[] [cover image] நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் விந்தன் FreeTamilEbooks.com CC0 நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் 1. நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் 1. உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) 2. Universal (CC0 1.0) Public Domain Dedication 3. பதிப்புரை 4. எம்.ஆர். ராதா பேசுகிறார்! 2. ஒவ்வோர் கலைஞர்கள் 3. கடவுள் கொடுத்த காசு 4. வந்தது ’பிளைமவுத்’கார் 5. என்.எஸ்.கிருஷ்ணனின் சபதம் 6. காந்தியார் மேல் வந்த கோபம் 7. கோவிந்தா, கோவிந்தா! 8. நாடக மேடையில் ஜேம்ஸ்பாண்ட் 9. எடுத்தேன்; சுட்டேன்! 10. மாரீசன் குரல் 11. வஸ்தாதுக்குப் பெண் பார்த்த வஸ்தாது 12. வாசு பிறந்தான்! 13. “ஐ வாண்ட் அநதர் ஒன்’ 14. பொள்ளாச்சி ஞானம் 15. இழந்த காதலில் சிவாஜி 16. என்.எஸ்.கே. எதிரியானார் 17. பெரியார் போட்ட பூட்டு 18. ஜி.டி.நாயுடுவைச் சந்தித்தேன் 19. விதவையின் கண்ணீர் 20. கண்கண்ட தெய்வம் 21. திருப்பதியில் திருடினேன்! 22. போர்வாள் 23. நண்பர் ஜீவானந்தம் 24. சர்.ஆர்.எஸ்.சர்மா 25. திருவாரூர் சிங்கராயர் 26. என் வழி தனி வழி 27. நெஞ்சிலே இட்ட நெருப்பு 28. இரு கெட்டிக்காரர்கள் கதை 29. தி.மு.கவும் நானும் 30. அண்ணாவின் ஆசை 31. தருமம் தலை காக்கும் நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்   விந்தன்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Nadigavel_MR_Radhavin_Siraichaalai_Sindhanaigal} உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. பதிப்புரை 1971-ல் ’தினமணிகதிரி’ல் நடிகவேள். எம்.ஆர். இராதா வைப் பேட்டி கண்டு அமரர். விந்தனால் தொடராக எழுதப்பட்ட இந்நூல், தற்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூலின் சிறப்பம்சம் கலையுலக விற்பன்னரும், இலக்கிய விற்பன்னரும் இணைந்து தமிழ் மக்களுக்கு இதை வழங்கியிருப்பது. இச்சுயசரிதத்தை அமைத்திருக்கும் விதம் வாசகர்களைச் சட்டெனக் கவரும் என நம்புகிறோம். இந்நூலைப் படிப்பவருக்கு நடிகவேள். எம்.ஆர். இராதா, தன் சுயசரிதத்தைத் தானே சொல்லக் கேட்பது போன்ற அனுபவம் ஏற்படும். படித்து முடித்த பின்னரும் அவரது குரல் வெகுநேரம் நம் காதுகளில் ஒலிப்பது போன்ற பிரமை ஏற்படும். உள்ளது உள்ளபடி, கிட்டத்தட்ட மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ போன்று வெளிவந்திருக்கும் இந்நூலை வாசகர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. -பதிப்பகத்தார் - எம்.ஆர். ராதா பேசுகிறார்! 1971ம் ஆண்டு மே 1ந் தேதி, ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் வெறிச்சோடிக் கிடந்த சென்னை தேனாம்பேட்டை போயிஸ் ரோட் வீடு கலியான வீடுபோல் ‘கலகல’ வென்று காட்சியளிக்கிறது. வெளியே பல கார்கள் நிற்கின்றன. சில கார்கள் வருவதும் போவதுமாயிருக்கின்றன. ஆணும் பெண்ணுமாக மக்கள் அங்கங்கே சிறு சிறு கூட்டமாக நின்று, மாடியைப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதுமாக இருக்கிறார்கள். மேலேயும் கீழேயுமாகச் சிலர் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து நானும் போகிறேன். ராதாவின் குரல் ஒலிக்கிறது: “என்னைப் பார்க்கவா இத்தனை பேரு? நான் என்ன, ராஜாஜியைப் போல, பெரியாரைப் போல, காமராஜைப் போல பெரிய மேதையா? சாதாரண நடிகன்தானே? என்னைப் பார்க்க ஏன் இப்படி விழுந்தடிச்சிக்கினு வர்றீங்க?… சரி, பாாத்தாச்சா?… போங்க … மாலை வேறே கொண்டாந்து இருக்கீங்களா?… ஐயோ, ஐயோ … சரிசரி, போடுங்க… போட்டாச்சா?… போயிட்டு வாங்க!” ராதாவின் குரலா இது, இத்தனை சன்னமா யிருக்கிறதே!… வியப்பு அடங்கு முன் இன்னொரு குரல் கேட்கிறது: “உங்கள் குரல் முன்னைப் போல்…” “அஞ்சி வருஷமாப் பேசாம இருந்த குரல் இல்லையா ? அப்படித்தான் இருக்கும்; கொஞ்சம் கட்டினாச் சரியாயிடும்!” என்கிறார் ராதா. மேலே செல்கிறேன். ராதா தம் உறவினர்களுடன் பேசிக் கொணடிருக்கிறார். “உங்கள் உறவினர்களோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது; நான் டிஸ்டர்ப் செய்ய வந்துவிட்டேனோ?” என்கிறேன். “டிஸ்டர்ப் என்ன, டிஸ்டர்ப்? நான் என்ன, பெரிய சையன்டிஸ்ட்டா? விண்வெளி ஆராய்ச்சி சேஞ்சிக்கிட்டு இருக்கேனா? சாதாரண ஆக்டர் நீங்களெல்லாம் பேசற பேச்சுக்குக் கொஞ்சம் பாலிஷ் கொடுத்து மேடையிலே பேசறவன். அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். ஆக்டர்னா நீங்க ஒவரா நினைச்சிடாதீங்க… ஆ!… தொண்டை கட்டிக்கிச்சி… இப்ப நான் ‘ரத்தக் கண்ணீர் ராதா’ வாயிட்டேன்… ஏய், காந்தார்!… யார் அங்கே…?” ராதா சிரிக்கிறார். அப்போது அவர் மகன் வாசு வருகிறார். அவரைப் பார்த்ததும், “வாசு உங்களை விட நன்றாக நடிக்கிறார் என்று சினிமா ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்களே?” என்கிறார் டாக்டர். “அதை நான் ஒத்துக்க முடியாது. டி.வி.எஸ்.ஸை எடுத்துக்குங்க அவருடைய பையனுங்க அந்த ஸ்தாபனத்தை இப்ப பிரமாதமா முன்னுக்குக் கொண்டாந்திருக்காங்க. அதை வெச்சி ஆதியிலே அதுக்குக் காரணமாயிருந்த டி.வி.எஸ். திறமையிலே குறைஞ்சவருன்னு சொல்லி விட முடியுமா?” என்கிறார் ராதா. “அது எப்படிச் சொல்ல முடியும்?” என்கிறேன் நான். சக பத்திரிகையாளர் ஒருவர், “உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக் கொள்கிறேன்” என்கிறார். வினயத்துடன். “என் மனைவியை எதுக்குக் கூப்பிடறது? நான் மட்டும் பார்க்கத்தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லே!” என்று ராதா ‘பட்’ டென்று பதிலளிக்கிறார். “ஜெயில்லே…” என்று நான் மெல்ல ஆரம்பிக்கிறேன். ராதா குறுக்கிட்டுச் சொல்கிறார்: “எனக்குத் தெரிஞ்ச வரையிலே ரோசமுள்ளவனும் மானமுள்ளவனும் ஜெயில்லே இருக்கான்!… அங்கே வேலை கெடைக்குது, கூலி கிடைக்குது, இட்லி சாம்பார், சாப்பாடு எல்லாம் கெடைக்குது… ’இன்னிக்கு உனக்கு விடுதலைடா’ன்னு ஜெயிலர் சொன்னாக்கூட ’அதுக்குள்ளேயா, இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போறேனே!’ங்கிறான்… அதைப் பத்தியெல்லாம்தான் உங்க கதிர்லே தொடர்ந்து வரப் போவுதே ?… அப்போ சொல்றேன்!” சொன்னபடி அவர், ’கதிருக்காக வாரா வாரம் என்னிடம் சொல்லிக் கொண்டு வந்ததைத்தான் நீங்கள் இப்போது புத்தக வடிவில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். - விந்தன் சென்னை-30 15.3.1972 ‘ஒவ்வோர் கலைஞர்கள்’ சிறையில் இருந்தபோது, ‘பெரியார் மனம் வைத்தால் சீக்கிரமாக விடுதலையாகிவிடலாம்’ என்று நீங்கள் நினைத்ததுண்டா ?" “இல்லை; நான் யாருடைய தயவிலும், சிபாரிசிலும், கருணையிலும் எப்போதுமே வாழ்ந்தவனுமல்ல; வாழ நினைப்பவனுமல்ல ?” “முதல்வர் கருணாநிதியைப் பற்றி…” “ஒரு காலத்தில் அவர் என் கம்பெனி ஆக்டர்; இன்று இந்த நாட்டின் முதலமைச்சர். என் கம்பெனி ஆக்டர் முதலமைச்சராயிருக்கிறார் என்றால் அதிலே எனக்குப் பெருமைதானே?” “சரி, கலை உலகத்துக்கு வருவதற்கு முன்னால் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?” “வீட்டுக்கு அடங்காத பிள்ளையாயிருந்தேன். ஸ்கூலுக்குப் போவதில்லை. ராபர்ட் கிளைவ் மாதிரி துடுக்குத்தனமாக ஏதாவது பேசிக்கிட்டிருக்கிறதே என் பொழுது போக்காயிருந்தது.” “அதை விட்டுக் கலை உலகத்துக்கு நீங்கள் வந்தது எப்படி ?” கலை உலகத்துக்கு நானாகவும் போகவில்லை; அதுவாகவும் என்னைத் தேடி வரவில்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமுமே என்னையும் கலையையும் ஒன்று சேர்த்தது." “அது என்ன சூழ்நிலை, சந்தர்ப்பம் ?” “வீட்டிலே சோறில்லை; டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அப்போ அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் இன்னிக்குப் பலரைக் கலைஞர்களாக்கியிருக்கிறது. ‘பேக்ட்’டை யாரும் சொல்ல மாட்டேங்கிறானுங்க. வசதி வந்ததும் ’ஹிஸ்டரி’யையே மாத்திச் சொல்றானுங்க. ’ராயல் பேமிலி’ங்கிறானுங்க. கலைக்காகவே அவதாரம் எடுத்ததா வேறே அளக்கிறானுங்க. என்ன செய்யறது ? உண்மை உறங்குது; பொய் பொன்னாடை போர்த்திக்கிட்டு ஊர்வலம் வருது. என்னைப் பொறுத்தவரை டிராமா கம்பெனி சோறுதான் என்னை ’ஆக்ட’ராக்கியிருக்கிறது. இதுதான் ’பேக்ட்’. “ஒரு கலைஞன் முன்னேற வேண்டுமானால் மற்ற கலைஞர்களை முன்னேற விடாமல் தடுத்தால்தான் முன்னேற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?” “இல்லை; சரக்கு உள்ளவன் அப்படி நினைக்கமாட்டான், அந்த வேலையைச் செய்யவும் மாட்டான்.” “கலைஞன் என்பவனுக்கு இலக்கணம் ஏதாவது…” “உண்டு; பஞ்சமாபாதகத்தில் அவன் ஒரு பார்ட்னர்” “கலைஞன் கலைஞனாக மட்டும் இருந்தால் போதுமா ? அவன் தருமோபதேசியாகவும் தத்துவ ஞானியாகவும் கூட இருக்க வேண்டுமா ?” “கலைஞன் கலைஞனாகத்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். தருமோபதேசம், தத்துவ ஞானமெல்லாம் அவனுக்கு ஏது? இருந்தால் அதெல்லாம் இரவல் சரக்காகத்தான் இருக்கும்.” “உண்மையான கலைஞன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்?” “ஆடியன்ஸுக்கு லஞ்சம் கொடுப்பவனா யிருக்கக்கூடாது; அறிவைக் கொடுப்பவனாயிருக்க வேண்டும்.” “நடிகர்களில் சிலர் பிறந்த நாள் கேக் வெட்டுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?” “நினைப்பதற்கு என்ன இருக்கிறது ? ‘கேக்’ வெட்றதை ஒரு ’ஜோக்’கா ஆக்கிட்டான் இந்த நாட்டிலே. மேல் நாட்டிலே அப்படி இல்லை. அதிலே ஒரு சமதர்மச் சித்தாந்தமே அடங்கியிருக்கிறது. மனைவி மக்களோடு வீட்டு வேலைக்காரர்கள், நண்பர்கள், உறவினர்களையெல்லாம் வரவழைத்துப் பிறந்த நாள் கேக்கை வெட்டி, ஒரு துண்டைத் தன் வாயில் போட்டுக்கிட்டு, மற்ற துண்டுகளை ஏற்றத்தாழ்வைப் பார்க்காம அவன் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கிறான். ஏன் ? தன்னை வந்தடைந்துள்ள புகழ், பொருள் எல்லாவற்றையுமே பிறருடன் பகிர்ந்து கொள்ளத் தான் தயாராயிருப்பதை எடுத்துக் காட்டுவதற்காக. இதுவே கேக் வெட்டுவதன் தாத்பரியம். இதை விட்டுவிட்டுப் பிரஸ் ரிப்போர்ட்டரைக் கூப்பிட்டு”பர்த்டே கொண்டாடறவன் உண்மையான கலைஞனல்ல; அசல் வியாபாரி. அப்படித்தான் என்னாலே சொல்ல முடியும்." “கலைஞனை விளம்பரம் தானாகவே தேடி வர வேண்டுமா ? அல்லது, விளம்பரத்தைத் தேடி அவன் ஓட வேண்டுமா ?” “விளம்பரம் கலைஞனைத் தேடி வந்தது அந்தக் காலம்; கலைஞன் விளம்பரத்தைத் தேடி ஓடறது இந்தக் காலம்.” “மேடை நாடகங்களில் நீங்கள் யாரை யாரையெல்லாம் சந்தித்தீர்கள் ? அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த தொடர்புகள் என்னென்ன?” “மேடை நாடகங்களில் குரங்காட்டம் போட்டவர்களையும், கொள்கையில்லாக் கூத்தாடிகளையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் எனக்கும் இடையே இருந்த ஒரே தொடர்பு ’அரிதாரம் பூசறது தான்.” “அதைத் தவிர… ?” “வெட்டுப் பாறையில் கோவலன் பாடிக்கொண்டே செத்துவிடுவான். ‘ஆடிட்டோரிய’த்திலிருந்து ’ஒன்ஸ்மோர்’ குரல் வரும்; மாண்டவன் மீண்டும் எழுந்து பாடுவான்!” “இந்த ஒன்ஸ்மோர் கலைஞர்களைத் தவிர…” “பெருமைக்குரிய கலைஞர்கள் சிலரையும் நான் சந்தித்திருக்கிறேன்; அவர்களைப் பற்றிப் பின்னால் சொல்கிறேன்.” “நீண்ட நாட்களாக நீங்கள் திரை உலகத்துக்கு வராமல் இருந்தது ஏன் ? வந்தாலும் இடையிடையே விட்டுவிட்டுப் போய்விட்டது ஏன்?” “டிராமாங்கிறது எனக்கு ‘பெர்மெனென்ட் ஹவுஸ்’; சினிமாங்கிறது ‘டெம்பரரி கேம்ப்’. இருந்தாலும் ராஜசேகரன், சத்தியவாணி, சந்தனத் தேவன், பம்பாய் மெயில், சோகாமேளர் போன்ற அந்த நாள் படங்களிலேயே நான் நடித்திருக்கிறேன்!” “சிறை சென்று வந்த பிறகு உங்கள் கருத்தில் ஏதாவது மாற்றம் உண்டா ?” “இல்லை; எப்போதும் ஒரே கருத்துத்தான். ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துக்களையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம் தான்; நானோ, என் கருத்தோ அல்ல.” “சிறையில் இருந்தபோது நீங்கள் சிந்தித்தவற்றைப் பற்றி…” “எத்தனையோ சொல்ல வேண்டும். இந்த வாரம் தானே ஆரம்பிச்சிருக்கோம். வாராவாரம் சொல்றப்போ அதெல்லாம் தானாவே வரும்.” கடவுள் கொடுத்த காசு உங்க ’ஹிஸ்டரியை எழுதணும்னு ஆரம்பிச்சோம்; அது பொதுவா கலை உலக ஹிஸ்ட்ரியாயில்லே போய்க்கிட்டிருக்கு ?" “ரெண்டும் ஒண்ணுதான்; என் ஹிஸ்ட்ரி கலை உலக ஹிஸ்ட்ரி; கலை உலக ஹிஸ்ட்ரி என் ஹிஸ்ட்ரி”. “எல்லாக் கலைஞர்களுக்கும் பிறந்த ஊர் என்று ஒன்று தனியாக இருக்குமே, அந்த மாதிரி உங்களுக்கு எந்த ஊரும் கிடையாதா ?” “இல்லை; நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மெட்ராஸில்தான். ‘எம்.ஆர்.ராதா’ன்னா ’மெட்ராஸ் ராஜகோபால் நாயுடு மகன் ராதா’ன்னு அர்த்தம். அப்பா மட்டுமில்லே, என் தாத்தாவும் இங்கேயேதான் பிறந்து வளர்ந்தார். அவர் மூர் மார்க்கெட்டில் ’ஆக்கர் கடை’ வைத்திருந்தார். மூர் மார்க்கெட்டுன்னா இப்போ இருக்கிற மூர் மார்க்கெட்டைச் சொல்லலே, பழைய மூர் மார்க்கெட்டைச் சொல்றேன். அது பத்தி எரிஞ்சிப் போச்சு, இப்போ இருக்கிறது புதுசாக் கட்டியது.” “ஆக்கர் கடை யென்றால்….?” “பழைய சாமான்களை வாங்கி விற்கிறது. அப்போ மெட்ராஸிலே எங்கே பார்த்தாலும் வெள்ளைக்காரனுக இருப்பானுக, அவனுக புதுசு புதுசா ஏதாவது வாங்கிக்கிட்டே இருப்பானுக. அப்படி வாங்கறப்போல்லாம் பழைய சாமான்களை வந்த விலைக்குக் கொடுத்துடுவானுக. அதை வாங்கி விற்கிறது. தமிழனா, வீடே குப்பைத் தொட்டியானாலும் சரி, எந்த சாமானையும் வெளியே விட மாட்டேன்னு வெச்சிக்கிட்டிருக்க?” “உங்கள் தகப்பனார் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் ?” “கெளரவமாச் சொல்றதாயிருந்தா யுத்த சேவை செஞ்சிக்கிட்டிருந்தார்னு சொல்லணும்…. நான் அப்படிச் சொல்ல மாட்டேன். மனுஷனுக்கு வேறே வேலை கெடைக்கலை, பட்டாளத்திலே சேர்ந்துட்டார். அதுதான் பேக்ட்!” “அதற்கும் ஒரு வீரம் இருக்க வேண்டுமே ?” “தமிழனைப் பொறுத்த வரையிலே எந்த வீரமும் சோறில்லாமப் போனாத்தான் வரும்!” “கரெக்டாச் சொன்னீங்க, அப்புறம் ?” “அப்புறம் என்ன ? ரஷ்ய எல்லையிலே, பஸ்லோவியா என்ற இடத்திலே அவர் வீர மரணம் அடைஞ்சிட்டார்னு எங்களுக்குச் சேதி வந்தது. அதோடு அவர் சேப்டர் க்ளோஸ். அவர் ‘வார்’ சமயத்திலே வாங்கிய மெடல்களை மட்டும் நான் இன்னும் பத்திரமா வெச்சிக்கிட்டிருக்கேன்.” “அவர் இறந்த பிறகு தான் உங்களைக் கொண்டு போய் நாடகக் கம்பெனியிலே விட்டார்களா ?” “இல்லை; முதல்லே என்னை யாரும் கொண்டு போய் விடலே, நானாத்தான் போனேன். போனேன்னா, நேரா நாடகக் கம்பெனிக்குப் போயிடலே….” “வேறு எங்கே போனீர்கள் ?” “சொல்றேன்; வீட்டிலே படிக்கிறவனுக்கும் படிக்காதவனுக்கும் வித்தியாசம் காட்டினாக….” “அது என்ன வித்தியாசம்?” என அண்ணன் ஜானகிராமன் நல்லாப் படிப்பான்; அவனுக்கு எங்க அம்மா ரெண்டு மீன் வைப்பாக. நானும் என் தம்பி பாப்பாவும் படிக்க மாட்டோம். அதுக்காக எங்களுக்கு ஒரே ஒரு மீன் வைப்பாக. இந்த வித்தியாசத்தை ஒரு நாள் என்னாலே பொறுக்க முடியாமப் போச்சு; எனக்கும் ரெண்டு மீன் வச்சாத்தான் ஆச்சு’ன்னு அடம் பிடிச்சேன். ’ஊரைச் சுத்தற பயலுக்கு ஒண்ணு போதாதா?ன்னு அம்மா என் தட்டிலே ரெண்டு வைக்கிறதுக்குப் பதிலா முதுகிலே ரெண்டு வெச்சாக. அவ்வளவு தான்; எழுந்து நடந்துட்டேன்." “எங்கே ?” “எழும்பூர் ஸ்டேஷனுக்கு. அப்போ எனக்கு ஏழெட்டு வயசுதான் இருக்கும்; அங்கே போனப்புறம்தான் எங்கே போறதுன்னு எனக்கு ஒண்ணும் புரியலே. பிளாட்பாரத்தைச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டிருந்தேன். ஏலே பயலே, இங்கே வாடான்’னு ஒரு குரல் கேட்டது; திரும்பிப் பார்த்தேன். கனத்த பெட்டியுடன் என்னை நோக்கி வந்துகிட்டிருந்த ஒருவர், இதை எடுத்துக்கிட்டு வான்னு என்கிட்டே பெட்டியைக் கொடுத்தார். அப்போல்லாம் ’போர்ட்டர்’னு யாரும் தனியா கிடையாது; என் மாதிரி பொடிப் பயலுகதான் அந்த வேலையையும் செய்துக்கிட்டிருந்தானுக. நான் பெட்டியைத் தூக்கிக்கிட்டுப் போய் அவர் வைக்கச் சொன்ன இடத்திலே வெச்சேன். அவர் காலணாவை எடுத்து என் கையிலே கொடுத்துட்டு, ’உன் பேரு என்னடா ?ன்னு கேட்டார்; ராதா’ன்னேன். அப்பா, அம்மால்லாம் இருக்காங்களா ?’ன்னார்; ’ஒருத்தரும் இல்லே’ன்னு சொல்லி வெச்சேன். அப்படின்னா என் டிராமா கம்பெனியிலே சேர்ந்துடறியா ? நான் தான் ஆலந்தூர் டப்பி ரங்கசாமி நாயுடு எங்கிறவரு; கேள்விப்பட்டிருப்பியே ?ன்னார்; ’நல்லாக் கேள்விப்பட்டிருக்கேன்; சேர்ந்துடறேன்’னேன். சரி, ஏறு வண்டியிலே’ன்னார்; ’டிக்கெட் வாங்கலையான் ?’னேன். அதெல்லாம் ஒண்ணும் வாணாம்;”சும்மா ஏறு ’ன்னு அவர் என்னை வண்டியிலே ஏத்திவிட்டு, ஒரு பெஞ்சுக்குக் கீழே பதுங்கி உட்கார்ந்துக்கச் சொன்னார். நான் அப்படியே உட்கார்ந்துக்கிட்டேன். அவர் ஒரு படுக்கை விரிப்பை எடுத்து பெஞ்சியின் மேல் போட்டு, என்னை மறைக்கும் அளவுக்கு அதைக் கீழே தொங்கவிட்டு, அதுக்கு மேலே அவர் உட்கார்ந்துட்டார்…" “அதாவது, டிராமாவிலே எப்படி நடிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதற்கு முன்னால் ரயிலில் டிக்கெட் இல்லாமல் எப்படிப் பிரயாணம் செய்வது என்பதை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டார்!” “இவருடைய கண்ணியம் தான் இப்படி இருந்ததுன்னா, அந்த நாள் ஸ்டேஷன் மாஸ்டர்கள் கடமை எப்படி இருந்தது, தெரியுமா ? இதை விட வேடிக்கையாயிருந்தது. சிதம்பரம் ஸ்டேஷன்லே பெட்டியோடு பெட்டியா நாயுடு என்னையும் இறக்கிவிட்டார். பெட்டியைத் துக்கி என் தலையிலே வெச்சுட்டு அவர் முன்னால் நடந்தார். ஒரு பய டிக்கெட் கேட்கணுமே? மூச்! எல்லாரும் ‘சல்யூட்’ அடிச்சி எங்களை வெளியே விடறானுக. விஷயம் என்னடான்னா, நாயுடு வசூலாகாத நாடகமாப் பார்த்து அவனுகளுக்கெல்லாம் ’ஓசிப் பாஸ் கொடுப்பாராம்.” “இந்த உலகமே ஒரு திறந்த புத்தகம் என்று சொல்வார்கள். அதை நீங்கள் அப்போதுதான் படிக்க ஆரம்பித்தீர்கள் போல் இருக்கிறது!” “ஆமாம், அதைவிட நல்ல புத்தகம் இல்லேங்கிறது இப்போ என் கருத்து.” “டிராமாவிலே உங்களுக்கு என்ன வேஷம் கிடைத்தது?” “அரிச்சந்திரனிலே லோகிதாசனா வந்து ’அம்மா பசிக்குது, அப்பா பசிக்குதுன்னு அழற வேஷம்; நல்லதங்காளிலே ஏழு பிள்ளைகளிலே ஒருத்தனா வந்து கிணத்திலே விழுந்து சாகற வேஷம்; கிருஷ்ண லீலாவிலே நச்சுப் பால் கொடுக்க வரும் பூதகியைக் கொல்ற பாலகிருஷ்ணன் வேஷம். இந்த வேஷங்களோடு அப்பப்போ ஸ்டேஜுக்கு வந்து சர்க்கஸ் டான்ஸும் ஆடணும்…” “அது என்ன சர்க்கஸ் டான்ஸ்?” “அந்த நாள் நாடக மேடையிலே சதிராட்டமோ, ஓரியண்டல் டான்ஸுகளோ கிடையாது. என் வயகப் பையன்களை வரிசையா ஒருத்தன் மேலே ஒருத்தனா கோபுரம் மாதிரி காலை அகட்டி நிற்க வைப்பானுக. இங்கிலீஷ் பாண்டு மியூசிக்குக்கு ஏத்தாப்போல நாங்க காலையும் கையையும் அசைச்சி ஆடணும். அதுதான் சர்க்கஸ் டான்ஸ்!” ’தவறி விழுந்தால் முட்டி உடைந்து விடும் போலிருக்கிறதே?" “அப்படியும் உடையலேன்னா கம்பெனிக்காரனுக உடைச்சிடுவானுக!” “ரொம்ப மோசமான வாழ்க்கையாக இருந்திருக்கும் போலிருக்கிறதே… ?” “எங்கேயோ அடிமை வாழ்க்கை இருந்ததாச் சொல்றாகளே, அந்த வாழ்க்கை அங்கே இருந்தது!” “அப்புறம்?” “ராஜா வேஷம், மந்திரி வேஷம் போடறவனுக வீட்டு வேலையிலிருந்து கம்பெனி வேலை வரையிலே நாங்கதான் செய்யணும். பொழுது விடிஞ்சதும் வீட்டிலே இவனுக உடம்பைப் பிடிச்சி, எண்ணெய் தேய்ச்சிக் குளிப்பாட்டி விடுவாக, சூப் வெச்சிக் கொடுப்பாக. ராத்திரி டிராமாவிலே அத்தனை கஷ்டப்பட்டு இவனுக நடிச்சிட்டு வந்திருக்கானுகளாம். என்ன கஷ்டம்?’னு கேட்கிறீங்களா ? சொல்றேன்: ’மந்திரி, மாதம் மும்மாரி பெய்ததா?’ம்பான் ராஜா ’பெய்தது, அரசே ’ம்பான் மந்திரி. ’ஆகம விதிப்படி ஆலயங்களிலெல்லாம் ஆறு கால பூஜை நடக்கிறதா ?’ம்பான் ராஜா நடக்கிறது அரசே ’ம்பான் மந்திரி. இதுதான் இவனுக நடிச்சிக் கிழிக்கிற நடிப்பு. இதுக்குப் பொழுது விடிஞ்சதும் இவனுகளுக்கு உடம்புப்பிடி, எண்ணெய்க் குளிப்பு, சூப்பு எல்லாம். எங்களுக்கு ? -இவனுக தின்னு மீந்தாத்தான் சோறு. இல்லேன்னா, காலையிலே இவனுக கொடுக்கிற காலணாவிலே ரெண்டு தம்பிடிக்கு ஆப்பம், ஒரு தம்பிடிக்குக் காப்பி வாங்கிக் குடிக்கிறோமே, அதோடு சரி!” “கைச்செலவுக்கு ஏதாவது வேண்டுமானால்…. ?” “கடவுள் கொடுப்பார்!” “கடவுளா ?” “ஆமாம், ராத்திரி டிராமா முடிஞ்சதும் பெரிய நடிகனுக எல்லாம் நல்லாக் குடிச்சிட்டு நாடகக் கொட்டாவுக்குப் பின்னாலே இருக்கிற மணல் தரையிலே படுத்துப் புரளுவானுக. பொழுது விடிஞ்சப்புறம்தான் எழுந்து வீட்டுக்குப் போவானுக. இவனுக போனதும் நாங்க மணல்லே கையை விட்டுத் துழாவிப் பாப்போம். காலணா, அரையனா, ஓரணா, ரெண்டணாக்கூடக் கிடைக்கும். குடி வெறியிலே இவனுங்களுக்குத் தெரியாம மணல்லே விழுந்து புதையற காசுதான் அத்தனையும்!” வந்தது ’பிளைமவுத்’கார் “வீட்டுக்குத் தெரியாமல் வந்துதானே நாயுடு கம்பெனியில் சேர்ந்தீர்கள் ? உங்களை யாரும் தேடிக் கொண்டு வரவில்லையா ?” “வந்தாக வந்து என்னை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்தாக. ஆனா இப்போ எனக்கு வீடு பிடிக்கல்லே; டிராமா கம்பெனிதான் பிடிச்சது. மறுபடியும் போயிடறதுன்னு திட்டம் போட்டேன். இந்தத் தடவை என் தம்பி பாப்பாவும் என்னோடு வரேன்னான்; ’சரி’ன்னேன். போற அன்னிக்கு ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போனாத் தேவலைன்னு நினைச்சோம். என்னத்தை, எங்கே சாப்பிடறது ? ரயில்வேக்காரன் ஏமாறாப்போல எந்த ஓட்டல்காரன் ஏமாறேங்கிறான்? சுற்றுமுற்றும் பார்த்தோம். யார் கொடுத்த வாழைப்பழத்தாரோ, வீட்டிலே இருந்தது. ரெண்டு பேருமாச் சேர்ந்து அதிலே பாதியைக் காலி செஞ்சோம். கைச் செலவுக்குக் காசு வேண்டாமா ? வீட்டிலே யார்யாரோ, எது எதுக்கோ வெச்சிருந்த காலணா அரையனாக்களையெல்லாம் எடுத்துச் சேர்த்தோம். கிட்டத்தட்ட ஒரு ரூபாய் சேர்ந்தது. சரி, புறப்படுவோமா ?ன்னேன். ’எங்கே, நாயுடு கம்பெனிக்கா ?ன்னான் தம்பி. இல்லே, சாமண்ணா அய்யர் கம்பெனிக்கு. அவர் இப்போ மைசூரிலே இருக்கிறாராம். அங்கே போயிடுவோம்’ன்னேன். ’சரி’ன்னு அந்தப் பாதிவாழைப்பழத்தாரைக்கூட வீட்டிலே வைக்காம அவன் கையோடு எடுத்துக்கிட்டான். வேண்டாண்டா, வெச்சிடு’ன்னேன்.” கேட்கல்லே; ’வழியிலே பசிச்சா என்ன செய்யறது?’ன்னு அதையும் எடுத்துக்கிட்டு வந்துட்டான். ரெண்டு பேரும் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போறதுக்காக வால்டாக்ஸ் ரோடு வழியா வந்தோம். அப்போ அந்த ரோடு முனையிலே ஒரு டிராம் டெர்மினஸ் இருக்கும். அங்கே ஒரு தண்ணித் தொட்டி இருக்கும். அதிலே ஒரு ‘காக்காக் குளியல்’ குளிச்சிட்டுப் போலாம்னு வாழைத் தாரைக் கீழே வெச்சிட்டு, சட்டையைக் கழற்றி ரோடு போடுவதற்காக அங்கே கொட்டி வைச்சிருந்த சரளைக் கல் குவியல் மேலே வெச்சோம். குளியலை முடிச்சிட்டு வந்து என் தம்பி சட்டையை எடுத்தான். எடுத்த வேகத்தில் அதிலிருந்த காசெல்லாம் சரளைக்கல் குவியல்வே விழுந்து கல்லோடு கல்லா கலந்துவிட்டது. விடுவோமா ? -அக்கம் பக்கத்திலே யார் வராங்க, போறாங்கன்னு கூடக் கவனிக்காம ரெண்டு பேருமா கல்லை வாரிப் பின்னாலே விட்டுக்கிட்டே காசை ஒவ்வொண்ணாப் பொறுக்கி எடுத்தோம். டேய், யாரடா அது? ஏண்டா, கல்லை வாரி என்மேலே விடறீங்க ?ன்னு ஒரு குரல்-திரும்பிப் பார்த்தோம்; கையிலே குண்டாந்தடியோடு ஒரு போலீஸ்காரன்! நிற்போமா ? காசை மறந்து, வாழைப்பழத்தாரையும் மறந்து எடுத்தோம் ஓட்டம்!" “ஸ்டேஷனுக்குப் போய்த்தான் நின்றீர்களா ?” “வேறே வழி ? வண்டி வர வரையிலே அங்கேயே சுத்திக்கிட்டு இருந்து, எப்படியோ மைசூர் போய்ச் சேர்த்தோம். அவர் எங்களைக் கம்பெனியிலே சேர்த்துக்கிட்டார்…” “அவர் ஒரு கிராட்ஜூவேட், இல்லையா ?” “ஆமாம், அந்த நாள் பி.ஏ. அவர். ‘டம்பாச்சாரி’ நாடகத்திலே அவருக்கு நல்ல பேர்; பதிமூணு வேஷம் போட்டு ஆடுவார். அண்ணன் சாரங்கபாணிக்கும் அந்த நாடகத்திலே அப்போ நல்ல பேர்; அவரைப் போலவே இவரும் பதிமூணு வேஷம் போடுவார்.” “கம்பெனி முதலாளி பி.ஏ. என்றால் அங்கேயும் ‘படித்தவன் படிக்காதவன்’ என்கிற வித்தியாசம் இருந்திருக்குமே ?” “இருந்தது; அதாலே அந்தக் கம்பெனியையும் விட்டுட்டு ஆஞ்சநேயர் கோவிந்தசாமி நாயுடு கம்பெனியிலே சேர்ந்துட்டோம். அங்கே எங்களுக்கு அதிகமா கிடைச்சது ரெண்டு…” “என்னென்ன ?” “ஒண்ணு அடி, இன்னொண்ணு உதை’ “இப்போது சொல்ல வேடிக்கையாயிருக்கிறது: அப்போது வேதனையாயிருந்திருக்கும்…” “அந்த வேதனையைப் பொறுக்க முடியாமல் என் தம்பி வேறே தொழிலுக்குப் போயிட்டான்; நான் மட்டும் ஜகந்நாதய்யர் கம்பெனியிலே சேர்ந்துட்டேன்…” “அதுவும் நாடகக் கம்பெனிதானா?” “ஆமாம், ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனின்னா அதுதான், அப்போ ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனியாயிருந்தது. காலையிலே எழுந்ததும் குளிக்கிறது, தோத்திரப்பாடல் பாடறது, வேளா வேளைக்குச் சாப்பிடறது எல்லாமே அங்கே ஒழுங்கா நடந்து வந்தது. அது மட்டும் இல்லே. ’சமபந்தி போஜனம்’னா அந்தக் காலத்திலே பெரிய விஷயம். அது ஜகந்நாதய்யர் கம்பெனியிலே சர்வ சாதாரணம். எந்தவிதமான பேதமும் இல்லாம அவர் எங்களோடு உட்கார்ந்து சாப்பிடுவார். சில பிராமணப் பிள்ளைக அப்படிச் சாப்பிடமாட்டோம்னு சொல்லும். அதுகளை மட்டும் தனியா உட்கார்த்து சாப்பிடச் சொல்லிவிடுவார். எதையும் வற்புறுத்தித் திணிக்க அவர் விரும்பமாட்டார். நான் சந்தித்த முதல் சீர்திருத்தவாதி அவர்தான். அவருடைய கம்பெனியிலேதான் எஸ்.வி.வேங்கடராமன், பி.டி.சம்பந்தம், கே.சாரங்கபாணி, சி.எஸ்.ஜெயராமன், யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, நவாப் ராஜமாணிக்கம் எல்லாரும் இருந்தாக.” “கிட்டப்பா இல்லையா ?” “அவரும் ஒரு சமயம் ஜகந்நாதய்யர் கம்பெனியிலே சேர வந்தார். ஆனா அவர் மட்டும் வரல்லே, அஞ்சி அண்ணன் தம்பிகளைக் கூட அழைச்சிக்கிட்டு வந்தார். ’ஒருத்தனுக்காக இத்தனை பேரை வெச்சி என்னாலே சமாளிக்க முடியாது’ன்னு சொல்லி, அய்யர் அவரை அனுப்பிவிட்டார்.” “சங்கரதாஸ் சுவாமிகள்… ?” “வருவார்; இருப்பார். குடித்துவிட்டு ஆடினால், ‘இது நமக்குப் பிடிக்காது; நீ போய்விட்டு வா!’ என்று அய்யர் அவரை வெளியே அனுப்பிவிடுவார்.” “அவரை இன்று சிலர் நாடக உலகத் தந்தை என்று சொல்கிறார்களே ?” “அதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர் நல்ல நாடகாசிரியர்; பாடலாசிரியர். எழுத ஆரம்பித்தால் தங்குதடையில்லாமல் எழுதுவார்… அதெல்லாம் சரி. ஆனா, இப்போதே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்ட புராண இதிகாச நாடகங்களுக்கு வேண்டுமானால் அவர் தந்தையாயிருக்கலாமே தவிர நாடக உலகத்துக்கு ஒரு நாளும் தந்தையாயிருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர் ஜகந்நாதய்யராய்த்தான் இருக்க முடியும். ஏன்னா, இன்னிக்கு இருக்கிற அத்தனை கலைஞர்களும் அவருடைய வழி வழியா வந்த கலைஞர்களே. இதை யாராலும் மறுக்க முடியாது.” “ஜகந்நாதய்யர் கம்பெனியை விட்டு நீங்கள் வேறு எந்தக் கம்பெனிக்கும் போகவில்லையா ?” “இல்லை; போகவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதோடு அந்தக் கம்பெனியிலே நான் நடிகனாக மட்டும் இல்லை; கார் டிரைவராகவும், மெக்கானிக்காகவும், எலெக்ட்ரிஷியனாகவும் இருந்தேன்!" “எலெக்ட்ரிஷியனாகவா! அதில் என்ன வேலை தெரியும் உங்களுக்கு ?” “எல்லா வேலைகளும் தெரியம். ஒரு சமயம் சேஷசாயி பிரதர்ஸாரே என் வேலையைக் கண்டு அசந்து போயிருக்கிறார்கள்! “அது என்ன வேலை ?” “திருப்பாற்கடலில் திருமால் பள்ளி கொண்டிருக்கும் போது அவருடைய தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் அந்த நாள் நாடக மேடைகளில் சுழலும். அதை நான் தான் முதன்முதலாகச் சுழலவிட்டேன். அதற்காக நான் பயன்படுத்தியது பாட்டரி, ஜெனரேட்டரோடு சில தகரத்துண்டுகள். முதல் வரிசையில் உட்கார்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த சேஷசாயி, நாடகம் முடிந்ததும் என்னைக் கூப்பிட்டு, ’அந்த ஒளிவட்டத்தை எப்படிச் சுழல விட்டாய்? என்று கேட்டார். நான் விளக்கினேன். அவருக்கு ஒரே ஆச்சரியம்!” ’டி.வி. சுந்தரம் அய்யங்கார் கூட ஒரு சமயம் உங்கள் மெக்கானிசத்தைப் பார்த்து…." “அதுவா?…. அதைச் சொல்றதுக்கு முந்தி அவருக்கும் எனக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டதுங்கிறதை நான் சொல்லனும், மதுரையிலே ஜகந்நாதய்யர் கம்பெனி முகாம் போட்டிருந்த சமயம் அது. நான் ஸ்பேர் பார்ட் வாங்க அடிக்கடி அய்யங்கார் கடைக்குப் போவேன்…” ’அய்யங்கார் அப்போ ஸ்பேர் பார்ட் கடை தான் வைத்திருந்தாரா ?" “ஆமாம். அதுவும் ரொம்ப சின்ன கடை நாலனாவுக்குச் சாமான் வாங்கினால்கூட அவர் எனக்கு மறக்காம காலணா கொடுப்பார். இப்படி ஏற்பட்ட தொடர்பு எங்கே வந்து நின்னதுன்னா, பாலாற்றங்கரையிலே வந்து நின்னுது…..” “பாலாற்றங்கரையிலா!” “ஆமாம், அந்த ஆத்து மேலே பாலம் கடடிக்கிட்டிருந்த சமயம் அது. டிராமா குரூப்போடு நான் அந்த வழியா வேன்லே வந்துக்கிட்டிருந்தேன். ஆத்தைக் கடக்கிற இடத்திலே ஒரே கூட்டம்.என்னடான்னு பார்த்தா, டி.வி.எஸ். லாரி ஒண்னு ஆத்துமணல்லே சிக்கிக்கிட்டிருந்தது. அதைத் தூக்கக் கிரேன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தாங்க. இந்தப் பக்கம் இருநூறு வண்டி, அந்தப் பக்கம் இருநூறு வண்டி நிக்குது. டிராபிக் ஒரே ஜாம். நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன், பொறுக்க முடியல்லே. வேனை விட்டுக் கீழே இறங்கினேன். ஆத்திலே முழங்கால் அளவு தண்ணிதான் இருந்தது. இறங்கி நடந்தேன். ’யாரப்பா அது, இங்கே பாருங்க. லாரி அசையறதா இல்லே, கிரேனும் அதைத் தூக்கறதாயில்லே. இப்படியே இருந்தா நாங்க எப்போ ஊர் போய்ச் சேர்றது ? ஒண்ணு, கிரேனை ஒரு மணி நேரம் ஒரு பக்கமா தள்ளி நிறுத்தி எங்களுக்கு வழி விடுங்க. இல்லேன்னா இந்த லாரியைக் கிளப்ப எனக்கு அரை மணிநேரம் அவகாசம் கொடுங்கன்னேன். நான் சொன்னதை ஒருத்தனும் காதிலே போட்டுக்கல்லே, அவனுக பாட்டுக்குத் தஸ்.புஸ்னு இங்கிலீஷிலே ஏதோ பேசிக்கிட்டே இருந்தானுக. எனக்குக் கோபம் வந்துடுது. ’என்னடா, சொல்றதைக் கேட்காம தஸ்.புஸ்ஸுங்கிறீங்களே ?ன்னேன். அப்போத்தான் நான் யாருன்னு அவனுகளுக்குத் தெரிஞ்சுது. அதுக்குள்ளே என்னைச் சுற்றி ஒரு கூட்டமும் சேர்ந்தது. நான் மறுபடியும் விஷயத்தைச் சொன்னேன்.”கிரேனைத் தள்ளி நிறுத்தறதுக்கில்லே; உங்களுக்கு வேணும்னா லாரியைக் கிளப்ப அரை மணி நேர அவகாசம் கொடுக்கிறோம்னு கொஞ்சம் கேலியாச் சொன்னானுக. ’கெடக்கிறானுக’ன்னு நான் வேனைக் கொண்டு வரச் சொல்லி, அதிலே இருந்த கம்பெனி ஆட்களையெல்லாம் கீழே இறங்கச் சொன்னேன். டி.வி.எஸ். லாரியை ’அன்லோ’டாக்கறதுக்காக அதிலிருந்த சரக்கையெல்லாம் இறக்கி என் வேன்லே போடச் சொன்னேன். இப்போ என்ன ஆச்சு ? லாரி ’லைட்’டாச்சு, வேன் ’வெ ய்ட்’டாச்சு. அந்த “லைட்’டை இந்த ’வெய்ட்’டாலே கட்டி இழுக்கச் சொன்னேன். விஷயம் முடிஞ்சது. கிரேன் இல்லாமலே லாரி கிளம்பிடுது. ’ஆஹா’ன்னான் ஒருத்தன்; ’நல்ல மெக்கானிக்கல் பிரெய்ன்’னான் இன்னொருத்தன். ஊருக்கு வந்து சேர்ந்தோம். ஒரு நாள் காலையிலே பார்த்தா என் வீட்டு வாசல்லே பிளைமவுத் கார் வந்து நிக்குது. ’என்ன விஷயம் ?’னா சுந்தரம் அய்யங்கார் அனுப்பினார்’னு சொன்னாக. என்கிட்டே இதுக்கு ஏது பணம் ?ன்னேன். ’உங்களுக்கு எப்ப செளகரியமோ அப்போ கொடுக்கலாம்’னு அய்யங்கார் சொன்னதாச் சொன்னாக. ’சரி’ன்னு ஐந்நூறும் ஆயிரமுமா கொடுத்து அந்தக் கடனை அடைச்சேன். அதிலிருந்து அய்யங்கார் மகன் துரைசாமிக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு அவர் மறையற வரையிலே இருந்தது. நான் ஜெயில்லே இருந்தப்போ அவர் பொண்ணு கூட வந்து என்னைப் பார்த்துட்டுப் போச்சு.” என்.எஸ்.கிருஷ்ணனின் சபதம் “கே.பி.கேசவன், காளி என். ரத்தினம் கூட ஜகந்நாதய்யர் கம்பெனியில்தான் இருந்தார்களா ?” “இல்லை, அவங்க இருந்தது ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலே. அதிலேதான் பி.யு. சின்னப்பா, எம்.ஜி.ராமச்சந்திரன் கூட இருந்தாங்க. நானும் ஒரு சமயம் அங்கே இருந்தேன். அந்தக் கதையை அப்புறம் சொல்றேன்.” “ஜகந்நாதய்யர் கம்பெனிக்கும் ‘ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’ என்ற பெயர் உண்டா ?” “கிடையாது; ஜகந்நாதய்யர் கம்பெனியின் முழுப் பெயர் ‘மதுரை ஶ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத சபா’ என்பது. ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் முழுப்பெயர் ‘மதுரை ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி’ என்பது.” “என்.எஸ்.கிருஷ்ணன் எந்தக் கம்பெனியிலே இருந்தார் ?” “அவர் எங்க கம்பெனியிலிருந்து கொல்லத்திலிருந்த டி.கே.எஸ். கம்பெனிக்குச் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டார். போலீசார் கையில் விலங்கிட்டு அவரை அழைச்சிக்கிட்டு வந்தாங்க!” “கையில் விலங்கா, எதற்கு ?” ’எல்லாம் எங்க அய்யர் செஞ்ச வேலைதான். யாராயிருந்தாலும் சொல்லிக் கொள்ளாமல் கம்பெனியை விட்டுப் போனா அவருக்குப் பிடிக்காது. உடனே ’கம்பெனி நகையைத் திருடிக்கிட்டுப் போயிட்டான்’னு போலீசிலே புகார் எழுதிக் கொடுத்துடுவார். அதை வைச்சி அவங்க அந்த ஆசாமியைப் பிடிச்சிக் கையிலே விலங்கு போட்டு இழுத்துக்கிட்டு வந்துடுவாங்க." “பாவம், என்.எஸ்.கே.!” “பாவமாவது ? அந்த விஷயத்தை அவர் அவ்வளவு சீரியஸா எடுத்துக்கல்லே; அதையும் காமெடியாவே எடுத்துக்கிட்டார். அந்த நாளிலே எடுத்ததுக்கெல்லாம் வண்டி ஏது, வசதி ஏது ? கொல்லத்திலிருந்து மதுரைக்கு அவரைக் கால் நடையாவே அழைச்சிக்கிட்டு வந்திருக்காங்க. அவரும் சளைக்காம அவுட்போஸ்ட்டுக்கு அவுட்போஸ்ட் கையில் விலங்கோடு நின்று, மலையாளத்திலும் தமிழிலுமா மாறி மாறித் தத்துவப் பாடல் பாடிக்கிட்டே வந்திருக்கார்!” “முதலில் அவர் டி.