[TEV-Book-Wrapper-opt]    தொடர்பு எல்லைக்கு வெளியே சிறுகதைகள் சித்ரன் ரகுநாத் தொடர்பு எல்லைக்கு வெளியே சிறுகதைகள் உரிமம்: சித்ரன் ரகுநாத் Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0   சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது. [cc] முதல் மின்பதிப்பு: ஆகஸ்டு 2015 அட்டை வடிவமைப்பு: சந்தோஷ்குமார் santhosh@happilyeverafter.in மின்னூல் வெளியீடு - FreeTamilEbooks.com Thodarbu Ellaikku Veliyae Short Stories This work is licensed under a  Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0  International License. First electronic edition: August 2015   Cover design: Santhoshkumar santhosh@happilyeverafter.in      சமர்ப்பணம் எந்நாளும் எனக்கான க்ரியா ஊக்கியாக விளங்கும்  எழுத்தாளர் சத்யராஜ்குமாருக்கு.. முன்னுரை கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ’மனதில் உனது ஆதிக்கம்’ என்கிற எனது முதல் சிறுகதைத் தொகுப்பு தந்த உற்சாகம் மேலும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதில் கவனம் கொள்ள வைத்தது. நிறைய இல்லாவிட்டாலும் எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே பத்திரிக்கைகளிலும், இணையத்திலுமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி வெளியான சில சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் இருபது கதைகள் உள்ளன. இந்தச் சிறுகதைகளின் கருக்கள் பெரும்பாலும் அகண்ட வாழ்வின் சின்னத் துணுக்குகளால் கோர்க்கப்பட்டவை. எதிர்ப்படுகிற ஏதாவது சம்பவங்களில் கிளர்ந்த சிறு பொறிகள் சிறுகதைகளாய் வடிவம் பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகள் கடந்த ஏழெட்டு வருட கால கட்டங்களில் எழுதப்பட்டவை. இந்தத் தொகுப்பை மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இவைகளை வெளியிட்ட கல்கி, குமுதம், ஃபெமினா தமிழ், நம் தோழி ஆகிய பத்திரிக்கைகளுக்கும், தமிழோவியம்.காம், பதாகை.காம், செந்தமிழ்.காம் ஆகிய இணைய இதழ்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். சித்ரன் ரகுநாத் சென்னை. உள்ளே.. மறக்க முடியாதவன் நீரோட்டம் புலம் தனி வழி வீடு அறை ஜனனம் விரல்கள் திருப்பம் ஆரஞ்சுப் பழங்கள் பேறு அழகிய தீயே இறந்தவன் மழைக்காதல் நிருபமா : சில குறிப்புகள் தூரப்பார்வை தொடர்பு எல்லைக்கு வெளியே டுகாட்டி அனர்த்தம் படகு மறக்க முடியாதவன் அவனை எங்கேயோ பார்த்தது போலிருந்தது. அந்த விடைத்த மூக்கு. நடுவகிடு எடுத்து முன் நெற்றியில் புரளும் முடி. அடுத்தவரை கடுகளவும் கவனியாமல் எங்கோ வெறித்த யோசனைப் பார்வை. ஆமாம். இதே ஆளை நிச்சயம் எங்கேயோ பார்த்திருக்கிறேன். அவன் அந்த ஹோட்டலில் எனக்கு அடுத்த மேஜையில் உட்கார்ந்திருந்தான். நான் அவனை மிக தீர்க்கமாய் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை அறியாமல் மிக நிதானமாக டபரா டம்ளரில் காப்பியை உறிஞ்சிக்கொண்டிருந்தான். என் மூளைக்குள் பரபரவென்று தேடல் நடந்துகொண்டிருந்தது. எங்கே? எங்கே? எங்கே பார்த்திருக்கிறேன் இவனை? ஒரு பத்து விநாடிகள் போதாதா இவனை ஞாபக அடுக்கிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு? ஏற்கனவே இவனது அங்க அடையாளங்கள் எனது மனதில் துல்லியமாகப் பதிந்திருக்கிறது. இல்லாவிட்டால் இவனைப் பார்த்ததும் மண்டையில் மணியடித்திருக்காது. ஆனால் மணி சரியாய் அடிக்கவில்லை. அவன் யார் என்று சட்டென்று சொடக்குப் போட்டது போல ஞாபகம் வரவில்லை. ச்சே.. ரொம்ப மோசம்! இதற்கு முன்னர் இவ்வாறு நடந்ததேயில்லை. பார்க்கிற ஆட்களை பார்த்த இடத்தில் பார்த்த மறுகணம் இன்னார் என்கிற விவரத்தைச் சொல்லும் ஞாபகத்திறன் கொண்டவனல்லவா நான்! இப்போது என்ன ஆயிற்று எனக்கு? அவன் காபி குடித்து முடித்துவிட்டு பில் தொகையை பேரரிடம் கொடுத்துக்கொண்டிருந்தான். இதோ இப்போது வெளியேறி தெருவின் அடர்ந்த ஜனத்திரளில் கலந்துவிடுவான். அப்புறம் அவனை மறந்துவிடவேண்டியதுதான். அதெப்படி? மறக்க வேண்டும் என்றால் முதலில் ஞாபகமிருக்க வேண்டுமல்லவா? அப்புறம்தானே மறப்பதற்கு? அவன் யார் என்றே இன்னும் புலப்படவில்லையே. என்மேல் மிதமானதொரு அவமானம் கவிந்ததுபோல் உணர்ந்தேன். அடுத்த மேசையில் அமர்ந்திருக்கிற எனக்கு நன்கு பரிச்சயமான ஒரு முகத்தை யார் என்று நினைவு படுத்திக் கொள்ள ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் முடியவில்லை என்கிற ஏமாற்றம் எனக்கு என்னவோ போலிருந்தது.. அவனை எங்கேயோ பார்த்திருக்கிறேன். அவன் முகம் மனதில் ஒரு புள்ளியாய் எங்கேயோ பதிந்திருக்கிறது. இப்போது மறுபடியும் பார்க்க நேரிட்டுவிட்டது. உலகம் உருண்டைதான் என்பது மறுபடியும் நிரூபணமாகிவிட்டது. அவன் மேசைக்கடியில் வைத்திருந்த ட்ராவல் பேக்-ஐ எடுத்துக் கொண்டு வாசலைப் பார்த்து நடந்தான். இப்போது அவனது பின்புறம் தெரிந்தது. நல்ல வெளிர் நீலத்தில் ஜீன்ஸ் அணிந்து கருப்பு நிற காலர் இல்லாத டி-சர்ட் அணிந்திருந்தான். காலில் கான்வாஷ் ஷூ. கொஞ்சம் கூட அவசரம் இல்லாமல் நிதானமாக நடந்துபோய்க் கொண்டிருந்தான். அவன் பின்னாலேயே என் பார்வை நீண்டு சென்றது. அவன் போவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் யாரென்று தெரியாமல் வீட்டுக்குத் திரும்பிப் போவது என்னால் இயலாத காரியமென்று தோன்றியது. அவனை பின் தொடரவேண்டும். அவன் நிச்சயம் இந்தப் பகுதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும். இங்கேதான் பக்கத்தில் எங்கேயாவது! அவன் பின்னாலேயே நடந்தால் அவன் இருப்பிடம் தெரிந்துவிடப் போகிறது. இத்தனை பரிச்சயமான முகத்தை நொடியில் ஞாபகப்படுத்திக் கொள்ளமுடியாததன் தவிப்பு மனதிற்குள் சுழன்று ஒரு தவிர்க்க இயலாத அவஸ்தை மையமாய் நிலை நின்றது. பில் கொண்டுவந்த பேரரிடம் அவசரமாய் பணம் கொடுத்துவிட்டு வாசலுக்குப் பாய்ந்தேன். அவன் ரொம்ப தூரம் போய்விடுவதற்குள் அவனைப் பிடித்துவிட வேண்டும். அவன் ஹோட்டல் வாசலிலிருந்து இடது பக்கம் திரும்புவதை கவனித்திருந்தேன். நானும் அதே திசையில் நகர்ந்தேன். ஹோட்டல் வாசலையொட்டிய கடைத் தெருவில் சோடியம் வேப்பர் விளக்குகளுக்குக் கீழே நடைபாதைக் கடைகள். பழ வண்டிகள். ஜூஸ் ஸ்டால், பூ விற்பவர்கள். தெருவெங்கும் பரபரப்பாய் மனிதர்கள். கார்கள், ஸ்கூட்டர்கள். ஸ்கூட்டிகள். நகரச் சொன்ன ஹாரன்கள், சைக்கிள் மணி. எல்லாவற்றையும் சடுதியில் தாண்டி அவனைத் தேட ஆரம்பித்தேன். அவன் ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. இத்தனை தலைகளுக்குள் எங்கேயிருக்கிறான்? அவனைப் பார்த்துவிட்டேன். பக்கத்து பஸ் நிறுத்தத்தின் குடையின் கீழ் பஸ் வரும் திசையைப் பார்த்தவாறு நின்றிருந்தான். அவன் வேறு எங்கோ போவதற்காக நின்று கொண்டிருக்கிறான் என்பது உறைத்தது. நான் மெதுவாக அவன் பக்கத்தில் போய் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு அவன் முகத்தை இன்னும் உற்றுப் பார்த்தேன். அண்மையில் பார்க்கையில் அந்த முகம் இன்னும் பரிச்சயமானது போலத் தோற்றமளித்தது. அவன் என்னை லேசாகத் திரும்பிப் பார்த்தான். ஒரே ஒரு நொடி. பின்னர் திரும்பிக் கொண்டான். பஸ் வருகிறதா என்று மறுபடியும் பார்க்க ஆரம்பித்தான். ப்ராட்வே போகிற 21 வருவதைப் பார்த்ததும் அவன் கால்கள் சிறிது முன்னுக்கு நகர்ந்தன. நான் ஓரிரு விநாடிகள் குழப்பமாய் நின்றேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? பேசாமல் வீட்டுக்குத் திரும்புவதா? அல்லது மேலும் பின் தொடர்வதா? தொடர்வது என்றால் முன் பின் தெரியாத இவன் பின்னால் ஒரு அல்ப காரணத்திற்காக செல்வதென்பது எத்தனை பைத்தியக்காரத்தனம்? எனக்கு வேறு வேலை வெட்டி இல்லையா என்ன? அவன் போகட்டும். பஸ்ஸில் நெரிக்கிற கூட்டத்துக்குள் அவன் மறுபடி தொலைந்து போகட்டும். நான் என் பாதையில் திரும்பிப் போகிறேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. 21 வந்து நின்று அவன் அதில் தொற்றிக்கொண்டான். அநேகமாக அவன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குத்தான் போவான் என்று யூகித்துக்கொண்டேன். கையில் ட்ராவல் பேக் இருக்கிறதல்லவா? நான் ஒரு கணம் ஸ்தம்பித்துப் பின்னர் சட்டென்று முடிவு செய்து அதே பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். அவனை அடையாளப் படுத்திக் கொள்ள எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. ஆக நான் அத்தனை சீக்கிரம் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுப்பதாயில்லை. அவன் யாரென்று வீட்டுக்குப் போய் நிதானமாய் யோசித்துப் பார்த்து கூட கண்டுபிடிக்கலாம். சட்டென்று பொறி தட்டி ‘அட இவன்தானா?’ என்று பளிச்சென்று மூளையில் மின்னலடிக்கலாம். ஆனால் அதைவிட அவன் என்முன்னே என் பார்வையில் இருக்கும்போதே யோசித்துக் கண்டுபிடிப்பதுதான் இன்னும் வசதி. ஒரு வேளை நடுவழியிலேயே மின்னலடித்துவிட்டால் ‘அப்பாடா’ என்று ராயப்பேட்டையிலோ, மவுண்ட் ரோட்டிலோ இறங்கித் திரும்பிவிடலாம். ஏன் இத்தனை அவஸ்தை? சின்ன வயதிலிருந்து தொடர்ந்துவந்த பழக்கம் இது. ஒரே ஒரு முறை எங்காவது ஒரு கணம் மட்டுமே பார்க்க நேரிட்ட பல பேர்களை அடுத்த தடவை வேறு எங்கேயாவது பார்க்கிறபோது இந்த மின்னல் பளிச்சிட்டுவிடும் என்று சொன்னேனில்லையா?. இது பல முறை என் அனுபவத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஒரு முறை தீவுத்திடல் பொருட்காட்சியில் ராட்டினம் ஆட டிக்கட் வாங்கும்போது கவுண்டரில் பார்த்த பெண்மணியை மறுமுறை கற்பகாம்பாள் சன்னதியில் பார்த்தபோது இழை பிசகாமல் ஞாபகம் வந்திருக்கிறது. இன்னொரு முறை கார்த்திக்கிடம் ஸ்பென்சரில் அமெரிக்கன் கார்ன் தின்று கொண்டிந்த ஒரு குண்டு ஆசாமியைக் காட்டி ’சத்யம் தியேட்டர் திரைப்பட இடைவேளையின் போது கழிவறையில் இவரை என் பக்கத்து ஸிங்கில் பார்த்திருக்கிறேன்’ என்று சொல்லி அவன் முறைப்பை வாங்கிக் கொண்டேன். ரோட்டில் போகும்போது அல்லது கடையில், ஆஸ்பத்திரியில், கடற்கரையில், மின்சார ரயிலில், கோவிலில், வீட்டுவரி கட்டுகிற இடத்தில் என்று இது போன்று அடையாளம் காணுதல் சட்டென்று நிகழ்ந்துவிடுகிறது. ஒரே நொடியில்.. ரொம்ப யோசிக்காமல்.. உடனே! முகங்களை அடையாளம் காணும் இத்தனை துல்லியமான ஞாபக சக்தி உனக்கு எப்படி வாய்த்தது என்று நிறைய பேர் ஆச்சரியப்பட்டுக்கூட கேட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இது எனக்கு ஒரு பொழுதுபோக்கு போலவும், பெருமையாகவும் கூட ஆகிவிட்டிருந்தது. அது ஒரு பிறவித் திறமை அல்லது வரப் பிரசாதம் என்றெல்லாம் முழுசாய் சொல்லிவிட முடியாது. எப்படியென்றால்.. எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. தினசரி பார்க்கிற முகங்களை ஒரு சில விநாடிகளாவது உற்றுப் பார்த்துவிடுவது. ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு தனித்தன்மையிருக்குமல்லவா? வித்தியாசமான மூக்கு, புருவம் சரிந்த கண்கள். ஓரம் சுழிந்த உதடுகள். வரிசை அல்லது வரிசை தவறின பற்கள், சுருள் முடி, நீளக் கழுத்து, குள்ளம், இரட்டை நாடி அல்லது மிகப் பரிச்சயமான ஒரு ஆளை நினைவு படுத்தும் சாயல், துளைக்கும் பார்வை, மானரிசம், உடல் மொழி அல்லது நடை. ஏதோவொன்று! அந்த முறை அந்த வித்தியாசத்தை அந்த குறிப்பிட்ட முகத்தின் தனித்தன்மையை என் மனதிற்குள் ஏற்றிக் கொண்டுவிட்டால் அப்புறம் எங்கே பார்த்தாலும் சொல்வேன். ஒருமுறை ரயிலில் செல்லும்போது எதிரிலிருந்தவனுடைய மனைவிக்கு வித்தியாசமான முகம். கொஞ்சம் சுமாரான அழகுதான் என்றாலும் யாரையும் முதல் பார்வையில் திரும்பிப் பார்க்கும் வகையில் இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும். அவள் ஒரு மாதிரி சீனப் பெண்களை ஒத்த கண்களை உடையவளாயிருந்தாள். அந்த மாதிரிக் கண்கள் அவள் சிரிக்கத் தேவையில்லாமலேயே அவளுக்கு ஒரு மலர்ச்சியான ஈர்ப்பை முகத்தில் தக்கவைத்திருந்தது என்றே எனக்குத் தோன்றியது. அதிகம் காணக் கிடைக்கிற கண்களின் வகை அல்ல அது. சற்றே வித்தியாசமாய் தனித்துவமாய். பார்த்துக் கொண்டேயிருந்தால் அரைமணி நேரத்தில் அவள் வசீகரமான உலக அழகியாய் தோன்ற ஆரம்பித்துவிடுவாள் என்று தோன்றியது. நான் அவளை அடுத்த முறை பார்க்கும்போது நிறைய யோசனைகளுக்கு அவசியமின்று உடனே ’ரயிலின் எதிர் ஸீட்’ என்று சொல்லிவிடமுடியும். சீனக் கண்ணழகி! இந்த எண்ண ஓட்டத்தில் நான் அவளை ரொம்பவும் உற்றுப் பார்த்துவிட்டேன் போலிருக்கிறது. அவள் கணவன் என்னை விரோதப் பார்வையுடன் முறைக்க ஆரம்பித்தான். ’அநாகரீகனே’ என்று செய்தியுடன் அவன் கண்களில் எரிச்சல் தேங்கியிருந்தது. நான் சுதாரித்து மறுபக்கம் திரும்பிக் கொண்டேன். முகங்களை உற்றுப் பார்க்கும் இந்த கெட்ட பழக்கத்திலிருந்து என்னை மீட்டெடுக்க நான் பட்ட பிரயாசைகள் தோல்வியில் முடிந்திருந்தன. முகங்கள். கோடி முகங்கள். ஒரு வேளை நான் சீனாவில் பிறந்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காதென்று தோன்றியது. அங்கே எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி முகம். ராயப்பேட்டையிலோ, மவுண்ட் ரோட்டிலோ இறங்கி வீடு திரும்புகிற அதிர்ஷ்டம் இன்றைக்கு வாய்க்கவில்லை எனக்கு. பஸ்ஸில் அவன் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அவன் ரயில் நிலையத்திற்குத்தான் டிக்கட் வாங்கினான் என்பதை நான் கவனித்திருந்தேன். திட்டமிடப்படாத பயணமாகிவிட்டது இது. ரொம்பப் பசிக்கிறதே என்று ஒரு சாம்பார் வடை சாப்பிடப் போனவனுக்கு இது திடீர்த் திருப்பம். ச்சே! இப்படி ஒரு ஞாபக மறதியா எனக்கு? அவன் யார்? ஏதாவது கல்யாணத்தில் பார்த்தேனா? பள்ளிக் கூடத்தில் மகளைக் கொண்டுபோய் விடும்போது எதிர்பட்டவனா? சினிமாவில் நடிப்பவனா? தொலைகாட்சியில் ஏதாவது பேட்டியில் வந்தானா? என் தெருவிலேயே எங்காவது குடியிருப்பவனா? அல்லது என் சர்வீஸ் செண்டருக்கு என்றாவது விஜயம் செய்த வாடிக்கையாளனா? என்றாவது ரோட்டோரம் இளநீர் சாப்பிடுகையில் பக்கத்தில் நின்றிருந்தானா? அல்லது இந்த முகவரி எங்கேயிருக்கிறதென்று வழியில் மடக்கி இவனை விசாரித்திருக்கிறேனா? யார்? எங்கே? மண்டை சூடாகிவிட்டது. இதோ ஒருவன் தன் பின்னால் நின்றுகொண்டு மனக் குடைச்சலில் மறுகுகிறானே என்ற கவலை துளியுமின்றி அவன் தன் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டே வருகிறான். யோசனையின் கனம் என்னை அழுத்தியிருந்தது. சென்ட்ரல் வந்துவிட்டது. அவன் நிதானத்துடன் மெதுவாய் இறங்கினான். நான் சற்றே இடைவெளிவிட்டுப் பின் தொடர்ந்தேன். அவனை மாதிரியே ஏகப்பட்ட ஜீன்ஸ்கள். கருப்பு பனியன்கள். பயணப் பைகள். ஜனத்திரள்களுக்கு நடுவே அவனைத் தொலைத்துவிடாமல் முன்னேற வேண்டியிருந்தது. பயணிகளின் இரைச்சல்களுக்கிடையே அறிவிப்புக் குரல் தத்தளித்துத் திணறியது. பெருநகரத்தின் பரபரப்பான வாழ்க்கையின் தினசரி ஆரம்பம் இதுபோலவொரு இடத்திலிருந்துதான் துவங்குகிறதென்று தோன்றியது. அவன் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகளைக் காட்டும் மின்னணுத் திரையின் எதிரில் நின்று ஒரு கணம் அண்ணாந்து பார்த்தான். ஒன்பதாவது ப்ளாட்பாரத்தை நோக்கி அவன் கால்கள் நடந்தன. கோயமுத்தூர் செல்கிற ரயில் அது என்று தெரிந்தது. ப்ளாட்பாரத்தின் முக்கால்வாசி தூரத்தை அளந்து நடந்துவிட்டு ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டிக்குமுன் நின்றான். பெயர்ப்பட்டியலில் விரல் ஓட்டி தன் பெயரிருப்பதை உறுதி செய்துவிட்டு பெட்டிக்குள் ஏறினான். பெட்டிக்குள் அநேக இருக்கைகள் ஏற்கனவே நிரம்பியிருந்தன. ஒரு வேளை ரயில் புறப்படுகிற சமயமாயிருக்கும். அவன் ஜன்னலோரமாய் ஒரு இருக்கையில் வந்து உட்கார்ந்தான். ஜன்னல் வழியே பிளாட்பாரத்து மனிதர்களை அசுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அடப் பாவி! ஏழு கிலோமீட்டர் ஒருவன் தன்னை பின் தொடர்ந்து வந்து கவனித்துக் கொண்டிருக்கிறான். அதை அறியாமல் தேமே என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். இவனையெல்லாம் என்ன செய்வது? நான் நினைத்தது சரிதான். அறிவிப்பினைத் தொடர்ந்து பச்சைவிளக்கு எரிய ரயில் ஊளையிட்டது. இப்போது நான் என்ன செய்யவேண்டும்? அவனுடனேயே அவன் செல்லுமிடத்துக்கு செல்வதா? எனக்கு திடீரென்று அந்த ரயிலில் தொற்றிக் கொள்ளலாம் என்றுதான் தோன்றியது. இதோ ஒரு சில விநாடிகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன. அவ்வளவே. அப்புறம் அவன் ரயிலோடு நகர்ந்துவிடுவான். ஒரு கருநிழலைப் போல என்மேல் ஒரு ஆயாசம் வந்து கவிந்துகொண்டது. இப்போது ரயில் நகரத்துவங்கியது. ஜன்னல் வழியாகத் தெரியும் அவன் முகத்தை ஒரு முறை ஆழமாகப் பார்த்தேன். அப்போதுதான் நான் சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது என்னவென்றால், அவன் நகர்கிற ரயிலின் ஜன்னல் வழியாக என்னை திடீரென்று நன்கு உற்றுப் பார்த்து பின்பு சற்றே ஆச்சரியமடைந்தவனைப் போல முகம் மாறினான். பின்பு என்னை நோக்கி லேசாகச் சிரித்துக் கையசைத்தான். என்னைப் பார்த்துத்தானா? நான் நம்பிக்கையற்று லேசாய்த் திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்னால் ஒரு கடை மட்டுமே இருந்தது. அப்படியானால் அவன் என்னைப் பார்த்துச் சிரித்திருப்பதற்கான வாய்ப்பு மட்டுமே உள்ளது.  யார்ரா நீ? இதுவரை கண்டறியாத பரபரப்புடன் ரத்தம் உடலெங்கும் வேகமெடுக்க நான் தீர்மானித்தேன். அவனுக்கும் எனக்கும் நடுவே ஏதோ ஒரு இழை உள்ளது. இல்லையென்றால் ஏதோ ஒன்று என்னை இதுவரையில் கூட்டிவந்திருக்காது. இருக்கிற மிகக் குறைந்த அவகாசத்தில் நான் அதை இப்போதே உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும். ரயில் லேசாக வேகமெடுக்க ஆரம்பித்திருந்தது. நான் நகர்கிற பெட்டியை நோக்கி வேகமாக ஓடினேன். இன்னும் இரண்டே எட்டுக்களில் அவனைப் பிடித்துவிடலாம். அவன் யாரென்று தெரிந்து கொண்டே ஆகவேண்டும். அவன் என்னை இப்போது ஏறிட்டுப் பார்த்தான். அவன் முகத்தில் புன்னைகை மறைந்து லேசாய்ப் பதட்டம் தெரிந்தது. திடீரென்று யாரோ ஒருவன் என் முன்னே ஓடுகிற ரயில் பெட்டியிலிருந்து ப்ளாட்பாரத்துக்குக் குதித்தான். நான் அவனைத் தவிர்க்க முயற்சித்து முடியாமல் தட் என்று அவன் மேலே வேகமாய் மோதினேன். இருவரும் தடுமாறி தடாலென கீழே விழுந்து உருண்டோம். சட்டைப் பையிலிருந்து என் செல்ஃபோன் வெளியே அதிர்ந்து விழுந்தது. நான் ஒரு நொடியில் சுதாரித்து எழுந்து கொண்டேன். அவன் என்னைப் பார்த்து ‘ஸாரி’ என்றான். நான் செல்ஃபோனை பொறுக்கிக்கொண்டேன். அதன் திரை விரிசல் விழுந்திருந்தது. எட்டாயிரத்தைந்நூறு ரூபாய்க்கு போன வாரம் வாங்கியது. நான் விரக்தியாய் ரயில் போகிற திசையை பார்த்தவாறு நின்றிருந்தேன். மேலும் வேகமெடுத்து அவன் பெட்டி இன்னும் தூரமாகப் போய்விட்டிருந்தது. இப்போது ரயிலின் கடைசி பெட்டியின் X தெரிந்து பின்பு அதுவும் மறைந்தது. நான் சொல்லவொண்ணாத ஏமாற்றத்துடன் கால்கள் தயங்க வாசலைப் பார்த்து நடக்க ஆரம்பித்தேன். திடீரென்று ப்ளாட்ஃபாரச் சீட்டு வாங்கவில்லையென்று உறைத்தது. நானொரு முட்டாள். அவன் யாரென்று கடைசி வரை ஞாபகம் வரவில்லை. ஆனால் இனிமேல் அவனை மறக்க முடியாதென்று தோன்றியது. *** நீரோட்டம் “ஆகாஷை மறுபடி எங்கேயாவது மீட் பண்ணியா?” என்றாள் பிரமிளா. அப்பாடா! ஒரு வழியாகக் கேட்டுவிட்டாள். இந்தக் கேள்வியை அவள் நிச்சயம் கேட்காமல் இருக்க மாட்டாள் என்று அவனுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லிக்கொண்டேயிருந்தது. இதோ கேட்டேவிட்டாள்! அதைக் கேட்கும்போது அவள் குரலில் ஏதேனும் ஆர்வம் தென்பட்டதா என்பதை அறிய முற்பட்டான் அருண். ஆனால் ரொம்ப சாதாரணமான குரலில்தான் அவள் அதைக் கேட்டாள். அவள் கேட்காமல் இருந்தால்கூட அவன் ஆகாஷைப் பற்றி அவளிடம் சொல்வதாகத்தான் இருந்தான். மத்ய கைலாஸில் கிரீன் சிக்னல் விழுந்ததும் சட்டென்று கியர் மாற்றி காரைக் கிளப்பினான் அருண். சீரான வேகத்தைத் தொட்டுவிட்டு முன்னிருக்கையிலிருந்த அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அந்தக் கேள்வியைக் கேட்டதன் மிகப் பெரிய தயக்கத்தோடு அவள் கண்கள் அவனை கூர்ந்து கவனித்ததைப் பார்த்தான். அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “ஏன் சிரிக்கறே? தேவையில்லாத கேள்வியக் கேட்டுட்டனா?” என்றாள். அவன் பதில் சொல்லாமல் மறுபடி சிரித்தது அவளை லேசாய் தர்மசங்கடப் படுத்தியது போலிருந்தது. திடீரென அவள் மெளனமாகி கண்ணாடிக்குப் பின் நகரும் கட்டிட வெளிச்சங்களை வெறிக்க ஆரம்பித்தாள். காருக்குள் ஏதோ எஃப்.எம்-மின் RJ மொக்கைகளுக்கப்புறம் “கண்கள் இரண்டால்..” என்று ஒரு வழியாய் பாட்டைப் போட்டார்கள். “ஆகாஷைப் பத்தி நீ எப்படியும் என்கிட்ட கேட்பேன்னு தெரியும் பிரமி! பரவாயில்லயே.. இத்தனை வருஷம் கழிச்சும் நீ அவனை ஞாபகம் வெச்சிருக்கிற.. கிரேட்! யெஸ்.. ஆகாஷை நான் மறுபடி பாத்தேன். ஆனா அவன் என்ன நிலைமைல இருந்தான் தெரியுமா?” என்றான். அவன் அப்படிச் சொன்னது அவளை லேசாய் திடுக்கிட வைத்திருந்தது. குழப்பமாய் அவன் முகம் நோக்கினாள். ஏன் அவனுக்கு என்ன ஆயிற்று என்பதுபோல பார்த்தாள். சாலையிலிருந்து கண்களை எடுக்காமல் காரை ஓட்டியபடியே அருண் சொன்னான். “எப்படி இருந்தவன்.. எப்படியோ ஆயிட்டான்.” திடீரென்று அவன் அடுக்கிக்கொண்டேபோன சஸ்பென்ஸின் கனம் தாங்காதவளாக பிரமிளா “அருண்.. இன்னும் இருபது நிமிஷத்தில ஏர்போர்ட் வந்துரும். ஃப்ளைட் ஏறி நான் பெங்களூரூக்குப் போயிருவேன். அப்றம் அங்கிருந்து அமெரிக்கா. அங்க போயிட்டேனா அப்றம் ஒரு மாதிரி அங்கயே ஹஸ்பெண்ட், குழந்தைகள்னு செட்டில் ஆயிருவேன்னு தோணுது. அதான் ப்ளான். சரி கிடைச்ச கேப்ல எல்லா ஃப்ரெண்ட்ஸையும் ஒரு தடவை பாத்துட்டு போயிரலாம்னு வந்தேன்.” கொஞ்சம் நிறுத்திவிட்டு போக்குவரத்தை வேடிக்கை பார்த்தபடி மேலும் தொடர்ந்தாள். “ஆகாஷையும் உன்னை மாதிரி நல்ல ஃப்ரெண்டாதான் நினைச்சேன். ஆனா அவன் தான் எம் மேல காதல் அது இதுன்னு ரொம்ப ஸீன் போட்டான். அதான் அவனை கண்டுக்காம விட வேண்டியதா போச்சு. இப்போ ஜஸ்ட் லைக் தட் அவனைப் பத்தி விசாரிக்கலாம்னு தோணிச்சு. எங்க இருக்கான் என்ன பண்றான்னு. அதான் கேட்டேன். அவனுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு.” சட்டென்று சாலையைக் கடக்க முயன்ற ஒருவனை ஹார்னால் திட்டிவிட்டு அருண் சொன்னான். “சொல்றேன் பிரமி! அதுக்கு முன்னால என்னோட ஒரு கேள்விக்கு பதில் சொல்லு” ’என்னடா கேள்வி! கேட்டுத்தொலை’ என்கிற மாதிரி அவள் அசுவாரஸ்யமாய் அருணைப் பார்த்தாள். அருண் ஸ்டியரிங்கில் தாளம் போட்டபடி “உனக்கு ஆகாஷை ஏன் புடிக்காமப் போச்சு?.” என்றான். “அவன் ரொம்ப நல்ல டைப்பாதானே இருந்தான்?. ரொம்ப அமைதியா அவனுண்டு அவன் வேலையுண்டுன்னு இருப்பான். அவன் பேசினாக் கூட யாருக்கும் கேக்காது. அவ்ளோ ஸாஃப்ட். ஆளு வேற ரொம்ப ஹாண்ட்சம்மா இருப்பான். பொண்ணுங்க எல்லாம் அவன்கிட்ட வழிஞ்சு வழிஞ்சு போய்ப் பேசுவாங்க. ஆனா அவந்தான் பொண்ணுங்கன்னா கொஞ்சம் கூச்சப்படுவான். தங்கமான பையன். எல்லார் கூடவும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பான். உன்னை லவ் பண்றேன்னு உங்கிட்ட சொல்றதுக்கு எவ்ளோ தவிச்சான் தெரியுமா? ஆனா அவன் லக்கி ஃபெல்லோ. நல்லவேளை நீ அவன் காதலை ஏத்துகிகிட்டு அவனுக்கு வாழ்வு குடுக்கலை. இப்ப நீ ரெண்டு மடங்கு குண்டாகி மாமி மாதிரி ஆயிட்டே. தப்பிச்சான் அவன்!” என்று பலமாகச் சிரித்தான். பிரமிளா அவனை பொய்யாக முறைத்து “இந்த கிண்டலெல்லாம் வேணாம். நீ மட்டும் என்ன?” என்றாள். அப்புறம் கொஞ்சம் ஸீரியசாக நெற்றியைத் தேய்த்து யோசித்தாள். அப்புறம் சொன்னாள். “ஆகாஷ் ரொம்ப நல்லவன்தான். அவன் என்னை லவ் பண்றேன்னு தயங்கித் தயங்கி லெட்டர் எழுதினப்போ அவன் மேல லேசா க்ரஷ் மாதிரி ஏதோ ஒரு எழவு எனக்கும்கூட வந்துச்சு. அது சும்மா லேசாதான். ஆனா அவனோட கூச்ச சுபாவம் இருக்கு பாரு. அதான் பிரச்சனையே. ஐயோ! அதான் என்னை எப்பவும் கடுப்பாக்கற விஷயம். அது என்ன பொம்பள ஆம்பளன்னு யார்கிட்ட பேசறதுன்னாலும் அப்படி தயங்கறது?. பொண்ணுங்க கூட பரவால்ல. நேரா நிமிர்ந்து நின்னுகூட பேசமாட்டான் அவன். ஸ்விம்மிங் பூல்-க்கு போனாக் கூட சட்டையை கழட்டக் கூச்சப்படுவான்-னு ராஜூ ஒரு தடவை சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அது தவிர புவர் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ். அது எனக்கு ஒத்து வரும்னு தோணல. நான் முழுக்க முழுக்க அப்பா கவனிப்பில வளர்ந்த பொண்ணு. அவரோட கம்பீரம், தோரணையெல்லாம் பாத்துப் பழகின பொண்ணு. எங்கேயும் ரொம்ப போல்டா நின்னு பேசுவார். அவர் கண்ணைப் பாத்துப் பேசறதுக்கு அவர் கிட்ட வேலை செஞ்சவங்க ரொம்ப தயங்குவாங்க. அவ்ளோ பவர்ஃபுல். தன் அப்பா மாதிரி இருக்கிற கணவரைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்கன்னு எங்கேயோ படிச்சிருக்கேன். நானும் அப்படித்தான் விரும்பினேன். ரொம்ப ப்ராக்டிக்கலா அவர் மாதிரி ஒரு ஆளை ஹஸ்பண்டா கற்பனை பண்ணினேன். அதனால ஆகாஷ் மாதிரி கூச்ச சுபாவமான பசங்க எனக்கு கொஞ்சம் அலர்ஜி. அதெல்லாம் என் கேரக்டருக்கு ஒத்து வராதுன்னு தோணிச்சு. அதுவுமில்லாம பெரிசா இந்த காதல் மேல எல்லாம் பிடிப்பு வர்ரதுக்குள்ள அப்பா ஒரு நல்ல பிஸினஸ் மேனா பாத்து கல்யாணமும் பண்ணி வெச்சுட்டார். அப்றம் அவன் என்ன பண்ணினான்னு எனக்கு நிஜமாவே தெரியாது. தாடி விட்டுட்டு அலைஞ்சானா?” சில நிமிடங்கள் இருவரும் மெளனமாயிருந்தார்கள். கார் கத்திப்பாரா ஜங்ஷனைக் கடந்து விரையும்போது எஃப் எம்மில் அடுத்த பாடலான “அடியே கொல்ல்ல்லுதே”-வை கொஞ்சம் சத்தம் குறைத்தான். பாடலுடன் லேசாய் விசிலடித்தான். “பிரமி.. நீ சொல்றது கொஞ்சம் லாஜிக்கலாதான் இருக்கு. இந்த லவ் சமாச்சாரமெல்லாம் ரெண்டு சைடும் இருக்கவேண்டிய அவசியமில்ல. ஆனா அவன் உன்ன நெனச்சு ரொம்ப உருகினான். ஆனா தாடி வளத்தானான்னு ஞாபகமில்ல. நான்கூட அவன் சார்பா உன்கிட்ட பேசலாம்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா ’தோ’ன்னு சுதாரிக்கறதுக்குள்ள நீ மேரேஜ் இன்விடேஷன் நீட்டிட்டே. ஒண்ணும் செய்ய முடியாம போச்சு. ப்ச்! அவன் உடைஞ்சு போயி ரொம்ப அழுதான்னு நினைக்கிறேன்.” “ஓ” என்றாள். லேசாய் வருத்தம் சூழ்ந்தமாதிரி ஒரு பாவனைக்கு அவள் முகம் மாறியது. அதை கவனித்துவிட்டு அருண் அவளிடம் கேட்டான். “ஆனா பிரமி.. உங்கிட்ட ஒண்ணு கேக்கறேன். நீ நினைக்கிற மாதிரி எல்லாரும் எல்லா சமயத்திலேயும் ஒரே மாதிரியே மாறாம அப்படியே இருப்பாங்கன்னு நினைக்கிறியா?” அருணின் கேள்வி புரியாததுபோல புருவங்களை நெரித்துப் பார்த்தாள். அவன் விளக்குகிற தொணியில் மேலும் சொன்னான். “அதாவது.. இப்போ நீ நம்ம ஸ்வாதியை எடுத்துக்கோ.. அவளை மாதிரி பயந்தாங்குள்ளியை உலகத்திலேயே பாக்க முடியாது. அவளுக்கு லேடி தெனாலினு பேர் வெச்சுருந்தோம் ஞாபகமிருக்கா? ரோட்ல தனியா போக பயப்படுவா. யாராவது எப்பவும் அவ கூடப் போகணும். பஸ்ல கண்டக்டர்கிட்ட டிக்கெட் கேக்கறதுக்குகூட பயந்துக்குவா. எப்பவும் எல்லாத்துக்கும் பயம்.” “தெரியும். அவளுக்கு என்ன இப்ப?” “அவ திடீர்னு பி.ஈ படிக்கணும்னு முடிவு பண்ணி தஞ்சாவூர் இன்ஜினீயரிங் காலேஜ்ல சேந்தா. நாலு வருஷம் ஹாஸ்டல்-ல தங்கிப் படிச்சா. கோயமுத்தூருக்கும் தஞ்சாவூருக்கும் தனியா ட்ராவல் பண்ணுவா. அப்றம் ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனில ஜாயின் பண்ணி அங்கிருந்து ஒரு ப்ராஜக்ட்டுக்கு நியூஜெர்ஸி போயி தனியா ஒரு வருஷம் இருந்தா. அப்பா அம்மாவை எதுத்துக்கிட்டு ஒரு கிறிஷ்டியன் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா..” “ஓ.. ஈஸிட்?. நிஜமாவா? அவளா? எப்ப நடந்தது இதெல்லாம். எனக்குத் தெரியாமயே போச்சு!” மிகுந்த ஆச்சரியத்துடன் பிரமிளா கேட்டாள். “அது ஆச்சு நாலஞ்சு வருஷம். நான் என்ன சொல்ல வர்ரேன்னா.. யார் யார் எப்போ எப்படியெல்லாம் மாறுவாங்கன்னு யாராலயும் சொல்ல முடியாது.” “அப்ப ஆகாஷூம் மாறிட்டான்னு சொல்ல வர்றியா?” “அஃப்கோர்ஸ்” மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துவிட்டிருந்தது. அருண் காரை உள்ளே திருப்பிச் செலுத்தி பார்க்கிங் செய்தான். இன்னும் சம்பாஷணை முடியாததால் இருவரும் காரைவிட்டு இறங்காமல் அப்படியே உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். தொண்டையை செருமிவிட்டு ஒரு புதிரான புன்னகையுடன் “ஆகாஷை நான் பாத்தேன்னு சொன்னேன் இல்லையா?. ஆனால் அவனை நான் நேர்ல பாக்கல.” என்றான். “ஓ! அப்றம்?.” “அவன்தான்னு என்னால நம்பவே முடியல. ஆனா அவனை அப்படிப் பாத்து ஷாக் ஆனேன் பாரு. மை காட்! அதுக்கப்புறம் அவனை ஒரு தடவை டி.வில கூட அதே மாதிரி பாத்தேன். எப்படியிருந்தவன் எப்டியாயிட்டான்னு ஒரே ஆச்சரியம்.” “ஐயா.. சாமி!.. திரும்பத் திரும்ப இதையே சொல்லாத. சஸ்பென்ஸ் போதும். சீக்கிரம் விஷயத்துக்கு வா!. எனக்கு டைம் ஆகுது” அருண் தயக்க சிரிப்புடன் “ஒரு நாள் ஒரு கடைல போய் இன்னர் வேர் வாங்கினேன். அதோட பேக்கிங் அட்டைப்பெட்டில…” என்று சொல்லிக்கொண்டே பின் சீட்டிலிருந்து அதை எடுத்தான். “நீ சென்னைக்கு வர்ரேன்னதும் உனக்கு காமிக்கணும்னு எடுத்து வெச்சிருந்தேன். இதப் பாரு இது ஆகாஷ்தான?” அவன் நீட்டின அட்டைப்பெட்டியின் மேற்புற கவர் டிசைனில் ஆகாஷ் கட்டான வெற்றுடம்புடன் கொஞ்சமும் கூச்சமில்லாமல் இடுப்பில் மட்டும் உள்ளாடை அணிந்து ஸ்டைலாக சிரித்துக் கொண்டிருந்தான். *** கல்கி – 16.8.2009 புலம் மணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு காலி செய்யப்படுகிற முகாந்திரமாய் வீடு நிறைய மூட்டை முடிச்சுகள். அட்டைப் பெட்டிகள். அடுக்கத் தயாராயிருந்த சாமான்கள். குறுக்கும் நெடுக்குமாய் ஒழுங்கில்லாமல் சோஃபா, கவிழ்ந்த சேர்கள், நியூஸ் பேப்பர் குப்பைகள். கயிறுகள். பேக்கிங் டேப் சுருள்கள். மணி பொருட்குவியல்களுக்கு ஓரமாய் ட்ராவல் பேகை வைத்துவிட்டு வியப்புடன் புரியாமல் கேசவனைப் பார்த்தான். “வீடு காலி பண்றீங்களா?” என்றான். “ஆமாண்டா..” “எந்த ஏரியா?” “இங்க இல்லடா. ஊருக்கே போறோம்..” “சென்னையை விட்டுட்டா?” கேசவன் புன்னகையுடன் ஆமாம் என்றான். “இன்னும் ரெண்டு நாள்ல..” மணி நம்பிக்கையில்லாமல் வீட்டின் கோலத்தை கண்களால் அளவெடுத்துவிட்டு “என்னடா சொல்ற?” என்றான். அவனுடைய குழப்பத்தை இடை மறித்து “நீ முதல்ல ரிஃப்ரெஷ் பண்ணு. அப்றம் விவரமா சொல்றேன்” என்றான் கேசவன். டவல், டூத் ப்ரஷ், உள்ளாடைகளுடன் யோசனைகளையும் சுமந்துகொண்டு மணி பாத்ரூமுக்கு நகர்ந்தான். இன்னும் பொட்டலம் கட்டப்படாமலிருந்த பக்கெட்டின் குளிர் நீரால் ரயில் பிரயாணத்தின் கசகசப்பை தணிக்கும்போது கேசவன் சொன்னது மண்டைக்குள் மீண்டும் ஊடுறுவித் தாக்கியது. என்ன பிரச்சனை? ஏன் திடீரென்று சென்னையை விட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பவேண்டும்? கேசவன் சென்னையில் இருக்கிறான் என்றுதானே நானே தைரியமாய்க் கிளம்பி வந்திருக்கிறேன். ரொம்பவும் பழகின நண்பன் என்று அவனொருவன்தான் இங்கே இருக்கிறான். ஏன் இந்த அபத்த முடிவு? நல்ல வேலையில்தானே இருந்தான்? இல்லை சும்மா விளையாடுவதற்காகச் சொல்கிறானா? கேசவன் ஒன்பது வருடங்களுக்கு முன்பே ஊரில் பார்த்துக் கொண்டிருந்த சின்ன உப்புமாக் கம்பெனி வேலையை உதறிவிட்டு இள மாலை நேரத்தில் சேலத்திலிருந்து கோவை எக்ஸ்ப்ரஸ் பிடித்து சென்னைக்கு ரயிலேறினவன். முன்பின் வந்து பழக்கமில்லாத நகரம். வேறு மாதிரி மனிதர்கள். வேறுவிதமான பேட்டைகள். பேச்சு வழக்கங்கள். எப்போதும் உச்சியில் நின்றெரிகிற வெயில். ட்ராஃபிக் நெரிசல். வேர்வைக் கசகசப்பு. அரை பக்கெட் தண்ணீரில் குளியல். ஆட்டோ அவஸ்தைகள். பஜார்கள். பேஜார்கள். இதெல்லாம் தாண்டின மனோதிடத்துடன் சென்னையில் எளிதாக ஒட்டிக் கொண்டும் விட்டான். வந்ததும் முதலில் அதிகம் பிரபலமில்லாத கம்பெனியில் அசிஸ்டெண்ட் மானேஜராகச் சேர்ந்தான். அப்புறம் மணிக்கும் அவனுக்கும் தூரம் அதிகமாகி இருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார்கள். எப்போதாவது திடீரென்று நினைத்தாற்போல் தொலைபேசிக் கொள்வார்கள். இடையில் கேசவன் வேறு கம்பெனிக்கு மாறினதும் அங்கே அவனுக்கு காரெல்லாம் கொடுத்திருப்பதையும் ஒரு தடவை சொன்னான். ஊருக்கு வந்து சொந்தத்திலேயே ராதிகாவை பெண் பார்த்து திருமணம் செய்துகொண்டான். சென்னை வந்து பிள்ளைப் பேறு. காலம் கரைந்தும் கடந்தும் போனது. இந்நேரம் அவன் தொழில்முறையில் வளர்ந்து பெரிய ஆளாகி சென்னையில் செட்டிலாயிருப்பான் என்று பார்த்தால் இங்கே அவன் ஊரைப்பார்க்க பெட்டி கட்டிக்கொண்டிருக்கிறான். மணி குளியல் முடித்து உடைமாற்றி ஹாலுக்கு வந்தான். ஹாலிலிருந்து தெரிந்த பெட்ரூமில் இன்னும் தூக்கம் கலையாமல் அவன் இரண்டரை வயதுக் குழந்தை எந்த உலகக் கவலைகளுமில்லாமல் பொம்மை மாதிரி கவிழ்ந்து உறங்குவதைப் பார்த்தான். கேசவனும் இன்னொரு பாத்ரூம் உபயத்தில் காலைக் கடன்கள் முடித்துத் திரும்பியிருந்தான். இருவரையும் சாப்பிட வரச்சொல்லி அவன் சரிபாதி ராதிகா கூப்பிட்டாள். டைனிங் டேபிளை லாஃப்டிலிருந்து பொருள்களை எடுப்பதற்காக உள்ளறையில் போட்டிருந்ததால் கொஞ்சம் அகன்ற சமையலறைத் தரையில் சாப்பிட உட்கார்ந்தார்கள். ராதிகா பறிமாறின இட்லியை மிளகாய்ப் பொடியுடன் சூடாக உள்ளே தள்ளும்போது கேசவன் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்திருந்தான். “சென்னை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். ஆஃபிஸ்ல ரெசிக்னேஷன் எழுதிக் குடுத்துட்டேன். ரொம்ப நாளாவே பிரச்சனைடா. இந்த ஊர் எனக்கு லாயக்குப்படலை. சரியா எதுவும் ஒர்க் அவுட் ஆகலை. ஒரு விதத்துல ரிட்டர்னிங் வித் எம்ட்டி ஹாண்ட்ஸ்னு வெச்சுக்கயேன். திரும்பவும் நம்ம ஊருக்கே..! பேக் டு ஸ்கொயர் ஒன்.” “அப்படி என்னடா பிராப்ளம்?” “இருக்குடா.. நிறைய இருக்கு..” கேசவன் மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தான். சென்னையில் தனக்கு ஏற்பட்டதெல்லாம் தொடர் தோல்விகள்தான் என்றும், இந்தப் பெருநகரம் அவனுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறெதையும் அளிக்கவில்லையென்றும், இங்கே எத்தனை வேலை செய்து எவ்வளவு சம்பாதித்தாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருப்பதாகவும், கொஞ்சமாய் கடன்கூட ஆகிவிட்டதாகவும் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல மணி இட்லி தொண்டைக்குள் இறங்காமல் கலவையான உணர்ச்சிகளோடு கேசவனை ஏறிட்டான். சென்னையில் வாழ்ந்து சலித்த அலுப்பு ரேகைகளை அவன் முகத்தில் தேடிப்பார்த்தான். ஒன்பது வருடங்களுக்கு முன் பார்த்ததைவிட தலை மயிர் லேசாக நெற்றியில் பின்வாங்கி குறைந்திருந்ததைத் தவிர அதிகம் மாறாமல் இளமையாக களையாகத்தான் இருந்தான். எந்தவொரு பிரச்சனையின் சுவடையும் அவன் கண்களிலிருந்து படிக்க முடியவில்லை. அவன் கொஞ்சம் அழுத்தக்காரன்தான். “நீயும் சென்னைக்கே வந்துருன்னு என்கிட்ட கூட சொல்லிட்டிருந்தியேடா மச்சி.!” “சொன்னேன். ஆனா..” கேசவன் தயக்கமான குரலில் தனது சிற்றுரையை சிற்றுண்டியுடன் ஆற்ற ஆரம்பித்தான். அதன் சாராம்சம் என்னவென்றால், சென்னையின் கம்பெனி முதலாளிகளுக்கு எப்போதும் காசுதான் குறி. உழைப்புக்குத் தகுந்த மரியாதையும் ஊதியமும் கிடையாது. சரியான ஆட்களை சரியான இடத்தில் வைத்திருப்பதில்லை. சொந்த ஊரில் கஞ்சியோ கூழோ குடித்து ஏதாவது ஒரு வேலை பார்த்து குடும்பத்துடன் நிம்மதியாய் இருப்பதைவிட சாலச் சிறந்த காரியும் இப்பூவுலகில் கிடையவே கிடையாது. இத்யாதி. “கெட்டும் பட்டணம் சேர்-ன்னு காலகாலமா சொல்றாங்க.. ஒருத்தன் பட்டணம் வந்து கெட்டுப் போனேன்னு சொல்றத முதன் முதலா கேக்கறேன்..” “அதெல்லாம் சும்மாடா.. சென்னை பொழைக்க லாயக்கில்லாத ஊரு..” கேசவனின் குரல் இப்போது திடமாய் அறுதியிட்டு ஒலித்தது. “ஒன்பது வருஷமா எதுவும் தேறலைங்கறியா?” “தேறிச்சு.. ஆனா தேறின வேகத்துல கரைஞ்சும் போச்சு.. ஓடின ஓட்டத்துக்குப் பலனா ஒரு ஓட்டைச் சட்டிகூட கிடைக்கல. முட்டி தேஞ்சதுதான் மிச்சம்” ரொம்ப மிகைப்படுத்துகிறானோ என்று தோன்றியது மணிக்கு. மேற்கொண்டு எதுவும் கேட்பதற்குள் கேசவனின் செல்ஃபோன் கந்த சஷ்டி கவசம் பாட அதை எடுத்து.. ‘ஆமாங்க.. நாளன்னிக்கு காலைல பதினொரு மணி.. ஓபன் கண்டெய்னரா.. க்ளோஸ்டு இல்லையா? என்ன சார் எய்ட் தவுசண்ட்டுங்கறீங்க.. ஆறு ரூபாய்க்கெல்லாம் வர ரெடியா இருக்காங்களே… ஆமாங்க.. பேக்கிங்.. லோடிங்… அன்லோடிங்.. ரீ செட்லிங்.. சேலம் செவ்வாய்ப்பேட்ட.. ஆமா.. ஃபைனலா சொல்லுங்க.. அட்வான்ஸ் எதுனா குடுக்கணுமா…” என்று அங்கேயும் இங்கேயுமாக சாமான்களுக்கு நடுவே நகர்ந்து நகர்ந்து கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்தான். கிளம்புவதென்று முடிவே பண்ணிவிட்டானா? ராதிகா மணியின் தட்டில் குறைந்து போயிருந்த சட்டினியின் அளவை கொஞ்சமாய் அதிகப்படுத்திவிட்டு “ஆமாங்க மணி. வந்ததிலிருந்தே எனக்கும் இந்த ஊரு சுத்தமா புடிக்கல. ஒரே குப்பை. தூசி.. கொசு.. ஊராங்க இது? காசு இருக்கறவங்களுக்குத்தான் இது சொர்க்கம். நம்பள மாதிரி மிடில் க்ளாஸ் ஜனங்களுக்கு சரிவராது. இங்க வந்ததுக்கப்புறம் சொந்தக்காரங்க மூஞ்சியெல்லாம் கூட மறந்து போயிருச்சுங்க. நானும் ரொம்ப நாளா இவர்ட்ட சொல்லிக்கிட்டிருக்கேன். இப்பதான் கொஞ்சம் அசைஞ்சு கொடுத்திருக்காரு. திடீர்னு சரி போதும் கிளம்பலாம்னுட்டாரு..” என்றாள் உற்சாகமாய். கேசவனும், ராதிகாவும் மாறி மாறிப் பேசினது மணியை மெதுவாய் ஏமாற்றத்தின் உச்சிக்குச் கொண்டு சென்று கொண்டிருந்தன. அவனால் இன்னும் நம்ப முடியவில்லை. மணிக்கும்கூட இவ்வளவு பெரிய காஸ்மோபாலிட்டன் சிட்டிக்கு வந்து நாலு காசு சம்பாதித்து சொந்த வீடு, கார், பேங்க் பேலன்ஸ் என்று செட்டிலாகிவிட வேண்டுமென்று அப்போதே துடிப்பாக இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் சதி பண்ணிவிட்டது. இப்போதுதான் ஒரு வாய்ப்புக் கிடைத்து எதிர்காலத்திற்கான ஒரு சில அறை குறை ஐந்தம்சத் திட்டங்களுடன் அவன் கிளம்பி வந்திருந்தான். இங்கே என்னடாவென்றால்.. “ராதிகா.. தப்பா நினைச்சுக்கலைன்னா நான் ஒண்ணு சொல்றேன். கேசவனோட அப்ரோச்ல ஏதோ தப்பு இருக்கும்ன்னு நான் சந்தேகப்படறேன். சென்னைலயே எதுவும் கிழிக்க முடியலேன்னா வேற எங்கயும் எதுவும் கிழிக்க முடியாதுன்னுதான் எனக்கு ஸ்ட்ராங்கா படுது. பிழைக்க எவ்வளவோ சாத்தியங்கள் இருக்கிற ஊர்ங்க இது. இவனுக்கு மட்டும் எப்படி ஃபெயிலியர் ஆச்சு? அதுவும் கேசவன் திறமையான ஆசாமி வேற..” ராதிகா பதில் சொல்வதற்குள் கேசவன் இடை புகுந்து “அப்படியெல்லாம் இல்ல மணி! அப்ரோச் எல்லாம் நல்ல அப்ரோச்தான். நானும் சென்னைக்கு வந்து ரெண்டு மூணு கம்பெனி மாறிட்டேன். என்னை மாதிரி சின்சியரான ஆள் கிடையாது. ஆனா வளர விடறாங்களா? எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரி ஆளுங்க. போட்டி. பொறாமை. போட்டுக் குடுக்கறது.. பெரிய தலைகளுக்கு கூஜா தூக்கி உள்ளுக்குள்ளேயே அரசியல். சம்பள விஷயத்தில எப்பவுமே தப்பான கமிட்மெண்ட்-தான் குடுப்பாங்க. கடைசில நம்ம பொழப்புதான் நாய்ப்பொழப்பு. இதெல்லாம் தாண்டி நிக்கனும்னா ரொம்ப மன வலிமையோட இருக்கணும்டா. முடியலேன்னா கண்டுக்காம போயிரணும். இல்லேன்னா நாமளும் கூஜா தூக்கணும். ச்சே என்னடா வாழ்க்கை இதுன்னு அப்பப்போ தோணிட்டே இருந்தது. ராதிகாவுக்கும் இந்த ஊர் புடிக்கலை. ரோஹித்தும் இன்னும் ஸ்கூல் போக ஆரம்பிக்கலை. ஸோ… முடிவெடுத்துட்டேன். கொஞ்ச நாள் நாம விருப்பப்படறமாதிரி வாழ்ந்துட்டுப் போலாமே..” என்று கண் சிமிட்டினான். மிகுந்த நம்பிக்கையுடன் சென்னை வந்த இறங்கின மணிக்கு அவர்களின் பேச்சும், புரண்டு கிடக்கிற வீட்டின் கோலமும் அயர்ச்சியைத் தந்தாலும், அவன் தளரவில்லை. இட்லிக்கப்புறம் வந்த சூடான காப்பியை உள்ளே தள்ளிக் கை கழுவிவிட்டு வீட்டை மறுபடி நிதானமாய் நோட்டமிட்டான். ஒரு ஹால், இரண்டு படுக்கை அறைகள், டைனிங் ஏரியா, சமையலறை, துணி காய்கிற பால்கனியிலிருந்து பக்கத்து அபார்ட்மெண்ட் ப்ளாக்குகள் தெரிந்தன. அபிராமபுரத்தில் நல்ல லொக்கேஷனில் நல்ல வீடு. சோஃபா, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்.