[] [தெருவிளக்கு] தெருவிளக்கு வின்சென்ட் காபோ, ஜோ ஃபாக்ஸ் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை கிரியேட்டிவ் காமன்ஸ் உலகளாவிய உரிமம் 4.0 கீழ் வெளியிடப்படும் இந்த மின்னூலினை அனைவரும் படிக்கலாம், பகிரலாம். இதனை எங்கு பயன்படுத்தினாலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வலைப்பூ மற்றும் மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட வேண்டும். This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - தெருவிளக்கு - தொகுப்பாசிரியர்கள் உரை - பதிப்பாளர் உரை - நூல் அறிமுக உரை - நூல் அறிமுகம் - 1. கதைகள் நம் அனைவருக்குமானவை - 2. இந்தியாவில் மக்கள் பங்களிப்புடன் இயங்கும் ஒரு மக்கள் நூலகம் - 3. மரபிற்கு திரும்பும் பாதையைத்தேடி... - 4. மந்திரக்கோலும் தொப்பியும் நோய் தீர்க்கிறது - 5. ஒடிசாவில் வளர்ந்து வரும் தன்னம்பிக்கை தலைவி - 6. புலிகள் சூழ்ந்த வனம் - 7. பெண்களின் கௌரவத்திற்காகத்தான் உழைக்கிறேன் - 8. தெருவில் நிகழும் களிப்பின் நடனங்கள் - 9. விபத்துகளைத்தடுக்க ஒருங்கிணைந்த அரசு துறைகளின் முயற்சி தேவை - 10. உள்ளிருக்கும் பேரொளி - 11. நேர்காணல்- குருதேவ்தாஸ் குப்தா - 12. பறவைகளின் காதலர்கள் - 13. இளைய இந்தியாவிற்கான புதிய கற்றல் முறைகள் - 14. 1947, ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரை - 15. ராணித்தேனீயின் கதை - 16. சிக்கனமான புதுமைவழித் தீர்வுகள் - 17. ஒடிஷாவின் ஐன்ஸ்டீன் - தொகுப்பாசிரியர்கள் - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 1 தெருவிளக்கு [tvcv1] நூல் வகை: மொழிபெயர்ப்பு கட்டுரைகள் தொகுப்பாசிரியர்கள்: வின்சென்ட் காபோ, ஜோ ஃபாக்ஸ் ஆக்கத்தலைமை: அன்பரசு சண்முகம் தொகுப்பில் உதவி: ப்ரான்சிஸ் கார்த்திக், ஷான் .ஜே தட்டச்சுப்பணி:  ஷாம்பவி, பியர்சன் கயே வெளியீட்டு அனுசரணை: Komalimedai.blogspot.in மின்னஞ்சல்: Sjarasukarthick@rediffmail.com மின்னூல் வடிவம்: தி ஆரா பிரஸ், இந்தியா. அட்டைப்பட உதவி: பின் இணையதளம். அட்டைப்பட உருவாக்கம்: தி இன்னோவேஷன் பொட்டிக், இந்தியா. மின்னூலாக்கம் – ஜெயேந்திரன்  – vsr.jayendran@gmail.com   கிரியேட்டிவ் காமன்ஸ் உலகளாவிய உரிமம் 4.0 கீழ் வெளியிடப்படும் இந்த மின்னூலினை அனைவரும் படிக்கலாம், பகிரலாம். இதனை எங்கு பயன்படுத்தினாலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வலைப்பூ மற்றும் மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட வேண்டும். 2 தொகுப்பாசிரியர்கள் உரை அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நூலைப்பற்றிச்சொல்ல நூலின் தலைப்பே போதுமானது. புதிதாக என்ன கூறிவிட முடியும். தெருவிளக்குகள் போல தன் வாழ்க்கையின் பல்வேறு துயர்களுக்கிடையே தன்னால் முடிந்த விஷயங்களை சிந்திப்பதோடு அல்லாமல் அதை செயல்படுத்த முயற்சிக்கும் தன்னை எரித்தேனும் சிறிது இருளையாவது போக்க முயலுமா என்று முயற்சிக்கும் உண்மையான தூய ஆத்மாக்கள் இவர்கள். இந்நூலிற்கான கட்டுரைகளை ஆக்கத்தலைமையாளர்  தேர்ந்தெடுத்தார். இவற்றை அவர் உட்பட பலரும் மொழிபெயர்த்துள்ளோம். மனிதர்கள் மேல் அன்புகொண்ட, மனித வாழ்க்கை மேல் அக்கறையும், ஆதுரமும் கொண்ட இக்கட்டுரையிலுள்ள அந்த மனிதர்களின் செயல்களைத்தான் நாம் கவனம் செலுத்திப்பார்க்க வேண்டும். இந்தக்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியிட்ட கோமாளி மேடை வலைப்பூ  நண்பர்களுக்கு என்றும் எங்களன்பு. வாசியுங்கள்.நன்றி! அன்பார்ந்த   வாழ்த்துக்களுடன், வின்சென்ட் காபோ                                                                                                                                                 ஜோ ஃபாக்ஸ் 3 பதிப்பாளர் உரை இந்த நூலிற்கான மொழிபெயர்ப்பினை பல்வேறு சூழ்நிலைகளில் செய்யவேண்டி இருந்தது. அதனால் சில கட்டுரைகளில் அது எங்கிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டது என்ற நாளிதழின் தேதி இல்லாமல் போய்விட்டது. பிழை பொறுத்துக்கொள்ளுங்கள். அடுத்தமுறை சரியாக இருக்க முயற்சிக்கிறோம். இந்த கட்டுரைகளுக்கான விதை 2008ல் வெளிவந்த இந்தியா டுடேவின் மாற்றத்தின் முன்னோடி என்ற இதழிலிருந்துதான் தொடங்குகிறது. அந்த மனிதர்களின் செயல்பாடுகளைப்போல உழைக்கும் பலரையும் அறிமுகப்படுத்த முயலும் எளிய முயற்சிதான் இது. இதற்கான  ஊக்கத்தை தந்த திரு. இரா .முருகானந்தம்,  எழுத்தாளர் ஸ்ரீராம், அறச்சலூர் ப்ரகாஷ் பொன்னுசாமி, வெள்ளோடு மெய்யருள், மரு. வெ. ஜீவானந்தம்,  செபியா நந்தகுமார், ஃப்ரீ தமிழ் இபுக்ஸ் இணையதள நண்பர் சீனிவாசன் அவர்களின் தலைமையிலான குழு மற்றும் இதற்கான தொடக்கத்தை  ஏற்படுத்தி தந்த  சிவராஜ் அவர்களையும் மறக்க முடியாது. மனிதன் என்பவன் தீமையும், வன்முறையும் கொண்டவன் என நான் நம்பவில்லை. மாற்றத்திற்கான விஷயங்கள் அவ்வளவு எளிதில் நமது சமூகத்தில் நடைபெற வாய்ப்பில்லை; என்றாலும் அதற்கான எந்த முயற்சிகளும் இன்றுவரை தொய்வடையவில்லை. இதற்கான கட்டுரைகள் எழுதிய செய்தியாளர்களுக்கு நன்றி என்ற ஒரு சொல் போதாது. அவர்களின் பெயர்கள் கட்டுரையில் தக்க மரியாதையுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  எந்த நாளிதழின் கட்டுரைகள் பயன்படுத்தப்பட்டதோ அந்த பத்திரிகைகளின் பெயர்கள் கட்டுரைகளின் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  நன்றி! ப்ரியங்களுடன் அன்பரசு சண்முகம் 4 நூல் அறிமுக உரை இந்நூலில் மொத்தம் பதினெட்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்றால் சமூகத்திற்கான தனிமனித பங்களிப்பு என்ற வகையில் உள்ளது. தனி மனித பொருளாதாரம், குடும்பம் என்று பல சுழல்காற்றுகளிடையே இந்த பதினெட்டு கட்டுரைகளிலும் உள்ள மனிதர்கள் தங்கள் மனதின் உள்ளொளியை அணையவிடவில்லை. சமூகத்திற்கு பயன்படும் வகையில் பல பொருட்களை உருவாக்கியிருக்கிறார்கள். இவை அனைத்தும் சுயமான அகத்தூண்டுதலினால் நிகழ்ந்துள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.   தனக்கு ஏற்படும் ஒரு பிரச்சனைக்கான தீர்வாக ஒன்றைத் தேடும்போது பலரும் அதே பிரச்சனைக்கான தீர்வுகளைத் தேடி அலைந்துகொண்டிருப்பது கண்டு நிலைமையைப் புரிந்துகொண்டு  தான் கண்டுபிடித்த பொருளை சமூகத்திற்கானதாக மாற்றுகிறார்கள். இப்படித்தான் சாதாரண மனிதன் சமூகத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற முடியும். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இதுபோன்ற மனிதர்கள் ஒரு பார்வையில் தன்னையொத்த மனிதர்களுடன், ஆத்மாக்களுடன் இணைந்துவிடுவார்கள்.   வீடு என்ற பாதுகாப்பான இடத்திலிருந்து வெளிவந்த பின்தான் தெருவில் விளக்கு இல்லாதது, வெளிச்சம் இல்லாதது நமக்கு நினைவு வருகிறது. இவர்கள் தங்களின் வாழ்வையே பலரது ஏளனத்திற்கும், கிண்டலுக்கும், நக்கல் சிரிப்புக்கும் பணயமாக வைத்து இன்றும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இறுதிக்கட்டுரையான ஒடிசாவின் ஐன்ஸ்டீன் கட்டுரையில் பண்டா தனது இயந்திரங்கள் உருவாக்கும் ஆர்வத்திற்காக தனது மனைவியின் நகைகளையே விற்றிருக்கிறார் என்பதை படிக்கும்போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. தோழர்களே! நமது தேசம் இயங்குவது இது போன்ற தன்னை எரித்து பிறருக்கு வெளிச்சம் மனிதர்களால்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த கட்டுரைகளைப் படியுங்கள். உதவும் எண்ணம் இருக்கிறவர்கள் அதை தங்கள் பையில் உள்ள பணமாக கருத வேண்டியதில்லை. தங்கள் அறிவாக கூட கருதலாம். இன்று நாம் பெறும் பல உரிமைகள், வசதிகள் இவர்கள் போன்றவர்களால்தான் கிடைத்தது. அர்ப்பணிப்பும், நேர்மையும், திட்டமும் கொண்ட உழைப்பு  இல்லாமல் இவை சாத்தியமேயில்லை என்பதை இக்கட்டுரைகளைப் படித்தவுடன் உணருவீர்கள்.  நன்றி.   அன்புடன், கார்த்திக் வால்மீகி 5 நூல் அறிமுகம்   தி அதர் இண்டியா பிரஸ் வெளியிட்ட ராகுல் ஆல்வாரிஸ் எழுதிய ஃப்ரீ ஃப்ரம் ஸ்கூல் எனும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘பள்ளிக்கு வெளியே வானம்‘ எனும் இந்நூல் ராகுலின் ஒரு ஆண்டு பள்ளி செல்லாத வாழ்வினை வெகு இயல்பாக நம் முன் வைக்கிறது. இந்நூலானது அனைவரும் எளிமையாக தரவிறக்கி வாசிக்க ஃப்ரீதமிழ்இபுக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதனையொத்த பல சமகால தமிழ் நூல்களை விலையில்லாமல் தரவிறக்கி வாசிக்க  www.freetamilebooks.com  எனும் வணிக நோக்கமற்ற தளத்தினை அணுகலாம். அதோடு தங்களது படைப்புகளை வெளியிட விரும்பினாலும் இத்தளத்தில் அதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன.   நூலகவாசியின் குறிப்புகள் எனும் நூல் எளிய வாசிப்பிற்கான சிறிய வாசிப்பு விமர்சனங்களைக் கொண்டுள்ளது. இவை பெரிய முக்கியமான நூல்கள் என்றில்லாமல் ஒரு நூலகத்தில் கிடைக்கும் நூல்களை வாசிப்பவர் அதைப்பின்பற்றி நல்ல நூல்களை பின்னாளில் தேர்ந்தெடுத்து வாசிக்கும் தன்மையைப்பெறுவார் அல்லவா? அதுபோல தன் வாசிப்பைத் தொடங்கி தொடர்ந்து முன்னேறுகிறார் இந்நூலின் ஆசிரியர். படிக்க சிரமப்படுத்தாத எளிய வார்த்தைகளில் எழுதப்பட்டுள்ள இப்பிரதி வாசிப்பை மேற்கொள்வோருக்கு சிறியளவிலேனும் வழிகாட்டி உதவக்கூடும். இவை அனைத்தும் கோமாளி மேடையில் வெளியிடப்பட்ட நூல்விமர்சனங்களாகும். இவை தற்போது விலையில்லாமல் தரவிறக்கி படிக்க உதவும் வண்ணம் www.freetamilebooks.com  எனும் மின்னூல்களைக்கொண்டுள்ள தளத்தினை அணுகலாம். [pressbooks.com] 1 கதைகள் நம் அனைவருக்குமானவை   காமேஸ்வரி பத்மநாபன் தமிழில்: அன்பரசு சண்முகம் நமது இந்தியாவில் கதை கூறுவது என்பது தொன்று தொட்டு நடந்துவரும் ஒரு நிகழ்வாக உள்ளது. மகாபாரதம், ராமாயணம், பஞ்சதந்திரக்கதைகள், திருக்குறள் மற்றும் நீதிநெறிநூல்கள் பலவற்றையும் எளிய, சுவாரசியமான கதைகளின் வழியே கேட்பவர்களின் இதயத்தில் இடம் பெறச் செய்துவிட முடியும். இவற்றை பின்னாளில் நாம் நூலாகப் படித்திருந்த போதும், இதனை சிறுவயதில் கதையாகக் கூறிய ஆசிரியரை, தாயை, நம் உறவினர்களை மறக்கவே முடியாது. நேர்மை, துணிச்சல், வீரம், பயணம், சாதுர்யம், ஒற்றுமை என வலியுறுத்தும் கதைகளின் நிழலில் பள்ளி நாட்களின் இளைப்பாறல் அவ்வளவு இனிமையான ஒன்றாக இருந்தது. இன்றைய தொழில் பயிற்சி போல் இயந்திரத்தின் ஒரு பாகம் போல் ஆக்கிவிடும் வேலைக்குச் செல்லும் கணவன், மனைவி ஆகியோர் தங்கள் குழந்தைகளிடம் பேச நேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது. கணவன், மனைவி என இருவருமே சேர்ந்திருந்தால் கூட்டுக்குடும்பம் என்ற சமகாலத்தில் மூதாதையரின் வழிகாட்டல் கிடைக்க அதிக வாய்ப்புகள் இல்லை. தொலைக்காட்சிகள், தகவல் தேடும் நிகழ்ச்சிகள், மதிப்பெண் பந்தயங்களையும் தாண்டி கதைகளை காலத்திற்கு ஏற்றாற்போல, பள்ளிக்குழந்தைகளுக்கு ஏற்றாற்போல கூறும் பல கதைசொல்லிகள் தோன்றி குழந்தைகளின் மனதை நெகிழ்வாக்குகிறார்கள்; புதுமைத்திறனை விதைக்கிறார்கள்.   குறிப்பிடத்தக்க கதை சொல்லியான ஜெய்ஸ்ரீ சேதியையும் கதை கூறும் கலை அப்படித்தான் வசீகரித்தது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நூலகம் ஒன்றில் தன்னார்வலராக பணிபுரிந்து வந்த ஜெய்ஸ்ரீ கதையின் மாய வசீகரம் அனைவரையும் எளிதில் கட்டிப்போட்டுவிடுவதை கண்டார். வானொலியில் சிறிது காலம் கதை கூறுதலைத் தொடர்ந்தவர், பின் ‘ஸ்டோரி ஹார்’ எனும் கதைகூறுதலுக்கான அமைப்பைத் தொடங்கினார். ஜெய்ஸ்ரீ சேதியும், அவரது நண்பர்களும் அமைப்பின் முக்கிய இலக்காகக் கொண்டது குழந்தைகளையும், கிராம மக்களின் முன்னேற்றத்தில் பங்குகொள்ளும் தொண்டுநிறுவனங்களையும்தான். தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு கதை கூறுவதை உயிர்ப்பானதாகவும், வேடிக்கை நிரம்பியதாகவும் மாற்றினார். கதை கூறுதலை விரும்பி கற்க விரும்பும் ஆசிரியர்கள், பல்வேறு நிறுவனப் பணியாளர்கள் ஆகியோருக்கும் கதை கூறுவதற்கான பயிற்சி வகுப்புகளையும் ஜெய்ஸ்ரீ சேதி தயாரித்து நிகழ்த்துகிறார்.   கதை கூறுவதில் பதினாறு ஆண்டு கால அனுபவத்தினைக் கொண்டுள்ள இவர், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், இயற்கைப் பாதுகாப்பு, ஆண், பெண் ஆகியோருக்கான சிக்கல்கள் ஆகியவை என எதையும் கதையாக மாற்றிவிடும் அற்புதத்தை கைக்கொண்டிருக்கிறார். டெல்லி மற்றும் ஃபரிதாபாத்தில் நடைபெற்று முடிந்த கதைத்திருவிழாவில் நடனம், பாடல், நாடகம் என பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட குழந்தைகளின் குறையாத உற்சாகம் கொண்ட பங்களிப்பே ‘ஸ்டோரி ஹார்’ அமைப்பின் உழைப்பைக் கூற சான்றாக உள்ளது.   மே மாதத்தில் குர்கானில் நடந்த விழாவில் ‘’ ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர் ஐபேட் அல்லது புத்தகம் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆனால் அதைவிட உயிர்ப்பான அனுபவமாக பின்னாளில அவர்களுக்கு இருக்கும் கதை கேட்கும் பயிற்சிக்கு அழைத்துவந்து, அவர்கள் சிறிது நேரம் எங்களோடு இணைந்திருந்தால் போதும். அந்த அனுபவம் பின்னாளில் சிறந்த தகவல் தொடர்பாளராக, பேச்சாளராக மாறுவார்கள். வருங்கால தொழில்நுட்ப காலத்திற்கு இது போன்ற திறன்கள் மிக அவசியம் ’’ என்று பேசினார்.   ‘ஸ்டோரி ஹார்’ அமைப்பு குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பை தன் மேல் தொடர்ந்து தக்கவைத்திட ஆசிரியர்களுக்கும், பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. மேலும் பல தனிச்சிறப்பான வகுப்புகளையும் இவ்வமைப்பு தயாரித்து நடத்துகிறது.   அனைத்து செய்திகளையும், சிறு கருக்களையும் அற்புதமான கதையாக மாற்றிவிடும் ஜெய்ஸ்ரீ சேதி இன்றைய காலத்திற்கான தேவையான சுருங்கக் கூறுதல் என்ற தன்மையினையும் உணர்ந்திருக்கிறார். மேலும் கதைகளின் வழியே பல்வேறு தகவல்களையும், இந்தியாவின் வரலாறு குறித்த தகவல்களையும் குழந்தைகளுக்கு கூற வேண்டிய முக்கியத்துவத்தினையும் உணர்ந்து அவற்றையும் செம்மையாக செய்ய முயற்சிக்கிறோம் என்கிறார். பள்ளியில் கல்வி என்பது கட்டாயப்படுத்துவதாக இல்லாமல், பல்வேறு வாய்ப்புகளை வழங்குவதும், தன்னியல்பாக நிகழும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பவருக்கு, இந்தக் கனவு வித்துகளை ஊன்றி வளர்க்கும் முறையிலான பள்ளியைத் தொடங்கும் ஆசையும் உண்டு. ‘’இன்று எங்களது அமைப்பு மெல்ல சிறகுகளை விரித்து பறக்கத் தொடங்கியுள்ளது. நாளைக்கு என்ன நிகழ்கிறது என்பது அந்த கணத்தில் கண்டறியும் சுவாரசியமாக இருக்கட்டும் ’’ என்று பொம்மைகளோடு சிரிக்கிறார். இவரது இணையதளம்: www.Storyghar.com   நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.   2 இந்தியாவில் மக்கள் பங்களிப்புடன் இயங்கும் ஒரு மக்கள் நூலகம்   தீப்சிகா புன்ஞ் தமிழில்: அன்பரசு சண்முகம்   புஷ்பேந்திர பாண்டியாவின் வீட்டுக்குள் நுழைந்தால் கண்ணுக்கு தெரிவது நான்கு மீட்டர் உயரமுள்ள சுவரின் சிலபகுதிகளே. அறை முழுக்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தானமாகப் பெற்ற புத்தகங்கள் பெரும் குவியலாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பாண்டியா புத்தகங்களைப் படிப்பதும், அவற்றை தன் நண்பர்களுடன் பரிமாறிக் கொள்வதுமாக இருந்த காலத்தில் மக்கள் பங்கேற்புடன் ஒரு நூலகம் தொடங்கினால் என்ன என்று ஒரு சிந்தனை தோன்றியிருக்கிறது. முதலில் மும்பையிலுள்ள புத்தகப்பிரியர்களுக்காகத் தோன்றிய மக்கள் நூலகம் இன்று ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே என பல இடங்களில் தன் புத்தகச்சிறகுகளை விரித்துள்ளது. ‘‘ புத்தகங்கள் செய்தித்தாள்களைப்போல மலிவாகவும், எளிதாகவும் அனைவருக்கும் படிக்கக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். மும்பை எவ்வளவு அதிகவசதி கொண்டதாக, அலங்காரமாக தோன்றுகிறதோ அதேயளவு அதனுள் குளிர்ந்த தனிமை உறைந்து கிடக்கிறது. நிறைய பணமோ, வளர்கின்ற வணிகமோ எளிய புத்தகம் தரும் மகிழ்ச்சியை, புத்துணர்வை தர முடியாது என்பதை உணர்ந்தேன். புத்தகங்களை மக்களுக்கு படிக்கத்தருவதன் மூலம் பெரு மாநகரத்தில் வசிக்கும் மக்களின் மனதில் நிறைந்துள்ள தனிமைத்துயரைப் போக்கி நம்பிக்கையின் ஒற்றைக் கீற்றை பரிசளிக்க விரும்பினேன்’’ என்று உறுதியாகப் பேசுகிறார் முப்பத்திரெண்டு வயதான பாண்டியா. இந்த முயற்சிகளைத் தொடங்கும் முன் பைகுல்லாவிலுள்ள ராணிபாக் வனவிலங்கு காட்சி சாலையில் புத்தக ஆர்வலர்கள், மக்களுடன் பல்வேறு உரையாடல்கள், கருத்துக்களின் அடிப்படையில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்கள் நூலகத்தை கட்டமைத்து, ராணிபாக்கிலேயே நண்பர்களுக்கும், புத்தகப்பிரியர்களுக்கும் நூல்களை வாடகைக்கு தரத்தொடங்கினார். ‘’ மக்கள் தங்களிடமிருந்த நூல்களையும் நாளிதழ்களையும் கொண்டுவரத்தொடங்கினார்கள். அவர்கள் புத்தகங்களை குழப்பமில்லாமல் பார்த்து தேர்ந்தெடுக்க பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்த முயற்சித்தேன் ’’ என்று கூறும் பாண்டியா ஃபேஸ்புக், இணையதளம் என்று தொடர்ந்த சிறப்பான பரப்புரை செயல்பாடுகளின் காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் மக்கள் பங்கேற்பு நூலகம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. பாண்டியா இவ்வளவு புத்தகங்களையும் பெறும் முயற்சியும், உழைப்பும் அசாதாரணமானவை. நண்பர்கள், புத்தகக்கடைகள், உள்ளூர் ரயில் நிலையங்கள், நடைபாதைக் கடைகள், பேருந்து நிலையங்கள் என எங்கு அவரினால் போகமுடிகிறதோ அங்கெல்லாம் புத்தகங்களைத் தேடி அலைந்து வாங்கியிருக்கிறார். ‘’ நூலகத்தை தொடர்ந்து நடத்த எனது சேமிப்புகளின் பெரும்பகுதியை செலவிட்டிருக்கிறேன். இதோடு எனக்கு இதில் இணைந்த கட்டண உறுப்பினர்களும் உதவுகிறார்கள் என்றாலும் இலவச உறுப்பினர்களும் பங்கேற்று ஏற்ற இறக்கமாக இவ்விரு பிரிவினரும் இணைந்திருக்க நூலகம் மெல்ல பயணித்துக்கொண்டிருக்கிறது. நூலகத்திற்கு ஐயாயிரம் ரூபாயிற்கும் குறைவான தொகைதான் கிடைக்கிறது என்றாலும் மக்கள் தொடர்ந்து தங்களிடமுள்ள புத்தகங்களை அள்ளித்தந்து மும்பையிலுள்ள வீட்டின் மற்ற இடங்களையும் நிறைக்குமளவு தானமாக வழங்கி வருகிறார்கள். நூலகத்தில் ஒரு மாதத்திற்கு வாசகர்கள் 250 ரூபாயும், மூன்று மாதங்களுக்கு 500 ரூபாயும், ஆறு மாதங்களுக்கு 900 ரூபாயும், ஒரு ஆண்டிற்கு 1900 ரூபாயும் கட்டணமாக நிர்ணயித்து பெற்று வருகிறோம். நாளிதழ்களின் ஆண்டு சந்தாவை விட இது குறைவான தொகைதான். மற்ற பகுதியிலுள்ள மக்கள் நூலகங்களுக்கும் இது பொருந்தும் ’’ என்று கூறுபவருக்கு துப்பறியும் உளவாளிகளின் கதை மேல்தான் பிரியமாம். ஞாயிற்றுக்கிழமைகளில் பாண்டியா புத்தகங்களை உறுப்பினர்களிடமிருந்து பெறவும், புதிய நூல்களை வாங்க முயற்சித்தும் பயணிக்கிறார். ‘’ பெரிய பைகளில் முழுக்க அடைத்த நூல்களை நெருக்கடி நிறைந்த மும்பை போக்குவரத்தில் எடுத்துச்செல்வது பெரும் போராட்டம்தான் என்றாலும் புத்தகங்களின் மூலம் வாசிப்பவர் பெறும் மகிழ்ச்சியை, புத்துணர்ச்சியை, உயிர்ப்பை நினைக்கும்பொழுது என்னுடைய சிரமங்கள் பெரிதல்ல என்று உணர்வேன் ’’ என்று புன்னகை நிறைய கூறும் பாண்டியா விவகாரத்து பெற்றவர்களுக்கும், முதியோர்களுக்குமான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் இணையதளங்களை மும்பையில் உள்ளவர்களுக்காக தொடங்க உள்ளார். ‘’ டிசம்பரில் செயல்படுத்தப்படும் இந்த இணையதளங்கள் உற்சாகமற்ற, மனந்தளர்ந்த பெருமாநகர மனிதர்களின் முகத்தில் புன்னகையையும், நம்பிக்கையின் ஒரு துளியையாவது தருவதாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை ’’ என்று நம்பிக்கையின் குன்றாத ஒளியுடன் பேசி மலர்ச்சியோடு விடைதருகிறார் புஷ்பேந்திர பாண்டியா. நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 20 ஏப்ரல் 2014 3 மரபிற்கு திரும்பும் பாதையைத்தேடி... ஷிபா மொகந்தி  தமிழில்: அன்பரசு சண்முகம் தன் நெல் வயலில் நெற்கட்டைகளுக்கிடையே நிலையில்லாது தடுமாறும் நடபார சாரங்கிக்கு உதவ கைகொடுத்தால் சிறிய புன்னகையுடன் நம் உதவியை மறுதலிக்கிறார். தினமும் ஆறு கி.மீ தொலைவு நடந்து வந்து தன் இரண்டு ஏக்கர் நிலத்தை பார்வையிட்டு வேலை செய்யும் இளைஞனுக்குரிய ஆற்றல் கொண்டிருக்கும் சாரங்கியின் வயது வெறும் 81 தான் நண்பர்களே. ஓய்வு பெற்ற ஆசிரியரான சாரங்கி மற்ற தனது வயதொத்தவர்கள் போல தேநீர் பருகிக்கொண்டு செய்தித்தாள் புரட்டிக்கொண்டிருக்காமல், தனது நிலத்தில் உள்நாட்டு வகையைச் சேர்ந்த நெல்வகைகளைக் கண்டறிந்து வந்து பயிரிட்டு இயற்கை வேளாண்மை செய்துவருகிறார். கடந்த இருபதாண்டுகளாக சாரங்கி நானூற்று அறுபது உள்நாட்டு நெற்பயிர் ரகங்களைக் தேடிக் கண்டறிந்து அவற்றை தன் நிலத்தில் பயிரிட்டும் விதை நெல்வகைகளை பாதுகாத்தும் வருகிறார். புவனேஸ்வரிலிருந்து ஐம்பத்தைந்து கி.மீ தொலைவிலுள்ள தான் வாழும் நரிசோ கிராமத்திலுள்ள தன் வீட்டிலிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் பயணித்து உள்நாட்டு நெற்பயிர் வகைகளை சேகரித்து வந்து அவற்றை நிலத்தில் பயிரிட்டு பெருக்கியிருக்கிறார். ‘’ மாநில அரசு அதிக விளைச்சல் தரும் கலப்பின நெல்விதைகளை பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்தி வந்தாலும், மரபான நெற்பயிர்களைப் போல் பல்வேறு காலநிலைகளுக்கும், சூழல்களுக்கும் தாக்குப்பிடித்து கலப்பினப்பயிர்கள் நிற்பது இல்லை ‘’ என்று ‘கேடர்கவ்ரி’ எனும் வலுவான தண்டுடன் உயரமாக காற்றுக்கும் உடையாது இருக்கும் நெற்பயிரினைச்சுட்டிக் காட்டியபடி பேசுகிறார் சாரங்கி. ‘’ உள்நாட்டு ரகங்களான இந்த நெற்பயிர்களை விவசாயிகள் விளைவிக்க தொடர்ந்து அரசு ஊக்கப்படுத்தவேண்டும். விவசாயிகளில் பெரும்பாலானோர் குறைந்த வள ஆதாரங்களையே கொண்டுள்ளனர். கலப்பின பயிர்களைவிட அதிக விளைச்சலும், குறைந்த முதலீடும், எவ்வித சூழலையும் தாங்கி வளரும் தன்மையும், மண்ணுக்கேற்ற பயிர் என்பதும் இதன் சிறப்பு ’’ என்று கூறியவர் கடலி பெந்தி எனும் நெற்பயிர் ரகத்தை சுட்டிக்காட்டினார். அதன் கதிர்களில் முந்நூறுக்கும் அதிகமான நெற்கள் இருந்தன. இந்த நெற்பயிரின் மூலம் ஏக்கருக்கு பதினைந்திலிருந்து பதினேழு குவிண்டால் விளைச்சல் கிடைக்கிறது என்றும் தெரிவித்தார் சாரங்கி. தன் நண்பர் யுவ்ராஜ் ஸ்வைனுடன் இணைந்து பல்வேறு இடங்களுக்கு பயணித்து மரபான உள்நாட்டு ரகங்களைப் பெற்று வந்திருக்கிறார். இந்த இருவரும் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து ‘நைனிடால் பாஸ்மதி’, மேற்கு வங்கத்திலிருந்து ‘கோவிந்த் போகா’ எனும் நெற்பயிர் ரகங்களை பெற்று வந்திருக்கிறார். சாரங்கி எனும் ஓய்வு பெற்ற ஆசிரியர் விவசாயியாக மாறி இயற்கை விவசாயம் செய்கிறார் என்பதை விட மரபான வேளாண்மை முறைகளை காப்பாற்றும், மீட்டெடுக்கும் முயற்சி அல்லது செயல்பாடு என்றே இதனைக் கூற முடியும். ‘’ நம் இந்திய நாட்டின் சுயசார்பான பொருளாதாரத்திற்கு உகந்தது உள்நாட்டு நெற்பயிர் வகைகளே என்றாலும், அரசு இதனை ஊக்கப்படுத்துவதில் ஏனோ பெரிய ஆர்வம் காட்டுவதில்லை ’’ என்று கவலையோடு கூறுகிறார் சாரங்கி. வேதிப்பொருட்களை இட்டு கலப்பின அதிக விளைச்சல் தரும் என்று கூறப்படும் கலப்பின நெற்பயிர் ரகங்களை பயிரிட்டால் 20000 ரூபாயிலிருந்து 30000 ரூபாய் வரை செலவாகிறது. இதே நாட்டு ரக நெற்பயிர்களுக்கு 8000 ரூபாயிலிருந்து 9000 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது. 1992 ஆம் ஆண்டு சாரங்கி தன் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றைப் பயன்படுத்தி நல்ல வருமானம் பெற்றிருக்கிறார். 1996 ஆம் ஆண்டு நிலத்தில் பெருகிய பூச்சிகளின் தாக்குதலை சமாளிக்க பூச்சிக்கொல்லியினை தன் நிலத்தில் தெளித்து இருக்கிறார். ‘’ பூச்சிக்கொல்லியினை அடித்த மறுநாள் பல்வேறு எண்ணிக்கையில் பாம்புகள், தவளைகள், மண்புழுக்கள், மீன் என பலவும் இறந்துகிடந்தன. கடும் மன உளைச்சலுக்கு உள்ளானவனாக அன்றிலிருந்து எந்த பூச்சிக்கொல்லிகளையும் நிலத்தில் பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுத்தேன் ‘’ என்கிறார் சாரங்கி. சாரங்கி தான் சேகரித்த பல்வேறு நெற்பயிர் ரகங்களை ஆவணப்படுத்தியும், மற்ற விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக வைத்திருக்கிறார். அரசின் ஆதரவு கிடைக்காவிட்டாலும், பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவிகளும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. சட்டசபை அங்கத்தினரான சசி பி பெஹ்ரா வுடன் இணைந்து ஆராய்ச்சி மையம் ஒன்றினையும், விதை வங்கியையும் கிராமத்தின் அருகிலேயே அமைத்து வருகின்றார் சாரங்கி. நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 7 செப்டம்பர் 2014 4 மந்திரக்கோலும் தொப்பியும் நோய் தீர்க்கிறது சாலேட் ஜிம்மி தமிழில்: அன்பரசு சண்முகம்   சில ஆண்டுகளுக்கு முன் கேரளா பெண்கள் கல்லூரியில் தன் நிகழ்ச்சியை முடித்திருந்த மந்திரக்காரர் நாத்தை மூன்று மாணவர்கள் சந்தித்து பேசும்போது அவர்களின் வெளிப்படையான உரையாடலினால் அவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி அதற்கு அடிமையானவர்கள் என்று அவர் அறிந்துகொள்கிறார். அவர்கள் பேசுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு நாத் தன் நிகழ்ச்சி வழியே போதைப்பொருட்களினால் ஏற்படும் கொடும் விளைவுகளை அவர்கள் முன் காட்சிப்படுத்தியிருந்தார். அது அந்த மாணவர்களின் மனதில் பெரும் பயத்தை ஏற்படுத்தி அழியாது பதிந்துபோயிருந்தது. அதற்கு பின்தான் மேற்கூறிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின்னால் அவர்கள் போதைப்பொருட்களை தூக்கியெறிந்து தமது உடல்நலத்தையும், மனநலத்தையும் பாதுகாத்துக்கொள்ள முயற்சித்தால் நாத் அதனால் பெரிய ஆச்சர்யத்திற்கு உட்பட மாட்டார். தன் முப்பத்தைந்து ஆண்டு கால பணியில் இதுபோன்று பலரின் வாழ்க்கையினை நலமாக்கி தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருக்கும் மற்ற மந்திரக்காரர்களிடமிருந்து வேறுபடுவது தன் நிகழ்ச்சிகளை வெறும் பொழுதுபோக்குக்காக நடத்தாமல் சமூகத்தின் கேடுகளைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற தனித்தன்மையான அர்ப்பணிப்புஉணர்வை கொண்டிருப்பதனால்தான். நாம் அவரைப்பற்றி எழுதுவதற்கும் அது ஒன்றேதான் காரணம். போதைப்பொருட்கள், மதுபானங்கள், எய்ட்ஸ் ஆகியவற்றுக்கு எதிராக பல ஆண்டுகளாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நிறுவனங்களான கேரளா மாநில எய்ட்ஸ் தடுப்புக் கழகம், தேசிய ஊரக உடல்நலத்திட்டம், மாநில புற்றுநோய் மையம், மாநில சுகாதாரத்துறை ஆகியவற்றுக்காக நடத்தி தந்திருக்கிறார் மந்திரக்காரர் நாத். ‘’ நான் எனது நிகழ்ச்சிகளின் மூலம் யாருக்கும் அறிவுரை கூறுவதில்லை. அதன் விளைவுகளை மட்டும் காட்சிப்படுத்த முயற்சிக்கிறேன். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறியாமையைக் களைய இது சிறந்த வழியாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்குப்பிறகும் பெரிய மாற்றங்கள் இங்கு ஏற்படவில்லை. கலாச்சாரம்தான் மக்களின் பழக்கவழக்கங்களின் மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதில் குழந்தைகள்தான் அடித்துச்செல்லப்படுகிறார்கள். அதனால் குழந்தைகளின் மேல்தான் இனி என் முழுகவனமும் இருக்கும் ‘’ என்று கூறியவர் தன் தொப்பியின் உட்புறமிருந்து பல புகையிலைப் பாக்கெட்டுகளை தன் மந்திரக்கோலால் எடுத்துக்காட்டி அதனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான விளைவுகளை ஒவ்வொன்றாக விளக்குகிறார் நாத். புகையிலை எவ்வாறு உடலின் உள்ளுறுப்புகளை சிதைத்து உடல் மனநலன்களையும், குடும்ப உறவுகளையும் அழிக்கிறது என்பதைக்குறித்து சிந்திக்க வைக்க முயற்சிக்கிறேன். இதற்காக குழந்தைகளின் கற்பனைத்திறன் வடிவத்தை பயன்படுத்துகிறேன் என்கிறவர் கேரளா மாநில எய்ட்ஸ் தடுப்புக் கழகமும், ஹிந்துஸ்தான் லேடக்ஸ் நிறுவனமும் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி பற்றி ‘’ எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பை மக்களிடம் பெற்றதன் சாட்சியாக ஆணுறைகளை வாங்க மக்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். கல்வியில்லாத அறியாமைதான் மக்களை பெரும் நெருக்கடியில் தள்ளுகிறது ‘’ என்ற நாத் கேரளா மாநில எய்ட்ஸ் தடுப்புக்கழகத்திடமிருந்து அந்நிகழ்ச்சியின் வெற்றிக்குப்பிறகு ஐந்நூறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார். பல இடங்களுக்கு மக்களோடு பயணித்து எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். மதுபானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பத்தாயிரம் நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தியிருக்கிறார். ‘’ பலரும் கேரளாவில் மதுபானங்களால் கடும் பாதிப்பிற்கு ஆட்பட்டிருந்தனர். இன்று வரையும் மது அங்கே விலக்கப்படவில்லை. இந்த நிகழ்வுகள் என்னை கடுமையாக பாதித்தன. மதுவிற்கு எதிரான நிகழ்ச்சிகளை நான் எனது சுயநலன் பாராது நடத்த தொடங்கினேன். மதுவருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துகளை திட்டமிட்டே உருவாக்குகிறோம் ’’ என்று மதுவின் அபாயங்களோடு சாலைபாதுகாப்பு பற்றியும் அக்கறையோடு விளக்குகிறார் மந்திரக்காரர் நாத். முன்பு சாலையில் பேருந்தின் ஒருபக்கத்தை மேடைபோலாக்கி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், பின் போக்குவரத்து நெருக்கடியினால் அதனை தொடரமுடியாமல் போகிறது. இந்த மந்திரக்காரரின் பணி தொடங்கியது 1980 ஆண்டிலிருந்துதான். தன் மந்திரக்கோலை சுழற்றி மக்களிடம் இருந்த மூடநம்பிக்கைகளை களைந்து அறிவியலை அவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க முயற்சித்தார். ‘’ எனது நிகழ்ச்சியின் மூலமாக நெருப்பில் நடப்பது, உடலில் துளையிட்டு அலகு குத்துவது போன்ற நிகழ்ச்சிகளை பக்தர்கள் தம் நேர்மை அல்லது உண்மை பக்தியை உணர்த்த செய்தாலும் அதை தவறு என்று உணர்த்த முயற்சித்து வெற்றி பெற்றேன் ‘’ என்று கூறும் நாத்திற்கு இருக்கும் வருத்தம் முன்பு போல அரசு சமூகக்கேடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை என்பதுதான். தற்போது தனியார் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியோர்களின் ஆதரவில்தான் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார் நாத். மந்திரக்காரர் நாத்தின் அடுத்த நிகழ்ச்சி எதை மையமாக வைத்து இருக்கும் என்று கேட்டபோது, என் சட்டைப்பையிலிருந்த கைபேசி ஒளிர்ந்து அழைக்க, பேசிவிட்டு அவர் முகம் பார்க்க, ‘’ இளைஞர்களிடம் தற்போது பெரிதும் பரவிவரும் கைபேசி பற்றிய கருதான் அடுத்த நிகழ்ச்சி மையப்படுத்தும் ’’ என்று புன்னகை மாறாமல் விடைதருகிறார் தனித்துவமான மந்திரக்காரர் நாத். நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 20 ஏப்ரல் 2014 5 ஒடிசாவில் வளர்ந்து வரும் தன்னம்பிக்கை தலைவி எஸ். என் அக்ராகமி தமிழில்: அன்பரசு சண்முகம் ‘’ நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த நவதானிய மாவு தயாரிக்கும் தொழிற்சாலை அருகே மூன்று வயதான பெண் குழந்தை ஒன்று தாய், தந்தை என யாருமில்லாமல் நின்றுகொண்டிருந்தாள். அவளை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு வருகிறோம். அங்கு அவள் பாதுகாப்பாக வளருவாள் ’’ கூறும் பிரேம நளினி ஷாகு ஒடிசாவிலுள்ள பன்ச்கான் கீழுள்ள டைஜிரியா கட்டக் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். ஷாகு தொழிற்சாலைக்கு வந்த பிறகு சக தொழிலாள பெண்கள் அவரோடு ஒன்றிணைந்து சூழ்ந்து நின்று பணிபுரிகிறார்கள். நிலக்கடலை, துவரை, பாசிப்பயறு, என பல்வேறு தானியங்களை தூசுகளை சலித்து எடுத்துவிட்டு, அதனை மாவாக அரைக்க கிரைண்டர் பகுதிக்கு எடுத்துச்செல்கிறார்கள். அப்போது, இருபது வயது மதிக்கும்படியான பெண் ஒருவள் கதவின் அருகில் எழுந்து நிற்க, ஷாகு அவரை சைகை காட்டி அறையின் உள்ளே அழைத்து குடும்ப விவகாரங்களை கேட்டறிகிறார். தன் கணவனின் பொறுப்பில்லாத அலட்சியத்தன்மை குறித்து அப்பெண் ஷாகுவிடம் முறையிட, அதற்கான தீர்வுகளைக் கூறி, கணவன் மனைவி என இருவரும் சமாதானமாக வாழும்படி அறிவுரை கூறி அனுப்பிவைக்கிறார். நாற்பத்தெட்டு வயதாகும் ஷாகுவுக்கு இது வழக்கமான நிகழ்வுகளே. காலையில் அதிகாலையில் எழுந்து, பின்னிரவில் தூங்கப்போகும் ஷாகு நான்கு உற்பத்திப்பொருட்களுக்கான குழுக்களை நிர்வகித்துவருகிறார். நவதானிய சத்துமாவு தயாரிக்கும் குழு, பெண்களுக்கான நாப்கின் தயாரிக்கும் குழு, அகர்பத்தி தயாரிக்கும் இரு குழுக்கள் என்பதோடு தங்கள் கிராமத்தில் நிலவும் கேடுகளைக் களையும் முயற்சிகளையும் பெண்களின் ஆதரவோடு செய்துவருகிறார். ஒற்றைப்பெண்மணியாக முயன்று சுய உதவிக்குழுக்களை உருவாக்கி இன்று அதில் ஆறாயிரம் பெண்களை உறுப்பினராக சேர்த்து அவர்களின் வாழ்வை வளமாக்கியிருக்கிறார். ஷாகு திருமணத்தம்பதிகளிடையே நிகழும் பூசல்கள், குடும்பத்தில் நிகழும் கருத்துவேறுபாடுகள், சண்டைகள், வாக்குவாதங்கள் என இருநூறுக்கும் மேலான பிரச்சனைகளை தீர்வுகளை கண்டறிந்து உதவியிருக்கிறார். மதுபானம் மற்றும் சட்டவிரோதமான கள்ளச்சாராயம் ஆகிய சமூகக் கேடுகளுக்கான சமரசமற்ற போராட்டத்திற்கு ஷாகுவிற்கு தன் கிராமத்து மக்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. கிராமத்திற்கான சுத்தம், சுகாதாரம், ஆரோக்கிய வாழ்வு ஆகியவற்றை ஷாகுவின் தலைமையிலான பெண்கள் குழுவினர் பொறுப்பேற்று பராமரித்து வருகிறார்கள். சமுதாயப்பணிகளுக்கான தொடக்கம் ஷாகு 2000 ஆம் ஆண்டு தன் குடும்பத்தின் பாதுகாப்பு வளையத்தை தாண்டி வந்த பிறகு தொடங்குகிறது. மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களினால் தொடங்கப்பட்ட சக்தி எனும் திட்டத்தில் ஷாகு தன்னோடு பத்து பெண்களை சேர்த்து சுய உதவிக்குழு ஒன்றினைத்தொடங்கி நிலக்கடலையின் மேலோடு நீக்கும் பணியை தொழிலாக செய்து, தோல்வியடைகிறார். ஆனால் ஷாகுவின் தலைமைப்பண்பும், குழுவினரின் திறமையும் தொடர்ந்து முன்னோக்கி செல்ல உதவுகிறது. பெண்களை ஒருங்கிணைந்த குழுவாக மாற்றும்போது, அவர்களின் குடும்பத்திலுள்ள பிரச்சனைகளையும் தீர்க்க முயற்சிக்கிறார் . 2005 ஆம் ஆண்டு ஜெமேதிபூர் கிராம் பஞ்சாயத் மகிளா சமிதி எனும் அமைப்பினை ஐநூறு உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கினார். இவர்கள் அனைவரும் கிராமத்தின் சுற்றுச்சூழல், சுகாதாரம் பற்றி மட்டுமல்லாமல் மதுபானங்கள், கள்ளச்சாராயம் உள்ளிட்டவற்றுக்கும் எதிராக தொடர்ந்து இயங்கிவருகிறார்கள். ‘’ மதுபானக்கடைகள் மற்றும் கள்ளச்சாராய தொழிற்சாலைகளை அழிப்பதும், மதுவருந்தும் மக்களுக்கு (அவர்கள் தனது அப்பா, கணவன், அண்ணன், தம்பி, என யாராக இருந்தாலும்) எதிராக திரண்டெழுந்து தண்டிப்பதால் மதுவிற்பனை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது ‘’ என்று பெருமையுடனும் உறுதியுடனும் பேசுகிறார் ஷாகு. ஷாகு ஒடிஷாவில் முதல் உற்பத்திப்பொருள் குழுவாக இருக்கும் ஜோதி மகிளா சங்கத்தினை தொடங்கி அதில் ஐந்து சுய உதவிக்குழுவினைச் சேர்ந்த பெண்கள் ஐம்பத்து நான்கு பேரை ஈடுபடுத்தி செயல்படுகிறார். இந்த குழுவானது உடனடி உணவாக தயாரிக்கப்படும் நவதானிய சத்துமாவினை பெண்கள் பள்ளி, அங்கன்வாடி என அரசின் திட்டங்களின் கீழ் விநியோகம் செய்கின்றனர். நானூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ஷாகுவின் தலைமையில் நேரடியாக இணைந்து அகர்பத்தி உற்பத்தி செய்கின்றனர். மற்ற குழுவினருக்கும் செய்யும் பணி குறித்த தெளிவான குறிப்புகளைக்கூறி வழிகாட்டுகிறார் ஷாகு. சுய உதவிக்குழுவிலுள்ள இப்பெண்கள் மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். எங்கள் பகுதியிலுள்ள அனைத்து பெண்களுக்கும் தற்சார்பான பொருளாதாரத்தை உருவாக்கி சமூகத்தில் அதிகாரத்தை பெறும்படி ஒன்றிணைக்க, கட்டமைக்க ஒன்றிணைந்து முயற்சிக்கிறோம்’’ என்று தன்னடக்கமாக பேசி புன்னகைக்கிறார் தன்னம்பிக்கைத் தலைவி ஷாகு. நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 6 புலிகள் சூழ்ந்த வனம் மீரா பரத்வாஜ் தமிழில்: அன்பரசு சண்முகம் கர்நாடகாவில் உள்ள பத்ரா பாதுகாக்கப்பட்ட புலிகள் பகுதியை உருவாக்கியதில் வன சூழலியலாளரான டி.வி கிரிஷ் முக்கியமான பங்காற்றியுள்ளார். 2001 – 2002 ஆகிய ஆண்டுகளில் உருவான புலிகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியினை உருவாக்க கிரிஷ் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகா மாநிலத்தின் சிக்மகளூர் அருகிலுள்ள பதிமூன்று கிராமங்களில் வாழும் நானூற்று அறுபத்து நான்கு குடும்பங்களின் மக்களிடமும், உண்மையை விளக்கிப் புரிய வைத்து இதனை சாதித்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தொடங்கியது 1993 ஆம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பிற்கான இடமாக பத்ரா பகுதியை மாற்றும் விதமாக மூங்கில்மரங்களை அகற்ற முயலும்போது, கிராம மக்களுக்கும் பல முரண்பாடுகள் ஏற்பட்டன. மனிதநேயத்துடன் அந்த பிரச்சனையை அணுக முயன்றார் கிரிஷ். ‘’ கிராம மக்களுக்கான மறு வாழ்வு குடியமர்த்துதல் செயல்பாடுகளைச் செய்ய சில ஆண்டுகளை ஒதுக்கினேன். எண்பது விழுக்காடு கிராம மக்கள் வறுமையில் உழலும் மக்கள் என்பதால், நான் இங்கு செய்யப்போகும் செயல்பாடுகளை எடுத்துக் கூறி, அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு அவற்றைத் தீர்க்க முயற்சித்தேன் ’’ என்று மரத்தின் வேர்களைப் பற்றியபடி தீர்க்கமாக பேசுகிறார். பத்ரா திட்டம் முதலில் 1982 – 1983 ஆகிய ஆண்டுகளில் திட்டமிட்டாலும் , 1992 ஆம் ஆண்டு தொடர்ந்தாற்போல் வந்த அரசு திட்டத்தில் தங்களின் பங்களிப்பை செய்தது. மத்திய அரசு திட்டத்திற்கான எழுநூற்றைம்பது ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அனுமதி கொடுத்தாலும், மாநில அரசு மக்களின் மறு குடியமர்த்தல் பணிகளுக்காக சிறிது காலம் அவகாசம் கேட்டது. மக்களிடம் எங்களது திட்டங்களை தெளிவாக எடுத்துக்கூறி, கண்ணியமான எங்களது நடவடிக்கையால் மக்கள் கொடுத்த ஒத்துழைப்பினால் 2000 – 2001 ஆண்டிலிருந்து அவர்களை வேறு இடத்திற்கு குடியமர்த்த தொடங்கினோம். இது மேலும் ஒரு ஆண்டு காலம் நீடித்தது. கிரிஷ் இன்றுவரை குடியமர்த்தப்பட்ட குடும்பங்களின் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்த்து, அவர்களை அக்கறையுடன் கவனித்து வருகிறார். பத்ரா பாதுகாக்கப்பட்ட புலிகளின் பகுதியான ஐம்பத்தி மூன்று கி.மீ நீண்டிருக்கும் பகுதியில் கால்நடை மந்தைகளோ, கிராமங்களோ, தச்சு வேலைக்கான மரம் வெட்டுதலோ இல்லாமல், பசுமையாக இருக்கும் இப்பகுதியை ஒருவர் கடந்து செல்லும்போது, தன் மனதில் உள்ளே சுனை போல பெருகியோடும் உற்சாக பரவச இரைச்சல்களை தடுக்கவே முடியாது. இருபதிற்கும் மேற்பட்ட புலிகளைக் கொண்டிருக்கும் இப்பகுதியான வனத்தில் யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் மற்றும் பிற உயிரினங்களும் வாழ்கின்றன. கிரிஷின் இயற்கை மீதான நேசம் தொடங்கியது அவரின் வீட்டிலிருந்துதான். மாவட்டம் முழுவதும் அழகாய் வனம் போல சூழ்ந்திருக்கும் காபித்தோட்டங்களில் நோயுற்று அல்லது காயமுற்று கிடக்கும் விலங்குகளை காப்பாற்றி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். ‘’ சுதந்திரமாக இருக்கும் விலங்குகளை அவை காயமுற்றோ, நோயுற்றோ இருந்தால் அவற்றைப் பேணிப் பாதுகாத்து அவற்றை வனத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவோம். இது போன்ற செயல்பாடுகள்தான் என் இந்நாளைய இயற்கை நேயத்தின் முதற்படியாக அமைந்தது. எனது பனிரெண்டாவது வயதில் பெரிய விலங்குகளைக் காண்பதற்காக பத்ரா காட்டினில் நுழைந்தேன் ‘’ நினைவுகளின் சிலிர்ப்பில் முகம் மலர்கிறார். 1970 களின் முற்பகுதியில் வனங்களில் வேட்டையாடுவது பெரும் மன உளைச்சலை கிரிஷிற்கு ஏற்படுத்தியது. ‘’ நானும் என் நண்பர்களும் இணைந்து இயற்கையினை பாதுகாக்க அமைப்பு ஒன்றினை உருவாக்கினோம். அது இன்றைய காலத்தில் பழமையான அமைப்புகளில் ஒன்றாக இருக்கும். பள்ளி முடியும் வரை சைக்கிள்தான் எங்களது வாகனமாக இருந்தது. கிடைக்கும் நேரங்களிலெல்லாம் வனத்தினுள் சென்று பறவைகளை கவனித்துக்கொண்டு இருப்பதுதான் எங்களது வேலையாக இருந்தது. பின் கல்லூரிகளின் போது மோட்டார் சைக்கிள் கிடைத்ததால், பல இடங்களுக்கும் சென்று இயற்கையைப் புரிந்து கொள்ள முயற்சித்தோம். அதன் மூலம் அதற்கு எதிரான பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்க்க முயற்சித்தோம் ‘’ என்கிறார். 1980 ல் சூழலியலாளர்களான உலாஸ்காரந்த் மற்றும் எம். கே சின்னப்பா ஆகியோரை நாககோலில் சந்தித்தது அவரது வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. ‘’ முழு உலகத்தையும் காப்பாற்ற முடியும் என்ற என் அதீத கற்பனையை உலாஸ் உடைத்தெறிந்து குறிப்பிட்ட ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு இயங்குமாறு கூறினார். சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட அவரின் பங்கு என் வாழ்வில் அதிகம். முத்தோடி வனப்பகுதியிலுள்ள பிரச்சனைகளை அதன் பின்னர் கவனிக்கத் தொடங்கினேன். நான் பிறந்த மற்றும் நான் வாழ்கின்ற அடிப்படை இடமான அதன் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது; அதன் காரணமானவற்றை தீர்க்க முயற்சித்தேன் ‘’ என்கிறவருக்கு சூழ்நிலைகள் மிக எளிதாக அமையவில்லை. சிக்மகளூர் அருகிலுள்ள பத்ரா – குத்ரேமுக் வனவெளியில் இரக்கமற்ற வணிகர்களால் உருவாக்கப்பட இருந்த சுரங்கம், அணைகள், கேளிக்கைவிடுதிகள் மற்றும் இதர வணிகத் திட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து மக்களைத் திரட்டி இவரும் சூழலியலாளர்களும் நடத்திய போராட்டங்கள் மற்றும் வனப்பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்தக்கோரிய நீதிமன்ற போராட்டங்களால் அவை கைவிடப்பட்டுள்ளன. கிரிஷின் அர்ப்பணிப்பான சேவைக்கு அங்கீகாரமாக 1998 ல் வன பாதுகாப்பு சங்கத்தின் சேவை விருதும், 2001 ல் கர்நாடகா ராஜ்யோட்சவா விருதும், 2002 ல் டைகர் கோல்டு விருதும் கிடைத்துள்ளன. ஸ்காட்லாந்து நாட்டின் ராயல் வங்கி புவிநாயகர்கள் 2013 என்ற விருதினை புலிகளின் பாதுகாப்பில் கிரிஷின் பங்களிப்பிற்காக வழங்கி கௌரவித்தது. ‘’ அங்கீகாரத்திற்காக என்று எந்த செயலையும் செய்யவில்லை. அதை விரும்பவும், அதைப்பிடித்துக்கொண்டு இருக்கவும் இல்லை. இந்த விருதுகள் வனப்பாதுகாப்பிற்கான விழிப்புணர்ச்சியை அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன் ‘’ என்று தெளிவாக மெலிதாக பேசுகிறார். தன்னடக்கமாக மெல்லியகுரலில் பேசும் இந்த சூழலியலாளரின் கடும் முயற்சியால்தான் பத்ரா மற்றும் சுற்றியுள்ள மேற்குமலைத்தொடர்கள் உட்பட்டவை பாதுகாக்கப்படுகின்றன. பாபாபுதான் கிரி மலைகளில் வணிகச்சுற்றுலா மற்றும் காற்றாலைகள் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கிரிஜா சங்கர், சதாக்சாரி ஆகிய இயற்கை சூழலியலாளர்களோடு சேர்ந்து சில அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் மூலமாக வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருவதோடு இளைஞர்களுக்கென பயிற்சி வகுப்புகள், உரைகள், நிகழ்வுகள் ஆகியவற்றையும் தயாரித்து நிகழ்த்துகிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வனப்பாதுகாப்பு குறித்து கற்பித்தும், பயிற்சி அளித்தும் தன் வழியில் தொடர்ந்து பயணிப்பவர் இந்த அற உணர்வை நேச இதயத்தை மெல்ல காற்றில் ஆடும் மரத்தின் இலைகள் அசைவதை, அமர்ந்து கவனிப்பதன் மூலம் பெற்றிருக்கக் கூடும். நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 7 பெண்களின் கௌரவத்திற்காகத்தான் உழைக்கிறேன் எஸ்எஸ் தமிழில்: அன்பரசு சண்முகம்   ஸ்வப்னில் சதுர்வேதி தலைமை ஏற்று நடத்தும் சமக்ரா கழிவறைப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சூழல் அறிவியல் மற்றும் பகுப்பு வடிவமைப்பு முறையில் கழிவறைகளை நகரில் வாழும் ஏழை மக்களுக்காக, பயன்தரும் விதத்தில் கட்டணம் குறைவாக அமைத்துத் தருகிறார். இந்தப்பணியை முன் வந்து செய்வதற்கு ஒரே காரணம் பெண்களின் கௌரவத்தைக் காக்கவேண்டும் என்கிற விருப்பமும், கடமை உணர்வும்தான் காரணம். ஒரு பெண்குழந்தைக்கு தந்தையாக நான் அவளின் எதிர்காலத்திற்கு பொறுப்பாகிறேன். அதை செம்மையாக கட்டமைக்க முயற்சிக்கிறேன் என்று வார்த்தைகள் கோர்த்து நெஞ்சிற்கு நெருக்கமாக உரையாடுகிறார் ஸ்வப்னில் சதுர்வேதி. சமக்ரா நிறுவனத்தைத் தொடங்கும் முன் சதுர்வேதி கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்தில் அடுத்த தலைமுறை வாகனங்களுக்கான டெலிமேட்டிக்ஸ் மற்றும் நேவிகேஷன் இயக்கம் போன்ற தொழில்நுட்பங்களை வடிவமைக்கும் பணியை செய்து வந்தார். 