[] [cover image] நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் ஆர்.பட்டாபிராமன் FreeTamilEbooks.com CC-BY-NC-ND நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் 1. நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் 1. ஆசிரியர் விழைவு 2. தாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும் 3. விவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம் 4. லாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 5. பிபின் சந்திர பால் 6. ராஜாஜி வாழ்வினிலே 7. சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் 8. ஆச்சார்யா கிருபளானி 9. ஆச்சார்யா நரேந்திர தேவா 1. ஆசிரியரின் பிற நூல்கள் நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள்   ஆர்.பட்டாபிராமன்   pattabieight@gmail.comதமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-ND கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/naveena_sindhanaiyin_indhia_panmugangal} ஆசிரியர் விழைவு இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆளுமைகள் வெவ்வேறு இடங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி, மேற்கு கல்வி, ஆண்ட இஸ்லாம்- கிறிஸ்துவம் என்ற பொதுச்சூழலில் வளர்ந்தவர்கள். இந்துமதத்தின் நிறைகுறைகளை அறிந்து அதன் பின்னணியில் வளர்ந்தவர்கள். சிலர் இந்திய பண்பாடு என்பதை மேற்கு பண்பாட்டிற்கு இளைத்த ஒன்றல்ல என நிறுவ முயன்றவர்கள். ஆங்கிலக்கல்வி, மேற்குலக பயணங்களால் தங்கள் சிந்தனையை கூர்தீட்டிக்கொண்டவர்கள். இந்திய விடுதலை என்கிற கனவை சுமந்தவர்கள். அய்ரோப்பிய தத்துவ பலத்திற்கு முன்னால் கையைக்கட்டிக்கொண்டு நிற்காமல் தங்கள் சிந்தனையை உலகறிய செய்யவேண்டும் என தவிப்புகொண்டவர்கள். இந்தியாவின் ‘கடைக்கோடி மனிதனுக்கும் வாழ்க்கை’ என்கிற பேரவா அவர்களை துரத்தி செயல்படவைத்தது. அவர்கள் தவறே செய்யாதவர்களாக இருந்திருக்கமுடியாது. விமர்சனத்திற்கு ஆளாகாமல் செயல்பட்டிருக்கமுடியாது. அவமதிப்புக்களைக்கூட அவர்கள் தாங்கி பல வாய்ப்புக்களில் பிரகாசித்தவர்கள். நவீனகால இந்தியாவை கட்டுவதில் இவர்களது சிந்தனை செயல்களுக்கு பெரும் பங்கிருக்கிறது. இவர்களின் மண்சார்ந்த ஞானம் அவர்களது ஆக்கங்களை படிக்கும்போது நம்மை பிரமிக்க செய்கிறது. தாகூரும், விவேகானந்தரும், ராதாகிருஷ்ணனும் நம்மை மட்டுமல்ல உலகை வியக்க வைத்தவர்கள். சாளரமாக இருந்தவர்கள். லாலாஜி, பிபின், ராஜாஜி, கிருபளானி , நரேந்திரதேவா குறித்தும்முன்கூட்டி நிற்கும் அனுமானங்கள் (prejudice) எதிலும் ஆட்பட்டுக்கொள்ளாமல் அவர்கள் ஆக்கங்களை படித்து அதன்மூலம் அவர்கள் இக்கட்டுரைகளில் பேசப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் பற்றி உணரப்பட்ட உன்னத சிறப்புகள், விமர்சனங்கள் அப்படியே கொடுக்கப்படுகின்றன. இந்தியாவில் இன்று நிலவும் அரசியல் சூழலில் இப்பெரியவர்களின் எவரையும் விலக்கி ஒதுக்கா ஞானம் (wisdom of Inclusiveness) இளம் தலைமுறைக்கு சென்று சேர வேண்டும் என்பதே கட்டுரை ஆசிரியரின் விழைவு. அவர்கள் சிந்தனையின் உன்னதங்கள் நின்று நிலைபெறட்டும். வழக்கொழிந்தவைகள் மங்கி மறையட்டும். 21-1-18 -ஆர். பட்டாபிராமன் தாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும் [] டாக்டர் ராதாகிருஷ்ணன் தாகூரின் தத்துவம் என்கிற புத்தகத்தை எழுதினார். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1918ல் சென்னையில் தாகூர் அறிய அப்புத்தகம் வெளியானது. உபநிடதங்களும், புத்தர் போதனைகளும் அவரது ஆக்கங்களில் விரவிதனித்தன்மையுடன் மேம்பட்டு நிற்பதை தாகூர் ஏற்று இருந்தார். பழம்பெரும் இந்திய ஞானத்தை நவீன உலகிற்குரிய வகையில் தாகூர் வழங்கினார் என்பது டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் ஆய்வாக உள்ளது. இந்தியாவின் பழமைதான் அவரது இலட்சியவாதம் என்றும், அவரது தத்துவ சாரம் முழுமையான இந்திய வகைப்பட்டதே என்றார் ராதாகிருஷ்ணன். மேற்குல அறிவையும், கிறிஸ்துவ சாரத்தையும் அவர் தனது நம்பிக்கைகளில் ஊடும்பாவுமாக இணைத்தார். மாயைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தாமல், ‘மனித கடவுள்பாற்’ நம்பிக்கையை, செயல்களின்பாற் நம்பிக்கையை தனது அற்புத இலக்கிய மேதைமையில் அவர் வெளிக்கொணர்ந்தார் என தாகூரின் ‘சாதனா’ குறித்த தனது பார்வையை ராதாகிருஷ்ணன் தருகிறார். உயர் லட்சிய கனவுகளுக்கும் நடைமுறை அனுசரிப்பு என்கிற பொருண்மைகளுக்கும் உள்ளே நிலவும் உடைவு, இடைவெளியை தாகூர் மிக அழகாக சுட்டிக்காட்டினார். எவ்வாறு இசைவை ஏற்படுத்துவது என்பது பெரும்கேள்வி. காமம் எனும் வியாதியை குணப்படுத்து- நான் எப்போதும் அதை தீர்த்துக்கொள்ளவே விழைகிறேன், அணைத்துவிட அல்ல என்கிற செயிண்ட் அகஸ்டின் வாசகத்தை தாகூருடன் ஒப்பிட்டு சொல்கிறார் ராதாகிருஷ்ணன். Self, not- self சுயம்- சுயமில்லாதது இரண்டையும் இணக்கப்படுத்துவது தத்துவ கேள்வியாக இருக்கிறது. இதை தன் கவிதைகளில் தாகூர் கொணர்கிறார்.. பூமி, நீர், ஒளி, பழம், பூ எல்லாம் அவசியமே என இயற்கையின் அனைத்தையும் அதன் ஒரு வெளிப்பாடான மனிதனுடன் தாகூர் இணக்கப்படுத்தினார். மனிதன் தன் உலகுடனும் இயற்கையுடனும் ஆன உறவை அறியாவிட்டால் அவன் சிறைக்கூடத்தில் அன்னியனாக இருக்கிறான் என்றார். தாகூரிடம் தத்துவம் கவித்துவ வண்ணம் பெறுகிறது. உன் ஜன்னலுக்கு அருகே பிரபஞ்சம், வானம், நட்சத்திர கூட்டங்கள் தட்டு நிறைய விளையாட்டுப்பொருட்கள் போல் உன்னிடம் வந்து நிற்கின்றன என கவிதை தருகிறார். இயற்கையின் சிந்தனையில், அமைதி மற்றும் தனிமையில் மனித மனம் தன்னை இழந்து தெய்வீக உள்ளூக்கம் (divine inspiration) பெருகிறது என்கிற தாகூரின் விளக்கத்தை Fruit Gatheringல் பெறமுடிவதாக ராதாகிருஷ்ணன் சொல்கிறார். நமக்கு வெளித்தெரியும் ‘வழிபாட்டு சடங்கு ஆசாரங்களும் கோயிலும் அல்ல’ தேவை. எங்கு இயற்கையின் அழகும் ஆகச்சிறந்த மனித முயற்சிகளும் இசைந்துபோகிறதோ அப்படிப்பட்ட வழிபாட்டுத்தலம்- ஆஸ்ரமம்தான் நமக்கு தேவை எனத் தெரிவித்தார் தாகூர். அன்றாட சத்தம் நிறைந்த உலகிலிருந்து தள்ளிநின்று இயற்கையின் உன்னதங்களை அனுபவிக்கும் மனம் குறித்து தாகூர் பேசுவதாக ராதாகிருஷ்ணன் அவர் கதைகளின் பாத்திரம் மூலம் எடுத்துக்காட்டுகிறார். பிரபஞ்சம் மனிதனுக்கு அந்நியமானதல்ல. இயற்கை அவனை வதைக்கும் எதிரி அல்ல என்கிற புரிதலை தாகூர் மனிதர்களுக்கு தருகிறார். உண்மையின்மையிலிருந்து உண்மையை அடைய முடியாது. பாபங்களால் நமது இதயம் தூய்மைபெறாது. அனைத்து எதிர்தன்மைகளும் அப்படியே இணக்கம் பெறாமல், வேறுபாடுகள் நீங்கப்பெறாமல் இருக்கும் என்றார் தாகூர். அப்படியொரு வாழ்க்கை வீண் மட்டுமல்ல தவறும்கூட என்றார்.. கீதாஞ்சலியில் All that is harsh and dissonant melts into one sweet harmony என தாகூர் தந்த வரிகளை நாம் கண்டுணரமுடியும். கடவுள் படைப்பின் ஊடாக தன்னை உணர்கிறார் (God finds himself by creating) என பேசும்போது ஹெகல் கருத்துடன் தாகூர் நெருங்குகிறார்… வெளியில் பார்த்திருப்பவன் தனது சுயத்தின் நீட்சிதான். அன்புக்குரியவரிடத்தில் அன்பை தேடுதல் என தாகூரின் வரிகளுக்கு மிகைநிரப்புதல் என்கிற விளக்கத்தை ராதாகிருஷ்ணன் தருகிறார். The Cycle of Spring ல் பழமையும் எப்போதும் புதுமையானதே என்றும், தாயின் கருப்பை விட்டு நீங்குகையில் குழந்தை தன் தாயை காண்கிறது என Fruit Gatheringலும் அவர் எழுதுகிறார்.. நமது உலகிற்கு அனைவரும் யாத்ரிகர்களாக வருகிறோம். நாம் சாலையை பார்க்கிறோம். ஆனால் முடியவில்லை என்றார் தாகூர். அறிவு வேறுபடுத்தி பார்க்கிறது.- ஒன்று எனும் சாரத்தை காணத்தவறுகிறது என்கிறார். அனைத்திற்கும் மேலான ஒன்று என்பது நமது ஆன்ம தரிசனம். அது காரணகாரிய பகுத்தறிவு நிறுவுதலில் இல்லை என தாகூர் எழுதினார் . உள்ளுணர்வையும் அறிவையும் அவர் வேறுபடுத்தி விளக்குகிறார். அன்பின்வழிப்பட்ட ஞானம் முன்னது என்கிறார். உற்றுநோக்குதல்வழி அறிவு என்கிறார். ராதாகிருஷ்ணனும் கடவுளை காரணகாரிய அறிவின் வழி காணமுடியாது என்றே சொல்பவர். கலைஞர்கள், கவிகள் உள்ளுணர்வின்வழி தேடல் நிரம்பியவர்கள். அவர்களுக்கு கிடைக்கும் பார்வைதீர்க்கத்தில் வாழ்பவர்கள். மண்பெயர்க்கும் உழவனிடம், கல்லுடைப்பவனிடம் கடவுளை காண்பதாக எழுதியவர் தாகூர். அவரைப்பொறுத்தவரை உருவமற்ற, இதுதான் அம்சம் என சொல்லமுடியாத ஒன்றைத்தான் பாடுகிறார்-. பிரபஞ்சம் கடவுளின் வடிவம் என்கிற கருத்திலும் அவர் சொல்கிறார். வானம் உனது கலைக்கூடம் என்கிறார்.. காதலன் காதலி பாவத்தில்தான் கவிகள் உள்ளுணர்வுவாதிகள் தங்கள் சிந்தை நகர்தலை செய்வர். எல்லைக்குள் நின்று எல்லையற்றது நோக்கிய பாவம் கீதாஞ்சலியில் செயல்படுவதை காணமுடியும். நான்கு கண்கள் சந்தித்தன. இரண்டு ஆன்மாக்களில் பெரும் மாற்றம் என்கிறது பெர்ஷிய கவிதை . அன்பில்- காதலில் சுயம் நிற்பதையும் அது சுயமற்று போவதையும் சாதானாவில் தாகூர் சொல்கிறார். மாடர்ன் ரிவ்யூ ஆகஸ்ட் 1913 இதழில் இந்திய ஆத்திகம் பற்றி தாகூர் எழுதினார். இந்திய பிரம்ம வித்யாவில் இருவித பார்வைகள் இருக்கின்றன. புலனாகாத கடவுள், புலனுக்குரிய தன் கடவுள் என்கிற (மோனிசம்)ஒருமைவாத மற்றும் இருமையியல் இருக்கிறது. இருமை என்பதை ஏற்காவிட்டால் வழிபாடு என்பது இல்லை. டிவோஷன் –பக்தி என்பதற்கு ஒன்றிப்போதல் என்கிற குவிப்புள்ளி தேவை. ‘சுயம் அறிய சுய மறுப்பு’ என்பார் ராதாகிருஷ்ணன் . தன்னை இழத்தல் மூலம் ஆன்மா உணர்தல். அவனை (கடவுளை) கண்டறியும்போது ஒருவன் மனிதனாக இருப்பதில்லை என்கிறார். அது கடக்கும்நிலையே தவிர அழித்துக்கொள்தல் அல்ல (It is self transcendence, not annihilation) என்கிற அவசர குறிப்பு ஒன்றையும் இதனால் ராதாகிருஷ்ணன் தர நேர்ந்தது. வெளியாள் என எவரும் இல்லையெனில் கதவு ஏன் மூடப்போகிறது என்கிற கவிதைவரிகளை தாகூர் தந்தார். கீதாஞ்சலியில் சாவும் பிறப்பை போலவே வாழ்விற்குரிய ஒன்றே என தாகூர் எழுதினார். நடை என்பது காலை உயரே தூக்குவது மட்டுமல்ல, கீழே தாழ்த்துவதும் கூடத்தான் என முரண்பாட்டின் அழகியலை காட்டுகிறார். உலகம் எனும் சங்கீதம் பாடுபவனிடம் இருந்து கணநேரம் கூட பிரிவதில்லை. அழுக்குலிருந்து பிறக்கும் மலர் தனது மூலத்தின் அருவருப்பை தன்னுள் அழித்து மணம் வீசுகிறது என்றும் மண் தனக்கு நேரும் காயங்களை மறந்து பூவை வெளித்தருகிறது என்றும் கீதாஞசலி வரிகளை பார்க்க முடிகிறது. எல்லையற்ற ஒன்றில்தான் எல்லைக்குட்பட்ட எல்லாம் என்றாலும் எல்லைகுட்பட்ட மனிதசேவையில் அல்லாமல் எல்லையற்ற பரம்பொருள் விசுவாசம் என ஏதுமில்லை.. (infinite is not other than the finite, but is the finite transfigured ) என்றார் தாகூர்.. மாசு, குறைபாடு, பூரணமின்மை என்பதெல்லாம் இல்லாமல் உலகம் இல்லை என்பதை ரவீந்திரர் அதன் உள்ளார்ந்த முரண்பாடு, ஒத்திசைவு மூலம் எடுத்து சொன்னார். (Imperfection is not a negation of perfectness; finitude is not contradictory to infinity; they are but completeness manifested in parts, infinity revealed within bounds) சாதானாவில் எழுதினார். இதையே டாக்டர் ராதாகிருஷ்ணன் குறையுள்ளமை உலக இயல்பே. அது உலகம் போல் நிஜமானதே என விளக்குவார். வலி உணர்தல் இல்லாமல் அன்பில்லை என்கிற கருத்து தாகூரிடம் இருந்தது. பெரும் துயரங்களும், கீழ்மைப்படுத்தப்படுதல் என்கிற அவமானங்களுக்கு உள்ளாவதும் ஒருவனை முழுமைப்படுத்துகின்றன என்றார் தாகூர். நமது ஆசைகளும் ஆவல்களும் நம்மை சுயம் குறித்த புரிதலுக்கு தடையாகி விடுகின்றன . நமது பாவ காரியங்கள் நம்மை சுயநலக்காரர்கள் ஆக்கி அனவரும் ஒன்று என்ற உணர்தலை பெறமுடியாமல் தடுக்கின்றன என்றார். .. உண்மையான வேலை என்பது எப்போதுமான வேலையல்ல. அவன் மகிழ்ச்சிக்காக வேலையாக இருக்கவேண்டும். எளிமையான, இயல்பானதாக இருக்கவேண்டும் என்பார் தாகூர். II தாகூரிடம் மீபொருண்மைவாதமும், உள்ளுணர்வு புதிர்வாதங்களும் நிறைந்து காணப்படுவதால் அவரை சிறந்த கவியாக ஏற்பதற்கில்லை என்கிற கருத்தும் நிலவாமல் இல்லை. கவி என்பவன் அவநம்பிகையாளனாக இருக்கமுடியாது. அவன் இயற்கையும் படைப்பையும் கொண்டாடுபவன். உலகின் அவலங்களை நேர்த்தியின்மையை காணதவன் அல்ல அவன். ஆனால் அனைத்தையும் மீறி வாழும் உலகம் நல்லதொன்றே என அவன் பறை சாற்றுவான் . கவிதை என்பது நகலெடுப்பதல்ல, படைப்பு. அது .இயற்கையின் உள்ளார்ந்த அழகின் மீதான உள் உந்துதல். இயற்கை தானாக அழகானதல்ல… கலையில் மனிதன் தன்னைதான் வெளிப்படுத்திக்கொள்கிறான். அவனது பொருட்களை அல்ல என்றார் தாகூர். உரைநடை விவரணைக்குரியது. கவிதை படைப்புக்குணம் கொண்டது. அது தன்னளவில் முடிவானது. ஆனால் உரைநடை வழியாகிறது. தாகூர் கவிதையின் உருவத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற விமர்சனத்திற்கு ஆளானவர். கலையின் தேவை ஆன்ம தரிசனம்தான், வடிவத்தேடல் அல்ல என்பார் ராதாகிருஷ்ணன். தன்னைக்கடந்த வாழ்க்கையில்தான் மனிதன் உண்மையில் வாழ்கிறான். அறிந்திராத ஆண்டைக்காக உழைக்கிறான். உலகில் பிறந்திராதவர்களுக்காக சேமித்து வைக்கிறான். ஒருவனுக்கு மட்டுமே வழங்குவதற்காக அளிக்கப்பட்டதில்லை, எனது இதயம். பலருக்கும் வாரி வழங்கிடத்தான் என்றார் தாகூர். நிலமாதா- உன்னிடம் வேற்றாள் போல் வந்தேன். விருந்தாளியாக வாழ்ந்தேன். நண்பனாக வெளியேறுகிறேன். விதை ஒன்றின் நெஞ்சத்தில் காத்திருக்கும் நம்பிக்கை ஓர் அற்புதத்தை வாக்களிக்கிறது. ஆனால் உடனே அந்த வாக்கை அது மெய்ப்பிக்க முடியாது என நம்பிக்கையின் உயர்வை பொறுமையின் தேவையை கவித்துமாக தந்தார் தாகூர். கடலில் கலக்கும் ஆறு போல , ஓய்வின் ஆழத்தில் உழைப்பு தனது நிறைவை காண்கிறது. தேடுதல்களைப்போன்று, மரங்கள் விண்ணக மண்ணகத்தை கண்ணோட்டமிட குதிகால்களில் நிற்கின்றன. உலகின் சுமையை எளிதாகமட்டுமல்ல மகிழ்ச்சியுடன் தாங்கிட வேண்டுவதெல்லாம் அன்பே.. அன்பு மொழி எங்கும் பாடலாகட்டும் என்றார். வாழ்க்கை நமக்கு அளிக்கப்படுகிறது. ஆம் மற்றவருக்கு வழங்கித்தான் நாம் அதை அடைகின்றோம். உழைக்கும்போது இறைவன் மதிக்கின்றான். நான் பாடும்போது அவன் என்னை விரும்புகின்றான். அன்பு என்பது ஒன்று சேர்ப்பதுதான். உண்மைக்கு அப்பாற்பட்டு எவன் ஒருவனுடைய புகழ் பளிச்சிடாமலிருக்கிறதோ அவனே பெருமைக்குரியவன் என படோபட பெருமித பொய்மைகளை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார் . அடக்கத்தால் உயர்ந்தவர் என்கிற நிலையை நாம் கிட்டத்தட்ட எட்டிவிடுவதாக அவர் எழுதினார். தோல்வியை தாங்க ‘தவறால்’ முடியாது- ஆனால் ‘நேர்மையால்’ முடியும். இடையூறு எதிர்ப்படும் பணிகளுக்கு என்னை அனுப்பி திடப்படுத்து என அவர் வேண்டுவார். சின்னஞ்சிறு மலர்களை நேசிக்கும் இறைவன், பேரரசுகளின் மீது வெறுப்படைகிறான் என தனது எண்ணத்தை இறைமீது ஏற்றி தாகூர் பாடினார். துன்பமளிப்பது எனக்கு நீ தரும் மரியாதை என்றார். ஆசைப்படாதே என்கிற குரல் எங்கும் கேட்டபோது நான் ஆசைப்படுவதையெல்லாம் பெற இந்த பேரண்டம் உதவிக்கொண்டிருக்கிறது என எழுதி நிறைவுகொள் மனிதா என்றார். என்னால் கடவுளை நேசிக்க முடிகிறது. ஏனெனில் மறுப்பிற்கான உரிமையை அவன் தருகிறான். மாறுபடுதல் வாழ்வின் இயல்பு என்பதை அவர் உணர்த்துகிறார். அதிகாரப் பேரரசில் அடக்கி நொறுக்கியே நாம் முன்னேறுகிறோம். ஆனால் அன்பு பேரரசில் ஆசையை ஒதுக்கியே நாம் முன்னேறுகிறோம் என கவிதை தந்தார். தனது வரையறைகளை உண்மை விரும்புகிறது. அங்கே அது அழகினை சந்திக்கும் என்றார் தாகூர். புகழ் என்னை நாணச்செய்கிறது. ஏனெனில் கமுக்கமாக அதற்கு நான் ஏங்குகிறேன். மற்றவர்களின் நுகத்தடிக்கு எனது நெஞ்சம் வளைந்து கொடுக்காமலிருக்கட்டும். நமக்கு நாமே எல்லாமாயிருக்கும் நிலையில் உலகம் அவ்வளவு சிறப்பாகபடுவதில்லை. அச்சமற்று இரு என்பதை அவர் தொடர்ந்து சொல்கிறார். இடர்களிலிருந்து என்னைக் காக்குமாறு உன்னை வேண்டிக்கொள்ளாமலிருப்பேனாக என்பதே அவரது பாடல். அனைத்தையும் அச்சமின்றி எதிர்கொள்ளும் ஆற்றலைத்தா என்று பாடினார். இறந்தவர்கள் தங்கள் புகழில் வாழட்டும். இருப்பவர்கள் அன்பின் அழியாமையில் வாழட்டும். பல பொருள்களை அடையப் பல வழிகளைக் கையாளாமல் இருப்பேனாக என எச்சரித்துக் கொள்கிறார். நெஞ்சே அமைதியாக இரு- தூசி கிளப்பாதே என நறுக்குத்தெறித்தாற்போல மனப்பயிற்சியின் அவசியத்தை உணர்த்தினார். தவறுகள் என்கிற வாய்க்கால் வழியாக உண்மை என்கிற நீரோடை பாய்ந்து செல்கிறது என உண்மைக்கான பயிற்சியில் தவறிழைத்து மீள்வது இயல்பான ஒன்றே என கற்றுத்தருகிறார். கட்டுப்பாடுதான் நல்லவர்களின் நுழைவாயில் என்றார். இகழப்பட்ட மாந்தன் வெற்றிக்காக மனித வரலாறு பொறுமையாகக் காத்திருக்கிறது.. மதம் உயிரற்று இறுகி முடங்கிப்போய், சுமைபோல அழுத்துகிறது. அன்பு ஒன்றே மாந்தர் அடையும் உயர்பேறு என அன்பு குறித்து ஆயிரக்கணக்கான பக்கம் எழுதியவர் தாகூர். எந்தப்படகு எல்லா உலகங்களுக்கும் புகலிடமோ, அதைத்துண்டு துண்டாக்கிவிட்டுக் கடலைக் கடக்கமுடியுமா என கேள்வி எழுப்பினார். இடர்படும் எளிய மக்களுடந்தான் வாழ்க்கை பின்னிப்பிணைந்துள்ளது என்ற அறிதலை அவர் கொண்டாடினார். உன் வாழ்வைக்கொண்டு அன்பு விளக்கை ஏற்றி செல் என்ற கீதம் இசைத்தார். முழுமை பெறும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. வெளியேற வேண்டியதற்கு கதவை திறந்து வை என்றவர் தாகூர். சமயம் நமது இயல்பை அழிப்பதற்காகவல்ல, வளர்ப்பதற்கான கருவி. நேயத்தில் வாழ்வதே வாழ்க்கை காலத்தில் அல்ல என்றார். நுண்ணறிவாளனாக மனிதன் ஆகும்போது மறைக்கப்பட்டிருந்ததெல்லாம் பலப்பட்டுவிடும் என்றார்.. எல்லையற்ற பெரும்பரப்பில்தான் விடுதலை பற்றிய முழு அறிவு கிட்டும் என்றார். . ஒரே வரலாறு தான் உள்ளது. மாந்தனுடைய வரலாறே அது. தேசிய வரலாறுகள் யாவும் பெரிய நூலின் பகுதிகளே. தாகூர் வாழ்வின் ஒற்றுமைத்தன்மையில் நம்பிக்கை கொண்டமை அவரது பெரும்பலம். கலைக்கும் வாழ்விற்கும் இடையே பிளவேதும் காணாதவராக அவர் இருந்தார். அழகையும் வாழ்வின் வெளிப்பாடாகவே அவர் கண்டுணர்ந்தார். அவரின் பன்முகத்தனமை எவருக்கும் வியப்பை தரும். கவிஞர், பாடலாசிரியர், நவீன கால பிரச்சனைகள் குறித்த கட்டுரையாளர், சொற்பொழிவாளர், ஓவியர்- அவர் தனது 70ஆம் வயதில் ஓவிய ஆர்வம் கொண்டு நுழைந்தார். பத்தே ஆண்டுகளில் 3000 ஓவியங்களை அவர் வரைந்துவிட்டார் என அறியும்போது அவரது கலைத்தாகம், ஓயா உழைப்பு பிரமிக்கவைக்கிறது. கல்வி சிந்தனைகளில் அவர் மிக முக்கிய மனிதராக கருதப்படுகிறார். ஆளுமையை வளர்க்கும் கல்வி குறித்து எழுதினார். III தாகூர் முழுநேர அரசியல் பணியாளர் அல்லர். ஆனால் அரசியல் பேசாதவர் அல்லர். 1905 வங்கப்பிரிவினை, 1919 ஜாலியன்வாலாபாக் பற்றி அழுத்தமாக கருத்துக்களை வெளியிட்டவர். சாதி, மத, இன, மொழி கடந்து அனைத்து இந்தியர்களின் சமமதிப்பு குறித்து பேசியவர். சமயம் பற்றி குறுகிய பார்வையை மறுத்து பரந்த நோக்கத்தை அவர் வெளிப்படுத்தினார். பிரிட்டிஷார் இருந்த நேரத்தில் நம் உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து நிறைய பேசினார் தாகூர். நம்முடைய பண்பாட்டின் மூலம் அவர்களுடைய மனிதப் பண்பாட்டைத் தட்டி எழுப்பவேண்டும் எனக் கருதினார். குவிந்த கையோடும் குனிந்த தலையோடும் செல்வது அவர்களிடமுள்ள தாழ்மையான அற்பத்தனத்தை தூண்டிவிடும் என்றார். கோபத்தை காட்டும்போது அவர்களின் தீயப் பண்புகளை வெளிக்கொணர நேரிடும். தியாகம், பணி இரண்டும் நம் சக்தியின் அடிப்படைகள். நம் சக்தி முழுமையும் செலவழித்து இந்தியாவை நமதாக்கி கொள்ளும்போது ஆங்கிலேயர் நாம் சொல்கின்றபடி நடப்பர் என்றார். கிழக்கு மேற்கின் ஒன்றல் சந்திப்பின் சாத்தியம் குறித்து அவர் பேசினார். நாட்டுடன் நாடு, இனத்துடன் இனமும், அறிவுடன் அறிவும், முயற்சியுடன் முயற்சி ஒன்று கலக்க முடியும். தன்னைதானே அழித்துக்கொண்டு அதன் மூலம் விரிவடைகின்ற கொள்கையை எந்த மனிதனுடைய மனமும் பெரியதாக ஏற்றுக்கொள்வதில்லை. எவ்வளவு சிறிய பொருளும் தனக்குரிய தனித் தன்மையை உணர்ந்தவுடன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முயலுகின்றது. இதுதான் வாழ்க்கைச் சட்டம். உண்மையை கூறுமிடத்தில், விரிந்த தன்மையில் சாவதைவிடச் சுருங்கிய தன்மையில் வாழவே உயிர்கள் விரும்புகின்றன என ஹிந்து பலகலைக் கழகம் என்கிற கட்டுரையில் எழுதினார் தாகூர். தனிப்பட்டவர் ஒவ்வொருவரும் உயர்நிலையை அடையும்போதுதான் மக்களுக்குள் ஒற்றுமை என்பது உண்மையில் நடைபெறுகிறது. வறுமையில், அடிமைத்தனத்தில், கட்டுப்படுத்தலில் ஒற்றுமை என்பதெல்லாம் அந்தந்த நேரத்திற்கான ஒற்றுமையாகவே அமையும் என்றார் அவர். இந்து- முஸ்லீம் ஒற்றுமை முழுமையாக ஏற்படாத காரணத்தை அவர் உணர்ந்த அளவிற்கு விளக்கினார். அவர்களை உண்மையான கூட்டாளிகளாக கருதாமல் தேவைக்காக ஏற்றுக்கொள்ளும் கருவியாக கருதுவதை சரியான அணுகுமுறையல்ல என விமர்சித்தவர் தாகூர். தேவையால் ஏற்படும் கூட்டில் வெற்றிக்கு பின்னர் கிடைத்தவற்றை பகிர்வதில் ஏமாற்ற முற்படுகிறோம். சந்தேகப்படுகிறோம். இந்துவாக இருப்பதன் பெருமையை இந்து உணரவேண்டும் என்றால் முஸ்லீமாக இருப்பதன் பெருமையை முஸ்லீம் உணர்தல் என்பதும் வருகிறது. பிரச்சனை வேறுபாடுகளை அழித்து அதன் மூலம் ஒற்றுமை என்பதல்ல. வேற்றுமைகளை அறிந்து வைத்துக்கொண்டு எவ்வாறு ஒற்றுமை பெறுவது என்பதுதான். முஸ்லீம்கள் கல்வி கெளரவம் பெருமை ஆகியவற்றில் இந்துக்களோடு சமமாக ஆவதனால் இந்துக்களுக்கே நன்மை ஏற்படும் என்றார் அவர். உண்மையான விட்டுக்கொடுப்புகளால்தான் இதை சாதிக்கமுடியும் என்றார் தாகூர். தனிப்பட்ட ஒருவன் எல்லை மீறி வளர்ந்து, பேய் வடிவம் எடுப்பதற்குரிய இடம் தரும் முறையில், எந்த மூலையிலும் இடம் காலியாக இல்லை என்கிற அம்சத்தை அவர் புரிந்து கொள்ள வற்புறுத்தினார். ஜெர்மனியில் படிக்கின்ற மாணவன் இந்து, இஸ்லாமிய சமயங்கள் பற்றிப் படிக்கும் வாய்ப்பைக்கூட நாம் பெறவில்லை. நாம் கிளிப்பிள்ளை போல் மேனாட்டு மொழியை பேசிக்கொண்டிருக்கிறோம். நமது மொழியை பேச வேண்டும் என உலகம் எதிர்பார்க்கிறது. பண்டைய சடங்குகளை தேடி அதை தேசியப் பண்பாடு என்று கூறிக் கற்பனையான நற்பண்புகளை ஏற்றுகிறோம். காலமென்னும் குப்பை மேட்டைக் கிண்டித் தங்களுடைய இனம் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கிறோம். சதுப்பு நிலத்தில் தோன்றுகின்ற கொள்ளிவாய்ப் பிசாசை, சூரியனை, சந்திரனை விட மிகப் பழமையானதென்று போற்றும் மக்களாக இருக்கிறோம் என விமர்சித்தார். நாம் தனிப்பட்ட இனம் என்ற எண்ணம் தன்னைதானே ஏமாற்றிக்கொள்தலே எனவும் அவர் எடுத்துரைத்தார். இந்து பஞ்சாங்கங்களில் மாதக்கடைசியில் செய்ய வேண்டிய சடங்குகள்தான் இந்து நாகரீகம் என நினைத்தல் கஷ்டம்தான் என்றார். மகாபாரதம் உட்பட பண்டைய ஏடுகளை பார்த்தால் சமுக மாறுபாடுகள், பழக்கங்கள் இரும்பில் செய்யப்பட்டவை அல்ல என புரியும். எப்போதும் விழித்திருக்கின்ற மனத்தால் தூண்டப் பெற்ற புதிய வழிகளை கண்டறிதல், பிழைகள் நேர்ந்தாலும் உண்மையை நோக்கி செல்தல், முயற்சிகள் மூலம் காரிய வெற்றி என அச்சமுகம் சென்றது என சொல்கிறார் தாகூர். கல்வி பற்றி அவர் 1892 ல் எழுதிய கட்டுரை ஒன்றில் உருப்போடும் பாடம் தவிர வேறு புத்தக அனுமதியில்லாமல் மாணவன் வளர்ச்சியை நாம் புறக்கணிக்கிறோம் என்றார். தாய்மொழி கல்வியின் அவசியத்தையும் ஆங்கில வழி அவஸ்தையும் அவர் விளக்கினார். சிந்திக்காமல் கற்பிக்கப்படும் முறையை அவர் விமர்சித்தார். வாழ்க்கையின் 20 ஆண்டுகள் ஆங்கிலத்திலிருந்து கருத்துக்களை பொறுக்கிக்கொண்டு, உள்ளத்தில் ஒட்டாமலே கற்று வருகிறோம். கல்வியும் வாழ்க்கையும் ஒன்றாக இராமல் வாழ்வுடன் பொருந்திக்கொள்ளாமல் போய்விடுகின்றன . நாம் பெறும் கல்வி நம் வேருக்கு அப்பால் வெகுதூரத்தில் பெய்யும் மழை போன்று உள்ளது என்கிற கவலையை வெளிப்படுத்தினார். கல்வியையும் வாழ்க்கையையும் எப்படி ஒன்றுபடுத்துவது என்பதுதான் தலையாய பிரச்சனை என தெரிவித்தார். சமுதாயமும் அரசாங்கமும் என்ற கட்டுரை ஒன்றை தாகூர் எழுதினார். ஆங்கிலேயரின் துரைத்தனந்தான் அரசாங்கம். நமது பழைய அரசர் ஆட்சியில் சமுக நலப்பணிகள் பல அரசாங்கத்திடம் இல்லை. குடும்பம், கிராமம் பார்த்துக்கொண்டது. அரசன் அவ்வூரின் செல்வந்தர் செய்த அளவிற்கு மேல் பொதுவாக ஏதும் செய்யவில்லை. இந்தியாவில் அரசன் சுதந்திரமாக இருந்தான். சமுதாயம் கடமைகள் நிரம்பியதாக இருந்தது. இங்கிலாந்தில் இது வேறுபட்டிருந்தது. இதனால் தர்மம், தன்னடக்கம் என்பது இந்தியாவில் இருந்தன. அங்கு அரசியல் முக்கியமானதாக இருந்தது. இங்கு சமாஜம் இருந்தது. இன்று பிரிட்டிஷ் அரசாங்கம் நமது சமுதாய அமைப்பில் எந்த இடத்தையும் பெறமுடியாது. சமுதாயத்தின் கடமைகளை ஒவ்வொன்றாக நாம் அரசாங்கத்திடம் ஒப்படைக்க தயாராகிவிட்டோம். எல்லாம் ஆங்கிலேயர்களின் வளையாத சட்டப்பிடிக்குள் என்றாகி வருகிறது. பிரிட்டிஷாரிடம் நமது ஆன்மாவை ஒப்படைத்து அடிமை சீட்டும் எழுதிவிட்டோம். ஆங்கில முறைப்படி கூட்டம் என்பதற்கு பதில் இந்தியவகைப்பட்ட விழாக்கள் மக்களை கவர்ந்திழுக்கும் என்றார் தாகூர். இந்து முஸ்லீம் இருவரும் விழாக்களில் கூடி புத்தாக்கம் பெறவேண்டும். பொருளற்ற அரசியல் வாதம் தவிர்த்து தேவைகள் பற்றி பேசுதல் வேண்டும். மனித உறவு மேம்பாடுதான் நமது நோக்கம். கிராமங்களில் சாதி சூழலையும் கடந்து கூட உறவுமுறை ஏற்பட்டது. தேசிய காங்கிரஸ் கூட்டங்களில் கூட அதன் உபசரிப்பு நேரம்தான் உறவுகளை காட்டுகிறது. மனித இதயம் வெளிப்படுகிறது. விரும்பித்தரக்கூடிய சகாயநிதிதான் கோயில்களை காத்துவருகிறது. அதேபோல் சமுதாயத்தை காக்கவேண்டும். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஆகிய நாம் பல நூற்றாண்டுகளாக இதே தாய்நாட்டால் ஊட்டி வளர்க்கப்பட்டும் வேறுபாடு இருந்துவருகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் தூண்ட முயற்சிக்கிறது என சொல்லிவிட்டு நாம் ஒருவரை ஒருவர் தூண்டிவிடாமல் இருப்போம். இல்லையேல் அந்த அரசாங்கம் தீயணைக்க படையனுப்பும். சிலநேரங்களில் புதிய கட்சி தோன்றிவிடுகிறது. அதுவும் அவசரப்படுகிறது என விளக்கும் தாகூர் இரண்டும் வேறுபட்டாலும் இழுத்துப்பிடித்து தோள் கொடுக்க பழக்கவேண்டும் என்றார். இந்தியாவில் எப்போதுமே ஒர் ஒற்றுமைப்படுத்தும் சக்தி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் அது உயிர்ப்புடன் இருக்கிறது என்றார் தாகூர். ஒற்றுமை கணத்தில் அனைத்தும் ஒருமுகப்படுகின்றன. இதுதான் புத்தர் கால நிகழ்ச்சி என்றார். அதேபோல் முஸ்லீம்கள் ஆட்சிக்காலத்தில் பிரிக்கும் கோட்டை மறைய செய்திட கபீர், நானக், பின் வைணைவர் என பொது இயல்பை காண முயற்சி நடைபெற்றது. இன்று இந்து, புத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் எனும் நான்கு பெரும் மதங்களின் சோதனைகூடமாக இந்தியா ஆகியுள்ளது. பேரச்சம் நம்மை சிறுக செய்துவிட்டது. குறுகிப்போயுள்ளோம். ஒவ்வொரு தேசமும் முக்கிய வினாக்களுக்கு பதில் தரவேண்டும். மனிதனுக்கு கொடுப்பதற்கு என்று என்ன வைத்திருக்கிறாய்- மகிழ்ச்சி பெருக என்ன புதிய வழிகளை கண்டுபிடித்தாய் என்பன அக்கேள்விகள். அனைத்துலக மனிதனின் பக்கவாத உறுப்பாக பாரமாக தேசம் ஆகிவிடக்கூடாது. பிரிட்டிஷாரை காப்பியடித்து மாறுவேடத்தை புனைந்துகொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதேயாகும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் தாகூர். சமயம் பற்றி நாம் கொண்டுள்ள பிடிவாதம் அடிமைத்தனத்தை தவிர வேறு ஒன்றுக்கும் தகுதி இல்லாமல் செய்துவிட்டது. ஒரு மனிதனிடத்தில், காட்டப்படும் அவமரியாதை, காட்டுகின்றவனுக்கு எவ்வித நன்மையும் புரியாமல், காட்டப்படுபவனுக்கும் எவ்வித நன்மையையும் புரிவதில்லை. மற்ற மனிதனை எவ்வளவு கொடுமையாக நடத்தவேண்டும் இல்லையெனில் சமய பிரஷ்டம் என சமய சடங்குகள் பேசுகின்றன. பிராமணன் தகுதி இல்லாவிட்டாலும் மரியாதைக்கு உரியவன் என போலி சடங்குகள் பேசுகின்றன. உண்மையில் விடுதலை நோக்கி உண்மை சமயம் அழைத்துச் சென்றால் போலி சமயம் அடிமைத்தனம் நோக்கி அழைத்து செல்கிறது என கடும் தாக்குத்லை தாகூர் தந்தார். துரோணருக்கு ஏகலைவனின் கட்டைவிரல் தியாகத்தை விமர்சன பார்வையுடன் அணுகினார் தாகூர். பயனற்ற முட்டாள்தன பக்தியை ஆண்டவன் ஏற்பதில்லை என்றார். ஆண்டவன் அளித்த அரிய சக்தியை மனிதன் அவமானப்படுத்துவது போன்ற செயல்தான் இவை என்றார். நம்மிடமுள்ள குருமார்கள், பூசாரிகள், தாயத்துகள், மந்திரங்கள் பழமொழிகள் அனைத்தும் நம்மை பக்தியுடன் கீழ்படிதலையே எதிர்பார்க்கின்றன. தாகூரின் கல்வி சிந்தனை இன்றைக்கும் பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. விடுதிப் பள்ளிக்கூடங்கள் திருப்தியளிக்காத இனம் சேர்ந்தவை. அவை போர்வீரர் தங்கும் பாடி வீடுகளையும், பைத்தியக்காரர் மருத்துவமனைகளையும், சிறைச்சாலைகளையும் ஒத்துள்ளன. வலுவான சுவர்களுக்கு இடையே கதவுகளை வைத்து அதற்கு காவல்காரனை போட்டுவைத்து குழந்தைகளை அனுப்பி என்ன வழியில் கல்வி போதிக்கிறோம்? கேடி போலீஸ் ஸ்டேஷன் தினம் சென்று ஆஜர் சொல்வது போல் என கடுமையாக நமது கல்வி முறையை அவர் விமர்சித்தார். பிரம்மச்சரியம் என்பதை அவர் ஏற்கிறார். இயற்கை சூழலில் பண்பாடு சார்ந்த கல்வி என்கிறார். அமைதியான சூழல் நிறைந்த மரம், வயல் வெளிகளில் பள்ளிக்கூடம் என்றார். பள்ளிக்கென்று விவசாயம் நடைபெற துண்டு நிலம் என்றார். தோட்ட பராமரிப்பும் பாடமாகட்டும் . இசையும், கதைகளும் பள்ளி சூழலில் தழைக்கட்டும் என்றார். மாணவனுக்கு தண்டனை என்றில்லாது பிராயசித்தம் என்கிற முறை வரட்டும் . இயற்கையான தன்மையும் எளிமையும் நாகரிகத்தின் சின்னங்கள். ஆடம்பர மிகுதி காட்டுமிராண்டித்தனம் என்றார் தாகூர். ஆசிரியரை வியாபாரியாக்கிவிட்டோம். அவர் கல்வி சரக்கை விற்றுவிட்டு சம்பளம் பெறுவதுடன் அவர் வேலை முடிந்துவிடுகிறது. அன்பு, விருப்பம், மரியாதை, கடமையுணர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. நாட்டில் ஐரோப்பியர் போல வாழத் தலைப்படுகிறோம். சொந்த வங்கமொழியைவிடுத்து சந்தைக்கடை ஹிந்திமொழி பேசவும் கற்றுத்தருகிறோம். என தாய்மொழி புறக்கணிப்பு மனப்பாங்கை சாடுகிறார். இணக்கம்ஒதுக்கம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து அவற்றில் ஓர் ஒன்றல் தன்மையைக் கண்டால் ஒழிய அவை நம்மை முடிவான விடுதலைக்கு கொண்டு செலுத்துதல் இல்லை. தளை, விடுதலை என்ற இரண்டின் இடையே காணப்படும் ஒன்றல் தன்மைதான் ஆக்கத்தின் தாண்டவம்- (dance of creation). சமுதாயம் என்பது மனிதன் விரும்புகின்ற முடிவான பயன் அன்று . பல்வேறு உறுப்பினர்களும் சேர்ந்து செய்கின்ற பெருமுயற்சிதான் விடுதலைக்கு வழியாகும். வாழ்க்கையைப்பற்றி தேவைப்படுகின்ற புரிதலை அவர் சொல்கிறார். ஒருவர் பல்வேறு தலைமுறைகளின் பிரதிநிதியாக வாழ்க்கைக்கு வருகிறோம். அவர்கள் பெருக்கி வைத்த ஞான அனுபவங்களுக்கு ஒருவரால் முடிந்த அளவு அவர் உதவுகிறார். அதே நேரத்தில் தனிப்பட்ட மனிதன் என்ற வகையில் எல்லைக்குட்பட்ட காலத்தில் குறிக்கோளை முழுத்தன்மையை அடைய முயற்சிக்கிறோம். எல்லாப் பொருள்களின் உள்ளேயும் முடிவிலாத ஒரு வளர்ச்சி அமைந்து கிடப்பதால், அங்கு நிறைவும் இருக்க வேண்டும். அதுவே இயக்கத்தின் பொருளாகும். எனவேதான் பணி/ செயல்/ வேலை என்பதை வாழ்க்கையின் இடையே தோன்றுவதாகவும், விடுதலை வாழ்க்கையின் முடிவில் கிடைப்பதாகவும் நாம் அமைத்துக்கொண்டுள்ளோம். தனிப்பட்ட உடம்பிலிருந்து சமுதாயத்திற்கு, சமுதாயத்திலிருந்து உலகத்திற்கு உலகத்திலிருந்து பூரணத்துவத்திற்கு என்ற முறையில்தான் சாதாரண ஆன்ம யாத்திரை அமைந்து கிடக்கிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஓர் இயல்பான முடிவு உண்டு, அந்த முடிவு சிறப்பாக இருப்பதில்தான் நம்முடைய குறிக்கோள் பூர்த்தியாகின்றது; அந்தப் பூர்த்தியான பூரணத்தைத் தவிர மற்றவை அனைத்தும் வெறும் ஆடம்பரம் என்றார் தாகூர். காங்கிரஸ் தேசிய மாநாட்டில் அவர் தலைமை உரை ஆற்ற வாய்ப்பு கிடைத்தது. தகுதியற்ற ஒருவரை மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு தள்ளுதல் அவரை அவமரியாதை செய்வதற்கு மற்றொரு வழியாகும். நமது பணியில் முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். விழித்தெழும் வாழ்க்கை தன்னை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்திக்கொள்ளும். விருப்பமில்லாதவைகளை எதிரானவற்றை அழிக்க முயலக்கூடாது. சாதி அடிப்படையில் ஆங்காங்கு கழகங்களை அமைத்தால் காங்கிரஸ் அதன் உண்மைத்தன்மையை இழக்கும். தீவிரவாதக் கொள்கையைத் துவங்கிவிடுவது எளிது. ஆனால் அதை தடை செய்தல் மிகக்கடினம். அரசாங்கம் என்பது தெய்வீகத்தன்மை வாய்ந்ததன்று. அதிகாரத்திலிருப்பவரும் சாதாரண மக்களே. அதிகார வெறி என்பதுதான் பிரச்சனை. பொறுப்பற்றத்தனம் பிரச்சனை. ஒரு இயக்கத்தை தூண்டுவதற்குரிய காரணம் இருந்து வருகின்ற வரையில் அதுவும் இருந்து வரும். அடக்கினால் மற்ற வகையில் வெளிப்படும். பிறர் அறியாத உண்மையை முதல் முதலில் எடுத்துச் சொல்லும்போது, மிக மென்மையாக சொல்லமுடியாது. புயல் காற்றைப்போலத்தான் வெளிப்படும். பொருத்தமில்லாதவை மோதும்போது உண்மை பளீர் எனத்தோன்றும் என சொற்பெருக்காற்றினார். எந்திரங்களை பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதற்காக மனிதனுடைய மதிப்பைக் குறைத்து விடுகின்ற எந்த முயற்சியையும் சமுதாயம் பொறுக்கமுடியாது. கிராமத்தார்கள் பலரும் ஒன்று சேர்ந்து தங்கள் கிராம சூழ்நிலையிலேயே அவர்களால் பயன்படுத்தக்கூடிய எந்திரங்களை நிறுவினால் பலன் கிடைக்கும் என பெருந்தொழில், கிராம மக்கள் நகரப்புறம் பெயர்தல் விளைவுகளை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார் IV ஹிரன் முகர்ஜி தாகூர் பற்றி 1961ல் புத்தகம் எழுதினார். அதன் மறுபதிப்பு 125 ஆண்டுகளை குறிக்கும் வண்ணம் 1986ல் வந்தது. கிருஷ்ண கிருபாளனி தனது தாகூர் புத்தகத்தில் மார்க்சியம் தாகூருக்கு அந்நியமானது என சொல்வதை ஹிரன் குறையாக சுட்டிக்காட்டுகிறார். தேவையில்லாமல் ஸ்டாலின் காலத்து பிம்பத்தைகொண்டு தாகூர் சென்று பாராட்டிவந்த சோவியத் மதிப்பீடுகளை குறைக்க கிருஷ்ணா முயன்றுள்ளார்.. ருஷ்யாவின் முயற்சி வெற்றிபெற பிரார்த்திப்பதாக தெரிவித்தவர் தாகூர். 1917-27 ஆண்டுகளில் தாகூரின் 60 படைப்புகள் 2 லட்சம் காப்பிகள் விற்றுத் தீர்ந்ததாகவும் ஹிரன் தெரிவிக்கிறார். இவான் புனின் நோபல் பரிசாளர் மேற்பார்வையில் தாகூரின் ஆக்கங்கள் ருஷ்ய மொழிபெயர்ப்பில் 1918ல் வந்தன. தாகூரின் படைப்புக்கள் உலகின் பொக்கிஷங்கள் என லுனாசார்ஸ்கி (Anatoli Lunacharski ) பாராட்டினார். அவரை இந்தியன் டால்ஸ்டாய் என்றார். லெனின் தனது நூலகத்தில் தாகூர் ஆக்கங்களை வைத்திருந்ததாகவும், அவர் தாகூர், பெர்னார்ட் ஷா போன்றவர்களை சிறந்த இலக்கியவாதிகள் என குறிப்பிட்டதையும் ஹிரன் சொல்கிறார். எட்வர்ட் தாம்சன் காளிதாசருக்கு அடுத்த மகத்தான இந்திய கவி தாகூர் என்றார். அவரை ஓவியராக, கவியாக மட்டுமே சுருக்கி சிந்தனையாளர் என ஏற்க மறுக்கும் அரை ஞான இந்தியர்களை ஹிரன் சாடுகிறார். 1921 கோஆப்பரேஷன் என்கிற மாதப்பத்திரிக்கை ஒன்றில் தாகூர் எழுதினார். எங்கே பொருளாதார வேறுபாடுகள் இருக்கிறதோ அங்கு இறையாண்மை சமமாக போவதில்லை. ஒவ்வொரு அடியிலும் ஜனநாயாகம் தடைசெய்யப்படுகிறது என தெரிவித்தார். ருஷ்ய மக்களின் துன்ப துயரங்களிலிருந்துதான் போல்ஷ்விசம் பிறந்தது. மனித குலம் நிலைகுலைந்து போனதால் புரட்சி எழுந்துள்ளது. போல்ஷ்விசம் என்பது மருத்துவ சிகிட்சை போன்றது. ஆனாலும் சிகிட்சை என்பது நிரந்தரமாக நடைபெறமுடியாது, டாக்டர்களின் ஆட்சி முடியும் நாளே நோய் இருந்தவர்க்கு பொன்னாள். (This Revoultion has broken out because humanity has lost its balance.It is not improbable that in this age Bolshevismis the treatment, but medical treatment cannot be permanent; indeed the day on which the doctors’s regime comes to an end must be hailed as the red letter day for the patient) என்கிற கருத்தையும் அவர் வெளிப்படுத்தினார். பிறந்த சொந்த மண்ணில் இரத்தமும் சதையுமாக பின்னிப்பிணந்து நாம் கற்றவற்றை பெரிதாக கொள்ளாமல், இங்கிலீஷ்காரர்கள் மூலம் வந்ததை கொண்டாடிவருகிறோம். நம் தலையின் கனத்தைவிட டர்பன் அல்லது தலைப்பாகை கவர்ச்சியாகிவிடுகிறது. மாத சம்பளத்தைவிட போனஸ் பெரிதாக தெரிகிறது என மிக நயமாக அந்நியமாகாதே என்பதை எடுத்துரைக்கிறார் தாகூர். இதை ஹிரன் தனது புத்தகத்தில் தாகூர் வாசகத்தாலேயே சுட்டிக்காட்டுகிறார். மக்களிடம் அந்நியப்படுபவர்களால் அந்நிய அம்சங்களை தமதாக்கவும் முடியாது. தன் வீட்டை உதறுபவனால் உலகிற்கு உபசரிப்பை செய்யமுடியாது என அவர் எழுதினார். தாகூருக்கு கிராமப்புற விவசாயம் சார்ந்த பின்னணி இருந்தாலும் அவர் காலத்தில் பல்கேரியாவில் 1920களில் இருந்த கிரீன் சோசலிஸ்ட் என்கிற அடையாளத்தை கொள்ளவில்லை. அவருக்கு பெர்னார்ட் ஷா, எச் ஜி வெல்ஸ் பழக்கம் இருந்தாலும் தன்னை பாபியன் சோசலிஸ்டாகவும் அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. இந்தியாவின் எகானாமிக் நேஷனலிசம் என்பதுடன் அவ்வப்போது தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் தாகூர். அந்நிய பொருட்கள் பகிஷ்காரம்- இந்திய பொருட்களை வாங்குவீர் என்பதில் கூட காந்தியுடன் ஆரம்பத்தில் விவாதம் நடத்தியவர் தாகூர். சுதேசி இயக்கத்திற்கு ஆதரவாக தாகூர் நின்றார். 1904ல் அவரது எழுத்துக்களில் சோசலிசம் குறித்த ஆரம்பக்கூறுகள் இருந்தன என லால்சேத் சொல்கிறார். ராபர்ட் ஓவனிச சோசலிசம் எனக்கூட சொல்லலாம் என்கிறார் லால்சேத். அவரின் சுதேசி சமாஜ் நோக்கி இளைஞர்களை அழைத்தார். பயங்கரவாத நடவடிக்கைகளை விடுத்து நிலத்தில் இறங்கி செல்வத்தை பெருக்க வாரீர் என தாகூர் அழைப்புவிடுத்தார். டால்ஸ்டாயின் சிறந்த படைப்புகள் 1850-70களில் வந்தன, மார்க்ஸ்- பகுனின் படைப்புகள் வேறுபாடுகளும் இக்காலத்தவையே. ஆனால் சோசலிச கருத்து முரண்பாடுகள் டால்ஸ்டாயை எந்த வகையில் பாதித்தன எனத்தெரியவில்லை. அடிமைகள் விடுவிப்பில்- அவர்களின் சுதந்திரம் என்பது ருஷ்ய ஜனநாயக போராட்டத்தில் மிக முக்கிய அம்சம். டால்ஸ்டாய் அதில் நின்றார். ஆனால் ஜாரின் கோபத்திற்கு இரையாகாத வழிகளில் நின்றார். ஏசுபிரான் ஏழைகளின் ஒடுக்கப்பட்டவர்களின் காவலன் என்கிற புரிதலை டால்ஸ்டாய் முன்வைத்தார். கிறிஸ்துவர்கள் சோசலிஸ்ட்களாக இருக்கவேண்டும் என்கிற விழைவும் இருந்தது. தாகூர் லிபரல் மரபை பிரதிநிதித்துவப்படுத்த விழைந்தார். நிகழ் நடப்புக்காலம் என்பதைவிட கனவு சமுதாய பார்வையை அவர் விழைந்தார் என லால்சேத் சொல்கிறார். லால்சேத் அவரை கன்சர்வேடிவ் சோசலிஸ்ட் என்கிறார். மாற்றம் தவிர்க்கமுடியாது என்ற பார்வை அவருக்கு இருந்தாலும் ‘மார்க்சிய கன்வெர்ட்’ அல்ல அவர். அவரின் சொத்து- தன்வந்தர்கள் குறித்த பார்வையில் அரசியல், பொருளாதாரம் என்பதைவிட எதிகல் என்கிற நெறிப்படுத்தல் கருத்துக்களே அதிகமாக இருந்தன. அதேநேரத்தில் டால்ஸ்டாய், தாகூர் இருவரையும் மதப்பர்ர்வை கொடையாளர் (religious philanthropists) என முத்திரைகுத்தி விடக்கூடாது என்கிற எச்சரிக்கையும் லால்சேத் பார்வையில் வருகிறது. மண்டலி எனும் கிராம யூனியன் ‘பாப்னா’ அமையப்பெற விழைந்தவர் தாகூர். ஆனால் அவை மார்க்சிய வர்க்க ஸ்தாபனங்கள் அல்ல. வர்க்கப்போராட்டம்- மோதல் என்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை. கிராமத்தின் சுயதேவைகள் நிறைவேற்றும் இயக்கங்களாக அவை இருக்கவேண்டும் என கருதினார். விவசாய கருவிகளை கூட்டாக வாங்க அவை முயற்சிக்க வேண்டும் என்றார். பால் உற்பத்தியை கூட்டாக செய்தால் அடக்க செலவு குறையும் என்றார். நெசவாளர்கள் கூட்டுறவுமுறையை அவர் பரிந்துரைத்தார். பெங்கால் சோசியல் சர்வீஸ் லீக் என்பதில் 1915களில் அவர் ஆர்வமாக செயல்பட்டார். கல்வியை பரப்புதல்- எழுத படிக்க கற்றுத்தருதல், குடிநீர் பெற உதவுதல், முதலுதவி, சிறு மருத்துவ சேவைகளை செய்தல்- குறிப்பாக மலேரியா, டி பி போன்றவற்றை ஒழிக்க பாடுபடுதல், சிசு மரணங்களை தடுக்க பாடுபடுதல், கிராம கூட்டுறவு கடன் சொசைட்டிகளை துவங்கி அதன் பலன்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல், வறட்சி, வெள்ளக்காலங்களில் நிவரணவேலைகள் போன்ற அக்காலத்தில் கடினமான திட்டங்களை அவர்கள் முன்வைத்து செயல்பட்டனர். மகிழ்ச்சி மூலம் பலம் கொள் என்றார் – ஆரோக்கியம், நல்ல உணவு, சகமனிதர் போற்றுதல் என்பனதான் மகிழ்ச்சிக்குரியன என்றார். . சோவியத் புரட்சி நடந்த தருணத்தில் அவர் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தார். அங்கு பல்வேறு பத்திரிகை செய்திகளை கண்ணுற அவருக்கு வாய்ப்பிருந்தது. அவர் சோவியத் செல்லும்போது திறந்த மனதுடன் சென்றார். அங்கு கல்வி, இலக்கிய பணிகள் குறித்து அறிந்தார். சைமன் பிரிட்டிஷ் இந்திய கல்விமுறை பற்றி பேசுவதற்கு முன்னர் ரஷ்யா போய் அறிந்து வந்திருக்கவேண்டும் என்றார் தாகூர். இந்தியா திரும்பியவுடன் சோவியத் கல்வி பற்றி சொற்பொழிவாற்றினார். ரிலிஜன் ஆப் அன் ஆர்டிஸ்ட் என்கிற கட்டுரை ஒன்றை அவர் 90 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார். தான் பிறந்த கால சூழலில் ராஜாராம் மோகன்ராயின் கருத்துக்கள் சமூகத்தில் உருவாக்கிய புயல் பற்றியும் தனது குடும்பம் அவ்வியக்கத்தில் அங்கமாக இருந்தது பற்றியும் தெரிவிக்கிறார். பழமையில் ஊறிப்போனவர்களுக்கு அது கடுமையாகவே இருந்தது. பங்கிம் சட்டர்ஜி உறங்கி கிடந்த வங்க மொழிக்கு புத்தாக்கம் தந்தார். அதன் பின்னர் தேசிய இயக்கம். நமது பழமையை விடக்கூடாது என்று வந்தாலும் பிற்போக்கு தன்மையில் இல்லாது புரட்சிகரமாக பேசியது. இந்த மூன்று இயக்கங்களிலும் எங்கள் குடும்பம் தொடர்புடன் இருந்தது. இதனால் எங்கள் குடும்பம் பகிஷ்கரிப்பிற்கு உள்ளாகி தீண்டப்பாடதவர் ஆனோம் என்கிற குறிப்பைத் தருகிறார் தாகூர். உபநிடதங்கள் கருத்துக்களுடனான மோனோதீசம் என்பதில் தந்தை முன்நின்றார். அவரை மோசமான கிறிஸ்துவர் போன்றே சக வங்காளிகள் பார்த்தனர். எனவே குடும்பம் ஒதுக்கப்பட்டது. அமைப்பு எனும் எந்திரம் மையப்படுத்தப்பட்ட சக்தியானால் அரசியல், மதம், வணிகம் அது உள்ளார்ந்த வாழ்விற்கு தடையாகிவிடும் என எச்சரித்து அதன் எதிர்மறை விளைவு பற்றி தனது கவலையை அவர் வெளிப்படுத்தினார்.. கவிதைகள் என்பன மார்க்கெட் சரக்குகள் அல்ல. நான் தாந்தேவிடம் போனேன். படுதோல்வியடைந்தேன் என்கிறார் தாகூர். ஹெயின் ஜெர்மானிய கவிதை அழகை தந்தது என்கிறார். கதேவிடம் போனேன். ஆனால் அவ்வீட்டில் சகஜமாக இருக்கமுடியவில்லை. விருந்தாளியாகத்தான் இருக்க முடிந்தது என்பார் தாகூர்.. எனது மதம் கவியின் மதமாகும். சுற்றியிருக்கும் உலகம் என்னை மந்தமாக்கியதில்லை. ஏனெனில் மேகம் மேகமாக, பூ பூவாக நேரிடை உறவை எனக்கு தருகிறது என்றார் தாகூர். மதத்தின் அடிப்படை அதன் வறட்டுத்த்னத்தில் இல்லை( True foundation of religion is not in its dogma) என்றார். காலை புலர்ந்துவிட்டது என உணர்த்த எனக்கு ஒரு விஞ்ஞானி வரவேண்டியதில்லை. சுற்றி ஏராள உண்மைகள் தெரிகின்றன. அதேபோல் உண்மைகள், நல்லது என விளக்க இறையியலாளர் ஒருவர் தேவையில்லை என்றார். தீயது என்றால் என்ன, இறப்பிற்கு பின்னர் என்ன ஆகிறோம் என்பது பற்றி எனக்கு எவரும் திருப்திகரமான பதில்களை தரமுடியாது. வேறுபாடுகளை முற்றானது என கருதாமல் பிரபஞ்ச வாழ்வுடன் ஒன்றிப்போகும் மனம் மகிழ்ச்சி அடைகிறது என எழுதினார். நமது உடல் வெறும் வயிறு, இதயம், மூளை தாங்கி மட்டுமல்ல. அது ஆளுமையை வெளிப்படுத்துவதும் கூடத்தான்.ஆளுமையை அது வெளிப்படுத்துவது, தான் என்பதை வைத்துக்கொள்வதல்ல என்றார். நாம் இருக்கிறோம் என்பது எவ்வள்வு உண்மையோ அதே போல் பிற எல்லாம் இருக்கின்றன என்பதும் உண்மைதான். வரையற்றதின் வரையறைதான் ஆளுமை படைக்கும்போது கடவுள் தனிப்பட்டதாகிறார் (Limitation of the unlimited is personality: God is personal where He creates) என எழுதினார். 1904 சுதேசி சமாஜில் அவரது அழைப்பு நம்மை நாம் மீட்டுக்கொள்வோம் என்பதாக இருந்தது. தாகூர் உனது பலத்திற்கு நீ பழக்கமாகு என்றார். சிலர் மட்டும் தீவிர செயல்களில் இறங்குவதை அவர் ஏற்கவில்லை. மானுட பிரபஞ்சம் என்பதில் பலமான நம்பிக்கையை அவர் வைத்திருந்தார். மனிதனின் வரலாறு மனித பிரபஞ்ச கட்டுமான வரலாறே (History of man is history of Building up human universe) என கற்பித்தார். 1940 Gandhi Maharaj என்கிற ஆக்கத்தை அவர் தந்தார். . ஆனால் 1920ல் அவர் காந்தி அறிவித்த காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட ஒத்துழையாமையில் பங்கேற்கவில்லை. இது எதிர்மறை இயக்கம் என்றார்.. காந்தியின் உண்மையைத்தேடுதல், வன்முறையற்ற வழியில் விடுதலை போராட்டம் என்பதை தாகூர் மனம் திறந்து பாராட்டினார். 1921 ல் ஆண்ட்ரூஸ் அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தாகூர் அரசியலுக்கு எதிரானது எனது இயல்பு. ஆனால் துரதிருஷ்டவசமாக நமது நாட்டின் சூழலில் அரசியல் கோபங்களை காட்டாமல் இருக்கமுடியவில்லை என்றார். 1940ல் அரசதிகாரம் எனும் உலக அரசியலை கண்ணுற்ற அவர் கவிதை ஒன்றை தந்தார். பழமையை முற்றிலுமாக அறுத்துக்கொண்ட புதுமை என்பது அவருக்கு உவப்பானதல்ல. இரண்டிற்கும் இடையே சரி கட்டல்கள் தேவை என்றார். நமது முன்னோர்களின் தியாக சிந்தனை, வேலைப்பாங்கு நம் புது வாழ்க்கையிலும் தொடரவேண்டும் என விழைந்தார். V தாகூர் காந்தி உறவு குறித்து பலர் பேசியுள்ளனர். தாகூர் மறைந்த ஆகஸ்ட் 1941ல் நேரு அதைப்பற்றி குறிப்பிட்டார். ”இருவரும் உலகத்திடமிருந்து கற்றவர்கள் ஆனால் இந்திய குழந்தைகள் வாரிசுகள் என்கிற பெருமிதம் கொண்டவர்கள். அவர்களின் பண்பாட்டுத்தன்மை, அறிவை பார்க்கும்போதும் அவர்கள் எந்த அளவு இந்தியர்கள் என்பதும் விளங்கும். அவர்களிடம் வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் இருவருக்கும் மூல ஊற்று ஒன்றுதான்” என்றார் நேரு. காந்திக்கு மதம் என்பது பூகோள பரப்பினுடன் நிற்பதல்ல. தேசபக்தி என்பதும் கூட மானுட விரோத தன்மையானதல்ல. மனிதநேயம் என்பதுடன் அவரின் தேசபக்தியை பிரித்து பார்க்க முடியாது. இந்தியாவிற்கு தொண்டு என்பதால் ஜெர்மனியை, இங்கிலாந்தை புண்படுத்துவது என்பதாகாது என அவர் தனது தேசபக்தி பற்றி சொல்வார். அதே போல் தாகூரின் தேசபக்தியும் பரந்து விரிந்த பார்வை கொண்டது. நமக்கான விடுதலை நம்மை கதவடைத்துக்கொள்ள அல்ல- பிற நாடுகள் மீது எஜமானத்தனமை கொள்வதற்கும் அல்ல என்றார் தாகூர். மனிதகுலத்தின் அனைத்து பெருமிதங்களும் எனக்கு வேண்டும். அனைத்து இனங்களும் இசைவுடன் வாழ்தல் என்பது வேண்டுதல். இந்தியா ஒற்றுமையில் உண்மையை காணும் என்றார். இருவருக்கும் மெக்கானிக்கல் மெட்டீரியலிஸ்டிக் நாகரீகம் என்பது குறித்த கவலையும் விமர்சன பார்வையும் இருந்தது. ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் கடைத்தேற்றம் என்பதை இருவரும் பேசினாலும் நேரிடையாக சோசலிசம் என்பதை தங்கள் தனி அடையாளமாக முன்வைக்கவில்லை. சோவியத் போய்வந்து தாகூர் அங்கு கண்ட சில அம்சங்களை பேசாமல் இல்லை. காந்தி தர்மகர்த்தா கொள்கையை முன்வைத்தார். இருவரும் அரசின் கட்டற்ற அதிகாரம் குறித்த அச்ச வெளிப்பாடுகளை சொல்லாமல் இல்லை. 1915 துவங்கி அவர்களிடன் நேரிடை தொடர்பு ஏற்பட்டது. சாந்திநிகேதனுக்கு காந்தி வந்தார். அவர் வந்த மார்ச் 10யை சாந்திநிகேதன் காந்தி தினம் என்று கொண்டாடியது. ஜாலியன்வாலாபாக் அடுத்து தாகூர் தனது பிரிட்டிஷ் கொடுத்த பட்டத்தை துறந்து மே 30 1919ல் வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார். காந்தி தனது ஒத்துழையாமையை 1920ல் அறிவித்தார். இருவருக்கும் அது குறித்த மாறுபட்ட கண்ணோட்டம் இருந்தது. ரொமெயின் ரோலந்த் இது குறித்து எழுதியுள்ளார். காந்தி குறித்து டால்ஸ்டாய்விட கூடுதல் மதிப்பீடுகளை தாகூர் கொண்டிருந்தாலும் ஒத்துழையாமையை அவர் ஏற்கவில்லை. 1921 மாடெர்ன் ரிவ்யூவில் உண்மைக்கு வேண்டுகோள் என்கிற ஆக்கத்தை தாகூர் எழுதினார். காந்தி அதற்கு பதிலளிக்கும்விதமாக அக்டோபர் 13, 1921ல் யங் இந்தியாவில் தனது கருத்துக்களை முன்வைத்தார். காந்தியின் பதில் சற்று வலிமையாக கூட வந்தது. பசித்து புசித்து ஆனந்தமாக சுற்றும் பறவைகளை கண்ணுற்று ஆனந்தப்படுகிறார் கவி. நானோ இரைதேடும் பறவைகளின் துன்பங்களை கவனிக்கிறேன். அது வலிமையற்று பறக்கக்கூட முடியாத நிலையைக் கண்டு துயர் படுகிறேன் என்றார் காந்தி. வலியால் தவிக்கும் மனிதனுக்கு கபீர் பாடல் ஒன்றை தந்து ஆறுதல் சொல்ல முடியவில்லை என்றார் காந்தி. காந்தியின் வார்த்தைகளை dark and tragic words என்றார் ரோலந்த். தாகூரை காந்தி குருதேவ் என அழைப்பார். தாகூர் மகாத்மா என அழைப்பார். சர்க்கா வழிபாடு என்கிற கட்டுரையில் எந்த இடத்தில் நெய்யப்பட்ட துணியை அணிதல் என்பது பொருளாதார விஷயமே தவிர அதில் தூய்மையின்மை என நன்னெறிகளை பொய்மையாக ஏற்றுவது சரியல்ல என தாகூர் கருதினார். பொருளாதார அம்சம் ஒன்றில் நன்னெறி ஏற்றுவது என்பது தனக்கு உடன்பாடானதே என்றார் காந்தி. அதே போல் வர்ணாஸ்ரம தர்மம் என்பதில் உடன்பட்டு காந்தி பேசியது தாகூருக்கு உவப்பாக இல்லை. 1932 செப்டம்பரில் புனே உடன்படிக்கை சூழலில் எரவாடா சிறையில் தாகூர் காந்தியைப் பார்த்தார். உண்ணாநோன்பு முடியும் தருவாயில் காந்திக்கு பிடித்த when the heart is died and parched up, come with your shower of mercy என்பதை தாகூர் பாடினார். அடுத்துவந்த ஆண்டுகளில் வாய்ப்புள்ள தருணங்களில் இருவரும் சந்தித்தனர். பிப்ரவரி 1940ல் சாந்திநிகேதனில் பார்த்தது இருவருக்குமான கடைசி சந்திப்பாக அமைந்தது. தாகூர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சாகும் தருவாயில் இருந்தபோது மகாதேவ தேசாய் காந்தியின் கடிதம் எடுத்துவந்து தாகூரிடம் தந்தார். தாகூர் ஆனந்த கண்ணீர் விடுத்தார் என கிருஷ்ணா கிருபளானி சொல்கிறார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழலில் நர்ஸ்களிடம் அவர்கள் கிளாக்ஸ்கோ கொடுக்கும்போதெல்லாம் நான் எத்தனை மாத குழந்தை என்றார் தாகூர். டாக்டரிடம் நான் அமைதியாக மரணிக்க அனுமதிக்ககூடாதா என்றார். நன்றாக வாழ்ந்து விட்டேன் என்பார். ஆகா இந்த மரங்களை நான் பார்க்க முடியாமல் போய்விடுமே என்றார். விஸ்வபாரதிக்கு வாழ்நாள் டிரஸ்டியாக இருக்க காந்தியை தாகூர் வேண்டினார். விஸ்வபாரதிக்கு நிதிஉதவி செய்திட காந்தி ஒத்துழைத்தார்.. தாகூர் ஆகஸ்ட் 7 1941ல் மறைந்தார். உலகம் பார்த்து மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதனையும் நாம் தர முடியாவிட்டால் நம்மைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஒரே காரணத்தால் ஒரு பொருளை நம்முடையதாக முற்றிலும் ஆக்கிக்கொள்ளமுடியாது என்ற உண்மையை உணரவேண்டும். மழைநீரை பெறும் ஏரியால் தான் உயிர்களை காக்கமுடியும். பாலைவனத்தால் அல்ல. ஏரிக்கு அதன் ஆழத்தில் பெறுதலும் கொடுத்தலும் ஒரே நிலையானது. யாரிடத்தில் ஏற்கனவே இருக்கிறதோ அவருக்கே மறுபடியும் கொடுக்க நம் சமூகம் பழக்கப்படுத்தப்படுகிறது என நமக்கு வாழ்வின் பெரும் அர்த்தங்களை சொன்னவர் தாகூர். Ref - The Philosophy of Ravindranath Tagore by Dr S.RadhaKrishnan - Political Thought of Tagore by Dr Sachin Sen - Ravindranath Tagore by Hiren Mukherjee - Tagore on Socialism by Hira lal Seth - தாகூர் எண்ண களஞ்சியம- புலவர் த. கோவிந்தன் - அனைத்துலக மனிதனை நோக்கி- தாகூர் -தமிழில் அ.ச.