[] 1. Cover 2. Table of contents நவதுவாரகை யாத்திரை நவதுவாரகை யாத்திரை   கைலாஷி   muruganandams@rediffmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - பிரசன்னா - udpmprasanna@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/navadhuvaaragai_yathirai மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: மீ. வேல். பிரசன்னா - udpmprasanna@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Prasanna - udpmprasanna@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/navadhuvaaragai_yathirai This Book was produced using LaTeX + Pandoc முன்னுரை உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன், எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி மண்ணினுள் அவன் சீர், வளம் மிக்கவன் ஊர் வினவித் திண்ணம் என் இளமான் புகும் ஊர் துவாரகையே ( திருக்கோளூரே) என்று நம்மாழ்வார் பாடியுள்ளார். அத்திருக்கோளூர் பெண்பிள்ளை போல அடியோங்கள் துவாரகையில் அருள் பாலிக்கும் கண்ணன் கருந்தெய்வத்தை நாடிச் சென்ற யாத்திரையின் விவரங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே இந்நூல். ஸ்ரீபிள்ளை லோகாச்சார்யார் எனும் மகான், ஏதோ ஒரு நினைவுடன், ஏதோ ஒரு காரணத்துக்காக, இறை நினைப்பே சிறிதும் இல்லாமல் அவரது தலத்தின் பெயரை நாம் உச்சரித்தாலும், அந்த ஒரு காரணத்திற்காக அவர் நம் மீது அன்பைப் பொழிவார் என்று கூறியுள்ளார். தெய்வத்தின் மீது பற்றுகொண்டு, அவரைத் தவிர வேறெதையும் நினையாமல், அவரது திருநாமத்தையும் அவரது திருத்தலப் பெயர்களையும் உச்சரித்தால், நம் மீது கருணை மழை பொழியமாட்டாரா என்ன? அத்தலங்களுக்குச் சென்று தரிசித்தால், இன்னும் எவ்வளவு பலன்கள் கிட்டும்? இறைவன் கருணையுடன் அருள் பாலிக்கும் பல் வேறு ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரையாக சென்று வரும் ஒரு சிறு குழு அடியோங்களுடையது. அடியோங்களின் ஓர் யாத்திரையின் அனுபவங்களே இந்நூல். ஒரு நாள் எங்கள் குழுவின் திரு.தனுஷ்கோடி அவர்கள் தொலைப்பேசியில் அழைத்து இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் சிறிது விடுமுறை நாட்கள் உள, குஜராத் மாநிலத்தில் உள்ள நவதுவாரகைகள் யாத்திரை செல்லலாமா? என்று வினவினார். அதற்கு அடியேன் பஞ்சதுவாரகைகள் பற்றி கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் நவதுவாரகைகள் எவையென்று தெரியாதே என்றேன். இருக்கின்றாரே கூகிள், அதில் தேடி ஒரு அட்டவணை தயாரியுங்கள் என்றார். அது போலவே கூகிளில் (Google) நவதுவாரகைகள் சென்று வந்த அனுபவத்தை ஒரு அன்பர் பதிவு செய்திருந்தார் அதில் முழு விவரமும் கிடைத்தது. மேலும் அடியேனுடன் பணி புரியும் குஜராத்தைச் சார்ந்த ஒரு அன்பரிடம் இவ்விடங்களைப் பற்றி விசாரித்த போது அவரும் ஒரு வாரத்தில் அனைத்து தலங்களையும் சேவிக்கலாம். அவருடைய மகன் மூலதுவாரகை அமைந்துள்ள கொடினார் என்ற இடத்திற்கு அருகில் பணி புரிகின்றான். அகமதாபாதில் இருந்து ஒரு வண்டி அமர்த்தித் தருவதாகவும் கூறினார், அனைத்து இடங்களையும் அறிந்த ஓட்டுநர் என்பதால் எந்தவித சிரமமும் இல்லாமல் யாத்திரை மேற்கொள்ளலாம். தங்கும் இடங்களை அவ்விடம் சென்ற பிறகே முடிவு செய்து கொள்ளுங்கள் முன்பதிவு செய்யவேண்டாம். சோமநாதம், நாகேஸ்வரம் ஆகிய ஜோதிர்லிங்க ஸ்தலங்கள், கிர் காடுகள், காந்தி அடிகளின் பிறந்த இடமான போர்பந்தர், காசிக்கு இணையான பிராசி, இராஜஸ்தானத்தில் ஸ்ரீநாத்ஜீ அருகில் உள்ள கங்ரோலி மற்றும் புஷ்கர் ஆகிய பல புண்ணிய தலங்களையும் தரிசிக்கலாம் என்று பல உபயோகமான தகவல்களையும் கூறினார்.  இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரைவு அட்டவணையை தயார் செய்தோம். அடியேன் படிப்பை முடித்து முதலில் பணியில் அமர்ந்த இடம் தென் குஜராத்தில் உள்ள அங்கலேஸ்வர் ஆகும். ஐந்து வருடம் அங்கு பணி புரிந்தேன் அப்போது துவாரகா, சோமநாத் செல்ல வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அச்சமயம் அவ்வெண்ணம் நிறைவேறவில்லை. பின்னர் பல வருடங்கள் கழித்து இவ்வாய்ப்பு சித்தித்தது. இதை ஏன் எழுதுகின்றேன் என்றால் “அவன் அருளால் தானே அவன் தாள் வணங்க முடியும்”. யாருக்கு எப்போது எப்படி தரிசனம் தருவது என்பது அவன் திருவுள்ளம். நாம் அவனிடம் நமது பிரார்த்தனையை மட்டுமே வைக்க முடியும். சென்னையிலிருந்து வான் வழியாக அகமதாபாத்திற்கு மூலமாக சென்று வருவதற்கு முன்பதிவு செய்து விட்டு அடியேன், திரு.தனுஷ்கோடி, திரு.ஸ்ரீகுமார், திரு.கோபால், திரு.மோகன் ஆகிய ஐவர், ஸ்ரீகிருஷ்ணரை பல் வேறு தலங்களில் சேவிக்க மிக்க ஆவலுடன் நவதுவாரகை யாத்திரைக்காக காத்துக் கொண்டிருந்தோம். ஒன்பது துவாரகைகளின் யாத்திரைக்கு முன்னர் துவாரகையின் சிறப்பு என்னவென்று காணலாமா அன்பர்களே? “உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்”, “கண்ணனல்லால் தெய்வமில்லை” என்றெல்லாம் நம்மாழ்வார் பாடிய, கேட்டதைக் கொடுப்பவனும், கீதையின் நாயகனுமான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நூறாண்டுகள் அரசாண்ட நகரம் துவாரகை. இறைவனுடனான தொடர்பால், முக்தி தரும் வல்லமை சில தலங்களுக்கு உண்டு. அவற்றை ‘மோட்சத் தலங்கள்’ என்பர் பெரியோர். அத்தகைய ஏழு மோட்சத் தலங்களில், துவாரகை தனிச்சிறப்பு கொண்டது ஏனென்றால். பகவான் கண்ணன் நூறாண்டுகள் ஆட்சி செய்த தலம் இது. துவாரகை சார்தாம் தலங்களில் ஒன்று. நமது பாரத தேசத்தின் எல்லையாக கருதப் படும் சார்தாம் என்றழைக்கப்படும் நான்கு தலங்களில் மேற்குப்பகுதி ஆலயம் இத்தலம், ஆதி சங்கரர் அமைத்த நான்கு பீடங்களில் ஒரு பீடம் இத்தலத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார்கள் மங்கலாசாசனம் செய்த திவ்ய தேசங்கள் 108ல் ஒன்று துவாரகை. துவரை, துவராபதி, வண்துவரை, வண்துவராபதி, மதிள் துவராபதி என்றெல்லாம் ஆழ்வார்கள் பலவாறாக இத்தலத்தை போற்றியுள்ளனர். சம்பிரதாயத்தில் துவாரகைப் பெருமாளுக்கு “கல்யாண நாராயணன்” என்று திருநாமம்.   ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாக ஒளித்து வளர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் வடமதுரை என்றழைக்கப்படும் மதுராவை ஆண்டு கொண்டிருந்தார். ஒரு கால கட்டத்தில் அவர் அந்நகரை விடுத்து மேற்குப் பகுதியில் கடற்கரைக்கு வந்தார் அவ்வாறு அவர் வந்து கடல் பின் வாங்கிய பிரதேசத்தில் ஒரு நகரை அமைத்து அரசாண்டார், அந்நகரமே துவாரகை. அவரது இராஜசபை துவாரகையிலும், அந்தப்புரம் துவாரகை தீவிலும் அமைந்திருந்தது. இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணருடன் தொடர்புடைய தலங்களே இந்நவதுவாரகைகள். இத்தலங்கள் குஜராத் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் தற்போது அமைந்துள்ளன. அடியோங்கள் தரிசித்த நவதுவாரகைகள் 1. துவாரகை 2. கோமதி துவாரகை 3. பேட்(தீவு) துவாரகை 4. ருக்மிணி துவாரகை 5. சுதாமா துவாரகை, 6. முக்தி துவாரகை, 7. மூல துவாரகை, 8. டாகோர் துவாரகை 9. ஸ்ரீநாத்ஜீ துவாரகை ஆகியவை ஆகும். இவற்றில் முதல் நான்கு தலங்கள் துவாராகதீஷ் என்றழைக்கப்படும் ஸ்ரீகிருஷ்ணர் ஆண்ட (முக்கிய) துவாரகைக்கு அருகில் அமைந்துள்ளன. துவாரகை(1) கோமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது எனவே கோமதி அன்னையின் சன்னதி கோமதி துவாரகை(2) என்றழைக்கப்படுகின்றது. கிருஷ்ணபரமாத்மாவின் அந்தப்புரம் ஒரு தீவில் அமைந்திருந்தது அதுவே பேட் துவாரகை(3). பேட்(Bayt) என்றால் குஜராத்தி மொழியில் தீவு என்று பொருள். துவாரகைக்கு அருகில் உள்ள ஓகா (Okha) என்ற துறைமுகத்தில் இருந்து படகு மூலம் செல்ல வேண்டும். துர்வாசரின் சாபத்தினால் ருக்மணி 12 ஆண்டுகள் தவம் புரிந்த தலம் ருக்மணி துவாரகை(4). இத்தலத்திற்கு அருகில் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் நாகேஸ்வரர் தலம் உள்ளது. இந்நான்கு துவாரகைகளுடன் இன்னொரு ஜோதிர்லிங்கத் தலமான சோமநாதத்தில் அமைந்துள்ள, ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதார நோக்கம் முடிந்த பின் வைகுந்தம் சென்ற பால்கா தீர்த்தம் என்றழைக்கப்படும் முக்தி துவாரகை(6) என்ற தலத்தையும் சேர்த்து ‘“பஞ்ச துவாரகைகள்”’ என்று தரிசித்து மகிழ்கின்றனர் பொதுவாக அனைவரும் பொதுவாக பஞ்சதுவாரகை யாத்திரை மேற்கொள்வர். அடியோங்கள் சில தலங்களை அதிகமாக தரிசித்தால் இந்த யாத்திரை நவதுவாரகை யாத்திரை ஆனது. இப்பஞ்ச துவாரைகளுடன், கிருஷ்ண பரமாத்மா துவாரகைக்கு வந்த போது முதன் முதலில் இங்கு தங்கிய கொடினார் (Kodinar) என்ற ஊருக்கு அருகில் உள்ள மூல துவாரகை(7). காந்தியடிகளின் பிறந்த ஊரான போர்பந்தருக்கு அருகில் அமைந்துள்ள கண்ணனின் பால்ய நண்பரான குசேலரின் ஆலயம் அமைந்துள்ள சுதாமா துவாரகை(5), தென் குஜராத்தில் நதியாத் (Nadiad) என்ற ஊரின் அருகில் அமைந்துள்ள இரண்டாவது துவாரகை என்றழைக்கப்படும் டாகோர் துவாரகை(8) மற்றும் இராஜஸ்தான் மாநிலத்தில் உதயப்பூர் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீநாத்ஜி துவாரகை(9) ஆகிய நான்கு தலங்களையும் சேர்த்து நவதுவாரகைகள் என்றழைத்து தரிசித்து மகிழ்கின்றனர் சில பக்தர்கள். அடியோங்கள் ஐவர் இந்நவதுவாரகைகளுடன் அருகில் உள்ள பல தலங்களையும் திவ்யமாக தரிசனம் செய்யும் பாக்கியம் இந்த யாத்திரையின் போது கிட்டியது. அவ்வற்புத அனுபவத்தை தாங்களும் பகிர்ந்து கொள்ள அடியேனுடன் வாருங்கள் அன்பர்களே. அடியோங்கள் பல யாத்திரைகள் சென்றிருக்கிறோம். ஆனால் துவக்கம் முதல் நிறைவு வரை எந்தவித சிறு தடங்கலும் இல்லாமல், அனைத்து சன்னதிகளிலும் திவ்யமான தரிசனத்துடன் மிகவும் அருமையான யாத்திரையாக இந்த யாத்திரை அமைந்தது. எட்டு நாட்கள் யாத்திரை என்பதாலும், வண்டியில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்ததாலும் தங்கும் விடுதிகளுக்கு முன் பதிவு செய்யவில்லை. வண்டி ஓட்டுநருக்கு இவ்வழியாக பலமுறை சென்று வந்த அனுபவம் இருந்ததால் எவ்விடத்தும் எந்தவித சிரமமும் இருக்கவில்லை. திட்டமிட்டதை விட அதிக தலங்களையே சேவித்தோம். நாம் அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி நூறு அடிகள் எடுத்து வைத்து ஓடி வருகின்றான் என்பதை உணர்த்திய யாத்திரை இது. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் உளன் என்ற திருக்குறளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள். அவர் பிறந்த மாநிலம் குஜராத் அல்லவா? எனவே யாத்திரை செல்லும் பகுதியில் அவரது பிறந்த ஊரான போர்பந்தரில் ஒரு துவாரகை அமைந்துள்ளதால் அவர் பிறந்த இல்லத்தையும், அகமதாபாத்தில் அவர் வசித்த சபர்மதி ஆசிரமத்தையும் கண்டு களித்தோம் ஸ்ரீமந் நாராயணன் இப்பூவுலகில் உள்ளோர் உய்ய மொத்தம் 22 அவதாரங்கள் எடுத்தார் என்பர் பெரியோர், அவற்றுள் பத்து அவதாரங்கள் தசாவதாரங்கள் என்று சிறப்பிக்கப்படுகின்றன அவற்றுள் இராம மற்றும் கிருஷ்ணாவதாரங்கள் இரண்டும் பூரண அவதாரங்கள் என்று போற்றப்படுகின்றன. இவ்விரண்டு அவதாரங்களில் பெருமாள் மனிதனாக பிறந்து, நமக்கெல்லாம் ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டிச் சென்றார், ஆகவே பாரத தேசம் முழுவதும் உள்ள பல பக்தர்கள் இருவரையும் பலவாறு போற்றிப் பாடியுள்ளனர். கிருஷ்ணன் என்ற பதத்திற்கு பல பொருள்கள் உண்டு அதில் முதலானது கருமை நிறம் உடையவன் என்பது எனவே கண்ணனை சியாமளன் என்று போற்றியுள்ளனர். இரண்டாவது பொருள் யாரையும் எளிதாக ஆகர்ஷிக்கக் கூடியவன். மூன்றாவது பொருள் சதானந்த ரூபன், அவனை தரிசிப்பதும், அவனது பாடல்களைப் பாடுவதும், அவனது பால லீலைகளை நினைப்பதும் எல்லாமே ஆனந்தம் தானே. நான்காவது பொருள் சாட்சாத் பரமாத்மா அவனே. மேலே கூறியபடி கண்ணனின் லீலைகளால் ஆகர்ஷிக்கப்பட்ட பல பக்தர்கள் அவரைப் பற்றி பாடியுள்ளனர். கிழக்கில் ஜெயதேவர், மேற்கில் மீராபாய், மராட்டியத்தில் பல் வேறு கவிகள், கன்னடத்தில் தாசர்கள், மலையாளத்தில் பட்டத்திரி, தமிழில் ஆழ்வார்கள், ஊத்துக்காடு வேங்கடகவி, பாரதியார் என்று கண்ணனைப் பற்றிப் பாடியவர்கள் எண்ணிலடங்கர். அவர்கள் கிருஷ்ணரைப் பற்றிய ஆயிரக்கணக்கான கீர்த்தனைகள் பல்வேறு மொழிகளில் உள்ளன. தன்னை யசோதையாக, இராதையாக, கோபிகைகளாக, தோழனாக, ஆசிரியனாக பாவித்து பலவிதங்களில் இவர்கள் பாடியுள்ளனர். கண்ணனைப் பற்றிய பாடல்களுள் பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்து கண்ணனின் பால லீலைகளை பாடிய பாசுரங்கள், அவரது திருமகளாரான கோதை நாச்சியார் தன்னை ஒரு கோபிகையாவும், ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்ப்பாடியாகவும், வடபத்ர சாயியை ஸ்ரீகிருஷ்ணராகவும் பாவித்து பாடிய பாசுரங்கள் மற்றும் மற்ற ஆழ்வார்கள் பாலகிருஷ்ணரின் லீலைகளை பலவாறு போற்றிப் பாடியுள்ள பாசுரங்கள் சிலவற்றை தக்க இடங்களில் சேர்த்துள்ளேன். யாத்திரை என்பது புண்ணிய பயணம் அல்லவா? எனவே புது இடங்களுக்கு பயணம் செய்யும் போது நாம் அவ்விடங்களுடன் தொடர்புடைய பல செய்திகள், கலாச்சாரம், உணவு, உடை, பொது சிறப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இந்த யாத்திரையின் போது அடியோங்கள், “அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்” என்று கிருஷ்ணரின் மேல் மதுராஷ்டகம் பாடிய ஸ்ரீமஹாபிரபுஜீ என்று இப்பகுதியின் வைணவர்கள் அழைக்கும் வல்லபாச்சாரியாரின் புஷ்டி மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்டோம். கண்ணனே தெய்வம், அவனது சேவையே வாழ்வின் குறிக்கோள், முக்தி தேவையில்லை என்னும் சுத்த அத்வைதத்தின் அடிப்படையில் அமைந்த இம்மார்க்கத்தின் படி இக்கோவில்களில் பூசைகள் நடைபெறுகின்றன. மேலும் ஜலாராம் பாபா என்றழைக்கப்படும் இராம பக்தர், ஸ்வாமி நாராயண் ஆகியவர்களைப் பற்றியும் அறிந்து கொண்டோம். இவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளையும் இந்நூலில் தாங்கள் படித்து இன்புறலாம். துவராபதி எம்பெருமான், துவரை நாயகன், துவராபதிக் காவலன், வண்துவராபதி மன்னன், முதுத்துவரைக் குலபதி, துவரைப்பிரான், துவரைக்கோன் என்றெல்லாம் ஆழ்வார்கள் போற்றிப் பாடிய சுந்தரனின் பல்வேறு கோலங்களை தாங்கள் தரிசித்து மகிழலாம். ஒவ்வொரு தலத்துடன் தொடர்புடைய பல் வேறு சுவையான கதைகளும் உள்ளன அவற்றையும் சொல்லிக் கொண்டு வருகிறேன் தாங்களும் வாசித்துக்கொண்டே “கொண்டல் வண்ணனை, கோவலனாய் வெண்ணையுண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணியமுதை, ஸ்ரீகிருஷ்ணரை” அரபிக்கடலோரம் அமைந்த பல் வேறு துவாரகைகளில் திவ்யமாக தரிசனம் செய்ய அடியேனுடன் பயணம் செய்யுங்கள் என்று இரு கரம் கூப்பி அழைக்கிறேன், வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் - 1 கிருஷ்ணர் துவாரகை வந்த வரலாறு [] …….. அவரைப்பிராயந்தொடங்கி என்றும் ஆதரித்தெழுந்த என் தடமுலைகள் துவரைப்பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேனொல்லை விதிக்கிற்றியே (நா.தி 1-4) என்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் அடைய விரும்பிய துவரைப் பிரானை, ஸ்ரீகிருஷ்ணரை தரிசிக்க, அடியோங்கள் டிசம்பர் மாதம் யாத்திரை மேற்கொண்டதால் அப்போது சிறிது குளிர் இருக்கலாம் என்பதால் ஒரு கம்பளி உடை(Sweater) தேவைப்படும் என்று அடியேனுடன் பணி புரியும் அன்பர் கூறியிருந்தார், மேலும் எட்டு நாள் யாத்திரை என்பதால் அதற்கு தகுந்தவாறு நொறுக்குத் தீனி, அவசியமான மருந்துகள் மற்றும் யாத்திரைக்கு வேண்டிய பூசைப் பொருட்கள் ஆகியவற்றை தயார் செய்து கொண்டு, தகுந்த ஏற்பாடுகளுடன் யாத்திரையைத் துவக்கினோம். மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூயப்பெரு நீர் யமுனைத் துறைவனை ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை….. (திரு-5) நவதுவாரகைகளில் ஸ்ரீகிருஷ்ணரை சேவிக்க சென்னையில் இருந்து அகமதாபாதிற்கு அதிகாலையில் செல்லும் ஒரு விமானம் மூலமாக கிளம்பினோம். (ஜாம்நகர்- Jamnagar விமான நிலையம் துவாரகை மற்றும் சோமநாதத்திற்கு மிகவும் அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்) விரும்பும் அன்பர்கள் அங்கும் விமானம் மூலம் சென்று பின்னர் அங்கிருந்து இத்துவாரகைகளை தரிசிக்கலாம். விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதே கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் ஸ்ரீகிருஷ்ணர் மதுராவை விட்டு ஏன் துவாரகை வந்தார் என்ற சுவையான வரலாற்றைக் காணலாமா அன்பர்களே? வடமதுரையில் ஒருத்தி (தேவகி-வசுதேவர்) மகனாய் ஓரிரவில் பிறந்து, யமுனையைக் கடந்து கோகுலம் சென்று ஒருத்தி (யசோதை- நந்தகோபர்) மகனாக ஒளித்து வளர்ந்த ஸ்ரீகிருஷ்ணர், கோகுலத்தில் வெண்ணெய் உண்டு, குழலூதி கோபியர் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டு, தாயால் ஆப்புண்டு, ஆவினம் மேய்த்து, கோபியருடன் இராச லீலை செய்து, கம்சன் அனுப்பிய புள்ளின் வாய் கீண்டு, பேய்ச்சி முலையுண்டு, கள்ளச் சகடம் காலோச்சி, விளவை கன்றால் வீழ்த்தி பல் வேறு பால லீலைகள் செய்தார். பின்னர் தனது பதினோராவது வயதில் மதுரா வந்து “தரிக்கிலானாகி தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில் நெருப்பென நின்று” அவனை சம்ஹாரம் செய்தார். தாத்தா உக்ரசேனரை அவரை யது ராஜ்யத்தின் அதிபதியாக்கினார். மதுரா மக்கள் அனுதினமும் ஸ்ரீகிருஷ்ணரை முகுந்தா என்று அழைத்து வணங்கினர். இதற்கு முக்தியும் பரமானந்தமும் தருபவர் என்று பொருள். கம்சனை கண்ணன் கொன்றதால் அவர் மேல் கோபமுற்ற கம்சனின் மாமனாரான ஜராசந்தன், ஸ்ரீகிருஷ்ணரின் மேல் பதினேழு  முறை போர் தொடுத்தான். இதனிடையே யாதவர்களால் தன் தந்தை அவமானப்படுத்தப்பட்டதை நாரதர் மூலம் அறிந்த காலயவனன் என்ற அரசனும் பெரும்படையுடன் மதுராவைத் தாக்கினான். இரண்டு எதிரிகளை ஒரே சமயத்தில் சமாளிப்பது கடினம் என்பதால், ஜராசந்தனிடம் இருந்து யாதவ குலத்தினையும், தன்னை அடைக்கலமாக அண்டி வந்தவர்களையும் காக்க,  ஸ்ரீகிருஷ்ணர் எண்ணம் கொண்டார். எனவே மதுராவை விடுத்து மேற்குக் கடற்கரை பகுதிக்கு வந்தார். ‘குசஸ்தலம்’ என்னும் ஒரு நிலப்பகுதியை, ஸ்ரீபலராமர் அளித்தார். அந்நிலப்பகுதி போதுமானதாக இல்லாததால்,  ஸ்ரீகிருஷ்ணர் சமுத்திர  ராஜனை வேண்டினார். அதன் படி கடல் பன்னிரண்டு யோசனை தூரம் உள்வாங்கியது. கடல் கொடுத்த பூமியையும் சேர்த்து தேவதச்சன் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு அற்புதமான நகரை நிர்மாணித்து யாதவ மக்களையும், மாடு - கன்றுகளையும் அங்கு குடியேற்றினார் ஸ்ரீகிருஷ்ணர், தன்னுடைய தலை நகரத்தையும், தன்னுடைய மாளிகையையும் அவ்விடத்தில் அமைத்துக் கொண்டார். இப்படித் தோன்றியதுதான் துவாரகை. ஒரே நாளில் ஒரே இரவில் இப்பகுதியை பொன்னால் ஆன நகராக, துவாரகாவை உருவாக்குகிறார். கண்ணன் பாதம் பட்டாலே புண்ணியம் என்று சொல்லுவார்கள். கண்ணன் இங்கே அரசனாக வாழ்ந்திருந்து மக்களிடையே கலந்து பழகியிருக்கிறார். பக்தர்கள் அவரை அரசனாகவும் போற்றுகிறார்கள். பகவானாகவும் துதிக்கிறார்கள். ஜராசந்தனுக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் என்ன சம்பந்தம்? ஜராசந்தன் ஏன் பகவானுடன் போர் புரிய வேண்டும்?  அதற்கு ஒரு பின்னணி இருக்குமல்லவா? அக்கதை இதோ. வடமதுரையின் அரசன் உக்கிரசேனனின் மகளான தேவகியை ஸ்ரீவசுதேவர் மணந்ததும், தேவகியின் சகோதரனான கம்சன், புது மணத்தம்பதிகளை தேரில் கூட்டிச்செல்லும் பொழுது, தேவகியின் எட்டாவது குழந்தையினால், கம்சனின் மரணம் நிகழும் என்று அசரீரி ஒலித்தது, அதனால்,  வசுதேவரையும், தேவகியையும் கம்சன் சிறையில் அடைத்தான். குழந்தைகள் பிறந்தவுடன் தன்னிடம் கொடுத்து விடவும் ஆணையிட்டான். தேவகி வயிற்றில் பிறந்த முதல் ஆறு குழந்தைகளை கொன்றான். ஏழாவது குழந்தை விஷ்ணுவால் கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றப்பட்டு அவள் வயிற்றில் வளர்ந்து பலராமராக அவதாரம் செய்தார். பலராமன் ஆதிசேஷனின் அம்சம் ஆவார். ஸுதபஸ் என்னும் முனிவரும் அவரது மனைவி வ்ருஷ்ணியும் மஹா விஷ்ணுவை குறித்து கடுமையான தவம் புரிந்தனர், அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து பெருமாள் அவர்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பெருமானே நீங்களே எங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று மூன்று முறை கேட்டனர். அவ்வண்ணமே முதலில் ஸுதபஸ் – வ்ருஷ்ணி தம்பதியரின் மகனாக வ்ருஷ்ணி கர்ப்பராக மஹாவிஷ்ணு அவதரித்தார். இரண்டாவது முறை காஷ்யபர் – அதிதியாக அவர்களுக்கு வாமனராக அவதரித்து மஹாபலியின் கர்வத்தை அடக்கினார். மூன்றாவது ஜன்மத்தில் அவர்கள் வசுதேவர் – தேவகியாக திகழ அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார். பிள்ளை வேண்டும் என்ற பாசத்தால் அவர்கள் இருந்ததால் பகவான் அவர்கள் பிள்ளையாக பிறந்தாலும் அவரை வளர்க்கும் பாக்கியம் மூன்று முறையும் அவர்களுக்கு சித்திக்கவில்லை. வசுக்களில் ஒருவரான துரோணர் (மஹாபாரத துரோணர் அல்ல) தன் மனைவியான தராவுடன் பிரம்ம தேவரைப் பணிந்தனர். பிரம்மதேவரும் அவர்களிடம் நீங்கள் இருவரும் உலகத்தை விருத்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது அவர்கள், தந்தையே! நீங்கள் உங்கள் சொல்படி நடக்கிறோம். எங்களுக்கு நீங்கள் ஒரு வரம் தர வேண்டும். மஹாவிஷ்ணுவை நாங்கள் மிகவும் நேசிக்கின்றோம், அவர் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார், என்னென்ன சேஷ்டைகள் செய்வார் என்பதை நாங்கள் கண்குளிரக் காண வேண்டும், பிற்காலத்தில் அவரது சேஷ்டைகளையெல்லாம் படிப்போரும், கேட்போரும் பாவ விமோசனம் பெற வேண்டும் என்று வேண்டினர். பிரம்மதேவரும் அது இப்பிறவியில் நடக்காது, பூலோகத்தில் நடக்கும் அநியாயங்களை தடுத்து நிறுத்திட மஹாவிஷ்ணு மானிட ரூபத்தில் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் போது உங்களுக்கு அப்பாக்கியம் கிடைக்கும் என்றார். அதன்படி இப்பிறவியில் அவர்கள் நந்தகோபர்-யசோதையாக கோகுலத்தில் பிறக்க அவர்களிடத்தில் ஸ்ரீகிருஷ்ணர் குழந்தையாக வந்து சேர்ந்து அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினார். எனவேதான் திருக்கோளூர் பெண்பிள்ளை “தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே!” என்றும் “ஆயனை வளர்த்தேனோ யசோதையைப் போலே!” என்று கூறுகின்றாள். தேவகி கண்ணனைப் தன் வயிற்றில் சுமந்து பெற்றாலும் அவனது பால லீலைகளை தரிசிக்கும் பாக்கியம் தெய்வநங்கை யசோதைக்கே கிட்டியது என்பது அந்த மாயக்கண்ணனின் லீலை. ஆகவே நாமும் எந்தவிதப் பற்றும் இல்லாமல் நீயே சரண் என்று சரணமடைவதே உத்தமம். தேவகியின் எட்டாவது பிள்ளையாக அத்தத்தின் பத்தாம் நாள் நள்ளிரவில் சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர் தாய் தந்தையருக்கு நான்கு கரங்களுடன் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். “ஆழியை மறைத்துக்கொள் என்றேனோ சொன்னேனோ வசுதேவரைப் போலே” என்று திருக்கோளூர் பெண்பிள்ளை கூறியது போல வசுதேவர் வேண்டிக்கொண்டபடி சங்கு சக்கரங்களை மறைத்துக் கொண்டு மானிடப்பிள்ளையாக தன்னை மாற்றிக்கொண்டார். இரவோடிரவாக தன்னை கோகுலத்தில் கொண்டு விட்டு விட்டு அங்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கு கொண்டு வருமாறு பகவான் பணிக்க, வசுதேவரும் கொட்டும் மழையில் ஆதி சேஷன் குடைபிடிக்க யமுனையைக் கடந்து கோகுலத்தில் யசோதையிடத்தினில் கிருஷ்ணரை விட்டு யசோதையின் பெண் குழந்தையை சிறைச்சாலைக்கு கொண்டு வந்தார். இதை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் “கஞ்சன் வலை வைத்தவன்று காரிருளெல்லிற் பிழைத்து” என்று கொண்டாடுகிறாள். குழந்தையின் அழுகுரல் கேட்ட காவலர்கள் கம்சனிடம் சென்று தெரிவிக்க அவனும் அக்குழந்தையைக் கொல்ல வந்தான் பெண் என்றும் பாராமல் அக்குழந்தையை கொல்ல அவன் வாளை ஓங்க, விஷ்ணுவின் யோக மாயாவான அக்குழந்தை துர்க்கையாக மாறி, உன்னைக் கொல்லப் பிறந்தவன் கோகுலத்தின் வளர்கிறான் என்று கூறி மறைந்து விட்டாள். கோகுலத்தில் கண்ணன் வளர்ந்து வந்த கண்ணனைக் கொல்ல பல்வேறு அசுரர்களை அனுப்பினான் அவர்கள் அனைவரும் கிருஷ்ணரால் வதம் செய்யப்பட்டனர். இறுதியில், ஸ்ரீகிருஷ்ணபகவான், கம்சனை வதம் செய்து, சிறையில் இருந்த தன்னுடைய தாய், தந்தை மற்றும் தன்னுடைய பாட்டனார்  ஆன உக்கிரசேனனையும் விடுவித்தார். இனி ஜராசந்தனைப் பற்றி காணலாம். மகத நாட்டினை, பிருகத்ரதன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் தேவர்களுக்கு பரம எதிரி. அவனுக்கு இரண்டு மனைவிகள். காசி இராஜனின் புத்ரிகள். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் மட்டும்  இல்லாமல் இருந்தது. மன்னன் உபாயம் தேடி அலைந்தான். சந்திர கௌசிகர் என்கிற முனிவர், மன்னனின் துயர் தீர்க்க ஒரு மாங்கனியைக் கொடுத்து, அவன் மனைவியிடம் கொடுக்கச் சொன்னார். மன்னனானவன், அக்கனியை இரண்டாக்கி இரு மனைவியரிடமும் கொடுத்தான். இருவருமே கருவுற்றனர். ஆனால் பிரசவத்தில் ஒவ்வொரு அரசிக்கும், பாதி குழந்தை மட்டுமே பிறந்தது. தன்  செயலால் மனம் உடைந்த மன்னன், கிரிவிரசம் என்ற நகருக்கு சென்று இரு பாதிகளையும் வெளியே வீசி எறிந்தான். அப்பொழுது நர மாமிச   பட்சிணியான, ‘ஜரை’ என்னும் அரக்கி, மனித வாடையை நுகர்ந்து, அந்த சதைப் பிண்டங்களை உட்கொள்ளும் பொருட்டு அவ்விடம் வந்தாள். அவளுக்கு அவை மன்னரின் வாரிசாக இருக்குமோ என்கிற எண்ணம் ஏற்பட்டது.  அதனால், அப்பிண்டங்களை கையில் எடுத்தாள். இரண்டு பாகங்களையும் ஒன்றாகச் சேர்த்தாள். ஒன்றாகச் சேர்ந்த பாதி உடல்கள், ஒன்றாகி,  உயிர் பெற்றன. உயிர் பெற்ற குழந்தையை, மன்னனிடம் கொண்டு சேர்த்தாள், அவ்வரக்கி. மிகுந்த சந்தோஷத்துடன் அக்குழந்தையை பெற்றுக்கொண்ட, மன்னன், அக்குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயரிட்டான். (அரக்கியால் சேர்க்கப் பட்டதால் அப்பெயர்) இவ்வாறு பிறந்த தன்னுடைய புத்திரனுக்கு, எந்தவித ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக் கூடாது என்றும், பிறந்தது போலவே இரண்டாகக் கிழிக்கப் பட்டுதான் முடிவு வரவேண்டும் என்றும்   வரங்களை  பெற்றிருந்தான், மகத மன்னன். ஜராசந்தனுக்கு, அஸ்தி, பிராப்தி என்னும் பெயர் கொண்ட இரு மகள்கள் இருந்தனர். அவர்களை கம்சனுக்கு அவன் மணம் முடித்துக் கொடுத்திருந்தான். ஸ்ரீகிருஷ்ணர், கம்சனை வதம் செய்ததால், தன்னுடைய புத்திரிகள் இருவரும் விதவை ஆகிவிட்டார்கள் என்கிற எண்ணம் ஜராசந்தனை வாட்டி வதைத்தது. அதனால், பகவானின் மேல் அதீதமான காழ்ப்புணர்ச்சி அவனுக்கு உண்டானது. எனவே ஸ்ரீகிருஷ்ணரை கொல்லும் வெறியுடன் பதினேழு முறை படையெடுத்து வந்தான். தன்னுடைய பதினோராவது வயதிலேயே கம்சனை வதம் செய்த பகவானுக்கு ஜராசந்தனை அழிக்க முடியாதா என்ன? என்ற எண்ணம் தங்களுக்கு தோன்றியிருக்கலாம். அதற்கான விடை, ஜராசந்தனின் விதி பீமன் மூலமாகவே முடிய வேண்டும் என்று இருக்கும் பொழுது, கண்ணன் எங்ஙனம் வதைப்பார்? அதனால் பீமன் நேரிடையாக ஜராசந்தனிடம் மோதாத பதினேழு முறையும், அனாவசியமாக  போரில் மடியும்   தன்னுடைய யாதவ குல மக்களை காக்கும்  எண்ணத்தில் ஸ்ரீகிருஷ்ணர் விலகி நின்றார், பின்னர் மதுராவை விடுத்து துவாரகை வந்து சேர்ந்தார். பீமன், துரியோதனன், கீசகன், பகாசுரன், ஜராசந்தன் ஆகியவர்கள் ஐவரும் ஒரே நட்சத்திரத்தில் தோன்றியவர்கள் ஒவ்வொருவரும்,  ஆயிரம் யானை பலத்திற்கு ஈடானவர்கள். ஜராசந்தன், பீமனால் அழிக்கப்பட வேண்டும் என்பது விதி. பதினெட்டாவது முறை ஜராசந்தனை, பீமன் இரு பாதியாக கிழித்துக் கொன்றான் என்பது தனி கதை. அது என்னவென்று பார்ப்போமா அன்பர்களே. ஜராசந்தன் பல மன்னர்களை சிறையில் அடைத்து வைத்து நரமேத யாகம் செய்ய திட்டமிட்டிருந்தான் அவ்வரசர்களை காப்பாற்றவும் ஜராசந்தனை வதைக்கவும் பீமனையும், அர்ச்சுனனையும் அழைத்துக்கொண்டு மகத நாட்டின் தலைநகரமான கிரிவ்ரஜத்திற்கு அந்தணர் வேடத்தில் சென்றார் ஸ்ரீகிருஷ்ணர். தன் அரண்மனைக்கு வந்த அந்தணர்களை வரவேற்ற ஜராசந்தன் அவர்கள் உடலில் இருந்த தழும்புகளைப் பார்த்து அவர்கள் யார் என்று வினவ, உன்னுடன் போர் புரிய வந்துள்ளோம் எங்களில் ஒருவரை நீ தேர்ந்தெடுத்து போர் புரியலாம் என்றார்கள். மற்ற இருவரையும் தனக்கு சமமானவர்கள் அல்ல என்று ஒதுக்கி விட்டு பீமனை தேர்ந்தெடுத்தான் ஜராசந்தன். இருவருக்கும் இடையே மல்யுத்தப்போட்டி துவங்கியது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர், மலையும் மலையும் மோதிக்கொள்வது போல இருவரும் கடுமையாக யுத்தம் செய்தனர், அச்சண்டை பதினான்கு நாட்கள் தொடர்ந்தது, ஜராசந்தன் சிறிது சோர்வடைந்தான், இதுதான் சமயம் ஜராசந்தனை முடித்துவிடு என்று ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கு சுட்டிக் காட்டினார், பீமனும் ஆக்ரோஷத்துடன் ஜராசந்தனை தூக்கி தலைக்கு மேல் நூறு சுற்றுகள் சுழற்றி ஜராசந்தனின் முதுகெலும்பில் தன் கால் முட்டியை வைத்த அவனது உடலை இருகூறுகளாக உடைத்துப் போட்டு அவனைக் கொன்றான். ஜராசந்தனின் தந்தை பெற்ற  வரத்தை முறியடிக்க பகவான் இவ்வாறு யுக்தியோடு செய்து முடித்தார். கிருஷ்ண பரமாத்மா மதுரா விடுத்து ஏன் துவாரகா வந்தார் என்ற வரலாறு சுவையாக இருந்ததா? வாருங்கள் யாத்திரையை தொடரலாம். அகமதாபாத் விமான நிலையத்தை சரியான சமயத்திற்கு வந்தடைந்தோம். அடியேனுடன் பணி புரியும் அன்பர் திரு. M.R. படேல் அவர்கள் வாகனத்துடன் காத்துக்கொண்டிருந்தார். அவர் இல்லத்திற்கு அழைத்து சென்று விருந்தளித்தார். வண்டி ஒட்டுநரை அறிமுகப் படுத்தினார் வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பினார். அடியோங்கள் முதலில் துவாரகை செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் வண்டி ஓட்டுநர் திரு.பவின் யக்ஞிக் அவர்கள், முதலில் டாகோர் துவாரகை செல்லலாம் என்று கூறினார். ஏனென்றால் துவாரகை அகமதாபாதிலிருந்து சுமார் 435 கி.மீ தூரம் என்பதால் எப்படியும் துவாரகையை அடைய 8 மணி நேரம் ஆகும், எனவே அன்றே தரிசனம் செய்ய இயலாது. டாகோர் சென்று திரும்பி வர எப்படியும் 5 மணி நேரம் ஆகும் அவ்வாறு சென்றால் பின்னிரவில் துவாரகையை அடைந்து விடலாம் இரவு அங்கு ஒரு விடுதியில் தங்கி அதிகாலையில் துவாரகையில் தரிசனத்தை முடித்துக் கொண்டு அருகில் உள்ள மற்ற தலங்களையும் அன்றே தரிசித்து விடலாம், இவ்வாறு சென்றால் ஒரு நாள் மிச்சமாகும் என்று கூறினார், அடியோங்களும் விடுதிகளுக்கு முன் பதிவு செய்திருக்கவில்லையாதலால் அதற்கு ஒத்துக்கொண்டு முதலில் இரண்டாவது துவாரகை என்றழைக்கப்படும் டாகோர் துவாரகைக்கு புறப்பட்டோம்.. ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா மதுராவை விட்டு துவாரகை வர காரணமாக இருந்த இருவரில் ஜராசந்தனின் கதையை கூறி விட்டீர்கள், ஆனால் காலயவனனின் கதையைக் கூறவில்லையே என்று யோசிக்கின்றீர்களா? அடியோங்கள் முதலில் தரிசனம் செய்த டாகோர் துவாரகையுடன் தொடர்புடையது அக்கதை எனவே அடுத்த அத்தியாயத்தில் காணலாம், தொடருங்கள் அன்பர்களே. அத்தியாயம் - 2 டாகோர் துவாரகை [ரண்சோட்ராய் ஜீ] நவதுவாரகைகளில் முதலில் அடியோங்கள் தரிசித்த துவாரகை டாகோர் துவாரகை ஆகும். குஜராத் மாநிலத்தில் கேடா (Kheda) மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது. அகமதாபாத் மற்றும் பரோடா ஆகிய இரு நகரங்களில் இருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனந்த் – கோத்ரா புகை வண்டி தடத்தில் உள்ள இத்தலத்தை வதோதரா என்று இன்றழைக்கப்படும் பரோடா (Baroda), நதியாத் (Nadiad), ஆனந்த் (Anand - அமுல் பால் நகரம்) ஆகிய நகரங்களில் இருந்தும் பேருந்து மற்றும் புகைவண்டி மூலம் அடையலாம். இத்தலத்தின் ஸ்ரீகிருஷ்ணருக்கு “ரண்சோட் ராய் ஜீ” (ரணச்சோர் ராய்) என்பது திருநாமம். அப்பெயர் எவ்வாறு வந்தது என்பதை முதலில் காணலாம். ரண் சோட் ராய் என்றால் ‘யுத்தத்தைத் துறந்து ஓடிய மன்னன்’ என்று ஒரு பொருள். ஒரு வகையில் பார்த்தால் இது போரில் புறமுதுகிட்டு ஓடுவதை குறிக்கும். ராய் என்றால் இராயர் அதாவது அரசன் என்று பொருள். மேலும் இரத்தம் சிந்துவதைத் தடுத்தவர், போரைத் தடுத்தவர், மக்களைக் காத்தவர் என்ற பொருள்களும் உண்டு. இப்பெயரை கேட்டவுடன் அடியேனுக்கு எங்கள் அலுவகலத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. அடியேனுடைய மேலதிகாரி ஒருவர் மராத்தியர், எனவே அவர் இப்பெயரை கேட்டவுடன் மிகவும் கோபப்பட்டார் யாராவது போரில் தோற்று ஓடினான் என்று பெயர் வைத்துக் கொள்வார்களா? அது கேவலமானது அல்லவா? குஜராத்தில் மட்டும் எவ்வாறு இப்படி பெயர் வைத்துக் கொள்கின்றீர்கள் என்று வினவினார். அதற்கு குஜராத்தி அன்பர்கள் அது ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சாதுர்யமாக கால யவனன் என்ற பகைவனை அழிக்க செய்த லீலை என்று விளக்கினர். அதற்கு பிறகு அவர் சமாதானமானார். அடியேன் கேட்ட அக்கதையை தாங்களும் அனுபவியுங்கள் அன்பர்களே. ஒரு சமயம் கார்க்கியன் என்பவனை சாலுவன், “போடா பேடி!’’ என்று சொல்லி இழிவு படுத்தினான். அதைக் கேட்டதும், அங்கிருந்த யாதவர்கள் பலமாகச் சிரித்து விட்டனர். கார்க்கியனுக்கு அவமானம் தாங்கவில்லை.”என்னைப் பார்த்துச் சிரித்த இவர்களை விட்டு வைக்கக் கூடாது. இவர்களுக்கு யமனாக, ஒரு குழந்தையைப் பெறத் தவம் செய்வேன்,’’ என்று அவமானப்படுத்திய சாலுவனை விட்டு, அதைப் பார்த்துச் சிரித்தவர்கள் மேல் கோபப்பட்டான். அதன் பலனாக, பிறந்த போதே யாதவர்கள் மீது பகையோடு பிறந்தான் காலயவனன். கார்க்கியனின் எண்ணமும், அதன் பலனாக அவன் செய்த தவமுமே இதற்குக் காரணம். இவ்வாறு தன் தந்தை யாதவர்களால் அவமானப்படுத்தப்பட்டதை நாரதர் மூலம் அறிந்த காலயவனன், யாதவர்களின் அரசனான கண்ணன் மீது பகை கொண்டு வடமதுரையை அழிக்க வந்தான். ஜராசந்தனும் அப்போது பதினேழாவது முறையாக படையெடுத்து வந்ததால் அவர்களைக் காப்பாற்ற மதுராவை விடுத்து கண்ணன் துவாரகையை நிர்மாணித்து யாதவர்களை அங்கே பத்திரமாகச் சேர்த்தார். அதன்பின், பின்னர் தான் மட்டும் மீண்டும் மதுராவுக்கு வந்து, பலராமருடன் ஆலோசித்து, தாமரை மாலையை அணிந்து, ஆயுதம் ஏதுமின்றி, பட்டிணத்தின் வாசலில் இருந்து புறப்பட்டார். நாரதர் மூலம் கண்ணனின் அங்க அடையாளங்களை அறிந்து வைத்திருந்த காலயவனன், அவரைப் பின் தொடர்ந்தான். யோகிகளாலும் நெருங்கமுடியாத பரமபுருஷனைப் பிடிக்க முயன்றான் அவன். “யே! ரண் சோட்!” (போரிலிருந்து ஓடுகின்றவனே) என்று ஏளனமாக அழைத்துக் கொண்டே எம்பெருமானை துரத்திக் கொண்டு ஓடினான். முதன் முதலாக குஜராத்தில் சிறப்பாக ஸ்ரீகிருஷ்ணரை அழைக்கும் நாமத்தால் அழைத்தவன் காலயவனன் ஆவான். எல்லாம் வல்ல பகவானை ஆணவம் கொண்டவனால் பிடிக்க முடியமா என்ன? அவனை அன்பால் அல்லவா கட்ட முடியும். காலயவனன் கண்ணனை நெருங்கினான். கண்ணனோ, அவனுக்குப் பயந்தோடுவதைப் போல ஓடிப்போய் ஒரு குகைக்குள் மறைந்தார். பின் தொடர்ந்து ஓடிய காலயவனனின் பார்வையில், அங்கே யாரோ படுத்திருப்பது போல தெரிந்தது. படுத்திருப்பவர் கண்ணன் என நினைத்துக் கொண்டு, "ஹா…. அகப்பட்டுக் கொண்டாயா?’’ என்றபடி ஓர் அடி அடித்தான். தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்துப் பார்த்தார். அவர் பார்வை பட்டவுடன் காலயவனன் எரிந்து சாம்பலானான். குகையில் உறங்கிக் கொண்டிருந்தவர் முசுகுந்த சக்கரவர்த்தி. இஷ்வாகு வம்சத்தில் வந்த மாந்தாதாவின் மைந்தன். தேவர்களுக்கு போரில் உதவியதன் காரணமாகக் களைத்து, ஓய்வெடுக்க நினைத்த அவர், "என்னை உறக்கத்தில் இருந்து எழுப்புபவன் சாம்பலாகப் போக வேண்டும்,’’ என்ற வரம் பெற்றிருந்தார் இதை அறிந்திருந்த மாயக்கண்ணன், காலயவனனை சாதுர்யமாக குகைக்கு வரும்படி செய்து, முசுகுந்த சக்கரவர்த்தியின் பார்வையாலேயே அழியும்படி செய்தார். இவ்வாறு காலயவனுடன் போரிடாமல் ஓடி தந்திரமாக ஓடி அவனை அழித்தால் ஸ்ரீகிருஷ்ணருக்கு “ரண்சோட் ராய் ஜீ” என்ற திருநாமம். ஒரு சாரார் ஜராசந்தனுடன் போர் புரியாமல் மதுராவை விட்டு துவாரகை வந்ததாலும் இப்பெயர் வழங்குகின்றது என்றும் கூறுவர். இப்பெயரில் டாக்கோர் துவாரகை கிருஷ்ணரும் அழைக்கப்படுகிறார். இவ்வாறு கண்ணன் ஒடி வந்தது துவாரகைக்கு என்பதால் குஜராத்தில் பலர் இப்பெயரையே தங்கள் குழந்தைகளுக்கு வைக்கின்றனர். அகமதாபாதிலிருந்து கிளம்பியவுடன் வண்டி ஒட்டுநர் முதலில் ஓரிடத்தில் கொண்டு வண்டியை நிறுத்தினார். வண்டிக்கு டீசல் போட போயிருப்பார் என்று தானே தாங்கள் நினைக்கின்றீர்கள்? அது தான் இல்லை! ஒரு பெட்டிக்கடைக்கு சென்றார். அங்கு சென்று மாவா என்றழைக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு தண்ணீர் பொட்டலங்களை அள்ளிக் கொண்டார். திரும்பி வரும் வரை ஒரு வாரத்திற்கு வேண்டுமல்லவா? யாத்திரை முழுவதும் எப்போதும் வாயில் போட்டு அதை மென்று கொண்டே இருந்தார். குஜராத்தின் பல இளைஞர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அகமதாபாதிலிருந்து அடியோங்கள் சுமார் இரண்டு மணி நேரம் பரோடா (Baroda) செல்லும் பாதையில் பயணம் செய்து நடியாத் (Nadiad) என்ற நகரை அடைந்து பின்னர் அங்கிருந்து டாகோரை அடைந்தோம். அது ஒரு சிறிய கிராமம் அதன் மையப் பகுதியில் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் எதிரே பீமன் தன் கதையால் உருவாக்கிய கோமதி குளம் பரந்து விரிந்து விசாலமாக அமைந்துள்ளது.. மஹாபாரத காலத்தில் இப்பகுதி ஹிடும்பவனம் என்னும் அடர்ந்த காடாக இருந்தது. அதில் பல முனிவர்கள் தவமியற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் டாங்க முனியும் ஒருவர். அவரின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் காட்சி கொடுத்து, முனிவரின் விருப்பத்திற்கிணங்கி அங்கேயே கோவில் கொண்டார் எனவே இத்தலம் முன்காலத்தில் டாங்கோர் என்றழைக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையிலிருந்து தன் பக்தன் போதணாவிற்காக இத்தலம் வந்த பிறகு அது டாக்கோர் ஆகியது. இது என்ன புதுக்கதையாக இருக்கின்றதே என்று பார்க்கின்றீர்களா? வாருங்கள் துவாரகை கிருஷ்ணன் தன் பக்தன் ஒருவருக்காக டாக்கோர் வந்த கதையைப் பார்க்கலாம். ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணரும் பீமனும் டாங்க முனி தவம் செய்யும் இவ்வனத்திற்கு வந்த போது டாங்க முனிவர் கிருஷ்ணரிடம் தாங்களும் சிவபெருமானுடன் இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டினார். ஸ்ரீகிருஷ்ணரும் 4225 வருடங்கள் துவாரகையில் இருந்த பின் இங்கு வருகின்றேன் என்று வரமளித்தார். டாங்க முனிக்கு கொடுத்த வரத்திற்கேற்ப டாக்கோர் வர ஸ்ரீகிருஷ்ணர் தேர்ந்தெடுத்த பக்தர் போடாணா என்ற அந்தணர். துவாரகாதீசனிடம் அளவற்ற அன்பு வைத்திருந்த போடாணா, வருடந்தோறும் தன் கையால் வளர்த்த துளசி இலைகளை எடுத்துக் கொண்டு டாக்கோரிலிருந்து துவாரகைக்குச் சென்று, துவாரகாதீஷனை தரிசிப்பது வழக்கம். தள்ளாத வயதிலும் அவ்வாறு சென்று வந்து கொண்டிருந்தார், வரும் காலங்களில் தன்னால் துவாரகைக்குச் செல்ல முடியுமோ முடியாதோ? எனும் கலக்கத்துடன் பகவானை வேண்டிக் கொள்வார். அவருக்காக டாக்கோருக்கே செல்லத் தீர்மானித்தார் பகவான். ஒரு சமயம் பகவான் போடாணாவிடம் மறு முறை துவாரகை வரும் போது ஒரு வண்டியுடன் வருமாறு கனவில் பணித்தாராம். போதாணாவும் அவ்வாறே எருதுகள் பூட்டப்பட்ட வண்டியுடன் துவாரகையை அடைந்தார். துவாரகாவின் பூசாரிகள் எதற்காக வண்டியுடன் வந்திருக்கிறீர்கள் என்று வினவ. பகவான் தன்னுடன் டாக்கோருக்கு வரவிருப்பதாகக் கூறினார். அதைத் தடுக்க பூசாரிகள் கோவிலை பூட்டி விட்டனர். சிறைச்சாலையில் பிறந்தவுடனே கம்சன் போட்ட காவலை மீறிய கண்ணனுக்கு இக்காவல் எம்மாத்திரம். பூட்டுகள் எல்லாம் உடைந்தன போடாணாவின் வண்டியில் அமர்ந்து கொண்டார், தன்னை டாகோருக்கு அழைத்துச் செல்ல கட்டளையிட்டார். வண்டியை ஓட்டிய போடாணா பாதி வழியிலேயே களைப்படைய, பின்பு கண்ணனே வண்டியை ஓட்டிவந்தாராம். அர்ஜுனனுக்காக குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிய பரந்தாமன், பக்தர் போடாணாவுக்காக மாட்டு வண்டியை ஓட்டினார். அதுவே இறை அன்பு. போடாணாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக பிலேஸ்வர் மஹாதேவ் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஒரு வேப்பமரக் கிளையில் சாய்ந்து நின்றாராம் கண்ணன். இன்றும், அந்த மரக்கிளையின் இலைகள் மட்டும் இனிப்பாக திகழ்கின்றன!. “லிமடமா மே ஏக் டால் மேதே (வேப்ப மரத்தில் ஒரு கிளையில் இனிப்பு)” என்று இவ்வேப்ப மரத்தைப் போற்றித் தொழுகின்றனர் பக்தர்கள். இதனிடையே, மூலவரைக் காணாமல் துவாரகையே கவலையில் ஆழ்ந்தது. பகவானும் இதையறிந்தார். துவாரகையில் இருந்து தன்னைத் தொடர்ந்து வந்துவிட்டவர்களுக்குத் தெரியாமல் தன்னை கோமதி குளத்தில் ஒளித்து வைக்கும்படி, போதாணாவைப் பணித்தார். அந்தப் பக்தரோ, ‘எங்கே நம் இறைவனைக் கண்டு அழைத்துச் சென்று விடுவார்களோ’ என்று பதறினார். அப்போது, ‘உள்ளவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிபவனான’ கண்ணபிரான், தனது திருவாய் மலர்ந்து போடாணாவிடம் பேசினார். ‘தன்னைத் தேடி வருவோரிடம், தனது விக்கிரகத்தின் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொன்னால், வந்தவர்கள் நகைகளுடன் திரும்பிச் செல்வார்கள்; வருந்தாதே!’ என்றார் பகவான். ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகத்தை குளத்தில் இருந்து வெளியே கொண்டுவர கடப்பாரையை கொண்டு அவர்கள் துழாவிய போது அது அவரது திருமேனியில் பட்டு இரத்தம் வெளிப்பட்டு குளம் முழுவதும் செந்நிறமாக மாறியதாம். இறுதியில் சுவாமி விக்கிரகத்தை அவர்கள் குளத்தில் இருந்து வெளியே எடுத்து துவாரகைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, பகவான் கூறியபடி போடாணா, சுவாமியின் எடைக்கு எடை பொன் தருகிறேன் என்றார். பொன்னுக்கு ஆசைப்பட்டு துவாரகாவில் இருந்து வந்தவர்கள் ஒத்துக் கொண்டனர். ஆனால், போடாணாவோ எடைக்கு எடை பொன் தரும் அளவுக்குச் செல்வந்தர் இல்லையே! அவரின் மனைவி, கங்காபாய் கடவுளின் கருணையை நன்கு உணர்ந்தவள். தராசின் ஒரு தட்டில் கடவுளின் விக்கிரகத்தையும் மற்றொரு தட்டில் தனது சிறு மூக்குத்தியையும் வைத்தாள். கண்ணனின் மாயத்தினால் ஒரு ஆச்சர்யம் நடந்தது மூக்குத்தி வைத்த தட்டு, கனமாகிக் கீழிறங்க, கண்ணனின் விக்கிரகம் உள்ள தட்டு மேலே உயர்ந்து நின்றது. வந்தவர்கள் குழப்பத்துடன் மூக்குத்தியை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றனர். பகவான் அசரீரியாக அவர்களுக்கு வேறு ஒரு விக்கிரகம் கிடைக்குமென்று அருளினார். அப்படியென்றால் இப்போது துவாரகாவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் யார்? என்ற சந்தேகம் தங்களுக்கு தோன்றியிருக்குமே. அதற்கான விடையை துவரகாதீஷனை தரிசிக்கும் போது காணலாம். துவாரகையிலிருந்து டாகோர் வந்த கருணைக் கடலை, “பந்தணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால் வெந்திறலேழும் வென்ற வேந்தன், விரி புகழ் சேர் நந்தன் மகனாக வரும் நம்பியை ஸ்ரீகிருஷ்ணரை” சேவிக்கலாமா?. செல்லும் வழியெங்கும் புகையிலை தோட்டங்களை இரு புறமும் பார்த்தோம். டாக்கோர் கோயிலுக்கு அரை கிலோ மீட்டர் முன்னரே வண்டிகளை நிறுத்தி விட்டனர். கூட்டம் அதிகமாகவே இருந்தது. பாதுகாப்பு அதிகமாகவே இருந்தது. உடைமைகளை சோதனை செய்த பின்னரே கோவிலின் உள்ளே அனுமதிக்கின்றனர். கோவிலின் அருகில் ஒரு கோசாலை உள்ளது. நூற்றுக்கணக்கான பசு மாடுகள் கோவிலைச் சுற்றிக்கொண்டிருந்தன. குஜராத் மாநிலம் “தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்” நிறைந்த மாநிலம். அமுல் என்ற பெயரை அறியாத இந்தியர் இல்லை எனலாம். அந்த அமுல் பால் பண்ணை, பாரத தேசத்தின் வெள்ளை புரட்சிக்கு காரணியாக இருந்த கூட்டுறவு பால் பண்ணை, அருகில் உள்ள ஆனந்த் நகரில் முதன் முதலில் அமைக்கப்பட்டது. முதலில் கோமதி குளத்தில் முகம், கை கால் கழுவினோம். இப்பகுதியின் மிகப்பெரிய ஏரி இது. குளத்தில் கிருஷ்ண விக்கிரத்தை போடாணா மறைத்த இடத்தில் ஒரு மண்டபம் அமைத்துள்ளனர். ஒரு மண்டபத்தில் பகவானின் பாதங்கள் அமைத்துள்ளனர். மண்டபம் செல்ல ஒரு பாலமும் உள்ளது. இக்குளக்கரையில் டாங்கேஸ்வரர் மஹாதேவ் ஆலயமும் அமைந்துள்ளது. தன் பக்தனுக்காக துவாரகையிலிருந்து ஓடி வந்த கண்ணனை, புள்ளின் வாய் கீண்டானை, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, மாவாய் பிளந்தானை, வல்லானைக் கொன்றானை, மல்லரை மாட்டிய தேவாதி தேவனை, சேவிக்கலாம் வாருங்கள் அன்பர்களே. ரண்சோட் ராய் ஜீ ஆலயம் ஒரு கோட்டை போல அமைந்துள்ளது. மிக பிரம்மாண்டமான மதிற்சுவர், நாற்புறமும் வாயில்கள், கோட்டை வாயில்களைப் போலவே உள்ளன. கதவங்கள் வெள்ளிக்கவசம் பூண்டுள்ளன. பூசை சமயத்தில் முக்கிய துவாரத்தின் மேலே நாகர்கானா அமைந்துள்ளது. இசைக் கலைஞர்கள் மற்றும் மேளகாரர்கள் இங்கமர்ந்து இசைக் கருவிகளை வாசிப்பார்கள். உள்ளே நுழைந்தவுடன் வெளிப்பிரகாரத்தின் உட்புறத்தில் இரு புறமும் பிரம்மாண்டமான தீபஸ்தம்பங்கள் இச்சுற்றில் மற்ற அலுவலக அறைகளும் உள்ளன. ஆலயத்தை வலம் வரும் போது துவாரகை கிருஷ்ணரை நிறுத்த துலாபாரத்தைக் காணலாம். தற்போது தங்கக் கவசத்தில் மின்னுகின்றது அத்தராசு. துலாபாரம் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வரம் ஒரு சுவையான கதையைக் காணலாமா? ஒரு சமயம் ருக்மணி, சத்யபாமா ஆகிய கிருஷ்ணரின் இரு மனைவியரிடையே அன்பு குறித்து போட்டி எழுந்தது. அப்போது நாரதரின் யோசனைப்படி துலாபாரம் அமைத்து அன்பினை நிரூபிப்பது என்று முடிவானது. துலாபாரத்தில் கிருஷ்ணர் ஒரு தட்டில் அமர்ந்திருக்க சத்யபாமா கர்வத்துடன் வைர வைடூரியங்கள், பொன் போன்றவற்றை மறு தட்டில் வைத்தார். தன்னிடமிருந்த அனைத்து விலை உயர்ந்த பொருட்களை கொட்டியும் கிருஷ்ணரின் துலாபாரத் தட்டு உயரவில்லை. அடுத்தாக ருக்மணி ஒரு பிடி துளசியை அன்பாக வேண்டி வைத்தார். கிருஷ்ணரின் துலாபாரத் தட்டு உயர்ந்தது, துளசி இருந்த துலாபாரத் தட்டு கீழே சென்றது. பக்தியின் சிறப்பை விளக்கவும் சத்யபாமாவின் கர்வத்தை அடக்கவும் பகவான் செய்த லீலை அது. தூய மனதுடன் ஒரு இலையையோ, மலரையோ, தண்ணீரையோ சமர்ப்பணம் செய்தாலும் போதும் என்று பகவத்கீதையில் கூறிய வாசகத்தை நிரூபிப்பது போல துலாபாரம் அங்கு காட்சி தருகின்றது. [டாக்கோர் துவாரகை ஆலயம்] பிரகாரத்தை வலம் வரும் போது ஸ்ரீகிருஷ்ணருக்கு நிவேதனமான பிரசாதங்களை விற்றுக் கொண்டிருந்தனர். மறு புறத்தில் ஒரு தங்க சிம்மாசனம் இருந்தது. இச்சிம்மானத்தை கெயிக்வாட் மகாராஜா அமைத்துக் கொடுத்தாராம். உற்சவ மூர்த்தி எழுந்தருளும் போது இச்சிம்மாசனத்தில் சேவை சாதிப்பார் என்று கூறினார்கள். ஆலய வளாகத்தில் பிரம்மாண்ட மரங்கள் இருந்தன. கோவில் பிரம்மாண்டமாக இருந்தது. எட்டு அரைக்கோள குவி மாடங்கள் (Dome) மற்றும் 24 நெடிதுயர்ந்த ஸ்தூபிகள். அவற்றின் உச்சியில் உள்ள கலசங்கள் தங்க கவசத்தில் மின்னுகின்றன. கருவறை மேல் உள்ள சதுர வடிவமான ஸ்தூபி 90 அடி உயரமானது. பல்வேறு மிருகங்களின் சுதை வடிவங்களை கூரையெங்கும் அமைத்துள்ளனர். 1772ம் ஆண்டு புனேவின் பேஷ்வா மாதவ் ராவ் அவர்களின் அதிகாரி கோபால் ஜகந்நாத் தாம்ப்வேகர். அவரது கனவில் வந்து ஸ்ரீகிருஷ்ணர் உத்தரவிட்டபடி இக்கோவிலை கட்டினார். பேஷ்வா மற்றும் பரோடாவின் கைக்வாட் மன்னன் டாமாஜி கைக்வாட் இருவரும் ஒவ்வொரு கிராமத்தை இறையிலியாக அளித்தனர். அதில் தம்ப்வேகர் தற்போதுள்ள இக்கோவிலை பிரம்மாண்டமாக கட்டினார். கருவறையும் சபா மண்டமும் உயரமாக அமைந்துள்ளன. முன்னையமரர் முதல்வனை வண் துவராபதி மன்னனை மணிவண்ணனை வாசுதேவனை சேவிக்க சுமார் 20 படிகள் மேலேறிச் செல்ல வேண்டும். கருவறை மற்றும் சபா மண்டபத்தின் கதவங்களில் வெள்ளிக் கவசம் ஓளிர்கின்றன. அதில் பல கிருஷ்ண லீலை புடைப்பு சிற்பங்கள் எழிலாக அமைக்கப்பட்டுள்ளன. கருவறை மூன்று பகுதிகளாக உள்ளது. வலப்பக்கம் ஸ்நான அறை, நடுவில் எம்பெருமான் எழுந்தருளியுள்ளார். இடப்பக்கம் சிகரபந்தி எனப்படும் பள்ளியறை. பள்ளியறையில் வெள்ளி ஊஞ்சல், படுக்கைகள் உள்ளன. சபாமண்டபத்தில் நின்று போரிலிருந்து ஓடி வந்த சுந்தரனை சேவிக்கின்றோம். சபா மண்டபத்தின் உள்ளே சரியான கூட்டம். சியாமள வண்ணத்தில் சங்கு சக்கரம் கதை அபய திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார் மனமோகனன். அபய திருக்கரத்தில் தாமரையும் உள்ளது. கிரீடத்தில் கண்ணனுக்கே உரித்தான மயிற்பீலி, பட்டுப் பீதாம்பரம், வனமாலை மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் திருமேனியை அலங்கரிக்க எழிலாக, ஒயிலாக பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார் பெருமாள். துவாரகையிலிருந்து வந்த சக்கரவர்த்தி என்பதால் பொன் சிம்மாசனத்தில் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழிலாக சேவை சாதிக்கின்றார். கொண்டல் வண்ணன், கருநீல வண்ணன், அதிருங்கடல் வண்ணன், உருவு கரிய ஒளி மணி வண்ணன், காயா மலர் நிறவன், கருவுடை முகில் வண்ணன், கருவிளை போல் வண்ணன், அஞ்சன வண்ணன், கருமாணிக்கம் என்றெல்லாம் ஆழ்வார்கள் பாடி மகிழந்த வண்ணம், இப்பகுதியில் அனைத்து கிருஷ்ண விக்கிரகங்களும் கருப்பு பளிங்குக் கல்லால் ஆனவை. “செவ்வரி ஓடிய பரந்து விரிந்த அழகிய பங்கயக் கண்கள்” அப்படியே அனைவரையும் சொக்க வைக்கின்றது பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றன. வலக்கரத்தில் புல்லாங்குழல், பட்டு பீதாம்பரம், நவரத்ன மாலைகள், மயிற்பீலியுடன் கூடிய மகுடம், திருப்பாதங்களில் கொலுசு என்று பெருமாளை அருமையாக சேவித்தோம். வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை அப்படியொரு அழகு, ஈர்ப்பு அந்த சௌந்தர்யத்தைப் பருகிக்கொண்டே நின்றோம். கருவறை முழுவதும் தங்கத்தால் இழைத்துள்ளனர். இரு பக்கமும் தொலைக் காட்சி பெட்டிகளிலும் பெருமாளை சேவித்துக் கொள்ளலாம். சில குஜராத்தி தொலைக் காட்சிகளிலும் ஆலயத்தின் http://ranchhodraiji.in வலைத்தளத்திலும் நேரடி ஒலிபரப்பு செய்கின்றனர். சபா மண்டபத்தின் குவிமாடத்தின் உட்பக்கம் கூரையில் வண்ண வண்ணக் கண்ணாடிகளால் ஆன அருமையான பூந்தோட்டக் காட்சிகளை எழிலாக அமைத்துள்ளனர். சபா மண்டபமெங்கும் புள்ளின் வாய் கீண்டல், பேய் முலை உண்ணல், கள்ளச்சகடம் உதைத்தல், கன்று குணிலாய் எறிதல், காளிய நர்த்தனம், குன்று குடையாய் எடுத்தல் ஆகிய பால லீலைகளின் அற்புத ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. அவற்றை எல்லாம் கண்ணுற்ற போது காயாமலர் நிறவா! கருமுகில்போலுருவா! கானகமாமடுவில் காளியனுச்சியிலே தூயநடம்பயிலும் சுந்தரவென்சிறுவா! துங்கமதக்கரியின் கொம்பு பறித்தவனே! ஆயமறிந்துபொருவானெதிர்வந்தமல்லை அந்தரமின்றியழித்தாடிய தாளினையாய்! ஆய! எனக்கொருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள்போரேறே! ஆடுக ஆடுகவே (பெரி.தி 1.5.6) என்னும் பெரியாழ்வாரின் பாசுரம் சேவித்தோம். பெருமானுக்கு மிக அருகில் பெண்களுக்குக்கென்றே தனி இடம் ஒதுக்கியிருக்கின்றனர். கிருஷ்ணருக்கு அருகில் சென்று தரிசிக்க உரிமை, அவர்கள் கோபிகைகளாக இருந்ததனாலோ என்னவோ இக்கோவிலில் வழங்கியுள்ளனர்? கூட்டம் அதிகமாக இருப்பதாலும் பெரிய சபா மண்டபம் என்பதாலும் கோயில் ஊழியர்கள் கயிற்றில் தொங்கிக்கொண்டே தட்சனை வசூலித்தது புதுமையாக இருந்தது. வல்லபாச்சார்யாரின் புஷ்டி மார்கத்தின்படி வழிபாடுகள் நடைபெறுவதால் இசை (ராக்), பிரசாதம் (போக்), உடை மற்றும் அலங்காரம் (வஸ்த்ர ஔர் ச்ருங்கார்) ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது. ஸ்ரீகிருஷ்ணனை இவர்கள் சிறு குழந்தையாகவே பாவித்து வணங்குகின்றனர். எப்படி நம் இல்லத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து மகிழ்கின்றோமோ அது போலவே இவர்களும் ஒரு நாளில் பலமுறை பட்டு பீதாம்பரங்கள் மற்றும் விலை உயர்ந்த நவரத்ன ஆபரணங்களாலும் பல்வேறு அலங்காரம் செய்து மகிழ்கின்றார். குழந்தைக்கு எப்படி பார்த்து பார்த்து உணவளிக்கின்றோமோ அதே போல ஒரு நாளில் பல முறை பிரசாதம் படைக்கின்றனர். அதுவும் இனிப்புகள் (பால் இனிப்புகள்) பெரிய அளவில் இவருக்கு நிவேதனம் செய்கின்றனர். காலை 6 மணிக்கு சன்னதி திறக்கின்றனர். பன்னிரு மணி வரை சன்னதி திறந்திருக்கின்றது. காலையில் மங்கலா போக், பால் போக் என்று சிருங்கார் போக், க்வால் போக், ராஜ் போக் என்று ஐந்து முறை பிரசாதம் அமுது செய்கின்றனர். அப்போது ஆரத்தியும் காண்பிக்கின்றனர். பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் சிறிது நேரம் ஓய்வெடுக்கின்றார். மறுபடியும் மாலை 4:30 மணிக்கு தரிசனம் ஆரம்பம் இரவு 8 மணி வரை தரிசனம் தொடர்கின்றது. மாலையில் உதாபன் போக், சயன் போக் மற்றும் சக்தி போக் என்று மூன்று முறை பிரசாதம் அமுது செய்கின்றனர். பெருமாளுக்கு பிரசாதம் அளிக்க விரும்பும் அன்பர்கள் கட்டணம் செலுத்தி மஹா போக் மற்றும் ராஜ் போக் அளிக்கலாம். அடியோங்களுக்கு ஒரு ஆரத்தி சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி சென்றங்குத்தென்னிலங்கைசெற்றாய்! திறல்போற்றி பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ்போற்றி கன்றுகுணிலாவெறிந்தாய்! கழல்போற்றி குன்றுகுடையாவெடுத்தாய்! குணம்போற்றி வென்றுபகைகெடுக்கும் நின்கையில்வேல்போற்றி என்றென்றுன்சேவகமே ஏத்திப்பறை கொள்வான் இன்றுயாம்வந்தோம் இரங்கேலோரெம்பாவாய்! (திரு-24) என்று ஆண்டாள் நாச்சியாரின் பாசுரம் பாடி திவ்யமாக சேவித்தோம். பல பக்தர்கள் தங்களின் கரங்களில் இனிப்புகளை வைத்து ஸ்ரீகிருஷ்ணருக்கு படைக்கின்றனர். “ரண்சோட் ராய் ஜீக்கு ஜே!” என்று கோஷமிட்டு தங்களின் பக்தியை வெளிப்படுத்துகின்றனர். இத்தலத்தில் பௌர்ணமி தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை குறிப்பாக ஸ்ரீகிருஷ்ணர் துவாரகையிலிருந்து டாக்கோருக்கு வந்த நவராத்திரிக்குப் பின் வரும் புரட்டாசி பௌர்ணமியும், ஹோலிப் பண்டிகையான பங்குனிப் பௌர்ணமி, சித்திரை, ஆவணி மாதப் பௌர்ணமிகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. மற்றும் ஜன்மாஷ்டமி, தசரா பண்டிகைகளும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அத்தினங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் இத்தலத்தில் குவிகின்றனராம். முகலாயர் காலத்தில் இக்கோவில் சிதைக்கப்பட்டுள்ளது, பின்னர் புனருத்தாரணம் செய்துள்ளனர். டாக்கோர் துவாரகையின் திவ்யமான தரிசனத்திற்குப் பிறகு வெளியே வந்த போது மஹாலஷ்மித்தாயாரின் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு சந்தில், இத்தலத்திற்கு ஸ்ரீகிருஷ்ணர் வருவதற்கு காரணமாக இருந்த போதாணா அவர்களின் இல்லத்திற்கு அருகில் உள்ளது. சன்னதி மூடி விடுவார்கள் எனவே விரைவில் சென்று சேவியுங்கள் என்று அங்கிருந்த அன்பர்கள் சிலர் வழிகாட்டினர். அங்கு சென்று தனிக்கோவில் நாச்சியாராக விளங்கும் தாயாரை, மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாளை, அல்லி மாமலராளை, தெய்வத்திருமாமலர் மங்கையை திவ்யமாக சேவித்தோம். செல்வத்திருமகளின் ஆலயம் எளிமையாவும் அமைதியாகவும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வலப்புறம் சிவன் சன்னதி அடுத்து ஆஞ்சநேயர் சன்னதி. இவ்வாலயமும் கருவறை மற்றும் சபா மண்டபத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் அருமையான அலங்காரத்தில் மஹாலக்ஷ்மித்தாயாரை திவ்யமாக சேவித்தோம். வெள்ளிக்கிழமைகளில் ரண்சோட்ராய் உற்சவர் தாயாரின் சன்னதிக்கு எழுந்தருளி அருள் பாலிக்கின்றாராம். பெருமாளுடன் தாயாரையும் சேவித்த மனத்திருப்தியுடன் 200 வருடங்கள் ஸ்ரீகிருஷ்ணர் இருந்த, அருகில் உள்ள போடாணாவின் இல்லத்திற்கு சென்றோம். கிருஷ்ண விக்கிரகம் இருந்த இடத்தில் ஒரு சப்பரத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் படம். அருகில் ஒரு பளிங்கு மேடையில் திருப்பாதங்கள். வீட்டின் ஒரு புறம் போதாணாவும், கங்காபாயும் சிலை வடிவில் அமைத்துள்ளனர். திவ்யதம்பதிகளின் தரிசனத்திற்குப்பின் துவாரகைக்கான பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் ஓட்டுநர் நிறுத்திய ஒரு உணவகத்தில் இப்பகுதியின் கத்தியவார் உணவை சுவைத்தோம். தேசிய நெடுஞ்சாலை NH-47ல் பயணம் செய்தோம். துவாரகைக்கு பயணித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் புஷ்டி மார்க்கத்தைப் பற்றி சிறிது காணலாம் அன்பர்களே. டாகோர் துவாரகை பிரகாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் ஸ்ரீநாத்ஜீ, யமுனை, மஹாபிரபு வல்லபாச்சார்யர் படத்தைப் பார்த்தோம் அப்போது அப்படத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. பின்னர் மற்ற ஆலயங்களிலும் இப்படத்தைப் பார்த்தோம், எனவே அதைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரித்து புஷ்டி மார்க்கத்தைப் பற்றி விரிவாக தெரிந்து கொண்டோம். மேற்கு உத்திரபிரதேசம், குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள வைஷ்ணவர்கள் பின்பற்றுவது புஷ்டிமார்க்கம். புஷ்டி என்றால் கருணை என்று பொருள். ஸ்ரீகிருஷ்ணரின் கருணையினால் அவருக்கு சேவை செய்து ஜீவாத்மா அவருடன் இணைவதே இம்மார்க்கம். “கண்ணனல்லால் தெய்வமில்லை” என்று நம்மாழ்வார் பாடியது போல ஸ்ரீகிருஷ்ணன் ஒருவரே தெய்வம் அவருக்கு சேவை செய்து அவர் ஆனந்தம் அடைவதால் நாம் முக்தியடையாலாம் என்பதை உணர்த்தும் இம்மார்க்கம் சுத்த அத்வைத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இம்மார்க்கத்திற்கு அடிகோலியவர் மஹாபிரபுஜீ என்றழைக்கப்படுகின்ற ஸ்ரீவல்லபாச்சார்யார் அவர்கள் ஆவார். இவர் வாரணாசியில் தெலுங்கு பிராமண குடும்பத்தில் லக்ஷ்மண பட்டர் எல்லம்மா தம்பதிகளுக்கு ஸ்ரீகிருஷ்ணரின் அம்சமாக 1479 ஆண்டு பிறந்தார். இவர் தாயின் வயிற்றில் இருந்த போது இந்து முஸ்லிம் கலவரத்தினால் இவர்கள் வாரணாசியை விட்டு சட்டீஸ்கருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவ்வாறு செல்லும் குறைப்பிரசவமாக குழந்தை பிறக்க, இவர்கள் குழந்தை இறந்து பிறந்தது என்று நினைத்து அக்குழந்தையை துணியில் சுற்றி ஒரு மரத்தடியில் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனராம். இரவில் இவர்கள் கனவில் வந்த ஸ்ரீகிருஷ்ணர், உண்மையை உணர்த்த, அவர்கள் திரும்பி வந்து பார்த்த குழந்தை பாதுகாப்பாக ஒரு புனித நெருப்பு வளையத்துள் இருந்தது. அக்குழந்தையை உச்சி முகர்ந்து ஆனந்தத்துடன் எடுத்து சென்றனர். பிள்ளைக்கு வல்லபன் என்று பெயரிட்டனர். [மஹா பிரபு ஜீ – ஸ்ரீநாத் ஜீ – யமுனா ஜீ] இவர் தனது பத்து வயதிற்குள், வேதங்கள், அதன் அங்கங்கள், மற்றும் ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர், நிம்பார்கர் ஆகிய ஆச்சார்யர்களின் தத்துவ சாஸ்திர நூல்களையும் புத்த, ஜைன மத நூல்களையும் கற்று தெளிந்தார். இவரது ஞானத்தைக் கண்டு இவரை பாலசரஸ்வதி என்று அழைத்துப் போற்றினர். தனது பதினோராவது வயதில் தாகூர்ஜி எனப்படும் தன்னுடைய ஆராதன ஸ்ரீகிருஷ்ண பெருமானுடன் தனது முதலாவது பாரத யாத்திரையை துவங்கினார். கிராமங்களுக்கு வெளியே மரத்தடியில் அல்லது குளக்கரையில் தங்கி தானே பிரசாதம் சமைத்து தாகூர்ஜிக்கு படைத்து பின் உண்டார். ஆங்காங்கே பாகவத சொற்பொழிவும் ஆற்றி வந்தார். இவர் பூரி ஜெகந்நாதரை தரிசிக்க சென்ற போது அவ்வூர் அரசர் நான்கு கேள்விகளை எழுப்பினார். அதற்கு இவர் அளித்த பதில்களால் திருப்தியடையாத அரசன் இவை ஜகந்நாதரால் தரப்படவேண்டும் என்றார். எனவே வல்லபர் ஒரு ஓலையில் அந்நான்கு கேள்விகளை எழுதி சன்னதியில் இரவில் வைத்தார். மறு நாள் காலை சன்னதி திறந்த போது அக்கேள்விகளுக்கான விடை இவ்வாறு இருந்தது. மிகச் சிறந்த காப்பியம் எது?, தேவகியின் புதல்வன் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய கீதை, மிகச்சிறந்த தெய்வம் எது?, ஸ்ரீகிருஷ்ணர், மிகச்சிறந்த மந்திரம் எது? ஸ்ரீகிருஷ்ணனின் நாமங்களே சிறந்த மந்திரங்கள், மிகச்சிறந்த சேவை எது? ஸ்ரீகிருஷ்ணருக்கு செய்யும் சேவையே சிறந்த சேவை. இதன் பிரகாரமே புஷ்டி மார்க்கம் அமைந்துள்ளது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்பதே இவர்கள் கொள்கை. இந்த யாத்திரையின் போது ஓர்சா என்ற ஊரில் சரஸ்வதி தேவியை ஒரு கடத்தில் அடைத்து வைத்திருந்த கடசரஸ்வதி என்ற பண்டிதருடன் இவர் விவாதம் செய்தார். அப்பண்டிதர் விவாதத்தின் போது சரஸ்வதியின் துணையை வேண்ட, சரஸ்வதியோ வந்திருப்பது என்னுடைய வாசஸ்பதி (குரு) அவர் முன் நான் விவாதம் செய்ய முடியாது என்று கூற வல்லபாச்சார்யார் வாதத்தில் வென்று முதல் கனகாபிஷேகம் பெற்றார். தன்னுடைய பதினான்காவது வயதில் இவர் முதன் முதலாக கோகுலம் வந்தார். அங்கு எது கோவிந்தன் படித்துறை, எது தாகூர்ராணி படித்துறை என்று தெரியாமல் நின்ற போது, பதினாறு வயது பருவம் நிறைந்த ஒரு சுந்தர தேவ மங்கை தோன்றி, உந்தன் வலப்பக்கம் தாகூர்ராணி படித்துறை, இடப்பக்கம் கோவிந்தன் படித்துறை என்று ஐயத்தை தீர்த்தாள். வந்திருப்பது யமுனாஜீ (யமுனை) என்பதை உணர்ந்த வல்லபாச்சார்யார் உடனே யமுனாஷ்டகம் பாடி அன்னையை வாழ்த்தினார். புஷ்டி மார்கத்தின் படி யமுனாஜீ ஸ்ரீகிருஷ்ணரின் நான்காவது பட்டத்து ராணி. பின்னர் யமுனை ஆணையிட்டபடி ஏழு முறை பாகவதம் பாராயணம் செய்தார். அன்று நள்ளிரவு இவர் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் எவ்வாறு இணைப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது ஸ்ரீகிருஷ்ணர் இவருக்கு தரிசனம் அளித்து பிரம்மசம்பந்த மந்திரத்தை உபதேசித்தார். வல்லபரும் அவருக்கு பவித்ரம் அணிவித்தார். இனிப்புகளை நிவேதனம் செய்தார். அந்த ஆனந்தத்தில் அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் | ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே அகிலம் மதுரம் || உன் இதழ் இனியது, திருமுகம் இனியது, கண்கள் இனியது, சிரிப்பு இனியது, இதயம் இனியது, நடை இனியது, மதுராவின் தலைவனே அனைத்தும் இனியது என்று தொடங்கி ஸ்ரீகிருஷ்ணருடன் சம்பந்தப்பட்ட அனைத்துமே இனிமையானது என்று மதுராஷ்டகம் பாடி அருளினார். மறு நாள் தனது சீடரான தாமோதர்தாஸுக்கு முதன் முறையாக பிரம்மசம்பந்த மந்திரபோதேசம் செய்து தீட்சை அளித்து புஷ்டி மார்க்கத்தின் முதல் வைணவராக்கினார். இரு வருடங்கள் கழித்து இவர் இரண்டாம் முறையாக பாரத யாத்திரை மேற்கொண்ட பொழுது விரஜ பூமியில் தான் தோன்றியதை ஸ்ரீநாத்ஜீ அறிவித்தார். யாத்திரையை முடித்துக்கொண்டு விரஜ பூமிக்கு வந்து கிரிராஜ்ஜீயில் தோன்றிய ஸ்ரீநாத்ஜீயை ஒரு சிறு தற்காலிக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து சேவையை ஆரம்பித்தார். இவர் பண்டரிநாதரை தரிசிக்க சென்ற போது விட்டோபா (விட்டலன்) இவரை இல்லறத்தில் ஈடுபட அறிவுறுத்தினார். எனவே தனது 23வது வயதில் மஹாலக்ஷ்மிஜீயை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப்பின் இவர் மூன்றாவது பாரத யாத்திரையை துவங்கினார். இந்த யாத்திரையின் போது கிருஷ்ணதேவராயரின் சபையில் நடைபெற்ற விவாதத்தில் வெற்றி பெற்று கனகாபிஷேகமும், ஜகத்குரு என்ற பட்டமும் பெற்றார். இவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். முதலாமவர் கோபிநாத்ஜீ, இரண்டாமவர் விட்டலரின் அம்சமாக பிறந்த விட்டல்நாத்ஜீ. இவர் தன்னுடைய வாழ்நாளில் பல கிரந்தங்கள் இயற்றினார். அவற்றுள் சோடச கிரந்தங்கள் எனப்படும் பதினாறு நூல்கள் முக்கியமானவை. மேலும் இவர் பிரம்ம சூத்திரத்திற்கு சுத்த அத்வைதத்தை ஒட்டி அனுபாஷ்யம் என்னும் உரை எழுதினார். இவர் பாகவதத்திற்கு எழுதிய பாஷ்யம் ஸ்ரீசுபோதினிஜீ ஆகும். தத்வார்த்த தீப நிபந்தம் என்ற நூல் புஷ்டி மார்க்கத்தை பற்றியதாகும். ஸ்ரீநாத்ஜீயின் மூன்றாவது ஆணையின் படி தமது 52வது வயதில் காசியில் ஹனுமன் கட்டத்தில் தனது பூத உடலை விடுத்து ஜோதி ரூபமாக ஸ்ரீகிருஷ்ணருடன் கலந்தார். இது வல்லபாச்சாரியாரின் சுருக்கமான வரலாறு. இனி சுத்த அத்வைத புஷ்டி மார்கத்தின் கூறுகள் என்ன என்று காணலாம். ஒரே பிரம்மம் என்ற வேதாந்தத்தை அடிப்படையாக கொண்டது புஷ்டி மார்க்கம். வேதங்கள், பிரம்ம சூத்திரங்கள், பகவத் கீதை, பாகவதம் இவை நான்கும் இம்மார்க்கத்தின் முக்கிய புண்ணிய நூல்கள். வேதங்கள் பிரம்மம் என்றும், பகவத்கீதை பரமாத்மா என்றும் பாகவதம் பகவான் என்று குறிக்கும் தெய்வம் ஒன்றே அது ஸ்ரீகிருஷ்ணர். மாயை என்று ஒன்று இல்லை, அனைத்தும் ஸ்ரீகிருஷ்ணரின் கருணையே, எப்பொருள் என்றாலும் அது எப்படி இருந்தாலும் அது சரியாகவே உள்ளது என்று கூறுவதால் இம்மார்க்கம் சுத்த அத்வைதமார்க்கம் ஆனது. சச்சிதானந்த புருஷோத்தம பரப்பிரம்மமான ஸ்ரீகிருஷ்ணருக்கு சேவை செய்து அவரது கருணையினால் ஜீவாத்மா அவருடன் இணைவதே இம்மார்க்கம். ஞானம் முக்திக்கு வழி வகுக்காது, சந்நியாசம் தேவையில்லை. இல்லறத்திலிருந்தே ஸ்ரீகிருஷ்ணருக்கு சேவை செய்யலாம். ஸ்ரீகிருஷ்ணர் அடைகின்ற ஆனந்தமே அவருடன் இணைவதற்கு வழி வகுக்கும் என்பன இம்மார்க்கத்தின் முக்கிய கோட்பாடுகள் ஆகும். ஸ்ரீகிருஷ்ணருக்கு சேவை செய்பவர்கள் இசை (ராக்), பிரசாதம் (போக்), உடை மற்றும் அலங்காரம் (வஸ்த்ர ஔர் ச்ருங்கார்) மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதால் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் சிறப்பாக பூஜைகள் நடைபெறுகின்றன. பண்டிகைகளும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. புஷ்டி மார்க்கத்தைப் பற்றி சிறிது பார்த்தோம் அதற்குள் அடியோங்கள் ராஜ்கோட் என்னும் ஊரை அடைந்திருந்தோம். வாருங்கள் துவாரகைக்கான பயணத்தைத் தொடரலாம். அகமதாபாதிலிருந்து ராஜ்கோட் (Rajkot), ஜாம்நகர் (Jamnagar) வழியாக சுமார் 450 கி.மீ பயணம் செய்தோம். வரண்ட பிரதேசம், அதிகமாக போக்குவரத்து இருக்கவில்லை. வழியெங்கும் புகையிலை தோட்டங்களை கண்டோம். பல நாடோடிக் குடும்பங்கள் ஒட்டகங்களில் தமது உடமைகளை எல்லாம் ஏற்றிக் கொண்டு குடிபெயர்ந்து கொண்டிருந்தனர். மாடுகள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்தன. பல ஒட்டக வண்டிகளை இப்பகுதியில் பார்த்தோம். [ஜலாராம் பாபா ஆலயம்] வழியில் சோடிலா (Chotila) என்ற இடத்தில் உள்ள ஜலாராம் பாபா (Jalaram Bapa) ஆலயத்தில் வண்டியை ஓட்டுனர் நிறுத்தினார். குஜராத் மாநிலத்தில் இத்துறவியை மிகவும் மதித்துப் போற்றுகின்றனர். தமது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டிருந்தாராம் இவர். இராம பக்தரான இவர் ஸ்ரீஇராமருடன் பேசியுள்ளாராம். ஒரு சமயம் எம்பெருமான் ஒரு வயோதிக துறவியாக எனக்கு சேவை செய்ய உனது மனைவியை அனுப்பு என்றவுடன் என்ற தயக்கமும் இல்லாமல் தனது மனைவியை அவளது சம்மதத்துடன் அனுப்பி வைத்தாராம். சிறிது சமயத்தில் அத்துறவி மறைந்தார். பின்னர் ஆகாய வாணி மூலம் உங்களின் விருந்தினர்களை உபசரிக்கும் பான்மையை உலகிற்கு உணர்த்தவே இவ்வாறு திருவிளையாடல் புரிந்தேன். என்னுடைய தண்டத்தையும், ஜோல்னாப் பையையும் விட்டுச் சென்றுள்ளேன் என்று அறிவித்தார். அத்தண்டத்தையும் பையையும் ஜலாராம் பாபா பயன்படுத்தினாராம். இராம நாமம் ஜபித்து பல பக்தர்களின் துன்பங்களை போக்கி பல அதிசயங்கள் புரிந்துள்ளார். ஆகவே இவரை ஒரு தெய்வப்பிறவியாக மதித்து பலர் அவரை இன்றும் வழிபடுகின்றனர் தமது பிரார்த்தனைகளை இவரிடன் வைத்து அவை நிறைவேறியவுடன் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அந்தி சாயும் நேரத்தில் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய பிரம்மாண்ட தூண்களூடன் கூடிய இவ்வாலயத்தில் சீதா லட்சுமண ஹனுமத் சமேத இராமரையும், ஜலாராம் பாபாவையும் சேவித்தபின் பயணத்தைத் தொடர்ந்து துவாரகையை அடையும் போது நள்ளிரவாகி விட்டது. கூட்டிலிருந்து கிளியெப்போதும் கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும் ஊட்டக்கொடாதுசெறுப்பனாகில் உலகளந்தானென்றுயரக்கூவும் நாட்டில்தலைப்பெய்தி உங்கள்நன்மையிழந்துதலையிடாதே சூட்டுயர்மாடங்கள்சூழ்ந்துதோன்றும் துவராபதிக் கென்னையுய்த்திடுமின் (நா.தி 12-9) என்று கோதைப் பிராட்டி பாடியபடி கிளிகள் கூட கோவிந்தா! கோவிந்தா! என்றும், உலகளந்தான் என்றும் கூவும், உயர்ந்த மாடங்களுடன் கூடிய மாளிகைகள் கொண்ட துவாரகையை அடைந்தோம். துவாரகாதீசர் ஆலயத்தின் பின்புறமுள்ள ஒரு தங்கும் விடுதியில் இரு அறைகள் கிடைத்தன அதில் தங்கினோம். இவ்வாறு முதல் நாள் யாத்திரை மிகவும் சிறப்பாக அமைந்தது. மறு நாள் எந்தெந்த ஆலயங்களை தரிசித்தோம் என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? சற்றுப் பொறுங்கள் உறங்கி விழித்து விடுகின்றோம். அத்தியாயம் -3 துவாரகை [ஜகத்மந்திர்/ திரைலோக்ய சுந்தர் மந்திர்] “பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரையென்னும் அதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” என்று பெரியாழ்வாரும், “துவராபதிக் காவலன்”, “சோலைமலைப் பெருமான் துவராபதி யெம்பெருமான் ஆலினிலைப் பெருமான் என்று அவர் திருமகளாரான சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாளும்,”முது துவரைக் குலபதி’ என்று திருமங்கையாழ்வாரும், வண்துவராபதி மன்னன் என்று நம்மாழ்வாரும், ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் என்று திருமழிசையாழ்வாரும்  பாடியபடி ஸ்ரீகிருஷ்ணர் 100 வருடங்கள் அரசாண்ட நகரம் துவாரகை ஆகும். தமது 25வது வயதில் மதுராவை விட்டு மேற்குக் கடற்கரையோரம் வந்து துவாரகையை உருவாக்கினார் ஸ்ரீகிருஷ்ணர், சௌராஷ்டிரா தேசம் மற்றும் ஜாம் நகர் அருகில் கடலோரத்தில் வாழ்ந்து வந்த ஒரு மகாராஜாவின் மகள் ருக்மணியை மணந்தார் தமது 125வது வயதில் வைகுந்தம் செல்லும் வரை இங்கு ஆட்சி புரிந்தார். துவார் – என்றால் வாயில், கா – என்பது பிரம்மனைக் குறிக்கும். எனவே துவாரகை என்றால் மோட்சத்திற்கான வாயில் என்றும் ஒரு பொருள் உண்டு. பெயருக்கேற்றார் போல இறைவனுடன் தொடர்புடையதால் முக்தி தரவல்ல ஏழு நகரங்களுள் ஒன்றாக துவாரகை விளங்குகின்றது. மற்ற முக்தித்தலங்கள் அயோத்தி, வடமதுரை, மாயாபுரி என்னும் ஹரித்வாரம், காசி, காஞ்சி, உஜ்ஜயினி ஆகியவை ஆகும். ‘அடியேனின் அடியவர்களைக் காக்கிற ஊர் இது’ என கண்ணனால் கொண்டாடப்பட்ட தலம்! துவாரகையின் பிரபாவத்தால் புழு, பட்சி, மிருகங்கள், பாம்புகள் போன்ற ஜந்துக்கள் கூட, ஆசையிருப்பின் ஒரு நாள் முக்தி அடையுமாம் எனில், அங்கு வசிக்கும் மனிதர்களுக்கு முக்தி உண்டு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அதுமட்டுமா? துவாரகையில் வசிப்பவரைப் பார்ப்பதாலும் தொடுவதாலும் கூட மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அனைத்தும் பாவங்களிலிருந்து விடுபட்டு, சொர்க்கத்தை அடையும். இவ்வூரின் மண் துகள்கள் காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு, பாவிகளுக்குக்கூட முக்தியைத் தரவல்லது என்கிறது ஸ்கந்தபுராணம். 5000 ஆண்டுகள் பழமையான திருத்தலம் இது என்று ஸ்ரீமத்பாகவதம் கூறுகிறது. துவாரகையை நோக்கி காலடி எடுத்து வைத்தாலே அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்று புராணங்கள் பகர்கின்றன. பகவத்கீதை, ஸ்கந்தபுராணம், விஷ்ணு புராணம், ஹரிவம்சம் ஆகிய நூல்களில் இந்நகரம் தங்கத்தால் வடிக்கப்பட்ட தகவல் கூறப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடலில் மூழ்கிய துவாரகையின் அழிந்து போன சில பகுதிகளை கண்டெடுத்துள்ளனர். இந்தியாவின் ஏழு தொன்மை மிக்க நகரங்களில் இதுவும் ஒன்று. நமது பாரத தேசத்தின் நாற்திசைகளிலும் சிறப்புடன் விளங்கும் சார்தாம் எனப்படும் நான்கு தலங்களில் துவாரகை மேற்கு எல்லை ஆகும். வடக்கில் பத்ரிநாதம், கிழக்கில் ஜெகந்நாதம் - பூரி, தெற்கில் இராமேச்சுரம் ஆகிய தலங்கள் மற்ற சார்தாம் தலங்கள் ஆகும். சனாதன தர்மம் தழைத்தோங்க ஆதிசங்கர பகவத் பாதாள் பாரத தேசத்தின் நாற்திசையிலும் நிறுவிய நான்கு ஆம்னானாய பீடங்களில் ஒன்று துவாரகை. இது மேற்கு சாரதா பீடம் ஆகும். ------------- -------------------- -------------------- --------------- -------------------- மடம் கோவர்தன் சிருங்கேரி சாரதா சோதிர்மடம் தாம் ஜகந்நாதம் இராமேசுவரம் துவாரகை பத்ரிநாதம் சம்பிரதாயம் கங்குவார் பூரிவார் கோட்வார் ஆனந்தவார் ஆசார்யர் பத்மபாதர் சுரேசுவர் ஹஸ்தமாலக் தோடகாச்சாரியர் பதவி வன், ஆரண்யம் சரஸ்வதி,பூரி,பாரதி தீர்த்தர் கிரி,பர்வத், சாகர் தேவி விமலா காமாட்சி பத்ரகாளி பூர்ணகிரி தேவதா ஜகந்நாதர் ஆதி-வராகர் சித்தேசுவர் நாராயணன் தீர்த்தம் மகாநதி துங்கபத்ரா கோமதி அலக்நந்தா வேதம் ரிக் யசுர் சாம அதர்வண மஹா வாக்யம் ப்ரக் ஞானம் ப்ரம்ம அஹம் பிரம்மாஸி தத் த்வம் அஸி அயம் ஆத்மா பிரம்ம ------------- -------------------- -------------------- --------------- -------------------- ஆழ்வார்களால் மங்கலாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101வது திவ்ய தேசம். பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்கள் துவாரகையை துவரை, துவராபதி, வண்துவரை, வண்துவராபதி என்று பலவாறு மங்கலாசாசனம் செய்துள்ளனர். வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோத்தமனிருக்கை …….(பெரி.தி 4.7.9) என்பது பெரியாழ்வார் பாசுரம்.  