[] 1. Title Page 2. Cover 3. Table of Contents நவ பிருந்தாவனம் மந்திராலயம் தரிசனம் நவ பிருந்தாவனம் மந்திராலயம் தரிசனம்   கைலாஷி   muruganandams@rediffmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - பிரசன்னா - udpmprasanna@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/nava_brindhavanam_mandhiralayam_dharisanam மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: மீ. வேல். பிரசன்னா - udpmprasanna@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Prasanna - udpmprasanna@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/nava_brindhavanam_mandhiralayam_dharisanam This Book was produced using LaTeX + Pandoc நவபிருந்தாவனம் – மந்திராலயம் யாத்திரை பத்மநாபம் ஜெயமுனீம் கவீந்த்ரம் ச வாகீசம் வ்யாஸராஜஹம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் த்தைவ ச ஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம் நவ பிருந்தாவனம் பஜே!  நவ பிருந்தாவனம் பஜே! பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே  முன்னுரை […] நவபிருந்தாவனத்தின்  பெருமைகளை  முதலில் தமிழ்  கூறும்  நல் உலகத்தினருக்கு  அறிமுகப்படுத்தியவர்  திரு. A.M.இராஜகோபால் அவர்கள்.  அவரின்  கட்டுரைகளை  படித்து  விட்டு  எனது  மைத்துனன் ஒரு  சமயம்  நவபிருந்தாவனம்,  ஹம்பி,  மந்திராலயம் சுற்றுலா சென்று  வந்த பின்  அப்புகைப்படங்களை  எனக்கு அனுப்பி  வைத்தார். பின்னர்  அம்மன் சத்தியநாதன் அவர்கள் எழுதிய “நவநிதி நல்கும் நவபிருந்தாவனம்”  என்னும்  நூலையும் படிக்கக் கொடுத்தார், அதைப் படித்த பிறகு ஒரு தடவை எப்படியாவது நவபிருந்தாவனம் சென்று வர வேண்டும்  என்ற அவா மனதில் தோன்றியது. பின்னர் ஒரு சமயம் ஒரு  இக்கட்டான  சமயத்தில் மந்திராலயத்திற்கும்  நவபிருந்தாவனத்திற்கும்  வந்து  தரிசனம் செய்கின்றேன் என்று வேண்டிக்கொண்டேன்,  இம்மகான்களின் பேரருளினால் அந்த இக்கட்டு விலகியது  வேண்டிக்கொண்டதை நிறைவேற்ற நண்பர் திரு. அ. தனுஷ்கோடியின்  உதவியினால் ஒரு அருமையான  சந்தர்ப்பம் கூடியது. அவ்வாறு இவ்விரு புண்ணிய தலங்களுக்கும் சென்று வந்த அனுபவமே இந்நூல்.   அவரும் அடியேனும் பல்வேறு ஆலயங்களுக்கு யாத்திரை செல்வது வழக்கம்.  அவரிடம் ஒரு தடவை நவபிருந்தாவனம் சென்று தரிசித்து வரலாம் என்று கூறியிருந்தேன் அவரும் காலம் கனியட்டும் என்றார்.  அவனருளால் தானே அவன் தாள் பணிய முடியும் அது போலவே அந்த மகான்கள் அனுமதித்தால் மட்டுமே நாம் அவர்கள் அருகில் சென்று நாம் அவர்களை வணங்க முடியும் எனவே அந்நாளுக்காக காத்திருந்தேன்.  அதிக நாட்கள் காத்திருக்க வைக்கவில்லை அவர்கள். 2011 ஜனவரி மாதம் நவபிருந்தாவனமும் மந்திராலயமும் செல்லலாமா? என்று ஒரு நாள் தனுஷ்கோடி கேட்ட போது  உடனே ஒத்துக்கொண்டேன்.  குடும்பத்தினர் அனைவருடனும் யாத்திரையை மேற்கொள்ள உத்தேசிருந்தேன் அதை தனுஷ்கோடி அவர்களிடமும் கூறினேன் அவரும் ஒத்துக் கொண்டார். அவர் முதலில் இந்த யாத்திரை சென்று வந்த திரு.மோகன் அவர்கள் அனைத்து ஏற்பாட்டையும் கவனித்துக்கொள்வார் என்று கூறினார்.  மேலும் தாங்கள் குடும்பத்தினருடன் வருவதால் பலர் குடும்ப சகிதமாக வருகின்றனர் மொத்தம் 23 பேர் வருகின்றனர். செல்வதற்கு புகை வண்டி டிக்கெட் முன்பதிவு செய்து விட்டோம் ஆனால் இன்னும் உறுதியாகவில்லை இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளதால் ஆகிவிடும் என்று கூறினார். திரு,மா.மோகன் அவர்கள் முன்னரே இவ்விருதலங்களுக்கும் சென்று  வந்திருந்த அனுபவத்தினால் தொடர்வண்டிக்கு பயணசீட்டு பதிவு செய்வது,  தங்க இடம் முன் பதிவு செய்வது,  பயணிக்க வண்டி என்று யாத்திரை சம்பந்தமான  அனைத்து தேவைகளையும்  அவரே கவனித்துக்  கொண்டார்.  2011ம் ஆண்டு  துவங்கும் ஜனவரி முதல் நாளில் இம்மகான்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.     சென்னையில் இருந்து ஹோஸ்பெட் செல்வதற்காக முதலில் 12609 -பெங்களூர் விரைவு வண்டியிலும் பெங்களூர் வரைக்கும்,  பெங்களூரிலிருந்து ஹோஸ்பெட் வரை செல்ல 16592 -  ஹம்பி  விரைவு வண்டியிலும்,  பின்னர்   ஹோஸ்பெட்டிலிருந்து மந்திரலாயம் செல்ல திருப்பதியிலிருந்து கோலாப்பூர் செல்லும்  17415 - ஹரிப்ரியா விரைவுவண்டியிலும்,  மந்திராலயத்திலிருந்து திரும்பி வர மும்பையில் இருந்து சென்னை வரும் 11028 மும்பை மெயிலிலும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.  இவ்வழியில்தான் செல்ல முடியுமா இன்னும் வேறு வழிகள் உள்ளனவா?  என்று மனதில் ஒரு ஐயம் தோன்றுகிறதா? இன்னும் சில வழிகளைப் பற்றிய விவரம். சென்னையில் இருந்து நவபிருந்தாவனம் செல்ல மேலே கூறியபடி தொடர் வண்டியிலும் செல்லலாம் அல்லது சென்னையில் இருந்து மும்பை செல்லும் இரயில் வண்டிகளில் குண்டக்கல் வரை சென்று அங்கிருந்து ஹோஸ்பெட்  சென்று அங்கிருந்து  பேருந்து,   கார், வேன் மூலமாக  ஆனேகுந்தி அடைந்து பின்னர் பரிசல் அல்லது படகு மூலம் துங்கபத்ரை நதியை கடந்து நவபிருந்தாவனத்தை அடையலாம். ஹோஸ்பெட்டிலிருந்து  கங்காவதி வழியாக ஆனேகுந்தி 45 கி .மீ தூரமாகும். ஹோஸ்பெட்டிலிருந்து முதலில் ஹம்பி சென்று அங்குள்ள விருபாக்ஷீஸ்வரர் ஆலயம்,  சக்ரதீர்த்தம்,  ஸ்ரீயந்த்ரோத்தாரக ஹனுமான் போன்ற தலங்களை தரிசித்து விட்டு கமலாப்பூர் வழியாக கங்காவதி வந்தும் ஆனேகுந்தி அடையலாம்.  குண்டக்கல்லில் இருந்து பேருந்து அல்லது சிற்றுந்து மூலம் பெல்லாரி வழியாக கங்காவதி அடைந்து பின்னர் 12 கி.மீ தூரத்தில் உள்ள ஆனேகுந்தி அடைவது இன்னொரு சாலை வழியாகும். மற்ற ஊர்களிலிருந்து வருபவர்களுக்கான வழி. பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக வருபவர்கள்,  தும்கூர், சிரா,  சித்ரதுர்கா,  ஹொசாஹல்லி,  கூட்கிலி வழியாக ஆனேகுந்தியை அடையலாம்.  பெங்களூரிலிருந்து பல் வேறு புகைவண்டிகள் ஹோஸ்பெட்டுக்கு உள்ளன. ஹைதராபாத்திலிருந்து நவபிருந்தாவனம்  சாலை வழியாக வருபவர்கள் மெஹபூப் நகர்,  ரெய்ச்சூர்,  மான்வி, கங்காவதி வழியாக ஆனேகுந்தி அடையலாம். மந்திராலயம் ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆனேகுந்தியிலிருந்து மந்திராலயம் சாலை வழியாக செல்ல  இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று கங்காவதி,  சிறுகுப்பா, சிந்தனூர், மான்வி, கல்லூர், பிக்ஷாலயா வழி.  இரண்டாவது கங்காவதி ரெய்ச்சூர் வழியாகும்.  சென்னையிலிருந்து நேரடியாக மந்திராலயம் செல்ல 11028, 11042, 11074, 19419, 22601 ஆகிய தொடர்வண்டிகள் உள்ளன. மந்திராலயம் ரோடு தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி பின் பேருந்து அல்லது ஆட்டோ மூலமாக மந்திராலயத்தை அடையலாம். இது வரை இவ்விரு தலங்களுக்கு செல்லும் வழிகளை பார்த்தோம். அடியோங்களின் யாத்திரை எவ்வாறு அமைந்தது மற்றும் தரிசனம் எவ்வாறு இருந்தது என்பதைப் அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. இந்த யாத்திரைக்கு மூல காரணமாக அமைந்த திரு. தனுஷ்கோடி அவர்கள், அனைத்து ஏற்படுகளையும் செய்த திரு.மோகன் அவர்கள் மற்றும் இந்நூலில் இருந்த சிறு பிழைகளை திருத்திக் கொடுத்த அடியேனுடன் பணி புரியும் திரு. அனந்தேஷ் ராவ் அவர்கள் மற்றும் உடன் வந்த அன்பர்கள் அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். தங்களுக்கு இந்நூல் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். முடிந்த வரை இதில் உள்ள தகவல்களை பற்றி விசாரித்து அறிந்தே எழுதியுள்ளேன் அதை மீறியும் ஏதாவது குறைகள் இருந்தால் அடியேனுக்கு muruganandams rediffmail.com என்ற மின்ன தெரிவியுங்கள் பிழைகளை திருத்தி வெளியிட ஏதுவாக இருக்கும். அத்தியாயம் - 1 : நவபிருந்தாவன மகான்கள் [நவ பிருந்தாவனம் - ஆனேகுந்தி] காலம்  காலமாக சம்சார பந்தத்தில் கட்டுண்டு உழலும் நம்மை நல்வழிபடுத்தி நாம் உய்ய வழி காட்டும்  பல்வேறு மகான்கள்  இப்பாரத தேசத்தில்  பல்வேறு  காலங்களில் தோன்றிக்  கொண்டிருக்கின்றனர் அவர்களின் அவதார  நோக்கம் முடிந்து தம்  பூத உடலை நீத்தாலும் பல் வேறு  இடங்களில்  ஜீவசமாதியில்  சூஷ்ம நிலையில் இருந்து பின்னும் நமக்கு அபரிமிதமான  கருணையினால்  அவர்கள் நமக்கு நல்வழி காட்டிக்கொண்டு இருக்கின்றனர்.  இவ்வாறு  ஒன்பது மத்வ மகான்கள்  பிருந்தாவனம் கொண்ட  இடம்   துங்கபத்ரா  நதியில்  நடுவே  அமைந்த  நவபிருந்தாவனம்  என்னும்  புண்ணிய  ஷேத்திரம்  ஆகும்.  திருவரங்கம்  போல துங்கபத்ரை  நதியின்  நடுவே  ஹம்பி, ஆனேகுந்தி அருகே   அமைந்த  ஒரு  மணல் திட்டில் அமைந்துள்ளது  நவபிருந்தாவனம்.  அது போல ஹரிவாயு குரு என்றும்,  இராயரு என்றும் போற்றப்படும்  ஸ்ரீஸ்ரீ இராகவேந்திர  சுவாமிகளின்  மூலபிருந்தாவனம்  அமைந்துள்ள  இடம்  மந்திராலயம் ஆகும். இப்பிருந்தாவனமும் துங்கபத்ரை நதிக்கரையில்தான் அமைந்துள்ளது.  இவ்விரு தலங்களுக்கும் மற்றும் இவற்றின் அருகில் அமைந்துள்ள இன்னும் சில தலங்களுக்கும் சென்று  வந்த யாத்திரை அனுபவமே இந்நூல். அடியோங்கள் முதலில் சென்று தரிசித்த தலம் நவபிருந்தாவனம் ஆகும், அகிலமே புகழும் நவநிதி நல்கும் நவ பிருந்தாவனம் பாரத தேசத்தில், கர்நாடக மாநிலத்தில், கொப்பல் மாவட்டத்தில், கங்காவதி தாலுக்காவில் ஆனேகுந்தியில்  துங்கபத்ரை ஆற்றின் நடுவில் உள்ள ஒரு மணல் திட்டில் அமைந்துள்ளது. நினைத்தாலும், துதித்தாலும் நமது மனக்குறைகளை நீக்கி நன்மைகளை வழங்கி நமது பிரார்த்தனைகள் நிறைவேற செய்யும் நவபிருந்தாவான மஹான்கள் யார் என்று முதலில் காணலாமா அன்பர்களே? (கீழே உள்ள மகான்களின் குறிப்புகள் எல்லாம் அம்மன் சத்தியநாதன் நூலில் உள்ளவை, சுருக்கி கொடுத்துள்ளேன், முழுதும் தெரிந்து கொள்ள விழையும் அன்பர்கள் அவர் நூலை வாங்கிப் படித்துக் கொள்ள வேண்டுகிறேன்.) [ஸ்ரீஸ்ரீ இராகவேந்திர சுவாமிகள்] பக்தி சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட த்வைதம் என்னும் தத்வவாத, பேத பரமான சித்தாந்தத்தை நிறுவி அபூர்வ பகவத் ஆக்ஞா தேவதா பிரார்த்தனாபூர்வகமான அத்விதீய உபகாரத்தை இப்புவியில் உள்ள ஸஜ்ஜனங்களுக்கு செய்து கொடுக்கவே அவதரித்தார் ஸ்ரீமத்வாச்சாரியர். அனுக்ஷணமும் பகவத் ஸ்ரமணையே நம்மால் செய்யத்தக்கது என்று முழங்கியவர் இவர். தாரதம்யத்தில் பிரம்மதேவருக்கு இணையாகவும், அடுத்தபடியாகவும் திகழ்கின்ற ரிஜூபுங்கவரான ஸ்ரீமுக்யப்ராண தேவரின் மூன்றாவது அவதாரமான மத்வாச்சாரியாரின் சீடர்கள் ஆவார்கள்.  த்ரேதா யுகத்தில் ஸ்ரீராமனுடன் அனுமனாகவும், த்வாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணருடன் பீமனாகவும், கலியுகத்தில் ஸ்ரீவியாசருடன் ஸ்ரீமத்வராகவும் இவர் அவதாரம் செய்துள்ளார். 1. ஸ்ரீபத்மநாப தீர்த்தர் (1317-1324) . நவபிருந்தாவனத்தில் முதல் பிருந்தாவனம் கொண்ட ஸ்ரீமத்வமதயதி. காகதீய ராஜனின் அமைச்சராக இருந்த ஸோபன பட்டர் வியாகரணம், தர்க்கம் போன்றவற்றில் மிகச்சிறந்து விளங்கினார். ஒரு தடவை மத்வாச்சாரியார் காகதீய அரசவைக்கு வந்த போது மத்வர் இவரை வாதத்தில் வென்றார் அதன் பின் இவர் மத்வரின் சீடரானார். மத்வாச்சாரியாரின் பிரதான சீடர்கள் நால்வரில் இவர் முதல்வர். மற்ற மூவர் ஸ்ரீநரஹரி தீர்த்தர் (கலிங்க தேசத்து அரசராக இருந்தவர்), ஸ்ரீமாதவ தீர்த்தர், ஸ்ரீஅக்ஷோபய தீர்த்தர். நால்வருமே முதலில் அத்வைதிகளாக இருந்தவர்கள் அவர்களை வாதத்தில் வென்று ஸ்ரீமத்வாச்சாரியர் அவர்களை தன் சீடர்களாக்கிக்கொண்டார். ஸ்ரீமத்வாச்சாரியர் இன்றும் பத்ரிநாத்தில் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருப்பதால் மத்வ மகான்களின் முதல் பிருந்தாவனம் இவருடையதுதான். (அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள காலம் இம்மகான்கள் பீடத்தில் இருந்த காலங்கள் ஆகும்) […] 2. ஸ்ரீஜய தீர்த்தர் (1365 -1388) / ஸ்ரீ ரகுவர்யர் (1502 – 1537): இரண்டாவது பிருந்தாவனம் ஸ்ரீஅக்ஷோப்ய தீர்த்தரின் (ஸ்ரீமத்வாச்சாரியாரின் நான்கு சீடர்களுள் ஒருவர்) சீடரான ஸ்ரீஜய தீர்த்தருடையதா? அல்லது ஸ்ரீரகுவர்யரின் பிருந்தாவனமா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. நாம் இரண்டு மகான்களையும் மனதில் தியானித்து இரட்டிப்பு நன்மை அடைவோமாக. இதில் ஸ்ரீஜய தீர்த்தர் ஸ்ரீமத்வாச்சாரியாரின் காலத்தில் கிரந்தங்களை சுமக்கும் எருதுவாக இருந்தார். ஒரு சமயம் மத்வர்களுடைய சீடர்கள் அவரிடம் உங்களுக்குப்பின் உங்களின் கிரந்தங்களுக்கு யார் விரிவுரை எழுதப்போகிறோம் என்று வினவிய போது மத்வர் இதோ இந்த எருது என்றார். அதனால் அசூயை கொண்ட சீடர்கள் அந்த எருதுக்கு விஷம் கொடுத்து கொன்று விடுகின்றர். மத்வர் ஸ்லோகம் பாடி அவ்வெருதை மீண்டும் உயிர்பித்தார். அடுத்த பிறவியில் அந்த எருது தோண்டுபந்த் என்னும் அரசகுமாரனாக பிறந்து அனைத்து செல்வம், இரு மனைவிகள், அரச வாழ்க்கை எல்லாவற்றையும் உதறித்தள்ளி, அக்ஷோப்ய தீர்த்தரின் சீடராகி மத்வாச்சாரியாரின் ஸர்வ மூல கிரந்தங்களுக்கு உரையெழுதிய மகான் ஆவார். இவர் எழுதிய ஸ்ரீமந்நியாயசுதா என்னும் கிரந்தம் மத்வர்களுக்கு ஒரு பெரிய பொக்கிஷம் ஆகும். இவர் இந்திரனின் அவதாரம் ஆவார். […] 3. ஸ்ரீகவீந்த்ர தீர்த்தர் (1392 – 1398): மூன்றாவதாக இங்கு பிருந்தாவனம் கொண்ட இவர் ஸ்ரீஜய தீர்த்தரின் சீடரான ஸ்ரீவித்யாதிராஜரின் சீடர் ஆவார், இவரது பாண்டியத்தையும் ஞானத்தையும் கண்டு ஸ்ரீ வித்யாதிராஜர் இவருக்கு சன்யாசமளித்து பீடாதிபதியாக்கினார். […] 4. ஸ்ரீவாகீச தீர்த்தர் (1398 – 1406) : இவர் கவீந்த்ர தீர்த்தரின் சீடர். தனது குருவைப்போலவே பாண்டித்யம் கொண்டவர். இவர் தனது குருவின் அருகிலேயே நவபிருந்தாவனத்தில் பிருந்தாவனஸ்தராகி அருளுகின்றார். 5. ஸ்ரீவியாஸராஜர் (1447 – 1539) : நவபிருந்தாவனத்தில் நடு நாயகமாக ஸ்ரீபிரஹ்லாதர் தவம் செய்த அதே இடத்தில் பிருந்தாவனம் கொண்டவர் இவர். முன் அவதாரத்தில் இவரே பிரஹ்லாதன், பின்னர் இவரே நாம் எல்லோரும் உய்ய இராகவேந்திரராக திருவவதாரம் செய்தார். ஸ்ரீவியாஸராஜரின் காலம் விஜய நகர சாம்ராஜ்யத்தின் பொற்காலமாகும். நரஸப்பன், வீர நரசிம்மன், கிருஷ்ண தேவராயர் மற்றும் அச்சுதராயர் என்னும் நான்கு அரசர்களுக்கு இராஜகுருவாக இருந்தவர் இவர். கிஷ்கிந்தை பகுதியான ஹம்பியில், ஸ்ரீராமர் சுக்ரீவனை முதன் முதலாக சந்தித்த துங்கபத்ரா நதியின் சக்ர தீர்த்தக் கரையில் ஸ்ரீகோதண்டராமர் சீதாவுடனும், இளவல் இலக்குவனுடனும் அனுமன் இல்லாமல் சுக்ரீவனுடன் சேவை சாதிக்கும் திருக்கோவிலின் அருகில் யந்ரோத்ர ஹனுமனை நாம் எல்லோரும் உய்ய பிரதிஷ்டை செய்த மகான். அவர் பாரத தேசமெங்கும் மொத்தம் 731 ஹனுமனை பிரதிஷ்டை செய்தவர் ஆவார். ஒரு சமயம் கிருஷ்ணதேவராயர் ஆண்டு கொண்டிருந்த போது அரச பதவியில் இருப்பவர்களை தாக்கும் குஹூ யோகம் நெருங்கியது. விஜயநகர சாம்ராஜ்யத்தை தனது அருளாசியின்படி ஆண்டுவரும் கிருஷ்ணதேவராயருக்கு குஹூ யோகத்தினால் ஏதும் தீங்கு ஏற்படக்கூடாது என்று ஸ்ரீ வியாஸராஜர் ஒரு நாளில் சிம்மாசனம் ஏறி குஹ யோகமாக வந்த சர்ப்பத்தின் மீது தனது காஷாய வஸ்திரத்தை வீசி குஹூ யோகத்திலிருந்து கிருஷ்ணதேவரையும் மாபெரும் இந்து சாம்ராஜ்ஜியத்தையும் காப்பாற்றிய மகான் ஆவார். அதுவரை ஸ்ரீவியாச தீர்த்தராக இருந்தவர் அன்று முதல் ஸ்ரீவியாசராஜர் என்றழைக்கப்படலானார். […] இவர் எழுதிய கிரந்தங்களுள் சிறந்தவை நியாய அமிர்தம், தர்க்க தாண்டவம், தாத்பர்ய சந்திரிகா ஆகியவை ஆகும். இவர் பெருமாளின் 24 திருநாமங்களைக் கொண்ட 24 பால சன்னியாசிகளுக்கு தீக்ஷை அளித்துள்ளார். மேலும் சீனப்ப நாயக் ஆக இருந்தவர் ஸ்ரீஹரி அருளினால் மனம் மாறி வந்த போது அவரை புரந்தரதாசராக்கி தாச கூட்டத்தையும் வளர்த்தவர் இவர். கனகதாசரும் வியாஸராஜரின் சீடராவார். இவரது பிருந்தாவனம் நவபிருந்தாவனத்தில் நடு நாயகமாக அமைந்துள்ளது மேலும் இவரது பிருந்தாவனத்திற்கு முன்னர் அலங்கார தூண்கள் அமைந்துள்ளன. இவருக்கு காட்சி அளித்த வண்ணம் சேவை சாதிக்கின்றார் ஸ்ரீ அவதாரத்ரய ஹனுமார். […] 6. ஸ்ரீஸ்ரீநிவாஸ தீர்த்தர் (1539 – 1564): இவர் ஸ்ரீவியாஸராஜ சுவாமிகளின் பூர்வாச்ரம தமக்கையின் மகன் மற்றும் சீடர் ஆவார். இன்றைக்கு ஸ்ரீவியாஸராஜரைப் பற்றிய பல செய்திகளை நாம் அறிந்து கொள்ள உதவியாக இருப்பது இவர் எழுதிய ஸ்ரீவியாஸ விஜயம் என்னும் நூல்தான். […] 7. ஸ்ரீ ராமதீர்த்தர் (1564 – 1584) : இவர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தீர்த்தருக்குப் பின் பட்டத்திற்கு வந்தார். இவர் ஸ்ரீவியாஸராஜர் அருளிய கிரந்தங்களை போதிப்பதிலும், பிரவசனம் செய்வதிலும் பெரும் பங்காற்றினார். ஸ்ரீ வியாஸராஜர், ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தீர்த்தர், ஸ்ரீ இராம தீர்த்தர் மூவரும் அடுத்தடுத்து பட்டத்திற்கு வந்து நவபிருந்தாவனத்தில் ” ஃ ” (ஆயுத எழுத்து) வடிவில் பிருந்தாவனஸ்தராகி இருப்பது வெகு சிறப்பு. […] 8. ஸ்ரீ ஸுதீந்த்ர தீர்த்தர் (1614 – 1623) : காமதேனுவாய், கற்பக விருக்ஷமாய் திகழும், இன்றைக்கு பூலோகமே மெய்மறந்து கொண்டாடும் ஸ்ரீஸ்ரீராகவேந்த்ர ஸ்வாமிகளை நமக்கு தந்தருளியவர் ஸ்ரீஸுதீந்த்ர தீர்த்தர். ஆம் இவர்தான் ஸ்ரீஇராகவேந்திரருக்கு சன்யாசம் அளித்தவர். ஸ்ரீஇராகவேந்திரரின் அவதார ரகசியத்தை அறிந்து கனவில் ஸ்ரீஇராமபிரான் கட்டளையிட்டபடி வேங்கடநாதனாக இருந்த போது மறுத்தவரை விடாப்பிடியாக எடுத்துரைத்து தன் குருவின் அவாவை நிறைவேற்றியவர் இவர். இவரை வணங்க நமது தேவைகள் எல்லாம் இவர் அருளால் நிறைவேறும். […] 9. ஸ்ரீ கோவிந்த ஓடயர் (1534): இவர் ஸ்ரீவியாஸராஜரின் சமகாலத்தவர், அவருக்கு முன்பே இங்கு பிருந்தாவனஸ்தரானவர். ஆயினும் பட்டியலில் ஐந்தாவதாக வரவேண்டிய இவரை கடைசியில் கூறுவது இவர் பட்டத்திற்கு வராததால் இருக்கலாம். கிருஹஸ்தராக இருந்து குடும்பத்திற்குண்டான கடமைகளை செய்யாமல் சுற்றித் திரிந்தவரை பக்குவப்படுத்தி சன்யாசம் அளித்தவர் ஸ்ரீவியாஸராஜர். இவ்வாறு சுமார் 300 ஆண்டுகள் இடைவெளியில் நவபிருந்தாவனம் உருவாகியது. இந்நவபிருந்தாவன நாயகர்களை நம்பிக்கையுடனும், நிஜ பக்தியுடனும் வழிபட அவர்களின் பரிபூரண அருள் நமக்கு கிட்டும். நாம் பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பலனால்தான் நமக்கு இந்த பாக்கியம் சித்திக்கும். அத்தியாயம்-2 : வேதாந்தங்கள் மூன்று [ஆதி சங்கர பகவத் பாதாள்] சனாதன தர்மமான நமது இந்து மதத்தில் பரமாத்மாவான இறைவனுக்கும் ஜீவாத்மாவான நமக்கும் உள்ள உறவை விளக்கும் மூன்று சித்தாந்தங்கள் உள்ளன அவையாவன ஆதி சங்கரரின் அத்வைதம்,  இராமனுஜரின் விசிஷ்டாத்வைதம்,  மத்வாச்சாரியாரின் துவைதம்.  இந்த யாத்திரை மத்வ மகான்களின் பிருந்தாவனங்களுக்கு என்பதால் மேலோட்டமாக மூன்று வேதாந்தங்களையும் காண்போம்.  ஜீவாத்மாக்கள் தங்களுடைய பரிபக்குவ நிலையின் படி தாங்கள் வழிபடும் கடவுளை தேர்ந்தெடுத்து வழிபட்டாலும் அடையும் பிரம்மம் ஒன்றே.  பாதைகள் பலவானாலும் சென்று அடையும் இலக்கு ஒன்றே.  எந்த மார்க்கம் சிறந்தது என்பதை சொல்வது அல்ல இப்பதிவு அவற்றின் சாராம்சம் என்ன என்பதை பகிரும் ஒரு முயற்சியே இது. அத்வைதம்: (அ + துவைதம், அத்துவிதம்) - அதாவது இரண்டற்ற நிலை. சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக  ஆத்மா  விளங்குகின்றது என்றும் கூறும்  தத்துவம் இந்த அத்வைத தத்துவம் வேதங்களின் சாரம். அத்வைதத்தின் பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஆதிசங்கரர்,  திருமூலர்,  தாயுமானவர், அருட்பிரகாச வள்ளலார், பாரதியார் போன்றோர்கள் கூறிச் சென்ற பல அரிய கருத்துக்களின் மூலம் அறியலாம், கேரளத்தில் காலடியில் பிறந்த  ஆதி சங்கர பகவத் முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார் அத்வைதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகள் 1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-)பிரம்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல. 2. பிரம்மம் என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப்பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரம்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும். 3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும்  ஜீவாத்மா வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பரமாத்மா ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே. 4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை இடைநிலை விளக்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும் போது அதை கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும்.  இதனையே சுருக்கமாகச் சொல்வதாயின் 5. பிரம்மத்தின் இரண்டற்ற நிலை. 6. பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடாத நிலை. 7. உலகத்தின் உண்மையற்ற நிலை எனக் கூறலாம். [இராமானுஜர்] விசிஷ்டாத்வைதம்: இவ்வேதாந்த நெறியை உலகிற்கு அளித்தவர் ஸ்ரீஇராமானுஜர் ஆவார். இவர் பிரம்ம சூத்திரம், பகவத்கீதை முதலியவற்றிற்கு தமது விசிஷ்டாத்வைதக் கொள்கைப்படி உரை எழுதினார். விசிஷ்ட +அத்வைதம் = விசிஷ்டாத்வைதம். அதாவது விசேஷ அத்வைதம் என்பதே விசிஷ்டாத்வைதமானது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் ஜீவாத்மா பரமாத்வாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது இந்நெறி. சித்து, அசித்து சேர்க்கையினால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே இதன் உட்கருத்து. பிரம்மம் ஒருவரே அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஜீவாத்மாவுடனும், அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்வாவே நிலையானவர், சர்வ சுதந்திரம் உடையவர் , அனைத்தும் அறிந்தவர், அனைத்து இடங்களிலும் நிறைந்திருப்பவர். சித்தும் அசித்தும் அவரை சார்ந்திருப்பவை. அன்பு, சுருதி, ஸ்மிருதி, நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தர்ம சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கம சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம். பிரபத்தி என்னும் சரணாகதி மூலம் முக்தி பெறலாம். வேதம் தமிழ் செய்த மாறன் என்று போற்றப்படும் நம்மாழ்வாரின் திவ்விய பிரபந்த பாடல்கள் விசிஷ்டாவைத்வைத கோட்பாடுகளுக்கு ஒரு சிறந்த ஆதாரம். [மத்வாச்சாரியார்] த்வைதம் :  இந்நெறியை அல்லது சமயத்தைப் பரப்பியவர் மத்வாச்சாரியர் என்று அழைக்கப்படும் மத்துவர் இவர் துளுவ நாட்டில் உள்ள உடுப்பிக்கு அருகில் அநந்தேஸ்வரம் என்னும் கிராமத்தில் அவதரித்தார். இவரது இயர்பெயர் வாசுதேவர். தமது ஒன்பதாம் வயதில் அச்சுதபிரகாசரின் சீடராகி துறவு மேற்கொண்டார்.  அப்போது இவர் ஸ்ரீஆனந்த தீர்த்தர்/ ஸ்ரீபூர்ணப்ரக்ஞர் என்ற பெயர்களைப் பெற்றார். ஜீவாத்மாவும் பரமாத்வாவும் வேறானவை. ஜீவாத்மா தனி பரமாத்மா தனி. மற்றவை அதில் சேராதவை என்பதாம். பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம் இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருட்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம். த்வைதம்’ என்றால் இரண்டு. முக்கியமாக பிரம்மத்தையும் ஆன்மாவையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப் பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவக் கூற்றுகளுக்கு இப்பெயர் நிலைத்தது. உண்மையில் இந்த வேதாந்தத்தில் இன்னும் சில தத்துவங்கள் வேறுபடுத்திச் சொல்லப்படுகின்றன. அதன்படி ஐந்து வேற்றுமைகள் நிரந்தரமானவை. அவை: • பிரம்மமும் ஆன்மாக்களும்: ஆத்மாவுக்கு காமகுரோதமோகங்கள் உள்ளன. அது மும்மலங்களால் மூடப்பட்டுள்ளது. அது குறைவும் முழுமையும் கொண்டது. ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே என்றால் அந்த் இயல்புகள் பிரம்மத்துக்கும் உரியன என்றகிறது. அப்படி அல்ல, பிரம்மம் தூயது, எந்நிலையிலும் முழுமை குறையாதது. • ஆன்மாவும் ஆன்மாவும்: ஆத்மாக்கள் அனைத்தும் ஒன்றல்ல. அப்படி ஒன்று என்றால் நன்மை தீமை என்பதற்கு வேறுபாடே இல்லாமல் போய் விடும் • பிரம்மமும் உலகும்: உலகிற்கு குணம், கருமம், தர்மம் ஆகியவை உள்ளன. அவ்வியல்புகளுக்கு அது கட்டுப்பட்டது. பிரம்மம் அத்தகைய அறியப்படும் இயல்புகள் கொண்ட ஒன்று அல்ல. அது நிர்ணயிக்க முடியாதது. • ஆன்மாவும் உலகும்: உலகத்தின் இயல்புகளான குணம், கருமம் ஆகியவற்றுடன் ஆத்மா இணைவதில்லை. ஆத்மா அதன் சாட்சியாகவே உள்ளது, அதன் பகுதியாக அல்ல. ஆகவே உலகம் ஆத்மாவுக்கு தொடர்பில்லாமல் வெளியே தனித்தியங்குகிறது. மற்றும் • உலகிலுள்ள பொருளும் பொருளும்: எல்லா பொருட்களும் ஒன்றல்ல. அப்படி ஒன்று என்றால் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரே குணம்-கருமம் ஆகியவைதானே இருக்கும்? ஆனால் இங்கே ஒவ்வொரு பருப்பொருளுக்கும் அதற்கான குணமும் செயலும் உள்ளது. இவ்வைந்து வேற்றுமைகளைத் தத்துவக் கண் கொண்டு ஆராய்ந்தால், பிரம்மம் என்று அழைக்கப்படும் நாராயணன் அல்லது கடவுள் தத்துவத்தில் இரண்டு அடிப்படை வேற்றுமைகளை இப்படியும் பாகுபடுத்தலாம். ஆன்மா கடவுளின் ஒரு அணுவளவு பாகமாதலால், இவர்களின் வேற்றுமையை மரத்திற்கும் மரத்திலுள்ள ஒரு இலைக்கும் உள்ள வேற்றுமையாகச் சொல்லலாம். இதை வடமொழியில் ஸ்வகத பேதம்  என்பர். அதாவது ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமை’.  கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள வேற்றுமையோ இரு பகுப்புகளுக்குள் (Categories)  இருக்கும் வேற்றுமை. இவ்வேற்றுமையை  விஜாதீய பேதம்  என்பர். மரத்திற்கும் வேறு பகுப்பைச்சேர்ந்த மலைக்கும் உள்ள பகுப்பு வேற்றுமை போல. இவ்விரண்டு அடிப்படை வேற்றுமைகளை முன் நிறுத்தியே மத்வரின் தத்துவ இயல் விரிவாக்கம் செயல்படுகிறது. அதனாலும் அவருடைய தத்துவம் துவைத-தத்துவம் என்று பெயர் பெறுகிறது. மத்வ தரிசனத்தின் அடிப்படை இதுவே. ஒருமையால் அல்ல பிரிவுகளால் தான் பிரபஞ்சம் இயங்குகிறது. ஞானம், கருமம், முத்தி ஆகியவை அப்பிரிவிலிருந்து உருவாகின்றவை. ஒருமையே உண்மையென்றால் இவை தேவையே இல்லை. மத்வர் ஐவகை பிளவுகளை முன்வைத்து பிரபஞ்ச இயக்கத்தை விளக்குகிறார். முக்தி என்பது அப்பிளவு இல்லாமலாகும் நிலையல்ல, அவற்றை தாண்டி பிரம்மத்தை அறியும் நிலையே. அதற்கு மத்வ மதம் முன்வைக்கும் வழி உணர்ச்சிகரமான தூய பக்தியேயாகும் இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் இவ்வேற்றுமை விஷயத்தில் முதலில் சொன்ன  ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமையை’ ஒப்புக்கொள்கிறது. ஆனால் இரண்டாவது வேற்றுமையை ஒப்புக்கொள்வதில்லை. ஆதி சங்கரரின் அத்வைதமோ இரண்டு வேற்றுமைகளையுமே ஒப்புக்கொள்வதில்லை. மத்வருடைய வேதாந்தக் கொள்கையை ‘துவைதம்’ (இரண்டுள்ளது) என்று அழைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு. கடவுள் நாராயணன் ஒருவர் தான் சுதந்திரர். மற்ற எல்லா உலகப்பொருட்களும் அவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் சுதந்திரமில்லாமல் அவரால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன. அதனால் சுதந்திரர் ஒரு பகுப்பாகவும் சுதந்திரமற்றதெல்லாம் ஒரு பகுப்பாகவும் இரண்டு பகுப்புகள் எக்காலமும் இருந்தே தீரும். இதனாலும் இக்கொள்கை ‘துவைதம்’ என்று கூறப்படுகிறது. ஶ்ரீமன் மத்வமதே ஹரி: பரதர: ஸத்யம் ஜகத் தத்வதோ பேத: ஜீவகணா: ஹரே: அனுசரா: நீசோச்ச பாவம் கதா: முக்திர் நைஜஸுகானுபூதிரமலா பக்திஸ்ச தத்ஸாதனம் அக்ஷாதித்ரிதயம் ப்ரமாணம் அகிலாம்னயைகவேத்யோ ஹரி: ஶ்ரீவியாச ராஜரின் இந்த ஸ்லோகத்தில் த்வைதத்தின் பல கோட்பாடுகள் விளக்கப்படுகின்றன. ஸ்ரீஹரியே சர்வோத்மோத்தர் அவருக்கு சமமானவரோ அவரை விட உயர்ந்தரோ யாரும் இல்லை, உலகம் உண்மையானது. ஜீவன்களுக்குள் ஏற்ற தாழ்வுகள் உண்டு. முக்தியென்பது சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்கும், அதற்கான வழி அசஞ்சலமான, நிர்மலமான பக்தி. மூன்று பிரமாணங்களுக்குள் வேதத்தால் மட்டுமே ஸ்ரீஹரியை அறிய முடியும். அத்தியாயம் -3 : நவபிருந்தாவன தலத்தின் மகிமை பிரம்மாவின் வையில் அங்கம் வகித்தர்களுள் ஒருவர் சங்குகர்ண தேவதை.  இவர் ஸ்ரீமந்நாராயணனின் அர்ச்சனைக்காகவும்,  அலங்காரத்திற்காகவும் நாள் தோறும்  வாசனை மிகுந்த பலவிதமான மலர்களை கொண்டு வரும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தார்.  இதற்காக இவர் பிரம்ம லோகத்திலிருந்து பூலோகம் வருவது வழக்கம். இப்படி அவர் வரும் போது அவரை கவர்ந்த ஒரு சில இடங்களில் அப்படியே லயித்து விடுவார்.  இவ்வாறு ஒரு சமயம் காலம் போவது தெரியாமல் காலம் தாழ்த்தி பூக்களை கொண்டு சென்றார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன் பூலோகத்தில் மனம் லயித்து நின்ற நீ அந்த பூலோகத்தில் பிறவியெடுக்கக் கடவாய் அதுவும் அரக்கர் கூட்டத்தில் பிறக்கக் கடவாய் என்று சாபம் தந்தார்.  இவ்வாறு பிரம்ம தேவரின் சாபம் பெற்ற சங்கு கர்ண தேவதை,  பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் செய்து தன்னை யாராலும் அழியாதபடிக்கு பலமான வரத்தை வாங்கிக்கொண்டு தேவர்கள் உட்பட்ட அனைவரையும் துன்புறுத்தி வந்த  ஹிரண்யகசிபுவின் மனைவி லீலாவதியின் கர்பத்தில் ஸ்ரீபிரஹலாதராக ஜனித்தார்,  இவருக்காக ஸ்ரீஹரி ந்ருஸிம்ஹராக அந்தியம் போதில் அரியுருவாய் அவதரித்து அவனது மார்பை தனது வள்ளுகிரால் கீறி கூடாவிரணியனை அழித்தார்.  தன் தந்தை கொல்லப்பட தானே காரணமாக இருந்ததை எண்ணி வேதனைப்பட்ட பிரஹலாதர் ஸ்ரீந்ருஸிம்ஹரை வேண்ட  அவரும்  மனத்தை ஒரு நிலைப் படுத்தும் யோகத்தை, யோகானந்த ந்ருஸிம்ஹராகி போதித்து தன் வக்ஷத் தலத்திலிருந்து சாளக்ராமத்தை எடுத்துத் தந்து  “புண்ய க்ஷேத்ரங்களுக்கும், புனித தீர்த்தங்களுக்கும் சென்று பூஜை தவம் செய்ய தந்தை மாண்டதற்குக் காரணமான பாவம் விலகும், மனதும் சாந்தமடையும் என்று அருளினார். அந்த சாளக்ராமத்தை எடுத்து கொண்டு வந்து கிருத யுகத்தில் பிரஹலாதர் தவம் செய்த இடம்தான் இந்நவபிருந்தாவனப் பகுதி.  சங்குகர்ண தேவதையே பின்னர் ஸ்ரீவியாஸராஜராகவும்,  ஸ்ரீராகவேந்திரராகவும்  அவதாரம் செய்து நவ பிருந்தாவனப் பகுதியை புனிதப்படுத்தியுள்ளனர். இங்கு தவம் செய்த போது அவரது மனதில் சாந்தம் பொங்கியது பாபம் விலகியது.  இதனால்தான் இன்றும் நவபிருந்தாவனத்திற்கு செல்பவர்களின் மனதில் உள்ள  கவலைகள் விலகும், முன் ஜென்ம வினை தீர்கின்றது. […] கிஷ்கிந்தா மலைத்தொடர் நவ பிருந்தாவனம் ஸ்ரீஇராமருடனும் தொடர்புடையது.  இராமசந்திர பிரபு ஹனுமனை முதலில் சந்தித்த கிஷ்கிந்தையே இப்பகுதி. சிற்றன்னை சொல் கேட்டு வனவாசம் வந்த காலத்தில் சீதையை பிரிந்த பின்பு கிஷ்கிந்தை நோக்கி வருகிறார்  வந்த காகுத்தன் சொல்லின் செல்வனாம் ஹனுமனின் மூலம் வானர அரசன்  சுக்ரீவனுடன் நட்புக்கொண்டு வாலியை வதம் செய்கிறான் பின்பு சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகின்றது பதவியின் மோகத்தில் சுக்ரீவன் இராமனிடம் கொடுத்த வார்த்தையை மறக்கின்றான் பின்பு லக்ஷ்மணனின் கோபம் கண்டு தன் பரிவாரங்களை எட்டு திக்கும் அனுப்புகின்றான் இவை நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று,  இவ்வாறு வனவாசத்தில் இருந்த இராமபிரான் நாடுகளின் எல்லையில் வசிக்க வேண்டுமே தவிர நாடுகளின் உள்ளே பிரவேசிக்க கூடாது என்பது நியமம் அதன் பிரகாரம் இராமர் கிஷ்கிந்தைக்கு வெளியே ஒரு குகையில் வாழுகின்றான் வானரங்களின் வாழ்விடம் என்பதால் தன் சந்தியா வந்தன தேவைகளுக்கு அந்த குகையின் அருகில் இருக்கும் துங்கபத்ரா நதியின் நடுவில் தீவு போன்ற அந்த பகுதிக்கு சென்று சூரிய பகவானை வழிபடுவது வழக்கம். கண்டேன் சீதையை என்று காகுத்தனிடம் சுந்தரன் அனுமன் கூறிய இடம்தான் அக்கால கிஷ்கிந்தை இன்றைய ஆனேகுந்தி ஹம்பி பகுதி.  சீதையைப் பிரிந்து கிஷ்கிந்தையில் வாடும் இராமன்,  அனுமனை இலங்கைக்கு அனுப்பிய  அவர் திரும்பி  வருவதற்காக காத்திருந்தார்.  இலங்கையிலிருந்து வந்த அனுமன்,  இராமனிடம் “சீதையைக் கண்டேன்” என்று சொல்லி  இருக்கலாம். ஆனால், “சீதையை” என்று சொல்லும் அந்த கணநேரத்தில் சீதைக்கு என்னவாயிற்றோ என்று பல பல எண்ணங்கள் தோன்றும் எனவே  “கண்டேன்” என்று முதலில் சொல்வதால்,  ஒரு நிம்மதி உண்டாகும் என்று    அனுமன்  “கண்டேன் சீதையை” என்று  சொல்வது  போல் கவி சக்கரவர்த்தி கம்பர்  எழுதியுள்ளார்.   இங்கே அனுமனுடைய  சொல்வன்மை மிகவும் பாராட்டத்தக்கது. அதனால் தான் அனுமனுக்கு “சொல்லின் செல்வர்” என்று ஒரு பெயர் உண்டு.  கண்டெனன் கற்பினுக் கணியைக் கண்களால் தென்திரை அலைகடல் இலங்கைத் தென்னவ அண்டர் நாயக இனிதுறத்தி ஐயமும் கொண்டுள்ள துயரும் என்றனுமன் பண்ணுவான். இப்பாடல் அடியேனுக்கு  மிகவும்  பிடித்த  பாடல்.  பள்ளியில்  தமிழாசிரியர்  இப்பாடலை  மனப்பாடம்  செய்ய வைத்தார்  முப்பது   வருடங்களுக்குப்பின்னும் மனதை விட்டு  அகலாத பாடல் தாங்களும்  படித்து  இன்புறுங்கள்.  ஒருவர் எவ்வாறு பேச வேண்டும் என்பதற்கு  உதாரணமான பாடல் இது. இவ்வாறு இராமபிரானாலும், இளைய பெருமாளாளும் , வாயு புத்ரன் அனுமனாலும் புனிதப்பட்ட அந்த புண்ணிய பூமியில்   பின்னர் பக்த பிரகலாதன் ஸ்ரீமந்நாராயணை நினைத்து தவம் இயற்றினார்  இத்தனை சிறப்பு வாய்ந்த இப்புண்ணிய பூமி என்பதால்தான் புனித மத்வசாரிய மகான்கள் இங்கு பிருந்தாவனத்தில் அமர்ந்தனர்.  நவபிருந்தாவனங்களில் நடு நாயகமாக அமைந்துள்ள வியாஸராஜரின் பிருந்தாவனம் பிரஹலாதர் தவம் செய்த அதே இடமாகும். சுமார் 30 ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பகுதி. அடுத்து இந்நவபிருந்தாவனம் அமைந்துள்ள துங்கபத்ரா நதியின் சிறப்பைக் காண்போம் அன்பர்களே. அத்தியாயம்-4 : துங்கபத்ரை நதியின் சிறப்பு ஹிரண்ய கசிபுவின் சகோதரன் ஹிரண்யாட்சன் ஒரு சமயம் பூமியை கடலுக்கடியில் கொண்டு ஒளித்து வைத்த போது பகவான் வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை மாய்த்து பூமிதேவியை மேலே கொண்டு வந்தார். இப்படி வந்த போது அவர் சற்றே இளைப்பாறுவதற்காக ஒரு மலையின் உச்சியில் சென்று அமர்ந்தார். அந்த மலை இப்போது வராஹ மலை அல்லது வராஹ பர்வதம் என்று அழைக்கப்படுகின்றது.  இது தற்போதய ‘ஸஹ்யாத்ரி’ பகுதியாகும் . சிருங்கேரிக்கு தெற்கே உள்ளது இப்பகுதி. அப்போது பகவானின் இடது பற்களில் ஒன்று உடைந்து அதிலிருந்து வெளிபட்ட நீர் கிழக்கு நோக்கி நதியாகப் பாய்ந்தது இதுதான் பத்ரா நதி. வலது புற கோரைப்பல் உடைந்து மேற்கு நோக்கிப் பாய்ந்த நீர் துங்கா நதியாகப் பாய்ந்தது.  [நவபிருந்தாவன துங்கபத்ரா நதியின் அழகு] வராக அவதாரத்தின் மூலம் இவ்வாறு நிலம் உழும் முறை வழக்கத்தை கொண்டு வந்தார் என்பர். நிலம் உழ அதன் வளம் பெருக நீரும் ஆறாக பெருக வேண்டியதுதானே. அதனால்தானோ வராக வடிவில் பூமியைக் காத்த பெருமாள் தன் இரு கொம்புகளால் பூமியைக் குத்திக் குடைந்து உள்ளே இருந்த நீரை வெளியே கொணர்ந்து ஆறுகளாக ஓடவிட்டார். இவை இரண்டும் தற்போது ஷிமோகா அருகே இனைந்து துங்கபத்ரா நதியாக பாய்கின்றது. இக்கூடலில்தான் பிரஹ்லாதர் பெருமாளின் வக்ஷஸ்தலத்திலிருந்து எடுத்துத் தந்த சாலகிராமத்தால் ஆன சிந்தாமணி  நரசிம்மரை பிரதிஷ்டை செய்தார்.  சங்கு கர்ண தேவதையின் ஸ்ரீபிரஹ்லாத அவதாரத்திலும்,  ஸ்ரீவியாஸராஜ அவதாரத்திலும்,  ஸ்ரீராகவேந்த்ர அவதாரத்திலும் துங்கபத்ரையில் அமைந்த நவபிருந்தாவனப்பகுதி ஈர்த்துள்ளது.  இத்தனை சிறப்புடையது இப்பகுதி. இராமயண காலத்தில் இந்நதி பம்பா நதி என்றழைக்கப்பட்டுள்ளது. பிரம்மாவின் புத்ரியாகிய பம்பா சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து அவரை மணாளராக அடைந்தாள் எனவே சிவபெருமான் பம்பாபதி என்றும் அழைக்கப்படுகிறார் என்பது ஒரு ஐதீகம் . தென்னிந்திய புண்ணிய நதிகளில் ஒன்று துங்கபத்ரை, மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் சரிவில் உள்ள கங்க மூலா என்ற இடத்தில் வராஹ பர்வதத்தில் துங்கா நதி உற்பத்தியாகிறது. கூட்லி என்ற இதத்தில் பத்ராவுடன் இணைந்து துங்கபத்ராவாக பாய்கின்றது. சிமோகா, சிக்மகளூர் மாவட்டங்களில் பாய்ந்த பின் ஆந்திர மாநிலத்தில் நுழைந்து கிருஷ்ணா நதியில் கலக்கின்றது. சுமார் 174 கி.மீ தூரம் பாய்கின்றது. கூட்லி நரசிம்மர் ஆலயம், நவ பிருந்தாவனம், மந்திராலயம் ஆகிய புண்ணியத்தலங்கள் இதன் கரையில் அமைந்துள்ளன. விஜயநகர பேரரசின் முக்கிய நகரமான ஹம்பி இதன் தென் கரையில் அமைந்திருக்கின்றது. இவ்வாறு தெய்வீகம், புராதன சின்னங்கள், இயற்கை எழில் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற ஜீவநதியாக துங்கபத்ரா இன்றும் ஒடிக் கொண்டிருக்கின்றது. இதுவரை நவபிருந்தாவன மகான்களைப் பற்றியும், நவபிருந்தாவனப் பகுதி மற்றும் துங்கபத்ரா நதியின்  மகிமைகளைப் பற்றியும் கண்டோம் வாருங்கள் இனி யாத்திரையைத் தொடரலாம். அத்தியாயம்-5 : யாத்திரை துவக்கம் யாத்திரைக்கான நாளும் நெருங்கியது சுமார் மூன்று நாட்கள் இருக்கும் போது திரு. தனுஷ்கோடி அவர்களை தொலைபேசியில் நிலவரம் பற்றிக்கேட்டேன் பள்ளி அட்டவனையில் மாறுதல் செய்யபட்டுள்ளதால் திட்டமிட்டபடி பலர் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது ஆயினும் தங்கள் குடும்பம்,  நான் மற்றும் திரு. வைத்தி, மற்றும் திரு, மோகன் அவர்களின் குடும்பத்தினர் செல்கின்றோம் என்றார்.  முதலில் 23 கொண்ட பெரிய குழுவானது இப்போது  10 பேர் கொண்ட சிறு குழுவாக சுருங்கி விட்டது. புகைவண்டி டிக்கெட்கள் உறுதியாகி விட்டன தற்போது திரும்பி வருவதற்கான டிக்கெட் மட்டும் RACயில் உள்ளது ஒன்றும் கவலையில்லை என்று கூறினார். […] ஒரு ஆங்கில வருடத்தின் கடைநாள் அதாவது டிசம்பர் 31 அன்று மதியம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து மதியம், 12069 பெங்களூர் விரைவு வண்டி மூலமாக பெங்களூருக்கு புறப்படோம். பகல் வண்டியானதால் யாத்திரையில் உடன் வருபவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டு அளவளாவினோம்.  எப்படி அந்த மகான்களின் அருளினால் இந்த யாத்திரை நமக்கு சித்தியானது என்று அவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டே பெங்களூரை அடைந்தோம். அடியேன் மற்றும் எனது மனைவி, மகள் மற்றும் அக்கா, மாமா என்று நாங்கள் ஆறு பேரும், திரு.மோகன் அவரது தங்கை அருணா மற்றும் அவரது சிறு வயது மகள்கள் இருவர், திரு. தனுஷ்கோடி மற்றும் திரு.வைத்தி அவர்கள் அடங்கிய குழு இரவு 7 மணியளவில் பெங்களூரை அடைந்தது.  பெங்களூர் இரயில் நிலையத்தில் இறங்கி ஹம்பி விரைவு வண்டிக்காக காத்திருந்தோம்.  முதலில் அவ்வண்டி ஐந்தாவது நடைமேடையில் வருவதாக இருந்தது ஆனால் கடைசி நிமிடத்தில் ஏழாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டது. அவசர அவசரமாக மேலேறி இறங்கி வண்டியில் ஏறி அமர்ந்து அந்த மந்திராலய மகானுக்கு நன்றி செலுத்தினோம். ஒரு வருடம் முழுதும் பயணம் செய்து ஆம் அன்றைய தினம் ஆங்கில வருடப் பிறப்பானதால் புது வருடத்தின்(2011) காலையில் ஹோஸ்பெட் (ஹொஸ்பெட்ட) புகைவண்டி நிலையத்தில் வந்திறங்கினோம். காலை நேர சூரியன்  இளஞ்சிவப்பு வர்ணத்தில் புது வருடத்திற்கு கட்டியம் கூறிக்கொண்டிருந்தான்.  ஆம் சூரியன் உதிக்கும் இரம்மியமான நேரத்தில் சென்று இறங்கினோம்.  மரங்களில் பறவைகள் கீசு கீசு என்று எங்களை நவபிருந்தாவனத்திற்கு வரவேற்றன.  ஒரு சிறு நகரம்தான் புகைவண்டி சந்திப்பில்  அதிக கூட்டம்  இருக்கவில்லை.  மெல்ல மூட்டை மூடிச்சுகளையெல்லாம் எடுத்துக் கொண்டு இயற்கை அழகை இரசித்துக்கொண்டே வெளியே வந்தோம். மார்கழி மாதம் என்பதால் பனி மூட்டமாக இருந்தது சிறிது குளிரும் இருந்தது குழந்தைகள் பெண்கள் கம்பளி ஆடை அணிந்து கொண்டனர். வெளியே வந்த போது தொடர்வண்டி நிலையத்திலிருந்து செல்லும் பாதையின் இருமருங்கும் தங்கும் விடுதிகளாக இருந்ததை கவனித்தோம். ஹோஸ்பெட் கர்நாடகாவின்  பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது.  இங்கு தற்போது பெல்லாரி சகோதர அமைச்சர்களால் பிரபலமானதும்,  ஒரு முதலமைச்சர் ராஜினாமா செய்ய காரணமான இருந்ததும், சீனாவிற்கு தற்போது அதிகம் எற்றுமதி செய்யப்படும்  இரும்புத்தாது  (Iron Ore)  இப்பகுதியில் கிடைக்கின்றது என்பதாலும், உருக்கு ஆலை (Steel plant)  உள்ளதாலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதல் அனைத்து ரகமான தங்கும் விடுதிகளும் இந்நகரில் உள்ளன. ஒரு காலத்தில் இந்நகரம்  விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் நுழைவு வாயிலாக இருந்துள்ளது.  இந்நகரை கிருஷ்ணதேவராயர் தமது அன்னையின் நினைவாக நாகலாபுரம் என்று அமைத்தார் ஆயினும் கன்னடத்தில்  புதிய நகரம் என்று பொருள் படும் ஹொஸ்பெட்ட என்ற பெயர் நிலைத்துவிட்டது. ஆனால் அப்படி ஒன்றும் புது பட்டிணமாக தோன்றவில்லை. எங்களை தங்கும் விடுதிக்கு கூட்டிச்செல்ல வண்டி (Tempo Traveller van) தயாராக நின்றிருந்தது காலையிலிருந்து  இரவு வரை இந்த வண்டியை திரு. மோகன் அவர்கள் வாடகைக்கு அமர்த்தி இருந்தார் வண்டி ஒட்டுனரே வழிகாட்டியாகவும் விளங்கினார்.  புகை வண்டி நிலையத்தின் மிக அருகிலேயே தங்கும் விடுதி இருந்தது. SLV YATRI NIVAS,  Opp To Rotary Club, Station Road, Hospet- 583201 என்ற விடுதியில் தங்கினோம்.  விடுதியின் தொலைப்பேசி எண் (08394-221525/26, சுரேஷ் பிரபு – 9448576148  அவர்களையும் தொடர்பு கொள்ளலாம் ) மகான்களை தரிசிக்கும் ஆவலினால் சீக்கிரமாக காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தயாரானோம். அவ்விடுதியிலேயே காலை உணவை முடித்துக் கொண்டோம் .நவபிருந்தாவனம் செல்லும் முன் துங்கபத்ரை நதியில் குளிக்கலாம் என்பதால் அதற்குரிய துண்டு,  மாற்றுத் துணி,  பூஜை பொருட்கள்,  புத்தகங்கள் ஆகியவற்றை மட்டும் ஒரு சிறு பையில் கொண்டு கொண்டு ஆனேகுந்திக்கு வண்டியில் கிளம்பினோம். செல்லும் வழியில் நீண்ட  துங்கபத்ரை  அணையை பார்த்தோம். அதன் அடிவாரத்தில் ஜப்பானிய பாணியில் ஒரு அருமையான தோட்டம் உள்ளது.  எப்போதும் தண்ணீர் பாயும் பூமி என்பதால் இரு மருங்கும் வாழை, தென்னை, நெல் வயல்கள் செழிப்பாக காட்சி தந்தன. வாய்க்கால்கள் சாலையின் குறுக்காக ஓடின. கங்காவதி என்ற ஊரைக் கடந்த போது பழங்கால பாலம் ஒன்றையும் அழிந்து போன விஜயநகர சாம்ராஜ்ய நகரான ஹம்பியின் அழிவுகளையும் கண்டோம். சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து ஆனேகுந்தி அடைந்தோம். பதிமூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முகமது கோரி டில்லி முதலான பகுதிகளைக் கைப்பற்றி முகம்மதிய பேரரசை ஏற்படுத்தினான். வடஇந்தியாவில் இப்படி நிலைத்த முகம்மதியர்களின் ஆட்சி தெற்கு நோக்கி பரவ ஆரம்பித்தது. அப்போது தோன்றியது பாமினி இராச்சியம். 1338இல் ஆனேகுந்தியை ஆண்ட  அரசனை முகமது பின் துக்ளக் தோற்கடித்து அரசனையும்,  அவன் குடும்பத்தாரையும் கோட்டையிலே சிறை வைத்திருந்தான்.  வித்யாரணரின் வழிகாட்டுதலின் பேரில் ஹரிஹரன், புக்கராயன் என்னும் சகோதரர்கள் தந்திரத்தால் கோட்டைக்குள் நுழைந்து துக்ளக்கின் படைகளை தோற்கடித்து அரசனை விடுவித்து இந்நகரை கைப்பற்றி, விஜய நகர சாம்ராஜ்யத்திற்க்கு வித்திட்ட இடம் இதுதான்.  இவ்வாறு விஜயநகர சாம்ராஜ்ஜியத்திற்கு  அஸ்திவாரமாக ஆனேகுந்தி விளங்கியது. ஹரிஹரர் காலத்தில் ஆனேகுந்திதான் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியுள்ளது. அவருக்குப்பின் வந்த புக்கராயரின் காலத்தில் பின் விஜயநகரம் தலைநகராகியது. இது என்ன ஆனேகுந்தி என்று மனதில் தோன்றுகின்றதா? விஜயநகர ஆட்சி காலத்தில் யானைகள் கட்டிய இடம் என்பதால் ஆனே கோந்தி என்பது மருவி இப்போது ஆனேகுந்தி ஆகிவிட்டது . நாங்கள் அங்கு சென்று சேர்ந்த போது மணி சுமார் பத்தாகிவிட்டது. நவபிருந்தாவனம் தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் சமயம் மதியம் ஆகி விடும் என்பதால் இங்கேயே மதிய உணவை முடித்துக் கொண்டால் அருகில் உள்ள சிந்தாமணி,  அஞ்சனாத்திரி,  பம்பா சரோவர் ஆகிய தலங்களை தரிசித்துக் கொண்டு பின்னர் ஹம்பி செல்லலாம் என்று மோகன் அவர்கள் HOOVA CAFÉ   என்னும் விடுதியில் ( வீடுதான், சொல்லிவிட்டு சென்றால் சமையல் செய்து வைக்கின்றனர்) மதிய சாப்பாட்டிற்கு சொல்லி விட்டு சென்றோம். [ஆனேகுந்தி அரங்கநாதர் ஆலயம்] ஆனேகுந்தியில் அரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது, தீபஸ்தம்பம் மற்றும் அழகான கற்தூண்களையுடைய மண்டபத்துடன், எழிலாக இவ்வாலயம் அமைந்துள்ளது. துங்கபத்ரை நதிக்கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஆனேகுந்தி சுமார் 25 சிறு வீடுகள்தான் உள்ளன. அதிக அரசு பஸ் வசதியில்லை ஹோஸ்பெட்டிலிருந்து அவரவர்கள் வண்டிகளில் வருவது உத்தமம். குக்கிராமத்தைப் போல ஆடுகள் அங்கங்கே மேய்ந்து கொண்டிருந்தன. கோழிகள் குஞ்சுகளுடன் ஆலவட்டம் வந்து கொண்டிருந்தன. ஒன்றிரண்டு விவசாயிகள் மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர்,  மற்றபடி சத்தம், கூட்ட நெரிசல் ஏதும் இல்லை.  இராகவேந்திர சுவாமிகளின் மடம் ஒன்று கண்ணில் பட்டது திரும்பி வரும் போது தரிசனம் செய்து கொள்ளலாம் என்று படித்துறையை நோக்கி சென்றோம். படித்துறையை நெருங்கும் பொது இடப்பக்கம் கருங்கல்லாலான ஒரு மண்டபத்தைப் பார்த்தோம். அதில் ஒரு காலத்தில் யாணைகளை கட்டி இருக்க வேண்டும் இப்போது வைக்கோற் போராக மாறி இருந்தது. ஒரு பிரம்மாண்ட ஆலமரத்திற்கு அருகில் படித்துறை அமைந்துள்ளது. சுமார் ஐந்து படிகள் இறங்கி துங்கபத்ரை நதிக்கரையை அடைந்தோம் பரிசலை எதிர்பார்த்து காத்திருந்தோம் ஆனால் ஒன்றும் கண்ணில்  படவில்லை! ஆனால் நவபிருந்தாவன் ஹோஹுத்தாரா?  என்ற ஒரு குரல் கேட்டது, யார்? என்று பார்த்தால் ஒரு படகில் இருவர் நின்று கொண்டு வருபவர்களை அழைத்துக் கொண்டிருந்தனர். பரிசல் பயணம் செய்ய முடியவில்லையே என்ற வருத்தும் இருந்தாலும் சீக்கிரம் செல்லலாம் என்பதால் அதில் ஏறி அமர்ந்தோம், பத்து நிமிடங்களில் இன்னொரு குழு வர படகு நிரம்ப டீசல் எஞ்சினை உசுப்பினார் படகோட்டி, படகும் நகர ஆரம்பித்தது. [அமைதியான துங்கபத்ராவில் படகுப்பயணம்] படகில் அமர்ந்து கொண்டே அதிக வேகம் இல்லாமல் சாந்தமாக பாயும் துங்கபத்ராவின் நீரோட்டத்தில் கையை வைத்து தண்ணீரை வாரி இரைத்துக்கொண்டு சென்றோம். அங்கு வட்டமிட்ட நீர்க்காக்கைகளை படம் பிடித்தோம்.  வந்த இப்பயணத்தை மறந்துவிடக்கூடாது என்பதற்காக நிழற்படம் பிடித்தோம், படகோட்டி காட்டிய அறுபத்து நான்கு கால் மண்டபத்தையும், அதோ அங்கு தெரிகின்றதே, அதுதான் சிந்தாமணி அங்குதான் இராமர் வாலியை வதம் செய்தார் என்று கூறிய வரலாறுகளை மனதில் பதிய வைத்துக்கொண்டோம். எதிரே எதோ குழந்தை உருவாக்கியது போல பாறையின் மேல் பாறை அடுக்கி மலையாக உள்ளதே இது இத்தனை வருட காலம் எவ்வாறு சரிந்து விழாமல் இருக்கின்றது காலத்தின் கோலத்தினால் பெரிய பாறைகள் இவ்வாறு வெளுப்புறமாக வெடித்து இவ்வாறு உருமாறி விட்டனவா? என்று விவாதித்தோம். எல்லாவற்றிக்கும் மேலாக பல நாள் கனவாக இருந்தது இன்று மகான்களின் மாப்பெரும் கருணையினால் சித்திக்கப் போகின்றதே என்று அவர்களை நோக்கி துதித்தோம்.  சுமார் பத்து நிமிடங்கள் பயணம் செய்து நவபிருந்தாவனத் தீவின் கரையில் இறங்கினோம். சூரியன் உச்சிக்கு வந்து கொண்டிருந்தான். தீவெங்கும் பச்சைப் பசேல் என்று தாவரங்களால் நிறைந்திருந்தது. ஒரு வகை புல்லும், தொட்டாற் சிணுங்கி செடிகளும் நிறைந்திருந்தன.  தொட்டாச்சிணுங்கி செடியை தொட்டு குழந்தைகளுக்கு காட்டினோம்.  கோ மாதக்கள் சில இந்த புல்லினை மேய்ந்து கொண்டிருந்தன. நவபிருந்தாவனத்திற்கு செல்வதற்கு முன் வராகப் பெருமான் கொணர்ந்த துங்கபத்ரையில் புனித நீராடினோம். அங்கு போக்குக் காட்டிக் கொண்டு பறந்து விளையாடிக் கொண்டிருந்த பல்வேறு பறவைகளை வீடியோ எடுத்தோம்.  புனித நீராடிய பின் தூய உள்ளத்துடன் மகான்களை தரிசிக்க சென்றோம். இங்கு துங்கபத்ரையானவள் மிகவும் சாந்தமாக ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக ஓடுகின்றாள் அதிக ஆழமில்லை ஆனால் பாறைகள் வழுக்கும் என்பதால் கவனமாக குளிப்பது நல்லது.  துங்கபத்ரையில் குளித்து விட்டு நவபிருந்தாவங்களை தரிசிக்க சென்றோம் மணல் பாதைதான் சூரியன் உச்சியை நெருங்கும் நேரம் என்பதால் மணல் கொதித்துக்கொண்டிருந்தது. [நவபிருந்தாவனத்தின் அருகில் துங்கபத்ரை சாந்தமாக பாயும் அழகு] முதலில் கண்ணில் பட்டது மதில் சுவர்.  நடுவில் ஒரு வாயில். மதில் சுவரில் நவ பிருந்தாவனங்களை தொடக்கூடாது என்ற எச்சரிக்கை வாசகம் மேலே தமிழிலும், கீழே கன்னடத்திலும் எழுதி இருந்தனர். சப்தம் செய்யாமல் அடி மேல் அடி வைத்து உள்ளே நுழைந்தோம் மகான்களின் அருள் மழையில் நனைந்தோம், உள்ளே நுழைந்தவுடன் அற்புதமான அதிர்வலை, மனம் ஆனந்தத்தில் துள்ளியது, ஒரு இனம் புரியாத அமைதி மனதில் குடிகொண்டது. அத்தியாயம் -6 : நவபிருந்தாவன தரிசனம் [நவபிருந்தாவனங்கள்] நவபிருந்தாவனத்தில் நாங்கள் முதலில் சேவித்த சன்னதி  அரங்கநாதர் சன்னதி ஆகும். அரங்கநாதர் சன்னதியும், ஜாக்ரதை அனுமன் சன்னதியும் சிறிது உயரமாக அமைந்துள்ளதால் நாம் உள்ளே நுழைந்தவுடன் வலப்பக்கம் உள்ள இச்சன்னதிக்கு படியேறி செல்ல வேண்டும். கருவறையில் பாம்பணையில் யோக நித்திரையில் உள்ள அரங்கநாதரை சேவிக்கலாம். இம்மூர்த்தத்தின் ஒரு தனி சிறப்பு பெரிய பிராட்டியார் ஆதிசேஷனில் அமர்ந்து சேவை செய்யாமல் கீழே நின்று சேவை செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. இங்கு நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது என்பதால் ஒன்பது நெய் விளக்கு ஏற்றினோம். நாங்கள் சென்ற சமயம் ஒரு அம்மையார் அகல் விளக்குகளும் நெய் விளக்குகளும் விற்றுக்கொண்டிருந்தார் பல சமயம் அங்கு பூஜை சாமான்கள் எதுவும் கிட்டாது நாமே எடுத்து செல்வது நல்லது. பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் கங்கையினும் புனிதமான காவேரியின் நடுவில் உள்ள அரங்கத்தில் பெருமாள் இதேவிதமாக ஆதிசேடனில் யோக நித்திரையில் சேவை சாதிக்கின்றார். இங்கே இந்த துங்கபத்ரையின் அரங்கத்திலும் பெருமாள் அரங்கநாதனாகவே சேவை சாதிக்கின்றார். அங்கே தாயார், பிரம்மன் எதுவும் இல்லாத யோக சயனம் இங்கே பெரிய பிராட்டியுடன் கூடிய போக சயனம். திருமாலை( பிரபந்தம்) அறியாதர் திருமாலையே( ஸ்ரீமந் நாராயணன்) அறியாதார் என்னும் புகழ் பெற்ற திவ்ய பிரபந்தத்தின் இந்த அற்புத பாசுரத்தை பாடி இவரை மனதார வணங்கினோம். பச்சைமாமலைபோல்மேனி பவளவாய்கமலச்செங்கண் அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்கொழுந்தே! என்னும் இச்சுவைதவிரயான்போய் இந்திரலோகமாளும் அச்சுவைபெறினும்வேண்டேன் அரங்கமாநகருளானே! இச்சன்னதியின் அருகே  ஜாக்ரதை அனுமனின் சன்னதி  உள்ளது.  இச்சன்னதியில் அனுமன் தனது இராவணனின் மகன் அக்ஷய குமாரனைத் தன் காலில் இட்டு வதம் செய்யும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவரது சன்னதியிலும் விளக்கேற்றினோம். இங்கு ஒரு பத்து நிமிடம் அமர்ந்து வாயு குமாரனை மனதில் இருத்தி தியானம் செய்து பாருங்கள்.  அவரின் அதிர்வலைகளை தாங்கள் உணரலாம். இந்த இரண்டு சன்னதிகளுக்கு இடையில் ஒரு குகை உள்ளது ஏகாந்தமாக இங்கு உட்கார்ந்து நவ பிருந்தாவன நாயகர்களை நினைத்து தியானம் செய்ய ஏற்ற இடம். பிரஹ்லாதர் இக்குகையில் அமர்ந்து தியானம் செய்தார் என்பது ஐதீகம். பின்னர் அரங்கநாதர் ஆலயத்தின் முன்னுள்ள படிகளில் இறங்கி நவ பிருந்தாவனத்தை சுற்றி இடப்பட்டுள்ள மஞ்சள் கோட்டிற்கு வெளியே வலம் வந்து அவதாரத்ரய ஹனுமான் சன்னதி சென்று அவரை அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம் வதா ராம தூத கிருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ - என்று வணங்கினோம்.  அங்கே ஒரு பட்டர் இருந்தார். அவர் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து குங்கும அட்சதையால் ஆசிர்வாதமும் செய்கிறார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ஆனேகுந்தியில் உள்ள இராகவேந்திரர் மடத்திலிருந்து தினம் வந்து செல்வதாகவும் காலை நவபிருந்தாவனங்களுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வதாகவும் பின்னர் மாலை திரும்பி செல்வதாகவும் கூறினார். மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் போது நவபிருந்தாவனம் செல்வது சிரமமாம் அப்போது ஆற்றின் இக்கரையிலிருந்தே கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர். [அவதாரத்ரய ஹனுமான்] […] அது என்ன அவதாரத்ரய ஆஞ்சநேயர் என்ற நாமம் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த ஹனுமான் இவர். ஸ்ரீவாயு பகவான் த்ரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக ஸ்ரீஅனுமனாகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ண சேவை செய்வதற்காக ஸ்ரீபீமனாகவும், இக்கலியுகத்தில் ஸ்ரீவியாச சேவை செய்ய ஸ்ரீமத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இனைந்தவர்தான் அவதாரத்ரய ஹனுமான். ஹனுமன் முகமும்,  பீமனை குறிக்கும் புஜங்களும்,  மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். வாலில் மணி உள்ளது,  இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீநரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனையும் வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார். குருஷேத்திரத்தில்  பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு  கீதோபதேசம் செய்யும் போது அதை தேர்க்கொடியில் இருந்த வாயு புத்திரன் அனுமனும் செவி மடுத்தார்.  அப்போது கேட்டு,  பீமனாக உணர்ந்ததை மத்வராக அவதரித்த போது  கீதா பாஷ்யம்,  கீதா தாத்பர்யம்  என்று இரு கிரந்தங்களாக இயற்றினார். இந்த அனுமனின் வாலில் ஒரு மணி 🔔 தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரிந்து கொள்ளலாமா அன்பர்களே அதுவும் ஒரு சுவையான கதை. தசரத சக்கரவர்த்தி தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி, ஸ்ரீராமர் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் இலட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை இராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே. சீதாப்பிராட்டியை மீட்க இராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீராமர் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை, குட்டையானவை என்று. அதில் “சிங்கலிகா” என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை. இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர், அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில். அதைக் கவனித்த ஸ்ரீராமர் கூறினார் “யாரும் கவலைப்பட வேண்டாம் .என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு” என்று. போர் ஆரம்பமாயிற்று. கடும்போர் நடந்து கொண்டிருந்தது. இராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள். வேறு வழியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச் சொன்னான் இராவணன். இராட்சசனாக இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் “இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைக் கடத்தியதற்காக ஸ்ரீராமரிிடம் மன்னிப்பு கேட்டு சீதையை விடுவித்துவிடுங்கள்” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இராவணன் கேட்கவில்லை. வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன். கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற் போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. போர் தொடங்கி சிறிது நேரத்தில் இராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் சிங்கலிகா வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது. திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன.ஒரே இருட்டு.நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. “ஒரு வானரம் சொன்னது”இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப்போய்விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி” என்றது. சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப் போவதில்லை நம்மைக் காப்பாற்ற .நம் தலைவிதி இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான்” சொன்னது இன்னொரு வானரம் “ஸ்ரீராமர் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே, அவர் மட்டும் என்ன செய்தார்” இன்னொரு வானரம் சொன்னது. இதைக்கேட்ட மற்ற வானரங்களும் “ஆமாம் ஆமாம்” என்றன. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது.” முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள். நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்.எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ‘ராம் ராம் ராம்’ என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்” என்று சொன்னது. எல்லா வானரங்களும் அப்படியே செய்தன. இறுதியில் இராமபாணத்தால் இராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள். அப்போது ஸ்ரீராமர் கூறினார் ” சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா” “பிரபு! எண்ணிவிட்டேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை” என்றான் சுக்ரீவன்.” இல்லை.மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா ” என்றார் ஸ்ரீராமன். ஸ்ரீராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான்.” தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை” “அனுமா நீ என்னுடன் வா .நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம்.”என்றார் ஸ்ரீராமர். அனுமனும் ஸ்ரீராமரும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள்,உடைந்து கிடந்த தேரின் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப்பார்த்தான் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை. திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார். “அனுமா! அங்கே பார்.ஒரு பெரிய மணி தெரிகிறது.” ஸ்ரீராமர் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் அவ்விடத்திற்கு விரைந்தார்கள் . அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமனுக்கு இது ஒரு பொருட்டா என்ன! அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி இராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள். எதிரே ஸ்ரீராமனும் அனுமனும். வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர். “பிரபு ! என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம்.எங்களை மன்னித்து அருள வேண்டும்” என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின. அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ஸ்ரீராமர் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு. அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து சொன்னார், ” அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா?இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் கிட்டும் “என்று வாழ்த்தினார். கர்நாடகா,ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். அவதாரத்ரய ஹனுமனை திவ்யமாக சேவித்து பின்னர் பூமி அதிராமல் மெல்ல மெல்ல தம் கோரிக்கைகளை மனதில் கொண்டு நவபிருந்தாவனங்களை ஒன்பது முறை வலம் வந்து வணங்கினோம். பத்மநாபம் ஜெயமுனீம் கவீந்த்ரம் ச வாகீசம் வ்யாஸராஜஹம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் த்தைவ ச ஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம் நவ பிருந்தாவனம் பஜே!  நவ பிருந்தாவனம் பஜே! என்ற தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்டும் வலம் வருவது மிகவும் உத்தமம்.  முடிந்தவர்கள் ஒவ்வொரு மகானுக்கும் தனித்தனியாக உள்ள ஸ்லோகங்களை சொல்லியும் வலம் வரலாம்.  இந்த பிருந்தாவனங்கள் சுமார் 300 ஆண்டு காலமாக தோன்றின. முதல் பிருந்தாவனம் 1324ம் ஆண்டும், ஒன்பதாவது பிருந்தாவனமான ஸ்ரீஸுதீந்திரரின் பிருந்தாவனம்  1623லும் தோன்றியது.  மத்வாச்சார்யர் வியாசருக்கு சேவை செய்ய பத்ரிகாச்சிரமம் சென்று விட்டதால்  மத்வ மகான்களின் முதல் பிருந்தாவனம் ஸ்ரீபத்மநாபதீர்த்தருடையதுதான் என்பது சிறப்பு. மனமுருக மகான்களை சுற்றி வணங்கி அப்பக்கம் வெளியே சென்று அங்கிருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் ஏறி நின்று பறவைப் பார்வையாக முழு பிருந்தாவனத்தையும் தரிசனம் செய்தோம். மறு பக்கம் பாயும் துங்கபத்ரை நதியையும் சோலையும் கண்டோம். பின்னர் திரும்பி வந்து அரங்கநாதர் கோவிலின் அருகில் உள்ள குகையில் அமர்ந்து தியானம் செய்து இன்னொரு முறை எல்லா சன்னதிகளையும் சென்று சேவித்தோம்.  முக்கியமாக தங்களை வந்து தரிசனம் செய்யஅனுமதித்த அவர்களுக்கு அனந்த கோடி நன்றிகளை கூறிக்கொண்டோம். இனி இந்த நவபிருந்தாவங்களை வணங்கும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளைப் பற்றி காண்போம். 1. நவ பிருந்தாவனம் தீவு பகுதிக்குள் உணவு, தின்பண்டப் பொருள்களை கொண்டு சென்று உண்ணக் கூடாது. 2. இந்த தீவைச்சுற்றியுள்ள நீரில் வாய் கொப்பளிப்பது, முகம் கழுவுவது கூடாது. 3. எக்காரணம் கொண்டும் குளிக்காமல் நவபிருந்தாவனம் வளாகத்திற்குள் நுழையக்கூடாது. 4. லுங்கி, பேண்ட அணிந்து கொண்டு உள்ளே செல்வது கூடாது. வேஷ்டி,துண்டு அணிந்து செல்வது சிறந்தது. 5. பெண்கள், குளித்தபின், தலையை விரித்த நிலையில் உள்ளே செல்லக் கூடாது. 6. நவபிருந்தாவனத்தைச் சுற்றி போடப்பட்டிருக்கும் மஞ்சள் கோட்டைத் தாண்டி உள்ளே செல்லக் கூடாது. 7. நவபிருந்தாவனங்களை எந்தக் காரணம் கொண்டும் தொட்டு வணங்கக் கூடாது. 8. 11 விளக்குகளை அரங்கநாதர் சன்னதியில் ஏற்றி வழிபட்டு 11 முறை நவபிருந்தாவனங்களை வலம் வரலாம். 9. அங்கப்ரதக்ஷணம் செய்யக்கூடாது. 10. உப்பு, மிளகு முதலியவற்றை பிருந்தாவனங்களின் முன்பு சமர்பிக்கக்கூடாது. கற்பூரமும் ஏற்றக்கூடாது. ஏனென்றால் இம்மகான்கள் எல்லாம் பரம வைராக்கிய புருஷர்கள், ஆச்சார அனுஷ்டானங்களில் கண்டிப்பானவர்கள், எனவே அங்குள்ள தெய்வீக நிலை பாதிக்கப்படாமல் அமைதியுடன் வழிபட்டு வருவது பக்தர்களாகிய நமது கடமையாகும் என்று திரு. ஏ.ஏம். இராஜகோபால் அவர்கள் பக்தர்களின் நன்மையை உத்தேசித்து இவ்விதிமுறைகளை தொகுத்துள்ளார். நாம் நவபிருந்தாவனம் செல்வது நமது துன்பங்களை தொலைத்து நன்மை பெற செய்யக் கூடாத செயல்களை செய்து மேலும் பாவங்களை நாம் அதிகப்படுத்திக்கொள்ளகூதாது என்பதற்காகவே இந்த விதிமுறைகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். எந்த விதத்ததிலும் ஆழ்ந்த தியானத்தில் உள்ள மகான்களின் தியானத்திற்கு எந்த விதமான பங்கமும் வராதவாறு தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். இனி நவபிருந்தாவனங்களின் அமைப்பைப் பார்ப்போமா,  அவதாரத்ரய அனுமனின் ஆலயத்திற்கு நேர் எதிரே நடுநாயகமாக ஸ்ரீ வியாஸராஜரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது.  ஏனென்றால் இவ்விடத்தில்தான் ஸ்ரீபிரஹ்லாதன் தவம் செய்திருக்கின்றார்.  இவருக்கு வலப்புறம் இவரது சீடர்கள் மற்றும் இவருக்குப் பின் பிருந்தாவனஸ்தரானவர்களின் பிருந்தாவனங்கள் உள்ளன.  இவருக்கு இடப்புறம் இவருக்கு முன் பிருந்தாவனஸ்தர் ஆனவர்களின் பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன. இந்த பிருந்தாவனங்களில் வியாஸராஜரின் பிருந்தாவனத்தின் முன் நான்கு தூண்கள் உள்ளன.  அவரது பிருந்தாவனத்தின் நான்கு பக்கங்களிலும், சீதாராமர், லக்ஷ்மணன், அனுமன் வியாஸராஜர் சிற்பங்கள் உள்ளன. பீடத்தில் யானை சிற்பங்கள் உள்ளன. [வியாஸராஜர் பிருந்தாவனம்] […] இரண்டாவது பிருந்தாவனத்தில் ஒரு போர் வீரனும் சந்நியாசியும் சிற்பமாக உள்ளனர்.  ஸ்ரீஜய தீர்த்தர் தோண்டுபந்த் என்று வீரனாகவும், சந்நியாசியாகவும் உள்ளதை இது குறிக்கின்றது என்பார் ஒரு சாரார். இல்லை ஸ்ரீரகுவீர்யரை ஒரு சமயம் ஒரு மிலேச்சன் துரத்தி வந்ததை இது குறிக்கின்றது என்பது இன்னொரு சாரார் வாதம். […] ஒன்பதாவது பிருந்தாவனமான கோவிந்த ஒடையரின் பிருந்தாவனம் பத்மநாப தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கு பக்கத்தில் உருவில் மிக சிறிய பிருந்தாவனமாக விளங்குகின்றது.  இவரது பிருந்தாவனத்தில் சன்னியாசி, அனுமன்,  வீரன் சிற்பங்கள் உள்ளன. நவபிருந்தாவனத்திற்கு செல்லும் அன்பர்கள் பூஜைக்கு வேண்டிய விளக்கு நெய், திரி முதலியவற்றை தாங்களே எடுத்து செல்வது உத்தமம் பல சமயங்கள் அங்கு எதுவும் கிடைக்காது. அரங்கநாதர் ஆலயத்தின் அருகில்  அமர்ந்து  மகான்களில்  அருள் மழையில் நனைந்து மிகவும் நிறைவான மனதுடன்  இன்னும்  பலமுறை  தங்கள் அனைவரையும் சேவிக்கும்  பாக்கியத்தை  அருள  வேண்டும்  என்று  வேண்டிக்கொண்டே  வெளியில்  வந்து  படகில் ஏறி துங்கபத்ரையை கடந்து ஆனேகுந்தி வந்து  சேர்ந்தோம். ஆனேகுந்தி  திரும்பி வந்த போது  வைக்கோற்போராக மாறியிருந்த  மண்டபம் “நாராயண மண்டபம்”  என்று  அறிந்தோம்.  HOOVA CAFÉ  சென்றோம். மதிய உணவு தயாராக இருந்தது. உணவு வீட்டுச் சாப்பாடுதான், இனிப்பு, பாயசம், அப்பளம் ஊறுகாய் என்று தேவாமிர்தமாக இருந்தது. அப்போது தமிழில் பேசி ஒரு இளைஞர் எல்லா உதவிகளும் செய்தார் அவர் யார் என்று கேட்ட போது தான் ஒரு வழிகாட்டி என்றும் பெயர்  மஞ்சுநாத்  என்றும்  அவரது  செல் போன் எண் 09449284490, 09480567616  என்றும்  முன்கூட்டியே போன் செய்தால் வேண்டிய  ஏற்பாடுகளை செய்து தருவேன் என்று கூறினார். கர்நாடகத்தில் ஆதிகாலத்தில் இருந்தே பல ஆலயங்களில் மதியம் அன்னதானம் செய்யும் வழக்கம் உள்ளது. அது போலவே மந்திராலயத்திலும் இன்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகின்றது. எனவே மதிய உணவிற்கு  பிறகு  திரு.தனுஷ்கோடி  அவர்கள்  மடத்திற்கு  அன்னதானத்திற்காக  அனைவரின்  சார்பாக  நன்கொடை  வழங்கலாம்  என்று  கூறினார்,  எனவே  இராகவேந்திரர்  மிருத்திகா பிருந்தாவன  மடத்திற்கு  சென்றோம். வெளியே கதவு  சார்த்தியிருந்தது  ஜன்னல் வழியாக  உள்ளே  இருந்தவர்களிடம்  பேசினோம்  எங்கள்  எண்ணத்தை  அறிந்த  அவர்கள்  கதவை திறந்து அனைவரையும்  உள்ளே  அனுமதித்தனர்.  நன்கொடையை பெற்றுக்கொண்டு  இரசீது  கொடுத்து, ஹரிவாயு குருவிற்கு ஆரத்தி காட்டி தரிசனம் செய்து வைத்து நிறைய பிரசாதமும், அங்கவஸ்திர மரியாதையும் கொடுத்து ஆச்சிரியத்தில் ஆழ்த்தினர். தாங்கள் மேலே படித்த விதிமுறைகள்  எல்லாம் இங்கு அனைவரும் காணும்  வண்ணம்  வைக்கப்பட்டுள்ளன.  இம்மிருத்திகா பிருந்தாவனம் மந்தராலய மடாதீசர் ஸ்ரீஸ்ரீ ஸுஷமீந்த்ர தீர்த்தரால் 2001ஆண்டு பிரதிஷ்டைசெய்யப்பட்டதாம்.  சாயுங்காலமே  ஆனேகுந்தி  செல்பவர்கள் இங்கு இரவு தங்கிக்கொள்ளலாம், உணவு ஏற்பாடுகளும் முன் கூட்டியே  சொன்னால்  செய்து தருகிறார்கள் நம்முடைய பொருட்களையும் இங்கே வைத்து விட்டு செல்ல வசதிகள் உள்ளன.  காலையில் பட்டர் நவபிருந்தாவனம் செல்லும்  போது  அவருடன்  கூடவே சென்று அபிஷேகம் பார்க்கலாம்.  இராகவேந்திர மடத்தின்  மேலாளர் M.S.Ramesh Jodiar, 09480305874,  மடத்தின் தொலைப்பேசி எண்: 08533-267733. இவ்வாறு ஆனேகுந்தியில்  ஒன்பது மத்வ மாகன்களின்  தரிசனம் பெற்ற பின்  சிந்தாமணிக்கு  வண்டி மூலம் புறப்பட்டு  சென்றோம். அத்தியாயம் -7 : சிந்தாமணி கோயில் வளாகம் நவ பிருந்தாவன மகான்களின் அருமையான தரிசனத்திற்கு பிறகு நாங்கள் சென்ற இடம் சிந்தாமணி கோயில் வளாகம் ஆகும். இராமபிரான் முதன் முதலில் ஹனுமனையும், சுக்ரீவனையும் சந்தித்த குகையும், சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இராமபிரான் வாலியின் மீது அம்பெய்த இடமும் இவ்வளாகத்தில் உள்ளன. சீதா பிராட்டியார் வீசிய நகைகளை இராமர் இங்குதான் கண்ணுற்றார். மேலும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் ஸ்ரீமகிஷாசுர மர்த்தினி ஆலயம் இவ்வளாகத்தில் அமைந்துள்ளது. துங்கபத்ரையின் இக்கரையில் ஆனேகுந்தி படகுத்துறையின் இடப்பக்கம் அழகான தாரா பர்வதம் உள்ளது. வலப்பக்கம் சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சிந்தாமணி அமைந்துள்ளது. நாங்கள் வண்டி மூலமாக இவ்விடத்தை அடைந்தோம். [ருத்ராக்ஷ பந்தலில் காசி விஸ்வநாதர் அன்னபூரணி அம்பாள்] இந்த ஹம்பியும் ஆனேகுந்தியும் இனைந்த  பகுதிதான்  இராமாயண கால கிஷ்கிந்தை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.  இராமபிரான்  சீதாதேவியை  பிரிந்து  அவரைத்தேடி  வந்த போது சுந்தரன்  அனுமனின்  மூலம்  சுக்ரீவனுடன்  நட்பு கொண்டு  வாலியை அம்பு எய்து வதம்  செய்த  இடமே துங்கபத்ரை நதிக்கரையில் அமைந்துள்ள  சிந்தாமணி. எனவே இவ்விடம் திரேதா யுகத்து கிஷ்கிந்தா ஆகும். ஆனேகுந்திக்கு  “பம்பா க்ஷேத்ரம்” என்ற பெயருமுண்டு என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகின்றது.  இந்த பம்பா க்ஷேத்ரம்தான் வாலி மற்றும் சுக்ரீவனின் தலைநகராக இருந்தது.   வாலியின் மனைவி தாராவின் பெயர் கொண்ட  தாரா மலை அருகே உள்ளது.  துங்கபத்ரையின் தெற்குக்கரையில்தான் ஆஞ்சனேயர் அவதரித்த, அஞ்சனை ஹனுமனை வளர்த்த  அஞ்சனாத்ரி மலை  உள்ளது.  இன்றும் ஸ்ரீராமருடன் வைகுண்டம் செல்லாமல் அவருடைய நாமம் ஒலிக்கு இடமெல்லாம் ஆனந்த கண்ணீருடன் அமர்ந்து கேட்கும் ஹனுமனின் சஞ்சாரம் உள்ள இடம் இந்த ஆனேகுந்தி ஹம்பி பகுதி என்பது ஐதீகம். [வாலியின் எலும்பு மலை] இவ்விடம் சிந்தாமணி என்று அழைக்கப்படுவதற்கு ஒரு காரணமும் உண்டு அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?  அன்னை சீதா தேவியை தேடி வந்த இராமபிரானிடம் சுக்ரீவன் சீதா தேவியின் நகைகளை காண்பித்த இடம்  என்பதால் இப்பெயர் வந்ததாம்.  இத்தலம் பூமாதேவியின் பிறந்த வீடு என்பது ஒரு ஐதீகம்.  அடியோங்கள் சென்ற சமயம் நரசிம்மர் சன்னதியில் பட்டர் இருந்தார் அவர் திவ்யமாக சேவை செய்து வைத்து தீர்த்த சடாரி பிரசாதமும் வழங்கினார். மற்ற சன்னதிகள் பூட்டியிருந்தன. எனவே உள்ளுரில் விசாரித்துக்கொண்டு அல்லது ஒரு வழிகாட்டியுடன் செல்வது நல்லது. சிவபெருமான் சன்னதிக்கு  படிகளில் மேலே ஏறி செல்ல வேண்டும்.  இங்கு தவம் செய்த மகான் ஒருவர் பிற்காலத்தில் சிவலிங்கத்தையும் அன்னபூரணி அம்மையும் பிரதிஷ்டை செய்தாராம்.  அம்பாளின் முன்னர் ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவசக்தி இருவரும் ருத்ராக்ஷ பந்தலில் அருட்காட்சி தருகின்றனர். அம்மகான் இக்கோவிலின் கீழேயே அப்படியே ஒரு நாள் மறைந்து விட்டாராம். [ஸ்ரீராமர் பாதம் (இங்கிருந்துதான் வாலியை வீழ்த்த அம்பு எய்தினாராம்)] இவ்வளாகத்தில் இராமர் பாதம் உள்ள இடத்தில் இருந்துதான் ஸ்ரீராமர் அம்பெய்து வாலியை கொன்றாராம்.  எதிரே தெரியும் மரங்கள் வரை இராமனின் அம்புகள் சென்று வாலியை வீழ்த்தியதாம். இன்னும் அந்த இடத்தில் வாலியின் எலும்புகள் குவியலாக உள்ளதாக நம்பப்படுகின்றது.  பின்னர் இங்கிருந்து  பம்பா சரோவர் சென்றோம். அத்தியாயம் -8 : பம்பா சரோவரம் [நெஞ்சை அள்ளும் பம்பா சரோவரம்] முதலில் நவபிருந்தாவனத்தை தரிசனம் செய்து விட்டு அடுத்து சிந்தாமணி லக்ஷ்மி நரசிம்மரையும் தரிசனம் செய்து விட்டு நாங்கள் அடுத்து சென்ற இடம் பம்பா சரோவரம் ஆகும்.  தற்போதைய ஆனேகுந்தி ஹம்பி பகுதியாகிய இந்த பம்பா க்ஷேத்திரத்தை தலைநகராகக் கொண்டு வாலி ஆண்டு வந்ததாக வரலாறு. ரிஷ்ய முக பர்வதத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள அமைதி தவழும் இச்சரோவரின் கரையில் ஆதி காலத்திலிருந்தே தவ சிரேஷ்டர்கள் தவம் புரிந்து வந்துள்ளனர். விஜயநகர சம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்த ஸ்ரீ வித்யாரண்யர் தவம் புரிந்த இடம் இது. தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி தருவதற்கொன்றும் இல்லை தலைவனே எனை ஆதரி என்ற பாடலை தாங்கள் கேட்டிருப்பீர்கள், இப்பாடலில் கூறியுள்ளது போல இராமபிரானுக்காக சுவை மிகுந்த பழங்களை சேர்த்து வைத்திருந்த சபரி அன்னை வாழ்ந்த குகை இக்குளக்கரையில்தான் உள்ளது. அன்னை சமர்பித்த அந்த கனிகளை மிகவும் உவப்புடன் ஏற்றுக் கொண்டார்  தாசரதி. சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க தாமரை மலர்களால் நிறைந்து இரம்மியமாக காட்சி தருகின்றது  பம்பா சரோவர். திருக்கயிலாய மலையுடன் சார்ந்த மானசரோவரைப் போலவே இந்த பம்பா சரோவரமும் பிரம்மதேவரின் மனதில் இருந்து தோன்றிய தடாகம் ஆகும். பாரத கண்டத்தில் உள்ள மற்ற மூன்று சரோவர்கள் இராஜஸ்தானில் உள்ள புஷ்கர் சரோவர் மற்றும் குஜராத்தில் உள்ள நாராயண சரோவர், பிந்து சரோவர் ஆகும். இந்த தடாகத்தில் எப்போதும் நீர் வற்றுவது இல்லையாம். குளக்கரையில் பிரம்மாண்டமான மரங்கள் உள்ளன நாங்கள் சென்ற சமயம் அருமையான ஆரஞ்சு நிற மலர்கள் பூத்து அருமையான காட்சி அளித்தது. அதிலிருந்து வந்த சுகந்த மணம் அந்த இடத்தின் தெய்வீகத் தன்மையை மேலும் அதிகப் படுத்தியது.  சரோவர் முழுவதும் தாமரை மலர்கள் பூத்து காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. ஸ்ரீவாதிராஜர் தீர்த்த பிரபந்தத்தில் பம்பாவைப் பற்றி குறிப்பிடும் போது “ இது பாபத்தை தலைகீழாக்கி விடும் க்ஷேத்திரம்  என்று கூறுகிறார்.  அதாவது பாபம் என்பதில் உள்ள ’பா’வை எடுத்து இறுதியில் இட்டால் பம்பா என்றாகிவிடும்.  எனவே பாப பரிஹாரத்திற்கு தலை சிறந்த தலம் இந்த பம்பா க்ஷேத்திரம்.  இதற்கு “தக்ஷிண காசி” என்ற பெயரும் உண்டு. இச்சரோவரின் கரையில் சபரி தனது குருநாதர்  மாதங்க மஹரிஷி,  ஸ்ரீராமர் வருவார் என்று சொன்ன சொல்லுக்காக அவருக்காக தவம் செய்து காத்திருந்த குகையும்,  விஜயலக்ஷ்மி மற்றும் சிவபெருமானின் ஆலயங்களும் உள்ளன. இங்குள்ள ஆதிவாசி இனத்தினர் இக்குகையையும் சரோவரையும் பராமரித்து வருகின்றனர்.  நாங்கள் சென்ற சமயம்,  ஒரு ஆதிவாசிப்பெண், தங்களுடைய பாரம்பரிய ஆடையுடன்  சரோவரின் கரைகளில் விழுந்திருந்த குப்பைகளை கூட்டி கூடையில் அள்ளிக் கொண்டிருந்தார். சபரி வேட்டுவர் குலத்தை சார்ந்தவர் என்பதால் இங்கு தவம் செய்து கொண்டிருந்த சில முனிவர்கள் அவர் மேல் அசூயை கொண்டு பம்பா சரோவரில் நீராட வேண்டாம் என்று துரத்தி விட்டனர். ஆனால் மறு நாள் காலையில் அம்முனிவர்கள் நீராட வந்த போது குளம் மிகவும் அசுத்தமாக இருந்ததாம். பின்னர் ஒரு தூயவர் இக்குளத்தில் நீராடினால் சரியாகும் என்று அசரீரியாக கேட்டு சபரியை நீராட அழைத்தனர். அவர் நீராடிய பின் குளம் முன் போல மாறியதாம். இறைவனே அவரை நாடி வந்து தரிசனம் தரும் பேறு பெற்றவர் அல்லவா? சீதாப் பிராட்டியாரைக் காணாமல் அலைந்து கொண்டிருந்த சமயம் இங்கு இராமச்சந்திர மூர்த்தி வந்த போது அன்னை சபரி அவருக்கு பாத பூஜை செய்தார். அந்த பாதச்சுவடுகளையும், சபரி இராமர் வரும் வரை காத்திருந்த போது ஹோமம் செய்த ஹோம குண்டத்தையும் இக்குகையில் தரிசிக்கலாம். சுக்ரீவனுடைய உதவியைப் பெற்று தாயாரை தேடுமாறு சபரி அன்னை இராமருக்கு அறிவுறுத்தினாராம். இராமபிரான் சபரி அன்னையின் பக்திக்கு மகிழந்து அவருக்கு மோட்சம் அளித்தார். […] [சபரி மாதா பூசித்த இராமர் பாதம் – விஜய லட்சுமி தாயார்] குகைக்கு அருகிலேயே மற்ற இரண்டு ஆலயங்களும் உள்ளன.  இங்குசிவபெருமானையும் பம்பா தேவியையும் இங்கு தவம் செய்த ஒரு முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இவரது சீடர்கள் இப்போது இவ்வாலயங்களை பராமரித்து வருகின்றனர்.  விஜயலக்ஷ்மி அம்மன் சன்னதியின் முன்னே கணேசர் மற்றும் ஹனுமன் அருள் பாலிக்கின்றனர். கருவறையில் அமர்ந்த கோலத்தில் அன்னை அருளாட்சி நடத்துகின்றாள் அலைமகளின் முன்னே அனேகம் சாலக்கிராமங்களும் உள்ளன. இரண்டு ஆலயங்களையும் ஒரு சிறு வாயில் இணைக்கின்றது. […] […] சிவபெருமானையும் பம்பா தேவியாக அருள் பாலிக்கும் அன்னை மலைமகள் பார்வதியையும்  வணங்கி விட்டு வெளியே வரும் போது. ஆசிரமத்தின் முன்னறை சமையல் கூடமாக ( அல்லது வரும் பக்தர்களுக்கு பிரசாதம் படைக்கவோ)  மாறியிருந்தாக தோன்றியது.  வெளியே வந்து  மேலிருந்து பார்த்தபோது  ( ஆலயத்திற்கு செல்ல சுமார் பதினைந்து படிகள் ஏறி செல்ல வேண்டும்) சபரி அன்னை நீராடி புனிதப்படுத்திய சரோவர் இன்னும் அழகானதாக தோன்றியது. பம்பா சரோவரில் தவம் செய்யும் யோகிகள் தமக்கோ அல்லது பிறர்க்கோ உடல் நலம் சரியில்லாத போது வாலி வீழ்ந்த இடத்தில் உள்ள எலும்புகளை எடுத்து வந்து தேய்த்து நிவாரணம் தருவார்களாம். அஞ்சனாத்ரி மலை ஏறி பால ஆஞ்சனேயரை தரிசிக்க வேண்டுமென்பதால் அங்கிருந்து சீக்கிரம் கிளம்பினோம். அத்தியாயம்-9 : அழகு கொஞ்சும் அஞ்சனாத்ரி மலை கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஆனேகுந்தி அருகில் உள்ள நவபிருந்தாவனம், சிந்தாமணி கோயில் வளாகம் மற்றும் பம்பாசரோவர்ம் தரிசனம் செய்த பிறகு நாங்கள் சென்ற தலம் அஞ்சனாத்ரி ஆகும். ஆம் அஞ்சனா புத்ரன், அஷ்ட சிரஞ்சிவிகளில் ஒருவன் இராமபக்தன் சுந்தரன்  அனுமன் பிறந்த இடமாக இந்த அஞ்சனாத்ரி கொண்டாடப்படுகின்றது வாருங்கள் சென்று பால ஆஞ்சனேயரையும் அன்னை அஞ்சனையையும் தரிசனம் செய்யலாம். [அஞ்சனாத்ரி மலை] பம்பா சரோவரிலிருந்து சிறிது தூரத்தில் (2 கி.மீட்டருக்குள்) ஆனேகுந்தியிலிருந்து ஹுலிகி செல்லும் பாதையில் உயர்ந்த இந்த அழகே உருவான அஞ்சனாத்ரி மலை அமைந்துள்ளது. வண்டி ஓட்டுநர் இந்தப் பகுதியை சார்ந்தவர் என்பதனால் எங்களுக்கு எந்த சிரமமும்  இருக்கவில்லை அவரே எல்லா இடங்களுக்கும் அவரே  அழைத்து சென்றார். மலையின் மேல்   ஹனுமனுக்கும் அஞ்சனா தேவிக்கும் கோயில் அமைந்துள்ளது.  மேலே ஏறி செல்ல சுமார் 545 படிகள் ஏற வேண்டும்,  மிகவும் குறுகிய படிகள் பல இடங்களில் செங்குத்தாக படிகள் அமைந்துள்ளன.  சில இடங்களில் தான்  மேலே உள்ள  பாறைகள் நமக்கு நிழலை அளிக்கின்றன. ஆகவே வெயில் காலத்தில்  அதிகாலையில் மலையேறுவதுதான் உகந்தது. படிகளின் ஆரம்பத்தில் ஒரு அலங்கார வளைவு உள்ளது. அதில் அன்னை அஞ்சனா தேவி அனுமனை தனது மடியில் வைத்து அழகு பார்க்கும் கோலத்தில் காட்சி தருகின்றாள். வழியெங்கும் வானரங்கள் உள்ளன. கீழே பொரி,  ஊற வைத்த கடலை விற்கின்றார்கள் வாங்கி குரங்குகளுக்கு அளிக்கலாம். [பால ஆஞ்சனேயர் விமானம்] மலையின்  மேல் அமைந்துள்ள கோவிலில் மூன்று சன்னதிகள்.  முக்கிய சன்னதி பால ஆஞ்சனேயர் புடைப்பு சிற்பமாக கையில் கதை ஏந்திய வண்ணம் அருட்காட்சி தருகின்றார் அஞ்சனா புத்ரன்.  அந்த வாயுபுத்ரனை, இராம தூதனை, மாருதியை, சிரஞ்சிவி மலை கொண்டு வந்த சுந்தரனை, கண்டேன் சீதையை என்று கூறிய சொல்லின் செல்வனை புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், செயலில் உறுதிப்பாடு, ஆரோக்கியம், நாவன்மை இத்தனையும் தரும் வள்ளலை மனதார  அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்றா றாக ஆரியற் காகஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக்காப்பான் என்று துதி சொல்லி வழிபட்டு அடுத்த சன்னதிக்கு சென்றோம். அது வேத மாதா  காயத்ரி  சன்னதி அங்கு பல் வேறு சாதுக்கள் அமர்ந்து பஜனை செய்து கொண்டிருந்தனர். அடுத்த சன்னதி  அஞ்சனா தேவி சன்னதி,  பளிங்கு கல்லினால் ஆன சிலை அமர்ந்த கோலத்தில்  குழந்தை அனுமனை மடியில் வைத்த கோலத்தில் காட்சி தருகின்றாள் மாதா அஞ்சனாதேவி.  அன்னையையும் சுந்தரனையும் திவ்யமாக சேவித்துவித்து வெளியே வந்த போது மாருதியின் அருளால் தேங்காய் பிரசாதம் கிடைத்தது.  சன்னதியில் இருந்து வெளியே வந்த போது கீழே சுமார் பத்து படிகள் சென்றன.  இறங்கி சென்ற போது  ஒரு சிவலிங்கம்  இருந்தது ஈசனை, சிவகாமி நேசனை, ருத்திரனை தரிசனம் செய்தோம்.  அனுமன் வாயு புத்ரன். ஸ்ரீ ஹரியுடன் ஒவ்வோரு அவதாரத்திலும் அவருக்கு சேவை செய்வதற்காக உடன் வருபவர்.  வாயு பகவான் எங்குள்ளாரோ அங்கேதான் ஜெயம் ஏனென்றால் ஸ்ரீ ஹரியின் பூரண அருள் அவருக்கு உண்டு.  த்ரேதா யுகத்தில் சூரிய புத்ரன் சுக்ரீவன், இந்திரனின் புத்ரன் வாலி, இந்த கிஷ்கிந்தையிலே வாயு புத்ரன் ஆஞ்சனேயன் துணை இருப்பதனால் சுக்ரீவன் வெல்கிறான், இந்திர புத்ரன் வாலி வீழ்கிறான்.    அதே துவாபர யுகத்தில் அது தலைகீழ் ஆகிறது கர்ணன் சூரிய புத்ரன், அர்ச்சுனன் இந்திர புத்ரன். குருக்ஷேத்திரத்தில் சூரிய புத்ரன் கர்ணன் வீழ்கிறான், அர்ச்சுனன் வெல்கிறான், ஏனென்றால் வாயு புத்திரன் பீமனும் அவனுடன் இருந்தான். பால ஆஞ்சனேயரை பார்த்த மகிழ்ச்சியில், கம்பன் சொல்லின் செல்வரின் வாய் மொழியாகப் பாடிய  இரு பாடலைக் காண்போமா? விற்பெருந் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன் இற்பிறப்பென்பதொன்றும் இரும்பொறை யென்பதொன்றும் கற்பெனும் பெயரதொன்றும் களி நடம் புரியக் கண்டேன் சுந்தரனான அனுமன், சிறந்த  சீதா பிராட்டியின் நலம் எவ்வாறு உள்ளது  என்று அறிய விரும்பும் இராமனிடம் கூறுகின்றான், கடல் சூழ்ந்த இலங்கை மாநகரில் நான் சீதாபிராட்டியை காணவில்லை, நல்ல குடிப்பண்பும்,  பூமாதேவியைப் போன்ற பொறுமையும், கற்பில் சிறந்தவளும் ஆன பெருந்தவத்தவளான நங்கையைக் கண்டேன்  என்றார் மேலும் , அவள் உன்பெருந்தேவி என்னும் உரிமைக்கும் உன்னைப் பெற்ற மன் பெரும் மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் என் பெருந் தெய்வம்! ஐயா! சிறை வாழ்க்கையிலும்  மனைவி, மகள், மருமகள் என்னும் உறவுமுறைகளெல்லாம் தன்  மூலம்  சிறப்பு  அடையும் படியாக  விளங்கினாள்.  இதுவரை  மற்றவர்களுக்கு  உறவு முறையால் பெருமை  சேர்த்த பிராட்டி  எனக்குப்  பெருந்தெய்வமாகக் காட்சி  தந்தாள் என்கிறான் அனுமன். என்னே சொல்லின் செல்வனின் பெருமை. தாயாரையும் பெருமாளையும் சேர்த்து வைத்தவரல்லவா.  மேலிருந்து இந்த கிஷ்கந்தையின் முழு அழகையும் பார்த்தோம், சுற்றிலும் வளமான நெல் வயல்கள், பச்சை போர்வை போர்த்தது போல காட்சி தந்தது. சுற்றிலும் மலைகள் குழந்தைகள் கட்டியது போல பாறைகளை ஒன்றின் மேல் ஒன்று வைத்தது போல அருமையாக காட்சி தந்தது. இந்த இயற்கையின் அழகை வீடியோவிலும் பதிவு செய்தோம்.  இங்கிருந்து ஹம்பியின் விருபாக்ஷீஸ்வரர் கோயில் கோபுரம், மற்றும் வளைந்து ஒடும் துங்கபத்ரா நதியின் முழு ஓட்டம் மற்றும் சுற்றுமுற்றும் உள்ள காட்சிகளை எல்லாம் கண்டு களித்தோம்.  [மலைமேலிருந்து பறவைப்பார்வையில் துங்கபத்ரை] இம்மலை ஏறும் போது ஒன்றை கவனித்தோம். நிறைய வெளிநாட்டினர் இந்த ஹம்பி பகுதியை சுற்றிப் பார்க்க வருகின்றனர்.  பலர் மலையேறி வந்தனர். பின்னர் திரும்பி ஹோஸ்பெட் செல்லும் போதும் சைக்கிளில் பயணம் செய்யும் வெளி நாட்டினர் பலரைக் கண்டோம். சுமார் 4 மணியளவில் அஞ்சனாத்ரி மலையிலிருந்து கீழே இறங்கி வந்தோம். புகை வண்டி இரவில்தான் என்பதால் ஹம்பி சென்று பார்த்து வருவோம் என்று புறப்பட்டோம். ஆனேகுந்தியிலிருந்து ஹம்பிக்கு செல்ல ஒரு குறுக்கு வழி உள்ளது அதில் ஆனேகுந்தி பக்கமே நமது வண்டியை நிறுத்திவிட்டு படகு மூலம் துங்கபத்ராவை கடந்து மறுபக்கம் சென்று  வேறு ஆட்டோ அமர்த்திக் கொண்டு ஹம்பியில் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் பார்த்து விட்டு  படகு மூலம் இப்பக்கம் வந்து பின்னர் ஹோஸ்பெட் அடையலாம். எங்களுக்கு அதிக நேரம் இல்லாததால் முடிந்தால் விருபாக்ஷீஸ்வரர்  ஆலயத்தை மட்டும் தரிசித்து உடனே தங்கும் விடுதிக்கு சென்று விடலாம் என்று நாங்கள் ஹோஸ்பெட் வழியாக ஹம்பிக்கு புறப்பட்டோம்.  சுமார் ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று புறப்பட்டோம். ஆனால் ஹோஸ்பெட்டை நெருங்க நெருங்க  வாகனங்கள் அதிகமாகி விட்டதால் வண்டி ஊர்ந்து செல்ல வேண்டியதாக ஆகிவிட்டது.  சென்னையில் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது இப்பகுதியின் போக்குவரத்து. இரண்டு பக்கமும் செழிப்பான வயல்களை பார்த்தோம். வாழை மரங்களில் வாழைத்தார்கள்  தொங்கின. தென்றல் காற்றில் நெல் கதிர்கள் ஊசலாடிக்கொண்டிருந்தன. வரும் வழியில் துங்கபத்ரா அணையின் முன்னே வண்டி சரியாக நின்றது  ஏனென்றால் சரியாக அந்த பாலத்தின் மேல் வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரி கோளாறு காரணமாக சிக்கிக்கொண்டது. சூரியன் மறையும் அந்த அந்தி வேளையில் வான மகள் ஆரஞ்சுப் போர்வை போர்த்திக்கொண்ட நேரத்தில் அணையின் காட்சி மிகவும் இரம்மியமாக இருந்தது.  புகைப்படமும் எடுத்துக்கொண்டோம்.   வாருங்கள் துங்கபத்ரா அணையை சற்று சுற்றிவிட்டு வரலாம். அத்தியாயம் - 10 : துங்கபத்ரா அணை [அந்தி சாயும் நேரத்தில்]  கிருஷ்ணா நதியின் துணை நதி துங்கபத்ரா, துங்கா மற்றும் பத்ரா என்னும் இரு நதிகள் சங்கமமாகி துங்கபத்ரா ஆகின்றது.  இந்நதி கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை வளப்படுத்துகின்றது. மண்ணும் சுண்ணாம்பும் சேர்ந்து கட்டப்பட்ட இந்த அனை பம்பா சாகர் என்றும் அழைக்கப்படுகின்றது. வேளாண்மை, மின்சாரம் மற்றும் வெள்ள நீர் மேலாண்மை ஆகியவற்றுக்காக கட்டப்பட்ட பல் நோக்கு அணையாகும் இது.    ஹோஸ்பெட்டிலிருந்து சுமார் 4.8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அணை.  இதன் நீளம் 2.4 கி.மீ,  உயரம் 50 மீ. கொள்ளவு 135 டிம்சி,  ஆனால் தற்போது அது 30  டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. மூன்று கால்வாய்களின் வழியாக தண்ணீர் பாய்கின்றது. கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கான ஆகிய மூன்று மாநிலங்களுக்கிடையில் இவ்வணையின் நீர் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. சாலையில் இருந்து அணை வரை சென்று வர கட்டண பேருந்து வசதி உள்ளது. தினமும் மாலை வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர். அனையின் இருபக்கமும் இரு மலைகள் வலப்பக்கம் கயிலாயம் இடப்பக்கம் வைகுண்டம்.  வைகுண்ட மலையின் மேல் ஒரு ஆஞ்சனேயர் ஆலயம் உள்ளது.  அணையின் மேல் உள்ள சாலைப் பாலத்திலிருந்தும்,  மலையின் மேலிருந்தும், கடல் போல தேங்கியிருக்கும் நீரையும், அணைக்கு அழகு சேர்க்கும் மலர் சோலையையும் கண்டு களிக்கலாம். கயிலாயத்தின் கீழ் தோட்டத்தின் மையத்தில் சிவபெருமான் சிலை எழிலாக அமைந்துள்ளது. சிவபெருமானின் ஜடாமுடியிலிருந்து கங்கை ஓடி வருவது போல் கால்வாய் அமைத்துள்ளனர், அதன் நடு நடுவே நீரூற்றுக்கள் அமைத்துள்ளனர். சிறுவர்கள் விளையாட சிறு பூங்காவும் உள்ளது. துங்கபத்ரா அணையை அடுத்து ஆனேகுந்தியின் அருகே உள்ள இரு மலைகளைப் பற்றி பார்த்து விடலாம் அன்பர்களே. அத்தியாயம் - 11 : துர்கை பர்வதம் இம்மகான்களின் அருளினால் இரண்டாம் முறை நவபிருந்தாவனம் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அப்போது  அழகு கொஞ்சும் துர்கை மலை சென்று தரிசித்தோம், மேலும் மற்றும் அருகில் உள்ள தாரா மலை என்னும் மலையும் அருகில் உள்ளது இவற்றின் சிறப்புகளை பற்றிக் காணலாம். துர்கா பேட்டா என்று அழைக்கப்படும் துர்கை மலைக்கு  அஞ்சனாத்திரி மலை போல் அதிக படிகள் ஏறிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை, மலையின் பெரும்பாலான உயரம் வரை வாகனங்கள் செல்கின்றன எனவே கொஞ்சம் படிகள் மட்டுமே ஏற வேண்டி இருந்தது. மலை உச்சியில் இருந்து நாம் இப்பகுதியின் வனப்பை கண்டு களிக்க இயலும்.  மலை மேல் துர்க்கா தேவிக்கு ஒரு கோயில் உள்ளது.  அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மிகவும்  விசேஷம். பதிமூன்றாம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவிய ஹரிஹரர் அவர்கள்து குரு வித்யாணரின் வழிகாட்டுதலின் பேரில் இக்கோவிலை அமைத்துள்ளார். எனவே அவர்களின் இஷ்ட தெய்வமாக இத்துர்கா தேவி இருந்துள்ளாள். அக்காலத்தில் அவர்கள் அன்னையின் ஆசி பெற்றே போருக்கு சென்றார்கள், மற்றும் எந்த சுப நிகழ்ச்ச்சிக்கு முன்னரும் துர்க்கையை வழிபட்டுள்ளனர். சாரதா நவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தசமியன்று அலங்கரிக்கபட்ட யானையின் மேல் அன்னையை எழுந்தருளச்செய்து ஆனே குந்திக்கு அழைத்து வந்து அன்னை மகிஷாசூரனை சம்ஹாரம் செய்ததை கொண்டாடியுள்ளனர். ஆலயம் ஒரு கோட்டைக்குள் அமைந்துள்ளது. ஹனுமனுக்கும் ஒரு சிறு சன்னதி உள்ளது. இவர் துவார ஹனுமன் என்றழைக்கப்படுகின்றார். அம்மன் சன்னதியில் துர்காம்பாள் மேற்திருக்கரங்களில் சங்கு சக்கரமும், வலது கீழ் திருக்கரத்தில் திரிசூலமும், இடது திருக்கரத்தில் மகிஷாசுரனைன் தலையை சம்ஹாரம் செய்வதற்காக பற்றிய கோலத்தில் அருட்காட்சி தந்தருளுகின்றாள். சிறிய சன்னதிதான் என்பதால் பூசைகள் முடிந்த பிற்கு பக்தர்கள் ஒவ்வொருவராக சென்று அன்னையை தரிசனம் செய்து குங்குமப்பிரசாதம் பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாலயத்தை சாதுக்கள் சிலர் தற்போது பராமரித்து வருகின்றனர், அவர்கள் தங்குமிடமும் மலை மேலே உள்ளன. தினமும் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்படுகின்றது, காலையில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. காலை 7 மணி, மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணி என்று முக்கால பூசை நடைபெறுகின்றது. தினமும் மூன்று வேளைகளில் குங்குமார்ச்சனையும், லலிதா சகஸ்ரநாம பாராயணமும் நடைபெறுகின்றது. இரவு 10 மணி வரை ஆலயம் திறந்துள்ளது. [தாரா பர்வதம்:  தாரை வாலியின் மனைவி.  இவள் சிறந்த பக்தை மற்றும் அருமையான சொல் வன்மை கொண்டவள். மழைக்காலத்திற்காக வானரங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு சமயத்தில் அன்னை சீதா தேவியை  தேட கிளம்பாமல் சுக்ரீவனும் வானரப் படைகளும் களித்துக் கிடந்த  சமயம் இவர்களை நாடி கோபத்துடன் இளைய பெருமாள் இலக்குவன் வந்த போது அவரை சமாதானப்படுத்த சுக்ரீவன் தாரையைத் தான் முன்னிறுத்தினான்.  வாலிக்கு நல்ல யோசனைகளை தந்தவள் தாரை,  வாலி சில சமயம் அவளது யோசனையை கேட்காத போது  தாரை தியானம் செய்த மலைதான் இந்த தாராபர்வதம் என்பது ஐதீகம்.  இந்த தாரா பர்வதத்திலிருந்து பிரதி அமாவாசை, பௌர்ணமி தோறும்  இரவு நேரங்களில் ஒரு ஜோதி புறப்பட்டு நவ பிருந்தாவனத்தை சுற்றி வருவதாக இங்குள்ளவர்கள் நம்புகின்றனர். தாராபர்வதம் ஆனேகுந்தி படகுத்துறையின் இடப்பக்கம் உள்ளது. நவபிருந்தாவனத்திலிருந்து அருமையாக தரிசிக்கலாம்.  பல்வேறு இடங்களில் வாலி மற்றும் சுக்ரீவனைப் பேசுகின்றோம் எனவே   அவர்கள் கதையை சிறிது பார்ப்போமா? […] ரிக்ஷரஜஸ் என்னும் கபியின் வாலிலிருந்து இந்திர புத்ரனாக வாலியும்,  கழுத்திலிருந்து  சூரிய புத்ரனாக  சுக்ரீவனும்  பிறந்தனர்,  ஒரு சமயம்  மாயாவி என்னும் இராக்ஷஸன் கிஷ்கிந்தை மீது படையெடுத்து வந்தான். அவனை வாலி சுக்ரீவன் இருவரும் துரத்தினர் அப்போது அவனொரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான்,  வாலி அவனுடன் போர் செய்ய உள்ளே சென்றான், சுக்ரீவன் வெளியில் நின்றான், பல நாட்கள்   ஆகியும் அவன் வெளியே வரவில்லை சண்டையிடும் சததம் மட்டுமே வந்து கொண்டிருந்தது பின்னர் ஒரு நாள் குருதி மட்டும் வெளியே வந்தது.  சுக்ரீவன் வாலிதான் இறந்து  விட்டான் என்று அதை தவறாக  கருதி இராக்ஷசன் வெளியே வராமல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் குகையின் வாசலை ஒரு பெரிய கல்லினால் மூடி வைத்து விட்டு திரும்பினான்.  இவ்வாறு சரியாக புரிந்து கொள்ளாமல் சுக்ரீவன் செய்த செயல் வாலிக்கு கோபத்தை மூட்டியது,  குகையிலிருந்து வெளியே வந்த அவன் சுக்ரீவன் அரசனாகவும் உள்ளதைக் கண்டு அவனை கொல்ல பாயந்தான் அவனிடமிருந்து தப்பிக்க ஒடினான், வாலியும் துரத்திக் கொண்டு ஒடினான்.  சுக்ரீவன் ரிஷ்யமுக பர்வதத்தை அடைந்த போது  மாதங்க முனியின் சாபத்தால் வாலி அம்மலையில் கால் வைக்க முடியாமல் திரும்பினான் சுக்ரீவன் அன்று முதல் ஹனுமன் முதலிய தனது நண்பர்களுடன் அங்கு வாழ்ந்து வரலானான்.  ரிஷ்யமுக பர்வத்ததில் வாலி கால் வைக்க முடியாமல் போனதற்கு காரணம் மதங்க முனி கொடுத்த சாபம்தான். இவர்தான் சபரியின் குருநாதர் என்று முன்னரே பார்த்தோம் அல்லவா?. அந்த கதை என்னவென்றால், துந்துபி என்ற வலிமை மிக்கவன் கிஷ்கிந்தையை தாக்கி துன்புறுத்தி வந்தான். ஒரு சமயம் அவன் எருமை வடிவம் எடுத்து வந்த போது வாலி அவனது காலால் எட்டி உதைக்க அவன் தூக்கி எறியப்பட்டு மதங்கர் தவம் செய்யும் ரிஷ்யமுக பர்வதத்தில் சென்று விழுந்தான். தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களின் தவம் கலைந்ததால்  மதங்க முனிவர் வாலிக்கு சாபம் அளித்தார்.    சுக்ரீவன் தன்னிடமிருந்து தப்பித்து விட்டதால்  கோபத்துடன் திரும்பி சென்ற வாலி,  சுக்ரீவனின் மனைவி ருமையை தனது மனைவி ஆக்கிக்கொண்டான்.  ஸ்ரீஇராமன் மறைந்திருந்து  அம்பெய்து அவனைக் கொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்.  வாலி மிக சிறந்த வீரன். அவன் இராவணனை தனது  வாலில் கட்டி சுமந்து சென்று கடலில் குளித்து விட்டு வருவானாம்.  மேலும் அவனுக்கு இருந்த ஒரு வரத்தின்படி  அவனுக்கு நேரெதிர் சென்று போர் செய்பவரின் பாதி வீரம் இவனுடையதாகிவிடும், ஆகவே அவனை எதிர்த்து யாரும் வெல்ல முடியாத வலிமை பெற்றிருந்தான். நீதிக்கு புறம்பானதை செய்ததாலும், இராம காரியத்திற்காக அவதாரம் செய்தவன் அதை மறந்து இராவணனுடன் நட்பு கொண்டதாலும் அவன் இராமனின் பாணத்திற்கு இரையாக நேர்ந்தது. அந்த இராமபாணத்தில் வாலி மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, இராம என்னும் செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான். பொருள்: மூன்று உலகங்களுக்கும் மூல மந்திரமாக உள்ளதும், தன்னை ஜபிக்கின்ற அடியார்க்குத் தம்மையே முற்றும் அளிக்கின்றதும், ஒப்பற்ற சிறந்த சொல்லாக உள்ளதும் இப்பிறப்பிலேயே எழுமையும் ஒழிக்க வல்லதும்; ஆன ராம’ என்ற சிறந்த திருநாமம் அந்த அம்பிலே விளங்கக் கண்டான் வாலி என்று இராம நாமத்தின் பெருமையை கம்பர் பாடுகின்றார். வாருங்கள் அன்பர்களே இனி ஹம்பி நகரத்தை சுற்றிப் பார்க்கலாம். அத்தியாயம் - 12 : ஹம்பி நகரம் (https://www.blogger.com/u/1/blog/post/edit/1485957878144258220/4137755981342344104)நவபிருந்தாவனம் செல்லும் அன்பர்கள் அனைவரும் அவசியம் சென்று பார்க்கவேண்டிய இடம் ஹம்பி. துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு நகரம். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின்  தலைநகரமாக விளங்கிய போது இதன் பெயர்  விஜயநகரம்  ஆகும். வற்றாத துங்கபத்திரை ஆற்றால் ஒரு புறமும், ஏனைய மூன்றுபுறங்களிலும் இயற்கை அரணாக அமைந்த மலைகளாலும் சூழப்பட்ட இதன் அமைவே தலைநகராக அமைந்ததற்கு முக்கியக் காரணமாகும். ஒரு காலத்தில் இந்நகரம் ஏழு வரிசை கொண்ட கோட்டைகளால்  சூழப்பட்டிருந்தது. இந்தக் கோட்டைகளில் வாயில்களும் கொத்தளங்களும் அமைக்கப்பட்டிருந்தன. நகரைச் சுற்றி ஏழாவதாக அமைந்த உட்கோட்டை மிகவும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றோ அவையெல்லாம் சிதைக்கப்பட்டு எஞ்சிய பல நினைவு சின்னங்களுடன் நிற்கின்றது. இப்பகுதியில் மலயவந்தா, மாதங்கா, ஹேமகூட என்னும் மூன்று மலைகள் உள்ளன. பம்பா என்னும் வடமொழிச்சொல் கன்னட மொழியில் ஹம்பா என்றாகிப் பின்னர் ஹம்பி எனத்திரிந்து நிலைத்தது. இது  போன்ற  ஒரு  நகரத்தை கண்கள் பார்த்தது இல்லை என மேலை  நாட்டுப்பயணிகள்  பலராலும் புகழப்பட்ட நகரம்.  அகலமான வீதிகள், வேலைப்பாடுகள் கொண்ட அழகிய மாளிகைகள், வண்ண மலர்களும் கனிகளும் நிறைந்த தோட்டங்கள், ஓடைகள், நீருற்றுகள்,  என நகரம்  முழுவதும் பசுமையும் குழுமையும் பரவிக்கிடந்தன. வணிக வீதிகளில் வைரம்,  வைடூரியம், முத்து, பவளம்  என்று பலவிதமான விலை மதிப்பற்ற  நவரத்தினங்கள்  கொட்டிக் கிடந்தன. செல்வமும்  வளமையும் திகழ ரோமாபுரிக்கு நிகராக விளங்கியது அந்நகரம் என்று ஹம்பியைப்  பற்றி தனது  ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’  என்ற  நூலில்   திரு. ஜவஹர்லால் நேரு  கூறியுள்ள ஹம்பி நகரைத் தலைநகராக கொண்ட  விஜயநகர  சாம்ராஜ்ஜியத்தின்  வரலாற்றை  சுருக்கமாக  காண்போமா? 1296ம் ஆண்டில் அலாவுதின் கில்ஜி தென்னிந்தியாவை ஆக்ரமித்த பின் நமது  கோயில்கள்  சூறையாடப்பட்டன,  கலாச்சார சின்னங்கள்  அழிக்கப்பட்டன,  திருக்கோவில்களின்  சொத்துக்கள்  கொள்ளையடிக்கப்பட்டன.  இவ்வாறு  மிலேச்சர்களினால் நமது  கலாச்சாரம் அழிவதைக் கண்டு   ஆத்திரம்  கொண்ட மக்கள்  தங்கள்  தர்மத்தை  காக்க எடுத்துக் கொண்ட  முயற்சியின் மூலமே விஜயநகர  சாம்ராஜ்யம் தோன்றி மாபெரும்  இந்து சாம்ராஜ்யமாக விரிந்தது.  முதலில்  சங்கமாவின்  ஐந்து  பிள்ளைகளில்  இருவரான  ஹரிஹர  புக்கர்  என்னும்  சகோதரர்கள் சிருங்கேரி சாரதாபீடத்தின் 12வது ஜகத் குருவாகப் பின்னர் விளங்கிய  ஸ்ரீவித்யாரண்யரின்  ஆலோசனையின் பேரில்  ஆனேகுந்தியில்  விஜய நகர சாம்ராஜ்ஜியத்திற்கு  வித்திட்டனர்.  இவர்கள்  சங்கமா  வம்சாவளியை  சார்ந்தவர்கள்.  வித்யாரண்யரை  சிறப்புப்படுத்தும்  விதமாக விஜயநகரம் முன்பு வித்யாநகரம் என்று  அறியப்பட்டது  என்பதை  கல்வெட்டுகளின் மூலம்  அறிந்து  கொள்கிறோம்.  அதற்குப் பின்  சால்வ வம்சத்தினரினரும்,  துளு  வம்சத்தினரும், அரவிது  வம்சத்தினரும் விஜயநகரை  ஆண்டனர்.  கிருஷ்ணதேவராயர் துளு வம்சத்தை சார்ந்தவர்,  இவர்  தனது  வெற்றியின் மூலம்  இச்சாம்ராஜ்ஜியத்தை மேலும்   விரிவுபடுத்தினார். வடக்கே மைசூர், ஓரிஸ்ஸா முதலான நாடுகளை வென்றார். தெற்கே மதுரையை வென்றார். கல்வி அறிவும், கலை உணர்வும் கொண்ட இவரது காலத்தில் பல்வேறு  கோவில்கள்  கட்டப்பட்டன. இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆலயங்களில் உள்ள நூற்றுக் கால் மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள், நெடிதுயர்ந்த இராஜகோபுரங்கள் இவர் காலத்தில் கட்டப்பட்டவை. அவற்றில் அற்புதமான நூணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களை நாம் இன்றும் கண்டு களிக்கலாம்.  இவர்  தெலுங்கிலும்,  சமஸ்கிருதத்திலும்  பல காவியங்கள்  படைத்துள்ளார்.  இவருக்கு பின்  வந்த  சதாசிவராயரின்  காலத்தில்  பாமினி சுல்தான்கள் பலரும் கூடி விஜய நகர மன்னரை எதிர்த்தனர். தலைக்கோட்டையில் நடந்த பெரும் விஜயநகர மன்னர் தோற்கடிக்கப்பட்டார், மலைகளும்,  துங்கபத்ரா  ஆறும் தங்களுக்கு அரணாக  விளங்கும் என்று போட்ட  கணக்கு  பொய்த்தது  விஜயநகர  சாம்ராஜ்யம்  வீழ்ந்தது. மீண்டும்  ஹம்பி நகரம்  சூறையாடப்பட்டது அவ்வாறு ஆறு மாதங்களாக சூறையாடப்பட்டபின்  எஞ்சியவற்றையே  நாம்  இன்று  காண்கின்றோம்.  சிதைந்த நிலையில் இருந்தாலும், விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலையின் சிறப்பை இன்றும் பறைசாற்றி நிற்கிறது ஹம்பி. விஜயநகர கதையை  சிறிது மனத்தில் வைத்து கொண்டு முதலில்  விருபாக்ஷீஸ்வரர்  ஆலயத்திற்குள் செல்வோமா? இக்கோவிலுக்கு செல்லும் பாதை ஒரு காலத்தில் இராஜ பாட்டையாக இருந்தது.  இப்போது அந்த அகலமான வீதிகளின் இருபுறமும் கடைகள் உள்ளன.   இவ்வாலயம் புகழ் வாய்ந்த ஹேமகூட பர்வதத்தின்  மேல் அமைந்துள்ளது.  சிவபெருமான்  இத்தலத்தில் விரூபாக்ஷீஸ்வரராக  எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.  பம்பாதேவியாக  அன்னை  மலைமகள்  பார்வதி  தவம் செய்து  சிவபெருமானை மணாளராக அடைந்தாள். சிவன் பம்பாபதி என்றும் சிறப்பிக்கப் படுகின்றார்.   இவ்வாலயம்  யாரால்  முதலில்  கட்டப்பட்டது என்று  தெரியவில்லை ஆனால் கிருஷ்ணதேவராயர்  காலத்தில்  இக்கோயில் புதுபிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. [விரூபாக்ஷீஸ்வரர் ஆலயம்]  இரண்டு  பெரிய  இராஜகோபுரங்களும்  இரண்டு  பிரகாரங்களும்  கொண்டது இக்கோவில்.   வெளிக்கோபுரம்   பிஸ்டப்பய்ய கோபுரம்  என்றழைக்கப்படுகின்றது.  கோபுர முகப்பில் பல்வேறு  அருமையான  சிற்பங்கள்  உள்ளன.  11 நிலை கொண்ட இந்த கோபுரம்  165 அடி  உயரமானது.  இரண்டாவது  கோபுரம் இராயர் கோபுரம்  என்றழைக்கப்படுகின்றது.  இந்த இரண்டு  கோபுரங்களையும்  கடந்து சென்றபின் கொடி மரத்தையும்,  விளக்குத் தூணையும் காணலாம்  அதன் அருகில் எண்ணத்தை  ஈடேற்றும்  கல் உள்ளது. அதில் கை வைத்து  பக்தர்கள் தாங்கள்  நினைத்தது  நடைபெறுமா?  என்று சோதித்துப்  பார்த்துக் கொள்கின்றனர்.  ஐயனுடைய  வாகனமான  நந்தி மூன்று முகங்களுடன் வித்தியாசமாக   அமைந்துள்ளது.  கோயில் கற்றளியாக அமைந்துள்ளது  அருமையான தூண்கள்  அதில் உள்ள  சிற்பங்கள் அனைத்தும்  அதை விட  அருமை ஒரு கற்தூண்களில் இன்றைய தினம் பட்டுப்புடவைகளில் வரும் அனைத்து வடிவமைப்புகளையும்(Designs)  அக்காலமே  செதுக்கி  கல்லில் வைத்திருப்பதைக் காண  முடிந்தது.  இடப்புறம்  பாதாளேஸ்வரர்,  முக்திநரசிம்மர்,  சூரிய நாராயணர்  சன்னதிகள் உள்ளன.  விருபாக்ஷீஸ்வரர்  சன்னதி  நடுவில்  அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்தில்   சுயம்பு மூர்த்தி,  லிங்க ரூபத்தில்  எழுந்தருளி  அருள்பாலிக்கின்றார்  பம்பாபதி.  ஆவுடை  இல்லாமல் லிங்க ரூபத்தில் அருள் பாலிக்கின்றார். வெள்ளி முக கவசம்   எம்பெருமானுக்கு  சார்த்துகின்றனர்.  நாங்கள்  சென்ற சமயம்  அபிஷேகம்  நடந்து கொண்டிருந்து.  நிஜ ரூபத்தில்   ஆலமுண்ட  நீலகண்டனை,  வேதப்பொருளோனை,  மாவகிடண்ண  கண்ணி  பாகனை   தரிசனம்  செய்யும்  பாக்கியம்  கிட்டியது.  ஸ்ரீவிருபாக்ஷீஸ்வரர் மேல் ஸ்ரீவியாஸராஜர் சிவஸ்துதி அருளியுள்ளார்.சீனப்பநாயக்காக இருந்து மனம் மாறி தாசரான ஸ்ரீபுரந்தரதாஸரும்  பல கீர்த்தனைகள்  இயற்றியுள்ளார் .இக்கோவிலில்  இரண்டு அம்மன்  சன்னதிகள் உள்ளன.   முதலாவது ஹம்பாம்பா என்னும் பம்பாதேவி மற்றும் புவனேஸ்வரி.   புவனேஸ்வரி கிருஷ்ணதேவராயரின் குலதெய்வமாம் அவர் போருக்கு செல்லும் முன் இந்த அன்னைக்கு  சிறப்பு வழிபாடுகள்  செய்து  அனுமதி  பெற்றுச்செல்வாராம்  என்று அங்கிருந்த அர்ச்சகர் கூறினார்.  பட்டுச்சேலைகள் மடிப்பு மடிப்பாக   படிப்படியாக ஜகத் ஜனிக்கு,  அகிலாண்ட  கோடி பிரமாண்ட  நாயகிக்கு செய்திருந்த அலங்காரம்  வித்தியாசமாகவும் அதே சமயம்  அருமையாகவும் இருந்தது.  புவனேஸ்வரி அம்மனின் சன்னதி கதவின் மேல் இருந்த  மரச்சிற்பம்  மிகவும்   நுணுக்கமாக   செதுக்கப்பட்டுள்ளது.  மூஷிக வாகனத்தில்  விநாயகர், அன்ன வாகனத்தில் பிரம்மா, கருட வாகனத்தில்  விஷ்ணு,  ஏழு குதிரைகள் பூட்டிய   தேரில் சூரியன் என்று அருமையாக  செதுக்கப்பட்டுள்ளது .  சன்னதிக்குப்பின் புறம் ஒரு இருட்டான பகுதி  உள்ளது அங்கு ஒரு  துளையின் வழியாக இராஜ கோபுரத்தின் நிழல்  தலைகீழாக  விழும் வண்ணம்  அமைத்துள்ளனர்.  இரவு நேரம்  என்பதால் நாங்கள் பார்க்கவில்லை சூரிய  வெளிச்சத்தில்தான் நிழல்  தெரியுமாம். இக்கோவில் அக்கால சிற்பிகளின் கை  வண்ணத்திற்கு   ஒரு    சிறந்த உதாரணம். மேலும் நவக்கிரக சன்னதி  மற்றும்  மாதவப்பெருமாள் சன்னதியும்  உள்ளது.  இவ்வாலயத்தின் உள்ளே  ஒரு மூடப்பட்ட கால்வாயின்  வழியே  துங்கபத்ரா நதி ஓடுகின்றது . மிகப் பெரிய வெங்கல காண்டா  மணிகளையும் பார்த்தோம். உண்மையிலேயே  இக்கோயில் ஒரு  கலைக்கூடம்.   அருமையான ஒரு கோவில்  தரிசனத்திற்குப் பின் வெளியே வந்தோம். கோபுர வாசலில்  வாழைத்தார்களை  விற்றுக் கொண்டிருந்தனர்,  அதை  அங்கிருந்த பக்தர்கள்  வாங்கி  கோ மாதாவிற்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்.  நம்மூரில்  அகத்திக்கீரை  கொடுப்போம்  இங்கோ  வாழைத்  தோப்புகள்  நிறைந்துள்ளதால்  வாழை சீப்புகளை  (2 ரூபாய்தான் ஒரு சீப்பு)  வாங்கிக்  கொடுக்கின்றனர்.  நாங்களும்  ஆளுக்கு  ஒரு சீப்பு  வாழைப்பழம் வாங்கி பசுக்களுக்கு கொடுத்தோம். சித்திராப்பௌர்ணமியில் தேரோட்டம் சிறப்பாக நடைபெறுகின்றதாம். முதல் தடவை சென்ற போது விருபாக்ஷீஸ்வரர் ஆலயம் செல்ல மட்டுமே நேரம் இருந்தது. இரண்டாவது முறை ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. பொறுமையாக அனைத்து கலைப் படைப்புகளையும் காண மூன்று நாட்களாவது வேண்டும்.  கலைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள், சரித்திரத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள் பார்த்து பரவசமடைவதற்கான 84 அற்புத கலைப் படைப்புகள் இங்குள்ளன. இந்த நகரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க மிதி வண்டி, இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. ஆனாலும் ஒரு வழிகாட்டியை கூட்டிச் சென்றால் இந்த இடத்தில் பெருமைகளை முழுதுமாக அறிய முடியும். 12 பேருக்கு மேல் ஒன்றாக சுற்றுலா வந்திருந்தால், கர்நாடகா சுற்றுலாத்துறை ஒத்துழைப்புடன் இந்நகரை வேனில் சென்று சுற்றிப்பார்க்கலாம். அதில் உடன் வழிகாட்டிகளும் வருவார்கள். ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று அவர்கள் காட்டுவார்கள்.   [ஸ்ரீ யந்த்ரோத்தாரக ஹனுமன்] ஹம்பியில் அவசியம்  பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று சக்கர தீர்த்தமும் அதன்  கரையில் அமைந்துள்ள  ஸ்ரீகோதண்டராமர் ஆலயம்  மற்றும்  ஸ்ரீ யந்த்ரோத்தாரக  ஹனுமான்  ஆலயமும் ஆகும்.   துங்கபத்ரா நதி கிழக்காக ஓடி வந்தவள்  உத்தர வாகினியாக  ( வடக்காக)  திரும்பும்  இடம்  தான்  சக்க்ர தீர்த்தம்  இவ்விடத்தில் துங்கபத்ரை கிழக்கில் சிறிது  தூரம் நீண்டு சென்று பின்  வடக்காக திரும்புவதால் ஒரு சுழற்சி ஏற்படுகின்றது. இவ்வாறு சுழற்சி ஏற்படுவதால்  இவ்விடத்திற்கு  சக்கர தீர்த்தம்  என்று பெயர்.  இவ்விடத்தில்தான் ஸ்ரீ வியாசராஜருக்கு  அனுமன் காட்சியளித்தான்  அதன் பலனாக  அவர்  ஸ்ரீ யந்த்ரோத்தாரக  ஹனுமனை  பிரதிஷ்டை  செய்தார்.  ஸ்ரீராமருக்கு  சுக்ரீவன் அன்னை  சீதாதேவியின்  நகைகளை   காட்டிய  இடம்  இதுதான்.  சக்கர தீர்த்தத்தில் சிக்கிய கோவிந்த ஓடயரை  ஸ்ரீவியாஸராஜர்  காப்பாற்றிய இடமும் இதுதான்.  ஹம்பியிலே ஸ்ரீவியாஸராஜர்  சுமார்  40 ஆண்டு காலம் தங்கி  இருந்தார்.  அப்போது அவர்  தினமும் சக்கர தீர்த்த கரையில் அமர்ந்து   தியானம்  செய்வது வழக்கம்.  இவ்வாறு  ஒரு நாள் தியானம்  செய்து  கொண்டிருந்த போது  அவரது மனத்திரையில் வாயு புத்ரன்  அனுமன்  வரத்தொடங்கினார்.  இவ்வாறு ஏன் நடக்கின்றது  என்று புரியாமல்  ஸ்ரீவியாஸராஜர்  அனுமனை பிரார்த்தனை  செய்ய, சொல்லின்  செல்வனும் அவரது  கனவில் தோன்றி தன்னை  சக்கர   தீர்த்தக் கரையில் பிரதிஷ்டை  செய்யுமாறு பணித்தார்.   பின்னர் தானே வானர  ரூபத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய இடத்தையும்  காட்டி  அருளினார்.  ஸ்ரீவியாஸராஜரும்  கரித்துண்டினால்  அவ்விடத்தில்  ஒரு  பாறையில் அனுமன் உருவம்  வரைந்து  பொட்டு  வைத்தார்,  உடனே  ஒரு அற்புதம்  நிகழ்ந்தது,  பாறையில்  வரைந்த  ஸ்ரீஆஞ்சநேயர்  உருவம் உயிர்  பெற்று பறந்தது மற்றும்  பாறையில் இருந்த உருவமும்  மறைந்தது.  இப்படியே பன்னிரண்டு  நாட்கள்  நடந்தன.  பதிமூன்றாம் நாள்  உருவம் வரைந்து  முதலில்  கயிற்றினால் யந்திரம்  அமைத்து  திக்பந்தனம்  செய்து  பின்னர் பொட்டு  வைத்தார்  அன்றைய தினம்  ஸ்ரீவியாஸராஜரின் பக்திக்கு கட்டுப்பட்டு  அனுமனும்  அப்படியே  நின்றார்.  பின்னர் ஸ்ரீவியாஸராஜர் பறந்து  சென்ற  பன்னிரண்டு  அனுமன்களையும்  ஒன்றன் வாலை ஒன்று  பிடிக்குமாறு அமைத்து ஒரு வேலி உருவாக்கினார்.  இவ்வாறு  பக்தர்களுக்கு  அருள  யந்திரத்தில் எழுந்தருளிய  சஞ்சீவி மலை  கொணர்ந்த அஞ்சனை  மைந்தனை  ஸ்ரீயந்த்ரோத்தாரக ஹனுமானை  ஆனேகுந்தி  செல்பவர்கள் அவசியம்  தரிசனம்  செய்து நன்மையடைகின்றனர்.  இவ்வாலயம் கோதண்டராமர் ஆலயத்தின் அருகில் ஒரு சிறு குன்றின் மேல் உள்ளது. ஆறு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் இராமர் அன்னை ஜானகியுடனும், இளவல் இலக்குவனுடனும் வித்தியாசமாக  சுக்ரீவனுடனும் (அனுமன் அல்ல)  சேவை சாதிக்கின்றார்.  முதலில் கோதண்டராமர் ஆலயத்தில்  இராமனை  வணங்கி விட்டு பின் அனுமனை  நெய்  விளக்கேற்றி வணங்க சகல  நன்மைகளும் கிட்டும்,  பாவங்கள் பறந்தோடும்  என்பதில் எந்த  ஐயமும் தேவையில்லை. இந்த ஆலயங்களுக்கு நேர் எதிராக அஞ்சனாத்ரி மலை அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.  இக்கோவிலுக்கு வலப்புறம் ஸ்ரீஅச்சுதராயர் ஆலயம் உள்ளது.   இதன் எதிரே அக்காலத்தில் முத்தும் மணியும் விற்பனை செய்யப்பட்ட ஸுலேபஜார் உள்ளது.  கோதண்டராமர் ஆலயத்திற்கு இடப்புறம் ஸ்ரீவராஹ சுவாமி ஆலயம்,  ஸ்ரீபுரந்தரதாசர் மண்டபம் மற்றும் ஸ்ரீவிட்டல் ஆலயம் அமைந்துள்ளன.  புரந்தரதாசரின் கதை இதோ. முதலில் மிகுந்த செல்வந்தராக   இருந்தார்.  இளம்பருவத்திலேயே சீனப்பநாயக் என்று அழைக்கப்பட்ட இவர் வைரத்தில் விளையாடியவர்.  வளர்ந்தபின் வைர வைடூரிய வியாபாரி ஆகி அளவற்ற செல்வம் சம்பாதித்து நவகோடி நாராயணாய் விளங்கினார். ஆனால் அவர் பரமலோபியாக இருந்தார்.  எச்சில் கையால் கூட காக்கையை ஓட்டாதவர். தன் மனைவி யாருக்கோ பிச்சை இடுவது போல கனவு கண்டதற்காகவே இரண்டு நாட்கள் மனைவியை பட்டினி போட்டவர். இவரை திருத்தி பணிகொள்ள ஸ்ரீமந்நாராயணன் திருவுளம் கொண்டு ஒரு வயோதிகராக  இவரிடம் வந்து யாசகம் கேட்டார், அவருக்கு சீனப்ப நாயக் எந்த யாசகமும் தரவில்லை. இவ்வாறு ஆறு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் முதியவர் சீனப்பநாயக்கின்  ,மனைவியிடம் சென்று யாசகம் கேட்டார், அந்த அம்மையாரும் என்னுடைய சொத்து எதுவுமில்லை எல்லாம் அவருடையது என்று மறுக்க, உன் மூக்குத்தி உன் பிறந்த வீட்டில் போட்டது தானே அதைக் கொடு என்று கேட்க அந்த அம்மையாரும் அதை கழற்றிக்கொடுக்க அதை சீனப்பநாயக்கிடமே சென்று விற்க,  தனது மனைவியின் வைர மூக்குத்தி போல அல்லவா உள்ளது என்று சந்தேகப்பட்டு அம்மூக்குத்தியை தனது இரும்புப்பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்று பார்த்தபோது மனைவியின் மூக்கு மூளியாக இருப்பதைக்கண்டு மூக்குத்தி எங்கே என்று வினவ அந்த அம்மையாரும்  ஸ்நானம் செய்வதற்காக கழற்றி வைத்துள்ளேன் எடுத்து வருகின்றேன் என்று கூறி, உள்ளே சென்று கணவனை ஏமாற்றி ஏழை பிராமணனுக்கு உதவியதற்காக தனது வைர மோதிரத்தை உடைத்து பாலில் கலந்து குடிக்க சென்றபோது அந்த கிண்ணத்திலிருந்து அந்த வைர மூக்குத்தி  வெளியே விழுந்தது.  இறைவனின் கருணையை எண்ணி வியந்த அந்த அம்மையார் அதை தன் கணவரிடம் கொடுத்தார். அதை எடுத்துக்கொண்டு கதைக்கு ஓடிய சீனப்பநாயக் அங்கு இரும்புப்பெட்டியை திறந்து பார்க்க அங்கு வைர மூக்குத்தியை காணாமல் திகைத்தார்.  அவருக்கு உண்மை புலனாகியது. வயதானவராக தன்னிடம் வந்து யாசகம் கேட்டவர் வேறு யாருமல்ல மஹாலக்ஷ்மியை தனது மார்பில் கொண்ட குறையொன்றும் இல்லாத கோவிந்தனான   மாதவன் ஸ்ரீஹரிதான். தனது லோபித்தனத்தினால் அவரை தரிசனம் செய்யும் பாக்கியத்தை இழந்தேனே! என்று மனம் வருந்தி தனது செல்வம் அனைத்தையும் துறந்து உடுத்த உடுப்புடன் மனைவி மற்றும் மகனுடன் ஸ்ரீஹரியை நோக்கி தேடி நடுவீதியில் நடக்கலானார்.  பின்னர் வியாஸராஜரை கண்டு அவரால் தீக்ஷை பெற்று புரந்தரதாஸராகி,  புரந்தர விட்டல என்ற அங்கிதத்தில் சுமார் 4,75,000 கீர்த்தனைகள் புனைந்தார்.  வியாஸராஜர் பிருந்தாவனஸ்தரான போது உடனிருந்தவர் இவர்.  துங்கபத்ரா நதிக்கரையிலேயே சுற்றி வந்த புரந்தரதாசர் தன் காலத்தை கழித்து இறுதியில் சக்கர தீர்த்த கரையிலேயே அந்தர்யாமியானார். அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது அதன் ஒரு தூணில் கையில் தும்புராவுடன் புரந்தரதாசர்  சிலை உள்ளது. இம்மண்டபத்திலிருந்தும் அஞ்சனாத்ரியை  தரிசிக்கலாம்.   இம்மண்டபத்திற்கு இடப்புறம் அழகான கல்லால் ஆன இராஜ துலாபாரம் உள்ளது.  இத்துலாபாரத்தில் ஒரு சமயம் கிருஷ்ணதேவராயர் ஸ்ரீவியாசராஜருக்கு எடைக்கு எடை தங்கம் தந்து மகிழ்ந்தாராம்.  அரசர்கள் சில நாட்களில் தங்கள் எடைக்கு நிகரான செல்வத்தை ஏழை மக்களுக்கு இத்துலாபாரத்தில் நிறுத்து  கொடுத்தனர் என்பாரும் உண்டு. இம்மண்டபத்திற்கு அருகில் ஒரு பாழடைந்த  ஆனேகுந்தியையும், ஹம்பியையும் இணைக்கும்  பாலம் உள்ளது. கோதண்டராமரின் ஆலயத்திற்கு எதிரில் உள்ள ஒரு சிறு மலையில் ஸ்ரீநரஹரி  தீர்த்தர் மற்றும் ஸ்ரீரகுநந்தனர் பிருந்தாவனங்கள் உள்ளன.  முதலாமவர் மத்வாச்சாரியாரின் பிரதான நான்கு சீடர்களில் ஒருவர்.  பத்மநாப தீர்த்தருக்குப் பின் பட்டத்திற்கு வந்தவர். கஜபதி வம்ச அரசரிடமிருந்து ஸ்ரீமூலராமர் விஹ்ரகத்தைப் பெற்று மத்வரிடம் தந்தவர். ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் அருகே உள்ள ஸ்ரீகூர்மம் என்ற தலத்தில் கூர்மரை பிரதிஷ்டை செய்தவர். இரகுநந்தனர் தற்போது ஸ்ரீஇராகவேந்திர மடம் என்று அழைக்கப்படும் வித்யா மடத்தின் பீடாதிபதியாக இருந்தவர்.  இவரது குருநாதர், இன்றும்  விருக்ஷ ரூபமாய் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஸ்ரீஜதாமித்ரர் ஆவார்.    மேலும் ஹம்பியில் பார்க்க வேண்டிய இடம் மதங்க மலை. விருபாக்ஷீஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் இம்மலை உள்ளது.  மதங்கமலையின் மேல் வீரபுவனேஸ்வர் ஆலயம் அமைந்துள்ளது.  இம்மலையின் உச்சியில் இருந்து விருபாக்ஷீஸ்வரர் ஆலயத்தின் மேற்கு கோபுரம்,  ஹேமகூட மலை,  தேரோ(டிய)டும்   இராஜ பாட்டை, யானை லாயம், துங்கபத்ரா நதி  மற்றும் கோட்டை ஆகியவற்றை பறவைப் பார்வையில் அருமையாக கண்டு களிக்கலாம்.    அடுத்து ஹம்பியில் பார்க்க வேண்டிய ஆலயம்,  விந்தை மிகு விஜய விட்டல ஆலயம். மிலேச்சர்களால் சிதைக்கப்பட்டும் இவ்வாலயம் இன்றும் நம் கண்ணுக்கு விருந்தாக விளங்குகின்றது. இவ்வாலயம் கி.பி. 1513ல் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. துங்கபத்ரை நதியின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. பல்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் ஒவ்வொரு தூணும் ஒரு கதை சொல்கின்றது. ஹம்பியில் உள்ள ஆலயங்களிலேயே இதுதான் அளவில் பெரியது. ஆலயக் கட்டட உன்னதமும், முதிர்ந்த கலைநயமும் கொண்ட சிற்பங்களும், அதன் கலைச்சிறப்புக்குப் சான்றுகள். மரத்திலே செதுக்க முடியாத நுணுக்க வேலைகளை எல்லாம் கல்லிலே செதுக்கியுள்ளனர். ஆலய வளாகம் உயர்ந்த கல்சுவர் கொண்டது. முப்புற நுழைவாயில்களும் அவற்றின் மேல் உயர்ந்த கோபுரங்களும் பிரகாரத்தில் கல்லால் உருவான பல மண்டபங்களும் கொண்டது. அவற்றில், மஹா மண்டபம், சபா மண்டபம், ரங்க மண்டபம், உற்சவ மண்டபம், கல்தேர் ஆகியவை பார்வையாளரைப் பெரிதும் கவர்பவை. […] ஆலயவளாகத்தின் திறந்தவெளிப் பகுதியில் சிற்பவேலைப்பாடுகள் கொண்ட, நிலத்திலிருந்து உயர்த்தப்பட்ட கல்மேடையின் மீது சபாமண்டபம் அமைந்துள்ளது. அம்மேடை பல அடுக்குகள் கொண்டது. அவற்றில் ஹொய்சாள பாணியில் வரிசை வரிசையாகப் பறவைகளும் விலங்குகளும் மலர்களும் போர்வீரர்களின் தோற்றங்களும் சிற்பமாகியுள்ளன. மண்டபத்தை அடைய உள்ள கிழக்குப் பகுதிப் படிகளில் யானைகளின் சிற்பங்களும், நுழைவாயிலின் இருபுறமும் மிக நேர்த்தியான சிற்பங்களுடன் பத்து அடிகள் உயரம் கொண்ட நாற்பது கல்தூண்களும் காணப்படுகின்றன. மண்டபம் நான்காகவும் மையப்பகுதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மையப் பகுதியில் ஒரு பக்கத்துக்கு நான்கு என்னும் விதத்தில் பதினாறு தூண்கள் சிற்பங்களால் நிரம்பி வழிகின்றன. சதுர வடிவமான இப்பகுதி மண்டபத்துக்குப் பேரழகைக் கொடுக்கின்றது. உட்கூரையும் பல்வேறு வடிவங்களால் எழிலூட்டப் பட்டுள்ளது. ஐம்பத்தாறு கல்தூண்களை உள்ளடக்கியது அரங்க மண்டபம். அவை அளவில் மிகப் பெரியவை. அவற்றுடன் இணைந்த ஏழு சிறிய தூண்களும் ‘சரிகம’ இசைத்தூண் என்று பெரும் புகழ் பெற்றவை. கைகொண்டு இத்தூண்களை மெல்லத் தட்டினால் ஏழு தூண்களிலிருந்தும் ஏழு வகையான ஒலிகள் உண்டாகின்றன. அதுதான் இவற்றின் சிறப்பு, புதிர். இவ்வாலயத்திற்கு   எதிரே உள்ள கல் இரதம் ஒரு அருமையான  கலைப் படைப்பு. ஹம்பிக்கு அடையாளமாகத் திகழ்வது இக்கல்தேர். கர்நாடக அரசின் சுற்றுலாத்துறையின் குறியீடும் (logo) இதுதான். இன்று 50 ரூபாய் தாளின் பின் புறத்தை அலங்கரிக்கின்றது. இத்தேர் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டுவிக்கப்பட்டது. கோனார்க் சூரியனார் ஆலயத்தைக் கண்டு மோகித்த அவர் அதுபோன்ற ஒன்றை இங்கும் தோற்றுவித்தார் என்கிறது வரலாற்றுக் குறிப்பு. [விஜய விட்டல ஆலய கல் இரதம்] உண்மையில் இது தேர்மட்டுமில்லை. தேரின் உருவம் கொண்ட ஆலயம். முன்னர் அதன் மேற்புறத்தில் உள்ள கருவறையில் ஒரு பெரிய கருடனின் சிலை கம்பீரமாகக் காட்சியளித்தது. நகரம் அழிக்கப்பட்டபோது அது இடித்து உடைக்கப்பட்டது. முதல்பார்வைக்கு இது ஒரே கல்லில் செதுக்கிய சிற்பம் போல் தோன்றினாலும், ஊன்றி கவனித்தால் அது பாறைத் துண்டுகளைக் கொண்டு உண்டானது என்பது விளங்கும். இணைப்புகள் தெரியாதபடி உருவாக்கியிருப்பதில் இருந்து சிற்பியின் சிற்பநுணுக்க முதிர்ச்சி புலப்படுகிறது. தேரினைச் சுற்றி பூத கணங்களின் நாட்டியங்கள், கூத்து சிற்பங்கள், அழகிய கொடுங்கைகள் அனைத்தும் அற்புதம், சக்கரங்களில் கூட வரி வரியாய் சிற்பங்களை இழைத்துள்ளனர். இது அவர்களின் படைப்பு மேதைமையை பறைசாற்றும் அடையாளம். தேரின் அமைப்பு திராவிட ஆலய பாணியைக் கொண்டுள்ளது. தேரை இழுப்பதுபோல இப்போது உள்ள யானைகள் இருக்கும் இடத்தில் முன்பு புரவிகள் இருந்தன. அதற்கு அடையாளமாக புரவிகளின் பின்னங்கால் குளம்பு நிலத்தில் ஒட்டிக்கொண்டு உள்ளதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். இரண்டு யானைகளுக்கும் இடையில் உடைந்த கல் ஏணி காணப்படுகிறது. அந்தப் படிகளின்மீது ஏறி கருடர் சிலைக்கு வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. உயர்த்திய மேடையின் மீது எழுப்பப்பட்ட தேரின் இருபுறமும் இரண்டு சக்கரங்கள் உள்ளன. இருப்பத்தைந்து அடி உயர இத்தேரின் எடையையும் தாங்கியவாறு அவற்றை சுழற்றும் விதமாக சிற்பி உண்டாக்கினான். இப்போது பாதுகாப்புக் கருதி அவை அசையாதபடி சிமெண்ட் கலவை பூசப்பட்டுள்ளது. விட்டலர் ஆலயத்தின் திறந்த வெளியில் உள்ள இதன் முன் புகைப்படம் எடுத்துக்கொள்ளாதவரே இரார், என்னையும் சேர்த்து. ஆனால், விஜய விட்டல ஆலயம் இன்று இடிபாடுகளுடன் உருக்குலைந்து காணப்படுகிறது. கருவறையில் முன்னர் விட்டலரின் சிலை வழிபாட்டுகளுடன் விளங்கியது. இப்போது கருவறையில் சிலை இல்லை. மைய மண்டபத்தின் மேற்குப்புறம் சிதைந்த நிலையில் உள்ளது. முன்பு, அங்காடிகளுடன் பரபரப்பாக இருந்த ஆலயத்தை அடையும் நீண்ட சாலையும் பராமரிப்பின்றிப் பாழ்பட்டுக் காட்சியளிக்கிறது. அன்று புரவிகள் பெரும் அளவில் வியாபாரம் செய்யப்பட்டது இங்குதான். இப்போது ஆலய வளாகம் இரவில் ஒளிவிளக்குகளுடன் கூடியதாக, சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் அழகைச் சொல்கிறது. ஆண்டுதோறும் புரந்தரதாசர் இசைவிழா கோலாகலமாக நிகழ்த்தப்படுகிறது. ஹசாரா ராமர் ஆலயம்: மன்னர் கிருஷ்ணதேவ ராயரால் 1513ல் இந்த ஆலயம் கட்டப்படத் தொடங்கி அவரது ஆட்சி முடியும் முன்னர் நிறைவு பெற்றது. இந்த ஆலயம் பொது மக்களக்கானது அல்ல. மன்னரும் அவரது குடும்பத்தினரும் மட்டும் வழிபடுவதற்கு என்றே உருவாயிற்று. கிழக்கு திசையில் ஆலயத்தின் நுழைவாயில் தூண்களுடன் கூடிய மண்டபத்துடன் தொடங்குகிறது. உள்ளே கருங்கல் தூண்கள் தாங்கும் ரங்க மண்டபத்தை அடைவோம். உயரம் கூடிய அத்தூண்கள் கண்ணைக் கவரும் அரிய சிற்பங்களைக் கொண்டுள்ளன. விநாயகர், மஹிஷாசுரமர்த்தனி, ஹனுமான் விஷ்ணுவின் பலதோற்றங்கள் ஆகியவை இவற்றுள் சிலவாகும். நாற்கரங்களிலும் ஆயுதம் ஏந்தியவாறு புரவியில் வீற்றிருக்கும் கல்கி அவதார சிற்பம் மிகச்சிறப்பானது. அரங்க மண்டபத்து மேற்கு, தெற்கு, வடக்கு நுழைவாயில்கள் கருவறை செல்லும் பாதையில் இணைகின்றன. ஆலயத்தின் வெளிச்சுற்று வழியை ஒட்டி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது வெளிப்புறத்தில் நீளவாட்டில் ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கீழிருந்து வேழம், புரவிகளின் வரிசை, கிருஷ்ணரின் இளம்பருவ விளையாட்டுகள், முருகன், விநாயகர் உருவங்கள் தொடர் புடைப்புச் சிலைகளாக உள்ளன. ருஷ்யசிங்கர் கதை, புத்ரகாமேஷ்டி வேள்வி, சீதா சுயம்வரம் என்று இராமாயணக் கதை முழுவதையும் சிற்பத் தொகுப்புகளாக செதுக்கியுள்லனர். இதன் அழகு கலை ஆர்வலரைக் கிறங்க வைக்கின்றன. கருவறையின் வடக்கில் உள்ள தாயாரின் ஆலயம் அளவில் சிறியது. ஆனால் மிகுந்த சிற்பவேலைப்பாடுகள் கொண்டது. இதன் சிறு மண்டபத்தின் கிழக்குச் சுவரில் நரசிம்மரின் உருவம் பெரிய அளவில் காணப்படுகிறது. நடைவழியில் மன்னருக்கு வைணவ ஆச்சாரியார் பொருள் ஒன்றை அளிப்பது போன்ற சிற்பம் உள்ளது. அது கிருஷ்ணதேவ ராயரும் அவரது குரு வியாச ராயரும் என்போர் உண்டு. வடக்கு எல்லையில் உள்ள கல்யாண மண்டபம் 1521ல் எழுப்பப்பட்டது. விஷ்ணுவுக்கான இந்த ஆலய வெளிச்சுவர் மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு இராமாயணக் காவியம் தொடர் சிற்பங்களாகியுள்ளது. அவ்விதமே தாயாரின் ஆலய வெளிச்சுவரில் குசன் - லவன் கதையும் சிற்பமாகியுள்ளது. அச்சுதராயர் ஆலயம்: கிருஷ்ணதேவராயரின் மரணத்துக்குப் பிறகு அவரது தம்பி அச்சுததேவராயர் அரசுக்கட்டிலில் அமர்ந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டது. (1534). திருவேங்கடவனுக்கானது இந்த ஆலயம். மதங்க மலைக்கும் கந்தமதன மலைக்கும் இடையில் உள்ள இது விஜயநகர ஆலயக் கட்டட அமைப்பின் முதிர்ச்சியைக் கொண்டதாக உள்ளது என்று கலை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். விஜயநகரப் பேரரசின் கடைசி ஆலயமும் இதுதான். இரண்டு சதுரமான அரவணைப்புகளுடன் கூடிய மையப்பகுதியில் ஆலயம் உள்ளது. தூண்களுடன் கூடிய தாழ்வாரம் இரண்டு காணப்படுகிறது. மற்ற பகுதிகள் இடிபாடுகளாகக் காணப்படுகின்றன. கருவறையில் முன்னர் கருட சிற்பம் வழிபடப்பட்டு வந்தது. மண்டபத்துத் தூன்களில் கஜேந்திர மோக்ஷம், பசுக்களின் கூட்டத்தில் குழலூதும் கண்ணன், காளிங்கன் மீது நடமாடும் கிருஷ்ணன் போன்ற அரிய சிற்பங்கள் இவற்றில் உள்ளன. திருக்கல்யாண மண்டபம் ஒன்றும் காணப்படுகிறது. இவ்வாலயம் ஹம்பியிலிருந்து சிறிது தள்ளி இருக்கிறது. இன்று இவ்வாலயம் இடிபாடுகளுடன் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. வருவோரின் எண்ணிக்கையும் குறைவுதான். பத்ம மஹால்: இந்த மாளிகையின் கட்டட வடிவ அமைப்பைச் சார்ந்து இது பத்ம மஹால் என்று குறிப்பிடப்படுகிறது. அந்நாளையக் கட்டடக் கலையின் உன்னதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்திய இஸ்லாமியக் கட்டட வழிகளை இணைத்துக் கட்டப்பட்ட இரு தளங்களைக் கொண்ட இம்மஹால், நாற்புறமும் எழுப்பிய சுவரும், மலரும் தாமரையின் வடிவம் கொண்ட உப்பரிகைகளுடன் கூடியது. கட்டடத்தை 24 தூண்கள் தாங்குகின்றன. நுழைவாயிலின் மேற்புறம் கவிழ்த்த வில்போல் வளைந்து வடிவாகியுள்ளன. இந்த மஹால் அரசுப் மகளிருக்கானது. அவர்களது அந்தப்புரமாக விளங்கியது. அவர்களின் உல்லாசத்துக்காகவே கட்டப்பட்டது. எனவே ‘சித்ராங்கி மஹால்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒன்றுதான் போர் அழிவிலிருந்து தப்பிப் பிழைத்து இடிபாடுகள் இல்லாத முழுகட்டடமாக உள்ளது. ஹேமகூடமலை ஆலயத் தொகுப்பு: ஹம்பி நகரத்தின் தெற்குப்புறத்தில் ஹம்பியிலிருந்து கமலாப்பூர் செல்லும் வழியில் உள்ள ஹேமகூடமலை எனப்படும் இந்த மலையின் மேற்புறம் நீண்ட தட்டையான அமைப்பைக் கொண்டது. 9ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை அவ்வப்போது கல்லால் எழுப்பப்பட்ட ஆலயங்களைக் கொண்டது. முன்னர் இப்பகுதி முழுவதும் மதிற்சுவரால் சூழப்பட்டிருந்தது. இதற்கான தடயங்கள் இன்றும் உள்ளன. பெரும்பாலும் இந்த ஆலயங்கள் சிவனுக்கானவை. இந்த மலையின்மேல் ஏறத்தாழ 35 ஆலயங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் இப்போது வெறும் நினைவுச் சின்னங்கள்தான். பல ஆலயங்கள் முற்றிலுமாக இடிந்து காணப்படுகின்றன. ஆலயங்கள் சிலவற்றில் சிலபகுதிகள் இன்றும் திடமாக உள்ளன. இவற்றின் கட்டடப்பாணி விஜயநகர கட்டடப் பாணியிலிருந்து வேறுபட்டது. அவற்றின் அமைப்பு வடிவம் காரணமாக ஜைனர் ஆலயம் என்று தவறாகப் பேசப்படுகிறது. மலையின் தெற்குப்புறத்தில் பழைய விருபாக்ஷர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய வளாகத்தில் ஒரு சிறிய குளம் உள்ளது. இன்றும் அங்கு வழிபாடு நிகழ்கிறது. கிருஷ்ணர் ஆலயம், படவி லிங்கர் ஆலயம், லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் போன்றவை விஜயநகர ஆட்சி காலத்தில் உருவானவை. [லக்ஷ்மி நரசிம்மர்] லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்: ஹேமகூடமலையில் உள்ள இந்த ஆலயமும் இதில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் சிலையும் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் (1528) கட்டப்பட்டன. ஹம்பியில் உள்ள சிலைகளிலேயே லக்ஷ்மி நரசிம்மர் சிலைதான் அளவில் பெரியது. ஒற்றைக் கல்லில் உருவானது. விட்டலர் ஆலயத்தில் உள்ள கல்தேரைப்போல இதுவும் ஹம்பியின் புகழை ஓங்கி ஒலிக்கும் சிலை. அமர்ந்த நிலையில் உள்ள இதன் உயரம் அதன் மேடையையும் சேர்த்து 6.7 மீட்டர்களாகும். மண்டலமிட்ட ஆதிசேஷன் மேல் சம்மணமிடும் விதமாக அமர்ந்த நிலையில் சிலை உருவாக்கப் பட்டுள்ளது. சம்மணமிட்டு அமரும் நிலைக்கு ஆயத்தமாவது போன்ற கால்கள். இரு தொடைகளும் நிலத்தில் படியாது உள்ளன. ஏழுதலை ஆதிசேஷன் படத்தை விரித்து அவரது தலைக்கு மேல் குடையாகக் காட்சியளிக்கிறார். பெரிய கிரீடம் சூடிய சிலையின் இருபுறமும் மகரதோரணம் ஒன்று அலங்காரமாக அமைந்துள்ளது. நரசிம்மரின் முகத்தில் உருண்டு பிதுங்கி விழிக்கும் கண்களும், பற்களும், விரியும் வாயும் காண்போரை உறையச் செய்யும். ஆதிசேஷனின் தலைக்கு மேல் சிங்க முகம் ஒன்றும் உள்ளது. ‘மாலோல நரசிம்மர்’ என்றும், ‘உக்கிர நரசிம்மர்’ என்றும் இதற்கு சிறப்புப் பெயர்கள் உண்டு. முன்னர் அவரது மடியில் இலக்குமியின் சிலை அமர்ந்த நிலையில் இருந்துள்ளது. 1565ல் நிகழ்ந்த போருக்குப்பின் இச்சிலையின் திருக்கரங்களும் இலக்குமி சிலையும் உடைக்கப்பட்டன. இலக்குமி சிலை இப்போது அருங்காட்சிக்கூடத்தில் பாதுகாப்பாக உள்ளது. […] இத்தொகுப்பில் விநாயகரின் சிலைகள் இரண்டு உள்ளன. ஒன்று சசிவேகலு கணேசர் (கடுகு கணேசர்) மற்றது 18அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன கடலேகலு  கணபதி, (நிலக்கடலை கணேசர்).   [படாவி லிங்கம்] இதுவல்லாமல்   அழகிய நீராழி மண்டபத்துடன் கூடிய கிருஷ்ணர் கோயில்,   12 அடி  கருப்புக் கல்லால் ஆன  படாவி லிங்கம்,   லிங்கத்தின் கீழே கால்வாய் ஒன்று செல்கின்றது  வீரபத்திரர் கோவில், பாதாளீஸ்வர் கோவில், இராஜ மாதா குளிக்கும்  “குயின்ஸ் பாத்” , 11 யானைகள் கட்டப்பட்ட எலிபென்ட்ஸ் ஸ்டேபிள்.  ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் சமயம் எடுத்துக்கொண்டு அனைத்தையும் பார்த்து மகிழுங்கள். மழைக்காலம் விடுத்து செல்ல ஹம்பியில் அருமையாக பார்க்க அநேக இடங்கள் உள்ளன. இவ்வாறு இந்த யாத்திரையின் முதல் நாள் நவபிருந்தாவனம் மற்றும் அருகே உள்ள தலங்களை சேவித்தோம். ஹம்பியிலிருந்து திரும்பிய பின் விடுதிக்கு சென்று மூட்டை முடிச்சுகளை எல்லாம் எடுத்துக் கொண்டு புகை வண்டி நிலையம் வந்து ஹரிப்பிரியா விரைவு வண்டிக்காக காத்துக் கொன்டிருந்தோம். இவ்வண்டி திருப்பதியிலிருந்து கோலாப்பூருக்கு செல்கின்றது அதாவது கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் வேங்கடேச  பெருமாளின் ஷேத்திரத்திலிருந்து அகலகில்லேன் இறையும் என்று அவன் திருமார்பில் அலர்மேல் மங்கையாம் மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் கோலாப்பூர் செல்லும் வண்டிக்கு ஹரிப்பிரியா என்று அவள் நாமம் வைத்திருப்பது சால பொருத்தமாக உள்ளது அல்லவா?    ஹோஸ்பெட்டிலிருந்து மந்திராலயம் சுமார் 165 கி.மீ தூரத்தில் உள்ளது சாலை வழியாக செல்லும் போது சுமார் நான்கு மணிநேரத்தில் செல்லலாம். ஹரிப்பிரியா விரைவு வண்டி  மந்திராலயம் ரோடு  புகைவண்டி நிலையத்திற்கு. இரவு சுமார் 3.00 மணிக்கு  சென்றது. அந்நேரத்திலும் மந்திராலயம் செல்ல அரசு பேருந்து காத்துக் கொண்டிருந்து. விசாரித்த போது பக்தர்களின் நன்மையை முன்னிட்டு புகை வண்டி வரும் சமயங்களில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படுள்ளது என்று கூறினார்கள்.      மந்திராலயம் ரோடு புகைவண்டி நிலையத்திற்கும். ஸ்ரீஸ்ரீஇராகவேந்திரர் மந்திராலயத்திற்கும் இடையேயான தூரம் 32 கி.மீ ஆகும். அடியோங்கள் ஆட்டோ மூலமாக மந்திராலயத்திற்கு புறப்பட்டோம்.  மந்திராலயம் சென்று சேர்வதற்குள் இராகவேந்திர சுவாமிகளின் சரிதத்தை சுருக்கமாக பார்த்து விடுவோமா அன்பர்களே?  அத்தியாயம் - 13 : ஸ்ரீஸ்ரீஇராகவேந்திர தீர்த்தர் […] நினைத்த மாத்திரத்தில் சில தலங்களுக்கு செல்ல முடியாது. திருவருள் இருந்தால் தான் செல்லமுடியும். ஆனால், சில தலங்களுக்கு செல்ல திருவருள் மட்டுமல்ல குருவருளும் வேண்டும். அதில் மந்த்ராலயமும் ஒன்று. மந்த்ராலயம் சாதாரண பூமி அல்ல. கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி இன்றும் தம்மை நாடி வருவோருக்கு தனது புண்ணியப் பலன்களை வாரி வாரி வழங்கி வரும் மகான் ஸ்ரீ ஸ்ரீ இராகவேந்திர சுவாமிகள் ஜீவ பிருந்தாவனத்தில் உள்ள பூமி. மந்திரங்கள் உறைந்திருக்கும் புனித பூமி. இராகவேந்திர ஸ்வாமிகளின் திரு அவதாரம் கலியுகத்தில் நிகழ்வதற்கும் அவர் மந்த்ராலயத்தில் ஜீவ சமாதியானதற்கும் ஆழ்ந்த காரணம் உண்டு. கலியுகத்தில் அறம் பிறழ்ந்து பக்தி மறைந்து அவதியுறும் மக்களை நல்வழிப்படுத்தி காத்து இரட்சிப்பதற்கு என்றே ஏற்பட்ட அவதாரம் அது. புவனகிரியில் பிறந்த இராகவேந்திரர் கும்பகோணத்தில் சன்யாசம் ஏற்றும் ஆந்திர மாநிலம் அதோனி தாலுக்காவில் மந்த்ராலய க்ஷேத்திரத்தில் தனது பிருந்தாவனப் பிரவேசம் அமைய தேர்ந்தெடுத்தமைக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் முக்கியமான காரணம், கிருத யுகத்தில் நரசிம்ம அவதாரத்தின் போது பிரஹ்லாதராய் இருந்தபோது அவர் யாகம் செய்த பூமி இது. அற்ப சுகங்களுக்காகவோ சில்லறை அபிலாசைகளை அடைவதற்காகவோ, பிசாசு, பில்லி, சூன்யம் முதலிய பீடைகளை விலக்கிக்கொள்ள மட்டும் ஏற்பட்டதல்ல மந்த்ராலயம். பாமரர்களின் அக்ஞானத்தை போக்கவும், உலக வாழ்க்கையில் சகிக்கவே முடியாத கஷ்டங்களை போக்கவும், ஜன்ம ஜன்மாந்திரங்களாக தொடர்ந்து வரும் ஊழ்வினையின் கடுமையைத் தீர்க்கவும், தெரிந்தே செய்த பாவங்களை சொல்லி கண்ணீர் விடுவோருக்கு மன்னிப்பு அளிக்கவும், பரிபூரண சரணாகதி அடைந்தவர்களுக்கு மனதிலும், கனவிலும் தோன்றி எல்லா நன்மைகளையும் அருளும் தெய்வசக்தி இங்கு சாக்ஷாத்காரமாக இருக்கிறது. ஸ்ரீ நரஹரியின் முன் எந்தப் பீடைதான் – அக்ஞானம் தான் நிற்க முடியும்? தமது வீணா கானத்தால் ஜீவாத்மாவை ஆனந்தப்படுத்தி, உலக வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடிய எல்லா சௌகரியங்களையும் கொடுத்து ஞானயோகத்தையும் புகட்டக்கூடிய சௌலப்யமூர்த்தி ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரல்லவா? தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் முதலிய நான்கு புருஷார்த்தங்களையும் கொடுக்கும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி இருக்கிறாரல்லவா? தமது கருணா கடாக்ஷத்தாலேயே பிரம்மா வித்தையை புகட்டக் கூடிய வேதவியாசர் இருக்கிறாரல்லவா? மற்றும் ஜெகன்மாதா – மாஞ்சாலி அம்மன் ஸ்வரூபத்தில் இருக்கிறாளல்லவா? பீடைகளை விரட்டியடித்து பக்தி வைராக்கியத்தை அளிக்க வல்ல – பக்தர்களுக்கெல்லாம் அரசராகிய ஹனுமான் இருக்கிறார். முழுமுதற் கடவுள் என்று ஒரு சித்தாந்திகள் இவரே ஸ்ரீ ஹரி ஸர்வோத்தமனுடைய பக்தர்களில் முதல்வர் என்று மத்வசித்தாந்திகள் போற்றி வணங்கும் மகாதேவன், திரிபுரம் எரித்தவன், காலாக்னி ருத்ரன், பரமேஸ்வரன் இருக்கிறார். இவர்கள் அல்லாமல், சாந்த ஸ்வரூபியான ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன், ரௌத்ர மூர்த்தியாகிய ஸ்ரீ நரசிம்ஹர், கருணாமூர்த்தியாகிய ஸ்ரீ ராம சந்திரபிரபு, சௌலப்யமே உருவமான ஸ்ரீ கிருஷ்ணர், தன தான்யங்கள், மக்கட்பேறுகள், பசு, நல்ல மனைவி, நன்மக்கள், சௌகரியமுள்ள சொந்த வீடு எல்லாம் கொடுக்கும் ஸ்ரீ மகாலக்ஷ்மி இவர்களுடைய சக்திகளை கொண்ட சாளக்ராமங்கள் குருராஜருடைய சிரசின் மேல் இருக்கின்றன. கடந்த முன்னூறு வருஷங்களில் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைத்த பிருந்தாவனம்; குடும்ப வாழ்க்கையில் கணக்கற்ற கஷ்டங்களை அனுகவித்து மனமொடிந்த நிலையில் “இனி ஏன் உயிர் வைத்திருக்க வேண்டும்” என்று சோர்ந்து வந்தவர்களுக்கு மனசாந்தி அளித்து வாழவைத்து வரும் பிருந்தாவனம்; கண்பார்வை இழந்தவர்களுக்கு கண்பார்வையும், ஊமைகளுக்கு பேசும் சக்தியையும், பேய், பிசாசு, சித்த பிரம்மை முதலிய பீடைகளால் அவதிபடுபவர்களுக்கு நல்வாழ்க்கை கொடுத்து புதிய வாழ்க்கையை நல்கிவரும் பிருந்தாவனம்; கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும், அறிவாளிகளுக்கும் அறிவிலிகளுக்கும், பக்தி உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும், ஜாதி மத வேறுபாட்டை பாராமல், விருப்பு வெறுப்பின்றி, இல்லை என்று சொல்லாமல், தம்மிடம் சரணாகதி என்று வந்தவர்களுக்கெல்லாம் கேட்பதை கொடுக்கும் வல்லமை படைத்தவர் ஸ்ரீராகவேந்திரர். ஸ்ரீமத்வாசாசாரியாரின் பிரதான சீடர்கள் நான்கு பேர்  அவர்களுள் ஸ்ரீபத்மநாப தீர்த்தரின் சீடர்களால் ஆரம்பிக்கப்பட்ட மடம் ஸ்ரீபாதராஜ மடம் என்று அழைக்கப்படுகின்றது. ஸ்ரீஅக்ஷோப்ய தீர்த்தரின் சீடர் ஸ்ரீவித்யாதிராஜரின் இரண்டு சீடர் பரம்பரையால் உருவான மடங்கள் மூன்று அவையாவன ஸ்ரீவியாஸராஜ மடம், மற்றும்  ஸ்ரீராமச்சந்த்ரர் அவர்களின் சீடர்களால் ஆரம்பிக்கப்பட்டது ஸ்ரீஇராகவேந்திர மடம் மற்றும் ஸ்ரீ உத்திராதி மடம் ஆகியவை ஆகும்.  தனது காலத்தில் ஸ்ரீஹரிவாயு குருவான இவர் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார், மற்றும் அச்சமயத்தின் மிகச்சிறந்த ஞானியாகவும் விளங்கினார். இன்றும் அவர் தன் பக்தர்களுக்கு பல்வித நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு அவரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களே சான்று.  வாருங்கள் அடியோங்களின் மந்திராலய தரிசனம் எவ்வாறு அமைந்தது என்று காணலாம். பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே  என்று தன் பக்தர்களுக்கு கற்பக விருக்ஷமாகவும், காமதேனுவாகவும்  விளங்கும், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்  (1595-1671), 16ஆம் நூற்றாண்டில்   இப்பூவுலகில் வாழ்ந்து மத்வரின் கொள்கைகளைப் பரப்பினார். முற்பிறவியில்  சங்கு கர்ணன்  என்ற தேவராக இருந்த இவர் பிரம்மாவின்   சாபத்தின்  காரணமாக  பூவுலகில் அரக்கர் வேந்தன் ஹிரண்ய கசிபு மற்றும் லீலாவதியின் மகனாக  பிரஹலாதனாக   பிறந்தார்.   தாயின் கருவில் இருந்த போதே நாரத மஹாரிஷியின் மூலம் திருமந்திர உபதேசம் பெற்றார். மஹா விஷ்ணுவின் மேல் இருந்த  தீவிர பக்தியினால்  பிரஹ்லாதன் சொன்ன எங்கும் உள்ளான் ஹரி என்ற வாக்கைக் காப்பாற்ற பெருமாள் நரசிம்ஹ அவதாரம் எடுத்து ஹிரணியனை அழித்தார். தனது  அடுத்த  பிறவியில் பாஹ்லிகனாக  பிறந்தார்.  பாஹ்லிகர்  மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டாலும்  ஒரு  நல்ல  ஹரி பக்தராக விளங்கினார்.  இவர்  மஹாபாரதப்போரில்  பீமனின்  கையினால்  உயிர்  துறந்தார்.  தன்  அடுத்த பிறவியில்  வியாசராஜராகப்  பிறந்து  மத்வரின்  தத்துவத்தை  பரப்பினார். அப்பிறவியில்  தாம் செய்த தொண்டினால் திருப்தி  அடையாமல் மீண்டும்  குருராகவேந்திரராக அவதரித்தார்.   விஜயநகர சாம்ராஜ்யத்தின் அழிவினால் அந்த அரசவையில் இருந்த கலைஞர்கள் பலரும் மேலும் தெற்குப்பக்கம் வந்து குடியேறினர்.  திம்மண்ண பட்டரும்  இவர்களில் ஒருவர், இவர் கிருஷ்ணதேவராயருக்கு வீணை கற்பித்த கிருஷ்ணபட்டரின் பேரன் ஆவார். இவர் காவிரிக்கரையின் புவனகிரியில் வந்து தங்கினார்.  திம்மண்ண பட்டருக்கும் கோபிகாம்பிகாவிற்கும், திருமலை வேங்கடவனின் அருளால்  ஹரிவாயு குரு  மூன்றாவது திருமகனாக 1959ம் ஆண்டு நாம் எல்லோரும் உய்ய திருவவதாரம் செய்தார். இவரது முத்த சகோதரர் குருராஜர், மற்றும் தமக்கையார் வேங்கடாம்பாள். இவரது இயற்பெயர் வேங்கடநாதர் ஆகும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கிணங்க வேங்கடநாதர் சிறு வயது முதலிலேயே கல்வியில் சிறந்து  விளங்கினார். ஆனால் இவரது தகப்பனார் இவரது திறமைகளை கண்டு களிக்க முடியாமல் இறைவனடி சேர்ந்தார். இவரது தமையானர்  இவரது படிப்பை கவனித்து கொண்டார். இவரது முதல் குரு இவரது தமக்கையின் கணவர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் ஆவார். மதுரையிலிருந்து திரும்பி வந்தபின் சரஸ்வதியுடன்  இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இவர் கும்பகோணம் சென்று தனது படிப்பைத் தொடர்ந்தார். கும்பகோணம் மடத்தில் ஸ்ரீசுதீந்திர தீர்த்தரிடம் த்வைத வேதாந்தத்தை கற்றார் வேங்கடநாதர். இவர் தமது வாதத் திறமையினால் பல்வேறு பண்டிதர்களை தோற்கடித்தார். இவர்களில் முக்கியமானவர் தஞ்சாவூர் அரசவை அறிஞர் வெங்கடேஸ்வர தீக்ஷிதர் ஆவார்.  இலக்கணத்தில் இவருக்கிருந்த புலமையைக்கண்டு சுதீந்திர தீர்த்த்ரே வியந்தார். இவருக்கு  “மஹாபாஸ்ய வேங்கடநாதாச்சாரியர்” என்று பட்டம் வழங்கினார்.  ஆனால் இவரது மண வாழக்கை ஏழ்மையில் கழிந்தது. இவரது மனைவி இவருக்கு ஏற்ற மனைவி குடும்பத்தை இந்த ஏழ்மையிலும்  சீர்மையாக நடத்தி சென்றார். இவர்களுக்கு ஒரு மகன் லக்ஷ்மிநாராயணன்.   ஒரு தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக்குளிக்கக்கூட இவர் வீட்டில் எண்ணெய் இல்லாத ஏழ்மை, புதுத்துணிக்கு எங்கு செல்ல. எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல ஒரு நாள் கள்வன் இவரது வீட்டில் இருந்து தட்டு முட்டு சாமான்களைக்கூட திருடிச்சென்று விட இவர் மடத்திற்கே சென்று தங்கிவிட நேர்ந்தது.  மடம் வந்து சேர்ந்த பிறகு வேங்கட நாதன் மேல் தனிக்கவனம் செலுத்தினார் சுதீந்திரர். இது மற்ற சீடர்களிடம் அசூயையை ஏற்படுத்தியது. ஒரு நாள் இரவில் வெங்கடநாதன் எதோ எழுதிக்கொண்டிருப்பதை கவனித்த குரு தேவர், அவர் உறங்கியபின் சென்று பார்த்தார் அந்த ஓலையை, அவருக்கு புரிந்து விட்டது உறங்கும் இவன் இவ்வுலகை விழிப்புற செய்ய பிறந்தவன் என்று. அவரது போர்வையை போர்த்தி விட்டு ஓலைச்சுவடியை எடுத்துக்கொண்டு வந்து விட்டார். காலையில் ஓலையைக் காணாமல் தேடிய வேங்கடநாதரிடம் தாம்தான் எடுத்து வந்தோம் என்று மற்றவர்களுக்கும் உண்மையை கூறினார் அவர்களும் தலை குனிந்தனர்.  இவரது ஞான அறிவு பூவின் மணம் போல பரிமளிப்பதால்  “பரிமளாச்சாரியார்”  என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.   ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் தமக்குப்பின் மடத்தை நிர்வகிக்க தகுந்த சீடர் வேங்கடநாதர் என்று உணர்ந்தார். கனவில் ஸ்ரீஇராமசந்திர மூர்த்தியும் இதை உணர்த்தினார். எனவே ஸ்ரீசுதீந்திரர் வேங்கடநாதரை சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டினார்.  குடும்பமா? மடமா? என்று இவர் குழம்பி முதலில் மறுத்து விட்டார். பின்னர் வித்யா லக்ஷ்மி இவர் கனவில் வந்து மடத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு எல்லாரையும் உய்விக்க வேண்டும் என்று கட்டளையிட, இவர் சந்நியாசம் பெற்றுக்கொள்ள முடிவு செய்தார். தனது மனைவியையும் இதற்கு சம்மதிக்க வைத்தார். மகனுக்கும் உபநயனம் செய்து வைத்தார். துர்மதி வருடம் (1621),  பங்குனி மாதம் வளர்பிறை  இரண்டாம் நாள் சந்நியாசம் பெறுவதற்கான நாள் குறிக்கப்பட்டது. கணவர் சந்நியாசம் பெறுவதற்கு முன் அவரது முகத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலினால் மடத்தை நோக்கி ஓடிய இவர் மனைவி சரஸ்வதி ஒரு பாழடைந்த கிணற்றில் விழுந்து இறந்து ஆவியாக மாறினார். ஸ்ரீஇராகவேந்திரார் என்ற நாமத்துடன் சந்நியாசம் ஏற்ற கருணாமுர்த்தி இராயரு  தமது தவ சக்தியால் அவளுக்கு மோட்சம் வழங்கினார். அவளது பெயரால் வஸ்திர தானம் நடத்தப்படவேண்டும் என்று நியமம் செய்தார். 1623ல் ஸ்ரீசுதீந்திர தீர்த்தர் ஆனேகுந்தியில் பிருந்தாவனஸ்தர் ஆனபின் இவர் மடாதிபதியாக பொறுப்பேற்று  மத்வாச்சாரியாரின் கொள்கைகளை நாடெங்கும் பரப்பினார். உலக நன்மைக்காக பல கிரந்தங்களையும்  எழுதி அருளினார். பாரத தேசமெங்கும் தீர்த்த யாத்திரை  செய்தார். உடுப்பி, பண்டரிபுரம், கொல்லபுரம், கர்நூல் என்று இவர் திருபாதம் பதித்த இடங்கள் எல்லாம் புண்ணிய தலங்களாக மாறின.  அங்குள்ள  அறிஞர்களை வென்று அவர்களை த்வைத வேதாந்தத்திற்கு மாற்றினார். மத்வாச்சாரியரின்  கொள்கைகளை பரப்பினார். தமது அற்புத  சக்தியினால் பல அதிசயங்களை நிகழ்வித்தார். அவற்றுள் சில   இறந்தவரை உயிர்பித்தது, மூடனை  ஞானியாக்கியது, நம்பாத சுல்தான் கொண்டு வந்த மாமிசத்தை பழங்களாக்கி அவரை  மாற்றியது ஆகியவை அவற்றுள் சில. இவர் மட்டுமல்ல இவரது காவி ஆடை, இவர் வழங்கிய மந்திர அக்ஷதை, பிரசாதம், மிருத்திகை என்னும் மண் ஆகியவையும் அற்புதம் நிகழ்த்தின.   இவர் வியாசராஜரின் சந்திரிகைக்கு பிரகாசம் என்னும் உரை, தந்திர தீபிகை என்னும் நூலுக்கு நியாய முக்தாவளி என்னும் உரை என்று பல உரைகளை எழுதினார். வேதத்தின் சாரத்தை பாமரரும் உணரும்படி பல கிரந்தங்களை இயற்றினார். ஸ்ரீ இராகவேந்திரரின்  ஜாதகத்தை கணித்த மூன்று ஜோதிடர்கள் மூன்று விதமான ஆயுட்காலங்களை கணித்தனர், அவையாவன, 100, 300, 700. ஸ்ரீஇராகவேந்திரரிடம் விளக்கம் கேட்ட போது இந்த பூத உடலுடன் 100 வருடங்கள், என் நூல்கள்  300 வருடங்களுக்குப்பிறகு பிரசுரமடையும், பிருந்தாவனத்தில்  700 வருடங்கள் வாசம் செய்வேன்   என்று விளக்கமளித்தார் ஹரிவாயு குரு. தனது கடமைகளை முடித்த இராயர்  தாம் பிரஹ்லாதனாக இருந்த போது யக்ஞம் செய்த மாஞ்சாலியில்  பிருந்தாவனஸ்தராக அமர முடிவு செய்தார் ஸ்ரீஇராமர்  அமர்ந்த கல்லினால் பிருந்தாவனம் அமைக்கப்பட்டது. தமது பிரிய சீடரான அப்பணாச்சாருயாரை வேறு வேலையாக அனுப்பி விட்டு 1671ம் வருடம் (விரோதிகிருது) ஆவணி மாதம், கிருஷ்ணபக்ஷம், துவிதியை திதியுடன் கூடிய வியாழன்று பிருந்தாவனத்தில் அமர்ந்தார்.  இன்றும் அங்கிருந்து நம்மை எல்லாம் இரட்சித்து வருகின்றார். அவரே  கூறியபடி கற்பக விருக்ஷமாய், காமதேனுவாய் வேண்டுபவர் வேண்டுவன அருளும்  அவரது இந்த பிருந்தாவனம் உள்ள மந்திராலயத்திற்குத்தான் அடியோங்கள் வந்து சேர்ந்தோம். […] சுமார் ஒரு மணி நேரத்தில் மந்திராலயம் ரோட்டிலிருந்து மந்திராலயம் வந்து சேர்ந்தோம். அப்போது  ஆலய அலுவலகம் மூடப்படிருந்ததால் தனியார் ஹோட்டலுக்கு சென்றோம். நாங்கள் ஆலயத்தை கடந்த போது காலை சுப்ரபாத சேவை தொடங்கி விட்டிருந்தது. எல்லோரும் ஹோட்டலில் சென்று சிறிது நேரம் தூங்கினோம். பின்னர் சுமார் 7 மணி அளவில் எழுந்து சிலர் துங்கபத்ராவில் நீராட சென்றோம். நவபிருந்தாவனத்தில் துங்கபத்ரா தூய்மையாக இருந்தது ஆனால் இங்கு பக்தர்கள் அதிகம் இருந்தனர் மற்றும் கரையோரம் மிகவும் அசிங்கம் செய்யப்பட்டிருந்தது, மேலும் பாறைகள் நிறைந்து காணப்பட்டது. ஆயினும்  துங்கபத்ராவில் குளித்து விட்டு இராகவேந்திரரை தரிசனம் செய்ய  வந்தோம். இந்த மாஞ்சாலாவில் குரு இராகவேந்திரர் தமது பிருந்தாவனத்தை அமைக்க தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை நாம் முதலிலேயே பார்த்தோம் அதாவது பிரஹ்லாதராக இருந்த காலத்தில் இவர் யாகம் செய்த இடம் இது. [மந்திராலயத்தில் துங்கபத்ரையின் அழகு] இனி இவ்விடத்தை இவர் பெற்ற சுவையான வரலாற்றைப் காணலாமா?  பல்லாண்டுகள் பல நூல்களைப்  பயின்று  சரஸ்வதி  கடாட்சம் பெற்ற இராகவேந்திரர்,  தம் வாழ்வில் நிகழ்த்திய ஓர்  அற்புதம் அவரது  பேராற்றலை மட்டுமல்ல;  அவரது  பெருங்கருணையையும்  புலப்படுத்தும் அற்புதமான வரலாறு அது.  ஆதோனி  என்ற ஊரில் வெங்கண்ணா  என்ற ஒரு பிராமண சிறுவன் சிறு வயதிலேயே தனது  தாய் தந்தையை இழந்தான். எனவே அவனது தாய் மாமனிடம் வந்து சேர்ந்தான். தனது மருமகனின் சொத்துக்களை எல்லாம் கவர்ந்து கொள்ள விரும்பிய அவர் அவருக்கு முறையான கல்வி அளிக்காமல் அவரை மாடு மேய்க்க அனுப்பினார்.  மாடு மேய்ப்பது என்பது இழிவான தொழிலா? இல்லை இல்லை கிருஷ்ணபகவானும் மாடுதானே மேய்த்தார் என்று தான் அதற்கு மறுத்தால் தனக்கு கிடைக்கின்ற சோறு கூட கிடைக்காது என்று தனது விதியை நொந்து கொண்டு மாடு மேய்த்து வரலானார். இவ்வாறு அவன் மாடு மேய்த்து வரும் போது ஒரு நாள் பூரண சந்திரனை ஒத்த தேஜஸுடன் ஒரு சந்நியாசி அவ்வழியாக தனது சீடர்களுடன் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். அவரைக் கண்டவுடன் அவனது மனதில் பால் வார்த்தது போல இருந்தது. ஒடிச் சென்று அவரது பாதரவிந்தங்களில் சரணமடைந்து தேம்பித் தேம்பி அழலானான்.  சரணடைந்தவர்களைக்  காப்பாற்றுவது  என்பது மகான்களின்  இயல்பாக  குணம்  அல்லவா?  ஆகவே அவனை பரிவுடன் எழுப்பி அவனது கதையைக் கேட்ட குரு இராகவேந்திரர் ஆசிர்வாதம் செய்து  மந்திர அக்ஷதையை வழங்கி உனக்கு இன்னல் ஏற்படும் சமயத்தில் என்னை நினைத்துக்கொள் நான் உன்னை காப்பாற்றுவேன் என்று அபயம் வழங்கினார் கருணை வள்ளல் வாயு குரு ராயரு.  பல வருடங்கள்  உருண்டோடின  இளைஞனான  வெங்கண்ணா நல்ல வெயில் நாளில்  மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது  அவ்வழியாக சித்தி மசூத்கான்  குதிரையில் சென்று கொண்டிருந்தான். பீஜப்பூர் சுல்தானின் சிற்றரசன் அவன். அப்போது இன்னோரு குதிரை வீரன் மின்னல் வேகத்தில் வந்து அவனிடம் ஒரு ஓலையை கொடுத்து விட்டு சென்றான்.  அதை படிக்க ஆளைத் தேடிய போது அவன் கண்ணில் பட்டான் . உடனே அவனிடம் சென்று இந்த ஓலையைப் படித்து சொல் என்று  அதிகாரத்துடன் கூறினான். வெங்கண்ணாவிற்கு கையும் ஒடவில்லை காலும் ஓடவில்லை தானோ படிப்பறிவில்லாத முட்டாள்  தன்னிடம் வந்து இவர் ஓலையைப் படிக்க சொல்கிறாரே இப்படி இக்கட்டில் மாட்டிக் கொண்டோமே என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டு நின்ற போது இறையருளால் அவருக்கு சந்நியாசியின் ஞாபகம் வந்தது. ஐயா அன்று ஆபத்துக் காலத்தில் என்னை நினைத்துக் கொள் என்று கூறிவிட்டு சென்றீரே இன்று இந்த இக்கட்டான  சமயத்தில் தாங்கள்தான் காக்க வேண்டும் என்றும் மனமுருக வேண்டி நின்றான்.  [மந்திராலய ஹனுமன்] அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது குருவருளால் வெங்கண்ணாவிற்கு எழுத்துக்கள் எல்லாம் ஸ்பஷ்டமாக படிக்க முடிந்தது. அவன் போரில் நவாப் வெற்றி பெற்ற நல்ல செய்தியை அவனுக்கு கூறினான். அதனால் மனம் மகிழ்ந்த அவன் வெங்கண்ணாவை இப்பகுதியின் திவானாக நியமித்து கௌரவித்தான்.  இராகவேந்திரனின் கருணையினால் எழுதப் படிக்கதெரியாத தான் படிக்க முடியாத தான் படிக்க முடிந்தது என்ற உண்மையை  திவான் வெங்கண்ணா நவாபிடம் கூறினான். அவனும் வெங்கண்ணாவின் தாய்மாமனிடம் இந்த   உண்மையை உறுதி செய்து கொண்டு இராகவேந்திரரை பரிசோதிக்க அவர் கும்பகோணத்தை விடுத்து மாஞ்சாலியில் இருக்க முடிவு செய்து ஆதோணி வந்து  வெங்கண்ணா இல்லத்தில் மூல ராமருக்கு பூஜை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்தான்.  […] அப்போது இராகவேந்திர சுவாமிகள் மூலராமருக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவரிடம் நவாப் மாமிசம் கொண்ட ஒரு தட்டை துணி கொண்டு மூடி சமர்பித்தான். அதை இராமருக்கு பூஜை செய்து முடித்தபின் தண்ணீர் தெளித்து திருப்பிக் கொடுத்தார் குருதேவர். துணியை எடுத்துப் பார்த்த நவாபிற்கு ஒரே அதிர்ச்சி தட்டில் இருந்தவை  பழங்களும்  மலர்களும். குரு இராகவேந்திரரின் மகிமையை உணர்ந்த நவாப் அவரைப் பணிந்து என்ன வேண்டுமென்றாலும்  கேட்க வேண்டினான்.  அப்போது இராகவேந்திரர் இந்த மாஞ்சாலி கிராமத்தைக் கேட்டார்.  நவாப்பும். அந்த பிரதேசம் பாறைகள் நிறைந்த வறண்ட பூமி வேண்டாம்,  வேறு நல்ல வளமான பகுதியை தருகின்றேன் என்றான். ஆயினும் இராகவேந்திரர்   அன்மீக சக்தி மிகுந்த இப்பகுதியே வேண்டுமென கேட்க அதையே தானமாக மனமுவந்து வழங்கி   சாசனம் செய்து குருதேவரை வணங்கிச் சென்றான்.  [மாஞ்சாலம்மன்] பின்னர் இராகவேந்திரர் மாஞ்சாலியில் வாழ ஆரம்பித்தார், அவரது இஷ்டதெய்வமான  வெங்கடரமண சுவாமிக்கு  ஒரு ஆலயமும் எழுப்பினார். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மாஞ்சாலி கிராமத்திற்கு வரத்தொடங்கினர். இந்த கிராமத்தின்  கிராம தேவதை மாஞ்சாலியம்மன். அவர் இராகவேந்திரரிடம் சென்று  தாங்கள்  வந்த பிறகு என்னை மறந்து விடுவார்களே என்றபோது, இராகவேந்திரர்  என்னை தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில் உன்னை தரிசனம் செய்த பிறகுதான் என்னை தரிசனம் செய்வார்கள் என்று வரம் தந்தார் பரம கருணாமூர்த்தி குரு ராயரு. என்ன சுவையாக இருந்ததா? குரு மாஞ்சாலி கிராமத்தை பெற்ற வரலாறு. காமதேனுவும் கற்பக விருக்ஷமுமான குரு ராயரை தரிசனம் செய்வதற்கு முன்னர்  மாஞ்சாலம்மாவை தரிசனம் செய்ய வேண்டும் என்பதனால்  நாங்கள் அங்கு சென்று வரிசையில் சென்று நின்றோம். இராகவேந்திரரின் பிருந்தாவனத்திற்கு இடப்பக்கம், துங்கபத்ராவில்  இருந்து வரும் பக்கத்தில் அமைந்துள்ளது மாஞ்சாலம்மா ஆலயம். தற்போது புணருத்தாரணம் செய்யப்பெற்று எழிலாக விளங்குகின்றது அம்மனின் ஆலயம். காலை நேரம் என்பதால் கூட்டம அதிகமாகவே இருந்தது.  அம்மனின் தரிசனம் அருமையாக கிடைத்தது நம்மூரில் மாரியம்மன் ஆலயத்தில்  இருப்பது போல் மூன்று அடுக்கில் அம்மன் அருள் பாலிக்கின்றாள். [இராகவேந்திரர் ஸ்தாபித்த வெங்கடரமண சுவாமி] அம்மனிடன் அனுமதி பெற்றுக்கொண்டு குருராஜரை தரிசிக்கச் சென்றோம். 700 வருடகாலம் பிருந்தாவனத்தில் இருந்து அருள்பாலிப்பேன் என்று அருளியபடி இராகவேந்திரர் இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை நீக்கி பலவித அற்புதங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்.  நுழைவாயிலில் அப்பணாச்சாரியார் அருளிய       பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே என்ற ஸ்லோகம் நம்மை வரவேற்கின்றது. உள்ளே நுழைந்து  பிருந்தாவனங்களை சுற்று வந்து தரிசனம் செய்ய சென்ற போது ஒரு அருமையான சம்பவம் நடந்தது. கோவிலுக்கு செல்லும் போது நாங்கள் எப்போதும் வேஷ்டி அணிந்து சட்டை அணியாமல்தான் செல்வோம். பொது தரிசனத்திற்காக சென்ற எங்களை கூப்பிட்டு வேஷ்டி அணிந்திருப்பதால்  சிறப்பு  வழியில் செல்லுங்கள் என்று அவர்களாக அனுப்பி வைத்தது அந்த குரு தேவரின் கருணைதான்.  வாயு குருவுக்கு மிக அருகில் உள்ள வாயிலில் சென்று அருமையாக இராகவேந்திரரை மனமார வணங்கினோம். எதிரே கல்லில்  மந்திராலய ஹனுமனையும் அருகில் உள்ள சிவலிங்கத்தையும் தரிசனம் செய்தோம். குருநாதருக்கு இடப்பக்கம் உள்ள வாதீந்திர தீர்த்தரின் பிருந்தாவனத்தையும் தரிசனம் செய்து வணங்கினோம். வாதீந்திரர் குருநாதரின் பூர்வாசிரம தமையனின் கொள்ளுப்பேரரரான இவரது பிருந்தாவனம் இங்கிருப்பதற்கான ஒரு   காரணம் என்ன என்று அறிந்து கொள்ளலாமா?  தமது பிருந்தாவன காலம் வந்த போது திவான் வெங்கண்ணாவை அழைத்து ராயரு    தம் ஜீவபிருந்தாவனத்திற்காக மாதவரம் என்னும் கிராமத்தில் இருந்து  கல் கொண்டு வர அடையாளம் சொல்லி அனுப்பினார். வெங்கண்ணாவும் பக்தி சிரத்தையுடன் அங்கு சென்று கல்லை கொண்டு வந்து பிருந்தாவனம் அமைத்து குருதேவரிடம் காட்டிய போது அவர் நான் சொன்ன ஸ்ரீராமர் அமர்ந்த கல் இதுவல்ல இந்த பிருந்தாவனம் இப்படியே இருக்கட்டும்   இதில் யார் பிருந்தாவனஸ்தர் ஆவார் என்று எதிர்காலத்தில் தெரியும்.   மீண்டும் மாதவரம் சென்று சரியான கல்லை கொண்டு வரவும் என்று அனுப்பினார். இந்தத் தடவை வெங்கண்ணா சரியான கல்லைக் கொண்டு வந்து பிருந்தாவனத்தை அமைத்தார். இது நடந்த போது வாதீந்த்ரருக்கு வயது இரண்டு. மிகுந்த மன நிம்மதியுடன் அருமையான தரிசனம் தந்த குருதேவருக்கு  கோடி நன்றிகள் கூறி விட்டு  வெளியே வந்தோம். குருநாதருக்கு எதிரே உள்ள  மந்திராலய ஹனுமன் இராமர் கிஷ்கிந்தா செல்லும் போது அமர்ந்த கல்லினால் செய்யப்பட்டது.  இராகவேந்திரரின் பிருந்தாவனத்திற்கு பிறகு எஞ்சிய கல்லில் இந்த விக்ரகம் அவரின் விருப்பபடி உருவாக்கி அவர் எதிரிலேயே பிரதிஷ்டை செய்யப்பெற்றது. இக்கல்லின் ஒரு சிறு பகுதி இன்னும் மாதவரம் கிராமத்தில் உள்ளது அதை இராமராக கருதி வழிபட்டு வருகின்றனர். சமயம் உள்ளவர்கள் அங்கு சென்று தரிசனம் செய்து விட்டு வரலாம். அன்றைய தினம்  சிவலிங்கத்திற்கு  வெள்ளி கவசம் சார்த்தப்பெற்றிருந்தது.  வெளியே வரும் போது தீர்த்தபிரசாதமும் மந்திர அக்ஷதையும் வழங்கினார்கள், அவற்றை சுவீகரித்துக் கொண்டு மீண்டும் சன்னதி வலம் வந்தோம். [மூலராமருக்கு பூஜை] பின்னே உள்ள மண்டபத்தில் மூலமூர்த்திகளுக்கு அபிஷேகமும் பூஜையும் நடந்து கொண்டிருந்தது. வேத மந்திரங்கள் முழங்க கிரமப்பிரகாரம் நடந்த கொண்டிருந்த பூஜையில் சிறிது நேரம் கலந்து கொண்டு பின்னர் பிரசாதம் வாங்கிகொண்டு வெளியே வந்தோம். இதற்குள்  ஹோட்டலில் இருந்த குழந்தைகள், பெண்கள் தரிசனம் செய்வதற்காக வந்தனர் அவர்களுடன் இன்னொரு முறை சிறப்பு வழியில்  சென்று இன்னொரு முறை மனமார வழிபட்டோம்.  பின்னர் வெளியே சன்னதிக்கு அலங்கார வளைவுடன் நேரெதிரே அமைக்கப்பட்டுள்ள சாலையின் இருபக்கமும் அருமையான  சிற்பங்களையும் மலர் தோட்டத்தையும் கண்டு களித்துவிட்டு காலை உணவை முடித்துக்கொண்டு, கடைகளை பார்த்துவிட்டு திரும்பி வந்து அன்னதானத்திற்கு  நன்கொடை அளித்து விட்டு குருதேவரின் சிலை அமைந்துள்ள ரவுண்டாவின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.  அலுவலகத்தின் மேல்மாடிக்குச் சென்று விமான தரிசனம் செய்தோம். [மந்திராலய மூல பிருந்தாவனம்] அலுவலகத்தில் தேவஸ்தான அறைகளை பெற்று ஹோட்டலை காலி செய்து விட்டு அங்கு சென்று பொருட்களை எல்லாம் வைத்து விட்டு  பின்னர் திரும்பி பிருந்தாவனம் வந்து அவ்வளாகத்தில் உள்ள மற்ற பிருந்தாவனஙளில் எல்லாம் வணங்கி விட்டு ஆலமரத்தடியில்  நெய் விளக்கேற்றி  வழிபாடு செய்தோம். இன்னும் ஒரு முறை குரு இராகவேந்திரரை தரிசனம் செய்து விட்டு அன்னதானத்தில் சென்று உணவருந்தி விட்டு  பிச்சாலயா மற்றும் பஞ்சமுகி செல்வதற்காக கிளம்பினோம்.     மாஞ்சாலியில் குருராயர், ஆங்கிலேய பிரபு சர்.தாமஸ் மன்றோவுடன் நடத்திய ஒரு அற்புதத்தைப் பற்றிக் காணலாமா அன்பர்களே. கி.பி 1812ல் பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது, அதன் மூலம் கோயில் இடத்திற்கு வாரிசுகள் யாரும் இல்லை என்றால் அவ்விடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அச்சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்திற்கு தானமாக வழங்கப்பட்ட நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியை ஆண்ட சுல்தான் ஸ்ரீராகவேந்திரருக்கு தானமாக வழங்கிய அவ்விடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று எதிர்த்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர்.தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை அமைத்து நிலைமையை சரி செய்ய உத்தரவிட்டது. மன்றோ தனது குழுவுடன் பிருந்தாவனத்திற்கு விரைந்தார். ஆலயத்தின் நுழைவாயிலில் தனது காலணியையும், தொப்பியையும் கழற்றி விட்டு உள்ளே சென்றார். பிருந்தாவனத்தின் அருகே சென்ற மன்றோ யாரோ இருப்பது போல வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார். அவருடன் வந்திருந்த குழுவினருக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் மன்றோ அவர்களுக்கு எதிரே யாரும் இல்லை. ஆனால் மன்றோவோ யாரோ எதிரில் நின்று பேசிக் கொண்டிருப்பது போல சரளமாக ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். வெகு நேரத்திற்குப் பிறகு உரையாடலை முடித்துக் கொண்டு தங்கள் ஆங்கிலேயப் பாணியில் ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார் மன்றோ. அது வரை திகைத்துப் போயிருந்த குழுவினர், அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்டனர். அதற்கு மன்றோ, “பிருந்தாவனத்திற்கு அருகே காவி அணிந்த ஒளி வீசும் கண்களுடன் உயரமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மான்யம் பற்றி சில விளக்கத்தை கேட்டேன். அவரும் என்னிடம் அது குறித்து உரையாடி மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கத்தைத் தந்து விட்டார். இவ்விடம் மட்த்திற்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமுமில்லை” என்றார்.  [வாதீந்திரர் பிருந்தாவனம்] மேலும் அம்மகானின் ஒளி வீசும் கண்கள், கம்பீரக் குரல் மற்றும் செழுமையான ஆங்கில உச்சரிப்பு பற்றியும் வியந்து கூறிய அவர், நீங்கள் எல்லாரும் அவரைக் காணவில்லையா? என்று வினவினார். குழுவினர் தங்கள் யாரும் யாரையும் காணவில்லை என்று பதிலிறுத்தனர். இதனால் தன்னுடன் உரையாடியது சாட்சாத் ஸ்ரீஇராகவேந்திரர் என்று உணர்ந்து கொண்டார். ஒரு   நூற்றாண்டுக்கு முன் பிருந்தாவனஸ்தரான    மகான் தன் முன்  நேரில்  தோன்றி  அதுவும்  தனது மொழியான  ஆங்கிலத்தில்  தன்னுடன்  பேசிப்  பிரச்சனையைத் தீர்த்த விதம் கண்டு பிரமித்தார்  சர் தாமஸ் மன்றோ.  தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி  மகிழ்ந்தார். அரசுக்கும், ஆளுநருக்கும்,  அந்த இடம் மடத்துக்குச்  சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன்  அன்று  முதல்  ஸ்ரீராகவேந்திரரின் பக்தராகவும்  மாறினார். விரைவில் மன்றோ  தாற்காலிக ஆளுநராகப்  பொறுப்பேற்கும்  நிலை வர, அவர்  கையெழுத்திட்ட முதல் கோப்பு,  மடத்துக்கு நிலம்  அளிப்பது  தொடர்பானது  தான்.  இச்சம்பவங்கள் அப்போதைய சென்னை  மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக் குறிப்பு) வெளியாகியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.  இனி வாருங்கள் பிச்சாலயா மற்றும் பஞ்சமுகி தரிசிக்கலாம். அத்தியாயம் - 14 : பிச்சாலி [இராகவேந்திரரும் அப்பணாச்சாரியாரும்] அருமையாக மந்திராலயத்தில் குரு ராகவேந்திரரை தரிசனம் செய்த பின்னர் அங்கு நடைபெறும் அன்னதானத்தில் மதியம் பிரசாதம் சுவீகரித்துக் கொண்டு  தங்கும் விடுதிக்கு திரும்பி வந்து பிச்சாலிக்கும் பஞ்சமுகிக்கும் செல்ல கிளம்பினோம். இவை இரண்டும் துங்கபத்ரையின் மறு கரையில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளன.  பிச்சாலி மந்திராலயம் ரோட்டிலிருந்து 15 கி.மீ தூரத்தில்  துங்கபத்ரை நதிக்கரையில் அமைந்துள்ளது. மந்திராலயத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது.   மந்திராலயத்திலிருந்து துங்கபத்ரா பாலம் வழியாக செல்வதென்றால், முதல் மாதவரம் சென்று அங்கிருந்து வலப்பக்கம் திரும்பி, ரெய்ச்சூர் செல்லும் வழியில் துங்கபத்ரா பாலத்தை கடந்து கில்லேசுகர் முகாம் வந்து அங்கிருந்து இடப்பக்கம் திரும்பினால் பிச்சாலியை வந்தடையலாம். பாதை பழுது பட்டிருந்தால் பரிசல் வழியாக பிச்சாலி வரலாம். திரு.மோகன் அவர்கள் முன்னரே இங்கெல்லாம் வந்துள்ளார் என்பதால் அவர் துங்கபத்ராவை பரிசல் மூலம் கடந்து அக்கரை சென்று விட்டால் அங்கு ஜீப்கள் கிட்டும் சீக்கிரமாக சென்று விடலாம் என்று கூறினார் நாங்கள் அவ்வாறே சென்று திரும்பினோம்.  [ஏக சிலா பிருந்தாவனம், பிச்சாலி] பிச்சாலியை தரிசிப்பதற்கு முன்னால் பிச்சாலியின் சிறப்பைக் காண்போமா?  பிட்சாலயா என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் இன்று    பிச்சாலி என்று அழைக்கப்படுகின்றது.  துங்கபத்ரா நதிக்கரையில் இங்கு  ஸ்ரீபாதராயர்  தங்கி தவம், ஜபம் செய்யும் காலத்தில், ஹிரணியனை மடியில் போட்டு வள்ளுகிரால் அவன் மார்பை பிளக்கும் உக்ர நரசிம்ம தேவரை இங்கு பிரதிஷ்டை செய்தார்.  அவர் இங்குள்ள ஜபாடகட்டே என்னும்  கல் மேடையில் அமர்ந்து உபன்யாசம் செய்துள்ளார். ஸ்ரீவியாஸராஜர்  ஹனுமன்  சிலையை பிரதிஷ்டை செய்திருக்கின்றார். ஸ்ரீஜிதாமித்ரர் இங்கு நாக பிரதிஷ்டை செய்துள்ளார். இவ்வாறு பலமகான்களால் புனிதமடைந்த இடம் இந்த பிச்சாலி ஜாபட கட்டே.  இங்கு பிச்சாலியில் குருராயர் பன்னிரண்டு வருடம் தனது சீடரும் நண்பருமான அபர்ணாச்சாரியாருடன் வசித்துள்ளார்.     [ஸ்ரீபாதராஜர்  பிரதிஷ்டை  செய்த உக்ர நரசிம்மர்] இங்குதான் இராகவேந்திரரின் அத்யந்த சிஷ்யரும் நண்பருமான அப்பணாச்சாரியார் வசித்து வந்தார். அவர் மிகச்சிறந்த ஹரி பக்தர், வேத வேதாங்களில் கரை கண்டவர், சம்ஸ்கிருத ஞானி, அபார கருணை கொண்ட ஆசிரியர். இவரது ஞானத்தை பற்றி கேள்விப்பட்டு இவரிடம் சிஷ்யராக இருந்து கல்வி கற்க பாரத தேசமெங்கும் இருந்து எண்ணற்ற மாணவர்கள் வந்து தங்கி கல்வி கற்றனர்  அவர்களுக்கு ஞானதானம் வழங்கி வந்தார் அப்பணாச்சாரியார் . இவர் 300  ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர் ஆயினும் அக்கால வழக்கப்படி தனது சிஷ்யர்களுக்கு தானே உணவு அளித்து வந்ததால் வறுமையில் வாடினார். எனவே இவரது சிஷ்யர்கள் உஞ்சவிருத்தி செய்து கொண்டு வந்த அரிசியை ஒரு துணியில் கட்டி துங்கபத்ரா நதியில் நனைத்து  ஆலமரத்தில் கட்டி விடுவார். பாடம் முடிவதற்குள் இவரது யோக சக்தியால்  அது சாதமாகி விடும் அதை சிஷ்யர்களுக்கு அளிப்பார். அவ்வளவு சிறந்த யோகி அவர்.  துங்கபத்ரை நதிக்கரையில் ஆலமரத்தின் அடியில் உள்ள கல்மேடையில் (ஜாபட கட்டே) அமர்ந்து வேதம், உபநிஷத் சாஸ்திரம் ஆகியவற்றை இவர் தன் மாணவர்களுக்கு போதித்து வந்தார். இவ்வாறு அப்பணாச்சாரியார் பிச்சாலியில்  சேவை செய்து வரும் காலத்தில், கும்பகோணத்திலிருந்து இராகவேந்திர சுவாமிகள் ஆதோனி வர முடிவு செய்தார், அதற்காக தனது அருளால் எழுத்தறிவில்லாமல் இருந்து ஞானியான வெங்கண்ணாவிடம் தான் அங்கு வருவதாக செய்தி அனுப்பினார். திவான் வெங்கண்ணாவும் வெகு சிறப்பாக குருதேவரை வரவேற்றார், இராகவேந்திரர் வெங்கண்ணா வீட்டில் மூல இராமருக்கு பூஜை செய்யும் போது நவாப் வந்து மாமிசம் கொடுக்க அதை பழங்களாக மாற்றி அற்புதம் செய்த இராகவேந்திரர் மாஞ்சாலியை பெற்றார்.  இச்சமயம் பிச்சாலிக்கு வந்த குருதேவர் அதன் இயற்கை அழகிலும் அப்பணாச்சாரியரின் அப்பழுகற்ற  பக்தியாலும் மகிழ்ந்தார். அப்பணாச்சாரியாரும் இராகவேந்திரரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.  துங்காவும் பத்ராவும் சங்கமம் ஆகி துங்கபத்ராவானது போல இராகவேந்திரரும், அப்பணாச்சாரியரும் இணைந்து ஹரி பக்தியை பரப்பினர்.  குருதேவர் மந்திராலயத்தில்  வசித்து வரும் போது பிச்சாலி வருவார் அவர் கல்மேடையில் அவர்  அமர்ந்திருக்க, அவரது திருப்பாதங்களில் அப்பணாச்சாரியார் அமர்ந்து சேவை செய்வார். இருவரும் பகவத் விஷயத்தில்  ஈடுபடுவர்.  இவ்வாறு 13 வருடங்கள் இருவரும் ஹரி பக்தியை பரப்பி வந்தார்கள். குருராயர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் நாள் வந்தது. அப்பணாச்சாரியார் அவ்விடம் இருந்தால் தன்னை அனுமதிக்கமாட்டார் என்று அறிந்திருந்த இராகவேந்திரர் அவரை மத்வசங்கத்திற்கு சென்று வருமாறு அக்கரைக்கு அனுப்புகிறார். மனதில்லாமல் அவரும் செல்கின்றார். இராகவேந்திர சுவாமிகள் தமது பிருந்தாவன பிரவேசத்திற்கு முன்னர் பக்தர்களுக்கு மனம் நெகிழ வைக்கும் ஒரு உரையாற்றினார். அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்: - சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது. - நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/ தர்மம் கடவுளின் பூசைக்கு நிகராகும். - சாத்திரங்களை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக் கொண்டு அதிசயங்களை செய்பவர்களை விட்டு விலகி இருங்கள். நானும் ஆசாரியரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும், கடவுளின் அருளினாலும் எங்களால் செய்யப்பட்டவை. சரியான ஞானத்தை மிஞ்சிய அதிசயமோ அற்புதங்களோ கிடையாது. - கடவுளின் மேல் தூய்மையான பக்தி இருத்தல் வேண்டும். அப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக் கூடாது. கடவுளின் மேலாண்மையை முழு மனதோது எற்றுக் கொள்ளுதல் பக்தி ஆகும்.  பின்னர் பிருந்தாவனத்துக்கு  மூச்சை  அடக்கி  தியானத்தில்  ஆழ்ந்தார்.  அவரது கையில் இருந்த ஜபமாலை  நழுவி விழுகிறது.  இதனைப் புரிந்துகொள்ளும் வெங்கண்ணா கடைசியாக, திறந்திருந்த  பகுதியை மூடிவிடுகிறார். இராகவேந்திரர் ஜீவ சமாதி அடையப்  போவதை அறிந்ததும் அவரைக்  கடைசியாகக் கண்டு விடும்  உத்வேகத்தில்  ஓடிவருகிறார் அப்பணாச்சாரியார்.  வழியில்  துங்கபத்ரை  பொங்கி  வழிந்து  ஓடுகிறது.  அவர் ராகவேந்திரரை  மனதில் நினைத்துக் கொண்டு,  சமஸ்கிருதத்தில் சுலோகம்  பாடிக்கொண்டு, நதியில் இறங்கி  ஓடி வருகிறார்.  சங்கரர் அழைத்ததும் நதியில் பாதம் பதித்து வந்த பத்மபாதர் போல இக்கரை வந்தார் அப்பணாச்சாரியார்,  அவர் அங்கு வந்த போது பிருந்தாவனத்தின் மேல் கடைக்கல் வைக்கப்பட்டு கொண்டிருந்தது.  இராகவேந்திரர்  ஜீவ சமாதி அடைந்துவிடுகிறார்.  அப்பண்ணாச்சாரியார் பாடிக்கொண்டிருந்த சுலோகத்தில் கடைசி  ஏழு எழுத்துகள் மட்டும் பாக்கி இருக்கின்றன. தம்மால் இராகவேந்திரரைப் பார்க்க  முடியவில்லையே  என்னும்  சோகத்தில்  அவரது  நா   தழுதழுக்கின்றது.  ஆனால் இராகவேந்திரர்  ஜீவ சமாதி  அடைந்த  பிருந்தாவனத்தில் இருந்து “ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி” என்பதாக  அந்த சுலோகம் நிறைவு பெறும் உரத்த ஒலி வெளிவருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் நான் உனக்கு காட்சி தருவேன் என்று வாக்கு கொடுக்கின்றார் இராகவேந்திரர். . [ அப்பணாச்சாரியார் இயற்றிய குரு ஸ்லோகம்   ஸ்ரீ பூர்ணபோத குரு தீர்த்த பயோப்தி பாரா காமாரிமாக்ஷ விஷமாக்ஷ ஷிரஸ்ப்ருஷந்தி  பூர்வோத்தராமித தரங்க சரத்ஸுஹம்ஸா தேவாளி ஸேவித பராங்க்ரி பயோஜலக்னா  (1) ஜீவேஷ பேத குணபூர்த்தி ஜகத் ஸுஸத்வ நீசோச்ச பாவ முகநக்ர கணைஸ்ஸமேதா  துர்வாத்யஜாபதி கிலை: குருராகவேந்திர  வாக்தேவதா ஸரித்மும் விமலீகரோது  (2) ஸ்ரீராகவேந்திரஸ் ஸகலப்ரதாதா ஸ்வபாத கஞ்ஜத்வய பக்தி மத்ப்ய: அகாத்ரி ஸம்பேதன த்ருஷ்டி வஜ்ர: க்ஷமாஸுரேந்த்ரோ: அவதுமாம் ஸதாயம்  (3) ஸ்ரீராகவேந்த்ரோ ஹரிபாத கஞ்’ஜ நிஷேவணால்லப்த ஸமஸ்த ஸம்பத்  தேவ ஸ்வபாவோ திவிஜ த்ருமோயம் இஷ்ட ப்ரதோமே ஸததம் ஸபூயாத்  (4) பவ்யஸ்வரூபோ பவதுக்க தூல ஸங்காக்னிசர்ய: ஸுகதைர்யஷாலி  ஸமஸ்த துஷ்டக்ரஹ நிக்ரஹேஷோ துரத்யயோபப்லவ ஸிந்து ஸேது:  (5) நிரஸ்ததோஷோ நிரவத்யவேஷ: ப்ரத்யர்த்தி மூகத்வ நிதான பாஷ:  வித்வத் பரிக்ஞேய மஹாவிஷேஷோ: வாக்வைகரீ நிர்ஜித பவ்ய ஸேஷ:  (6) ஸந்தான ஸம்பத் பரிஸுத்த பக்தி: விக்யான வாக்தேஹ ஸுபாடவாதீன் தத்வா  ஷரீரோத்த ஸமஸ்த தோஷான் ஹத்வா ஸநோவ்யாத் குருராகவேந்த்ர:  (7) யத்பாதோதக ஸஞ்சய: ஸுரநதீ முக்யாபகாஸாதிதா: ஸங்க்யாநுத்தம புண்ய ஸங்க விலஸத்ப்ரக்யாத புண்யாவஹ:  துஸ்தாபத்ரய நாஷனோ புவிமஹா வந்த்யாஸுபுத்ர ப்ரதோ வ்யங்கஸ்வங்க ஸம்ருத்திதோ க்ரஹமஹா பாபாப ஹஸ்தம் ஷ்ரயே  (8) யத்பாத கஞ்’ஜரஜஸா பரிபூஷிதாங்கா யத்பாதபத்ம மதுபாயித மானஸாயே  யத்பாதபத்ம பரிகீர்த்தன ஜீர்ண வாச: தத்தரிஷனம் துரிதகானன தாவபூதம்  (9) ஸர்வதந்திர ஸ்வதந்த்ரோஸௌ ஸ்ரீமத்வ மதவர்த்தன   விஜயீந்த்ர கராப்ஜோத்த சுதீந்த்ர வரபுத்ரக:  (10) ஸ்ரீராகவேந்திரோ யதிராட் குருர்மேஸ்யாத் பயாபஹ:   ஞானபக்தி சுபுத்ராயு: யஷஸ்ரீ புண்யவர்த்தன:  (11) ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேத சின்ஹா தரோ குரு:   ஸர்வவித்யா ப்ரவீணோன்யோ ராகவேந்திராந்நவித்யதே  (12) அபரோக்ஷீக்ருத ஸ்ரீஷ: ஸமுபேக்ஷித பாவஜ: அபேக்ஷித ப்ரதாதாந்யோ ராகவேந்திராந்நவித்யதே  (13) தயா தாக்ஷிண்ய வைராக்ய வாக்பாடவ முகாங்கித: ஷாபானுக்ரஹ ஷக்தோன்யோ ராகவேந்திராந்நவித்யதே  (14) அக்யான விஸ்ம்ருதி ப்ராந்தி ஸம்ஷயாப ஸ்ம்ருதிக்ஷயா: தந்த்ரா கம்பவச: கௌண்ட்ய முகா யே சேந்திரியோத் பவா:  (15) தோஷாஸ்தே நஷமாயாந்தி ராகவேந்திர ப்ரஸாதத: ஓம் ஸ்ரீராகவேந்திராய நம: இத்யஷ்டர்க்ஷர மந்த்ரத: ஜபிதாத் பாவிதாந்நித்யம் இஷ்டார்த்தாஸ்யு: ந ஸம்ஷய:  (16) ஹந்துந: காயஜான்’தோஷாந் ஆத்மாத்மீய ஸமுத்பவாந் ஸர்வானபி புமர்த்தாம்ஸ்ச ததாது குருராத்மவித்  (17) இதி காலத்ரயேந்நித்யம் ப்ரார்த்தனாம் கரோதி ஸ: இஹா முத்ராப்த ஸர்வேஷ்டோ மோததே நாத்ர ஸம்ஸய:  (18) அகம்ய மஹிமா லோகே ராகவேந்திரோ மஹாயஷா: ஸ்ரீமத்வமத துக்தாப்தி சந்திரோவது ஸதாநக:  (19) ஸர்வயாத்ராபலாவாப்த்யை யதாஷக்தி ப்ரதஷிணம் கரோமி தவஸித்தஸ்ய ப்ருந்தாவன கதம் ஜலம் ஷிரஸா தாரயாம்யத்ய ஸர்வதீர்த்த பலாப்தயே  (20) ஸர்வாபீஷ்டார்த்த ஸித்யர்த்தம் நமஸ்காரம் கரோம் யஹம் தவஸங்கீர்த்தனம் வேதஷாஸ்திரார்த்த ஞானஸித்தயே  (21) ஸம்ஸாரே க்ஷயஸாகரே ப்ரக்ருதிதோகாதே ஸதாதுஸ்தரே ஸர்வாவத்யஜலக்ரஹைரனுபமை: காமாதிபங்காகுலே  நாநாவிப்ரம துப்ரமே அமிதபயஸ்தோமாதி பேனோத்கடே துக்கோத்க்ருஷ்டவிஷே ஸமுத்தரகுரோ மாம்மக்னரூபம் ஸதா  (22) ராகவேந்திரகுருஸ்தோத்திரம் ய: படேத்பக்தி பூர்வகம் தஸ்ய குஷ்டாதி ரோகாணாம் நிவ்ருதிஸ்த்வரயாபவேத்  (23) அன்’தோபி திவ்யத்ருஷ்டிஸ்யாத் ஏடமூகோபிவாக்பதி: பூர்ணாயு: பூர்ணஸம்பத்தி: ஸ்தோத்ரஸ்யாஸ்யஜபாத்பவேத்  (24) ய: பிபேத்ஜலமேதேன ஸதோத்ரேணைவாபிமந்திரிதம் தஸ்ய குக்ஷிகதாதோஷா: ஸர்வே நஷ்யந்திதத்க்ஷ்ணாத்  (25) யத்ப்ருந்தாவன மாஸாத்ய பங்கு: கஞ்’ஜோபிவாஜன: ஸ்தோத்ரேணானேன ய: குர்யாத்ப்ரதக்ஷிண நமஸ்க்ருதீ ஸ ஜங்காலோபவேதேவ குருராஜ ப்ரஸாதத:  (26) ஸோமஸூர்யோ பராகேச புஷ்யார்காதி ஸமாகமே யோநுத்தமமிதம் ஸ்தோத்ரமஷ்டோத்தரஷதம்ஜபேத் பூதப்ரேத பிஷாசாதி பீடாதஸ்ய ந ஜாயதே  (27) ஏதத்ஸ்தோத்ரம் ஸமுச்சார்ய குரோர்ப்ருந்தா வனாந்திகே தீபஸம்யோஜனாத்ஞானம் புத்ரலாபோ பவேத்ருவம்  (28) பரவாதி ஜயோதிவ்ய ஞான பக்த்யாதி வர்தனம் ஸர்வாபீஷ்டப்ரவ்ருத்தி ஸ்யாத் நாத்ரகார்யா விசாரணா  (29) ராஜசோரமஹாவ்யாக்ர ஸர்பநக்ராதி பீடனம் ந ஜாயதேஸ்ய ஸ்தோத்ரஸ்ய ப்ரபாவான் னாத்ரஸம் ஷய:  (30) யோ பக்த்யா குருராகவேந்திரசரணத்வந்த்வம் ஸ்மரன் ய: படேத் ஸ்தோத்ரம் திவ்யமிதம் ஸதா ந ஹி பவேத் தஸ்யா ஸுகம் கிஞ்சன  கிந்த்விஷ்டார்த்த ஸம்ருத்திரேவ கமலாநாத ப்ரஸாதோதயாத் கீர்த்தி: திக்விதிதா விபூதிரதுலா ஸாக்ஷீஹயாஸ் யோத்ரஹி  (31) இதி ஸ்ரீராகவேந்திரார்ய குரு ராஜப்ரஸாதத: க்ருதம் ஸ்தோத்ரமிதம் புண்யம் ஸ்ரீமத்பிர்யப்பணா பிதை:  (32) பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய ச பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே  (33) துர்வாதித்வாந்தரவயே வைஷ்ணவேந்தீ வரேந்தவே ஸ்ரீராகவேந்திர குரவே நமோத்யந்த தயாளவே  (34) இராகவேந்திரர் பிருந்தாவனஸ்தர் ஆன பின்னும்  தினமும் பிச்சாலியிலிருந்து மந்திராலயம் வந்து குருதேவரை வணங்கிச் செல்வதை கடமையாக கொண்டிருந்தார் அப்பணாச்சாரியார். மழையிலும் வெள்ளத்திலும், துங்கபத்ரையில் தன் நண்பர் அலைந்து திரிவதைக்கண்டு இராகவேந்திரர் பிச்சாலியில் ஜபாட கட்டேயில் ஒரு ஏக சிலா பிருந்தாவனம் அமைக்குமாறும் அங்கு வந்து தான் காட்சி தருவதாகவும் அருளினார். அப்பணாச்சாரியார் அமைத்த ஏக சிலா பிருந்தாவனத்தில் ஜோதி ரூபத்தில் காட்சி அளித்தார் குருதேவர். இவ்வாறு பல சிறப்புக்கள் கொண்ட பிச்சாலியை தரிசனம் செய்யலாமா அன்பர்களே. [பிச்சாலியில் துங்கபத்ரை அமைதியாக பாயும் அழகு] தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டு முதலில் அனைவரும் பரிசல் துறை சென்று சேர்ந்தோம். அங்கிருந்து துங்கபத்ரையை ஒரு பரிசல் மூலம்  கடந்து அக்கரை அடைந்தோம். பரிசலில் பயணம் செய்வதும் ஒரு சுகமான அனுபவமாகவே இருந்து பரிசல்காரர் எங்கு ஆழம் அதிகம் என்று அறிந்து லாகவமாக பரிசலை நடத்திச்சென்றார். மோகன் அவர்கள் கூறியது போல அங்கு வேன் தயாராக இருந்தது. பிச்சாலி மற்றும் பஞ்சமுகி இரண்டும் போக வேண்டும் என்று கூறினோம் அவர்களோ இருட்டி விட்டால் பரிசல் கிட்டாது எனவே பிச்சாலியில் தரிசனத்தை சீக்கிரமாக முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறி அழைத்து சென்றனர்.  பாதை ஒன்றும் அவ்வளவு நன்றாக இல்லை. வழியில் ஷேர் ஆட்டோக்களில் எவ்வளவு பேரை அடைக்கமுடியுமோ அவ்வளவு பேரை அடைத்துக் கொண்டு செல்வதைப்  பார்த்தோம். துங்கபத்ரையின்  நீரால் வளமான வயல்கள் இரு புறமும் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது. நடு நடுவே  சிறு கிராமங்கள் கண்ணில் பட்டன. இவ்வாறாக பிச்சாலி வந்து சேர்ந்தோம். முதலில் அமைதியாக ஒடும் துங்கபத்ரா நதியில் நீராடினோம். அந்தி சாயும் வேளை ஆகிவிட்டதால் வானம் செம்மைச்சாயம் பூசிக் கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் சிவப்பாக  அடித்துக் கொண்டிருந்தாள் அப்படியே ரம்மியமாக இருந்தது.   தூரத்தில் துங்கபத்ரா பாலம்  அருமையாக காட்சி தந்தது அதில் அப்போது ஒரு புகை வண்டி சென்றது அருமையாக இருந்தது. இந்த யாத்திரையில் நாங்கள்  மூன்று இடங்களில் துங்கபத்ராவில் குளித்தோம், நவபிருந்தாவனத்திற்கருகில், மந்திராலயத்தில் மற்றும் இங்கு பிச்சாலியில், இங்கு இருக்கும் சுழ்நிலை மிகவும் இரம்மியமாக இருந்தது என்பதில் எந்த ஐயமுமில்லை. [அந்தி சாயும் நேரத்தில்  துங்கபத்ரையின் அழகு - பிச்சாலி] பின்னர் ஜாபட கட்டேவில் அமைந்துள்ள ஏக சிலா பிருந்தாவனத்தை  வலம் வந்து வணங்கினோம். ஜோதி வடிவாக காட்சி தந்த ஹரி வாயு குருவுக்கு  9 ஜோதி விளக்கேற்றினோம், ஆம் நெய் விளக்கேற்றி அவரவர்கள் குறை தீர, எல்லாரும் இன்புன்றிருக்க   மனதார வேண்டிக்கொண்டோம். அகல், நெய், திரி எல்லாம் நாம் கொண்டு செல்லவேண்டும்.  இன்றும் இரவு நேரங்களில் குருநாதர் ஜோதி ரூபத்தில் காட்சி தருகிறார் என்கிறார்கள். இப்பிருந்தாவனத்திற்கு கூரை கிடையாது வெட்ட வெளியில் அமைந்துள்ளது, மூல பிருந்தாவனத்திற்குப் பின் அமைக்கப்பட்ட முதல் பிருந்தாவனம் இது என்பதெல்லாம் இந்த ஏக சிலா பிருந்தாவனத்தின் சிறப்பு.     அந்தி சாயும் அந்த நேரத்தில் துங்கபத்ரா சலசலவென்று ஒடிக்கொண்டிருக்க, பறவைகள் எழுப்பிய கீச், கீச் சத்தமும் சேர்ந்து ஒரு அருமையான தெய்வீக சூழ்நிலையை உருவாக்கியது மனதில் இனம் புரியாத ஒரு அமைதி குடி கொண்டது அப்படியே தியானத்தில் அமர அருமையான இடம்.  பின்னர் அருகில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஹனுமன் மற்றும் பல சிவலிங்கங்களை தரிசித்தோம். அவ்விடம் நிறைய நாக சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதையும் கண்டோம். மூல ஆல மரம் கீழே விழுந்து விட்டது தற்போது அரசும் வேம்பும் இனைந்து பிருந்தாவனத்திற்கு  நிழல் வழங்கிக்கொண்டு இருக்கின்றது.  [அபர்ணாச்சாரியார் குருதேவருக்கு சட்னி அரைத்த ஆட்டாங்கல்] அங்கிருந்த அபர்ணாச்சாரியாரின் வம்சத்தில் வந்த ராமசந்திர பதாதா அவர்கள் பிட்சாலயாவின் சிறப்புக்களையும், அபர்ணாச்சாரியார் மற்றும் இராகவேந்திரரின் நட்பையும் பற்றி ஆங்கிலத்தில் அற்புதமாக விளக்கிக் கூறினார். அவர் கூறிய சில செய்திகள்  பரிமளாச்சாரியர் பல கிரந்தங்களை இங்கு அப்பணாச்சாரியாரின் இல்லத்தில் இயற்றி உள்ளார்.  இராகவேந்திரர் பிச்சாலி வந்த போது அபர்ணாச்சாரியார் அவருக்கு தேங்காய் சட்னி அரைத்துக் கொடுத்த ஆட்டுக்கல்லையும், தேங்காய் உரிக்க பயன்படுத்திய கொழுவையும் காண்பித்தார். [வியாஸராஜர் பிரதிஷ்டை செய்த ஹனுமன்] பிட்சாலயாவில் அநேக நாகதேவதைகள் வாசம் செய்வதாக அவர் கூறினார். இராகவேந்திரர் அபர்ணாச்சாரியாரின் இல்லத்தில் மூல இராமருக்கு பூஜை செய்துள்ளார். மற்றும் அவர் பிட்சாலயா வந்த காலத்தில் அபர்ணாச்சாரியாரின் இல்லத்தில் ஒரு பாம்புப் புற்று இருந்ததாகவும் அதில் இருந்த  கரு நாக(ம்) தேவதை குருதேவர் அளித்த பாலை பருகி வந்ததாகவும், தமது பிருந்தாவன பிரவேசத்திற்கு முன் அவர் நாக நடமாட்டம் இருந்தால் மக்கள் துன்பப்படுவார்கள் என்று புற்றை மறைத்து நாகதேவரை சிலையாக பிரதிஷ்டை செய்தாராம் கருணை மிக்க குருநாதர்.  சுமார் 400 ஆண்டுகள் பழமையான அபர்ணாச்சாரியாரின் இல்லம்,  2009  ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்து இடிந்து விட்டதாம்,  தற்போது  மராமத்து வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன அதனால் அங்கு சென்று குருநாதர் நடமாடிய இடத்தை பார்க்கமுடியவில்லை. பிட்சாலயாவில் தினமும் மதியம் அன்னதானம் நடந்து வருகின்றது. முதலிலேயே சொல்லி விட்டால் உணவு தயார் செய்து வைக்கின்றனர்.  அவர்களின் தொலைப்பேசி எண் 08532-204108 / 9885853864.  அத்தியாயம் -15: பஞ்சமுகி [பஞ்சமுக ஆஞ்சனேயர்] பிச்சாலியில் அருமையான ஒரு தரிசனத்திற்குப் பின் பஞ்சமுகிக்கு புறப்பட்டோம். பஞ்சமுகி வந்த போது இருட்டிவிட்டிருந்தது கோவில் சாத்தி இருக்கலாம் என்று அவசர அவசரமாகச் சென்றோம். இக்கோவில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது இராகவேந்திரர் இங்கு சுமார் 12 ஆண்டுகள் தவம் செய்த பஞ்ச முக ஆஞ்சனேயர் குகை உள்ளது  இந்த குகையில்தான்  பஞ்ச முக அனுமன்  இங்கு பிரத்யக்ஷமாகி  குரு தேவருக்கு  பிரஹ்லாதன் யாகம் செய்த இடத்தில்  பிருந்தாவனஸ்தர் கொள்ளுங்கள் என்று கூறியருளினார். மேலும் வேங்கடேசரும், மஹாலக்ஷ்மித் தாயாரும் குருநாதருக்கு இக்குகையில் பிரத்யக்ஷ்யமாகி அருள் புரிந்துள்ளனர். இராகவேந்திரர் பூஜித்த சிவலிங்கமும்  அவர் பிரதிஷ்டை செய்த பிள்ளையாரும், நாகராஜாவையும் தரிசிக்கலாம்.  இராகவேந்திரர் தவம் செய்த இடத்தில் ஒரு பிருந்தாவனம் அமைத்துள்ளனர். இங்கு ஒரு பாறையில் பஞ்சமுக ஆஞ்சனேயரும், வெங்கடேசரும், பெரிய பிராட்டியாரும், சிவபெருமானும் பிரத்யக்ஷமாகிய இடங்கள் சந்தனம் மற்றும் மலர் மாலைகளில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவர்களை திவ்யமாக  தரிசனம் செய்தோம்.  [பஞ்சமுகி] மயில்இராவணன் யுத்தத்தின் போது  இராம-லக்ஷ்மணர்களை கடத்திக்கொண்டு பாதாள லோகத்தில் சிறையில் அடைத்து விட்டான். அவர்களை விடுவிக்க ஹனுமன்   விபீஷணரிடம் மயில் இராவணன் அரண்மணைக்கு எவ்வறு செல்வது என்று கேட்க, அவரும்   இரு வழிகள் உள்ளன ஒன்று இராவணன் அரண்மணை வழியாக செல்வது, இரண்டாவது தண்டகாரண்யத்தின் வழியாக செல்வது. தண்டகாரண்யம் செல் அங்கு எருக்கலாம்பாள் உனக்கு உதவி செய்வாள் என்று கூறினார். அனுமனும் தண்டகாரண்யம் சென்று அம்பாளை வேண்ட அவளும் சந்திரசேனன் என்ற இராமபக்தர் உனக்கு உதவுவார் என்று உபாயம் கூறி அனுப்பினாள். சந்திரசேனன் ஐந்து வண்டுகளில் மயில்ராவணனின் உயிர் நிலை ஐந்து வண்டுகளில் உள்ளதால் அனைத்தையும் ஒரே சமயத்தில் கொல்ல வேண்டுமென கூறினார். எனவே அனுமன்   விஷ்ணு பகவானின் அவதாரங்களைக் கொண்ட பஞ்சமுக ஆஞ்சனேயராக மாறி ஒரே சமயத்தில் ஐந்து வண்டுகளையும்  தின்று மயில்ராவணனை கொன்று   இராம லக்ஷ்மணர்களை விடுதலை செய்தார். இவ்வாறு ஆஞ்சனேயருக்கு எருக்கலாம்பாள் உதவியதால் இன்றும் இக்குகைக்கோவிலின் பின்னர் எருக்கலாம்பாளுக்கு ஒரு சன்னதி உள்ளது. அம்மனுக்கு வளையல் சார்த்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.    பஞ்சமுக ஆஞ்சனேயரின் ஐந்து முகங்களுள் ஹனுமான்  கிழக்கு  நோக்கி இருக்கிறார், இவர் மனத் தெளிவைத் தருகிறார்.  நரசிம்மர்  தெற்கு நோக்கியிருக்கிறார், இவர் வெற்றியையும் அஞ்சாமையையும் தருகிறார்.  மேற்குப்  பார்த்த  கருடன் தீய சக்திகளையும்  விஷங்களையும்  நீக்கி அருள்கிறார்.  வடக்கு நோக்கிய வராஹர்  வளமையையும்  செல்வத்தையும் நல்குகிறார்.  வானத்தை  நோக்கியுள்ள ஹயக்ரீவர்  அறிவையும் நல்ல குழந்தைகளையும் அளிக்கிறார்.  ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக அனுமனை கம்பர் பாடிய பஞ்சபூதப் பாடலால் வணங்கினோம்?  அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்று தாவி அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற ஆரணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான். பொருள்: பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு புத்திரன் அனுமன், மற்றொரு பூதமான கடலைத் (தண்ணீர்) தாண்டி ஆகாய வழியில் ஸ்ரீ இராமருக்காக பூமிப் பிராட்டியின் மகள் சீதா தேவியைக் கண்டு இலங்கைக்கு நெருப்பு(அக்னி) வைத்தார் அந்த இராமதூதன் நம்மை காப்பான். அருகில் ஒரு சன்னதியில் ஹனுமனின் பாதுகைகள் உள்ளன, கேரேபுதூர் பீமண்ணாவின் கனவில் ஹனுமன் தோன்றி தனக்கு பாதுகைகள் செய்யுமாறு கூறினார், காலின் அளவு எங்கு கிடைக்கும் என்று உணர்த்தினார். காலை அவ்விடத்தில் சென்று பார்த்த போது அஞ்சனை மைந்தனின் காலடித் தடம் இருந்தது. அவரும் அந்த அளவிற்கு பாதுகைகள் செய்து அர்பணித்தார். தினமும் காலையில் அர்சகர்கள் சன்னதியைத் திறக்கும் பொது பாதுகையில் புல், மண் ஒட்டியிருப்பதையும் சிறிது தேய்ந்திருப்பதையும் காண்கின்றார்களாம், ஐந்து வருடத்திற்கு ஒரு முறை புது பாதுகைகள் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன. இரவில் சென்றதால் புஷ்பக விமானம் போன்ற பாறை, மெத்தை தலையணை போன்ற பாறை ஆகியவற்றை காணமுடியவில்லை. கோவிலுக்கு அருகே உள்ள கடைகளில் காரப்பொரி மற்றும்   மசால்பொரி விற்கிறார்கள். அருமையாக இருக்கும் என்று மோகன் அவர்கள் கூறினார்கள். ஆளுக்கொரு பொட்டலம் வாங்கிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டே பரிசல் துறை வந்தோம். அக்கரையில்   மின் ஓளியில் மந்திராலயம் அருமையாக காட்சி தந்தது.  சுமார் 7  மணியளவில் இருட்டில் திக் திக் என்று மனது அடித்துகொள்ள,    துங்கபத்ராவை மனதில் இராகவேந்திரர் துதியுடன் கடந்து சுகமாக இக்கரை அடைந்தோம்.  [ஹனுமன் பாதம்] இரவில் தினமும் மர, வெள்ளி, தங்கத்தேர் கோவில் வலம் உள்ளது இப்போது சென்றால் தரிசிக்கலாம் என்று மோகன் அவர்கள் கூறினார்கள். எனவே ஒரு சிலர் கோவிலுக்கு சென்றோம், முடியாதவர்கள் தங்கும் விடுதிக்கு சென்றனர். அந்த அற்புத தரிசனத்தை அடுத்து காணலாம் அன்பர்களே.       அத்தியாயம் -16 : யாத்திரை நிறைவு [வெள்ளித்தேர் பவனி] துங்கபத்ரையை  கடந்தவுடன் ஒய்வெடுக்க விரும்பியவர்களை விடுதிக்கு அனுப்பி விட்டு மற்றவர்கள் ஆலயத்திற்கு விரைந்தோம். நாங்கள் செல்லும் போது மரத்தேர் பவனி முடிந்து விட்டிருந்தது. சுவாமியை வெள்ளித்தேருக்கு எழுந்தருளப் பண்ணிக் கொண்டிருந்தனர். அருமையாக வெள்ளித்தேர் பவனியையும் பின்னர் அதற்கடுத்து தங்கத்தேர் பவனியையும் அதற்குப்பின்னர் நடந்த ஊஞ்சல் உற்சவத்தையும் மனதார வாயு குருதேவருக்கு நன்றியுடன் கண்டு களித்தோம். அனுதினமும் தேரோட்டமும் ஊஞ்சல் உற்சவமும் கண்டருள்வது பிரஹ்லாதர் திருமேனியாகும். தேரோட்டம் நிறைவடைந்தவுடன் வேத கோஷத்துடன் ஊஞ்சல் சேவை மிகவும் அற்புதமாக நடைபெற்றது, சேவித்தது மனதிற்கு மிகவும் அமைதியாக இருந்தது, அனைத்து  தேவைகளையும் குருதேவர் கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்தது. பின்னர் நடைபெற்ற ஆரத்தியையும் சேவித்து மிகுந்த மன மகிழ்ச்சியுடன் விடுதி திரும்பினோம். [தங்கத்தேர் பவனி] யாத்திரையின் மூன்றாம் நாள் காலை மறுபடியும் குரு தேவரை தரிசனம் செய்ய சென்றோம். முதலில்காலையில் குரு நாதருக்கு நடைபெற்ற அபிஷேகத்தையும் பின்னர் நடைபெற்ற    ஆரத்தியையும் சேவித்தோம்.  இன்று தர்ம தரிசன வழியில்  சென்று தரிசனம் செய்யலாம் என்று அந்த வழியாக சென்றோம். அவ்வாறு சென்ற போது ஹனுமனையும் , சிவபெருமானையும் அருகில் இருந்து சேவித்தோம், சிவபெருமானுக்கு அருமையாக வெள்ளிக்கவசம் சார்த்தியிருந்தர்கள்.  பின்னர் தீர்த்த பிரசாதம் சுவீகரித்துக்கொண்டு வெளியே வந்த போது  பின் மண்டபத்தில் வேத கோஷம்  கேட்டது. மூல இராமருக்கும் மற்ற பூஜா மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொண்டிருப்பது   புரிந்தது. உடனே சென்று அங்கு அமர்ந்து அந்த பூஜையில் பங்கெடுத்துக்கொண்டோம். .  [ஊஞ்சல் சேவை] [மூல மூர்த்திகளுக்கு பூஜை] [பரமபதநாதர் சேவை] [மூல இராமர் சேவை] மூல இராமரையும், பரமபதநாதரையும் அற்புதமாக தரிசனம் செய்தோம். பின்னர் சுவாமிகள் கொடுத்த அட்சதைப் பிரசாதம் மற்றும் குருதேவரின் டாலர் பெற்று மிக மகிழ்ச்சி  அடைந்தோம்.  பின்னர் வெளியே வந்து அடி அளந்து வலம் வந்தோம். மதிய ஆரத்தியும் கண்டோம்,  அருமையான தரிசனம் தந்ததற்கு குருதேவருக்கு மனதார நன்றி தெரிவித்துக்கொண்டு, விடுதிக்கு திரும்பி வந்து, பின்னர் ஆட்டோ பிடித்து மந்திராலயம் ரோடு வந்து மும்பையில் இருந்து சென்னை வரும் மும்பை மெயில் புகைவண்டி மூலம் சென்னை வந்து சேர்ந்தோம். அனைவருக்கும் ஒரே பெட்டியில் படுக்கை  வசதி கிடைத்தது, ஆனால் தனித்தனி இடத்தில் இருந்தது.  சென்னை வந்த பின்   அருமையாக எல்லா  ஏற்பாடுகளும் செய்து அழைத்துச் சென்று அருமையாக தரிசனம் செய்து வைத்த மோகன் அவர்களுக்கும், தனுஷ்கோடி அவர்களுக்கும் மற்றும் உடன் வந்த அனைவருக்கும் நன்றி விடைபெற்றோம்.  இவ்வாறு நவபிருந்தாவனம் மற்றும் மந்திராலயம் யாத்திரை அவனருளால் அருமையாக நிறைவு பெற்றது.   மந்திராலயத்தில் எவர் ஒருவர் 72 மணி நேரம் தங்கி தியானம் செய்கிறாரோ அவர் பல சித்திகளை அடைகிறார். அது மட்டும் அல்லாமல் ஸ்ரீராகவேந்திரரின் தரிசனத்தையும் பெறுகிறார் என்பது ஐதீகம். மந்திராலயம் செல்பவர்கள் பின்வரும் இடங்களையும் தரிசனம் செய்யலாம். இராகவேந்திரரது பாதுகைகள் : 339 வருடங்களாக ராகவேந்திர சுவாமி தமது திருப்பாதங்களில் அணிந்து ஆசீர்வதித்து கொடுத்த பாதுகைகள். பரம்பரை பரம்பரையாக ஒருவரது வீட்டில் உள்ளது. பாலாஜி மந்திருக்கு அருகில் இவ்வீடு உள்ளது. பாலாஜி மந்திர் : ராகவேந்திரர் தமது திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வெங்கடசபெருமாள் கோவில் ராகவேந்திரர் பிருந்தாவனத்தின் வடகிழக்கு திசையில் உள்ளது. அவர் நட்ட பூச்செடிகள் பச்சை பசேலென பூத்துக் குலுங்கும் அதிசயத்தை இன்றும் காணலாம். இராமலிங்கசுவாமி திருக்கோயில் : இதுவும் இராமர் ஸ்தாபித்து வழிபட்ட சிவன் கோவிலாகும். எனவே ராமலிங்க சுவாமி எனப்படுகிறார். 3 அடி உயர பிள்ளையாரும், மற்றொரு லிங்கமும் இத்திருக்கோயிலின் காலத்தை நமக்கு பறைசாற்றுபவையாகும். வீரபத்திரர் திருக்கோயில்: ராமலிங்கசுவாமி திருக்கோயிலை அடுத்து உள்ளது. 4 அடி உயர வீரபத்திரர் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அஷ்டமி, பவுர்ணமி நாட்களில் வெற்றிலை மாலை பிரபைகள் வைத்து அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. ஆஞ்சநேயர் கோயில்: பாலாஜி மந்திரிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு வலதுபுறம் திரும்பும் இடத்தில் உள்ளது. மிகப்பழமையான ஆலயம். ஆஞ்சநேயரின் வாலில் மணியுடன் அபயஹஸ்தத்துடன் காட்சி அளிக்கிறார். முன்புறமுள்ள தூண்களில் சிவன், விஷ்ணு உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பஸ்ஸாவரம் ஷீரடி பாபா கோவில் : ரெயில் நிலையத்தில் இருந்து இராகவேந்திரர் பிருந்தாவனம் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் பஸ்ஸாவரத்தில் சாலையின் வலது புறத்தில் உள்ளது. மாதவரம் இராமர் அமர்ந்த கல்: தொடர்வண்டி நிலையத்தில் இருந்து மந்திராலயம் செல்லும் வழியில் ராய்ச்சூர் கூட்ரோட்டை அடுத்து சிறிது தூரத்தில் சாலை வலதுபுறம் திரும்பும்போது இடதுபுறத்தில் சிறிது தொலைவில் தகரக்கொட்டகை ஒன்று தெரியும். அதுவே ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதியானபோது அமர்ந்த கல்லின் மற்றொரு பாதியாகும். இதன் மீதுதான் இராமபிரான் இவ்வழியே செல்லும்போது அமர்ந்தார் என்று கூறி இக்கல்லையே இராகவேந்திரர் எடுத்துவரச் செய்து அதன் மீது அமர்ந்து பிருந்தாவனம் எழுப்பச் செய்தார். அதன் ஒரு பகுதியே இங்கு ஆஞ்சநேயர் சிலை வடிக்கப்பட்டு தற்போது சிறிய கோவிலாக உள்ளது. மாதவரம் லக்ஷ்மி நரசிம்மர் கோயில்: தொடர்வண்டி நிலைத்தில் இருந்து மந்திராலயம் செல்லும் வழியில் ராய்ச்சூர் கூட்ரோட்டை அடுத்து சிறிது தொலைவில் சாலையின் இடதுபுறம் உள்ளது. பல காலங்கள் பூமிக்கடியில் புதைந்து கிடந்த நரசிம்மர் சிலை, தற்போது மிகச்சிறப்பான ஆலயமாக கட்டப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை வாசித்த அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.  ஹரிவாயு குருவின் அருளால் அனைவரும் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்ற சுகமாக வாழ அவர் தாள் வணங்கி பிரார்த்தித்துக்கொள்கிறேன். குருவே சரணம். சுபம் FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.