[] [cover image] நகுலனின் நாய் அரவிந்த் சச்சிதானந்தம் FreeTamilEbooks.com CC BY-NC-ND 4.0 நகுலனின் நாய் 1. நகுலனின் நாய் 1. நூல் விபரம் 2. கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும் 3. நகுலனின் நாய் 4. கடவுளும் ப்ளாக் டிக்கெட்டும் 5. நைட் ஷிப்ட் 6. கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள் 7. ஆவி எழுத்தாளன் (எ) தமிழ் சினிமா கதாசிரியன் 8. ஓடிப்போனக் கடவுள் 9. கண் 10. தாத்தாவின் கதை நகுலனின் நாய் நகுலனின் நாய்   அரவிந்த் சச்சிதானந்தம்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC BY-NC-ND 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Nagulanin_Naai} நூல் விபரம் நகுலனின் நாய் ♦ சிறுகதைத் தொகுப்பு ♦ அரவிந்த் சச்சிதானந்தம் © அரவிந்த் சச்சிதானந்தம் ♦ முதல் பதிப்பு: ஜூன் 2015 ♦ அட்டை படம் © பிரேம்குமார் சச்சிதானந்தம் ♦ அந்தாதி பதிப்பகம் 49, பெரியார் தெரு, தாம்பரம் சானடோரியம், சென்னை –600 047 Nakulanin Naai ♦ Short Story Collections ♦ Aravindh Sachidanandam © Aravindh Sachidanandam ♦ First edition: June 2015 ♦ Kindle edition: August 2017♦ CoverImage © Premkumar Sachidanandam ♦ Andhadhi Pathippagam 49, Periyar Street, Tambaram Sanatorium, Chennai-600 047 Andhadhi Pathippagam Title 1 Email: andhadhipathippagam@gmail.com www.andhadhi.com கதைகள் சொல்லி, கதை சொல்லியாய் வார்த்தெடுத்த அப்பாயிக்கு கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும் “Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex.” -Wikipedia கைக்குட்டை என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமா இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர் விடயம். கைக்குட்டைக்கென்ன பெரிய முக்கியத்துவம் இருந்துவிடப்போகுதென்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் நான் ஆயிரம் ரூபாய்க்கு கைக்குட்டை வாங்கிட்டேன்னு சொன்னால், அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும். ஒரு வருடத்திற்குச் சுமார் ஆறாயிரம் ரூபாய் கைக்குட்டைக்கே செலவளிக்கிறேன். நான் என்ன செய்வது! வேறு வழி இல்லை… ஏதோ நான் கைக்குட்டையை வைத்துப் பாய்மரக்கப்பல் செய்வதாக நீங்கள் நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எதற்காக கைக்குட்டை பயன் படுத்துகின்றீர்களோ அதே காரணங்களுக்காகக் கைக்குட்டையைப் பயன்படுத்தும் ஒரு சாதாரண மனிதன் நான். ஆனால் என் வாழ்க்கையில் கைக்குட்டைகள் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரணமானவையல்ல. “பத்திரம்டா! எங்கேயும் கீழ விட்டுறாத…” ஒவ்வொரு முறையும் அம்மா சொல்லுவாள், அந்தக் கைக்குட்டையை என் யூனிபார்ம் ட்ரௌசரோடு சேர்த்து ஊக்கைக் குத்தும் போது. அழகான பூப் போட்ட வெள்ளை நிறக் கைக்குட்டை அது. என் வாழ்க்கையில் அதன் பின் ஏனோ பூப்போட்ட கைக்குட்டை உபயோகப் படுத்தவில்லை. யாரும் உபயோகப் படுத்தவிடவில்லை. பூப்போட்டக் கைக்குட்டைகளும் குடைகளும் பெண்களுக்கு மட்டுமே உரித்தானவையென்று இங்கு ஏனோ நம்பப் படுகிறது. பூக்கள், ஜனனம் முதல் மரணம் வரை மனிதனின் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் அலங்கரிக்கின்றன. ஆண் கடவுளுக்குப் பூச் சூட்டி அழகு பார்க்கும் இந்தச் சமுதாயம், பூவைப் பற்றி ஒரு சராசரி ஆண் பேசினாலே அவனை விசித்திரமாகப் பார்க்கிறது. பூக்கள் ஆண்மையின் பலவீனமாகவும் பெண்மையின் அடையாளமாகவும் பார்க்கப்படுவது ஆணாதிக்கத்தின் உச்சம். ஆறாம் வகுப்பு படிக்கும் போது பூ வரைந்த கைக்குட்டையை வைத்திருந்த ராமஜெயத்தை எல்லாரும் அழும் வரை கேலி செய்தது எனக்கு இன்னும் நினைவிலுள்ளது. எனக்கும் அந்தக் கைக்குட்டை ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் அதை வெளியே சொல்ல இயலவில்லை. நண்பர்கள் என்னை ஒதுக்கி வைத்திடுவார்களோ என்ற பயம். வீட்டிலும் ஒரு நாள் பூப் போட்டப் புடவையை முகர்ந்து பார்த்ததற்கு அம்மா சூடு போட்ட அந்தத் தழும்பு இன்னும் என் வலது துடையை உறுத்திக்கிட்டிருக்கு. அதனால் எனக்குப் பிடித்த பல விடயங்களை வெளியே சொல்லாமல் ஆசையை மனதில் வைத்தே பூட்டிக் கொண்டேன்… சிறு வயதிலிருந்தே எனக்கும் கைகுட்டைக்கும் முரண்பட்ட ராசி. ஒவ்வொரு முறையும் நான் கைக்குட்டையைத் தொலைத்துவிட்டு வந்து நிற்கும் போது விளக்குமாற்றில் அடி விழும். கீழே சிதறி விழும் குச்சிகளை மீண்டும் எடுத்துச் சொருவி மறுபடியும் அம்மா அடிப்பாள். என்னை அடிக்கிறதுக்கு அவளுக்கு ஏதாவதொரு காரணம் வேண்டும். “ஒரு கைக்குட்டையை தொலச்சதுக்கா இப்படி போட்டு அடிக்குற”, வினவிய பக்கத்து வீட்டு அத்தையை அம்மா பார்வையாலேயே வெட்டினாள். “எம் புள்ளைய தான அடிக்கிறேன்… நீ யாருடி சக்காளத்தி!” அம்மா எல்லாரையும் இப்படிதான் தரக்குறைவாகப் பேசுவாள். அதனாலேயே யாரும் மத்துசத்திற்கு வரமாட்டார்கள். ஒவ்வொரு முறையும் கைக்குட்டையைத் தொலைத்து விட்டு நான் ‘தேமே’ என்று அம்மா முன்னாடி வந்து நிக்கும் போதெல்லாம், அம்மா சாமியாடத் தொடங்கிவிடுவாள். அம்மா அடிக்கும்போது அவள் கண்கள் சிவந்து, முகம் சிடு சிடுவென்று இருக்கும். எதுவும் பேசமாட்டாள். என்றாவது கோபம் உச்சத்தை அடையும் போது, வெறிபிடித்தவள் போல் கத்துவாள். என்னை அடிக்கும் போது அவள் உடம்பு குளிர் ஜுரம் வந்தது போல் நடுங்கும். மூச்சு இரைக்கும். ஆனாலும் முயன்று என்னை அடிப்பாள். “ஏன்டா உன் புத்தி இப்படிப் போகுது… பொருளத் தொலைச்சதுக்குப் பேயாடுறேன்னு சொல்ற முண்டைகளுக்கு என்ன தெரியும், என் கவலை!” ஒவ்வொரு முறையும் இதைச் சொல்லிடும் போது அவள் கண்கள் கலங்கிடும். “பொட்ட புத்தி உனக்கெதுக்குடா!” அப்போது தான் எனக்கு விளங்கிற்று. நேற்று மொட்டைமாடியில் உலர்ந்து கொண்டிருந்த என் அக்காவின் சிகப்புத் தாவணியை நான் நிரடிக்கொண்டிருந்ததை அம்மா பார்த்துவிட்டிருக்கிறாள். பெரும்பாலும் அம்மா எதற்காக அடிக்கிறாள் என்ற காரணம் மறந்து போய்விட்டிருக்கும். ஏதேதோ காரணங்களுக்காக அடிப்பதாலும், எந்தக்காரணத்துக்காக அடித்தாலும் அடியும் வலியும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதாலும், நானும் காரணங்களை நினைவில் வைத்துக் கொள்வதில்லை. “ஆண் பிள்ளைடா நீ…” என்று கூறி விட்டு மீண்டும் கலங்குவாள். கலங்கும் அவள் கண்களைக் காணத் தாளாமல் நான் அவள் கால்களைக் கட்டிக் கொள்வேன். “இனிமே இப்படி செய்ய மாட்டேன்மா! நீ அழாத!” நான் என்ன தப்பு செய்தேனென்று எனக்கு விளங்காது. ஆனால் எங்க அம்மாவை ஆசுவாசப் படுத்த அப்படிச் சொல்லிவிடுவது வழக்கம். ஓரிரு நாட்களுக்குப் பின் எல்லாம் மறந்துவிடும். அக்காவின் தாவணியை எடுத்து உடலில் சுற்றிக் கொள்வேன். மறுபடியும் விளக்குமாற்றுக் குச்சிகள் சிதறும். அப்போதெனக்கு பத்து வயதுதான் இருக்கும். நான் செய்வது தப்பென்று எனக்குத் தோன்றியதே இல்லை. ஆண்கள் மாதிரி சட்டை போடுற பெண்களை நான் பார்த்திருக்கிறேன். எங்க பக்கத்துக்கு வீட்டு அக்கா எப்பவும் சட்டை பேன்ட் தான் போடும். ஆனால் நான் புடவையை உற்றுப் பார்த்தாலே அம்மாவுக்குக் கோபம் வந்திடும். “திருட்டுப் புத்தி வேறயா?” மீண்டும் ஒருநாள் அம்மா சாமியாடினாள். இப்போது திருட்டுப் பட்டத்தையும் கொடுத்துவிட்டாள். அக்காவின் பூப் போட்ட கைக்குட்டை என் பைக்குள் இருந்ததற்காக அம்மா சொல்லிச் சொல்லி அடித்தாள் “இது எப்படிடா உன் பையில வந்துது. குடியக் கெடுக்கனே பொறந்திருக்கியா ! கோடலிக் காம்பே…” அந்தக் கைக்குட்டை எப்படி என் பைக்குள் வந்தது என்பது எனக்கும் விளங்கவில்லை. ஒரு வேளை நான் தான் பையினுள் வைத்திருப்பேன். அப்போதெல்லாம் ரயிலில் பத்து ரூபாய்க்கு மூன்று எனப் பல வகையான கைக்குட்டைகள் விற்கப்படும். அம்மா பெரும்பாலும் அதைத்தான் வாங்கித் தருவாள், எனக்கு கட்டம் போட்டக் கைக்குட்டைகள், அக்காவிற்கு பூ வரைந்த கைக்குட்டைகள். இருதினங்களுக்குமுன் அக்காவிற்குக் கைக்குட்டை வாங்கிவந்தாள். அம்மாவிற்குத் தெரியாமல் நான் எடுத்து வைத்துக் கொண்டேன். எடுத்து வைத்திருக்கலாம்… புடவைகள், பூ வரைந்த கைக்குட்டைகள், தாவணிகள் போன்றவற்றைப் பார்த்தால் என் மனம் கட்டுப் பாட்டை இழந்து விடும். நடப்பது எதுவும் பெரும்பாலும் ஞாபகம் இராது. யாருக்கும் தெரியாமல் என் பையில் திருடி வைத்துக் கொள்வேன், ஓரிரு நாட்களுக்குப்பின் மீண்டும் அதே இடத்தில் வைத்துவிடுவேன். அன்று என் அம்மா அக்காவின் கைக்குட்டையைத் திருடியதற்காகச் சாடும் போது சிரிப்புதான் வந்தது. ஒரு நாள் அவள் மாங்காடு கோவிலுக்குச் சென்றிருந்த போது, வீட்டிலிருந்த நான் அவளின் பழைய புடவையை எடுத்துச் சுற்றிக் கொண்டேன். அது அவளுக்கு இன்னும் தெரியாது. தெரிந்திருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பாள். ஆனால் இன்று வெறும் கைக்குட்டைக்காக அடிக்கிறாள். அம்மா ரொம்ப நல்லவள், என்னை அடித்தாலும்… பெரும்பாலும் பிச்சைக்காரிகளுக்குக் கொடுப்பதற்காகவே தன் பழைய புடவைகளை எடுத்து மூட்டை கட்டி வைத்திருப்பாள். அவள் இல்லாத போது அதிலிருந்து சில புடவைகளை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்வேன். நிறைய புடவைகள் இருப்பதால் அவளால் புடவை தொலைந்து போவதைக் கண்டு பிடிக்க இயலாது. யாரும் இல்லாத இடங்களில் அந்தப் புடவை என் தோளைத் தழுவும். பின் சாக்கடையில் நழுவும். பெரும்பாலும் யாரும் தென்படாத அந்தச் சுடுகாட்டு மண்டபத்தில்தான் நான் புடவையைப் பதுக்குவது, நெருடுவது, தோளில் சுற்றிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவேன் . என் தனிமையின் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியங்களை அம்மா எப்படியோ கண்டு கொண்டுவிட்டாள். அதன்பின் நான் பெரும்பாலும் தனியாக எங்கேயும் சென்றதில்லை. அம்மாவின் கழுகுப் பார்வையிலேயே என் வாழ்க்கை நகரத் தொடங்கியது. சாமி படத்திற்கு பூ நான் தான் வாங்கி வருவேன். அதற்கும் தடை வந்து விட்டது. அம்மா தன் தலையில் பூ வைப்பதைக் கூட நிறுத்திவிட்டாள்… நான் செய்வது சரியா தவறா என்று தெரியாத குழப்பத்தில் தான் என் வாழ்க்கை நகரத் தொடங்கியது. சரி-தவறென்று பகுத்துச் சொல்ல வேண்டிய அப்பாவும் என்னுடன் இல்லை. என் அப்பாவை இது வரை நான் இரண்டு முறை தான் பார்த்திருக்கிறேன். என் அம்மா அவரின் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நானும் பார்ப்பதால் அவர் முகம் எனக்கு மறக்கவில்லை. அவர் துபாய் சென்று பல வருடங்களாகின்றன. நான்கைந்து வருடங்களுக்கு ஒரு முறைதான் வீடு வருவார். கடைசியாக மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பார்த்ததாக ஞாபகம். நான் வளர்ந்ததெல்லாம் என் தாய், தமக்கை அரவணைப்பில்தான். முழு ஆண்டு விடுமுறையில் என் சித்தி வீட்டில் கொண்டு விட்டுவிடுவாள் அம்மா. அங்கு சித்தியும், அவளின் பெண் மட்டும்தான் . என் சித்தப்பா நான் பிறப்பதற்கு முன்னே இறந்து விட்டார். என் சித்திப் பெண் என்னைவிட வயதில் மூத்தவள். அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும், என் உடன் பிறந்த தமக்கையை விட. எப்போது நான் சித்தி வீட்டுக்குப் போனாலும் அவளோடும் அவள் தோழிகளுடனும் தான் விளையாடிக் கொண்டிருப்பேன். என்னை அவள் தன் அனைத்து தோழிகளிடமும் அறிமுகப் படுத்தி வைப்பாள். எல்லாரும் என்னைத் ‘தம்பி’ ‘தம்பி’ என்று செல்லமாக அழைப்பார்கள். அங்கேயே இருந்துவிடலாம் என எண்ணும் போது, அம்மா வந்துவிடுவாள், விடுமுறை முடிந்ததால் அழைத்துச் செல்வதற்காக. வாழ்க்கையின் அழகான தருணங்கள் மிக வேகமாகக் கரைந்து விடுகின்றன… மீண்டும் விடுமுறையை எதிர்பார்த்து நான் வீட்டில் காத்துக் கொண்டிருப்பேன்… “இந்த வருஷம் சித்தி வீட்டுக்குப் போகல!” அம்மா கூறியவுடனே தூக்கி வாரிப் போட்டது. “அப்பா வர்றார்டா…!” எனக்கு எந்த சந்தோசமும் ஏற்படவில்லை. ‘அடுத்த வருஷம் வர வேண்டியவர் ஏன் இப்பவே வராரு’ என்றே தோன்றியது. அம்மா ஏதோ வத்தி வைத்திருக்கிறாள். ஒரு வேளை என் நடவடிக்கைகளைப் பற்றி சொல்லி இருக்கலாம். பூமியே இருண்ட மாதிரி ஒரு மாயை. நான் செய்வதைப் பகுத்துப் பார்த்தறிய எனக்கு அந்தப் பத்து வயதில் விளங்கவில்லை. அம்மாவும் அக்காவும்தான் நான் செய்வது தப்பென்பார்கள். அப்பாவின் வருகையினால் சித்தி வீட்டுப் பயணம் தடைப் பட்டு விட்டது என்றதும் அப்பாவின் மீது வெறுப்பு தான் மிஞ்சியது. அப்பா நிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தார். ‘உனக்குதான்டா’ என்றவாறே அவர் கொடுத்த அந்தப் பையைத் திறந்ததும், என்னால் என் சந்தோசத்தை அடக்கிக் கொள்ள இயலவில்லை. கலங்கிய கண்களுடன் அப்பாவைப் பார்த்தேன், அந்தப் பையினுள் இருந்த சுடிதாரை வெளியே எடுத்தவாறே. “பை மாறிப் போச்சா! அக்காக்கிட்ட கொடு… உன் பை இங்கிருக்கு” பின் அவர் கொடுத்த எந்தப் பொருட்களும் என்னைக் கவரவில்லை . என் கவனம் முழுக்க அக்காவிற்கு வாங்கிய அந்த நீல நிறச் சுடிதாரிலேயே இருந்தது… அப்பா எதற்காக வந்திருக்கிறார் என்றெனக்கு விளங்கவில்லை. அடிக்கடி அம்மாவும் அப்பாவும் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டனர். நான் அறையினுள் நுழைந்தால், பேச்சை நிறுத்திவிடுவார்கள். ஆனால் அப்பா என்னிடம் சகஜமாகதான் பழகினார். பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். நிறைய பொருட்கள் வாங்கித் தந்தார். எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்தது. அம்மா மலிவு விலைக் கைக்குட்டைகளை வாங்குவதைக் கண்டு அப்பா கடிந்துரைத்தார். “உடம்பத் தொடுற எந்தப் பொருளும் நல்ல ரகமா இருக்கணும்” அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார். என்னை அறியாமலேயே என்மனதில் அவர் வார்த்தைகள் பதிந்து விட்டன. இன்று வரை எந்தப் பொருள் வாங்கினாலும் அப்பாவின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் விளைவே பிராண்டட் கைகுட்டைகளுக்காக நான் பல ஆயிரங்கள் இறைக்கிறேன்… “அக்கா கல்யாணம்டா…” இதற்குத் தான் அப்பா வந்திருக்கிறார், கல்யாணம் முடிந்தவுடன் கிளம்பிவிடுவார் என்று நான் நினைத்துக் கொண்டேன். அதை உணர்ந்ததினாலோ என்னவோ ஏதோ சொல்ல வந்த என் தந்தை பேச்சை நிறுத்திக் கொண்டார். அடுத்த ஒரு மாதத்தில் எங்கள் வீடு திருவிழாக் கோலம் பூண்டது. வேக வேகமாகக் கல்யாண ஏற்பாடுகள் நடந்தன. தினம் தினம் விருந்தாளிகள் வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தனர். பக்கத்துத் தெருவில் ஒரு லாட்ஜில் விருந்தினர்களுக்கு ரூம் போடப் பட்டிருந்தது. வரும் விருந்தாளிகளை லாட்ஜிற்கு அழைத்துச் செல்வதே என் வேலை. எத்தனை வகையான மனிதர்கள்! வகை வகையான ஆடை அலங்காரங்கள்! எங்கள் குடும்பம் இவ்வளவு பெரியது என இது நாள் வரை தெரியாது. அம்மா யாருடனும் ஒட்டமாட்டாள் என்பது விருந்தாளிகளாக வந்த பல பாட்டிமார்கள் சொல்லியே எனக்குத் தெரிந்தது. என் வயதுப் பையன்கள் நிறைய பேர் வந்திருந்தனர். நாங்கள் அனைவரும் தெருவில் கிரிக்கெட் விளையாடுவோம். இரவில் கூட தெரு விளக்கின் துணையோடு கிரிக்கெட் களைகட்டிக் கொண்டிருக்கும். இதுநாள் வரை இவர்களை அறிமுகம் கூட செய்து வைக்காத அம்மாவை எண்ணி நான் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தேன். ஊரிலிருந்து சித்தி தன் மகளுடன் வந்துவிட்டாள். நான் கிரிக்கெட்டில் நேரம் செலவழித்ததால் என் சித்திப் பெண்ணிடம் அதிகம் ஒட்டவில்லை. அவளிடம் நான் திடீரென ஒட்டாமல் போனதை அவள் ஒரு பெரிய அதிசயம் போல் தன் தோழிகளிடம் விவரித்துக் கொண்டிருந்தாள். “என் தம்பியப் பாத்தீங்களா… பெரிய மனுஷன்… நம்ம யாருகிட்டயும் பேசமாட்றான்” தோழிகள், அவர்கள் காதுகளுக்குள் ஏதோ பேசிச் சிரித்துக் கொள்வார்கள். என்னைக் கேலி செய்கிறார்கள் எனத் தெரிந்ததும் நான் என் உடன்பிறந்த அக்காவிடம் போய் சொல்லுவேன். அவளும் எனக்காக மத்துசம் வாங்கிட வந்திடுவாள்… “ஏண்டி கல்யாண பொண்ணே! நீ உன் வேலையப் பார்த்துகிட்டுப் போ… உன் தம்பிக்குப் பத்து வயசுதான்… ஆனா…” நிறுத்திவிட்டு மீண்டும் என் தமக்கையின் காதில் ஏதோ சொல்லிட்டாள் என் சித்தி மகள். இப்போது எல்லாரும் என்னை நோக்கிச் சிரித்தார்கள், என் உடன் பிறந்தவள் உட்பட… அக்காவின் கல்யாண வைபவத்தோடு சேர்த்து கேலிகளும் கூத்துகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அக்கா புகுந்த வீட்டிற்கு சென்று விட்டாள். வீட்டிற்கு வந்த விருந்தாளிகளும் ஒவ்வொருவராகச் சென்றுவிட்டனர். இறுதியாகச் சென்றார்கள் என் சித்தியும் அவளின் மகளும். “அடுத்தது இவளுக்குதான்டி. இப்பவே பையன் தேட ஆரம்பிச்சாதான் இன்னும் ரெண்டு வருசத்துல முடியும்… அவரு திரும்ப துபாய் போகல… ஏதோ வியாபாரம் செய்றதா சொன்னாரு. அதனால அவரே எல்லாம் முன்னாடி நின்னு செஞ்சு வைப்பார்… நீ நல்ல பையனா பார்த்து சொல்லு…” வாசலில் நின்று கொண்டே அம்மா சித்தியிடம் மனப்பாடம் செய்தவள் போல் ஒப்புவித்தாள். வெட்கத்துடன் சித்தி மகள் “போயிட்டு வர்றேன் பெரியம்மா!” என்றவாறே என்னைப் பார்த்துக் குறும்பாகக் கண் சிமிட்டினாள். “மொட்டை பையன் மாதிரி ஆடாத… வீட்ல அடக்கமா இரு.” அம்மா அக்காவின் தோளில் தட்டியவாறே கூறினாள். சித்தியும் அவள் மகளும் வாசலில் இறங்கி நடந்தார்கள். ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்த அப்பா அவர்களை பஸ் ஏற்றி விடுவதற்காக உடன் சென்றார். ஆட்டோ மறையும் வரை கலங்கிய கண்களுடன் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அக்கா மணமாகிப் போய்விட்டாள். நெருடுவதற்கு அவள் தாவணி இனி இருக்காது. சித்தியின் மகளும் விரைவில் மணமாகிப் போய்விடுவாள். அப்பா மீண்டும் வெளிநாடு போகப் போவதில்லை. ஏதோ மிகப் பெரிய சதி என்னைச் சுற்றி நடந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கை மீண்டும் மீண்டும் இருள்கிறது. மருள்கிறது, ஆட்டோவின் சக்கரத்தோடு சேர்ந்து சுழன்றன எண்ணங்கள். கலங்கின கண்கள். ஆட்டோ மறையும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டோவின்பின் எழுதி இருந்தது, ‘எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு’ நான் எதையோ இழந்து கொண்டிருக்கிறேன். எது என்றுதான் விளங்கவில்லை… அப்பா முன்னொருநாள் சொல்லாமல் தவிர்த்ததை அன்று சொன்னார், நிச்சயம் அம்மா உண்மைகளை ஓதி விட்டிருக்கிறாள். “நான் துபாய்க்குப் போகல. அம்மாக்கும் உடம்பு சரிபடல. அதனால உன்னை ஹாஸ்டெல்ல சேர்த்து விடலாம்னு இருக்கேன். நல்ல ஸ்கூல்டா. நிச்சயம் நீ பெரிய டாக்டரா இஞ்சினீயரா வரலாம்.” டாக்டரும் இஞ்சினீயருமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் படிப்புகள் என நம்பும் இந்த மூட நாட்டில், என் தந்தை ஒன்றும் விதிவிலக்கல்ல, அவரும் மற்றவர்களைப் போல என்னை இஞ்சினீயராக, டாக்டராக உருவாக்கிப் பாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். என்னை முதல் நாள் அப்பா ஹாஸ்டலில் கொண்டு விடும் போது, வாங்கிய காசிற்கு அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், “நிச்சயம் இவன பன்னிரண்டாவது வகுப்புல நல்ல மதிப்பெண் எடுக்க வைக்குறோம்” எனக்கு கண்கள் மீண்டும் இருட்டின. நான் அப்போதுதான் ஆறாம் வகுப்பு போக வேண்டும். அதற்குள் என் பன்னிரெண்டாம் வகுப்பும் பிற்கால வாழ்க்கையும் நிர்ணயிக்கப் படுகின்றன. “மாதம் ஒரு முறை நீங்க வந்து பார்க்கலாம், வருடா வருடம் முழு ஆண்டு விடுமுறையில் 15 நாள் அவனைக் கூட்டி போய் வச்சுக்கலாம்” இன்னும் ஏதேதோ எழுதியிருந்தது அந்தத் தாளில். அப்பா உன்னிப்பாகப் படித்துக் கொண்டிருந்தார். “அப்பா எங்கயாவது போலாம்பா” அப்பா எதுவும் பேசவில்லை. உடனே என்னை வெளியில் அழைத்துச் சென்றார். நான் அழுது கொண்டே இருந்தேன். அப்பா என்னை ஆசுவாசப் படுத்த முயற்சித்தும் பயனில்லை. திடீரென்று அங்கு அமைதி குடிகொண்டது. நான் அழுகையை நிறுத்தியதற்கான காரணத்தை அப்பா கண்டு கொண்டார். அவருக்கு இந்நேரம் என்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும். உபயம்:அம்மா. நான் தெருவில் ஒருவன் விற்றுக் கொண்டிருந்த கைக்குட்டைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். “என் கூட வா” அப்பா வேகமாக ஒரு பெரிய துணிக் கடையினுள் என்னை அழைத்துச்சென்றார். எதிர்பாராத விடயங்கள் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத மனிதர்களால் நிறைவேற்றி வைக்கப்பட்டுவிடுகின்றன. பரந்த இவ்வுலகத்தில் சந்தோசங்கள் சிறுசிறு விடயங்களிலும் ஒளிந்திருக்கின்றன… கடையை விட்டு நான் மலர்ந்த முகத்துடன் இறங்கினேன். அப்பாவின் முகமும் மலர்ந்திருந்தது. அப்பாவின் மீது பாசம் கூடிவிட்டது எனவும் சொல்லலாம். அன்று முழுக்க பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். எதிலும் எனக்கு நாட்டமில்லை. என் கவனம் முழுக்க அப்பா வாங்கித் தந்த அந்தப் பூ வரைந்த வெள்ளைக் கைக்குட்டையில் பதிந்திருந்தது. ஹாஸ்டலில் கொண்டு விடும் போது கைக்குட்டையை அப்பா வாங்கி வைத்துக் கொண்டார். என்னால் எதுவும் பேச இயலவில்லை. அப்பா என் தலையைக் கோதியவாறே சொன்னார், “நல்லா படிக்கணும், எது நல்லது எது கெட்டதுனு உனக்கே தெரியும்.” அப்பா எதைக் கெட்டதென்கிறார்! சமுதாயம் வரையறுத்த கவைக்குதவா சட்டங்களை கேள்வி கேட்காமல் பின்பற்றுபவர்கள் நல்லவர்கள். அதில் சற்றே பிறழ்ந்தாலும் ஒட்டுமொத்த சமுதாயமும் ஏசிடும். ஊரோடு ஒத்துவாழ் என்பதே அப்பா சொல்ல வந்தது. போவதற்கு முன் ஹாஸ்டல் வார்டனிடம் அப்பா வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்தியாவை வல்லரசாக்குவதைப் பற்றியா பேசியிருக்கப் போகிறார்கள்! என்னைப் பற்றிதான் பேசியிருப்பார்கள். ஹாஸ்டல் வார்டனும் என்னை இரண்டு முறை திரும்பிப் பார்த்தது எனக்கு என்னவோ போல் இருந்தது. இவர்கள் எல்லாரும் சேர்ந்து நான் செய்யாத தவறிற்கு என் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்று விட்டார்கள். அதனால் தான் பள்ளியை முடிக்கும்வரை என் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டேன், நான் தங்கியது ஆண் விடுதி என்பதால் நெருடுவதற்குப் புடவைகளும் கிட்டவில்லை. என் நண்பர்கள் புடை சூழ வலம் வந்ததால் எனக்கும் புடவைகள் இன்னபிற இத்யாதிகள் மீது ஆர்வம் போய்விட்டதாகவே எண்ணினேன்… ஆனால் கல்லூரி வந்தபின் சக மாணவிகளின் ஆடைகளைப் பார்க்கும் போது என் உடலுக்குள்ளும் மூளைக்குள்ளும் மீண்டும் மணியடிக்கத் தொடங்கியது. பெண்களின் சகவாசமேயின்றி பள்ளிப் படிப்பு முடிந்ததால் எனக்குள் ஒரு கூச்ச சுபாவம் குடிகொண்டுவிட்டது. அதனால் கல்லூரியில் நான் எந்தப் பெண்ணிடமும் பேச முயற்சித்ததில்லை. ஆனால் நீல நிறச் சுடிதார்கள் மீது எப்போதும் என் கண் படரும். அப்படி நின்று அந்தப் பெண்களின் ஆடைகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன் நான் அவ்வாறு வெறித்துப் பார்ப்பதைக்கண்டு, தங்கள் அழகில் மயங்கிதான் நான் சொக்கி நிற்கிறேன் என்றெண்ணி உள்ளுக்குள் குளிர்ந்த அதிரூபசுந்தரிகள் என் கல்லூரியில் நிறைய உண்டு… கல்லூரியிலும் விடுதி வாழ்க்கைதான். எப்போதாவது வீட்டிற்குச் சென்றால், அம்மா சில நேரங்களில் சந்தேகத்துடன் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது. “நான் இப்பெல்லாம் அப்படி இல்லைமா” என்னை அறியாமலேயே ஒரு நாள் என் தாயிடம் சொன்னேன். “இன்னும் உன்னால சுதார்ப்பா இருக்க முடியல இல்லை”, சிடுசிடுத்தாள் அம்மா. ஆம். கல்லூரியிலும் என்னால் கைக்குட்டைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள இயலவில்லை. எல்லாம் விலையுயர்ந்த கைக்குட்டைகள். எத்தனைக் கைக்குட்டைகள் வாங்கினாலும் இரண்டு நாட்களில் தொலைத்துவிடுவேன். அம்மா காத்துக் கருப்பின் வேலையோ என எண்ணி கோவிலுக்கெல்லாம் அழைத்துச் சென்று மந்திரித்து விட்டிருக்கிறாள். எதுவும் பயன் தரவில்லை. இன்று வரை கைக்குட்டைகளைத் தொலைக்கும் பணியினை நான் செவ்வனே செய்துவருகிறேன். இன்று என் சுய சம்பாத்தியத்தில் வாங்கும் கைகுட்டைகளும் என்னிடம் நிலைப்பதில்லை. பிராண்டட் கைக்குட்டைகள் மீது ஒரு வகையான மோகம் படர்ந்திருப்பதால் ஒவ்வொருவாரமும் பல நூறுகள் செலவு செய்து கைக்குட்டைகள் வாங்கிடுவேன். ஓரிரு நாளில் தொலைத்தும் விடுவேன்… அம்மா ஒரு முறை சொன்னது நன்றாக நினைவில் உள்ளது. “நீ வேணும்னே தான் தொலைச்சுட்டு வந்து நிக்கிற…” நானும் அன்று பல்லை இளித்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு வேளை அம்மா சொன்னது உண்மையாக இருக்கலாம். நான் என் பாக்கெட்டில் கைக்குட்டை வைப்பது வரை நினைவிருக்கும். பின் தேடும்போது கைக்குட்டை அங்கிருக்காது. கைக்குட்டை எங்காவது விழுந்திருக்கலாம். பறந்திருக்கலாம். இல்லையேல் நானே தூக்கி எறிந்திருக்கலாம். பிடிக்காத பொருளை ஏன் வைத்திருக்கனுமென்று நான் எண்ணியிருக்கலாம். எதுவும் சரியாக நினைவிலிராது. ஒரு பொருள் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் தேவையில்லை. ஆனால் அடுத்தவருக்கு இன்னது தான் பிடிக்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்தும்போது காரணங்கள் நிச்சயம் தேவை . பூ வரைந்த கைக்குட்டைகள் எனக்குப் பிடிக்கும். அது எனக்குப் பிடிக்கும் என்பது என்னைச் சூழ்ந்தோருக்குப் பிடிக்கவில்லை. எனக்கு ஏன் பிடிக்கும் என்பதற்கு காரணங்கள் தேவையில்லை. ஆனால் அதை நான் ஏன் வைத்துக் கொள்ள கூடாது என்பதற்கு இச்சமுகம் காரணம் சொல்ல முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் பூ பெண்மை சார்ந்தது. என்னைப் பொறுத்த வரை பெண்மை, பெண்ணை மட்டும் சார்ந்ததன்று. இதை என்னால் தர்க்கம் செய்திடமுடியும். ஆனால் செய்திடத் திராணியில்லை. உலகம் என்னை விசித்திரமாகப் பார்த்துவிடுமோ என்றொரு விசித்திரமான உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, என்னுள் விதைக்கப் பட்டுவிட்டது. விசித்திரமாகப் பார்த்தால் என்ன ! சம்பாதிக்கத் தொடங்கியபின் ஒரு முறை அந்த எண்ணத்தோடுதான் கடையில் சென்று பூ வரைந்த கைக்குட்டை வாங்கினேன். “சார்! இது உங்களுக்கா!” ஆச்சர்யத்துடன் வினவினான் கல்லாவில் அமர்ந்திருந்தவன். நான் எதுவும் பேசமால் நின்று கொண்டிருந்தேன். “இல்ல சார். பூ போட்டு இருக்கே அதான்!” மீண்டும் சற்று ஏளனமாக வினவினான் அவன். “ஓ! மாறிப் போச்சா… வேற எடுத்திட்டு வரேன்” என்று நான் வேகமாக உள்ளே சென்றேன். பின் வேறொரு கைக்குட்டையை, உலக மொழியில் சொல்லவேண்டுமெனில், ஆண்கள் பயன்படுத்தும் கைக்குட்டையை வாங்கிவந்தேன். நான் நினைத்திருந்தால்,அது எனக்குத் தான் என்று தைரியமாகச் சொல்லியிருக்கலாம். இல்லை என் தமக்கைக்கு என்று பொய் சொல்லிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை. செய்ய முடியவில்லை. அவனும் ஏன் அப்படி வினவினான் என்று எனக்கு விளங்கவில்லை. என்னைப் பார்த்தவுடேனே ஏதாவது கண்டுகொண்டு விட்டானா? அவனின் ஏளனப் பார்வை நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ண வைத்தது. நான் என்ன தவறு செய்துவிட்டேன்! பெண்மையைப் போற்றுவோம் எனக்கூறும் சமுதாயம் ஆண்களிடத்தில் பெண்மை இருந்தால் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை? நான் அவ்வாறு கேள்வி கேட்பதே தவறோ! ஆண்மை பெண்மை எனப் பாகுபாடுகள் எவ்வாறு வந்தன. ஆண்மையின் குணங்கள் இவை, பெண்மையின் குணங்கள் இவை என வரையறுத்தது யார்! வரையறுக்கும் உரிமையை அவர்களுக்கு யார் வழங்கியது. பெண்மையும் பெண்ணியமும் வெவ்வேறோ! ஆண் போல் வாழ்வதே பெண்ணியம் என ஏன் பெண்ணியம் பேசும் பெரும்பாலானோர் கருதுகின்றனர்! அப்படியெனில் பெண்மைக்கான அடையாளம் எது! ஆண்மைக்கான அடையாளம் எது! அடையாளங்களை அடையாளப் படுத்த யாரால் முடியும்! தாய்மை பெண்மையின் அடையாளமெனில், தாய்மை ஒரு உணர்வெனில், ஆணாலும் தாய்மை உணர்வை வெளிப்படுத்த இயலுமெனில், ஆணினுள்ளும் பெண்மை இருக்கு என்றுதானே அர்த்தமாகிறது. அவ்வாறெனில் ஆணும் இங்கு பெண்ணாகிப் போகிறான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள். பெண்மையின் அடையாளங்களைத் துறப்பதே பெண்ணியம் என ஆண்கள் பெண்கள் உட்பட பலரும் ஏன் கருதுகிறார்கள்? பெண்ணியம் என்பது சமூக உரிமை சார்ந்த விடயமாயிற்றே! அதை ஏன் பெண்மையோடு குழப்புகிறார்கள். பெண்மையைத் துறப்பதுதான் பெண்ணியமென்று ஏன் கூறுகிறார்கள். பெண்மையைத் துறப்பதெனில் ஆண்மையைத் தழுவவேண்டும் என்றுதானே அர்த்தப்படுகிறது. அவ்வாறெனில் இங்கு பேசப்படும் பெண்ணியம் ஆணாதிக்கத்தை மறைமுகமாக ஆதிரிக்கின்றதோ! பெண்ணியம் பேசும் ஆண்களும், ஆண்களிடத்தில் இருக்கும் பெண்மையை ஏன் வெறுக்கிறார்கள். பெண்ணியம் பெண்மை சார்ந்ததெனில் அவர்கள்(ஆண்கள்) பெண்மையை, அது யார் இடம் இருந்தாலும் ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும். பெண்ணியத்திற்கும் பெண்மைக்கும் சம்பந்தம் இல்லையெனில், பெண்ணியம் என்பது யாது! பெண்ணியம் பெண்களின் உரிமை சார்ந்தது என்றால், பெண்மைக்கும் பெண்ணியத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றால், பெண்மை பெண்களுடையது எனக் கருதும் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தைப் பெண்களோடு எவ்வாறு பொருத்துவார்கள்! அவ்வாறு பெண்மை என்னும் உணர்வு பொருத்தப்படாமல் அகற்றப் படும்போது, எல்லாரும் உணர்வற்ற ஒரே ஜடநிலையைத் தானே அடைகிறோம்! ஜட நிலை உயிர் நிலை ஆகாதே! அப்படியெனில் எல்லோரும் ஜடமா! ஜடமில்லையெனில், உணர்வுகள் உண்டெனில், எல்லாவகையான உணர்வுகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமம்தானே! அப்போது பெண்மை எனவும் ஆண்மை எனவும் எப்படி பாகுபாடு வருகிறது! மெல்லிய குணம் பெண்மை, முரட்டுக் குணம் ஆண்மை என்கிறார்களா! எத்தனை மென்மையான ஆண்கள் இங்குண்டு. அவர்களெல்லாம் பெண்களா? ஆதிகாலத்தில் தாய்மண் சமுதாயத்தில் வேட்டையாடியது பெண்கள்தானே! அவ்வாறெனில் அவர்களெல்லாம் ஆண்களா! இப்படி அடிக்கடி மாறிவரும் வரையறைகள் எப்படி நியாயமாக இருக்க முடியும்? நியாயமற்ற வரையறைகளை ஒதுக்கிவிட்டால் ஆண்களும் பெண்களும் ஒன்றுதான் என்று தெளிவாக புரிந்துவிடுமே. ஆண்களும் பெண்களும் ஒன்றெனும் பட்சத்தில் இது ஆண்மைக்கான குணம், பெண்மைக்கான குணம் என்ற வாதம் உடைபட்டுப் போய்விடுகிறது. பாகுபாடுகள் தகர்ந்து விடுகின்றன. ஒரு மனிதனின் குணங்கள் தனிப்பட்ட மனித வாழ்க்கை சார்ந்ததாக மாறிவிடுகிறன. அவ்வாறெனில் தனிப்பட்ட மனிதனின் விருப்பு வெறுப்புகளில் தலையிட சமுதாயத்திற்கு யார் உரிமை அளித்தது? சேலைகளைச் சுற்றிக்கொள்வதும், பூ வரைந்த கைக்குட்டைகளைப் பயன்படுத்துவதும் என் தனிப்பட்ட விடயமாயிற்றே! இதற்கு இந்த உலகம் என்ன பதில் வைத்திருக்கிறது! இது போன்று என்னுள் ஆயிரம் கேள்விகள் ஓடும். குறிப்பாக பெண்கள் உடை விற்கும் கடைகளுக்குச் சென்றால் பல லட்சம் கேள்விகள் மனதில் எழும். அன்றும் இது போன்று சிந்தித்துக்கொண்டு நிற்கையில்தான் இனிமையான அந்தக் குரல் கேட்டுத் திரும்பினேன். “அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க, இந்தப் புடவை எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க” இனிமையான அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி என் மனைவி. நான் ஏதோ அவளுக்குப் புடவை தேர்ந்தெடுக்கத்தான் ஆவலுடன் ஒவ்வொரு முறையும் கடைக்கு வருகிறேன் என இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என் அப்பாவி மனைவி. ஒவ்வொரு முறையும் அவள் புடவையை உற்றுப்பார்க்கும் போது, “உங்களுக்கு என் மேல ரொம்ப தான் ஆசை” என்பாள் வெகுளியாக. இப்போது புடவையை அவள் உடுத்தியிருக்கும்போதே நெருடலாம். என் மனைவியாயிற்றே! “உன் புடவை நல்லாயிருக்கு, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” ஒவ்வொரு முறையும் நான் சொல்லக் கேட்டு ரசிப்பாள். ஆனால் அதனுள் பொதிந்திருக்கும் உண்மையான உண்மைகளை, நான் சொல்லவந்த அர்த்தங்களை அவளால் புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொண்டு விட்டால் நிச்சயம் அவளால் என்னோடு நிம்மதியாக வாழமுடியாது. பல முறை யோசித்திருக்கிறேன், என்னைப் பற்றிய அவளின் கரங்களைப் பற்றி என்னைப் பற்றின உண்மைகளைச் சொல்லிவிடலாமென்று. ஏதோ சொல்லமுடியாத உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, என்னுள் விதைக்கப்பெற்ற அந்த உணர்ச்சி என்னைத் தடுத்திடும். பில் கவுண்ட்டரில் சொன்னேன், “அந்த நீலக் கலர் புடவை ரொம்ப நல்லாயிருக்கு. வாங்கிக்கோ… ஐ. மீன், உனக்கு ரொம்ப நல்லாயிருக்கும்” “ஐம் மூவ்ட். எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க என் மேல! லெம்மீ டேக் இட்” என்றவாறே அந்த நீல நிறப் புடவையையும் வாங்கிக் கொண்டாள்… என்னைப் பற்றிய ரகசியங்கள் யாருக்கும் தெரியாது. என் பெற்றோர்கள் என் தமக்கையின் குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்கள் என் ரகசியங்களை மறந்திருப்பார்கள். கால ஓட்டத்தில் நான் மாறிவிட்டதாகவே அவர்கள் எண்ணுகிறார்கள். நான் என்ன தவறு செய்துவிட்டேன்! மாற்றிக் கொள்வதற்கு… என் மனைவியைப் பொறுத்த வரையில் நான் ஒரு உன்னதமான கணவன். ரகசியங்களை வெளிப்படுத்தி அந்த உறவினை நான் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ரகசியங்கள் ரகசியமாகவே வைத்துக்கொள்ளப்பட வேண்டும். வெளியே சொல்லிவிட்டால் அது ரகசியமாகாது. என்றாவது ஒரு நாள் என் மனதில் குற்ற உணர்ச்சி எழும், சமுதாயத்தால் விதைக்கப்பட்ட குற்ற உணர்ச்சி. என் மனைவியின் புன்சிரிப்பில் அது மறைந்துவிடும். என்னுள் ரகசியங்களை நான் புதைத்து வைத்திருந்தாலும், நாங்கள் எந்தக் குறையுமின்றி சந்தோசமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நானும் எந்தத் தடங்கலுமின்றி- தடங்களுமின்றி என் மனைவி வீட்டில் இல்லாத சமயங்களில் அந்த நீல நிறப் புடவையை என் மீது சுற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். பூ வரைந்த கைக்குட்டைகளையும் யாருக்கும் தெரியாமல் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். யாரையும் பாதிக்காத இந்த விடயங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இது ஒரு சிதம்பர ரகசியம். உங்களுக்குள்ளும் ஆயிரம் ரகசியங்களுண்டென்று எனக்குத் தெரியும். அதையும் சிதம்பர ரகசியமாகவே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களைப் பாதிக்காத எந்த விடயமும் தவறில்லை, தப்பில்லை. அதனால் தைரியமாக உங்கள் ரகசியங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ரகசியங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்பட வேண்டும்… இன்னும் சொல்வதற்கு நிறைய உண்டு. இப்போது நான் செல்ல வேண்டும், என் மனைவிக்குப் புடவை வாங்குவதற்காக. அப்படியென்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். உங்களுக்குத் தெரியும், நான் யாருக்காகப் புடவை வாங்கப் போகிறேனென்று… (நவம்பர் 2012, ஐக்கியா வல்லமை சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை ) நகுலனின் நாய் இரு கைகளையும் நிலத்திலூன்றி, ஒரு காலால் முட்டியிட்டு, மற்றொரு காலைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி நாயைப் போல் குரைத்துக் காட்டினான் நகுலன். அவனின் பெற்றோர் அதனை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆண்டே மிஷா தம்பதியரின் ஒரே மகன் நகுலன். கார்ப்பரேட் தம்பதிகள். அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கி ஐந்து வருடங்களாகின்றன. ஒரு வருடத்திற்கு முன்தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன் குழந்தையைப் பற்றிக் கவலைப்படாத அவர்கள் திருமணம் என்ற சம்ப்ரதாயத்திற்கு உட்பட்டவுடன் சம்ப்ரதாயமாக ஒரு குழந்தைக்கு ஏங்கத் தொடங்கினர். கிழமை தவறாமல் தேவாலயம் சென்றும் கர்த்தா கண்திறக்காததினாலோ என்னவோ பல வருடங்கள் கூடி வாழ்ந்தும் குழந்தை உண்டாகவில்லை. சிலுவை போட்டக் கைகள் கன்னத்தில் போட்டுப் பார்த்தன, மண்டியிட்டு நமாஸ் செய்து பார்த்தன. ஒரு பயனுமில்லை. தவமாய்த் தவமிருந்து குழந்தை பெறுவதெல்லாம் இராமாயணத்தில்தான் சாத்தியம் என்று அவர்களுக்கு வெகு நாட்களுக்குப் பின் தெரிந்தது. பின் கடவுளுக்கு நிகராகக் கருதப்படும் மருத்துவர்களிடம் சென்றனர். கடவுளின் பெயர் சொல்லி காணிக்கைகளைப் பிடிங்கிக் கொள்ளும் மனிதர்களைப் போல கடவுளாகக் கருதப்பட்ட அந்த மருத்துவர்களும் லட்சங்களைப் பிடுங்கிக் கொண்டனர். எல்லோரும் “உங்களுக்கு எந்தக் குறையுமில்லை, நிச்சயம் குழந்தை உண்டாகிவிடும்” என்று சொல்லிக்கொண்டிருக்கையில் நல்லெண்ணம் படைத்த ஒரு டாக்டர் சொன்னார் “ஸ்பெர்ம் ஸ்கார்சிடி. டோனார் தேவைப்படும். கொஞ்சம் செலவாகும். யோசனைபண்ணி சொல்லுங்க” இரண்டு மூன்றுநாட்கள் கதறினர். பின் மனதைத் தேற்றிக் கொண்டு ஈருடல் ஓர் மனதாய் ஒரு முடிவெடுத்தனர். யாரோ ஒரு டோனாரை நாடிச் செல்வதைவிட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து விட முடிவு செய்தனர். ‘நகுலன்’ என்ற அந்த உன்னதமான பெயரோடே அவன் வந்து சேர்ந்தான். ‘நகுலன்’ ஆசிரமத்தில் யாரோ ஓர் தனிமை விரும்பி சூட்டிய பெயர். பல மாதங்கள் செலவு செய்து பல ஆசிரமங்கள் ஏறி இறங்கி அந்தக் குழந்தையை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆடைகள் வாங்குவதற்கே பல மணி நேரங்கள் செலவு செய்யும் ஒரு நாட்டில், குழந்தையைத் தத்தெடுக்க பல மாதங்கள் செலவு செய்வதில் தவறொன்றுமில்லையே! புதுக் குழந்தையோடு புது வாழ்க்கை தொடங்க விரும்பிய அவர்கள் புது வீட்டிற்குக் குடியேறினர். பழைய இடத்திலேயே வசித்தால், தான் தத்தெடுக்கப் பட்ட விஷயத்தை நகுலனுக்கு அந்தச் சமுதாயம் உணர்த்திவிடும், அது அவனுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்திவிடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த அவர்கள் நிச்சயம் பகுத்தறிவுத் தம்பதிகளே… நகுலன், நகுலன், நகுலன்… புதிதாகக் குடி புகுந்த காலனி எங்கும் நகுலனின் பெயரே ஒலித்தது. நகுலன் எல்லோர் வீட்டுச் செல்லப் பிள்ளை. கிருஷ்ணர் ஜெயந்திக்கு நகுலனின் கால் தடங்களே எல்லோர் வீட்டிலும் நிறைந்திருக்கும். சில தினங்கள், சாண்டா க்ரூஸ் வேடம் அணிந்தவர்கள் வந்து அழைத்துச் சென்றுவிடுவார்கள். ரம்ஜான் கொண்டாடிடுவான் சில நேரம். தாமரைத் தாள் பணிந்திடுவான் சில நேரம். ஆண்டேவோ மிஷாவோ எதையும் தடுக்கவில்லை. மதங்களைக் கடந்த மனிதனாய் வார்த்தெடுக்கப்பட்டான், வளர்த்தெடுக்கப்பட்டான் நகுலன்… இந்தியாவில் குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை. வளர்ந்து கொள்கின்றன. பாலூட்டிச் சோறூட்டிச் சீராட்டுவதே குழந்தை வளர்ப்பு என இங்கு நம்பிக் கொண்டிருக்கின்றனர். குழந்தை வளர்ப்பில் உள்ள உயிரியல், உடலியல் மற்றும் மனோவியல் சார்ந்த விடயங்களைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்வதில்லை. தொடுதல் புரிதல் என்ற எந்த உணர்வுகளையும் பற்றி யாரும் கவலை கொள்வதுமில்லை. சம்ப்ரதயமாகவே குழந்தைகள் இங்கு