந்த பூமி இப்போது அவர் காலில் இருந்த சிலம்பின் சிறு பரல் போல் தோன்றியதாம். பெருமாள் எடுத்த வராஹ அவதாரம் இவ்வளவு பெரிதாக இருந்தது. பெருமாள் பாதாளத்திலிருந்து தமது வளைந்த கொம்பில் பூமி பிராட்டியை எடுத்துக் கொண்டு மேலே வந்த போது அகலகில்லேன் இறையுமென்று பிராட்டி உறையும் மார்பு அப்படியே குலுங்கியதாம். இராகு வழிபட்ட நான்காவது நரசிம்மரான இக்க்ரோடா நரசிம்மரை மீனாய், ஆமையுமாய், நரசிங்கமுமாய்க் குறளாய், கானேரமுமாய் மூவுருவிலிராமனுமாய்க் கண்ணனாய் கற்கியுமானவனே, பெருந்தாட்களிற்றுக்கு அருள் செய்த பெருமாளே, பன்றியுமாமையு மீனமுமாகிய பாற்கடல் வண்ணனே, வெண்பலிலகு சுடரிலகு விலகு மரகத குண்டலத்தானே, கேழலாகிய கேடிலீ, பரியனாகி வந்து அவுணனுடல் கீண்டவனே, அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனே, ஏனத்தினுருவாகி நிலமங்கை எழில் கொண்ட நாதனே, ஞானத்தினொளியுருவே, தூணாயதனூடு அரியாய் வந்து தோன்றி பேணாவவுணனுடலம் பிளந்திட்டவனே, பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு தெண் திரை வருட பாற்கடல் துயின்ற பரமனே, சிங்கமதர அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தான் தழலாணி வலத்தானவனே, ஏனமாகி அன்று இருநிலம் இடந்தவனே, மாதர் மாமண்மடந்தை பொருட்டு ஏனமாய் ஆதியங்காலத்து அகலிடங்கீண்டவனே, மைய கண்ணாள் மலர் மேலுறைவாள் உறைமார்பினனே, வடியுகிரால் இரணியதாகம் ஈர்ந்தவனே, ஊன்றியிடந்து எயிற்றின் கொண்டவனே என்று பலவாறு துதித்தோம். பக்தஸ்ய தாநவ சிசோ: பரிபாலநாய பத்ராம் நரசிம்ம குஹநா மதிஜக்முஷஸ்தே | ஸ்தம்பைக வர்ஜ மதுநாபி கரீச நூநம் த்ரைலோக்ய மேத தகிலம் நரஸிம்ஹ கர்ப்பம் || ஒவ்வொரு நரசிம்மர் ஆலயத்தின் அருகிலும் ஒன்பது நரசிம்மர்களின் ஆலயங்களை காட்டும் வரைபடம் மற்றும் அருகில் உள்ள மற்ற ஆலயங்களுக்கான தூரத்தைக் காட்டும் மைல் கல் வைத்துள்ளனர். இச்சந்நிதி நரசிம்மர் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மற்ற இடங்களில் இதை சரியாக கவனிக்கவில்லை. இங்கு ஸ்பஷ்டமாக தெரிந்தது. ஆயினும் தக்க ஒரு வழிகாட்டியின் உதவியுடன் செல்வதே நல்லது. இங்கிருந்து அடுத்து எந்த நரசிம்மரை தரிசிக்க சென்றோம் தெரியுமா? அதற்கு முன் நம் கலியனின் எட்டாவது பாசுரத்தை அநுபவிப்போம். நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கு ஆளரியாய் இருந்த அம்மானதிடம் காய்த்த வாகை நெற்றொலிப்பக் கலாதர் வேய்ங்கழைபோய் தேய்த்த தீயால் விண்சிவக்கும் சிங்கவேள் குன்றமே (8) (பொருள்): நாவானது தழும்பேறும்படியாக நான்முகத்தையுடைய பிரம்மனும், ருத்ரனும், வேண்டிக்கொள்ள அங்கு நரசிம்மமாய் எழுந்தருளிய சர்வேஸ்வரனுடைய இடம், காய்கள் நிறைந்த வாகைகளின் நெற்றுக்கள் ஒலிக்கும் கல்வழியிலே உண்டான குழல் மூங்கிலானது ஆகாயத்தளவும் ஓங்கி தன்னிலே அவை உராய்ந்து உண்டான நெருப்பால் ஆகாயம் சிவக்கும் சிங்கவேள்குன்றமே. அடுத்து அஹோபில மடத்தின் திருவாதாரன பெருமாளாக விளங்கும் மாலோல நரசிம்மரை. தரிசிக்கச் சென்றோம். ஒன்பது நரசிம்மர்களுள் யாரை மடத்தின் உற்சவ மூர்த்தியாக ஏற்றுக் கொள்வது என்ற ஐயம் எழுந்த போது கனவில் வந்து அனைவரின் ஐயத்தையும் போக்கியவர் இவர். பாவன நரசிம்மர் போல மஹா லக்ஷ்மித் தாயாருடன் சேர்ந்து சேவை சாதிக்கும் பெருமாள். அதனால்தான் இவர் கோவில் கூட பெரிதாக சுற்றி மதில் சுவருடன் முன்னர் நந்தவனத்துடன், முன் மண்டபத்துடனும் எழிலாக விளங்குகின்றது. முழு ஆலயத்தையும் பிரித்து பின் கட்டி சம்ப்ரோஷணம் நடந்திருக்கின்றது ஏனென்றால் கோவிலில் கற்களில் எண்கள் காணப்பட்டன. மஞ்சள் வண்ணப்பூச்சில் புதுப்பொலிவுடன் விளங்கும் திருக்கோவிலை வலம் வந்தோம். உள்ளே நுழைந்து பெரிய துவார பாலாகர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு பூவின் மிசை நங்கைக்கு இனியவன் தன்னை சேவிக்க உள்ளே சென்றோம். துவார பாலகர்களின் காலடியில் இவ்வாலயத்தை அமைத்த அரசன் மற்றும் அரசியின் சிலை உள்ளது. []மாலோலன் பட்டர் ஒருவர் இக்கோவிலில் இருந்தார் அவர் பெருமாளின் திருவடிகள், தாயாரின் திருவடிகளை அற்புதமாக சேவை செய்து வைத்து, தீர்த்தம், சடாரி, துளசி தந்தார். மாதவன் போல மாலோலன் , திருமகளுடன் நாம் எல்லோரும் உய்ய விளையாடும் செல்வன். கருடன் பாதங்களை தாங்கி நிற்க, பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் ஆதிசேஷன் குடைப்பிடிக்க ஓங்கார சுடராழியும், வெண் சங்கமும் கைக்கொண்டு, அபய ஹஸ்தத்துடன் ஆலிங்கன கோலத்தில் சௌம்ய ரூபத்தில் அற்புதமாக சேவை சாதிக்கின்றார் மாலோல நரசிம்மர். அன்னை இடது தொடையில் அமர்ந்துள்ளாள். முன்னர் சுயம்பு மூர்த்தியும் பின்புறம் பிரதிஷ்டா மூர்த்தியும் சேவை சாதிக்கின்றனர். சுக்கிரன் வழிபட்ட மூன்றாவது நரசிம்மர் இவர். அர்த்த மண்டபத்தில் இச்சிங்கவேள் குன்றத்திற்கு பல்லாண்டு பாடிய திருமங்கையாழ்வாரை சேவிக்கலாம். வேதமலையின் உன்னதமான தலை பாகத்தில் தெற்கு முகமாக ஸ்ரீ மாலோல நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார். இந்த ஆலயத்தின் ஈசான்ய பாகத்தில் கனகபாயா நதி என்ற தடாகம் உள்ளது. அதிலிருந்து எப்பொழுதுமே தாரை பிரவஹித்துக் கொண்டே உள்ளது. வற்றாமல் நீர் பெருகுகிறது. (ஸ்ரீமத் அழகிய சிங்கர்கள் அஹோபிலத்துக்கு எழுந்தருளும் சமயங்களில் அந்த கனக நதியில் நீராடி ஜபம் முதலிய அநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஸ்ரீமாலோலனை மங்களா சாசனம் செய்வது வழக்கம்). அங்கு மஹாலக்ஷ்மிக்கு ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறார் பகவான். ஆகையால் லக்ஷ்மி ஸ்தானம் என்று அதை உலகம் கூறுகிறது. 'லக்ஷ்மிகுடி', 'அம்மவாருகுடி' என்று அங்கு இப்பொழுதும் பிரசித்தி உண்டு. தாயாரையும் பெருமாளையும் முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணனே, நான்கு வேதப்பயனே, நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனே, மைய கண்ணாள் மலர் மேலுறைவாள் உறை மார்பினனே, என் திருமகள் சேர் மார்வனே ,நின் திருவெயிற்டாலிடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே, அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே, அல்லியந்துழாய் முடி அப்பனே, அரியாகி இரணியன் ஆகம் கீண்டினவனே, கோலமலர்ப்பாவைக்கு அன்பனே, எல்லையிலாத பெருந்தவத்தால் பல செய்மிரை அல்லலமரரைச் செய்யும் இரணியனாகத்தை மல்லலரியுருவாயச் செய்த மாயனே, அமலனே, ஆதிபிரானே. புரியொடுகை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி அரியுருவமளுருவமாகி, எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலே, மாமலராள் நாதனே, பந்திருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள் வந்திருக்கும் மார்வனே, ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருகவெனா மாவலியை சிறையில் வைத்த தாடாளனே, திருவுக்கும் திருவாகிய செல்வனே, அன்னமாய் முனிவரோட அமரரேத்த அருமறையை வெளிப்படுத்த அம்மானே, வடியுகிரால் இரணியனதாகம் ஈர்ந்தவனே, கோளரி மாதவன் கோவிந்தனே, அரிமுகன் அச்சுதனே, வேரிமாறாப் பூமேலிருப்பவளுடன் கூடிக் களித்திடும் பொன்னுருவ மாலோலனே என்று திவ்ய தம்பதிகளை மனமார துதித்தோம். அருமையான தரிசனம் தந்த ஆதி தம்பதிகளை வணங்கி வெளி மண்டபத்தில் வந்து சிறிது நேரம் அமர்ந்து மூலிகைக் காற்றை உட்கொண்டு இயற்கையை இரசித்தோம். திருமலை சுவாமிகள் வாருங்கள் பள்ளிக்கூடம் போகலாம் என்று அழைத்தார். எங்களுடன் வந்த சிறுவர்கள் இருவரும், பள்ளிக்கூடமா நாங்கள் வரவில்லை என்றார்கள். சுவாமிகள் உங்கள் பள்ளிக்கூடம் இல்லை பிரஹாலாதன் படித்த பள்ளிக்கூடம் செல்லலாம் என்று அழைக்க அனைவரும் மெல்ல எழுந்து நடந்தோம். தற்போது ஒவ்வொரு ஆலயத்தின் அருகிலும் ஒரு செஞ்சு இன குடும்பத்தினரை தங்க அனுமதித்துள்ளனர். அவர்கள் ஆலயத்தை பராமரித்துக்கொள்கின்றனர் மற்றும் நெய் விளக்கு, பானகம் ஆகியவற்றையும் விற்பனை செய்கின்றனர். பிரகலாதன் பள்ளி செல்வதற்கு முன் மங்கையர்தன் தலைவன் கலிகன்றி மானவேற் கலியனின் ஒன்பதாவது பாசுரத்தை சேவிப்போமா? நல்லைநெஞ்சே ! நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான் அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரம் தோளனிடம் நெல்லிமல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர்வாய் சில்லு சில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே (9) (பொருள்) : நமக்கு சுவாமியாய் தாமரைப் பூவை இருப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியார் கட்டிக்கொள்ளும்படியாக எழுந்தருளியிருக்கும் ஆயிரம் திருத்தோள்களையுடைய சர்வேஸ்வரனுடைய இடமாவது, நெல்லி மரங்கள் நிறைந்து அதில் இருந்து விழும் கனிகள் கற்களை உடைக்க, பனையோலைகள் ஒசைப்படியாகவும், வழியிலே சில்வீடு என்னும் பறவைகள் சில் சில் என்று ஒலி எழுப்பும் சிங்கவேள் குன்றத்தை பாங்கான என் நெஞ்சே தொழுது உய்வோமாக. பிரகலாதன் பள்ளி: முன்னரே கூறியது போல க்ருத யுகத்தில் இம்மலைதான் ஆயிரம் தூண்கள் கொண்ட ஹிரணியன் அரண்மனையாக இருந்தது. ஆகவே அதன் அருகிலேயே பிரகலாதன் குருகுலம் வாசம் செய்த இடமும் இருப்பது இயற்கைதானே. அனைவரும் காலையில் இருந்து மலை ஏறிக்கொண்டு இருப்பதால் களைப்பாகவே இருந்தோம் ஆயினும் பிரகலாதன் பள்ளியை இன்றே பார்த்து விட்டால் நாளை ஜ்வாலா நரசிம்மரை தரிசித்து விட்டு உக்ரஸ்தம்பம் ஏறலாம் என்பதால் இன்றே மெதுவாக பிரகலாதன் குருகுலத்திற்கு புறப்பட்டோம். செல்லும் வழியில் ஒரு பாதை ஜ்வாலா நரசிம்மர் சன்னதிக்கு செல்லுவதைப் பார்த்தோம். மரங்களின் வழியே வேதாத்திரி மலையின் செங்குத்தான வழுக்கும் ஒற்றையடிப்பாதையில் மேலே ஏறிச் சென்றோம். செல்லும் போது மேலிருந்து மேல் அஹோபிலத்தை பறவைப் பார்வையால் பார்த்தோம். அஹோபில நரசிம்மர் திருக்கோயில், நாங்கள் தங்கிய மடம், அக்ரஹாரம், மண்டபம் அனைத்தும் தெரிந்தது, புகைப்படமும் எடுத்தோம். பாதை குறுகி விரிந்து விளையாடுகிறது. சிறிய பிளவுப் பிடிப்புகளில் கவனமாக பாதம் படித்து மெள்ள இறங்கி சுமார் அரை கி.