இப்பாசுரத்தில் வடநாட்டு திவ்ய தேசங்களை பட்டியலிட்டுள்ளார் பெரியாழ்வார். திருமங்கையாழ்வார் “மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே” (பெ.தி 6-8-7) என்று தேன் மிகுந்த கற்பக மரத்தைச் சத்தியபாமை பிராட்டிக்காகத் துவாரகையில் நட்டவன் என்று மங்கலாசாசனம் செய்துள்ளார். உன்னித்துமற்றொரு தெய்வந்தொழாள் அவனை யல்லால் நும்மிச்சைசொல்லி நும்தோள்குலைக்கப்படும் அன்னைமீர்! மன்னப்படுமறைவாணனை வண்துவராபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலுந்தொழுதாடுமே. (தி வா 4-6-10) என்று தோழி பாசுரமாக நம்மாழ்வார் பாடியருளியுள்ளார். சேயனணியன் சிறியன் மிகப்பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற – மாயன் என்று திருமழிசையாழ்வார் மங்கலாசாசனம் செய்துள்ளார். பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்னும் ஆச்சார்யார் தமது நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் இத்திவ்யதேசத்தை இவ்வாறு பாடியுள்ளார். திறம் திறமாத் தாம் துய்க்கும் தீம்சுவையை நாடி அறம் திறம்பி பாதகர் ஓர் ஐவர் நறுந்துளவமாதுவரை யோனே மனம் துணையாகக் கொண்டு என்னைக் காதுவர் ஐயோ மெய் கலந்து (நூ தி – 105) பொருள்: நறுமணமுடைய திருத்துழாய் மாலையைத் தரித்த, பெருமை பெற்ற, துவாரகை என்னும் திருத்தலத்தை வாழும் இடமாகக் கொண்டவனே! மிகக் கொடிய பாதகங்களைச் செய்வதற்குக் காரணமாய் நிற்கின்ற ஐம்பொறிகள், விதம் விதமாக, தாம் அனுபவித்தற்கு உரிய இன்சுவையுள்ள பொருட்களைத் தேடிக் கொண்டு, அறவழியிலிருந்து தவறி எனது மனத்தை உற்ற துணையாகக் கொண்டு எனது உடலில் பொருந்தி என்னை இடைவிடாது வருவார்கள் ஐயோ! துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள்.   மேலும் இத்தலம் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களின் நுழைவாயிலாகக் கருதப்படுவதால் துவாரகா அல்லது துவாரகாதீஷ் என்றும் பெயர் பெற்றது. மகாபாரதத்தில்  துவாரகை, யது குல விருஷ்ணிகள் ஆண்ட ஆனர்த்தா அரசின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாபாரதத்தில் பல்வேறு இடங்களில் துவாரகையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பாரத தேசத்தின் வரை படத்தில் மாங்காய் போன்று காட்சியளிக்கும் ‘கத்தியவார்’ தீபகற்பத்தில் (குஜராத் மாநிலம்) புதிதாக துவக்கப்பட்டுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில், கட்ச் வளைகுடாவின் கழிமுகத்தில், கோமதி ஆற்றின் வலது கரையில் துவாரகை என்னும் இப்புண்ணிய நகரம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு குசங்கலீ, ஓகா (உஷா) மண்டல் என்றும் பெயர்கள் உண்டு. கிருஷ்ணன் வாழ்ந்த காலத்திலிருந்த, விஸ்வகர்மா ஒரே இரவில் கட்டிய, சுவர்ணநகரி என்றழைக்கப்பட்ட துவாரகை தற்போது இல்லை. பாரதப்போரில் தன்னுடைய புதல்வர்களாகிய கௌரவர்கள் நூற்றுவரும் மடிய ஸ்ரீகிருஷ்ணரே காரணம் என்று கோபம் கொண்ட காந்தாரியின் சாபத்தின் படி கிருஷ்ணருடன் யாதவ குலம் முற்றிலுமாக அழிந்தது. அப்போது ஸ்ரீகிருஷ்ணர் அரசாண்ட துவாரகை நகரமும் கடலில் மூழ்கியது என்பது ஐதீகம். ஆழ் கடல் அகழ்வாராய்ச்சியில் கடலுக்கு அடியில் அழிந்து பட்ட ஒரு நகரம் உள்ளது தெரிய வந்துள்ளது. தற்போதுள்ள இக்கோயில் கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் கொள்ளுப்பேரனான ‘வஜ்ரநாபன்’ என்பவனால் கட்டப்பட்டது. கி.பி. 8 முதல் 10-ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய படையெடுப்பாளர்கள் அழித்து விட்டனர். பின்னாளில் 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளில் குஜராத்தை ஆண்ட சாளுக்கிய அரச பரம்பரையினர் கட்டியதுதான் இப்போதுள்ள கோவில் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  இந்த துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் சோமநாதர் கோவில் ஒரே பாணியில் அமைந்திருப்பதை அதற்கு ஆதாரமாக இவர்கள் கூறுகிறார்கள். இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். துவாரகையின் சில சிறப்புகளைப் பற்றி இதுவரை பார்த்தோம் வாருங்கள் வண்துவாரபதி மன்னனை சேவிக்கலாம். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்தால் துவாரகாதீஷ் என்றழைக்கப்படும் துவாரகையின் அரசன் ஸ்ரீகிருஷ்ணரையும் அருகில் உள்ள மற்ற ஆலயங்கள் அனைத்தையும் தரிசித்து விட்டு சோம்நாத் சென்று விடலாம் என்று முதல் நாளே வண்டி ஓட்டுனர் கூறியிருந்தார் எனவே யாத்திரையின் இரண்டாம் நாள் அதிகாலையில் எழுந்து கதிரவன் குண திசை வந்தணைந்து, கனை இருள் அகன்று காலையம் பொழுதாகின்ற வைகறைப் பொழுதில் கடலும் கோமதி ஆறும் கூடும் சங்கமத்தில் புண்ணிய நீராடச்சென்றோம். அந்த அதிகாலை வேளையிலும் பலர் கோமதி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தனர். கோமதி சங்கமத்தில் பன்னிரண்டு படித்துறைகள் உள்ளன. அருகே ருஷபா குண்டம் என்றொரு குண்டமும் உள்ளது. இவற்றில் முதலில் நீராடி விட்டு பின்னர் துவாரகாதீஷனை சேவிக்க வேண்டுமென்பது ஐதீகம். அடியோங்கள் இந்த யாத்திரை செய்த மாதம் மார்கழி மாதம் எனவே ஓங்கியுலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டுகண்படுப்ப தேங்காதேபுக்கிருந்த சீர்த்தமுலைபற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய் (திரு - 3) என்று ஆண்டாள் நாச்சியாரின் பாசுரம் பாடி முறையாக மழை பெய்து எல்லோரும் சுபிட்சமாக அனைத்து செல்வமும் பெற்று நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்று வாழ துவாரகாதீஷனை வேண்டி புனித நீராடினோம். நீராடிவிட்டு வெளியே வந்த போது ஆற்றின் கரையில் பல பசு மாடுகள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம். கோமாதாவிற்கு நாம் அகத்திக்கீரை வாங்கி அளிப்பதைப் போல இங்கு கோதுமை மாவு உருண்டை அளிக்கின்றனர் ஆற்றில் உள்ள மீன்களுக்கும் லட்டு அளிக்கின்றனர். லட்டை ஆற்றில் வீசியவுடன் மீன்கள் வந்து மொய்ப்பதைக் காணலாம். யாத்திரை வரும் சமயம் தானம் செய்யவேண்டும் என்பதால் அருகில் கோதுமை மாவு விற்றுக்கொண்டிருந்த ஒரு மாதிடம் அவற்றை வாங்கி பசுக்களுக்கு அளித்தோம். மகிழ்ச்சியாக சாப்பிட்டுவிட்டு ஆசிர்வதிப்பது போல கோமயமும் பெய்து விட்டு சென்றது. [] [ஸ்ரீகோமதி அம்மன் – ஸ்ரீமஹாலக்ஷ்மித் தாயார்] கோமதி இத்துவாரகைக்கு வந்ததற்கு ஒரு சுவையான கதை உள்ளது அது என்ன என்று காணலாமா அன்பர்களே? வசிஷ்ட முனிவரின் புதல்வியான, கோமதி, தனக்கு உகந்த மணாளனை தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முனிவருடன் புறப்பட்டாள். முனிவரிடம் ஒரு நிபந்தனை விதித்தாள் .அதாவது தந்தையைத் தொடர்ந்து வரவிருக்கும் அவளை, முனிவர் திரும்பிப் பார்த்தால், அவ்விடத்திலேயே நிலையாகி விடுவதாகக் கூறியிருந்தாள்   கோமதியின் கால் சலங்கை ஒலியின் மூலம் அவள், தன்னைத்  தொடர்வதை அறிந்து கொண்ட முனிவர், அந்த ஒலி, துவாரகாபுரியில் நின்று விடவே,  திரும்பிப் பார்த்தார். யுவதியாக இருந்த கோமதி, நீர் நிலையாக அவ்விடத்தையே நிரந்தரம் ஆக்கிக் கொண்டாள். இவளின் கரையில் இன்றைய ஜகத்மந்திர் என்றழைக்கப்படும் துவாரகை ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயம் அமைந்துள்ளது. இந்நதியில் நீராடினால் கங்கா ஸ்நானம் செய்த பலன் கிட்டும். கோமதி நதிக்கரையிலும் பித்ரு காரியங்கள் செய்கின்றனர் பக்தர்கள். கோமதி நதியில் நீராடினால் நமது பாவங்கள் அகலும், பரிசுத்தர்கள் ஆகின்றோம், அதற்குப்பிறகே நமக்கு துவரகாதீசனை தரிசிக்க அதிகாரம் கிட்டுகின்றது, தரிசன பலனும் அப்போதுதான் சித்திக்கும். எனவே முதலில் நாம் கோமதி மாதாவை அர்சித்து பூசிக்க வேண்டும். அன்னையை தரிசித்த பின்னரே துவாரகை யாத்திரை முழுமை பெறுகின்றது என்பது ஐதீகம் கோமதி அம்மனுக்கு ஆற்றின் கரையிலேயே ஒரு சிறு சன்னதி உள்ளது. இக்கோவிலை கோமதி துவாரகை என்று அழைக்கின்றனர். கருவறையில் பச்சை பட்டு, கிரீடம், முத்து, இரத்தின மாலைகள், வைரத் திலகம் என்று சர்வலங்கார பூஷிதையாக நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள் கோமதி அன்னை. அன்னைக்கு வெள்ளி சிம்மாசன மேடை அன்னையின் சன்னதியில் வண்கமலத் திருமாது, மஹாலக்ஷ்மித் தாயாரும் பொன் சிம்மாசன மேடையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். கோமதிப்படித்துறையில் ராதா தாமோதர் கிருஷ்ண மந்திரும் அமைந்துள்ளது. அன்னையர் இருவரையும் பணிந்து வணங்கி விட்டு துவாரகையின் நாயகனை தரிசிக்க ஜகத்மந்திர் ஆலயத்திற்குள் சென்றோம். கல்யாண நாராயணாக ஸ்ரீகிருஷ்ணர் அருள் பாலிக்கும் துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கோமதி கரையிலிருந்து 57 படிக்கட்டுகள் ஏறி ஜகத்மந்திர் அல்லது திரைலோக்ய சுந்தர் மந்திர் என்றழைக்கப்படும் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும். முன்னரே கூறியது போல இவ்வாலயத்திற்கு இரு பக்கம் வாயில்கள் உள்ளன. ஆயினும் கோமதி நதிப் பக்கம் உள்ள ‘சுவர்க்க த்வார்’ (சொர்க்க வாயில்) வழியாக உள்ளே சென்றுவிட்டு, எதிர்பக்கம் உள்ள ‘மோட்ச த்வார்’ (மோட்ச வாயில்) வழியாக வெளியே வர வேண்டும் என்பது ஐதீகம். ஏனென்றால் குசேலர் துவாரகைக்கு தன் குருகுல நண்பன் கண்ணனை காண வந்த போது இவ்வாசல் வழியாகச் சென்று அவல் கொடுத்து திருமகளின் பெருங்கருணைக்கு பாத்திரமானார் என்கிறார்கள். சுவர்க்க துவாரத்திற்கு நுழைவதற்கு முன்னரே பலராமரின் சன்னதி அமைந்துள்ளது. நான்கு திருக்கரங்களுடன் எழிலான அலங்காரத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார் பலராமர். இத்தலத்தில் கொடி ஏற்றுவது ஒரு பிரார்த்தனை, அக்கொடி இவர் பாதத்தில் வைத்து வணங்கிய பின்னரே ஏற்றுவதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றது. தினமும் அன்னதானம் நடைபெறுகின்றது அதற்காக பக்தர்கள் அரிசி தானம் இச்சன்னதியில் செய்கின்றனர். சங்கல்பம் செய்து கொண்டு தங்கள் சக்திக்கு ஏற்றவாறு அரிசியையும், பணத்தையும் கிருஷ்ணார்ப்பணம் என்று பலராமரின் பாதத்தில் சமர்ப்பிக்கின்றனர். துலாபார பிரார்த்தனையும் இவர் சன்னதியில் நிறைவேற்றப்படுகின்றது. பலராமரது திருப்பாதங்களை தொட்டு வணங்கலாம். பலராமரை [செம்பொற் கழலடி செல்வன் பலதேவன்(திருவடியில் கொடி)] அம்பரமே தண்ணீரே சோறேயறஞ் செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்! அம்பரமூடறுத்தோங்கி உலகளந்த உம்பர்கோமானே! உறங்காதெழுந்திராய் செம்பொற்கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய் (திரு.-17) என்று பாசுரம் பாடி வணங்கினோம். அடுத்து ஆலயத்துள் சென்று துவாரகாதீஷனை சேவிக்கச் சென்றோம். "வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும்’ என்று பெரியாழ்வார் பாடியபடி சுற்றிலும் உயர்ந்த மதிள் சுவர் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கோபுரத்தின் உயரம் 51.8 மீட்டர். கோபுரத்தின் மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கலசத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. சாளுக்கிய கட்டிடக் கலை அமைப்பு. இக்கோபுரம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது.  60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. உன்னதமான சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது விமானம். கீழே சன்னிதானமும் மேல்மாடியில் கோபுரமும் உள்ளன.. கோயிலின் நடுவில் 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமாக உள்ளது. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம். அன்னைஎன் செய்யில்என்? ஊர்என் சொல்லில்என்? தோழிமீர்! என்னைஇனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே. (தி.வா 5-3-6) என்று நம்மாழ்வார் மங்கலாசாசனம் செய்த ஸ்ரீகிருஷ்ணர் கருவறையில் துவாரகாதீஷராக, சிரசில் கொண்டையுடன் “காயா மலர் வண்ணன் கருவிளை போல வண்ணன் கமல வண்ணன்” என்று ஆண்டாள் பாடிய படி சியாமள வர்ணத்தில் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் சேவை சாதிக்கின்றார். வலமேற்திருக்கரத்தில் கதையும், இடமேற்திருக்கரத்தில் சக்கரமும், வலகீழ்திருக்கரத்தில் பத்மும், இடகீழ்திருக்கரத்தில் சங்கமும் ஏந்தி சர்வாங்க சுந்தரனாக எழிலாக சேவை சாதிக்கின்றார். கருப்பு நிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. சாய்ந்த தலைப்பாகையிடன் கூடிய மகுடமும், பட்டு பீதாம்பரமும், “கரியவாகி புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடிய நீண்ட அப்பெரியவாய கண்களும்” நம்மை அப்படியே ஈர்க்கின்றன. நாமும் அத்துவாராபதி மன்னன் வாசுதேவன் வலையில் அகப்பட்டால் மீளவழியறியாது மயங்குவோம். [கல்யாண நாராயணன்(துவாரகாதீஷன்)] தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே தமருகந்த தெப்பேர் மற்றபேர் – தமருகந்தது எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே அவ்வண்ணமாழியானாம் - (மு..தி.-44) என்று பொய்கையாழ்வார் பாடியபடி ஸ்ரீகிருஷ்ணரை குருவாகவும், சாரதியாகவும் கண்டான் அர்ச்சுனன், மானம் காத்த தமையனாக கண்டாள் பாஞ்சாலி. ஆப்த நண்பனாக கண்டார் குசேலர், உயிரினும் மேலான காதலானாகக் கண்டனர் கோகுலத்து கோபியர், எல்லாமாகவும் சேவகனாகவும் கண்டார் பாரதியார், அக்காலத்தில் மன்னனாகக் கண்டனர் துவாரகாவாசிகள் அவரை இன்று நாம் கேட்டவர்க்கு கேட்டபடி வரம் அளிக்கும் தெய்வமாக, குழந்தையாக வணங்குகின்றோம். காலையில் பாலகிருஷ்ணனாகவும் பகலில் மகாராஜாவைப் போலவும் மாலையில் பகவான் அலங்காரத்துடனும் துவாரகாதீஷ் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார். அடியோங்கள் சென்றது குளிர் காலம் என்பதால் பாலகிருஷ்ணருக்கு குளிருமே என்று கம்பளி உடைகள் அணிவித்திருந்தனர். கோடைக் காலத்தில் மலர் அலங்காரம் செய்கின்றனர். மாதவ்ஜீ என்று அழைத்து மகிழ்கின்றனர். முன்னர் கருவறையின் உள்ளே செல்ல அனுமதித்திருந்தார்களாம், தற்போது யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. திரைலோக்ய மோகன சுந்தரனுக்கு எதிரே தேவகி சன்னதி. அதிகாலையில் பெருமாள் கண் விழிப்பது தன் தாயின் திருமுகத்தில்தான். மேலும் எந்த குறையும் இல்லாமல் தன் மகனுக்கு எல்லா சீர்களும் நடைபெறுகின்றதா? என்று அன்னை கவனித்துக் கொள்வதாகவும் ஐதீகம். “முன்னையமரர் முதல்வன் வண் துவாராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன்” என்று நம்மாழ்வார் மங்கலாசாசனம் செய்த “தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை” திவ்யமாக சேவித்தோம். அன்னை மட்டுமா? அண்ணன் பலராமன், பட்டமகிஷிகள் எண்மர், மைந்தன், பேரன் ஆகியோருக்கும் சன்னதிகளும் அமைந்துள்ளன. ஸ்ரீகிருஷ்ணருக்கு எட்டு பட்டமகிஷிகள், எண்பது பிள்ளைகள். மொத்தம் 71 தலைமுறைகள். ஆலயத்தின் உள்ளே கிருஷ்ணரின் வம்ச மரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்திற்கு பின் 1.ருக்மணி, 2.சத்யபாமா, 3.ஜாம்பவதி, 4.நக்னஜித், 5.காளிந்தி, 6.லக்ஷ்மணா, 7. மித்ரவிந்தா, 8. பத்ரா ஆகிய எட்டு பட்டமகிஷிகளின் சன்னதிகள் ஒரே மண்டபத்தில் அமைந்துள்ளன. மேலும் ஆதி குக்கேஸ்வரர், சத்யநாராயணர், காயத்ரி, அம்பிகை, த்ரிவிக்ரமன், சரஸ்வதி, கோபால கிருஷ்ணர், தத்தாத்ரேயர், மகன் பிரத்யும்நன், பேரன் அநிருத்தன், மற்றும் துர்வாசருக்கும் ஒரு சன்னதி உள்ளது. துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். அடியோங்கள் சென்ற சமயம், வேதம் படிக்கும் சிறார்கள் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டிருந்தனர். துவாரகையின் கிருஷ்ணர்தான் டாகோர் சென்று விட்டாரே இப்போதுள்ள கிருஷ்ணர் யார் என்று இன்னும் சொல்லவில்லையே என்று கேட்கின்றீர்களா அன்பர்களே? இதோ சொல்லி விடுகிறேன். துர்வாசரின் சாபத்தினால் ருக்மணி ஸ்ரீகிருஷ்ணரை பிரிந்து பன்னிரண்டு வருட காலம் தனியாக தவம் செய்ய நேரிட்டது. அப்போது ருக்மணி தினமும் பூசை செய்ய ஒரு மூர்த்தியை ஸ்ரீகிருஷ்ணர் அளித்தார், அம்மூர்த்தத்தில் நானே உறைந்துள்ளேன் என்றார். ருக்மணி பூசித்த அம்மூர்த்தி அதற்குப்பின் லாட்வா என்ற கிராமத்தில் ஒரு குளத்தில் பல காலம் இருந்தது, டாகோர் சென்ற அந்தணர்களுக்கு கனவில் வந்து ஸ்ரீகிருஷ்ணர் அக்குளத்தைக் காட்டினார். அவர்கள் அவ்விக்கிரகத்தை மீட்டெடுத்து துவாரகையில் நிறுவினர். அத்திருவுருவமே தற்போது துவாரகையில் அமைந்துள்ளது. இங்கு பூசைகள் மஹாபிரபுஜீ என்று அழைக்கப்படுகின்ற வல்லபாச்சாரியாரின் புஷ்டி மார்க்கம் பிரகாரம் நடைபெறுகின்றன. தினமும் துவாரகாதீசருக்கு காலை 7.00 மணிக்கு மங்கள ஆரத்தியும்; 10.00 மணிக்கு திருமஞ்சனமும்; மாலை 6.00 மணிக்கு அலங்கார ஆரத்தியும்; இரவு 7.30 மணிக்கு சந்தியா ஆரத்தியும்; இரவு 9.30 மணிக்கு சயன ஆரத்தியும் நடக்கிறது. டாகோர் துவாரகையில் எவ்வாறு பிரசாதம் அமுது செய்யப்படுகின்றதோ அது போலவே துவாரகையிலும் நடைபெறுகின்றது. அதன் விவரங்கள் என்னவென்று காணலாமா அன்பர்களே. பொதுவாகவே குஜராத்திகள் இனிப்புப் பிரியர்கள், இவர்கள் சமைக்கும் அனைத்திலும் சாம்பார் உட்பட சர்க்கரை சேர்ப்பார்கள். இறைவனுக்கு படைக்கும் உணவிலும் இனிப்புகளே அதிகம். போக் என்றால் இறைவனுக்கு படைக்கும் நைவேத்யம். துவாரகாதீசனுக்கு என்னென்ன பிரசாதங்கள் அமுது செய்யப்படுகின்றன என்று காணலாம் அன்பர்களே. பண்டா போக்: அதிகாலையில் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை துவாரகாநாதனுக்கு நைவேத்யம் செய்கின்றனர்.  வெண்ணெய் என்றால் ஸ்ரீகிருஷ்ணருக்கு கொள்ளை பிரியமல்லாவா? “வேயினன்ன தோள் மடவார் வெண்ணையுண்டான் இவனென்று ஏச நின்ற” எம்பெருமானுக்கு இச்சமயம் வெண்ணையும் அமுது செய்விக்கப்படுகின்றது. அதன் பிறகு துவாரகநாதனின் முகத்தினை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்கின்றனர்.  ஒரு குழந்தைக்குப் பல் தேய்த்து விடுவது போல துவாரகாநாதனுக்கும் தங்கத்தால் ஆன குச்சி கொண்டு பல் தேய்க்கும் படலம் நடக்கின்றது! அதன் பிறகு மங்கள ஆரத்தி.  இதற்குப் பின்னர் பக்தர்கள் துவாரகாதீசனை சேவிக்க அனுமதிக்கின்றனர். ஸ்நான் போக்: அதன் பிறகு குளிப்பாட்டும் படலம்! அதாவது திருமஞ்சனம். நமது ஊரில் நடப்பது போலவே இங்கேயும் விதம் விதமாக அபிஷேகம் கண்டருகிறான் குன்றால் குளிர் மாரி தடுத்துகந்தான், கானார் கரி கொம்பொசித்த களிறு, கோலால் நிரை மேய்த்த எங்கோவலர் கோ, ஸ்ரீகிருஷ்ணர். பிறகு அமுது படையல். ஷ்ருங்கார் போக்: திருமஞ்சனம் முடிந்த பிறகு அலங்காரம். பட்டு பீதாம்பரங்கள், நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள், தலைக்கு குவே என்றழைக்கப்படும் மகுடம், கொண்டு அலங்காரம் செய்கின்றனர். துளசி மாலை, பாக்கு மாலை, மலர் மாலைகள் சூட்டுகின்றனர். பின்னர் துளசியினால் அர்ச்சனை. இதற்குப் பிறகு ஷ்ருங்கார் போக் கண்டருளுகிறார். இச்சமயம் இனிப்புகள் அதிகமாக அமுது செய்யப்படுகின்றன. சுவாமிக்கு மட்டுமல்ல, பொன் வெள்ளி, நவரத்தினங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வண்ண வண்ண துணிகள் கொண்டு கருவறை முழுவதும் அலங்காரம் செய்கின்றனர். ராஜ் போக்: காய்த்த நீள் விளங்கனியுதிர்த்து எதிர்த்த பூங்குருந்து சாய்த்து மாபிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால் ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு பின் பேய்ச்சி பாலையுண்டு பண்டொரேன மாய வாமனனான துவாரகாதீசனுக்கு மதிய வேளையில் படைக்கப்படும் பிரசாதம். ஒரு அரசனுக்கு எப்படி உணவு சமைப்பார்களே அது போல 56 விதமான உணவு வகைகள் கொண்டு மிகவும் சிறப்பாக நைவேத்யம் செய்கின்றனர். ஆண்டாள் நாச்சியார் சோலை மலைப் பெருமானுக்கு நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன் ஏறுதிருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்லொலோ? (நா.தி 9-6) என்று பாடியபடி ஒரு சக்கரவர்த்திக்கு எவ்வாறு விருந்து படைப்பார்களோ அது போல ஸ்ரீகிருஷ்ணருக்கு ராஜ விருந்து அமுது செய்விக்கப்படுகின்றது. உத்தப்பன் போக்: மதிய இராஜ உணவிற்குப்பின் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர், எனவே சன்னதி அடைக்கப்படுகின்றது. சுவாமி உறங்குவதற்காக மெத்தை, தலையணை ஆகியவற்றை இவருக்கு முன்னர் சமர்ப்பிகின்றனர். மாலை எம்பெருமானை மணி அடித்து எழுப்புகின்றனர். பின்னர் அவருக்கு சந்தனம் ஜவ்வாது முதலிய வாசனை திரவியங்களைப் பூசுகின்றனர். பின்னர் தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் அச்சமயம் கிட்டுகின்ற கனி வகைகள் மற்றும் உலர் பழங்கள் நைவேத்யம் செய்கின்றனர். ஷயன் போக்: இரவு கோவில் நடையடைக்கும் போது துவாரகாதீசனுக்கு பூசைகள் முடித்து அன்றைய தினத்திற்கான நிறைவு நைவேத்யமாக பாலும் பழமும் படைக்கின்றனர். பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. அடியோங்கள் அதிகாலையில் சென்றதால், வெண்ணை பிரசாதம் கிட்டியது. ஜென்மாஷ்டமி, இராமநவமி, தீபாவளி, தசரா, அக்ஷய திருதியை, ரத யாத்திரை, வாமன ஜெயந்தி, தீபாவளி (குஜராத்தியரின் புது வருடப் பிறப்பு), தீபாவளிக்கு மறு நாள் அன்னகூட உற்சவம், துளசி திருக்கல்யாணம், மகர சங்கராந்தி ஆகிய திருவிழாக்கள் இத்தலத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. கோகுலத்தில் குடங்களை ஏடுத்தேறவிட்டு கூத்தாடவல்ல என் கோவே மடங்கொள் மாதரை மால் செய் என் மைந்தா என்று பெரியாழ்வார் பாடியபடி ஸ்ரீகிருஷ்ணர் அன்று குரவை கூத்தாடியதை நினைவு படுத்தும் வகையில் கோகுலாஷ்டமியன்று 52 பானைகளை தலையில் சுமந்து கொண்டு பெண்கள் “பாவன் பேடா” என்ற குரவைக் கூத்து ஆடுவர். தமிழ்நாட்டில் விசிஷ்டாத்வதைதத்தை பரப்பிய ஸ்ரீராமானுஜர் கி.பி 1050ல் துவாரகைக்கு விஜயம் செய்திருக்கிறார். மத்வாச்சாரியார் கி.பி. 1240ல் எழுந்தருளியிருக்கிறார். ஞானேஸ்வரர், வல்லபாச்சாரியார், சைதன்யர், மீராபாய் போன்ற மகான்களும் துவாரகைக்கு வந்து துவாரகாதீஷனை வணங்கியுள்ளனர். சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையனை, வல்லானை கொன்றானை, மாற்றாறை மாற்றழிக்க வல்லானை, புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கர்களை கிள்ளிக் களைந்தானை, கன்று குணிலாவெறிந்தானை, குன்று குடையாவெடுத்தானை, அம்பன்ன கண்ணாள் தேவகி இளஞ்சிங்கத்தை, ஆலினிலையானை, கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனை திவ்யமாக சேவித்த பின் ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஆம்னானாய மடங்களுள் ஒன்றான சாரதா மடத்திற்கும் சென்றோம். ஸ்வரூபானந்த தீர்த்தர் அப்போதைய சங்கராச்சார்யார். குஜராத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது மடம் சேதப்பட்டது, சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. அவற்றை சரி செய்ய மராமத்து வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மைய மண்டபத்தின் கூரையில் நான்கு பக்கமும் எழிலான ஆடல் வல்லான் மற்றும், அம்பாளின் பல்வேறு கோலங்களின் சிற்பங்களும் அருமையாக அமைத்துள்ளனர். இத்தலத்தில் த்வாஜாரோகணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் ஒரு நேர்த்திக் கடனாக இக்கொடியேற்றத்தை இத்தலத்தில் செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணர் அரசாட்சி செய்த காலத்தில், 52 பேர் தலைமை பொறுப்பில் இருந்தார்களாம். அதனால், முக்கோண வடிவில் படபடக்கும் 52 கஜ நீளம் அதாவது சுமார் 47 மீட்டர் கொடியானது பறக்க விடப்படுகிறது. வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளது போல இக்கொடியிலும், சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், வெள்ளை, பழுப்பு, ரோஜா வர்ணங்கள் இடம் பெறுகின்றன. சூரிய - சந்திர உருவங்கள் பதித்த இக்கொடியை ஒரு நாளைக்கு ஐந்து முறை விமானத்தின் உச்சியில்  ஏற்றுகிறார்கள். ஒரு முறை ஏற்றிய கொடியை மறுமுறை உபயோகப்படுத்துவது இல்லை. தினமும், இருவர் படிக்கட்டுகள் வழியாக,  தளத்திலிருந்து, நூற்று இருபது அடி  உயரமுள்ள ஐந்தடுக்கு கோயிலின் உச்சியை அடைந்து கொடியை இறக்கி  ஏற்றுகிறார்கள். புது கொடி ஏற்றப்பட்ட பிறகு, இதன் பாதி உயரத்தில், சதா ஒளிர்ந்து கொண்டிருக்கும் அகல் விளக்கின் சமீபத்திலிருந்து ஒரு தேங்காயை கீழே போட்டு உடைக்கிறார்கள் பக்தர்கள், அதை பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். கொடி ஏற்றத்தை தரிசித்தால், சகல ரோகங்களும் நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகிறது. இவர்கள் கொடியேற்றத்தை ஒரு பிரார்த்தனையாக செய்கின்றனர் எனவே ஊரையெல்லாம் அழைத்து கொடியை தாரை தப்பட்டைகள் முழங்க ஆட்ட பாட்டத்துடன், ஆடம்பரமாக ஒரு கூடையில் வைத்து தலையில் வைத்து சுமந்து கொண்டு “ஜெய் ரண் சோட், ராஜா ரண் சோட், கோபால கிருஷ்ணா, இராதா கிருஷ்ணா” என்று பக்தியுடன் ஜபித்துக்கொண்டே ஊர்வலமாக எடுத்துச் சென்று பலராமர் சன்னதியில் சமர்ப்பிக்கின்றனர். அங்கு பூசாரிகள் கொடியை பலராமரின் திருவடியில் வைத்து சிறப்பு பூசைகள் செய்கின்றனர். பின்னர் கொடியேற்றத்திற்காக கொடி விமானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. ஒரு கொடியேற்றத்திற்கு சுமார் ரூபாய் 25000/- ஆகின்றது. ஆயினும் முன் பதிவு செய்து கொண்டு காத்திருக்கின்றனர் இங்குள்ளவர்கள். எவ்வளவு பக்தியுடனும், சிறப்பாகவும் துவாரகையில் இக்கொடியேற்ற வைபவம் நடைபெறுகின்றது என்று பார்த்து இரசிக்க வேண்டிய ஒன்று என்பதில் ஐயம் இல்லை. ஆவலன்புடையார்தம் மனத்தன்றி மேவலன் விரைசூழ் துவராபதிக் காவலன் கன்றுமேய்த்து விளையாடும் கோவலன்வரில் கூடிடுகூடலே. (நா.தி 4.8) என்று வைகுந்த வாழ்வை விடுத்து பெரியாழ்வாரின் திருமகளாராக பூவுலகில் தோன்றிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் மங்கலாசாசனம் செய்த செங்கட்கருமுகிலை தேவகி சிங்கத்தை, கருக்கார் கடல் வண்ணனை, குடத்தையெடுத்தேற விட்டு கூத்தாட வல்ல எம் கோவை, மாமணி வண்ணனை, செங்கண் கரு முகிலை, செய்யவாய் செழுங்கற்பகத்தை, மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யான் துவாரகாதீஷனையும், கோமதியையும் திவ்யமாக தரிசனம் செய்த பின், உடனே தீவு துவாரகைக்காக படகுத்துறைக்கு வண்டி மூலம் கிளம்பினோம். ருக்மணி துவாரகை மற்றும் நாகேஸ்வர் ஆலயம் இரவிலும் திறந்திருக்கும் ஆனால் பேட்துவாரகைக்கு மாலை 5 மணிக்கு மேல் செல்ல முடியாது என்பதால் முதலில் அங்கு செல்வோம் என்று வண்டி ஓட்டுநர் கூறினார் எனவே தீவு துவாரகைக்கு பயணப்பட்டோம். அத்தியாயம் – 4 பேட் துவாரகை துவாரகாவிலிருந்து சற்று தூரத்தில் துவாரகா தீவு அமைந்துள்ளது. தீவு என்பதால் படகின் மூலம் அங்கு செல்ல வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா கடலில் மூழ்கிய சமயம் அவர் விருப்பப்படி கடலில் மூழ்காமல் எஞ்சியிருந்த பகுதி இது. இங்கே அவரது அரண்மனை அப்படியே உள்ளது. துவாரகையில் ராஜதர்பாரும் பேட்துவாரகையில் அந்தப்புரமும் இருந்ததாக ஐதீகம். இத்தீவில் குளிர்ச்சியாக ஸ்ரீகிருஷ்ணர் ருக்மணியுடன் தங்கி இருந்தாராம். முக்கிய துவாரகையும், பேட்துவாரகை இரண்டையும் சேர்த்து துவாரகாபுரி என்றழைக்கின்றனர். இத்தீவுதுவாரகைக்கு அக்காலத்தில் சங்கோதரா மற்றும் ஸ்ரீதீர்த்தா என்றும் பெயர் வழங்கியுள்ளது. தீவு துவாரகை செல்வதற்கான படகுத்துறை ஓகா (Okha) என்ற இடத்தில் உள்ளது. துவாரகாவில் இருந்து அங்கு செல்ல ஆட்டோக்கள் உள்ளன. தினமும் காலை 8:00 மணிக்கும், மதியமும் 2:00 மணிக்கும் ஒரு பேருந்து துவாரகையிலிருந்து கிளம்பி நாகேஸ்வர், கோபி தலாவ், பெட் துவாரகா, ருக்மணி துவாரகா அழைத்து செல்கின்றது, தனி வண்டி இல்லாதவர்கள் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். ஓகா செல்லும் வழியில் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. ஓகாவில் கப்பல் படை மற்றும் கடலோரக் காவல் படையினரின் தளங்கள் உள. பாகிஸ்தான் எல்லை அருகில் என்பதால் கப்பற்படை தளங்களை பல இடங்களில் கண்ணுற்றோம். 1965 போரின் போது பாகிஸ்தான் இவ்வாலயத்தை அழிக்க முயன்றது. அவனருளால் அது முறியடிக்கப்பட்டது. வழி நெடுக வெளி நாட்டுப் வரத்துப் பறவைகள் (Migratory Birds) கூட்டம் கூட்டமாக நீர் நிறைந்த வயல்களில் அமர்ந்திருந்தன. குளிர் காலம் என்பதால் பல விதமான வரத்து பறவைகள் அதிகமாக இருந்தன. கொக்குகள், நாரைகள், நீர்ப்பறவைகள், சைபீரியன் கொக்கு, பல வண்ண வாத்துக்கள், நீர்க் காக்கைகள் என்று பல வித வர்ணங்களில் பறவைக் கூட்டங்கள் கண்ணுக்கு விருந்து. ஆங்காங்கே நீல்காய் (Nilgai) என்றழைக்கப்படும் கடம்ப மான் கூட்டங்களையும் கண்ணுற்றோம். ஓகா படகுத்துறையிலிருந்து இயந்திரப் படகுகளில் தீவு துவாரகைக்கு பக்தர்களை அழைத்துச் செல்கின்றனர். செல்வதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கின்றனர். வரும் போது எந்தப் படகில் வேண்டுமென்றாலும் திரும்பி வரலாம். அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். உயிர் பாதுகாப்பு கவசம் யாரும் அணிவதில்லை. ஓகாவிலிருந்து தீவு துவாரகை 32 கி.மீ தூரம், சுமார் அரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். தற்போது துவாரகையும் பேட்துவாரகையையும் இணைக்கும் பாலப்பணிகள் துவங்கியுள்ளன. வரும் காலத்தில் வண்டி மூலமாகவே தீவுத்துவாரகையை அடைய முடியும். படகில் பயணிக்கும் போது வழியில் நீர்ப்பறவைகள் (Sea Gulls) செய்யும் அட்டகாசங்களை இரசித்துக் கொண்டே சென்றோம். பலர் பொரி வாங்கி இப்பறவைகளுக்கு வீசுகின்றனர். அவை அப்படியே அந்தரத்தில் பறந்த வண்ணம் அவற்றை அலகால் கவ்விக்கொண்டு மேலே பறந்து விடுகின்றன. கப்பல்கள் கட்டும் தொழிலும் இவ்விடம் சிறப்பாக நடக்கின்றது என்பதை கவனித்தோம். பேட் துவாரகையை நெருங்க நெருங்க துவாரகாதீஷனின் விமானத்தில் மேல் பறக்கும் கொடி வாருங்கள் வாருங்கள் என்று எங்களை வரவேற்றன. அரண்மனை கோட்டைச் சுவரும் கண்ணில் பட்டது. படகில் இருந்து இறங்கி ஒரு பாலத்தின் மூலம் சுமார் ஒரு கி.மீ தூரம் நடந்து அல்லது ஆட்டோ மூலம் பேட் துவாரகை ஆலயத்தை அடையலாம். வழியெங்கும் மீனவர்கள் தங்களின் வலைகளை காய வைத்திருக்கின்றனர். பாலம் பக்தர்களின் கூட்டத்தினால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. கோட்டையினுள்ளே செல்பேசிகள், புகைப்பட கருவிகள், முதலிய மின்னணுக் கருவிகளை அனுமதிப்பதில்லை என்பதால் கோயிலைச் சுற்றியுள்ள கடைகளில் அவற்றை பாதுகாக்க கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும். [தீவுத்துவாரகை] இங்குள்ள துவாரகதீசன், ருக்மணி உருவாக்கிய மூர்த்தி, கண்ணன் மேல் கொண்ட பக்தியால் பல பஜனைப் பாடல்கள் பாடிய பக்த மீராபாய் ஸ்ரீகிருஷ்ணருடன் கலந்த மூர்த்தி என்பது ஐதீகம். இவரும் நின்ற நிலையில் சேவை சாதிக்கின்றார். இவருக்கு கேசவ்ராய் ஜீ என்று திருநாமம். மையமாக இவர் சன்னதி இருக்க இரு புறமும் கல்யாணராய் ஜீ மற்றும் புருஷோத்தமன் சன்னதி ஆகிய மூவர் சன்னதிகளும் ஒரு பக்கம் உள்ளன. கேசவ் ராய்ஜீக்கு எதிரே தேவகி சன்னதி. மேலும் ருக்மிணி தவிர இவரது மற்ற மனைவியர்களின் சன்னதிகள், திரிவிக்கிரமமூர்த்தி மற்றும் லக்ஷ்மி நாராயணர், ஸ்ரீகிருஷ்ணரின் குலதெய்வம் அம்பாஜி சன்னதிகள் தீவு துவாரகையில் உள்ளன. நரகாசுரனிடம் இருந்து 16,000 பெண்களை மீட்டு, அவர்களுடன் ஸ்ரீகண்ணன் வாழ்ந்தது இங்கு என்பது ஐதீகம். இங்கே ரணசோட்சாகர், ரத்ன தலாப் (குளம்), கசாரி தலாப் முதலான குளங்கள் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணரை தரிசனம் செய்த போது பெரியாழ்வாரின் இப்பாசுரம் மனதில் தோன்றியது ……. வாரணம்பையநின்றூர்வதுபோல் உடன்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடை நடவானோ! (பெ தி 1-7-1) இப்பாசுரத்திற்கு வியாக்கியானம் கூறும் போது கிருஷ்ண பிரேமி அண்ணா, வெண்ணையும், பாலும், தயிரும் சாப்பிட்டு ஒரு குட்டி யானைப் போல கண்ணன் வருவான் என்று சுவையாகக் கூறுவது போலவே கொழுக், மொழுக் என்று கண்ணன் இருப்பார் என்று கூறுவார். இத்தலங்களில் கண்ணனும் அவ்வாறே சேவை சாதிக்கின்றார். அடியோங்கள் சென்ற சமயம் ஆரத்தி சமயம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. துவாரகையில் நடைபெறுவது போலவே இங்கும் பூசைகள் நடைபெறுகின்றன. பந்தனைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால் வெந்திறலேழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர் நந்தன் மகனாக வரும் நம்பியை, வங்கமா கடல் வண்ணனை, அஞ்சன குன்றம் நின்றதொப்பானை, பெய்யுமா முகில் போல் வண்ணனை, ஓதமா கடல் வண்ணனை, கோலங்கரிய பிரானை, அருமையான அலங்காரத்தில் சேவித்தோம். குசேலர் ஸ்ரீகிருஷ்ணரை காண வந்தபோது அமர்ந்த இருக்கை மஹாபிரபுவின் இருக்கை என்றழைக்கப்படுகின்றது. கண்ணனுக்காக குசேலர் அவல் பரிசாக (பேன்ட்) கொண்டு வந்த காரணத்தால் இத்தீவு பேன்ட் துவாரகை என்றழைக்கப்படுகின்றது என்பாரும் உண்டு. புதிதாக கல்லினால் ஒரு சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். அதில் கண்ணனின் லீலைகள் அனைத்தையும் எழில் சிற்பமாக செதுக்கியுள்ளனர். கண்ணன் கேசவன் நம்பி சிறைச்சாலையில் பிறந்தது, சங்கு சக்கரங்களுடன் தேவகி-வசுதேவருக்கு காட்சி கொடுத்தது, ஆதிசேஷன் குடை பிடிக்க யமுனையைக் கடந்தது, கோகுலத்தில் ஆய்ச்சி பாலையுண்டு, மண்ணையுண்டு பின் பேய்ச்சி பாலையுண்டு மாயம் காட்டியது, தாயே யசோதா உந்தன் மாயன் மணிவண்ணன் செய்யும் குறும்புகளைக் கேளாய் என்று கோபியர்கள் தீம்பு கூறியது, யசோதை உரலில் கயிற்றால் கட்ட அவள் அன்பிற்கு கட்டுப்பட்டு தாமோதரனானது, அவள் பிள்ளை வாயுளே அண்டமேழையும் கண்டது, கள்ளச் சகடம் உதைத்தது, ஆயர் மகளுக்காக மருதிறுத்தது, புள்ளின் வாய் கீண்டியது, வெண்ணெய் திருடி உண்டது, யசோதை நுணுக்கிய மஞ்சளால் வாய் வழித்து கண்ணனை நீராட்டியது, பரியனாகி வந்த அவணனுடல் கீண்டியது, கோலால் நிரை மேய்த்தது, குன்றால் குளிர் மலை காத்தது, குடக்கூத்தாடியது, வல்லானை கொம்பை முறித்துக் கொன்றது, மல்லரை மாட்டியது, கோபியர்களின் கூறை கவர்ந்தது, பல்லவம் திகழ் பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில் ஒல்லை வந்திறப் பாய்ந்து அருநடஞ்செய்தது, கோபியருடன் ராச லீலை செய்தது, கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்தது, மாவாய்ப் பிளந்தது என்று அனைத்து லீலைகளையும் காணலாம். பூதகியின் நகங்கள், யசோதை கட்டிய கயிற்றின் தழும்பு, என்று வெகு நுணுக்கமாக பார்த்து பார்த்து செதுக்கியிருப்பது வியக்க வைக்கின்றது. ஒவ்வொரு லீலையையும் பெரியாழ்வாரும், ஆண்டாள் நாச்சியாரும் எவ்வாறெல்லாம் பாடியுள்ளனர் என்று அவர்களின் பாசுரங்களை நினைவு கூர்ந்தோம். குன்றினாற் குடை கவித்ததுவும் கோலக் குரவை கோத்ததும் குடமாட்டும் கன்றினாள் விளவெறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டு மனத்திலும் ………(பெரு.