கே.எஸ்.கம்பெனியில் இருந்ததாகவல்லவா கேள்வி ?” “அது எங்கே இருந்தாரோ அது எனக்குத் தெரியாது; அவர் எங்க கம்பெனியிலேயிருந்து அங்கே போனது தான் எனக்குத் தெரியும்.” “அய்யர் கம்பெனி நல்ல கம்பெனி என்கிறீர்களே, அதிலிருந்து அவர் ஏன் போக வேண்டும்?” “வாழ்க்கையிலே வெறும் வசதி மட்டும் கெடைச்சாப் போதாது, பேரும் புகழும் கூடவே கெடைக்கணும்னு நினைப்பவர் அவர். அந்தப் பேரும் புகழும் எங்க கம்பெனியிலே அவருக்குக் கிடைக்க அப்போ வழியில்லே…” “ஏன்?” “சாரங்கபாணி அண்ணனும் சம்பந்தம் அண்ணனும் அப்போ எங்க கம்பெனியிலே இருந்தாங்க. காமெடியிலே அந்த நாளிலே அவங்களை மிஞ்ச என்.எஸ்.கே.யால் மட்டுமில்லே, வேறே யாராலும் முடியல்லே. அதாலே டி.கே.எஸ். கம்பெனிக்கு அவர் போனார்.” “சரி, அப்புறம் ?” “போலீசார் என்.எஸ்.கிருஷ்ணன்மேல் திருட்டுவழக்குப் போட்டாங்க. வேறே வழியில்லாம எல்லாரும் செய்யறாப்போல என்.எஸ்.கே.யும் அய்யர் கிட்டே சமாதானம் பேச வந்தார். ’வந்தியா வழிக்கு ?ன்னு அய்யரும் வழக்கை வாபஸ் வாங்கிக்கிட்டு அவரை மறுபடியும் தன் கம்பெனியிலே சேர்த்துக்கிட்டார்.” “கொஞ்சம் வசதியுள்ளவர்கள் நினைத்தால் சட்டம்கூட எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் என்பது வெள்ளைக்காரன் காலத்திலேயே இங்கு முடிவான விஷயம் போலிருக்கிறது ?” “இங்கே மட்டும் இல்லே; உலகம் முழுதுமே அப்படித்தான். ஜனங்கவெறும் சீட்டுக் கட்டுத்தானே ? யார் எப்படி வேண்டுமானாலும் கலைத்துப் போட்டு ஆடலாம்” “பிறகு?”. “எங்க நட்பு எப்போதும்போல இருந்தது. ஓய்ந்த நேரத்திலே அவர் என்கிட்டே கார் ஓட்டக் கத்துக்குவார்; மெக்கானிசம் கத்துக்குவார். எலெக்ட்ரிஷன் வேலையையும் அவர் விடறதில்ல, அதையும் கத்துக்குவார். அந்தச் சமயத்திலேதான் அவர் என்கிட்டே ஒரு சபதம் போட்டார்…” “அது என்ன சபதம் ?” “அப்போ கன்னையா கம்பெனியிலே இருந்த கிட்டப்பா, தாமிரபரணி ஆத்துக்குக் குளிக்க வரப்போல்லாம் கார் எடுத்துக்கிட்டு வருவார்; நானும் கார் எடுத்துக்கிட்டு போவேன். என்னோடு என்.எஸ்.கே.யும் வருவார். அது ’தள்ளு மாடல் வண்டி அடிக்கடி ’என்னை ஏன் தள்ளலே ? தள்ளினாத்தான் ஆச்சு ன்னு கோவிச்சுக்கிட்டு நின்னுடும். நான் ஸ்டியரிங்கைப் பிடிச்சுக்குவேன்; என்.எஸ்.கே.தான் இறங்கி இறங்கி மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கத் ’தள்ளுத் தள்ளு’ன்னு தள்ளுவார். வண்டி ஸ்டார்ட் ஆனதும் ஏறி உட்கார்ந்துக்கிட்டு, ’டேய், ராதா! இன்னிக்கு நீ உன் வண்டியை என்னைத் தள்ள வைக்கிறே இல்லே? என்னிக்காவது ஒரு நாள் உன்னை நான் என் வண்டியைத் தள்ள் வைக்கிறேன்,பார்ன்னு சொல்லுவார். இதை அவர் கடைசி வரையிலே மறக்கல்லே; அப்படியே ஞாபகம், வைச்சுக்கிட்டிருந்தார். ஒரு காருக்கு நாலு காரோடு வாழற காலம் வந்தது. அந்தக் காலத்திலே என்னைப் பார்க்கும் போதெல்லாம், ’ஏண்டா ராதா, என் காரிலே ஒரு நாள் வாயேண்டா ’ம்பார். ’ஏன், வண்டி தள்ள வைக்கவா?ன்னு நான் மெல்ல நழுவிவிடுவேன். பாவம், கடைசி வரையிலே சபதம் நிறைவேறாமலேயே அவர் கண்ணை மூடிவிட்டார்." “அவ்வளவு சீக்கிரம் அவர் கண்ணை மூடிவிட்டதற்கு அளவுக்கு மீறி மது அருந்தியதும் ஒரு காரணம் என்று சிலர் சொல்கிறார்களே ?” “இருக்கலாம்; எத்தனையோ காரணங்களில் அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம்.” “அதனால் தான் நீங்களும் இப்போது மது, மாமிசம், சிகரெட் ஆக மூன்றையுமே விட்டுத் தொலைத்துவிட்டீர்கள் போலிருக்கிறது ?” “நான் விட்டதற்குக் காரணம் வேறே “அது என்ன காரணம் ?” “நான் ஒரு பெண்ணுக்குக் கொடுத்த வாக்குத்தான் அதற்குக் காரணம்.” “யார் அந்தப் பெண் ?” “பிறந்தது மதுரை என்றாலும் சிலோனில் வளர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் கீதா. பி.ஏ. வரை படிச்சவ. பி.எல். படிக்கச் சென்னை வந்தப்போ நானும் அவளும் சந்திச்சோம்; ஒருவரையொருவர் விரும்பிப் பதிவுத் திருமணம் செஞ்சிக்கிட்டோம்…”. “ஏற்கெனவே உங்கள் வாழ்க்கையில் பங்கு கொண்டுள்ள தனம் அதற்குச் சம்மதித்திருக்க வேண்டுமே ?” “அந்த விஷயத்திலே அவ அந்த நாள் நளாயினி மாதிரி; ’உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்’னு சொல்லிட்டா… நானும் கீதாவும் ஒரு சமயம் சிதம்பரத்திலே நடந்த திராவிடக் கழக மாநாட்டுக்குப் போயிருந்தப்போ, டிராவலர்ஸ் பங்களாவில் தங்கியிருந்தோம். ஒரு நாள் சாயந்திரம், ’நான் கோயிலுக்குப் போய் நடராஜரைத் தரிசனம் செஞ்சிட்டு வரேன்’னா கீதா…” ’பெரியார் கொள்கைக்கு…." “அவருடைய கொள்கைப்படி பார்த்தா, ’எனக்கு வேண்டியது அறிவாளிங்க இல்லே, முட்டாளுங்க தான்னு அவரே சொல்வாரு என்னைப் பொறுத்தவரையிலே, அதை நான் ஏத்துக்கிட்டிருக்கேன். எனக்காக என் வீட்டிலே உள்ளவங்களும் அதை ஏத்துக்கணுங்கிறது என்ன நியாயம் ?.. அது எனக்குப் பிடிக்கிறதுமில்லே, அவங்க அப்படி இருக்கணும்னு நான் எதிர்ப்பார்க்கிறதுமில்லே. அதாலே ’போயிட்டு வா’ன்னு கீதாவை அனுப்பி வைச்சிட்டு, அவளுக்குத் தெரியாம அது வரையிலே மறைச்சி வைச்சிருந்த விஸ்கி பாட்டிலை எடுத்துத் திறந்து, கொஞ்சம் கொஞ்சமா சோடாவிலே கலந்து குடிச்சிக்கிட்டிருந்தேன். ’ஆஷ் ட்ரே’யிலே புகைஞ்சிக்கிட்டிருந்த சிகரெட்டை எடுத்து ஓர் இழுப்பு இழுத்தேன். நல்ல கிக் அந்தக் கிக்கிலே சிகரெட் சாம்பலை ட்ரேயிலே தட்டி விடறதுக்குப் பதிலா விஸ்கி பாட்டில்லே தடடிவிட்டுக்கிட்டிருந்திருக்கேன் போலிருக்குது அந்தச் சமயம் பார்த்து கோயில்லேருந்து வந்த கீதா அதை பார்த்துட்டு, ’மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா ? சாம்பலை எங்கே தட்டறதுன்னு கூடத் தெரியாம விஸ்கி பாட்டில்லே தட்டிக்கிட்டிருக்கீங்களே, அதையே உங்க சட்டை வேட்டியில் தட்டிக்கிட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்?… வேண்டாங்க, இந்த விபரீதம் ’உன் மேல் ஆணையா இனிமே நான் இந்த மதுவைத் தொடற தில்லே’ன்னு எனக்கு நீங்க வாக்குக் கொடுக்கணும். இல்லேன்னா, நீங்க என்ன சேஞ்சாலும் சரி, எந்த வகையிலும் நான் உங்களோடு இனிமே ஒத்துழைக்க மாட்டேன்னு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை அப்படியே ’பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டா. அதுக்கு மேலே நான் என்ன செய்ய முடியும்?… வெள்ளைக்காரன் காந்திகிட்டே சரண்டர் ஆன மாதிரி நானும் கீதாகிட்ட சரண்டர் ஆயிட்டேன். அதுதான் சமயம்னு அவ மிச்சம் மீதியிருந்த விஸ்கியை எடுத்து ஆஷ்ட்ரேயில் கொட்டிக் கலந்து அங்கிருந்த வாஷ் பேஸின்’லே ஊத்திட்டா. அதோடு நானும் அதுக்குக் ’குட்பை போட்டுட்டேன். அன்னியிலேருந்து வெறும் தண்ணியைத் தவிர வேறே தண்ணியை நான் கண்ணாலும் பார்க்கிறதில்லே.” “அட, பாவமே எல்லாரும் மதுவுக்கு வெல்கம் கொடுத்துக்கிட்டிருக்கிறப்போ, நீங்க ’சென்ட் ஆப் கொடுத்துட்டீங்களே ?” “யார் ’வெல்கம் கொடுக்கிறாங்க ? இதுவரையிலே திருட்டுத்தனமா குடிச்சிக்கிட்டிருந்தவங்க இனிமே பகிரங்கமா குடிக்கலாமேங்கிறதுக்காக வெல்கம் கொடுக்கிறாங்க. எனக்குத்தான் அந்தக் கவலையே இல்லையே, நான் அதுக்கு சந்தோஷமா ’சென்ட் ஆப் கொடுத்துட்டேன்!” “அப்புறம் உங்க கம்பெனியிலே இருந்த என்.எஸ்.கே.என்னதான் ஆனார் ?” “சிலோன் டூருக்குப் போற வரையிலே பொறுமையாயிருந்தார். அங்கே போனதும் நாலு பேரைக் கூட சேர்த்துக்கிட்டு ஸ்டிரைக், அது இதுன்னு ஆரம்பிச்சி, கடைசியிலே கம்பெனியை விட்டே விலகிவிட்டார்!” “அய்யர் அவரைச் சும்மா விட்டாரா ?” “அது சிலோன் ஆச்சே, அங்கே அவரால் என்.எஸ்.கே. யை என்ன செய்ய முடியும்?” “அடிப்பியா, உங்கப்பன் மவனே, சிங்கண்டான்னு மீசையை முறுக்கிக் காட்டிவிட்டார் போலிருக்கிறது!” காந்தியார் மேல் வந்த கோபம் “எங்க கம்பெனி அப்போ மாயவரத்திலே முகாம் போட்டிருந்தது. காந்தியார் வந்தார்…. “அப்போது நீங்களும் காங்கிரஸ்காரரா யிருந்தீர்களா ?” “இல்லே, ஆனா அதுக்காக எனக்குத் தேசபக்தி இல்லேன்னு நெனைச்சுடாதீங்க… வெள்ளைக்காரன்கிட்டேயிருந்து இந்தியா விடுதலையடையறகுக்கு அப்போ காந்தி காட்டிய வழியைவிட பகத் சிங் காட்டிய வழிதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதாலே அவர் கோஷ்டியிலே நான் இருந்தேன். அண்ணன் சாரங்கபாணி மட்டும் அன்னிக்கும் காந்தி பக்தர்தான்; இன்னிக்கும் பக்தர் தான். அவரும் நானும் காந்தியாரைப் பார்த்துட்டு வரலாம்னு கொட்டாங்கச்சிச் செட்டியார் வீட்டுக்குப் போனோம்…” “யார் அந்தக் கொட்டாங்கச்சிச் செட்டியார் ?” “அந்த நாள் மாயவரம் பெரிய மனுஷனுங்களிலே அவரும் ஒருத்தர். அவர் வீட்டிலேதான் காந்தி தங்க ஏற்பாடு சேஞ்சிருந்தாங்க. அங்கே நாங்க போறப்போ ஒரே கலாட்டா…! “ஏன்?” “தியாகி வள்ளியம்மை பிறந்த தில்லையாடியைப் பார்த்துட்டுப் போகக் காந்தியார் வந்திருந்ததுதான் அதுக்குக் காரணம்…” “எந்த வள்ளியம்மை பிறந்த தில்லையாடி… தென்னாப்பிரிக்காவிலே வெள்ளையரின் நிறத் திமிரை எதிர்த்துக் காந்திஜி சத்தியாக்கிரகம் செய்தபோது அவருக்குப் பக்க பலமாயிருந்து உயிர்த் தியாகம் செய்தார்களே, அந்த வள்ளியம்மை பிறந்த தில்லையா ?” “ஆமாம், மாயவரத்துக்குப் பக்கத்திலேதானே அந்த ஊரு ? அதைப் பார்த்துட்டுப் போறதுக்காகக் காந்தி வந்திருந்தாரு…” “அதற்கு ஏன் கலாட்டா செய்ய வேண்டும்?” “தென்னாப்பிரிக்காவிலே நிறத் திமிர் இருந்தா, இங்கே ஜாதித் திமிர் இருக்குன்னு காட்டிக்க வேண்டாமா, அதுக்கு.” “அது என்ன ஜாதித் திமிர் ?” “வள்ளியம்மை ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவங்களாச்சே! அவங்கப் பிறந்த தில்லையாடியை பார்க்க வந்த காந்திக்குக் கொட்டாங்கச்சிச் செட்டியார் தங்க இடம் கொடுக்கலாமா ?… அதுக்காக மேல் ஜாதிக்காரங்க கலாட்டா சேஞ்சாங்க!” “அப்புறம் ?” “சாஸ்திரம்தான் யார் எப்படி வேணும்னாலும் வளைச்சிப் பேச இடம் கொடுக்குமே?..”தொட்டாதோஷம்“பான்; ’குளிச்சிட்டா அது போக்சு’ம்பான் ….அதை வைச்சி, ’அந்த அம்மா ஊருக்குப் போயிட்டு வந்து இங்கே தங்கினாத்தான் தோஷம், போறதுக்கு முந்தி தங்கினாத் தோஷமில்லே’ன்னு சொல்லி, அந்தக் கலாட்டாவைச் சமாளிச்சாங்க.” “பாவம், கொட்டாங்கச்சிச் செட்டியார் படாத பாடு பட்டிருப்பார்.” “அதைச் சொல்லணுமா ?….அன்னிக்குச் சாயந்திரம் மாயவரத்திலே ஒரு கூட்டம் நடந்தது…கூட்டம்னா அந்தக் காலத்திலே ஆயிரம் பேரு, பத்தாயிரம் பேருன்னு சேர மாட்டாங்க; அம்பது பேரு சேர்ந்தா அதுவே ஜாஸ்தி. காந்தியார் பேசினார். அவர் பேசியதை டி.எஸ்.எஸ்.ராஜனோ, யாரோ ஞாபகமில்லே, தமிழிலே மொழி பெயர்த்துச் சொன்னாங்க. அன்னியத் துணி பகிஷ்காரத்தைப் பத்தி அவர் பேசினப்போ, அங்கே இருந்த அத்தனை பேரும் உணர்ச்சி வசப்பட்டோம். கட்டியிருந்த துணியை அங்கேயே அவுத்துப் போட்டுத் தீ வைச்சிக் கொளுத்திட்டோம். கூட்டம் முடிஞ்சது; அப்பத்தான் நான் வெறும் கோவணத்தோடு நிற்கிறது எனக்குத் தெரிஞ்சது.” “பழனியாண்டவர் வேண்டுமானால் அப்படி நிற்கலாம்; நீங்கள் நிற்கலாமா ?” “நான் சாரங்கபாணி அண்ணனைத் தேடினேன், அவர் எப்படி இருக்கார்னு பார்க்க…ஆளைக் காணோம். அந்தக் கோலத்துடனேயே நாடகக் கொட்டகைக்குப் போனேன். அங்கே புதிய கதர்த்துணி வாங்கிக் கட்டிக்கிட்டு அவர் ஜம்முன்னு உட்கார்ந்துக்கிட்டிருந்தாரு. அந்த வசதி அப்பவே அவருக்கு இருந்தது; எனக்கு இல்லே..என்ன செய்வேன்? அய்யர்கிட்டே வேறே துணி வாங்கிக் கட்டிக்கிறதும் அவ்வளவு சுலபமில்லே. அதை நெனைக்க நெனைக்க எனக்குக் காந்தி மேலேயும் கோபம் வந்தது; அண்ணன் சாரங்கபாணி மேலேயும் கோபம் வந்தது. அதைத் தீத்துக்க ஒரு வழி கண்டுபிடிச்சேன்…” “அது என்ன வழி ?” “சும்மாவாச்சும் ‘ஓ’ ன்னு அழுதுக்கிட்டே சாரங்கபாணி அண்ணன்கிட்டே போய்,”அண்ணேண்ணே, காந்தி செத்துப் போயிட்டார், அண்ணே அவரை யாரோ அடிச்சிக் கொன்னுட்டாங்களாம், அண்ணே ; ன்னேன்,…அவ்வளவு தான்; எப்போடா, எங்கேடா? ன்னு பதறிக்கிட்டே அவர் நிஜமாவே கேவிக் கேவி அழ ஆரம்பிச்சிட்டாரு, ’அழறியா, நல்லா அழு ’ன்னு நான் உள்ளுற நெனைக்சிக்கிட்டே தில்லையாடியைப் பார்க்கப்போற வழியிலே அவரை யாரோ அடிச்சிப் போட்டுட்டாங்களாம். அண்ணே!ன்னேன். ’அட, பாவிகளா!ன்னு அவர் தலையிலே கையை வைச்சிக்கிட்டுக் கீழே உட்கார்ந்துட்டாரு. எனக்கு ரொம்ப சந்தோஷம்; கோவணத்தை மறந்து அவர் அழறதை வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன்." “அய்யர் இல்லையா ?” “இல்லே, வெளியே போயிருந்த அவரு அப்பத்தான் வந்தாரு என்னடா சங்கதி?ன்னாரு அவர்கிட்டேயும் காந்தி செத்துட்டாராம். அண்ணன் அழிறாரு, நானும் அழறேன்ன்னேன். அவர் யார் சொன்னார்கள் அப்படி? னாரு. கடைத் தெருவிலே எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்களாம்னு நான் சமாளிச்சேன். போடா, போ ? நான் இப்போ கடைத் தெருவிலேயிருந்துதானே வரேன் ? அங்கே யாரும் அப்படிப் பேசிக்கல்லே, காந்திஜியும் எந்த ஆபத்தும் இல்லாமல் போய்த்தான் தில்லையாடியையும், வள்ளியம்மையின் சொந்தக்காரர்கள் சிலரையும் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கார்ன்னு சொல்லி, சாரங்கபாண்ணி அண்ணனைச் சமாதானம் சேஞ்சி வைச்சாரு; என்னையும் சமாதானம் சேஞ்சி வைச்சாரு. எனக்குக் கட்டிக்க வேறே துணியும் கொடுத்தாரு அண்ணன் சாரங்கபாணியின் காந்தி பக்தி அப்பவே அப்படி இப்போ கேட்கணுமா?” “அவருடைய சேவைக்காக இங்கே காங்கிரஸ் ஆட்சி நடந்த காலத்திலேயே ஒரு எம்.எல்.சி. சீட்டாவது அவருக்குக் கொடுத்து அவரைக் கெளரவித்திருக்கலாம்; தவறி விட்டார்கள்”. ’தப்பு அவங்க மேலே மட்டும் இல்லே, சாரங்கபாணி அண்ணன் மேலேயும் இருக்கு…" “அது என்ன தப்பு ?” “எடுத்ததுக்கெல்லாம் ’நான், நான்’னு முந்திரிக் கொட்டை மாதிரி தலையை நீட்டாம இருந்தது அவர் தப்புதானே ?” “அடக்கமாயிருப்பது தப்பு என்றால் அவர் அப்படியிருந்ததும் தப்புத்தான்’ “ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை…” “என்ன நம்பிக்கை ?” “இப்போ நடக்கிற கலைஞர் ஆட்சியும் எல்லாருக்கும்! பொதுவான ஆட்சியாத்தானே இருக்கு ? நாமக்கல்லா கவனிக்கும் அவர் சாரங்கபாணி அண்ணனையும் கவனிப்பாருங்கிற நம்பிக்கைதான் அது.” “கலைஞர் ஆட்சியிலே சாரங்கபாணி கெளரவிக்கபட்டா, அது கலைஞர் ஆட்சிக்கே ஒரு பெருமையாயிருககாதா?..ம்..அப்புறம் ?” “மாயவரத்திலேயிருந்து தஞ்சாவூருக்குப் போனோம். அங்கே தான் அய்யர் கம்பெனி கொஞ்சம் கலகலக்க ஆரம்பிச்சது…” “ஏன் ?” “நவாப் ராஜமாணிக்கமும் அண்ணன் சாரங்கபாணியும் அய்யர் கம்பெனியிலேயிருந்து விலகித் தனிக் கம்பெனி ஆரம்பிச்சாங்க. அந்தக் கம்பெனிக்கு நானும் எம்.ஆர்.எஸ். மணியும் அய்யர்கிட்டே சொல்லிக்காமப் போயிட்டோம். புதுக் கம்பெனிக்குப் பாட ஆள் வேண்டாமா ? அதுக்காக சி.எஸ். ஜெயராமனைக் கூப்பிட்டோம். அவருக்கு வர இஷ்டந்தான்; ஆனா அய்யர் அவரை விடறதாயில்லே. ஜெயில்லே அடைச்சி வைக்கிற மாதிரி அவரைக் கம்பெனியிலேயே அடைச்சி வைச்சிருந்தாரு அங்கிருந்து ஜெயராமனை எப்படிக் கிளப்பறதுன்னு நான் யோசிச்சேன், யோசிச்சேன், அப்படி யோசிச்சேன். கடைசியிலே அஞ்சாம்படை ஆசாமி ஒருத்தனைப் பிடிக்சேன். அவன்கிட்டே சொல்லி ஒருநாள் ராத்திரி எல்லாரும் தூங்கினப்புறம் சி.எஸ்.ஸை ‘ஜூலியட்’ மாதிரி மாடிக்கு வரச் சொன்னேன். நான் நூலேணியும் கையுமா ‘ரோமியோ’ மாதிரிப் போய் அவரை இறக்கிக் கொண்டு வந்துட்டேன்.” “அய்யர் உங்களைச் சும்மா விட்டாரா ?” “விடுவாரா? எல்லார் மேலேயும் டேமேஜ் க்ளெய்ம் பண்ணி உடனே நோட்டீஸ் விட்டுட்டாரு அதைப் பார்த்ததும் நானும் மணியும் அலறியடிச்சிட்டுப் போய் அவர்கிட்டே சரண்டர் ஆயிட்டோம்…” “மற்றவர்கள்…. ?” “வசதியிருந்தது; அவரை எதிர்த்து நின்று அப்பவே காலை ஊனிக்கிட்டாங்க.” “இத்தனை துடுக்குத்தனம் இருந்தும் அய்யர் உங்களை எப்படி விடாமல் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தார்?” “சும்மாவா?… ஆக்டர், எலெக்ட்ரிஷன், மெக்கானிக், டிரைவர் இத்தனை வேலைகளுக்கும் சாப்பாடு போட்டு மாசம் அஞ்சி ரூபாதானே சம்பளம்? இந்தச் சம்பளத்துக்கு என்னை விட்டா சாந்த சொரூபியான மகாத்மாவா வேலைக்கு வருவாருன்னு அவர் நெனைச்சிருக்கலாம்.” “ஆமாம், உங்களுக்கு ‘அகராதி’ என்று கூட ஒரு பெயர் உண்டாமே ?” “அதை யார்சொன்னது உங்களுக்கு ?” “கேள்விப்பட்டேன்….” “யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையும் சம்பந்தம் அண்ணனும் எனக்கு வாத்தியாரா யிருந்தாங்க. அவங்க சொல்லிக் கொடுக்கிறாப் போல நான் செய்ய மாட்டேன்; எனக்கு எது சரின்னு படுதோ அப்படித்தான் செய்வேன். அவங்களுக்குக் கோபம் வந்துடும்; அகராதியைத் தூக்கி என் கையிலே கொடுத்துட்டுப் போயிடுவாங்க…’ “ஏன், தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கவா ?” “என்னைப் பொறுத்த வரையிலே அதைத் தவிர வேறே எதுக்கு அது பிரயோசனம்?” “அரிச்சுவடியையே பார்க்காத உங்களுக்கு அகராதின்னு பேர் வாங்கிக் கொடுத்திருக்கிறதே, அது போதாதா ?” “நீங்க அதை வேறே பேப்பரிலே எழுதி வைக்காதீங்க; அப்புறம் என்னைப் பார்க்கிற பொடிப் பயலுங்கெல்லாம், இதோடா, அகராதி’ ம்பானுங்க!” “எவனாவது அப்படிச் சொன்னால் அவன் கையிலே நீங்களும் ஒரு அகராதியைத் தூக்கிக் கொடுத்து விடுங்கள்.” கோவிந்தா, கோவிந்தா! “ஒரு தீபாவளிக்கு நானே வெடி தயார் சேஞ்சேன்…” “என்ன வெடி, யானை வெடியா ?” “இல்லை, அதுக்கும் அப்பன் வெடி!” “நரகாசுரன் ’நம்ம ஆசாமி என்று சொல்வாரே பெரியார், நீங்கள் தீபாவளி கொண்டாடுவீர்களாா, என்ன ?” “வெடி நரகாசுரனுக்காக இல்லே, திருப்பதி கோவிந்தராஜனுக்காக!” “அட பாவமே!…அவன் என்ன செய்தான் உங்களை?” “அவன் ஒண்னும் செய்யலே, அவனுடைய தேவஸ்தான நிர்வாகிங்க ஒரு நாள் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டாங்க!” “காரணம் ?” “அது எனக்குத் தெரியாது. அன்னிக்கு என் கையிலே ஒரு காலணாக்கூட இல்லே; ’இந்த ஏழுமலையான் எப்போ பார்த்தாலும் நம்மை ஏன் இப்படியே வைச்சுக்கிட்டிருக்கான் ?’னு அவனையே நேராப் பார்த்து ஒரு வார்த்தை கேட்டுட்டு வரலாம்னு நான் மலையேறிப் போனேன். அந்த நாளிலே மலைமேலே ரோடு ஏது, பஸ் ஏது? இருப்பவன் ’டோலி’யிலே போவான்; இல்லாதவன், ’கோவிந்தா, கோவிந்தா’ன்னு ’அடிதண்டம் போட்டுக்கிட்டுப் போவான். அந்த மாதிரிதான் நானும் போனேன். ’தரும தரிசனம் இப்ப மட்டும் இல்லே, அப்பவும் காலையிலேதான். லேட்டாப் போனா எங்கே தரிசனம் கெடைக்காமல் போயிடுமோன்னு அவசர அவசரமாப் போனேன். கால்லே முள்ளு மட்டுமா குத்துச்சி, கல்லும் குத்துச்சி. அப்பத்தான் என் உடம்பிலும் கொஞ்சம் ரத்தம் இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுது. கொஞ்ச தூரம் போனதும் “கிளுக், கிளுக் குன்னு சத்தம் போட ஆரம்பிச்ச என் கால் முட்டி நட்டு மேலே போகப் போக ‘லொட லொடா’ன்னு ஆடவே ஆரம்பிச்சிடிச்சி. அந்த ’நட்டை எந்த ’ஸ்பான ராலே நான் முடுக்குவேன்? ’அப்பா, வட மலையானே, நீயே முடுக்குடாப்பா ன்னு பல்லைக் கடிச்சிக்கிட்டுப் போனேன். உதடு வறண்டு, நாக்கு வறண்டு, தொண்டையும் வறண்டு போச்சு, ’கோவிந்தா, கோவிந்தா!’ ன்னர தாடையும் வாயும் தான் அசையுது, சத்தம் வெளியே வரல்லே….” “ஐயோ பாவம், ஒரு கூஜா தண்ணீராவது கையோடு கொண்டு போயிருக்கக் கூடாதா ?” “தண்ணி வேணும்னா கிடைக்கும்; கூஜாவுக்கு எங்கே போவேன் ?” “அந்தக் கஷ்டம் வேறே இருக்கா?…ஆமாம், உங்களுடன் வந்தவர்கள் யாராவது…” “என்னோடு எவன் வருவான் ? என்னைக் காட்டிலும் ’அன்னக் காவடி தானே வருவான் ?” “ஒரு திருத்தம்…”அன்னக் காவடி" என்று சொல்லாதீர்கள்: ‘வெறுங் காவடி’ என்று சொல்லுங்கள்…" “பேப்பர்காரங்கன்னா பேசறப்போ கூட ‘திருத்தம்’ போடாம இருக்க முடியாது போலிருக்கு. சரி, அப்படியே வைச்சுக்குவோம்…”என்ன ஆனாலும் சரி,இந்தத் திருவேங் கடத்தானை இன்னிக்குப் பார்க்காம விடறதில்லே’ ன்னு நான் விழுந்து எழுந்து போனேன். கடைசியிலே காத்துப் போன பலூன் மாதிரி அங்கே போய்த் துவண்டு விழுந்தா…! “என்ன ஆச்சு, பாலாஜியே காணாமல் போய் விட்டாரா?” “அது இந்தக் காலத்துப் பக்திமானுங்க செய்யற வேலையில்லே? அந்தக் காலத்துப் பக்திமானுங்க அப்படியெல்லாம் செய்யறதில்லே. பாலாஜி இருந்தான்; ஆனா, நான் பாக்கும்படியா அவன் இல்லே…” “ஏன் ?” “அன்னிக்குக் காலையிலே ‘தரும தரிசனம்’ இல்லையாம்; மாலையிலேதானாம்…..எப்படி இருக்கும் எனக்கு…. ?” “என்னைக் கேட்காதீர்கள்; அந்தத் தரிசனத்துக்காக நீங்கள் பட்ட பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே இப்போது எப்படியோ இருக்கிறது!” “பசி வேறே, தாகம் வேறே கையிலே ஒரு தம்பிடிகூட இல்லாத கஷ்டம் வேறே, அன்னிக்குச் சாயந்திரம் அந்த ஊரிலே நடத்தவிருந்த நாடகத்துக்காக ஒத்திகை பார்ப்பாங்களே, அதிலே கலந்துக்கணுமேங்கிற கவலை வேறே….இத்தனையும் வைச்சுக்கிட்டுத் தரும தரிசனத்துக்காக அங்கே காத்துக்கிட்டிருக்க முடியாதேங்கிற ஆதங்கம் வேறே…எல்லாமாச் சேர்ந்து என்னை ஒரு வெறியனாவே ஆக்கிடிச்சி…தலை முடியைப் பிடிச்சி இழுத்துக்கிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தேன்…தீபாவளி வர ஒரு வாரம் ரெண்டு வாரம் இருக்கிறப்பவேதான் நம்ம ஊர்ப் பயலுங்க ’டப், டுப்’புன்னு பட்டாக கொளுத்த ஆரம்பிச்சுடுவானுங்களே ?.. அந்தச் சத்தம் அங்கேயும் கேட்டுக்கிட்டிருந்துச்சி..அதைக் கேட்டதும், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டதும் ’கண்டேன், கண்டேன்’ன்னு கூவியமாதிரி நானும் கூவிக்கிட்டே தட்டுத் தடுமாறிக் கீழே வந்தேன்… அந்தக் காலத்து நாடக மேடையிலே ராஜாவுங்க வரப்போ வேட்டுச் சத்தம் கிளம்பும்…” “ஏன், இந்தக் காலத்து நிஜ ராஜாக்கள், நிஜ ராஜப் பிரதிநிதிகள், நிஜ ஜனாதிபதிகள், நிஜப் பிரதம மந்திரிகள், நிஜ கவர்னர்களெல்லாம் நாடக மேடைக்கு வராமல் இருக்கும்போதே வேட்டுச் சத்தம் இன்னாருக்கு இவ்வளவு என்று கணக்குப்படி கிளம்பிக் கொண்டிருக்கிறதே, அதை நீங்கள் கவனிக்கவில்லையா ?” “எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்… சரியான தலைவன் இல்லேன்னா, நாடே நாடக மேடையாத்தான் போவும். ஆள வரவனெல்லாம் கூத்தாடி ராஜாவாத்தான் இருப்பான்…அப்புறம் அவன் தனக்கு வோட்டுப் போட்டுட்டுத் தூங்கற ஜனங்களை எழுப்ப வேட்டுச் சத்தத்தையாவது கிளப்பிக்கிட்டிருக்க வேண்டியது தானே ?” “கரெக்ட்…அப்புறம் ?” “வேட்டுச் சத்தம்னா சும்மாவா, அதுக்கு வெடிகள் வேண்டாமா ? அந்த வெடிகள் கிடைக்காத ஊரிலே அதை நாங்களே தயார் சேஞ்சுக்குவோம். அதுக்கு வேண்டிய மருந்தும் எங்கக்கிட்டே எப்போதும் ஸ்டாக்”கிலே இருக்கும்…ஆனா கருமருந்து வைச்சுச் செய்யற வெடி வேறே…கருமருந்து வைச்சிச் செய்யற வெடி வெறும் சத்தத்தோடு சரி; மனோசிலை வைச்சிச் செய்யற வெடியோ மலையைக்கூடப் பொளந்துடும். அந்த மாதிரி வெடிகுண்டு ஒண்ணைத் தயார் சேஞ்சி, அதை வைக்கிற இடத்திலே வைச்சித் திருப்பதி தேவஸ்தானத்தையே தூள் துள்ளாக்கிடணுங்கற ஆத்திரம் எனக்கு…" “ஆமாம், உங்களுக்கு வெடிகுண்டு வேறே செய்யத் தெரியுமா ?” “நான்தான் சொன்னேனே, பகத் சிங் கோஷ்டி என்று ?…வெள்ளைக்காரக் கலெக்டர் பயலுங்களுக்கு வைக்கிறதுக்காக அதை நான் கத்துக்கிட்டிருந்தேன். “அவர்கள் நல்ல காலம், உங்கள் குண்டிலிருந்து தப்பிப் பிழைத்தார்கள்; திருப்பதி வேங்கடமுடையானின் போதாத காலம்….” “அவசரப்படாதீங்க, முழுக்கக் கேளுங்க…அங்கே நாங்க தங்கியிருந்த வீடு ஒரு மொட்டை மாடி வீடு. அந்த வீட்டு மாடியிலே நான் வெடி குண்டைத் தயார் சேஞ்சிக் காய வைச்சேன்…சாயந்திரம் அது காய்ஞ்சிடிச்சான்னு பார்க்கப் போனேன். அப்ப என் வாயிலே புகைஞ்சுக்கிட்டிருந்த சிகரெட் நெருப்பிலிருந்து ஒரு பொறி தெறித்து அந்த வெடிகுண்டு மேலே விழுந்துடிச்சி..அவ்வளவுதான்; ’டமார்’னு ஒரு சத்தம்.வெடிச்சது வெடிகுண்டு மட்டுமில்லே; மாடியுந்தான் …நான் எங்கேயோ தூக்கியெறியப்பட்டேன்; அந்த வீட்டிலிருந்த நாற்பது ஐம்பது பேருக்குச் சரியான அடி….” “கோவிந்தா, கோவிந்தா!” “என்ன, ’கோவிந்தா’ன்னு கையெடுத்துக் கும்பிட ஆரம்பிச்சிட்டீங்க?” “மன்னிக்க வேண்டும்…நான் ஏழுமலையானின் பக்தன்; அவருடைய சக்தியை நினைத்து…” “விஷயம் தெரிஞ்சப்புறம் எல்லாரும் அப்படித்தான் பேசிக்கிட்டாங்க…அதுக்கு மேலே கேட்கணுமா?…தகவல் எதுவும் கொடுக்காமலே போலீஸ் வந்தது… காயம் பட்டவங்களைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியிலே சேர்த்தாங்க என்னை”அரெஸ்ட் சேஞ்சிக் கொண்டு போய் ‘லாக்அப்’ பிலே வைச்சாங்க…அய்யர் ஆடியே போய்விட்டார். நல்ல வேளையா அப்போ அந்த ஊர் போலீஸ் சூப்பிரெண்ட்டாயிருந்தவர் எங்க கம்பெனி ஹீரோ எஸ்.வி. வேங்கடராமனின் சொந்தக்காரராயிருந்தார். அவரைச் சரிக்கட்டி நிலைமையைச் சமாளிச்சோம். ’வெடிச்ச வெடி சாதாரண வெடிதான்; நாடகமேடை ராஜாக்களுக்கு மரியாதை குண்டு போடறதுக்காகச் சேஞ்சிக் காய வெச்சிருந்த வெடி’ன்னோம். ’அந்த வெடியிலே மனோசிலை ஏன் வந்தது?ன்னு கேட்டாங்க. ’அது வெறும் கருமருந்துதான்; மனோ சிலை மாதிரி தெரியுது“ன்னு அவங்க கண்ணிலே மண்ணைத் தூவினோம். ’வெடி சாதாரண வெடியாயிருந்தா மாடியே பொளப்பானேன்?னு கேட்டாங்க. ’பழைய கட்டடம், அதான் பொளந்து போச்சு’ன்னோம்…” “வேறே சூப்பிரெண்ட்டாயிருந்தால் இதையெல்லாம் நம்பியிருக்கமாட்டார்.” “அதிலே என்ன சந்தேகம்?…..இதிலிருந்து நீங்களும் நானும் தெரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா, ’சூப்பிரெண்ட் வேண்டியவராயிருந்தா குற்றவாளியை நிரபராதியாக்கிடலாங்கிறதுதான் .. மனுஷனுக்கு மனுஷனே வழங்கிக்கிற நீதியிலே உள்ள குறை இது…” “அந்தக் குறையை நிவர்த்தி செய்யத்தான் கடவுள் இருப்பதாகச் சொல்கிறார்கள்…” “அவர் வழங்கிற நீதி மனுஷனுக்கு எங்கே தெரியுது?…மனுஷனுக்கு மனுஷன் வழங்கிற நீதிதானே தெரியுது… ?” “அதெல்லாம் பெரிய விஷயம் என்று சொல்வார்கள்; நாம் நம்முடைய விஷயத்துக்கு வருவோம்.” “நம்முடைய விஷயம் அதுக்கு மேலே என்ன இருக்கு ?….கேஸ் கோர்ட்டுக்குப் போகல்லே, சூப்பிரெண்ட்டோடு நின்னு போச்சு. நான் விடுதலையாயிட்டேன்…” “கோவிந்தா, கோவிந்தா!” “திரும்பவும் ஏன் ’கோவிந்தா போடறீங்க?” “நீங்கள் விடுதலையானதும் அவன் அருள்தானே ?” “அப்படியா ? ‘இன்னிக்கு இதுக்கு மேலே சொல்ல வேணாம்’ னு நான் நினைக்கிறேன். இதுவும் அவன் அருளாத்தான் இருக்கணும். நீங்க போயிட்டு வறீங்களா ?” “தாங்க்ஸ்!” நாடக மேடையில் ஜேம்ஸ்பாண்ட் “இப்போ யாரோ ஜேம்ஸ்பாண்டுன்னு சொல்லிக்கிறாங்க, நான் அந்த நாள் நாடக மேடையிலேயே ஜேம்ஸ்பாண்டா நடிச்சிருக்கேன்…” “அப்போதே அமெரிக்க நடிகன் சீன்கானரி நடித்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வருமா ? அவனை உங்களுக்குத் தெரியுமா ?” “தெரியாது; அவன் நடிச்ச படங்களையும் நான் பார்த்தது கிடையாது. ஒரு நடிகனைப் பார்த்து இன்னொரு நடிகன் அப்படியே நடிச்சிட்டா அவனுக்கு நடிகன்னா பேரு ? ’பிளாட்டிங் பேப்பர்’னு பேரு!” “கலையை வளர்க்க அதுவும் ஒரு வழி என்றல்லவா சொல்கிறார்கள் ?” “அது வழியில்லே, தற்கொலை …எனக்குத் தெரிஞ்ச வரையிலே அந்த நாளிலே டக்ளஸ் பேர் பாங்ஸ்னு ஒரு நடிகன் இருந்தான். அவன் நடிச்ச ஊமைப் படம் இங்கே அப்பப்போ வந்துகிட்டிருக்கும்; அதை விட்டா எங்க நாடகம். இந்த ரெண்டைத் தவிர அந்தக் காலத்து ஜனங்களுக்கு வேறே பொழுது போக்கு கிடையாது.” “பரதம், சங்கீதம்…” “பரதம் பரதம்னு சொல்லிக் கிட்டு அப்போ ’தா, தை’ன்னு குதிச்சிக்கிட்டிருந்தவங்களே வேறே. அவங்களும் அவங்க - கலையும் அப்போ கடவுளுக்கு அர்ப்பணமாயிக்கிட்டிருக்கிறதா சொல்லுவாங்க. உண்மையிலே யாருக்கு அர்ப்பணமாயிக் கிட்டிருந்ததோ, அது எனக்குத் தெரியாது. இப்பத்தானே அதுக்கு ஒரு மரியாதையும், அதை ஆடறவங்களுக்கு ஒரு கவுரவமும் ஏற்பட்டிருக்கு ?” “சங்கீதம் ?” “அதுக்கு ஏது அப்போ தனி மவுசு ? நாடகத்தோடு சேர்ந்தாத்தான் மவுசு. ஒருவேளை பொம்மனாட்டி தனியா பாடியிருந்தா அந்த மவுசு அதுக்கு அப்பவே ஏற்பட்டிருக்குமோ, என்னவோ ? அதுக்கு அந்த நாளிலே யாரும் துணியலே. ஆம்பளை தனியாப் பாடினா யார் கேட்கிறது? அவன் பாட்டை அவனேதான் கேட்டுக்கணும். இந்தக் கஷ்டத்துக்காகத்தான் அந்தக் காலத்துப் பெரிய மனுஷர்களான எப்.ஜி.நடேசய்யர், டாக்டர் ரங்காச்சாரி யெல்லாம்கூட எங்க நாடகத்தைப் பார்க்க அடிக்கடி வருவாங்க..” “டாக்டர் ரங்காச்சாரியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?” “நல்லாப் பார்த்திருக்கேன். இப்போ இருக்காப்போல கண்ணுக்கு ஒரு டாக்டர், காதுக்கு ஒரு டாக்டர், பல்லுக்கு ஒரு டாக்டர்னு அப்போ ஏது? எல்லாத்துக்கும் ஒரே டாக்டர்தான். அவர்தான் ரங்காச்சாரி. அவர்கிட்டே எப்பவும் ரெண்டு கார் இருக்கும். ஒண்ணு ரோல்ஸ்ராய்ஸ், இன்னொண்ணு போர்டு. பணக்காரங்க வீட்டுக்கு ரோல்ஸ்ராய்ஸிலே போவார்; ஏழையின் வீட்டுக்கு போர்டிலே போவார். எங்கே போனாலும் பெட்ரோல் செலவுக்காவது அவருக்கு ஒரு ரூபா விஸிடிங் பீஸா கொடுத்துடனும். கொடுக்கலேன்னா இன்னொரு தடவை கூப்பிட்டா வரமாட்டார்…” ’எப்படி வரமுடியும்? பெட்ரோலை யாரும் தருமத்துக்குப் போடமாட்டாங்களே!" “நாடகம் பார்க்க வரப்போல்லாம் அவர் எங்களைப் பார்க்கத் தவற மாட்டார். மேடைக்கு வந்து, ’கண்ணைக் காட்டும்பார். ’நாக்கை நீட்டு’ம்பார்; வெளிக்குப் போறியா ?ம்பார், ’இல்லே’ன்னா ’கீரை சாப்பிடும்பார்.” “எல்லாம் சரி, அவர் மட்டும் காப்பி சாப்பிட்டுக் கொண்டு நோயாளிகளைக் காப்பி சாப்பிட வேண்டாமென்று சொல்லும் வழக்கம் அவரிடமும் உண்டா ?” “அதுதான் கிடையாது; சாதாரண ஜனங்களைப் போல அவரும் ‘பழையது’ சாப்பிடுவார்.” “அது என்ன பழையது ?” “பொழுது விடிஞ்சதும் டிப்ன், காப்பியெல்லாம் அப்போ ஏது ? அநேகமா எல்லாருடைய வீட்டிலும் ராத்திரி மிச்சமான சோத்திலே தண்ணியைக் கொட்டி வைச்சிருப்பாங்க. காலையிலே அந்தச் சோத்திலே உப்பைப் போட்டு ஊறுகாயைத் தொட்டுக்கிட்டுச் சாப்பிடுவாங்க. அதுதான் பழையது. ஆனா இந்தப் பழையதுக்கும் டாக்டர் ரங்காச்சாரி சாப்பிட்ட பழையதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.” “அது என்ன வித்தியாசம்?” “ராத்திரி வடிச்ச சோத்திலே தண்ணியைக் கொட்றதுக்குப் பதிலா அவர் பாலைக் காய்ச்சிக் கொட்டி, அந்தப் பால்லே ஒரு துளி தயிரைப் புரை குத்தி வைச்சிடுவாார். பொழுது விடிஞ்சதும் பார்த்தா அந்தச் சோத்தோடு தயிரும் தோய்ஞ்சிருக்கும். அதுதான் டாக்டர் ரங்காச்சாரி சாப்பிட்டுக்கிட்டிருந்த பழையது. அந்தப் பழையதைத்தான் நானும் அன்னியிலேருந்து இன்னியவரையிலே சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். அது மட்டுமில்லே, முதல் நாள் ராத்திரியே தண்ணியைக் காய்ச்சி ஆற வைச்சி, மறு நாள் பொழுது விடிஞ்சதும் அவர் குளிப்பார். அதே மாதிரி நானும் குளிச்சிக்கிட்டிருக்கேன்…” “பலன் ஏதாவது… ?” “என்னாலே டாக்டர்களுக்கு ஒரு பைசாக்கூட வருமானம் கிடையாது; அது போதாதா ?” “அப்படியானால் டாக்டர்களிடையேயும் இப்போது ‘வேலையில்லாத் திண்டாட்டம் பரவியிருப்பதற்கு நீங்களும் ஒரு காரணம் என்று சொல்லுங்கள்’ “திண்டாட்டம் வேலை தெரிஞ்சவனுக்கு எப்பவும் எதிலும் இருக்காது; தெரியாதவனுக்குத்தான் இருக்கும்’ “அதுவும் ஒரு விதத்தில் சரிதான்; அப்புறம்?” “தமிழ் நாடக மேடையிலே ஸ்டண்டுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கும் சமூக நாடகம் அப்பத்தான் தலைகாட்ட ஆரம்பிச்சிருந்தது. அதுக்குக் காரணமாயிருந்து, முதல்லே கதை எழுதிக் கொடுத்தவர் டி.கே.பாவலர்…” “எந்த டி.கே.பாவலர்?” “மதுரை யுனிவர்ஸிடி வைஸ்சான்ஸ்லராயிருந்தாரே டி.பி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அவர் தம்பி. அவர் எழுதிய ‘பதி பக்தி’ நாடகத்திலே எனக்கு சி.ஐ.டி. வேஷம். அந்த வேஷத்துக்காக டக்ளஸ் பேர்பேங்ஸ் டிரஸ் மாதிரி டிரஸ் தைச்சி எனக்கு மாட்டிவிடுவாங்க. அதுவே எனக்கு என்னவோ போல இருக்கும். நம்ம ஊர் சி.ஐ.டி. மாதிரி டிரஸ் தைச்சிப்போட்டுக்கிட்டா என்ன ?ன்னு நினைப்பேன். இருந்தாலும், சமயத்துக்குத் தகுந்தாப் போல வேஷம் போடறவன்தானே சி.ஐ.டி.. ?ன்னு என்னை நானே சமாதானம் சேஞ்சிக்கிட்டு மோட்டார் சைக்கிள்லே ஏறி உட்கார்ந்து, ‘டபடபா’ன்னு ’ஆடியன்ஸ்’ மேலே, பாயறாப்போல மேடைக்கு வந்து, ’டக்’குன்னு திரும்பி நிற்பேன். அவ்வளவுதான்; ’ஆடிட்டோரியம் பூராவும் ஒரே ’கிளாப்’ஸாயிருக்கும்…” “அப்போதும் உங்களுக்குச் சம்பளம் சாப்பாடு போட்டு மாதம் ஐந்து ரூபாய்தானா?” “இல்லே, இருப்பத்தைஞ்சி’ “ஒரு நாளைக்கு என்ன வசூலாகும் ?” “ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது.” “கிடைக்கிற காசையெல்லாம் சுருட்டி நல்ல வாடகை வரக் கூடிய வீடுகளாக் கட்டிப் போட்டுவிட்டு, கம்பெனி நஷ்டத்தில் நடக்கிறது, நான் போய்விட்டால் நாடக உலகமே அஸ்தமித்துவிடுமே என்று என் கையிலே இல்லாத காசைப் போட்டுக் கம்பெனியை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று உங்கள் அய்யர் சக நடிகர்களை ஏய்ப்பதற்காக முதலைக் கண்ணீர் விடுவதில்லையா ?” “அவர் அந்த நாள் மனுஷர் நடிப்பை நாடக மேடையோடு வைச்சிக்கிறது. அவர் வழக்கம்.” “பிழைக்கத் தெரியாதவராயிருந்திருப்பார் போலிருக்கிறது.” “பிழைக்கத் தெரியாதவர் மட்டுமில்லே, வாழத் தெரியாதவரும் கூட.” “அந்த விஷயத்தில் அவர் எப்படியோ, இங்குள்ள நடிகர்களின் சிலர் என்.எஸ். கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரின் அவல மரணத்துக்குப் பிறகு தங்கள் ஏழேழு தலைமுறைகளுக்கும் சேர்த்து வாழக் கற்றுக் கொண்டு விட்டார்கள்!” “அத்த விஷயத்திலே பாகவதரையும் என்.எஸ்.கே. யையும் கொடுத்த சீதக்காதிங்க’ ன்னு சொல்லனும் அதுக்காகவே இப்போ இருக்கிறவங்க அவங்களுக்கு நன்றி செலுத்தனும் எங்கே செலுத்தநாங்க?” “வாழுங் கலைஞர்களைக் கவனிப்பதுபோல் வாழ்ந்து மறைந்த கலைஞர்களையும் முதல்வர் கருணாநிதியே கவனிப்பார். அதை விடுங்கள்!…‘பதி பக்தி’ நாடகத்தில் உங்களுடைய ஸ்டண்ட் வேலைகளுக்கு ஈடு கொடுத்து நடித்த வில்லன் நடிகர் யார் ?” “அவர்தான் நடிப்புக்கே முதலில் இலக்கணம் வகுத்துக் கொடுத்த நடிப்புலக மேதை எம்.எஸ்.