மீ சென்ற பின், திடீரென்று ராட்சச திமிங்கிலத்தின் முதுகு போன்றதொரு பாறை அமைப்பு. பிரகலாதன் படித்து விளையாடி நாராயண நாமத்தை உச்சரித்த குருகுலம் இங்கேதான் அமைந்திருந்ததாக ஐதீகம். பிரகலாதன் மெட்டு என்னும் பிரகலாதன் படிகளில் இறங்கி பிரகலாதன் படித்த பள்ளியைப் தரிசித்தோம். அது ஒரு பள்ளத்தாக்கு போல இருந்தது ஒரு பக்கம் ஒரு அருவி அருமையாக வீழ்ந்து கொண்டிருந்தது, பாறைகளை புரட்டி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினாற் போன்ற இயற்கையான அமைப்பு. பாறைகளில் ஜாங்கிரி ஜாங்கிரியாக எழுத்துக்கள் தெரிந்தன. இவை பிரகலாதன் குருகுலத்தில் பயின்ற போது எழுதிப்பார்த்த எழுத்துக்கள் என்று சொல்லப்படுகின்றது. மனிதர்களின் கால் பட்டு அநேகமாக அவை மறைந்து விட்டன. நீர் கசியும் பாறை அடுக்குகளில் கவனமாக நடந்து ஆற்றைக் கடந்து மலையின் மடிப்பில் பொதிந்திருக்கும் சிறு குகைக்குள் நுழைந்து குகை நரசிம்மரை தரிசனம் செய்தோம், குகை நரசிம்மருடன் பிரகலாதனும் சேவை சாதிக்கின்றான். குகைக்கு செல்லும் படிகள் ஒருவர் ஏறும் அளவே உள்ளன. அதிலும் அருவித் தண்ணீர் விழுந்து வழுக்குகின்றது. பார்த்து பார்த்து ஒருவர் ஒருவராக சென்று பெருமாளை சேவித்து விட்டு வந்தோம். சிறிது நேரம் அங்கு ஒய்வெடுத்தோம் பின் இறங்கி வந்து இரண்டாவது முறையாக அஹோபில நரசிம்மரையும், செஞ்சு லக்ஷ்மித் தாயாரையும் சேவித்தோம். வரங்கருதித் தன்னை வணங்காத வன்மை உரங்கருதி மூர்க்கத் தவனை – நரங்கலந்த சிங்கமாய் கீண்ட திருவடியிணையே அங்கண் மா ஞாலத்தமுது என்று ஸ்ரீ நரஹரியின் திருவடிகளே உண்மையான அமிர்தம் என்று பற்றினோம். இன்று கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது. அருமையான தரிசனம் பெற்ற ஒரு நீண்ட நாள் முடிவுக்கு வந்தது. அருமையான நினைவுகளுடன் உறங்கச் சென்றோம். ஜ்வாலா நரசிம்மரையும் அவர் பிளந்து கொண்டு வந்த உக்ர ஸ்தம்பத்தையும் சேவிக்க சற்று பொருத்திருங்கள் அன்பர்களே. அத்தியாயம் -12 ஜ்வாலா நரசிம்மர் தரிசனம் []ஜ்வாலா நரசிம்மர் சன்னதி அரியுருவமாகி யெரிவிழித்து கொன்னவிலும் வெஞ்சமத்து கொல்லாதே, வல்லாளன் மன்னு மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து தன்னுடைய தாள் மேல் கிடாத்தி, அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த மின்னிலங்கு மாழிப்படை தடக்கை வீரனை இன்று சேவிக்கப்போகிறோம் என்ற ஆவலில் அதி காலை 5.00 மணிக்கே எழுந்து விட்டோம். இரண்டு நாட்களாக அஹோபிலத்தில் இருந்தும் பாவங்களை எல்லாம் போக்கி மறு பிறவி இல்லாமல் செய்யும் பவநாசினி ஆற்றில் குளிக்கவில்லையே என்று எங்களில் சிலர் பவநாசினி ஆற்றுக்கு குளிக்கச் சென்றோம். இந்த பவநாசினி ஆற்றைப்பற்றி அஹோபில க்ஷேத்திர மஹாத்மியத்தில் என்ன சொல்லியிருக்கின்றது என்று பார்ப்போமா? பகவானின் திருவடியினின்றும் வெளிக் கிளம்பிய கங்கை இந்த மலையில் பவநாசினியாக அவதரித்தது. அஹோபில மார்க்கத்தை அடைந்து இந்தப் பவநாசினியைக் கண்ணால் பார்ப்பவன் கோடிக்கணக்கான பிறவியில் செய்த பாவத்தினின்றும் விடுபடுகிறான்.. விஷ்ணுவை நன்கு பூஜித்து அவரது பாத தீர்த்தமான இந்த பவநாசினி தீர்த்தத்தை தலையில் எவன் ப்ரோக்ஷித்துக் கொள்கிறானோ அவன் கங்கையில் ஸ்நானம் செய்த பலனை பெறுகிறான். இந்த தீர்த்தத்தைச் சுத்த மனத்துடன் கையில் எடுத்து இறைவனை ஸ்மரித்து ப்ரோக்ஷித்துக் கொள்பவன் எல்லா பாவங்களினின்றும் விடுபடுகிறான். இந்த தீர்த்தத்தை தலையால் தரித்து பருகுபவன் மனத்திலுள்ள அழுக்கை அகற்றுகிறான். முக்தியையும் பெறுகிறான். இத்தீர்த்தத்தைக் குடிப்பவனைப் பார்த்து பித்ருக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். பிதாமகர்கள் கூத்தாடுகின்றனர். இந்தத் தீர்த்தத்தின் கரையை அடைபவனே எல்லா பிராயச் சித்தங்களையும் செய்தவனாக ஆகிறான். இந்தத் தீர்த்தத்தைக் கொண்டு சாளக்கிராம பூஜை செய்து, இதைப் பருகுபவன் பிரம்மஹத்தி முதலான பாபங்களினின்றும் விடுபடுகிறான். அந்த க்ஷணத்திலேயே பயனை அளிக்கவல்லது. இந்தத் தீர்த்தம், எல்லா மங்களங்களையும் கொடுக்க வல்லது. மனோ வியாதியையும் உடல் வியாதியையும் அழிக்க வல்லது. எல்லாவற்றுக்கும் மருந்து போன்றது இது. மேலும் துஷ்ட கிரகங்களின் கொடுமையையும் மாற்ற வல்லது. அந்த நரசிம்மரின் அருளினால் இவ்வளவு மகிமை வாய்ந்த பவநாசினி தீர்த்தத்தில் நீராடச் சென்றோம். மலைக்காலங்களில் ஆற்றில் நிறைய தண்ணீர் ஒடுமாம். அங்கங்கே மரப்பாலங்கள் ஆற்றின் குறுக்காக உள்ளன. நேற்றே கவனித்திருந்தோம் அஹோபில நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் இரண்டு சிறு அருவிகள் இருந்தன மற்றும் க்ரோடா நரசிம்மர் சன்னதிக்கு அருகில் ஒரு குளம் போல ஆழமில்லாமல் இருந்தது. ஆயினும் காட்டாறு என்பதால் எப்போது வெள்ளம் வரும் என்று தெரியாது என்பதால் சற்று கவனமாகவே குளிக்க வேண்டும், நாங்கள் அருவியில் குளிக்க முடிவு செய்தோம். சிறு வயதில் எங்கள் ஊரின் அருகில் உள்ள திருமூர்த்தி அருவியில் குளித்தது பல வருடங்களுக்குப் பிறகு இப்போது இயற்கையுடன் இனைந்து ஒரு அருவியில் குளிக்கும் வாய்ப்பு கிட்டியது மனதார அருவியில் குளித்தோம். பின்னர் மடத்திற்கு திரும்பி வந்து அனைவருடனும் ஜ்வாலா நரசிம்மரை சேவிக்க கிளம்பினோம். ஆற்றின் ஒரமாகவே சென்றும் ஜ்வாலா நரசிம்மர் குகையை அடையலாம் அல்லது மாலோலன் சன்னதி அருகில் இருந்தும் இன்னொரு பாதை உள்ளது. நாங்கள் ஆற்றின் ஓரப்பாதையிலேயே சென்றோம். நான்கு திசைகளிலும் மலைக்குன்றங்கள், நெடிதுயர்ந்த பருத்த மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு, சல சலத்து ஓடும் ஆறு, இசை பாடும் புள்ளினங்கள், வண்டுகளின் ரீங்காரம், குவிந்திருக்கும் முள் புதர்கள், பாதம் பட்டதும் புரளும் சிறு கற்கள், குண்டும் குழியுமான பாதை, வழியெங்கும் பசியுடன் பின் தொடரும் வானரங்கள். எச்சரிக்கையுடன்தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அஹோபில நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் மூலமாக ஆற்றைக் கடந்து அப்புறம் சென்று பவநாசினி ஆற்றின் ஓரமாக சென்றோம் சிறிது தூரம் சென்றதும் உக்ர ஸ்தம்பம் கண்ணில் பட்டது. இரணியன் அரண்மனையின் ஆயிரம் தூண்களும் அழிந்து போக வேத மலையின் உச்சியாக இந்த உக்ர ஸ்தம்பம் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. அதன் தோற்றமும் ஒரு தூண் போலவே உள்ளது. ஆற்றின் நடுவே உள்ள பாறைகளில் கவனமாக சென்று குகைக்கு அருகே சென்றோம், குகைக்கு முன்னர் பவநாசினியாற்றின் அருவி பொழிகின்றது. மேலும் நாம் ஒரு பெரிய பாலத்தில் ஏறி ஆற்றைக் கடக்க வேண்டி உள்ளது. ஆகவே ஒரு வழி காட்டியுடன் செல்வதே உத்தமம். ஜ்வாலா நரசிம்ம்ர் சன்னதி வேதாச்சல கருடாசல மலைகளுக்கு இடையே அச்சலசாயாமேரு என்னும் குன்றுப்பகுதியில் அமைந்துள்ளது. அக்குகைக்கு அருகிலே பவநாசினி அருவியாகத் தனது பயணத்தை துவங்குகின்றது. நாம் குகையை அடைய பவநாசினி அருவியின் தாரைகளுக்கு பின் செல்ல வேண்டும், நீர் தாரையின் வேகத்தில் வேகத்தில் இழுத்து சென்று விடாதிருக்க, மழைக் காலத்தில் பாதுகாப்பாக கடந்து செல்ல மலையில் கம்பி சங்கலிகள் அமைக்கப்பட்டுள்ளன மற்றும் சேவார்த்திகளின் பாதுகாப்பிற்காக சங்கிலியால் தடுப்பு அமைத்துள்ளனர். அருவியில் நனைந்து சென்ற போது தன்னை சேவிப்பதற்கு முன் நம்மை தூய்மைப்படுத்துவது போல இருந்தது. கிருத யுகத்தில் உக்ர ஸ்தம்பத்தில் இருந்து அரண்மணையின் வாயிலான இவ்விடம் வரை பெருமாள் கூடா இரணியனை இழுத்து வந்து வள்ளுகிரால் அவன் ஆகம் பிளந்து வதம் செய்த இடம்தான் இக்குகை. மண்டி வளர்ந்திருக்கும் மரங்கள், கிடு