சி.டி டிவி, குளிர் சாதனம், வரவேற்பரை ஊஞ்சல் என்று வீடு கொள்ளாத பொருட்கள். வசதியாகத்தான் இருந்திருக்கிறான். வரும் போது வெறுங்கையுடன்தான் வந்தான். ஆனால் திரும்பிப் போகும்போது அப்படிப் போவதாகச் சொன்னால் யாருமே ஒத்துக்கொள்ளத் தயங்குவார்கள். எதையும் இன்னொரு தடவை முயற்சித்துப் பார்க்காமல் பின் வாங்குவதில் அர்த்தமில்லை என்று கூறினான் மணி. கேசவன் மனது வைத்திருந்தால் நிச்சயம் இந்த நிலைமையை மாற்றியிருக்கலாம் என்றான். “அவசரப்பட்டு முடிவெடுத்த மாதிரி தெரியுது கேசவா.. வாழவைக்கும்னு நம்பினதுனாலதான் நான்கூட சென்னைக்கு வரலாம்னு முடிவெடுத்திருக்கேன். அது மட்டுமில்ல..” குப்புறக் கிடந்த பாலிவினைல் சேர் ஒன்றை நிமிர்த்திப் போட்டு உட்கார்ந்தபின் சொன்னான். “நான் இங்க வந்தது ஏதாவது ஒரு இடத்துல வேலைக்கு சேர்ரதுக்கு இல்ல. ஒரு ஃப்ரெண்டுகூட சேர்ந்து ஒரு பிஸினெஸ் ஆரம்பிக்கலாம்னு ஐடியா. நீ கூட விருப்பப்பட்டா ஒரு பார்ட்னரா சேந்துக்கலாம் கேசவா. இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போகலை.. சாமான் எல்லாத்தையும் அந்தந்த இடத்துல மறுபடி எடுத்துவெச்சுட்டாப் போச்சு..” என்று சிரித்தான். கேசவ் தீவிரமான யோசனையுடன் மூன்று நாள் தாடியைச் சொறிந்தான். ராதிகாவைப் பார்த்தான். மணியைப் பார்த்தான். பின் மோட்டுவளை ஃபேனையும் அவன் யோசனைப்பார்வையின் எல்லைக்குள் கொண்டுவந்தான். “நிறைய இழந்துட்டேன் மணி. மறுபடியும் இந்த ஊர்ல பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிப்பது கஷ்டம்.” எல்லாப் பெரிய கணக்குகளும் பூஜ்ஜியத்திலிருந்துதான் ஆரம்பிக்கின்றன என்றும். ஆனால் பூஜ்ஜியத்திற்கு உள்ளேயே நின்றுகொண்டிருக்காமல் பூஜ்ஜியத்திற்கு வெளியே ஓடிக்கொண்டிருப்பதுதான் முக்கியம் என்றான் மணி கொஞ்சம் தத்துவார்த்தமாய். “இல்லடா. முடிவு பண்ணியாச்சு. ஆஃபிஸூல இன்னியோட கடைசி.. ரிஸைன் லெட்டர் குடுத்துட்டேன். ஹவுஸ் ஓனர்கிட்ட காலி பண்றேன்னு சொன்ன மறுநிமிஷம் இந்த வீட்டை வேறொருத்தருக்குப் பேசி வாடகை செக்யூர் பண்ணிக்கிட்டார். கண்டெய்னருக்குச் சொல்லியாச்சு. ட்ரெய்ன் டிக்கெட் புக் பண்ணியாச்சு. இனி ஒண்ணும் பண்ணமுடியாது… கதம் கதம்.” அதன் பிறகு கொஞ்ச நேரத்திற்கு இருவரும் மௌனமாய் இன்னும் கழற்றப்படாமல் உயிரோடிருந்த டி.வி.யில் கருங்குரங்குகள் ஏரியில் வாளை மீன் பிடிக்க முயற்சிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குரங்கைப் பிடிக்க முதலை முயற்சித்துக் கொண்டிருந்தது. சர்வைவல்!! மணிக்கு எல்டாம்ஸ் ரோட்டில் யாரையோ பார்க்கவேண்டிய வேலையிருந்தது. கேசவன் ஆஃபிஸ் போகிற வழியில் அவனை அங்கே விட்டுவிடுவதாகச் சொன்னான். ராதிகாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். காரில் போகும்போது. “இந்த காரும், பின் சீட்ல இருக்கற லாப்டாப்பும் இன்னையோட கடைசி. ஆஃபிஸ்ல ஒப்படைக்கணும்.” “நெஜமாவே போறியாடா?” என்றான் மணி வருத்தம் தோய்ந்த வலுவிழந்த குரலில். ரொம்ப நேரம் அமைதியாயிருந்த கேசவ் “உன்கிட்ட சொல்றதுக்கு என்ன மணி… “ என்று இழுத்தான்.. லேசாய் எச்சில் விழுங்கிக் கொண்டு.. “போன வருஷம் வரைக்கும் எல்லாமே நல்லாதான் போயிட்டிருந்துச்சு மணி!. வீடு வாழ்க்கை எல்லாமே! ஆனா லைஃப்ல திடீர்ன்னு ஒரு பொண்ணு. ஆஃபிஸ்ல அறிமுகமானா மச்சி. மொதல்ல ஃப்ரெண்ட்ஷிப்பாதான் ஆரம்பிச்சுது. அப்றம் என்னமோ ஒரு படு பயங்கர அட்ராக்ஷன். போகப் போக வேற மாதிரி கொஞ்சம் நெருக்கமா ஆய்டுச்சு… அந்தப் பொண்ணு பயங்கர பொஸஸிவ்… யாருக்கும் தெரியாம ரகசியமா போய்ட்டிருந்தது. இப்ப மோப்பம் புடிச்சுட்டாங்க. கொஞ்சம் பிரச்சனையாயிருச்சு. அது எப்போ வேணும்னாலும் படபடன்னு வெடிக்கிற நிலைமை.” என்றான். மணியின் முகத்தில் லேசான அதிர்ச்சியை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டே தயங்கித் தொடர்ந்தான். “விஷயம் ராதிகா காதுக்கு எந்த நிமிஷம் வேணும்னாலும் வந்துரும். வந்துருச்சுன்னா அப்றம் நான் காலி. என் பொழப்பு நாறிப் போய்டும். பத்ரகாளியாகி ருத்ரதாண்டவம் ஆடிடுவா.. எல்லாத்தையும் விட்டுட்டு உடனே ஊருக்குத் திரும்பிப் போறதுதான் பிரச்சனை தீர்ரதுக்கு ஒரே வழி இப்போதைக்கு. அதையும் உடனே செய்யணும். அதுக்குக் காரணமா வேலை சரியில்லை. ஆஃபிஸ் சரியில்லை. ஊர் பிடிக்கலைன்னு எல்லார்கிட்டேயும் பில்டப் பண்ணி வெச்சிருக்கேன். வீட்ல நீ கேட்டப்போ கூட ராதிகா முன்னால நான் அப்படித்தான் சொல்ல முடிஞ்சுது…. பெரிதாய் ஒரு பெருமூச்சு விட இடைவெளி எடுத்துக்கொண்டு, “மத்தபடி பொழைக்கறதுக்கு சென்னை அம்சமான ஊருடா. நீ தைரியமா வந்து உன் பிஸினஸை ஆரம்பி. நல்லா வருவே” என்றான். *** தமிழோவியம் டாட் காம் - தீபாவளி மலர் – 2010  தனி வழி நிரஞ்சன் அவன் மொபைலை எடுத்து அந்த எஸ்.எம்.எஸ்ஸை மறுபடி திறந்து பார்த்தான். “உன்னை உடனே பாக்கணும் போல இருக்கு” என்றொரு வாசகம். அதற்கடுத்த எஸ்.எம்.எஸ்-ஸை படித்தான். அதே வாசகம். அடுத்ததும் அதற்கடுத்ததும் அதே. இதே மாதிரி பதினைந்து இருபது. எல்லாம் வேறு வேறு தினங்களில் அவனுக்கு அனிதா அனுப்பிய செய்திகள். உன்னை உடனே பாக்கணும்போல இருக்கு. அந்த வாசகம் அவன் மண்டைக்குள் ஒரு காட்டு வண்டின் அதீத ரீங்காரம்போல இப்போது கேட்க ஆரம்பித்தது. ஏற்கெனவே கொஞ்சமாய்க் குடித்திருந்த போதையில் அவனுக்கு மனது பிசைய ஆரம்பித்து கண்ணிமைகளில் சட்டென துளிகள் தளும்பி நிற்க ஒரு விம்மலுக்கான தருணமாய் வெடித்து நின்றது. பாட்டிலில் மீதியிருந்த விஸ்கியை ஒரே மடக்கில் குடித்துக் காலிசெய்தான். அப்படியே கண்களை மூடி சுவற்றில் சாய்ந்துகொண்டான். அவன் கன்னங்கள் வழியே கண்ணீர் கரகரவென்று மெளனமாய் வழிய லேசாய் உடல் குலுங்கி ஒரு தேம்பல் புறப்பட்டது. சிவா ஹாலில் சண்டே இண்டியன் படித்துக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் நிரஞ்சன் மேலேயே இருந்தது. அவன் இப்போதெல்லாம் தனியாகக் குடிக்க ஆரம்பித்துவிட்டான். சிவாவுக்குக் கவலையாக இருந்தது. போதை அதிகமானால் என்ன செய்வான் என்று அவனுக்குத் தெரியும். அவன் நினைத்த மாதிரியே நிரஞ்சன் தள்ளாட்டத்துடன் எழுந்து அறை மூலையிலிருக்கும் பீரோவின் இரு கதவுகளையும் அகலமாய்த் திறந்தான். அதில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் ஏராளமான புடவைகளை சுழலும் கண்களுடன் பார்த்தான். அப்புறம் உள் லாக்கரிலிருந்து அந்த தாலிச் செயினை எடுத்துப் பார்த்தான். எல்லாமே அனிதாவுக்காக வாங்கிச் சேகரித்தது. பிறகு பீரோவிலிருந்து புடவைகளை கலைத்து உருவி மூலைக்கொன்றாய் வெறியுடன் வீச ஆரம்பித்தான். “டேய் நிரஞ்சா!” என்று பதட்டமாய் ஹாலிலிருந்து குரல் கொடுத்தான் சிவா! நிரஞ்சன் அந்த தாலிச் செயினை மார்போடு வைத்து அழுத்தி அணைத்து வைத்துக் கொண்டான். அப்போது அவனிடமிருந்து தாங்க முடியாததோர் கதறல் வெளிப்பட்டு அப்படியே பீரோவின் கீழே சரிந்து படுத்தான். இப்போது அவன் உடல் ரொம்பக் குலுங்கியது. “டாமிட்” என்றான் சிவா. அவனுக்கு சர்ரென்று ஒரு கோபம் தலைக்கேறியது. இவனுக்கு எத்தனை எடுத்துச் சொல்லியும் புரியாதா? இன்னும் எத்தனை நாளைக்கு அனிதா அனிதா என்று உருகிக் கொண்டிருப்பான். ஒரு பத்துப் பதினைந்து எஸ்.எம்.எஸ்-களை மொபைலில் வைத்துக் கொண்டு அதை அழிக்காமல் திரும்பத்திரும்ப பைத்தியம் போல் படித்துக் கொண்டு குடித்து அழுது தினம் கதறி… அவன் தற்கொலை மாதிரி எதுவும் முடிவுக்குப் போய்விடுவானோ என்ற பயம் மட்டும் சிவாவுக்கு அடிக்கடி எழுந்து பயமுறுத்தியது. இரண்டு மூன்று முறை நடு இரவில் எழுந்து அவன் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் விபரீதமாய் எதுவும் செய்கிறானா என்று கண்காணித்தான். அறை நண்பனாய் இருக்கிற பாவத்துக்கு இதெல்லாம் செய்து தொலைக்க வேண்டியிருந்தது. “ஏண்டா இப்டி இருக்க? ப்ளடி இடியட். பி பிராக்டிகல்” என்று ஒரு நாள் சிவா உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினான். அன்றைக்கு அவனை ஓங்கி அறைந்துவிடலாமா என்றுகூடத் தோன்றியது. சிவா தரையில் முதுகு காட்டிக் கொண்டு படுத்திருந்த நிரஞ்சனின் மேல் ஒரு சில நிமிடங்கள் பார்வையை வெறித்தான். அவன் சாப்பிடாமல் அப்படியே தூங்கினாலும் தூங்கிவிடுவான். அவன் இப்போதெல்லாம் ஒழுங்காகச் சாப்பிடுவதுகூட இல்லை. புத்தகத்தை வைத்துவிட்டு அவன் மெல்ல யோசனையுடன் எழுந்தான். சட்டையை அணிந்து கொண்டு கதவை லேசாக சாத்தி வைத்துவிட்டு வெளியே வந்தான். ’சோ’ என்று மரங்களை பலமாய் அசைத்துக் காற்று வீசியது. ஒரு சின்ன தூறல் மழையை எதிர்பார்க்கலாம் என்று தோன்றியது. ரோடு திருப்பத்தில் திரும்பி ஆச்சி மெஸ்ஸைப் பார்த்து நடந்தான். யோசனை பூராவும் நிரஞ்சனையும் அனிதாவையும் சுற்றி அவன் மூளையில் அடர்ந்து படர்ந்தது. முட்டாள்கள்! அனிதா முன்பு கோயமுத்தூரில்தான் இருந்தாள். நிரஞ்சனும் அவளும் எப்படி எங்கே சந்தித்துக் கொண்டு காதல் வலையில் விழுந்து தொலைத்தார்கள் என்ற விவரங்களை ஒரு மலைச்சிகரமேறி உலகை வென்ற சிலாகிப்புடன் ஒரு நாள் நிரஞ்சன் சொன்னான். அது ஒரு சுமாரான ஓடாத சினிமாவின் பிசுத்துப் போன திரைக்கதை மாதிரிதான் தெரிந்தது சிவாவுக்கு. அவனுக்கு இந்த மாதிரி புறாக்கள் சிறகடிக்கிற, சிலீர் என்று அலைகள் எழும்பி ஆர்ப்பரிக்கிற, பூக்கள் மந்தகாசமாய் சிலுப்பிக் கொள்கிற, பட்டாம்பூச்சிகள் படபடக்கிற காதல்களில் சிறிதும் சுவாரஸ்யமோ நம்பிக்கையோ இல்லாமலிருந்தது. ஓரமாய் நின்று பார்த்தோமா, ரசித்தோமா, கிடைத்த சந்தர்ப்பங்களில் கிளர்ச்சியுடன் கடலை போட்டு முடிந்தால் தொட்டுப்பார்த்து… என்று போய்க் கொண்டிருக்கவேண்டியதுதான் என்பது அவன் கட்சி. நினைந்துருகிக் கவிதையெழுதி, கைகோர்த்துப் படம் பார்த்து, பூங்காக்களில் தோள் சாய்ந்தமர்ந்து புற்களைக் கிள்ளிக்கொண்டிருப்பது அவனைப் பொறுத்த வரையில் நேரவிரயம். ‘ஹைலி இடியாட்டிக்’. நிரஞ்சன் இதையெல்லாம் செய்து கொண்டு கால் தரையில் படாமல் மிதந்து கொண்டிருந்தான் என்று தெரியும். செல்போனை எடுத்துக் காதில் வைத்தான் என்றால் அவளுடன் நான்கு மணிநேரம் தொடர்ந்து பேசுவான். தினம் காலை 6 மணியிலிருந்து அவனுக்கு அவளிடமிருந்து எஸ்.எம்.எஸ்கள் வர ஆரம்பித்துவிடும். அசட்டுப் பிசட்டாக பரஸ்பரம் எதையாவது அனுப்பிக்கொண்டு இரவு ஒரு மணிக்குத் தூங்கப் போவது வரை மொபைலை நோண்டிக் கொண்டிருப்பான். அறைக்குள் குசுகுசுவென்று நடந்து நடந்து பேசுவான். இந்தக் காதல் துள்ளலும் கிளு கிளுப்பும் உருகலுமாய் கிடந்த அவர்களின் தினங்கள் திடீரென்று ஒரு நாள் முடிவுக்கு வந்தது. ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரைக் கையில் எடுத்துக் கொண்டு அனிதாவின் அப்பா சென்னைக்கு குடி புக லாரி பிடித்தார். கண்ணீர் மல்க அனிதா விடைபெற்றுக் கொண்டாள். “மிஸ் யூ வெரி மச் டியர். கொஞ்ச நாள் பொறு. வீட்டில் சொல்லி எல்லோரும் ஒத்துக் கொண்டதும் நம் கல்யாணம். டோண்ட் எவர் ஃபர்கெட் மி. லவ் யூ சோ மச். உம்ம்ம்மா.” என்று செய்தி அனுப்பினாள். நிரஞ்சன் இந்தப் பிரிவை ஜீரணிக்க இயலாமல் உறைந்து போய்க் கிடந்தான். “லைஃப் இஸ் லைக் தட். பி பிராக்டிகல் மேன்.” என்று வழக்கமாய் இரைந்தான் சிவா. நிரஞ்சனுக்கு அன்றிரவு சோகமின்றித் தூங்க ஒரு குவாட்டர் தேவைப்பட்டது. பிறகு திடீரென்று ஒரு நாள் அவளிடமிருந்து வந்த எஸ். எம். எஸ்ஸை சிவாவிடம் காட்டினான். “உன்னை உடனே பாக்கணும்போல இருக்கு” ஒரு நிமிடம் யோசித்து மறு நிமிடமே முடிவு செய்தான். ‘நான் சென்னைக்குப் போய் அனிதாவைப் பார்க்கப் போறேன்’ என்று சடுதியில் இரண்டு நாள் உடைகளை ட்ராவல் பேகில் திணித்துக் கொண்டு ஏதோ ஒரு பஸ்ஸில் கிளம்பினான். இரண்டு நாள் கழித்து நிரம்பி வழிந்த உற்சாகத்துடன் திரும்பிவந்தான். மொபைலில் அவளுடன் மெரீனா பீச்சில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டினாள். இரண்டு மெகா பிக்ஸல்களில் மலர்ந்து சிரிக்கும் ஆதர்ச காதலர்கள். “கூடிய சீக்கிரம் அவ அப்பா அம்மாகிட்ட சொல்லி எப்பாடு பட்டாவது ஓகே வாங்கிருவேன்னு சொல்லியிருக்கா. ஆனா அவ அம்மாவை கன்வின்ஸ் பண்றதுதான் கஷ்டம்கிறா!” என்றான் ஒரு இரண்டு சதவிகிதக் கவலையுடன். ஒரு மாதம் கூட ஆகவில்லை. மறுபடி அவளிடமிருந்து செய்தி வந்தது. ‘உன்னப் பாக்கணும் போல இருக்கு’. நிரஞ்சன் மறுபடியும் பஸ்ஸோ ட்ரெயினோ பிடித்தான். இப்படி மறுபடி மறுபடி இரண்டு வாரங்களுக்கொருமுறை இந்த “உன்னப் பாக்கணும்போல..” செய்திகள் வருவதும் அவன் ட்ராவல் பேகை தூக்கிக் கொண்டு சென்னைக்கும் கோவைக்கும் அலைவதும் தொடர்ந்து கொண்டிருந்தன. அப்படியாக அவன் ஒரு பத்துப் பதினைந்து தடவைகள் போய் வந்தும் விட்டான். ‘இது முட்டாள்தனத்தின் உச்சகட்டம் நண்பா!. நீ பேசாமல் சென்னையிலேயே வேலை தேடி செட்டில் ஆகிக் கொள்வது உத்தமம். அது உனக்கும் அனிதாவுக்கும் ஏன் எனக்கும்கூட நல்லது’ என்று அவனிடம் சொன்னான் சிவா. போறாக்குறைக்கு ராகவேந்திரா எம்போரியத்துக்கு சிவாவை அழைத்துச் சென்று அவளுக்கு அடிக்கடி எல்லா ரகத்திலும் புடவைகள் வாங்கிக் கொண்டு அதையெல்லாம் அறை மூலை பீரோவில் அடுக்க ஆரம்பித்தான். திருமணத்திற்குப் பிறகு ஒரு நாள் சஸ்பென்ஸாக அவளுக்கு அதையெல்லாம் காட்டவேண்டுமாம். உச்சபட்சமாக ஆலுக்காஸூக்குப் போய் ஒரு தாலிச் சரடு ஒன்றையும் வாங்கி வைத்துக் கொண்டான். அம்மாக்களும் அப்பாக்களும் அவர்கள் காதலை அங்கீகரித்து அவர்கள் தலைகளை ஆட்டுவது மட்டும்தான் பாக்கி. மற்றபடி நிரஞ்சன் அவன் மண வாழ்க்கைக்கான தயார் நிலையில் இருந்தான். கொஞ்ச நாட்களில் அனிதாவிடமிருந்து மொபைல் அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் சோகங்களைத் தாங்கி வந்ததைக் கவலையுடன் சொன்னான் நிரஞ்சன். அவள் அப்பா அம்மாவிடம் தெரிவித்துவிட்டாளாம். அப்பா செய்தியின் உக்கிரத்தில் தளர்ந்துபோய்க் கிடக்கிறார். அம்மா பத்ரகாளி மாதிரி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறாள். காதல் கீதல் என்று ஏடாகூடாமாய் எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டிருந்தால் நிச்சயம் என் பிணத்தைத்தான் பார்க்க வேண்டியிருக்கும் என்று உறுமலாய் சொல்லிவிட்டாளாம் அவள் அம்மா. இனிமேல் வேலை மண்ணாங்கட்டிக்கெல்லாம் போகவேண்டாம் என்றும் தடா போட்டுவிட்டார்களாம். ‘எனக்கு பயமாயிருக்கிறது. என்ன செய்வது?. எனக்கு உன்ன உடனே பாக்கணும்போல இருக்கே! என்று அனிதா வரிசையாய் செய்தியனுப்பிக் கொண்டிருக்க நிரஞ்சன் உறக்கம் கெட்டு அலைந்தான். நடுராத்திரி திடீரென்று எழுந்து பீரோவைத் திறந்து பார்க்க ஆரம்பித்தான். திடீரென்று கிளம்பி சென்னை போனான். வழக்கம்போல் பீச்சோ, பார்க்கோ, தியேட்டரோ என்றில்லாமல் வளசரவாக்கத்தில் அவள் வசிக்கும் தெருவில் தூரத்திலிருந்து அனிதா அவள் வீட்டு மொட்டை மாடியில் நிற்பதைப் பார்த்து ஃபோனில் பேசிவிட்டு திரும்பிவந்தான். “இப்ப என்னடா செய்யறது சிவா?” என்றான் கலவரமடைந்த குரலில். அவனுக்கு இடுக்கண் களைய உடுக்கையாய் ஆலோசனைகள் எதுவும் என் கைவசம் இல்லையென்றான் சிவா. அப்படியே இருந்தாலும் கொடுப்பதாயில்லை. “இதெல்லாம் இப்படித்தான் முடியுமென்று முன்பே தெரியும்டா. இந்த லவ் புண்ணாக்குச் செண்டிமெண்ட் எல்லாம் உதறித் தள்ளு. பேசாமல் அந்தப் புடவைகளை சஹாய விலைக்கு விற்றுவிட்டு..” என்று முடிக்குமுன் சிவாவைக் கன்னத்தில் அறைந்தான் நிரஞ்சன். சிவா திகைத்து நின்றுவிட்டான். அப்புறம் ஒருநாள் இரவு அனிதா நிரஞ்சனுக்கு தொலைபேசினாள். பேசும்போது அவன் ரொம்பவும் பதட்டம் அடைந்திருந்தான். “என்ன அனிதா சொல்றே..” நீயா இப்படிப் பேசறே..” “அப்ப அவ்ளோதானா” என்கிற வாக்கியங்கள் காதில் விழுந்தன. பேசி முடித்தபின் பாலிவினைல் சேரை ஆத்திரமாய் எட்டி உதைத்தான். பிரமை பிடித்தது போல மொபைலையே வெறித்துப்பார்த்தவாறு நின்றிருந்தான். சிவா கலவரமடைந்து என்ன நிலவரம் என்று லேசாய் விசாரித்ததில் தழுதழுப்பாக விஷயத்தைச் சொன்னான். அனிதாவின் அப்பா இறுதியாக மிகப் பெரிதாக “நோ” சொல்லிவிட்டாராம். அம்மாவின் தற்கொலை மிரட்டல் தொடர்கிறதாம். “ஸோ இது நடக்காது… அவளை மறந்துடறதுதான் ஒரே வழின்னு சொல்றா..” அப்புறம் அவளிடமிருந்து ஃபோன் மற்றும் எஸ்.எம்.எஸ்கள் வருவது சுத்தமாய் நின்று போனது. இவன் கூப்பிட முயற்சித்தபோது அவள் செல் நம்பரை மாற்றியிருந்தாள். அதிர்ச்சியில் பித்துப் பிடித்தவனைப் போலத் திரிந்த நிரஞ்சன் கடைசியில் ஆறுதல் தேடி பாட்டிலைப் பிடித்தான். மெஸ்ஸிலிருந்து பரோட்டா குருமா வாங்கிக் கொண்டு தூறலில் நனைந்து திரும்பிவந்தபோது நிரஞ்சன் இறைந்து கிடந்த புடவைகளுக்கிடையே கொஞ்சமாய்த் தெளிந்து உடகார்ந்து மோட்டுவளையை வெறித்துக் கொண்டிருந்தான். சிவா கொடுத்த பரோட்டா பொட்டலத்தைப் பிரித்து மெளனமாய் சாப்பிட்டான். “சிகரெட் இருக்கா..” என்று கேட்டு வாங்கிப் பற்றவைத்துக் கொண்டான். பிறகு சிவாவை ஒரு மிகப் பெரிய கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்துக் கேட்டான். “ஸாரிடா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தறேன் இல்ல?” என்றான். கொஞ்சம் நிறுத்தி விழுங்கிவிட்டு “நாம ஒரேயொருதடவை போய் அனிதாவை எப்படியாவது பார்த்து பேசிட்டு வந்துரலாமா? ப்ளீஸ்!” கேட்கும் போது அவன் கண்கள் கெஞ்சலாய்ப் பனித்திருந்தது. சிவா அவனது முகத்தை ஊடுருவிப் பார்த்தான். குடித்ததினாலும் அழுததினாலும் அவன் முகம் வெகுவாகக் களைத்திருந்தது. “யோசிக்கலாம்.. நீ தூங்கி ரெஸ்ட் எடு.. காலைல பேசலாம்.” என்றான் சிவா. அவன் தூங்கியபின் அவனையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. மனதளவில் இத்தனை கஷ்டப்படுகிற அவனுக்கு ஏன் ஒரு சின்ன ஆறுதலைக்கூடத் தன்னால் தர முடியவில்லை என்று யோசித்தான். அவனுக்கு முதன் முதலாக நிரஞ்சன் மேல் அதீதமாக ஒரு பரிதாபம் எழுவதையும், அவன் மனதின் ஏதோ ஒரு கோடியில் ஒரு சின்ன வலியையும் உணர்ந்தான். அவனுக்குள் சின்னதாக ஒரு இனம் புரியாத குற்ற உணர்வு எழுந்தது. “டாமிட். பி பிராக்டிகல்” என்று தன் கன்னத்தில் ஒரு முறை அறைந்து கொண்டான். *** தமிழோவியம் டாட் காம் – ஆகஸ்ட் 2009 வீடு நந்து சென்னைக்கு வந்து இறங்கியவுடன் முதல் கேள்வியாக அதைத்தான் கேட்கப் போகிறானோ என்று பயந்து கொண்டிருந்தார் நடராஜன். ஆனால் பேக்கேஜ்களைக் சேகரித்துக்கொண்டு வெளியில் டாக்ஸியில் ஏறுகிறவரை அவனும் அவன் மனைவியும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பதிலாக ரெண்டு பேரும் வாய் கொள்ளாத சிரிப்பாக இருந்தார்கள். இனிமேல் சென்னையில்தான் இருக்கப் போகிறோம் என்கிற சந்தோஷச் சிரிப்பு. நந்து ஒரு பெரிய அஞ்ஞாதவாசத்தை முடித்துவிட்டு வந்தவன் போல் தோற்றமளித்தான். மூன்று வருடங்களில் நிறைய இளைத்திருந்தான். முகத்தில் அவன் மீசை அடர்ந்து பெரிதாய்த் தெரிந்தது. அவன் மனைவி சுபா முடியெல்லாம் குட்டையாய் வெட்டிக் கொண்டு, லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு கண்ணுக்குக் கீழ் லேசாய் கருவளையங்கயோடு இருந்தாள். மகன் சொந்த ஊருக்கே திரும்பிவந்துவிட்டான் என்ற சந்தோஷத்தின் பிரமிப்பில் சரசுவுக்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது. ‘வந்திட்டியாடா’ என்று நந்துவைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள். இருக்காதா பின்னே. நடராஜனுக்கும் ரொம்ப சந்தோஷம்தான். ஆனாலும் அது முழுமையாக மனசில் தங்காமல் ஒரு கவலை தோய்ந்த பயத்தின் பிடியில் இருந்தது. அவன் இன்னும் சிறிது நேரத்தில் அவன் அதை கேட்கப் போகிறான். நடராஜன் அவனிடம் சொல்வதற்கு எந்த பதிலையும் தயாரிக்காமல்தான் வந்திருந்தார். அவனானால் கோபக்காரன் வேறு. அவன் கேட்கட்டும். கேட்கும்போது என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லலாம் என்று நினைத்தார். அவன் அஸ்ஸாமிலிருந்து புறப்படுவதற்குமுன் போன் பண்ணினபோதுகூட மறக்காமல் கேட்டான். “வீடு எப்பப்பா காலியாகுது?” “சொல்லியிருக்கேன். பண்ணிருவாங்க” என்றார். பொய்தான். கீழ் போர்ஷனில் குடியிருக்கிற ராமநாதனிடம் இன்னும் அதைச் சொல்லவில்லை. மகன் வருகிறான் என்று தகவல் சொன்னதோடு சரி! சமீபமாய் நந்து அங்கிருந்து போன் பண்ணுகிற சமயத்தில் எல்லாம் அதை எப்பவும் தவறாமல் கேட்க ஆரம்பித்திருந்தான். சொந்த ஊருக்குத் திரும்பலாம் என்று அவன் முடிவு பண்ணியவுடனேயே கூப்பிட்டுச் சொல்லிவிட்டான். ‘கீழ் போர்ஷனைக் காலி பண்ணி வெச்சிருங்கப்பா. இப்பவே சொல்லி வெச்சீங்கன்னாத்தான் நாங்க வர்ரதுக்கும் அவங்க காலி பண்றதுக்கும் கரெக்டா இருக்கும்.’ அவன் போகிறபோதே ‘இந்த வேலை மூணு வருஷ காண்ட்ராக்ட்! அதுக்குள்ள எத்தனை சம்பாதிக்கறனோ அத்தனை போதும். முடிஞ்சதும் ரிஸைன் பண்ணிட்டு திரும்பி வந்து ஏதாச்சும் பிஸினஸ் ஆரம்பிக்கணும்.’ என்று உறுதியாய் சொல்லிவிட்டுப் போனான். அசுர வேகத்தில் வருடங்கள் ஓடிவிட்டன. இதோ சொன்னபடி திரும்பியும் வந்துவிட்டான். கல்யாணம் ஆன கையோடு சுபாவையும் கூட்டிக்கொண்டு போயிருந்தான் அப்போது. மூன்று வருடங்களாய் குழந்தை பெற்றுக் கொள்கிற தீர்மானத்திலிருந்து விலகியிருந்தார்கள் போல. நந்துவின் முகத்தைப் பார்த்தால் இங்கே வந்தபிறகு ஏகப்பட்ட திட்டம் வைத்திருப்பான் போலிருக்கிறது. அவனுக்கென்று தனி குடும்பமாகிவிட்டது. இனி அவன் குடியிருப்பதற்கு தனி ஜாகை வேண்டும். அதற்கு ராமநாதன் காலிபண்ணவேண்டும். யோசிக்கப் போனால் நந்து சொந்தவீட்டை விட்டுவிட்டு வேறெங்கும் வாடகைக்கு போய் இருக்க வேண்டுமென்கிற அவசியமும் இல்லைதான். “சென்னைல வெயில் எப்பதான் முடியும்?” என்றான் நந்து. ரொம்ப நாளைக்கப்புறம் அவன் அப்பாவிடம் பேசுகிற முதல் வார்த்தை. போனிலேயே பேசிக்கொண்டிருந்துவிட்டு நேரில் பேசுவதற்கு ஒன்றுமில்லாததுபோல் இருக்கிறது. அவன் பேசட்டும். வீடு விஷயம் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ‘அவங்கிட்ட எதயும் தத்துப் பித்துன்னு ஒளறி வெக்காத’ என்று சரசுவிடமும்கூட சொல்லித்தான் ரயில்வே ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார் நடராஜன். எதுவானாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கொள்வது உத்தமம். இப்போது எதையாவது சொல்லித் தொலைத்தால் அப்புறம் இங்கேயே அவன் வாள் வாள் என்று கத்த ஆரம்பித்துவிடுவான். அவன் சுபாவம் தெரிந்ததுதானே. எதிலும் அப்படியொரு பிடிவாதம். எப்போதும் பிடித்த பிடியில் நிற்பான். வேண்டுமென்றால் வேண்டும். வேண்டாமென்றால் வேண்டாம். நடராஜன் அமைதியாய் வந்தார். டாக்ஸி ஜெமினி மேம்பாலம் ஏறும்போது அவர் பயந்துகொண்டிருந்ததை கேட்டே விட்டான். “கீழ்ப் போர்ஷன் என்னாச்சுப்பா?” நடராஜனுக்குக் கருக்கென்றது. பேசாமல் காது கேட்கவில்லை என்பதுபோல் திரும்பாமலே உட்கார்ந்துவிடலாமா என்று யோசித்தார். ஆனால் மெதுவாய் மென்று விழுங்கிவிட்டு திரும்பாமலேயே “கொஞ்சம் டைம் கேட்ருக்காங்கடா. வேற வீடு பாத்திட்டிருக்காங்க” என்று மறுபடி பொய் சொன்னார். ‘பையன் வர்ரான். நீங்க வீட்டைக் காலிபண்ணனும்’ என்று ராமநாதனிடம் எப்படிப் போய் சொல்வதென்று ரொம்ப நாளாகவே குழப்பமாய்த்தான் இருந்தது நடராஜனுக்கு. ராமநாதனின் முகத்தைப் பார்த்து நிச்சயம் அதை அவரால் சொல்ல முடியாது. அது ஒரு தர்மசங்கடமான விஷயம். ராமநாதன் மாதிரி அருமையான மனிதரை எங்கேயும் பார்க்கமுடியாதென்பது அவர் அபிப்பிராயம். அவர் மாதிரி ஒரு நல்ல டெனன்ட் கிடைத்ததை சந்தோஷம் எனவும் அதிர்ஷ்டம் எனவும் ஒரு சிலரிடம்கூட நடராஜன் சொல்லியிருக்கிறார். கரெக்டாக நந்து வேலை கிடைத்து கெளகாத்திக்குக் கிளம்பின ஒரு வாரத்தில்தான் ராமநாதன் குடும்பம் கீழ்ப் போர்ஷனுக்குக் குடி வந்தது. ராமநாதனுக்கு ஒரு நாற்பத்தைந்து வயதிருக்கும். கணவன், மனைவி, ஒரு பெண், ஒரு பையன் என்று கச்சிதமான குடும்பம். ராமநாதன் ஏதோ பிஸினஸ் பண்ணிக்கொண்டிருந்தார். மனைவி மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர். நியாயமாய்ப் பார்த்தால் பிஸினெஸெல்லாம் பண்ணிக்கொண்டு இத்தனை வயசுக்கு ராமநாதன் சொந்த வீடு கட்டி செட்டிலாகியிருக்கவேண்டும். ஒரு முறை நடராஜன் அதைப்பற்றிக் கேட்டபோது ‘வீடு கட்டலாம்னுதான் கோயமுத்தூர்ல லேண்ட் வாங்கிப் போட்டேன். நடுவுல பிஸினஸ் அடிவாங்கி நிறைய நட்டமாச்சு. பொண்டாட்டிக்கு வேலை இருக்கறதால ஏதோ கொஞ்சம் சமாளிச்சேன். ஒரு வழியா பிரச்சனையெல்லாம் முடிஞ்சு இப்பதான் எந்திரிச்சு நின்னிருக்கேன். கடன்ல லேண்ட்டெல்லாம் வித்தாச்சு சார்!” என்றார் ராமநாதன். நடராஜன் அடிக்கடி அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் பற்றியெல்லாம் நினைவுகளை வரிசையாய் மனத்திரையில் ஓட்டிப் பார்ப்பார். எத்தனை பேர் எத்தனை விதமாக. முதலில் நடராஜனேதான் அங்கே குடியிருந்தார். அது முதலில் ஒரு சின்ன போர்ஷனாக இருந்தது. அப்புறம் வசதி பெருகினதுக்கப்புறம் மாடியில் இன்னொரு போர்ஷன் கட்டி அங்கே குடிபோய் கீழ்ப் போர்ஷனை வாடகைக்கு விட்டார். கீழே முதலில் குடிவந்தவர்கள் இரண்டே மாசத்தில் மாற்றலாகி வடக்கே போய்விட்டார்கள். அப்புறம் நாலு பேச்சிலர்கள். அப்புறம் •பார்மா கம்பெனி மேனேஜர் ஒருத்தர். ரொம்ப டீசன்டான நல்ல மனிதர். பாதி நாள் டூரிலேயே இருப்பார். ஒரு நாள் அவரின் சம்சாரம் யாருடனோ ஓடிப்போய்விட்டது. அந்தத் தெருவில் அது பற்றின பேச்சில் அடிபட்டு வாழ்ந்து கொண்டிருந்த மேனேஜர் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் காலி பண்ணிக்கொண்டு போனார் ஒரு நாள். அதைவிட விவகாரமான விஷயம் இரண்டு வெளியூர் பெண்கள் அக்கா தங்கச்சி என்று சொல்லிக் குடிவந்தது. காலேஜ் ஹாஸ்டல் பிடிக்கல. அதனாலதான் தனியா வீடு பாத்துத் தங்கறோம் என்று என்னவோ காரணம் சொல்லித்தான் வந்தார்கள். பார்த்தால் நல்ல மாதிரி தெரிகிறதே என்றுதான் அவரும் வீட்டைக் கொடுத்தார். ஒரு நாள் எலெக்ட்ரிக் கடை தங்கராஜ் வந்து “என்ன நடராஜ்.. சைடுல தோல் பிஸினெஸெல்லாம் ஆரம்பிச்சிருக்கீங்க போல..” என்று கேட்டான். என்னடா என்று விசாரித்துப் பார்த்தால்.. “நீ வாடகைக்கு விட்டிருக்கிற வீட்டுல.. கமுக்கமா மேட்டர் நடக்குது ஓய்! அது காலேஜ் படிக்கிற பொண்ணுங்க இல்ல” என்று ஆதாரங்களை முன் வைத்தான். அடுத்தநாளே ரெண்டுகளையும் விரட்டி அனுப்பிவிட்டார். ராமனாதன் குடி வருவதற்கு முன் ஆர்.டி.ஓ ஒருத்தரும்கூட இருந்தார். அவருக்கு ஜந்து பெண்கள், நான்கு பையன்கள். பெரிய குடும்பம். எப்படித்தான் சமாளிக்கிறாரோ மனிதர் என்று பார்க்கும்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் வியந்து கொண்டிருந்தார் நடராஜன். அதிக குடும்ப உறுப்பினர்களால் அவர்கள் காம்பெளண்டு கொஞ்சம் கசகசப்பாக இருந்ததும், தண்ணீர் அதிகம் செலவானதும் தவிர அவர்களால் பெரிய உபத்திரவம் எதுவும் இருந்ததில்லை. அவர்கள் கூட அதிகம் காலம் இருக்கவில்லை. நாகர்கோவில் பக்கம் எங்கேயோ போய்விட்டதாகத் தகவல். கடைசியாய் வந்த ராமநாதன் குடும்பம் ரொம்ப வருடங்களாக இருக்கிறது. வருடங்களின் உருளளில் ஊறிப் போன நட்பு. பார்த்துப் பழகிய முகங்கள். பழகிப் பழகி இறுகின உறவு. எத்தனையோ சந்தர்ப்பங்கள். எத்தனையோ நிகழ்வுகள். பரிமாறிக்கொண்ட துக்கங்கள் சந்தோஷங்கள், பொழுதுகள். ராமனாதன் குடும்பம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தனிமையின் கோரக் கைகள் எல்லாவற்றையும் பிய்த்துப் போட்டிருக்குமோ என்னவோ என்றெல்லாம் யோசனை வரும் நடராஜனுக்கு. ஏனையபிற உறவினர்களையும்விட வாழ்க்கையின் வழியில் பார்த்துப் பழகின மனிதர்கள் நெருக்கமாய் இருக்கிறார்கள் என்றால் அது பெரிய கொடுப்பினைதான் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வார். எப்போதும் சரசுவும் ராமநாதனின் மனைவியும் ஒன்றாகவே கோவிலுக்கும் மார்க்கெட்டுக்கும் போவதும், ராமனாதனின் பையனும் பெண்ணும் தாத்தா தாத்தா என்று நடராஜன் வீட்டுக்குள்தான் எப்போதும் வளைய வருவதும், சார் வரீங்களா என்று ராமநாதன் இவரையும் போகிற இடங்களுக்கெல்லாம் துணை சேர்த்துக்கொண்டு சுற்றுவதும் ஆக அன்றாட நிகழ்வுகள். சில சமயம் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு வீட்டுக்கும் சேர்த்து ஒரே சமையல் நடக்கும். வீட்டு ஓனர், குடியிருப்பவன் என்கிற எல்லை எப்போதோ தகர்ந்து ஒரு ரெண்டு குடும்பத்துக்குள்ளேயும் அனுசரனையான உறவு இருந்தது. நிறைய பேச்சு! நிறைய சிரிப்பு! நிறைய உரிமை! ராமனாதன் அடிக்கடி சொல்வார். “உங்க வீட்டுல குடியிருக்கிறதே சொந்த வீட்டுல குடியிருக்கிற •பீலிங் தருது தார். ஐம் லக்கி. நான் சொந்தமா வீடு கட்டினாக்கூட அதை வாடகைக்கு விட்டுட்டு ஒங்க வீட்டுலதான் இருப்பேன்”. அதைக் கேட்பதில் நடராஜனுக்கும் பிடி கொள்ளாத சந்தோஷம். ராமநாதன் பிஸினெஸ் பிஸினெஸ் என்று எப்போதும் அலைகிற மனிதர். ஆனால் கொஞ்சம் ஓய்வாக இருக்கிற மாலை நேரங்களில் கண்ணில் பட்டால் வாங்க சார் வாக்கிங் போலாம் என்று நடராஜனுடன் கிளம்பிவிடுவார். இருவரும் ராகவேந்திரா நகர் தெருக்களில் உலவிவிட்டு அங்கேயிருக்கிற குட்டிப் பூங்காவுக்கு வந்து உட்கார்ந்து விடுவார்கள். நடராஜனுக்கு அப்படியொரு துணை அவசியம் வேண்டியிருந்தது. “உங்களை மாதிரி ரெண்டா பெத்திருக்கலாம் ராமநாதன். ஒண்ணே ஒண்ணைப் பெத்துட்டு…. பாருங்க….! அவஸ்தை! அவனும் பக்கத்தில இல்ல. முதுமைல தனிமைன்னு சொல்வாங்களே….” “அப்படியெல்லாம் நினைச்சுக்காதீங்க சார். நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்.” என்றார் ராமநாதன். அதென்னமோ தெரியவில்லை அவர்கள் குடிவந்த நாள் முதலாகவே அப்படியொரு ஒட்டுதலாகிவிட்டது. ‘நாங்க இருக்கோம்’ என்பது எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் மிகப்பெரிய வார்த்தைகள். அது தரும் அர்த்தமும் பலமும் மிக சுகமானவை. நடராஜன் எப்போதும் மனிதர்கள் முக்கியம் என்று நினைக்கிற ஜாதி. அந்த நினைப்புக்குக் குந்தகமாய் ஒரு மாசம் முன்பே நந்து போன் பண்ணிச் சொல்லிவிட்டான். ‘வீட்டைக் காலி பண்ணி வைய்ங்கப்பா!! நான் வர்ரேன்’ சான்ஸே இல்லை. நந்து அவன் பெண்டாட்டியுடன் சென்னை திரும்புகிறான். அவனுக்கு தனியாக நிச்சயம் ஒரு வீடு வேண்டும். அதற்காக ராமநாதனை காலி பண்ணச் சொல்வது நிச்சயம் தன்னால் முடியவே முடியாதென்று உறுதியாகத் தோன்றியது நடராஜனுக்கு. இதை நந்துவிடம் லேசாய் கோடி காட்டியபோது அவன் “பல வருஷம் ஒரே ஆளைக் குடிவெச்சா இதுதான் பிரச்சனை. நமக்குத் தேவைப்படும்போது நகர்த்தறது கஷ்டம்” என்று டெலிபோனிலேயே சலித்துக் கொண்டான். அதற்கப்புறம் அதுபற்றி அவனிடம் பேசவில்லை. அவன் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று பிரச்சனையை தள்ளிப் போட்டுவிட்டார். சரசுவுக்கும் அவர்களைக் காலி பண்ணச்சொல்வதில் நடராஜனைப் போலவே உடன்பாடு இல்லைதான். ஒரு முறை ராமநாதனிடம் எதற்கும் சொல்லி வைக்கலாமா என்று நடராஜன் படியிறங்கிக் கீழே போனபோது நினைத்தபடி தொண்டைக்குள்ளேயிருந்து வார்த்தைகள் வரவில்லை. பேச வந்த விஷயத்தின் சாரத்தை அப்படியே விழுங்கிவிட்டு “என்.டி.டி.வி பாத்தீங்களா.. நேத்து ஆந்திராவில.. “ என்று எங்கேயோ திசை திரும்பிவிட்டு வந்துவிட்டார்.  