ஞா - Tagore Gandhi Nehru Krishna Krupalanai - Mahatma and Poet S Battachraya விவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம் [] அரசு சமூகம் சோசலிசம் (State, Society and Socialism) என்கிற தலைப்பில் விவேகானந்தரின் கருத்துக்கள் ஆர்வமூட்டக்கூடியவை. அவரது நூல் தொகையிலிருந்து சேகரிக்கப்பட்டு இத்தலைப்பில் புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கல்கத்தா அத்வைத ஆசிரமம் இதை வெளியிட்டுள்ளது. இப்புத்தகம் கேள்வி பதில் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அவரது நூல்தொகையிலிருந்து ஆதாரம் உள்ள பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளனர். அதே நேரத்தில் சகோதரி நிவேதிதா கருத்துக்களும், சுவாமி அவர்களின் மறைவிற்கு 15 ஆண்டுகள் பின்னர் உருவான சோவியத் லெனின் ஆட்சி குறித்தும் இதில் கருத்துக்கள் ஓரிரு இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே வாசகர்கள் அவர் நேரிடையாக தெரிவித்ததாக ஆதாரம் தரக்கூடிய எழுத்துக்களை எடுத்து புரிந்து கொள்ளவேண்டும். அவரது சிந்தனைகளையும்-அவரை பின்பற்றி சொல்பவர்கள் எழுத்துக்களையும் பிரித்து அறிய வேண்டியுள்ளது. இப்புத்தகம் சமூகம்-அதன் அம்சங்கங்கள், வரலாறும் முன்னேற்றமும், அரசும் வர்க்க ஆட்சியும், சுரண்டல் வடிவங்கள், ஜனநாயகமும் சோசலிசமும், புரட்சியும் சமூக மாற்றமும் என 7 பகுதிகளில் விவாதவடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. விவாதத்தின் சில முக்கிய அம்சங்கள் இங்கு இடம் பெறுகின்றன. பல்வேறுநாடுகளில் சமுகம் உருவாகி மாறி வருகிறது. கடலை நம்பி வாழ்ந்தவர், காடுகளில் வேட்டையாடி வாழ்ந்தவர், கால்நடை வளர்த்தோர், பயிர்த்தொழில் செய்தோர் என பல்வேறு பகுதியினர்- அவர்களிடம் ஏற்பட்ட பூசல்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த சிறு ராஜ்யங்கள் தோன்றின. அசுரர்- தேவர் பண்புகளுடன் உருவான மோதல்கள் பின்னர் அரசாங்கத்திற்கு வழிவகுத்தன இவர்கள் மத்தியில் கலப்பும் உருவாகி இந்த இணைவிலிருந்து (fusion) நவீனகால இனங்கள், சமூகங்கள், பழக்கவழக்கங்கள் உருவாகின. அறிவியல் கருத்துக்கள் தோன்றலாயின என விவேகானந்தர் சமுகம்- சிற்றரசு- அரசு உருவாக்கம் பற்றி விவரிக்கிறார்.. ஒருவர் வயலில் உழைத்தார். விளைபொருட்களை விற்க வைஸ்யர் வந்தார். மற்றவர்கள் அதை பாதுகாப்பதாக சொல்லி அபகரித்தனர். உழைப்பவர் காயத்துவங்கினர். நான்கு வர்ண முடிச்சுகள் சமுகத்தில் இறுகின. நாம் பார்க்கும் நவீன சிக்கலான சமுகம் வந்துவிட்டது என்கிறார். கிழக்கு மேற்கு சமுக உருவாக்கங்கள் – வேறுபாடுகள் குறித்தும் சுவாமி விவாதிக்கிறார். ஆசியவகைப்பட்ட நாகரீகம் கங்கை, ஈப்ரடிஸ், யாக்டிசியாங் போன்ற ஆற்றங்கரையில் வளர்ந்தன. அய்ரோப்பிய சமுகமோ கடல் கொள்ளையில், குன்றுப் பகுதிகளில் வளர்ந்தது. இதை தேவ அசுர தன்மை என அவர் விவரிக்கிறார். அய்ரோப்பாவில் அரசியல் கருத்துக்களை கொண்ட தேசிய ஒற்றுமை உருவானது. ஆசிய சமூகங்களில் சமய கருத்துக்கள் வடிவில் தேச ஒற்றுமை உருவானது. ஆழ்மன ஆய்வு (Introspective)என்பது கிழக்கிலும் விஞ்ஞான மற்றும் வெளிப்பார்த்தல்( Scientific/ out seeing) என்பது மேற்கிலும் இருந்தன. இந்தியாவில் அத்வைத ஒளியில் சோசியல் கம்யூனிசம் என சகோதரி நிவேதிதா பேசுகிறார். மற்றொரு அம்சத்தை விவேகானந்தர் பளிச்சென விளக்குகிறார். மேற்கில் மனிதன் தனிமனிதனாகவே (as individual) பிறக்கிறான். இந்தியாவிலோ அவன் சமூக மனிதனாக தனது சாதியில் பிறக்கிறான். அதன் கட்டுக்குள்ளேயே வளர்கிறான். பண்டைய இந்தியாவில் நிலங்கள் பொதுவானது அரசனுக்கு/ அரசிற்கு சொந்தம். கிராமத்திற்கு பொதுவாக அவை சாகுபடிக்கு கொடுக்கப்படும். விளைச்சலில் ஒருபகுதியை அரசாங்கத்திற்கு தரவேண்டும். கிராம மருத்துவர், பள்ளி மற்றும் பிற பொது அம்சங்களை நிர்வகித்துக் கொள்ளவேண்டும். அய்ரோப்பிய சமூகம் போர் சமுகம். வாள் கொண்டு ஆளும் சமுகம். வாள் அங்கு நாகரீகம். ஆசியா மைனர் வழியே ஆசிய இனங்கள் சில அங்கே முன்னேறி சென்றிருக்கக்கூடும். இதன்மூலம் கலப்பு நிகழ்ந்தது. ருஷ்யாவின் மொழி கூட்டத்தில் தென்னிந்திய மொழிக்கூட்ட சாயல் தெரிகிறது என தன் ஆய்வை முன்னெடுக்கிறார் . கிரேக்கத்தில் யவன நாகரீகம் இவ்வாறு ஏற்பட்டது. பலரை வென்றுதான் ரோமராஜ்யம் உருவாக்கப்பட்டது. யூதர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல நேர்ந்தது. அய்ரோப்பாவின் காட்டுமிராண்டி இனம் வாளால் தன்னை உருவாக்கி கொண்டது என்கிறார். பின்னர் கிறிஸ்துமதம், ராணிக்களின் அதிகார ஆட்சி என வளர்ந்தது. அரேபியர் பாலைவனப்பகுதியிலிருந்து இஸ்லாம் புறப்பட்டது. அது எல்லாவற்றையும் தூக்கி சென்றது. இந்தியாவில் அய்ரோப்பாவில் இஸ்லாம் நுழைந்தது. ரோமசாம்ராஜ்ய அழிவிற்கு பின்னர் Franks செல்வாக்கு அய்ரோப்பாவில் பரவியது. இப்போது நாம் பரங்கியர் என இச்சொல் மூலம் தான் அவர்களை குறிக்கிறோம். வாள் மூலம் பெர்ஷிய நாகரிகம் பரவியது. கிரீசின் அறிவுத்தாகம், கலை உணர்வுகள் பின்னர் இத்தாலியில் பிளாரன்ஸ் மறுமலர்ச்சியாக வெளிப்பட்டது. நாம் இன்று உணரும் அய்ரோப்பா 16 ஆம் நூற்றாண்டின் உருவாக்க தொடர்ச்சி. இந்தியாவில் அப்போது அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான் முகல் ஆட்சி நடந்திருக்கும். பின்னர் வந்த நூற்றாண்டுகள் பிரஞ்சு புரட்சியின் சுதந்திரம்- சகோதரத்துவம், சமத்துவம் முழக்கங்களை கண்டன. பிரான்சில் அது பேசப்படுகிறதோ இல்லையோ, உலக நாடுகளை அம்முழக்கம் கவ்வி பிடித்தது . வடக்கில் இமயம், தெற்கில் சமவெளி, இடையில் காடுகளின் பகுதியாக இந்தியா என்பது உணரப்பட்டது. திராவிடர், பூர்வீக குடிகள் அவர்களது வழக்கம்- சமயம் இருந்தன. ஆரியர் என்ற பெருமித இனம் பல்வேறு அம்சங்களை அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்டாலும் இவர்களை தனித்தே வைத்திருந்தது. வாளின் வலிமையிலாது மதிநுட்ப புரோகித வர்க்கம் செல்வாக்கு பெற்றது. உயர்தட்டாக மாறியது. குலத்தொழிலாக தொடர்ந்த குடும்பங்கள் சாதிகளாக இறுகின. எல்லைகளை வகுத்துக்கொண்டன. சாதியை எவரும் தாண்டமுடியாது. பிரிவினையாக சாதிகள் எனவும், சாதிக்குள் உதவிக்கொள்ளும் சமுகம் என்ற ஏற்பாடாக இருந்தது. சாதி என்கிற கட்டுமானம் ஆரோக்கிய போட்டி என்பதை மட்டுப்படுத்திவிட்டது. இதுவே இந்திய அரசியலின் வீழ்ச்சிக்கும் காரணமாகியது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகின் பெரும் வர்த்தக மையம் இந்தியா. பருத்தி, சணல் சாயப்பொருட்கள், அரிசி, முத்து, பவளம், உயர்தர பட்டு, கம்பளி என ஏற்றுமதி செய்த நாடு இந்தியா. ஆப்கான், பெர்சியா வழியாக வர்த்தகம் செழித்தது. ஆன்மீக வழியை அனைவருக்கும் திறக்க கிருஷ்ணன், சமூக சமத்துவத்திற்காக புத்தம்- வைஷ்ணவம் என போராட்டங்கள் நடந்தன . ஆன்மீக சமத்துவம் பேசிய நாடு சமூக வேறுபாடுகளை கொண்டே நகர்ந்தது. வடக்கில் குமரிலர், தெற்கில் ஆதிசங்கரர் ராமானுஜர் செக்ட் வகைப்பட்ட கோட்பாடுகள், சடங்குமுறையிலான இந்துயிசம் உருவாயின. சங்கரரின் இயக்கம் மக்கள் தொண்டு இயக்கமாகாமல் அறிவு இயக்கமானது. சமஸ்கிருத வாகனத்தையும், சாதிய சட்டங்களுடனும் அது பயணித்தது. ராமானுஜர் உணர்வுகளின் எழுச்சியாய் நடைமுறைத் தத்துவங்களுடன் சாதாரண மக்களை ஈர்த்து பயணித்தார். ராமானந்தர், கபீர், சைதன்யர், நானக் மனிதர்களின் சமத்துவம் என பேசினர். அதே நேரத்தில் பல்வேறு தத்துவதிசைகளில் அவர்களது பயணம் சென்றது. முகலாயர்கள், பிரஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் என நுழைவை கண்டோம். ஆங்கிலேயர் வெற்றி பைபிளின் வெற்றி என பேசப்பட்டது. ஆனால் அவர்களின் உணமையான யுத்தக்கொடி ‘ஆலை சிம்னிகளில்’ பறந்தது. ஒவ்வொருநாடும் தனக்கென செயல்முறைகளை கொண்டிருந்தன. சில அரசியல் வழி- சில சமூக சீர்திருத்த வழி என அடையாளம் பெற்றன. இங்கிலாந்து அரசியல் மூலம் சமயம் என அறியப்பட்டால் அமெரிக்காவை சமய சீர்திருத்தங்கள் மூலம் சமயம் என புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. உலக பாதுகாப்பு என்பது தேசங்களின் கருத்தாக இல்லாமல் போனால் அழிவுதான். நமது நாடு பல துயர்களையும் தாண்டி நிற்கிறது எனில் இந்த உலக பாதுகாப்பு எனும் எண்ணத்தால்தான். அய்ரோப்பியர்களுக்கு தாங்கள் இல்லாவிட்டால் உலகம் நகராது என்ற எண்ணம் உள்ளது. இந்த எண்ணம் அவர்களை வலிமைப்படுத்தியும் உள்ளது. பிரஞ்சு மக்கள் அரசியல் சுதந்திரம் என்பதில் உறுதி பூண்டவர்கள். அரசாங்கத்தின் தாக்குதல்களை கொடுமைகளை கூட அவர்கள் சகித்துக் கொள்வர். ஆங்கிலேயர் give and take என்பர். இந்தியர் சிந்தனை முக்தியாகும்- ஆன்மீக சுதந்திரம்- விடுதலை என்கிறோம். இதை தொடாமல் யார் எதை செய்தாலும் இந்தியர்கள் சகித்துக் கொள்கின்றனர். ஒன்று மட்டும் உறுதி. சமுக, அரசியல், ஆன்மீகம் என்பதில் நானும் என் சகோதரனும் சமம்தான் என்ற பேருண்மை அனைத்து நாடுகளுக்கும் அனைத்து மக்களுக்கும் தேவைப்படுகிற ஒன்று. இந்தியாவின் சீரழிவிற்கு இங்கு நிலவிய பண்டைய பழக்கங்களோ சட்டங்களோ காரணமல்ல. அவற்றை சரியாக பின்பற்றாமைதான் என சொல்லும்போது சுவாமி எந்த சட்டம்- பழக்கத்தை சொல்கிறார் என ஊகிக்க முடியவில்லை. மனுவாக இருந்தால் அது இன்றைக்கு விவாதத்திற்குரியதாக மாறும். இந்திய சீன நாகரிகங்கள் உறைந்து போனதற்கு அங்கு நிலவிய வறுமைதான் காரணம். அன்றாட வாழ்விற்கே போராடும் மனிதனால் சிந்தனை புரட்சியை எவ்வாறு மேல் நகர்த்த இயலும் -. புதியன காண நேரமேது என வினவினார் விவேகானந்தர். தர்மம், துறவு, மோட்சம் என்கிறோம். முதலில் மனிதன் அனைத்து மகிழ்ச்சியையும் பெறட்டும். பின் அவன் அவற்றை துறக்கட்டும். தேசம் முழுதும் ஒரே நேரத்தில் சந்நியாசம் எடுத்திடமுடியாது என்றார். புத்த மதத்தில் இந்த தவறுதான் நடந்தது. அனைவருக்கும் சீருடை என்பதை புகுத்திடமுடியாது என கேலி செய்கிறார். சுயதர்மம் என்கிறோம். மோட்சம் பெரிய விஷயம்தான். ஓரடிகூட எடுத்து வைக்க முடியாதவனை இலங்கைக்கு பாய வைக்கமுடியாது என்கிற எதார்த்தம் உணரவேண்டும் என்கிறார். தர்மம் என்பது செயல் சார்ந்தவை. செயலுக்காகவே வேதம் என்றார் ஜைமினி. அவரவர் கடமை அவசியமாகிறது. மனிதனுக்கு தைரியம் தேவை. நிலைமைகளுக்கேற்ப அவரவர் ஹீரோ ஆகவேண்டும். யாரையும் வதைக்காமல் காரியமற்றிடவேண்டும். ஆயிரம் முறை ஓம் உச்சரித்துவிட்டோம் ஒன்றும் நடக்கவில்லை. பாவம் போகும் என்றார்கள். பல ஆண்டுகள் உச்சரித்தும் பலனில்லை. நாம் சரியாக புரிந்துகொள்ளாததின் விளைவு இது. சித்த சுத்தி என்கிற செயலில் பரிசுத்தமாகும் புத்தி அவசியம். மோட்ச காரியங்கள் வேறு. தர்ம காரியங்கள் வேறு என கீதையில் கிருஷ்ணன் வகைப்படுத்துகிறார். செயல்படும்போது நன்மை தீமைகள் உருவாகும். சும்மாயிருப்பதைவிட அது மேலானதல்லாவா என வினவுகிறார் சுவாமி. கீதையில் விவேகானந்தர் சாரப்படுத்துவது அதன் அத்தியாயம் 2ல் ‘களைப்படையாதே பார்த்தா’ என்கிற பாடல். எழு செயல்படு என்கிற உற்சாகப்படுத்தும் - செயலுக்கு உந்தித் தள்ளும் முழக்கம் அப்பாடலில் தொழிற்படுவதால் விவேகானந்தர் அதை திரும்ப திரும்ப எடுத்து பேசுகிறார். எழு புகழ் பெறு (Arise Acquire Fame) என்பார். சமூகம் வலிமை பெற அனைவருக்கும் கல்வி தான் வழி என்கிறார். மக்கள் கற்பிக்கப்படுவதன் மூலம் நமது தேசம் எழட்டும் என்கிறார். நல்லதின் சக்தியை உணர்தல், பொறாமை விட்டொழித்தல், அனைவருக்கும் நன்மை செய்தல் என்ற மூன்று அம்சங்கள் நம் எல்லாருக்கும் வலிமையை தரும் என்கிறார். நாம் விதவை திருமணம் என பேசினோம் ஆனால் உண்மையில் ஒரு பெண்ணிற்கு எத்தனை கணவன் கிடைக்கிறான் என்பது அல்ல முன்னேற்றம் – அங்குள்ள வெகுஜன மக்களின் வாழ்வில் என்ன மாற்றம் என்பதுதான் முன்னேற்றம் என சீர்திருத்தம் என்பதை மீள்வரையறை செய்கிறார். இந்த உதாரணத்தை அவர் ஏன் எடுத்துக் கொண்டார் என புரிந்துகொள்ள முடியவில்லை. மறைமுகமாக வங்க சீர்திருத்தவாதிகள் எவரையாவது விமர்சனம் செய்கிறாரா? அவரது லட்சிய சமுகம் உடல் மற்றும் ஆன்மீக விடுதலையில் இருப்பதாக சொல்கிறார். எந்திரங்கள் மட்டும் வறுமையை ஒழித்துவிடாது- மாறாக அவை நம் போராட்டத்தை அதிகப்படுத்திவிட்டன என்ற விமர்சனம் அவரிடம் இருந்தது. மனிதனின் தெய்வீகத்தன்மையை உணர்த்தாத எதுவும் நாகரீகமாகாது என்கிறார். II எங்கு போராட்டம் உள்ளதோ, எதிர்ப்புணர்வு இருக்கிறதோ அங்கு விழிப்புணர்வும் உயிரும் உள்ளது. ஒன்றுபடுத்திக்கொண்டேயிருக்கும் சக்தியும், வேறுபடுத்தும் சக்தியும் இயற்கையில் உள்ளன. இந்த இருசக்தி தன்மை இயற்கையின் ஒவ்வொரு துறையிலும், மனித வாழ்விலும் நிலவுகிறது. மனித வளர்ச்சி நாகரீகம் என்பது இயற்கையை கட்டுப்படுத்துவதாகவே உள்ளது. மாறுபட்ட நடவடிக்கைகள் மூலம் இக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள மாறுபட்ட மனித இனங்கள் முயற்சித்தன. தங்கள் மக்களின்மீது பேரன்பும், பிறர்மீது வெறுப்பும் என்பது தொழிற்பட்டது. பெர்சியா எதிர்ப்பில் கிரீஸ், கார்த்தேஜ்- ரோம், காபீர்- அரபியர், ஸ்பெயின் – பிரான்ஸ், பிரான்ஸ்- இங்கிலாந்து என ஒன்றை விஞ்சி ஒன்றின் முன்னேற்றம் எட்டப்பட்டன. இவர்கள் ஒன்றுபட்டும், வேறுபட்டு நின்று எதிர்த்தும் கொண்டனர். உலக வரலாற்றை பார்த்தால் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பெரும் ஆன்மா, அவரது சிந்தனைகளை பின்தொடர்ந்த மக்கள் என்பதை காண்கிறோம். மனிதர்கள் பட்டினியில்லாமல் உயிர்வாழவேண்டும் என்ற தேவை இயக்கிக்கொண்டே இருக்கிறது. பிராமணர்கள் கற்பதுதான் சக்தி என்றனர். சத்திரியர் வாள் என்றனர். வைஸ்யர் மின்னும் தங்கம் என்றனர். ஆனால் கவனிக்கவே பெறாத அடித்தட்டு வர்க்கம் நிலத்தில் உழைத்துக் கொண்டேயிருந்தது. யார் ஆண்டபோதும் அது அமைதியாக எதிர்க்க சக்தியின்றி உழைத்துக் கொண்டேயிருந்தது. சமுகத்தில் ஒரு கட்டத்தில் சில குடும்பங்கள் கையில் சாதியிடத்தில் அறிவு குவிப்பு, வலு பெருக்கம், செல்வக்குவிப்பு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் அவை சாசுவதாக நீடிக்க வேண்டியதில்லை. அவைகள் பகிர்ந்து (diffuse) அளிக்கப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் சுவாமி. அறிவோ அதிகார குவிப்போ செல்வமோ ஓரிடத்தில் என நிலைப்பெற்றுவிட்ட சமூகம் அழிந்துவிடும் என்றார். ”அதிபெளதிகா அதிதெய்விகா அத்யத்மிகா” (Adhibhautika, Adhidaivika, Adhyatmikaa) என்ற மூன்றுவகை துன்பங்கள் பற்றி அவர் குறிப்பிடுகிறார். இயற்கை பேரிடர்கள், சமூக தீமைகள், ஒருவரின் மோசமான உணர்ச்சி தூண்டல்களின் மூர்க்கம் ஆகியவற்றையே இவ்வாறு குறிப்பிடுகிறார். இந்த மூன்றையும் சமூகம் வெல்லவேண்டும். வெல்லவேண்டியது அவசியம் என்றார். அறிவிற் சிறந்தவர் சிலர் இருக்கலாம். உடல் வலு சிலரிடம் இருக்கலாம். ஆனால் இவை சலுகையாகிவிடக்கூடாது சமூக பயன்பாட்டிற்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும் என்றார். இயற்கை சார்ந்த வேறுபாடுகள் இருந்தாலும் சமுகம் எனில் சம வாய்ப்புகள் இருக்கவேண்டும் . இன்று பிராமண சிறுவன் கற்க ஓராசிரியர் போதும் எனில் சண்டாள சிறுவனுக்கு பத்து ஆசிரியர் தேவைப்படுகிறது என உறுதியான நடவடிக்கையின் (affirmative action) அவசியம் குறித்து பேசி நம்மை பிரமிக்க வைக்கிறார். அப்போதுதான் வாய்ப்புகள் நேராகும் என்கிறார். நீ அரசாள்கிறாய்- நான் செருப்பு தைக்கிறேன் என்பதற்காக. என்னைவிட நீ உயர்ந்தவன் என ஏற்பதற்கில்லை என்கிறார். எங்கு போனாலும் சாதி குழுக்கள் இருக்கின்றன. இதன் பொருள் சிலருக்கு மட்டும் உயர் சலுகைகள் என்பதாகக் கூடாது. ஒரே கடவுள்தான் நம் இருவரிடமும் உறைந்துள்ளார். பின் எதற்கு தனி உயர் சலுகை என கேட்கிறார். சுதந்திரம் என்பதுதான் வளர்ச்சியின் முதல் நிபந்தனை என திரும்ப திரும்ப அழுத்தமாக எடுத்துரைக்கிறார். புரோகித வர்க்கம் நாகரிகத்தின் வருகையாகவும், பொருட்களின் மீதான கருத்துக்களின் ஆதிக்கமாகவும் இருந்தது. மானுட வர்க்கம் அநீதி, சுயநலம், கபடத்திற்கு பலியானது. அதீத இயற்கையின் குரலுக்கு செவிமடுப்பது என்ற பெயரில் அறிவும் ஞானமும் புதியன காண்பதும் முடங்கின. ஆனால் இயற்கை எப்போதும் புத்தாக்கத்தைதான் வரவேற்கும். தானே பின்னிய சிலந்தி வலையில் அவ்வர்க்கம் மாட்டிக்கொண்டது. தாங்க முடியாத எண்ணற்ற சடங்குகள், ஆசாரங்கள், பழக்கங்கங்கள் என சமூகத்தை இரும்பு சட்டகத்தில் வைத்துவிட்டது. அவநம்பிக்கையின் ஆழ் உறக்கமது. எனவே வலையை அறுத்தெறிய வேண்டும். அதன் அடித்தளத்தை ஆடவைக்கவேண்டும். பிராமணர்கள் மீது சமூகத்திற்கு நம்பிக்கை போய்விட்டது. தனக்கானகல்லறையை(SEPULCHRE) தன் கரங்களாலேயே கட்டிக் கொண்டுவிட்டது. தனக்கான சிதையை அதுவே மூட்டிக்கொள்வது சரியானதேயாகும். அரசனோ பாதி கடவுள்- பாதி மிருகமாக இருந்தான். அவனுக்கு தேவை என்றால் தனது கூரிய நகங்களால் அப்பாவிகளை பிளந்து இரத்தம் குடிக்கும் மிருகமாக இருந்தான். சமூகத்தேவைகள்தான் அரசனை பிறப்பித்தன. சிதறிகிடப்பவர்களை திரட்டி ராஜ்யம் அமைக்கும் பணி செய்யப்பட்டது. இன்பவேட்கைகளில் மட்டும் அவன் ஆழ்ந்துவிடவில்லை. கலை ,அறிவியல் ,சிற்பம் ,இசை,ஓவியம் என புத்தாக்கங்களும் நடந்தேறின. தங்களின் சாகசங்களை உலகிற்கு உணர்த்தவேண்டிய தேவை இருந்தது. ஒப்பில்லாத இறை அவதாரம், இறைஏற்பாடு என தங்களை அவர்கள் காட்டிக் கொள்ளவும் செய்தனர். அரச கட்டளைக்கு பயந்து பல திறமையாளர்கள் தங்கள் கைவண்ணங்களை ராஜ விசுவாசத்திற்காக செய்யவேண்டியிருந்தது. நகரங்கள் எழுந்தன. அரசர் குடிகளுக்கு தந்தையெனப்பட்டார். கேள்வி கேட்கமுடியாத பணிவு கோரப்பட்டது. எதிர்ப்பு ராஜதுரோகம், பாவம் என்று சொல்லப்பட்டது. தண்டனைக்கு உரியதானது. ஆனால் சமூகம் வலுவாக இருக்குமிடத்தில் ‘கோவிற்கு’ எதிராக போராட்டங்கள் வெடித்தன. பல ராஜ்யங்கள் இன்று மியூசியத்தில் என்கிறார் விவேகானந்தர். வைஸ்யர்கள் அனைத்து தங்கமும் தங்களிடத்தில் என்றனர். நாங்களும் அதிகாரமிக்கவர்கள் என உரிமைகோரலாயினர். அதே நேரத்தில் பிராமணர். சத்திரியர் குறித்த அச்சமும் அவர்களிடம் இருந்தது. தங்கள் வர்த்தகத்தை நாடு கடந்து எடுத்து சென்றனர். கலாச்சாரம், அறிவுத்திறனும் கூடவே சென்றது. ருஷ்யா சீனாவில் சூத்திரர் ஆட்சி எழும் என கணித்தவர் விவேகானந்தர் என அவரது சகோதரர் புபேந்திரநாத் தத்தா தனது பதிவாக செய்துள்ளார். சூத்திரர் எனும் உழைக்கும் மக்கள் எழுவர்- shudra hood உருவாகும் என்றார். சோசலிசம், அனார்க்கிசம், நிகிலிசம் என பேசப்படுவதெல்லாம் சமூக புரட்சியின் வாகனகங்களாக அமையும் என்றார் ( ருஷ்யா அனார்க்கிஸ்ட்களை சந்தித்து உரையாடியவர் விவேகானந்தர்) சூத்திரர் ஆட்சியில் அனைவருக்கும் கல்வி பரவும். ஆனால் தனித்த அறிவுஜீவிகள் குறைவர் என்றார் சுவாமி. முகலாயர் ஆட்சியில் குரான் செல்வாக்கு பெற்றது, சமஸ்கிருத செல்வாக்கு குறைந்தது (இந்துக்களில் அரசு வேலைகளில் பெர்ஷியன் தெரிந்தவர் வைக்கப்பட்ட சூழல் இருந்தது) புத்தர்களின் வீழ்ச்சிக்கும் முகலாயர் வருகைக்கும் இடையில் ராஜபுத்திரர் ஆட்சி எழுந்தாலும் அது வெற்றிபெறவில்லை என்கிறார். சங்கரர் ராமானுஜர் தத்துவங்கள் உறங்கின. பின்னர் மாராட்டியர், சீக்கியர் விழிப்புணர்வு ஏற்பட்டது. அக்பர் போன்றவர் மக்களுக்கு நல்வாழ்வை தந்தனர் என சுவாமி குறிப்பிட்டு சொல்கிறார். அதே நேரத்தில் பலர் அவுரங்கசேப் போல இருந்தனர் என்ற குறிப்பையும் தருகிறார். யுதிஷ்ட்ரர், ராமர், அசோகர், அக்பர் ஆகியோரை தெய்வநிகர் அரசர்கள் என பட்டியலிடுகிறார். எண்ணிக்கையில் அதிகமிருந்தும் சூத்திரர் ஆட்சி ஏன் அமையவில்லை என்ற விவாதத்திற்கு சில காரணங்களை பதிலாக தருகிறார். அவர்களுக்கு நண்பர்கள் இல்லை. எப்போது அடி விழும் எனக் கூட அறியாமல் உழைக்க வேண்டும். தாங்களும் மனிதர்கள்தான் என்கிற உணர்வு அவர்களிடமே வற்றிப்போன நிலை. உயர்வர்க்கத்தை அண்டித்தான் வாழ்க்கை என்ற நிலை. மேற்கின் கல்வி நுழைந்த நிலையிலும் அவர்களிடம் போகாத சூழல்- கற்கவோ, சொத்துரிமை பெறவோ வாய்ப்பில்லாத வாழ்க்கை நிலைமைகள் என பல்வேறு தடைகளை அவர் பட்டியலிடுகிறார். நம்பிக்கை இருக்கிறது அவர்கள் எழுவர். காணமால் அடிக்கப்பட்ட அந்த உழைக்கும் மனிதனை மீண்டும் நாம் கண்டறிவோம் என கடமை உணர்த்துகிறார் சுவாமி விவேகானந்தர். சுரண்டல் வடிவங்களை பற்றியும் பிராமண வர்க்கம், சத்திரிய வர்க்கம், வைஸ்ய வர்க்கம் எவ்வாறு சுரண்டியது என விவரிக்கிறார். எந்த வர்க்கத்தின் சக்தியும் அதிகமாக குவியும்போது சுரண்டல் தீவிரப்படும் என்கிறார். கடவுள் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார். ஓருயிர் மூலம் அவர் பிற உயிரை காயப்படுத்துவதில்லை என்கிற கீதையின் (அத் 18 பாடல் 28) பாடலை உயிர்களை சமநோக்கு கொண்டு பார்க்கவேண்டும் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார். ஞானம், பலம், செல்வம் எதுவானாலும் அது பரவலாக்கப்பட வேண்டும் என்பதை பலமுறை சொல்கிறார். என்னுடையது என முத்திரை குத்திக் கொள்ளவேண்டாம் என உபதேசிக்கிறார். சூத்திரர் ஆட்சியில் சுரண்டல் இருக்குமா என்பதையும் அவர் விவாதிப்பது அவரது பார்வைதீர்க்கத்தை உணர்த்துகிறது. பின்வரும் கருத்து அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. விவேகானந்தர் இதை சொல்லியிருக்க முடியாது. அவர் அப்போது உயிருடன் இல்லை. ருஷ்ய புரட்சியின் போது லெனின் அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்றார். ஆனால் ஆகஸ்ட் 1918ல் சோவியத்துகள் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டவை என உத்தரவு போட்டார். கட்சித்தலைவர்களின் புரட்சிகர குழு சோவியத்துக்களை நடத்தும் என்றனர். தொழிலாளர் சங்கங்கள் கட்சி, அரசாங்க தலைமைக்குள் கொணரப்பட்டன. அவர்களுக்கு அரசாங்கம்தான் வழிகாட்டுகிறது. உழைப்பவர் அதிகாரம் என்பதில் நாம் கவனம் கொள்ளவேண்டிய ஜனநாயக அம்சமாக இதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்திய சமூக மாற்றத்தில் மதத்திற்குரிய பங்கு குறித்து சுவாமி பேசுகிறார். இந்தியாவின் மொழிபோல மதம் இருக்கிறது என்கிறார். சார்வாகர், ஜைனர், புத்தர், சங்கரர், ராமானுஜர், கபீர், நானக், சைதன்யர், பிரம்ம சமாஜ், ஆர்ய சமாஜ் என அனைவருமே சமூக தேவைகளுக்காகவே பயணப்பட்டனர். ராமானுஜர், கபீர் போன்றவர்கள் அடித்தட்டு மக்களுக்காக பேசினர். சங்கரர் சாதி ஏற்படுத்துவராக இருந்தார். உலகில் சாதியிருக்கலாம். ஆனால் இங்கு இருப்பது போல் எங்கும் இல்லை. சாதி தவிர்க்க முடியாதென்றால் எனக்கு டாலர் சாதி தேவையில்லை என்கிறார். கலாச்சார மேன்மையும், பரிசுத்தமும், தியாகமும் நிறைந்ததுதான் தேவை என்றார். வேதாந்தத்தில் சாதி ஏற்கப்படவில்லை என்கிறார். தொழிற்பாற்பட்ட (Trade Guild) வம்சவழி வளர்ச்சியில் சாதி உருவாகி, அரசியல் ஆட்சிகளால் கெட்டிப்பட்டுப்போனதாக விவேகானந்தர் தெரிவிக்கிறார். சாதிகள் இல்லாவிட்டால் நாம் எங்கே நின்றிருப்போம்- முகலாயர் அழித்திருப்பர்- அய்ரோப்பியர் ஆய்வேது எனவும் பேசுகிறார். அதே நேரத்தில் சாதி பிறப்பில் புனிதம் என்பது மாயைதான் என்பதை உறுதிபட தெரிவிக்கிறார். III தனிநபர்- சமூக உறவுகள் குறித்து சுவாமி விவாதிக்கிறார். தனிநபரை வியஸ்தி (vyashti) என்கிறோம். கூட்டாக எனும்போது சமஸ்டி (samashti) என அறிகிறோம். வியஸ்திக்கு எந்த அளவு உரிமை, சமஸ்டிக்காக எந்த அளவிற்கு தியாகம் என்பது ஒவ்வொரு சமூகமும் சந்திக்கும் பிரச்சனைகள். நவீன மேற்கு சமூகம் இந்த அலைகளில் அல்லாடுகிறது. சமூக மேலாண்மைக்காக தனிநபர்களின் தியாகத்தை சோசலிசம் என பேசுகிறோம். மேற்கு நாடுகளில் ‘லிபர்ட்டி’ வளர்ச்சிக்கான முன் நிபந்தனையாக இருக்கிறது. அதே நேரத்தில் வலுத்தவர் வாழவும் இளைத்தவர் வீழவும் மேற்கு ஜனநாயகம் வழிவகுத்துள்ளது- அரசின் பெயரில் மக்கள் சுரண்டப்பட்டு சிலர் செல்வந்தர் ஆகின்றனர் என்கிற பார்வையை விவேகானந்தர் வைக்கிறார். இதை அவர்கள் ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்ட ஆட்சி, நாடாளுமன்றம் என்றெல்லாம் அழைக்கின்றனர் என கேலி செய்கிறார். அனார்க்கிச தாக்கம் அவரிடம் இருந்திருக்கலாம். சோசலிசத்தில் நன்மை- தீமைகள் என அவர் விவாதிக்கிறார். (இப்பகுதிக்கு நூல்தொகை காட்டப்பட்டுள்ளது) அனைவருக்கும் கல்வி, சில வசதிகள் கிடைக்கும். ஆனால் மக்கள் எந்திரங்களாக்கப்பட்டுள்ளனர். சுய அறிவுத்திறனற்று இரயில் என்ஜின்கள் போல் ஓடுகிறார்கள், திரும்புகிறார்கள். உயிர்த்துடிப்பு இல்லை. சுயவிருப்பம் சார்ந்த துள்ளல் இல்லை. புதுமை விழைவில்லை. புத்தாக்க அறிவுமேன்மைக்கான தூண்டுதல் இல்லை (No Stir of Inventive Genius) என கடுமையான விமர்சனங்களையும் அவர் அடுக்குகிறார். எந்த நாட்டின் அனுபவம் கொண்டு அவர் இதை தெரிவிக்கிறார் என தெரியவில்லை. சுவாமியை சோசலிஸ்ட் என அழைக்கலாமா என கேள்வி அவரிடம் எழுப்பப்படுகிறது. அதற்கு அவர் தயக்கமின்றி தனது பதிலை தருகிறார். அனைத்து மக்களுக்கும் பட்டினியைவிட அரைத்துண்டு ரொட்டி கிடைப்பது மேலானது என்கிற சமூக முறைக்காக நான் சோசலிஸ்ட் ஆக இருக்கிறேன். (I am a Socialist not because I think it is a perfect system, but half a loaf is better than no bread). அந்த முறை மிக நேர்த்தியானது என்பதற்காக அல்ல என தனது நிலையை அவர் தெளிவுபடுத்துகிறார். அவரின் வெளிப்படையான விமர்சனம், குறிப்பிட்ட கட்டத்தில் சரியான ஒன்றுடன் தன்னையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் நேர்மை கொண்டாடப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. அவர் காணவிரும்பும் இலட்சிய அரசு என்பது குறித்த வினாவிற்கு அவரின் கற்பனை சித்திரத்தை அவர் வழங்குகிறார். மார்க்சிய வகைப்படுத்தலில் சமூக மாற்றத்தை அவர் விளக்கவில்லை. இந்திய வருண முறையில் அவர் எடுத்துரைக்கிறார். அதை வர்க்கம் என்ற சொல்லாக்கி அவர் விளக்குகிறார். நால்வகை வர்க்கத்தாரின் தீமைகள் ஏதுமற்ற அவர்களின் உயர் அடையாளங்களை இணைத்துக்கொண்ட- புரோகித அடையாளமான அறிவு- சத்ரிய போர்க்குண பலம்- வைஸ்யர் வணிக நியாயம்- சூத்திரர்களின் சமத்துவ உணர்வு என கட்டப்படும் அரசுதான் லட்சிய அரசாக அமையும் என அவர் பேசுகிறார். அரசின் தலைமைபாத்திர வர்க்கம் என்கிற மார்க்சிய சொல்லாடலை அவரிடம் நாம் எதிர்பார்க்க முடியாது. அரசு பாதுகாப்பில் என எப்போதும் இயங்கும் சமுகத்தில் அரசில் வளர்ச்சி நின்றுபோய்விடும். வலிமையான மனிதனை குழந்தைபோல் பாவித்தால் என்ன ஆகும்? அந்நாடுகள் அழிந்து கூட போகும் என தெரிவித்த அவரின் பார்வைதீர்க்கம் ஆச்சர்யமானது. தேர்தல், பொறுப்பேற்றல், விவாதம் அச்சமுகத்தில் தேவை என்கிறார். பரவலாக வேலையை பொறுப்பாக்கிக் கொள்ளும் பழக்கம் தேவை. . உழைப்பில், சொத்தில் மட்டுமில்லாது நிர்வாகத்திலும் பங்கிருந்தால்தான் நல்ல வளர்ச்சி ஏற்படும் என்கிறார். நமது நாட்டில் நாம் செய்ய வேண்டிய கடமையாது என்ற விவாதத்தை தொடர்ந்து செய்தவர் விவேகானந்தர். நமது பெரும்பான்மை மக்களுக்கு கல்வி, உணவு, பராமரிப்பு உடனடி கடமை. வளம் நிறைந்த நாட்டில் பட்டினி என்ற முரணை ஏற்பதற்கில்லை . மக்களுக்கு கற்று கொடுத்தால், பொருளாதாரம் உட்பட பிரச்சனைகளை அவர்கள் தீர்த்துக்கொள்வர். நாடாளுமன்றத்தில் நல்ல சட்டங்கள் வருவதால் மட்டுமே நாடு சிறந்துவிடாது. ஆன்மிகத்தன்மையும் வேண்டும். இதன் பொருள் மூடநம்பிக்கைகளை சுமக்கவேண்டும் என்பதல்ல என நேர்படுத்துகிறார். அவரின் பரிந்துரை வேதாந்தம். பிராமணர் அல்லாதவர்கள் சமஸ்கிருதத்தை கைவிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தவர் அவர். புரோகித வர்க்கத்தின் ஏகபோகத்திலிருந்து அதை மீட்க அவர் விழைந்திருக்கலாம். இளைஞர்கள் ஆற்றல்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அவர்களை செயலுக்கு உந்தி தள்ளியவர் விவேகானந்தர். புரட்சியின் சக்தி என அவர்களை கருதினார். அவர்களுக்கான சமூக கடமையை வலியுறுத்தி நிறைவேற்ற அறைகூவல் விடுக்கிறார். நம்பிக்கையற்ற நிலையில் உள்ள நம் மக்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள். பணம் உள்ளவர்களை நிமிர்ந்து பார்த்திருக்க வேண்டாம். அனைத்து வேலைகளையும் செய்துவரும் ஏழைகளை நிமிர செய்வீர். அவர்களுக்கு தீர்வை கொணருங்கள். அவர்களுக்கு விஞ்ஞானம, இலக்கியம் கற்பியுங்கள். அவர்கள் இல்லாமல் பணக்காரர்களுக்கு வாழ்வேது? அவர்கள் எழவேண்டும் . எழுவார்கள். உங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள். இதில் காலதாமதம் வேண்டாம். இளைஞர்களே ! இதுதான் உங்கள் mission என செயலுக்கு அழைக்கிறார். தேசபக்தி எனும் நம்பிக்கை குறித்து பேசுகிறார். இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அந்த உணர்வு பெருகவேண்டும். அன்பு திறக்காத கதவு என ஏதுமில்லை. அவர் மேற்கோள் ஒன்றை காட்டுகிறார். ”துறவிகள் தூற்றட்டும் அல்லது போற்றட்டும். அதிர்ஷ்ட தேவதை வரட்டும்- வராமல் போகட்டும். சாவு இன்று வந்தாலும் சரி- நூறு ஆண்டுகள் தள்ளிபோனாலும் சரி. நான் ஒருபோதும் உண்மையிலிருந்து அங்குலம் கூட விலகமாட்டேன் என்ற உறுதிப்பாடு கொண்ட புரட்சிகர மனிதன் எழுந்து வரட்டும்” பார்திஹரி என்கிற மன்னனின் உண்மைக்காக நிற்கும் வைராக்கிய வரிகள் அவை. லாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை [] லாலா லஜ்பத்ராய் 1865 ஜனவரி 28ல் பெரோஷ்பூர் மாவட்டத்தில் துடிகே என்கிற பகுதியில் பிறந்தார். தாய் குலாப்தேவி. தந்தையார் பள்ளி ஆசிரியர். தந்தைக்கு உருது, பெர்ஷியன் புலமை இருந்தது. லஜ்பத்ராய்க்கு 12வது வயதில் திருமணம் முடிக்கப்பட்டாலும் கல்விக்கு பாதிப்பு ஏற்படவில்லை. பள்ளிப்படிப்பு லூதியானாவிலும், கல்லூரி படிப்பை லாகூரிலும் முடித்தார். . பின்னர் சட்டத்தேர்வு எழுதி வக்கீல் தொழிலில் இறங்கினார் லாகூரில் பிரம்ம சமாஜ், ஆரிய சமாஜ் தொடர்பு அவருக்கு கிட்டியது. பண்டிட் குருதத் வித்யார்த்தி, லாலா ஹன்ஸ்ராஜ் ஆகியோர் ஆரம்ப வழிகாட்டிகளாக இருந்தனர்.. முதலில் அவருக்கு பெர்ஷியன் உருது மொழிகள்தான் பயிற்சியானது. கல்லூரியிலும் அவர் பெர்ஷியன் - அரபி தான் படித்தார். இந்தியை அவர் அறியவில்லை. ஆனால் அரசியல் சூழல் அவரை இந்தியின் பெரும் ஆதரவாளனாக மாற்றிவிட்டது. உருதுவை எதிர்த்து பொதுக்கூட்டங்களில் பேசத்துவங்கினார். பண்டிட் குருதத் லஜ்பத்ராய் சமஸ்கிருதம் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். அம்மொழியை அவர் அதிகம் கற்க முடியாவிட்டாலும் இந்து என்கிற அழுத்தமான உணர்வு ஏற்பட அது வழிகோலியது. பஞ்சாபி என்கிற பத்ரிக்கையை லஜ்பத் உட்பட பலர் ரூ1000 கொடுத்து துவங்கினர். சர் வில்லியம் வெட்டெர்பர்னுடன் ஏற்பட்ட தொடர்பு 1904ல் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் நோக்கி லஜ்பத்ராயை அழைத்து சென்றது. 1905 பிப்ரவரியில் கோகலேவுடன் நட்பு ஏற்படுகிறது. லாலா கங்கா பிரசாத் என்கிற உதவி கலெக்டருடன் லஜ்பத் சிலோன் செல்கிறார். கங்கா ஆர்யசமாஜியாக செயல்பட்டு வந்தார். இப்பயணம் மங்களூர், கோழிக்கோடு, கண்ணனூர், மாஹே வழியாக இருந்தது. ஒருவார கப்பல் பயணத்தில் உணவு பிரச்சனையானது. முதல்முறையாக ஹோட்டலில் தங்கி அய்ரோப்பிய உணவை எடுத்துக்கொள்ளும் அனுபவமும் ஏற்பட்டது. சிலோனில் சீதையை இராவணன் சிறைவத்த இடம் என சொல்லப்பட்ட இடத்தையும், அசோகரின் மகன் மரம் நட்ட இடத்தையும் தான் பார்த்ததாக லஜ்பத் பதிவு செய்துள்ளார். திரும்ப வருகையில் மதுரை, ராமேஸ்வரம் கோயில்கள் பார்த்துவிட்டு மதராஸில் திரு கி சுப்பிரமணியன் வீட்டில் தங்கி தென்னிந்திய உணவுகளை சுவைத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். லஜ்பத்ராய் லாகூருக்கு தனது 31ஆம் வயதில் குடியேறினார். அவர் லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடர்ந்தார். . சமாஜில் ஹன்ஸ்ராஜ், முன்ஷிராம் ஆகியவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. லஜ்பத் ஹன்ஸ்ராஜ் பக்கம் நிற்கிறார். செப்டம்பர் 1893ல் ஆர்யசமாஜ் கோயில் ஒன்றை எழுப்பிட பெருமுயற்சிகளை லஜ்பத் எடுத்தார். தயானந்தரின் ஆங்கில வேதப்பள்ளி ஒன்றை ஹன்ஸ்ராஜ், லஜ்பத்ராய் நிறுவி ஆசிரியர்களாகவும் பணிபுரிகின்றனர். அந்நிறுவனம் 1892ல் கல்லூரி அளவிற்கு உயர்கிறது. அதன் செயலராக இருந்து அப்பணியை திறம்பட லாலாஜி கையாள்கிறார். 1896-97ல் மத்தியப்பகுதி மாநிலங்களில் பஞ்சம் ஏற்பட்டது. வறுமையிலிருந்து தப்பிக்க பலர் கிறிஸ்துவ மதம் மாறினர். ஆர்ய சமாஜியின் தொண்டர் என்கிற வகையில் லாலாஜிக்கு இந்நிகழ்வு வருத்தத்தை ஏற்படுத்தியது. பிலாஸ்பூர், ஜபல்பூர், பெடுல் போன்ற மாவட்டங்களில் கைவிடப்பட்ட 250 குழந்தைகளை காப்பாற்ற லாலாஜி நிதி திரட்டினார். அமிர்தசரஸ், பெரோஷாபூர், லாகூர் போன்ற இடங்களில் ஆர்ய சாமாஜ் நடத்திவந்த அநாதை இல்லங்களில் அக்குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவினார். ஆர்ய சமாஜின் பஞ்சாப் நிவாரண கமிட்டியின் பொதுச்செயலராக லாலாஜி பொறுப்பேற்று பாராட்டினைப் பெற்றார் கர்சான் பிரபுவின் கொள்கைகளை லாலாஜி தாக்கத்துவங்கினார். 30 கோடி மக்களுக்கு மேலாக தன்னை நினைத்துக்கொண்டு ஆளும் அந்நிய ஆட்சி சொந்த நாட்டில் அதன் மக்களை இரண்டாம்தர மக்களாக நடத்துவதை சகிக்க முடியவில்லை என்று பேசலானார் . இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பதை அவர் சொல்லத்துவங்கினார். மதராஸ், பம்பாயில் இதற்கான ஆர்வம் தெரிகிறது. ஆனால் வட இந்தியாவில் ஒற்றுமை உணர்வு வரவேண்டும் என்றார். இந்துக்கள் ஒற்றுமைக்காக நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் கல்வி பெறவேண்டியதன் அவசியம் உணரப்பட வற்புறுத்தினார். வங்கத்திலிருந்து உயர்கல்விக்கு லண்டன் சென்றவர்கள் 10 பேரில் இருவர் முகமதியாராக இருப்பதை அவர் வரவேற்றார். சுதேசி இயக்கத்தில் உள்ளவர்கள், வர்த்தக பெருமக்கள் அடுத்த 5 ஆண்டிற்கு நமக்கு தேவையான தொழில் வளர்ச்சி எவ்வாறு அமையவேண்டும் என்பதை திட்டமிட்டு சொல்லவேண்டும் என்றார் லஜ்பத். 1907 சூரத் காங்கிரசில் திலகர் உட்பட லஜ்பத் காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என கருதினர். ஆனால் கோகலே தனக்கு லஜ்பத்ராய் மீது மரியாதை இருந்தபோதிலும், தற்போதைய சூழலில் நிதானமான கருத்துடைய மிதவாதிகளிலிருந்து ஒருவர் வரவேண்டும் என கருதினார். ராஷ் பிகாரி கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டில் கருத்துவேறுபாடுகளை குறைப்பதற்கு முயற்சித்தவர்களில் லஜ்பத்ராயும் ஒருவர். அவர் ஆரம்பத்தில் மிதவாதிகள் பக்கமே நின்றார். லண்டன் சென்ற லஜ்பத்ராய் தாயகத்திற்கு மார்ச் 1909ல் திரும்புகிறார். பஞ்சாபி இதழில் காங்கிரஸ் இயக்க முரண்பாடுகள் எழுதப்பட்டு வந்தன. காங்கிரஸ் அமர்வை லாகூரில் நடத்துவது என்பது உசிதமல்ல என்பது இந்துக்கள் கருத்து என லஜ்பத் தெரிவித்தார். காங்கிரசில் பல முசல்மான்கள் இணைந்து பணியாற்றவில்லை என்பதை கணக்கில் கொள்ளவேண்டும் என்றார். பெரோஷாமேத்தா, கோகலே மீது மரியாதை இருந்தாலும் அவர்களைப் போன்றவர்கள் காங்கிரசை சில படித்த இந்துக்களின் கட்சியாக மாற்றுகிறார்கள் என்கிற விமர்சனம் லஜ்பத்ராயிடம் இருந்தது. கோகலேவின் தேசபக்தி அபாரமானது என்றாலும் 1907 உடைவிலிருந்து அவர் பின்பற்றிவரும் நடைமுறைகளை லஜ்பத் கேள்விக்கு உட்படுத்தினார். திலகர் மீதும் தவறு இருக்கிறது. அவர் முன்நின்று இயக்கத்தை தலைமை தாங்க முன்வராமல் சில மூர்க்கத்தனமானவர்கள் பின் நிற்க துவங்கிவிட்டார் என லஜ்பத் கருத்தை வெளியிட்டார். மிதவாதிகள்பெரும்பான்மை என நினைப்பதால் அவர்கள் காங்கிரஸ் அமைப்பிற்கான , நிர்வாக பொறுப்பை வைத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் சிறுபான்மை தீவிரவாதிகள் உள்ளே வந்து கொள்கைகளில் தங்கள் தாக்கத்தை உருவாக்குவதுதான் சுதேசி இயக்கத்திற்கு நல்லது என சூரத் வேறுபாடுகளுக்கு பின்னர் லஜ்பத் கூறினார். திலகரை நாடு கடத்துவதற்கு கோகலேவே காரணம் என பேசுவது முட்டாள்தனமானது. புத்தியுள்ள எவரும் இப்படிப்பட்ட குற்ற சாட்டுக்களை நம்பப்போவதில்லை என்றார் லஜ்பத். பெருத்த அவநம்பிக்கைகளுடன் இரு பிரிவாக செயல்பட்டுவந்தால் எவ்வாறு ஒன்றுபடமுடியும். மிதவாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் செயல்படுவது சரியாக எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினார். காலம்தான் நம்மை குணப்படுத்தும். அதுவரை பகைமையை அதிகப்படுத்தும் கருத்துக்களை பேசாமல் இருப்போம் என்கிற பொது அறிவுரையை அவர் தந்தார். இந்தியாவின் மத, சமுக, அரசியல் நிலைமைகள் தனியானதாக இருக்கிறது. பண்டைய நாகரீகங்கள் எனப்படும் கிரேக்க, ரோமன், எகிப்தியன், பெர்சியன், பாபிலோனியன் ஆகிய எதுவும் இந்திய ஆர்ய நாகரீகம் போன்ற பல்வகைத்தன்மையை- பெறவில்லை எனலாம்.. இங்குள்ள இந்துக்கள், முசல்மான்கள் ஒரே இனத்தவர்கள். அவர்களிடம் ஒரே இரத்தம்தான் ஓடுகிறது. ஒரே ஆர்யன் ஸ்டாக் சார்ந்தவர்கள். திராவிட மொழிகள் கூட ஆர்யன் தாக்கம் கொண்டவை எனவும் லஜ்பத் எழுதினார். இந்தியாவிற்கு சில நல்லெண்ணம் கொண்ட ஆங்கிலேயர்களால் நவீன கல்வி அறிமுகமாகியுள்ளது. ஆங்கிலவழி என்பதில் சில எதிர்மறை விளைவுகள் இல்லாமல் இல்லை. ஆனாலும் பலன் கிடைத்துவருகிறது என்பதை மறுக்கமுடியாது. இந்திய பொதுவாழ்வை எப்படி இணக்கப்படுத்துவது, அர்ப்பணிப்புடன் இளைஞர்களை ஈடுபடுத்துவது என்பது மிக முக்கிய கடமையாகிறது. ஆர்யசமாஜ் உலக முழுதும் உள்ளது. தேசிய இன வேறுபாடுகள் பார்க்காதது.. வேதமதம் உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வை தரக்கூடியதாக இருக்கிறது. நாட்டை விடுவிக்கும் உயர்த்தும் சக்தியாக ஆர்யசமாஜ் விளங்குகிறது என்றார் லாலாஜி. அதனால் சட்டமற்ற நிலைமைகளை, அராஜகத்தை அங்கீகரிக்க இயலாது என்றார். தனிமையிலும், பொதுவாழ்விலும் சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் என்பதை அது கோருகிறது. இளைஞர்கள் சில மத நூல்களை படித்துவிட்டு சச்சரவுகளை உருவாக்குவது ஏற்புடையதல்ல. முரண்பாடுகளை உருவாக்காத மதவிஷயங்களை பாடங்களில் மாணவர்களுக்கு சேர்ப்பதில் தவறில்லை என கருதினார் லஜ்பத். அவை விரிந்து பரந்த உண்மைகளை பேசுபவையாக இருக்கவேண்டும் (broad religious truths ) என்றார். வறட்டு கோட்பாடுகளாக அமைந்துவிடக்கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேதப்பாடல்கள சிலவற்றை ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் குழந்தைகள் மனனம் செய்வது சிறப்பானது எனக் கருதினார். துறவு- துறவறம் குறித்த எண்ணங்கள் நமது வளர்ச்சியை மிகவும் பாதித்துவிட்டது. உலகம் மாயை என சொல்வது, செக்யூலர் நலன்களைவிட துறவறம் உயர்ந்தது என்று பேசுவதெல்லாம் கொடுரமானது. முதிர்ச்சியில்லாதவர் விளக்கங்களில் உபநிடதங்கள் சிக்கிவிடக்கூடாது . நடைமுறை வாழ்க்கை பற்றி அறியாதவர் அதை சரியாக விளக்க முடியாதென்றார். கட்டுமஸ்தான உடல்வளர்ச்சி ஆரியகுமாரர்கள் பெறவேண்டிய பயிற்சி. தங்கள் உணவு பழக்கங்களில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கவேண்டும். மேற்குநாடுகளின் உணவுமுறையை காப்பியடிப்பது உகந்ததல்ல அருந்தக்கூடியவற்றில் நமது பாலை விடுத்து ஒயின், காபி, டீ என செல்வது ஏற்புடையதல்ல என்றார் லஜ்பத். தேர்வில் வெற்றி என்பதுதான் திறமை என கருதப்படுகிறது. திறமை என்பது தேர்வுடன் நிற்பதல்ல. விளையாட்டுத்திறன் மிக அவசியம். உடல் தகுதி மிக முக்கியமானது என்கிற பொதுப்புத்தி நமக்கு தேவைப்படுகிறது . பெற்றோர்கள் முட்டாள்தனமாக சொல்கிறார்கள் என்பதற்காக சிறுவயதில் திருமணம், கட்டாய திருமணம் என்பதை நம் இளைஞர்கள் ஏற்ககூடாது. பள்ளிகளில் சக மாணவர்களுக்கு குழந்தை திருமணம் என்பதை அறிந்தால் அதை தடுக்க ஆர்யகுமாரர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார் அவர். சாதிதடைகளை தாண்டி, படித்தவர் பாமரர் என வித்தியாசமில்லாமல் விளையாட்டுக் கூடங்களில் நமது இளைஞர்கள் திரளும் பழக்கம் உருவாகவேண்டும். ஆர்யகுமார சபாக்கள் மல்யுத்தம், பிற விளையாட்டுப் போட்டிகளை நடத்தி விளையாட்டுதிறனை ஊக்குவிக்கவேண்டும் என வலியுறுத்தினார். உணவிற்கே வழியில்லாமல் பள்ளிக்கு வரமுடியாமல் போகும் குழந்தைகளுக்கு உணவு உத்தரவாதம் தந்து கல்விக்கூடம் வருவதற்கு சபாக்கள் உதவவேண்டும் என்ற வேண்டுகோளை இளைஞர்களுக்கு விடுத்தார் லஜ்பத். ரெளடிகளிடமிருந்து பெண்குழந்தைகளை பாதுகாப்பதற்கு ஆர்யகுமார சபா முன்வரவேண்டும் . சேவா மண்டலிகளை அமைக்கவேண்டும் . ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று ஆரம்ப கல்விக்கு உதவி செய்தல், பஞ்சம் பாதிப்பு நிவாரணவேலை, தொற்றுநோய் பாதிப்பறிந்து தேவையான மருந்துகளை கொண்டுசேர்த்தல் போன்றவற்றை இளைஞர்கள் செய்யவேண்டும் என்றார் இளைஞர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக மாற்றிட தனது வேலைத்திட்டம் உதவும் என லஜ்பத் கருதினார். ஆர்யசமாஜ் என்பது அமைப்பு என்பதால் வேலை செய்யும்போது கருத்துவேறுபாடுகள் வரலாம் .மேல் அமைப்பு, கீழ் அமைப்பு என பிரச்சனைகள் வரலாம். முடிந்தவரை நமக்கு இடப்பட்ட வேலைகளில் கவனம் குவித்தால் பிரச்சனைகள் குறையும் என்றார் லஜ்பத். கிளைகள் உயிர்ப்பற்றதாக இருந்தால் அதற்கு எவ்வித அர்த்தமும் இருக்கப்போவதில்லை. செயல்படாதவர் புலம்பலால் எந்தப் பயனும் விளையாது. யார் துடிப்புடன் செயல்படுகிறார்களோ அவர்தான் அமைப்பில் உயரமுடியும். என்னை விஞ்சிவிட்டாரே என்கிற குறைபேச்சுக்கள் உதவாது . அமைப்பு எனில் அதில் ஜீவன் உயிர்துடிப்பு அவசியம் என உணர்த்தினார் லாலாஜி. வர்ணாஸ்ரம் என்ற பெயரில் இங்கு தவறாகவே சொல்லித்தரப்பட்டுள்ளது. தன்னை உணர்தல் என்கிற பெயரில் சந்நியாசிகளும், சாதுக்கள் பலரும் சுயநலக்காரார்களாக இருந்துள்ளனர். வேலை கடினமானதாக இருக்கலாம். ஆபத்துக்கள் நிறைந்தும் இருக்கலாம். துன்பம் பற்றலாம். ஆனாலும் செய்தாக வேண்டும். நாட்டின் விருப்பமும், கடவுளின் விருப்பமும் அதுவே என இளைஞர்களுக்கு அவர் அறைகூவல் விடுப்பவராக இருந்தார். II ஒத்துழையாமை என்பதை லஜ்பத் அழுத்தமாக பேசினார். நம்மை பிடித்து அடக்கி ஆளும் அந்நிய அரசாங்கத்துடன் நாட்டில் உள்ள சிறந்தவர்களால், மூளை உள்ளவர்களால் ஒத்துழைக்கமுடியாது என்றார் லாலாஜி. பஞ்சாப் மாநில காங்கிரசின் தலைவராக இருந்தபோது நாக்பூர் காங்கிரஸ் அமர்வில் ‘தேர்தல்களில் பங்கேற்பு’ என்பதை லாலாஜி ஏற்கவில்லை. அதேநேரத்தில் காங்கிரசின் தீர்மானங்களை மாவட்டந்தோறும் எடுத்துசெல்ல அவர் தவறவில்லை. வகுப்புகளை புறக்கணித்து, அரசுவேலைகளை உதறி வாரீர் என அழைத்தார். அவ்வியக்கம் பஞ்சாபில் வெற்றிகரமாக நடக்க பெரும்பணியாற்றினார். பிரிட்டிஷ் சர்க்கார் மோதிலால், சி ஆர் தாஸ், லஜ்பத், ராஜேந்திரபிரசாத், ஜவஹர் போன்றவர்களை சிறையில் அடைத்தது. பல இடங்களில் சத்தியாக்கிரகிகள் தாக்கப்பட்டனர். அரசாங்க ஊழியர்கள் வேலையிழந்தனர். மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடரமுடியாமல் போனது. செளரி செளரா வன்முறை நிகழ்வு பிப்ரவரி 5 1922ல் நடந்தது. வன்முறையால் மனம் பாதிக்கப்பட்ட காந்தியடிகள் ஒத்துழையாமையை விலக்கிக்கொண்டார். மோதிலால், லஜ்பத் கடுமையாக இந்நடவடிக்கையை விமர்சித்தனர். லஜ்பத் காங்கிரஸ் கமிட்டிக்கு 72 பக்க கடிதத்தில் காந்தியின் நடவடிக்கையால் நாம் துடைத்தெறியப்பட்டுள்ளோம். காந்திக்கு இருந்த அதீத நம்பிக்கையால் அவரது தோழர்களுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியிது என எழுதி விமர்சித்திருந்தார். படித்த இங்கிலீஷ்காரர்களால்தான் நமக்கு விமோசனம் என்றால் அது வரப்போவதில்லை. நமது கோரிக்கைகள் பின்னால் நம் மக்கள் நிற்கிறார்களா என்பதுதான் அளவுகோல் என்றார் லஜ்பத். மக்களை அரசியல்படுத்தாமல் இன்றுள்ள காங்கிரஸ் தலைவர்களின் நடைமுறைகள் பலன் அளிக்கப்போவதில்லை என வெளிப்படையாக காந்தியின் மீதான தனது விமர்சனத்தை லஜ்பத் வைத்தார். நமது மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு வெகுஜனம் என்றாலே அலர்ஜி ஆகிவிடுகிறது என கேலி செய்தார் லஜ்பத். நம் மத்தியில் லட்சக்கணக்கான வருவாய் பெறும் சிலர் இருக்க, அய்ந்துக்கும் பத்திற்கும் அல்லாடும் ஏழை மக்களைப்பற்றி கவலை கொண்டு அவர்களை உயர்த்திட நடவடிக்கை வேண்டும் என்றார். எத்தனை தலைவர்கள் அம்மக்களின் மோசமான வாழ்க்கை சூழலை நேரிடையாக பார்த்திருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். அவ்வப்போது செய்யும் தர்மகாரியங்கள் போதும் என நின்றுவிடக்கூடாது. வக்கீல்கள் கேஸ்களுக்கு 1000, 5000 என சம்பாத்தித்துவிட்டு குளுகுளு மலைப்பிரதேசங்களுக்கு ஓய்விற்கு போகிறார்கள். விவசாயிகளும், அலுவலக ஊழியர்களும் 100, 200 கூட கிடைக்காமல் கடுமையாக உழைக்கிறார்கள். இந்த நாட்டில் விவசாயத் தொழிலைவிட வக்கில் தொழிலுக்கு முக்கியத்துவம் அவசியமா என கேள்வி எழுப்பினார் லஜ்பத். நமது படிக்காத பாமர உழைக்கும் மக்களுக்கு வேண்டியதெல்லாம் வேத உபதேசங்கள் அல்ல. சுய ஆட்சி என்றால் என்ன என்கிற ஆவேச பேச்சுக்கள் அல்ல. மாறாக படித்தவர்கள், வசதியுள்ளவர்கள் அவர்களுடன் முதலில் கலந்து உறவாடவேண்டும். உலக நாடுகளின் அனுபவங்களை வைத்துப்பார்த்தால், நமது மக்கள் ஒப்பீட்டளவில் முட்டாள்கள் அல்லர். அமைதியானவர்கள்தான் நிதானபோக்குடையவர்கள்தான். அவர்களின் ஆற்றலை தட்டிக்கொடுத்து வெளிக்கொணர நாம் உழைக்கவேண்டும். அவர்களுடன் நின்று அதற்காக ஒத்துழைக்கவேண்டும் என்றார் லஜ்பத். அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம் என்பதுதான் நாட்டின் தலையாய பிரச்சனைகள். பிரிட்டிஷ் அரசே இவற்றை உத்தரவாதப்படுத்து- இல்லையேல் வெளியேறு. எங்களை நாங்களே ஆண்டு கொள்கிறோம் என கடுமையாக எழுதினார் லஜ்பத். நமது அரசியல் போராளிகள் வாய்சவாடல்களை நிறுத்துவோம். மாவட்டந்தோறும் அமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும். அது ஆண்டுதோறும் பொருளாதார சர்வே ஒன்றை எடுத்து வெளியிடவேண்டும். குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதத்திற்கு அம்மாவட்ட மக்களுக்கு தேவைகள் என்ன, உணவு- உடை, உடல் ஆரோக்கியம் குறித்த கணெக்கெடுப்பீர். ஏதோ புள்ளிவிவரங்கள் நம் பசியை வறுமையை போக்கிவிடும் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார். அவை ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துவதற்கு உதவும். நமக்கும் தெளிவைத் தரும் என்றார் லஜ்பத். வெற்று வார்த்தைகளால் அல்லாமல் நமது தேசம் உண்மைகளால் நிரம்பட்டும் என்றார் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுயநலம் கொண்டது என்பதை முதலில் நாம் உணரவேண்டும். பிரிட்டிஷ் வகைப்பட்ட நீதி, விடுதலை பார்வை என்பதெல்லாம் நமக்கு உதவாது என்பதை அறிவோம் . ஏகாதிபத்திய நீதி என்பதை தாண்டி பிரிட்டிஷ் நியாயம் என ஏதுமிருக்கமுடியாது என்றார். அமெரிக்க, ருஷ்யாவில் உள்ளது போன்று சில நல்லெண்ணம் கொண்ட சர்வதேசவாதிகள் பிரிட்டனிலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக சிறுபான்மையினார். ஏதும் செய்ய இயலாதவர்கள் என வெளிப்ப்டையாக பேசினார் லஜ்பத். லிபரல்கள் ஆனாலும் டோரிகள் ஆனாலும் அவர்கள் ஏகாதிபத்தியத்தைதான் பிரதிபலிக்கிறார்கள். லிபரல் ஜனநாயகம் அதிகம் பேசுவர். நடைமுறையில் அவர்கள் டோரிகள் செய்வதைக்கூட செய்வதில்லை என பிரிட்டிஷ் அரசியல் சூழலை விமர்சித்தார். அங்கு சோசலிஸ்ட்களுடன் மட்டும்தான் நாம் சர்வதேசியம் பேசமுடியும் என்றார், இந்தியர்கள் தங்கள் உரிமைக்கு தாங்கள்தான் திரளவேண்டும் என்பதை உணரவேண்டும். இதை தெளிவாக தலைவர்கள் உணர்த்தவேண்டும். அங்குள்ள லிபரல்களை நம்பி இருக்கக்கூடாது என எச்சரித்தவர் லஜ்பத். . மைக்கேல் டயர் வருவதற்கு முன்பு 1914களில் இருந்த போலீஸ் நிர்வாகம் பொதுமக்கள் எண்ணத்திற்கு அஞ்சுவதுபோலவாவது இருந்தது. டயர் வந்தவுடன் நிலைமைகள் மிக மோசமாகிவிட்டது. காங்கிரஸ் இயக்கத்திலும் 1920 செப்டம்பர் முதல் 18 மாதங்களாக நிறைய தவறுகள் செய்துள்ளோம். அதை நாம் வெளிப்படையாக ஏற்று சரிசெய்திடவேண்டும் என காங்கிரஸ் கமிட்டிக்கு கடிதம் எழுதினார் லஜ்பத். காந்தியே பேசிவருவதுபோல் அவர் இமாலயத் தவறுகளை செய்துள்ளார். ஆனால் அவர் உண்மையாக நடப்பதற்கும் தியாகங்களை செய்வதற்கும், எளிமையாக இருப்பதற்கும், சகிப்புத்தன்மையையும் கற்றுக்கொடுத்துள்ளார். இதை சொல்வதற்கு தனக்கு தயக்கமில்லை என்றார் லஜ்பத். சக மனிதராக இருந்தாலும் அரசாங்கத்துடன் ஆனாலும் நேர்மையாக செயல்படுதல் என்பதை அவர் நடைமுறைப்படுத்த கற்றுத்தருகிறார் என்றார் லஜ்பத். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு முன்னுரிமை என்பதை அடுத்த உயரத்திற்கு அவர் கொண்டு செல்கிறார். நம்மில் பலர் அவர் வருவதற்கு முன்னரே விடுதலை இயக்கத்தில் பணியாற்றி வருபவர்கள்தான். ஆனால் அவரைப்போல சக்தியை, வசீகரத்தை, மக்களை ஈர்க்கும் ஆற்றலை சலியாத உழைப்பை வேறு எவராலும் தரமுடியவிலலை என்றார் லஜபத் . அகிம்சை என்பதை எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய நம்பிக்கை என தான் ஏற்கவில்லை என்றாலும் வன்முறை என்கிற பைத்தியக்காரத்தனம் தேவையில்லை . வன்முறைவழி முட்டாள்தனமானது, தேவையில்லை என்றார். பிரிட்டிஷ்கார்களை வெளியேற்ற வன்முறையை பிரயோகிக்கலாம் என்பது முட்டாள்தனமானது என அவர் எழுதினார். அதே நேரத்தில் அதை உஅயர் லட்சியமாக பேசுவதை அவர் ஏற்காமல் விமர்சித்தும் வந்தார். மகாத்மா தன் முன்மொழிவுகளை லட்சியமாக பெரும் உயரத்தில் வைப்பதால் நடைமுறையில் சாதிக்க முடியாமைக்கு அப்பால் அவை இருப்பதாக லஜ்பத் கருதினார். மனிதகுலம் தனது பாதையில் வன்முறையை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு பயணிக்கமுடியுமா என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். கிலாபத் பற்றி பேசும்போது முஸ்லீம்கள் மத்தியில் போதுமான அரசியல் உணர்வு வளரவில்லை என்கிற கருத்து அவரிடம் இருந்தது.. 