கிடு பள்ளத்தாக்கை ஒட்டி படமெடுத்த சர்ப்பம் போல் முன் தள்ளியிருக்கும் பாறை, பாறைக்குக் கீழே இயற்கையாக அமைந்திருக்கும் குகை. அருவியைக் கடந்து குகையை நெருங்கினோம். குகை என்பதால் கோபுரம் எதுவும் இல்லை, குரங்குகள் தொல்லை அதிகம் என்பதாலோ என்னவோ குகைக்கு கம்பி வலை கொண்டு தடுப்பு அமைத்துள்ளனர். கதவும் இருந்தது ஆனால் பூட்டியிருக்கவில்லை. மிக்க ஆனந்ததுடன் உள்ளே சென்று பெருமாளை திவ்யமாக சேவித்தோம். பெருமாளின் கோபம் காரணமாக வெகு காலம் வரை இக்குகைச்சந்ந்தி தகித்துக்கொண்டிருந்ததால் இவருக்கு ஜ்வால நரசிம்மர் என்ற திருநாமம். சந்நிதியில் மூன்று கோலங்களில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். வலப்புறம் தூணைப் பிளந்து கொண்டு பிரகலாதனுக்காக நரசிம்ம ரூபத்தில் வெளியே வரும் கோலம். இடப்புறம் அசுரனுடன் சண்டையிட்டுக் கொண்டே அவனது தலைமுடியைப் பிடித்து வாசற்படிக்கு அவனை இழுத்துக் கொண்டு செல்லும் கோலம். நடுவாக எட்டு கரங்களுடன் சுகாசனத்தில் இரணியனை ஆகாயமும், பூமியும் அல்லாத தனது தொடையில் போட்டுக் கொண்டு எந்த ஆயுதமாகவும் இல்லாத தனது கூரிய நகங்களில் அவுணனது மார்பைப் பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொள்ளும் கோலம். பெருமாளின் இடது திருக்கரத்தில் ஓங்கார ரூபியான சங்கும், வலது திருகரத்தில் மிளிரும் சுடராழியும் இலங்குகின்றன. இரு கரங்கள் அவனது பரந்த மார்பைக் கிழிக்கின்றது, இரு கரங்களினால் அவனது தலையையும் , காலையும் அவன் திமிறாத வண்ணம் பிடித்துக் கொண்டிருக்கிறார். மற்ற இரு கரங்களினால் அவனது குடலை மாலையாக அணிந்து கொள்ளும் கோலம். கோடிச் சூரிய பிரகாசத்துடன் விசாலமான நெற்றியும், தீர்க்கமான புருவங்களும், மிகவும் விலாசமான இரு கூற்றங்கொலோ என்னும் படியான ஜ்வாலையை கக்கும் கண்கள், நீண்ட மூக்கு, மதுராதர பல்லவம், கம்புக்ரீவம், விசால வக்ஷஸ்தலம், திரண்ட புஜங்கள், பிடரி மயிர், கோரைப்பற்கள், நாக்கு, கிரீடம், நெற்றிக் கண், வஜ்ர நகங்கள் அனைத்தும் அப்படியே தத்ரூபம். அன்று தன் பக்தன் பிரகலாதனுக்காக இரணியனை பிளந்த அதே கோலத்தில் இன்றும் சேவை சாதிக்கின்றார் ஜ்வாலா நரசிம்மர். பாதத்தின் அருகில் கை கூப்பி தன் வாக்கைக் காப்பாற்ற வந்து தன் தந்தையை வதம் செய்யும் கருணைக் கடலை கை கூப்பி வணங்கும் பிரகலாதன். சிறிதாக கையை கூப்பிய கோலத்தில் கருடன். ஹிரணியனின் கண்களில் பயத்தையும் அவன் கையில் உள்ள கேடயத்தையும் கூட காணலாம். கருடபீடம் பெருமாளைத் தாங்குகின்றது. அசுர குரு சுக்ராச்சாரியாரும் மஹா விஷ்ணுவும் உடன் உள்ளனர். எவ்வளவு புண்ணியம் செய்திருந்தால் தங்களுடைய இந்த திவ்ய தரிசனம் இன்று சித்தித்தது என்று ஆனந்த கண்ணீருடன் மனம் உருகி அவர் முன் நின்றோம். கையில் எடுத்து சென்றிருந்த விளக்கில் நெய் ஊற்றி ஏற்றினோம் அவர் சேவை சாதிக்கும் மேடையை தண்ணீர் ஊற்றி கழுவினோம். அனைவரும் கொண்டு வந்திருந்த நிவேதனப் பொருள்களை அவர் முன் சமர்பித்து இருளரிய சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத் துத்தியணி பணமாயிரங்களார்ந்த அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்னும் அணிவிளங்குமுயர் வெள்ளையனை மேவி பாற் கடலில் பள்ளி கொள்ளும் நாதனே, இந்த அஹோபிலம் என்னும் பெருநகருள் தெண்ணீர் பவநாசினி திரைக்கையாலடி வருட அமர்ந்த நாதனே, பூவில் நான்முகனைப் படைத்தவனே, கைம்மா துன்பம் கடிந்த பிரானே, கறந்த பாலுள் நெய்யே போன்றவனே, தேனும், பாலும், கன்னலும் அமுதுமாகி தித்தித்து என் ஊனிலுயுரிலுணர்வினில் நின்றவனே, பூந்துழாய் முடியானே, பொன்னாழிக்கையானே, அரியாகி இரணியனை ஆகம் கீண்டவனே, அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனே, தூணாயதனூடு அரியாய் வந்து தோன்றி பேணாவவுணனுடலம் பிளந்திட்ட பெருமாளே, மஞ்சாடு வரையேழும், கடல்களேழும், வானகமும், மண்ணகமும், மற்றுமெல்லாம் எஞ்சாமல் வயிறடக்கி ஆலின் மேலோர் இளந்தளிரின் கண் வளர்ந்த ஈசனே, போரார் நெடுவேலோன் பொன் பெயரோனாகத்தை, கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு, குடல் மாலை சீரார் திருமார்பின் மேற் கட்டி,செங்குருதி சோராகக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி அரியுருவாய் ஆராவெழுந்தவனே, ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தானே, வேரிமாறாப் பூமேலிருப்பவளுடன் கூடிக் களித்திடும் பொன்னுருவனே, தன் பக்தனான பிரகலாதனின் வார்த்தையை மெய்பிக்க இங்குளனங்குளென னென்றுரைக்கக் கூடாமே எங்குமுளானாய் அற்புதமான ரூபத்துடன், நரங்கலந்த சிங்கமாய் இரணியனின் சபையிலுள்ள பெரிய ஸ்தம்பத்தில் தோன்றிய கருணா முர்த்தியே உன்னுடைய பெருமையை யாரால் கூறால் இயலும் என்றும் புகுந்திலங்கும் அந்திப்பொழுதத்து அரியா யிகழ்ந்த யிரணியதாகம் – சுகிர்ந்தெங்கும் சிந்தபிளந்த திருமால் திருவடியே வந்தித் தென்னெஞ்சமே வாழ்த்து என்று பல ஸ்தோத்திரங்களை சொல்லி அவரிடம் சரணாகதி அடைந்து, பின் தேங்காய் பழம் உடைத்து சமர்பித்து கற்பூர தீபம் காட்டி பூஜையை நிறைவு செய்தோம். இவ்வாறாக அனைத்து நரசிம்மர்களின் தரிசனத்தையும் அவர் அருளினால் அற்புதமாக முடித்தோம். ஜ்வாலா நரசிம்மரை வணங்குவதால் மறுமையில் முக்தி கிடைக்கும், இம்மையில் பேய், பிசாசு, பூத உபாதைகள் நீங்கும், மன சஞ்சலம் தூர விலகி ஒடும், கிரக தோஷங்கள் நீங்கும். கிரகங்களில் சனிக்கிரக தோஷம் அகலவும், சத்ரு பயம் நீங்கவும் அருளும் ஜ்வாலா நரசிம்மரை ஸ்ரீமஹா ம்ருத்யுஞ்சயர் என்றும் போற்றுகின்றார்கள். கார்த்திகை மாதத்தில் நெய் அல்லது எண்ணெய் கொண்டு இவருக்கு விளக்கு ஏற்ற உடல் ஒளி பெறும், அழியாத ஞான விளக்கை மனதில் ஏற்றிக் கொண்டவனாவான். நீண்ட ஆயுள். கல்வி , ஐஸ்வர்யம் பெறுவான். பின்னர் மிக்க மகிழ்ச்சியுடன் வெளியே வந்தோம். ஜ்வாலா நரசிம்மர் குகையிலிருந்து சிறிது தூரம் மேலேறிச் சென்று உக்ரஸ்தம்பத்தை தரிசித்தோம். அதன் உச்சியில் ஜெயக்கொடி பறந்து கொண்டிருந்தது. குகைக்கு அருகில் பாறைகளின் இடுக்கில் அமைந்துள்ள, இரணியனை வதம் செய்தபின் பெருமாள் கையைக் கழுவிக்கொண்ட “இரத்த குண்டத்தை” சேவித்தோம் அதன் நீரை பருகினோம். ரத்த குண்டம் நீரை தலையில் தெளித்து வணங்க, பித்ரு தோஷம் நீங்கும் என்பதால் தலையில் தெளித்துக் கொண்டோம். “அதிரும் கழல் பெருந்தோள் இரணியனாகம் பிளந்தரியாய் உதிரமளந்த கையோடிருந்தவன்” என்னும் பாசுரம் மனதில் வந்தது. அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து பிரசாதம் சுவீகரித்துக் கொண்டு உக்ர ஸ்தம்பத்தை அருகில் சென்று தரிசிக்க மலை ஏறினோம். [] உக்ர ஸ்தம்பம் பரந்த ஆகாயத்தின் நீலப்பிண்ணனியில் பிரம்மாண்டமாக உச்சியாக உயர்ந்து நிற்கின்றது உக்ரஸ்தம்பம். மலைப்பாறை இரண்டாக பிளந்து இரு பிரிவாக விளங்குவதைக் காணலாம். உற்றுப் பார்த்தால் பாறையின் பிளவில் நரசிம்மரின் திருமுக தோற்றத்தை உருவகப்படுத்தி கொள்ளலாம். ஜ்வாலா நரசிம்மர் குகைக்கு எதிரே உள்ள குன்றின் உச்சியில் தான் உக்ரஸ்தம்பம் உள்ளது. கம்பீரமாக தூண் போன்று வானுயர நிற்கும் மலை முகட்டையே உக்ரஸ்தம்பம் என்கின்றனர். ஸ்ரீநரசிம்மம் பிளந்து வந்த தூண் இது என்பது ஐதீகம். ஆனால் மலைக்கு மேலே ஏறி செல்ல பாதை எதுவுமில்லை. இம்மலையில் ஜவ்வாது, கற்பூரம், விள, வில்வ, தேக்கு மரங்கள், மூங்கில் புதர்கள் நிறைந்திருக்கின்றன. அனைவரும் மலை ஏறுவது சாத்தியமில்லை. முடிந்தவர்கள் மட்டும் ஏறினோம், மற்றவர்கள் கீழிறங்கி சென்று விட்டனர் அவர்களை ஓட்டுனர் அவர்கள் கூட்டிக்கொண்டு மடத்துக்கு சென்று விட்டார். எங்களுடன் சில பெண்களும் உக்ரஸ்தம்பம் ஏறினர். ஒரு மூதாட்டியும் கஷ்டப்பட்டு ஏறினார். அவர் தெலுங்கில் “நா தன்றி நின்னை சூசுகோசரம் பைக ஒஸ்துன்னானு நீவு தரிசனம் இய்யி, அதாவது “என் ஐயனே உன்னைக் காண நான் மேலேறி வருகின்றேன் உனது தரிசனம் தா” என்று வேண்டிக்கொண்டே ஏறினார். அவர் படும் கஷ்டத்தைக் கண்டு சில இளம் பெண்கள் மேலே ஒன்றும் இல்லை நீங்கள் ஏன் கஷ்டப்படுகின்றீர்கள். இங்கேயே இருந்து விடுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அந்த அம்மாள் கூறிய பதில், “ஒன்றுமில்லை என்று சொல்ல வேண்டும் எல்லா இடத்திலும் பெருமாள் இருக்கின்றார்” என்று அவர்களை அதட்டி சொன்னார். இது அன்று பிரகலாதன் கூறிய பெருமாள் “தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்“ என்பதுதானே. ஒற்றையடிப் பாதை கூட இல்லை அப்படியே மெல்ல மரங்களுக்கிடையே ஏறி மேலே சென்று சேர்ந்து விட்டோம். மேலிருந்து பார்த்தால் கருட மலை அப்படியே கருடன் போல் இரு இறகுகள் நடுவில் அஞ்சலி ஹஸ்தத்துடன் நிற்கின்ற கோலத்தில் அப்படியே தத்ரூபமாக காட்சி தந்தார். உச்சியில் உக்ரஸ்தம்பத்தின் கீழே பெருமாளின் பாதம் உள்ளது. சுவாமிகள் அருகில் செல்ல வேண்டாம் காற்று அதிகமாக உள்ளது என்று