சொன்னால் புரிந்து கொண்டு ராமநாதன் ஒரு வேளை வேறு வீடு பார்த்துக்கொண்டு போகக்கூடும். ஆனால் வேண்டாம் என்று தோன்றிவிட்டது. இப்படியொரு பிணைப்பை ஒரு வார்த்தையில் அறுத்துப் போட்டுவிட விரும்பவில்லை. நந்துவிற்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது. அவன் வந்தவுடன் உடனே அந்த வீடு காலியாயிருக்கும் அல்லது காலியாகிவிடும் என்கிற நினைப்போடுதான் வந்திருப்பான். அவனிடம் தன் முடிவை இன்றிரவுக்குள் உடனடியாகத் தெரிவித்துவிட வேண்டியது அவசியம். ராமநாதனை காலிபண்ணச் சொல்லப் போவதில்லை. நந்தனம் சிக்னலில் டாக்ஸி நிற்கும்போது நந்து மறுபடி ஆரம்பித்தான்.. “அப்பா ராமநாதன்கிட்ட நிஜமாகவே அந்த வீட்டைக் காலி பண்ணச் சொல்லிட்டீங்களா?” நடராஜனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. வந்ததிலிருந்து இதையே கேட்கிறான். ஒழுங்கான பதில் தெரியாமல் இவன் விடமாட்டான் போலிருக்கிறது. நடராஜன் மெல்லத் திரும்பி சரசுவைப் பார்த்தார். அவள் ‘நீங்களாச்சு உங்க பையனாச்சு’ என்பது போல் சட்டென்று ஜன்னல் குளிர்காற்றுப் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். நடராஜன் தீர்மானித்தார். இப்போதே அவனிடம் விஷயத்தைச் சொல்லிவிடலாம். அவன் என்ன நினைத்துக்கொண்டாலும் சரி! அவர் மெல்லத் தொண்டையை செறுமிவிட்டு வாயைத் திறக்கமுற்படும்போது நந்து இடைமறித்துச் சொன்னான். “ஏற்கனவே சொல்லியிருந்தீங்கன்னா.. அவங்களைக் காலி பண்ணவேண்டாம்னு சொல்லிருங்கப்பா.. நாம மேல் போர்ஷன்ல ஒண்ணாவே இருந்துக்கலாம்!!.” நடராஜன் நம்பாமல் திரும்பி அவனைப் பார்த்தார். “ஏண்டா திடீர்னு…” “இல்லப்பா.. நாங்க கெளஹாத்தில குடியிருந்தோமில்லையா? அந்த வீட்டுச் சொந்தக்காரர் நாங்க காலி பண்ணிட்டுக் கிளம்பும்போது சட்டுன்னு அழுதுட்டார்ப்பா!. வி மிஸ் யூ. மிஸ் யூன்னு நூறுதரம் சொன்னார். வெறும் மூணு வருஷப் பழக்கம்தான். மனசெல்லாம் ரொம்பக் கஷ்டமாயிருச்சு. ட்ரெயின்ல வரும்போது ஒரே யோசனை. ராமநாதன் நம்ம வீட்ல எத்தனையோ வருஷமா குடியிருக்கறவர். நம்ம குடும்பத்தோட ரொம்ப அட்டாச் ஆன குடும்பம். அவங்களை திடீர்னு காலி பண்ணச் சொன்னா அவங்களுக்கு எப்படியிருக்கும்? அது உங்களுக்கும் அம்மாவுக்கும்கூட ரொம்ப கஷ்டமாயிருக்கும்னு தெரியும். வீடு ஈஸியா கிடைக்கும். இந்த மாதிரி மனுஷங்க கிடைக்கறதுதான்ப்பா கஷ்டம். அவங்க நம்ம வீட்டிலயே குடியிருக்கட்டுமே! என்ன சொல்றீங்க?” என்றான். *** தமிழோவியம் டாட் காம் – தீபாவளி மலர் 2004   அறை எனக்கு எதிரே அந்த அறை இருந்தது. வார்னீஷ் உபயத்தில் வருடங்கள் தாண்டி இன்னும் மினுமினுக்குகிற அதன் பெரிய கதவில் என் கண்கள் நிலைத்திருந்தன. அந்தக் கதவில் ஒரு புத்தரின் உருவம் தாங்கின ஸ்டிக்கர் ஒன்று. கண்கள் மூடி போதி மரத்தடி ஞானம். அதை அந்த அறையெங்கும் பரப்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறது. என் முன்பாக இன்னும் திறக்கப்படாத அந்தக் கதவின் உட்புற மர்மங்களின் மேல் என் கவனம் வெறி கொண்டு அலைந்து கொண்டிருந்தது. ஷிவ்ராம் ஏன் அந்த அறையை மட்டும் இன்னும் எனக்கு திறந்து காட்டாமலிருக்கிறார்? என்ன இருக்கிறது அந்த அறைக்குள்? அது ஏன் பூட்டியே கிடக்கிறது? இந்தக் கேள்வியை முன்பு ஒருமுறை அவரிடம் நான் கேட்டபோது மையமாகப் புன்னகைத்துவிட்டு பதில் சொல்லாமல் நழுவிவிட்டார். நான் அந்த அறைக் கதவின் எதிரே இருக்கிற ஸோபாவில் சாய்ந்து அதை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். பல மாதங்களாக இங்கு வரும்போதெல்லாம் இது நடக்கிறது. ஷிவ்ராம் தனித்து வசிக்கும் இத்தனை பெரிய வீட்டிற்கு இந்த அறையை அவர் உபயோகிக்காமல் விட்டுவைப்பதில் அத்தனை நஷ்டமொன்றுமில்லைதான். ஆனால் இந்த வீட்டுக்குள் இத்தனை சுதந்திரமாய் உலவ எனக்கு அனுமதி தந்த ஷிவ்ராம் என்னை அந்த அறைக்குள் இன்னும் அனுமதிக்காமல் வைத்திருப்பது உறுத்துகிறது. அது பற்றிக் கேட்டபோது அது ஸ்டோர் ரூம் என்று ஏதாவது சொல்லிச் சமாளித்திருந்தால் மேற்கொண்டு நான் எதுவும் கேட்டிருக்க மாட்டேன். ஆனால் அன்று அவர் முகம் லேசாய் மாறியதும், ‘அதை எதுக்குப் பார்க்கணும், அங்கே ஒண்ணுமில்லை’ என்று லேசான நடுக்கத்துடன் சொன்னதும் அதை திறந்து பார்க்கிற வலை அதிகப்படுத்திவிட்டது. மேலும் நாம் அதிகம் நேசித்து வசிக்கிற இடத்தில் அறைகள் முக்கியமில்லையா? ஷிவ்ராமை நான் எங்கே எப்படி சந்தித்தேன் என்பது பெரிய சுவாரஸ்யமான விஷயம் அல்ல. இந்த ஒரு வருடத்தில் எங்கள் நட்பு எப்படி வலுப்பட்டு இறுகியது என்பது வேண்டுமானால் சிறப்புச் செய்தியாகச் சொல்லலாம். ஒரு தடவை என் லோக்கல் நகரத்தில் நடந்த ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில் •போர் •பார் வெனிஸ் பார்க்கப் போனபோது அறிமுகமானவர் ஷிவ்ராம். அவருக்கு ஒரு அறுபத்தைந்து வயதிருக்கலாம். ஜிப்பா. வெண்தாடி. தீட்சண்யமான கண்களை அணைத்திருக்கிற கண்ணாடி. அவரிடமிருந்து ஒரு தலைமுறை தள்ளியிருக்கிற என்னை அவருக்கு எப்படி பிடித்துப்போனதென்று தெரியவில்லை. ஒரு வேளை நான் சினிமாவில் பணியாற்றிக்கொண்டு சினிமாவை நேசிக்கிறவனாக இருப்பதால்கூட இருக்கலாம். உலக சினிமாக்கள், தேசிய அரசியல், இசை, ஓவியம் எல்லாம் பற்றி அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்போல் இருக்கும். ஒரு நாள் வீட்டுக்கு வாயேன் என்று கூப்பிட்டார். போனேன். ஆறேழு அறைகளுடன் கூடிய பெரிய வீடு. பிரமிப்பாய் இருந்தது. நல்லவிதமாய் பராமரிக்கப்பட்ட அறைகள். வாழ்வுத் தேவைக்கு அதிகப்படியாய் வசதிகள். அத்தனை பெரிய வீட்டில் அவர் தனியாய் இருந்தார் என்பது ஆச்சரியத்தை அளித்தது. ஒரு வேலைக்காரர் மட்டும் அவ்வப்போது வந்து போவார். அவர் உறவுகள் பற்றி பொதுவாய் விசாரித்தபோது என்னை அவர் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்று டேபிள் ட்ராயரிலிருந்து போட்டோ ஒன்றை எடுத்து நீட்டினார். சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், ஒரு பத்து வயதுப் பையனும் அதில் இருந்தார்கள். “என் மனைவியும், பையனும்..” கொஞ்சம் மெளன இடைவெளிவிட்டு “அவ சின்ன வயசிலயே போய்ச்சேர்ந்துட்டா.. பையன் கொஞ்சம் பெரியவனாகி..” மேற்கொண்டு எதுவும் அவர் சொல்லவில்லை. எனக்கும் தயக்கத் திரைகளைக் கடந்து குடைந்து கேட்பதற்கும் விருப்பமில்லாமலிருந்தது. எத்தனை பழகினாலும் ஒவ்வொருவருக்கும் அந்தரங்கங்கள் வேறுவேறு. விருப்பமிருந்தால் அவராக ஒரு இளகின பொழுதில் எல்லாம் சொல்வார் என்று நம்பிக்கையிருந்தது. அதற்காக என் காதுகள் தயாராகவும் இருந்தன. பேசுவதை விட கேட்பது எனக்குப் பிடிக்கும். என்னிடம் மிகப் பிடித்த குணமும் அதுதான் என்று அவரே சொல்லியும் இருக்கிறார். ‘எப்படி நான் பேசறது எல்லாத்தையும் சகிச்சுக் கேட்டுட்டிருக்கிற?’ என்றும் கேட்பார் சிரித்தபடி. ஷிவ்ராமிடம் எனக்கு என்ன பிடித்தது என்று யோசித்தால் முதலில் ஞாபகத்துக்கு வருவது மென்மையில் தோய்த்தெடுத்த அவரது குரல். மெல்லிசாய் ஆனால் உறுதியாய் வெளிப்படுகிற அந்தக் குரலில் யாருமே கட்டுண்டு போவார்கள். முதல் சந்திப்பில் சம்பிரதாயமாய் ரம்பித்த பேச்சு பரிணாம வளர்ச்சியடைந்து இப்போது வெகு தூரம் முன்னேறிவிட்டது. சில நாட்கள் நான் அவருக்கு சமைத்துப் போட்டிருக்கிறேன். வீட்டைச் சுத்தம் செய்திருக்கிறேன். வேலையில்லாதபோது ஒரு முழுநாளும் அவருடனேயே இருந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். அவருடன் மேலும் ஓருசில உலக சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். என் வீட்டுக்குப் போகாமல் அவர் வீட்டிலேயே நிறைய நாள் தங்கியிருந்திருக்கிறேன். ஷிவ்ராம் அடுக்களையில் எங்களிருவருக்கும் காபி தயாரித்துக்கொண்டிருக்கிறார். இன்று மறுபடியும் அவரிடம் கேட்டுவிடலாம் என்று தோன்றியது. அந்த அறை ஏன் பூட்டியே கிடக்கிறது? ஆவி பறக்க ட்ரேயில் காபியுடன் அவர் வந்த போது மெதுவாய் “ஷிவ்..” என்றேன். (என்னை அப்படித்தான் கூப்பிடச் சொல்லியிருக்கிறார்). “இ•ப் யூ டோன்ட் மைண்ட்.. எனக்கு அந்த ரூமைப் பாக்கணும்” இந்தத் தடவை அவர் சமாளிப்பதற்கான பதில் தேடி எதுவும் யோசிக்கவில்லை. எனக்கு உடனேயே எந்த பதிலும் சொல்லவில்லை. காபியை உறிஞ்சிக்கொண்டே கீழே குனிந்து சிறிது நேரம் பேசாமலிருந்தார். நேரம் கடந்தது. காபியின் கடைசி ஸிப்பை ருசித்துவிட்டு எழுந்தார். மெல்ல நடந்து உள்ளறைக்குச் சென்றுவிட்டார். எனக்கு ஒரு மாதிரி இருந்தது. ரொம்ப உரிமை எடுத்துக் கொள்கிறேனோ என்று என் மேலேயே கோபமாய் வந்தது. காபியின் கசப்போடு இது வேறு சேர்ந்துவிட்டது. ஷிவ் ஓரிரு நிமிடங்களில் திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு சாவிக்கொத்து இருந்தது. என்னை நெருங்கினார். என் வலக் கையை எடுத்து சாவியை அதில் திணித்தார். “நீயே திறந்து பாத்துக்கோ” என்றார் புன்னகைத்தபடி. “ஷிவ் நான் ரொம்ப உரிமை எடுத்துக்கறனா உங்ககிட்ட?” அவர் பதில் சொல்லவில்லை. சாவிக்கொத்தை நீட்டிய கையும், அவர் புன்னகையும் அப்படியே இருக்கிறது. சரி! இனி இதில் மறுக்க என்ன இருக்கிறது? மேலும் என் இத்தனை நாள் ஆவல் என்ன? அந்த அறையை திறந்து பார்ப்பதுதானே? அவரும்கூட அதை எனக்குத் திறந்து காட்டுகிற தீர்மானத்தில்தான் இருக்கிறார் என்றும் தெரிகிறது. அப்புறம் என்ன? மெதுவாய் சாவியை வாங்கிக்கொண்டு அந்தக் கதவிடம் நகர்ந்தேன். நான் யோசனையுடன் மெதுவாய் சாவித்துவாரத்துக்குள் அதைச் செலுத்தித் திருப்புவதை ஷிவ் அதே புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கதவின் மகா மெளனம் கலைகிற ஓசை ‘ப்ளக்’ என்று கேட்டது. நான் கதவை தள்ளித் திறந்தேன். மறுநொடி என் முகத்தில் வந்தமர்ந்து தாண்டவமாடிய உணர்ச்சிகளைச் சொல்லமுடியாது. அத்தனை பெரிய அறையை நான் அங்கே எதிர்பார்க்கவில்லை. நீளமாய் மிகப்பெரிய அறை. இத்தனை நாள் இந்த வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தபோதெல்லாம் இதன் அமைப்பு எனக்கு பிடிபடாமல் போயிருக்கிறது. அதனுள்ளே லேசாய் நான் உள்நுழைய முற்பட குப்பென்று ஒரு நாற்றம் தாக்கியது. கதவில் பின்னியிருந்த சிலந்தி வலைகள் என் முகத்தில் கவிழ்ந்தன. காற்றில் தூசி நெடி மூக்கில் நெருடியது. பாதத்துக்குக் கீழே குப்பை நறநறத்தது. ஜன்னல்கள் திறக்கப்படாமலிருந்ததால் பாதி இருண்டிருந்தது. அந்த அறைக்குள் நுழைந்தவுடன் என் ஆச்சரியத்தை பல மடங்கு உயர்த்திய அடுத்த விஷயம், அறையின் இரண்டு பக்கமும் பெரிய பெரிய அலமாரிகளில் நிரம்பி வழியும் புத்தகங்கள். நான் ஒரு புதையலைக் கண்டுபிடித்தவனின் உத்வேகத்துடன் அந்த புத்தகங்களை நெருங்கினேன். பெரியதும் சிறியதும் ஆக என்னென்னவோ புத்தகங்கள். குறைந்தபட்சம் மூவாயிரம் இருக்கும். அதிக பட்சம் ஆங்கிலம். •போட்டோகிராபி பற்றி நிறைய இருந்தன. அப்புறம் அதுதவிர அலமாரிகளுக்கு மேல் •ப்ரேம்கள் இடப்பட்ட பெரிய பெரிய புகைப்படங்கள். ஷிவ் ஒரு முறை காட்டிய அவர் மனைவி மற்றும் மகனின் •போட்டோவும் அதில் இருந்தது. ஷிவ்ராமின் இளமைக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் போர்ட்ரைட் ஒன்று. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிதார்கள். அதில் அதிர்ந்து அறுந்திருந்த கம்பிகள். அறையின் நடு நாயகமாய் ஒரு சுழல் நாற்காலி. ஒரு ஷெல்•பில் தூசு படிந்து இரண்டு மூன்று கேமராக்கள். லென்சுகள். புகைப்படங்கள் எடுக்க உபயோகிக்கப்படும் குடை ரி•ப்ளெக்டர் சமாசாரங்கள். ஓரிரு ட்ரைபாட் ஸ்டேண்ட். மேலும் என்னன்னவோ. ஒரு காலத்தில் அதிகம் புழக்கத்தில் இருந்த அறையாக இது இருந்திருக்கவேண்டும். இதை பூட்டி வைக்குமளவுக்கு என்ன கெட்டுப்போயிற்று இப்பொழுது? நான் வியப்பு மாறாமல் திரும்பிப்பார்த்தபோது அவர் அறைக்குள் வராமல் வெளியிலேயே நின்றிருந்தார். வருடங்கள் கடந்து தாக்குகிற நெடியில் எனக்கோ அங்கே நிற்கவே முடியவில்லை. ஜன்னல்களையெல்லாம் திறந்து விடலாமா என்று யோசித்தேன். என்ன இதெல்லாம் என்று நான் கேட்பதை என் புருவ நெளிவிலிருந்து உணர்ந்துவிட்டார் போல. மெல்ல உள்ளே வந்தார். அறையை நாலாப்பக்கமும் கண்களால் அளவெடுத்தார். அவர் முகபாவங்கள் லேசாக மாறின. அறுந்து தொங்குகிற சிலந்திவலைத் தோரணங்களிலும், குப்பையிலும், கலைந்து கிடக்கிற புத்தகங்கள், கிதார், கேமராக்கள் என்று ஒவ்வொன்றின் மேலும் அவர் பார்வை படிந்து மறைந்தது. லேசாய் அவர் கண்கள் பனித்து அதைத் தொடர்ந்து வெளிப்பட்ட அவர் குரல் கரகரத்திருந்தது. “ஏழு வருடங்களுக்கப்புறம் இந்த ரூமைத் திறக்கிறேன்.” ஏழு வருடங்களா? இருக்கலாம். இதன் பராமரிக்கப்படாத அவலட்சணக் கோலமே அதை சொல்லுகிறதே. நான் அவர் மேலும் பேசக் காத்திருந்தேன். “என்னைப் பற்றி உனக்குத் தெரியாததையெல்லாம் முதலில் சொல்லிடறேன்?” என்றார். நான் தலையாட்டினேன். நிறுத்தி நிதானித்து அவர் சொன்னார். “நான் அடிப்படையில ஒரு பயாலஜி ப்ரொபஸர். அதற்கப்புறம் போட்டோகிராபி மேல் இருந்த அதீத ஆர்வத்தினால வேலையை உதறிவிட்டு ஒரு முழுநேரப் போட்டோகிராபரா யிட்டேன். அப்புறம் வைல்ட் லை•ப் போட்டோகிராபில இன்ட்ரஸ்ட் வந்து கொஞ்ச நாள் பைத்தியமாய் காடு மலைன்னு அலைஞ்சேன். அப்றம் மாடலிங் போட்டோகிராபி. நிறைய பெரிய அட்வர்டைஸிங் ஏஜன்ஸிகளுக்கு வேலை செஞ்சிருக்கேன். முக்கியமான நகரங்கள்ல போட்டோகிராபி ஒர்க்ஷாப் நடத்தியிருக்கேன். என்கிட்ட கத்துகிட்ட நிறைய பேரு இப்ப அந்தத் துறையில பல சாதனை படைச்சிருக்காங்க. நிறைய அவார்டுகள் வாங்கியிருக்கேன். இதோ இங்க நீ பாக்கிறது எல்லாம் நான் எடுத்ததுதான். ஒண்ணு ரெண்டு சினிமாட்டோகிராபிகூட பண்ணியிருக்கிறேன். இப்ப கூட ஷிவ்ராம்னு சொன்னா இண்டஸ்ட்ரீல எல்லாருக்கும் தெரியும். ரொம்ப ரொம்பப் பாப்புலர். கொஞ்சம் ஜாம்பவான் மாதிரிதான் இருந்தேன்.” நான் விழிவிரிய அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஷிவ்ராம் இவ்வளவு பெரிய ஆள் என்கிற விஷயத்தின் வியப்பில் அவரை நான் பிரமிப்புடன் வெறித்துக்கொண்டிருக்க அவர் தொடர்ந்தார். “உலகம் பூரா சுத்தினேன். நிறைய சம்பாதிச்சேன். பெரிய உயரத்துக்கு வந்தேன். எப்பவும் அலைச்சல். வேலை. வீட்டுக்கு என்னிக்காவது வருவேன். எப்பவும் புத்தகம் படிச்சுட்டு இருப்பேன். இதோ இது பூரா நான் கலெக்ட் பண்ணினது. கடைசில என்னாச்சு? என் பையனை கவனிக்காம விட்டுட்டேன். சின்ன வயசில அம்மாவை இழந்த பையன். கூடப்பிறந்தவங்க யாரும் கிடையாது. அவனுக்கு நிறைய பணம் குடுத்தேன். செல்லமா ஆனா தனியா வளர்ந்தான். ரொம்பத் தனியா! என்னோட அக்கறையும் கவனிப்பும், கண்டிப்பும் இல்லாம. நிறைய சுத்தினான். காலேஜ் படிக்கும்போது சிகரெட் கத்துக்கிட்டான். நான் பெரிசா கண்டுக்கலை. தண்ணி அடிக்க ஆரம்பிச்சான். எல்லாமே நிறைய. அப்புறம் போதைப் பழக்கம். நான் அதை சரியா கவனிக்க ஆரம்பிக்கும்போது ரொம்ப எல்லை மீறிப் போயிருந்தது. டி-அடிக்ஷன் சென்டர்ல விடும்படியா ஆயிடுச்சு. யாரும் கவனிப்பாரற்ற தனிமையில அவனுடைய இயல்பு நடவடிக்கையில நிறைய மாற்றம். கொஞ்சம் வயலண்டா ஆயிடுவான் அப்பப்ப. அப்றம் சைக்காலஜிஸ்ட்கிட்ட கன்ஸல்ட்.. இப்படி நிறைய நடந்தது. கொஞ்சநாள் ஒழுங்கா இருந்தான். எனக்கு என் வேலை எப்பவும் சரியா இருந்தது. மறுபடி அவனை சரியா கவனிக்க முடியாம சந்தர்ப்பங்கள் அமைஞ்சுபோச்சு. ஒரு நாள் ஒரு நீண்டநாள் டூரிலிருக்கும்போது அவசர தகவல் கிடைச்சு வீடு வந்து சேர்ந்தேன் அவன் இதோ இந்த ரூமுக்குள்ளதான் செத்துக்கிடந்தான். அவன் செத்து மூணுநாள் கழிச்சுத்தான் அவனை இந்த ரூமுக்குள்ளேர்ந்து கண்டுபிடிச்சு வெளியே எடுத்தோம்.” தழுதழுத்த குரலில் அவர் நிறுத்த நான் உறைந்துபோய் நின்றிருந்தேன். அந்தச் செய்தியின் அதிர்வை என் உடம்பு உள்வாங்கிக் கொண்டதில் சர்வ நரம்புகளும் நடுங்கின. “ஐம் ஸாரி ஷிவ்.” என்றேன். “நானில்லாதபோது ஒருநாள் அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கு. மஞ்சள் காமாலைன்னு சொன்னாங்க. அதோடயே நிறைய குடிச்சிருக்கான். உடம்பு தாங்கலை. போய்ட்டான். உனக்கு இன்னொன்னு தெரியுமா? அவன் நல்லா கிதார் வாசிப்பான்.” மறுபடி கொஞ்சம் நிறுத்தி “கவனிப்பில்லாத தனிமை அவனைக் கொன்னுடுச்சு. அதோ அந்த ஸோபால கவுந்து கிடந்தான் கடைசியா பார்க்கும்போது.” என்றார். நான் திரும்பிப் பார்த்தேன். அப்போதுதான் அந்த அறையின் மீதிப் பகுதிக்குள் பிரவேசிக்காமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது உறுத்தியது. அதிகம் வெளிச்சமற்று இன்னும் இருண்டிருந்த பகுதிக்கு மெதுவாய் எட்டு வைத்து நடந்தேன். புத்தக ஷெல்•புகள் ஓரிடத்தில் முடிந்து சரேலென்று இன்னொரு ஷெல்•ப் தொடங்கியது. அதில் முழுக்க பாட்டில் பாட்டிலாக நிறைந்து கிடந்தன. அவைகளில் வெவ்வேறு அளவுகளில் நிறைந்திருந்த ஆல்கஹால் திரவங்கள். அதன் மூக்கைத் துளைக்கும் நெடி. ஒரு டீப்பாய். அதன் மேல் ஷ்ட்ரே. அது முழுக்க புகைத்த சிகரெட் துண்டுகள் ஏராளமாய் கிடந்தன. அது தவிர நிறைய சிகரெட் டப்பாக்கள். பின் ஓரிரு சிரிஞ்சுகள். அப்புறம்.. அப்புறம்.. அப்போதுதான் நான் அதைப் பார்த்தேன். ஒரு அலமாரியில் புத்தகங்கள் பாதி எரிந்து கரியாய்க் கிடந்தன. என்ன இது? “அவன் எரிச்சதுதான். ஒரு நாள் எம்மேல இருந்த கோவத்துல” என்றார் ஷிவ்ராம். “அவன் இறந்தப்ப இந்த ரூம் எப்படியிருந்ததோ அப்படியே விட்டுட்டு இந்தக் கதவைப் பூட்டிட்டேன். ஒரு பொருளை நகர்த்தலை. அப்புறம் திறக்கவும் இல்லை. யாரையும் உள்ளே விடவும் இல்லை. ஒரு மனுஷன் எப்படி வாழக்கூடாதுங்கறதுக்கு ஒரு மோசமான உதாரணம் இந்த ரூம். ஒரு அப்பங்காரன் தன் பிள்ளைங்ககிட்டே எப்படியிருக்கணுங்கறதுக்கும்கூட. இல்லையா? எனக்கு எல்லாத்துலேயும் பிடிப்பு போய்டுச்சு. ரொம்ப கில்டியா •பீல் பண்ணினேன். என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தா எனக்கே கேவலமா இருந்தது. எதுக்காக வாழ்ந்தேன்? எதுக்காக அவார்டு? விரக்தியடைஞ்சு எல்லாத்தையும் விட்டுட்டேன். போட்டோகிராபி உட்பட. இப்ப எனக்கு எதுவும், யாரும் கிடையாது. இதையெல்லாம் மனசுவிட்டு யார்கிட்டேயும் சொல்லணும்னுகூட தோணினதே கிடையாது. யாரும் கேட்டதும் இல்ல. கேட்டாலும் சொல்ல மாட்டேன். என் வைராக்கியத்தை முதல் முதலா நீ உடைச்சிருக்க”. இதைச் சொல்லிவிட்டு ஷிவ்ராம் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். திடீரென்று கனத்துப் போன மனசுடன் நான் திகைத்து நின்றிருந்தேன். என் பிரியத்துக்குரிய ஒரு மனிதரின் பின்னால் இத்தனை பெரிய சோகம் இருக்குமென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. என் முன் ஒரு புதிராய் மெளனமாய் இருந்த இந்த அறை இப்போது தன்னை திறந்து காட்டி தன் அவலங்களையும் மர்மங்களையும் வெளிப்படுத்திவிட்டது. என்ன செய்யப் போகிறேன் நான்? ஷிவ்ராமுக்கு! ஒரு மாபெரும் இழப்பை என்றும் உணர்த்திக்கொண்டிருக்கும் இந்த அறைக்கு! அவர் விரும்பிப் படித்த புத்தகங்களுக்கு!. எனக்கு என் அப்பாவும், அவர் புத்தகம் படித்துக்கொண்டு கிடக்கிற அவரின் அறையும் ஞாபகத்துக்கு வந்தது. அதற்குள் ஒரு நாளாவது நுழைந்திருப்பேனா? ஒரு நாளாவது அங்கே அவருடன் அமர்ந்து ஒரு கொஞ்ச நேரம் பேசியிருப்பேனா? பெரியவனானதுக்கப்புறம் எப்படியெல்லாம் அவர் வார்த்தைகளைப் புறக்கணித்திருக்கிறேன். வாஞ்சையுடனான அவர் பார்வைகளைப் தவிர்த்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் நேரமில்லாமல் போய்விட்டது. இந்த அறை இப்படியே கிடந்துவிடவேண்டுமா? நான் மெதுவாய் ஷெ•ல்பிலிருந்து ஒரு கேமராவை எடுத்தேன். நல்ல விலையுயர்ந்த கேமரா அது. அதைப் சுற்றிப் பொதிந்திருந்த தூசியை ஊதினேன். கர்ச்சீப் எடுத்துத் துடைத்தேன். அதன் வியூ •பைண்டரின் வழியே கண்ணைப் பொருத்தி அந்த அறையைப் பார்த்தேன். அறை ஒரு மகா அமைதியுடன் என்னைப் பார்ப்பதுபோலிருந்தது. அதை எடுத்த இடத்தில் வைத்தேன். இழந்தவைகள் இழந்தவைகளாக இருந்துவிட்டுப் போகட்டும். இருப்பவைகள் வெறுமையாகாமல் ஏதாவது ஒன்றால் நிரப்பப்பட்டேயாகவேண்டும். அது மட்டும் புரிந்தது. ஷிவ்ராமுடன் எனக்கிருக்கிற நட்பும் நெருக்கமும் இப்போது இன்னும் அதிகமாய் கதவு திறந்துவிட்டன. திறந்த கதவுக்குப்பின் ஹோவெனப் பரந்து கிடக்கிற வாழ்வின் மீதிக்கு வேறு ஏதாவது வேண்டும். அறைக்குள்ளிருந்து வெளிவரும்போது சுவரில் சாய்த்து வைக்கப்பட்ட கிதார்களைப் பார்த்தேன். வா என்று என்னை இழுத்ததுபோல் நான் அதனருகில் போனேன். ஒரு கிதாரைக் கையில் எடுத்து மெதுவாய் அறுந்து போகாமல் மிஞ்சியிருந்த நரம்பில் விரலால் சுண்டினேன். “டிய்ங்” என்று அதிர்ந்து கிளம்பிய இசை தூசிகளைக் கிளப்பி அந்தப் பெரிய அறையின் மெளனத்தை ஊடுருவி நிறைந்தது. ***   ஜனனம் “ம்மா..” என்று அடி வயிற்றின் வேதனையடங்கிய குரல் எழுந்து அடங்கியது. பெரிதாய் வீங்கின வயிறுடன் நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு மிரண்ட விழிகளுடன் அது தரையில் கிடந்தது. பலவீனமான மூச்சில் வயிறு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. வைக்கோலின் உதவியால் தற்காலிகமாக மென்மையூட்டப்பட்ட மண் தரையில் “புஸ்ஸ்” என்ற பெருமூச்சுடன் அது புரள முயன்று தோற்றது. அந்தப் பசுமாட்டைச் சுற்றி கவலையும் பதட்டமும் கலந்த முகத்தோடு எல்லோரும் நின்று கொண்டிருந்தோம். அமுதாவின் முகம் இதற்கு முன் எப்போதும் பார்த்திராத மிரட்சியுடன் இருந்தது. “லட்சுமிக்கு ஒண்ணும் ஆகாதுல்ல” என்றாள் டாக்டரைப் பார்த்து. தன் பெயர் உச்சரிக்கப்பட்டதில் ஒருமுறை பசுமாட்டின் உடல் குலுங்கி அடங்கியது. அமுதா அதன் தலையை வாஞ்சையாய்த் தடவிக் கொடுத்தாள். வெடர்னரி டாக்டர் நெற்றியைச் சுருக்கி மிகத் தீவிரமான யோசனையுடன் அமுதாவை நிமிர்ந்து பார்த்தார். அவர் வாயிலிருந்து வரும் செய்திக்காய் எல்லோரும் பரபரப்பாய் காத்திருக்க, பசுவின் வயிற்றினுள் பரிசோதிக்கக் கையுறையாய் பயன்படுத்திய பாலிதீன் கவரைக் கழற்றி ஓரமாய்ப்போட்டார். அவர் சட்டை வியர்வையில் ஒட்டியிருந்தது. “மாட்டு வயத்துல கன்னு தல திரும்பிருக்கு. காலும் தலையும் இடம் மாறியிருக்கு” என்றார் மெல்லிய குரலில். அமுதாவின் கண்களில் இதுவரை அணையிட்டு நின்றிருந்த நீர் “சர்” என்று கன்னத்தில் கோடிட்டுக் கீழிறங்கியது. அழுகையை அடக்கப் பார்த்த பிரயத்தனத்தில் “ம்க்” என்று சப்தம் வந்தது அவளிடமிருந்து. “கன்னு போடற நேரம் ஊருக்குப் போகவேண்டாம்னு அப்பவே சொன்னேன் கேட்டியா” என்றாள் அமுதா அழுகையினூடே அவள் அம்மாவைப் பார்த்து. சேலை முந்தானையால் வாயைப் பொத்தி மாடிப்படியோரம் செய்வதறியாது நின்றிருந்த அவளின் அம்மா “யாரு நெனச்சா… இப்படியெல்லாம் ஆகும்னு… என்னை எதுக்குடி குத்தம் சொல்ற?” என்றாள். தரையில் லட்சுமி என்கிற அந்தப் பசுமாடு மறுபடி புரண்டெழ முயற்சித்தது. மறுபடியும் ஒரு வேதனையடங்கிய “ம்மா”. அந்தி மயங்கத் தொடங்கின அந்த நேரத்தின் நிசப்தத்தில் அந்த சப்தம் கொஞ்சம் கலவரமூட்டிக் கலைந்தது.. “இங்க பாருங்க… பேசிக்கிட்டுருக்கிற நேரமில்ல இது. வயித்துக்குள்ள கன்னு உசிரோட இருக்கறதுக்கு சான்ஸ் கம்மி. உடனே எப்படியாவது வெளிய எடுக்கணும். இல்லைன்னா மாடும் போய்ச் சேந்துடும். கொஞ்சம் சிரமப்பட வேண்டிவரும். ஒரு ஆறேழு ஆம்பளைங்க உதவிக்கு வேணும். அப்பறம் நெறைய சுடுதண்ணி, வைக்கோலு, கொஞ்சம் கயிறு, நாலு எமர்ஜென்ஸி லேம்ப், நாலஞ்சு சாக்கு எல்லாம் ரெடி பண்ணுங்க. எதுக்கால இருக்கிற ஃபேக்டரி கிரவுண்டுக்கு எப்படியாச்சும் பசுமாட்ட கூட்டிட்டுப் போயிடுங்க. நைட்டு ஒரு மணி ரெண்டு மணி ஆகலாம். நான் போயிட்டு ஒரு ஒம்பது மணிபோல வரேன். கூடவே எனக்கு லுங்கி, துண்டு வேணும் எடுத்து வைங்க” டாக்டர் சுவரோர பைப்பில் கை கழுவிக்கொண்டார். அமுதா கொடியிலிருந்து உருவின துண்டை நீட்ட அதில் துடைத்துக் கொண்டார். “எல்லாரும் தைரியமா இருங்க. முயற்சி பண்ணிப் பாக்கலாம்.” டாக்டர் தன் பழைய லேம்ரட்டா ஸ்கூட்டரில் ஏறி தெரு முனையில் மறைந்த பிறகு நாங்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். தூக்கலாய் மூத்திர-சாணி நாற்றமடிக்கும் அந்த தொழுவத்தில், நிலைமையின் தீவிரம் உணராத வேறு இரண்டு மாடுகள் கவலையற்று அசைபோட்டுக்கொண்டிருந்தன. ஓரத்தில் என்றோ உடைந்து உபயோகமற்றுப் போயிருந்த ஒரு ஆட்டுக்கல்லின் மேலமர்ந்து அமுதா தேம்பி அழ ஆரம்பித்திருந்தாள். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லையெனினும் என்ன செய்ய வேண்டுமென்று புரிந்தது. தோளில் மிதமாய் கனக்கிற டிபன் பாக்ஸ் மற்றும் அலுவலகக் காகிதங்கள் அடங்கிய லெதர் பேக் நான் இன்னும் வீட்டுக்குப் போகவில்லையென்பதை உணர்த்தியது. “இங்க பாரு அமுதா… சும்மா கவலப்பட்டு அழுதுகிட்டிருக்காத. வேணுங்கறதை ஏற்பாடு பண்ணு. நான் வீட்டுக்குப்போயி கைகால் மூஞ்சி கழுவிட்டு வந்துர்ரேன்.” இதுவரை வியந்தோ, அதிர்ந்தோ, கவலையுற்றோ, வேடிக்கை பார்த்தோ நின்றிருந்த இரண்டு மூன்று பேர் தன்னிலை உணர்ந்து அமுதாவைத் தேற்ற முயற்சிக்க நான் மெல்ல நகர்ந்தேன். வீட்டுப் படியேறி செருப்பைக் கழற்றுமுன்..”என்னங்க அமுதா வீட்டு…” என்று ஆரம்பித்த ஹேமாவை “பாத்துட்டுத்தான் வர்றேன்” என்று நிறுத்தினேன். “பாவம்ல அந்த மாடு” என்றாள் நிறுத்தாமல். ஆபிஸில் என்றுமிருக்கும் டென்ஷன், பஸ் இறங்கி நடந்து வந்த களைப்பு, வந்ததும் கேள்விப்பட நேர்ந்த இந்த விஷயம் எல்லாம் சேர்ந்து வரவேற்பரை பிளாஸ்டிக் சேரில் என்னைக் கொண்டுபோய் அசதியாய் உட்கார்த்தி வைத்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் கண்மூடி அப்படியே சாய்ந்திருந்தேன். ஒரு நிலையில் நிற்காமல் யோசனைகள் ஓடின. இரண்டு வீடுகள் தள்ளி இருக்கிற அமுதா வீட்டில்தான் தினசரி பால் வாங்குவது. மூன்று கறவை மாடுகள் இருக்கின்றன. இந்தத் தெருவில் நிறைய பேருக்கு இங்கிருந்துதான் பால் போகிறது. அது தவிர தேவைக்கேற்ப சாணி, வரட்டி என காசு கொடுத்து வாங்கிக் கொண்டு போகவும் ஆட்கள் வரும். ஒரு நகரத்தின் கான்க்ரீட் கட்டிடங்கள் அடங்கிய இந்தத் தெருவுக்கு மத்தியில் மாடுகள் அடங்கிய அவர்களின் வீடு கொஞ்சம் பிரதானமான வித்தியாசம்தான். மற்றவருக்கு என் வீடிருக்கிற பகுதியின் அடையாளம் சொல்வதற்குக்கூட அது வசதியாகவே இருந்தது. தினமும் வழக்கமாய் பால் கறந்த கையோடு அமுதா அளந்து எடுத்துவந்து தந்துவிட்டுபோவாள். சில தினங்கள் ஹேமா போய் வாங்கி வருவாள். ஏதாவது ஓரிரு நாட்கள் அபூர்வமாய் நான் போவேன். அப்படி இரண்டு நாட்கள் முன்பு போனபோதுதான் அமுதா வீட்டுத் தொழுவத்தில் அந்த வெள்ளை சினைமாட்டைப் பார்த்தேன். அதன் பார்வையும், நிற்க முடியாமல் கால் மாற்றி நின்றிருந்த அதன் அவஸ்தை நிலையும், மாடுகளோடு எனக்கு எந்தப் பரிச்சயமும் இல்லையெனினும் ஏதோ ஒரு அசாதாரணத்தை உணர்த்தியது போலிருந்தது. “அல்லாரும் ஊருக்குப் போயிருக்காங்க” என்றபடி பால் நிரம்பின எவர்சில்வர் சொம்பை என்னிடம் நீட்டின அமுதாவின் அண்ணனிடம் மாட்டைப் பற்றி விசாரித்தபோது “எல்லாம் அமுதா வந்து பாத்துக்கும்” என்று சொல்லிவிட்டு சாவதானமாய் பீடி பற்ற வைத்துக் கொண்டான். அப்போதே கவனித்திருந்தால் இப்படி விபரீதமாகாமல் தடுத்திருக்கலாமோ? ஒன்பது மணிக்கு நான் எழுந்துபோய் கைகால் முகம் அலம்பிக் கொண்டு வந்தேன். ஒரு மிகப் பெரிய செயலுக்கான ஆயத்தம் போல நான் எனக்குள் உணர்ந்தேன். என்றாலும் மாட்டு டாக்டர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று என்ன யோசித்தும் சரியாய் புரிபடவில்லை. ஹேமாவிடம் இரவு டிபன் வேண்டாமென்றேன். “கண்டிப்பா அவங்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணியாகணும். சரியா ஆம்பளை துணையில்லாத வீடு அது. பாவம். பால் வியாபாரத்துல இருந்து வீட்டு நிர்வாகம் வரைக்கும் எல்லா வேலையையும் அமுதா ஒத்தை ஆளா இருந்து பண்ணுது. பிரயோஜனமில்லாத அண்ணங்காரன். அப்பங்காரன். நான் போயிட்டு வர்றேன். நைட்டு ரெண்டு மணி ஆகுங்கிறாங்க. நீ கதவத் தாப்பாள் போட்டுட்டுப் படுத்துக்க.” சட்டை பட்டனைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன். அமுதா வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்த பக்கத்து வீட்டு நடராஜன் கையில் எமர்ஜென்ஸி விளக்கு இருந்தது. என்னைப் பார்த்ததும் சிரித்தார். “அங்கதானே?…வாங்க இன்னைக்கு நமக்கு நிறைய ஜோலி இருக்கும் போல. இந்தப் புள்ள அமுதா என்னடான்னா மாட்டைப் பாத்து பாத்து ஓ..ஓன்னு அழுது. ரொம்பப் பாசந்தான். இருந்தாலும்… அட.. கொஞ்சமாச்சும் தெகிரியம் வேணுமில்ல..” என்றார். பேசிக்கொண்டே தொழுவத்தை அடைந்தபோது பசுமாட்டை அங்கே காணவில்லை. எதிர்புற ஃபேக்டரி கிரவுண்டுக்கு அதை இடம் பெயர்த்தி விட்டார்கள் போல. வெளியே டாக்டரின் லேம்ப்ரட்டா நின்றிருந்தது. திறந்திருந்த கேட்டை தள்ளிக்கொண்டு கிரவுண்டுக்கு வந்தபோது ஒரு சின்னக்கும்பலின் நடுவே கால் மடக்கிச் சாய்ந்திருந்தது பசுமாடு. பாலண்ணன் நின்றிருந்தார். மளிகைக்கடை ஆறுச்சாமி இருந்தார். மேலும் சிவில் இன்ஜினியர் சுந்தரராஜன். கேபிள் டி.விக்காரர். இப்படி நிறைபேர் அங்கே உதவிக்குக் கூடியிருந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயமொன்றுமில்லை. எல்லாம் அமுதாவின் குணத்துக்கும் முகத்துக்கும்தான். ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்துக்கு முன்பான கசகசப்புபோல எல்லாரும் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தது காற்றில் கரைந்து தெளிவில்லாமல் காதுகளை வந்தடைந்தது. டாக்டர் தன் பேண்ட் சட்டையிலிருந்து லுங்கி பனியனுக்கு மாறியிருந்தார். போதுமான அளவு எமர்ஜென்ஸி லேம்புகள் கிடைக்காததால் வெளிச்சம் போதாமல் இருண்டிருந்தது அந்தப் பிரதேசம். கும்பலில் இருந்த எதிர்வீட்டு அழகப்பன் ஓரிரு நிமிட யோசனைக்குப் பிறகு வீட்டுக்கு ஓடினார். திரும்பி வரும்போது அவர் கையில் இரு பட்டிகளுடன் கூடிய ட்யூப் லைட்டுகளும் நிறைய ஒயர்களும் இருந்தன. அவர் பதினைந்து வயது மகன் கூடவே பெரிய ஸ்டூல் ஒன்றையும் எடுத்துவர.. பத்து நிமிடத்தில் பக்கத்துக்கூரையில் அவைகளை சேர்த்துக்கட்டி ஃபாக்டரி ஓனரிடம் போனில் அனுமதிபெற்று கனெக்ஷன் கொடுத்தார்கள். பளீர் வெண்மை வெளிச்சத்தில் இருள் விலகி பசுவின் அவஸ்தை இப்போது தெளிவாய்த் தெரிந்தது. நான் ஏறியிறங்கும் அதன் வயிற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். “நீ இருக்கியா.. போறீயா?” என்றார் டாக்டர் அமுதாவிடம். “இருக்கேன்”. “சரி நேரமாகுது ஆரம்பிக்கலாம். சிரமம் பாக்காம எல்லாரும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” சொல்லிவிட்டு டாக்டர் மறுபடி பாலிதீன் கவர்களை கையுறைகளாய் அணிந்துகொண்டார். ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு பசுமாட்டினருகே கூட ஆரம்பிக்க.. டாக்டர் ஒருமுறை மாட்டைத் தொட்டு வணங்கினார். அமுதாவை ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டார். பிறகு நிறைய வைக்கோல் பரப்பியிருந்த தரைக்கு பசுவை நகர்த்தலாம் என்றார். ஆனால் மாட்டை அதற்குமேல் நகர்த்துவது சிரமமாயிருந்ததால் வைக்கோல்கள் இடமாற்றப்பட்டு அதனடியில் முடிந்தவரை பரப்பினார்கள். ஒருக்களித்துச் சாய்ந்திருந்த மாடு படுக்க வைக்கப்பட்டது. அமுதாவிடமிருந்து கயிறுகள் வாங்கி மாட்டின் கால்களைக் கட்டினார். பிறகு “நாலு காலையும் அழுத்திப் புடிச்சுக்குங்க. அசையவிடாதீங்க.. வாலை யாராவது தூக்கிப் புடிங்க” என்றார் நானும் நடராஜனும் இரு கால்களை அழுத்திக்கொள்ள, மற்ற இருவர் மற்ற இரு கால்களை. டாக்டர் கையுறைக் கையை மாட்டினுள் செலுத்தி சிறிது நேரம் பரிசோதித்தார். மாட்டை அப்படியே நாலைந்து தடவை திருப்பித்திருப்பிப் புரட்டிப் போடவேண்டுமென்றார். ஒரு நாலைந்துபேர் சேர்ந்து அதன் நான்கு கால்களையும் பிடித்து உயர எழுப்பி ஒரு சாக்கு மூட்டையைத் திருப்புவதைப் போல அப்படியே வலதுபுறம் திருப்பிப்போட்டோம். பிறகு வலதுபுறம். “ம்… அப்படித்தான்…தூக்கிப்போடுங்க…” டாக்டரின் குரல் உயர்த்திக் கத்தினார். வலது. இடது. வலது. இடது. “ம்..மா…” என்ற ஈனமான குரல் அதன் அடிமடியிலிருந்து புறப்பட்டது. என் உடல் ஒரு முறை நடுங்கிக் குலுங்கியது. நடராஜன் முகத்தைப் பார்த்தேன். கைகளில் அப்பியிருந்த தரை மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு அவரும் என்னைப் பார்த்தார். ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. “இப்ப அப்படியே மொத்தமா புரட்டிப்போடுங்க. கால் ரெண்டும் கீழ போய் அப்பறம் மேல வர்ர மாதிரி..” கடவுளே. புரட்டிப்போட்டோம். தாங்கவொண்ணாத வேதனையில் இன்னொரு கத்தல். புஸ்..