முத்துகிருஷ்ணன் அவர்கள். ’பராசக்தி’யில் நடிக்கும் போது சிவாஜி கணேசனுக்குக் கூட நடிக்கச் சொல்லிக் கொடுத்தவர் அவர்தான்.” “அவருடைய பெயர் வெளியே தெரியவே யில்லையே!” “எங்கே தெரிய விடறாங்க ? தெரியவிட்டா நம்ம பேரு மறைஞ்சிடுமோன்னு பயப்படறாங்க. உண்மையான கலைஞர்களுக்குத் தேவையில்லாத பயம் இது!” “அவர்கள் தெரிய விடாவிட்டால் அவரே தெரிய வைத்துக் கொண்டு விடவேண்டியதுதானே ? “அது நிறை குடம், தளும்பாது… “அப்படியானால் இதுவும் ‘பிழைக்கத் தெரியாத கேஸ்’ தான் என்று சொல்லுங்கள்!” “அப்படியும் வைச்சிக்கலாம்.” “சரி அப்புறம் ?” “தமாஷா வரி வந்தது…’ “அதுக்கு முன்னே தமாஷா வரி இல்லையா ?” “இல்லே, நாங்க மதுரையிலே ‘பதி பக்தி’ நாடகம் நடத்திக்கிட்ருந்தப்போதான் தமாஷா வரி வந்தது. அப்போதெல்லாம் டாக்ஸ் கலெக்ட் பண்றவங்களுக்கு நாற்பது ரூபாதான் சம்பளம். அந்த நாற்பது ரூபா சம்பளக்காரன் வந்து நம்மைக் கணக்கு கேட்கிறதாவது, நாம் அவனுக்குப் பதில் சொல்றதாவதுன்னு அய்யர் கம்பெனியையே கலைச்சிட்டார்!” “சரியான சுயமரியாதைக்காரராயிருந்திருப்பார் போலிருக்கிறது!” ‘நான் சந்தித்த முதல் சுய மரியாதைக்காரரே அவர்தான்’ ‘அப்புறம் ?’ சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சவுக்கடி சாத்தப்பிள்ளை கிட்டே சொல்லி உனக்கு நான் லைலென்ஸ் வாங்கித் தரேன், நீ என்கிட்டே டிரைவராயிருன்னார் அய்யர்…" “அதுவரையிலே நீங்கள் லைலென்ஸ் வாங்கவே யில்லையா ?” “ஊஹாம்.’ “ஓசிப்பாஸ் தயவிலே லைலென்ஸ் இல்லாமலே காரை ஓட்டிக் கொண்டிருந்தீர்களாக்கும்…சரி, பிறகு ?” “என் நோக்கம் அய்யருக்கு டிரைவராயிருக்கிறது மட்டும் இல்லையே, நடிகனாகவும் இருக்க வேண்டுமே! அதாலே ’நான் ஊருக்குப் போயிட்டு வந்துடறேன்”னு சொல்லிவிட்டு மெட்ராசுக்கு விட்டேன் சவாரி!" எடுத்தேன்; சுட்டேன்! “சின்னப்பா எம்.ஜி.ஆர் எல்லாம் இருந்த ’மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யோடு நான் தொடர்பு கொண்டது சென்னையிலேதான்….” “சொல்லுங்கள் சொல்லுங்கள், அதைப் பற்றி அப்புறம் சொல்வதாகச் சொல்லியிருந்தீர்களே ? சொல்றேன் மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபாவை நான் விட்டாலும் அது இன்னும் என்னை விட்டிபாடில்லையே!" “அதைத்தான் அய்யர் கலைத்துவிட்டதாகச் சொன்னீர்களே ?” அய்யர் விட்டாலும் அவர் மகன் ராமசுப்பய்யர் அதை விடறதாயில்லே ‘நான் தொடர்ந்து நடத்திறேன்’ னார். அப்பா அதற்குச் சம்மதிக்கல்லே, ‘தான் தமாஷா வரிக் கணக்குக் கேட்கிற முனிசிபாலிடிக்காரனுக்கு அடிமையாயிருக்க விரும்பலேன்னா, என்மகன் அடிமையாயிருக்கிறதை மட்டும் விரும்புவேனா? அது முடியாது, நடக்காது’ ன்னு சொல்லிட்டார்…" “பிடிவாதக்கார மனுஷராயிருந்திருப்பார் போலிருக்கிறதே ?” “நீங்க எந்தப் பெரிய மனுஷரை வேணும்னாலும் பாருங்க, அவங்க பிடிவாதக்காரராய்த்தான் இருப்பாங்க… காந்தியார் மாதிரி வேறே ஒரு பிடிவாதக்காரர் இருக்க முடியுமா? ஆச்சாரியார் மாதிரி வேறே ஒரு பிடிவாதக்காரர் இருக்க முடியுமா ? ஏன், பெரியார் மாதிரிதான் வேறே பிடிவாதக்காரர் இருக்க முடியுமா ?” “கரெக்ட் …அப்புறம் ?” “நாகலிங்கச் செட்டியார்னு ஒருத்தர்…” “அவர் வேறே நாடகக் கம்பெனிக்காரரா?” “இல்லே; அவர்தான் ஜகந்நாதய்யர் கம்பெனியை விலைக்கு வாங்கி, அந்தக் கம்பெனிக்கு அவர் மகன் ராமசுப்பய்யரை மானேஜரா வைச்சிக்கிட்டவர்…” “அய்யர் இதற்கு ஒன்றும் சொல்லவில்லையா?” “அவர் சொல்றதைச் சொல்லத்தான் சொன்னார்; மகன் கேட்கல்லே. அப்பன் பேச்சைக் கேட்காத பிள்ளைங்க அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் மட்டும் இல்லே, ராமாயண காலத்திலேயே இருந்திருக்கும்போல இருக்கே இல்லேன்னா, ராமன்னு ஒருத்தனும், அவனை வைத்து ஒரு கதையும் இங்கே பொறந்திருக்குமா?” “ராமனை விடுங்கள்; முருகனையே ’தறுதலை தகப்பன் சாமி என்றல்லவா சொல்கிறார்கள் ?” “சும்மா சொல்லக் கூடாது; ராமசுப்பய்யர் அந்த அளவுக்கு மோசமில்லே. அவர் கம்பெனி பொறுப்பை ஏத்துக்கிட்டதும் சிதறிப் போன நடிகர்களையெல்லாம் ஒண்ணு சேர்க்க ஆரம்பிச்சார். அவங்களிலே ரெண்டு பேரு சென்னைக்கு வந்து, என்னையும் மதுரைக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க… பழையபடி நாங்க ‘பதி பக்தி’ நாடகம் போட்டோம். அப்பத்தான் புது நாடகம் எழுதிக் கொடுக்கக் கந்தசாமி வாத்தியார் வந்து சேர்ந்தார்.” “எந்தக் கந்தசாமி வாத்தியார் ?” “அவர்தான் எம்.கே.ராதாவின் அப்பா…” “ஜெமினி சந்திரலேகா, அபூர்வ சகோதரர்களிலே நடித்தாரே, அவரா?” “அவரேதான்!” “பழைய வாத்தியார்கள் ‘பாடம்’ என்றதும் அகராதியைத் தூக்கி உங்கள் கையிலே கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னீர்கள்; புது வாத்தியார் எப்படி?” “அவர்களைவிடமோசம்; என்னைக் கண்டதும் புத்தகத்தை மூடிக் கீழே வைச்சிடுவார். என் தலை மறைஞ்சப்புறந்தான் அதை எடுத்துப் பிரித்து மத்தவங்களுக்குப் பாடம் நடத்துவார்!” “குருவைக் கண்டு சீடன் பயப்படுவதற்குப் பதிலாகச் சீடனைக் கண்டு குருவே பயந்தார் போலிருக்கிறது!” “பயப்படறவன் குரு, சீடனைப் பார்த்து மட்டும் இல்லே; யாரைப் பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் பயந்துக்கிட்டுத்தான் இருப்பான்!” “எம்.கே.ராதா ?” “அவரையும் என்னுடன் சேர்ந்து நடிக்கவிடமாட்டார் அவருடைய அப்பா. அப்படியே நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் ’பத்திரம், பத்திரம்’னு சொல்லிக்கிட்டு அவருக்குப் பக்கத்திலேயே இருப்பார்…இந்த மாதிரி ஆளுங்க பயம் எதிலே போய் முடிஞ்சதுன்னா, எனக்கு எதிரா போடிநாயக்கனூரானைக் கெளப்பி விடறதிலே போய் முடிஞ்சது…” “அது யார் அந்தப் போடிநாயக்கனூரான் ?” “அவன் ஒரு ஸ்டண்ட் நடிகன்; என்னை விடக் கொஞ்சம் பலசாலி. நாடகத்திலே வர சண்டைக் காட்சியிலே அவன் என்னோடு கட்டிப் புரண்டு சண்டை போடுவான். அதை வைச்சிக் கம்பெனியிலே எனக்கு எதிரிங்களாயிருந்த சில பேரு ஒரு சூழ்ச்சி செய்தாங்க…” “என்ன சூழ்ச்சி ?” “நாடகத்திலே சண்டை போடறப்போ, என்னைக் கீழே தள்ளி ஒரே அமுக்கா அமுக்கிடச் சொல்லி போடிநாயக்கனூரான்கிட்டே சொல்லி வைச்சிருந்தாங்க. இந்த விஷயம் என் காதுக்கு எட்டிச்சி. அப்படியா சமாசாரம்?’னு நான் ஒரு வேலை சேஞ்சேன்…” “அது என்ன வேலை ?” “சி.ஐ.டி. வேஷம்னா கையிலே துப்பாக்கி இல்லாமலிருக்குமா? அதுக்காக என் கையிலே ஒரு துப்பாக்கி கொடுத்து வைச்சிருந்தாங்க… நெஜத் துப்பாக்கியில்லே; வெத்துவேட்டுத் துப்பாக்கிதான். அந்தத் துப்பாக்கியிலே ‘பால் பேரிங்’ எஃகு ரவைகளைப் போட்டு, அதுக்கு மேலே பஞ்சை அடைச்சி வைச்சுக்கிட்டேன்…” “இந்த விஷயம் அவர்கள் காதுக்கு எட்டவில்லையா?” “எட்ட விடுவேனா? அந்த மாதிரி அஞ்சாம் படை ஆளையே நான் எப்பவுமே என்னோடு சேர்த்துக்கமாட்டேன். அன்னிக்கு ராத்திரி நடந்த நாடகத்திலே அந்தப் போடிநாயக்கனூரான் எப்பவும் போல என்னோடு சண்டை போட வந்தான்… சண்டைக்கு நடுவே நான் வழக்கம்போலத் துப்பாக்கியை எடுத்தேன்; ஆனா வழக்கம்போல நாடகக் கொட்டாயின் கூரையைப் பார்த்துச் சுடல்லே; அவன் விலாவைப் பார்த்துச் சுட்டேன்… அவ்வளவுதான்; ’அம்மாடியோவ்’னு அலறிக் கிட்டே அவன் கீழே விழுந்தான். என்னடான்னு குனிஞ்சி பார்த்தா, என் துப்பாக்கிக்குள்ளே போட்டிருந்த அத்தனை குண்டுகளும் அவன் விலாவுக்குள்ளே பாய்ஞ்சிருந்தது!” “ச்சுச்சூ!” “எனக்கும் வருத்தமாய்த்தான் இருந்தது…ஏன்னா, என் நோக்கம் அவனைச் சும்மா மிரட்டி வைக்கணுங்கிறதுதான்; குண்டு இப்படிப் பாயும்னு நானும் எதிர்பார்க்கல்லே….” “அப்புறம்?” “ஒரே கூச்சல், கலாட்டா, ’என்ன, ஆக்ஸிடெண்ட்டா ? ன்னு கேட்டுக்கிட்டே ஆடியன்ஸிலே கூடச் சில பேரு மேடைக்கு வந்துட்டாங்க. எனக்கு ஒண்னும் புரியல்லே, ’ஆமாம்’னு சொல்வி வைச்சேன்…நல்ல வேளையா அன்னிக்கு ராத்திரி எனக்கு வேண்டிய ரத்தின சிங் நாடகம் பார்க்க வந்திருந்தார்…” “அது யார் அந்த ரத்தின சிங்?” “அவர்தான் டி.வி.எஸ். காரர்களுக்கு முந்தி மதுரையிலே பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்திக்கிட்டிருந்தவர்; நான் மோட்டார் மெக்கானிசம் கத்துக்கிட்டதுகூட அவர்கிட்டேதான்…” “அவர் வந்து என்ன செய்தார் ?” “போடிநாயக்கனூரான் விலாவிலே பாய்ஞ்சிருந்த குண்டுகளையெல்லாம் பக்குவமா வெளியே எடுத்தார். அவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்காம வீட்டிலேயே வைச்சி, வேண்டிய சிகிச்சையும் சேஞ்சார்…” “போலீசார் இதில் தலையிடவில்லையா ? வெற்று வேட்டுத் துப்பாக்கிக்குள்ளே குண்டு எப்படி வந்தது என்று கேட்கவில்லையா ?” “நாமா போய்ப் புகார் செய்யாத வரையிலே அவங்களாத்தான் எந்த வம்புக்கும் வரமாட்டாங்களே . ‘ஏன் ?’ ன்னு கேட்கிறீங்களா ?…சொல்றேன்… நீதி எப்பவும் தூங்கிட்டிருக்கு: நாம் போய் எழுப்பினாத்தான் அது கொட்டாவி விட்டுக்கிட்டே எழுந்து வந்து, ’என்ன ?ன்னு கேட்குது…இது தெரியாம சில பேரு நீதி தூங்காது, நீதி தூங்காது’ன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க!” “அது துங்கும்போது அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்; அப்புறம்?” “கம்பெனியிலே எனக்கு இருந்த எதிரிங்க அதிகமாயிட்டாங்க,”ராதா இருந்தா நாங்க நடிக்க மாட்டோம்னு அவங்க முதலாளிகிட்டே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!" “அந்த அளவுக்குப் போய்விட்டதா?…முதலாளி என்ன செய்தார் ?” “அவர் முழிச்சார். எனக்காக மத்தவங்களை விடவும் அவர் தயாராயில்லே; மத்தவங்களுக்காக என்னை விடவும் அவர் தயாராயில்லே…” - “கடைசியில் என்னதான் ஆயிற்று ?” “எம்.எஸ்.முத்துகிருஷ்ணன்கிட்டே எங்களுக்கெல்லாம் அந்தக் காலத்திலேயே பெருமதிப்பு உண்டு. அவர் எல்லாரையும் கூப்பிட்டு விசாரிச்சு, ஒரு வழியா சமாதானம் சேஞ்சி வைச்சார்.” “நல்ல வேளை, ’ராதாகிருஷ்ணனான உங்களைப் போலவே அந்த ’முத்துகிருஷ்ணனும் ’தீராத விளையாட்டுப் பிள்ளையாயிருந்திருந்தால் இப்படி ஒரு சமாதானமே சாத்தியமாயிருந்திருக்காது, இல்லையா?” “என்ன செய்வது ? நானாக யார் வம்புக்கும் போகமாட்டேன்; யாராவது வம்புக்கு வந்தாலும் விட மாட்டேன். இது என் சுபாவமாப் போச்சு!” “பிறகு ?”. “ஈரோட்டுக்குப் போனோம். அங்கே எங்க கம்பெனி நாடகங்க நடந்துகிட்டிருந்தப்போ, சக நடிகர்களிலே சில பேரு பச்சை அட்டை போட்ட ‘குடி அரசு’ பேப்பரை மறைச்சு வைச்சிகிட்டுப் படிக்கிறதைப் பார்த்தேன். ‘அது ஏன் ?’ ன்னு எனக்குப் புரியல்லே, நண்பர் பொன்னையாவைக் கேட்டேன். அது ராவணன் பத்திரிகை; அப்படித்தான் படிப்பாங்க. இல்லேன்னா, ஊர்ப் பெரியவங்க கட்டி வைச்சி உதைப்பாங்கன்னு சொன்னார். ராவணன் பத்திரிகை கூட நடத்துவானா ?ன்னேன். நடத்துவான், நடத்துவான். அந்த ராவணனை இன்னிக்கு நான் பார்க்கப் போறேன், நீயும் வேணும்னா வறியா ?ன்னார்…அவ்வளவுதான்; கதையிலே கேட்ட ராவணனை நேருக்கு நேராப் பார்க்க தான் அப்பவே தயாராயிட்டேன் …பத்துத்தலைகள், கோரைப் பற்கள், இருபது கைகள் … இதை நினைக்க நினைக்க என் ஆசை அளவு கடந்து போயிடிச்சி…”இப்பவே போவோமா, இப்பவே போவோமா ?ன்னு அவரை நச்சரிக்க ஆரம்பிச்சுட்டேன்…‘இரு, போவோம்; இரு, போவோம்’னு அவர் மத்தியானம் வரையிலே காலத்தைக் கடத்திட்டு, அதுக்கு மேலே என்னை ராவணன் வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போனார்…அங்கே போனா, பத்துத் தலைகளும் இல்லே, கோரைப் பற்களும் இல்லே… இருபதுகைகளையும் காணோம்’..தாடியும் மீசையுமா யாரோ ஒரு சாமியார் நாலைந்து இளம் விதவைகளோடு உட்காந்து ஏதோ பேசிக்கிட்டிருந்தார்…. எனக்குச் ’சப்’பென்று போய்விட்டது; ’பூ, இந்தச் சாமியாரா ராவணன் ?ன்னு உதட்டைப் பிதுக்கினேன். ’ஒரு வேளை மாரீசனை முன்னாலே அனுப்பி வைச்சிட்டு, சீதையைத் தூக்கிக்கிட்டு வரதுக்காக இவர் சாமியார் வேஷத்திலே இருக்காரோ ?ன்னு குழம்பினேன். என் குழப்பம் பொன்னையாவுக்கு வேடிக்கையாக இருந்திருக்கும் போல இருக்கு. அவர் என்னை ஒரு தினுசாப் பார்த்துக்கிட்டிருந்தார்…" மாரீசன் குரல் “நான் தான் ’ராவணனையும் பொன்னையாவையும் மாறி மாறிப் பார்த்துக்கிட்டிருந்தேனே தவிர, என்னை அந்த ராவணன் திரும்பிக்கூடப் பாக்கல்லே. ஒரு வேளை மாரீசன் குரலை எதிர்பார்த்து, அதிலேயே அவர் கவனமாயிருந்துகிட்டிருக்காரோ என்னவோன்னு நான் மெல்ல பொன்னையாவை நெருங்கி, ’இங்கே பஞ்சவடி எங்கே இருக்கு ? ன்னு அவர் காதோடு காதாக் கேட்டேன். அவர் ஒரு நிமிஷம் முழிச்சிட்டு மறு நிமிஷம் தன்னைச் சமாளிச்சிக்கிட்டு, ’பக்கத்திலேதான் இருக்கு’ன்னார். அங்கே இருந்து மாரீசன் குரல் கொடுத்தா இங்கே கேட்குமா ?ன்னேன். ’கேட்கும், கேட்கும்’னார். அந்தச் சமயத்திலே, ’லட்சுமணா, லட்சுமணா’ன்னு ஒரு குரல் கேட்டது. அவ்வளவுதான், கமண்டலத்தைக் கையிலே தூக்கிக்கிட்டு ’பிச்சை, தாயே”ன்னு ராவணன் சீதையைச் சிறையெடுக்கப் பஞ்சவடிக்குக் கிளம்பிடுவார்ன்னு நான் நெனைச்சேன். நெனைச்சபடி நடக்கல்லே. அவர் ஆடாம அசையாம உட்கார்ந்துகிட்டிருந்த இடத்திலேயே உட்கார்ந்துகிட்டிருந்தார். அப்போ, ’லட்சுமணா, லட்சுமணா’ன்னு மறுபடியும் குரல் கொடுத்துக்கிட்டே ராவணன் வீட்டிலிருந்து யாரோ ஒரு அம்மா வெளியே வந்தாங்க. அவங்களைப் பார்த்ததும், ’இவங்கதான் மண்டோதரியா?ன்னு நான் பொன்னையாவைக் கேட்டேன். அவர் சிரிச்சார். ’என்ன சிரிக்கிறீங்க ?ன்னேன், ’நீ என்னடா, ஒரேயடியா ராமாயண காலத்துக்கே போயிட்டே ? இது ராவணன் காலம். ஆனா அந்த ராவணன் இல்லே இந்த ராவணன், இவர் பெயர் ஈ.வே.ராமசாமி. எப்போதுமே இவர் சாமியார் மாதிரிதான் இருப்பார். இப்போ ஊரெங்கும் ஒரே பரபரப்பை உண்டாக்கிக்கிட்டிருக்கே சுயமரியாதை இயக்கம், அந்த இயக்கத்துக்கு இவர்தான் தலைவர். இப்போ வெளியே வந்தாங்களே ஒரு அம்மா, அந்த அம்மா மண்டோதரியில்லே, இவர் மனைவி நாகம்மை, அவங்க கூப்பிட்டது ராமன் தம்பி லட்சுமணனை இல்லே, வேலைக்காரன் லட்சுமணனை’ன்னு விளக்கிக்கிட்டே போனார்…." “ஈ.வே.ரா.வைச் சுற்றி உட்கார்ந்திருந்த இளம் விதவைகள் யார் என்று நீங்கள் கேட்கவில்லையா ?” “கேட்டேன்; அவங்க சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவங்க, மறுமணம் சேஞ்சிக்கிறதுக்காக வந்திருக்காங்கன்னு சொன்னார்.” ’மாப்பிள்ளைகள் ?" “தாங்களாகவே வருவதும் உண்டாம்; பெரியாரும் தேடி வைப்பதுண்டாம்.” “அந்த வேலையைக் கன்னிப் பெண்களுக்கும் அவர் செய்யக் கூடாதா? அவர்களில் பலருக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி, கலியாணமாவது கஷ்டமாயிருக்கிறதே?” “கன்னிப் பெண்களுக்காகக் கவலைப்பட எத்தனையோ பேர் இருப்பாங்க. கைம்பெண்களுக்காக கவலைப்பட அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, பெரியாரைத் தவிர வேறே யாரும் இருக்கிறதா தெரியலையே?” “அதற்கெல்லாம் ஒரு தனித் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் அவரைத் தவிர வேறு யாருக்கும் வர மாட்டேன் என்கிறது!” “ஏன் வரல்லே?” “அவரிடம் இருப்பதுபோல் மற்றவர்களிடம் பணம் இல்லாமல் இருப்பதுகூட அதற்கு ஒரு காரணமாயிருக்கலாம்…” “பணம் அவர்கிட்டே மட்டுமா இருக்கு, எத்தனையோ பேர்கிட்டே இருக்கத்தான் இருக்கு, அவங்களுக்கெல்லாம் அந்தத் துணிச்சல் வந்துடுதா?” “பணத்தோடு மனமும் இருந்தால்தான் வரும்” “அப்படி வாங்க, வழிக்கு அதுதான் உண்மைங்கிறேன். அவர் பணத்துக்காகவோ, புகழுக்காகவோ சேவை செய்ய வந்தவர் இல்லே, சேவையைச் சேவைக்காகவே செய்ய வந்தவர். அதனால்தான் அத்தனை எதிர்ப்புக்களுக்கும் தாக்குப் பிடிச்சி அவராலே இமயம்போல நிற்க முடியுது. அந்த நாளிலே அவர் நடத்திய குடியரசுப் பேப்பர் விறுவிறுப்பா வித்தாப்போல் இந்நாளிலே வேறே எந்தப் பேப்பரும் வித்து நான் பார்க்கல்லே. பெரியாரைத் திட்டி எழுதறதுக்குன்னே டி.கே.பாவலர் அப்போ ஒரு பேப்பர் நடத்தினார். அதன் பேரு இப்போ எனக்கு மறந்து போச்சு. அதுவும் விறுவிறுப்பா விற்கும். குடியரசு பேப்பர் வாங்கற அத்தனை பேரும் அதையும் வாங்குவாங்க. காந்தியார் வெளிநாட்டுத் துணிங்களைத் தெருவிலே தூக்கிப் போட்டுத் தீ வைச்சிக் கொளுத்தினாபோல ’நாங்க மேல் ஜாதிக்காரங்க’ன்னு சொல்லிக்கிட்டவங்க குடியரசுப் பேப்பரைத் தெருவிலே தூக்கிப் போட்டுத் தீ வைச்சிக் கொளுத்துவாங்க. அந்தத் தீயிலே பெரியார் பேப்பர்தான் சாம்பலாச்சே தவிர, அவருடைய கொள்கைங்க, கோட்பாடுங்க சாம்பலாகல்லே…” “நாங்கள் மேல் சாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிலும் அவருடைய கொள்கைகள், கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள்மேல் அவர் கொண்டுள்ள துவேஷந்தான்.” “தவறான பிரசாரம் அது. அவருக்கு எப்பவுமே நாங்க மேல் சாதிக்காரங்க’ன்னு சொல்லிக்கிட்டிருக்கிறவங்ககிட்டே துவேஷமே கிடையாது; அங்க சாஸ்திரங்க, சம்பிரதாயங்க மேலேதான்.” “சரி, அதை விடுங்கள், ஈ.வே.ரா.வை முதன் முதலாகப் பார்த்தீர்களே, அவர் உங்களிடம் என்ன சொன்னார் ?” “ஒண்ணும் சொல்லல்லே; என்னையும் பொன்னையாவையும் பார்த்ததும் பொதுவா ’வாங்கய்யா’ன்னு சொன்னதோடு சரி. அதுக்கு மேலே அவர் செய்ய வேண்டிய உபசாரத்தையெல்லாம் அவர் மனைவியார் நாகம்மை அண்ணியார்தான் சேஞ்சாங்க.” “யார் வந்தாலும் அவர்கள்தான் உபசாரம் செய்து அனுப்புவார்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்புறம்… ?” “ஈரோடிலிருக்கிற எங்க கம்பெனி சேலத்துக்குப் போச்க…” “அங்கேயும் ஏதாவது தகராறா ?” “தகராறு கம்பெனியிலே வரல்லே; வழியிலே வத்துடிச்சி!” “சரிதான், அதுவும் தன் வழியை மாற்றிக்கொண்டுவிட்டது போலிருக்கிறது. அது என்ன தகராறு ?” “ஒருநாள் ராத்திரி நாலு பேரோடு சேர்ந்து தான் சினிமாவுக்குப் போனேன். திரும்பறப்போ ஒரு ஜட்கா வண்டியைப் பிடிச்சோம். அவன் என்னடான்னா, ’நாலு பேரைத்தான் வண்டியிலே ஏத்துவேன், அஞ்சாவது ஆசாமியை ஏத்தவே மாட்டேன்’னு அடம் பிடிச்சான்.” “அந்த ஆசாமி நீங்களாத்தான் இருந்திருப்பீர்கள்.” “அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?” “தகராறு வர வேண்டுமானால் மாமூல்படி அது உங்கள் மூலமாகத்தானே வர வேண்டும்?” “நல்ல ஆளய்யா, நீங்க! நானா தகராறுக்குப் போறேன், அவங்க தானே தகராறுக்கு வராங்க?” “அநேகமாகப் பயணிகளைக் கொண்டு போய் வீட்டில் இறக்கி விட்டுக் கூலி வாங்கும்போதுதான் வண்டிக்காரர்களே தகராறுக்கு வருவார்கள். உங்கள் அதிர்ஷ்டத்தைப் பாருங்கள், வண்டியில் ஏறும்போதே தகராறுக்கு வந்திருக்கிறான்” “அதைக் கூடப் பெரிசா நெனைக்காம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கப்பா, எனக்குன்னு தனி வண்டி பிடிக்க முடியுமா நான்’ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்கல்லே. பொறுமை என்னை விட்டுப் போயிடிச்சி. அவனைக் கொழந்தையைத் தூக்கறாப்போல அப்படியே தூக்கிக் கீழே விட்டுட்டு, நானே லகானைப் பிடிச்சி ஜாவ்ரே ஜாவ்’னு குதிரையை ஓட்ட ஆரம்பிச்சேன். ’ஏய், ஏய்’னு கத்திக்இட்டே அவன் என்னைத் தொரத்திக்கிட்டு வந்தான். ’வாப்பா, வந்து நீயும் வண்டியிலே ஏறிக்க, நானே ஒட்றேன்’னேன். ’என்னடா, வெளையாடறியா ?ன்னு மொறைச்சிக்கிட்டே அவன் இடுப்பிலே செருகி வைச்சிருந்த பிச்சுவாவை எடுத்து என் வயித்திலே குத்த வந்தான். நான் கையிலிருந்த ’பாட்டரி லைட்’டாலே அவன் கையிலிருந்த க்த்தியை ஒரு தட்டுத் தட்டிவிட்டேன். அது எங்கேயோ போய் விழுந்தது. இருட்டிலே அது எங்கே விழுந்ததுன்னு அவனுக்கும் தெரியல்லே, எனக்கும் தெரியல்லே. கத்தி கையை விட்டுப் போனதும் ரெண்டு பேரும் தாராசிங், கிங் காங்காகி ரோட்டிலேயே கட்டிப் புரண்டோம்…” “இரண்டு பேரா ?..உங்களுடன் வந்திருந்த நாலு பேர் என்ன ஆனார்கள்?” “வண்டிக்காரன் கத்தியை எடுத்தபோதே அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்!” “ரொம்ப நல்லவர்களாயிருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனால்தான் சொல்லிக் கொள்ளாமல் போயிருக்கிறார்கள்!” “அந்தச் சமயத்திலே என்ன நடந்ததுன்னா, பத்துப் பதினஞ்சி முஸ்லிம்கள் ’மார்றே, மார்றே’ன்னு கையிலே கெடைச்சதை எடுத்துக்கிட்டு அந்த வண்டிக்காரனுக்காக என்னை அடிக்க வந்துட்டாங்க. அப்பத்தான் அதுவரையிலே என்னோடு சண்டை போட்டுக்கிட்டிருந்த வண்டிக்காரன் ஒரு முஸ்லிம்னு எனக்குத் தெரிந்தது. ’இதென்ன வம்பு, நம்மாலே இங்கே இந்து-முஸ்லிம் கலவரம் வேறே வந்துடக் கூடாதே’ன்னு நான் மெல்ல அத்தனை பேருக்கும் டிமிக்கி கொடுத்துட்டு நழுவிட்டேன்!” “அதோடாவது விட்டார்களா ?” “எங்கே விட்டாங்க ? என்ன ஆனாலும் என்னைத் தீர்த்துக் கட்றதுன்னு ஊர் முழுக்கத் தேட ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு மேலே நான் அங்கே இருந்தா நல்லாயிருக்காதுன்னு ஓரியண்டல் டாக்கீஸ் வேலாயுதம் பிள்ளையும், மருதப் பிள்ளையும் சேர்ந்து என்னை அன்னிக்கு ராத்திரியே வண்டியிலே ஏத்தி, மறுபடியும் மெட்ராசுக்கே அனுப்பி வைச்சுட்டாங்க.” “அதோடு நாகலிங்கம் செட்டியார் கம்பெனிக்குக் குட் பை; அப்படித்தானே ?” “நானா குட் பை போட்டேன்? அவங்க இல்லே எனக்குக் குட் பை போட்டுட்டாங்க!” “கொஞ்சம் கவுரமாயிருக்கட்டுமே என்று நான் அப்படிச் சொன்னேன்; அதைக்கூட ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறீர்களே ?” “அந்த மாதிரி கவுரவத்தையெல்லாம் ஏத்துக்கிறவன் இந்த ராதா இல்லே; அவன் வேறெ ஆளு!” வஸ்தாதுக்குப் பெண் பார்த்த வஸ்தாது சென்னைக்கு வந்ததும் மறுபடியும் ’ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் சேர்ந்திருப்பீர்கள். சின்னப்பா, எம்.ஜி.ஆரை யெல்லாம் சந்தித்திருப்பீர்கள்…" “எங்கே சந்திக்கவிட்டார் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை ? அவர் பெரம்பூரிலே, யாரோ ஒரு ரொட்டிக் கடைக்காரர் தயவிலே ஒரு நாடகக் கம்பெனியை ஆரம்பிச்சி வைச்சுட்டு, அதை நடத்த சரியான ஆள் இல்லாம தவிச்சுக்கிட்டிருந்தார்….” “ஏன், அவர் கம்பெனியை அவரால் நடத்த முடியாதா?” “அந்தக் காலத்திலே நாடகக் கம்பெனி நடத்தறது அவ்வளவு சாதாரண விஷயமில்லே, ரொம்பப் பெரிய விஷயம்…. மொதல்லே நாடகக்காருங்கன்னு சொன்னா, உள்ளூரிலே யாரும் தங்க இடம் கொடுக்க மாட்டாங்க. அதாலே நாங்க ஊருக்கு வெளியே உள்ள சத்திரம், சாவடியிலேதான் தங்குவோம்…” “கலையை வளர்க்க வந்த கலைஞர்களுக்கா இந்தக் கதி ?” “இந்த மாதிரி ’டூப்’பையெல்லாம் அப்போ யாரும் நம்பமாட்டாங்க; ’கூத்தாடி வயித்தை வளர்க்க வந்த கோமாளிங்க’ன்னு சொல்லி, எங்களை ஆதித் திராவிடரை ஒதுக்கி வைக்கிறாப்போல ஒதுக்கி வைப்பாங்க. ஊருக்குள்ளே ஏதாவது ஒரு பாழடைஞ்ச வீடு இருந்து, அந்த வீட்டுக்கும் யாராவது ஒரு பெரிய மனுஷர் சிபாரிசு சேஞ்சா, அது எங்களுக்குக் கிடைக்கும். அந்த வீட்டையும் எதுக்காகக் கொடுப்பாங்கன்னா, அதுக்குள்ளே இருக்கிறதா அவங்க நம்பிக்கிட்டிருக்கிற பேயும் பிசாசும் எங்களை அடிச்சித் திங்கிறதா, இல்லையான்னு ’டெஸ்ட்” பண்ணிப் பார்த்துக்கிறதுக்காகக் கொடுப்பாங்க!" “அப்படி யாரையும் அடித்துத் தின்னவில்லையென்று தெரிந்தால் உடனே வீட்டைக் காலி செய்து விடச் சொல்வார்களா?” “அவங்க காலி செய்ய சொல்றதுக்கு முந்திதான் நாங்களே காலி சேஞ்சிடுவோமே!” “ஏன் ?” “ஊரூராய்ப் போய்க்கிட்டிருக்கிறதுதானே எங்க வேலை?. எல்லா ஊரும் ஒரே மாதிரியாயிருந்தா யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையே கம்பெனியை நடத்திவிடலாம்… அப்படி இருக்காது… சில ஊருக்குப் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கிட்டா போதும்; சில ஊருக்கு ரவுடியாய் மாறினாத்தான் முடியும். மொத்தத்திலே ’அஷ்டாவதானியாயிருக்கிறவன் தான் அந்தக் காலத்திலே நாடகக் கம்பெனி நடத்த முடியும்…” “அந்த ’அஷ்டாவதானி’யாக நீங்கள் இருந்தீர்கள் போலிருக்கிறது…” “ஆமாம். ஆக்டிங், மெக்கானிக், எலெக்ட்ரிக்… இதோடு நான் நிற்கல்லே; சிலம்ப வித்தைங்க எத்தனை உண்டோ, அத்தனையும் கத்து வைச்சிருந்தேன். பாக்ஸிங், ரஸ்லிங்,…. என்ன, நான் சொல்லச் சொல்ல நீங்க பின்னாலேயே நகர்ந்துக்கிட்டிருக்கீங்க?” “எதிர்த்தாற்போல் நான் அல்லவா உட்கார்ந்திருக்கேன்?… ’இதுதான் பாக்ஸிங், இது தான் ரஸ்லிங் என்று நீங்கள் என் முகவாய்க் கட்டையிலேயே ஒரு ’நாக்கவுட் விட்டு, என்னையே ஒரு ’நண்டுப் பிடி பிடித்துக் காட்டிவிடக் கூடாதே” “நான் சும்மா ஒரு ’ஆக்ஷனுக்காகக் கையைக் காட்டினா, அதுக்குப் போய் நீங்க இப்படிப் பயப்படறீங்களே ?” “உங்களுக்குத் தெரியாது. இன்ஷ்யூரென்ஸ் கம்பெனிக்காரன் பிரீமியத்தைக் கூட என்னாலே ஒழுங்காக் கட்ட முடியறதில்லே.” “சண்டைன்னா, யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையும் உங்களைப் போலத்தான் ஒதுங்கிக்கப் பார்ப்பார். நாடகக் கம்பெனிக்காரன் எல்லா இடத்திலும் அப்படி ஒதுங்கினா நாடகம் நடத்த முடியாது… ஜகந்நாதய்யரும் சண்டைக்குப் பயந்தவர்தான்; ஆனா வர சண்டையைச் சமாளிக்க அவர் எப்பவும் இருபது முப்பது அடியாட்களைக் கூடவே வைச்சுக்கிட்டிருப்பார். அந்த வசதி பொன்னுசாமிப் பிள்ளைக்கு இல்லே; அதாலே என்னைப் பிடிச்சித் தன் க்ம்பெனியிலே போட்டுக் கிட்டார்… “அப்படியானால் சின்னப்பாவைப் பற்றியும் எம்.ஜி.ஆரைப் பற்றியும் இப்போது சொல்ல மாட்டீர்களா ?” “சொல்றேன், சொல்றேன்…. என்னிக்குப் பொன்னுசாமிப் பிள்ளை என்னைப் பிடிச்சாரோ, அன்னியிலேயிருந்து நான் அவருடைய கம்பெனிக்கு ’ஆர்கனைச’ரானேன். சக நடிகர்களிலே சிலர் படற கஷ்டத்தைப் பார்க்க முடியாம அவர் கம்பெனி ஆரம்பிச்சிட்டாரே தவிர, அதை நடத்தப் போதுமான பணம் அவர்கிட்டே இல்லே, மனம் தான் இருந்தது…” “அதை வைத்து நூறு வால் போஸ்டர் கூடப் போட முடியாதே” “அதுக்காக அவர் யார்கிட்டவாவது அப்பப்ப நூறு இருநூறுன்னு கடன் வாங்கிப் போட்டுக்கிட்டே இருப்பார்; அப்படிக் கொடுத்து உதவியவர்களிலே ஒருத்தர்தான் பெரம்பூர் ரொட்டிக் கடைக்காரர்.” “பெயர் ?” “ஞாபகமில்லை. இந்த நாடகக் கம்பெனிங்க இருக்கே, அதுங்க கொடுத்தா கொடுத்துக்கிட்டே இருக்கும்; கேட்டா கேட்டுக்கிட்டே இருக்கும். நான் போய்ச் சேர்ந்த காலம் கேட்டுக்கிட்டே இருந்த காலம். பெரம்பூர் ரொட்டிக் கடைக்காரராலே ஒரு அளவுக்கு மேலே கொடுத்து உதவ முடியல்லே…. ராணிப் பேட்டையிலே வரதராஜுலு செட்டியார்னு ஒருத்தர்; பெரிய ஜவுளிக் கடை வைச்சிருந்தார். அவர்கிட்டே பணமும் இருந்தது; கொடுக்க மனமும் இருந்தது. அவருடைய உதவியைக் கொண்டு ராணிப்பேட்டையிலே கொஞ்ச நாள் நாடகம் போட்டுவிட்டுச் சோளிங்கப்புரத்துக்குப் போனோம். அங்கே நாடகம் நடக்கல்லே…” “வேறு என்ன நடந்தது?” “கலகம்!” “கலகமா ?” “ஆமாம். அந்த நாளிலே அப்படித்தான். எந்த ஊருக்குப் போனாலும் ஒண்ணு நாடகம் நடக்கும். இல்லேன்னா, கலாட்டா நடக்கும்.” “தேவலையே, கலாட்டாவையும்,அந்தக் காலத்து மக்கள் காசு கொடுத்துப் பார்த்திருக்கிறார்களே, அதற்காக அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.” “காசு கொடுத்துப் பார்க்க வர்றவங்களாலே எந்தக் கலாட்டாவும் இருக்காது; காசு கொடுக்காமப் பார்க்க வர்றானுங்களே, அவனுங்களாலே தான் எல்லாக் கலாட்டாவும் வரும்.” “அன்றைக்கு என்ன கலாட்டா ?” “ஹெட் கான்ஸ்டபிள் ஒருத்தர் வந்து கேட்டண்டை நின்னுக்கிட்டார். பொன்னுசாமிப் பின்ளையையோ, என்னையோ கேட்காமலேயே தனக்கு வேண்டியவங்களையெல்லாம் ‘நீ போ, நீயும் போ’ ன்னு உள்ளே விட்டுக்கிட்டே இருந்தார். நாங்க படற கஷ்டத்திலே கொஞ்ச நஞ்சம் கலெக்ஷன் ஆவறதையும் இவர் இப்படிக் கெடுத்துக்கிட்டிருந்தா எனக்கு எப்படி இருக்கும்?… நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்; பொறுக்க முடியல்லே. கிட்டே போய், ’நியாயத்தை நிலை நாட்ட வேண்டியர்களே இந்த அநியாயத்தைச் செய்யலாமா?ன்னேன். ஷட் அப்’ன்னு அவர் ஒரு துள்ளுத் துள்ளிக் குதித்தார். ’அப்படின்னா என்ன அர்த்தம்? உங்களை வெளியே தள்ளிக் கேட்டை மூடச் சொல்றீங்களா ? இல்லே, என் வாயை மூடச் சொல்றீங்களா ?ன்னேன். யூ ஷட் அப்’ன்னு அவர் நீட்டி முழக்கினார். அவ்வளவுதான், ’யூ கெட் அவுட்’னு நான் அவர் கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளிட்டேன். அதுக்கு மேலே கேட்கணுமா ? அவர் அடிக்க, நான் அடிக்க, ஒரே அடி தடிச் சண்டை, கலாட்டா எல்லாம் வந்துட்டுது. அதோடு ’அரெஸ்ட் ஹிம், அரெஸ்ட் ஹிம்’னு கூச்சல் வேறே!” “யாரை யார் அரெஸ்ட் செய்யச் சொன்னார்கள் ?” “என்னைத்தான் ஹெட் கான்ஸ்டபிள் அரெஸ்ட் செய்யச் சொன்னார். ஆனா அவரோடு வந்திருந்த போலீஸ்காரர்களோ அவருக்கு அடி விழுந்ததும் ஓடிட்டாங்க!” “அப்புறம் ?” “போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயா இருக்கு, வேறே போலீஸ்காரர்களைக் கூட்டிக்கிட்டு வந்து என்னை அரெஸ்ட் செய்ய?… அது இப்போதைக்கு முடியாது, பொழுது விடிஞ்சாத்தான் முடியுங்கிற நிலைமை.” “ஹெட் கான்ஸ்டபிள் என்ன செய்தார் ?” “வேறே என்ன செய்யறது? இரு. இரு’ என் அப்பாகிட்டே சொல்லி உன்னை என்ன செய்யறேன்னு பார்’னு கையாலாகாத சின்ன பயலுங்க கறுவதாப்போல கறுவிக்கிட்டே போனார்!” “பொன்னுசாமிப் பிள்ளை ஒண்னும் சொல்ல வில்லையா ?” “சொல்லாம இருப்பாரா? என்ன ராதா, இப்படிச் சேஞ்சிட்டியே?’ன்னார். ’சும்மா இருங்க, துணிந்தவனுக்குத் துக்கமில்லே, துணியாதவனுக்கு எப்பவும் துக்கம்தான்’னேன். ’பொழுது விடிஞ்சதும் அவன் சப் இன்ஸ்பெக்டரோடு வந்து உன்னையும் என்னையும் அரெஸ்ட் செய்து இழுத்துக்கிட்டுப் போயிடுவானேன்னார்.”அவங்க வர்றத்துக்கு முந்தி நாம் ராணிப்பேட்டைக்குப் போய் வரதராஜுலு செட்டியாரிடம் விஷயத்தைச் சொல்வோம்; அவர் எப்படியாவது தம்மைக் காப்பாத்தி விடுவார்’ன்னேன். அவர் ’சரின்னார். அப்படியே கிளம்பிட்டோம்." “செட்டியார் என்ன சொன்னார் ?” “ஒண்ணும் சொல்லல்லே… பெத்தவங்களிலேயே ரெண்டு ரகம் உண்டு. சிலருக்குச் சோணிப்பயல்களைப் பிடிக்கும்; சிலருக்குப் போக்கிரிப் பயல்களைப் பிடிக்கும். ரெண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் செட்டியார். அவர் விஷயத்தைக் கேட்டதும், ’அவனை இவனை அடிக்க ஆரம்பிச்சிக் கடைசியிலே போலீஸ்காரனையே அடிக்க ஆரம்பிச்சிட்டியா ? பொறு தம்பி, பொறு! உன் துடுக்குத் தனத்தை அடக்கற விதத்திலே அடக்கி வைக்கிறேன்’னு சொல்லிக்கிட்டே போய், சப் இன்ஸ்பெக்டர் செளந்தர ராஜனைப் பார்த்தார். எனக்கும் அவரைத் தெரியும். எப்போ பார்த்தாலும் ரெண்டு பக்கெட் நிறையப் பழைய செருப்புகளைப் போட்டுத் தண்ணி ஊத்தி அவர் ஊற வைச்சிக்கிட்டிருப்பார்….” “எதற்கு ?” “குற்றவாளிகளைக் கட்டி வைச்சி அடிக்க!” “சட்டப்படி ‘செருப்பால் அடிப்பேன்’ என்று சொன்னாலே குற்றம் என்பார்களே ?” “அந்தச் சட்டம் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு இல்லையோ, என்னவோ!” “அப்புறம் ?” “அவர் கொஞ்சம் சங்கீதப்பைத்தியமுங்கூட. ஒஞ்ச நேரத்திலே சி.எஸ்.ஜெயராமனைக் கூப்பிட்டுப் பாடச் சொல்லிக் கேட்பார்….” “அப்படியா ? அவர் உங்கள் ஆள் என்று சொல்லுங்கள்!” “ஒரேயடியா அப்படிச் சொல்லிவிடவும் முடியாது. அன்னிக்கு என்னவோ ஹெட் கான்ஸ்டபிள் செய்தது சரியில்லேன்னு அவர் மனசிலே பட்டிருக்கு என்னையும். அவரையும் கண்டிச்சி விட்டுட்டார்!” “செட்டியார் ?” “விடல்லே: அன்னிக்கே எனக்கு ஒரு கால் கட்டைப் போட்டால்தான் ஆச்சுன்னு கடலூர் வஸ்தாது நாயுடுவை விட்டு எனக்குப் பொண் பார்க்கச் சொல்லிவிட்டார்.” “சரிதான், வஸ்தாதுக்கு வஸ்தாதே பெண் பார்த்தார் போலிருக்கிறது!” வாசு பிறந்தான்! “வஸ்தாது நாயுடு எனக்காக எங்கெங்கேயோ பெண் பார்த்தார். பார்த்த இடத்திலெல்லாம் ’கூத்தாடிக்குப் பெண் கொடுக்க முடியாது’ன்னு சொல்லிட்டாங்க.” “அப்புறம்?” “பையன் கூத்தாடியில்லே, மெக்கானிக்குன்னு சொல்லிப் பெண் பார்க்க ஆரம்பிச்சாங்க. விழுப்புரத்திலே ஒரு பொண்ணு, சரஸ்வதின்னு பேரு. அவ அப்பா ரயில்வேயிலே”டிராப்ட்ஸ் மேனாக இருந்தார். அவரைப் பிடிச்சாங்க. “பையன் மெக்கானிக்கா இருந்தா பார்க்கலாம்’னு அவர் சொல்ல, அவரை ஒரு நாள் வரச் சொல்லி விட்டு என்கிட்டே வந்தாங்க. ’இதோ பார், பொண்ணைப் பெத்தவர் வரப்போ நீ மூஞ்சியிலே அரிதாரத்தைப் பூசிக்கிட்டு நிற்காதே, கையிலே ஸ்பானரைப் பிடிச்சிக்கிட்டுக் காருக்கு பக்கத்திலே நில்லுன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அப்படியே நின்னேன்; கலியாணம் முடிஞ்சிப் போச்சு!” “நீங்கள் போய்ப் பெண்ணைப் பார்க்கவில்லையா?” “இல்லை!” “கலியாணத்தைப் புரோகிதர் நடத்தி வைத்தாரா, பெரியார் நடத்தி வைத்தாரா ?” “அப்போ நான் பெரியாரின் தொண்டனாகவில்லையே, புரோகிதர் தான் நடத்தி வைத்தார்.” “கலியாணத்துக்குப் பிறகு ?” “நாடகக் கம்பெனியிலே வேலை பார்த்ததோடு நான் நிற்கல்லே; வெளியேயும் மெக்கானிக்காகவும், எலெக்ட்ரீஷியனாகவும் வேலைபார்த்துச் சம்பாதிச்சேன். அப்பத்தான் வாசு பிறந்தான்…” “அவரும் உங்களைப் போலவே நடிகராகிவிட்டாரே, அவரை நீங்கள் படிக்க வைக்கவில்லையா ?” “நல்லாக் கேட்டீங்க! என் கிட்டே இருந்தா என்னைப் போலவே உருப்படாமப்போயிடப்டோறான்னு திருச்சியிலே இருக்கும் அவன் மாமன் லட்சுமணன் வீட்டுக்கு அவனை நான் படிக்க அனுப்பி வைச்சிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு பள்ளிக் கூடமே கட்டும் அளவுக்குச் செலவழிச்சும் பார்த்தேன். பையன் புத்தி நடிப்பிலேதான் போச்சே தவிர, படிப்பிலே போகல்லே….?” “பங்களா, கார் போன்ற சுக செளகரியங்கள் கூடச் சில குழந்தைகளைப் படிக்க விடாமல் செய்து விடுவதுண்டு….” “அந்த விஷயத்தில் நான் ரொம்ப கண்டிப்புக்காரன். சின்ன வயசிலே அந்த மாதிரி சுக செளகரியங்களையெல்லாம் நான் அவனை அனுபவிக்கவிடறதில்லே.” “இம்பாலா கார் கூட வாங்கினர்களாமே, ஆசைக்கு ஒரு நாள் அதில் ஏறக்கூடவா அவரை நீங்கள் அனுமதிக்கவில்லை ?” “அவனை ஏற்றவா நான் அந்தக் காரை வாங்கினேன்?” “வேறு எதற்கு வாங்கினர்கள் ?” “அதன் விலை ஏறக்குறைய லட்ச ரூபாயாயிருக்கவே ஹைசொசைடியிலே அதுக்கு ஏக மதிப்பு இருந்தது. அது எனக்குப் பிடிக்கல்லே; ‘வர்ணம் அடிச்ச தகரத்துக்கா இவ்வளவு மதிப்பு ?’ ன்னு நினைச்சேன். அந்த மதிப்பை என்னைப் பொறுத்த வரையிலே குறைச்சிப் பார்க்கவே அதை நான் வாங்கினேன். வாங்கி, ஊரிலே இருக்கிற மாடுகளுக்கு இங்கிருந்து வைக்கோல் ஏற்றி அனுப்பினேன்!” “இது என்ன கூத்து ? இம்பாலா காரிலா வைக்கோல் ஏற்றி அனுப்பினர்கள் ?” “வைக்கோல் மட்டும் இல்லே, அதைப் பிரித்துப் போட மாட்டுக்காரப் பயல்களையும் அதில்தான் ஏற்றி அனுப்பினேன்!” “நல்ல வேடிக்கைதான் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்காகக் கூட அதை ஒரு நாள் உங்களிடம் இரவல் கேட்க வந்தார்கள் போலிருக்கிறதே?” “ஆமாம், வந்தாங்க. ’இந்த ராதா ஏறவே அந்தக் காருக்குத் தகுதியில்லேன்னு நான் நினைக்கிறேன்; அந்த ராதா எதுக்கு ஏறணும் ?னு சொல்லி அனுப்பிவிட்டேன்.” “இப்போது அந்தக் கார் யாரிடம் இருக்கிறது ?” “ஜோதி அம்மாக்கிட்டே இருக்கிறதாச் சொல்றாங்க. “பாவம், அதற்கு உயிரும் உணர்ச்சியும் இருந்திருந்தால், நீங்கள் செய்த அவமானத்துக்குத் தற்கொலை செய்து கொண்டிருக்கும்!” “மனுஷனே இப்போ அவமானத்துக்கு அஞ்சறதில்லே, கார் எங்கே அஞ்சப் போவுது ?” “சரஸ்வதிக்குப் பிறகுதான் தனம் உங்கள் வாழ்க்கையில் பங்கேற்றார்களா ?” “ஆமாம். தனம் வேறே யாருமில்லே, சரஸ்வதியின் தங்கச்சி தான்.” “வாசுவுக்குப் பிறகு… ?” “சரஸ்வதிக்குக் குழந்தைங்க இல்லே, தனத்துக்குத்தான் அஞ்சு குழந்தைங்க…” “அவர்களில் இரு பெண்களுக்குத்தான் நீங்கள் சிறையில் இருத்தபோது கலியானம் நடத்தது, இலலையா?” “ஆமாம். ரஷ்யாவுக்கும், சம்பத் ராணிக்கும் நடந்தது.” “அப்படி என்ன அவசரம் வந்தது அவர்கள் கலியாணத்துக்கு ?” “நான் வெளியே இருந்தப்பவே முடிவு சேஞ்சி வைச்சிருந்த கலியாணம் தான் அது. மாப்பிள்ளைங்க ரெண்டு பேருமே சொந்தக்காரங்க அண்ணன் தம்பிங்க. ஒருத்தர் பேர் சீனிவாசன்; இன்னொருத்தர் பேர் ராஜேந்திரன். மூத்தவர் வேலை விஷயமா திடீர்னு அமெரிக்காவுக்குப் போகும்படியா ஆயிடிச்சு. தனியா அவரை அங்கே அனுப்பி வைக்க வேணாம், கலியாணத்தைப் பண்ணி அனுப்பி வைப்போம்’ன்னு தனம் நெனைச்சா எனக்கும் அது சரின்னு பட்டது. ’நான் வெளியே இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பெரியாரை வைச்சி ரெண்டு பேருக்குமே கலியானத்தைச் சேஞ்சி முடிச்சிடுங்க’ன்னு சொல்லிட்டேன். அப்படியே. நடந்தது. மணமாலையோடு அவங்க ஜெயிலுக்கு வந்து என்னை வாழ்த்தச் சொன்னாங்க வாழ்த்தி அனுப்பி வைச்சேன்.” “இந்த நிகழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாயிருக்கும், இல்லையா?” “இது ஒரு நிகழ்ச்சிதானா, இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிங்க…” “மூன்றாவதாகத்தான் கீதாவை விரும்பிப் பதிவுத் திருமணம் செய்து கொண்டீர்கள் போலிருக்கிறது ?” “ஆமாம்; அவளுக்கும் இப்போது நாலு குழந்தைங்க இருக்கு.” “குடிப்பதை நிறுத்தி வைத்ததோதான் இனிமேல் நீங்கள் கலியாணம் செய்து கொள்வதையும் நிறுத்தி வைக்க வேண்டும் போலிருக்கிறது!” “இனிமே கலியாணம் நடக்கிறதாயிருந்தா என் பொண்ணுக்கும் பிள்ளைக்கும்தான் நடக்கணும்!” “சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கூட இவ்வளவு தூரம் சொல்லத் துணியும் உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே எனக்குப் புரியவில்லை!” “ஒருவனுடைய பெருமை மட்டும் உலகத்துக்குத் தெரிஞ்சாப் போதாது, அவனுடைய பலவீனங்களும் தெரியணும்னு நினைப்பவன் நான். இல்லேன்னா, பொதுமக்களை ஏமாத்தறதாயில்லே அர்த்தம் ?” “கரெக்ட் கலியாணத்துக்கு அப்புறம் உங்கள் நாடக வாழ்க்கை எப்படி இருந்தது?” “ரொம்ப மோசம்! சண்டையில்லாத நாளே கிடையாதுன்னு ஆயிடிச்சு. ‘இந்துமுஸ்லீம்’ ஒற்றுமைக்காக ‘ராமதாஸ்’ நாடகம் நடக்கும். கடைசிக் காட்சியிலே நவாப் ராமதாஸைக் கட்டிப் பிடிச்சுக்குவாரு. ’அது தப்பு’ன்னு முஸ்லீம்கள் வம்புக்கு வருவாங்க; ’தப்பில்லே’ன்னு இந்துக்கள் அவங்களோடு சண்டைக்குப் போவாங்க. அவங்களையும் இவங்களையும் சமாதானம் சேஞ்சி வைக்கிறதுக்குள்ளே ’போதும், போதும்’னு ஆயிடும். எந்த நாடகத்திலாவது ஒரு காட்சியோ, பாட்டோ நல்லா இருந்துட்டா வந்தது ஆபத்து, நாடகத்தை மேலே நடத்தவிட மாட்டானுங்க, ’ஒன்ஸ்மோர், ஒன்ஸ்மோர்’னு கத்திக் கலாட்டா பண்ணுவாங்க. ஒரு நாள் எனக்குக் கோவம் வந்துடிச்சி. ’நடந்து முடிஞ்ச நாடகத்துக்குகூட நீங்க ஒன்ஸ்மோர் கேட்பீங்க, நாங்க உடனே அதைத் திருப்பி நடத்தணுமா ?ன்னு கேட்டுட்டேன். இந்த மாதிரி நான் எதற்கும் பணியாம எதிர்த்து நிற்கிறது பொன்னுசாமிப் பிள்ளைக்குப் பிடிக்கல்லே; அவர் அந்தமாதிரி நடந்துக்கிறது எனக்குப் பிடிக்கல்லே. ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம்.” “அப்புறம்?” “டி.ஆர். மகாலிங்கம், ரகோத்தமன்…” “யார் அந்த ரகோத்தமன் ?” “அவர் தான் ஏ.வி.எம். ’வாழ்க்கை’யிலே நடிச்ச டி.ஆர். ராமச்சந்திரன்!” “அந்த எட்டி கேன்ட்டரா?… சரி, பிறகு ?” “எல்லாருமாச் சேர்ந்து கோலார் தங்க வயலிலே நாடகம் நடத்திக்கிட்டிருந்தோம். அங்கே தான் ராஜசேகரன்’ படத்துக்காக என்னை ‘புக்’ சேஞ்சாங்க.” “அதுதான் உங்கள் முதல் படமா ?” “ஆமாம்; அப்போ ஸ்டண்ட்’டுக்கு என்னை விட்டா வேறே ஆள் கிடையாது.” “ஹீரோ யார் ?” “ஈ.ஆர். சகாதேவன்.” “ஹீரோயின் ?” “அந்த நாளிலே ஹீரோயின் அவ்வளவு முக்கியமில்லே; தேவையானப்போ ரெட் லைட் ஏரியாவுக்குப் போய் யாராவது ஒருத்தியைப் பிடிச்சிக்கிட்டு வந்துடுவாங்க.” “டைரக்டர் ?” “ஆர். பிரகாஷ்னு ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை. ஹாலிவுட்டுக்குப் போய் சினிமான்னா என்னன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டு வந்திருந்த ஆளு. அதாலே அவருக்கு ஏக மரியாதை காட்டுவாங்க. சதா தண்ணி வேறே போட்டுக்கிட்டே இருப்பார்.” “ஸ்டுடியோ ?” “பூந்தமல்லி ஹைரோடிலே இருந்தது. ’நாராயணன் ஸ்டுடியோ’ன்னு பேரு. நாராயணன்னு சொன்னதும் பட்சிராஜா பிலிம்ஸ் ஸ்ரீ ராமுலு நாயுடு பிரண்ட் நாராயணனாயிருக்கும்னு நினைச்சுடாதீங்க. இந்த நாராயணன் சி.வி. ராமன் தம்பி நாராயணன். அப்போ ஸ்டுடியோன்னா மேலே ஆஸ்பெஸ்டாஸ் கூரை, அதுக்குக் கீழே லைட் கிய்ட் ஒண்ணும் இருக்காது. இப்போ அவுட்டோர் ஷல்ட்டிங்கைச் சூரிய வெளிச்சத்திலே வைச்சி நடத்தறாப் போல அப்போ இண்டோர் ஷாலிட்டிங்கையும் சூரிய வெளிச்சத்தை வைச்சிதான் நடத்துவாங்க. அதுக்காக ஸ்டுடியோ கூரையைக் கண்ணாடிக் கூரையாப் போட்டிருப்பாங்க. ரிகார்டிங்குக்குப் ’பிடில்-டோன்ட்ரக்’குன்னு ஒண்ணு இருக்கும். அந்த ட்ரக்கிட்டே ’கண்ணே ’ன்னு காதல் வசனம் பேசறதா இருந்தாக்கூடக் கத்தித்தான் பேசணும். ’கீழ்ப்பாக்கம் வேறே பக்கத்திலே இருக்கா ? விஷயம் தெரியாத ஹீரோயினுங்க என்னவோ ஏதோன்னு நினைச்சிப் பயந்து ஓடுவாங்க. அவங்களை இழுத்து வைச்சி விஷயத்தைச் சொல்லி, ரீடேக் எடுப்பாங்க.” “டைரக்டருக்கு ரொம்பப் பொறுமை வேண்டியிருந் திருக்கும்!” “பொறுமையாவது? எடுத்ததுக்கெல்லாம் அவருக்குக் கோபம் வந்துடும். காலை ஏழு, ஏழரை மணிக்கே மேக்கப் போட்டுக்கிட்டு நாங்க ஸ்டுடியோவுக்குப் போய் விடுவோம். அவர் புரசைவாக்கத்திலிருந்த ‘ரெக்ஸ்’ ஓட்டலுக்குப் போய் நல்லாத் தண்ணி போட்டுக்கிட்டுப் பதினோருமணிக்கு வருவார். அதுக்கு மேலே ஷூட்டிங் ஆரம்பமாகும். ஒரு நாள் ஜெயில் ஷாட் எடுக்கிறதாயிருந்தது. ஹீரோ சகாதேவன் ஜெயில்லே இருக்கார். அவர் அங்கே எப்படி இருக்கணும்னு டைரக்டர் சொல்லணும்; சொல்லல்லே. அவர் பாட்டுக்கு சிகரெட்டை ஊதித் தள்ளிக்கிட்டே இருந்தார். சகாதேவன் என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டே இருந்தார். ரெண்டு பேரையும் கொஞ்ச நேரம் மாறி மாறிப் பார்த்துக்கிட்டிருந்த நான்,”அதோ இருக்கே, அந்தத் துணிலே தலையைச் சாய்ச்சி வைச்சி நில்லுங்கன்னேன். அவ்வளவு தான்; ‘நான் டைரக்டரா, நீ டைரக்டரா?’ ன்னு டைரக்டர் என் மேலே பாய ஆரம்பிச்சிட்டார்!" “ஐ வாண்ட் அநதர் ஒன்’ “தூணிலே தலையைச் சாய்ச்சி நில்லுங்கன்னு சகாதேவின்கிட்டே சொன்ன பாவம், ‘நான் டைரக்டரா, நீ டைரக்டரா?ன்னு பிரகாஷ் என்னைக் கேட்டா, நான் என்ன சொல்வேன்?…’ அய்யா, நீங்கதான் டைரக்டருங்கிறதிலே எனக்குக் கொஞ்சங்கூடச் சந்தேகமே கிடையாது; உங்களுக்கு அதிலே ஏன் சந்தேகம் வந்தது?”ன்னு திருப்பிக் கேட்டேன். “அப்படியா சமாசாரம் ? நான் உன்னைக் கவனிச்சுக்கிற விதத்திலே கவனிச்சுக்கிறேன் ’னு அவர் கருவினார். எனக்குத்தான் இதெல்லாம் தண்ணிபட்ட பாடாச்சே, சரி, கவனிச்சுக்குங்கன்னு சொல்லி, அதோடே அதை நான் விட்டுட்டேன்.” “அவர்.. ? “விடுவாரா?… அந்த நாளிலே டைரக்டருங்க கையிலே தானே எல்லாம் இருந்தது… ?” “இந்தக் காலத்து ஹீரோக்கள் சிலருடைய கையில் எல்லாம் இருப்பது போலவா ?” “ஆமாம், இந்தக் காலத்து ஹீரோக்கள் வெறும் ஹீரோக்களா மட்டும் இல்லையே? படாதிபதிகளாவும்”பைனான்ஷியர் களாகவும் கூட இருக்காங்களே! அதனாலே இலுங்க வைச்சது சட்டமாயிருக்கு அந்தக் காலத்து ஹரோக்களுக்கு அந்த வசதியெல்லாம் ஏது ? புரொட்யூசருக்கே கிடையாதே!" “அப்போது ஒரு படத்தை எடுத்து முடிக்க என்ன செலவாகும்?” “ஏறக்குறைய முப்பதாயிரம் ரூபாய் செலவாகும். அதையே முழுக்கப் போட்டு முடிக்க முடியாம அடுத்த படத்துக்கு ‘அட்வான்ஸ்’ வாங்கிப் போட்டுத்தான் முடிப்பாங்க!” “ஹீரோ, வில்லனுக்கெல்லாம் என்ன சம்பளம் கிடைக்கும்?” “ஓகோன்னு ஓடின ’அம்பிகாபதியிலே நடிச்ச பாகவதருக்கே எழுநூற்றைம்பது ரூபாய் தான் கொடுத்தாங்கன்னா, எங்களுக்கெல்லாம் என்ன கொடுத்திருப்பாங்கன்னு நீங்களே தீர்மானம் பண்ணிக்குங்க.” “அப்படியென்றால் டைரக்டருக்குத்தான் அப்போது எல்லாரைக் காட்டிலும் சம்பளம் அதிகமாக இருந்திருக்கும்….” “சம்பளம் மட்டும் இல்லே, அதிகாரமும் அவருக்குத்தான் அதிகம்!” “கடைசியில் அவர் உங்களை என்னதான் செய்தார்!” “ரேஸ் கோர்ஸிலிருந்து ‘ராமா’ன்னு ஒரு முரட்டுக் குதிரையை வரவழைச்சார். அந்தக் குதிரைமேலே என்னை ஏத்தி, ஜிம்கானா மைதானத்தைச் சுத்திச் சுத்தி வரச் சொல்லி, ’ரிஹர்சல்’ பார்த்தார்…” “எனக்கு ஒரு சந்தேகம்…” “என்ன… ?” “கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?” “மாட்டேன், கேளுங்க…?” “குதிரையின்மேல் நீங்களே ஏறி உட்கார்ந்தீர்களா ? அல்லது, அதற்குப் பக்கத்தில் ஸ்டுல், கீல் போட்டு யாராவது ஏறி, உங்களைத் தூக்கி அதன்மேல் உட்கார வைத்தார்களா?” “நான் அந்த மாதிரி ஹீரோவுமில்லே, வில்லனுமில்லே. எதுக்கும் ’டூப்’பைத் தேடறதும் என் வழக்கமுமில்லே. நானேதான் ஏறி உட்கார்ந்து சவாரி சேஞ்சேன். அதிலே நான் தவறிக்கிவறிக் கீழே விழுந்து, கையைக் காலை உடைச்சுக்குவேன்னு டைரக்டர் எதிர்பார்த்தாரோ என்னவோ, அப்படி ஒண்னும் நடக்கல்லே…” “நேருக்கு நேராக எதிர்த்து நின்று தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாத கோழைகள் இப்படித்தான் ஏதாவது செய்வார்கள் போல் இருக்கிறது ?” “கோழைங்க மட்டுமில்லே, படிச்சவங்களும் அப்படித்தான் செய்யறாங்க. படிக்காதவனுக்குச் சட்டம் தெரியறதில்லே, படிச்சவனுக்குச் சட்டம் தெரியுது. அதாலே படிக்காதவன் எந்தத் தப்பைச் சேஞ்சாலும் சட்டத்துக்கு விரோதமாச் சேஞ்சிட்டு மாட்டிக்கிறான். படிச்சவன் செய்ய வேண்டிய அயோககியத்தனங்களையெல்லாம் சட்டப்படியே சேஞ்சிட்டு, எண்ணிக்கும் பெரிய மனுஷனா பெயர் எடுத்துக்கிட்டிருக்கான்!” “இப்போதுள்ள பெரிய மனிதர்கள்தான் அப்படி இருக்கிறார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். அப்போதே அவர்கள் அப்படித்தான் இருந்தார்களாக்கும்?” “அந்த அளவுக்குப் பெரிய மனுஷனுமில்லே இந்தப் பிரகாஷ்! பெரிய மனுஷன் வீட்டுப் பிள்ளை, அவ்வளவுதான் … இந்தக் காலத்திலே ஸ்டார்ட், கட்டுன்னு ரெண்டு வார்த்தை சொல்லத் தெரிஞ்சிக்கிட்டுப் பிடிக்கிறவங்களைப் பிடிச்சா யார் வேணுமானாலும் டைரக்டராயிடலாம். அந்தக் காலத்திலே அது முடியாது. டைரக்டர்னா ‘ஸ்க்ரீன்பிளே’யிலேருந்து ’ரீரிகார்டிங்’ வரையிலே தெரிஞ்சிருக்கணும். அதெல்லாம் பிரகாஷ-க்குக் கொஞ்சம் தெரிஞ்சிருந்தது என்னவோ உண்மைதான். ஆனா, அதை வைச்சுக்கிட்டு அவர் பண்ண அட்டகாசம்…” “ஆமாம், அந்த நாளிலே அளவுக்கு மீறித் தண்ணி போடுபவரைத்தான் பெரிய ’ஜீனியஸ் என்று நினைப்பார் களாமே, அது உண்மைதானா ?” “அந்த நாளிலே மட்டுமென்ன, இந்த நாளிலுந்தான் அப்படிச் சிலர் நினைக்கிறாங்க!” “அப்படியென்றால் ஆகஸ்ட் முப்பதாந்தேதிக்கு மேலே ஏகப்பட்ட ’ஜீனியஸ்’கள் ரோடிலேயே நடமாட ஆரம்பித்துவிடுவார்கள்.” “உலகம் பல விதம். சில பேர் நெற்றியிலே பட்டை அடிச்சி ஏமாத்தறான்; சில பேர் கழுத்திலே கொட்டை கட்டி ஏமாத்தறான்; சில பேர் ‘தண்ணி’ போட்டு ஏமாத்தறான். இங்கே ஏமாறவன் இருக்கிற வரையிலே ஏமாத்தறவனும் இருந்துகிட்டுத்தான் இருப்பான். அதை விடுங்க… ‘ஹார்ஸ் ரைடிங் ரிஹர்சல் நடந்து முடிஞ்சதும் ’ஷூட்டிங்’ ஆரம்பமாச்சி…” “அவுட்டோரா?” “ஆமாம். அந்தக் காலத்திலே ஒரு படத்துக்கு நாலு நாள் ‘இன்டோர் ஷூட்டிங்’ நடந்தாலே அதிகம்; மற்ற ஷூட்டிங்கெல்லாம் அவுட்டோரிலேதான் நடக்கும்.” “அப்படி நடக்கும்போது குதிரையின் மேல் உங்களை ஏற்றி, உங்களையும் குதிரையையும் லாரியில் ஏற்றி, அந்த லாரியை ஓடவிட்டு, நீங்கள் குதிரை சவாரி செய்வது போல் லாரியை மறைத்துப் படம் எடுப்பார்களா ?” “அப்படி எடுத்தா குதிரை ஓடற சத்தமா கேட்கும்? லாரி ஓடற சத்தமில்லே கேட்கும்?” “அந்தச் சத்தத்தை இப்போது யார் . ரிகார்ட் செய்கிறார்கள் ? அதற்குப் பதிலாகத்தான் குதிரை ஓடுவது போல் கொட்டாங்கச்சியைக் கீழே தட்டி ரீரிகார்டிங்’ செய்து விடுகிறார்களே!” “இப்போது குதிரைக்குப் பதிலா லாரி என்ன, கழுதைகூட ஓடும். அப்போ குதிரைன்னா குதிரைதான் ஓடும்.” “எல்லாம் ’ஹீரோக்க’ளாக நடிப்பவர்களின் தைரியத்தைப் பொறுத்தது, இல்லையா?” “என்னைப் பொறுத்த வரையிலே நான் என் தைரியத்தை லாரியை ஓட்டிக் காட்டல்லே, குதிரையை ஓட்டியே காட்டினேன். பூந்தமல்லியிலே குருடர் செவிடர் ஊமைப் பள்ளியிருக்கே, அங்கேதான் ஷூட்டிங் நடந்தது. நான் குதிரை மேலே வந்து அந்தப் பள்ளிக்கூடத்து வாசலிலே நிற்கணும். நின்னு. மாடிக்கு ‘ஜம்ப்’ பண்ணனும். பண்ணி, அங்கே இருக்கிற ஹீரோவோடும் அவன் ஆட்களோடும் கத்திச் சண்டை போடணும்…” “கத்தி நிஜக்கத்தியா, அட்டைக்கத்தியா?” “நிஜக் கத்திதான். அங்கே சண்டை போட்டுட்டுக் குதிரை மேலே குதிக்கணும். அது வரையிலே ஒரு காட்சி. அந்தக் காட்சி முதல்”டேக்“கிலேயே நல்லா வந்துடிச்சின்னு காமிராமேன் சொன்னார்; சவுண்ட் என்ஜினியர் சொன்னார், டைரக்டர் அவங்க சொன்னதை ஒப்புக்கல்லே, ரீடேக் எடுக்கணும்னு சொன்னார். ‘இருபது முப்பது அடி உயரத்திலேயிருந்து குதிரை மேலே குதிக்கிறது அவ்வளவு லேசில்லே, எடுத்தது போதும்’னு எல்லாரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க. ’நோ நோ, பிலிம் ஒடறப்போ குருடன் ஒருத்தன் குறுக்கே வந்துவிட்டான், ஐ வாண்ட். அநதர் ஒன்னுன்னு அவர் அடம் பிடிச்சார். ’குருடன் குறுக்கே வந்திருந்தா எனக்குத் தெரிஞ்சிருக்குமே, நானே ’கட்’ பண்ணிட்டு ‘அநதர் ஒன்’னுன்னு சொல்லியிருப்பேனே’ன்னார். காமிரா மேன், ’ஐ சே, யு டேக், கமான், ரெடி’ ன்னு கத்தினார் டைரக்டர். பய வஞ்சம் தீர்க்கப் பார்க்கிறான்னு எனக்குப் புரிஞ்சிப் போச்சு. ஆனாலும் நான் அஞ்சலே. ‘கமான், ரெடி’ ன்னு குதிரை மேலே தாவி ஏறினேன். அதன் மேலேயிருந்து மறுபடியும் மாடிக்கு ‘ஜம்ப்’ பண்ணி, அங்கே இருந்த ஆட்களோடு மறுபடியும் சண்டை போட்டுட்டு, மறுபடியும் குதிரை மேலே குதிச்சேன், அவ்வளவு தான் எனக்குத் தெரியும்; அதுக்கு மேலே அன்னிக்கு என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. நாலைந்து நாட்களுக்கு அப்புறம் கண் விழிச்சிப் பார்த்தப்போ, கால் ஒடிஞ்சி நான் ஆஸ்பத்திரியிலே இருப்பது தான் தெரிஞ்சது!” பொள்ளாச்சி ஞானம் “டைரக்டா் பிரகாஷின் புண்ணியத்தால் கால் ஒடிந்து நான் ஒன்றரை வருஷம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அதைப் பற்றி ‘ஹிந்து’ பேப்பர்கூட அப்போ கண்டிச்சி எழுதியிருந்தது. அதுக்கப்புறம் நானும் பிரகாஷைப் பார்க்கல்லே, பிரகாஷூம் என்னைப் பார்க்கல்லே…” “மறுபடியும் நாடகக் கம்பெனிக்கு வந்துவிட்டீர்களா ? “இல்லே, சினிமா எப்போ வந்ததோ அப்பொவே பல நாடகக் கம்பெனிங்க கலைஞ்சி போச்சு. சினிமாவிலே ‘சான்ஸ்’ கெடைச்ச நடிகருங்க சினிமாவிலே நடிச்சாங்க, கெடைக்காதவங்க அங்கங்கே ’ஸ்பெஷல் நாடகம் போட்டுக்கிட்டிருந்தாங்க…” “நவாப் ராஜமாணிக்கம், டி.கே. எஸ். பிரதர்ஸ் போன்ற கம்பெனிகள்…” “தொடர்ந்து நடந்துக்கிட்டுத்தான் இருந்தன. அவங்களைக் கண்டா எனக்கு அலர்ஜி: என்னைக் கண்டா அவங்களுக்கு அலர்ஜி!” “அப்புறம் “நானே படாதிபதியானேன்!” “அதுக்குள்ளேயா?” “ஏன், ஆகக் கூடாதா?” “ஆகலாம்; பணம்… ?” “ஒரு படத்துக்கு அஞ்சி லட்சம் பத்து லட்சம்னு வேண்டியிருக்கிற இந்தக் காலத்திலேயே எத்தனையோ பேரு கையிலே ஒரு பைசா இல்லாம படாதிபதியாயிடறாங்க…” “ஐந்து லட்சம் பத்து லட்சத்தில் ஒரு படத்தையே எடுத்து முடிப்பதா? இந்தக் காலத்திலா ? அது எப்படி முடியும்? அந்தத் தொகை ஓரிரு நடிகர்களுக்குச் சம்பளமாகக் கொடுக்கவே போதாது என்கிறார்களே ?” “அப்படித்தான் நானும் கேள்விப் படறேன். ஆனா அந்த மாதிரி நடிகருங்களை வைச்சிச் சிலபேரு பணம், போட்டும் படம் எடுக்கிறாங்க, சில பேரு பணம் போடாமலும் எடுக்கிறாங்க…” “அது எப்படி ?” “சிதம்பர ரகசியம் மாதிரி அது ஒரு சினிமா ரகசியம். அந்த ரகசியமெல்லாம் எனக்குத் தெரியாது; ஆனா ஒண்ணு மட்டும் தெரியும்….” “என்ன ?” “செட்லே சில பசங்க இருப்பானுங்க. ஷாட்டுக்கு ஷாட் லைட்-அப் பண்ணணுமில்லே, அப்போ கொஞ்ச நேரம் இடைவெளி இருக்கும். அந்த நேரத்திலே நாற்காலியைக் கொண்டு வரச் சொல்லி நான் வெளியே போட்டுக் கொஞ்சம் காற்றாட உட்காருவேன். அந்தச் சமயத்திலே, ’சோடா வேணுமா, தண்ணி வேணுமா, காப்பி வேணுமா ?ன்னு கேட்டுக்கிட்டு அந்தப் பசங்க வருவானுங்க. ஏதாவது வேணும்னு சொன்னா கொண்டுவந்து கொடுப்பானுங்க. இப்படி ரெண்டு மூணு நாள் நடக்கும். நாலாவது நாள் அவனுங்களிலே ஒருத்தன் தலையைச் சொறிஞ்சிக்கிட்டே வந்து நிற்பான். ’அஞ்சி, பத்துக்கு அடி போடப் போறானாக்கும்?’னு நெனைச்சி, ’என்ன சங்கதி?’ம்பேன், அவன் அஞ்சும் கேட்கமாட்டான், பத்தும் கேட்கமாட்டான். அதுக்குப் பதிலா அஞ்சி லட்சம் பத்து லட்சம் வாங்கறதாச் சொல்லும் ஒரு பெரிய ஸ்டார் பெயரைச் சொல்லி, அவரை வைச்சி நானும் ஒரு படம் எடுக்கப் போறேன். அதிலே நீங்களும் நடிக்கணும்பான்!” “அதைக் கேட்டதும் நீங்கள் மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்து விடுவீர்களா?’ ’ “இந்த அதிர்ச்சிக்கெல்லாம் கீழே விழற ஆளா நான்?… ’படம் பூஜை போடறதோடு நிற்குமா, அதுக்கு மேலேயும் வளருமா ?’ன்னு கேட்பேன். அவன் சிரிப்பான். சிரிச்சிட்டு, ’என்ன அண்ணே, அப்படிக் கேட்டுட்டீங்க பணத்துக்குச் சரியான ஆளைப் பிடிச்சிருக்கேன்!. அண்ணே!’ம்பான். ’எப்படிப் பிடிச்சே ’ம்பேன். அதெல்லாம் தொழில் ரகசியம் அண்ணே, சொன்னா உங்களுக்குப் பிடிக்காது’ம் பான். ’அப்படியா ? அப்போ உன் படத்திலே நடிக்கவும் எனக்குப்பிடிக்காது, போடா!’ன்னு சொல்லிவிடுவேன்…” “அந்தத் தொழில் ரகசியம் தான் ‘சினிமா ரகசியம்’ போல் இருக்கிறது:” “என்ன ரகசியமோ, எனக்குத் தெரிஞ்சவரையிலே இப்போ சினிமா ரகசியம் ஒரு சாண் துணியிலே இருக்கு. அந்தத் துணியும் ’சென்ஸார் போர்டு’ன்னு ஒண்ணு இருந்து தொலையுதேன்னு இருக்கு; இல்லேன்னா….” “சினிமாக் கலையின் முன்னேற்றத்தையல்லவா அது காட்டுவதாகச் சொல்கிறார்கள் ?” “அப்படியா ? வேறே எதையோ இல்லே அது காட்டறாப்போல இருக்கு!” “சரி, அதை விடுங்கள்; நீங்கள் படாதிபதியான, கதையைச் சொல்லுங்கள் ?” “படாதிபதின்னா நான் மட்டும் படாதிபதியாயிடல்லே; என்னோட பாலையா, கேசவன்நாயர், ராதாபாய், பத்மன்செல்லப்பன் எல்லாரும் இருந்தாங்க. எங்க கையிலே தொழில்தான் இருந்தது; பணம் இல்லே. அதுக்காக ரெண்டு பேரைப் பிடிச்சோம். ஒருத்தர் கொஞ்சம் கை கொடுத்தார்; இன்னொருத்தர் கை கொடுக்கிறேன்னு சொல்லிக் கையை விட்டுட்டார். அது மாடர்ன் தியேட்டர்ஸ் கட்டி முடிக்கப்பட்டிருந்த சமயம். அங்கேயே ஷூட்டிங்கை ஆரம்பிச்சோம்…” “படத்தின் பேரைச் சொல்லவில்லையே ?” “பம்பாய் மெயில்.” “மெயில் என்றால் ஒரு வேகம் இருந்திருக்குமே?” “பெயரில்தான் அது மெயிலாயிருந்தது; படப்பிடிப்பில் பாசஞ்சராயிருந்தது!” -. “அதனாலென்ன, எப்படியும் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்திருக்குமே!” “சேர்ந்திடுச்சி, சேர்ந்திடுச்சி! ஆனா, அதோட எங்களுக்குச் சொந்தமாப் படம் எடுக்கிற ஆசையே போயிடுச்சி!” “சட்டி சுட்டா கையை நாமா விடுகிறோம் ? அதுதான் தானாகவே விட்டுவிடுகிறதே, அப்புறம் ?” “மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்டா கொஞ்ச நாள் இருந்தேன். அங்கேதான், சந்தனத்தேவன், ’சத்தியராணி எல்லாம் எடுத்தாங்க, அங்கேயும் ஒரு சங்கடம் வந்து சேர்ந்தது…!” “அது என்ன சங்கட்ம்…” “பொள்ளாச்சி ஞானம்னு ஒரு பொண்ணு…” “அது யார் அந்தப் பொள்ளாச்சி ஞானம் ?” “அதுதான் பி.எஸ். ஞானம்னு சொல்லுவாங்களே, அது. அந்தப் பொண்ணு அப்போ மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களிலே நடிச்சிக்கிட்டிருந்தது. அதுக்கு அங்கே ஏகக் கட்டுக் காவல் … யாராவது ஒரு வார்த்தை அந்தப் பொண்ணுகிட்டே பேசினாப் போதும், ‘அங்கே உனக்கென்ன பேச்சு? இங்கே உனக்கென்ன பேச்சு?ன்னு சீறி விழுவாங்க…’ அட, கடவுளே இந்தப் பெண்களிடம் அப்படி என்னதான் இருக்குமோ, தெரியவில்லையே?" “என்ன இருக்குன்னு எல்லாருக்கும் தெரிஞ்சித்தான் இருக்கு. ஆனாலும் சிலருக்கு அதிலே ஏதோ ஒரு தீராத மயக்கம். அந்த மயக்கத்தைத் தெளியவைக்கணும்னு நான் நெனச்சேன். அதுக்கு என்ன வழி ?ன்னு யோசிச்சப்போ, ’வள்ளுவன் வழி’தான் சரின்னு பட்டது…” “அது என்ன வள்ளுவன் வழி ?” “வாயாலே ஏன் பேசறே, கண்ணே போதுமே காரியத்தை முடிக்கன்னு அவன் சொல்லல்லையா?… அட, எங்கப்பா! இந்தக் காதல் விவகாரத்திலே தாடியும் ஜடாமுடியும் வைச்சிக்கிட்டு அவன் போட்டிருக்கிற போடு டைட் பாண்ட் டி ஷர்ட் பயலுங்ககூடப் போடமுடியாது போல இருக்கே … அவள் வழியையே நானும் ’பாலோ’பண்ணேன்… அதோடே நாடகத்திலும் அந்தப் பொண்ணை நடிக்கவிட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சி…. கண்ணாலேயே காரியத்தை ஒரு தினுசா முடிச்சி, பொம்மியை மதுரை வீரன் சிறை எடுத்தாப்போல, ஒரு நாள் ராத்திரிக்கு ராத்திரியா ஞானத்தை மாடர்ன் தியேட்டர்ஸிலேயிருந்து சிறை எடுத்து வந்து பொள்ளாச்சியிலே சேர்த்தேன். அதுக்கு மேலே என்ன செய்யறதுன்னு யோசனை பண்ணிக்கிட்டிருந்தப்போ யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை வந்தார். ’என்ன சங்கதி ?’ன்னேன். ’ஒரு ரவுடிப் பய காண்ட்ராக்டர்கிட்டே மாட்டிக்கிட்டேன். அவன் பேசிய பணத்தையும் ஒழுங்காகக் கொடுக்கமாட்டேங்கிறான், கம்பெனியையும் வேறே ஊருக்குப் போக விட மாட்டேங்கிறான்னார். ’ஏன், உங்க சமாதான வழியைக் கையாண்டு பார்க்கிறதுதானே ?’ன்னேன். ’அந்த வழியெல்லாம் இப்போ எங்கே செல்லுது? உலகம் முழுக்க சமாதானம், சமாதானம்னு சொல்லிக்கிட்டே சண்டை போடறதுதானே சமாதானமா இருந்துகிட்டிருக்கு! ’ன்னார். ’வந்தீங்களா வழிக்கு, வாங்க போவோம்’னு அவரோடே புறப்பட்டேன்.” இழந்த காதலில் சிவாஜி “யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் கம்பெனி அப்போ பரமக்குடியிலே இருந்தது. அதை அங்கிருந்து கொண்டு போய்ச் சேர்க்க முதல்லே ஒரு இடத்தை ஏற்பாடு செஞ்சிக்க வேண்டாமா ? அதுக்காகச் சேலத்துக்கு வந்து ’ஓரியண்டல் தியேட்டர் மருதப்பிள்ளை’யைப் பார்த்தோம். அவர் கிட்டே விஷயத்தைச் சொல்லி, நாடகம் நடத்த ஓரியண்டல் தியேட்டரிலே இடம் கொடுக்க வேணும்னும், நாடகச் சாமானுங்க ரயில்வே வேக்கின்லே வந்து இறங்கறப்போ அதை எடுக்க ஐந்நூறு ரூபா கடனாக் கொடுத்து உதவனும்னும் கேட்டுக்கிட்டோம். அவர் ’சரி’ன்னு சொல்லிவிட்டார்.” “தேவலையே, பணம்கூடச் சில சமயம் இருக்கிற இடம் தெரிந்து இருக்கும் போலிருக்கிறதே! இல்லாவிட்டால் நீங்கள் சொன்னதற்கெல்லாம் அவர் உடனே சரியென்று சொல்லியிருக்க முடியுமா ?” “பணம் மட்டுமில்லே, அதிகாரம்கூடச் சில சமயம் இருக்கிற இடம் தெரிந்து இருக்கிறதில்லே; அதாலே வர ஆபத்துக்கள் தான் இந்த உலகத்திலே அதிகம்… அதை விடுங்க… நாடகம் நடத்த அட்வான்ஸ்’ இல்லாம தியேட்டர் கொடுக்கிறதுக்கும், வேக்கின்லே வர நாடகச் சாமான்களை கடனாப் பணம் கொடுத்து எடுக்கிறதுக்கும் ஆளைப் பிடிச்சாச்சு. அடுத்தாப்போலப் பரமக்குடியிலே இருக்கிற ரவுடிக் காண்ட்ராக்டருக்கு டிமிக்கி கொடுத்து…” “அது என்ன, ரவுடிக்காண்ட்ராக்டர், ரவுடிக் காண்ட்ராக்டர் என்று சொல்கிறீர்கள்… ?” “அந்தக் காலத்துப் பெரிய மனுஷனுங்களிலே பல பேரு அப்படித்தான் இருப்பாங்க. எடுத்ததுக்கெல்லாம் அடியாட்களை விட்டுத் தங்களுக்குப் பிடிக்காதவங்களைப் ’பிடிடா, கட்டுடா, அடிடா’ம்பாங்க…..” “அந்த மாதிரி பெரிய மனுஷர்களிலே பரமக்குடி காண்ட்ராக்டரும் ஒருவர் போலிருக்கிறது…” “ஆமாம், அவருக்கு டிமிக்கி கொடுத்து அங்கே இருக்கிற நடிகர்களையும், நாடகச் சாமான்களையும் சேலத்துக்குக் கொண்டுவரப் பணம் வேணாமா ? அதுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சோம். ’திருச்சியிலே ஒரு நண்பர் இருக்கார், அங்கே போய் அவரைப் பார்த்தா ஒரு இருநூறு ரூபாயாவது வாங்கலாம்’னு பொன்னுசாமிப் பிள்ளை சொன்னார். அப்படியே போய்ப் பார்த்தோம்; ரூபாயும் கிடைச்சது. ’நான் இங்கேயே இருக்கேன். நீ மட்டும் பரமக்குடிக்குப் போய் அங்கே இருக்கிறவங்களையெல்லாம் அழைச்சிக்கிட்டு இங்கே வந்துடு. இங்கேயிருந்து எல்லாரும் சேர்ந்தாப்போலச் சேலத்துக்குப் போவோம்’னார் பிள்ளை. ’சரி’ன்னு பணத்தை வாங்கிக்கிட்டு நான் பரமக்குடிக்குப் போனேன்…” “அப்போது சிவாஜி கணேசனும் அங்கே இருந்தார், இல்லையா?” “ஆமாம், இருந்தார். அவருக்கும் மற்ற நடிகர்களுக்கும் என்னைக் கண்டதும் ரொம்ப சந்தோஷம். எதிலே சந்தோஷம்னா ‘எந்த நிலைமையையும் நான் சமாளிப்பேன்’கிறதிலே சந்தோஷம். சினிமாவிலும் சரி, நாடகத்திலும் சரி, அப்பவே எனக்குக் கொஞ்சம் ’ஸ்டார் வால்யூ’ இருந்தது. அதாலே காண்ட்ராக்டரும் என்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டு, ‘இனிமே நீங்களும் இந்த நாடகக் கம்பெனியிலே சேர்ந்து நடிக்கணும்னு’ சொன்னார்….” “உங்கள் பாடு ரொம்ப தர்ம சங்கடமாகப் போயிருக்குமே?” “இப்படிச் சொல்லி ரொம்ப நாளா ரொம்பப் பேர் ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கானுங்க….” “எப்படிச் சொல்லி… ?” “தர்மத்தையும் சங்கடத்தையும் சேர்த்துச் சொல்லி … இது வேறே, அது வேறே இல்லையா ?…. ரெண்டையும் ஒண்ணாப் போட்டு ஏன் குழப்பனும் ?. நின்னா தர்மத்தின் பக்கம் நில்லு: இல்லேன்னா சங்கடத்தின் பக்கம் நில்லு … நான் தர்மத்தின் பக்கம் இல்லே நிற்க வந்திருக்கேன்?… அதாலே, ’ஐயா, காண்ட்ராக்டர் ஐயா! நானும் இந்த நாடகக் கம்பெனியிலே சேர்ந்து நடிக்கிறதிலே எனக்கு ஒண்னும் ஆட்சேபணையில்லே. ஆனா ஒண்ணு’ன்னு ஆரம்பிச்சேன்: ’என்ன ?ன்னார். இந்த ஊரிலேயே இந்த நாடகக் கம்பெனி ரொம்ப நாளா இருந்துடிச்சி, வேறே ஊருக்கு மாத்திடுவோம், அங்கே நானும் சேர்ந்து நடிக்கிறேன்’னேன். ’நல்ல யோசனை’ன்னார். நாலு ஸ்டேஷன் தள்ளியிருந்த ஒரு ஊர் பேரைச் சொல்லி….” “அது எந்த ஊர் ?” “பேர் மறந்து போச்சு; அந்த ஊருக்குப் போய் நாடகம் போடுவோம்னேன். சரி’ன்னார். அப்ப்டிச் சொல்லுங்க’ன்னு எல்லாச் சாமானையும் பாக் பண்ணி ‘செல்ப்’ போட்டுச் சேலத்துக்கு அனுப்பி வைச்சேன். காண்ட்ராக்டருக்கு மட்டும் நாலு ஸ்டேஷன் தள்ளி ஒரு டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கெல்லாம் திருச்சிக்கு டிக்கெட் எடுத்துக்கிட்டேன். நாலு ஸ்டேஷன் தள்ளி ரயில் நின்றதும் காண்ட்ராக்டர் அவசர அவசரமாக ரயிலை விட்டு இறங்கி, ’இறங்குங்க, இறங்குங்க’ன்னு எங்களையும் இறங்கச் சொல்லி அவசரப்படுத்தினார். ’திருச்சியிலே ஒரு விசேஷம், நாங்க அதுக்குப் போயிட்டு வந்துடறோம், நீங்க இங்கேயே இருங்கன்னேன். அதுக்கும் ’சரி’ன்னார் அந்த அப்பாவி…” “ஆமாம், இப்படி ஏமாற்றி விட்டு வருகிறீர்களே, அவர் நீங்கள் இருக்கும் ஊருக்கு உங்களைத் தேடி வந்து…” “என்ன பிரயோசனம் ? ஊர்ப்பெரிய மனுஷனுங்க ரவுடிசமெல்லாம் அந்தந்த ஊரிலேதானே செல்லும்? மற்ற ஊர்களிலே செல்லாதே!” “ம், அப்புறம்?” “சேலம் ஓரியண்டல் தியேட்டரிலே ‘இழந்த காதல்’ நாடகம் போடறதா தீர்மானம் பண்ணோம். எனக்கு அந்த நாடகத்திலே ’ஜகதீஷ்’னு வில்லன் வேஷம், சிவாஜிக்குச் ’சரோஜா’ன்னு தாசி வேஷம்… சும்மா சொல்லக்கூடாது, அந்தக் காலத்திலேயே அவர் வேஷத்துக்குத் தகுந்தாப் போல நல்லா மினுக்கி, குலுக்கி, தளுக்கி நடிப்பார்…” “அவரும்”ராதா அண்ணன் கிட்டே நடிக்கக் கத்துக்கிட்டவங்களிலே நானும் ஒருத்தன்’னு சமீபத்திலே கூடச் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறதே?" “நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். என்கிட்டே அவருக்கு எப்பவுமே ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு…” “இருக்காதா… ?” “எல்லாருக்கும் எங்கே இருக்கு ? அவருக்கு இருக்கு, அவ்வளவு தான்…. அதோடே அதை விட்டுடுவோம்… டிராமாவுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செஞ்சப்புறம் போஸ்டர், நோட்டீசு எல்லாம் போட்டு விளம்பரம் செய்ய வேணாமா ?…. அதுக்குக் கையிலே காசில்லே. ‘என்னடா செய்யறது ?’ ன்னு நானும் பிள்ளையும் கையைப் பிசைஞ்சிக்கிட்டு மாடர்ன் தியேட்டர்ஸ் வாசல்லே நின்னுக்கிட்டிருந்தோம்; என்.எஸ்.கே. வந்தார். இப்போ சில சினிமா நடிகருங்க டெரிலின் சட்டைப் பையிலே ஒரு நூறு ரூபா நோட்டை வெளியே தெரியறாப் போல வைச்சிக்கிட்டுத் திரியறதை நீங்கக்கூடப் பார்த்திருப்பீங்களே…. ?” “ஆமாம், பார்த்திருக்கிறேன்.” “அந்த மாதிரி அப்போ என்.எஸ்.கே.யும் எப்போப் பார்த்தாலும் தான் போட்டுக்கிட்டிருக்கிற சில்க் சட்டைப் பையிலே ஒரு நூறு ரூபா நோட்டை வெளியே தெரியறாப் போல வைச்சிக்கிட்டிருப்பார். அவர் எங்களைக் கண்டதும் ‘என்ன விஷயம் ?’ ன்னு கேட்டார். பொன்னுசாமிப்பிள்ளை விஷயத்தைச் சொன்னார். ’நாடகக் கம்பெனிக்காரன் பிழைப்பு இன்னும் அப்படித்தான் இருந்துகிட்டிருக்கா ?….ம்… இருக்கட்டும், இருக்கட்டும்’னு சட்டைப் பையிலே இருந்த நூறு ரூபா நோட்டை எடுத்து அப்படியே கொடுத்துட்டார்…” “ஆச்சரியந்தான்!” “இதிலே என்ன ஆச்சரியம் இருக்கு… ?” “புகழ் பெற்ற ஒரு சினிமா நடிகர் அக்கம் பக்கம் தெரியாமல் முழுசா நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டார் என்றால்… ?” “அவர் எப்பவுமே புகழை விலை கொடுத்து வாங்கறதில்லையே, அதாலே அப்படிக் கொடுத்துவிட்டார்… அப்புறம் கேட்கணுமா?… போஸ்டர் போட்டு ஒட்டியாச்சு, நோட்டீசு அடிச்சுக் கொடுத்தாச்சு. அந்த நாடகத்திலே ஒரு ‘சவுக்கடி சீன்’ வரும். அதிலே எனக்கு நல்ல பேரு. அதாலே, ‘இழந்த காதலில் எம்.ஆர்.ராதாவின் சவுக்கடி சீனைப் பார்க்கத் தவறாதீர்கள்’னு தனி விளம்பரம் வேறே. இத்தனை அமர்க்களத்தோடே இந்த நாடகம் நடந்துகிட்டிருந்தப்போ, ஒரு நாள் சக நடிகர் ஒருவர் வந்து, ’உங்களுக்கு அண்ணாதுரையைத் தெரியுமா ?’ ன்னு கேட்டார். ’எந்த அண்ணாதுரையை ?’ன்னேன். ’அதுதான், தளபதி அண்ணாதுரையை ’ன்னார். யாருக்குத் தளபதி? ன்னேன்.”சரியாப் போச்சு’, போ! திராவிடர் கழகத்துக்காகப் பெரியார் ஈ.வெ.ரா. தமிழர் படைன்னு ஒரு படையை திரட்டிக்கிட்டிருக்கலையா? அதுக்கு அவர் தளபதின்னார். ‘சரி, அதுக்கு என்ன இப்போ ?’ ன்னேன். அவர் வந்து உங்க நாடகத்தைப் பார்த்து விட்டுக் குடி அரசு பத்திரிகையிலே ஒகோன்னு எழுதியிருக்கார். உங்களைப் பால்முனின்னு சொல்லியிருக்காருன்னார். ‘பால்முனியா, அவன் யாரு?’ ன்னேன். ‘மேல் நாட்டிலே புகழ் பெற்ற நடிகன். அவனுக்கு நிகரா அவர் உங்களை ஒப்பிட்டு எழுதியிருக்காருன்னார். ’நல்ல வேளை, நான் அவனைப் பார்த்துக் காப்பி அடிச்சி நடிக்கிறதா எழுதலையே?’ ன்னேன். ‘இல்லே’ன்னார். அதுக்கு மேலேதான் ’யார் அந்த அண்ணாதுரை ?’ன்னு நான் கவனிக்க ஆரம்பிச்சேன்; விசாரிக்கவும் ஆரம்பிச்சேன். ஈரோடிலே பெரியார் நடத்தற ’குடி அரசு’ பத்திரிகையிலே அவர் துணையாசிரியரா யிருக்காருன்னும், என் நாடகத்தால் கவரப்பட்ட அவர், ஒவ்வொரு நாள் மாலையும் ஈரோடிலிருந்து சேலத்துக்கு வந்து என் நாடகத்தைப் பார்த்துவிட்டுக் கடைசி பஸ்ஸிலே ஈரோடுக்குத் திரும்பறாருன்னும் தெரிஞ்சிக்கிட்டேன். ‘நமக்கும் இப்படி ஒரு ரசிகரா ?’ ங்கிறதைத் தவிர அப்போ நான் வேறே ஒண்ணும் நினைக்கல்லே. இது எந்த அளவுக்குப் போய் நின்னதுன்னா, அவரே ஒரு சமயம் என் நாடக மேடைக்கு வந்து, ’அழையா வீட்டுக்கு துழையா சம்பந்தியா வந்திருக்கேன்’னு சொல்றதிலே வந்து நின்றது. அதோடு இல்லே, அதுக்கு மேலேயும் போய், ’இந்தத் தாழ்ந்த தமிழகத்தைத் தலை தூக்கி நிறுத்த நூறு திராவிடர் கழக மாநாடுகள் நடப்பதும் ஒண்ணு, ஒரே ஒரு எம்.ஆர்.ராதா நாடகம் நடப்பதும் ஒண்ணு’ன்னு சொல்றதிலே போய் நின்றது." என்.எஸ்.கே. எதிரியானார் “சில நாடகங்களும் சினிமாப் படங்களும் இந்தக் காலத்திலேதானா வெள்ளி விழாவும் பொன் விழாவும் கொண்டாடுது? அந்தக் காலத்திலேயும் கொண்டாடிக்கிட்டுத்தான் இருந்தது. சேலம் ஓரியண்டல் தியேட்டர்ஸிலே ‘இழந்த காதல்’ நாடகம் ‘நூறாவது நாள் விழா’ கொண்டாடி, அதுக்கு மேலேயும் நடந்துக்கிட்டிருந்தது. அந்த நாடகத்தைப் படமாக்க மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், சாரங்கபாணி அண்ணன் எல்லாரும் வந்து பார்த்தாங்க. அவங்களுக்குக் கதை பிடிச்சிருந்தது; அதிலே நடிச்ச மாரியப்பனைத் தவிர மற்றவங்க எல்லாரையும் பிடிச்சிருந்தது….” “மாரியப்பனை ஏன் பிடிக்கவில்லை ?” “அவனைப் பிடிக்காமப் போனதுக்கு காரணம் வேறே ஒண்ணுமில்லே, அவன் அவ்வளவு நல்லா நடிச்சதுதான்!” “இது என்ன வேடிக்கை?” “இத்தனைக்கும் அவன் போட்டது பொம்பிளை வேஷம்; ஹீரோயின் பத்மாவா அவன் நடிப்பான். அந்த மாதிரி படத்திலே நடிக்க அப்போ நெஜப் பொம்பிளை கிடைக்கல்லே…” “அந்த மாரியப்பன் இப்போது எங்கே இருக்கிறார்?” “தெரியல்லே; அவரோட ஹீரோவா நடிச்ச டி.கே.சம்பங்கி இருக்கிற இடந்தான் தெரியுது; அவர் இருக்கிற இடம் தெரியல்லே…” “கடைசி வரையிலே இழந்த காதலைப் படமாக்க யாருமே துணியவில்லையா ?” “என்.எஸ்.கே. துணிந்தார்.ஆனா…” “என்ன ஆனால்…” “படத்திலேயும் வில்லன் ஜகதீஷா என்னைப் போட்டு எடுக்க அவர் விரும்பல்லே…” “காரணம் ?” “அவர் என்ன நினைச்சாரோ, அது எனக்குத் தெரியாது. அந்த வேஷத்திலே எனக்குள்ள புகழை அவர் ’ராபெரி பண்ணப் பார்க்கிறார்னு நான் நினைச்சேன்!” “ஒருவன் சேர்த்து வைத்துள்ள பணம், கிணம், நகை நட்டைத்தான் கொள்ளை அடிப்பார்கள்; புகழைக்கூட யாராவது கொள்ளை அடிப்பது உண்டா, என்ன ?” “கலை உலகத்திலே அது சர்வ சாதாரணம். ஏன்னா, அங்கே ஒருத்தன் பொழைக்கணும்னா அவனுக்கு மூலதனமா வேண்டியிருக்கிறது புகழ்தான்!” “அதுவும் ஒரு விதத்திலே உண்மைதான். அது இல்லையென்றால் அவனை யார் அழைக்கப் போகிறார்கள் ?..ம், அப்புறம் ?” “ஆளை மாத்திப் போட்டா ‘பப்ளிக்’ அதை எப்படி வரவேற்குதுன்னு தெரிஞ்சிக்க வேணாமா ? அதுக்காகப் பொன்னுசாமிப் பிள்ளைகிட்டே சொல்லி, எனக்குப் பதிலா அந்த வேஷத்திலே வேறே ஆளைப் போட்டுப் பார்க்கச் சொன்னாங்க..” “விஷயம் அந்த அளவுக்குப் போய்விட்டதா?” “ஆமாம்; சேலத்திலேயிருந்து நாங்க பொள்ளாச்சிக்கு வந்தோம். அங்கே என் வேஷத்தைப் பாலையாவைப் போடச் சொன்னாங்க, போட்டார். மக்கள் அவரை ஏற்கல்லே…. ஏற்கல்லேன்னா, தப்பு அவர் மேலேன்னோ, அவர் நடிப்பு மேலேன்னோ நான் சொல்ல மாட்டேன். ஏன்னா, அவரைப் பொறுத்தவரையிலே அவர் நல்ல நடிகர்; எந்த வேஷத்தைக் கொடுத்தாலும் அதை ஏத்து நல்லா நடிக்கக் கூடியவர். ஜனங்களுக்கு என்னவோ ஜகதீஷ் வேஷத்திலே அவரைப் பார்க்கப் பிடிக்கல்லே; ’கொண்டா ராதாவை’ன்னு ஒரே கூச்சல் போட ஆரம்பிச்சிட்டாங்க. அந்தக் கூச்சலை அடக்கப் பி.ஜி வெங்கடேசனைப் பிடிச்சாங்க.பாவம், அவன் அல்பாயுசிலே செத்துட்டான்..நல்லாப் பாடுவான். அவனை விட்டுப் பாடச் சொல்லிக் கலாட்டாவை ஒரு வழியாச் சமாளிச்சாங்க…” “நீங்கள் ?” “நான் ஒண்ணும் பண்ணல்லே, மேலே என்ன நடக்குதுன்னு கவனிச்சிக்கிட்டு இருந்தேன்.கம்பெனி கோயமுத்துருக்கு வந்தது. அங்கே பி.ஏ.ராஜூ செட்டியார்னு பேர் போன ஒரு தங்க வைர நகைக் கடை வியாபாரி இல்லையா ?. அவருக்குச் சொந்தமா ’டைமண்ட் டாக்கீஸ்’னு ஒண்ணு இருக்குது. அந்த டாக்கீஸ் அப்போ அவர் மகன் குப்புசாமிச் செட்டியார் மேற்பார்வையிலே நடந்துகிட்டிருந்தது. நான் ஏதோ ஒரு வகையிலே அவருக்கு இருநூறு ரூபா பாக்கி…” “அதை அவர் அப்போது திருப்பிக் கொடுத்தால்தான் ஆயிற்று என்று ஒற்றைக் காலில் நின்றாரா ?” “அப்படி ஒண்ணும் நிற்கல்லே; ‘நாடகம் நடந்து முடியட்டும், அப்புறம் கேட்டு வாங்கிக்கலாம்’னு அவர் இருந்திருப்பார் போலிருக்கு…நாடகம் நடந்தது; இங்கேயும் ’இழந்த காதல்’ தான்…ஆனா எனக்குப் பதிலா இங்கே பாலையாவை வில்லன் ஜகதீஷாப் போடாம, பவுநீர்னு வேறே ஒரு நடிகரைப் போட்டுப் பார்த்தாங்க… இங்கே நடந்த கலாட்டா பொள்ளாச்சியிலே நடந்த கலாட்டாவைத் துக்கி அடிச்சிடிச்சி..நாடகம் பார்க்க வந்திருந்த மகா ஜனங்க அத்தனை பேரும் நாற்காலிகளைத் துக்கிக் கீழே போட்டு ஒடைச்சித் தூள் தூளாக்க ஆரம்பிச்சிட்டாங்க..அதோட விடல்லே, ஒரே ஒரு சீனிலாவது ராதா தலையைக் காட்டினாத்தான் சும்மா விடுவோம். இல்லேன்னா விட மாட்டோம்னு கத்தினாங்க. பொன்னுசாமிப் பிள்ளைக்கு ஒண்ணும் புரியல்லே; ’யாரைப் போட்டாலும் பாழும் ஜனங்க ராதாவைக் கொண்டாங்கிறாங்களே, என்.எஸ்.கே.ய்க்கு நான் என்ன பதில் சொல்வேன்?”கிற கவலை அவருக்கு; குப்புசாமிச் செட்டியாருக்கோ ‘புதுசா வாங்கிப் போட்ட நாற்காலிகளெல்லாம் தூள் தூளாகிறதே’ங்கிற கவலை.. என்ன செய்வார், பாவம்!..’கிடக்கிறார் பொன்னுசாமிப் பிள்ளை’ன்னு என்கிட்டே வந்தார். ஜனங்க சொல்றாப்போல ஒரே ஒரு சீனிலாவது வந்து நீ நடிச்சிடப்பா!’ ன்னார். நான் அதுதான் சமயம்னு, ‘ஒரு நிபந்தனை’ன்னேன்; என்ன நிபந்தனை?’ன்னார். ’நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய இருநூறு ரூபாயை ரைட்ஆப் பண்ணிடணும்’ னேன். ’சரி’ன்னார். அதுக்கு மேலேதான் நான் போய் அந்த ஒரு சவுக்கடி சீன்லே மட்டும் நடிச்சிட்டு வந்தேன். ஜனங்களுக்குப் பரம திருப்தி, ராதாவுக்கு ஜே ன்னு கத்திக்கிட்டே கலைஞ்சிப் போயிட்டாங்க…" “இதெல்லாம் என்.எஸ்.கே.யின் மனத்தை மாற்றியிருக்குமே?” “அதான் இல்லே, அப்பவும் அவர் தன் பிடிவாதத்தை விடாம கே.பி. காமாட்சியை எனக்குப் பதிலாப் போட்டு ‘இழந்த காதல்’ படத்தை எடுத்தார்….” “எங்கே ?” “கோயமுத்துார் சென்ரல் ஸ்டுடியோவிலே. அப்போ யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை கம்பெனி சிங்காநல்லூரிலே நாடகம் நடத்திக்கிட்டிருந்தது; நானும் நடிச்சிக்கிட்டிருந்தேன். திடீரென்று ஒரு ஜப்தி…” “எதற்கு?” “நாடகக் கம்பெனிக்காரனுக்கு ஜப்தி வருதுன்னா, அது மளிகைக் கடைக்காரன் கிட்டேயிருந்துதான் வரும். ஏன்னா, அவன் கிட்டே வாங்கித் தின்கிற கடனையே அவனாலே சில சமயம் கொடுக்க முடியறதில்லே…” “அப்புறம்?” “அடுத்த நாள் காலையிலே அந்தக் கடைக்காரன் கோர்ட் அமீனாவோடு வந்து நாடகச் சாமான்களையெல்லாம் ஜப்தி செய்யப் போறாங்கிற விஷயம் எங்களுக்குத் தெரிஞ்சிப் போச்சு.. பிள்ளை வழக்கம் போலக் கையைப் பிசைஞ்சிட்டு நின்றார். அப்போ சகஸ்ரநாமம், என்.எஸ்.கே கிட்டே வேலையாயிருந்தார். அவருடைய காருங்கெல்லாம் அப்போ சகஸ்ரநாமம் இன்சார்ஜிலேதான் இருந்தது. நான் போய் சகஸ்ரநாமம் கிட்டே விஷயத்தைச் சொன்னேன். அவர் உடனே என்.எஸ்.கே. காரிலே ஒண்ணை எடுத்துக்கிட்டுச் சிங்காநல்லூருக்கு வந்தார். ரெண்டு பேருமாச் சேர்ந்து எல்லாச் சாமானையும் ராத்திரிக்கு ராத்திரியா கொஞ்சங் கொஞ்சமாக் காரிலே கொண்டுபோய்ப் பொள்ளாச்சியிலே சேர்த்தோம்”, “சகஸ்ரநாமத்தை உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமா?” “தெரியுமாவது, நல்லாத் தெரியும். நானும் அவரும் சாயந்திரமானா வாலிபால் ஆடுவோம். பழகறதுக்கு ரொம்ப நல்ல மனுஷர். யாருக்கு எந்த ஆபத்து வந்தாலும் தன்னாலே முடிஞ்ச வரையிலே கை கொடுத்து உதவற சுபாவம் அவருடையது.” “அப்படித்தான் நானும் அவரைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்..ம்,பிறகு.?” ’பொள்ளாச்சியிலே எனக்கும் பிள்ளைக்கும் மறுபடியும் தகராறு வந்துடிச்சி, பிரிஞ்சிட்டோம்…" “அதோடு அவரையும் மறந்து, என்.எஸ்.கே.யையும் மறந்துவிட்டீர்களா ?” - “மறப்பேனா ? யாரை மறந்தாலும் மறப்பேன்; யாரை மன்னிச்சாலும் மன்னிப்பேன், என் புகழிலே ஒருத்தன் ’ராபெரி பண்ண வரான்னா அவனை நான் மறக்கவும் மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன்..” “அதற்காக… ?” “என்ன நடந்தாலும் சரி, ’என்.எஸ்.கே. யைச் சுட்டுத் தள்றதே சரி’ன்னு அன்னிக்கே உளுந்தூர்ப்பேட்டைக்குப் போய் ஒரு ஆசாமியைப் பிடிச்சித் துப்பாக்கி ஒண்ணு வாங்கினேன்!” பெரியார் போட்ட பூட்டு “டுமீல், டுமீல்!” என்ன சத்தம் இது ?ன்னு கேட்கிறீங்களா ?.. துப்பாக்கி சுடற சத்தந்தான் “… என்.எஸ்.கே.யைக் குறி பார்த்துச் சுட வேண்டாமா ?… அதுக்கு வேண்டிய ’பிராக்டி’ஸை அக்கம்பக்கம் பார்த்துச் சேஞ்சிக்கிட்டிருந்தேன்…” “அப்படியும் போலீசார் சந்தேகப்பட்டு வந்து ஏதாவது கேட்டிருப்பார்களே ?” “எப்படிக் கேட்பாங்க, எங்க கம்பெனிதான் நாடகக் கம்பெனியாச்சே, ஏதோ ஒத்திகை நடக்குதுன்னு நெனைச்சிட்டிருந்தாங்க…” “அப்போது நீங்கள் எந்தக் கம்பெனியில் இருந்தீர்கள் ?” “டி.கே.சம்பங்கியின் கம்பெனியிலே இருந்தேன்…” “அவர் வேறே கம்பெனி ஆரம்பிச்சிருந்தாரா?” “ஆமாம், அப்போ யார் கம்பெனி ஆரம்பிச்சாலும் ஒரு நாளைக்குக் கொறைஞ்ச பட்சம் ஆயிரம் ரூபாயாவது வசூலாயிடும்…” “அந்தக் கம்பெனியிலும்….” “அதே இழந்த காதல் நாடகந்தான்; எனக்கு அதே ’வில்லன் ஜகதீஷ் வேஷந்தான்….” “எந்த வில்லனையும் எதையாவது சொல்லிக்’ ‘குபீ’ ரென்று சிரிக்க வைத்துவிடும் என்.எஸ்.கிருஷ்ணனால் உங்களை மட்டும் சிரிக்க வைக்க முடியவில்லை போலிருக்கிறது!” “ரொம்பப் பேர் அவரை இப்படித்தான் வெறும் சிரிப்பு நடிகருன்னே இன்னும் நெனச்சிக்கிட்டிருக்காங்க…அது தப்பு…அவர் வெறும் சிரிப்பு நடிகர் மட்டும் இல்லே, பெரிய சிந்தனையாளரும் கூட.” “என்ன, திடீரென்று நீங்கள் அவரைப் பாராட்ட ஆரம்பித்து விட்டீர்கள் ?” “உண்மை எங்கே இருந்தாலும்…அது என் நண்பன் கிட்டே இருந்தாலும் சரி, விரோதிகிட்டே இருந்தாலும் சரி..அதை என்னாலே பாராட்டாம இருக்க முடியாது. என்.எஸ்.கே.ய்க்கு இன்னிக்குச் சிலை சேஞ்சி வைச்சிருக்காங்க, அந்தச் சிலையை அறிஞர் அண்ணாதுரை திறந்து வைச்சிருக்காருன்னா சும்மாவா திறந்து வைச்சிருக்காங்க?…தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலே, ’சாமி, பூதம்’னு சொல்லி ஒரு சாமானியனைக்கூட இன்னிக்கு யாராலும் ஏமாத்த முடியலேன்னா, அதுக்குக் காரணமாயிருந்தவங்களிலே என்.எஸ்.கே.யும் ஒருத்தர் இல்லையா ? படிச்சவன் முட்டாளாயிருந்தா அவனைத் திருத்தறது அவ்வளவு கஷ்டமில்லே; யாரும் திருத்திடலாம். படிக்காத முட்டாளை அவ்வளவு சுலபமா யாராலும் திருத்திட முடியாது.அந்தக் கஷ்டமான காரியத்தை எந்த விதமான எதிர்ப்புக்கும் அஞ்சாம இந்த நாட்டிலே சேஞ்சிக்கிட்டு வந்தவங்களை, சேஞ்சிக்கிட்டு வர்றவங்களை விரல் விட்டு எண்ணிடலாம்…அவங்களிலே குறிப்பிடத் தக்கவங்க ரெண்டு பேரு…” “யார் அவர்கள்?” “ஒருவர் பெரியார்; இன்னொருவர் என்.எஸ்.கே…” “அந்த அளவுக்கு உங்கள் உள்ளத்தில் இடம் கொடுத்து வைத்திருக்கும் அவரையா நீங்கள் சுட்டுத் தள்ள வேண்டுமென்று நினைத்தீர்கள் ?” “அது வேறே விஷயம், இது வேறே விஷயம்…ஆனா அவங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு வித்தியாசம்…” “அது என்ன வித்தியாசம் ?” “பெரியார் காசு விஷயத்திலே கருமி, கருத்துக்களை அள்ளிக் கொடுக்கறதிலே வள்ளல்…என்.எஸ்.கே. அதற்கு நேர் விரோதம்…காசையும் அவர் அள்ளிக் கொடுப்பார். கருத்தையும் அள்ளிக் கொடுப்பார்…” “அப்படிப்பட்டவர் உங்களுடைய புகழைக் கொள்ளையடிக்க விரும்புவானேன்?” “அதுதான் எனக்குப் புரியல்லே, அதைத் தாங்கத்தான் என்னாலே முடியல்லே…அதுக்காக என்.எஸ்.கே.யைச் சுடறதுக்கு நான் ‘பிளான்’ போட்டுக்கிட்டிருக்கிற விஷயம் எப்படியோ பொன்னுசாமிப் பிள்ளைக்குத் தெரிஞ்சுப் போச்சு…அவர் சும்மா இருப்பாரா?…உடனே ஓடிப்போய் என்.எஸ்.கே.கிட்டே விஷயத்தைச் சொல்லிட்டார்…” “அப்புறம் ?” “பிள்ளை பயந்த அளவுக்கு என்.எஸ்.கே. பயந்துடல்லே; காரை எடுத்துகிட்டு நேரா கரூருக்கு வந்தார். அப்போ நானும் சம்பங்கியும் அங்கேதான் நாடகம் போட்டுக்கிட்டிருந்தோம்.என்.எஸ்.கே. வரப்போ நான் மாடி அறையிலே இருந்தேன்..அவர் வந்ததும் என்னையும் அறியாம நான் எழுந்து நின்னேன்…எடுக்கும்போதே அவர், ஏண்டா, உனக்குப் புத்தி இருக்காடா ?ன்னார். அப்போத்தான் என் புத்திமேலேயே எனக்குச் சந்தேகம் வந்தது. இருந்திருந்தா, சுடறவனையே தேடி வர இந்த ஆளைச் சுடறதுக்கு நான் துப்பாக்கி வாங்கியிருப்பேனான்னு யோசிக்க ஆரம்பிச்சேன்… ‘என்னடா யோசிக்கிறே? உனக்குப் புத்தி இருக்கான்னு கேட்கிறேன்’ னார். அவர் மறுபடியும். நான் பேசாம இருந்தேன். பணம், பங்களா, காரு, வயசு கியசு, அது இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்; நடிப்புன்னு வரப்போ, அதை உனக்குச் சொல்லிக் கொடுக்கிற யோக்கியதை, தகுதி எனக்கு இருக்காடா ? கே.பி.காமாட்சியைப் படத்திலே போட்டா, இப்படி நடிக்காதே, அப்படி நடின்னு என்னாலே சொல்ல முடியும்; உன்கிட்டே அப்படிச் சொல்லமுடியுமா ? சொன்னா மரியாதைக் குறைவாயிருக்காதா? அந்த அவமரியாதையை ஒருவேளை பணத்துக்காக நீ வேணும்னா பொறுத்துக்கலாம்; என்னாலே பொறுத்துக்க முடியாது.டா, என்னாலே பொறுத்துக்கவே முடியாது…..அதனாலேதான் உன்னை நான் அந்தப் படத்திலே போடல்லே…இப்போவாச்சும் புரிஞ்சுதா ?ன்னார். அவர் சொன்னதெல்லாம் எனக்கு ஒரே ‘த்ரில்’லாயிருந்தது. ’புரிஞ்சது’ங்கிறதுக்கு அடையாளமா தலையை மட்டும் ஆட்டி வைச்சேன்…’சரி, நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்..இனி நான் சாக ரெடி …அதுவும் ஒரு நண்பன் கையாலே நான் சந்தோஷமாவே சாவேன் …ம், எடு துப்பாக்கியை சுடு என்னை! ன்னார். இனிமே சுடறதாயிருந்தா நீங்கதான் என்னைச் சுடனும்னு துப்பாக்கியை எடுத்து அவர்கிட்டே கொடுத்தேன்! ’அட, புத்திசாலி’ ன்னு அவர் என்னை அப்படியே கட்டித் தழுவிக்கிட்டார்; நானும் அவரைத் தழுவிக்கிட்டேன். அன்னிக்குத்தான் முதல் தடவையா நானும் அழுதேன்; அவரும் அழுதார்.அந்தச் சமயம் பார்த்துப் பொன்னுசாமிப் பிள்ளை சொன்னது வேறே என் மனசை அப்படியே தொட்டு விட்டது…” “அவர் என்ன சொன்னார் ?” “வில்லன் ஜகதீஷ் வேஷம் அப்படியொன்றும் சாதாரண வேஷமில்லே; ரொம்பக் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டிய வேஷம். அந்தக் கஷ்டத்தை ஒரு நாளைப் போல உனக்கு மட்டுமே கொடுத்துக்கிட்டிருப்பானேன்னுதான் ரெண்டு ஆளுங்களை நான் மாத்திப் போட்டுப் பார்த்தேன். ஜனங்க விரும்பல்லே, விட்டுட்டேன்னார் அவர். அப்போத்தான் ஒருத்தரை ஒருத்தர் சரியாப் புரிஞ்சிக்காமலேயே இந்த உலகத்திலே பல தப்புங்க நடக்குதுங்கிற விஷயம் எனக்கு விளங்குச்சி!” “அந்த மட்டும் எல்லாம் நல்லபடியாக முடிந்ததே, அதைச் சொல்லுங்கள்!” “கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா, இந்த உலகத்தில் நடக்கிறதிலே எது நல்லது, எது கெட்டதுங்கிறதைச் சொல்றது அவ்வளவு சுலபமில்லே…ஒருத்தனுக்கு நல்லதாப் படறது இன்னொருத்தனுக்குக் கெடுதலாப்படறது; ஒருத்தனுக்குக் கெடுதலாப் படறது இன்னெருத்தனுக்கு நல்லதாப் படறது..அதெல்லாம் பெரிய விஷயம்னு பெரியவங்க சொல்வாங்க… அதாலே, அதைப் பெரியவங்கக்கிட்டேயே விட்டுட்டு நம்ம விஷயத்துக்கு வருவோம்…அப்போ நாடக உலகத்திலே நான் ரொம்ப ’டாப் ரேங்க்’கிலே இருந்ததாலே, ஐம்பதாயிரம் ரூபாயோடு வந்து என்னோடே ஒருத்தர் பார்ட்னராச் சேர்ந்தார்..எதுக்கு, நாடகக் கம்பெனி நடத்தத்தான்!” “அதற்குள்ளே முப்பதாயிரம் ரூபாயில் படமே எடுக்கிற காலம் மாறிப் போய்விட்டதா ?” “அது எப்பவோ மாறிப் போச்சு …அதாலே ஐம்பதாயிரம் ரூபாயிலே நாங்க பொள்ளாச்சியில் ஒரு பெரிய நாடகக் கம்பெனியை உருவாக்கினோம். எங்கெங்கேயோ போய்க் கடைசியிலே ஈரோடுக்கு வந்து சேர்ந்தது…” “அப்போது சிவாஜி கணேசன் எங்கே இருந்தார்?” எங்க நாடகக் கம்பெனியிலேதான் இருந்தார்…. ’கொள்ளைக்குப் போனாலும் கூட்டு உதவாது’ங்கிறாங்களே, அது எங்க பார்ட்னர்ஷிப் விஷயத்திலே படு உண்மையாப் போச்சு…" “இப்போது அப்படிச் சொல்லாதீர்கள்!.. இது கூட்டுறவு யுகம், எல்லாவற்றையுமே கூட்டுறவில் செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…!” “ஆமாம்; தனியார் கொள்ளை வேறே, கூட்டுறவுக் கொள்ளை வேறேயாக்கும் ?…’பப்ளிக்”கைப் பொறுத்த வரையிலே எல்லாக் கொள்ளையும் ஒரே கொள்ளை தான் ..அதை விடுங்க…அதுக்கு ஏத்தாப்போல அப்போ எங்க நாடகக் கம்பெனி நஷ்டத்திலே நடந்துக்கிட்டிருந்தது… ‘என்னாலேதான் நஷ்டம்’, னார் பார்ட்னர்; இல்லே, உன்னாலேதான் நஷ்டம்’ன்னேன் நான். அவர் சொன்னதை நான் ஒப்புக்கல்லே, நான் சொன்னதை அவர் ஒப்புக்கல்லே… ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம்… பிரிஞ்சிட்டோம்னா கம்பெனி அவர் கைக்குப் போயிடல்லே, என் கையிலேதான் இருந்தது. ஈரோடை விட்டுக் கோபிச்செட்டிப்பாளையத்துக்குப் போய் நாடகம் நடத்தினா, வசூல் கொஞ்சம் நல்லாயிருக்கும்னு தோணுச்சி. ஆனா எப்படிப் போறது… ?" “ஏன், அதற்குள்ளே அடுத்த ஊருக்கு நாடகச் சtrமான்களை எடுத்துக்கொண்டு போகவே கையில் காசில்லாமல் போச்சா ?” “அது மட்டுமில்லே, கொட்டகைக்காரருக்கு வேறே இருநூறு ரூபா பாக்கியிருந்தது…” “கோபிச்செட்டிப்பாளையம் பக்கத்திலேதானே இருந்தது?…அங்கே போய்க் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே ?” “சொன்னேன்; அவர் கேட்கல்லே…” “யார் அந்தக் கொட்டகைக்காரர்?” “இன்னிக்கு என் வணக்கத்துக்குக்குரிய பெரியாராயிருக்கும் ஈ.வெ.ரா. அவர்கள்தான் அந்தக் கொட்டகைக்காரர்!” “அப்படியா? அவர் என்ன சொன்னார் ?” “முதலில் ரூபாய் இருநூற்றையும் எண்ணிக் கீழே வை; அப்புறம் மற்றதைப் பற்றிப் பேசுன்னார்…” “நீங்கள் என்ன சொன்னீர்கள் ?” “நான் சாதாரண நடிகன், நீங்கள் சமூகத்தையே சீர்திருத்த வந்திருக்கும் தலைவர்னு ஆரம்பிச்சேன்… அவ்வளவுதான்: ’அது வேறே கதை, இது வேறே கதை. கொண்டா பூட்டை!ன்னார் பக்கத்தில இருந்த ஆளிடம். ’அடியேன் சாமி!ன்னு அவன் ஒரு பூட்டுக்கு ரெண்டு பூட்டாக் கொண்டு வந்து கொடுத்தான். அத்தனை சாமான்களையும் உள்ளே எடுத்துப் போட்டுப் பூட்டி,”என்னிக்கு இரு நூறு ரூபாயைக் கொண்டு வந்து கொடுக்கிறியோ, அன்னிக்கு உன் ’சாமான்களை நீ எடுத்துக்கிட்டுப் போ’ன்னு சொல்லிட்டார். அதுக்கு மேலே என்ன செய்யறதுன்னு ஒண்ணும் புரியாம, நான் வெறுங்கையோடே கோபிச்செட்டிப்பாளையத்தை நோக்கி நடந்தேன்." ஜி.டி.நாயுடுவைச் சந்தித்தேன் “வாழ்க்கையிலே எத்தனையோ மேடு பள்ளங்களிலே ஏறி இறங்கியவன் நான். பெரியார் போட்ட பூட்டு என்னை என்ன செய்யும்? அதையும் எப்படியோ சமாளிச்சேன். அடுத்தாப்போலக் குமாரபாளையத்திலே எங்க நாடகம் நடந்துக்கிட்டிருந்தது. கூட்டமாவது கூட்டம், சொல்ல முடியாத கூட்டம். ஒரு நாளைப்போலக் கொட்டகை நிரம்பி வழிஞ்சிக் கிட்டிருந்தது…” “புதிய நாடகமா?” “இல்லே, பழைய நாடகம்தான்; அதே ‘இழந்த காதல்’ தான். ஆனா ஒண்ணு.” “என்ன ?” “நான் பேசற நாடக வசனங்கள் அப்பப்போ மாறிக்கிட்டிருக்கும். அந்த வசனங்களிலே அப்டுடேட் அரசியல் விமரிசனங்கள் இருக்கும். ’கரண்ட் பாலிடிக்’ஸை வைச்சிக்கிட்டு என் கருத்துக்களை நான் துணிஞ்சிச் சொல்வேன்…” “அந்தக் காலத்து ஜனங்களுக்கு அது ரொம்பப் பிடித்திருந்தது போல் இருக்கிறது…” “அந்தக் காலத்து ஜனங்களுக்கு மட்டும் இல்லே, எந்தக் காலத்து ஜனங்களுக்கும் அது பிடிக்கும். ’கலை கலைக்காகவே’ன்னு சில பேர் கரடி விடுவானுங்க. அதை நீங்க நம்பாதீங்க. அப்படியிருந்தா அது எப்பொவோ செத்துப் போயிருக்கும். கலை வாழ்க்கைக்காகத்தான்; வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது… என் வெற்றிக்கு அதுவே காரணம்.” “சரி, அப்புறம் ?” “ஒரு நாள் எக்கச்சக்கமான கூட்டம். திரை மறைவிலே நான் மேக்அப் போட்டுக்கிட்டிருந்தேன். தியேட்டர் மானேஜர் இரைக்க இரைக்க ஓடி வந்து, ’பெரியார் வந்திருக்கார், அண்ணாதுரை வந்திருக்கார், சம்பத் வந்திருக்கார்’னு மூச்சு விடாம சொல்லிக்கிட்டே போனார். ’எதுக்கு ?ன்னு கேட்டேன்; ’உங்க நாடகத்தைப் பார்க்கணுமாம்’னார். ’பார்க்கட்டுமேன்னேன்,’ஒரு சீட்கூடக் காலியில்லையே, எப்படி அவர்களை உட்கார வைக்கிறது ?ன்னார். அவர்களுக்கு இஷ்டமிருந்தா தரையிலே உட்கார்ந்து பார்க்கட்டும்; இல்லேன்னா போகட்டும்’னேன். மானேஜர் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார்; ’ரொம்பப் பெரியவங்க அவங்க’ன்னார்; இருக்கலாம்; என்னைவிடப் பெரியவங்களா வேறே யாரையும் நான் நெனைச்சுக் கூடப் பார்க்கிறதில்லையே!ன்னேன். அதுக்கு மேலே அவர் அங்கே நிற்கல்லே; போயிட்டார்.” “பாவம், அவருக்கு ஒரே ஏமாற்றமா யிருந்திருக்கும்…” “அதுக்காக நானும் கவலைப்படல்லே, வந்தவங்களும் கவலைப்பட்டதாத் தெரியல்லே, அவர் சொன்ன மூணு பேரும் நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டுத் தரை டிக்கெட்டிலேயே உட்கார்ந்து கடைசி வரை என் நாடகத்தைப் பார்த்தாங்க. அதோடே நிக்கல்லே, என் அழைப்பை எதிர்பாராமலே இண்டர்வ’லிலே மேடைக்கு வந்து என்னையும் என் நாடகத்தையும் பாராட்டிப் பேசினாங்க. நான் நினைக்கிறேன், ஒரு கட்சியை வளர்க்கணும்னா அதுக்குக் கலைஞர்களுடைய ஒத்துழைப்பும் தேவைங்கிற விஷயமே அன்னிக்குத்தான் அண்ணாதுரை மனசிலே உதயமாகியிருக்கும்னு. அது மட்டும் இல்லே, ’தி.க.மாநாடு நூறு நடத்தறதும் சரி, எம்.ஆர்.ராதா நாடகம் ஒண்ணு நடத்தறதும் சரி’ன்னு அவர் சொன்னதுகூட அன்னிக்குத்தான். அதுக்கு மேலேதான் அவரே நாடகம் எழுதவும், நடிக்கவும், இன்னும் சிலரை அந்த வழியிலே திருப்பி விடவும் அவர் வேலை சேஞ்சாரு. அதாலேதான் சந்தர்ப்பம் வாய்க்கும்போது பெரியாரையே எதிர்த்து நின்று வெற்றி பெறவும் அவராலே முடிஞ்சது; மற்றவங்களாலே முடியலையே? அவரை எதிர்த்தவங்க அத்தனை பேரும் இருந்த இடமே தெரியாம இல்லே போயிட்டாங்க!” “யார் போனாலும் வந்தாலும் பெரியார் இன்னும் நிற்கிற இடத்திலேயேதானே நின்று கொண்டிருக்கிறார்!” “அது தெரிந்துதான் அண்ணாதுரை அவரை விட்டுப் பிரிஞ்சித் தனிக் கட்சி ஆரம்பிச்சப்போகூடத் தலைவர் பதவியை அவருக்கே விட்டு வைச்சிருந்தார்…” “இப்போது அதுகூட.” “சரியான ஆளைத் தேடித்தான் போயிருக்குது. அந்த விஷயத்திலே பெரியாருக்குக்கூட சந்தோஷமாயிருக்கும்னு தான் நான் நெனைக்கிறேன்…” “அதிருக்கட்டும், குமாரபாளையத்திலிருந்து, நீங்கள் எங்கே போனீர்கள் ?” “கோயமுத்துருக்கு… அங்கிருந்த பஸ் ஸ்டாப்புக்கிட்டே கருப்பண்ணப் பிள்ளைன்னு ஒருத்தர் ஒரு தியேட்டர் நடத்திக்கிட்டு இருந்தார். அந்தத் தியேட்டர் இருந்த இடம் ஜி.டி.நாயுடுவின் இடம்னு சொன்னாங்க… அப்போ எனக்கு ஒரு எண்ணம் வந்தது… ‘மொதல் தடவையா இங்கே ஜி.டி.நாயுடுவின் தலைமையிலே நாடகத்தை ஆரம்பிச்சி வைச்சா என்ன ?ன்னு நெனைச்சேன்…நெனைச்சதோடு நிக்கல்லே, அவர் வீட்டுக்குப் போய் அவரை அழைக்கவும் அழைச்சேன்…’நாயுடு எதிலும் கொஞ்சம் கண்டிப்பான பேர்வழி’ ன்னு எனக்கு முன்னமேயே தெரியும்…இருந்தாலும் நாடகத்துக்குத் தலைமை தாங்க அவர் ஒப்புக்கு வார்னே நான் நெனைச்சேன்…நெனைச்சபடி நட்க்கல்லே; ‘நாடகத்துக்காவது, நான் தலைமைதாங்க வருவதாவது ? போய்யா, போ,’ ன்னு சொல்லி அவர் என்னை விரட்டி விட்டார்…. இப்படியும் ஒரு பெரிய மனுஷனா ?ன்னு நெணைச்சிக்கிட்டே நான் வெளியே வந்தேன்…..நான் வந்த டாக்சி அந்த இடத்தை விட்டுச் சீக்கிரம் கிளம்பாம கொஞ்சம் ‘ட்ரபிள்’ கொடுத்தது; டிரைவர் இறங்கி அதை ‘ரிப்பேர்’ பார்த்துக்கிட்டிருந்தார். அப்போ எங்களுக்கு எதிர்த்தாப் போல ஒரு பெரிய கார் வந்து நின்றது; அதிலிருந்து ஏழெட்டுப் பேர் இறங்கி என்னைப் பார்த்துக்கிட்டே நாயுடு வீட்டுக்குள்ளே போனாங்க… போனவங்க சும்மா இல்லாம,”ராதா எங்கே வந்துட்டுப் போறார், இங்கேயா வந்துட்டுப் போறார்?’ன்னு கேட்டாங்க, “ஆமாம், இங்கே தான் வந்துட்டுப் போறான்; அவன் நாடகத்துக்கு நான் தலைமை ’தாங்கணுமாம். முடியாது, போன்னு சொல்லி அனுப்பிட்டேன்’னு அவர் அலட்சியமாய்ச் சொன்னார். ’ஐயையோ, அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதே! அவர் நாடகத்தை நீங்க அவசியம் பார்க்கனுமே!ன்னு அவங்க சொன்னாங்க…அதுக்குள்ளே டாக்சி சரியாகிவிட்டது; நான் அந்த இடத்தை விட்டுப் போயிட்டேன். அதுக்கு மேலே அவங்க என்ன பேசினாங்களோ, என்ன முடிவுக்கு வந்தாங்களோ, அது எனக்குத் தெரியாது….” “அன்றைக்குச் சாயந்திரம் நாயுடு தாமாகவே நாடகத்துக்கு வந்துவிட்டாரா?” “ஆமாம்; வந்தவர் தனியாகவும் வரல்லே, நாலைஞ்சு பேரோட சேர்ந்து வந்துட்டார்.அப்படித்தான் வந்தாரே, கொஞ்சம் முந்தியாவது வந்தாரா? அதுவும் இல்லே, ஹவுஸ் புல் ஆணப்புறம் வந்தார். நான் என்ன செய்வேன்? வந்து சொன்னவங்கக்கிட்டே, மியூஸிக் பார்ட்டி உட்கார்ற இடத்திலே நாலைஞ்சு நாற்காவியை ‘அட்ஜஸ்ட்’ பண்ணிப் போட்டு ’உட்கார வையுங்க’ன்னேன்…அப்படியே போட்டாங்க, அவங்களும் அங்கே உட்கார்ந்து கடைசி வரையிலே இருந்து நாடகத்தைப் பார்த்தாங்க.எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம், ’நாயுடு எப்பவும் எந்த இடத்திலும் எதையும் இத்தனை மணி நேரம் சேர்ந்தாப்போல உட்கார்ந்து பார்க்க மாட்டாரே. அப்படிப்பட்டவர் இந்த நாடகத்தை மட்டும் எப்படி இவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்த்தார்!’னு அங்கங்கே கூடி நின்னு பேசிக்கினாங்க…” “ஏன் பேச மாட்டார்கள்? மனிதரிலும் மனிதர் ‘அதிசய மனிதர்’ என்று பெயர் எடுத்தவராயிற்றே அவர்!” “அந்த அதிசய மனிதர் என் நாடகத்தை முழுக்க முழுக்க உட்கார்ந்து பார்த்தப்புறம் என்ன நெனைச்சாரோ என்னவோ, ஒரு நாள் என்னைத் தன் வீட்டுக்கு கூப்பிட்டனுப்பினார்; போனேன். தான் நடத்தும் தொழிற்பள்ளி மாணவர்களுக்காக நான் ஒரு நாடகம் நடத்தித் தரணும்னார்; அதற்கென்ன, நடத்தினால் போச்சு’ன்னேன். அந்த நாடகம் அவருடைய தொழிற்பள்ளி அரங்கில், சர்.சி.வி.ராமன் தலைமையிலே நடந்தது. ‘மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது; இந்த மாதிரி நாடகங்களும் தேவை’ ன்னார் ராமன்; நாயுடுவோ, ’நாட்டின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டும் இந்த நாடகக் கலைஞருக்கு, காலத்தின் நிலையை உள்ளது உள்ளளபடிக் காட்டும் கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக அளிக்கிறேன்’னு சொல்லி, ரூபாய் இரண்டாயிரத்தோடு ’காஸ்ட்லி வாட்ச் ஒன்றையும் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்…மாணவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி, ஆளுக்கொரு ஆட்டோ கிராப் நோட்டை நீட்டி என்னைத் திக்குமுக்காட வைச்சுட்டாங்க.. அத்தனையிலும் கை வலிக்கக் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டு, ஒரு வழியா வெளியே வந்தேன்..அதற்குப் பின் ஜி.டி.நாயுடு அவர்கள் எனக்கும் என் தொழிலுக்கும் செய்த உதவிகள், நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல…உண்மையிலேயே ரொம்ப ரொம்ப அருமையான காலம் அது…அப்படி ஒரு காலம் மீண்டும் வருமான்னு இப்போ நான் நெனைச்சிப் பார்க்கிறேன்…எங்கே வருது, பெருமூச்சுத்தான் வருது!” விதவையின் கண்ணீர் “எதை ஒப்புக்கலேன்னாலும் ஒண்ணை நான் அவசியம் ஒப்புக்கனும் - உள்ளே ஒண்ணு வைச்சிக்கிட்டு வெளியே ஒண்ணு பேச எனக்குத் தெரியாது. அந்த வழக்கத்தையொட்டியே சமீபத்தில் நான் சைதாப்பேட்டையிலே பேசியப்போ சொன்னேன்- ’யாருக்குப் பின்னாலும் போய் எனக்கு வழக்கமில்லே, எல்லாருக்கும் முன்னாலே போய்தான் வழக்கம்’னு. அப்படியே நான் வாழ்ந்தவன், வாழ்பவன், வாழ்ந்துக்கிட்டு இருக்கிறவன். அதை மாத்திக்க அன்னிக்கும் என்னாலே முடியல்லே, இன்னிக்கும் என்னாலே முடியல்லே. அதுக்கு நான் என்ன செய்வேன்? அப்படிச் சொல்றது பலருடைய மனசை உறுத்தவும் சிலருடைய மனசை புண்படுத்தவும் கூடுங்கிறது எனக்குத் தெரியத்தான் தெரிகிறது. இருந்தாலும் சமயத்துக்குத் தகுந்தாப் போல ஆடினா, குழந்தைங்க தள்ளி விடறதுக்குத் தகுந்தாப்போல ஆடற தஞ்சாவூர்ப் பொம்மைக்கும் எனக்கும் என்ன வித்தியாசமிருக்கும் ? நீங்களே சொல்லுங்க, அது ஒரு பொழைப்பா? அந்தப் பொழைப்பு எனக்கு எப்பவுமே பிடிக்கிறதில்லே…” “பிடித்திருந்தால்தான் சிறையிலிருந்து வந்த சீக்கிரத்தில் நீங்கள் என்னவெல்லாமோ ஆகியிருப்பீர்களே ?” “இப்போ மட்டும் என்ன, நான் கெட்டாப் போயிட்டேன் ? என்னிக்கும் இருக்கிறபடிதான் இன்னிக்கும் இருக்கேன்… “சரி, கோவையிலிருந்து எங்கே வந்தீர்கள்?” “நாகப்பட்டினத்துக்கு வந்தேன். அங்கே தண்டபாணி செட்டியார்னு ஒரு தனவந்தர் இருந்தார். அவருடைய உதவியைக் கொண்டு ‘விமலா, அல்லது விதவையின் கண்ணீர்’ என்று ஒரு சீர்திருத்த நாடகத்தைத் தயாரித்தேன். அதுக்குள்ளே ஊர் முழுக்க அதே பேச்சாப் போச்சு! இது என்ன அநியாயம்! இந்த ராதா விமலா அல்லது விதவையின் கண்ணீர்னு நாடகம் நடத்தறதாவது, அதை இந்த ஊர் பார்த்துக்கிட்டிருக்கிறதாவது ? அவன் எல்லாத்துக்கும் துணிஞ்சவன் ஆச்சே! அந்த நாடகத்திலே அவன் தாலியறுத்தவளுக்குத் தாலிகூடக் கட்டி வைப்பானே ? அதை நடத்த விடாம எப்படியாவது தடுக்கணும்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அப்போ நாட்டிலே பெரியாருக்கும் அவ்வளவு செல்வாக்கு இல்லே, அவருடைய திராவிடர் கழகத்துக்கும் அவ்வளவு செல்வாக்கு இல்லே. அதாலேச. தடை,கிடை’ன்னு சொன்னதும் அவங்களும் பயந்தாங்க. அவங்களிலே சில பேர் என்கிட்டே வந்து, ’என்னத்துக்கு வீண் வம்புக்குப் போங்க ? இன்னும் கொஞ்ச நாள் பொறுத்தே இந்த ’மாதிரி நாடகங்களை நடத்தலாமே’ன்னு சொன்னாங்க. இந்த ஒரு விஷயத்திலே மட்டும் நான் எப்பவுமே காந்தியாரின் கட்சி. அவன் என்ன சொன்னார் ? ’வீரன் ஒரே தடவை சாகிறான்; கோழை நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துக்கிட்டிருக்கான்’னு சொல்லலையா ?, அதாலே முன்னால் வைத்த காலை நான் பின்னால் வைக்க விரும்பலே, எத்தனை எதிர்ப்பு இருந்தாலும் நாடகத்தை எப்படியும் அரங்கேற்றியே தீர்றது’ன்னு ஒரு தேதியைக் குறிப்பிட்டு விளம்பரம் சேஞ்சேன்…” “விளம்பரத்துக்குத் துண்டுப் பிரசுரங்கள் மட்டும் அச்சிட்டுக் கொடுத்திருக்க மாட்டீர்கள்; போஸ்டர்களும் போட்டுச் சுவர்களில் ஒட்டியிருப்பீர்கள், இல்லையா ?” “பின்னே, நாடகம் பழைய நாடகமாயிருந்தாலும் பரவாயில்லே, புதிய நாடகமாச்சே ? நிறையப் போஸ்டர்கள் போட்டு ஒட்டினேன்…” “அந்தப் போஸ்டர்களில் யாரும் சாணி அடிக்கவில்லையா? வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொண்டு வந்து துப்பவில்லையா ?” “அந்த மாதிரி ரசிகருங்கெல்லாம் அந்தக் காலத்திலே கிடையாது; அவங்களை ஊக்குவிக்கிற நடிகருங்களும் அப்போ இல்லே…” “நல்ல வேளை, அப்புறம்?” “விளம்பரத்தைக் கண்டதும் அவ்வளவு திமிரா அந்தப் பயலுக்கு ?‘ன்னு ஊர்ப் பெரிய மனுஷருங்க சில பேரு கூடினாங்க. ’இந்த நாடகத்தை எப்படியாவது தடை செய்தே தீரனும் கிற முடிவுக்கு வந்தாங்க. என்னை மிரட்டி, கிரட்டிப் பணிய வைக்க முடியாதுன்னும் அவங்களுக்குத் தெரியும். அதாலே, இன்ன தேதியிலே, இந்த இடத்திலே எம்.ஆர். ராதா நடத்தவிருக்கும் விமலா அல்லது விதவையின் கண்ணிர்ங்கிற நாடகம் சாஸ்திரத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் விரோதமான நாடகம். அதை அவர் நடத்தினா சமூகத்தின் அமைதி குலையும்; சனாதனிகனின் மனம் புண்படும். அதாலே கோர்ட்டார் தயவு செய்து அந்த நாடகத்தைத் தடை செய்யணும்னு நாகப்பட்டினம் கோர்ட்டிலே ’பெட்டிஷன்’ கொடுத்தாங்க. அப்போ அங்கே ஜட்ஜாயிருந்தவர் கணேசய்யர். அய்யர்னா அவங்களிலும் சிலர் ஆசாரம் கீசாரம் ஒண்ணும் இல்லாம இருப்பாங்க, அந்த ரகத்தைச் சேர்ந்த அய்யர் இல்லே அவர். ஒரு பிராமணனுக்கு எத்தனை அனுஷ்டானங்கள் உண்டோ, அத்தனையையும் ஒண்ணு விடாமச் சேஞ்சி வந்தவர். பொழுது விடிஞ்சா வீட்டுக்குப் பால் கறக்க வந்து நிற்கும் பசுவுக்குத் தினம் ஒரு பிடி புல்லோ, ஒரு அகத்திக் கீரை கட்டோ தின்னக் கொடுக்காமல் இருக்க மாட்டார். நெற்றியிலே விபூதி, சந்தனம், குங்குமம் இல்லாத நாளைப் பார்க்கவே முடியாது. வேலை நேரம் போக, பாக்கி நேரமெல்லாம் அவருடைய வாய் ஏதோ ஒரு தோத்திரத்தைச் சதா முணுமுணுத்துக்கிட்டே இருக்கும். வழியிலே யாராவது ரெண்டு பேர் ஒருத்தனை ஒருத்தன் திட்டிக்கிட்டு வம்புக்கு நின்னா, அதைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார்; அந்த இடத்தில ஒரு நிமிஷம்கூட நிற்கவும் மாட்டார். ‘போங்கடா, போங்கடா, ன்னு அவனுங்களை விரட்டிக்கிட்டே ’சிவசிவா’ன்னு காதைப் பொத்திக்கிட்டு ’மடமட’ன்னு வீட்டுக்குப் போயிடுவார். அப்படிப்பட்டவர் அவங்க கொடுத்த ’பெட்டிஷ’ னை வாங்கி வைச்சிக்கிட்டு என்ன செய்தார்னா, ’அந்த நாடகத்தை நானே பார்க்கணும்னார். அந்த அனாசாரத்தை நீங்க எதுக்குப் பார்க்கணும் ? விமலா அல்லது விதவையின் கண்ணீர்னு சொல்றப் போவே அதிலே என்ன இருக்குங்கிறதுதான் எல்லாருக்கும் தெரியுதே ? அதைப் பார்க்காமலேயே நீங்க தடை விதிக்க வேண்டியதுதானே ? ன்னு ’பெட்டிஷன் கொடுத்தவங்க வக்கீல் வைச்சி வாதாடிப் பார்த்தாங்க. அவர் கேட்கல்லே, ’தருமத்தின்படி மட்டுமல்ல. சட்டத்தின்படியும் நடக்க நான் கடமைப்பட்டவன். நாடகத்தைப் பார்க்காமல் நான் எந்த முடிவுக்கும் வரமாட்டேன்’னு அவர் கண்டிப்பாச் சொல்லிவிட்டு, என் நாடகத்தைப் பார்க்க வந்தார்…” “எதிரிகள் அயர்ந்து போயிருப்பார்களே ?” “அதுதான் இல்லே, அதுக்குப் பதிலா ‘இதோடு ராதா குளோஸ்’னு அவங்க பேச ஆரம்பிச்சிட்டாங்க. ஏன்னா, சனாதனியான ஜட்ஜ் கணேசய்யருக்கு அந்த நாடகம் கொஞ்சங்கூடப் பிடிக்காது, அதாலே அவர் உடனே தடை போட்டுடுவார்’னு அவங்க நினைச்சாங்க. நினைச்சபடி நடக்கல்லே; ஆரம்பத்திலிருந்து கடைசி வரை இருந்து நாடகத்தைப் பார்த்த கணேசய்யர் எழுந்து’ மேடைக்கு வந்தார். மொதல்லே என் கைகள் ரெண்டையும் பிடிச்சிக் ’குலுக்குக் குலுக்கு’ன்னு குலுக்கினார். ’சாட்சாத் மார்க்கண்டேயன் மாதிரி என்னிக்கும் நீங்க சிரஞ்சீவியா இருக்கணும்’னார். ’இந்த மாதிரி நாடகம் இங்கே நடந்தா மட்டும் போதாது, இந்தியா முழுவதும் நடக்கணும்னார். ’கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், கணவனை இழந்த ஒரு பெண் அவனுக்காகத் தான் சாகும் வரை கைம் பெண்ணாக இருக்கவேண்டும் என்று சாஸ்திரத்தின் பேராலோ, சம்பிரதாயத்தின் பேராலோ சொல்வது, வற்புறுத்துவது கணவன் இறந்ததும் அவனுடன் அவன் மனைவியும் உயிருடன் உடன் கட்டை ஏறிச் சாக வேண்டும் என்று ஒரு காலத்தில் இந்த நாட்டில் இருந்து வந்த கொடுமையை விட மிகக் கொடுமையானது. ஏனென்றால், இறந்த கணவனுடன் உடனே உடன்கட்டை ஏறிவிடும் ஒரு பெண்ணின் சோகக் கதை அத்துடன் முடிந்துவிடுகிறது; கைம்பெண்ணாக இருப்பளின் கதை அப்படியலல, ’பூ வைக்கக் கூடாது, பொட்டு வைக்கக் கூடாது, சுப காரியங்கள் எதிலும் கலந்துகொள்ளக் கூடாது-ஏன், அவளுடைய தலைமுடியைக் கூட விட்டு வைக்கக் கூடாது என்பது போன்ற பல கொடுமைகளுக்கு அவள் சாகும் வரை உள்ளாக நேரும் தொடர் கதையாகி விடுகிறது. ஆண்டவன் ஏற்றாலும் சரி, ஏற்காவிட்டாலும் சரி-அறிவு ஏற்காத இந்த விஷயத்தை வைத்து இப்படி ஒரு நாடகத்தைத் துணிந்து தயாரித்து, துணிந்து மேடை யேற்றிய நண்பர் ராதாவை நான் வாயார, மனமார வாழ்த்துகிறேன். அவரும் அவருடைய இந்த நாடகமும் எல்லா வகையிலும் வெற்றி பெற என் ஆசிகள்’னு ரொம்ப உணர்ச்சியோடு, கண்ணில் அப்பப்போ அவரையும் மீறிக் கசிந்த நீரை அடிக்கொருதரம் கைக்குட்டையாலே தொடைச்சிக்கிட்டே அவர் பேசி முடிச்சார். அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்… ?” “கேட்க வேண்டுமா ? சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்ததுபோல் இருந்திருக்கும்!” . “பெட்டிஷன் போட்டவர்களுக்கு ?…” “எரிகிற தீயில் எண்ணெய் விட்டதுபோல் இருந்திருக்கும்!” “அப்புறம் ‘தடை என்ன ஆச்சு?’ன்னு கேட்கிறீங்களா? நல்ல வேளையாக அது கோர்ட்டுக்கு மேலே கோர்ட்டுன்னு போய்க்கிட்டிருக்கல்லே; நானும் என் நாடகமும்தான் ஊருக்கு ஊர் போய்க் கிட்டிருந்தோம். அப்பத்தான் பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார்’ இவர் எங்கள் கழக நடிகர், இவருடைய நாடகம் எங்கள் கழக நாடகம்’னு….” “பெரியார்.. ?” “அவரும் ’திராவிடர் கழக மாநாடு நூறு நடத்தறதும் ஒண்ணு, ராதா நாடகம் ஒண்னு நடத்தறதும் ஒண்ணு’ன்னு அண்ணா சொன்னதை அப்பத்தான் அப்படியே ஆமோதிச்சார். இதிலே எனக்கு ஒரு தனி சந்தோஷம் ஏன்னா, ராஜாஜியும் சரி, பெரியாரும் சரி-பிறத்தியாரை அவ்வளவு சுலபமாப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்லிவிட மாட்டாங்க. அதிலும் அவ்வளவு சிக்கனம் அவங்க ரெண்டு பேரும்!” கண்கண்ட தெய்வம் “யார் யாருக்கோ, யார் யரோ ‘கண் கண்ட தெய்வம்’னு சொல்வாங்க. என்னைப் பொறுத்தவரையிலே எனக்குக் கண் கண்ட தெய்வம்’ கணேசய்யர்தான். அவரோ செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜ்; நானோ சாதாரண நடிகன். எனக்கும் அவருக்கும் அப்படியொரு அன்புப் பிணைப்பு எப்படி எற்பட்டிருக்க முடியும்னு இன்னும்கூட நான் யோசிச்சுப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்; புரியல்லே, ஜட்ஜுன்னா சாதாரண ஜட்ஜா ? இல்லே; மற்ற ஜட்ஜுகளுக்கு ‘சிம்ம சொப்பன’ மாயிருந்த ஜட்ஜ். அந்த நாளிலே தீர்ப்பு எழுதறதிலே அவர்தான் மன்னன்னு எல்லா வக்கீல்களும் சொல்வாங்க. அவர் விசாரிச்சி ஒரு கொலையாளிக்குத் துக்குத் தண்டனைன்னு தீர்ப்பு எழுதிட்டா, அதை மாற்ற யாராலும் எந்தக் கோர்ட்டாலும் முடியாதாம்.” “அந்த விஷயத்திலே அவர் பூலோகத்துப் பிரம்ம தேவனாக இருந்திருப்பார் போலிருக்கிறது!” “ஆமாம், அந்தப் பிரம்மதேவன் நம்ம தலையிலே எழுதியதையும் யாராலும் மாற்றி எழுத முடியாதாமே, அதே மாதிரி இந்தப் பிரம்மதேவன் எழுதிய தீர்ப்பையும் யாராலும் மாற்றி எழுத முடியாதாம். அது மட்டுமா ? நான் நாத்திகன்; அவர் ஆத்திகர். அதுவும் எப்பேர்ப்பட்ட ஆத்திகர்னு நினைக்கிறீங்க? பொல்லாத ஆத்திகர். அந்தக் காலத்து ‘வள்ளித் திருமணம்’ நாடகத்திலே ஒரு சீன் வரும் தேவானையோடு வள்ளியையும் முருகனுக்குச் சேர்த்து வைக்க நாரதர் வருவார். அப்போ நாரதர் மாமா வந்துட்டார், மாமா வேலை செய்ய ன்னு பபூன் வேடிக்கைக்காகச் சொல்வான் எல்லாரும் சிரிப்பாங்க. ஆனா கணேசய்யர் சிரிக்க மாட்டார்; கோவிச்சுக்குவார். சட்டுன்னு சீட்டை விட்டு எழுந்து காவலுக்கு வந்திருக்கும் போலீசாரைக் கூப்பிட்டு, ’நாரதரையாவது, ’மாமா’ன்னு இந்த பபூன் பழிக்கிறதாவது? உடனே இவனை அரெஸ்ட் செய்யுங்கள்’ன்னு அங்கேயே ஆர்டர் போட்டுவிடுவார். அவர் எங்கே, நான் எங்கே….. ? “இத்தனை நன்றியுணர்ச்சியோடு பேசுகிறீர்களே, அப்படி அவர் உங்களுக்கு என்னதான் செய்தார் ? அதைச் சொல்லுங்களேன் ?” “ஒண்ணா ரெண்டா, எத்தனையோ சேஞ்சார். ஒரு சமயம் ஐந்நூறு ரூபாய் பாக்கிக்காக ஒரு புண்ணியவான் என்னை அரெஸ்ட் செய்ய போலீஸ் வாரண்டோடு, வந்துட்டான். அப்போ என் கையிலே அஞ்சி ரூபாகூடக் கிடையாது. ஐந்நூறு ரூபாய்க்கு நான் எங்கே போவேன்? ஒருத்தனா ? அவனுக்குப் பயந்து எங்கேயாவது ஓடி ஒளிய? ஒரு நாடகக் கம்பெனியே ஓடி ஒளியணும்னா அது முடிகிற காரியமா? திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன் சமயத்துக்குக் கடவுளைக்கூடத் துணைக்கு அழைக்கக் கூடாதேன்னு திருதிருன்னு விழிச்சிக்கிட்டிருந்தேன். அப்போ அய்யர் கார் அந்தப் பக்கமா வந்ததுன்னு யாரோ சொன்னாங்க…” “எந்த அய்யர் கார் ?” “ஜட்ஜ் கணேசய்யர் கார்தான். அந்தக் கார் வந்து யார்கிட்டே என்ன சொல்லிச்சோ, என்ன கொடுத்ததோ, அது இன்னிக்கு வரையிலே எனக்குத் தெரியாது. ஆனா ஒண்ணு மட்டும் தெரியும் - ஐந்நூறு ரூபாய் கடன்காரன் அதுக்கப்புறம் என்னைக் கண்ட போதெல்லாம் சலாம்தான் போட்டுக்கிட்டிருந்தானே தவிர, ஒரு சல்லிக்காசுகூடச் கேட்கல்லே!” “அப்புறம் ?” “ஒரு காதல் விவகாரம். நான் காதலிச்ச ஒரு பெண்னைப் பார்த்து ஒரு சக நடிகர் சிரிச்சார். அது எனக்குப் பிடிக்கல்லே, அதுக்காக வந்த ஆத்திரத்தையும் அப்போதிருந்த வயசு வேகத்திலே என்னாலே அடக்க முடியல்லே. கையிலே எதுக்கோ வாங்கி வைச்சிருதத திராவகத்தை அவர் மேலே கொட்டிட்டேன். இப்போ நடந்த எம்.ஜி.ஆர். கேசிலேகூட அந்த நடிகரையும் ஒரு சாட்சியாச் சேர்ந்திருந்தாங்க. அவர் எனக்கு விரோதமாச் சாட்சி சொல்லமாட்டேன்னு சொல்லிட்டார்…” “ஏன்?” “இப்போ அவரும் நானும் நண்பர்கள்.” “அது எப்படி நண்பர்களானீர்கள் ?” “அதுவும் இதுவரையிலே புரியாத ஒரு புதிராய்த்தான் இருக்கு.” “என்னிக்கும் விரோதின்னு எனக்கு இது வரையிலே யாரும் இருந்தது கிடையாது; அதே மாதிரி என்னிக்கும் நண்பன்’ன்னும் எனக்கு இது வரையிலே யாரும் இருந்தது கிடையாது. சுருக்கமாச் சொல்றேன். என்னதான் தலைகீழ நின்னாலும் மனுஷன் தெய்வமாக முடியுமா ? மனுஷன் மனுஷனாத்தானே இருக்க முடியும்? அது மட்டுமா ? ஒரு மனுஷன் சேஞ்ச தப்புக்கு அவன் மனசு அவனுக்குக் கொடுக்கிற தண்டனைக்கு மேலே வேறே யாரும், எந்தக் கோர்ட்டும் கொடுத்துட முடியாதுங்கிறது என் அனுபவத்திலே நான் கண்ட உண்மை.” “அது சரி, இந்த விஷயத்தில் கணேசய்யர் உங்களுக்கு எப்படி உதவினார் ?” “அதுவும் எனக்குத் தெரியாது. அந்தக் கேஸ் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போச்சு. அந்தப் பக்கமா கணேசய்யர்கூட வரல்லே, அவர் காரிலே வேறே யாரோ வந்து, யாரையோ பார்த்து ஏதோ சொன்னாங்களாம்; நான் ரிலீஸாயிட்டேன்” “ஆச்சரியமாயிருக்கிறதே?” “அதைவிட ஆச்சரியம் இன்னொண்ணு இருக்கு. அதையும் சொல்லிடறேன். அந்த நாளிலே திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலம் எங்கே நடந்தாலும் நான்தான் ஊர்வலத்துக்கு முன்னாலே குதிரை மேலே உட்கார்ந்து கொடி பிடிச்சிக்கிட்டுப் போவேன். அப்போ மாநாடாயிருந்தாலும் சரி, ஊர்வலமாயிருந்தாலும் சரி, அல்லது நாடகமாகவே இருந்தாலும் சரி, எதுவுமே கலகம் கலாட்டா இல்லாம நடக்காது. அதுக்கெல்லாம் காரணம் யாராயிருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க ? காங்கிரஸ் காரருங்க தான்! ஏன்னா, இன்னிக்கு எப்படியிருந்தாலும் அன்னிக்கு அவங்கதானே திராவிடர் கழகத்துக்கு எதிர்க்கட்சி ? கட்சி - எதிர்க்கட்சின்னு இருந்தா கலகம், கலாட்டா இல்லாம எப்படி இருக்கும்? கலகம், கலாட்டா இல்லேன்னா கட்சி எப்படி வளரும், தலைவருங்கதான் எப்படி வளருவாங்க ? பாவம், தொண்டர்கள் அவங்கதான் எந்தத் தலைவர் எப்போப்போ என்னென்ன சொல்றாரோ, அதை அப்படியே நம்பி, ஏதோ ஒரு வெறியிலே அவங்க சொல்றபடியே சேஞ்சிட்டு, ஒண்ணு சாவாங்க. இல்லேன்னா, குடும்பத்தை நடுத்தெருவிலே விட்டுட்டு ஜெயிலுக்குப் போவாங்க. அந்த மாதிரி வெறி பிடிச்ச காங்கிரஸ் தொண்டர் ஒருத்தர் அன்னிக்கு என் குதிரைக்குப் பின்னாலே வந்துகிட்டிருந்தார். வந்தவர் சும்மாவும் வரல்லே, ஒரு குச்சியை எடுத்து அந்தக் குதிரைக்குப் பின்னாலே குத்தத் தகாத இடத்திலே குத்திக்கிட்டே வந்தார். அப்படிக் குத்தினா, அது மிரண்டு முன்னங்கால்கள் ரெண்டையும் தூக்கும், நான் குப்புற விழுவேன், அதுவே எனக்குக் குழி பறிச்சிடுங்கிறது அவர் எண்ணம். பைத்தியக்காரர், இந்தக் குதிரை ஒட்டற வித்தையிலே நான் அவரைவிட கெட்டிக்காரன்கிறது அவருக்குத் தெரியாது. கடிவாளத்தை இழுத்துப் பிடிக்கிற விதத்திலே பிடிச்சா, குதிரை முன்னங் கால்களைத் தூக்கறதுக்குப் பதிலா பின்னங்காலைத் தூக்கி உதைக்கும் அந்த வித்தையை எடுத்ததும் செய்துட வேணாம்னு, ’மரியாதையா எட்டிப் போய்யா! இல்லேன்னா குதிரை உதைக்கும். பல்லெல்லாம் ஒண்ணு விடாமப் போனாலும் போகும்’னு அவரை ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா எச்சரிச்சிப் பார்த்தேன்….” “கேட்டாரா ?” “எங்கே கேட்டார் ? அவர் பாட்டுக்கு அவர் கற்ற வித்தையைக் காட்டிக்கிட்டே வந்தார். என்னைக் கவிழ்க்க எதுக்கும் ஒரு எல்லை உண்டு இல்லே, என் பொறுமை அந்த எல்லையைத் தாண்டிடிச்சு. நான் கற்ற வித்தையை நான் காட்டினேன் - அவ்வளவுதான், குதிரை எட்டி ஒரே உதைதான் உதைத்தது. அந்த உதை படாத இடத்திலே பட்டு ஆளே அவுட் டாயிட்டார்!” “அவுட்டாயிட்டார் என்றால்……? “செத்தே போயிட்டாருங்க!” “அட, பாவமே!” “எனக்கும் பாவமாத்தான் இருந்தது. அந்த மாதிரி ஒருவிபத்து ஒரு தலைவருக்கு நேர்ந்திருந்தாக் கூட அதுக்காக நான் அவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஏன்னா, அவங்க விஷயம் வேறே; அவங்களுக்கு எது நடந்தாலும் அதாலே அவங்க குடும்பம் நடுத்தெருவிலே நின்னுடாது. தொண்டனுங்க விஷயம் அப்படியில்லே, கொடி பிடிக்கிறதையும், ’வாழ்க, ஒழிக’ன்னு கத்தறதையும் தவிர வேறே என்னத்தைக் கண்டாங்க அவங்க ?” “ஏன் காணவில்லை ? போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு, ஜெயில், தூக்கு…” “ஆமாமாம், அதெலலாம் வேறே இருக்கவே இருக்கு. அந்த அப்பாவித் தொண்டராலே நீங்க கடைசியாச் சொன்ன அந்தத் தூக்குத் தண்டனையே அப்போ எனக்குக் கிடைச்சிடும்போல இருந்தது…” “ஏன், அது தற்செயலாக நேர்ந்த விபத்துதானே ?” “விபத்துத்தான்! எதிர்க் கட்சிக்காரன் அவ்வளவு சுலபமா அதை விட்டுடுவானா ? அதை வைத்து என்னைக் கொலைக் குற்றவாளியாக்கப் பார்த்தான்… “அப்போதும் கணேசய்யர் கார்தான் அந்தப் பக்கம் வந்து…” “ஆமாம், அதுதான் வந்தது; எனக்கு விடுதலையும் வாங்கித் தந்தது.” “பிறகு…. ?” “பிறகு என்ன ? பாவிகளை மன்னித்து ரட்சிக்க இயேசுபிரான் இந்த உலகத்தில் பிறந்ததுபோல அவர் என்னை மன்னித்து ரட்சிக்கப் பிறந்திருப்பதாகவே நான் நினைச்சேன்; வழிபட்டேன். அந்தச் சமயத்திலேதான் ரெண்டாவது உலக மகா யுத்தம் வந்தது. எங்கே பார்த்தாலும் விறகுப் பஞ்சம். அந்தச் சமயம் பார்த்து ஒரு சாயபுகாண்ட்ராக்ட்டர் எங்களைக் கும்பகோணத்துக்குக் கூப்பிட்டார்; போனோம். அங்கே நாங்கள் தங்குவதற்காக அவர் பார்த்து வைத்திருந்த வீடு ஒரு பிராமணர் வீடு. அவர் எங்களைப் பார்த்ததும் ’விரட்டு, விரட்டு’ன்னு விரட்ட ஆரம்பிச்சார். ’ராட்சசப் பசங்க’ன்னு கத்தினார். அன்னிக்கு அங்கே ஒரு ’தேவாசுர யுத்த’மே நடந்தது. நாங்க எதுக்கும் சளைக்கல்லே, அவர் வீட்டை விட்டும் போகல்லே. அதோடு நிற்காம அந்த வீட்டு உத்தரங்களையே அங்கிருந்து ஒண்னும் இங்கிருந்து ஒண்னுமா எடுத்து, உடைச்சி விறகாக்கி அடுப்பெரிய விட்டோம்…” “அநியாயமாகவல்லவா இருக்கிறது. இது ?” ’இல்லேன்னா. எங்க வயிறு எரியறேங்கிறதே!" “அதற்காக… ? “நாங்க செய்ததும் தப்புத்தான், என்ன செய்யறது? அப்போ காலம் அப்படியிருந்தது.” “சரி, அப்புறம் ?” “எதிர்பாராத விதமா கணேசய்யர்கிட்டேயிருந்து ஒரு ஆள் வந்து, ’அய்யர் உங்களை உடனே அழைச்சிக்கிட்டு வரச் சொன்னாருன்னு சொன்னான். அவ்வளவுதான்; அந்தக் ’கண் கண்ட தெய்வ’த்தைக் காண அப்பவே நான் அவனோடே புறப்பட்டுப் போனேன்.” திருப்பதியில் திருடினேன்! என்னைக் கண்டதும், ‘வாடா, வா உனக்கு ஒரு நல்ல சேதி’ என்றார் கணேசய்யர். ‘கெட்ட சேதியாயிருந்தாலும் என்னைப் பொறுத்த வரையிலே நல்ல சேதியா ஆக்கிடுவீங்களே, நீங்க!’ என்றேன் நான். ’அப்படி நீ தப்பா நினைச்சுடாதே, அது என்னாலே முடியாத காரியண்டா சட்டமே ஒரு மனிதனின் இயற்கையான உணர்ச்சிகளுக்கு ஓரளவு மதிப்பளித்து, அவன் குற்றத்தை மன்னிக்கும் வகையில்தான் செய்யப்பட்டிருக்கிறது. அந்த இயற்கையையும் மீறி அவன் குற்றம் செய்யும் போதுதான் அது அவனைத் தண்டிக்கிறது. அதையேதான் உன் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லார் விஷயத்திலும் நான் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செய்து வருகிறேன். படித்தவர்களுக்கு இந்த முறையில் என்னதான் செய்தாலும் அது பெரிதாகத் தோன்றுவதில்லை; அப்படி என்ன, பிரமாதமாச் செய்து கிழிச்சிட்டான் ’னு ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிவார்கள். படிக்காதவன் நீ; மனிதாபிமானத்தோடு நான் செய்த சில காரியங்கள் உனக்குப் பெரிதாகப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் சந்தோஷம். இப்போ உன்னை அழைத்த விஷயம் என்னன்னா, இரண்டாவது உலக மகாயுத்தந்தான் மூண்டுவிட்டதே, தஞ்சை மாவட்டம் முழுவதும் போர்ப் பிரசாரம் செய்யும் பொறுப்பைப் பிரிட்டிஷார் என்னிடம் ஒப்படைச்சிருக்காங்க… அந்த வகையிலே நீ எனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா ?" “முடியுமான்னு இன்னொரு தடவை கேட்டுடாதீங்க, என் மனசு தாங்காது. என்னாலே செய்ய முடியும்னு நீங்க நினைக்கிற உதவியை உதவி’ன்னு சொல்றதுகூட எனக்குப் பிடிக்கல்லே, ‘கட்டளை’ன்னு சொல்லுங்க. அந்தக் கட்டளையை வாயாலோ கையாலோ கூட எனக்கு நீங்க இடவேணாம், காலாலே இட்டாலே போதும், தலையாலே செய்யக் காத்திருக்கேன்.’ ’பிரிட்டிஷார் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் எனக்கு இடுவது கட்டளை. நானோ உத்தியோக வர்க்கத்தைச் சேர்ந்தவன்; உன்னிடம் நான் எதிர்ப்பார்ப்பது உதவி. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். உதவியென்றால் வேறு எந்த உதவியும் இல்லை; நாடக உதவிதான்… ஆமாம், உங்கள் கட்சி வெள்ளைக்காரன் கட்சிதானே ? ’வெறும் வெள்ளைக்காரன் கட்சிகூட இல்லே, வெள்ளைக்காரனுக்கு வால் பிடிக்கிற கட்சின்னு காங்கிரஸ்காரங்க சொல்லிக்கிட்டிருக்காங்களே, நீங்க. கேட்கலையா ? ’அவர்கள் எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும்: தலைவர் ஈ.வே.ரா.வும் தளபதி அண்ணாதுரையும் நீ யுத்தப் பிரசார நாடகம் நடத்துவதற்காக உன்னை எதிர்த்து அவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்களே? ஏன் அப்படிக் கேட்கிறேன்னா, என்னாலே உன் பிழைப்பு கெட்டு விடக் கூடாதேன்னுதான்….!" ‘அதெல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டாங்க, இப்போ அவங்களே அந்தப் பிரசாரம்தான் செஞ்சிக்கிட்டிருக்காங்க!’ ’நீ ஒரு பிரசார நாடகத்துக்கு என்ன எதிர் பார்க்கிறே? ‘உங்க இஷ்டங்க, என்ன கொடுத்தாலும் வாங்கிக்கிறேனுங்க.’ ‘நீ நடத்தப்போற பிரசார நாடகம் எனக்காக இல்லே; பிரிட்டிஷ்காரருக்காக. என்ன வேணும்னு சொல்லு: நான் அவர்களுக்கு எழுதணும்…’ “நூறோ, அம்பதோ கொடுங்களேன்!’ ’அடப்பாவி நாடகத்திலே என்னவெல்லாமோ பேசிச் சக்கைப்போடு போடறே, சொந்த விஷயத்திலே இத்தனை அசடாயிருக்கியே? கொஞ்சம் சமர்த்தா இருக்கப் பாருடா! சம்சாரி நீ; கொஞ்சம் பணம் பண்ணி வைத்துக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் உனக்கு. நான் ஆயிரம், ஆயிரத்தைந்நூறு ஆகுமாம்னு எழுதி வைக்கிறேன். அதாவது, இரண்டு மணி நேர நாடகம்னா ரூபா ஆயிரம்; மூணு மணி நேரம் தொடர்ந்து நடத்தணும்னா ரூபா ஆயிரத்து ஐந்நூறு. அதுக்குக் குறைஞ்சா கட்டுப்படியாகாதாம். அதுகூட துரைமார்கள் சண்டையிலே மாட்டிக் கொண்டிருக்கிறதாலே இந்த சலுகையாம்; இல்லேன்னா இதுக்கு மேலேயும் ஆகுமாம்னு மேலும் ஒரு போடு போட்டு வைக்கிறேன். அவர்களில் யாராவது வந்து உன்னைத் தனியாச் சந்தித்துக் கேட்டா நீயும் அப்படியே சொல்லு, என்ன ? ’அய்யர் இப்படிக் கேட்டா நான் என்னத்தைச் சொல்வேன்? ’தெய்வம் வெளியே இல்லே, நமக்குள்ளேதான் இருக்கு’ன்னு பெரியவங்க சொல்லக் கேட்டிருக்கேன். இன்னிக்குத்தான் அந்தத் தெய்வத்தை நான் நேருக்கு நேராப் பார்க்கிறேன்’னு சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டேன். ’சரி, போய் வா! இனிமே நீ எங்கெங்கே, எப்போப்போ நாடகம் போடணும்னு கடிதங்களும் செக்குகளும் தொடர்ந்து உனக்கு வந்துகிட்டிருக்கும். அந்தக் கடிதத்திலே உள்ளபடி நீ நாடகம் போடணும். சமயத்திலே நானும் எங்கேயாவது வந்து பார்ப்பேன்; அங்கங்கே உள்ள அதிகாரிகளும் வந்து பார்ப்பார்கள். போய் வர்றியா? ‘சரிங்க’ன்னு தலையை ஆட்டிவிட்டுத் திரும்பினேன். ’நில்லுடா, வரேன்’னு அய்யர் உள்ளே போனார். கையிலே பெரிய பெரிய லட்டு வடையோடு திரும்பி வந்து, ’உனக்கு ஏழுமலையானைப் பிடிக்கலேன்னாலும் அவனுடைய பிரசாதங்களைப் பிடிக்குமோ இல்லையோ?’ன்னார். ’உங்க கையாலே எனக்கு விஷத்தைக் கொடுத்தாலும் பிடிக்கும்’ னேன் நான். ‘பொழைச்சிக்குவேடா’ ன்னு சிரிச்சுக்கிட்டே பிரசாதத்தைக் கொடுத்தார்; வாங்கிக்கிட்டுத் திரும்பினேன். அப்போ நான் திருப்பதியிலே திருடின சமாசாரம் ஒண்ணு நினைவுக்கு வந்தது. அதையும் அய்யர்கிட்டே சொல்லி விட்டுப் போயிடலாம்னு திரும்பினேன்…" “என்னதான் நல்லவராயிருந்தாலும் ஒரு ஜட்ஜ்கிட்டே எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாதுங்கிறது, இல்லையா?” “எனக்கு அப்போ இருந்த சந்தோஷம் அப்படி! இப்போ நீங்க சொன்ன நியாயம் எனக்கும் அப்போ திடீர்னு தோணவே, ’இன்னொரு சமயம் பார்த்துக்கலாம்னு பேசாம வந்துட்டேன்!” என்று ராதா சற்று நிறுத்தி, “எனக்கு ஒரு சந்தேகம்…” என்று இழுத்தார். “என்ன சந்தேகம்?” என்றேன். “இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் நான் வெளியே சொல்றதாலே அய்யருடைய பெருமை குறையுமா?” “ஏன், அவர் இன்னும் ஜீவியவந்தராயிருக்கிறாரா?” “எங்கே இருக்கிறார் ? அப்படிப்பட்ட அபூர்வ மனுஷருங்களெல்லாம் தான் இந்த உலகத்தை விட்டுப் பொழுதோடு போயிடறாங்களே!” + “போயிருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களெல்லாம் அவருடைய பெருமைக்கு எந்தவிதமான இழுக்கையும் தேடி வைக்காது. அப்படி ஓர் உத்தமரை இப்போதெல்லாம் எங்கே பார்க்க முடிகிறது?” என்றேன் நான். “என் கவலை இதுதான். இதனாலே என்பெருமை குலைந்தாலும் அவருடைய பெருமை குலையக் கூடாது குலைவதாயிருந்தால் இந்த விஷயங்களைத் தயவு செய்து நீங்கள் வெளியிடக் கூடாது….” “அந்தக் கவலை எங்களுக்கும் இருக்காதா? கிட்டத்தட்ட ‘சத்திய சோதனை’ போல், உள்ளது உள்ளபடி வந்து கொண்டிருக்கும் இந்த வரலாற்றுத் தொடரில் இதை மட்டும் மறைப்பானேன்? வெளியிட்டே விடுவோம்…” “சரி, செய்யுங்கள்.” “அப்புறம்…. ?” “அப்புறம் என்ன, என்னைப் பிடித்த வறுமையே என்னை விட்டு ஒழிந்தது. பட்டி தொட்டியெல்லாம், மூலை முடுக்கெல்லாம் கழகப் பிரசார நாடகத்தோடு யுத்தப் பிரசார நாடகங்களும் கலந்து நடந்தன. பெயர், புகழ், பணம், செல்வாக்கு அத்தனையும் என்னைத் தேடி ஓடி வந்து குவிந்தன. மதுரை சவுந்தர பாண்டிய நாடார், தூத்துக்குடி தனுஷ்கோடி நாடார், விருதுநகர் வி.வி. ராமசாமி நாடார் போன்ற பல பெரிய புள்ளிகள் எனக்கு அறிமுகமானார்கள், அந்தரங்க நண்பர்களானார்கள். கழகத்தையும் என்னையும் கட்டி வளர்த்தார்கள்…” “அதென்ன, எல்லாம் ஒரே நாடார்களாகவே இருக்கிறார்கள் ?” “அந்த நாளில் மேல் சாதிக்காரர்கள் அரிசனங்களுக்கு இழைத்து வந்த கொடுமையை விட நாடார்களுக்கு இழைத்து வந்த கொடுமைதான் அதிகம். அதனாலேயே திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்கு அவங்க பங்கே அப்போ அதிகமாயிருந்தது. காளிமார்க் சோடா கம்பெனி பரமசிவ நாடார் இருக்காருங்களே, அவர் அப்போ என் பேரிலே ’எம்.ஆர்.ராதா சோடா’ன்னு ஒரு தனி சோடாவே போட்டு அந்தப் பக்கத்திலே விற்க ஆரம்பிச்சார்!” “அது வியாபார நோக்கமாயிருக்கும்; திராவிடர் கழகத்தார் அத்தனைபேரும் ’எம்.ஆர்.ராதா சோடா கொடு’ன்னு கேட்டு வாங்கிக் குடித்திருப்பார்களே ?” “அதுக்கு என்னைவிட எத்தனையோ பெரிய பெரிய தலைவர்களெல்லாம் இருந்தாங்களே ?” “சரி. அந்தத் திருப்பதி விஷயம்…” “அதுதான், அங்கே ஏதோ திருடின விஷயம்…” “ஓ, அதைக் கேட்கிறீங்களா ? அடுத்த வாரம் வாங்க, சொல்றேன்” போர்வாள் “யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை நாடகக் கம்பெனியோடு ,நான் ஒரு சமயம் திருப்பதிக்குப் போயிருந்தேன்…” “அது எப்போது ? திருப்பதி வேங்கடேசப் பெருமானுக்கு வெடி வைப்பதாக நினைத்துக் கொண்டு இருந்த வீட்டுக்கே வெடி வைத்துக் கொண்டீர்களே, அப்போதா ?” “இல்லை, அதுக்கு முந்தின்னு நினைக்கிறேன். சுவாமி தரிசனத்துக்காக எல்லாருமாச் சேர்ந்து மலைக்குப் போயிருந்தோம். அங்கே வைச்சிருந்த சந்தனக் கலவையின் வாசனை என் மூக்கைத் துளைத்தது. இவ்வளவு வாசனை வீச இதிலே என்னவெல்லாம் சேர்த்திருப்பாங்களோ ?”ன்னு நினைச்சேன். அவங்களாக் கொடுத்தா தொட்டுச் சேவிச்சிக்கிற அளவுக்குத்தான் கொடுக்கப் போறாங்க, அதுக்கு மேலேயா கொடுக்கப் போறாங்க?‘ன்னு தோணுச்சி. அந்தச் சமயம் எனக்கென்னவோ அதிலேயே குளிச்சி எழுந்தாத் தேவலைன்னு பட்டுது. அக்கம் பக்கம் பார்த்து யாருக்கும் தெரியாம அதிலே பாதியை வழிச்செடுத்து மடியிலே வைச்சுக் கட்டிக்கிட்டேன். என் போதாத காலம், உடனே அதைக் கவனிச்சிவிட்ட அர்ச்சகர்களிலே ஒருத்தர், “இங்கே வைச்ச சந்தனத்திலே பாதியை எவனோ திருடி எடுத்து வைச்சிக்கிட்டான்; இந்த இடத்தை விட்டு வெளியே போறதுக்கு முந்தி அவனைப் பிடிக்கணும். எல்லாக் கதவையும் சாத்துங்க!’ன்னு கத்த ஆரம்பிச்சிட்டார். ’இது என்ன வம்பு ?”ன்னு நான் மெல்ல நழுவினேன். அதுக்குள்ளே எல்லாக் கதவையும் ஒண்ணொண்ணா சாத்த ஆரம்பிச்சிட்டாங்க. ’அகப்பட்டுக்கிட்டா அவ்வளவுதான்’னு, ’தப்பினோம், பிழைச்சோம்னு’ தலை தெறிக்க மலையடிவாரத்துக்கு ஓட்டமும் நடையுமா வந்துட்டேன்." “சந்தனம்… ?” “விடுவேனா? அது என் மடியிலேயே இருந்தது. ’ஶ்ரீ பாதசாகரம்’னு அந்தக் கலவைச் சந்தனத்துக்குப் பேராம். பச்சைக் கற்பூரம், அத்தர், அது இதுன்னு என்னவெல்லாமோ அதிலே சேர்த்திருந்தாங்க. சுவாமி தரிசனம் செய்யறச்சே இந்த பக்தருங்க ’கோவிந்தா, கோவிந்தா’ன்னு ஓயாம, ஒழியாமச் சத்தம் போடறாங்க, இல்லையா ? அதாலே பெருமாளுக்குத் தலையை வலிக்க ஆரம்பிச்சுடுமாம். அந்த வலியைப் போக்கறதுக்காக இந்தச் சந்தனத்தைக் கலந்து அவர் மேலே பூசுவாங்களாம். வாரத்துக்கு ஒரு நாள் அதை வழிச்சி எடுத்து, சின்னச் சின்னப் பொட்டலங்களாகக் கட்டி, வேணுங்கிற பக்தர்களுக்கு விலைக்கு விற்பாங்களாம்…” “திருப்பதி ’ரேட்’டிலே பார்த்தால் நீங்கள் எடுத்துக் கொண்டு வந்துவிட்ட சந்தனமே ஐந்நூறு, ஆயிரம் என்று விலை போயிருக்கும் போலிருக்கிறதே ?” “யார் கண்டது, போனாலும் போயிருக்கும். அதுக்குள்ளே அங்கே என்னைக் காணாத பொன்னுசாமிப் பிள்ளை சும்மா இருப்பாரா ? சந்தனத் திருடன் நானாத்தான் இருக்கும்”கிறதை அவர் எப்படியோ ஊகிச்சிக்கிட்டுக் கீழே வந்து, ’ஏண்டா, இப்படிக்கூடச் செய்யலாமா ?’ன்னார். ’நாமெல்லாம் காசு கொடுத்து வாங்கிக் கட்டுப்படியாகிற சமாசாரமா இது ’ன்னு, நான் அவர் மேலேயே கொஞ்சம் சந்தனத்தை எடுத்துப் பூசி, ’எப்படி இருக்கு?’ன்னு கேட்டேன். அது அவர் சூட்டைத் தணிக்கலேன்னாலும் என் சூட்டைக் கொஞ்சம் நாள் தணிச்சி வந்தது. எல்லாம் தீர்ந்து அதை எடுத்து வைச்சிக்கிட்டு வந்த வேட்டியைச் சலவைக்குப் போட்டேன். ஒரு தடவையில்லே, பல தடவை போட்டேன். வேட்டி கிழியற வரையிலே அந்தச் சந்தன வாசனை போகவே யில்லே!" “சந்தன வாசனையும் போகவில்லை; அதன் நினைவும் உங்கள் மனசை விட்டுப் போகவில்லை. அப்புறம்… ?” “நம்ம சின்னராஜூ நாடகத்தாலே சென்னையிலே கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது…” “யார் அந்தச் சின்னராஜ ?” “இப்போ மேலவைத் தலைவராயிருந்துக்கிட்டிருக் கிறாரே, சிந்தனைச் சிற்பி சிற்றரசு - அவருக்குப் பேர் அப்போ அதுதான். அவர் எழுதிய ‘போர்வாள்’ நாடகத்திலே புரட்சியை முன்னின்று நடத்தும் ’அன்பானந்தனாக நான் வருவேன்….” அதே வேடத்தை சி.பி.சி., சி.என்.ஏ., கூட.!ஏற்றிருக்கிறார்கள் போலிருக்கிறதே?" “ஆமாம், பெரியாரைத் தவிர பாக்கி எல்லாருமே அந்த வேடத்தைப் போட்டிருங்காங்கன்னு கூடச் சொல்லிவிடலாம் - அவ்வளவு பிரபலமான வேடம் அது. ஏன்னா, ’திராவிட நாடு லட்சியமே அந்த நாடகத்திலேதான் அப்போ நிறைவேறிக்கிட்டிருந்தது…” “அது எப்படி? “புரட்சித் தலைவன் அன்பானந்தன் வேடம் போட்டுக்கிட்டு, தோள்மேலே திராவிடர் கழகக் கொடியை ஏந்திக்கிட்டு, மொதல்லே நான் ஒரு சலவைத் தொழிலாளி கிட்டே போவேன். சலவைத் தொழிலாளிகளே! சாக அடித்தான் சமரச நோக்கம் உடைய ஒருவரை. அந்த மாசு படிந்த மன்னனின் அழுக்கை வெளுக்கிறீர்கள் நீங்கள்; அவனோ உங்கள் மாசுபடிந்த மனத்தைத் துடைத்தானில்லை. இன்றே புரட்சி செய்யுங்கள், புறப்படுங்கள்!’ என்று ஒவ்வொரு தொழிலாளியிடமும் சென்று பேசிப் புரட்சிக் கனலை மூட்டுவேன். அவர்களும் என்னுடன் கொடியேந்திப் புறப்படுவார்கள். எங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவன் போல் முடிவேந்தன் ஒருவன் கையில் போர்வாளுடன் சிம்மாசனத்தில் வீற்றிருப்பான். அவன் எங்களைக் கண்டதும் அதைத் தூக்கி என்னிடம் கொடுத்து விடுவான். அவ்வளவுதான்: ‘வீழ்ந்தது முடியாட்சி; எழுந்தது குடியாட்சி! திராவிட நாடு திராவிடருக்கே!’ என்று நான் முழங்குவேன். என்னைத் தொடர்ந்து, ‘திராவிட நாடு வாழ்க திராவிட நாடு வாழ்க!’ என்று எல்லாரும் முழங்குவார்கள். திருச்சி, தஞ்சை இந்தப் பக்கமெல்லாம் வெற்றி முரசும், வீர முரசும் கொட்டிய இந்த நாடகத்தைச் சென்னையிலும் நடத்திப் பார்த்து விடவேணும்னு நினைச்சார் என்.வி.என்…” “எந்த என்.வி.என்…?” “இப்போ தொழிலாளர் நல அமைச்சராயிருக்கிறாரே மாண்புமிகு என்.வி.நடராசன், அவரேதான். அவரும் டி.எம். பார்த்தசாரதியும்…” “தி.மு.க.வின் ஆரம்ப காலத்தில் எப்போது பார்த்தாலும் அண்ணாவுடன் இருப்பாரே, அந்தப் பார்த்தசாரதியா ?” “அவரேதான்; ’தி.மு.க வரலாறு’ன்னு ஒரு புத்தகம் எழுதி, அதற்காக எழுத்தாளர் சங்கத்தின் கேடயத்தைக் கூட வாங்கியிருக்கிறார் போலிருக்கிறதே அவர் ?” “ஆமாமாம், தி.மு.க.வின் வளர்ச்சிக்காக முதன் முதலில் ‘மாலை மணி’ என்று ஒரு நாளிதழைத் தொடங்கி வைத்தவர் கூட அவர்தானே ? அதற்கு அண்ணாதுரை மட்டுமல்ல, கருணாநிதிகூடக் கொஞ்ச நாட்கள் ஆசிரியராயிருந்ததாக ஞாபகம்…” “அந்தப் பார்த்தசாரதியும் என்.வி.என்.னும் இன்னும் சிலரும் திருச்சிக்கு வந்து என்னைப் பார்த்தாங்க; நாடகம் நடத்தக் கூப்பிட்டாங்க. எனக்கும் அப்போ சென்னையிலே நாடகம் போட்டா தேவலைன்னு தோணுச்சி; வந்தேன். சவுந்தரிய மகாலிலே நாடகம். இழந்த காதல், விமலா அல்லது விதவையின் கண்ணீ ர், லட்சுமிகாந்தன் இந்த மாதிரி நாடகங்களைப் போட்டுக்கிட்டிருத்த வரையிலே எந்த வம்பும் இல்லே; போர்வாள்’னு போட்டது தான் தாமதம், சர்க்கார் அந்த நாடகத்தை நடத்தக் கூடாதுன்னு தடை போட்டுட்டாங்க…” “எந்த சர்க்கார், பிரிட்டிஷ் சர்க்காரா ?” “அவங்க போட்டிருந்தாலும் அதிலே ஓர் அர்த்தம் இருந்திருக்கும். ஒரு பக்கம் ஜனநாயகத்தைக் கட்டி வளர்த்தாலும், இன்னொரு பக்கம் முடியாட்சியை இன்னிய வரையிலே கைவிடாம இருக்கிறவங்க அவங்க. அந்த சர்க்கார் ‘போர்வாள்’ நாடகத்தைத் தடை செய்யல்லே; அதுக்குப் பதிலா அப்போ சென்னையிலே நடந்துக்கிட்டிருந்த பிரகாசம் சர்க்கார் தடை விதிச்சது…” “பிறகு… ?” “அப்போதைக்கு அந்தத் தடையை மீற வேணாம்னு வேறே நாடகங்களை நடத்த ஆரம்பிச்சோம். ஏன்னா, அப்போ நாட்டு நிலவரம் நல்லாயில்லே. எங்கே பார்த்தாலும் ஒரே கம்யூனிஸ்ட் கலாட்டா, குழப்பம். பொன்மலையிலே கம்யூனிஸ்டுகளைச் சுட்டுத் தள்றாங்கன்னு ஒரே புரளி, பீதி. பிரகாசம் வேறே ஒரு கம்யூனிஸ்ட்டைக்கூட வெளியே விடாம பிடிச்சி உள்ளே தள்ளிக்கிட்டே இருந்தார். இந்தச் சமயத்திலே என்கிட்டேகூட ஒருத்தர் வந்து, ’நீங்க டிராமா தொடங்கறதுக்கு முந்தி ஒரு திரை விடறீங்களே, அந்தத் திரையைக் கூடக் கழற்றிச் சுருட்டிக் கொஞ்ச நாள் உள்ளே வைச்சுடுங்க இல்லேன்னா, உங்களையும் கம்யூனிஸ்டுன்னு பிரகாசம் உள்ளே போட்டுட்டாலும் போட்டுடுவார்னார்…” “அப்படி என்ன இருந்தது அந்தத் திரையிலே… ?” “திராவிட நாடு திராவிடருக்கேன்னு இருந்திருக்கும்னு நினைக்கிறீங்களா ? அதுதான் இல்லே; ’உலகப் பாட்டாளி மக்களே, ஒன்றுபடுங்கள்’னு இருந்தது…” “கம்யூனிஸ்ட் கட்சியிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டா, என்ன?” “இல்லாதவன் யாராயிருந்தாலும் அவனுக்கு நிச்சயம் அதிலே ஓர் ஈடுபாடு இருக்கத்தானே இருக்கும்?” “சரி, அப்புறம்… ?” “கம்யூனிஸ்ட் தலைவர்களெல்லாம் வழக்கம் போல ’அண்டர்கிரவுண்டு’க்குள்ளே போக ஆரம்பிச்சிட்டாங்க. அவர்களிலே ஒருத்தர் ஜீவானந்தம். அவரை ஒரு பிராமண நண்பர் என்கிட்டே அழைச்சிக்கிட்டு வந்து, நீங்கதான் இவருக்கு அடைக்கலம் கொடுக்கணும்’னார். சரி’ன்னு அவரை நான் மேக்அப் ரூமுக்கு அனுப்பி, மொதல்லே தலையை மொட்டையடிக்கச் சொன்னேன். அப்புறம் நெற்றியிலும் கைகளிலும் பட்டைப் பட்டையா விபூதியைப் பூசி, தியேட்டர் முதல் வரிசையிலேயே அவரை உட்கார வைத்து, தைரியமா நாடகம் பார்க்கச் சொன்னேன்.” நண்பர் ஜீவானந்தம் “உங்கள் நாடகத்துக்கு அரசாங்கத்தார் தடை விதிப்பதும, அந்தத் தடையை மீறி நீங்கள் நாடகம் நடத்துவதும்தான் எப்போதும் சர்வசாதாரணமாயிருந்து வந்திருக்கிறதே, நீங்கள் என்ன செய்தீர்கள்? தடையை மீறிப் ‘போர்வாள்’ நாடகத்தை நடத்தினீர்களா ?” “இல்லே, அதிலே வேடிக்கை என்னன்னா, அந்தத் தடையைப் போட்டவங்க பிரிட்டிஷ் சர்க்கார் கூட இல்லே, அப்போ சென்னையிலே நடந்துகிட்டிருந்த பிரகாசம் சர்க்கார்தான் போட்டது.” “அவருடைய ஆந்திராவுக்கும் சேர்த்துத்தானே உங்கள் ‘போர்வாள்’ நாடகத்தில் நீங்கள் ‘திராவிட நாடு’ கேட்டுக் கொண்டிருந்தீர்கள்? அதற்கு அவர் ஏன் தடை விதிக்க வேண்டும்?” “யாருக்குத் தெரியும், நாங்களும் அப்போதைக்கு அதை மீற விரும்பாம, வேறே நாடகங்களை நடத்த ஆரம்பிச்சோம். ஏன்னா, அப்போ நாட்டு நிலவரம் நல்லாயில்லே. எங்கே பார்த்தாலும் ஒரே கம்யூனிஸ்ட் கலாட்டா, குழப்பம் பொன் மலையிலே கம்யூனிஸ்ட்டுகளைச் சுட்டுத் தள்றாங்கன்னு ஒரே புரளி, பீதி! பிரகாசம் வேறே ஒரு கம்யூனிஸ்ட்டைக்கூட வெளியே விடாம பிடிச்சி உள்ளே தள்ளிக்கிட்டே இருந்தார். அந்தச் சமயத்திலே என்கிட்டேகூட ஒருத்தர் வந்து, ’நீங்க டிராமா தொடங்கறதுக்கு முந்தி ஒரு திரை விடறீங்களே, அந்தத் திரையைக்கூடக் கழற்றிச் சுருட்டிக் கொஞ்ச நாள் உள்ளே வைச்சுடுங்க. இல்லேன்னா, உங்களையும் கம்யூனிஸ்ட்டுன்னு பிரகாசம்காரு உள்ளே போட்டுட்டாலும் போட்டுடுவார்’ன்னார்.” “அப்படி என்ன இருந்தது அந்தத் திரையிலே.” “திராவிட நாடு திராவிடருக்கேன்னு இருந்திருக்கும்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்லே ’உலகப் பாட்டாளி மக்களே, ஒன்றுபடுங்கள்’னு இருந்தது.” “கம்யூனிஸ்ட் கட்சியிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டா, என்ன ?” “இல்லாதவன் யாராயிருந்தாலும் அவனுக்கு அந்த நாளில் அதிலே ஒர் ஈடுபாடு இருக்கத்தான் இருந்தது.” “சரி, அப்புறம்.. ?” “கம்யூனிஸ்ட் தலைவர்களெல்லாம் வழக்கம்போல அண்டர்கிரவுண்டு’க்குள்ளே போக ஆரம்பிச்சுட்டாங்க. அவர்களிலே ஒருத்தர் ஜீவானந்தம். அவரை ஒரு பிராமண நண்பர் என்கிட்டே அழைச்சிக்கிட்டு வந்து…” “யார் அந்தப் பிராமண நண்பர் ?” “அவருடைய பெயரை இப்போ வெளியே சொல்ல வேணாம்னு நினைக்கிறேன். சொன்னா, அதாலே நல்லதுக்குப் பதிலா அவருக்குக் கெடுதல் ஏற்பட்டாலும் ஏற்படும்…” “சரி, விடுங்கள். பிறகு…. ?” “அவர் ஜீவானந்தத்தை அழைச்சிக்கிட்டு வந்து ’நீங்கதான் இவருக்கு அடைக்கலம் கொடுக்கணும்’னார். ’சரின்னு அவரை மேக்கப் ரூமுக்கு அனுப்பி, மொதல்லே தலையை மொட்டை அடிக்கச் சொன்னேன். அப்புறம் நெற்றியிலும் கைகளிலும் பட்டைப் பட்டையா விபூதியைப் பூசி, தியேட்டர் முதல் வரிசையிலேயே அவ்ரை உட்கார வைத்து, தைரியமா நாடகம் பார்க்கச் சொன்னேன்.” “அப்போது உங்களுக்கு இருந்த தைரியம் அவருக்கு இருந்ததா?” “அந்த விஷயத்திலே நானும் அவருக்குத் தோற்றவன் இல்லே, அவரும் எனக்குத் தோற்றவர் இல்லே. ஆனாலும் அப்போ இருந்த சந்தர்ப்பம் அப்படி என்னதான் தைரியசாலிகளாயிருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் தைரியம் சொல்லிக்க வேண்டியிருந்தது; சொல்லிக்கிட்டோம் அவ்வளவுதான், ஆனா…” “ஆனால் என்ன ?” “திராவிடர் கழகத்தார் சிலருக்கு இது பிடிக்கல்லே: உனக்கு ஏன் வீண் வம்பு ? அண்டர்கிரவுண்டுக்காரனை அரெஸ்ட் செய்ய வரப்போ உன்னையும சேர்த்து இல்லே அரெஸ்ட் செய்வாங்க?’ன்னு எனக்குப் புத்திமதி சொன்னாங்க…” “நீங்கள் என்ன சொன்னீர்கள் ?” “உங்கள் புத்திமதிக்கு நன்றி. ஆனா, இது கட்சியைப் பொறுத்த விஷயம் இல்லே, நட்பைப் பொறுத்த விஷயம். ’ஆபத்துக்கு உதவுவான். நண்பன்’னு ’தூக்குத் துாக்கி” நாடகத்திலே சொல்லிட்டு, வாழ்க்கையிலே அதைத் துக்கி எறிஞ்சிடறது அவ்வளவு சரியா எனக்குப் படலே, நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டேன்!" “என்ன இருந்தாலும் நாடகம் முடியும் வரைதானே அவரை உங்களாலே அப்படி வைத்துக் கொண்டிருக்க முடியும்? அதற்கு மேலே.. ?” “குட்டி போட்ட பூனை கதை தான். ஆண் பூனை எங்கே வந்து தான் போட்ட குட்டிகளைக் கடித்துப் போட்டு விடுமோன்னு பயந்து, அப்பப்போ அது இடம் மாற்றி வைச்சிக்கிட்டிருக்கும் பாருங்க, அந்த மாதிரி நானும் நண்பர் ஜீவானந்தத்தை இடம் மாற்றி, இடம் மாற்றி வைச்சிக்கிட்டே இருந்தேன். எங்கே வைச்சிக்கிட்டிருந்தாலும் அவரைத் தேடி அவர் கட்சிக்காரங்க சில பேரு வந்துகிட்டே இருப்பாங்க..” “ஆமாம். அண்டர்கிரவுண்டிலே இருக்கும்போதுகூட அவர்கள் கட்சி வேலை நிற்காதே!” “அப்படி வரவங்க பேச்சுக்குப் பேச்சு ’காம்ரேட், காம்ரேட்’னு சொல்றது எனக்கு என்னவோ போலிருக்கும். நான் ஒரு நாள் ஜீவானந்தத்தைக் கேட்டேன். ’காம்ரேட்டுன்னா என்னய்யா, அர்த்தம் ?