தி- 7-9) என்று குலசேகராழ்வார் ஸ்ரீகிருஷ்ணரின் பால லீலைகளை இவ்வாறு மங்கலாசாசனம் செய்ததை அப்படியே தத்ரூபமாக கல்லில் வடித்துள்ளனர் அது கண்ணுக்கு விருந்து உப்பரிகையில் அமைந்துள்ள ஜன்னல்களில் அருமையான பூ வேலைப்பாடுகள் இவ்வூர் சிற்பிகளின் கை வண்ணத்திற்கு ஒரு சிறந்த உதாரணம். இவ்வாலயத்தில் தினமும் பகல் 11 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை அன்னதானம் நடைபெறுகின்றது. இத்தீவு துவாரகையில்தான் கிருஷ்ணர் தனது 16000 மனைவியருடன் தங்கியிருந்தார். பட்டத்து இராணிகளுக்கு தனித் தனி அரண்மனைகள் இருந்தன. எனவே ருக்மணியின் ஆலயம் தனியாக அவளது அரண்மனையில் துவாரகாதீசனின் ஆலயத்திற்கு அருகில் உள்ளது. சிரித்த முகத்துடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார் அகலகில்லேன் இறையும் என்று பெருமாள் மார்பில் உறையும் அலர்மேல் மங்கை, கருந்தடங்கண்ணி, ருக்மிணித்தாயார். செல்வத் திருமகளை வணங்கி அனைவருக்கும் ஆரோக்கியமும், ஐஸ்வர்யமும் அளிக்குமாறு வேண்டிக்கொண்டோம். கோமதி நதி கடலில் சங்கமிக்கும் இடத்தில் துவாரகா கற்கள் கிடைக்கின்றன. அவற்றின் மேற்பாகம் தேன் அடைபோல் இருக்கும். சில கற்களில் விஷ்ணுவின் சக்கரம் இருக்குமாம். இக்கற்களில் நாராயண சின்னம் மற்றும் மகாலக்ஷ்மி சின்னம் பிரதீக் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இக்கற்களை எடுத்து வந்து பூஜிப்பவர்கள் மோட்சத்தை அடைகிறார்கள் என்பது ஐதீகம். இங்கு ஸ்ரீகிருஷ்ணர் ஆட்சி செய்த தர்ம சபையும் ஒரு மச்சாவதார பகவான் கோவிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துவாரகாவிலும், தீவு துவாரகாவிலும் ஆண்டு முழுவதும் எல்லா விழாக்களும் சிறப்பாக நடக்கின்றன. தினமும் இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து துவாரகாதீசரையும் ருக்மிணி தாயாரையும் தரிசனம் செய்கின்றனர். சமயமிருந்தால் பேட்துவாரகையின் கடற்கரையின் அழகையும் அன்பர்கள் இரசிக்கலாம். திவ்யமாக பெருமாளையும் தாயாரையும் சேவித்த பிறகு வெளியே வந்து இத்தீவுதுவாரகையில் தரிசிக்க வேறு ஆலயங்கள் உள்ளனவா? என்று கடையில் விசாரித்தோம். அனுமன் தனது மகனுடன் அருள் பாலிக்கும் ஒரு தண்டி ஹனுமன் ஆலயம் உள்ளது வேண்டுமென்றால் ஆட்டோவில் சென்று வாருங்கள் என்று கூறினார்கள். எனவே ஒரு ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு புறப்பட்டோம். ஒற்றையடி தார்ப்பாதை குண்டும் குழியுமாக இருந்தது. துவாரகாதீசர் கோவிலைத் தாண்டி அதிக குடியிருப்புகளும் இருக்கவில்லை காடாக இருந்தது. வழியில் நரி, குயில்கள் மற்றும் பல வித பறவைகள் கண்ணில் பட்டன. சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் பயணம் செய்து தண்டி ஹனுமன் ஆலயத்தை அடைந்தோம். அது ஒரு ஆசிரமம், ஒரு சுவாமிஜி அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார். ஆசிரமம் முழுமையும் விமானம் உட்பட "ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்" என்று எழுதியிருக்கின்றனர். பலர் அங்கு அமர்ந்து இம்மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கின்றனர். ஆசிரமத்தில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் உள்ளன. ஒரு சன்னதியில் அனுமனுடன் அவருடைய மகன் மகரத்வஜன் தரிசனம் தருகின்றார். அனுமன் பிரம்மசாரியாயிற்றே அவருக்கு மகன் எப்படி வந்தான் என்று யோசிக்கிறீர்களா? அதற்காகவும் ஒரு கதை உள்ளது. [மகரத்வஜனும் ஹனுமனும்] இராம இராவண யுத்தத்தின் போது இந்திரஜித், கும்பகர்ணன் அனைவரையும் இழந்த பின் தனி மரமாக நின்ற இராவணன், தனது மாற்றாந்தாய் சகோதரர்களான பாதாளத்தை ஆண்டு கொண்டிருந்த அஹிராவணன் மற்றும் மஹிராவணனை எப்படியாவது இராம லக்ஷ்மணர்களை கடத்திக் கொண்டு சென்று கொல்லுமாறு வேண்டினான். அவர்கள் இரவில் இலங்கை கடற்கரையில் வந்து பார்த்த போது அனுமன் தன் வாலினால் அமைத்த கோட்டையின் உள்ளே இராம லக்ஷ்மணர்கள் உறங்குவதையும், அவர்களுக்கு காவலாக விபீஷணரும், ஜாம்பவானும் இருப்பதையும் கண்டனர். அனுமனை ஏமாற்ற மாயத்தில் வல்ல அவர்கள் மேனி முழுதும் மணல் நிறைந்த கோலத்தில் விபீஷணனும், ஜாம்பவானும் போல உருமாறி அவர் முன் சென்று நின்றனர். அவர்களைக் கண்டு வியந்து எப்படி வெளியே வந்தீர்கள்? என்று வினவ புதை மணலில் மாட்டிக்கொண்டு வெளியே வந்து விட்டோம் என்று கள்ளத்தனமாகக் கூற அனுமனும் ஏமாந்து போய் தனது வாலின் நுனியை சிறிது உயர்த்த அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்து மாயத்தால் விபீடணனையும் ஜாம்பவானையும் உறங்கச் செய்து, இராம லக்ஷ்மணர்களை பாதாளத்திற்கு கொண்டு சென்று தங்கள் குல தெய்வத்திற்கு பலியிட அடைத்து வைத்தனர். சிறிது நேரம் கழித்து கண் விழித்த விபீஷணனும், ஜாம்பவானும், அனுமனிடம் இராம லக்ஷ்மணர்களை காணவில்லை என்றனர். அனுமன் நடந்ததைக் கூறினார். விபீஷணனும் இது அஹிராவணன், மஹிராவணன் செயல் என்பதை உணர்ந்து அதை அனுமனிடம் கூறினார். அனுமனும் இராம லக்ஷ்மணர்களை மீட்க பாதாளத்திற்கு சென்றார். அவர் பாதாளத்தில் நுழைய முயன்ற போது ஒரு வானரம் அவரை தடுத்தது. இருவருக்கும் போர் மூண்டது. அவ்வானரத்தின் பலத்தைப் பார்த்து அனுமனே வியந்தார். பின் அவர் அவ்வானரத்திடம் நீ யார்? என்று வினவ அவரும் அனுமனின் புத்திரன் என்று பதிலிறுத்தான். அனுமனும் அவர் பிரம்மச்சாரியாயிற்றே அவருடைய புதல்வன் எப்படி ஆவாய் என்று வினவ, அவனும், சீதையைத் தேடி இலங்கை வந்த போது இராவணன் அவர் வாலில் தீயிட அதைக் கொண்டு இலங்கை மாநகரத்திற்கு தீயிட்ட பிறகு தன் வாலை கடலில் வந்து அணைத்தபோது அவரின் ஒரு வியர்வைத்துளி கடலில் விழுந்தது. அதை ஒரு மகரம்( முதலை) விழுங்கியது அதன் மூலம் தோன்றியவன் நான் என்றான். அனுமனும் தான் யார் என்று உணர்த்தினார். மகரத்வஜனும் அனுமனை பாதாளத்தின் உள்ளே செல்ல அனுமதித்தான். பின் மாயத்தினால் அனுமன் அஹிராவணனையும், மஹிராவணனையும் மாய்த்து, மகரத்வஜனை பாதாளத்திற்கு அரசனாக்கி விட்டு, இராம லக்ஷ்மணர்களை மீட்டு பொழுது விடிவதற்குள் போர்க்களத்திற்கு திரும்பினார் என்று ஒரு அருமையான கதையைக் கூறினார்கள். சன்னதியில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தம் மற்றும் இதயத்தில் மற்றொரு கரத்தை வைத்து, காலடியில் ஒரு அசுரனை அழிக்கும் கோலத்தில் மகரத்வஜனும், இடுப்பு மேல் மட்டும் உள்ளவாறு அனுமனும் அருள் பாலிக்கின்றனர். இருவர் கரத்திலும் எந்த வித ஆயுதமும் இல்லாமல் அனுக்கிரக மூர்த்திகளாக அருள் பாலிக்கின்றனர் என்பது ஐதீகம். இருவருக்கும் இடையில் கதை உள்ளது. ஹனுமன் மெல்ல மெல்ல கீழே இறங்கிக்கொண்டிருப்பதாகவும், முழுவதும் மறையும் சமயத்தில் கலி காலம் முடிந்து விடும் என்பது ஐதீகம். ஆரத்தி காட்டி பிரசாதம் அளித்தனர். தசராவின் போது துவாரகாதீசர் பல்லக்கில் இராமர் கோலத்தில் இங்கு எழுந்தருளி அருள் பாலிக்கின்றாராம். இவ்வாறு தீவு துவாரகை தரிசனத்தை முடித்துக் கொண்டு படகு மூலம் ஓகா திரும்பினோம். ஓகாவில் வண்டி ஓட்டினர் காத்துக் கொண்டிருந்தார். அடுத்து ஜோதிர்லிங்கமான நாகேஸ்வரரை தரிசித்து விடலாம் என்று அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் நாகேஸ்வருக்கு ஐந்து கி.மீ தூரத்திற்கு முன் உள்ள ஒரு குளக்கரையில் வண்டியை நிறுத்தினார். கோபி தலாவ்: வண்டி நின்ற குளத்தின் பெயர் “கோபி தலாவ்” அதாவது கோபியர்களின் குளம். ஆயர்பாடியில் பசுக்கூட்டத்தை மேய்க்கும் இடைக்குல பெண்களை கோபிகைகள் என்பர். நாம் தீபாவளி கொண்டாடுவதற்கு காரணமாக அமைந்த நரகாசூரனை (பௌமாசூரன்) ஸ்ரீகிருஷ்ணர் வென்ற போது அவன் சிறையில் அடைத்து வைத்திருந்த 16000 பெண்கள் இவர்கள். பாகவத புராணத்தில் ஸ்ரீகிருஷ்ணர் தன் தோழிகளான கோபிகை பெண்களுடன் சேர்ந்து பிருந்தாவனத்தில் பசுக் கூட்டத்தை மேய்ப்பதை விரிவாக எடுத்துரைக்கிறது. கோபிகைகள் கிருஷ்ணரிடம் அதீத பக்தி கொண்டவர்கள். கோபிகைப் பெண்களில் ராதை, ஸ்ரீகிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளும் தன்னை ஒரு கோபிகையாகவே பாவித்து கண்ணனை அடைய திருப்பாவை பாடியருளினாள். [கோபி தலாவ்(குளம்)] பக்திக்கு இலக்கணமாக கோபிகைகளை சுட்டிக் காட்டுகின்றது நாரத பக்தி சூத்ரம். அவர்களது பக்திக்கு இணையே இல்லை. அவர்கள் ஒரு நாள் கிருஷ்ணரிடம் கேட்கிறார்கள், எங்களுக்கு எப்படி முக்தியளிக்கப்போகிறாய் என்று. அதற்கு அந்த மாயவன் உரைக்கின்றான். உங்களது உயர்ந்த பக்திக்கு என்னால் என்ன செய்துவிட முடியும், உங்களை விட்டு நான் அகல்வதில்லை! உங்களை சூடாமணியாக வைத்திருக்கிறேன் என்றான். கோபஸ்த்ரீ பரிவேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி என்று இதைப் பாடுகின்றார் லீலா சுகர். நம் மனதை பூரணமாக அவனிடம் அர்ப்பணித்து விட்டால் நமது வாழ்க்கைத்தேரின் கடிவாளத்தைப் பற்றிக்கொண்டு சரியான பாதையில் செலுத்தும் சாரதியாகி விடுவான். ஆமாம் பார்த்தசாரதி நம்மையும் சரியாக வழி நடத்துவான். அவன் தலையில் சூடாமணியாக திகழும் அளவிற்கு கோபிகைளைப் போல ஆழ்ந்த பக்தியும், தகுதியும் அடியேனுக்கு உள்ளதோ இல்லையோ ஆனால் அவன் திருவடித்தாமரைகளில் சிறிய மலராக வீழ்ந்து கிடந்தாலும் போதும் என்ற பிரார்த்தனை மட்டும் மனதில் எப்போதும் உள்ளது. குன்றமெடுத்து மழை தடுத்து இளையரொடும் மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் முன்றில் தனி பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற அண்றிலின் கூட்டைப் பிரிக்க கற்பவர் ஆர் கொலோ? (பெ.தி 11-1-1) என்று கரியபிரானாம் கண்ணனுடன் ஊடி, குரவை கூத்தாடி, கன்னியர்களான கோபியர்கள் பிருந்தாவனத்தில் இராசலீலை செய்து களித்திருந்தனர் கண்ணனும் அவர்களின் கூறைகளை கவர்ந்து, சிற்றில் சிதைத்து விளையாடி மகிழ்ந்திருந்தான். ஸ்ரீகிருஷ்ணர் பின்னர் கோகுலம் விடுத்து வடமதுரைக்கு அரசனாகி, அங்கிருந்து துவாரகைக்கு ஓடி வந்து விட்டதால், கண்ணனின் பிரிவைத் தாங்க முடியாமல் விரஜ பூமியிலிருந்து துவாரகைக்கு வந்த கோபியர்கள் சரத் பூர்ணிமையன்றைக்கு இராச லீலைகளுக்குப் பின் இவ்விடத்தில் தங்களை அர்பணித்துக் கொண்டு கண்ணனுடன் ஒன்றாகக் கலந்தனர். அதனால் இக்குளம் கோபியர்களின் குளம் என்றழைக்கப்படுகின்றது. பின்னர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமிகளான, கறவைகள் பின் சென்று கானஞ் சேர்ந்துண்ணும், பெற்றம் மேய்த்துண்ணுங் குலத்தில் பிறந்த, திங்கள் திருமுகத்துச் சேயிழையாராகிய அக்கோபியர்கள் அனைவரும் வழுவழுப்பான மஞ்சள் மண்ணாக மாறி விட்டனர். எனவே வட்டவடிவத்தில் எழிலாக அமைந்துள்ள இக்குளத்தின் மண் இன்றும் மஞ்சள் நிறத்தில் வழுவழுப்பாக உள்ளதாம். இதையே வடநாட்டினர் நெற்றிக்கு கோபி சந்தனமாக இட்டுக்கொள்கின்றனர். அருகில் கோபி சந்தனம் விற்கும் கடைகள் உள்ளன. குளத்தைச்சுற்றி கோபிநாதருடைய ஆலயமும், மஹாபிரபுஜீயின் கூடமும் சாட்சி கோபாலரின் சன்னதியும், பல மடங்களும் இக்குளத்தின் கரையில் உள்ளன. குளம் முழுவதும் நீர்க்காக்கைகள் நிறைந்திருந்தன. அன்றைய தினம் இன்னும் வேறு எந்தெந்த ஆலயங்களை தரிசித்தோம் என்று அறிய ஆவலாக உள்ளதா? சற்று பொறுங்கள் மதிய உணவிற்குப் பின்னர் தரிசனத்தைத் தொடரலாம் அன்பர்களே. அத்தியாயம் – 5 நாகேஸ்வரர் ஜோதிர்லிங்கம் [ஓம் நமசிவாய] ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான சிவப்பரம்பொருள் இப்பாரத தேசமெங்கும் எண்ணற்ற ஆலயங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். திருமாலும் பிரம்மனும் அடி முடி தேடியும் காண முடியா ஜோதி சொரூபமாக சிவபெருமான் நின்ற ஜோதிர்லிங்கங்கமாக பன்னிரு ஆலயங்களில் அருள் பாலிக்கின்றார். இத்தலங்கள் ஜோதிர்லிங்கத்தலங்கள் என்று சிறப்பாக போற்றப்படுகின்றன. சிவபுராணத்தில் சிவபெருமானே நான் எவ்விடத்தும் நீக்கமற நிறைந்திருந்தாலும் பன்னிரு தலங்களில் ஜோதிர்லிங்கமாக சிறப்பாக அருள் பாலிக்கிறேன் என்று அருளியுள்ளார். அவற்றுள் இரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் இக்குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளன. முதலாவது சோமநாதம் இரண்டாவது இந்நாகேஸ்வரம். துவாரகையிலிருந்து பேட் துவாரகை செல்லும் வழியில் துவாரகையிலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இன்னும் இரண்டு தலங்களில் பெருமான் நாகேஸ்வர ஜோதிர் லிங்கமாக வணங்கப்படுகின்றார். இமயமலையில் அமைந்துள்ள பாகேஸ்வர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஒரு சன்னதியில் நாகேஸ்வரர் அருள்பாலிக்கின்றார். "தாருகாவனே து நாகேசம்’ என்றபடி தேவதாரு வனமானதால் இப்பெருமானே நாகேஸ்வரர் என்பது அவர்கள் நம்பிக்கை. அது போலவே மஹாராஷ்டிரத்தில் பூமிக்கு கீழே உள்ள சன்னதியில் அருள் பாலிக்கும் ஐயனே நாகேஸ்வரர் என்பது அங்குள்ளவர்கள் நம்பிக்கை. அடியேன் முன்னரே இவ்விரு நாக நாதர்களையும் தரிசிக்கும் பேறு கிட்டியது. இச்சமயம் மூன்றாவது நாகேஸ்வரப் பெருமானையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. சிவபெருமான் தன் பக்தனுக்காக நாகேஸ்வரராக எழுந்தருளிய ஐதீகத்தை முதலில் பார்ப்போம் அன்பர்களே. அடர்ந்த வனமாக இருந்த பிரதேசத்தில் தாருகன் தாருகை என்ற அரக்க தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பரமேஸ்வரரின் பக்தர்கள். பரமனை வணங்கி தவம் செய்து பல அரிய வரங்களைப் பெற்றனர். வரங்களைப் பெற்ற மமதையால் எளியோரையும் பக்தர்களையும் துன்புறுத்த ஆரம்பித்தனர். ரிஷிகளையும், பக்தர்களையும் சிறையிலிட்டு துன்புறுத்தினர். ஒரு முறை சுப்ரி என்ற சிவபக்தனையும் அவ்வாறு சிறையிலடைத்தனர். சிறையில் அடைத்தாலும் சுப்ரி தனது சிவபூசையை கை விடவில்லை, சிறையிலேயே சிவலிங்கம் அமைத்து சிவபூஜையை தொடர்ந்தான். சிறைச்சாலையில் இருந்தவர்கள் அனைவருக்கும் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பதும் வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதும் நாதன் நாமம் நமச்சிவாயவே என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவித்தார். சிறையெங்கும் ஓம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம் எதிரொலித்தது. இதை அறிந்த அரக்க தம்பதியினர் சுப்ரிக்கு சொல்லொணாத துன்பங்கள் தந்தனர். வேதனை தாங்காத அவர் சுந்தரேஸ்வரரை நினைத்து மனமாற பிரார்த்தித்தார். ஒரு சமயம் சிறைக்கு வந்த தாருகன் சிவபூசை செய்து கொண்டிருந்த சுப்ரியை கொல்ல வாளை ஓங்கி விரைந்தான். “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று சுப்ரி அஞ்சாமல் பூசையை தொடர சுப்ரியை கொல்ல துணிந்த தாருகனை சுப்ரி வழிபட்ட லிங்கத்திலிருந்து, சிவபெருமான் ஜோதி வடிவமாக அக்கணமே தோன்றி அசுரனை சுட்டெரித்து சாம்பலாக்கினார். தாருகை தங்களது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினாள். தாருகையை மன்னித்த சிவபெருமான் அத்தலத்தில் ஜோதிர்லிங்கமாக கோவில் கொண்டார். அப்பகுதி தாருகவனம் என்றழைக்கப்படவும் செய்தார். இத்தலத்திற்கு இன்னொரு ஐதீகமும் உள்ளது அது முற்றும் துறந்தவர்களே ஆனாலும் இறைவனை வழிபட மறந்தால் அது தவறு என்று இறைவன் காட்டிய அருமையான வரலாறு அது. தாருகாவனத்து இருடிகள் தமது தவ வலிமை மற்றும் அவர்களது மனைவிகளின் பதிவிரதத்தன்மை குறித்தும் மிக கர்வம் கொண்டிருந்தனர். தவத்தை விட மேன்மையானது எதுவுமில்லை இறைவன் என்பதே இல்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அது மட்டுமன்றி ஈசனை மதியாமல், அவரை அவமரியாதையாகவும் பேசி செய்யும் செயலில் நாத்திகம் பாராட்டியும் வந்தனர். தம் பத்தினிகளின் கற்பு நெறி குறித்து கர்வமுற்று, மனைவியின் மாண்பே கொண்டவனுக்கு பலத்தையும், புகழையும் தந்திடும் என்றுரைத்து இறைவனையும் நிந்தித்திருந்தனர். முற்றும் துறந்த முனிவர்களின் கர்வத்தை அழித்து அவர்களை நல்வழிப்படுத்த திருக்கயிலைநாதன் திருவுளம் கொண்டார். அற்புதமொன்று நிகழ்த்த அழகிய ஆண்மகன் வடிவம் கொண்டார். முனிவர்கள் வசித்த தாருவாவனத்திற்கு முற்றும் துறந்த திகம்பரராக சடாமுடி தொங்க, தனது தோளில் திரிசூலத்தை தாங்கிய கோலத்தில் கம்பீரமாக நடந்து சென்றார் கண்டோர் வியக்கும் மோகினியாக வடிவெடுத்து மஹாவிஷ்ணுவும் உடன் சென்றார். பிச்சை தேவராக வந்த எம்பெருமான் ஒவ்வொரு முனிவரின் பர்ணசாலை வாயில் தோறும் சென்று ‘பிக்ஷாம் தேஹி’ என்று பிச்சை கேட்டார். பிச்சையிட வந்த முனிபத்தினிகள் தம் நிலையிழந்தனர், பிச்சாடன மூர்த்தியின் மோகனத்தையும், பிரகாசத்தையும் கண்டு கருத்திழந்து அவர் மேல் மோகம் கொண்டனர். தம்மையறியாமல் அவர் பின்னே சென்றனர். தாருகாவனத்து முனிவர்கள் அனைவரும் மோகினியின் மயக்கும் எழிலைக் கண்டு பித்தாகி அவள் பின் ஓடினர். சிறிது நேரம் சென்ற பின் தங்களது தவறை உணர்ந்து தங்களது பத்தினிகளை மயக்கிய சுந்தரரை அழிக்க அபிசார வேள்வி நடத்தினர் அதில் இருந்து வந்த மதம் கொண்ட யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாக நின்றார். அடுத்து வந்த நாகங்களை ஆபரணமாக அணிந்து கொண்டார், யாக குண்டத்திலிருந்து வந்த ஆயுதங்களை மழுவாக்கி ஒரு கரத்தில் ஏந்தினார், அடுத்த வந்த கலைமானை அதன் கொம்பை உடைத்து மறு கரத்திலே ஏந்திக்கொண்டார், அடுத்து வந்த வன் புலியின் தோலை உரித்து அதை தன் இடையில் ஆடையாக அணிந்து கொண்டார். முயலகனை அடக்கி தன் காலடியில் போட்டுக்கொண்டார் இறுதியாக யாககுண்டத்தை அழித்து யாகத்தீயையே அனலாக ஒரு கரத்தில் ஏந்தி ஆணவமாம் முயலகனின் மேல், மோகினியும் ரிஷி பத்தினிகளும் கண்டு களிக்க நடராஜராக ஆனந்தத் தாண்டவம் ஆடியருளினார். இதைக் கண்ட மோகத்தின் உச்சிக்கு சென்ற முனி பத்தினியர் சுந்தரர் பின் ஓடினர், அவரோ அவர்களுக்கு போக்குக் காட்டிக்கொண்டே ஓடினார். தத்தம் மனைவிகளை அழைத்தவாறே ரிஷிகள் அனைவரும் அவர்கள் பின்னே ஓடினர். சிவ லீலையின் முன்னே யார் தான் எம்மாத்திரம்? கணவர்களின் கூக்குரல்கள் அவர்களின் காதில் விழவில்லை. முனிவர்கள் தத்தம் மனைவியரை தொடர, அவர்கள் தம்மை மறந்து சுந்தரை தொடர அவரோ சிவ மந்திரம் ஜெபித்தபடி நடுக்காட்டில் அமைந்திருந்த குளத்தின் கரையில் இருந்த ஒரு நாகப்புற்றில் நுழைந்து மறைந்தார். ரிஷி பத்தினிகள் அப்புற்றையே சுற்றி வந்தனர். தாருகாவனத்து முனிவர்கள் கெஞ்சி அழைத்தும் அவர்கள் அவ்விடத்தை விட்டு அகலவில்லை. அப்பொழுது சதாசிவன் நுழைந்த புற்றில் இருந்து கண்களை குருடாக்கும் பிரகாசம் தோன்றியது. ரிஷிகளும் அவர்தம் பத்தினிகளும் புற்றினுள்ளே ஜோதிர்லிங்கமாக பரமனைக் கண்டனர். அவருக்கு ஐந்து தலை நாகம் குடைப் பிடித்துக் கொண்டிருந்தது. இக்காட்சியைக் கண்ட அனைவரும் பிச்சாடனராக வந்தது ஆதி சிவனே என்று உணர்ந்தனர். தங்கள் ஆணவத்தை விட்டொழித்து அகிலாண்டேஸ்வரரை புகழ்ந்து பணிந்தனர். இவ்வாறு இறைவன் சுந்தரராக வந்து தாருகா வன முனிவர்களின் ஆணவத்தை அழித்தார். புற்று இருந்த இடத்தில் பிற்பாடு நாகநாதர் ஆலயம் எழுந்தது என்பது ஐதீகம். சிவபெருமான், பிச்சாடனராக லீலை புரிந்து நடராஜராக ஆனந்த தாண்டவமாடி முனிவர்களின் கர்வத்தைப் போக்கி அவர்களை நல்வழிப்படுத்தி, நாகப்பாம்பின் புற்றுக்குள் நாகக்குடையுடன் தரிசனம் தந்ததால் இத்தலம் நாகநாதம் என்று பெயர் பெற்றது. ஜோதியாக உமையொருபாகன் தோன்றியதால் இத்தலம் ஜோதிர்லிங்கத் தலமாயிற்று. ஆலயத்தை நெருங்கும் போதே தூரத்திலிருந்தே அமர்ந்த கோல பிரம்மாண்ட சிவபெருமானின் தரிசனம் கிட்டியது.. பரவசத்துடன் ஆலயத்தை அடைந்தோம். முதலில் பிரம்மாண்ட 85 அடி உயர, 40 அடி அகலச் சிவன் சிலையை தரிசித்தோம். T-Series குல்ஷன் குமார் அவர்கள் புதிதாக இச்சிலையை அமைத்தாராம். புலித்தோல் ஆசனத்தில் ஆதி யோகியாக அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார் சிவபெருமான். மறக்காமல் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அருகினில் ஒரு புறாக்கூண்டு அமைத்துள்ளனர். ஆலயம் முழுவதும் ஆயிரக்கணக்கான புறாக்கள். புறாக்களுக்கு கம்பு வாங்கி அளிக்கின்றனர் பக்தர்கள். அலங்கார வளைவுடன் கூடிய நுழைவு வாயில் அதில் விநாயகர் அருள் பாலிக்கின்றார். இப்பகுதியில் உள்ள நகாரா அமைப்பில் நெடிதுயர்ந்த விமானம். துவாரகாசிலா எனப்படும் ஒரு வகை கல்லால் உருவான விமானம் மூன்று முக ருத்ராட்சம் வடிவில் உச்சியில் சக்கரத்துடன் எழிலாக அமைந்துள்ளது. சபா மண்டபத்தில் மேல் புறாக்கூண்டுகள் அமைப்பில் மாடம் புதுமையாக இருந்தது உட்புரம் வழக்கம் போல் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அரைக் கோள குழி மாடம். ஒரே பிரகாரம். நிஜ மண்டபம் (கர்ப்பகிரகம்), சபா மண்டபம் (அர்த்த மண்டபம்), நிருத்த மண்டபம் (மஹா மண்டபம்), முகப்பு மண்டபம், கொடி மரம் என்ற முறைப்படி மனித உடல் போல வாஸ்து சாஸ்திரப்படி இவ்வாலயத்தை புதுப்பித்துள்ளனர். மஹாதுவாரம் – கால், நுழை வாயில் – தொடை, சபாமண்டபம் – வயிறு, அந்தராளம்(நந்தி) – கழுத்து, கர்ப்பகிரகம் – சிரசு என்பது ஐதீகம் பிராகரத்தை வலம் வரும் போது பிரம்மாண்ட ஆலமரத்தை தரிசிக்கலாம், அதன் நிழலில் சனீஸ்வரன் சன்னதி அமைந்துள்ளது. பிரகார வலம் வந்து ஆலயத்தின் உள்ளே நுழைந்தோம். கர்ப்பகிரகத்தில் அம்மையுடன் சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். [] கர்ப்பகிரகத்தில் உள்ளே சென்று சிவலிங்கத்திற்கு நாமே அபிஷேகம் செய்ய அனுமதிக்கின்றனர். ஆனால் அங்குள்ள கடையில் அர்ச்சனை தட்டு வாங்கியவர்களுக்கு மட்டுமே அப்பேறு கிட்டுகின்றது. அவர்களை மட்டுமே கர்ப்பகிரகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர், மற்றவர்கள் வெளியிருந்தவாறே சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வர வேண்டியதுதான். அடியோங்கள் மானசரோவர் தீர்த்தம் கொண்டு வந்திருந்ததால், அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்று ஸ்ரீருத்ரம் ஓதி அத்தீர்த்தத்தினால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்து அனைவரும் சுகமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வந்தோம். உஜ்ஜயினியில் மஹாகாளேஸ்வரர் போல இவரும் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கோமுகி கிழக்கு நோக்கி உள்ளது. நாமதேவருக்காக இவ்வாறு ஐயன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் என்று ஒரு ஐதீகம் உள்ளது. அடியோங்கள் சென்ற சமயம் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். எம்பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள் வெள்ளி நாகம் சார்த்தி இவரை வழிபடுகின்றனர். வெளிப் பிரகாரத்தில் பன்னிருஜோதிர்லிங்களையும் தரிசனம் செய்யலாம். சுதையில் மாதிரி ஆலயங்கள் மற்றும் சந்திரன் தவம், சோமேஸ்வரர் சந்திரனுக்கு அருளும் கோலம், மற்றும் சிவ பார்வதி திருக்கல்யாணக்கோல சுதை சிற்பங்களை மிகவும் அற்புதமாக அமைத்துள்ளனர். அனைத்து லிங்கங்களையும் அந்ந்ததலங்களில் உள்ளது போலவே தத்ரூபமாக அமைத்துள்ளனர். பெருமானுக்கு சார்த்தப்பட்டுள்ள தாமரை வில்வம் அனைத்துமே அப்படியே தத்ரூபம். சோமநாத தலத்தின் ஐதீகமாக சந்திரன் தட்சன் கொடுத்த சாபம் தீர பெருமானை பூசிக்கும் கோலமும், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனருடன், அம்மையப்பரிடம் இருந்து ஞானப் பழத்தைப் பெற நடந்த போட்டியில் முருகர் மயில் வாகனத்தில் உலகை வலம் வர விநாயகர் அம்மையப்பரை வலம் வரும் காட்சியும் மிகவும் அருமை. பார்லி வைத்யநாத சுவாமியுடன், மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் தனது பிறங்கு தாளால் உதைத்து முனி மைந்தனுக்கு அருளிய கோலத்தை அமைத்துள்ளனர். பீமாசங்கர தல ஐதீகத்திற்காக பீமன் என்னும் அரக்கனை வதம் செய்ய சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடிய கோலத்தை சித்தரித்துள்ளனர். திர்யம்பகேஸ்வரின் ஐதீகத்திற்காக திரிபுரம் எரித்த காட்சியை அற்புதமாக அமைத்துள்ளனர். இராமேஸ்வரத்திற்காக கடற்கரையில் இராமர் சிவலிங்க பூசை செய்யும் காட்சியை கண்டு களிக்கலாம். உஜ்ஜயினி மஹாகாளேஸ்வருடன் அர்த்தநாரீஸ்வரரையும் தரிசிக்கின்றோம். இமயமலையில் உள்ள கேதாரத்தலத்திற்காக அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்ற கோலத்தை அருமையாக அமைத்துள்ளனர். இந்நாகேஸ்வரத்தலத்திற்காக மிக்கார் அமுதுண்ண தான் யாரும் விரும்பாத காய்சின ஆலமுண்டு, நீலகண்டனாக விளங்கும் தியாகராஜ கோலத்தை தரிசிக்கின்றோம். க்ருஷ்ணேஸ்வர் தலத்திற்காக குளத்தில் மூழ்கி இறந்த பிராமணச்சிறுவன் சிவபெருமானின் அருளினால் உயிருடன் வரும் காட்சியைக் காண்கின்றோம். முக்தித்தலமான காசியில் யோகிகள் கங்கைக் கரையில் தவம் செய்ய அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்து சிவபெருமான் தரிசனம் தந்த காட்சியை கண்டு மகிழ்கின்றோம். நர்மதை நதிக்கரையில் ஐயன் ஓங்கார ரூபமாக ஓங்காரேஸ்வரராக எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகை கண் குளிரக் காணலாம். இவ்வாறு பன்னிரு ஜோதிர்லிங்கங்களையும் சௌராஷ்ட்ரே சோமநாதம் ச ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம் உஜ்ஜய்ன்யாம் மஹாகாலம் ஓங்காரம் அமலேச்வரம் | பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீமசங்கரம் சேதுபந்தே து இராமேசம் நாகேசம் தாருகாவனே | வாராணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீதடே ஹிமாலயே து கேதாரம் குஷ்மேசம் ச சிவாலயே | ஏதானி ஜ்யோதிர்லிங்கானி சாயம் ப்ராத: படே நர: சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி | ஏதேஷாம் தர்ஷனாதேவ பாதகம் நைவ திஷ்டதி கர்மக்ஷயோ பவேத் தஸ்ய யஸ்ய துஷ்டோ மகேச்வர: || என்று ஸ்லோகம் ஓதி தரிசினம் செய்த மகிழ்ச்சியுடன் அடுத்து ருக்மிணிப் பிராட்டியாரை தரிசனம் செய்ய ருக்மிணி துவாரகைக்கு புறப்பட்டோம் தாங்களும் உடன் வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் – 6 ருக்மிணி துவாரகை [] துவாரகாதீசர் ஆலயத்திலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில், பேட்துவாரகை செல்லும் வழியில் ருக்மிணி துவாரகை அமைந்துள்ளது. அடியோங்கள் இவ்வாலயம் சென்ற சமயம் கருவறை திருக்கதவங்கள் மூடப்பட்டிருந்தன, ஏமாற்றத்துடன் எப்போது திறப்பீர்கள் என்று கேட்ட போது சிறிது நேரம் பொறுங்கள் என்றார்கள். அப்போது தான் கவனித்தோம் முன்னரே சுமார் பத்து பேர் காத்துக்கொண்டிருந்தனர். சபா மண்டபம் பக்தர்களால் நிறையும் வரை காத்திருந்த பின் அனவைருக்கும் ருக்மணி கண்ணனை மணந்த கதையைப் பற்றி கூறினார்கள். சாட்சாத் மகாலட்சுமியே ருக்மிணியாக பிறப்பெடுத்திருந்தாள். ருக்மணியின் அண்ணன் ருக்மி, அவளை தனது தோழன் சிசுபாலனுக்கு மணம் செய்ய விரும்பினான். ஆனால் ருக்மிணி, ஸ்ரீகிருஷ்ணரை மணாளனாக வரித்து விட்டாள். எனவே புவன சுந்தரா! என்று தொடங்கி கிருஷ்ணருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். ருக்மிணி எழுதி அனுப்பிய காதல் கடிதத்தில் அவள் குறிப்பிட்டிருந்த புவன சுந்தரா எனும் வார்த்தையில் மனம் நெகிழ்ந்தார் கிருஷ்ணர். அவளுக்கு பதில் கடிதம் கொடுத்து அதில் உள்ளவாறு செய்யுமாறும் தான் வந்து ஆட்கொள்வதாகவும் எழுதியிருந்தார். கண்ணனின் ஆலோசனைப்படி சுயம்வரத்திற்கு முன் காத்யாயினி ஆலயத்திற்கு பூசை செய்ய வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் தேரில் வந்து தாயாரை சிறைப்பிடித்து சென்றார். அதை எதிர்த்து வந்த சிசுபாலனையும், ருக்மியையும் மற்ற அரசர்களையும் போரில் தோற்கடித்து துவாரகை வந்து சித்திரை மாதம் சுக்லபக்ஷம் ஏகாதசியன்று திருமணம் செய்து கொண்டார். சிசுபாலன் தேசழித்து கன்னியை கைப்பிடித்த பராக்கிரமத்தை பெரியாழ்வார் உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந்தோடிச் சென்ற உருப்பனையோட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட வுறைப்பன் மலை …. (பெரி.தி 4.3.1) பல பல நாழஞ் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை அலைவலைமை தவிர்த்த அழகனலங்காரன் மலை .. திருமாலிருஞ்சோலையதே (பெரி.தி 4.3.5) – என்றும் அவரின் திருமகளாரான கோதைப் பிராட்டியார் கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசழிந்து ஆங்கவளை கைப்பிடித்த பெண்ணாளன் பேணுமூர் திருவரங்கமே (நா.தி 11.9) என்று அற்புதமாக மங்கலாசாசனம் செய்துள்ளனர். கோலமலர்ப் பாவை, ருக்மிணித்தாயார் புவன சுந்தரனுக்கு எழுதிய கடிதத்தை தினமும் படித்து வந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும், வீட்டில் திருமணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கும், அச்சிடப்பட்ட இக்கடிதம் இவ்வாலயத்தில் உள்ளது ரூ 5/-க்கு விரும்பியவர்கள் வாங்கிச்சென்று தினமும் தங்கள் இல்லத்தில் பாராயணம் செய்யுங்கள் என்றனர். அடுத்து துர்வாசர் ருக்மிணிக்கு சாபம் கொடுத்தக் கதையைக் கூறினார்கள், இதோ அக்கதை. கிருஷ்ணர் ருக்மணியை திருமணம் செய்த பின், தவத்தில் சிறந்த துர்வாச முனிவரை அழைத்து விருந்து தர விரும்பினார். எனவே அவரை அணுகிப் பணிவுடன் இருவரும் விருந்துக்கு அழைத்தனர். கிருஷ்ணரே அழைக்கும் போது அதை மறுக்க முடியுமா? ஆனாலும் ஒரு நிபந்தனையுடன் ஒத்துக் கொண்டார் துர்வாசர். அந்நிபந்தனை அவர் செல்லும் தேரை கிருஷ்ணரும், ருக்மிணியும் இழுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அது. இருவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். வழியில் கடும் வெயில். ருக்மிணிக்கு தாகம் எடுத்து நா வறள ஆரம்பித்தது. விருந்தோம்பலின் முக்கியமான விதிமுறை, விருந்தினர் திருப்தியாக உபசரிக்கப்பட்ட பிறகே விருந்தளிப்பவர் உண்ண வேண்டும். அதனால் துர்வாசரிடம் தன் தாகத்தைப் பற்றி ருக்மிணி சொல்லவில்லை. ஆனால், ருக்மிணியின் துயர் பொறுக்காத கிருஷ்ணர், துர்வாசர் அறியாதவாறு நிலத்தை கால் நகத்தால் கீறி கங்கையை வரவழைத்து ருக்மிணியை அருந்தச் செய்தார். விதிவசம், அச்சமயம் பார்த்து இவர்கள் பக்கம் திரும்பினார் துர்வாசர். ருக்மிணி நீர் அருந்தியதைக் கண்டு அவருக்குக் கோபம் தலைக்கேறியது. அதிதியின், அதாவது தன்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி நீர் அருந்தலாம் என்பதுதான் துர்வாசரின் கோபத்துக்குக் காரணம். கிருஷ்ணர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவரது முயற்சி தோல்வி அடைந்தது. “அதிதிக்கு உணவளிக்காமல் நீர் அருந்திய நீ, கிருஷ்ணனைப் பிரிந்திருக்கக் கடவாய்”. மேலும் இந்த பூமி தண்ணீர் இல்லாமல் பயிர் பச்சை விளையாமல் போகட்டும் என்று துர்வாசர் சாபமளித்தார் பிறகு, தண்டனை பன்னிரண்டு வருட காலம் என்று குறைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் ருக்மிணி துவாரகைக்கு வெளியே இவ்விடம் வந்து தவம் செய்தார், கிருஷ்ணர் தான் உறையும் ஒரு மூர்த்தியை ருக்மணிக்கு அளிக்க அதை அவர் தினமும் பூசை செய்து வந்தாள். (முதலில் துவாரகையில் இருந்த ஸ்ரீகிருஷ்ணர் போதாணாவிற்காக டாக்கோர் துவாரகை சென்று விட்டதால், தற்போது ருக்மணித்தாயார் பூசித்த இம்மூர்த்தமே தற்போது துவாரகையில் உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம் ஆல்லவா?) கெடு முடிந்த பிறகு ஸ்ரீகிருஷ்ணர் கருடவாகனத்தில் வந்து தாயாரை அழைத்துச் சென்றார். ருக்மிணி தவம் செய்த இவ்விடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சபா மண்டபத்தில் இவ்வரலாறு எழிலான ஓவியங்களாக மிளிர்கின்றன. பின்னர் துவாரகை வந்த துர்வாச முனிவருக்கு கிருஷ்ணர் விருந்து படைத்தார். இதில் மனம் குளிர்ந்த துர்வாச முனிவர் சாபத்தை நீக்கி ஊர் செழிப்புறவும் கிருஷ்ணர் 100 ஆண்டுகள் ஆட்சி புரியவும் ஆசி வழங்கினார். மேலும் துர்வாசர் சாபத்தினால் தண்ணீர் உப்பு நீராகி விட்டதால் பக்தர்களுக்காகவும், பூசைக்காகவும் நல்ல தண்ணீர் வெளியிலிருந்து வாங்குவதால் அதற்காக விரும்பியபடி நன்கொடை அளியுங்கள் என்றார்கள். பின் எல்லாரையும் அர்ச்சனைக்காக பெயர் கேட்டார்கள் தம்பதிகளாக இருந்தால் இராதா கிருஷ்ணன், லக்ஷ்மி நாராயணன் என்பது போல மனைவி பெயரை முதலிலும் கணவன் பெயரை பின்னரும் சொல்லுங்கள் என்றது புதுமையாக இருந்தது. [ருக்மணித்தாயார்] பின்னர் சன்னதியின் கதவை திறந்து ஆரத்தி காண்பித்தனர். வைர கிரீடம், பிரசன்ன வதனம், அழகிய ஆபரணங்களுடன் பச்சைப் பட்டில், நின்ற கோலத்தில் எழிலாக சேவை சாதித்தாள் பிராட்டி. திவளும் வெண் மதி போல் திருமுகத்தரிவை, செழுங்கடலமுதினில் பிறந்த செல்வத் திருமகளை, தாமரையாளை, வடிவிணையில்லா மலர்மகளை, கோலமலர்ப்பாவையை, திருமார்வினில் சேர் நங்கையை வணங்கி வெளியே வந்து பிரகாரத்தை வலம் வந்தோம். இவ்வாலயத்திற்கு செல்லும் போது சன்னதி சார்த்தியிருந்தாலும் கவலைப் படாமல் காத்திருங்கள், கூட்டம் கூடியவுடன் சன்னதியை திறந்து விடுவார்கள். துவாரகை அன்று 12 யோசனை தூரம் பரவி இருந்தது. அழகான பூஞ்சோலைகளும், கனி தரும் மரங்களும், கவின் மிகு மாட மாளிகைகளும், தாமரைத் தடாகங்களும் நிரம்பியிருந்தன என்று பழைய வரலாறுகள் கூறுகின்றன, ஆனால் இன்றோ வெயிலுக்கு ஒருமரம் இல்லாமல் பொட்டல் காடாக உள்ளதற்கு காரணம் துர்வாசர் கொடுத்த சாபமா? அல்லது அத்துவாரகையை கடல் கொண்டதாலோ? [] குஜராத்தின் கட்டிடக் கலையின் சிறப்பை ருக்மணியின் இக்கோயிலில் கண்டோம். நாகாரா கட்டிட அமைப்பில் ஒற்றை நெடிதுயர்ந்த விமானத்துடன் கூடிய கருவறை, அரைக் கோள குவி மாடத்துடன் கூடிய சபா மண்டபம், சிறிய குவி மாடத்துடன் கூடிய நிருத்திய மண்டபத்துடன் கோவில் அமைந்துள்ளது. சபா மண்டபத்தின் உட்புற சுவரில் துருவாசர் சாபமிட நேர்ந்ததையும் பின்னர் ருக்மணி சாப விமோசனம் பெற்ற வரலாற்றையும் அழகிய சித்திரங்களாக தீட்டியுள்ளனர். கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் அற்புதமாகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சபா மண்டபத்தின் சுவர்களின் அருமையான வேலைப்பாடுகளைக் கொண்ட ஜன்னல்கள். இக்கோயில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. சிற்பங்கள் மனித உருவங்களும் தெய்வ உருவங்களும் கொண்டதாக உள்ளன. அடித்தளத்தில் கஜதரங்கள், அதாவது யானைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கலை அம்சம் பூரணமாக நிறைந்த நிச்சயமாக பார்க்க வேண்டிய ஆலயம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவ்வாறாக அன்றைய தினம் அதுவரை நவநீதமுந் திருடி உரலோடயொன்று அரி கேசவன் மாயவன், பரியனாகி வந்த அவணனுடல் கீண்ட அமரர்க்கரிய வாதிப்பிரான், தீமனத்தன் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும், பூதனை தானுயிரும் செகுத்தான், ஒற்றைக்கிரி மத்தைப்பொருதொரு பட்டப்பகல் வட்டத்திகிரியிலிரவாக பத்தற்கிரதத்தைக் கடவிய பச்சைப் புயல் ஸ்ரீகிருஷ்ணரின் நான்கு துவாரகைகளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. பின்னர் சோமநாதரை தரிசிக்க கிளம்பினோம் வழியில் இன்னும் சில ஆலயங்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அவையெவை என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் - 7 விசாவாடா மூலதுவாரகை [] துவாரகையிலிருந்து கிளம்பி அரபிக்கடலோரம் தேசிய நெடுஞ்சாலையில் சோமநாதம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தோம். அகலமான பாதை, போக்குவரத்து அதிகம் இல்லை என்பதால் பயணம் வேகமாகவும் சுகமாகவும் இருந்தது. ஒரு பக்கம் நீல நிற கடல் கார் கடல் வண்ணனை செங்கட்கருமுகிலை தேவகி சிங்கத்தை நினைவு படுத்தியது, மறு பக்கம் பசுமையான வயல்கள் அது பார்க்கும் மரத்தில் எல்லாம் நந்தலாலா உந்தன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா! என்று பாரதியார் பாடியபடி எம்பெருமானின் பச்சை மாமலை போல் மேனியை நினைவு படுத்தியது. வெளி நாட்டிலிருந்து வரத்துப் பறவைகள் அதிகம் வரும் குளிர் காலம் என்பதால் இப்பகுதியில், வயல்களில் சோளக் கொல்லை பொம்மைகளுக்கு பதிலாக பறவைகளை துரத்த ஜிகினா காகிதங்களை பறக்க விட்டிருந்தனர், வெயிலில் அவை வெள்ளி போலவும், பொன் போலவும் மின்னிக் கொண்டு தட தடவென்ற சத்தத்துடன் பறந்து கொண்டிருந்தன. அவை இல்லாத பல வயல்களில் கூட்டம் கூட்டமாக பறவைகள் அமர்ந்திருந்தன. இவ்வாறாக இயற்கைக் காட்சிகளை இரசித்துக்கொண்டே திட்டமிட்டபடி யாத்திரை சென்று கொண்டிருப்பதையும், அனைத்து ஆலயங்களிலும் சிறப்பாக தரிசனம் கிட்டியதற்காக ஸ்ரீகிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் பயணித்துக் கொண்டிருந்தோம். சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்திருப்போம். ஓட்டுநர் வண்டியை ஓர் இடத்தில் நிறுத்தி மூலதுவாரகை வந்து விட்டது தரிசனம் செய்து கொள்ளுங்கள் என்றார். அடியோங்கள் தயாரித்த அட்டவணையில் இந்த மூலதுவாரகை இடம்பெற்றிருக்கவில்லை. விசாவாடா என்ற இடத்தில் உள்ள ஒரு புராதான ஆலய வளாகத்தை இவர்கள் ஒரு மூலதுவாரகை என்றழைக்கின்றனர். இவ்வாலயமல்லாமல் இன்னும் இரண்டு தலங்களையும் மூல துவாரகைகள் என்று போற்றுகிகின்றனர். கொடினார் (Kodinar) என்ற இடத்தில் ஒரு கோவிலும், கஞ்சேடார் (Kanjetar) என்ற இடத்தில் உள்ள ஒரு கோவிலும் மூலதுவாரகை என்று கருதுகின்றனர். இவ்விரண்டு இடங்களிலும் கடலுக்கடியில் அகழ்வாராய்ச்சியின் போது சில இடிபாடுகள் கிடைத்துள்ளன. அடியோங்களின் திட்டத்தில் கொடினார் துவாரகை மட்டுமே இடம் பெற்றிருந்தது. எனவே இவ்விசாடா மூலதுவாரகை தரிசனம் அதிகப்படியாகக் கிடைத்தது. காலயவனன் ஸ்ரீகிருஷ்ணரை துரத்தி வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் அவனை அழைத்துச் சென்ற முசுகுந்தரின் குகைக்கு அருகில் இவ்விசாவாடா தலம் அமைந்துள்ளது. காலயவனனை சாதுர்யமாக வதம் செய்தபின் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து தங்கினார் என்பது இத்தலத்தின் ஒரு ஐதீகம். போரிலிருந்து ஓடி வந்தவர் என்பதால் இத்தலத்திலும் எம்பெருமானுக்கு டாகோர் துவாரகை போல ரண் சோட் ராய்ஜீ என்பது திருநாமம். மதுராவிலிருந்து துவாரகை செல்லும் வழியில் முதன் முதலில் ஸ்ரீகிருஷ்ணர் தம் பாதத்தை இவ்விடம் பதித்து தங்கினார் என்பது இரண்டாவது ஐதீகம். விஷ்ணு தன் பாதத்தை இங்கு பதித்ததால் ரண் சோட் ராய் ஜீ சன்னதியில் விஷ்ணு பாதம் உள்ளது. விஷ்ணு பாதம் என்பதே மருவி விசாவாடா ஆகிவிட்டதாம். தற்போதைய முக்கிய துவாரகை ஆலயத்திற்கும் முற்பட்ட ஆலயம் என்பதால் மூல துவாரகை ஆயிற்று என்பாரும் உண்டு. ஆலய முகப்பில் மூல துவாரகை ஆலயம் என்ற அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது. நுழைவு வாயிலின் கால்களில் அருமையான நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய கற்சிற்பங்கள். வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பஞ்சாதாயன முறையில் நீலகண்டேஸ்வரர், ரண்சோட் ராய் ஜீ, ஆகியோருக்கு முக்கிய சன்னதிகள் உள்ளன. சங்கு டேரு அம்பாள் மற்றும் ரண்டால் டேரு அம்பாள் என்று பல சன்னதிகள் இவ்வளாகத்தில் அமைந்திருக்கின்றன. அனைத்து சன்னதிகளும் நகாரா பாணி விமானம் மற்றும் பிரமிட் வடிவ மாடங்களுடன் எளிமையாக அமைந்துள்ளன. சன்னதிகளை வலம் வந்து வணங்கினோம். ஆலய வளாகத்தில் ஒரு பிரம்மாண்ட ஆலமரம் உள்ளது அம்மரத்தை எண்ணற்ற பச்சை கிளிகளும், புறாக்களும் இருப்பிடமாக கொண்டுள்ளன. ஆலோலம் பாடும் கிளிகளைப் பார்ப்பதே ஒரு தனி ஆனந்தம்தான். இவ்வாலயத்தின் சிறப்பு படிக்கிணறு (Step Well) ஆகும். இக்கிணற்றை ஞான வாவி என்று இவர்கள் அழைக்கின்றனர். குஜராத்தில் இது போன்ற படிக்கிணறுகளை பல இடங்களில் அமைத்திருக்கின்றனர். ‘ட’ வடிவத்தில் இக்கிணறு அமைந்துள்ளது. 