[] [cover image] நகைச்சுவைக் கதைகள் அரவிந்த் சச்சிதானந்தம் FreeTamilEbooks.com CC BY-NC-SA-ND நகைச்சுவைக் கதைகள் 1. நகைச்சுவைக் கதைகள் 2. வரிசையில் நின்ற கடவுள் 3. ப்ளாக் பாரஸ்ட் கேக் 4. கடவுளும் ப்ளாக் டிக்கெட்டும் 5. லேடி போலீஸ் 6. ஓடிப்போனக் கடவுள் 7. கும்பிடுசாமி நகைச்சுவைக் கதைகள் நகைச்சுவைக் கதைகள்   அரவிந்த் சச்சிதானந்தம்   aravindhskumar@gmail.comதமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC BY-NC-SA-ND கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Nagaichuvai_Kadhaigal} நகைச்சுவைக் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர்: அரவிந்த் சச்சிதானந்தம் © அரவிந்த் சச்சிதானந்தம் முதல் பதிப்பு: 13, டிசம்பர் 2017 அந்தாதி பதிப்பகம் 49, பெரியார் தெரு, தாம்பரம் சானடோரியம் சென்னை- 600047 +91-9789910740 Nagaichchuvaik Kathaigal- Short Story Collection Author: Aravindh Sachidanandam ©Aravindh Sachidanandam First edition: 13, December 2017 Andhadhi Pathippagam (A Publishing house of Sparkcrews Studios) 49 Periyar Street, Tambaram Sanatorium Chennai-600047 www.andhadhi.com Email: andhadhipathippagam@gmail.com +91-9789910740 வரிசையில் நின்ற கடவுள் வழக்கமாக நடை சாத்துவதற்கு முன்பு செய்யப்படும் கைங்கர்யம் எதுவும் செய்யப்படவில்லை. நங்கையர் குறை தீர்க்கும் நல்லாண்டானுக்கு சந்தேகம், ‘தாலாட்டு ஏன் இன்னும் பாடப்படவில்லை?’. அசதியின் காரணமாக அதைப் பொருட்படுத்தாமல் உறங்கிப் போனார். வைகுண்டராஜன் தன் துயில் கலையும் போது சுப்ரபாத ஒலி கேட்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் இல்லை. குழப்பமடைந்தவர், வைகுண்டத்திலிருந்து நேரடியாக மலை மீது இறங்கினார். கோவிலே வெறிச்சோடிக் கிடந்தது. வாசலில் பல்லக்கு கேட்பாரற்றுக் கிடந்தது. வெகுதொலைவில், மலை அடிவாரத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் புள்ளியாகத் தெரிந்தார்கள். ‘எல்லாம் எங்கே ஓடுகிறார்கள்?’ வைகுண்டராஜன் சுற்றும் முற்றும் பார்த்தார். நந்தவனத்தில் ஒரு பிச்சைக்காரன் உறங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்பினார். “என்ன சார் நீயும் என்னமாதிரியா? பாத்ததே இல்லையே?” பிச்சைக்காரன் கேட்டான். வைகுண்டராஜனுக்குப் புரியவில்லை. என்ன சொல்கிறான் இவன் என்பது போல் பார்த்தார். அதைக் கேட்டும்விட்டார். “என்ன சொல்கிறாய் மகனே? எல்லோரும் எங்கே?” பிச்சைக்காரன் கடவுளையே ஏற இறங்கப் பார்த்தான். கூத்துக் கட்ட வந்தவனைப் போல் அவர் ஆடை அணிந்திருந்தது அவனுக்கு ஆச்சர்யம் அளித்தது. அவன் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். “உன்னைத்தான் மகனே? எல்லோரும் எங்கே ஓடுகிறார்கள்?” “அதான் கவர்மென்ட்ல சொல்டாங்களே. ஐநூறு ரூவா ஆயிரம் ரூவா நோட்டுலாம் செல்லாதுன்னு. அதான் எல்லாம் மாத்த பேங்க்குக்கு ஓடுறாங்க. உங்களுக்கு தெரியாதா?” வைகுண்டராஜன் பதில் அளிக்கவில்லை. பல்லக்கைப் பார்த்தார். “அது நேத்து நைட்ல இருந்து அங்கதான் இருக்கு. எட்டு மணி இருக்கும். கருட ஊர்வலம் முடிஞ்சு சாமி மறுபடியும் கோவிலுக்குள்ள நுழைஞ்சுக்கிட்டு இருந்துச்சுல. அப்பதான் யாரோ சொன்னாங்க. ஐநூறு ரூவாய் ஆயிரம் ரூவாய் நோட்டுலாம் செல்லாதுனு. எல்லாம் பல்லக்க போட்டுட்டு அப்டியே ஓடிட்டாங்க” வைகுண்டராஜனுக்கு கோபம் வந்தது. அடக்கிக் கொண்டார். “நீ செல்லவில்லையா மகனே?” “என்ட எல்லாமே சில்லறை தான்” சொல்லிவிட்டு அவன் தன் மூட்டையைக்காண்பித்தான். “நம்மக்கிட்ட ஏது ஐநூறும் ஆயிரமும்? ஆமா என்ன கேக்குறியே, நீ காசலாம் மாத்தீட்டியா?” அப்போது தான் வைகுண்டராஜனுக்கு உண்டியல் முழுக்கப் பணம் இருப்பது நியாபகம் வந்தது. வெறும் உண்டியல் மட்டுமா? அங்கே திறக்கப்படாமல் இருக்கும் பல அறைகள் முழுக்கச் செல்வங்கள் இருக்கின்றன. ‘நல்ல வேளை, அவையெல்லாம் ரூபாய் நோட்டுக்களாக இருந்திருந்தால், பெரும் நஷ்டமாகி இருக்கும்.’ உண்டியலிலிருந்து அள்ள முடிந்த அளவிற்கு பணத்தை எடுத்துக் கொண்டார். அவர் கோவிலை விட்டு வெளியே வருகையில், அந்தப் பிச்சைக்காரன் எதிரில் வந்தான். “இம்புட்டும் உன் காசா?” “இன்னும் இருக்கிறது மகனே?” “அது சரி. ஆனா பேங்க்ல நாலாயிரம்தான் மாத்துவாங்க. கொஞ்சம் எடுத்துட்டுப் போ. ஏன் இவ்ளோவையும் தூக்கிட்டுப் போற” வைகுண்டராஜன் தயங்கினார். “இந்தக் காசுக்கு இப்ப மதிப்பே இல்ல. சும்மா வச்சுட்டப் போ. நான் பாத்துக்கிறேன்” அவர் கொஞ்சம் காசை மட்டும் எடுத்து சுருக்குப் பையில் வைத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். “வாத்தியாரே இந்த ட்ரெஸோட போனா உள்ள விட மாட்டாங்க. மேல் சட்டக் கூட இல்ல. இந்தா இதைப் போட்டுக்கோ” என்று அவன் தன் பைக்குளிருந்து ஒரு பேண்ட் சட்டையை எடுத்து நீட்டினான். அவர் வாங்கிக் கொண்டார். *** வங்கியில் கூட்டம். வைகுண்டராஜனின் கோவிலில் இருப்பதை விட அதிகக் கூட்டம். வைகுண்டராஜன் அவ்வளவு கூட்டத்தை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. வங்கியின் வாசலில் நிழலுக்காக பந்தல் போட்டிருந்தனர். வெயில் அதிகமிருந்ததால், எல்லோரும் அடித்துப்பிடித்துக் கொண்டு பந்தளுக்குள்ளே  நிற்க முற்பட்டனர். வைகுண்டராஜனுக்கு வரிசையில் நின்று பழக்கம் இல்லாததால், அங்கு நிற்பதே பெரும் போராட்டமாக இருந்தது. எல்லோரும் அவரை தள்ளிவிட்டு முன்னே போய்க் கொண்டிருந்தனர். பக்கத்து வரிசையில் நின்ற பெரியவர் வைகுண்டராஜனை பார்த்த கேட்டார், “உங்கள எங்கேயோ பாத்திருக்கேனே? ஹான், சாவித்திரியோட அத்திம்பேர் தான நீங்க?” வைகுண்டராஜன் என்ன சொல்வது என்று தெரியாமல், ஆம் என தலை அசைத்தார் “கண்ணன் தான உங்க பேரு?” அதற்கும் தலையசைத்தார். “வாங்க இங்க வந்து நின்னுக்கோங்க.” என்று அந்தப் பெரியவர் தனக்கு முன் நிற்க இடமளித்தார். அகம் மகிழ்ந்த வைகுண்டராஜன் பெரியவருக்கு போகும் போது வரமளித்துவிட்டு போக வேண்டுமென்று முடிவு செய்தார். அதற்குள் கேஷ் கவுன்ட்டர் வந்தது. “ப்ரூப் வேணும் சார். அப்பத்தான் எக்ஸ்சேஞ் பண்ணமுடியும்” கேஷியர் பெண்மணி சொன்னாள். வைக்குண்டராஜன் திருதிருவென விழித்தார். “மறந்துட்டீங்களா கண்ணன்?” பின்நின்ற பெரியவர் வினவினர். “மேடம் இது என் வைஃப்போட ஆதார். இத வச்சு மாத்திக் குடுங்களேன். ரொம்ப நேரம் க்யூல நின்னுட்டார். என் ரிலேடிவ் தான்” பெரியவர் வக்காலத்து வாங்கினார். கேஷியர் பெண்மணி இறக்கப்பட்டு சரி என ஒப்புக் கொண்டாள். வைகுண்டராஜன் நான்கு ‘ஆயிரம் ரூபாய்’ நோட்டுக்களை நீட்டினார். அந்த பெண்மணி இயந்திரத்தினுள் அந்த தாள்களை போட்டாள். “க்யுங்” என்று இரண்டு முறை சப்தம் வந்தது. இயந்திரத்தின் டிஸ்ப்ளேயில் “F” என்று வந்தது. “ஃபேக் நோட்” கேஷியர் பெண்மணி கோபமாக இரண்டு நோட்டுக்களையும் திருப்பி நீட்டினாள். “அப்படி என்றால்” “கள்ள நோட்டு “எங்க வாங்குனீங்க கண்ணன் இந்த நோட்ட?” பெரியவர் வினவினார். “கோவில்ல” “பெருமாளே. கோவில்ல கள்ள நோட்ட குடுக்குறாளே உருப்புடுவாளா?” “சார், நாங்க இந்த நோட்ட கிழிச்சு போடணும். ஏதோ வயசானவராச்சேனு திருப்பி கொடுத்துட்டேன். எங்க வாங்குனீங்களோ அங்கேயே குடுங்க” கேஷியர் பெண்மணி சீறினாள். “அந்த மிச்சம் ரெண்டாயிரத்தயாவது மாத்திக்குடுங்க?” பெரியவர் பவ்யமாக கேஷியரிடம் சொல்ல, கேஷியர் மீண்டும் ஒரு நோட்டை திருப்பி தந்தாள். “இது pre-2005 நோட் சார் “சில்வர் கம்பி இருக்கு பாருங்க. இந்த நோட்ட இப்போ நாங்க வாங்கக் கூடாதுன்னு ரூல். இத இங்க மாத்த முடியாது. ரிசர்வ் பேங்க்போய் மாத்திக்கோங்க?” ‘உண்டியலில் என்னென்ன நோட்டுக்களை எல்லாம் போடுகிறார்கள்’ வைக்குண்டராஜனுக்கு கோபம் வந்தது. மீண்டும் அடக்கிக் கொண்டார். “ஒரு ஆயிரத்தையாவது மாத்திக் குடுமா?” இது பெரியவர் “சின்ன denomination இன்னும் வரல சார். வெறும் 2000 denomination தான் இருக்கு. ஆயிரத்துக்கு குடுக்க சில்லறை இல்லையே?” “கொஞ்சம் ட்ரை பண்ணுமா?” “வச்சுகிட்டா சார் இல்லன்னு சொல்றோம். வேற நோட் இருந்த குடுங்க. இல்ல கிளம்புங்க” “வேற காசு இருக்கா?” பெரியவர் வைகுண்டராஜனை கேட்டார். “நிறைய இருக்கிறதே” என்றவாறே வைகுண்டராஜன் தன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டார். பாக்கெட் ஓட்டையாக இருந்தது. *“வாத்தியாரே இந்த* ட*ரெஸோட போனா உள்ள விட மாட்டாங்க. மேல் சட்டக் கூட இல்ல. இந்தா இதை ப்போட்டுக்கோ“* ‘விதி வலியது’ “காச வச்சுட்டு வந்துட்டேன். நிறைய இருக்கு” வைகுண்டராஜன் சொன்னார். “யோவ் பெருசுங்களா எவ்ளோ நேரம் அங்கேயே நிப்பீங்க?” பின்னிருந்து ஒருவன் கத்தினான். பெரியவர் மட்டும் தன் காசை மாற்றிக் கொண்டார். “அகௌண்ட் ஓபன் பண்ணி போட்டுறலாம் கண்ணன். கவலை படாதீங்க. மேனஜர் என் பிரெண்டு தான்” பெரியவர் வைகுண்டராஜனை மேலாளரிடம் அழைத்துச்  சென்றார். வேலை செய்யாமல் தொலைபேசியில் யாரிடமோ வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்த மேலாளர் இவர்களை பார்த்ததும் வேலை செய்வது போல் பாவனை செய்தார்.  வைக்குண்டராஜனும் பெரியவரும் வெளியே காத்திருக்க வேண்டியதாயிற்று. ‘நம்மை தரிசனம் செய்ய எத்தனை பேர் காத்திருப்பார்கள். இன்று இந்த மானிடன் நம்மையே காக்க வைத்துவிட்டானே’ ஒருவழியாக மேலாளர் இவர்களை உள்ளே அழைத்தார். பெரியவர் வைகுண்டராஜனை அறிமுகம் செய்து வைத்தார். “உங்க ஃபுல் நேமே கண்ணன் தானா?” “கண்ணன், கமலக்கண்ணன், ஹரிஹரன், வைகுண்டன், பார்த்தசாரதி. இன்னும் ஆயிரம் பெயர்கள் உண்டெனக்கு” “ஆயிரம் பேர் இருக்கலாம் சார். ப்ரூப்ல என்ன பேர் இருக்கு? அத வச்சு தான் அகௌண்ட் ஓபன் பண்ண முடியும்” “ப்ரூப்பா?” “அடையாள அட்டை. ஆதார், பான் கார்ட்” வைகுண்டராஜன் விழித்தார். “அதெல்லாம் இல்லையப்பா” “எந்த ப்ரூப்மே இல்லையா? வோட்டர்ஸ் ஐ.டி, டிரைவிங் லைசன்ஸ்?” “அதுவும் இல்லையப்பா” “என்ன கண்ணன். எப்பவும் வண்டில தானே வருவீங்க. லைசன்ஸ் இல்லாமயா இவ்வளவு நாளா வண்டி ஓட்றீங்க?” “கருட வாகனம் ஓட்டுவதற்கு லைசன்ஸ் எதற்கு?” வைகுண்டராஜன் என்ன பேசுகிறார் என்று பெரியவருக்கு குழப்பமாக இருந்தது, வெகு நேரம் வெயிலில் நின்றதால் கண்ணன் ஏதோ பேசுவதாக அவர் கருதினார். அதனால் அவர் மேலாளரிடம், “சார் ப்ரூப்லாம் எடுத்துட்டு வந்து அகௌண்ட் ஓபன் பண்ணிக்குறோம். இவ்வளவு தூரம் வந்ததுக்கு ஒரு ரெண்டாயிரம் எக்ஸ்சேஞ் பண்ணித்தாங்கோ. கவுன்டர்ல அந்த பொண்ணு ரூல்ஸ் பேசுறா” மேலாளர் உதவி மேலாளரை அழைத்து, ஜாடையில் எதையோ எடுத்து வர சொன்னார். அவர் ஒரு மை டப்பாவையும் ஒரு இரண்டாயிரம் நோட்டையும் எடுத்து வந்தார். “இது  எதுக்கு?” மை டப்பாவை காண்பித்து பெரியவர் வினவினார். “இனி ஒருத்தர் ஒரு முறை தான் நோட் எக்ஸ்சேஞ் பண்ணலாம். அதுக்கு தான் அடையாளத்துக்கு விரல்ல இந்த மை” என்று சொல்லிக்கொண்டே அந்த உதவி மேலாளர், வைக்குண்டராஜனின் வலது கை ஆட்காட்டி விரலில் மை வைத்தார். “பிப்டீன் மினிட்ஸ் முன்னாடி தான நான் எக்ஸ்சேஞ் பண்ணினேன். என் கைல யாரும் வைக்கலயே” “பைவ் மினிட்ஸ் முன்னாடிதான் சார் RBI circular வந்துச்சு” “ராமா” பெரியவர் அலுத்துக்கொண்டார் “கூப்டீங்களா?”  வைகுண்டராஜன் பெரியவரைப் பார்த்துக் கேட்டார் “கண்ணன் தான உங்க பேரு!” “கண்ணனும் நானே ராமரும் நானே” “விட்டா கிருஷ்ணரும் நீங்கதான்னு சொல்வீங்க போல இருக்கே?” மேலாளர் வினவினார். “அதிலென்ன சந்தேகம்!” வைகுண்டராஜன் சொன்னார். “சும்மா இருங்க கண்ணன். எப்பபாத்தாலும் ஜோக் பண்ணிக்கிட்டு” வைகுண்டராஜன் ஒரு இரண்டாயிரம் தாளை பெற்றுக் கொண்டு வெளியே வந்தார். மேலாளர் பெரியவரிடம் சிறிது நேரம் தனியாக பேசினார். வெளியே வந்த பெரியவர், “வாங்க இளனி சாப்ட்டு போவோம்” என்று அழைத்தார். வைகுண்டராஜனுக்கும் தாகமாக இருந்தது. சரி என்று ஒப்புக் கொண்டார். அவர்கள் வங்கிக்கு எதிரே புதிதாக முளைத்திருந்த இளநீர் கடையில் இளநீர் அருந்தினர். பெரியவர் காசை கொடுத்தார். வைகுண்டராஜனுக்கு மீண்டும் அகம் மகிழ்ந்தது.  பெரியவருக்கு இன்னொரு வரமும் தர வேண்டும் என்று தன்னுள் நினைத்துக் கொண்டார். “எந்த ப்ரூப்பும் இல்லாம அகௌண்ட் ஓபன் பன்றது கஷ்டமாம். அகௌண்ட் இல்லாமயே உங்க காசலாம் மேனஜர் மாத்தி தரேன்னு சொல்றார். அவருக்கு 30% ப்ரீமியம் மட்டும்தந்தா போதுமாம்” பெரியவர் சொன்னார். “ப்ரீமியம் என்றால்?” “கமிஷன் அப்டினும் சொல்லலாம்” “ஐயோ இதெல்லாம் தவறில்லையா?” “இல்ல கண்ணன். கோவில்ல சாமிக்கிட்ட வேண்டிட்டு உண்டியல கொஞ்சம் காச போடுறோமே. அது மாதிரிதான் இதுவும்” வைகுண்டராஜனுக்கு கோபம் தலைக்கேறியது. “வேண்டாம் என் பணத்தை நானே மாற்றிக் கொள்கிறேன்” கோபாமாக சொன்னார். “எப்படி மாத்துவீங்க கண்ணன்? பெரிய கட்சிக்காராலாம் தொண்டர்ங்க கிட்ட காச பிரிச்சிக் கொடுத்து பேங்க் பேங்காக அனுப்பி மாத்திப்பா. நம்மள மாதிரி மிடில் கிளாஸ் எண்ணப் பண்றது. ஒவ்வொரு பேங்க்கும் ஒரு அவதாரமா எடுக்க முடியும்?” “யுரேக்கா” என்று வைக்குண்டராஜன் கத்தினார். “என்ன கண்ணன்?” “ஒன்றுமில்லை. நான் பல அவதாரங்கள் எடுத்து என்னிடமிருக்கும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்” என்று சொல்லிவிட்டு சப்தமாக சிரித்தார் வைகுண்டராஜன். பெரியவர் அதிர்ச்சியாக வைகுண்டராஜனைப் பார்த்தார். வெட்ட வெளியில் அவர் அப்படி சிரித்தது பெரியவருக்கு பயத்தை ஏற்படுத்தியது. அதற்குள் எதிரே வண்டியில் வந்த பெரியவரின் மகன், “என்னப்பா இவ்ளோ நேரம்! அம்மா பாத்துட்டு வர சொன்னா” என்றான். “கொஞ்சம் கூட்டம் ஜாஸ்தியாயிடுத்து” என்று சொன்ன பெரியவர், “இவர் நம்ம நாடகசபா கண்ணன்” என்று தன் மகனிடம் சொன்னார். வைகுண்டராஜன் எதையும் சட்டை செய்யாமல் ஆகாயத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தார். “நம்ம சாவித்திரி மாமி அத்திம்பேரா?. அவருக்குத்தான் சுவாதீனம் சரியில்லாம போச்சாமே. ஏதோ பெருமாள் கோவில் வாசல்ல பிச்சை எடுத்துட்டு இருக்காராம்” “ஆமாடா. இவரும் கோவிலுனு தான் சொன்னாரு. அப்பவே நான் சுதாரிச்சிண்டிருக்கணும்” என்று சொல்லிவிட்டு பெரியவர் வைகுண்டராஜனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று தன் மகனின் ஸ்கூட்டரில் ஏறிக் கொண்டு தன் மகனை அங்கிருந்து நகரும்படி துரிதப்படுத்தினார். அவர்கள் சென்றதை வைகுண்டராஜன் பொருட்படுத்தவில்லை. பல அவதாரங்கள் எடுத்து காசை மாற்றுவதே அவர் குறிக்கோளாக இருந்தது.  முதலில் ஒரு அவதாரம் எடுத்து காலையில் சென்ற வங்கிக்கே சென்றார். ஆனால் காவலாளி இவரை உள்ளே விடாமல், “காலைல தான சாப் வாங்கிட்டுப் போனீங்கோ.  அபி தூஸ்ரி பார் வந்தா எப்டி சாப்?” என்று கேட்டான். ‘இந்த அவதாரம் சரியில்லை போல. எளிதில் அடையாளம் கண்டுக் கொண்டான்’ என்று நினைத்துக் கொண்டு வைகுண்டராஜன் வேறொரு அவதாரத்தில் சென்றார். அதையும் அவன் கண்டுகொண்டான். ‘இந்த வங்கிக் காவலாளி மிக புத்திசாலியாக இருக்கிறான்’ வைக்குண்டராஜன் வேறொரு வங்கிக்கு சென்றார். அங்கே காவலாளி இல்லாததால் நேரடியாக உள்ளே நுழைந்து விட்டார். அவரை பார்த்த கிளார்க் பெண்மணி, “ஆல்ரெடி ஒரு பேங்க்ல எக்ஸ்சேஞ் பண்ணிடீங்க தான சார்? அப்பறம் ஏன் இங்க வறீங்க?” என்று எரிந்து விழுந்தாள். ‘இவர்களுக்கு எப்படி தெரிந்தது?’ வெகுதொலைவில் செல்ல முடிவேடுத்து தன் கருடவாகனத்தில் பயணித்து வேறொரு ஊரில் இருந்த வங்கிக்கு சென்றார். அங்கும் தோல்வியே மிஞ்சியது. மனித அவதாரத்தில் போனால் தான் பிரச்சனை, என்று மனித உடலும் மிருக முகமுமாக அவதாரம் எடுத்து ஒரு வங்கிக்கு சென்றார். அந்த காவலாளி வைக்குண்டராஜனின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான். ‘எத்தனை அவதாரம் எடுத்தாலும் எப்படி இவர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள்’ என்று யோசித்துக் கொண்டே இருந்தார் கடவுள். பதில் கிடைக்கவில்லை. அவர் வலது கை ஆட்காட்டி விரலிலிருந்த மை அவரை பார்த்து பல் இளித்தது. ப்ளாக் பாரஸ்ட் கேக் ராமசாமிக்கு கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. யாராவது அவர்முன் தற்போது போய் நின்றால் அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. ஒருவேளை கடித்துக்கூட வைத்துவிடலாம். அப்படி என்ன பிரச்சனை! புதிதாக வீட்டிற்குள் நுழைந்திருக்கும் சுமி தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ராமசாமிதான் அந்த வீட்டில் சீனியர். ராமசாமிக்கு ஒரு மனைவி சித்ரா. சித்ராவுக்கு தெரியாமல் அவர் பல பேருடன் கும்மியடிப்பது வழக்கம். அவர்களுடைய ஒரே மகன் ரெங்கா. இப்போது பெங்களூரில் இருக்கிறான். அமெரிக்காவிலிருந்து வந்த சுமி தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துகிறாளோ என்ற எண்ணம் ராமசாமியை வாட்டி வதைக்கத் தொடங்கியது. வீட்டின் கடைக்குட்டி வர்ஷினி தான் சுமிக்கு இடம் கொடுத்து வைத்திருக்கிறாள். இந்த வீட்டிற்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாத ‘சுமி’ திடிரென்று உள்ளே நுழைந்து (வர்ஷினியைக் கையில் போட்டுக்கொண்டு) அந்த வீட்டின் முக்கிய கர்த்தாவாக விளங்கிய தன்னுடன் மல்லுக்கட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை. அவருக்கு பதினொரு வயது இருக்கும்போது ஆறாம் வகுப்பு படித்த லட்சுமணனை கையில் கடித்து வைத்ததைப்போல் இப்போது சுமியை கடித்துவிடலமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார் ராமசாமி. ராமசாமிக்கு வைட் பாரஸ்ட் கேக் என்றால் உயிர். அதை எந்த கூச்சமுமின்றி நக்கி நக்கித் தின்பார். கடந்த சில வருடங்களாக தான் கேக் எல்லாம். வர்ஷினி முதன்முதலில் கல்லூரி கல்சுரல்ஸில் முதல் பரிசு வாங்கியதை கொண்டாடும் விதமாக ராமசாமிக்கு வைட் பாரஸ்ட் கேக் வாங்கி கொடுத்தாள்.  அப்போதுதான் அவர் அதை முதன்முதலில் சுவைத்தார். (அவருக்கு சுமி வயது இருக்கும்போது அவர் சாப்பிட்ட ஒரே இனிப்பு வகை மைசூர்பாக்கு மட்டுமே.) இப்போது அந்த வர்ஷினியே தனக்கு வைட் பாரஸ்ட் கேக் தராமல் போவாள் என்று ராமசாமி எதிர்ப்பார்த்திருக்கவில்லை. வர்ஷினி தன் குழந்தை சாரலின் முதல் பிறந்தநாளை கொண்டாடுவதற்காகதான் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். வரும்போது சுமியையும் அழைத்து வந்து விட்டாள். சாரலின் பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்படும் வரை, வைட் பாரஸ்ட் கேக் வெட்டுவார்கள் என்றே ராமசாமி நினைத்திருந்தார்.  ஆனால் அவர்கள் ப்ளாக் பாரஸ்ட் வாங்கி வந்துவிட்டார்கள். “சுமிக்கு ப்ளாக் பாரஸ்ட் தான் புடிக்கும்” வர்ஷினி சப்தமாக யாரிடமோ சொன்னது ராமசாமியின்  காதில் தீயாய் விழுந்தது. ‘சுமி சுமி சுமி. இந்த வர்ஷினிகூட இப்படி மாறிட்டாளே! ஆறாவது படிக்கும் போது டியூஷன் முடிச்சு வீட்டுக்கு தனியா வர பயப்படுவான்னு அரை கிலோமீட்டர் நடந்தே போய் கூட்டிட்டு வருவேனே. எல்லாத்தையும் மறந்துட்டாளே!’ ராமாசாமி நொந்துக் கொண்டார். ஆனால் இப்படி சுணங்கி நிற்பதை விட ஏதாவது செய்து சுமியை இந்த வீட்டிலிருந்து அனுப்பிவிட்டால் மீண்டும் தான் இழந்த பழைய அங்கிகாரத்தை பெற்றுவிடலாம் என்று நினைத்தார். தன் எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். பார்ட்டி அரங்கிலிருந்து கோபமாக வெளியேறினார். ஆனால் அவரை யாரும் சட்டை செய்யவில்லை. இரண்டு நாட்கள் தன் அறையிலேயே காலம் கழித்தார். வேலைக்காரி வந்து உணவை வைத்துவிட்டு சென்றாள். வேறுயாரும் அவரை காண வரவில்லை. ஏன், அவர் மனைவி சித்ராகூட சுமியை ஏற்றுக்கொண்டுவிட்டாள். அன்று அவர்கள் அனைவரும் சேர்ந்து தீம் பார்க் சென்றபோது சுமி ஓடிச்சென்று காரின் முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டது ராமசாமிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அன்றிரவு சுமிக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தார். இரவு தீம் பார்க்கிலிருந்து தாமதமாக வந்த அனைவரும் களைப்பில் உறங்கிப்போயினர். சுமி ஹாலிலேயே சோபாவில் படுத்துக்கொண்டாள். மணி இரவு பன்னிரெண்டு. தூக்கமில்லாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்த ராமசாமி ஹாலிற்கு வந்தார். சுமி அருகே வந்தவர், ஓங்கி சுமியின் கன்னத்தில் ஓர் அறை அறைந்துவிட்டு விறுட்டென்று சோபாவின் பக்கவாட்டில் மறைந்துக்கொண்டார். பதறியடித்து விழித்த சுமி பயத்துடன் அக்கம்பக்கம் பார்த்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. கன்னத்தை தடவிக்கொண்டே மீண்டும் உறங்கிப்போனாள். ராமசாமிக்கு பெருமிதமாக இருந்தது. மறுநாளும் அதே நேரத்தில் அதேபோல் சுமியின் கன்னத்தில் அறைந்தார். பதறிய சுமி எழுந்து வர்ஷினியின் அறைநோக்கி ஓடினாள். அவள் அறை தாளிடப்பட்டிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள். அவளுக்கு அங்கே தனியாக இருக்க பயமாக இருந்தது. வெளியே வராந்தாவிற்கு வந்தாள். இருட்டாக இருந்தது. கதவருகே ஒளிந்துகொண்டிருந்த ராமசாமி ‘உர்’ ‘உர்’ என்று உறுமினார். அந்த சப்தம் சுமியை மேலும் பயமுறுத்தியது. இரவெல்லாம் தூங்காமல் அறையில் உலாத்தினாள். ராமசாமி நிம்மதியாக படுத்துறங்கினார். மறுநாள் காலையில் ராமசாமி நடு அறைக்கு வந்தபோது அனைவரும் பரபரப்பாக இருப்பதைக் கண்டார். சுமிக்கு ஜூரம். அவள் சோபாவில் படுத்திருந்தாள். வர்ஷினி அழுதுக் கொண்டிருந்தாள். “அதெல்லாம் சரியாகிடும்” வர்ஷினியின் தந்தை அவளை தேற்றினார். ராமசாமிக்கு எதையோ சாதித்துவிட்ட சந்தோசம், வெளியே ஓடி வந்து ஆனந்தக் கூத்தாடினார். சுமிக்கு ஜூரம் அதிகமாகிக் கொண்டே போனது. டாக்டர் வந்து ஊசி போட்டு மருந்து கொடுத்துவிட்டு போனார். உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிடித்ததை வாங்கி தந்தால் உடல் நிலை தேறும் என்று யாரோ சொல்ல, சுமிக்கு பிடித்த ப்ளாக் பாரஸ்ட் கேக் வாங்கி வந்து அவள் முன்பு வைத்தார்கள். ஆனால் அவள் கண்களை திறக்கவில்லை. வர்ஷினி சுமி அருகிலேயே படுத்துக் கொண்டாள். ராமசாமி தன் அறையில் உறங்கிப் போனார். திடிரென்று வர்ஷினியின் அழுகுரல் கேட்டது. ராமசாமி வந்து பார்த்தபோது சுமி இறந்திருந்தாள். சில நாள் சோகமாக இருந்த வர்ஷினி திரும்பி ஊருக்கு சென்றுவிட்டாள். அன்றிரவு, ராமசாமி தனியாக உறங்கிக் கொண்டிருக்க சுமியின் ஆவி வந்து அவர் கன்னத்தில் ஓங்கி அடித்தது. ராமசாமி திடுக்கிட்டு விழித்தார். வெளியே எட்டிப் பார்த்தார். சுமி சோபாவில் படுத்திருந்தாள். வர்ஷினி அவள் அருகே அமர்ந்திருந்தாள். ராமசாமி வர்ஷினி அருகே செல்ல, அவள் ராமசாமியை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதாள். ராமசாமிக்கும் கண்கள் கலங்கின. தன் எண்ணம் இவ்வளவு மோசமாக போய்விட்டதை எண்ணி வருந்தினார். சுமியை பார்த்தார். அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகே சென்று, முன்பு தான் அறைந்த அவளின் கன்னத்தை தடவினார். காலையிலிருந்து கண்களை திறக்காமல் இருந்த சுமி, நிதானமாக தன் கண்களை திறந்தாள். ராமசாமி அவளை பாசமாக பார்த்தாள். வர்ஷினிக்கு சந்தோசம். “அப்பா சுமி முழிச்சிட்டா” என்று கத்தினாள். ராமசாமி சுமியின் கன்னத்தை மீண்டும் தடவ, அவள் ராமசாமியை பார்த்து ‘மியாவ்’ என்று பாசமாக கத்தினாள். ராமாசாமியும் தன் சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘லொள்’ ‘லொள்’ என்று இரண்டு முறை குறைத்தார். கடவுளும் ப்ளாக் டிக்கெட்டும் கி.பி. 2220வெள்ளிக்கிழமை. மார்கழி மாதம். காலை7.30. பூலோகத்தில் ஆண்டவருக்கு பால் அபிஷேகம்அமோகமாக நடந்து கொண்டிருந்தது. ‘ஆண்டவா ஆண்டவா’ என்று எழும்பிய பேரொலி, காற்றைக் கிழித்துக் கொண்டுப் பயணித்து வைகுண்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்டவரின் காதில் விழ, திடுக்கிட்டுக் கண்விழித்தார் ஆண்டவர். அருகில் அவரது துணைவியார் சாந்தமாக உறங்கிக் கொண்டிருந்தார். இரா முழுதும் வேலை செய்து களைத்திருந்த ஆண்டவர் சோம்பல் முறித்தவாறே ஒலி வரும் திசையை நோக்கினார். ஒலி உலகின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய துணைக் கண்டத்தின் தென் மூலையில் உயிருக்கு ஊசல் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருந்த தமிழகத்திலிருந்து வருவதையறிந்து அவர் முகம் கோணிற்று. “இன்னுமா இந்த உலகம் நம்மை நம்பிக் கொண்டிருக்கிறது” என்றவாறே தன் மடிக்கணினியைத் திறந்து ஜி.பி.எஸ் மோடை கிளிக் செய்து தமிழகம் செல்லும் வழியைத் தேடினார். அவர் தமிழகம் வந்து பல நூறு வருடங்கள் ஆனதால் வழி மறந்திருக்கும். அதற்காக அவரை மன்னித்து விடலாம். ஒருவாறு பாதையைக் கண்டுணர்ந்து தமிழகம் நோக்கிக் குதித்தார். ‘ஆண்டவா ஆண்டவா’ என்ற பேரொலிக்கு மத்தியில் வந்து குதித்தவரை யாரும் சட்டை செய்யவில்லை. அங்கு பெரிய வரவேற்பை எதிர்பார்த்த ஆண்டவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் ‘ஆண்டவா’ என்ற பேரொலி மட்டும் குறையாதது கடவுளை குழப்பத்தில் ஆழ்த்தியது. “மானிடப் பதர்களே! இன்னும் எதைத் தேடுகிறீர்? எதையாவது ஒன்றைத் தேடுவதே உங்கள் பிழைப்பா? நான் தான் வந்துவிட்டேனே!” என்று உரக்கக் கத்தினார் கடவுள். ஆனால் அவரின் குரல் அவர் காதுகளிலேயே விழாத அளவுக்கு அங்கு ‘ஆண்டவா’ என்ற ஒற்றைச் சொல், அலை அலையாக மூலை முடுக்குகளை நிரப்பிக்கொண்டிருந்தது. திடீரென பால் அபிஷேகம் நடக்கும் இடம் நோக்கி ஓடிய கூட்டத்தோடு ஆண்டவரும் சேர்ந்து கொண்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், மெய் மறந்து நின்ற ஆண்டவர் கூட்டத்தோடு அடித்துச் செல்லப்பட்டார். அங்கே ஆண்டவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடைய முப்பத்திரண்டடி சிலையை எதிர்பார்த்து சென்ற இடத்தில், வேறொரு ஜாம்பவானின் உருவம் வரையப்பெற்ற முப்பத்திரண்டடி கட்டவுட் இருந்ததால் ஆண்டவர் திடுக்கிட்டு நின்றார். அதில் எழுதி இருந்த வாசகங்கள் அவரை இன்னும் கிலி அடையச் செய்தது. ‘ஆண்டவர்’ அருமை ராசன் பதினைந்து அவதாரங்களில் நடிக்கும், ‘அண்டமாமுனி’. “ஐயகோ! என்ன இது. ஒன்பது ஆவதாரம் எடுப்பதற்கே எனக்கு பல யுகங்களாயிற்றே! பத்தாம் அவதாரத்திற்கு கொஞ்சம் இடைவெளி விட்டது தவறோ! யார் இந்த அருமைராசன்? என்னை மிஞ்சிவிட்டானே!” ஆண்டவனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. பின்னிருந்து ஒரு குரல் கேட்டு திரும்பினார். “என்ன தலைவா, அழுவுற?”, கேட்டவாறே அங்கே நின்றுகொண்டிருந்தான் ஆண்டவரின் தீவிர பக்தனொருவன். ஆண்டவனெனில் அது அருமைராசன். இது பூலோகம். “சொல்லு தலைவா. ஏன் அழுவுற? டிக்கெட் கிடைக்கிலையா! உன்ன யாரு முத காட்சிக்கு வர சொன்னா? ஆண்டவர் படம்னா ஒரு வாரம் ஹவுஸ்புள்னு தெரியாதா! கிளம்பு அடுத்த வாரம் வா” “பூலோகத்தில் யாரைக் கேட்டாலும் ஆண்டவன் என்கிறார்களே. யாரப்பா அந்த ஆண்டவன் ?” “ஓய் என்னா! ஆண்டவர தெரியாதா? எந்த ஊர் நீ. எங்க தலைவர் சவுத் ஆப்பிரிக்கா வரைக்கும் பேமஸ் ஆச்சே !” “அவரைத்தெரிந்துக்கொள்ளும்அவசியம்ஏற்படவில்லையப்பா. இதுநாள்வரை நான் மட்டும்தான் ஆண்டவன்எனநினைத்திருந்தேன். ஒருவன் போட்டியாக வருவான் என நான் கனவிலும் எண்ணியதில்லை” “என்னது, எங்க ஆண்டவர் உனக்கு போட்டியா? ஒன் சன். ஒன் மூன். ஒன் ஆண்டவர். அதான் எங்க அருமைராசன்” “நான் நினைத்தால் ஆயிரம் சூரியன் படைத்திடுவேன். உன் தலைவன் போல் ஓராயிரம் தலைவர்கள் செய்திடுவேன். நான் தானடா உண்மையான கடவுள்” “என்ன தலைவா உளர்ற? காலையிலே மப்பா?” “மப்பா? இல்லையப்பா. உண்மையாகவே நான் தான் அண்டங்களை அடக்கி ஆளும் ஆண்டவன். வைகுண்டத்திலிருந்து வந்துள்ளேன்” “உன் கெட்டப்ப பார்த்தா அப்படி தெரியலயே. தாடி, மீசை ஜடாமுடிலாம் வச்சிருக்க! நான் தான் சவரம் பண்ணவக்கத்துப்போய் உக்காந்திருக்கேன். உனக்கின்னா ?” “இதுதானப்பாஎன் உண்மையான உருவம். இதிலென்ன உனக்கு சந்தேகம்?” “பொதுவா கடவுள்னா வழிச்சு சவரம் பண்ணி மூஞ்சிலாம் டால் அடிக்கிற மாதிரி இருப்பாங்களே. கிருஷ்ணரு, ராமரு, முருகருனு எல்லாரும் அப்படித்தான இருக்குறாங்க. ஏதோ கருப்பு, சுடலை மாதிரி சாமிலாந்தான் மீசையோட இருக்காங்க, என்ன மாதிரி. நீ வைகுண்ட கோஸ்டினா மீச இருக்க கூடாதே !” “வெறும் மீசைதானே. அதிலென்ன உனக்கு பிரச்சனை !” “என்ன சார் அப்படி மீசைய சாதரணமாநினைச்சுபுட்ட. நம்ம ஆண்டவர் ஒரு படத்துல டபுள் ஆக்டிங் கொடுத்திருப்பாரு பாரு. மீசை வச்சு ஒரு வேசம். மீசை இல்லாம ஒரு வேசம். படம் 175 நாள். அந்தபடத்துலமீசைதான முக்கியமான கேரக்டரு” “யாது சொல்கிறாய் மகனே! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே” “செம்மொழி மானாட்டில பேசுறமாதிரியே பேசிக்கிட்டு இருக்க . நீ கடவுள்னு நான் எப்படி நம்புறது ?” “நீ என்ன வேண்டுமென்றாலும் கேள். தருகிறேன்” “நீயெல்லாம்ஒன்னும் தர வேணாம். இப்பலாம் அரசாங்கமே ஓசிலயே எல்லாத்தையும் கொடுக்குது. அரிசியில இருந்து லேப்டாப் வரைக்கும். நீ என்னத்த கொடுத்துற போற பெருசா ?” “உன்னைப் பார்த்தால்சாப்பிட்டுப்பலநாள் இருக்கும் போல் தோன்றுகிறது. என்னசாப்பிடுகிறாய்கேள்” “தோடா. என்ன நக்கலா. உன்ன போட்டுதள்ளிட்டு உள்ள போனா, ஜெயில்லயே சிக்கன் போடுவாங்க. என்ன சொல்ற, உன்னபோட்டுடவா?” கடவுளின் கண்கள் சிவந்தன. தான் கடவுள் என்பதை நிலை நிறுத்தஏதாவது செய்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். வெகுண்டு எழுந்த அவர், “அற்பப் பதரே! மூவடியில் உலகை அளந்தஎன்னையா நீ அவமதிக்கிறாய்? இப்போதே நரசிம்ம அவதாரமெடுத்து இவ்வுலகை அழித்துக் காட்டவா ?” எனச் சூளுரைத்தார். “என்ன தலைவா டபாய்க்கிற, நீனாவது நரசிம்ம அவதாரம் எடுக்கனும். எங்க ஆண்டவர் எதுமே இல்லாம ஓரு ரெட் சிப் வச்சே உலகத்த அழிச்சிருவார். “போன படத்துல ஒரு ரோபோ செஞ்சு, அதுக்கு ரெட் சிப்ப பொருத்துவார். அந்த ரோபோ உலகையே அழிக்க புறப்படும். பின்னாடியேபோய் ரெட்சிப்ப அழிச்சுஉலகத்தகாப்பாத்துவார். படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாமே எங்க அருமைராசன்தான். அதுனாலதான்அவருஆண்டவரு. நீ…?” கடவுள் கதி கலங்கிப்போனார்.அருமைராசனைஎண்ணும் போது அவர் உடல் சிலிர்த்தது. அருமைராசன் நூறு அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லையென எண்ணிக் கொண்டார். “மகனே! நிச்சயம் உன் அருமை ராசன் மகான்தான். ஆனால் நான்தான் உண்மையான சிருஷ்டிகர்த்தா. அதை நீ நம்பியே ஆகவேண்டும். நிச்சயம் உனக்கு ஏதாவது வரம் அளிக்கிறேன். யாது வேண்டும் கேள்” “என்னப்பா உன்னோட ஒரே ரோதனையாப் போச்சு. சரி விடு. நம்ம அஞ்சல இல்ல. அதான் பா. என் செட்டப்பு. அவளுக்கும்ஆண்டவர்படம்னாஉசுரு. இந்தப் படத்த இன்னைக்கேபாக்கனுமா… ஆனா பாரேன்! டிக்கெட் கிடைக்கில. ஹவுஸ்புல்.நீ ஒரு ரெண்டு டிக்கெட்டு, ப்ளாக்ல, இன்னக்கு ராத்திரி ஆட்டத்துக்கு வாங்கிக் கொடு. அப்புறம் நீ கடவுள்னுஒத்துக்கிறது என்ன, ஊட்டுக்கு இட்டுப் போய் நல்லா நாட்டுக் கோழி அடிச்சு சோறு போடுறேன். நீ கவுச்ச சாப்பிடுவயில்ல?” கடவுளால் ஒன்றும் பேச இயலவில்லை. கடந்த காலம் அவர் கண் முன் ஓடத் தொடங்கிற்று.எத்தனைஅரக்கர்களைக் கொன்று குவித்துள்ளார், எத்தனை சத்ரியஇரத்தங்களில்புனிதநீராடியுள்ளார்.ஆனால் இன்றுதன்னால் ஒரு ப்ளாக் டிக்கெட் வாங்க இயலவில்லை என்பதை எண்ணி வெட்கி தலை குனித்து நின்றார். ஒரு புறம் சராசரி மனிதனின் ஏளனச் சொற்கள் அவரை முள்ளாய்க் குத்தின. இன்னொருபுறம் அருமைராசனின் பிரமாண்ட கட்அவுட் உருவம் அவரை மிரட்டிற்று. தன்னிலைமறந்துகடவுள் புலம்பத் தொடங்கினார். “நான்தான் கடவுள். நான்தான் உண்மையான கடவுள்” “இது வேலைக்கு ஆகாது” என்றபடி தீவிர பக்தன் அந்த இடத்தை விட்டு நழுவினான் தனக்குத் தானே கடவுள் புலம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அவரின் குரல் அவர் காதுகளிலேயே விழாத அளவுக்கு அங்கு ‘ஆண்டவா’ என்ற ஒற்றைச் சொல், அலை அலையாக மூலை முடுக்குகளை நிரப்பிக்கொண்டிருந்தது. லேடி போலீஸ் அந்த புத்தகத்தை  வாங்கியே ஆகணுமென்று எங்கெங்கோ தேடுனேன். அந்த புத்தகத்திற்க்கு பின்னாடி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கு. எங்கேயும் கிடைக்காத அந்த புத்தகம் கண்ணிமேரா நூலகத்தில கிடைக்கும் என்கிற நம்பிக்கையில டிரைன் ஏறினேன். நானும் இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். பம்பாய் ரயிலில் எல்லாம் முட்டி மோதி ஏறியிருக்கேன். ஆனால் அங்கெல்லாம் டிரைன் கூட்டமா இருந்தாதான் தொங்கிக்கிட்டு போவாங்க. சென்னையில மட்டும்தான், எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து பாக்குறேன், ஒரு நாலு பேரு தொங்கிக்கிட்டே பயணம் செய்வானுங்க. உள்ள எவ்வளவு இடம் இருந்தாலும் ஏறமாட்டனுங்க… இவனுங்கெல்லாம் சமுதாயத்திற்கு ஏதோ சொல்ல வராணுங்க. ஆனால் என்ன சொல்லவராங்க என்பதுதான் என் குறுகிய அறிவுக்கு எட்டமாட்டேங்கிது.. சென்னையில எந்த மேஜர் ஸ்டேஷன்ல எறங்குனாலும், ஆட்டோ டிரைவர்ஸ் சூழ்ந்துபாங்க. ‘அண்ணே ஆட்டோ, சார் ஆட்டோ..’ இந்தியாவிலேயே சவாரி தலையில் மிளகாய் அரைக்கிற ஆட்டோ டிரைவர்ஸ் சென்னையிலதான் இருக்காங்க. அவங்க சவாரி புடிக்க சில ‘psycological methods’ வச்சிருக்காங்க. ஆட்டோ வேணாம்னு சொன்னா, ’எனக்கு தெரியும். நீங்கலாம் ஆட்டோல போமாட்டீங்க’னு சொல்லி நக்கலா சிரிப்பாங்க. அப்படியாவது ரோஷம் வந்து ஆட்டோவுல ஏறுறாங்களானு பாப்பாங்க. ஆனா நான் அதுக்கெல்லாம் அலட்டிக் கொல்(ள்)வதில்லை. அதுவும் ஹிந்தியில ’ஆட்டோ வேணாம்’னு சொன்னீங்கனா ஹிந்திக்காரன்னு நினைச்சிக்கிட்டு மரியாதையா ஒதுங்கிருவாங்க. மீசை தாடியெல்லாம் ஷேவ்பண்ணிட்டு அடிக்கிற கலர்ல டைட்டா டிரஸ் போட்டா இவங்களே இந்திக்காரன்னு முடிவு செஞ்சுபாங்க. மரியாதையும் தர ஆரமிச்சிடுவாங்க. தமிழ்நாட்டுக்கு வெளிய தமிழனுக்கு மரியாதை தர மாட்டாங்க. ‘மதராசி’னு ஓட்டுவாங்க. குஜராத்ல ஒருத்தன் கிட்ட சும்மா சொன்னேன் ’நான் மதராசி இல்ல. சௌத் ஆப்ரிக்கன்’ உடனே அவன் மன்னிப்பு கேட்டான். இந்தியாவில அப்படிதான். இந்தியர்கள discriminate பண்ணுவாங்க. ஆனா வெளி நாட்டுக்காரனுங்கள மதிப்பாங்க. அதே மாதிரிதான் தமிழ்நாட்டுலயும். தமிழன மதிக்க மாட்டாங்க. மத்த ஊர் ஆளா இருந்தா ராஜா மரியாதை… ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ ‘Destination’ இல்லாம சுத்துறது எனக்கு ரொம்ப புடிக்கும். நான் ஒரு ‘Bohemian’. ஆனா எங்காவது ஒரு இடத்துக்கு போகணும்னா செம கடுப்பு. அதுவும் எப்படி  போகணும்னு தெரியாம, போய் ஆகவேண்டும் என்கிற கட்டாயதுல போறது பெரிய கடுப்பு. பீக் ஹவர்ல அட்ரஸ் கேட்டா யாரும் சொல்லமாட்டாங்க. ஒரு டீ கடையில போய் டீ குடிக்கிற சாக்குல அட்ரஸ் கேட்டேன். அவரும் கஷ்டமராச்சேனு, ‘அந்த சிக்னல்ல போய் கேளுங்க’ என்றார். நானும் அந்த சிக்னல் வரைக்கும் போனேன். லெப்ட்ல திரும்புறதா ரைட்ல திரும்புறதானு சந்தேகம். சிக்னல்ல ஒரு லேடி போலீஸ் நின்னுக்கிட்டு இருந்தாங்க… பொதுவா நான்தான் பொண்ணுங்களா உத்து உத்து பார்ப்பேன், பெமினிச ஆராய்ச்சி. ஆனா அந்த லேடி கான்ஸ்டபிள் என்ன உத்து உத்து பார்க்கும் போதே நான் உஷார் ஆயிருக்கணும். அதையும் மீறி நான் அவங்ககிட்ட போய் கேட்டேன், “ம்யூசியம் எப்படி போறது?” (ம்யூசியமும், நூலகமும் ஒரே இடத்துலதான் இருக்கு. நூலகம்னு கேட்டா பாதி பேரு தெறித்து ஓடுறாங்க ) அவங்க என்னை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னாங்க, ‘இப்டியே நேரா போங்க’ நானும் அந்த பெண்மணி பொய் சொல்லியிருக்க மாட்டாங்க என்கிற நம்பிக்கையில அவங்க சொன்ன வலது புறம் போனேன். அங்க வெறும் மேம்பாலம்தான் இருந்துச்சு. தப்பான வழியோ என்று எனக்கும் ஒரு உள்ளுணர்வு. ‘Raghavan instinct’ மாதிரி. ரோட்ல போய்ட்டிருந்த ஒரு அண்ணங்கிட்ட வழி கேட்டேன். சென்னையில எல்லாம் அண்ணனுங்கதான். சென்னைக்குனு ஒரு ‘slang’ உண்டு. சின்ன வயசுல பொட்டிக்கடையில போய் ‘டூ ருபீஸ் சேஞ்ச் இருக்கானு’ கேட்டு நான் பல்பு வாங்கியிருக்கேன். அப்பறம் தான் தெரிஞ்சுது, அவங்க கிட்ட லோக்கலா பேசணும்னு.. லோக்கலா கேட்டேன், ‘அண்ணே ம்யூசியம் எங்கிட்டு போறது’ ‘என்னப்பா… இங்க வந்துட்ட… அப்டியே சிக்னல்ல இருந்து