னு. அவர் ’தோழர்’ன்னார். ’அப்போ தோழர்ன்னு சொல்லிட்டுப் போறதுதானே’ன்னேன். ’அந்த உரிமை உங்களுக்கு வேணும்னா இருக்கலாம். எங்களுக்கு இல்லேன்னார். அப்பத்தான் நான் ஒரு சாதாரண விஷயத்திலேகூட அந்தக் கட்சி எவ்வளவு கட்டுப்பாடோடு இருக்குதுங்கிற விஷயம் எனக்குப் புரிஞ்சது…” “கட்டுப்பாட்டை மட்டும் அது காட்டவில்லை: என்னதான் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டுக் கட்சியல்ல, அயல் நாட்டுக் கட்சி என்பதையும் அது காட்டவில்லையா ?” “அதையும் காட்டத்தான் காட்டுது. இருந்தாலும் கட்சி அயல்நாட்டுக் கட்சியாயிருந்தாலும் ஜீவானந்தம் அயல் நாட்டு மனுஷன் இல்லே பாருங்க, அதாலே நான் அவரைத் தொடர்ந்து ஆதரிச்சி வந்தேன். அந்தச் சமயத்திலேதான் யாரோ ஒரு வாத்தியாரம்மாவுக்கு அவர் அடிக்கடி கடிதம் எழுதி என்கிட்டே கொடுத்தனுப்புவார். ‘ஏதோ கட்சி சம்பந்தப்பட்ட கடிதமாக்கும்’னு நினைச்சி, நான் அதைப் பத்திரமாகக் கொண்டு போய் அந்த அம்மாகிட்டே கொடுப்பேன். அவங்க அதை வாங்கிப் படிச்சிப் பார்த்துட்டுப் பதில் கடிதம் எழுதிக் கொடுப்பாங்க. அதையும் பத்திரமா எடுத்துக்கிட்டு வந்து ஜீவானந்தம்கிட்டே கொடுப்பேன். கடிதம்தான் இப்படி அடிக்கடி கை மாறிக்கிட்டிருந்ததே தவிர, அந்தக் கடிதங்களாலே நான் வரும்னு எதிர்பார்த்த புரட்சி அவ்வளவு சீக்கிரம் வரதாத் தெரியல்லே; அது எப்போ வரும்? ம்னு ஒரு நாள் ஜீவாவைக் கேட்டேன். எது?ன்னார். புரட்சி’ன்னேன். அவர் சிரிச்சார், ’ஏன் சிரிக்கிறீங்க?’னனேன். ’நாட்டிலே புரட்சி நடந்தால்தான் புரட்சியா? வாழ்க்கையிலே புரட்சி நடந்தா அது புரட்சியில்லையா ?’ ன்னார். ’நாட்டிலே புரட்சி நடக்காம வாழ்க்கையிலே எப்படிப் புரட்சி நடக்கும்?’ன்னேன். ’பொறுத்துப் பார்’ன்னார். பொறுத்துப் பார்த்தேன். அதுக்குள்ளே ஆவடியிலே ஒரு கலாட்டா; அங்கே ஏதோ ஒரு திருட்டுக் கூட்டம் முகாம் போட்டிருக்குன்னு போலீசார் அவங்களைச் சுற்றி வளைச்சிப் பிடிக்கப் போனாங்க. அப்போ நான் ஜீவாவை அங்கிருந்த ஒரு வீட்டிலே ஒளிச்சி வைச்சிருந்தேன். அவர் போலீசாரைக் கண்டதும் எங்கிட்டே கூடச் சொல்லிக்காம அந்த வீட்டிலிருந்து எப்படியோ தப்பி, எங்கேயோ தலைமறைவாப் போயிட்டார்…” அதற்குப் பிறகு நீங்கள் அவரைப் பார்க்கவே இல்லையா ?" ’தடையெல்லாம் நீங்கி அவர் வெளியே வந்தப்புறம்தான் பார்த்தேன்…" “புரட்சி… ?” “அவர் சொன்னாப்போல நாட்டிலே புரட்சி நடக்கலேன்னாலும் அவருடைய வாழ்க்கையிலே புரட்சி நடந்துவிட்டது:” “அது என்ன புரட்சி ?” “அதுதான் அவர் கலியாணம் செய்துகிட்ட புரட்சி ! அண்டர்கிரவுண்டிலே இருந்தப்போ யாரோ ஒரு வாத்தியாரம்மாவுக்கும் அவருக்கும் இடையே நான் கடிதம் கொண்டு போய்க் கொடுக்கிற ஆளா இருந்துகிட்டிருந்தேனே, அது கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்க இல்லையாம்; காதல் சம்பந்தப்பட்ட கடிதங்களாம்…” “ஓ, அவர் காதலி பத்மாவதியம்மாளுக்கு நீங்கள்தான் ’காதல் விடு தூதாயிருந்தீர்களா ?” “ஆமாங்க.” “தேவலையே நாடக நடிகரான உங்களை வைத்தே அவர்கள் தங்கள் காதல் நாடகத்தை நடத்தியிருக்கிறார்களே?” “அதை வைத்துத்தான் அந்த மனுஷர் ’நாட்டிலே நடந்தாத்தான் புரட்சியா, வாழ்க்கையிலே நடந்தாப் புரட்சியில்லையா ?’ன்னு அன்னிக்கு என்னைக் கேட்டிருக்கார். அப்போ அது எனக்குப் புரியல்லே, இப்போ புரிஞ்சிப் போச்சு!” “அதோடு அவரை நீங்கள் விட்டு விட்டீர்களா ?” “எங்கே விட்டேன் ? அவரும் என்னை விடல்லே, நானும் அவரை விடல்லே. என்னிக்கு அவர் திருவொற்றியூரிலே சிலையா நின்னாரோ அன்னிக்குத்தான் அவருக்கும் எனக்கும் இடையே இருந்த தொடர்பு எங்களை விட்டது.!” சர்.ஆர்.எஸ்.சர்மா “திருவாரூரிலே பிரசித்தி பெற்ற பிராமணர்களிலே ஒருத்தர் சர்.ஆர்.எஸ்.சர்மா. அந்த நாள் ‘ஜர்னலிஸ்ட்’டா யிருந்த அவர் கல்கத்தாவிலே ஏதோ ஒரு பத்திரிக்கையை நடத்தி வந்தார். இந்த நாளிலே சிலர் அடிக்கடி உலகச் சுற்றுப் பிரயாணம் செய்யறதைப் பார்த்துட்டுப் பலர் ஆச்சரியப்படறாங்க, இல்லையா? அந்த ஆச்சரியத்துக்கு இடமில்லாம அந்த நாளிலேயே அடிக்கடி உலகச் சுற்றுப் பிரயாணம் செய்துகிட்டிருந்தவர் அவர். இன்னிக்கு ’லண்டன்’ என்பார்; நாளைக்கு ‘அமெரிக்கா’ என்பார். இப்படி எப்போ பார்த்தாலும் எங்கேயாவது போய்க்கிட்டே இருப்பார்…” “நல்ல பண வசதி இருந்திருக்கும் போலிருக்கிறது….” “அப்படி எந்த வசதியும் இருந்ததாக்கூடத் தெரியல்லே. ஆனா, எங்கிருந்தோ, எப்படியோ அவருக்கு அடிக்கடி பணம் வந்துகிட்டே இருந்தது. வர பணத்தைத் தானே வைச்சுக்கவும் மாட்டார். எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்துடுவார். அப்படிக் கொடுக்கிறப்போ அவர் ஆரியர்னும் பார்ப்பது கிடையாது. திராவிடர்னும் பார்ப்பது கிடையாது. இன்னும் சொல்லப்போனா அவர் ஆரியர்களுக்குக் கொடுத்ததைவிட திராவிடர்களுக்குக் கொடுத்ததுதான் அதிகம். இதிலே அவருக்கு ஒரு திருப்தி என்னன்னா, உலகம் பூரா சோஷலிசம் பரவுதோ இல்லையோ, தன்னைச் சுற்றி சோஷலிசம்’ பரவினால் போதுங்கிறதுதான்!” தேவலையே, என்ன வத்தாலும் தானே வாங்கிப் போட்டுக் கொண்டு, யாராவது ஒரு பிச்சைக்காரன் வந்து ஒரு காசு பிச்சை கேட்டால்கூட, ’இதெல்லாம் தனிப்பட்டவர்கள் தீர்க்கக்கூடிய பிரச்சனையா? அரசாங்கத்தார் பார்த்துத் தீர்க்க வேண்டிய பிரச்சனை!" என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் தர்க்க வாதம் பேசித் தட்டிக் கழிப்பதைவிட, இது எவ்வளவோ மேலானதாயிருக்கிறதே?" “அந்த ஒரு விஷயத்தாலேதான் எனக்கும் அவரை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவர் தலைமையிலே ஒரு சமயம் நான் திருவாரூரிலே ஒரு நாடகம் போட்டேன்…” “என்ன நாடகம்?” “விமலா அல்லது விதவையின் கண்ணீர்….” “சர்மாவுக்கு அந்த நாடகம் பிடித்திருந்ததா ?” “நல்லா கேட்டீங்க! என்னைக் கேட்டா அந்த நாடக சப்ஜெக்ட் அந்தக் காலத்திலேயே எல்லாருக்கும் பிடிச்சிருந்ததுன்னே சொல்வேன். ஆனா, அதை வெளியே சொல்ற துணிவு, ஒப்புக்கிற தைரியம்தான் பலருக்கு அப்பவும் இல்லே, இப்பவும் இல்லே. அதாலேதான் இத்தனை வருஷப் பிரச்சாரத்துக்குப் பிறகும் விதவைங்க பகிரங்கமா மறுமணம் செஞ்சிக்கிறது இந்த நாட்டிலே இன்னும் அபூர்வமாயிருக்கு. தப்பித் தவறி யாராவது செஞ்சிக்கிட்டா அது அதிசயமாக் கூட இருக்கு” “அதற்கு யார் என்ன செய்ய முடியும்? இத்தனைக்கும் அந்தச் சீர்திருத்தமெல்லாம் இன்று பிரசாரத்தோடு மட்டும் நிற்கவில்லை; அவற்றுக்கு வேண்டிய சட்ட திட்டங்களையும் செய்து வைத்திருக்கிறார்கள். அதையும் பயன்படுத்திக் கொள்ளாமல் பயந்து பயந்து சாகிறவர்களைக் கடவுளே வந்தாலும் இனிக் காப்பாற்ற முடியாது.” “நம்ம ஜனங்களுடைய மனோபாவம் அப்படி. இதே விஷயத்தைத்தான் அன்னிக்கு சர்மாஜியும் வேறே ஒரு விதத்திலே எடுத்துச் சொன்னார். ’ராதா நாடகம்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் அவருடைய ரத்தக் கண்ணீர் நாடகத்தை நான் மிஸ் பண்ணுவதே கிடையாது. அதிலே ஒரு சீன் வரும். அந்த சீன் எப்பவோ பார்த்தது, இன்னும் என் நினைவிலே அப்படியே இருக்கு. குஷ்டரோகியான பின் காந்தாவால் விரட்டப்பட்டு அவர் வீதிக்கு வருவார். அந்த வீதியிலே ஒரு பக்கம் இந்து கோயில்; அதிலே ஒரு அர்ச்சகர். இன்னொரு பக்கம் மாதா கோயில்; அதிலே ஒரு பாதிரியார். இந்து கோயில் அர்ச்சகர் குஷ்ட ரோகியைக் கண்டதும், ’மாபாவிகிட்ட வராதேடா, எட்டிப் போடா!’ன்னு விரட்டு வார்; பாதிரியாரோ,”வா தம்பி, வா உன் பாவத்தை மன்னித்து உன்னை ரட்சிக்க எங்கள் இயேசு இருக்கிறார். வா தம்பி, வா’ என்று அன்புடன் குஷ்டரோகியை அழைத்து அடைக்கலம் தருவார். இந்த ஒரு சின்னஞ்சிறு காட்சியில், இந்து மதம் நாளுக்கு நாள் ஏன் ஷீணிக்கிறது, கிறிஸ்துவ மதம் ஏன் நாளுக்கு நாள் வளருகிறது என்பதை எவ்வளவு நாசூக்காகச் சொல்லாமல் சொல்லி விடுகிறார் ராதா!–இந்த மாதிரி பல விஷயங்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சீன்கள் சில இந்த நாடகத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றையெல்லாம் இங்கே விரிவாக எடுத்துக் கூறும் அளவுக்கு இப்போது எனக்கு நேரமில்லை. இன்றிரவே இங்கிருந்து நான் புறப்பட்டு நாளை சென்னைக்குப்போய், அங்கிருந்து அமெரிக்காவுக்குப் போக வேண்டியவனாயிருக்கிறேன். ஆகவே, இந்த நாடகத்தைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் கூறி என் பேச்சை முடித்துக் கொள்கிறேன். இதிலே நாம் பார்த்த விதவையின் துயரம் பிராமணாள் வீட்டிலே மட்டுமில்லே, சூத்திராள் வீட்டிலும் இருக்கு. அதாலே இது எல்லாருக்கும் பொது. எல்லாரும் சேர்ந்து ஒழிக்க வேண்டிய அநீதி, கொடுமை! நான் வரேன், நமஸ்காரம்’னு சொல்லி, அவர் மேடையை விட்டு இறங்கியதுதான் தாமதம், ஆடிட்டோரியத்தின் ஒரு மூலையிலிருந்து ஒரே ஆரவாரம்’வாபஸ் வாங்கு, சூத்திராள்னு சொன்னதை வாபஸ் வாங்கு’ன்னு ஒரே கூச்சல், கலாட்டா! சர்மாவுக்கோ மீண்டும் மேடை ஏறி அதை வாபஸ் வாங்கி விட்டுப் போகும் அளவுக்கு நேரமில்லே. பழக்க தோஷம், வாய் தவறி வந்துவிட்டது. நான் வேணும்னா, சூத்திரான்னு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்னு ஒரு கடிதமே எழுதி வீட்டிலே கொடுத்துட்டுப் போறேன். நாளைக்கு நீ அதை வாங்கி வந்து மேடையிலே படிச்சிடு’ன்னு சொல்லிட்டு, அவர் அவசர அவசரமாக காரிலே ஏறி வீட்டுக்குப் போயிட்டார்….?" “அப்புறம்.. ?” “நான் மேடை ஏறி, சர்மா சொன்னதை அப்படியே சொல்லி, அன்றைய நாடகத்தை ஒரு வழியா நடத்தி முடிச்சேன். மறுநாள் சி.பி.சிற்றரசு தலைமையிலே நாடகம். சர்மா எழுதிக் கொடுத்துவிட்டுப் போன மன்னிப்புக் கடிதத்தை அவரிடமே கொடுத்துப் படிக்கச் சொன்னேன். அவர் படிச்சார். அவ்வளவுதான்; ஆடிட்டோரியம் பூராவும் ஒரே கரகோஷம்! முன் வரிசையிலே உட்கார்ந்திருந்த ரெண்டு திராவிடர் கழகத் தலைவருங்க சட்டுன்னு எழுந்து, ’அந்தக் கடிதத்தை இங்கே படிச்சா மட்டும் போதாது; இப்படிக் கொடு. நான் என் பத்திரிகையிலே போடறேன்!”னு போட்டி போட்டு வாங்கிட்டுக்போனாங்க.." “போட்டாங்களா ?” “எங்கே போட்டாங்க ? சர்மாவைப் பொறுத்த வரையிலே அவர் சொன்னதைச் செய்துட்டார்; இவங்க செய்யல்லே…” ’காரணம் ? “யாருக்குத் தெரியும்?” “அந்தத் தலைவர்கள் யாரென்றாவது… ?” “ஏற்கனவே என்னைப் பொல்லாதவங்கிறாங்க; அதையும் சொன்னா இன்னும் பொல்லாதவன் என்பாங்க; வேண்டாம்.” “அவர்களைச் சொல்கிறீர்களே, நம் சினிமா ரசிகர்களும் அப்படித்தானே இருக்கிறார்கள்? சினிமாவில் ஒருவன் நல்லவனாக நடித்தால், அவன் வாழ்க்கையிலும் நல்லவனாக இருப்பான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; உங்களைப் போன்ற நடிகர்கள் வேண்டுமானால் அதை உங்கள் நடிப்பின் வெற்றியாக நினைக்கலாம்; நாங்களோ அதைச் சமூகத்தின் கொடுமையாக நினைக்கிறோம். இதைப் பற்றி உங்கள் கருத்து… ?" “தர்ம சங்கடமான கேள்வி நடிகருங்க நினைக்கிறதி லேயும் தப்பில்லே, நீங்க நினைக்கிறதிலேயும் தப்பில்லேங் கிறதுதான் என் கருத்து:” இருவரும் ஒருவரையொருவர் ஒரு கணம் பார்க்கிறோம். மறு கணம் சிரித்துச் சமாளிக்கிறோம். இந்தப் பேட்டியில்தான் இப்படி எத்தனை நாட்கள்! திருவாரூர் சிங்கராயர் “காந்தியார் அகிம்சாவாதியாயிருந்தாலும் அப்போதிருந்த காங்கிரஸ் தொண்டர்களிலே பலர் அகிம்சாவாதிகளாயில்லே. திராவிடர் கழக மாநாடு எங்கே நடந்தாலும் அந்த மாநாட்டுப் பந்தல்களைக் கொளுத்தறதிலே அவங்க முன்னணியிலே நின்னாங்க, கறுஞ் சட்டைக்காரனைப் பிடிச்சி அடிக்கிற ஆத்திரத்திலே தங்களை மறந்து கறுப்பு அங்கி போட்ட வக்கீலையும் பிடிச்சி அடிச்சிட்டு,”ஐ ஆம் வெரி சாரின்னாங்க. என் நாடகம் எங்கே நடந்தாலும் அதை நடக்கவிடாம தடுக்கிறதுக்காகத் தங்கள் செல்வாக்கை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்தித் தடை உத்தரவு வாங்கினாங்க. இந்த மாதிரி எதிர்ப்புக்களைக் கண்டு அஞ்சிப் பின் வாங்கியவர்களும் அந்த நாள் திராவிடர் கழகத்திலே உண்டு; அஞ்சாம எதிர்த்து நின்று நினைச்சதை நினைச்சபடி செஞ்சி முடிச்சவங்களும் உண்டு. அவர்களிலே சிலர் இன்னிக்கு என்னை மறந்தாலும் என்னாலே அவர்களை மறக்க முடியல்லே…" “சொல்லுங்கள்; நீங்கள் சொன்ன பிறகாவது உங்களுடைய நினைவு அவர்களுக்கு வராதா ?” ’எதுக்கு வரணும்? நீங்க நினைக்கிற நோக்கத்திலே அதை நான் இப்போ உங்ககிட்டே சொல்ல வரல்லே, ஏன்னா, என்னிக்குமே இன்னொருத்தன் கால்லே நிற்கணும்னு நான் நினைச்சதே கிடையாது; இன்னிக்கும் அப்படி நினைக்க மாட்டேன்…" “அதுதான் உங்களைத் தெரிந்த எல்லாருக்கும் தெரியுமே!” “வரலாறுன்னு வரப்போ அதையெல்லாம் சொல்றது என் கடமைன்னு நினைக்கிறேன்; அவ்வளவுதான். விழுப்புரத்திலே ஒரு கண்காட்சி; அதிலே என் நாடகம். வழக்கம்போலக் காங்கிரஸ்காரர்களின் ‘திருவிளையாடல்’ ஆரம்பமாச்சி. அப்போ அதை எதிர்த்து வெற்றி கண்டவர் இப்போ கூட்டுறவு வங்கித் தலைவர்களிலே ஒருவராயிருக்கும் சண்முகம். அடுத்தாப்போல திருவண்ணாமலையிலே ஒரு மாநாடு; அந்த மாநாட்டிலேயும் என் நாடகம் இருந்தது. வழக்கம் போல காங்கிரஸ் தொண்டருங்க அங்கேயும் தங்கள் கைவரிசையைக் காட்டினாங்க. அன்னிக்கு அங்கே அவர்களை எதிர்த்து நின்று வெற்றிக் கொடி நாட்டியவர் இன்னிக்கு உணவு அமைச்சராயிருக்கும் ப.உ.சண்முகம். இவர்களை மிஞ்கம் வகையில் ஒரு சமயம் மதுரையில் நடந்த கலகத்தை அடக்கி ஒடுக்கி வெற்றி வாகை சூடியவர்கள் இப்போ அங்கே மேயராயிருக்கும் முத்துவும், அவர் நண்பர் ஹீராலாலும் ஆவார்கள். மதுரை மாநாட்டிலே நாடகம் நடத்த நான் வந்திருந்தபோதுதான் அறிஞர் அண்ணாதுரை யாரோ ஒரு பையனை அழைச்சிக்கிட்டு என்கிட்டே வந்து ’இவன் எங்கள் ஊர்ப் பையன்; சத்தியமூர்த்தின்னு பேரு, நடிக்க வேணும்னு ஆசைப்படறான். உங்க கம்பெனியிலே இவனைச் சேர்த்துக்க முடியுமா ?”ன்னார். ’விட்டு விட்டுப் போங்க’ன்னேன். அவர் செஞ்ச முதல் சிபாரிசு இது. அடுத்த சிபாரிசு அவர்கிட்டேயிருந்து வரல்லே, திருவாரூர் சிங்கராயர்கிட்டேயிருந்து வந்தது…." “அது என்ன சிபாரிசு ?” “அந்த நாள் கழகத் துண்களில் ஒருவராயிருந்த அவர் இந்த நாள் முதலமைச்சராயிருக்கும் டாக்டர் கருணாநிதியை என்கிட்டே அழைச்சிக்கிட்டு வந்து, ’தம்பி கருணாநிதி ஒரு நாடகம் தீட்டனும், அதிலே நீங்க நடிக்கனும்கிறது என் ஆசை. என்ன சொல்றீங்க?’ன்னார். ’அதுக்கென்ன, அப்ப்டியே செய்வோம்’னேன். அப்போ தீட்டியதுதான் தூக்கு மேடை…" “தஞ்சாவூர் மிராசுதாரர்களில் சிலரை ஞாபகப் படுத்துவதுபோல் இருக்குமே, அந்த நாடகமா?” “ஆமாமாம், அதுவேதான்!” “சரி, அப்புறம்…?” “அப்போ நான் தஞ்சாவூர் கொடி மரத்து மூலையிலிருந்த கிருஷ்ணப் பிள்ளை தியேட்டரிலே நாடகம் நடத்திக்கிட்டிருந்தேன். எதிர்த்தாப்போல டவுன் ஹால்: அதிலே அறிஞர் அண்ணா தீட்டிய ‘வேலைக்காரி’ நாடகத்தை நண்பர் கே.ஆர்.ராமசாமி நடத்திக்கிட்டிருந்தார். அதுக்காக அவர் செஞ்ச விளம்பரங்களிலெல்லாம், ‘அறிஞர் அண்ணா தீட்டிய வேலைக்காரி’ன்னு போட்டுக்கிட்டிருந்தார். ’அறிஞர் பட்டம் பொதுவானது தானே ?’ ன்னு நானும் ’தயாராகிறது, அறிஞர் கருணாநிதி தீட்டிய தூக்கு மேடை’ன்னு நோட்டீசு போட்டுக் கொடுத்தேன். கருணாநிதிக்கு இது பிடிக்கல்லே ’எனக்கு வேண்டாம் அறிஞர் பட்டம், தயவு செய்து எடுத்து விடுங்கள்’னு என்னைக் கேட்டுக்கிட்டார். அந்த விஷயத்திலும் தான் அண்ணாவுக்குத் தம்பியாகவே இருக்கணும்னு அவர் நினைக்கிறதை நாம் ஏன் தடுக்கணும்’னு, நானும் அந்த அறிஞர் பட்டத்தை எடுத்துட்டேன்…” “அண்ணா அறிஞ’ராயிருக்கட்டும், நாம் கலைஞ’ ராகவே இருந்து விடலாம் என்று அவர் நினைத்தாரோ என்னவோ ?” “அப்போ ’கலைஞர்’னு போட்டுக்கலாம்னு அவருக்கும் தோணல்லே, எனக்கும் தோணல்லே. அதாலே மு.கருணாநிதி தீட்டிய தூக்குமேடை’ன்னே விளம்பரம் சேஞ்சோம். காரிலே மைக் வைச்சிச் செய்யற விளம்பரம் அப்போத்தான் வந்திருந்தது. அதுக்கு என்கிட்டே அப்போ கார் இல்லை; சிங்கராயர் தன்கிட்டே இருந்த காரைக் கொடுத்து உதவினார். அதிலே மைக் வைச்சித் தஞ்சாவூர் பூராவும் ‘தூக்கு மேடை’ நாடகத்துக்கு விளம்பரம் செய்ய வைச்சேன். முதல் நாள் நாடக வசூலைக் கருணாநிதிக்குக் கொடுத்துடறதா முடிவு செஞ்சிருந்தோம். அதைப் பெரியார் தலைமையிலே நாடகத்தை நடத்திக் கொடுத்தா நல்லாயிருக்கும்னு எனக்குத் தோணுச்சி. அப்போ பெரியார் இப்போ இறந்து போனாரே திருச்சி வேதாசலம், அவர் வீட்டிலே தங்கியிருந்தார்…" “யார் வக்கீல் வேதாசலம்தானே ?” “அவரேதான். அந்த நாளிலே பெரியார் திருச்சிக்கு வந்தா அவர் வீட்டிலேதான் தங்குவார். அங்கே போய்ப் பெரியாரைப் பார்த்து, அவர் கிட்டே விஷயத்தைச் சொல்லி, அவருக்குச் செளகரியமான ஒரு தேதியைக் கேட்டுக்கிட்டு வரச் சொல்லி சிங்கராயரை அனுப்பினேன். அவர் போய்ச் சொன்னதற்கு, கண்டவனுக்கெல்லாம் நிதி கொடுக்கிறதாவது, அந்த நாடகத்துக்கு நான் தலைமை தாங்கறதாவது? போய்யா, போ ன்னு பெரியார் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார். விஷயம் என்னன்னா, கருணாநிதியை அப்போ பெரியாருக்குக் கொஞ்சம் பிடிக்காது. காரணம் வேறே ஒண்ணுமில்லே, எல்லாப் பெரிய மனிதர்களுக்கும் ஏதாவது ஒண்ணிலே ‘வீக்னஸ்’ இருக்குமே, அந்த வீக்னஸ் அவருக்கும் இருந்ததுதான் காரணம். மேடைப் பேச்சிலே சில சமயம் எல்லாரையும் மிஞ்சிப் பேசி, அப்போதே பொது மக்களிடம் ‘அப்ளாஸ்’ வாங்கிவிடும் சாமர்த்தியம் கருணாநிதிக்கு உண்டு. அது அவருக்குப் பிடிக்காது. இருந்தாலும் அதுக்காக அந்தச் சமயம் அவரை விட்டுவிடக் கூடாதுன்னு நானே திருச்சிக்குப் போனேன். போனதும் நூறு ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதற்குப் பின் விஷயத்தைச் சொல்லித் தேதியைக் கேட்டேன். சக்ஸஸ் உடனே தேதி கிடைத்துவிட்டது. அவர் குறிப்பிட்ட தேதியில், அவருடைய தலைமையில் ‘துக்கு மேடை’ நாடகம் நடந்தது. வெற்றி எனக்கு மட்டுமா ? இல்லே, கருணாநிதிக்கும்தான்!” என் வழி தனி வழி ’தூக்குமேடை நாடகம் தஞ்சாவூரோடு நிற்கல்லே, எல்லா நாடகங்களையும் போல அதுவும் பட்டி, தொட்டியெல்லாம் நடந்தது. அந்த நாடகத்துக்கு நாட்டிலே எவ்வளவு ஆதரவு இருந்ததோ, அவ்வளவு எதிர்ப்பும் இருந்தது." “பெரிய மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கையை முதன் முதலாக அம்பலப்படுத்திய நாடகம் அது என்று சொல்வார்களே, எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா ?” “நான்தான் எதிர்ப்பிலேயே வளர்ந்தவனாச்சே, அதுக்கெல்லாம் அஞ்சுவேனா? என் நாடகம் பாகற்காய் மாதிரி. கசப்பைப் பார்க்காம பாகற்காயைக் கறி சமைத்துத் தின்னா உடம்புக்கு நல்லது; அதேபோல என் நாடகக் கருத்துக்களிலே உள்ள உண்மையும் உங்களில் சிலருக்குக் கொஞ்சம் கசப்பாய் தான் இருக்கும். அதை முகத்தைச் சுளிக்காம, எதிர்த்துக் கூச்சலிடாம, அமைதியாயிருந்து கேட்டா உங்க அறிவுக்கு நல்லது. எங்களுக்கு அறிவு வேணாம்னு யாராவது நினைச்சிக் கலாட்டா செய்யறதாயிருந்தா அவங்க தயவு செய்து டிக்கெட்டைத் தியேட்டர் கவுண்டரிலே கொடுத்துப் பணத்தை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போயிடுங்க’ம்பேன். அதையும் மீறி வம்புச் சண்டைக்கு வந்தா, அந்தச் சண்டைக்கும் நான்: தயாராயிருப்பேன். நீங்க பார்த்திருப்பீங்களே, நம்ம சாமிகளிலே ஏதாவது ஆயுதம் ஏந்தாத சாமி இருக்கா ? இருக்கவே இருக்காது; எல்லா சாமியும் ஆயுதம் ஏந்திக்கிட்டுத்தான் இருக்கும். எதுக்கு அப்படியிருக்கு, மனுஷனைக் கண்டு பயந்தா? அதெல்லாம் ஒண்னுமில்லே, துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்ய எல்லா சாமியும் அப்படியிருக்கு’ன்னு பெரியவங்க சொல்வாங்க. அந்த சாமிகளைப் போலவே நானும் என் எதிரிகளுக்காக எப்பவும் ’ஆயுதம் ஏந்திய சாமி’யாவே இருந்துகிட்டிருந்தேன்…” “சுவாமிகள் ஏதாவது தப்புத் தண்டா செய்தால்கூட அதைத் ‘திருவிளையாடல்’ என்று பக்தர்கள் சொல்லிவிடுவார்கள்; நீங்கள் தப்புத் தண்டா செய்தால்…” “நானாக எப்பவுமே எத்தத் தப்புத் தண்டாவுக்கும்: போக மாட்டேன்; எல்லாம் தானாகத்தான் வந்து சேரும்…” “அது உங்கள் ஜாதக விசேஷம் போலிருக்கிறது ?” “இல்லே, நாடக விசேஷம்!” “சரி, பிறகு….?” “மலைக்கோட்டை மணின்னு ஒரு நண்பர். அவர் திருச்சி தேவர் ஹாலிலே என் நாடகங்கள் சிலவற்றை நடத்தினார். அந்தச் சமயத்திலேதான் குன்றக்குடி அடிகளார் எனக்குக் ‘கலைத் தென்றல்’ என்ற பட்டத்தை வழங்கினார்…” “கலைத் தென்றல் எம்.ஆர்.ராதா என்று சொல்பவர்களை விட நடிகவேள் எம்.ஆர்.ராதா என்று சொல்பவர்கள்தானே அதிகமாயிருக்கிறார்கள் ? அந்தப் பட்டத்தை யார் கொடுத்தது?” “என் அருமை நண்பர், அஞ்சா நெஞ்சர் அழகிரிசாமி. திராவிடர் கழகத்துக்காகத் தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் உண்மையாகவே தத்தம் செய்த உத்தமர் அவர்.” “அவருடைய குடும்பத்துக்கு யாரும் எந்த உதவியும்…” “கேட்காமலேயே உதவி செய்ய வேண்டிய குடும்பம் அது. இப்போ உள்ள நிலவரத்தைப் பார்த்தா கேட்டால்தான் ஏதாவது செய்வார்கள் போலிருக்கிறது…!” “வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும், இல்லையா?” “எனக்குத் தெரிந்த வரையிலே அந்த மாதிரியெல்லாம் கேட்டுப் பிழைக்கக்கூடிய பிள்ளையில்லே அழகிரிசாமி பெற்ற பிள்ளை…” “ஆமாம், இங்கே வந்திருந்தபோது நானும் ஒரு சமயம் அவரைப் பார்த்தேன். எனக்கும் அவர் அப்படியெல்லாம் கேட்டுப் பிழைக்கக் கூடிய பிள்ளையாகத் தோன்றவில்லை…” “புலிக்குப் பிறந்தது பூனையாக இருக்க முடியுங்களா ?” “அது எப்படி இருக்க முடியும்? அப்புறம்.. ?” “எல்லா நடிகருங்களுக்கும் அவங்கவங்க ரசிகருங்களே ’ஓசி டிக்கெட்’டுக்காக மன்றம் வைக்கிறாங்க; எனக்குப் பெரியாரே எந்தவிதமான பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் என் பேரால் ’ராதா மன்றம்’னு ஒரு மன்றம் வைச்சார். அந்த மன்றத்திலே ஒரு சமயம் என் நாடகம் நடந்துகிட்டிருந்தப்போ காமராஜர் வந்து எனக்குப் பொன்னாடை போர்த்தி, ராதா செய்யும் புனிதமான தொண்டுக்கு நான் போர்த்தும் புனிதமான பொன்னாடை இது’ன்னார். இப்படி எந்த விளம்பரத்தையும் தேடி நான் போகாமலேயே எல்லா விளம்பரமும் என்னைத் தேடி வந்துகிட்டிருந்தப்போதான் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் வந்தார்.” “எதற்கு? ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தைப் படமாக எடுப்பதற்கா ?” “ஆமாம்” “அப்போ” ’நந்தனா’ரா நடிச்ச கே.பி.சுந்தராம்பாளுக்கு வாசன் ஒரு லட்சம் ரூபா கொடுத்தார்னு ஊர் பூரா ஒரே பேச்சாயிருந்தது. எனக்குத் தெரிந்த வரையிலே இந்த சினிமா உலகில் முதன் முதலா லட்ச ரூபா வாங்கிய நட்சத்திரம் அந்த அம்மாதான்னு நினைக்கிறேன்…" “எனக்கும் அதுதான் உண்மையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது; இந்த மாதிரி விஷயங்களில் எப்போதுமே வாசன்தான் முந்திக்கொள்வது வழக்கம்.” “காரணம், ‘தரித்திர புத்தி’க்குப் பதிலா அவருக்குக் ’கொடுக்கிற புத்தி’ இருந்ததுதான். இதைக் கேள்விப்பட்டிருந்த நான் பெருமாள் முதலியார்கிட்டே சொன்னேன் -’ரொம்ப நாளா இந்த சினிமாக்காரன் சகவாசமே நமக்கு வேணாம்னு இருந்து விட்டவன் நான். இப்போ நீங்க கூப்பிடறீங்க; வரேன். ஆனா, எதிலுமே என் வழி தனி வழின்னு உங்களுக்குத் தெரியும்…” “அதெல்லாம் தெரிஞ்சித்தான் வந்திருக்கேன்; உங்க வழி என்ன வழின்னு சொல்லுங்கன்னார் முதலியார். ’சினிமாவுக்காக நாடகத்தை நான் விடமாட்டேன். வால்டாக்ஸ் தியேட்டரிலே அது தொடர்ந்து நடக்கும். பகல்லே நாடகம்; ராத்திரியிலே படப்பிடிப்பு. சம்மதமா? ன்னேன். அப்படியே செய்வோம்’ன்னார். அடுத்தாப்போல, ’காமிராவின் இஷ்டத்துக்குத் திரும்பித் திரும்பி நான் நடிக்க மாட்டேன், என் இஷ்டத்துக்குத் தான் காமிரா திரும்பித் திரும்பி என்னைப் படம் எடுக்கணும். என்ன சொல்றீங்க ?ன்னேன். சரி’ன்னார். கடைசியாச் சம்பளம். கே.பி.எஸ்.ஸ் அக்கு வாசன் ஒரு லட்ச ரூபா கொடுத்திருக்கிறாராம். நீங்க இருபத்தையாயிரம் கூடச் சேர்த்து ஒண்ணேகால் லட்சமா கொடுக்கணும். கொடுக்க முடியுமா ?ன்னேன்; ’கொடுக்கிறேன்’னார். அப்படியே கொடுக்கவும் கொடுத்தார்.” “சினிமா உலகில் முதன் முதலாக ஒன்றே கால் லட்ச ரூபாய் வாங்கிய நட்சத்திரமும் நீங்களாய்த்தான் இருக்க வேண்டும், இல்லையா ?” “வேறே யார் வாங்கினாங்க, எனக்கு முந்தி ? அதுக்காகத்தானே உங்ககிட்டே இதைச் சொல்றேன்!” “பிறகு… ?” “மாலை நாடகம் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குவேன். அப்படி ரெஸ்ட் எடுத்துக்கிறப்போ சில சமயம் தன்னை மறந்து தூங்கிடறதும் உண்டு. அந்த மாதிரி சமயங்களிலே முதலியாரே போன் பண்ணிட்டு வந்து என்னை எழுப்பி ஸ்டூடியோவுக்கு அழைச்சிக்கிட்டுப் போவார்….” “ஏன், புரொடக்சன் மானேஜர், புரொடக்சன் எக்ஸிகியூடிவ், அப்படி இப்படின்னு எத்தனையோ பேர் இருப்பார்களே, அவர்களெல்லாம் உங்களை எழுப்ப வர மாட்டார்களா ?” “அவங்களையெல்லாம் என்னை நெருங்க விடறதில்லே முதலியார். அவரேதான் வந்து அழைச்சிகிட்டுப் போவார்…” “அந்த அளவுக்கு உங்களிடம் அவருக்கு மரியாதை இருந்திருக்கிறது…” “நானும் வீண் வம்புக்கெல்லாம் போகமாட்டேன். நான் நடிக்கிற படத்திலே எனக்கு வால் பிடிக்கிற அவனைத்தான் போடணும், இவனைத்தான் போடணும்; எனக்கு வால் பிடிக்காத அவனைப் போடக் கூடாது, இவனைப் போடக்கூடாதுன்னெல்லாம் சொல்ல மாட்டேன். அதுதான் சொல்லிவிட்டேனே, என் வழி எதிலுமே தனி வழின்னு!” “சரி, அப்புறம்.. ?” “எப்படியோ படத்தை எடுத்து முடிச்சாங்க. அதுக்குள்ளே அறிஞர் அண்ணாதுரைக்கு முதல் அமைச்சர் பதவி அலுத்துப் போனாப்போல எனக்கும் சினிமா உலகம் அலுத்துப் போச்சு. சென்னையை விட்டுக் கிளம்பிட்டேன்.” நெஞ்சிலே இட்ட நெருப்பு “ரத்தக் கண்ணீர் சினிமா வரை சொல்லிக்கொண்டு வத்துவிட்டீர்கள். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி விவகாரங்கள் பற்றி மட்டும் சொல்கிறேன், சொல்கிறேன் என்று இன்னும் சொல்லவேயில்லையே?” என்று நான் மீண்டும் ஒரு முறை அதை ராதாவின் நினைவுக்குக் கொண்டு வந்தேன். அவர் கொஞ்சம் தயக்கத்தோடு சொன்னார்; “அந்த விவகாரங்களை நான் இந்த நாட்டுக்கும், நாகரிகத்தின் எல்லையையே தொட்டுவிட்டதாக எண்ணிக்கிட்டிருக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் சில சமயம் சொல்லணும்னும் நினைக்கிறேன்; சில சமயம் சொல்ல வேணாம்னும் நினைக்கிறேன். என்னுடைய தயக்கத்துக்கு அதுதான் காரணம். அந்த அளவுக்கு அது காட்டுமிராண்டித்தனமானது; கர்ணகடூரமானது; இன்றைய மனித குலம் முழுவதையுமே வெட்கத்தால் தலை குனிய வைக்கக் கூடியது. அதைப்பத்தி நான் மொதல்லே கேள்விப்பட்டப்போ என் நெஞ்சிலே யாரோ நெருப்பை வாரிக் கொட்டியது போல இருந்தது…” “அது என்ன கொடுமை, அப்படிப்பட்ட கொடுமை ?” “அந்தக் கொடுமை இங்கு மட்டுமில்லே, இந்த உலகம் பூராவுமே பரவியுள்ள கொடுமைங்கிறது அப்புறந்தான் எனக்குத் தெரிஞ்சது. ஆஸ்கார் ஒய்ல்டுன்னு யாரோ ஒரு இலக்கிய மேதை மேல் நாட்டில் இருந்தானாமே…?” “ஆமாம், இருந்தான்…” “அவன்கூட அந்த வெறி பிடிச்சி அலைஞ்சவன்னு உங்களைப் போன்றவங்க சொல்ல, நான் பின்னால் கேட்டேன். ஒரு ஆண் மேலே இன்னொரு ஆண் மோகம் கொள்வதும், அவனோடு இயற்கைக்கு விரோதமான வழியில் உடலுறவு வைத்துக் கொள்வதும் நினைத்துப் பார்ப்பதற்கே அருவருப்பாயில்லே? இந்த அருவருப்பான காரியத்துக்காக அந்த நாள் நாகப்பட்டினத்துக் கனவான்களில் சிலரும், சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த கனவான்களில் சிலரும் லட்சக் கணக்கில் செலவழிக்கத் தயாராயிருந்தனர். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிகளில் பல அந்த நாளில் அவர்களுக்கு ஆள் பிடிச்சிக் கொடுப்பதற்காகவே நடந்து வந்தன. யாராவது ஒரு பையன் கொஞ்சம் அழகாயிருந்து, அவன் பாலகிருஷ்ணன் வேஷமோ, பாலமுருகன் வேஷமோ போட்டுக்கிட்டு மேடைக்கு வந்து நின்னாப் போதும், நான் சொன்ன கனவான்களில் யாராவது அந்தப் பையன் சம்பந்தப்பட்ட கம்பெனி முதலாளியுடன் பேரம் பேசி, அவனுக்காக அவர் கேட்கும் தொகையைக் கொடுத்து, அன்றிரவே அவனைத் தூக்கித் தன் காரிலே வைச்சி, ஊருக்குக் கொண்டு போயிடுவார். அப்புறம் அவன் கதி அதோகதிதான். பாலகிருஷ்ணன், பால முருகன் வேஷம் போட்ட பயல்களுக்கே இந்தக் கதின்னா, பொம்பளை வேஷம் போட்ட பயல்களின் கதியைப்பத்திக் கேட்கவாவேனும் ? அவங்களிலே ஒருத்தனைக்கூட யாரும் ஒழுங்கா இருக்க, ஒழுங்கா வாழ விட்டதே இல்லே. நானும் அந்த ஒழுங்கீனமான காரியத்தைச் செய்யறதிலே ஒருத்தனாத்தான் இருந்தேன். எனக்கும் அப்போ பொம்பளை மோகம்னா என்னன்னே தெரியாது; ஆம்பளை மோகம்தான் தெரியும். அந்த மோகத்திலேதான் எத்தனை காதல், எத்தனை ஊடல், எத்தனை சண்டை, எத்தனை தற்கொலைகள், எத்தனை சொல்லிக்காம ஓடிப்போற ஜோடிகள்…எல்லாம் வேதனையோடு கூடிய வேடிக்கைதான், போங்கள்; அதன் பலனாகச் சக தோழர்களில் சிலர் இன்னிக்கு மகப் பேற்றுக்குக் கூட லாயக்கற்றவர்களாகப் போய் விட்டதைப் பார்க்கிறப்போ என் நெஞ்சே வெடிச்சிடும்போல இருக்குது…” “இந்த அக்கிரமத்துக்கெல்லாம் காரணம் அந்த நாள் நாடகங்களில் பெண்கள் நடிக்க முன் வராதது தான், இல்லையா ?” “அதுதான் காரணம்னு சொல்ல முடியாது; அதுவும் ஒரு காரணம்னு வேணும்னா சொல்லலலாம். மனுஷன் பல விஷயங்களிலே இன்னும் தன் காட்டுமிராண்டித்தனத்தை விட்ட பாடாயில்லையே? அதைத்தானே பெரியார் இன்னிக்கும் பேச்சுக்குப் பேச்சு சொல்லிக்கிட்டிருக்கார்?” “டி.பி.ராஜலட்சமி நாடக மேடைக்கு வந்த பிறகு…” “அந்த அசிங்கம் நாடகமேடையை விட்டுக் கொஞ்சங் கொஞ்சமா மறைஞ்சது என்னவோ உண்மைதான். ராஜலட்சுமியைத் தொடர்ந்து இன்னும் பல பொண்ணுங்க நாடக மேடைக்கு வந்தாங்க. அவங்களிலே ஒருத்தி பிரேமா. அந்தப் பிரேமாதான் ஆண் மோகத்திலிருந்து என்னை விடுவித்து, பொண் மோகம் கொள்ளச் சேஞ்சவ…” “அப்படியென்றால் உங்களுடைய முதல் காதல் பிரேமாவிடம்தான் அரும்பிற்றா ?” “ஆமாம், அது முதல் காதலோ, முடிவில்லாத காதலோ, அது எனக்குத் தெரியாது. என்னுடன் நடித்து வந்த அவளை நான் அப்போ மனமார நேசித்தேன். என் இதய ராணியாயிருந்த அவள், வெளியார் பார்வைக்கும் ராணியாவே இருக்கணும்னு நினைச்சி, பட்டுப் புடவையைத் தவிர வேறே எத்தப் புடவையும் கட்ட வேணாம்னு அவகிட்டே சொன்னேன். நெற்றிச் சுட்டியிலிருந்து பாதசரம் வரை நகைங்க சேஞ்சிப் போட்டு, அவ அழகை உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பார்த்துப் பார்த்து ரசித்தேன். அவளுடைய கொள்ளையழகு மட்டுமில்லே, குரலழகும் என்னைத் தேனுண்ட வண்டாக்கிடிச்சி. ஓய்வு கிடைச்சப்போல்லாம் அவளைப் பக்கத்திலே உட்கார வைச்சிக்கிட்டு, ’பேசு, ஏதாவது பேசு, பேசிக்கிட்டே இருன்னு; பேசச் சொல்லிக் கேட்டேன்; பாடச் சொல்லியும் கேட்டேன். அந்த அழகு ராணியோடு நான் கோயமுத்துரில் தங்கியிருந்த சமயம் அது. அப்பதான் பம்மல் சம்பந்த .முதலியார், கந்தசாமி முதலியார் மாதிரி படிச்சவங்க சிலரும், கலையிலே பிரியமுள்ள பிராமணர்களில் சிலரும் மெல்ல மெல்ல நாடக மேடைக்கு வந்து கிட்டிருந்தாங்க. அவங்க வந்தப்புறந்தான் ‘கூத்துங்கிறது ’நாடக மாச்சி; ’கூத்தாடி’ங்கிறவன் நடிகன், கலைஞன்னு ஆனான். ’நாடக’ மும் ஒரு ’கலை’ன்னு ஆச்சி…" “இதிலிருந்து படித்தவர்களும் பிராமணர்களும்தான் எதையும் ஓர் உன்னத நிலைக்கு உயர்த்த முடியும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் இல்லையா?” “சந்தேகமில்லாமல். ஒரு காலத்தில் தாசிகளுக்கே உரிய கலையாயிருந்த பரதகலை இன்னிக்கு அவங்களாலே புனிதமான கலையாயிடிச்சே! அந்தக் கலைக்காக அவங்க வீட்டுப் பொண்ணுங்களையே அவங்க அர்ப்பணம் ’செய்யறாங்களே ?” “அப்படிச் செய்யாவிட்டால் சமூகத்தில் அந்தக் கலைக்கு இன்று கிடைத்துள்ள கெளரவம் கிடைத்திருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா ?” “ஒரு நாளும் கிடைத்திருக்காது. எப்போப் பார்த்தாலும் சமூகச் சீர்திருத்தத்தைப் பற்றியே பேசிக்கிட்டிருக்கும் பெரியார் தலைமையிலே கூட இல்லே இப்போ பரத நாட்டிய அரங்கேற்றம் நடக்குது ?” “ஆமாம்; மயிலையிலே நடந்த அந்த அரங்கேற்றத்தை நானும் பார்த்தேன். எல்லாமே ’வெங்காயமாகத் தெரியும் அவருக்கு பரத கலை மட்டும் வெங்காயமாகத் தெரியாமல் போனது எனக்குக் கூட ஆச்சரியமாய்த்தான் இருந்தது!” “வெங்காயம்னா உரிக்க உரிக்க ஒண்ணுமே இல்லாமப் போகும். பரத கலை அப்படியா? எவன் எந்தக் கண்ணாலும் அதைப் பார்த்து ரசிக்கலாமே!” “உங்கள் பிரேமாவுக்கும் அந்தக் கலை தெரியுமா?” “தெரியும்.” “அப்படியானால் பிரேமாவைப் பேச வைத்து அழகு பார்த்த நீங்கள், ஆட வைத்தும் அழகு பார்த்திருப்பீர்களே ? ஆனால் அதைப் பக்திக் கண்ணால் பார்த்திருக்க மாட்டீர்கள், இல்லையா,” “காதலும் ஒரு பக்திதானே ? எத்தனை பக்தருங்க கடவுள்மேலே காதல் கொண்டு பாடியிருக்காங்க!” “ம், அப்புறம்?” “அப்புறம் என்ன ஆச்சுன்னா, என் பிரேமாவுக்குத் திடீர்னு ஒரு நாள் காய்ச்சல் அடிக்க ஆரம்பிச்சது. டாக்டரை வரவழைச்சிக் காட்டினேன். அவர் வந்து பார்த்துட்டு, ’இது சாதாரண ஜூரம் இல்லே, அம்மை ஜூரம், இதுக்கு இப்போ மருந்து கொடுத்துப் பிரயோசனமில்லே, முந்தியே வாக்சினேஷன் சேஞ்சிருக்கணும்னு சொல்லிட்டுப் போயிட்டார். அவர் சொன்னபடி மூணாவது நாளே அம்மை போட ஆரம்பிச்சிடிச்சி. பத்தாவது நாள் அவ என்னை விட்டுப் போறேன்னு போயிட்டா!” “இப்படி ஒரு சோகம் உங்கள் வாழ்க்கையில் நேர்ந்திருக்க வேண்டாம். பிறகு.?” “அவளை நான் எல்லாரையும் அடக்கம் செய்யறாப் போல சாதாரணமா அடக்கம் செய்ய விரும்பல்லே; அவளுக்கு ஒரு கலைக் கோயிலே எடுக்கணும்னு நினைச்சேன். நினைச்சபடியே’ கோயமுத்துரிலிருந்த ராஜா சாண்டோ சமாதிக்குப் பக்கத்திலே அவளை அடக்கம் சேஞ்சி, அந்த இடத்திலே இருபது.அடிக்கு இருபது அடி வைச்சி ஒரு கலைக் கோயில் கட்டினேன். ஜி.டி. நாயுடு வந்து அதைப் பார்த்துட்டு, ’இப்படிக்கூட ஒரு முட்டாள் இருப்பானா? யாரோ ஒரு நடிகை அம்மையிலே குளிர்ந்து போனதற்காக ஆயிரக் கணக்கிலே செலவு செய்து இப்படி ஒரு சமாதி கட்டுவானா ?