1922 உறுப்பினர் கட்டணம் செலுத்தாமை குறித்துக்கூட காந்தி விசனப்படுகிறார். அவர் சொன்னதால்தான் ஆயிரக்கணக்கில் நாம் சிறைகளை நிரப்பினோம். சிறையை நிரப்ப சொல்லிவிட்டு சந்தா வரவில்லை என்றால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார் லஜ்பத். அரசியல் தலைவர் என்பவர் இராணுவ தளபதி போல் இருக்கவேண்டும் . கோழை நெஞ்சினனாக இருக்ககூடாது . விடுதலை போராட்டத்தில் முன்நிற்கும் தலைவர்கள் உடனுக்குடன் தங்கள் உள உணர்ச்சிகளை வெளிக்காட்டிவிடக்கூடாது. மகாத்மாவை நான் கோழை என சொல்லவில்லை . அவர் தனது கடமையின்போது உயிர்துறப்பாரே தவிர ஒதுங்கி நிற்பவர் அல்ல என்பது தனக்கு நன்றாக தெரியும் என லஜ்பத் எழுதினார். பிரிட்டிஷாரிடமிருந்து நம் நாட்டு முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் ஆட்சியை பிடித்துவிட்டால் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் முன்னேற்றம் கடுமையானதாகிவிடும் என்பதை உணர்ந்து அதை வெளிப்படையாக எழுதவும் செய்தார் லஜ்பத்ராய். இந்திய அதிகாரிவர்க்கம் பிரிட்டிஷ் அதிகாரிகளைவிட தாராள சிந்தனையும், சிறப்பான சேவையும் செய்துவிட போகிறார்களா என்ன என்ற கேள்வியும் அவரிடம் இருந்தது. முதலாளிகளும் நிலபிரபுக்களும் தாங்கள் பெறப்போகும் புதிய அதிகாரம் மூலம் விவசாயிகளை, தொழிலாளர்களை நசுக்கிவிடுவர் என்ற கவலையை அவர் வெளிப்படுத்தினார். இரட்டை ஆட்சிமுறை மோசமானது என்பது அவர் கருத்தாக இருந்தது. ஆனாலும் இரு முதலாளிகளையும் ஒரே நேரத்தில் அகற்றுவது கடினம் என்பது உணரப்படுகிறது, முதலில் பிரிட்டிஷ் முதலாளிகளை அகற்றுவோம் பின்னர் நமது முதலாளிகளிடம் கணக்கு பார்க்கலாம் என்கிற கருத்தையும் அவர் வேறு இடத்தில் பேசுகிறார். தேசங்கள் பிரச்சனையில் ஒருதேசம் பிற தேசத்துடன் கருணைகூர்ந்து நடக்கும் என எதிர்பார்க்கக்கூடாது என்பார் லஜ்பத். தனிநபர்கள் தூய உந்துதல்களின் செல்வாக்கில் செயல்படலாம். ஆனால் நாடுகள் அப்படி நடக்கமுடியாது என்றார்.. அவை அதிகாரத்தை நிர்பந்தமின்றி இழந்துவிடாது என்றார். டொமினியன் அந்தஸ்து என்பதெல்லாம் ஏற்புடையதல்ல, பரிபூர்ண சுதந்திரம் என்பதற்கு நிற்பவன் நான் என்றார் லஜ்பத். அதற்கு இரகசிய முடிவெடுத்தல்களும் வன்முறையும் கூட தேவைப்படலாம் என கருதினார். அந்நியர் ஆட்சி சாபம், குழப்பமானது , ஆனால் அந்நியர் ஆட்சியை வெறும் செண்டிமெண்ட்களால் மெலொ டிராமாக்களால் அகற்ற முடியாது என்றார். அந்தந்த வகுப்பார் தங்கள் மதம், அதன் நம்பிக்கைகள் என சொல்லி, அரசியலில் மதவேறுபாடுகளை பார்த்துக்கொண்டிருப்பது சரியான பாதையாகாது . அரசியல் களத்தில் ஒற்றை பற்றுறுதியுடன் மத வேறுபாடுகளை இணக்கப்படுத்தி முன்னேறுவது என்பதுதான் சவால். அதேபோல் ஒத்துழையாமை போன்ற அரசியல் நடவடிக்கைகளில் மத உரையாடல்களை கொணர்வது தவறானது. III 1920 செப்டம்பரில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் அமர்வில் லாலாஜி தலைவராக இருந்தார். அவர் தனது உரையில் பஞ்சாபில் நடக்கும் சீர்குலைவுகள், ஜாலியன்வாலாபக் படுகொளைகள் பற்றி குறிப்பிட்டார். இராணுவ சட்டம் பெயரில் ஜெனரல் டயர் நடத்திய கொடூரத்தை எடுத்துரைத்தார். திலகர் மறைவின் பேரிழைப்பை சுட்டிக்காட்டினார். பஞ்சாபியர்களின் சிறப்புகள் பிரிட்டிஷ் இராணுவத்தில் அவர்களின் சேவைகளை அவர் குறிப்பிட்டார். மைக்கேல் ஒ டயரின் அலங்கோல ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். ஜாலியன்வாலாபாக் கொடூரங்களை கண்டபின் நாம் தெளிவாக மாண்டேகுவிடம் தெரிவிக்க வேண்டும். உங்களின் வெற்று பேச்சுக்களால் யாரும் ஏமாறப்போவதில்லை. நீங்களும் ஏமாறவேண்டாம் என தெளிவாக சொல்லவேண்டும் என தனது தலைமையுரையில் அவர் வேண்டுகோள்விடுத்தார். டயர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், இராணுவசட்டப்படி கைதானவர்களை விடுவித்து வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும், பஞ்சாபில் உடைமைகளை இழந்தவர்க்கு நட்டஈடு வழங்கவேண்டும், லார்ட் செம்ஸ்போர்ட் பதவி விலகவேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அவர் முன்மொழிந்தார் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறவர் ‘கருத்தொற்றுமை’ இல்லாத அம்சங்களில் தனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லது. அவர் பக்கசார்பு எடுப்பவராக இருக்கக்கூடாது என்கிற அமைப்பு ஒழுங்கை அவர் சுட்டிக்காட்டினார். தானும் அவ்வறே நடக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். தீவிரமான அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுகின்ற எவர் மத்தியிலும் கருத்துவேறுபாடுகள் வராமல் இருக்காது. அரசியலில் ஒதுங்கி இருப்பவரும் தலைமைக்கு வரமுடியாது. முற்றிலும் பாரபட்சமற்றவர் என எவரும் இருக்கமுடியாது. இப்படியுள்ள சூழலில்தான் தீவிரமாக இயங்குபவர் மத்தியிலிருந்து தலைவரை தேர்ந்த்தெடுக்க வேண்டியுள்ளது. கருத்தொற்றுமை உள்ள விஷயத்தில் அவர்தான் காங்கிரசின் அடையாளமாக பேசுகிறவர் என்கிற அரசியல்தலைமை குறித்த விளக்கத்தை லஜ்பத் தந்தார். மாண்டேகு அமர்த்தியுள்ள பிரதிநிதிகளான ஷாஃபி, சர்மா, சாப்ருவிற்கு வாழ்த்துகள். ஆனால் அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கம் அமர்த்திய பிரதிநிதிகள், இந்திய மக்களின் பிரதிநிதிகள் அல்லர் என வித்தியாசப்படுத்திக் காட்டினார். இந்தியாவில் பெரும் வருவாயில் 40 சதம் இராணுவ செலவாகிறது. இப்பெருமகனார்களுக்கும் ரூ 80000 சம்பளம் தரப்படலாம். கோடானுகோடி மக்கள் வாடுகிறார்கள் என நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். ஜனநாயக சர்வாதிகாரம், முடியாட்சியைவிட மோசமானது என அறிவோம் என்றார். சைமன் கமிஷன் பகிஷ்கரிப்பு குறித்து கடுமையாக அவர் பேசினார். சைமன் திறமைசாலியாக இருக்கலாம். அந்த கமிஷனுக்கு இந்திய மக்கள், வரலாறு, அரசியல் பற்றி ஏதும் தெரியாது என்றார். இந்திய பிரச்சனை மிகப்பெரிது. சிக்கலானது. கடவுளே வந்தாலும் புரிந்து கொள்வது கடினமானது. எனவே கமிஷன் வந்து சில நாட்களில் புத்திபூர்வமாக பரிந்துரைகளை தந்துவிடமுடியாது. அவர்கள் நடவடிக்கை இரகசியமாக உள்ளது. பிரிட்டிஷ் அரசாங்க பிரதிநிதிகள் இந்திய மக்களின் பிரதிநிதிகளுடன் இருபக்க மரியாதையுடன் விவாதித்து உடன்பாட்டிற்கு வந்துவிட்டால் நாடாளுமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் சரியான நடைமுறையாக இருக்கும் என்றார். பிரிட்டிஷார் வெளியேறிவிட்டால் அராஜகம் நிலைக்கும் என அரசாங்க செயலர் சொல்கிறார் .உங்களுடைய துப்பாக்கிமுனை ஆட்சியைவிட எங்களின் அராஜக ஆட்சி சிறப்பாகவே இருக்கும். எனவே அனார்க்கி என்றெல்லாம் சொல்லி எங்களை பயமுறுத்ததேவையில்லை என்றார். 1928 அக்டோபர் 28ல் புனாவிலிருந்து சைமன் கமிஷன் லாகூர் செல்கிறது. லாகூரில் ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்களுக்கு அரசாங்கம் தடைவிதிக்கிறது. அக் 29 மாலையில் ஷேக் சிராஜுதின் பராச்சா தலைமையில் நகராட்சி பூங்காவில் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அக்டோபர் 30 கமிஷன் வந்த தினத்தில் நண்பகல் லாகூரில் ‘சைமன் திரும்பிப்போ’ முழக்கத்துடன் பெரும் ஊர்வலம் நடக்கிறது. ஊர்வல முகப்பில் லாலாஜி, மெளலானா ஜாபர் அலி இருந்தனர். போலீசார் அமைதியான ஊர்வலத்தின்மீது தடியடி நடத்தினர். லாலாஜி தாக்கப்பட்டார். அவரது நெஞ்சின்மீது விழுந்த தாக்குதல் சில நாட்களில் அவர் மறைவிற்கு காரணமாகியது. தன்மீது நான்கு குண்டாந்தடி தாக்குதல் நடைபெற்றதாக லாலாஜி தெரிவித்தார். இதயத்தில் விழுந்த அடி தொந்திரவு செய்வதாக கூடியிருந்தவர்களிடம் சொன்னார். ஹன்ஸ் ராஜ் கைகளில் இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. டாக்டர் முகமது ஆலம் முழங்கைகளில் குண்டாந்தடி தாக்குதல் நடந்திருந்தது. அவர் வலி பொறுக்கமுடியாத அளவில் அவதியுற்றார். அதேபோல் டாக்டர் சத்யபால் தாக்கப்பட்டிருந்தார். எந்த தலைவரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. நம்மீது விழுந்த ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் ஆட்சி சவப்பெட்டிக்கு அறையப்படும் ஆணிகளாகட்டும் என்றார் லாலாஜி. மோதிலால், காந்தி, ஜெயகர் போன்றவர் லாலாஜி உடல்நலம் விசாரித்தும் போலீசார் தாக்குதலை கண்டித்தும் தந்திகள் அனுப்பினர். அன்னிபெசண்ட், காந்தி தங்கள் பத்ரிக்கைகளில் இந்நிகழ்வை காட்டுமிராண்டித்தனமானது என குறிப்பிட்டு எழுதினர். நேரு கண்டித்து பத்ரிக்கை செய்தி தந்தார். தனக்கு ஏற்பட்ட தாக்குதலை பெரிதுபடுத்திக்கொள்ளாமல் டெல்லியில் நடந்த காங்கிரஸ் அமர்விற்கு நவம்பர் 4 1928ல் லாலாஜி சென்றார். உரையாற்றினார்.. ஆனால் அவருக்கு உடல் சுகமின்மை ஏற்பட்டது. இன்புளுயன்சா காரணமாக நேரு கமிட்டியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாக அறிவித்து ஊர் திரும்பினார். நவம்பர் 17 1928 அன்று காலை தனது 63ஆம் வயதில் அவர் காலமானார். நவம்பர் 16 அன்றுகூட தன்னை காணவந்தவர்களை சந்தித்தார். அவரின் மருத்துவர் பரிசோதித்ததில் இதயத்தின் வலப்புற வலி அதிகரித்திருந்ததை அறியமுடிந்தது. மறுநாள் காலை மக்கள் சேவகர் சொசைட்டி (servants of people Society) அலுவலத்திற்கு துணவியார், மகன், மகள் விரைந்தனர். அவரின் டாக்டர் வந்து அமைதியான முறையில் அவர் மறைந்துவிட்ட செய்தியை உறுதிப்படுத்தினார். செய்தி அறிந்து மக்கள் திரளத்துவங்கினர் லாலாஜியின் இரத்தத்தால் உங்கள் கரங்கள் சிவந்து போயுள்ளது(Your Govt’s hands are red with the blood of Lalaji) என்கிற தீர்மானத்தை அசெம்பிளியில் பண்டிட் துவராகபிரசாத் பிப்ரவரி 15 1929ல் முன்மொழிந்தார். ஆனால் கவர்னர் ஜெனரல் அதை ஏற்கமுடியாது என ரத்து செய்தார். சைமன் கமிஷன் எதிர்ப்பு ஊர்வலத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட லாலாஜி மறைந்தார் என நியுயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது. ஸ்காட்( Scott) என்கிற அதிகாரிதான் லாலாஜியை முதலில் தாக்கினார் என்பதை லாலா ஹன்ஸ்ராஜ் பதிவு செய்தார். நான் என் கைகளை கொண்டு லாலாஜியை காப்பாற்றுவதற்காக மறைத்தபோது என் கைகளை தாக்கி முறித்தனர் என அவர் பதிவு செல்கிறது. டாக்டர் கோபிசந்த தங்களைப் போன்றவர்கள் லாலாஜியை சுற்றி நின்று அடிகளை வாங்கிக்கொள்ளாமல் விட்டிருந்தால் லாலாஜி அங்கேயே அடித்துக்கொல்லப்பட்டிருப்பார் .அவரை நோக்கியே அடிகள் இருந்தன என்றார். மகத்தான தேசபக்தர் என நிரூபித்து லாலாஜி மறைந்துள்ளார். அவர் நம்முடன் வாழ்வார். லாலாஜியுடன் உடன்படமுடியாமல் போகலாம். ஆனால் மிக நேர்மையான் அரசியல் தலைவர் என ஜின்னா தெரிவித்தார். நானும் எனது சக நண்பர்களும் லாலாஜி மறைவை கேள்விப்பட்டு வருந்துகிறோம். சமூக போராளியும் புகழ்வாய்ந்த அரசியல் தலைவரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளார் என்பதை அறிந்து வருந்துகிறோம் என ஜான் சைமன் தனது அசோசியேட்டட் பிரஸ் பேட்டியில் கூறினார். லண்டன் காக்ஸ்டன் கூடத்தில் நவம்பர் 25 1928 அன்று இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கர்னல் வெட்ஜ்வுட், சக்லத்வாலா பேசினர். பிரிட்டிஷாரின் மோசமான இந்திய கொள்கையை லண்டன் மக்கள் அறியவேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. லாலாஜி நீடுழி வாழ்க என்கிற கட்டுரையை யங் இந்தியாவில் காந்தி எழுதினார். மாபெரும் மனிதர்கள் எப்படி வாழ்ந்து மறைவார்கள் என்பதற்கு லாலாஜி வாழ்வு எடுத்துக்காட்டு என நேதாஜி சுபாஷ் எழுதினார். இந்நிகழ்வு பகத்சிங்கை பாதித்தது. அவர் சாண்டர்ஸ் எனும் போலீஸ் அதிகாரியை சுட்டு வீழ்த்த காரணமானது. சீனியர் எஸ் பி ஆன ஜே ஏ ஸ்காட்டைத்தான் பகத்சிங் தோழர்கள் பழிதீர்த்திட விரும்பினர். தவறுதலாக பயிற்சி ஏ எஸ் பி ஆக வந்திருந்த 23 வயதே ஆன சாண்டர்ஸை சுட்டுக்கொன்றனர். IV லாலாஜி மிகச்சிறந்த சொற்பொழிவாளராக இருந்தார். ஆயிரக்கணக்கில் மக்கள் அவர் உரை கேட்க கூடுவர். அவர் சாதாரண உழைக்கும் மக்கள் பக்கம் நின்றவர். வேத, இந்திய கலாச்சாரம் குறித்த பெருமிதம் அவரிடம் இருந்தது. தேசிய கல்வி என்பதில் அவர் தனிக்கவனம் செலுத்தினார். மாஜினி, கரிபால்டி, சிவாஜி போன்றவர்களின் வீர வரலாறுகளை தனது 30ஆம் வயதிலேயே அவர் எழுதினார். காங்கிரஸ் இயக்கத்தில் லால்-பால்-பால் கூட்டு மிதவாதிகளால் தீவிரமாக உணரப்பட்டது. அவரும் பகத்சிங் உறவினர் அஜித் சிங்கும் விவசாயிகளை கிளர்ந்தெழ செய்தனர். லாலாஜி மே 9 1907ல் மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டார். நவம்பரில்தான் விடுவிக்கப்பட்டார். அவர் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பதை பேசாமல் இல்லை. அதேநேரத்தில் பண்டிட் மதன்மோகன் மாளவியாவுடன் இணைந்து இந்துஸ்தான் டைம்ஸ், அர்ஜுன், தேஜ் பத்ரிக்கைகளை துவக்கினார். இந்துசங்காத்தான் அமைப்பை தீவிரப்படுத்தினார். முஸ்லீம்களை அடக்கி ஒடுக்குவதை இந்துக்கள் விரும்பமாட்டார்கள் என்பதையும் அவர் எழுதிவந்தார். பம்பாயில் டிசம்பர் 5 1925ல் நடந்த இந்துக்கள் மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்தார். நவீன கால சூழலையும் உள்வாங்கி பண்டைய வர்ணாஸ்ரம தர்மம் என்கிற புரிதல் தேவை என அவர் பேசினார். தீண்டாமை ஒழித்தலும், சூத்திரர் முன்னேற்றமும் உடனடி கடமை என்றார். இந்து பெண்களின் கல்வியில் தனிக்கவனம் உடனடி அவசியம் என்றார். இந்து வகுப்பார் அனைவரும் ஒன்றே என்ற உணர்வை உண்டாக்கவேண்டும் என்பது மாநாட்டில் வற்புறுத்தப்பட்டது. இந்தியாவை தாயகமாக கொண்ட எவரும் எம்மதத்தினராக இருந்தாலும், இனத்தினராக இருந்தாலும் சமமானவர்களே என்றார் அவர். ஸ்வதர்மா என்கிற பெயரில் தீண்டாமையை அனுசரித்துவிட்டு ஜனநாயகம் பேசுவது எப்படி சரியாகும் என்றார். இந்த கொடுமையை களையாமல் ஜனநாயக அரசாங்கம் இல்லை என்றார். கோயில் நுழைவு உரிமை உடனடியாக அவர்களுக்கு தேவை என்றும் பூணூல் அணிவித்து அவர்களை இந்து மதத்திற்குள் கொணரவேண்டும் எனவும் பேசினார். திருமண சட்டங்களில் மாற்றம் வேண்டும் - கலப்பு மணத்தை ஆதரிக்கவேண்டும் எனவும் லாலஜி பேசினார். நமது எதிர்கால ஜனநாயகத்தில் பாரபட்சம் இருக்கக்கூடாது. சில தொழில்கள் மீதான மோசமான பார்வைதான் தீண்டாமைக்கு காரணமாகவுள்ளது. இதனால் மத மற்றும் சமூக பாரபட்சங்கள் உருவாகின்றன. அவற்றை போக்கவேண்டும் சமுகத்திற்கு தேவையான எந்த உழைப்பையும் கேவலமாக கீழ்த்தரமாக எண்ணுதலை அனுமதிக்ககூடாது என்பது அவரது கண்ணோட்டமாக இருந்தது. விடுதலைக்கான விருப்ப உறுதி என்கிற அவரின் பேச்சில் இந்தியாவிற்கு என்னதான் தேவை என்பதை உணர்த்தினார். 1. அன்பான, கற்பிக்க விருப்பம் கொண்ட, அதட்டாத பெற்றோர் 2. மாணவர்களுக்கு சிந்திக்கவும் கருத்துமாறுபடவும் அன்புடன் கற்பிக்கும் ஆசிரியர் 3. கட்டளை பிறப்பிக்காமல் வழிகாட்டும் தலைவர்கள் 4. சக மரியாதையுடனும் ஒத்துழைக்கும் மனப்பாங்குடனும், கருத்து வேறுபாடுகளுக்காக சண்டையிட்டுக்கொள்ளாத நண்பர்கள் 5. வறட்டுத்தனமாக சித்தாந்தங்களை போதிக்காத போதனையாளர் 6. மக்களை மந்தைபோல் நடத்தாத மந்திரிமார்கள் 7. அன்பும் ஒத்துழைப்பும் கொண்டு மிரட்டி ஒடுக்குதல் செய்யாத கணவன்மார் 8. தூள்துணுக்குகளுக்கு நிற்காமல் அடிப்படைகளுக்கு நிற்கும் தேசபக்தர்கள் 9. மக்களை தாங்களே ஆள்வதற்கு உத்வேகப்படுத்தும் ஆட்சியாளர்கள் லாலாஜி 1914-19 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்தார். இந்திய விடுதலைக்கான பிரச்சாரங்களை மேற்கொண்டார். இக்காலத்தை அவர் புத்தகங்கள் எழுதுவதற்கு பயன்படுத்திக்கொண்டார். யங் இந்தியா, இந்திய அரசியலின் எதிர்காலம், இங்கிலாந்தின் கடன், தேசிய கல்வி போன்றவைகளை அவர் எழுதினார். அடிமை சங்கிலி சங்கிலிதான். எவ்வளவு நல்ல அரசாங்கம் என பிரிட்டன் சொன்னாலும் சுய அரசாங்கத்திற்கு அது இணையாக முடியாது என்றார். அவர் அமெரிக்காவில் சோசியல் டெமாக்ரசி குறித்து பேசத்துவங்கினார். 1920ல் AITUCன் அகில இந்திய துவக்க மாநாட்டிற்கு அவர் தலைமைதாங்கி உரையாற்றினார். இந்தியாவில் அகில இந்திய அளவில் தொழிலாளர்க்கென முதல் மாநாடு என்பதை அவர் எடுத்தியம்பினார். திரட்டப்பட்ட மூலதனம் கடந்த 150 ஆண்டுகளாக உலகை ஆள்கிறது. பண்டைய நாகரீகங்களை அது அழித்துவிட்டது. மதத்தை அடிமைப்படுத்திவிட்டது. அறிவியலுக்கு கூட சங்கிலி பிணைத்துவிட்டது. இராணுவவாதமும் ஏகாதிபத்தியமும் முதலாளித்துவ குழந்தைகள். அவை விஷமானவை.. நாம் அரசியல்ரீதியாக கையாலாகாமல் இருக்கிறோம், பொருளாதாரரீதியாக பலவீனமாக இருக்கிறோம். நம்மை ஆள்பவர்கள் நம்மை கூலிகளாக்கிவிட்டனர். அய்ரோப்பிய தொழிலாளர்களை ஒப்பிடுகையில் இந்தியாவில் சீனாவில் அவர்களுக்கு மலிவான கூலிகள் கிடைக்கிறோம். இதனால் அய்ரோப்பிய தொழிலாளர்களும் ஆபத்தில் உள்ளனர். இந்திய தொழிலாளர்கள் கைகோர்ப்பது மட்டுமல்ல, சர்வதேச சகோதரத்துவமும் தேவை என்றார் லாலாஜி. இந்தியாவில் தொழிற்சங்கம் குழந்தைபருவத்தில்தான் இருக்கிறது. வட்டார வேறுபாடுகளுக்குள் சிக்கிவிடாமல் ஒன்றுபட்ட நடவடிக்கைகளில் நாம் இறங்கவேண்டும். பிரிட்டிஷார் பணத்தை வாரி இறைத்து விரயம் செய்கிறார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதிக்கு மட்டும்தான் உயர் ஊதியம். இங்கு 12பேர் அதை பெறுகிறார்கள். சிலர் கூடுதலாகவும் வாங்குகிறார்கள். அமெரிக்காவில் அமைச்சர் 12000 டாலர்தான் பெறுகிறார். இங்கு அமைச்சர் ரூ 80000 பெறுகிறார். ஏன் இந்த தாராளம் என வினவினார் லாலாஜி. இங்கு போஸ்ட்மேனுக்கு, ரயில்வே தொழிலாளிக்கு என்ன சம்பளம் கொடுக்கின்றனர், குடும்பம் நடத்த முடியுமா என வினவினார்.. லாலாஜி வாழ்க்கை திறந்த புத்தகம். அவர் வெளிப்படையாக பேசுவதால் பல நண்பர்கள் கஷ்டப்பட்டுள்ளனர். ஆனால் அவரை மாற்றமுடியவில்லை. லாலாஜியுடன் ஒருவர் கருத்துமாறுபட வேண்டியிருக்கும். ஆனால் அவரின் சமுக சேவையும் தேச அர்ப்பணிப்பும் அபாரமானவை என்றார் மகாத்மா காந்தி.. தேசபக்தன் என்கிற வகையில் மட்டுமல்லாமல் தனிமனிதன் என்கிற வகையிலும் அவர் மிக சிறந்தவர் என்றார் மோதிலால். அவருடன் பலமுறை பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. எதற்கும் அஞ்சாத மனிதர் அவர் என்றார் பிர்லா… அய்ரோப்பிய தொழில்வளர்ச்சி முதலாளித்துவம் குறித்து விமர்சன பார்வை அவருக்கு இருந்தது. சோசலிச எழுத்தாளர் பலர் அதன் சித்திரத்தை நமக்கு வழங்கியுள்ளனர். கார்ல்மார்க்ஸ் அதன் கோர முகத்தை வெளிக்கொணரும்வேலையை துவங்கி வைத்தார் என லாலாஜி எழுதினார். திரட்டப்பட்ட மூலதனத்தை எத்ர்கொள்ள தொழிலாளர் திரளவேண்டும். அவர்களின் அறியாமையை, ஒண்ருபடாது நிற்கும் நிலயை முதலாளிகள் பயன்படுத்தி சாதகமாக்கிக்கொள்ள இனியும் முடியாது. திரள்வதும் கற்பதும் நம்முன் நிற்கும் மிக முக்கிய கேள்வி என்று எழுதினார் லாலாஜி . இக்கேள்விக்கான நியாயங்கள் இன்றளவும் முக்கியமானதாகவே இருக்கின்றன. Ref: - Lajpat Rai Socio political ideology S R bakshi - Lajpat Rai Writings and Speeches V C Joshi பிபின் சந்திர பால் [] காந்திக்கு முந்திய விடுதலைப்போராட்ட தலைவர்களின் வரிசையில் புகழ்வாய்ந்தவர் பிபின் சந்திர பால். வாழ்நாள் முழுதும் பத்திரிகையாளராக உணர்ச்சிபெருக்கு உரையாளராக இருந்தவர் பிபின். வங்க வாரப்பத்திரிகையில் 1880ல் தனது சோதனையை அவர் துவங்கினார். ட்ரிப்யூன், நியுஇந்தியா, வந்தே மாதரம், ஸ்வராஜ், இந்து ரிவ்யு, இண்டிபெண்டட், டெமாக்ரட், வங்காளி என தின, வார, மாதப்பத்திரிகைகள் பலவற்றை கொணர்ந்து அவற்றில் எழுதினார். அவ்வப்போது மாடர்ன் ரிவ்யு, ஸ்டேட்ஸ்மேன் போன்ற பத்திரிகைகளில் எழுதுபவராக இருந்தார் பிபின். பேனாவை திறமையாக எழுத்துலகில் கையாண்ட பலர் வெளிமேடைகளில் மின்னியதில்லை. ஆனால் பிபின் மேடைகளிலும் கிளர்ச்சி பிரச்சாரகராக இருந்தார். தன்னை கட்டுபடுத்திக் கொள்ள முடியாத பிரவாக பேச்சாளராக இருந்தார் என அரவிந்தர் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார். மிகச்சிறந்த உரையாளர் ஸ்ரீநிவாச சாஸ்திரி 1907ல் சென்னையில் பிபின் உரையை கேட்டவுடன் ஓர் உரை இவ்வளவு பெரும் வெற்றியை உருவாக்கும் என்பது நிருபிக்கப்பட்டுவிட்டது என்றார். பிபின் சந்திர பால் தற்போது வங்கதேசத்தில் இருக்கும் சில்ஹெட் மாவட்டத்தின் போயல் என்ற கிராமத்தில் 1858ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி பிறந்தார். தாயார் நாராயணி. செல்வச் செழிப்பான வைணவக் குடும்பத்தில் பிறந்த பிபின் சந்திர பாலின் தந்தையார் ராமச்சந்திர பால் பாரசீக மொழியில் விற்பன்னர், சிறு மிராசுதார். கட்டுப்பாட்டிற்கு பெயர்போனவர். சாணக்ய நீதிகளை அறிந்தவர். பிபின் மீது அன்புகாட்டி அவரை பிரசிடென்சி கல்லூரிக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு பிபின் பாலுக்கு பிரம்மசமாஜ் தொடர்பு ஏற்படுகிறது. பிபினிடத்தில் ராஜாரம் மோகன்ராயின் சீர்திருத்த சிந்தனைகள் தாக்கத்தை உருவாக்கின. அவர் ஒரு விதவையைத் திருமணம் செய்து கொண்டதால் தனது குடும்பத்தோடு கொண்டிருந்த பந்தங்களையே துறக்க வேண்டி வந்தது. கல்கத்தாவின் மாநிலக்கல்லூரியில் சேர்ந்த பிபின் சந்திரபால் தனது படிப்பைத் தொடர முடியாத காரணத்தால், அவர் தலைமை ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். பின்னாட்களில் அவர் கல்கத்தா பொது நூலகத்தில் நூலகராக பணி செய்த போது ஷிவ்நாத் சாஸ்திரி, SN பேனர்ஜி, BK கோஸ்வாமி போன்ற தேசபக்தர்களை சந்திக்க நேர்ந்தது. தேச பக்தி அவரை ஆட்கொண்ட காரணத்தால், தனது வேலையையே கூட உதறித் தள்ளி அரசியலை தனது முழு நேரப் பணியாக மேற்கொண்டார் வழக்கம்போல் மற்ற தந்தையைப்போலவே அவரது தந்தைக்கும் வருத்தம் நேர்ந்தது. பணம் அனுப்புவதை தந்தை நிறுத்துகிறார். தொடர்பு அறுந்துபோகிறது. பிபின் தனது வாரிசு இல்லை என்கிற அறிவிப்பை தந்தை வெளியிடுகிறார். ஊர்ச்சமூகம் பிபினை சாதி பிரஷ்டம் செய்கிறது. வறுமையுடனான போர் தொடங்கி நீடித்தது. பிரம்மசமாஜின் ஷிவ்நாத் சாஸ்த்ரி பிபினுக்கு பெங்களூரில் வேலை ஒன்றை பெற்றுத் தருகிறார். அந்தவேலையையும்விட்டு கல்கத்தா திரும்பிய பிபினை தந்தை ஏற்றுக்கொள்கிறார். சொத்தையும் எழுதித் தருகிறார். 1886 மெட்ராஸ் காங்கிரஸ் அமர்வில் பிபன் பங்கேற்கிறார். 1907வரை அவர் தொடர்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றுவந்தார். 1907ல் காங்கிரசில் ஏற்பட்ட முறிவு அவரை திலகருடன் வெளியேறவைத்தது. மீண்டும் அவர் காங்கிரஸ் அமர்விற்கு 1916லேயே திரும்புகிறார். மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் தொடர்பான ஹோம்ரூல் கமிட்டி உறுப்பினராக திலகருடன் இங்கிலாந்திற்கு 1916ல் செல்கிறார். கேசவ் சந்திர சென்னிற்கு அடுத்தது இவர்தான் என்கிற அடையாளத்தை பிரம்ம சமாஜில் பிபின் பெறத்துவங்கினார். பினாய் குமார் சர்கார் புரட்சிகர வங்க தேசியத்தின் தந்தை பிபின் என்றார். அவரின் இந்தியாவின் அமையின்மை(Indian Unrest) மெட்ராஸ் உரை மிக உயர்ந்த பொருத்தமான அரசியல் சிந்தனை என புகழப்பட்டது. லார்ட் மிண்டோ வைஸ்ராய் 1907ல் இந்திய செயலர் லார்ட் மார்லிக்கு பிபினின் தேசத்துரோக உரைகளை அனுமதிக்கக்கூடாது என்று எழுதினார். மெட்ராஸ் அட்வகேட் ஜெனரல் அவரது உரை தீப்பற்றக்கூடிய ஒன்றுதான் ஆனால் தேசத்துரோக வகைப்பட்டதல்ல என விளக்கம் தந்தார். அவரது உரையில் பிரிட்டிஷ் ஆட்சியுடன் பொருதுதல் இருந்தது. ஆனல் தனிப்பட்டவர் மீதான தாக்குதலோ வன்முறை தூண்டலோ பொதுவாக இல்லை என்ற கருத்தும் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இருந்தது. 1908-11 பிபினது இங்கிலாந்து வாசம் அவரது சிந்தனையை மேலும் மேம்பட வைத்தது. அவரது முக்கிய ஆக்கமான Nationality and Empire உருவாகவும் உதவியது. பிரிட்டனுடன் கூட்டுறவுடன் கூடிய பார்ட்னர்ஷிப் என அவர் பேசினார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பதை காமன்வெல்த் ஆக வைத்துக்கொள்ளலாம் என்றார். பின் நாட்களில் ராஜாஜி, நேரு போன்றவர்கள் இதை பேசினர். வந்தே மாதரம் வழக்கில் அரவிந்தருக்கு எதிராக சாட்சியம் கூற மறுத்ததால், பிபின் சந்திர பாலர் 6 மாத கால சிறைத் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. இதன் தாக்கம் நாடு முழுக்க எதிரொலித்தது. பாரதத்தின் தென் கோடியில் இருந்த திருநெல்வேலி ஜில்லாவரை அவர் கருத்துக்களை ஏற்று செயல்படத் துடித்த புரட்சியாளர்கள் பலர் உருவாகினர். இவர் விடுதலையைக் கொண்டாடும் வகையில் இராமநாதபுரத்தில் சுப்பிரமணிய சிவாவும், வ.உ.சியும் உணர்ச்சிப் பெருக்கான பெரும் கூட்டத்துக்கே ஏற்பாடு செய்திருந்தார்கள். பிபின் சந்திர பாலர் பின்னர் சுப்பிரமணிய சிவா ஏற்படுத்தவிருந்த பாரத மாதா கோயிலுக்கும் உறுதுணையாக இருந்தார். 1904ம் ஆண்டு பம்பாயில் நிகழ்ந்த இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டம், 1905ம் ஆண்டு வங்காளப் பிரிவினைக்கு எதிரான போராட்டம், சுதேசி இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், 1923ம் ஆண்டு ஏற்பட்ட வங்காள ஒப்பந்தம் ஆகியவற்றில் பிபின் பெரும்பங்கு ஆற்றினார். அவர் 1896ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். பாரபட்சமானதாக இருந்ததால், ஆயுதச் சட்டத்தை வாபஸ் பெற 1887ம் ஆண்டு தீவிரமாக தன் வாதங்களை முன்வைத்தார். நாட்டில் சமுதாயக் கேடுகளை களைய வேண்டும் என்பதிலும், தேசிய உணர்வுகளை மக்கள் மனங்களில் தூண்டி விட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். அவரின் புத்தகமான The New Economic Menace of India மூலம் இந்திய தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியமும், குறைவான பணி நேரத்தையும் கோரினார். ஏழைகளுக்காக அவர் கொண்டிருந்த அக்கறையால் அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடினார். பிரிட்டிஷார் இந்தியாவை பொருளாதார ரீதியாக கொள்ளையடிப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்து எச்சரிக்கை செய்தவர் பிபின் சந்திர பாலர். கிலாஃபத் இயக்கத்துக்கு எதிராகவும், காந்தியடிகளின் யதேச்சாதிகாரப் போக்குக்கு எதிராகவும் கடுமையாக குரல் கொடுத்த பிபின் சந்திர பாலர் 1922ம் ஆண்டு தொடங்கி தன் வாழ்வின் பின்னாட்களில் தன்னை காங்கிரஸின் அனைத்து வேலைகளிலிருந்தும் ஒதுக்கிக்கொண்டு, தனிமையும், கொடும் ஏழ்மையும் நிறைந்த வாழ்க்கையைக் கழித்தார். அவர் 1932ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி இந்த உலக வாழ்வைத் துறந்தார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்த பெரும் புத்தகம் ஒன்றை வாழ்க்கை மற்றும் காலம் குறித்த நினைவுகள் என்ற பெயரில் அவர் எழுதினார். பிபின் சந்திரபால் கீதை உபநிடதங்கள் பற்றி ஆர்வமாக கற்றறிந்தார். தனிமனிதரும் சமுகமும் சார்பு கொண்டுதான் நிற்க வேண்டியுள்ளது. தனிமனிதன் தன்னை சமுக வாழ்வின் ஊடாகத்தான் நிறைவெய்திக்கொள்ள முடியும். பிற படைப்புகளிலிருந்து அவன் வித்தியாசப்படுவது அவனை அவனால் அறிந்துகொள்ள முடிவது என்பதில்தான்- அதாவது சிந்தனை ஆற்றல்- தியாகம்- உணர்ச்சிகள் போன்றவைகளால்தான். ஒருவரை அறிந்துகொள்ள வேண்டுமெனில் அவரின் சமுக அமைவை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். தன்சரிதை என்பதும் உள்ளார்ந்த சமுக வரலாற்றின் இழுவைகள், சர்வாம்ச வளர்ச்சிக்கான தேடல் வெளிப்பாடுகள்- விமர்சன விளக்கங்கள் என்பனவே ஆகும். சுயசரிதை ஒவ்வென்றும் சமூக வரலாறே(Every biography is also a social history) என தன் காலமும் நினைவுகளும் என்பதில் அவர் எழுதினார். ‘தன்வாழ்வு’ என்பது ஒருவர் வாழும் காலத்துடன் ஊடும்பாவுமாக நெய்யப்படுகிறது என்பதை அவர் அதில் எடுத்துரைக்கிறார். பால் அவர்களின் தந்தை பெர்ஷியன் புலமையாளர். டாக்கா நீதிமன்றத்தில் பணிபுரிந்தார். தாயார் நாரயணி தந்தைக்கு இரண்டாம் மனைவி. குழந்தைப்பேறு இன்மையால் முதல் மனைவி வற்புறுத்தி இரண்டாவது மணம் செய்துகொண்டார். பிபின்பால் 10வயதுவரை பள்ளிக்கூடம் செல்லவில்லை. வீட்டில் சமஸ்கிருதம், மந்திரங்கள், கிருஷ்ண வழிபாடுகள் சொல்லிக்கொடுக்கப்பட்டன. கணிதம் கற்பிக்கப்பட்டது. தந்தையின் சிறப்பு காரணமாக நல்ல அரிசி உணவு, மீன், பால் கிடைக்கப்பெற்றன. வேலையாட்கள் என்பார் மாதம் எட்டணாவிற்கு உழைக்க கிடைத்தனர். சில்ஹெட்டில் பெரும் வீடு 1860-70ல் அவர்களுக்கு மாதம் ரூ 8 வாடகையில் கிடைத்தது. அது 4 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டு இருந்தது. அரபி கற்பதற்காக அவர் மெளல்வியிடம் அனுப்பப்படுகிறார். பின்னர் ஆங்கில மொழிப் பயிற்சியும் அவருக்கு கிடைக்கிறது. பள்ளிக்கூட காலத்திலேயே ஏராள ஆங்கில இலக்கிய புத்தகங்களை அவர் படிக்கத்தொடங்கினார். சில்ஹெட் வீட்டின் சுற்றுக்காடுகள் சீரமைக்கப்பட்டு அக்கம்பக்கத்தில் உறவினர்கள் குடியேறத்துவங்கினர். பிபின் தந்தையார் வீட்டில் ஏராள உறவுக்காரர்கள் தங்கி ஒன்றாக இருந்தனர். 20 நபர்களுக்கு சமைக்கும் பொறுப்பு அவரின் தாய்க்கு இருந்தது. அக்காலத்தில் இவை குறித்தெல்லாம் வீட்டுப்பெண்கள் புலம்பாமல் சேவைமனப்பான்மை என்கிற பெருமித உணர்வுடன் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். தந்தையின் நண்பர்களுக்காக மாதம் ஒரு சனிக்கிழமை நூற்றுக்ககணக்கானவர்களுக்கு சமைத்து போடுதலும் நடந்தது. குழந்தைகளை அமரவைத்து அவர்களுடன் தானும் அமர்ந்து ஊட்டும் காட்சியும் வீட்டில் நடந்தது. தன் தாயைப் பற்றியும் அவரின் நேர்த்தி குறித்தும் அற்புத நினைவுகளை பிபின் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீட்டில் வெளியிலிருந்து வந்து தங்கிய குழந்தைகளுக்குத்தான் தாயார் முன்னுரிமை தருவார். அவர்கள் தங்கள் தாயார்களைவிட்டு இங்கு வந்து தங்கியுள்ளனர். நம் குழந்தைகள் அதைப் புரிந்து நடந்துகொள்ளவேண்டும் என்கிற அறிவுரையை அவர் பிபினுக்கு தருவார். வீட்டின் வேலைக்காரர்களையும் அவர்கள் சாதியென்ன என்பதை பார்க்காமல் மாமா, அண்ணா என அழைக்க குழந்தைகள் கற்றுக்கொடுக்கப்பட்டனர். வேலைக்காரர்களும் தாயாரை அக்கா, தந்தையை மாமா என்றழைப்பர். சாதன் என்கிற கழிப்பறை சுத்தம் செய்யும் தொழிலாளி கூட அவ்வாறே அவ்வீட்டில் அழைக்கப்பட்டார். நாங்கள் அவரை ராம்தான் மாமா என்று அழைப்போம் என தன் சிறு வயது நினைவுகளை பிபின் எடுத்துச் சொல்கிறார் . தந்தை வீட்டு மனிதர்களுக்கு என்னவகை உணவோ அதுதான் வேலைக்காரர்களுக்கு தரப்படவேண்டும் என்பதில் கண்டிப்பானவராக இருந்தார். ஊரில் வைணவ வழிபாடும் சைதன்யரை கொண்டாடும் மரபும்- ராதை கிருஷ்ண கொண்டாட்டங்கள் , தேர்த்திருவிழாக்கள் இருந்தன. அங்கிருந்த மணிப்புரி குடும்பத்தார்கள் மிகத்தூய்மையாக காணப்படுவார்கள் என்கிற செய்தியையும் பிபின் பகிர்ந்துகொள்கிறார். வீடுகளில் புத்தகங்களை எடுத்து வைத்து சரஸ்வதி பூஜைகள் நடக்கும் பழக்கத்தை சொல்கிறார். துர்கா பூஜை கொண்டாட்டங்கள் பற்றியும், அந்நகரில் ஈத் தொழுகையை பார்க்க தந்தையார் குழந்தைகளை அழைத்து சென்றதையும் பிபின் நினைவலையாய் விவரிக்கிறார். பொதுவாக இரு மதக்காரர்களுக்கும் இணக்கமும் நல்லுறவும் இருந்ததை குறிப்பிடுகிறார். சாதிகள் வேறுபாட்டை அவரவர் இயல்பாக எடுத்துக்கொண்டது போல் இருந்ததாக குறிப்பிடுகிறார். ஒன்றாக சாப்பிடமுடியாது என்பதும் இயல்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்கிறார். அதே நேரத்தில் தீண்டப்படாதவர்கள் பிராமணர்களை, உயர் சாதியினராக கருதப்பட்டவர்களை மாமா காக்கா என அழைப்பது இயல்பாக இருந்தது. வீட்டு நிகழ்வுகளில்கூட கிராமத்தில் அவர்களுக்கான பாய்களில் அமர்ந்து பிற சாதிக்காரர்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்க முடிந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். மனுவை பின்பற்றி சாதி அம்சங்களை கண்டிப்பாக பின்பற்றிய பிரிவினர்களும் இருந்தனர் . துர்காபூஜையின்போது நான்கு நாட்கள் விருந்துகள் பெரும் அளவில் நடந்தன. தலித்கள் உட்பட்டவர்களுக்கு உணவு, அரிசி, காய் கனிகள், மீன் தரப்பட்டுவந்தன. சமைத்த உணவை இஸ்லாமியர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே அவர்களுக்கு அரிசி, பழவகைகள் தரப்பட்டு வந்ததாக பிபின் குறிப்பிடுகிறார். 1875-78 கல்கத்தாவில் கல்லூரி காலத்தில்தான் தேசியம் குறித்த சிந்தனைகள் தன்னிடம் பற்றியதாக பிபின் எழுதுகிறார். சுரேந்திரநாத் பானர்ஜியின் ஈர்ப்பு மாணவர்களிடம் இருந்தது . சமஸ்கிருதம் மக்களின் பேச்சுமொழியாக இல்லை. அவ்வாறு ஒருபோதும் இருந்ததாகவும் தெரியவில்லை. தாங்கள் போட்ட சமஸ்கிருத நாடகங்கள் கூட பிராகிருத் எனும் மக்கள் மொழியிலேயே இருந்தன என தன் கல்லூரரி கால நினைவுகளை அவர் சொல்கிறார். பிபின் சந்திரா என்பதற்கு வங்க மொழியில் காட்டு நிலவு எனப்பொருள். அவரிடம் அனைத்திலும் உக்கிரம் காணப்பட்டது.. மெட்ராஸிற்கு வந்த முதல் வங்காளி கேசவ் சந்தர் சென். அவர் 1860களிலேயே வந்திருக்கிறார். பிபின் 1881ல் மெட்ராஸ் வருகிறார். பெரும் தனவந்தர் ஆற்காடு நாராயணசாமி முதலியார் பிரம்ம சமாஜிற்கு ஆதரவாக இருந்தார். பெங்களூரில் அரசாங்க காண்ட்ராக்டராக இருந்து சம்பாதித்தவர். அவரது தொடர்பு கிட்டுகிறது. கல்கத்தாவிலிருந்து மெட்ராஸ் வரவேண்டும் என்றால் அப்போது பம்பாய் வந்துதான் ரயிலில் பயணிக்கவேண்டும்.பேஷ்வாக்கள் 50 ஆண்டுக்கால ஆட்சியில் மகராஷ்ட்ரா ‘நேஷனல் ஸ்டேட்’ ஆகவே வளர்ந்திருந்தது என்கிறார் பிபின். மெட்ராஸில் புட்சிய பந்தலு என்கிற தெலுங்கு பிரம்ம சாமாஜி பிபினை ரயில்நிலையம் வந்து அழைத்து செல்கிறார். அங்கிருந்துதான் பின்னர் பிபின் பெங்களூர் ஆசிரியப்பணிக்காக செல்கிறார். 2 The New economic Menance to India என்கிற அவரது புத்தகத்தை 1920ல் மெட்ராஸ் கணேஷ் அண்ட் கோ ரூ2 க்கு வெளியிட்டது. 33 தலைப்புகளில் பிரிட்டிஷ் பொருளாதார கொள்கையால் இந்திய வளங்கள் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டன என்பதை அப்புத்தகம் விவரித்தது. பிரிட்டிஷ் கல்விமுறையால் படித்த நமது இந்தியர்களோ அரசியல் விடுதலை என்ற ஒன்றில்தான் கவனம் குவிக்கிறார்கள். அதன் பொருளாதார சுரண்டலை போதுமான அளவு கவனப்படுத்திக்கொள்ளவில்லை என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். பிரிட்டனில் அரசர்/அரசி என்பது அரசியல் சட்டப்படி முடியாட்சி(Constitutional monanrch) ஆனால் இந்தியாவிற்கோ முற்றுமுழுதான முடியாட்சி(absolute monarch) என்கிற இரட்டை நிலையை எடுத்த பிரிட்டிஷ் பாரபட்ச ஆட்சியை அவர் அதில் விமர்சித்திருந்தார். இம்பீரியல் எம்ப்ரிசிம், ஒயிட்மேன் பர்டன் போன்ற பதங்களை விளக்கி விமர்சிக்கிறார். சார்பு சாம்ராஜ்யம் (Dependent Empire) எனப்படுவதன் மூலம் இந்தியா பிரிட்டனின் பொருளாதார நலன்களுக்கு அவசியப்படுவதாகவும் ஆங்கிலேயர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை தரும் இடமாகவும் இருக்கிறது. பிரிட்டன் தாமஸ் மன்ரோ மூலம் ‘ட்ரஸ்ட் அய்டியா’ பேசியதை பிபின் எடுத்துக்காட்டினார். இந்தியாவை நாம் தற்காலிகமாக வைத்துக்கொள்ளவேண்டும் என எண்ணக்கூடாது. அவர்கள் தங்களின் பாரபட்ச கருத்துக்கள், மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு தங்களை ஆண்டுகொள்ள முடியும் என்கிற விழிப்புணர்வு பெறுவரை நாம் இருக்கவேண்டும் என்கிற பிரிட்டிஷாரின் தர்மகர்த்தா சிந்தனை இந்திய நலன்களுக்கு உதவப்போவதில்லை என்றார் பிபின் அரசியல் மேலாண்மையில் மோதல்கள் இல்லாமல் இருக்காது. தேச அரசுகள் இதை சந்திக்கின்றன. அரசர், அரிஸ்டோகிராட் பகுதி, அல்லது பிரான்சில் சொல்வதுபோல் பூர்ஷ்வா என மேலாண்மையில் மோதல் இல்லாமல் இருக்காது என அப்புத்தகத்தில் சொல்கிறார் பிபின். அவைகளெல்லாம் வர்க்க ஆட்சியே என்பதையும் சொல்கிறார். எது இங்கிலாந்திற்கு லாபமோ அது இந்தியாவிற்கு நட்டமாகவே இருக்கும் என்றார் பிபின். 1800களின் துவக்கத்தில் வலுவாக இருந்த இந்திய வர்த்தகம் மான்செஸ்டரை வாழவைக்க எவ்வாறு தியாகமாக்கப்பட்டது என்பதை பிரிட்டிஷ் எழுத்தளர்களிடமிருந்தே எடுத்துக்காட்டுகிறார். 1800களின் இறுதிவரையில் பிரிட்டன், அமெரிக்க தொழிலாளர்கள் நிலை மேம்படவில்லை. பியானோ வாசிக்கும் சுகத்தில் அவர்கள் இல்லை. இன்று பலரிடம் சைக்கிள் இருக்கிறது, சற்று மேம்பட்ட வாழ்க்கை கிடைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் நிலை வேறாக இருக்கிறது. இந்தியாவில் தொழில் முன்னேற்றம் வருவதற்கு அந்நிய முதலீடுகள் தேவை என்பதை மறுக்கவில்லை. இதன் பொருள் வாருங்கள் இந்திய வளங்களை கொள்ளைக்கொண்டு போவதற்கு என்பதல்ல என்றார் பிபின். வருகின்ற மூலதனம் அதனால் உருவாகும் தொழிலில் இந்தியர் பயிற்சிவிக்கப்படவேண்டும். அது அவர்களின் நெறி மற்றும் அறிவுசார் சொத்துடைமையாக வேண்டும் என்கிற பொருளாதாரப் பார்வையை பிபின் முன்வைத்தார். அந்நிய கம்பெனிகள் இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது அந்த பாக்டரிகளில் தொழிலாளர்களுக்கு உடல் நல உத்தரவாதம், அறிவுக்கல்வி ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். உரிய சட்டப்பதுகாப்பு வேண்டும். லார்ட் கர்சான் நிர்வாகமும் சுரண்டலும் அரசாங்கத்தின் கடமைகளில் பகுதிகளே என வெளிப்படையாக பேசியதை பிபின் சுட்டிக்காட்டினார். மூலதனம் எந்தநாட்டின் கொடியையும் சுற்றிக்கொண்டு வருவதில்லை. அது சர்வதேசத்தன்மை கொண்டது. அது வீசும் காற்றைப்போன்று திசை கொள்ளும் என கர்சான் பேசியதை சுட்டிக்கட்டி அதற்கு விமர்சனத்தை வைத்தார் பிபின். மூலதனத்திற்கு சர்வதேசத்தன்மை உண்டுதான். ஆனால் ஜெர்மன் மூலதனத்தை பிரிட்டிஷ் ஏற்கிறதா எனக் கேட்டார் பிபின். அந்ந்நிய மூலதனம்- தேச சுயாட்சி (Foreign Capital and National Autonomy) என்கிற விளக்கத்தை அவர் தந்தார். அரும்பும் நிலையில் இருக்கும் உள்நாட்டு தொழில்களை வளர்ந்த வெளிநாட்டு கம்பெனிகளுடன் நியாமற்ற போட்டியில் ஈடுபட செய்வதை அவர் விமர்சித்தார். உள்நாட்டு தொழில் பாதுகாப்பு (protection) என்பது காலகாலத்திற்கும் இருக்கவேண்டும் என்பதில்லை- ஆனால். இந்திய இளம் கம்பெனிகளுக்கு இந்த பாதுகாப்பை பிரிட்டிஷ் கம்பெனிகளிடமிருந்து உருவாக்கித்தர வேண்டும். பிரிட்டிஷ் அரசாங்கம் இதை செய்யவில்லை என்றார். பெருந்தொழிலின் கேடு குறித்த தீர்க்கமான பார்வையை (huge business amalgamations may be a possible danger to a democratic state) பிபின் முன்வைத்தார். அது அரசாங்கத்தை மூலதனம் பக்கம் அவர்களின் நலன்களுக்காக சாயவைக்கும் என்றார். ஜனநாயக அரசிற்கு கேட்டை கொணரும் என்றார். அய்ரோப்பாவில் பல நாடுகளில் அதுவும் குறிப்பாக இங்கிலாந்தில் தொழிலாளிவர்க்கம் பொதுவாக சோசலிசவாதிகளாகவே உள்ளனர். நிலமும் வேலையும் பெரும் தனியார்களிடம் இல்லாமல் அரசின் வசம் இருக்கவேண்டும் என்பது சோசலிச கருத்தாக உள்ளது என எழுதினார் பிபின். அரசாங்க சோசலிசத்திற்கான இயக்கமாக அய்ரோப்பாவில் தொழிலாளர் வர்க்கம் வளர்கிறது என்றார். ஆனால் பிரிட்டிஷாரின் புதிய பொருளாதார மறுகட்டுமான கொள்கை இந்த சோசலிச இயக்கத்திற்கு முடிவுகட்ட விழைகிறது என சாடினார் பிபின். கடந்த முதல் உலக யுத்தம் செலவு 52000 மில்லியன் ஸ்டெர்லிங். பிரிட்டனின் கடன் 1919ல் 6099 மில்லியன் ஸ்டெர்லிங். யுத்தத்திற்கு முன்னர் அதன் கடன் 650 மில்லியன் ஸ்டெர்லிங் ஆக இருந்தது. யுத்தம் சுமத்திய நிதி நெருக்கடியிலிருந்து இம்பீரியல் பிரிட்டன் மீள்வதற்கு பல ஆண்டுகள் ஆகும் என கணித்தார் பிபின். பேரரசு நிதிஆதார வளர்ச்சி (Empire Resources Development) கமிட்டியின் பெயரில் சுரண்டல் தீவிரப்படுத்தப்படுவதாக பிபின் விளக்கினார். இந்தியாவின் விவசாய வளங்களை திரட்டுதல் என்கிற பெயரில் நடைபெற்ற மோசமான பாதிப்புகள் குறித்து அவர் பேசினார். இந்திய விவசாயிகள் எதை பயிரிடவேண்டும் எவ்வளவு என்கிற உரிமைமீதான தாக்குதலை சித்தரித்தார். கட்டாயமுறை உகந்ததல்ல. எது அவனுக்கு வருவாயை வழங்குமோ அதை பயிரிட பெறும் உரிமையில் தலையிடுவது அந்த உழைக்கும் பொருளாதார மனிதனின் வாழ்க்கையில் பாதிப்பை உருவாக்கும் என்பதை அவர் எடுத்துரைத்தார். 1909-18 ஆகிய 10 ஆண்டுகளின் ஏற்றுமதி இறக்குமதி இந்திய வர்த்தகம் பற்றி அவர் ஆராய்ந்தார். யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் ஏற்பட்ட மாற்றங்களை அவர் கண்டறிந்து குறிப்பிடுகிறார். மிகக் குறைவான வர்த்தக உறவுகளில் இருந்த ஜப்பான், அமெரிக்கா வர்த்தகம் வளர்ந்துள்ளதை அவர் காண்கிறார். ஜப்பான் பிரிட்டனுக்கு அடுத்த இடத்தை ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகத்தில் பிடித்துள்ளதை அவர் காட்டுகிறார். டாட்டாவிற்கு லண்டனின் அலுவலகம் இருக்கிறது. அதைப் பெறுவதற்கு டாட்டாவும் கஷ்டப்பட்டதை அறியமுடியும். நமக்கு வலுவான ஏஜன்சிகள் வெளிநாடுகளில் இல்லையெனில் நமது வர்த்தகம் பாதிக்கும் . வலுவான இந்தியர் வங்கிகளின் வலைப்பின்னல் நமக்கு இல்லாமல் இருக்கிறது. அவை நமது ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திற்கு மிக முக்கிய பங்களிப்பாக இருக்கும். தேச வர்த்தகம் வளர்வது பற்றி அவர் கவலையுடன் விவாதித்தார். பிரிட்டன் மாதிரியிலான தொழில்மயமாக்கம் என்பதை அவர் சந்தேகத்துடன் அணுகினார். அதில் ஓரளவாவது வெற்றி பெற நமது உற்பத்தி பொருட்களை கொண்டு கிடத்த நுகர்வோர் நாடுகள் தேவை. அய்ரோப்பிய தொழில்மய வழியில் இந்திய பொருளாதார மறு உருவாக்கம் என்பது குறித்து அவர் எச்சரித்தார். அய்ரோபிய தொழில்மயமாக்கம் பார்த்து நகல் செய்தல் குறித்து தனியாக கட்டுரை எழுதினார். தொழிலாளரை குறைக்க உதவும் எந்திரங்கள்- வேலையின்மை எனும் பொருளாதார உறவு பற்றி எடுத்துரைத்தார். நமது திறன் சார்ந்த உழைப்பாளர் தங்கள் அளவில் மாஸ்டர்களும் கூட. அய்ரோப்பிய அர்த்தத்தில் அவர்கள் தொழிலாளர் அல்லர். இங்கு குடும்பமே கூட்டாக தொழிலில் ஈடுபடும். முதலாளி என உரிமைபாராட்டுபவர் இல்லை என்று வரலாற்று பின்புலத்திலிருந்து இந்திய உற்பத்தி முறையின் தன்மையை அவர் விளக்கினார். பிரிட்டன் நாடாளுமன்றம் என்னதான் ஜனநாயகம் உரிமை கோரிக்கொண்டபோதும் அது முதலாளித்துவ குணம் கொண்டதாகவே இருக்கிறது. பிரிட்டிஷ் அமைச்சரவை புளுட்டோகிரசிக்கு (பண ஆதிக்கம்) அடிமையாகவே உள்ளது. நமக்கு இந்த வலிமையான ஆளும்பகுதியை எதிர்க்க இன்று தெரியும் வழி பிரிட்டனின் தொழிலாளிவர்க்கம்தான் என்றார் அவர். சோசலிஸ்ட் இயக்கம்தான். ஆனால் உள்நாட்டில் முதலாளித்துவம் எதிர்த்தும் பிரிட்டிஷ் முதலாளித்துவம் எதிர்த்தும் நாம் போராட முன்வராவிட்டால் பிரிட்டிஷ் தொழிலாளிவர்க்கம் நம்மை சீண்டாது என்றார். இந்திய தொழிலாளர்களை திரட்டுவோம் (Organise Indian Labour)என்ற அத்தியாயத்தை அப்புத்தகத்தில் அவர் எழுதினார். பிரிட்டன் தொழிலாளரைப்போலவே வேலைநேரம், இணையான ஊதியம் என்பதை முழக்கமாக்கவேண்டும் என்றார். இந்தியாவில் ரயில்வேயில், சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளி ஏன் பிரிட்டனைவிட குறைவான கூலி பெறவேண்டும் என்கிற கேள்வியை அவர் எழுப்பினார். தொழிலாளி எந்த நிறமானால் என்ன சமவேலைக்கு சம சம்பளம் என்றார். நமது தொழிலாளிக்கும் அமெரிக்க தொழிலாளி சொல்வது போல வாரத்தில் 48 மணி வேலைநேரம்தான் இருக்கவேண்டும் என்றார். இதற்கு சட்டம் மூலம் பாதுகாப்பு வேண்டும். இந்தியாவில் சுரண்டும் மூலதனம் 150 முதல் 400 சத லாபம் பெறுவது ஏன் ? அனைத்தையும் அபகரித்து செல்லவிடக்கூடாது என்றார். உரிய சட்டவழிகள் வேண்டும் என்றார். மனிதனை மட்டப்படுத்துவது அவனுள் உறைந்து நிற்கும் தெய்வத்தை மட்டப்படுத்துவதற்கு சமம். மனிதனின் உயர்வு என்பதுதான் நாம் நடத்தவேண்டிய மதப்புனிதம் என்றார் பிபின். 3 An Introduction to the study of Hinduism- மதங்கள் குறித்த ஒப்பீட்டு ஆய்வு என்கிற புத்தகத்தை பிபின் எழுதினார். கல்கத்தா, பக்சார் சிறைகளில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட ஒன்று. ஆகஸ்ட் 1908ல் புத்தகம் வெளியானது. முதல் அத்தியாயத்தில் முதல் வரியிலேயே இந்துயிசம் என்றால் என்ன என்கிற கேள்வியை எழுப்பி அதற்கு இதுவரை திருப்திகரமான பதில் ஏதுமில்லை என்பதையும் சொல்கிறார். நமது மகத்தான அறிவுத்திறன் கொண்ட புத்திமான்கள் கூட இதை ஆய்ந்து சொல்லவில்லை என்கிறார். இந்துயிசம் என்பது பலவற்றை கொண்டுள்ள சிறிய அளவே சொல்லப்பட்ட ஒன்று. உலகம் முழுதும் அப்பெயர் போய் இருக்கிறது. சிலர் மதம் என்றும் பிறர் அப்படி ஏதுமில்லை சமுக பொருளாதார ஏற்பாடு எனவும் பேசியுள்ளனர் என்றார். பிபின் சந்திர பால் அவரின் இந்துயிச ஆய்வு- ஓர் அறிமுகம் எனும் புத்தகத்தில் முரண்பட்ட கருத்துக்குவியல், சிக்கல் நிறைந்த ஒழுங்குமுறைகள், பல்வகை கலாச்சாரங்களின் வடிவமாக நாம் அறியும் இந்துமதம் இருக்கிறது. அதனால் முற்றிலும் குழப்பமாக இருக்கிறது. இப்படிப்பட ஒன்றில் மக்கள் ஒற்றுமையை கண்டறிய தவறிவிட்டார்கள் என குற்றம் சொல்லமுடியாது என்பதை சுட்டிக்காட்டினார். மாக்ஸ்முல்லரின் ஆய்வுகளை பிபின் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் இறங்குகிறார். இந்துயிசம் என்பது பிற வரலாற்று மதங்களைப் போன்றதல்ல. மத குடும்பம் இந்துமதம்-குறைந்த ஆரம்பநிலை என சில, மிக உயர்ந்த, முன்னேற்றமான சில என கம்யூனிட்டி மதம் (community or family of religion some lower and earlier, some in higher and advanced) என்றார். அவர் இந்துயிசம், ஜுடாயிசம் என்பதை எதினிக் மதங்களாகவும் அவற்றிலிருந்து பிறந்தவைகளாக புத்தம், இஸ்லாம் போன்றவை சமய நம்பிக்கை வகைப்பட்டவை (credal Type) எனவும் சொல்கிறார். ஒத்த சீரான நம்பிக்கை, கட்டுப்பாடுகள், வழிப்பாட்டுமுறைகள், சடங்குகள்- வேறுபட்ட அமசங்களுக்கு இடம்கொடுக்காத சிந்தனைமுறை , முரணுக்கு இடமில்லாமை என்கிற விளக்கத்தை கிரிடல் வகப்பட்ட மதங்களுக்கு தருகிறார். எதினிக் மதம் கிரீடல் ஸ்டேஜ் என்பதற்கு போகாமல் யுனிவர்சல் ஆவது குறித்து அவர் விளக்குகிறார். அது மதங்களின் மியுசியமாகிறது. அங்கு ஆராய்ச்சி மாணவர் பழமையை இருப்பதின் ஒளியிலிருந்து பேசவேண்டிய நிலையும் உருவாகிறது. இந்துயிசமாக இருந்தாலும் இஸ்லாமாக இருந்தாலும் அவை சில அதிர்ச்சிகளை உலக சிந்தனைகள் பெயரில் நேரிடையாக மறைமுகமாகவோ உணர்த்த வேண்டியதாயிற்று. சிலவற்றை உள்வாங்கவும் நேரிட்டது. ஒத்த சீரான நம்பிக்கை, கட்டுப்பாடுகள், வழிப்பாட்டுமுறைகள், சடங்குகள்- வேறுபட்ட அமசங்களுக்கு இடம்கொடுக்காத சிந்தனைமுறை , முரணுக்கு இடமில்லாமை என அவர் அழகாக எடுத்து சொல்கிறார்.தங்களின் பண்டைய பிடிப்புகளிலிருந்து தளர்வுகளை உணரவேண்டியிருந்தது. இக்காலம் உலகளாவிய அளவில் இருப்பதை கேள்விக்கு உட்படுத்தும் காலம் என்றார். இந்துயிசம் குறித்த நமது விரிவுரைகள் இன்றுள்ள பொருள்முதல்வாதம் அல்லது பகுத்தறிவாத செல்வாக்கிற்கு உட்பட்டோ அல்லது பழம்பெரும் உள்ளுணர்வுவாத கண்மூடித்தனமான விடாப்பிடிவாத செல்வாக்கிலோ இருக்கின்றன. மேலை நாட்டு புத்திமான்களான ஜோன்ஸ், கோல் புருக், ஹேமன் வில்சன், மூர் போன்றவர்கள் இந்துயிசம் குறித்து விமர்சனபூர்வ ஆய்வுகளில் ஈடுபட்டனர். இவர்கள் தத்துவவாதிகளாக இல்லாததால் அவர்களால் சிலவற்றிற்கு போதுமான விளக்கம் தர இயலவில்லை. பின்னர் வந்த கிறிஸ்துவ நற்செய்தியாளர்களோ கிறிஸ்து தத்துவம் என்கிற எல்லைக்குள் நின்று விளக்கம் தந்தனர் என இந்துயிச ஆய்வுகள் எவ்வாறு நடந்தன என்பதை பிபின் எடுத்து சொல்கிறார். மாக்ஸ் முல்லரின் அறிவியல் ஆய்வை ஒப்பீட்டளவில் ஏற்கலாம் என்கிறார். அவர் மொழியியல் துறையில் சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தின் என்பதையும் ஆய்வு செய்தார். ஜெர்மன் ஆக்கங்களை அவர் எடுத்துக்கொண்டார். பல்வேறு மொழிகளின் அமைப்பியல் பந்தம்(Structural affinity among these different languages) என்பதை பிபின் ஆய்விற்கு அவசியம் என்கிறார்.. வரலாற்றிற்கு முந்திய மொழிகளின் பந்தம் மட்டுமல்ல சிந்தனை பந்தம் என்கிறார். மனிதனிடம் உறையும் அநாதிக்கால ஆதித்தன்மை எனப் பேசியவர் முல்லர். இந்த பார்வையில் சமஸ்கிருதத்தில், கிரேக்கத்தில் நமது முன்னோடி மனிதர்கள் என்ன பதிவிட்டுள்ளார்கள் என்பதை அவர் ஆய்ந்தார். இந்த இயற்கை மதம் என்பதிலிருந்து கடவுட்கொள்கை, தியோசாபிவரை முல்லர் செல்கிறார். முல்லரின் வேத மதம் ஆய்வில் ஆதிகால இந்துக்கள் உலகை இந்த இயற்கை மதம் முறையில் வெளிப்படுதியதானா புரிதல் இருப்பதாக தெரிவிக்கிறார் பிபின். இந்த இயற்கைவாதம் இந்துயிசத்திற்கு மட்டுமானதல்ல என்கிறார் பிபின். கிரேக்கம், ரோமிலும் காணமுடியும் . ஹீப்ருவில் மோனோதீயிசம் என்பது பேசப்பட்டாலும் அங்கும் பழைய ஆவணங்களில் பிற கடவுள் மறுப்பு இல்லை என்கிறார் பிபின். ‘கவுன்சில் ஆப் காட்ஸ்’ என்பது சொல்லப்பட்டு அதில் இஸ்ரேல் கடவுள் உயர்ந்தவர் என பேசப்படுவதாக பிபின் சொல்கிறார். ஆரம்பகாலத்தில் இஸ்ரேல் கடவுள் பிற தேசங்கள் மீதான அதிகாரம் என ஏதும் கொள்ளவில்லை.என சொல்கிறார். அய்ரோப்பிய வாசகர்களுக்கு உதவும் வகையில் முல்லர் இந்து துறவிகள் பேசியவற்றையும் அலெக்சாந்த்ரியா தந்தையர் ஒரேகன், கிளமண்ட் போன்றவர் பேசியதையும் அவர் ஒப்பிட்டு விளக்கினார். மத விவகாரங்களின் ஆய்விற்கு அறிவியல் தத்துவம் ஆகியவைகளின் துணை தேவை என்றார் பிபின். மதம் என்பதே இந்த இரு அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்திய அனுபவத்தில் மதமும் தத்துவமும் ஒன்றாகவே உள்ளது என்கிறார். மத அறிவியல் என்பது மத அனுபவங்களை முறைப்படித்தும் அறிவுதான் என்பார் பிபின்.. உள மெய்யியல் (Metaphysics) இல்லாமல் நேரம், இடம் என்பதை கணிதம் பேசமுடியாது என்றார். எனவே இவ்வாய்வு மெட்டாபிசிக்ஸ் சயின்ஸ் கலந்த ஆய்வு என்கிறார். டேவிட் ஹ்யூமின் ஆய்வுகளை பற்றி பிபின் பேசுகிறார். மதங்களின் பரிணாமம் மன உணர்வுகளின் அடிப்படையில்லாமல், காரணகாரிய இயக்கவியலை பின்பற்றாமல் இல்லை. ஹெர்பர்ட் ஸ்பென்சர் கூற்றுப்படி அனைத்து பரிமாண வளர்ச்சியும் ஒருமித்த தன்மையிலிருந்து தனித்து வேறுபட்ட தன்மை கொள்ளுதலும் அதிலிருந்து ஒருங்கிணைப்பிற்கு செல்வதாகவுமே இருக்கிறது. இந்த விளக்கம் மத பரிணாமத்திற்கும் பொருந்தும் என்கிறார் பிபின். மனித மத ஆய்வில் ஒப்பீட்டு முறை, வரலாறு எந்த முறையானாலும் அது காரணகாரிய அறிவின் இயக்கவியலுடன், பரிணாம விதிகளுடன் தொடர்பாகியிருக்கவேண்டும் .இவ்வாறு மனவளர்ச்சி என்பதிலிருந்து பார்க்கும் போதுதான்Negro Fetishism- Hindu Idolatry போன்றவற்றை புரிந்துகொள்ளமுடியும். எல்லாமே ஒப்பிடக்கூடியவைதானா என்பதில் அவருக்கு சந்தேகமில்லாமல் இல்லை. இரண்டும் வரலாற்று வளர்ச்சியில் தொடர்பு உள்ளதா என்கிற கேள்வியை அவர் எழுப்பாமலும் இல்லை. சில தனித்த ஒற்றுமைகள், காட்சிக்கு தெரியும் அடையாளங்கள் மட்டுமே அறிவியல் ஒப்பீட்டிற்கு போதுமான்வையல்ல என்கிறார். ஒப்பீட்டுமுறையில் பெறப்பட்ட தரவுகளை அதன் போதாமை தவறுகளை பொதுவான பரிணாம வளர்ச்சி விதியின் மூலம் சரி செய்துகொள்ளவேண்டும் என்கிறார் பிபின். பண்டைய பழங்குடிகளிடம் இருந்த மணவிலக்கு முறையை இன்று வளர்ந்த ஆங்கிலேயர் மணவிலக்குடன் ஒப்பிட்டு பேசுவதில் உள்ள குறையை அவர் சுட்டிக்காட்டுகிறார். மதப்பரிமாண வளர்ச்சி என்பது மனித எண்ணங்களின் வளர்ச்சி,செயல்களின் வளர்ச்சி. அவை மனரீதியான மற்றும் உளவியல் வளர்ச்சியும் கூட. ஆனால் இறுதியில் அவை காரணகாரிய இயக்கவியலை பின்பற்றவேண்டும் என்கிற தெளிவான பார்வையை அவர் முன்வைத்தார்அப்படி பரிணாம வளர்சியில் மதம் மாறிக்கொண்டேயிருக்கிறது என்றார். பரிணாம வளர்ச்சிக்கு டார்வீனிய நேர்கோட்டு அம்சம் என்ற புரிதல் தவறு என்று சொல்வதுடன் என்கிற ஹெகலிய மார்க்சியவகைப்பட்ட டயலக்டிக்ஸ் அணுகுமுறையை பிபின் நெருங்குகிறார். ஆனால் மார்க்சிய இயக்கவியல் என்கிற பதத்தை அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் ஹெகலியம் எனப்பேசுகிறார். தூய இருப்பு என்பது ஏதுமில்லை (Pure Being is Pure Nothing) என்பது ஹெகல் கருத்தாகும் என்கிறார் பிபின். பரிணாம மதம் முற்று முழுதான அதன் இறுதியை நிர்வாணம் என்கிற நிலையை அடைந்துவிட்டது என நாம் சொன்னால் அது மேலும் வளர ஏதுமில்லா நிலையில் என்றாகிவிடும் . அது வாழும் மதமாக இல்லாமல் செத்ததாகிவிடும் என்றார். புத்த, இஸ்லாமிய, கிறிஸ்துவ credal மதங்கள் அப்படியொரு இறுதி (finality) வந்ததுபோல் உரிமை கொண்டாடுகின்றன . ஆனால் வரலாற்றின் போக்கில் அதன் ‘நற்செய்தி புரிதலுக்காக’ ஏராள முரண்பட்ட மோதல்கள் நிகழாமல் இல்லை என்கிறார் பிபின். வளர்ச்சியை முரண்- எதிர் முரண்- இசைவுமூலம் விளக்குகிறார். பழமைக்கும் புதுமைக்கும் அவ்வப்போது ஏற்படும்போராட்டமே மதங்களின் வளர்ச்சியின் வரலாறு. இந்த மோதலுக்குரிய தீர்வென்ன - இணக்கப்படுத்துவது எப்படி என அவர் சிந்திக்கிறார். சிந்தனை வாழ்வு முரண்பாடுகளை தாங்கிக்கொள்ளாது. அதன் ஆன்மா இணக்க்கப்படுத்துவதில் இருக்கிறது. எனவே சிந்ததிஸ் என்கிறார். வேதபிரதிகள் கூட ஏககால அனுபவங்களின் பிரதிபலிப்பல்ல. தொடர்ந்த பல காலங்களின் பிரதிபலிப்பாகா இருப்பதால்தான் அதில் பல்வேறு அனுபவங்களை பார்க்கமுடிகிறது என்கிறார். ரிக்வேதத்தின் முதல் மற்றும் 10வது மண்டலமும் சீராகத்தான் வளர்ந்திருக்கவேண்டும். குறித்த் விஷயத்திலிருந்து, இயற்கைவாதத்திலிருந்து ஏகக்கடவுட் கொள்கைநிலைக்கு உலகளாவிய தன்மைக்கு வளர்ந்திருக்கவேண்டும். உண்மை ஒன்றுதான்- பிராம்மணர்கள் அதை இந்திரா வருணா, ருத்ரா என பலவாறு அழைக்கிறார்கள் என எடுத்துக்காட்டி விளக்குகிறார். எனவே இந்த அத்துனை பிரதிகளையும் ’ஒரே ஸ்டேஜ் இந்து பரிணாம வளர்ச்சி என்பது சரியல்ல என்றார். உபநிடதங்களுக்கும் இது பொருந்தும் என்கிறார். மாக்ஸ்முல்லர் தனது ஆய்வில் வேத வளர்ச்சி 500 ஆண்டுகள் இருக்கலாம் ; உபநிடத வளர்ச்சி 200 ஆண்டுகள் இருக்கலாம் என்றார். திலகரோ தனது ஆய்வில் பல நூற்றாண்டுகளின் தொகுப்பு என்றார் .புராண இந்துயிசம் கூட அப்படித்தான். கடவுள் பார்க்கமுடிந்தவரா இல்லையா என்பதை தாண்டி மனிதனின் ஆய்வுப்பொருளாகிவிட்டார். உபநிடதங்கள் ஆக உய்ர்ந்த அந்த இறை அனைத்தியும் அறிவார் என்கிறது. அதை கண்டவர் இல்லை என்கிறது. பிரம்மனும் சுயமும் ஒன்று என்கிற தன்முனைப்புவாதமும் உபநிடதம் பேசுகிறது என்றார் பிபின். அநாதி (Infinite) என்பது குறித்து அவர் மாக்ஸ்முல்லருடன் மாறுபாடுகிறார். பிபினுக்கு அநாதி உள் உணர்வு( infinite is intutional). அதே நேரத்தில் அதற்கு புற தூண்டல் அவசியம் என்பதை அவர் ஏற்கிறார். மலை, கடல், இருட்டு , வானம் போன்ற இயற்கை அம்சங்கள் அவனுக்கு infinite என மாக்ஸ்முல்லர் சொல்கிறார். இதை தான் அல்லாத சக்தியின் சந்திப்பில் உணர்வது (not-me Idham not Aham Face to face with a power-not-Himself) என பிபின் சொல்கிறார். இயற்கையில் தான்அற்றவற்றை உணரத்துவங்கியதுதான் இயற்கை தெய்வங்களுக்கு மூலம்- என வந்தடைகிறார் பிபின். வேத- ஹெல்லனிய தெய்வங்கள் இவ்வகையானவை என்கிறார். ஹ்யூம், ஸ்பென்சரை அவர் ஆய்வு செய்கிறார். இயற்கை தெய்வ வழிபாடு என்கிற உணர்வுடன் தனது மூதாதையர் வழிபாடு என்கிற இரு உணர்வு நிலைப்பற்றி சொல்கிறார். மனிதன் சமுக உயிரியாக இல்லாத நேரம் என ஏதுமிருக்காது என்பதை சொல்லி இந்த சமுக பந்தம்தான் மதத்திற்கு முக்கிய காரணி என வரையறுக்கிறார். மனிதனுக்கு சமய உணர்வு உருவாவதற்கு இயற்கையும் சமூகமும்தான் இரண்டு முக்கிய ஏஜென்சிக்கள்என்கிற விளக்கத்தை அவர் தருகிறார். கிரேக்கர்கள் மதத்தை சூழலுடன் ஆன இசைவு என புரிந்திருந்தனர். இயற்கை- முன்னோர் வழிபாடு என்கிற இரட்டைத்தன்மை வேத இந்துயிச பரிணாமத்தில் முக்கியமானதாக இருக்கிறது என வந்தடைகிறார். பிரம்மன், பிராஜாபதி- தேவர்- பிதுர் என்பன மூலம் இதை அவர் எடுத்து சொல்கிறார். தீ உள்ளிட்ட பஞ்சபூத வழிபாடு, ஹிரண்யகர்ப்ப போன்றவற்றை சொல்கிறார். மதத்தின் வரலாறே மனிதன் சூழலை புரிந்து அவன் அளித்த விளக்கம், மோதல், இணக்கம் ஆகியவற்றின் வரலாறுதான் என்பதை அவர் ஏற்றார். சமயத்தின் வரலாறு மனித முயற்சியின் வரலாறுதான். காணும் காட்சிகளுடன், சிந்தனையுடன், சமுகம், பொருளாதாரம் மற்றும் உருவாக்கிக்கொள்ளும் நெறிகளுடன், இயற்கை குணங்களில் தான் பெறும் முன்னேற்ற வளர்ச்சி, ஆன்மாவின் ஆக உயர்ந்தது குறித்த சாத்தியப்பாடுகள் ஆகியவற்றிற்கான முயற்சிதான் என்ற அருமையான வரையறையை பிபின் நல்கினார். மனித உணர்வுகள், காரணக்கள், விருப்பங்கள் என்கிற உளவியல் வெளிச்சத்திலும் மதப் பரிமாணம் ஆய்வுக்குரியதாக இருக்கிறது. அதன் முதல்கட்ட பரிமாணம் இயற்கையானது- உய்த்துணர்வது என்கிறார். வேதக்கடவுள்கள் காணமுடிந்த பொருட்களாக(visible objects) ஆக இருப்பதை சொல்கிறார். ஹீப்ருவிலும் இதை உணரமுடியும். இஸ்லாம் முகமது காலத்தில் உய்த்துணர்வு என்பது பிரதிபலிப்பு நிலை மதமாக வடிவெடுக்கிறது ஆகிறது என மதிப்பிடுகிறார். பிரதிபலிப்பு நிலை என்பது சமய கற்பனைகளுக்கும் இடம் கொடுக்கும் என்கிறார் ஆரம்பகால வழிபாடு தெரிந்தவைகளை கண்ணுற்றவைகளை வழிபடுவதாக இருந்தது, கிறிஸ்துவம், இஸ்லாமில் கூட கிறிஸ்து, முகமது என்கிற உணர்வின்றி வழிபாடு இல்லாமல் இருக்கிறது என்கிற விளக்கத்தை அவர் தருகிறார். இவ்விடத்தில் உருவ வழிபாடு என்பதை நெருங்கும் அவரது கருத்தாக்கம் சிக்கல்களை ஏற்படுத்தலாம். அவரைப்பொறுத்தவரை கிறிஸ்துவம், இஸ்லாம் இரண்டையுமே அவர் பிரதிபலிப்பு நிலை மதங்கள் என்றும் (Reflective state Religions) ஊகநிலையை(Speculative). அவை பிரதிந்தித்துவப்படுத்தவில்லை எனவும் சொல்கிறார். அனைத்து கருத்தியல்களுக்கும் கற்பனை ப்யிற்சி தேவைப்படும். சமய கற்பனைகள் தத்துவ ஊகங்களுக்கு முன்னதானது என்றே சமய வரலாற்றின் பரிணாம வளர்ச்சி காட்டுகிறது என்றார் பிபின். உலக மதங்கள் ஏன் தமக்குள் வேறுபடுகின்றன என்கிற கேள்வியும் அவரிடம் எழுகிறது. இதற்கு அவர் அவை விளக்கும் நிலைத்தனமை மற்றும் தனித்த விச்த்திரங்களையும் காரணமாக்குகிறார். மொழிக்கும் சிந்தனைக்கும் உள்ள தொடர்பென எடுத்துக்கொண்டு விளக்குகிறார். மொழியின் கட்டமைப்பு அம்மக்களின் மனநிலை வாழ்வை காட்டும் என்கிறார். மொழி மன உலகின் குறியீடு(Language an index to mental life) என்கிறார். இனங்களின் சிந்தனை கட்டுமானம் எண்ண ஒழுங்குமுறையை உருவாக்குவதாகவும் அவர் எழுதுகிறார். இந்தோ ஆர்ய இனம் பற்றி குறிப்பிடுகிறார். இவ்வகை இன உணர்வுகள் சமய வேறுபாடுகளை காட்டும் அம்சம் என அவர் தன் ஆய்வில் வந்தடைகிறார். எனவே இன குணநலன்கள் பற்றிய ஆய்வும் மத ஆய்விற்கு தேவைப்படுகிறது என்கிறார். ஹீப்ரு அராபியம் ஒரே ஸ்டாக் என சொல்கிறார். கடைப்பிடிக்கும் தன்மையில் யூத, இஸ்லாம் (Judaic Islamic legalism) ஒன்று என்கிறார். ஆனால் கிறிஸ்துவ லீகலிசம் சற்று மாறுபட்டதுஎன்கிற முடிவிற்கு அவர் வருகிறார். புத்தம் வளைந்து கொடுக்காதது என்றும் அது ஆள் பார்க்காது, முழுமையானது, நிரந்தரமானது என எழுதுகிறார் கடவுள் என்கிற கருத்தாக்கத்திலும் அவர் திரும்ப திரும்ப சொல்வது மனிதன் தொடர்ந்து கடவுளை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறான்(Man has always made and is still making his God, everywhere after himself.) என்பதாக உள்ளது. நம் காலத்திற்கு மதம் பெரும்பாலும் ஊகமாகவே இருக்கிறது. வரலாற்றுக்கு முந்திய மனிதன் போன்ற சூழல் இல்லாத நம் வாழ்வில் மதம் என்கிற பழக்கம் இல்லாமல்கூட உயிர்வாழமுடியும். ஆதிமனிதனுக்கு மதம் எல்லாமாக இருந்திருக்கலாம். ஆனால் நவீன மனிதன் உடைவை ஏற்படுத்திக்கொண்டுள்ளான். அவன் புத்தி வாழ்க்கையை ,நெறிகளை, அழகியல் உணர்வுகளை சமயத்திற்கு வெளியே கூட வளர்த்துக்கொண்டுவிட்டான் என்றார் பிபின். நவீன அய்ரோப்பிய சிந்தனை புதிய கூட்டிணைவிற்கு அழைத்து செல்கிறது. காண்ட், ஹெகல், ஷெல்லிங், கதே, எமர்சென், டென்னிசன், பிரவுனிங், இப்சன், டால்ஸ்டாய் விட்மேன் என புதிய சிந்தனையாளர்கள் இந்த உயர்ந்த கூட்டிணைவிற்காக நிற்கிறார்கள் என்றார் பிபின். An Introduction to Hinduism- Comparative study of Religion என்கிற மதம் பற்றிய அறிவியல்- தத்துவ ஆய்விற்கு அவர் ஹெகல் முறையை எடுத்துக்கொள்கிறார். 1910க்கு முன்னர் இந்திய தலைவர் ஒருவர் ஹெகல் சிந்தனையுடன் தொடர்பில் இருந்தது ஆச்சரியமூட்டுவதாகவுள்ளது. காண்ட், டால்ஸ்டாய், இப்சன், எமர்சன், மாக்ஸ்முல்லர் என பல பெரியவர்களின் கருத்துக்களுடன் இருந்த சிந்தனை உறவை காணமுடிகிறது. இந்துயிசம் சிறப்பானது என்கிற கருத்துக்கு அவர் வந்தடைந்தாலும் வேறு மதங்கள் மீது எவ்வித துவேஷமும் இல்லாமல் இருக்கும் அவரின் ஆய்வுமுறை மிக வித்தியாசமானதாக தெரிகிறது. நமது நவீன உலகத்திற்கு மதம் மிக அடிப்படையாக இருக்க வேண்டியது கூட இல்லை என்கிற பார்வையையும் அவரால் அறிவியல் தத்துவ வலுவான பின்புலத்துடன் சொல்லமுடிந்தது 4 பிபின் சந்திர பால் இந்திய விடுதலைக்கால புரட்சிகர கருத்துக்களின் தந்தையாக கருதப்பட்டவர். லால்-பால்-பால் என லாலாஜி, திலகருடன் இணையாக பார்க்கப்பட்டவர். காந்திக்கு முந்திய தலைமுறை. அவரின் எழுத்துக்கள் பல ஆச்சரியமூட்டும் விஷயங்களை கொடுக்கின்றன. அவரின் Soul Of India கிறிஸ்து மதத்துடன் மட்டுமல்ல பிரிட்டிஷ் குழந்தைகள் இந்திய சிந்தனைகள் குறித்து முறையாக தெரிந்து கொள்ளவேண்டும் என்பதன் விழைவில் எழுதப்பட்டது. The New Economic Menance to India என்ற புத்தகம் இந்தியாவின் வளங்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொள்ளை அடிப்பதை குறித்து விவரிக்கிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற கருத்தாக்கம், தொழிலாளிவர்க்கம் இந்தியாவில் அணிசேரவேண்டும், பிரிட்டிஷ் சோசலிசம் தாக்கம் போன்ற நிலைகளுக்கு மிக அருகாமையில் அவர் வருகிறார்… மனித அர்த்தங்களில்தான் நாம் தெய்வத்தை கண்டுணரமுடியும் என்பதையே அனைத்து மத ஆன்மீக வாழ்வியல் அனுபவங்கள் சொல்கின்றன. திலகர், அரவிந்தர், லாலாஜி ஆகியோர்கள் இந்து மறுமலர்ச்சிவாதத்திற்கு நின்றார்கள். அவ்வாறே பிபினும் நின்றார் என்கிற பொதுப்பார்வை இல்லாமல் இல்லை. இந்து மறுமலர்ச்சி (Hindu Revivalism) என்கிற பெயரில் நடந்துவருவதென்ன என அவர் பேசினார். இந்து நம்பிக்கைகளை புதுப்பிப்பது என்கிற பெயரில் பண்டைய உபநிடதங்களிலிருந்து எடுத்துக்கொள்ளாமல் சங்கர வேதாந்தம், சடங்குகள், சிம்பலிசம், புராண கற்பனைகள் ஆகியவற்றிலிருந்து சாதிய ஒதுக்கல் போன்ற வளைந்துகொடுக்காதன்மை, பிராம்மண உயர்வு போன்ற மதத்தின் ‘சூப்பர் இயற்கைவாதத்தை’ புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற விமர்சன பார்வை அவரிடத்தில் இருந்தது. நவீன கருத்துக்களின் வரவு பிராம்மண மேலாதிக்கத்தின் செல்வாக்கை குறைத்து வருகிறது என்கிற திருப்தியை அவர் வெளியிட்டார். அவரின் இங்கிலாந்து அமெரிக்க பயணங்கள் சமுக அரசியல் கருத்துக்களை செழுமைப்படுத்த அவருக்கு உதவின. அதே நேரத்தில் தேசாபிமானம் என்பது அவருக்கு மிக முக்கியமானதாக இருந்தது. அமெரிக்காவின், இங்கிலாந்தின் உத்வேகம், அழகு, வளம் என்பதை கண்ணுறும் அதேவேளையில் சொந்த நாடு குறித்த எண்ணங்கள் கூடுதலாக வலிமைப்பெறுகின்றன என அவர் தெரிவித்தார். மதகுருமார், அரசர், அரசியல்வாதி, சமுக சீர்திருத்தவாதி என எந்த பெயரில் மக்கள் விரும்பாத கருத்துக்களை அவர்கள் மீது திணித்தாலும் அது சரியில்லை என அவர் கருதினார். சீர்திருத்தவாதிகளால் இவ்வுலகம் உருவாக்கப்படவில்லை. உலகு அவர்களின் சோதனைக்களமும் அல்ல. வித்தைகள் காட்டி உலகிற்கு நன்மை செய்கிறோம் எனப் பேசுபவர்களை ஏற்கமுடியவில்லை என சாடினார் பிபின். இவ்வுலகை உண்மை என ஏற்காத தத்துவத்தை ஏற்கவேண்டியதில்லை என அழுத்தமாக அவர் சொன்னது சங்கரரின் மாயாவாதம் குறித்த விமர்சனமாக நாம் எடுத்துக்கொள்ளலாம் அவர் சாதி ஒழிப்பு என்பதை பேசவில்லை. ஆனால் தளர்வுகள் குறித்து உரையாடிவந்தார். தொட்டால் தீட்டு இந்துமதத்தின் மிகப்பெரிய பலவீனம் என்றார். சாதிமுறை ஆகாயத்திலிருந்து திடிரென வந்துவிடவில்லை. சமுகம் துவங்கிய காலத்தில் அது உருண்டுதிரண்டு நிற்கவும் இல்லை. சமூகம் தன் தேவைகளுக்கு காலப்போக்கில் செய்து கொண்ட ஏற்பாடு. அந்த ஏற்பாட்டின் சமுக விளையாட்டு. அதீதைஅர்கை அம்சங்களோ பில்லி சூன்யமோ அல்ல(nothing supernatural or necromancy in it) என்ற விளக்கம் அவரிடம் கிடைக்கிறது. தவறான பெருமிதங்களால் இந்துமத ஆதாரங்களில் நாம் குற்றிவிட்டோம் எனவும் அவர் விசனப்பட்டார். வர்ணாஸ்ரமம் என்ற பெயரால் இங்கிலாந்தில் உள்ள வர்க்கப் போராட்டம் போன்ற நிலையைத்தான் நாம் ஏற்படுத்தியுள்ளோம். அதைக்கொண்டு இந்து நாகரீகத்தை கலாச்சாரத்தை காப்பாற்ற முடியாது-அழிவிற்குத்தான் உதவும் என்ற எச்சரிக்கையை அவர் தந்தார். குழந்தை திருமணமுறை எதிர்த்தும் விதவைகளுக்கு சமுகம் இழைக்கும் அநீதிகளுக்காகவும் மறுமணத்திற்காகவும் அவர் கடுமையாக போராடினார். அவரே சுரேந்திரநாத் அவர்களின் உறவுக்கார விதவைப்பெண்ணை மணந்தார். அவருக்கு கடுமையான மிரட்டல்கள் வந்தன. ஒருமுறை அவர்மீது துப்பாக்கியால் ஒருவர் சுட்டார். குறி தவறியதால் அவர் தப்பி பிழைத்தார். பெண்களுக்கு திருமண வயதை உயர்த்த சட்டம் என பேசும்போதெல்லாம் கலாச்சார ஆபத்து- மதத்திற்கு ஆபத்து என கூக்குரல் எழும்பும் ஆனாலும் நாம் உறுதியாக செயல்படவேண்டும் என்றார் அவர். அதற்கான பொறுக்குக்குழு உறுப்பினராகவும் அவர் 1924ல் இருந்தார். அப்போது குறைந்தவயது 14 ஆவது இருக்கவேண்டும் என சொன்னதற்கே எதிர்ப்பு வந்தது. 1909ல் அவர் இங்கிலாந்தில் இருந்தபோது பெண்களுக்கு ஓட்டுரிமை என்கிற (women Suffragist) இயக்கம் தீவிரமாக எழுந்தது. அவரும் ஆதரவு தெரிவித்து உரையாற்றினார். இந்தியாவிலும் பெண்களின் சமுக அரசியல் உரிமைக் கிளர்ச்சிகளில் இளைஞர்கள் முன்நிற்கவேண்டும் என அவர் தெரிவித்தார். அவர் சமஸ்கிருதம் தேவை எனக் கருதினார்.சிவில் சர்வீஸ் தேர்வில் சமஸ்கிருதம் கட்டாயம் இருக்கவேண்டும். இந்தியாவின் இணைப்புமொழியாக இந்துஸ்தானி என அவர் பேசிவந்தார். என் தலைமுறைக்கு கிடைத்த சமஸ்கிருத, அறிவியல் கல்வி என் பேரக்குழந்தைகளுக்கு கிடைக்காமல் போய்விடக்கூடாதென்றார். வடமொழியும் அறிவியலும்(sanskrit and Science) என முழங்கி வந்தார். வந்தே மாதரம் என்கிற பத்திரிகை வாயிலாக அவர் 1908ல் ஒத்துழையாமை (Passive Resistance) குறித்து ஏராள கட்டுரைகள் எழுதினார். அது சிவிலியன்களகிய மக்களுக்கும் சிவில் அரசாங்கத்திற்குமான் முரண் என்பதாக அவர் விளக்கினார். அரவிந்தர் பிபின்தான் இந்தியாவின் ஒத்துழையாமை சொன்ன தீர்க்கதரிசி (Prophet of passive Resistance) என்று புகழ்ந்துள்ளார். காந்தியடிகள் பின்னர் சத்தியாக்கிரகம்- ஒத்துழையாமை என்கிற வகையில் அதை மக்கள் இயக்கமாக பெரிய அளவில் உருவாக்கினார். ஒட்டுமொத்த உள்நாட்டு திறமைகளின் ஊக்குவிப்பாக அரசாங்கம் இருக்கவேண்டுமே தவிர தலையிட்டு தொந்திரவு செய்வதாக இருக்கக்கூடாது. அப்பொழுதுதான் சுயசார்புள்ள பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்றார் பிபின். நமது புதிய தேசம் குறித்த பார்வை முற்றுமுழுமையான தற்சார்பு, சுயஉதவி தன்மையினதாக இருக்கவேண்டும் என்றார். 1906ல் காங்கிரஸ் தலைமைக்கு திலகரா- தாதாபாய் நெளரோஜியா என்கிற கேள்வி வந்தது. பிபின் திலகர் கருத்துக்களுடன் உடன்பட்டு போகக்கூடியவராக இருந்ததால் அவர் தாதாபாயை எதிர்க்கிறார் என்ற செய்தி பரவியபோது அதை அவர் மறுத்தார். தாதாபாய் கொண்டிருக்கும் அரசியல் விடுதலை குறித்த கருத்துக்களில் தான் வேறுபடுவதாக தெரிவித்தார். காலனியத்திற்குள்(Self Govt of Colonial type) என்கிற தாதாபாய் முன்மொழிவை எதிர்த்து சுதந்திர இந்தியா( free India) என பிபின் பேசிவந்தார். விடுதலைப்பெற்ற இந்தியா பிரிட்டனுடன் தோழமை கொள்வதில் ஆட்சேபணை இல்லை என்றார். தீவிரவாதிகளின் கருத்துக்களை பைத்தியக்காரத்தனம் என விமர்சித்த கோகலேவிற்கு பதிலை பிபின் எழுதினார். கலோனியல் எண்ணம் தவறானது என்பதை எடுத்துக்கூறி பைத்தியக்காரத்தனம் முற்றிலுமாக எங்கள் பக்கம் மட்டும் இல்லை என்று எழுதினார். ஸ்டேட்ஸ்மேன் நிருபரிடம் அவர் பக்சார் சிறையிலிருந்து வெளிவரும் நேரத்தில் விளக்கம் ஒன்றை அளித்தார். என்னை தீவிரவாதி என சொல்கின்றனர். ஆனால் நான் சமுகவியல்வாதி அவ்வளவுதான் என்றார். மறுமலர்ச்சி என்பது குறித்து அவர் 1928 டிசம்பரில் எழுதினார் மறுமலர்ச்சி என்பது வளர்ச்சிக்கட்டத்தில் முன்பிருந்த நிலைக்கு திரும்புவதல்ல. செத்தொழிந்த, நலிந்தனவற்றை மீட்பதல்ல. எந்த நாடும் கடந்த காலத்திற்கு போய்விடமுடியாது. இந்தியாவும் அப்படித்தான். இன்று ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்காலத்தில் எந்த மந்திர சக்திகொண்டும் பழைய காலத்தை கொண்டுவந்து வைத்துவிடமுடியாது.மறுமலர்ச்சி என்பது வழக்கொழிந்த சிந்தனைகளுக்கு சென்று அவற்றை மீட்டுருவாக்கம் செய்வதல்ல. பரிணாம வளர்ச்சியில் கடந்தவைகள் கடந்தவைவைதான் என்றார். கலை, கலாச்சாரம் எதுவாக இருந்தாலும் இன்று எதிர்ப்படும் பிரச்சனைகளுக்கு மறைந்து போய்வரும் சில கலாச்சார கூறுகளை இன்றுள்ள காலநிலைக்கேற்ப இணக்கத்துடன் சேர்த்தல் என்பதே மறுமலர்ச்சி என்றார். பிபின் தன்விருப்பம் போல காங்கிரசிற்குள் உள்ளேயோ வெளியேயோ தனி அமைப்பை உருவாக்கி நடத்தும் அளவிற்கு நிதி பின்புலம் உடையவராகவில்லை. அவரின் குடும்ப வாழ்க்கைக்கே போராடுபவராக இருந்தார். திலகர் அன்னிபெசண்ட் ஹோம்ரூல் இயக்கத்தில்கூட தனக்கென தனி முத்திரை பதிப்பவராக இருந்தார். 1924 துவங்கி கல்கத்தா செண்ட்ரல் அசெம்பிளியில் மூன்று ஆண்டுகள் தனது வாதத்திறமையால பலரின் கவனத்தை ஈர்த்தார். அதிலும் கூட கட்சியின் முடிவுகள் என்றில்லாமல் சுயேட்சையான சிந்தனைகளை வெளிப்படுத்துவராக இருந்தார். வெற்று அரசியல் என்பதைவிட அனைவரின் நலனுக்குமான இராஜதந்திரி என்பதுவே தனது விருப்பம் என்பார். அவருக்கும் சி ஆர் தாஸ் அவர்களுக்கும் ஏற்பட்ட வேறுபாடுகளால் அவர்கள் ஒருவரை ஒருவர் அணுகிக்கொள்ளாமல் இருந்தனர். அரசியலாக இருந்தாலும் தேச வாழ்வு என எடுத்துக்கொண்டாலும் அவர் சிந்தனையும் செயல் முடுக்கமும் நிறைந்தவராகவே தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். நமது அறிவுத்துறை வர்க்கத்திடம் தெளிந்த சுதந்திரமான சிந்தனை பழக்கம் மேம்படட்டும் என முழங்கியவர் பிபின். ‘முதலில் முஸ்லீம் பின்னர்தான் இந்தியர்’ என்ற பார்வைக்கு பதிலாக ‘முதலில் இந்தியர் பின் தான் ஒரு முஸ்லீம்’ என்கிற பார்வை இஸ்லாமியர்களிடம் பலப்பட்டால்தான் இந்து முஸ்லீம் பிரச்சனை முழுமையாக தீரும் என்கிற கருத்து அவரிடம் இருந்தது. கிலாபத் இயக்கம் மத தீவிரவாதங்களுக்கு துணையாகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை அவரிடமிருந்து வந்தது. இந்து வகுப்புவாதம்- முஸ்லீம் வகுப்புவாதம் என மோதிக்கொள்ளும் இரு வகுப்பாராக மாறிவிடக்கூடாது எனவும் அவர் பேசினார். இந்துராஜ்யம்- முஸ்லீம் ராஜ்யம் என்கிற கண்மூடித்தனமான நம்பிக்கையில் நாம் அராஜகத்தை உருவாக்கிவிடக்கூடாது என்றார். இந்தியாவில் பொறுப்புவாய்ந்த ஜனநாயக அரசாங்கம் என்பதற்கு உண்மையான பொருள் பிரிட்டிஷார் அதிகாரத்தை முற்றிலுமாக இந்தியர்களுக்கு மாற்றுவதுதான் என்றார். இவ்வாறு விடுதலை பெற்ற சுயாதீன செயல்பாடுள்ள நாடுகளின் உலக கூட்டமைப்பு பற்றியும் அவர் பேசினார். தேசிய- சர்வதேசிய இணைப்பு என்பதை அவர் விளக்கினார். அமைதியான சட்டபூர்வ வழிகளில் என்பதை அவர் சுட்டிக்காட்டிவந்தார். 1919 அமிர்தசரஸ் காங்கிரசில் திலகர் பிபின் காந்தி மூவரும் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்த்ருத்தங்கள் குறித்து மூன்று பார்வைகள் வைத்தனர். காந்தி loyal cooperation, திலகர் responsive coopeartion, பிபின் opposition என்றனர்.. ஒத்துழையாமை என்பது எங்கும் ஒலிக்கட்டும் என்றார். அது அமைதியான எதிர்ப்பு (It is passive resistance) என்றார் பிபின். சட்டம் ஒழுங்கை காத்து அமைதியை நிலைநாட்டுவது அரசின் பிரதான கடமை என்பதால் அதை சீர்குலைக்கும் இயக்கங்களை நாம் சட்டவரம்பிற்குட்பட்ட இயக்கம் என கருத முடியாது என்கிற ஒத்துழையாமை இயக்க எல்லைகளையும் அவர் குறிப்பிட்டார். 1920ல் காந்தி ஒத்துழையாமை என பேசியபோது பிறர் அதை கொண்டாடிய அளவு புதிய சிந்தனையாக அவர் ஏற்கவில்லை. அது குறித்து முன்பே தான் பேசிவிட்டதாகவே பிபின் கருதினார். காந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளை சொல்லி மோதிலாலுக்கு பிபின் கடிதம் எழுதினார். பத்திரிகை பொறுப்பிலிருந்தும் விடுவிக்க வேண்டினார். தனிநபர் துதி ஆபத்தானது. காந்திக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் செல்வாக்கு குறித்து நான் கண்ணை மூடிக்கொள்ளவில்லை. ஜனநாயக இயக்கத்தின் ஆரம்ப நிலையில் இவ்வாறான தனிநபர் செல்வாக்கு என்பது குறிப்பாக மத்தியகால மத உணர்வுகளின் உத்வேகத்துடன் என்பது எதிர்காலத்தில் ஆபத்தானதாக முடியும்என அதில் குறிப்பிட்டிருந்தார். 5 வங்கத்தின் காங்கிரஸ் மாநாடு 1921 மார்ச்சில் நடைபெற்றது. பிபின் தலைமையுரை நிகழ்த்தினார். மக்களை தன்னால் வசீகரிக்கமுடியவில்லை என்றார். எனக்கு உண்மை தெரிவதால் நான் அரை உண்மைகளை பேசுவதில்லை என்றார். காந்தி சொன்னால் தெய்வீக அருளுரை மற்றவர் பேசுவதெல்லாம் மனித கற்பனைகள் என்பதை அவர் ஏற்கவில்லை. மதத்தில் எந்த அதிகார பீடத்தையும் ஏற்கமுடியாத என்னால் அரசியலில் அவ்வாறு ஏற்கமுடியாமைக்கு வருந்துகிறேன் என தன் நிலையை அவர் தெளிவுபடுத்தினார். மக்கள் சத்தமிட்டு பேசவிடாமல் செய்ததை பார்த்து தான் வெளியேறிவிடுவதாக சொன்னார். அரவிந்தரால் வங்கத்தின் வலுவான மூளை என வர்ணிக்கப்பட்ட பிபினை பொறுமையிழந்த கூட்டம் கேலிக்குரியதாக்கியது. தாகூருக்கும் காந்தியின் ஒத்துழையாமை அரசியல் துறவித்தனம் (political asceticism) என்பதாகவே தெரிந்தது. காந்தியுடன் தனிப்பட்ட சண்டை என ஏதுமில்லை என்பதையும் பிபின் தெளிவுபடுத்தினார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் அவ்வாறு எடுத்துக்கொண்டுவிட்டனர் என்றார். காந்தி 1924ல் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு காலவரையற்ற பட்டினியை அறிவித்தபோது பிபின் அவரை மிக உயர்வாக பேசினார். ராஜாராம்மோகன்ராய்க்கு அடுத்து மதிக்கப்படவேண்டியவராக காந்தியை அவர் கருதினார் வரலாற்று கட்டங்கள் எதிர் எதிர் சந்திப்பு மோதல் காரணமாக புதிய சேர்மானங்கள் உருவாகிவருகின்றன. அது கலாச்சார அணிசேர்க்கைகளாகின்றன. இதையே பிபின் இந்தியவகைப்பட்ட கலாச்சாரம் என்பது இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ என மதக்கலாச்சாரங்களைவிட பெரியதான ஒன்று என எழுதினார் பிபின். 1907 லேயே அவர் இந்தியாவை பெடரல்ஸ்டேட் என்கிற பார்வையுடன் பார்த்தார். நான் மதம் எனும் பார்வையில் இந்துவோ . இஸ்லாமியனோ அல்ல. உயர் பார்வையில் சொன்னால் நான் இந்துவும் இஸ்லாமியனும் ஆவேன் (I am neither Hindu nor Mohamedan in the religious sense. From a larger view, I may honestly claim to be both Hindu and Mohamedan) என்றவர் பிபின். நவீன அரசு என்பது மத சார்பற்ற அரசாகவே இருக்கவேண்டும். புனித நூல்களின் மத இறையியல் கட்டளைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கவேண்டும். சிவில் வாழ்க்கையின் கடமைகளிலும் பொறுப்புகளிலும் மத சம்பந்தமான தலையீடு என்பது கூடாது என எழுதினார். 1925 ஜனவரியில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இதை மேலும் அவர் உறுதிபட தெரிவிக்கிறார். இந்து தர்மசாஸ்திரங்களுக்கோ குரானுக்கோ அரசிடம் இடமில்லை. அவை தனிப்பட்ட வாழ்க்கைக்குரியவை என எழுதினார். அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் அடிப்படையில் கட்டமைக்கப்படாத எந்த ஒன்றும் ஜனநாயகமாகாது . சிறுபான்மை கம்யூனிட்டியை பெரும்பான்மை கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது அரசிற்கான இழுக்கு பொறுப்பு என்கிற உணர்வுவேண்டும் என்றார். மதம் சார்ந்தவர் என்கிற உணர்வைவிட பொதுவான குடிமை சமூகம்(Civic Community) என்கிற உணர்வு பலப்படவேண்டும் என்றார்.. வேர்க்கால் ஜனநாயகத்தில் அவர் நம்பிக்கை வைத்தவர். இருகட்சி ஆட்சிமுறை நல்லது என்றார். கூட்டணி சர்க்கார் என்கிற குரூப் சிஸ்டம் பயனளிக்காது எனக் கருதினார். பொருளாதார கோட்பாடுகளில் சோசலிசம் என்பதற்கு மிக நெருக்கமாக அவர் கருத்துக்களை தெரிவித்துவந்தார். அதேநேரத்தில் எதேச்சதிகார அரசாங்க சோசலிசம் உண்மையான ஜனநாயக மலர்ச்சிக்கு ஆபத்தானது (State socialism was absoultely fatal to the evolution of real democracy under a despotic administration) என்கிற எச்சரிக்கையையும் அவர் தந்தார். அது தனிநபர் ஊக்கத்தை சிறிது சிறிதாக அரித்துவிடும் என்கிற கருத்தை அவர் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அவர் போல்ஷ்விக்குகளை பாராட்டி கருத்துக்களை சொல்லி வந்தார். பின்னர் பயங்கரவாதம் மூலம் ஆட்சியை பிடித்து நடத்தி வருபவர்கள் என்கிற கருத்து அவருக்கு உருவானது. இதற்கு அவரின் இங்கிலாந்து தொடர்பு காரணமாக இருந்திருக்கலாம். மார்க்ஸ் உடன் தொடர்பில் இருந்த ஹைண்ட்மேன் (H M Hyndman) பழக்கம் பிபினுக்கு இருந்துள்ளது, ஹைண்ட்மேன் மார்க்சை பாராட்டி நட்பு கொண்டவராகவும் லஸ்ஸேலுடன் சேர்ந்துகொண்டு மார்க்சை விமர்சிப்பவராகவும் இருந்துள்ளார். ஏங்கெல்ஸ் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். மார்க்சின் புதல்வி எலியனார் ஹைண்ட்மேனுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். பிபினை பொறுத்தவரை ருஷ்யாவில் நாடாளுமன்ற நடைமுறை இல்லாததும் அனைவருக்கும் வாக்குரிமை செயல்படாமையும் ஏற்பிற்குரியன அல்ல எனக் கருதினார். நமது இலட்சியவாதத்திற்கு ஏற்புடைய பல அம்சங்கள் சோவியத் முறையில் இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் மார்க்ஸ் போதனைகளைப்பின்பற்ரி புதிய சொர்க்கமோ, புதிய பூமியோ கம்யூனிஸ்ட்களும் சோசலிஸ்ட்களும் பேசிவந்தபடி உருவாகிவிடவில்லை என்று அக்டோபர் 1924 லேயே எழுதும் அளவிற்கு அவர் நிலைமைகளை கவனித்து எழுதுபவராக இருந்தார். பிபின் எழுதிய The New Economic Menance to India லெனின் அவர்களின் சொந்த நூலக அறையில் இருந்தது என அறியும்போது பிபின் எழுத்துக்கள் மீதான மரியாதையை அதன் உள்ளடக்கத்தை நம்மால் உணரமுடியும். டால்ஸ்டாய், லெனின் போன்றவர்கள் தத்துவார்த்த அராஜகவாதிகள் (philosophical anarchists) என்கிற விமர்சன கருத்தை பிபின் வைத்திருந்தார். லண்டனில் வாழ்ந்த புகழ்வாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் சாபுர்ஜி சக்லத்வாலாவுடனும் பிபின் அவர்களுக்கு பழக்கம் இருந்தது. 1901லேயே அவர் காங்கிரஸ் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர்களை திரட்ட வேண்டும் எனக் குரல் கொடுத்தவர். கல்கத்தாவில் தொடர்ந்து பலதரப்பட்ட தொழிலாளர் கூட்டங்களில் உரையாற்றியவர். அஞ்சல், மில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனைகளில் தலையிட்டு உரையாற்றியவர். உழைப்பை நேசிப்போம் கூலி அதன் உடன் விளைவுதான் என்பார் பிபின். பயமற்ற உறுதி கொண்ட தேசியவாதி பிபின். தனது புரிதலுக்கும் பார்வைக்கும் ஏற்ப செயல்பாடுகளை அமைத்துக்கொண்ட அர்ப்பணிப்பு நிறைந்த மனிதர் என கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக இருந்த அஜாய்கோஷ் பிபினை அவரின் நூற்றாண்டு விழாவின் போது பாராட்டி எழுதினார். முசோலினியின் பாசிசசம் குறித்து கடுமையான விமர்சனங்களை 1928ல் பிபின் முன்வைத்தார். ஜனநாயகத்திற்கு முசோலினியின் கரும்படை பெரும் ஆபத்து என்றார். முசோலினி பெரும் எதேச்சதிகாரி என்றார். காட்டுமிராண்டிதனத்தால்தான் அவர்களது ஆட்சி நிலைக்கிறது என்கிற விமர்சனம் அவரிடம் இருந்தது. இன்று அரசியல் வானில் கடவுள் போல் காட்சி தருபவர்கள் நாளை இருப்பதில்லை. காந்தியையும் சுயராஜ்ய கட்சியினரையும் ஒருசேர எதிர்த்து வந்ததன் காரணமாக அவரால் நிலைத்து நிற்க முடியாமல் போனது . சி ஆர் தாஸ் போன்றவர்கள் தொடக்கத்தில் பிபினுடன் இருந்து ஆரம்ப அரசியலை கற்றார்கள் 1923ல் சுபாஷ் வங்க மாநிலக் கமிட்டி செயலராக இருந்தபோது பிபின் காங்கிரசிற்கு வந்தால் இருகரங்கொண்டு வரவேற்பதாக கூறினார். நேருவும், பிபினும் ஒருவரைப்பற்றி ஒருவர் நல்ல மதிப்பீடுகளை கொண்டிருக்கவில்லை. நேரு நினைப்பதையெல்லாம் பேசிவருபவர் என்கிற கருத்து பிபினுக்கு இருந்தது. 1908ல் லண்டனில் நேரு உட்பட 10பேர் மட்டுமே இருந்த கூட்டத்திலேயே அவர் பத்தாயிரம்பேர் திரண்ட கூட்டம்போல் நினைத்து கத்திப் பேசினார். ஏதும் புரியவில்லை என்கிற பதிவை நேரு தந்தார். தனக்கு லாலாஜி உரைகள்தான் பிபினைவிட வசீகரிக்கின்றன என தந்தை மோதிலாலுக்கு நேரு எழுதினார். மோதிலாலுக்கும் பெங்கால் உணர்ச்சிபெருக்காளர்களை பிடிக்காமல் இருந்தது. நாகரீகத்தின் இலக்கு ‘மனித நேர்த்தி’ என்பதை அடைவதுதான் என்று 1911ல் பிபின்பால் எழுதினார்.. அது உடல் மன வளர்ச்சி மட்டுமல்ல, நெறி மற்றும் ஆன்மீக வளர்ச்சியுமானது. சமுக முழுமையின் அங்கம் என்கிற தன்மையில் சமுக அலகான மனித நேர்த்தியும் இருக்கவேண்டும்.” எம். என் ராய் ஆரம்பத்தில் மார்க்சிய பிடிமானங்களிலிருந்து பிபினை விமர்சித்திருந்தாலும் , பின்னர் அவரின் காரணகாரிய அறிவுமுறை சார்ந்த மனிதாபிமான கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்டார். மார்ச் 1911ல் லண்டனில் பிபினை பேட்டி எடுத்த ஃபென்னர் பிராக்வே என்பார் அவரை தேசிய சிந்தனையின் முதல் தீர்க்கதரிசி என புகழ்ந்தார். அடுத்து வந்த சில ஆண்டுகள் பிபின் தனிமைப்பட்டு வாழ்ந்து மே 20, 1932ல் மறைந்தார். ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை தனது மே 22 1932ல் Democracy’s ingratitude என தலைப்பிட்டு புகழஞ்சலி செய்தது. ஜனநாயகம் படுமோசமாக நன்றிகெட்டத்தனம் கொண்டதாகவும் உள்ளது. அது மனிதனின் ஆக உயர்ந்த உடல் மூளை உழைப்பை பெற்றுக்கொண்டு அவனை குப்பைக்கூடையில் தூக்கி எறிந்துவிடுகிறது. வளரவிழையும் பல இளைஞர்கள் தங்கள் சுய முன்னேற்றத்திற்காக மூத்த சகாக்களை தூக்கி எறிவதை பார்க்கிறோம். அதே நேரத்தில் இதன் மூலம் அவர்களுக்கு வேறு அனுபவம் ஒன்றும் கிடைக்கிறது. செல்வாக்குள்ள கட்சிகள் அதன் தலைவர்கள் சிலரை அவர்கள் பயன்பாடு முடியும் காலத்தில் கொடுமையாக தூக்கி எறிந்துவிடுகின்றன. இது ஏதோ இந்திய நிகழ்வு மட்டுமானதல்ல. நமது சிந்தனாமுறையில் அவ்வப்போது மீள்கண்டுபிடிப்புகளுக்கும் நாம் வரவேண்டும். மறுவிளக்கங்கள்- விவரிப்புகள், மறு சரிகட்டல்கள் என நமது செய்முறைகள் அமையவேண்டும் என்பார் பிபின். Ref: 1. Social Political Ideas of Bipin Chandra Pal-Amalendu Mookerjee 2. Makers of Modern India- T V Parvate 3. Memories of My Life and Times-B C PAL ராஜாஜி வாழ்வினிலே [] ராஜாஜி டிசம்பர் 10 1878ல் தொரப்பள்ளி எனும் கிராமத்தில் சக்கரவர்த்தி அய்யங்கார் குடும்பத்தில் மூன்றாவது மகனாக பிறக்கிறார். சக்கரவர்த்தி ஓசூரில் கிராம முன்சீப் ஆக வேலை பார்த்து வந்தார். வாரிசுகளே பிறக்காதா என கவலைப்பட்ட குடும்பத்தில் வரிசையாக மூன்று ஆண்மகவுகள் பிறந்தன. பிறக்கும்போது நோஞ்சானாக எடை குறைவாக இருந்தார் ராஜாஜி. அவரது ஜாதகம் ராமர், கிருஷ்ணர், சங்கரர், ராமானுஜர் போன்றவர்களை ஒத்து இருக்கிறது என வீட்டில் பேச்சு இருந்தது.. ஒன்று ஆள்வான் இல்லையேல் தோல்வியுற்று சாதிபிரஷ்டம் செய்யப்படும் அளவிற்கு வெளியேற்றப்படுவான்.. ஆயுள் கெட்டியானவன்- 80யை தாண்டும் என சோதிடர் தனது கணிப்பை தந்திருந்தார்.. ராஜகோபாலா என தந்தை மகனுக்கு அவன் காதில் பெயரை உச்சரித்தார். பள்ளி படிப்பிற்காக குடும்பம் ஓசூரில் குடியேறியது. அங்கு நெசவாளர்கள் நூல் நூற்பதையும் வண்ணங்கள் செய்து துணி உருவாக்குவதையும் குழந்தை ராஜா குதுகுலமாக பார்த்து ஆச்சரியப்பட்டது. குத்தகைக்கு விவசாயி இடம் நிலம் விடப்பட்டிருந்தது. பெயர் குலுக்கிப்போட்டு எந்த நிலம் யாருக்கு என முடிவு எடுக்கும் பழக்கம் இருந்தது. பார்ப்பவை அனைத்தும் குழந்தைகளுக்கு ஆச்சர்யமாக இருந்தன. பெரியவர்கள் கதை சொல்லி குழந்தைகளை தூங்க செய்வர். பெரும்பாலும் அவை ராமயண, மகாபாரத கதைகளாக இருக்கும். இல்லத்தில் மனித நற்பண்புகள், அன்பு , காருண்யம் போதிக்கப்பட்டன. அநியாயத்தை எதிர்த்தல், நியாயம் போற்றுதல், துணிவு, நேர்மை பற்றி குழந்தைகளுக்கு பெரியவர்கள் சொல்லி வந்தனர். உயர்நிலைகல்விக்கு மாணவன் ராஜா பெங்களூர் அனுப்பப்படுகிறான். அங்கு கரும்பலகை எழுத்துக்களை அவனால் காண முடியாத பார்வை தொந்திரவு ஏற்படுகிறது. கண்ணாடியா மூச் என தந்தை புரிந்து கொள்ளாமல் நவீனத்திற்கு பையன் ஆசைபடுகிறான் என நினைத்து மறுக்கிறார். தாய் கணவனை எதிர்த்து பேசாதவர். அப்பா சொல்படி கேள், அவருக்கு எல்லாம் தெரியும் என சொல்லிவிட்டார். மெட்ரிக் தேர்வு நெருங்கியது. மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது பார்வை பிரச்சனை குறித்து சக்கரவர்த்தியிடம் ராஜா தெரிவிக்கிறார். மருத்துவர் சோதித்து கண்ணாடி கிடைக்கிறது. ஆங்கில இலக்கியத்தை தேர்ந்த முறையில் கற்பித்த ஆசிரியரிடமிருந்து அதன் மீதான ஆர்வம் பற்றுகிறது. ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின், ஸ்காட் அறிமுகமாகின்றனர். அய்ரோப்பிய நாடுகளின் வளர்ச்சி, மக்கள் போராட்டங்கள், ஜனநாயகம், தேசபக்த வீர சாகசங்கள் குறித்த பார்வை கிடைக்கிறது. அய்ரோப்பாவில் சிவில் சமூகம் உருவான வரலாறு அவரை கவர்கிறது. ஆங்கில அரசு முறைகள் பற்றி தெரிந்து கொள்ள துவங்குகிறார். அதே நேரத்தில் பாரம்பரியம் என்ற வகையில் இந்து புராணங்கள், வேத உபநிடதங்கள் அவர் மீது தாக்கம் செலுத்தின. மேற்கித்திய சிந்தனாமுறைகளுடன் நமது நாட்டின் மரபார்ந்த சிந்தனைகளையும் அவர் தன்னிடம் உறவாட அனுமதித்தார். 1885 டிசம்பரில் இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கப்பட்டதை ராஜா கேள்விப்பட்டார். ஆலன் ஆக்டோவியன் ஹூயும் எவ்வாறு தனது உரையால் பலரை கவர்ந்திழுக்கிறார் என்பதும் அவருக்கு தெரியவந்தது. மனிதர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவர்- தன்னலமறுப்பும் சுயத்தியாகமும் நாட்டின் விடுதலைக்கும் மகிழ்ச்சிக்கும் துணைநிற்கும் என்ற உரை அவரையும் ஈர்த்தது. இந்தியா என்ற ஒற்றை தேசிய சிந்தனை கருக்கொள்ள பிரிட்டிஷார் உதவியிருந்தாலும் அவர்கள் இந்தியாவின் வளங்களை கொள்ளையடிக்கின்றனர். எப்போது இந்தியாவிற்கு விடுதலை என்ற எண்ணம் வலுப்பட துவங்கியது. 1857 போராட்டம், தலைவர்களது எழுத்துக்களை அவர் படிக்கத் துவங்கினார். சாக்ரடிஸ். ரூசோ, தோரோ, வாஷிங்டன், கரிபால்டி, மாஜினி எழுத்துக்களை தேடிப்படித்தார். தனது சிந்தனையும் நோக்கும் விரிவடைவதை அவரால் உணரமுடிந்தது. பட்டபடிப்பு தேர்வில் தமிழில் அவர் தேறவில்லை. தந்தை சட்டப்படிப்பு என பேசிவந்தார். பின்னாட்களில் ஏராள நூல்களை படித்து அவரின் தமிழறிவை மேம்படுத்திக்கொண்டார். தனது 17ஆம் வயதில் சட்டப்படிப்பிற்காக சென்னை வருகிறார். கடற்கரை உலாவலின் போதெல்லாம் மீனவ நண்பர்களுடன் உரையாட விரும்பினார். அவர்களின் மீன்பிடி சாகசங்கள் அவரை கடலில் செல்ல தூண்டியது. துடுப்பு போட மீனவர் உதவியுடன் நண்பர்கள் கடலில் சென்றனர். அலைசீற்றம் தோணியை அலைக்கழித்தது. ஓடக்காரர் உதவியுடன் உப்புமேலிட கரை திரும்பினர் நண்பர்கள். இயற்கையை மனிதன் கையாளும் திறன் குறித்து ராஜாவிற்கு இந்த அனுபவம் பெருமிதம் தந்தது. சென்னையின் பிரம்மாண்டம் ஆரம்பத்தில் மலைக்க வைத்தாலும் பெருநகரம் பழகியது. கோயில்கள், பக்தி சொற்பொழிவுகள் என ராஜா ஆரம்பத்தில் போய்க்கொண்டிருந்தார் சில பொதுக்கூட்டங்களுக்கும் செல்ல வாய்ப்பு வந்தது. தனது சூழலில் பொது அறிவு ஏன் பொதுவாக இல்லை என ஆச்சரியமடைந்தார் சட்டநடைமுறைகளுக்கும் மத அனுஷ்டானங்களுக்கும் இடையில் இருவேறு நிலைகள் இருப்பதை அவரால் உணரமுடிந்தது. தனது சட்ட அறிவால் ஏழைகளுக்கும் சுரண்டப்படுவோர்க்கும் பயனளிக்கும் வண்ணம் நடக்கவேண்டும். காரணகாரிய குரலாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் கருக்கொள்ளத் துவங்கியது. 1897ல் சுவாமி விவேகானந்தர் சென்னை வருகிறார்.. அவரை காணப்போகிறோம் என்ற எண்ணம் ஏராள இளைஞர்களுக்கும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. விவேகானந்தர் வெறும் மத உரையாடலை மட்டும் நடத்தவில்லை. தேசத்தின் எதிர்காலம் விடுதலை கட்டுமானம் குறித்தும் உரையாடி வந்தார். இந்தியா விடுதலையின் மூலம் தனது ஆன்மாவை மீட்டெடுக்கமுடியும் என தெரிவித்து வந்தார். அதன் ஆன்மா என்னவென விளக்கி பேசிவந்தார். உயர்கல்வி பெற்றவர்கள் சுயமுன்னேற்றம் என்பதில் தோய்ந்துவிடாது மனிதகுல மேன்மைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும் என்றார் . சுவாமியிடமிருந்து வெளிவந்த ஞானத்தெளிவு நிறைந்த உரையை ராஜகோபாலன் உள்வாங்கிக்கொண்டார். தேசபக்தி எனும் பொறி தன்னிடம் பற்றியதாக அவர் உணர்ந்தார். 1890களின் இறுதியில் திலகரின் போராட்டங்கள் நாடுதழுவியவகையில் இளைஞர்களை தட்டி எழுப்பியது. அவர்களின் ஆதர்சநாயகனாக திலகர் இருந்தார். ராஜாகோபாலனும் திலகர்பாற் ஈர்க்கப்பட்டார். சேலத்தில் ராஜகோபாலன் தனது வழக்கறிஞர் தொழிலை துவங்கினார். 1900ல் அலமேலு மங்கம்மாளுடன் திருமணம் நடந்தது. 10 ஆண்டுகளுக்குள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என பெயர் பெறலானார். ரோட்டரி உறுப்பினரானார். சீட்டாட்ட கிளப் உறுப்பினர், டென்னிஸ் விளையாட்டு ஆர்வம் என உயர்தட்டு வாழ்க்கை அமைந்தது. அதேநேரத்தில் அரசியல் எழுத்துக்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. காந்தியின் எழுத்துக்களும் அவரிடம் வந்து சேர்ந்தன. அதில் உள்ள மானுட நியாயங்கள் சரியாகவும் உண்மைக்கு நெருக்கமாக உள்ளதாகவும் ராஜகோபாலாச்சாரி கருதினார். வழக்கு ஒன்றை சாதித்து தனது தரப்பு குற்றவாளியை விடுவித்த பெருமையில் ராஜகோபாலாச்சாரி தனது தந்தை, நண்பர்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தார். நண்பர் ஒருவர் உனது வாதத்திறமையால் நீ காப்பாற்றியது ஒரு கொலைகாரன் என அறிந்திடு என்றார். ராஜகோபாலாச்சாரி தன்னை தற்காத்திட வாதங்களை அப்போது வைத்தாலும், மனசாட்சியின் உறுத்தலை உடனடியாக உணர்ந்தார். உடலை வறுமை காரணமாக விற்க நேரிடும் வேசியைக்கூட மன்னிக்கலாம்- ஆனால் அறிவு வேசித்தனத்தை மன்னிக்கக்கூடாது என அவர் மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டார். இனி வேண்டாம் இந்த தொழில் என எழுந்தார். அவர் மனக்காயத்தை அந்நேரத்தில் எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரது வீடு மனிதர்களால் சூழப்பட்டிருக்கும். குழந்தைகளின் குதுகூலம் நிறைந்திருக்கும். 1905 கர்சான் செய்த வங்கப்பிரிவினை ராஜகோபாலாச்சாரியிடத்தும் பாதிப்புக்களை உருவாக்கியது. இந்து - முஸ்லீம் மத மோதலுக்கான சதி என நண்பர்கள் பேசிக்கொண்டனர். ஆனால் தேசிய புரட்சிகரவாதிகளின் வன்முறை நடவடிக்கைகளில் ராஜகோபாலாச்சாரி அதிருப்தியுற்றார். வன்முறை வழியாகாது என கருதினார். வ உ சியின் சுதேசி கப்பல் முயற்சி அவரை கவர்ந்தது. அதற்கு துணை நிற்கவேண்டும் என்ற எண்ணத்தில் ரூபாய் ஆயிரத்தை அவருக்கு அனுப்பினார். சுதந்திரம் எனது பிறப்புரிமை எனும் திலகரின் முழக்கம் அனைத்து நகர்களுக்கும் பரவியது. ராஜகோபாலாச்சரியார் திலகருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். காங்கிரஸ் உறுப்பினராக ஆனார். 1885 காங்கிரஸ் துவக்க அமர்விலேயே பங்கேற்ற விஜயராகவாச்சாரியாரும் ராஜாஜியை ஈர்த்தார். 1906 கல்கத்தா மாநாட்டில் விவாதங்களை கவனித்தார் ராஜாஜி. திலகர் வாதங்களால் அவர் ஈர்க்கப்பட்டார். 1907ல் சூரத் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் வேறுபாடுகள் முற்றியது. திலகரின் ஆவேச உரையின்போது அமளி ஏற்பட்டது. சார்பாளர்கள் மத்தியில் மோதல் தாக்குதல் நடைபெற்றது. பெரொஷா மேத்தா மீது செருப்பு வீசப்பட்டது. திலகர் அனல்பறக்கும் கேசரி எழுத்துக்களால் கைது செய்யப்பட்டு மாண்டலே சிறையில் வைக்கப்பட்டார். 1908 மெட்ராஸ் மாநாட்டில் பிரதிநிதிகள் அனுமதியில் சாத்வீகவாதிகள் என அறியப்பட்ட மாடரேட்கள் ஜனநாயக விரோதமாக நடக்கிறார்கள் என ராஜாஜிக்கு தோன்றியது. ராஜாஜி தனது நண்பர்களுடன் ஆலோசித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தீவிரவாதிகள்- திலகர் ஆதரவாளர்கள் பலருக்கு சார்பாளர் அனுமதிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டதை ராஜாஜி எதிர்த்தார். அவரால் பார்வையாளராகமட்டுமே பங்கேற்க முடிந்தது. விவாதங்களில் பங்கேற்க முடியவில்லை. குதிராம் போஸ் குண்டெறிந்தது குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் விவாதம் நடந்தது. காந்தி குறித்து பலரும் கேள்விப்பட்டிராத நிலையில் அகிம்சை முறையில் தென்னாப்பிரிக்காவில் அவர் போராடி வருவதை ராஜாஜி மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார். மெட்ராஸ் மாநாடு ராஜாஜிக்கு சோர்வை ஏற்படுத்தியது. ராஜாஜி தனது வக்கீல் தொழிலில் கவனம் செலுத்தினார். ஒருநாள் இரவுபணிமுடிந்து திரும்பும்போது கொள்ளைக்காரர்கள் மறிக்கிறார்கள் என எண்ணி தனது ரிவால்வாரால் ஒருவரை சுட்டுவிடுகிறார். பின்னால் அவர்கள் டோல்கேட் பணியாளர்கள் என தெரியவருகிறது. தனது தவறுக்கு வருந்தி உடன் அப்பணியாளரை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று காப்பாற்ற முயற்சிகள் எடுக்கிறார். உயிர்பிழைத்த அவருக்கு நட்ட ஈடும் தருகிறார். சேலத்தை சுற்றி சமுக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடவேண்டும் என செயல்பட துவங்கினார் ராஜாஜி. விதவை திருமணம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்கிறார். அவரின் இச்செயலால் அவரது சாதிக்காரர்கள் கடும் எரிச்சல் அடைகின்றனர். அவரை சாதிநீக்கம் செய்யவேண்டும் என்கின்றனர். அவர் வீட்டு நிகழ்வுகளுக்கு செல்லக்கூடாது என முடிவெடுக்கின்றனர். அவரது தந்தையுடனும் வாக்குவாதம் வருகிறது. தங்கள் சாதி பெரியவர்களை பகைத்துக் கொள்ளவேண்டாம் என்ற அறிவுரை தரப்படுகிறது. அனைவரும் கடவுளின் குழந்தைகள்தான் - சமமானவர்கள்தான் என்கிறார் ராஜாஜி. சம்பிரதாயம்- சமுக பழக்கம் என்ற பெயரில் அந்த சிறுவயது பெண் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது சரியல்ல என்கிறார். கலப்பு மணங்கள் தவறல்ல என்றார். சேரிப்பகுதிவாழ் தீண்டப்படாதவர் என வைக்கப்பட்டிருக்கும் மக்களை உயர்த்திடவேண்டும் என பேசத் துவங்கினார். கர்நூல் மாநாட்டுநேரத்தில் காந்தியின் ஹோம்ரூல் – ஹிந்து சுயராஜ் புத்தகம் அவருக்கு கிடைத்தது. காந்தியடிகள் மீதான மரியாதை கூடியது. பிரிட்டிஷார் தலைநகரை டெல்லிக்கு மாற்றுவது என்ற பெயரில் டெல்லி தர்பார் என அதீதமாக வீண் செலவு செய்வதை கண்டு ராஜாஜி நொந்துபோனார். பிரிட்டிஷாரை விரட்ட வழி ஏதுமில்லையா என்ற கவலை அவரிடம் தொற்றியது. இதற்கிடையில் வைஸ்ராய் ஹார்டிங் மீது குண்டுவீசப்பட்டது என்ற செய்தி பரவியது. புரட்சியாளர்களின் தைரியத்தை பாராட்டலாமே ஒழிய இதன் மூலம் பலன் ஏதும் ஏற்படாது என கருத்து தெரிவித்தார் ராஜாஜி. 1913ல் மாடர்ன்ரிவ்யூ பத்திரிக்கை காந்தியின் சிறை அனுபவங்களை வெளியிட்டிருந்தது. அதனை தனது முன்னுரையுடன் புத்தகவடிவில் ராஜாஜி கொணர்ந்தார். விற்றுவந்த பணத்தையும் கோகலே மூலம் காந்திக்கு அனுப்பினார். 1915ல் காந்தி இந்தியா வந்திருந்தார். காந்தி நாட்டின் பல்வேறுபகுதிக்கு சென்று வரவேண்டும் என கோகலே அறிவுறுத்தினார். பிரிட்டிஷார் யுத்தத்திற்கு ஆளெடுப்பு செய்வதை நியாயப்படுத்தியும், தான் பிரிட்டிஷ் விசுவாசி எனவும் காந்தி உரையாற்றினார். முரண்பாடாக காந்தி பேசுவதில் சிலர் அதிருப்தி அடைந்தனர். காந்தியை புரிந்துகொள்ள முயல்வோம் என்றார் ராஜாஜி. தனது 37ஆம் வயதிலேயே மலேரியா காய்ச்சல், ஆஸ்த்மா நோய் அவதிக்கு ராஜாஜி உள்ளானார். அவரது துணைவியாரும் படுக்கையில் கிடந்து ஆகஸ்ட் 1915ல் மறைந்தார். மறுமண கோரிக்கையை ராஜாஜி நிராகரித்தார். தனது குழந்தைகளை காப்பது, தேசம் காப்பது என்ற பணிகளை எடுத்துக்கொண்டார். 1916 லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சி கோரிக்கை வலுப்பெற்றது. சம்பரான் விவசாயிகள் போராட்டத்திற்கு காந்தி உத்வேகம் கொடுத்தார். அன்னிபெசண்ட் அம்மையார் ஹோம்ரூல் இயக்கத்தை வலுப்படுத்திக் கொண்டிருந்தார். ராஜாஜிக்கும் ஈர்ப்பு ஏற்பட்டது. அன்னிபெசண்ட் , அருண்டேல் கைது செய்யப்பட்டனர். மெட்ராஸ் கவர்னரின் நடவடிக்கையை கண்டித்து ராஜாஜி பத்ரிக்கைகளில் எழுதினார். கண்டன கூட்டங்களை நடத்தினார். இந்த சூழலிலும் அரசாங்கம் அவரை சேலம் முனிசிபாலிட்டிக்கு தலைவராக்கியது. இப்பதவி மூலம் சேரிப்பகுதிகள் என ஒதுக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் ஆகியவற்றை கொணர்ந்தார். பிராமணர் எதிர்ப்பை, பிற சாதிகளின் நலன்களை முன்னிறுத்தி நீதிகட்சி 1917ல் மெட்ராஸில் உருவாகிறது. பெசண்ட் அம்மையார் இவ்வமைப்பை விமர்சித்தார். அவருக்கு ‘ஐரிஷ் பாப்பாத்தி’ என்ற பதிலடியை நீதிகட்சியினர் தந்தனர். கல்வி, வேலை என்பதற்கு போராடுவது அவசியம்- ஆனால் பிரிவினை அரசியல் ஆபத்தானது என்ற கருத்து ராஜாஜியிடம் இருந்தது. காங்கிரஸ் தலைமையின்கீழ் விடுதலைக்கு போராடுவது என்ற லட்சியத்திலிருந்து விலகல் கூடாது என பேசிவந்தார். 1918ல் சி ஆர் தாஸ் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிட்டியது. 1919ல் ராஜாஜி மெட்ராஸில் குடியேறினார். 1919ல் ஜனநாயகவிரோத அடக்குமுறை ரெளலட் பரிந்துரைகள் அடங்கிய மசோதா தாக்கல் நடைபெற்றது. காந்தியும் பார்வையாளர் வரிசையில் இருந்தார். இந்தியர் உணர்வுகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. காந்தி மார்ச்சில் சென்னை வந்து ராஜாஜியுடன் தங்குகிறார். அப்போழுதுதான் ராஜகோபாலாச்சாரி என்பதை ராஜாஜி என சுருக்கி காந்தி அழைக்கத் துவங்கினார். தாகூர் வைத்த மகாத்மா என்ற பெயரிலேயே ராஜாஜி காந்தியை அழைக்க துவங்கினார். ஏப்ரலில் ஹர்த்தால் என்ற முடிவை ராஜாஜியை கலந்தாலோசித்து மெட்ராஸில்தான் காந்தி அறிவிக்கிறார். அமிர்தசரசில் பிரிட்டிஷ் மாது ஒருவர் தாக்கப்பட்டர் என்பதற்காக அடக்குமுறை நிகழ்கிறது. இதை கண்டித்து ஜாலியன்வாலாபாக்கில் ஏப்ரல் 13, 1919ல் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. மக்கள் திரளக்கூடாது என்கிற அறிவிப்போ தடுப்போ ஏதுமில்லை. இரண்டு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் ஜெனரல் டயர் அங்கு முகாமிட்டு அப்பாவி மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிசூடு நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கானவர் சுடப்பட்டு மரணித்தனர். சாவு எண்ணிக்கை குறித்து பல்வேறு கணக்கீடுகள் வெளிவந்தன. ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றனர். 1920ல் காந்தி சென்னை வந்தார். ராஜாஜியுடன் தங்கினார். திலகர் மறைந்திருந்த நேரமது. கிலாபத் இயக்கம் சூடுபிடித்தது. 1920 டிசம்பரில் நாக்பூரில் காங்கிரஸ் கூடியது. காந்தி விடுதலை இயக்கத்தின் ஏகோபித்த தலைவராக ஏற்கப்பட்டார். ராஜாஜி தனது வக்கீல் தொழிலைவிட்டார். முழுநேர தேசப்பணி என்றார். ராஜாஜியின் தந்தைக்கு காந்திமீது பெரும் சீற்றம்.. தனது மகனின் வாழ்வை கெடுத்துவிட்டார் என்றும் அவரை நான் கேட்கப்போகிறேன் எனவும் திட்டி வந்தார். காந்தியை கண்டவுடன் தன் மகன் அவருடன் மக்கள் சேவையில் ஈடுபட்டதில் மிகவும் சந்தோஷம் என்றார். காந்தி அப்பெரியவரையும் ஈர்த்துவிட்டார். காதி இயக்கம், அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு போன்ற இயக்கங்களில் மக்களோடு மேலும் நெருக்கமானார் காந்தி. காந்தியுடன் விவாதிப்பதில் முடிவெடுப்பதில் ராஜாஜி பக்கபலமாக நின்றார். காந்தியின் மனசாட்சி என அவர் கருதப்படலானார். சிவில் ஒத்துழையாமை இயக்கத்தின்போது ராஜாஜி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். வசதியாக வாழ்ந்தவர்க்கு புதிய அனுபவம். ஜனநாயகம், அதிகாரம், லஞ்ச ஊழல் ஆகியவை குறித்து சிறைகுறிப்புகள் எழுதினார். 1922 பிப்ரவரி செளரி செளரா நிகழ்வு காந்திக்கு துயரை தந்தது. காந்தி மிக சாதாரண சிறை அறை ஒன்றில் தலையணை கூட இல்லாமல் வைக்கப்பட்டிருந்ததை ராஜாஜியும், தேவதாஸும் கண்டனர். யங் இந்தியாவின் பொறுப்பை ராஜாஜி ஏற்றுக்கொண்டார். II மகாத்மாவின் எடிட்டோரியல் கொள்கைவழி நின்று செயல்படுவதில் ராஜாஜி தேர்ச்சியை காட்டினார். காந்தி சிறையில் இருந்தபோது கயாவில் காங்கிரஸ் கூடியது. மூத்தவர்களான சி ஆர் தாஸ், மோதிலால் போன்றவர்களுக்கு போராட்ட திட்டங்களில் மாற்றம் தேவை என்ற கருத்து செளரி செளராவிற்கு பின் ஏற்பட்டது. வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் போராட்டங்கள் என்ற கருத்து எழுந்தது. காந்தி முன்னெடுத்த போராட்டம் குறித்து தொகுத்து பேசவேண்டிய நிலையில் ராஜாஜி இருந்தார். நீ என்ன டெபுடி மகாத்மாவா என்ற கேலிக்கு அவர் உள்ளாக்கப்பட்டார். சிவில் ஓத்துழையாமை குறித்து தனது வாதத்தை அருமையாக வைத்ததாக அவர் பாராட்டப்பட்டார், சட்டமன்றம் பகிஷ்கரிப்பு என்பது தீர்மானமானது. காந்தியின் அகிம்சை, சட்டமறுப்பு இயக்கம், காதி, அந்நியதுணிகள் பகிஷ்கரிப்பு ஆகியவற்றை நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து எடுத்து சொல்லும் கடமையை ராஜாஜி மேற்கொண்டார். காந்தியின் வழியிலா அல்லது பிரிட்டிஷ் சட்டங்களுக்கு உட்பட்ட வழியிலா என்ற விவாதத்தை எடுத்து சென்றார். தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் நுழைவு- வைக்கம் போராட்டத்தில் ஆதரவு நிலை எடுத்தார் ராஜாஜி. ஒரு பகுதி மக்களை அசமத்துவமுறையில் நடத்தி சொர்க்கத்திற்கும் முக்தி என்ற விடுதலைக்கும் வழிதருவோம் என எம் மதம் பேசினாலும் அதை முற்போக்கென கொள்ள இயலாது என்றார். கிராம முன்னேற்றம் என்பதற்காக திருசெங்கோட்டில் ஆசிரமம் ஒன்றை பிப்ரவரி 1925ல் நிறுவினார். ராட்டை.நூல் நூற்றல், மருந்தகம், மதுஒழிப்பு, அரிஜனங்கள் முன்னேற்றம் என்பன நடவடிக்கைகளாக இருந்தன. சந்தானம், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ராமதுரை, வரதாச்சாரி போன்றவர்கள் துணை நின்றனர். தமிழில் விமோசனம், ஆங்கிலத்தில் புரொகிபிஷன் என இரு பத்ரிக்கைகள் வெளியிடப்பட்டன. மாலையில் முதியோர் கல்வி நடந்தது. கைத்தொழில்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறு குடில் ஒன்றில் ராஜாஜி தங்கி ஆசிரம பணிகளை கவனித்து வந்தார். சைமன் கமிஷன் 1928 பிப்ரவரியில் வந்தது. திரும்பிபோ எதிர்ப்பு இயக்கங்கள் பலமாக நடந்தன. லாகூர் போராட்டத்தில் லஜ்பத்ராய் தாக்கப்பட்டார். உடல்நிலை சீர்கெட்டு சில நாட்களில் அவர் மறைந்தார். இதற்கு பதிலடியாக போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை பகத்சிங் மற்றும் தோழர்கள் சுட்டு வீழ்த்தினர். தான் முன்வைக்கும் போராட்ட முறைகள் விலகிப்போவதை குறித்த வருத்தம் காந்திக்கு இருந்தது. இளம் புரட்சியாளர்கள் வழி தவறி போகிறார்கள் என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தினார். பகத்சிங் சட்டமன்றத்தில் 1929 ஏப்ரல் 8 அன்று குண்டெறிந்து போலீசார் முன் கைதாவதற்கு துணிச்சலாக நின்றது நாட்டில் பல இடங்களில் விதந்து பேசப்பட்டது. ராஜாஜி காந்தியின் அகிம்சை வழிதான் மீட்கும் என்பதில் அழுத்தமான கருத்தை வெளிப்படுத்தினார். படேல் தலைமையில் பர்தோலி வரிகொடா இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. படேலின் செயல்பாடு காந்தியால் பாராட்டப்பட்டு சர்தார் என அழைக்கப்படலானார். 1929ல் பட்டேலின் சென்னை வருகை ராஜாஜி படேல் உறவை பலப்படுத்தியது, ஒத்த கருத்துடன் காங்கிரசில் இணைந்து பணியாற்ற துவங்கினர். இந்த நாட்டு பிராமணர்களை நாம் விமர்சித்து வருகிறோம்.. உண்மையில் பிரிட்டிஷ்காரர்கள்தான் சூப்பர் பிராமணர்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து போராட வாருங்கள் என படேல் பேசிவந்தார். இர்வின்பிரபு வட்டமேசை மாநாட்டிற்கு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் வாருங்கள் என்ற அழைப்பை தந்தார். காந்தி உப்பு சத்தியாக்கிரகம் என்ற போராட்ட ஆயுதத்தை எடுத்தார். 1930 மார்ச்சில் சபர்மதியிலிருந்து தண்டி யாத்திரை நடத்தினார், மக்கள் பெரும் எழுச்சியுடன் திரண்டனர். ராஜாஜி திருச்சியிலிருந்து வேதாரண்யம் என்ற யாத்திரையை ஏப்ரல் 13, 1930ல் துவங்கினார். தஞ்சாவூர், கும்பகோணம், திருத்துறைப்பூண்டி என வழிநகர்களில் மக்கள் பெரும் வரவேற்பை நல்கினர். மாவட்ட ஆட்சியாளர் எச்சரிப்புகள் பல இடங்களில் புறந்தள்ளப்பட்டன. ராஜாஜி கைது செய்யப்பட்டார். இருநூறு அபராதத்துடன் ஆறுமாத சிறை இல்லையேல் 9 மாத சிறை என தண்டனை விதிக்கப்படுகிறது. ராஜாஜி சென்ற வேலூர் சிறையில் பட்டாபிசீதாராமையா, பிரகாசம், சாம்பமூர்த்தி, சந்தானம் என விடுதலை இயக்க போராளிகள் பலரும் இருந்தனர். ராஜாஜியின் சிறை நண்பர்கள் மத்தியில் அவரது உடல் நரம்புபோல் காணப்பட்டாலும் மூளை அனைவரையும் வசீகரித்தது என்கிற கருத்து இருந்தது. தனி உரையாடலில் அவரது ஆழம் புரிந்தது. அவர் மரபுரீதியான உடைபழக்கம், உணவுபழக்கம் வைத்திருந்தாலும் சிந்திப்பதில் புரட்சிகரமாகவே இருந்தார் என்ற பதிவை தருகின்றனர். ராஜாஜி சிறையில் படிப்பு வட்டம் ஒன்றை உருவாக்கினார். எமர்சென், தோரோ, டால்ஸ்டாய், ரஸ்கின், ஷேக்ஸ்பியர், சாக்ரடிஸ், பிளாட்டோ, காந்தி என சிந்தனைகள் அங்கு அலசப்பட்டன. இவை அனைத்திலும் முதன்மையான பங்கினை ராஜாஜி செலுத்தினார். பகவத்கீதையை எளிமைப்படுத்தி விளக்கி வந்தார். சாக்ரடிசின் உள்ளழகு என்பதை விவரித்தார். மதம், தத்துவம், அறிவியல், பொருளாதாரம், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் என விவாதம் அங்கு விரியும். காந்தி- இர்வின் பேச்சுவார்த்தை 1931 பிப்ரவரி- மார்ச்சில் நடந்து உடன்பாடு ஏற்பட்டது. சிவில் ஒத்துழையாமை விலக்கிக் கொள்ளப்பட்டது. வட்டமேசை மாநாடுகளில் காங்கிரஸ் பங்கேற்க உடன்பட்டது. அதே நேரத்தில் டொமினியன் அந்தஸ்து உட்பட எதற்கும் உத்தரவாதம் தரப்படவில்லை. பல்தரப்பிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் தரப்பு கோரிக்கைகளில் அழுத்தம் கொடுத்ததால் இரண்டாவது வட்ட மேசை மாநாடு வெற்றிபெற முடியவில்லை. காந்தியுடன் ராஜாஜி அறுபடா தொடர்பில் இருந்தார். காந்தி 1932 ஜனவரியில் மீண்டும் கைது செய்யப்பட்டு எரவாடாவில் அடைக்கப்பட்டார். அரிசனங்களுக்கு தனித்தொகுதி என்ற அரசாங்க முடிவை காந்தி கடுமையாக எதிர்த்தார். இந்துமத ஒற்றுமை பாதிக்கும், இந்து மக்கள் தங்கள் பாரபட்ச மனோபாவத்திலிருந்து வெளியேறுவதையும் தடுத்துவிடும் என காந்தி வலுவாக கருதினார். செப்டம்பர் 1932ல் உண்ணாநோன்பை அறிவித்தார். ராஜாஜி நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ராஜேந்திர பிரசாத், சாப்ரு, ஜெயகர் போன்றவர்களை சந்தித்து தீர்விற்காக விவாதித்தார். டாக்டர் அம்பேத்காருடன் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அம்பேத்காருக்கு கடுமையான விமர்சனம் இருந்தது. காந்தி கோமா நிலைக்கு சென்றார். அம்பேத்காருடன் ஏற்பட்ட ‘எரவாடா அவார்ட்’ பிரிட்டிஷ் சர்க்காரால் ஏற்கப்பட்டால்தான் உண்ணாநோன்பை கைவிடுவேன் என்றார் காந்தி. காபினட் அவசரமாக கூடி ஏற்றுக் கொண்டவுடன் உண்ணாநோன்பு கைவிடப்பட்டது. ராஜாஜி இதில் பெரும் பங்காற்றினார். தாழ்த்தப்பட்டவர்கள் உரிமையுடன் கோயில் நுழைவிற்கு உத்தரவாதமளிக்கும் வகையில் சட்டம் வேண்டும் என ராஜாஜி பேசிவந்தார். தாங்களும் இந்துக்கள்தான் என்கிற அய்க்கிய உணர்வு அவர்களிடம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். தனது மகள் லஷ்மியை காந்தியின் மகன் தேவதாஸ் மணமுடிக்க செய்தார். அதே 1932 ஆம் ஆண்டில் தனது மற்றொரு மகள் நாமகிரி தனது கணவனை இழந்து ராஜாஜியுடன் சேர்ந்தார். அவருக்கு பணிவிடை செய்யும் பொறுப்பு நாமகிரிக்கு தொடர்ந்தது. பிறப்பு அடிப்படையில் வேறுபாடுகள் இந்துமத சகோதரர்களால் தொடரப்படுவது வேதனையளிக்கிறது என சுய சுத்திகரண உண்ணாவிரதம் ஒன்றை மே 1933ல் காந்தி மேற்கொண்டார். மெலிந்த தேகம் இதை தாங்காது என கருதி தனது கவலையை ராஜாஜி கடிதம் மூலம் தெரிவித்தார். மருத்துவ சோதனைக்கு மட்டும் காந்தி இசைந்தார். பின்னர் 1934 பீகார் நிலநடுக்கத்தின்போது சேவைகளில் காந்தி ஈடுபட்டார். 1935 இந்திய அரசாங்க சட்டம் ஒன்றை மத்திய , மாநில சட்டமன்ற அதிகாரங்களுடன் பிரிட்டிஷ் கொணர்ந்தது. பட்டேல், ராஜாஜி போன்றவர்கள் ஏற்கலாம் என்றனர். மதன் மாளவியா எதிர்த்தார். நேருவும் பயன்படுத்தி சோதிக்கலாம் என கருதினார். தேர்தல்கள் நடந்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. மெட்ராஸ் மாநில பிரதம அமைச்சராகிட சத்தியமூர்த்தி விரும்பவில்லை. மத்திய சட்டமன்றம் செல்ல விரும்பினார். பட்டேல் ராஜாஜியை அணுகினார். ராஜாஜி அப்பதவியை ஏற்க மறுத்தார். பதவி ஏற்கவில்லையெனில் இமயமலை சென்று தவம் செய் என கடுமையாக பட்டேல் பேசியதால் ராஜாஜி சென்னை ராஜதானி பிரதமர் பொறுப்பை ஜூலை 14, 1937ல் ஏற்றார். கவர்னராக லார்ட் எர்ஸ்கைன் என்பவர் இருந்தார். பொதுவாக நல்லுறவை காக்க விரும்பினார். ஆனால் பிரிட்டிஷ் உயர் சிவில் அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளாக வந்த அமைச்சர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. அமைச்சரவை முடிவெடுத்துவிட்டால் அதை அமுல்படுத்துவதற்கு சிவில் அதிகாரிகள் தலைப்படவேண்டும் என்பதை ராஜாஜி உணர்த்தினார். சேலத்தில் மதுவிலக்கு அமுலாக்கம் என்றார். பின்னர் கடப்பா, சித்தூர் மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார். முதலில் எதிர்ப்பு இருந்தது. சேலம் கலெக்டர் டிக்‌ஷன் போன்றவர்கள் ஏழைகள் குடும்பத்தில் உருவான நல்ல மாறுதலை தெரிவித்தனர். லேவாதேவிகாரர்கள் பிடி தளர்வதாகவும் அறிக்கை வந்தது, ஜமீன்தாரி ஒழிப்பில் விவசாய தொழிலாளர் நலன் என ராஜாஜி குரல் கொடுத்தார். கோயில் நுழைவில் ஹரிஜன மக்களுடன் பங்கேற்றார். ஏழைகளை காத்திட கடன் நிவாரண சட்டம் என அறிவித்தார். காதி, கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களை ஊக்குவித்தார். கல்விக்கூடங்களில் அவர் கட்டாயப்படுத்திய இந்தி எதிர்ப்பிற்கு உள்ளானது. இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை பிரிட்டிஷ் இணைத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதை கண்டித்து சென்னை சட்டமன்றத்தில் ராஜாஜி அக்டோபர் 26, 1939ல் தீர்மானம் கொணர்கிறார். காங்கிரஸ் அரசாங்கங்கள் வெளியேறவேண்டும் என முடிவெடுக்கப்பட்டு அமுல்படுத்தப்படுகிறது. காங்கிரசில் சுபாஷ், பட்டாபி சீதாராமையா போட்டி பிரச்சனைகளை உருவாக்குகிறது. காந்தியை கலந்தாலோசித்து செயல்கமிட்டி என்பதை சுபாஷ் ஏற்க மறுத்துவிட்டார். வழக்கத்திற்கு மாறான ஆலோசனையை ராஜாஜி பரிந்துரைத்தார். போஸ் அழைத்தாலும் காங்கிரஸ் செயற்குழுவிற்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் போகக்கூடாது என்றார். காந்தியை உதாசீனப்படுத்திவிட்டு ‘காங்கிரஸ் செயல்பாடு’ என ஏதுமில்லை என்றார் ராஜாஜி. சுபாஷின் ஓட்டைப்படகில் ஏறவேண்டாம் என ராஜாஜி பேசியதாக ஹிரன்முகர்ஜி பதிவு செய்கிறார். காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகம் அறிவித்தார். ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, பக்தவச்சலம் ஆகியோர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி சிறைவாழ்க்கையில் ராஜாஜி வால்மீகி ராமாயணம் குறித்த ஆய்வை மேற்கொண்டார். வேதம்- உபநிடதம், பைபிள், குரான் ஒப்பீட்டு அம்சங்களை சக நண்பர்களிடம் எடுத்துரைத்து வந்தார். தனது காஸ்மோ பார்வை விரிவாக்கத்திற்கு அவை உதவியதாகவும் தனது சமஸ்கிருத அறிவையும் சற்று மேம்படுத்திக் கொள்ளமுடிந்ததாகவும் ராஜாஜி தெரிவித்தார். கீதை- திருக்குறள் விவாதங்களையும் நண்பர்கள் நடத்தினர். 1941ன் மத்தியில் காந்தி நிலைபாட்டிற்கு சற்று மாறுபட்ட நிலைப்பாட்டை ராஜாஜியும் படேலும் எடுத்தனர். காங்கிரஸ் செயற்குழு விவாதம் முடிந்து முழு சுதந்திரம் எனில் யுத்தத்தில் ஆதரவு என்கிற தீர்மானத்தை காங்கிரசில் எடுத்தனர். ஜின்னா தனது பாகிஸ்தான் கோரிக்கையில் அழுத்தமாக நின்றார். கிரிப்ஸ் தூது விவாதம் 1942ல் தோல்வியுற்றது. 1942 ஏப்ரலில் சென்னை ராஜதானி உறுப்பினர்களை ஏற்கவைத்து முஸ்லீம் லீக் கோரிக்கையான பாகிஸ்தானை ஏற்பது என்ற நிலைப்பாட்டை ராஜாஜி எடுத்தார். ராஜாஜியின் இந்நிலைப்பாட்டை படேல் கடுமையாக ஆட்சேபித்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல் என விமர்சித்தார். ஏப்ரல் இறுதியில் அகமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் ராஜாஜி நிலைப்பாட்டை நிராகரித்தது. காந்திஜி ராஜாஜியை காங்கிரசிலிருந்து விலகிவிடுமாறு அறிவுறுத்தினார். மதரீதியாக நாடு பிளவுபடுவதை காந்தி ஏற்கவில்லை. அதே நேரத்தில் ராஜாஜி வெளியிலிருந்து தனது சுதந்திர கருத்துக்களை வெளிப்படுத்தலாம் என காந்தி கருதினார். ஆகஸ்ட் 1942ல் ‘இந்தியாவிட்டு வெளியேறு’ இயக்கம் காந்தியடிகளால் அறிவிக்கப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ராஜாஜி தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. முஸ்லீம் லீகின் கோரிக்கை என்கிற யதார்த்தம் காங்கிரஸ் தலைமையால் உணரப்படாமல் விடுதலை தள்ளிப்போகிறது என்கிற வருத்தம் ராஜாஜியிடம் இருந்தது. முஸ்லிம் லீகிடம் விலைபோய்விட்டார் என்று ராஜாஜி மீது விமர்சனம் எழுந்தது. அவரது கூட்டங்களில் கல்வீச்சு, தக்காளி வீச்சு நடந்தன. 1943 மார்ச்சில் அகாகான் மாளிகை புனேவில் காந்தி உண்ணானோன்பு மேற்கொண்டார். காந்தியை விடுவிக்கவேண்டும் என்ற பிரச்சாரத்தை ராஜாஜி தீவிரப்படுத்தினார். வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினர் சிலரை ராஜினாமா செய்யவைத்தார். காந்தியை சந்தித்து இந்து- முஸ்லீம் இணக்க திட்டம் ஒன்றை காந்தியை ஏற்க செய்தார். தேசிய அரசாங்கம் எனில் இணக்கம் என்பது முன்நிபந்தனை என பிரிட்டிஷ் அறிவித்தது. திட்டம் ஜூலை10, 1944ல் வெளியானது. முஸ்லீம் லீக் முழு சுதந்திரம் என்பதை வலியுறுத்த வேண்டும்- முஸ்லீம்கள் பெரும்பான்மை உள்ள இன்றைய பாகிஸ்தான் பகுதியில் பிரிந்து செல்ல வேண்டுமா என்பதற்கு வெகுஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்- பிரிட்டிஷ் முழு அதிகாரத்தையும் பொறுப்பையும் இந்திய அரசாங்கத்திடம் விட்டு செல்ல வேண்டும் என்பதாக அத்திட்டம் பேசியது. ஆனால் ஜின்னா பாகிஸ்தானை பிரித்து தருவது என்பதில்லாத திட்டம் எதையும் ஏற்பதற்கில்லை என தெரிவித்துவிட்டார். காந்தி- ஜின்னா வேறுபாடுகளை ராஜாஜியால் போக்கிட முடியாமல் போனது. இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த நிலையில் லேபர் கட்சி ஜூலை 1945ல் அட்லி தலைமையில் பதவியேற்றது. இந்தியாவிற்கு விரைவில் சுய அரசாங்கம் உருவாகும் என்றார் அவர். காந்தி மட்டும் பாகிஸ்தான் என்பதை ஏற்றுவிட்டால் பத்து நிமிடங்களில் சுய ஆட்சி பிரச்சனையை தீர்த்துவிடலாம் என ஜின்னா நிலைமைகளை எளிமைப்படுத்தினார். சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், வடமேற்கு மாநிலம், வங்கம், அஸ்ஸாம் என்கிற பகுதிகள் பாகிஸ்தான் ஆகவேண்டும் என்றார் ஜின்னா. ராஜாஜி காங்கிரசிற்கு திரும்பவேண்டும் என வேண்டுகோள் வைத்தார் காந்தி. இயக்கத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. ராஜாஜி என்னை மிக சரியாக புரிந்து கொண்டவர். 1942ல் என்னை எதிர்த்தபோதும் மிக நேர்மையாகவே செய்தவர். அவர் சிறந்த சமுக சீர்திருத்தவாதி. அவரின் அரசியல் ஞானமும் நேர்மையும் கேள்விக்கு அப்பாற்பட்டவை என எதிர்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் காந்தி. ஆகஸ்ட் 1945ல் மீண்டும் ராஜாஜி காங்கிரசில் இணைந்தார். காந்தியின் சுற்றுப்பயணத்தில் ராஜாஜி உடன் இருந்தார். தேவையான உதவிகளை செய்து வந்தார். பத்ரிக்கை சந்திப்புகளில் மிளிர்ந்தார். சென்னை ராஜதானியில் அரசாங்கம் அமைந்தால் பொறுப்பேற்கவேண்டும் என காந்தி ராஜாஜிக்கு அறிவுரை தந்தார். படேல் உலகளாவிய விஷய ஞானம் நிரம்பிய ராஜாஜியை காங்கிரசார் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். III தென்னிந்தியாவில், சென்னையில் அவருக்கு எதிர்ப்பு இருந்ததால் அவரை தேசிய அளவில் பயன்படுத்துவது என முடிவெடுத்தனர். பிரிட்டிஷாரின் மிஷன் திட்டம் குறித்து இருந்த தயக்கங்களை போக்கிட காங்கிரஸ், முஸ்லீம் லீக் தலைவர்களிடம் ராஜாஜி முயற்சித்தார். வேவல் இடைக்கால சர்க்கார் ஒன்றை வைத்திட நேருவிற்கு அழைப்பு விடுத்தார். நேரு கொடுத்த அழைப்பிற்கு ஜின்னா செவிசாய்க்கவில்லை. இடைக்கால சர்க்காரில் அமைச்சர் பொறுப்புகளை அளிப்பது குறித்த உரையாடலில் காந்தி பங்கேற்று இருந்தாலும் நிர்வாக நடைமுறை பற்றி அவர் அதிகம் தெரிந்தவர் இல்லை என்ற பதிவை ராஜாஜி தருகிறார். படேல் உள்துறை கேட்டதால் ஏதும் செய்யமுடியவில்லை. விவரமான ஜான் மதாய் அவர்களுக்கு நிதி போய் இருக்க வேண்டும். நேரு லியாகத் என சொல்லியதால் மதாய்க்கு போகவில்ல. அவருக்கு தொழில் கொடுக்கப்பட்டது. ராஜ்குமாரி கெளரோ தனக்கு ஹெல்த்- சுகாதாரம் என்றார். யாரும் எடுக்க முன்வராத கல்வியை நான் எடுத்துக் கொண்டேன் என்கிறார் ராஜாஜி. இதில் உடன்பாடு கொணர்வதில் ராஜாஜி பெருமளவில் பங்களித்தார். காபினட் கூட்டங்களில் லீக்- காங்கிரஸ் சச்சரவுகள் அதிகமாக இருந்தன. ஒன்றுபட்ட இந்தியாவிற்கான ஒரே கான்ஸ்டிட்யூஷன் வருவதற்கு வாய்ப்பில்லை என்ற எதார்த்தம் நிலவியது. மெளண்ட்பாட்டன் பொறுப்பிற்கு வந்தார். நாடு பிரிவினைக்கு உள்ளானதை காந்தி துயரத்துடன் கண்ணுற்றார். விடுதலைக்கு பின்னர் ராஜாஜி மேற்குவங்க கவர்னராக அனுப்பப்படுகிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ராஜாஜியால் வங்கத்திற்கு ஆகப்போவது ஏதுமில்லை என வெளிப்படையாக எதிர்ப்பாளர்கள் பேசினர். அவருக்கு கருப்புகொடி வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னை எதிர்த்து முன்னணியில் இருந்த சரத் சந்திர போஸ் இல்லம் தேடி சென்றார் ராஜாஜி. விடுதலைப் போராளிகளான இருவர் கண்களும் பனித்தன. காந்தி கொலை செய்யப்பட்டார் என்கிற செய்தி அவரது உதவியாளர் மூலம் ராஜாஜிக்கு வருகிறது. அவர் மெளண்ட்பாட்டனை தொடர்புகொள்கிறார். நேருவிற்கு சரியான ஆலோசனை தேவை என ராஜாஜி கருதுகிறார். நாட்டின் பாதுகாப்பை நேரு உறுதி செய்யட்டும். அவரை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். காந்தியின் அஸ்தி கலயம் ஏந்தி மிக்க துயருடன் கல்கத்தா திரும்புகிறார் ராஜாஜி. அஸ்தி கரைத்துவிட்டு திரும்பும் போது அவர் உடைகிறார். அஸ்தி என்னை இழுக்கிறது என உணர்வு மேலிடுகிறார். மெளண்ட்பாட்டன் கவர்னர் ஜெனரலிருந்து விடுபடும்போது நேருவும் படேலும் இணைந்து ராஜாஜியை கொணர்கின்றனர். தான் எந்த அளவிற்கு பயன்படுவேன் என ராஜாஜி கேட்டபோது பட்டேல் காந்தி மறைவிற்கு பின்னர் எங்களுக்கு நல் ஆலோசகராக நீங்கள் இருப்பீர்கள் என்கின்றனர். கல்கத்தா ராஜ்பவனிலிருந்து அவர் வெளியேறியபோது பரிசுபொருட்கள் எதையும் உடன் எடுத்துசெல்ல மறுத்துவிட்டார். அங்குள்ளோர் பிரித்து எடுத்துக்கொள்ளட்டும் என்றார். ஊன்று கோலாவது எடுத்து செல்லுங்கள் என்ற போது நான் நடை பயிற்சியில் இருக்கும்போது அதை வாங்கியே என்னை யாராவது தாக்கிவிடலாம் என கிண்டல் செய்தார். கவர்னர்ஜெனரல் பதவியின் பாரம் தன்னை அதிகம் தாக்காமல் அவர் பார்த்துக்கொண்டார் என்ற பதிவை கே பி எஸ் மேனன் தருகிறார். வழக்கமாக அவர் காணப்படும் உடையையே அணிந்தார். அவர் பங்கேற்ற நிகழ்வுகளில் புரோட்டகால் என்பவையெல்லாம் பார்க்காமல் அனைவருடனும் கலந்து பேசினார்- பகட்டு ஏதுமின்றி நடந்துகொண்டார் . இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வந்தவுடன் நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியை முதல் குடியரசு தலைவராக ஆக்கிடவேண்டும் என நேரு விரும்பினார். எதிர்ப்பு கிளம்பியதால் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவரானார். ராஜாஜி சென்னை திரும்பினார் . சென்னை திரும்பியவுடன் கண்பார்வை பிரச்சனையால் அவதிப்பட்டார். கடிதங்களை படிக்கக்கூட உதவி தேவைப்பட்டது. படேல், நேரு தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டனர். கண் பார்க்கமுடிகிறது என்ற நிலை வந்தவுடன் நேரு தனது அமைச்சரவைக்கு சேருமாறு அழைத்தார். திட்ட கமிஷன் தலைவராக முடியுமா எனக்கூட கேட்டார். நேரு பட்டேல் முரண்களை தீர்த்திடவும் ஆலோசனைக்காகவும் ராஜாஜி டெல்லியில் இருந்தால் நல்லது என்ற கருத்து நிலவியது. ராஜாஜி டெல்லி வந்தார். இருவருக்கும் இணக்கம் உருவாக்க முயன்றார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புருஷோத்தம் டாண்டனை பட்டேலும், ஆச்சார்யா கிருபளானியை நேருவும் விழைந்தனர். புருஷோத்தம் என முடிவானால் தன்னால் காங்கிரஸ் செயற்குழுவிலோ, பிரதமராகவோ தொடர முடியாது என நேரு தெரிவித்தார். நிலைமைகள் மோசமடையாமல் தடுக்கப்பட இருவரும் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிக்கவேண்டி அறிக்கை ஒன்றை வெளியிட வைத்தார் ராஜாஜி. அறிக்கையை அவரே தயார் செய்திருந்தார். புருஷோத்தம் வெற்றி நேருவிற்கு விழுந்த அடியானது. ராஜாஜி இருவரின் நம்பிக்கைக்கும் உரியவராக அப்போதிருந்தார். படேல் 1950 டிசம்பரில் மறைந்தவுடன் உள்துறைக்கு ராஜாஜி அமைச்சரானார். நிஜாமின் ரசாக்கர் உருவாக்கிய பிரச்சனைகள், தெலங்கான கம்யூனிஸ்ட்கள் போராட்டம் ஆகியவற்றை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. தடுப்பு காவல் சட்டம் கொணர்ந்ததால் எதேச்சதிகாரம் என்ற விமர்சனத்திற்கு உள்ளானார். நேருவுடன் ஏற்பட்ட கொள்கை மோதல் காரணமாக அவர் 1951 டிசம்பரில் பதவி விலகினார். சென்னை திரும்பி இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார். IV 1952 பொதுதேர்தலில் சென்னை மாகாணத்தில் 375 இடங்களுக்கு காங்கிரசால் 152 மட்டுமே பெறமுடிந்தது. பிரகாசம் முதல்வராக விரும்பினார். கம்யூனிஸ்ட்கள் 62 எனும் அளவில் இருந்தனர். இந்நிலையில் சி சுப்பிரமண்யம் ராஜாஜி தலைமையேற்கவேண்டும் என்ற தீர்மானத்தை காங்கிரசில் கொணர்ந்து நிறைவேற்றினார். 1952 மார்ச்சில் காமராஜர் ராஜாஜியை சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைக்கு முன்மொழிந்தார். ராஜாஜி தயங்கி பின்னர் ஏற்றுக்கொண்டு சென்னை முதல்வரானார். கித்வாய் உதவியுடன் உணவு கட்டுப்பாடு சட்டத்தை விலக்கினார். கட்டுப்பாடு நீக்கம் எதிர்மறை விளவுகளை தரும் என சில அதிகாரிகள் தெரிவித்ததை அவர் கேட்கவில்லை. ராஜாஜி திட்டத்தை கித்வாய் நாடுமுழுவதும் விஸ்தரித்தார். அப்போதிருந்த 50 லட்சம் நெசவாளர்களை காப்பதற்காக மில்கள் வேட்டி, புடவை நெய்யக்கூடாது என்றார். போலீஸ்காரர்கள் போராட்டத்தை ராஜாஜி சந்திக்க வேண்டியிருந்தது. அதை கடுமையாக நசுக்கினார் . ரயில்வே தொழிலாளர் போராட்டதிற்கு நேரு பணியக்கூடாது. துணை ராணுவம் கொண்டு ரயில்களை இயக்கவேண்டும் என்றார். அரசாங்கம் என்பது நிர்பந்தங்களுக்கு பணியக்கூடாது என்ற நிலையை எடுப்பவராக இருந்தார். அரசாங்க உத்தரவுகளை அமுலாக்குவதில் அதிகாரிகள் எம் எல் ஏ க்களின் நிர்பந்தங்களுக்கு அடிபணியக்கூடாதென்றார். மொழிவாரி மாநில கோரிக்கை வைத்து ஆந்திராவில் கிளர்ச்சிகள் எழுந்தபோது அதை எதிர்த்தார். மொழிவாரி மாநில பிரிப்பு நாட்டு நலனுக்கு விரோதமானது என்பது அவரின் கருத்தாக இருந்தது. பொட்டி ஸ்ரீராமுலு தியாகம் கொந்தளிப்பை தீவிரமாக்கியது. மத்திய சர்க்கார் பணிந்தது. ராஜாஜியின் குலக்கல்வி திட்டமும் எதிர்ப்பை கண்டது. காமராஜர் தலைமையிலேயே எதிர்ப்பு பலப்பட்டது. இனி காங்கிரசிற்கு அவர் தேவைப்படமாட்டார் என்கிற அளவிற்கு அவரது செல்வாக்கு குறைந்தது. பொறுப்பை துறந்த அவர் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம் எழுத துவங்கினார். வானொலியில் நெறி உணர்த்தும் உரைகளை ஆற்றத் துவங்கினார். ஆவடி காங்கிரசில் நேரு நிறைவேற்றிய சோசலிச மாதிரி சமுகம் தீர்மானம் மீண்டும் கருத்து வேறுபாடுகளை ராஜாஜியுடன் ஏற்படுத்தியது. பொதுத்துறை சார்ந்த தொழில் வளர்ச்சி என்பதில் ராஜாஜி சந்தேகங்களை எழுப்பினார். நேரு அரசாங்கத்தின் கொள்கைகளை தனது சுயராஜ்யா இதழ் மூலம் சாடத்துவங்கினார். தனக்கு நேருவுடன் கருத்துவேறுபாடுகள் இருக்கிறது என்றாலும் அவர் இடத்தை எவராலும் நிரப்பமுடியாது என தெரிவித்து வந்தார். தனது மகளின் கணவர் தேவதாஸ் காந்தி மரணம் 1957ல் அவரை மேலும் பலவீனப்படுத்தியது. ராஜாஜியின் மகள் லஷ்மிக்கு ஆறுதலாக இந்திராவை தோழமை கொள்ள செய்தார் நேரு. இதில் ராஜாஜி நெகிழ்ந்து போனார் என அறிகிறோம். இருகட்சி ஆட்சிமுறைதான் இந்தியாவிற்கு நல்லது எனபதை ராஜாஜி சொல்லி வந்தார். மினுமாசானியுடன் உறவு 1950ன் இறுதியில் பலப்பட்டது. மசானி நேருவை நாடாளுமன்றத்தில் கடுமையாக தாக்கிவந்தார். ராஜாஜி- மசானி கலந்துபேசி 1958 ஜூனில் சுதந்திரா கட்சியை உருவாக்கினர். சோசலிச கொள்கைகளை கடுமையாக அவர்கள் தாக்கினர். நேரு தவறாக நாட்டிற்கு பாதகமான கொள்கைகளை அமுலாக்கும்போது அதை எதிர்த்து அறிவுரை சொல்வது தனது கடமை என்றார் ராஜாஜி. 1962 தேர்தலில் சுதந்திரா கட்சியை மக்களுக்கு தெரியும் அளவிற்கு கொணர்ந்தனர். 1967ல் தமிழகத்தில் காங்கிரசை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்திட உதவினார் ராஜாஜி. ஆனால் சுதந்திரா கட்சி தேர்தலில் சோபிக்கவில்லை. அணுஆயுத சோதனைகளுக்கு எதிராக அவர் பிரச்சாரங்களை செய்தார். அமெரிக்கா, சோவியத் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். அமெரிக்க அதிபரை சந்திக்கும் சமாதான தூதுக்குழுவிற்கு தலைமை ஏற்று சென்றார். இளைஞராக இருந்த கென்னடி எவ்வித புரொட்டோகாலும் பார்க்காமல் ராஜாஜி அவர்களை வரவேற்ற நிகழ்வை பி கே நேரு பதிவு செய்துள்ளார். முதலில் 20 நிமிடம் என ஒதுக்கப்பட்ட சந்திப்பு 75 நிமிட உரையாடலாக மாறியது. அய்நா பொதுச்செயலர் ஊதாண்ட் அவர்களுடனும் சந்திப்பு நிகழ்ந்தது. இந்தியாவிற்கு வந்த குருஷேவ் அவர்களை சந்தித்து நியுக்ளியர் சோதனை தடை குறித்து ராஜாஜி விவாதித்தார். காஷ்மீர் பிரச்சனை குறித்து கவலையுற்றார் ராஜாஜி. ஷேக் அப்துல்லா சிறைக்காவல் குறித்து விமர்சித்தார். அவர் பள்ளிகளில் இந்தியை அறிமுகப்படுத்தியவராக இருந்தாலும் இந்தி பேசாத மாநிலங்களில் கட்டாய இந்தி திணிப்பு என்பதற்கு எதிராக குரல் கொடுத்தார். உலக ஆட்சிமுறை, உலக அரசாங்கம் என்பது குறித்து அவர் பேசிவந்தார். நாடுபிடிக்கும் எண்ணத்தில் இல்லாமல் உடன்பாட்டின் அடிப்படையில் நாடுகள் போர் எண்ணங்களிலிருந்து வெளியேற வற்புறுத்தி வந்தார். பொறுமை கொண்ட வாழ்விற்கும் புரிவுணர்வு மேம்படுவதற்கும் மதம் அவசியம் என கருதியவர் ராஜாஜி. சமுக சேர்ந்திசைக்கு மத நெறிகள் அவசியம் என்றார். மதம் அபின் அல்ல - சமுகத்தின் சக்திக்கான அஸ்திவாரம் என மார்க்சிய கருத்திற்கு பதில் வைத்திருந்தார். அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு ஆதரவாக இயங்கக் கூடாது என்றாலும் மதங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கருதினார். இந்திய சமூகம் ஒருபோதும் மதமற்ற சமுகமாக மாறிவிடாது என்பதில் தனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். கல்வியில் வளர்ச்சி பெற்ற பின்பும் சமூகம் அவ்வாறுதான் இருக்கும் என்றார். இது இந்து மதத்திற்கு மட்டுமல்ல, சீக்கிய, இஸ்லாமிய சமுகத்திற்கும் பொருந்தும் என்றார். மூடநம்பிக்க்கைகளை விட்டொழித்து மதத்தின் அடிப்படை அம்சங்களுக்கு திரும்பவேண்டும் என்பது அவரது முழக்கமாக இருந்தது. ஒழுக்கநெறியில்லா மதம் கலோரி தராத வைட்டமின் போலத்தான் என்பார் அலிகார் முஸ்லீம் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றியபோது இஸ்லாமோ, வேதாந்தமோ அவை ஒன்றின் புகழுக்கு மற்றது துணை நிற்பதாக இருக்கவேண்டும். ஒன்றின் அழகை மற்றது வியக்கவேண்டும் என பேசினார். அண்டையில் உள்ளவனை நேசி- உனக்கு எது நேரக்கூடாது என நினைக்கிறாயோ அதை பிறருக்கு செய்யாதே என்பதில் பைபிளும் கீதையும் ஒன்றாகவே பேசுகின்றன என்றார். அனைத்து வழிபாடுகளையும் ஒன்றிணைப்பதிலும் அதில் இணக்கம் கொணர்வதிலும் கீதை பங்காற்றுகிறது என்றார்.. தன்னை பொறுத்தவரை விஞ்ஞானத்தை மதத்திற்கு எதிராக நிறுத்தவேண்டிய அவசியமில்லை. மூடதனத்திற்கு எதிராக வேண்டுமானால் நிறுத்தலாம் என்றார். மதப்பற்று இருப்பதால் ஒருவர் மதசார்பின்மைக்கு எதிரானவரல்ல. மதம் மக்களை பிரித்துவிடக்கூடாது என்பதில்தான் மதசார்பின்மை இருக்கிறதே தவிர மதம் கூடாது என்பதில் அல்ல என்ற புரிதல் அவரிடம் இருந்தது. அவர் பகவத்கீதை குறித்து தனியாக விளக்கம் எழுதினார் அதிகம் கற்க கற்க பெரும் வார்த்தைகள் புலமையல்ல என அவர் புரிந்து கொள்ளத்துவங்கினார். சில நேரங்களில் அவை குழப்பத்தை தருவதாகவும் உணர்ந்தார். அவர் பெரும் உரையாடல்காரராக இருந்ததால் அவரது திறம் பலராலும் உணரப்பட்டது. திருக்குறளும், ரூசோவும், சாக்ரடிஸ், பிளாட்டோவும் உரையாடலில் கூடவே வருவர். நகைச்சுவை உணர்வுகளை அவர் வெளியிட தவற மாட்டார் என அவரைப் பற்றி அறிந்த விஜயராகவாச்சாரி குறிப்பிடுகின்றார். இடையிடையே தன்னைத்தானே கேலியும் செய்து கொள்வார். எந்தப் பொருள் குறித்த விவாதமாக இருந்தாலும் அதில் நடைமுறை ஞானம்கொண்ட ரிஷி போலவே அவர் இருப்பார் என்ற பதிவையும் அவரது நண்பர்கள் தருகின்றனர். இரு விஷயங்களை கற்று தெளிவோம் என்பார். நம்மை மற்றவர் எப்படி பார்க்கின்றனர் என்பதை நாமும் பார்க்க கற்போம். மற்றவர்களின் கருத்திற்கு பயந்தால் நம்மால் ஏதும் செய்யமுடியது என்பதை அறிவோம். சரி என நாம் உணர்வதை செய்யத் துவங்கினால் எல்லாம் சரியாகும் என்பது அவரது துணிபு. விமோசனா, பவான்ஸ்ஜேர்னல், சுயராஜ்யா, கல்கி, கோகுலம் ஆகியவற்றில் அவர் எழுதிவந்தார். Chemistry on the Front Verandah, The domestic life of Plants, Raman Effect போன்ற அறிவியல் செய்திகள் குறித்தும் அவர் எழுதினார். ராஜாஜியின் இந்தி திணிப்பு எதிர்ப்பை ராஜேந்திரபிரசாத் விமர்சித்தார். வடக்கு தெற்கு என பேதம் வளர்க்கிறார் என குற்றம் சாட்டினார். இதற்கு ராஜாஜி ஏதோ நாட்டில் இப்போது ஒற்றுமை இல்லாதது போலும் இந்தி ஏற்கப்பட்டால் மட்டுமே ஒற்றுமை வரும் என பேசுவது அபத்தம் என பதில் அளித்தார். நாட்டின் ஒற்றுமை குறித்த அக்கறையில் தான் யாருக்கும் குறைவானவன் அல்ல என்றார். 1937ல் கட்டாய பாடமாக இந்தியை அவர் கொணர்ந்தபோது எதிர்ப்பை அவர் உணர்ந்தவர். தென்னிந்தியர் சுயவிருப்பத்தில் இந்தி கற்றுக்கொள்வது அவசியம் என்ற கருத்தும் அவரிடம் இருந்தது. I Meet Rajaji என்கிற புத்தகத்தை மோனிகா ஃபெல்டன் எழுதினார். அவர் ராஜாஜியிடம் உங்களை நவீன சக்ரடீஸ் என்கிறார்களே என கேட்டபோது சாக்ரடீஸ் கேள்விகளாக கேட்டவர்- நான் பதில்களை சொல்லிக்கொண்டிருப்பவன் என்றார். அதே நேரத்தில் தன்னை தாழ்த்திக்கொண்டு விண்மீன் ஒன்றுடன் தீக்குச்சியை ஒப்பிட வேண்டாம் என்றார். அவரது ஹாஷ்ய உணர்வு குறித்து பலரும் பேசியுள்ளனர். கஸ்தூரிபாய் திருசெங்கோட்டில் பேசிய ஆங்கிலம் குறித்து ராஜாஜி கிண்டல் செய்கிறாரோ என்ற உணர்வில் கஸ்தூரிபாய் எனது இங்கிலீஷ் தப்பா என கேட்டபோது , இல்லை அது Ba இங்கிலிஷ் என்று சமாதானப்படுத்தினார் ராஜாஜி.. மொரார்ஜி அவர்களின் பட்ஜெட் குறித்து வலது பட்ஜெட்டா- இடது பட்ஜெட்டா என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. ராஜாஜி தனது பதிலாக அது ராங் பட்ஜெட் (Morarji’s budget is neither right nor left but wrong ) என பதிலளித்தார். 1937ல் ராஜாஜி கந்துவட்டிக்காரர்களின் பிடியிலிருந்து சாதாரண மக்களை மீட்க சட்டம் என சொன்னபோது, டி டி கே அவர்கள் கடன் புள்ளிவிவரம் இருக்கிறதா என்றார். கொசு கடித்தால் வலை வாங்கவேண்டும், கொசு ஜார்ஜ் டவுனில் எவ்வளவு என டி டி கே கணக்கு எடுத்துக்கொண்டிருக்க கூடாது என்றார். ஒருமுறை நேருவுடன் விவாதம் வந்தபோது, நேரு என்னிடம்தான் பெரும்பான்மை இருக்கிறது என்றார். அதற்கு ராஜாஜி என்னிடம் தர்க்க நியாயம் இருக்கிறது ( ‘yes, Jawahar, the majority is with you, but logic is with me’) என்றார். ஒருமுறை பயணம் ஒன்றில் கூட பயணித்த ஆங்கிலேயர் ராஜாஜியுடம் வெப்பம் மிக அதிகமாக இருக்கிறதே என்றார். ராஜாஜி சூடு போதாது. இன்னும் அதிகமானால்தான் உங்களை வெளியேற்ற முடியும் என்று இரட்டை தொனியில் பதில் தந்தார். சமரசம் கூடாது என கருதியவர் ராஜாஜி. அது ஒருவகை ஏமாற்று என்பார். 1966 அக்டோபரில் அய்நா சபையில் திருமதி எம் எஸ் சுப்புலஷ்மி அவர்கள் ராஜாஜி கம்போஸ் செய்த பாடல் ஒன்றை பாடினார். எல்லா நாடுகளும் இக்கூரையின் கீழ் புரிதலுடன் ஒன்றாகட்டும் வெறுப்பும் பயமும் தொலையட்டும் என்கிற பொருள்தரும் பாட்டு அது. ஜேன் ஆஸ்டன் எழுத்தின் வலிமையை பெண்கள் குறித்த சிக்கலான உணர்த்தலை அவர் பாராட்டி பேசுவார். பிரிட்டிஷ் பெண் எழுத்தில் அந்த அளவிற்கு வேறு யாரிடமும் வலிமை இல்லை என்பார்.ஆர். கே நாரயண் எழுத்தை ரசித்துவிட்டு கடவுள் அருள் புரியட்டும் என்று வாழ்த்து அனுப்பினார். பாரதி பாடல்கள் பதிப்பிக்கப்பட உதவினார். சர் சி ராமனுக்கும் உதவியிருக்கிறார் என அறிகிறோம். நமக்கு உதவும் அனைத்து கருவிகளையும் சரியாக பாராமரிக்கவேண்டும் என்பார். அதைக்கூட அடிமை போல் நடத்திக்கொண்டிருக்கக்கூடாது என சொல்வார். புகையிலை தீங்கை அவர் எடுத்துரைத்தவர். உங்கள் வாய் விஷத்தின் ஆலையாகிவிடக்கூடாது (Don’t make your mouth a poison factory) என்பார். அதே போல் பி சி ஜி யை கடுமையாக அவர் எதிர்த்தவர். ராஜாஜி- காமராஜ் இடையில் கசப்புகள் இருந்தன. காமராஜருக்கு 61ஆம் பிறந்தநாள் அன்று அவர் ஊர்வலமாக சத்தியமூர்த்திபவனுக்கு அழைத்துவரப்படுகிறார். அங்கு வாழ்த்த காத்திருந்தவர்களில் ஒருவராக ராஜாஜி இருந்தார். என்னைவிட அதிக ஆண்டுகள் வாழ்வீர் என வாழ்த்தினார். 1948ல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி அய் நா சபை நிகழ்வொன்றில் நூலக தந்தை ரங்கநாதனை பார்க்கிறார். அவரை அருகில் அழைத்து கவர்னர் ஜெனரல் போலவே பேராசிரியரும் நூலகரும் அவசியமானவர்தான் முன்னால் வந்து அமர்க என்றார். ராஜாஜி தன் வாழ்நாளில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானவர். மனுதர்மவாதி, குலத்தொழில் செய்ய சொல்லியவர், இந்திக்கு ஆதரவாக இருந்தவர், சோசலிச கருத்துக்களுக்கு விரோதமாக பேசியவர், மொழிவாரி மாநிலங்களை எதிர்த்தவர் என ஏராள விமர்சனங்களுக்கு ஆளானவர். “ஶ்ரீ இராஜகோபாலாச்சாரியார் என்கிற ஓர் அய்யங்கார் பார்ப்பனர், தமிழ்நாடு முழுவதும் பெரிய சீர்திருத்தக்காரர் என்று பெயர் வாங்கியவர். தமிழ் மக்களையெல்லாம் அடியோடு ஏய்த்தவர். தனக்கு சாதி வித்தியாசம் இல்லை என்பதாகச் சொல்லிக் கொண்டும், தன்னிடம் பார்ப்பனத்தன்மை இல்லை என்று சொல்லிக் கொண்டும், பார்ப்பனீயத்தை விட்டு வெகுகாலமாகிற்று என்று சொல்லிக் கொண்டும், சில பார்ப்பனரல்லாத வாலிபர்களை ஏமாற்றிக் கொண்டும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழித்து, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் இந்தியாவில் உள்ள பார்ப்பனரெல்லோரையும் விட அதிகமான கவலையும், அதற்கேற்ற சூழ்ச்சியும் கொண்டவர்.” என குடியரசு (25.3.1928) விமர்சன பதிவு உள்ளது. ராஜாஜி பெரியார் நட்பு பற்றி அனைவரும் அறிவர். பெரியார் ஒருமுறை அவரை சந்தித்துவிட்டு 1936ல் எழுதிய பதிவின் சுருக்கம் இங்கு தரப்படுகிறது. “ஆச்சாரியாரிடம் எப்போதுமே மரியாதை உண்டு. ஆச்சாரியாரைப் பற்றி அரசியல், பொதுநலத்தில் மாறுபட்ட அபிப்ராயம் கொண்டிருந்தாலும், கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தாலும் அவருக்கு என்னிடம் அன்பு உண்டு. நான் அவரது அன்புக்குப் பாத்திரமானவன். ..ஒத்துழையாமை ஆரம்பமானவுடன் நான் அவருடைய உள்ளத்தைக் கொள்ளைகொண்ட காதலி போலவே இருந்துவந்தேன். எங்களுக்குள் வெகுநாள் ஒத்துழையாமையிலே அபிப்ராய பேதமே இல்லாதிருந்தது. அவர் இஷ்டத்தை அறிந்து, அதுவே என் அபிப்ராயம்போலக் காட்டி இணங்கச் செய்வதுபோல ஒவ்வொரு விஷயத்திலும் நடந்துகொள்வேன். அதனாலேயே அனேகர் என்னைக் கண்டுவிட்டே அவரைக் காணுவார்கள், அப்படிப்பட்ட நிலை. வகுப்புணர்ச்சி காரணமாகவே இருவருக்கும் மாற்றம் நேரிட்டது. அதன் பிறகு பல சம்பவங்கள் ஏற்பட்டுவிட்டன என்றாலும், அவரைக் காணும் போது என்னை அறியாமலே அவரிடத்தில் ஒரு மரியாதையும் பணிவும் ஏற்பட்டுவிடுகின்றன. அவரைக் காணும்போது எப்படி மரியாதையும் பணிவும் ஏற்படுகிறதோ, அதுபோல ஒரு பரிதாபமும் ஏற்படாமல் இருப்பதில்லை. காரணம், அவ்வளவு பெரிய தியாகம் செய்தவர். அவ்வளவு தியாகமும் ஒரு பயனும் இல்லாமல் போகும்படியாய்விட்டதே பாவம் என்று பரிதாபப்படுவதுண்டு என்றாலும், அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு மூன்று அர்த்தம் செய்துபார்க்காமல் நான் ஒரு முடிவுக்கும் வருவதில்லை சேலத்தில் ராஜாஜிக்கு கெட்டிக்கார வக்கீல் என்ற பெயரோடு, புத்திசாலி என்ற பெயரும் யோக்கியர் என்ற பெயரும் ஏற்பட்டுவிட்டது. அவரை எனக்கு 1910-ம் ஆண்டு வாக்கிலிருந்து தெரியும். ராஜாஜி 1912 வாக்கில் எல்லோருடைய வீட்டிலும் சாப்பிடுவார். இதனால் அவரிடம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது அவர் ஒரு பகுத்தறிவாதியாகவே நடந்துகொண்டார். வ.வே.சு. அய்யரை எனக்கும் பிடிக்காது. ராஜாஜிக்கும் பிடிக்காது. அவர் சீனிவாச அய்யங்கார் பேச்சைக் கேட்டுக்கொண்டு, என்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். ராஜாஜி ஓட்டு சேகரம் செய்து அத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். எனக்கும் ஆச்சாரியாருக்கும் இடையே உள்ள நட்பு கணவன் - மனைவிக்கும் உள்ளது போன்றது. உற்சாகம் காரணமாக, தனிப்பட்ட முறையில் சமுதாயத் தொண்டில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த என்னை முழுக்க முழுக்கச் சமுதாயத் தொண்டனாக ஆக்கிய பெருமை ராஜாஜிக்கே உரியதாகும்.” (குற்றாலத்தில் ராஜாஜியைச் சந்தித்தது குறித்து பெரியார் அவர்கள் 1936 ஜூலை 14-ம் தேதி ‘குடிஅரசு’ இதழில் ) The Nation’s Voice என காந்தியின் இங்கிலாந்து உரைகளை ராஜாஜி, குமரப்பாவுடன் தொகுத்து வெளியிட்டார். 1956-61 வரை அவர் சுயராஜ்யாவில் எழுதிய கட்டுரைகள் 1000 பக்கங்களுக்கு மேல் சத்யமேவ ஜெயதே என்ற இரண்டு நூல் தொகுப்பாக வெளிவந்தது. மதம், உபநிடதம், மொழி, நீதி, விமர்சனம், தேர்தல் வாக்கு, வெளிநாட்டு உறவுகள், காஷ்மீர்- பாகிஸ்தான் பிரச்சனைகள், அரசியல் மதிப்பீடுகள், மத்திய மாநில உறவுகள்- சுயாட்சி, நிலப்பிரச்சனை, கீதை-குறள், நம்மாழ்வார் பாசுரம், உணவு பற்றாக்குறை, காங்கிரஸ் இயக்கம், சோசலிசத்தில் சுதந்திரம், நல் இலக்கியம், இராணுவ செலவு மற்றும் அன்றாடம் மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள்-அரசியல் குறித்து எழுதினார். அவரது ஆங்கில கட்டுரைகள் நீளமாக இருக்காது. மிக சிறிய அளவு கட்டுரைகளாகவே இருந்தன. ராஜாஜி இலக்கிய ஆளுமை என ஏற்கப்பட்டு இலக்கிய உலகில் கொண்டாடப்படாவிட்டாலும் அவர் ஏராளம் எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக ஆத்திசூடி விளக்கம், நல்வழிபடுத்தும் உபதேச கதைகள், சமுக விழிப்புணர்வு கதைகள் என 60க்கும் மேற்பட்டு எழுதியிருப்பதாக தெரிகிறது. கண்ணன் காட்டிய வழி என கீதை விளக்கமளித்தவர். ஆங்கிலத்திலும் கீதை குறித்து எழுதியுள்ளார். உபநிடத பலகணி என 25 கட்டுரைகள் எழுதினார். திருக்குறள் குறித்து அவர் 90க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியதாக தெரிகிறது. பஜகோவிந்த விளக்கம், ராமகிருஷ்ணர் உபநிடதம், திருமுலர் தவமொழி, ராமாயணம், மகாபாரதம் எழுதியவர். மனதிற்கு அமைதியில்லாத காலங்களில் மகாபாரதம் படிப்பது வழக்கம் என்பார். ராஜாஜியின் சிறுகதைகளை parables- குறிப்பிட்ட உண்மையை கதை மூலம் எடுத்து சொல்லும் உவமை கதைகள் என சிவத்தம்பி கூறுகிறார். ராஜாஜி கவிதை, பாடல் ,நாடகம் குறித்து கல்கி வெங்கடேஷ் தனது நூலில் விவரிக்கிறார். நாவிலெழுந்ததை எழுந்தபடி நவில்கிறேன்-பாவிலக்கணம் பயிலாதவன் என நேர்மையாக ராஜாஜி பதிவு செய்கிறார். சத்திய நெறியில் நின்று அச்சம் என்பது சிறிதும் இல்லாமல் அதர்மத்தை கண்டவிடத்து அதனுடன் போர்புரிந்து நிற்பவனே சத்தியாக்கிரகி என்கிறார் ராஜாஜி. அவர் சாக்ரடிஸ், மார்க் அரேலியர் ஆகியோர் ஆக்கங்களையும் தமிழர் அறிய தந்தவர் அவர். Rescue Democracy from Money Power என்ற ஆக்கத்தை எம் சி சாக்லா அறிமுகத்துடன், ஜெயபிரகாஷ் நாராயண் முன்னுரையுடன் ராஜாஜி எழுதினார். கல்கி இதழ் அவரில்லாமல் இல்லை என்ற அளவிற்கு அவருடன் இரண்டற கலந்த இதழ். கல்கி- டி கே சி ராஜாஜி உறவு பெருமளவு பேசப்பட்ட ஒன்று. ராஜாஜியின் ஆளுமை குறித்து இலக்கியகர்த்தா மஸ்தி வெங்கடேச அய்யங்கார் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். Rajaji Story- A warrior from South என்பதை ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ளார். 1972ல் டிசம்பர் 25ம் தேதி அவர் மறைந்தார்.எப்போதும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வது கழுதையின் குணம் என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார். அவரின் ஏராள எழுத்துக்கள் மீதான விவாதம்- விமர்சனம்- மறுவாசிப்பு தற்போது பெருமளவில் நடைபெறுவதில்லை. Ref: - Rajaji: Life nad Work R K Murthi - The Political Career of C RajaGopalachari- A R H Copley - Satyameva Jayate - இந்திய இலக்கிய சிற்பிகள்- ராஜாஜி ஆர். வெங்கடேஷ் சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் [] இந்திய தத்துவ ஞானி என அறியப்பட்டவரும் பெரும் மேதையுமான இராதாகிருஷ்ணன் நேரடி அரசியல்வாதியாக இல்லையெனினும் இந்தியாவின் குடியரசு துணைத்தலைவராகவும், குடியரசுத்தலைவராகவும் உயர்ந்தவர். கல்வியாளர், தத்துவஞானி, தூதர், ராஜ்யசபாவை வழிநடத்தியவர், ராஜதந்திரி என்கிற பன்முகத்தன்மையுடன் இருந்தவர் . தன்னைப்பற்றி அதிகம் பேசாதவராக இருந்தவர். அவரது படைப்புக்கள்தான் அவருக்காக பேசுகின்றன. தனது எழுத்துக்களே தனது சுயசரிதையாக விளங்கட்டும் என கருதியவர். அவரது புதல்வர் திரு கோபால் அவரது வாழ்வு குறித்து 1988ல் பெரும் புத்தகம் ஒன்றை நமக்கு அளித்துள்ளார். நேரு குறித்த சுயசரிதையும் எழுதியவர் கோபால். பிரிட்டிஷார் வரவு அதன் காரணமாக கிறிஸ்துவ சமயம் பெற்ற அரசியல் ஒத்துழைப்பு என்ற சூழல் இந்தியாவில் நிலவிய காலத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். இந்துயிசம் என்பது மத மற்றும் அரசியல் வழிப்பட்டு அறியப்படாமல் பல்வேறு செக்ட் அடிப்படையில் இந்து மத உணர்வு என இருந்த காலமது. முறைப்படுத்தப்பட்ட கிறிஸ்துவ சமயத்தை எதிர்கொள்ளவேண்டிய சவால்உணர்வுகளுக்கான யுத்தம் (battle for consciousness) உருவானது. காலனியாதிக்கத்தின் கொடுமையிலிருந்து மீள்வதற்கு வலுவான கருத்துக்களின் ஒருங்கிணைவு, நம்மிடம் என்ன இல்லை என்கிற முழக்கம், பழமையிலிருந்து சிறந்தவைகளை மீட்டுருவாக்கம் செய்வது- தேவைப்படலாயிற்று. சொந்த மண்ணிலும் ஆள்வோர் மண்ணிற்கு சென்றும் பிறரின் கலாச்சாரத்தை அந்நிய மொழியில் கற்கவேண்டிய நிலையும் நிலவியது. திருத்தணியில் செப்டம்பர் 5 1888ல் ஏழை பிராம்மணர் குடும்பம் ஒன்றில் இராதாகிருஷ்ணன் பிறக்கிறார். தாய் சீதம்மா, தந்தை சர்வபள்ளி வீராசாமி. தான் செப் 20 1887ல் பிறந்ததாக இராதாகிருஷ்ணன் கருதினார். செப் 5 தான் அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது. கோபால் எழுதும்போது வீராசாமி அவர் தந்தைதானா என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறார். அவருடன் உடன் பிறந்தததாக சொல்பவர்கள் ‘ஒரே ஜீன்’ உடையவர்களா என்கிற சந்தேகமும் இருப்பதாக கோபால் சொல்கிறார். இராதாகிருஷ்ணன் தன் தாயை சற்று தூரத்திலேயே வைத்திருந்துள்ளார். ராதாகிருஷ்ணனின் மூதாதையர்கள் சென்னையிலிருந்து 200 மைல்கள் தொலைவில் உள்ள சர்வபள்ளி என்கிற கிராமத்திலிருந்து சென்னைக்கு அருகில் திருத்தணியில் 18 ஆம் நூற்றாண்டில் குடியேறியிருந்தனர். திருத்தணி ஆரம்ப பள்ளியில் அவர் சேர்க்கப்படுகிறார். 1896ல் அவர் திருப்பதி கிறிஸ்துவ மெஷினரிக்கு அனுப்பப்படுகிறார். ஆரம்ப கல்வி காலத்தில் அவரிடம் அறிவுக்குணம் ஏதும் தென்படவில்லை. சராசரி மாணவராக இருந்துள்ளார். விளையாட்டுக்களில் ஆர்வம் செலுத்தவில்லை. அவருக்கு படிப்பு உதவித்தொகை கிடைத்தது. பெற்றோருக்கு ஆங்கில அறிவு ஏதும் இல்லை. சூழல் சரியில்லா நிலையில் அவர் வேலூருக்கு அனுப்பப்படுகிறார். அங்கு தூரத்து மாமா ஒருவர் பாதுகாப்பில் விடப்படுகிறார். மெட்ரிக் தேர்வில் வென்று கல்லூரி செல்கிறார். பைபிள் அவருக்கு மனப்பாடம் ஆகிறது. அதே நேரத்தில் விவேகானந்தர் உரைகள் அவரை ஈர்க்கிறது. சாவர்க்கர் எழுதிய முதல் இந்திய விடுதலைபோர் அவருக்கு கிடைக்கிறது. புத்தக படிப்பில் நாட்டம் ஏற்படுகிறது. வெல்லூரில் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கம் அதிகரித்தது. அவரிடம் இந்தப் பழக்கம் இறுதி வரை தொடர்ந்தது. தனிமையாக, சற்று கூச்ச சுபாவத்துடன் இருத்தல், எதிலும் ஆழம் சென்று பார்த்தல் என்று அவர் காணப்பட்டார். புகையிலை, மது போன்ற எப்பழக்கமும் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இருந்ததில்லை. எளிய சைவ உணவை எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தது. அவருக்கு கிடைத்த படிப்பு ஊக்க உதவித்தொகையை மிச்சம் செய்து நண்பர்கள் உபசரிப்பு, ஏழை மாணவர்களுக்கு உதவி என்பதற்கு செலவு செய்தார். ஆரம்பத்தில் அவருக்கு செக்ஸ் என்பதிலும் கூச்சம் இருந்தது. கழிப்பறைகளில் அவர் கண்ணில்படும் செக்ஸ் இலக்கியங்கள் அவருக்கு தொந்திரவு செய்தாலும் அதை குறித்து மாரல் உபதேசமோ, புகாரோ அவர் செய்ததில்லை. அவரின் 16 வயதில் சிவகாமு என்கிற 10 வயது பெண்ணை மணம் முடிக்கின்றனர். அவர்கள் மணமாகி மூன்று ஆண்டுகள் கழிந்தபின்தான் சேர்ந்து வாழத்துவங்குகின்றனர். 1908ல் அவர்களுக்கு முதல் பெண் குழந்தை பிறக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளில் 6 குழந்தைகள் பிறக்கின்றன. 1918வரை முரட்டு மீசையுடன் ராதாகிருஷ்ணன் இருந்ததாக கோபால் எழுதுகிறார். பத்மா என அழைக்கப்ப்ட்ட சிவகாமு தனக்கென எதிர்பார்ப்புகள் இல்லாதவராக கணவருக்கும் குடும்பத்திற்கும் பாடுபடக்கூடியவராக இருந்துள்ளார். இராதாகிருஷ்ணனுடன் அறிவார்ந்த வளர்ச்சி குறித்த விவாதங்கள் நடைபெறாவிட்டாலும் அவரின் அனைத்து மன உணர்வுகள், போராட்டங்கள் ஆகியவற்றில் ஆறுதலாக இருந்தவர் சிவகாமு. 1904ல் ராதாகிருஷ்ணன் கணிதம், தத்துவம், வரலாறு பாடங்களுடன் மேல்படிப்பை கல்லூரியில் தொடர்ந்தார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் அவர் தத்துவம் பயின்றார். அவருக்கு உறவுக்காரர் ஒருவர் தான் படித்த புத்தகங்களை தருவதாக சொன்னதால் அவர் தத்துவம் எடுத்தார். ஆர்வம் காரணமாக இல்லை. செலவு சிக்கனம் அவரை அத்துறைக்கு அழைத்து வந்தது. 1949வரை ஏராள ஆய்வுகள், தத்துவம் குறித்த உரைகள் நிகழ்த்தி வந்தார். தனது வாழ்க்கை கண்ணிற்கு புலப்படாத சக்தியால் உருவாக்கப்பட்டுவருகிறது என்கிற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அந்த சக்தியை இயற்கை என்றோ, கடவுள் என்றோ அல்லது ஏதோவொன்று என அழக்கலாம் என்பார். அவரை கல்லூரியில் பதப்படுத்தியவர்களாக வில்லியம் ஸ்கின்னர். ஏ ஜி ஹாக் இருந்தனர். அவருக்கு பொறுமையை கற்றுத்தந்தனர். மிகச்சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றலை மேம்படுத்தினர். 1906ல் தத்துவத்தில் தலைசிறந்த மாணவர் என்ற பாராட்டுடன் அவர் பட்டம் பெற்றார். தந்தை வீராசாமி, தாயார், சகோதரர்களுக்கு பணம் அனுப்பும் பொறுப்பு அவருக்கு வந்தது. வறுமையின் சூழலில் தனது எம் ஏ மேற்படிப்பை அவர் தொடர்ந்தார். தனது மரியாதைக்குரிய ஹாக் பகவத்கீதையை கேவலமாக விளக்கியதால் சவலாக எடுத்துக் கொண்டு இந்து மதம் - நம்பிக்கைகள் குறித்து அவர் கற்க துவங்கினார். விவேகானந்தர் எழுத்துக்கள் தனக்கு தேசப்பற்றை தந்த அளவு மதம் குறித்த எழுச்சிகளை உருவாக்கவில்லை என்கிற எண்ணம் அவரிடம் ஏற்பட்டது. பார்னெட் எழுதிய இந்துயிசம், வில்பெர்னிட்ஸ் எழுதிய பகவத்கீதை, சுவாமி அபேதானந்தாவின் வேதங்கள் உரைகளை அவர் தீவிரமாக படித்துணர்ந்தார். தனது ஆய்வுரையாக The Ethics of the Vedanta and its Metaphysical Presuppositions என்பதை எழுதி முடித்தார். எவ்வித மாறுபாடுகளையும் காட்டாமல் ஹாக், வில்சன் மெச்டன் என்கிற பேராசிய பெருமக்கள் அவரை பாராட்டினர். பிற்காலத்தில் இந்த ஆக்கத்தை சிறுவயது முயற்சி என கருதி அதிகம் பாராட்டிக்கொள்ளவில்லை. அதில் அவர் புரோகிதத்தனம் என்பது வேத நூல்களை சிதைத்துள்ளது. இது இந்தியாவின் நிகழ்வு மட்டுமல்ல. உலகின் பாதியுத்தங்கள், பாதி பாவங்கள், துன்பங்கள் மத படுகொலைகள் மேற்கூறிய செல்வாக்கால் ஏற்பட்டன என்று எழுதியிருந்தார். மனிதன் தனது உணர்வுகளை கட்டுக்குள் நிறுத்தி மேலான சுயமாக உருவாவது அவனின் கடமை என அவர் எழுதினார். ஒருமைத்தன்மை உணர வேதாந்த நன்னெறிகள் தேவை என்றார். வாய்ப்புகள் கதாநாயகனை உருவாக்கிவிடும். ஆன்மீக மதிப்புகளுடன் சமுக சேவை என்பதை நோக்கி அவர் நகரத்துவங்கினார். சர்வதேச சகோதரத்துவம் வேதாந்த நெறியின் சாரம் என்றார். மானுட நலனுக்காக நிற்பது உள் அமைதிக்கான வழியாகும்.. மானுடத்தின் மீதான மதிப்புத்தான் இறை மரியாதை என குறிப்பிட்டார். 1909ல் அவர் தனது முதுகலை முடித்தவுடன் ஆக்ஸ்போர்ட் அல்லது காம்பிரிட்ஜ் செல்ல விழைந்தார். ஆனால் குடும்பநிலை அவர் சென்னையைவிட்டு வெளிச்செல்ல முடியாமையை உருவாக்கியது. வேலைமுயற்சியும் சென்னையில் கைகூடவில்லை. ஸ்கின்னர் பரிந்துரையில் அவரின் கல்வித்தகுதிக்கும் குறைவான பள்ளி துணை ஆய்வாளர் பதவி தரப்பட்டது. பிறகு சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தற்காலிக காலியிடத்தில் மலையாள ஆசிரியர் என ரூ 60 சம்பளத்திற்கு வேலை கொடுக்கப்பட்டது. சில மாதங்களில் 1910ல் அரை சம்பளத்தில் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப்பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார். சம்பளம் ரூ 37. கடும் நிதி பிரச்சனை ஏற்பட்டது. வாழை இலை வாங்கி அதில் போட்டு சாப்பிடாமல் தரையை சுத்தம் செய்து அதில் உணவிட்டு சாப்பிடும் அளவிற்கு சிக்கனமாக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தனது கல்லூரி மெடல்களை அடகுவைத்து ஜீவனம் செய்யும் நிலையும் உருவாகியது. வாங்கியிருந்த கடனுக்கு வட்டி தரவில்லை என 1913ல் கோர்ட்டில் அவர் நிறுத்தப்பட்டார். தனி டியுஷன், புத்தகம் எழுதி சம்பாதிப்பது என நாட்கள் நகர்ந்தன. Essentials of Psychology என்கிற புத்தகத்திற்கு காப்பிரைட் முழுமையாக ஆக்ஸ்போர்ட் பிரஸ்க்கு தந்து ரூ 500 பெற்றார். 1914 துவங்கி பிரசிடென்சியில் தத்துவத்துறை உதவி பேராசிரியர் ஆக பணிபுரிந்தார். 2 தத்துவ படிப்பு எழுதுவது எல்லாம் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான். கணிதமேதை இராமனுஜம் ஸ்ரீனிவாசன் அப்படி ஒரு இரவில் வந்து தான் ஆக்ஸ்போர்ட் செல்கிறேன், ஆசிர்வதிக்கவேண்டும் என கேட்டு நின்றுள்ளார். கல்லூரி காலத்தில் பெரும் நண்பர்களை அவர் பெறவில்லை. அல்லாடி கிருஷ்ணசாமி சீனியராக அங்கு படித்துவந்தார். 1920களில்தான் அவர்கள் நட்பு உருவாகி வளர்ந்தது. பின்நாட்களில் புகழ்வாய்ந்தவர்களாக உயர்ந்த சத்யமூர்த்தி, சுப்பிரமண்ய அய்யர், மொகமது உஸ்மான் (சென்னை தற்காலிக கவர்னராக வந்தவர்) ஆகியோரின் பழக்கம் தோழமை ஏற்பட்டது. உஸ்மான் ராதாகிருஷ்ணனிடம் பயின்று பின்னர் பல்கலை துணவேந்தரானவர்- கவர்னர் ஆனவர். டி.கே துரைசாமி என்கிற பொருளாதார வல்லுனர் 40 ஆண்டுகளுக்கு மேல் தொடர் நட்பில் இருந்தவர். காஸ்மோபாலிட்டன் கிளப் சேரும் அளவிற்கு நிதிநிலைமை பலப்பட்டதாக கோபால் தெரிவிக்கிறார். அநாவசிய செலவு செய்யத்துவங்கினார் எனவும் மதிப்பிடுகிறார். சரோஜினி நாயுடு குடும்பத்துடனும் பழக்கம் ஏற்பட்டது. நேருவின் நண்பராக இருந்த எம் ஏ காண்டத் காம்பிரிட்ஜ்லிருந்து கல்லூரிக்கு வந்தார். இருவரும் மிகச்சிறந்த அறிவு விவாத நட்பை உருவாக்கிக்கொண்டனர். மேற்கத்திய தத்துவத்தில் ஆங்கிலம் மூலம் அவர் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும், இந்திய தத்துவம் கற்க சமஸ்கிருத உதவி அவசியப்பட்டது. பல பண்டிதர்களின் துணைக்கொண்டு உபநிடதங்களை அவர் கற்றார். புத்தமதம்பற்றி தெரிந்து கொள்ள பாலிமொழி ஆக்கங்களை ஆங்கில வழி பயின்றார். மேற்கிலிருந்து வந்த தத்துவப் பத்ரிக்கைகளில் கட்டுரைகள் எழுத துவங்கினார். ஆரம்பத்தில்Mind, Hibbert Journal அவர் கட்டுரைகளை திருப்பி அனுப்பிவிட்டன. 1911ல் International Journal of Ethics என்கிற இதழ் The Ethics of Gita and Kant என்கிற ஒப்பீட்டு ஆய்வை வெளியிட்டது. வேதாந்தம் குறித்த கட்டுரைகளையும் அவ்விதழ் வெளியிட்டது. விவேகானந்தர், சுரேந்திரநாத் பானர்ஜி, லஜ்பத்ராய், கோகலே, ராஷ்பிகாரிபோஸ் குறித்து ராதாகிருஷ்ணன் அறியலானர். அன்னிபெசண்ட் உரைகளால் கவரப்பட்டார். இந்தியா குறித்த பெருமிதம், அய்ரோப்பாவின் பொருளாசை எண்ணம் குறித்து அவர் உலகப்போர் சூழலில் 1915ல் ஏசியாட்டிக் ரிவ்யூவிற்கு கட்டுரைகள் எழுதினார். அவை தணிக்கைத் தடைக்கு உள்ளானதாக அறிகிறோம். காந்தியுடன் ஆன முதல் சந்திப்பு நிறைவாக இல்லை. பின் நாட்களில் அவர் காந்தியை திலகர், அன்னிபெசண்ட்டைவிட கூடுதல் மதிப்புக்குரியவராக கருத ஆரம்பித்தார். முதல் சந்திப்பில் காந்தி மத்தியகால அணுகுமுறை பார்வையுடன் இருப்பதாக ராதாகிருஷ்ணன் நினைத்தார். பால் அருந்தாதே அதுவும் பீப் (beef) என சொல்ல ராதாகிருஷ்ணன் அனைவரும் நரமாம்சம் குடித்துதான் வளர்கிறோம் (தாய்ப்பால்) என்ற பதிலை தந்துள்ளார். அருகில் இருந்த ஜி ஏ நடேசன் அவர் தர்க்கவியல் பேராசியர் என காந்தியிடம் தெரிவித்தார். அதேபோல் டாக்டர்களே தேவையில்லை- வனாந்தரங்களில் அவர்கள் இல்லாமல் ஆயிரம்பேர் பிறக்கிறர்கள் என காந்தி சொல்ல ஆயிரம் பேர் இறக்கவும் செய்கிறார்கள் என ராதாகிருஷ்ணன் பதில் தந்தார். எப்படி தெரியும் என காந்தி கேட்க , உங்களுக்கு எப்படித்தெரியும் என பதில்கேள்வி எழும்ப விவாதம் நின்றுபோய்விட்டது. மாண்டலே சிறையில் திலகர் இருந்தபோது ராதாகிருஷ்ணனின் கீதை கட்டுரையை கேட்டுப்பெற்று தனது அணுகுமுறைக்கு ஏற்ப உளது என்ற கருத்தை தெரிவித்தார். அதற்கு மிக்க நன்றி தெரிவித்து திலகருக்கு கடிதம் எழுதினார் ராதாகிருஷ்ணன். தாகூரின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் கொணர 1912ல் அவர் தாகூரை படிக்க துவங்கினார். தாகூருக்கு 1913ல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவர் கிறிஸ்து சாரத்தில் எழுதுகிறார் என்ற குற்றசாட்டு வந்தது. அதை மறுத்து தாகூரின் எழுத்துக்களில் இந்து வேதாந்தி தெரிகிறார் என ராதாகிருஷ்ணன் எழுதினார். 1918ல் தாகூரின் தத்துவம் என்கிற அருமையான புத்தகத்தை ராதாகிருஷ்ணன் சென்னையிலிருந்து வெளியிடுகிறார். இது குறித்து விரிவாக தாகூரின் தத்துவப் பார்வை எனும் கட்டுரையில் இக்கட்டுரை ஆசிரியர் எடுத்துக்கூறியுள்ளார். தாகூர், ராதகிருஷ்ணன் இருவரும் தேசபக்த இயக்க நடவடிக்கைகளில் தீவிரமாக இல்லை. காந்தி இன்னும் வெளிப்படுத்தப்படாதவராக இருந்தார். திலகர் மீது மரியாதை இருந்தது. அவரது அரசியல் பார்வையுடன் இராதாகிருஷ்ணன் நிற்கவில்லை. தாகூரின் தத்துவம் குறித்த ராதாகிருஷ்ணன் புத்தகம் நல்ல மதிப்புரைகளை கண்டது. வரவேற்பு பெற்றது. சென்னை பச்சையப்பா தனியார் நிர்வாகம் அதிக சம்பளம் தருவதாக சொன்னாலும் பிரசிடென்சியில் இருப்பதை ராதாகிருஷ்ணன் விரும்பினார். சென்னை பல்கலைகழகத்தில் அப்போது தத்துவத்துறை இல்லை. 1916ல் அவர் ஆந்திரா அனந்தப்பூர் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் மூன்றே மாதத்தில் அவர் சென்னை பிரசிடென்சி வந்தார். பிறகு பேராசிரியராக அவர் ராஜமுந்திரி செல்கிறார். அங்கு ஆனந்த குமாரசாமியின் நண்பரும் எடின்பர்க் மாணவருமான கோபாலகிருஷ்ணய்யா நண்பராகிறார். அவருக்கு வந்த மைசூர் வாய்ப்பை மைசூர் அரசாங்கம் ஏற்காத சூழல் இருந்தது. வங்கத்திலிருந்து வரவேண்டியவர்கள் வராதால் ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி கொடுத்தனர். ஆனால் அப்போது மைசூரில் பிராம்மண எதிர்ப்பு இயக்கம் வலுப்பட்டு நிலவியது. விஸ்வேஸ்வரய்யா கூட சாதி இயக்கங்களில் உடன் நின்றார். ஜூலை 1918 முதல் 5 ஆண்டுகளுக்கு நிலையான மாத ஊதியம் ரூ 500 என்பது ஒப்பந்தம். அங்கு தனது நேரத்தில் பெரும்பான்மையை சமஸ்கிருத இலக்கிய ஆய்வுகளில் செலவிட்டார் ராதாகிருஷ்ணன். 1920ல் Reign of religion in Contemporary philosophy என்கிற ஆய்வு புத்தகம் எழுதினார். கிறிஸ்துவ மத தாக்கத்தை அவர் அதில் விமர்சித்தார். வேதாந்தா உயர்த்திப் பிடிக்கப்பட்டிருந்தது. மேற்கு சிந்தனைகளைவிட உபநிடத சிந்தனைகள் மேலானவை என ராதாகிருஷ்ணன் பேசத்துவங்கினார். தான் கண்டடைந்த ஆதாரங்களை அவர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஜேம்ஸ்வார்ட், எஃப் சி எஸ் ஸ்கில்லர், வில்டன் கார் போன்றவர்களுக்கு அனுப்பினார். வெளித்தெரியாத மைசூர் பேராசியருடன் தாங்கள் வேறுபட்டாலும் அவருக்கு தன் கருத்துக்களை நிலைநாட்டும் முழு உரிமையை ஏற்பதாக அவர்கள் பதில் எழுதினார். ராதாகிருஷ்ணனுக்கு நீட்சே, ரேனன், ஹார்டி, பிரெளனிங், இப்சென், பெர்னார்ட் ஷா, காளிதாசர், தாகூர் என பலதரப்பட்ட எழுத்துக்களில் ஆழம் இருந்தது. ராதாகிருஷ்ணனுக்கு உண்மையான தத்துவம் எனில் அது உண்மையான மத விளைவுகளை தரும். அப்படி ஒன்று இருக்கிறது எனில் வேதாந்தா என அவர் கருத துவங்கினார். அவரின் ஆங்கில புலமை அமெரிக்க அய்ரோப்பிய சிந்தனையாளர்களால் வியந்து பாராட்டைப்பெற்றது. மேற்கு நாடுகளுக்கு வராமலேயே ஹெகலிய சிந்தனை உள்ளிட்ட பலவற்றை அவர் உள்வாங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. ராதாகிருஷ்ணனுக்கு உண்மையான மதம் என்பது துறவை பேசுவதல்ல. அன்பையும், சேவையும் நடைமுறையில் கொண்டது. கடவுளை அடைய ஒரே வழிதான் உள்ளது என்பதில் உண்மையில்லை என்ற கருத்தும் அவரிடம் இருந்தது. 3 இராதாகிருஷ்ணனுக்கு பெண்கள் என்றால் மணவாழ்க்கை, தாய்மை, குடும்பம் என்ற கருத்துதான் இருந்தது . தன் பெண்களை அவர் 11வயது முதல் 16 வயதிற்குள் திருமணம் செய்து கொடுத்தார். அவர்கள் ஒப்புதல் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தந்தை என்கிற வகையில் மணமகனை முன்கூட்டியே பார்க்காமல் கூட திருமணம் செய்து வைத்தார். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிற கருத்து அவரிடத்தில் இருந்தது. ஆண்களுக்காவே பெண்கள் என்கிற பேச்சு தோரணை அவரிடம் வெளிப்பட்டது . மைசூரில் கிடைத்த நல்வாழ்க்கை அவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பை உருவாக்கியது என அவரது மகன் கோபால் பதிவு சொல்கிறது. இவ்வகை செய்திகள் தவறானவை- சரியானவை என இரு தரப்பு வாதங்கள் உள்ளன. மைசூரில் சமஸ்கிருத பண்டிதர் ஹிரியன்னா, தத்துவத்துறை வாடியா, வணிகத்துறை கே டி ஷா போன்றவர்களுடன் நடைப்பயிற்சி விவாதம் என்கிற நட்பை ராதாகிருஷ்ணன் வைத்திருந்தார். கல்லூரியில் அவர் புகழ் உயர்ந்தது. அவரது வீடு எப்போதும் உபசரிப்புகளுக்காக திறந்தே இருந்தது. ஏப்ரல் 1919 ஜாலியன்வாலாபாக் நிகழ்வைத்தொடர்ந்து அவரின் அரசியல் தாகம் அதிகரித்தது. ஆனால் சம்பாத்தியம், குடும்பம் போன்றவற்றையும் அவர் யோசிப்பவராக இருந்தார். அவரால் கெளரவமான முறையில் தொழிலில் ஈடுபடமுடிந்தது என்கிற பெருமிதம் இருந்தது. 1920ல் அசுடோஷ் முகர்ஜி கல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சென்னையில் சர் பி எஸ் சிவசாமி அய்யர் வீட்டில் தங்கவைக்கப்பட்டு உபசரிக்கப்பட்டார். சிவசாமி ராதாகிருஷ்ணனின் நண்பர். மைசூரிலிருந்து ராதாகிருஷ்ணனை வெளியே கொணர விரும்பியவர். அசுடோஷ் 32 வயதே நிரம்பிய ராதாகிருஷ்ணனிடம் நான் நேரிடையாக அப்பாயிண்ட் செய்ய முடியாது, வயதில் மூத்த பலர் இருக்கின்றனர். எனவே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினார். மைசூர் நிர்வாகம் செய்தி அறிந்து அவர் சம்பளத்தை உயர்த்தி 5 ஆண்டு ஒப்பந்தம் என்பதை மாற்றி நிரந்தரம் என்றது. ஆனால் அதற்கு முன்பாகவே கலகத்தாவிலிருந்து உலகத்தரம் வாய்ந்த ஜார்ஜ்5 இருக்கை பேராசிரியராவதற்கான உத்தரவு ரூ 1000 சம்பளத்தில் வெளியானது. இராதாகிருஷ்ணனும் கல்கத்தா சூழல் மீன் உணவு குறித்தெல்லாம் கவலை கொண்டாலும் துணிந்து 1921 பிப்ரவரியில் போய் சேர்ந்தார். 1924ல் அசுடோஷ் மறைந்தார். அங்கும் ராதாகிருஷ்ணனுக்கு நண்பர்கள் குறைவாகவே இருந்தனர். கிரன் முகர்ஜி, பசந்தகுமார் மல்லிக் போன்ற தத்துவ ஆசிரியர்களுடன், சர் சி வி ராமனும் நன்கு பழக்கமானார். கல்கத்தா வீட்டிலும் தனது சகோதரர்கள் வந்துபோனாலும் அதிக மனிதர்கள் இருந்தனர் என்றபோதிலும் அவரது வேலைமுறைகளை பாதிக்காமல் நடந்தன. புத்த வாக்கியமான கவன செறிவு மனதின் கொண்டாட்டம்(Concentration is the joy of mind) என்பதை அவர் அடிக்கடி சொல்வார். இந்திய தத்துவம் என்கிற இரண்டு வால்யூம் புத்தகத்தை 1923 மற்றும் 1927ல் அவர் கொணர்கிறார். ஏறத்தாழ 1500 பக்கங்கள் கொண்ட பெரும்படைப்பாக வெளிவந்தது. பழமைவாய்ந்த பிரதிகளின் முன்வைப்புகளை அவர் மறுகட்டுமானம் செய்தார். நவீன கால விவாதங்களுக்கும் முரண்களுக்கும் ஏற்ப செப்பனிட்டார் என கோபால் குறிப்பிடுகிறார். தத்துவ வரலாற்றாசிரியன் என்போன் வெறும் குப்பைகளை பொறுக்கி சாக்கில் கிடத்துபவன் அல்ல. விமர்சனபூர்வ பார்வையில் அது குறித்த விரிவுரையாளன். அவர் புத்தர் சிந்தனைகளை பெர்க்சன்னுடன் ஒப்பிட்டும், ஹீனயானத்தை இப்சன் மேற்கோள்களிலிருந்தும் விளக்கினார். இந்திய தத்துவமுறைகளை மேற்குலகிற்கு காட்டுவதற்கான் பெருமுயற்சி அதில் தெரிந்தது. மேற்குடன் ஒப்பிட்டு பேசுதல் என்பதில் அவர் அதிகம் கவனம் செலுத்தியதால் இந்திய தத்துவத்தின் ஒரிஜினல் டெக்ஸ்ட் அர்த்தத்திலிருந்து விலகி சென்றுவிட்டார் என்கிற விமர்சனமும் வந்தது. அவர் இந்து தத்துவம் என சொல்லாமல் இந்திய தத்துவம் எனப்பேசினார். அதே நேரத்தில் சங்கரரின் அத்வைதத்திற்கு இணையான மேற்கு தத்துவம் ஏதுமில்லை என்பதில் உறுதியாக நின்றார். ராதாகிருஷ்ணனைப் படித்த டி எஸ் எலியட் அவர்களின் நுட்பத்திறணைக் காணும்போது பல அய்ரோப்பிய தத்துவவாதிகள் பள்ளி சிறார்களாக தெரிகின்றனர் என கேலி செய்தார். நமது பண்டைய அடிப்படைகளை மறுகட்டுமானம் செய்வதும் புதியனவற்றின் செல்வாக்கிற்கு உட்படுவதும் தேவைப்படுகின்றன. நமது மரபில் ஏதுமில்லை என்பது அறியாமை, அதில் மட்டுமே அனைத்தும் உள்ளன என்பது மற்றவை பற்றிய அறியாமை.. தனது சிறந்தவற்றுடன் பிற சிறந்தவைகளை இணைத்துக்கொள்வதுதான் மேம்பட உதவும் வழியாகும். இந்திய அறிவார்ந்த மரபை மேற்கின் அரைகுறைவாதிகளிடமிருந்தும் இந்தியாவின் அறியாமையில் உழன்று தற்பெருமை கொண்ட மேதாவிகளிடமிருந்தும் இராதாகிருஷ்ணன் மீட்டெடுத்தார் என மதிப்பிடுகிறார் கோபால். அவருக்கு வெளிஉலக சிந்தனைகள் தெரிந்ததால் அதன் வெளிச்சத்தில் இந்திய தத்துவமரபை பார்க்க முடிந்தது. மனித இயல்பு எனும் விரிவில் இந்திய மனதை அதன் சிந்தனை ஆதாரங்களை அடுக்குவது மட்டுமல்ல- விளக்குவது, வெளிப்படுத்துவது எனது குறிக்கோளாக இருந்தது என்றார். உலக ஆன்ம விழிப்புணர்விற்கு இந்திய சிந்தனை உதவாது என்பதை மாற்றவேண்டியிருந்தது என எழுதினார் ராதாகிருஷ்ணன். வாழ்க்கை எனும் விளையாட்டில் உங்களால் தேர்ந்தெடுக்கமுடியாத சீட்டுகள் வருகின்றன. அவை கர்ம பலன்கள். தோல்வியும் வெற்றியும் அவ்வாட்டத்தில் வருகின்றன. விளையாட்டில் சுதந்திரம் இருக்கிறது என ராதாகிருஷ்ணன் சொல்வார். சீட்டுக்கட்டுகள் கலைக்கப்பட்டவிதம் குறித்து வருத்தம் இருந்தாலும் ஆட்டம் ரசிப்புக்குரியதே என்பார். அமெரிக்க உரை ஒன்றில் அவர் இந்தியாவின் சாதிமுறையை அங்கு நிலவிய வேலை அதற்கான மனிதர்களை ஒப்பிட்டு பேசினார். நியுயார்க்கில் பெரும்பாலான போலீஸ்காரர்கள் அய்ரிஷ், தெருக்கூட்டிகள் இத்தாலியர், துரித உணவு கடைகள் கிரேக்கர், குறு மற்றும் ஏவல் வேலைகளில் கறுப்பரென்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அவருடைய உரைகள் பின்னர் The Hindu View of Life என வெளியானது. வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் அப்புத்தகம் புகழ்பெறத்துவங்கியது. சிறையில் ஜவஹர் இருமுறை அதைப்படித்துவிட்டு நண்பர்களுக்கு பரிந்துரைத்தார். பிரதமர் ஆன பின்னர் கூட சிலநேரங்களில் மேற்கோள் காட்டினார்.. சாதி குறித்த அவரது கருத்துக்களை சமுகவியலாளர்கள் மறுக்கக்கூடும் என்கிறார் கோபால். 1940களில் அவர் சாதிவேறுபாடுகளை விமர்சன பார்வையுடன் பேசினார். விடுதலைக்கு பின்னர் அவர் நான்கு வர்ணம் பிறப்பினால் அல்ல செய்யும் தொழில்களால் எனப் பேசத்துவங்கினார். அவர் லண்டனில் இந்துமத தத்துவ அம்சங்கள் குறித்து உரைகள் தந்தார். சி இ எம் ஜோட் உட்பட பலர் பங்கேற்றனர். லண்டனில் சியாமா பிரசாத் முகர்ஜி சட்டம் படித்துக்கொண்டிருந்தார். அவர் ராதாகிருஷ்ணனிடம் பழகினார். தொடர்ந்த நண்பர்களாக அவர்கள் இருந்தனர். ஹால்டேன், ரஸ்ஸல் , பால்போர், மோர்ர், கீன்ஸ், டிக்கின்சன் ஆகியோருடன் விருந்து உரையாடல்கள் நடந்தன. உலக தத்துவ மாநாடு ஹார்வார்டில் உரையாற்ற ராதாகிருஷ்ணன் அழைக்கப்பட்டார். அங்கு அவர் கில்சன் டுயி க்ரோஸ் (Gilson, Dewey, Groce) ஆகியவர்களுடன் நாகரீகத்தின் வரலாற்றில் தத்துவங்களின் பங்களிப்பு குறித்து உரைநிகழ்த்தினார். ஒவ்வொரு நாகரீகத்திற்குமான மனோதத்துவம், எதார்த்தம் குறித்த பார்வை தேவைப்படுகிறது. நாகரீகம் என்பதும் வரையறுக்கப்பட்ட தத்துவமே. அன்றாட பிரச்ச்னைகளுக்கு முகம் கொடுக்காமல் எந்த தத்துவமும் நின்று நிலைக்காது என பேசினார். அவர் கையில் குறிப்புகளை வைத்துக்கொண்டு பேசுவதில்லை. அவர் பேசத்துவங்கிவிட்டால் தத்துவ வளமும் மொழிவளமும் கேட்பவர்களை மெய்மறக்க செய்துவிடும் என்கிறார் கோபால். பண்டைய சிந்தனைகளுடனும் புதிய சிந்தனையாளர்களுடனும் இந்தியா பயணிக்க துவங்கியது. வழக்கொழிந்த வறட்டுத்தனங்களால் புதிய சமுகத்தை கட்டி எழுப்பிட முடியாது. தேசப்பெருமிதமும் பக்தியும் உருவாக்கும் கல்விமுறை குறித்து தலைவர்கள் பேசினர். பல்கலைக் கழகங்கள் இந்திய கலாச்சாரம் பற்றி ஏதும் அறியாதவைகளாக இருந்தன. கல்வியை அரசிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் விடுவிக்கவேண்டும் என்கிற சிந்தனையும் எழுந்தது. சுயமரியாதையை உருவாக்காத சுதந்திர மனிதர்களாக வேண்டிய தவிப்பை உருவாக்காமல் அந்நிய நாட்டுக்கு பணி செய்திடும் கருவிகளாக இந்தியர்களை உருவாக்கும் கல்விமுறையை ராதாகிருஷ்ணன் சாடத்துவங்கினார். இந்திய வரலாறை வெறும் தோல்விகளின் வரலாறாக சித்தரிப்பதை அவர் கண்டித்தார். இந்திய சிந்தனை முறைப்பற்றி விமர்சனபூர்வ ஆய்வற்று எழுச்சிபுரிதல்கள் கொள்வது மட்டும் போதாது என்றார். செத்தழிந்தவைகள் தொடர்பான வாழும் நம்பிக்கை என்பது வாழ்வதின் இறந்த நம்பிக்கையானது (The living faith of the dead has become the dead faith of living) என அவருக்கே உரிய மொழிப்புலமையில் தெரிவித்தார். 4 1926ல் வரலாற்று அறிஞர் ஜாதுநாத் சர்க்கார் கல்கத்தா பல்கலை துணைவேந்தரானார். அங்கிருந்த பல பேராசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பல்கலையில் மாணவர், ஆசிரியர் துணைவேந்தர் வேறுபாடு அதிகமானது. அமிர்தபசார் பத்திரிகை சற்று நடுநிலையில் நின்றது. வட்டார வங்கப் பத்ரிக்கைகள் சர்க்காருக்கு ஆதரவாக நின்றன. ராதாகிருஷ்ணன் செனட் விவாதங்களில் ஆசிரியர் மாணவர் நலனுக்காக நின்றார். சரோஜினி நாயுடு உரை ஆற்ற வந்த நேரத்தில் ஜாதுநாத் சர்க்கார் தலைமை தாங்க முடியாமல் ராதாகிருஷ்ணன் தலைமை ஏற்கும் நிலை ஏற்பட்டது. சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை சர்க்கார் போலிசார்கொண்டு தடியடி நடத்தி அப்புறப்படுத்திய நிகழ்வு பிரச்சனையானது. ராதாகிருஷ்ணன் தலைமையில் விசாரனை நடந்தது. தடியடி அவசியமற்றது என தன் முடிவை அவர் அறிவித்தார் 1920களின் துவக்கத்தில் காந்தியைவிட தாகூர் தனது மனதிற்கு நெருக்கமானவராக இருப்பதை உணர்ந்தார் ராதாகிருஷ்ணன். ஆனால் செளரி செளராவிற்கு பின்னர் அவரிடம் காந்தி பற்றிய மதிப்பீடுகள் உயர்ந்தன.. கல்கத்தா காங்கிரஸ் அமர்விற்கு வந்த நேரு ராதாகிருஷ்ணனை சென்று சந்தித்தார். நட்பு தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிட உதவியது. உள்ளுணர் அனுபவம்(Intuitive experience) என்பதில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. அதேநேரத்தில் வெற்று உள் உணர்வுகள் குருட்டுத்தனமானது. அறிவார்ந்த படைப்புகள் தன் அளவில் வெற்றானவை (Mere intuitions are blind while intellectual work by itself is empty) என்கிறார் கோபால். பெர்னார்ட் ஷா, எச் ஜி வெல்ஸ் போன்றவர் எழுத்துக்களில் அறிவுபூர்வ வாதங்கள் இருந்தாலும் அவை ஆன்மாவின் ஆழத்தை தொட்டு வசீகரிக்கவில்லை என்கிற கருத்து ராதாகிருஷ்ணனிடம் இருந்தது. அவருக்கு உள்ளுணர்வின் தரிசனம் முக்கியமாக பட்டது. கவிஞர்களும் தீர்க்கதரிசிகளும் தேடல்களுக்காக கமிட்டிகளுக்கு செல்வதில்லை (Poets and prophets do not go into committee’s ) என்கிற ஆழப்புரிதலை அவர் தந்தார். 1926ல் அவரிடம் அறியவொணாவாத தாக்கம் அதிகம் தெரிந்தது என்கிறார் கோபால். 1929ல் அவர் கடவுள் உலகத்துடன் உயிர்ப்புடையவர்என்கிற பதிலை அடைந்தார். முற்று முழுமையான சிஸ்டம் என்பது விரும்பத்தக்கதல்ல என்றார். முற்றிலுமாக தீர்ந்த பிரச்சனை என்பது பிரச்சனையாக இருக்காது என்றார். முழுமையாக புரியப்பட்டது கடவுளும் ஆகாது என்றார். அவரது An idealist view of Life 1932ல் வெளியானது. அவர் Bergson உடன் ஒப்பிடப்பட்டார் சாமுவேல் அலெக்ஸ், ரஸ்ஸல் ஆகியோரும் தங்கள் கமெண்ட்டுகளை தந்தனர். ஜோட் அதை மேற்குலகிற்கு ராதாகிருஷ்ணன் தந்த பதிலடியாக பார்த்தார். இந்திய தனது சொந்த வீட்டை ஒழுங்குபடுத்தவும் இப்புத்தகம் துணைநிற்கும் எனப் பேசப்பட்டது. 1930களில் அய்ரோப்பிய அமெரிக்க அறிவு வட்டாரங்களில் கொண்டாடப்படும் மனிதராக அளவிற்கு ராதாகிருஷ்ணன் உயர்ந்தார். பண்டைய வளமான இந்திய சிந்தனைக்கும் மேற்கிற்குமான வானவில் பாலம் அமைத்தவர் அவர் எனப் புகழப்பட்டார். 1930ல் அவர் லண்டனில் இந்திய மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்திய விடுதலை உலக அமைதி நல்லிணக்கத்திற்கே கூட அவசியமானது என பேசினார். தெளிவுள்ள பிரிட்டிஷ்காரர்கள் இதற்காக முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 1929-33 ஆண்டுகள் கடும் செலவும் மனவேதனையும் அவருக்கு உருவானது. மாடர்ன் ரிவ்யூ அவரது இந்திய தத்துவம் ஒரிஜினல் அல்லாமல் காப்பியடிக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தை வைத்தது. ராதாகிருஷ்ணன் அவதூறு வழக்கு ஒன்றை அவர்கள் மீது தொடர்ந்தார். சுபாஷ் போஸ் சகோதரர் சரத் போஸ், சியாமா பிரசாத் போன்றவர்கள் அவருக்கு வாதாடினர். சில சமஸ்கிருத பண்டிதர்கள் ராதாகிருஷ்ணனுக்கு சாட்சியாக வந்தனர். எதிர் தரப்பினர் கோர்ட்டிற்கு வெளியே தீர்த்துக் கொள்ளும் வேண்டுகோளை ராதாகிருஷ்ணன் ஏற்றார். அவர் ஆந்திரா மாணவர்கள் மாநாடு, ஆந்திரா மகாசபை கூட்டங்களில் பங்கேற்றார். ஆந்திரா பல்கலைக்கழக துணைவேந்தராக செனட்டில் வெற்றிப்பெற்று தேர்வானார். 1931 மே மாதம் அவர் துணைவேந்தர் பொறுப்பை ஏற்றார். மிக ஆரம்பநிலையில் இருந்த இளம் பல்கலைக்கழகமது. பின் நாட்களில் புகழ் பெற்ற ஹுமாயுன் கபிர், ஹிரன் முகர்ஜி, வி கே ஆர் வி ராவ் ஆகியோர் ராதாகிருஷ்ணனால் எடுக்கப்பட்ட இளம் ஆசிரியர்கள். சர் சி வி ராமன், விஸ்வேஸ்வரய்யா ஆகியோரையும் ராதாகிருஷ்ணன் பயன்படுத்தினார். ஹிட்லரால் விரட்டப்பட்ட பெர்லின் சார்ந்த லுத்விக் உல்ப், லாகூரிலிருந்து கணித மேதைசாவ்லா, ராயல் சொசைட்டி பெலோ சேசாத்ரி போன்றவர்களை ராதாகிருஷ்ணன் அழைத்துவந்தார். இரண்டே ஆண்டுகளில் வால்டேர் பல்கலை பெரும் பெயர் பெறத்துவங்கியது. ராதாகிருஷ்ணன் மந்திரக்கோலால் கட்டிடங்கள் எழுந்துவிட்டன என்றார் ராமன். ஆக்ஸ்போர்டில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற தவிப்பில் அவர் செயல்பட்டார். மிக அற்புதமான நூல்நிலையம் உருவாக்கினார். அனைத்து மார்க்சிய புத்தகங்களையும் தயங்காமல் தருவித்தார். இதை ஹிரன் பதிவிட்டுள்ளார். ஆனால் ராதாகிருஷ்ணன் சென்ற பிறகு வந்த புதிய நிர்வாகம் அரசாங்கத்திடம் அனைத்துவகை புரட்சிகர புத்தகங்களையும் ஒப்படைத்துவிட்டது. காந்தியை அவர் உரையாற்ற அழைத்தார் அவரால் வரமுடியவில்லை. தாகூர் வந்து உரையாற்றினார். சாப்ரு, ஸ்ரீனிவாச சாஸ்த்ரி, அல்லாடி கிருஷ்ணசாமி அழைக்கப்பட்டனர். 1934ல் தனது சேமிப்பிலிருந்து மைலாப்பூரில் அவர் பங்களா ஒன்றை வாங்கினார். கிரிஜா இல்லம் என பெயரிடப்பட்டது ஆக்ஸ்போர்ட் அவரை அழைத்தது. ஆனாலும் சென்னையில் இருந்து பணியாற்ற விழைந்தார். சென்னையில் பணியாற்ற வாய்ப்பில்லை என்கிற நிலையில் ஆக்ஸ்போர்ட் பணியை ஏற்பது என்ற இரட்டை மனநிலை அவரிடம் தொழிற்பட்டது.. லண்டனில் செயல்பட்ட ஐநா ஒத்துழைப்பு சர்வதேச லீகில் ஜகதீஷ் போஸ் காலம் முடிவடையும் நிலையில், அதன் உறுப்பினராகிட ராதாகிருஷ்ணன் தகுதியானவர் என்பதை ஸ்ரீனிவாச சாஸ்திரி பரிந்துரைத்தார். இர்வின் பிரபு சட்ட ஆலோசனைப்பெற்று அவரின் பெயரை பரிந்துரைக்க லண்டன் அவை ஏற்றுக்கொண்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பில் இருந்துகொண்டு ஆங்காங்கே காணப்படும் இளைஞர்களின் எழுச்சிக்கு ஆதரவு தந்தும் அவை பரவலாக எழவில்லையே என்ற குறையுடனும் அவர் உரைகள் அமைந்தன. சட்டரீதியான சமுகத்தில் உரிய வகைப்பட்ட போராட்டங்களும் அதற்காக செய்யப்படும் தியாகங்களும்தான் விருப்பங்களை நிறைவேற்றும் என விடுதலை குறித்து உரையாற்றியும் வந்தார். வன்முறை மூலம் அமையும் சுய ஆட்சியை தான் ஏற்கப்போவதில்லை என காந்தி பேசியது உலகிற்கான உண்மை- நெறி என்ற ராதாகிருஷ்ணன், பிரிட்டிஷார் வெளியேறி இந்தியர்களின் சுய ஆட்சி உரிமையில் இணக்கத்துடன் நட்புடன் இருக்கலாம் என்றார். தீண்டாமையை அனுசரிக்கும் பொறுத்துக்கொள்ளும் சமுதாயம் நாகரீகமானது என அழைத்துக்கொள்ளமுடியாது. எந்த கல்விமுறை வகுப்புவாத எண்ணங்களை, சாதியபெருமிதத்தை போதிக்கிறதோ அதனால் வெற்றிபெற இயலாது . சமுகநீதி இல்லாமல் சமுகம் ஸ்திரத்தன்மையுடன் இருக்காது என்றார். காங்கிரசின் தலைவர்கள் குறிப்பாக நேரு சிறையில் இச்செய்திகளை பத்ரிக்கை வாயிலாக பார்த்து அவற்றை சேகரித்து வைத்தார். ராஜாஜி நெகிழ்வுடன் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினார். அறிவுசார் ஒத்துழைப்பு சர்வதேச கமிட்டியில் (The International Committee for Intellectual Cooperation) 1931 முதல் தொடர்ந்து 8 ஆண்டுகள் அவர் பங்களிப்பு பாராட்டிற்குரியதாக போற்றப்பட்டது. அய்ன்ஸ்டின், மேடம் க்யூரி, வாலேரி, ஹுயுசிங்கா, முர்ரே போன்றவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். மாக்சிம் கார்க்கி கூட்டங்களுக்கு அழைக்கப்படுவது அவசியம் என அவர் வற்புறுத்தினார். க்யூரிவின் கேள்வியான கீழ்த்தேச மக்கள் உண்மையில் மேற்குலக மக்களைவிட மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதற்கு ஆழமான விடையை காணவேண்டும் என்றார். 1936க்குப் பின்னர் அவர் ஆக்ஸ்போர்ட் பணியை ஏற்று லண்டனில் குடும்பத்துடன் குடியேறினார். எட்வர்ட் தாம்சன் அவரின் ஆக்ஸ்போர்ட் உரைகள் உலக ஏற்பிற்குரியன என்று மதிப்பிட்டார். ஆகஸ்ட் 1937ல் அவர் புத்தர் குறித்த உரை ஒன்றிற்கு பிரிட்டிஷ் அகதமியால் அழைக்கப்பட்டார். டேவிட் ராஸ் தலைமையில் டி எஸ் எலியட் உட்பட பலர் வந்த அமர்வாக இருந்தது. காந்தியின் 70வது வயதினை ஒட்டி மிகச்சிறந்த உலக சிந்தனையாளர்களிடமிருந்து கட்டுரைகளை பெற்று வெளியிட ராதாகிருஷ்ணன் விழைந்தார். உரிய நடவடிகைக்களில் ஈடுபட்டார். பெர்னாட் ஷா, ரஸ்ஸல், ஆந்த்ரே ஜீட் தயங்கினர். கீன்ஸ் கூட கமெண்ட் கொடுத்துவிட்டு எழுதவில்லை. ஏறத்தாழ 60 கட்டுரைகளை பலரிடமிருந்து ராதாகிருஷ்ணன் பெற்றதாக கோபால் சொல்கிறார். அக்கட்டுரை தொகுப்பின் அரசியல் முக்கியத்துவம் பெரிய அளவில் உணரப்பட்டது. பொதுமேடை ஒன்றில் காந்தி பங்கேற்புடன் அப்புத்தகம் வெளியிடப்படலாம் என்பதை காந்தி விரும்பவில்லை. என்னை புகழ்ந்த இசைகளை நான் கேட்க முடியாது என்றார் அவர். புத்தகம் வெளியிடப்பட்டு அவருக்கு பின்னர் தனியாக அனுப்பி வைக்கப்பட்டது. 1939 ல் இரண்டாம் உலக யுத்தம் துவங்கியவுடனேயே, யுத்தம் என்பதால் அல்ல ‘சரியானது என்பதால்’ இந்தியாவிற்கு சுயாட்சி அறிவிப்பை பிரிட்டன் செய்திடவேண்டும் என ராதாகிருஷ்ணன் பேசினார். அறிக்கையும் கொடுத்தார். ஆட்சியாளர் லின்லித் இரட்டை ஆட்சி முறைதனை காந்தி ஏற்க வேண்டும் என கருதினார். ராதாகிருஷ்ணனும் வெளிநாட்டு உறவுகள்,பாதுகாப்பு தவிர மற்றவை இந்தியர் அதிகார வசம் - அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையான விடுதலை என்ற கருத்திற்கு வந்தார். காந்தியை வலியுறுத்தவும் செய்தார். லின்லித்தை அதிகம் நம்பிய ராதாகிருஷ்ணன் பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாத குறிப்பில் சுய ஆட்சி அறிகுறி ஏதும் இல்லாமை கண்டு ஏமாந்தார். நேரு கைது செய்யப்பட்டார். பிரிட்டனின் பிடிவாதத்தை ஏற்பதற்கில்லை என்றார் காந்தி. ராதாகிருஷ்ணன் கடிதம் கேலிக்குரியதாக லின்லித்தால் பார்க்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் அரசியல் உரையை தவிர்த்தால் மட்டுமே அவரது லாகூர் கூட்டத்திற்கு அனுமதி என அரசாங்கம் கடுமையான நிலை எடுத்தது. அவர் ஏற்க மறுத்தார். கூட்டம் வேறு பகுதிக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டது. 1941ல் அவர் உலக நாகரீகத்தின் போதாமைகளால் ஏற்பட்ட யுத்தங்களை சாடி உரைநிகழ்த்தினார். மதன்மாளவியா பனாரஸ் பல்கலைக்கு ராதாகிருஷ்ணன் வந்து பணியாற்ற வேண்டினார். கலிபோர்னியாவில் பணியாற்றலாம் என்கிற விழைவு 1939ல் ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்டது. காந்திக்கும் அவர் இந்தியாவில் பணியாற்றவேண்டும் என்கிற கருத்து இருந்தது. கல்கத்தா மற்றும் பனாரஸ் இரு இடங்களில் பணியாற்றும் சூழலை அவர் ஏற்றார். இறுதியாக 1941ல் கல்கத்தாவை முழுமையாக விடுத்து பனாரஸ் துணைவேந்தர் ஆனார். அங்கு இஸ்லாம் இருக்கை ஒன்றை நிசாம் அவர்களிடம் நன்கொடை பெற்று அமைத்தார். மாணவியர் வேதம் கற்க அனுமதி தந்தார். ஞாயிறுதோறும் கீதை, வேத உரைகள் நிகழ்த்தப்பட்டன. குறுகிய பார்வையிலிருந்து மாறுபட்டு தத்துவ நோக்கில் அவை செய்யப்பட்டதாக கோபால் குறிப்பிடுகிறார். அப்பல்கலைகழகத்தின் வெள்ளிவிழாவிற்கு வைஸ்ராய், கவர்னரை அழைக்காமல் காந்தியை 1942 ஜனவரியில் அழைத்தார். 1942 ஆகஸ்டில் வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள் வெடித்தன. நேரு, காந்தி கைது செய்யப்பட்டனர். காந்தியை விடுவிப்பது அமைதிக்குரிய வழி என ராதாகிருஷ்ணன் கூறியதை வைஸ்ராய் ஏற்கவில்லை. அவர் பனாரஸ் பல்கலைக்கு வன்முறை பரவாமல் இருந்திட ஒருமாதம் விடுமுறையை அறிவித்தார்.. வாயிலுக்கு வந்த போலிசார் உள்நுழையாமல் பேசி அனுப்பினார். அரசாங்கம் ராணுவத்தை அனுப்பியது. அங்கு பசு மாமிசம் உண்ணப்படுகிறது என்ற செய்தி பரவியதால் பல்கலைகழகத்தை கசாப்புகடையாக்காதே என மாளவியா உண்ணாநோன்பு துவங்கினார். நிலைமைகளை கட்டுக்குள் வைக்க காந்தியால்தான் முடியும் என வைஸ்ராய்க்கு ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதினார். நிலைமைகள் மோசமாவதால் தான் ராஜினாமா செய்துவிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார். கல்லூரியில் அரசியல் நிகழ்வுகளுக்கு இடம் இருக்காது என உறுதிமொழியை கட்டாயப்படுத்தியது அரசாங்கம். ராதாகிருஷ்ணன் தொடர் முயற்சியால் அக்டோபர் இறுதியில் பனாரஸ் மீண்டும் திறக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் இந்தியாவில் காணப்படும் மோசமான சூழலுக்காக வின்ஸ்டன் சர்ச்சிலை விமர்சித்தார். 5 அவர் 1943ல் கல்கத்தாவில் மதம் சமுக மறுகட்டுமானம் குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். பகவத்கீதை விளக்கம் என நீண்ட புத்தகம் ஒன்றை எழுதினார். 1944 மே மாதம் அவர் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். சீனா ஜப்பான் உறவுகள் மோசமாகி வான்வழி தாக்குதலை ஜப்பான் எந்நேரம் வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற சூழலில் அந்த அபாயகர பயணம் மேற்கொண்டார். அங்கு பல்கலைகழகங்களில் அவர் புத்த மதம் குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். ஆகஸ்ட் 1942க்குப் பின்னர் இந்தியாவில் நடந்து வருபவை குறித்து அவர் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார். காந்தி பிப்ரவரி 1943ல் மேற்கொண்ட உண்ணாநோன்பில் இறந்து போனால் என்ன செய்வது குறித்து சர்ச்சில், ரூஸ்வெல்ட் சியாங்காய்ஷேக் கடித போக்குவரத்து நடத்தியுள்ளனர் என்பதை அங்கு அறிந்ததாக அவர் இந்தியா வந்து காந்தியை சந்தித்தபோது தெரிவித்தார். காந்தி ஜின்னா பேச்சுவார்த்தை தோல்வி, இரு நாடு கொள்கை வலுப்பெற்றுள்ளது என்பதற்காக காந்தி மீண்டும் பட்டினி கிடந்து தன்னை வருத்திக்கொள்ளக்கூடாது என ராதாகிருஷ்ணன் கருதினார். சேவைக்கு தன்னை வருத்திகொள்வது அவசியம்தான். ஆனால் சேவையே இனி செய்யமுடியாது என்கிற அளவிற்கு உடலை வருத்திக்கொள்ளக்கூடாது (Suffering was the essence of service but not suffering which might incapcitate us from offering any service) என்றார். இந்தியாவிற்கான கான்ஸ்டிட்யூஷன் அரசியல் அமைப்பு சட்ட கமிட்டிக்கு நேரடியாக கட்சிப்பணிகளில் இல்லாத ராதாகிருஷ்ணன் வரவேண்டும் என சாப்ரு கருதினார். ஆனால் வேவல் ‘அவர் திறமைசாலி ஆனால் அகடமிக் ஆக இருப்பார்’ என கருதினார். சாப்ரு சொன்ன கமிட்டி இந்தியா ஒரே நாடு என்கிற அரசியல்வடிவத்தை முன்மொழிந்தது. சில இடங்களில் ராதாகிருஷ்ணனுக்கு வேறுபாடு இருந்தது. இணைந்த வாக்காளர் தொகுதி என்பதை முஸ்லீம்கள் ஏற்கவேண்டும் என அவர் கருதினார். அவருக்கு முஸ்லீம் லீக் குறித்து விமர்சன பார்வை இருந்தது. இந்த இடைவெளி இளைஞர்கள் இந்துயிசம் பேச கற்கவேண்டும் என அவரை சொல்லவைத்தது. ஜின்னாவும் ராதாகிருஷ்ணனை சந்தித்தபோது நீர் எனது முக்கிய விரோதி என்றார். குழப்பம் அடைந்து ராதாகிருஷ்ணன் பார்த்தபோது இந்துயிசத்திற்கு மரியாதை உண்டாக்கிவிட்டீர் என்றார் ஜின்னா. வேவலுக்கு ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தை தொடர்ந்து ஜூன் 1945ல் சிம்லாவில் பிரதிநிதிகள் மாநாடு ஒன்றிற்கு அழைப்புவிடுவதாக வேவல் தெரிவித்தார். காந்தி, நேரு அதற்கு நேர்மறையான பதிலை நல்குவது நலம்பயக்கும் என்றார் ராதாகிருஷ்ணன். அதே நேரத்தில் சியாமாபிரசாத்முகர்ஜிக்கு அழைப்பு கொடுக்கப்படாமை குறித்து அவர் தனது வருத்தத்தை தெரிவித்தார். எப்போதும் எதிர்மறை நில எடுப்பதில் உடன்பாடில்லை அதே நேரத்தில் முட்டுக்கட்டைகளை அகற்றுவதில் கருத்தாக இருக்கவேண்டும் என காந்தி பதில் எழுதினார். ஜின்னாவிற்கு இடம் கொடுத்துவிடாமல் கூட்ட முடிவுகள் வரவேண்டும் என வேவலுக்கு ராதாகிருஷ்ணன் தெரிவித்த செய்தி பயனளிக்கவில்லை. சிம்லா கூடலும் தோல்வியில் முடிந்தது . நாம் விரைவில் ஆட்சியாளராக மாறப்போகிறோம். கட்டுப்படத்தெரியாதவர் நல்ல ஆட்சியாளராக முடியாது என்ற பதிவை செய்தார் ராதாகிருஷ்ணன். அரசியல் சட்ட அசெம்பிளியில் சகிப்புத்தன்மையில்லாதது வளர்ச்சிக்கு பெரும் தடையாகும். அடுத்தவர் முகத்தில் தெய்வீகத்தை பார்க்கமுடியும் போதுதான் சகிப்புத்தன்மையும் சுதந்திர உணர்வும் பெருகும் என்றார் ராதாகிருஷ்ணன். கிறிஸ்துவ மதமாற்றம் எனும் பிரச்சனையில் அவருக்கு விமர்சன பார்வை இருந்தது.இ பி தாம்சன் ராதாகிருஷ்ணனின் அதிரடியான எதிர்வினைகளை விமர்சித்தார். தன்னறிவு மற்றும் சேவையின் அடிப்படையில் புரிந்துகொள்ளப்படும் மதத்தால்தான் பாசிச மனப்பான்மையை வெல்லமுடியும் என்பார் ராதாகிருஷ்ணன். அவர் 1946ல் அமெரிக்காவில் சொற்பொழிவாற்றும்போது மனித இதயங்களுக்கு நேர்த்தியை தருதல் என்பதற்கான தேடல் இந்தியாவில் தொடர்ந்து இருக்கிறது என்றார். மனித உறவுகளில் மேம்பட்ட நடத்தைகளுக்கான தேடல் கொண்டவர் நாங்கள். தேசங்களின் துயர்களுக்கு எங்கள் தத்துவம் இதமான குணமளிக்கும் என்றார்.. மற்றவர்களின் வாழ்க்கையின் ஊடே மதம் என்பதை வறட்டுத்தனமாக எந்த நவீன மனமும் ஏற்காது என்பதை உணர்தலில் தான் ஒருவர் வாழ்வு பரிபூர்ணமாகிறது என்றார். UNESCO விற்காக 1945-52 ஆண்டுகளில் அவர் பெரும்பணி நல்கினார். அமர்வுகளில் அவர் இருப்பே தத்துவ சூழலை தருகிறது என பிரதிநிதிகள் சொல்வதுண்டு. அதன் பொதுமாநாட்டு தலைமை அவருக்கு 1952ல் தரப்பட்டது. விடுதலை அடைந்த நேரத்தில் அவருக்கும் மாளவியா மகன் கோவிந்திற்கும் ஏற்பட்ட கசப்புகள் ஆசாத், நேரு தலையிடாமை அவருக்கு சோர்வை ஏற்படுத்தியது. அரசியல் சட்ட அசெம்பிளியிலிருந்து அவர் விலகுவதாக தெரிவித்தார். ஆனால் அவரின் அற்புத திறமைகள் வீணாகிவிடக்கூடாது என நேரு கருதினார்.. சிலநேரங்களில் சியாமாபிராசாத் நெருக்கம், இந்து மத அமைப்புக்களை புகழ்ந்து பேசுதல் போன்றவை நேருவிற்கு சற்று பிரச்சனையாக இருந்தாலும் அவர் ராதாகிருஷ்ணன் பயன்படவேண்டும் என்றே கருதினார். இந்திய பல்கலைக்கழகங்கள் குறித்து அறிக்கை ஒன்றைத்தர நேரு கேட்டுக்கொண்டார். ஜாகீர் ஹுசைன், லட்சுமணசாமி முதலியார், மேகநாத்ஷா, ஆர்தர் மார்கன், ஜான் டைகரெட் போன்றவர்கள் அக்கமிஷன் உறுப்பினர்கள். ஜி டி எச் கோல் இருந்தால்கூட நல்லது என ராதாகிருஷ்ணன் விரும்பினார். ஆனால் கோல் அவர்களை டாக்டர் ஓய்வில் இருக்க வற்புறுத்தியதால் அவர் இடம்பெறவில்லை. அக்கமிஷன் பயிற்று மொழி இந்திய மொழிகளே என்றது. இந்திய மொழிகள் உயர்கல்விக்கேற்ப வளம்பெறும்வரை ஆங்கிலம் என்றனர். உயர்கல்வி சேர்க்கை மெரிட் அடிப்படையில் என்று சொன்னதை மெட்ராஸ் பல்கலை விமர்சித்தது . சோவியத்திற்கான (அம்பாசிடர்) தூதர் என்பதில் விஜயலஷ்மி பண்டிட் தன்னால் இந்திய சோவியத் நட்புறவை பலப்படுத்த முடியவில்லை என தெரிவித்தவுடன் ராஜாஜி தனது மருமகன் காந்தியின் புதல்வர் தேவதாஸ் காந்திக்கு தூதர் வாய்ப்பு கிடைத்தால் பரவாயில்லை எனக் கருதினார். பொருத்தமானவராக இருக்கமாட்டார் என விஜயலஷ்மி நேருவிடம் தெரிவித்ததால் ராதாகிருஷ்ணன் என நேருவிற்கு மனதில் பட்டது. உலகம் அறிந்த நேரடி அரசியலில் இல்லாத அதே நேரத்தில் தேசஉணர்வு நிறைந்த வெளிப்படையாக கருத்தை சொல்லி உணரவைக்கும் ஆற்றல் நிறைந்த ராதாகிருஷ்ணன் மாஸ்கோ செல்வது நல்லது என நேரு கருதினார். ராதாகிருஷ்ணன் முதலில் ஏற்க மறுத்தார். நேரு வற்புறுத்தலால் அனைத்து தத்துவவாதிகளும் ஏதாவொரு குகைக்கு போகவேண்டும்- நான் மாஸ்கோ குகை போகிறேன் என ஏற்றார். முதல்முறையாக கல்விச்சூழல் என்பதிலிருந்து பெரும் பொதுவெளிக்கு அவர் செல்கிறார். ஜூலை 1949ல் அவருக்கு நியமன உத்தரவு வெளியானது. சரத்போஸ், கோல்வால்கர், ஹிரன்முகர்ஜி என பல்வேறு தரப்பினரும் இதை பாராட்டினர். 1927ல் சோவியத் 10 ஆண்டுகள் கொண்டாட்டத்திற்கு ராதாகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார். மோதிலால், நேருதான் சென்றனர். சோவியத் பற்றி அறிந்துகொள்வதும் இந்திய கொள்கைகளை நயமாக உணர்த்துவதும் என்கிற கடமைகளை அவர் உணர்ந்தார். அவர் போகின்றபோதே முரண்பாட்டிற்குரிய புத்தகமான The God That Failed படித்துக்கொண்டிருந்ததை சில பத்திரிகைகள் வெளியிட்டன. அவர் மார்க்சியத்தின் ஏற்கத்தகுந்த அம்சங்கள், விலக்க வேண்டிய அம்சங்கள் குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார். சமூக மாற்றத்தின் கருவி என்கிற வகையில் ஏற்பையும், வாழ்வு குறித்த அதன் தத்துவம், நாத்திகம், தனிந்பர் குறித்த உதாசீனம் ஆகியவற்றில் ஏற்பின்மை என்பதை அவர் தன் உரைகளில் வெளிப்படுத்தியிருந்தார். அரசியல் மோதல்களில் தீர்வு என்பது அதிகாரம் என்பதை மையமாக வைத்தும் அடித்து வீழ்த்தும் (knockout blow) வகையாகவும் இருப்பதை அவர் ஏற்கவில்லை. எதிராளியுடன் உரையாடல் மூலம் அறிவுத்தீர்வு வகைப்பட்டமுறை (‘Knowledge solution’) உகந்தது என்பார். அதில் ஜனநாயக தன்மைகள் இருக்கும் என்கிற கருத்து அவரிடம் இருந்தது. அங்கிருந்த காலத்தில் ஜனநாயக மாண்புகள், மாறுபடும் உரிமை, ஒரேகட்சிமுறை உவப்பின்மை, கட்சி லைன் எனவே பின்பற்று என்கிற வற்புறுத்தல்கள் பற்றி தொடர்ந்து பேசிவந்தார். அமெரிக்க சோவியத் உறவுகள் மேபடுத்தக்கூடியவையே- ஸ்டாலின் முயற்சிகளை ஒதுக்கிவிடமுடியாது எனவும் அவர் கருதினார். இரு நாட்டு முறைகளிலும் குறைகள் இல்லாமல் இல்லை என்றார். நேருவின் அமெரிக்க விஜயம், மேற்கு நாடுகள் பக்கம் இந்தியாவா என்கிற கேள்விகளை எழுப்பியபோது இந்தியா சுயமான கொள்கைகளை கடைபிடிக்கும் நாடு என தெளிவுபடுத்தினார். சோசலிச பொருளாதாரம் என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என்றாலும் மார்க்சிய- லெனியம் என்பதை ஏற்கவில்லை என விளக்கினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் வன்முறைகள் காரணமாக கைது செய்யப்படுகின்றனர். அவர்களின் கொள்கைக்காக (ஐடியாலஜிக்காக) அல்ல என்றார். சோவியத் அதிகாரிகள் நம்பிக்கை குறைவுடனேயே அவரை அணுகினர். ராதாகிருஷ்ணனுடன் சமுகத் தொடர்புகளை அவர்கள் வளர்த்துக்கொள்ளவில்லை. நான் மாஸ்கோவை விரும்பாமல் இல்லை. நான் இடதாகவே இருக்க விழைகிறேன். இங்கு தனித்துதான் இருக்கிறேன் (I do not dislike Moscow as I like to be left alone and here I am left alone) என லெஃப்ட் என்பதை தன் சொல்லாடலில் திறமையாக பயன்படுத்தினார் ஸ்டாலின் முன்னர் இருந்த விஜயலஷ்மி பண்டிட்டை சந்திக்கவில்லை. ராதாகிருஷ்ணன் சந்திக்க விருப்பம் தெரிவித்த உடனேயே அழைப்பு வந்தது. ஜனவரி 14 1950 இரவு நேரம் ஒதுக்கப்பட்டது. படுத்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் தூதர் ஒருவரை சந்திக்க இருக்கிறேன் என ஸ்டாலின் சொன்னதாக தெரிகிறது. அரைமணிநேர சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சோவியத்துடன் இந்தியா நல்லுறவை உருவாக்கிக்கொள்ள விழைகிறது என தெரிவித்தார். பதட்ட தணிவை உருவாக்க முயற்சிகளை ஸ்டாலின் எடுக்க வேண்டினார். இருபக்கமும் செய்ய வேண்டிய ஒன்று அது என ஸ்டாலின் பதில் தந்தார். ஆமாம் சண்டைக்கு இருபக்கம் தேவைதான் -முதலில் ஒருவர் நிறுத்தலாமே என சற்றுக் கூடுதலாக ராதாகிருஷ்ணன் தெரிவித்ததை ஸ்டாலின் மறுத்து ஏதும் சொல்லவில்லை. ஸ்டாலின் இந்தியா மொழிப்பிரச்சனைகள் எப்படி உள்ளது என கேட்டு தெரிந்துகொள்ள முயன்றார். இந்த மனிதன் இதயத்திலிருந்து வெளிப்படையாக பேசுகிறார் என ஸ்டாலின் தெரிவித்தாக அறியமுடிகிறது. அவர் அமைதி என பேசும்போது உண்மை தெரிகிறது என்றாராம். உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக ஸ்டாலின், நேரு, மாவோ, சர்ச்சில் சந்தித்து பேசவேண்டும் என்கிற விழைவை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பிரிட்டிஷ் அமெரிக்க அரசாங்கங்கள் ஸ்டாலினின் அமைதி குறித்த அக்கரையையோ, சர்வதேச கம்யூனிச இயக்கம் அடைந்துவரும் பலவீனத்தையோ சரியாக கணிக்கவில்லை என்பதை ராதாகிருஷ்ணன் சர்ச்சிலிடம் எடுத்துரைத்தார். ஸ்டாலின் உடல்நிலை பலவீனப்பட்டுவரும் சூழலில் ஸ்டாலினுக்கு பின்னர் சர்வதேச இயக்கம் உடையலாம்- சீனா வெளியேறலாம்- டிட்டோவிசம் செல்வாக்கு பெறலாம் என்பதை சோவியத் தலைமை உணர்ந்துள்ளது என்றார் ராதாகிருஷ்ணன். 1950 கொரிய போரின்போது ஐநா செக்யூரிட்டி கவுன்சில் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா நின்றதில் சோவியத் அதிருப்தி அடைந்தது. சோவியத் தலையிட்டு சுமுகத்தீர்வை உருவாக்கவேண்டும் என ராதாகிருஷ்ணனை நேரு கேட்டுக்கொண்டார். சீனாவை அனுமதித்து செக்யூரிட்டி கவுன்சிலுக்கு மீண்டும் சோவியத்தை கொணர்வது என்கிற ராதாகிருஷ்ணன் முன்மொழிவை நேரு ஏற்று கடிதம் எழுதினார். பிற சிஸ்டங்களைப்போலவே சோவியத்திலும் நிறைகுறைகள் இருப்பதை அவர் கண்ணுற்றார். சோவியத் நல்லுறவு என்பதையும் கம்யூனிஸ்ட் ஐடியாலஜி ஏற்பது என்பதையும் வேறுவேறாக உலகம் புரிந்துகொள்ளவேண்டும் என விரும்பினார். கம்யூனிச உலகமும் அல்லாத உலகமும் ஒன்றுடன் ஒன்று இசைவுபட்டு சில விட்டுக்கொடுப்புகள் மூலம் இணக்கமாக செயல்பட்டு போர்களை தவிர்க்கமுடியும். உலக அமைதிக்கு நிற்கமுடியும் என கருதினார் ராதாகிருஷ்ணன். ஸ்டாலின் வெளிப்படையாக சக்வாழ்வு- தலையிடாகொள்கை (coexistence- non interference) என்பதை அறிவிப்பது நலம் பயக்கும் என சோவியத் ஆதிகாரிகளிடம் ஆலோசனையாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.. 1951ல் ஐநா செக்யூரிட்டி கவுன்சிலில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்காவும் பிரிட்டனும் எடுத்தபோது சோவியத் தனது ரத்து அதிகாரத்தை பிரயோகிக்கவேண்டும் என ராதாகிருஷ்ணன் வேண்டினார். ஆனால் சோவியத் பிரதிநிதி அமைதிகாத்தார் என்பது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. பின்னர் 1952 ஜனவரி அமர்வில் சோவியத் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. ரத்து அதிகாரத்தையும் இந்தியாவிற்காக பயன்படுத்தியது. நேருவிடம் இதற்கு பெரிய வரவேற்பு இல்லை என்கிறார் கோபால். அதை மேற்கு நாடுகள் போலவே சோவியத் தலையீடு என அவர் எடுத்துக்கொண்டார். 1950 ஜனவரியில் ராஜேந்திரபிரசாத் குடியரசு தலைவர் பொறுப்பில் அமர்ந்தார். 1952 தேர்தலுக்கு பின்னர் குடியரசுத்தலைவர் துணைத்தலைவர் தேர்ந்தெடுத்தல் என்கிற ஆலோசனையின்போது ராஜேந்திரபிரசாத்திற்கு பதில் ராதாகிருஷ்ணன் என்கிற கருத்தை நேரு வைத்திருந்தார். மார்ச் 1952ல் ராஜேந்திர பிரசாத் இல்லையெனில் என் பெயரை பரிந்துரைக்கலாம் என்கிற ஒப்புதலை ராதாகிருஷ்ணன் கடிதம் மூலம் நேருவிற்கு தந்திருந்தார். பிரசாத் தான் தொடர விரும்பியதால் அவர் குடியரசுத்தலைவர் பொறுப்பிற்கும், துணைத்தலைவராக இராதாகிருஷ்ணன் என்கிற சமரசத்தை நேரு உருவாக்கினார். பட்டாபிசீதாராமையா, பி ஜி கேர் போன்றவர்கள் துணைத்தலைவர் ஆகிட விரும்பினர். ராஜாஜி மாவ்லங்கர் சபாநாயகர் என்றார். மெளலானா ஆசாத் ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் பங்கு குறைவு என்பதால் பிரசாத் என்பதில் உடன்பாடு கொண்டிருந்தார். நேரு ஏன் ராதாகிருஷ்ணனை இப்படி கொண்டாடுகிறார் என்ற கேள்வி ஆசாத்திடம் இருந்தாலும் துணைத்தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டி ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினார். இதற்கு முன்னர் எவருக்கும் அளித்திராத அளவில் ராதாகிருஷ்ணனுக்கு சோவியத் பாராட்டு விழா எடுத்தது. இந்த தூதர் நமது மக்களை நேசிப்பவராக இருக்கிறார். ஆனால் அரசாங்கத்தை வெறுக்கிறார் என சோவியத் வெளியுறவு அமைச்சர் வைசின்ஸ்கி தெரிவித்தார். ஸ்டாலினிடம் ராதாகிருஷ்ணன் விடைபெறும்போது உலக அமைதிக்கு தாங்கள் பங்களிக்க வேண்டும் என்றார். கிறிஸ்துவின் வாசகம்மனிதன் ஆன்மாவை இழந்து உலகை அடைவதில் என்ன இருக்கிறது (What shall it avail man if he gain the whole world and lose his own soul) என்றார். ஸ்டாலின் நெகிழ்ந்து நானும் இறையியல் கல்லூரியில் இருந்தவன்தான் என கைகுலுக்கினார் என்கிற பதிவை கோபால் தந்துள்ளார். ஸ்டாலின் பாவ்லோவிடம் இவர் ஒருவர்தன் என்ன்னை மனிதனாக பார்த்து நடந்துகொள்கிறார் (He is the only man who treats me not as a monster but as a human being) என்று ராதாகிருஷ்ணன் பற்றி குறிப்பிட்டதாகவும் கோபால் எழுதுகிறார். இராதாகிருஷ்ணனின் சோவியத் தூதர் காலம் அவர் விடைப்பெற்ற பின்னரும் அடுத்து வந்த அதிகாரிகளுக்கு நல்ல டிவிடண்ட் பெற உதவியாக இருந்தது என்கிற கருத்தும் இந்திய வெளியுறவுத்துறையில் இருந்தது. 6 தனது பெரும்பரப்பான ஆக்ஸ்போர்ட் அறிவு உலகைவிட்டு முற்றிலுமாக நீங்கி குடியரசுத்துணைத்தலைவர் என்கிற கட்டுக்குள் அடங்கவேண்டுமா என்கிற தயக்கமும் அவரிடம் முதலில் ஏற்பட்டது. சிலர் ஒலிம்பிக்கில் விளையாட செல்வர்- சிலர் அதில் வர்த்தகம் செய்வர்- மற்றவர் பார்க்க செல்வர். தான் மூன்றாவது ரகம் என்றார். ராஜ்யசாபாவில் அமர்ந்து மற்றவர் பேசுவதை அப்படியே கேட்டுக்கொண்டிருப்பது சரிப்படுமா என்பதும் ஒரு காரணம். டெல்லியைவிட்டு துணைத்தலைவர் வெளிவந்தால் அவருக்கு பிரதமர், குடியரசுத்தலைவருக்குரிய ப்ரொடோகால் என நேரு முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார். மாஸ்கோ அனுபவங்களையும் அவர் கணக்கில்கொண்டு இந்திய ஆன்மாவை அழிக்காமல் விடுதலை- சமூக நியாயம்- பொருளாதார சமத்துவம் என்கிற இணைப்புகொண்ட சமுக புரட்சி என ராதாகிருஷ்ணன் வற்புறுத்தினார். அது கம்யூனிச சித்தாந்தத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டதாகவும் விளங்கும் என்றார். நேருவால் அது சாத்தியமாகும் என்றார். நேரு நமது முன்னேற்றம் மிக மெதுவாக நகர்கிறது- அதை துரிதகதிக்கு மாற்றவேண்டும் என ஏற்கிறேன் என்றார். நேரு மறைந்த 1964வரை தொடர்ந்து 12 ஆண்டுகள் அவர்கள் இருவரும் நெருக்கமாக செயல்பட்டனர். அனைத்து விஷயங்களிலும் இருவருக்கும் ஒத்த நிலைப்பாடுகள் இருக்கவில்லை. ராதாகிருஷ்ணன் உடன்நிற்பார் என்கிற நம்பிக்கையுள்ள அம்சங்களில் நேரு அவரை கலந்து ஆலோசிப்பார். இருவரும் தங்கள் அறிவார்ந்த விவாதங்களை திறமைகளை ரசிபவர்களாக இருந்தனர் என்பது கோபால் பார்வை. அவர்கள் அறிவுத்தரத்திற்கேற்ற அளவில் பிறர் டெல்லியில் இல்லை என்ற உணர்வும் இருவரிடத்திலும் இருந்தது. பொதுவாக அவர்கள் வாழ்வை மேம்படுத்தும் மனிதர்கள் என மற்றவர் மதித்ததாகவும் கோபால் சொல்கிறார். நேருவின் கடைசி ஆண்டுகளில் இருவருக்கும் இடையே பாசப்பிணைப்பு கூடுதலாகவே இருந்தது. இராதாகிருஷ்ணனின் வெளிப்படையான பேச்சு சிலநேரங்களில் காங்கிரசாரிடம் அதிர்வுகளை உருவாக்கியது. பதில் விமர்சனங்கள் வந்தன. உணர்ச்சிவசப்பட்ட ராதாகிருஷ்ணன் தான் ராஜினாமா செய்துவிடுவதாக கூறினார். நேரு அவரை அழைத்து என் முன்னிலையில் எந்த விமர்சனமும் எழவில்லை என்பதை தெளிவுபடுத்தி அவரை சமாதானப்படுத்தினார். உள்நாட்டு பிரச்சனைகளில் அவர் பிரதமருக்கு துணையாக பலநேரங்களில் நின்றார். காஷ்மீர் பிரச்சனை சியாமாபிரசாத்- நேரு இணக்கத்திற்கு அவர் முயற்சித்தார். ஆனால் நேரு ஏற்காத நிலையில் சியாமா ஸ்ரீநகரில் மரணம் என்கிற துக்கம் எழுந்தது. ஆந்திரா பிரச்சனை, கல்வி குறித்த முடிவுகள், கிருஷ்ணமேனன், சி டி தேஷ்முக் அமைச்சரவை சேர்ப்பு- வேறுபாடுகள் போன்றவற்றில் ராதாகிருஷ்ணன் சேவை அவசியம் என நேரு கருதினார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் இருந்த எம் சி சாக்லா போன்றவர்கள் காபினட்டில் நேரு இடம்பெற செய்யவேண்டும் என்கிற ஆலோசனையை ராதாகிருஷ்ணன் தந்தார். ராஜ்யசபாவில் மணிக்கணக்காக உட்கார்வதால் தலைவலி உருவாகி அவதிப்படுவதாக அவர் தெரிவித்தார். நேருவிடம் 1955ல் துணைத்தலைவர் பொறுப்பையும் ராஜ்யசபா சேர்மன் பொறுப்பையும் பிரித்துவிடுங்கள் என்றார். நேரு இசைந்தாலும் அதற்கு ஏற்பு பொதுவாக இல்லாமல் போனது. சில நேரங்களில் கடுமையான காய்ச்சல் இருந்தபோதும் அவர் ராஜ்யசபா விவாதங்களை முறைப்படுத்த அமரவேண்டிய நிலை இருந்தது. சில நேரங்களில் தான் பாரபட்சமற்றவன், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன் என்கிற வகையில் நிருபிக்கும் நிலை ஏற்பட்டது, பிரதமர் உரையைக்கூட அவைக்குறிப்பிலிருந்து நீக்க அவர் தயங்கவில்லை. நாடாளுமன்ற லோக்சபாவின் நடைமுறையிலிருந்து மாறி எதிர்கட்சியினரையும் அவர் தலைமை தாங்கிட வழிவகுத்தார். மேற்கு நாடுகள் ருஷ்யாவை ஒழித்திட ஹிட்லர் பாணியை கையாள்வதாக அவர் சாடியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. லூயி பிஷர் சோவியத் இம்பீரியலிசம்தான் ஹிட்லரிசம் என பதிலடி தந்தார். ஸ்டாலின் மறைவின்போது மார்ச் 1953ல் ராஜ்யசபாவில் அவர் ஸ்டாலின் நினைவை பகிர்ந்தபோது வலதுசாரி நண்பர்கள் அதை ரசிக்கவில்லை. அவர் கம்யூனிசத்தின் பக்கம் இழுக்கப்பட்டுவிட்டார் என சந்தேகப்பட்டனர். 1955ல் அவரது இரு படைப்புகளான Recovery of Faith, East and West வெளியாயின. கோட்பாடுகளில் சிக்காத படைப்பாற்றல் மிகுந்த மதம் (creative religion free of doctrine) என்பதை அவர் பேசினார். தனிநபரின் சுதந்திரம் மனிதகுல ஒற்றுமை நோக்கித்தான் மதங்கள் என்றார். கிழக்கு மேற்கு என்பது வெறும் பூகோள விஷயமல்ல மனித குல முன்னேற்ற பாதையின் இரு சாத்திய வகைகள் என்றார். அய்க்கியநாடுகள் செக்ரடரி ஜெனரல் பொறுப்பிற்கு ராதாகிருஷ்ணன் எனில் சோவியத், அமெரிக்க இருநாடுகளின் இசைவும் இருப்பதாக நேருவிற்கு தகவல்கள் வந்தன. அவர் விரும்பினால் அனுப்பலாம் என்றார் நேரு. ராதாகிருஷ்ணன் விருப்பமின்மையை தெரிவித்தார். அவர் அமெரிக்க கனடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அமெரிக்க வழியா ருஷ்யா வழியா என்பதில்லை. வளைந்துகொடுக்கும் தன்மையுடன் பொறுமை கொண்ட அணுகுமுறையால் உலகம் அமைதியில் திளைக்கும் என உரை நிகழ்த்தினார். அய்நா தினம் அன்று அவர் உரை ஒலிப்பரப்பானது. அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் கம்யூனிசம் பாற்கொண்டுள்ள ஈர்ப்பை குறிப்பிட்டார். தனக்கு அதில் நாட்டம் இல்லை என்றாலும் அதை புரிந்து கொள்ள நாடுகள் தவறக்கூடாது. நமது புரிதல் கம்யூனிச நாடுகள் தங்களை ஜனநாயகப்படுத்திகொள்ளக்கூட உதவும் என்றார். இதை நியாயார்க் டைம்ஸ் வெளியிட்டது. அமெரிக்க சோவியத் நல்லுறவுகள் குறித்த அவரது கருத்துக்களை சிலர் ஏற்கவில்லை என்பதை ஐஷ்னோவரே ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்ததாக அறிகிறோம். எச்சமூகமும் தேங்கிவிடுவதில்லை. எச்சட்டமும் மாறாமல் இருப்பதுமில்லை. அரசியல் அமைப்பு சட்டம் கூட நிரந்தரமானதில்லை. காலவளர்ச்சியில் பொறுமையாக தீவிர மாற்றங்களுக்கு மனித மனமும் சமூகமும் உள்ளாகும் என தனது உரைகளின் ஊடே அவர் தெளிவிபடுத்தினார். 1955 ஏப்ரலில் டெல்லிக்கு பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் வந்தபோது ராதாகிருஷ்ணன் தனது உரையில் வரலாறு என்பது நாம் எவற்றை தேர்ந்து நினவுகூற விரும்புகிறோம் என்பதாக இருக்கிறது (History is not what we remember but what we choose to remember;) பிரிட்டிஷ் காலத்தின் நேர்மறையான நலன்களை நினைவில் கொள்கிறோம். இந்தியா விடுதலை அடைந்து மீண்டும் உலக வரலாற்றில் நுழையும்போது காமன்வெல்த்தில் உடன்பாடுள்ள பொதுவான அம்சங்களை பகிர்ந்துகொள்ள விழைகிறது. முடிவுகளுக்கு கட்டுப்படவேண்டும் என்கிற நிர்ப்பந்தமின்றி பொது இலட்சியங்களில் ஒன்றாக நிற்கமுடியும் என்கிற அவரது உரை அற்புதமானவை தெளிவான பார்வைகொண்டவை என பாராட்டைப் பெற்றன. 1956ல் அவர் சோவியத், கிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்றார். அங்கு கம்யூனிசத்தின் மதம் (Religion of Communism) என்கிற விமர்சன பார்வையை வைத்தார். கம்யூனிசம் உண்மையைத் தேடுவதில்லை. ஆன்மத் தூய்மை என்பதைப் பற்றி அது கவலைப்படவில்லை. உள்ளொளி என்பதில் எல்லாம் அதற்கு நம்பிக்கையில்லை என்பதை விமர்சனமாக வைத்தார். குருசேவ் சில முயற்சிகளை எடுப்பதை கவனிக்கவேண்டும் என்றார். மனம் ஆன்மா ஆகியவற்றின் உயர் மதிப்பீடுகளில் கவனம் கொள்ளாமல், பொருளாதார நலன்களில் மட்டும் முன்னேற்றம் என்பது பழிவாங்லை செய்துவிடும். தனிந்பர் உணர்வுகளை புறந்தள்ளும் எந்த சிஸ்டமும் மார்க்சியமாகாது என்கிற அறிவுரையை அவர் தந்தார். உரையை வானொலியில் கேட்டதாக குருசேவ் ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தார். முதலில் எங்கள் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள விழைகிறோம். மூன்று ஆண்டுகள் கழித்து வந்து பாருங்கள் சில மாற்றங்களை காண்பீர் என்றார். கீவ் ரேடியோவில் ராதாகிருஷ்ணன் உரையாற்றியபோது புகாரின் பெயரை குறிப்பிட்டார். கிண்டலாக இங்கும் இருகட்சி ஆட்சிமுறைதான் உள்ளது. ஒன்று ஆட்சியில் மற்றது சிறையில் என்றார். ராதாகிருஷ்ணன் துணைவியார் நவம்பர் 26 1956ல் இதயவலியால் மறைந்தார். சில ஆண்டுகளாகவே அவர் சென்னையைவிட்டு வெளியே வரமுடியாதநிலையில் இருந்தார். ராதாகிருஷ்ணன் டெல்லிக்கும் சென்னைக்கும் ஆக அலைந்து வந்தார். சடங்குகளில் அவருக்கு நம்பிக்கையில்லை. மனைவியின் விருப்பம் என்பதால் உடன்பட்டார். The end of a long chapterஎன புத்தக மொழியிலேயே மனைவி மறைந்த துக்கத்தை வெளிப்படுத்தினார். சிவகாமு கல்கத்தாவில் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். ராதாகிருஷ்ணனின் சில தொடர்புகள் குறித்த வலியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தாய்மை பண்புகளில் நிறைவடைந்துகொண்டார் சிவகாமு. அவர்கள் பிரியவில்லையே தவிர அவ்வுறவு முறிவுகள் கொண்டதாகவே இருந்தது என சொல்கிறார் கோபால். 1955 முதலே ராஜேந்திரபிரசாத் தான் விலகிவிடுவதாக நேருவிடம் தெரிவிக்கத்துவங்கினார். நேருவிற்கோ 1957ல் ராதாகிருஷ்ணனை குடியரசுத்தலைவர் ஆக்கிவிடலாம் என கருதினார். மெளலானா ஆசாத்திற்கு ராதாகிருஷ்ணன் மீது வருத்தம் இருந்தது. அவரின் கல்வி அமைச்சகம் சரியாக வேலை செய்யவில்லை என்கிற விமர்சனத்தை ராதாகிருஷ்ணன் வைத்தார் என்பதில் ஆசாத் வருத்தமாக இருந்தார். ராஜ்யசபாவில் கேள்வி வரும்போது ஆசாத் இருந்து பதில் அளிக்கவேண்டும்- உடல்நிலை என சொல்லி வராமல் இருக்கக்கூடாது என்றார் ராதாகிருஷ்ணன். பிரசாத்திடம் அவரே குடியரசுத்தலைவராக தொடரவேண்டும் என்ற எண்ணத்தை ஆசாத் தெரிவிக்க அதை ஆசாத்தும் நண்பர்களும் முடிவெடுக்கலாம் என மறைமுக ஒப்புதலை பிரசாத் தந்தார். இந்த பிரச்சாரத்தால் மனம் உடைந்தார் நேரு. பிரசாத்தா ராதாகிருஷ்ணனா என்கிற விவாதம் பொதுவெளியில் நடக்கத் துவங்கிவிட்டது. மார்ச் 1957 பிரசாத் நேரு சந்திப்பில் ஏதும் முடிவாகவில்லை. காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்ட் கூடியது. முன்னதாகவே பிரசாத்திற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடந்தது. மொரார்ஜி ராதாகிருஷ்ணன் என்றார். ஆனால் கூட்டத்திற்கு வரவில்லை. பிரசாத் விரும்பினால் அவர்தான் என பந்த், ஜகஜீவன் போன்ற்வர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் நேரு தன் கருத்திற்கு ஆதரவு இல்லை என உணர்ந்தார். மரபுகளுக்கு மாறாக இரண்டாம் முறை பிரசாத் என்பதும் ராதாகிருஷ்ணன் துணையாக தொடரலாம் என்பதும் எட்டப்பட்டது. நேரு ராதாகிருஷ்ணனுக்கு தனது முயற்சி-முடியாமை குறித்து தெரிவித்து இரண்டாம் முறை துணைத்தலைவராக நீடிக்க வேண்டினார். ராதாகிருஷ்ணன் அதற்கு தன்னையாவது மரபான முறைதனை பின்பற்ற அனுமதிக்கவேண்டும் என்றார். தேசிய நலன்கருதி என அவரை அனைவரும் வேண்டினர். நீங்கள் இல்லாத டெல்லி கற்பனை செய்யமுடியாது என இந்திரா தெரிவித்தார். மொரார்ஜி நேரில் சென்று நேருவை இவ்வாறு விட்டுவிட்டு செல்வது அழகல்ல, அவர் கண்ணீர் விடுகிறார் என சமாதானப்படுத்தினார். ராஜாஜி அவருக்கே உரிய கேலியுடன் வாழ்த்து தெரிவித்தார். பதவி ஏற்றவுடன் நாம் சில நேரங்களில் சிறு விசுவாசங்களுக்கு பலியாகிவிடுகிறோம் (we seem to be victims of too many small loyalties ) என்றார் ராதாகிருஷ்ணன். மே 1957ல் அவர் கம்போடியா வியட்நாம் சென்றார். சிகனோக், ஹோசிமின் சந்திப்புகள் பலன் தந்தன. ஹோசிமின் புரொடோகால் ஏதும் பார்க்காமல் விமானநிலையம் வந்தார். அவர் சீனாவில் அங்கிருந்த கொந்தளிப்பான நிலையிலும் மாவோவை சந்திக்க முடிந்தது, ராதாகிருஷ்ணனை பார்க்க மாவோ பெய்ஜிங் வந்தார். நீங்கள் மார்க்சியத்தை வறட்டுத்தனமாக பார்க்காமல் செயல்படும் நம்பிக்கையாக பார்க்கிறீர்கள்.. உங்கள் ஆட்சியில் சீனாவில் சோசலிசம் மனிதாபிமானம் கொண்டதாக ஜனநாயகம் நிறைந்தததாக மாறட்டும் என மாவோவிடம் தெரிவித்தார். தேசிய மக்கள் காங்கிரசில் ஜனநாயகம் குறித்து அவர் உரையாற்றினார். மாவோவுடன் தனி உரையாடலில் சகவாழ்வு (coexistence) என்பதில் நம்பிக்கை வைத்துள்ளீர்களா என கேட்டார் ராதாகிருஷ்ணன். அவர் ஆமாம் என்றார். ஒத்துப்போகிறவருடன் மட்டும் சேர்ந்து வாழ்வதா - ஒத்துப் போகாதவர்களுடனும் சேர்ந்து வாழ்வதா அது எனக்கேட்டார். மாறுபட்டவர்களையும் ஒடுக்கிவிடாமல் நட்புபாராட்டி அவர்களை ஒத்துழைக்க செய்வது என விளக்கமும் தந்தார். மாவோ பதில் தரவில்லை. ராதாகிருஷ்ணனுக்கு ஒரு பழக்கம் இருந்தது, அவர் விடைபெறும்போது கன்னத்தில் தட்டிக்கொடுத்து விடைபெறுவார். ஸ்டாலினிடம், போப்பாண்டவரிடம் செய்த அதையே மாவோவிடமும் செய்தார். சுற்றி நின்றவர்கள் திடுக்கிட்டனர். மாவோ அதை புன்முறுவலுடன் ஏற்றார். உலகில் காணப்படும் நெருக்கடிகள் குறுகிய பிரத்யோகமானவர்கள் (narrow exclusiveness) என்கிற பார்வை காரணமாக வருகிறது என்றார் ராதாகிருஷ்ணன். நம்து மோசமான குடிம்கனை சகித்துக்கொள்வோம்- அடுத்த குடிமகன் எவ்வளவு சரியானவனாக இருந்தாலும் சகியோம் எனும் பார்வைதான் எங்கும் காணப்படுகிறது.. மற்றவரை அவர்கள் குறைகளை மட்டும் சொல்லி மாற்றத்தைக்கொணரமுடியாது. அவரது உயர் மற்றும் சிறந்த அமசங்களை மனமார போற்றவும் செய்திடவேண்டும் என்றார். ராஜ்யசபா, குடியரசுத்துணைத்தலைவர், சுற்றுப்பயணங்கள்- சொற்பொழிவுகள் என்கிற கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் அவர் பிரம்ம சூத்திர உரை எழுதினார். ராஜேந்திர பிரசாத்திற்கு மூன்றாம் முறையும் விருப்பம் என்கிற செய்தி வலுவாக வரத்துவங்கியது அதற்கு சிலர் முயற்சியும் செய்தனர். ஆனால் நேரு கடுமையாக இருந்தார். ராஜ்யசபாவில் இருமுறைதான் என்கிற பில் ஒன்றை உறுப்பினர் கொணர்ந்தபோது நாம் வழக்கம் என்பதில் கறாராக இருக்கலாம் விலக்கி கொள்ளுங்கள் என நேரு வேண்டினார். பிரசாத் உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழலில் 1961ல் குடியரசுத்தலைவர் பதவி பொறுப்பில் இருந்தார் ராதாகிருஷ்ணன். ராஜ்யசாபாவில் புபேஷ்குப்தா மிகசிறந்த உறுப்பினராக வலுவாக வாதம் புரிபவராக இருந்தார். அவர் கல்கத்தாவில் ராதாகிருஷ்ணன் அவர்களின் கல்லூரி மாணவர். ராதாகிருஷ்ணன் அவையில் கடிந்து கொண்டால் வகுப்பாசிரியருக்கு தரும் மரியதையை புபேஷ் தந்துவிடுவார். நேரு, புபேஷ், ராதகிருஷ்ணன் எனில் அவை களைகட்டும் என்கிறார் கோபால். 7 1962 மே மாதம் ராதாகிருஷ்ணன் குடியரசு தலைவரானார். தனக்கு வந்த முதல் மெர்சி பெட்டிஷனை முன்வைத்து மரணதண்டனையை ஒழித்தால் என்ன என நேருவிடம் கேட்டார். நேருவும் அதற்கு நேர்மறையாக பதிலை தந்தார். அது உள்துறை மூலம் விவாதத்திற்கு போனது. பொதுவாக கருணை மனுக்களை அவர் நிராகரிக்காமல் இருந்தார். . 1962 அக்டோபரில் சீனா துருப்புகள் லடாக் பகுதியில் என்கிறமிக முக்கிய பிரச்ச்னையில் பாதுகாப்பு அமைச்சர் மேனனை மாற்றிடுமாறு நேருவிடம் தெரிவித்தார். ஆனால் நேருவிற்கு கிருஷ்ணமேனனிடம் நம்பிக்கை இருந்தது. அமெரிக்காவின் தூதர் பேராசிரியர் கால்பிரைத் அமெரிக்க அனைத்து உதவிகளும் செய்யத்தயார் ஆனால் வேண்டுகோளே இல்லையே என்றார். மேனன் மேற்கு நாடுகளிடம் செல்லக்கூடாது என்றார். கால்பிரைத் பேசுவதில் முழு உண்மையில்லை என்றார் நேரு. அக்டோபர் 28 1962 அன்று நேரு ஆமாம் நாம் தவறிவிட்டோம் என ராதாகிருஷ்ணனிடம் ஏற்றுக்கொண்டார். நவம்பர் 7 அன்று மேனனின் ராஜினாமை ஏற்று அனுப்ப ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார். மேனன் விலகலை என்னதான் வருத்தம் இருந்தாலும் தேசநலன் கருதி ஏற்றுக்கொள்ளலாம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நேருவின் ஏற்புடன் போர்முனைக்கு சென்றார், தளபதிகளுடன் வீரர்களுடன் விவாதித்தார். மிக மோசமான அரசின் ஆயத்தமின்மை குறித்த பொது கருத்துடன் உடன்பட்டு பேசினார். இவ்வாறு வெளிப்படையாக எந்த நாட்டிலும் யாரும் பேசியிருக்கமாட்டர்கள் என்கிற கருத்துக்கள் வெளியாயின. ராஜாஜி போன்றவர் தேவையில்லாமல் நேரு மீதான அதிருப்தியில் பிரசிடென்சியல் அரசாங்கம் என சட்டதிருத்தம் கொணர்க எனப் பேசினர். புபேஷ் குடியரசுத்தலைவர் அன்றாட பாலிசிகளில் தலையிடுவதாக நேருவிற்கு கடிதம் எழுதினார். நேரு அதை கண்டுகொள்ளவில்லை. குடியரசுத்தலைவர் குறித்து வெளிப்படையாக விவாதிப்பது ஆரோக்கியமனதல்ல என்றார் நேரு. சீனாவுடனான யுத்தம் முடிந்த அடுத்த ஆண்டு ராதாகிருஷ்ணன் அமெரிக்கா, பிரிட்டன் சென்றார். கென்னடியுடன் உரையாடினார். முதல்முறையாக ராதகிருஷ்ணன் வரும் ஹெலிகாப்டர் வெள்ளை மாளிகையில் இறங்கிட அனுமதியை கென்னடி கொடுத்தார். அதேபோல் தங்கள் குடும்ப அறைக்கு அழைத்து சென்று குழந்தைகளை அறிமுகம் செய்தார். கென்னடி மேனன் குறித்த தனது மதிப்பீடுகளை சொன்னபோது ராதாகிருஷ்ணன் எவ்வித பதிலும் தரவில்லை. நீங்கள் நாட்டின் பிரதமர் ஆவிர்களா என்றதற்கு நிச்சயம் இல்லை என்றார். அவரது அமெரிக்க உரைகள் பொதுவாக அதிகம் பத்திரிகைகளில் வரவில்லை. உரைகளை எழுதி அவர் படிக்கவில்லை.. சீனா யுத்தத்திற்கு பின்னர் நேரு மிகவும் தளர்ந்தார். ஜனவரி 1964ல் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. ராதாகிருஷ்ணனுடன் தத்துவ உரையாடல்களில் ஈடுபட்டார். நேரு. 1964 மே 23 அன்று உள்துறை செயலர் குடியரசுத்தலைவரின் தனிஅதிகாரிக்கு நேரு உடல்நிலை மோசமானதை குறிப்பிட்டு மாற்று யோசிக்கவேண்டும் என்றார். காமராஜர் திட்டத்தில் வெளியேறியிருந்த லால்பகதூரை ஜனவரியில் மீண்டும் நேரு இணைத்துக்கொண்டார். அவர் நேருவிற்கு பின்னால் என்கிற உணர்வு பிரதமர், குடியரசுத்தலைவர் இருவருக்கும் இருந்தது. ராதாகிருஷ்ணன் சாஸ்திரியிடம் உரிய தருணத்தில் எவ்வாறு உரிய முறையில் நடக்கவேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்தார். 1964 மே 27 காலையில் நேரு சுயநினைவில்லாமல் இருக்கிறார் என்ற செய்தியை இந்திரா தெரிவிக்க ராதாகிருஷ்ணன் சென்று பார்த்துவந்தார். மதியம் 1.50க்கு காபினட் செயலர் நேரு மறைவை அறிவித்தார், ராதாகிருஷ்ணன் நாட்டிற்கு மட்டுமல்ல தனக்கும் பெரும் இழப்பாக னேருவின் மறைவை கருதினார். மாலை 4.30க்கு நந்தா பிரதமராக பொறுப்பேற்றார். ராணுவ உயர் அதிகாரிகள் குடியரசு தலைவரை சந்தித்து ஜனநாயகம் நிலைபெற தங்கள் உறுதிமொழியை தந்தனர். இது பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. குடியரசுத்தலைவரை காமராஜர் சந்தித்தார். இருமாதங்கள் கழித்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கலாம் என்கிற நந்தாவின் விருப்பததை தெரியப்படுத்தினார். ராதாகிருஷ்ணன் ஏற்கவில்லை. உடனடியாக தேர்ந்தெடுத்து நாட்டிற்கு தெரிவிக்கவேண்டும் என்றார். நந்தா விலகி சாஸ்திரி பதவியேற்றார். கிருஷ்ணமேனனை அமைச்சரவையில் சேர்ப்பதில் உள்ளதடைகளை ராதாகிருஷ்ணன் சாஸ்திரியிடம் எடுத்துரைத்தார். இந்திரா ஆரம்பத்தில் தயங்கினாலும் அமைச்சரவையில் இணைந்தார். சாஸ்திரி வெளியுறவுத்துறையை ஸ்வரன்சிங்கிற்கு ஒதுக்கினார். அதன் மூலம் இந்திரா அதை பெறமுடியாத நிலை உருவாக்கப்பட்டது. இந்திராவிற்கு நந்தா பிரதமராக தொடர்ந்தால் பரவாயில்லை என்ற எண்ணம் இருந்ததாக கோபால் பதிவு செய்கிறார். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. சாஸ்திரிக்கு ராதாகிருஷ்ணன் அறிவுரை எடுபடாத நிலையில் அமைச்சர்கள் ராஜினாமை ஏற்கும்படி சாஸ்த்ரி தெரிவிக்க ராதாகிருஷ்ணன் சரியல்ல என அறிவுறுத்தினார். ராதாகிருஷ்ணன் மீதும் இந்தி பிரச்சனையால் விமர்சனம் எழுந்து அவரது திருத்தணி பூர்வீக வீடு கொளுத்தப்பட்டது. பொதுவாக வன்முறைகளை அவர் கண்டித்தாலும் அவை மூளாமல் இருக்க ஆட்சியாளர்கள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். இந்திபிரச்சனையை கையாண்டதில் அவருக்கு அரசாங்கம் மீது விமர்சனம் இருந்தது என்பது அப்போது வெளித்தெரியாமல் போனது. நமது ராணுவ செலவு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க சீனா, பாகிஸ்தானுடன் நல்லுறவை மேம்படுத்தவேண்டும் என அவர் அறிவுறுத்தினார். ஷேக் அப்துல்லா, ஜெயபிரகாஷ் , கம்யூனிஸ்ட்கள் இதை வரவேற்றனர். இருநாடுகளும் தங்கள் இராணுவ மனப்பாங்கிலிருந்து வெளிவரவேண்டும் என்பதை பாகிஸ்தான் பிரசிடெண்ட் அயுப்கான் வரவேற்றார். ஆனால் நடைமுறையில் காஷ்மீருக்குள் ஊடுருவல் என்பதை நிகழ்த்தினார் . பாகிஸ்தானுடன் போர் பிரச்சனையில் ராதாகிருஷ்ணன் எகிப்தின் நாசர் போன்றவர்களை புரியவைக்க முயற்சித்தார். அரபுநாடுகளுக்கு இந்திய நியாயம் போய் சேரவில்லை என்பதை நாசர் கூறினார். டிட்டோ சீனா- பாகிஸ்தான் நிலைப்பாட்டை கண்டித்தார். இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை காஷ்மீர் என்றார். அமெரிக்காவோ சுதந்திர காஷ்மீர் அல்லது பொதுவாக்கெடுப்பு என்கிற நிலைக்கு இந்தியாவை கொணர்க என்ற செய்தியை கோசிஜினுக்கு தந்தது. அதேநேரத்தில் தாஷ்கண்ட் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானை வலியுறுத்தியது. ராதாகிருஷ்ணன் உரிய ஆலோசனைகளை நல்கினார் . தாஷ்கண்ட் டெக்லரேஷன் விவாதம் நடைபெறமுடியாமல் சாஸ்த்ரி மரணம் விடியற்காலை ஜனவரி11 1966ல் நிகழ்ந்தது. அடுத்த பிரதமர் தேர்வு என்கிற கடமையை குடியரசுத்தலைவர் எதிர்கொண்டார். நந்தா, மொரார்ஜி, இந்திரா, யஷ்வந்த்ராவ் சவான் ஆகியோர் பிரதமர் விருப்பத்தில் இருந்தனர். நந்தாவின் போதாமை, சவானுக்கு டெல்லி சூழல் போதாமை, மொரார்ஜி நண்பர் எனினும் பிடிவாதம் கொண்டவர் ஆகியவற்றை எடைபோட்டு ராதாகிருஷ்ணன் இந்திரா பொருத்தமானவர் என கருதினார். வெளித்தெரியாமல் அதற்கான வேலைகளை செய்யவும் அவர் தவறவில்லை. அதே நேரத்தில் குடியரசுத்தலைவர் பதவியின் கண்ணியம் காத்தல் என்பதையும் அவர் சாதுர்யமாக செய்தார். மேனன் நந்தாவிற்காக நிற்கிறார், காமராஜர் பிரதமராக விரும்பவில்லை என்ற செய்தியும், இந்திரா தன்னை முன்வைக்க காய்களை நகர்த்திகொள்ளலாம் என்கிற செய்தியும் இந்திராவிற்கு அனுப்பப்பட்டது. தன்னை சந்திக்க வருபவர்களிடம் விசாலபார்வை கொண்ட ஒருவரை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என்றார் ராதாகிருஷ்ணன். ஜனவரி 15 அன்று 8 முதல்வர்கள் இந்திரா என்றனர். ராஜாஜி நந்தா ஓராண்டாவது இருக்கட்டும் என்றார். இருப்பதில் இந்திராதான் உகந்தவர் என்கிற ராதாகிருஷ்ணன் ஆலோசனையை காமராஜர் அமுலாக்க முனைந்தார். இந்திரா என்பது ஏற்கப்பட்டவுடன் அமைச்சரவை உருவாக்கத்தில் நந்தா, மேனன் கோரிக்கைகள் இருந்தன. அசோக் மேத்தாவை காமராஜர் விரும்பவில்லை. ஜெகஜீவன்ராம் பெயர் அவர் மீதிருந்த சில குற்றசாட்டுக்களையும் மீறி இடம்பெறுவது சரியல்ல என்கிற ராதாகிருஷ்ணன் அறிவுரையை இந்திரா ஏற்கவில்லை. இந்திரா மீது மிகுந்த நம்பிக்கை வைத்தாலும் அரசாங்க தவறுகளை வழக்கம்போல் விமர்சிப்பவராக ராதாகிருஷ்ணன் இருந்தார். இந்திராவிற்கு கற்றுக்கொள்ள அவகாசம் தேவை. பிரச்சனையில்லாமல் பார்த்துக்கொள்ளும்படி காமராஜரிடம் எடுத்துரைத்தார். காமராஜருக்கு துணைபிரதமர் பதவி என்பதை இந்திரா ஏற்காமல் உள்துறை கொடுக்கலாம் என்றார் . காமராஜர் பதில் ஏதும் தரவில்லை. அருனா ஆசாப் அலி சென்று இந்திராவிற்கு மொரார்ஜியே மேல் என சொன்னார். குடியரசுத்தலைவர் தேர்தல் நெருங்கியபோது மீண்டும் குடியரசுதலைவராக ராதாகிருஷ்ணன் என ஹிரன்முகர்ஜி, ஜெயபிரகாஷ் போன்றவர் பேசினர். புத்திபூர்வமான ஒரேகுரல் என்கிற புகழ் அவருக்கு கிட்டியது. மாதிரி சர்வே அவரை 76 சத வாக்கு கொடுத்து அவரின் செல்வாக்கை காட்டியது. ஆனால் 1966 டிசம்பர் 4 அன்று தனது வலக்கை செயலிழக்க, பேச முடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது. பேசுவதற்கு பயிற்சி கொடுத்தனர். அவர் இந்திராவிடம் ஜாகீர் ஹுசைன் பொறுப்பேற்கட்டும் என்றார். இந்திரா அமைதியாக இருந்து உதவ வேண்டினார். ஜனவரி 26 குடியரசு அணிவகுப்பிற்கு கூட செல்லமுடியாத அளவு அவர் பாதிக்கப்பட்டிருந்தார். ராஜாஜியும், ஜனசங்கமும் அவர் மீண்டும் குடியரசுத் தலைவராக இருப்பதே நல்லது என்றனர். இந்திராவிற்கு சில நேரம் தன்னை மகள்போல் அறிவுரை கூறும் முறையில் அவர் உரிமை எடுத்துக்கொள்வதில் சங்கடம் இருந்தது. ஜாகீர் என்றால் சரியாக இருக்கும் என நினைத்தார். காமராஜர் ராதாகிருஷ்ணன் என பேசியதில் இந்திராவிற்கு வருத்தம் ஏற்பட்டது. ஜாகீருக்கு அவர் வாக்கு கொடுத்த நிலையில் இருந்தார். தனக்கு பெருகி வரும் செல்வாக்கை கண்டு ராதாகிருஷ்ணன் என்னை இருக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர் என்ன செய்வதுஎன பேசத்துவங்கினார். சுதந்திராவின் மினுமசானி வேறு கருத்தில் இருப்பதை அறிந்த இந்திரா ராதாகிருஷ்ணனை தாண்டி யோசிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். காங்கிரசில் இருவேறு கருத்துக்கள் நிலவின. எதிர்கட்சிகள் தலமைநீதிபதியை போடலாம் என பேசத்துவங்கின. சூழல்களை உணர்ந்து ராதாகிருஷ்ணன் தான் இல்லை என சொல்ல விழைந்தார். காமராஜர் அவசரப்படவேண்டாம் என சொன்னதால் அதை உடன் வெளிப்படுத்தவில்லை. ராதாகிருஷ்ணன் ஒருமித்த கருத்தில்தான் ‘தனது பதவி ஏற்புகள்’ நிகழ்ந்துள்ளன. தேவையில்லாமல் தன்னை பலியாக்கவேண்டாம் என்றார். ஆனால் காமராஜர் பொறுத்திருங்கள் என சொல்லிவந்தார். ஏப்ரல் 9 1967ல் உயர் பொறுப்பு குறித்து தேவையற்ற சர்ச்சைகள் எழுவது வருத்த்மளிக்கிறது. பதவியில் மீண்டும் என்பதில்லாமல் ஓய்வு பெறவேண்டும் என்கிற எண்ணம் வலுப்பெற்றுள்ளது. மனம் உடைந்துள்ளேன் என அறிவித்தார். சென்னைக்கு குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இருந்தாலும் தனிமையை உணர்ந்தார். . அவர் மெலிந்து ஒடுங்கினார். ஏப்ரல் 17 1975ல் அவர் மறைந்தார். யுனிவர்சல் மனிதனை உருவாக்காத மதம் யுனிவர்சல் நம்பிக்கையை தரமுடியாது என்றவர் அவர். தன்னை அவர் அவ்வாறு தகவமைத்துக்கொண்டார். ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார். தனிமனித வளர்ச்சி என்பதை வலியுறுத்தினார். மானுட வாழ்வின் இறுதி உண்மை தனிமனித வளர்ச்சியில் இருக்கிறது என்றார். தனது அரசியல் தத்துவம் என்பதுcivilised Individualism என்றார். அவருடன் உரையாடுவது வகுப்பறையில் அற்புத உரைகேட்டதுபோல் இருக்கும் என அவரை அறிந்தவர்களின் பதிவு. மனிதனை ம்னைதாபிமானம் நிறைந்தவனாக மாற்ருவது சமூகம் மனிதாபிமானம் கொண்டதாக இருப்பதற்கு அவசியமானது. தெருவிளக்கின் உயரம் காட்டியல்ல, நட்சத்திரங்களைக் காட்டி பேசவேண்டும் என்பார். நமது மக்கள் சிறந்த வாழ்க்கையும், மனிதாபிமான சூழலையும் பெற உரிமை உடையவர்கள் என்பதை அழுத்தமாக சொல்லி வந்தார். அவரது இறப்பின் போது குடியரசுத்தலைவர் அகமதுவும்,பிரதமர் இந்திராவும் வராமல் போன வருத்தத்தை கோபால் பதிவு செய்துள்ளார். 1988ல் ராதாகிருஷ்ணன் நூற்றாண்டில் நினைவு மலர் ஒன்றை ராஜ்யசபா வெளியிட்டது. அதில் குடியரசுத்தலைவராக இருந்த வெங்கட்ராமன் செய்தி பதிவானது. இராதாகிருஷ்ணனை உலகம் முழுதும் கேட்பவர்கள் இருந்தனர்’ என குறிப்பிட்டிருந்தார். விடுதலை தினமான 14-15, 1947ல் ராஜேந்திரபிரசாத், நேருவுடன் ராதாகிருஷ்ணன் உரையாற்ற அந்த மிக முக்கிய வரலாற்றுத் தருணத்தில் வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் உரையில் வாஷிங்டன், நெப்போலியன், கிராம்வெல், லெனின், முசோலினி, ஹிட்லர் ஆகியவர்கள் பதவிக்கு ஆட்சிக்கு வந்ததை ஒப்பீடு செய்து விடுதலைக்கான பங்களிப்பில் காந்தியின் உயர்வை எடுத்துக் கூறினார் . நமது வாய்ப்புகள் மிகப்பெரியவை. ஆனால் அதிகாரம் திறமையை கபளிகரம் செய்தால் நாம் வீழ்வோம். திறமையை வளர்த்து வாய்ப்புகளை பயன்படுத்தும் கலையை கற்போம். இனி நாம் பிரிட்டிஷாரை குறைகூறிக்கொண்டிருக்க முடியாது என தனது எச்சரிக்கையை அவர் அத்தருணத்தில் தரத்தவறவில்லை. சிலவரிகளாவது எழுதாமல் இருந்தால் அந்நாளில் மிகவும் வருத்தம் அடைவார். அவர் எவரையும் குருவாக கொள்ளவில்லை. தான் எவருக்கும் குரு என உரிமை பாராட்டவும் இல்லை என கோபால் தன் தந்தை பற்றி சொல்கிறார் . உனது ஆசிரியர்கள் செய்ததையெல்லாம் செய்யாதே. அப்பழுக்கற்றவை என ஏதாவது செய்திருந்தால் அதை செய் என்ற உபநிடத பாடலை கோபால் தருகிறார். Ref: 1. RadhaKrishnan A Biography- Saravapalli Gopal 2. The Ideal View of Life – Dr Radhakrishnan 3. Radhakrishnan Commemorative Vol- Rajya Sabha ஆச்சார்யா கிருபளானி [] நவீன இந்தியாவின் அரசியல் விவாத களத்தில் கிருபளானி குறிப்பிடத்தகுந்த பங்காற்றியவர் . ஆழமான அறிவு மற்றும் அனுபவங்களின்பாற்பட்டு கருத்துக்களை ஒளிவு மறைவின்றி எடுத்துவைத்தவர். பல சோசலிஸ்ட் தலைவர்கள் போலவே மார்க்சியம்- காந்தியம் குறித்த உரையாடல்களில் ஆழத்தோய்ந்தவர். விடுதலை இந்தியாவில் எதிர்கட்சி தலைவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் ஆச்சார்யா கிருபளானி . காங்கிரசில் இருந்தபோதும், பிரஜா சோசலிஸ்ட் தலைமையில் ஆனாலும் கட்சியின் கொள்கைகளை அப்படியே பிசகின்றி பின்பற்றும் மனோபாவம் கொண்டவராக கிருபளானி தன் அரசியலை அமைத்துக்கொள்ளவில்லை. தவறு என்று தான் உணரும் ஒன்றுடன் சேர்ந்து உழைப்பதில்லை என்கிற காந்திய மனோபாவம் அவரிடம் இருந்தது. ஜீவத்ராம் பகத்ராம் கிருபளானி இன்றுள்ள பாகிஸ்தானின் அய்தராபாத்தில் 1888ல் பிறந்தார். அவரது ஜாதகம் தொலைந்துபோனதால் அவரால் தனது பிறந்த மாதம் தேதியை சரியாக சொல்லமுடியவில்லை. அவரைப்பற்றி எழுதக்கூடியவர்கள் அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாளில் அவர் பிறந்ததாக அறிந்து நவம்பர் 11, 1888யை குறிப்பிட்டு வருகின்றனர். கிருபளானி தந்தையார் தாசில்தாராக இருந்தவர். அக்குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் ஆறாவதாக பிறந்தவர் கிருபளானி.. தந்தை வைஷ்ணவ பற்றாளர். குடும்பத்தில் இரு மகன்கள் இஸ்லாமிற்கு மாறினர். கிலாபத் இயக்கம், துருக்கியை காப்பாற்றுதல் என சென்று மறைந்தனர். பம்பாயில் கிருபளானியின் மாணவர் பருவம் கடந்தது. அவரது அறை முழுவதும் ஆங்கில கவிதை நூல்களாக இருந்தது. வங்கப்பிரிவினையின்போது மாணவர்கள் கிளர்ச்சியில் கிருபளானி ஈடுபட்டதால் கல்லூரிகள் அவரை சேர்க்க மறுத்தன. பின்னர் புனே பெர்குசான் கல்லூரியில் 1907ல் சேர வாய்ப்பு கிடைத்தது. சிந்து மாகாணத்தில் தனது வரலாறு, பொருளாதார முதுகலைப்படிப்பை அவர் முடித்தார். முசபர்பூர் கல்லூரியில் 1912ல் வரலாற்று பேராசிரியர் பணியில் சேர்ந்தார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் காந்தியுடன் நேரடி தொடர்புகொண்டவராக கிருபளானி மாறினார். பெரோஷ்மேத்தா, கோகலே, பானர்ஜி என மிதவாதிகளுக்கும் திலகர், பிபன் சந்திரபால், அரவிந்தர் போன்ற தீவிரவாதிகள் என அறியப்பட்டவர்களுக்கும் இடையேயான மோதல் களமாக காங்கிரஸ் இருந்தது. கிருபளானி இளைஞர்கள் பலரைப்போல தீவிரவாதிகள் பக்கம் ஈர்க்கப்பட்டார். காந்தி தன்னை கோகலேவின் சீடர் என அறிவித்திருந்தாலும் அவரின் மனோதைரியம் கிருபளானியை கவர்ந்தது. பேச்சில் தீவிரவாதமும் நடைமுறையில் அதை காட்டாமல் இருப்பவர்கள் மத்தியில் காந்தியின் தைரியமான அணுகுமுறை மேலானது என கருத துவங்கினார் கிருபளானி. பேராசிரியர் ஊதியத்தில் மிக சிக்கனமாக செலவை செய்துவிட்டு பணத்தை வங்கப் போராளிகளுக்கு அனுப்பிவந்தார் கிருபளானி. காந்தியுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் பழகி விவாதித்து பின்னர் அவரின் கருத்துக்களுடன் ஒத்துப்போகும் நிலையை கிருபளானி மேற்கொள்கிறார். காந்தியை முசாபர்பூர் அழைத்துவந்து தன்னுடன் தங்க வைக்கிறார். கல்லூரிமுதல்வரிடம் கிருபளானி குறித்து அரசாங்கம் விளக்கம் கேட்டது. கிருபளானியை காப்பாற்றும் வகையில் பதிலை முதல்வர் தந்துகொண்டிருந்தார். ஆனாலும் காந்தி வந்துபோன 15 ஆம் நாள் கிருபளானி கல்லூரி ஆசிரியர் பதவியிலிருந்து வெளியேற்றப்படுகிறார். 1917 முசபர்பூர் பகுதி சார்ந்த சம்பரான் போராட்டத்தில் அரசாங்கத்தை எதிர்த்து காந்தி நின்றவிதம் அவர் பெயர் நாடுமுழுவதும் பிரபலமாக உதவியது. இந்நிகழ்வு கிருபளானியை நெகிழவைத்தது, டாக்டர் ராஜேந்திரபிரசாத்துடனும் தோழமை கிட்டியது. பெரும்பாலான நேரத்தை காந்தியுடன் செலவழிப்பதையே கிருபளானி விரும்பினார். சில மாதங்கள் பண்டிட் மதன் மோகன் மாளவியாவிற்கு தனிச் செயலராக இருந்தார். 18 மாதங்கள் பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் ஆசிரியராக இருந்தார். பின்னர் காந்தியுடன் அவரது நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பிரிட்டிஷாரின் ரெளலட் சட்டம், ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் காந்தியின் அகிம்சை முறைப்போராட்டங்கள் மீதான சந்தேகத்தை கிருபளானி அவர்களுக்கு தராமல் இல்லை. 1922 ஒத்துழையாமையை செளரி செளராவை காண்பித்து அவர் விலக்கிக்கொண்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அந்நேரத்தில் காந்தியின் பக்கம் கிருபளானி மிகுந்த நம்பிக்கைவைத்து நின்றார். அதேபோல் சுயராஜ்யவாதிகள் சட்டமன்றங்களுக்கு செல்லவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தபோது காந்தி அதை ஏற்கவில்லை. காந்தி பக்கம் கிருபளானி அப்போதும் நின்றார். 1920 பனாரஸில் பேராசிரியராக இருந்தபோது ‘காந்தி ஆசிரம்’ என ஒன்றை அங்கு அமைத்தார் கிருபளானி. இளம் டாக்டர்கள், வக்கீல்களுடன் சேர்ந்து சத்தியாக்கிரக போராட்டத்தை தீவிரப்படுத்தினார். கைது செய்யப்பட்டார். காசி வித்யாபீடம், வல்லபாய் பட்டேல் முயற்சியால் நிறுவப்பட்ட குஜராத் வித்யா பீடம் என இரண்டிற்கும் சென்று ஏராள இளைஞர்களுக்கு தேசப்போராட்ட உத்வேகத்தை கிருபளானி ஏற்படுத்தினார். காந்திக்கு விருப்பமாக இருந்த குஜராத் வித்யா பீடத்தில் 5 ஆண்டுகள்பணி செய்துகொண்டிருந்தபோதுதான் அவர் ஆச்சார்யா என அழைக்கப்படலானார். 1934ல் காங்கிரசில் செயலர் பொறுப்பு அவருக்கு தரப்பட்டது. பணிநிமித்தம் நாடு சுற்றமுடிந்தது. வறட்டுத்தனங்களுக்கு இடம் கொடுக்கவிரும்பாத, தனது சொந்த அனுபவங்கள் அடிப்படியில் பக்குவமாக அவர் வளரத்துவங்கினார். தலைமை பண்புகளுக்குரிய கட்டுமானங்கள் அமைந்த மனிதராக கிருபளானி உயரத்துவங்கினார். அவர் இயல்பிலேயே சற்று கூச்ச சுபாவம் உடையவராக இருந்தார், விளம்பரம் தேடிகொள்ளாதவராகவும், எளிமையாக இருக்கவும் கற்றார். அவர் கூட்டங்களில் ஏறி நின்று உஷ்ணம் கிளப்பும் பேச்சாளர் வகைப்பட்டவரல்லர். பொறுப்புடன் பாதை காண வேண்டும் என்கிற தவிப்புள்ளராக இருந்தார். சகமனிதர்களுடன் கருத்து வேறுபடும்போது தனிப்பட்ட தாக்குதல்கள் கூடாது என நினைத்தார். ஆனால் அனல் பறக்கும் விவாதங்களை அவர் நடத்தாமல் விட்டதில்லை. நாடாளுமன்ற உரைக்காக பிறந்தவர் போல் அவரது உரைகள் அமைந்ததாக அவரைப் பற்றி எழுதிய பார்கவா தெரிவிக்கிறார். குறிப்புகள் எடுத்துக்கொண்டுபோனாலும் அவர் வேகமான சிந்தனை ஆற்றல் தெறிக்க பேசுவதுபோல் இருக்கும் என்கிறார் பார்கவா. அக்சாய் குன்றுகள் சீனா கைப்பற்றியது குறித்த விவாதத்தில் அவர் நேருவை பதில் சொல்லமுடியாத அளவு கடுமையாக விமர்சித்தார். தொலைநோக்கில் கனவுலகில் கிருபளானி அவர்கள் எப்போதும் இருக்கிறார் என நேரு விமர்சித்தார். அதற்கு பதிலாக ஆம் நமது தொலைநோக்கும் கனவும் பலித்தன. இனியும் பலிக்க வேண்டுமென்றார் கிருபளானி. 1946வரை அவர் காங்கிரசின் செயலராக இருந்தார். சுபாஷ் தலைவராக இருந்தபோது அவருடன் கிருபளானிக்கு ஒத்துப்போகவில்லை. ஜவஹர் தலைவராக இருந்தபோதும் அவ்வளவாக உடன்பட்டிருக்கவில்லை. 1946 இறுதியில் காங்கிரஸ் தலைவராக கிருபளானி இருக்கவேண்டும் என காந்தி விரும்பினார். எதிர்ப்பு கிளம்பியது. அனைத்தையும் மீறி காந்தி உறுதியாக இருந்ததால் அக்டோபர் 1946ல் கிருபளானி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் பதவி விலகவேண்டியிருந்தது. 1950ல் ஜவஹர்லால் மீண்டும் கிருபளானி காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என விழைந்தார். புருஷோத்தம்தாஸ் அவர்களை பட்டேல் மற்றும் வலது பிரிவினர் நிறுத்தினர். புருஷோத்தம் தாஸ் டாண்டன் 1306, கிருபளானி 1092 வாக்குகள் வாங்கினர். நேரு தான் தோற்றதாகவே எடுத்துக்கொண்டார். நேரு கிருபளானிக்கு நேரிடையாக இறங்கி பணியாற்றவில்லை. ஆனால் பட்டேல் டாண்டனுக்காக பணியாற்றினார். பட்டேல் அவ்வாண்டே மறைந்தார். கிருபளானியை மத்திய கமிட்டியில் இணைக்க நேரு கோரியபோது டாண்டன் ஏற்க மறுத்தார். தனக்கு இனி காங்கிரசில் இடமில்லை, வகுப்புவாதிகளை உள்ளிருந்து போராடமுடியவில்லை என்கிற உணர்வு கிருபளானிக்கு உருவானது. அவர் 1951ல் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி என்பதை உருவாக்கினார் II காந்தி கிருபளானியை பேராசிரியர் (‘Professor’) என்றுதான் அன்புடன் அழைத்துவந்தார். விடுதலைக்கால ‘நேரு சர்க்கார்’ தான் காங்கிரஸ் பொறுப்பில் இருந்தபோது கொள்கை அமுலாக்கம் குறித்து தன்னுடன் கலந்து பேசவில்லை என்கிற வருத்தம் கிருபளானிக்கு இருந்தது. நாடுபிரிவினை குறித்த சிம்லா மாநாட்டிற்கு ஜின்னா எதிர்க்கிறார் என்கிற பெயரில் காங்கிரஸ் தலைவராக இருந்த கிருபளானி அழைக்கப்படவில்லை. நேருவை ஒப்பிடுகையில் கிருபளானி பட்டேலிடம் தள்ளியே இருந்தார். மதசார்பின்மை பிரச்சனையில் நேரு போல அவ்வளவு உறுதிப்பாட்டுடன் பட்டேல் இல்லை என்பதை தலைமைபண்புக்குரிய அழகல்ல என்று கிருபளானி கருதினார். அப்போதுதான் நாடு விடுதலை அடைந்துள்ளது என்பதாலும் நேரு மீதான கவர்ச்சி உச்ச அளவில் இருந்ததாலும் கிருபளானியின் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி (கே எம் பி பி) போன்ற எதிர்கட்சிகள் மக்களிடம் போய் சேரமுடியவில்லை. 1952 பொதுத்தேர்தலை அக்கட்சி பிறந்தவுடனேயே சந்திக்க நேர்ந்தது. கிருபளானி உட்பட கட்சியினர் தோற்றனர். காங்கிரசிற்கு மாற்றாக ஜனநாயக சக்திகள் இணைவதை- சோசலிஸ்ட்களுடன் இணைவதை அவர் விரும்பினார். ஆனால் சோசலிசம் என்பதை வறட்டு கோட்பாடாக பேசுவதை ஏற்கமுடியாது என்றார். சமுக நீதி என்பதே இப்போது சரியான முழக்கம் என்றார். சோசலிசமா சமுகநீதியா என்கிற கட்டுரை ஒன்றைக்கூட அவரது தொண்டர்கள் விளக்கத்திற்காக எழுதினார். 1954 பிரஜா சோசலிஸ்ட் கட்சியின்(PSP) நாக்பூர் மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்தார். அங்கு கோஷ்டி சண்டைகளும் தனிநபர் தகராறுகளும் இருப்பதை கண்ணுற்று தான் ஏமாற்றம் அடைந்ததாக கருதினார். இடைத்தேர்தல் ஒன்றில் காங்கிரஸ் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவில்லை, கிருபளானி நாடாளுமன்றம் சென்றார். 1957லும் அவர் வெற்றி பெற்றார். ஆனால் 1962ல் அவர் கிருஷ்ணமேனனிடம் தோற்றார். பிறகு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது துணவியார் சுசேதா கிருபளானி உத்தரபிரதேசத்தில் காங்கிரசை வழிநடத்திக்கொண்டிருந்தார். துணைவியாரின் அரசியலை முன்வைத்து கிருபளானி மீது சில விமர்சனங்கள் எழுந்தன. சுசேதா தன் கணவரின் காந்திய கொள்கைகளை ஏற்காத நபரல்ல என்கிற விளக்கம் தரநேர்ந்தது. 1920களில் சுசேதா (Sucheta) இளம்பெண்ணாக கிருபளானி உறவினர் வீட்டில் தங்கி தனது மேல்கலை (MA) டெல்லியில் படித்துக்கொண்டிருந்தார்.. நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பீகார் நிலநடுக்கத்தின்போது களப்பணியாற்றினர். சுசேதா பனாரஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பணியில் சேர்ந்தார். காந்திஜி சிறையில் இருந்ததால் அவர் ஒப்புதலை பெற்று மணமுடிக்கலாம் என இருவரும் மூன்று ஆண்டுகள் காத்திருந்தனர். காந்திக்கு திறமையான கிருபளானியை இழந்துவிடக்கூடாதே என்கிற தயக்கம் இருந்தது. நாங்கள் இருவரும் காங்கிரசில் பணிபுரிவோம் என சுசேதா உறுதியளித்தார். ஆனால் காந்தி வேறு ஒருவரை பார்த்து மணந்துகொள் என்றே அறிவுறுத்தினார். சுசேதா காந்தியுடன் விவாதம் செய்து பிடிவாதமாக கிருபளானியைத்தான் மணப்பேன் என்றார்.. காந்தியும் தனது ஏற்பை நல்கினார். கிருபளானி பொதுவாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவராக இருப்பார். காந்தி இறந்தபோது கூட அவர் அழவில்லை. அப்படியே உள் உறைந்துபோனார். கால இடைவெளிகளில் அரசாங்கங்களை மாற்றுவதுதான் ஜனநாயகம். எவ்வளவு சிறந்த அரசாங்கமாக இருந்தாலும் அதை தொடர்ந்து நீடிக்கவிட்டால் அது மக்களிடம் பாராமுகம் கொள்ளும். லஞ்ச ஊழலுக்கு உள்ளாகும் என்பதை அழுத்தமாக பேசிவந்தார் கிருபளானி. அரசாங்கம் தன்னை அமைத்துக்கொள்வதில் அன்றாட நடவடிகைகளில் சிக்கனமாக இருக்கவேண்டும் என விரும்பினார். அவசியமற்ற செலவுகளை ஆடம்பரங்களை தவிர்க்கவேண்டும் என்கிற விமர்சனப்பார்வையை வெளியிட்டுவந்தார். நிர்வாக நேர்மை இல்லையெனில் எதையும் சாதிக்கமுடியாது. மாநிலத்திலும், மத்தியிலும் மிருகபலம் இருக்கிறது என்பதாலேயே ஆரோக்கியமான விமர்சனங்களைக்கூட ஆட்சியில் உள்ளோர் பொருட்படுத்தாவிட்டால் ஜனநாயகத்திற்கு ஆபத்து நேரும் என்றார். கலாச்சாரம் என்பதை மொழியுடன் சமப்படுத்தி பார்க்ககூடாது என்பது அவரது கருத்து. பலமொழி இருந்தாலும் நமக்கு அடிப்படையான கலாச்சாரம் இருக்கிறது. வேதம், உபநிடதம் ராமாயணம், மகாபாரதம் என மொழியைத்தாண்டி பொதுவாக புரிந்து கொண்டுள்ளோம். கீதை என்பதை குஜராத் கீதை, தமிழ் கீதை என்றெல்லாம் பிரித்து பேசமுடியுமா என அவர் வினவினார். புத்தரையும், மகாவீரரையும் பிரதேச கடவுளாக்கிவிடமுடியுமா என்றார்.. இஸ்லாம் மற்றும் அய்ரோப்பியர் கொடைகளையும் நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் என்றார். குருநானக், கபீர், துக்காராம் போன்றவர்களையும், ராஜாரம்மோகன்ராய், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், திலகர், காந்தி உள்ளிட்டவர்களை இந்தியாவின் மகத்தான மனிதர்களாகவே ‘வட்டாரங்களுக்கு’ அப்பாற்பட்டு புரிந்துகொள்ளவேண்டும் என்றார். இந்து மேதைமை என்பது தீவிர மறுமலர்ச்சியை ஏற்காது என்கிற கணிப்பு 50 ஆண்டுகளுக்கு முன்னர் அவரிடம் இருந்தது. ஆனால் அக்கணிப்பு இன்று பொய்த்துபோய்விட்டதே என்கிற கவலையை கொள்ளாமல் இருக்கமுடியாது விவசாயம் மட்டுமே நாட்டை முன்னேற்றிவிடாது. தொழில்வளர்ச்சி தேவைதான். முதலாளித்துவ முறையிலான தொழில்வளர்ச்சி, கம்யூனிஸ்ட் நாடுகளில் உள்ள அரசு முதலாளித்துவ வளர்ச்சி என்கிற இரு அனுபவம் இருக்கிறது. இரண்டிலும் மக்கள் பாதிக்கப்பட்டே உள்ளனர். காந்தி பேசிய கிராம வளர்ச்சி, தன்னிறைவு கிராமங்கள் என்பது வெறும் விவசாயம் சார்ந்தது மட்டுமல்ல. அங்குள்ள தொழில் சார்ந்ததும்கூட என்றார் கிருபளானி. மையப்படுத்தப்பட்ட முறையில்தான் தொழில் வளர்ச்சி என்கிற மேற்கு கருத்து நம்மிடம் வலுவாக அமர்ந்துவிட்டதால், பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சி (decentralised industrial growth) என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம் என்றார்… காந்தியின் கழிப்பறையை சுத்தம் செய்யும் தொண்டர் வேலைத்துவங்கி காங்கிரசின் உயர்வேலைகள்வரை 1917-47 ஏறக்குறைய 30 ஆண்டுகள் காந்தியுடனேயே இருந்து பார்த்தவர் கிருபளானி. மீரத் காங்கிரஸ் அமர்வில் (1946) அவர் அதன் தலைவராக இருந்து மிக முக்கிய உரை ஒன்றை தந்தார் . இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு அழுத்தம் கொடுத்தார் காந்தியிடமிருந்து பெற்றுக்கொண்ட அகிம்சையால் நாடு தன்னை உயர்த்திக்கொள்ளும் என்றார். எவர் வாளை நேசிப்பாரோ அவர் அதனாலேயே மடிவர். காந்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு வழிமுறையின் தூய்மை என்பதிலேயே உள்ளது என்றார். குறுகிய வழிகளால் உயர்நோக்கத்தை அடையமுடியாது என்கிற காந்தியம் உலகிற்கு புதியது. உலகம் என்று அதை ஏற்குமோ தெரியாது என்றார். மீரத் அமர்வில் அரசியல் அமைப்பு சட்ட அசெம்பிளிக்கு ஜின்னா வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அகிம்சையும் சர்வாதிகாரமும் முரண்படுபவை . நமது அரசியல் ஜனநாயகம் எந்த ஒரு வர்க்கத்தின் , சாதியின் ஆட்சியாக இருக்காது என்றார். அது மக்களால் மக்களுக்கானதாக அமையவேண்டும் . தனிநபருக்கு சுதந்திர செயல்வெளியை மறுத்தால் அரசியல் ஜனநாயகம் கூட சர்வாதிகாரமாக மாறிவிடும் என்கிற எச்சரிக்கையை அவர் தந்தார். இஸ்லாமியர் இந்த நாட்டிற்கு வருபோது இங்குள்ள லட்சக்கணக்கான இந்துக்களைப்பார்த்து அஞ்சவில்லை. ஆனால் நாடு விடுதலைப்பெற்று ஒரே நாடாக இருவரும் வாழலாம் என்றால் ஏன் அச்சப்படவேண்டும் என்கிற வினாவை அவர் தனது தலைமை உரையில் எழுப்பினார். இன்றுள்ள பிரதேச மாநிலங்கள்படி 7 மாநிலங்களில் இந்துக்கள் பெரும்பான்மை என்றால், 5 மாநில பிரதேசங்களில் இஸ்லாமியர்தான் பெரும்பான்மை. இதில் அரசியல் சிறுபான்மை என்கிற எண்ணம் தேவையில்லையே என்றார். இஸ்லாமியர்களை அந்நியர் என பார்க்கும் இந்துமனம் தனது சொந்த மதத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் சேர்த்தே கேடு விளவிக்கிறது என்றார். மதத்தின் பெயர் சொல்லி நடக்கும் அரசியல் தவறுகளை அவர் சுட்டிக்காட்ட விமர்சிக்க தயங்கவில்லை. III கிருபளானி சுயராஜ்யா, சர்வோதயா, இல்லஸ்ட்ரேடட் வீக்லி, விஸ்வபாரதி போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவந்தார். புத்தகங்கள் எழுதியுள்ளார். ‘சர்கா அரசியல்’ என்கிற கட்டுரையை அவர் எழுதினார். சர்வதேச வர்த்தகம், தேசத்தின் தொழில் வளர்ச்சி, கிராமப்புற குடிசைத்தொழில் வளர்ச்சி குறித்து அதில் விவாதித்தார். வலுத்தவனுக்கும் பலவீனமானவனுக்கும் இடையே உள்ள வர்த்தகம் ஒருபோதும் சமத்துவத்தை உருவாக்காது என்றார். நமக்கு குடிசைத்தொழில் சார்ந்த பொருளாதாரம்தான் வேலையின்மையை போக்கும். வறுமையை குறைக்கும். விவசாயிக்கு அனுசரணையான தொழிலாகவும் இருக்கும் என அவர் எழுதினார். காந்திய பொருளாதார கொள்கைகளை முன்னெடுக்கவேண்டிய அவசியத்தை எப்போதும் அவர் வலியுறுத்துபவராக இருந்தார். வளர்ச்சி என்பது அமைப்பாவதுதான். அறிவுஜீவிகள்கூட எண்ணங்களின் அமைப்பாளர்கள்தான். இலக்கியவாதிகளும், கலைஞர்களும் கூட அமைப்பாளர்கள்தான். குறைந்த செலவில், சிலமணிநேரத்தில் மக்களை திரட்டும் நடவடிக்கை எதுவோ அதுதான் பயனளிக்கும். நமக்குள்ள பலவீனமே நம்மால் திரளமுடியாமையே. மக்களை ஈடுபடுத்தும் குணம் நமக்கு கைவரவேண்டும் என்றார் கிருபளானி. மையப்படுத்தப்பட்ட பெருந்தொழில் கலாச்சாரம் மேலிருந்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். ஆனால் நமது குடிசைத்தொழில் கலாச்சாரம் சுய ஆர்வம், பங்களிப்பை மற்றும் ஜனநாயகத்தையும் கூட்டும் என்றார். கிராமத்தில் கிடைத்த வருமானத்தைவிட மில் தொழிலாளி கூடப்பெற்றாலும் அவன் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். அவனின் இழப்பு கணக்கிடமுடியாத ஒன்று என எழுதும்போது அவர் மார்க்சிய பார்வையான அந்நியமாதல் சிந்தனைக்கு நெருங்கி வருகிறார். கூலி அடிமை (Wage slave) என்கிற மார்க்சிய சொல்லாட்சியையும் அவர் பயன்படுத்துகிறார். சர்கா- காதி என காந்தி பேசும்போது அதனை கேலியாக பார்ப்பது சரியானதல்ல என்றார் கிருபளானி. குடிசைத்தொழில் என்பது இயல்பில் சோசலிசத்தன்மையுடைத்தது என எழுதினார். மார்க்ஸ்- எங்கெல்ஸ் பேசிய உபரிமதிப்பு கோட்பாட்டை சுட்டிக்காட்டி ‘காட்டேஜ் தொழில்’ மற்ற முதலாளி எடுத்து செல்லக்கூடிய உபரிமதிப்பை உருவாக்காது என்று பேசினார் கிருபளானி. கிராமத்தொழிலுக்கு தேவைப்படும் கருவிகளை சுலப தவணைகளில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். புரட்சி என்றாலே வர்க்க வெறுப்பு, போராட்டம் என்பதில்தான் உருவாகும்- அமைதியான ஒத்துழைப்பு முறைகளில் வராது என்கிற கருத்தை தான் ஏற்கவில்லை என்றார் கிருபளானி. பரிணாம வளர்ச்சியின் கடைசி அடியாக புரட்சி இருக்கிறது என அவர் புரட்சி குறித்து விளக்கினார். கொடிய வறுமையும், பட்டினியும் எப்போதுமே புரட்சிக்கான நல்ல கருவிகளாகும் என்பது அனுபவத்தில் சரியாக இருக்கவில்லை என்று எழுதினார் கிருபளானி. பழமையான ஒன்று என்பதாலேயே புரட்சிக்கு ஒத்துவராது என குடிசைத் தொழில் பற்றி சொல்லப்படுகிறது. அப்போது வன்முறை என்பது காலம் காலமாக இருக்கின்ற பழமையான ஒன்றுதானே என எதிர்கேள்வியை அவர் வைத்தார். சமூக சீர்திருத்தம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைக்குரிய வேறுபாடுகள் கையாளப்படும் நடவடிக்கைளில் இல்லை. அவை வழிமுறைகளிலும், எந்த நோக்கத்திற்காக அவை நடத்தப்படுகிறது என்பதிலும்தான் இருக்கிறது என விளக்கமளித்து காந்தியின் செயல்களில் புரட்சிகர தனமைகள் இருப்பதாக தனது வாதங்களை அவர் அடுக்கினார். தீண்டாமை குறித்த காந்தியின் போராட்டத்தை ‘பெருமாட்டியின் போராட்டம்’ என கேலி செய்வது சரியல்ல, அது புரட்சிகரபோராட்டம் என எழுதினார் கிருபளானி. மார்க்சிய பொருள்முதல்வாதம் என்பதிலிருந்து அவர் மாறுபட்டு பேசினார். மார்க்சிய பொருள்முதல்வாதம் அறிவியல் அடிப்படையில் என உரிமை கோரினாலும் அங்கு நெறிகளுக்கு இடமிருப்பதில்லை. வழிமுறைகள் பற்றி அது கவலைகொள்வதில்லை. வழிகளை குறித்து எந்த நெறிகோட்பாடுகளையும் வைத்துக்கொள்ளவில்லை என்றார். சோவியத்தில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் பற்றி தனது கடும் விமர்சனங்களை கிருபளானி முன்வைத்தார். லெனினை புதிய கடவுள் ஆக்குகிறார்கள் என்றார். அவர் உடல் பாதுகாக்கப்பட்டு வந்ததை பற்றி விமர்சித்தார். எழுந்துவரும் தேசிய விடுதலை இயக்கங்களையெல்லாம் பூர்ஷ்வா இயக்கம் என்று முத்திரையிடுவதும் தலைவர்களை விமர்சிக்கும் முறையையும் அவர் ஏற்கவில்லை. ருஷ்யாவை கண்டனம் செய்வதற்காக தான் எதிர்வினையாற்றவில்லை என்றும் அதன் கொள்கை குறித்த விமர்சனபார்வையே அவை என்றும் எழுதியிருந்தார் வெற்றி அனைத்தையும் தீர்மானிக்கும் என்பதையும் வலிமை என்கிற முரட்டுத்தனத்தால் சாதித்துவிடலாம் என்பதிலும் அவர் உடன்படவில்லை. அப்படியொரு பார்வை நோக்கி நகரும் மானுட நடத்தை குறித்து தனது கவலையை வெளியிட்டவர் கிருபளானி. உண்மை என்பது கடைபிடிக்கப்படவில்லையெனில் பின் அன்போ, விசுவாம் என்பதற்கு அர்த்தம் இருக்காது. இறைவனின் பெயரால் வெளிப்பட்ட மதவெறித்தனமோ, பாட்டாளிகளின் பெயரால் கம்யூனிச வெறித்தனமோ எதிர்விளைவுகளை உருவாக்கும். பாசிசம்கூட இப்படிப்பட்ட எதிர்விளவுதான் என அவர் பேசினார். சோதனைகளுக்காக அறிவியல் கூடத்தில் அனுசரிக்கப்படும் உகந்த சூழல் என்பது சமூக கூடத்தில் கிடைக்காது. எனவே விஞ்ஞான விதிகள் போன்ற அறுதியிட்டு சொல்லப்படும் விதிகள் சமூக விஞ்ஞானம் என்பதற்கு இருப்பதில்லை என சமுக விஞ்ஞானம் குறித்த தனது பார்வையை கிருபளானி முன்வைத்தார். சமுக மனித நடத்தை பரிசோதனைகள் அறிவியல்கூட பரிசோதனைகளை ஒத்ததல்ல என்றார். புரட்சிக்காக நின்ற பல தலைவர்கள் சோவியத்தில் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு ஒழிக்கப்பட்டுவந்ததை அவர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.. ருஷ்யாவில் பொருளாதார சோசலிசம் வந்திருக்கலாம். ஆனால் அரசியல் ஜனநாயகத்தை மிதித்து அது வெளித்தெரிகிறது என எழுதினார் . அரசு உதிர்ந்துவிடும் என்று மார்க்சியம் பேசும்போது ‘சுய ஒழுங்கு கொண்ட உயர் வளர்ச்சியடைந்த தனிநபர்களின் சமுக இருப்பு’ என்பதையே குறிப்பாக தருகிறது. ஆனால் நடைமுறையில் (சோவியத்) மிகு அதிகாரம் கொண்ட அரசைத்தான் கட்டிவருகிறது என விமர்சித்தார் கிருபளானி. பொருளாதார பலன்கள் என்கிற பெயரில் அரசியல், கலாச்சார, ஆன்மீக பின்னடைவுகளை கம்யூனிசம் தருகிறது என்ற கடுமையான தாக்குதலையும் அவர் சோவியத் அனுபவத்திலிருந்து முன்வைத்தார். சுரண்டல், அநீதி, லாபவேட்டை கொண்டுள்ளதால் முதலாளித்துவத்தை நாம் விமர்சிக்கிறோம். அகற்றப்படவேண்டும் என கருதுகிறோம். காந்தியை பொறுத்தவரை அவர் எந்த கொள்கைக்கும் (தான் பேசுவது உட்பட) தன்னை அடிமையாக்கிக்கொள்ளவில்லை. அரசிற்கு அதிக அதிகாரம் என்பதை கண்டு அவர் அஞ்சினார். அதிகாரம் குவிந்த அரசு எந்திரம் ஆன்மா இல்லாதது என காந்தி சுட்டிக்காட்டினார். அரசு ஜனநாயகரீதியாக செயல்படவேண்டுமெனில் அதுன் பன்மைத்துவ தன்மை கொண்டிருக்கவேண்டும் என விழைந்தார் கிருபளானி . அவர் சொல்லும் அரசில் முதலாளிகளும் தொழிலாளர்களும் எப்படிப்பட்ட பன்முகத்தன்மையை வெளிப்படுத்தமுடியும் என அவர் விளக்கவில்லை. மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் ஜனநாயகமும் ஒத்துப்போகாது என்றார் கிருபளானி. குவிஅதிகாரம் எனில் ஜனநாயகமில்லை (More of Centralism means less of democaracy). என்றார். ஜனநாயக மத்தியத்துவம் (democaratic centralism) என்பதையும் அவர் சரி என ஏற்கவில்லை - வார்த்தை விளையாட்டே என்றார். பொருளாதார பரவலாக்கம் (decentralization) இல்லாமல் அரசியல் பரவலாக்கம் இருக்காது என்றார். காந்தி எந்திரங்களை எதிர்க்கிறார் என்கிற விமர்சனத்திற்கு கிருபளானி விளக்கம் தந்தார்.. காந்திஜி எந்திரங்கள் மீதான கவர்ச்சியை விமர்சித்தார். உயிருள்ள மனித உழைப்பிற்கு எதிராக உள்ளுறைந்த செத்த ஒழிப்பின் வடிவமாக நிற்கும் எந்திரங்களை வைப்பதைத்தான் காந்தி விமர்சித்தார் என்றார் IV வர்க்க சங்கார்ஷ் (varga sangarsh) என்கிற வர்க்கப்போராட்டம் பற்றி பிரஜா சோசலிஸ்ட் தொண்டர்களுக்கு விளக்கம் அளிக்க கிருபளானி தனி கட்டுரை ஒன்றை எழுதினார். மார்க்சிய முழக்கங்கள் குறித்து அதில் அவர் விவாதித்தார். மார்க்சிய தத்துவம் புரிந்து கொள்ளப்படுவதை சுருக்கமாக அவர் 9 அம்சங்களில் எடுத்து சொல்கிறார்.. 1. சமுகவியலும் வரலாறும் பிற விஞ்ஞானங்களைப்போலவே தவிர்க்கமுடியாத விதிகளை கொண்டவை 2. வரலாற்றிலும், சமுகத்திலும் அடிப்படை இயங்குவிதி பொருளாதாரம் 3. மனித வரலாறே பொருதிக்கொள்ளும் இருவேறு வர்க்கங்களின் போராட்டமே. தற்போது முதலாளித்துவ- தொழிலாளி வர்க்கப் போராட்ட கட்டம் 4. பல தொழில்மய நாடுகளில் இருதுருவ வளர்ச்சி வந்துவிட்டது. பிற நாடுகள் அதை நோக்கி போகின்றன. 5. திரளான தொழிலாளர்களின் மோசமடைந்துவரும் வாழ்க்கை நெருக்கடிகள் வர்க்கப்போராட்டம் நோக்கி நகர்த்துகின்றன. 6. திரட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பாட்டாளிகளுக்கு சாதகமாக இப்போராட்டம் முடியவேண்டும். 7. இந்த வன்முறை போராட்ட நிகழ்ச்சிப்போக்கில் போராட்ட வெற்றியை உறுதிப்படுத்திட, புதிய வகைப்பட்ட வர்க்கமற்ற சமுகம் அமைந்திட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் அவசியம் 8. இவ்வழி அமைந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வர்க்கங்களே இல்லாத சமுகத்தை மட்டுமல்லாமல் அரசே உதிர்ந்துபோகும் நிலையை உருவாக்கும் 9. எந்த நாட்டில் புரட்சி வெற்றி பெற்றாலும் அதற்கு உலகளாவிய முக்கியத்துவம் விரிவு இருக்கிறது. உலகம் முழுதும் மூலதன நலன்கள் ஒன்றாகவே இருக்கிறது. அதேபோல் பாட்டாளிகளின் நலன்களும் உலக அளவில் ஒன்றாகவே இருக்கிறது. இவற்றை கிருபளானி மனோதத்துவகைப்பட்ட ஊகங்கள் (metaphysical speculations) என்றே சொல்லமுடியும் என்றார். மார்க்சிற்கு முன்பே பல அறிஞர்கள் முதலாளித்துவ கொடுமைகளை பேசியுள்ளனர். மார்க்ஸ் விவரங்களை எடுத்துக்கொண்ட ராயல் கமிஷன் பல கொடுமைகளை சித்தரித்தது. ஆனால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று சொல்லவில்லை. முதலாளித்துவ உற்பத்திமுறை தந்த பொதுவான அனுபவங்களை அது பேசியது. விஞ்ஞானத்திற்கும் சமுக விஞ்ஞானத்திற்குமான வேறுபாடுகளை அவர் விளக்கினார். சமூக ஆய்வுகளில் விஞ்ஞான ஆய்வைப்போன்று நியூட்ரல் ஆக ஒருவர் செயல்படமுடிவதில்லை. ஆய்வாளர் செயற்பாட்டாளராகவும் இருக்கிறார். விருப்பு வெறுப்புகளை புறம் தள்ளிய ஆய்வுமுறைக்கு அங்கு வாய்ப்பில்லை. சமுக விஞ்ஞானம் மனிதகுலத்தின் காலம்காலமான நினவுகளுடன் ஊடாடவேண்டியுள்ளது. பழக்க வழக்கம், மூடநம்பிக்கைகள், நினைவிற்கு அப்பாற்பட்ட தொடரும் நம்பிக்கைகள் என.. இவற்றை விஞ்ஞான முறைகளால் அளந்துவிடமுடியாது. பெளதீக, உயிரியல், அரசியல், பொருளாதாரம், மதம் என மனித வாழ்க்கையை ஒற்றை காரணத்திற்குள் சுருக்கிவிடமுடியாது. பின்னர் அது பொருளாயத உள்ளுணர்வு (Material mysticism) என்றாகிவிடும். அந்த இறுதி காரணத்தை தேடுவதாக அமைந்துவிடும் என்று தனது விளக்கமாக கிருபளானி எழுதினார். மார்க்சின் உழைப்பு மதிப்பு கோட்பாடு (Labour Theory of Value) குறித்து கிருபளானி விவாதிக்கிறார். பெளதிகம், கணிதம் போல் பொருளாதாரத்தை விஞ்ஞானமாக கார்ல் மார்க்ஸ் பார்த்ததாக சொல்கிறார். ரிகார்டோதான் மதிப்பின் விதி ( foot rule of value ) பற்றி சொல்கிறார். உற்பத்திக்கு ஈடுபடும் பயன் உழைப்பின் நேரம் பொறுத்து பண்டம் அளவிடப்படுகிறது ( An article is measured by the hours of useful labour needed in its production- socially useful labour) என ரிக்கார்டோ கூறினார். இது இறுதியில் சந்தை விலையில் தொழிலாளரை பெறுவது என்றானது. அது நிரந்தர விலைக்குரியதாகவோ, முற்று முழுதான ஒன்றாகவோ இருக்காது. சரக்குகளின் விலையைப்போல தொழிலாளர் விலையும் போட்டிக்குரியதாக இருக்கிறது என்றார் கிருபளானி போட்டி சூழலில் ‘பிழைப்பு ஊதியத்திற்கு’ தங்களுக்கு மலிவாக தொழிலாளர்கள் வேண்டும் என ‘மதிப்பு விதியின்படி’ முதலாளித்துவம் நினைக்கிறது. ஆனால் மார்க்சின் கொள்கைப்படி தொழிலாளி தான் பெறும் பிழைப்பு ஊதியத்திற்கு மட்டும் உழைக்கவில்லை. உபரி உழைப்பை தருகிறார். அதை வைத்துதான் பிற செலவுகளை முதலாளி செய்யமுடிகிறது. அவரிடம் கருவிகள் இருப்பதால்- நிலம்- எந்திரம் மற்றும் ஆலை உடைமையாக இருப்பதால் உபரியை அவரால் அபகரிக்கமுடிகிறது. பாட்டாளிகளின் உழைப்பினால்தான் முதலாளிகளுக்கு இலாபம் உபரி மதிப்பு கிடைக்கிறது. இந்த பொருளாதாரமுறை முரண்பாடுகளை உருவாக்கி வர்க்க மோதலுக்கு இட்டு செல்லும் என்றார் மார்க்ஸ். முதலாளிகள் தாங்களாக விட்டுத் தரமாட்டார்கள்- புரட்சியை சட்டரீதியாக அமைதியான வழிகளில் கொணரமுடியாது என்பது மார்க்சின் கருத்தாக இருந்தது. மார்க்சிடமிருந்து தான் மாறுபடுவதை கிருபளானி விளக்குகிறார். மூலதனம் வளர்ச்சிக்கு தேவை, தொழிலாளர் அனைத்தையும் சம்பளமாக பெற்று செல்லமுடியாது. சேமிப்பு என்பதை புதிய உற்பத்திக்கு எடுத்து சென்றிடவேண்டும். முதலாளிகள் கூட அத்தனை உபரியையும் எடுத்து செல்லமுடியாது உற்பத்திக்கு முதலிட்டாக வேண்டும் என்றார் கிருபளானி. எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய பொதுவிதிகள் என வகைப்படுத்துவது ஆபத்தானது என தாம் கருதுவதாக எதிர்வினையை கிருபளானி தந்தார். கிருபளானியை பொறுத்தவரை தொழிற்சங்கத்தின் அடிப்படியான நோக்கம் பொருளாதரா பலன்களை மேம்படுத்துவது என்பதுதான் . நேரடி அரசியல் புரட்சிக்கானதல்ல தொழிற்சங்கம் என்பதில் அவர் உறுதியாக நின்றார்.. உறுப்பினர்களை திரட்டி தனது கூட்டுபேரவலிமையை தொழிற்சங்கம் நிறுவவேண்டும். அங்கு மூலதனமும் உழைப்பும் பகைமை பாராட்டிக்கொள்ளாமல் அமைதி இயக்கமாக இருக்கவேண்டும் என்றார்.. அவர் காந்திய பார்வையைத்தான் இங்கும் முன்வைக்கிறார். ஜனநாயக நடைமுறையும் தொழிலாளர் இயக்கம் வளர உதவியுள்ளது. அவர்களின் பலமான வாக்குரிமை முக்கிய காரணியாகியுள்ளது என்றார் கிருபளானி. தொழிற்சங்க வாதமும் ஜனநாயகமும் (Trade Unionism and Democracy) என்கிற பெரும் வளர்ச்சி மார்க்ஸ் காலத்திற்கு பின் நாம் காண்பது என்கிறார் கிருபளானி. கம்யூனிஸ்ட்கள் தொழிற்சங்கங்களை அவை பொருளாதார மேம்பாடு என்பதுடன் சுருக்கிக்கொண்டால் விமர்சிக்கிறார்கள். பொருளாதாரவாதம்-புரட்சிகரமானதல்ல என கருதுகிறார்கள். வர்க்கப்போராட்டத்தை அது ஒத்தி வைப்பதாக கருதுகிறார்கள். தொழிற்சங்கம் என்பது முதலாளித்துவம் வீழ்த்தப்படுவதற்கான புரட்சிகர கருவியாக வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பொருதிக்கொள்ளும் இரு படைப்பிரிவுகளாக மூலதனம், உழைப்பாளர்களை அவர்கள் பார்க்கிறார்கள். அங்கு ஒத்துழைப்பு, சமரசம், புரிந்து இசைதல் என்பதெல்லாம் மோசமானது எனவும் கருதுகிறார்கள். இறுதி புரட்சிகர யுத்தத்திற்கு தொழிற்சங்கம் பயிற்சிக்கூடம் என்பது அவர்கள் பார்வை என கிருபளானி தொண்டர்களுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார். மார்க்சியத்தின் பெயரால் நிறுவப்பட்டுள்ள போல்ஷ்விக் ஆட்சி நடைமுறையில் பல்வேறு சமரசங்களை செய்யவேண்டியிருந்தது. பூர்ஷ்வா நிறுவன முறைகள் பலவற்றை ஏற்றது. சமாதான சகவாழ்வு என பேசவேண்டியதானது. உலக புரட்சி என்பதை அது கைவிட்டதாகவே தெரிகிறது. கட்டளைகள் மூலம் புரட்சி சாத்தியமல்ல என்றும் பேசவேண்டியதாயிற்று. அதே நேரத்தில் உலகின் பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அது ஊக்கம் தராமல் இல்லை என சோவியத் அதன் நடைமுறைகள் உணர்த்திய அனுபவத்தை கிருபளானி முன்வைத்தார். சத்யாகிரகி என்பவருக்கு தனிநபர், சமுக மேம்பாடு என்கிற அம்சத்தில் வெறுப்பு, வன்முறை வழியாக இருப்பதில்லை. அப்படியொன்றும் மேம்படுத்தவே முடியாத வர்க்கம், தனிநபர் என சத்யாகிரகி எந்த வர்க்கத்தையும் எவரையும் கருதவில்லை என்கிற காந்திய பார்வையை கிருபளானி முன்வைத்தார். அய்ரோப்பா நாடுகளின் முக்கிய சில புரட்சிகள் பற்றி கிருபளானி பேசினார். தொழிற்புரட்சிக்கு முன்னர் மார்க்சிய பொருளில் வர்க்கம் என்பதை எவரும் அறியவில்லை. இங்கிலாந்து, அமெரிக்க பிரஞ்சு புரட்சிகள் சட்டத்தின்படியான ஆட்சி என்பதற்கு நின்றன. ருஷ்ய புரட்சி எப்படிப்பட்டது. ஜாரின் கொடுமை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் கிளர்ச்சியது. அங்கு முதலாளித்துவ வர்க்கம் நேரிடையாக வறுமைக்கும் துனபத்திற்கும் காரணமாகும் அளவு வலுவாகிடவில்லை. யுத்தக்களைப்பும் அதனால் தொடர்ந்த துன்பங்களும் மக்களை வாட்டின. ஜார் குடும்பம் படுகொலைக்கு உள்ளானது. ஆட்சிக்கு வந்த கெரன்ஸ்கி சர்க்கார் என்பது பாட்டாளிவர்க்க சர்வாதிகார ஆட்சியல்ல. தாராளவாத ஜனநாயக ஆட்சி. டூமா மூலம் அரசியல் அமைப்பு சட்டம் கொணர அந்த ஆட்சி முயற்சித்தது. மிக பலவீனமான அரசாக இருந்தது. போர் நிறுத்தம் உள்ளிட்டு மக்கள் பாதிப்புகளை அகற்ற முடியாத அரசாக இருந்தது. போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் அரசியல் இராணுவகலகம் மூலம் அந்த அரசு அகற்றப்பட்டது. வர்க்கப்போராட்டம் என்பதன் மூலமல்ல என்பதே தன் புரிதல் என்றார் கிருபளானி. லெனின் தலைமையில் பாட்டாளிகள் பெயரில் போல்ஷ்விக் கட்சியின் சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. ஸ்டாலின் லெனினைப்போலவே திறமையாக அதைத்தொடர்ந்தார். அவர்கள் இராணுவக்கலை அறிந்தவர்கள். அங்கு சொல்லப்பட்ட சோசலிச ஆட்சி, கம்யூனிச ஆட்சி, மக்கள் ஜனநாயக ஆட்சி என்பதெல்லாம் வார்த்தைகள்தான். தனியார் முதலாளித்துவம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு அவ்விடத்தில் அரசு முதலாளித்துவம் நிறுவப்பட்டது. உண்மையில் ஒருவகை ராணுவ ஆட்சிதான் அங்கு நடந்தது. ஸ்டாலின் மறைவிற்கு பின்னர் ஏக சர்வாதிகாரம் முடிவுற்று குழு சர்வாதிகாரம் ஏற்பட்டது என சோவியத்புரட்சி- அதிகாரம் பற்றிய தனது விமர்சன பார்வையை கிருபளானி முன்வைத்தார். ஜனநாயகம் மூலம் அரசாங்கம் என்கிற நம்பிக்கையை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தினார். பரவலான மக்கள் கருத்தை உருவாக்கி ஜனநாயகம் மூலம் ‘அரசாங்கத்தின் குணத்தை’ தீவிரமாக மாற்ற இயலும் என நம்பினர் கிருபளானி. வாக்கு மூலம் வருவதை நாம் புரட்சி என ஏற்பதில்லை. வாக்கு மூலம் நம்மால் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் தீவிர மாற்றத்தை உருவாக்க முடிந்தால் அதுவும் புரட்சிதான் என்றார் கிருபளானி. ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து செயல்படும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு எவ்வளவு அசெளகரியம் நேர்ந்தாலும் ‘வகுப்புவாதம் - சாதியம் - வட்டாரவாதம்’ எதிர்த்து தொடர்ந்து போரிட்டு அவற்றின் தீவிரத்தை குறைத்தால் மாற்றங்களை கண்டு நாடு உயரும் என நம்பினார் கிருபளானி. சொத்து என்றால் என்ன என ஒரு கட்டுரையை அவர் எழுதியிருந்தார். அனைத்து உற்பத்தியும் சமூக வய்ப்பட்டது. அந்த இணைப்பு சங்கலியில் தனிநபர் இடம் பெறுகிறார். உற்பத்தி விநியோகம் என்பவை சமூகத்தன்மை கொண்டவை என்கிற புரிதல் இல்லாவிட்டால் இரத்தக்களறிக்கான வழி ஏற்படும்.. கிருபளானியை பொறுத்தவரை புரட்சி என்பது அடிப்படியில் ஆன்ம இயக்கம் . அது சமுக சக்திகளால், பொருளாயத சக்திகளால் கொணரப்பட்டிருக்கலாம். எளிமை, சிக்கனம் என்பது அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டிய அவசிய குணங்களாக கிருபளானி தொடர்ந்து பேசிவந்தார். கோடிக்கணக்கான மக்கள் ஏழ்மையில் இருக்கும்போது இக்குணங்களை கடைப்பபிடிக்கவேண்டியது அவசியம் என கருதினார். நமது குடியரசு தலைவரும், கவர்னர்களும் எளிய ஆடைகள் அணிவதுதான் உகந்தது - வெளிப்பகட்டு அவசியமில்லை என்றார். கண்ணியம் என்பது வெளித்தெரிவதில் இருப்பதில்லை. அது உள்ளொளி பண்பாட்டின் வெளிப்பாடே (Dignity is the result more of inner culture) என்றார் கிருபளானி. காந்தியிடம் நாம் கற்றுக்கொண்ட எளிமையை விடலாகாது என்பது அவரது வாதமாக இருந்தது. நட்பு மேற்கொள்வது என்பதற்கு ராஜாஜி தந்த விளக்கத்தை கிருபளானி மேற்கோளாக தந்தார். சிரித்து மகிழ்வது மட்டுமல்ல நட்பு. அவ்வப்போது மேற்கொள்ளும் ஆக்கபூர்வ விமர்சனமும் நட்பின் வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்பது ராஜாஜி அவர்களின் புரிதல். தங்களை ஆள்பவர்கள் மீது நம்பிக்கை இருக்கும்வரைத்தான் தாங்களே முன்வந்து மக்கள் ஒத்துழைப்பை நல்குவர். சந்தேகம் வந்துவிட்டால், ஆள்பவர்கள் தங்கள் நம்பிக்கையை பொய்த்துவிட்டார்கள் என்பது வலுப்பெற்றால் அவர்களால் மனம் விரும்பிய ஒத்துழைப்பை தர இயலாமல் போகும் என்றார் கிருபளானி. அதிகாரம் என்பதற்கான குறைகளை அதன் எதிர்மறை குணங்களை காந்தி அறிந்தவர். ஆனால் அரசியல் என்பதிலிருந்து விலகவும் முடியாது என்பதால் தனது அரசியல் என்பதை அவர் வழிமுறையாக, விடுதலைக்கும், மனிதர்களின் சமதையான வாழ்க்கை முறைக்குமான வழியாக கொண்டார். அவர் காலத்து அரசியல் என்பது தியாகமும் சித்திரவதைகளை அனுபவிப்பதுமாக இருந்தது. அதிலும் அவர் மிக கவனமாக உண்மை- அகிம்சை முறைகளை கைக்கொண்டார். இன்று எங்கு திரும்பினும் அரசாங்கம் நிற்கிறது. மக்களின் பிரச்சனையை காங்கிரஸ் தீர்த்தால் அது அதிகாரத்தில் நிலைக்கும். இல்லையெனில் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட்கள் என வந்து தீர்த்தால் அவர்கள் அதிகாரத்தில் இருப்பர். காந்தி மனித இயல்பின்மீது அவநம்பிக்கை கொண்டவராக இல்லை. அவர்கள் செய்திறன் மீது அவர் வரையறைகளை நிர்ணயிக்கவில்லை. அளப்பரியது என்கிற உளவியல் அவரிடம் செயல்பட்டது என்கிறார் கிருபளானி. ஜனநாயகம் என்பதை பெரும்பான்மை என்பதுடன் மட்டும் அவர் நிறுத்தவில்லை. அதற்கு காரணகாரிய செயல் என்கிற மதிப்பை கிருபளானி கூட்டினார். பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்பதுகூட அறியாமையுடன் இருந்துவிடக்கூடாது. அதற்கு சிறந்த நேர்மையான வழிகாட்டல் தேவைப்படலாம் என்பதை (Some of us conceive democarcy to be the will of the majority and this will needs no guidance. Is the will of the majority always well informed? Does the majority need no guidance from wise, well informed and united leadership) அவர் வலியுறுத்தி வந்தார். பெரும்பான்மை விருப்பம் என்பதுடன் நிற்காமல் சிறந்த கருத்துக்களின் துணையுடன் பெரும்பான்மை என்பதை அவர் இணக்கப்படுத்தி ஜனநாயகத்தை மேம்படுத்திட விழைந்தார். இதற்கு உதாரணமாக இன்று பெரும் அரசியல் சர்ச்சையாக மாறி நிற்கும் பசுகொலை தடை என்பதைப்பற்றி அவர் பேசுகிறார். காந்தி இதை தவறான கோரிக்கை என விளக்கியதை கிருபளானி அதில் எடுத்து உரைத்தார். பசுகாப்பு என்பதை எதிர்மறையாக அணுகுகிறார்கள் என்ற கவலை காந்திக்கு இருந்தது என்றார் கிருபளானி. பெரும்பான்மை உறுதி விருப்பம் என்பதுடன் சரியான காரணம் கொண்ட விருப்பம் என்பதாகவே ஜனநாயகத்தை புரிந்துகொள்ள வேண்டும் (Democarcy is not only will of majority but with right reason) என்கிற நல்ல வரையறையை கிருபளானி தனது அனுபவத்திலிருந்து நாட்டிற்கு தந்தார். இந்து திருமண சட்டம், மொழிக்கொள்கை, மாணவர்களும் அரசியலும், அரசியல் கட்சிகள். நான் ஏன் காங்கிரசிலிருந்து வெளியேறினேன், அரசியலில் மறைபொருள்வாதம், விமர்சன பயம், நாட்டுப்பிரிவினைக்கு பலியானவர்கள் போன்ற பல கட்டுரைகளை கிருபளானி எழுதினார். காந்தி குறித்த ஏராளமாக எழுதியவர் கிருபளானி 1951 கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி (KMP) துவங்கி பின்னர் பிரஜா சோசலிஸ்ட்களுடன் இணைந்தார். பின்னர் அதிலிருந்தும் 1954ல் வெளியேறினார். நாடாளுமன்றத்தில் தனது ஆழமான உரைகளால் விவாதங்களை வளப்படுத்தினார். இந்திரா அம்மையார் கால எமர்ஜென்சியின் போது அதனை எதிர்த்து காந்தி ஜெயந்தி அன்று போராடியதால் கைது செய்யப்பட்டார். ஜேபியின் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார். அவரது துணைவியார் சுசேதா கிருபாளனி இந்தியாவில் உத்தர பிரதேச முதல் பெண் முதலமைச்சராக 1963ல் இருந்தவர். அவர் தன் அளவில் பெருமைக்குரிய வரலாற்று பின்னணி கொண்டிருந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்ட நாயகிகளுள் சுசேதா ஒருவர்.ஆகஸ்ட் 1947 விடுதலை பிரகடன நள்ளிரவில் நேருவின் உரையை உலகம் கேட்டதுபோல் அன்று வந்தேமாதரம், ஜாரே ஜகான்சே அச்சா, ஜனகனமன பாடல்களை சுசேதா பாடிட உலகம் கேட்டது. ஆச்சார்யா கிருபளானி அவர்கள் தனது 93ஆம் வயதில் அகமாதாபதில் இயற்கை எய்தினார். தனது வாழ்க்கை அனுபவங்களை ‘எனது காலம்’ என அவர் பதிவு செய்திருக்கிறார். மனிதர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறுவேறுபாடுகளை மாபெரும் கொள்கை பூசல் அளவிற்கு உயர்த்தாமல் இருப்போம். தனிப்பட்ட தொடர்புகள் தேவை. எப்போதுமே மனிதர்கள் கொள்கைகளைவிட சிறந்தவர்கள், தேவைப்படுபவர்கள். சமுக உறவுகளில் நம் இவற்றை புரிந்து கொள்ளமுடியும் என்றார் அவர். அருகில் அமர்ந்து விவாதிப்பவர்களுடன் அவர் நகைச்சுவை ததும்ப பேசுவார். தன்னை கேலி செய்துகொள்வார். தன் சிறுமண்டையை மறைக்கத்தான் நீண்ட முடி வளர்ந்துள்ளது என்பார். காந்திய சிந்தனைகள் குறித்து ஓயாமல் எழுதி வந்தவர் அவர். Ref: - Acharya Kripalani - GS Bhargava - Kripalani and His Ideas- J S Bright - J B Kripalanai- His vision and Ideas- Verinder Grover ஆச்சார்யா நரேந்திர தேவா [] இந்தியாவின் சோசலிச இயக்கத் தந்தை என அறியப்பட்டவர் நரேந்திர தேவா. ஜனநாயக சோசலிச இயக்கத்தை ஜெயபிரகாஷ் லோகிய உள்ளிட்டோருடன் கட்ட முனைந்தவர். உ.பி மாநிலத்தின் சிதாப்பூரில் அக்டோபர் 31, 1889ல் அவர் பிறந்தார். தந்தை பால்தேவ் பிரசாத். தாயார் ஜவஹர்தேவி. அலகாபாத் மற்றும் பனாரஸ் நகர்களில் கல்வி மேற்கொண்டு அக்காலத்தின் முதுகலை சட்டம் (எம் ஏ எல் எல் பி.)முடித்தவர். திலகர் , அரவிந்தர் ஆகியோரால் கவரப்பட்டு தேசவிடுதலை இயக்கத்தில் தேவா நுழைந்தார். காந்தியின் ஒத்துழையாமை அறிவிப்பால் தனது சட்டத்தொழிலை துறந்தார். பின்னர் காசி வித்யாபீடத்தில் ஆசிரியராகவும் பிரின்சிபலாகவும் 1936வரை பணியாற்றினார். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்டைய வரலாற்றில் தனித்த ஆர்வம் கொண்டு தொடர்ந்து கற்றார். புத்த நூல்களை அறிவதற்காக ஜெர்மன் மற்றும் பாலி மொழிகளில் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டக்காலத்தில் 1942-45 அகம்மதுநகர் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். சிறைச்சாலையில் அபிதர்மகோஷா சூத்திரங்களை பிரஞ்சு மொழியிலிருந்து இந்திக்கு கொணர்ந்தார். 1932ல் பனாரஸ் சிறைவாழ்க்கையில் துவங்கிய பிரஞ்சு- இந்தி மொழியாக்கத்தை அவர் 1945ல் அகமதுநகர் சிறையில் முடிக்கிறார். நேரு தனது டிஸ்கவரி ஆப் இந்தியாவில் ஆச்சார்யா நரேந்திரதேவ் அவர்களின் புலமை சார்ந்த அறிவிற்கு நன்றி பாராட்டியுள்ளார். நரேந்திரதேவிற்கு அவரின் பாட்டனார் சோஹன்லால் ‘அவினாஷி லால்’ என பெயர் வைத்தர். தந்தை பால்தேவ் பிரசாத் வழக்குரைஞர். அத்தொழிலில் புகழ் பெற்றவராக இருந்தார். குழந்தைகளுக்காக பல புத்தகங்களையும் எழுதியவர் அவர். இளம் பருவத்திலேயே அவினாஷிக்கு கணிதம், புவியியல், இந்திமொழி நாட்டம் இருந்தது. பண்டிட் மாதவ் பிரசாத் மிஸ்ராவுடன் பழக்கம் ஏற்பட்டது. பண்டிட் மாதவ்தான் நரேந்திரதேவ் என்ற பெயரை சூட்டினார். தந்தைக்கு காங்கிரஸ் இயக்கம்பாற் தொடர்பு இருந்தது. பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம் சொல்லக்கேட்டு வளர்ந்தவராக தேவா இருந்தார். லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் 1889ல் தேவா முதல்முறை பங்கேற்றார். அங்குதான் திலகர், ரானடே, ரமேஷ் சந்திர தத் ஆகியோரால் ஈர்க்கப்பட்டார். தேவா இல்லத்திற்கு வந்த மதன்மோகன் மாளவியா அந்த இளைஞனின் தீர்க்கமான அறிவைக்கண்டு வியந்தார். தேவாவை அலகாபாத் இந்து போர்டிங் ஹவுசில் சேரவைத்தார். 1905ல் தேவா காங்கிரஸ் கட்சியின் சர்ச்சைகளை கண்ணுற்றார். தாதாபாய் சுவராஜ்ய என்கிற பதத்தை விளக்கியதில் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனாலும் தீவிரவாதிகளுடன் உடன் நின்று 1908ல் காங்கிரசிலிருந்து வெளியேறினார். இணைப்பின்போது திரும்பவும் வந்தார். சுதேசி என்பதில் பற்றுக்கொண்டு அந்நியபொருட்கள் வாங்குவதை தவிர்த்தார். பங்கிம் சந்திர சட்டர்ஜி, லாலா ஹர்தயால், எட்வின் ஆர்னால்ட் போன்றவர்களின் எழுத்துக்களை படித்தறிந்தார். அவர் தனது BA படிப்பை அலகாபாத் முயிர் கல்லூரியிலும் முதுகலையை ( MA Archeology) ) வாரணாசி ராணி கல்லூரியிலும் முடித்தார். அக்காலத்தில் சச்சிந்திர சன்யால் மூலம் புரட்சிகர கருத்துக்களை அறிந்தார். அவர் தனது சட்டப்படைப்பை 1915ல் முடித்து ஃபைசாபத்தில் வழக்குரைஞர் ஆனார். அங்கு ஹோம்ரூல் லீகின் கிளையைத் துவங்கினார். உபி காங்கிரஸ் மாநிலத்தலைமையுடன் அவருக்கு இருந்த நெருக்கம் நேருவின்பால் தோழமை கொள்ள உதவியது. அவர் சுபாஷ் சந்திரபோசுடனும் தொடர்பில் இருந்தார். சைமன் கமிஷன் திரும்பி போ இயக்கத்திலும் சிவில் ஒத்துழையாமையிலும் பனாரசில் பங்கேற்றார். நாக்பூரில் காங்கிரஸ் தனது ஒத்துழையாமையை அறிவித்தவுடன் வக்கீல் தொழிலைவிட்டார். நேரு அழைப்பின் பெயரில் காசி வித்யாபீட பொறுப்பேற்றார். அதிலிருந்து அரசியல் கல்விப்புலங்களில் தொடர்ந்து இயங்குபவராக மாறினார். அங்குதான் ஸ்ரீபிரகாஷ் என்பவர் இவரின் மேதமைகண்டு அவரை ஆச்சார்யா என அழைக்கத்துவங்கினார். நாசிக் சிறையில் ஜெயபிரகாஷ், லோகியா, நரேந்திரதேவா, மினுமசானி, அசோக்மேத்தா, யூசுப் மெஹரலி அனைவரும் இருந்தபோது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி துவங்குவது பற்றி விவாதித்தனர். பாட்னாவில் 1934ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் (சி எஸ் பி) என்கிற கட்சியை துவக்கினர். ஜெயபிரகாஷ் நாராயண் அதன் முதல் பொதுச்செயலராக்கப்பட்டார். ஜெயபிரகாஷ் தொடர்பால் 1934 சோசலிச கட்சி துவக்க நிகழ்வின் தலைவராக இருக்க தேவா பணிக்கப்பட்டார்.. இரண்டாவது உலக யுத்த காலத்தில் 1940-45 அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் செப்டம்பர் 1941ல் உடல்நிலை பாதிக்கப்பட்டு காந்தியின் பராமரிப்பில் சேவாகிராமில் இருந்தாலும், பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கைது செய்யப்பட்டார். ஜூன் 1945ல்தான் அவர் விடுதலை செய்யப்படுகிறார். 1948ல் காங்கிரசிலிருந்து வெளியேறி சோசலிஸ்ட் கட்சி அமைந்தவுடன் அதன் சேர்மனாக்கப்பட்டார். 1947-51 காலத்தில் அவர் லக்னோ பல்கலை துணைவேந்தரானார். 1951-53 களில் பனாரஸ் பல்கலை கழக துணைவேந்தரானார். ஆசிரியர்களின் தேர்ச்சி ஒழுக்க நன்னெறிகளில் அவர் கூடுதல் கவனத்துடன் இயங்கினார். இந்தியர்களின் மேம்பட்ட கல்வி அறிவில்தான் நாட்டின் முன்னேற்றம் என்பதை அழுத்தமாக சொல்லி வந்தவர் தேவா. பின்னர் ஜனநாயக சோசலிச கட்சியின் சேர்மனாக 1955 ல் ஆனார். 1937-48 காலங்களில் அசெம்பிளி உறுப்பினரான அனுபவத்தில் 1952 முதல் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்து மறைந்தவர் ஆச்சார்யா தேவா. லக்னோவிலிருந்து ஈரோடு வந்து பெருந்துறையில் அவருக்கு குணமடைவதற்கும் ஓய்விற்குமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு 5 வாரங்கள் தங்கியிருந்த தேவா உடல்நிலை மோசமானதால் ஈரோடு அழைத்துவரப்பட்டார். பிப்ரவரி 19 1956ல் மரணம் அடைந்தார். சென்னையில் அப்போது கவர்னராக இருந்த ஸ்ரீபிரகாசம் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு திருச்சியிலிருந்து சென்னை விரைந்தார் என்ற செய்தியை அப்போது வந்த ஹிந்து வெளியிட்டது. தனது பல்கலைகழக காலங்களில் மாணவர்களுடன் நல்லுறவுகளை அவர் உருவாக்கிக்கொண்டார். ஏழை மாணவர்களுக்கு கற்பதற்கு நிதி உதவி செய்தார். புகழ்வாய்ந்த லால்பகதூர் சாஸ்திரி, கமலபதிதிரிபாதி, சந்திரசேகர் அவரின் மாணவர்கள். இதில் இருவர் பிரதமர் பதவி அளவிற்கு உயர்ந்தவர்கள். சோசலிஸ்ட் கட்சியின் மிகமுக்கிய தலைவராக மாறிய சந்திரசேகர் ஆச்சார்யா தேவாவை தனது குரு என தொடர்ந்து சொல்லிவந்தார். சோசலிச இயக்கத்தில் லோகியாவின் பன்ச்மாரி தீசிஸ் என்பதும் ஆச்சார்யாவின் கயா தீசிஸ் என்பதும் பெருமளவு விவாதிக்கப்பட்டவையாக இருந்தன.. தான் கட்சியைவிட்டு வெளியேறுவேனே தவிர மார்க்சியத்தை கைவிடமுடியாது என்ற நிலையை எடுத்தவர் ஆச்சார்யா. சோவியத்தின் சர்வாதிகார நடைமுறையை அவர் விமர்சித்தார். ஜனநாயக சோசலிசம் என பேசினார். விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒன்றை ஒன்று நிரப்பிக்கொள்ளும் சக்திகள் என்றார். புரட்சிகர இயக்கம் என்பது தேசவிடுதலை இயக்கத்திலிருந்து அந்நியப்பட்ட ஒன்றாக முடியாது என்ற கருத்து அவரிடம் இருந்தது. அவரின் இந்தி புத்தகம் புத்த தர்ம தர்சன் என்பதற்கு சாகித்ய அகாதமி விருது கொடுக்கப்பட்டது. நமது சுரண்டல் ஒழிப்பு திட்டம் என்பதில் தேசத்தின் மகத்தான மரபுகளின் வண்ணங்கள் இருக்கவேண்டும் என்றவர் தேவா. தனிப்பட்ட மனிதனின் ஒழுக்க நன்னெறிகள் புரட்சிகர மனிதனிடம் அப்பழுக்கற்ற முறையில் இருக்கவேண்டும் என்பதை காந்தி போலவே அதிகம் வலியுறுத்தியவர் ஆச்சார்யா. உபி அசெம்பிளியில் காங்கிரசில் போட்டியிட்டு வென்ற பதவியை 1948 சோசலிச கட்சி துவங்கியபோது நெறி அடிப்படையில் ராஜினாமா செய்தவர் நரேந்திர தேவா. இடைத்தேர்தலில் காங்கிரஸ் பெருமுயற்சி எடுத்து அவரை தோற்கடித்தது. தேவா மறவின் போது நேரு தனது அஞ்சலியை புகழுரையாக தந்தார். நாம் எல்லாம் கருதியதைவிட மிகமிக உயர்ந்த்வர் தேவா. மிக முக்கிய புத்ல்வரை நாடு இழந்திருக்கிறது. மிக அபூர்வமான ப்ல்துறை நிபுணத்துவம் கொண்ட மனிதர் அவர்.. அவரது இடல்நிலை மட்டுமே ஒத்துழக்க மறுத்தது. மிகவும் உக்கிரமாக நாம் நடத்திய விடுதலை வேள்விப் போராட்டத்தில் நான் அவருடன் 40 ஆண்டுகள் பயணித்துள்ளேன். சிறை அனுபவங்களை அருகே இருந்து அனுபவித்துள்ளோம். கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளோம். நாடு அவரது இழப்பின் மூலம் பொது நட்டமடைந்துள்ளது. நான் பெருமளவு தனிப்பட்ட நட்டம் அடைந்துள்ளேன். அவரைப்போல வேறு ஒருவர் கிடைப்பது அபூர்வமே என நேருவின் உரை அமைந்தது. 2 1947 விடுதலைக்கு பின்னர் நரேந்திரதேவா இருமுறை ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டர். கார்ல் மார்க்ஸ் மீதும் மார்க்சியத்தின் மீதும் அழுத்தமான நம்பிக்கை வெளிப்பாட்டை கொண்டவராக இருந்தார் ஆச்சார்ய தேவா. சோசலிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி மூவரான ஜேபி, லோகியா, தேவா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சோசலிஸ்ட் இயக்கம் உடைவிற்கு உள்ளானது. மார்க்சியத்தை லெனின் ருஷ்யமயப்படுத்தியது போல, மாவோ சீனமயப்படுத்தியதுபோல நாம் இந்தியமயப்படுத்தவேண்டும் என்பதை தேவா நம்பினார். நரேந்திரதேவா போன்ற சோசலிஸ்ட்கள் மார்க்சியத்தை விஞ்ஞான அணுகுமுறை என ஏற்றிருந்தாலும் அவர்களிடம் மேற்கு ஜனநாயக சமுக தாக்கமும், இந்திய காந்திய தாக்கமும் கலந்தே இருந்தது. இதில் அவர்கள் அன்று செயல்பட்டவந்த கம்யூனிஸ்களிடமிருந்து மாறுபட்டு நின்றனர். சமூக சொத்துரிமை என்பதற்கு அனைவருக்கும் அவை பொதுவானவை- சமத்துவமான பகிர்தலுக்குரியவை என்று பொருள். ஆரம்பத்தில் அவரவர் வேலைத்தன்மை என்பதிலிருந்துதான் பகிர்தல் இருக்கும். ஆனால் அனைத்து தனிநபர் தேவைகளுக்குமான பகிர்தல் என்பதுதான் அதன் இலக்காக இருக்கமுடியும் என்கிற மார்க்சிய லெனிய விளக்கம் அவரிடமும் இருந்தது. அதேபோல் விவசாய கொள்கையாக கூட்டுறவு பண்ணைமுறைகள் (coopearative cum collective farming) என்பதையும் அவர் பேசினார். அதை இருகட்டங்களாக இந்தியாவில் அமுல்படுத்தலாம் என்றார். அதே நேரத்தில் ருஷ்யா மாதிரியில் கட்டாயப்படுத்துவது எதிர்விளைவுகளை தந்துவிடும் என்கிற எச்சரிக்கையை 1946ல் அவர் தந்தார். மார்க்சிடமும் சோசலிச பாதை என்பதில் வன்முறை மற்றும் வன்முறையற்ற என்கிற இருவழிகள் இருந்தன. நாடுகளின் நிலைமைக்கேற்ப எனத்தான் மார்க்ஸ் விளக்கினார் என்பதை தேவா எடுத்துக்காட்டுகிறார். இந்தியாவில் வன்முறையற்ற பாதை என்பது மார்க்சியத்திற்கு உகந்த வழிதான் என்றார். தேசிய இயக்கமும் சோசலிச இயக்கம் அணிசேர்ந்து செயல்பட விழைந்தார். அதை பூர்ஷ்வா இயக்கம் என ஒதுக்காமல் அனைத்து வர்க்கத்தினருடன் இணைந்து விடுதலை போராட்டத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தவேண்டும் என்றார். வெகுமக்களுக்கு உகந்த பொருளாதார கொள்கை அடிப்படையில் விடுதலை போராட்டத்தை தேசியமயமாக்கியே நடத்த வேண்டும் என்றார். அவருக்கு சீர்திருத்தவாதம்- அரசியல் அமைப்பு சட்டவாதம் என்பதில் நம்பிக்கை குறைவாக இருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை தொழிலாளி வர்க்கத் தலைமையில் விவசாயிகள் அறிவுஜீவிகள் அணிசேர்க்கையுடன் நடத்தவேண்டும்என்பதிலும் அவர் மார்க்சியர் போலவே நம்பிக்கை வைத்திருந்தார். ஸ்டாலினின் சர்வாதிகாரபிடியிலும் சோவியத் யூனியனின் தேர்க்காலில் பிணைக்கப்பட்டும் உள்ள மூன்றாவது அகிலத்துடன் சேரமுடியாது என்கிற நிலைப்பாட்டை எடுத்தவர் ஆசார்யா நரேந்திரதேவா. தேச விடுதலை இயக்கத்தை கம்யூனிஸ்ட்கள் முதலாளித்துவ ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று பார்த்ததை அவர் ஏற்கவில்லை. ஏகாதிபத்திய அந்நிய ஆட்சியைவிட முதலாளித்துவ ஜனநாயகம் ஏற்புடையதுதான் என்றார் அவர். காசிவித்யாபீட பட்டமளிப்புவிழாவிற்கு 1929ல் வந்தபோது நரேந்திரதேவாவிற்கு காந்தியுடன் நேரிடையாக பழக வாய்ப்பு கிடைத்தது. சோசலிசம் குறித்த பார்வையில் வேறுபாடுகள் இருந்தாலும் இந்து முஸ்லீம் ஒற்றுமையின்மை இருந்தால் அரசியல் போராட்டத்தை பெருமளவு பாதிக்கும் என்பதில் ஒத்த கருத்து அவர்களிடம் நிலவியது. ஹரிஜனங்கள் சமுக ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் அவர்களுக்கு உரிமை என்பதை முழுமையாக இந்துக்கள் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதிலும் அவர் காந்தியுடன் உடன்பட்டிருந்தார். பிரிட்டிஷார் அவர்களை பயன்படுத்தி பிரித்தாள முயற்சிப்பதை கண்டிப்பவராக இருந்தார். காந்தியின் மதப்பற்றில் வெறித்தனமோ கன்சர்வேடிசமோ இல்லை என்ற கருத்தும் அவருக்கு இருந்தது. காந்தியின் அகிம்சை என்பதை கோட்பாடு என்கிற மட்டத்தில் ஏற்காவிட்டாலும் சத்தியாக்கிரக வழிமுறைகள் என்பதை நரேந்திர தேவா ஏற்றார். வன்முறை குறித்து காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்கள் தெளிவாக பேசினால் தன்னால் சி எஸ் பி கட்சியில் இணைந்துகொள்ளமுடியும் என்றுகூட காந்தியடிகள் அவர்களிடம் தெரிவித்தார். நரேந்திர தேவா ஜனநாயக சோசலிசம் என்பதற்கான சில வரையறைகளை கூறினார். உயர்வு-தாழ்வு என்கிற சமுகமுறைக்கு எதிரானதாக இருக்கும். சமுக அதிகாரம், அரசியல் அதிகாரம், பொருளாதாரம் ஆகியவை தனிநபரின் ஆதிக்கத்திலோ, ஒருவர்க்கத்தின் ஆதிக்கத்திலோ, சிறப்பு தகுதி கொண்ட குழுவினரிடமோ இருக்காது. சர்வாதிகாரம், நிலபிரபுத்துவம் முதலாளித்துவ பாதையாக ஜனநாயக சோசலிசம் இராது ஏகாதிபத்திய எதிர்ப்புடன் சுதந்திர ஜனநாயகமாக இருக்கும் மனித நடத்தைகளில், சமுக உறவுகளை ஜனநாயகப்படுத்துவதாக இருக்கும் சமுக, பொருளாதார அரசியல் அதிகாரம் உழைப்பவர் கட்டுப்பாட்டிலும் அவர்களின் சுய அரசாங்கமாகவும் அமையும் மையம் நீக்கப்பட்ட அதிகார பரவல்முறை, பங்கேற்பு சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்வதாக அமையும். சமுக ஏற்றத்தாழ்வுகளை அனுமதிக்காத சமுக மகிழ்ச்சிக்கு ஆதாரமான தனிநபர் மகிழ்ச்சியை அது உறுதிப்படுத்தும். அரசு அதிகாரத்தை தனிநபரோ சிறுகுழுவோ சிறுபான்மை வர்க்கமோ காப்பாற்ற முயற்சித்தால் அதை எதிர்த்து மக்கள் கலகம் செய்திட உரிமை வழங்கப்படும் மார்க்சியம் காந்தியம் இணைவை குழைவை நரேந்திரர் உருவாக்க முயல்கிறாரா என்கிற கேள்வி ஒன்றிற்கு அவர் 1950ல் எழுதிய கட்டுரை மூலம் தெளிவுபடுத்துகிறார். சத்தியாக்கிரகம் என்பது மார்க்சியத்திற்கு விரோதமானதல்ல. அதேபோல் வன்முறையற்ற வழியில் சமுக மாற்றம் எனில் மார்க்சியம் அதற்கு முன்னுரிமை கொடுப்பதாகவே உள்ளது என்றார் தேவா. இந்தியாவில் விடுதலைக்கு முன்னர் தோன்றிய சோசலிச இயக்கம் தேசவிடுதலை இயக்கத்துடன் இணைந்தே செயல்படவேண்டும். இந்திய விவசாயிகளை தேசிய இயக்கமும் சோசலிச இயக்கமும் இழுத்துக்கொள்ளாமல் விடுதலை துரிதப்படாது. சோசலிசம் என்பது வெறும் பொருளாதார ஒற்றை பிரச்சனையல்ல போன்ற மிக முக்கிய பங்களிப்புகளை செய்தவர் தேவா. காங்கிரஸ் சோசலிஸ்ட் அமைப்பு மாநாடு மே 17 1934ல் பாட்னாவில் நரேந்திரதேவ் தலைமையில் நடைபெற்றது. அடுத்து மாநாடு பம்பாயில் அக்டோபர் 21,22 1934ல் நடைபெற்றது. 13 மாநிலங்களில் இருந்து 137 சார்பாளர்கள் பங்கேற்றனர். ஜெயபிரகாஷ்அவர்களை (ஜேபியை) பொதுச்செயலராக கொண்ட 21பேர் கமிட்டியில் நரேந்ந்திர தேவாவும் இடம் பெற்றிருந்தார். அமைப்பு மாநாட்டில்தேவாகாங்கிரசில் இருக்கும் நம்மை போன்ற பலர் அறிவார்ந்த சோசலிஸ்ட்கள். வறட்டுத்தனம் மற்றும் செக்டேரியனின் போக்குகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். விஞ்ஞான சோசலிசமா, சமூக சீர்திருத்த்மா என்பதில் தெளிவுவேண்டும் என உரையாற்றினார். நரேந்திரதேவா, ஜேபி. பாமர்ஜி, பரிதுல் ஹக் கொண்ட நால்வர் கமிட்டி சிஎஸ்பி கட்சித்திட்டம் எழுதுவதற்காக அமைக்கப்பட்டது. பம்பாய் மாநாட்டின்போது பங்கேற்ற சோசலிஸ்ட் இளைஞர்களின் சராசரி வயதே 30 தான். இளமை ததும்பும் அமைப்பாக அது உருவானது. காங்கிரசின் உறுப்பினர்கள் சி எஸ் பியில் உறுப்பினராகலாம். ஆனால் வகுப்புவாத கட்சியில் இருப்பவர்கள் ஆகிட முடியாது என்ற முடிவை எடுத்தனர். விவசாயிகளை, தொழிலாளர்களை திரட்டுவது, முழுவிடுதலைக்கு மக்களை திரட்டி போராடுவது என அறிவித்தனர். கோமிண்டர்ன் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்., கம்யூனிஸ்ட் கட்சி செயலர் பி சி ஜோஷி போன்றவர்களின் அணுகுமுறையால் லக்னோவில் இரு இடதுசாரி கட்சிகள் மத்தியிலும் இணக்கமாக செயல்படுவது என்கிற புரிதல் உருவானது. ஆனால் ஆறே மாதத்தில் கல்கத்தா, பம்பாய், கான்பூர், ஆந்திராவில் இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட கசப்புகள் சி எஸ் பியில் எதிரொலிக்க துவங்கியது. 1937 ஏப்ரலில் கம்யூனிஸ்ட்களின் தந்திரங்களுக்கு இரையாக வேண்டாம் என்கிற எச்ச்சரிக்கையை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தந்தது. ஆந்திராவில் சுந்தரைய்யா, கேரளாவில் நம்பூதிரி, மெட்ராசில் ஜீவா, ராமமூர்த்தி செல்வாக்கு பெறத்துவங்கினர். கிசான் சபாக்களில் டாக்டர் இசட் ஏ அகமத், ஜாகீர், ஏ கே கோபாலன், அஷ்ரஃப் பணியாற்றினர். 1937ல் மசானி கையில் கிடைத்த கம்யூனிஸ்ட்களின் இரகசிய ஆவணங்களை அவர் சோசலிஸ்ட் கட்சி செயற்குழுவில் வெளியிட்டு இரு இடதுசாரிகளின் மத்தியில் பிளவை அதிகப்படுத்தினார். சோசலிஸ்ட் கட்சியை கைப்பற்ற கம்யூனிஸ்ட்கள் ரகசிய சதி என செய்தி பரப்பப்பட்டது. 1939 ஏப்ரலில் மினு மசானி சோசலிஸ்ட் கட்சியின் தலைவரானார். கம்யூனிஸ்ட்கள் தாங்கள் லக்னோ புரிதலை தொடரவே விரும்புகிறோம் என தெரிவித்ததை நம்பமுடியாது என சோசலிஸ்ட்கள் நிராகரித்தனர். ரெட்குருப்பை சேர்க்கவேண்டாம் என்கிற முடிவை எடுத்தனர். மினு மசானி Communist Plot against CSP என்கிற பிரசுரத்தை வெளியிட்டார். ஜெயபிரகாஷ் சோசலிஸ்ட் கம்யூனிச ஒற்றுமை என்பதில் நாட்டமாக இருந்தார். 1939 திரிபுரி மாநாட்டில் கம்யூனிஸ்ட்கள் சி எஸ் பி வழிகாட்டலில் ஏற்பில்லை என அறிவித்தனர். அவர்களை கட்சியிலிருந்து நீக்காததில் சில தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். லோகியா, மசானி, அசோக்மேத்தா, பட்வர்த்தன் ராஜினாமா செய்தனர். 1940ல் ராம்கர் சந்திப்பில் சில கம்யூனிஸ்ட் தலைவர்களை நீக்கிவிடலாம் என்கிற முடிவை சோசலிஸ்ட்கள் எடுத்தனர். மற்றொருபுறம் எம் என் ராய் போன்றவர்களின் தாக்குதலும் இருந்தது. சி எஸ் பி இடதுசாரியுமல்ல, மார்க்சிய சோசலிஸ்ட் கட்சியுமல்ல என எம் என் ராய் தாக்கினார். ராய் ஆதரவாளர்கள் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியதானது. ஜீவா, நம்பூதிரி, ராமமூர்த்தி, சுந்தரைய்யா, அஷ்ரப், அகமது, சஜ்ஜட் ஜாகீர் போன்ற புகழ்வாய்ந்தவர்கள் சி எஸ் பி கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் ஆனவர்கள். எம் ஆர் மசானி போன்றவர்கள் கம்யூனிஸ்ட் எதிர்ப்பில் தீவிரமாக இயங்கினர். ஜே பி கம்யூனிஸ்ட்கள் திருந்தி பணியாற்றிடவேண்டும் என்கிற கருத்தில் இருந்தார். 1939 கல்கத்தா தேசிய குழுவில் கருத்து வேறுபாடுகள் காரணமாக லோகியா, பட்வர்த்தன், மசானி, அசோக்மேத்தா விலகினர். 1940 ராம்கர் கூட்டத்தில் கம்யூனிஸ்ட்களை வெளியேற்ற முடிவெடுத்தனர். முன்னதாக 1937ல் ராயிஸ்ட்கள் வெளியேற்றப்பட்டனர். 1934ல் சி எஸ் பி துவங்கியபோதே மகாத்மா காந்தி தனது நிலையை தெளிவுபடுத்தினார்.நம்து சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்பது வன்முரையற்ற வழியிலானதாக இருக்கவேண்டும். முதலாளி- தொழிலாளி , நிலப்பிரபு- விவசாயி ஒத்துழைப்பும் இணக்கமும் நிலவவேண்டும் என்றார்.. 1936 ஜனவரி மீரத் சோசலிஸ்ட்களின் சந்திப்பில் உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பு, மார்க்சிய வழியில் என பேசியதுடன் தீர்மானமும் எழுதிக்கொண்டனர். 1936 டிசம்பரில் பைஸ்பூரில் கூடிய மாநாட்டில் இந்தியா ஏகாதிபத்திய யுத்தங்களுக்கு மத்தியில் பங்குதாரராக இருக்காது என்கிற தீர்மானத்தை நரேந்திர தேவா கொணர்ந்தார். காங்கிரசிலும் அதை ஏற்க வைத்தார். 1937 தேர்தல்களில் 1161 போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ் 716யை பிடித்தது. அய்ந்து மாகாணங்களில் அறுதி பெரும்பான்மை பெற்றது. நான்கில் தனிப்பெரும் கட்சி நிலைக்கு வந்தது. சி எஸ் பியினர் 1935அரசாங்க சட்டம் போர்க்குணத்தை மழுங்கடிக்கும் என்ற நிலை எடுத்தனர். சி எஸ் பி எதிர்ப்பை பொருட்படுத்தாது காங்கிரசார் அரசாங்கம் அமைத்தனர். சுபாஷ்போசை எதிர்த்த வலதுசாரிகளையும் திருப்தி செய்யும்வகையில் அதிகமாக சச்சரவுகளுக்கு உள்ளாகாமல் இருக்கும் நரேந்திரதேவை காங்கிரஸ் தலைவர் ஆக்கலாம் என்கிற போஸின் ஆலோசனை ஏற்கப்படாமல் போனது. பட்டாபி சீதாரமைய்யா எதிர்த்து போஸ் ஜனவரி 1939ல் 1580- 1375 வாக்குகள் கணக்கில் வெற்றி பெறுகிறார். காந்தி மனம் நொந்தார், கோட்பாடு மற்றும் காந்தி என்கிற மன உணர்ச்சிக்கு மத்தியில் ஜவஹர்லால் தடுமாறினார். சோசலிஸ்ட்கள் போஸிற்கு வாக்களித்தனர். 1942ல் கிரிப்ஸ் தூது வந்தது. கிரிப்ஸ் போன்றவர்கள் சாத்தானுக்கு வக்காலத்து வாங்கலாம் என்கிற கருத்து நேருவிடம் இருந்தது. காந்தி அது post dated cheque என்றார். சோசலிஸ்ட்களும் ஏற்கவில்லை. பிரிட்டிஷாருக்கு எதிராக நேரடி வெகுஜன திரள் இயக்கம் என சோசலிஸ்ட்கள் வலியுறுத்தினர். ஆகஸ்ட் 8 1942ல் வெள்ளயனே வெளியேறு செய் அல்லது செத்துமடி முழக்கமானது. தலைவர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். ஜேபி ஹசாரிபாக் சிறையிலிருந்து தப்புகிறார். அருணாஆசப், பட்வர்த்தன், ஜேபி, லோகியா 1942 இயக்கத்தை தீவிரப்படுத்துகின்றனர். பல இடங்களில் தொலைபேசி இணைப்புகள் துண்டாகின்றன. விவசாயிகள் வரி கொடுக்கமுடியாது என்றனர். ஆசாத் ஹிந்து ரேடியோ லோகியாவால் நடத்தப்பட்டது. 1943ல் அரசு வெளியிட்ட தகவல்படி 92000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜேபி லோகியா ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டனர். . மீரட் மாநாடு 1936 ஜனவரியில் கமலாதேவி சட்டோபாத்யாய் தலைமையில் நடந்தது. குறைந்தபட்ச ஊதியம் ரூ 30 என்றும் வாரத்திற்கு 40 மணிநேர வேலை எனவும் கோரிக்கை எழுப்பப்பட்டது. மார்க்சியம் மட்டுமே வழிகாட்டும் கோட்பாடு என்கிற அழுத்தம் இருந்தது- காங்கிரசிற்குள் மார்க்சியவகைப்பட்ட இயக்கம் (organised body of marxian socialists within Congress) என்பதில் கவனம் குவித்தனர். பைஸ்பூரில் அடுத்த மாநாடு டிசம்பர் 1936ல் ஜேபி தலைமையில் கூடியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி முக்கிய கடமை எனப்பட்டது. அதே நேரத்தில் கூடிய காங்கிரசில் நரேந்திரதேவா யுத்த எதிர்ப்பு தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டது. . திரிபுரியில் மார்ச் 1939ல் கோவிந்த வல்லப் பந்த் காந்தி சொல்படி கமிட்டி அமை என நேதாஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். மனம்கசந்த போஸ் ஏப்ரல் 29 1939ல் ராஜினாமா செய்து பார்வார்ட் பிளாக் துவங்கினார். சி எஸ் பி நடுநிலைமையால்தான் இந்நிலை ஏற்பட்டது என்கிற விமர்சனத்தை வைத்தார் சுபாஷ் . சோசலிஸ்ட்கள் துரோகம் செய்துவிட்டனர் என தாக்கினார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சி எஸ் பி தலைமை சாகசத்தலைமையாக அங்கீகாரம் பெற்றது. கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டது. ஜேபி போன்றவர் ஏப்ரல் 1946ல்தான் விடுதலை பெறுகின்றனர் பாகிஸ்தான் பிரிவினை இந்து முஸ்லீம் பெயரால் கூடாது என்கிற நிலையை சி எஸ் பியினர் எடுத்தனர். அசோக்மேத்தா, பட்வர்த்தன் வகுப்புவாதம் குறித்து எழுதினர். பிரிட்டிஷ் வெளியேறுவதற்கு முன்னர் அரசியல் சட்ட அசெம்பிளி என்பதை ஏற்கமுடியாது என்றனர் சோசலிஸ்ட்கள். பிரிவினை தவிர்க்கமுடியாது என காங்கிரஸ் ஏற்கத்துவங்கியவுடன் காங்கிரஸ் என்ற பெயரை நீக்கிக்கொள்வது என சோசலிஸ்ட்கள் மார்ச் 1947 கான்பூரில் கூடி முடிவெடுத்தனர். 3 மார்க்சியத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்தவர் நரேந்திர தேவா. அவர் சீனா சென்ற நேரத்தில் மே 1952 பஞ்ச்மாரி கன்வென்ஷனில் லோகியா தலைமை ஏற்றிருந்தார். மார்க்சியத்தில் சில விலகல்களை அவர் செய்தபோது, அதை அறிந்த நரேந்திர தேவா செப்டம்பர் 3, 1952ல் அசோக்மேத்தாவிற்கு கடிதம் எழுதினார். தான் கட்சியை வேண்டுமானால் விட்டு விலக முடியுமே தவிர மார்க்சியத்திடமிருந்து விலக முடியாது என அதில் அவர் தெரிவித்திருந்தார். அதற்கு பின்னர் அவர் 4 ஆண்டுகள் கூட வாழ்ந்திருக்கவில்லை. ஜெயபிரகாஷ் போன்றவர்கள் மார்க்சியத்திலிருந்து விலகியபோதும் நரேந்திரதேவா தத்துவத்தை உயர்த்திப்பிடிக்க தவறவில்லை. 1989ல் நடந்த ஒரு விழாவில் நம்பூதிரிபாட் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். 1934 சோசலிஸ்ட் கட்சியில் நரேந்திரதேவா ஆற்றிய உரைமூலம்தான் மார்க்சிய சோசலிசம் என்பதை அறிந்துகொண்டதாகவும், பின்னர்தான் ஜேபியின் சோசலிசம் எதற்காக புத்தகம் படித்து மேம்படுத்திக்கொண்டதாகவும் இ எம் எஸ் குறிப்பிட்டார். நேருவின் அறிவுரை ஏற்றுதான் தேவா பனாரஸ் காசிவித்யாபீடம் சென்றார். நேருவின் இண்டிபெண்டன்ஸ் இந்தியா லீகில் சேர்ந்து பணியாற்றினார். அதன் உபி மாநில செயலர் ஆனார். இந்திய மக்களுக்கு அறிவார்ந்த விஷயங்களை கொண்டுசேர்ப்பதற்கு உழைக்கவேண்டும் என அவர் நேருவிடம் சொல்லிக்கொண்டிருப்பார். கான்பூரில் செப் 1929ல் நடந்த தொழிலாளர் மாநாட்டில் நேரு தலைமை ஏற்றார். நரேந்திரதேவா குறைந்த பட்ச வாழ்க்கை ஊதியம், இலவச கல்வி, மருத்துவம் குறித்தும், நிலம் எந்த தனிமனிதருக்கும் சொந்தமாக இருக்கக்கூடாது அது சமுகத்திற்குரியதாக இருக்கவேண்டும் என்றும் பேசினார். 1932 வரிகொடா இயக்கத்தின்போது அவர் பனாரஸ் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டாம் யுத்தகாலத்தில் ஜனவரி 1941ல் அவர் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டார். பின்னர் 1942 வெள்ளையனே வெளியேறு காலத்தில் காந்தியுடன் சேவாகிராமத்தில் சில தீர்மான வரைவுகளுக்கு நரேந்திர தேவா உதவிக்கொண்டிருந்தார். நேருவிடம் நரேந்திரதேவா தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுவிட்டார் என காந்தி தெரிவித்தார். அந்த அளவிற்கு காந்தி அவ்ர் மீதான மரியாதையைக் கொண்டிருந்தார். வெள்ளையனே வெளியேறு தீர்மானத்திற்கு மறுநாள் கைதான நரேந்திரதேவா 1945 ஜூனில்தான் விடுவிக்கப்படுகிறார். இந்திய பிரச்ச்னைகளை மார்க்சிய ஒளியில் கற்கும்போது இந்திய பின்புலம் என்பதை ஒதுக்கிவிட்டு செய்யக்கூடாது என்பதை அவர் இறுதிவரை சொல்லிவந்தார்.கம்யூனிஸ்ட் நண்பர்கள் சோசலிஸ்ட் கட்சியின் மார்க்சிய குணங்களை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். உலகம் முழுவதிலும் சோசலிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்கள் மோதலால் நாஜிக்கள் பயன் அடைந்துவிட்டனர் என்றார் . காங்கிரஸ்- லீக் ஒற்றுமையையும் இந்து- முஸ்லீம் ஒற்றுமையும் ஒன்று என கருதுவது தவறு என்றார். பாகிஸ்தானா இல்லையா என்பதைவிட இந்து முஸ்லீம் மக்களின் பொருளாதரா பிரச்சனைகளை எடுத்து தீர்விற்கு கொணராமல் ஒற்றுமையை கட்டிவிடமுடியாது என்கிற கருத்தும் அவரிடம் இருந்தது. 1946ல் ஜின்னா பாகிஸ்தான் ஏற்கப்பட்டால் கலவரம் நின்றுவிடும் என பேசுவதையும் அதே நேரத்தில் பாகிஸ்தான் உருவாகும்வரை கலகம் நிற்காது என பேசிவருவதையும் தேவா விமர்சித்தார். இந்துமகாசபா மதத்தின் பெயரால் கலகம் உருவாக்க நினைக்கும் அமைப்பாக மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் அமைப்பாக இருப்பதாக தேவா விமர்சித்தார். இந்து விவசாயத்தொழிலாளியும் முஸ்லீம் தொழிலாளியும் இரு பக்க நிலப்பிரபுக்களாலும் சுரண்டப்படுவதை நாம் பார்க்க தவறக்கூடாது என்றார். விடுதலைக்கு பின்னர் நடந்த சோசலிஸ்ட்களின் நாசிக் மாநாட்டில் காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் சர்தார் பட்டேல் அணுகுமுறைகளை விமர்சித்து தேவா உரையாற்றினார். காங்கிரஸ் விடுதலைக்கு முன்னர் பேசியது ஒன்றாகவும் ஆட்சிக்குவந்த பின்னர் விடுதலை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது வேறாகவும் இருக்கிறது. அவர்கள் சோசலிஸ்ட்களை வெளியேற்றுகிறார்கள். முதலாளித்துவவாதிகளுக்கும் வகுப்புவாதிகளுக்கும் இடம் தருகிறார்கள். பட்டேல் ஆர் எஸ் எஸ், இந்துமகாசபாவை தட்டிக்கொடுக்கிறார். சண்முகம் செட்டியார் நிதி அமைச்சர் முதலாளிகளின் நலன்களை காப்பார் என்கிறார். கடவுள் காங்கிரசை காப்பாற்றட்டும் என்பதாக அவர் உரை அமைந்தது 1938ன் இறுதியில் காந்தியே நரேந்திர தேவா காங்கிரஸ் தலைவராக இருக்கலாம் என்றார். சுபாஷ் வேண்டாம் என்கிற எண்ணம் இருந்தது. நேருவும் இதை மார்ச் 1939ல் குறிப்பிடுகிறார். காந்திஜி சோசலிச எண்ணம் கொண்ட ஒருவர் நேருவோ அல்லது நரேந்திர தேவாவோ வரலாம் என்று சொல்லி வந்தார். ஆனால் நான்தான் சோசலிஸ்ட்கள் யாரும் இப்போது வேண்டாம் எனக் கருதினேன் என நேரு எழுதுகிறார். ராம்காரில் 1940 மார்ச்சில் தேவா சுபாஷின் நடவடிக்கைகளை விமர்சித்தார். 1942ல் கம்யூனிஸ்ட்கள் மக்கள் யுத்தம் என்று பேசியபோது அதை அவர் ஏற்கவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பில் பாசிச எதி்ர்ப்பில் முதலாளித்துவ எதிர்ப்பில் நடத்துவதுதான் மக்கள்யுத்தம் என அவர் விளக்கம் தந்தார். தேவாவைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பது அரசாங்க முறை மட்டுமன்று வாழ்க்கை முறையும் கூட. மனித நடத்தையில் அரசியலுடன் நிற்கக்கூடிய ஒன்றல்ல. அது பழக்கமாகவும் மரபாகவும் மாறவேண்டும் என கருதியவர். மானுட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அது உளப்பூர்வமாக ஊடுருவிய ஒன்றாக மாறவேண்டும் என்பதை வலியுறுத்தியவர். சர்வாம்ச கல்வி முறை ஜனநாயகத்தின் முதல்படி. கலாச்சாரத்தை சமுகமயமாக்குவதன் மூலமே( Socialisation of culture)மனித கூட்டுறவு ஏற்பட்டு பொது நன்மைக்கான முயற்சிகள் கைகூடும் என்றார். மக்களின் விமர்சனாபூர்வ திறன்களை வளப்படுத்தி தேர்ந்தெடுக்கும் ஆற்றலை மேம்படுத்தும் கல்விமுறை குறித்து அவர் பேசினார். கற்பது என்பது ஒரு வயதில் நின்று போகக்கூடிய செயல் அல்ல என்பதை அவர் வலியுறுத்தி சொன்னார். அரசாங்கமே முக்கிய நிகழ்ச்சிகளில் மக்களை பயிற்றுவிக்கும் வகையில் செயல்படவேண்டும் என்றார். பிறப்பு, வசதி அடிப்படையில் சிறப்பு தகுதிகளை வழங்காது வாய்ப்புகளை அனைவருக்கும் உருவாக்கித்தரும் கடமை ஜனநாயகத்திற்கு இருக்கிறது என்பதை நினைவூட்டிக்கொண்டிருந்தார். இந்து சமுக அமைப்பில் சாதிய ஏற்ற- இறக்க படிமுறைகளும் அசமத்துவமும் நிலவுகிறது. நாகரீகத்தின் வெளிச்சம் படாமல் ஏராள மக்களை வைத்துள்ளோம். அவர்களை கீழ்மையாக நடத்துகிறோம். இப்படிப்பட்ட சமுக முறைகள் ஜனநாயக வளர்ச்சிக்கு தடைகளாகவும் இருக்கின்றன. மனிதர்களை வேறுபடுத்தும் சமுக நடைமுறைகளுக்கு எதிராக உறுதியாக போராடாமல் நம்மால் ஜனநாயகத்தை மேம்படுத்த இயலாது என்ற எச்சரிக்கையை அவர் தந்தார். தேவா மேற்கு கிழக்கு தத்துவங்களை ஆழமாக கற்றார். புத்த மத ஆய்வுகளில் ஈடுபட்டார். ருஷ்யா குறித்த மதிப்பீடுகளில் இரண்டு அம்சங்களில் அவர் உடன்படவில்லை. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்- ஜனநாயகமின்மை என்றார். நவீன கல்வியும் அரசியல் சிந்தனையும் நிரம்பிய புரட்சிகரமானவர்களால்தான் பாட்டாளி- விவசாயிகளுக்கு தலைமை தாங்க முடியும் என அவர் 1951ல் எழுதினார். அளவிற்கு மீறி வானளாவிய அளவு வெகுஜனங்களை புகழ்வது சரியல்ல எனக் கருதினார்.புரட்சிகர அறிவாளிவர்க்கம் பாட்டாளிகளுக்கு சரியான தலைமையாக இருக்கும். புரட்சியின் தத்துவக்கூறுகளை விவசாயிகளும் தொழிலாளர்களும் உள்வாங்குவதில் சற்று சிரமம் இருக்கும். ஆகையால் வானளாவ வெகுஜனங்களை புகழ்வது என்பதில் ஞானம் இருப்பதாக தெரியவில்லை என்கிற கருத்து அவரிடம் வெளிப்பட்டது. நரேந்திரதேவா தேசிய புரட்சி்யும் சோசலிசமும் என்கிற புத்தகம் ஒன்றை 1946ல் எழுதினார். கல்லூரி காலத்திலேயே அவரால் கரிபால்டி, மாஜினி எழுத்துக்களை முழுமையாக படிக்க முடிந்தது. குரோபோட்கின், அனந்த குமரசாமி, அரவிந்தர், ஹர்தயால், துர்கானேவ் ஆகியோரையும் படித்தார். 1934 மே 17ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அமைப்பு மாநாட்டில் அவர் காங்கிரசில் இருந்து செயல்படவேண்டிய தேவையை குறிப்பிட்டு பேசினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தத்தில் பல பலவீனங்கள் இருந்தாலும் காங்கிரஸ்தான் தலைமை தாங்குகிறது என்றார். தற்போதுள்ள கட்டமும் பூர்ஷ்வா ஜனநாயக புரட்சிகர கட்டம்தான் என்பதையும் புரிந்துகொள்ள தவறக்கூடாது என்றார் நரேந்திரா. மார்க்சிஸ்ட் என்பவன் வறட்டு செக்டேரியனாக இருக்கக்கூடாதென்றார். இலக்கு அறிந்து, இருக்கும் நிலைகளில் தங்களது பலம் உணர்ந்து செயல்படும் இயக்கவியல் புரிதல் மார்க்சியர்களுக்கு வேண்டும்.. அடிமைப்பட்ட நாட்டிற்கு ‘அரசியல் விடுதலை’ சோசலிசம் நோக்கிய பாதையில் மிக அவசியம். அந்நிய சக்திகளின் ஆட்சி என்பதைவிட முதலாளித்து ஜனநாயகம் விரும்பதக்கதே என்றார் தேவா. குட்டிமுதலாளிகள் தலைமை எனச் சொல்லி விடுதலைப்போரில் ஒதுங்குவது சோசலிஸ்ட்களின் கண்ணோட்டமல்ல. அதே நேரத்தில் வர்க்கப்போராட்டம் என நாம் சொல்வதை விமர்சிப்பவர்களையும் ஏற்கமுடியாது. ஒடுக்கப்பட்டவர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை பிற்கால தேதிக்கு அவர்கள் ஒத்திப்போட சொல்வதையும் ஏற்கமுடியாது என்றார் தேவா. மக்கள்திரள் காலத்தின் அவசியம். சோவியத் ருஷ்யா அனுபவம் வெகுஜனங்களை உலகின் மையவிவாதப்பொருளாக மாற்றியுள்ளது. சோசலிச கருத்து எங்கும் உலாவத்துவங்கிவிட்டது. காங்கிரசும் தீவிர திட்டங்களுடந்தான் நகர்ந்தாகவேண்டும் என அறிவுறுத்தினார். தொழிலாளர்கள் இன்று தொழிற்சங்கவகையில் திரள்கிறார்கள். அவர்கள் அரசியல் உணர்வு பெறவேண்டும். அவர்களுக்கென அனைத்திந்திய கட்சி உதயமாகிவிட்டது. அவர்கள் தேசிய விடுதலைப்போரில் தலைமைதாங்கும் அளவு வரவேண்டும். அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பில் விவசாயிகளை அணியாக்கிக்கொள்ளவேண்டும். ஆனால் இயக்கமோ பிரிந்து கருத்துவேறுபாடுகளுடன் கிடக்கிறது. சந்தர்ப்பவாத தலைவர்கள் கையில் சிக்கியுள்ளது. பலநேரம் அவர்களது வேலைநிறுத்தங்கள் வெற்றிபெறாமல் போகின்றன. முதலாளித்துவவாதிகள் பக்கம் ஏகாதிபத்திய அரசு போய் நிற்கும் என அறியும்போது தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் அரசியல் போராட்டமாக மாறும். அவர்கள் தங்கள் போராட்டங்களுக்கு தாங்களே முன்கை எடுக்கிறார்கள். நமது இயக்கத்துடன் உயிர்ப்புள்ள தொடர்புகளை அப்போராட்டங்கள் ஏற்படுத்தவில்லை என்கிற விமர்சன் பார்வையும் அவரிடம் இருந்தது. ஏகபோகம் ஏகாதிபத்தியம் குறித்து லெனின் எழுதியவைகளை நரேந்திரா சுட்டிக்காட்டி அவ்வுரையை நிகழ்த்தினார். முசோலினையைப்போல ஹிட்லரும் பெருந்தனக்காரர்களின் நிதி செலவில்தான் ஆட்சியேறியுள்ளார். சில சோசலிச திட்டங்களை அவர்கள் முன்மொழியலாம். ஹிட்லர் பேசும் பொருளாதார தேசியம் ஜெர்மனிக்குப் பொருந்தாது. மக்களின் வாழ்க்கைத்தரத்தை வீழ்த்தி அதிருப்திக்கு இட்டுசெல்லும். அங்கு மத்தியதரவர்க்கத்தின் ஒருபகுதி சோசலிசத்தை ஒடுக்குவோருடன் கூட்டணி சேர்ந்துள்ளது. உழைப்பாளர்களிடமிருந்து தனித்துக்காட்டிக்கொள்ள அவ்வர்க்கம் விழைகிறது. பாசிசத்தின் எதிர்காலம் என்னவாகுமோ தெரியாது. ஆனால் முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகளை தீர்க்காமல் அதை ஒடுக்க மட்டும் அது விழைகிறது என பேசினார் தேவா. வேலையின்மை என்பது இல்லாத நாடு ருஷ்யா மட்டுமே.. அங்கு அராஜகம் இல்லை. திட்டமிட்டப்படி பொருளாதாரம் செல்கிறது. ருஷ்யாவின் ஓவ்வொரு அடியையும் பின்பற்றவேண்டிய அவசியமில்லை. அங்கு நகரும் கட்டங்கள்தான் நமக்கும் நடக்கும் என்பதும் அல்ல. நம்மை பொறுத்தவரை ஒரே இரவில் உருவாவதல்ல சோசலிசம். அது வளர்ந்து வரவேண்டிய ஒன்று. சோசலிசம் வருவதால் மனிதர்களிடம் முன்னேற்றகரமான மாற்றங்கள் வரும் என்கிறோம். இதன்பொருள் சோசலிசம் வந்தால் மனிதன் தேவனாகிவிடுவான் என்பதல்ல. அதேபோல் சோசலிசத்தில் அனவரும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்பதுமல்ல. ஒருவர் உடல்ரீதியாக மூளைரீதியாக பிறரை விஞ்சக்கூடிய நிலை இருக்கவே செய்யும். 1940களில் தேவாவிடம் இருந்த இவ்வகை புரிதல் பிரமிக்க வைக்கிறது. தங்களைப்போன்ற அறிவுஜீவிகள் செய்திடும் தவறை நரேந்திரா சுட்டிக்காட்டுகிறார். நாம் மக்களுக்கு கற்றுத்தரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறோமே தவிர கற்றுக்கொள்ளவும் வேண்டும் என நினைப்பதில்லை என்கிற தவறான மன்ப்போக்கை அவர் விமர்சித்தார். விவசாயிகள் மனநிலையும் மாறத்துவங்கியுள்ளது. மிராசுதாரர் நிலப்பிரபுக்களுடன் மட்டுமே கொண்டிருந்த உறவுகள் என்பதிலிருந்து காங்கிரஸ் மத்தியதரவர்க்கம் நோக்கி அவர்கள் திரும்பியுள்ளார்கள் என்று கணித்தார் தேவா. அவர் சோவியத் அனுபவம், மற்றும் ஸ்டாலின் 17வது கட்சிகாங்கிரசில் வைத்த ஆவணங்களை சுட்டிக்காட்டி விவசாயிகளும் இந்திய புரட்சியும் என்ற தனது உரையை மார்ச் 1939ல் நிகழ்த்தினர். அரசாங்கம் கட்டாய வரி வசூல் செய்வதை அவர் கடிந்துகொண்டார். முதலாளித்துவ நெருக்கடியின் பகுதியாகவே விவசாய நெருக்கடியும் எழுவதாக குறிப்பிட்டார். சென்னை, வங்க மாநிலங்களில் விவசாய அமைப்புகள் பலப்பட்டுவருவதை குறிப்பிட்டார். நிலம் சொத்துரிமை என்பதைவிட சமுக உற்பத்தி தேவைக்குரியது என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. இத்தாலி, ஜெர்மனியில்கூட நிலச்சட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டன. சொத்து என்பது உரிமை மட்டுமல்ல கடமைகளையும் உள்ளடக்கியது என ஜெர்மானிய சட்டம் பேசுகிறது. ருஷ்யா ஒரே ஆணையில் நிலப்பகிர்வை முடித்துவிட்டது. பொருளாதாரவாதிகள் மத்தியிலும் நிலவுடைமை பெரும் அநீதிக்குரியது என்கிற என்ணம் உருவாகியுள்ளது. அது வாடகைக்குரியது என்பதைவிட அதில் உழைப்பவர்களின் பயன்பாட்டிற்குரியது என்கிற கருத்து செல்வாக்கு பெற்றுள்ளது என்றார் நரேந்திர தேவ். ஊரக மக்களை கடன்வலையிலிருந்து காப்பது, விவசாய விளைபொருட்களை இடைத்தரகர் கொள்ளையிலிருந்து காத்து சந்தைப்படுத்த உதவுவது போன்றவற்றை அவர் பேசினார். ஒருங்கிணைந்த விவசாய கொள்கையை அரசு வெளியிட்டு அமுல்படுத்த வற்புறுத்தினார். விவசாய அமைப்புகளை கட்டுங்கள் என நாம் சொல்லும்பொது ஏதோ காங்கிரஸிற்கு பகை அமைப்பை உருவாக்குகிறோம் என பேசுவதை ஏற்கமுடியாது என்றார் தேவ். இரண்டும் ஒன்றுக்கொன்று துணைநிற்கும் அமைப்புகள் என புரிந்து செயலாற்றமுடியும் என்றார். தேச விடுதலைப்போராட்டத்தில் பொருளாதார சமுக உள்ளடக்கம் தரும் அவை என்றார். கூலி பிரச்சனையில் சிறுவிவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் முரண்பட்டு தோழமை சேர்மானத்தை தொலைத்துவிடக்கூடாது என்கிற கவலையை பகிர்ந்து கொண்டார் தேவ். நிலப்பிரபுக்களிடம் பெரும் விவசாயிகளிடம் அதிக கூலி கேட்பதில் தவறேதுமில்லை என்றார். இதற்கு கிசான் சபாக்களும் அவர்களுக்கு துணைநிற்கவேண்டும். விவசாயிகள் விவசாயத் தொழிலாளர் மத்தியில் சாதிய ஏற்றத்தாழ்வு பூசல் நேராவண்ணம் இணக்கம் தேவை என்றார். விவசாய இயக்கம் குறுகிய ‘பெசண்டிசம்’ என்கிற விவாசாயவாத கன்ணோட்டத்தில் சிக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்தார். 4 வலது, இடது என இருபகுதிகளிலிருந்தும் நம்மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. நாம் சர்வதேசியவாதிகள் எனவும் நமது தேச விடுதலை போராட்ட பங்களிப்பு சந்தேகத்திற்குரியது என வலதுசாரிபிரிவினர் விமர்சிக்கின்றனர். விடுதலை இல்லாமல் சோசலிசம் இல்லை என்பதை நாம் உறுதிபட கூறுகிறோம். அதற்காக செயல்படுகிறோம். இடதுசாரிபிரிவோ காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட் என்கிற இரட்டைப் பிரிவே பூர்ஷ்வாக்கள் ஏற்பாடுதான் என்றும் நாம் ஏமாற்று எனவும் சொல்கின்றனர். பிற தேசங்களை அடிமைப்படுத்தும் எந்த தேச பெருமிதமும் நமக்கு மார்க்ஸ் சொன்னபடி தேவையில்லை என்கிறோம். No fatherland என மார்க்ஸ் சொன்னதை சரியாக உள்வாங்காமல் பேசுவது கூடாது. முதலாளித்துவ வர்க்கம் மட்டுமே தனியாக முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை செய்துவிடமுடியாது என உணர்ந்துதான் நாம் தொழிலாளர் விவசாயி வர்க்க அமைப்புகளை கட்டுங்கள் என்கிறோம். தொழிலாளர் பலம் வாய்ந்த வேலைநிறுத்தங்களை நடத்துகின்றனர். அவை பெரும்பாலும் பொருளாதார கோரிக்கைகளில் அழுந்தியுள்ளன. அரசியல்ரீதியாக பலவீனமாகவே உள்ளன. ருஷ்யா போல் நிலைமை இல்லை என உணர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரசை பிரதான மேடை என்கிறோம் என்றார் தேவா. கம்யூனிஸ்ட்கள் கொள்கை நடைமுறை பற்றி பேசிவிட்டு எதிர்மறையாக நடந்துகொள்வதாக அவர் விமர்சித்தார். மூன்றாவது அகிலம்கூட தற்போதெல்லாம் ருஷ்யாவின் உள்நாட்டுகொள்கையின் விரிவாக்கம் போலவே பேசுகிறது என்ற விமர்சன பாரவையும் அவரிடம் இருந்தது. மூன்றாவது அகிலத்தை ருஷ்யாதேர்க்காலில் மட்டும் கட்டிவைத்துக்கொள்வது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்றார். கம்யூனிஸ்ட்கள் அதை அப்படியே இறக்குமதி செய்துகொண்டு தங்களை தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள் என விமர்சித்தார். மக்களிடம் செல்வாக்கு பெற விரும்ம்பும் எக்கட்சியும் தனது உறுப்பினர்களை அனைத்துவர்க்கத்தினர் மத்தியிலும் பரவலாக செயலாற்ற அனுமதிக்கவேண்டும். எங்கெல்லாம் வெகுஜனங்களோ அங்கெல்லாம் நிற்க தயங்கக்கூடாது. ஏகாதிபத்திய எத்ரிப்பு போராட்டத்தின் முனையில் இருக்கவேண்டும் என காங்கிரஸ் மேடையை பயன்படுத்துவதற்கு வேண்டிய தெளிவைத்தந்தார்.பாசிசம் குறித்தும் அவர் விவாதிக்கிறார். இன்று பாசிசமா சோசலிசமா என்ற நிலை வந்துவிட்டது. முதலாளித்துவ ஜனநாயகம் எதிர்காலமற்று நிற்கிறது. வெகு மக்களுக்கு ருஷ்யா நிலைமைகள்தான் தீர்வை தந்துள்ளது என்பதை தேவா ஏற்று அதையும் வெளிப்படுத்தி வந்தார்.. காங்கிரஸ் சோசலிசத்திற்கான மேடையல்ல ஆனால் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கான பரந்தமேடை என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம் என விளக்கமளித்தார். உபி சட்டமன்ற விவாதம் ஒன்றில் (செப்4, 1937) வெகுஜனங்களுக்கு பொருளாதார மேம்பாட்டை வழங்காத அரசியல் ஜனநாயகம் கேலிக்கூத்தாகவே அமையும். மனாரிட்டிகள் எனப்படும் சிறுபான்மையினரின் இசைவை ஒத்துழைப்பை பெறும்வகையில் பெரும்பான்மையின் நடவடிக்கைகள் அமைந்திடவேண்டும். சிறுபான்மையினர் தங்களுக்கு நியாயம் கிடைக்கிறது என்கிற உணர்வைப் பெறவேண்டும் என அவர் உரக்க கருத்தாடல் செய்தார். நாம் சொல்லக்கூடிய காங்கிரஸ் சோசலிஸ்ட் திட்டம்தான் லெனின் கூற்றுப்படியான ருஷ்யவகைப்பட்ட சோசியல் டெமாக்ரசியின் இந்திய வடிவமாக அமையும் என 1938ல் அவர் நம்பிக்கையை தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சி நம் கட்சியின் மார்க்சிய கேரக்டரை புரிந்துகொள்ளாதது துரதிருஷ்டமானது என்றார் தேவ். சோசலிச சக்திகளின் ஒற்றுமையை நாம் விழைகிறோம். சில அடிப்படைகளில் குறிப்பாக கட்சியில் உள் விமர்சனம் உட் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டு இரு கட்சிகளையும் கலைத்துவிட்டு புதிதாக மார்க்சிய கட்சியை உருவாக்கி செயல்படலாம் என்கிற முன்மொழிவை அவர் துணிச்சலாக தந்தார். இருபக்க பிரதிநிதிகள் கமிட்டி அமைத்து விவாதிக்கலாம் என்றார். எந்திரவகையிலான ஒற்றுமையை தான் சொல்லவில்லை என்றார். எம் என் ராய் கூட காங்கிரஸ் புரட்சிகர ஜனநாயக இயக்கம் என பேசத்துவங்கிவிட்டார். ஆனால் கம்யூனிஸ்ட்கள் அதை வெறும் முதலாளித்து அமைப்பு என்கிற பார்வையிலேயே உள்ளனர் என்கிற விமர்சனம் அவரிடம் இருந்தது.. 1942ல் கம்யூனிஸ்ட்களின் நிலைப்பட்டை அவர் மார்க்சிய பார்வையல்ல என விமர்சித்தார். நடைமுறைக்கும் கொள்கைக்கும் இடையேயான உறவு குறித்து லெனினிய பார்வையை தேவ் வலியுறுத்தி வந்தார். அவர்களது கோட்பாட்டிற்கும் ந்டைமுறைக்கும் பெரும் இடைவெளியிருக்கிறது. கொள்கை இலட்சியம் சார்ந்து செயல்படவில்லையெனில் குழப்பமே மிஞ்சும் என்றார். காங்கிரஸ் சோசலிஸ்ட்களாக இருந்து சோசலிஸ்ட் கட்சியில் பணியாற்றியவர்களில் ஜேபி, லோகியா உள்ளிட்ட பலரும் மார்க்சியத்திலிருந்து விலகிப் போன நிலையில் நரேந்திராவும் யூசுப் மெஹ்ரலி போன்றவர்கள் மட்டும்தான் இறுதிவரை மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்தனர் என பரஞ்பே தனது தேவா கட்டுரையில் எழுதினார். மார்க்சியவகைப்பட்ட கம்யூனிசம் உண்மையில் இந்தியாவில் ஜனநாயக சோசலிசமாகவே இருக்கமுடியும் என்பதை அழுத்தமாக பேசியவர் தேவா. எவ்வகை கற்பனை புனைவுகளுக்கும் மாறானது மார்க்சியம் (Marxism is entirely opposed to Romanticism) என்றார். ஜனநாயகமின்றி சோசலிசம் கட்டமுடியாது என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். சோசலிசம் கட்டுவதற்கு குறுக்குவழிகள் என ஏதுமில்லை என்றார் தேவா. பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக 1955ல் அவர் கயா மாநாட்டில் ஆற்றிய உரை மிகவும் உயர்ந்த ஒன்றாக சோசலிஸ்ட்களால் கொண்டாடப்படுவதை பார்க்கமுடியும். சோசலிச மனிதாபிமானம் என்பதை அவர் பேசிவந்தார். அது கலாச்சார உரிமைகளை காத்திட உதவும் என்றார். சோசலிஸ்ட் தலைவர் பிரேம் பசின் குறிப்பிடும்போது தேவா வன்முறைக்கு எதிராக இருந்தாரே தவிர வர்க்கப் போராட்டத்திற்கு எத்ராக இல்லை என்றார். பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கை கயாதீசிஸ் என்கிற பெயரில் 1955ல் தேவாவால் எழுதி வெளியிடப்பட்டது. அதில் ஆளும் வர்க்கம் பிற வர்க்கம் மீது அன்பு பாராட்டி எதையும் விட்டுக்கொடுத்து விடாது. அதற்கு வரலாறில்லை. இந்திய முதலாளித்துவம் பிற நாடுகளின் முதலாளித்துவத்தை விட கருணை கூர்ந்தது என்பதற்கு ஆதாரமில்லை என்று குறிப்பிட்டிருந்தார் தேவா. சோசலிசம் என்பது வெறும் அரசியல் மற்றும் பொருளாதாரமல்ல. அது நன்னெறி மற்றும் கலாச்சார கூறுகளையும் கொண்டது என்றார். அவர் தன்னை தலைவர் என நினைத்துக்கொள்ளாமல் இருந்தவர். இதை மது லிமாயி குறிப்பிடும்போது அவரிடம் பதவிக்கனவு என ஏதும் இல்லாத பலவீனம் இருந்தது .என்கிறார். ஜே பி, லோகியா, தேவா என்கிற மூன்று பெரும் ஆளுமைகள் இணைந்து இணக்கமாக வேலை செய்திருந்தால் சோசலிஸ்ட் கட்சியின் முகமே இந்தியாவில் செல்வாக்கு செலுத்தியிருக்கும் என்கிற தனது ஆதங்கத்தை மதுலிமாயி வெளிப்படுத்தியிருந்தார். தேவாவின் ஆதங்கமோ மார்க்சிய ஒளியில் மேம்பட்ட புரிதலில் கம்யூனிஸ்ட்களும் சோசலிஸ்ட்களும் இணைந்து பணியாற்றிருக்கவேண்டும் என்பதாக இருந்தது. Ref: 1. Narendra Deva A profile by Qurban Ali 2. Narendra Deva The cradle of Socialism and Gandhism by Pratyay Dutta 3. Narendra Deva In the Freedom Movement-Anil Nauriya 4. Socialism and the National revolution- Narendra Deva 5. Narendra Deva and the socialist movement- H K Paranjpe ஆசிரியரின் பிற நூல்கள் [] 1. மார்க்சிய தடங்கள் 2. ரோசாலக்ஸம்பர்க் 3. போராளிகளின் குரல் 4. பகவத்கீதை பன்முகக் குரல்கள் 5. Trade Justice in Telecom 6. Selected Ides of O.P Gupta 7. ஹெகல் துவங்கி.. 8. கார்க்கியின் அரசியல்வெளி www.pattabiwrites.in Ph : 9443865366