13ம் நூற்றாண்டில் இக்கிணறு அமைக்கப்பட்டதால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப் பட்டு தொல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கீழிறங்கிச் செல்ல படிகளை மூன்று நிலைகளாக அமைத்துள்ளனர். ஒவ்வோரு நிலையிலும் கோஷ்டத்தில் அருமையான சிற்பம் காணப்படுகின்றது. அருமையான கலைநயத்துடன் பிரம்மா, சூரியன், விஷ்ணு சிலைகளை தரிசித்தோம். அருகில் மற்றொரு ஆலய வளாகம் உள்ளது. அதில் சிவன், கார்த்திகேயர், தத்தாத்ரேயர் சன்னதிகள் அமைந்துள்ளன. ஒரு அருமையான புராதான ஆலயத்தில் எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடு மதிசய வினையுறு மலகையை வென்றும் கொன்றும் துண்டந் துண்டஞ் செயு மரி கேசவன், கருமுகில் வண்ணன், கருக்கார் கடல் வண்ணன், புயற்கரு நிறத்தானை, தரிசித்த மகிழ்ச்சியுடன் அடுத்த துவாரகையை நோக்கி புறப்பட்டோம். அடுத்து அடியோங்கள் தரிசித்த தலம் சிறந்த நட்பிற்கு உதாரணமாக கூறப்படும் ஒருவரின் பெயரால் அழைக்கப்படும் துவாரகை ஆகும். யார் அவர்? இத்துவாரகையின் வரலாறு என்ன என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? சற்றுப் பொறுத்திருங்கள். குஜராத்தின் தனித்தன்மை வாய்ந்த இஞ்சி, ஏலக்காய் மற்றும் மசாலாப் பொடிகள் சேர்த்து குழம்பு போல சுண்டக் காய்ச்சிய தேநீர் அருந்திவிட்டு செல்லலாம். இம்மசாலா தேநீர் குஜராத்தில் மிகவும் சுவையாக இருக்கும், வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் அருந்திப் பாருங்கள் அன்பர்களே. அத்தியாயம்- 8 சுதாமா துவாரகை [] விசாவாடா மூல துவாரகையை தரிசித்து பிறகு வண்டி ஓட்டுநர் அடுத்து போர்பந்தரில் சுதாமா துவாரகையை தரிசிக்கலாம் என்று கூறினார். யார் அந்த சுதாமா என்று யோசிக்கின்றீர்களா? தூய நட்பிற்கு சிறந்த உதாரணம் கிருஷ்ணன் -சுதாமா இதோ இவர்களின் அற்புதக் கதை. பாகவதத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. நாம் இவரை குசேலர் என்று அழைக்கின்றோம், வடநாட்டில் இவரை சுதாமா என்றழைக்கின்றனர். குசேலர் என்பது காரணப்பெயர் வறுமை காரணமாக கந்தல் துணிமணிகளை அணிந்திருந்ததினால் இவர் குசேலர் என்றழைக்கப்பட்டார். ஸ்ரீகிருஷ்ணர் சந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் கல்வி பயின்ற போது உடன் கல்வி கற்றவர். கண்ணனின் சிறந்த நண்பர். குருகுலம் முடிந்த பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். கண்ணன் துவாரகைக்கு அரசனார். குசேலரோ திருமணம் முடித்து 27 பிள்ளைகளைப் பெற்று வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். இவரது மனைவி சுசீலை இவரை ஸ்ரீகிருஷ்ணர் தங்களின் பால்ய நண்பர் என்று சொல்கின்றீர்களே, அவரிடம் சென்று ஏதாவது பொருள் வாங்கி வாருங்கள் என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தார். மனைவியின் அறிவுரை மதித்து ஒரு சமயம் குசேலர் ஸ்ரீகிருஷ்ணரை சந்திக்க சுதாமாபுரியில் இருந்து துவாரகைக்குப் புறப்பட்டார். பரிசுப் பொருளாக கொண்டு செல்ல எதுவும் இல்லாதால் அவர் மனைவி அக்கம்பக்கத்தாரிடம் வேண்டிப்பெற்ற சிறிது அவலை ஒரு கந்தல் துணியில் கட்டிக்கொண்டு புறப்பட்டார். சுதாமாபுரியாகிய போர்பந்தரிலிருந்து துவாரகைக்கு நடந்தே சென்றார். அவர் துவாரகையை அடைந்த போது முதலில் கோட்டைக் காவலாளிகள் இவரது உடையைப் பார்த்து இவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய வாயிற் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவோம் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நேய நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய் (திரு -16) என்று ஆண்டாள் பாடியது போல குசேலர் வாயில் காப்பளர்களை கோட்டை வாசல் கதவைத் திறந்து தன்னை உள்ளே அனுப்புமாறு கேட்டுக்கொண்டிருந்தார். தன் நண்பன் வந்து கோட்டை வாசலில் உள்ளே வரமுடியாமல் நிற்பதை உணர்ந்த கண்ணன், ஒரு காவாலாளியை அனுப்பி அவரை சகல மரியாதைகளுடன் அழைத்து வருமாறு கூறினார். குசேலரை ஒரு உயரிய ஆசனத்தில் அமர வைத்து ருக்மிணிப் பிராட்டியார் நீர் வார்க்க பாதபூஜை செய்து வரவேற்றார். பின்னர் அவருக்கு விருந்தளித்தார், இருவரும் சிறிது நேரம் அன்று சந்தீபனி ஆசிரமத்தில் கழித்த நாட்களை எண்ணி எண்ணி மகிழ்ந்தனர். ஆசிரமத்தில் பயின்றபோது ஒரு சமயம் குருபத்தினி அடுப்பிற்கு விறகு இல்லை என்று கூற, நாமிருவரும் அருகிருந்த காட்டிற்கு சென்று விறகு ஒடித்துக் கட்டினோம். அப்போது வானில் மேகம் மின்னலுடன் இடித்து பெருமழை பொழிந்தது, சூறாவளியும் தொடர்ந்து அடித்தது. எங்கும் ஒதுங்கவும் முடியாத நிலையில் அங்குமிங்கும் மேடும் பள்ளமும் அறியாமல் இருளில் ஒடி வாடினோம், காலை சூரிய உதய சமயத்தில் நம்மைத் தேடி நமது குரு சாந்தீபனி முனிவர் விரைந்து வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் அவரை விழுந்து வணங்கினோம். அவர் நம்மைக் கட்டித்தழுவி, “சிஷ்யர்களே! உங்களைப் போன்று குருவிற்காக காடடைந்து கடுந்துயர் படுவாரை கண்டிலேன். நீவிர் இருவரும் நல்லொழுக்கத்துடன், நல்ல மனைவி மக்களூடன் வாழ்ந்து முக்திப்பேற்றை மறவாது, நல்லறம் தவம் புரிந்து யாவர்க்கும் இனியவராய், நன்கு நீடு வாழ்க” என்று வாழ்த்தி ஆசிரமத்திற்கு நம்மை அழைத்துச் சென்றார் என்று அக்கால கதைகளை பகிர்ந்து கொண்டனர். கண்ணனின் செல்வ நிலையைப் பார்த்து குசேலருக்கு தான் கொண்டு வந்த அவலை கொடுக்க மனம் வரவில்லை. மாயக்கண்ணன் அதை அறியமாட்டானா? என்ன. அவனாகவே எனக்காக எதுவும் கொண்டு வரவில்லையா என்று வினவி அவர் தோளில் இருந்த அக்கந்தல் மூட்டையை இழுத்து பிரித்து அவலை எடுத்து தன் வாயில் இட்டான். அடுத்த நொடி அங்கு சுதாமாபுரியில் பெரிய பிராட்டியாரின் அருளினால் குசேலரின் குடிசை, மாட மாளிகையாயிற்று, அம்மாளிகை முழுதும் செல்வத்தினால் நிறைந்தது. பரந்தாமனின் ஆசியினால் குசேலர் ஆனார் மாளிகைவாசி, இனி ஒட்டாது அவர் காலில் தூசி. கிருஷ்ணர் இரண்டாவது பிடி அவலை எடுத்த போது ருக்மணித் தாயார் ஜாடையாக அவரைத் தடுத்தார் என்று கூறுவார்கள் அதன் தாத்பரியம் என்னவென்றால் செல்வம் அதிகமானால், அச்செல்வ செருக்கால் அகம்பாவம் அதிகமாகும் அதனால் இறைவன் மேல் பக்தி குறையும் அவ்வாறு குசேலருக்கும் ஆகக்கூடாது என்பதற்காகவே தாயார் கிருஷ்ணரை தடுத்தாராம். எனவே போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. தன் வீட்டில் என்ன நடந்தது என்பதை அறியாது, கிருஷ்ணனின் அன்பில் திளைத்த குசேலர் எதுவும் கேட்காமல் திரும்பி வந்தார். இப்பக்தியை திருக்கோளூர் பெண் பிள்ளை இராமானுஜரிடம் “அவல் பொரி ஈந்தேனோ குசேலரைப் போல” என்று உரைக்கின்றாள். தன் வீட்டை குசேலர் அடைந்த போது அது மாளிகையாக மாறி இருப்பதையும், மனைவி மற்றும் பிள்ளைகள் பட்டுப் பீதாம்பரம், விலை உயர்ந்த ஆபரணங்களில் மிளிர்வதையும், மாளிகை முழுவதும் செல்வம் நிறைந்திருப்பதையும் கண்டு ஸ்ரீகிருஷ்ணருக்கு மனதார நன்றி கூறினார், கண்ணா நான் உன்னிடம் வேண்டியது முக்தியல்லவா? இந்த அழிகின்ற செல்வமல்லவா? என்று மனமுருகி வேண்டி கண்ணன் கழலிணைகளியே மனதில் நாளும் நண்ணி நிறைவாக வைகுந்தம் சென்றடைந்தார். [சுதாமா துவாரகை] நாராயண பட்டத்திரி தனது நாராயணீயத்தில் இக்குசேலாபாக்கியாணத்தைப் பாடும் போது ஹே குருவாயூரப்பா! இரத்தினமயமான இல்லத்தில் வசித்த குசேலர் மேலும் மேலும் செல்வ விருத்தியடைந்தது போலவே உன் மீதான பக்தியையும் விருத்தி செய்து கொண்டவராகவே வாழ்ந்து இறுதியாக மோட்சமும் அடைந்தாரல்லாவா? என்று வினவ குருவாயூரப்பனும் தலை அசைத்து ஆமோதிக்கின்றான். குருவாயூரில் மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று குசேலர் தினம் கொண்டாடப்படுகின்றது. நட்பின் மேன்மையை கூறும் வரலாறு இது. “உண்ணுஞ்சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்”என்று சமர்ப்பணம் செய்பவர்களுக்கு அவன் அருளை வாரி வழங்குவதைக் கூறும் வரலாறு இது. பள்ளியில் வல்லூர் தேவராஜப்பிள்ளை அவர்கள் பாடிய குசேலாபாக்கியானம் படித்த ஞாபகம் வந்தது, மனையாளின் பெருமை, செல்வத்தின் நிலையாமை, நட்பின் பெருமை மற்றும் தெய்வத்தின் கருணை ஆகியவற்றை கூறும் நூல் அது. அந்நண்பனுடன் கண்ணன் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம் தற்போதைய போர்பந்தரில் அமைந்துள்ள சுதாமா துவாரகை. துவாரகையிலிருந்து சோமநாத் செல்லும் வழியில் துவாரகையிலிருந்து சுமார் 105 கி.மீ தூரத்தில் போர்பந்தர் அமைந்துள்ளது. ஊரின் மையமாக சுதாமா யாத்ரா தாம் என்றழைக்கப்படும் சுதாமா துவாரகை சற்று வித்தியாசமாக ஒரு பெரிய சோலையின் நடுவே அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்னர் சுதாமாபுரி என்று ஒரு அலங்கார வளைவு எல்லாரையும் வரவேற்கின்றது. அடியோங்கள் அங்கு சென்ற போது மாலை நேரம் என்பதால் பறவைகள் எல்லாம் இவ்வாலயத்தில் உள்ள மரங்களில் உள்ள தம் கூடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தன. அவைகள் எழுப்பிய ஓசை அருமையான பின்னணியாக விளங்க காயா மலர் வண்ணனை, குன்றமேந்தி குளிர் மழை காத்தவனை, காரொத்த மேனி எம்பெருமானின் தரிசனம் பெற்றோம். கர்ப்பகிரகம் நாகாரா விமானத்துடன் உள்ளது. ஒரே ஒரு மண்டபம், அழகிய தூண்களுடன் பிரம்மாண்டமாக இம்மண்டபம் எழிலாக அமைக்கப்பட்டிருக்கின்றது. கருவறையில் சுதாமா மற்றும் அவரது மனைவி சுசீலையுடன் துவாரகாதீசன் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு நண்பனுக்கு ஏற்றம் தருகின்றார் “கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன், காலிகள் முன் காப்பான், குன்றதனால் மழை காத்து குடமாடு கூத்தன் ஸ்ரீகிருஷ்ணன்”. பிரகாரத்தை வலம் வரும் போது துவாரகையில் குசேலருக்கு ஸ்ரீகிருஷ்ணர் பாத பூஜை செய்யும், மற்றும் பத்ரி நாராயணர் யோக கோலத்தில் அமர்ந்திருக்கும் சித்திரத்தையையும் தரிசனம் செய்தோம். ஆலய வளாகத்தில் ஞான வாவி என்றழைக்கப்படும் ஒரு கிணறும் அமைந்துள்ளது. அன்றைய தினம் இவ்வாறு ஐந்து துவாரகைகளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் தம்மை நல்வழிப்படுத்தியது கீதை என்று சத்திய சோதனை என்ற தமது சுயசரிதையில் கூறியுள்ளார். இந்திரிய விஷயங்களை தியானிக்கின்ற மனிதனுக்கு அவற்றில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலில் இருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து குரோதம் வளர்கிறது. குரோதத்தில் இருந்து மனக்குழப்பம் உண்டாகிறது. குழப்பத்தில் இருந்து நினைவின்மையும், நினைவின் மையத்திலிருந்து புத்திநாசமும் உண்டாகிறது. புத்தி நாசத்தால் மனிதன் அழிந்து போகிறான் என்ற வரிகள் அவரது உள்ளத்தில் ஆழப் பதிந்திருக்கின்றது. அம்மகான் பிறந்தது போர்பந்தர் என்ற புண்ணிய ஊர் அல்லவா? கீதை சொன்ன கண்ணனை தரிசிக்கின்ற இந்த யாத்திரையின் நடுவே கீதையால் கவரப்பட்ட காந்தியடிகளது பிறந்த இடமான கீர்த்தி மந்திர் சென்றோம். காந்தி அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது மாமேதை ஐன்ஸ்டின் அவர்கள் இவ்வாறு கூறினார். “On the occasion of Mahatma Gandhi’s 70th birthday.”Generations to come, it may well be, will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth." -  Albert Einstein “வரும் காலத்தில் இப்படியும் ஒரு மனிதர் மனித உடலுடன் இப்பூவுலகில் நடமாடினார் என்று நம்புவது கடினம்” என்று போற்றினார்.  தாரக மந்திரமான இராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு, சத்திய வழியில் நடந்து, அகிம்சையையே ஆயுதமாகக் கொண்டு அன்னிய தளையிலிருந்து நமக்கு விடுதலை வாங்கித் தந்த அண்ணலின் இல்லம் சென்றோம். 1777ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் முப்பாட்டன் ஹரிவன்ஜி ராஹ்தாஸ்ஜீ காந்தி அவர்கள் இந்த இல்லத்தை வாங்கியுள்ளார். 1869ம் ஆண்டு அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவ்வில்லத்தில் பிறந்தார். அவர் பிறந்த புண்ணிய இடத்தை சுவஸ்திக் சின்னம் இட்டு சுட்டிக்காட்டியுள்ளனர் அதைக் காணும் போது நமக்கு உடல் எல்லாம் புல்லரிக்கின்றது. அவரின் வாழ்க்கை வரலாறு பல் வேறு சித்திரங்கள் மற்றும் புகைப்படங்களின் மூலம் முழுவதுமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கஸ்தூரிபாய் மற்றும் காந்தியடிகளின் படத்தை பெரிதாக எழுதி வைத்திருக்கின்றனர். மேல் மாடியிலும், கீழே உள்ள அறைகளிலும் காந்தியடிகளின் பொன் மொழிகளை சலவைக் கல்லில் பொறித்து வைத்துள்ளனர். அவரது வாழக்கையை விளக்கும் பல் வகைப் படங்களும் இருக்கின்றன. நூல் நிலையம் ஒன்றும் உள்ளது. அவர் சிறுவராக இருந்தபோது உபயோகித்த செருப்பு, பெட்டி, துண்டு காகிதங்கள், சில்லறை பொருட்கள் எல்லாம் இன்று அரிய கண்காட்சிப் பொருட்களாக பார்வைக்கு வைத்துள்ளனர். மேலும் அவர் சந்தித்த முக்கிய தலைவர்கள், அவரை கௌரவப்படுத்தி மற்ற அரசுகள் வெளியிட்ட தபால் தலைகள் ஆகியவற்றை கண்டு களித்தோம். [காந்தியடிகள் பிறந்த கீர்த்தி மந்திர்] போர்பந்தர் அக்காலத்தில் எவ்வாறு இருந்ததோ அப்படியே உள்ளது. கோட்டை போன்ற மாளிகைகள். பிற்கால சந்ததியினர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து விட்டதால் பராமரிப்பில்லாமல் அப்படியே பூட்டிக்கிடப்பதை பார்த்தோம். குஜராத் மாநிலம் நிலக்கடலைக்கு பெயர் போனது. கடலை பெரிதாக இருக்கும். எனவே ஒரு காலத்தில் நமது தமிழ்நாட்டிலிருந்து. தேங்காய்கள் இங்கு வருகின்றன இங்கிருந்து கடலை எண்ணெய் அங்கு வருகின்றன. மேலும் அடியேன் தங்கிய ஊரின் அருகே உள்ள நகரமான பரூச் (Bharuch) உப்பு வேர்க்கடலைக்கு பெயர் பெற்றது. அப்போது ஊருக்கு வரும் போது அக்கடலையை வாங்கி கொண்டு வருவேன். அது போன்ற கடலை இங்கும் கிடைத்தது ஆளுக்குக் கொஞ்சம் வாங்கிக் கொண்டோம். போர்பந்தரும் கடற்கரை நகரமானதால், பாகிஸ்தான் அச்சுறுத்தலுக்காக இந்நகரிலும் கப்பற்படை, மற்றும் கடலோரக் காவல்படை தளங்கள் உள. போர்பந்தரிலிருந்து சோமநாத் சுமார் 127 கி.மீ தூரம், சுமார் 3 மணி நேரத்தில் சென்று விடலாம் எனவே இன்றிரவே சோமநாத் அடைந்து விடலாம், ஆலயத்தின் விடுதிகள் உள்ளன, அதிக கட்டணம் வசூலிப்பதில்லை, எல்லா வசதிகளும் உள்ளன எனவே அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளலாம் என்று வண்டி ஓட்டுனர் கூறினார். சோமநாதரின் தரிசனம் கிடைக்குமா? என்று அவரிடம் கேட்டோம் முயற்சி செய்கிறேன், அதிகமான போக்குவரத்து இல்லை என்றால் சென்று விடலாம் என்று கூறினார். அன்றே சோமநாதர் தரிசனம் தந்தாரா? என்று அறிய ஆவலாக உள்ளதா. தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் – 9 சோமநாத ஜோதிர்லிங்கம் [] அந்தி சாயும் வேளை அரபிக் கடலை ஒட்டிய பாதையில் சூரியன் மறையும் அழகையும் பறவைகள் தங்கள் கூட்டிற்கு திரும்பிச் செல்வதையும் இரசித்துக் கொண்டே போர்பந்தரிலிருந்து (Porbundar) பயணத்தை தொடர்ந்தோம். வழியெங்கும் பல காற்றாலைகளைக் கண்டோம். இடையில் வேராவல் (Veraval) என்ற ஊரைக் கடந்தோம். சோம்நாத்திற்கான தொடர்வண்டி நிலையம் இவ்வூர் ஆகும். அடியோங்கள் சோமநாத்தை அடைந்த போது இரவு மணி 8:30 ஆகி விட்டது. முதலில் தங்கும் விடுதியை பதிவு செய்ய வேண்டும் என்பதால் இரண்டு பேர் மைய முன்பதிவு அலுவலகத்திற்கு சென்றனர். மற்றவர்கள் சோமநாதரை தரிசிக்க ஆலயம் சென்றோம். ஆலயத்தில் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆலயத்திற்கு சுமார் அரை கிலோமீட்டருக்கு முன்னரே வண்டிகள் நிறுத்தப்படுகின்றன. அதற்குப்பின் பக்தர்கள் நடந்து சென்றே ஆலயத்தை அடைய முடியும், செல்பேசி, புகைப்படக் கருவி மற்றும் எந்த மின்னணு கருவியும் கோவிலின் உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை. உலோக கண்டுபிடிப்பான் (Metal Detector) கொண்டு உடற்பரிசோதனை செய்த பிறகே வாயிலின் உள்ளே நுழைய அனுமதிக்கின்றனர். தோல் பொருட்கள், காலணிகள், பைகள் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை அவற்றை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதி ஆலய வளாகத்தின் உள்ளே உள்ளது. விஜய்துவாரத்தில் நுழைந்தவுடன் கோவிலின் முகப்பை அருமையாக தரிசிக்கலாம். முழுக்க முழுக்க காவி பூசப்பட்ட முன் வாசல் மண்டபம். அதன் இரு புறங்களிலும் துலங்கும் மாட உப்பரிகைகள். மண்டபத்தின் மையத்தில் இருக்கும் வாசல் வழியாக ஆலயத்தில் நுழைந்தால் பரந்த புல்வெளி. அதன் நடுவே ஒரு பாதை பிரதான ஆலயம் நோக்கி செல்கின்றது. புல்வெளிக்கப்பாலும், ஆலயத்திற்கு பின் புறத்திலும் அரபிக் கடல் ஆர்ப்பரிக்கின்றது. தரிசனத்திற்கான வரிசையும் விரைவாக சென்று கொண்டிருந்தது அடியோங்களும் வரிசையில் நின்று ஆலயத்தின் உள்ளே சென்றோம். சந்திரனுக்கு அருளிய சோமநாதரின் தரிசனம் இரவே அருமையாக கிட்டியது. இவ்வாலயத்திற்கு எத்தனையோ கதைகள் உள்ளன வாருங்கள் அவையனைத்தையும் ஒவ்வொன்றாகக் காணலாம். சந்திரபுரம் என்றும் சூரியபுரம் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்ட்ட பிரபாஸ்பாடன் ஸ்ரீகிருஷ்ணரின் காலத்திற்கு முன்னரே பிரபலமான ஒரு தீர்த்த யாத்திரைத் தலம். கதிரவனின் பிரகாசத்தையும், வெண் நிலவின் குளிர்ச்சியும் பொருந்திய தலம் என்பதால் இத்தலத்திற்கு பிரபாஸ்பாடன் என்று பெயர். பிரபாச க்ஷேத்திரம் என்பதற்கு ஒளி மிகுந்த தலம் என்றும் ஒரு பொருள் உண்டு. பாகவத புராணம், விஷ்ணு புராணம், ஸ்கந்த புராணம் ஆகியவற்றில் சோமநாதத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அம்மனின் 51 சக்தி பீடங்களுள் இது பிரபாஸ சக்தி பீடம் ஆகும். [சோமநாத் ஆலயம்] கிருஷ்ண விஜயம் நிகழ்ந்த காரணத்தால் யாதவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இத்தலம் உயரிய யாத்திரை தலமானது. சந்திரன் தியானம் செய்து சாபம் நீந்கி சிவபெருமானின் அருளைப் பெற்ற தலம் என்பதால் தியானம் செய்ய தக்கதோர் தலம் ஆகும். சோமனாம் சந்திரனுக்கு அருளிய வரலாற்றை முதலில் காணலாம் அன்பர்களே. தட்சபிரஜாபதி தன் மகள்களை தனித் தனியாக மணம் செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தந்து 27 மகள்களான, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான சந்திரனுக்கு மணம் புரிவித்தான். ஆனால் சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும் மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். அதனால் மனம் நொந்த மற்ற பெண்கள் தங்கள் தந்தையிடம் சென்று முறையிட்டனர். ஆத்திரமடைந்த தட்சன் உனது அழகில் கர்வம் கொண்டுதானே நீ என் மற்ற பெண்களை அவமதித்தாய் எனவே நீ உனது அழகை இழந்து குஷ்ட ரோகியாகக் கடவது என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தான், அதனால் சந்திரன் தனது கலைகளை இழந்தான் அவனை குஷ்ட நோயும் பீடித்தது. தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட்கிழமைகளிலும் எம்பெருமானை கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை நினைத்து இப்பிரபாச படான் தலத்தில் விரதம் அனுஷ்டித்தான், அவனது விரதத்திற்கு மகிழந்த பரம கருணாமூர்த்தியான எம்பெருமான் அவனுக்கு சாப நிவர்த்தி அளித்தார். அதனால் சந்திரன் தான் இழந்த சோபையை பெற்றான், ஆயினும் பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து பௌர்ணமியன்று பூரண சந்திரனாக திகழ்ந்து பின் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் வண்ணம், எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும் தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார் கருணைக் கடலாம் சிவபெருமான். என்னே பகைவனுக்கும் அருளும் ஐயனின் பண்பு. கார்த்திகை சோமவார விரதம் இருப்பவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடன் இறுதியாக அவர்களுக்கு முக்தியும் கொடுத்து அருள வேண்டும் என்று சந்திரன் வேண்ட ஐயனும் அவ்வாறே அருள் பாலித்தருளினார். சந்திரன் வழிபட்டு தன் சாபம் தீரப்பெற்ற தலத்தில் சோமநாதராக, ஜோதிர்லிங்கமாக அருள் பாலிக்கின்றார். பிரபாஸ்பாடன் சென்று சோமநாதரை வழிபட்டால் பிறவிப்பயன் பெறலாம். [இரவில் ஒளிரும் சோமநாதர் ஆலயம்] கிருஷ்ணர் தமது குரு சாந்தீபனி முனிவரின் மகனை உயிருடன் மீட்டுக்கொண்டு வர இப்பிரபாச க்ஷேத்திர கடலில்தான் பாஞ்ஜசன்யன் என்னும் அரக்கனை அழித்தார். அவ்வரக்கனே அவரது இடக்கரத்தில் திகழும் பாஞ்ஜசன்யம் என்றொரு வரலாறும் உண்டு அது என்ன என்று பார்ப்போமா அன்பர்களே. வசுதேவர் தன் இரு மகன்களையும் சாந்தீபனி முனிவரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார். இத்தனை காலம் மாடு மேய்த்து திரிந்த அவர்கள் சகல சாஸ்திரங்களையும் ஆசானிடம் கற்றனர். பயிற்சி முடிந்ததும், குருவிடம், தங்களுக்கு தர வேண்டிய குரு தட்சணை என்ன? என்றதும் குரு ஒன்றும் பேசாமல் அருகில் இருந்த தன் மனைவியைப் பார்த்தார். அவளது கண்களில் கண்ணீர் பனித்திருந்தது. தாயே! தங்கள் கண்கள் பனித்திருக்கின்றன. தாங்கள் ஏதோ எங்களிடம் கேட்க விரும்புகிறீர்கள். தாராளமாக கேளுங்கள் என்றனர். அப்போது சாந்தீபனி முனிவர், அவர்களிடம் சீடர்களே௧ ஒரு சமயம் நாங்கள் எங்கள் மகனுடன் பிரபாச க்ஷேத்திரம் கடற்கரைக்கு சென்றிருந்தோம். அவன் அப்போது கடலில் மூழ்கி இறந்து விட்டான். அவனை மீட்ட்டுத்தர வேண்டும் என்றார். அவரிடம் ஆசி பெற்று உடனே புறப்பட்டு கடற்கரையில் நின்றனர் கிருஷ்ண பலராமர். சமுத்திரராஜன் அவர்களின் திவ்ய தரிசனம் கண்டு ஓடோடி வந்து பணிந்தான். ஸ்ரீகிருஷ்ணா! நான் தங்களுக்கு செய்ய வேண்டியது என்ன? என்றான். கிருஷ்ணரும் உன்னிடம் மூழ்கியுள்ள எங்கள் குரு சாந்தீபனியின் மகனைத் திருப்பிக்கொடு என்றார் ஸ்ரீகிருஷ்ணர். தேவாதி தேவா! அவன் எனக்குள் இல்லை. அவனை என்னுள் மூழ்கி அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் பஞ்சஜனன் என்ற அசுரன் பிடித்து சென்றான். ஒரு வேளை அவன் அச்சிறுவனை உயிருடன் விழுங்கியிருக்கக்கூடும், சங்கு வடிவில் மறைந்திருக்கும் அவனைப் பிடித்தால் விபரம் தெரியும் என்றான். கிருஷ்ண பலராமர்கள் சற்றும் தாமதிக்காமல் கடலுக்குள் சென்றனர். அங்கே சங்கு வடிவில் உருண்டு கொண்டிருந்த பஞ்சஜனனைப் பிடித்தனர். அவனது வயிற்றை கிழித்தார் கிருஷ்ணர். உள்ளே சிறுவன் இல்லை. பாஞ்சஜன்யத்தை தனது ஆயுதமாக கொண்டார். பிறகு அவர்கள் நேராக யமலோகம் சென்றனர். எமதர்மராஜா தண்டனிட்டு அவர்களை வரவேற்றார். காலனே! எங்கள் குருவின் மகன் இங்கிருந்தால் உடனே என்னுடன் அனுப்ப வேண்டும் என்று பணித்தார். தங்கள் கட்டளை என் பாக்கியம் என்று, சிறுவனை அழைத்து வந்தான். அவர்கள் சிறுவனை குருவிடம் ஒப்படைத்தனர். சாந்தீபனி முனிவர் மிகவும் மனம் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதித்தார் மேலும் நவ துவாரகைகளுள் முக்தி துவாரகை சோமநாத் ஆகும். ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின் ஒரு வேடனின் அம்பினால் காயம் பட்டு திவ்ய மேனியை விடுத்து வைகுண்டம் சென்றது இங்கிருந்துதான். இத்தலம் “பால்கா தீர்த்தம்” என்றும் முக்தி துவாரகை என்றும் அழைக்கப்படுகின்றது. மேலும் திரிவேணி சங்கமம், கோலோக் தாம் மற்றும் சற்று தூரத்தில் உள்ள பிராஞ்சி ஆகிய இடங்களையும் சோம்நாதத்தில் தரிசிக்கலாம். துவாரகையில் உள்ளது போலவே பக்தர்களின் வசதிக்காக தினமும் காலை 8 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் சோமநாத் அருகில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லும் பேருந்து வசதி உள்ளது விரும்பும் அன்பர்கள் அதைப் பயன் படுத்திக்கொள்ளலாம். இப்பேருந்து முக்தி துவாரகை என்றழைக்கப்படும் பால்கா தீர்த்தம், லக்ஷ்மி நாராயணர் ஆலயம், பரசுராமர் தவம் புரிந்த பரசுராமர் ஆலயம், ஹிரண்யா, கபிலா மற்றும் சரஸ்வதி நதிகள் கடலுடன் சங்கமிக்கும் த்ரிவேணி சங்கத்தில் அமைந்துள்ள த்ரிவேணி சங்கம ஆலயம், சூரஜ் மந்திர் என்றழைக்கபடும் சூரியன் ஆலயம், கீதா ஆலயம், பஞ்ச பாண்டவர்கள் குகை மற்றும் காம்நாத் மஹாதேவ் ஆலயங்களுக்கு அழைத்துச் செல்கிறது. அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையின் சமயம் இத்தலம் வந்த போது ஸ்ரீகிருஷ்ணரின் தங்கை சுபத்ரையின் அழகைப் பற்றி கேள்விப்பட்டான். பின்னர் ஸ்ரீகிருஷ்ணரின் உதவியுடன் சுபத்ரையை மணந்தான். அபிமன்யுவை வீரமகனாகப் பெற்றான். இத்தலம் ஆதி ஜோதிர்லிங்கத் தலமாகவும் போற்றப்படுகின்றது. துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரமும் “சௌராஷ்ட்ரே சோமநாதம்” என்று துவங்குகிறது. வாருங்கள் பல முறை மிலேச்சர்களால் சிதைக்கப்பட்ட பின்னும் நெடிதுயர்ந்து நிற்கும் ஆலயத்தின் கதையைக் காணலாம். சத்ய யுகத்தில் சந்திரன் பொன்னால் இக்கோவிலை கட்டினான், எம்பெருமான் பைரவேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். திரேதாயுகத்தில் இராவணன் ஸ்வர்ணகேஸ்வரராக வெள்ளியிலும், துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சிருங்கேஸ்வரராக சந்தன மரத்திலும் கட்டினர், அவையெல்லாம் அழிந்து விட்டன. கலியுகத்தில் சோமேஸ்வரராக கற்கோவிலாக விளங்குகிறது. முகம்மது கஜினி 17 முறை படையெடுத்து வந்து இக்கோவிலை சிதைத்து இதன் செல்வங்களையெல்லாம் கொள்ளை அடித்து சென்றான், பின்னரும் பலமுறை புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆலயங்கள் பல்வேறு முகம்மதிய மன்னர்களால் சிதைக்கப்பட்டன. நாம் அன்னிய தளையிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்ற பிறகு இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆலயத்தையே நாம் இப்போது தரிசிக்கின்றோம். 1950ல் தற்போதுள்ள ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. காந்தி அடிகளின் யோசனைப் படி பக்தர்களின் நன்கொடையின் மூலமாகவே இவ்வாலயம் கட்டி முடிக்கப்பட்டது. முன்பிருந்த செல்வச்சிறப்பில் தற்போது இல்லை என்றாலும் பிரம்மாண்ட ஆலயமாகவே இன்றும் விளங்குகின்றது. பழைய ஆலயத்தின் முன் வாயிலில் இருந்த அற்புத வேலைப்பாடுகள் கொண்ட பிரமாண்ட மரக்கதவு இன்றும் ஆக்ரா கோட்டையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாகாரா அமைப்பில் நெடிதுயர்ந்த விமானத்துடன் கூடிய பெரிய கருவறை, 150 அடி உயரமான விமானத்தின் கலசம் மட்டும் 10 டன் எடையுள்ளது என்பதில் இருந்து இவ்வாலயத்தின் பிரம்மாண்டம் விளங்கும். கூம்பூ வடிவ விமானத்தின் உச்சியில் சூலமும், நந்தியும், உடுக்கையும் உடைய முக்கோணக் கொடி பறக்கின்றது. வட்ட விதானக்கூரையுடன் கூடிய ஆலயத்தில் முதலில் நம்மை வரவேற்பது கலையழகுடன் கட்டப்பட்ட முகப்பு மண்டபம். இதில் இடப்புறம் விநாயகர், வலப்புறம் ஆஞ்சநேயர். கர்ப்பகிரகத்தை இவர்கள் நிஜ மண்டபம் என்றழைக்கின்றனர். அர்த்த மண்டபத்தை சபா மண்டபம் என்றும், மஹா மண்டபத்தை நிருத்த மண்டபம் என்றும் அழைக்கின்றனர். இவ்விரண்டு மண்டபங்களும் உயர்ந்த தூண்கள் தாங்கும் மண்டபங்களாக எழிலாக அமைந்துள்ளன. இம்மண்டபங்களின் கூரையில் குவி மாடம், வெளிப் பகுதி புறாக்கூண்டு அமைப்பு, உள் பக்கம் அருமையான சுதை சிற்பங்களை அமைத்துள்ளனர். கருவறை முன் மண்டபம் மிகவும் அகலமாக எத்தனை பக்தர்கள் வந்தாலும் ஐயனை தரிசிக்கும் விதமாக அமைக்க்ப்பட்டுள்ளது. இதன் முடிவில் கருவறைக்கு இடப்புறம் அன்னை திரிபுரசுந்தரி சன்னதி, வலப்புறத்தில் அம்பா சன்னதி. அம்பாவுக்கு முன்னர் அகண்ட தீபம் அணையாமல் எரிகிறது. [ஆலயத்தின் அற்புத வேலைப்பாடு] கர்ப்பகிரகம் மற்றும் முன் மண்டபம். தங்க கவசம் மற்றும் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முன் காலத்தில் எவ்வளவு செல்வச்சிறப்புடன் விளங்கியது அது போல இப்பொழுதும் விளங்க வேண்டும் என்ற முயற்சியில் நன்கொடைகள் பெற்று இத்திருப்பணிகளை செய்து வருகின்றனர். பிரம்மாண்ட ரூபத்தில் ஜோதிர் லிங்கமாக எம்பெருமான் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். எந்நேரமும் அருமையான அலங்காரத்தில் ஐயனை தரிசிக்கலாம். ஐயனுக்கு மேலே தங்கக் குடை மற்றும் தாரா பாத்திரம் தொங்குகின்றது. விலாசமான கருவறையில் கோட்டத்தில் நின்ற கோலத்தில் அம்பாள், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் உடன் அருள் பாலிக்கின்றனர். மண்டபம் முழுவதும் மானாட மழுவாட புனலாட மங்கை சிவகாமியாட என்றபடி சிவபெருமானின் பல்வேறு நாட்டியக் கோலங்கள். மேலும் சிவ பார்வதி திருக்கல்யாண சிற்பம், யானை, குதிரை வீர்ர்கள், நாட்டியப்பெண்கள் சிற்பங்கள் மிகவும் அருமை. மிகவும் பிரம்மாண்டமான கோயில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வரிசை, தரிசனத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லை. அருகில் சென்று தரிசனம் செய்ய முடிகின்றது. ஐயனை தொட்டு அபிஷேகம் செய்ய அனுமதியில்லை, ஆனால் சன்னதியின் முன்புறம் ஐயனுக்கு அபிஷேக தீர்த்தத்தை ஊற்றும் அமைப்பு அதில் பக்தர்கள் ஊற்றும் தீர்த்தம் ஐயனுக்கு அபிஷேகம் ஆகும் வண்ணம் அமைத்துள்ளது மிகவும் சிறப்பு. ஐயனுக்கு மானசரோவர் தீர்த்தம் அபிஷேகம் செய்தோம். எண்ணற்ற முறை சிதைக்கப்பட்டிருந்தாலும் சாநித்தியத்துடன் இன்றும் விளங்குகிறது ஆலயம். புறத்தில் தரிசனம் தரும் ஐயனை அகத்தில் இருத்தி கண்களை மூடி தியானித்தால் மனதும் உடலும் லேசாகின்றது. அப்படியே அந்தரத்தில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு. ஐயனுக்கு எதிரே பிரம்மாண்ட நந்தி, ஆமை, அகண்ட தீபத்தையும் தரிசிக்கின்றோம். ஆமை இருப்பதற்கான ஐதீகம். ஆமை அடக்கம் மிக்கது. தன் உறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள் அடக்கி பணிவை வெளிப்படுத்தும். அது போல நாமும் ஐம்புலன்களை அடக்கி உள் நோக்கினால் அந்தர்யாமியாக உள்ள இறைவனைக் காணலாம் என்பதை குறிக்கின்றது. காலை 7 மணி, மதியம் 12 மணி, இரவு 9 மணி என்று ஒரு நாளில் மூன்று முறை ஆரத்தி சிறப்பாக நடைபெறுகின்றது. ஆரத்தி சமயத்தில் சங்கம் முழங்குகின்றது. ஜல் ஜல் என ஜால்ரா ஒலிக்கின்றது. டம் டம் என டமாரம் அதிர்கின்றது. ஆரத்தி காண்பதே ஒரு பரவசமான அனுபவம். சோமநாதத்தின் வரலாற்றை சொல்லும் ஒலி, ஓளிக் காட்சி இரவு 8 மணிக்கு நடைபெறுகின்றது. அடியோங்கள் தாமதமாக சோமநாதத்தை அடைந்ததால் அக்காட்சியை காண இயலவில்லை. சிதைக்கப்பட்ட புராதன பார்வதி ஆலயத்தின் கீழ்ப்பகுதி முக்கிய சன்னதிக்கு அருகில் உள்ளது. கடற்கரையில் கம்பீரமாக அமைந்துள்ளது இவ்வாலயம். இவ்வாலயத்திலிருந்து நேராக எந்த நிலப்பரப்பும் இல்லாமல் தென் துருவத்தை அடைய முடியும். நிலவியலில் நம் முன்னோர்களுக்கு இருந்த ஞானத்தை இது காட்டுகின்றது. தென் துருவத்தை நோக்கி ஒரு அம்பு அமைத்துள்ளனர். கபர்தின் விநாயகர், மற்றும் கஷ்ட் பஞ்சன் ஹனுமான் சந்நிதிகளும் உள்ளன. ஐயனை தரிசனம் செய்பவர்கள் தரிசனம் செய்து கொண்டே, சுலோகங்கள் பாராயணம் செய்ய விரும்புபவர்கள் அமர்ந்து பாராயணம் செய்யவும் இடம் ஒதுக்கியுள்ளனர். அங்கு அமர்ந்து ஸ்ரீருத்ரம் பாராயணம் செய்தோம். முதலில் அலங்காரம் இல்லாமல் நிர்வாண தரிசனம் பெற்றோம். காலை ஆரத்தி தரிசித்தோம். மூலவர், கர்ப்பகிரகத்தின் உள்ளே உள்ள பார்வதி அம்பாள், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கு ஆரத்தி பின்னர் கர்ப்பகிரகத்திற்கு வெளியே உள்ள பார்வதி அம்பாள், ஹனுமான், நந்தி, ஆமை, தெற்கு துவாரம் வழியாக சமுத்திரத்திற்கும் ஆரத்தி நடைபெறுகின்றது. இதன் பிறகு சுவாமிக்கு ச்ருங்காரம் என்னும் மலர் அலங்காரம் அற்புதமாக செய்கின்றனர். சந்தனம் குங்குமப்பூ கலவை பூசுகின்றனர். முககவசம் சார்த்தி, பாணம் முழுவதும், தாமரை, சாமந்தி, வெள்ளெருக்கு, வில்வம், ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்கின்றனர். மலர் மாலைகள், ருத்ராட்சத்தினால் ஆன மகுடம் மற்றும் சந்திரன் வழிபட்ட ஈசன் என்பதால் சந்திரப்பிறை கொண்டு அற்புதமாக அலங்காரத்தை நிறைவு செய்கின்றனர். பின்னர் சிறப்பாக வேத மந்திரங்கள் முழங்க ஆரத்தி நடைபெறுகின்றது. இரண்டாவது முறையாக ச்ருங்கார் ஆரத்தியும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. அருமையான தரிசனம் தந்த சிவபெருமானுக்கு நன்றி கூறி வெளியே வந்தோம். ஆலயத்தின் பிரம்மாண்ட வெளிப் பிரகாரத்தில் வலம் போது கடற்காற்று தழுவுகிறது. கார்த்திகை பௌர்ணமி மற்றும் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது. ஐயனை பிரிய முடியாமல் பிரிந்தோம். தங்கும் விடுதிகள் ஆலயத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. ரூ50/- முதல் ரூ1000/- வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் அறைகள் உள்ளன. லீலாவதி பவன், மஹேஸ்வரி பவன், அதிதி க்ருஹ் என்று மூன்று தங்கும் விடுதிகள் உள்ளன. மைய அலுவகத்தில் சென்று முன் பணம் கட்டி அறையை பெற்றுக் கொள்ளலாம். www.somanath.org என்ற இணைய தளத்தின் மூலம் முன் பதிவும் செய்து கொள்ளலாம். அறைகள் விலாசமாகவும், சுத்தமாகவும் உள்ளன. தொலைக் காட்சிப் பெட்டி, சுடு தண்ணீர், அலமாரி, கம்பளிப் போர்வைகள் என்று அனைத்து வசதிகளும் உள்ளன. அறைகள் மிகவும் சுத்தமாக இருந்தன. விடுதிகளை நன்றாக பராமரிக்கின்றனர். ஒவ்வொரு விடுதியிலும் பல ஆன்மீக நூல்களுடன் கூடிய நூலகம் உள்ளது. வெளியே உட்கார்ந்து ஓய்வு எடுக்கவும் வசதிகள் உள்ளன. உணவு விடுதியில் அடக்க விலையில், சுகாதாரமான உணவும் உண்ணலாம். யாத்திரிகளுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நிறைவாக அளிக்கின்றது கோயில் நிர்வாகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குருக்கள் யாரும் தட்சணை கேட்கவில்லை. சுவாமியை மறைத்துக்கொண்டு நிற்கவில்லை. பணம் உள்ளவன் சுவாமிக்கு அருகில் சென்று சேவிக்கலாம் வறியவர்கள் தூரத்திலிருந்தே தரிசித்து விட்டு செல்ல வேண்டியதுதான் என்று எந்த பாகுபாடும் இல்லை ஏனென்றால், சுவாமியை தரிசிக்க எந்தவித தனி கட்டணமும் இல்லை. வரிசையும் வேகமாக செல்வதால் அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமுமில்லை. அனைவரும் இங்கு சமமாகவே நடத்தப்படுகின்றனர். கட்டண சேவைகள் உள்ளன அதற்கான கட்டணத்தைக் கட்டி இரசீது பெற்றுக்கொண்டு அதற்கான பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டு செல்லலாம். சுவாமிக்கு அர்ப்பணம் செய்யும் மலர்களை தவறாமல் சுவாமியின் திருமேனியில் சார்த்துகின்றனர். அது போலவே பிரசாதம் (இங்கு இனிப்பு) சமர்பித்தால் சுவாமிக்கு நிவேதனம் செய்து திருப்பித்தருகின்றனர். தரிசனம், தங்கும் விடுதி, கோயிலில் உள்ள சுத்தம், ஒழுங்கு, விதிப்பிரகாரம் நடக்கும் பூசை என்று எல்லா விதத்திலும் அனைத்து ஆலயங்களுக்கும் ஒரு முன்னோடியாக இவ்வாலயம் விளங்குகின்றது. எதையும் எதிர்பாராமல் கோயில் பணியாளர்கள் சேவை மனப்பான்மையுடன் பணி செய்வதைப் பார்த்தபோது ஆச்சரியமாகவும் அதே சமயம் பிரமிப்பாகவும் இருந்தது. மொத்தத்தில் ஒரு ஆலயம் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இவ்வாலயம். பாரத தேசமெங்கும் முகம்மதியர்களால் சிதைக்கப்பட்ட பல இந்து ஆலயங்களை புனருத்தாரணம் செய்த மஹா சிவபக்தை இந்தோர் அரசி அகல்யாபாய் அவர்கள் கட்டிய ஆதி சோமநாதர் ஆலயம் சென்று ஆதி சோமநாதரை தரிசனம் செய்தோம். அருகில் நமது திராவிட பாணியில் அமைந்த லக்ஷ்மி நாராயணர் ஆலயம் சென்று ஆதி சேடன் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் சேவை சாதிக்கும் பெருமாளை சேவித்தோம். ஐந்து நிலை திராவிடபாணி இராஜ கோபுரம், கொடிமரம், பலிபீடம், மற்றும் பஞ்சலோக உற்சவர்கள் என்று தென்னிந்திய தென்கலை சம்பிரதாய கோவில் அமைந்துள்ளது. அடுத்து பால்கா தீர்த்தம் என்றழைக்கப்படும் முக்தி துவாரகை சென்று ஸ்ரீகிருஷ்ணரை சேவித்தோம். அத்தியாயம் - 10 முக்தி துவாரகை நாம் அடுத்து தரிசிக்கின்ற துவாரகை மண்மிசை பெரும்பாரம் நீங்க ஒரு பாரதமா பெரும்போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப் போய் விண்மிசை தன் தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே? (தி.