புஸ்ஸென்று பெருமூச்சு அதிகமாகி வயிறு அதிக உயரம் ஏறி இறங்க ஆரம்பித்தது. ஓரிரு நிமிடங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் டாக்டர் மாட்டின் வயிற்றினுள் கை செலுத்தி பரிசோதனை நடத்தினார். இந்தமுறை கொஞ்சம் அதிக நேரம். வைத்தகண் வாங்காமல் அனைவரும் டாக்டரின் செய்கையையே பார்த்துக்கொண்டிருக்க அங்கு நிலவின நிசப்தத்தை உடைத்துக்கொண்டு சிவப்பு கலந்த திரவம் கொழகொழவென்று வெளியேறி வழிந்தது. நெற்றியிலிருந்து பெருக்கெடுத்து வழிந்த வியர்வையை இடது கையால் வழித்தெறிந்தார். தன்னை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டார். பிறகு மீண்டும் பரிசோதனை. நான்கு நீளமான கயிறுகள் வாங்கி ஒவ்வொன்றின் முனையிலும் ஒரு சுருக்குப் போட்டுக்கொண்டு வயிற்றுக்குள் கைவிட்டு உள்ளே துழாவி அகப்பட்ட கன்றின் ஒவ்வொரு கால்களிலும் ஒவ்வொன்றாய்க் கட்டினார். துள்ளின மாடு பலப்பிரயோகத்தால் அடக்கப்பட்டது. இப்போது நான்கு கயிறுகள் மட்டும் மாட்டின் ஆசனத் துவாரத்தில் வெளிநீண்டிருந்தது. மாட்டைவிட பெரிதான பெருமூச்சொன்று டாக்டரிடமிருந்து புறப்பட்டது. எல்லோரும் உறைந்துபோய் நின்றிருக்க… முதலில் டாக்டர் பலம் முழுவதையும் திரட்டி இழுக்க அது லேசாய் வெளிவந்தது. கன்றின் ஒரு கால் குளம்பு. “வாங்கப்பா இழுங்க. ஆனா விட்டுறக்கூடாது. அப்றம் கஷ்டம்.” டாக்டரின் கைகளுடன் இன்னும் பல கைகள் சேர்ந்துகொள்ள அந்தப் போராட்டம் ஆரம்பமானது. வெளித்தெறிந்த கன்றின் ஒரு காலை நான் பிடித்துக்கொள்ள மற்றவர்கள் கயிறுகளைப் பிடித்துக்கொண்டார்கள். குளம்பு, திரவத்தின் கொழகொழப்பில் பிடிகிடைக்காமல் வழுக்கியது. “ம்… இழுங்க..” என டாக்டரின் பத்து செகன்டுகளுக்கொருமுறை ஒலித்துக் கொண்டிருக்க பலங்கொண்டமட்டும் இழுக்க ஆரம்பித்தோம். திமிறின மாட்டை நான்குபேர் கால் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் அத்தனை எளிதில் எதுவும் நடந்து விடுவதாய்த் தோன்றவில்லை. முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு என் இதயத் துடிப்பு உயர்ந்து விட்டிருந்தது. எல்லோருடைய பெருமூச்சுகளும் இப்போது பூதாகரமாய் கேட்டது. கைகள் தகதகவென்று எரிந்து வலித்தன. இதெல்லாம் ஒரு வலியா?. குறைந்தபட்சம் இந்த தாய் மாட்டையாவது உயிரோடு காப்பாற்ற வேண்டுமே. இழு. இழு. பட்டென்று கன்றின் குளம்பு மட்டும் குதிகாலோடு பெயர்த்துக் கொண்டுவிட.. இழுத்துக் கொண்டிருந்த எல்லோரும் மண்தரையில் தடுமாறிச் சரிந்தோம். அய்யோ என்று வாய் பொத்திக்கொண்டாள் அமுதா. “கெட்டுச்சு” என்றார் டாக்டர். “நகருங்க” என்று எல்லாரையும் விலக்கினார். மறுபடி வயிற்றுக்குள் கைவிட்டுத் துழாவினார். எதுவோ மீண்டும் அகப்படப் பலங்கொண்டமட்டும் பிடித்திழுத்தார். பட்டென்று ஒரு சப்தம் கேட்டது. “காலெலும்பு முறிஞ்சிருச்சுபோல” என்றார் யாரோ ஒருவர். “சும்மாருங்கய்யா” என்று டாக்டர் அதட்டினார். மாட்டின்மீதே சாய்ந்த மாதிரி படுத்துக்கொண்டிருந்தார் அவர். மீண்டும் ஒரு இழுப்பு. நீண்ட நேர முயற்சிக்குப்பின் ஒன்றும் முடியாமல் “சரி மூணு கயித்தையே இழுத்துப்பாப்போம். வாங்க…இழுங்க..” என்றார். இழுத்தோம். அத்தனை பேரின் பிரயத்தனமும் கவனமும் பலமும் பிரயோகிக்கப்பட்ட அந்த செயலில் கொஞ்சம் பலன் தெரியும்போல இருந்தது. வயிற்றுக்குள் நகர்ந்துகொடுக்கிற கன்றின் அசைவை கைகள் உணர்ந்தன. ஈரம் கலந்த ரத்தம், வழுக்கல்.. சணல் கயிற்றின் சொரசொரப்பில் கைகளின் எரிச்சல். “விட்டுராதீங்க… விட்டுராதீங்க’ என்று டாக்டரின் எச்சரிக்கைக்குரல் அந்த நள்ளிரவில் எழுந்து எழுந்து அடங்கியது. எப்படியும் மணி பன்னிரண்டாவது இருக்கும். “கொடுமைங்க..” என்றார் நடராஜன் என் காதருகே. மீண்டும் அவரே சொன்னார். “வேற வழியில்ல..” இப்போது மாடு தன் சக்தி முழுவதையும் இழந்து அரை மயக்க நிலைக்குப் போய்விட்டிருந்தது. மறுபடி ஒரு பத்து நிமிடங்கள் நடந்த அந்தப் போராட்டத்தின் முடிவில்.. குளம்பு முறிந்த கால் தவிர இன்னொன்றும் வெளித்தெரிந்தது. அதற்கப்புறம் எல்லாம் சுலபமாகிவிட்டது. இழுப்பின் திசையில் தாயின் மடியிலிருந்து கன்று சரேலென்று உருவிக்கொண்டு ரத்தக்கொழகொழப்புடன் சொத்தென்று வெளி வந்து விழ மறுபடி ஒரு முறை தடுமாறிச் சரிந்தோம். டாக்டரும்கூட. களைப்பான பெருமூச்சுக்களுடன் அத்தனை பேரின் பார்வையும் கன்றின் மேல் படிந்தது. அமுதா ஓடிவந்து அதனருகே குனிந்தாள். அது உயிரோடிக்கிற சாத்தியக்கூறுகளை அவள் கண்கள் தேடி ஏமாந்தது. திறந்திருந்த அதன் அழகான விழிகளில் அதன் உயிர் எப்போதோ உறைந்து நிலைகுத்தியிருந்தது. அவள் கண்ணிலிருந்து நீர் பெருக்கெடுத்து வழிந்தது. கன்றின் உயிரற்ற சடலத்தினருகில் அப்படியே கால் மடங்கி உட்கார்ந்து கதறியழ ஆரம்பித்தாள். அந்த இடத்தின் அமைதியை விலக்கி பேச்சுக்குரல்கள் மெல்ல எழுந்தன. “ரொம்ப தேங்ஸ்ங்க. இத்தன பேரு உதவிக்குக் கிடைக்கும்னு நான் நெனைக்கவேயில்லை” என்று நன்றியோடு பார்த்தார் டாக்டர். மாட்டின் கால்களை அவிழ்த்துவிட்டார். கன்றினருகில் வந்து அதன் நான்கு கால்களையும் அலாக்காகத் தூக்கி மாட்டினருகில் “இந்தா” என்று போட்டார். அவரின் அந்த வார்த்தையில் நிறைய அர்த்தங்கள் புதைந்துகிடந்த மாதிரி உணர்ந்தேன். டாக்டர் கையுறைகளைக் கழற்றி வீசிவிட்டு பக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கைகழுவிக்கொண்டார். “ஒரு வழியா ஆச்சு” என்றபடி கைகழுவிவிட்டு நடராஜன் எமர்ஜென்ஸி விளக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார். ட்யூப் லைட்டுகள் கழற்றப்பட்டு மறுபடி இருள் சூழ்ந்தது. அழகப்பன் மறுபடியும் மகனுடன் ஸ்டுல் உட்பட தன் பொருள்களைச் சேகரித்துக்கொண்டு நகர்ந்தார். இஞ்ஜினியர், கேபிள்காரர், மளிகை ஆறுச்சாமி எல்லோரும்கூட நகர ஆரம்பித்தார்கள். மாட்டுக்கு மற்ற சிஷ்ருஷைகளையும், சோதனைகளையும் முடித்துவிட்டு “காலைல சீக்கிரமா மறுபடி வந்து பாக்கறேன்” என்று நடுநிசியின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு டாக்டரின் லேம்ரட்டா புறப்பட்டுச் சென்றபிறகு மற்றவர்களும் கொட்டாவியைச் சுமந்தபடி நடையைக் கட்டினார்கள். நான் இன்னும் நின்றிருந்தேன். மனது கலக்கமாயிருந்தது. ‘உனக்கப்புறம் ஒரு பொட்டப்புள்ள ஆறுமாசத்திலயே குறையா பொறந்து இறந்துடுச்சு’ என்று அம்மா என்றைக்கோ ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்து போனது. என் கண்கள் லேசாய் ஈரமாகிவிட்டிருந்ததை உணர்ந்தேன். “கேட்டை மூடிரலாங்களா” என்று ஃபாக்டரி வாட்ச்மேன் குரல் என் கவனத்தைக் கலைத்தது. கடைசியாய் அமுதாவும் நானும் மட்டும் வெகுநேரம் அமைதியாய் அங்கு நின்றுகொண்டிருந்தோம். வெளிச்சம் கரைந்த இருளில் நிழலுருவமாய் தெரிந்த அமுதாவின் கண்களில் இன்னும் நீர் இருந்தது. வேதனை கொஞ்சம் தணிந்திருந்த பசுமாடு மெல்ல ஒருக்களித்து எழுந்து அருகில் கிடந்த இறந்த கன்றின் உடலை வாஞ்சையுடன் நக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தது. நான் அதையே உறைந்துபோன நெஞ்சோடு இன்னும் பார்த்துக்கொண்டிருந்தேன். வீட்டுக்குத் திரும்பும்போது கிரவுண்டிலிருந்து “ம்ம்..மா” என்கிற குரல் மறுபடி எழுந்து தேய்ந்தது. என் உடம்பு ஒரு முறை லேசாய் சிலிர்த்து அடங்கியது. ***   விரல்கள் அந்தப் பெண் என்னைச் சைகை காட்டிக் கூப்பிட்டமாதிரி இருந்தது. என்னைத்தானா? நான் திரும்பி தோட்டத்தில் ஷாமியானாவுக்குக் கீழே பாலிவினைல் சேர்களில் தனித் தனிக் குழுக்களாய் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தேன். என்னைத் தாண்டி அவர்களில் யாரையாவதைத்தான் அவள் கூப்பிட்டாளா? அவள் சைகையை அவர்கள் யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவள் என்னைத்தான் கூப்பிடுகிறாள் என்று தோன்றியது. நானும் ஒரு முறை அவளிடம் சைகையிலேயே என்னைத்தானா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டபின் அவளை நோக்கி நகர்ந்தேன். இத்தனை பேர் இருக்கிற, கல்யாணக் களைகட்டியிருக்கிற இந்த வீட்டில் எனக்கு இதற்குமுன் அறிமுகமாயிராத அந்தப் பெண் என்னை எதற்கோ கூப்பிடுகிறாள். நான் யோசனையோடு அவளை நெருங்கினேன். சுற்றிலும் ஒரு பெரிய தோட்டத்துக்கு நடுவே இருந்த அந்த வீட்டின் இடதுபுறத்தில் தோட்டத்துக்கு இறங்க இன்னொரு வாசல் இருந்தது. அந்த வாசல் படிக்கட்டில் அவள் நின்றிருந்தாள். என்னைப் பார்த்து முறுவலித்தாள். ஸ்நேகம் பூசின புன்னகை. வெகு சுமாரான ஒரு நூல் புடவையில் இருந்தாள். அவள் கையில் ஒரு பித்தளை சொம்பு இருந்தது. அவள் கைகள் ஈரமாயிருந்தன. ஏதோ வீட்டு வேலையாயிருந்தாள் போலும். ரொம்பத் திருத்தமாய் இருந்தாள். “நிங்ஙளுடே ச்சங்ஙாதி.. அவிடெ ஸர்திக்குந்நு..” என்று காம்பெளண்டு ஓரமாய் கை காண்பித்தாள். நான் கேரளாவின் ஒரு கிராமத்தில் வந்திறங்கியிருப்பதை மறுபடி ஒரு முறை அவள் பாஷை ஞாபகப்படுத்தினதுபோல் இருந்தது. அவள் கை நீட்டின இடத்தில் ஒருவன் எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தான். உவ்வாக் என்று அவனிடமிருந்து சப்தம் வந்தது. அவன் மார்புவரை உயரமாயிருந்த காம்பெளண்ட்டைப் பிடித்தபடி அதற்கு அந்தப் பக்கமுள்ள காலி நிலத்தில் வாந்தியெடுத்துக்கொண்டிருந்தான். இந்த வீட்டைச் சுற்றி நாளைய கல்யாணத்தின் பொருட்டு கூடியிருக்கிற இத்தனை ஜனத்தில் யாரும் அவனைக் கவனிக்கவில்லை போல. இவள் கவனித்தது அவனுடைய அதிர்ஷ்டம்தான். அவனருகில் சென்றபோது அவன் வாந்தியால் போதம் கெட்ட அந்த நிலையிலும் அரவம் கேட்டுத் திரும்பி என்னைப் பார்த்து லேசாய்ச் சிரிக்க முற்பட்டான். அவனை எனக்கு அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. பாலாவின் கல்யாணத்துக்காக என்னுடன் ட்ரெயினில் வந்த இருபத்தியெட்டு பேர்களில் அவனும் ஒருவன். அவனுடன் அவன் மனைவி மற்றும் பையனையும் பார்த்ததாக ஞாபகம். நான் அவனை நெருங்கி “என்ன பாஸ்… உடம்பு சரியில்லையா?” என்று கேட்கும்போதே மறுபடி ஒரு உவ்வாக். நான் அவன் தலையைப் பிடித்துக்கொண்டு பின் அவன் முதுகை லேசாய்த் தடவிக் கொடுத்தேன். முன்பொரு தடவை நான் எதனாலோ வாந்தியெடுத்தபோது என் நண்பனொருவன் எனக்கு இதே மாதிரி முதுகில் தடவிக்கொடுத்ததும், அது எனக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தை அளித்ததும் நினைவுக்கு வந்தது. இவனுக்கும் அது மாதிரித்தான் இருந்திருக்கவேண்டும். அவன் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் தன் நெஞ்சில் கைவைத்திருந்தான். சாப்பிட்டது அத்தனையையும் பிரயத்தனப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட்டதில் அவன் கண்கள் சிகப்பாய் கலங்கியிருந்தன. உடல் பலவீனப்பட்டு கைகள் லேசாய் நடுங்கிக்கொண்டிருந்தன. நான் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் இன்னும் கையில் சொம்புடன் நடையிலேயே நின்றிருந்தாள். வைத்தகண் எடுக்காமல் எங்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். நான் அவளிடம் ‘நீ சொன்னமாதிரி இவன் என் ச்சங்ஙாதியில்லை’ என்று சொல்ல விரும்பினேன். அது ஒன்றும் முக்கியமான விஷயமில்லை. நேற்று வேனில் வந்திறங்கிய கும்பலில் என்னுடன் அவனிருந்ததைப் பார்த்து இவன் என் நண்பன் என்று முடிவு பண்ணியிருப்பாள். இருக்கட்டும். இப்போது இந்த நிலையில் அவனுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் அவள் போகாமல் அங்கே நின்றுகொண்டிருக்கிறாள். எனக்கும் அவ்வாறான எண்ணமே இருந்ததால் மேற்கொண்டு யோசிக்காமல் காம்பெளண்டு ஓரமாய் அடுக்கப்பட்டிருந்த மீதமிருந்த பாலிவினைல் சேர்களில் ஒன்றை எடுத்துப் போட்டு ‘உட்காருங்க ப்ரதர்’ என்று அவனைச் சாய்த்து உட்கார வைத்தேன். அவன் ரொம்பத் தளர்ந்திருந்தான். “கட்டஞ்சாயா போட்டுத் தரட்டே. கொறச்சு பேதமாகும்.” தமிழ் பேசுகிற ஆட்கள் என்பதையுணர்ந்து தன் பாஷையை அவள் லேசாய் மாற்ற முற்பட்டது வித்தியாசமாயிருந்தது. பேச இயலாத ஒரு நிலையில் அவள் கேட்டதற்கு அவன் வெறுமனே தலையசைத்து வைத்தான். அவள் சொம்பை படியில் வைத்துவிட்டு புடவைத் தலைப்பால் கைகளைத் துடைத்தபடி உள்ளே விரைவதைப் பார்த்தேன். “நேத்து பார்ட்டில கொஞ்சம் ஓவராயிருச்சு! அதான்” என்றான் அவன் நான் கேட்காமலே! அவன் சொல்லாமலே எனக்கு அது புரிந்துதான் இருந்தது. நேற்று இரவு பார்ட்டியில் அவன் நிறையக் குடித்ததால் கீழே பாயில் தூங்கிக் கொண்டிருக்கிற நிலையிலேயே வாந்தி எடுத்ததும் பிறகு மாப்பிள்ளைப் பையன் பாலாவும், சந்தோஷும் சேர்ந்து அவனை நகர்த்திக் கிடத்திவிட்டு அவ்விடத்தை சுத்தம் செய்தார்கள் என்றும் இவன் அதற்காக தென்னந்தோப்புக்குள் பாலாவை தனியாய் கூட்டிக்கொண்டு போய் மன்னிப்புக் கேட்டான் என்றும் காலையில் கேள்விப்பட்டிருந்தேன். இரவு மயக்கம் இன்னும் தெளிந்தபாடில்லை போலும். இதோ கட்டஞ்சாயாவுக்குக்காக காத்துக் கிடக்கிறான். உள்ளே போய்விட்டிருந்தாலும் எனக்கு அந்தப் பெண் இன்னும் நிலைப்படியில் நின்றுகொண்டு என்னை சைகையால் அழைப்பதுபோல் பிரமை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்ணிடம் என்னவோ இழுக்கிற அம்சம் இருந்தது. ஒரு வேளை பொட்டு வைக்காத அவள் நெற்றியா அல்லது லேசான சோகம் விரவின கண்களா? என்னமோ ஒன்று. அவள் சாயாவுடன் வருகிறாளா என்று நான் கதவுக்குள் பார்த்துக்கொண்டிருந்தபோது அவன் சொன்னான். “இந்த விஷயத்தை என் ஒய்ஃப்கிட்ட சொல்ல வேணாம் பிரதர்.” நான் திரும்பிச் சிரித்தேன். அவனிடம் பயப்படவேண்டாம் என்று சொன்னேன். அவன் மனைவிக்குப் பிடிக்காத விஷயத்தை அவன் செய்திருக்கிறான். அவள் இதைக் கேள்விப்பட நேர்ந்தால் கிடைக்கும் அர்ச்சனைக்கு அவன் பயப்படுகிறான். அவனுடனேயே எனக்கு அதிகமான பரிச்சயமில்லாத போது அவன் மனைவியிடம் நான் பேச நேரிடும் என்று எப்படி நினைத்தான் என்று தெரியவில்லை. அவள் வாசற்படியில் மீண்டும் தென்பட்டாள். படிகள் தாண்டி முற்றம் வரை சாயா டம்ளருடன் நடந்து எங்களை அணுகினாள். இப்போது பரவாயில்லையா என்று விசாரித்தபடி சாயாவை நீட்டினாள். நான் அதை அவளிடமிருந்து வாங்கும்போது பட்ட விரல்களை அவள் இயல்பாக எடுத்துக்கொண்டிருக்கக் கூடும் என்று தோன்றியது. ஆனால் எனக்கு ஏன் இன்னும் குறுகுறுப்பாக இருக்கிறது? தன் வேலை முடிந்தது என்பது மாதிரியும், தன் எல்லைக் கோட்டை கொஞ்சம் தாண்டி வந்துவிட்ட மாதிரியும் அவள் இரண்டடி பின்னால் நகர்ந்து நின்று கொண்டாள். என்னைப் பார்த்து முன்பு மாதிரியே முறுவலித்தாள். நான் அந்தக் கணத்திலிருந்துதான் அவளைக் கவனிக்க ஆரம்பித்திருக்கவேண்டும். அல்லது அவளைக் கவனிக்க வேண்டும் என்கிற ஒரு சின்ன உந்துதல் அந்தக் கணத்திலிருந்துதான் என்னுள்ளிருந்து புறப்பட்டிருக்கவேண்டும். என்னவோ ஒரு எளிமையும், சாந்தமும் கலந்த கலவையாய் அவள் அப்படி நின்றுகொண்டிருந்தது என்னை லேசாய் ஈர்த்தது. நான் அவளை அத்தனை உற்றுப் பார்த்திருக்கக்கூடாதோ என்று பிறகுதான் தோன்றியது. அவள் சட்டென்று என் பார்வையைச் சுதாரித்துக்கொண்டு “கொறச்சு பணியுண்டு” என்று சரசரவென்று இரண்டு தாவலில் படிகளைக் கடந்து உள்மறைந்தாள். என்னிடமிருந்து வெளிப்பட்டு மறைந்துபோன பெருமூச்சின் நதிமூலம் எனக்குப் பிடிபடவில்லை. நான் மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தேன். பதிநான்கு மணிநேரப் பிரயாணம் செய்து இங்கே வந்ததே இந்தக் கட்டஞ்சாயாவைக் குடிக்கத்தான் என்கிற மாதிரி துளித்துளியாய் நிதானமாய் அவன் அதை உறிஞ்சிக் கொண்டிருந்தான். இப்போது அவன் உடல் படபடப்பும், முக வாட்டமும் கொஞ்சம் மறைந்து கொஞ்சம் தெம்பு பிறந்திருந்தது. அவன் குடித்து முடித்துத் தந்த டம்ளரை நிலைப்படியில் அந்த சொம்புக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு கதவினுள் லேசாய் பார்வையைச் செலுத்தினேன். அந்தக் கதவை ஒட்டியிருந்தது சமையலறை என்று பிறகுதான் புரிந்தது. உள்ளே நாலைந்து பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் அவளைத் தேடுகிற அளவு அவகாசம் இருப்பதாய்த் தோன்றவில்லை. யாரேனும் கவனித்தால் அவன் அங்கே நின்றுகொண்டிருப்பதன் காரணம் பற்றி அநாவசியமாய் கேள்வி எழுப்பக்கூடும். நான் திரும்பி வந்தபோது அவன் எழுந்திருந்தான். ‘ரொம்ப நன்றி தலைவா!’ என்றான். நான் புன்னகைத்து அவன் தோளில் தட்டிக் கொடுத்தேன். என்னை மாதிரியே அவனும் வாசற்கதவைத் அடிக்கடி பார்க்கிறானோ என்று தோன்றியது. அவனைக் கூட்டிக் கோண்டு தோட்டத்தில் ஷாமியானாவுக்கு வந்தேன். அவன் மனைவி, பையனைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் அந்த வீட்டுக்குள் பெண்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் இருப்பதாகச் சொன்னான். முகூர்த்தத்துக்கு நேரமாகிவிட்டபடியால் அநேகமாக அவர்கள் உடைமாற்றி புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கலாம் என்றும் உபரியாய் தெரிவித்தான். இங்கிருந்து ஒரு கூட்டம் எட்டு மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்ஸில் கிளம்பி பெண் வீட்டிலேயே நடக்கவிருக்கும் கல்யாணத்துக்குப் போவதாக ஏற்பாடு. தோட்டத்திலேயே வரிசையாய் சேர் டேபிள் போட்டு வந்திருந்தவர்களுக்கு காலை டிபன் முடிந்துவிட்டது. நிறைய சந்தனப்பொட்டு யுவதிகளும், முண்டு உடுத்திய சேட்டன்மார்களும் பரபரப்பாய் அலைந்து கொண்டிருந்த அந்த வீட்டுக்குள் பாலா எங்கேயிருக்கிறான் என்று தெரியவில்லை. நேற்று சாயங்காலம் முதற்கொண்டே அவன் ரொம்ப பிஸியாய்த்தான் இருந்தான். அவன் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளியிருந்த, காலியாயிருந்த அவன் மாமா வீட்டில்தான் மற்ற பேருடன் நான் தங்கியிருந்தேன். அங்கே பசங்களுக்கு 2T ஆயில் கேனில் கள்ளும், அப்புறம் மற்ற சரக்கு பாட்டில்களும் கொண்டுவந்து கொடுத்துவிட்டு “என்ஜாய்” என்று பாலா சொல்லிவிட்டு கிளம்பும்போதுதான் அவனை கடைசியாய் பார்த்தது. பஸ் வந்துவிட்டதாகவும் புறப்பட்டுத் தயாராயிருப்பவர்கள் போய் ஏறிக்கொள்ளலாம் என்றும் ஒரு வெற்றிலை வாயர் அறிவித்துவிட்டுப் போனார். கிட்டத்தட்ட எல்லாருமே தயாராகத்தான் இருந்தார்கள் போல. பளபளவென்று குளித்து உடைமாற்றிக்கொண்டு என்னுடன் ரயிலில் வந்திருந்தவர்கள் எல்லோரும்கூட இவ்விடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். திடீரென்று பாலாகூட வீட்டுக்குள்ளிருந்து கல்யாணக்கோலத்தில் வெளிப்பட்டு அரசியல்வாதிபோல நண்பர்களுக்கு கையாட்டிவிட்டு அவனது சேச்சி குடும்பத்துடன் ரோஜாப்பூக்கள் ஒட்டியிருந்த ஒரு டாடா சுமோவுக்குள் ஏறிக்கொண்டான். நான் பஸ் எங்கே என்று விசாரித்தேன். ரோடு குறுகலாக இருப்பதால் ரொம்ப தூரத்துக்கு முன்னமே திருப்பி நிறுத்தப்பட்டிருப்பதாய் சொன்னார்கள். வீட்டிலிருந்து கிளம்பி ஒரு சின்ன ஊர்வலம் போல மெதுவாய் எல்லோரும் பஸ் இருக்கிற திசை பார்த்து நடக்க ஆரம்பித்தார்கள். எல்லோரையும் மிக அலங்காரமாய் சுறுசுறுப்பாய், புத்துணர்ச்சியுடன் ஒரு கல்யாண வீட்டில்தான் பார்க்க முடியும் என்று தோன்றியது. நடக்கிற பெண்கள் கூட்டத்துக்குள் நான் அவளைத் தேடினேன். எங்கேயும் தென்படவில்லை. அவள் இன்னும் கிளம்பவில்லையா? பஸ்ஸை அடைந்தபோது ஏற்கெனவே ஒரு கூட்டம் இருக்கைகளை நிரப்பியிருந்தது. அதுதவிர இன்னும் இத்தனை பேர். கல்யாணம் நடக்கிற இடத்துக்கு இரண்டு மணி நேரம் நின்று கொண்டுதான் போகவேண்டும்போல. நான் அந்த மெயின் ரோட்டில் நின்றுகொண்டு பஸ் கிளம்பும்போது தொற்றிக்கொள்ளலாம் என்று காத்திருந்தேன். கிளம்ப இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகுமென்று யாரோ சொன்னார்கள். பின் இருக்கையில் அவன் சாய்ந்திருப்பதைப் பார்த்தேன். அவனெப்படியோ ஒரு இருக்கையைப் பிடித்துவிட்டான். பக்கத்தில் அவன் மனைவியும், அவன் பையனும். எனக்கு மறுபடி அவன் வாந்தியும், அந்த புறவாசற்கதவும், படிகளும் ஞாபகத்துக்கு வந்தன. அவளை மறுபடி பார்க்கவேண்டும் என்கிற ஆவல் திடீரென்று தோன்றியது. நான் மெல்ல பாலாவின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கே யாரெல்லாம் இன்னும் கிளம்பாமல் இருப்பார்கள்? நடக்கும்போதே ஏதோ ஒரு விவகாரமான யோசனையில் வாட்சை கழற்றிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். பாலாவின் வீட்டையடைந்தபோது அதிகம் அரவமில்லாமலிருந்தது. கிட்டத்தட்ட எல்லோரும் கிளம்பி விட்டார்கள் போல. தோட்டத்தில் ஷாமியானாவையும், டேபிள்களையும் பிரித்துக் கொண்டிருந்த ஒரு சில வேலையாட்களைத் தவிர வேறு யாரையும் காணோம். நான் எதற்கு இத்தனை தூரம் மெனக்கெட்டு வந்தேன் என்று எனக்கே புரியாமல் இருந்தது. கேட்டைத் தாண்டி பக்கவாட்டிலிருந்த வாசலை அடைந்தபோது அவள் படிகளில் ஓய்வாய் உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்து லேசாய் அவள் கண்களில் ஆச்சரியம் விரிந்து மெதுவாய் எழுந்தாள். நான் எதுவும் பேசத் துவங்கும் முன்பாக அவள் கேட்டாள். “இப்போ நல்லா இருக்காரா நிங்ஙளுடெ ச்சங்ஙாதி?” அவன் என் ச்சங்ஙாதியில்லை என்று மீண்டும் அவளிடம் சொல்ல விரும்பினேன். பதிலாக ‘அவனுக்கு இப்போது ஒன்றும் பிரச்சனையில்லை’ என்றேன். கூடவே அவள் கல்யாணத்துக்குக் கிளம்பாமல் இப்படி நடையில் உட்கார்ந்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகத் தெரிவித்தேன். அவள் ஒரு மெல்லிய புன்முறுவலை உதடுகளில் படரவிட்டாள். “ஞான் அதிகம் இம்மாதிரி எடத்துக்கு போறதில்ல..” என்றாள். கொஞ்சம் இடைவெளிவிட்டுப் பின்னர் தயக்கத்துடன்.. “சொல்றதுக்கென்ன? பர்த்தாவு மரிச்சதினு சேஷம்தான்” என்று சேர்த்துக்கொண்டாள். அவள் மறைக்க விரும்பின வருத்தம் லேசாய் அவள் முகத்தில் கோடிட்டுக் காட்டிவிட்டது. எனக்கு ஏதேதோ உணர்ச்சிகளைப் பூசிக்கொண்டு ஒரு இனம்புரியாத அதிர்வொன்று மனதிற்குள் ஓடியது. ஓரிரு விநாடிகள் செய்வதறியாது நின்றிருந்தேன். “ஆனா என்டெ மோள் கல்யாணத்தினு போய்ட்டுண்டு..” என்றாள் முகம் மலர்ந்து. பின்னர் ஓரிரு விநாடிகள் அவள் மெளனமாய் எதையோ யோசித்துவிட்டு சட்டென்று “எந்தா நிங்ஙள் புறப்பட்டில்லே?!!” என்றாள். நான் யோசித்து “போகணும். என் வாட்சைக் காணோம். இங்க எங்காவது கழண்டு விழுந்ததான்னு பாக்க வந்தேன். நீங்க ஏதாவது பாத்தீங்களா?” என்றேன். எதற்காக என் வாயிலிருந்து பொய் இத்தனை சரளமாக வருகிறது? அவள் ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தது எனக்கு என்னவோ போல் இருந்தது. என் முகத்திலிருந்து ஏதாவது கள்ளத்தனத்தை கண்டுபிடித்துவிட்டாளா என்று லேசாய் சந்தேகம் எழுந்தது. அவள் சட்டென்று அவளின் மூடிய வலது கை விரல்களை என் முன் நீட்டினாள். “‘இதுவா பாருங்க” எனக்குள் ஒரு சின்ன திடுக்கிடல் நிகழ்ந்து குழப்பமாய் அவளை நோக்கிக் கைநீட்டினேன். என் நீட்டிய என் விரல்களின் மேலாக வைத்து அவள் விரல்களைப் பிரித்தாள். வெறும் விரல்கள். நான் ஏமாந்ததைப் பார்த்து வரிசைப் பற்கள் தெரிய ரொம்ப அழகாய்ச் சிரித்தாள். “இதுதான்” என்றேன் திடீரென்று. நான் அவளிடமிருந்து பெற்றுக்கொண்டதை என் விரல்களுக்குள் இறுக்கமாக மூடிக்கொள்வதைப் பார்த்து அவள் சிரிப்பின் வீரியம் குறைந்து வேறு ஏதேதோ உணர்ச்சிகள் அவளது முகத்தை நிறைத்தன. இறுக்கின கையைப் பிரிக்காமல் அவளை நோக்கி ஒரு அர்த்தப் புன்னகை பூத்துவிட்டு மனசில்லாமல் வாசலை நோக்கி நடந்தேன். நான் மறையும்வரை என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் என்பது நான் திரும்பிப் பார்த்தபோதெல்லாம் தெரிந்தது. கல்யாணம் முடிந்து அன்று மத்தியானமே ட்ரெயின் ஏறிவேண்டியிருந்தது. இங்கிருந்து சென்னைக்கு பதினாலு மணி நேரம் ஆகும். இப்போது என் எதிர்சீட்டிலேயே அவன் சிரித்தவாறு உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் முகம் இப்போது ரொம்பத் தெளிவாய் இருந்தது. பக்கத்தில் அவன் மனைவியும் பையனும். வெளியே கேரளத்தின் தென்னந்தோப்புகள் பின்னோக்கி விரைந்து கொண்டிருந்தன. அந்தப் பையன் என்னையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். என்னிடம் கேட்பதற்கு அவனுக்கு என்னவோ இருப்பதுபோலொரு பாவனை அந்தப் பையன் முகத்தில் தெரிந்தது. “என்னடா கண்ணா?” என்றேன். அவன் இறுக்கமாய் மூடியிருந்த என் வலது கை விரல்களை உற்றுப் பார்த்துவிட்டுக் கேட்டான். “கைல என்ன வெச்சிருக்கீங்க அங்கிள்?” நான் சுதாரித்து சட்டென்று அவனிடம் விரல்களைப் பிரித்துக் காண்பித்து “ஒண்ணுமில்லடா..”என்றேன். *** தமிழோவியம் டாட் காம் – 28-03-06   டுகாட்டி கதிரேசன் மணி பார்த்தான். நிஷாவை இன்னமும் காணோம். அவன் பெஸண்ட் நகரில் அந்த காஃபி ஷாப்பின் போர்டிகோ காத்திருப்புப் பகுதியில் வந்து உட்கார்ந்து கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடந்திருந்தது. அவள் வருகிற சுவடைக் காணோம். அவன் ஏற்கெனவே அவள் மேல் மகா எரிச்சலில் இருந்தான். இப்போது எரிச்சல் கோபமாக உருமாறிக்கொண்டிருந்தது. என்ன செய்வதென்றறியாமல் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான். ஆர்டர் எடுக்க அவனைச் சமீபித்த பேரர் பெண்ணிடம் ‘ஒருத்தர் வரணும்’ என்றான். நிஷா இன்று நிச்சயமாகச் சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கிறாள். அவன் எரிச்சலுக்குக் காரணமே அதுதான். ஊரில் அவனவன் காதலியோடு தினசரி நகர்வலம் வந்துகொண்டிருக்க இவளோ ஒரு முறை பார்த்துக்கொள்வதற்கே இன்றைக்கு நாளைக்கு என்று அலையவிட்டுக்கொண்டிருக்கிறாள். கேட்டால் 1) ஆஃபிஸில் ப்ராஜெக்ட் டெலிவரி, 2) திடீர்னு வீட்ல கெஸ்ட், 3) அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. 4……. என ஆயிரம் காரணங்கள் சொல்வாள். நான் மட்டும் என்ன வெட்டியாகவே இருக்கிறேன்? ஃபோன் செய்தால் முழுசாய் ஒரு நிமிடம்கூடப் பேசாமல் துண்டிப்பதிலேயே குறியாக இருக்கிறாள். ’என்னைப் பார்க்கணும்னு உனக்குத் தோணலையாடி?’ என்று கேட்டால் ‘தினம் பாத்துக்கிட்டாத்தான் லவ்வா?’ என்று மடக்குகிறாள். ஒவ்வொரு முறையும் நிஷாவைச் சந்திக்க அவளிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதற்கு கதிரேசனுக்கு நாக்குத் தள்ளிக்கொண்டிருந்தது. அவனுக்கோ அவளைப் பார்க்காமல் இருப்பது அன்றாட அவஸ்தை அல்லது உபாதை. அவன் உள்ளக்கிடக்கையை அவள் புரிந்துகொண்டமாதிரி தெரியவில்லை. என்ன இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு இத்தனை பிகு ஆகாதுதான். கருணையில்லாத ராட்சஸி. இன்றைய சந்திப்புக்காக அவன் அவளிடம் கெஞ்சவில்லை. மாறாக இன்றைக்கு மட்டும் சொன்ன சமயத்துக்கு டாண் என்று அவள் வரவில்லையெனில் அதன் பிறகு ஏற்படும் பின்விளைவுகளுக்கு அவன் பொறுப்பல்ல என்று மிரட்டலாகச் சொல்லிவைத்திருந்தான். வருகிறேன் என்றாள் நிஷா. இப்படியே விட்டால் சரியாகாது. இன்றைக்கு கறாராக அவளிடம் இரண்டில் ஒன்று பேசி முடிவு செய்துவிடவேண்டும். கொஞ்சம் டோஸ் விட்டால்தான் சரிப்படும். திடீரென்று இடி இடிப்பதுபோல ஒரு சப்தம் கேட்டது. கதிரேசன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். மொபைலைத் தடவிக்கொண்டிருந்த விரல் அப்படியே நின்றது. காஃபி ஷாப் வளாக கேட்டுக்குள் ஒரு பெரிய பைக் நுழைந்து கொண்டிருந்தது. அவன் கேட்ட இடிச் சப்தம் அந்த பைக்கினுடையதுதான். பைக்கின் மேலே ஆகிருதியுடன் ஒரு இளைஞன். அந்த சிவப்பு நிற எந்திரத்தின் பெட்ரோல் டாங்கின் மேல் டுகாட்டி என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும் கதிரேசன் மேலும் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆரம்பம் படத்தில் ’தல’ ஓட்டுவாரே. அந்த பைக் என்பதை உடனே மனதுக்குள் பொருத்திப் பார்த்துக்கொண்டான். அப்பா! என்ன ஒரு என்ஜின் உறுமல்!! ஆர்வத்துடன் அந்த டுகாட்டி இளைஞனைக் கவனிக்க ஆரம்பித்தான். அவன் ஆறடி உயரம் இருந்தான். காலர் இல்லாத கருப்பு நிற பனியனில் I tried to be normal twice. Worst two minutes of my life. என்று எழுதப்பட்டிருந்தது. நெற்றியில் தவழும் ஒழுங்கற்ற முடி. ஜீன்ஸ். உயர்தர ஷூக்கள் மற்றும் பணமும் வசதியும் தந்த தோரணை. ’டுகாட்டி பைக் மினிமமே ஆறு லட்ச ரூபாயாம்ல..” என்று நண்பனொருவன் முன்னெப்பொழுதோ அங்கலாய்த்தது கதிரேசனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. இளைஞன் டுகாட்டியில் வந்திறங்கிய மறு நிமிடம் கடை வாசலில் ஒரு ஆட்டோ வந்து நிற்க அதிலிருந்து ஒரு யுவதி இறங்கினாள். ’ஹாய்’ என்றவாறு நேராக டுகாட்டி இளைஞனை நோக்கி வந்தாள். டுகாட்டி அவளை நோக்கி நகர்ந்தான். இருவரும் அருகருகே நெருங்கிய கணத்தில் லேசாக சம்பிரதாயமாக அணைத்துக் கொண்டு ஆங்கிலக் குசலம் விசாரித்துக் கொண்டார்கள். கதிரேசனுக்கு லேசாய் தொண்டையை அடைத்த மாதிரி இருந்தது. கதிரேசனின் ஆர்வம் இப்போது இருமடங்கு அதிகமானது. நிஷாவை லேசாய் மறந்துவிட்டு அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான். இப்போது அவர்கள் இருவரும் கதிரேசனின் அருகே உள்ள டேபிளில் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களிருவரும் பேசுவது தெளிவாக இல்லாவிட்டாலும் ஓரளவு காதில் விழுந்தது. ”ஸோ.. வாட்ஸப்” என்று டுகாட்டி கேட்டான். அவனுக்குக் கொஞ்சம் பெரிய கட்டைக் குரல்தான் நுனி நாக்கு ஆங்கிலச் சரளத்தில் உரையாடல். ஆனால் அவர்கள் பேசுகிற ஸ்பீடில் கதிரேசனுக்குத் தலை சுற்றியது. யுவதி டேபிளின் மேல் கழற்றி வைத்திருந்த கூலர் க்ளாஸின் மேல் மாலை இளவெயில் பட்டுச் சிதறி அவள் முகத்தில் பிரதிபலித்தது. மாடலிங் செய்பவள் போல இருந்தாள். லிப்ஸ்ட்டிக் உதடுகளை அழகாகப் பிரித்து அவ்வப்போது சிரித்தாள். நெற்றியில் புரளும் முடியை, தலையை வெடுக்கென்று சாய்த்து சாய்த்து பின்னுக்குத் தள்ளினாள். டுகாட்டி பாக்கெட்டிலிருந்து டன்ஹில் சிகரெட் டப்பாவை எடுத்து அதில் ஒன்றை உருவிக்கொண்டு லைட்டரால் பற்ற வைத்தான். சாய்ந்திறங்கிய வெயிலில் புகை ரம்மியமாய் நெளிந்தது. டுகாட்டிக்கும் யுவதிக்கும் இடையே பெரிய அந்நியோன்யம் இருப்பதுபோல் தெரியவில்லை. அவர்கள் நண்பர்களாக இருக்கலாம். அல்லது தொழில் நிமித்தம் இதற்கு முன் ஓரிரு முறை சந்தித்தவர்களாக இருக்கலாம். அவர்கள் நடந்துகொள்கிற விதத்தில் ஒரு சின்ன நெருக்கமும், விலகலும் ஒரே சமயம் தெரிவதாக கதிரேசன் உணர்ந்தான். சிறிது நேரம் டுகாட்டியானவன் புகை கிளப்பியபடி அவளிடம் எதையோ ஸீரியஸாகப் பேசிக்கொண்டிருந்தான். அவள் தலை சாய்த்தபடி அவனையே வைத்தகண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருந்தாள். கதிரேசன் மொபைலில் கண்களை வைத்துக் கொண்டு அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்க முயற்சித்துக்கொண்டிருந்தான். ஜர்னலிஸம், ஹாரி பாட்டர், ஹாலோ எர்த், பில்டர்பெர்க் மீட்டிங், எம்.ஹெச். த்ரீ ஸெவண்டி, ஹூ ஸேஸ் எலிஃபண்ட் கேண்ட் டான்ஸ், ஃபோட்டோகிராபி ஸொசைட்டி ஆஃப் மெட்ராஸ், ஆண்ட்ராய்ட் லாலிபாப் அப்டேட், இண்டியன் பொலிடிக்ஸ், ஹ்யூமன் ட்ராஃபிக்கிங்.. எஸ்.வி. சேகர் காமெடி சிடி, லிட்டில் ஜானி (இந்த இடத்தில் இருவரும் உரக்கச் சிரிக்கிறார்கள்) என்று கலவையாக ஏதேதோ காதில் விழுந்துகொண்டிருந்தது. கதிரேசன் மறுபடி மணி பார்த்தான். அவன் பல்ஸ் எகிறுவதற்கேற்ப நொடிமுள் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. நிஷா இன்னும் வரவில்லை. அவள் நிஜமாகவே வருவாளா என்று இப்போது சந்தேகம் வந்துவிட்டது. அவள் மட்டும் இன்றைக்கு வரவில்லையெனில் அப்புறம் அவளை உண்டு / இல்லை என்று பண்ணிவிடவேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டான். கோபம் மேலும் கூடியது. டுகாட்டிக்கு காஃபியும், யுவதிக்கு ஒரு பொன்னிற திரவமும் பரிமாறப்பட்டிருந்தது. யுவதி சிரித்தவாறு ‘ஐ ஆல்வேஸ் லைக் க்ரீன் டீ” என்றாள். கோப்பையைக் கையில் எடுத்து நாசூக்காக ஒரு ஸிப் உறிஞ்சினாள். டுகாட்டி காஃபியைத் தொடாமல் அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தான். “யு ஆர் ஸ்மோக்கிங் அ லாட்..” என்றாள் யுவதி அவனிடம். “நோ.. நாட் ஆல்வேஸ்.. ஐ ஃபீல் லைக் ஐ நீட் இட் பேட்லி நவ்… யு. நோ!” சொல்லும்போது அவள் கண்களைத் தவிர்க்க முற்பட்டான். “கூல்.. ஐ ஜஸ்ட் ஆஸ்க்ட்.. நெவர் மைண்ட்..” டுகாட்டி பொதுவாகச் சிரித்தான். அவன் ஏதோ கொஞ்சம் பதட்டத்திலிருக்கிறான் என்று கதிரேசனுக்கு ஏனோ தோன்றியது. பேசாத தருணங்களில் டுகாட்டி அந்த யுவதியையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் ஆயிரம் பேசிக்கொண்டிருந்தாலும் பேசப்படாத வேறு ஏதோ விஷயம் தொக்கி நிற்பது மாதிரி இருந்தது. அவனிடமிருந்து எதையோ எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிற மாதிரி அவள் முகத்தில் ஒரு சின்ன ஆர்வ உணர்வு ஒரு புன்னகையுடன் தேங்கிக் கிடந்தது. அவர்கள் பேச்சில் இடைவெளி விழுந்தது. தத்தம் பானங்களை லேசாய் உறிஞ்சியவாறு இருவரும் மௌனமாக இருந்தார்கள். இடையிடையே ஒருவருக்கொருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ”தென்?” என்றாள் அவள். அவர்கள் பேசவேண்டிய விஷயங்கள் எல்லாம் தீர்ந்துபோனமாதிரியும் மேற்கொண்டு ஏதேனும் இருந்தால் சொல் என்று தூண்டுகிற மாதிரியும் இருந்தது அவள் கேட்டது. திடீரென்று அங்கே நிலவின மௌன இடைவெளி கதிரேசனுக்கே ஒரு மாதிரி இருந்தது. அவர்களைக் கவனிப்பதை தவிர்க்க நினைத்தாலும் கண்கள் அவர்களின் மேலேயே மறுபடி மறுபடி படிந்தன. இடையே நிஷா வருகிறாளா என்று ஆயிரத்து நாற்பத்தெட்டாவது தடவையாக வாசலைப் பார்த்தான். ஏமாற்றத்தின் இன்னொரு துளியை நெஞ்சில் வாங்கிக்கொண்டான். டுகாட்டி இப்போது லேசாய் கண்களை மூடிக்கொண்டிருந்தான். ஒரு சில விநாடிகள் கழித்துத் திறந்தான். பின்னர் அந்த யுவதியின் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்தான். ஒரு கனவுலகத்திலிருந்து நேராக இறங்கி வந்தவன் மாதிரி இருந்தது அவன் பார்வை. பின்னர் நெய்ல் ஆர்ட் போட்டிருந்த அவளின் வலது கை தளிர் விரல்களைத் தொட்டு மெதுவாக மிக மெதுவாக அவன் பக்கம் பிடித்திழுத்தான். எந்த எதிர்ப்பும் இல்லாமல் அது அவன் கைவசப்படுவதை நினைத்து ஒரு அர்த்தப் புன்னகை அவன் முகத்தில் நிலைகொண்டது. அவள் லேசாக திடுக்கிடுவதுபோல பாவனை செய்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பின்னர் லேசான வெட்கத்தில் அவள் இதழ்கள் பிரிந்தன. என்னய்யா நடக்குது இங்கே என்று கதிரேசன் இன்னும் நிமிர்ந்து உட்கார்ந்தான். “லயா..” என்று மிருதுவான குரலில் கூப்பிட்டான் டுகாட்டி. அவன் தொண்டைக்குழி ஒரு முறை ஏறி இறங்கியது. ஒரு ஹம்மிங் மாதிரி “ம்ம்” என்று அவளிடமிருந்து ஒரு பரவசத்துடன் கூடிய முனகல் மட்டுமே உதிர்ந்தது. பின்னர் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் டுகாட்டி அவள் கையை விடாமலேயே நாற்காலியை விட்டு எழுந்து அப்படியே ஒற்றைக்காலை மட்டும் மடக்கி அவள் முன் மண்டியிட்டு இறைஞ்சுவது போலச் சொன்னான். “லயா… ஐ வாண்டு சே இன் திஸ் வொண்டர்ஃபுல் மொமெண்ட் தட் அ யம் இன் லவ் வித் யூ…” என்றான். கதிரேசன் புருவங்களை உயர்த்தினான். பொது இடத்தில் லஜ்ஜையேயில்லாமல் இதென்ன சினிமாத்தனம் என்று நினைத்துக்கொண்டான். சரிதான். பெரிய இடத்து நபர்கள் இந்த மாதிரியெல்லாம் நடந்துகொள்வது சகஜம்தானே என்று சமாதானம் கொண்டான். லயா என்ற பெயர் கொண்ட அந்த அப்ஸரஸ் இந்தத் தருணத்திற்காகவே காத்திருந்ததுபோல “ஹே.. மிதுன்… ஐ நோ தட் அல்ரெடி.. டோண்ட் ஸே இட்..” என்று மேலும் வெட்கப்பட்டாள். அவன் கையை இறுக்கிக்கொண்டாள். கதிரேசனுக்கு ஆலங்கட்டியொன்று சட்டைக்குள் விழுந்ததுமாதிரி உடம்பு லேசாகச் சிலிர்த்தது. உலகத்தில் அவர்களைத் தவிர அங்கே யாரும் இல்லை என்பதுபோல், சூழ்நிலையின் ப்ரக்ஞையை முற்றிலும் இழந்தவர்கள் போல் தங்களுக்குள் திடீரெனப் பூத்துவிட்ட ஒரு காதல் பரவசத்தில் தளும்பி நின்றிருந்தார்கள். அந்த இடத்தில் இப்போது மழை பெய்தால் நன்றாயிருக்கும் என்று கதிரேசன் ஏனோ நினைத்தான். லயா என்பவள் டுகாட்டியிடம் திடீரென்று “பீச்?” என்றாள். “ஷ்யூர்” என்றான் அவன். பிறகு எதற்காகவும் காத்திருக்கவில்லை. சடுதியில் பில்லை செட்டில் செய்துவிட்டு கிளம்பினார்கள். மறுபடி இடிச் சத்தம். டுகாட்டியின் பின்னிருக்கையில் அவள் அவன்மேல் சாய்ந்து ஒட்டிக்கொண்டிருக்க நொடியில் சாலையில் கலந்து காணாமல் போனார்கள். டுகாட்டி பைக் பார்வையிலிருந்து மறைவது வரை பார்த்துக்கொண்டேயிருந்தான் கதிரேசன். அவனிடமிருந்து ஒரு மகா பெருமூச்சு எழுவதற்கும் நிஷாவின் ஸ்கூட்டி காஃபி ஷாப்பினுள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. ஸ்கூட்டியைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அவசர கதியில் கதிரேசனை நோக்கி வந்தாள். நீல நிற சுரிதார், பின்னலிடப்படாத கூந்தல் என சற்றே நிர்மலமான அழகுடன் ஒரு தேவதை அவனை நோக்கி வருவதுபோல உணர்ந்தான் கதிரேசன். “ஸாரிடா… கோவிச்சுக்காத.. கிளம்பற நேரத்துல மீட்டிங்.. ஒரு வழியா தப்பிச்சு வர்ரதுக்குள்ள… ரொம்ப நேரமா வெய்ட் பண்றியாடா?” என்றாள் பதட்டமாக. யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்துவிட்டு அவன் தலையை விரல்களால் கலைத்தாள். இன்னதென்று புரியாத ஒரு உணர்வு கதிரேசனுக்குள் பிரவாகமெடுத்து அவனை ஆக்ரமித்தது. பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். மறுபடி அவனருகே வந்து நின்ற பேரரிடம் “ஒரு கிடார் கிடைக்குமா?” என்றான். *** பதாகை.காம் – பிப்ரவரி 2015   திருப்பம் குல்மொஹர் மரத்தில் போஸ்ட் பாக்ஸ் கட்டியிருந்த தெரு முக்கில் திரும்பும்போது செல்வாவின் கால்கள் தயங்கி நின்றன. அங்கிருந்து நாலாவது காம்பெளண்டின் பச்சை கேட்டில் ஜேவியம்மா நிற்கிறாளா என்று பார்த்தான். வாசல் மரத்தில் ஒரு காகத்தைத் தவிர மற்றபடி ஒருவரின் நடமாட்டத்தையும் காணோம். “அப்பாடா” என்று அவன் வாய் முணுமுணுத்தது. கூட வந்துகொண்டிருந்த வாசுவும் நின்று ‘என்னடா’ என்றான் புரியாதமாதிரி. “அந்தம்மா இருக்குதான்னு பாத்தேன். நல்ல வேளை ஆளக் காணோம். மத்தியானம் பாபு வீட்டுக்குப் போலாம்னு வந்தப்ப கூட நின்னுட்டிருந்தா. அப்படியே திரும்பிப் போயிட்டேன்” என்றான். வாசு பச்சை கேட்டின் திசைநோக்கி ஒரு அலட்சியப் பார்வையை வீசிவிட்டு அதை அப்படியே செல்வாவிடம் திருப்பினான். “ஏண்டா இப்படி அந்தம்மாவுக்கு பயந்து சாவறீங்க!” என்றான் சலிப்பாக. வாசு அப்படிக் கேட்டது கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. செல்வா அவனுக்கு பதில் சொல்லாமல் நடந்தான். ஜேவியம்மா காம்பெளண்டை நெருங்கும்போது வழக்கம்போல ஒரு பதட்டச் சுழல் நெஞ்சில் மையம் கொண்டது. அதை முகத்தில் காட்டினால் போச்சு! வாசு அவன் அட்வைஸ் கட்டை அவிழ்க்க ஆரம்பித்து விடுவான். அத்தனை நேரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டு வந்தது இந்தத் தெரு முனை திரும்பியதும் திடீரென்று நின்று போய்விட்டது. செல்வாவின் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் காரணம் ஜேவி சார் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற ஜே. விஸ்வநாதன். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவர் பண்ணின முதல் தப்பு செல்வா படிக்கிற கல்லூரியில் அவனுக்கு லெக்ட்சரராக வந்து வாய்த்தது. மேலும் ஹெட் ஆ•ப் த டிபார்ட்மெண்ட்டாக வேறு இருந்து தொலைத்தார். இரண்டாவது தப்பு செல்வாவின் நண்பன் பாபுவின் வீட்டுக்கு அருகிலேயே நான்கு மாதத்துக்கு முன் குடிவந்து தொலைத்தது. மூன்றாவது தப்பு ஜேவியம்மா என்கிற இந்த பிசாசைக் கல்யாணம் செய்திருப்பது. (அதாவது அவள் ஜேவி சாரின் மனைவியாக இருக்கிறபடியால் ஜேவியம்மா என்று காலனியில் எல்லோராலும் அழைக்கப்பட்டாள் என்று குறிப்பிட வேண்டியதில்லை). நாலாவது மிக முக்கியமான தப்பு ஜேவி சார் தன் மனைவிக்கு அடங்கின புருஷனாய் எப்போதும் வளையவருவது. ஜேவியம்மா என்கிற இந்த அம்மணிக்கு வேறு வேலையே இல்லை என்பதுபோல எப்போதும் வாசல் கேட்டிலேயே கையை ஊன்றிக்கொண்டு தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். பாபுவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகிற செல்வா தன் கணவனின் மாணவன் என்பதை அவள் எப்படித்தான் தெரிந்து கொண்டாளோ! செல்வாவுக்கு அன்றைக்கு ஆரம்பித்தது பிரச்சனை. ஒரு நாள் சாயங்காலம் செல்வா ஜேவி சாரின் வீட்டைத்தாண்டும்போது “ஏய்.. இங்க வா!” என்று கேட்டுக்குள்ளிருந்து அதிகாரம் தோய்ந்த குரல் வந்தது. திடுக்கிட்டுத் திரும்பினபோது ஜேவியம்மா முகத்தில் ஒரு வில்லித்தனமான புன்னகையுடன் நின்றிருந்தாள். சுற்றிக்கட்டிய புடவைக்குள் இரட்டை நாடி உருவம். உருளும் கண்கள். பக்கத்தில் அவள் பெண். அவளுக்கு ஒரு பதினாறு பதினேழு வயசிருக்கும். அவளை பஸ் ஸ்டாப்பில் ஓரிரு முறை மார்பில் புத்தகங்களோடு பார்த்த ஞாபகம் வந்தது. வாசுவைக் கேட்டால் எங்கே படிக்கிறாள் என்று தெரிந்துவிடும். ஜேவியம்மா ‘க்கும்’ என்று கணைத்துவிட்டு, “செல்வாதான ஒம்பேரு” என்றாள். தன் பெயர் அவளுக்கெப்படி தெரிந்தது என்று அவன் குழப்பமாய் யோசித்தான். ஆமாம் என்று தலையாட்டினான். “ஸ்டுடன்ட்டா லட்சணமா இல்லாம ரவுடி மாதிரி லுங்கிய எதுக்கு மடிச்சுக் கட்டியிருக்க? எறக்கி விடு. மாடியிலேர்ந்து ஜேவி சார் பாக்கறாரு பாரு” செல்வா சரேலென்று லுங்கியை இறக்கிவிட்டான். பயத்துடன் நிமிர்ந்து மாடியைப் பார்த்தபோது அங்கே ஒரு ஜீவனையும் காணோம். ஜேவியம்மாவின் பெண் களுக் என்று வாயில் கைவைத்துச் சிரித்தாள். செல்வாவுக்கு அந்த நிமிஷம் அவளை ஓங்கி அறையவேண்டும் போல் இருந்தது. “இந்தவாட்டி எக்ஸாம் ஒழுங்கா எழுதினியா?” “ம்ம்?” என்றான் எரிச்சல் மாறாமல். “எக்ஸாம் பேப்பர் கட்டு எங்க வீட்டுக்குத்தான் வந்திருக்கு. உனக்கு நான் பாத்து மார்க் போட்டாதான் உண்டு. அவன் யாரு உங்கூட எப்பவும் லுங்கிய தொடை தெரிய தூக்கிக் கட்டிக்கிட்டே திரியறான். பேரென்ன?” செல்வா துணுக்குற்று “யாரைக் கேக்கறீங்க?” என்றான் தெரியாத மாதிரி. “ஹ! அதான் ஒசரமா.. தாடி வுட்டுட்டு… நடேசய்யர் பையன்தான? அவன் பேரென்ன?” “வாசு” “ம். அவன்தான். உங்க ப்ரண்ட்ஸ் செட்டுல எல்லார் ஜாதகமும் தெரியும். முக்குத் திட்டுல உக்காந்து அரட்டையடிக்கிறது. போற வர்ர பொட்டப் புள்ளைங்களைப் பாக்கறது.. ஒண்ணும் தெரியாதுன்னு நெனச்சுக்காத. ஒழுங்கான ஸ்டூடண்ட்டா நடந்துக்க!.. இல்லைன்னா எக்ஸாம் பேப்பர்ல கை வெக்கவேண்டியிருக்கும். நான் நெனச்சா உன்ன காலேஜிலேர்ந்தே தூக்கிருவேன் தெரியுமிலல? உங்கப்பா ஈ.பி-ல என்ஜினியர்தான? அவர் பேரக் கெடுத்துராத. இன்டெர்னல் மார்க் கூட என் கையிலதான் இருக்கு. நீ நல்ல பையனாதான் தெரியற. அந்த வாசுதான் செரியில்ல.” செல்வா பொத்துக்கொண்டு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டான். இத்தனை விவரங்களை எங்கிருந்து சேகரித்தாள் என்று ஆச்சரியமும் வந்தது. ஆனாலும் இப்படியொரு ப்ளாக்மெயிலை அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. ஒரு வேளை அந்தம்மா சொல்வது உண்மையாகக்கூட இருக்கக்கூடும். அவனை பெயிலாக்கி விடக்கூடிய சகல அதிகாரமும் அவளுக்கு இருக்கிறதோ என்னவோ! என்ன சொல்வது, செய்வதென்று தெரியாமல் திருதிருவென்று முழித்துக்கொண்டு நின்றான். ஜேவியம்மா அவன் குழப்பத்தை பொருட்படுத்தாமல் சட்டென்று குரலைத் தணித்துக்கொண்டு “சரி எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா செல்வா” என்றாள். அவனது பதிலுக்குக் காத்திராமல் முந்தானை முடிச்சிலிருந்து ஒரு நூறு ரூபாய்த் தாளைப் பிரித்து அவனிடம் கொடுத்து, நைட் டிபனுக்கு பூரி மாவு தீர்ந்து போய்விட்டதாகவும், கிச்சான் கடைக்குப் போய் ஒரு அரைக்கிலோ வாங்கிக் கொண்டு வருகிறாயா என்றும் பவ்யமாய்க் கேட்டாள். முக்குத்திட்டில் உட்கார்ந்து பொறுமலோடு மீதிக் கதையைச் சொன்னபோது வாசு கபகபவெனச் சிரித்தான். “நல்ல வேளை நானும் பாபுவும் வேற காலேஜ். தப்பிச்சோம். பாவம்டா நீ” என்றான். “அந்தம்மாவப் பத்தி காலனியே பேசுது.. இது பரவாயில்ல. பாபுவோட அப்பாகிட்ட வத்தி வெச்சுருக்குது. உங்க பையன சிகரெட்டும் கையுமா பாத்தேன்னு. எப்டி? அவனுக்கு வீட்ல சரியான மாத்து. பக்கத்து வீட்டு குடும்பப் பிரச்சனைக்குள்ளயெல்லாம் மூக்க நுழைக்குதாம். அந்தம்மாவை பாரதி மகளிர் மன்றத்துல தெரியாம மெம்பராக்கிட்டோம்னு கனகா மாமி புலம்புது. ஒரே டாமினேஷன். காலைல காய்கறிக்காரனப் புடிச்சு மெரட்டிட்டிருந்துச்சாம். இஸ்திரி மாணிக்கம் சொல்றான். அந்தம்மா புருஷன் வேற ஒரு வாயில்லாப் பூச்சி. அந்தாளுக்கு கூட டெய்லியும் அடி உழுதோ என்னமோ வூட்டுல. அவரு பொண்ணு சுதா கொஞ்சம் அம்சமா இருக்குது. என்ன அவங்கம்மா மாதிரி கொஞ்சம் லொள்ளு..” என்னைவிட அதிகம் பாதிக்கப்பட்டவனைப் போல அன்று வாசு நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தான். ஜே.வி சார் ஏன் அப்படியிருக்கிறார் என்று யோசித்தபோது எரிச்சல் மண்டியது. இப்படியுமா ஒருத்தர் பெண்டாட்டியிடம் பயந்த பேடியாக இருப்பார்? பெண்டாட்டியிடம்தான் இப்படியென்றால் வகுப்பில் கூடவா? பாடம் எடுக்கும்போது குரலே வெளிவராது. சளசளவென்று வகுப்பில் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிற சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும். அவர் முதுகு காட்டிப் பாடம் நடத்துகிறபோது கடைசி டெஸ்க் நாகராஜ்கூட அடிக்கடி ரகசியமாய் வெளியே போய்விட்டு திரும்ப வந்து உட்காருவான். வகுப்பில் யாருக்கும் அவரிடம் பயம் என்பதே கிடையாது. இவரெல்லாம் எப்படி ஹெச்.ஓ.டி ஆனார் என்பதே பெரிய புதிர். சின்னதாய் ஒரு முணுமுணுப்புக் கேட்டால்கூட சரேலென்று திரும்பி புருவம் உயர்த்தி என்ன என்று முறைப்பாய் கேட்கிற லெட்சரர் மணிவாசகத்தின் தோரணை ஏன் இவரிடம் இல்லாமல் போய்விட்டது? கோபம் வந்தால் நோட்டுப் புத்தகங்களை கதவுக்கு வெளியே விசிறியடிக்கிற புரபசர் ராமலிங்கத்தின் கம்பீரம் இவருக்கு ஏன் வாய்க்கவில்லை என்றெல்லாம் செல்வா நிறைய யோசித்திருக்கிறான். ஜேவியம்மா மாதிரி ஒரு நாள்கூட அவரைக் காம்பெளண்ட் கேட்டருகில் வைத்துப் பார்த்ததில்லை. மனிதர் வந்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பார் போல. ஒரு சில சமயம் ஜேவி சாரின் வீட்டைத் தாண்டும்போது அவரிடம் ஏதோ சண்டையிடுவதைப்போல ஜேவியம்மாவின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும். மறுகுரலாய் ஒரு போதும் அவரின் குரல் கேட்டதில்லை. காலனிக்குள் பார்க்கிற ஆட்களெல்லாம் ஜேவியம்மாவைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எதையாவது சொல்லிவிட்டுத்தான் போனார்கள். அவளுடன் பேசுவதற்கே பயந்து காலனி மாமிகளும், ஆண்ட்டிகளும் விலகிப்போனார்கள். ஜேவியம்மாவுக்கும் பாபுவின் அம்மாவுக்கும்கூட ஒருநாள் குடுமிப்பிடி சண்டையாகிவிட்டது. கனகா மாமி இடைப்புகுந்து தடுக்காமலிருந்திருந்தால் ரணகளமாயிருக்குமாம். ச்சே… என்ன பொம்பளை என்று தோன்றியது செல்வாவுக்கு. இப்படியுமா ஒரு பஜாரி?!. முந்தா நேத்து கிச்சான் கடை தட்டி மறைப்பில் நின்று செல்வா திருட்டு தம் அடித்துக்கொண்டிருக்கும் போது ஜேவியம்மா பார்த்துத் தொலைத்துவிட்டாள். “உங்கப்பாவை மார்க்கெட்ல பாத்தப்போ சொல்லலாம்னு நெனச்சேன்” என்று சின்னதாய் மிரட்டி அவனிடம் எலக்ட்ரிசிட்டி பில் கட்டிவிட்டு வரச்சொன்னாள். ooOoo இன்றைக்கும் தெருமுனையில் தயங்கித் திரும்பியதுகூட அவளுக்கு பயந்துதான். பச்சை கேட்டைக் கடக்கும்போது பயந்த மாதிரியே திடீரென்று எங்கிருந்தோ காம்பெளண்டுக்குள் தோன்றினாள் ஜேவியம்மா. பின்னாலேயே வாலைப் பிடித்துக்கொண்டு அவள் பெண் சுதா. ஜேவியம்மா செல்வாவைப் பார்த்து “ஓய்…” என்றாள். செல்வா வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு அவளை ஏறிட்டான். வாசு மடித்துக்கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து வேண்டுமென்றே தொடை தெரிய தூக்கிக் கட்டிக்கொண்டான். தொண்டை நீரை க்ர்ர் என்று பண்ணிவிட்டு கேட்டருகேயிருந்த விளக்குக் கம்பத்தினடியில் பான் பராக்கைத் துப்பினான். அவன் தினம் துப்பித் துப்பியே அந்தக் கம்பம் நாறிப்போய்விட்டது. அவனுக்கென்ன! ஜேவியம்மாவைப் பார்த்து பயப்படுவதற்கான காரணம் எதுவும் அவனுக்கில்லை. அவன் ஜேவி சாரின் மாணவன் அல்ல. இந்த மாதிரி ஆயிரம் பண்ணுவான். செல்வாவுக்கு அப்படியெதுவும் செய்துவிடக்கூடிய துணிச்சலோ, சுதந்திரமோ எதுவும் இந்த வீதிக்குள் பறிபோய் ரொம்ப நாளாகிவிட்டது. வாசு கொஞ்சம் தள்ளிப் போய் நின்றுகொண்டு ஜேவியம்மாவின் பெண்ணை லேசாய் ஓரக்கண்ணால் பார்க்க ஆரம்பிக்க இன்றைக்கு என்ன வம்போ என்று யோசித்தபடி செல்வா கேட்டருகில் போனான். சொல்லப்போனால் இதெல்லாம் செல்வாவுக்குப் பழகியும் விட்டது. ஜேவியம்மா எதையோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் தெருவில் ஏதோ அரவம் கேட்க நான்கு பேரும் திரும்பினார்கள். திபுதிபுவென்று யாரோ யாரையோ துரத்திக்கொண்டு ஓடிவந்தார்கள். என்னவென்று புரியாமல் வயிற்றில் உருண்ட கலவரத்துடன் பார்த்தபோது, முதலில் ஓடிவந்தவன் சடாரென்று கனகா மாமியின் வீட்டுக்குள் புகுந்துவிட்டான். துரத்திக்கொண்டு வந்தவனை அடையாளம் தெரிந்தது. கறிக்கடை முருகேசு! வந்த வேகத்தில் அவனும் மாமியின் வீட்டுக்குள் பாய்ந்தான். அடுத்ததாக கனகாமாமியின் கூக்குரலுடன் வீட்டு அடுக்களையிலிருந்து பாத்திரங்கள் உருள்கிற சப்தம் கேட்டது. செல்வாவும் வாசுவும் என்னவென்று புரியாமல் நிற்கும்போதே கூட்டம் சேர்ந்துவிட்டது. இப்போது முருகேசு அந்த ஆளை தரதரவென்று வெளியே இழுத்துக்கொண்டு வந்து தெருப் புழுதியில் போட்டு மிதிக்க ஆரம்பித்தான். சகாதேவன் வந்து அவனை விலக்கி என்னவென்று விசாரித்தார். “பட்டபகல்ல சுப்ரமணிய கவுண்டர் வூட்ல புகுந்து திருடப்பார்த்தான். நான் பாத்தாங்காட்டி ஆச்சு. அவ்ளோ லேசுல வுட்ருவமா? தொரத்திப் புடிச்சமில்ல… தே….. மவன” என்று சொல்லிவிட்டு அவனை மறுபடி உதைத்தான். விஷயம் கேள்விப்பட்டவுடன் கூடியவர்கள் ஆளுக்கொரு மிதி மிதித்தார்கள். வாசுவும் கூட்டத்தில் புகுந்து அருகில் சென்று பொளேர் என்று அறைந்தான். “எத்தன பேருடா கெளம்பியிருக்கீங்க…” என்று இடது கையால் அவனது குரல் வளையைப் பிடித்துக் கேட்டான். ஒரு முறை திரும்பி ஜேவியம்மாவின் பெண்ணை ஸ்டைலாகப் பார்த்தான். செல்வா கனகா மாமியின் காம்பெளண்டு ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்தான். எல்லோரும் செத்த பாம்பை அடிக்கிறார்கள். பேசக்கூட திராணியற்ற நிலைக்குத்தான் முருகேசு முதலிலேயே அந்த ஆளை அடித்துத் துவைத்திருந்தான். மேலும் அந்த ஆளிடமிருந்து வீசின விஸ்கி வாசனை அவன் குடித்திருந்தான் என்பதைச் சொல்லியது. அவன் ஒரு பிச்சைக்காரனைப் போலிருந்தான். அவன் கட்டியிருந்த லுங்கி முருகேசு மிதித்த மிதியில் கிழிந்து தொங்கியது. அவன் இப்போது எதையோ முனகியபடி தரையில் கிடந்தான். ஜேவியம்மா திடீரென காட்சிக்குள் வந்தாள். “கொஞ்சம் நகருங்க… நான் விசாரிக்கிறேன்” என்று கூட்டத்தை விலக்கி அந்த ஆளைப் பார்த்தாள். கூடவே அவள் பெண்ணும் எட்டிப்பார்த்தது. அடிவாங்கி அவ்வளவு நேரம் தொய்ந்து போய்க்கிடந்தவனுக்கு எங்கிருந்துதான் தெம்பு வந்ததோ…தெரியவில்லை. சட்டென்று எழுந்தான். “தாய்க்குலமே…. அடிக்கிறாங்க தாய்க்குலமே..” என்றான் போதைக் குழறலாய். ஏற்கெனவே பாதி தளர்ந்திருந்த அவன் லுங்கி முழுவதுமாய் அவிழ்ந்து விழுந்ததை அவன் பொருட்படுத்தாமல் தள்ளாடியபடி ஜேவியம்மாவின் திசையை நோக்கி வேகமாய் நெருங்கினான். ஜேவியம்மாவும் அவள் பெண்ணும் பின்வாங்கினார்கள். “ஏய்… போங்கடீ வீட்டுக்கு.. இங்க என்ன வேல உங்களுக்கு…” திடீரென ஒரு குரல் கூட்டத்தைப் பிளந்து வந்தது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தபோது ஜே.வி சார் நின்றிருந்தார். ‘இருங்க… இந்தாளை…” என்று ஆரம்பித்த ஜேவியம்மாப் பார்த்து மறுபடி அவர் இரைந்தார். “இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்னீன்னா அறை விழும். போடீ…” ஜேவியம்மா போகாமல் அவரை முறைத்துப் பார்த்தாள். “உங்களுக்கென்ன தெரியும்? காலனிக்குள்ள இவ்ளோ பெரிய ப்ரச்சனை நடக்குது…” என்று மறுபடி ஆரம்பித்தவளின் கன்னத்தில் ஆக்ரோஷமாய் “சப்ப்” என்று ஜேவி சாரின் கை இறங்க.. கூட்டம் ஸ்தம்பித்து நின்றது. “போடீன்னா…” பொறி கலங்க விழுந்த அறையில் சட்டென்று கண்களில் மல்கிய நீருடன் ஜேவியம்மா கேட்டைத் திறந்துகொண்டு விருட் என்று வீட்டுக்குள் போனாள். மகளும் பின்னாலேயே. “ஸ்டுப்பிட் •பெல்லோஸ்..” என்று கோபமாய் முணுமுணுத்துவிட்டு ஜேவி சாரும் வீட்டுக்குள் போய் கதவை அறைந்து சாத்தினார். செல்வா திகைப்புடன் வாசுவைப் பார்த்தபோது அவன் பேயறைந்த மாதிரி நின்றிருந்தான். என்ன நடந்ததென்று இருவருக்கும் ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. காலனியில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சித் திருப்பம் அது. செல்வாவுக்கு ஏனோ கொஞ்சம் குதூகலமாயிருந்தது. இனி ஜேவியம்மாவுக்கு பயந்து நடக்க வேண்டியதிருக்காது என்றுதான் உடனே அவன் மனதில் தோன்றியது. வீட்டில் அவர்தான் ஆம்பிளை என்று ஜேவி சார் கூட்டத்திற்கு முன் நிரூபித்துவிட்டுப் போய்விட்டார். அடுத்தநாள் ஜேவி சாரின் பச்சை கேட்டைக் கடக்கும்போது அந்தக் காம்பெளண்டு வெறிச்சோடிக் கிடந்தது. வாசு லேசாய்த் தயங்கி உள்ளே எட்டிப் பார்த்துவிட்டுச் சொன்னான். “என்ன இருந்தாலும் அப்படி பப்ளிக் முன்னால ஜேவி சார் அப்படி நடந்திருக்கக் கூடாதுடா. ரொம்ப பாவமா இருந்துச்சு அந்தம்மாவப் பாக்கறதுக்கு.. எனக்கே கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சுன்னா பாத்துக்கோயேன். நீ என்ன நினைக்கிற இதைப்பத்தி” என்றான் வாசு. இத்தோடு பதிமூன்றாவது தடவையாக அதைச் சொன்னான். அந்த கேட்டை நெருங்கியபோது வாசு மடித்துக்கட்டியிருந்த லுங்கியை அநிச்சையாய் தளர்த்திவிட்டுக் கொண்டதையும், இன்று அவன் விளக்குக் கம்பத்தினருகில் எச்சில் துப்பவில்லை என்பதையும் கவனித்தான் செல்வா. “சரிதான்” என்றான். *** தமிழோவியம் டாட் காம் தீபாவளி மலர் 2005   ஆரஞ்சுப் பழங்கள் இரவு மணி ஒன்பதரை ஆகிவிட்டது. முதல் தெரு முக்கில் சோடியம் விளக்குக்கடியில் அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். வேணு விரல்களினிடையே சிகரெட் சாம்பலைத் தட்டினான். இந்த இரண்டு மணி நேரத்தில் நாலாவது சிகரெட். ஒரு நீண்ட பேச்சுக்கப்புறம் விடைபெறும் தருணம் போன்ற சூழ்நிலை இருவருக்குள்ளும் விரவி நின்றது. பெங்களூர்க் காற்று குளிர் கண்டிருந்தது. யாரையோ இறக்கிவிட்டு ஒரு ஆட்டோ திரும்பியது. மற்றபடி ஆள் நடமாட்டமற்று தெரு நீண்டிருந்தது.கார்த்தி மறுபடி வாட்சைப் பார்த்தான். அதற்குள் ஒன்பதரை மணி ஆகிவிட்டது என்றான். அவன் அப்படிச் சொல்வது இரண்டாவது தடவை. அவனுக்கு நேரமாகிவிட்டது என்பதை மறைமுகமாக உணர்த்துகிறான். வேணுவுக்குக் கிளம்ப மனசில்லை. இப்படி யாருடனாவது நின்று மனம்போன போக்கில் எதையாவது பேசிக்கொண்டேயிருக்கலாம் என்று தோன்றியது. அல்லது இப்படியே டவுன் பஸ் ஏறி மெஜஸ்டிக் போய் வேறொரு பஸ்ஸோ ட்ரெயினோ பிடித்து கோயமுத்தூருக்குப் போய்விடலாம் என்று தோன்றியது. இப்போதைக்கு அது சாத்தியமில்லை. அவனுக்காக பெரியம்மாவும் பெரியப்பாவும் காத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் கொஞ்ச நேரம் அவனைக் காணாவிடில் அவர்கள் கார்த்தியின் வீட்டுக்குக்கே தேடி வந்து விடக்கூடும். வேணு அவனிடம் விடை பெற்றுக்கொண்டு ஆர்.ஆர் லே-அவுட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஒரு ஹால்ஸ் மிட்டாயை பிரித்து வாயில் அடக்கிக் கொண்டான். கையில் வைத்திருந்த •போல்டரில் அன்று அவனுக்குக் கிடைத்த வேலையின் அப்பாயிண்ட் ஆர்டர் ஏகத்துக்கு கனப்பதுபோல் உணர்ந்தான். அதை அந்தக் கம்பெனியிலிருந்து வெளியே வந்தவுடன் கிழித்துப்போட்டுவிடத்தான் விருப்பமாயிருந்தது. பெரியப்பாவுக்குத் தெரிந்த ஏதோ பெரிய மனிதரின் சிபாரிசின் பேரில் கிடைத்த வேலை. பெரியப்பா அவனுக்காக ரொம்பவே சிரமம் எடுத்துக்கொள்கிறார். ஆர்டர் கையில் கிடைத்தவுடன் உடனே கொண்டுவந்து பெரியப்பாவிடம் காண்பித்திருக்கவேண்டும். ஆனால் ஏனோ அது அவனுக்குத் தோன்றவில்லை. அவன் நேராக கார்த்தியைப் பார்க்கப் போய்விட்டான். கார்த்தியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான். தயக்கம் பின்னி இழுக்கிற கால்களுடன் பெரியம்மாவின் வீட்டை நெருங்கும்போது பெருமூச்சாக வந்தது. கடந்த பத்து நாளாக தவிர்க்க முடியாமல் தினசரி இந்த உணர்வுதான். அவன் நினைத்தமாதிரியே பெரியம்மாவும் பெரியப்பாவும் வாசற்படியிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் ரோஸ் நிற நைட்டியணிந்த எதிர்வீட்டுப் பெண்ணும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது. இவனைப்பார்த்ததும் எழுந்துகொண்டது. அவள் கை அநிச்சையாய் நைட்டியை கழுத்துப்பக்கம் இழுத்துவிட்டுக்கொண்டது. “நான் சொன்னேன்ல? வேணுன்னு.. அது இவந்தான்.” என்றார் பெரியம்மா அந்தப் பெண்ணிடம். அறிமுகப்படுத்திவைத்த பாவத்துக்கு “ஹலோ” என்றான் வேணு. அவளும் தயக்கமாய் ஒரு ஹலோ சொல்லிவிட்டு ‘வர்றேன் ஆன்ட்டி’ என்று எழுந்து போய்விட்டாள். “உனக்காகத்தான் காத்துட்டிருக்கோம். இவ்வளவு நேரம் எங்க போயிட்ட?” என்றார் பெரியப்பா.  பெரியம்மா எதுவும் கேட்காமல் வழக்கமான புன்சிரிப்புடன் அவனைப் பார்த்தார். உள்ளே போனதும் முதல் வேலையாய் அப்பாயிண்ட் ஆர்டரை எடுத்து நீட்டினான் அவன். “செலக்ட் பண்ணிட்டாங்க பெரீப்பா! திங்கக்கிழமைலேர்ந்து வரச்சொன்னாங்க” “தெரியும். பின்ன கெடைக்காமலா இருக்கும்? பெரிய சிபாரிசு” பெரியப்பா அவனை முதுகில் தட்டிக் கொடுத்தார். “நல்ல கம்பெனி. அங்கெல்லாம் வேல கெடைக்கறது கஷ்டம். அப்படியே கெட்டியா புடிச்சு படிப்படியா முன்னேறப்பாரு..” என்றார். பிறகு டைனிங் டேபிள் கூடையிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து சுளைகளை உரித்துக்கொண்டே மேலும் சில உபதேசங்கள் சொன்னார். அவர் அனுபவத்துக்கு அவை எல்லாம் சரியான உபதேசங்களே என்றாலும் அவனுக்கு அதில் மனம் லயிக்கவில்லை. வெறுமனே தலையாட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். பெரியப்பா உரித்த சுளைகளை தட்டில் வைத்து வேணுவிடம் நீட்டினார். பெரியம்மா சமையல் முடிக்கிறவரை அதைச் சாப்பிடுமாறு சொன்னார்.  வேண்டாம் என்று சொன்னால் பெரியப்பா என்ன சொல்வார் என்று தெரியும். அவன் தட்டிலிருந்து பேருக்கு ஒன்றை எடுத்து விழுங்கிக்கொண்டான். பெரியம்மா அடுப்பில் குக்கரை வைத்துவிட்டு வந்தார். என்ன மாதிரி வேலை, எத்தனை மணிக்குப் போகவேண்டும், கேண்டீன் இருக்கிறதா என்றெல்லாம் விசாரித்தார். பிறகு, வேணு ஒரு வருடம் முன்பே இங்கே வந்திருந்தால் எப்போதோ அவனுக்கு வேலை கிடைக்கச் செய்திருக்கலாமென்றும், ஒரு வருடத்தை அவன் வீணாய் கழிக்க நேரிட்டது குறித்தும் சொல்லிக் கொண்டிருந்தார். அதைச் சொல்வது பத்தாவது தடவை. வேணு வலுக் கட்டாயமாய் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அமைதியாய் உட்கார்ந்து கொண்டிருந்தான். திடீரெனத் தோன்றிய அலுப்பிலும் மனத் தளர்விலும் அவனுக்குப் பேசாமல் போய் படுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. சாப்பிடாமல் படுப்பதாவது! அப்புறம் பெரியம்மாவிடமிருந்து உரிமையாய் பாட்டுக் கேட்க நேரிடும். கொஞ்ச நேரத்தில் சமையல் முடிந்து பெரியம்மா வந்தார். அவனை முகம் கழுவி விட்டு வரச் சொன்னார். பாத்ரூமில் பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறதென்றார். டர்க்கி டவலை நீட்டினார். அவனிடமிருந்து பெருமுச்சொன்று புறப்பட்டது. பாத்ரூமில் குழாயைத் திறந்தால் தண்ணீர். என்றாலும் பெரியம்மா தவறாமல் அவனுக்காக பக்கெட்டில் நிரப்பி வைத்து விடுவதும், கைக்கெட்டுகிற தூரத்தில் இருக்கிற துண்டை அவன் முகம் கழுவினதும் நீட்டுவதும்.. ஹ¥ம்ம்.. கழுவின முகத்தைத் துடைத்துவிடுவது ஒன்றுதான் பாக்கி. இது தினசரி நடக்கிற விஷயம்தான். எல்லாமே ஒரு கனிந்த அக்கறையின் பொருட்டுதான் என்றாலும் அவனுக்கு அது சலிப்பாய் இருந்தது. எல்லாமே அவனே செய்து கொள்ளக் கூடிய சின்னச் சின்ன வேலைகள்தான். ஆனால் அதையெல்லாம் எதற்காக இப்படி பெரியம்மா இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறாள் என்று லேசான எரிச்சல் கூட எழுந்தது அவனுக்கு. முகம் கழுவும்போது திங்கட்கிழமை முதல் வேலைக்குப் போகவேண்டுமே என்ற நினைப்பு எழுந்தது. உடனே தலையை உலுக்கிக் கலைத்தான். தொடர்ந்து பெரியம்மா வீட்டிலே இருக்க வேண்டிய சூழ்நிலை பற்றி அதற்குமுன் நிறைய யோசித்தாக வேண்டும். வேணு ரொம்பக் குழப்பமாக உணர்ந்தான். ஏனென்று தெரியாமல் அவனுக்குள் ஒரு வாரமாய் தொடர்ந்து கொண்டிருக்கிற அவஸ்தை. இப்போது வேலை கிடைத்ததும் இன்னும் அதிகமாகிவிட்டது. வேறு யாராவதாக இருந்திருந்தால் பெரியம்மாவின் இத்தகைய கவனிப்பில் உருகிப் போயிருப்பார்கள்தான். கவனிப்பென்றால் சும்மா அப்படி இப்படி இல்லை. ராஜ கவனிப்பு! சொந்தப் பையனை எப்படி கவனித்துக்கொள்வார்களோ அப்படி! ஆனால் வேணு அதை காலில் குத்தின முள்ளை அகற்றிய பின்னும் இருக்கிற நெருடல் உணர்வு மாதிரி உணர்ந்தான். இதென்ன தவழ்கிற குழந்தைக்கு அளிக்கிற மாதிரி முழு நேர கவனிப்பு? விருந்தாளிகளைக் கவனிக்கிற மாதிரி சதா உபசரிப்பு. கூட்டணிக்கு இந்தப் பெரியப்பா வேறு. ஆரஞ்சுப் பழத்தை எனக்கு உரித்துச் சாப்பிடத் தெரியாதா? பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் குழந்தைகள் இல்லை. வேணுவை இத்தனை கவனிப்பதற்கு அதுதான் காரணமோ என்னமோ!? இருந்தாலும் இந்த கவனிப்பு எனக்கு முள் படுக்கை மாதிரி இருக்கிறது என்று சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும்போல் இருந்தது அவனுக்கு! வேணு சின்னப் பையனாய் இருந்தபோது ஸ்கூல் லீவு விட்டால் அடிக்கடி இங்கே வருகிற வழக்கம்தான். அப்போதெல்லாம் பெரியவர்களின் வேலைக்கும் அரட்டைக்கும் நடுவில் அவன் செய்கிற குறும்பும், புதுசு புதுசாய் எதையாவது நோண்டிக் கொண்டிருக்கிற ஆர்வமும், விளையாட இடமும், விளையாட்டுப் பொருட்கள் தேடுகிற மும்முரமும் மட்டுமே அப்போதிருந்தது. அப்போதிருந்த மாதிரியே அந்தக் கவனிப்பும் அன்பும் பெரியம்மாவிடம் இன்றைக்கும் மாறாமல்தான் இருக்கிறது. ஆனால் அவன்தான் வளர்ந்துவிட்டான். இப்போது மனசில் குடிவந்துவிட்ட பெரிய மனுஷத்தனத்தால் அதை முழுசாக ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுக்கத் தோன்றுகிறது. பெரியப்பா வேணுவின் அப்பாவுக்கு ஏதோ விஷயமாய் ஃபோன் பண்ணியதிலிருந்துதான் எல்லாமே ஆரம்பமானது. அவன் படித்துவிட்டு வேலையில்லாமல் வெட்டியாய் சுற்றிக் கொண்டிருப்பதாக அவன் அப்பா சும்மா இருக்காமல் பெரியப்பாவிடம் புலம்பிவிட்டார். “இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அவன இங்க பெங்களூர்க்கு அனுப்பு சாரங்கா! ஒரு வாரத்துல வேல வாங்கித்தர்றேன். இங்கிருந்தேகூட வேலைக்கு போய் வந்திட்டிருக்கட்டும்.” போனை கீழே வைத்த கையோடு ஒரு மூட்டை உபதேசங்களையும், ட்ராவல் பேகையும் கையில் கொடுத்து அப்பா அவனை பெரியப்பாவிடம் அனுப்பிவைத்துவிட்டார். இதோ பெங்களூருக்கு வந்து பத்து நாட்களாகிவிட்டது. சொன்னபடி பெரியப்பா ஒரே வாரத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்துவிட்டார். அவனுக்கு வேலை கிடைத்த அலுவலகம் மல்லேஸ்வரம் ஏரியாவில் ரொம்ப பந்தாவாகப் பெரியதாகத்தான் இருந்தது. அதில் அட்மின் செக்ஷனில் ட்ரெயினியாக சேரச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு வருஷத்துக்கப்புறம் நிரந்தரமாக்குவார்களாம். எல்லாம் சரிதான். பெரியப்பாவின் சிபாரிசு பாதாளம் வரை பாய்ந்துவிட்டது. பின்னே இன்டர்வ்யூவில் சுரத்தேயில்லாமல் பதில் சொன்ன அவனை வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள் என்றால் சும்மாவா? அங்கே இன்டர்வ்யூவுக்குப் போவதற்கேகூட அவனுக்கு அத்தனை சலிப்பாகத்தான் இருந்தது. அப்பா சொன்னதற்காக பெங்களூர் வந்தான். பெரியப்பா சொன்னதற்காக இன்டர்வ்யூவுக்குப் போனான். தன் வாழ்வு யாராலோ இயக்கப்படுவதாகவும், யாரோ போட்ட கோட்டில் அவன் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவ்வப்போது தோன்றுகிற நினைப்பால் அவனுக்கு ரொம்ப ஆயாசமாக இருந்தது. செலவுக்குக் காசிருக்கிறதாஎன்றுகேட்டு அவன் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் அவன் பாக்கெட்டில் முந்நூறு ரூபாயைத் திணித்திருந்தார் பெரியப்பா. ஒவ்வொரு கிங்ஸ் புகைக்கும்போதும் அது வேறு உறுத்திக்கொண்டேயிருக்கிறது. கார்த்தி பெங்களூரில் இருப்பது ஒரு ஆறுதல். அதுவும் பெரியப்பாவின் வீடிருக்கிற ஏரியாவிலேயே அவன் வசிப்பது வேணுவின் அதிர்ஷ்டம். வந்த பத்துநாட்களுக்குள் அவனுடன் சேர்ந்து இரண்டு சினிமா பார்த்துவிட்டான். “இன்னிக்கு நான் ஸ்பெஷலா பாயசம் பண்ணியிருக்கேன். நியாயமா இன்னிக்கு நீ ஸ்வீட்டோட வீட்டுக்கு வந்திருக்கணும். பரவாயில்லை. முதல் சம்பளத்திலயாவது ஏதாவது வாங்கிட்டு வர்ரியான்னு பாப்போம்” சாப்பாடு பரிமாறும்போது பெரியம்மா சிரித்தபடி சொன்னார். மனதில் நெருடிய குற்ற உணர்வை மறைத்துவிட்டு பொதுவாய் சிரித்து வைத்தான். வேலை கிடைத்த விஷயத்தை அப்பாவுக்கு இன்னும் போன் பண்ணிச் சொல்லவில்லை என்பது திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது. “பெரீப்பா கோயமுத்தூருக்கு ஒரு போன் பண்ணிக்கட்டுமா?” “உங்கப்பாவுக்குத்தானே? நீ இன்டர்வ்யூ முடிச்சவுடனேயே உன்னை செலக்ட் பண்ணிட்டதா எனக்கு போன் வந்துரிச்சு. நான் மத்தியானமே அவனைக் கூப்பிட்டுச் சொல்லிட்டேன்.” பெரியப்பா பெருமிதமாய் சிரித்தார். சாப்பிட்டுவிட்டு வாசற்படியில் இளைப்பாற நின்றபோது பின்னாலிருந்து பெரியம்மாவின் குரல் கேட்டது. “படுக்கை தட்டிப் போட்டிருக்கேன். டயர்டா இருந்தா பால் சாப்டுட்டு போய் படுத்துக்கோ! இல்ல டி.வி பாக்கறதுன்னா பாரு! ரூம்ல கொசுவத்தி பத்த வெச்சிருக்கேன்.” இன்றைக்கு ஒரு முடிவுக்கு வந்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஒன்றோ கிடைத்த வேலையில் சேர்ந்து கொண்டு இங்கேயே இருப்பது. அல்லது கோயமுத்தூருக்கு மூட்டையைக் கட்டிவிடுவது. பின்னதுதான் உசிதம் என்று தோன்றியது. அங்கே போய் ஏதாவது ஒரு சின்ன வேலை கிடைத்தால்கூடப் பரவாயில்லை. அவன் வீட்டிலிருந்தே சுதந்தரமாய் போய் வந்து கொண்டிருக்கலாம். சுதந்திரம்! ஆம் அது ரொம்ப முக்கியம். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை இழந்துவிடக்கூடாது. மேலும், அம்மா கையால் சாப்பாடு. எத்தனை கொடுத்தாலும் ஈடாகாத விஷயமில்லையா அது? வெப்பத்தைத் தாங்க முடியவில்லையெனில் சமையலறையை விட்டு வெளியேறுங்கள் என்று காப்மேயர் கூட சொல்லியிருக்கிறார். பெங்களூர் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்? இந்த அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரைக் கிழித்துப் போட்டுவிட்டு ஞாயிற்றுக் கிழமை ட்ரெயின் ஏறி விடவேண்டியதுதான். என்ன இருந்தாலும் சொந்த ஊரும் வீடும் மாதிரி வராது. அவன் சடுதியில் தீர்மானித்துவிட்டான். அம்மாவையும், பெரிம்மாவையும் எப்படியாது சமாளித்து விடலாம். அப்பாவும், பெரியப்பாவும்தான் அதிர்ச்சியாகிவிடுவார்கள். முக்கியமாய் பெரியப்பா ஏதாவது நினைத்துக்கொள்வாரோ என்று லேசாய் பயமாயிருந்தது. என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டால் என்ன?. என் எண்ணங்களையும், சுதந்திரத்தையும் முன் வைத்து என்னை இருப்பை நிரூபித்துக்கொள்ள வேண்டிய நேரமிது என்று நினைத்துக்கொண்டான். யாரோ சொல்கிறார்கள் என்று எதையாவது செய்வதாவது? அப்புறம் என் கருத்தென்று என்னதான் இருக்கிறது? அந்த முடிவுக்கு வந்தபிறகு வேணு கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தான். பக்கத்து வேப்ப மரம் சிலுசிலுவென்று காற்றை அனுப்பியது. மேலே வானத்தில் அரை நிலாவும் ஒரு சில மேகப்பஞ்சுகளும் இருந்தன. எங்கிருந்தோ “பவ்” என்று குரல் கேட்டது. வேணு திடுக்கிட்டுத் திரும்பினான். எதிர் வீட்டிலிருந்து கேட்டைத் திறந்து ரோஸ் நைட்டிப் பெண் பாமரேனியன் நாய்க்குட்டியுடன் வெளிப்பட்டதைப் பார்த்தான். அவளது பேரைத் தெரிந்துகொள்ளாமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டான். முன் வாசல் ட்யூப்லைட் வெளிச்ச உபயத்தில் பளபளக்கிற கண்களுடன் அவள் வேணுவைப் பார்த்துச் சிரித்தது மந்தகாசமாய் இருந்தது. அவன் ஒரு நொடி சிலிர்த்துத் தடுமாறி பதிலுக்குச் சிரித்து வைத்தான். எப்படி அவள் இத்தனை நாள் கண்ணில் படாமல் போனாள் என்று யோசித்தான். திங்கட்கிழமை காலை பெரியம்மா பூஜை செய்து கொடுத்த விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு இருவர் காலிலும் விழுந்து நமஸ்கரித்துவிட்டு நன்றாய் அயர்ன் பண்ணின உடையணிந்து, பாலிஷ் இடப்பட்ட ஷூவுடன் ஆபிஸூக்குக் கிளம்பினான். மறக்காமல் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை எடுத்துக்கொண்டான். *** செந்தமிழ் டாட் காம் 2006   பேறு அம்புஜம் வேலைக்கு வந்தால் தன்னை வந்து பார்க்குமாறு பரமேஷ் வீட்டில் சொல்லிவிட்டு வந்தான் ப்ரசன்னா. அவள் வந்தால் இரண்டில் ஒன்று கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அவள் மறுபடி வேலைக்கு வரமுடியுமா முடியாதா?. மஞ்சு இருக்கிற நிலைமைக்கு இனியும் அவளால் எந்த வேலையையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தால் பிற்பாடு ப்ரச்சனையாகிவிடும். வீட்டு வேலைக்கு யாரையாவது வைத்தே தீரவேண்டும். சமத்தாய் அம்புஜம் நாளையிலிருந்து வந்துவிட்டால் தேவலை. இரண்டு நாள் முன்பு டாக்டர் சொன்னதை நினைத்து அவனுக்குள்ளே கனன்று கொண்டிருந்த சந்தோஷம் ஒரு கவலைச் சுழலுடன் கலந்து பொங்கிக் கொண்டிருந்தது. மஞ்சுவுக்கும் அப்படித்தானிருந்திருக்க வேண்டும். அவள் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல்தான் வீட்டுக்குள் உலவிக்கொண்டிருக்கிறாள். முதலில் சந்தோஷப்படுவதும் பிறகு அது தங்காமல் கலைந்துவிடுவதும் என நிறைய ஆகிவிட்டது. பத்தாம் மாசம் ஒரு பிள்ளையைக் கண்ணில் பார்த்தால்தான் இனி சிரிப்பெல்லாம் என்று முடிவு பண்ணிவிட்டவள்போல் இருந்தாள் மஞ்சு. அவளும் பத்து வருடமாக கோவில் குளம் பூஜை என்று அலைந்து வேண்டுதலில் உருகி நின்றதற்குப் பலனாய் டாக்டரின் வாயிலிருந்து இதோ நல்ல சேதி கிடைத்துவிட்டது. இந்தத் தடவை மஞ்சுவுக்கு நாள் தள்ளிப்போனபோது எல்லா எதிர்காலக் கற்பனைகளையும் தற்காலிகமாய்த் தள்ளி வைத்துவிட்டு நேரே டாக்டரிடம் போனார்கள். நல்ல செய்திதான் என்று உறுதிப்பட்டுவிட்டபோதுகூட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அர்த்தமாய் புன்னகைக்க கூட பயமாயிருந்தது. டெலிவரி வரைக்கும் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று டாக்டர் சொல்லிவிட்டார். கடினமாய் எந்த வேலையையும் செய்வது பிரச்சனையை உண்டுபண்ணும் என்று கையுறைகளைக் கழற்றி வைத்துவிட்டு எச்சரித்தார் டாக்டர். மேலும் மஞ்சுவுக்கு உடம்பு பலவீனமாக இருக்கிறது. கவனமாக இருக்கவில்லையென்றால் அப்புறம் இதுவும் இல்லையென்று ஆகிவிடுமென்றார். மஞ்சுவுக்கு முப்பத்தைந்து வயதாகிவிட்டதும் ஒரு காரணம். இதற்கு முன்னால் இரண்டு தடவை அபார்ஷன் வேறு. “ஸோ.. பாத்துக்குங்க. ஆறாவது மாசத்திலேயே உங்க ஒயிஃப்-ஐ அட்மிட் பண்ணி அப்ஸர்வேஷன்ல வெக்க அவசியம் வந்தாலும் வரலாம். பார்ப்போம்! ஆல் த பெஸ்ட்..” லேசாய் மிதக்கிற குழந்தைக் கனவுகளுடனும், கொஞ்சம் டானிக் மாத்திரைகளுடனும் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மஞ்சுவை அப்படியே தூக்கி கரகரவென்று சுற்றவேண்டுமென்கிற ஆவலை அடக்கி மென்மையான முத்தத்துடன் நிறுத்திக்கொண்டான். ரொம்ப சந்தோ்ஷம் வேண்டாம். எதற்கும் உத்தரவாதமில்லை. போன தடவை மாதிரியே நடுவில் சிக்கலானால் அப்புறம் எல்லாக் கனவுகளும் சரிந்துவிடும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாய் இருப்பதே நலம். இனி மஞ்சுவை அதிகம் வேலை செய்யவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் இரண்டுபேர் மட்டும் இருக்கிற அந்த வீட்டில் அவளைப் பார்த்துக்கொள்ள ப்ரசன்னாவை விட்டால் ஆள் கிடையாது. பார்த்துக்கொள்ள ஆளில்லாவிட்டாலும் பரவாயில்லை. வேலை செய்ய யாராவது ஆள் இருந்தால் தேவலை. அம்புஜம் வரவேண்டும். பரமேஷ் வீட்டில் சொல்லிவைத்திருப்பதால் அம்புஜம் அங்கே வேலைக்கு வரும்போது தகவல் சொல்லிவிடுவார்கள். ஆனால் பழைய கோபத்தை வைத்துக்கொண்டு அவள் வராமல் இருந்துவிடுவாளா என்று யோசனையாய் இருந்தது. இருந்தாலும் கேட்டு வைத்தால் என்ன கெட்டுப்போய்விடும்? ஐம்பது ரூபாய் ஜாஸ்தியாய் தருகிறேன் என்றால் வராமலா இருப்பாள்? அந்தப் பெண் செல்வி அத்தனை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொண்டு போகாமல் இருந்திருந்தால் அவளாவது இன்னும் வேலையில் இருந்திருப்பாள். இத்தனை பெரிய நகரத்தில் வீட்டு வேலைக்கு ஒரு நல்ல ஆள் கிடைப்பது எத்தனை கஷ்டமாயிருக்கிறது! அன்றைக்கு டாக்டரிடமிருந்து திரும்பியதிலிருந்து ப்ரசன்னாவும், மஞ்சுவும் அதிகம் பேசவில்லை. அதுவும் நல்லதுதான். எதற்காகவும் மஞ்சு அதிகம் உணர்ச்சிவசப்படுவதேகூட நல்லதல்ல என்று தோன்றியது ப்ரசன்னாவுக்கு. அன்றிரவு படுக்கப் போகுமுன் அவளை மடியில் சாய்த்துக்கொண்டு லேசாய் அவளது அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தான். அவனால் நம்பமுடியவில்லை. பத்து வருடத்திற்குப் பின் அத்தனை நம்பிக்கைகளும் நசித்துப் போனபின் மறுபடி உதித்திருக்கிற தளிர். மஞ்சு அவனது உள்ளங்கையில் முகத்தைப் பதித்துக்கொண்டு லேசாய் சப்தமின்றி அழுதாள். இருவருக்குமிடையே ஏற்பட்ட நெகிழ்வில் அவளை மெதுவாய் இறுக்கிக் கொண்டான். “நீ எதுக்கும் கவலப்படாதடி. நான் பாத்துக்கறேன். நாளைக்கு அம்புஜம் வேலைக்கு வந்துட்டா.. அப்றம் உனக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்தான்” என்று காதோரம் கிசுகிசுத்தான். அவ்வளவு நெருக்கத்தில் காதோரக் கிசுகிசுப்பாய் சொல்ல அம்புஜம் மேட்டர்தானா கிடைத்தது என்று உடனே அசந்தர்ப்பமாக உணர்ந்தான். மறுநாள் காலை எட்டு மணிக்கு அழைப்பு மணி அடித்தபோது அம்புஜமாகத்தான் இருக்கும் என்று ஏனோ நினைத்துக் கொண்டு கதவைத் திறந்தான் ப்ரசன்னா. அங்கே செல்வி நின்று கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் தயக்கத்துடன் கொஞ்சம் பின்வாங்கி நின்று கொண்டு “நல்லாருக்கீங்களாண்ணே!!” என்றாள். முகத்தில் திகைப்பை விடுவித்துவிட்டு “என்ன செல்வி! ஏது இவ்ளோ தூரம்?” என்றான். அவளை திடீரென மறுபடி பார்த்ததில் ஆச்சரியமாயிருந்தது அவனுக்கு. அவன் கதவைத் திறக்குமுன்னரே பழைய பழக்கத்தில் அவள் செருப்பை ஓரமாய்க் கழற்றி வைத்துவிட்டு நின்றிருந்ததைப் பார்த்தான். “அண்ணே! வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னீங்களாமே…” என்றாள் மேலும் தயங்கியபடி. “உனக்கு யார் சொன்னாங்க? உள்ள வா!” என்று வழிவிட்டான். செல்வி உள்ளே வந்து சுவரோரமாய் ஒடுங்கி நின்றாள். ஒண்ணரை வருஷமிருக்குமா இவள் வேலையைவிட்டுப் போய்? ரொம்பவே மாறியிருந்தாள். முதலில் தாவணியோ சுரிதாரோ போட்டுக்கொண்டுதான் வேலைக்கு வருவாள். இப்போது சேலை. முகத்தில் லேசாய் பவுடர் பூச்சு. வகிட்டில் தீற்றிய குங்குமம். பழைய குழந்தைத்தனம் போய் லேசாய் பெரிய மனுஷித்தனம் தெரிந்தது இப்போது. குரல்கள் கேட்டு மஞ்சு வெளியே வந்து செல்வியைப் பார்த்து சிரித்தாள். “உம் புருஷன் எப்படியிருக்காம்மா?” என்றான் ப்ரசன்னா. “இருக்குது” என்றாள் சுரத்தில்லாமல். சொன்ன மறுமணம் அவள் முகம் மிகவும் சோர்ந்து போய்விட்டது. “எங்க வேலைக்கு போறாரு?” “இப்ப வேல இல்லக்கா! மின்ன போயிட்டிருந்த ஆபிசுல மொதலாளி அவரை வேலையிலிருந்து நிப்பாட்டிருச்சு. இப்ப சும்மா கெடக்குது வூட்ல. வேறெங்கியும் வேல தேடக் காணம். அதுக்கொரு வேல கெடைக்கற வரைக்கும் நான் வேலைக்கு போலாம்னு..” என்றாள். “கொழந்த?” “ஒரு பொண்ணுக்கா! கொளந்தைய அவரு பாத்துக்குவாரு. ஒண்ணும் பிரச்சினையில்ல” ப்ரசன்னாவும் மஞ்சுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். திடீரென்று அவள் இப்படி வந்து நின்றதில் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. பரமேஷ் வீட்டிலிருந்து இவளுக்கு விஷயம் தெரிந்திருக்கவேண்டும். அவள் நிலைமையை யோசித்தால் பரிதாபமாக இருக்கிறது. மேலும் செல்வி மேல் ப்ரசன்னாவுக்கு எப்போதுமே ஒரு அனுதாபம் உண்டு. “எப்படியும் ஒரு ஆள் வேணும் செல்வி. அம்புஜத்தை கேட்டிருந்தோம். ஒனக்கு முடியும்னா வா! என்ன சொல்ற?!” என்றாள் மஞ்சு. செல்வி உடனே அகமகிழ்ந்துவிட்டு ‘வூட்ல சொல்லிட்டு இப்பவே வந்துடறேன்’ என்று நகர்ந்தாள். ப்ரசன்னாவுக்கு லேசாய் நிம்மதிப் பெருமூச்சு வந்து போனது. மஞ்சுவுக்கும்கூட! செல்வி திரும்பவும் வந்து அன்றைக்கே வேலையை ஆரம்பித்துவிட்டாள். உடனே அடுக்களைக்குப் போய் பழைய துணி ஒன்றை சேகரித்துக்கொண்டு வந்து டி.