2001 ஆம் ஆண்டு சதுர்வேதி அமெரிக்கா கிளம்பிச் சென்று,தன் படிப்பை முடித்தார். உடனே மென்பொருள் வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்தார். பின் திருமணம் முடிந்து குழந்தை பிறந்திருந்தபோது, 2007 ல் தன் பெற்றோர்களைப் பார்க்க பிலாய் வரும்போது, மக்கள் அருவெறுக்கத்தக்க, மோசமான தூய்மையற்ற சூழலில் வாழும் அவலத்தைப் பார்த்து பல கேள்விகள் பிறந்திருக்கிறது சதுர்வேதிக்கு. பின் அமெரிக்கா திரும்பி தன் வேலையை விட்டு விலகி, நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் சுகாதார வசதி மற்றும் வடிவமைப்பு குறித்த படிப்பை படித்துவிட்டு, 2011 ல் இந்தியா திரும்பியதும், சமக்ரா அமைப்பை தொடங்கிவிட்டார். ‘’ நம்மால் பேஸ்புக் இல்லாமலோ, ஸ்மார்ட் போன்கள் இல்லாமலோ, வாழமுடியும். ஆனால் பிற மனிதர்களுக்காக துடிக்கும் இதயங்களும், கரங்களும், அதில் நிறைந்த பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் நம் சமூகமே இயங்க முடியாது ‘’ என்று தீர்க்கமாக பேசி முடித்து புன்னகையுடன் விடைகொடுக்கும் ஸ்வப்னில் சதுர்வேதியிடம் நம்பிக்கையின் ஒளி வசீகரம் குன்றாமல் ஒளிருகிறது. சமூகம் பல தடைகளைத் தாண்டி இயங்க உந்து சக்தியே அதுதானே! நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 8 தெருவில் நிகழும் களிப்பின் நடனங்கள் செவ்லின் செபாஸ்டியன் தமிழில்: அன்பரசு சண்முகம் 2012 ஆம் ஆண்டு மே மாதம் குளோபல் விஷன் இன்டர்நேஷனல் அமைப்பைச்சேர்ந்த தன் நண்பர்களோடு கொச்சிக்கு அருகேயுள்ள ஸ்ரீதர்ம பரிபாலனை யோகம் சென்ட்ரல் பள்ளியில் தன்னார்வ குழுவாக பணிபுரிய முடிவெடுக்கிறார் சிகாகோவைச் சேர்ந்த புகைப்படக்காரரான வில்லியம் ஜெரார்டு. ‘’ பெரிதும் பதட்டம் கொண்டிருந்த சூழல் அது. குழந்தைகள் எங்களை எப்படி புரிந்துகொள்வார்கள் என்பதும், அவர்களுக்கு கற்றுத்தரும் அளவு எனக்குள் விஷயங்கள் முழுமையாக இருந்ததா என்றே நான் சந்தேகம் கொண்டிருந்தேன் ‘’ என்கிறார் ஜெரார்டு. ஜெரார்டின் அறை நீண்ட நடைபாதையின் கடைசியில் உள்ளது. பல வகுப்பறைகள் ஒரு புறம் அமைந்துள்ளன. பள்ளிக்குச் சென்ற முதல் நாளை நினைவு கூர்கிறார் ஜெரார்டு. பள்ளி மாணவர்கள் ஜெரார்டை வரவேற்று, அவரது கைகளைத் தொட்டிருக்கின்றனர். ‘’அற்புதமான பரவசம் கிளர்ந்த கணம் அது’’ என்று நெகிழும் அந்த பள்ளியில் மூன்று மாதங்கள் தங்கி கணக்கில்லாத பல படங்களை எடுத்திருக்கிறார். அதில் பல இளஞ்சிறுமிகள் பள்ளியின் முற்றத்தில் நிற்பது, பிரார்த்தனைக் கூட்டத்தில் கைகூப்பி தொழுதவாறு நிற்பது என படங்களைக் குறிப்பிடலாம். வரிசையில் கைகளை இறுக பற்றி கண்களை மூடி நிற்கும் ஒரு படத்தைக் காட்டி ‘’ இறைமையின் முடிவுறாத இழையில் தன்னை பிணைத்துக்கொண்டுள்ள இச்சிறுமியின் முகம் எனக்கு மிகப்பிடித்திருந்தது ’’ என்று தான் எடுத்த புகைப்படத்தின் சூழலைக் கூறுகிறார். பள்ளிக்கூடத்தின் முன்னால் குழந்தைகள் நிற்பது, காற்றில் புழுதி பறக்க மைதானத்தில் விளையாடுவது, ஆசிரியரின் பின்னே குழந்தைகள் நிற்பது என பல புகைப்படங்களும் ஏதோ உணர்வு ஒன்றை பார்வையாளருக்கு கடத்துகிறது. வில்லியம் ஜெரார்டு கொச்சியின் துறைமுகப்பகுதியில் உள்ள பாஸ்டியன் தெருவில் உள்ள சுவர் ஒன்றில் தான் படம்பிடித்த பள்ளி குழந்தைகளின் புகைப்படங்களை மரச்சட்டமிட்டு மக்களின் பார்வைக்காக மாட்டியிருக்கிறார். புகைப்படங்களைக் காட்சிப்படுத்த கவனமாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாக கூறியவர், பல கிளைகளைக் கொண்டுள்ள மரத்தினைக் காட்டி ‘’இந்த மரங்கள்தான் கண்காட்சியின் தாய்மடி போன்றது மிகவும் உயிர்ப்பான, தன்னியல்பான அழகைக் கொண்டுள்ளது இம்மரம். நான் பிறந்த சிகாகோவுக்கு அழகுண்டு என்றாலும், நாம் உருவாக்கிய ஒன்றுக்கு தன்னியல்பாக உருவாகும் அழகு இல்லை. இந்தியாவில் வளரும் மரங்கள் இயல்பான மலர்ச்சி கொண்டு உள்ளன. ஓவியங்களுக்கு இயற்கையான சூழல் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்பவருக்கு இன்னொரு உன்னத இலக்கும் உண்டு. ‘’ கலை என்பதை ஓவிய அரங்கிலோ, அல்லது அருங்காட்சியத்திலோ பூட்டி வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நான் ஆதரிக்கமாட்டேன். தெருக்களில் அவை மக்களின் முன்பாகவே அவை வெளிப்பட, காட்சிபடுத்த வேண்டும் என்று விரும்புகிறேன் ‘’ என்கிறவர் ‘’ தோராயமாக 250 மக்கள் எனது ஓவியக்கண்காட்சியைக் காண்கிறார்கள் தினமும். ஆனால் சிகாகோவில் ஓவியக்கண்காட்சியில் மாதம் முழுவதும் 90 பேர்தான் அதனைப் பார்வையிட வருவார்கள் ‘’ என்று வெளிப்படையாக பேசும் ஜெரார்டு பயன்படுத்தும் கேமிரா கெனான் டி 3000 ஆகும். இதனை இயக்கும் அனைத்து நுட்பங்களையும் தானாகவே முயன்று கற்றுக்கொண்டு படமெடுக்கத் தொடங்கியவர் ஆவார். ‘’ லியோ டால்ஸ்டாயின் பார்வைக்கோணத்தில் நான் கலையை அணுகுகிறேன். டால்ஸ்டாய் கலையினை பிறரை உணரும் அனுபவிக்க வைக்கும் ஒன்றாக கருதினார். அதனை செயல்படுத்த முயற்சித்தார். நான் என் புகைப்படங்களில் கூறவிரும்புவதும், வெளிப்படுத்துவதும் இந்த கோணத்தையே என்ற நம்புகிறேன். புகைப்படங்களின் வழியே இதனைக் காண்பவர்கள் தங்கள் ஆன்மாவில் மற்றொரு உயிரை, ஆன்மாவினை உணரச்செய்ய முடியும் என்று நினைக்கிறேன். அதனை சாத்தியப்படுத்த முயல்வதே எனது புகைப்படங்கள் என்று கூறி புன்னகைக்கிறார் வில்லியம் ஜெரார்டு. நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 9 விபத்துகளைத்தடுக்க ஒருங்கிணைந்த அரசு துறைகளின் முயற்சி தேவை சம்ஹதிமொஹபத்ரா தமிழில்: ஹன்சா   ப்யூஷ் திவாரி சேவ்லைப் எனும் அமைப்பு மூலமாக சாலைகளில் நடைபெறும் விபத்துகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கவும் முயற்சித்து வருகிறார். தன் தம்பி வாகனம் மோதி துரதிர்ஷ்டவசமாக எந்த முதலுதவியும் கிடைக்காமல் இறந்துபோன செய்திதான் ப்யூஷ்திவாரியை தட்டி எழுப்பியது. மாநிலத்தில் பெரும் போதாமையாக, பற்றாக்குறையாக இருந்த முதலுதவி சிகிச்சை முறைகள் தான் திவாரிக்கு தான் செயல்படவேண்டிய திசை, நோக்கம் குறித்து புரியவைக்க உதவியது. ‘’என் தம்பிக்கு பதினாறு வயதுதான் இருக்கும். ரத்தம் சொட்ட கீழே கிடந்தவனுக்கு முதலுதவி செய்யக்கூட யாரும் பக்கத்தில் வரவில்லை. அவனைக் காப்பாற்றும் உதவி வேண்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை வற்புறுத்தி அழைக்கவேண்டி இருந்தது.’’ என்று கூறும் திவாரி அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச்சந்தையில் பங்குகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தபின் 2008 ல் தன் தம்பியின் மரணத்திற்குப் பின் ‘சேவ் லைப்’ அமைப்பினை லாபநோக்கமற்ற அமைப்பாக தொடங்கினார். இந்த அமைப்பு மூலமாக சாலைவிபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு சாலை விபத்து விதிகளில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கும் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். சேவ்லைப் அமைப்பின் விபத்துகள் குறித்த விழிப்புணர்வு பணி, விபத்துகளைத்தடுக்க உயிரிழப்பைத் தடுக்க செய்த சிறப்பான பணிகளுக்காக அங்கீகாரமாக 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற விருதினை ராக்பெல்லர் மற்றும் எடெல்கிவ் அமைப்புகள் வழங்கி கௌரவித்துள்ளது. சிறந்த அமைப்பிற்கான ரோலக்ஸ் விருதினையும், அசோகா எனும் நிறுவனத்தில் தோழமையிலான பதவி(2013) உட்பட பல வெற்றிமாலைகளை திவாரி தன் அர்ப்பணிப்பான சேவைகளின் மூலம் பெற்றுள்ளார். ‘’ முதலில் எங்களுடைய திட்டம் விபத்தில் காயமடைபவர்களை அவர்களின் அருகில் உள்ளவர்கள்; விபத்தினை காண்பவர்கள் காப்பாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் விதமாக இருந்தது. 50% விழுக்காடு விபத்து காரணமான இறப்புகள் முதலுதவி கிடைக்காமல் நேருகிறது. விபத்தினை காண்பவர்களுக்கு பயிற்சியளிப்பதைவிட காவல்துறையினருக்கு பயிற்சியளிப்பது என்பது, பார்வையாளர்கள் சட்டச்சிக்கலுக்கு பயப்படும்போது சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற காவல்துறை தவிர வேறு யாரும் முதலுதவி தர முடியாது என்பதை உணர்ந்தோம் ’’ என்கிறார் திவாரி. ‘’ அவசர சிகிச்சை வண்டி ஒன்று மட்டும் போதுமானதல்ல, உயிர்காக்கும் கருவிகளைக் கொண்ட, பயிற்சி பெற்ற முறையான பணியாளர்கள் இருந்தால் மட்டும் சிக்கலான தருணங்களில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது பற்றி யோசிக்கவாவது முடியும் ’’ என்கிறார் திவாரி. உலகிலேயே ஒரு மணிநேரத்திற்கு எட்டு சாலை விபத்துகள் என்ற அளவில் இந்தியா தன்னை மேலே உயர்த்திக்கொண்டுள்ளது. சாலையில் கவனம் இல்லாது நடந்துகொள்ளுதல், வாகன உரிமம் பெறுவதில் சீர்கேடுகள், போதிய கல்வி அறிவு இல்லாத ஓட்டுநர்கள், சாலைவிதிகளை முறையாக அமல்படுத்தாத தன்மை, மோசமான சாலைகள் உருவாக்கம், வாகனங்களின் விரக்தி கொள்ளும் இயந்திர தொழில்நுட்ப இயக்கம் , விபத்தில் காயம்பட்டவர்களை காப்பாற்ற உபகரணங்கள் போதாமை என்று பல்வேறு காரணங்களை திவாரி சுட்டிக்காட்டுகிறார். இக்குறைபாடுகளை அரசுத்துறைகளான காவல்துறை, மாவட்டபோக்குவரத்துதுறை அலுவலகம், உடல்நலம் உள்ளிட்டவற்றுக்கு அடையாளம் காட்டி இணைந்து செயல்படுகிறோம். வெளிநாடுகளில் இந்த துறைகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது மோசமான செயல்பாடுகளினால் ஆண்டிற்கு இருபது பில்லியன் டாலர்கள் வருமான இழப்பு ஏற்படுகிறது என்கிற தன் கவலையை தெரிவித்தவர், 2014 ஆம் ஆண்டில் அமல்படுத்த இருக்கும் சாலைப்பாதுகாப்பு சட்டம்(2014) குறைபாடுகளை தீர்க்க உதவக்கூடும் என்று தன் நம்பிக்கையை பகிர்ந்துகொள்கிறார். நியூ டெல்லி, மகராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் என்று செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு உலகவங்கி, டபிள்யூஹெச்ஓ, உலக சாலைப்பாதுகாப்பு பங்குதாரர் திட்டம், ஹார்வர்டு மருத்துவப்பள்ளி, மஹிந்திரா நிறுவனம் என்று பலரும் அனுசரணை வழங்கி வருகிறார்கள். காவல்துறையினருக்கு ஜீவன் ரக்ஸக் எனும் திட்டத்தின் மூலம் 6500 நபர்களுக்கு மூன்று ஆண்டுகளாக அவசர சிகிச்சை பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சிக்கலான உயிராபத்தில் உள்ளவர்களைக் காப்பாற்றும் மூன்று யுக்திகளைக் கொண்டது. சேவ்லைப் அமைப்பு விபத்துகள் தற்காப்பு பயிற்சி(கிஞிகிறிஜி) எனும் சான்றிதழ் வழங்கும் பயிற்சி ஜார்கண்ட், ஃபரிதாபாத், குஜராத் மாநிலங்களைச்சேர்ந்த கனரக வாகன ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய கல்வியையும் அளிக்க முயற்சித்து செயல்படுகிறது. சேவ்லைப் அமைப்பு தற்கால மோட்டார் வாகன சட்டத்திலுள்ள ஓட்டைகள் குறித்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. 1988, மத்திய மோட்டார் வாகனச்சட்டம் 1989ல் கனரக வாகனங்களில் இரும்புக்கம்பிகளை ஆபத்தான முறையில் ஏற்றிச்செல்வதால் ஆண்டிற்கு 9000 இறப்புகள் ஏற்படுகின்றன என்பதைக்கண்டறிந்து அதில் திருத்தங்களை ஏற்படுத்தி அவ்வாகனங்களை முறைப்படுத்த முயற்சித்து வருகிறது. நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (19.9.2014) 10 உள்ளிருக்கும் பேரொளி சேதனா திவ்யா வாசுதேவ் தமிழில்: ஏஆர்ஏ   பெங்களூரைச் சேர்ந்த அமைப்பு ஒன்று அடித்தட்டு மக்களின் குழந்தைகளை பள்ளியிலிருந்து கல்லூரி வரை படிக்கவைக்க கட்டணம் செலுத்தி உதவிவருகிறது. அடித்தட்டு வாழ்நிலை கொண்ட குழந்தைகளின் உள்ளே இருக்கும் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவு தரும் பெங்களூரில் உள்ள ‘பரிக்ரமா’ மனிதநேய அமைப்பிற்கு இது பதிமூன்றாவது ஆண்டாகும். தொடர்ந்து நம்பிக்கையோடு செயல்பட்டு வரும் இவ்வமைப்பு ஓவியங்கள் தொடர்பான (அனைத்தும் இவ்வமைப்பின் பள்ளிக்குழந்தைகள் வரைந்தது) கண்காட்சி ஒன்றினை சில நாட்களுக்கு முன் நடத்தியது. அமைப்பின் செயல்பாட்டிற்கு கிடைத்த நல்ல முன்னேற்ற நிலையாக இதனைக்கொள்ளலாம் என்கிறார் அமைப்பின் நிறுவனர் சுக்லா போஸ். பெங்களூரில் நான்கு பள்ளிகள் எளிமையாக தொடங்கப்பட்டு அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகள் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள், அனாதை இல்லங்கள், குற்றவாளிகளின் குழந்தைகள் ஆகியோர் கல்வி கற்று வருகின்றனர். ‘’ முதலில் சமையல் மேஜைதான அலுவலகமாகவும், கோரமங்கலாவிலுள்ள குழந்தைகள்தான் என் முதல் மாணவர்களாக அமைந்தார்கள் ‘’ என்று பழைய நினைவுகளின் பூரிப்பில் முகம் மலர்கிறார் சுக்லா. 2000 ஆம் ஆண்டில் எம்பிஏ படித்து பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுக்லாவிற்கு தன் மனதில் ஏதோ போதாமையை, அர்த்தமின்மையை உணர்ந்திருக்கிறார். ‘’ பன்னாட்டு நிறுவனங்களின் வேலை என்பது பயனில்லாத ஒன்று என்று கூறமுடியாவிட்டாலும் சில சமயங்களில் அர்த்தமின்மையை தோற்றுவிக்கிறது ‘’ என்கிறார் சுக்லா. 