வா 6-4-10) என்று நம்மாழ்வார் பாடியபடி பூபாரம் குறைக்க கிருஷ்ணாவதாரம் எடுத்த பரந்தாமன் ஸ்ரீகிருஷ்ணர் தன் அவதார நோக்கம் நிறைவேறிய பின் வைகுண்டம் சென்ற இடம். இதுவும் சோமநாதத்திற்கு அருகில் அமைந்துள்ளது. [] பாரதப்போரில் தன் மைந்தர்கள் நூற்றுவரும் மடிய ஸ்ரீகிருஷ்ணரே காரணம் என்று அவர் மேல் கோபம் கொண்ட காந்தாரி, போருக்குப்பின் ஸ்ரீகிருஷ்ணர் அவளைக் காணச் சென்ற போது, என் மக்கள் அனைவரும் மாள காரணமாக இருந்த நீயும் உனது யாதவ குலமும் அது போலவே அழியட்டும் என்று சாபம் கொடுத்தாள். மதுராவிலிருந்து துவாரகைக்கு யாதவர்களை அழைத்து வந்த ஸ்ரீகிருஷ்ணர் அவர்களுக்கு எல்லாவிதமான உபசாரங்களும் கிடைக்குமாறு செய்தார். தேவை என்று எதற்காகவும் காத்திருக்க வேண்டாதபடி, அவர்கள் அனைவரும் எல்லாவற்றையுமே அபிரிமிதமாக அனுபவிக்க வழிசெய்தார். இப்படி எல்லா சலுகைகளும், உரிமைகளும் கிடைத்துவிட்டதால் அவர்கள் அனைவரும் கட்டவிழ்த்து விடப்பட்ட விலங்குகளாக மாறினார்கள். பிறருக்கு ஊறு விளைவிப்பது தமக்கு விளையாட்டு என்ற மனப்போக்கு உடையவர்களாக ஆனார்கள். அங்கே தவமியற்றிக்கொண்டிருந்த ரிஷிகளையும் அவர்கள் விட்டுவைக்க வில்லை. கிருஷ்ணனுக்கு அவர்களுடைய நடவடிக்கை பெரிய தலைவலியாகப் போய்விட்டது. அவர் எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் தம் போக்கிலிருந்து மாறவில்லை. எத்தனையோ அரக்கர்களை எளிதாக சமாளித்த அவரால், யாதவர்களின் அரக்க மனதை வெல்ல இயலவில்லை. கலியுகத்தின் ஆரம்ப அடையாளம் அது என்று அவருக்கும் தெரியாதா என்ன? அதோடு காந்தாரி இட்ட சாபமும், ரிஷிகளின் மனவருத்தங்களும் பலித்தாகவேண்டுமே! ஆக, தன் அவதார காலம் நிறைவுக்கு வந்ததை உணர்ந்த கிருஷ்ணன், வைகுந்தம் ஏக ஆயத்தமானார். யாதவர்களும் தர்மத்தை கைவிட்டு, குடியிலும், கேளிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர். ஒரு சமயம் முனிவர் துவாரகை வந்த போது யாதவர்கள் விளையாட்டாக, ஆண் ஒருவனுக்கு கர்ப்பிணிப் பெண் போல வேடம் அணிவித்து அவனை முனிவர் முன் நிறுத்தி, இவளுக்கு எக்குழந்தை பிறக்கும்? என்று கேட்டு கிண்டல் செய்தனர். உண்மையை உணர்ந்த முனிவர் இவன் ஒரு இரும்பு உலக்கையை பெற்றெடுப்பான் அதனால் உங்கள் யாதவ குலம் முற்றிலுமாக அழியட்டும் என்று சாபம் கொடுத்தார். மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்த மாயவன், ஸ்ரீகிருஷ்ணர் அவதார நோக்கம் நிறைவேற தனது யாதவ குலத்தை தன்னுடன் அழைத்துச் செல்ல ஆடிய நாடகமே இச்சாபங்கள் என்பர் பெரியோர். முனிவரின் சாபத்திற்கேற்ப அந்த ஆண் பிள்ளை ஒரு இரும்பு உலக்கையை பெற்றெடுத்தான். உலக்கையாக இருந்தால்தானே தமக்கு தீங்குண்டாகும் என்று கருதிய யாதவர்கள் அதை தூள், தூளாக பொடி செய்து கடலில் கரைத்தனர். இறுதியாக இருந்த ஒரு பெரிய இரும்புத் துண்டினை அப்படியே கடலில் வீசி விட்டனர். இவர்கள் கடலில் கரைத்த தூள்கள் எல்லாம் பிரபாச தீர்த்தக்கரையில் ஒதுங்கின அவை அக்கரையில் வளர்ந்த கோரைப் புற்களுக்கு உரமாயின. இறுதியாக இருந்த இரும்புத் துண்டை விழுங்கிய மீன், ஜரா என்ற ஒரு வேடனின் கையில் வந்து சேர்ந்தது, அவனும் அம்மீனின் வயிற்றில் கிடைத்த இரும்புத்துண்டை தனது ஒரு அம்பின் கூர் முணையாக அமைத்துக் கொண்டான். தன்னுடைய தேர்ப்பாகனான தாரகனை அழைத்தார். தன்னுடைய அரண்மனை தவிர துவாரகையின் பிற பகுதிகள் எல்லாம் கடல் கொண்டுபோகும் என்றும், அதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக பிரபாஸ க்ஷேத்திரம் என்ற உயர்ந்த மலைப்பகுதியில் குடியமர்த்துமாறும் கேட்டுக்கொண்டார். அந்த க்ஷேத்திரம்தான் இப்போது சோம்நாத் என்று வழங்கப்படுகிறது. இச்சம்பவம், யாருக்கும் தான் கடனாளியாக இருக்க விரும்பாத கிருஷ்ணனின் மனோபாவத்தை விளக்குவதாக நயமாக உரைப்பார்கள். அதாவது, துவாரகை அமைய கடலரசனிடமிருந்துதானே 12 யோஜனை பரப்புள்ள நிலம் கேட்டார், கிருஷ்ணர்? இப்போது அதை மீண்டும் கடலரசனிடமே ஒப்படைத்துவிட்டார்! வைகுண்டம் செல்ல வேண்டிய நாளில் யாதவர்கள் அனைவருடன் ஸ்ரீகிருஷ்ணர் பிரபாச தீர்த்தம் வந்தார். எப்போதும் போல் குடி போதை அதிகமாக யாதவர்களிடையே பேதம் அதிகமாகியது. அதுவே ஒரு சண்டையாக மாறியது. அவர்கள் கடற்கரையில் வளர்ந்திருந்த கோரைப் புல்லை பிடுங்கி ஒருவருடன் சண்டையிட ஆரம்பித்தனர். முனிவரின் சாபத்தினால் அப்புற்களே வாளாக மாற, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு யாதவர்கள் அனைவரும் மாண்டனர். காட்டில் சென்று ஸ்ரீகிருஷ்ணரும் ஒரு பிரம்மாண்டமான அரசமரத்தினடியில் ஒரு காலின் மேல் ஒரு காலை வைத்து யோக நித்திரையில் ஆழ்ந்தார். தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஸ்ரீகிருஷ்ணரின் இடது பாத பெருவிரல் ஒரு மானைப் போல தோன்ற தூரத்திலிருந்தே ஜரா என்ற அவ்வேடன் அம்பெய்தான். ஸ்ரீகிருஷ்ணரும் பூலோகத்தில் தன்னுடைய திவ்ய மேனியை விடுத்து வைகுண்டம் ஏகினார். இவ்விடம் பால்கா தீர்த்தம் என்றும் தேஹோத் சர்க் காட் என்றும் அழைக்கப்படுகிறது. பலராமரும் அருகில் உள்ள ஒரு குகையில் தனது மேனியை விடுத்து ஆதிசேஷன் ரூபத்தில் வைகுண்டம் சென்றார். அவ்விடம் பல்தேவ்ஜீகா குபா என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு காந்தாரி மற்றும் முனிவரின் சாபத்தினால் யாதவ குலம் முற்றிலுமாக அழிந்தது. [] ஜரா என்ற அவ்வேடனுக்கு ஏன் கிருஷ்ணர் மேல் அம்பெய்யும் பாக்கியம் கிட்டியது என்று யோசிக்கின்றீர்களா? அதற்காக நாம் இராமாவதாரத்திற்கு செல்ல வேண்டும். இராமாவதாரத்தில் சுக்ரீவனுக்கு உதவுவதற்காக இராமர் மறைந்திருந்து வாலியின் மேல் அம்பெய்து அவனை வதம் செய்தார். இக்கிருஷ்ணாவதாரத்தில் வாலியே ஜரா என்னும் வேடனாகப் பிறப்பெடுத்தான். அவன் கிருஷ்ணராக அவதாரமெடுத்த இராமரை மறைந்திருந்து அம்பெய்தான். இராமவாதாரத்தில் சூரிய புத்திரன் சுக்ரீவன், இந்திரனுடைய புத்திரன் வாலி வதமாக காரணமாக இருந்தான், கிருஷ்ணாவதாரத்தில் அது மாறி இந்திரன் புத்திரனாகிய அர்ச்சுனன், சூரிய புத்திரனான கர்ணனை வதம் செய்தான். தெய்வமே ஆனாலும் செய்கின்ற கர்மத்தின்படி அனுபவித்தே தீர வேண்டும் என்று பகவான் இதன் மூலம் உணர்த்தினார். அர்ச்சுனன் சுவாமியின் திருமேனிக்கு அந்திம சம்ஸ்காரம் செய்தானாம். மேல் பாகம் அப்படியே எரியாமல் கடலில் மிதந்து ஜெகந்நாதம் (பூரி) அடைந்தது, அதை ஆதிவாசிகள் இன்றும் நல்நாராயணன் என்று வழிபட்டு வருகின்றனர் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது. இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணர் யோக நித்திரையில் இருந்து அம்படி பட்ட இடமே முக்தி துவாரகை. அந்த அரசமரம் இன்றும் உள்ளது, நன்றாக பாராமரிக்கப்பட்டு வருகின்றது. அதனடியில் ஸ்ரீகிருஷ்ணர் சங்கு சக்கர கதாதாரியாக ஒரு காலை ஒரு காலின் மேல் போட்ட கோலத்தில் உள்ள சுதை சிற்பத்தை அமைத்துள்ளனர். அறியாமல் அம்பெய்த ஜரா மண்டியிட்டு பகவானை வணங்குகின்றான். அதனடியில் விஷ்ணு பாதமும் அமைத்துள்ளனர். தவழும் கோல பாலகிருஷ்ணரையும் சேவிக்கின்றோம். விஷ்ணு பாதத்தில் மலர் தூவி பின்னை தோள் மணந்த பேராயனை மாலரி, கேசவன், நாரணன், ஸ்ரீமாதவன், கோவிந்தன், வைகுந்தனென்றென்று பக்தர்கள் வழிபடுகின்றனர். அன்பர்கள் அருகில் உள்ள பலராமர் வைகுண்டம் சென்ற குகையையும் சென்று சேவிக்கின்றனர். இத்தீர்த்தத்திற்கு அருகில் பிரம்மகுமாரிகளின் சிவலிங்க வடிவ கலைக்கூடம் அமைந்துள்ளது. திரிவேணி சங்கமம்: ஹிரண்யா மற்றும் கபிலா மற்றும் அந்தர் வாகினியாக சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமமாகும் திரிவேணி சங்கமமும் சோமநாதத்தில் தரிசிக்க வேண்டிய, புனித நீராட வேண்டிய இடம் ஆகும். குறிப்பாக அமாவாசை தினங்களில் சங்கமத்தில் நீராடி நீத்தார் கடன் செலுத்துவது மிகவும் சிறப்பானதாகும். இவ்வாறு சோமநாதத்தில் அருமையான தரிசனம் முடித்து கொடினார் (Kodinar) புறப்பட்டோம். சிறிது தூரத்தில் வண்டி பழுதடைந்து விட்டதால் அதை சரி செய்ய ஓட்டுனர் ஒரு கடையில் நிறுத்தினார். சுமார் ஒரு மணி நேரமாகும் என்பதால் ஒரு ஆட்டோ பிடித்து சோமநாதம் திரும்பி வந்து ஐயன் முன் அமர்ந்து திருமுறைகள் பாராயணம் செய்து கொண்டிருந்தோம். இவ்வாறு சென்றவர்களை திருப்பி அழைத்து தரிசனம் அருளினார் எம்பெருமான். பழுது சரியான பின் வண்டி திரும்பி வந்து அடியோங்களை அழைத்துக்கொண்டு அடுத்த துவாரகை நோக்கி விரைந்தது. இதுவரை அடியோங்கள் தரிசித்த துவாரகாதீஷ் துவாரகை என்னும் முக்கிய துவாரகை, பேட் துவாரகை, ருக்மிணி துவாரகை, கோமதி துவாரகை, மற்றும் சோமநாதத்தில் உள்ள முக்தி துவாரகை ஆகிய இவ்வைந்து தலங்கள் பஞ்ச துவாரகை என்று பலரால் கருதப்படுகின்றது. பொதுவாக பல அன்பர்கள் பஞ்ச துவாரகை யாத்திரையே மேற்கொள்கின்றனர். அடியோங்கள் நவதுவாரகை யாத்திரைக்காக திட்டமிட்டிருந்ததால் பயணத்தை தொடர்ந்தோம். மூல துவாரகை அமைந்துள்ள கொடினார் செல்லும் வழியில் அடியேனுடன் பணி புரியும் அன்பர் கூறிய பிராஞ்சி (Piranchi) என்னும் புண்ணிய தலத்தை அடைந்தோம். அத்தலத்தின் சிறப்பு என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் - 11 பிராஞ்சி ஆலமரம் [] சோமநாத்தில் இருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் குஜராத்தின் காசி என்றழைக்கப்படும் இப்புண்ணியத் தலம் அமைந்துள்ளது. "ஏக் பார் பிராஞ்சி சௌ பார் காசி" அதாவது ஒரு தடவை பிராஞ்சி செல்வது நூறு தடவை காசி செல்வதற்கு சமம்" என்பது இவர்களின் நம்பிக்கை. மஹாபாரதப் போருக்குக் பிறகு கௌரவர்களுக்கு பாண்டவர்கள் இத்தலத்தில்தான் நீத்தார் காரியம் செய்தனர். எனவே பித்ரு தர்ப்பணம் அளிப்பதற்கு உகந்த தலம். கயா செல்ல முடியாதவர்கள் இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அது கயா சென்றதற்கு சமம். கங்கை, யமுனை, காசி பிராஞ்சி ஆகியவை முக்தி தலங்கள் என்பது இவர்கள் ஐதீகம். இத்தலத்தின் சிறப்பு இதன் ஆலமரம். இம்மரத்தை **" மோக்ஷி பிப்லீ பிராஞ்சி “** என்று இவர்கள் அழைக்கின்றனர். ஒரு தடவை ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களைத் தேடிக்கொண்டு இத்தலம் வந்த போது இம்மரத்தினடியில் அமர்ந்து உத்தவருக்கு பாகவதத்தின் இரகசியார்த்தங்களை உபதேசித்தாராம். நாசிக்கின் பஞ்சவடி ஆலமரங்கள், அலகாபாத்தின் அக்ஷய வடம், பிருந்தாவனத்தின் பம்சி வடம், உஜ்ஜயினியின் சித்த வடம் மற்றும் கயாவின் போதிமரம் போன்று பிராஞ்சி வடத்திற்கும் தனி சிறப்பு உள்ளது. இந்த ஆலமரம்”மோக்ஷவாலி பீபல் பேட்" அதாவது முக்தியளிக்கும் ஆலமரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இங்கு நீத்தார் காரியம் செய்வதும் மிகவும் எளிது. ஒரு தாமிர சொம்பில் தண்ணீர் வைத்துக் கொண்டு சங்கல்பம் செய்து வைக்கின்றனர். பின்னர் அத்தண்ணீரை ஆலமரத்தின் மேல் ஊற்றச் சொல்கின்றனர். அவ்வளவுதான் முன்னோர்கள் அனைவரும் மோட்சம் அடைகின்றனர் என்பது ஐதீகம். நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது ஆலமரம். வண்டியில் இருந்து இறங்கியவுடன் பிராஞ்சி பிப்லா என்ற பெயர் பலகையை காணலாம். சுற்றிலும் சிங்கவால் குரங்குகள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தன. ஆலமரத்திலும் நிறைய குரங்குகள் தாவிக்கொண்டிருந்தன. மரத்தின் அடியில் ஒரு வயதான பண்டிட் நின்று கொண்டிருந்தார். அவர் அனைவரையும் அருகில் இருந்த ஒரு ஆற்றில் இருந்து சொம்பில் தண்ணீர் முகர்ந்து வரக் கூறினார். அனைவருக்கும் பொதுவாக சங்கல்பம் செய்து வைத்து நீரை மரத்தின் மேல் ஊற்றச் சொன்னார். அவ்வளவுதானாம். தட்சினையாக எதுவும் கேட்கவில்லை, ஆனால் தினமும் மதியம் அன்னதானம் நடந்து கொண்டிருக்கின்றது. அன்னதானத்திற்கு ஏதாவது நன்கொடை தாருங்கள் என்று மட்டுமே கேட்டார். விருப்பமுள்ளவர்கள் தங்களால் இயன்றதை அளித்தனர். [சரஸ்வதி ஆற்றில் ஆலயத்தின் பிரதிபிம்பம்] அருகில் இருந்த ஆறு சரஸ்வதி ஆறு, பூமிக்குள் சென்ற ஆறு பின்னர் இவ்விடம் மீண்டும் வெளியே வந்து தரையில் ஒடி சோமநாதத்தில் திரிவேணி சங்கமமாகி பின்னர் கடலில் கலக்கின்றது என்று கூறினார்கள். நீர் ஓடுவது போல தோன்றவில்லை, மாசடைந்து பாசி படர்ந்திருந்தது. அதன் மறு கரையில் ஒரு ஆலயவளாகம் உள்ளது. அதில் மூன்று சிவாலயங்கள் உள்ளன. பிரதான சிவாலயத்தில் நந்தியெம்பெருமான் தனி மண்டபத்தில் அருள் பாலிக்கின்றார். இவ்வாலயத்தின் விமானமும் சற்றி வித்தியாசமாக பிரமிட் வடிவத்தில் அடுக்கடுக்க இருந்தது. சோமநாத்தில் இருந்து காலையும் மாலையும் புறப்படும் சுற்றுலா பேருந்து இத்தலத்திற்கும் வந்து செல்கின்றது. பிராஞ்சி பிப்லாவை தரிசித்தபின் கொடினாருக்கு புறப்பட்டோம். செல்லும் வழியில் குஜராத்தைப் பற்றிய இன்னொரு தகவல் நிலக்கடலையைப் போலவே துவரம் பருப்பும் இம்மாநிலத்தில் அதிகம் விளைகின்றது. சாம்பாருக்காக நாம் பயன்படுத்தும் துவரம் பருப்பு இங்கிருந்தே அதிகம் வருகின்றது. கொடினாரில் ஒரு அன்பர் மூலதுவாரகையை எளிதாக தரிசிப்பதற்கு உதவினார் அவர் யார்? எவ்வாறு உதவினார் என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் – 12 கொடினார் மூலதுவாரகை [] நவதுவாரகைகள் எவை என்று கூகுளில் அடியேன் தேடிய போது மூலதுவாரகை கொடினாரின் அருகில் உள்ள அம்புஜா சிமெண்ட் தொழிற்சாலையின் அருகில் உள்ளது என்று படித்தேன். முன்னரே கூறியது போல குஜராத்தில் மூன்று தலங்கள் மூலதுவாரகை என்று போற்றப்படுகின்றன. துவாரகையில் இருந்து சோமநாத் வரும் வழியில் விசாவாடாவில் அடியோங்கள் ஒரு முக்தி துவாரகையை தரிசித்தோம். அடுத்து இம்மூலதுவாரகையை சேவித்தோம். அடியேனுடன் பணிபுரியும், இந்த யாத்திரைக்கு வேண்டிய பல உதவிகளை புரிந்த திரு.M.R படேல் அவர்களின் இளைய மகன் மற்றும் மருமகள், இந்த கொடினார் மூல துவாரகைக்கு அருகில் உள்ள அம்புஜா சிமென்ட் ஆலையில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுடைய தொலைப்பேசி எண்ணை அளித்திருந்தார் அவர், எனவே அவரை அழைத்து பேசினோம். அவர் எங்களை ஆலைக்கு அருகில் வந்தவுடன் அழையுங்கள் நானே உங்களை மூல துவாரகைக்கு அழைத்துச் செல்கின்றேன் என்று கூறினார். தற்போது அடியோங்கள் பயணம் செய்த பாதை மாநில நெடுஞ்சாலை, எனவே அதிக போக்குவரத்து இருக்கவில்லை. வழியில் பல வரத்துப்பறவைக் கூட்டங்களை கண்ணுற்றோம். இப்பகுதியில் அதிகம் மயில்களையும் கண்டோம். பிராஞ்சியில் இருந்து கொடினார் சுமார் 25 கி.மீ தூரத்தில் உள்ளது. எனவே ஒரு மணி நேரத்தில் கொடினாரின் அம்புஜா சிமென்ட் ஆலையை அடைந்தோம். திரு. பார்கவ் பட்டேல் அவர்கள் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். ஆலைக்கு எதிரே கடற்கரையில் சுமார் எட்டு கி.மீ தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவர்களின் கப்பல் தளம் இவ்வாலயம் அருகில் அமைந்துள்ளதால் இவர்களின் தனிப் பாதை வழியாக இவர் அடியோங்களை அழைத்துச் சென்றார். பொதுவாக 8 சக்கரங்கள் கொண்ட பெரிய சரக்கு லாரிகள் சிமென்ட் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்குமாம். எனவே பொது மக்களுக்கு இப்பாதையில் செல்ல அனுமதி இல்லை சுற்றுப்பாதையில் செல்லவேண்டும் தூரம் சற்று அதிகம் என்றார். இவர் முன்னரே இவ்வாறு செல்லப்போகிறோம் என்று கூறியிருந்ததால் பாதையில் சரக்கு லாரிகளிம் போக்குவரத்தை சிறிது நேரம் குறைத்திருந்தனர். ஆகவே அடியோங்கள் விரைவாக மூலதுவாரகையை அடைந்தோம். மூலத்துவாரகையில் தற்போது கர்ப்பகிரகம் மட்டும், அதுவும் பாழடைந்த நிலையில் எஞ்சியுள்ளது. விமானம் முற்றிலுமாக சிதைந்து விட்டது. சுற்றுப்பாதையும் சரியாக இல்லை. சபா மண்டபம் இருந்ததற்கான சின்னங்கள் உள்ளன. ஒரு பூசாரி இருக்கின்றார். அவர் தரிசனம் செய்து வைத்தார். கர்ப்பகிரகத்தின் உள்ளேயே செல்ல அனுமதி அளித்தார். உள்ளே சென்று சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தோம். மனதில் அப்படியொரு அமைதி. சதுர்புஜங்களில் கதை, சக்கரம், சங்கு, அட்ச மாலை தாங்கி எழிலாக கரு நீல வண்ணன், காயா மலர் வண்ணன், கார் முகில் போல் வண்ணன், கருங்கடல் முந்நீர் வண்ணன், கடல் வண்ணன், நீல முகில் வண்ணன், நீரார் முகில் வண்ணன் என்று பலவாறெல்லாம் ஆழ்வார்கள் அனுபவித்து பாடியபடி நீல வண்ணத்தில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் பல்லவம் திகழ் பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில் ஒல்லை வந்திறப்பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர் கோனை அருமையாக சேவித்தோம். மலர் மாலைகள் எதுவும் சூடியிருக்கவில்லை ஆனால் பட்டு பீதாம்பரத்தில் சேவை கிட்டியது. அடியோங்கள் எடுத்துச் சென்றிருந்த உலர் பழங்களை படைத்தோம். பூசாரி அவர்கள் எம்பெருமான் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டாம் என்று பணித்ததால் அப்படியே பராமரித்துக்கொண்டு வருகிறோம் என்று கூறினார். [கிருஷ்ண குண்ட்] மதுராவில் இருந்து துவாரகை நோக்கி வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் முதலில் இங்கு தங்கினாராம். அதற்கு பிறகு கடல் வழியாக துவாரகைக்கு சென்றார் எனவே இத்தலம் மூலதுவாரகை ஆனது என்றார். ஸ்ரீகிருஷ்ணர் இங்கு தங்கிய போது குளித்த இடம் அர்த்த சந்திர வடிவில் “கிருஷ்ண குண்ட்” என்று அழைக்கப்படுகின்றது என்று காண்பித்தார். ஆலயத்திற்கு பின் பக்கம் கடல் அவ்வாறே இருந்தது அருகில் உள்ள கடற்பகுதியில் அலைகள் ஆர்பரிக்க இக்குளப்பகுதியில் மட்டும் அலைகள் குறைவாக இருந்தது அந்தி சூரியன் மறையும் வேளை என்பதால் சூரியக் கதிர்கள் பொன் போல மின்ன அக்குளப்பகுதி பொற்குளம் போல காட்சி தந்தது. அன்று ஸ்ரீகிருஷ்ணன் நீராடிய போது இவ்வாறுதான் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக்கொண்டோம். அருகில் ஒரு பாழடைந்த வட்ட வடிவ கட்டிடம் உள்ளது. ஒரு காலத்தில் கலங்கரை விளக்கமாக இருந்திருக்கலாம். கடலுக்கடியில் அகழ்வாராய்ச்சியின் போது பழைய கல் நங்கூரம் கிட்டியுள்ளது. அங்குள்ள பூசாரிக்கு அம்புஜா நிறுவனத்தினரே சம்பளம் வழங்குகின்றனர். அவர் வசிப்பதற்கு ஒரு இல்லமும் கட்டிக்கொடுத்துள்ளனர். திரும்பி வரும் போது திரு. படேல் அவர்கள், பொதுவாக யாரும் இத்துவாரகைக்கு வருவதில்லை, அதுவும் தமிழர்களாகிய அடியோங்கள் இங்கு வந்தது ஆச்சரியமளிக்கின்றது என்றார். இவர் தென்காசியில் பள்ளிப் பாடம் பயின்றவர் என்பதால் தமிழிலேயே உரையாடினார். அருகில் உள்ள மீனவ கிராமத்தில் சில ஆலயங்கள் புதுப்பொலிவுடன் விளங்கின. செல்லும் வழியில் பல் வேறு விதமான பறவைக் கூட்டங்களைக் கண்ணுற்றோம். காலை வேளையில் கிராமத்தில் மீன் சந்தை சமயத்தில் இன்னும் அதிக அளவில் பறவைகளைக் காணலாம் என்றார். இவர்கள் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற சிமென்ட் அப்படியே பிரம்மாண்ட சரக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டு கப்பல்களில் இங்கு நிரப்பப்படுகின்றன. பின்னர் அக்கப்பல்கள் பெரிய துறைமுகங்களான கொச்சி, ஸ்ரீலங்கா, சூரத், கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு செல்கின்றன. அங்கு பின்னர் பைகளில் அடைக்கப்பட்டு பல் வேறு ஊர்களுக்கு சிமென்ட் மூட்டைகளாக அனுப்பப்படுகின்றது என்று கூறினார். கொடினார் மூலதுவாரகையில் குன்றால் மாரி தடுத்து உகந்த காளையை, கானார் கரி கொம்பது ஒசித்த களிற்றை, கோலால் நிரை மேய்த்த எங்கோவலர் கோவை, குன்றமெடுத்த பிரானை திவ்யமாக தரிசித்த பின் அம்புஜா சிமென்ட் ஆலைக்கு திரும்பி வந்தோம் அடியோங்களை தன் இல்லம் அழைத்துச் சென்று குஜராத்தின் பஃப்டாஸ் (Fafdas) என்னும் காரவகை மற்றும் தேநீரும் கொடுத்து உபசரித்தார். நமது ஓலை பக்கோடா போன்ற இத்தின்பண்டம் மிகவும் இலகுவாகவும் சுவையானதாகவும் இருக்கும். இதை இவர்கள் வேகவைத்து பொரித்த மிளகாயுடன் காலை/மாலைச் சிற்றுண்டியாக ஜிலேபியுடன் உண்பர். பயணத்தின் போது பயன்படும் என்று ஒரு பொட்டலமும் கட்டிக் கொடுத்தார். பின்னர் ஆலையின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இராதாகிருஷ்ணர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். அருமையான அமைதியான சுழலில் ஆலயம் அமைந்திருந்தது. குழலூதும் கண்ணன் இராதையுடன் மந்தகாச புன்னகையுடன் அருமையாக சேவை அளித்தான். அம்பாள் சன்னதியும் உள்ளது. ஆலயத்தை சுற்றிலும் மரங்கள், ஆரத்தி சேவித்தோம், பிரசாதம் சுவீகரித்துக் கொண்டு அவருக்கு அருமையாக தரிசனம் செய்து வைத்ததற்கு நன்றி கூறி புறப்பட்டோம். இவ்வாறு குஜராத் மாநிலத்தில் உள்ள எட்டு துவாரகைகள் மற்றும் இரு ஜோதிர் லிங்கங்களை அவனருளால் மூன்று நாட்களில் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அடுத்து இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாரா துவாரகை செல்ல அகமதாபாத் புறப்பட்டோம். வழியில் அன்றைய இரவு நமது பாரதத் திருநாட்டின் ஒரு தனித்தன்மை வாய்ந்த இடத்தில் தங்கினோம். அவ்விடம் என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் – 13 கிர் காடுகள் நமது பாரத நாட்டில் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகளில் மட்டுமே காட்டிற்கு அரசன் என்று அழைக்கப்படும் சிங்கங்கள் தற்போது உள்ளன என்பது தனி சிறப்பாகும் எனவே இந்த யாத்திரையின் போது கிர் சிங்கங்களின் சரணாலயத்திற்கு சென்றோம். உலகில் ஆசிய சிங்கங்கள் குஜராத் மாநிலத்தின் இக்கிர்காடுகளில் மட்டுமே உள்ளன. பாவ்நகர்(Bhavnagar) அருகே கடலின் உள்ளே அமைந்துள்ள ஒரு அற்புத ஆலயம் உள்ளது. கடல் உள் வாங்கும் சமயத்தில் அதாவது மதியம் சுமார் 3 மணியிலிருந்து இரவு சுமார் எட்டு மணி வரை மட்டுமே சென்று தரிசிக்கக்கூடிய சிவாலயம் அது. மற்ற நேரங்களில் கடல் நீரில் ஆலயம் முழுகி விடும். மஹாபாரதப் போரில் தங்கள் சகோதரர்களான கௌரவர்களைக் கொன்ற களங்கம் தீர பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த நிஷ்களங்கேஷ்வர் அக்கோவிலில் அருள் பாலிக்கின்றார். கொடினாரிலிருந்து அகமதாபாத் செல்லும் போது முடிந்தால் அக்கோவிலுக்கு செல்லலாம் என்று ஒரு திட்டம் வைத்திருந்தோம். அதை வண்டி ஓட்டுநரிடம் கூறிய போது அங்கு சென்று மறுபடியும் கிர் காடுகள் வருவதென்றால் பின் நோக்கி வர வேண்டும் மேலும் அகமதாபாத் செல்வதற்கு அது சுற்றுப் பாதை என்பதால் ஒரு முழு நாள் வேண்டும் என்றார். எனவே அத்திட்டத்தை கை விட்டு நேராக கிர் காடுகளுக்கு வண்டியை செலுத்துமாறு கூறினோம். காட்டுப்பகுதியில் நுழையும் முன்னர் வண்டியை நிறுத்தி இவ்வறிவுரைகளை வழங்கினர். சிங்கங்கள் வசிக்கும் காட்டுப் பகுதியில் நுழைய அனுமதி சீட்டு பெற வேண்டும். மிருகங்களின் நடமாட்டம் இருப்பதால் அதிக வேகமாக செல்ல வேண்டாம், ஒலிப்பான்களை பயன்படுத்த வேண்டாம் அமைதியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினர். மெதுவாக காட்டிற்குள் பயணம் செய்து காட்டிலாகா அலுவலத்தை அடைந்தோம். முன்னரே தங்கும் இடத்தை பதிவு செய்திருக்கவில்லையாதலால் அங்கு சென்றபின் காட்டின் உள்ளே உள்ள சுக்சாகர் கிர் ரிசார்ட் (Sukhsagar Gir Resort) என்ற விடுதியில் தங்கினோம். மறு நாள் காட்டிற்குள் சென்று மிருகங்களை பார்த்து வருவதற்காக ஜீப்பில் முன்பதிவு செய்ய காட்டிலாக்கா அலுவலகம் சென்றோம் ஆனால் சீட்டுகள் முழுவதும் முதலிலேயே பதிவாகி விட்டது இடம் காலி இல்லை என்றனர். தினமும் காலை 6 மணி, மதியம் 2:30 மணிக்கு ஒரு ஜீப்பில் அதிக பட்சம் ஆறு பேர் என்று மொத்தம் 15 பேருக்கு மட்டுமே காட்டுக்குள் செல்ல அனுமதி சீட்டு வழங்குகின்றனர். மொத்தம் 3 மணி நேரம் காட்டுக்குள் பயணம் செய்விக்கின்றனர். சிங்கங்கள் கண்ணில் பட்டாலும் படலாம் பல சமயம் கண்ணில் படாமலும் போகலாம். முதலிலேயே இணையதளம் மூலம் முன் பதிவு செய்திருக்க முடியும், அடியோங்கள் இணக்கமான யாத்திரையாக திட்டமிட்டதால் நாள் பிரகாரம் யாத்திரையை திட்டமிட்டிருக்கவில்லை எனவே முன் பதிவு செய்யவில்லை. காட்டிற்குள் செல்ல முடியாமல் போனதே என்று சிறிது ஏமாற்றமாக இருக்கின்றது என்று கூறினோம். அதற்கு அவர்கள் இங்கிருந்து 15 கி.மீ தூரத்தில் ஒரு இயற்கை விலங்கியல் பூங்கா உள்ளது அங்கு சென்றால் தாங்கள் சிங்கங்களை காண முடியும் என்று கூறினார்கள் எனவே மறு நாள் அந்த Interpretation Zone செல்லலாம் என்று முடிவு செய்து விடுதி திரும்பி கத்யவார் சமையலின் டோக்ளா (கடலை மாவில் நீராவியில் வேகவைக்கப்படும் ஒரு சிற்றுண்டி) சேவ் டமேடார் (தக்காளியும் ஓமப்பொடியும் சேர்ந்த ஒரு கறி) பேகன் பராத்தா (கத்திரிக்காய் கறி) பாஜ்ரா பாக்ரி (சோளத்தில் செய்யப்பட்ட ஒரு வடை) சுவைத்தோம் நன்றாக உறங்கினோம். குஜராத்தின் உணவு எல்லாவற்றிலும் இனிப்பு இருக்கும் ஆயினும் சுவையாக இருக்கும், யாத்திரை செல்லும் போது சுவைத்துப் பாருங்கள். [] மறு நாள் காலை எழுந்து காட்டின் இடையே கீசு, கீச்சென்று பறவைகள் பேசிய பேச்சரவத்தை கேட்டு இரசித்தோம். கதிரவன் குண திசையில் உதிக்கும் அழகை இரசித்தோம். பின்னர் சிங்கங்களை காண விலங்கியல் பூங்கா சென்றோம். ஒரு பேருந்து மூலம் அச்சரணாலயத்தை சுற்றிப் பார்க்க அழைத்து சென்றனர். கட்டணமாக ரூ 75/- வசூலித்தனர். பாதையின் இரு புறமும் புற்கள் எரிக்கப் பட்டிருந்ததை பார்த்தோம். மிருகங்களை தெளிவாகப் பார்க்க இவ்வாறு செய்திருக்கலாம் என்று நினைத்தோம். வண்டி ஓட்டுனரிடம் கேட்ட போது இல்லை, புற்கள் காய்ந்து விட்டதால் பேருந்தில் செல்பவர்கள் பீடித்துண்டு போன்றவற்றை வீசினால் தீப்பிடித்து விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க இவ்வாறு சரணாலய அதிகாரிகளே சுமார் 10 அடி தூரத்திற்கு தீயிடுவதாக கூறினார். சுமார் அரை மணி நேரம் பயணம் செய்திருப்போம் மான்கள் மட்டுமே கண்ணில் பட்டன, புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக புல் மேய்ந்து கொண்டிருந்தன. இரண்டு நீல்காய் ஆண் மான்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. வண்டி ஓட்டுநர் செல் பேசி மூலம் மற்ற வண்டி ஒட்டுநர்களிடம் பேசி எப்பகுதியில் சிங்கங்கள் உள்ளன என்று விசாரித்து அப்பக்கம் சென்றார் ஒரு மரத்தின் நிழலில் இரு சிங்கங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிந்தன. இரண்டும் பெண் சிங்கங்கள் ஒன்றுக்கு மூன்று குட்டிகள், இன்னொன்றுக்கு இரண்டு குட்டிகள் உள்ளன என்றார். சிறிது நேரம் சென்ற பின் அவற்றுள் ஒன்று எழுந்து கம்பீரமாக நடந்து வர ஆரம்பித்தது. வண்டியில் இருந்த அனைவரும் ஆர்வத்துடன் தங்களுடைய புகைப்படக் கருவியை அப்பகுதிக்கு திருப்பி அதை புகைப்படம் பிடிக்க ஆரம்பித்தோம். வண்டு ஓட்டுனர் சத்தம் ஏற்படுத்தாமல் இருங்கள் இல்லாவிட்டால் சிங்கம் திரும்பிச் சென்று விட வாய்ப்புள்ளது என்றார். எனவே அனைவரும் அமைதியாக புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டிருந்தோம். கம்பீரமாக நடந்து வந்த சிங்கத்தைப் பார்த்த போது ஆண்டாள் நாச்சியார் தனது திருப்பாவையில் பாடிய மாரிமலை முழஞ்சில் மன்னிகிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! உன் கோயில்நின்று இங்ஙனேபோந்தருளி கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த காரியமாராய்ந்தரு ளேலேலோரெம்பாவாய். (தி.பா - 23) என்னும் பாசுரம் சேவித்தோம். சிங்கம் வண்டி நின்றிருந்த பாதையை கடந்து அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் சென்று நீர் அருந்த ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் இன்னுமொரு சிங்கமும் அதனுடன் சேர்ந்து கொண்டது. வண்டி ஒட்டுநரிடம் விசாரித்த போது இது ஒரு விலங்கியல் பூங்காவில் இரண்டு ஆண் சிங்கங்கள், இரண்டு பெண் சிங்கங்கள் குட்டிகளுடன் உள்ளன. இவற்றுடன் சிறுத்தைப் புலிகளும் உள்ளன இரவில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் இவை பகலில் சுதந்திரமாகச் சுற்ற அனுமதிக்கப்படுகின்றன. பசி எடுக்கும் போது இவை கூண்டிற்கு வந்து விடும். எனவே இப்பூங்காவில் சுற்றுலா பயணிகள் சிங்கங்களை காண வாய்ப்பு அதிகம் என்றார். மையத்தில் இருந்த கூண்டுகளுக்கு அருகில் அழைத்துச் சென்றார் சிங்கங்களுடன் ஒரு சிறுத்தைப் புலியும் இருந்தது. புள்ளி மான்கள் மற்றும் கடாமான்கள் மயில்கள், குயில்கள் மற்றும் பல விதப் பறவைகளை இவ்விலங்கியல் பூங்காவில் கண்ணுற்றோம். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ என்பது காட்டில் சென்று சிங்கங்களை பார்க்க முடியவில்லை என்றாலும் வெட்டவெளியில் சிங்கங்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அச்சிங்கங்களைப் பார்த்தபோது அந்தியம் போதிலரியுருவாகி அரியையழித்தவனை பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே. என்று சிங்கப்பெருமானை நினைத்து வணங்கினோம். பின்னர் பூங்காவின் விற்பனை நிலையம் சென்றோம் தேன், மரத்தால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், சிங்கப் படத்துடன் கூடிய பனியன்கள், தேநீர் கோப்பைகள், காடுகளைப் பற்றிய புத்தகங்கள் ஆகியவை விற்பனைக்கு உள்ளன. அருகில் இரண்டு சந்தன மரங்கள் இருந்தன. இவ்வாறு சிங்கங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அகமதாபாத் நோக்கி புறப்பட்டோம். குரங்குகள் கண்ணில் படவில்லை. இலந்தை மரங்கள், முட்புதர்கள் அதிகமாகக் காணக் கிட்டின. நெடிதுயர்ந்த புல் காய்ந்து கிடந்தது. காட்டுப்பகுதியைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையை அடைந்தோம். அகமதாபாத் நோக்கி பயணம் செய்தோம். வழியில் ஜெத்பூர் (Jetpur) என்ற ஊரில் பருத்தி சேலைகள் கிடைக்கும் என்று வண்டி ஓட்டுனர் ஒரு கடையில் நிறுத்தினார். இப்பகுதி கரிசல் மண் பூமி என்பதால் பருத்தி அருமையாக விளைகின்றது. எனவே இவ்வூரில் வீட்டுக்கு வீடு சேலை நெய்யும் தறிகள் மற்றும் ஆலைகள் அதிகம் என்பதால் சேலை விற்பனை நிலையங்களும் அதிகமாக உள்ளன. அங்கு இல்லத்தில் உள்ளவர்களுக்காக சில சேலைகளை தேர்வு செய்து வாங்கிக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். மாலை கோண்டால் (Gondal) என்ற ஊரில் உள்ள சுவாமி நாராயண் ஆலயத்திற்கு சென்றோம். தலைநகர் டில்லியில் உள்ள அழகிய அக்ஷார்தாம் என்ற ஆலயத்தை அனைவரும் அறிவோமல்லவா? அந்த சுவாமி நாராயண் அவர்கள் இங்கு குஜராத்தில் மிகவும் பிரசித்தம். இவரை  சகஜானந்த் சுவாமி  என்ற பெயரிலும் அழைப்பர். இந்தியாவின் உத்த்ரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சப்பையா என்னும் ஊரில் 1781 ஆம் ஆண்டில் இராமநவமியன்று பிறந்தார். இவரது இயற்பெயர் கன்சியாம் பாண்டே, இவரது 11 ஆவது வயதில் இந்தியாவின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய யாத்திரை ஒன்றை ஆரம்பித்தார். ஏழு ஆண்டுகள் எடுத்த இந்த யாத்திரையின் போது இவர் நீலகண்ட வர்ணி என்னும் பெயரைப் பெற்றார். இந்து மெய்யியலின் முக்கியமான பிரிவுகளான வேதாந்தம், சாங்கியம், யோகம், பஞ்சராத்திரம் ஆகியவற்றைச் சரியாக விளங்கிக்கொண்டு செயற்படும் ஆசிரமம் அல்லது துறவி மடங்களைக் கண்டறிவதே இவரது நோக்கமாக இருந்தது. இத்தகைய ஆசிரமங்களைக் கண்டறிவதற்காக பின்வரும் ஐந்து கேள்விகளைக் கேட்டார். சீவன்  என்பது என்ன? ஈஸ்வரன் என்பது என்ன? மாயை என்பது என்ன? ஆத்மா என்பது என்ன? பரப்பிரமம் என்பது என்ன? தனது யாத்திரையின்போது, கோபால் யோகி என்னும் வயதான யோகி ஒருவரிடம் ஒன்பது மாதங்களில் அட்டாங்க யோகத்தை கற்றார்.  நேபாளத்தில் மன்னர் ராணா பகதூர் ஷாவைச் சந்தித்த நீலகண்டர் மன்னருக்கிருந்த தீர்க்க முடியாத வயிற்று நோயைக் குணப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. நீலகண்டரின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னர் தான் சிறையில் இட்டிருந்த துறவிகள் பலரை விடுவித்தாராம். அப்போது அவர் முக்திநாத்தில் சில காலம் தங்கியிருந்தார்.  நீலகண்டர் பூரியில் உள்ள ஜகந்நாதர் ஆலயம், பத்ரிநாத், இராமேசுவரம், நாசிக், துவாரகை, பண்டரிபுரம் ஆகிய ஆலயங்களுக்கும் சென்றார். 1799ல் தனது ஏழு ஆண்டு யாத்திரையை நீலகண்டர் குஜராத் மாநிலத்தின் ஜூனாகாத் மாவட்டத்திலுள்ள லோஜ் என்னும் ஊரில் முடித்துக்கொண்டார். இவ்வூரில், அவர் இராமானந்த சுவாமியின் மூத்த சிடர்களில் ஒருவரான முக்தானந்த சுவாமியைச் சந்தித்தார். அவர் நீலகண்டருடைய ஐந்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். எனவே இராமானந்த சுவாமியைச் சந்திப்பதற்காக அங்கேயே தங்கியிருந்த நீலகண்டர் சில மாதங்களுக்குப் பின்னர் இராமானந்த சுவாமியைச் சந்தித்தார். 1800ல் சுவாமி இராமானந்தர் இவரை உத்தவ் சம்பிரதாயம் என்னும் அமைப்பினுள் ஏற்றுக்கொண்டார். இங்கே அவருக்கு சகஜானந்த் சுவாமி என்னும் பெயர் வழங்கப்பட்டது. இவர் கடவுளின் அவதாரம், முக்தியளிக்க வல்லவர் என்பதை உணர்ந்த இவரது குரு இறக்குமுன், உத்தவ் சம்பிரதாயத்தின் தலைமைப் பொறுப்பை இவருக்கு அளித்தார். சகஜானந்த் சுவாமி கூட்டமொன்றைக் கூட்டி சுவாமிநாராயண் மந்திரத்தைக் கற்பித்தார். இதிலிருந்து இவர் சுவாமிநாராயண் என்னும் பெயர் பெற்றார். உத்தவ் சம்பிரதாயமும் சுவாமிநாராயண் சம்பிரதாயம் என்ற பெயரைப் பெற்றது. இவரது பக்தர்கள் இவரை நரநாராயணராக, தெய்வமாகவே வணங்குகின்றனர். இச்சுவாமியின் சீடர்கள் உலகம் முழுவதும் பரவியிருந்தாலும் அதிகமான பக்தர்கள் குஜராத்தில் உள்ளனர். இவர்களும் வைணவர்கள், விசிஷ்டாத்வத சித்தாந்தத்தை பின் பற்றுபவர்கள். தர்மம், சத்யம், அஹிம்சை, பிரம்மச்சரியத்தை கடுமையாக கடைப்பிடிப்பவர்கள். ஸ்ரீகிருஷ்ணருக்கு தூய மனதுடன் சேவை செய்வதால் முக்தி அடையலாம் என்பது இவர்களது கொள்கை. பொதுவாகவே இவர்கள் ஆலயங்கள் பிரம்மாண்டமாக நுணுக்கமான கற்சிற்பங்களைக் கொண்ட ஆலயங்களாகவே இருக்கும் இவ்வாலயமும் அவ்வாறே அருமையாக அமைந்திருந்தது. பின்னர் ராஜ்கோட் வழியாக அகமதாபாத் வந்தடைந்த போது இரவாகிவிட்டது. இன்றைய தினம் மிகவும் நீண்ட பயணமாக அமைந்தது. வண்டி ஒட்டுனர் இராஜஸ்தான் செல்ல ஏதுவாக அகமதாபாதில் நகருக்குள் செல்லாமல் வெளியே வட்டப்பாதையில் (Ringroad), மோகன் இன் (Mohan Inn) என்ற தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார், இரவு அங்கு தங்கினோம். பொதுவாக வெளி மாநிலங்களில் பயணம் செய்யும் போது அங்கங்கு கிடைக்கும் உணவிற்கு நம்மை ஒப்புக்கொடுத்து விடுவது அவசியம், இவ்வாறே இது வரை செய்தோம் ஆனால் இன்று எதிரே ஒரு உடுப்பி உணவகம் இருந்ததை கவனித்தோம் எனவே அங்கு சென்று தோசை சாப்பிட்டோம். மறு நாள் இராஜஸ்தானத்தில் யாத்திரை எவ்வாறு அமைந்தது எந்தெந்த தலங்களையெல்லாம் சேவிக்க முடிந்தது என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் -14 உதயபுரி நவதுவாரகைகளில் ஸ்ரீநாத்ஜீ துவாரகை இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளதால் குஜராத் பகுதியின் துவாரகைகளை திவ்யமாக தரிசனம் செய்த பிறகு அகமதபாத் திரும்பி வந்து நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே என்று நம்மாழ்வார் அறிவுறுத்தியபடி ஸ்ரீநாத்ஜீயை சேவித்து அவன் நாமம் பாட நாத்துவாராவிற்காக அதிகாலையிலேயே புறப்பட்டோம். வழியில் இராஜஸ்தானத்தின் ஒரு பெரிய நகரான உதயபுரி (Udaipur) வருவதால் அந்நகரில் சிறிது நேரம் செலவிடலாம் என்று முடிவு செய்து, உதய்ப்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்று வண்டி ஓட்டுனரிடம் விசாரித்தோம், அவரும் எனக்குத் தெரிந்த ஒரு வழிகாட்டி உள்ளார் அவரை அழைக்கின்றேன் அவர் உதய்ப்பூரை சுற்றிப் பார்ப்பதற்கு உதவுவார் அவருடைய கட்டணம் ரூ.500/- ஆகும் என்றார். சரி அவரை அழையுங்கள் என்று கூறினோம். அகமதாபாத்திலிருந்து உதய்ப்பூர் 250 கி.மீ தூரம், எனவே அடியோங்கள் உதயபுரியை நெருங்கும் போது சுமார் 10:30 மணி ஆகிவிட்டது. இடையே வழிகாட்டி எங்களுடன் வந்து இணைந்து கொண்டார். இராஜஸ்தான் மாநிலம் வீரத்திற்கும், கற்புக்கரசிகளுக்கும், கோட்டை கொத்தளங்களுக்கும், பிரம்மாண்டமான கலை அம்சம் நிறைந்த அரண்மனைகளுக்கும், அழகிய ஏரிகளுக்கும் பெயர் போனது. இம்மாநிலம் இரண்டு பகுதிகளாக அதாவது பாலைவனப்பகுதி மார்வார் என்றும் ஆரவல்லி மலை மற்றும் அதனுடன் இனைந்த பகுதி மேவார் என்றும் சரித்திர காலத்தில் அறியப்பட்டிருந்தது. அடியோங்கள் யாத்திரை சென்ற பகுதி மேவார் ஆகும். 1559ல் மஹா ராணா உதய் சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உதயபுரி நகரிலும், பல அரண்மனைகள், மற்றும் ஏரிகள் அமைந்துள்ளன. ஃபதே சாகர் ஏரி, பிசோலா ஏரி, ஸ்வருப் சாகர் ஏரி, ரங்சாகர் ஏரி, மற்றும் தூர் சாகர் என்னும் ஐந்து ஏரிகள் இந்நகரில் உள்ளன. எனவே இந்நகரம் கிழக்கத்திய வெனிஸ் நகரம் என்றும் ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஒருகாலத்தில் மேவார் பகுதியின் தலைநகராக விளங்கியுள்ளது இந்நகரம். இந்நகரம் ஒரு இரமணீயமான இடம். இங்கு இறைவன் படைத்த இயற்கை எழிலும், மனிதன் படைத்த அற்புத மாளிகைகளும் கரம் கோர்த்து உலவுகின்றன. ஊரைச்சுற்றி மலைகளும் அவற்றின் இடையில் உள்ள காடுகளும் இயற்கை அழகை இந்நகருக்கு அளிக்கின்றன. எங்கெங்கு காணினும் வெள்ளை பளிங்குக் கற்களால் ஆன அரண்மணைகள், ஏரிகள் அவற்றின் இடையே வளைந்து வளைந்து செல்லும் பாதைகள், ஏரியின் மையத்திலும் அலங்காரமான மாளிகைகள் இவ்வளவு கோலாகலத்துடன் அமைந்த நகரத்தை இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது. உதயபுரி இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. பழமையான நகரம் மலைச்சரிவில் உள்ளது. அதைச்சுற்றி பெரிய மதிற்சுவர் உள்ளது. அதில் பத்து வாயில்கள் உள்ளன. சமவெளியில் புதிய நகரம் விரிவாக அமைந்துள்ளது. மஹாராணாவின் அரண்மனை, சோட்டி சித்ரசாலை, மானக் மஹால், மோத்தி மஹால், பாரி மஹால் என்று பல மாளிகைகள் உதயபுரியில் அமைந்துள்ளன. அனைத்தும் இப்பகுதியில் கிடைக்கும் வெள்ளை பளிங்குக்கல் கட்டிடங்கள், கண்ணாடிகள் பதித்து அற்புதமாக அலங்காரம் செய்துள்ளனர். பல இடங்களில் நமது தேசியப்பறவையாம் மயில் தோகை விரித்து ஆடும் அழகை வர்ணக் கண்ணாடிகள் மூலம் அமைத்துக் காட்டியுள்ளனர். சித்திரங்களுக்கும் குறைவில்லை. பிச்சோலா ஏரியின் மையத்தில் அமைந்துள்ள இரண்டு அரண்மனைகள் ஜக் மந்திர் மற்றும் ஜக்நிவாஸ் ஆகும். மஹாவிஷ்ணுவின் ஜகதீசர் ஆலயத்தையும் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட சமணக்கோயில்களையும் உதயபுரியில் தரிசிக்கலாம். இவ்வாறு பல அரண்மனைகள், ஏரிகள் அவற்றில் படகுப்பயணம், பூங்காக்கள் என்று உதய்ப்பூரில் சுற்றிப் பார்க்க அநேக இடங்கள் உள்ளன. இரு நாட்கள் தங்கி சுற்றிப் நிதானமாகச் சுற்றிப் பார்க்கலாம் கலைப் பொருட்களை வாங்கலாம். ஆனால் அடியோங்களுக்கு விஸ்தாரமாக உதயப்பூரை சுற்றி பார்க்க சமயம் இருக்கவில்லை, மலை மேல் உள்ள ஒரு அரண்மனைக்கு மட்டும் சென்றோம். பறவைப்பார்வையில் உதயப்பூர் நகரை இரசித்தோம். ஃபதே சாகர் ஏரி (Fateh Sagar Lake) இந்திய வரை படம் போல காட்சியளித்ததை கண்டு களித்தோம். பருவக்காற்று அரண்மனை (Monsoon Palace) எனும் அவ்வரண்மனையில் அக்காலத்தில் மழைக் காலத்தில் பெய்யும் தண்ணீரை சேகரித்து, சேமித்து வைத்து வருடம் முழுவதும் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை பார்த்தபோது எவ்வளவு தொழில்நுட்ப அறிவு அக்காலத்திலேயே இருந்தது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அவ்வரண்மனையை சஜ்ஜன் சிங் மஹாராஜா தனது 21 இராணிகளுக்காக கட்டிய உல்லாச மாளிகை என்றார் வழிகாட்டி. பளிங்குக்கல் கொண்டு இழைத்திருந்தனர். அரண்மனையை முழுதுமாக சுற்றிப்பார்க்க சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. பின்னர் வழிகாட்டி கலைப் பொருட்களை விற்கும் கடைக்கு அழைத்துச் சென்றார். நினைவுப் பரிசாக சில கலைப் பொருட்களை வாங்கினோம். பின்னர் வண்டி ஓட்டுனர். நாம் வாங்கும் பொருட்களின் மதிப்பிற்கேற்ப வழிகாட்டிகளுக்கு கடைக்காரர் சன்மானம் வழங்குவார் என்று கூறினார். இதற்குள் மதியம் ஆகிவிட்டதால் ஒரு நல்ல உணவகத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறினோம். நடராஜ் என்றொரு குஜராத்தி உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அருமையான குஜராத்தி உணவை சுவைத்தோம். குஜராத்தில் கிச்சடி எனப்படும் பருப்பு சாதம் மற்றும் கடி எனப்படும் மோர் குழம்பு அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவு வகை அது இவ்வுணவகத்தில் அருமையாக கிட்டியது சுவைத்து மகிழ்ந்தோம். கல்லாவில் ஆடல் வல்லான் நடராஜப் பெருமானின் ஒரு சிலையும் இருந்தது. கடைக்காரரிடம் நடராஜர் ஆலயம் சென்றிருக்கிறீர்களா? என்று வினவினோம். அவர் இல்லை, எனது தாத்தா மதராஸில் நடராஜர் ஆலயம் சென்று வந்த பின் சிறு கடையாக ஆரம்பித்து இப்போது இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கின்றோம். சமயம் கிடைக்கும் போது செல்கிறேன் என்றார். சிதம்பரம் என்ற ஊரில் நடராஜர் அருள் பாலிக்கின்றார். சமயம் கிடைக்கும் போது சென்று தரிசித்து விட்டு வாருங்கள் என்று கூறிவிட்டு உதயப்பூரை விடுத்து அடுத்த துவாரகையான ஸ்ரீநாத்ஜீ துவாரகைக்காக புறப்பட்டோம். வண்டி ஓட்டுனர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகுமென்றார். வழியில் ஒரே கல்லால் ஆன பிரம்மாண்டமான சிவலிங்கம் அமைந்துள்ள ஏக்லிங்ஜீ (Eklingji) என்ற ஊரில் உள்ள சிவாலயத்தை தரிசிக்கலாம் என்று வண்டியை நிறுத்தினோம். இச்சிவபெருமான் மகாராணக்களின் வழிபடு தெய்வம். இக்கோயில் பல தடவை முகம்மதிய படையெடுப்பில் சேதம் அடைந்திருக்கின்றது. பிற்காலத்தில் மகாராண பாப்பாராவ் என்பவரால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இரு தளமாக கோவில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேலே உயர்ந்த சிகரம் அமைந்துள்ளது. கருப்பு பளிங்குக் கல்லால ஆன சிவலிங்கப்பெருமான் சுமார் 50 அடி உயர சதுர்முக லிங்கமாக அருள் பாலிக்கின்றார். அவருடன் மலையன்னை பார்வதி மற்றும் விநாயகர் மற்றும் முருகனும் எழுந்தருளியுள்ளனர். கறுப்பு சலவைக் கல்லில் எழிலாக ஐயன் தரிசனம் அளிக்கிறார். நாள் முழுவதும் பூசைகள் நடைபெற்றாலும் இரவு ஆரத்தி தரிசிப்பது சிறப்பு. அடியோங்கள் சென்ற சமயம் ஆலயம் மூடியிருந்ததால் ஆலயத்தின் இரு புறமும் அமைந்துள்ள அருமையான வேலைப்பாடுகள் கொண்ட சிலைகளை மட்டும் தரிசித்து விட்டு பயணத்தை தொடர்ந்தோம். நாத்துவாராவை (Nathdwara) அடைந்தபோது அந்தி சாய்ந்து விட்டது. முதலில் இரவு தங்குவதற்கான அறைகளை பெற்று கொண்டோம். காலையிலிருந்து பயணம் செய்த களைப்புத்தீர சிறிது நேரம் ஒய்வெடுத்துக்கொண்டு, சிரமபரிகாரம் முடித்து பின்னர் ஸ்ரீநாதரை சேவிக்கச் சென்றோம். இத்துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்த அனுபவம் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் -15 ஸ்ரீநாத்ஜீ துவாரகை [மஹாபிரபு ஜீ(வல்லபாச்சாரியார்)- ஸ்ரீநாத்ஜீ- யமுனாஜீ] நவதுவாரகை யாத்திரையின் நிறைவுத் தலமான இராஜஸ்தானத்தில் உள்ள நாத்துவாரா வந்து சேர்ந்தோம். இத்தலம் ஆரவல்லி மலை அடிவாரத்தில், பானஸ் நதியின் கரையில், உதயப்பூரிலிருந்து சுமார் 48 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் சிறப்புகள் என்னவென்று அடியோங்கள் முதலில் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. அறிந்து கொண்ட பின் இத்தலத்தின் மகிமை புரிந்தது. ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் பின்பற்றும் தென்னிந்திய வைணவர்களான நமக்கு திருவரங்கமும், திருமலையும் எவ்வாறு புனிதமானதோ அது போல குஜராத், இராஜஸ்தான் மற்றும் கிழக்கு உத்திரபிரதேச வைணவர்களுக்கு, வல்லாபாச்சாரியாரின் புஷ்டி மார்க்கத்தை பின்பற்றுபவர்களுக்கு இத்தலம் திருவரங்கம், திருமலை என்று உணர்ந்தோம். பாரத தேசமெங்கும் அடியோங்கள் அறிந்திருந்த ஆச்சார்யர்களை தவிர இன்னும் பலர் தோன்றி மக்களை நன்னெறிப் படுத்தியுள்ளனர் என்பது புரிந்தது. இத்தலத்திற்கு எங்களை அழைத்து தரிசனம் தந்த ஸ்ரீகிருஷ்ணருக்கு நன்றியும் கூறினோம். வாருங்கள் புஷ்டி மார்க்கத்தில் இத்தலம் எவ்வாறு முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்பதைக் காணலாம். வண்டி ஓட்டுனர் ஆலயத்தின் தங்கும் அறைகள் கிட்டும் மைய முன்பதிவு அலுவலகம் சென்று முதலில் அறைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார். அது போலவே முதலில் அறைகளை பெற்றோம். அறைகளுக்கான பூட்டுகளை தாங்களே வாங்கிப் பூட்டிக்கொள்ள வேண்டும் என்று கூறியது புதுமையாக இருந்தது. அறைகளில் காலையில் சுடு தண்ணீர் வருமா? என்று கேட்டோம். அறைகளில் அவ்வசதி இல்லை ஆனால் அதிகாலையில் சிலர் வாளிகளில் கொண்டு வந்து விற்பார்கள் தாங்கள் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். புஷ்டி மார்கத்தின் முதன்மைத்தலம் என்பதால் தினந்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால் அவர்கள் பல வசதிகள் செய்துள்ளனர், எனவே அறை தேவஸ்தானத்தின் மூலமாகவே எளிதாக கிட்டியது. குறைந்த வாடகைதான். https://www.nathdwaratemple.org என்ற இணைய தளத்தின் மூலம் முன் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. [மங்களா – காலையில் துயில் எழுப்பும் திருக்கோலம்] முதலில் அறைகளுக்கு சென்று சிரமபரிகாரம் செய்து கொண்டு ஆலயத்திற்கு சென்றோம். பொதுவாகவே இப்பகுதி ஆலயங்களில் நமது ஆலயங்களைப் போல நெடிதுயர்ந்த கோபுரங்கள் கிடையாது. கர்ப்பகிரக விமானம் மட்டுமே உயரமாக இருக்கும். இக்கோவிலில் அதுவும் கூட இருக்கவில்லை. விமானம் சிறியதாகவே இருந்தது. அடியோங்கள் சென்ற சமயம் நடை சார்த்தப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு ஆவலுடன் நேய நிலைக் கதவம் எப்போது நீக்குவர் என்று காத்துக் கொண்டிருந்தனர். பல பக்தர்கள் கிருஷ்ண கண்ணையா லால் கீ ஜெய் ! கோவர்த்தன கிரி தாரி கீ ஜெய் ! மோர் முகுட் வாலே கீ ஜெய் ! அம்பே மஹாராணி கீ ஜெய்! ஆஜ் கீ ஆனந்த் கீ ஜெய்! என்ற கோஷத்துடன் பக்திப் பெருக்குடன் கூறிக்கொண்டு நடை மேல் விழி வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தனர். முதலில் இவர்கள் கூறிக்கொண்டிருந்த ஜெய் கோஷத்தைக் கேட்டவுடன் மனதில் ஒரு ஆனந்தம் தோன்றியது. ஏனென்றால் 2005ல் அடியேன் திருக்கயிலை யாத்திரை செய்த போது எமது குழுவில் இருந்த ஒரு குஜராத்தி அன்பர் இந்த ஜெய் கோஷத்தை விடாமல் கூறிக் கொண்டிருப்பார், அடியோங்களும் அவருடன் சேர்ந்து இக்கோஷத்தை கூறியுள்ளோம். அவ்வற்புத யாத்திரையின் நினைவுகள் மனதில் நிழலாடியது. அடியோங்களும் அவ்வடியார்கள் கூட்டத்துடன் இணைந்து கொண்டு காத்திருந்தோம். இவ்வாறு ஸ்ரீநாத்ஜீயின் தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் போது அவர் இத்தலத்தில் வந்து கோவில் கொண்ட வரலாற்றைப் பார்த்துவிடலாமா? அன்பர்களே. குன்றால் குளிர்மாரி தடுத்து உகந்தானே! குன்றமேந்தி குளிர் மழை காத்தவன், குன்றததனால் மழைகாத்த குடமாடு கூத்தன், குன்றமெடுத்து மழை தடுத்து இளையரொடும் மன்றில் குரவை பிணைந்த மால், குன்றினால் குடை கவித்ததும், குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி! என்று பலவாறு ஆழ்வார்கள் மங்கலாசாசனம் செய்த கோவர்த்தன கிரிதாரியாக, 7 வயது பாலகனாக நின்ற கோலத்தில் இத்தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சேவை சாதிக்கின்றார். இவர் கோபால் டாகூர்ஜீ, கோவர்த்தன்நாத்ஜீ, என்றும் அழைக்கப்படுகிறார். [ச்ருங்கார்- யசோதை நீராட்டிய பின் அலங்காரம் செய்த திருக்கோலம்] இவர் ஒரு சுயம்பு மூர்த்தி. 14ம் நூற்றாண்டில் விருந்தானத்திற்கு அருகில் உள்ள கோவர்த்தன் மலை மேல் முதலில் சுயம்புவாகத் தோன்றினார். முதலில் இடது புஜங்கள் மட்டும் கோவர்த்தனகிரிக்கு அருகில் உள்ள ஜதிபுரம் என்ற கிராமத்தில் தோன்றின அங்கிருந்த ஆதிவாசிகள் மாதவேந்திர பூரி என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் கோபால் என்று அவரை அப்போது பூசித்து வந்தனர். தேவ அரசனான இந்திரன் ஆணவத்தை அடக்கிய கோலம் என்பதால் தேவதமன் என்றும் அழைக்கப்பட்டார். அறுபது வருடம் கழித்து ஒரு காராம் பசு ஒன்று பாலைச் சொரிந்து அவரது திருமுகாரவிந்தத்தை அடையாளம் காட்டியது. பின்னர் இத்திருமேனி கோவர்த்தனகிரியின் உச்சியில் கொண்டு சென்று வழிபாடு தொடர்ந்தது. பின்னர் 1549ம் ஆண்டு வல்லபாச்சாரியார் திக்விஜயம் செய்து கொண்டிருந்த போது ஸ்ரீநாத்ஜீ தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளப் போவதாக உணர்த்த அவரும் தனது திக்விஜயத்தை இடையில் நிறைவு செய்து கொண்டு கோவர்த்தனகிரி அடைந்தார். ஸ்ரீநாத்ஜீயின் ஆணையின் படி ஒரு ஓலைக் குடிசை அமைத்து அதில் சுவாமியை எழுந்தருளச் செய்து பூசைக்கு ஏற்பாடு செய்தார். பூஜா விதிகளையும் வகுத்தார். அவருக்குப்பின் அவரது இரண்டாவது புதல்வர் விட்டல்ஜீ பூஜையை தொடர்ந்தார். 1672 அவுரங்கஜீப் இவரை கைபற்ற முயன்ற போது இவரை பாதுகாத்து யமுனை வழியாக ஆக்ராவில் வைத்து ஆறு மாதம் பூசித்தனர். அங்கிருந்து பின்னர் ஒரு இரதத்தில் பின்னர் தெற்கு நோக்கி வரும் போது பல அரசர்கள் இவரை வரவேற்க தயாராக இருக்கவில்லை மேவார் பகுதியின் மகாராணா ராஜ்சிங் இவரை வரவேற்று தன் இராச்சியத்தில் கோவில் கொண்டு அருளுமாறு வேண்டினார், சின்ஹாத் என்ற கிராமத்தை அடைந்த போது இரதத்தின் சக்கரம் பூமியில் புதையுண்டது. எவ்வளவு முயற்சி செய்தும் சக்கரத்தை விடுவிக்க முடியவில்லை. ஸ்ரீநாத்ஜீ இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்து இக்கிராமத்தில் கோவில் அமைத்தனர். ஸ்ரீநாத்ஜீ கோவில் கொண்டதால் பின்னர் இவ்வூர் நாத்துவார் அதாவது ஸ்ரீநாதரின் வாயில் என்றழைக்கப்படலானது. பின்னர் இந்தூரின் ஹோல்கர்களாலும், பிண்டார்களாலும் மேவார் தாக்கப்பட்ட போது இவரை உதயப்பூருக்கும், கசியார் என்ற ஊருக்கும் எடுத்துச்சென்று காத்தனர். போர் முடிந்த பின் நாத்துவாரா திரும்பினார். பின்னர் ஒரு சமயம் இவர் கோவர்த்தனகிரிக்கு திரும்பி செல்வார் என்பது ஐதீகம். [க்வால் – மாடு கன்றுகளை மேய்க்கச்செல்லும் திருக்கோலம்] இவ்வாறு மஹாபிரபுஜீக்காக தன்னை முழுவதுமாக வெளிப்படுத்திக் கொண்ட கிருஷ்ணர் கோயில் கொண்ட தலம் என்பதால் இத்தலம் புஷ்டி மார்க்க வைஷ்ணவர்களுக்கு முதன்மைத்தலம் ஆகும். கோவர்த்தன கிரிதாரி இவ்விடம் வந்த கதை சுவையாக இருந்ததா? அன்பர்களே. அவர் செய்த லீலைகள்தான் எத்தனை எத்தனை? அவரை தரிசிப்பதற்கு முன்னர் இந்திரனுக்கென்று ஆயர்கள்எடுத்த எழில்விழவில்பழநடைசெய் மந்திரவிதியில்பூசனைபெறாது மழைபொழிந்திடத்தளர்ந்து ஆயர் எந்தம்மோடு இனவாநிரைதளராமல் எம்பெருமான்! அருளென்ன அந்தமில்வரையால்மழைதடுத்தானைத் திருவல்லிக்கேணிகண்டேனே. (பெ.தி 2-3-4) என்று திருமங்கையாழ்வார் பாடியபடி அன்று கோகுலத்தில் அவர் குன்று குடையாக எடுத்து இந்திரனின் அகந்தையை அழித்த கதையையும் காணலாமா? கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழிய செருச்செய்யும் குற்றமொன்றில்லாத ஆயர்ப்பாடியின் கோபர்களுக்கு கோவர்த்தன கிரி மேய்ச்சல் நிலமாக பயன்பட்டது. அதன் சாரலிலே அவர்கள் நித்தம் திரிந்து விளையாடினர். காலிகளை மேய்த்தனர். ஒரு நாள் அங்கே ஆயர்கள் கூட்டம் கூட்டமாய்த் திரண்டு சென்று கொண்டிருந்தனர். “எங்கே போகிறீர்கள்?” என்று ஸ்ரீகிருஷ்ணர் கேட்கப், “பொங்கல் இட, இந்திரனுக்கு வழிபாடு செய்யச் செல்கிறோம்” என்றனர் ஆயர்கள். “சூரியன் , சந்திரன், மழைநீர் இவற்றையே வழிபடுவது வழக்கம்; இவற்றை விட்டுவிட்டு இந்திரனை வழிபடுவது புதுமையாய் இருக்கிறதே?” என்றான் கண்ணன். “மழைக்கு வருணன் தலைவன்; அவனுக்கு இந்திரன் தலைவன்; அதனால் அவனை வழிபடுகிறோம்” என்றனர் ஆயர்கள். “பசுவே நாம் வழிபட வேண்டிய தெய்வம்; செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியாதா?” என்று கேட்டான் கண்ணன். அவர்கள் அவன் சொல்லியதை ஏற்றுக் கொண்டனர் எந்தத் தெய்வத்தின் பெயரும் கூறாமல் பொங்கல் இட்டுத் தம் பசுக்களை வழிபட்டனர். அவர்கள் படைத்த பிரசாதங்களை கண்ணனே ஏற்றுக் கொண்டு அருளினான். [ராஜ்போக் - மதிய உணவருந்தும் திருக்கோலம்] விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த பூசையை கிருஷ்ணர் தடுத்து விட்டார் என்று அறிந்தபோது இந்திரன் மிகுந்த கோபம் கொண்டு, தன் கோபத்தை விருந்தாவனவாசிகளின் மீது காட்டினான். பல வகையான மேகங்களின் அதிபதியான இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான். விடாது கோகுலத்தை மூழ்கடித்து விடுமாறு மழை பொழியுமாறு கட்டளையிட்டான். இந்திரனின் கட்டளைப்படி பலவகையான, மிகவும் அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின் மேல் தோன்றி தம் பலம் முழுவதையும் பிரயோகித்து இடைவிடாது மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இடியிடித்தது. மின்னல் மின்னியது, பலமான காற்று வீசியது. கூரிய அம்புகள் போல் நீர் தாரை தாரையாக பொழிந்தது. சற்று நேரத்தில் விருந்தாவனத்தின் நிலப் பகுதிகள், மேடு பள்ளம் தெரியாத வண்ணம் நீரால் நிரம்பின. நிலைமை மிக மோசமாயிற்று. குறிப்பாக மிருகங்கள் பெருத்த அவதிக்குள்ளாயின. மழையோடு கடும் காற்று வீசியதால் விருந்தாவனத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் குளிரில் நடுங்கின. அத்தொல்லைகளில் இருந்து விடுபட முடியாத மக்கள் கோவிந்தனின் பாத கமலங்களில் சரணடைந்தனர். அப்போது விருந்தாவன வாசிகள் எல்லோரும் கிருஷ்ணரை நோக்கி அன்புள்ள கிருஷ்ணா, நீர் மிகவும் சக்தி வாய்ந்தவர், பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இந்திரனின் கோபத்துக்கு ஆளாகித் தவிக்கும் எங்களைக் காப்பாற்றுவீராக. எனப் பிரார்த்தித்தார்கள். இப்பிரார்த்தனையைக் கேட்ட கிருஷ்ணர், காலம் தவறிப் பெரும் மழை பெய்ததும், கடும் காற்று வீசியதும் தனக்குச் சேர வேண்டிய யாகம் நடைபெறாததால் கோபம் கொண்ட இந்திரனின் செயலால் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டார். [உத்தப்பன் – மதிய உணவிற்குப்பின் உறங்கிய கண்ணனை எழுப்புதல்] அவனது கர்வத்தை அடக்க ஸ்ரீகிருஷ்ணர், ஒரு குழந்தை தரையில் இருந்து குடைக் காளானைப் பிடுங்குவது போல், கோவர்த்தன கிரியைத் தனது இடது திருக்கரத்தினால் தூக்கிக் கொண்டார். மலையைக் கையில் ஏந்தியவாறு தம் பக்தர்களிடம் கிருஷ்ணர் கூறினார், எனதருமை விருந்தாவன வாசிகளே, இப்போது நீங்கள் பத்திரமாக இந்த கோவர்த்தன கிரியாகிய குடையின் கீழ் வரலாம். என் கையிலிருந்து மலை நழுவி விழுந்து விடலாமென்று நீங்கள் அஞ்ச வேண்டாம். பலத்த மழையாலும் சூறாவளிக் காற்றாலும் நீங்கள் பெருத்த அவதிக்குள்ளாகி இருக்கிறீர்கள். எனவே நான் இம்மலையைத் தூக்கி அதை உங்களுக்காக குடையாகப் பிடித்திருக்கிறேன். இக்குடையின் கீழ் உங்களின் பசுக்களுடன் இப்போது நின்மதியாக இருங்கள். என்று கிருஷ்ணர் கூறியதும் விருந்தாவன வாசிகள் அப்பெரிய மலையினடியில் ஒன்று கூடி, தங்கள் உடைமைகளுடனும் மிருகங்களுடனும் பத்திரமாக இருந்தார்கள். விருந்தாவன வாசிகளும் அவர்களது பசுக்களும் அம்மலையின் அடியில் ஒரு வாரம் பசி, தாகம் இன்றி, வேறு எவ்விதமான கவலையும் இல்லாமல் இருந்தார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமது இடது கையின் சுண்டு விரலின் நுனியில் அவ்வளவு பெரிய மலையை ஒரு வார காலம் நிறுத்தியிருந்ததைக் கண்டு ஆயர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அப்போது கிருஷ்ணருக்கு ஏழு வயதே நிரம்பியிருந்தது. கிருஷ்ணரின் அசாதாரணமான யோக சக்தியைக் கண்டு சுவர்க்கத்தின் அதிபதியான இந்திரன், இடியால் தாக்கப்பட்டவனைப் போல் திகைப்படைந்து உறுதி குலைந்தான். உடனே, அவன் மேகங்களையெல்லாம் விலகிச் செல்லும்படி கட்டளையிட்டான். மேகங்கள் எல்லாம் கலைந்து ஆகாயம் தெளிவு பெற்றதும் பலத்த காற்று வீசுவது நின்றது. அப்போது கோவர்த்தன கிரிதாரி என்ற பெயரைப் பெற்றார். கிருஷ்ணர் கூறினார்: என்னருமை ஆயர்குல மக்களே, இப்போது நீங்கள் உங்கள் மனைவியரையும், குழந்தைகளையும், பசுக்களையும் அழைத்துக் கொண்டு உங்கள் உடமைகளுடன் வீட்டுக்குச் செல்லலாம். வெள்ளம் குறைந்து விட்டது. எனவே, நீங்கள் இங்கிருந்து செல்லலாம். என்று கூறினார். எல்லா மக்களும் தத்தம் உடைமைகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றார்கள். அவர்கள் அங்கிருந்து சென்றதும் பிரபுவாகிய கிருஷ்ணர் மெதுவாக கோவர்த்தன கிரியை கீழே இறக்கி அதன் உரிய இடத்தில் முன்பிருந்தபடி வைத்தார். இறுதியில் சுவர்க்க லோகத்தில் இருந்து தேவேந்திரன் வந்து, தான் இழைத்த குற்றத்தை உணர்ந்து, கிருஷ்ணரின் பாதகமலங்களில் விழுந்து வணங்கி, அவரைத் துதித்ததும் இந்தினின் கர்வம் அடங்கியது. அவரை கோவிந்தனாக அபிஷேகம் செய்வித்தான். பின் கிருஷ்ணரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு இந்திரன் சுவர்க்க லோகத்திற்கு திரும்பிச் சென்றான். இந்த லீலையைத்தான் ஆழ்வார்கள் குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி, குன்றால் குளிர்மாரி தடுத்து உகந்தானே, குடையா வரையொன்றெடுத்து ஆயர் கோவாய் நின்றான், குன்றமொன்றெடுத்தேந்தி மாமழை அன்று காத்த அம்மான், குன்றமெடுத்து மழை தடுத்து இளையரொடும் மன்றில் குரவை பிணைந்த மால், வெற்பை யொன்றெடுத்து ஒற்கமென்றியே நிற்குமம்மான், குன்றமேந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலமளந்த பிரான், குன்றமொன்றால் மழை காத்த பிரான், ஆநிரை பாடி அங்கே யொடுங்க அப்பன் தீ மழைகாத்துக் குன்றமெடுத்தானே! என்று பலவாறெல்லாம் போற்றிப்பாடியுள்ளனர் சிறப்பாக பெரியாழ்வார் ஒரு முழு பதிகம் கண்ணன் தாங்கிய கோவர்த்தனகிரியின் சிறப்பை “கோவர்த்தமென்னும் கொற்றக்குடையே”என்று பாடியுள்ளார் அப்பதிகத்திலிருந்து ஒரு பாடல் வழுவொன்றுமில்லாச்செய்கை வானவர் கோன் வலிப்பட்டுமுனிந்து விடுக்கப்பட்ட மழைவந்தெழுநாள்பெய்துமாத்தடுப்ப மதுசூதனெடுத்துமறித்தமலை இழவுதெரியாததொரீற்றுப்பிடி இளஞ்சீயம்தொடர்ந்து முடுகுதலும் குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே – (பெரி. தி 3-5-2) இவ்வாறு “குன்றமொன்றேந்தி குளிர்மழை காத்த” கோவர்த்தனகிரிதாரி கோலத்தில் இத்தலத்தில் ஸ்ரீநாத்ஜீ சேவை சாதிக்கின்றார். இடது திருக்கரத்தால் கோவர்த்தன கிரியை தாங்கி வலக்கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்துக் கொண்ட அற்புதக் கோலம். இவரது திருமேனியில் இரண்டு பசுக்கள், ஒரு நாகம், ஒரு சிங்கம், ஒரு மயில், ஒரு கிளியின் உருவங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இராதையும், கிருஷ்ணரும் இணைந்த கோலம் இது. ஸ்ரீ என்பது தாயாரைக் குறிக்கும் அல்லவா எனவே இவர் ஸ்ரீநாத் என்று திருநாமம் பெற்றார். இயற்கையாகவே இவருடைய திருமுகத்தில் ஒரு வைரம் அமைந்துள்ளது. கிரிதர கோபாலா – பாலா சியாமள சரீரகௌஸ்துபஹாரா பீதாம்பரதர பிரபோ முராரே நந்த குமாரா மனமோகன கள பிருந்தாவனசா துளசீஹாரா கிரிதர கோபாலா கம்ஸவிதாரா மீராமாஸை ஸரோ விஹாரா என்று பாடிய பக்த மீராபாயை ஆகர்ஷித்த கோலம் இந்த கோவர்த்தனகிரிதாரி கோலம் ஆகும் தன்னுடைய ஒவ்வொரு பாடலிலும் “மீராக்கீ பிரபு கிரிதர நாதரு” என்று பாடியருளினாள். [போக் – கார் முகில் வண்ணனுக்கு மாலை சிற்றுண்டி] பெருமாள் புண்டரீகாக்ஷன் அல்லவா? அவரது கண்களே தாமரை கண்ணழகை பெருமாளிடம்தான் தரிசிக்க முடியும், இதை பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்து காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து மத்தினால் தயிர் கடையும் வாச நறுங்குழலாய்ச்சியரை விண்கொளமரர்கள் வேதனைதீர முன் மண்கொள்வசுதேவர்தம் மகனாய் வந்து திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான் கண்களிருந்தவாகாணீரே கனவளையீர்! வந்து காணீரே. (பெரி.தி 1-2-16) என்று அழைத்த மாயக்கண்ணனின் கண்கள் இத்தலத்தில் விரிந்து பரந்தனவாக இல்லாமல் பாதி மூடிய நிலையில் கீழ் நோக்கிய பார்வையாக, வசீகரிக்கும் பார்வையாக அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பாகும். அக்கண்களின் அழகே ஒரு தனி அழகு. சர்வாங்க சுந்தரன் அல்லவா எம்பெருமான். சனிக்கிழமை என்பதால் அன்று சரியான கூட்டம். திருக்கதவம் திறந்த பின் ஆயிரக்கணக்கான அன்பர்களுடன் வரிசையில் சென்று ஸ்ரீநாத்ஜீயை சேவித்தோம். திருப்பதியில் உள்ளது போல மூன்று வரிசையில் தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். முட்டி மோதிக்கொண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். கட்டண தரிசனமும் உள்ளது அவர்கள் பெருமாளுக்கு அருகில் சென்று தரிசிக்க இயலும். அருகில் சென்று தரிசித்த பின்னரும் தூரத்தில் இருந்து நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று தரிசிக்க இயலும். ஆலயத்தில் பல இடங்களில் ஸ்ரீநாத்ஜீ - யமுனாஜீ – மஹாபிரபுஜீ ஓவியத்தைக் கண்ணுற்றோம். கோவிலில் ஸ்ரீவல்லபாச்சார்யார் ஸ்ரீநாத்ஜீயை, நாத்துவாரில் பிரதிஷ்டை செய்யும் சித்திரமும் அழகாக தீட்டப்பட்டுள்ளது. முன்னரே கூறியது போல இவ்வாலயம் ஹவேலி அதாவது மாளிகை போலவே அமைந்துள்ளது. இம்மாளிகையும் நந்தாலயம் அதாவது கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் மாளிகை இது என்பது ஐதீகம். அதில் ரஸோயி கர் (சமையலறை), தூத் கர் (பால் சேமித்து வைக்கும் அறை), பான் கர் (வெற்றிலை அறை), மிஸ்ரி கர் (சர்க்கரை அறை,) பேடா கர் (இனிப்புகள் அறை), பூல் கர் (மலர்கள் அறை), கெகணா கர் (ஆபரணங்கள் அறை), அஷ்வ சாலா (குதிரை லாயம்), கோ சாலா (மாட்டுக் கொட்டகை) பைடக் (வரவேற்பறை) என்று பல அறைகள் கொண்டதாகவே ஆலயம் அமைந்துள்ளது. மேலும் இவருக்காக மேவார் அரசன் வழங்கிய தங்க மற்றும் வெள்ளி அரைக்கற்களையும், ஸ்ரீநாத்ஜீ ஆக்ராவில் இருந்து வந்த மாட்டு வண்டியையும் தனித்தனி அறைகளில் தரிசிக்கலாம். இவ்வாறு அரண்மனையில் வசிப்பதால் இவரை தாகூர்ஜீ என்றும், பாங்கே பிஹாரிஜீ என்றும் வனமாலிஜீ என்றும் அழைத்து மகிழ்கின்றனர் பக்தர்கள். சபா பண்டபத்தில் அரை வட்டவடிவ குவி மாடம் அமைந்துள்ளது கருவறையின் மேல் சிறு விமானம், விமானம் கூம்பூ வடிவில் அமைந்துள்ளது. நான்கு புறமும் புலிகள் காவல் காக்கின்றன. எளிமையாக மங்களுர் ஓடு வேயப்பட்டுள்ளது. மாடிப்படிகளில் ஏறிச் சென்று விமானத்தை தரிசனம் செய்ய முடியும். பகவானைப் பாடிப் பரவிய பல தாசர்களின் ஓவியங்கள் ஆலயம் முழுவதும் நிறைந்துள்ளது. புஷ்டி மார்க்கத்தின் இவருக்கு தினமும் எட்டு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. அப்போது மட்டுமே பக்தர்கள் இவரை தரிசிக்க முடியும் மற்ற சமயங்களில் திரையிடப்படுகின்றது. கிருஷ்ணரைக் காண எப்போதும் கோபியர்கள் யசோதையின் வாயிலில் காத்துக்கிடப்பதால் தனது செல்லப்பிள்ளை உரிய சமயத்தில் உணவு உட்கொள்ளவும், கோபச்சிறுவர்களுடன் விளையாடவும், காலிகள் பின் செல்லவும், கோபியர்களுடன் இராசலீலை ஆடவும் யசோதை அன்று செய்தது போல இன்று வல்லபாச்சார்யர் ஏற்படுத்திய முறை இது. அதுவும் இரவு, பகல், கோடை, குளிர், வசந்தகாலம் என்று கால நேரத்தைப் பொறுத்து இவருக்கு செய்யும் அலங்காரமும் மாறுபடுகின்றது. அவை என்னவென்று காணலாமா அன்பர்களே. தனது திருமகன் கிருஷ்ணரை அன்று கோகுலத்தில் யசோதை எவ்வாறு காத்தாளோ அப்பாவனையில் இன்றும் இக்கோவிலில் ஸ்ரீநாத்ஜீயை இவர்கள் ஆராதிக்கின்றனர். அடியோங்கள் சென்ற சமயம் குளிர் காலம் என்பதால் இவருக்கு முன்னர் குளிர் காய்வதற்கு ஏதுவாக தீக்கங்குகளை ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து கருவறை வெப்பமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதை பார்த்த போது என்ன ஒரு அன்பு என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அது போலவே கோடை காலத்தில் வசந்த பஞ்சமிக்குப் பின் இரண்டு மாதங்கள் சயன ஆரத்தியின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையது. பெருமாள் விரஜவாசிகளுக்கு அருள்பாலிக்க அங்கு செல்கின்றார் என்பது ஐதீகம். சயன ஆரத்தி கோவர்த்தனகிரியில் நடைபெறுகின்றது. எனவே இங்கு சீக்கிரம் ஸ்ரீகிருஷ்ணரை உறங்கச் செய்கின்றனர். வாருங்கள் தினமும் எவ்வாறெல்லாம் ஸ்ரீகிருஷ்ணருக்கு பூசைகள் சிறப்பாக நடக்கின்றன என்று காணலாம். புஷ்டி மார்க்கத்தின் படி அனைத்து பூசையின் போதும் ஸ்ரீகிருஷ்ணருக்கு இசை (ராக்), அந்தந்த காலங்களுக்கு ஏற்ற இராகத்தில் பாடல்கள் இசைக்கப்படுகின்றது. நேரத்திற்கு ஏற்றவாறு பிரசாதம் (போக்), உடை மற்றும் அலங்காரம் (வஸ்த்ர ஔர் ச்ருங்கார்) மூலம் கிரமமாக பூஜை நடைபெறுகின்றது. அதிகாலையின் முதல் தரிசனம் மங்களா என்றழைக்கப்படுகின்றது. அதிகாலை 5:45 மணி முதல் 6:30 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. காலை எழுந்தவுடன் ஸ்ரீகிருஷ்ணரை தரிசனம் செய்வதே மங்களம் என்பதால் இப்பெயர். இப்பூசையின் போது உறங்கிக்கொண்டிருக்கும் கண்ணனை திருப்பள்ளி எழுப்பி காலைக் கடன்களை முடித்து காலைச் சிற்றுண்டி படைப்பதாக ஐதீகம். இப்பூசை குளிர்காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னரும், கோடை காலத்தில் சூரிய உதயத்திற்கு பின்னரும் நடைபெறுகின்றது. இச்சமயத்தில் முதலில் திருக்கதவங்கள் திறக்கப்படுவதில்லை. உள்ளே சிரமப்பரிகாரம் செய்து வைத்தப் பின்னரே திருக்கதவங்கள் திறக்கப்படுகின்றன. கோபச்சிறுவர்கள் கண்ணனுக்காக வெளியே காத்துக் கொண்டிருப்பதால் எழுந்தவுடன் அவர் விளையாட ஓடி விடுவார் என்று அன்னை யசோதா கதவை மூடி வைத்திருப்பதாக ஐதீகம். கோடை காலத்தில் ஒற்றை அரையாடையுடன் தரிசனம் தருவார் கோவர்த்தன கிரிதாரி. எனவே அப்போது முழு திருமேனியையும் அலங்காரம் இல்லாமல் அருமையாக தரிசனம் செய்யலாம். குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளுடன் சேவை சாதிக்கின்றார். இப்பூசையின் போது புல்லாங்குழல் கண்ணனின் திருக்கரங்களில் தருவதில்லை, ஏனென்றால் அவன் அக்குழலை ஊதி அனைவரையும் மயக்கி காலைக் கடமைகளை செய்யவிடமாட்டான் என்பதாக ஐதீகம். கண்ணனுக்கு கண்ணேறு படாமல் இருக்க இப்பூசையின் போது ஆரத்தி எடுக்கப்படுகின்றது. காலை சிற்றுண்டி நைவேத்யம் செய்யப்படுகின்றது. இப்பூசையின் போது காலை நேரத்திற்கு உரிய இராகங்களில் பாடல்கள் இசைக்கின்றனர். அடியோங்களுக்கு முக தரிசனம் மட்டுமே கிட்டியது. இரண்டாவது பூசை சிருங்கார் என்றழைக்கப்படுகின்றது. காலை 7:15 மணி முதல் 7:45 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. தன் நீலமேக சியாமளனை யசோதை “இன்று நீ பிறந்த திருவோணம் அழகனே நீராட வாராய்” என்றும் எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யு பிரானே! உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே வண்ணமழகிய நம்பீ! மஞ்சனமாடநீவாராய். (பெரி,தி 2-4-6) இவ்வாறு பலவாறெல்லாம் சொல்லி அழைத்து நீராட்டி, பின்னர் தலை முதல் கால் வரை சிறப்பாக மயிற்பீலி, ஆபரணங்கள், மாலைகள் ஆகியவற்றால் அலங்காரம் செய்து பார்க்கும் பூசை இது. கண்ணன் அலங்காரத்தை கண்டு களிப்பதற்காக கண்ணாடி சேவை சிறப்பாக நடைபெறுகின்றது.. இதற்குப் பின்னரே கண்ணனைக் காண்பதற்காக வாயிலில் காத்துக் கொண்டிருக்கும் கோபியர்களை தன் மகனைக் காண அனுமதிக்கின்றாள் யசோதை. கண்ணன் காலை சிற்றுண்டி உண்டு விட்டதால், இப்பூசையின் போது கோபியர்கள் கண்ணனுக்காக கொண்டு வந்த உலர் பழங்கள், இனிப்புகள் ஆகியவை மட்டுமே பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. இதற்குப்பிறகு இவர் திருக்கரத்தில் வேய்ங்குழல் தரப்படுகின்றது. சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச் செங்கண்கோடச்செய்யவாய் கொப்பளிப்ப குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் கோவிந்தன்குழல்கொடூதினபோது பறவையின்கணங்கள்கூடுதிறந்து வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப கறவையின்கணங்கள்கால்பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிக்செவியாட்டகில்லாவே.(பெரி.தி 3-6-8) என்று பெரியாழ்வார் பாடியபடி தனது குழலின் இனிமையான கானத்தை இராதைக்காக வாசிக்கின்றார் என்பது ஐதீகம். மூன்றாவது பூசை க்வால். காலை 9:15 மணி முதல் 9:30 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. காலைச்சிற்றுண்டியை முடித்த கோபகுமார்களுடன் கிருஷ்ணர் மாடு கன்றுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்லும் கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். இப்பூசையின் போது இலகுவாக இவருக்கு பால் இனிப்பு நைவேத்யம் செய்யப்படுகின்றது. கோ சாலை கண்காணிப்பாளர் பெருமான் முன்னர் கோ சாலையில் உள்ள பசுக்களின் நலம் பற்றி விண்ணப்பிக்கின்றார் அதைக் கேட்டு மகிழ்கின்றார் பெருமாள். இப்பூசையின் போது துளசி கொண்டு சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்படுகின்றது. மதிய நேரத்தில் ஸ்ரீநாத்ஜீக்கு நடைபெறும் பூசை ராஜ் போக் ஆகும். காலை 11:15 மணி முதல் 12:05 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. மதிய உணவு ஒரு அரசனுக்கு எவ்வாறு படைப்பார்களோ அது போல 56 வகையான பதார்த்தங்களுடன் உணவுண்டு மகிழ்கிறார் பெருமாள். வெற்றிலை தரித்துக் கொள்கின்றார். இப்பூசையின் போது கோவர்த்தன கிரிதாரி மிகவும் சிறப்பான அலங்காரத்தில் சேவை சாதிக்கின்றார். குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லவெங்கோவே! மடங்கொளதிமுகத்தாரை மால்செய்யவல்லவென்மைந்தா! இடந்திரட்டிரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்! குடந்தைகிடந்தகோவே! குருக்கத்திப்பூசூட்டவாராய். (பெரி.தி 2-7-7) என்று யசோதை கண்ணனை பலவித மலர்கள் கொண்டு அலங்கரித்த வண்ணம், மலர் மாலைகள், நவரத்தின ஆபரணங்களுடன் திருக்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியவாறு அருமையாக அலங்காரம் செய்கின்றனர். அவ்வழகைக் காணக் கண்கோடி வேண்டும். இப்பூசையின் போது இனிமையான நறுமணப்புகை ஊட்டப்படுகின்றது. மதிய உணவிற்குப் பின்னர் சிறிது நேரம் தனது தோழர்களுடன் சதுரங்க ஆட்டம் ஆடிய பின் உறங்க செல்கின்றார். எனவே இப்பூசைக்குப் பிறகு மூன்று மணி நேரம் நடை அடைக்கப்படுகின்றது. மதிய நேர சிறு உறக்கத்திற்குப் பிறகு மாலை உன்னி கிருஷ்ணரை சங்கொலியினால் எழுப்பும் பூசை உத்தப்பன் என்றழைக்கப்படுகின்றது. மாலை 3:45 மணி முதல் 4:00 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. மாடுகளை மேய்த்தபின் ஸ்ரீகிருஷ்ணர் ஆயர்பாடிக்கு திரும்பி வருவதாக ஐதீகம். இப்பூசையின் போது வீணை இசையை செவி மடுத்து மகிழ்கின்றார் பெருமாள். அந்தகக் கவியான சுர்தாசரின் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. அடுத்த பூசை போக் என்றழைக்கப்படுகின்றது. மாலை 4:45 மணி முதல் 5:00 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. பட்டிமேய்த்தோர்காரேறு பலதேவற்கோர்கீழ்க்கன்றாய் இட்டீறிட்டுவிளையாடி இங்கேபோதக்கண்டீரே? இட்டமானபசுக்களை இனிதுமறித்துநீருட்டி விட்டுக்கொண்டுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே. (நா.தி 14-1) என்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் பாடியபடி, மாடுகளை மேய்த்தபின் திரும்பி வந்த கண்ணனின் வரவை யசோதைக்கு அறிவிக்கின்றனர். பசுக்களை கறவைக்காக அழைத்து செல்ல இவ்வறிவிப்பு செய்யப்படுவதாக ஐதீகம். இப்பூசையின் போது லகுவான ஆகாரமே ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. கண்ணன் வெளியே சுற்றி விட்டு வந்ததால் ஏற்பட்ட கண்ணேறு விலகுவதற்காக ஆரத்தி எடுக்கப்படுகின்றது. கானகமெல்லாம் சுற்றி விட்டு வந்த களைப்பு தீர பெருமாளுக்கு சாமரம் வீசுகின்றனர். இதற்குப்பின் அவர் கோபகுமாரர்களுடன் விளையாட செல்வதாக ஐதீகம். [மாலை ஆரத்தி – யசோதை கமல கண்ணணுக்கு காப்பிடுதல்] மாலை பூசை (சந்தியா) ஆரத்தி என்று அழைக்கப்படுகின்றது. மாலை 6:00 மணி முதல் 6:45 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. அந்தி சாயும் நேரம் என்பதால் அசுரர்கள் கண்ணனுக்கு தீங்கு விளைவிக்க காத்துக்கொண்டு இருப்பர், எனவே யசோதை கண்ணனுக்கு அந்தி காப்பிடுகின்றாள். பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்து அழகனை அந்திக் காப்பிட அழைக்கும் பாசுரத்தின் ஒரு பாடல் இதோ கன்றுகளில்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம் நின்றொழிந்துன்னைக்கூவி நேசமொன்றுமிலாதாய்! மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்வெள்ளறை (நாத்துவாரா) நின்றாய் நன்றுகண்டாயென்தன்சொல்லு நானுன்னைக் காப்பிடவாராய். (பெரி.தி 2-8-2) ஆகவே இப்பூசை மாத்ரு பாவத்தில் நடைபெறுகின்றது. கண்ணனுக்கு எளிமையான அலங்காரமே செய்யப்படுகின்றது. கண்ணனின் திருக்கரங்களில் புல்லாங்குழல் இருக்கின்றது அதன் கானத்தினால் அனைத்து கோகுல வாசிகளையும் மாயக் கண்ணன் மயக்குகின்றான் என்பது ஐதீகம். இரவு ஆரம்பித்து விட்டதால் விமானத்தில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. மாளிகையின் கொடிகள் சுருட்டப்படுகின்றன. [சயன் – பள்ளியறை எழுந்தருளும் கோலம்] நாளின் நிறைவு பூசை சயன் என்றழைக்கப்படுகின்றது. பக்தர்களுக்கு ஸ்ரீநாத்ஜீ வழங்கும் நிறைவு சேவை. சமையல்காரரை விளித்து மறு நாள் காலை சீக்கிரம் வருமாறு கூறுவதுடன் பூசை ஆரம்பமாகின்றது. மேள தாளங்கள் முழங்குகின்றன. இரவு உணவு நைவேத்யம் செய்த பின் வெற்றிலை(பீடா) தரிக்கின்றார் பெருமாள். கிருஷ்ணதாசரின் பாடல்கள் இசைக்கப்படுகின்றது. அவர் பள்ளியறைக்கு எழுந்தருள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கர்ப்பகிரகத்தில் இருந்து பள்ளியறை வரை சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுகின்றது. அலங்கரிக்கப்பட்ட பள்ளியறையில் பால், பழம் வைக்கப்படுகின்றது. மற்றும் இராதா இராணியின் ஆடை ஆபரணங்கள் வைக்கப்படுகின்றது. கோயிலில் பக்தர்களை முறைப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட தடுப்புகள், மற்றும் முற்றத்தில் கட்டிய விதானம் முதலியவை பெருமாள் தங்கு தடை இன்று சென்று வருவதற்காக நீக்கப்படுகின்றன. சயன ஆரத்திக்குப்பிறகு திரையிடப்படுகின்றது. பெருமாள் பள்ளி எழுந்தருளுகின்றார். இவ்வாறு காலம், நேரம் இவற்றிற்கேற்ப வெகு சிறப்பாக பூசைகள் மற்றும் நடைபெறுகின்றது. என்ன ஒரு நாள் முழுவதும் இருந்து அனைத்து அலங்காரங்களையும் சேவிக்க வேண்டும் என்று ஆவல் பொங்குகின்றதா? நாத்துவாரா செல்ல விழையும் போது இரு நாட்கள் அங்கு தங்கும்படி செல்லுங்கள். ஸ்ரீநாத்ஜீயுடன், தவழ்ந்த கோலத்தில் ஒர் திருக்கரத்தில் வெண்ணையுடன் நவநீத் பிரியாஜீயும் (நவநீதப் பிரியன்), மதன்மோகன்ஜீ என்ற திருநாமத்துடன் இராதா கிருஷ்ணரும், விட்டல்நாத்ஜீ என்ற திருநாமத்துடன் விட்டலரும்-இரகுமாயியும் அருள் பாலிக்கின்றனர். இவர்களுக்கும் அலங்காரம் அருமையாக செய்கின்றனர். இத்தலத்திலும் துவாரகையைப் போல கொடியேற்றத்தை ஒரு பிரார்த்தனையாக சிறப்பாக செய்கின்றனர். இத்தலத்தின் சமையலறையில் அன்பர்கள் அளிக்கும் அனைத்து காய்கறிகள், பால் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கின்றனர் என்பது ஒரு சிறப்பு. [ஸ்ரீஜீ மனோரத் – சிறப்பு அலங்காரம்] வருடம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ள இவ்வாலயத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ஹோலி மற்றும் தீபாவளி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தீபாவளிக்கு அடுத்த நாள் ‘அன்னக் குவியல்’ உற்சவம். அதை ஏற்படுத்தியவர் வல்லபாச்சார்யார். அன்று 56 வகையான உணவுப் பண்டங்கள் பெருமாளுக்கு படைக்கப்படுகின்றது. ‘சப்பன் போக்’ என்று பெயர். இந்தியில் ‘சப்பன்’ என்பது 56 என்ற எண்ணைக் குறிக்கும். ‘போக்’ என்றால் போஜனம் அல்லது உணவு. கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா! கோவலர்இந்திரற்கு காட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துண்டாய்போலும் ஊட்டமுதலிலேனுன்தன்னைக்கொண்டு ஒருபோதுமெனக்கரிது வாட்டமிலாப்புகழ்வாசுதேவா! உன்னையஞ்வனின்றுதொட்டும். (பெரி.தி 3-3-8) என்றபடி அன்று ஆயர்கள் படைத்த உணவை பகவான் உண்டதை அன்னக்குவியல் உற்சவத்தின் போது, இன்று உண்பித்து மகிழ்கின்றனர் பக்தர்கள். அதில் சமைக்கப்பட்டது, சமைக்கப்படாதது, சர்க்கரை சேர்த்தது, சேர்க்கப்படாதது, பாலில் செய்தது, கிழங்கு வகைகள், சில புதிய பழங்கள், உலர்ந்த பழங்கள் என்று பலவிதப் பண்டங்கள் இருக்கும். எல்லாம் அறுசுவை உணவு. அதே போல், விழுங்குபவை, கடித்துத் தின்பவை, சப்பிச் சாப்பிடுபவை, நக்கிச் சாப்பிடுபவை இப்படிப் பல விதத் தயாரிப்புகள் அடங்கியது இந்த ‘சப்பன் போக்’ என்ற விழாப் படையல். அச்சமயம் ஆயிரக்கணக்கில் வைஷ்ணவர்கள் கலந்து கொள்கின்றனர். ஜென்மாஷ்டமியின் போது வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர் கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே. (பெரி.தி 1-1-1) என்று பெரியாழ்வார் அன்று கோகுலத்தில் கோபர்கள் மகிழ்ந்ததைப் பாடியது போல பாலையும் வெண்ணையும் தூவி இன்றும் பக்தர்கள் மகிழ்வதைக் காணலாம். அடியோங்களுக்கு ஆரத்தி தரிசனம் சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது. மேவார் அரசர் அளித்த வெள்ளி மட்டும் தங்க அரைகற்களை தரிசித்தோம். அருமையான தரிசனத்திற்கு பின் வெளியே வரும் போது கடைகளில் ஸ்ரீநாத்ஜீயின் அருமையான சித்திரங்களைப் பார்த்தோம். கடைகளில் விசாரித்த போது “பிச்வாய்” (Pichwai) – துணியின் மீது சித்திரம் வரைதல் எனப்படும் சித்திர முறையில் வரையப்பட்ட படங்கள் இவை என்று கூறினார்கள். இச்சித்திரங்கள் உலகப்புகழ் பெற்றவை. இவை நாத்துவாரா சித்திரங்கள், ஸ்ரீநாத்ஜீ ஓவியங்கள் என்றும் சிறப்புப் பெற்றுள்ளன. ஸ்ரீநாத்ஜீயின் வடிவழகை துணி, காகிதம், சுவர், பெரிய தொங்கும் துப்பட்டாக்கள் என்று எல்லாவற்றிலும் பல வர்ணங்களில் வரைகின்றனர். இவை பல் வேறு வர்ணங்களில் காடா துணி போன்ற முரட்டு துணியில் வரையப்படுகின்றன. பொதுவாக மஹாபிரபுஜீ - ஸ்ரீநாத்ஜீ - யமுனாஜீ மூவரும் உள்ள சித்திரங்கள், மற்றும் கிருஷ்ணரின் ராச லீலைகள் இச்சித்திரங்களின் கருவாக அமைந்துள்ளன. நாத்துவாரவை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பல்வேறு கலைஞர்கள் இப்பாணியில் சித்திரங்கள் வரைகின்றனர். இக்கடைகளில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்வதற்கேற்ற பல்வேறு அலங்காரப் பொருட்களும் கிட்டுகின்றன. அடியோங்கள் தரிசித்த முதல் துவாரகையான டாகோர் துவாரகையில் முதன் முதலாக ஸ்ரீநாத்ஜீ- மஹாபிரபுஜீ- யமுனாஜீ ஓவியங்களைப் பார்த்தபோது நடுவில் உள்ளது கிருஷ்ணன் மற்ற இருவரும் யார் என்ற ஒரு கேள்வி மனதில் எழுந்தது, மற்ற ஆலயங்களிலும் இதே ஓவியங்களைப் பார்த்தோம். இத்தலத்தில் அக்கேள்விக்கான பதில் கிட்டியது. புஷ்டி மார்கத்தைப் பற்றியும் அறிந்து கொண்டோம். திவ்ய தரிசனத்திற்குப்பின் தங்கும் விடுதிக்குத் திரும்பினோம். விடுதிகளின் மையத்தில் கோவர்த்தன கிரிதாரியின் அருமையான சுதை சிற்பம் அமைத்திருப்பதை கண்டு மகிழ்ந்தோம். ஸ்ரீநாத்ஜீ ஆலயம் மட்டுமல்ல இன்னும் கணேசர் ஆலயம், லால் பாக் எனப்படும் பூங்கா, விருந்தாவன் பாக் எனப்படும் பூங்கா ஸ்ரீநாத்ஜீயின் கோசாலை என்று பார்ப்பதற்குரிய அம்சங்கள் இவ்வூரில் உள. இந்திரனுக்கென்று ஆயர்கள்எடுத்த எழில்விழவில்பழநடைசெய் மந்திரவிதியில்பூசனைபெறாது மழைபொழிந்திடத்தளர்ந்து ஆயர் எந்தம்மோடு இனவாநிரைதளராமல் எம்பெருமான்! அருளென்ன அந்தமில்வரையால்மழைதடுத்தானைத் நாத்துவாரா (திருவல்லிக்கேணி) கண்டேனே. (பெ.தி 2-3-4) என்றபடி கோவர்த்தனகிரிதாரியின் மங்களா தரிசனத்தை மறு நாள் காலை பின் ஒரு முறை சேவித்த பிறகு இத்தலத்திற்கு அருகில் உள்ள கங்ரோலி என்ற தலத்திற்கு சென்றோம். அத்தலத்தின் சிறப்புகள் என்ன என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் -16 கங்ரோலி துவாரகை [] கங்ரோலி துவாரகை உதய்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே குளிர் காலத்தில் அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதே ஒரு சுகமான அனுபவமாக அமைந்தது. காற்றில் பனியின் ஈரவாடையுடன், அப்பனியின் இடையே சூரியனின் பொன் கதிர்கள் பாயும் போது அனைத்துப் பொருட்களும் பொன் மயமாக ஜொலிக்கும் காலைப்பொழுதில் நாத்துவாராவிலிருந்து கங்ரோலிக்கு பயணம் செய்தோம். துவாரகாதீஷரின் அரண்மனை (ஹவேலி) என்றழைக்கப்படும் இவ்வாலயம் ராஜ்சமந்த் என்ற ஒரு பிரம்மாண்ட ஏரியின் கரையில் எழிலாக அமைந்துள்ளது. ஒரு கோட்டையைப் போல பிரம்மாண்ட மதிலும் உள்ளது. இவ்வாலயத்தில் குழந்தை துவாரகாதீஷன் கோயில் கொண்டுள்ளதால் ஒரு சிலர் கங்ரோலி துவாரகை என்றும் அழைக்கின்றனர். புஷ்டி மார்க்கத்தின் மூன்றாவது பீடம் இத்தலம். இத்தலத்தில் வல்லபாச்சாரியாரின் பேரன் பாலகிருஷ்ணன்ஜீ துவரகாதீசருக்கு பூசைகள் செய்து வந்தாராம். ஸ்ரீநாத்ஜீ கோவர்த்தனகிரியிலிருந்து வந்தது போல அவுரங்கசீப் ஆலயங்களை அழித்துக் கொண்டிருந்த காலத்தில் துவாரகாஷ்ஜீ மதுராவிலிருந்து 1671ம் வருடம் மஹா ராணா ராஜ் சிங் காலத்தில் இங்கு வந்தாராம். பின்னர் 1676ம் ஆண்டில் ராஜ்சமந்த் ஏரியை உருவாக்கிய சமயம் அரசர் இக்கோவிலையும் அதன் கரையில் உயரே ஒரு மலையில் அமைத்தார். 21 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். முகப்பில் பிரம்மாண்டமாக பல வர்ண இராஜஸ்தானத்து ஓவியங்கள் இவ்வாலயத்தின் ஒரு சிறப்பு அம்சம் ஆகும். படிகளில் அமர்ந்து ஏரியை காண்பதே ஒரு அற்புதமான அனுபவம். இத்தலத்தில் பெருமாள், வலது மேற்திருக்கரத்தில் கதை, இடது மேற்திருக்கரத்தில் சக்கரம், வலது கீழ்கரத்தில் பத்மம், இடது கீழ் கரத்தில் சங்கம் ஏந்தி நின்ற கோல சதுர்புஜ விஷ்ணுவாக சேவை சாதிக்கின்றார். புராணங்களில் சதுர்புஜ விஷ்ணுவாக ஸ்ரீஹரி எப்போதெல்லாம் சேவை சாதித்தார் என்பதை ஒரு பதாகையில் எழுதி வைத்திருந்தனர் இதோ அவ்விவரம். சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் மஹா பிரளய ஜலத்தில் பகவான் யோக நித்திரையில் இருந்த போது அவரது நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா தோன்றினார். நான்கு பக்கமும் நீராக இருப்பதைக் கண்டு பிரம்மா திகைத்து நின்ற போது தவம் என்ற அசரீரி கேட்டு தவம் செய்தார் அவரது தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு சேவை சாதித்த கோலமே இந்த சதுர்புஜ விஷ்ணு கோலம். கர்தம் பிரஜாபதி சரஸ்வதி நதிக்கரையில் தவம் செய்தபோதும் அவருக்கு பெருமாள் இக்கோலத்தில் சேவை சாதித்தார். கபில முனிவருக்கும் அவரது தாய் தேவஹூதிக்கும் அவர்களுக்கு பக்திக்கு மெச்சி இக்கோலத்தில் தோன்றினார். இம்மூர்த்தியை கபில முனிவர் பின்னர் அவரது சீடரான தேவ சர்மா அவருக்குப்பின் அவரது புத்திரர் விஷ்ணு சர்மா ஆராதித்து வந்தனர். கலியின் முடிவில் அம்பரீஷ மஹாராஜா மற்றும் அவருக்குப் பின்னர் ஜனமேஜயனும் இவரை பூசித்தனர். ஜனமேஜயன் சோமசர்மா என்பவரின் மூலம் இவரை அற்புதசாலத்தில் பிரதிஷ்டை செய்தார். பல வருடங்களுக்குப் பிறகு வல்லபாச்சாரியாரிடம் அவரது சீடரான திவான் தாமோதர் தாஸ் சம்பர்வால் என்பவரின் மூலமாக துவரகாதீஷன் வந்து சேர்ந்தார். அவரை மஹாபிரபூஜீ ஆராதித்து வந்தார். பகவான் துவாரகாநாத்தை இக்கலியுகத்தில் தரிசனம் செய்பவர்கள் யோகேஸ்வரர்கள் கூட அடைய முடியாத விஷ்ணு பதமான வைகுண்டத்தை நிச்சயம் அடைவர் என்பது ஐதீகம் என்று எழுதியுள்ளனர். இத்தலத்தில் துவாரகாஜீயுடன் மதுராஜீ, தாவுஜீ (பலராமர்) மற்றும் கிரிதர்ஜீ தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். ஹவேலி - அரண்மனை என்பதற்கிணங்க ஒவ்வொரு சன்னதியும் ஒவ்வொரு அறையில் அமைந்துள்ளது. [ராஜ்சமந்த் ஏரி] புஷ்டி மார்க்கத்தின் படி காலை மங்களா முடிந்து நடை சார்த்தப்பட்டிருந்தது. சிருங்கார் பூசைக்காக நடை திறக்கு வரை சிறிது நேரம் காத்துக்கொண்டிருந்தோம். நாத்துவாரா போல இங்கு கூட்டம் அதிகன் இருக்கவில்லை. உள்ளூர் பக்தர்கள் சிலர் மட்டுமே இருந்தனர், அவர்களுடன் அப்பூசையின் ஆரத்தியை அனைத்து சன்னதிகளிலும் சேவிக்கும் பேறு பெற்றோம். வயதானவர்கள் கூட சிரத்தையுடன் ஜெய கோஷம் இட்டு சன்னதி சன்னதியாக சென்று வணங்குகின்றனர். ஆலயத்தில் நிறைய பசு மாடுகளை பராமரிக்கின்றனர். கோமாதாவிற்கு கீரை அளிக்கின்றனர். திரும்பி வரும் வழியில் பிரம்மாண்ட இராஜ்சமந்த் ஏரியின் அழகை இரசித்தோம். ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவளித்தோம். இவ்வாறு கங்ரோலி துவாரகையையும் தரிசனம் செய்தபின் பெருமாள் தீர்த்த நாராயணராக அருள் பாலிக்கும் தலத்திற்கு பயணப்பட்டோம். அத்தலம் எத்தலம் என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் – 17 புஷ்கரம் [ஸ்ரீஜகத் பிதா பிரம்மா ஆலயம்] “நீர் வானம் மண் எரிகலனாய் நின்ற நெடுமால்” என்றபடி பெருமாள் அனைத்துமாய் நிற்கின்றார், இத்தலத்தில் அவர் தீர்த்தரூபியாய் அருள் பாலிக்கின்றார். அத்தடாகமே பரந்தாமன். அதில் மூழ்கி எழுபவர்கள் வினையெல்லாம் களையப்படுகின்றது இறைவனோடு கலந்து ஆடும் இன்பம் பெற்றால் அதன் பின்னே வினைகள் நிற்பது ஏது. அப்புஷ்கரம் என்ற புண்ணிய தலத்திற்கே கங்ரோலியிலிருந்து அடுத்து அடியோங்கள் பயணம் செய்தோம். புஷ்கரத்தின் சிறப்பு எல்லாமே அங்குள்ள தீர்த்தத்தில்தான் உள்ளது. பெருமாள் தீர்த்த ரூபியாக அருள் பாலிப்பதால் இதை தீர்த்த ராஜா என்கின்றனர். அகலிகையின் கதையை நாம் அறிவோம். கௌதம முனிவரின் பத்னியான இவளைக் கண்டு மோகித்து இந்திரன் வஞ்சித்து விடுகிறான். நடந்ததை அறிந்த முனிவர் அகலிகையை கல்லாகப் போகும்படியும், இந்திரன் மேனி முழுவதும் ஆயிரம் கண்கள் பெறும்படியும் சாபமளிக்கிறார். இச்சாபம் தீர இந்திரன் பிரம்மனை நோக்கி தவம் செய்கின்றான். பிரம்மனும் கங்கை நதியை ஒரு குளத்தில் பெருக செய்து அதில் தனது கமண்டலத்து நீரையும் தெளித்துப் புனிதமாக்குகிறார். அத்தீர்த்தமே புஷ்கரம். இந்திரன் அதில் நீராடி தன் பாவங்களை போக்கிக்கொள்கிறான். இராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில், அஜ்மீரிலிருருந்து 11 கி.மீ. தொலைவில் பாலைவனத்தின் விளிம்பில் உள்ள அமைதியான நகர் புஷ்கர். நாகமலை அஜ்மீருக்கும் புஷ்கருக்கும் இடையே இயற்கை எல்லையாக உள்ளது. இத்தலத்தின் மையத்தில் உள்ள புஷ்கர் ஏரி உருவானதற்கான ஒரு சுவையான கதை உள்ளது அது என்னவென்று காணலாமா அன்பர்களே. பூவுலகில் ஒரு யாகம் செய்வதற்கு உரிய இடம் ஒன்றைத் தேடி பிரம்மா அலைந்தபோது, ஓரிடத்தில் சிந்தனையில் மூழ்கியிருந்தாரா‌ம்.  அ‌ப்போது அவருடைய கரங்களில் இருந்து ஒரு தாமரை மலர் தரையில் விழுந்ததும், மூன்று இடங்களில் நீரூற்று பீறிட்டது. புஷ்கரம் எனில் தாமரை என்றும் பொருள் உண்டு. பூமி பிளந்து மூன்று இடங்களில் ஜேஷ்ட புஷ்கரம், மத்ய புஷ்கரம், கனிஷ்ட புஷ்கரம் என உண்டாக, அவற்றில் பிரம்மா, விஷ்ணு, சிவன் உறைவதாகக் கூறப்படுகிறது அவற்றில் ஒன்று தான் பிரம்மா வேள்வி செய்த புஷ்கர். எனவே தாமரை விழுந்ததால் உருவான இத்தடாகம் புஷ்கர் என்றழைக்கப்படுகின்றது. மண்ணார்நீர்எரிகால் மஞ்சுலாவும்ஆகாசமுமாம் புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்து எய்த்தொழிந்தேன் விண்ணார்நீள்சிகர விரையார்திருவேங்!கடவா அண்ணா! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே. (பெ.தி 1-9-7) என்றபடி தீர்த்த நாராயணனாக எம்பெருமான் அருள் பாலிக்கும் இப்புஷ்கர் ஏரியில் கார்த்திகை மாதம் சுக்ல பட்சத்தில் மூழ்கி, வராக மூர்த்தியை தரிசித்தால் முக்தி நிச்சயம். நூறு வருடங்கள் தவம் செய்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.  புனிதமாக‌க் கருத‌ப்படு‌ம் புஷ்க‌ர் ஏரியில் 52 படித்துறைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் எந்த நேரமும் புனித நீராடுகின்றனர். பத்ரி, பூரி, இராமேஸ்வரம், துவாரகை முதலிய யாத்திரைகளின் பலன் புஷ்கரத்தில் நீராடினால்தான் பூர்த்தியடையும் என்பது வேதவாக்கு. அடியோங்களுக்கு அவனருளால் இத்துவாரகை யாத்திரையின் போது அது இயற்கையாகவே அமைந்தது. எண்கோண வடிவத்தில் அமைந்துள்ளது புஷ்கர சரோவரத்திற்கு அடியோங்கள் முதலில் சென்றோம். பண்டாக்கள் எங்களை சூழ்ந்து கொண்டனர். புஷ்கரின் கரையில் பித்ரு கடன் செய்வது மிகவும் சிறப்பு என்பதால் அக்கடமையை முதலில் முடித்தோம். பின்பு புஷ்கரணியில் ஆனந்தமாக நீராடினோம். பின்னர் பிரம்மாவை தரிசிக்க சென்றோம். இத்தலத்தில் பிரம்மாவிற்கு தனிக்கோவில் அமைந்துள்ளது ஒரு தனி சிறப்பு. கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி ஐந்து நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது அப்போது நடைபெறும் கால்நடை சந்தை உலக பிரசித்தம் பெற்றது. மேலும் இராமபிரான் தசதரதருக்கு பித்ரு காரியம் செய்த தலம், காந்தியடிகள், இந்திரா காந்தி ஆகியோர்களின் அஸ்தி கரைக்கப்பட்ட தலம். வாருங்கள் அன்பர்களே இவ்வளவு சிறப்பு பெற்ற புஷ்கரில் நீராடி பிரம்மனை தரிசிக்கலாம். இவ்வூரில் மட்டும் பிரம்மாவின் ஆலயம் அமைந்திருப்பதற்கான காரணம் என்ன என்பதற்கும் ஒரு கதை உள்ளது அது என்ன என்று காணலாமா அன்பர்களே. புஷ்கரின் கரையில் யாகம் செய்ய அமர்ந்த பிரம்ம தேவர் யாகத்தில் உடன் அமர சாவித்திரியை (சரஸ்வதி) அழைத்து வர நாரதரை அனுப்புகின்றார். நாரதர் செய்த கலகத்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு சாவித்திரி வராமல் போக பிரம்மன் காயத்ரி என்ற குஜ்ஜர் இனப் (இடைக்குல)பெண்ணை திருமணம் புரிந்து கொண்டு யாகத்தை துவங்குகின்றார். தாமதமாக வந்து சேர்ந்த சாவித்திரி சாபம் கொடுக்க பிரம்மாவிற்கு வேறெங்கும் கோவில் இல்லாமல் போனது. இக்கோவிலிலும் பூஜைகள் கிடையாது. [எண்கோண வடிவத்தில் புஷ்கர தடாகம்] முப்புறமும் மலைகள் சூழ்ந்த புஷ்கரில் கோயில்கள் ஏராளம். இவற்றில் முக்கியமானது ஸ்ரீஜகத் பிதா பிரஹ்மா மந்திர், புஷ்கர் என்றழைக்கப்படும் பிரம்மன் ஆலயம். நாட்டில் பிரம்மாவுக்குள்ள ஒரே கோயில் இதுதா‌ன் எ‌ன்பது  இத‌ன்  ம‌ற்றொரு ‌சிற‌ப்பு.  இ‌க்கோ‌யி‌ல் செந்நிறத்தில் கூரான கோபுர‌த்தை‌க் கொ‌ண்டது. உயரத்தில் அமைந்துள்ளது ஆலயம் பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். தலைவாசலில் பிரம்மாவின் வாகனமான அன்னம் அழகிய சிலையாகக் காட்சி தருகிறது. நான்முகன் அருகிலேயே காயத்ரி தேவி வீற்றிருக்கிறாள். ஆலய முன்முக மண்டபம் சலவைக்கல்லால் ஆனது. பிரார்த்தனை செய்து கொண்டு பக்தர்கள் பதித்து வைத்த வெள்ளி நாணயங்களை இம்மண்டபம் முழுவதும் காணலாம். தரையில் பதிக்கப்பட்ட இந்த நாணயங்கள் பக்தர்கள் கால்கள் பட்டு தேய்வது போல தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும் தேய்ந்து விடும் என்பது நம்பிக்கை. பிரம்மாவை திவ்யமாக சேவித்தோம். ஆதி காலத்தில் கட்டப்பட்ட கோவில், அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டது பின்னர் 1809ல் கோகுல் சந்த்ரேபக் என்பவரால் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் கோபுரத்தின் அருகில் சனகாதி முனிவர்களின் சிலைகள் உள்ளன. இந்நகரத்தின் ஒரு சிறப்பு இந்நகரத்தின் எல்லைக்குள் மிருகங்கள் கொல்லப்படுவது இல்லை. இங்குள்ள அனைவரும் சைவம்தான். பிரம்மாவின் முதல் மனைவி சாவித்திரிக்கு  ஒரு கோயில் இ‌ங்கு‌ள்ளது.  இது பிரம்மனின் கோயிலுக்குப் பின்னால் உள்ள மலையின் மீது அமை‌ந்து‌ள்ளது. கோ‌யிலு‌க்கு ப‌க்த‌ர்க‌ள் எ‌ளிதாக  ஏறிச் செல்லு‌ம் வகை‌யி‌ல் படிகள் அமை‌க்க‌ப்ப‌ட்டு உள்ளன. மாபாதகங்களைத் தீர்க்கும் அருட்சக்தியாக அன்னை விளங்குகிறாள். கெளதம முனிவரால் சபிக்கப்பட்ட அகலிகை இவ்விடத்தில்தான் இராமபிரானால் சாபவிமோசனம் பெற்றாள். விஸ்வாமித்திரர் தவம் செய்த இந்த இடத்தில் அகத்தியரின் குகையும் உள்ளது.  கோயிலில் இருந்து ஏரியையும் சுற்றியுள்ள பாலைவனப் பரப்பையும் கா‌ண்பது  அனைவரது உ‌ள்ள‌த்தையு‌ம் கொ‌ள்ளை கொ‌ள்ளு‌ம் எழிலான  கா‌ட்‌சியாகு‌ம். பிரம்மா மற்றும் சாவித்திரி ஆலயம் மட்டுமல்லாமல் வராஹ மூர்த்தியின் ஆலயமும், தென்னிந்திய இராஜகோபுரம் மற்றும் கட்டிடகலை அமைப்பில் அமை‌ந்த ரங்ஜீ ஆலயம் (அரங்கநாதர்) ஆகியவை புஷ்கரில் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள் ஆகும். மணிராம் என்ற சேட் ஒருவர் தீராத நோய்வாய்ப்பட்டிருந்த போது தமிழ்நாட்டின் வைணவப் பெரியார் ஒருவர் அவரது நோயைத் தீர்த்திருக்கிறார். சேட்ஜீ தனது செல்வம் அனைத்தையும் அவரது காலடியில் கொட்டீயிருக்கிறார். அதில் ஒரு பைசா கூட தனக்காக அவர் எடுத்துக் கொள்ளாமல் அந்த சேட்ஜீயைக் கொண்டே முழுதும் தமிழ்நாட்டு பாணியில் இக்கோவிலை கட்டுவித்தார். மூலவராக ஸ்ரீதேவி பூதேவியருடன் ஸ்ரீவைகுண்டநாதர் அருள்பாலிக்கின்றார். அஹோபில நரசிம்மர், இராமர், மஹாலக்ஷ்மித்தாயார், உடையவர், ஆண்டாள், தேசிகர் தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். அடியோங்களுக்கு வராஹர் ஆலயம் சென்று தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. அமைதி தவழும் புஷ்கரில், அ‌க்டோப‌ர்-நவ‌ம்ப‌ர்  மாத‌த்‌தி‌ல்  வரு‌ம் கா‌ர்‌த்‌திகைப்  பெள‌ர்ண‌மி ‌உ‌ற்சவ‌ம்  வெகு ‌சிற‌ப்பாக  கொண்டாடப்படுகின்றது. தீபாவளி இவர்களின் கணக்குப்படி கார்த்திகை மாதம் அமாவாசையன்று வருகின்றது எனவே தீபாவளியை அடுத்து பத்து நாட்கள் கழித்து ஐந்து நாட்கள் நடக்கும் இ‌ந்த  உற்சவ‌த்‌தி‌ன் போது இ‌ந்நகரமே ‌விழா‌க் கோல‌ம் பூணு‌கின்றது.  ஆதி காலத்தில் புஷ்கரில் எப்போது நீராடினாலும் அவர்கள் சொர்க்கத்தை அடைந்தனராம், எனவே சொர்க்கம் நிறைந்து விட, யமன் வேண்ட கார்த்திகை மாதம் வளர்பிறை ஐந்து நாட்கள் புஷ்கரில் நீராடுபவர்கள் மட்டுமே சொர்க்கம் அடைவர் என்று பிரம்மா மாற்றினார். எனவே அந்த ஐந்து நாட்கள் உற்சவம் கொண்டாடப்படுகின்றது. அச்சமயம் லட்சக்கணக்கான ம‌க்க‌ளின் ஆரவாரம் அலைமோதும், பிரம்மாண்டமான கால் நடைசந்தையும் குறிப்பாக ஒட்டக சந்தை அப்போது சிறப்பாக நடைபெறுகிறது. இப்புஷ்கர் மேளா போது வண்ண வண்ணக் கடைகள் பு‌திதாக  தோ‌ன்று‌‌கி‌ன்றன. இவைதா‌ன்  உ‌ற்சவ‌த்‌தி‌ன் மு‌க்‌கிய நாயகமாக‌ ‌விள‌ங்கு‌கி‌ன்றன.  இசை ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌ம்,  நடன ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌ம் க‌ண்களையு‌ம், காதுகளையு‌ம் கு‌ளி‌ர்‌வி‌க்‌கி‌ன்றன.  உலகப்புகழ் பெற்றது என்பதால் அச்சமயத்தில் வெளிநாட்டினர் அதிக அளவில் வருகின்றனர். உ‌ற்சவ‌த்‌தி‌ன்  ம‌ற்றுமொரு  அ‌ம்சமாக  நாவில் நீர் ஊறச் செய்யும் பாரம்பரியத் திண்பண்டங்களும் விற்கப்படுகின்றன. வண்ண வண்ண உடைகள் அணிந்த கிராம மக்கள் விழாவுக்கு மெருகூட்டுகின்றனர். அழகான பின்னணியில், கவர்ச்சிகரமான பொம்மலாட்டம் உட்பட ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கால்நடைகள் ஏலம் விடப்படுவது, அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்களின் ஓட்டப்பந்தயங்கள், குதிரை நடனம் ஆகியவையும் கொண்டாட்டங்களுக்குப் பொலிவூட்டுகின்றன. இக்கொண்டாடத்தைக் காண வெளிநாட்டினர் பலர் புஷ்கர் வருகின்றனர். இவ்வாறு அவனருளால் தரிசிக்க நினைத்த அனைத்து ஆலயங்களிலும் அருமையான தரிசனம் பெற்றது மட்டுமல்லாமல் திட்டமிடாத சில ஆலயங்களையும் தரிசித்த மகிழ்ச்சியில் அகமதாபாத் கிளம்பினோம். யாத்திரை முடித்து இல்லம் திரும்புகிறோம் என்ற மகிழ்ச்சியில் வண்டி ஓட்டுநரும் உற்சாகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து அகமதாபாத் சேர்த்தார். அகமதாபாதில் இரண்டு நாட்களில் எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தோம் என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. அத்தியாயம் -18 அகமதாபாத் சுற்றுலா வண்டி ஓட்டுநர் கூறிய அறிவுரையின் பேரில் முதல் நாளே டாகோர் துவாரகை சென்று விட்டு பிறகு துவாரகை சென்றதாலும் சென்ற தலமெல்லாம் உடனே அருமையான தரிசனம் கிடைத்ததாலும் டி அகமதாபாதில் ஒரு நாள் அதிகமாக தங்க வேண்டி வந்தது. அகமதாபாதிலிருந்து சென்னைக்கான விமான டிக்கெட் முதலிலேயே பதிவு செய்திருந்ததினால் இரண்டு நாட்கள் அகமதாபாதில் உள்ள சில இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். திரு. படேல் அவர்கள் இல்லம் சென்று அவருக்கு நன்றி கூறினோம். குஜராத் மாநிலத்தின் ஒரு மிகப்பெரிய நகரம் அகமதாபாத். ஆதிகாலத்தில் அசாவல் என்றும் பின்னர் கர்ணாவதி என்றும் அழைக்கப்பட்ட இவ்வூரை புதிய முறையில் நிர்மாணித்தவர் சுல்தான் அகமத்ஷா என்ற மன்னன். ஒரு சமயம் அவர் சபர்மதி ஆற்றங்கரையில் வந்து தங்கி இருந்த போது அவரது வேட்டை நாய்கள் முயல் கூட்டம் ஒன்றை துரத்திச்சென்றதாகவும், இந்நகரம் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் அம்முயல் கூட்டம் வேட்டைநாய்களை எதிர்த்தன என்றும் அதனால் இவ்விடத்தில் எதோ ஒரு சிறப்பு இருக்கின்றது என்று தீர்மானித்த அவர் இவ்விடத்தில் இந்நகரை நிர்மாணித்தார். இந்நகரத்தில் கட்டிடகலைக்கு சிறப்பு சேர்க்கும் பல கட்டிடங்கள் உள்ளன. தீன் தர்வாஜா, ஆடும் கோபுரங்கள் அமைந்த ஜும்மா மஜீத், ஹைமத்கான் மசூதி, துளையிடப்பட்ட ஜன்னல்கள் அமைந்த சீதீ சையத் மசூதி ஆகியவை முகலாய கட்டிட கலையின் சிறப்பை எடுத்துக் காட்டும் அழகிய கட்டிடங்கள். மேலும் கங்காரியா ஏரியும் அதனுடன் இணைந்த பூங்காவும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் செல்ல வேண்டிய இடம். அடியோங்கள் அகமதாபாதில் முதலில் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றோம். வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க! என்று பாரதியார் போற்றிய தேசப்பிதா மகாத்மா காந்தி 1918 முதல் 1933 வரை அன்னை கஸ்தூரிபாய் அவர்களுடன் இவ்வாசிரமத்தில் வசித்தார். முதலில் இது சாத்தியாகிரக ஆசிரமம் என்றழைக்கப்பட்டது. 1930 உப்பு சத்தியாகிரகத்திற்காக காந்தியடிகள் தண்டி யாத்திரை மேற்கொண்டது இங்கிருந்துதான். காந்தியடிகள் இந்தியா சுதந்தரம் அடைவதற்குரிய வழிகளை வகுத்தார். தேசிய நினைவுச் சின்னமாக விளங்கும் இவ்வாசிரமம் சபர்மதியாற்றின் கரையில் அமைந்துள்ளது. அகமதாபாத் ஒரு பெரிய நகரம்தான் அதில் ஓடும் ஆற்றை மிகவும் சுத்தமாக பராமரிக்கின்றனர். அதுவும் ஆசிரமத்தை ஒட்டி ஆற்றங்கரையில் அருமையான பூங்காவும் அமைத்துள்ளனர். ஆசிரமத்தில் காந்தியடிகள் தங்கிய அறை, அவர் நூல் நூற்ற இராட்டை, அவர் எழுத பயன்படுத்திய சிறு மேசை. அவருடைய வாழ்வுடன் தொடர்புடைய பல நிகழ்வுகளின் புகைப்படங்கள், நமது சுதந்திர போராட்டத்தின் பல்வேறு புகைப்படங்கள் ஆகியவற்றை பார்த்து இரசித்தோம். ஆங்கில ஏகாதிபத்தியத்தை அகிம்சை என்ற ஆயுதத்தை கொண்டு வீழ்த்திய மகான் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்பதைப் பார்த்து ஆச்சிரியப்படாமல் இருக்க முடியவில்லை. ஆசிரமத்தின் விற்பனை நிலையத்தில் சில நினைவு பரிசுகள் வாங்கினோம். ஆசிரமத்தின் உள்ளே நுழைந்தாலே மனதில் ஒரு அமைதி தவழ்வதை இன்றும் உணர முடிகின்றது. ஆசிரமத்தை சுற்றிப் பார்த்து விட்டு அடுத்து எங்கு சென்றோம் தெரியுமா அன்பர்களே? குஜராத்தி உணவை முழுவதுமாக சுவைக்க ஒரு நல்ல உணவகத்திற்கு அழைத்து செல்லுமாறு வண்டி ஓட்டுனரிடம் கூறினோம் அவரும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். சிறு பூரி தொடங்கி பல வகையான பூரிகள், சப்பாதிகள், இனிப்புகள் என்று சுமார் 32 வகைகள் கொண்ட அவ்வுணவை இரசித்தோம். அவ்வுணவகத்திலும் கோவர்த்தனகிரிதாரி கண்ணன் இருந்தான். மனத்திருப்தியுடன் அடுத்து அறிவியல் மையம் சென்றோம். அகமதாபாத் நகரத்தின் ஒரு சிறப்பு அம்சம் இந்த அறிவியல் மையம் (Science City) ஆகும். அறிவியல் உண்மைகளை எளியவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இம்மையத்தை அமைத்துள்ளனர். கோளரங்கம் ஒன்றும் இம்மையத்தில் அமைந்துள்ளது. மேலும் சூரிய குடும்பத்தில் ஒரு சுற்றுலா (Journey through Solar system), அண்டவெளி (Hall of Space), பூமிக்கோள் (Planet Earth Pavilion), வாழ்வியல் பூங்கா (Life Science Park), சக்தி கல்வியியல் (Energy Education), மின்சாரம் (Electrodome) என்று பல பெரிய அரங்கங்கள் இவ்வறிவியல் மையத்தில் உள்ளன. அனைத்தையும் முழுதுமாக பார்க்க வேண்டுமென்றால் பல மணி நேரம் பிடிக்கும், நேரமின்மையால் அவற்றை அவசரமாகச் சுற்றி வந்தோம், ஒரு விண்கலம் வழியாக விண்வழியில் (Space) பயணம் செய்து சூரிய குடும்பத்தை சுற்றி வந்தோம். கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது ஆனால் அருமையான அனுபவமாக இருந்தது. 5 பரிமாணத் திரைப்படம் பார்த்தோம். அதில் நாங்கள் ஒரு அதிவேக தொடர் வண்டியில் பயணம் செய்யும் போது ஏற்படும் அனுபவங்களை உணர்ந்தோம். வண்டி அதி வேகத்தில் ஓடும் போது அதன் அதிர்வு, மல்லிகைத் தோட்டத்தில் இடையே செல்லும் போது மல்லிகையின் மணம், ஒரு அருவியின் ஊடே செல்லும் போது தண்ணீர்ச் சிதறல் என்று ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மன அமைத்திக்காக இசை நீரூற்றும் (Music Fountain) உள்ளது. மாலை திரு, பட்டேல் அவர்கள் இல்லம் சென்று அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்தோம். மறு நாள் மாலை விமானம் என்பதால் காலை பாலாஜி மந்திர் என்றழைக்கப்படும் திருவேங்கடவன் ஆலயம் சென்றோம். திருப்பதியில் உள்ளது போலவே விமானம், விமான வெங்கடேஸ்வரர், பிரம்மாண்ட கருடன் மற்றும் அனுமன் சிலைகள் என்று எழிலாக அமைந்திருந்தது ஆலயம். பிரம்மாண்ட விஸ்வரூப விஷ்ணு சிலையும் ஆலயத்திற்கு மெருகூட்டியது. ஆலயத்தில் திருப்பதியில் உள்ளது போலவே பூசைகள் நடைபெறுகின்றனவாம். உற்சவர், வாகனங்கள் உள்ளன, பிரம்மோற்சவமும் நடைபெறுகின்றது என்றார்கள். வேங்கடவனின் சன்னதியின் இரு புறமும் அலர் மேல் மங்கைத் தாயாருக்கும், ஆண்டாளுக்கும் சன்னதிகள் உள்ளன. விசாரித்த போது திருப்பதிக்கும் இக்கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, திருப்பதி போலவே ஆலயம் அமைக்க வேண்டும் என்று விரும்பிய அன்பர்கள் சிலர் இணைந்து ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி, பொது மக்களின் நன்கொடை மூலம் இவ்வாலயத்தை கட்டி பராமரித்து வருகின்றனர் என்றனர். திருப்பதியில் நடைபெறுவது போலவே பூசைகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவத்திற்கான வாகனங்களும் உள்ளன. விமானத்தில் விமான வெங்கடேஸ்வரரும் அருள் பாலிக்கின்றார். அருகிலேயே வித்தியாசமாக டெல்லியில் உள்ள தாமரை ஆலயம் போல ஒரு கட்டிடம் இருந்தது அது என்ன என்று கேட்ட போது ஒரு யோகா பல்கலைக் கழகம் என்றார்கள். உள்ளே சென்று பார்க்கலாம என்று வினவிய போது செல்லலாம் என்று ஒரு அரங்கத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நமது உடலில் உள்ள சக்கரங்கள், பல்வேறு யோகாசனங்களை பற்றிய விளக்கங்கள், யோகாவின் பலன்கள் என்று பல உபயோகமான தகவல்களை பகிரும் பாதாகைகள் அவ்வரங்கில் இருந்தன. அவற்றை பார்த்துவிட்டு வந்தோம். [படிக்கிணற்றில் சுற்றுலா சென்ற அன்பர்கள்] அடுத்து படிக்கிணறு செல்லலாம் என்று வண்டி ஓட்டுனர் கூறினார். ஆகவே அகமதாபாதிற்கு அருகில் உள்ள அடலெஜ் (Adalej Step Well) என்ற ஊரில் உள்ள படிக்கிணற்றை பார்க்கச் சென்றோம். வருடத்தில் தென்கிழக்கு பருவமலை சமயத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே மழை பெய்யும் என்பதால் வருடம் முழுவதற்குமாக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டி குளங்களை அழகிய வேலைப்பாடுகள் கொண்ட படிக்கிணறுகளாக இப்பகுதியில் அமைத்தனர். பாலைவனம் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள குஜராத் மற்றும் இராஜஸ்தான் பகுதிகளில் இவ்வாறு சுமார் 120 படிக்கிணறுகள் அமைந்துள்ளன. இக்கிணறுகளை இவர்கள் வாவ்(Vav) என்றழைக்கின்றனர். (தமிழில் வாவி என்றழைப்பதுடன் ஒத்துச் செல்கின்றதா?) முதலில் விசவாடா மூலதுவாரைக்கு அருகில் ஒரு ஞான வாவியைப் பார்த்தோம் அல்லவா? அன்பர்களே. இக்கிணறுகளின் அருகாமையில் அக்காலத்தில் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளன. இக்கிணற்றை ஒட்டியும் ஒரு கதை உள்ளது அது என்னவென்று காணலாமா? இக்கிணறு உருவாகக் காரணமாக இருந்தவர் ருடா பாயி என்ற ஒரு அரசி, எனவே இக்கிணறு ருடாபாய் வாவ் என்றும் அழைக்கப்படுகின்றது. பதினைந்தாம் நூற்றாண்டில், இப்பிரதேசத்தை இராணா வீர் சிங் என்ற வகேலா வம்ச இந்து அரசன் ஆண்டு வந்தான் அவனே 1498ம் ஆண்டில் இக்கிணற்றை வெட்ட ஆரம்பித்தான். இடையில் அண்டைய தேசத்தை சேர்ந்த முகமது பெகாதா என்ற அரசன் படை எடுத்து வந்தான் போரில் வீர் சிங் வீர மரணமடைந்தான். பேரழகியான அரசியின் அழகில் மயங்கிய முகமது அவளை மணந்து கொள்ள விரும்பினான். அரசியும் ஒரு என் கணவர் கட்டத் துவங்கிய கிணற்றை முடித்தால் பின்னர் மணம் செய்து கொள்கிறேன் என்று நிபந்தனை விதித்தாள். அரசனும் வெகு சீக்கிரத்தில் கிணற்றின் கட்டுமானத்தை முடித்தான். ஆனால் கிணற்றின் கட்டுமானம் முடிந்த பின்னர் அரசி தன்னுயிரை தானே எடுத்துக்கொண்டாள். முகமதுவும் அரசியின் கனவான கிணற்றை நாசம் செய்யாமல் சென்று விட்டதால் அருமையாக வேலைப்பாடுகளுக்கு உதாரணமான இக்கிணறு இன்றும் சிறப்பாக விளங்குகின்றது. இந்த அடலெஜ் கிணறு சோலங்கி பாணியில் எண்கோண அமைப்பில் ஐந்து நிலை கிணறாக எழிலாக அமைந்துள்ளது. சிற்பக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இக்கிணறு. காற்று வரவும், மக்கள் கூடவும் ஏதுவாக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும்படி ஆழமாகவும் அதே சமயம் நீரின் மட்டம் உயரும் போதும் மக்கள் தண்ணீர் சுமந்து செல்ல ஏதுவாக ஐந்து நிலைகளை அமைத்துள்ளனர். ஒவ்வொரு நிலையிலும் காற்று வர அருமையான சாளரங்களும், மக்கள் கூட முற்றங்களும் அமைந்திருப்பது இக்கிணற்றின் சிறப்பு. ஒரு அருமையான கலை பொக்கிஷத்தை பார்த்த திருப்தியுடன் விடுதிக்கு திரும்பினோம். குஜராத் இனிப்புகளுக்கு பெயர் போனதல்லவா? வண்டி ஓட்டுனரிடம் எக்கடையில் நல்ல இனிப்புகள் கிடைக்கும் என்று கேட்டு அக்கடைக்கு சென்று இல்லத்தில் உள்ளவர்களுக்காக இனிப்புகள் வாங்கிக் கொண்டு மாலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தோம். அவனருளால் இந்த யாத்திரை ஒரு அருமையான பரிபூரண யாத்திரையாக அமைந்தது. எந்த வகையிலும் சிறு குறைபாடும் ஏற்படவில்லை. தரிசிக்க நினைத்த அனைத்து ஆலயங்களில் அனைத்திலும் அருமையான தரிசனம் கிட்டியது. பல ஆலயங்களில் ஆரத்தி தரிசனமும் கிட்டியது. வண்டியில் சென்றதால் எங்கும் அதிகமாக காக்க வேண்டி இருக்கவில்லை. நவதுவாரகைகள் தவிர அதிகப்படியாக சில ஆலயங்களையும் சேவித்தோம். மேலும் புஷ்டி மார்க்கம், வல்லபாச்சார்யார், ஸ்வாமி நாராயண், ஜலாராம் பாபா முதலிய குஜராத்தின் ஆச்சார்யர்களைப் பற்றி அறிந்து கொண்டோம். துவாரகை யாத்திரையின் பலனை நல்கும் புஷ்கர் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. [திரு. பார்கவ் படேல் அவர்களுடன் அடியோங்கள்] நூலின் நிறைவாக இந்த யாத்திரைக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறவேண்டிய தருணம். முதற்கண் இந்த யாத்திரைக்கு வேண்டிய அறிவுரைகளை வழங்கி, வண்டிக்கு ஏற்பாடு செய்து பல வகையிலும் உதவி செய்த அடியேனுடன் பணி புரிந்த திரு. M.R.படேல் அவர்கள் மற்றும் அவரது மைந்தர், கொடினார் மூல துவாரகைக்கு துரிதமாக அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்த திரு.பார்கவ் படேல் அவர்களுக்கும் மிக்க நன்றி. வண்டி ஓட்டுனர் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும், துரிதமாகவும் அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். அவர் கூறியபடி சென்றதால் எவ்விடத்திலும் எந்தவித சிரமமும் இருக்கவில்லை அனைத்து தலங்களிலும் அருமையான தரிசனமும் கிட்டியது. வண்டி ஓட்டுனர் திரு.பவின் யக்ஞிக் அவர்களுக்கும் அடியோங்களின் மனமார்ந்த நன்றி. ஆரம்பம் முதல் வலைத்தளங்களில் பல தகவல்களை பெற்றோம், அவைகளை எழுதிய அந்த முகம் தெரியாத அன்பர்கள் அனைவருக்கும், இந்நூலில் சில படங்களை பயன்படுத்தியுள்ளேன் அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்நூலில் சொல், அல்லது பொருள் குற்றமிருந்தாலும் அதை பொறுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவற்றை அடியேனுக்கு muruganandams@rediffmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவித்து அவற்றை சரி செய்ய வாய்ப்பளிக்குமாறும் விண்னப்பித்து கொள்கிறேன். இந்த யாத்திரைக்கும் நூலுக்கும் எவ்விதமாகவே உதவிய அனைவருக்கும் அடியேனது அனந்த கோடி நமஸ்காரங்கள். நிறைவாக கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் சரம சுலோகம் ஸர்வ தர்மான் பரித்யத்ய மாகேகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா சர்வ பாபேப்ய மோக்ஷயிஷ்யாமி மாசுச: || என்றபடி அனைத்தையும் அவனது காலடியில் சமர்ப்பித்து பூரண சரணாகதி அடைய துவாரகாதீசன் நமக்கு வேண்டிய இம்மை மற்றும் மறுமைப்பேறு அனைத்தையும் வழங்குவான். இந்நூலைப் படிக்கும் அன்பர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணரின் தரிசனம் கிட்டவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இப்புத்தகத்தை வண்துவராபதி மன்னன் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன். ------------------------------------------------------------------------ பெரி.தி : பெரியாழ்வார் திருமொழி திரு – திருப்பாவை நா. தி நாச்சியார் திருமொழி பெரு.தி – பெருமாள் திருமொழி பெ.தி – பெரிய திருமொழி மு.தி – முதல் திருவந்தாதி. தி.வா -திருவாய்மொழி நூ தி : நூற்றெட்டு திருப்பதி திருவந்தாதி நூலின் பெயர் : நவ துவாரகை யாத்திரை நூல் அறிமுக உரை: நூலில் உள்ளது. நூல் ஆசிரியர் : கைலாஷி அட்டைப் பட வடிவமைப்பு : மீ.வேல். பிரசன்னா நூல் ஆசிரியர் அறிமுக உரை: இறைவன் புகழ் பாடும் ஒரு சிறுத்தொண்டன்   ஆசிரியரின் மற்ற நூல்கள்: https://freetamilebooks.com/ebooks/mukthinath-yatra/ https://freetamilebooks.com/ebooks/ahobila-yathra/ https://freetamilebooks.com/ebooks/karudasevai/ https://freetamilebooks.com/ebooks/thirupadhadharisanam/ FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.