ன்னார். ’மும்தாஜுக்காக ஆக்ராவில் தாஜ்மகால் கட்டிய ஷாஜகான் முட்டாள்னா நானும் முட்டாள்தான்’னு சொல்லி, அவரை அனுப்பி வைச்சேன் நான்.” இரு கெட்டிக்காரர்கள் கதை “நாடகம் சிலருக்குக் கலையாயிருக்கும் ; சிலருக்குத் தொழிலாயிருக்கும். எனக்கோ கலையாகவும் தொழிலாகவும் மட்டுமில்லே, தொண்டாகவும் இருந்தது, தொண்டுன்னா நான் வேறே எந்தத் தொண்டையும் சொல்லல்லே, சமூகச் சீர்திருத்தத் தொண்டைத்தான் சொல்றேன்,” “பெரியார் சீடராயிற்றே, வேறு என்ன தொண்டைப் பற்றிச் சொல்லப் போகிறீர்கள் ?” “பெரியார் சீடனாயிருந்தாலும் அந்தத் தொண்டுக்கு முதலில் எனக்கு வழி காட்டியவர் பேரறிஞர் அண்ணாங்கிறதை நான் இன்னும் மறக்கல்லே, என்னிக்கும் மறக்க மாட்டேன்…” “அது எப்படி” “அவர்தான் திருச்சி திராவிடக் கழக மாநாட்டிலே என் நாடகம் நடப்பதற்கு முதல்லே ஏற்பாடு செய்தவர்…” “அண்ணா ரகசியமாகக் குடிப்பதுண்டு என்று சிலர் சொல்கிறார்களே, அது உண்மையா?” “பொய். அவருக்கும் அந்தப்பழக்கம் கிடையாது; பெரியாருக்கும் அந்தப் பழக்கம் கிடையாது. பெரியாராவது வாலிபராயிருந்தப்போ, சில குடிகார நண்பர்களோடு கூடிக் குலாவியதுண்டாம். அவர்களிலே சிலர் இவர் வாயிலே பலவந்தமாகப் பிராந்தியையோ, விஸ்கியையோ ஊத்தி வைக்கக்கூட முயன்றதுண்டாம், அதற்கு டிமிக்கி கொடுத்துட்டு இவர் வீட்டுக்கு வந்தா இவருடைய சம்சாரம். சம்சாரம்னா இப்போ இருக்கிற மணியம்மை இல்லே, நாகம்மை… வாயை ஊதச் சொல்லி மோப்பம் பிடிச்சிப் பார்ப்பாராம். அந்த ஒரு விஷயத்திலே மட்டும் பெரியார் கூட எல்லாரையும் போலப் பெண்டாட்டிக்குப் பயந்தவராயிருந் திருக்கார்ன்னா, பார்த்துக்கங்களேன்! எனக்குத் தெரிஞ்ச வரையிலே அண்ணா அந்த வம்புக்கே போக மாட்டார். ’துஷ்டரைக் கண்டா துார ஒரு அடி’ம்பாங்களே, அந்த மாதிரி குடிச்சிட்டு வரவன் தன் நண்பனாயிருந்தாலும் அந்தச் சமயம் அவர் அவனை விட்டு ஒதுங்கிவிடுவார்…” “அப்படியானால் அவர் இருந்திருந்தால் மதுவிலக்கை ஒத்திவைத்திருக்கமாட்டார் என்று இப்போது சிலர் நினைப்பதுபோல் நீங்களும் நினைக்கிறீர்களா ?” “என்னாலே அப்படி நினைக்க முடியல்லே. ஏன்னா, வசதியுள்ளவன் பெர்மிட் வாங்கிக் குடிக்கிறது, அதுக்கு வழியில்லாதவன் அவன் வாயைப் பார்த்து ஏங்கறதும் வார்னிஷ் குடிச்சிச் சாகறது’மாயிருக்கிறதை அவராலும் ரொம்ப நாள் பார்த்துக்கிட்டிருந்திருக்க முடியாது. அதாலே ’மதுவிலக்கைக் கொண்டு வந்தா இந்தியா பூராவும் கொண்டு வாங்க, இல்லேன்னா ஒத்தி வைச்சிடுவேன்’னு அவரும். முதல்வர் கருணாநிதியைப்போலவே எச்சரித்திருப்பார், ஒத்திவைத்தும் இருப்பார்…” “ம், பிறகு… ?” “சினிமா, நாடகம், சங்கீதம், கச்சேரி, நாட்டியம்னாத்தான் அந்த நாளிலே டிக்கெட் போட்டு விற்பாங்க, ஜனங்களும் காசு கொடுத்து வாங்கிட்டுப் போய்ப் பார்ப்பாங்க. அந்த வழக்கத்தையொட்டி மாநாடுகளுக்கும் முதல்லே டிக்கெட் போட்டு வித்தவங்க திராவிடக் கழகத்தார்தான்.” “அவர்கள்தான் மேடைப் பேச்சை வெறும் பேச்சாக நினைத்துப் பேசுவதில்லையே? மேடைக் கச்சேரியாகவே அல்லவா நினைத்துப் பேசினார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள் ?” “அவங்க எப்படிப் பேசறாங்களோ என்னவோ, மக்கள் அவங்க பேசறதை அப்பவே காசு கொடுத்துக் கேட்கவும் தயாராயிருந்தாங்க. அதை வைச்சி, ’திருச்சி மாநாட்டிலே நாடகம் நடத்தறதைப் பத்தி எனக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லே, நல்லா நடத்தறேன்.” “அந்த நாடகத்திலே என்னைப் பொறுத்த வரையிலே நான் சும்மா நடிக்கத் தயார், என்னைப் போலவே என் கம்பெனி ஆட்களும் சும்மா நடிக்கணும்னு என்னாலே எப்படிச் சொல்ல முடியும்?’னேன். ’நீங்க சும்மா நாடகம் நடத்தனும்னு நானும் சொல்ல வரல்லே. ஆனா, காசைப் பொறுத்த வரையிலே பெரியார் குணம் எப்படிங்கிறதை நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலையிலே இருக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன். அதாலே, ஒரு நாடகம் நடத்த குறைந்த பட்சம் நீங்க என்ன எதிர்ப்பார்க்கிறீங்கன்னு சொன்னா. அதை நான் பெரியார்கிட்டே சொல்லி, அதுக்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்யறேன்’னார். சாதாரணமா நான் ஒரு நாடகத்துக்கு ஆயிரம் ரூபா வாங்கறேன்; நீங்க ஐந்நூறாவது வாங்கிக் கொடுக்க முடியுமா ?ன்னேன், ’வாங்கித் தரேன்’ன்னார். அதன்படி, திருச்சி மாநாட்டிலே முதல் முதலா என் நாடகம் நடந்தது. அண்ணா சொன்னபடி, அவராலே பெரியார்கிட்டேயிருந்து எனக்கு ஐந்நூறு ரூபாவாங்கிக் கொடுக்கமுடியல்லே. ஏன்னா, பெரியார் முந்நூறு ரூபாயை எடுத்து அவர்கிட்டே கொடுத்து, ’எல்லாம் அது போதும், போன்னு சொல்லிட்டார். அண்ணாவாலே அப்படிச் சொல்ல முடியல்லே ’கொடுத்த வாக்கைக் காப்பாத்தணுமே’ங்கிறதுக்காக அவர் மாநாட்டுக்கு வந்திருந்த தன் நண்பர்களிடமெல்லாம் தலைக்குக் கொஞ்சங் கொஞ்சமா வாங்கி, இருநூறு ரூபா சேர்த்து, முந்நூறை ஐந்நூறாக்கி எங்கிட்டே கொடுத்தார்…” அப்போ தளபதி அண்ணாவாயிருந்தாலும், நானும் ஒரு விதத்திலே அவருக்கு உதவித் தளபதியாயிருந்து வந்தேன். அதாவது, நான் ஏதாவது செய்ன்னா தொண்டருங்க உடனே செய்யத் தயாராயிருந்தாங்க. அந்த ரயிலிலோ தளபதி அண்ணா வரல்லே. அவருக்குப் பதிலா, என்ஜினுக்கு முன்னாலே கட்டுங்கடா, கழகக் கொடியை’ன்னு நானே ஆர்டர் போட்டேன். அப்படியே கட்டினாங்க. அதைத் தடுக்காத கார்டு வண்டி புறப்படற சமயத்திலே, பெட்டிக்குப் பெட்டி தொத்திக்கிட்டு நிற்கிற தொண்டருங்க அத்தனை பேரும் வண்டியை விட்டுக் கீழே இறங்கினாத்தான் பச்சைக் கொடி காட்டுவேன்’னு அடம்பிடிக்க ஆரம்பிச்சார். ’அப்படியா சமாசாரம்?’னு நான் முதல்லே வண்டியை விட்டுக் கீழே இறங்கி, ’அய்யா சொல்றாரு, அங்கே இங்கே தொத்திக்கிட்டிருக்கிறவனுங்கெல்லாம் இறங்கிப் பிளாட்பாரத்திலே நில்லுங்கடா, வண்டி பாசானதும் ஏறுங்கடா’ன்னேன். அப்படியே இறங்கினாங்க. கார்டு பச்சைக் கொடி காட்டினார். வண்டி நகர்ந்தது; பிளாட்பாரத்திலே நின்ன அத்தனை பேரும் மறுபடியும் தொத்திக்கிட்டாங்க!" “கார்டுக்கு எரிச்சலாயிருந்திருக்குமே ?” “இருந்து என்ன செய்யறது? கதர்ச் சட்டையாயிருந்தாலும் கொஞ்சம் மிரட்டிப் பார்த்திருப்பார்; கறுப்புச் சட்டையாச்சே!” “சரி, அப்புறம் ?” “இத்தனை அமர்க்களமா நடந்த அந்தத் தூத்துக்குடி மாநாட்டுக்குத் தளபதி அண்ணா வரல்லே…” “ஏன் ?” “கருத்து மோதல்தான் காரணம்.” “பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அப்போதே கருத்து மோதல் இருந்ததா?” “இல்லேன்னா ஏன் வராம இருந்திருக்கப் போறார்? இது எனக்குப் பிடிக்கல்லே. ’என்னதான் கெட்டிக் காரராயிருந்தாலும் ஒரு மாநாட்டுக்குத் தலைவர் வராம இருக்கலாம்; தளபதி வராம இருக்கலாமா?ன்னு நினைச்சேன். அப்போ பெரியார் சொன்ன ’கெட்டிக்காரன் கதை ஒண்ணு என் நினைவுக்கு வந்தது.” “அது என்ன கதை?” “நீங்ககூடக் கேட்டிருப்பீங்களே, அவர் அடிக்கடி சொல்வார் - ’எனக்குக் கெட்டிக்காரனுங்க வேணாம், முட்டாளுங்கதான் வேணும்’னு. ஒரு நாள் அவர் அப்படிச் சொன்னப்போ, ’ஏன் அப்படிச் சொல்றீங்க?’ன்னு அவரை ஒருத்தர் கேட்டார். அதுக்குப் பெரியார் சொன்னார்: ’எனக்குப் பா.வே.மாணிக்க நாயக்கர்னு ஒரு நண்பர்; என்ஜினியர். அவரை வைச்சி நான் ஒரு சமயம் ஈரோடிலே வீடு ஒண்ணு கட்டினேன். சுற்றுச் சுவரெல்லாம் எழுப்பியாச்சு. இனிமே மரம் வந்துதான் மேலே வேலையை ஆரம்பிக்கனும், நாளைக்கு நீங்க மரம் வாங்கி வையுங்க, நான் வரேன்னு: சொல்லிட்டு அவர் வீட்டுக்குப் போயிட்டார். மறுநாள் வந்து,”என்ன, மரம் வாங்க ஆள் போயாச்சா ?’ன்னார். ’போயாச்சு, நல்ல கெட்டிக்காரத் தச்சனுங்களர்ப் பார்த்து ரெண்டு பேரை அனுப்பி வைச்சிருக்கேன்னேன். ’கெட்டிக்காரனுங்களையா அனுப்பினிங்க? அப்போ மரம் வந்து சேராது’ன்னார். ’ஏன்?’னு: கேட்டேன். அதை நான் ஏன் சொல்லனும், நீங்களாகவே தெரிஞ்சிக்குவீங்கன்னார். . ’சரி’ன்னு அந்தக் கெட்டிக்காரனுங்க வர வரையிலே காத்திருந்தோம். காலையிலே போன அவனுங்க, சாயங்காலம் மூணு மணிக்கு மேலே வந்தானுங்க. வந்தவனுங்க மரத்தோடும் வரல்லே, வெறுங்கையோடு வந்து நின்னானுங்க. ’எங்கே மரம்’னேன். ’இந்தக் கொட்டாப்புளி பிடிக்கத் தெரியாத பயலைக் கேளுங்க, நான் நல்ல மரமா பொறுக்கி எடுத்தா, இவன்தான் அதை வேணாம்னு சொல்லிட்டான்’னான் ஒருத்தன்; இன்னொருத்தனோ, ’இந்தத் தொரப்பணம் போடத் தெரியாத பயலைக் கேளுங்க, நான் நல்ல மரமா எடுத்துக் காட்டினா, இவன்தான் அதை வேணாம்னு சொல்லிட்டான்’னான்: ஆக, மாணிக்க நாயக்கர் சொன்னது சரியாப் போச்சு. ரெண்டு பேரும் ’யார் கெட்டிக்காரன்’கிறதிலே போட்டி போட்டுக்கிட்டதுதான் மிச்சம், காரியம் நடக்கல்லே. நாயக்கர் சொன்னார், ’இனிமேலாவது தெரிஞ்சுக்குங்க, வழி காட்டத்தான் கெட்டிக்காரன் வேணும்; அந்த வழிப்படி காரியம் நடக்கணும்னா முட்டாளுங்கதான் வேணும்’னு. அது எனக்கு ரொம்பச் சரியாப் பட்டது. அன்னியிலேருந்துதான் எனக்குக் கெட்டிக்காரனுங்க வேணாம், முட்டாளுங்களே போதும்னு நான் சொல்லிக்கிட்டு வரேன்’ன்னார். எப்படியிருக்கிறது, கதை?" “பிரமாதம்!” “இந்தக் கதையை நினைவிலே வைச்சிக்கிட்டு அன்னிக்கு நடந்த மாநாட்டிலே நான் பேரறிஞர் அண்ணாவைக் கொஞ்சம் தாக்கிப் பேசிட்டேன். அவர் மேடையிலே இல்லாத சமயத்திலே மட்டுமில்லே, இருக்கிற சமயத்திலும் நான் சில சமயம் அவரைத் தாக்குவதுண்டு. என்னதான் தாக்கினாலும் அவருக்கு என் மேலே கோபம் வராது. சிரிப்புத்தான் வரும். கலைஞர் கருணாநிதி அன்னிக்கு நான் மாநாட்டிலே பேசிய பேச்சைக் கண்டிச்சி, ‘தூத்துக்குடி மாநாட்டிலே நடிகவேள் நஞ்சு கலந்தார்’னு ’திராவிட நாடு’ ஏட்டிலே எழுதினார். நான் அதைப் பார்த்துக் கோபப்படல்லே, சந்தோஷப்பட்டேன். ஏன்னா, அதை அவர் எழுதி எத்தனையோ வருஷமாச்சு. இன்னும் அந்த வார்த்தை என் நெஞ்சிலே அப்படியே இருக்கு. காரணம்? தமிழை அவ்வளவு அழகா அவர் கையாள்ற முறைதான். எதிரிகளையும் மகிழ வைக்கிற விதத்திலே தமிழைக் கையாளும் அவருக்குத் ’தமிழவேள்’னு பட்டம் கொடுத்தா என்னய்யா? அதைக்கூடச் சிலர் பொறுத்துக்க மாட்டேங்கிறாங்களே, அவங்களை நினைச்சாத்தான் எனக்குச் சங்கடமாயிருக்கு.” தி.மு.கவும் நானும் “அறுபத்திரண்டு எலெக்ஷன்னு நினைக்கிறேன்; ஜெமினி வாசன் ஒரு நாள் என் தோட்டத்துக்கு டெலிபோன் செய்து,‘ஒரு காரியமா உங்களைப் பார்க்கணும். நான் உங்க தோட்டத்துக்கு வரட்டுமா, நீங்க என் வீட்டுக்கு வர்றீங்களா ?’ன்னார். நானே வரேன்’ன்னு போனேன். அப்போ காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் ஒரு படம் எடுத்துக்கிட்டிருந்தார். அதிலே நீங்களும் நடிக்கணும்னார். ’நடிக்கிறேன்; என் கருத்தைச் சொல்ல இடம் கொடுப்பீங்களா ?’ன்னு கேட்டேன். காமராஜைக் கேட்டுச் சொல்லணும்’னார். ’கேளுங்கன்னேன். கேட்டார்; அது முடியாது’ன்னு அவர் சொல்லிட்டார். உங்க கருத்துக்கு ஒத்தாப்போல என்னாலும் பேசி நடிக்க முடியாது’!ன்னு சொல்லிட்டு நான் வந்துட்டேன்.” “ஏன், அப்படிச் சொல்லிவிட்டு வந்து விட்டீர்கள்? அப்போது பெரியார் காங்கிரலை ஆதரித்தும், தி.மு.கவை எதிர்த்தும் தானே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்?” “அது என்னவோ உண்மைதான். ஆனா, என் சமாசாரம் வேறே. அப்போ நான் பெரியாருக்காகத்தான் தி.மு.கவைத் திட்டறாப் போல நடிச்சிக்கிட்டிருந்தேனே தவிர, உண்மையா திட்ட என் மனம் இடம் கொடுக்கல்லே. காரணம், அவங்களிலே பலர் எனக்கு அன்னிக்கும் நண்பருங்க இன்னிக்கும் நண்பருங்க. தி.க வை விட்டுத் தி.மு.க பிரிஞ்சப்புறம் கூட நான் வழக்கம்போல அண்ணா வீட்டிலே தங்குவேன்; சாப்பிடுவேன். அதே மாதிரி ப.உ.சண்முகம் வீட்டிலும் தங்குவேன்; சாப்பிடுவேன். கட்சி வேறே, நட்பு வேறே இல்லீங்களா ?” “ஆமாம், குளித்தலைத் தொகுதியிலே கலைஞர் கருணாநிதி நின்றபோது அவரை எதிர்த்து உங்களை நிற்கச் சொன்னாராமே பெரியார், அது உண்மைதானா?” “உண்மைதான். அவர் மட்டுமில்லே, ‘விடுதலை’ வீரமணியும் மணியம்மையும் கூட எப்படியாவது அவரைத் தோற்கடிக்கணும்னு என்னை எதிர்த்து நிற்கச் சொல்லி வற்புறுத்தினாங்க. தேர்தலுக்கு ஆகிற செலவைக்கூட அவங்களே செய்யறேன்னு சொன்னாங்க. ’மாட்டேன்”னு சொல்லிட்டேன்." “ஏன் 7. “கலைஞரைப் போல ஒரு தலைவர் இந்த நாட்டுக்கு வேணும்னு நான் அப்பவே நினைச்சதுண்டு.” “அண்ணா இருக்கும்போதேயா?” “ஆமாம். அண்ணா நல்லவர், அவர் மனசும் நல்ல மனசு. ஆனா அவராலே எப்பவும் எதிலும் அவ்வளவு உறுதியாயிருக்க முடியறதில்லே…” “கருணாநிதி… ?” “பிடிச்சா, குரங்குப் பிடிதான்; விடவே மாட்டார். சில சமயம் சில விஷயங்களிலே அவர் விட்டுக் கொடுக்கிறாப்போல விட்டுக் கொடுப்பார். கடைசியிலே தான் நினைச்சதை எப்படியும் செய்து முடிப்பார். அப்படி ஒரு உறுதி அவருக்கு அப்பவே உண்டு. ஒரு சமயம் எம்.ஜி.ராமச்சந்திரன் ரசிகர் மன்றத்தாரெல்லாம் சேர்ந்து ’எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற மாநாடு’ன்னு ஒரு பெரிய மாநாடே நடத்த ஏற்பாடு செஞ்சாங்க. அந்த மாநாட்டாலே அப்போ தி.மு.கவின் வளர்ச்சி கொஞ்சம் பாதிக்கப்படும் போல இருந்தது. அதைத் தடுக்கமுடியாத தர்ம சங்கடம் அண்ணாவுக்கு. பார்த்தார் கருணாநிதி; தானே தன் சகாக்களான சி.பி.சிற்றரசு, ப.உ.ச., மதுரை முத்து இவங்களையெல்லாம் சேர்த்துக்கிட்டு நின்னு, அந்த மாநாட்டை நடக்க விடாம தடுத்துட்டார்.” “ஒரு நாட்டின் தலைவருக்கு அப்படி ஓர் உறுதி இருக்க வேண்டுமென்று நீங்கள் அப்போதே நினைத்தீர்கள் போலிருக்கிறது ?” “ஆமாம். நான் நினைச்சதிலே தப்பில்லேன்னு இப்போ அவர் நடத்தற ஆட்சியிலேருந்து தெரியுதா, இல்லையா ? அப்படிப்பட்டவரை நான் எப்படி எதிர்த்து நிற்பேன்? யார் என்ன வேனுமானாலும் நினைச்சிக்கட்டும்’னு சென்னைக்கு வந்துட்டேன்.” “எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாடு தடுத்து நிறுத்தப்பட்டதற்காக அண்ணா வருத்தப்படவில்லையா ?” “அவர் ஏன் வருத்தப்படறார் ? அவருக்கு இருந்த வருத்தம் வேறே….” “அது என்ன வருத்தம்?” “அரசியல் உலகத்திலே நிமிர்ந்து நிற்கிறாப்போல கலை உலகத்திலே”நம்மவங்க நிமிர்ந்து நிற்க முடியலையேன்னு அவர் என்கிட்டே அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார்." “நம்மவங்க என்றால்”? “நண்பர் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், நாராயணசாமி இவங்களையெல்லாம் அவர் அப்படிக் குறிப்பிடறது வழக்கம்.” “அவர்கள் மேல் அத்தனை அன்பா அவருக்கு ?” “இருக்காதா? மத்தவங்க கழகத்தை வைச்சி வளர்ந்தா, அவங்க தங்களை வைச்சிக் கழகத்தை வளர்த்தவங்களாச்சே? “ஓகோ!” “இன்னொரு சமயம் ஈரோடிலே இருக்கிற சம்பத் வீட்டிலே தி.மு.க.கமிட்டிக் கூட்டம் நடந்தப்போ நான் அங்கே இருந்தேன். கமிட்டிக் கூட்டம்னா கழகப் பெரும் புள்ளிகளிலேயே ஒரு சில குறிப்பிட்ட புள்ளிங்கதான் அதிலே கலந்துக்கும். அத்தனை ரகசியமா அது நடக்கும். அந்த இடத்திலே ’தி.க வைச் சேர்ந்த நான் இருக்கலாமா ?’ன்னு யாரோ கேட்டாங்க. அண்ணா சொன்னார், ராதா அப்படிப்பட்டவர் இல்லே, அவர் அங்கே நடப்பதை இங்கே வந்து சொல்ல மாட்டார்; இங்கே நடப்பதை அங்கே போய்ச் சொல்ல மாட்டார்’னு. அந்த நம்பிக்கைக்கு பங்கம் வரும்படியா இன்னிக்கி வரையிலே நான் நடந்துக்கல்லே.” “சரி, விடுங்கள். இப்போதுதான் அவர்கள் எல்லாருமே ஒன்றாய்ப் போய்விட்டார்களே ?” “அதிலும் எனக்கு சந்தோஷம்தான். அதாலேதான் அந்தக் குளித்தலை சமாசாரத்தைக் கூட இப்போ நான் வெளியே சொல்றேன்… இப்படி நான் கழகத்திலும் நாடகத்திலுமா இருந்தப்போ, ராமானுஜத்தைச் சந்தித்தேன்…’ “எந்த ராமானுஜத்தை… ?” “அவரை உங்களுக்குத் தெரியாதா? வாசன் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரர். சர்.சி.பி.ராமசாமி அய்யருக்கெல்லாம் ரொம்ப வேண்டியவர்….” “அப்படியா, அவரை உங்களுக்குத் தெரியும் போலிருக்கிறது ?” “தெரியும். அவர் என்னைப் பார்த்ததும், ’ரத்தக் கண்ணிiர் சினிமாவுக்கு அப்புறம் உங்களை சினிமாவிலேயே பார்க்க முடியலையே ?’ன்னார். ’நாடகத்திலேதான் பார்க்கிறீங்களே, அது போதாதா ?ன்னேன். ’உங்க பிரச்சாரத்துக்கு நாடகத்தைவிட சினிமா பவர்புல்லாச்சே?’ன்னார்; ’பவர்புல்தான்; என் இஷ்டத்துக்கு எங்கே அதிலே பேச விடறாங்க ?’ன்னேன். ’அதுக்கு நீங்க சொந்தப்படம் எடுக்கணும்’னார்; ’பணம் ?’னேன். ’நான் வேணும்னா என்னால் முடிஞ்ச வரையிலே உதவறேன்’ன்னார். அதுக்கு மேலே என் கம்பெனி மானேஜர் சாமண்ணாவை விட்டு அவரோடு பேரம் பேசச் சொன்னேன். எல்லாம் பேசி முடிச்சாச்சி. தேனாம்பேட்டை போயஸ் ரோட்டிலே கம்பெனிக்குன்னு ஒரு வீட்டைப் பிடிச்சி, ’எம்.ஆர்.ஆர்.புரெடக்ஷன்ஸ்’னு சொந்தமாகவே ஒரு பிலிம் கம்பெனி ஆரம்பிச்சேன். காமராஜ்தான் திறந்து வைச்சார். கிருஷ்ணன் பஞ்சுவின் டைரக்ஷன்லே ’ஆளப் பிறந்தவன்’னு படம் எடுக்கிறதா திட்டம் போட்டோம். எனக்கென்னவோ ஒரு நாடகக்காரர் எடுக்கிற படத்துக்கு நாடகத்திலே அனுபவமுள்ள இன்னொரு நாடகக்காரர் டைரக்டராயிருப்பது தான் நல்லதுன்னு பட்டது; கிருஷ்ணன் பஞ்சுவை நீக்கிவிட்டு ஏ.பி.நாகராஜனை டைரக்டராப் போட்டேன். சீனிவாசராகவனின் ரேவதி ஸ்டுடியோவிலே படப் பிடிப்பை ஆரம்பிச்சோம். அப்போ ’ரத்தக் கண்ணீர் பெருமாள் முதலியா’ரும் வந்து எனக்குப் பண உதவி செய்தார்.” “அவருக்கும் உங்களுக்கும் ஏதோ தகராறுன்னு வெளியே சொல்லிக்கிட்டிருந்தாங்களே ?” “அது உண்மையில்லேங்கிறது உங்களுக்கெல்லாம் தெரியட்டும்னுதானே இப்போ நான் அதைச் சொல்றேன் ? அந்தச் சமயத்திலே சீனிவாச ராகவன் என்னையும் பாகவதரையும் போட்டு, ராஜா சாண்டோ நடிச்ச பழைய ’வசந்த சேனா’வை மறுபடியும் புதுசா எடுக்க நினைச்சார். நினைச்சபடியே எடுக்கவும் எடுத்தார். படத்தை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே பாகவதரின் கண் போயிடிச்சி; பாதியிலே நின்னுடிச்சி.” “பாவம், சீனிவாச ராகவன் ஒலிப்பதிவில் மட்டுமல்ல, வேறு எத்தனையோ வகைகளில் அவர் வியக்கத்தக்க திறமை பெற்றிருந்தார். அப்படியிருந்தும் இப்படி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ஏற்பட்டே அவ்வளவு சீக்கிரத்தில் அவர் மறைந்து போனார்!” “எனக்கும் அதிலே வருந்தந்தான்; என்ன செய்வது ? ‘வசந்த சேனா’வின் கதை அப்படி முடிஞ்சப்புறம் ஏ.பி.என். ’ஆளப்பிறந்தவன்’ டைரக்சனோடு, என்னை வைச்சித் தானும் ஒரு படம் எடுக்க முடிவு செய்தார். அதுவே ‘நல்ல இடத்துச் சம்பந்தம்’. அந்தப் படத்திலே எனக்கு ஈடு கொடுத்து நடித்தவர் சவுகார் ஜானகி. அவரை என்னிக்கும் என்னாலே மறக்க முடியாது. அவருக்கும் எனக்கும் இடையே மூன்று வருஷ காலத்துக்கு மேல் கலையுலகத் தொடர்பு இருந்தது. அந்தக் காலத்திலே அவருடைய காருக்கு ஒரு காலன் பெட்ரோல் சும்மாப் போடறேன்னு நான் சொன்னாக்கூட அவர் அதை ஏத்துக்கமாட்டார். ’நான் விரும்பறது. உங்களுடைய நடிப்புக் கலையை, ஓசிப் பெட்ரோலை இல்லே’ன்னு சொல்லிவிடுவார்.” “படித்தவர் அல்லவா ?” “படிச்சவங்களிலும் அப்படி எங்கேயோ ஒருத்தர்தானே இருக்காங்க?” “ஆமாமாம், அப்புறம் ?” “ஆளப்பிறந்தவன் வர்றதுக்கு முந்தி நல்ல இடத்துச் சம்பந்தம் வந்து நல்லா xட ஆரம்பிச்சிடிச்சி. அதுக்கு மேலே கேட்கனுமா ? ஏகப்பட்ட சான்ஸ் எனக்கு. அந்தக் கெடுபிடியிலே சொந்தப் படத்தை என்னாலே கவனிச்சி எடுக்க முடியல்லே, நிறுத்திட்டேன்…” “கம்பெனி… ?” “அதோடு க்ளோஸ்!” “செலவு செய்தது… ?” “ரெண்டரை லட்சம்!” “பணம் கொடுத்து உதவியவர்களெல்லாம் என்ன ஆனார்கள் ?” “திருப்பிக் கொடுத்துட்டேன்.” அண்ணாவின் ஆசை “சிவாஜிகணேசனும் நானும் சேர்ந்து நடிச்ச ‘பாகப்பிரிவினை’ படம் வந்தது. அதை மெஜஸ்டிக் ஸ்டுடியோவிலே போட்டு அண்ணாவுக்குக் காட்டினாங்க…” “எந்த மெஜஸ்டிக் ஸ்டூடியோ, இப்போதுள்ள சாரதா ஸ்டூடியோதானே ?” “ஆமாம். அந்தப் படத்தைப் பார்த்த அண்ணா, ’எம்.ஜி.ராமச்சந்திரனோடு நீங்க இப்படிச் சேர்ந்து நடிக்கணுங்கிறது என் ஆசை’ன்னார். அதுக்கென்ன, நடிச்சாப் போச்சு’ன்னு நான் தேவரைப் பார்த்தேன்…” ஏன், அவரால்தான் உங்கள் இருவரையும் சேர்த்து வைத்துப் படம் எடுக்க முடியும் என்றா ?" “இல்லே, அண்ணாவின் ஆசையை அவரால்தான் சீக்கிரமா நிறைவேற்றி வைக்க முடியுங்கிறது என் எண்ணம்.” “தேவர் என்ன சொன்னார் ?” “அவர் கொஞ்சம் தயக்கத்தோடு ‘எம்.ஜி.ஆர். தகராறு செய்வாருன்னு சொல்றாங்களே ?’ன்னார். அப்போ எனக்கு அது சரியாப் படல்லே. ஏன்னா, எம்.ஜி.ராமச்சந்திரன் இப்போ கட்சி, கிட்சின்னு சொல்லிக்கிட்டிருந்தாலும் ஒரு காலத்திலே கட்சின்னாலே வெறுத்துக்கிட்டிருந்தவர். ஒரு சமயம் ஒரு மாநாட்டு நாடகத்திலே சிவாஜி வேஷம் போடப் பெரியார் அவரைக் கூப்பிட்டப்போ, ’கலைஞனுக்குக் கட்சி வேணாங்கிறது என் கருத்து. அதாலே கட்சி நாடகத்திலே நான் நடிக்க மாட்டேன்’னு சொல்லிவிட்டவர். அதுக்கு மேலேதான் சம்பத் அந்த வேஷத்தைப் போட்டார். அவருக்குப் பிறகு நம்ம கணேசன் அந்த வேஷத்தைப் போட்டு, ’சிவாஜி கணேசன்’னே பெரியார்கிட்டே பேர் வாங்கிவிட்டார். ராமச்சந்திரனுக்கு அப்போ இருந்த லட்சியமெல்லாம் உடம்பைக் கட்டுக் குலையாம வைச்சிக்கனுங்கிறதுதான். அதுக்காகச் சில விஷயங்களிலே அவர் கொஞ்சம் ரிசர்வ்டாயிருப்பார். யார் குடிச்சாலும் அவர் குடிக்கமாட்டார். இப்போ அவரும் குடிக்கிறார்னு சில பேர் என்கிட்டே வந்து சொல்றாங்க, அதை நான் நம்பல்லே. அப்படிப்பட்டவன் தேவர் சொன்னதை நம்புவேனா? என்னைப் போட்டுக் ’கொங்கு நாட்டுத் தங்கம்’ எடுக்கிறதுக்கு முந்திகூட நீங்க அப்படித்தான் நினைச்சீங்க’ன்னேன்.” “என்ன நினைத்தார், உங்களையும் தொல்லை கொடுப்பவர் என்றா ?” “ஆமாம்; இத்தனைக்கும் கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவிலே தேவர் பால் வித்துக்கிட்டிருந்த காலத்திலிருந்து அவரை எனக்குத் தெரியும். நல்ல மனுஷர்; தெய்வ பக்தி உள்ளவர். அறிவு சம்பந்தமாப் பேசறதை விட ஆத்திகம் சம்பந்தமா பேசறதுதான் அவருக்குப் பிடிக்கும். நான் பெரியார் பக்கம் இருக்கிறவன் இல்லையா ? அதாலே ஆரம்பத்தில் என்னைக் கண்டு கொஞ்சம் மிரண்டார். என்னைப் போட்டுக் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ எடுத்தப்புறம் நான் வம்புக்காரன் இல்லேங்கிறது அவருக்குப் புரிஞ்சிப் போச்சு. அதுக்கப்புறம் அவர் என்னை வைச்சிப் பல படங்கள் எடுத்தார். எடுக்கிற படத்துக்குப் பேசிய தொகையை முதலிலேயே கொடுத்துடற புரொட்யூலர் அவர் ஒருத்தர்தான். ஆனா, ’முப்பது நாளிலே ஒரு படத்தை எடுத்து முடிக்கிறதுக்கு அவர்தான் வழிகாட்டி’ன்னு சொல்றதை மட்டும் என்னாலே ஒப்புக்க முடியறதில்லே.” “ஏன் ?” “அவருக்கு முந்தியே சிலர் அப்படி எடுத்து முடித்தது எனக்குத் தெரியும். அவர்களிலே ஒருத்தர் சி.வி.ராமன்…” “சர்.சி.வி.ராமனா ?” “இல்லே. அந்த ராமன் வேறே, இந்த ராமன் வேறே. இவர். இங்கே ‘நாராயணன் கம்பெனி’ன்னு ஒரு சினிமாக் கம்பெனி இருந்ததே, அந்தக் கம்பெனி முதலாளியின் அண்ணன். இவர் முதல்லே படம் எடுக்க மாட்டார். நாலு போட்டோதான் எடுப்பார். ஒரு ஹீரோ போட்டோ, ஒரு ஹீரோயின் போட்டோ, ஹீரோவும் ஹீரோயினும் கட்டிப் பிடிச்சிக்கிட்டு நிற்கிறாப் போல ஒரு போட்டோ; ஹீரோவை வில்லன் கத்தியாலே குத்தப் போறாப்போல ஒரு போட்டோ; இப்படி நாலு போட்டோக்களை எடுத்துக்கிட்டுச் செட்டிநாட்டுப் பக்கம் போவார். அங்கே யாராவது ஒரு செட்டியாரைப் பிடிச்சி, அவர்கிட்டே அந்தப் போட்டோக்களைக் காட்டியே இருபதாயிரம், முப்பதாயிரம் வட்டிக்குக் கடன் வாங்கிக்கிட்டு வந்துடுவார். அந்தப் பணத்தை வைச்சி முப்பது நாள் என்ன, இருபது நாளிலேயே படத்தை எடுத்து முடிச்சிடுவார். இவர் ’சோகா மேளர்’ன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டிருந்தப்போ, நான் வேறே வேலையா சென்ட்ரல் ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். ’என் படத்திலே நீயும் ஒரு வேஷம் போடேண்டா’ன்னார்: ’என்ன வேஷம் ?’னு கேட்டேன். ’பறையன் வேஷம்’னார். ’சரி, போட்றேன்’னு போட்டேன். அந்தப் படத்திலே கொத்தமங்கலம் சுப்பு தம்பி கொளத்து மணி வேதியரா நடிச்சதா ஞாபகம். அவர் ஒரு காட்சியிலே, போடா, பறப்பயலே!’ன்னு என் கன்னத்திலே அறைஞ்சார். எனக்குக் கோபம் வந்துடிச்சி; ’போடா, பாப்பாரப் பயலே!’ன்னு பதிலுக்குத் திருப்பி அறைஞ்சுட்டேன். அறைஞ்சப்புறம்தான் ஆத்திரத்திலே அவசரப்பட்டு இப்படிச் செஞ்சுட்டோமேன்னு காமிரா பக்கம் திரும்பி, ’கட்’,கட்’ன்னு நானே டைரக்டருக்குப் பதிலா கட்’ சொன்னேன். ’கட்டும் வேணாம், வெட்டும் வேணாம்; அப்படியே இருக்கட்டும். அதுதான் நேச்சுரலாயிருக்கும்’னு சொல்லிவிட்டார் ராமன். படம் முடிஞ்சி, நடிச்சதுக்காக ஏதாவது பணம் கொடுப்பார்னு போனப்போ, அவர் சாப்பிட்டியா?’ன்னார். ’சாப்பிட்டேன்’னேன். ’நல்லா சாப்பிடு; வேளா வேளைக்குக் காலந்தவறாம ஒழுங்கா சாப்பிடு. அதுதான் உடம்புக்கு நல்லது’ன்னு சாப்பாட்டைப் பற்றியே பேசிக்கிட்டிருந்தார். ’பணம்?’னேன். ’நீ கூடவா என்னைப் பணம் கேட்கிறது ? நான் பி.ஏ.வரையிலே படிச்சிட்டு வேறே வழியில்லாம இந்தத் தொழிலுக்கு வந்து, மாசத்துக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கிடைச்சாக்கூடப் போதும்னு இருபது நாளைக்கு ஒரு படத்தை எடுத்துச் சுருட்டிக்கிட்டிருக்கேன். உனக்கென்னடா, நீதான் டிராமாவிலேயே போடு, போடுன்னு போட்டுக்கிட்டிருக்கியே? போடா, போய் நல்லா சாப்பிடு; அதுதான் உடம்புக்கு நல்லது’ன்னார். அதுக்கு மேலே என்னத்தைச் சொல்றது? சிரிச்சிக்கிட்டே வந்துட்டேன். அது ஒரு காலம்.” “தேவருக்கும் அந்த ராமனைத் தெரியுமா?” “தெரியும்னுதான் நினைக்கிறேன்.” “சரி. அப்புறம்?” “எம்.ஜி.ஆரைப் பற்றி நான் சொன்னதோடு என் மேக்கப் மேன் கஜபதியை வேறே அனுப்பி அப்பப்போ தேவர்கிட்டே சொல்லச் சொன்னேன். அதுக்கு மேலே ’தகராறு பண்ணா கான்சல் பண்ணிடுவேன்’கிற நிபந்தனையோடு அவர் ராமச்சந்திரனையும் என்னையும் சேர்த்துப் போட்டுப் படம் எடுக்க ஆரம்பிச்சார்.” “அவர் எதிர்ப்பார்த்தபடி தகராறு ஏதாவது.” “ஒண்ணும் இல்லே, தகராறு வந்ததெல்லாம் தாயைக் காத்த தனயன்கிற படத்தாலேதான்.” “அதாலே என்ன தகராறு ?” “அந்தப் படத்திலே எம்.ஜி.ஆரோடு நானும் என் மகன் வாகவும் சேர்ந்து நடிச்சோம். படம் வெளியே வந்தது. அதிலே எம்.ஜி.ஆர். சரோஜா தேவி, அசோகன் எல்லாரும் இருந்தும், விமர்சனம் எழுதறப்போ சில பேப்பர்காருங்க, ’இந்தப் படத்திலே தகப்பனும் மகனும்தான் நிற்கிறாங்க, மற்றவங்க நிற்கலே’ன்னு எழுதினாங்க. இதைப் பார்த்தப்போ, வட நாட்டிலே ஒரு நடிகர் பரம்பரையை உருவாக்கிய பெருமை பிருதிவிராஜூக்கும் அவர் மகன் ராஜ்கபூருக்கும் இருக்கிறாப்போல, தென்னாட்டிலே அப்படி ஒரு பரம்பரையை உருவாக்கிய பெருமை எனக்கும், என் மகனுக்கும் இருக்குன்னு நினைச்சி நான் சந்தோஷப்பட்டேன். அடுத்த படத்திலேயே அந்த சந்தோஷத்துக்கு ஆபத்து வந்துடிச்சி.” “அது என்ன ஆபத்து ?” “அடுத்த படத்திலே ராமச்சந்திரனோடு நடிக்க எனக்கு சான்ஸ் கொடுத்தவங்க, என் மகனுக்குக் கொடுக்கல்லே. அப்பத்தான் இதுக்கு யாரோ காரணமாயிருக்கணும்கிற ஒரு எண்ணம் என் மனசிலே எழுந்தது. அந்த எண்ணம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் நான் மட்டும் எம்.ஜி.ஆரோடு தொடர்ந்து நடிச்சிக்கிட்டு வந்தேன். அந்தச் சமயத்திலே ராமச்சந்திரனாலே பாதிக்கப்பட்ட சில நடிகர்களும் நடிகைகளும் என்கிட்டே வந்து, ‘அவர் எங்க பொழைப்பை அப்படிக் கெடுத்துட்டார். அவர் செய்யற’ ’தான தரும சாகசத்தாலே இதெல்லாம் வெளியே தெரியமாட் டேங்குதுன்னு புகார் சொல்ல ஆர்ம்பிச்சாங்க.” “அவரால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களிடம் வந்து புகார் சொல்வானேன் ?” “யாரையும் எதுக்கும் தட்டிக் கேட்கிற தைரியம் எனக்குத்தான் இருக்குன்னு அவங்க நம்பியதுதான் அதுக்குக் காரணம்.” “பிற்கு ?” “இதையெல்லாம் கேட்கக் கேட்க, ’அப்படியும் இருக்குமா ?ங்கிற ஒரு கேள்விக் குறி வேறே என் மனசிலே எழுந்து, நாளுக்கு நாள் அது பெரிசா வளர்ந்துக்கிட்டே வந்தது. அதுக்குமேலேதான் எதையும் பொருட்படுத்தாம, ’தானுண்டு, தனக்குக் கிடைக்கிற எச்சிலை உண்டுன்னு நாய் வாழலாம், மனுஷன் வாழலாமா ? தானும் வாழ்ந்து, மற்றவங்களையும் வாழ வைக்கிறவன் இல்லே மனுஷன்னு நான் யோசிக்க ஆரம்பிச்சேன்.” தன் தருமம் தலை காக்கும் “இந்த நாட்டிலே மனுஷனா வாழறதை விட நாயா வாழறது நல்லதுன்னு சிலர் நின்னைக்கிறாங்க; நாயா வாழறதைவிட மனுஷனா வாழறது நல்லதுன்னு சிலர் நினைக்கிறாங்க. நானோ நாயா வாழறதை விட மனுஷனா வாழறதுதான் நல்லது’ங்கிற முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுக்கு நான் வர ஒரு காரணம் ரெண்டு காரணம் இல்லே, எத்தனையோ காரணங்கள் இருந்தன…” “அந்தக் காரணங்களை… ?” “இப்போ நான் சொல்றதும் ஒண்ணுதான். சொல்லாம விடறதும் ஒண்ணுதான்…” “சரி, விடுங்கள்; அப்புறம்?” “அதுக்கு மேலே என்ன நடந்தது, நான் ஏன் ஜெயிலுக்குப் போனேங்கிறதெல்லாம் உங்களுக்கும் தெரியும்; இந்த உலகத்துக்கும் தெரியும். அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி, மேலே மேலே கசப்பை வளர்த்துக்கிட்டிருக்க நான் விரும்பல்லே. அப்படிச் சொல்லச் சொல்லி என்னை வற்புறுத்தறவங்களுக்கெல்லாம் நான் சொல்ற பதில் இதுதான்-‘தயவு செஞ்சி என் வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்களைக் கொஞ்சம் விரிவா வெளியிட்டிருக்கிற பேப்பருங்களை எடுத்து வைச்சிக்கிட்டு இன்னொரு தடவை ஊன்றிப் படியுங்க என்கிறதே அது. அதுங்களிலே இருக்கிற என் வக்கீல்களின் வாதங்கள் உங்களுக்கு உண்மையை ஓரளவாவது எடுத்துக் காட்டும். ’சட்டம் ஓர் இருட்டறை; வக்கீலின் வாதம் விளக்கு’ன்னு சொன்னார் பேரறிஞர் அண்ணா. என் வழக்கைப் பொறுத்த வரையிலே வக்கீலின் வாதம் விளக்காயிருந்ததோ என்னவோ, உண்மைக்கு அது ஓரளவு விளக்காவே இருந்தது. ஆனாலும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே நான் மனம்விட்டுச் சொல்லி விடணும்னு நினைக்கிறேன். அதாவது, நெற்றிப் பொட்டில் குண்டடி பட்டு நினைவை இழந்தவன் நான்தான். அந்த நிலையிலே என்னையும் முதல்லே ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போயிருக்கிறாங்க. அங்கே நினைவு திரும்பி நான் கண் விழிச்சிப் பார்த்தப்போ, கீதா மட்டும் என் பக்கத்திலே இல்லே; அண்ணா, கலைஞர் கருணாநிதி எல்லாருமே இருந்தாங்க. அவங்களிலே யாரும் அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, என்னைக் கண்டிச்சி ஒரு வார்த்தை சொல்லல்லே; அதிலே எனக்கு ஒரு திருப்தி.’ அதைவிட திருப்தியளிக்கிற விஷயம் ஒண்னு ஜெனரல் ஆஸ்பத்திரியில்லே நடந்தது…” “அது என்ன விஷயம் ?” “அங்கேதான் என் நெற்றிப் பொட்டிலிருந்து தலைக்குள்ளே பாஞ்சியிருந்த குண்டை ஆபரேஷன் பண்ணி எடுத்தாங்க. எடுத்தப்புறம் டாக்டர் சொன்னார், ‘நல்ல வேளை, மூளை வரையிலே போயிட்ட குண்டு அதைத் தொடாம’ நின்னுடிச்சி. தொட்டிருந்தா ஆளே அவுட்டாயிருப்பார். தருமம் தலை காக்கும்னு பெரியவங்க சொல்வாங்க. இவரைப் பொறுத்த வரையிலே அது உண்மையாப் போச்சு’ன்னு. அது போதும் எனக்கு.” “நீங்களும் தருமம் கிருமம் செய்வதுண்டா, என்ன ?” “ஏதோ, என்னாலே முடிஞ்ச வரையிலே செஞ்சிக்கிட்டுத் தான் இருக்கேன். ஆனா, உங்களைப் போலிருக்கும் பேப்பர்காரர்களையெல்லாம் கூட்டி வைச்சிக்கிட்டு நான் எதையும் செய்யறதில்லே. நான் செய்யற தருமம் எனக்கும், என்னாலே உதவப்படறவங்களுக்கும். மட்டும் தெரிஞ்சாப் போதும்னு நான் நினைக்கிறேன்.” “உங்கள் சிறைச்சாலைச் சிந்தனைகளைப் பற்றி…” “இது வரையிலே சொல்லிக்கிட்டு வந்ததெல்லாம் என் சிறைச்சாலைச் சிந்தனைகள்தானே? இன்னும் என்ன இருக்கு, சொல்ல? ஒண்ணு வேணும்னா சொல்லலாம். ஜெயில்லே நான் ஒரு படம் பார்த்தேன்; கே.ஆர்.விஜயா எடுத்திருந்தது அது.” “என்ன படம், ’சபத’மா ?” “ஆமாம். அந்தப் படத்தின் கதை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்தது. அதிலே ஒரு பெரிய மனுஷன் வர்றான். உள்ளே அவன் செய்யாத அக்கிரமமில்லே; வெளியிலே இருக்கிறவங்களுக்கோ அவன் சாக்ரடீசாகவும், காந்தியாகவும், இயேசுவாகவும் காட்சியளிக்கிறான். அந்த வேஷத்தை பகவதி ஏத்து ரொம்ப நல்லா செஞ்சிருந்தார். அந்த மாதிரி நாலு படங்க வந்தா நல்லவன் வாழ்வான், நாடும் வாழுங்கிறது என் கருத்து.” “பொதுவாக சிறைவாழ்க்கை.” “நல்லாத்தான் இருந்தது. அன்னியன் இந்த நாட்டை ஆண்டகாலத்திலே வேணுமானா அங்கே கொடுமை கிடுமை நடந்திருக்கலாம்; இப்போ அதெல்லாம் ஒண்ணும் இல்லே. அங்கே இருக்கிற அதிகாரிங்களும் நம்மவங்களாப் போயிட்டாங்க; கைதிங்களும் நம்மவங்களாப் போயிட்டாங்க. அதாலே நல்லவன் யாரு, கெட்டவன் யாருன்னு புரிஞ்சிக்கிட்டு, அதுக்கேற்றபடி நடந்துக்கிறாங்க.” “உங்களை அங்கே நல்லவன் என்று நினைத்தார்களா, கெட்டவன் என்று நினைத்தார்களா ?” “நல்லவன்னே நினைச்சாங்க!” “அங்கே உங்கள் பொழுது போக்கு…” “டென்னிஸ் ஆடினேன். மற்ற நேரங்களிலே இங்கிலீஷ் படிச்சேன்; அதிலிருந்து தமிழிலே வர்ற சமூகக் கதைகளிலே பாதிக்கு மேலே இங்கிலீஷிலிருந்து திருடறதுன்னு தெரிஞ்சது. பிரெஞ்சு படிச்சேன். அதைச் சொல்லிக் கொடுத்த வாத்தியார்கிட்டே தமிழிலே திட்றதுக்கு இருக்கிற வார்த்தை களையெல்லாம் சொல்லிக் காட்டி, அந்த மாதிரி பிரெஞ்சிலே ஏதாவது இருந்தா, அதை முதல்லே சொல்லிக் கொடுங்கன்னேன். ’அப்படி எதுவும் பிரெஞ்சிலே இல்லே’ன்னார். அப்போ அந்தப் பிரெஞ்சே எனக்கு வேணாம்’னு விட்டுட்டேன். “பிறமொழி படிப்பது பிறரைத் திட்டுவதற்குத்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, என்ன ?” “அப்படி நான் நினைக்கல்லே; ’திட்றதிலேகூடத் தமிழை மிஞ்ச இன்னொரு மொழி இல்லாதப்போ, அதைப் படிப்பானேன்?’னு நினைச்சித்தான் விட்டேன்;” “சிறைக்குச் செல்லும் குற்றவாளிகளில் யாரும் அதை விட்டு வெளியேறும்போது திருந்தி வெளியேறுவதில்லை என்கிறார்களே, அது உண்மைதானா ?” “உண்மைதான். எதிரி மேலே வைச்ச வஞ்சத்தை மறக்கத்தான் ஜெயில் உதவுது; திருந்த உதவல்லே.” “உங்கள் அனுபவமும் அப்படித்தானா?” “என் அனுபவம் வேறே: மற்றவங்க அனுபவம் வேறே. அது சொன்னாப் புரியாது; நீங்களும் ஒரு தடவை ஜெயிலுக்குப் போய் விட்டு வந்தால்தான் புரியும். ஆனா, கெட்டகாரியம் செய்துட்டுப் போய் வராதீங்க; ஏதாவது நல்ல காரியம் செய்துட்டுப் போயிட்டு வாங்க!” ராதா சிரிக்கிறார்; “பக்தனுக்கு இந்த உலகமே சிறைச்சாலையாயிருப்பதுபோல என் வீடே எனக்குச் சிறைச்சாலையாயிருக்கிறது. அந்த அனுபவம் போதும்” என்று நானும் பதிலுக்குச் சிரித்தபடி அவரிடமிருந்து விடை பெறுகிறேன். முற்றும்.