வி ஸ்டேண்ட் மேலுள்ள புத்தர் சிலையை எடுத்துத் துடைக்க ஆரம்பித்தாள். ப்ரசன்னாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவள் முன்பு வேலைக்கு வந்துகொண்டிருந்த போதுகூட இதே மாதிரிதான் பண்ணுவாள். அப்போதெல்லாம் வாரத்துக்கொருமுறை வீடு முழுக்கத் தூசி தட்டி சுத்தம் பண்ணுகிற சமயங்களில் அவள் தவறாமல் இந்த புத்தர் சிலையிலிருந்துதான் வேலையை ஆரம்பிப்பாள். நேராய் வந்து முதலில் டி.வி ஸ்டாண்டின் மேலிருந்து புத்தரை எடுத்து பளபளவென்று துடைத்து வைத்துவிட்டுப் பிறகு ஓரிரு விநாடிகள் அதன் மெட்டாலிக் பளபளப்பைப் பார்த்துக்கொண்டிருப்பாள். பிறகுதான் மற்ற பொருளெல்லாம். இதை ப்ரசன்னா எத்தனையோ தடவைகள் கவனித்திருக்கிறான். புத்தர் சிலையிலிருந்து ஆரம்பிப்பது என்ன கணக்கென்று புரியவில்லை. இல்லை அவளுக்கு அது ரொம்பப் பிடித்திருக்கிறதோ என்னமோ. ஒரு நாள் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். செல்வியைப் பற்றி யோசித்துக்கொண்டே கிளம்பி ஒரு சின்ன வேலையாய் ஆடிட்டரைப் பார்க்கப் போனான். அவர் வருவதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட நேரத்தில் ஒரு வேலைக்காரி துடைப்பத்துடன் வந்து ‘கொஞ்சம் எந்திரிச்சீங்கன்னா.. ரூம க்ளீன் பண்ணிர்ரேன்.’ என்றபோது அவனுக்கு மறுபடி செல்வி ஞாபகம் வந்துவிட்டது. பாவம் எத்தனை சின்னப்பெண். படிப்பும் விளையாட்டுமாய் இருக்கவேண்டிய இந்த சின்ன வயசில் கல்யாணம் பண்ணிக்கொண்டு.. ச்சே! நினைக்கவே கோபமாய் வருகிறது. மனசளவில் எந்த முதிர்ச்சியும் இல்லாத அவள் கையில் இப்போது ஒரு குழந்தை. அந்தப் பெண்ணுக்கு மீறிப் போனால் இப்போது ஒரு பதினெட்டு வயது இருக்குமா? அவள் புரு்ஷன் அவளை விட ஒரு வயசோ ரெண்டு வயசோ பெரியவன். அவ்வளவுதான். செல்வி வேலைக்கு வருவதற்கு முன் அவளது அம்மாதான் ப்ரசன்னா வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தாள். கொஞ்சம் சுறுசுறுப்பான ஆள்தான். ‘கெட்டிக்காரி பொம்பளை’ என்று மஞ்சு அடிக்கடி சொல்லுவாள். துவைப்பது, பெருக்குவது, பாத்திரம் கழுவுவது என்று எந்த வேலையானாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடித்துவிட்டு அடுத்த வீட்டுக்குப் போய்விடுவாள். அப்படியே பிஸியாகி தன் நெட்வொர்க்கை விஸ்தரித்துவிட்டாள். முதலில் ஒன்றிரண்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவள் குறுகிய காலத்திலேயே வளர்ந்து பதிமூன்று வீட்டுக்கு வேலை செய்ய ஆரம்பித்தாள். ஒருநாள் திடீரென்று ‘இனிமே உங்க வூட்டுக்கு எம்பொண்ணுதான் வேலைக்கு வரும்’ என்று அறிவித்த கையோடு செல்வியை அனுப்பி வைத்தாள். வந்து நின்ற செல்விப் பெண்ணுக்கு அப்போது பதினைந்து வயதுதான் இருக்கும். பத்தாம் கிளாஸ் பாஸ் செய்த கையோடு வேலைக்கு வந்திருந்தது. அம்மாவுக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் பம்பரமாய் சுழன்று வேலை செய்ய ஆரம்பித்தாள். செல்வியோ அவள் அம்மாவோ யாராவது ஒருவர்! ஒழுங்காய் வேலை நடந்தால் சரி என்று ப்ரசன்னாவும் மஞ்சுவும் அந்த திடீர் ஆள் மாற்றலைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. செல்வியிடம் “ஏன் மேல படிக்கல” என்று கேட்டபோது. ‘வசதியில்லீங்க’ என்று பதில் வந்தது. இத்தனைக்கும் அவள் எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் செய்திருக்கிறாள் எனும்போது அவள் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டாள் என்கிற செய்தி அத்தனை ரசிக்கவில்லை ப்ரசன்னாவுக்கு. அவள் அம்மாவை ஒருநாள் வரச்சொல்லிப் பேசினான். “இங்க பாரும்மா.. பத்தாங்கிளாஸோட படிப்ப நிறுத்திட்டு பாத்திரம் கழுவி முந்நூறு ரூபா சம்பாதிக்கறதுக்கு பதிலா.. செல்வி அட்லீஸ்ட் ப்ளஸ் டூ முடிச்சான்னா ஏதாவது கடையில சேல்ஸ் கேர்ள் மாதிரி வேலைக்கு போலாமில்ல. கொறஞ்சது ஆயிரம் ரூபாயாச்சும் சம்பாதிக்கலாம். வசதியில்லன்னா சொல்லு. நான் என் செலவுல படிக்க வெக்கறேன். ஸ்கூல் படிப்பு நேரம் போக மீதி நேரம் இங்க வந்து வேல செய்யட்டும். பொண்ணு படிச்ச மாதிரியுமாச்சு. வேல செஞ்சமாதிரியும் ஆச்சு!! நிறைய வாக்குவாதத்துக்கப்புறம்தான் செல்வியின் அம்மா ஒத்துக்கொண்டாள். ப்ரசன்னா மற்றும் மஞ்சுவின் தாராள மனத்தை நினைத்து கண்களைத் துடைத்தவாறே அரை மனதாய் தலையாட்டினாள். உடனே அவன் மள மளவென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டான். செல்விக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தான். செல்வி ஸ்கூலில் ப்ளஸ் ஒன் சேர்ந்த முதள் நாள் அதிகாலையில் வந்து இருவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பி திடீரென்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிப் போனாள். அதற்கடுத்த கால் பரீட்சையில் நல்ல மார்க் எல்லாம்கூட எடுத்து ரிப்போர்ட்டை இருவரிடமும் காட்டினபோது உருப்படியான காரியம்தான் பண்ணியிருக்கிறோம் என்று திருப்தியாயிருந்தது ப்ரசன்னாவுக்கு. ஆனால் அரைப்பரீட்சை வருவதற்குள் நிலைமை மாறிவிட்டது. ஒரு நாள் திடீரென்று செல்வியுடன் அவள் அம்மா வந்தாள். செல்விக்கு சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் அடுத்த மாசம் கல்யாணம் எனவும் சொல்லிவிட்டு “எம்பொண்ணு படிப்புக்கு எத்தனயோ செஞ்சிருக்கீங்க சாமி. இனி அவ வேலைக்கு வர மாட்டா. மன்னிச்சுக்குங்க!!” என்றாள். “என்னம்மா இது? அவளுக்கு இன்னும் வயசு பதினாறுகூட முடியல. அதுக்குள்ள கல்யாணமா?” “தப்பா நெனச்சுக்காதீங்க. நெலம அப்படித்தான். இத தாட்டிவுட்டாதான் அடுத்து இருக்கற ரெண்டு பொட்டப் புள்ளைங்களை கரயேத்த முடியும். ஏதோ இவளுக்கு அதிஸ்டமா தானா வந்து அமைஞ்சுருக்கு. சட்டுப் புட்டுன்னு முடிச்சுர்றதுதான நல்லது.” என்றாள். ஒரு சுபமுகூர்த்தச் சுப தினத்தில் செல்வி கல்யாணம் பண்ணிக்கொண்டு போய்விட்டாள். ********* இப்போது மீண்டும் செல்வியின் வரவு. ஒரு வேலைக்காரியின் மிக அவசியத் தேவையின் சமயத்தில் நிகழ்ந்திருக்கிற அவள் பிரவேசம் கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு வருஷத்திற்காவது இவள் இங்கே தங்கினால் நல்லது. இல்லையேல் வேறு யாரையாவது தேடி மறுபடி அலைய வேண்டியிருக்கும். பழைய சம்பளத்துடன் கூட நூறு ரூபாய் வேண்டுமானால் ஜாஸ்தியாகப் போட்டுக்கொடுத்துவிடலாம் என்று தோன்றியது. பாவம்! இப்போது அவள் சின்னப் பெண் இல்லை. குடும்பஸ்தி! அப்புறம் அவன் புருஷன் வேலையில்லாமலிருக்கிறதாகச் சொன்னாளே! அவனையும் வரச்சொல்லி ரெண்டு அதட்டு அதட்டி உருப்பட வைக்கமுடியுமா என்று பார்க்கவேண்டும். மஞ்சுவின் டெலிவரி வரை செல்வி ஒத்தாசையாய் இருந்து அவளை அலுங்காமல் பார்த்துக்கொள்வாளேயாயின் அவள் குடும்பத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த மாதிரி ஒரு உணர்ச்சி வேகத்தில் ப்ரசன்னாவுக்கு என்னென்னவோ சிந்தனைகள் வந்து விழுந்தன. சாயங்காலம் வீட்டுக்குப் போனபோது மஞ்சு கதவைத் திறந்துவிட்டு விட்டு அடுக்களைக்குப் போய், விட்ட இடத்திலிருந்து மறுபடி பாத்திரம் கழுவ ஆரம்பித்தாள். ப்ரசன்னாவுக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளே வந்து “மஞ்சு இதெல்லாம் நீ எதுக்கு பண்ற? எதுக்கு இப்படி ரிஸ்க் எடுத்து உடம்பை அலட்டிக்கிற? நாளைக்கு செல்வி வந்து இதெல்லாம் பண்ணுவால்ல!” என்றான் அவன் லேசான கோபத்துடன். “செல்வியை நாளையிலேர்ந்து வர வேண்டான்னு சொல்லிட்டேன்” என்றாள் மஞ்சு. ப்ரசன்னா புரியாமல் நின்றான். முகத்தில் குழப்பம் சூழ ஏனென்று கேட்க வாய் திறக்குமுன் மஞ்சுவே சொன்னாள். “ஏன் தெரியுமா? செல்வியும் முழுகாம இருக்கா!” ப்ரசன்னா லேசான பெருமூச்சுடன் திரும்பி டி.வி ஸ்டாண்ட் மேலிருக்கிற புத்தர் சிலையை அமைதியாய் வெறிக்கத் தொடங்கினான். *** தமிழோவியம் டாட் காம் 17-04-05   அழகிய தீயே! பல வருடம் கழித்து ஆதியை நேற்று பார்க்க நேரிட்டது. ஒருவகையில் அது கொஞ்சமும் எதிர்பாராத சந்திப்புதான். பார்த்த கணத்தில் அருணாவுக்கு காலடியில் பூமி நழுவியது. முகத்தில் லேசாய் கலவரம் விரிந்தது. தியாகராயா ரோட்டில் எச்.எஸ்.பி.ஸி ஏடிஎம்-ல் பணம் எடுக்க நின்றிருந்தபோது “ஹாய்” என்று திடீரென்று எதிரே வந்து நிற்கிறான். இத்தனை காலம் எங்கிருந்தான் இவன்? ஆரம்பத் தயக்கங்கள் தாண்டி இருவரும் இயல்புக்கு வருவதற்கே சில கணங்கள் ஆயின. இருவருக்கும் சட் சட்டென்று பழைய நினைவுகள் முகத்தில் வெளிச்சமிட்டதை இருவருமே உணர்ந்தார்கள். அப்புறம் பரஸ்பர விசாரிப்புகள் நடந்தன. அவன் சென்னையில்தான் ஒரு தனியார் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் ஸீனியர் மானேஜராக இருக்கிறானாம். அவனை காலேஜில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்ததுபோல் தோன்றியது. கோல்டு ஃப்ரேமில் கண்ணாடி. லேசாய் முன்தலை வழுக்கை. லேசாய் பூசியிருக்கிற உடம்பு. உடையில் சொற்ப மாற்றம். ஆதி கையில் செல்போன் சிணுங்கல்களுக்கு நடுவே அவளைப்பற்றிக் கேட்டான். காலேஜ் ப்ரண்ட்ஸ் வேறு யாரையாவது மீட் பண்ணுவதுண்டா? என்றான். “ம். ஜான்ஸி மட்டும் அப்பப்ப போன்ல பேசுவா” “ஓ அந்த குட்டி வாத்து. க்ரேட் அருணா உன்னை மறுபடி பார்ப்பேன்னு நினைக்கல. வெரி சர்ப்ரைஸ். ஃப்ரியா இருக்கும்போது ஒரு நாள் சும்மா எங்கயாவது மீட் பண்ணலாமே” என்றான் ஆவலாய். கார்டு கொடுத்தான். மேலும் சம்பிரதாயமாய் ஒரு சில வார்த்தைகளுடன் அந்த சிறு சந்திப்பு முடிந்தது. வீட்டுக்குத்திரும்பி வரும்போது அருணாவுக்கு ஒரே யோசனையாயிருந்தது. ஆதி இப்படி திடீரென்று எதிர்ப்படுவான் என்று எதிர்பார்க்கவில்லை. பழைய விஷயங்களை மறுபடி கிளறுவானோ என்று ஒரு சின்ன பயமும் தோன்றியிருந்தது இப்போது. ஆதி என்கிற ஆதிராஜன். காலேஜில் எம்.ஸி.ஏ. ஒரே வகுப்பு. அப்போதும் கண்ணாடி போட்டிருந்தான். தானே வலியவந்து யாரிடமும் அறிமுகப்படுத்திக்கொள்ளும் சுபாவம் அவனுக்கு. எப்போதும் அவனைச்சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். சிகரெட் புகைத்து லேசாய் கவிதையெல்லாம் பேசுவான். ஆரம்பத்தில் அருணாவிடமும் நட்பாய்த்தான் இருந்தான். வருவான். பேசுவான். போவான். பிறந்தநாளுக்கு கார்டு அவனே செய்து பரிசளிப்பான். ஒருநாள் மதியம் கல்லூரி நிறுவனர் சிலைக்குப்பக்கத்தில் எல்லாரும் உட்கார்ந்து டிபன்பாக்ஸ்களை காலி செய்துகொண்டிருக்கும்போது மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்து அருணாவை ஊடுருவிப்பார்த்து “சமீப நாட்களாய் நீ என்னை பாதிக்கிறாய்” என்றான். விளையாட்டு மாதிரிதான் சொன்னான். அதன் அர்த்தம் தெரிந்துகொள்ள அவள் அப்போது பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை. பிறகு சில நாட்களிலேயே அவன் சொன்னதன் தீவிரம் புரிந்துபோது அவள் அவனிடமிருந்து லேசாய் விலகினாள். ஆனால் ஒரே க்ளாஸ் என்பதால் பொதுவாய்ப் பார்ப்பதும் பேசுவதும் தவிர்க்கமுடியாததாய் இருந்தது. “ஆதி உன்னை ஸீரியசா லவ் பண்றான்னு நினைக்கிறேன்” என்று ஜான்ஸி சொன்னாள். வேறு சிலரிடமிருந்துகூட அதைக் கேள்விப்பட்டாள். “அதுக்கு நான் என்ன பண்ணனும்;?” என்று கேட்டாள். கோபமாய் வந்தது. அவனிடம் எனக்கு என்ன ஈர்ப்பு? ஒருகணம் அதையும் அவன் நினைத்து பார்த்திருக்கவேண்டும். இந்த காதல் மண்ணாங்கட்டி எல்லாம் எப்படியோ இவன்களுக்கு வந்து தொலைத்து விடுகிறது. நான்சென்ஸ். ஒரு தடவை ஒரு நோட்டு நிறைய கவிதைகள் எழுதி கொண்டுவந்து கொடுத்தான். உனக்கே உனக்காக எழுதினது என்றான். முதல் பக்கத்தில் “அருணோதயம்” என்று டைட்டில் எழுதியிருந்தது. கவிதைகள் என்னமோ நன்றாகத்தான் இருந்தன. அதைப்படித்து எனக்குக் காதல் வரும் என்று நம்பினான் போலும். பாவம். ஆனால் சுற்றி வளைக்காமல் முகத்துக்கு நேரே தைரியமாய் மனதிலிருப்பதைச் சொல்கிற அவனின் நேரடியான அணுகுமுறையைப் பாராட்டத்தான் வேண்டும். அருணா அதை படித்துவிட்டு பாலுவிடம் திருப்பிக்கொடுத்தனுப்பிவிட்டாள். “இங்க பார் பாலு. ஆதியைப்பார்த்து எனக்கு எந்தவிதமான ரசாயன மாற்றமும் ஏற்படலை. எனக்கு படிக்கிறதுலதான் கவனம். அவன் நல்ல டைப்தான். நட்பான பையன். படிக்கிற பையன். எல்லாம் ஓ.கே. எனக்கு அவன் மேல காதல் வர்ல பாலு. நீயாவது எடுத்துச் சொல்லு” அவளின் இந்த எதிர்மறை பதிலுக்கப்புறமும்கூட ஆதியின் முயற்சி தளர்ந்தபாடில்லை. கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் அவன் மறுபடி மறுபடி வந்து நிறைய பேசினான். நீயில்லாமல் நானில்லையென்றான். நிறைய சினிமா பார்ப்பான் போல. காலேஜின் கடைசி நாள். எல்லோரும் பிரியப் போகிற தருணம். ஆதிக்கு அது கடைசி சந்தர்ப்பம். நேராக அவளிடம் வந்தான். நூற்றி இருபதாவது தடவையாக அருணாவிடம் “யோசிச்சு சொல்லு. உன் பதிலுக்காக மூணு ஜென்மமா காத்திருக்கேன். உன்னை ரொம்ப தொந்தரவு செய்யறேன்னு நினைக்காத. சாதகமான பதில் சொன்னா சந்தோஷம். இல்லைன்னா என்கூட கடைசி கடைசியா அபிநயா கஃபேல வந்து ஒரு கப் காபி சாப்பிடு போதும். ப்ரண்ட்லியா பிரிவோம்” என்றான். சிறிதும் நம்பிக்கையிழக்காத கடைசி முயற்சி. அன்று மாலை இருவரும் அபிநயா கஃபேயில் காபி சாப்பிட்டார்கள். அதற்குப்பிறகு அவள் கண்ணில் அவன் தென்படவேயில்லை. ஸ்பென்ஸரில் இன்று மறுபடி அந்த சின்ன கஃபேயில் ஹிந்துஸ்தானி இசைக்கு நடுவே இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். இவனை மறுபடி எதற்கு பார்க்க வந்தேன் என்று யோசித்துக்கொண்டிருந்தாள் அருணா. பேரர் வந்து ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், பாவ் பாஜியை டேபிளில் பரப்பிவிட்டுப் போனான். கொஞ்சம் பேச்சு. கொஞ்சம் அமைதி என நேரம் போனது. பேசியது எல்லாமே பொதுவான விஷயங்கள். பிறகு ஆதி சிறிது நேரம் ஸீரியஸாய் இருந்துவிட்டு “நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கல?” என்று கேட்டான். அருணா அவனை கேள்வியாய்ப் பார்த்தாள். “அப்பா நிறைய ஜாதகம் பார்த்தார். ப்ச்! எதுவும் அமையல” என்றாள். “நீ ஏன் பண்ணிக்கல?” “வீட்ல சொல்லி சொல்லி அலுத்துட்டாங்க. நான்தான் வேண்டாம்னு சொல்லி தட்டிக் கழிச்சுட்டிருக்கேன்.” என்றவன்.. கொஞ்சம் மௌனமாயிருந்துவிட்டு…. “அருணா உனக்கு ஒரு ஆச்சரியமான விஷயம் சொல்லட்டா? நான் இன்னும் உன்னதான் நெனச்சிட்டிருக்கேன்” என்றான் மெதுவாய். சிலீரென்றது. முதல்முதலாய் மனசில்.. ச்சே!. என்னது இது..! அவள் அமைதியாயிருக்க முயற்சித்தாள். அவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்று தெரிந்து கொள்வதில் அவளுக்கு விருப்பமாயிருந்தது. முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் இருக்க முயற்சித்தாள். தொண்டையை செறுமிவிட்டு சொன்னான். “இந்த பொன் மாலைப் பொழுதை வீணாக்காம சுருக்கமா சொல்றேன். காலேஜ்ல பிரியும் போது சாப்பிட்ட காபியோட என் காதல் விஷயம் சூடு ஆறிப் போயிடுச்சுன்னு நீ நினைச்சிருக்கலாம். ஆனா என்னால உன்னை மறக்க முடியல. ரொம்ப அவஸ்தையாயிருச்சு. நீ சென்னைலதான் இருக்கேன்னு தெரியும். ஆனா உன்னை மறுபடி தொந்தரவு பண்ண வேணான்னு விட்டுட்டேன். ஆனாலும் மனசோரத்துல நீ ஒட்டிக்கிட்டுதான் இருந்தே. இப்ப கூட அப்படித்தான். ரெண்டு தடவை உன்னை தூரத்திலேர்ந்து பார்த்தேன்;. என்னடா கிடைக்கலையேன்னு கொஞ்சம் வருத்தம் வந்தது. இப்ப ஒரு நல்ல வேலையும் சொந்தமாய் வீடும் இருக்கு. நான் வீட்ல ஒரே பையன். நான் ஆசைப்பட்டதை நிறைவேத்தற அம்மா, அப்பா. உன்னைப்பத்தி நிறைய சொல்லியிருக்கேன். நீ கிடைச்சா அதைவிட சந்தோஷம் எனக்கு கிடையாது. இந்த சந்திப்பு எனக்கு கிடைச்ச இன்னொரு பொன்னான சந்தர்ப்பம்ங்கிறதுனால நழுவவிட மனசில்லை. மறுபடி ஒரு முயற்சி. அதான் சொல்லிட்டேன். நீ மறுத்தாகூட உன் நினைப்பிலயே வாழ்ந்துட்டுப் போறது அப்படியொன்னும் கஷ்டமா தோணலை. என்னைப் பத்திதான் உனக்குத் தெரியுமே.” சொல்லிவிட்டு ஆதி அவளை நேராகப் பார்த்தான். “ஓ மை காட்!” என்றாள் அருணா. அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தொடர்ந்து மேலும் சில சிலீர்களும் ஓடிவிட்டிருந்தன மனதுக்குள். அவன் ஊடுறுவும் பார்வை என்னவோ செய்தது. “கொஞ்சம் வசீகரமான பையன்தாண்டி” என்று காலேஜ் படிக்கும்போது ஜான்ஸி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. பைத்தியமாய் வருடக்கணக்கில் இப்படி ஒருத்திக்காக காத்திருக்கிறதென்றால். அவள் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். குழப்ப யோசனைகள் ஓடின. ரொம்ப லேட்டாய் அவன் மேல் ஒரு ஈர்ப்பை உணர்கிறேனோ? கடவுளே! எனக்கு என்ன ஆயிற்று? அன்றைக்கு மாதிரியே உன்மேல் எனக்கு எதுவும் இல்லை என்று பட்டென்று சொல்லிவிட முதன் முதலாய் ஏன் ஒரு தயக்கம் எழுகிறது? அவன் மேலும் சொன்னான். “நிதானமா யோசிச்சுச் சொன்னாப் போதும். பாஸிட்டிவ்வான பதில்னா செல்போன்ல கூப்பிடு. வீட்டுக்கு வந்து பெண் கேட்கிறேன். நெகட்டிவ்வான பதில்னா இதே இடம். என்னோட ஒரு கப் காஃபி. ஓகே?” எதுவும் சொல்லாமல் ஒரு சிரிப்புடன் விடைபெற்றாள். வீட்டுக்கு திரும்புகிறபோது ஒரே யோசனைக்குவியல். திடீரென்று வந்து எல்லாவற்றையும் கலைத்துப்போட்டுவிட்டுப் போய்விட்டான். அவனுக்கு அங்கேயே ஏன் பதில் சொல்ல முடியவில்லை? இந்தத்தடவை வித்தியாசமாய் ஏதேனும் பதில் சொல்ல விரும்புகிறேனா? என்ன இது குழப்பம். புன்னகையுடன் கூடிய அவன் மலர்ந்த முகம் மீண்டும் மீண்டும் நினைவில் ஓடியது. அவன் ஒரு நல்ல டைப்தான். பின்னாலேயே நாய் மாதிரி சுற்றினான் என்பதை வைத்து அவனை மோசம் என்று சொல்லிவிட முடியாது. என்ன ஒரு நம்பிக்கை அவனுக்கு. குரலில் ஒரு சின்ன கம்பீரம். அவனை கடைசியில் ஜெயிக்கவிடலாமா? இரு! முதலில் என்னை நானே கேட்டுக்கொள்ள நிறைய கேள்விகள் இருக்கிறது. முதல் கேள்வி இத்தனை வருடம் கழித்து எனக்கு அவன்மேல் ஈர்ப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது. சில தயக்க யோசனைகளுக்குப் பின் ஆமாம் என்று மனது தீர்மானம் நிறைவேற்றியது. அவளையறியாமல் உதட்டோரம் ஒரு புன்னகை அரும்பி மறைந்தது. காதலின் பயாலஜி விதிகள் என்னென்ன? அவனை லேசாய் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அல்லது பிடித்துவிட்டது. அன்றிரவு பொட்டுத் தூக்கம்கூட வரவில்லை. நடுநிசியில் அவன் விஸிட்டிங் கார்டை எடுத்துப்பார்த்தாள். நான் இன்னும் உன்னதான் நெனச்சிட்டிருக்கேன் என்று அவன் சொன்னது திரும்பத்திரும்ப ரிவைண்ட் ஆகிக் கொண்டிருந்தது. எங்கேயோ முன்னமே போடப்பட்ட பூர்வ ஜென்ம முடிச்சா இது? நினைக்க நினைக்க ஆச்சாரியமாய் மனதில் விரிகிற கனவுச்சாரல். ஆனால் அதை கொஞ்சநேரம்கூட நீடிக்க விடாமல் திடீரென்று வேறொரு எண்ணம் வந்து குறுக்கிட்டு நின்றது. இன்றைய தேதிக்கு எனக்கு மாப்பிள்ளை பார்த்து பாவம் அப்பாவும். அம்மாவும் களைத்து ஓய்ந்து போய்விட்டார்கள். இப்படி எனக்கு இன்னும் வரன் கூடாமல் தள்ளித் தள்ளிப் போனது எல்லாருக்குமேகூட வருத்தம்தான். இந்த நிலைமையில் திடீரென்று ஆதியின் வருகை. அவன் பைத்தியமாய் அவள் பின்னால் சுற்றியபோதெல்லாம் பாராமுகமாய் இருந்துவிட்டு இப்போது போய் அவனிடம் உன்னைப் பிடித்திருக்கிறதென்று நான் சொன்னால் அது வேறு வழியில்லாமல் ஒரு கல்யாணத்தேவைக்கு என்று ஆகிவிடாதா? அவன்மேல் நிஜமாவே ஒரு பிடிப்பு வந்துவிட்டது என்றே இருந்தால்கூட இத்தனை காலம் கழித்து இப்போது போய் உன்னை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வது சுயநலமில்லையா? சட்டென்று அவளின் முந்தைய எண்ணங்களின் மீது ரிவர்ஸ் கியர் விழுந்ததுபோல் இருந்தது. ரொம்பத் திகைப்பாய் இருந்தது. இப்படியொரு கோணத்தில்கூட இதை யோசித்துப் பார்த்தே ஆகவேண்டும். அருணாவுக்குப் பிரமை பிடித்தது மாதிரி இருந்தது. மறுநாள் குளித்துவிட்டு ஸ்டிக்கர் பொட்டை நிலைக் கண்ணாடியில் சாரிபாக்கும்போது தலையில் மறுபடி அந்த நரைமுடியைப் பார்த்தாள். முப்பத்தைந்தை நெருங்கின வயது. லேசான பெருமூச்சு வந்துபோனது. நிறைய யோசனைகளுடன் ஆபிஸுக்கு கிளம்பிப்போனாள். வேலையில் கவனம் ஓடவில்லை. ஆதி சொன்னது மண்டையைக் குடைந்தது. மதிய இடைவேளையில் ஹேண்ட் பேகிலிருந்து ஆதியின் விஸிட்டிங்கார்டை தேடி எடுத்தாள். ரிசப்ஷனைக் கூப்பிட்டு அவன் செல்போன் நம்பருக்கு லைன் வாங்கினாள். “சாயங்காலம் பார்ப்போமா ஆதி ? ஜஸ்ட் ஒரு காஃபி. ஓகே?” *** கல்கி 25-04-2004   இறந்தவன் ஆறு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த பைக் விபத்தொன்றில் வசந்தன் இறந்துவிட்டானாம். இதைச் சொல்வதற்காகவே நேரங்கெட்ட நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தான் நடராஜ். மிகத் தாமதமாக வந்த அதிர்ச்சி செய்தி. கேட்டுவிட்டு இந்த முனையில் அஷோக் உறைந்துபோய் சில விநாடிகள் பேச்சற்று நின்றான்.  ஆறு மாசத்துக்கு முன்னாலா? எப்படி இது இத்தனை நாள் தனக்குத் தெரியாமல் போனது? எனக்கே இப்பதாண்டா தெரியும். ரொம்ப கஷ்டமாயிருச்சு. பாவம்டா அவன். அல்பாயுசு! எப்பவும்போல பைக்-ல கண்ணு மண்ணு தெரியாமப் பறந்திருப்பான். வினையாயிருக்கும். எத்தனை தடவை படிச்சுப் படிச்சு சொல்லிருப்போம். கேட்டானா?” என்றான் நடராஜ். அவன் அடுத்த தடவை இந்தியாவுக்கு வரும்போது வசந்தனின் வீட்டுக்குப் போய் விசாரிப்பதாகவும் முடிந்தால் அசோக்கை இப்போதே அங்கே போய்விட்டு வரும்படியும் சொல்லிவிட்டுப் ஃபோனை வைத்தான்.  ஐந்தாறு நிமிடங்கள் பிரமை பிடித்தமாதிரி உட்கார்ந்திருந்தான் அசோக். வசந்தனிடம் மனஸ்தாபம் ஏற்பட்டுப் பிரிந்து ஏழெட்டு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சித் தகவல்! கொதிக்கிற நீரில் குமிழ்கள் மாதிரி மனதிற்குள் குழப்பமாய் வசந்தனைப் பற்றிய நினைவுகள் சட்சட்டென்று தோன்றி மறைந்தன. அவன் இறந்துவிட்டான் என்பதை அஷோக்கால் நம்பவே முடியவில்லை. ஆனால் ஒரு நாள் இந்த மாதிரி விபரீதம் நடக்குமென்பது மனதின் ஏதோ ஒரு மூலையில் தோன்றிக்கொண்டேயிருந்தது. ஓடும் ரயிலின் ஜன்னல் வழிக் காட்சிகள் போல மனதில் வசந்தனைப் பற்றிய எண்ணங்கள் ஓடத்துவங்கின. அவனைப் பற்றி யோசிக்கையில் எப்போதுமே முதலில் நினைவுக்கு வருவது அவனுடைய வசீகரமான மலர்ந்த சிரிப்பு. இளந்தாடி. எறும்பு போன்ற சுறுசுறுப்பு. Catch me if you can என்று பிருஷ்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டிய அவனது யமஹா பைக். அந்த பைக்கில் அவன் செய்கிற தீர சாகசங்கள். இவற்றிற்கு அடுத்ததாக பிறகு அந்தப் பெண் சுகந்தி. அவள் போகிற இடங்களுக்கெல்லாம் விடாமல் வசந்தனின் பைக் பின் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. அவளோ அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டாள். இந்த மாதிரி ஒரு வசீகரமான, வேகமான பையனை ஒரு பெண் நிராகரிக்கிறாள் என்பது நண்பர்களுக்கே ஆற்றாமையாக இருந்தது. சுகந்தியை கிரிக்கெட் கிரவுண்ட் அருகே வழிமறித்து அசோக் கூட வசந்தனைப் பற்றி அவன் நல்லவன் வல்லவன் என்று மெதுவாய்ச் சொல்லிப்பார்த்தான். எதுவும் நகரவில்லை. மாறாக அடுத்த நாளிலிருந்து உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா என்பது போல் அசோக்கையும் பார்த்து முறைக்க ஆரம்பித்திருந்தாள்.  இப்படித் தன் பின்னே ஒருவன் பைத்தியம் பிடிக்காத குறையாய் சுற்றுகிறானே பாவம் என்று அவளும் கொஞ்சமாவது தயை காட்டியிருக்கலாம். ஊஹூம். வசந்தனால் பெட்ரோல் பங்க்காரர்கள் பலனடைந்ததுதான் மிச்சம். அவளை அத்தனை நினைந்துருகி மருகிக் காதலித்த வசந்தன் இப்போது போய்ச் சேர்ந்துவிட்டான் என்பது அவளுக்குத் தெரியுமா?  வேகம் என்றால் அப்படியொரு வேகம்! வசந்தன் எதற்கு அப்படி இறக்கை கட்டிக்கொண்டு பறந்தான்? எதைச் சாதிக்க? பைக்கில் ஏறி உட்கார்ந்துவிட்டானென்றால் அவனை யாரும் கட்டுப்படுத்தமுடியாது. முன் சக்கரத்தைத் தூக்கி ஓட்டுவது, ‘க்ரீச்’ என்று டயர் தேய படுத்தவாக்கில் அரைவட்டம் இடுவது, பைக் ஓடும்போதே இரண்டு கையையும் விட்டு காலரை பின்னுக்கு இழுத்து விட்டுக்கொண்டு நிதானமாய் சிகரெட் பற்ற வைப்பது, நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் லாரிகளுக்கிடையே புகுந்து பறப்பது என பயமறியாத இளங்கன்றின் துணிச்சல். அப்பாவிடமும் நண்பர்களிடமும் வாங்கிக் கட்டிக்கொண்டே பைக்கில் அவன் செய்கிற சர்க்கஸ்-கள் எல்லோருக்கும் மிகப் பிரசித்தம். எங்கேயாவது போகலாம் வருகிறாயா என்று அவன் கூப்பிட்டால் அசோக் உடனே ஜகா வாங்கி விடுவான். ஒரு கிலோ மீட்டர் தாண்டுவதற்குள்ளாகவே குடல் வெளியே வந்து விழும் அளவுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் பிரயாணத்தை பைக்கிலேயே நிகழ்த்திக் காட்டிவிடுவான் வசந்தன். உயிரைப் பற்றி பயமில்லாதவர்கள் மட்டுமே அவன் பைக்கின் பில்லியனில் ஏற முடியும். சுகந்தியை அவன் முதன் முதலாய்ப் பார்த்தபிறகு அவளைக் கவரும் பொருட்டு இந்த சர்க்கஸ்களை அதிகமாக்கவும் செய்தான். நண்பர்கள் கூட “ஒரு நாளைப் போல ஒரு நாள் இருக்காது. அப்புறம் விபரீதமாகிவிடும்” என்று எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறார்கள். நிறைய எச்சரிக்கைகள். நிறைய புத்திமதிகள். நிறைய கோரிக்கைகள். எதையும் காது கொடுத்துக் கேட்டால்தானே? வழக்கம்போல எல்லாவற்றிற்கும் மந்தகாசமாய்ச் சிரிப்பான். ராஸ்கல். எல்லாமே விரயமாகிவிட்டது  அசோக் வசந்தனைச் சந்தித்த கடைசி நாளை யோசித்துப் பார்த்தான். முன்னொரு காலத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாய் இருந்தவர்கள்தான். ஒன்றாய் சுற்றி, உரையாடி சந்தோஷமாகக் கழிந்த நாட்கள். ஒருநாள் ஏதோ விஷயத்தில் ஏற்பட்ட சின்ன விவாதம் பெரிய பிரச்சனையாய் விஸ்வரூபம் கொண்டுவிட்டது. வார்த்தைகள் தடித்தன. இருவருக்குமிடையே இனம்புரியா வன்மம் ஒன்று திடுக்கென முளைவிட்டது. சட்டென்று ஒரு கணத்தில் பிரிந்துவிட்டார்கள். நண்பர்களின் சமரச முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இருவரும் சமாதானமாகாமல் விரோதம் தொடர்ந்தது. அதற்கப்புறம் இந்த ஏழெட்டு வருடங்களில் விலகல் அதிகமாகி, இருவருக்குமான இடைவெளியின் நீளம் அதிகமாகிவிட்டது. எங்கேயாவது எதேச்சையாக எதிர்ப்பட நேரிட்டால் முறைத்துக்கொண்டு நகர்ந்தார்கள். இருவருக்கும் பொதுவான நண்பர்களும் வேறு திக்குகளில் வாழ்க்கையைத் துரத்திப் பிரிந்துபோனார்கள், அசோக்கும் கோயமுத்தூர் வந்துவிட்டான். அதற்கப்புறம் யாருக்கும் யாருடனும் சுத்தமாய் தொடர்பில்லாமல் எந்தத் தகவல் பரிமாற்றங்களும் இல்லாமல் வருடங்கள் உருண்டன. இப்போது ரொம்ப நாள் கழித்து நடராஜ் மூலமாய் வசந்தனைப் பற்றிக் கேள்விப் படுவது இப்படியொரு சோகச் செய்தியாகத்தான் இருக்கவேண்டுமா? பாறைகளுக்குக் கீழே நீர் போல வசந்தனின்பால் முன்னர் ஏற்பட்டிருந்த விரோதத்துக்கும் அடியில் எங்கோ ஒரு மூலையில் சேமிக்கப்பட்டிருந்த பழைய நட்பின் ஒரு துளி கண்ணீராய் வழிந்தது. அசோக் துடைத்துக் கொண்டான். முன்னாள் ஆனாலும் இந்நாள் ஆனாலும் நண்பன்தானே. அசோக்கிற்கு திடீரென்று தன்மேலேயே வெறுப்பாக இருந்தது. அவனுக்கும் வசந்தனுக்குமிடையே ஏற்பட்ட பழைய மனத்தாங்கலை பின்னோக்கி ஓட்டிப்பார்த்தான். அவன்மீது ஏன் அப்படி ஒரு வெறுப்பை உமிழ்ந்தேன்? கடைசியாய் பிரியும்போது ஏற்பட்ட வாக்குவாதம் அப்படியொன்றும் வெட்டு குத்துப் பகையில் முடிந்திருக்கவில்லை. ஒரு காரசாரமான பேச்சு. எதன் பொருட்டு என்பதுகூட இப்போது சரியாக ஞாபகம் வரவில்லை. ஆனால் இரண்டு பேரும் ரொம்பவே ஆத்திரமாகப் பேசிக்கொண்டார்கள் என்பது மட்டும் ஞாபகமிருக்கிறது. சூடான அந்தச் சூழ்நிலையில் உதிர்ந்த வார்த்தைகள் ஒரு நல்ல நட்பைச் சிதைத்துவிட்டதா? அந்த வயதின் பக்குவமின்மைக்கும், ஈகோவுக்கும் இடையில் ஊஞ்சலாடின முடிவில் வசந்தனை முற்றிலும் புறக்கணித்துவிடுவது என்கிற முடிவே அசோக்கிற்குப் பிடித்தமானதாக இருந்தது. அவனை அதற்கப்புறம் பார்க்காமல், அவனைப்பற்றி விசாரிக்காமல், அவனிருக்கிற திசையில் தலைவைத்துப் படுக்காமல் போகிற அளவுக்கு அந்தப் பிரச்சனையும் அசோக்கின் பிடிவாதமும் அன்றைய தினத்தில் விஸ்வரூபம் எடுத்திருந்தது. இப்போது யோசிக்கும் போது அந்தச் சம்பவம் சிறு பிள்ளைத்தனமான ஒரு விஷயமாகவே தோன்றியது அவனுக்கு. இப்போது அதைப் பற்றி யோசித்து ஒரு புண்ணியமுமில்லை. எட்டு வருடங்களுக்கு முன் வாழ்க்கையிலிருந்து மறைந்துபோனவன் இப்போது உலகத்தைவிட்டே போயும்விட்டான். சென்றதினி மீளாது. இப்போதைக்கு முடிகிற ஒரே விஷயம் வசந்தனின் வீட்டைத் தேடிப்போய் அவனது பெற்றோர்களுக்கு தன்னாலான ஆறுதலை அளித்தல். அவன் புகைப்படத்துக்கு முன் நின்று காலதாமதமான ஒரு மௌனாஞ்சலி. சாயங்காலம் வசந்தனின் வீட்டுக்குப் போகத் தீர்மானித்துக் கிளம்பினான். அவனுடைய வீடு பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் இருந்தது. கோவையில் பஸ் ஏறி பொள்ளாச்சி போகிற வழியில் அவன் பழைய நினைவுகளை அசை போட்டுக்கொண்டே வந்தான் அசோக். அவனோடு சுற்றின இடங்கள். அவனோடு பார்த்த படங்கள். அவனோடு சேர்ந்து செய்த ரகளைகள். இப்படியாக ஒவ்வொன்றைப் பற்றி நினைக்கும்போது துக்கத்தின் அளவு மில்லிகிராம்களாகக் கூடிக் கூடி விழிவிளிம்பில் அணை கட்டி நின்றது. நிச்சயமாகப் பேரிழப்புதான். அங்கே போனபிறகு அவன் பெற்றோர்களுடன் என்ன பேசுவது கேட்பது என்று புரியவில்லை. எப்போதுமே அசோக்கிற்கு இது போன்ற துக்க செய்தியை விசாரிக்க நேர்கையில் ஒருவித அவஸ்தை சூழ்ந்துகொள்ளும். எப்படி ஆரம்பிப்பது, என்ன கேட்பது, என்ன சொல்லி ஆறுதலளிப்பது என்று தெரியாமல் விழிப்பான். அல்லது ஒரேயடியாய் மௌனமாக உட்கார்ந்து விடுவான். எப்போதும் அவன் வீட்டுக்குப் போகும்போது “வாடா அசோக்கு..” என்று உரிமையாய் அழைப்பார் வசந்தனின் அப்பா. இத்தனை வருடங்களாய் ஏன் வீட்டுக்கு வரவில்லை? வசந்தனோடு உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டால் அதற்கும் பதில் சொல்லத்தயாராக வேண்டும். வசந்தனுடனான பிரச்சனையில் அவரையும் சேர்த்தல்லவா நிராகரித்திருக்கிறோம். ச்சே.. ரொம்ப நல்ல மனிதர். மகாலிங்கபுரத்தில் பஸ்ஸை விட்டு இறங்கி நடந்து வசந்தனின் வீடிருந்த தெருவை அடைந்தான். அவன் வீட்டை நெருங்கும்போது தூரத்திலிருந்தே பிரதானமான அந்த பச்சை பெயிண்ட் அடித்த கேட் தெரிந்தது. கேட்டில் படந்த பேப்பர் ரோஸ் பூக்கள். மரங்கள். எத்தனை நாளாயிற்று இங்கே வந்து! கேட்டை நெருங்க நெருங்க அசோக்கின் உடம்பில் ஒரு மாதிரி பதற்றமும் பயமும் கலந்ததாக ஒரு உணர்வு மிதந்தது. காலில் கட்டப்பட்டிருக்கும் பெரிய இரும்புச் சங்கிலியை இழுத்துக்கொண்டு நடப்பதுபோல நடந்தான்.  அசோக்கும் வசந்தனும் எப்போதும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் பெரிய வாசல் திண்ணையும், படிகளும் தெரிந்தன.  அருகில் நெருங்கிய போது திண்ணையில் உட்கார்ந்து ஒரு உருவம் பேப்பர் படித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. வாசலில் நிழலாடுவதைப் பார்த்துத் திண்ணை உருவம் கையிலிருந்த பேப்பரைக் கவிழ்த்துவிட்டுத் திரும்பிப்பார்த்தது. அசோக் திடுக்கிட்டு நின்றான். ஒரு பெரிய அதிர்வலை அவனைச் சுற்றி சுழற்றியடித்துவிட்டு அடங்கியது. வசந்தன்?? இறந்துபோனதாக சொல்லப்பட்ட ஒருவன் திண்ணையில் சாவகாசமாகப் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிற காட்சியில் உறைந்து போய் நின்றான் அசோக். வலது கன்னத்தில் மிகப்பெரிய தழும்புடன் லேசாய் விகாரமாயிருந்த முகம். வசந்தன் சாகவில்லையா? அப்படியென்றால் அவன் விபத்தில் இறந்துவிட்டதாக வந்த தகவல்? எப்படி என்ன நிகழ்ந்தது? எங்கே தப்பு? ஒரு சில நொடிகள் மாபெரும் குழப்பம் சூழ அவனுக்கு பரபரவென்று ஆகிவிட்டது. வீட்டை நெருங்கின கால்கள் தயங்கியது. அசோக் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு அழுத்தத்தை உணர்ந்தான். இப்போது என்ன பண்ணுவது? அசோக்கைப் அங்கே எதிர்பார்த்திராத மாதிரி வசந்ந்தன் முகத்திலும் ஒரு பெரிய திடுக்கிடல் நிகழ்ந்ததை அசோக் கவனித்தான். அது ஒரு சில நொடிகள்தான். அடுத்தநொடியில் வெறுப்பும் விரோதமும் லேசாய் கிளர்ந்தவிதமாய் அவன் முகம் மாறியது. துளைத்து எடுப்பது போல ஒரு நேர்ப்பார்வை பார்த்தான். அசோக்கிற்கு காலம் உறைந்து நின்றது போல் தோன்றியது. எல்லாமே சட்டென கலைந்து சூழ்நிலை வேறுமாதிரி உருவெடுத்துவிட்டதை உணர்ந்தான். அசோக்கும் வசந்தனை ஏறிட்டான். “ராஸ்கல்.. என்று மனதில் கறுவலாய் ஒரு வரி ஓடியது. இருவரின் உக்கிரமான முறைப்புப் பார்வைகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. உறைந்த காலம் இயக்கம் பெற்றது. தயங்கின கால்கள் வேகமெடுத்து உடனே அங்கிருந்து நகர்ந்துவிடவேண்டுமென்று தோன்றியது அசோக்கிற்கு. இருவரும் ஒரே நேரத்தில் முகத்தைத் திருப்பிக்கொள்ள, அசோக் வேகமாய் வசந்தனைக் கடந்து நடக்கத் தொடங்கினான்.  *** ஃபெமினா தமிழ் – ஜூன் 2012   மழைக்காதல் இரவு முழுக்க இடைவிடாது பெய்த மழை விடிந்த பின்னும் இன்னும் நிற்கவில்லை. அதன் இடைவிடாத சலசலப்பு ஹாலின் ஜன்னல் வழியே தோட்டத்தில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அறைக்குள் தட்பவெப்பம் மாறி லேசான குளிர். ராஜனுக்கு சூடாக ஒரு ஒரு கப் காஃபி குடிக்கவேண்டும் போல இருந்தது. கூடவே மீனாவுடன் உடனே ஃபோனில் பேசவேண்டும் போல ஒரு உத்வேக எண்ணமும் எழுந்தது. இன்றைக்கு அவர்களின் கல்யாண நாள். ஆகவே லீவு போட்டுவிட்டு நாள் முழுவதும் அவன் கூடவே இருப்பதாக மீனா சொல்லியிருந்தாள். ஆனால் ஆஃபிஸிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் ஏதோ ஒரு முக்கிய மீட்டிங் இருக்கிறதென்று அவசரமாக ஆட்டோ பிடித்து வழக்கத்தைவிட சீக்கிரமாகவே ஆபிஸூக்குக் கிளம்பிப் போய்விட்டாள். போகிற அவசரத்தில் லேசாய் அணைத்து முத்தமிட்டு இருவரும் ஒருவருக்கொருவர் ‘ஹாப்பி அனிவர்ஸரி’ சொல்லிக்கொண்டதோடு சரி. ராஜனுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. மீனா இன்று அவனோடு இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமென்று தோன்றியது. ஊர் முழுக்க மழை காரணமாக பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் நரேனுக்கு ஸ்கூல் இருந்தது. அவனும் கிளம்பிப் போய்விட்டான். ராஜன் தனிமையை உணர்ந்தான். கல்யாண நாள் இப்படி ஆயிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அவனுக்கு வீடும் ஆஃபிஸூம் ஒன்றுதான். இண்டர்நெட், டெலிபோன் அழைப்புகள் உபயத்தில் உட்கார்ந்த இடத்திலேயே அவனது வேலைகள் முடிந்துவிடும்.  லாப் டாப்பில் “மலையும் நதியும் கடலும் ஒருநாள்...” என்று ஹரிஹரனும், சுஜாதாவும் காதல் பொங்க பாட ஆரம்பித்தார்கள். மழை நாட்களில் இந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்பது அவனுக்கு மிகவும் பிடித்த விஷயம். குரல்களின் உருகலில் எப்போதும் கிளர்ந்தெழும் தவிப்பு இப்போதும் இந்த யாருமற்ற தனிமையில் கிளர்ந்தது. இத்தனை வருடத்திற்கப்புறமுமா? மீனாவுடன் பேசவேண்டுமென்று தோன்றியது. ராஜன் மொபைலை எடுத்தான். அவள் மீட்டிங்-கில் இருந்தால் தொந்தரவாக இருக்குமே என்றும் யோசனை வந்தது. உடனே வேண்டாம் என்று தீர்மானித்தான். ஃபோனில் கூப்பிடுவதற்குப் பதில் குறுஞ்செய்தி அனுப்பலாமே என்று தோன்றியது. ’டாரு’ என்று ஆரம்பித்து மொபைலின் பட்டன்களை அழுத்த ஆரம்பித்தான். ‘மழை. குளிர். பகலிலேயே இருள். திருமண நாள். அழகான ரொமான்ஸூக்கு அற்புதமான சூழ்நிலை. வாயேன்!” சட்டென்று அவன் மனதிலிருந்து ஒரு விரகம் கலந்த காதல் நதி பிரவாகமெடுத்து அருவியாய் தலைகீழாகக் குதித்ததை உணர்ந்தான். பதினைந்து வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிற வற்றாத ரகசிய நதிதான் அது.  பிறகு ஏதோ யோசித்து மொபைலில் டைப் பண்ணுவதை நிறுத்தி அழித்தான். லாப்டாப்பை தன் பக்கம் திருப்பி அவள் ஆன்-லைனில் இருக்கிறாளா என்று பார்த்தான். இருந்தாள். ஆனால் ’பிஸி.. நோ சாட் ப்ளீஸ்’ என்று போட்டிருந்தது. இருந்தாலும் சாட்-டில் கூப்பிட்டுத் தொந்தரவு செய்யலாமா என்று யோசித்தான். பிறகு சாட் வேண்டாம் ஒரு இமெயில் அனுப்பிவிடலாம் என்று தீர்மானித்தான். ஜிமெயிலைத் திறந்து குறுஞ்செய்தியில் சொல்ல நினைத்ததை ஈமெயிலாக எழுத ஆரம்பித்தான். ’மழை. குளிர். பகலிலேயே இருள்.’ பிறகு அதையும் பாதியில் நிறுத்தினான். அப்படியே கண்களை மூடி சோபாவில் சாய்ந்தான். அவன் செய்கைகள் அவனுக்கே சிரிப்பை வரவழைத்தது. இத்தனை வருடம் கழித்தும் என்னடா ரொமான்ஸ் வேண்டிக்கிடக்கிறது என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். காலச் சக்கரத்தின் வட்டம் பெரிது. மீனாவை கல்யாணம் பண்ணி விளையாட்டுப் போல பதினைந்து வருடம் ஓடிவிட்டதென்பதையே நம்ப முடியவில்லை. நரேன் பிறந்து கிடு கிடுவென வளர்ந்து ஏழாம் வகுப்புக்கும் வந்துவிட்டான். ராஜனும் மீனாவும் காதல் வயப்பட்டிருந்த காலத்தில், தெருவில், பஸ்ஸ்டாப்பில், காஃபி ஷாப்புகளில் என கை கோர்த்து மயங்கித் திரிந்த நாட்கள் பனிமூட்டத்தின் நடுவே காட்சிகள் போல மங்கலான ஃப்ளாஷ்பேக்குகளாக இருவரின் ஞாபக அடுக்குகளிலும் சேகரம் செய்யப்பட்டுக் கிடந்தன. எப்போவாது அவைகள் மீள்நினைவுகளாக பேச்சினூடாக இருவருக்கும் வந்து போகும். அப்போது ஒரு சின்ன சிலிர்ப்பு ஒன்று ஓடும். அந்தச் சிலிர்ப்புத் தருணத்தில் ஒன்றை கண்ணுக்குள் கொண்டுவந்து நிறுத்த முற்பட்டுக்கொண்டிருந்தான் ராஜன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு அப்போது செல்ஃபோன்கள் இல்லாத ஒரு காலம். இதே போலத்தான் ஒருநாள் இடைவிடாது மழை கொட்டிக்கொண்டிருந்தது. ராஜன் ஒரு எஸ்.டி.டி பூத்துக்கு மழையில் நனைந்து கொண்டே வருகிறான். டெலிஃபோன் கூண்டுக்குள் ஏற்கெனவே ஒரு பெண் தீவிரமாக கையை ஆட்டியபடி பேசிக்கொண்டிருக்கிறாள். அவள் உச்சஸ்தாயியில் கத்துவது கண்ணாடி கதவைத் தாண்டி வெளியே கேட்கிறது. வெளியே ஒருவன் காத்திருப்பதைப் பொருட்படுத்தாமல் அவள் பாட்டுக்கு வெகுநேரம் பேசிக்கொண்டேயிருக்கிறாள். நிறைய காத்திருப்புக்குப் பின் ஒரு வழியாக அந்தப் பெண் வெளியே வருகிறாள். ராஜன் அவசரமாய் கூண்டுக்குள் பாய்கிறான். மீனா வேலை செய்யும் ஆஃபிஸ் நம்பரை டயல் செய்கிறான். யாரோ எடுக்கிறார்கள். “ஹலோ.. மீனா இருக்காங்களா?” “நீங்க யாரு பேசறீங்க…” “நான் அவங்க ரிலேட்டிவ்..” “உங்க பேரு?..” “ராஜன்” மறுமுனை ஒரு நிமிடம் காத்திருக்கச் சொல்லுகிறது. அத்தனை ரசிக்கத்தகாத ஒரு இசை ஃபோனில் ஒலிபரப்பப்படுகிறது. ராஜன் காத்திருக்கிறான். எஸ்.டி.டி பூத்தில் மாட்டியிருந்த மீட்டரில் சிவப்பு வண்ண எழுத்துக்கள் அவன் கையில் இருக்கிற சில்லறையை பற்றிய கவலையில்லாமல் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. நீண்ட நேரம் கழித்து மீனாவின் குரல் தயக்கமாய் மெதுவாய் சன்னமாய் ஒலிக்கிறது. “டாரூ..” என்கிறான் ராஜன். டார்லிங் என்பதன் சுருக்கம். மறுமுனையில் தயக்கம் தொடர்கிறது. மீனா ’ஒரு நிமிடம்’ என்று சொல்கிறாள். ராஜன் அமைதியாய்க் காத்திருக்கிறான். மீண்டும் ம்யூசிக். ஒரு டயல் சப்தம். அரை நிமிடம் கழித்து இப்போது மீண்டும் அவள் குரல். “ஏய்.. சொல்லுப்பா. இங்க அக்கவுண்ட்ஸ் செக்ஷன்-ல இருக்கானே ஒருத்தன்.. எனக்கு எப்ப ஃபோன் வந்தாலும் பக்கத்துலயே நின்னுகிட்டு ஒட்டுக்கேக்கறதே அவனுக்கு வேலையாப் போச்சு. அதான் எம்.டியோட ரூமுக்கு லைன் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டுப் பேசறேன். எம்.டி. வெளிய போயிருக்காரு. சீக்கிரம் பேசிட்டு வெச்சுரு என்ன!. எங்கிருந்து போன் பண்றே? ஆபிஸ்லேர்ந்தா?”  “பூத்லேர்ந்து.. வெளிய ஒரே மழை. நாம பாத்து மூணு நாளாச்சுடி ஞாபகமிருக்கா?...”  “பின்ன இல்லாமயா?..” “இன்னிக்கு சாயங்காலம் மீட் பண்ணலாண்டி....” “இன்னிக்கா.?. ரொம்ப கஷ்டம். சாயங்காலம் பெரீம்மா வீட்டுக்குப் போயாகணும்.. ராஜி தெரியும்-ல பெரீம்மாவோட ரெண்டாவது பொண்ணு.. அவ வயசுக்கு வந்துட்டா…” “அடிப்பாவி!.. அப்ப நாளைக்கு?” “ஏய்.. எனக்கு மட்டும் உன்னப் பாக்கணும்னு இருக்காதாடா.. கண்டிப்பா வர்ரேன் செல்லம்.. நாளைக்கு ஆறு மணி. நம்ம டிவைன் தியேட்டர் பஸ் ஸ்டாப்பு...” இந்த மாதிரி அவன் மீனாவுக்காக காத்திருந்து காத்திருந்தே டிவைன் தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் அவன் நிற்கிற இடத்தில் தரை தேய்ந்திருந்தது. ஒவ்வொரு பஸ் வந்து நிற்கும் போதும் அதிலிருந்து மீனா வெளிப்படுவாளா என்று தேடுவான். அவள் சொல்கிற மாதிரி எப்போதும் சரியாக ஆறு மணிக்கு வந்ததேயில்லை. வந்தவுடன் ஆபிஸிலிருந்து கிளம்பும்போது மேனேஜர் பிடித்துக்கொண்டார் அல்லது பஸ் கிடைக்கவில்லை என்று ஏதாவது சமாதானம் கூறுவாள். பத்துப் பதினேழு யுகமானாலும் உனக்காக காத்திருப்பது சுகம்தாண்டி என்று ராஜன் பிதற்றுவான். அந்த பொய்யான வசனத்தில் அவள் மலர்ந்து சிரிப்பாள். இருவரும் பார்த்து பலவருடமாகிவிட்டதைப் போல ஒருவரை ஒருவர் பார்வையால் சிறிது நேரம் விழுங்கிக்கொண்டிருப்பார்கள். பிறகு மெதுவாய் கை கோர்த்துக் கொண்டு நடந்து அப்படியே பெரிய கடைவீதி, மார்க்கெட் என ஜனத்திரள்களுக்கு நடுவே ஒரு மூன்று கிலோமீட்டர்களாவது நடந்துபோவார்கள். எதையெதையோ பேசிக்கொண்டு சில நிமிடங்கள். ஒன்றும் பேசாமல் மௌனமாய்ப் பல நிமிடங்கள். அர்த்தமில்லாமல் எதற்கோ சிரித்துக்கொண்டு சில நிமிடங்கள். திடீரென எதிர்காலம் குறித்த பேச்சு வந்து கவலையும் சோகமுமாய் கொஞ்சநேரம். சின்னச் சின்ன உரசல்கள். விழித் தீண்டல், விரல் தீண்டல் என ஒரு மணி நேரம் கால் போன போக்கில் போய்க்கொண்டிருப்பார்கள். மென் காற்றில், கருநீல வானத்தில் என எங்கும் எதிலும் காதல் விரவி நிற்கும் கணப் பொழுதுகளாய் இருவரும் மயங்கித்தவித்த காலம். பிறகு ஒரு பஸ் ஸ்டாப்பில் நின்று பிரிய மனமின்றி கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருப்பார்கள். நாளைக்கு ஃபோன் பண்ணு என்று சொல்லிவிட்டு அவள் பஸ்ஸில் ஏறிக்கொள்வாள். பஸ் கிளம்பியதும் ஜன்னல் வழியே தெரிகிற அவள் ஏக்க முகத்தையும் பிறகு பஸ்ஸின் முதுகையும் மறையும் வரை பார்த்துக் கொண்டு நிற்பான்.  அடுத்தடுத்த நாட்களில் மறுபடி மறுபடி எஸ்.டி.டி பூத். ஃபோன். மீட்டரில் ஓடும் சிவப்பு எண்கள். ஒட்டுக்கேட்கிற அக்கவுண்ட் செக்ஷன் ஆசாமி. மீனாவின் குரல். இண்டர்காம். டிவைன் தியேட்டர் பஸ் ஸ்டாப். கடை வீதி. காஃபி. கால் தேய நடை. பஸ் ஜன்னல் பார்வை.  ஒரு இடிச்சத்தம் நினைவுகளிலிருந்து மீட்டு ராஜனை சுய நினைவுக்குக் கொண்டுவந்தது. லாப்டாப்பில் பாடல் நின்றிருந்தது. ராஜன் லேசாய் புன்னகைத்துக்கொண்டான். கொஞ்சம் கார்பன்-டை-ஆக்ஸைடை பெருமூச்சாக வெளிப்படுத்தினான். சமையலறைக்குப் போய் சூடாக ஒரு கப் காஃபி கலந்து சாப்பிட்டான். பிறகு என்னவோ யோசித்தவனாக குடையை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு தெருவில் இறங்கினான். வெளியே மழை இப்போது இன்னும் அதிக வலுவுடன் பெய்து கொண்டிருந்தது. சாலையெங்கும் கணுக்கால் அளவு வெள்ளம். பேண்ட்-டை முழங்கால் வரை மடக்கி விட்டுக்கொண்டு இறங்கினான். குடையை விரித்து மெதுவாய் தண்ணீரை அலசி அலசி நடந்து அடுத்த தெருவில் இருக்கிற சுமதி ஸ்டோருக்கு வந்தான். எல்லாத் தெருக்களும் கனமழையால் வெறிச்சோடிக்கிடந்தன.  சுமதி ஸ்டோர் வாசலில் மழை நீர் ஒழுகுகிற ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழே மாட்டியிருந்த காயின் போட்டுப் பேசுகிற போனில் அவள் ஆஃபிஸ் நம்பரை டயல் செய்துவிட்டுக் காத்திருந்தான். மறுமுனையில் மீனா வந்து “ஹூ இஸ் திஸ்” என்று கேட்டுவிட்டு அவன் “நாந்தான்” என்று சொன்னதும் லேசாகப் பதறிப் போய் “என்னடா.. லேண்ட் லைன்–ல இருந்து பேசற? எனி ப்ராப்ளம்?” என்றாள். அவன் சிரித்தபடி “ஏ.. டாரூ.. இன்னிக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு டிவைன் தியேட்டர் பஸ் ஸ்டாப்புல மீட் பண்ணலாமா?” என்றான். திடீரென்று அடித்த காற்றில் மழைச்சாரல் கூரையைத் தாண்டி விசிறியடித்ததில் அவன் தேகம் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. *** நம் தோழி – பிப்ரவரி 2012   நிருபமா : சில குறிப்புகள் “நிருபமா நிச்சயமா எனக்குக் கிடைப்பா” என்றான் வரதராஜன். குபீரென சிரிப்பலை எழுந்தது. அப்பொழுதுதான் ராபர்ட் சிகரெட்டை இழுத்திருக்க, எழுந்த சிரிப்பில் குப்பென்று அவனுக்குப் புரையேறிவிட்டது. கண்கள் நீர்த் திரையிட்டுவிட, இறுமியபடி சிரித்தான். சதீஷ் ஹாஹா என்று சிரித்தது நிச்சயம் இரண்டு கிலோ மீட்டருக்குக் கேட்டிருக்கும். குண்டு ரமேஷ் இளந்தொந்தி குலுங்க சப்தம் வராமல் சிரித்தான். சிரிப்பு அடங்கி ஓய ஐந்து நிமிடமாகிவிட்டது. வரதராஜன் அமைதியாயிருந்தான். அதைச் சொன்னதும் எல்லோரும் நிச்சயம் சிரிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும். அவன் அதை எதிர்பார்த்திருந்தான். உன் பர்சனாலிட்டிக்கு நிருபமா ஒரு கேடா? என்ற கேள்வி அந்தச் சிரிப்பில் இருந்தது. வரதராஜன் அதை அவர்களிடம் சொல்லியிருக்கக்கூடாது என்று நினைத்தான். அங்கே உட்கார்ந்திருந்த நாலுபேரை விடவும் அவன் நிறம், லட்சணம் எல்லாவற்றிலும் அவர்களோடு ஒப்பிட முடியாதபடிக்கு குறைவாகவே இருப்பது உண்மைதான். வரதராஜன் நல்ல கருப்பு. உயரமாயிருந்தாலும் கொஞ்சம் ஒடிசலான தேகம் அவனுக்கு. முழியாங்கண்ணன் என்று ஸ்கூல் படிக்கும்போது கூசாமல் கூப்பிடுவார்கள். இப்போது கல்லூரிப்படிப்பை முடித்தாயிற்று. இப்போது முகத்திற்கெதிரே அப்படிக் கூப்பிடுபவர்கள் எவரும் இல்லை. என்றாலும் சதீஷின் பக்கத்தில் நிற்கும்போதெல்லாம் ஒரு மாதிரி தாழ்வாய் உணர்வான். அஜீத்துக்கு தம்பி மாதிரி இருப்பான் சதீஷ். ராபர்ட் புகையை வெளிவிட்டுச் சொன்னான். “சதீஷோட ஃப்ரெண்ட் போன வாரம் நிருபமாவுக்கு லெட்டர் குடுத்து என்னாச்சுன்னு தெரியுமா? டேய், அந்த முன்னூத்தி அறுபத்தேழாவது எபிஸோடை சொல்றா..!” “எது? அந்த செருப்படி விஷயமா? அதான் அவனுக்குத் தெரியுமேடா” என்றான் குண்டு ரமேஷ். “தெரிஞ்சுமா..” சிகரெட்டை அடுத்த இழுப்பு இழுத்துவிட்டு “டேய் வாணாண்டா..” என்றான். வரதராஜன் அவர்கள் மூன்று பேரையும் பார்த்தான். நிதானமாய்ச் சொன்னான். “இங்க பாருங்கடா.. எனக்கு எல்லாக் கதையும் தெரியும். ஆனாலும் சொல்றேன். நிருபமாவை நான் மடக்கிக் காட்டறேன்.” மறுபடி எல்லோரும் அடுத்த ரவுண்டு சிரித்தார்கள். ராபர்ட் சிரிப்பை நிறுத்திவிட்டு, “ஆல் தி பெஸ்ட்” என்றான். அவன் குரலில் தொனித்த கிண்டல் வரதராஜனை மேலும் உசுப்புவதாக இருந்தது. “பாத்துரலாம்..” என்று நினைத்துக்கொண்டான். நிருபமாவின் உருவம் சலனமாய் ஒரு விநாடி மனசுக்குள் வந்து போனது. லேசாய் கலக்கமாகவும் இருந்தது. எப்படி அவளை அணுகப்போகிறேன்? தடுக்க முயன்றும் முடியாமல் ஒரு பெருமூச்சு வந்து போனது அவனுக்கு. நிருபமா நிஜமாகவே அசத்துகிற அழகுதான். பாந்தமும் நவீன மோஸ்தரும் ஒருங்கே கலந்து மிளிர்கிற அழகு. பளிச்சென்று சிரிக்கிறபோது பளபளக்கிற கன்னக் கதுப்பு. கடந்துபோவது யாரானாலும் ஒரு விநாடி அவள்மேல் ஓரப்பார்வை விழாமல் போவது கஷ்டம்தான். பெண்கள் உடபட.  காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறாள். வரதராஜன் குரூப்பை விட இரண்டு வருட ஜூனியர். அவள் பிறந்தது முதல் அவளின் இன்றைய தினப்பலன் வரை அத்தனை விஷயங்களும் ராபர்ட் சேகரம் செய்து வைத்திருக்கிறான். அவன் கூட “நிரு! என் பேனாவில் என் உதிரம் ஊற்றி எழுதுகிறேன்..” என்று பால்பாயிண்ட் பேனாவில் லெட்டர் எழுதி அவளுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்தான். ஆனால் கொடுக்கவில்லை. அவள் எங்கேயோ கராத்தே கற்றுக்கொள்ளப் போவதைப் பார்த்துவிட்டானாம். தினசரி, கிச்சான் கடையில் நின்று பேசுகிற டாபிக்கில் நிருபமா பல சமயம் தலைப்புச் செய்தியாக வந்துபோவாள். ராபர்ட் வேறு வேலையே இல்லை என்பது போல ‘நிருபமா தகவல் திரட்டுக் களஞ்சியமாய்’ இருந்தான். அவளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஏழெட்டு லெட்டர்களாவது வருகிறதாம். தோழிகள் சகிதம் படித்துச் சிரித்துவிட்டுக் குப்பையில் போட்டுவிடுகிறாளாம். மோட்டார் பைக்கில் ஹாண்டில் பாரை ஆளைவிட உயரமாக இருக்கும்படி வைத்துக்கொண்டு முறுக்கிக் கொண்டு காலேஜ் வருவான் அவள் சீனியர் ஒருத்தன். அவன் ஒரு தடவை நிருபமாவை லவ் பண்ணுவதாய்ச் சொல்லியிருக்க, காலேஜ் கேட் அருகே மே ஃப்ளவர் மரத்தடியில் வைத்து அவனுக்கு 28 நிமிடம் அட்வைஸ் பண்ணினாளாம். ஆளுயர ஹாண்டில்பார் தவிர, சீனு, ஹாண்ட்சம் மணி, குருமூர்த்தி, ஜி.எஸ்.பி, முகம்மது ஷோயப் ஹனீஃப், காமாட்சி சுந்தரம், திருச்சி என்கிற திருச்சிற்றம்பலநாதன் என்று நிருபமாவை காதலித்துத் தோல்வியுற்றோர் பட்டியல் மிக நீளமாக இருந்தது. காலேஜிலேயே அழகான, டீசண்டான, வசதியான, படிக்கிற பையன் அஜய். அவனேகூட முயற்சித்துத் தோற்றதாய் லேட்டஸ்ட் தகவல் கூறுகிறது. வரதராஜன் மொட்டை மாடிக் குளிர்தரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு யோசித்தான். மேகக் குவியலுக்குள் ஆம்ஸ்ட்ராங்கின் பௌர்ணமி நிலவு ஒளிந்து ஒளிர்ந்தது. முதற்கட்டமாய் நிருபமாவின் முன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். அவளுக்கு நான் காலேஜ் சீனியர்தான் என்றாலும் நினைவிருக்குமா என்று தெரியவில்லை. பேசிப் பார்த்துவிடவேண்டும். அடுத்த நாள் உற்சாகமாகவே கிளம்பினான். தலைவாரும் போது கண்ணாடியில் அவன் உருவம் அவனுக்கே வழக்கத்தைவிட அதிகமாக உறுத்தியது. ’டேய்.. வாணாம்டா..” என்று ஒரு உள்ளே ஒரு குரல் எச்சரித்தது. பொருட்படுத்தாமல் புறப்பட்டான். முயற்சி பண்ணாமல் இந்த ப்ராஜெக்ட்டை கை விடுவதில்லை என்று தீர்மானமாயிருந்தான். உடலின் சகல அணுக்களிலும் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு காலேஜிலிருந்து நிருபமா திரும்பும்போது கேட்டருகே அவளை நேருக்கு நேர் எதிர்கொண்டான். அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அவளும் புன்னகைத்தாள். வரதராஜன் “ஹாய்” என்று சொல்லலாமா என்று யோசிப்பதற்குள் அவள் நகர்ந்துவிட்டாள். இருந்தாலும் அவனுக்குச் சந்தோஷமாகவே இருந்தது. அவனை அவள் தெரிந்து வைத்திருக்கிறாள் என்பது நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. அவள் புன்னகையே அதற்குச் சாட்சி. இப்போதைக்கு இது போதும். திரும்பினால் சதீஷ் மரத்தடி சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு இவனையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எப்பொழுது அங்கே வந்தானென்று தெரியவில்லை. கடன்காரன். “உனக்கு அவமேல விருப்பு வரலாம். ஆனா அதுக்குப் பதிலா செருப்புதான் வரும். எதுக்கும் ரெடியா இரு.” என்றான் ராபர்ட். வரதராஜனுக்கு எதைப் பற்றியும் சிந்திக்கத் தோன்றவில்லை. இந்தத் தடவை நிருபமாவின் மேல் கொஞ்சம் ஜூரம் போல உணர்ந்தான். தனிமையில் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதிக் கிழித்துப்போட்டான். நண்பர்களின் சந்திப்பை தற்காலிகமாகக் குறைத்துக்கொண்டான். தூர தரிசனமாக நிருபமா போகும்போதும் வரும்போதும் சிலதடவைகள் பார்த்தான். பதினெட்டாவது தடவை நிருபமா எதிர்ப்பட்டபோது பேச சந்தர்ப்பம் கிடைத்தது. “ஹலோ.. என்னை ஞாபகம் இருக்கா?.” என்றான். “இருக்கு.. எனக்கு ரெண்டு வருஷம் சீனியர்.. பேர் வரதராஜன். இப்பெல்லாம் அடிக்கடி கண்ல படறீங்க..” கவனித்திருக்கிறாள். ஆகவே இது இரண்டாவது கட்டம். நிருபமா வரதராஜனை பொதுவாக விசாரிக்கவும் செய்தாள். வேலை, வீடு, அப்பா அம்மா பற்றி, சதீஷ், ராபர்ட் பற்றிக்கூட கேட்டாள். குரலில் நட்பிருந்தது. நிறைய புன்னகைத்தாள். “உங்க அலும்னி அசோசியேஷன் எல்லாம் என்னாச்சு” என்றாள். அப்புறம் இயல்பாய் பார்ப்பதுபோல நிறைய தடவை அவளுக்கு ஹாய் சொன்னான். ஒரு தடவை மழைக்கு பஸ் ஸ்டாப்பின் குடையில் ஒதுங்கினபோது கனமழை தூரலாக குறையும்வரை பேச முடிந்தது. எல்லாம் பொத்தாம் பொதுவான பேச்சு. நல்லப்பா தியேட்டரில் ஒரு தடவை தோழிகள் புடைசூழ வந்திருந்தவளுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தான். பிறகு அவள் பர்த்டே தெரிந்து வைத்துக்கொண்டு கிரீட்டிங் கார்டு கொடுத்தது, நண்பர்களிடமிருந்து அவளுக்கு Internet 6 in 1 என்ற புத்தகம் பெற்றுத்தந்தது என உபரியாய் நிகழ்ந்த சம்பவங்களின் மூலம் நிருபமாவுக்கும், அவனுக்கும் இடையே தூரம் குறைந்துவிட்டாற்போல் உணர்ந்தான். வரதராஜன் ஒரு வார இரவுத் தூக்கத்தை அர்ப்பணித்து நிருபமாவுக்கு ஒரு கடிதம் எழுதினான். செதுக்கினான் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். யோசித்து யோசித்து ஒவ்வொரு வரியையும் மெருகேற்றி, உயிர் கொடுத்து, அவன் உணர்வுகளையெல்லாம் வார்த்தைகளுக்குள் அடக்கி… கடைசியில் கிழித்துப் போட்டான். வேளை வந்தது. கொஞ்சம் உதறலுடன் நிருபமாவிடம் “உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். சாயங்காலம் அருள்மதி ரெஸ்டாரண்டுக்கு வரமுடியுமா?” என்றான் வரதராஜன். அருள்மதி ரெஸ்டாரண்ட். மற்றொரு நாள். தென்னங்கீற்றுக் கூரை. வட்ட மேஜை. வாட்டர் பாய்  முதற்கண் தண்ணீர் வைத்துவிட்டுப் போனான். சுற்றிப் போடப்பட்டிருந்த சேர்களில் வரதராஜன், ராபர்ட், சதீஷ், குண்டு ரமேஷ், அப்புறம் நிருபமா. இதே ஹோட்டல். இதே வட்டமேஜை வேறொரு மெழுகுவர்த்தியில் நிருபமாவிடம் ஐ லவ் யூ சொன்னதும், அவளும் எந்த அசம்பாவிதமும் செய்யாமல் பட்டென்று அரும்பிய வெட்கத்துடன் அதை தயங்கி ஏற்றுக்கொண்டதும் வரதராஜனுக்கு ஞாபகம் வந்தது. அந்த ராசிக்காய் இதே ஹோட்டலில் இன்று ட்ரீட்டும் சொல்லியிருந்தான். எல்லோருக்கும் நிருபமாவுடனான அறிமுகப்படலம் முடிந்திருந்தது. யார் முதலில் பேசுவது என்பதுபோல அனைவரும் அமைதியாக இருந்தார்கள். வரதராஜன் எல்லோரையும் பார்த்தான். அன்றைக்கு எல்லோரும் எப்படிச் சிரித்தார்கள்? நிருபமா எனக்குத்தான் என்று நினைக்கிறபோது வரதராஜனுக்கு வெற்றிப் பெருமிதமாக இருந்தது. இப்பொழுது எல்லோரும் கண்களுக்குள் ஆச்சரியத்தையும் கேள்விகளையும் வைத்துக்கொண்டு வரதராஜனையும், நிருபமாவையும் மாறி மாறிப் பார்த்தார்கள். யாராலும் நம்ப முடியவில்லை. இவன் இத்தனை சீக்கிரம் இவளை எப்படி? “எப்படிரா?” என்று சதீஷ் ஜாடையிலேலே கேட்டான். வரதராஜன் லேசாய்ப் புன்னகைத்தான். அவனாலேயே அவனை நம்ப முடியவில்லை. ஆர்டர் பண்ணின ஐட்டங்கள் வந்தன. எல்லோரும் சாப்பிடத் தொடங்கினார்கள். ஒரு சில உரையாடல்களுக்குப் பின் ராபர்ட் நிருபமாவிடம் கேட்டே விட்டான். “கேக்கறேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. உங்களுக்கு எத்தனையோ பேர் லவ் லெட்டர் குடுத்திருக்காங்க. பலபேரு உங்க பின்னாடி பைத்தியமா சுத்தியிருக்காங்க. எத்தனையோ பேரு உங்ககிட்ட நேர்லயும் அப்ரோச் பண்ணியிருக்காங்க. அத்தனை பேருகிட்டயும் இல்லாதது வரதராஜன்கிட்ட அப்படி என்ன புடிச்சுது? புரிஞ்சுக்கவே முடியல. எப்படி இவனை மட்டும் நீங்க லவ் பண்..” நிருபமா இடைமறித்து லேசாய் வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னாள். “நிறைய பேர் லவ் லெட்டர் குடுத்ததா யாரு சொன்னா? இது வரைக்கும் என் லைஃப்ல என்னை லவ் பண்றேன்னு முதன் முதலா எங்கிட்ட சொன்னது வரதராஜன்தான்.” *** குமுதம் 15-02-2001   தூரப்பார்வை சுரிதார் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு பெண் தீவிரவாதியைப் போல நின்றுகொண்டிருந்தாள் பரிமளா. பஸ்ஸூக்கு காத்திருக்கும் ஏராளமான கூட்டத்திற்கு நடுவே அவளும் பொறுமையின்றி காத்துக்கொண்டிருந்தாள். லேசாக இருட்டத் தொடங்கிவிட்டது. விரைந்து கடக்கும் வாகனங்கள் இடைவிடாது சாலைப் புழுதியை நின்று கொண்டிருந்த கூட்டத்தின் மேல் இடமாற்றம் செய்துவிட்டுச் சென்றன. பஸ்கள், லாரிகள், கால் டாக்ஸிகள். ஷேர் ஆட்டோக்கள். டூவீலர்கள். காதைக் கிழிக்கும் ஹார்ன் ஒலிகள். அனிஷா வீட்டில் தனியாய் இருப்பாள். அனிஷா ஸ்கூல் விட்டு வந்தபிறகு ஒழுங்காக சாப்பிட்டிருப்பாளா? அவளுக்கு நாளைக்கு பரீட்சை தொடங்குகிறது. இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? படிக்க உட்கார்ந்திருப்பாளா? இல்லை பக்கத்து வீட்டுக்குப் போய் வாயடித்துக் கொண்டிருப்பாளா? அனிஷாவைப் பற்றி வரிசையாய் யோசிக்க ஆரம்பித்ததும் ஒரு பரபரப்பு வந்து பரிமளாவின் மேல் கவிந்தது. அடுத்த பஸ் சீக்கிரமாக வந்து தொலைத்தால் தேவலை. கூடவே சட்டென்று தொற்றிக்கொண்ட இயலாமை உணர்வு மற்றும் எரிச்சல்களோடு பரிமளா வாட்ச்சைப் பார்த்தாள். அது நின்று போயிருந்தது. பேட்டரி மாற்ற வேண்டும். ஆஃபிஸிலிருந்து இன்றைக்குக் கிளம்பும்போதே லேட் ஆகிவிட்டது. அந்த மேனேஜர் தடியன் கடைசி நேரத்தில் வந்து வெண்டாருக்கு ஒரு அர்ஜெண்ட் மெயில் அனுப்பவேண்டும் என்று சொல்லாமலிருந்திருந்தால் கொஞ்சம் நேரத்தோடு கிளம்பியிருக்கலாம். இந்நேரம் வீட்டுக்குப் போய் சேர்ந்தும் இருக்கலாம். ஏற்கெனவே அடைத்துக்கொண்டு வந்து நிற்கிற பஸ்களில் எப்படியோ ஏறி உட்புகுந்து அடைந்து கொண்ட ஜனங்களைப் பார்த்தாள். அவள் போக வேண்டிய இரண்டு மூன்று பஸ்கள் கூட இப்படித்தான் வந்தது. கூட்டமாயில்லாததாய் வரட்டும் என்று அவைகளை போகவிட்டுத்தான் நின்று கொண்டிருந்தாள். நெரிசல்களுக்குள் இலகுவாய் புகுந்து புறப்படும் சாகச டூவீலர்களை பரிமளா சிறிது நேரம் வேடிக்கை பார்த்தாள். எத்தனை வேகம்! எத்தனை பரபரப்பு! எப்படியாவது ஒரு பழைய ஸ்கூட்டியாவது வாங்கிவிட முடிந்தால் பஸ்ஸூக்குக் காத்திருக்கிற இந்த அவஸ்தைகளிலிருந்து தப்பிக்கலாம். அதற்கான வேளை வரவேண்டும். அப்போதுதான் அவள் அவர்களைப் பார்த்தாள். ஒரு பல்ஸர் பைக். அதன் மேல் ஒரு இளஞ்ஜோடி. நிச்சயம் கல்லூரியில் படிக்கிறவர்களாகத்தான் இருக்கும் என்று நினைத்தாள். பின்னிருக்கையில் இருந்த அந்தப்பெண் பரிமளாவை மாதிரியே துப்பட்டாவால் முகத்தை மூடியிருந்தாள். பல்ஸர் பையனின் தோளைப் பிடித்தபடி அவன் மேல் பல்லிபோல் ஒட்டிக்கொண்டிருந்தாள். ட்ராஃபிக் இயக்கத்தில் சற்றுத் தயங்கி நின்று பின் பரிமளாவின் பக்கத்தில் கிடைத்த இடைவெளியில் கடந்து போனது பல்ஸர். அவர்களைப் பார்த்ததும் பரிமளாவுக்கு ஏற்கெனவே இருந்த எரிச்சலின் அளவு காரணமில்லாமல் இரண்டு டிகிரி கூடியது. ‘இதுகள் எல்லாம் கண்டிப்பாக வீட்டுக்குத் தெரியாமல் காதல் என்கிற பெயரில் ஊர் சுற்றுகிற கழுதைகளாகத்தான் இருக்கும்’ என்று நினைத்துக்கொண்டாள். பிறகு திரும்பி பஸ் வருகிறதா என்று தூரத்தில் வெறித்தாள். பல்சர் பெண் அவனை இன்னும் சற்று உரிமையாய் நெருக்கி உட்கார்ந்து கொண்டு “மொத மாச சம்பளத்துல ட்ரீட் குடுக்க முடியலடா.. ஸாரி…” என்றாள் அவன் காதுக்குள். “ச்சேச்சே.. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத நீ. உன் கஷ்டம் எனக்கு புரியாதா..” என்றான் அவன் சற்றே திரும்பி. தோளில் விழுந்திருந்த அவள் கையை வாஞ்சையாய்த் தொட்டான். அந்தத் தொடுகை உணர்த்திய குறிப்புகளை அவள் உள்வாங்கிக்கொண்டு அவன் முதுகில் சாய்ந்தாள். ஏனோ அவள் கண்கள் லேசாகப் பனித்தன. “அடுத்த லெஃப்ட்ல போய்.. செகண்ட் ரைட் திரும்பு.. அங்க ரைட் சைடு நாலாவது வீடு. திலகம்மை இல்லம்ன்னு போட்டிருக்கும்” அவள் சொன்ன திசைகளில் அவன் வண்டியைச் செலுத்தி அந்த வீட்டின் முன் நிறுத்தினான். பெரிய கேட் வைத்த காம்பவுண்டுக்குள் ஒரு இன்னோவா நின்றிருந்தது. வீட்டின் நிலைக் கதவு அகலத் திறந்திருந்தது. கேட்டைத் திறந்து உள்ளே சென்று ’அண்ணாச்சி’ என்று குரல் கொடுத்தாள். சில விநாடிகளில் ’யாரு?’ என்று கேட்டபடியே ஒருவர் வெளிப்பட்டார். நடிகர் மணிவண்ணன் சாயலில் இருந்தார். நெற்றியில் பட்டை, அவர் சட்டை எல்லாமே வெள்ளை நிறத்தில் மிளிர்ந்தது. அவளையும் அவளருகே நின்றிருந்த அவனையும் பார்த்ததும் தெரிந்துகொண்டு ’வாம்மா..’ என்றார். “இல்லைங்க அண்ணாச்சி.. லேட் ஆயிருச்சு.. பணம் குடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்.” ஹாண்ட் பேகிலிருந்து ஒரு கவரை எடுத்து அவரிடம் கொடுத்தாள். “ஏதோ இப்போதைக்கு இதுதான் முடிஞ்சது.” என்றாள். வார்த்தைகள் சன்னமாகத்தான் வந்தன. “நல்லதும்மா..” என்று சொல்லிவிட்டு அண்ணாச்சி கவரிலிருந்து பணத்தை எடுத்து சரக் சரக் என்று ஓசையுடன் எண்ணிப்பார்த்துவிட்டு பாக்கெட்டில் வைத்தார். ஏமாற்றத்தை வெளியே காண்பிக்க விரும்பாதவர் மாதிரி முகத்தை இறுக்கிக்கொண்டு சொன்னார். “அப்பன் வாங்கின கடன அடைக்க புள்ள பாடுபடுது.. அந்தாளோ குடிச்சே சீரழியறான். சீக்கிரம் முழுப்பணத்தையும் எப்படியாவது வட்டியோட செட்டில் பண்ணிரும்மா.. காப்பி கீப்பி சாப்டறீங்களா?” “பரவால்ல அண்ணாச்சி.. கிளம்பறோம்..” அவரிடம் விடைபெற்றுவிட்டு வெளியே வந்து கிளம்பும்போது அவன் மெதுவாகச் சொன்னான். “க்ரீடி பீப்பிள்… இவனுக கிட்டே எவ்ளோ காசு கொட்டிக்கிடந்தாலும் நயா பைசா வுட்டுத்தரமாட்டானுங்க..” “இன்னும் அறுபத்தி நாலாயிரம் ரூபா பாக்கியிருக்கு..” என்றாள் அவள் கவலையோடு. அவர்கள் கிளம்பிப் போனபிறகு அண்ணாச்சி ஃபோர்டிகோவில் நின்றிருந்த அவருடைய காரை ஏறிட்டுப் பார்த்தார். பின்னர் வாஞ்சையாய் தொட்டுப் பார்த்தார். அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. அடுத்த வாரம் அதை விற்பதற்குப் பேசி முடித்தாயிற்று. உள்ளே அவர் மனைவி படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். மூளையில் கட்டி. கூடவே சிறுநீரக பாதிப்பு வேறு. கிரிட்டிக்கல் கேஸ் என்று சொல்லிவிட்டார்கள். ஆபரேஷன் உட்பட இதுவரைக்கும் ஆன மருத்துவச்செலவுகள் கிட்டத்தட்ட நாற்பது லகரத்தைத் தாண்டிவிட்டது. அரக்கோணம் நிலத்தை விற்றுவிட்டார். அடுத்தவாரம் காரும் போய்விடும். மேலும் தொழில் நஷ்டம். போன வருடம் நடந்த மகளின் கல்யாணத்துக்கு செலவான பெருந்தொகை எல்லாம் சேர்ந்து அவரது கையிருப்பைக் காலி செய்து கொண்டிருந்தது. இப்படியே போனால் ஒன்றும் மிஞ்சாது என்பதும் அவருக்குப் புரிந்தே இருந்தது. ஆனால் திலகம்மைக்காக கடைசிக் காலணா வரைக்கும் இழக்கவும் அவர் தயாராகவே இருந்தார். பழைய மாதிரி நிலைமை இருந்திருந்தால் இந்தப் பெண்ணிடம் கை நீட்டி காசு வாங்க வேண்டியிருந்திருக்காது. அவசரமில்லை. மெதுவாகக் கொடுத்தால் போதும் என்று சொல்லியிருப்பார் அண்ணாச்சி. அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஆனால் என்ன செய்வது? இப்போதிருக்கிற நிலைமை மிக மோசம். கிடைக்கிற இடத்திலெல்லாம் பணத்தைப் புரட்டுவதும் உருட்டுவதுமாக இருந்தார் அண்ணாச்சி. இன்னும் நிறைய பணம் தேவைப்படுகிறது. ஸோஃபாவில் அமர்ந்து ஃபேனைப் வெறித்துக்கொண்டு யோசித்தார். பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து மறுமுறை எண்ணிப் பார்த்தார். இந்த சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. மாணிக்கத்திடமிருந்து அவருக்கு வரவேண்டிய மூன்று லட்சம் உடனே கிடைத்தால் இன்னும் தாக்குப்பிடிக்கலாம் என்று தோன்றியது. இது தோன்றிய மறுகணமே மொபைலை எடுத்து மாணிக்கத்தின் எண்ணை ஒத்திவிட்டுக் காதில் வைத்தார். இரண்டு மூன்று முறை இணைப்பு துண்டிக்கப்பட்டு.. மீண்டும் மீண்டும் முயற்சித்தபோது ஒரு பெண்குரல் கேட்டது. “அவர் இல்லைங்க.. வெளிய போயிருக்காரு” தயக்கக் குழைவுடன் மறுமுனை ஒலித்தது. மாணிக்கத்தின் மனைவியாக இருக்கவேண்டும் என்று யூகித்துக்கொண்டார். அண்ணாச்சி சலிப்பாய் புருவங்களை சுருக்கினார். கொஞ்சம் அதிருப்தியுடன் “எப்ப வருவாரு?” என்றார். “வந்துருவாருங்க.. வந்ததும் கூப்பிடச்சொல்றேன்..” அழைப்பைக் கட் செய்துவிட்டு. ’எப்பப் பாத்தாலும் வீட்டுக்குள்ள இருந்துகிட்டே இல்லைன்னு சொல்றதே இவனுக்குப் பொழப்பாப் போச்சு.. களவாணிப்பயலுக.” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார். அவருக்கு ஆத்திரமாக வந்தது. அப்படியே ஸோஃபாவில் சாய்ந்து கண்களை மூடினார். மாணிக்கத்தின் மனைவி ஃபோனை படுக்கையின் மேல் வீசிவிட்டு சுவரோரம் சாய்ந்து உட்கார்ந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு லேசாய் விசும்ப ஆரம்பித்தாள். அவர் வீட்டில் இல்லையென்று சொன்னதை அண்ணாச்சி நம்பவில்லை. அவர் குரல் காட்டிக்கொடுத்துவிட்டது. வெளியே போயிருக்காரு.. வந்துருவாருங்க’ என்றுதான் போனில் கேட்கிற எல்லோரிடமும் மூன்று நாட்களாய் சொல்லிக்கொண்டிருக்கிறாள். பின்னே போலீஸ் லாக் அப்பில் இருக்கிறார் என்று உண்மையையா சொல்ல முடியும்? இப்போதே பக்கத்து வீடுகளுக்கெல்லாம் செய்தி பரவிவிட்டது. ஆஃபிஸில் திருடு போன இரண்டு லட்சத்தை இவர்தான் எடுத்திருப்பார் என்று யாரோ கொடுத்த கம்ப்ளெய்ண்டில் இவரை அரெஸ்ட் பண்ணி உள்ளே வைத்திருக்கிறார்கள். இவருக்கு எதிராய் ஒரு சாட்சியம் வேறு இருக்கிறது. நிச்சயமாக இவர் அப்படியெல்லாம் பண்ணுகிற ஆள் இல்லை. போலீஸ் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. துரைசாமியண்ணன் அவரை ஜாமீனில் வெளியே கொண்டுவர முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார். காலையில்கூட ஸ்டேஷனுக்குப் போய் இரண்டு மணி நேரம் நின்றுவிட்டு வந்தார்கள். அவள் ஒழுங்காகத் தூங்கி மூன்று நாட்கள் ஆயிற்று. அவர் சீக்கிரம் வெளியே வந்தால் மாங்காடு அம்மனுக்கு அங்கப் பிரதட்சணம் செய்வதாய் வேண்டிக்கொண்டிருக்கிறாள். வாசலில் நிழலாடுவதை உணர்ந்து முகத்தை நிமிர்த்தினாள். அந்தச் சிறுமி நின்றிருந்தாள். கையில் ஒரு மாங்காய்த் துண்டு. அதைக் கடித்துக்கொண்டே உள்ளே வந்தாள். மாணிக்கத்தின் மனைவி அவசரமாய் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். “என்ன ஆண்ட்டி.. அங்கிளை போலீஸ் புடிச்சுட்டுப் போயிருச்சாமா? நிஜமாவா?” என்றாள். அவள் லேசாக அதிர்ந்தாள். சின்னப்பிள்ளைகள் வரை சேதி பரவிவிட்டது. சட்டென்று கோபம் மண்டையின் உச்சிக்கு ஏறியது. ‘அடி செருப்பால.. நாயே.. உனக்கெதுக்குடி அதெல்லாம்… யார்ரீ சொன்னா?” என்று ஆவேசமாகக் கத்தினாள். “எதுத்த வீட்ல பேசிட்டிருந்தாங்க ஆண்ட்டி” “அதிகப்பிரசங்கித்தனமா பேசிட்டிருக்காத.. போ… போய் படிக்கிற வேலயப் பாரு…” ஏன் அவள் கத்துகிறாள் என்று புரியாமல் பயந்து போய் நகர முற்பட்ட சிறுமியிடம் “உங்கம்மா இன்னும் ஆபிஸ்லயிருந்து வல்லியாடி” என்று நக்கல் தோய்ந்த வார்த்தைகளால் கேட்டாள். “இன்னும் இல்ல ஆண்ட்டி..” என்றாள். ‘என் புருஷனாவது ஜெயில்ல கெடக்கிறான்..  பணத்த இவர் எடுக்கலன்னு நிரூபணம் ஆச்சுன்னா வெளிய வந்துருவார். ஆனா இவ அப்பன் ஓடிப்போய் ஆறு மாசமாச்சு.. இனி திரும்புவானோ.. மாட்டோனோன்னு இருக்கு.. இவ அம்மா வேலைக்குப் போறேன்னுட்டு எங்க ஊர் மேயறாளோ..’ என்று முணுமுணுத்தாள். அப்படி நினைத்துக்கொண்டதில் அவளது துக்கம் லேசாய் மட்டுப்பட்டமாதிரி இருந்தது. “ஆண்ட்டி.. ரொம்ப லேட்டாச்சு.. அம்மாவ இன்னும் காணோம். ஒரு ஃபோன் பண்ணிக்கட்டுமா..” அப்பாவியான முகத்துடன் கெஞ்சுகிற தொனியில் கேட்டாள். மாணிக்கத்தின் மனைவி ஒரு விநாடி அவளை முறைப்பாய் ஏறிட்டுவிட்டு கட்டிலின் மேல் வீசப்பட்டுக் கிடந்த மொபைலை எடுத்து சிறுமியிடம் வேண்டா வெறுப்பாய் கொடுத்தாள். “இதே பொழப்பாப் போச்சு.. இந்தா.. கைய தொடச்சிட்டு வாங்கு..” அனிஷா தன் மாங்காய்க் கையை பாவாடையில் துடைத்துவிட்டு ஃபோனை வாங்கி டயல் செய்தாள். இன்னும் பஸ் ஸ்டாப்பில் நாள் முழுக்க அலுவலகத்தில் வேலை செய்த களைப்புடன் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தபடி சலிப்புடன் நின்றுகொண்டிந்த பரிமளா ஃபோன் அடிப்பதை உணர்ந்து அதை கைப்பையிலிருந்து எடுத்து ஒளிர்கிற திரையில் பெயர் பார்த்து அவசரமாய் காதில் வைத்தாள். மறுமுனையில் அனிஷாவின் “எப்பம்மா வருவ?” தூரத்தில் அவள் போக வேண்டிய பஸ்ஸின் நம்பர் தெரிந்தது. “ஒன்னவர்ல வந்துர்ரண்டி. நீ படிச்சிட்டிரு.. பஸ் வருது… ஃபோனை வை…” அழைப்பைத் துண்டித்துவிட்டு வந்து நின்ற பஸ்ஸில் ஏறப்போனாள் பரிமளா. *** கல்கி – மார்ச் 2014   தொடர்பு எல்லைக்கு வெளியே இன்னும் ஒரு தெரு திரும்பினால் குழந்தையைப் பார்த்துவிடலாம். ஆனால் ஏதோ தயக்கம், லேசான பயம் எல்லாம் சேர்ந்து கால்கள் தானாக ப்ரேக்கை அழுத்தி நிறுத்தின. பைக்கை ஓரமாக நிறுத்தினான். அவசரப்படவேண்டாம். யோசிக்காமல் எதையாவது செய்தால் பிறகு அவமானம் மட்டுமே மிஞ்சும். ராஜூவை மறுபடி ஃபோனில் கூப்பிட்டு என்ன செய்வது என்று கேட்கலாமா என்று யோசித்தான். சட்டென்று சூழ்நிலைக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவதில் அவன் கில்லாடி. ராஜூவின் நம்பரை முயற்சித்தபோது ‘தற்போது தொடர்பு கொள்ளமுடியாத நிலையில்’ இருப்பதாக குரல் சொன்னது. மறுபடியும் யோசித்தான். இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? என் குழந்தையைத்தானே பார்க்கப் போகிறேன்?. திமிர் பிடித்த வித்யாவையோ வரட்டு கௌரவம் கொண்ட அவளது பெற்றோர்களையோ இல்லையே? அதில்லாமல் குழந்தையைப் பார்ப்பதற்கும் கொஞ்சுவதற்கும் தனக்கில்லாத உரிமையா? தயக்கத்தை உதறிவிட்டு பைக்கைக் கிளப்பினான். மனது தெளிவாய் இருந்தது இப்போது. இரண்டே நிமிடங்களில் வித்யாவின் வீட்டை அடைந்தான். கதவு திறந்திருந்தது. ஆனால் உள்ளே யாரும் தென்படவில்லை. காலிங்பெல்லை ஒரு தடவை அழுத்திவிட்டு நின்றான். சொந்தப் பெண்டாட்டியின் வீட்டிற்குள் அந்நியன் மாதிரி காலிங்பெல்லை எல்லாம் அடித்துவிட்டுக் காத்திருக்கிற அபத்தம் உறைத்தது. எல்லாம் வித்யாவின் அப்பாவால்தான். முன்னறையில் நிழலாடியது. யாரோ எட்டிப்பார்த்தார்கள். வித்யாதான். ஷங்கரை அங்கே திடீரென்று எதிர்பார்க்காத அதிர்ச்சியை ஒரு விநாடி முகத்தில் காட்டிவிட்டு சட்டென்று சமையலறைக்குள் புகுந்தாள். தன் வருகைக்கு எந்த வரவேற்பும் கிடைக்காத சூழ்நிலையில் ஒரு கணம் அவன் லேசான அவமானமாக உணர்ந்தான். எதிர்பார்த்ததுதான் என்பதால் அதை பொருட்படுத்தாமல் அவன் பாட்டுக்கு உள்ளே சென்றான். என் குழந்தையை நான் வந்து பார்ப்பதற்கு எந்தவித அழைப்போ, வரவேற்போ எனக்குத் தேவையில்லை. நான் பாட்டுக்கு கொஞ்ச நேரம் அதனுடன் கொஞ்சி விளையாடிவிட்டுப் கிளம்பப் போகிறேன். வித்யா மறைந்து இப்போது அவள் அம்மா எட்டிப்பார்த்தார். விருந்தோம்பலுக்கும் ஊதாசீனப்படுத்தலுக்குமான ஒரு மனநிலையில் அவர் ஊசலாடிக் கொண்டிருக்கிறார் என்பதை நொடியில் புரிந்துகொண்டான். ‘வாங்க’என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தையை தொண்டையிலேயே தடுத்து விழுங்கிவிட்டு மெல்ல அவரும் சமையலறைக்குள் மறைந்தார். வறட்டு கௌரவம் வார்த்தைகளைத் தடுத்திருக்கும். ஷங்கர் யார் அனுமதியையும் எதிர்பார்க்காமல் பெட்ரூமிற்குள் நுழைந்தான். அவன் வருகையை உணர்ந்திருந்தார்ப்போல தொட்டிலுக்குள் பிஞ்சுப்பாதங்கள் நெளியத்தொடங்கியிருந்தன. அவன் முகம் மலர்ந்து ஒரு அபரிமிதமான சந்தோஷம் கிளம்பி உடலைச் சிலிர்க்க வைத்ததை உணர்ந்தான். பிறந்த நான்கு மாதங்களுக்குள் அப்பாவைப் விட்டு பிரிய வேண்டிய விதி இதற்கு ஏன் நேரவேண்டும்? இந்தப் பெரியவர்களின் ஈகோதான் எப்படியெல்லாம் விளையாடித் தொலைக்கிறது! “அப்பா மாடில தூங்கிட்டிருக்காராம்மா?” வித்யாவின் குரல் அசரீரியாய் ஒலித்தது. அம்மாவிடம் கேட்பது போல் ஷங்கருக்கு சேதி சொல்லுகிற உத்தி. ’உங்கப்பன் தூங்கினா என்ன முழிச்சிட்டிருந்தா என்ன? எனக்கொண்ணும் பிரச்சினையில்லை..’