கூற அங்கிருந்தே பெருமாளை சேவித்தோம். செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றுடைய எங்களீசனெம்பிரான் இருந்தமிழ் நூற்புலவன் மங்கையாளன் மன்னுதொல் சீர் வண்டறைத்தார்க்கலியன் செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர் தீதிலரே (10) என்னும் திருமங்கையாழ்வாரின் கடைக்காப்பு பாசுரத்தை சேவித்தோம். பொருள் : சிவந்தகண்களையுடைய சிம்மங்கள் மற்ற மிருகங்களை அழியச்செய்து அவற்றை எம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து தொழுது நிற்கும் சிங்கவேள் குன்றத்தில் உறைகின்ற, நம்மைப் போன்ற சம்சாரிகளுக்கு ஸ்வாமியும் எனக்கு உபகாரனுமான ஸர்வேஸ்வரன் விஷயமாக தமிழில் வல்ல வண்டுகள் மொய்க்கும் மலர் மாலை அணிந்த திருமங்கை மன்னன் தடக்கையன் அருளிச்செய்த செவ்விய மாலையை கற்க வல்லவர்கள் பொல்லாங்கு இல்லாதவர்கள் ஆவர். இப்பகுதியிலேயே இது உயரமான இடம் என்பதால் செல்லிடைப்பேசி இங்கு வேலை செய்தது. இந்த மேல் அஹோபிலத்தில் பாவன நரசிம்மரை சேவிக்க சென்ற போது ஓரிடத்தில் சிறிது நேரத்திற்கு வேலை செய்தது, பின் இங்குதான் வேலை செய்தது. அங்கிருந்தே வீட்டை அழைத்து அற்புத தரிசனம் செய்த தகவலை பகிர்ந்து கொண்டோம். பின் மெள்ள இறங்கினோம். என்ன ஆச்சரியம் அந்த பெருமாளை பூரணமாக நம்பி மேலே வந்த மூதாட்டி அந்த பெண்களுக்கு முன்பாக கீழே இறங்கி வந்து விட்டார். எல்லாரும் மடத்திற்கு கிளம்பினர் அடியேன் மட்டும் இன்னொரு தடவை ஜ்வாலா நரசிம்மரை சேவித்து விடலாம் என்று ஒடினேன். அவ்வாறு சென்ற போது ஐயனுக்கு வேத கோஷங்கள் முழங்க அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. வெளியே நின்று அவர் கொடுத்த அந்த அற்புத தரிசனத்தை கண்டு களித்து பின் அவசர அவசரமாக ஓடி வந்து மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு மடத்தை வந்து சேர்ந்தோம். ஒன்று கூட தவறவில்லை எல்லா தரிசனமும் திவ்யமாக கிடைத்தது அவரின் அருளினால். அதற்காக அஹோபில நரசிம்மரின் கோவிலின் முன் நின்று அவருக்கு கன்ணீருடன் நன்றி கூறினோம். மதிய உணவுக்குப்பின் கிளம்பி கீழ் அஹோபிலம் வந்தோம். அங்கு அஹோபில புத்தகம், சி.டிகள் மற்றும் நினைவுப் பொருட்கள் வாங்கினோம். பின்னர் சென்னைக்காக கிளம்பினோம், வரும் வழியில் போத்தூர் வீர பிரம்மேந்திரர் ஜீவ சமாதி ஆலயம், மற்றும் தாலப்பாக்கம் அன்னமாச்சாரியார் பிறந்த இடம் சேவித்தோம். அன்னமாச்சாரியாரின் நினைவு மண்டபம், மற்றும் அங்கு கோவில் கொண்டுள்ள கேசவப் பெருமாளையும் தரிசித்தோம். உற்சவ மூர்த்திகளின் அழகே அழகு. இரவு சுமார் 1 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தோம். இயற்கையுடன் இயைந்து, ஆற்றில், அருவியில் குளித்து, ஆண்டவனை பல் வேறு கோலங்களில் தரிசித்து, மலையேறி எந்த வித கவலையுமில்லாமல் (கைப்பேசி கூட தொந்தரவு செய்யக் கூடாதென்றால்) நிச்சயம் நீங்கள் அஹோபில யாத்திரையை மேற்கொள்ளலாம் ஒரு தெய்வீக உணர்வையும் பெறுவீர்கள் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. என்ன தங்களுக்கும் அஹோபிலம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றதா? அவசியம் சென்று வாருங்கள் ஒரு அருமையான ஆன்மீக அனுபவம் கிட்டும். இனி நரசிம்மரைப் பற்றிய சில குறிப்புகளைக் காண்போமா? அன்பர்களே. அத்தியாயம் -13 நரசிம்மரின் வடிவங்கள் கோபுரங்களில் இன்னென்ன தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக நரசிம்மருடைய உருவம் கோபுரங்களில் அமைக்கப்பட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இவர் திருக்கோபுரத்து நாயனார் என்று அழைக்கப்படுகின்றார். மேலும் கிரிஜா, ஸ்தூணஜா என்ற இரு வடிவுகளிலும் நரசிம்மர் பிரதிஷ்டை செய்யப்படுகின்றார். இதில் கிரிஜா வடிவமானது ஸ்ரீமந்நாராயணன் இரணிய கசிபுவால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள், ரிஷிகளுடைய வேண்டுகோளுக்கிணங்க காடுகளையும், மலைகளையும் தனக்கு உறைவிடமாகக் கொண்டு அன்பர்களுக்கு காட்சி அளிக்கும் தோற்றமாகும். ஸ்தூணஜா வடிவானது தூணிலிருந்து தோன்றும் போது உள்ள வடிவாகும். இன்னும் நான்கு வடிவங்களில் நரசிம்மர் பிரதிஷ்டை செய்யப்படுகின்றார். 1. சக்கரத்தின் பின்புறம் யோக நரசிம்மர் வடிவத்தில் சுதர்சன நரசிம்மர் வடிவம். நான்கு கரங்களிலும் சுதர்சன சக்கரத்தை ஏந்தியிருப்பார். 1. ஸ்ரீமஹாலக்ஷ்மித் தாயாரை தனது தொடையில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு அருள் பாலிக்கும் கோலம்தான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர். மேற் கரங்களில் சங்கு சக்கரம். அபய ஹஸ்தத்துடன் தாயாரை அனைத்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். தாயாரும் அபய ஹஸ்தத்துடன் அருள் பாலிக்கின்றாள். 1. கருட வாகனத்தின் மேல் எழுந்தருளியிருக்கும் நரசிம்மருக்கு பாடாலாத்ரி நரசிம்மர் என்று பெயர். 1. ஆதிசேஷன் மேல் எழுந்தருளியிருக்கும் நரசிம்மரை யானக நரசிம்மர் என்று அழைக்கிறோம். விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப் படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன. அவையாவன . 1. அகோபில நரசிம்மர் 2. அழகிய சிங்கர் 3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர் 4. உக்கிர நரசிம்மர் 5. கதலி நரசிங்கர் 6. கதலி லக்ஷ்மி நரசிம்மர் 7. கதிர் நரசிம்மர் 8. கருடாத்ரி லக்ஷ்மி நரசிம்மர் 9. கல்யாண நரசிம்மர் 10. குகாந்தர நரசிம்மர் 11. குஞ்சால நரசிம்மர் 12. கும்பி நரசிம்மர் 13. சாந்த நரசிம்மர் 14. சிங்கப் பெருமாள் 15. தெள்ளிய சிங்கர் 16. நரசிங்கர் 17. பானக நரசிம்மர் 18. பாடலாத்ரி நரசிம்மர் 19. பார்க்கவ நரசிம்மர் 20. பாவன நரசிம்மர் 21. பிரஹ்லாத நரசிம்மர் 22. பிரஹ்லாத வரத நரசிம்மர் 23. பூவராக நரசிம்மர் 24. மாலோல நரசிம்மர் 25. யோக நரசிம்மர் 26. லட்சுமி நரசிம்மர் 27. வரத யோக நரசிம்மர் 28. வராக நரசிம்மர் 29. வியாக்ர நரசிம்மர் 30. ஜ்வாலா நரசிம்மர் அத்தியாயம் –14 முக்கிய நரசிம்மத் தலங்கள் நரசிம்மர் பாரதம் முழுதும் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான், அவருக்குத் தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம். மிகப்பிரபலமான நரசிம்மர் தலங்களும் அவற்றைப் பற்றி சில முக்கிய குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அ) ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள் ஜோதிர்மட் (திருப்பிருதி): உத்தராஞ்சல் மாநிலத்தில் பத்ரிநாதம் செல்லும் வழியில். ஆதிசங்கரர் எழுப்பிய ஆலயத்தில் சாந்த நரசிம்மராக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சாளக்கிராம மூர்த்தி ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி அமர்ந்த கோலம். வலதிருக்கரத்தில் சுதர்சன சக்கரம் தாங்கி இடதிருக்கரத்தை கீழே ஊன்றிய அற்புதமான கோலம், காலையில் பெருமாளின் திருமஞ்சனத்தை சேவிப்பது மிகவும் விசேஷம். மறங்கொளாளரியுருவெனவெருவர ஒருவனது அகல் மார்வம் திறந்து வானவர்மணிமுதிபணிதர இருந்தநலியமத்துள் இறங்கி ஏனங்கள் வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவீசும் பிறங்கிமாமணியருவியொடிழிதரு பிருதிசென்றடை நெஞ்சே! என்று திருமங்கையாழ்வார் இத்திருப்பதியை மங்களாசாசனம் செய்துள்ளார். அஹோபிலம் (சிங்கவேள் குன்றம்) : ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் நந்தியாலின் தென்கீழ் 48 கி.மீ. நவநரசிம்ம க்ஷேத்ரம். மலையில் 9 கி.மீல் அகோபில நரசிம்மர் கோயில். குடவரை நரசிம்மர் வெளியான தூண் 2கி.மீல் உள்ளது. அடிவாரத்து பிரகலாத வரதன் கோயிலே அகோபில மடத்தின் தலைமையகம். இம்மடத்தின் அழகிய சிங்க ஜீயர், ஸ்ரீரங்கத்தில் செய்த அபூர்வ கோபுரத் திருப்பணியை எவரும் மறக்க முடியாது. ஆதிசங்கரரை, காபாலிகர்களிடமிருந்து, நரசிம்மர் காப்பாற்றிய தலம். சோளிங்கபுரம் (திருக்கடிகை): தமிழ்நாடு, வேலூரின் வடகீழ் 40கி.மீ. மலையில் 500 அடி உயரத்தில் யோக நரசிம்மர் அக்காரக்கனியாகவும் தாயார் அமிர்தபலவல்லியாகவும் பொன் விமானங்களின் கீழ் எழுந்தருளி அருள் பாலிக்கும் திவ்ய தேசம், நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த சோழ சிங்கபுரம். அடிவராத்தில் உற்சவமூர்த்தி பக்தோசிதன், பக்த பிரகலாதனை அஞ்சாதே வா என்று அழைக்கும் ஆவாஹன முத்திரையுடன் சேவை சாதிக்கின்றார். சிறிது நேரம் தங்கினாலே முக்தியளிக்கும் தலம். எதிர் மலையில் ஆஞ்சநேயர் சங்கு சக்கரம் கையிலேந்தி யோக ஆஞ்சனேயராய் சேவை சாதிக்கின்றார். கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் இவரை சேவிப்பது மிகவும் விசேஷம். எக்காலத்தெந்தையாய் என்னுள்மன்னில் மற் றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன் மிக்கார் வேதமலர்விழுங்கும் என் அக்காரக்கனியே! உன்னையானே வேளுக்கை: திவ்ய தேசங்களால் நிறைந்த காஞ்சிபுரத்தில் திருத்தண்கா சமீபம். ஸ்ரீஅழகியசிங்கர் கோயில். மேற்கு திசையில் அசுரர்களை தடுத்தபின், பெருமாள், யோக நரசிம்மராக, தானே விரும்பித் தங்கிவிட்ட இடம். சிறந்தவென் சிந்தையும் செங்கணரவும் நிறைந்தசீர்நீள்கச்சியுள்ளும் – உறைந்ததும் வேங்கடமும்வெஃகாவும் வேளுக்கைப்படியுமே தாங்கடவார்தண் துழாயார். திருவாலித் திருநகரி :சீர்காழியின் தென்கீழ் 6 கி,மீ ல் திருவாலி. அங்கிருந்து வடகீழ் 4 கி.மீ திருநகரி. திவ்ய பிரபந்தத்தில் திருவாலி லக்ஷ்மி நரசிம்மரும், திருநகரி தேவராஜனும் சேர்ந்தே போற்றப்பட்டுள்ளனர். நாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்று. திருவாலியில் மூலவர் இலஷ்மி நரசிம்மர், வயலாளி மணவாளன், உற்சவர் திருவாலி நகராளன். மூலவர் வலப்பக்கத்தில் மஹாலஷ்மித் தாயாரை அணைத்த நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இரணியனை கொன்ற பின்னும் கோபம் அடங்காமல் பெருமான் இருந்த போது தேவர்களும் முனிவர்களும் வேண்டிட பெரிய பிராட்டியார் வந்து பெருமாளின் வலது தொடையில் அமர, அவரை அனைத்து சாந்தமடைந்ததாக ஐதீகம். ஆலிங்கன கோலத்தில் சேவை சாதிப்பதால் இத்தலம் திருவாலி ஆயிற்று. தாயார் அனேகமாக எல்லாத் தலங்களிலும் பெருமாளின் இடது தொடையில் அமர்ந்தவாறு தான் சேவை சாதிப்பது வழக்கம் ஆனால் இத்தலத்தில் வலப்பக்கம் இருப்பது ஒரு தனி சிறப்பு. தாயார் - அம்ருத கடவல்லி. பூர்ண முனிவரின் மகளாக லஷ்மி பிறந்து வளர்ந்து வரும் போது பெருமாள் அவரை திருவாலியில் மணந்து திருநகரி செல்லும் போது தான் திருமணங்கொல்லையில் கலியன் வாளால் வெருட்டி திருமந்திர உபதேசம் பெற்றதாக ஐதீகம். இத்தலம் பில்வாரண்யம் என்று அறியப்படுகின்றது. குயிலாலும்வளர்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடீ! துயிலாதகண்ணினையேன் நின்நினைந்து துயர்வேனோ! முயலாலும் இளமதிக்கே வலையிழந்தேற்கு இதுநடுவே வயலாளிமணவாளா! கொள்வாயோமணிநிறமே! திருவல்லிகேணி : பெருமாள் ஐந்து கோலங்களில் அருள்பாலிக்கும் அற்புத திவ்ய தேசம். ஸ்ரீ அழகிய சிங்கர். பக்த பிரகலாதனுக்கு அருள் செய்யத் தோன்றிய நரசிம்மர். புத்திக்கு வழிகாட்டி யோக நரசிம்மர் இத்தலத்தில் மூலவராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஞான பாதைக்கு அழைத்து செல்பவர். மேற்கு நோக்கிய திருமுக மண்டலம். இங்கே முகத்தில் அடிக்கப்படும் சங்கு தீர்த்ததால் பல் வேறு பயங்கள் தோஷங்கள் நீங்குகின்றன. உற்சவர் ஸ்ரீ தெள்ளிய சிங்கர் மேற் கரங்களில் சங்கு சக்கரம், கீழ்க்கரங்களில் அபய முத்திரை, உயர்ந்து ஒரு விரலை வளைத்து அருகே வா என்று அழைப்பது போல உள்ள இம்முத்திரை ஆவாகன முத்திரை என்று அழைக்கப்படுகின்றது. பிரகலாதனை வா என்று அழைத்து அருளும் முத்திரை. கோபக்கனலுடன் விழித்தாலும் அது இரண்யனுக்கே, நீ அஞ்சேல் நான் எப்போதும் உன்னைக் காப்பேன் என்று தெளிவாக (தெள்ளிய) கூறும் கோலம். அத்ரி முனிவருக்கு பிரத்யக்ஷம். நரசிம்மம் என்று பயப்பட தேவையில்லை உங்களுக்கு அருளவே சேவை சாதிக்கின்றேன் பயமில்லாமல் வாருங்கள் என்று பக்தர்களை ஆவாஹன முத்திரையால் அழைப்பதாகவும் ஐதீகம். இவரை வணங்க நோய்கள் குணமாகும். உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார் தெள்ளிய (அழகிய) சிங்கர். பள்ளியிலோதிவந்ததன் சிறுவன் வாயில் ஓராயிர நாமம் ஒள்ளியவாகிப்போத ஆங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி பிள்ளையைச் சீறிவெகுண்டு தூண்புடைப்பப் பிறையெயிற்றனல் விழிபேழ்வாய் தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. திருநீர் மலை: நின்றான், கிடந்தான், இருந்தான் நடந்தான் என்று நான்கு கோலத்தில் சேவை சாதிக்கும் பெருமாள், மலைக் கோவிலில் இருந்தானாக சாந்த நரசிம்மராக அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவரை சேவித்தால் வேளுக்கை பெருமானை சேவித்தது போலாகும் என்று திருமங்கையாழ்வார் பாடுகின்றார். நாகை (நாகப்பட்டினம்) : நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சையின் கிழக்கே 90 கீ.மீ அபூர்வமான அஷ்டபுஜ நரசிம்மர் திருமேனி உள்ளது. துருவனும் ஆதி சேடனும் பணிந்த திருப்பதி. தஞ்சைமாமணிக்கோயில் (வெண்ணாற்றங்கரை): தஞ்சைக்கு வடக்கே திருவையாறு வழியில் 6 கி.மீ. அருகருகே 3 பெரிய விஷ்ணு கோயில்கள். ஒன்றாகவே பாடப்பட்டவை. நீலமேகப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள் மற்றும் நரசிம்மன் கோயில்கள். தஞ்சகன், தண்டகன், கஜமுகன் ஆகியோரின் கெடுமையிலிருந்து மக்களைத் திருமால் காத்த பதி. திவ்யப்ரபந்தம் கூறி வணங்கிடலாகாத தினங்களில் தேசிகப்ரபந்தம் பாராயணம் செய்யுமாறு நயினாச்சாரியார் நியமித்த பதி. திருக்கோஷ்டியூர் : (தென்) திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை வழி 7 கி.மீ. உரகமெல்லணையான் கோயில். மகாவிஷ்ணு நின்று, இருந்து, கிடந்த, நடந்து, கூத்தாடும் 5 நிலையில் தரிசனமளிக்கும் பதி. 1000 ஆண்டுகட்கு முன்பே, கீழோர் எனப்பட்டவரை, திருக்குலத்தோர் என்று கூறி, தான் நரகம் சென்றாலும், அனைவரும் உய்வதற்காக ,யாவரும் அறியுமாறு ராமானுஜர் நாராயண மந்திரத்தை உரக்கக் கூவிய தலம். மகாமகக்கிணறு சிறப்பு. வைணவ மறுமலர்ச்சியில் முக்கிய ஸ்தலம். சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து அருளும் பதி. மயனும், விஸ்வகர்மாவும் இணைந்து எழுப்பியது. தென்புற நரசிம்மர் தெற்காழ்வார் இரண்யனைப் பிடித்த கோலம். வடபக்க நரசிம்மர் வடக்காழ்வார் இரண்யவதம் செய்த கோலம். இரண்டுமே மிகப்பெரிய திருவுருவங்கள். ஆ) பிற நரசிம்மத் தலங்கள் ஆந்திரம் மாநிலம் 1. எர்ரகுண்டா - கடப்பாவிலிருந்து 40 கி.மீ. லக்ஷ்மி நரசிம்மர், யோக நரசிம்மர் ஆலயங்கள். 2. யாதகிரி - ஐதராபாத்திலிருந்து 70 கி.மீ மலையில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். 375 படிகள். 3. தர்மபுரி - கோதாவரி நதி மேற்குக் கரை (கரீம் நகரிலிருந்து 16 கி.மீ) இரு நரசிம்மர் ஆலயங்கள். 4. பாபட்லா - தெனாலியிருந்து 43 கி.மீ. ஜ்வாலா நரசிம்மர் கோயில். 5. அகிரபள்ளி - விஜயவாடாவிலிருந்து செல்லலாம். வியாக்ர நரசிம்மர் ஆலயம். 6. மங்களகிரி - பெசவாடாவிலிருந்து 13 கி.மீ. மலையில் 400 படிகள். பெருமாளின் உக்கிரத்தைக் குறிக்க நரசிம்மருக்கு வாயில் பானகம் ஊற்றிக்கொண்டே இருக்கிறார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி. 7. சிம்மாசலம் - வால்டேரிலிருந்து 8 கி.மீ. மலைமேல் 1000 படிகள். வராஹ நரசிம்மர். உக்ர மூர்த்தி என்பதால் எப்போதும் சந்தனக்காப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியையில் மட்டும் புது சந்தனக்காப்பு அன்று மட்டும் நிஜ தரிசனம் கிட்டும். 8. பூமினிபட்டினம் : விஜய நகரத்திலிருந்து 20 கி.மீ. லக்ஷ்மி நரசிம்மர். 9. கொருகொண்டா: ராஜமுந்திரியிலிருந்து 20 கி.மீ. மலையில் 600 படிகள். சாத்வீக நரசிம்மர். 10. லக்ஷ்மி புரம்: கரிம் நகர் மாவட்டம் மலையில் நவநரசிம்மர். இரண்டாவது அகோபிலம் என்பர். 11. திராக்ஷராமம் : காகிநாடா சமீபம் புகழ் பெற்ற பீமேஸ்வரர் கோயிலில் ஷேத்ராபாலராயுள்ள நரசிம்மர். 12. திருப்பதி: உலகப்புகழ் வேங்கடாசலபதி கோயிலில் உள் பிரகாரத்தில் தனி நரசிம்மர் சன்னதி. 13. கம்மம் : ஸ்தம்பம் (தூண்) என்பது கம்மம் ஆகிவிட்டது. ஸ்தம்ப நரசிம்மர் கோயில். 14. வாடபல்லி: இத்தலத்தில் நதசிம்மரின் மூக்கிற்கு எதிராக ஒரு தீபம் ஏற்றப்படும், இத்தீபம் காற்றில் அசைவது போல அசையும், இது எம்பெருமானின் மூச்சுக்காற்று பட்டு அசைவதாக ஐதீகம். அதே சமயம் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும். 15. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும். கர்நாடக மாநிலம் 1. நரசிப்பூர் திருமுக்கூடல் - மைசூரின் தென்கீழ் 30 கீ.மீ. காவிரி, கபில, ஸ்படிக நதிகளின் சங்கமத்தலம். குஞ்சால நரசிம்மர். ஒரு கையில் குண்டுமணியும், மறு கையில் தராசும் ஏந்திய அபூர்வத் திருமேனி. 2. அகர: மைசூர் மாவட்டம் ஏலந்தூர் தாலுக்கா. ஒரே திருமேனியில் யோக, லக்ஷ்மி, உக்கிர, ஜ்வால, பிரகலாத வரத முகங்களுடைய பஞ்சமுக நரசிம்மர். 3. பாண்டவபுரம் :ஸ்ரீ ரங்கப் பட்டிணத்திலிருந்து 32 கி.மீ. 400 படிகள். மலையில் யோக நரசிம்மர் ஆலயம். 4. சாளக்கிராம் : மைசூர் மாவட்டம் கிருஷ்ணராஜ நகரின் வடமேற்கு 15 கி.மீ. 5. ஹோலே நரசிப்பூர் : ஹாஸனிலிருந்து தென்கீழ் மைசூர் வழி 32 கி.மீ. பிரஸன்ன நரசிம்மர். 6. சிபி: தும்கூர் மாவட்டம், சிரா தாலுக்காவில் சாளக்கிராம வடிவில் நரசிம்மர். 7. ஹம்பி : பெல்லாரி மாவட்டம் ஹாஸ்பேட் தாலுக்கா 22 அடி உயர நரசிம்மர். 8. கனககிரி : ராய்சூர் மாவட்டம், கங்காவதி தாலுக்கா வடமே. 20 கி.மீ. லிங்க வடிவில் லக்ஷ்மி நரசிம்மர். 9. கர்பரா: பிஜப்பூர் மாவட்டம் தாலுக்காவில் அரசமரமே நரசிம்மராக வழிபாடு. 10. ஹலசி : பெல்காம் மாவட்டத்தில் தெற்கே காநாபுர தாலுக்கா. பூவராக அனந்தவீர விக்கரம நரசிம்மர். 11. முடுதகாண ஹுப்ளி : பெல்காம் சமீபம் சம்பகாவ் வட்டம். அஸ்வத்த நரசிம்மர். மஹாராஷ்டிரா மாநிலம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராகேர் மற்றும் சார்தானா ஆகியவை நரசிம்மத் தலங்கள். ஒரிசா மாநிலம் ஒரிசா மாநிலம் ந்ருசிங்கநாத் ஒரு நரசிம்மர் தலம். தமிழ்நாடு மாநிலம் 1. திருக்குறையலூர் : சீர்காழியிலிருந்து 8 கி.மீ. திருமங்கையாழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூரில் ஸ்ரீ உக்ர நரசிம்மர், ஆழ்வார் ஒருவருடம் முழுவதும் 1008 வைணவர்களுக்கு ததியாராதனம் நடத்திய திருமங்கைமடத்தில் ஸ்ரீ வீர நரசிம்மர், திருநகரியில் ஆழ்வார் ஆராதித்த ஸ்ரீ யோக நரசிம்மர், மற்றும் ஸ்ரீ இரணிய நரசிம்மர் என்று ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார். சிவபெருமான் அசுரர்களுக்கு பல் வேறு வரங்களை அளித்ததால் அவர்கள் செய்த பாவங்கள் சிவபெருமானை பற்றிக் கொள்கின்றன, அவை தீர சிவபெருமான் தனது ஐந்து முகங்களால் ஸ்ரீநரசிம்மரை துதிக்க பெருமாளும் ஐந்து கோலத்தில் சேவை சாதித்து சிவபெருமானின் பாவங்களை அழித்ததாக ஐதீகம். 2. நாமக்கல் : ஊரின் நடுவே உள்ள மலைமுகட்டில், மேற்புறம் நரசிம்மர் சன்னதி. பெருமாள் சாளக்கிராம திருமேனி. தாயார் நாமகிரிவல்லி. 3. சிங்கப்பெருமாள் கோயில் : சென்னையிலிருந்து (தாம்பரம் வழி) 48 கி.மீ. உக்ர நரசிம்மர் கோயில். முக்கண்ணுடன் குகையில் எழுந்தருளியுள்ளார் பாடலாத்ரி நரசிம்மர். மலையே உடலாக எழுந்தருளியுள்ளார் எனவே கிரி வலம் மிகவும் சிறப்பு. தாயாரின் திருநாமம் அஹோபிலவல்லித்தாயார். ஜாபாலி முனிவருக்காக உக்ர கோலத்தில் சேவை சாதித்த பெருமாள். 4. திருவதிகை : பண்ருட்டி அருகே 1 கி.மீ. சரநாராயணர் கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சிறப்பு. 5. காஞ்சிபுரம் : சங்கராச்சாரியார் மடத்தில் நரசிங்க சாளக்கிராமம் பூஜிக்கப்படுகிறது. 6. ஸ்ரீரங்கம் : பார்புகழ் ரெங்கநாதர் கோயிலில் கம்பனின் இராமாயணத்தை அங்கீரிப்பதற்கு விமான சிற்பத்திலிருந்து வெளிவந்த நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பர். ஆலிநாடன் திருசுற்றில் வடக்கு வாசலை நோக்கி உயர்ந்ததான கட்டிட அமைப்பில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது உக்ர நரசிம்மர் சன்னதி. 5 அடி உயரத்தில் 8 திருக்கரங்களுடன் சேவை சாதிக்கின்றார். இவருடைய வலக்கரமானது நீட்டிய நிலையில் அசுரனைக் கொல்ல விழையும் தோற்றத்தில் அமைந்துள்ளது. இவருக்கு எடுத்தகை அழகிய நாயனார் என்னும் திருநாமம் உள்ளதாக ஜடவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டின் மூலம் அறியப்படுகின்றது. கம்பர் தாம் பாடிய இராமாயணத்தை திருவரங்கம் மேட்டழகிய சிங்கர் சன்னதிக்கு எதிரே உள்ள நாலு கால் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்த போது தம்மையும் பாட வேண்டுமென்று அழகிய சிங்கர் நியமித்ததால், கம்ப இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப்படலம் பாடப்பட்டதாக பெரியோர்கள் கூறுவர். மேலும் உபய காவேரி மத்தியில் ஸ்ரீமந்நாராயண அவதாரமான ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவில். 7. அவனியாள்புரம்: அண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் விஷ்ணு ஆலயத்தில் 5 8. மதுரை: ஆனைமலை நரசிங்கம் யோக நரசிங்கப் பெருமாள் ஆலயம். 9. பரிக்கல்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். தாயார் நரசிம்மரை ஆலிங்கனம் செய்தவாறு உள்ள அற்புதமான திருமேனி அமைந்துள்ள ஆலயம். இராகவேந்திரின் குருநாதர் வியாசராசர் அனுமனை பிரதிஷ்டை செய்ய விரும்பிய தலம். ஆனால் முடியாமல் போனதால் வசந்தராஜன் என்னும் அரசனிடம் அப்பொறுப்பை ஒப்படைக்க பரிக்கலாசுரன் என்னும் அரசன் அவருக்கு தொல்லை தர, நரசிம்மர் தோன்றி அவ்வசுரனை வதம் செய்தருளினார். அசுரன் பெயரால் இவ்வாலயம் பரிக்கல் என்றழைக்கப்படுகின்றது. பரிக்கல் வந்தால் பரிஹாரம் எனவே பரிக்கல் வர அனைத்து குறைகளும் தீரும். வருடத்தில் மாசி மகம், பங்குனி உத்திரம், சித்திரை வருட பிறப்பு, தை பிரம்மோற்சவம் என்று வருடத்தில் நான்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார் பெருமாள். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள் லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் கரோடா நரசிம்மர் என்று இரு கருட சேவை ஒரு தனி சிறப்பு.. 11. பூவரசன் குப்பம்: நரசிம்மர் இரணியனை அழித்து பிரகலாதனுக்கு காட்சி கொடுத்த தலம் ஆந்திராவில் "அகோபிலம்' என்றும், முனிவர்களுக்கு காட்சி கொடுத்த தலம் பூவரசன் குப்பம் என்றும் கூறுவர். எனவே இத்தலம் "தென் அகோபிலம்' எனவும் அழைக்கப்படுகிறது. நரசிம்மர் தன் மடியில் அமிர்தவல்லி தாயாரை அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, வலது கரத்தால் அபயம் அளித்து, சிரித்த முகத்துடன், சீரிய சிங்கனாக, 12 திருக்கரங்களுடன் விளங்குகிறார். பொதுவாக நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதற்கிணங்க பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது. பகவான் நரசிம்மர் அகோபிலத்தில் இரண்யனை அழித்த பிறகு உக்கிரம் தணியாமல் அலைந்தார். இரணியனின் கொடுமைக்கு பயந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்து தவமிருந்த முனிவர்கள் நரசிம்மரின் தரிசனம் கிடைக்க வேண்டினர். அப்படி காட்சியளித்த தலங்கள் தமிழகத்தில் எட்டு உள்ளன. அவையாவன பூவரசன் குப்பம் அதற்கு கிழக்கே சிங்கரி கோயில், மேற்கே அந்திலி, பரிக்கல், வடக்கே சோளிங்கர், சிங்க பெருமாள் கோயில், தெற்கே நாமக்கல், சிந்தலவாடி ஆகியன அமைந்துள்ளன. சோளிங்கரிலும் அந்திலியிலும் யோக நரசிம்மராகவும், சிங்கிரியில் உக்கிர நரசிம்மராகவும், பூவரசன் குப்பத்தில் லட்சுமி நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார். 12. அந்திலி: கருடன் தவம் செய்ததற்காக அவனுக்கு காட்சியளித்த லக்ஷ்மி நரசிம்மர். கருடவடிவில் அமைந்த பாறையின் மீது திருக்கோயில் அமைந்துள்ளது. வருடத்தின் 365 நாட்களும் லட்சுமி நரசிம்மர் மீது சூரிய ஒளி படுவது தலத்தின் சிறப்பம்சமாகும். 13. பழைய சீவரம் : செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பாலாற்றங்கரையில் மலை மேல் தாயாருடன் சாந்த நரசிம்மராய் காட்சி தரும் லக்ஷ்மி நரசிம்மர் கோயில். 14 நரசிங்கபுரம். கூவம் நதிக்கரையில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சுமார் 8.0 கி.மீ தூரத்தில் மரகதவல்லித்தாயார் சமேத லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். 1. தாடிக்கொம்பு: சுதர்சன நரசிம்மர். பாண்டிச்சேரி மாநிலம் பாண்டிச்சேரி மாநிலம் : சிங்கரி கோயில் என்ற ஊரில் 18 கை நரசிம்மர். கேரள மாநிலம் 1. கடுங்கலூர் : ஆலவாயிலிருந்து 2 கி,மீ. நரசிம்மர் கோயில். 2. துறவூர் : ஆலப்புழையிலிருந்து 35 கி.மீ. இரண்டு நரசிம்மர் கோயில்கள். 3. குருவாயூர் : கிருஷ்ணன் கோயிலில் நாராயண பட்டத்ரி தன் குருவிடம் வாங்கிக் கொண்ட நோய் நீங்கிட நாராயணீயம் இயற்றும் போது விஷ்ணு நரசிம்மக்காட்சி அளித்த தலம். சிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு திருக்கரங்களே. எனினும் சில தலங்களில் நரசிம்மர் 5 முகமும், 8,10,16,18,26,32,64 கரங்களும் உடையவராகவும்; லக்ஷ்மியுடன் அல்லது ஸ்ரீ தேவி பூதேவியோடு சேர்ந்திருப்பராகவும்; அமர்ந்து, நின்று நகருபவராகவும்; வராகமும் சிம்மமும் சேர்ந்த வடிவிலும் மாறுபட்ட இன்னும் பல உருவங்களோடும் பல ஆயுதங்களோடும் காணப்படுகிறார் லக்ஷ்மி நரசிம்ம விரதம்: நரசிம்மரை வழிபட முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள், லக்ஷ்மி நரசிம்ம விரதம் இருப்பது நல்லது. நீண்ட கால துன்பங்கள் கூட போக்கும் சக்தி இந்த விரதத்திற்கு உண்டு. 48 நாட்கள் “லக்ஷ்மி நரசிம்ம சரணம் பிரபத்யே“ என்று ஜபம் செய்து பசும்பால் அல்லது பானகம் நிவேதனம் செய்ய வேண்டும். நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை. நரசிம்ம வழிபாட்டிற்கு உகந்த காலம்: வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும். சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும், நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. இவ்விரதத்தை அனுஷ்டித்ததாலே, கயவனாக இருந்த சுவேதன், மறுபிறவியில், பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றதாக, விஷ்ணுவே கூறியிருப்பதால், அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல, ஒரு முறை தான் அல்ல என்பதும் தெரிகிறது. இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், நம் வசதி கருதி, சில நல்-நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தியில்/ சஷ்டியில்; செவ்வாய்/வெள்ளியில்; காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது. அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்த்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு. கம்பப்பெருமாள்கள் கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதி (பேச்சு + அம்மன்) பேச்சியம்மன் ஆகவும்; ஓம் காளீஸ்வரி அங்காளீஸ்வரி ஆகவும்; பிரும்மன் விரும்பன் ஆகவும் மாறியது போலவே ஸ்தம்பம் (தூண்) கம்பம் ஆகி, கம்பத்திலிருந்து வெளிப்பட்ட விஷ்ணு கம்பப் பெருமாள் ஆகிவிட்டார். தென் தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரைக்குத் தெற்கே கம்பப்பெருமாள் கோயில்கள் அதிகமாகவுள்ளன. கர்நாடகத்தில் நரசிம்மரை கம்படய்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கூறப்படும் நரசிம்ம நாமத்தின் பெருமைகள் அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹ ஸந்தாதா ஸந்திமாந் ஸ்திர: | அஜோ துர்மர்ஷண: சாஸ்தா விச்ருதாத்மா ஸுராரிஹா || இந்த சுலோகத்திலுள்ள அனைத்து திருநாமங்களும் நரசிம்மாவதாரத்தைப் பற்றியவை. அம்ருத்யு: மிருத்யு (சாவின்) விரோதி. தனது பக்தனான பிரகலாதனை நரசிம்மனாய் அவனுக்கு மிருத்யுவாய் அமைந்த இரணியகசிபுவிடமிருந்து காத்தவன். நமன் சூழ் நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்( மூ.தி – 92) ஸர்வத்ருக்: யாவரையும் பார்ப்பவன் (நியமிப்பவன்). பிரகலாதன் முதலான அநுகூலர், இரணியன் முதலான பிரதிகூலர் இவ்விருவருமில்லாத நடுவர், யாவரையும் அவரவர் நிலைப்படி நியமிப்பதற்காகப் பார்ப்பவர். இவையா எரிவட்டக் கண்கள் (நா.தி - 21) ஸிம்ஹ: சிங்கப்பிரான் இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டுமழகன் (நா.தி - 23). பக்தர்களுக்குப் புகலான நரசிம்மப்பெருமான், பிரகலாத வரதன், பாவிகளுக்கு பயம் உண்டு பண்ணுபவன் செற்றவர்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்( தி.பா ), பக்தர்களான ஞானிகளுக்கு ஆனந்தம் தரும் பரமபோகயாமான திருமேனியுடையவன். அழகியான் தானே அரியுருவம் தானே (நா.தி - 22). அசோதை இளஞ்சிங்கம். தண்டிப்பவன். ஸந்தாதா: பக்தர்களைத் தன்னிடம் சேர்த்துக் கொள்பவன். சீற்றத்தோடு அருள் பெற்றவன் பிரகலாதன். இரணியனிடம் சீற்றம். பிரகலாதனிடம் அருள். யானையின் மத்தகத்தைப் பிளக்கும் சிங்கம் அப்போதே குட்டிக்குப் பால் கொடுக்கும் என்பார் பட்டர். எதிரிகளை கொல்லும் போதும் பக்தர்களுக்கு அருள் புரிபவன். ஸந்திமாந்: தன்னிடம் சேர்க்கை நித்யமாயிருக்கப் பண்ணுபவன். அன்பர்கள் தவறு செய்தாலும் அவர்களை விடாதவன். தன்னடியார் திறத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்கு மேல் என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும். ஸ்திர: ஸ்திரமாய் ( நிலையாய்) இருப்பவன். சலனமற்றவன். நிலை பேரான் என்னெஞ்சத்து எம்பெருமான். எப்பொழுதும் அடியார்களின் அபசாரங்களைப் பொருட்படுத்தாமலிருப்பவன். அஜ: பிறப்பிலி – பிறவாதவன் ஸ்தம்பத்திலிருந்து தோன்றியபடியால் (நம் போல்) பிறவாதவன். அஜன் – யாவரையும் வெற்றி கொள்பவன். துர்மர்ஷண: எதிரிகளால் தாங்க முடியாத ஒளி பொருந்தியவன். எதிரிகளால் ஜெயிக்க முடியாதவன். இவையா பிலவாய் இவையா எரிபொங்கி காட்டும் இமையோர் பெருமான் அரிபொங்கிக் காட்டுமழகு. பொன் பெயரோனாகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை சீரார் திருமார்பின் மேல் கட்டி ஆராவெழுந்தான் அரியுருவாய் செம்பொகனாத்தவுணனுடல் கீண்டவன். சாஸ்தா: சாசனம் செய்பவன் ஒரு மூவுலகாளி, விரோதிகளை நன்றாக தண்டிப்பவன். சிம்ம கர்ஜனையால் அசுரர்களை கலக்கியவன். இகலிடத்தார்கள் கூற்றம். விச்ருதாத்மா: வியந்து கேட்கப்படும் சரித்திரமுடையவன். பகவத்பிரபாவம் எல்லாவிடங்களிலும் எல்லாக் காலங்களிலும் யாவரும் ஆச்சிரியத்துடன் கேட்கும் சரித்திர பிரசித்தி உடையவன். என் சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே? ஸுராரிஹா: தேவர்களின் எதிரிகளை முடிப்பவன். சத்ரு இரணியனை வதைத்தவன். விரோதிகளை முடிப்பவன் என்பதில் நோக்கு அமரர்தமமுதே! அசுரர்கள் நஞ்சே! அத்தியாயம் –15 நரசிம்ம துதிகள் நரசிம்ம காயத்திரி (பகைவரைவெல்ல) ஓம் உக்ர ந்ருசிம்ஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி | தன்னோ ந்ருசிம்ஹ ப்ரசோதயாத் || ஓம் நாரசிம்ஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி | தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத் || முக்கிய நரசிம்ம துதிகள் இல்லற வாழ்வு பற்றியும் வாதிடும் நிலையைப் பெறுதற்காக ஆதிசங்கரர், தன் உடலை ஒரு காட்டு மரத்தில் மறைத்து விட்டு, இறந்துவிட்ட அமரசன் என்பவனின் உடலில் புகுந்து, சிலகாலம் கழித்து, அறிய வேண்டியது நிறைவானவுடன், தம் பழைய உடலைத் தேடிச் செல்கிறார். அப்போது, உடல் பாதி எரிந்து கொண்டிருந்தாலும் சங்கரர் அதனுள் புகுந்தவுடன் ஏற்பட்ட தாங்க முடியாத உஷ்ணத்தைத் தணிக்க, சுவர்ண நரசிம்மரைத் துதித்த பின்னரே முன்பிருந்த தேகப் பொலிவை மீளப் பெறுகிறார். பின்னொரு சமயம், காபாலிகர்கள் சங்கரரைக் கொல்ல முற்பட்டபோது, அவரின் சீடரான பத்மபாதரின் மூலம், சங்கரரைக் காப்பாற்றியது நரசிம்ம மூர்த்தியே. பத்மபாதர் நரசிம்ம உபாசகர். கபாலிகர்கள் வஞ்சனையால் ஆதி சங்கரரை கொல்ல முயன்றபோது ஆவேசமாக நரசிம்மர் ஆர்பவித்து வாளினால் அவர்களை வெட்டி ஆதிசங்கரை காப்பாற்றினார். இதனால் தான், கொலை செய்யப்படுவோமோ என பயப்படுபவரும், தீக்காயத்தால் அவதிப்படுபவர்களும், ஆதிசங்கரர் இயற்றிய கராவலம்பத் துதியையும் பஞ்சரத்தினத்தையும் நரசிம்மர் வழிபாட்டில் மிக முக்கியமாகக் கருதுகின்றனர். எல்லா ஆபத்துக்களையும் நீக்கி, சகல நலனும் தருகின்ற ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய , ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் 1. ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத லக்ஷ்மீ நரசிம்ம மம தேஹி கராவலம்பம் 2. ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்த லக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸ லக்ஷ்மீ நரசிம்ம மம தேஹி கராவலம்பம் 3. ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு ஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்ய த்வத்பாத பத்மஸரஸீ சரணாகதஸ்ய லக்ஷ்மீ நரசிம்ம மம தேஹி கராவலம்பம் 4. ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸ ஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ÷ஷாபமஸ்ய ப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய லக்ஷ்மீ நரசிம்ம மம தேஹி கராவலம்பம் 5. ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம் ஸம்ப்ராப்ய துக்க சதஸர்ப்ப ஸமாகுலஸ்ய தீநஸ்ய தேவ க்ருபணாபத மாகதஸ்ய லக்ஷ்மீ நரசிம்ம மம தேஹி கராவலம்பம் 6. ஸம்ஸார பீகர கரீச கராபிகாத நிஷ்பிஷ்ட மர்ம வபுஷஸ் ஸகலார்த்திநாச ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய லக்ஷ்மீ நரசிம்ம மம தேஹி கராவலம்பம் 7. ஸம்ஸார ஸர்ப்ப கநவக்த்ர பயோக்ர தீவ்ர தம்ஷ்ட்ரா கராள விஷதக்த விநஷ்ட மூர்த்தே நாகாரி வாஹந ஸுதாப்தி நிவாஸ சௌரே லக்ஷ்மீ நரசிம்ம மம தேஹி கராவலம்பம் 8. ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மநந்தகர்ம சாகா சதம் கரணபத்ர மநங்க புஷ்பம் ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ லக்ஷ்மீ நரசிம்ம மம தேஹி கராவலம்பம் 9. ஸம்ஸார ஸாகர விசால கரால கால நக்ர க்ரஹ க்ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய வ்யாக்ரஸ்ய ராக ரஸநோர்மி நிபீடிதஸ்ய லக்ஷ்மீ நரசிம்ம மம தேஹி கராவலம்பம் 10. ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமாநம் தீநம் விலோகய விபோ கருணாநிதே மாம் ப்ரஹ்லாத கேத பரிஹார பராவதார லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் 11. ஸம்ஸாரகோர கஹநே சரதோ முராரே மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்திதஸ்ய ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் 12. பத்வா களே யமபடா பஹு தர்ஜயந்த : கர்ஷந்தி யத்ர பவபாச சதைர் யுதம்ச மாம் ஏகாகிநம் பரவசம் சகிதம் தயாளோ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் 13. லக்ஷ்மீபதே கமலநாப ஸுரேச விஷ்ணோ வைகுண்ட க்ருஷ்ண மதுஸூதந புஷ்கராக்ஷ ப்ராஹ்மண்ய கேச வஜநார்தந வாஸு தேவ தேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம் 14. ஏகேந சக்ர மபரேண கரேண சங்கம் அந்யேந ஸிந்து தநயா மவலம்ப்ய திஷ்டந் வாமேதரேண வரதாபய பத்ம சிஹ்ந லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் 15. அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதநஸ்ய சோரை: ப்ரபோ பலிபி ரிந்த்ரிய நாமதேயை: மோஹாந்த கூப குஹரே விநிபாதிதஸ்ய லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் 16. ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ பக்தாநுரக்த பரிபாலந பாரிஜாத லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் 17. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சரணாப்ஜ மதுவ்ரதேந ஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம் புவி சங்கரேண யே தத் படந்தி மநுஜா ஹரிபக்தி யுக்தா: தே யாந்தி தத்பத ஸரோஜ மகண்ட ரூபம் நரசிம்ம புரணத்திலுள்ள தொல்லை நீக்கும் ருணவிமோசன ந்ருசிம்ம ஸ்தோத்திரம் தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே வேதவேதாந்த யஞ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ய இதம் பட்யதே நித்யம் ருணமோசந ஸம்ஞிதம் அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்  நரசிம்ம சகஸ்ர நாமத்தில் ஒரு பகுதி நமோஸ்து நாராயண நாரஸிம்ஹ நமோஸ்து நாராயண வீரஸிம்ஹ நமோஸ்து நாராயண க்ரூரஸிம்ஹ நமோஸ்து நாராயண திவ்யஸிம்ஹ நமோஸ்து நாராயண வ்யாக்ரஸிம்ஹ நமோஸ்து நாராயண புச்சஸிம்ஹ நமோஸ்து நாராயண பூர்ணஸிம்ஹ நமோஸ்து நாராயண ரௌத்ரஸிம்ஹ நமோ நமோ பீஷண பத்ரஸிம்ஹ நமோ நமோ விஹ்வல நேத்ரஸிம்ஹ நமோ நமோ ப்ரும்ஹித பூதஸிம்ஹ நமோ நமோ நிர்மல சித்ரஸிம்ஹ நமோ நமோ நிர்ஜித காலஸிம்ஹ நமோ நம: கல்பித கல்பஸிம்ஹ நமோ நம: காமத காமஸிம்ஹ நமோ நமஸ்தே புவநைக ஸிம்ஹ      ஸ்ரீ நரஸிம்ஹாஷ்டோத்தர சத நாமாவளி   ஓம் நாரஸிம்ஹாய நம: ஓம் மஹாஸிம்ஹாய நம: ஓம் திவ்யஸிம்ஹாய நம: ஓம் மஹாபலாய நம: ஓம் உக்ரஸிம்ஹாய நம: ஓம் மஹாதேவாய நம: ஓம் உபேந்த்ராய நம: ஓம் அக்னிலோசனாய நம: ஓம் ரௌத்ராய நம: ஓம் ஸெளரயே நம: ஓம் மஹாவீராய நம: ஓம் ஸுவிக்ரம பராக்ரமாய நம: ஓம் ஹரிகோலாஹலாய நம: ஓம் சக்ரிணே நம: ஓம் விஜயாய நம: ஓம் ஜயாய நம: ஓம் அவ்யயாய நம: ஓம் தைத்யாந்தகாய நம: ஓம் பரப்ரஹ்மணே நம: ஓம் அகோராய நம: ஓம் கோரவிக்ரமாய நம: ஓம் ஜ்வாலாமுகாய நம: ஓம் ஜ்வாலாமாலிநே நம: ஓம் மஹாஜ்வாலாய நம: ஓம் மஹாப்ரபவே நம: ஓம் நிடிலாக்ஷாய நம: ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம: ஓம் துர்நிரீக்ஷயாய நம: ஓம் ப்ரதாபநாய நம: ஓம் மஹாதம்ஷ்ட்ராயுதாய நம: ஓம் ப்ராஜ்ஞாய நம: ஓம் ஹிரண்யகநிஷூதநாய நம: ஓம் சண்டகோபிதே நம: ஓம் ஸுராரிக்நாய நம: ஓம் ஸதார்திக்நாய நம: ஓம் ஸதாஸிவாய நம: ஓம் குணபத்ராய நம: ஓம் மஹாபத்ராய நம: ஓம் பலபத்ராய நம: ஓம் ஸுபத்ராய நம: ஓம் கராளாய நம: ஓம் விகராளாய நம: ஓம் விகர்த்ரே நம: ஓம் ஸர்வகர்த்ருகாய நம: ஓம் பைரவாடம்பராய நம: ஓம் திவ்யாய நம: ஓம் அகம்யாய நம: ஓம் ஸர்வஸத்ருஜிதே நம: ஓம் அமோகாஸ்த்ராய நம: ஓம் ஸஸ்த்ரதராய நம: ஓம் ஹவ்யகூடாய நம: ஓம் ஸுரேஸ்வராய நம: ஓம் ஸஹஸ்ரபாஹவே நம: ஓம் வஜ்ரநகாய நம: ஓம் ஸர்வஸித்தயே நம: ஓம் ஜநார்தநாய நம: ஓம் அநந்தாய நம: ஓம் பகவதே நம: ஓம் ஸ்தூலாய நம: ஓம் அகம்யாய நம: ஓம் பராவராய நம: ஓம் ஸர்வமந்த்ரைகரூபாய நம: ஓம் ஸர்வயந்த்ரவிதாரணாய நம: ஓம் அவ்யயாய நம: ஓம் பரமாநந்தாய நம: ஓம் காலஜிதே நம: ஓம் ககவாஹநாய நம: ஓம் பக்தாதிவத்ஸலாய நம: ஓம் அவ்யக்தாய நம: ஓம் ஸுவ்யக்தாய நம: ஓம் ஸுலபாய நம: ஓம் ஸுசயே நம: ஓம் லோகைகநாயகாய நம: ஓம் ஸர்வாய நம: ஓம் ஸரணாகதனத்ஸலாய நம: ஓம் தீராய நம: ஓம் தராய நம: ஓம் ஸர்வஜ்ஞாய நம: ஓம் பீமாய நம: ஓம் பீமபராக்ரமாய நம: ஓம் தேவப்ரியாய நம: ஓம் நுதாய நம: ஓம் பூஜ்யாய நம: ஓம் பவஹ்ருதே நம: ஓம் பரமேஸ்வராய நம: ஓம் ஸ்ரீ வத்ஸவக்ஷஸே நம: ஓம் ஸ்ரீ வாஸாய நம: ஓம் விபவே நம: ஓம் ஸங்கர்ஷணாய நம: ஓம் ப்ரபவே நம: ஓம் த்ரிவிக்ரமாய நம: ஓம் த்ரிலோகாத்மநே நம: ஓம் காலாய நம: ஓம் ஸர்வேஸ்வரேஸ்வராய நம: ஓம் விஸ்வம்பராய நம: ஓம் ஸிதிராபாய நம: ஓம் அச்யுதாய நம: ஓம் புருஷோத்தமாய நம: ஓம் அதோக்ஷஜாய நம: ஓம் அக்ஷயாய நம: ஓம் ஸேவ்யாய நம: ஓம் வனமாலிநே நம: ஓம் ப்ரகம்பநாய நம: ஓம் குரவே நம: ஓம் லோக குரவே நம: ஓம் ஸரஷ்ட்ரே நம: ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம: ஓம் பராயணாய நம:        ஸ்ரீந்ருஸிம்ஹரைப்பற்றிய  கீழ்க்கண்ட பன்னிரண்டு நாமாக்களை பக்தியுடன் ஜபித்தால் ஆபத்துக்களிலிருந்து அவர் ரட்சிப்பார்.    1.ப்ரதமஸ்து மஹோஜ்வாலா    2.த்விதீயஸ் தூக்ரகேஸரீ    3.த்ருதீய: க்ருஷ்ண பிங்காக்ஷ:    4.சதுர்த்தஸ்து விதாரண:    5.பஞ்சாஸ்ய: பஞ்சமச்ஶ்சைவ    6.ஷஷ்ட: கஶிபுமர்தந:    7.ஸப்தமோ தைத்யஹந்தாச    8.அஷ்டமோ தீநவல்லப:    9.நவம: ப்ரஹலாதோவரதோ    10.தஶமோ நந்தஹஸ்தக:    11.ஏகாதஶ மஹாரௌத்ரோ    12.த்வாதஶ: கருணாநிதி:    த்வதாஶைதாநி ந்ருஸிம்ஹஸ்ய மஹாத்மந:       FreeTamilEbooks.com  எங்களைப் பற்றி...   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.   ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.   தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.  சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.  எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.  சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.   எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது.   ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.   அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.   வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.   பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.  FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT , இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.  இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.   அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:   - ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் - தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் - சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்   விருப்பமுள்ளவர்கள்  freetamilebooksteam@gmail.com  எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.    இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை.   இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.   இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை.   ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது.  பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.   1. www.vinavu.com  2. www.badriseshadri.in   3. http://maattru.com   4. kaniyam.com   5. blog.ravidreams.net   and more - http://freetamilebooks.com/cc-blogs/     எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.  <துவக்கம்>  உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].  தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.   இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.  எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/    நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.    e-mail : freetamilebooksteam@gmail.com    FB : https://www.facebook.com/FreeTamilEbooks    G +: https://plus.google.com/communities/108817760492177970948          நன்றி   உங்கள் படைப்புகளை வெளியிடலாமே...   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம்.  1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/  தமிழில் காணொளி .    2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –  கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்  http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101   https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses     உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/     3.  மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.       நூலின் பெயர்     நூல் அறிமுக உரை     நூல் ஆசிரியர் அறிமுக உரை     உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்     நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)   இவற்றை freetamilebooksteam@gmail.com  க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.   விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.   நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்   மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –  தமிழில் காணொளி, offline method      – https://youtu.be/0CGGtgoiH-0   press  book  online  method  - https://youtu.be/bXNBwGUDhRs     A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/    எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum      நன்றி !