2003 ஆம் ஆண்டு லாபநோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமாக அமைப்பை தொடங்கியபோது, முன் செய்த வேலையில் கற்ற பயன்படும் விஷயங்களையும், டார்ஜிலிங்கில் பள்ளிச்சிறுமியாக ஏழுஆண்டுகள் மதர்தெரஸா அறக்கட்டளையில் பணிபுரிந்த விஷயங்கள் அவருக்கு பயன்பட்டிருக்கின்றன. பரிக்ரமா அமைப்பு பல்வேறு ஆழமான சிந்தனைகளின் வாயிலாக குழந்தைகளுக்கான வகுப்பறையினை கற்கும் சூழல் கொண்ட உத்வேகம் பெருகும் இடமாகவும், சுவாரசியமான ஆர்வம் கொண்டு இயங்குமாறும் மாற்ற சிந்திக்க வைத்தது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளியான இவர்கள் நிர்வாகம் செய்யும் பள்ளியில் கல்வி என்பதற்கு எந்த நிர்ணயிக்கப்பட்ட எல்லை எதுவும் கிடையாது. ஜெய நகர் பள்ளி வளாகத்திற்குள் யாரும் சிறுவர்கள் தம் கைப்படத்தீட்டிய பளிச்செனும், வண்ணம் கொண்ட அலங்காரம் செய்யப்பட்ட சுவர்களை கண்டால் ஆச்சர்யம் கொள்ளாமல் இருக்கமுடியாது. ‘’ இறுதியாக இந்தியா தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியது என்றாலும், பள்ளியில் நிகழ்ந்தது என்னவென்றால் ஏமாற்றம்தான். தேர்வுகளில் அல்லது போட்டித்தேர்வுகளிலோ அதிக மதிப்பெண் எடுப்பது என்பது போதுமானதாக, சரியான தன்மையாக நான் கருதவில்லை. மதிப்பெண் குழந்தைகளுக்கு முக்கியம் என்றாலும் அவர்கள் மனிதர்கள் அல்லவா, அவர்களிடம் இயல்பாக திறன்களை மலர வைக்கவேண்டும் கல்வி’’ என்று விரிவாக தங்கள் பள்ளிக்கல்வி குறித்து உரையாடுகிறார் சுக்லா. பரிக்ரமா பள்ளிகளில் விளையாட்டு மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளில் ஊக்குவிக்கப்படுவதோடு, முதலாம் வகுப்பிலிருந்தே கணினியின் அடிப்படை பயிற்சிகள் கற்பிக்கப்படத் தொடங்கிவிடுகின்றன. ‘’ அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பற்றிய பிம்பங்கள் பள்ளியில் அதிகமாக இடைநிற்பவர்கள், அதிகமாக பள்ளிக்கு விடுப்பு எடுப்பவர்கள், கல்லூரிக்கு செல்லாதவர்கள் என்பதாகவே அதிகம் இருக்கிறது ’’ என்று தீவீரமாக பேசுகிறார் சுக்லா. பரிக்ரமா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 98% விழுக்காடு பள்ளிக்கல்வியை முடிப்பதோடு பல்கலைக்கழக கல்வியைக் கற்கச் செல்கிறார்கள் என்பதோடு வருகைப்பதிவு 96% விழுக்காடாகவும், இடைநிற்றல் 1% விழுக்காடாகவும் உள்ளது. ‘’மத்திய அரசின் மனிதவளத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற கேள்வியைத்தான் இவை எழுப்புகிறன்றன ‘’ என்கிறார் சுக்லா. பரிக்ரமாவில் கலைகளின் மீதான ஊக்குவிப்பு என்பது அதனைக் கற்பது என்பதைத் தாண்டிய ஒன்றாக கருதி பேணி வளர்க்கப்படுகிறது. ‘’பல்வேறு கீழ் நிலையிலுள்ள சூழல் கொண்ட இடங்களிலிருந்து மாணவர்கள் வருவதால் அவர்களின் மோசமான குணங்களை நீக்க கலை பேதிமருந்து போல செயல்படுத்தப்படுகிறது. எங்கள் பள்ளிகளில் உள்ள மனநல ஆலோசகர்கள் தொடர்ந்து மாணவர்கள் தங்கள் மன உணர்வுகளை கலையின் வழியே வெளியே கொண்டு வர உதவுகிறார்கள்’’ என்று கலையின் ஊக்குவிப்பு காரணங்களைப் பட்டியலிடுகிறார் சுக்லா. ‘’இவர்கள் அனைவருமே எங்கள் பிள்ளைகள்தான். பள்ளியில் பிரிகேஜி யிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை எங்களோடு பயணிக்கிறார்கள். பள்ளிக்குப் பிறகு நீங்கள் அவர்களிடம் இவ்வளவு நாட்கள் நாங்கள் உன்னைப் பார்த்துக்கொண்டோம், இன்று நீ வளர்ந்துவிட்டாய்; உன்னை நீ கவனித்துக்கொள்ள முடியுமல்லவா? என்று இந்தியாவில் கேட்பது எவ்வளவு சரியானது? அதற்கு காலம் வரவில்லை’’ என்ற சுக்லாவிடம் அவர்களது மாணவர்கள் குறித்து கேட்டதும் பெருமையாக ‘’எங்களது பழைய மாணவர் சிஸ்கோவில் மென்பொருள் பொறியியலாளராகவும், மற்றொருவர் ஹில்டன் இன்டர்நேஷனலில் தலைமை சமையற்கலைஞராகவும் இருக்கிறார்கள்’’ கூறுகிறார். பரிக்ரமாவின் பணி பள்ளி முடித்தவர்களுக்கு கல்லூரிப்படிப்பிற்கான கட்டணத்தைச் செலுத்தி அவர்களை ஊக்குவிப்பது என்று தொடர்ந்து நீண்டு பயணிக்கிறது. நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (28.10.2014) 11 நேர்காணல்- குருதேவ்தாஸ் குப்தா மோடியின் விரைவான சீர்திருத்தங்களினால் தொழிலாளர்களின் நலன்கள் சீர்குலைந்துபோகும். பர்வேஸ் ஹபீஸ் தமிழில்: தியோ வான்யா   மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான குருதேவ்தாஸ் குப்தா பிரதமர் நரேந்திரமோடி அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர் நலச்சட்டங்களுக்கான திருத்தம் என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு தலை வணங்குவது போன்றதாகும் என்பவர் இந்த திருத்தங்கள் முறைகேடான வணிகம் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், சுரண்டலை சட்டபூர்வமாக்கும் வழிமுறை என்று உறுதிபடக்கூறுகிறார். பிரதமர் மோடி இன்ஸ்பெக்டர் ராஜ் திட்டம் முடிவு பெற்றதாக அறிவித்திருக்கிறார். அதன் தாக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பிரதமரின் அறிவிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் முதலிலேயே இங்கு இன்ஸ்பெக்டர் ராஜ் திட்டம் இல்லை. அத்திட்டம் என்றோ முடிவுக்கு வந்துவிட்டது. மேற்பார்வையிடுதல் என்பதை குறைந்த அளவிலும், தொழிலாளர் துறையில் செயல்படுத்தப்படுவது இல்லை. தொழிலாளர் வைப்பு நிதி உயர்வு பற்றி பிரச்சனைகளில் பெரும் தொழில் நிறுவனங்கள் போதுமான அளவு கட்டுப்படுத்தப் படவில்லை. தொழிலாளர்களுக்கு அத்தொகை சரியான நேரத்தில் சென்று சேர்வதில்லை. மற்ற பகுதிகளிலும், மேற்பார்வையிடுதலும், கண்காணிப்பு தேவைப்பட்டாலும் அவை சரியாக நிறைவேற்றப்படவில்லை. இவைதான சட்டப்பூர்வமாக்கப்பட்ட வேண்டும். கவனக்குறைவான மேற்பார்வையிடுதல் என்பது சட்டபூர்வமாக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜ் என்கிற மந்திரத்தின் கீழ் அறிவிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் தரப்பை ஏமாற்றும் பெரும் தந்திரம் ஆகும். இதன் தாக்கம் என்னவென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் ஆக்கிரமிப்பாளராக வலிமையானவர்களாக மாறுவார்கள். அமைப்பு சாராத அல்லது முறைப்படுத்தப்படாத தொழிலாளர்களுக்கு நேருவது என்ன? அமைப்புசாராத அல்லது முறைப்படுத்தப்படாத தொழில் நிறுவனப்பணியாளர்களுக்கு பொதுவாகவே எந்த பலன்களையும் அனுபவிக்கமுடியாத நிலைதான் உள்ளது. அவர்களுக்கு வருங்கால வைப்புநிதி சேமிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு தரப்படுவதாக கூறப்படும் சம்பளத்தொகையினைக் காட்டிலும் குறைவாகவே தரப்படுகிறது. பணிக்கொடை பற்றி கேள்வி கூட எழுவதில்லை. பிரதமரின் அறிவிப்பு ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களின் வாழ்வை மேலும் பரிதாபத்தில் கீழ்மையில்தான் தள்ளும். மோடி பரிந்துரைக்கும் தொழிலாளர் சீர்த்திருத்தத்தின் வாயிலாக இந்தியா முன்னணி உற்பத்தி மையமாக மாற வாய்ப்பு உள்ளதா? நிச்சயம் பன்னாட்டு நிறுவனங்களை புதிய அரசு டெல்லியில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்பதை மறுத்திருந்தால்; தொழிலாளர்களுக்கான சட்டங்களை, குறைவான ஊதியம் உள்ளிட்ட குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நீக்க பன்னாட்டு நிறுவனங்களைக் கேட்டுக்கொள்ளும் ஊக்கம் பெற்றிருந்தால் மட்டுமே உற்பத்தி துறையில் வருமானத்தை நாம் எதிர்பார்க்க முடியும். சீர்திருத்தங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா? எதிரிடையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத்தான் நான் கருதுகிறேன். தொழிலாளர் நலச்சட்டங்களில் பெரும் சீர்குலைவு ஏற்படும் நிலை உள்ளது. கூலிக்கு அமர்த்தும், வேலையிலிருந்து நீக்கும் என எதேச்சதிகார நிலையினால் தொழிலாளர்களின் மிச்ச உரிமைகளும் பறிக்கப்படும் சிதைவுறும் நிலை உள்ளது. தொழிலாளர்களின் முதலாளிகளின் கருணையில் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை ஏற்படும். பிரதமர் தொடங்கிய ஸ்ரமேவ ஜெயதே( உண்மையாக உழைப்போம்) எனும் திட்டத்தில் உலகளாவிய தொழிலாளர் கணக்கு எண் வருங்கால வைப்புநிதிக்கு வழங்கப்படுவது, ஒற்றைச்சாளர வசதி மூலம் தொழில் அமைச்சகத்தின் தொழில் செய்ய அனுமதி, மேற்பார்வை அனுமதி என தொடங்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றிக் கூறுங்களேன்? மேற்சொன்னதில் நல்ல அம்சங்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதனை ஆழமாகப்பார்த்தால் குழுவாக இல்லாது பணிபுரியும் 93% விழுக்காடு தொழிலாளர்களுக்கு கணினியைப் பயன்படுத்துதல் என்பது சாத்தியமான வரம்பில்லை. தொழிலாளர் பாதுகாப்பில் இவை பாதிப்புகளை ஏற்படுத்துமா? தொழிலாளர் நலன்களுக்கு இது கெடுதலான தாக்கத்தை ஏற்படுத்தும் விபத்து உள்ளது. தொழிலாளர் நலன்களுக்கான தொகையைக் குறைப்பது, மற்றும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான அளவுகளை செயல்பாடுகளை சமரசம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. நிறுவனங்கள் சுயமாக சான்றிதழ் பெறுவது என்பது செயல்படும்படியான ஒன்றா? இல்லை. நிச்சயமாக இல்லை. பெரு நிறுவனங்கள் நேர்மையை எப்போதும் அறிந்ததில்லை. நடைமுறையில் பெரு நிறுவனங்கள் பல்வேறு சட்டங்களை சிதைப்பவர்களாகத்தான் உள்ளார்கள். வருமானவரி அல்லது உற்பத்தி செய்யும் பொருளின் அளவைக் குறைத்துக்காட்டி அதிக லாபத்தை அறுவடை செய்கிறார்கள். பிரதமர் அறிவித்த தொழிலாளர் சீர்திருத்த திட்டங்களில் தொழிலாளர் களுக்கு பயன்படும்படியான திட்டங்கள் எதுவும் நீங்கள் எதுவும் காணவில்லையா? தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான அரசு அவர்களுக்கு ஆதரவான திட்டத்தை உருவாக்க முடியும் எப்படி நான் எதிர்பார்க்க முடியும்? தொழிலாளர் சீர்திருத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டதே முதலாளித்துவவாதிகள், பெரு நிறுவனங்களுக்காகத்தான். பா.ஜ.க பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக கூறியதன் பின்னால்தானே அவர்கள் வெற்றிபெற முடிந்தது. தொழிலாளர் சட்டங்களை திருத்தி, பெரு நிறுவனங்கள் தன்னிச்சையாக தாங்கள் லாபம் பெற பல லட்சம் தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள். தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்கும் திட்டமிருக்கிறதா? தொழிலாளர் நலன்களை நீர்த்துப்போகச்செய்யும் சட்டத்திருத்தத்தை எதிர்த்து மத்திய வர்த்த தொழிலாளர் சங்கங்கள் புரட்சிப்போராட்டம் நடத்த உள்ளனர். டிசம்பர் ஐந்தாம் தேதி இந்தியா முழுக்க போராட்டங்கள் நடைபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிஎம்எஸ், ஏஐடியுசி, ஐஎன்டியுசி, சிஐடியு, ஹெச்எம்எஸ் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டக்களத்தில் இறங்கப்போகின்றனர். இது அனைத்து தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைந்த குரலாகும். நன்றி: டெக்கன் கிரானிக்கல் (19.10.2014) 12 பறவைகளின் காதலர்கள் சம்ஹதி மொஹபத்ரா தமிழில்: வின்சென்ட் காபோ ராஜாளி, வல்லூறு, கழுகுகள் மற்றும் பல்வேறு வகையான ஆந்தைகளின் காயங்களை, உடல்நலிவை, அதற்கென அமைக்கப்பட்ட கூண்டுகளில் சென்று பார்வையிட்டு தீர்க்க முயலுவதிலிருந்து நதீம் ஷெஸாத், முகமது சாத் ஆகியோரின் நாட்கள் தொடங்குகிறது. டெல்லியிலுள்ள வஃஜீராபாத்திலுள்ள வீட்டினைப் பறவைகளுக்கான அகதிகள் முகாம் போலாக்கி, அண்ணன், தம்பி இருவரும் காயம்பட்ட பறவைகளுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றி வருவதை கடந்த 11 ஆண்டுகளாக செய்துவருகிறார்கள். தங்களின் வீட்டு மேற்பகுதியில் பறவைகளை பாதுகாப்பதற்கான கூண்டுகள் மற்றும் மருத்துவமனையைப் பயன்படுத்தி பருந்து, வல்லூறுகள், பல்வேறு வகையான ஆந்தைகள், எகிப்திய பிணந்தின்னி கழுகுகள் ஆகியவற்றிற்கான மருத்துவ உதவியை வழங்கி வருகிறார்கள். காயம்பட்ட பறவைகளைக் காணும் வனவாழ்வு ஆர்வலர்கள், காவல்துறை, பறவைகளுக்கான மருத்துவமனை ஆகியவற்றுக்கு கொண்டு செல்ல இவ்விரு சகோதரர்களும் உதவுகிறார்கள். பறவைகளுக்கான அறுவை சிகிச்சைகள், எலும்புகளை சரி செய்து பொருத்துவது உள்ளிட்டவற்றை தொடர்ந்து மருத்துவர்களின் செயல்பாடுகளை கவனிப்பதன் மூலம் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். 36 வயதாகும் நதீம் 2003 ஆம் ஆண்டு காயம்பட்ட கழுகு ஒன்றினை மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சையளித்து, ஜெயின்கோவிலில் உள்ள பறவைகளுக்கான மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தபோது, மாமிசம் உண்ணும் பறவைகளுக்கு இடமில்லை என்று கூறி சிகிச்சை செய்ய மறுத்துவிட்டார்கள். ‘’ சிறுவர்களான நாங்களிருவரும் பறவைகள் எங்கள் கண்முன் இறப்பதை பார்த்து என்ன செய்வதென தெரியாமல் நின்றுகொண்டிருந்தோம். பொதுவாக காயம்படுகிற புறா, சிட்டுக்குருவி ஆகியவை நாய்களால் உண்ணப்பட்டு வந்தன. இதில் கழுகுகள் போன்றவை தம்மை காப்பாற்ற யாரும் இல்லாத போதும், உண்ணுவதற்கான இரை கிடைக்காதும் பட்டினியால் இறக்க நேரிடுகிறது. அதற்கு காயங்களும் முக்கிய காரணமாகிறது. வனக்காவலராக நதீம் சில ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார். டெல்லியில் நடைபெறும் பறவைகளின் இறப்பிற்கு தீவிரமான அளவு அதிகரித்து வரும் பட்டங்களை பறக்கவிடும் செயல்பாடுகள்தான் காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார் நதீம். கண்ணாடி மற்றும் உலோகத்துகள்களினால் தோய்த்து கூராக மாற்றப்பட்டு பட்டங்கள் பறக்க இதனைப் பயன்படுத்தும் போது, இந்தக்கயிறு பறவைகளின் உடலில் சிக்கி, அவற்றை ரத்தம் கசிய குரூர மரணத்திற்கு ஆளாக்குகிறது என்று கூறுகிறார் நதீம். சகோதரர்கள் பறவைகளின் தொற்று நோய்கள், விபத்துகளினால் ஏற்படும் காயங்களினால் பாதிக்கப்படுகின்ற அவற்றுக்கு எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் என்ற போது, அப்பறவைகளை நாங்கள் காயப்படுத்தப்போவதில்லை, ஆபத்தானவர்களில்லை என்று மெல்ல புரிந்துகொண்டன என்று கூறுகிறார் ஸாத். அண்மையில் பறவைகள் மரத்தில் பாதுகாப்பாக கூடு கட்டி வாழ 60 பஞ்சுகள் பொதிந்த கூடுகளை அமைத்து தந்திருக்கிறார்கள். பெண் பறவைகள் முட்டைகள் இட சிரமப்படும்போது, அவற்றின் முட்டைகள் வெளிவருவது சிரமமானதாகிவிடுகிறது. ‘’ சில பிரச்சனைகளால் பறவைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பறவைகளின் கர்ப்ப பையிலிருந்து எண்ணெய் மூலம் முட்டைகளை மெதுவாக தடவி வெளியே எடுப்போம்’’ என்கிறார் நதீம். 33 வயதாகும் ஸாத் பறவைகளுக்கான அறுவை சிகிச்சைகளை செய்கிறார். எலும்புகளை பறவைகளுக்கு பொருத்துவது குறித்து மனிதர்களுக்கான எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரிடம் கற்றுக்கொண்டிருக்கிறார் ஸாத். மேலும் தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள பல புத்தகங்களை இணையத்தில் தேடிப்படிப்பதோடு, அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைகளையும், சிக்கலான தருணங்களில் நாடுகிறார்கள். தோராயமாக 111 பறவைகள் இவர்களின் மையத்திற்கு ஒரு மாதத்திற்கு வந்தடைகின்றன. சில சமயங்களின்போது வரும் பறவைகளின் காயம் கடுமையாக இருக்கும்போது, அவை காப்பாற்றமுடியாமல் இறந்துவிடும் அல்லது அதனை வேதனை இன்றி மரணிக்க வைக்க மருத்துவரை நாடுகிறோம் என்கிறார் நதீம். அறுவை சிகிச்சையின் பின் பறவை இழந்த தன் சக்தியை திரும்பப் பெற ஒரு மாதமாகிறது. வயதான சக்தி இழந்த பறவைகள் மையத்தில் தங்கிவிட, காயம் குணமான பறவைகள் மையத்தின் கூண்டுத்திறப்பின் வழியே பறந்து சென்றுவிடுகின்றன. ஆழ்ந்த சிந்தனைகளின் விளைவாக அவை தன்னியல்பாக பறந்துசெல்ல அத்திறப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ‘’இளம் பறவைகள் ஓய்வெடுக்கவும், இரை தேடிப் பயணிக்கும் உடல்வலிமை பெறும்வரை தங்கியிருக்கவும் ஒரு வாசலாக உள்ளது திறப்பு’’ என்று கூறும் இச்சகோதரர்கள் பறவைகளுக்கான ஹெல்ப்லைன் ஒன்றினை 2010 ஆண்டு உருவாக்கியிருக்கிறார்கள். பறவைகளினோடான உறவினால் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறியிருக்கும் இவர்கள் பறவைகளுக்கு நன்றி கூறுகிற அதேசமயம், அவைகளோடு உணர்வு பூர்வமான எவ்வித உறவுகளையும் வைத்துக்கொள்வது, மற்ற மனிதர்களையும் தங்களையும் போல நம்பி ஆபத்தில் சிக்கிக்கொள்ள ஏதுவாகும் என்று கவனமாக இருக்கிறார்கள். பீப்பிள்ஸ் ஃபார் அனிமல்ஸ் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பணிபுரிவதால் லிம்கா புத்தகத்தில்(2014) இடம்பிடித்திருக்கிறார்கள். விலங்குகள் கருத்தரங்கம் ஒன்றில் சிறப்பு விருது ஒன்றினையும், மற்றும் சிட்டுக்குருவி விருதினையும் பெற்றிருக்கிறார்கள். பறவைகளுக்கான உணவு செலவு 30,000 ரூபாய்க்கும் மேல் வருவதால் இது அவர்களின் முயற்சிகளுக்கு கடும் சவாலானதாக அமைந்துள்ளது. இது பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படாமல் எதிர்காலத்தில் பறவைகளுக்கான மருத்துவமனை ஒன்றினை அமைக்கும் திட்டமும் இவர்களின் மனதில் உள்ளது. ‘’இதற்கான தேவை என்னவென்றால் காயம்பட்ட பறவைகள் இறந்துவிடுகின்றன. பெரும்பாலும் தங்கள் வீட்டிற்கு தீமையைக் கொண்டுவந்துவிடும் என்று சாபமிட்டு பறவைகளின் மீது கற்களை எறிகிறார்கள்’’ என்கிறார் நதீம். காயம்பட்ட பறவைகளைக் கண்டால் பாதுகாப்பு மையத்திற்கு அழைக்க உதவும் எண் – 0981029698. நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 13 இளைய இந்தியாவிற்கான புதிய கற்றல் முறைகள் அனில் முல்சந்தினி கெவின் பிரகன்சா தமிழில்: தியோ வான்யா   மோடி அரசின் தூய்மையான பாரதம் திட்டம் மூலம் காந்தியின் சிந்தனைகள் நாட்டின் மேடையில் அண்மையில் இடம்பிடித்து இருக்கின்றன. ஆனால் 1947 ஆம் ஆண்டிலிருந்தே காந்தியின் சிந்தனைகள் அகமதாபாத்திலிலுள்ள பள்ளியொன்று மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது. காந்தியின் தத்துவமான தூய்மையான இந்தியா, மரியா மாண்டிசோரி குழந்தைகளுக்கான செயல்பாடுகளில் ஏற்படுத்த மாற்றம் தந்த வாய்ப்புகள், தாகூரின் இயற்கையோடு இணைந்த கல்வி என இவை அனைத்தையும் தனது பள்ளியான ஸ்ரேயாவில் நிகழ்த்தியிருக்கிறார் அதன் நிறுவனரான ல¦னா சாராபாய். தற்போது அந்நிறுவனத்தை இவரது பேரனான 50 வயதாகும் அபய் மங்கள்தாஸ் அவர்கள், நிர்வாக அறங்காவலராக இருந்து ஸ்ரேயாஸ் அமைப்பினை தன்மை மாறாது நடத்திவருகிறார். ‘’1940ல் எனது பாட்டி காந்தி, ரவீந்திரநாத் தாகூர், மரியா மாண்டிசோரி இன்னும் பலரின் கருத்துக்கள், சிந்தனைகளின் முழுமையைக் கொண்ட கல்விமுறையினை பின்பற்றி, குழந்தைகளுக்கான பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகியவற்றைத் தொடங்கினார். அவருக்கு நன்றி கூறவேண்டும். ஸ்ரேயாஸ் வளாகமானது பசுமையான 50 ஆண்டுகளுக்கு மேல் வயது கொண்ட மரங்களைக்கொண்டுள்ள தோட்டங்களைக் கொண்டு அகமதாபாத்தின் இதயத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு பிறகு பாட்டி இறந்துவிட்டார். தற்போது இருக்கும் நிர்வாகக்குழு, பள்ளியின் கொள்கைகளை தொடர்ந்து மேம்படுத்தியதோடு வளாகம், சுற்றுப்புறம் பசுமையாக இருக்க பாடுபட்டு வருகிறது என்கிறார் மங்கள்தாஸ். பள்ளியைத்தாண்டி ஸ்ரேயாஸ் அகமதாபாத்தில் கலை மற்றும் விளையாட்டுக்களை மேம்படுத்த நாடக அரங்குகள், கலைமையங்கள், பொருட்காட்சி சாலை நாட்டுப்புற கலைப்பொருட்கள்) நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகள் கொண்ட மைதானங்கள் என அமைக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படுத்தும் வண்ணம் செயல்பட்டுவருகிறது. ‘’ இது போன்ற வட்டவடிவ அரங்குகள் சில பயனற்று சில சமயம் இருப்பதால் அவற்றை மீண்டும் மறுபுனரமைக்க முயன்று வருகிறோம்’’ என்கிறார் மங்கள்தாஸ். ஸ்ரேயாஸிலுள்ள பல்வேறு வகுப்பறைகள் மரங்களைக் காணும் வகையில் பாதி திறந்தவெளியாக இயற்கையோடு இணைந்த சூழல் இருக்க அமைக்கப்பட்டுள்ளது. இயல்பு மாறாமல் பராமரிக்கப்படுகிறது. வளாகத்திலுள்ள பெரும்பாலான மரங்கள் கட்டிடத்தின் உயரத்தைத் தாண்டி வளர்ந்துள்ளன. 1940 ல் ல¦னா சாராபாய் மேடம் மாண்டிசோரியை அகமதாபாத்திற்கு சென்னையிலிருந்து வர அழைப்பு விடுத்தார். 1947 ல் அவரை தலைவராகக் கொண்டு ஸ்ரேயாஸ் பள்ளி தொடங்கப்பட்டது என்று பள்ளியின் வரலாற்றை அபய் கூறுகிறார். 1961 ல் ஸ்ரேயாஸ் தற்போது இருக்கும் 28 ஏக்கர் மரங்கள் சூழ்ந்த இடத்திற்கு மாறியிருக்கிறது. தாகூரின் கல்வி குறித்த தத்துவங்களை அடிப்படையாகக்கொண்டு இயற்கையின் அரவணைப்பில் புகழ்பெற்ற வடிவமைப்பாளரான பாலகிருஷ்ண தோஷி மூலம் கட்டமைக்கப்பட்டு உருவாகியிருக்கிறது இப்பள்ளி. ‘’காந்திய தத்துவங்களான நெசவு செய்வது, விவசாய செயல்பாடுகள், உணவு தயாரிப்பது, உடல்நலத்தை மேம்படுத்துவதோடு மனநலத்தினை வளர்ப்பது, கற்கின்ற அறிவோடு, சுயசார்பு தன்மையைக் கற்றுக்கொள்ளுதல் ஆகியவையும் எங்களது கல்விக்கொள்கைகளில் உள்ளன. இதோடு காந்தியின் கொள்கையான அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கான விலையில்லாக் கல்வியையும் அளிக்கிறோம். காலத்திற்கேற்ப அதைத் தாண்டிய செயல்பாடுகளை மேற்கொள்ள முயற்சிக்கிறோம். எனது பாட்டி தொடக்கப்பள்ளி தொடங்கியபோதே ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தினைக் கொண்ட மேல்நிலைப்பள்ளி ஒன்றினை தொடங்க எதிர்காலத்திற்கான திட்டமிடுதலை தொடங்கினார்’’ என்று பெருமையாக கூறுகிறார் அபய் மங்கள்தாஸ். ஆசிரியர்களுக்கு மாண்டிசோரி முறையில் குழந்தைகளுக்கு கற்பிக்க பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகிறது. ஸ்ரேயாஸின் விளையாட்டு மையத்தில் நீச்சல், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து, யோகா, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பயிற்சிகளை குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு வழங்குவதில் சிறப்பான புகழ்பெற்றது. மகாராஷ்டிரத்தில் உள்ள மால்வனில் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு மற்ற பள்ளிகள் கல்வி அளிக்காத நிலையில் கல்வி கற்பிக்கிறார் சச்சின் தேசாய் என்பவர். 44 வயதாகும் சச்சின் அறிவியலாளராக இருந்து கல்வியாளராக மாறிய முனைவர். எஸ். கல்பக் மூலம் உத்வேகம் பெற்று மும்பையிலிருந்து தன் குடும்பத்தோடு 2006 ஆம் ஆண்டு கொங்கன் பிரதேசமான கிராமத்திற்கு வந்துவிட்டார். தனது பூர்வீகமான 80 வயதாகும் வீட்டினை பள்ளியாக மாற்றியிருக்கிறார். உள்ளூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தைச்சேர்ந்த இரு இளைஞர்களையும் சேர்த்து பரிசோதனை முயற்சியினை தொடங்கியிருக்கிறார். ஷியாமன்தக் என்றழைக்கப்படும் இப்பள்ளி இயற்கை வழியிலான கல்வி போதனைகளை நம்புகிறது. ‘’ஷியாமன்தக் பள்ளியில் எதற்கும், எதையும் கற்பதற்கான தடைகள் இல்லை. இங்கு மாணவர்கள் பொறியியல், தச்சுவேலைகள், கால்நடை வளர்ப்பு, கணினி பணிகள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தருகிறோம். இப்பள்ளியில் முறையான பள்ளியின் சொகுசான வசதிகள் இல்லையென்றாலும் மாணவர்கள் தங்கள் வாழ்விற்கான சிறப்பான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான அறிவைப்பெற உதவுகிறோம ¢’’ என்கிறார் சச்சின். தொழில் முனைவுத்திறன் மற்றும் சுயசார்புத்தன்மையை வளர்க்க சிந்தித்தபோது, சிந்தனைகளை செயல்படுத்தும் ஆதார மையம் தோன்றியது. மண்புழுவை உரமாக தயாரிக்கும் திட்டம் பள்ளியில் செயல்படுத்தப்பட்டு இப்போது இயற்கை முறையிலான பொருட்களைக் கொண்டு துரித உணவு தயாரிக்கும் கூடம் ஒன்றினையும் செங்கற்கள் தயாரிக்கும் திட்டமும் தற்போது செயல்படுத்த முயன்று வருகிறார்கள். செயல்வழிக்கற்றல், பல்துறை திறமைகளை வளர்த்தல், பொதுசேவைகள், தொழில்முனைவுத்திறன் ஆகியவை பள்ளியில் கொள்கைகளாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த கல்வித் திட்டத்தை மகராஷ்டிரா மாநில கல்விக்கழகமும், டெல்லியில் உள்ள நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓப்பன் ஸ்கூலும் அங்கீகரித்துள்ளன. ஷியாமன்தக் பள்ளிக்கான நிதியுதவி பல்வேறு தரப்பிலிருந்தும் கிடைக்கின்றன என்றாலும், குறிப்பாக சச்சினின் தனியார் துறை நண்பர்களான பலரின் உதவியினால்தான் பெரும்பாலும் நிதி கிடைக்கிறது. இன்று 800 மாணவர்கள் சச்சினின் வழிகாட்டுதலால் தாங்கள் விரும்பிய தொழிலைத் தொடங்கியிருக்கிறார்கள். நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 2 நவம்பர் 2014. 14 1947, ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரை ஜவகர்லால் நேரு தமிழில்: வின்சென்ட் காபோ     பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து நாம் விதியை சந்திக்க முயன்றாலும், அதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது. நாம் நமது நாட்டை முழுவதுமாக அல்லது முழுக்க மீட்கவில்லை என்றாலும் கணிசமான அளவு மீட்டிருக்கிறோம். உலகமே உறங்கும் இந்த நள்ளிரவு வேளையில் இந்தியா தன் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப்பெற விழித்துள்ளது; தூங்காமல் விழிப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி வரலாற்றில் மிக அரிதாக நிகழும்படியான சொல், செயல் என அனைத்திலும் நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலம் மாறி, பழையவற்றிலிருந்து மீண்டு புதியவற்றுக்கு செல்கிறோம். இந்த மனமார்ந்த செயல்பாட்டின்போது, இந்தியாவிற்கான சேவைகள் மற்றும் அவளின் குடிமக்களின் மீது அர்ப்பணிப்பான பணிகளை செய்யவேண்டும். வரலாற்றில் புதிய விடியலை காணும் இந்தியா தனது முடிவில்லாத பயணத்தில் கடும் போராட்டத்தில் கம்பீரமான பல வெற்றிகளையும், தோல்விகளையும் கண்டு கடந்து வந்துள்ளது. நன்மை, தீமை என சமமாக கொண்டு தன் முடிவில்லாத நெடும் பயணத்தில் பெரும் உத்வேகமும், ஆற்றலும் அளித்த லட்சியங்களை அவள் மறக்கவில்லை. இன்று நமது துரதிர்ஷ்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. இந்தியா தன்னைத்தானே மீண்டும் புதிதாய் கண்டடைந்துவிட்டாள். இந்த சாதனையை இன்று நாம் கொண்டாடுகிறோம். ஆனால் மேலும் பல பெரிய வெற்றிகளும் சாதனைகளும் நமக்காக காத்திருக்கின்றன. தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும் இந்த வாய்ப்பினைக் கைப்பற்றுவோமா? எதிர்காலத்திற்கான இந்த சவாலை ஏற்றுக்கொள்வோமா? சுதந்திரமும், அதிகாரமும் பொறுப்பினை ஏற்படுத்துகிறது. அப்பொறுப்புணர்வை இந்தியாவின் சுதந்திரமான மக்களை அவர்களின் உணர்வை வெளிப்படுத்த, சர்வ சுதந்திரமான ஆற்றல் கொண்ட இச்சபை ஏற்றுள்ளது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன், நாம் இதற்காக பட்ட வலிகளை நினைக்கும்போது, இதயம் கனமாகி தவிக்கிறது. அந்த வலிகள் தொடர்ந்தும் இன்றுவரை உள்ளன. ஆயினும் கடந்த காலம் முடிந்துவிட்டது. எதிர்காலம் நமது செயல்பாடுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது. நமது எதிர்காலம் எளிதான ஒன்றாகவோ அல்லது ஓய்வு கொள்ளும்படியானதாகவோ இருக்காது. ஆனால் தொடர்ந்த போராட்டத்தின் மூலம் மட்டும் நாம் நமது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். இன்று அதில் ஒன்றை எடுத்துக்கொள்வோம். இந்தியாவிற்கான சேவை என்பது கோடிக்கணக்கான துன்பத்தில் தவிக்கும் மக்களுக்குச் செய்யும் பணிகள்தான் வறுமை ஒழிப்பு, கல்வி அறிவின்மை, நோய்கள், வாய்ப்புகளின் சமநிலையற்ற தன்மை ஆகியவற்றை நீக்கிடத்தான் முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும். நம் தலைமுறையின் மிகச்சிறந்த மனிதர்கள் ஒவ்வொரு மனிதரின் கண்ணீர்த்துளிகளையும் துடைக்க பேரார்வம் கொண்டுள்ளோம். இதற்கு அப்பால் பலரும் கண்ணீரும், பாதிப்புகளும் கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு நமது உழைப்பு முடிவடையாது. நாம் நமது கனவுகளை உண்மையில் காணும் வரை கடுமையாக உழைக்க வேண்டும். இவை இந்தியாவிற்கான கனவுகள். ஆனால் உலகத்திற்கானதும் கூட. அனைத்து நாடுகள் மற்றும் மக்கள் மிகவும் நெருக்கமாக ஒன்றிணைந்து இன்று இருப்பதையும் கூட ஒருவர் கற்பனை செய்து கண்டிருக்கக்கூடும். பிரிக்க முடியாத அமைதியைப் போலவே, சுதந்திரமும், வளர்ச்சியும் இன்று உள்ளன. அதோடு, பேரிடர் போல பல நாடுகளும் தனித்தனி தீவுகளாக இருக்கும் நிலையையும் மாற்றவேண்டும். இந்தியாவின் மக்களின் பிரதிநிதிகளான நாம், அவர்களோடு உண்மை மற்றும் நம்பிக்கையோடு இந்த சிறப்பான சாகசப்பயணத்தில் பங்குகொள்ள வேண்டும். இந்த நேரம் அற்பத்தனமாக அழித்து ஒழிக்கும் விமர்சனங்களுக்கோ, விரக்திக்கோ அல்லது அடுத்தவர்களை குற்றஞ்சாட்டவோ பயன்படுத்தப்படக்கூடாது. இந்தியத்தாயின் பிள்ளைகள் அனைவரும் சிறந்த முறையில் வாழ்வதற்கான ஒரு நல்ல வாழிடத்தை உருவாக்கித் தரவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நாள் விதியினால் ஏற்படுத்தப்பட்டு நீண்ட உறக்கத்திலிருந்து எழுந்து போராட்டத்தினால் விழிப்புணர்வு பெற்று உயிர்ப்பான, சுதந்திரமான, தற்சார்பு நிலையை அடையும். இறந்த காலம் சில விஷயங்களில் நம்மைத் தொடர்ந்து வருவதற்கு முன்னமே அவற்றில் உள்ள வாக்குறுதிகளை தொடர்ந்து மீட்டெடுக்க வேண்டும். இன்று திருப்புமுனையாக இறந்த காலம் மற்றும் வரலாறு புதிதாக தொடங்கியுள்ளது. அதில் நாம் வாழ்வதோடு செயல்படும் விஷயங்களை மற்றவர்கள் எழுதக்கூடும். இந்தியா மற்றும் உலகத்திற்கே முக்கியமான நிகழ்வு இது. புதிய நட்சத்திரமாக, சுதந்திரச்சின்னமாக கிழக்கில் உதித்து, புதிய நம்பிக்கைகளை மனதில் விதைத்து தொலைநோக்கான லட்சியங்களை நினைவில் கொண்டு அவற்றை உருவாக்கவேண்டும். இந்த நட்சத்திரம் மறைந்துவிடாதபடியும், நம்பிக்கை ஏமாற்றம் தரும்படியும் இல்லாது செயல்படவேண்டும். சுதந்திரம் பெற்றதில் மகிழ்ச்சி கொண்டிருக்கும் இந்த வேளையிலும், பல மேகங்கள் போல மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் நம்மை சூழ்ந்துள்ளன. சுதந்திரம் தந்துள்ள பொறுப்புகள் மற்றும் கடமைகளை நேருக்கு நேராக உத்வேகத்துடன் சுதந்திரமான ஒழுக்கமான மக்களின் ஆற்றலுடன் எதிர்கொள்வோம். இன்றைய நாளில் சுதந்திரத்திற்கான கருத்துக்களை கட்டமைத்தவரை, நம் நாட்டின் தந்தையை தொன்மை கொண்ட இந்தியாவிற்கு உருவம் கொடுத்தவரை, சுதந்திரத்திற்கான விளக்கினை மேலே ஏற்றி வைத்தவரை, நம்மைச் சுற்றியிருந்த கொடும் இருளை ஒளியினால் விலகச்செய்தவரை நினைத்துப் பார்க்கவேண்டும். அவர் கூறிய செய்திகளை பின்பற்றாது விலகி நடக்கும்போது, நாம் மதிப்பிழந்த மக்களாவோடு, அடுத்து வரும் தலைமுறையினரிடமும், அவரின் செய்திகளைக் கூறுவதோடு, அவர் பின்பற்றிய உண்மை, வலிமை, தைரியம், பணிவு ஆகியவற்றை அவர்களின் மனதில் பதிய வைக்க முயற்சிக்கவேண்டும். சுதந்திர விளக்கை கடும் புயல் காற்றிலும் நாம் அணைந்துவிட அனுமதிக்கக் கூடாது. நமது அடுத்த கருத்து இந்திய விடுதலைக்காக இறப்பு வரை பரிசிற்கோ, புகழிற்கோ ஆசைப்படாமல் தன்னை வாங்கிய அர்ப்பணித்த வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குறித்தேயாகும். அரசியல் பிரிவுகளால் பிரிந்துள்ள நமது சகோதர, சகோதரிகளையும் சுதந்திரத்தின்போது அதை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாதவர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அவர்களும், இங்குள்ள மற்றவர்களும் எது நடந்தாலும் அது அதிர்ஷடமோ, துரதிர்ஷ்டமோ அதை சமமாக பகிர்ந்து கொண்டவர்களே ஆவர். எதிர்காலம் நம்முன் இருக்கிறது. எங்கு நாம் பயணிக்கப் போகிறோம்? எதை நோக்கி நம் உழைப்பு இருக்கவேண்டும்? இந்தியாவிலுள்ள உழவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட சாமானியர்களுக்கு சுதந்திரமும், வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. வறுமையை ஒழிக்கவும், கல்வியறிவின்மையைப் போக்கவும், நோய்களை களையவுமான போராட்டத்தை தொடங்க வேண்டும். செழுமையான, ஜனநாயகத்தன்மை கொண்ட, முன்னேற்றமடையும் நாட்டை உருவாக்கி, சமூக, அரசியல், பொருளாதார நிறுவனங்கள் நியாயத்தை உறுதிபடுத்துவதோடு, ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் என அனைவருக்குமான முழுமையான வாழ்வை உறுதி செய்ய வேண்டும். நம் முன்னால் கடின உழைப்பு காத்திருக்கிறது. நமது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை நம்மில் யாருக்கும் ஓய்வேயில்லை. விதி நமக்கு என்ன நிர்ணயித்திருக்கிறது என்பதைக் காணும் வரை நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். மிகச்சிறந்த நாட்டின் குடிமக்களாகிய தீரமும், முன்னேறும் எண்ணமும் கொண்ட நாம் உயர்ந்த நல்ல தரமான வாழக்கையை வாழ வேண்டும் . நம் அனைவருக்கும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய நாட்டின் பிள்ளைகளான அனைவருக்கும் சம உரிமைகள், சிறப்பு உரிமைகள், கடமைகள் என அனைத்தும் சமமாக உள்ளன. குழுவாதங்களை அல்லது குறுகிய சிந்தனைகளை என்றும் ஆதரிக்கவோ, ஊக்கப்படுத்தவோ கூடாது. குறுகிய சிந்தனைகளை கருத்தளவிலும் அல்லது செயல்பாட்டளவிலும் செயல்படுத்துகின்ற மக்களைக் கொண்டிருக்கிற நாடு சிறந்த நாடாக இருக்க முடியாது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளுக்கும், வாழ்த்துக்களை இந்தியா தெரிவிப்பதோடு, அவர்களோடு ஒன்றிணைந்து அமைதி, சுதந்திரம், ஜனநாயகத்தை உறுதிப்படுத்த உழைக்கவுமான வாக்குறுதியையும் அளிக்கிறது. நம் தாய்நாடான தொன்மையான, தனித்துவமான, இளமையான இந்தியாவிற்கு நம் வணக்கத்தை தெரிவித்துக்கொள்வதோடு, அவளுக்கான சேவையில் நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம். ஜெய்ஹிந்த்! நன்றி: இரா.முருகானந்தம், தாராபுரம். 15 ராணித்தேனீயின் கதை மீரா பரத்வாஜ் தமிழில்: ஜோ ஃபாக்ஸ் சாயா நஞ்சப்பாவின் கண்கள் தன் நிறுவனமான ‘நெக்டார் ஃப்ரெஷ்’ பற்றிப்பேசும்போது மகிழ்ச்சியிலும், ஆர்வத்திலும் அவ்வளவு அழகாக மினுங்கி ஒளிர்கிறது. ‘’ ஒரு சிறு கிராமம் சார்ந்த தொழில் நிறுவனமாக 2007ல் எனது கிராமமான கூர்க்கில், அதனைத் தொடங்கினேன். தேனுக்கு புகழ்பெற்ற பகுதி அது ’’ என்று மகிழ்ச்சி மாறாமல் கூறுகிறார் சாயா. திருமணத்தோல்வி மற்றும் தந்தையின் மரணம் என மிகச்சிக்கலான காலகட்டத்தில் அவர் தொழில் ஆரம்பித்த தருணம் இருந்தது. தேன் பற்றிய தன் அறிவை விரிவாக்கிக்கொள்ள மத்திய தேன் மற்றும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கழகத்தின் அடிப்படை பயிற்சியில் சேர்ந்தார். ‘’நிறுவனத்திற்கு அடிப்படைத்தேவையான தேனை சித்திஸ், ஜீனு குருபாஸ் மற்றும் பல மக்களிடமிருந்தும், பல்வேறு மாநில விவசாயிகளிடமிருந்தும் பெறுகிறேன், ’’ என்கிறார் சாயா. இன்று இவரது நெக்டார் ஃப்ரெஷ் நிறுவனமானது, பெரும் ஏற்றுமதியாளர் மற்றும் தயாரிப்பாளராக இந்தியாவில் உருவெடுத்திருக்கிறது. தேனைப் பக்குவப்படுத்தியும், மூலப்பொருள் ஏற்றுமதி செய்யும் 5 பெரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக நெக்டார் ஃப்ரெஷ் வளர்ச்சி பெற்றுள்ளது. பெண்கள் தொழில்முனைவோர் கூட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல் துறையில் இந்தியாவின் சிறந்த தொழில் முனைவோர் விருதினை சாயா நஞ்சப்பாவிற்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளது. சாயாவின் தொழில் முயற்சி என்பது துணிச்சலானது மட்டுமல்ல. இவரது வளர்ச்சிப்பயணமே பெரும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தருவதாக உள்ளது. சாயாவின் பயணமானது, ஸ்ரீரங்கபட்டிணத்திலிருந்து ஜெர்மனிவரை நீண்டு, அங்கு சந்தையில் ஏகபோகம் செய்துகொண்டிருந்த ஐரோப்பிய நிறுவனங்களுக்கு கடும் போட்டி கொடுப்பது ஆச்சர்யமான செயல்தானே! பொம்மன ஹல்லியில் 10 லட்சரூபாய் கடனுதவி பெற்று சிறிய அளவிலான தொழிற்சாலை ஒன்றினைத் தொடங்கி தேனை உள்ளூர் சந்தைகளில் விற்பதற்கான முயற்சியினை சாயா முதலில் தொடங்கினார். பிறகு, அவர் நஞ்சன்கட் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய இடங்களில் 6 கோடிரூபாய் முதலீட்டில் 200 டன்கள் உற்பத்தித்திறன் கொண்ட தொழிற்சாலைகள் மூலம் சுத்தமான பூக்களில் உருவாகும் தேனினைப் பெற்று அவற்றை விற்பனை செய்கிறார். ‘’20 தேனீ வளர்க்கும் இடங்கள், பீகார், உத்ராகண்ட், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், மற்றும் பல மாநிலங்களில் உள்ளன. தூய்மையான, பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாத ஒரே வகையான பூக்களிலிருந்து தேனினைப்பெற முடிகிறது. லிச்சி, வேலமரம், கஜானஸ், ஜாமுன், தைம் ஆகிய பூக்களைக்கொண்ட 80 – 90 ஏக்கர் பரப்பிலான பண்ணைகளிலிருந்து தூய்மையான தேனை பெறுகிறோம்’’ என்று விளக்கமாக பேசுகிறார் சாயா. நெக்டார் ஃப்ரெஷ் நிறுவனம் குறிப்பிடத்தக்க அடையாளத்தை உலகளவிலான சந்தையில் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதனை பலவகையிலும் மேலும் முன்னேற்ற அந்தப்பெயரிலேயே ஜாம் மற்றும் சாஸ் வகைகளை உருவாக்கி ஐரோப்பாவில் சந்தைப்படுத்தும் முயற்சிகளில் சாயா ஈடுபட்டு வருகிறார். ‘’ ஜாம் மற்றும் சாஸ் ஆகியவற்றிற்கான பழக்கூழை பெங்களூரு மற்றும் மங்களூரு மேலும் சில இடங்களில் பெண்களின் சிறிய நிறுவனங்களிலிருந்தும், பப்பாளி, தக்காளி போன்றவற்றை விவசாயிகளிடமிருந்து நேரடியாகவும் பெற்றுக்கொள்கிறோம் ‘’ என்கிறார் சாயா. ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு தொடர்ந்து தன் பொருட்களை ஏற்றுமதி செய்துவரும் காதி கிராமிய தொழில்கள் நிறுவனத்தின்(கேவிஐபி) உதவிகளைப்பெற்று வளர்ந்துவரும் கர்நாடகத்தைச் சேர்ந்த நிறுவனமான நெக்டார் ஃப்ரெஷ் ஐரோப்பாவில் முன்னணி நிறுவனமாக உள்ள பெரீன் பெர்க், தர்போ, பொனிமாமன் ஆகிய நிறுவனங்களை திகைக்கவைக்கும் அளவு திடமான போட்டியாளராக உள்ளது. ‘’மிகக் கடுமையான க்யூஎஸ் தர நிர்ணய சோதனைகள் ஜெர்மனி நாட்டிற்கு உணவுப்பொருட்கள் ஏற்றுமதிக்கு தேவைப்படுகின்றன. தேனைப்பெட்டியில் மற்றும் சாஷேக்களில் அடைப்பதில் மிக நவீன முறைகளைக் கையாள்வதால்தான் ஐரோப்பிய நிறுவனங்கள் எங்கள் நிறுவனப் பொருட்களைக் கண்டு நிலைகுலைகின்றன ’’ என்று தன் நிறுவனத்தைப்பற்றிக் கூறுகிறார் சாயா. ‘’இந்த மாதம் ஜப்பானியர்கள் எங்கள் தொழிற்சாலைக்கு வந்து பார்வையிடப்போகிறார்கள். இது இரு நிறுவனங்களும் இணைந்து கேரட் ஜாம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துகொள்ள உதவியாய் இருக்கும் ’’ என்று கூறும் சாயா தன் உற்பத்தி வரிசையில் காபியையும், அண்மையில் இணைத்திருக்கிறார். குடகு மற்றும் சிக்மகளூர் ஆகிய பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிறந்த காபி விதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மேலும், சாயா தனக்கு உதவியாக இருக்கும் பலரில் கே.எம் ராஜப்பாவினை முக்கியமாக குறிப்பிடுகிறார். ‘’ நம்பிக்கையாக பாதுகாப்பாக நிறுவனத்தை வழிநடத்த ஒரு தொழில் பங்குதாரர் எனக்குத் தேவைப்பட்டார். அப்போது என் அம்மாவின் உறவினரான ராஜப்பா கிடைத்தார். இவரின் மூலம்தான் மக்களை அணுகுவதற்கும், காலக்கெடு முடிவதற்குள் பணிகளை நிறைவு செய்வதற்கும் உதவியாக இருக்கிறார் ’’ என்று பெருமையுடன் கூறுகிறார் சாயா நஞ்சப்பா. வளைகுடாவைச்சேர்ந்த நிறுவனத்துடன் ஜாம் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு சவூதி அரேபியாவிலிருந்து வந்து சேர்ந்த 24 டன் பேரீச்சம்பழத்தினை பதப்படுத்த இயந்திரங்களை வாங்கி, அவற்றைக்கொண்டு தொழிற்சாலையை விரிவு படுத்திக்கொண்டிருக்கிறார். சாயாவின் அடுத்த தொழில் முயற்சியாக காதியின் உதவியுடன் கிராமிய தொழில்களான ஊறுகாய், சாஸ், அப்பளம் மற்றும் கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை செய்ய முனைந்திருக்கிறார். கேவிஐபி இத்தொழில்களுக்கும், கைவினைப்பொருட்களுக்கும் மானிய உதவிகளை அளித்து வருகிறது. ‘’எனது தனிப்பட்ட குறிக்கோளாக, கிராமிய உற்பத்திப்பொருட்களை விளம்பரப்படுத்துவதும், பெண்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதும், அவர்களின் உற்பத்திப்பொருட்களுக்கான சந்தையை உருவாக்கித்தருவதேயாகும். இன்று சிறந்த தரத்தில் பெரும் நிறுவனங்கள் தமது பொருட்களை தயாரிப்பதோடு அவற்றை தரமாகவும் அடைக்கப்பட்ட எங்களது தொழிற்சாலைகள் உதவுகின்றன ’’ என்று சாயா நஞ்சப்பா நம்பிக்கையின் பேரொளி ஒளிர கூறுகிறார். நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 16 சிக்கனமான புதுமைவழித் தீர்வுகள் கேத்தரின் கிலோன் தமிழில்: வின்சென்ட் காபோ ஒளிரும் புத்தகப்பை தயாரித்தவர்: அனுஷீலா சகா சவால் தொடர்ச்சியான மின்வெட்டுகளினால் பள்ளிக்குப் பிறகான படிப்பு மாணவர்களுக்கு எளிதானதாக இல்லை. பயணம் டெல்லியைச் சேர்ந்த அனுஷீலா சகா தன்வீட்டில் பணிப்பெண்ணுடன் நடத்திய உரையாடலின்போது, அங்கு ஏற்படும் மின்வெட்டு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான சிந்தனை அவரின் மூளையில் உதித்தது. சீல் இந்தியா நிறுவனத்தின் புதுமை உருவாக்கத்திறன் தலைவரான அனுஷீலா, ‘’ டெல்லியிலுள்ள பெரும்பாலான குடிசைப்பகுதிகளில் தொடர்ச்சியான மின்வெட்டுகளினால் அங்குள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் மெழுகுவர்த்தி அல்லது மண்ணெண்ணெய் விளக்கின் மூலம் படிக்கிறார்கள். அசைந்து எரிந்து நின்றுவிடுவது போல் எரியும் சுடரின் ஒளியில் படிப்பது மிக கடினமான காரியம் என்பதோடு, படிப்பின் மீதான ஆர்வமும் வடிந்துபோய், பள்ளியை விட்டு நிற்கிற நிலைவரை செல்கின்றதும் உண்டு ‘’ என்று விரிவாக பேசுகிறார் அனுஷீலா. சிறந்த விளக்குகளைக் கொண்ட ஒரு பையை உருவாக்க வேண்டும் என்பது இவரின் ஆசையாக இருந்தது. சூரிய சக்தியை சேமிக்கும் தகடுகளை பையின் முன்பகுதியில் அமைத்து எல்இடி விளக்குகளை அதன் எதிர்புறமாக அமைத்திருக்கிறார். இதன் மூலம் பகலில் சாதாரணமான பை போல இருக்கும் இது, இரவில் விளக்குகளைக்கொண்ட மேஜை விளக்கு போல செயல்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது பள்ளியில் இருக்கும்போதும், சூரிய சக்தி தொடர்ந்து சேமிக்கப்படுவதில் எவ்வித தடையும் ஏற்படுவதில்லை. திறந்தபள்ளிகளுக்கு செல்லுகிற குழந்தைகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. நீரினால் பாதிப்பு ஏற்படாதவண்ணம் உருவாக்கப்பட்டுள்ள சூரிய சக்தி தகடுகளின் எடை 620 கி. ஆகும். எளிமையாக பயன்படுத்த முடியும் இந்தப்பை மாணவர்களுக்கு தன் ஒளிமூலம் வழிகாட்டுகிறது. தாக்கம் இந்த ஒளிதரும் பைகளை உருவாக்க பை ஒன்றுக்கு ரூ. 1500 செலவாகிறது. சீல் இந்தியா தனது நிதியின் மூலம் உருவாக்கித்தரும் இப்பைகளை தி பாலக் டிரஸ்ட் எனும் அமைப்பு திறந்தபள்ளிகளுக்கு செல்லும் குடிசைவாசி குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.   பசுமைப்பயணம் தயாரித்தவர்: சிவராஜ் முத்துராமன் சவால் தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல் விலையும், நகரத்தில் அதிகமாகும் மாசுபடுத்தலுமே ஆகும். பயணம் ‘’மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை மாற்றி அமைப்பது என்பது எனக்கு மிகப்பிடித்தமானது. எரிபொருளின் விலை அதிகரித்துகுக்கொண்டே செல்வது சூழலில் சூரிய சக்தியில் இயங்கும் வாகனம் ஒன்றை மாற்றாக உருவாக்கினால் என்ன என்று தோன்றியது ’’ என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த விற்பனை நிபுணரான சிவராஜ். ஒரு சைக்கிள் ரிக்சா ஒன்றினை 9000 ரூபாய்க்கு வாங்கி, அதனை சேலம் கொண்டுசென்று வெல்டர்கள் மூலம் பல மாறுதல்களைச் செய்து தன் முதல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனத்தை தயாரித்தார் சிவராஜ். பின் பல மாறுதல் பணிகளை செய்து, அதன் எடையை குறைத்திருக்கிறார். அதில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தினார் என்று கேட்டபோது,’’ மூன்று இருக்கைகள் கொண்ட சிறிய நானோ கார் போல இருக்கும். சாவியைத் திருகினால் எந்த சத்தமும், மாசுபடுத்தலும் இல்லாமல் பயணிக்க முடியும். சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் இந்த வாகனம் 45 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. மழைநாட்களிலும் எந்த பழுதும் இல்லாமல் இயங்கும் இவ்வாகனம் மின்சாரம், சூரிய சக்தி, காலால் அழுத்தும் பெடல் என மூன்று வித முறைகளின் மூலம் உருவாகும் சக்தி பின்னால் உள்ள லித்தியம் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. தாக்கம் ஒரு லட்சரூபாய் செலவாகிறது இந்த வாகனத்தை முழுமையாக உருவாக்க. சென்னை மெரினா கடற்கரையில் பொது மக்கள் பயன்பாட்டிற்கென விலையில்லாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனமானது, தற்போது சதக் பொறியியல் கல்லூரியில் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான காரணங்களுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.   பெண்களின் கௌரவத்திற்கான கழிவறை கண்டுபிடித்தவர்: பிராமிதாசென் குப்தா சவால் தூய்மை செய்யக்கூடிய எளிதில் எடுத்துச்செல்லும் வகையிலான கூடாரம் இரண்டு நிமிடங்களில் கட்டமைக்க இயலும் இந்த உபகரணத்தின் மூலம் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தினை பெண்களுக்கு அளிக்க இயலும். பயணம் குர்கானைச் சேர்ந்த முன்னாள் வங்கியாளரான பிராமிதா சென்குப்தா சுகாதாரத்திற்கான இவ்வுபகரணத்தினை உருவாக்கியது பற்றிக்கூறுகிறார் ‘’பல்வேறு பயணங்களின்போது பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்தவேண்டிய அவசியமும், கட்டாயமும் இருந்தது. அக்கழிவறைகளின் மோசமான பராமரிப்பின் காரணமாக தண்ணீரைக் குறைவாகக் குடித்து சிறுநீர் வராமல் பார்த்துக்கொள்ளும் நிலைக்கு, அக்கழிவறைகளுக்கு செல்லும் நிலையைத் தவிர்க்க நினைத்தேன்’’. இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் பிராமிதா அதோடு நிற்கவில்லை. ‘’ எளிதில் கையாளக்கூடிய ஒரு வடிவமைப்பை என்சர்க்கிள் சி(15கி) எடையில் உருவாக்கி, கார்களில் வைத்துக்கொண்டு பயணங்களில் பயன்படுத்தும்படியான கழிவறையினை உருவாக்கினோம். இதனை சாலைகளில் எளிமையாக பயன்படுத்த முடியும் என்கிற பிராமிதா இதன் பின்னர் அடித்தட்டு மக்களுக்கான பிரச்சனைகளை அறிந்து அதனைத் தீர்க்க முயற்சித்தார். ‘’பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகையினால் ஒரு பேரிடர் நேரும்போது, ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க மிகவும் கடினமாக உள்ளது. வயிற்றுப்போக்கு, கருச்சிதைவு, பெருகியுள்ள பள்ளி இடைநிற்றல் இன்னும் பல பிரச்சனைகளும் உள்ளன. இவையே பிராமிதாவின் உத்வேகத்திற்கு காரணமாக அமைய அவரது ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் குழுவானது அதிக எண்ணிக்கையிலான இது போன்ற என் சர்க்கிள் ஆர் கழிவறைகளை உருவாக்கி வருகின்றனர். தாக்கம் இன்றைய தேதி வரை என்சர்க்கிள் ஆர் மேம்படுத்தப்பட்டு பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் வௌ¢ள நிவாரணத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்பு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையின்போது அறையாக மாற்றியமைத்து பயன்படுத்தப்பட்டது.   புத்தகப்பையும் மேஜையும் ஒன்றேதான் கண்டுபிடித்தவர்: ஷோபா மூர்த்தி சவால் இந்தியாவிலுள்ள பல கிராமத்து பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான மேஜைகள் இல்லை. மாணவர்களுக்கு புத்தகைப்பையும் கிடைப்பதில்லை. பயணம் மும்பையைச் சேர்ந்த ஷோபா மூர்த்தி தன்னுடைய ஆரம்ப் அமைப்பு மூலம் மகராஷ்டிரா மாநில சதாரா மாவட்ட வாய் தாலூக்காவில் பணி செய்து வருகிறார். ஃஜில்லாபரிஷத் பள்ளி மாணவர்கள் கடும் வறுமையான சூழலில் புத்தகப்பை கூட இல்லாமல் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அதுவும் கிடைக்காதவர்கள் கைகளில் புத்தகத்தை சுமந்து பள்ளி செல்வதை உற்றுக் கவனித்தார். இதுபோன்ற பல பள்ளிகளிலும் மேஜைகள் இல்லாமல் குழந்தைகள் பலமணி நேரம் குனிந்துகொண்டே படிக்கவேண்டிய நிலை இருந்ததைக் கண்டறிந்தார். தன் குழுவோடு இணைந்து பயன்படுத்திய காகிதப்பெட்டிகளை புத்தகப்பை மற்றும் மேஜை போல் செய்தார்கள். ‘’முத்ரா விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த சனூரி கோம்ஸ் மற்றும் அவர்களின் குழுவினர் எங்களோடு இணைந்து இதுபோன்ற மேஜைகளைத் தயாரிப்பவர்களைக் கண்டறிந்து அவற்றைத் தயாரித்தோம்’’ என்கிறார் ஷோபா. எங்களுடைய குறிக்கோள் செய்தி ஒன்றுதான். ஒரு பிரச்சனைக்கான தீர்வை நம்முள்ளிருந்தே பெறமுடியும். எளிமையாகவும், சிக்கனமாகவும் தேடிப்பெற முடியும்’’ என்கிறார். தாக்கம் ஒவ்வொரு புத்தகப்பையும் 15 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 10 ஃஜில்லாபரிஷத் பள்ளிகளுக்கு இவை எவ்வித விலையில்லாமல் மகராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.   நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்து தடுக்கும் நுட்பம் கண்டுபிடித்தவர்கள்: பிரசித்தி பண்டாரி, ஸ்வாதி ஸ்ரீதரன் சவால் வயிற்றுப்போக்கை உருவாக்கும் ரோட்டாவைரசினால் இந்தியாவில் 80000 குழந்தைகள் ஆண்டுதோறும் இறக்கிறார்கள். பயணம் பிரசித்தி பண்டாரி மற்றும் ஸ்வாதி ஸ்ரீதரன் ஆகியோர் வைரஸைக் கண்டறிய திரவச்சில்லு ஒன்றினைப் பயன்படுத்துகிறார்கள். ரோட்டாவைரஸை கண்டறிய எதிர் நுண்ணுயிரிகள் செலுத்தப்பட்ட பட்டு நூல் பயன்படுத்தப்படுகிறது. மலத்தில் கலந்துள்ள வைரஸ் பரவத்தொடங்கும் போது நூலில் உள்ள எதிர் நுண்ணுயிரிகள் அதைக் கண்டறிந்து அதன் வேதிப்பொருட்களினால் நிறம் மாறும்’’ என விளக்குகிறார் பெங்களூர் அச்சிதா ஆய்வகத்தைச் சேர்ந்த மரு. தனஞ்ஜெய் தெந்துகுரி. ‘’இச்சோதனை மூலம் வயிற்றுப்போக்கிற்கு காரணம் வைரஸா, அல்லது பாக்டீரியாவா எனக்கண்டறிந்து தேவையில்லாத எதிர் நுண்ணுயிரிகளை விலக்க முடியும். வயிற்றுப்போக்கிற்கு தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள், போடப்படாத குழந்தைகள் என்பதையும் கண்டறிய முடியும். இந்திய அறிவியல் கழகத்தின் உயிரி வேதியியல் துறையைச் சேர்ந்த மரு. சி. துர்க்கா ராவ் அவர்களோடு இணைந்து பணிபுரிகிறோம்’’ என்கிறார் தனஞ்ஜெய். நாங்கள் இதுபோன்ற சோதனைகளை இரண்டாம், மூன்றாம் வரிசை நகரங்களைச்சேர்ந்த மக்களும் பெற வேண்டுமென சோதனைகளை 30 லிருந்து 40 ரூபாயில் செய்கிறோம். இச்சோதனைகளை மேம்படுத்துவது தொடர்பாக பல ஆண்டுகளாக உழைத்துவருகிறோம்’’ என்கிறார் மரு. மோகன்ராவ். நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 17 ஒடிஷாவின் ஐன்ஸ்டீன் ஹேமந்த் குமார் ரௌட் தமிழில்: வின்சென்ட் காபோ   சிறிய கேக் துண்டுகளை வெட்டும் இயந்திரத்திலிருந்து பெரிய தொழிலக கத்தரிக்கோல்கள், காற்றடிக்கும் இயந்திரத்திலிருந்து ரிக்சா, தானியங்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், கிராமத்து குளிர்சாதனப்பெட்டியிலிருந்து பல்வேறு செயல்பாடுகளைக்கொண்ட சாதனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த கண்டு பிடிப்புகள் மிஹிர்குமார் பண்டாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்திற்கும், அவற்றைப்பயன்படுத்திய முறைக்கும் சாட்சியாக உள்ளன. ஒடிஷாவின் கரையோர மாவட்டமான பாலசோர் மாவட்டத்திலில் உள்ள பகனாகா அருகிலுள்ள இச்சாபூரினை பூர்வீகமாக கொண்டவரான 47 வயதாகும் பண்டாவின் அறிவுத்திறன் சிறுவயதிலேயே உத்வேகம் கொண்டு ஒளிரத்தொடங்கியிருக்கிறது. இளமையிலிருந்தே பண்டா வாகனங்களின் இயந்திர பாகங்களை கழற்றுவது, பின அவற்றை இணைப்பது என்பது அவருக்கு ஒரு பொழுதுபோக்கான விஷயமாக, விளையாட்டாக இருந்து வந்தது. பண்டாவின் கண்டுபிடிப்புகள் மக்களுக்கான கண்டுபிடிப்புகள், மற்றும் மாணவர்களுக்கான கண்டிபிடிப்புகள் என் வாழ்வில் தினமும் பயன்படுத்தும் வண்ணமான பொருட்களை உருவாக்க முனைகிறார். ஒடிஷாவின் ஐன்ஸ்டீன் என்று அழைக்கப்படும் இவர் 8,537 அறிவியல் மாதிரிகளை உருவாக்கியிருப்பதோடல்லாமல், தனது சொந்த கண்டுபிடிப்புகளாக 2000க் கும் மேற்பட்ட இயந்திரங்களை வடிவமைத்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவற்றைத் தயாரிக்க அரசின் உதவிகளையோ அல்லது தனியார் அமைப்புகளின் உதவிகளையோ பெறாமல் இவ்வளவையும் உருவாக்கி சாதித்திருக்கிறார் என்பதுதான் முக்கியமானது. அறிவியலின் மீதான காதல் பண்டாவுக்கு 1986 ஆண்டு உள்ளூர் சிறுவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கும் போது, முதன்முதலில் தொடங்கியது. தன் வீட்டு காலிங்பெல்லை கழற்றி மாணவர்களுக்கு எப்படி அது வேலை செய்கிறது என்று காட்டும்வரை தனக்கு அறிவியல் மாதிரிகள் பற்றி எந்த அறிவும் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார் பண்டா. அழைப்பு மணி வேலை செய்வது நின்று போக, வீட்டில் பெற்றோர் இவரைத்திட்ட அழைப்புமணியை சரிசெய்கிறார் என்றாலும், அதனை தராமல் வேறொரு அழைப்பு மணியை உருவாக்கி வெற்றியை பெறுகிறார். சிவில் என்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்றுள்ள பண்டா மாநில பஞ்சாயத்துராஜ் துறையில் பணியாற்றுகிறார். இவர் வாழ்வினை விடாமுயற்சி கொண்டு பயணிக்கும் நெடுந்தொலை நீண்ட சாலை என நம்புகிறார். ‘’ பெறுவது இழப்பது என்பனவற்றை உள்ளடக்கிய வாழ்க்கை தீர்க்கப்படாத ஒரு சூத்திரம். தோல்வியின் துக்கங்களைத் தாண்டிய சிறப்பான ஒன்றைத்தேடுவதே இதில் மகிழ்ச்சியான நிகழ்வு. பல புதிய விஷயங்களை தேடிப்பயணிப்பதே என் கனவுகளுக்கு உருவம் கொடுக்கவும், அவற்றை ஆராயவும் உதவுகிறது ‘’ என்று கூறுகிறார் பண்டா. பண்டாவின் வீடு ஒரு பொருட்காட்சி சாலையை நினைவுபடுத்துகிறாற்போல பல்வேறு அளவுகளில் வடிவங்களில் இயந்திரங்கள் மூலை முடுக்கெங்கும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்கான அறிவியல் பொருட்களைத் தயாரிப்பதே இவரின் வாழ்வின் லட்சியமாக உள்ளது. Social Development Research Organization for Science, Technology, and Implementation (SROSIT)எனும் எளிமையான தனித்துவ இயந்திர கண்டுபிடிப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிலகத்தை உருவாக்கியுள்ளார் பண்டா. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இவரது பயிலகத்தை பார்வையிட்டு, இவரது படைப்பாளுமையில் உருவான அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி கற்கிறார்கள். உயிரோட்டமான வகுப்பறைகளில் மாணவர்களை சிறைவைப்பதனால் அவர்களின் புதுமையாக்க ஆர்வம் அழிந்துவிடுவது துரதிர்ஷ்டவசமானது. உயிர்ப்பான சூழலில் நடைபெறும் கல்வி ஒரு கொண்டாட்டமாகவும், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதாகவும் அமையும்’’ என்கிறார் பண்டா. ‘’கல்வி என்பது வாழ்க்கை முழுவதும் கற்க வேண்டிய ஒன்று இது பாடத்திட்டத்தில் குறுகிவிடக்கூடாது. கண்கள் கவனிக்க, கைகள் செய்யும் இந்த அறிவியல் மாதிரிகள் மூலம் நாம் கற்பதை பாடநூல்களின் மூலம் கற்பது சாத்தியமில்லை’’ என்று தீர்க்கமாக பேசுகிறார் தன்னியல்பான அறிவியல் கண்டுபிடிப்பாளர் பண்டா. இவரது கண்டுபிடிப்புகள் பெரும்பாலும், வீணான பொருட்கள், குப்பைகளிலிருந்து உருவாகியுள்ளன. ‘’ என் வருவாயைப் பயன்படுத்தித்தான் இவை அனைத்தையும் உருவாக்கி வருகிறேன். பொருளாதாரரீதியாக யாரும் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. என் மனைவியின் நகைகளையும் இதற்காக விற்றுவிட்டேன்.’’ என்று கூறுபவர் இதனை 75 பைசாவிலிருந்து தொடங்கியிருக்கிறார். பொருளாதாரப் போதாமை என்பது மீண்டும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பொருளாதாரப் பற்றாக்குறையினால், பல முக்கியமான நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகள் வெளியே தெரியாமல் தேங்கி நின்றுகொண்டிருக்கின்றன. பல்வேறு இடைஞ்சல்கள் வந்தாலும், பண்டா அவற்றை தாண்டி விட்டுக்கொடுக்காமல் இயந்திரங்களை உருவாக்கி வருகிறார். பண்டாவின் அறிவியல் ஆய்வுக்கூடமானது நன்கு அலங்காரம் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டு தோட்டத்துடன் உள்ளது. வெகு தொலைவிலிருந்து வரும் பார்வையாளர்களையும், தன்வசம் ஈர்ப்பதாக உள்ளது. எந்த விவசாயப்பின்னணியும் கொண்டிராத பண்டா தனித்துவமான முறைகளின் மூலம் போன்சாய் ஆலமரங்களை மேம்படுத்தி தன் பண்ணையில் வளர்த்துவருகிறார். இவற்றை கைவிடப்பட்ட கோயில்கள், பழைய கட்டிடங்களிலிருந்து பெற்றிருக்கிறார். உண்மையான மனிதர்களுக்கு நெருக்கமான அறிவியலை உணர பண்டாவின் ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி அறையிலுள்ள இயந்திரங்கள் மூலம் அறிய முடியும். இதற்கு அதைச்சுற்றியுள்ள தனித்துவமான சூழலும், காரணமாயிருக்கலாம். பண்டாவின் சாதனைகளுக்கும் அவை உதவியிருக்க கூடும். நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். 1 தொகுப்பாசிரியர்கள் வின்சென்ட் காபோ(சிங்காரம்)   அடுத்தவர்களுக்கு ஆலோசனை என்றால் தன் காசை செலவழித்தாவது பஸ் ஏறி வந்து பல யோசனைகளைக்கூறி தானே அவற்றை நிராகரித்துவிட்டு நீயே யோசித்து ஏதாவது முயற்சி செய் என கூறி தன் வழியே செல்லும் நவீன பூச்செரிந்து ஆசிர்வாதிக்கப்பட்ட தாவோ இவர் என்று இவரே நினைத்துக்கொண்டு பலவற்றிலும் வாயை விட்டு வாங்கிக்கட்டிக்கொள்ளும் லோக்கல் ப்ரூஸ்லீ இவர்.   இவரின் தொகுப்பாசிரிய பணி என்பது குறிப்பிட்ட எல்லை கொண்டது என்பதால் இவரின் ஸ்டேண்டப் , சிட்டிங் அப் காமெடிகளை தன்னியல்பாகவே வெளிப்படுத்தி, சிரித்தால் என்னய்யா ஏய்யா என்பார் இந்த அப்பாவி கல்லாப்பொட்டி சிங்காரத்தின் அதி தீவிர ரசிகர். முதலில் பேச ஆரம்பிக்கும்போது அடடா, திக்குவாய் போல என்று நினைப்பவர்கள் பின் சரவெடியாய் மன்மத சஞ்சீவி காணொளிகளைப்போல மணிக்கணக்காக அன்னாரது பேச்சு நீளும் போதுதான் அறிவார்கள்; கண்ணிவெடியில் சிக்கினால் கூட கால்தான் போயிரும், அநியாயத்திற்கு ஆர்.டி. எக்ஸ் பாமில் அல்லவா சிக்கியிருக்கிறோம் என்று. எழுத்து சீரியசாத்தான் இருக்கும் என்று இவர் அங்கப்பிரதட்சணம் செய்து கூறியும் கூட லைஃப்ஸ்டைல் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இவரை நம்பாமல் சிரித்துக்கொண்டே ரன்னிங்ல கூட காமெடி பண்றீங்களே என துளசி டீ கொடுத்து அடிக்கடி வந்துட்டுப்போங்க சார் என்று கூறி அனுப்பிவிட்டார்.     ஜோ ஃபாகஸ்   தீவிரமான விஷயங்களைப்பற்றி மட்டுமே எழுதுவேன் என்ற குறிக்கோளோடு தாளில் பென்சிலால் மட்டுமே அடித்து திருத்தி எழுதும் பழக்கமுடையவர் ஜோ ஃபாக்ஸ். எழுதும்போது தீவிரநிலையில்  எழுதும் விஷயங்களைக்காட்டிலும் மிகத்தீவிரமாக பல பாக்கெட்டுகள் ஜிலேபி தின்னும் பழக்கம் கொண்டவர்.  சரி இது ஒரு ஜிலேபி கேசப்பா என்று ஒதுக்கமுடியாதபடி மிகத்தீவிரமான தாராளமயம், உலகமயமாக்கம் பற்றிய சூழல்களை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களைக் காட்டிலும் மிகவிரிவாக தொகை நூலாக வெளியிடலாமா என்று தோன்றும் அளவு பேசும் விஷயம் தெரிந்த புரட்சிக்காரர் இவர். இவரின் ஆளுமை தெரிந்தபின் இவரை கோமாளி மேடை நண்பர்கள் அணுகியபோது, இவரின் அறையைப் பார்த்து, இது மனிதன் வாழும் வீடா என்று பயந்தே போய்விட்டனர். அறை முழுக்க மின்விசிறி காற்றில் தாள்கள் பறக்க, சிகரெட் புகை அறை முழுக்க டிசம்பர் பனி போல உறைந்திருக்க தலித் சமூக செயல்பாடுகள் பற்றி டி. ஆர். நாகராஜ் எழுதிய கெட்டி அட்டை ராயல் அளவு கொண்ட ஆங்கிலப்புத்தகத்தினை கதவில் சாய்ந்து படித்துக்கொண்டிருந்தார். இது இவரின் தொகுப்பில் வரும் முதல்நூல் பின்னாட்களில் இவரின் முழுமையான நூல்கள் வெளிவரக்கூடும். தற்போது புதிய நூல்களின் தொகுப்பிலும், தன் எழுத்துக்களை சேகரித்து எழுதியும் வருகிறார். பெரும் நம்பிக்கை கொண்டெழுதும் மனிதநேய சமத்துவ மார்க்சிய லெனினிய சிந்தனையாளர் இவர். பல உள்ளடங்கிய கிராமங்களில் களப்பணியும் ஆற்றியிருக்கிறார். 2 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/