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் ஷங்கர். விழித்துக்கொண்டிருந்த குழந்தையை தொட்டிலிலிருந்து எடுத்தான். அறைக்கு வெளியே லேசாய் எட்டிப்பார்த்தபோது வித்யாவின் அம்மா மாடிக்கு விரைவது தெரிந்தது. அவன் திடீரென்று வந்து நின்றதில் எல்லோருக்கும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். இருக்கட்டும். என்னை மட்டும் அன்றைக்கு அத்தனை பதறவைத்தார்களே. தூக்கம் சரியாகத் தெளியாமல் ஷங்கரை மலங்க மலங்கப் பார்த்தது குழந்தை. சரியாக இரண்டு வாரங்கள் ஆயிற்று இதைப் பார்த்து. அதனை அப்படியே தொட்டிலோடு சேர்த்து மார்பில் அணைத்துக்கொண்டான். அவன் விழிகள் லேசாய்த் துளிர்த்தன. எதற்கு இத்தனை கஷ்டம் என்று நினைத்துக் கொண்டான். அன்றைக்கு நடந்த பிரச்சனைக்கு வித்யாவிடம் இப்போதே ஒரு வார்த்தை ஸாரி என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது பிரச்சனை. ஆனால் நான் எதற்கு வளைந்து கொடுக்கவேண்டும்? அவர்களாக வந்து முதலில் பேசும் வரை நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை. ஷங்கர் அதில் உறுதியாக இருந்தான். பிரச்சனையைக் கிளப்பியதே வித்யாவும் அவள் அப்பாவும் சேர்ந்துதான். இரண்டு வாரங்களுக்கு முன் அவர் ஷங்கரின் வீட்டுக்கு வந்து தேவையில்லாமல் வாக்குவாதத்தைக் கிளப்பிவிட்டு தூங்குகிற குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டு வித்யாவையும் கூட்டிக்கொண்டு புயல் போல் வெளியேறின காட்சி இன்னும் மனதிற்குள்ளேயே அழியாமல் நிற்கிறது. ஷங்கர் அதற்கு எதிர்வினையாற்றியிருந்தால் விஷயம் வேறு மாதிரி ஆகியிருக்கும். அன்றைக்கு என்னவோ தெரியவில்லை. எப்போதும் சட்டென்று எட்டிப்பார்க்கும் முன்கோபத்தை கட்டுப்படுத்தி எதுவும் பேசாமல் ஒருமாதிரி மோன நிலையில் இருந்துவிட்டான். ஆனால் வித்யாவின் அப்பா கொதிக்கிற கோபத்தில் காற்றில் விசிறியடித்த வார்த்தைகள் மட்டும் இன்னும் காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன. “இனி ஜென்மத்துக்கும் நானும் என் பொண்ணும் உங்க வீட்டு வாசப்படிய மிதிக்கறதா இல்ல.” அதற்கப்புறமும் மதியாதார் தலைவாசல் மிதித்து ஷங்கர் இங்கே வந்திருக்கிறான் என்றால் குழந்தைக்காகத்தான். வித்யா எடுத்தெறிந்து பேசிவிட்டுப் போனது கூட பெரிய வருத்தமாய் இருக்கவில்லை. தனிமையில் அடிக்கடி அவன் குழந்தையின் ஞாபகம் வரும்போது மனது பிசைவது தாங்க முடியாத இம்சையாக இருந்தது. அதுதான் கிளம்பி வந்துவிட்டான். வித்யாவிற்கும் ஷங்கரின் அம்மாவுக்கும் லேசாய் ஒத்துவரவில்லை. லேசாக என்ன நிறையவே ஒத்துவரவில்லை! அவன் அம்மா எதற்கெடுத்தாலும் சலித்துக்கொள்கிற ஒரு மனுஷிதான். எதைப் பற்றியாவது எப்போதும் லேசான புலம்பல் இல்லையென்றால் அம்மாவுக்கு விடியாது. வேண்டாத மருமகள் கை பட்டது, கால்பட்டது என அம்மாவின் குற்றப்பத்திரிக்கை லிஸ்ட் பெரிதாக இருந்தது. வித்யா நிதானமாய் உட்கார்ந்து யோசித்திருந்தால் ஷங்கரின் அம்மாவை எப்படிச் சமாளிப்பது என்கிற சூட்சுமம் பிடிபட்டிருக்கும். ஆனால் அவளுக்கு பிரச்சனைகளைத் தீர்ப்பதைவிட வளர்ப்பதிலேயே ஆர்வம் அதிகமாயிருந்ததை ஷங்கர் கொஞ்சம் தாமதமாகத்தான் உணர்ந்தான். அவன் தனது மாதச் சம்பளத்தை அப்படியே அப்பாவிடம் கொடுத்துவிட்டு அவ்வப்போது கொஞ்சமாய் செலவுக்கு வாங்கிக்கொள்வதையும் சுட்டிக்காட்டி குறைசொல்ல ஆரம்பித்தாள் அடிக்கடி. “நாம தனியாப் போயிறலாங்க..” என்கிற வாக்கியம் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவள் வாயிலிருந்து வந்து விழுந்தது. ஷங்கர் அவன் அப்பா அம்மாவைத் தனியாக விட்டுவிட்டு தனிக்குடித்தனம் வரத் தயாராயில்லை என்று திட்டவட்டமாய் அறிவித்துவிட்டான். புகைச்சல்களும் புலம்பல்களும் அதிகமாயின. வித்யா ஏதோ பெரிய பிரச்சனைக்குள் இருப்பது போன்ற தோற்றத்தை அவளது பிறந்த வீட்டில் உருவாக்க ஆரம்பித்தாள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் வித்யாவின் அண்ணன் ஒருவன் வந்து ‘என்ன மாப்ள ப்ரச்சன?’ என்று கேட்டபொழுதுதான் வித்யாவின் வீட்டில் தன்னையும் தன் குடும்பத்தைப் பற்றியும் இல்லாததும் பொல்லாததும் ஆக விவாதங்கள் நடப்பதை புரிந்துகொண்டான் ஷங்கர். வித்யா திடீரென்று சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் முரண்டு பிடிப்பதும் சண்டையிடுவதுமாக பல நாட்கள் கழிந்தன. ஷங்கருக்கு எரிச்சலின் சதவிகிதம் அதிகமாகிக்கொண்டே போனது. ஒரு நாள் அடுத்த வீட்டுக்கெல்லாம் கேட்கிறபடி காட்டுக் கத்தலாய்க் கத்தினான். சமீபத்தில் குழந்தை பெற்ற தளர்ந்த உடம்புடன் வித்யா விசும்பி அழுததை அவன் பொருட்படுத்தவில்லை. அவளிடமிருந்து விசும்பல்கள் கலந்த ரகசிய ஃபோன்கால்கள் பறக்க அவளின் அப்பா திடீர் விஜயம் செய்தார். ”என்ன நடக்குது இங்கே?” என்றார் அதிகாரமாய் குரலுயர்த்தி. வாக்குவாதங்கள். சண்டைகள். ‘இந்த குடும்பம் உனக்கு சரிவராது. குழந்தையை எடுத்துட்டு நீ கிளம்பும்மா..” என்றார். “தாராளமா கிளம்புங்க.. நான் நிம்மதியாயிருக்கேன் இனிமே..” என்று கையெடுத்து கும்பிட்டான் ஷங்கர். தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தொட்டிலிலிருந்து கோபமாக உருவி, அவளும் அவள் அப்பாவும் வெளியே போனார்கள். டாக்சியின் கதவு அறைந்து சாத்தப்படுகிற சப்தம் பலமாய்க் கேட்டது. ஷங்கர் அமைதியாய் உட்கார்ந்துவிட்டான். ராஜூவிடம் இதைப் பற்றியெல்லாம் சொல்லி ஆலோசனை கேட்டபோது “அட உங்க வீட்ல பெரிய ஸீரியலே ஓடுது போல. இரு எங்கம்மாவையும் சம்சாரத்தையும் அங்க அனுப்பி வெக்கறேன்..” என்றான் அட்டகாசமாக சிரித்தபடி. பிறகு ஸீரியஸாகி “கொஞ்ச நாள் எந்த தொடர்பும் இல்லாம ஃப்ரீயா வுடு. தானா எறங்கி வருவாங்க..” இரண்டு வாரங்களாயிற்று. ஒன்றும் பெரிதாய் நடக்கவில்லை. இரண்டு தரப்பிலும் மௌனம். ஷங்கரின் கோபம் சற்றுத் தணிந்திருந்தது. அப்பாவும் அம்மாவும்கூட அவனிடம் எதுவும் கேட்காமல் வீட்டுக்குள் மௌனமாய் வலம் வந்து கொண்டிருந்தார்கள். பீரோவைத் திறக்கும்போது தென்படுகிற வித்யாவின் உடைகளும், அறையின் உத்தரத்திலிருந்து தொங்குகிற காலித் தொட்டிலும் வெறுமையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஒரேயடியாகப் போய்விட்டாளா? இனி வரவே மாட்டாளா? எதுவும் உத்தரவாதமாகத் தெரியவில்லை. என்னதான் அவர்களுக்குப் பிரச்சனை என்று தெளிவாகவும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தோன்றியது. எப்போதாவது குழந்தையின் நினைப்பு அவஸ்தையை அதிகரிக்கும்போது மட்டும் அதைப் போய் பார்த்துவிட்டு வந்துவிடுவது என்று தீர்மானித்தான். யார் தடுத்தாலும் பரவாயில்லை. இன்றைக்கு வித்யாவின் வீட்டுக்கு போனதும், குழந்தையைப் பார்த்ததும், அதன் பட்டு உடம்பை ஸ்பரிசித்து விளையாடியதும் அவனை பெருமளவில் ஆசுவாசப்படுத்தியிருந்தது. முன்னறைக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தபோது வித்யாவின் அப்பா முண்டாசு பனியனுடன் மாடியிலிருந்து இறங்கி சமையலறைப்பக்கம் போவதைப் பார்த்தான். இவனுக்குக் கேட்காத விதத்தில் முணுமுணுப்புப் பேச்சுகள் காற்றில் மிதந்து வந்தன. அப்புறம் நின்றுவிட்டது. ஷங்கருக்கு கோபம் கோபமாய் வந்தது. மகளின் வாழ்க்கையைவிட சுயகவுரவம்தான் பெரிது என்று நினைக்கிற இந்த மனிதரை என்ன செய்வது? அவனுக்கு அந்த வீட்டுக்குள் இருப்பது மிகுந்த அவஸ்தையாக இருந்தது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு மெதுவாக பெட்ரூமிலிருந்து வெளியே வந்தான். ஹாலில் வித்யாவின் அப்பா நியூஸ் பேப்பர் படிக்கிற பாவனையிலிருந்தார். இவன் நிழலை உணர்ந்ததும் கூடுதலாக பேப்பரை உயர்த்தி தன்னை மறைத்துக்கொள்வதாகப் பட்டது. ஷங்கர் பொருட்படுத்தாமல் வாசலுக்கு வந்தான். இருள் கவியத்தொடங்கி பறவைகள் கூடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. பக்கத்து மரத்திலிருந்து கிரீச் கிரீச் என்று பெரும் சப்தம். காம்பவுண்டுக்குள் கார் நிறுத்த போட்டிருந்த ஷெட்டின் அடியில் வந்து நின்றான். பெருகிப் புரண்ட பாசவெள்ளத்தில் குழந்தையை நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தான். சொல்லவொண்ணாத உணர்ச்சிகள் அவனைச் சூழ்ந்து நின்றிருந்தன. இன்னும் ஒரு ஐந்து நிமிடத்தில் இதை இங்கேயே விட்டுவிட்டுப் பிரிய வேண்டியிருக்கும் என்று நினைத்தான். இதற்கு இன்னும் பேர்கூட வைக்கவில்லை என்பது பெரிய உறுத்தலாய்க் குத்தியது. “பனி பெய்யுது. குழந்தையோட வெளீல நிக்காதீங்க.” கொஞ்சமும் ஸ்நேகம் கலக்காத தடித்த வார்த்தைகள் பின்னாலிருந்து கேட்டன. வித்யாவின் அப்பாவின் குரல். எகிறிய எரிச்சலில் சட்டென்று திரும்பினான் ஷங்கர். திரும்பின வேகத்தில் ஷெட்டின் ஓரத்தில் நீட்டிக்கொண்டிருந்த இரும்பில் ”ணங்” என்று தலை இடித்துக்கொண்டது. அவனையறியாமல் அம்மா என்று கத்திவிட்டான். தெறித்த வலியில் குழந்தையோடு கீழே அமர்ந்துவிட்டான். ”அய்யோ..” கிளர்ந்த பதற்றத்தில் இரண்டு படிகளை ஒரே தாவலாகத் தாவி வித்யாவின் அப்பா அவனருகே வந்துவிட்டிருந்தார். ”என்னாச்சு” என்று குழந்தையை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டார். வலியின் உச்சத்தில் பதில் சொல்லக்கூட இயலாமல் நின்றான். அவன் கை பரபரவென்று தலையைத் தேய்த்துவிட்டுக்கொண்டது. அவன் சங்கோஜமாக எழுந்துகொண்டான். திரும்பிப் பார்த்தபோது வாசற்படியில் வித்யாவும் அவள் அம்மாவும் நின்று இவனையே பதட்டத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கையிலிருந்த குழந்தையை ஒரு தடவை பார்த்தான். புன்னைகை மாதிரியான பாவத்தில் அதன் இதழ்கள் விரிந்து சுருங்கின. “பலமான அடியா மாப்ள….” என்றார் வித்யாவின் அப்பா தன்னைத் தணித்துக்கொண்டு. “இல்ல சின்ன அடிதான்” அதற்கப்புறம் அவன் அங்கே நிற்க விரும்பாமல் வேகமாய் வெளியே வந்து பைக்கைக் கிளப்பினான். திரும்பிப் பார்க்காமல் விரைந்தான். வித்யா ஒரு வாரத்திற்குள் திரும்பி வந்துவிடுவாள் என்றுதான் அவனுக்குத் தோன்றியது. ***   அனர்த்தம் ஹால் சோஃபாவில் தலை குனிந்தபடி மிக அமைதியாக உட்கார்ந்திருக்கும் அபர்ணாவையும், கையைக்கட்டி வாசற்கதவை வெறித்தபடி சுவரில் சாய்ந்து நின்றிருக்கும் சம்பத்தையும் அவர்களின் எதிரே உட்கார்ந்திருந்த மாதவன் ஒரு சின்ன புன்னகையோடு மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கே நிலவிய அமைதியில் பேரிங் போன மின்விசிறியின் கிரீச் ஒலிகள் பூதாகரமாகக் காதைக் கிழித்தது. அதைக் கலைக்கும் வகையில் மாதவன் தொண்டையை செறுமினார். மிக மெல்லிய ஆனால் மிகுந்த ஆயாசம் கொண்ட குரலில் பேச ஆரம்பித்தார். “அபர்ணா உன்னை எதுக்கு இங்க வரச்சொன்னேன்னு தெரியுமா?” என்று நிறுத்தினார். அவள் தலையை நிமிர்த்தி “சொல்லுங்க மாமா..” என்றாள் தயக்கமாக. மாதவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். சம்பத்திடம் “உக்காருடா.. ஏன் நிக்கறே?” “அப்பா.. இட்ஸ் ஓகே.. நீங்க சீக்கிரம் மேட்டருக்கு வாங்க..” சம்பத்தின் குரலில் இருந்த மெலிதான எரிச்சலை மாதவன் உணர்ந்தார். டிவி ஸ்டாண்டின்மேல் இருந்த ஃபோட்டோ ஃப்ரேமில் சம்பத்தும் அபர்ணாவும் ஜோடியாய்ச் சிரிப்பதை ஒரு கணம் பார்த்தார். “உங்க ரெண்டு பேர்கிட்டேயும் ஒரே ஒரு தடவை கொஞ்சம் பேசணும்னு தோணிச்சு. ஜஸ்ட் ஒரு அட்டெம்ப்ட். உங்க பிரச்சனைக்கெல்லாம் டிவோர்ஸ்-தான் ஒரே தீர்வுன்னு நினைச்சீங்க. அதில பிடிவாதமா இருந்தீங்க. நீங்க கேட்டது இப்போ கிடைச்சிருச்சு. ரெண்டு வருஷம் கூட முழுசா முடியல. நல்ல வேளை உங்களுக்கு குழந்தை இல்லை. ஸோ.. அடிஷனல் காம்ப்ளிகேஷன்ஸ் இல்லை” ”அப்பா.. எதுக்கு இப்போ ரிவர்ஸ் கியர்?”  சுரிதார் துப்பட்டாவின் நுனியை விரலால் சுழற்றியபடி எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்த அபர்ணாவிடம் திரும்பினார் மாதவன். ”எனக்கு உன் கையால ஒரு காஃபி போட்டுத்தர்ரியா அபர்ணா?” அபர்ணா சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். சம்பத்தையும் சமையலறை இருக்கும் திசையையும் ஒரு விருப்பமற்ற பார்வை பார்த்தாள். பிறகு தயங்கி மெதுவாக எழுந்து சென்றாள்.  அவள் பார்வையிலிருந்து மறைந்தபிறகு கிசு கிசுப்பான குரலில் “அப்பா.. உங்க நோக்கம் என்ன? மறுபடி ஒட்டுவேலை செய்யற ஐடியாவா? அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை. பேச வேண்டியதைப் பேசிட்டு அவளை சீக்கிரம் அனுப்புங்க.. இந்த ஸீன் நல்லா இல்ல. இட்ஸ் டோட்டலி அ வேஸ்ட் ஆஃப் டைம்” மாதவன் பதில் பேசவில்லை. அபர்ணாவுக்காகக் காத்திருந்தார். சில நிமிடங்களில் அபர்ணா ட்ரேயில் மூன்று கோப்பைகளோடு வந்தாள். டீப்பாயின் மேல் வைத்தாள். அவளும் மாதவனும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக்கொண்டார்கள். சம்பத் அதைத் தொட விரும்பவில்லை என்பதை உணர்ந்தார். “பரவாயில்லை.. எடுத்துக்கடா..” “இல்லப்பா.. வேணாம்.. என்று இழுத்தவனிடம் மாதவன் மூன்றாவது கோப்பையை எடுத்து நீட்டினார். அவன் வாங்கிக்கொண்டான். காஃபி அபர்ணா போட்டது என்றாலும் காப்பிப்பொடியும் பாலும் சர்க்கரையும் நான் வாங்கியதுதானே என்று சம்பத் யோசிப்பதாக கற்பனை செய்து பார்த்தார் மாதவன். வந்த சிரிப்பை சூழ்நிலை கருதி அடக்கிக்கொண்டார். ஒரு ஸிப் காஃபியை உறிஞ்சிவிட்டு மெதுவாய் கனிவாகப் பேச ஆரம்பித்தார். ”உங்க ஜெனரேஷனுக்கு எல்லாமே அவசரம். பொறுமை இல்ல. சகிப்புத்தன்மை இல்ல. விட்டுக்கொடுக்கறதுக்கு மனசு கிடையாது. வார்த்தைகள வீசும்போது நிதானம் கிடையாது. முக்கியமா தீர்வுகளைப் பத்தி யோசிக்காம பிரச்சனைகளை பத்தி மட்டும் யோசிச்சிட்டே இருக்கறது. கேட்டா ஸிம்பிளா எங்க ப்ரச்சனையெல்லாம் உங்களுக்குப் புரியாதுன்னு சொல்லிடறது. உங்களோட ப்ரச்சனைகள் உங்களுக்கே சரியாப் புரியுதாங்கறதுதான் என்னோட கேள்வி..” சம்பத் சூடான பார்வையொன்றை அவர்மேல் வீசினான். குழிதோண்டி மூடியதை இவரெதற்கு மீண்டும் கிளறிக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அபர்ணா எந்த முகபாவமும் காட்டாமல் அவள் பாட்டுக்குக் காஃபியை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். அவன் உதடுகள் துடித்தன.  “அப்பா.. நீங்க எங்க நிலைமையில் இருந்து யோசிக்கல. என்ன ப்ராப்ளம்ன்னு எழுபது பர்ஸண்ட் உங்ககிட்டயும் அம்மாகிட்டேயும் சொல்லியிருக்கேன். ஒத்து வரல. வெட்டிக்கிட்டோம். காமன் இண்டெரெஸ்ட் செட் ஆகலை. டெய்லி சண்டை போட்டுக்கிட்டு எதிரும் புதிருமா ஒரே வீட்டுக்குள்ள எதிரிகள் மாதிரி வாழறதுக்கு டிவோர்ஸ் பெஸ்ட் ஆப்ஷன். ரெண்டு பேருக்கும் நிம்மதி.” சம்பத் லேசாய்த் தோள்களைக் குலுக்கியபடி “ஃப்ரீ அண்ட் பீஸ் ஆஃப் மைண்ட்”  “மீதி முப்பது பர்ஸண்ட்?” ”அது கொஞ்சம் பர்ஸனல்ப்பா.. எல்லார்கிட்டேயும் சொல்லிட்டிருக்க முடியாது…” மாதவனுக்கும் லேசாய் குரலில் கோபம் ஏறியது.  ”என்ன பெரிய புண்ணாக்கு பர்சனல்?” அபர்ணா இப்போது வாயைத் திறந்தாள். படபடவென்று வார்த்தைகள் பொறிந்தன. “மாமா.. நான் தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் அப்படீங்கற மாதிரிதான் இருந்தது. அப்படியே இருந்துட்டுப் போகட்டும். ஐ டோண்ட் மைண்ட். எவரிதிங் இஸ் ஓவர் மாமா! இனி பேசறதுக்கு என்ன இருக்கு?..”  சுவரில் நிலைகுத்திய பார்வையுடன் தான் அவள் அதைச் சொன்னாள். சம்பத்-அபர்ணா ப்ரச்சனையின் ஆணி வேர் வேறேதோ திசையில் இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் மாதவன். சம்பத் இதுவரை அபர்ணாவைப் பற்றி சொன்னதையெல்லாம் முழுதாக அவரால் நம்பவும் முடியவில்லை. எல்லாவற்றையும் கொஞ்சம் அதீதமாகவே சொல்கிறானோ என்று அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருந்தது அவருக்கு. பாதிப் பிரச்சனை இவனிடம்தான் இருக்கிறது. தன் மேல் ஏதாவது தப்பு இருந்தால் அதை வெளிக்காட்டாமல் அடுத்தவர் மேல் பழிபோடுதல் எளிய உபாயம் இந்தக்காலத்தில். அபர்ணாவிடம் ஒரு தடவை தனியாகப் பேசிப்பார்த்தபோது சம்பத்தின் மேல் அவள் பக்க நியாயக் குற்றச்சாட்டுகள் அதுபாட்டுக்கு விரிந்துகொண்டே போனது. அபர்ணா பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்தவள். கொஞ்சம் வாய்த்துடுக்கான பெண் என்றாலும் அவள் இரைந்து பேசி அவர் பார்த்ததில்லை. முகத்தில் எப்போதும் ஒரு சின்ன புன்னகை. மாதவனைப் பொறுத்தவரையில் அபர்ணா புகார்களுக்கு இடமளிக்காத அமைதியான, அழகான, அருமையான மருமகள். ஆனால் அந்த பிம்பத்தை சம்பத் அடிக்கடி கலைத்துப் போட்டபடி இருந்தான். நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை அவள் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். ஏன் அவன் நினைத்த மாதிரியேகூட இல்லையாம். இத்தனைக்கும் காதல் கல்யாணம் வேறு. கல்யாணத்திற்கு முன் தோளில் சாய்ந்துகொண்டு கடற்கரை, தியேட்டர்களில் என்ன மாதிரியான மனப் புரிதல்களை இருவரும் பரிமாறிக்கொண்டார்கள்? இன்று எப்படிக் கசந்தது? அதற்குள் பிரச்சனைகள் கிளம்பி கையில் விவாகரத்து. மாதவன் நிதானமாக சம்பத்தைப் பார்த்தார். அவன் கண்களில் கருவளையம் படர்ந்திருக்கிறது. சரியாய் தூக்கம் இல்லை போல. அவன் குரலில் சுரத்து இல்லை. பிரச்சனைகளின் பிடியில் முகப்பொலிவு எப்படி சாத்தியம்?. அபர்ணாவின் முகத்திலும் ஒரு பெரும் வாட்டத்தைக் கவனித்தார். கொஞ்சம் மெலிந்திருக்கிறாள். சம்பத்தின் வீட்டுக்கு அவளை வரச்சொன்னது அவளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. “அபர்ணா.. தப்பு யார் மேல இருந்தாலும் எதையும் நிதானமா தெளிவா யோசிச்சுப் பேசினா ப்ரச்சனை தீர்ந்திடும்ங்கறது என்னோட நம்பிக்கை. அதை நீங்க பண்ணலை. காரணம் உங்க ரெண்டு பேரோட ஈகோ.” இருவரின் முகத்திலும் பலவித உணர்ச்சிகள் சரிவிகிதமாய்க் கலந்த ஒரு இறுக்கம் தாண்டவமாடுவதை மாதவன் உணராமல் இல்லை. இன்னும் ஓரிரு வாக்கியங்கள் மேற்கொண்டு பேசினால் அபர்ணாவின் கண்ணிலிருந்து ஒரு துளி உதிர்வது உறுதி என்பதைப் புரிந்து கொண்டார். ”எனக்கு இன்னும் ஹோப் இருக்கு..” என்றார். அவர் உறுதியான குரலில். ”மாமா… இட்ஸ் டூ லேட்.. இனிமே நீங்க என்ன ட்ரை பண்றீங்கன்னு எனக்குப் புரியலை. நீங்க கூப்பிட்ட மரியாதைக்காக இங்க வந்தேன். எனக்கு இப்படி இந்த வீட்ல உக்காந்துட்டிருக்கறது ரொம்ப அன்ஈஸியா இருக்கு. நான் கிளம்பணும்..” சம்பத் அவளை முறைப்பாய் பார்த்தான். ”அப்பா.. இட்ஸ் அவர் டெஸ்டினி.. உங்களை மாதிரி கல்யாணம் பண்ணி முப்பது வருஷம் ஒண்ணா வாழ்ற சாதனையைப் எங்களால பண்ண முடியாது. விட்ருங்க.. லெட் ஹர் கோ..” மாதவன் அவனை உற்றுப் பார்த்தார். பிறகு திடீரென்று தீவிரமானார். இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தார். ஓரிரு விநாடிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார். பிறகு சொல்ல ஆரம்பித்தார். “உங்களுக்கு ஒரு ரகசியக் கதை சொல்றேன். முப்பது வருஷத்துக்கு முன்னால பெத்தவங்கள எதிர்த்துக்கிட்டு திருநீர்மலைல கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஓடிப்போனோம் நானும் உங்கம்மாவும். மூணே மூணு ஃப்ரெண்ட்ஸை மட்டும்தான் கூப்பிட்டிருந்தோம். மாலை, தாலி எல்லாம் வாங்கிட்டு அடிவாரத்துல காத்திட்டிருந்தோம். ஃப்ரெண்ட்ஸ் யாருமே வரலை. விசாரிச்சா ஒருத்தனுக்கு அவன் ஆஃபிஸ்ல டெபுடேஷன்னு அர்ஜெண்டா பாம்பே போயிட்டான். இன்னொருத்தனுக்கு வைரல் ஃபீவர். இன்னொருத்தனையும் காணோம். முகூர்த்த நேரம் முடியற நேரம் நானும் உங்கம்மாவும் கையைப் புடிச்சுட்டு தனியா நின்னிட்டிருக்கோம். அப்ப திடீர்னு தோணிச்சு. யாருக்கு எதை நிரூபிக்க இந்தக் கல்யாணம்? மனசு ஒத்துபோனா பத்தாதா? ரெண்டு பேரும் யோசிச்சோம். பேசினோம். உங்கம்மாவை நான் கன்வின்ஸ் பண்ணினேன். வாங்கின மாலையை படிக்கட்டுல வீசிட்டு ரெண்டு பேரும் கிளம்பி வந்துட்டோம். யார்கிட்டேயும் எதையும் சொல்லலை. தனியா வீடு எடுத்தோம். வாழ ஆரம்பிச்சோம். வராத ப்ரெண்ட்ஸ், அப்பா, அம்மா, சொந்தக்காரங்க எல்லாம் எங்களுக்குக் கல்யாணம் நடந்திருச்சுன்னே நினைச்சிட்டாங்க. அதை அப்படியே மெயிண்டெய்ண் பண்ணிட்டிருக்கோம். முப்பது வருஷமா!!!. லேசான அதிர்ச்சியுடன் உறைந்திருந்த இருவரையும் பார்த்தார். அபர்ணாவிடம் திரும்பினார். ”நீ இன்னும் என்னை மாமான்னுதான் கூப்பிடற.. கேக்க நல்லா இருக்கும்மா. கோர்ட்ல தீர்ப்பு ஆனப்புறம் வெளியே வந்து தூண் மறைவில நின்னு நீ ஓன்னு அழுததை நான் பார்த்தேன்.” சம்பத்திடம் திரும்பினார். டி.வி ஸ்டாண்ட் மேல் சம்பத்-அபர்ணா ஜோடிப் ஃபோட்டோவை சுட்டிக்காட்டி தணிந்த குரலில் சொன்னார். “இதை ஏண்டா நீ இன்னும் தூக்கிப் போடல? ஸோ.. ஏதோ ஒண்ணு இன்னும் மிச்சமிருக்கு.. இல்ல?!”  மெதுவாய் எழுந்தார். லேசான பெருமூச்சு விட்டுவிட்டு இருவரையும் பார்த்துச் சொன்னார்.  ”இந்தக் கல்யாணம், விவாகரத்து.. ரெண்டுக்குமே அர்த்தம் கிடையாது” ஒரு பெருத்த மௌனம் அங்கே மறுபடி கவிய மாதவன் கதவைத் திறந்து வெளியேறினார். ***   படகு “உனக்கு பாய் ஃப்ரண்ட்ஸ் யாராவது இருக்காங்களா?” தேனிலவு நேரத்தில் கேட்கக்கூடாத கேள்வி என்று வரையறுக்க முடியாதுதான். அதற்கான பதிலை பளிச்சென்று நித்யாவால் சொல்லிவிட முடியவில்லை. இன்னதென்று தெரியாத ஒரு பய உணர்ச்சியால் தொண்டைக்குழி ஏறி இறங்க நித்யா ஒரு வித அவஸ்தையில் நெளிந்தாள்.  முதலிரவின் போது, ஜோடியாக பிறந்தகத்துக்கும், புகுந்தகத்துக்கும் இடையே பயணித்துக்கொண்டிருந்தபோது, இதோ இப்போது தேனிலவுக்கு வந்த பிறகு என எல்லாப் பொழுதுகளிலும் ஓரிரு விநாடிகளுக்காவது அந்த செந்திலின் முகம் நித்யாவின் மனதில் மின்னல் கோடிட்டு மறைந்தவாறிருந்தது. இப்போது சந்தோஷ் அவளை நோக்கி புன்சிரிப்புடன் வீசிய இந்தக் கேள்வி அவனைப் பற்றிய நினைப்பை மீண்டும் அதிக அளவு கொண்டுவந்து கொட்டிவிட்டது.  குளிரால் போர்த்தப்பட்டிருந்த உதகமண்டலம்! அந்த ஊரின் படகு இல்லத்தின் கரையில் இருவரும் நின்றிருந்தார்கள். அவன் அவளை ஆசுவாசப்படுத்துவது போன்ற பாவனையில் தோளில் கைபோட்டு “பி.. ரிலாக்ஸ்ட்.. இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்லத் தேவையில்லை… நான் சும்மாதான் கேட்டேன்..” என்றான். அந்தக் கேள்வியைக் கேட்பதற்கு சற்று முன்னால்தான் சந்தோஷ் அவனது பெண் தோழிகள் பற்றி ஒருபாட்டம் சொல்லி முடித்திருந்தான். அவன் காதலித்த பெண்கள், அவனைக் காதலித்த பெண்கள், சிறு வயது இன்ஃபாக்சுவேஷன்கள், க்ரஷ்கள் என இந்த ஒரு வாரத்திலேயே சின்னச் சின்னதாய் நிறைய கதைகள் கேட்டாயிற்று அவனிடமிருந்து. இவ்வளவு அவசரமாக சந்தோஷ் ஏன் தனது வாழ்க்கையில் இடறின பெண்களைப் பற்றி ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. நான் கடந்துவந்த பாதையை உன்னிடம் சொல்லி முடித்த கையோடு இறந்தகால சம்பவங்கள் முடிவுக்கு வந்துவிடும். பிறகு உன்னுடனான தினசரிகளில் ஐக்கியமாகப் போகிறேன். இனிமேல் உன்னைத் தவிர வேறு யாரும் பெண் என் வாழ்க்கையில் இல்லை என்று சொல்வது போன்ற அவசரமா? அல்லது பெண்களைப் பற்றிப் பேசினால் மனைவி உட்பட எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும் என்று யாராவது தப்பாக அவனிடம் சொல்லிவைத்திருக்கிறார்களா? அல்லது ஏதாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? ”யு நோ.. நான் உன்கிட்ட ஒளிவு மறைவில்லாம ஓப்பனா இருக்க விரும்பறேன். என்னைப் பத்தி நீ எல்லாமே தெரிஞ்சுக்கறது நல்லது. ஆனா நான் ரொம்ப மோசமானவன்னு முடிவு பண்ணிராத” என்று சிரித்தான் சந்தோஷ். பிறகு படகு சவாரிக்கு டிக்கட் வாங்கி வந்தான். இருவரும் ஒரு படகில் ஏறிக்கொண்டார்கள். சந்தோஷ் துடுப்புகளைத் துழாவ மெல்ல கரையிலிருந்து ஏரிக்குள் நகர்ந்தது படகு.  கொஞ்ச தூரம் போன பிறகு ”வித் யுவர் பர்மிஷன்” என்று சொல்லிவிட்டு நித்யா அனுமதிக்கும் முன்னரே சிகரெட் பற்றவைத்தான். ”உனக்குப் பிடிக்காதுன்னு தெரியும்.. ஒருநாள் நிச்சயம் விட்டுர்ரேன்..” நீ என் வாழ்க்கையில் வந்து ஒரு வாரம்தானே ஆகிறது. உன் ஆரோக்கியத்தைப் பத்தி இன்னும் நான் கருத்தில் கொள்ள ஆரம்பிக்கவில்லை என்று சொல்லத்தான் நித்யா விரும்பினாள். ஆனால் நினைத்ததெல்லாம் சொல்ல முடிவில்லை. அவனோ வளவளவென்று பேசிக்கொண்டே கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறான். பேசாத நேரத்தில் இளமை உத்வேகம் கொண்டு கொஞ்சம் ரொமான்ஸ். தேநிலவின் கால அவகாசத்தை ஒரு நொடி கூட வீணாக்க விரும்பாதவன் போல உரசல், தழுவல், தோளோடு அணைத்து நடத்தல் என்று அந்நியோன்னியம் பழக முயற்சி எடுத்துக்கொண்டு இருந்தான்.  நித்யாவும் தன் இருபத்தைந்து வருட கட்டுக்கோப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஒரு புதிய உறவின் கைகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக விழுந்துகொண்டிருந்தாள். சந்தோஷிடம் மூன்று விஷயங்கள் மட்டும் பிடிக்கவில்லை. ஒன்று அவன் பெண்களைப் பற்றி அதிகம் பேசுவது. இரண்டாவது சிகரெட். மூன்றாவது அவன் அதிகம் கேள்விகள் கேட்பது. நித்யா நல்ல வேளையாக அதிகம் பேசாத குணாம்சம் கொண்டவளாக இருந்ததினால் நிறைய கேள்விகளுக்கு பதிலாக ஒரு புன்னகையால் சமன் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு மறுபடி செந்திலின் ஞாபகம் வந்தது. அவனது மௌனம். அவன் கண் கலங்கியது. மீண்டும் மீண்டும் ஞாபகம் வந்துகொண்டிருந்தது. அவன் பெயர் மட்டும் தெரியும். அவன் யாரென்று தெரியாது. அவன் ஏன் தன் திருமணத்துக்கு வந்தான்? யாரும் கூப்பிட்டிருக்க வாய்ப்பில்லை. அவளது நண்பர்களுக்கோ, நண்பிகளுக்கோ பொதுவான நபராகவும் அவன் இருந்திருக்கவில்லை. அழையா விருந்தாளியாக அவன் வந்திருந்தான். மண்டபத்தில் முன் இருக்கையில் வந்தமர்ந்து மேடையில் உட்கார்ந்துகொண்டிருக்கும் அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கழுத்தில் தாலி முடிச்சிடப்படும்போது அவன் கண்ணில் லேசாய் நீர் துளிர்த்ததும் யாருமறியாமல் அவன் அதைத் துடைத்துக் கொண்டதையும் அவள் ஓரக்கண்ணால் பார்த்து துணுக்குற்றிருந்தாள். மறுமுறை பார்த்தபோது அவன் மண்டப வாசலை நோக்கி நடந்துபோவது தெரிந்தது. ஏதோ ஒரு சோக நாடகத்தின் இறுதிக் காட்சிபோல இருந்தது அது. அவன் பெயர் செந்தில் என்பதே நிருபமா சொல்லித்தான் தெரியும். கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே அவளின் இரண்டாவது நிழல் போல அமைதியாக அவன் அவளைத் தொடர்ந்துகொண்டேயிருந்தான். திடீரென்று எங்கிருந்தாவது குறுக்குத் தெருக்களிலிருந்து வருவான். பின் தொடர்வான். அல்லது பஸ்ஸ்டாப்பில் சற்றுத் தள்ளி நின்று அவளையே பார்த்துக்கொண்டிருப்பான். திடீரென்று மறைந்துவிடுவான். முதலில் நித்யா அவ்வளவாக கண்டுகொள்ளாமல்தான் இருந்தாள். பின்னர் அவன் அவளருகில் வந்து ஏதோ பேசமுற்பட்டபோது மனதில் கொஞ்சம் பயம் ஏறியது. அவன் என்ன சொல்ல வந்தான் என்று தெரியவில்லை. நித்யா அவனைப் புறக்கணித்து முகம் திருப்பிக்கொண்டாள்.  அவன் பார்ப்பதற்கு கொஞ்சம் சாந்தமாகத்தான் இருந்தான். அவனுடன் வேறு நண்பர்கள் யாரும் இல்லாமல் தனியாகவே வருவான். அவனுக்கு ஒரு இருபத்தியைந்து வயதிருக்கலாம் என்று தோன்றியது. அடர்த்தியற்ற மீசை, மழித்த முகவாய், க்ராப் தலை. அவன் ஒருதலையாக நித்யாவைக் காதலித்துக் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. நிருபமாதான் அவளிடம் சொன்னாள். காதல் என்கிற வார்த்தை நித்யாவை லேசாக ஈர்க்க ஆரம்பித்த காலம் அது என்றுகூட சொல்லலாம். ஆனால் தன்னை வசீகரிக்கக்கூடிய ஆண்மகன் பற்றிய முன் தீர்மானம் எதுவுமில்லாமல் இருந்தாள் என்பதால் கொஞ்சம் பூரிப்பு இருந்தாலும் ஒரு குழப்ப மனநிலையும் அவளை ஆட்கொண்டிருந்தது. அவன் தொடர்ந்து பார்வையில் பட்டுக்கொண்டிருந்தது வேறு ஒரு மாதிரி குறுகுறுப்பை சதா ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஒரு ஆணால் கவனிக்கப்படுகிறோம் என்கிற சுகமான குறுகுறுப்பு. ஒரு நாள் அவனைக் காணாவிட்டால் அந்த நாளின் ஒரு பகுதி பூர்த்தியாகாமல் போனதுபோல ஒரு உணர்வு கிளர்ந்தெழ ஆரம்பித்திருந்தது. நித்யா தன்னைத் தானே திட்டிக்கொண்டாள். அப்பாவை நினைத்தால் பயமாக இருந்தது. மகள் தன்னிச்சையாக எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் சரியென்று தலையாட்டுகிற ஆசாமியல்ல அவர். ஆகவே பிரச்சனை வேண்டாம் என்று அவளது வட்டத்துக்குள் அவன் வந்துவிடாமல் ஜாக்கிரதையாக ஒரு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் வளையத் தயாராக இருந்தது என்பதையும் அவள் உணராமலில்லை. இந்த நேரத்தில்தான் அப்பா ஒரு வரன் கொண்டு வந்தார். பெயர் சந்தோஷ். சொந்தமாக பிஸினஸ் பண்ணுகிறான். தங்கமான பையன். எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. பிடித்திருந்தால் வருகிற நல்ல முகூர்த்தத்தில் கல்யாணம் என்று அறிவித்தார். வீட்டில் நித்யாவைத் தவிர அனைவருமே அதற்குள்ளாக சந்தோஷை வீட்டு மாப்பிள்ளையாகவே வரித்துவிட்டிருந்தார்கள். அப்பா அவளிடம் அனுமதி கேட்கவில்லை. தகவல் சொல்கிறார். அவளுக்கடுத்து அவள் தங்கையை கரையேற்ற ஆவண செய்யவேண்டும். ஆகவே சீக்கிரம் ஒத்துக்கொள் என்பது மறைமுக செய்தி. நித்யா அப்பா நிச்சயித்த மாப்பிள்ளைக்கு ஒத்துக் கொண்டாள். அதை நிருபமாவிடம் சொன்னபோது அவள் உடனே சொன்னாள். “பாவம்டி அந்த செந்தில்.. உன்னையே சுத்திச் சுத்தி வந்தான்.. ” “அதுக்கு நான் என்ன பண்றது?” என்று கேட்டாலும் அவனை நினைத்து ஒரு மாதிரி தர்மசங்கடமாக இருந்தது. எதற்குச் சுற்றுகிறாய் என்று அவள் திரும்பிக் கேட்டதுமில்லை. அவனுக்கும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடம் தன் மனதில் இருப்பதை நேரிடையாகச்  சொல்லவும் தெரியவில்லை. சரி கொஞ்சநாள் பஸ் ஸ்டாப்பில் அவளைக் காணக் கிடைக்காவிடில் அப்புறம் மறந்தும் மறைந்தும் போவான் என்று நினைத்தாள். ஆனால் அவள் கல்யாண மண்டபத்தில் அவனை எதிர்பார்க்கவில்லை. எப்படியோ தெரிந்துகொண்டு வந்துவிட்டான். அங்கே அவன் கண்ணீரைத் துடைப்பதைப் பார்த்தபோது அவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. தான் என்ன செய்திருக்கவேண்டும் என்று அவளுக்குப் புரிபடவில்லை. ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்கிற தைரியத்தை அவனுக்கு வாழ்க்கை தரட்டும் என்று நினைத்துக்கொண்டாள். ஆனாலும் அந்தக் காட்சி அவள் மனதை விட்டு அகலவில்லை. கல்யாணத்துக்கப்புறம் ஒவ்வொரு தினத்திலும் ஏதாவதொரு பொழுதில் அவன் நினைப்பு வந்த வண்ணமிருந்தது. அதை சந்தோஷும் அவன் பங்குக்கு இப்போது கிளறுகிறான். சந்தோஷிடம் சொல்வதற்கு இந்த சின்னக் கதை மட்டுமே இருந்தது. ‘அவன் பெயர் செந்தில். அவனைப் பற்றி வேறெதுவும் தெரியாது. ஆனால் அவன் அப்படி என்னையே பார்த்துக்கொண்டு, என்னிடமிருந்து எதையோ எதிர்பார்த்துக் கொண்டு எனக்காக தினசரி காத்துக் கிடந்தான். ஏனோ ஒரு விதத்தில் அது என்னை அசைத்துவிட்டது. அது காதலா கருணை உணர்ச்சியா என்றுகூடத் தெரியாது. ஆனால் என் எண்ணம் மாறி மேற்கொண்டு ஏதும் நிகழ்வுகள் நடக்குமுன்னர் என் வாழ்க்கைக்குள் அப்பா உங்களைக் கொண்டுவந்துவிட்டார். அவ்வளவுதான் கதை.’ இப்படிச் சொன்னால் அதைக் கேட்டுவிட்டு சந்தோஷ் பெரிதாய் சிரிக்கக்கூடும். ’ப்பூ இவ்வளவுதானா..’ என்று அவளை சீண்டக்கூட செய்வான். கொஞ்சம் கூட சுவாரஸ்யம் இல்லாத காதல் கதை யாருக்குப் பிடிக்கும்?. ஆனால் அதை சந்தோஷிடம் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லை. சந்தோஷூக்கும் நித்யாவுக்கும் இடையே ஏதோ இன்னும் ஒரு மெல்லிய இடைவெளி பாக்கியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் அந்நியோந்நியம் கைகூடும்போது அது மறையலாம். அல்லது அது நிரப்பப்படாத நிரந்தர இடைவெளியாகக்கூட தொடரலாம். எப்போதாவது ஒரு தருணம் கைகூடும்போது மெதுவாக அந்த செந்தில் பற்றிச் சொல்லலாம். இல்லை சொல்லாலேகூட இருந்துவிடலாம். ”நான் ட்யூஷன் படிக்கிறப்போ செல்வின்னு ஒரு பொண்ணு.. இத நான் உங்கிட்ட சொன்னேனா…” என்று படகின் துடுப்பைத் துழாவியவாறே அடுத்த கதையை சொல்ல ஆரம்பித்தான். அவன் பேசுவதைக் கவனியாமல் நித்யாவின் கண்கள் துடுப்பிலிருந்து கிளம்பின அலைகளில் தீர்க்கமாக நிலை குத்தி வெறிப்பதைப் பார்த்துவிட்டு பேச்சை நிறுத்தினான். ”நித்யா..” என்று மெதுவாகக் கூப்பிட்டான். “வேற ஏதாவது பேசுங்களேன்.. ப்ளீஸ்..” என்றாள் நித்யா. அவள் குரலில் முதன் முதலாக லேசாக எரிச்சலை உணர்ந்து துணுக்குற்று அவளைப் பார்த்தான் சந்தோஷ். அவளது நேர்கொண்ட பார்வையைச் சந்திக்க இயலாமல் திரும்பிக்கொண்டான். “ஆல்ரைட்” என்று சிரித்தான். பிறகு ஏதோ கேட்க வந்தவன் சட்டென்று நிறுத்திவிட்டான். நெர்வஸாக ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டான். பின்னர் என்ன நினைத்தானோ அதை ஏரிக்குள் வீசி விட்டான். படகு இப்போது ஏரிக்கு நடுவே நிலை கொண்டிருந்தது. ”சரி.. நீங்க நகருங்க.. நான் துடுப்பு போடறேன்..” என்றாள் நித்யா. *** சித்ரன் ரகுநாத் புனைபெயர்: சித்ரன். முதல் கதை: 1995-ல். அறிமுகப்படுத்தியது - கல்கி வார இதழ். வெளியான கதைகள் - முப்பது+. வெளியான இதழ்கள்: கல்கி, குமுதம், ஆனந்த விகடன், மங்கையர் மலர், அமுத சுரபி, நம் தோழி, ஃபெமினா தமிழ் மற்றும் தமிழோவியம், செந்தமிழ் போன்ற இணைய இதழ்கள். உபரி: கல்கியில் ஒரு குறுந்தொடர், தமிழோவியம்.காம்-ல் ஒரு தொடர்கதை. வலைப் பதிவுகள் எழுத ஆரம்பித்தது:கி.பி 2004. வலைப்பதிவுகள்: புள்ளி மற்றும் இன்று. சிறுகதைத் தொகுப்பு: கிழக்கு பதிப்பக வெளியீடாக ’மனதில் உனது ஆதிக்கம்’ இணையதளம்: www.chithran.com. கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்படத்தில் “ஆத்தாடி ஒரு பறவ பறக்குதா..” என்ற பாடல் மூலம் பாடலாசிரியராகவும் எண்ட்ரி. Chithran Raghunath chithranji@gmail.com chithran.com |  chithran.blogspot.com facebook.com/chithranraghu twitter.com/raghuji FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி    மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !