[]                     நடிக்கப் பிறந்தவள் (சிறுகதைத் தொகுப்பு)  நிர்மலா ராகவன்     அட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப் - mrishansha@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.        பொருளடக்கம் முன்னுரை 4  1. பந்தயம் 5  2. தாம்பத்தியம் = சண்டை + பொய் 9  3. விலகுமோ வன்மம்? 12  4. ஆன்மா ஒன்று ஓலமிடுகிறது 17  5. விருந்தோம்பலுக்கு ஒரு பாலம் 20  6. மனித இயந்திரம் 23  7. பெயரில் என்னமோ இருக்கு! 26  8. முதுகில் ஒரு குத்து 30  9. நடிக்கப் பிறந்தவள் 33  நிர்மலா ராகவனைப்பற்றி 36  முன்னுரை   ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத கதைகளின் தொகுப்பு இது. தொடர்பு என்று தேடினால், மனிதனின் உணர்ச்சிகளை, மனதின் வக்கிரங்களை, பிரதிபலிக்கின்றன என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏமாற்றுவது, ஏமாறுவதால் உண்டான ஆத்திரம், துக்கம், பொய் எல்லாம் அடங்கியிருக்கின்றன. நீங்களும் இவைகளில் எங்காவது இருப்பீர்கள். அட, காதலும் இல்லாமலா! படித்துப் பாருங்களேன்! நன்றி. நிர்மலா ராகவன் மலேசியா                                         1. பந்தயம்   அந்தப் பெரிய மண்டபத்துக்குள் நுழையும்போதே செல்லப்பா பாகவதருக்கு நா உலர்ந்துபோயிற்று. ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் பின்னுக்கு இழுத்தன. தோரணங்கள் என்ன, மேடையைச் சுற்றி வண்ண வண்ண விளக்குகள் என்ன என்று, கல்யாணக்கோலத்தில் இருந்தது மண்டபம். இருபதுக்குக் குறையாத வாத்தியங்கள் அன்று நிகழப்போகும் பாடல் போட்டியின் இறுதிச் சுற்றுக்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன. அந்த மேடைமேல் தானும் இருக்கப்போகிறோம்! கடந்த வாரம்வரை ஓர் இன்பக் கனவென அதை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தவருக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. அருகிலிருந்த இருக்கையைப் பிடித்துக்கொண்டு சுதாரித்துக்கொண்டார். பூமி பிளந்து பாவிகளை உள்வாங்கிக் கொள்வதெல்லாம் இதிகாச புராணங்களில்தான் நடக்குமோ? இந்தக் கலிகாலத்தில் ஜக்கு போன்ற அயோக்கியர்கள்தாம் தரைக்க முடியுமோ? `நீ மட்டும் பெரிய யோக்கியனா?’ என்று அவரது அந்தராத்மா இடித்துரைத்தது. `எங்காவது ஓடிவிட மாட்டோமா!’ என்ற ஏக்கம் பிறக்க, `கொன்று போட்டுவிட மாட்டார்கள்?’ என்று எதிரெண்ணம் ஒன்று எழுந்து பயமுறுத்தியது.   அதுதான் வெளிப்படையாகவே சொல்லிப் போனாரே அந்த மனிதர், `நாங்க நல்லவங்களுக்கு நல்லவங்க. பொல்லாதவங்களுக்கு யமன்!’ என்று! செல்லப்பாவின் வீட்டுக்கு முதல்நாள் வந்திருந்திருந்தவர், வீட்டுச் சுற்றுச்சூழலைப் பார்த்தபோதே ஒரு முடிவுக்கு வந்திருந்தார். “என் பெயர் ஜக்கு -- ஜகன்னாதன்! ஒங்களால எனக்கு ஒரு காரியம் ஆகணுமே!” மிகப் பணிவாகப் பேசினார். ஒரு சிறு கிராமத்தில் எக்காலத்திலோ கும்பாபிஷேகம் பண்ணப்பட்ட கோயிலில் வாத்தியம் வாசிக்கும் பரம்பரையில் வந்தவர் என்று செல்லப்பாவின் முன்னோர்களுக்கு அந்த வீடு கொடுக்கப்பட்டிருந்தது. கோயிலே சிதிலம் என்றால் வீட்டைப்பற்றிக் கேட்கவா வேண்டும்! இந்த மனிதரையா தன் கைக்குள் போட்டுக்கொள்ள முடியாது! ஆனால், அவர் எதிர்பார்த்தபடி செல்லப்பா அவ்வளவு எளிதாக மசியவில்லை. ஜக்கு சொல்வதைக் கேட்டுவிட்டு, “அது இசைக்குச் செய்யற துரோகமில்லே,” என்று மறுத்தார். “ஒங்க மனைவிக்குப் புத்துநோயாமே! நீங்க எவ்வளவு உழைச்சாலும், இந்த ஜன்மத்தில அஞ்சு லட்சத்தைப் பாக்க முடியுமா? இதை வெச்சுக்கிட்டு நல்லா வைத்தியம் பாக்கலாமில்ல? பிடிங்க!” ஒரு பெட்டியை அருகிலிருந்த முக்காலிமேல் வைத்தார் அந்த விடாக்கண்டர். பெட்டியைத் திறந்து காட்டியபோது செல்லப்பாவின் கண்கள் அகன்றதைக் கவனிக்கத் தவறவில்லை அவர். “நீங்களும் எத்தனையோ வருஷமா, `சாமி காரியம்’னு செஞ்சுக்கிட்டிருக்கீங்கல்ல? அந்தக் கடவுளே என் ரூபத்திலே வந்திருக்குன்னு நினைச்சுக்குங்க,” என்று நைச்சியமாகப் பேசியவர், “இதிலே ஒரு லட்சம் இருக்கு. வெச்சுக்குங்க. மீதியை விழா முடிஞ்சதும், நானே ஒங்ககிட்டே மண்டபத்திலேயே குடுத்துடறேன். என்ன?” “ஐயோ!” பதறினார் செல்லப்பா. “சரி, வேண்டாம். யாராவது பாத்துட்டா வம்பு! அடுத்த நாள் காலையிலே இங்கேயே வந்து குடுத்தாப்போச்சு!”  வந்த காரியம் நல்லவிதமாக முடிந்தது என்ற திருப்தியுடன் எழுந்துகொண்டார். “கைநீட்டி காசு வாங்கியிருக்கீங்க. கல்யாணிக்குப் பரிசு கிடைக்கக் கூடாது. அவ்வளவுதான். அது ஒங்க கையிலதான் இருக்கு”. கல்யாணியின் விதவைத் தாய் ஓர் இசை ஆசிரியை. கருவிலிருந்தே பாட்டைக் கேட்டு வளர்ந்த பெண்! சோடையாக இருக்குமா? உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஜக்குவைப்போன்ற பலர் ஒன்று சேர்ந்து, போட்டி முடிவைக் குறித்து பொதுமக்களைப் பந்தயம் கட்ட வைத்திருந்தார்கள். மக்களின் கணிப்புப்படி கல்யாணிக்குத்தான் முதல் இடம். அப்படி ஏடாகூடமாக ஏதாவது நடந்துவிட்டால், பந்தயம் கட்டியவர்களுக்கு வாரிக் கொடுத்து, நஷ்டப்பட வேண்டியிருக்குமே என்று முன்ஜாக்கிரதையாக இருந்தார்கள். ஜக்கு போனதும், “யாருங்க?” என்று மெல்லிய குரலில் விசாரித்தாள் மனைவி. “ஒனக்கு வைத்தியம் செய்ய சாமி அனுப்பினவரு!” என்று கூறினாலும், செல்லப்பாவின் மனதில் நிம்மதி இல்லை. குறுக்கு வழியில் சம்பாதித்தாவது மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமா? நிகழ்ச்சி ஆரம்பிக்க சில நிமிடங்களே இருந்தன. “வந்துட்டீங்களா, மாமா? இந்தப் பக்கமா நில்லுங்க. நமஸ்காரம் பண்ணறேன்!”   ஒரு வருடத்துக்கு முன்னால் அவர் யாரோ, அவள் யாரோ! ஆனால், இந்தச் சில மாதங்களாக, அவள் பாடிய ஒவ்வொரு வரிக்குப் பிறகும் அவர் தன் வாத்தியத்தில் அதையே திரும்ப வாசிக்க வேண்டிய நிலையில், இசைத்துறையில் தனக்கிருந்த நீண்டகால அனுபவத்தால் அவளுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருந்தார். குருவென மதித்தவரின் காலில் விழுந்து கும்பிட்டாள் கல்யாணி. செல்லப்பா காலைப் பின்னால் இழுத்துக் கொள்ளாதிருக்க அரும்பாடு பட்டார். “ஏன் மாமா, முகம் வெளுத்தாப்போல இருக்கு? ராத்திரி எல்லாம் தூங்கலியா?” கரிசனத்துடன் விசாரித்தவள், தானே ஒரு காரணத்தையும் கற்பித்துக்கொண்டாள். “படபடப்பா இருந்திச்சோ?” “அ.. ஆமா. இல்ல. லேசா காய்ச்சல்!” “அதெல்லாம் சரியாப் போயிடும். ஒங்களுக்குத்தான் வாத்தியத்தைக் கையில எடுத்தா, ஒலகமே மறந்துடுமே!” உற்சாகமூட்ட நினைப்பதுபோல கலீரென்று சிரித்தாள். `ஐயோ! சிரிக்காதேயேன்!’ என்று அலற வேண்டும்போல இருந்தது செல்லப்பாவுக்கு. வாத்தியத்தைக் கையில் எடுத்தால் தனக்கு உலகமே மறந்துவிடுமாம்! அதுதான் ஜக்கு கூறிப்போனதை மறக்காமல், கல்யாணியின் ஐந்து கட்டை ஸ்ருதிக்குச் சற்றே குறைவாக வாத்தியத்தில் வைத்துக்கொண்டு வந்தோமா? இசை கற்றிருந்தாலும் சரி, இல்லை, அதுபற்றி எதுவும் தெரிந்திராவிட்டாலும்கூட, இரண்டையும் ஒரே சமயத்தில் கேட்பவருக்கு நாராசமாக ஆகிவிடுமே! அவர்களல்லவா வாக்களிக்கப்போகிற நீதிபதிகள்!   பலத்த கரகோஷத்துக்கு நடுவே, தொலைகாட்சி நிலையத்தாரின் உபயமான புதிய ஆடையை அணிந்து, வாய்கொள்ளாத சிரிப்புடன் கல்யாணி மேடைக்கு வந்தாள். பாட்டின் முதல் வரியைப் பாடினாள். அடுத்து, செல்லப்பாவின் முறை. அவரைத் திரும்பிப் பார்த்து, மென்மையாகச் சிரித்தாள். அடுத்த வரி. அதற்கடுத்த வரி. கல்யாணி பாடிக்கொண்டே போனாள். நீதிபதிகள் முகத்தைச் சுருக்கினார்கள். சபையிலிருந்தவர்களிடமும் `கசமுசா’ என்று பேச்செழுந்தது. கல்யாணி அவர் பக்கம் திரும்பினாள். முகத்தில் கேள்விக்குறி. எங்கே தவறு நிகழ்ந்தது என்று யோசிக்கவெல்லாம் அது நேரமல்ல. வலக்கை மைக்கைப் பிடித்திருக்க, இடது ஆள்காட்டி விரல் ஒரு காதுக்குள் நுழைந்து, வாத்திய இசையை மறைக்கப் பார்த்தது. தானும் புதிய புடவை அணிந்து, பெருமையுடன் சபையில் அமர்ந்திருந்த தாயின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடுவதை அவள் கவனிக்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டு, தன் குரலிலேயே கவனம் செலுத்தினாள். பாட்டு முடிந்ததும், நீதிபதி, “இந்தச் சூழ்நிலையிலும் நீங்க ஸ்ருதி தவறாம பாடினதைப் பாராட்டித்தான் ஆகணும்!” என்று தவறு எங்கு, எப்படி நிகழ்ந்தது என்று சூசகமாகச் சுட்டிக் காட்டியபோதும், அவளால் செல்லப்பாவைத் தப்பாக நினைக்க முடியவில்லை. “பாவம் மாமா நீங்க! காய்ச்சலோட வாசிக்க முடியல,” என்று அனுதாபம் காட்டினாள், தனக்குப் பரிசு கிடைக்காததைப் பெரிதாக எண்ணாது. செல்லப்பாவுக்கு வார்த்தைகளே வரவில்லை. நெற்றியில் அடித்துக்கொண்டார். மறுநாள்! அவர் மனைவிதான் நிரந்தரமாக அவரைப் பிரிந்து போனாள் -- பிறரை ஏமாற்றிச் சேர்த்த பணம் தனக்கு வேண்டாம் என்பதைப்போல். ஜக்கு வரவில்லை. ஒரு நாள் அவரைத் தேடி வந்தாள் கல்யாணி. அவளுடன் நாகரிகமான இளைஞன் ஒருவன். “மாமா! போட்டி அன்னிக்கு ஒங்களுக்கு ஒடம்பு முடியாம போனதும் நல்லதுக்குத்தான். ஜெயிச்சிருந்தா, ஊர் ஊராப் போய் பாடியிருக்கணும். இப்ப வெளிநாட்டுக்கே போகப்போறேன்!” வந்திருந்தவன் பேசினான்: “கல்யாணியை டி.வியில பாத்ததுமே, `எனக்கு இவதான்!’னு முடிவு செஞ்சுட்டேன். போட்டியில பரிசு கிடைக்கலியேன்னு இவளுக்கு வருத்தமா இருந்திருக்கும். ஆனா, நான் சந்தோஷமா ஒடனே பறந்து வந்து, பெண் கேட்டுட்டேன்!” “மொதல் பத்திரிகை ஒங்களுக்குத்தான் குடுக்கணும்னு வந்தோம், மாமா!” இருவரும் மாறி மாறி, ஸ்ருதி பேதமில்லாத இரட்டை நாயனங்கள்போல் பேசினார்கள். சேர்ந்து அவர் காலில் விழுந்தார்கள். ஆசி கூறக்கூட அவர் நாக்கு புரளவில்லை. சற்று யோசித்துவிட்டு, ஏதோ முடிவுக்கு வந்தவராக, “இரும்மா!” என்று உள்ளே போனவர், ஒரு சிறு பெட்டியைக் கொண்டுவந்தார். “இதிலே லட்ச ரூபா இருக்கு. என்னோட கல்யாணப் பரிசா இருக்கட்டும்”. அதைப் பார்க்காமலேயே, “இப்போ எதுக்கு, மாமா? கல்யாணத்துக்கு வர்றப்போ குடுங்க”. ஒரு சிறிய மிரட்டலுடன், குழந்தைமாதிரி பிடிவாதம் பிடித்தாள் கல்யாணி. “ஒங்க மாமி செத்துப்போய் இன்னும் ஒரு மாசம்கூட ஆகலே, குழந்தே. நான் வரதுக்கில்ல!” “எத்தனை பணம்னு சொன்னீங்க?” அப்போதுதான் அவளுக்கு உறைத்தாற்போல் கேட்டாள். “ஒரு லட்சமா! அப்படியோவ்!” சிரித்தாள். “என்ன மாமா? லாட்டரி ஏதும் அடிச்சீங்களா?” தளர்ந்த குரலில் ஒப்புக்கொண்டார்: “இல்லேம்மா. ஒரு பந்தயத்திலே கிடைச்சது!” அவ்வார்த்தையைக் கேட்டதும், அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள் கல்யாணி. மகளுக்குப் பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் அம்மா கூறியது இப்போது கேட்டது: `மனுசன் எவங்கிட்டேயோ பணம் வாங்கிக்கிட்டு, வேணுமின்னே ஸ்ருதியைக் குறைச்சு வாசிச்சிருக்கான். அப்போதானே ஒனக்குப் பரிசு கிடைக்காம பண்ணமுடியும்?’ `சேச்சே! மாமா தினமும் சாமி காரியம் பண்றவரு! அப்படியெல்லாம் தப்புத்தண்டாவுக்குப் போகமாட்டாரு. என்னை அவர் பெறாத மகளாத்தான் நினைச்சுக்கிட்டிருக்காரும்மா,’ என்றெல்லாம் இந்த மனிதரையா விட்டுக்கொடுக்காமல் பேசினோம்! கல்யாணி செல்லப்பாவைப் பார்த்த பார்வையில் ஒரு வெறுப்பு. அப்பார்வையில், `ஒங்களை எவ்வளவு ஒசத்தியா நினைச்சிருந்தேன்!’ என்ற வேதனைதான் அதிகமிருந்ததோ?   அதைத் தாளமாட்டாது தலைகுனிந்தார் செல்லப்பா. “வாங்க, போகலாம்!” அவரிடம் சொல்லிக்கொள்ளாமலேயே வெளியே விரைந்தாள் கல்யாணி. பணப்பெட்டி அங்கேயே இருந்தது. உள்ளே புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், கத்தை கத்தையாய்!                                     2. தாம்பத்தியம் = சண்டை + பொய்   அதிவேகமாக உள்ளே நுழைந்த மகளைப் பார்த்தாள் வேதா. அலுப்பாக இருந்தது. வழக்கம்போல், ஆத்திரமும், தன்னிரக்கமுமாகத்தான் இருந்தாள் பத்மினி. `ஒரே குழந்தையுடன் நிறுத்திக்கொண்டால் அதிக செலவாகாமல் தப்பிக்கலாம். வேலையும் மிச்சம்!’ என்று எப்போதோ எண்ணியது தவறோ என்ற சிந்தனை உதித்தது. யாருடன்தான் ஒத்துப்போக முடிந்தது இவளால்! “வேலை முடிஞ்சு நேரா வர்றியா?” அனுசரணையாகக் கேட்பதுபோல் கேட்டாள். “என்ன சாப்பிடறே?” “ஒரு சொட்டு விஷம்!” “அதெல்லாம் இந்த வீட்டிலே கிடையாது. தோசை வேணுமா? மாவு இருக்கு. ஆனா, புளிக்கும்”. “விஷமே சாப்பிடறேன்னு சொல்றேன். என்னமோ, புளிப்பு, அது, இதுன்னு! ஒண்ணும் வேண்டாம், போ!” முணுமுணுத்தபடியே தன் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி. அவள் கணவன் வீட்டுக்குப் போய் ஒரு வருடம் ஆகியிருந்தாலும், அவள் குணம் புரிந்து,  அந்த அறையை அப்படியே விட்டு வைத்திருந்தார்கள். உள்ளே நுழைந்தவள் அதே வேகத்தில் திரும்ப வந்தாள். “நல்லா பாத்துப் பாத்து எனக்குப் பண்ணி வெச்சீங்களே, ஒரு கல்யாணம்!” என்று தாயைச் சாடினாள். “மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? படிப்பு இருக்கு. கைநிறைய சம்பளம் வாங்கறார்!” தனக்குப் பிடிக்காதவருக்கு அம்மாவே வக்காலத்து வாங்குவதா! பச்சைத் துரோகம்!  பத்மினி பொருமினாள். “தான்தான் ஒசத்தின்னு கர்வமும் இருக்கு. அதை விட்டுட்டியே!” வேதாவுக்கு அலுப்பாக இருந்தது. வாரம் தவறாமல் இவள் கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு தாய்வீட்டுக்கு வந்துவிடுவது எப்போதுதான் முடியுமோ! “அவர் செய்யறதுதான் ரைட்டு. நான் என்ன செஞ்சாலும், தப்பு கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்கணும்மா அவருக்கு!” அதே சமயத்தில், “அவ செய்யறது தப்புன்னு ஒத்துக்கவே மாட்டாம்மா. அதுதான் பிரச்னையே!” என்று தன் தாயிடம் முறையிட்டுக்கொண்டிருந்தான் கார்த்தி. “அவ குணம்தான் புரிஞ்சு போச்சில்ல? அவ என்ன செஞ்சாலும் கண்டுக்காதே,”  என்று அறிவுரை வழங்கினாள் மங்களம். “அது எப்படி? இன்னிக்கு உப்புமா பண்ணியிருந்தா. பேரிலே உப்பு இருக்குதான். அதுக்காக கரண்டி கரண்டியா உப்பை வாரிப் போடணுமா?” “அப்படியே தூக்கிக் கொட்டிட்டு, ஹோட்டல்லே போய் சாப்பிட்டிருக்கணும் நீ!” “தோணிச்சு. ஆனா அவ கத்துவாளேன்னு பயந்து, ரொம்ப கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடிச்சேன்”. மங்களத்திற்கு அவனுக்குப் பரிந்து பேசத் தோன்றவில்லை. ஒரே மகன் என்று பார்த்துப் பார்த்து, அவனுக்குப் பிடித்ததாக சமைத்துப்போட்டது  ஒரு காலம். இன்று அவன் அவளுக்கு மகன் மட்டுமில்லை. இன்னொரு பெண்ணின் துணைவன். அவனைப்போலவே தானும் சிறுபிள்ளைத்தனமாக, விட்டுக்கொடுக்காமல் இருந்தால் எப்படி! “நிறைய படிச்ச பொண்ணு வேணும்னு சொன்னே. அவ படிச்சுக்கிட்டே இருந்ததிலே  சமைக்க  கத்துக்க நேரமில்லாம போயிருக்கும்னு அப்பவே தெரியாம போச்சு! இனிமே என்ன செய்யறது! விட்டுப் பிடி!” மகன் உப்புமா விஷயத்திலேயே இருந்தான். “நானும் மொதல்லே ஒண்ணும் சொல்ல வேண்டாம்னுதான் பாத்தேன். ஆனா, அவ வாய்க்குப் பயந்து,” என்று சொல்லிக்கொண்டே போன மகனை இடைமறித்து, “என்னடா பயம்?” என்று கேட்டாள் மங்களம். “முந்தி ஒரு தடவை பீன்ஸ் பொரியலைக் கறுக்க விட்டுட்டா. அடுப்பிலே எதையாவது வெச்சுட்டு, டி.வியைப் பாத்து எக்சர்ஸை பண்ணப்போனா வேற எப்படி இருக்கும்?  `இதை எவன் சாப்பிடுவான்?’னு கத்தினேனா! `எனக்கு இவ்வளவுதான் தெரியும். ஒங்கம்மாமாதிரி சமைச்சுப்போட பொண்டாட்டி வேணும்னா, படிக்காத பொண்ணா பாத்து கட்டியிருக்கணும்,’ அப்படின்னு காளி மாதிரி ஆடினா, பாரு! பயந்துட்டேன்”. தாய்க்கும் கோபம் வந்தது. இவர்கள் சண்டையில் தன்னை எதற்கு இழுக்கிறாள்? “ஆபிசிலிருந்து நேரா வர்றியா?” பேச்சை மாற்றப்பார்த்தாள். “ஆமா. அவ ஏன் அங்கே இருக்கப்போறா! அம்மா வீட்டிலே அவளுக்கு ஆசார உபசாரம் நடக்குமில்ல!” சற்றுப் பொறாமையுடன் கூறியவன், “இதுக்குத்தான் அழகில்லாத, அனாதைப் பொண்ணாப் பாத்துக் கட்டியிருக்கணும்கிறது!” என்றான் நொந்த குரலில். கட்டியவளுக்கு ஒரு நியாயம், இவனுக்கு ஒரு நியாயமா? கோபம் வந்தால் போக இவனுக்கு அம்மா வேண்டுமாம், அதையே மனைவி செய்தால் ஆத்திரம்! நல்ல பிள்ளை! சிரிப்பை அடக்கிக்கொண்டு மங்களம் யோசித்தாள். தான் உபசாரம் பண்ணி உணவளிப்பதால்தான், ஒவ்வொரு முறை மனைவி கோபித்துக்கொண்டு பிறந்தகம் போய்விடும்போதும் சாப்பிட இங்கு வந்துவிடுகிறான்!  “எனக்குக் கொஞ்ச நாளா உடம்பே சரியா இல்லே, கார்த்தி. இன்னிக்குப் பெரிசா ஒண்ணும் ஆக்கலே. நீ போற வழியிலே ஏதாவது ஹோட்டல்லே சாப்பிட்டுக்க,”  என்று அந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டினாள். தனது ஏமாற்றத்தை மறைத்தபடி, “ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு!” என்றபடி எழுந்தான் கார்த்தி. ஹோட்டலைக் கடந்தபோது விரக்தி எழுந்தது.  சமைக்கத் தெரிந்தவன்களெல்லாம் கைநிறையச் சம்பாதிக்கலாம் என்று வெளிநாட்டுக்குப் போய் சமைக்கிறான்கள். இங்கிருப்பவனோ, முன்னே பின்னே சமையலறைக்குப் போயிருக்க மாட்டான். மனைவி மோசமாகச் சமைத்தால் திட்ட முடியும். இங்கு அது நடக்குமா?   பசியுடன் வீடு திரும்பியதும் அவனுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. பத்மினி வீட்டில்தான் இருந்தாள்! அதுவும் அழகாக அலங்கரித்துக்கொண்டு! அப்படியானால், தான் நினைத்ததுபோல் அவள் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குப் போகவில்லையா? “இன்னிக்கு ரொம்ப வெயில், இல்லே? களைப்பா இருக்கு. நாம்ப ரெண்டுபேரும் வெளியே போய் சாப்பிடலாமா?” என்று பத்மினி   அன்பு சொட்டச்  சொட்ட கேட்டபோது, `நல்லவேளை,  சமைக்கிறேன்னு நீ கிளம்பலே!’ என்ற எண்ணம் எழுந்தது  கார்த்திக்கு. கூடவே, `எவ்வளவு அழகா இருக்கா! இவளோட சேர்ந்து நடந்துபோனா, அவனவன் பொறாமையில சாவான்!’ என்றும் தோன்ற,   “நானும் அதைத்தான் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே வந்தேன்! உனக்கு வெளியிலேயும் வேலை, வீட்டிலேயும் வேலை, பாவம்! அது நியாயமில்லே,” என்று உருகிவிட்டு, “நல்லா சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்தாதானே ராத்திரி..!” என்று கண்ணைச் சிமிட்டினான். `பொய் சொன்னா, சாமி கண்ணைக் குத்திடும்!’ என்று சொல்லி வைத்திருப்பவர் பிரம்மச்சாரியாகவே காலத்தைக் கடத்தியிருப்பார் என்று தோன்ற, சிரிப்பு எழுந்தது அவனுக்கு.   3. விலகுமோ வன்மம்?   தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, அந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ரமா. `இவ்வளவு நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டு எவ்வளவு காலமாகிவிட்டது!’   அவளது எண்ணப் போக்குக்கு ஒரு திடீர் நிறுத்தம் அம்மாவின் குரலிலிருந்து: “கெட்டதிலேயே ஆகக் கெட்டது எது தெரியுமா?” `சே! இந்த அம்மா ஏன்தான் இப்படிப் பண்றாங்களோ! நல்ல ருசியா ஆக்கிப்போட்டுட்டு, அதை அனுபவிச்சு சாப்பிட முடியாம!’ என்ற மனத்துள் சலித்துக்கொள்ளத்தான் அவளால் முடிந்தது. வந்ததிலிருந்து இதே பாடம்தான்! ரமா எதுவும் சொல்ல வேண்டும் என்று எதிர் பாராதவளாக, தனது கேள்விக்குத் தானே பதிலும் அளித்தாள் அம்மா, ஒரு மட்டமான ஆசிரியையை ஒத்தவளாக. “நன்றி கொல்றதுதான் பாவத்திலேயே பெரிய பாவம்!” மகளின் முகம் இறுகியது கண்டு, தாய்க்கே பரிதாபம் எழுந்திருக்க வேண்டும். அல்லது, இவளை இப்படியெல்லாம் வழிக்குக் கொண்டுவர முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்ததால், சற்றுமுன் காட்டிய மிரட்டலிருந்து மாறினாள். “புவனா சித்தி ஒனக்கு சாப்பாடு போட்டு, படிக்க வெச்சிருக்காங்க. இப்ப அவங்க ஒடம்பு முடியாம கெடக்கறப்போ, நீ பாக்கப் போகாட்டி, நல்லாவா இருக்கு?” என்று கெஞ்சலில் இறங்கினாள். ஒருவழியாக வாயைத் திறந்தாள் ரமா. “சித்தி ஒண்ணும் என்னைப் படிக்க வைக்கலே. நான் புத்திசாலி! அதனால உபகாரச்சம்பளம் குடுத்தாங்க அரசாங்கத்திலே! பாட்டி சமைச்சுப்போட்டாங்க!” அம்மாவின் முகத்தில் ஒரு புன்னகைக்கீறல். “இப்போ எதுக்கு இந்தச் சிரிப்பு?” என்று மகள் எரிந்துவிழ, “ரமா! ஒன்னோட திமிர் இருக்கே, அது அப்படியே சித்திகிட்டேயிருந்து வந்திருக்கு!” என்றாள். புன்னகை விரிந்தது. ரமாவுக்கு எரிச்சலும், அவமானமும் ஒருங்கே எழுந்தன. சித்தியைப்போலவா ஆகிவிட்டோம்! சீ! தலையை அதீதமாகக் குனிந்துகொண்டவளின் கை சோற்றை அடைபோல் தட்டிக்கொண்டிருந்தது. “சாப்பாட்டுமேல கோவிச்சுக்கிட்டு என்ன புண்ணியம்? இப்பவாச்சும் நல்லா, நிதானமா சாப்பிடு. அங்கேதான் வெந்ததும் வேகாததுமா நீயே ஆக்கிக் கொட்டிக்கறே!” தாய்க்கே உரிய பரிவுடனும், கரிசனத்துடனும் வந்தது குரல். ஆனால், ரமாவின் காதிலோ வேறொரு குரல்தான் ஒலித்தது. “சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திருடி. எப்பப் பாத்தாலும், பாட்டிகூட என்ன கதை?” அவளக்குப் பதினெட்டு வயதாகி இருந்தபோது கேட்ட வசவு. அதற்குப் பிறகு பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இன்னமும் அந்தக் குரல் அப்போதுதான் ஒலிப்பதுபோல் கேட்டு, அதே பாதிப்பை ஏற்படுத்தியது. `இவளையும் என்னைமாதிரி ஒரு டாக்டரா ஆக்கிடறேன்கா. எனக்கு ஒரு மக இருந்தா செய்ய மாட்டேனா?’ என்று புவனா அவளைத் தன்னுடன் கோலாலம்பூர் அழைத்துப் போனபோது ரமாதான் எவ்வளவு சந்தோஷப்பட்டாள்! அதே மூச்சில் அவள் சொன்னதோ! `இந்த தோட்டப்புறத்திலே இருந்தா, ஒன்னைமாதிரி பால்மரம் வெட்டத்தான் போகணும்!’ அம்மாவை அவள் மட்டம் தட்டிப்பேசியது ரமாவுக்கு என்னமோபோல் இருந்தது. ஆனால் அம்மா அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பெரிய படிப்பு படித்து, தான் எட்ட முடியாத உயரத்துக்குப் போய்விட்ட தங்கை எது சொன்னாலும், செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. மகளும் இந்தப் பட்டிக்காட்டில் அல்லல் படவேண்டாம் என்று மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள். “இந்தாடி, பட்டிக்காடு! இப்படி கைலியைக் கட்டிட்டு நிக்காதே! ஒனக்காக மூணு ஹவுஸ்கோட் வாங்கிட்டு வந்திருக்கேன், பாரு!” அவள்மீது வீசாத குறையாக எறியப்பட்டது ஒரு பிளாஸ்டிக் பை. பாட்டியைக் குற்ற உணர்வோடு பார்த்தாள் ரமா. எப்போதும் கைலியும், மேலே தொளதொளவென ஒரு சீட்டிச் சட்டையும் அணிந்தவளாகத்தானே பாட்டி வளையவருவாள்! ஒருவேளை, `பட்டிக்காடு’ என்று அவளை மறைமுகமாகத் தாக்குகிறாளோ? `ஒங்க சித்திக்கு நாக்கிலே விஷம்!’ என்று பாட்டி அடிக்கடி சொல்வது லேசாகப் புரிய ஆரம்பித்தது. யாருக்காவது ஏதாவது நல்லது செய்தால், அது தன்னைத் தாழ்த்திக்கொள்வதுபோல் ஆகிவிடுமோ என்று அஞ்சியவள்போல், வார்த்தைகளிலேயே நஞ்சைக் கலந்து, யாரையாவது மட்டம் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும் புவனாவுக்கு. பிறரைத் தாழ்த்துவதால் தான் உயர்ந்துவிட்டோம் என்று பெருமிதம் கொள்கிற சிறுபிள்ளைத்தனம். குழந்தைகளின் மருத்துவர் ஆனதால், அவர்களுடனேயே பழகிப் பழகி, சித்தியும் அவர்களைப்போல் ஆகிவிட்டாள் என்று அனுமானித்தாள் ரமா, பல ஆண்டுகள் கழித்து. புவனாவின் பெரிய படிப்போ, வாயோ, எதுவோ ஆண்களை மிரள வைத்தது. எதற்கும் அஞ்சாத மகளின் போக்கு பாட்டிக்கு அச்சத்தைத்தான் விளைவித்தது. “இந்த ராத்திரியிலே தனியா எங்கம்மா போறே?” பயந்து, பயந்து அவளைத் தடுக்கப்பார்த்தாள் ஒரு முறை. “படத்துக்கு. தனியா என்ன! அதான் ரமாவையும் கூட்டிட்டுப் போறேன்ல?” வீறாப்பும், எரிச்சலும் கலந்து வந்தன அக்குரலில். தன்னை ஒருத்தர் -- அது அம்மாவே ஆனாலும் -- தட்டிக்கேட்பதா! “சின்னப்புள்ள! அதெல்லாம் ஒரு துணையா! ஆம்பளைத்துணை இல்லாம..!” பாட்டி முணுமுணுத்தாள். “ஆம்பளை என்ன, பெரிய ஆம்பளை! ஒங்க காலத்திலே பொம்பளைங்களுக்கு சோத்துக்கு வழியில்லே. அதனால், புருஷன்காரன் எப்படி அடிச்சு ஒதைச்சாலும், ஒங்களை என்ன கேவலமா பேசினாலும் பொறுத்துப்போனீங்க!” என்று நேரிடையாகவே தாக்கிவிட்டு,  “நான் கைநிறைய சம்பாதிக்கறேனே!” என்று தலையை நிமிர்த்திக்கொண்டாள். படம் முடிய சில நிமிடங்களே இருந்தன. ரமாவின் யோசனை, `தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டாவது இப்படி ஒரு பாடாவதிப் படத்தைப் பார்க்காவிட்டால் என்ன!’ என்று போயிற்று. திரைப்பட கதாநாயகன் தன்னைவிட இருபது வயது இளையவளாக இருந்த கதாநாயகியைக் கண்ட கண்ட இடங்களில் தொட்டுக் கொஞ்சியதைவிட வேறு எதுவும் உருப்படியாகச் செய்ததாகத் தெரியவில்ல. சித்தி மட்டும் எப்படி இந்தக் கண்ராவியையெல்லாம் இவ்வளவு ரசிக்கிறாள், ரகசியச் சிரிப்புடன்? ஒரு வேளை, தன்னையே அந்த கதாநாயகியாக உருவகப்படுத்திக்கொண்டாளோ? இந்த நரகத்திலிருந்து கொஞ்சநாட்களாவது விடுதலை பெற வேண்டும். “லீவு வருதே! அம்மாவைப் பாக்கப் போகட்டுமா, சித்தி?” “அங்கே போய் என்ன கிழிக்கப்போறே? காலை நீட்டி படுக்கக்கூட எடம் கிடையாது. ஒங்கம்மாவுக்கும் சாப்பாடு மிச்சம்!” என்று, தான் வளர்ந்த சூழ்நிலை என்றும் பாராமல் பழித்துவிட்டு, “இங்கேயே இருந்தா, லைப்ரரிக்குப் போய் படிக்கலாம்!” என்று புவனா சொன்னதை வாய்திறவாது ஏற்றுக்கொண்டாள் ரமா. சித்தியுடன் யாரால் தர்க்கம் பண்ண முடியும்! ஆண்களே அவளிடம் எவ்வளவு பணிவாகப் பேசுகிறார்கள்! இரண்டு நாட்கள் கழிந்ததும், “பஸ் காசு செலவழிச்சுக்கிட்டு, நாள் தவறாம வெளியே போகாட்டி என்ன!” என்றாள் புவனா. “நீங்கதானே சித்தி,” என்று ஆரம்பித்தவளை, “எதிர்த்துப் பேசாதே. ஒனக்காக எவ்வளவு செலவு, தெரியுமா? இந்த ஒலகத்திலே எதுவுமே இலவசமா கிடைக்காது. தெரிஞ்சுக்க. வீட்டைக் கூட்டி, சுத்தம் பண்ணு. பாட்டிகிட்ட சமைக்கக் கத்துக்க. மல்லி, கனகாம்பரம், கத்தரி, எல்லாச் செடிங்களையும் கொத்திவிட்டு, தினம் ரெண்டு வேளையும் தண்ணி விடு,” என்று அடுக்கினாள். வேலைக்காரி நிறுத்தப்பட்டாள். ரமா முதலில் விழித்துக்கொண்டது அப்போதுதான். சித்திக்கு தன் காலில் விழுந்துகிடக்க, போட்டு மிதிக்க, யாராவது வேண்டும். தான் வசமாக மாட்டிக்கொண்டோம்! மீண்டும் கல்லூரி திறக்கும் நாளை ஏக்கத்துடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள். அன்று கல்லூரி முடிந்ததும் நல்ல மழை. இரண்டு பஸ்களைத் தவறவிட்டு, இருட்டியபின் வீடு வந்து சேர்ந்திருந்தாள். முகமெல்லாம் இறுகிப்போய், இடுப்பில் கைவைத்து, வாசலிலேயே காத்திருந்தாள் புவனா. “எவனோட சுத்திட்டு வரே?” ரமா வாயடைத்துப்போனாள், இப்படி ஒரு சொற்கணையை எதிர்பார்த்திராததால். “சொல்லேண்டி!” “மழை..பஸ்..!” என்று குழறினாள். “என்ன அளக்கறே? நீ எவனோ ஒருத்தன்கூட ஹோட்டலுக்குள்ளே நுழைஞ்சதைப் பாத்ததா யாரோ சொன்னாங்களே!” பன்னிரண்டு பிராயம் வந்ததும், `இனிமே ஆம்பளைப் பசங்களோட விளையாடாதே. அனாவசியமா பேசவும் கூடாது!’ என்ற அம்மா விடுத்த எச்சரிக்கையின் அர்த்தம் புரியாதுபோனாலும், இன்னமும் ஆண்களைக் கண்டாலே அஞ்சி விலகும் தன்னைப் பார்த்து, இப்படி ஒரு பழிச்சொல்!   வீட்டின் வெளியிலேயே நின்றபடி ரமா அழ ஆரம்பித்தாள். திரும்பவும் மழை பொழிய ஆரம்பித்து, அதில் தான் நனைவதுகூட அவளுக்கு உறைக்கவில்லை. அவளடைந்த திருப்தி முகத்தில் வெளிப்படையாகவே தெரிய, உதடுகளை வெற்றிச்சிரிப்புடன் இறுக்கிக்கொண்டு, உள்ளே நடந்தாள் புவனா. எங்காவது ஓடிவிடலாமா? எங்கு போவது? மாமாவின் வீட்டில் தங்கிப் படித்த அண்ணன் ரமாவின் நினைவில் எழுந்தான். `அத்தை எங்கிட்ட தப்பா பழகப் பாக்கறாங்க, ரமா!’ என்று அவளிடம் மட்டும் ரகசியமாகச் சொல்லிவிட்டு, மீண்டும் தோட்டப்புறத்துக்கே வந்து ஒளிந்துகொண்டானே! `அண்ணன் செய்த தவற்றை நானும் செய்ய மாட்டேன்!’ என்று உறுதி எடுத்துக்கொண்டாள் ரமா. `சித்தியைவிட வாழ்வில் உயர்ந்து காட்டுகிறேன்! இறுதிப் பரீட்சைக்குச் சில மாதங்களே இருக்க, படிக்கும் சாக்கில், சித்தியுடன் பேசுவதைத் தவிர்த்தாள். பரீட்சை முடிந்தபின் எங்கு வேண்டுமானாலும் தொலையலாம். சுதந்திரமாக இருக்கலாம். “பாட்டி! பரீட்சை முடிஞ்சிடுச்சு. அம்மா,  மத்த எல்லாரையும் பாக்கணும்போல இருக்கு. காலையிலே போறேன்!” என்று யாருக்கோ அறிவிப்பதுபோல், பெரிய குரலெடுத்துச் சொன்னாள். `இவ்வளவு செஞ்சிருக்கேன். கொஞ்சமாவது நன்றி இருக்கா, பாரு!’ என்று சித்தி முணுமுணுத்ததை லட்சியம் செய்யவில்லை. நன்றியாமே, நன்றி! பாட்டி சமைத்துப்போட்டு, ஆதரவாக இருந்தாள். திட்டியதையும், மிரட்டி வேலை வாங்கியதையும் தவிர சித்தி என்ன கிழித்துவிட்டாள்! அதற்குப் பிறகு அமெரிக்காவில் மேலும் இரண்டு பட்டங்கள் பெற்று, அங்கேயே வேலையும் தேடிக்கொண்டு விட்டாள். அன்பான கணவரும் அவளுக்கு வாய்த்திருந்தார். சித்திபோல் படங்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிட வேண்டியதில்லை.   நீண்ட காலத்துக்குப் பிறகு மலேசியா திரும்பியபோது, அனைத்துலக விமான நிலையத்தின் அருகே, கோலாலம்பூரிலேயே இருந்த சித்தியை, ஒரு மரியாதைக்குக்கூடப் பார்க்கத் தோன்றவில்லை ரமாவுக்கு. அதுதான் அம்மாவுக்குப் பொறுக்கவில்லை. `நன்றிகொன்றவள்’ என்று வசைபாடுகிறாள். அந்த புவனா சித்தி -- நாவிலேயே தேளின் கொடுக்கை வைத்துக்கொண்டிருந்தவள் -- இன்று சாகக் கிடக்கிறாளாம். `செத்துத் தொலையட்டுமே! இந்த மாதிரி ஒருத்தி போய்ச்சேர்ந்தா, ஒலகத்துக்கு என்ன நஷ்டம்?’ என்றுதான் எண்ணத் தோன்றியது ரமாவால். கூடவே, பாட்டி உயிருடன் இல்லாத நிலையில், தனியாக என்ன பாடுபடுகிறாள் அந்த ராட்சசி எனபதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஒரு குரூரமான எண்ணமும் அவளுக்கு உதித்தது. “நாளைக்கு கே.எல் போகணும்மா. அங்கே எனக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தர் இருக்காங்க!” என்ற மகளைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக்கொண்டாள் தாய். `சித்தியைப் பார்க்கப் போகிறேன்,’ என்று உண்மையை ஒத்துக்கொண்டால், மதிப்பு குறைந்து விடுமோ! அப்படி என்ன வன்மம்? `இந்த பரிதாபகரமான ஜீவன்மேலா இத்தனை காலமும் வன்மம் வைத்துக்கொண்டிருந்தேன்!’ அதிர்ச்சியாக இருந்தது ரமாவுக்கு. இதுவா சித்தி? மூன்று வயதுக் குழந்தை படுத்திருந்ததுபோல் இருந்தது. முழு நீள அங்கி அந்த சொற்ப உடலையும் மறைத்திருந்தது. ஒட்டிய கன்னம். நீளமான முடி கழுத்தளவே கோணல்மாணலாக வெட்டப்பட்டிருந்தது. இடுப்புக்குக்கீழ் மட்டும் சற்றுப் பருமன். டயபர் கட்டியிருக்க வேண்டும். `உலகமே என் காலடியில்!’ என்று இறுமாப்பாக இருந்தவள் தனது அடிப்படைத் தேவைகளுக்குக்கூட இன்னொருவர் கையை எதிர்பார்க்கும் அவல நிலை! `எனக்கு யார் நிகர்!’ என்று எல்லாரையும் அலட்சியமாகப் பார்த்த கண்களில் இப்போது எந்தவித ஒளியோ, சலனமோ காணப்படவில்லை. “புவனா அம்மாவால பேசத்தான் முடியாது. ஆனா, நாம்ப சொல்றது எல்லாம் விளங்குது,” என்று தெரிவித்தாள் தாதி. “பெரிய வேலையிலே இருந்தவங்களாமே!” ரமாவின் நினைவு எங்கோ தாவியது. ஒரு நாள் பாட்டி தன் கையாலேயே சோற்றை எடுத்து சித்தியின் தட்டில் போட, `அசிங்கம்! கரண்டியால போடாட்டி நான் சாப்பிட மாட்டேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!’ என்று ஆங்காரமாகக் கத்தியவள், தட்டை பாட்டியின்மேல் வீசினாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரமா விறைத்துப்போனாள். `வெளியிலே வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்குமா?’ என்று சொல்லியபடியே அன்பையும், கவனத்தையும் செலுத்தி, குனிந்து நிமிர்ந்தால் வலிக்கும் இடுப்பைப் பிடித்தபடி  பாட்டி சமைத்திருந்ததை அவள் அறிவாள். சோறு பாட்டியின் கைலியில் படிந்தது. ஆனால், பாட்டி அதைப் பொருட்படுத்தவில்லை. “நாள் பூராவும் ஒழைச்சுட்டு வந்திருக்கேடி, கண்ணு. ஒன் கோபத்தை சோத்தின்மேலே காட்டாதே!” என்று தரையில் கிடந்ததைக் கையால் திரட்டியபடி அழுதது இந்த ஜன்மத்தில் மறக்கக்கூடியதா! இன்றோ, திரவப்பொருட்கள்தாம் சித்திக்கு ஆகாரமாம். அதுவும், கைப்பிள்ளைக்கு ஊட்டுவதுபோல, சொட்டுச் சொட்டாக, ஒரு சிறு ஸ்பூனால். `தெய்வம் நின்று கொல்லும்!’ என்று இதைத்தான் சொல்லிவைத்தார்களோ? `நல்லவேளை, நானும் நன்றி கொன்ற பாவத்திற்கு ஆளாகவில்லை!’ தன்னை விரட்டிய அம்மாவின்மேல் நன்றிகூட எழுந்தது. சித்தி ஆக்கிரமித்ததுபோக, கட்டிலில் நிறைய இடம் இருந்தது. அவள்மேல் இடிக்காத குறையாக அதன்மேல் உட்கார்ந்துகொண்டாள் ரமா. எதனாலேயோ உந்தப்பட்டவள்போல, சித்தி வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து, அண்மைக்காலம்வரை தன் வாழ்க்கையில் நிகழ்ந்ததை எல்லாம் தன்பாட்டில் சொல்லிக்கொண்டே போனாள். ஒவ்வொரு வார்த்தையாலும் அவளுடைய மனத்தடியில் படிந்திருந்த கசப்பு, அதனால் எழுந்திருந்த வன்மம், விலகியதுபோல் ஒரு நிம்மதி. அசைவே இல்லாது, படுக்கையே கதியென்று இருந்தவளின் கண்களில் நீர் நிரம்பியது. ஏதோ சொல்ல முயன்றாள். கரடுமுரடான ஓசைதான் வெளியே வந்தது. அவளுடைய நிலையைப் பொறுக்காது, “ஒங்களுக்கு நல்லா ஆயிடும், சித்தி!” என்று அவசரமாகச் சொன்ன ரமா,  கைகளைச் சிறகென விரித்து சித்தியின் தோளில் போட்டு, தன் தலையை அவள் மார்பில் பதிய வைத்துக்கொண்டாள் -- மிக மிக லேசாக.      4. ஆன்மா ஒன்று ஓலமிடுகிறது   “நான் எடுக்கலே!” திரும்பத் திரும்பச் சொன்னேன். ஆரம்பத்தில் மறுப்பாக ஒலித்த குரல் போகப் போக ஈனஸ்வரமாக ஆகியது. குரல் அடைத்துவிட்டது. “எந்தத் திருடன்தான், `ஆமா. நான்தான் எடுத்தேன்,’னு ஒத்துக்குவான்!” டீச்சர் கருணாவின் ஏளனக்குரல். (அவளுடைய கணவனின் பெயர் கருணாகரனாம். மிஸஸ் கருணா நாளடைவில் வெறும் கருணாவாகிப்போனது). “என்ன கருணா?” இன்னொரு டீச்சரின் குரல். நேரத்துடன் வகுப்புக்குப் போகாமலிருக்க ஏதோ வம்பில் பங்கு எடுத்துக்கொள்வது ஒரு சாக்கு. “என்னோட பார்க்கர் பேனாவை இந்தப் பொண்ணு எடுத்துட்டா. நல்லத்தனமா  கேட்டா..,” என்று ஏதோ ஆரம்பித்தாள். “இவளா! இவளுக்குத்தான் எழுதவே தெரியாதே? பேருதான் கலைவாணி!”   எத்தனை பேருக்குப் பெயர் பொருத்தமாக இருக்கிறது! கருணைக்கு அர்த்தம் என்னவென்றே தெரியாத இவளுக்கெல்லாம்..! சிரிப்பு வந்தது. “செய்யறதையும் செஞ்சுட்டு, சிரிப்பைப் பாரு!” டீச்சர் கன்னத்தில் அறைந்தாள். இந்தக் கருணா டீச்சரிடம் அடி வாங்குவது ஒன்றும் எனக்குப் புதிதல்ல. `எழுது, எழுது!’ என்று என் வலது கை விரல்களை ஒரு பருமனான கட்டையால் எத்தனை தடவை நசுக்கி இருக்கிறாள்! நானும் எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒவ்வொரு எழுத்தும் ஏதோ நடனம் ஆடுவதுபோல் தெரியும். எப்படி அதைப்  படிப்பது, என்ன எழுதுவது என்றெல்லாம் எனக்குப் புரியத்தானில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் நான்தான் கடைசி மாணவி. நான் தினமும் பள்ளிக்கூடத்தில் அடியும் திட்டும் வாங்குகிறேன் என்று தெரிந்தால் துடித்துப் போய்விடுவார். நான் சொன்னதேயில்லை. பாவம், அவராவது நிம்மதியாக இருக்கட்டும்! “இப்படியெல்லாம் கேட்டா ஒத்துக்கமாட்டா, கருணா!” அதற்குப்பின் நடந்ததெல்லாம் யாருக்கோ நடந்ததைப்போல் இருக்கிறது. வேதியல் ஆய்வகத்தை ஒட்டியிருந்த அறையில் என்னைத் தள்ளி, கதவை வெளியில் பூட்டுகிறார்கள். ஒரே இருட்டு. ஜன்னல் இல்லாததால் மூச்சு முட்டுகிறது. எத்தனை நேரம் அங்கு இருந்தேனோ! கண்விழித்துப் பார்த்தபோது, அப்பாவும் பாட்டியும் கவலையுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். “கலை! என்னம்மா ஆச்சு? நீ  ஸ்கூல்ல மயக்கம் போட்டுட்டியாம்!” என்றார் அப்பா, கவலையுடன். “அந்த நல்ல டீச்சர்தான் ஒன்னை வீட்டிலே கொண்டு விட்டுட்டுப் போறாங்க!”  என்றாள் பாட்டி. நடந்தது எல்லாம் என் நினைவில் எழுந்தது. “நான் எடுக்கலேப்பா,” என்றேன். அழுகை வந்தது. “எதையோ பாத்து பயந்து போயிருக்கு,” என்று பாட்டி அனுமானம் செய்தாள். “மொதல்லே சூடா மைலோ குடி. எழுந்திரு!” “இப்போ ஒண்ணும் வேணாம், பாட்டி. நான் தூங்கறேன்,” என்று எழுந்தவள், அப்பாவையும், பாட்டியையும் இறுக அணைக்கிறேன். “கலை! கலை! என்னம்மா?” அப்பா பதறினார். வயதுக்கு வந்த இந்த இரண்டு வருஷங்களாக நான் அப்பாவைத் தொட்டதே கிடையாது. “எனக்கு ஒங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்பா!” என் துக்கத்தை மறைத்து,  சிரிக்க முயல்கிறேன். பிறகு என் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக்கொள்கிறேன். மீண்டும் இருள். என்னைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் கருமையான, கெட்டிச் சுவர்! எந்தப் பக்கம் போக முயன்றாலும் இடிக்கிறது. மிரண்டுபோய், “என்னைக் காப்பாத்துங்களேன்!” என்று கத்துகிறேன். “நீயும் தற்கொலைக் கேசா?” ஒரு குரல், லேசான சிரிப்புடன் ஒலிக்கிறது. தற்கொலையா? நான் செத்துவிட்டேனா! ஐயோ! அப்பா துடித்துப்போவாரே! எங்கள் வீட்டைப் பார்க்க முயல்கிறேன். முடியவில்லை. பயங்கரமான அந்த இருளிலேயே அடைபட்டுக் கிடந்தேன். என் ஆத்மா சாந்தியடைய  பூசை செய்கிறார்கள். எனக்கும் அந்த இருளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. வீட்டு வாசலில்  நாளிதழ் கிடக்கிறது. முதல் பக்கத்திலேயே என் போட்டோ!  இப்போதும் படிக்க முடியவில்லைதான். ஆனால், என்ன எழுதியிருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. “ஆசிரியையால் திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்ட மாணவி தூக்கு போட்டுக்கொண்டு இறந்துபோனாள்!” அப்பா கதறிக் கொண்டிருந்தார்: “கண்ணு! கலைக்கண்ணு! ஏம்மா இப்படி ஒரு காரியம் செய்துட்டே? நீ நல்ல பொண்ணுன்னு எனக்குத் தெரியாதா! எடுக்கலேன்னு நீ வேற தனியா சொல்லணுமா? நீ சொன்னப்போ புரியாம போச்சே!” கருணா டீச்சர் மட்டும் நிம்மதியாக இருக்கலாமா?  நினைத்த மாத்திரத்தில் அவள் வீட்டுக்குள் நுழைந்தேன். பீரோவில் அடுக்கி வைத்திருந்த புடவைகளுக்கிடையே இருந்தது அது -- என் உயிரைப் பறித்த அந்த சிவப்பு நிற பார்க்கர் பேனா. என்னைப்போலவே கருணாவும் அதிர்ச்சி அடைந்தது தெளிவாகத் தெரிந்தது. சுற்றுமுற்றும் பார்த்தவள், அதை ஒரு புடவைகளுக்குள் செருகி,  நன்றாக மறைத்துவைத்தாள். இவள் செய்த கொடுமையால், அதனால் அடைந்த பயத்தால்,  என்ன செய்கிறோம் என்று சரியாகப் புரியாமலேயே என் உயிரை மாய்த்துக்கொண்டேனே! அந்த நிலையிலும் ஒரு சிறு திருப்தி பிறந்தது. உயிருடன் இருக்கும்போது செய்ய முடியாததையெல்லாம் இப்போது சாதிக்கலாம்.   நான் தொடாமலேயே, பொருட்களை இடம் மாற்றி வைக்க முடியுமே!   சற்றுப் பொறுத்து, புடவைகளின் பின்னால் கையைவிட்டுத் துழாவினாள் கருணா. பதட்டத்துடன், சமையலறைக்குள் நுழைந்தவள், அங்கிருந்த மேசைமேல் கிடந்த பேனாவைப் பார்த்தாள். மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டது எனக்கு நன்றாகவே கேட்டது. வேண்டும். நன்றாக வேண்டும். பயம் என்றால் என்னவென்று இவளுக்கு மட்டும் தெரிய வேண்டாமா? தணலைத் தொடுவதுபோல் அதை ஒரு விரலால் தொட்டாள், தான் காண்பது நிசம்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள நினைப்பவளாக. அப்பேனாவை எடுத்து டிராயரில் வைத்துப் பூட்டினாள். தான்தான் கைமறதியாக அதை அங்கு வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருப்பாள். முட்டாள்! மறுநாள் காலை கருணா அந்த டிராயரைத் திறந்து பார்த்தபோது  அவள் முகத்தில் தோன்றிய கலக்கத்தை ரசித்தேன். `இன்று பூராவும் தேடட்டும்!’ என்று ஆக்ரோஷமாக முதலில் எழுந்த யோசனையைக் கைவிட்டேன். எங்கெங்கோ தேடிவிட்டு, பள்ளிக்கூடத்திற்குப் புறப்பட்டாள் கருணா. “ஆ!” இதற்குத்தானே காத்துக்கொண்டிருந்தேன்! பூட்டி வைத்த பேனா எப்படி தன் செருப்புக்குள் புகுந்தது என்று நன்றாகக் குழம்பட்டும்!   அவள் சற்றும் எதிர்பாராத இடங்களில் அப்பேனா முளைத்தது. அரிசிமாவு சம்புடத்தைத் திறந்தபோது, அது சிவப்பாக ஒளிர்ந்தது. மிளகாய்ப்பொடி டப்பாவில் சிவப்போடு சிவப்பாக!  எவ்வளவுதான் பத்திரப்படுத்தினாலும், அதற்குக் கால் முளைத்தது. கருணாவுக்குப் புதிய கவலை பிறந்தது. பள்ளிக்கூடத்தில் இருக்கையில், கைப்பைக்குள் வந்துவிட்டால்? அப்போது வெளியே வந்து விழுந்து, தன்னைக் காட்டிக்கொடுக்காது என்று என்ன நிச்சயம்? நடுங்கும் கரங்களுடன் அடிக்கடி பையைத் திறந்து சோதனை போட்டாள். நிம்மதி போயிற்று. “இந்த வீட்டிலே பேய் இருக்குங்க. வீடு மாத்திடலாம்,” என்று படபடப்புடன் அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்தான் மிஸ்டர் கருணா. நடந்ததை அவள் சொல்லக் கேட்டு, “பேனா கிடைச்ச விஷயம் வெளியில தெரியக்கூடாது. நீ மாட்டிப்பே!” என்று எச்சரித்தான். “அதைத் தூக்கிக் குப்பையில போடு!” அந்தப் பாழாய்ப்போன பேனாவுக்காக என் உயிரை வாங்கியவள், “நல்ல பார்க்கர் பேனா! எவ்வளவு ஆசையா வாங்கினது!” என்று தயங்கினாள். “அப்போ, கொலைக் குத்தத்துக்காக ஜெயிலுக்குப் போறியா?” என்று கத்தியவன்,  “எங்கே அந்த சனியன்? குடு. நெருப்பில போட்டுடறேன்,” என்று மேலும் குரலை உயர்த்தினான். அவ்வளவு சீக்கிரம் அவளைத் தப்பிக்க விடுவேனா! “இங்கதானே வெச்சேன்!” என்று குழப்பத்துடன் அவள் மேசையைத் தடவினாள். என்னால் எழுதவோ, படிக்கவோ இயலாமல் போனது பிறவியிலேயே என் மூளையிலிருந்த ஏதோ கோளாறினால் என்பதுகூடத் தெரிந்திராத இவளெல்லாம் ஆசிரியத் தொழிலுக்கே இழுக்கு! நான் பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த பயமும் துக்கமும் வெறுப்பாக மாறின. மாதக்கணக்கில் நான், பேனா, கருணா மூவரும் விளையாடிய இந்த விளையாட்டின் இறுதியில் நான்தான் வென்றேன்.   `மன நிலை சரியாக இல்லை,’ என்ற காரணத்துடன் உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்டாள் எனக்குப் பொய்யாகத் திருட்டுப்பட்டம் சூட்டியவள்.   வெறித்த பார்வையுடன் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தவளை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு கல்யாணம் செய்துகொண்டான் மிஸ்டர் கருணா. எனக்கு இனிமேல் அங்கு என்ன வேலை? அப்பாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. விரைந்தேன். மாலை போட்டிருந்த என் படத்தின்முன் நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தார் அப்பா. `நம்புங்கப்பா. நான் எடுக்கலே!’ என்றேன் கெஞ்சலாக. ஆனால் அவருக்கு என் ஓலம் கேட்கவில்லை. அழுதபடியே இருந்தார். கதாசிரியரின் குறிப்பு: இளம் பருவத்தில் திடீர் மரணம் அடைந்தவர்கள் பொருட்களை இடம் மாற்றி வைப்பார்கள். சில சமயம் விளையாட்டாக.   5. விருந்தோம்பலுக்கு ஒரு பாலம்   பாகீரதி மாமியை `மாமி’ என்றழைத்த எங்களில் யாரும் அவளுக்கு ரத்த சம்பந்தமான உறவினர்களில்லை. பள்ளிக்கூடத்திற்கு நேர் எதிர் வீட்டில் அரசாங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் குடியிருந்தது மாமியின் குடும்பம். சீனு மாமாவிற்கு அரசாங்கத்தில் ஏதோ சிறிய வேலை. அதனால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த வீடும் சிறியது. ஆனால் நாற்பது வயதுகூட இருக்காத மாமியின் மனம் விசாலமானது. ஒரு மணி சுமாருக்கு பள்ளிக்கூடம் முடிந்ததும், மாமி தன் வீட்டு வாசலில் நின்றிருப்பாள். கோலாலம்பூரில்  கோயில், கல்யாணம் போன்ற இடங்களில்தான் புடவை உடுத்திய தமிழர்களைப் பார்க்கமுடியும். மாமியோ காட்டன் புடவையில்!  இனம்தெரியாத மகிழ்ச்சியை உணர்ந்தேன். ஒரு நாள், என்னைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தபடி, “ஒன் பேர் என்னம்மா?” என்று விசாரித்தாள். பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம், மலாயைத்தவிர வேறு மொழிகளில் பேசக்கூடாது என்ற விதி தமிழைக் கேட்டவுடனே என்னை மாமியிடம் ஈர்த்தது. அடுத்து, நான் வீடு போய்ச்சேர இரண்டு பஸ் மாற்றி, ஒரு மணி நேரம் பிடிக்கும் என்றறிந்து, “வளர்ற வயசு. அத்தனை நேரமா பசியோட இருப்பே? வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போ, ஷீலு!” என்றாள் உரிமையோடு. (என் பெயர் சுசீலா என்றுதானே சொல்லியிருந்தேன்?)  பிறருடன் சுலபமாக நெருங்கிவிடும் வித்தை மாமிக்குத் தெரிந்திருந்தது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு விரைவாகத் தயாரிக்கவென நிறைய எண்ணையைக் கொட்டியிருப்பான் பள்ளி காண்டீனை நடத்திய ஆ சேக். (சீன மொழியில் மாமா). உப்புக்குப் பதில் சோயாவிலிருந்து தயார்செய்யும் கீசாப். நாள் தவறாது இதையே சாப்பிட்டுச் சாப்பிட்டு  நாக்கு செத்திருந்தது. அதிகமாகப் பிகு செய்துகொள்ளாது மாமியின் வீட்டுக்குள் நுழைந்தேன். சில வாரங்களில், ஆறாம் படிவம் படித்துக்கொண்டிருந்த எங்களில் சிலருக்கு மாமி கைச்சாப்பாடுதான். ஒரு சாம்பார், கொஞ்சம் மோர். உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய் என்று ஏதாவது ஒரு `இந்திய’ கறிகாயை காரசாரமாக வதக்கி வைத்திருப்பாள்.  அவ்வளவுதான். ஆனால், மாமி அன்புடன் பரிமாறும்போது அமிர்தமாக இருந்தது. ஒரு தடவை சொன்னாலே மாமிக்கு எங்கள் பெயருடன் எல்லா விவரங்களும் நினைவில் பதிந்துவிடுவது எங்களுக்குப் பேராச்சரியம்.  `இந்தமாதிரி ஒரு ஞாபகசக்தி இருந்தால் நாமெல்லாம் சரித்திரப்பாடத்தில் நூற்றுக்கு நூறு!’ என்று கூறி சிரிப்போம். “விசு வரவர சரியாவே சாப்பிடறதில்லை. சிகரெட் பிடிக்கறியா? அதான் பசி மந்தமாயிடுத்து!” அவன் முழுப்பெயர் விசுவலிங்கம். மாமிக்கோ, முதல் நாளிலிருந்தே அவன் விசுதான். “ஐயோ! இல்லை, மாமி!” என்று மறுத்தபோது, எங்கள் முகத்தில் புன்னகை. “பொய்யாடா சொல்றே? படவா!” என்று சொரசொரப்பான அவன் கன்னத்தை மாமி உரிமையுடன்  கிள்ளியபோது, நாங்கள் எல்லாரும் உரக்கச் சிரித்தோம். விசு வெட்கத்துடன் நெளிந்தான். “தினமும் சோறு போடற அந்த நல்லவங்க யாரு? நாங்களும் பாக்க வேணாமா?”” என்ற அம்மாவுடன்,  அப்பாவும் ஒரு நாள் என்னை அழைத்துப்போக வந்திருந்தார். மாமி வீட்டுக்குள் இருந்தாள். பூஜை அறையில் மணியிடிக்கும் ஒலி கேட்டது. `ஓ, இன்று வெள்ளிக்கிழமை இல்லை?’ என்று என் யோசனை போயிற்று. அன்று மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் தொழுகைக்குப் போக சௌகரியமாக பள்ளிக்கூடம்  முன்னதாகவே முடிந்துவிடும்.   ஐந்து நிமிடங்கள் பொறுத்து மாமி வந்தாள், பக்திப்பழமாக. நெற்றி நிறைய விபூதி, குங்குமம். என்னுடன் நின்றிருந்தவர்களைப் பார்த்து முக மலர்ச்சியுடன், “வாங்கோ, வாங்கோ,” என்று வாயார வரவேற்றாள். “ஸாரி. பூஜையிலிருந்தேன்,” என்று மன்னிப்பும் கேட்டுக்கொண்டாள். எனக்குப் பெருமையாக இருந்தது. அம்மா விஷயத்துக்கு வந்தாள். “எங்க மகளுக்கு நீங்க தினமும் சாப்பாடு போடறீங்களாம். அது சரியில்லே.  நீங்க ஏதாவது வாங்கிக்கணும்,” என்று தன் கைப்பையைத் திறந்தாள். “மொதல்லே பையை மூடுங்கோ,” என்றாள் மாமி, அதட்டலாக. “நாலு குழந்தைகளுக்கு சாப்பாடு போடறதால நான் ஒண்ணும் குறைஞ்சு போயிடமாட்டேன். அதிதிக்குப் பண்றது தேவர்களுக்குப் பண்றதுக்குச் சமானம்னு சொல்லி வெச்சிருக்கா! பாருங்கோ,” என்று ஓர் ஆன்மிகப் புத்தகத்தை எடுத்தாள். எல்லா இளவயதினரையும் தனக்குப் பிறக்காத குழந்தைகளாகக் கருதும் மாமியின் பெருந்தன்மை அம்மாவுக்குப் பிடித்திருந்தது. “இந்தக் காலத்தில இப்படியும் ஒரு மனுஷி!”  என்று நாங்கள் திரும்பும் வழியில் அப்பாவிடம் கூறினாள். “ஒனக்கு ஒலகம் புரியல. ஆதாயமில்லாம யாரும் எந்தக் காரியமும் பண்ணமாட்டாங்க!” என்ன ஆதாயம்? நாங்கள் மாமியிடம் அன்று பள்ளிக்கூடத்தில் நடந்தவைகளையெல்லாம் கூற, சிரித்தபடி கேட்பாளே, அதுவா? தனியாக இருக்கையில், அப்பா என்னிடம் கேட்டார் மாமாவைப்பற்றி. மாமா யாருடனும் அதிகம் பேசமாட்டார், வீணையை வைத்துக்கொண்டு தன் அறையிலேயே இருப்பார்,  இந்த வருடம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும், வாடகை வீட்டுக்குப் போய்விடுவார்கள்  என்று எனக்குத் தெரிந்ததைக் கொட்டினேன்.   `தஞ்சாவூர்கிட்டே ஒரு கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில்  பிறந்துட்டேனே, என்ன செய்யறதுடி, ஷீலு!  இரண்டாந்தாரமா  வாக்கைப்பட்டேன். வயசானவரா இருந்தா என்ன, பணக்கார நாடு! நம்ப பாகீரதி அமோகமா இருப்பா!’ அப்படின்னா எல்லாரும். பணக்கார நாடா இருந்தாப்போல அங்கே இருக்கிற எல்லாருமே பணப்பாரான்னு ஆயிடுமா? அதோட, மாமாவுக்கு வீணைதான் பொண்டாட்டி! நான் வெறும் சமையக்காரிதான்!’ என்று மாமி என்னிடம் அந்தரங்கமாகக் கூறியதைச் சொல்லத் தோன்றவில்லை. அந்த வயதில் அதன் அர்த்தம் எனக்குப் புரியவுமில்லை. “அந்தப் பொம்பளை நல்லவங்க இல்லே, சுசிம்மா!” என்றார் ரகசியக்குரலில். “ஏம்பா?” என்று கேட்டேன், எதுவும் புரியாது. “`இந்தப் பக்கம் வரும்போது, நீங்க வாங்களேன்,’ அப்படின்னு என்னை ஒருமாதிரி பாத்துச் சொன்னா அந்த …,” ஒரு கெட்ட வார்த்தையைப் பிரயோகித்தார். “அம்மாகிட்ட சொல்லிடாதே. என்னைச் சந்தேகப்படுவாங்க”. “சாமி பக்தியா இருப்பாங்களே?” “எல்லாம் வேஷம்!” அப்பா ஏளனச்சிரிப்பு சிரித்தார். “ராத்திரி முச்சூடும் தண்ணி அடிக்கிறவன் காலையில பட்டை பட்டையா விபூதி பூசிக்கிட்டு ஒலகத்தை ஏமாத்தற கதைதான் இதுவும்!” விசுவும், நடராஜாவும், `எப்பவும் சைவச்சாப்பாடுதான்! யாருக்கு வேணும்?’ என்று மாமி வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டதற்குக் காரணம் புரிந்தது. `பாவிகளா! என்னிடம் சொல்லி இருக்க மாட்டீர்களோ?’ என்று மனத்துள் திட்டிக்கொண்டேன். அதன்பின் நான் மாமி வீட்டுக்குச் சாப்பிடப் போகவில்லை.  அம்மாவுக்குத் துரோகம் செய்யப்பார்க்கிறாள் என்று ஒரே ஆத்திரமாக இருந்தது. மாமி, “என்னடி, சுசி? இப்பல்லாம் நீங்க இந்த மாமியை மறந்துட்டேள்போல இருக்கே?” என்று கேட்டபோது, “பெரிய பரீட்சை வருது. நிறைய படிக்கணும்,” என்று சமாளித்தேன். எதற்காக உறவு முறை வைத்துக் கூப்பிடுவது! எதிர்வீட்டைக் காலி செய்துகொண்டு அவர்கள் போனபோதுகூட நாங்கள் யாரும் உதவிக்குப் போகவில்லை. எனக்குக் கல்யாணமாகி, கையில் குழந்தையுடன் ஒரு கச்சேரிக்குப் போயிருந்தபோது, பின்னால் மாமி உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன். “போய், பிள்ளையைக் காட்டிட்டு வா!” என்று அம்மா பணித்தாள். நான் தயங்கினேன். “எதுவாக இருந்தாலும், சாப்பாடு போட்டிருக்காங்களே! போ,” என்றாள் அம்மா வற்புறுத்தலாக. `எதுவாக இருந்தாலும்!’ அதற்கு என்ன அர்த்தம்? அம்மாவை உற்றுப் பார்த்தேன்.  எங்கள் கண்கள் கலந்தன. அம்மாவின் முகத்தில் ஒரு சிறு சிரிப்பு. ஆமோதிப்பதுபோல் கண்களை ஒரு முறை சிமிட்டி, மிக மிக லேசாகத் தலையாட்டினாள். அப்படியானால், அப்பா சொன்ன உண்மை அம்மாவுக்கும் தெரியுமா? ஏன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை? முன்பு சாதாரணமாகப்பட்டதெல்லாம் இப்போது பூதாகாரமாகத் தெரிந்தது. விசுவின் கன்னத்தைக் கிள்ளியது, நடராஜாவின் தோளை அணைத்தது, சதீஷ் வகுப்பில் முதல் என்று கட்டி அணைத்துப் பாராட்டியது  – இப்படி எத்தனையோ! என் நண்பர்களை அந்த வீட்டுக்குள் வரவழைக்க நான் ஒரு பாலமாகப் பயன்பட்டிருக்கிறேன்! நினைக்கவே கசப்பாக இருந்தது. “போகலாம்மா. நவராத்திரி கச்சேரியிலே தரையில ஒக்காந்து கேக்க முடியலே,” என்று எழுந்தேன். கவனமாக, பின்பக்கம் திரும்பாது முன்வாசல்வழியாக மண்டபத்திற்கு வெளியே நடந்தேன். யோசிக்கையில், ஒருவித பச்சாதாபமும் எழுந்தது. பசித்தவனுக்கு வெறும் ஊறுகாய் கிடைத்ததுபோல், அந்த விடலைப் பையன்களைத் தற்செயலாகத் தொடுவதுபோல் தொட்டு, அல்ப சந்தோஷம் அடைந்திருக்கிறாள் பாகீரதி மாமி! பாவம்!   6. மனித இயந்திரம்   விமானம் கீழே இறங்கிக்கொண்டிருந்தது. `குப்பை! குப்பை!’ என்று கூவியபடி, உதட்டுடன் ஒட்டிய  நிரந்தரமான முறுவலுடன் விமான பணிப்பெண் பயணிகளின் இடையே விரைந்தாள். வேலு தன் சட்டைப்பைக்குள் வைத்திருந்த காகிதத்தை எடுத்து அவள் பிடித்திருந்த பெரிய பிளாஸ்டிக் பைக்குள் எறிந்தார். சில வாரங்களாகவே தான் அனுபவித்த குழப்பம் அதனுடன் தொலைந்துவிட்டதாக ஓர் எண்ணம் உதிக்க, சிறு சிரிப்பில் உதடுகள் விரிந்தன. தானும் அவரது மகிழ்ச்சியில் பங்கு கொள்பவள்போல் அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள் பணிப்பெண். வெளிநாட்டில் சில காலத்தைக் கழித்துவிட்டு,  தாய்நாடு திரும்பும் எத்தனைபேரை அவள் பார்த்திருக்கிறாள்! அச்சிரிப்பே அவளுடன் ஒரு நெருக்கத்தை உண்டுபண்ண, “என் மகளுக்குக் கல்யாணம்! அதுக்குத்தான் போறேன்,” என்று தெரிவித்தார். சொல்லும்போதே ஆனந்தமாக இருந்தது. `வெளிநாடு போனால், கைநிறையச் சம்பாதிக்கலாம்,’ என்று, கல்யாணமாகி ஒரே மாதத்தில் மலேசியாவுக்குச் சென்றிருந்தார். மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மனைவியைப் பார்க்க முடிந்தது. அவர் ஒவ்வொரு முறை வந்து போகும்போதும் ஒரு குழந்தைக்கு வித்திட்டிருப்பார். சும்மாவா? ஒவ்வொரு முறையும் இரண்டு பவுனுக்குக் குறையாது, சங்கிலி, வளை, தோடு என்று மனைவிக்கு வாங்கிப்போவாரே! மீனாட்சி அவர் அடுத்த முறை வரும்வரையில் நகைகளை எல்லாருக்கும் காட்டிக் காட்டிப் பெருமைப்படுவாள். வேலுவால் அவ்வளவு எளிதாக திருப்தி அடைந்துவிட முடியவில்லை. மூத்தவள் ரஞ்சனி பாலுக்காகச் சிணுங்கும்போதும், தளர்நடை பழகும்போதும் பக்கத்திலிருந்து ரசிக்கக் கொடுத்துவைக்கவில்லை. எதிர்ப்படுகிற சிறு குழந்தை ஒவ்வொன்றையும் பார்த்து, `என் ரஞ்சனி இப்போது இவ்வளவு பெரியவளாக இருப்பாளா?’ என்றெழுந்த யோசனையைத் தவிர்க்க முடியவில்லை. மகள் கையைப் பிடித்து, பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றதில்லை. பூப்படைந்தபோது, `நமக்கு ரொம்பத்தான் வயதாகிவிட்டதோ!’ என்று பெருமையும் கவலையுமாக  அவளருகில் நிற்கவில்லை. யோசிக்கும்போதே அயர்ச்சியாக இருந்தது. ஆனால், நல்ல தந்தையாக இருந்திருக்கிறோம் என்று திருப்திப்பட்டுக்கொண்டார். தான்தான் சிறுவயதில் படிக்கவும் வசதியற்று, ஏழ்மையில் உழன்றுவிட்டோம், தன் குழந்தைகளாவது நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று உடலை வருத்தி, அடுப்படியில் உழன்றார். ஒரு கெட்ட பழக்கத்திற்கும் இடம் கொடுக்காது, சம்பாதித்ததில் பெரும்பகுதியை மனைவிக்கு அனுப்பினார். வருமான வரி கிடையாது என்பதால் நிறையவே சேமிக்க முடிந்தது. தன் சம்பாத்தியத்தில் மனைவி வாங்கிய வீட்டை இன்னும் பார்க்கவில்லை. வீடு கிடக்கிறது, வெறும் உயிரற்ற பொருள்! கல்யாணத்தின்போது பூரித்து நிற்கும் மகளைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வளர்ந்தது. கடை முதலாளி, “வெளிநாட்டிலிருந்து சமையல் செய்ய வர்றவங்களுக்கு மட்டும்தான் பர்மிட் கொடுப்பாங்களாம். அப்போ, யார் பரிமாறுவாங்களாம்?” என்று அலுத்தபோது, வேலுவுக்குப் பயம் வந்தது. பரிசாரகர்கள் பற்றாக்குறையால் பல சாப்பாட்டுக்கடைகள் மூடப்பட்டது அவருக்கு மட்டும் தெரியாதா, என்ன? “உள்ளூரிலே எவனாவது வரமாட்டானா, மொதலாளி?” “இங்க இருக்கிறவங்க  நாலு பங்கு சம்பளமில்ல கேக்கறாங்க? அப்போ, நாம்ப இட்லி, தோசையோட வெலையைக் கூட்டினாத்தான் கட்டுப்படியாகும். யாரு சாப்பிட வருவாங்க?” வேலு பதட்டமாக, “நான் பரிமாறிட்டுப்போறேன். என்னோட சம்பளத்தை மட்டும்..,” என்று இழுத்துவிட்டு, “மகளுக்குக் கல்யாணம் வருது,” என்று அசட்டுச்சிரிப்புச் சிரித்தார். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, காலைப் பலகாரத்துக்கான ஆயத்தங்களை ஆரம்பிப்பார். பத்து மணிக்கு பகல் உணவைத் தயார் செய்யவேண்டும். இரண்டு மணியிலிருந்து ஓரிரு மணி சற்று ஓய்வு. அதன்பின், இரவு ஒன்பது மணிவரை இடைவிடாத உழைப்பு. மகளைக் கல்யாண கோலத்தில் பார்க்கும் இன்பக்கனவில் உடல் இளைப்பும், அடிக்கடி வரும் சளி, காய்ச்சலும் துச்சமாகப்பட்டன.   கல்யாணப் பத்திரிகையுடன், அவரை அதிரவைத்த அந்தச் செய்தியும் வந்தது. சாப்பாட்டுக்கடைக்கு வந்த அம்மாளிடம் முறையிட்டார்: “தங்கச்சி! என் மகளுக்குக் கல்யாணம். எனக்கு ஊருக்குப் போக ஆசையா இருக்கு,” என்று முறையிட்டுவிட்டு, “`நீங்க வரவேணாம், பிளேனுக்குக் கொட்டி அழற காசில தங்க நகை வாங்கி அனுப்பிடுங்கன்னு!’ மனைவி சொல்றாங்க! என்னா செய்யறதுன்னு புரியலே!” என்றார் அழமாட்டாக்குறையாக. “குடும்பத்துக்காக இவ்வளவு காலமா உழைச்சிருக்கீங்க. நீங்க போனா, `ஏன் வந்தே?ன்னு          விரட்டிடுவாங்களா, என்ன! சந்தோஷமா போயிட்டு வாங்க!” என்று ஆதரவு வர, உற்சாகம் மீண்டுவந்தது. பக்கத்திலிருந்த அடகுக்கடையில் நான்கு பவுனில் மகளுக்கு ஒரு சங்கிலி, மாப்பிள்ளைக்கு ஒரு கடிகாரம் என்று வாங்கிக்கொண்டார். பிரயாணத்தின்போது பெட்டியில் வைத்தால் யாராவது எடுத்துவிடலாம் என்று பயமெழ, உடனே அவைகளை  அணிந்துகொண்டார். அடிக்கடி தன் பிம்பத்தைச் சிறிய கண்ணாடியில் பார்த்துப் பூரித்தார். “விமானம் சென்னையை அடைந்துவிட்டது. பயணிகள்  தத்தம் இருப்பிடங்களிலேயே அமர்ந்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்ற அறிவிப்பை யாரும் லட்சியம் செய்யவில்லை. பரபரப்புடன் எழுந்தனர்.     நீண்ட காலத்திற்குப்பிறகு சந்திக்கப்போகிறோம்! பெண்டாட்டி பிள்ளைகளுக்கும் தன்னைப்போல்தானே மகிழ்ச்சியாக இருக்கும்! “எங்கே வந்தீங்க?” எடுத்த எடுப்பில் கேட்டாள் மனைவி மீனாட்சி. “கடுதாசி கிடைக்கலே?” “டேய்! அப்பா வந்திருக்காருடா!” என்று தொனியைச் சற்று மாற்றினாள், மகனைக் கண்டதும். தான் எண்ணிக்கொண்டிருந்ததுபோல் இவன் படித்துப் பெரிய ஆளாக ஆகமாட்டான் என்று அவனைப் பார்த்ததுமே தெரிந்தது. மைனர்போல் இருந்தான். அருகில் வரும்போதே துர்வாடை. அலட்சியமாக அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எதுவும் பேசாமலேயே அப்பால் நகர்ந்தான். `நான் மாடா ஒழைச்சுச் சம்பாதிச்ச காசைக் கரியாக்கிட்டியாடா!’ என்று மனத்துக்குள் அழுதார். ஏதோ நினைத்துக்கொண்டதுபோல் திரும்பி, “கடிகாரத்தைக் கொண்டாங்க பாக்கலாம்,” என்று கையை நீட்டினான் மைனர். “நீ சம்பாதிச்சு வாங்கிக்க,” என்று கத்திய அப்பா அவனுக்குப் பழக்கமில்லாதவர். கடைக்குட்டி யாரோ புதிய மனிதர் வந்திருக்கிறார் என்று பயந்தவனாக, தாயின் பின்னால் ஒளிந்துகொண்டான். “பிள்ளைங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?” மீனாட்சியின் அடுத்த கேள்வி. தனக்கும் ஏதாவது நகை வாங்கி வந்திருக்கமாட்டாரா என்ற ஆசையில் எழுந்தது. “நீ வேற! பிளேனுக்கே ஆயிரக்கணக்கிலே செலவழிஞ்சுடுச்சு!” என்று முணுமுணுத்தபடி, சட்டைக்காலரை இழுத்துவிட்டுக்கொண்டார். இவர்களுக்கெல்லாம் சங்கிலியும், பரிசுகளும் ஒரு கேடு! “மலேசியாவிலே பெரிய வேலை பாக்கறே! எங்களுக்கெல்லாம் என்ன கொண்டுவந்தே?” என்ற உறவினர்களிடம், “என்னைத்தான் கொண்டுவந்தேன்,” என்றார். ஆபத்து என்றாலும் மனைவிக்கு எந்த உதவியும் செய்யாதவர்கள்! தான் அயல்நாட்டிலிருந்து மூட்டை மூட்டையாகப் பணத்தைக் கட்டிக்கொண்டு வருவதுபோல் அல்லவா கேட்கிறார்கள்! கல்யாணம் முடிந்ததும், மாப்பிள்ளை, “ஒங்க கடிகாரம் நல்லா இருக்கு. தங்க செயின் மாட்டியிருக்கீங்க?” என்று நைச்சியமாக விசாரித்தான். “இதுவா? கர்ணனோட கவச குண்டலம் மாதிரி. எப்பவும் என் கையிலேயேதான் இருக்கும். குளிக்கிறப்போதான் கழட்டுவேன்னா பாத்துக்குங்களேன்!” என்று அவன் வாயை அடைத்தார். திரும்பும்போது, விமானத்தில் அதே பணிப்பெண். தாய்நாட்டுக்குப் போகிறபோது அவரிடம் இருந்த உற்சாகம் வடிந்திருந்தது அவள் கண்களுக்குத் தப்பவில்லை. “பிடிச்சவங்க எல்லாரையும்விட்டுப் போறோமே அப்படின்னு வருத்தமா இருக்கீங்க போல இருக்கு?” என்று விசாரித்தாள். `பிடிச்சவங்களா! அவங்களைப் பொறுத்தவரைக்கும் நான் சம்பாதிச்சுப்போடற ஒரு இயந்திரம். அவ்வளவுதான். நானும் மனுஷன்தான், எனக்கும் உணர்ச்சிங்க உண்டுன்னு யாரும் நினைக்கலே!’    தன்னைப்போன்றவர்களின்  அவல வாழ்க்கை இவளுக்கு எங்கே புரியப்போகிறது என்று நினைத்தவராக, எதுவும் பேசாது, தலையைக் குனிந்துகொண்டார் வேலு.     7. பெயரில் என்னமோ இருக்கு!   தன் சிநேகிதி வீட்டுக்குப் போய் திரும்பிய கமலம் படபடத்தாள்: “யோசிக்காம,  கன்னாபின்னான்னு பேர் வெச்சா இப்படித்தான் ஆகும்!” புத்தகத்தில் ஆழ்ந்திருந்த ரேணுகா நிமிர்ந்தாள். எதுவும் கேட்கவில்லை. அம்மா தானே சொல்வாள் என்று காத்திருந்தாள். “மீனாட்சியோட பொண் வயத்துப் பேரனுக்கு துருவன்னு பேரு வெச்சா. ஸ்டைலா கூப்பிடறது த்ருவ். இப்போ என்ன ஆச்சு?” “என்னம்மா ஆச்சு?” “ரெண்டாவது குழந்தை பிறந்ததும், இந்தக் குழந்தையைக் கரிக்கிறாராம் அதோட அப்பா. ரெண்டு வயசுக் குழந்தையை அடிச்சுக்கொல்றாராம்!” என்னவோ, தானே அறைபட்டதுபோல் குமுறினாள்.  “சின்னக்குழந்தை கடையில பாக்கற சாமானையெல்லாம் கேக்கத்தான் செய்யும். அதுக்காக அடிப்பாளோ?” “சரி. இதுக்கும் துருவன்கிற பேருக்கும் என்ன சம்பந்தம்?” “அப்பா மடியில ஒக்காரணும்தானே அந்தப் பிள்ளையும் தவம் பண்ணினான்?” ரேணுகாவையும் கவலை பிடித்துக்கொண்டது. பெயர் சூட்டும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டுமோ, பெற்றோர்? நல்ல வேளை, அவள் புராண காலத்து ரேணுகாவைப்போல் இல்லை. பூஜைக்கு ஆற்றில் நீர் மொண்டு வருவதற்காகப் போன முனிவர் பத்தினி  ரேணுகா காந்தர்வக் காதலர்களின் சல்லாபத்தைப் பார்த்து சற்றே மயங்கினாளாம். அதற்குத் தண்டனையாக அவளுடைய தலையைக் கோடரியால் வெட்டும்படி மகனைப்  பணித்தாராம் கணவர் ஜமதக்னி. பன்னிரண்டு வயதில், பழைய படங்களில்  தோன்றிய சிவாஜி கணேசனைத் திரையில் பார்த்து மயங்கிய தானோ,  கமலஹாசன், மாதவன், கார்த்தி, ஆர்யா என்று இன்றுவரை ஒவ்வொரு நடிகரையும் மனதால் நினைப்பதை நிறுத்தவில்லை. `ராமாயணத்திலே வர அகல்யாமாதிரி நான் கல்லாப் போகணும்னா, இருநூறு தடவை கல்லாகியிருப்பேன்! நல்லவேளை, அந்தக் காலத்திலே நான் பிறக்கலே!’  எத்தனை தடவை தங்கை பார்வதியிடம் அதைச் சொல்லிச் சிரித்திருக்கிறாள்! இருபது வயதில் படிப்பை முடித்துவிட்டு, “இதுக்குமேலே படிச்சா, வரன் கிடைக்கிறது கஷ்டம். அநியாயத்துக்கு வரதட்சணை கேப்பா,” என்ற அம்மாவின் நியாயத்தை ஏற்றுக்கொண்டிருந்தாள் ரேணுகா. தனக்கு வரப்போகிறவருக்காவது நல்ல பெயர் இருக்கிறதா என்று பார்த்துத்தான் கழுத்தை நீட்ட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டது அப்போதுதான். முதல் வரன் ராமச்சந்திரன்.  ஜாதகம் கிடைத்திருந்தது. “எனக்கு இவன் வேண்டாம்மா,” என்றவளைப் பார்த்து அம்மா குழம்பினாள். நிறையப் படித்திருந்தான். தரகரிடம் வரதட்சணையே வேண்டாம் என்று சொல்லியிருந்தானாம். ஒரே தங்கையும் கல்யாணமாகி வெளிநாட்டில் இருக்கிறாள். “இதைவிட நல்ல வரன் கிடைக்குமா?  ஒனக்கு இவனைப் பண்ணிக்க கசக்கிறதோ?” “பேரைப் பாரு!  அப்பா எது சொன்னாலும், அது சரியா, தப்பான்னு யோசிக்காம தலையாட்டுவான். நான் அந்த ராமரா இருந்தா, தசரதர்கிட்ட என்ன சொல்லியிருப்பேன் தெரியுமா?” என்று வீராவேசமாக ஆரம்பித்தவளுடன் மேலே பேசப் பிடிக்காது கமலம் அப்பால் நகர்ந்தாள். எப்போதும் கேட்டதுதான். `நீங்க புத்தி கெட்டுப்போய், அடுக்கடுக்கா ரெண்டு மூணு கல்யாணம் பண்ணிண்டா, அதற்கு நானா பிணை?’ என்றிருப்பாள். ராமாயணமும் இந்த அளவுக்குப் பிரபலமாகி இருக்காது. அடுத்தது சுப்ரமணியன். பயந்துகொண்டே அவன் பெயரைச் சொன்னாள் கமலம். “நான் முதல் பொண்டாட்டியா, ரெண்டாவதா?” ஆச்சரியத்துடன், “எப்படிக் கண்டுபிடிச்சே?” என்றாள் கமலம். “மூத்தாள் போயிட்டாளாம். இந்த வரனுக்குச் சின்ன வயசுதான்! குழந்தையும் கிடையாது!” “முருகனுக்கு வள்ளி, தெய்வயானை. இந்த சுப்ரமணியனுக்கும் ரெண்டு வேணுமோ?” “பிடிக்காட்டா விட்டுடு.  பிறத்தியாரைப் பழிக்காதே!” பெண்ணை அதிகமாகப் படிக்க வைத்தது தப்போ என்று யோசிக்க ஆரம்பித்தாள் தாய்.  எதர்க்கும் குதர்க்கம்தான். கேட்டால், `மூளை எதுக்கு? யோசிக்கத்தானே?’ என்பாள். அடுத்து கிடைத்த ஹரீஷை கமலமே நிராகரித்துவிட்டாள் கமலம். `ஸ்ரீதேவி, பூதேவி’ என்று ஏதாவது ஆரம்பிப்பாள், மூளையைப் பயன்படுத்தும் மகள். எதற்கு வம்பு!   தான் அந்தப் பிள்ளை துருவனைப்பற்றி இவளிடம் சொல்லியே இருக்கக்கூடாது என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள்.   அதைவிடப் பெரிய தவறு, தகப்பனில்லாத பெண் கெட்டுவிடக்கூடாதே என்ற பரிதவிப்புடன் நாள் தவறாமல் அவளைத் தன்னுடன் கோயிலுக்கு அழைத்துச் சென்று இதிகாச புரணக்கதைகளெல்லாம் கேட்க வைத்ததுதான். சிறியவளென்று பார்வதியை வீட்டிலேயே விட்டுவிட்டுப் போனதால்தான் அவள் இவளைப்போல் இல்லை. “கிருஷ்ணனா? எப்பவும் பொண்களோடேயே சுத்திண்டு இருப்பான். ஜொள்ளுப்பார்ட்டி!” “நன்னாப் பாடுவானாம்!” சற்று நம்பிக்கையுடன் சொல்லிப்பார்த்தாள் கமலம். “வேற வினையே வேண்டாம். ஆயர்பாடியில வளர்ந்த கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிச்சுதானே எல்லாரையும் மயக்கினான்?” “ஒனக்குப்போய் வரன் பாக்கறேனே! இனிமே நான் ஒன்னோட கல்யாணப்பேச்சை எடுத்தா, `ஏண்டி?’ன்னு கேளு!’ என்று சூளுரைத்தாள் பெற்றவள். அம்மா இவ்வளவு கண்டிப்பாகவா இருப்பாள்! வயதோ இருபத்தாறு ஆகிவிட்டது! காதல் புதினங்கள் படித்துக்கொண்டும், வீட்டுக்குச் சாமான் வாங்கிப் போட்டுக்கொண்டும் காலத்தைக் கழிக்க வேண்டியிருந்த தன் விதியை நொந்துகொண்டாள் ரேணுகா. ஒரு நாள் சூபர்மார்க்கெட்டுக்குப் போயிருந்தபோதுதான்  அவனைப் பார்த்தாள். பின்னாலிருந்து. என்ன உயரம், அமிதாப் பச்சன் மாதிரி! கடைச் சிப்பந்தியிடம் அவன் ஏதோ கேட்கையில், `இது எந்த நடிகருடைய குரல்? சரத் பாபுவா?’ என்ற யோசனை எழுந்தது.   அவன் இவளை நோக்கித் திரும்பினான். ரேணுகாவிற்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. தான் வெறித்துப் பார்த்ததை தப்பாக எடுத்துக்கொண்டிருப்பானோ? “ரேணுதானே?” யாரிது, உரிமையுடன் தன் பெயரைச் சொல்வது? “சந்துரு! ஞாபகம் வருதா? ஒன் காதை முறுக்கி கணக்குச் சொல்லிக்கொடுப்பேனே?” சிரித்தான். பல்வரிசையும் அழகாக இருந்தது என்று குறித்துக்கொண்டாள் ரேணுகா. நிம்மதியுடன், சிரிப்பும் வந்தது. அவளுக்குப் பத்துப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, மூன்றாவது வீட்டில் இருந்தவன். அப்போதெல்லாம், “பாவம், சின்னப்பொண்ணுடா. ரொம்பத்தான் மிரட்டாதே. அன்பாச் சொல்லிக்குடு,” என்று அவனுடைய தந்தை அவளுக்குப் பரிவார். “இப்போ என்ன பண்றே? `ஒன்கூடப் பேசறேன்’னு அறுக்காதே!” கலகலவென்று சிரித்தான். “டியூஷன் எடுக்கறேன்”. “என்ன பாடம்?” “கணக்கு!” இதைச் சொல்வதற்குள் அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது. முகத்தைத் திருப்பிக்கொண்டாள். சந்துரு பெரிதாகச் சிரித்தான். அவனுடன் என்ன பேசுவது என்று புரியவில்லை. “ஒங்கப்பா சௌக்கியமா?” என்று கேட்டுவைத்தாள். “இருக்கணும்,” என்றான், அசுவாரசியமாக. “என் தங்கை கல்யாணமாகி அமெரிக்காவில இருக்கா. எனக்கு அங்கே கிடைச்ச நல்ல வேலையை ஒதறிட்டு, நான் இங்கேயே வந்துட்டேன்னு அப்பாவுக்கு கோபம். வீட்டையும், நிலபுலனையும் என்பேரில எழுதிவெச்சுட்டு, அவளோடேயே போய் இருக்கார்!” மரியாதை குறித்து, “ஒரு நாள் ஆத்துக்கு வாயேன். அம்மா ஒன்னைப் பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவா,” என்று அழைப்பு விடுத்தாள் ரேணு. “இப்பவே வந்தா உள்ளே விடமாட்டியா?” மீண்டும் சிரிப்பு. “இன்னிக்குப் பண்ண முடியற காரியத்தை நாளைக்குன்னு ஒத்திப் போடக்கூடாது”. அவனுடைய காரில் பின்னால் உட்காரப்போனவளை, “முன்னாலேயே ஒக்காரு, வா!” என்று அழைத்தான் சந்துரு. அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தபோது, எதையோ இழந்ததுபோல் இருந்தது. எத்தனை தடவை ஜோடி ஜோடியாகப் போகும் தம்பதிகளையும் காதலர்களையும் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டிருக்கிறாள்! முகமன் எல்லாம் முடிந்ததும், “ஒரு நாள் பொண்டாட்டியை அழைச்சிண்டு சாப்பிட வாடா, சந்துரு!” என்றாள் கமலம், உபசாரமாக. “நீங்க வேற, மாமி! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலே”. ரேணுகா நிமிர்ந்து உட்கார்ந்தாள். “ஒரு முப்பது வயசு இருக்காது ஒனக்கு? அமெரிக்காவில பொண்ணா இல்ல?” “அங்கேயே தங்க எனக்குப் பிடிக்கலே, மாமி. பணமா பெரிசு?  நம்ப நாட்டை விட்டுப் போனா, எங்கேயும் செகண்ட் கிளாஸ்தான்!” “சரி. இங்கேயே ஒரு நல்ல பொண்ணாப் பாத்து,” என்று ஆரம்பித்த கமலத்தை இடைமறித்தான் சந்துரு. “இங்கேதான் பொண்குழந்தை பிறக்கறபோதே கொன்னுடறாளே!” தனக்கு மனைவியாகும் பாக்கியம் பெறாத அந்தக் குழந்தைகளுக்காக வருத்தப்பட்டான். “இப்போ எல்லாருக்கும் ஒரே குழந்தைதான் இங்கே. அதுவும் பொண்ணா இருந்துட்டா, கேக்கவே வேண்டாம். தான் வெச்சதுதான் சட்டம்னு சாதிக்கும். சண்டை போடும். நிறைய பாத்துட்டேன். பயமா இருக்கு”. கமலத்தின் முகத்தில் நம்பிக்கை துளிர்விட்டது. “எங்க பார்வதியைப் பண்ணிக்கிறயாடா? நீ கேக்கற பொண்ணுமாதிரி இருப்பா! பரம சாது”, என்ற அம்மாவின்மேல் ரேணுவுக்கு ஆத்திரம் வந்தது. முதலில் தங்கைக்குக் கல்யாணமானால், அப்புறம் தன்னை யார் சீந்துவார்கள்? ஏற்கெனவே வயதாகிக்கொண்டிருக்கிறது! “ஏன் மாமி, ரேணுவை எனக்குக் குடுங்கோன்னா, `மாட்டேன்’னுடுவேளா?” “இவ ஒன்னை ஆட்டிவைப்பா!” என்று கமலம் எச்சரிக்க, “அதனால என்ன! காதை முறுக்கி, முறுக்கி, படிய வெச்சுடமாட்டேனா!” என்று சந்துரு சிரித்தான். ரேணுவும் அந்தச் சிரிப்பில் பங்கு கொண்டாள். “ஒரு வேடிக்கை, மாமி,” என்று எதையோ சொல்ல ஆரம்பித்தான் சந்துரு. “அப்பா என் ஜாதகத்தை தரகரிடம் குடுத்திருந்தாராம். யாரோ ஒரு பொண்ணு, இவன் பேரு எனக்குப் பிடிக்கலேன்னு சொல்லித்தாம்,” என்றவன், அந்தப் பெண் எதிரில் நிற்பதாகக் கற்பனை செய்துகொண்டு இரைந்தான்: “நீ என்னைப் பண்ணிக்காட்டா போயேன்! எங்காத்து கன்னுக்குட்டி புல் திங்காதா?” கமலம் கடைக்கண்ணால் மகளைப் பார்த்தாள். அவள் விறைப்பாக அமர்ந்திருந்தாள்.   “நீங்களே சொல்லுங்கோ, மாமி. பேரில என்ன இருக்கு?” “அதானே! பேரில என்ன இருக்கு?” என்றவள் ரேணுகா.                                         8. முதுகில் ஒரு குத்து   ஆராவமுது தன் டி.வி. சேனலின் வருமானத்தைப் பெருக்க வழி தேடிக்கொண்டிருந்தபோதுதான் செந்தில் அந்த யோசனையைச் சொன்னான். “அப்பா! எத்தனையோ பேருக்கு வெளியூருக்குப் போய் சுத்திப்பாக்க  ஆசை. ஆனா வசதி கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ரெண்டு மூணு  இடத்திலே பந்தயம் வெச்சு   இழுத்தடிக்கலாம்!” மலை ஏறி, பிறகு ஒரு கம்பியில் படுத்த நிலையில் ஆற்றைக் கடந்து,  மற்றும்  பிடிப்பிடியாக நெல்லை அள்ளி, (வழியில் இரு `பூதங்கள்’ அவர்களை மறித்து, பிடித்துத் தள்ள)  சேற்றில் ஓடி, அதற்கென வைக்கப்பட்டிருந்த கூடையில் நெல்லை நிரப்பி – இப்படி மனிதர்களின் உடல்பலம் மனோபலம் இரண்டையும் ஒருங்கே பரிசோதிக்கும் போட்டி அது. அமெரிக்காவில் பார்த்த நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி. பந்தயத்தில் ஜெயித்தால் பத்து லட்சம்! பல கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசை பிடித்து நின்றார்கள் எதிர்கால லட்சாதிபதிகள். “பத்து வருடங்களாகியும் எங்களுக்குப் பிள்ளைப்பாக்கியம் இல்லை. அதற்கான சிகிச்சைக்குப் பணம் கிடைக்கும் என்ற ஆசையில்தான் இப்போட்டியில் சேர்ந்திருக்கிறோம்!” என்றாள் பூரணி. பருமனாக இருந்தாள். கணவர் புஜபராக்கிரமத்துடன் இருந்தார். வயது நாற்பதுக்குள்தான் இருக்கும் என்றாலும்,   அவர்களால் ஒன்றாக ஓடமுடியுமா? இல்லை, விரைவாக நடக்கத்தான் முடியுமா? `பாக்கிறவங்களுக்கு எல்லாரும் ஒரேமாதிரியாக இருந்தா அலுப்பு தட்டும்!’ என்ற செந்திலின் யோசனை அவர்களுக்குத் தெரியாது. “நம்பளை போட்டியிலே சேர்த்துக்கிட்டாங்க!” அப்போதே குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டதுபோல் பூரணி குதித்தாள். அழகுப்போட்டியில் வென்ற இரு பெண்கள், விளையாட்டு வீரர்களான இரு இளைஞர்கள், குண்டும் ஒல்லியுமாக இரு ஆப்த நண்பர்கள்  என்று பத்து ஜோடிகளும் வெவ்வேறு விதமாக இருந்தார்கள். “இரண்டு வயதான என் மகனுடைய இருதயச் சிகிச்சைக்கு வேண்டிய வசதி என்னிடம் இல்லை. அதற்காகத்தான் பெயர் கொடுத்தேன்.  என் உயிர்த்தோழி வந்தனாவும் என்னுடன்   பங்குபெற வந்திருக்கிறாள்!” என்ற கல்பனா வேறு மாநிலத்திலிருந்து வந்திருந்தாள். கணினித்துறையில் பட்டம் பெற்றிருந்தாள். பூரணியைவிட பத்து வயதாவது இளையவளாக இருப்பாள். போட்டி துவங்கியது. பல கேமராக்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து ஓடியபடி இருந்தன. வார இறுதியில் ஒரு மாநிலத்திலிருந்து வேறொன்றிற்குப் போகவேண்டும்.   `கல்பனாவையும், வந்தனாவையும்பற்றி நாம் தவறாக முடிவெடுத்துவிட்டோம்!’ என்று பிற போட்டியாளர்கள் பொறாமையுடன் முணுமுணுக்கும் வகையில் ஆறில் நான்கு இடங்களில் அக்குழு முதலாவது இடத்தைப் பிடித்திருந்தனர். பூரணிக்கோ, அவள் எண்ணியதுபோல, இலவச சுற்றுலாப் பயணம்போல் இருக்கவில்லை அந்த அனுபவம். மூச்சு வாங்கியது. காலை விந்தித்தான் நடக்க முடிந்தது. “அவங்களுக்கெல்லாம் வயசாகலே! குரங்குமாதிரி ஏறிக் குதிக்க முடியுது!” என்று பொருமினாள். “திரும்பப் போயிடலாமா?” என்று மனைவியைக் கேட்டார் பரசுராமன், அனுதாபத்துடன். “அதெல்லாம் முடியாது!” அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது. ஏழாவது மாநிலத்தில், `இந்த இரண்டு விளையாட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்!’ என்ற அறிவிப்பு இருந்தது. அது மட்டுமா! அதில் ஒன்றை முடித்ததும், அடுத்ததற்குப் போகமுடியாது, ஆங்கில எழுத்தான `U’ ஒரு கரும்பலகையில் வரையப்பட்டு இருந்தது. முதலில் போகும் குழு வேறு ஒரு குழு உறுப்பினரின் பெயர்களை மேலே எழுதி, தம் பெயரையும் பகிரங்கப்படுத்திவிட வேண்டும். அப்படிச் செய்தால், மேலே இருப்பவர்கள் இரண்டையும் முடித்தாகவேண்டும். (`இதெல்லாம் அவசியமாடா? துரோகமில்ல?’ என்று ஆராவமுது தயங்கியபோது, ` இந்தமாதிரி ஏதாவது ஸ்டண்ட் செஞ்சாத்தான் எல்லாரும் இதைப்பத்தியே பேசுவாங்கப்பா. நம்ப ரேடிங்க் மேலே போகும்,’ என்று அவரைச் சம்மதிக்க வைத்திருந்தான் மகன்). `இது அசிங்கம்!’ என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு, ஒருவரும் கரும்பலகையில் மற்றவர் பெயரை எழுதவில்லை.   இறுதிச்சுற்று நான்கே குழுக்களுடன் ஆரம்பித்தது. உடலில் அடி, மிகவும் தாமதமாக வந்தார்கள் என்று மற்றவர்கள் விலக்கப்பட்டு இருந்தார்கள். “கால் விரல்லே உணர்ச்சியே இல்லை!” என்று முனகியபடி பூரணி மலைமேல் ஏறமுடியாது உட்கார்ந்தாள். இவ்வளவு தூரம் கடந்ததே அதிசயம் என்று தோன்றியது பரசுராமனுக்கு. “எதுக்கும்மா  இந்த விபரீத விளையாட்டு? போதும்னு போயிடலாமே!” என்றார். அலைச்சலில் பூரணியின் இடுப்பில் சதை அவ்வளவாகத் தொங்கவில்லை என்பது மட்டும்தான் திருப்திகரமாக இருந்தது. “அதெல்லாம் முடியாது!” அவள் குரல் மீண்டும் தீர்மானமாக ஒலித்தது. “அது ரெண்டும் எங்கே காணோம்?” “யாரைக் கேக்கறே?” “கல்பனா, வந்தானாவைத்தான்!” “பாவம்!  நாம்ப வந்த பஸ்ஸிலே அவங்களுக்கு இடம் கிடைக்கலே.  வந்து சேர இன்னும் அரைமணியாவது ஆகும்”. “அப்பாடா! இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு. கிளம்புங்க. ஓய்வா இருக்கவா இங்கே வந்திருக்கோம்?” என்று அவரை விரட்டியபடி,  புதிய உற்சாகத்துடன் எழுந்தாள் பூரணி. கால்வலி போன இடம் தெரியவில்லை. வழியில் ஒரு U! வழக்கம்போல் அதைக் கடந்துபோன கணவரை, “கொஞ்சம் இருங்க,” என்று தடுத்தாள் பூரணி. அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து, “எதுக்கு பூரணி?” என்று தடுக்கப்பார்த்தவரிடம்,   “இது பந்தயம். இங்கே  உணர்ச்சிங்களுக்கு இடம் குடுக்கக் கூடாது!” என்று மிரட்டலாகக் கூறியபடி, கல்பனா, வந்தனா என்று எழுதினாள். பஸ் நிறுத்தத்தில் கியூவில் தங்களுக்கு இருபது இடங்களுக்கு முன்னால் நின்றிருந்த கல்பனாவிடம், `என் மனைவிக்கு நிக்கவே முடியவில்லை. ஒங்க இடத்தைக் கொடுத்தா நல்லாயிருக்கும்,’  என்று அவர் கெஞ்சியபோது, சற்றும் யோசியாது, `அதுக்கென்ன!’ என்று பெருந்தன்மையுடன் பின்னால் போன இளம்பெண் பரசுராமனின் நினைவில் எழுந்தாள்.   வழக்கம்போல், அசுரவேகத்தில் பல தடைகளைக் கடந்துவந்த கல்பனா தன் குழுவின்  பெயர் அங்கே எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அலறினாள். “ஐயோ! இப்படி எங்கள் முதுகில் குத்த அவர்களுக்கு எப்படி மனம் வந்தது!” என்று கதற ஆரம்பித்தாள். “திரு, திருமதி பரசுராமன்! வாழ்த்துகள்! நீங்கள் போட்டியில் முதலாவதாக வந்திருக்கிறீர்கள்!” என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் முகமெல்லாம் சிரிப்பாகக் கூறினார். `இந்த மனிதர் சொன்னதைக் கேட்டு அவங்க பேரை எழுதாம இருந்திருந்தா?’ என்று எழுந்த எண்ணத்தை ஒதுக்கினாள் பூரணி. பொது இடம் என்றுகூடப் பாராது, கணவரைக்  கட்டி அணைத்துக்கொண்டு, முத்தமாரி பொழிந்தாள். அவரால் அவளுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. குற்ற உணர்ச்சி மிகுந்தது. அதற்கடுத்த வாரம் பரிசளிப்பு விழா. பத்து குழுக்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்தார்கள். வந்தனாவின் வற்புறுத்தலால்  கல்பனாவும் வேண்டாவெறுப்பாக வந்திருந்தாள். பூரணியைப் பார்க்கவே பிடிக்காது, தலையை அதீதமாகக் குனிந்துகொண்டாள். “பரிசுத்தொகையான பத்து லட்சம்..,” அறிவிப்பாளர் சற்று நிறுத்தி, ஒவ்வொரு குழுவினரையும் ஒரு பார்வை பார்த்தார். வாய் கொள்ளாத சிரிப்புடன், பூரணி எழுந்திருந்தாள். “அத்தொகை கல்பனா-வந்தனா குழுவிற்கு அளிக்கப்படுகிறது!” மேடையில் அமர்ந்திருந்த ஆராவமுது தலையை ஆட்டினார், அதை அங்கீகரிக்கும் வகையில். “இதென்ன அநியாயம்! நாம்பதானே ஃபர்ஸ்ட் வந்தோம்!” என்று கணவரிடம் உரக்க முறையிட்டவளை “ஷ்!” என்று அடக்கினார் அவர். (`அநீதிக்கும் ஏமாற்றத்துக்கும்  துணைபோகும் உங்கள் சேனலுக்கு இனி சந்தா கட்டமாட்டோம்’ என்று போட்டி முடிவை ஒருங்கே எதிர்த்த தொலைகாட்சி நேயர்களின் சீற்றத்துக்குப் பயந்து முடிவை மாற்றியதற்காக சேனலின் சொந்தக்காரரான ஆராவமுது தன்னைத்தானே பாராட்டிக்கொண்டார். `நம்ப நாட்டு ஜனங்க இன்னும் தர்மம், நியாயம்னு கெட்டியா பிடிச்சுக்கிட்டு இருக்காங்கப்பா. நான் அதை யோசிக்காம போயிட்டேன்!’ – செந்தில் தன் தோல்வியை ஒப்புக்கொண்டிருந்தான்). “இப்போட்டியின் நோக்கம் உடல் வலிமை, மனவலிமை இரண்டை மட்டும் பரீட்சை செய்வதில்லை. மனிதத்தன்மை என்றும் ஒன்றிருக்கிறது! பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும், அவர்கள் காலை வாருவது என்ன தர்மம்?” யாரோ எழுதிக்கொடுத்ததை உணர்ச்சியுடன் பேசினார் ஆராவமுது . “சராசரி என்று எடுத்துக்கொண்டால், பத்து இடங்களில் ஏழு இடங்களில் முதல் இடம் பிடித்திருக்கிறது கல்பனாவின் குழு.  திட்டமிடும் திறனாலும், எந்த நிலையிலும் நிதானத்தை இழக்காத குணத்தாலும் இறுதிச்சுற்றிலும் அவர்கள் வென்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்..,” வெளிப்படையாகக் குற்றம் சாட்ட விரும்பாது, குறிப்பாக பூரணியைப் பார்த்தார். அவளுக்கு அவமானமாக இருந்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டு, கடைக்கண்ணால் கணவரை நோக்கினாள். ஒரு  பெருமூச்சு எழுந்தது அவரிடமிருந்து. அது நிம்மதியை வெளிப்படுத்திய பெருமூச்சு! குறுக்கு வழியில், நல்லவர் மனதை நோகடித்து… அப்படியாவது ஒரு குழந்தை பெற வேண்டுமா? பிறக்கும் குழந்தை ஏதாவது குறையுடன் பிறக்காது என்பது என்ன நிச்சயம்? “போகட்டும், விடுங்க! இந்த ஒலகத்திலே எல்லாருமே ஏமாத்துக்காரங்களா இருக்காங்க, ” என்று அவரைச் சமாதானப்படுத்துவதில் இறங்கினாள் பூரணி.     9. நடிக்கப் பிறந்தவள்   `அம்மா’ என்றாலே கதாநாயகிக்குப் பின்னால், இருபது, முப்பது பேருடன் ஏதோ ஒரு மூலையில் நடனமாடுபவள்தான் என் நினைவுக்கு வரும்.  அப்போதெல்லாம் நான் சூப்பிக்கொண்டிருந்த கட்டைவிரலை எடுத்துவிட்டு, கதாநாயகி செய்வதையெல்லாம் செய்துபார்ப்பேன். சிரிப்புடன், `இது நடிக்கவே பிறந்திருக்கு! பெரிய நடிகையா வரும்!’ என்று அங்கிருந்தவர்கள்  சிலாகிப்பார்கள். அம்மாவுக்கு அதுதான் டானிக். தன்னைத்தான் நடிகை என்று யாருக்கும் தெரியாமலே போய்விட்டது, மகளுக்கும் அதே நிலைமை வரக்கூடாது என்பதில் குறியாக இருந்தாள். அவர்கள் வாக்கு பலித்தது. எல்லாருக்கும் அபிமானமான குழந்தை நட்சத்திரமாக ஒளிர்ந்தேன். ஒன்பது வயதில் நான் வயதுக்கு மீறி உயர்ந்தபோது, எனக்குப்  பெருமையாக இருந்தது. கலங்கியவள் அம்மாதான்.  போட்டி போட்டுக்கொண்டு என்னை ஒப்பந்தம் செய்ய வந்த திரைப்பட இயக்குனர்கள், `குழந்தைப் பாத்திரத்துக்குப் பொருந்தாது. பெரியவளாக இருக்கிறாளே!’ என்று ஒதுங்கிப்போனார்கள். அம்மாவின் கெஞ்சலுக்கு அவர்களில் யாரும்  மசியவில்லை. மகளால் இனி குழந்தையாகத்தான் நடிக்க முடியாது, ஆனால் வளர்ந்த மங்கையாக நடிக்க முடியுமே என்று அம்மாவின் புத்தி குறுக்கு வழியில் போயிற்று. அரும்பாக இருந்த என்  மார்புக்குள் எதையோ வைத்தார் மருத்துவர். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சிறு வயதிலிருந்தே, ` ஏம்மா எனக்கு மட்டும் உன்னைப்போல மார்பு பெரிசா இல்லை?’ என்று கேட்டவளாயிற்றே! அப்போது எனக்குத் தெரியவில்லை, நான் அம்மாவின் கைப்பாவையாய், நிரந்தரமாக மனதளவில் குழந்தையாகவே இருப்பேன் என்று.  ஒரு குழந்தையைப் பருவ மங்கையின் உடலில் அடைத்தார்கள் என்பது புரியும் வயதா அது! பருந்தாக அலைந்த இயக்குனர்களின் கண்களுக்கு என் வளர்ச்சி தப்பவில்லை. அதிக சிரமமில்லாது என்னை நடிக்க வைக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரிந்த விஷயம்.  ஒரு காட்சியை விளக்கினால், அதை ஐந்து விதமாக நடித்துக் காட்டி, `உங்களுக்கு எது வேண்டும்?’ என்று கேட்கும்  புத்திசாலி என்று பெயர் வாங்கியிருந்தேனே! `மரப்பாச்சிக்குப் புடவை சுத்தினாப்போல இருக்கு!’ என்று சில மாமிகள் முணுமுணுத்தாலும், திரைப்பட ரசிகர்கள் என்னை, என் சுட்டித்தனத்தை, அடிக்கடி மாறும் முகபாவங்களை  முழுமனதாக ஏற்றுக்கொண்டார்கள். (இதெல்லாம் விமரிசகர்கள் எழுதியிருந்தார்கள் என்று அம்மா பெருமையுடன் படித்துக் காட்டியது). ஒரு நாளைக்கு இரண்டு ஷிஃப்ட். ஆனால், காமராவுக்கு முன்தான் நான் நானாக இருந்தேன். ஒவ்வொரு காட்சியிலும்  வண்ண வண்ண ஆடைகளாக உடுத்தியபோது, எதையோ சாதித்த நிறைவு ஏற்பட்டது. (சிறு வயதில்கூட நான் பொம்மைகள் வைத்து விளையாடியதில்லை. `கடைக்குப் போகலாம், வரியா?’ என்று அம்மா என்னை எங்கும் அழைத்துப் போனதில்லை. பட்டும், பீதாம்பரமும் வாங்கித் தந்து, என்னை அழகு பார்க்கவில்லை. அதற்கெல்லாம் எங்கே நேரம்!) `முகத்தில் அவ்வளவாக முதிர்ச்சி இல்லையே!’ என்று பெரிய தயாரிப்பாளர்கள் தயங்கினார்களாம். அம்மா பயந்து, என் முகத்தில் எந்தெந்த பாகத்தை செப்பனிட முடியுமோ, அதையெல்லாம் சீர்படுத்தச் செய்தாள். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்புகள் வரும்போது, லட்சங்களைப்பற்றி யாராவது யோசிப்பார்களா! அம்மாவிற்கு லாபம் அளித்த ஒரே முதலீடு என் முகமாற்றம்தான். ஒன்றைப் பத்தாக்கலாம் என்று யாராவது ஆசை காட்டினால், உடனே நம்பி, மோசம் போகும் வர்க்கம் அம்மா.  பொன்முட்டை இடும் வாத்தாக இருந்த நான் சம்பாதித்த கறுப்புப் பணமெல்லாம் அம்மாவின் பேராசையால் அழிந்துபோயிற்று. `இரவு பகலாக நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தை என்ன செய்கிறாய்?’ என்று கேட்கும் அறிவோ, துணிச்சலோ, நேரமோ எனக்கு இருக்கவில்லை. அம்மாதான் சகலமும். `பத்திரிகைக்காரங்க எப்போ கல்யாணம்னு கேப்பாங்க.  கலைத்துறைக்கே என்னை அர்ப்பணிச்சுட்டேன் அப்படின்னு சொல்லிடு!’ என்று அம்மா சொல்லிக்கொடுத்தாள். யார் யாரோ என் உடலைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா, என்ன! என் வாய்ப்புகள் அதிகரித்தன.  ஆனால், என் உடலில்  இருந்த செயற்கையான பாகங்கள் அப்படியே மாறாது இருக்கவில்லை. முன்பு இருந்ததைவிட மோசமாக மாறின. மீண்டும் மீண்டும் அறுவைச் சிகிச்சை. வலி ஒருபுறமிருக்க, கண்ணாடியில்  பார்த்துக்கொண்டபோது, எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. இப்படியே  நாற்பத்தைந்து வயதை எட்டிவிட்டேன்.  என் இடத்தைப் பிடித்துக்கொள்ள சில அப்பாவிக் குழந்தைகள் விரைவாக பருவம் அடையும் வழிகளைத் தேடினர். எனக்கோ அக்காள், அம்மா போன்ற வேடங்கள்தான் கிடைத்தன. அதையும் சிறப்பாகத்தான் செய்தேன் என்று பத்திரிகைகள் பாராட்டின. என் கையிலிருக்கும் குழந்தையை என் கருவில் உருவாகி, அரைகுறையாக வெளியேற்றப்பட்டதாகவே பாவித்துக்கொண்டு, அன்பைப் பொழிவேன். ஆனாலும், படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தவள் சில நிமிடங்களே தலைகாட்ட முடிந்தது அவமானமாக, வேதனையாக இருந்தது. என்னைப் பிஞ்சிலேயே பழுக்க வைத்ததன் விளைவுகள் விரைவிலேயே தெரிந்தன.  என் குரலிலும் தோற்றத்திலும் அகாலமான முதுமை! பற்கள் ஆட ஆரம்பித்தன.  சற்றே வளைந்த முதுகு. குரலிலும் நடுக்கம். வாய்ப்புகள் அறவே நின்றன. பத்து வயதிலிருந்தே என்னை அரவணைக்கக் காத்திருந்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள். அதுவரை மிரட்டலாகவும், கொஞ்சலாகவும் என்னைத் தன்வழி நடத்திச்சென்ற அம்மாவும் மாறிப்போனாள். `கண்ணு’ என்றழைத்த நாக்கு இப்போது `சனியனே!’ என்றது. இதற்கா சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவ்வளவு கஷ்டப்பட்டேன்? நான் இழந்த குழந்தைப்பருவத்தை புகழும் பணமும் ஈடு செய்ய முடியவில்லையே! காலங்கடந்து வருத்தம் ஏற்பட்டது. மாரடைப்பை  உண்டுபண்ணி, ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று  ஆராய்ந்து, அதைச்  செயலிலும் காட்டினேன். அம்மாவின் மரணம் என்னை எவ்வளவு தூரம் பாதித்துவிட்டது என்று காட்டிக்கொள்ள அன்ன ஆகாரமில்லாமல் மூன்று நாட்கள். நான் நிர்மலா ராகவன்  கடைசியாக நடித்தது அப்போதுதான். ஆனால், நான் எதிர்பார்த்தபடி, எனக்கு  நிறைவு கிட்டவில்லையே, ஏன்? எதிர்காலத்தை நினைக்கவே பயமாக இருந்தது. இனி யார் என்னை ஒவ்வொரு நிமிடமும், `இதை இப்படிச் செய், இந்தக் கேள்விக்கு இப்படிப் பதில் சொல்லு!’ என்று வழிகாட்டப்போகிறார்கள்? அடுத்த நாள். `முன்னாள் கதாநாயகி … தற்கொலை செய்துகொண்டார்.  அவருக்கு உறுதுணையாக இருந்த தாயின் மரணத்தைத் தாங்கமுடியாமல் போனதுதான் காரணம் என்று நம்பப்படுகிறது!’ என்ற இரண்டே வாக்கியங்கள் தினசரி ஒன்றின்  நான்காம் பக்கத்தின் ஒரு மூலையில்   இடம்பெற்றிருந்தது. பலரும் அதைப் படிக்காது அசுவாரசியமாகப் பக்கங்களைப் புரட்டினாலும், சில மாமிகள், `இந்தப் பொண்ணுக்குத்தான் அம்மாமேல என்ன பாசம்!’ என்று பிரமித்து,  `எனக்கும் வந்து பிறந்திருக்கே -- வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசிண்டு!’ என்று தலையில் அடித்துக்கொண்டார்கள்.                                                               நிர்மலா ராகவனைப்பற்றி   ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியை.  1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக சிந்திக்கும் இவர் தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டு வருகின்றார்.  பரிசில்களும், விருதுகளும் - "சிறுகதைச் செம்மல்"விருது (1991) - "சிறந்த பெண் எழுத்தாளர்"விருது (1993) - சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006) - ஆஸ்ட்ரோ, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் போட்டிகளில் மூன்று முறை பரிசு பெற்றிருக்கிறார்.