வளர்க்கப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட வயது வரை பெற்றோரின் அரவணைப்பில் வளர்க்கப்படும் குழந்தைகள் பின் அவர்களின் ஸ்பரிசத்திலிருந்து அறவே நீக்கப் படுகின்றார்கள். வயது வந்த குழந்தைகளிடம் கொள்ளும் ஸ்பரிசம் தவறென்று கண் மூடித் தனமாக நம்பிக் கொள்கிறார்கள். தொடுதலிலுள்ள ஆழமும் அர்த்தமும் வேறுபாடுகளும் யாருக்கும் விளங்குவதில்லை. அதனைத் தெரிந்துக் கொள்ளவும் யாரும் விரும்புவதில்லை. ஆனால் இந்த விடயத்தில் ஆண்டே-மிஷாவைப் பாராட்டிட வேண்டும். அவர்கள் பகுத்தறிவோடு சேர்த்து உலகறிவும் கொண்டிருந்தார்கள். குழந்தை வளர்ப்பைப் பற்றித் தேடித் தேடிப் படித்தார்கள். ஒரு குழந்தையை மனோதத்துவ ரீதியாக எவ்வாறெல்லாம் வளர்க்க வேண்டுமோ அவ்வாறெல்லாம் வளர்த்தார்கள். வடித்தார்கள். பதிமூன்று வயதிற்குப் பின் அவனுக்கு பாலியல் கல்வியையும் புகட்டிடவேண்டும் என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். இவ்வாறு பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டாலும், ‘நகுலன்’ என்ற பெயர் கொண்டதினாலோ என்னவோ அவன் திடீர் திடீரென்று தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வான். தனி அறையில் சுழலும் மின்விசிறியைப் பார்த்தவாறே ஏதாவது சிந்திக்கத் தொடங்கிவிடுவான். பின் தனிமையை விடுத்து உடனே நண்பர்களுடன் விளையாடத் தொடங்கிவிடுவானாதலால், அவன் தனிமையில் பொதிந்திருந்த அபாயத்தை அந்த புத்திசாலித் தம்பதிகள் உணர்ந்திடவில்லை. இவ்வளவு சிறு வயதில் அவன் தனிமையை விரும்புவதை எண்ணி ஆச்சர்யம்தான்பட்டனர்… சூரியன் உதித்து மறைந்து கொண்டிருக்க, பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க மூன்று வயதில் நகுலன் பள்ளியில் சேர்க்கப்பட்டான். “ரொம்ப சுதார்ப்பான பையன்தான். ஆனா திடீர் திடீர்னு எதையோ சிந்திக்க ஆரம்மிச்சிடுறான். வீட்டுல ஏதாவது பிரச்சனையா?” அந்தப் பள்ளிக்கூட ஆசிரியை ஆண்டேவிடம் வினவினார். அப்போதாவது சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டிய ஆண்டே சுதாரித்துக் கொள்ளவில்லை. “இல்ல, மேடம்… வீட்டுல சந்தோசமான சூழ்நிலை தான். அவன் விரும்பினதெல்லாம் வாங்கித் தரோம்… எப்பயாவது இப்படி தனியா யோசிப்பான்… ஆனா உடனே மாறிடுவான்… மே பி டயர்ட்னஸா இருக்கும்” ஒரே மாதிரியாகச் சுழலும் பூமியில், எல்லாம் ஒரே மாதிரியாகச் சுழலுவதில்லை. வாழ்க்கை எப்போதும் நேர்க்கோட்டுச் சித்திரமாக அமைந்து விடுவதில்லை. கிறுக்கல்கள் நிறைந்ததே வாழ்க்கை, பலநேரங்களில் அலங்கோலமான கிறுக்கல்கள். ஆனால் வாழ்க்கை எப்போது சித்திரமாகும், எப்போது அலங்கோலமாகும் என்று யாராலும் கணித்திட இயலாது. கணிக்கமுடிந்த பட்சத்தில் வாழ்க்கைக்கான அர்த்தம் தவிடுபொடியாகிடும். வாழ்க்கை, வாழ்வதற்கான அவசியத்தை இழந்து அர்த்தமற்றுப் போய்விடும். தனிமனிதனின் மனோநிலையும் அவன் மேற்கொள்ளும் முயற்சிகளுமே அலங்கோலங்களை அழகாக்குகின்றன. சூழ்நிலைகள் சில நேரங்களில் சித்திரங்களை அலங்கோலமாக்கி விடுகின்றன. அதற்காக யாரையும் நொந்து கொள்ள இயலாது. தன்னுடைய வாழ்க்கை இந்தச் சிறிய நாயால்தான் அலங்கோலப் படப்போகிறது என்பதை உணராமல், அதனைக் கட்டிபிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான் நகுலன். “க்யூட் டாக். ஹி லைக் இட்” ஒட்டுமொத்த காலனியும் நகுலனின் நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்க, பிறந்தநாள் பரிசாகத் தான் வாங்கித் தந்த விலையுயர்ந்த நாயினைப் பற்றி பெருமிதத்துடன் தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆண்டே. நகுலன் அந்த நாயிடம் ஒட்டிக்கொண்டதை எண்ணி அலமந்து போனார்கள் அனைவரும். இப்போதெல்லாம் அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வதில்லை. வீட்டிலிருக்கும் நேரங்களை அந்த நாயுடனே செலவழித்தான். நாயினை அழைத்துக் கொண்டு ஒட்டு மொத்த காலனியையும் வலம் வருவான். நகுலனைப் போலவே நாயும் அந்தக் காலனியின் செல்லமாகிவிட்டது. நாய்க்கு ஆளாளிற்கு ஏதேதோ பெயர் சூட்டினாலும், ‘குட்டி நகுலன்’ என்பதே நாயின் பெயராகிப் போனது நகுலன் வீட்டில் இல்லாத சமயங்களில் குட்டி நகுலனே அந்த காலனியின் செல்லப் பிள்ளை. இவ்வாறே ஒரு வருடம் கழிந்தது. நகுலன் அந்த நாயினை விட்டுப்பிரிவதில்லை. திடீர் திடீரென்று நாய் போலக் குரைத்துக் காட்டுவான். நாயின் செய்கைகளைச் செய்து காட்டுவான், அனைவரும் கைத்தட்டி ரசிப்பார்கள். ஒருநாள் நகுலன் அந்த நாயின் கழுத்தைப் பிடித்து நெருக்கிக் கொண்டிருப்பதை ஆண்டே கண்டுவிட்டார். நாய் மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தது. ஆண்டே ஓடிச் சென்று தடுத்துவிட்டார். நாய் சுருண்டு படுத்துவிட்டது. ஆண்டேவிற்கு எதுவும் விளங்கவில்லை. “எல்லாருக்கும் இந்த நாயதான் பிடிக்குது” மீண்டும் நாயை நோக்கி ஓடினான் நகுலன். நகுலனை நோக்கிக் கத்தினார் ஆண்டே. நகுலன் மிரண்டு போய் நின்று கொண்டிருந்தான். அவர் போட்ட சத்தத்தில் உள்ளிருந்து ஓடி வந்தாள் மிஷா, மிஷா, “வாட் ஹாப்பெண்ட்…” “ஹீ ஈஸ் ட்ரையிங் டு கில் தி டாக்” பதறினார் ஆண்டே, மிஷா நகுலனை அள்ளி அணைத்துக் கொண்டாள். அவன் நெத்தியில் முத்தம் இட்டவாறே, “நத்திங் பேபி. உள்ள போலாம் வா” என்றாள் நகுலனிடம். சற்று கோபமாகத் திரும்பி, “புள்ள பயந்துட்டான். ஹி மைட் ஹாவ் ப்ளேடு… இப்படியா அதட்டுவீங்க!” என்றவாறே விருட்டென்று உள்ளே நுழைந்தாள். ஆண்டே தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். வெகு தாமதமான சிந்தனை… ஒருநாள் பள்ளியிலிருந்து வந்த செய்தி நகுலனின் பெற்றோரை அதிர்ச்சியடையச் செய்தது. “கிளாஸ் நடக்கும் போது அவன் நாய் போல ஊளையிடுறானாம். என்னனு சீக்கிரம் பாருங்க” கோபமாகச் சொன்னார் தலைமை ஆசிரியை மிஷாவிடம். அவன் வீட்டில் அவ்வப்போது நாயைப் போல் குரைப்பதுண்டு. அதை விளையாட்டாகவே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். வெளியில் அவன் அவ்வாறு நடந்து கொள்வதை எண்ணி ஆண்டே கவலை கொள்ளத் தொடங்கினார். நகுலனின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் தெளிவாகத் தெரியவந்தன. நாயைப் போல் நாக்கால் உணவு உண்பது, நாயின் அருகில் படுத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினான். பல நேரங்களில் வாசலில்தான் தூங்குவான். எதையோ சிந்தித்தவாறே படுத்துக் கொண்டிருப்பான். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருக்கும். இப்போது நகுலன் யாருடனும் சகஜமாகப் பழகுவதில்லை. அமைதியாகவே இருந்தான். பெரும்பாலான நேரங்கள் நாயையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதற்கிணங்க காலனியிலும் யாரும் நகுலனை கண்டு கொள்ளவில்லை. பையன் வளர்ந்து விட்டான் என்று அவர்களும் ஒதுங்கி விட்டனர். நகுலன் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பள்ளிக்கும் செல்வதில்லை. ஒருவாறு அனைவரும் நிலைமையை யூகிக்கத் தொடங்கியதால் ஆண்டே மிஷா தம்பதியர் தனி வீடு ஒன்று வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். புது வீட்டிலும் நகுலன் அவ்வாறே இருந்தான். நாயை விற்றுவிட முடிவு செய்து சிலரை அழைத்து வந்தார் ஆண்டே. அவர்கள் நாயை அழைத்துச் செல்வதைக் கண்டு மிகவும் ஆக்ரோசமாகக் கதறினான் நகுலன். வந்தவர்களும் நாயை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். “அவன் அஞ்சு வயசு குழந்தைங்க… அவனப் போய் எப்படி சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போறது?” கலங்கினாள் மிஷா. ஆண்டே, “வி டோன்ட் ஹாவ் ஹான் ஆப்சன், வி ஹாவ் டு…” “சோ, யு ஆர் ஹிஸ் அடாப்டட் பேரேன்ட்ஸ்! அவன் தனியா உக்காந்து சிந்திக்கிறான்னு தெரிந்தவுடனே, you should have taken him to psychiatrist” ஆண்டே, “இல்ல சார். ரெண்டு வயசு பையன் என்ன சிந்திக்கப் போறான்னு நினைச்சோம்” “குழந்தை கருவில் இருக்கும் போதே சிந்திக்கத் தொடங்கிடும். ரெண்டு வயசுன்னு சாதாரணமா சொல்லிட்டீங்க… இன்பான்ட் ஸ்டேஜில ஒரு குழந்தை மனசுல எழுகிற எண்ணங்கள் தான் அதன் வாழ்க்கையையே நிர்ணயிக்குது” நிதானமாகப் பேசினார் அந்த மனோதத்துவ நிபுணர். பகுப்பாய்வின் மூலமாக நகுலனைத் தெளிவாகப் படித்திருந்தார் அவர். அவன் உள்ளறையில் மயக்கத்திலிருந்தான். மேற்கொண்டு அந்தப் பெரியவர் சொல்லிய செய்திகளைக் கேட்கக் கேட்க ஆண்டே-மிஷா தம்பதியரின் கண்களில் நீர் பெருகி வழிந்தது. “பொதுவா ஒரு குழந்தைகிட்ட யார வேணாலும் காட்டி இதான் உங்க அப்பான்னு பொய் சொல்லிடலாம். குழந்தை நம்பிடும். ஆனா, அம்மாவைப் பொறுத்த வரைக்கும் அது சாத்தியமில்லை. கிட்டத் தட்ட பத்து மாதம் கருவுல இருக்கிறதுனால அம்மாவைப் பற்றிய உள்ளுணர்வு குழந்தைக்கு இருக்கும். அதனால்தான் நகுலனால சில தருணங்கள்ல உங்கள அம்மாவா ஏத்துக் கொள்ள முடியல. ‘நம் அம்மா வேறயாரோ’ என்ற உள்ளுணர்வு அவனுக்குள்ளத் தலைத்தூக்கும் போதெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கியிருக்கான். ஒரு வகையான பாதுகாப்பின்மை அவனுக்குள்ள ஏற்பட்டிருக்கு. But fortunately he got good people around… அதனால பெரும்பாலும் சந்தோசமாதான் இருந்திருக்கான். அந்த நாயையும் அவனுக்கு ஆரம்பத்தில் பிடிச்சுதான் இருந்திருக்கு… ஆனால் எல்லாரும் அந்த நாய் மேல பாசம் காட்டுறதப் பார்த்ததும், மீண்டும் அந்தப் பாதுகாப்பின்மை அவனுள் எழும்பத் தொடங்கியிருக்கு. தன் இடத்தை அந்த நாய் ஆக்கிரமிச்சுருச்சோ என்கிற பயம் அவன் மனசுல பதிஞ்சிருச்சு. தானும் அந்த நாய் போலச் செய்கை செய்தா எல்லாருக்கும் தன்னைப் பிடிக்கும்னு அவனே நினைச்சிக்கிட்டான். That’s why he started imitating that dog. அதை நீங்கெல்லாம் விளையாட்டா எடுத்துகிட்டீங்க. எந்த ஒரு உணர்வும் எக்ஸ்ட்ரீம் ஸ்டேட் போகக் கூடாது… ஆனா கொஞ்சம் கொஞ்சமா அவனுக்குள்ள இருந்த பாதுகாப்பின்மையும் பயமும் எக்ஸ்ட்ரீம் ஸ்டேட்ட ரீச் ஆகிடுச்சு. அதனால்தான் நாயக் கொலை செய்ய முயற்சித்ததும், ஆக்ரோசமாகக் கத்தினதும்…" ஆண்டே, “பட்… வித் இன் எ இயர், இவ்வளவு ட்ராஸ்டிக் சேஞ்ச் எப்படி டாக்டர்” “I too thought about it. சின்ன வயசில இருந்தே அவனுக்குள்ள இருந்த பாதுகாப்பின்மை கடந்த ஒரு வருடத்தில் அதிகமாயிருக்கு, because of that dog… ஆனா இவ்வளவு ட்ராஸ்டிக்கானதற்கு வேறொரு காரணம் இருக்கலாம்… அவனுடைய பெற்றோர்களில் யாராவது ஒருத்தராவது ஆட்டிஸ்டிக்கா (Autistic) இருக்கலாம்…” ஆண்டேவும் மிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நகுலனின் நிஜப் பெற்றோர்களைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதையே அந்த பரிதாபமான பார்வை காட்டியது. “பொதுவா சைகோ அனலிசிஸ் என்பது ஒரு யூகம்தான். ஆனா பெரும்பான்மையான நேரங்களில் எங்க யூகம் சரியாதான் இருக்கும். ஒரு குழந்தை தான் வீட்டில் வளர்க்கப் படுகிற பெட்ட இமிடேட் பண்ணுறது ரொம்ப காமன். அதற்கு ரெண்டு காரணம் உண்டு. ஒண்ணு விளையாட்டா குழந்தைகள் அப்படிச் செய்யும். காலப் போக்குல அந்த பிகேவியர் மறைஞ்சிடும். ரெண்டாவது ஆட்டிசம்(Autism). இது ரேர் கேஸ். ஆட்டிஸ்டிக் குழந்தைகள்கிட்ட தான் இவ்வளவு ட்ராஸ்டிக் சேஞ்சஸ் தெரியும். சோ நகுலன் மஸ்ட் பீ… ஆட்டிஸ்டிக்.” மிஷா , “ஆனா சின்ன வயசில இருந்து அவன் ரொம்ப ஆக்டிவ்” “அது அவன் வளர்க்கப்பட்ட சூழ்நிலை நல்லா அமைஞ்சதால. ஆட்டிஸ்டிக் பெற்றோர்களுக்குப் பிறக்குற குழந்தைகள் ஆட்டிஸ்டிக்கா இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆரம்பத்துல நிலவிய சூழ்நிலை நகுலனுக்கு ரொம்பப் பிடிச்சிருந்திருக்கு. அதனால அவன் ரொம்ப ஆக்டிவா இருந்திருக்கான். ஆனால் அவனோட பாதுகாப்பின்மை இந்த நாயினால் அதிகமாயிட்டதுனால அவனோட ஆட்டிஸ்டிக் பிகேவியர் வெளிப்படத் தொடங்கியிருக்கு. முதல்ல நாய் மேல ஒரு காம்ப்ளெக்ஸ் டெவலப் ஆகியிருக்கு. அதனாலதான் அவன் நாய இமிட்டேட் பண்ணியிருக்கான். அதுவே பொறாமையா மாறுனதால கொலை செய்யப் பார்த்திருக்கான். ஒரு கட்டத்துல, ஆட்டிஸ்டிக் பிகேவியர் அதிகமானதால அந்த நாயையே தன் பிம்பமா கருத ஆரமிச்சுட்டான். அதனால…" மிஷாவின் கலங்கிய கண்களைப் பார்த்தவாறே பேசிய டாக்டர் தொடர்ந்து பேசத் தயங்கினார். “அதனால, அவன் நாயா மாறிட்டு வரான்… அதான சொல்ல வரீங்க!”, வேகமாக வினவினார் ஆண்டே. “இல்ல அவன் ஏற்கனவே முழுசா நாயாக மாறிட்டான்” எடுத்துரைத்தார் டாக்டர். புயலுக்கு முன்னும் பின்னும் படரும் அமைதிபோல அங்கு சிறிது நேரம் நிலவிய அமைதியை ஆண்டேவின் தீனக் குரல் கலைத்தது, “அப்ப அந்த நாயப் பிரிச்சிட்டா, he’ll be fine, right?” “அந்தத் தப்ப மட்டும் செஞ்சிடாதீங்க. நாய்க்கு எதாவது ஒன்னுனா குழந்தை ஏக்கத்திலேயே இறந்திடுவான். அவனப் பொறுத்த வரையில் நாய் என்ற பிம்பம்தான் உண்மை. அவன் இப்போ தனக்குத் தானே உருவாக்கிக்கொண்ட ஒரு உலகத்தில இருக்கான். அவன் குணமாகுற வரைக்கும் நாயையும் பத்திரமாகப் பாத்துக்கணும்” “ப்ளீஸ் டூ சம்திங் டாக்டர். எனக்கு அவன் நல்லபடியா வேணும்.” அழத் தொடங்கினாள் மிஷா. “அவனோட ஆக்ரோசமான பிகேவியர மெடிகேசன்மூலம் கட்டுப்படுத்திடலாம். மத்தபடி அவனை நிஜ உலகிற்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு உங்களுடையது. அவன் இப்போ தன்னைத்தானே நாய் என்று நினைச்சிக்கிட்டு இருக்கான். முதலில் அந்த பிம்பத்தை உடைக்கணும். வீட மாத்துறதெல்லாம் எந்தப் பயனும் தராது. நீங்க ரெண்டு பேரும் அவன் கூடவே இருக்கணும். உங்கள் ஸ்பரிசம் அவனுக்கு ரொம்ப முக்கியம். அவன தனியா எங்கயும் விடாதீங்க. ஒருத்தர் மாற்றி ஒருத்தர் தூக்கியே வச்சியிருங்க. உங்களோடையே தூங்கட்டும். அந்த நாயையும் அவன் பார்வையிலேயே வச்சிருங்க. கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கு விளங்கும், ‘நாய் என்ற பிம்பம் பொய், தான் நாய் என்ற எண்ணம் பொய்’. அவன் அந்த மாய உலகத்திலிருந்து வெளிய வந்திடுவான். அதுக்கப்புறம் அவனுக்கு ஆட்டிஸ்டிக் பிகேவியர் இருந்தா, we will have different treatment for that. அவன் குணமாக சில வருடங்கள் கூட ஆகலாம். அவன் உருவாக்கிக்கொண்ட பிம்பம் உடையும் முன் நாய்க்கு ஏதும் ஆகக் கூடாது, உங்க குழந்தை மேல வச்சிருக்க அக்கறைய நாய் மேலயும் வைக்கணும்” டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு நகுலனைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர். இரவு நேரமாகிவிட்டது. அவர்களுக்கு எதுவும் சாப்பிடத் தோணவில்லை. காரை ஓரமாக நிறுத்திவிட்டு, நகுலனுக்கு மட்டும் உணவு வாங்கி வரச் சென்றார் ஆண்டே. அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டுவிட்டன. திறந்திருந்த ஒரு பேக்கரியில் இரண்டு கேக்குகளை வாங்கிவந்தார். அதை வாங்கிக் கொண்ட நகுலன் வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனையே பார்த்தவாறு அழுகையை அடக்கிக் கொண்டிருந்தாள் மிஷா. திடீரென நகுலன் கேக்கை நாக்கை வைத்து நக்கத் தொடங்கினான். தடுக்கச் சென்ற மிஷாவை தடுத்திட்டார் ஆண்டே. பாதி கேக்கை கீழே இறைத்து மீதியை அவன் தின்று முடித்ததும் கார் அங்கிருந்து நகர்ந்தது. கார் பார்க்கிங்கில் ஓரமாக நகுலனின் நாய் படுத்திருந்தது. அதனைக் கடந்து அனைவரும் உள்ளே நுழைந்தனர். வீட்டில் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நகுலனை நடுவில் படுக்க வைத்து இருவரும் அவனை அணைத்தவாறே படுத்துக் கொண்டனர். படுத்தவுடனே உறங்கிவிட்டான் நகுலன். ஆண்டே மிஷாவால் உறங்க முடியவில்லை. அவர்கள் மனதில் ஒரு கோடி எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. அவர்கள் இதுவரை மனதறிந்து யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. கடவுளின் இருப்பைக் குறித்தக் கேள்வி மீண்டும் மீண்டும் அவர்கள் மனதில் எழுந்தது. ‘நிச்சயம் கடவுள் என்று ஒன்று இல்லை. சிறு குழந்தை ஆட்டிவைப்பான் கடவுளாக இருக்க முடியாது. அவ்வாறான திருவிளையாடல்கள் யாருக்கும் தேவையில்லை. அப்படியே கடவுள் இருந்தால் அவன் ஒரு சாடிஸ்ட்டாகதான் இருக்கக் கூடும்’ தங்களுக்குள்ளே எண்ணிக் கொண்டனர். வெகு நேரம் விழித்தே கிடந்த அவர்கள் அதிகாலையில் தூங்கிப் போயினர். மிஷா விழித்துப் பார்க்கையில் நகுலன் அங்கு இல்லை. பதறியடித்து ஆண்டேவை எழுப்பினாள். வேகமாக வாசலை நோக்கி ஓடினர், இருவரும். கார் பார்க்கிங்கில் இருந்தான் நகுலன், நாயின் அருகினில். இரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு, மற்றொரு காலைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி நாயைப் போல் குரைத்துக் காட்டினான் நகுலன். மிஷா கதறினாள் ஆண்டேவின் தோளில் சாய்ந்தவாறே. ஆண்டேவின் கண்களும் கலங்கியிருந்தன. அங்கே இரண்டு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன… கடவுளும் ப்ளாக் டிக்கெட்டும் கி.பி. 2220 வெள்ளிக்கிழமை. மார்கழி மாதம். காலை7.30. பூலோகத்தில் ஆண்டவருக்கு பால் அபிஷேகம்அமோகமாக நடந்து கொண்டிருந்தது. ‘ஆண்டவா ஆண்டவா’ என்று எழும்பிய பேரொலி, காற்றைக் கிழித்துக் கொண்டுப் பயணித்து வைகுண்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்டவரின் காதில் விழ, திடுக்கிட்டுக் கண்விழித்தார் ஆண்டவர். அருகில் அவரது துணைவியார் சாந்தமாக உறங்கிக் கொண்டிருந்தார். இரா முழுதும் வேலை செய்து களைத்திருந்த ஆண்டவர் சோம்பல் முறித்தவாறே ஒலி வரும் திசையை நோக்கினார். ஒலி உலகின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய துணைக் கண்டத்தின் தென் மூலையில் உயிருக்கு ஊசல் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருந்த தமிழகத்திலிருந்து வருவதையறிந்து அவர் முகம் கோணிற்று. “இன்னுமா இந்த உலகம் நம்மை நம்பிக் கொண்டிருக்கிறது” என்றவாறே தன் மடிக்கணினியைத் திறந்து ஜி.பி.எஸ் மோடை கிளிக் செய்து தமிழகம் செல்லும் வழியைத் தேடினார். அவர் தமிழகம் வந்து பல நூறு வருடங்கள் ஆனதால் வழி மறந்திருக்கும். அதற்காக அவரை மன்னித்து விடலாம். ஒருவாறு பாதையைக் கண்டுணர்ந்து தமிழகம் நோக்கிக் குதித்தார். ‘ஆண்டவா ஆண்டவா’ என்ற பேரொலிக்கு மத்தியில் வந்து குதித்தவரை யாரும் சட்டை செய்யவில்லை. அங்கு பெரிய வரவேற்பை எதிர்பார்த்த ஆண்டவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் ‘ஆண்டவா’ என்ற பேரொலி மட்டும் குறையாதது கடவுளை குழப்பத்தில் ஆழ்த்தியது. “மானிடப் பதர்களே! இன்னும் எதைத் தேடுகிறீர் ? எதையாவது ஒன்றைத் தேடுவதே உங்கள் பிழைப்பா? நான் தான் வந்துவிட்டேனே!” என்று உரக்கக் கத்தினார் கடவுள். ஆனால் அவரின் குரல் அவர் காதுகளிலேயே விழாத அளவுக்கு அங்கு ‘ஆண்டவா’ என்ற ஒற்றைச் சொல், அலை அலையாக மூலை முடுக்குகளை நிரப்பிக்கொண்டிருந்தது. திடீரென பால் அபிஷேகம் நடக்கும் இடம் நோக்கி ஓடிய கூட்டத்தோடு ஆண்டவரும் சேர்ந்து கொண்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், மெய் மறந்து நின்ற ஆண்டவர் கூட்டத்தோடு அடித்துச் செல்லப்பட்டார். அங்கே ஆண்டவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடைய முப்பத்திரண்டடி சிலையை எதிர்பார்த்து சென்ற இடத்தில், வேறொரு ஜாம்பவானின் உருவம் வரையப்பெற்ற முப்பத்திரண்டடி கட்டவுட் இருந்ததால் ஆண்டவர் திடுக்கிட்டு நின்றார். அதில் எழுதி இருந்த வாசகங்கள் அவரை இன்னும் கிலி அடையச் செய்தது. ‘ஆண்டவர்’ அருமை ராசன் பதினைந்து அவதாரங்களில் நடிக்கும், ‘அண்டமாமுனி’. “ஐயகோ! என்ன இது. ஒன்பது ஆவதாரம் எடுப்பதற்கே எனக்கு பல யுகங்களாயிற்றே! பத்தாம் அவதாரத்திற்கு கொஞ்சம் இடைவெளி விட்டது தவறோ! யார் இந்த அருமைராசன்? என்னை மிஞ்சிவிட்டானே!” ஆண்டவனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. பின்னிருந்து ஒரு குரல் கேட்டு திரும்பினார். “என்ன தலைவா, அழுவுற?”, கேட்டவாறே அங்கே நின்றுகொண்டிருந்தான் ஆண்டவரின் தீவிர பக்தனொருவன். ஆண்டவனெனில் அது அருமைராசன். இது பூலோகம். “சொல்லு தலைவா. ஏன் அழுவுற? டிக்கெட் கிடைக்கிலையா! உன்ன யாரு முத காட்சிக்கு வர சொன்னா? ஆண்டவர் படம்னா ஒரு வாரம் ஹவுஸ்புள்னு தெரியாதா! கிளம்பு அடுத்த வாரம் வா” “பூலோகத்தில் யாரைக் கேட்டாலும் ஆண்டவன் என்கிறார்களே. யாரப்பா அந்த ஆண்டவன் ?” “ஓய் என்னா! ஆண்டவர தெரியாதா? எந்த ஊர் நீ. எங்க தலைவர் சவுத் ஆப்பிரிக்கா வரைக்கும் பேமஸ் ஆச்சே !” “அவரைத்தெரிந்துக்கொள்ளும்அவசியம்ஏற்படவில்லையப்பா. இதுநாள்வரை நான் மட்டும்தான் ஆண்டவன்எனநினைத்திருந்தேன். ஒருவன் போட்டியாக வருவான் என நான் கனவிலும் எண்ணியதில்லை” “என்னது, எங்க ஆண்டவர் உனக்கு போட்டியா? ஒன் சன். ஒன் மூன். ஒன் ஆண்டவர். அதான் எங்க அருமைராசன்” “நான் நினைத்தால் ஆயிரம் சூரியன் படைத்திடுவேன். உன் தலைவன் போல் ஓராயிரம் தலைவர்கள் செய்திடுவேன். நான் தானடா உண்மையான கடவுள்” “என்ன தலைவா உளர்ற? காலையிலே மப்பா?” “மப்பா? இல்லையப்பா. உண்மையாகவே நான் தான் அண்டங்களை அடக்கி ஆளும் ஆண்டவன். வைகுண்டத்திலிருந்து வந்துள்ளேன்” “உன் கெட்டப்ப பார்த்தா அப்படி தெரியலயே. தாடி, மீசை ஜடாமுடிலாம் வச்சிருக்க! நான் தான் சவரம் பண்ணவக்கத்துப்போய் உக்காந்திருக்கேன். உனக்கின்னா ?” “இதுதானப்பாஎன் உண்மையான உருவம். இதிலென்ன உனக்கு சந்தேகம்?” “பொதுவா கடவுள்னா வழிச்சு சவரம் பண்ணி மூஞ்சிலாம் டால் அடிக்கிற மாதிரி இருப்பாங்களே. கிருஷ்ணரு, ராமரு, முருகருனு எல்லாரும் அப்படித்தான இருக்குறாங்க. ஏதோ கருப்பு, சுடலை மாதிரி சாமிலாந்தான் மீசையோட இருக்காங்க, என்ன மாதிரி. நீ வைகுண்ட கோஸ்டினா மீச இருக்க கூடாதே !” “வெறும் மீசைதானே. அதிலென்ன உனக்கு பிரச்சனை !” “என்ன சார் அப்படி மீசைய சாதரணமாநினைச்சுபுட்ட. நம்ம ஆண்டவர் ஒரு படத்துல டபுள் ஆக்டிங் கொடுத்திருப்பாரு பாரு. மீசை வச்சு ஒரு வேசம். மீசை இல்லாம ஒரு வேசம். படம் 175 நாள். அந்தபடத்துலமீசைதான முக்கியமான கேரக்டரு” “யாது சொல்கிறாய் மகனே! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே” “செம்மொழி மானாட்டில பேசுறமாதிரியே பேசிக்கிட்டு இருக்க . நீ கடவுள்னு நான் எப்படி நம்புறது ?” “நீ என்ன வேண்டுமென்றாலும் கேள். தருகிறேன்” “நீயெல்லாம்ஒன்னும் தர வேணாம். இப்பலாம் அரசாங்கமே ஓசிலயே எல்லாத்தையும் கொடுக்குது. அரிசியில இருந்து லேப்டாப் வரைக்கும். நீ என்னத்த கொடுத்துற போற பெருசா ?” “உன்னைப் பார்த்தால்சாப்பிட்டுப்பலநாள் இருக்கும் போல் தோன்றுகிறது . என்னசாப்பிடுகிறாய்கேள்” “தோடா. என்ன நக்கலா. உன்ன போட்டுதள்ளிட்டு உள்ள போனா, ஜெயில்லயே சிக்கன் போடுவாங்க. என்ன சொல்ற, உன்னபோட்டுடவா?” கடவுளின் கண்கள் சிவந்தன. தான் கடவுள் என்பதை நிலை நிறுத்தஏதாவது செய்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். வெகுண்டு எழுந்த அவர், “அற்பப் பதரே! மூவடியில் உலகை அளந்தஎன்னையா நீ அவமதிக்கிறாய்? இப்போதே நரசிம்ம அவதாரமெடுத்து இவ்வுலகை அழித்துக் காட்டவா ?” எனச் சூளுரைத்தார். “என்ன தலைவா டபாய்க்கிற, நீனாவது நரசிம்ம அவதாரம் எடுக்கனும். எங்க ஆண்டவர் எதுமே இல்லாம ஓரு ரெட் சிப் வச்சே உலகத்த அழிச்சிருவார். “போன படத்துல ஒரு ரோபோ செஞ்சு, அதுக்கு ரெட் சிப்ப பொருத்துவார். அந்த ரோபோ உலகையே அழிக்க புறப்படும். பின்னாடியேபோய் ரெட்சிப்ப அழிச்சுஉலகத்தகாப்பாத்துவார். படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாமே எங்க அருமைராசன்தான். அதுனாலதான்அவருஆண்டவரு. நீ…?” கடவுள் கதி கலங்கிப்போனார்.அருமைராசனைஎண்ணும் போது அவர் உடல் சிலிர்த்தது. அருமைராசன் நூறு அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லையென எண்ணிக் கொண்டார். “மகனே! நிச்சயம் உன் அருமை ராசன் மகான்தான். ஆனால் நான்தான் உண்மையான சிருஷ்டிகர்த்தா. அதை நீ நம்பியே ஆகவேண்டும். நிச்சயம் உனக்கு ஏதாவது வரம் அளிக்கிறேன். யாது வேண்டும் கேள்” “என்னப்பா உன்னோட ஒரே ரோதனையாப் போச்சு. சரி விடு. நம்ம அஞ்சல இல்ல. அதான் பா. என் செட்டப்பு. அவளுக்கும்ஆண்டவர்படம்னாஉசுரு. இந்தப் படத்த இன்னைக்கேபாக்கனுமா… ஆனா பாரேன்! டிக்கெட் கிடைக்கில. ஹவுஸ்புல்.நீ ஒரு ரெண்டு டிக்கெட்டு, ப்ளாக்ல, இன்னக்கு ராத்திரி ஆட்டத்துக்கு வாங்கிக் கொடு. அப்புறம் நீ கடவுள்னுஒத்துக்கிறது என்ன, ஊட்டுக்கு இட்டுப் போய் நல்லா நாட்டுக் கோழி அடிச்சு சோறு போடுறேன். நீ கவுச்ச சாப்பிடுவயில்ல?” கடவுளால் ஒன்றும் பேச இயலவில்லை. கடந்த காலம் அவர் கண் முன் ஓடத் தொடங்கிற்று.எத்தனைஅரக்கர்களைக் கொன்று குவித்துள்ளார், எத்தனை சத்ரியஇரத்தங்களில்புனிதநீராடியுள்ளார். ஆனால் இன்றுதன்னால் ஒரு ப்ளாக் டிக்கெட் வாங்க இயலவில்லை என்பதை எண்ணி வெட்கி தலை குனித்து நின்றார். ஒரு புறம் சராசரி மனிதனின் ஏளனச் சொற்கள் அவரை முள்ளாய்க் குத்தின. இன்னொருபுறம் அருமைராசனின் பிரமாண்ட கட்அவுட் உருவம் அவரை மிரட்டிற்று. தன்னிலைமறந்துகடவுள் புலம்பத் தொடங்கினார். “நான்தான் கடவுள். நான்தான் உண்மையான கடவுள்” “இது வேலைக்கு ஆகாது” என்றபடி தீவிர பக்தன் அந்த இடத்தை விட்டு நழுவினான் தனக்குத் தானே கடவுள் புலம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அவரின் குரல் அவர் காதுகளிலேயே விழாத அளவுக்கு அங்கு ‘ஆண்டவா’ என்ற ஒற்றைச் சொல், அலை அலையாக மூலை முடுக்குகளை நிரப்பிக்கொண்டிருந்தது. நைட் ஷிப்ட் “Every Guilty Person is his Own hangman” -Lucius Annaeus Seneca “தூ நைட் ஷிப்ட் மே ஆஜா” திடீர்னு ஒருநாள் என் பாஸ் சொன்னான். பொதுவா ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டாங்க. எல்லாம் கல்யாணம் ஆனவனுங்க. இத்தனைக்கும் என்னோட சின்ன பசங்க. இங்கெல்லாம் அப்படித்தான். ரொம்ப சீக்கிரம் கல்யாணம் செஞ்சுப்பாங்க. ராத்திரியில மட்டும்தான் பெண்டாளானும்னு யாரோ சொல்லிவச்சிட்டுச் செத்த எழுதப்படாத அந்தக் கவைக்குதவாத சட்டத்தைக் கண்மூடித்தனமா பின்பற்றுற நாட்டுல அவனுங்க ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனு சொன்னது ஒண்ணும் ஆச்சரியமான விடயமில்லை. எனக்கு எந்த ஷிப்டா இருந்தாலும் பிரச்சனையில்லை. நைட்ல எந்த வேலையும் இருக்காது. கடமைக்குன்னு ஒரு இஞ்சினியர் இருக்கணும். எங்காவது ஒன்னு ரெண்டு எந்திரம் ஓடும். அதுல ஏதாவது பழுதுவந்தா அதப் பார்க்குறதுக்கு ஒரு இஞ்சினியர் வேணும், அதாவது வேடிக்கை பார்க்குறதுக்கு ஒரு இஞ்சினியர் வேணும். எனக்குப் பழுதெல்லாம் பார்க்கத் தெரியாது. ஆனா இருபத்தினாலு மணி நேரமும் யாரோ ஒரு பலிகடா கம்பெனில இருக்கணும். நான் ராத்திரி நேரத்து பலிகடா. “ராத் கா பலிபக்ரா” கம்ப்ரசர் அறையிலிருந்து வழக்கம்போல நாராசமான அந்தச் சத்தம் வந்து கொண்டிருந்தது. காது ஜவ்வுல குண்டூசி குத்துற மாதிரி இருக்கும் அந்த கம்ப்ரசர் ஓடுற சத்தம். வரிசையா நிறைய கம்ப்ரசர் ஓடிக்கிட்டு இருக்கும். வளிமண்டலக் காற்றை உறிஞ்சி அழுத்தத்தை அதிகப்படுத்தி ஒட்டு மொத்த தொழிற்சாலைக்கும் அழுத்தம் நிறைந்த காற்று வினியோகிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். அந்தக் கம்ப்ரசர் அறையின் மூலையில அமைக்கப்பெற்ற ஒரு சிறு கண்ணாடி அறையில தான் என் வேலை நேரம் முழுக்கக் கரையும். அங்க கம்ப்யூட்டர் இல்லை. கணினி உபயோகப் படுத்த வேண்டுமென்றால் அங்க இருந்து நடந்து ஆபீஸ் வரணும். பெரும்பாலும் நான் ஆபீசில் இருக்கமாட்டேன். தொடக்கத்துல காலை நேர வேலை செய்யும் போது ஆபிஸ்ல நிறைய பேர் இருப்பாங்க. சந்தைக் கடை மாதிரி எந்நேரமும் சப்தம் வந்து கொண்டே இருக்கும். அதுவும் அவர்களின் மூன்றாம் தர ஆங்கிலத்தைக் காதுகொடுத்துக் கேட்க இயலாது. தேவையில்லாம என்ன ‘மதராசி’ என்று சொல்லிச் சொல்லி ஏளனம் செய்வாங்க. எனக்கு ஒரே ஒரு பிரச்சனை. எனக்குக் கோபம் வந்தால் நான் சரமாரியா ஆங்கிலம் பேசுவேன். எல்லாமே அதிகம் உபயோகிக்கப்படாத ஆங்கில வார்த்தைகள். சின்ன வயசில பொழுதைக் கழிப்பதற்கு நான் அதிகம் படித்த ‘ஆக்ஸ்பார்ட்’ அகராதியிலிருந்து கற்றுக்கொண்ட வார்த்தைகள். ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் தங்கள் ஜகாவை தென்னகத்தில் வைத்திருந்ததால் தென்னாட்டுக்காரர்களுக்கு ஆங்கிலம் நல்லா வரும், பிற மாநிலத்தாரைக் காட்டிலும். ஆனால் குஜராத்திகளுக்கு ஆங்கிலம் குதிரைக்கொம்பு. அதனால், படித்தவர்களுக்கே அதிகம் புரியாத என் ஆங்கில அறிவை குறுகிய புத்தி கொண்டவர்களிடம் காட்ட முடியாது. இப்பிரச்சனைகளைத் தவிர்க்கவே நான் ஆபிசில் இருப்பதை விட சைட்டிலேயே அதிகம் நேரம் செலவழிப்பேன். அதுமட்டுமின்றி எனக்கு எப்பவும் கூட்டம் பிடிக்காது. முக்தி அடைவதற்கு ஒரே வழி தனிமையென்று நம்புகிறவன் நான். தாயுமானவர் சொன்ன மாதிரி சும்மா இருக்கவும் ஒரு மனிதன் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறவன் நான். இக்காரணங்களாலே நான் கம்ப்ரசர் அறையே கதியென்றிருக்கத் தொடங்கினேன் . அன்று கண்ணாடி அறையினுள் நுழைந்ததும் ‘நமஸ்தே சாஹிப்’, வணக்கம் வைத்தவாறே ஆபரேட்டர் அங்கிருந்து நகர்ந்தான். நான் எப்போது உள்ளே நுழைந்தாலும் அவர் அங்கிருந்து நகர்ந்து விடுவார். அது ஒரு விசித்திரமான மரியாதை. அந்த அளவுக்கு நான் என் மரியாதையைக் காப்பாற்றி வைத்திருந்தேன்… “சாஹிப். லடிகி நம்பர் சாயியே கியா?” ஒரு நாள் சிரித்துக் கொண்டே வினவினான். “ஐசா மத் பூச்சோ! நீ எப்ப ஆபரேட்டர் வேலைய விட்டுட்டு, பொம்பள சப்ளை பண்ண ஆரமிச்ச!” கோபத்தோடு கத்துற மாதிரி நடிச்சேன் என் ’கெத்’த காப்பற்றிக் கொள்வதற்காக. அன்றிலிருந்தே அவர் எனக்கு மரியாதை கொடுக்க ஆரமிச்சுட்டார். எந்நேரமும் காலாட்டிக்கிட்டு அந்த அறையிலேயே உக்காந்து மொபைல்ல வீடியோ பாக்குறதுதான் அவர் வேலை. நான் வந்துட்டா மரியாதையா அங்கிருந்து எழுந்து வெளியே போயிடுவார். விசித்திரமான மரியாதை. ‘நமஸ்தே நமஸ்தே’ என்றவாறே கண்ணாடி அறையில் அமர்ந்தேன். டிராயரத் தொறந்து உள்ளே இருந்த அந்த தடி புத்தகத்தை எடுத்தேன். என் வாழ்க்கையில் நான் பெரும்பாலான நேரம் படிப்பதற்காகதான் செலவளிக்கிறேன், சில நேரங்களில் புத்தகங்களை, சில நேரங்களில் மனிதர்களை. புத்தகத்தின் அட்டையில் சிரித்துக் கொண்டிருந்தார், மாபசான். டெல்லி போயிருந்தபோது வாங்கிய புத்தகம் அது. “A complete Collection of Guy De Maupassant Short Stories” முதல் இரண்டு பக்கங்களைத் திருப்பி அட்டவணைக்குச் சென்றேன். ‘இம்பொலைட் செக்ஸ்’-772 ஆம் பக்கம் ஏனோ தெரியல. மனசு எதையோ நினைத்துக்கொண்டு அந்தக் கதையை நோக்கிச்சென்றது. என் மனசு எதிர்பார்த்த மாதிரி அந்தக் கதை இல்லை. படிக்கப் பிடிக்கல. எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்குமென்பது உண்மை தான் போல! புத்தகத்தை அது இருக்க வேண்டிய இடத்திலேயே வைத்துவிட்டு, வேற எதாவது புத்தகம் கிடைக்குமான்னு என் பையைத் தேடினேன். ஒரு சிட்னி செல்டன் புத்தகம் கிட்டியது. எப்போவோ என் நண்பன் எனக்குக் கொடுத்த பழைய புத்தகம் அது. நான் பொதுவா மேற்கத்திய எழுத்தாளர்கள அதிகம் படிக்கிறதில்லை. விசித்திரமா இருக்கிறதுல ஒரு ‘கெத்’ இருக்கு. குப்பை மாதிரி எழுதிக்குவிக்கும் ஆங்கில எழுத்தாளர்கள் மீதெனக்கு ஆர்வம் குறைவு. ஆனாலும் ஒருநாள் சிட்னிசெல்டன் படிச்சா ஒண்ணும் குடி மூழ்கிடாது. கிழிஞ்ச அந்தப் பழைய புத்தகத்துல, மூணாவது பக்கத்திலேயே நாயகியின் ஆடை களையப்பட்டது. எனக்கு என்னென்னமோ எண்ணங்கள் தோன்றின. உடம்பெல்லாம் ஏதோ செய்தது. எனக்கு கவர்ச்சி பிடிக்கும், விரசம்பிடிக்காது. மேலாடை இல்லாமல் உக்ரைன்ல போராட்டம் நடத்திய பெண்ணியவாதி ஒருத்தியக்கண்டு இந்திய அரசு துடிக்கிறது. அவள் கூறும் காரணங்களைக் காதுகொடுத்துக் கேளாமல் அவளைக் கைது செய்ய எத்தனிக்கிறது. ஆனால் முகத்தைச் சுழிக்கவைக்குற அளவிற்குத் தன் செழிப்புகளைக் காட்டுகிற ஒரு நடிகைக்கு தேசியவிருது கொடுக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் கைதட்டுகிறது. பாவம் இந்தியர்களுக்கு கவர்ச்சிக்கும் விரசத்திற்கும் வித்தியாசம் தெரியாது. அந்தப் புத்தகத்திலிருந்தது விரசம். அது எனக்குப் பிடிக்கலை. அந்தப் புத்தகத்தை அங்கேயே போட்டுட்டு வெளியவந்தேன். வெளியில உக்காந்து ஆபரேட்டர் மொபைல்ல வீடியோ பாத்துக்கிட்டிருந்தான். அவன் முகபாவனைகள் பார்க்கச்சகிக்கல. அப்படியே காறி உமிழலாம்னு இருந்தது. அந்தாளுக்கு ஐம்பது வயசிருக்கும். கல்யாணமாகி 30 வருடம் மேலாகுது. ஒம்பது வயசில ஒரு பேத்தி வேற இருக்கு. ஆனா இன்னும் மொபைல்ல ‘போர்னோ’ படம் பாத்துக்கிட்டிருக்கான். ‘போர்னோ’ படம் பார்க்கிறதப் பற்றி நான் குறை சொல்லல. ஆனா வாழ்க்கைக்கு வடிகாலா இருக்க வேண்டிய விடயங்கள் வாழ்க்கையாகிப் போவதைத்தான் நான் எதிர்க்கிறேன், நிஜ வாழ்க்கையை நிழல் உருவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்குவதை ஆதரிப்பதைதான் நான் வெறுக்கிறேன். மனிதனோட தேவைகளும் ஆசைகளும் இச்சைகளும் கட்டுப்பாட்டில் இருக்கனும். அதைக் கட்டுப்படுத்த மறந்திட்டு நிழல் உருவங்களுக்கு அடிமையாகிப் போறது மடத்தனம். என்னை நிமிர்ந்து பார்த்த ஆபரேட்டர், “சாஹிப், ஆப்கே பாஸ் குச் வீடியோ ஹே” என்று வினவினான், நிழல் உருவங்களால் ஆக்கிரமிக்கப் பட்ட அவன். கிழவன் பார்த்த வரைக்கும் பத்தாதுனிட்டு என் கிட்ட வேற வீடியோ கேட்குறான். “கியா சாஹிப் ?” “குச் நஹி, மே ஜாரா ஹூன்” திரும்பிப் பார்க்காம அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். பொதுவாக பொழுது போகாத பல சமயங்களில் நான் தொழிற்சாலைக்குள்ளேயேதான் சுற்றித் திரிவேன். அன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கம். என் உடம்போ மனசோ, என் கட்டுப்பாட்டில் இல்லை. அன்று ஹோலி பண்டிகை என்பதால் யாருமே தொழிற் சாலையில் இல்லை. ரெண்டு சொறி நாய்கள் புணர்ந்துகொண்டிருந்தன. அதை ரெண்டு செக்யூரிட்டி கார்டுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதன்மேலும் பற்றின்றி வீதியில் இறங்கி நடந்தேன். மணி ஒண்ணரை இருக்கும். நிசப்தம் வழிந்தோடிய தெருக்கள். தவளை கத்துகிற சப்தம் மட்டும் கேட்டது. சாலையின் இரு புறமும் வெறும் மரங்கள். நான் வேலை செய்யும் தொழிற்சாலையில் இருந்து வலது புறம் போனா ‘சுவாளி’ என்று ஒரு பீச் இருக்கிறதாக் கேள்விபட்டிருக்கேன். இது வரைக்கும் பார்த்ததில்லை. ரொம்ப தூரம் போகணும்னு தெரியும். எனக்கும் ஒரு வேலையுமில்லை. காலைல ஏழு மணிக்கு அவுட் பன்ச் அடிக்கணும். அதுக்கு முன்னாடி கிளம்பினால் லாஸ் ஆப் பே. எவ்வளவு நேரம் அதிகமா வேலை செஞ்சாலும் நிர்வாகம் கண்டுக்காது. ஆனா ஒரு நிமிடம் சீக்கிரம் கிளம்புனா ஒரு நாள் சம்பளம் காலி, இந்தியாவிலேயே பெரிய நிர்வாகம். கேட்க நாதியில்லை. ஏழு மணி வரை நேரத்தை ஓட்டனும் என்பதற்காக நான் சுவாளி நோக்கி நடந்தேன். இப்போது தவளை சத்தத்தோட சேர்ந்து வேறொரு சப்தமும் கேட்டது, நான் தொடர்ந்து நடக்க, சத்தம் அதிகமாகக் கேட்டது. அங்கு நிரம்பியிருந்த நிசப்ததைக் கலைத்தது அருகிலிருந்த புதரினுள்ளிலிருந்து வந்த அந்தப் பெண்ணின் பயங்கரமான அலறல். ஒரு நிமிடம் திகைத்து நின்று, அந்த அலறலை ரசித்தேன். அதில் ஏதோ ஒரு சுகம், சொர்க்கம் பொதிந்திருந்தது. பின் சுதாரித்துக் கொண்டு, புதரை நோக்கி ஓடினேன். முன்னாடி நின்னவன் இரண்டு கைகளையும் விரிச்சு என்ன அப்படியே தடுக்க வந்தான். எனக்கு சண்டை போடத் தெரியாது, இருந்தாலும் தில்லாக் கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடினேன். உடம்புல அடிக்கிறதோட ஒருத்தன் மனசுல அடிக்கணும். நான் போட்ட சத்தத்துலேயே அவன் பயந்துட்டான். அவன் உடம்பு நடுங்க ஆரமித்து விட்டது. அதைப் பார்த்ததும் நான் இன்னும் அதிகமாக் கத்துனேன். “பஹேன் சோX” “க்யா கர்ரஹா ஹே து… கோனே அந்தர்… லவx” கெட்டவார்த்தைகள் சரமாரியாக என் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தன. பொதுவா நான், மூன்று மொழிகளில் பாரபட்சமின்றி கெட்ட வார்த்தை பேசுவேன். எல்லா மொழிகளிலும் வகை வகையான கெட்ட வார்த்தைகள் உண்டு. ஆனா உடம்பின் உறுப்புகளக் குறிக்கிற வார்த்தைகள் எப்படி கெட்ட வார்த்தையாச்சுனு இன்னும் புரியல. பல நாள் தூங்காம கெட்ட வார்த்தைகள் ஆராய்ச்சி பண்ணியிருக்கேன். இந்திய மொழிகளில் பெரும்பாலான கெட்டவார்த்தைகள் உடல் சம்பந்தப் பட்டது. பெரும்பாலும் எல்லாக் கெட்டவார்த்தைகளும் அப்படிதான்… தொடர்ந்து என் வார்த்தைகள் உச்ச மண்டிலத்தை அடைய அவன் அங்கிருந்து ஓடி விட்டான். புதரின் உள்ளிருந்து இருவர் வேகமாக என்னை நோக்கி ஓடி வரவும், நான் பாய்ந்து அருகில் இருந்த கூரிய கல்லை எடுக்கவும் சரியாக இருந்தது. கல், மனிதனின் முதல் ஆயுதம். உலகிலேயே மிகக் கொடூரமான ஆயுதமும் கூட. கல்லை இறுக்கமாகப் பிடித்திருந்த என் கையைப் பார்த்ததும் இருவரும் ஓடத் தொடங்கினர். நான் அவர்களைத் துரத்திக் கொண்டே ஓடினேன். அதில் ஒருவன் கால் தடுக்கி கீழ் விழுந்து, முட்டி சிராய்ந்து, மீண்டும் எழுந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஓடினான். ஒரு விடயம் தெளிவாகப் புரிந்தது. இவர்கள் இதற்கு முன் எந்தத் தவறும் செய்யாத விடலைகள். அவர்களுக்கு இருபது வயதுக்குள் தான் இருக்கும். எங்கேயோ திருட்டு சாராயம் வாங்கிக் குடித்து விட்டு, சூட்டைத் தணிக்க முடியாமல் தனியாகப் போனவளைச் சீண்டியிருக்கிறார்கள். நான் துரத்துவதை நிறுத்தி விட்டு, சிறிது நேரம் ஒரே இடத்தில் நின்று கெட்டவார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தேன். இடையிடையே சில ஆங்கில கெட்ட வார்த்தைகளையும் உதிர்த்தேன். அவர்களுக்குப் புரிந்ததா என்பதைப் பற்றிய கவலை எனக்கில்லை. கெட்ட வார்த்தை பேசுவதிலும் ஒரு சுகம் இருக்கதான் செய்கிறது… சொல்ல முடியாத அந்தச் சுகத்தில் லயித்திருந்த என்னை அந்தப் பெண்ணின் அழுகுரல் தான் மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்தது. புதர் நோக்கி ஓடிய போது, புல்லிலிருந்த அந்தப் பை காலில் சிக்கியது. பை முழுதும் பெண்ணின் துணிகள். ஒருவாறு நிலைமையை யூகித்துக் கொண்டு பையைக் கையில் எடுத்துக் கொண்டு அந்தப் புதர்வரை சென்றேன். வெளியில் புதர் போன்று காட்சியளித்த அந்த இடத்தின் உட் புறத்தில் புல்தரை பரந்து விரிந்திருந்தது. அந்தப் பெண் அழுது முடிக்கும் வரை அங்கேயே அமைதியாக நின்றிருந்தேன், கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள். பின் பொறுமையாகப் பேசத் தொடங்கினேன். “கோனே து ? கஹான் சே ஆயா ?” சொல்லுடி. யாரடி நீ… தொடர்ந்து பல முறை வினவியதும் அவள் சற்றே தடுமாறி பதிலளித்தாள். அவள் பேச்சில் பெரும்பாலும் மராத்தி வார்த்தைகள் கலந்திருந்தன. ஹிந்தி பேசத் திணறும்போதே, ஏதோ கிராமத்திலிருந்து வருகிறாள் எனக் கண்டுகொண்டேன். “இதற் க்யு ஆயா ?” அவள் அழுதுகொண்டே சொன்னது, “அம்மா செத்துட்டா… வேலை தேடி இங்க வந்தேன்… அவங்க வேலை வாங்கித் தரேன்னு சூரத்துல இருந்து இங்க கூட்டி வந்தாங்க” இப்போது மீண்டும் உரைத்தது. அந்தப் பசங்க பிளான் பண்ணித் தூக்கி வந்துருக்கானுங்க. பாவம் எத்தனை நாள் காத்திருந்தானுங்களோ ! “ராத்திரி நேரத்துல எவன் வேலை கொடுப்பான். உனக்கெங்க அறிவு போச்சு…” “தங்க இடம் தரேன்னு சொன்னான். தங்கச்சி தங்கச்சின்னு சொன்னான். ஊர் பாச பேசுனான்” தங்கச்சியாவது, அக்காவாவது… எனக்குள்ளே முனகிக் கொண்டேன். “உன்ன யாரும் தேடமாட்டாங்களா ?” மீண்டும் கொஞ்சம் நேரம் அழுகை. “எனக்குன்னு யாரும் இல்ல. ஊர்லதான் தப்பா நடந்துக்குறாங்கனு இங்க வந்தேன். இவங்களும்… ரொம்ப நன்றி சார். என்னக் கொன்னிருந்தாக் கூட கேட்க ஆளில்லை…” நன்றாகவே உரைத்தது, கொன்னிருந்தாக் கூட கேட்க ஆளில்லை. அந்தப் பொண்ணோட கதறல நான் பொருட்படுத்தவேயில்லை. அவள் வாயை இறுக்க மூடினேன். சிறிது நேரத்தில் அவளின் கதறல் காற்றில் கரைந்தது. வாய்ப்புகள் கிடைக்காத வரைக்கும் அனைவரும் நல்லவர்கள்தான். நானும் நல்லவன்தான், சில நிமிடங்களுக்கு முன்பு வரை… அந்தப் பொண்ணு அழுதுக்கிட்டே இருந்தா. நான் திரும்பிப் பாக்காம மீண்டும் தொழிற்சாலைக்கே வந்துட்டேன். அந்தப் பொண்ணுக்கு இருபது வயது இருக்கும். களையான முகம். நீல நிற சல்வார்ல ரொம்ப லட்சணமாவே இருந்தாள். ஆனால் இதெல்லாம் அவள் ஆடையைக் கிழிக்கும் போது எனக்குத் தோணலை. என்னால கம்ப்ரசர் அறையில இருக்க முடியலை. மாபசான் என்னப் பார்த்து சிரிக்குற மாதிரி இருந்துச்சு. ‘ஏன்டா மெத்தப் படிச்ச மேதாவியே ! கடைசியில் நீயும் ஒரு…’ அவர் என்னப் பார்த்து கேட்கிற மாதிரி இருந்தது. என் உடம்பெல்லாம் வேர்க்க ஆரமிச்சிட்டது. “சாஹிப் கியா ஹுவா?” ஆபரேட்டர், தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தான். நான் எதுவும் பேசாம ஆபிஸ்ல வந்து அமர்ந்தேன். ஏ.சி அறையிலும் வேர்த்துக் கொண்டே இருந்தது, நல்லா நினைவிருக்கு. அந்தப் பொண்ணு என்னத் தடுக்கல. நாலு பேரு தூக்கிப் போய் ஒரு பொண்ண பலாத்காரம் பண்ணலாமேயொழிய, ஒருத்தனால ஒரு பெண்ணோட உரிமையில்லாம கற்பெல்லாம் அழிக்க முடியாது. நான் படித்த மனோதத்துவத்தெல்லாம் சொல்லி என் மனசைத் தேற்றிக் கொள்ளப் பார்த்தேன். ஆனா மனக் குரங்கு சாந்தி அடையல. நேற்று வரைக்கும் பெண்ணியவாதினு பெருமையா சொல்லிக்கொண்ட என்னால இனிமே பெருமைப் பட முடியாது, ஒரு பெண்ணோட உரிமை இல்லாம அவளைத் தொடுவது மட்டும் தப்பில்லை. அவள் உரிமை இல்லாம அவள் உணர்ச்சியைத் தூண்டி விடுவதும் தப்புதான். நான் செய்தது மிகப் பெரிய தப்பு. துரோகம். அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதாய்ச் சொல்லிச் சீரழுச்சிட்டேன். நான் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணிற்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்திருக்கலாம். அவள் முன்னாடி மரியாதைக்குரிய ஒரு மனிதனாய் நிமிர்ந்து நின்னிருக்கலாம். ஆனால், நான் என் இச்சைக்கு அடிமை ஆகிட்டேன். என் முகத்திலேயே நான் காறித் துப்பணும் போல இருந்தது. எல்லாருள்ளையும் ஒரு ஆதிக்கவாதி முதலாளித்துவவாதி ஒளிந்திருக்கிறான். இவளால் என்னை என்ன செய்ய முடியுமென்ற எண்ணம். இ.பி.கோ 375 பிரிவ எப்படி உடைக்கணும்னு எனக்குத் தெரியும். நான் அறியாமையில் தப்பு பண்ணல. மேதாவித் தனத்துல தப்பு பண்ணிட்டேன். அதான் என்ன ரொம்ப உறுத்துது. நான் படிச்ச படிப்பெல்லாம் பொய். கீதாசாரம் பொய். தில்லைப்பதிகம் பொய். நான் படிச்ச எல்லாம் வீண்.. வாழ்க்கை அழகு நிறைந்த பூந்தோட்டம் கிடையாது. அது ஒரு குப்பை. மனித மனம் ஒரு சாக்கடை. அங்கு வெறும் இச்சைகளும் கீழ்த்தரமான எண்ணங்களும்தான் புதைந்து கிடக்கு. கடைசில பிராய்ட் தான் ஜெயிக்கிறான். எல்லாமே வெறும் ஹார்மோன்ஸ்தான். நாமெல்லாம் ஹார்மோன்ஸின் அடிமைகள். அதைக் கட்டுப் படுத்த யாரும் சொல்லித்தரல. யாராலயும் கட்டுப் படுத்தவும் முடியாது. நன்னெறி பேசுற உன்னத இலக்கியங்களெல்லாம் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவே சொல்லித் தருது. சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள யாரும் சொல்லித்தரல. நிர்வாணமாய் ஒரு பெண் உன் முன் வந்தால் கண்ணை மூடிக் கொண்டு சாமியாராகப் போ, என்று சொல்லிதரும் இலக்கியம் எதுவும் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு கட்டுபாட்டோடு இரு என்று சொன்னதில்லை. யாராலயும் சொல்லவும் முடியாது. அப்பறம் என்னடா உன்னத இலக்கியம்! உலக இலக்கியம். எல்லாம் பொய். நன்னெறிகள் பொய். எல்லாம் செப்படி வித்தை. கீழ்த்தரமான மனித வாழ்க்கையில் எதுவும் உண்மையில்லை… இல்லாத கடவுளை இருக்குறதா நினைத்து நானும் வேண்டியிருக்கேன், பாரதி போல. “சிந்தை தெளிவாக்கு அல்லாளிதை செத்த உடலாக்கு” ஆனா எதுவுமே எனக்குப் பயன்படவில்லை. சிந்தித்துப் பார்த்தா நானும் ஓர் கபட வேசதாரியோனு தோணுது. என்னைக்காட்டிலும் மொபைல்ல ‘போர்னோ’ படம் பார்க்கிற அந்தக் கிழவன் எவ்வளவோ மேல்… என் குற்ற உணர்ச்சி என்னை அணு அணுவாச் சிதைக்கத் தொடங்கியது. ‘அவ நிச்சயம் நல்ல பொண்ணா இருக்கமாட்டா. இந்த நேரத்துல தனியா வெளிய வரவ நல்லவளா இருக்க முடியாது’ நான் ஏதேதோ சொல்லி என் குற்ற உணர்ச்சியைக் குறைக்கப் பார்த்தேன். என் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது… மணி 4. கார எடுத்துக்கிட்டு அந்தப் புதரை நோக்கிப் போனேன். அவள் அங்கு இல்லை. அந்தப் பையும் இல்லை. அந்த இடத்தில் அவளோட கிழிஞ்ச சல்வார் மட்டும் இருந்தது. அதெல்லாம் ரத்தம். அதைப் பார்த்ததும் விளங்கிற்று. நான் நினைத்த மாதிரி இல்லை. அவள் உண்மையாவே ஒரு அப்பாவி பொண்ணு. என் மனச சாந்தப் படுத்த முடியலை, கத்துனேன். சாடிஸ்ட்… சாடிஸ்ட். என்ன நானே திட்டிக் கொண்டேன். வேகமா என் கார எட்டி எட்டி உதச்சேன், கால் வலி எடுக்கிற வரைக்கும். ஒரு பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்ச அந்தக் குற்ற உணர்ச்சியத் தாங்கிக் கொள்ள இயலாமல், கொஞ்ச நேரம் அங்கேயே உக்காந்து அழுதேன். அதுக்கப்புறம் அந்தப் பொண்ண கிட்டத்தட்ட ஒரு வாரம் தேடுனேன். சத்தியமா அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும் என்ற எண்ணத்தோடு தான் தேடுனேன். கடைசி வரைக்கும் அவள் கிடைக்கவே இல்லை. நான் செஞ்சது நம்பிக்கை துரோகம். அவள் உயிரோடிருந்தால் நிச்சயம் அந்த வலியோடுதான் வாழ்ந்துக்கிட்டு இருப்பாள், நான் என் குற்ற உணர்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருப்பதைபோல… “…மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின் பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே…" கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள் வேகமாகத் திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களைக் கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாறே அவன் ஜன்னல் வழியே வீதியில் செல்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். ஜேஜே என மக்கள் இங்கும்அங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அதைக் காண்பவர்களுக்கு ஆடி மாதத் திருவிழாவோ என ஐயப்பாடு எழலாம். ஆனால் அந்தச் சேரியைப் பொறுத்த வரையில் தினமும் காலையில் அரங்கேறும் சாதாரண காட்சியே அது. அங்கு அதிகம் வசிப்பது தினக் கூலிகள். அருகில் அமைந்திருந்த பஞ்சுத் தொழிற்சாலையில் பெரும்பாலானோர் வேலை செய்து கொண்டிருந்தனர். சிலர் உணவுப் பண்டங்களை விற்றும், சிலர் குறைந்த விலையில் உடையையும் உடலையும் விற்றும் வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தனர். மேம்பாலத்துக்குக் கீழ் அமைந்திருந்ததால் அந்தச் சேரியில் எப்போதும் வாகன இரைச்சலுக்குப் பஞ்சமில்லை. கூடவே வேலைக்குச் செல்லும் மனிதர்களின் காலடி சப்தம், பஞ்சுத் தொழிற்சாலையில் இயங்கும் பழைய எந்திரங்களிலிருந்து வரும் பேரொலி, நடு வீதியில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் எழுப்பும் ஒலி, சேரியில் சுற்றித் திரியும் நாய்களின் ஊளை, பன்றிகள் நரவையை நக்கித் தின்னும் சப்தம் என அனைத்தையும் ஜன்னலுக்குப் பின்னின்று அவன் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான். வேறு வழியின்றி வெகு நாட்கள் அங்கே வசிப்பதனால் முதலில் நாராசமாய் காதில் விழுந்த ஒலிகள் இப்போது அவனுக்குப் பிடித்துப்போனதில் வியப்பொன்றுமில்லை. தினமும் காலையில் போருக்குச் செல்வது போல் செல்லும் கூட்டம் வரிசையாக வடக்கு மூலையில் நிற்கும். இந்தியாவில் எங்குதான் வரிசை இல்லை! சற்று உள்ளே சென்று பார்ப்போமேயானால் பெரிய கல்வெட்டு ஒன்றைக் காணலாம். அதில் பின்வரும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். “சுகாதார கழிப்பிடம். திறப்பு: 09 .09 .1999, கோடை வள்ளல் திரு. கோதண்டன் அவர்கள்" கொடை என்பது கோடை என பொறிக்கப்பட்டதனாலோ என்னவோ கோடைக்கு ஒருமுறை அந்தக் கல்வெட்டை மட்டும் சில ஜால்ரா கூட்டம் வந்து சுத்தம் செய்து விட்டுப் போகும். கழிவறை சுத்தத்தைப் பற்றியோ சுகாதாரத்தைப் பற்றியோ யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. சுகாதாரம் கழிக்கப்பட்டதாலோ என்னவோ அது சுகாதார கழிப்பிடம். இவை அனைத்தும் அவனுக்கு பழகிப்போன காட்சிகள். அவன் வாழ்வில் ஏமாற்றம் மட்டுமே மாறி மாறி வந்ததேயொழிய மாற்றம் வரவில்லை. அவன் நிரஞ்சன். வெளிறிய முகம். மெலிந்த தோற்றம் 5 அடி 8 அங்குலம். 74 கிலோ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை. தற்போது 5 அடி 9 அங்குலம். 60 கிலோ. ஒருகாலத்தில் ஐந்து வேளை உணவு உண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அவன், தற்போது கிட்டியபோது மட்டும் உணவு உண்டு தன்னைக் கொல்ல முயற்சிக்கும் தனிமையை தான் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தான். உயர் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவன் அவன். பிறந்ததிலிருந்து பசி அறிந்ததில்லை, இப்போது பசியைத் தவிர வேறு ஏதும் அறிவதில்லை. அண்ணனாக தன் இரு தங்கைகளுக்கும் அவன் எதையும் செய்துவிடவில்லை. தனியார் பணியில் இருக்கும் அவன் தந்தைக்கு அவனை அரசுப் பணியில் அமர்த்திவிட வேண்டும் என்று ஆசை. லட்சங்களை இறைத்து அவனைப் பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார். ஆனால் அவன் பொறியாளன் ஆவதைத் தவிர்த்து கலைக்கூத்தாடி ஆகிப் போனான். கல்லூரி செல்வதே மேடை நாடகம் போட, நண்பர்களிடம் கதை சொல்ல என்றாகிப்போனது. அவன் சொல்லும் கதைகளைக் கேட்டு கைத்தட்டுவதற்காகவே ஒர் வேலையற்ற நண்பர் கூட்டமிருந்தது. அதனாலோ என்னவோ அவன் சினிமா பித்து தலைக்கேறி, உலக சினிமாவில் பின்நவீனத்துவம் பேசிடவே தான் பிறந்துள்ளதாக எண்ணிக்கொண்டான். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே பல இயக்குனர்களின் வீட்டிற்குச் சென்று உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்கத் தொடங்கினான். அவர்களும் சொல்லிவைத்தாற் போல் “படிச்சு முடிச்சதும் வா!” என்ற ஒரே பதிலையே சொல்லி அவனைத் திருப்பி அனுப்பினர். அவன் சோர்ந்து போகாது மீண்டும் மீண்டும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தான். கல்லூரியில் எந்தப் பரிச்சையிலும் தேறவில்லை. தேர்வுகளைப்பற்றி அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளாவிடினும் வாங்கிய காசிற்காக கல்லூரி நிர்வாகம் அலட்டிக்கொண்டது. “உங்க பையன்கூட சேர்ந்துதான் மத்த நல்ல பசங்களும் கெட்டுப் போறாங்க. எந்நேரமும் கதை அடிக்கிறது, கேங் பார்ம் பண்ணிக்கிட்டு பிரச்சனை பண்ணுறது, அவனுக்கு மனசுல ஹீரோனு நினைப்பு. இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா படிக்கிறதா இருந்தா படிக்கட்டும். இல்லைனா அவனக் கல்லூரியவிட்டு நீக்க வேண்டியதிருக்கும்” பொறிந்து தள்ளினார் கல்லூரி முதல்வர். “உங்கள நம்பிதான படிக்க அனுப்புறோம், காச வாங்கிகிட்டு நீங்களே இப்படி பேசுனா எப்படி மேடம்” “படிக்க அனுப்பினேன்னு நீங்க சொல்றீங்க. அவன் படிக்க முயற்சிகூட பண்ணலயே. படிக்க வேண்டிய வயசுல என்ன சார் ஆட்டம். எதோ கல்சுரல்ஸ் பண்ணுறனு கிளாசுக்கே வரமாட்டேன்கிறான். கேட்டா நம்ம கல்லூரிக்காகதான் செய்றேன்னு என்னையே எதிர்த்து பேசுறான். இவன் போகும்போது கூடவே பத்துபேர கூட்டிட்டு போயிடுறான். கண்டிச்சு வைங்க. இவனால எங்க கல்லூரி பேர் கெட்டுட கூடாது” “இப்ப கூட உங்க பேர் கெட்டுட கூடாதுனுதான் பார்க்குறீங்களேயொழிய என் பையனோட எதிர்காலத்தை பத்திப் பேச மாட்றீங்களே… கடன் வாங்கி அவன இங்க படிக்க வச்சேன்” “இது ரொம்பப் பிரபலமான கல்லூரி, இங்க படிச்சா உடனே வேலை கிடைக்கும், அதனாலதானே கடன்பட்டாலும் பரவாயில்லைன்னு உங்க பையன சேர்த்திருக்கீங்க. இதுவே இது ஒரு அநாகரிகமான கல்லூரி, இங்க எந்த மாணவனும் ஒழுங்கா படிக்க மாட்டான், ஆட்டம் போடுறதத் தவிர அவனுக்கு வேற வேலையில்லை, அப்படினா உங்க புள்ளைய சேர்ப்பீங்களா!” முதல்வரின் பேச்சில் நியாயம் இருப்பதாகத் தோன்றியதால் என்னவோ நிரஞ்சனின் தந்தை எதையும் மேற்கொண்டு பேச முயற்சிக்கவில்லை. முதல்வர் தொடர்ந்து பேசினார், “இங்க பாருங்க சார். உங்க பையனோட எதிர்காலத்தில எங்களுக்கும் அக்கறை இருக்கு. அவன கொஞ்சம் கண்டிச்சு வைங்க. பிளேஸ்மென்ட் நெருங்கிடுச்சு. அவன் படிக்க ஆர்வம் காட்டினா போதும், நிச்சயம் அவன மேல கொண்டு வந்திடுறோம்” “அவங்க சொல்றதெல்லாம் என்னால கேக்க முடியாதுப்பா. எனக்கு படம் எடுக்கிறதுலதான் ஆர்வம் அதிகம். அவங்க உங்களுக்குக் கால் பண்ணினதும் நீங்க ஏன் தனியா போய் பார்த்தீங்க. என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கனும். ரொம்ப நல்லவ மாதிரி பேசுறாளோ. வருஷம் வருஷம் ஏதோ ஒரு சிம்போஷியம் நடத்தி காசடிக்கிறா. கல்சுரல்ஸ் எங்க கட்டுப்பாட்டுல இருக்கிறதுனால காசடிக்க முடியல. அதனால் என் மேல வெறுப்பு” பளார்… கன்னத்தைத் தடவியவாறே நிரஞ்சன் நின்று கொண்டிருந்தான். அவன் கண்கள் கலங்கி இருந்தன. சிறு வயது முதல் அவனை அதிகம் கண்டித்தது அவன் தாய் மட்டுமே. அதிகம் செல்லம் கொடுத்த தந்தை முதன் முதலில் கை நீட்டியது, அதுவும் தங்கைகளின் முன் தான் அடி வாங்கியது அவனுக்கு பெருத்த அவமானமாயிருந்தது. “அம்மா! உன் புள்ள செத்துட்டானு நினைச்சிக்கோ” வீட்டைவிட்டு வெளியேறியவனை யாரும் தடுக்க முற்படவில்லை. அவன் தாய் மட்டுமே கதறிக் கொண்டிருந்தாள். சென்னை வந்த பின் பல இயக்குனர்களைச் சந்தித்தான். ஒவ்வொருவரும் பல காரணங்களைச் சொல்லி அவனைத் தவிர்த்தனர், சில நேரங்களில் காவலாளிகள் தடுத்தனர். “புயலிலே ஓர் தோணி படிச்சிருக்கியா?” ஒரு பிரபல இயக்குனர் வினவினார்.. “இல்ல சார்” “இலக்கியத்துல எவ்வளவு ஆர்வமுண்டு ?” “தெரியல சார்” “பிடித்த எழுத்தாளர் ?” “அப்படியெல்லாம் இல்ல சார். குமுதம் ஆனந்த விகடன் படிப்பேன். நல்லா கதை சொல்லுவேன்” “இங்க பாரு தம்பி. சினிமா என்பது ஒரு புரிதல். அதுக்கு நீ இன்னும் பக்குவப் படல… நிறைய படி. அப்பறம் ஒருநாள் வா. பாக்கலாம்” நிச்சயம் வீட்டுக்குத் திரும்பி போகிற எண்ணம் அவனுக்கில்லை. தன்மானம் என்று தனக்குத் தானே கற்பித்துக் கொண்ட எதோவொன்று அவனைத் தடுத்தது. பல இயக்குனர்களின் வீட்டுப் படி ஏறிஇறங்கி, பல இடங்களில் பட்ட அவமானங்களைத் துடைத்துக் கொண்டு, கையில் இருந்த சில ஆயிரங்களைச் செலவு செய்து, கழுத்தில் இருந்த அந்தத் தங்கச் சங்கிலி அடகு கடைக்குச் சென்றபின் உதவி இயக்குனர் வாய்ப்பு கிட்டியது. குறைந்த வாடகையில் அந்தச் சேரி வீடும் கிட்டியது. சினிமா அவனுக்கு நிறைய கற்று தந்தது. கனவு தொழிற்சாலை தான் கனவு கண்டதைப் போல் இல்லை என்பதை முதல் நாளே உணரத் தொடங்கினான். படப்பிடிப்பு குழுவே ஹீரோவுக்காக காத்திருந்த நேரத்தில் வந்து சேர்ந்தது ஓர் செய்தி. ‘தயாரிப்பாளர் மாரடைப்பால் காலமானார்’ ‘ஷூட்டிங் பேக்கப்’ என்று குரல் ஒலித்தது. கலைந்த கனவுகளுடன் கூட்டம் கலைந்தது. “என்ன தம்பி புதுசா!” வினவினார் ஓர் அசோசியேட். “ஆமா சார், இன்னைக்குதான் சேர்ந்தேன்” “இஞ்சினியராமே! இப்பெல்லாம் நல்லா படிச்ச பசங்கதான் சினிமா பக்கம் வரீங்க. நமக்கு படிப்பெல்லாம் கிடையாது. எல்லாம் அனுபவம். இருபது வருடம். எப்படியும் அடுத்த வருடம் படம் பண்ணிருவேன். அப்படியே என் கூட வந்து சேர்ந்துக்கோ…” தன் நிலையை நினைத்து சிரிப்பதா அழுவதா என தெரியாமல் நின்று கொண்டிருந்தவன், எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைத்தான். அந்த அசோசியேட் இயக்குனர் அங்கிருந்து நகர்ந்து சென்று இன்னொருவனிடம் பேசிக்கொண்டிருந்தார், “…எப்படியும் அடுத்த வருடம் படம் பண்ணிருவேன். அப்படியே என் கூட வந்து …” “என்னையா! காலையிலே பலத்த யோசனை…” அருகில் நின்றுகொண்டிருந்தார் அந்த வீட்டு ஓனர் மாடசாமி. பல ஒன்டிக்குடுத்தனங்கள் இருக்கும் அந்தத் ‘திருமகள் நிலையத்தின்’ சொந்தக்காரர். கடுமையான முகம், ஆனால் குழந்தை மனசு. அதனால்தான் என்னவோ அங்கு பலர் வாடகை கொடுக்காவிடினும் அவர்களை விரட்டியடிக்கவில்லை. வீதியைப் பார்த்தவாறே பழைய ஞாபங்களில் லயித்திருந்த நிரஞ்சன், மாடசாமியின் குரல் கேட்டுத் திரும்பினான்… “என்னையா! ஷூட்டிங் இல்லையா !” “ஸ்ட்ரைக்கு” “திரும்பவுமா… போனமாசம்தானே பண்ணுனிங்க…” “அது காவேரி பிரச்சனைக்கு… இது ஈழப் பிரச்சனை” “சினிமாகாரன நினைச்சா சிரிப்புதான்யா வருது. கண்டகருமாந்தரத்த சினிமால காட்டுறான். ஒரு படம் ஓடிட்டா ஈழப் போராளி ஆயிடறான்… என்ன எழவோ. நமக்கு சினிமானாலே ஆகாது. உன்ன ஏதும் சொல்லல. நீ கோவிச்சிக்காத” “அதெல்லாம் ஒன்னும் இல்லங்க. மனசுல இருக்குறத சொல்லுறீங்க. நான் மத்தவங்க மாதிரி இருக்கமாட்டேன். நிச்சயம் நல்ல படம் பண்ணுவேன்…” இரண்டு வருடத்தில் அவன் நிறைய பக்குவப் பட்டிருந்தான். சினிமா அவமானங்களுடன் சேர்த்து நிறைய பாடங்களையும் கற்று தந்தது. ஆனால் படம்தான் இரண்டு வருடங்களாக இழுத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் அவன் உதவி இயக்குனர்தான். இன்னும் நிறைய படிகளைக் கடக்கவேண்டும், நிறைய அவமானங்களைத் தாங்கவேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். நம்பிக்கை ஒன்றைமட்டுமே மூலதனமாகக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்தான் . அவன் முதல்தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டதாகக் கேள்விப்பட்டான். இவனுக்கு யாரும் சொல்லி அனுப்பவில்லை. அழையா விருந்தாளியாக வீட்டுக்குச் செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. உலக ஆசைகளைத் துறந்து, குடும்பத்திலிருந்து விடுபட்டு ஓர் சித்தனாகவே மாறிப்போனான். “என் பொண்டாட்டி உடம்பு முடியலனு படுத்துட்டா. எனக்கும் சுதார்ப்பா ரோட்ல நடக்க முடியல. அதான் இந்த முனைக்கடை வரைக்கும் போய் மூணு இட்லி வாங்கிட்டுவாயேன். நான் டீயக் குடிச்சு பொழுதக் கழிச்சுருவேன். அது பசி தாங்காது…” என்று மஞ்சள் பையையும் காசையும் நீட்டினார் மாடசாமி. அவனுக்கு இது பழகிப் போயிருந்தது. சிறு சிறு வேலைகளைச் செய்து, வாடகை தர முடியாத தன் இயலாமையை சரிசெய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான் . பையை எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கும்போது, மாடசாமியின் குரல் ஒலித்தது, “அப்படியே மிச்சம் காசுல நீ ஒரு டீ குடிச்சிட்டு வந்திடு” வீதியில் சிறுவர்கள் சாக்கடையில் விழுந்த பந்தை எடுத்து, அருகிலிருந்த வேறோரு சாக்கடைத் தண்ணீரில் கழுவிக்கொண்டிருந்தனர். இவனைக் கண்டதும், “ஐயா! டைரக்டர் மாமா…” என அனைவரும் கத்தினர். வாழ்க்கையில் அவனுக்கிருந்த சிறு சந்தோசங்களில் அதுவுமொன்று. அந்தச் சிறுவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லுவான். நீட்ச்சே, ஹெகெல் என இவன் சொல்லும் தத்துவார்த்த விடயங்கள் புரியாவிடினும் அவர்களும் புரிந்ததுபோல் தலையாட்டுவார். இவனும் அந்தச் சிறுவர்கள்முன் தத்துவம் பேசுவதை பெருமையாகக் கருதினான். தங்களை சிறந்த மேதைகளாகக் காட்டிக்கொள்ள பாமரர்கள்முன் நவீனத்துவம் பேசும் அரைவேக்காடுகளின் பட்டியலில் இவனும் சேர்ந்துகொண்டது ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஏனெனில் வீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டு, வாழ்வில் பல அவமானங்களைச் சந்திக்கும் அவனுக்கு தன் ஆண்மையை நிலைநிறுத்திக்கொள்ள தத்துவார்த்த பேச்சுக்கள் தேவைப்பட்டன. சொல்வதற்கெல்லாம் தலையாட்ட அந்தச் சிறுவர்களும் தேவைப்பட்டார்கள். இட்லியை வாங்கிக் கொண்டு, மீதமிருந்த காசில் டீ குடிக்க நினைக்கையில் தன் பிய்ந்த செருப்பைப் பற்றிய எண்ணம் தோன்றியது. டீ குடிப்பதைவிட அந்தக் காசில் செருப்பைத் தைத்துவிடலாமென எண்ணி செருப்பு தைக்கும் கடையோரம் நடந்தான். ஒரு சிறிய ஓலைக் குடிசையின் வாசலில் சில சாமான்களுடனும் கையில் கோணி ஊசியுடனும் ஒருவன் அமர்ந்திருந்தான். குடிசையின் உள்ளே சில சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “வா தம்பி” என நிரஞ்சனை வரவேற்றான் அவன். தடித்த மீசை. அவன் கருத்த உடலில் மீசை மட்டுமே வெளுத்திருந்தது. தலையில் ஒரு மயிர் கூட இல்லை. வயது அறுபதிற்கு மேல் இருக்கும். “இந்தச் செருப்ப கொஞ்சம் தெச்சி கொடுங்களேன்” “பத்து ரூபா ஆகும்” “என் கிட்ட ஏழு தான் இருக்கு…” இருவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தனர். “சரி கொடு. தெச்சிக் கொடுக்கிறேன். இதுக்காக உன்ன வெறும் காலோடையா அனுப்பமுடியும்..வெயில் வேற கொளுத்துது” “ரொம்ப நன்றி” “இருக்கட்டும் இருக்கட்டும்… தம்பி என்ன பண்றீங்க?” “சினிமாவுல இருக்கேன். அசிஸ்டன்ட் டைரக்டர்” அந்த செருப்பு தைப்பவனின் முகத்தில் வேகமாக ஓர் புன்முறுவல் தோன்றி மறைந்தது. அதனுள் எத்தனையோ அர்த்தங்கள் பொதிந்து கிடந்தன. அதன்பின் அவர்கள் இருவரும் ஏனோ பேசிக்கொள்ளவில்லை. அந்த நிசப்தத்தை திடீரெனவந்த ஓர் குரல் கலைத்தது, “தலைவரே, இங்க வீ.கே நகர் மூணாவது தெரு, எங்க இருக்கு” மடிப்புக்கலையா சட்டைக்குள் ஒளிந்து கொண்டிருந்தான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன். “இங்கிருந்து நேரா போய் இடதுபக்கம் திரும்புங்க” என்றார் அந்தக் கடைக்காரர். அங்கிருந்து நகர முற்பட்ட அந்தப் புதியவன் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டிருந்த நிரஞ்சனைப் பார்த்ததும் நின்றான். “டேய் நீ நிரஞ்சன் தானே!” அவன் கண்ணில் பட்டுவிடக்கூடாதென்றே ஒதுங்கி நின்ற நிரஞ்சனை அவன் அடையாளம் கண்டுகொண்டான். “என்ன தெரியலையா. கதிர்டா… கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மன்ட்… ஞாபகமில்ல!” நிரஞ்சன் எதுவும் பேச வில்லை. மிகவும் கடினப்பட்டு ஓர் புன்னகை புரிந்தான். அங்கு நின்றுகொண்டிருந்த காரிலிருந்து ஒரு பெண்குரல் ஒலித்தது. “கதிர். சீக்கிரம் வா” “யா டியர்!” தொடர்ந்து அந்தப் புதியவன் பேசத் தொடங்கினான், “என்னடா ஏதோ படம் எடுக்கிறேன்னு சுத்திக்கிட்டு இருந்த. இப்ப ஆளு இவ்வளவு பரிதாபமா மாறிட்ட. ஏதும் படம் எடுத்த மாதிரி தெரியலே…” “சீக்கிரம் எடுத்திடுவேன்” அவமானங்கள் நிரஞ்சனுக்கு புதிதல்ல. “எங்க! அவன்அவன் நெட்லயே படம் ரிலீஸ் பண்ணுறான். நீ என்னடானா ஆளே மாறிபோய் இப்படி சுத்திக்கிட்டிருக்க. நல்லா இருக்கேன்னு பொய் சொல்லாத… பாத்தாலே தெரியுது எப்படி இருக்கணு… அப்பவே தெரியும் எனக்கு. கதை யாரு வேணும்னாலும் சொல்லலாம்… படம் எடுக்கிறதெல்லாம்… ம்ஹூம். ஒழுங்கா படிச்சிருந்தினா ஈசியா ஐ.டி வேலையாவது கிடைச்சிருக்கும். என்ன பார்த்தியா…" காரின் ஹாரன் மீண்டும் ஒலித்ததும் பேச்சைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அந்தப் புதியவன் காரை நோக்கி ஓடினான். கலங்கிய கண்களுடன் நின்று கொண்டிருந்த நிரஞ்சனை ஆசுவாசப் படுத்த முயற்சித்தார் அந்தக் கடைக்காரர். “நீ ஏன் தம்பி கலங்குற… நிச்சயம் நீ படம் பன்னிருவ. நீ யாரையும் ஏமாத்துல. சொந்தத் திறமைய வச்சு முன்னுக்கு வர நினைக்குற… கொஞ்ச நாள் கஷ்டப்பட்டு உழைச்சா எல்லாம் சரியாகிடும்” தான் பொய் சொல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். அங்கு நடந்த சம்பாஷணைகளைக் கொண்டு நிரஞ்சனின் நிலையை ஒருவாறு யூகித்துக்கொண்ட அவர் அவனைச் சமாதானம் செய்வதற்காகவே அவ்வாறு கூறினார். அவரும் பல வருடமாக யாரையும் ஏமாற்றாமல் தான் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஏனோ முன்னேற முடியவில்லை. “என் கிட்ட நல்ல நல்ல திரைக்கதைகளெல்லாம் இருக்கு… நிச்சயம் படம் பண்ணிருவேன்” என்றவாறே தைத்த செருப்பை வாங்கிக் கொண்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான். நிரஞ்சன் தொலைவில் ஒரு புள்ளியாக மறையும்வரை அவனை பார்த்துக்கொண்டிருந்தார். அவரை அறியாமலேயே அவர் கண்களில் நீர் பெருகியது. வேகமாக அந்த ஓலைக் குடிசையினுள் ஓடிய அவர் அங்கிருந்த அந்தப் பழைய பெட்டியைத் திறந்தார். அதில் கட்டு கட்டாகக் காகிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகில் சில செருப்பு தைக்கும் ஊசிகளும், சில கிழிந்த துணிகளும் கிடந்தன. அந்தக் காகிதங்களைக் கையில் ஏந்தி, தன் கண்ணீர் துளிகள் காகிதத்தை நனைக்க, படிக்கத் தொடங்கினார். இதுவரை பல முறை படித்திருப்பார். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மனதில் ஏதோ ஓர் பாரம் அவரை அழுத்திடும். பல வருடத்திற்குமுன் அவர் எழுதிய திரைக்கதைகள்தான் அவை… அவர் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. நிரஞ்சனின் வார்த்தைகள் காற்றில் ஒலித்துக் கொண்டிருந்தன… “என் கிட்ட நல்ல நல்ல திரைக்கதைகளெல்லாம் இருக்கு… நிச்சயம் படம் பண்ணிருவேன்” (2014, கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரத்துக்குத் தேர்வான சிறுகதை) ஆவி எழுத்தாளன் (எ) தமிழ் சினிமா கதாசிரியன் ‘ஆவி எழுத்தாளன்’ என்றதும் அமானுஷ்ய சக்திகளைப் பற்றி எழுதி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவன் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் ‘அமானுஷ்ய உலகம்’ புத்தகத்தை எழுதுபவன் சத்தியமாக நான் இல்லை. பதினைந்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை நானும் வாங்கிப் படித்திருக்கிறேன். ‘முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி’ என்பது போல ‘முப்பது நாட்களில் சூனியம் வைப்பது எப்படி’ என்று அந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கும். வெள்ளைச்சட்டை போட்ட ஒரு கருப்பு உருவத்தின் படத்தைப் போட்டிருப்பார்கள். அவரின் மீசை பயமுறுத்தும். கீழே, ‘மசானக் காளி துணை’ என்று எழுதி, பில்லி சூனியம் வைக்கக் கற்றுத் தருகிறார் திரு.கருப்புசாமி வெள்ளை வீரன், உடனே ரூபாய் 8500 மணியார்டர் எடுத்து அனுப்பவும். வீட்டிலிருந்தே கற்றுக் கொள்ளலாம்… பில்லி சூனியம் சொல்லித்தரும் எல்லாரும் அது ஏன் பேசிவைத்தாற்போல் ரூபாய் 8500 வாங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கட்கென்று ஏதாவது சங்கம் இருக்கலாம்! மன்னிக்கவும்,நான் சொல்ல வந்த விடயத்தை விட்டுவிட்டு ஏதேதோ பேசுகிறேன். இதுதான் என்னிடம் இருக்கும் பிரச்சனை. என்னிடம் மட்டுமில்லை, என்னைப் போன்ற பலருக்கும் இருக்கும் பிரச்சனை. உதாரணத்திற்கு, என் நண்பன் என்னிடம் கடன் கேட்டால், நான் ‘மிசல் பூகோ’, ‘லார் பத்தார்’ என்று அந்நிய எழுத்தாளர்களின் பெயர்களை உதிர்ப்பேன். பின்நவீனத்துவம், எக்ஸ்டேன்ஸ்சியலிசம் என்று என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுவேன். என் நண்பனும் என்னவென்று புரியாமல் புரிந்தது போல் நடிப்பான். தெரிகிறதோ இல்லையோ தெரிந்தது போல் பேச வேண்டும். புரிகிறதோ இல்லையோ புரிந்தது போல் நடிக்க வேண்டும். அப்போது தான் இந்தச் சமுதாயம் மதிக்கும். நான் இயங்கும் துறையில் வாய் இருந்தால்தான் பிழைத்துக் கொள்ள முடியும். சொல்ல வந்ததை விடுத்து, சொல்லத் தேவையற்றதைப் பேசிக்கொண்டிருக்கவேண்டும். நீங்களும் இந்தத்துறைக்கு வந்தால் அப்படித்தான் பேசுவீர்கள். தேவையற்ற விடயங்களைப் பேசி உங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முயல்வீர்கள். கலைத்துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது… இங்கு ஒவ்வொருவரிடமும் ஒரு கதையிருக்கும். வாழ்க்கைக் கதையைப் பற்றி சொல்லவில்லை. படம் இயக்குவதற்காக வைத்திருக்கும் கதையைப் பற்றிச் சொல்கிறேன். வடபழனி ஸ்டுடியோவில் சேனைக் கிழங்கு வறுவல் சமைக்கும் தவசிப்பிள்ளை சண்முகநாதனிடம்கூட (அவர் பிள்ளை வகுப்பைச் சார்ந்தவரன்று) ஒரு ‘டபுள் ஆக்சன்’ கதை இருக்கிறது. இயக்கினால் நடிகர் சுஜித்தை வைத்துதான் இயக்குவேன் என்று அவர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார். (அந்தக் கதையை எனக்கு பாதிதான் சொன்னார். அடுப்பில் வைத்த சேனைக் கிழங்கு தீய்ந்துவிடுமென்று ஓடிவிட்டார். முழுக்கதையைச் சொன்னால், நான் திருடிவிடுவேன் என்ற பயத்தினால்தான் ஓடிவிட்டார் என்பது எனக்குத் தெரியும்). இங்கு யாரைக் கேட்டாலும் நடிக்கப் போகிறேன், படம் இயக்கப் போகிறேன் என்பார்கள். சினிமாவில் முப்பத்திரெண்டு கலைகள் இருப்பதை யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. இயக்குனராகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியும் என் நண்பனிடம் வினவினேன், “இயக்குனரின் வேலை என்ன?” “நல்ல கதை பண்றது..” “அது கதாசிரியனின் வேலை… உன் வேலை?” “ம்ம்ம்… திரை… இல்ல… கேமரா ஆங்கில்!” “அது கேமராமேன் வேலை… உன் வேலை?” “போடா… பா(Beep)… எச்ச த் (Beep)…” என் சட்டையைக் கசக்கின அவன் கைகள். அதன்பின் என் நண்பனை நான் பார்க்கவில்லை. பழைய நண்பன். இப்போது ஏதோ படம் இயக்கிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. இங்கு பலர் உண்டு. அவர்கள் யாருக்கும் இயக்குனரின் வேலை என்னவென்று சொல்லத் தெரியாது. எந்தப் பொறுப்பை ஒளிப்பதிவாளர் சுமப்பது, எந்தப் பொறுப்பை இயக்குனர் வகிப்பது என்றும் பகுத்து விவரிக்கத் தெரியாது. ஆனால் அவர்கள் எப்போதும் சொல்வது, “நான் இயக்குனர் ஆகப் போறேன்…” “முதல கேமராமேன் ஆகிட்டு, அப்பறம் அப்படியே டைரக்டர் ஆகிடலாம்” இதுபோல் திரியும் கூட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சினிமாவினுள் நுழைந்தால் போதும் என்று ஏதேதோ வேலை செய்பவர்களுமுண்டு. (கொசுரு செய்தி: நடிகர் சுஜித்தின் கார் டிரைவர் அவரை வைத்து படம் இயக்கப் போகிறாராம். (இப்படித்தான் ஆவி இயக்குனர்கள் உருவாகிறார்கள்) ஒரு சாதாரண கார் டிரைவர் எப்படி சினிமாவில் பெரிய ’தலை’யாகிறார் என்பதுதான் கதைக்கருவாம். வாழ்த்துக்கள்.) தட்டுங்கள் திறக்கப்படும் எனும் கூற்று சினிமாவிற்குப் பொருந்தாது. சினிமாவின் கதவுகள் என்னதான் தட்டினாலும் சாமானியர்களுக்கு, அவர்கள் மிகுந்த திறமைசாலிகள் எனினும் திறக்காது. இந்த ஏதேதோ வேலை செய்யும் கூட்டம் சினிமாவின் கதவுகளை இன்னும் துருப்பிடிக்க வைக்கிறது. என்னுடைய இன்னொரு பழைய நண்பனும் அப்படித்தான். சினிமாவின் conventional விதிகளைப் பின்பற்றி உதவி இயக்குனரானவன். conventional விதிகள். 1.குறைந்தது ஐந்து முதல் பதினைந்து நாட்கள் வரை ஏதாவது ஒரு இயக்குனரின் வீட்டு வாசலில் காத்திருக்க வேண்டும். (பதினைந்து நாட்களில் அவர் பார்வை உங்கள் மீது படவில்லை எனில், வேறு இயக்குனர் வீடு நோக்கிச் செல்லவும். பதினைந்து நாட்களுக்கு மேல் காத்திருப்பது வீண். மீண்டும் ஆறு மாதம் கழித்து அதே இயக்குனர் வீட்டு வாசலில் வந்து நிற்கலாம்.) 2.இயக்குனர் வீட்டின் முன் நிற்கையில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தக் கூடாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆது. (மழைக்காலத்தில் போவது புத்திசாலித்தனம். மழையில் நனைந்து கொண்டே காத்திருந்தால், அந்த இயக்குனரை மேலும் கவர முடியும்) 3.என்னதான் பசித்தாலும் டீயும், பட்டர் பிஸ்கெட்டும் தான் சாப்பிட வேண்டும். (கையில் இருக்கும் காசிற்கு அது மட்டும் தான் கிடைக்கும் ) இந்தக் conventional விதிகளை எண்ணினால் எனக்குக் குமட்டிக் கொண்டு வரும். “நீ ஏன்டா இப்படிப் போய் அசிங்கப் படுற. திறமைய மதிக்கிறவங்ககிட்ட போய்ப் பார்ப்போம்…” என்றேன் என் நண்பனிடம். திறமையை மதிப்பவர்களும் சினிமாவில் உண்டு என்ற நம்பிக்கையில். “நீ இப்படிப் பேசிக்கிட்டே இருந்தா யாருக்கிட்டயும் அசிஸ்டண்டா சேர முடியாது” அவன் சொன்னது சரிதான். நான் இது வரை யாரிடமும் உதவி இயக்குனராகச் சேரவில்லை. (எங்கு போனாலும் சிபாரிசு. ‘நீ இவர் புள்ளையா?’, ‘அவர் புள்ளையா?’, ‘அந்த நடிகையோட தம்பியா?’. நான் மார்லன் பிராண்டோ பேரனாக இருந்தால், உங்களை ஏன் தேடி வரணுமென்று அவர்களைக் கேட்கத் தோன்றும். ஆனால் கேட்க இயலாது. கேட்க முடியாது.கேட்கக் கூடாது ) “அது இல்லடா, தன்மானத்தை அடகு வைத்துட்டு… இப்படிச் செய்யணுமா ?” இது நான். “இதுல என்னடா தன்மானம். நம்ம டைரக்டர் சாரதி பெட்ரோல் பங்குல வேலை பாத்திருக்கார். இப்படிப் போராடித்தான் பல பேர் மேல வந்திருக்காங்க” “அவங்க வந்த காலம் வேற. இப்ப திறமைய மதிக்கணும், யாரா இருந்தாலும். மதிக்கலனா மதிக்க வைக்கணும். அதை விட்டுட்டு, இப்படி அவர் செஞ்சாரு இவரு செஞ்சாருனு நம்மளும் ஒருத்தன் வீட்டு வாசல்ல போய் அசிங்கமா நிக்கணுமா?” இதோடு நான் நிறுத்தி இருக்கலாம். ஆனால் என் வார்த்தை சற்று தடித்துவிட்டது. “ஒரு காலத்தில ஆடை இல்லாம அம்மணமா திரிஞ்சாங்களே! அது மாதிரி நீயும் திரிய வேண்டித்தானே…!” அது ஒரு டீ கடை. எல்லாரும் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நண்பன் ரொம்ப நாகரிகமானவன். அவன் திட்டியது எனக்குப் புரியவில்லை. ஊர் கெட்ட வார்த்தைகள். ஆனால் என்னை அடிக்க வரவில்லை. அதனால் தான் சொன்னேன் நாகரிகமானவனென்று. அவனும் பழைய நண்பன் ஆகிப்போனான். conventional விதிகளை என்னால் பின்பற்ற முடியாத சூழ்நிலையில், புதுத் திறமைகளை மதிக்கிறாரென்று கேள்வியுற்று தமிழில் ஆங்கிலம் பேசிப் படம் எடுக்கும் ஒரு இயக்குனரைச் சென்று பார்த்தேன். என்னை ஒரு எழுத்தாளன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். தமிழ் எழுத்தாளன் என்று தெரிந்ததும் அவர் தேவாங்கு போல் முகத்தை வைத்துக் கொண்டார். (என் தமிழ் நண்பர்களே என்னை மதிப்பதில்லை. அங்கீகரிப்பதில்லை. அவர் தமிழரன்று. அதனால் நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை ) என்னை மதியாததைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் தமிழ் எழுத்தாளன் என்றால் எதற்கும் லாயக்கற்றவன் என்று இவர்கள் எண்ணுவதைத்தான் நான் எதிர்க்கிறேன்.வெறுக்கிறேன். “அப்ப நீ டான் பிரவுன், சிட்னி ஷெல்டன் கதைகளெல்லாம் படிச்சதில்லை?” வினவினார், அந்த தேவாங்கு முகப் பாவனையை மாற்றிக் கொள்ளாமலே. ‘அப்ப இல்ல… எப்பவுமே நான் படித்ததில்லை.’ டான் பிரவுன், சிட்னி ஷெல்டன், ஜான் க்ரிஷம் மட்டுமே ஆங்கில எழுத்தாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர். ஆங்கிலப் பெயர் உதிர்க்கும் பலரும் இந்த மூவரின் பெயரைத்தான் உதிர்ப்பார்கள். என்னைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட அனைவரும் பல்ப் (pulp) எழுத்தாளர்கள். இலக்கியவாதிகளன்று. ஆங்கில இலக்கியவாதிகளான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், சார்லஸ் ரைட், தெட் ஹூஸ் போன்ற பலரை மிகத் தீவரமாக நான் வாசித்திருக்கிறேன். மேலும் லத்தின் அமெரிக்கக் கவியான பாப்லோ நெருடா, ஜெர்மன் படைப்பாளியான பெர்டோல்ட் பிரெக்ட் போன்ற பலரைப் பின்பற்றியிருக்கிறேன். ஆனால் இதையெல்லாம் அவரிடம் சொல்வது வீண். ஏனெனில் அவரைப் பொறுத்த வரையில் நான் ஒரு தமிழ் எழுத்தாளன். “மார்டின் ஸ்கார்சிஸே படம் ஏதாவது பார்த்திருக்கியா?” இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவரின் நடு நெத்தியில் சுத்தியலால் அடிக்கவேண்டுமென்றிருந்தது. ஆனால் அடிக்க முடியவில்லை. அடிக்க இயலாது. அடிக்க முடியாது. அடிக்கக் கூடாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் மார்டின் ஸ்கார்சிஸேவும், குப்பாலாவும். எனக்கு இவர்களையும் சேர்த்து ப்ருஸ் ராபின்சன், வூடி ஆலன், டெரன்ஸ் மாலிக் போன்று இன்னும் பலருடைய சினிமாவைப் பற்றி ஆழ்ந்த புரிதல் இருக்கிறது. நம்பினால் நம்புங்கள். நான் வாரம் முப்பத்தியாறு படங்கள் பார்த்த காலமெல்லாம் உண்டு. தமிழில் ஆங்கிலம் பேசிப் படம் எடுக்கும், ஒரே கதையைத் திரும்பத் திரும்ப வேறு நடிகர்களை வைத்துப் படம் எடுக்கும் இவரை விட நான் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன், ஆங்கில இலக்கியங்களைப் படித்திருக்கிறேன். இருந்தாலும் நான் எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகையோடு அந்த இடத்தை விட்டு விலகிவிட்டேன், அந்த இயக்குனர் மீது நான் நிறைய மரியாதை வைத்திருப்பதால்… மேற்கூறிய இயக்குனரைப் பின்பற்றி நிறையபேர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களையாவது சகித்துக் கொள்ளலாம். ஆனால் இன்னொரு வகைக் கூட்டம் உண்டு, மாற்று சினிமா எடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள். அவர் ஒரு பிரபல இயக்குனர். மன்னிக்கவும் மாற்று சினிமா இயக்குனர். வடபழனி பஸ் ஸ்டாண்டில் இறங்கி, பிரபல ஸ்டுடியோக்களைக் கடந்து, வலது புறத்தில் உள்ள பெரிய சாலையில் (சிக்னல் அருகில்) திரும்பி, மீண்டும் வெகுதூரம் சென்று மூன்றாவது குறுக்குத் தெருவில் திரும்பினால் அவர் வீட்டை அடைந்துவிடலாம். அவரின் முதல் கேள்வி, “ஈரான் படம் எத்தனை பார்த்திருக்க?” அவரின் வீட்டின் பின்னாடி அமைந்திருக்கும் அலுவலகம் அது. (ஏ.சி இருந்தும் வேர்த்தது. பின்தான் தெரிந்தது ஏ.சியை அணைத்து வைத்திருக்கின்றனர்). சத்தியமாகச் சொல்கிறேன் அது மட்டும் நான்காவது மாடியாக இருந்திருந்தால் நான் ஜன்னல் வழியாக வெளியே குதித்திருப்பேன். (மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள விரும்புவோர், குறைந்தது நான்காவது மாடியிலிருந்தாவது குதிக்கவும். முதல் மூன்று மாடியிலிருந்து குதித்தால் மரணிக்க முடியாது. பெருத்த காயம் ஏற்படும். ஆறுமாதமாவது வலியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில் பல லட்சங்கள் செலவாகும். ஆனால் நான்காவது மாடியில் இருந்து குதிக்கும் போது, எலும்புகள் சுக்கு நூறாக உடைவதால் வலி தெரியாது. உடனே மரணம். அப்படி இல்லையெனினும் மருத்தவமனையில் நிச்சயமாக மரணம். ஒருநாளைக்கு மேல் உயிர் தங்காது. பி.கு. நான்காவது மாடியிலிருந்து குதிப்பவர்கள், ‘நான் பிழைக்கமாட்டேன்… என்னை மருத்துவமனையில் சேர்க்காதீர்கள்’ என்று எழுதி வைத்து விட்டுக் குதிக்கவும். மருத்துவச் செலவு மிச்சம்.) ஆம் குதித்திருப்பேன். மாற்று சினிமா என்றால் ஈரான் படமென்று சொம்படிப்பவர்களைக் கண்டால் எனக்கு அருவருப்பாக இருக்கும். குறைந்த செலவில் எடுக்கப்படும் ஈரான் படங்கள் அருமையான படங்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அப்படங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடமுடியாது. காரணம், அது போன்ற யதார்த்தமான கதைகளை 1950களிலேயே இங்கு கரிச்சான் குஞ்சு எழுதிவிட்டார். 1930களில் மௌனி இயற்றிவிட்டார், 1960களில் தீ.ஜா விவாதித்துவிட்டார். (ஆனால் அந்தக் கதைகளை படமாக எடுக்க யாரும் தயாராகயில்லை) நவீன தமிழ் இலக்கியத்தைச் சிறிதும் படிக்காமல், ஈரானிய படங்களைக் கண்டு பிரமித்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமன்று. அடுத்த கேள்வி, “பிடித்த இயக்குனர் ?” “செர்ஜியோ லியோன்” அவர் அருகிலிருந்த தன் உதவியாளர்களைப் பார்த்துக் கொண்டார். அவர்கள் தெரியாது என்பது போல் தலையாட்டினர். “என்னப்பா மாற்று சினிமாவெல்லாம் பார்க்க மாட்டியா?” “நான் மாற்று சினிமாவும் பார்த்திருக்கேன். நீங்க தமிழ்ல பல படங்கள் எடுத்தீங்களே, அந்தப் படங்களோட ஒரிஜினல் வெர்ஷனையும் பார்த்திருக்கேன்” என்று சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் சொல்லவில்லை. சொல்ல இயலாது. சொல்ல முடியாது.சொல்லக் கூடாது… எனக்கு நன்றாகத் தெரியும். நான் அங்கு சத்ய ஜித்ரே என்று சொல்லியிருந்தால் அவர் என்னை அரவணைத்திருப்பார். ஆனால் சத்ய ஜித்ரேவின் பெயரை உதிர்க்க எனக்கு விருப்பமில்லை. சத்ய ஜித்ரே ‘இந்திய புது அலை’ சினிமாவின் தந்தை, பல தரமான படங்களை இயக்கியவர் என்று நான் அறிவேன். எனக்கும் அவர் படங்கள் பிடிக்கும். அதனைக் கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லை. ஆனால் சத்ய ஜித்ரே படைப்புகளை ஆராய்ந்து அவரின் ஆளுமை இந்தக்காலத்திற்கு எப்படிப் பொருந்தும் என்று சிந்திப்பதை விடுத்து, சத்ய ஜித்ரே சத்ய ஜித்ரே என்று பெயர் உதிர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ‘பதேர் பாஞ்சாலி’ மட்டுமே தலை சிறந்த படம் என அறைகூவல் விடுக்கும் கூட்டத்தில் நான் சேர விரும்பவில்லை. விளைவு இறுதி வரை என்னால் உதவி இயக்குனர் ஆகமுடியவில்லை. என்னிடம் இருந்த கதைகளையெல்லாம் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, மீண்டும் ஏதாவது ஒரு கார்ப்பரேட் கம்பனியில் நவீன கொத்தடிமையாகி விடலாம் என்று எண்ணியபோது வந்து சேர்ந்தார் அந்தப் புது நண்பர். சினிமாவில் நண்பர்கள் எளிதாகக் கிட்டி விடுவார்கள். எதிரிகள் மிகவும் எளிதாகக் கிட்டிவிடுவார்கள். அந்த நண்பர் இயக்கப் போகும் குறும்படத்திற்குக் கதை வேண்டும் என்றார். வெகு நாட்களாக யாரும் பிரசுரிக்க முன்வராத ‘நிரஞ்சனின் நாய்’ என்ற என் சிறுகதையை அவரிடம் கொடுத்தேன். (என் கதைகளைப் பலரும் பாராட்டி இருந்தாலும் யாரும் பிரசுரிக்க முன்வரவில்லை). அதை வைத்து அவர் இயக்கிய குறும்படம் பலரால் பாராட்டப்பட்டது என்று கேள்வியுற்றேன். அந்தப் படத்தை அவர் என்னிடம் காட்டவில்லை. ஏனென்று பின் ஒருநாள் விளங்கியது, அந்தப் படத்தின் கதைக்கு அவன் (இனிமேல் அவனுக்கு என்ன மரியாதை!) தன் பெயரைப் போட்டுக் கொண்டான். அவனுடைய நண்பர் என்று சொல்லிக் கொண்டு இன்னொருவர் என்னைத் தொடர்பு கொண்டார். “அவன் பண்ணுனது தப்புதான் ப்ரோ…” இன்னும் ஆதரவாக நிறைய வார்த்தைகள் சொன்னார். “மீட் பண்ணலாமா ப்ரோ ?” மின்விசிறியின் சப்தம் தலைவலியைத் தந்தது. மிகப் பழைய மின்விசிறி. “ப்ரோ… கொஞ்சம் ஃபேன ஆஃப் பண்றீங்களா… குளுருது” என்றேன். ஒருவழியாக மின்விசிறி நின்றது. டீ வந்தது. குடித்து முடிக்கும் வரை காத்திருந்தான். மேஜையில் இருந்த ஒரு நாவலைக் கையில் எடுத்து பின் அட்டையைப் பார்த்தேன். “எப்டியும் இதப் படிச்சிருப்பீங்க?” இல்லை என்று தலை அசைத்தேன். “ஐயோ” பதறினான். “இப்ப இந்த நாவல் இண்டஸ்ட்ரில ரொம்பப் பிரபலம் ஆச்சே… நீங்க படிக்கலனு சொல்றது ஆச்சர்யமா இருக்கு. “மேஜிகல் ரியலிசம் ப்ரோ… பின்னியிருக்காரு…” மேஜிகல் ரியலிசம் என்றால் என்னவென்று கேட்டிருந்தால், நிச்சயம் அவனுக்கு விளக்கத் தெரிந்திருக்காது. பெயர் உதிர்க்கும் பட்சிகள். நான் எதுவும் பேசவில்லை. “நான் இவரோட ரைட்டிங்ஸ தொடர்ந்து ஃபாலோ பண்றேன். இவர் மாதிரி யாரும் எழுத முடியாது… நீங்க இவரோட மத்த புக்ஸ்லாம் படிச்சி இருக்கீங்களா?” “இல்ல” மீண்டும் அவன், “ஐயோ” எனக்குப் பழைய ஞாபகம் வந்துவிட்டது. வேலையை விட்டுவிட்டு வந்த புதிதில், ஒரு பிரபல பதிப்பாளரிடம் தொலைபேசியில் பேச நேர்ந்தது. என் கதையைப் பதிப்பிக்க முடியுமா என்று கேட்டேன். “என்னலாம் படிச்சிருக்கீங்க?” “நவீன தமிழ் இலக்கியம் படிச்சிருக்கேன். படிச்சுக்கிட்டு இருக்கேன்…” “அதான்… என்னலாம் படிச்சிருக்கீங்க?” “பிரதாப முதலியார் சரித்திரத்துல இருந்து, அஞ்ஞாடி வரைக்கும் படிச்சிருக்கேன்… நகுலன், கரிச்சான் குஞ்சு…” இன்னும் நான் படித்த ஏகப்பட்ட எழுத்தாளர்களைப் பற்றிப் பேசினேன். ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை என்றேன். சிறிது நேர மௌனம். உரையாடலை முடித்துக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம். குறிப்பிட்ட எழுத்தாளரைப் படித்தால் தான் ஒருவனால் எழுத்தாளனாக முடியும் என்று கருதுகிறார் அவர். சர்வாதிகார மனப்பாங்கு அவருடையது. இன்று மீண்டும் அதே பெயரை இந்தப் பட்சி சொல்கிறது. “என்ன ப்ரோ யோசிக்கிறீங்க ?” சுதாரித்துக்கொண்டேன். “ஒண்ணுமில்ல… இதுவரை படிச்சதுல்ல. படிக்கணும்” மீண்டும் நான் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன். “அவன் உங்களுக்குக் கிரெடிட் கொடுத்திருக்கணும் ப்ரோ… இல்லனா ஒரு அமெளண்ட்டாவது கொடுத்திருக்கணும்” நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் தலையைக் குனிந்து கொண்டான். தொடர்ந்து பேசினான், என் கண்களை நிமிர்ந்து பார்க்காமலேயே. “இல்ல. கஷ்டப்பட்டுக் கதை எழுதுறீங்க… எதுவுமே கொடுக்கலனா எப்டி?” நான் அமைதி காத்தேன். “ஆனா. நான் அப்டி இல்ல ப்ரோ” வேகமாக டிராயரைத் திறந்து ஒரு கவரை எடுத்து என் கையில் கொடுத்தான். “வாங்கிக்கோங்க… ப்ளீஸ்…” வாங்கி, பிரித்துப் பார்த்தேன். உள்ளே காசோலை இருந்தது. ஒன்றிற்குப் பக்கத்தில் நான்கு பூஜ்ஜியங்கள் இருந்தன. அதுவரை யாரும் கொடுக்காத பணம். “இது அட்வான்ஸ் தான் ப்ரோ… என் கூட நீங்க தைரியமா வர்க் பண்ணலாம். நான் ப்ரொஃபஷனல்…” நான் மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன். “ஓ! என்னனு சொல்லல இல்ல. ஒண்ணுமில்ல ப்ரோ. இன்னும் எத்தனை நாள் அசிஸ்டண்ட் டைரக்டராவே இருக்கிறது. ப்ரொடியூசர் கிடச்சிட்டாரு. ஸ்கிரிப்ட் தான்… …உங்கக்கிட்ட ஏதாவது ஸ்கிரிப்ட் இருக்கா ப்ரோ?" என்னைப் பேசவிடாமல் அவனே பேசினான். “இல்லாம இருக்குமா… வேலையெல்லாம் விட்டுட்டு ரைட்டர் ஆகியிருக்கீங்க…” ‘விட்டா பேசிக்கிட்டே இருப்பான்’. நான் காசோலையை மீண்டும் அவன் கையில் கொடுத்தேன். அவன் முகத்தில் சோகம் குடிகொள்ள ஆரம்பித்துவிட்டது. “இன்ட்ரஸ்ட் இல்லயா ப்ரோ ?” நான் புன்னகை செய்தேன். “என் பேர்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு” ஸ்பெல்லிங்கைச் சொன்னேன். புதியதொரு காசோலையை எடுத்துப் பிழையின்றி என் பெயரை எழுதிக் கொடுத்தான். அவன் கொடுத்த காசுக்கு ஒரு கதையைச் சொல்லவேண்டும். என் கதையை ஏன் சொல்ல வேண்டும்? எப்படியும் அவன் கிரெடிட் தரப் போவதில்லை. முந்தைய நாள் இரவு ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். நான்கு நண்பர்கள் சேர்ந்து குடிப்பார்கள். போதை தலைக்கேறிடும். பின் ஒரு நாள் முழுக்க என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. இந்தக் கதையை அப்படியே தலைகீழாக மாற்றினேன். நான்கு வழிப்போக்கர்கள் சேர்ந்து குடிப்பார்கள். பின் நண்பர்களாவார்கள். கதையை மதுரைப் பின்னணியில் அமைத்தேன். அவனுக்குக் கதை பிடித்திருந்தது. ஆவி எழுத்தாளானாக அவதாரம் எடுத்தேன். ஒருவாரத்தில் திரைக்கதையை எழுதி முடித்தேன். படம் சூப்பர் ஹிட். 120 ரூபாய் டிக்கெட் கொடுத்து தாம்பரத்தில் ஒரு திரையரங்கில் படத்தைப் பார்த்தேன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- கதிர்க்குமரன் அது என்னுடைய பெயர் இல்லை. அது அவனுடைய பெயருமில்லை. சினிமாவிற்காக பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறான். என் கதைதான். நான் சொன்ன இடத்தில் பாடல்கள் வந்திருந்தன. ஆனால் க்ளைமாக்ஸிற்கு முன் வரும் குத்துப் பாட்டிற்கு நான் பொறுப்பல்ல. அந்தப் பாடல், மூலத்திரைக்கதையில் இடம்பெற்றிருக்கவில்லை. படத்தோடு பொருந்தாமல் தனித்துத் தெரிந்தது. ஆனால் மக்கள் ஆரவாரம் செய்தனர். ஒரு ஹிந்தி நடிகை ஆடிக்கொண்டிருந்தாள். பாடலில் ’செழிப்பம்’என்ற வார்த்தை மட்டும் ஐந்து முறை வந்தது. தேசிய விருது பெற்ற கவிஞர் எழுதிய பாடல். ஒரு வழியாகப் பாடல் முடிந்தது. அதற்கு பின் என்னால் படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அங்கே பாடல் வந்திருக்கக்கூடாது. அவன் ஒரு நல்ல இயக்குனர் அன்று. நல்ல இயக்குனராக இருந்திருந்தால், அங்கே அந்த பாடலை வைத்திருக்க மாட்டான். அவன் என்ன செய்வான் பாவம்? ஒருவேளை தயாரிப்பாளர் ஐட்டம் பாடல் வைக்கச் சொல்லி அவனை வற்புறுத்தியிருக்கலாம். ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன்தான் தயாரிப்பாளர். அவன் அவரைப் பகைத்துக்கொள்ள விரும்பியிருக்க மாட்டான். நானும் அவன் இடத்தில் இருந்திருந்தால் அப்படிதான் செய்திருப்பேன். அந்தப் ப்ரொஃபஷனல் அதன்பின் என்னை அழைக்கவில்லை. குற்ற உணர்ச்சியாய் இருக்கலாம். ஆனால் அவனுடைய உதவி இயக்குனர் ஒருவன் அழைத்தான். பிரசுரமாகாத என் நாவலைத் திரைக்கதையாக்கிக் கொடுத்தேன். படம் ஓடவில்லை. ஆனால் அவன் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த வரம் என்று அனைவரும் பாராட்டினார்கள். இப்படிதான் நான் முழுநேர ‘ஆவி எழுத்தாளன்’ ஆகி போனேன். அதாவது, கிரெடிட் கிடைக்காது என்று தெரிந்தும் பிறருக்காக, வெறும் பணத்திற்காக எழுதும் ‘நிழல் எழுத்தாளன்’ ஆகிப்போனேன். என் வங்கிக் கணக்கில் பணம் அதிகமாகத் தொடங்கிற்று. நிறைய பேர் என்னை அழைப்பார்கள். நிறைய எழுதிக் கொடுத்திருக்கிறேன். ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், போன தீபாவளிக்கு, அந்தப் பிரபல மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் ஆறு படங்கள் வெளியாயின. அதில் ஒன்று தெலுங்கு படம். அந்த ஆறு கதைகளும் என்னுடையதுதான். பெரிய தலைகளுக்கெல்லாம்கூட கதை எழுதி இருக்கிறேன். அந்தப் பிரபல நடிகன் பல வேடங்களில் நடித்த, அந்தப் படத்தின் கதையைத் தான் தான் எழுதியதாக ஒரு உதவி இயக்குனர் புகார் தெரிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் அது பொய். ஏனெனில் அந்தக் கதையை எழுதியவன் நான்தான்… அந்தப் பிரபல நடிகனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். (அவர் இப்போது இல்லை. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்). அவரைச் சொல்லிக் குற்றமில்லை. இறுதி வரை அவரை வசனகர்த்தா என்றே தமிழ் சினிமா அழைத்தது. ஆனால் அவர் வசனகர்த்தா அன்று. சிறந்த திரைக்கதை ஆசிரியர். அவர் ஏராளமான படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியிருந்தாலும், அவருக்கு வசனகர்த்தா என்ற கிரெடிட் மட்டுமே மிஞ்சியது. அந்த எழுத்தாளரே அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. நான் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் அலட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. காரணம், தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களாக நான் கருதும் இருவரில் இவரும் ஒருவர். இன்னொருவர் அசோகமித்திரன். ஆனால் இறுதி வரை தமிழ் இலக்கிய உலகம் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அவருக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்தப் பிரபல நடிகன் திரைப்படத்தின் உண்மையான கதாசிரியர் நான் தான் என்று. ஆனால் இதற்கெல்லாம் நான் அலட்டிக் கொள்ளக் கூடாது. என் கதையைத் திருடிவிட்டார்கள் என, யாரையும் எதிர்த்துக் கொடிபிடிக்க முடியாது. இருக்கும் ‘ஆவி எழுத்தாளன்’ வேலையும் போய்விடும். என் தந்தை ஒண்ணும் பிரபல தயாரிப்பாளர் அன்று. என் பாட்டன் மார்லன் பிராண்டோ அன்று. என்னால் வேறு எப்படியும் திரைத்துறையில் நுழைய முடியாது. நீந்த முடியாது. யாராவது ஒருவருடைய உதவியோடு, என்றாவது ஒருநாள் படம் இயக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான், நான் யாரையும் பகைத்துக்கொள்வதில்லை. குறைந்த விலைக்கு என் கதைகளை விற்றுக் கொண்டிருக்கிறேன். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, என்னைப் போல் பலருண்டு. அவர்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை, விரும்பப்போவதுமில்லை. ஓடிப்போனக் கடவுள் நான் எப்படி இங்கு வந்தேன் என்பது இன்னும் விளங்கவில்லை. இது ஒரு பெரிய கோவில். மிக உயர்ந்த மதில் சுவர்கள். நிச்சயம் ஏதோ ஒரு மிகப்பெரிய அரசனால் கட்டப்பட்ட கோவிலென்பது திண்ணம். சிற்றரசர்கள் பெரிய கோவில்களை உருவாக்கியதில்லை. பிரகாரம் முழுக்க ஏதேதோ குட்டிக் கடவுள்களின் சிதிலமடைந்த சிலைகள். அனைத்தையும் கடந்து நான் மூல ஸ்தானத்தை நோக்கிச் சென்றேன். மூலமே என் நோக்கு வெறிச்சோடிக் கிடந்த கோவில் காணவில்லை கடவுள் இது என்ன கோவில் என்பது விளங்கவில்லை. கர்ப்பக்ரஹத்தில் மூலவர் சிலையைக் காணவில்லை. நிலையில் கடவுளின் பெயர் எழுதி இருக்கிறதா என்பதை உற்று நோக்கினேன். கும் இருட்டு. சட்டைப் பையில் இருந்த லைட்டரை எடுத்துப் பற்ற வைத்தேன். உள்ளே கடவுள் இல்லை என்பது உறுதியானதும் அப்படியே சிகரட்டையும் பற்ற வைத்தேன். சுருள் சுருளாய் பறந்தன புகைகள் நிலை வாசற்படியில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது “பன்னாரி அம்மன் துணை” ஏதோ சிந்தனையோடு திரும்பினேன். சிகரெட் வெளிச்சத்தில் தெரிந்தார் நந்தி பகவான். ‘நிச்சயம் இது அம்மன் கோவிலன்று. அம்மன் கோவிலில் எப்படி வரும் நந்தி’ மீண்டும் நிலைக் கதவை நோக்கினேன். “பண்ணாரி அம்மன் துணை சென்னை" இது நிச்சயம் சென்னை இல்லை. நேற்று இரவு நான் திருச்சியில் உறங்கியது வரை ஞாபகம் இருக்கிறது. விழித்துப் பார்த்தால் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குழப்பத்துடன் அரை நொடிமீண்டும்அந்த நிலையை நோக்க, விளங்கியது அனைத்தும் தெளிவாக. “பண்ணாரி அம்மன் துணை உபயம்: சாந்தா பாக்கியசாமி- சென்னை" வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள இயலவில்லை. அடக்கவும் நான் முயற்சிக்கவில்லை. இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டிய மன்னனே ஒரு சிறு கல்வெட்டில்தான் தன் பெயரைச் செதுக்கிக் கொள்கிறான். ஆனால் ஒரு சிறு நிலைக் கதவைக் செய்து கொடுத்துவிட்டு தன் பெயர், தான் வணங்கும் கடவுளின் பெயர், தன் ஊரின் பெயர் என செதுக்கிக் கொள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதைப் பார்க்க மனம் தாளாமல்தான் கடவுள் மறைந்துவிட்டரோ என்றெண்ணும்போது வந்து சேர்ந்தார் கோவிலின் குருக்கள். அவர் முகத்தில் நிலவிய தேஜஸ் என்னை அறியாமலேயே என் சிகரட்டை தரையில் போட்டு மிதிக்க வைத்தது. குருக்கள், “வாடா அம்பி. உனக்காகத்தான் காத்திண்டிருந்தேன்” என்னை நன்கறிந்தவர் போல் அவர் பேசத் தொடங்கினார். “நீ வருவ, இந்தக் கோவிலை உன் பொறுப்பில் விட்டுட்டுப் போயிடலாம்னுதான் இத்தனைநாள்காத்திண்டிருந்தேன்” எனக்கு ஒன்னும் விளங்கவில்லையெனினும்அவரை மறுத்துப் பேச நாஎழவில்லை. “சாமி… மூலவர் எங்க !” பதற்றத்தோடு வினவினேன் நான். “நோக்கு தெரியாதா…! தமிழ்ல மந்திரம் ஓதுறேனு நாலு சிவனடியார்கள் வந்தா… சுவாமி ஓஓஓஓஓடிட்டார்!” என்றார் ஒரு நமட்டு சிரிப்பை வெளிப் படுத்தியவாறே. எனக்கு நறுக்கென்றிருந்தது. “ஐயரே! சொல்றேன்னு கோபப் படாதீங்க. நான் பெரியார்வாதி தான். ஆனால் பிராமணர்கள எதிர்ப்பவன் கிடையாது. இருந்தாலும் நீங்கள் பேசுறது கொஞ்சம் திமிராதான் இருக்கு” மீண்டும் வெளிப் பட்டது நமட்டு சிரிப்பு. சற்று ஆக்ரோசமாகவே கத்தினேன். “என்ன… ஐயரே! என்ன திமிர் உனக்கு. இது தமிழ்நாடு, தமிழர் பூமி. இங்கு தமிழ் மொழியில் அர்ச்சனை செய்றது தானே நியாயம். கடவுள் இருக்காரோ இல்லையோ. ஆனால் மக்களுக்கு புரியாத மொழியில் எதுக்கு அர்ச்சனை !” இப்போது கம்பீரமாகப் பேசினார் குருக்கள், “அடே அம்பி! நான் எங்கடா சொன்னேன் தமிழ்ல அர்ச்சனை வேண்டாம்னுட்டு? எங்கவாளே பல பேர் அர்த்தம் தெரியாமதான் மந்திரம் ஓதுறா… தமிழ்ல தான் ஒதனும்னா அர்த்தம் புரிஞ்சு தமிழ்லயேஓதிட்டுபோறோம். அதை விட்டுட்டு எங்களை விரோதி மாதிரி நடத்தினா…?” அவர் பேச்சில் நியாயம்இருப்பதாக நான் உணர்ந்ததை அவர் அறிந்துக் கொண்டார் போலும். “இதோ இப்ப நான் பாடுறேன் கேளு “கருநட்ட கண்டனை அண்ட…” உருக உருகப் பாடினார் தேவாரத்தை. நானும் அதில் மயங்கி நின்றேன் சில மணி நேரங்கள். கடவுள் இருக்கார் இல்லார் என்பது பல நேரங்களில் தேவையற்ற விவாதம். அவர் இருக்காரோ இல்லையோ, ஆனால் அவர் மீது பாடல்கள் பாடிய பலரும் வெறும் கடவுள் தொண்டர்களன்று. அவர்கள் தமிழ்த் தொண்டர்கள். எத்தனை ஆயிரம் அருமையான தமிழ் பாடல்களைப் பாடியுள்ளனர். நாத்திகம் பேசுபவர் கடவுளை வெறுத்துக் கொள்ளட்டும். ஆனால் தமிழ் மொழியை வெறுப்பது தமிழ் இலக்கியத்தை அழிக்க முயற்சிப்பது மடத்தனம். இன்னும் எத்தனை அருமையான சமணப் பாடல்கள் தமிழிலுண்டு. சைவ சமயம் தழுவிய பலரும் எத்தனை அருமையான சமணத் தமிழ் பாடல்களை அழித்து விட்டனர்! இன்னும் இன்று நாத்திகம் பேசும் மாமனிதர்கள் பலர் எத்துணை அருமையான தமிழ் பக்தி இலக்கியங்களை அழிக்கவும் ஒழிக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றனர். நகச் சுத்திக்குப் பயந்து கையையே வெட்டிக் கொள்கிறது ஒரு கூட்டம்… அவர் பாடிய பன்னிரு திருமுறைகளைக் கேட்கக் கேட்க உருகியது என் மனம். பெருகியது கண்ணீர். எம்மொழியாம் செம்மொழி தமிழ்மொழி, பாரில் அதற்கு நிகர் வேறெந்த மொழி ! கண்ணீரைத் துடைத்தவாறே வினவினேன், “மூலவர், ஓடிட்டார்னு சொன்னீங்களே! கேலியோ !” “இல்லடா… நிஜமாதான்… சிவாச்சாரியார்கள் நான்கு பேர் கை கோர்த்து வந்தா. ஒருத்தர் சொன்னார் ‘இறைவா… திருசிற்றம்பழம்…’ எல்லாருக்கும் ‘ழ’ தான் தடுமாறும். இவருக்கு ‘ல’ வே தடுமாறுது. எனக்கு அதைப் பார்த்ததும் சிரிப்ப அடக்க முடியலை. நானும் உங்க கூட சேர்ந்து பாடட்டுமானு கேட்டேன். ஏய்! பிராமணா வெளிய போடானு நாலு பேரும் என்னத் துரத்திட்டா. நானும் வெளிய நின்று வேடிக்கை பார்த்தேன். இரண்டாம் சிவாச்சாரியார் சிவனை நோக்கிப் பாடினார் ‘பாழ் அபிசேகம் செய்யவா ! என் மன்னா’ என்னது பாழ் அபிசேகமா! அடியாரே அது பால் அபிசேகம்னு நான் சொன்னேன். அவர் அதைக் காதுல போட்டுக்காம மீண்டும் மீண்டும் ‘பாழ்’ என்றார். சிவனே என்று கிடந்த சிவன் கண்ணில் தாரை தாரையா கண்ணீர் வர ஆரமிச்சிடுத்து. இருக்காதா பின்ன! தமிழைக் கொலை செய்தால் பொறுத்துக் கொள்வானோ வெள்ளையங்கிரி நாதன். ஆனால் அதைப் பார்த்த அந்த மூன்றாவதுசிவாச்சாரியார் சொன்னார் ‘ஐயகோ! இறைவன் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்’ அதைக் கேட்டதும் மூலவர் சிலையிலிருந்து இன்னும் அதிகமாக வழிந்தது, கண்ணீர். இன்னும் கொஞ்சம் போயிருந்தா ஆண்டவன் ரத்தக் கண்ணீரே வடித்திருப்பார். அந்த நேரம் பார்த்து அந்த நாலாவது சிவாச்சாரியார் சொன்னார்…" பேச்சை நிறுத்திவிட்டு சிரித்தார் குருக்கள். கபடமற்ற சிரிப்பு. அவர் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தேன் நான். சிரித்துவிட்டு, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்… “அந்த நாலாவது மனிதர் பாவம். இறைவன் மீது பாசம் ரொம்ப அதிகம் வச்சுட்டார். தன்னைத் தானே திருநாவுக்கரசரென்று நினச்சுண்டு இறைவனை ஆட்கொண்டருள வேண்டினார்… ஆனால்… (மீண்டும் சிரித்தார்குருக்கள்) ஆனால் அவர் வேண்டியதுவேறு… ‘இறைவா நீ என்னைக் கொல்வாயாக… கொல்லாவிடில் நான் உன்னைக் கொல்வேனாக… இறைவா நீ என்னைக் கொல்வாயாக… கொல்லாவிடில் நான் உன்னைக் கொல்வேனாக…’ தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்டுப் பாடிண்டே இருந்தார். நானும் வெளியே இருந்து, அது ‘ள்’ அடியாரே ‘ல்’ அன்றுனு சொல்லிண்டே இருந்தேன். அவர் என் பக்கம் செவி சாய்க்காமல் தொடர்ந்து ஆனந்தக் கூத்தாடினார். ‘இறைவா நீ என்னைக் கொல்வாயாக… கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…’ திடிர்னு இடி இடிக்கிற மாதிரி சத்தம். இந்த கோவிலே ஆட்டம் கண்டுடுத்து. நான் தடுக்கி கீழ விழுந்து மயங்கிட்டேன். எனக்கு என்ன நடந்ததுனே புரியல. சில நிமிடம் கழித்து நினைவு வந்தது. நான் வேகமா கர்ப்ப கிரகம் நோக்கி ஓடினேன். அங்க கடவுள் இல்லை. ஆனால் நான்கு சிவனடியார்களும் கண்ணைத் திறக்காமலேயே கண்ணீர் வழிய பாடிண்டே இருந்தா. ‘இறைவா நீ என்னைக் கொல்வாயாக… கொல்லா விடில் நான் உன்னைக் கொல்வேனாக…’ வெகு தொலைவில கடவுள் கதறிண்டே ஓடிண்டிருந்தார், ‘அய்யோ.. என்னை கொலை பண்ணுறாங்க. அய்யோ என்னைகொலை பண்ணுறாங்க’…" கண் கண்களில் எரிச்சல் உண்டாக ஆரம்பித்தது. பதினைந்து நிமிடங்களுக்குக் கண்களைத் திறக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு தான் அந்த நர்ஸ் கண்களில் மருந்தை ஊற்றினாள். நான்கு மணி நேரத்திற்குப் பார்வை மங்கலாக இருக்கும் என்றாள். ஆனால் கண் எரியும் என்று அவள் சொல்லவில்லை. இன்னும் பதினான்கு நிமிடங்கள் நான் கண்களை மூடியே வைத்திருக்க வேண்டும். கண்களைத் திறந்துவிடலாமா என்று எண்ணினேன். ஆனால் கண்களைத் திறந்து, வெளிச்சம் கண்ணில் பட்டுப் பார்வை போய் விட்டால்? நினைக்கும் போதே கிலி ஏற்படுகிறது பார்வை எப்படிப் போகும். போக வாய்ப்பிருக்கிறது. உள்ளே நுழையும் போதே ஏதேதோ டாக்குமென்ட்களில் கையெழுத்து வாங்கினார்கள். அதில் என்ன எழுதியிருந்தது என்று படிக்கவில்லை. ஃபார்மாலிட்டீஸ் என்றார்கள். நானும் கேள்வி கேட்கவில்லை. ஆர்வக்கோளாறில் கண்ணைத் திறந்தீர்கள் எனில் கண் பார்வை போய்விடும் என்று எழுதி இருக்கலாம். அப்படி கண் போய்விட்டால் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பல்ல என்று கூட எழுதியிருக்கக்கூடும். கண்ணைத் திறக்காமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்தபின், கைக்குட்டையை எடுத்து கண்களில் இருந்து வழியும் மருந்தைத் துடைத்துக் கொண்டேன். “அம்மா உச்சா…” அந்தக் குரலுக்குச் சொந்தக்கார சிறுவனுக்கு பத்து வயது இருக்கலாம். “டாய்லெட்னு சொல்லு” என்று அவன் தாய் அவன் காதில் கிசுகிசுப்பது கேட்கிறது. “கூட்டிட்டு போய்ட்டு வந்துருங்க” நர்ஸ் சொல்கிறாள். “ஆண்ட்டி நான் மூஞ்ச கழுவிட்டு வந்துறேன். கண் எரியுது” சிறுவன் கெஞ்சினான். “அதெல்லாம் செய்யக்கூடாது… கண்ண நாங்க சொல்றப்ப தான் திறக்கணும்” என்றவாறே நர்ஸ் என்னைக் கடந்து சென்றாள். அவள் மீது மல்லிப் பூ வாசம் அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் நான் பார்த்தபோது அவள் தலையில் மல்லிப்பூ இல்லை. “அம்மா கண்ணத் தொறந்தா என்ன ஆகும்” “ஹான் சாமி கண்ண குத்திடும்” என்றவாறே அந்தத் தாய் அவனை அழைத்துச் செல்கிறாள். இப்போது மீண்டும் நர்சின் குரல் கேட்டது. “லக்ஷ்மி ரெட்டி” என்று உரக்கக் கத்தினாள். யாரும் வந்ததைப் போல் தெரியவில்லை. “லக்ஷ்மி ரெட்டி” “லக்ஷ்மி ரெட்டி” மீண்டும் கத்தினாள். “போன் மேல போன் போட்டு அப்பாய்ண்ட்மென்ட் வாங்குறது. கரெக்ட் டைம்க்கு வரதுல்ல…” அவள் முணுமுணுத்தாள். லக்ஷ்மி ரெட்டி ஏன் வரவில்லை? முக்கியமான வேலை ஏதாவது வந்திருக்கும். கல்லூரியில் திடீரென்று செய்முறைத் தேர்வு வைத்திருப்பார்கள். இல்லை. லக்ஷ்மி பொய் சொல்லிவிட்டாள். மருத்துவமனைக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு தன் ஆண் நண்பருடன் எங்கேயோ சென்றுவிட்டாள். ஒருவேளை அவள் திருமணம் ஆனவளாக இருந்தால்? அவள் மாமியார் ஊரிலிருந்து திடீரென்று வந்திருக்கக் கூடும். “நான் வந்துட்டேனே… அதான் சமச்சு போட பயந்துக்கூட்டு கண் ஆஸ்பத்திரி போறேன் பல் ஆஸ்பத்திரி போறேன் புளுவுரா. இவ வடிச்சுகொட்டி தான் நான் உடம்ப வளக்கணுமா!” என்று அவளது மாமியார் லக்ஷ்மியின் காது படவே சொல்லியிருக்கக் கூடும். (இதை அவள் தெலுங்கில் தான் சொல்லியிருப்பாள். எனக்கு தெலுங்கு தெரியாது) இதைக் கேட்டதும் அவள் என்ன செய்திருப்பாள்? பாவம் அழுது கொண்டே உள்ளே சென்றிருப்பாள். இல்லை. அவளின் குழந்தைக்குக் காய்ச்சல் வந்திருக்கக் கூடும். அவளது கணவனுக்கு வேலை போயிருக்க கூடும். துக்கத்தில் அழுது கொண்டிருக்கும் அவனுக்கு லக்ஷ்மி ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறாள் போல. ஆம். அப்படிதான் நடந்திருக்கும். இல்லை, அவள் வீட்டு நாய்க்குட்டி இறந்திருக்ககூடும். இல்லையேல் அவளது புருஷன் வெளியூர் சென்றுவிட்டதால், அவள்… “எவ்ளோ நேரம் சார் வைட் பண்றது… டாக்டர் உங்களக் கேட்டுகிட்டே இருக்கார்…”, நர்சின் குரல் என்னை மீண்டும் ஹாஸ்பிடல் அறைக்குள் இட்டு வந்தது. “சாரி மேடம் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…” கரகரப்பான குரலில் பதில் வந்தது. “நெக்ஸ்ட் டைம் உங்க கம்பெனில இருந்து யாரு வந்தாலும் அப்பாய்ன்ட்மெண்ட் கொடுக்கக் கூடாதுனுட்டார். போங்க நீங்களே போய் பேசுங்க… “பேஷண்ட் இருக்கும் போதே எல்லாரும் பேக தூக்கிட்டு வந்தா எப்படி… நாங்களும் வீட்டுக்குப் போக வேணாம்” முணுமுணுத்துக் கொண்டே நர்ஸ் நகர்ந்தாள். லக்ஷ்மி ரெட்டி ஒரு ஆண். சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவ். எனக்கு முழியைப் பிடிங்கிக் கொள்ள வேண்டும் என்பது போல் இருந்தது. ஆண்களுக்கு ஏன் லக்ஷ்மி என்று பெயர் சூட்டுகிறார்கள்? “ரீ செக்கப்பா?” நர்சின் குரல் மீண்டும் கேட்டது. “யா…” இனிமையானதொரு பெண் குரல். “சரி அந்த சேல்ஸ் ரெப் வந்ததும் நீங்க போங்க” மீண்டும் நர்சின் குரல். “சரி மேடம்” இன்னொரு பெண்ணின் குரல் கேட்டது. இது மிகமிக இனிமையாக இருந்தது. அவர்கள் முன் வரிசையில் இடது மூலையில் அமர்கிறார்கள். என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சிறிது நேர மௌனம். டாக்டரின் அறைக் கதவு திறந்து மூடப்படுகிறது. “இப்ப நீங்க போலாம்” நர்சின் குரல் எனக்குப் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும். நான் அந்த மிகமிக இனிமையான குரலுக்கு அடிமையாகி விட்டேன். “சரி மேடம்” மீண்டும். மிகமிக இனிமையான குரல். சிறிது நேரத்திற்குப் பின் அவர்கள் வெளியே வருகிறார்கள். “டாக்டர் பவர் டீடெயில்ஸ் கொடுப்பாரு. டூ மினிட்ஸ்” மீண்டும் நர்சின் குரல். “இட்ஸ் ஒகே” அந்த இனிமையான குரல் எனக்கு மிகவும் அருகில் கேட்கிறது. இதோ, அந்தப் பெண்கள் என் அருகாமையில், என் பின் வரிசையில் வந்து அமர்கிறார்கள். மௌனம் இப்போது, ஏதோ பேசத் தொடங்கினார்கள். ஆங்கிலத்தில் பேசினார்கள். நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். ஹிந்தியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஐயோ! அவர்கள் என்னைப் பற்றி தான் பேசுகிறார்கள். ஆம் என்னைப் பற்றிதான். கிண்டல் செய்கிறார்கள். எனக்கு ஹிந்தி பாஷை புரியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. போலும். அறிந்திருந்தால் இப்படிப் பேசமாட்டார்கள். என்னை வர்ணிக்கிறார்கள். என் ஆடையைப் பற்றி, என் கண்ணாடியைப் பற்றி, ஏதேதோ பேசுகிறார்கள். “உனக்கு புடிச்சிருந்தா பேசு. தப்பில்ல” இனிமையான குரல் கொண்டவள், மிகவும் இனிமையான குரல் கொண்டவளிடம் சொல்லுகிறாள். “வேண்டாம். விடு” “சும்மா பேசு… இல்லனா ஹாஸ்பிட்டல் வெளிய வெயிட் பண்ணுவோம். அவன் வந்தோன பேசுவோம்…” மீண்டும் இனிமையான குரல் கொண்டவள். “நஹி… எப்டியும் வாப்பா லவ் மேரேஜுக்கு ஒத்துக்க மாட்டாரு. அமைதியா இரு” நான் பறந்து கொண்டிருக்கேன். அந்த மிகமிக இனிமையான குரல் கொண்டவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. கண்ணைத் திறந்து பார்க்க வேண்டும். ஆசையாக இருந்தது. திடீரென்று என் அருகில் யாரோ வந்து நிற்பது போல் இருந்தது. “சார். எவ்ளோ நேரம் ஆச்சு ட்ராப்ஸ் போட்டு?” ஒரு ஆண் குரல். என்னைத் தான் கேட்கிறான். “பத்து நிமிஷம் இருக்கும்” “ஒகே. இன்னும் கொஞ்ச டைலூட் பண்ணியிறலாம். கண்ண திறங்க” எனக்கு சந்தோஷம். அந்தப் பெண்களைப் பார்க்கலாம். கண்ணைத் திறந்தேன். பார்வை மங்கலாக இருந்தது. தலையைத் திருப்ப எத்தனித்தேன். கையில் ட்ராப்சுடன் நின்று கொண்டிருந்த மேல் நர்ஸ் “சார்” என்றான். நான் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் பார்த்தேன். “ரெண்டாவது முறை ட்ராப்ஸ் போடணும்” என்றவாறே கண்களில் மீண்டும் மருந்தை ஊற்றிவிட்டான். அந்தப் பெண்கள் எழுந்து சென்று நர்சிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். “அஞ்சு நிமிஷம் கண்ணத் திறக்காதீங்க…” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான். கண்ணைத் திறக்க முடிவு செய்தேன். பார்வை போனாலும் பரவாயில்லை. பார்வையெல்லாம் போகாது. எப்படிப் போகும்? கண்களைத் திறந்தேன். பார்வை மிகமிக மங்கலாக இருந்தது. “கண்ணத் திறக்காதீங்க சார்” நர்ஸ் கத்தினாள். அந்தப் பெண்கள் அங்கு இல்லை. கண்ணிலிருந்து மருந்து வடிந்து கொண்டிருந்தது. “அங்கிள் கண்ணத் திறக்காதீங்க… சாமி கண்ணக் குத்திரும்” முன் வரிசையில் அமர்ந்திருந்த சிறுவன் என்னைப் பார்த்துச் சொன்னான். “ஹேய் சும்மா இரு” என்று அவனை அவன் அம்மா அதட்டினாள், நான் மருந்தைத் துடைத்துக் கொண்டே, சுற்றும் முற்றும் பார்த்தேன். மின் விளக்குகளின் ஒளி கண்களைக் கூசச் செய்தது. தூரத்தில் லிப்ட்டுக்குள் அந்த இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தனர். லிப்ட்டின் கதவு கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொண்டிருந்தது. அதில் ஒருத்தி என்னைப் பார்த்து புன்னகை செய்தாள். லிப்ட் மூடிக்கொண்டது. தாத்தாவின் கதை பள்ளிக்கூட மணி அடிப்பதற்கு முன்பே, தாத்தாவின் வருகையை எதிர்பார்த்து வாசலைப் பார்க்கத் தொடங்கிவிடுவது வழக்கம். கேட்டை கடந்து வெளியே வரும்போது, இரண்டு பொட்டலங்களுடன் தாத்தா காத்திருப்பார். எப்போது வந்திருப்பார் என்று நாங்கள் கேட்டதே இல்லை. ஆனால் எல்லா நாட்களிலும் தாத்தா எங்களுக்கு முன் வந்து காத்திருப்பார். தினமும் காலை வீட்டிலிருந்து பள்ளியில் எம்.ஐ.டியில் டிராப் செய்வது அப்பாவின் வேலை என்றால், பள்ளியிலிருந்து எங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வது தாத்தாவின் வேலை. சைக்கிள் கேரியரில் முதலில் என்னைத் தூக்கி அமரவைத்து, பின் அண்ணனை அமர வைப்பார். “குஞ்சுப் பையன். கீழ விழுந்திருவான். பெரிய பையன், நீ தான் பின்னாடி உக்காந்து புடிச்சுக்கணும்” அண்ணனிடம் சொல்வார். உண்மையில் எனக்கும் அண்ணனுக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். ஆனால் தாத்தாவைப் பொறுத்த வரை நான் குஞ்சுப் பையன், இன்றளவும். அப்போதே தாத்தாவிற்கு எழுபத்தைந்து வயதிற்கு மேல் இருக்கும். அவர் வாங்கி வரும் இரண்டு பொட்டலங்கள் தான் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் காரணமாய் இருந்திருக்க வேண்டும். அந்தப் பொட்டலங்களைப் பிரிக்கும் போது, அற்புத விளக்கைத் தேய்த்துவிட்டு ஜீனிக்காகக் காத்திருக்கும் அலாவுதீன் கணக்காகக் காத்திருப்பேன். கடலை பர்பி, வெண்ணை பிஸ்கட், க்ரீம் இல்லாத வித்தியாசமான ஏதோவொரு கிரீம் பிஸ்கட், தீனிகளின் பட்டியலுக்கு முடிவேயில்லை. இப்போது இத்தனை வருடங்கள் ஓடிவிட்ட பின், தொண்ணூற்றைந்து வயதைத் தொட்டுவிட்ட தாத்தா படுக்கையில் விழுந்துவிட்ட பின், தாத்தா எண்பது வயதிலும் எங்களுக்காக சைக்கிள் மிதித்திருக்கிறார் என்று எண்ணும் போது அவர் மீதான பாசம் அதிகமாகிறது. தாத்தாவிற்கு ஏராளமான வேலைகள் இருந்திருக்கின்றன. அந்த வேலைகளுக்கு மத்தியில் தான் பள்ளிக்கு வந்து எங்களை அழைத்துச் சென்றிருக்கிறார். தொண்ணூற்றி நாலு வயது வரை அவர் ஏதோ வேலை செய்து கொண்டே இருந்தார். கடந்த ஒரு வருடமாகத் தான் அவருடைய நடமாட்டம் குறைந்துவிட்டது. அப்படியும் தன் வேலைகளை தானே செய்து கொள்வார். அவருக்கு தினமும் சவரம் செய்து கொள்ள வேண்டும். “நான் மிலிட்டரிகாரன்டா. தினைக்கும் ஷேவ் பண்ணி பழகிடுச்சு” என்பார். நான் இரவு தாமதமாக உறங்கினாலோ, பகலில் தாமதமாக எழுந்தாலோ “லைப்ல டிசிப்ளின் இருக்கணும். டைமுக்குத் தூங்கி டைமுக்கு எழுந்திருக்கணும்” என்று கடிந்து கொள்வார். மற்றபடி தாத்தா எனக்கு நெருங்கிய நண்பர். நான் ஏதேதோ படித்தேன். செலவு செய்ய முடியாத அளவிற்கு சம்பாதித்தேன். இன்று ‘சினிமா சினிமா’ என்று சம்பாதிக்காமல் சுற்றிக்கொண்டிருந்தாலும், போகிற போக்கில் பலரும் என்னை ‘பைத்தியக்காரன்’ என்று சொன்னாலும், தாத்தா மட்டும் “புடிச்சத செய், எல்லாம் ஜெயம்” என்று சொல்வார். இதை என்னிடம் பல முறை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லும்போதெல்லாம், அவருக்கும் எனக்குமான நெருக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. படுக்கையை விட்டு எழ முடியாத, வாய் குழறிப் பேசும் இந்தத் தருவாயிலும், தாத்தாவின் நற்பண்புகள் எதுவும் குறையவில்லை. இன்று வரை யாரையும் முகம் சுளித்துப் பேசியதில்லை. இப்போதெல்லாம் தாகம் என்றால் ஒரு ஸ்பூன் தண்ணீர் மட்டுமே அவரால் குடிக்க முடிகிறது. “முழுங்க முடியில…” என்பார். வெறும் ஒரு ஸ்பூன் தண்ணீரைக் குடித்துவிட்டு, “தண்ணீ குடுத்ததுக்கு தாங்க் யூ” என்பார். எதற்காக நன்றி சொல்கிறார்! செய்வது கடமை ஆயிற்றே! ஆனால் அவர் அப்படிதான் ! தாத்தா விநாயகர் பக்தர். ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஒரு விநாயகர் கோவிலைக் கட்டி ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை நிர்வகித்து வந்தார். பல லட்சங்களை அந்தக் கோவிலிலுக்காக இறைத்திருக்கிறார். ஆனால் கோவில் வருமானத்தில் எதையும் தனக்கென்று அவர் எடுத்துக் கொண்டதில்லை. கோவில் வரவு செலவு கணக்கை ஒரு சிறு நோட்டில் எழுதி வைத்திருப்பார். பின்பு அவர் சொல்லச் சொல்ல பெரிய லெட்ஜரில் நான் எழுதுவேன். பால் வாங்கியது, பூ வாங்கியது, வஸ்திரம் வாங்கியது என்று ஒவ்வொரு செலவையும் தேதியிட்டு தெள்ளத் தெளிவாக எழுதி வைத்திருப்பார். ஐம்பது வருடக் கணக்கும் வரிசையாக பத்திரமாக வைத்திருக்கிறார். ஏன் இவ்வளவு பிரயத்தனப் பட வேண்டும்? நான் அவரைக் கேட்டதுண்டு. “நாளைக்கு யாரும் கேள்வி கேட்டுறக் கூடாது!” என்பார். தன் வாழ்வின் பெரும்பகுதியை, தன் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை அந்தக் கோவிலுக்காகச் செலவழித்த மனிதனை யார் கேள்வி கேட்கக்கூடும் என்று எண்ணுவதுண்டு. அதைப் புரிந்து கொண்டவராய், “கோவில் பொது சொத்து. அதனால யாருக்கும் கேள்வி கேட்குற உரிமை இருக்கு” என்பார். “நீங்க தான கட்டினீங்க !” “அப்படிலாம் பேசக்கூடாது. சாமிக்கு தொண்டு பண்றோம். அவ்ளோதான்” இதற்கு மேல் அவரிடம் பேசமுடியாது. மேம்பாலம் கட்டுவதற்காக கோவிலையும் சுற்றுப்புறத்தில் இருந்த கடைகளையும் இடிக்கப்போகிறோம் என்று வந்தவர்கள், கோவிலை மட்டும் விட்டுவிட்டு மேம்பாலத்தைக் கட்டிவிட்டு போனார்கள். “எல்லாம் விநாயகர் அருள்” என்று சொல்லிவிட்டு தாத்தா அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டார். ஆனால் கோவிலை இடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும், ஏராளமான மனுக்களைப் போட்டு, பல அரசு அலுவலகங்கள் ஏறி இறங்கி போராடி கோவிலைக் காப்பாற்றினார் என்பது பலருக்கும் தெரியாது. இன்று ஒரு டிரஸ்ட்டை அமைத்து அதனிடம் கோவிலை ஒப்படைத்து விட்டு எனக்கும் கோவிலுக்கும் சம்மந்தமில்லை என்று ஒதுங்கிக்கொண்டார். எப்படி ஒருவரால் இப்படி சுயநலமின்றி இருக்கமுடியும் என்று எண்ணி ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் போதாதென்று, ஒருநாள் என்னை அழைத்து, “என் பென்ஷன் அக்கௌன்ட்ல எவ்வளவு இருக்கு பாரு. கோவில்ல சிவலிங்கம் ஒன்ன பிரதிஷ்டை பண்ணிறலாம்” என்று சொல்லி மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். எதற்காக கோவிலுக்கு இவ்வளவு செய்ய வேண்டும் என்று என் பகுத்தறிவு எட்டிப்பார்க்கும் போதே, “என் மிச்ச காசெல்லாம் எடுத்து டெபாசிட் பன்னிரு. வர வட்டில பசினு வர்றவங்களுக்கு சோறு போடு” என்று கூறி என் வாயை அடைத்திருக்கிறார். “ஓ தர்மகர்த்தா பேரனா நீ! உங்க தாத்தா மனசுலாம் யாருக்கும் வராதுப்பா” என்று பலர் என்னிடம் சொன்னதுண்டு. ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமில்லை என்று நான் எண்ணி மகிழ்ந்த தருணங்கள் அவை. தாத்தா வாக்கிங் சென்றபோது அவருக்குத் துணையாகச் சென்ற நாட்களிலெல்லாம் எதிர்கொண்டவர்கள் பலரும் தாத்தாவை நலம் விசாரிப்பதைப் பார்த்திருக்கிறேன். இவ்வளவு மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறாரே என்று வியந்திருக்கிறேன். உண்மையில், அவரை எண்ணி வியக்க இன்னும் ஏதேதோ நிகழ்வுகள் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் பணிபுரிந்த தாத்தா, பின்பு சுங்கவரித் துறையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். முதல் நாள் முடிவிலேயே ‘உங்க பங்கு’ என்று லஞ்சத்தை நீட்டியிருக்கிறார்கள் சக ஊழியர்கள். அதை வாங்க மறுத்தவர் அடுத்த நாளிலிருந்து வேலைக்குப் போகவில்லை. “நான் காந்தியவாதி. லஞ்சம் வாங்குறதுலாம் அசிங்கம். அதான் மறுநாளே ராஜினாமா கடுதாசி அனுப்பிட்டேன். ஒருநாள் வேலை பாத்த சம்பளம் ஒரு ரூவாய் ஒருமாசம் கழிச்சு வந்துச்சு. அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் வேலையே இல்ல. குடும்பத்துல ரொம்ப கஷ்டம் தான். ஆனா கைசுத்தம்னு நினச்சு இன்னைக்கும் சந்தோஷ படலாம்” இதை நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்த நாளில் சொன்னார். ‘இதை ஏன் இப்போது சொல்கிறார்’ என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவரிடம் எதையும் கேட்கவில்லை. “நீலாம் கஷ்டம் தெரியாம வளந்தவன். எந்த சூழ்நிலை வந்தாலும் கையும் மனசும் சுத்தமா இருக்கணும்” என்று அவரே சொல்லி முடித்தார். இப்போது தாத்தாவைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். தாத்தாவிற்கு உடல் நலிந்துவிட்டாலும், நினைவு தவறவில்லை. எல்லோரையும் நினைவுவைத்து பேசுகிறார். எல்லோருமே தாத்தாவைப் பற்றி என்னிடம் உயர்வாகப் பேசுகிறார்கள். தாத்தா யார் யாரையோ படிக்க வைத்திருக்கிறார். வளர்த்து விட்டிருக்கிறார். யார் யாருக்கோ பணம் கொடுத்து உதவி இருக்கிறார். “எனக்கு கேன்சர்னு திருச்சில கை விரிச்சிட்டாங்க தம்பி. உங்க தாத்தா தான் மெட்ராஸ் ஹாஸ்பத்திரில வச்சு பாத்தாரு. இன்னைக்கு உசிரோட இருக்கேன்னா… அவர நினச்சுப் பாக்கணும்” என்று நேற்று தாத்தாவைப் பார்க்க வந்த ஒரு தாத்தா சொல்லிவிட்டு அழுதார். தாத்தாவைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் இப்போதெல்லாம் அதிகம் வருகிறது. ஆம். ஹீரோக்கள் சினிமாவில் மட்டும் இருப்பதில்லை. அத்தகைய ஹீரோ தன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை இவை தாத்தாவின் கடைசி நாட்களாக இருக்கலாம். என் பகலும் இரவும் தாத்தாவிற்காக தாத்தாவிற்கு அருகிலேயே கழிகின்றன. தாத்தா ஏராளமான கதைகள் சொல்கிறார். தொண்ணூற்றைந்து வருட வரலாறு அந்தக் கதைகளுக்குள் ஒளிந்திருக்கிறது. தாத்தாவின் கதைகளில் நேதாஜி வருகிறார், காந்தி வருகிறார், வெள்ளைக்கார துரைமார்கள், இரண்டாம் உலகப் போர், ஸ்டீம் என்ஜின், சிலோன், இன்னும் யார்யாரோ, ஏதேதோ. “என் கதைய தம்பி எழுதுவான்” என்று வருபவர்களிடம் சொல்லிவிட்டு சிரிக்கிறார். எனக்கு அழுகை வருகிறது.