லெப்ட்லபோயிருக்கலாம்ல… வந்த வழியே போ’ அப்பதான் புரிஞ்சிது. சாச்சுபபுட்டா  பொம்பள போலீஸ். எனக்கு புரியல. அவங்க ஏன் தப்பா வழி சொன்னாங்கனு. ஒரு வேலை நான் அவங்களை கேலி பண்றதா அவங்க நினைச்சிருக்கலாம்… (இல்ல அவங்க வலதுசாரியோ என்னமோ!) அப்படியே வந்த வழியே போனேன். அங்க ஒரு பிச்சைக்காரர் போயிட்டு இருந்தார். அவர் தாடி, அலங்கோலமான ஆடை செய்கையெல்லாம் பார்த்தா மன நிலை பாதிக்கப் பட்டவர் மாதிரி இருந்தார். காசியா இருந்தா அகோரினு சொல்லலாம். இங்க பைத்தியக்காரர்னுதான் சொல்லணும். அவர் பின்னாடி நான் போகலா. ஆனா என் முன்னாடி அவர் போய்ட்டிருந்தார். அப்டியே அவர தாண்டி போனேன். பெமினிஸ்ட்டா இருக்குறதுல ஒரு பிரச்சனை. ஒரு பொண்ணு பொய் சொல்லிறுப்பா, தப்பு பண்ணியிருப்பானு மனசு உடனே ஏத்துக்காது. அதனால தான் அந்த லேடி போலீஸ் பொய் சொல்லியிருப்பாங்கணு நம்ப முடியல. அப்படியே திரும்பி இன்னொரு கடையில போய் விசாரிச்சேன், “பெரியவரே.. இந்த ம்யூசியம்…” இப்ப முடிவாயிடுச்சு. லேடி போலீஸ் பிளான் பண்ணி சாச்சிருக்கா. அதுல என்ன அவங்களுக்கு ஒரு சந்தோசம்னு தெரியல. ’சாடிஸ்ட்… அங்க இருந்து நகரும் போது தான் பார்த்தேன். அந்த பிச்சக்காரரும் என் பக்கத்துல நின்னுகிட்டிருந்தார். என்ன பார்த்ததும் ரொம்ப கோபமா கத்துனார், “போடா… என்ன ஃபாலோ பண்ணிக்கிட்டே வர !” என்னால சிரிப்ப அடக்க முடியல.உள்ளுக்குள்ளேயே சிரிச்சிக்கிட்டு வேகமா ரோட் க்ராஸ் பண்ணினேன். அந்த பிச்சக்காரர சுத்தி ஒரு கூட்டம் கூடிடுச்சு. அவரோட குரல் சத்தமா என் காதுல விழுந்தது. “அந்த சிவப்பு T-Shirt என்ன ரொம்ப நேரமா ஃபாலோ பண்றான் சார்,”அவர் எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்தாரு. அதை கேட்டு சிரிச்சிக்கிட்டே நான் சிக்னல கடந்தேன். சிக்னல்ல நின்றுகொண்டிருந்த அந்த லேடி போலீஸ் என்ன பார்த்து சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க…. ஓடிப்போனக் கடவுள் நான் எப்படி இங்கு வந்தேன் என்பது இன்னும் விளங்கவில்லை. இது ஒரு பெரிய கோவில். மிக உயர்ந்த மதில் சுவர்கள். நிச்சயம் ஏதோ ஒரு மிகப்பெரிய அரசனால் கட்டப்பட்ட கோவிலென்பது திண்ணம். சிற்றரசர்கள் பெரிய கோவில்களை உருவாக்கியதில்லை. பிரகாரம் முழுக்க ஏதேதோ குட்டிக் கடவுள்களின் சிதிலமடைந்த சிலைகள். அனைத்தையும் கடந்து நான் மூல ஸ்தானத்தை நோக்கிச் சென்றேன். மூலமே என் நோக்கு வெறிச்சோடிக் கிடந்த கோவில் காணவில்லை கடவுள் இது என்ன கோவில் என்பது விளங்கவில்லை. கர்ப்பக்ரஹத்தில் மூலவர் சிலையைக் காணவில்லை. நிலையில் கடவுளின் பெயர் எழுதி இருக்கிறதா என்பதை உற்று நோக்கினேன். கும் இருட்டு. சட்டைப் பையில் இருந்த லைட்டரை எடுத்துப் பற்ற வைத்தேன். உள்ளே கடவுள் இல்லை என்பது உறுதியானதும் அப்படியே சிகரட்டையும் பற்ற வைத்தேன். சுருள்சுருளாய் பறந்தன புகைகள் நிலை வாசற்படியில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது “பன்னாரி அம்மன் துணை” ஏதோ சிந்தனையோடு திரும்பினேன். சிகரெட் வெளிச்சத்தில் தெரிந்தார் நந்தி பகவான். ‘நிச்சயம் இது அம்மன் கோவிலன்று. அம்மன் கோவிலில் எப்படி வரும் நந்தி’ மீண்டும் நிலைக் கதவை நோக்கினேன். “பண்ணாரி அம்மன் துணை சென்னை” இது நிச்சயம் சென்னை இல்லை. நேற்று இரவு நான் திருச்சியில் உறங்கியது வரை ஞாபகம் இருக்கிறது. விழித்துப் பார்த்தால் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குழப்பத்துடன் அரை நொடிமீண்டும்அந்த நிலையை நோக்க, விளங்கியது அனைத்தும் தெளிவாக. “பண்ணாரி அம்மன் துணை உபயம்: சாந்தா பாக்கியசாமி- சென்னை” வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள இயலவில்லை. அடக்கவும் நான் முயற்சிக்கவில்லை. இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டிய மன்னனே ஒரு சிறு கல்வெட்டில்தான் தன் பெயரைச் செதுக்கிக் கொள்கிறான். ஆனால் ஒரு சிறு நிலைக் கதவைக் செய்து கொடுத்துவிட்டு தன் பெயர், தான் வணங்கும் கடவுளின் பெயர், தன் ஊரின் பெயர் என செதுக்கிக் கொள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதைப் பார்க்க மனம் தாளாமல்தான் கடவுள் மறைந்துவிட்டரோ என்றெண்ணும்போது வந்து சேர்ந்தார் கோவிலின் குருக்கள். அவர் முகத்தில் நிலவிய தேஜஸ் என்னை அறியாமலேயே என் சிகரட்டை தரையில் போட்டு மிதிக்க வைத்தது. குருக்கள், “வாடா அம்பி. உனக்காகத்தான் காத்திண்டிருந்தேன்” என்னை நன்கறிந்தவர் போல் அவர் பேசத் தொடங்கினார். “நீ வருவ, இந்தக் கோவிலை உன் பொறுப்பில் விட்டுட்டுப் போயிடலாம்னுதான் இத்தனைநாள்காத்திண்டிருந்தேன்” எனக்கு ஒன்னும் விளங்கவில்லையெனினும்அவரை மறுத்துப் பேச நாஎழவில்லை. “சாமி… மூலவர் எங்க!” பதற்றத்தோடு வினவினேன் நான். “நோக்கு தெரியாதா…! தமிழ்ல மந்திரம் ஓதுறேனு நாலு சிவனடியார்கள் வந்தா… சுவாமி ஓஓஓஓஓடிட்டார்!” என்றார் ஒரு நமட்டு சிரிப்பை வெளிப் படுத்தியவாறே. எனக்கு நறுக்கென்றிருந்தது. “ஐயரே! சொல்றேன்னு கோபப் படாதீங்க. நான் பெரியார்வாதி தான். ஆனால் பிராமணர்கள எதிர்ப்பவன் கிடையாது. இருந்தாலும் நீங்கள் பேசுறது கொஞ்சம் திமிராதான் இருக்கு” மீண்டும் வெளிப் பட்டது நமட்டு சிரிப்பு. சற்று ஆக்ரோசமாகவே கத்தினேன். “என்ன… ஐயரே! என்ன திமிர் உனக்கு. இது தமிழ்நாடு, தமிழர் பூமி. இங்கு தமிழ் மொழியில் அர்ச்சனை செய்றது தானே நியாயம். கடவுள் இருக்காரோ இல்லையோ. ஆனால் மக்களுக்கு புரியாத மொழியில் எதுக்கு அர்ச்சனை !” இப்போது கம்பீரமாகப் பேசினார் குருக்கள், “அடே அம்பி! நான் எங்கடா சொன்னேன் தமிழ்ல அர்ச்சனை வேண்டாம்னுட்டு? எங்கவாளே பல பேர் அர்த்தம் தெரியாமதான் மந்திரம் ஓதுறா… தமிழ்ல தான் ஒதனும்னா அர்த்தம் புரிஞ்சு தமிழ்லயேஓதிட்டுபோறோம். அதை விட்டுட்டு எங்களை விரோதி மாதிரி நடத்தினா…?” அவர் பேச்சில் நியாயம்இருப்பதாக நான் உணர்ந்ததை அவர் அறிந்துக் கொண்டார் போலும். “இதோ இப்ப நான் பாடுறேன் கேளு “கருநட்ட கண்டனை அண்ட…” உருக உருகப் பாடினார் தேவாரத்தை. நானும் அதில் மயங்கி நின்றேன் சில மணி நேரங்கள். கடவுள் இருக்கார் இல்லார் என்பது பல நேரங்களில் தேவையற்ற விவாதம். அவர் இருக்காரோ இல்லையோ, ஆனால் அவர் மீது பாடல்கள் பாடிய பலரும் வெறும் கடவுள் தொண்டர்களன்று. அவர்கள் தமிழ்த் தொண்டர்கள். எத்தனை ஆயிரம் அருமையான தமிழ் பாடல்களைப் பாடியுள்ளனர். நாத்திகம் பேசுபவர் கடவுளை வெறுத்துக் கொள்ளட்டும். ஆனால் தமிழ் மொழியை வெறுப்பது தமிழ் இலக்கியத்தை அழிக்க முயற்சிப்பது மடத்தனம். இன்னும் எத்தனை அருமையான சமணப் பாடல்கள் தமிழிலுண்டு. சைவ சமயம் தழுவிய பலரும் எத்தனை அருமையான சமணத் தமிழ் பாடல்களை அழித்து விட்டனர்! இன்னும் இன்று நாத்திகம் பேசும் மாமனிதர்கள் பலர் எத்துணை அருமையான தமிழ் பக்தி இலக்கியங்களை அழிக்கவும் ஒழிக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றனர். நகச் சுத்திக்குப் பயந்து கையையே வெட்டிக் கொள்கிறது ஒரு கூட்டம்… அவர் பாடிய பன்னிரு திருமுறைகளைக் கேட்கக் கேட்க உருகியது என் மனம். பெருகியது கண்ணீர். எம்மொழியாம் செம்மொழி தமிழ்மொழி, பாரில் அதற்கு நிகர் வேறெந்த மொழி ! கண்ணீரைத் துடைத்தவாறே வினவினேன், “மூலவர், ஓடிட்டார்னு சொன்னீங்களே! கேலியோ !” “இல்லடா… நிஜமாதான்…சிவாச்சாரியார்கள் நான்கு பேர் கை கோர்த்து வந்தா. ஒருத்தர் சொன்னார் `இறைவா… திருசிற்றம்பழம்…‘எல்லாருக்கும் ’ழ’ தான் தடுமாறும். இவருக்கு ‘ல’ வே தடுமாறுது. எனக்கு அதைப் பார்த்ததும் சிரிப்ப அடக்க முடியலை. நானும் உங்க கூட சேர்ந்து பாடட்டுமானு கேட்டேன். ஏய்! பிராமணா வெளிய போடானு நாலு பேரும் என்னத் துரத்திட்டா. நானும் வெளிய நின்று வேடிக்கை பார்த்தேன். “இரண்டாம் சிவாச்சாரியார் சிவனை நோக்கிப் பாடினார் `பாழ் அபிசேகம் செய்யவா! என் மன்னா’ என்னது பாழ் அபிசேகமா! அடியாரே அது பால் அபிசேகம்னு நான் சொன்னேன். அவர் அதைக் காதுல போட்டுக்காம மீண்டும் மீண்டும் ‘பாழ்’ என்றார். சிவனே என்று கிடந்த சிவன் கண்ணில் தாரை தாரையா கண்ணீர் வர ஆரமிச்சிடுத்து. இருக்காதா பின்ன! “தமிழைக் கொலை செய்தால் பொறுத்துக் கொள்வானோ வெள்ளையங்கிரி நாதன்.ஆனா அதைப் பார்த்த அந்த மூன்றாவதுசிவாச்சாரியார் சொன்னார் `ஐயகோ! இறைவன் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்’ அதைக் கேட்டதும் மூலவர் சிலையிலிருந்து இன்னும் அதிகமாக வழிந்தது, கண்ணீர். இன்னும் கொஞ்சம் போயிருந்தா ஆண்டவன் ரத்தக் கண்ணீரே வடித்திருப்பார். அந்த நேரம் பார்த்து அந்த நாலாவது சிவாச்சாரியார் சொன்னார்…” பேச்சை நிறுத்திவிட்டு சிரித்தார் குருக்கள். கபடமற்ற சிரிப்பு. அவர் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தேன் நான். சிரித்துவிட்டு, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்… “அந்த நாலாவது மனிதர் பாவம். இறைவன் மீது பாசம் ரொம்ப அதிகம் வச்சுட்டார். தன்னைத் தானே திருநாவுக்கரசரென்று நினச்சுண்டு இறைவனை ஆட்கொண்டருள வேண்டினார்… ஆனால்… (மீண்டும் சிரித்தார்குருக்கள்) ஆனால் அவர் வேண்டியதுவேறு… ‘இறைவா நீ என்னைக் கொல்வாயாக… கொல்லாவிடில் நான் உன்னைக் கொல்வேனாக… இறைவா நீ என்னைக் கொல்வாயாக… கொல்லாவிடில் நான் உன்னைக் கொல்வேனாக…’ தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்டுப் பாடிண்டே இருந்தார். நானும் வெளியே இருந்து, அது ‘ள்’ அடியாரே ‘ல்’ அன்றுனு சொல்லிண்டே இருந்தேன். அவர் என் பக்கம் செவி சாய்க்காமல் தொடர்ந்து ஆனந்தக் கூத்தாடினார். ‘இறைவா நீ என்னைக் கொல்வாயாக… கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…’ திடிர்னு இடி இடிக்கிற மாதிரி சத்தம். இந்த கோவிலே ஆட்டம் கண்டுடுத்து. நான் தடுக்கி கீழ விழுந்து மயங்கிட்டேன். எனக்கு என்ன நடந்ததுனே புரியல. சில நிமிடம் கழித்து நினைவு வந்தது. நான் வேகமா கர்ப்ப கிரகம் நோக்கி ஓடினேன். அங்க கடவுள் இல்லை. ஆனால் நான்கு சிவனடியார்களும் கண்ணைத் திறக்காமலேயே கண்ணீர் வழிய பாடிண்டே இருந்தா. ‘இறைவா நீ என்னைக் கொல்வாயாக… கொல்லா விடில் நான் உன்னைக் கொல்வேனாக…’ வெகு தொலைவில கடவுள் கதறிண்டே ஓடிண்டிருந்தார், ‘அய்யோ.. என்னை கொலை பண்ணுறாங்க. அய்யோ என்னைகொலை பண்ணுறாங்க’…" கும்பிடுசாமி ‘கும்பிடுசாமி’ என்றதும் ஏதோ ஊர் பக்கம் இருக்கும் காவல் தெய்வம் என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர். கும்பிடுசாமி என்பவர் என்னுடைய சித்தப்பா. அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது யாருக்கும் நினைவிலில்லை. எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து அவரை ‘கும்பிடுசாமி’ என்றே அனைவரும் அழைக்கின்றனர். அதற்கு முன்பிருந்தே அவர் கும்பிடுசாமிதானாம். நாங்களும் அப்படிதான் அழைப்போம். அவரை யாரும் உறவுமுறை சொல்லி, அப்பா என்றோ, மாமா என்றோ, சித்தப்பா என்றோ அழைக்கமாட்டார்கள். அவருடைய மகனே அவரை ‘கும்பிடுசாமி’ என்று தான் அழைப்பான். அவர் எப்போதும் கும்பிட்டுக்கொண்டே இருப்பது தான் அதற்கு காரணம். அவர் கை குழந்தையாக இருந்த போதே இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிடுவாராம். எல்லோரும் அவர் பக்திமான் என்று சிலாகித்து போயிருக்கிறார்கள். அவரை பள்ளியில் சேர்த்த போதுதான் அவர் பக்திமானும் இல்லை சக்திமானும் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. முதலில் வகுப்பறையில் அவர் அவ்வப்போது கும்பிடுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். இரண்டாம் வகுப்பு பள்ளித் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர், திடிரென்று பென்சிலை கீழே போட்டுவிட்டு கும்பிடத் தொடங்கி இருக்கிறார். வகுப்பாசிரியர், கூட்டல் கணக்கிற்கு பதில் தெரியாமல் கடவுளை வேண்டுகிறார் என்று அமைதியாக இருந்திருக்கிறார். இவர் கிட்டத்தட்ட அரைமணி நேரம் கும்பிடுவதைப் பார்த்து அவருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இப்படி கும்பிட்டால் கடவுள் பத்தாம் வகுப்பு கேள்விக்கே பதில் சொல்லியிருப்பாரே, இவன் ஏன் இன்னும் கும்பிடுகிறான் என்று யோசித்தவர் இவரை கும்பிடுவதை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். இவர் கேட்காததால், இரண்டு கைகளையும் விலக்கி விட்டிருக்கிறார். மீண்டும் இவர் கும்பிட்டிருக்கிறார். எத்தனை முறை விலக்கினாலும் இவர் மீண்டும் மீண்டும் கும்பிட்டிருக்கிறார். செய்ததை செய்யும் குரங்குப் பிள்ளை. அவ்வளவுதான் தாத்தாவிற்கு செய்தி அனுப்பிவிட்டிருக்கிறார்கள். அதன்பின் தாத்தா அவரை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவில்லை. வீட்டில் வசதி இருந்ததால் அவர் கும்பிட்டு கும்பிட்டு தூங்கி இருக்கிறார். கும்பிடுசாமியாகவே இருந்தாலும் திருமணம் செய்துவைக்க வேண்டுமே, திருமணம் என்றால் வேலைக்கு போகவேண்டுமே என்று யோசித்த தாத்தா அவருக்கு ஏற்றார் போல் ஒரு வேலையை தேர்ந்தெடுத்திருக்கிறார். அது ஒரு துணிக்கடையில் வருபவர்களை வாசலில் நின்று வரவேற்க்கும் வேலை. ­­ நாள் முழுக்க கும்பிட்டுக் கொண்டே இருந்தால் போதும். ஆனால் சில மாதங்கள் மட்டுமே அவரால் அந்த வேலையில் நீடிக்க முடிந்தது. அந்த கடை முதலாளியின் மகன் வெளிநாட்டிலிருந்து கும்பிடும் பொம்மைகளை இறக்குமதி செய்து கடையின் முன் நிற்க வைத்துவிட்டான். அந்த பொம்மைகள் கும்பிட்டுக் கொண்டே தலையையும் ஆட்டி இருக்கின்றன. கும்பிடுசாமியால் கும்பிட மட்டுமே முடியும். வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று தாத்தா எண்ணியிருக்கிறார். கும்பிட்டுக் கொண்டே இருக்கும் அடுத்த வேலை எது? தாத்தா யோசித்தக்கொண்டிருந்த நேரத்தில் அந்த ஊர் சட்டமன்ற உறுப்பினர் தலையில் தேங்காய் விழுந்து இறந்து போக, ஊருக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. தாத்தாவிற்கு யோசனை பிறந்தது. “வாக்காள பெருமக்களே…” அந்த சுயேட்ச்சை வேட்பாளர் பேசிக்கொண்டே போகும் போது, அருகில் கும்பிடுசாமி கும்பிட்டுக் கொண்டே வருவாராம். ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் கும்பிடுகிறாரோ அதற்கு ஏற்றார்போல் தினப்படியும் உண்டாம். ஆனால் இவர் கும்பிடுவதை கவனித்த மக்கள் அனைவரும் இவரையே சுற்றி வரத் தொடங்கியிருக்கின்றனர். வேட்பாளருக்கு, எங்கே இவர் அரசியலில் குதித்துவிடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது. கும்பிடுக்கு அந்த வேலையும் போயிற்று. தாத்தா மருத்துவரிடம் போயிருக்கிறார். ஏதேதோ புரியாத நோய் பெயர் சொல்லி மருத்துவர் நிறைய காசை பிடிங்கிக் கொண்டிருக்கிறார். கும்பிடு சாமியிடம் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை இதெல்லாம் காத்துகருப்பின் வேலையாக இருக்குமோ என்று பயந்த அப்பாயி மாசி பெரிய கருப்புசாமியிடம் போய் முறையிட்டிருக்கிறார். தன் மகனை அண்டிய காத்து ஓட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கிடா வெட்டியிருக்கிறார். ஊரில் ஆடுகளுக்கு பற்றாக்குறை வந்ததுதான் மிச்சம். கல்யாணம் பண்ணிவைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சேலத்தில் ஒரு ஜோசியர் சொல்ல, உத்தியோகம் இல்லாமலிருப்பதும் புருஷலட்சணம்தான் என்று அப்பாயி முடிவெடுத்திருக்கிறார். ஊரில் யாரும் கும்பிடுக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை. மேலும் அவரை பலரும் கேலி பேசியிருக்கிறார்கள். அதனால் தாத்தா, குடும்பத்தோடு மெட்ராசிற்கு குடி புகுந்திருக்கிறார். தாம்பரம் அருகே ஒரு கிராமத்தில் வசித்து வந்த போது, கும்பிடு சாமி கும்பிட்டுக் கொண்டே இருப்பது மரியாதைக்காக என்று தவறாக புரிந்துகொண்ட அந்த ஊர் பஞ்சயாத்து தலைவர், இவ்வளவு மரியாதையான மனிதனை தவறவிடக் கூடாது என்று முடிவுசெய்து தன் கடைசி மகளை கும்பிடு சாமிக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். தாத்தாவிற்கு உள்ளுக்குள் சந்தோசம் என்றாலும், எப்படி மகன் தாலிக் கட்டுவான், அவன் கும்பிட்டுக் கொண்டே இருப்பானே என்று பயந்திருக்கிறார். தன் பையனிடம் இருக்கும் பிரச்சனையை தன் (சம்மந்தி) சமப்பந்தியாகப் போறவரிடம் சொல்லிவிடலாம் என்று யோசித்திருக்கிறார். அப்போது தான் தெரிந்திருக்கிறது, பஞ்சாயத்து தலைவர் பகுத்தறிவு கட்சியை சேர்ந்தவர் என்பது. தாத்தாவிற்கு பெரும் மகிழ்ச்சி. தாலி கட்டவேண்டிய பிரச்சனை இல்லாமல் பகுத்தறிவு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. பஞ்சயாத்து தலைவரின் குடும்பம் மிகப் பெரியது. வசதி படைத்தது. திருமணத்திற்கு பின்பு கும்பிடுசாமி தன் மனைவியை கும்பிட்டுக் கொண்டே இருந்ததைப் பார்த்து அவர்கள் அலமந்து போயிருக்கிறார்கள். தாங்கள் அனைவரும் செல்லமாக வளர்த்த பெண்னை வழிப்படும் ஆண்மகன் கிடைத்துவிட்டதாக எண்ணிய பெண்ணின் சகோதரர்கள் தங்களின் பெயரிலிருந்த ஒரு பெரிய துணிக் கடையை கும்பிடு சாமியின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார்கள். “இது என்னையா பேரு. கும்பிடுசாமி. இந்த பேருக்கு எப்படி ரிஜிஸ்தர் பண்றது?” சொத்தை பதிவு சைய்யும் போது பதிவாளர் கேட்டிருக்கிறார். அவ்வளவுதான் கும்பிடுசாமியின் மச்சான்கள் அனைவரும் அந்த அரசு அதிகாரியை அடிக்கப் போயிருக்கிறார்கள். பயந்த அதிகாரி, கும்பிடுசாமி என்று பெயரிலேயே சொத்தை பதிவு செய்ய அது அன்று முதல் அவரின் சட்டப்பூர்வமான பெயர் ஆனது. மேலும் கும்பிடுசாமிக்கு ஒன்றென்றால் அவருடைய ஐந்து மச்சான்களும் வருவார்கள் என்ற செய்தி ஊரில் வேகமாக பரவியிருக்கிறது. எல்லோரும் கும்பிடுசாமியை ஒரு குட்டி டான் போல பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். “கோன் ஹே ஒ. எனக்கே பாக்கனும்போல இருக்கே…” என்று பம்பாயில் சோட்டாராஜன் சொல்லும் அளவிற்கு கும்பிடு அண்ட் கோ-வின் செல்வாக்கு பரவியிருக்கிறது. அந்த அதிகாரத்தோடு அவர் வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த வியாபாரமும் செய்யத் தெரியாது என்ற உண்மை தாத்தாவிற்கும் அப்பாயிக்கும் மட்டுமே தெரியும். அதனால் தாத்தா புத்திசாலித்தனமாக கும்பிடுசாமியை கல்லாவிற்கு அருகில் அமரவைத்துவிட்டு, கல்லாவில் கும்பிடுசாமியின் மச்சான் ஒருவரை அமர வைத்துவிட்டார். கும்பிடு சாமி கும்பிடுவதை பார்ப்பதற்காக நிறைய ஜனங்கள் அங்கே வரத் தொடங்க, அவருடைய ஸ்தாபனம் விறுவிறுவென வளர்ந்திருக்கிறது. கும்பிடுசாமி அந்த இடத்தில் அமர்வதுதான் ராசி என்று தாத்தா எல்லோரையும் நம்பவைத்துவிட்டார். பஞ்சாயத்து தலைவர்தான் பகுத்தறிவுவாதி. அவருடைய மகன்கள் எல்லாம் ராசிபலன்(வியா)வாதிகள். டிவியில் ராசிபலன் பார்த்துவிட்டு குரு இன்று எந்தக் கட்டத்தைப் பார்க்கிறார் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து வியாபார முதலீடுகள் செய்யக்கூடிய அளவிற்கு ஜோஷிய ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் அவர்களும் கும்பிடுசாமி அங்கே அமர்வதால் தான் வியாபாரம் நடக்கிறது என்று நம்பி அவரை அங்கேயே விட்டுவிட்டனர். கல்லாவிற்கு பக்கத்திலிருக்கும் இருக்கை கும்பிடுசாமியின் நிரந்தரஇருக்கையாகிப் போனது இப்படிதான். சூரியன் உதித்து மறைய, கும்பிடுசாமிக்குப் பிள்ளைகள் பிறக்க, மெட்ராஸ் சென்னையாக, தாம்பரத்தை சுற்றியிருந்த கிராமங்கள் அபார்ட்மென்ட்களாக மாறிப்போக, அவரின் வியாபாரமும் பெருக கும்பிடுசாமி (மிகப்)பெரிய மனிதராக உருவெடுக்கத் தொடங்கியிருக்கிறார். கும்பிடுசாமியின் பிள்ளைகள் வளர்ந்து அமெரிக்காவில் வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட கடையில் கும்பிடுசாமி கும்பிடுவதை படமாக்கி சுவற்றில் மாட்டிவிட்டான் அவருடைய மகன். அந்த படத்தைப் பார்க்கவே பல அமெரிக்கர்கள் வருகிறார்களாம். இன்று கும்பிடுசாமிக்கு நிறைய வயசாகிவிட்டது.‘கும்பிடுசாமிடெக்ஸ்டைல்ஸ்’ உலகம் முழுக்க பரவிவிட்டது. இன்னும் அவர் கும்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அவர் மனைவி இன்று வரை தன் கணவன் தன்னை வழிபடுவதாக நினைத்து வருகிறார். அவர் குடும்பத்தார் அவர் கும்பிடுவதுதான் ராசி என்று நம்பி வருகின்றனர். மக்கள் அவரை தேடி வந்து பார்க்கின்றனர். அவரிடம் நிறைய பணம் சேர்ந்துவிட்டது. அவருக்கு திநகரில் பெரிய பங்களா இருக்கிறது. வீட்டில் பல வெளிநாட்டு கார்கள் நிற்கின்றன. எந்த கட்சி அடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்று முடிவுசெய்வதே அவர்தான் என்று பேசிக் கொள்கிறார்கள். தமிழக அரசியலில் அவருக்கு தெரியாத ரகசியம் எதுவுமில்லை என்பது கூடுதல் தகவல். மேலும், கும்பிடுசாமி என்ற பெயரில் ஆதார் அட்டை வைத்திருக்கிறார். அதை தன் மொபைல் நம்பரோடும் வங்கிக் கணக்கோடும் இணைத்துவிட்டார் (அதனால் அவர் சேவைத் துண்டிக்கப் படவில்லை). அவர் இப்போது வெறும் கும்பிடுசாமி இல்லை. ‘கும்பிடுசாமி அண்ணாச்சி’. ஆனால் அவருடைய உண்மையான பெயர் என்ன என்பதுதான் யாருக்கும் நினைவிலில்லை. *** அரவிந்த் சச்சிதானந்தம் எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர். சுஜாதா விருது பெற்றவர். மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் பயின்றவர். www.aravindhskumar.com என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார் இவரது பிற நூல்கள்: - மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் - சகலகலாவல்லவன் கமல் பிற பரிமாணங்கள் ஓர் உரையாடல் - நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்பு - தட்பம் தவிர்- நாவல் - கொஞ்சம் திரைக்கதை - போதிதர்மர் முதல் ஜேம்ஸ் பாண்ட் வரை - தொடரும் சினிமா தொடர்பு : aravindhskumar@gmail.com