[] []       தூற்றுவார் தூற்றட்டும்  கட்டுரைகள்    நிர்மலா ராகவன்  nirurag@gmail.com    அட்டைப்படம் : N. Sathya - experimentsofme@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை :  Creative Commons Attribution-NonCommercial-ShareAlike  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.              பொருளடக்கம் 1. தூற்றுவார் தூற்றட்டும்! 4  2. கலாசாரக் குழப்பங்கள் 8  3. பணம்தானா எல்லாம்? 11  4. உல்லாசம் எங்கே? 14  5. கடவுள் நம்பிக்கை – மூட நம்பிக்கை 17  6. வழிகாட்டல் நச்சரிப்பல்ல 20  7. உள்ளுணர்வைக் கேளுங்கள்! 22  8. இந்த ஆண்களை..! 24  9. நிறைவுகளைப் பட்டியலிடுங்கள் 27  10. கூடா நட்பும் தண்டனையும் 30  11. நண்பர்களும், மரக்கட்டைகளும் 33  12. சிறு வெற்றி, பெரு மகிழ்ச்சி 36  13. ஆத்திரத்தை ஆத்திரத்தால் வெல்ல முடியுமா? 39  14. எப்படியெல்லாம் கையாள்கிறார்கள்! 42  15. தலைவரும், அதிகாரியும் 44  16. போதுமென்ற மனமே.. 46  17. தொழில் நுட்பமா, உறவினரா? 49  18. திரையால் பாதிப்பு 52  19. நல்லதொரு முடிவு 54  20. அனுபவங்களா, அவதியா? 57                                    1. தூற்றுவார் தூற்றட்டும்!   எல்லா அவயவங்களும் சரிவர இயங்கும் பலர் எதையோ இழந்தவர்கள்போல் இருக்கிறார்கள். ஆனால், உடற்குறையுடன் இருப்பவர்கள் அதையே எண்ணி வருந்திக்கொண்டிராது, தம்மால் இயன்ற ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதில் வெற்றியும் பெறுவது ஆச்சரியப்படத்தக்க சமாசாரமா, இல்லை, நமக்குத்தான் முறையாக வாழத் தெரியவில்லையா?   குறை யாரிடம்? “சிலர் எதையும் எதிர்மறையாகவே எடுத்துக்கொள்கிறார்கள். அது அவர்களுடைய குறைபாடு!” இப்படிக் கூறியிருப்பவர் மார்லா ரன்யான் (MARLA RUNYAN) என்ற அமெரிக்க பெண்மணி.   பிறரைக் குறைகூற இவருக்கு என்ன தகுதி? சட்டபூர்வமாக பார்வையற்றவர் மார்லா. 2,000-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தடகளப் பந்தயத்தில் பார்வை உள்ளவர்களுடன் கலந்துகொண்ட முதல் பெண்மணி. 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்றவர். மாரதானில் பல முறை ஓடியுள்ள மார்லா கல்வித்தகுதியையும் விட்டுவைக்கவில்லை. முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறார். இவரைப்போல் மனோதிடம் படைத்தவர்கள் இன்னும் சிலர். இன்னொரு வெற்றியாளரைப் பார்ப்போம். நடக்க முடியாவிட்டால் என்ன! கை, கால் இரண்டுமின்றிப் பிறந்தவர் நிக் (NICK VUJICIC). பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, பிறரது கேலிக்கு ஆளானார். சிறுவர்கள் தம்மை ஒத்தவர்களையே விட்டுவைப்பதில்லையே! உடற்குறை இருந்தால் சும்மா இருப்பார்களா? `பிறரிடம் என்ன குறை என்றே ஆராய்பவர்களின் வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது!’ என்று அலட்சியம் செய்யும் அறிவு அப்போதே இருந்தது இவருக்கு. முடியும், முடியாது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டார். மார்லாவைப்போலவே, `மனிதர்களின் மனதில்தான் குறையிருக்கிறது!,’ என்ற முடிவுக்கு வந்தார்.   `ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால் முன்னேறலாமே! தன்னால் என்ன முடியும்?’ என்று யோசித்தார் நிக். அதன் விளைவாக, பத்தொன்பது வயதிலிருந்தே தன்முனைப்பைப்பற்றி மேடைகளில் முழங்கினார். `நீ ஒரு நாள் நன்றாகப் பேசப்போகிறாய்!’ என்று பள்ளிப்பருவத்தின்போது ஒருவர் தன் `கையை முறுக்கியதாக,’ தன்னையே கேலி செய்துகொள்ளவும் தவறவில்லை நிக். கேட்பவர்களுக்குத்தான் அதிர்ச்சி. குறைகளுடன் தன்னை ஏற்றதால் நிக் புகழ் வாய்ந்தவராகத் திகழ்கிறார். ஈராண்டுகள் கழித்து, பட்டமும் பெற்றார். `நடக்க முடியாதது ஒரு பெரிய குறையா!’ என்று நினைக்கத் தூண்டும் பிறரைக் காண்போமா? அண்மையில் கோலாலம்பூரில் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். நடனமணிகள் சக்கர நாற்காலியின் உதவியோடு நகர்பவர்கள்.   `நடக்கவே முடியாதவர்கள் எப்படி ஆட முடியும்?’ என்கிறீர்களா? கை அசைவாலேயே ராமாயணம், (தமிழில்) கீதோபதேசம் ஆகிய இரு காவியக் கதைகளையும் திறம்பட விளக்கினார்கள். சக்கர நாற்காலியையோ, கைத்தடியையோ சுழற்றியபடி மேடையை எளிதாகச் சுற்றிவந்தார்கள். காட்சி அமைப்புகள் பிரமாதமாக இருந்தன.   சிலிர்த்துப்போய் அரங்கத்தினர் அனைவரும் கைதட்ட, தில்லியில் முப்பது ஆண்டுகளாக இப்பயிற்சியை அளித்துவருபவர் கூறினார், “இவர்களில் யாருக்கும் நீங்கள் கைதட்டுவது கேட்காது. ஏனெனில் இவர்களுக்குக் காது கேட்காது!” அதிர்ச்சியுடன் அரங்கமே மௌனமாகிவிட, சைகை மொழி தெரிந்த ஓரிருவர் இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தியபடி வேகமாக ஆட்டி, தம் பாராட்டைத் தெரிவிக்க, மேடையிலிருந்தவர்களின் முகம் மலர்ந்தது. அவர்களும் அப்படியே செய்து, தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். (கைதட்டுவது, மகிழ்ச்சி இரண்டையும் தெரிவிக்க ஒரே சைகைதான்). செவிப்புலன் இல்லாமல் தாளத்திற்கேற்ப நகர்வதும், மொழி புரியாவிட்டாலும் தக்கவாறு அவர்கள் ஆடுவதும் விந்தை. உலகிலேயே முதன்முறையாக இங்கு அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சி அது. கிருஷ்ணன், சீதை ஆகிய இரு பாத்திரங்களையும் ஏற்று, மெய்சிலிர்க்க வைத்தவர் இருபது வருடங்களாகப் பயின்றவராம். (சில “மாதங்களே நாட்டியம் பயின்ற மகளுக்குத் தனியாக ஆடச் சந்தர்ப்பம் வேண்டும் என்று ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கும் தாய்மார்களை நினைத்துக்கொண்டேன். பத்து ஆண்டுகளாவது பயிலவேண்டாமா!) உடலில் குறைபாடுகள் இருந்தாலும், இவர்களிடம் மனோதிடம் இருந்தது. `எவ்வளவு பிரயாசைப்பட்டு உழைத்திருப்பார்கள்!’ என்ற பெருவியப்பு பார்த்தவர்களிடம் ஏற்பட்டது. `நாமும் இருக்கிறோமே, ஒன்றுமில்லாததற்கெல்லாம் துவண்டு போய்க்கொண்டு!’ என்று அன்று சிலருக்கு ஞானோதயம் வந்திருக்கலாம்.    காது கேட்காவிட்டால் என்ன! இசைத்திறன் போதாதா! காது கேட்காத நிலையிலும் இசையில் நிலைத்திருந்தவர் ஜெர்மானியரான பீதோவன். (பிறந்த வருடம்: 1770). குடிகாரரான தந்தை இவரது முதல் குரு. சிறு பையனான மகனை பியானோ வாசிக்கும்படி பலவந்தப்படுத்தி, தவறிழைத்தால் கடுமையாகத் தண்டிப்பாராம். பன்னிரண்டு வயதிலேயே ஆர்கன் வாத்தியம் வாசித்தும், இசையமைத்தும் பொருளீட்டி, குடும்பத்தைக் காக்கவேண்டிய பொறுப்பு ஏற்பட்டது பீதோவனுக்கு. `புதுமையான கண்டுபிடிப்பு!’ என்று இவரது சிம்பொனி இசையமைப்பு பாராட்டப்பட, பிறரும் அவ்வழியைப் பின்பற்ற ஆரம்பித்தனர். ஆனால், மேடையில் இவர் வாசித்தபின் ரசிகர்களின் கரகோஷம் செவியில் விழாததுதான் பரிதாபம். பழகத் தெரியாவிட்டால் என்ன! கணிதமே போதும் மூன்று வயதுவரை பேச்சு வராமல், ஆடிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, பிறருடன் பழகத்தெரியாது ஒரு குழந்தை இருந்தால் `முட்டாள்!’ என்று பழிக்கத் தோன்றுகிறதா?   யோசிக்கவேண்டிய விஷயம். ஐன்ஸ்டீன் அப்படித்தான் இருந்தார். இதில் சிறப்பு என்னவென்றால், தனக்கு இயலாததைப்பற்றி எண்ணி வருந்தவில்லை அவர். கணிதம், பௌதிகம் இரண்டு மட்டும் அவர் உயிர்மூச்சாக இருந்தன. 1921-ல் நோபல் பரிசு பெற்றார். தன்னம்பிக்கை போதுமே! நம் ஒவ்வொருக்குள்ளும் ஏதாவது திறமை ஒளிந்துதான் இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவது நம் கையில்தான் இருக்கிறது. பிறரது எள்ளலை உண்மையென நம்பித் தளர்ந்துவிடக்கூடாது. அப்படிச் செய்பவர்கள் நம்மிடம் காணப்படும் திறமையால் எழும் பொறாமையை மறைத்து, கேலி பேசுவார்கள். என் பாதையை மறித்தவர்கள் `இவள் எழுதுவதெல்லாம் ஆபாசம்! இல்லை, புரட்சி!’ `நம்மால் முடியாததை இவள் சாதித்துவிடப் போகிறாளே!’ என்ற அச்சம் அந்த பயங்கொள்ளிகளுக்கு. வேறு சிலர், நயமாகப் பேசியே நாம் முன்னேறுவதைத் தடுக்க முனைவார்கள். (`இந்தமாதிரி பிறரைத் தாக்கி எழுதினால், மாட்டிக்கொள்வாய்! ஜாக்கிரதை!’) இப்படிப்பட்டவர்களின் மனம் புரிந்தால், நம்மை எவ்வழியிலாவது தாக்கும் சொற்களை அலட்சியம் செய்யலாம். அவர்களுடைய ஆத்திரம் அதிகரிக்கும். பிறரிடம் நம்மைப்பற்றித் தாறுமாறாகப் பேசுவார்கள். பிறர் பொறாமைப்பட நம்மிடம் விஷயம் இருக்கிறதே என்று பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!   இவ்வளவு இடர்பாடுகளைத் தாண்டி தான் தேர்ந்தெடுத்த துறையில் சாதனைகள் புரிய ஒருவருக்குப் பல ஆண்டுகள் ஆகலாம். விடாமுயற்சி, தன்னம்பிக்கை இரண்டும் இருந்தால் போதும். எவரும் பிரகாசிக்கலாம்.   2. கலாசாரக் குழப்பங்கள்   “கோலாலம்பூரில் எங்கே குடியிருக்கிறீர்கள்?”   என் பதிலைக் கேட்டவள் சற்று அதிர்ச்சியுடன், “அது மலாய்க்காரர்கள் இருக்கும் இடமாயிற்றே!” என்றாள். இந்தியர், சீனர், மலாய் மட்டுமின்றி, பலர் வாழும் நாடு மலேசியா. அவர்கள் ஒவ்வொருவரின்  கலாசாரமும் வித்தியாசமாக இருக்கலாம். இருந்தாலும், பிறருடன் பழகினால்தானே நம் கண்ணோட்டம் விரிவடையும்? பின் எப்படித்தான் முன்னேற்றம் அடைவது? மலாய்க்காரர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள். சீனர்கள் கிறிஸ்துவர்கள். அல்லது, புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். இந்தியர்கள் பெரும்பாலும் இந்துக்கள். சில கிறிஸ்துவர்களும் உண்டு. எப்படியெல்லாம் பிறர் வேறுபடுகிறார்கள் என்றே கவனித்துக் கொண்டிருந்தால், யாருக்கும் நிம்மதியில்லை. இன்று உலகம் சுருங்கிவிட்டது. வேலை நிமித்தம் பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம், பலருக்கும். அங்கு வெவ்வேறு விதமான மனிதர்களைச் சந்திக்க நேர்வதைத் தவிர்க்க முடியாது. இருப்பினும், தம்மை ஒத்தவர்களுடன் மட்டுமே தொடர்புகொள்வதுதான் பலருக்கு நிம்மதி, மகிழ்ச்சி.  தம்மைப் பிறர் தாழ்வாக எடை போட்டுவிடுவார்களோ, இல்லை, தமது கலாசாரத்தை இழக்க நேரிடுமோ என்ற பயமே இவர்களது போக்கிற்குக் காரணம். என்னைப்போலவே இரு! தன்கீழ் வெவ்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் வேலை செய்யும்போது அவர்களை அதட்டியோ, மட்டம்தட்டியோ நடத்தினால், வேலை நடக்காது.   ஒரு முறை, நான் மலாய் பெண்கள் அணிவதுபோல் ஸாரோங் அணிந்து பள்ளிக்கூடத்திற்குப் போனேன்.  எப்போதும் எல்லாரையும் பார்த்துச் சிடுசிடுக்கும் தலைமை ஆசிரியை, “இன்று ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்!” என்று முகமெல்லாம் சிரிப்பாகப் பாராட்டினாள். இவளைப் போன்றவர்கள் தலைமைப் பதவியில்  இருக்கவே தகுதியில்லை. தானும், தன்னைப்போல் இருப்பவர்களும்தான் உயர்த்தி, வித்தியாசமானவர்கள் மாற்றுக்குறைவு என்று சிந்தனை போனால், யார் அவளுக்கு அடங்கி வேலை செய்வார்கள்? அவளை எப்படி ஏமாற்றுவது என்றுதான் மனம் போகும். ஒரு பிரபல மலாய் பெண் எழுத்தாளர் எழுதியிருந்தது நினைவில் எழுகிறது: “நான் படித்தது எல்லாம் கான்வென்டில். அங்கு சிஸ்டர்ஸ் கூறுவார்கள், `கிரிஸ்தவர்கள்தான் சொர்க்கம் செல்ல முடியும்,’ என்று! விவரம் புரியாத வயதில் நான் எவ்வளவு பயந்தேன், தெரியுமா?” அண்மையில், இங்கு ஒரு தனியார் பள்ளியில், அதேபோன்ற ஓர் ஆசிரியை, “எங்கள் இஸ்லாமிய மதம்தான் மிக உயர்வானது,” என வகுப்பில் கூற, பிற இனத்தையும் மதத்தையும் சார்ந்த மாணவ மாணவிகள் தாங்கள் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்கள். அவர்கள் தம் பெற்றோரிடம் கூற,   புகார் தலைமை ஆசிரியைக்குப் போயிற்று. அந்த ஆசிரியை உடனே வேலையிலிருந்து நீக்கப்பட்டாள் – மாணவர்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தாள் என்று. வித்தியாசமாக இருக்கிறான், முட்டாள்! தன்னைப்போல் இல்லாதவர்கள் அனைவரும் முட்டாள், தரக்குறைவானவர்கள் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்கள், `நாம்தான் உயர்த்தி. எங்கள் கலாசாரம்தான் மேல்!’ என்று கர்வமாக நடந்துகொண்டால், இறுதியில் தோல்வி அவர்களுக்குத்தான். சிலருக்குத்தான் தம் இழப்பு என்னவென்று  புரிகிறது. தனித்துப்போய்விட்டோமே! “TALK TO US, LAH! (எங்களுடன் பேசுங்களேன்!)” என்றார் ரிதுவான். லண்டனில் படித்து, பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகிய அனுபவம் உள்ளவர். ஏன் வித்தியாசமான பிறர் தங்களையெல்லாம் ஏற்கவில்லை என்ற  ஏக்கத்துடன், கெஞ்சலாக ஒலித்தது அவர் குரல். நாங்கள் இருவரும் ஆசிரியர்கள் பொதுவறையில்  எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம். நிறையப் பேசினோம் – அரசியலைப்பற்றி, எங்கள் கலாசாரத்தைப்பற்றி. நான் அலைந்து திரிந்து, வாசகசாலைகளிலிருந்து எடுத்துவரும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிப் படிப்பார். “அந்த லைப்ரரி எங்கு இருக்கிறது?” என்று ஒவ்வொரு முறையும் கேட்பாரே ஒழிய, அங்கு போகவே இல்லை. இப்படியே ஈராண்டுகள் கழிந்தன. ஒரு சமயம், “அரசாங்கம் உங்களைக் கெடுத்து வைத்திருக்கிறது. விசேட சலுகையால் உங்கள் சுயமுயற்சியை அறவே இழந்துவிட்டீர்கள்!” என்றேன், எரிச்சலுடன். கூறியபின், அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று தோன்றியது. முதலில் அதிர்ந்த ரிதுவான், நான் கூறியதன் உண்மை புரிந்து, பெரிதாகச் சிரித்தார். நானும் அவரது சிரிப்பில் பங்குகொண்டேன். நினைத்து, நினைத்து, வெகு நேரம் சிரித்தோம். கலாசாரம் வீட்டுக்கு வீடு, நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஏன், ஒரே நாட்டில், ஒரே ஊரில்கூட மாறுபடுமே! நான் கல்லூரிக்குப் போகையில், பேருந்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அக்காலத்தில் பெங்களூரில் எந்தப் பெண்ணும் ஓர் ஆணின் பக்கத்து இருக்கையில் உட்காரமாட்டாள். ஒரு சமயம், என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த தாய், “அங்கே உட்காரேன்!” என்று காட்டினாள். அங்கு ஒருவர் உட்கார்ந்திருந்ததை நான் சமிக்ஞையால் குறிப்பிட, அம்மா, “அதனால் என்ன! ஒட்டிக்கவா போறது!” என்றாள் அலட்சியமாக. நான் அப்படி அமரும்போதெல்லாம் பிற பெண்கள் கேலியாகப் பார்ப்பார்கள். எந்த ஆணும் பேச முயற்சித்ததுமில்லை, தகாத முறையில் நடக்கவுமில்லை. ஆண்களுடன் சரிசமமாக அமர்ந்து, சிரித்துப் பேசினாலே கற்பு பறிபோய்விடும் என்பதுபோல் எண்ணம் கொண்ட பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் பின்தங்கியவர்கள். இன்னொரு பாலருடன் பழகியே இராதவர்கள் திருமணமானபின் வாழ்க்கைத்துணையைப்  புரிந்துகொள்வது சிரமம். “என்னால் என் அண்ணனுடன் நிறையப் பேச முடிகிறது. கணவருடன் அப்படிப் பேசி, நெருங்க  முடிவதில்லையே!’ என்று ஒரு மாது ஏக்கத்துடன் தெரிவித்தாள். பழகுவது என்றால் ஓடி வந்து இடுப்பில் ஏறுவதோ, கட்டி அணைத்துக்கொள்வதோ இல்லை. சரி சமமாக உட்கார்ந்து பேசினாலே போதுமே, மற்றொருவரது கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள! தென்கிழக்காசியாவில் மூத்த பெண்டிருக்கு மிகுந்த மரியாதை. மேல்நாடுகளிலோ, இதற்கு நேர் எதிரிடை. அதனால், எப்போதும் இளமையாகவே இருந்து தொலைக்க வேண்டும். நடக்கிற காரியமா! பிற கலாசாரங்களைப்பற்றி அறிய  புத்தகங்களின் மூலம் ஓரளவு அறிந்தாலும், பிறருடன் பழகுவதும், பயணங்கள் மேற்கொள்ளுவதும் நம் அறிவை விசாலமாக்குகிறது.   `நீ எங்களைப்போல் இல்லையே!’ என்று இளக்காரம் செய்பவர்களும் எதிர்ப்படுவார்கள். பிறரை அவர்கள் இருக்கிறபடியே ஏற்பதால் தாமும் நன்மை அடைகிறோம் என்பது புரியாத மூடர்கள் அவர்கள்.   `நீ மட்டும் என்னைப்போல் இருக்கிறாயோ?’ என்று மனத்துக்குள் திட்டி, சமாதானம் அடைய வேண்டியதுதான்! ஒரே மொழியானாலும், உச்சரிப்பு மாறுபடுகிறது. புரிந்தால் சரி. அதற்குத்தானே மொழி? கேலி எதற்கு? அவரவர் பழகிய விதத்தில் பேசினால்தான் கற்பனையில் தடங்கல் இருக்காது.  நான் மேடையில் பேசும்போது, செந்தமிழில் ஆரம்பித்துவிட்டு, எனக்குப் பழக்கமான `மெட்ராஸ் ஐயர் பாஷை’யில் வேகமாகப் பேசுவேன். “எத்தனை பேர் ஔவை ஷண்முகி பார்த்திருக்கிறீர்கள்?” என்று கேட்பேன். அரங்கத்திலிருக்கும் அனைவரின் கைகளும் உயரும்.   “அப்போ, நான் பேசறதும் புரியும்!” யாரும் மறுத்ததில்லை.   பிறரை, அவர்கள் வாழும் முறையை அறிவது என்றால் நம் பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுப்பது என்றில்லை. அவர்களுக்கு அளிக்கும் மரியாதையை நமக்கும் கொடுத்துக்கொள்ள வேண்டாமா? நாம் நாமாகவே இருக்க, அவர்களையும் மாற்ற முயலாது இருந்தால் நம்பிக்கை எழ, நட்பு பலப்படும். அறிவும் விசாலமாகும். 3. பணம்தானா எல்லாம்?   “ஏண்டா வேலைக்கு வருகிறோம் என்றிருக்கிறது,” என்று தினமும் சலித்துக்கொள்வாள் ஆசிரியையான சுசீல் கௌர்.  “வீட்டில் குழந்தைகளை அழ விட்டு, அப்படியாவது என்ன வேலை!” “பின் ஏன் வருகிறாய்?” என்று நான் கேட்டபோது, “பணத்திற்காகத்தான். வேறென்ன!” என்ற பதில் வந்தது அவளிடமிருந்து. வெவ்வேறு துறையில் இருப்பவர்களை இதே கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. `நீங்கள் ஏன் நடிக்க வந்தீர்கள்?’ `புகழ், பணம்!’ என்ற அந்தப் பிரபல நடிகை புகழும், பண வரவும் நிலைத்திருக்க கடுமையாக உழைக்கவேண்டும் என்றும் புரிந்து வைத்திருந்தார். அதனால் நினைத்தது கிடைத்தன. மகிழ்ச்சியும் உடன் வந்ததோ? தெரியவில்லை. `ஏன் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள் மேற்கல்விக்கு?’   `இந்த உத்தியோகத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?’ எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்: பணம்! மன நிறைவுக்குப் பணம் மட்டும் போதுமா? போதுமான ஊதியம் கிடைத்தாலும், தலைமை அதிகாரியின் அசிரத்தையான, அல்லது கொடுமையான  போக்கால் சலிப்பு எழக்கூடும். எவ்வளவு திறம்பட உழைத்தாலும் பதவி உயர்வு கிட்டாது என்ற நிலை ஏற்படும்போது  இயந்திரகதியில் வேலை பார்க்கத் தோன்றுமே! பணத்தால் அந்த வெறுமையை ஈடுசெய்ய முடியுமா?   பணத்தை மட்டுமே இலக்காக வைத்துக்கொண்டு செயல்படுபவர்களுக்கு எதிலும் பூரண திருப்தி கிடைப்பதில்லை.   `தந்தை பார்த்த பரம்பரை உத்தியோகம். அதனால் நானும் அதையே செய்ய வந்துவிட்டேன்!’ என்பவர்களுக்கு அத்துறையில் திறமை இருக்கலாம். ஆனால், ஆர்வமும் சேர்ந்திருக்க வேண்டாமா?   வேறு வழியில்லாது கிடைத்த  வேலையில் நிலைத்திருக்க வேண்டியபோது, விரக்தி ஏற்பட்டுவிடுகிறது. என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்துதான் நாம் ஒவ்வொன்றையும் செய்கிறோம். இலக்கை மனதில் உறுதியாக வைத்துக்கொண்டால், எந்த இடர்பாடும் பெரிதாகத் தோன்றாது. பொழுதுபோக்குகளும் அவசியம். கோடீஸ்வரர்கள் கூறுகிறார்கள், “பணத்தைச் சம்பாதிக்கும்போது விளையாடுவதுபோல் சுவாரசியமாக இருக்கிறது! பணம் பெரிதாகத் தோன்றவில்லை”. பல எழுத்தாளர்கள் நம் பெயர் நான்கு பேருக்குத் தெரியவரும், புகழ் கிடைக்கும், பணமும் கிடைக்கும் என்றுதான் எழுத வருகிறார்கள். இப்படி யோசனை போனால், எழுத்தில் முழுமனதாக ஈடுபட முடியுமா?  `எழுதும்போதே ரம்மியமாக இருக்கிறது!” என்று புரிந்தவர்கள்தாம் நிலைத்து நிற்கிறார்கள். இவர்களது குறிக்கோள் பணமில்லை. ஆத்ம திருப்தி.   எதை நோக்கிப் போகிறோம்? எவருக்கும் குறிப்பிட்ட ஒன்றை அடையவேண்டும் என்ற ஆசை முதலில் எழும். அது மட்டும் போதுமா? வெற்றி அடைந்தே தீரவேண்டும் என்ற உந்துதல் அவசியம். திறமைகூட இரண்டாம்பட்சம்தான். `பள்ளிக்கூடத்திற்குப் போகமாட்டேன்! ஏன் போகணும்?’ என்று அடம்பிடிக்கும் குழந்தைகளே கிடையாது எனலாம். `படிச்சாதான் பணக்காரனா ஆகலாம்! வேணும்கிற சாமானை எல்லாம் வாங்கிக்கலாம்!’ இப்படி   எவ்வளவுதான் விளக்கினாலும், என்றோ நடக்கலாம் என்பது அந்த வயதில் புரியாது. `சனி, ஞாயிறில் பீச்சுக்குப் போகலாம், சினிமா பார்க்கலாம்,’ என்று குழந்தைக்குப் புரியும்படி ஏதாவது ஆசை காட்டினால் அதையே இலக்காகக்கொண்டு படிக்க இசைவான். இலக்கற்றவர்கள் வசதி குறைந்த சிறுவர்களுக்கு உணவு, உடை, ஆகாரம் எல்லாமே போதிய அளவு கிடைக்காது. சில சமயம், இவர்களுக்கென நேரம் ஒதுக்காத, அல்லது புரிந்துகொள்ளாத பெற்றோரும் வாய்ப்பார்கள். அதனால் உடல், மனம் இரண்டிலும் சோர்வு எழும். எந்தக் காரியத்தையும் முழுமனதுடன் செய்யும் ஆர்வத்தை இவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?   படிப்புதான் ஏறாவிட்டாலும், இசை,  நாட்டியத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் பலர். ஆனந்தி இவர்களுள் ஒருத்தி. ஆனால், அடிப்படைத் தேவைகளுக்கே பணமில்லாதபோது, கலைகளுக்காக எப்படிச் செலவழிக்க முடியும்? இதெல்லாம் புரியாத ஆசிரியர்கள் இருப்பதால்,  பள்ளிக்கூடத்திலும் அனேகமாக வசவுதான். சிறுவர்கள் மேலும் தளர்ந்துபோய்விடுவார்கள். ஒரு சிலரே இவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் புரிந்துவைத்து, தம் சக்திக்கு மீறி உதவவும் முன்வருகிறார்கள். சிறுவர்களுக்கு உதவும் கரங்கள் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியா, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பீன்ஸ்  ஆகிய நாடுகளில் ஆசிரியர்கள் சிலர், `படிப்பில் மனம் போகாவிட்டால் என்ன! இந்த  ஏழைச்சிறுவர்களிடம் கலைத்திறன் இருக்கிறது,’ என்று உணர்ந்து, அத்திறமையை வெளிக்கொணர்கிறார்கள். முதலில் சிறிது உணவைப் படைத்து  வரவழைப்பார்கள். அதுதானே அடிப்படைத் தேவை! கலையைக் கற்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே, `நம்மாலும் உருப்படியாக எதையோ செய்ய முடிகிறது!’ என்று ஆச்சரியத்துடன் உணர்வார்கள் சிறுவர்கள். அப்போது ஏற்படும் மகிழ்ச்சியில் அவர்களது தன்னம்பிக்கை வளர்கிறது. இத்தகைய மாணவர்களிடம் கூடுதலான கவனம் அவசியம். கண்டிப்பாக இருந்தாலே போதும். கட்டொழுங்கு வரும் – மெல்ல மெல்ல. இப்படிப்பட்டவர்கள் தோல்வியால் துவளமாட்டார்கள். அவர்கள் படாத துயரமா?   கலை விருந்து மேற்குறிப்பிட்ட நாடுகளிலுள்ள இளம் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு ஆசிய நாட்டில் கலை விருந்தினைப் படைக்கிறார்கள். அண்மையில் கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில், உள்நாட்டு பரதநாட்டியக் கலைஞர்களுடன் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் இணைந்து ஆடினார்கள், மேற்கத்திய பாணியில்! ஒரே இசை. இரு பாணிகள்! சமையலில் வெவ்வேறு சுவை கலந்திருப்பதுபோல்தான். பார்வையாளர்களின் ஒருமித்த பாராட்டைப் பெற்றது அந்த ஆட்டம். போதனையாளர்கள் ஒரே வாரத்தில் நாள் முழுவதும் உழைத்துக் கற்பித்துவிட்டு, ஒதுங்கிவிட்டார்கள். சிறுவர்களுக்காக சிறுவர்களே இணைந்து படைக்கும் இம்மாதிரியான நிகழ்ச்சியில் கிடைக்கும் சன்மானத்தை ஏதாவது ஒரு நாட்டில் தம்மைவிட ஏழ்மையில் உழலும் சிறுவர்களுக்குக் கொடுத்து நிறைவு காண்கிறார்கள் இள வயதினர். `இவர்களையெல்லாம் முன்னுக்குக் கொண்டுவரவே முடியாது!’ என்று பல ஆசிரியைகள் தன்னை ஒத்தவர்களைப் பாதியிலேயே கைவிட்டதாகக் கசப்புடன் கூறுகிறாள் ஆனந்தி. ஒரே ஒரு ஆசிரியை மனந்தளராமல் போதிக்க, பதினேழு ஆண்டுகள் பரதநாட்டியம் பயின்று சிறந்திருக்கிறாள். தன்னிடம் இயற்கையாக அமைந்த கலைத்திறனை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, பன்னிரண்டு வயதிலிருந்து நான்கு மணி நேரம் இடைவிடாது பயிற்சி செய்திருக்கிறாள். விடாமுயற்சியால் கலை மட்டுமின்றி, பிற துறைகளிலும் பிரகாசிக்கிறாள். அவளுடைய நாட்டியத் திறமையால் கல்லூரியில் உபகாரச் சம்பளம் கிடைத்திருக்கிறது. ஆரோக்கியத்தின் அவசியத்தையும் புரிந்து வைத்திருக்கிறார்கள் இவர்களைப் போன்றவர்கள். வசதி இருந்தும், `காணாததைக் கண்டதுபோல்’ அளவுக்குமீறி சாப்பிடுவதில்லை. உடல் ஒத்துழைத்தால்தானே ஆட முடியும், பார்ப்பவர்களும் ரசிப்பார்கள்? பிறர் தமக்களித்ததைப் பகிர்வது ஆனந்தியை ஒத்தவர்கள் தாம் எப்படி முன்னுக்கு வந்தோம் என்பதை மறக்கவில்லை. கல்வியும், உத்தியோகமும் ஒருபுறமிருக்க, தம்மைப்போன்ற ஏழைக் குழந்தைகளை தேடிப்போய், தாம் கற்றதைக் கற்றவிதத்திலேயே, இலவசமாக, பொறுமையுடன், அவர்களுக்குப் போதிக்கிறார்கள். `எல்லாரும் திட்டினா, பாவம், அதுங்க எங்கே போகும்?’ என்கிறாள் ஆனந்தி. வேறு சிலர், முதியோர் இல்லத்திற்குச் சென்று தம் வாத்திய இசையை வழங்கி, அவர்களை மகிழ்விக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் தாம் நீண்ட காலம் சிரத்தையாகக் கற்ற வித்தையால் பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுவதில்லை. நம்மாலும் பிறருக்கு உதவ முடிகிறது, நாம் செய்யும் காரியத்தால் பிறர் வாழ்க்கையில் சிறிது மகிழ்ச்சி கூடியிருக்கிறது என்ற நிதரிசனமே செய்யும் நற்காரியத்தில் அவர்களைத் தொடர்ந்து ஈடுபட வைக்கிறது. ஒரு ஆனந்தி தன்னைப்போன்ற பத்து ஆனந்திகளை உருவாக்குவாள்.       4. உல்லாசம் எங்கே?   ஒரு மாலைப்பொழுதில் தெருவில் போக்குவரத்து நெரிசல். காரில் பயணித்தாலும், எல்லோருடைய முகத்திலும் சோர்வு. பிடிக்காத உத்தியோகமா, இல்லை, `வாழ்க்கையில் உல்லாசமே இல்லாமல் போய்விட்டதே!’ என்ற விரக்தியா என்று என் யோசனை போயிற்று. முப்பது வயதிற்குமேலும் கலகலப்பாக ஒருவர் இருந்தால், பார்ப்பவர்கள் `சிறுபிள்ளைத்தனம்!’ என்று முகத்தைச் சுளிப்பார்களோ என்று பயந்தே பலரும் கடமை, பொறுப்பு என்று வாழ்க்கையைக் கழித்துக்கொண்டு, எப்போதும் ஏதோ பாரம் வந்து தலையில் இறங்கினாற்போல் காணப்படுவார்கள்.   பெற்றோரின் எதிர்பார்ப்பால் சிலர் – அனேகமாக, குடும்பத்தில் மூத்த குழந்தைகள் – கடமை உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள்.   கதை “நீதான் மூத்தவள். நீ ஒருத்தி படித்து முன்னுக்கு வந்துவிட்டால் போதுமா? உன் தங்கைகள் உன்னைவிட புத்திசாலிகள்!” என்ற தாயின் வார்த்தைகளை ஏற்றாள் ரெஜினா. அதனால் ஏற்பட்ட வருத்தத்தை நெருங்கிய தோழிகளிடம் மட்டும் பகிர்ந்துகொண்டாள். இரு தங்கைகளும் மருத்துவர்களாக, ரெஜினாவோ, பள்ளிப்படிப்புடன் நிறுத்திக்கொள்ள நேரிட்டது. பல வருடங்கள் ஆன பின்னரும், தன் மகிழ்ச்சிக்காக ஏதாவது செய்துகொண்டால் குற்ற உணர்வே மிகுந்தது. வெளியில் எங்காவது போகவேண்டுமானால், அவளுக்குச் சில நாட்களாவது முன்னெச்சரிக்கை கொடுக்கவேண்டும். எது செய்யும் முன்னரும், `விளைவு எப்படி இருக்குமோ!’ என்று சிந்தனை போனதன் விளைவு. உல்லாசம், கேளிக்கை இதெல்லாம் சிறுவர்களுக்கு மட்டும்தானா? கோலாலம்பூரிலிருந்து நாற்பத்து ஐந்து நிமிடங்களில் அடைந்துவிடக்கூடிய கெந்திங் மலை (GENTING HIGHLANDS) `பார்க்க வேண்டிய இடம்!’ என்று வெளிநாட்டுப் பயணிகள் கூடுகிறார்கள். இங்கு வித விதமான கேளிக்கைகள். (காசினோ என்ற சூதாடும் இடத்தைக் குறிக்கவில்லை). ராட்டினத்தில் இருந்த குதிரைமேல் சவாரி செய்ய, அது பக்கவாட்டில் தொண்ணூறு பாகையில் (degree) பறந்து, திடீரென கீழே சரிவதுபோல் இருக்கும். தெரியாத்தனமாக நான் ஒரு முறை அதன்மேல் ஏற, ஒவ்வொரு சுற்றிலும் மேலே இருந்து கீழே இறங்கும்போதெல்லாம் கண்ணை இறுக மூடிக்கொண்டேன். புவியின் ஈர்ப்பு இல்லாது இருதயம் தொண்டைக்குள்ளேயே போவதுபோன்ற உணர்ச்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது. ஆனால், சிலருக்கு அந்த அனுபவம் வேண்டியிருக்கிறது. புடவை அணிந்த ஓர் இந்திய மாது ஒவ்வொரு சுற்றிலும் தலையைப் பின்னால் சாய்த்து, வாயைப் பிளந்து சிரித்ததைப் பார்த்து அதிசயமாக இருந்தது. ஐம்பது வயது இருக்கலாம். `இந்த வயதில் என்ன சிரிப்பும், விளையாட்டும்!’ என்று பிறர் கண்டனம் செய்வார்களே என்று பயந்து, அடக்கமாக இருந்திருக்க வேண்டிய நிலையோ!   `உல்லாசம் எங்கே?’ என்று தேடுபவர்கள்— குறிப்பாக இளைய வயதினர் – தகாத காரியங்களில், ஆபத்தான விளையாட்டுகளில், ஈடுபடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், தாம் ஓட்டும் வாகனங்களைத் தலை தெறிக்க ஓட்டினால்தான் மகிழ்ச்சி பிறக்கும். இதனால் பிறருக்கும் ஆபத்து விளையும் என்ற முன்யோசனை அவர்களுக்கு ஏன் எழுவதில்லை? `நாம் மகிழ்ந்தால் போதும், பிறர் எப்படிப் போனால் நமக்கென்ன!’ என்ற அசிரத்தை. கசப்பான வாழ்க்கை `எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கவில்லை. நினைத்தாலே பூரிப்பு அடையும்படி எதுவும் கிடையாது!’ என்று அரற்றுபவர்களிடம் ஒரு பொதுவான குணத்தைப் பார்க்கலாம். அத்தகையவர்கள் எதிலாவது தோல்வி அடைந்தால் அதையே நினைத்து மறுகிக்கொண்டிருப்பார்கள். தோல்வி ஏன்? `யாருமே என்னை உற்சாகப்படுத்ததால்!’ என்றுதான் பலரும் குறைகூறுவார்கள். தன்னிடம்தான் ஏதோ குறை இருக்கிறது என்று எவரும் ஒப்புக்கொள்வதில்லை. நாம் செய்வதற்கெல்லாம் பிறரது உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால், அவர்கள் வேண்டுமானால் பெருமையாக உணரலாம். ஆனால் சுயமுயற்சிக்கு மாற்று கிடையாது. உங்கள் முன்னேற்றத்தில் உங்களைவிட வேறு யாருக்கு அதிக அக்கறை? பிழைக்கத் தெரிந்த சிலரே காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு, மகிழ்ச்சி குன்றாது வாழ்கிறார்கள். நாட்டு நடப்பு `விலைவாசி ஏறிவிட்டது, எவரும் நான் விற்கும் பொருளை வாங்குவதில்லை!’ என்று பல வியாபாரிகளும் முனகுவார்கள். பொருளாதாரம் அப்படியே இருக்குமா? ஆன்மிகப் புத்தகங்கள் விற்கும் ஒருவர் தன் கடையை வீடியோ விற்கும் கடையாக மாற்றினார். நல்ல லாபம் வந்தது. கள்ள விசிடி விற்பனை செய்து ஒரு முறை மாட்டிக்கொண்டவர், அதையே பலசரக்குக் கடையாக மாற்றினார். மனிதர்கள் உயிர் வாழ சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கித்தானே ஆகவேண்டும்! ஆத்திரக்காரன் சரியான திசையில் பயணிக்கும் ஒரே ஒருவன் `இதுதான் நியாயம்!’ என்று எல்லாவித அநீதியையும் ஆத்திரத்துடன் எதிர்ப்பான். இவ்வாறு ஆத்திரத்தை மட்டுமே வெளிக்காட்டுபவன் சீக்கிரமே தன் மதிப்பை இழந்துவிடுவான். தகுந்த சமயத்தில் ஆத்திரத்தை வெளிக்காட்டுவது மட்டுமே பலனை அளிக்கும். (உதாரணம்: ஒரு படத்தில் கதாநாயகன் ஆரம்பத்திலிருந்து ஆத்திரத்துடன் பலபேருடன் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார். இறுதிக்காட்சியில் உத்வேகம் சற்று அதிகம். பார்ப்பவர்களுக்கு அலுப்புதான் மிஞ்சியது). திறமையே பாரமாகிவிடும் அபாயம் நுண்கலை பயிலும் தம் குழந்தைகளை `ஓயாமல் பயிற்சி செய்!’ என்று விரட்டும் தாயோ, அல்லது அடித்தாலும், திட்டினாலும்தான் திறமை அதிவிரைவில் வளரும் என்றெண்ணி அதன்படி நடக்கும் ஆசிரியையோ இதற்கு எதிரான விளைவை உண்டுபடுத்தி விடுகிறார்கள். இதனால் இசை, நடனப் போட்டிகளில் கலந்துகொள்ளும் சிறுவர்களுக்குள் போட்டி மனப்பான்மை மிகுந்து, தான் வெல்லவேண்டும் என்ற வெறி வந்துவிடுகிறது. அல்லது, அக்கலையே பிடிக்காமல் போய்விடுகிறது. கதை குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி நடந்துகொண்டிருந்தபோதே மேடையில் ஒரு நடன நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு சிறுமியின் கவனம் நடனத்தில் போக, பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த தாய் முறைத்தபடி அவள் தலையைத் திருப்பி,  ஒரு விரலால் அவள் செய்யவேண்டிய காரியத்தை நினைவுபடுத்தினாள். இன்னொரு தாய், “இங்கே கலர் தீட்டு. அங்கே,” என்று சுட்டியபடி அறிவுறுத்திக்கொண்டே இருந்தாள். இந்த இரு குழந்தைகளுக்கும் சித்திரம் வரைதலினால் கிடைக்கும் மகிழ்ச்சி, சுதந்திர உணர்வு, அமைதி எதுவுமே கிடைக்கப்போவதில்லை. அவர்களுடைய திறமையே பாரமாகவே ஆகிவிடும் அபாயமும் உண்டு. தூற்றினால் உயரமுடியுமா? மேடையில் உரையாற்றும்போது, தன் துறையில் இருக்கும் ஒருவரை அவர் எதிரிலேயே தூற்றுவது பேசுகிறவருக்கு வேண்டுமானால் உவகை அளிக்கலாம். சிரிப்பாக இருக்கும் என்று நினைத்து வாய்க்குவந்தபடி பேசுகிறார். ஆனால் அதைச் செவிமடுக்க நேர்ந்தவர்களுக்கு தர்மசங்கடமாக இருக்குமே! இதனால் அவர் உயர்ந்துவிட்டார் என்று எவரும் நினைப்பதில்லை. பிறரைக் கேலி செய்து நகைப்பது வேடிக்கையா? தமிழ் திரைப்படங்களில், `இதுதான் நகைச்சுவை’ என்று வலியப் புகுத்திவிடுகிறார்களே! பாதிக்கப்பட்டவர் மகிழ்வாரா? தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விப்பவர் பலர்முன் பாடுவதோ, நாட்டியம் ஆடுவதோ பிறருக்கு உவகை தருவதாக இருக்க வேண்டும். ஆனால் பிறரது மகிழ்ச்சி மட்டுமே குறிக்கோளாக இருப்பவர்களது படைப்பு அக்கலையை நன்கு உணர்ந்த ரசிகர்களுக்குத் திருப்தி அளிப்பதில்லை. கும்மியடி பெண்ணே! திருமணங்களில், வயது வித்தியாசமில்லாமல், பல பெண்கள் ஒன்றுசேர்ந்து கும்மி அடிப்பார்கள். பார்த்திருக்கிறீர்கள், அல்லவா? ஒவ்வொருவரும் வெவ்வேறுமாதிரி ஆடுவார்கள். அது வேறு விஷயம். ஆனாலும், அவர்கள் சிரித்தபடி வலம் வருவது பார்ப்பவர்களின் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிடும். ஏனெனில், அங்கு போட்டி கிடையாது. மகிழ்ச்சியான வைபவத்தில் எல்லாரும் அகமகிழ்ந்து ஒரே செயலில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் தம் மகிழ்ச்சியைப் பிறருக்கும் அவர்களால் பகிர்ந்து அளிக்க முடிகிறது. எந்த ஒருவரும் உற்சாகமாக, அர்ப்பணிப்புடன்  செய்யும் காரியங்களால்தான் பிறரது மனதையும் ஈர்க்க இயலும். செய்பவருக்கும் நினைக்கும்போதே மகிழ்ச்சி உண்டாகும்.     5. கடவுள் நம்பிக்கை – மூட நம்பிக்கை   `ராத்திரி வேளையில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளாதே. அடுத்த ஜன்மத்தில் மோசமான பிறவி வாய்க்கும்!’ `செவ்வாய், வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் சவரம் செய்துகொள்வதும், நகம் வெட்டிக்கொள்வதும் ஆகாது!’ நடுத்தர வயதான சாம்பு இப்படியெல்லாம் ஓயாது தம் குழந்தைகளை விரட்டிக்கொண்டிருப்பார். அவர் கூறியது அறிவுரையா, அச்சமுறுத்தலா?  தந்தையைத் தட்டிக்கேட்டால் மரியாதையாக இருக்காதே! அதனால் அவருக்குக் கீழ்ப்படிந்தனர் அவர் பெற்ற மக்கள். இந்த சர்வாதிகாரத்தில் வளர்ந்த (வளைந்த?) குழந்தைகள் புதிதாக எந்த காரியம் செய்வதற்கு முன்னரும், `இப்படிச் செய்தால் ஏதாவது கெடுதல் வந்துவிடுமோ?’ என்று தமக்குத் தாமே தடை விதித்துக்கொள்ள ஆரம்பித்தனர்.   புத்திசாலிகள் அவர்கள் நன்றாகச் செய்யக்கூடிய காரியத்தில்கூட சிறிது சந்தேகத்துடன் ஈடுபடுவர். அதற்கு எதிர்மாறாக, `நாம் சொல்வதும் செய்வதும் சரிதானா, தவறாகவும் இருக்கலாமே!’ என்று நினைத்துப்பார்க்கவும் விரும்பாது, வெறி பிடித்தவர்கள்போல் நடப்பர் சாம்புவைப் போன்றவர்கள்.   பயம் ஏன் எழுகிறது? எந்த நாட்டினர் ஆனாலும், ஒரு சூழ்நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றுக்கு (அதாவது, கிராமம் அல்லது சிற்றூர்களிலிருந்து பெரிய நகர்ப்புறத்திற்கு) குடிபெயர்ந்தால், தம் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் பிறர் ஏற்க மறுப்பார்களோ என்ற அச்சம் எழுகிறதாம் சாம்புவைப் போன்றவர்களுக்கு. (உளவியலில் படித்தது).   `நான் சொல்வதும் செய்வதும்தான் சரி!’ என்ற பிடிவாதம் மிகும் அவர்களுக்கு. புதிதாக எதையும் ஏற்க மறுப்பார்கள். கூட இருப்பவர்களும் தம்மைப்போல்தான் நடக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். கதை: அதிகாரத்தால் பயம் எங்கள் குடும்ப நண்பர் வேல்முருகன் சமீப காலமாக தன் தங்கைக்கு மனநிலை சரியில்லை என்றும், சிகிச்சைக்கு அழைத்துப்போவதாகவும்  என்னிடம் தெரிவித்தார். “உங்களிடம் உண்மையைச் சொல்லிடறேன்,” என்று மேலும் கூறினார்: “என் தந்தை ரப்பர் தோட்டப்புறத்தில் வளர்ந்தவர். அங்கேயே காலத்தைக் கழித்துவிட்டு, கோலாலம்பூருக்கு வந்தவர். இங்கும், `வீட்டுக்குள் நுழையுமுன் கால்களை வாசலிலேயே கழுவிவிட்டுக்கொள்!’ என்று அதிகாரம் செய்தால் எப்படி!”  இது ஒரு சிறிய காரணம்தான். இதைப்போல் பலவும் இருக்கும். காலத்திற்கும் இடத்திற்கும் ஒவ்வாது, `இப்படி நட, அப்படிச் செய்!’ என்று மூத்தவர் ஒருவர் ஓயாமல் விரட்டிக்கொண்டே இருந்தால், எல்லா பாதையும் தடைப்பட்டுப்போகின்றனவே! சுய சிந்தனைக்கே இடம் கொடுக்காத நிலையில், புத்தி தடுமாறாமல் என்ன ஆகும்! மரண பயம் புதிய காரியங்கள் செய்வதிலிருந்து, மரணம்வரை எது எதற்கோ பயம் மனிதர்களுக்கு.  சிறுவர்களுக்கு இறப்பு என்றாலே கொள்ளை பயம். ஆனால், வயோதிகர்களோ, பலகீனம், பல்வித நோய்கள், தனிமை என்று அவதிப்படும்போது, மரணத்தை வரவேற்கும் மனநிலையைப் பெறுகிறார்கள். (சிலர், `எனக்குச் சாவதற்குப் பயமில்லை. ஆனால், பிடித்தவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டுப் போகவேண்டுமே என்றுதான் வருத்தம்!’ என்று சொல்வதையும் கேட்டுள்ளேன்). சுயநலவாதி தன்னைப்பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்கும் ஒருவன் அச்சம், தனிமை, ஆத்திரம் போன்ற குணங்களுக்கு அடிமையாகி அல்லல்படுகிறான். காலம் கடந்தபின்னரும் கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு, அதிலிருந்து வெளிவராது, `இனி என்ன நடக்குமோ!’ என்று எதிர்காலத்தை எண்ணி அஞ்சுபவர்கள் பலர். தற்காலத்தில் ஒன்றுமே செய்யாமல் இருந்தால், `நம்மால் முடியுமா!’ என்ற அவநம்பிக்கையும், அச்சமும் பிறந்துவிடுமே! அச்சத்தை எதிர்கொள்! அச்சத்தை முறியடிக்க ஒரே வழிதான் உள்ளது: தைரியம்! தைரியம் என்றால் எதற்கும் அஞ்சாமல் இருப்பது என்பதில்லை. அச்சத்தை எப்படி எதிர்கொள்வது என்று புரிந்து நடப்பது. கதை “எனக்கு நாட்டியம் கற்றுக்கொள்ள ஆசை. சிறு வயதில் கொஞ்சம் கற்றேன். ஆனால் இப்போது குண்டாக இருக்கிறேனே!” என்று முதலில் தயங்கினாள் மனோகரி. அக்கலையின்மீதிருந்த விருப்பம் வென்றது. `பிறர் சிரிப்பார்களோ, என்ன சொல்வார்களோ!’ என்ற வீண்யோசனையைக் கைவிட்டாள். உடல் வலியை அலட்சியம் செய்தாள். சிறுமியான மகளுடன் தானும் கற்றாள். ஆடும்போது தவறு ஏற்பட்டால், மனோகரி கூனிக் குறுகுவதோ, அசட்டுச்சிரிப்பு சிரிப்பதோ கிடையாது. மேடையில் ஆடும் அளவுக்கு சிறப்பாளோ, என்னவோ! ஆனால், `துணிந்து செய்திருக்கலாமோ!’ என்று என்றாவது வருந்த வேண்டாம். ஆடும்போதே மகிழ்ச்சி பொங்குகிறது. இதுவரை இல்லாத தன்னம்பிக்கையும், சுதந்திர உணர்வும்  வந்துவிட்டன மனோகரிக்கு. இது போதாதா! யாருக்குப் பயமில்லை? அது எப்படி, சிலபேருக்கு மட்டும் நிமிர்ந்து நடக்க முடிகிறது என்று எப்போதாவது உங்கள் யோசனை போனதுண்டா? அவர்கள் நேர்மையானவர்கள். தாம் கூறியதை அடிக்கடி மாற்றிச் சொல்லவேண்டிய அவசியம் அவர்களுக்குக் கிடையாது. அதனால், `இவரிடம் என்ன சொன்னோம்?’ என்று நினைவு வைத்துக்கொண்டிருக்க வேண்டாம். இதனாலேயே இவர்களுக்குப் பயமுமில்லை, `தவறாகச் சொல்லிவிட்டோமோ?’ என்ற குற்ற உணர்வும் கிடையாது. மூடநம்பிக்கைகளால் அச்சம் மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறவர்கள், `கடவுள், மதம்’ என்று போலிச்சமாதானங்களை முன்வைத்து வெல்கிறார்கள். அச்சமுறுத்தும் மூடநம்பிக்கைகளுக்கு விஞ்ஞானம்தான் எதிரி என்று கூறலாம். ஏன், எப்படி என்ற கேள்விகளுக்கெல்லாம் விஞ்ஞானம் விடை அளிக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தாம் சொல்வதே சரி என்று சாதிப்பார்கள், அதில் அவர்களுக்கே சந்தேகம் இருந்தாலும்! தம்மைப்போல் இல்லாதவர்களைப் பொறுக்கமாட்டார்கள். சிலர் – ஹிட்லரைப்போல - வன்முறையில் இறங்குகிறார்கள். இன்றும் உலகெங்கும் காணப்படுகிறார்கள். இந்த வெறித்தனம் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டது. ஆயினும், தீயவைதாமே எளிதாகப் பரவுகின்றன! கதை ஸால்மா என்ற பதின்ம வயதுப் பெண் காதில் இரு துளைகளைக் குத்திக்கொண்டு, அவைகளில் சிறிய தோடுகளை அணிந்து பள்ளிக்கூடத்திற்கு வந்தாள். `இது நம் மதத்திற்கு எதிரானது,’ என்று கட்டொழுங்கு ஆசிரியை மிரட்டினாள். மாணவி முதலில், `அம்மா அப்படிச் சொல்லவில்லையே!’ என்று சமாளித்தாலும், பலரும் சேர்ந்து மிரட்டியபோது, தாளமுடியாது கதறினாள். மதம் கடவுளை அடைய வழிகாட்டுகிறது என்றால், இந்தச் சிறிய விஷயத்தில் எல்லாம் கடவுள் தலையிடுவாரா? மதம் என்பதின் குறிக்கோளே ஒருவனை நல்ல வழியில் செலுத்துவதுதானே? காதில் இருக்கும் துளைக்கும், நற்குணத்திற்கும் என்ன சம்பந்தம்? “சில மதகுருமார்கள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது நல்ல செய்தி. மூட நம்பிக்கைகளைப் பரப்ப அடுத்த தலைமுறை எழுவதில்லையே!” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்கரான கார்ல் ஸேகன் (CARL SAGAN). 1996-ல் மறைந்த இவர் ஒரு வானியல் நிபுணர். பாமரருக்கும் புரியும்படி விஞ்ஞானத்தைப் பரப்பியவர். “பயத்தை எதிர்கொள்ளும்போது ஞானம் பிறக்கிறது!” என்கிறார் தத்துவ ஞானி. கடவுளை நம்புவதே மூடநம்பிக்கை என்றில்லை. கடவுள் பெயரால், தமக்குத் தோன்றியபடியெல்லாம், தமக்குச் சாதகமாக ஏதேதோ நம்பிக்கைகளைப் பரப்பி, பக்தர்களை பயப்படவைப்பதுதான் ஒப்புக்கொள்ளக்கூடியது இல்லை.   கதை “நான் எது ஒன்று செய்யும்போதும் கடவுளை நினைத்துத்தான் ஆரம்பிப்பேன். நல்லபடியாக முடிந்ததும், கடவுளுக்கு நன்றி சொல்வேன்”. (சமைக்கும்போது அம்மன் பாடல் ஒன்றை நினைத்தபடி இருந்தாலே ருசி கூடுகிறது என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்தேன்).  நான் இப்படிச் சொல்லக் கேட்ட என் பேரன், “செய்வதையெல்லாம் நாம் செய்துவிட்டு, `கடவுளால்தான்!’ என வேண்டுமா?” என்று சந்தேகம் கேட்டான். அப்போது அவனுக்குப் பதின்மூன்று வயது.   “சில சமயம், ஒரு போட்டிக்குப் போகுமுன்னர் எதிர்பாராது உடல்நிலை கெட்டு, போட்டியில் கலந்துகொள்ளவே முடியாமல் போய்விடுகிறதே! அது யார் செயல்?”   அவன் யோசிக்க ஆரம்பித்தான். “கடவுள் நம்முடனேயே இருந்தால், நம்மை யார், என்ன செய்துவிட முடியும்!” என்று நம்பிக்கையுடன் இருந்தால், பயமே எழாது என்று எங்கோ படித்தேன். நீங்களும்தான் பரீட்சை செய்து பாருங்களேன்!     6. வழிகாட்டல் நச்சரிப்பல்ல   “முனைவர் பட்டப்படிப்பின் ஆராய்ச்சிக்கு உங்கள் கதைகளை எடுத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். நீங்கள் வழிகாட்ட முடியுமா?” தொலைபேசியில் வந்த கேள்வி அந்த எழுத்தாளரைத் திகைக்க வைத்தது. முதுகலைவரை படித்தும் சுயகால்களில் நிற்கும் தைரியம் இல்லாது, தனக்கு வழிகாட்ட மற்றொருவரின் உதவியை எதிர்பார்ப்பவரை எண்ணிப் பரிதாபம்தான் மிகுந்தது. பதினைந்து வருடங்கள் கல்வி பயின்ற ஒருவரால் தனக்குள்ளும் திறமை இருக்கிறது என்பதை ஏன் உணர முடியவில்லை? தன்னால் செய்ய முடிந்த காரியத்திற்கும் பிறரை நாடுபவர் சிறு வயதில் பெற்றோரின் அன்புக்கோ அல்லது அதிகாரத்திற்கோ பணிந்துபோனவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்களுக்கும் இதில் பங்குண்டு. ஏழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய சுதந்தரத்தைக் கொடுக்க வேண்டும். `இந்தக் காரியத்தை இப்படிச் செய்!’ என்று அதிகாரம் செய்தால், அவர்கள் பணியலாம். ஆனால் தன்னம்பிக்கையோ, மரியாதையோ எழாது. மாறாக, அன்புடன் வழிகாட்டியதை என்றும் மறக்கமாட்டார்கள். உதாரணமாக, `நான் இப்படிச் செய்வேன். உனக்கு எப்படிச் சௌகரியமோ அப்படிச் செய்!’ என்று, முடிவை ஒரு சிறுவனிடமே விடுங்கள். சில முறை தவறுகள் நிகழக்கூடும். ஆனால், தன் ஆற்றலுக்குத் தக்கபடி உங்கள் முறையைப் பின்பற்றுவான். அதிருப்தியே வழிகாட்டலை நாடுகிறது. `எனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா!’ என்ற பரிதவிப்பு தக்க வழிகாட்டலுக்கு முதல்படி. ஒரு குறிப்பிட்ட வழியில் செல்ல பொறுமை அவசியம். சிலவற்றைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கவேண்டும். கதை முப்பது வயதிலேயே கணவரை இழந்தவள் தனம். அண்மையில் என்னிடம் தம் மகள்களைப்பற்றி முறையிட்டாள்: “எப்போ பார்த்தாலும் கணினி, இல்லை, கைத்தொலைபேசிதான், டீச்சர், “என்று ஆரம்பித்தாள்.  “எல்லா வீட்டு வேலையும் நான்தான் செய்யறேன்.  அதுங்க அறையைக்கூட ஒழுங்கா வெச்சுக்கறதில்லே!” படபடப்புடன் இதையே திரும்பத் திரும்பக் கூறினாள். சற்று யோசித்துவிட்டு, “மரியாதை இல்லாம பேசறாங்களா?“ என்று விசாரித்தேன். “சேச்சே!” என்ற மறுத்தாள். “ஆனா, அப்பா இல்லாத குழந்தைகளைச் சரியா வளர்க்கலேன்னு என்னைத்தானே சொல்வாங்க!” குரல் தழுதழுத்தது. தந்தை இல்லாத குடும்பங்களில் அனேக தாய்மார்களின் குமுறல் இது. குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் ஒன்றிச் செயல்படும்போது, குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஒருவர்க்கொருவர் பகிர்ந்துகொள்வார்கள். ஆறுதலாக இருக்கும். அப்படி ஒரு துணை இல்லாததால், சிறு பிரச்னைகூட யோசிக்க, யோசிக்க பூதாகாரமாகிவிடுகிறது சில அபலைப்பெண்களுக்கு. சியாமளா அவர்களுள் ஒருத்தி. “நான் தினமும் தூங்கப்போகுமுன் என் மகனைப்பார்த்துக் கத்துவேன்! அதனால் மாடியிலிருக்கும் வீடுதான் சௌகரியம்!” என்று என்னிடம் தெரிவித்தாள். “சீச்சீ! பாவம்!” என்று அவளுடைய பதின்மூன்று வயது மகனுக்குப் பரிந்தேன். ஆதரவாகப் பேச தந்தையுமில்லை, ஒரே துணையான தாயும் வசையையே தன் மொழியாகக் கொண்டதாலோ, என்னவோ, அவனுடைய மூளை வளர்ச்சி சற்று குன்றியிருந்தது. “எனக்கு மட்டும் வடிகால் வேண்டாமா?” என்றாள் சியாமளா, ஆத்திரம் குறையாது. அந்தச் சம்பவம் நினைவில் எழ, தனத்திடம், “எல்லாரிடமும் இப்படி உங்கள் குழந்தைகளைப்பற்றிப் புகார் செய்துகொண்டிருக்காதீர்கள்!” என்று கண்டித்தேன். “இல்லே, ஒங்ககிட்ட மட்டும்தான் சொல்றேன். நீங்க ஒருத்தர் சொன்னாத்தான் கேக்கறாங்க!” `அம்மா எப்பவும் கத்தறாங்க!’ என்று மூத்த மகள் தன் குழப்பத்தை நம்பகமான சிலருடன்  பகிர்ந்துகொண்டிருக்கிறாள். பெண்களுக்குத் திருமணமானால் எவ்வளவோ பிரச்னைகள்!  புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள்! அப்போது மனம் கலங்கும்போது, தாய்வீட்டில் கழித்த இனிமையான தருணங்கள்தாம் ஆறுதலளிக்கும்.  இந்த உலக நடப்பை எடுத்துச்சொன்னேன்.   “நீங்க நச்சு நச்சுன்னு பிடுங்கினாலும், அவங்க மாறப்போறதில்லே. ஒங்களுக்குத்தான் B.P அதிகமாகும்”. தனத்தின் முகத்தில் சிறு சிரிப்பு. “அதேதான்!” என்றாள். தற்காலத்தில் எல்லா இளவயதினரும்  கணினித்துறையில் ஆர்வமும், திறமையும் கொண்டிருப்பதன் அவசியத்தை விளக்கிவிட்டு, “அவங்ககிட்ட பேசறேன்,” என்று சமாதானப்படுத்தினேன்.  பெண்கள் இருவரும் பட்டதாரிகள்.  மிகவும் பொறுப்பானவர்கள். பிறருக்கு உதவ ஓடி வருவார்கள். குறைந்த காலத்திலேயே உத்தியோகத்திலும் நல்ல பெயர். மேலதிகாரிகளாகும் தன்மை படைத்தவர்கள். இளையவள் தன் வருமானத்தில் பெரும்பகுதியை தெருவில் போகும் நாய், பூனைகளின் வைத்தியச்செலவுக்குச் செலவிடுகிறாள். அப்பெண்கள் தாமாகவே முனைந்து செய்யும் காரியங்களே அவர்களை ஒரு நாள் சிறந்த மனிதர்களாக காட்டும். இதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை தனத்திற்கு. தன் வளர்ப்புமுறையில் யாராவது ஏதேனும் குற்றம் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற வேண்டாத கவலையில் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறாள். அப்பெண்களைத் தனியாக அழைத்தேன்.  “ஒங்களைக் காப்பாத்த இத்தனை வருஷமா ஒங்கம்மாதான் சம்பாதிச்சாகணும். தனியாவே ஒங்களை வளர்த்திருக்காங்க. அது சுலபமில்லே. நீங்களும் கொஞ்சம் வீட்டு வேலையைப் பகிர்ந்துக்கணும்.  ஒங்க துணியை துணி துவைக்கும் இயந்திரத்தில் போடறதைக்கூட அம்மாதானா செய்யணும்?” என்று தாழ்ந்த குரலில்  ஆங்கிலத்தில் கூறினேன். (அவர்களுக்குத் தமிழ் தெரியுமென்றாலும், ஆங்கிலத்தில்  அவ்வளவு கடுமையாகக் கேட்காது). இரு பெண்களின் முகத்திலும் ஆழ்ந்த வருத்தம். இனி, தாயின் மனம் நோகாது, அவளுடைய எதிர்பார்ப்பு என்னவென்று புரிந்து நடப்பார்கள். குழந்தைகளோ, இளைஞர்களோ, மரியாதையாகவும், உண்மையாகவும் நடந்துகொண்டார்களானால், அவர்கள் நல்வழியில்தான் செல்கிறார்கள் என்று நம்பலாம். அவர்களைப்பற்றிய கவலை அநாவசியம். வழிகாட்டுவது என்றெண்ணி, ஓயாமல் நச்சரித்தால் ஒருவர் கூறுவதை மற்றவருக்கு அலட்சியம் செய்யத்தான் தோன்றும்.   7. உள்ளுணர்வைக் கேளுங்கள்!   மிக மலிவானது எது தெரியுமா? அறிவுரை வழங்குவதுதான். சிலர் யாரும் கேளாமலேயே அறிவுரைகளை வாரி வழங்குவர். பிறருக்கு நன்மை செய்வதாகத்தான் எண்ணிக்கொண்டிருப்பார்கள். உண்மையில், தம் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கென வழிகாட்டுகிறோம் என்று அவர்களுக்கே புரிவதில்லை. `நான் செய்த தவற்றை நீயும் செய்யக்கூடாது!’ என்று ஓயாது வழிகாட்டும் பெற்றோர் தம் குழந்தைகளின் சுதந்திர உணர்வைப் பறிக்கிறார்கள். ஒருவருக்குச் சரியெனப்படுவது எல்லாருக்கும் அப்படித்தான் இருக்குமா? பிறரது விருப்பத்துக்கு எதிராக வழிகாட்டுவது எந்தப் பலனையும் தராது. பிறர் சொற்படி நடப்பதைவிட, அவர்கள் புரியும் பிழைகளிலிருந்து கற்பதே மேல். அவசரப்படும் அம்மா தம் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை அமையவேண்டும் என்ற பதைப்பில் பல தாய்மார்கள் சிலவற்றை மறந்துவிடுகிறார்கள். ஒருவருக்கு எதையாவது கற்றுக்கொடுக்க நினைப்பவர்கள் முதலாவதாக, அவர்களுடைய திறமையையும், புரிந்துகொள்ளும் ஆற்றலையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.   “அந்த நாட்டிய வகுப்பில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்கள். என் நான்கு வயதுக் குழந்தையை சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம்!” என்று ஓர் இளம் தாய் என்னிடம் புகார் செய்தாள். நம் கை, கால், உடல் எல்லாம் நாம் சொன்னபடி கேட்க ஆறு வயதாவது ஆகவேண்டும்.  கையை நீட்டவும் முடியாது, கால்களால் தரையை ஓங்கித் தட்டவும் முடியாது, வலம், இடம் என்ற வித்தியாசமும் புரியாது என்ற நிலையில் பரதநாட்டியம் ஆடுவதாவது! பிழை புரியுங்கள். அதுவே பாடமாகும்! தவறிழைத்துவிடுவோமோ என்று பயந்து, புதிய அனுபவங்களை நாடத் தயங்குபவர்கள் அனேகர். வாழ்வில் எத்தனையோ இடர்கள். அவைகளை எப்படித் தவிர்ப்பது? புதிய முயற்சிகளில் இறங்கும்போது, பிழைகளும் ஏற்படத்தான் செய்யும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.  துணிந்து ஒரு காரியத்தில் இறங்கிவிட்டு, அப்போது எழும் பிழைகளைப் பாடமாக எடுத்துக்கொண்டால், அடுத்த முறையும் அதேபோன்று நடக்காதிருக்க  கவனமாகச் செயல்படலாம். அப்படி நாம் இழைக்கக்கூடிய பிழைகளிலிருந்து கற்க ஒரு வாழ்நாள் போதுமா? பிறரது அனுபவங்களையும் நமக்குப் பாடமாக ஆக்கிக்கொள்ளலாமே! மாறாக, செய்த பிழைகளையே ஓயாது எண்ணிக் கலங்கி, `அக்காரியமே தவறு!’ என்பதுபோல் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் அவை அச்சுறுத்த விடுவானேன்! சிறந்த வழிகாட்டி ஒருவருக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பது என்பது சாத்தியமில்லை. உள்மனம்தான் சிறந்த வழிகாட்டி. அது  நம்முடன் பேசும். எப்போது தெரியுமா? இரவில் கண்ணயரும் முன்னர், அதிகாலையில் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது. உள்மனம் கூறுவதை ஏற்றால், பிறகு எந்த நேரமும் அதை நாடலாம். கதை சில ஆண்டுகளுக்கு முன்னர், நான் ஒரு புடவை வாங்க கடைத்தெருவிற்குப் போயிருந்தேன். பல கடைகள் ஏறி இறங்கியும், எதுவுமே எனக்குத் திருப்திகரமாக அமையவில்லை. `இது ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் இருந்த டிசைன்!’ என்று ஏதேதோ சொல்லித் தட்டிக்கழித்தேன். நிறைய புடவைகளை எடுத்துக் காட்டிய ஒரு கடைச் சிப்பந்திக்குப் பொறுமை மீறியது. “உங்களுக்கு என்னதான் வேணும்?” என்றார், எரிச்சலை மறைக்காது. நானும் அலுப்பின் எல்லையில் இருந்தேன். மூச்சை நிதானமாக இழுத்து விட்டபடி,  `என்னுடன் வரப்போகும் புடவையே, நீ எங்கே இருக்கிறாய்?’ என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டேன். அடுத்த ஓரிரு நிமிடங்களிலேயே அது என் கண்ணில் பட்டது! இப்போது அதே கேள்வியை வெவ்வேறு விதமாகக் கேட்டு, உடனடியாக முடிவு எடுக்க முடிகிறது. வாங்கப்போகும் புடவையின் வண்ணத்திலிருந்து, அடுத்த பரீட்சையில் என்ன வரப்போகிறது என்பதுவரை சரியாக ஊகிக்க முடிகிறது. (நான் ஆசிரியையாக இருந்தபோது, ஆறு ஆண்டு காலம் பள்ளி இறுதியாண்டுப் பரீட்சைக்குமுன் வரப்போகும் கேள்விகளை உத்தேசமாகக் கணித்தேன். எல்லாமே சரியாக இருந்தன. பின்னென்ன! நான்தான் அக்கேள்விகளைத் தயாரித்திருக்க வேண்டும் என்று  வதந்தி பரவ, அவைகளைப் பெற பிற பள்ளிமாணவர்கள் போட்டியிட்டார்களாம்!)   உள்ளுணர்வின் உந்துதலில் கிடைக்கும் விடை நாம் எண்ணியதற்கு மாறாக இருக்கலாம். ஆனால், சரியாக இருக்கும். ஏன், எப்படி என்ற கேள்விகள் உதவாது. நம்பிக்கையுடன் துணிந்து ஏற்கவேண்டும். இளைஞர்களே, வாழ்க்கைத்துணையைத் தேட ஒரு வழி இதோ! `என் வாழ்நாளை எல்லாம் என்னுடன் மகிழ்ச்சியாகக் கழிக்கப்போகிறவர் எப்படி இருப்பார்?’ இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். முகம், கண், மூக்கு எதுவுமே நினைவில் எழாது. அவரது குணங்கள் ஒவ்வொன்றாக, பல நாட்களில் பிடிபடும். அப்படி ஒருவரைப் பார்க்கும்போது, `இவர்தான் நாம் தேடியவர்!’ என்று மனம் ஆர்ப்பரிக்கும். விஞ்ஞானமும் உள்ளுணர்வும் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை கொள்வதுதான் அறிவாற்றலுக்கு அடையாளம் என்று ஒரு சாரார் நினைக்கிறார்கள். `இதை விஞ்ஞான ரீதியில் பரிசோதிக்க முடியுமா?’ என்று கேட்பார்கள், அலட்சியமாக.  ஆனால், விஞ்ஞானிகள்கூட, எண்ணற்ற பரிசோதனைகளால் குழம்பி இருக்கும் ஒரு தருணத்தில் எதிர்பாராத விதமாக விடை கிடைக்க, `நமக்குமேல் ஒரு சக்தி இருக்கிறது!’ என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர். கடவுள், உள்மனம் – பெயர் எதுவாக இருந்தால் என்ன! பலன் கிடைக்கிறதே! ஏதாவது துன்பம் நேரும்போதுதான் ஒருவரை நமக்கு வழிகாட்ட நாட வேண்டும் என்பதுமில்லை. “வழிகாட்டல் என்பது இருண்ட கானகத்தில் ஒரு சிறிய விளக்கிற்கு ஒப்பானது. எதிரிலிருப்பவை யாவும் புலப்படாது. ஆனாலும், அடுத்த அடியை எடுத்துவைக்க அதுவே போதும்”.  (ஸ்வாமி விவேகானந்தர்) 8. இந்த ஆண்களை..!   `இந்தப் பெண்களை புரிந்துகொள்ளவே முடியாது!’ திருமணமான பல ஆண்களின் கூற்று இது.   இந்தக் குழப்பத்தைச் சமாளிக்க ஏதாவது முயற்சி எடுத்துவிட்ட பிறகு, `இது வேண்டாத வேலை!’ என்று வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவிடுவார்கள். ஆண்களோ, பெண்களோ, இப்போதெல்லாம் முப்பது வயதிலும் திருமணம் செய்துகொள்ளத் தயங்குகிறார்கள். சிறிதுகாலம் பழகியபின்னரும், `சரியான துணைதானா?’ என்ற குழப்பம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. தமது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற அச்சமும், `புதிய குழப்பங்களுக்கு ஆளாக வேண்டுமா!’ என்ற தயக்கமும் ஒரு காரணம். திருமணம் ஆனபின்பு, ஆண்களில் சிலர் தம்மைப்போலவே குழம்பிப்போயிருக்கும் நண்பர்களை நாடுவார்கள். வேறு சிலர் விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடலுக்கு அளிக்கும் கடும்வேலையால் தம்மை மறக்க முயற்சி செய்வார்கள். இன்னும் சிலர், `நம் மனைவிதான் அப்படியோ?’ என்ற சந்தேகம் எழ, அதை நிவர்த்தி செய்துகொள்ளும் சாக்கில் பிற பெண்களுடன் உறவு பூண்டு, இறுதியில், `எல்லாப் பெண்களும் ஒரே லட்சணம்தான்!’ என்ற கசப்பான முடிவுக்கு வருகிறார்கள். கதை `மனைவி என்றால், அவள் என் எண்ணங்களுக்கு ஒத்துப்போக வேண்டும். நான் சொல்கிறபடியெல்லாம் நடக்கவேண்டும்!’ என்ற சராசரி ஆணின் எதிர்பார்ப்புடன் விமலாவை மணந்தான் மனோகரன். அவளோ சுதந்திரமாக வளர்க்கப்பட்டிருந்தவள். முதலில் கணவன் சொற்படியெல்லாம் கேட்டவளுக்குச் சில மாதங்களிலேயே மனநிம்மதி பறிபோக, கணவனின் ஆதிக்கத்தை எதிர்ப்பதுதான் வழி என்று தோன்றிப்போயிற்று. அடிக்கடி சண்டை வந்தது. இத்தனை நாட்களும் அடங்கி இருந்தவளுக்கு இப்போது என்ன வந்தது என்று குழம்பினான் மனோகரன். நாள் முழுவதும் அன்று காலையில் நடந்த சம்பவமே விமலாவின் மனதில் திரைப்படமாக ஓட, அவளுடைய ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே போய்விடும். வேலை முடிந்து மனோகரன் வீடு திரும்பும்போது முகத்தைத் திருப்பிக்கொண்டு அப்பால் போய்விடுவாள். அலுத்துக் களைத்து வீடு வரும் ஒருவனுக்கு இப்போது எப்படி இருக்கும்? அவனும் எரிந்து விழுவான். அவளும் பதிலுக்குக் கத்துவாள். பெண்களும் கணினியும் ஒன்று! கணினி எப்படி தன்னிடத்தில் உள்ள ஒரு செய்தியை மறவாது அப்படியே வைத்திருக்கிறதோ, அதேபோல்தான் பெண்களும். ஆனால் ஒரு வித்தியாசம். நல்லனவற்றை எளிதில் மறந்துவிடுவார்கள், அல்லது அலட்சியப்படுத்திவிடுவார்கள். எதிர்மறையான சம்பவங்கள், அவைகளுக்குக் காரணமாக இருந்த உணர்ச்சிகள் – மன இறுக்கம், வருத்தம், கோபம் போன்றவை -- அவர்கள் மனதில் நிலைத்திருக்கும். ஆண்களோ, இதற்கு நேர் எதிர். நிம்மதியைக் குலைக்கும் நினைவுகளை உடனுக்குடன் மறந்துவிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, காலையில் நடந்த வாக்குவாதம் அத்துடன் முடிந்துபோய்விட்டது. இப்போது மனைவி முகத்தைத் திருப்பிக்கொண்டு போனது மனோகரனுக்கு எரிச்சலைத்தான் தராமல் என்ன செய்யும்? “என்ன கோபம்?” புரியாமல் கேட்டான். “அப்படிச் சொன்னீர்களே..!” என்று விமலா விளக்கியபோது, “அதை இன்னுமா நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறாய்? அலுவலகத்தில் ஏதோ பிரச்னை,” என்றான், அலட்சியமாக. தற்காலத்தில் வெளிவேலைகளில் பெண்களும் ஈடுபடுவதால், ஆண், பெண் இருவருக்குமே மன இறுக்கம் வர நிறைய காரணங்கள் இருக்கின்றன. இத்தருணங்களில் ஆண் விலகி இருக்கிறான். இதனால் அவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை என்று அர்த்தமாகாது. அவளைப்போல் அவனுக்குத் தன் உணர்ச்சிகள் புரிவதில்லை. ஆண்களுக்குப் பெண்களின் உடல்மொழி, குரலின் தளர்ச்சி இதெல்லாம் புரிவதில்லை. பெண்களும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். பிரச்னை எழாமல் என்ன ஆகும்?   வெளிப்படையாகச் சொன்னால்தானே தெரியும்?   அவள் (மனக்குறையுடன்): கல்யாணமான புதிதில் நீங்கள் என் விரல்களையெல்லாம் காதலுடன் கடிப்பீர்கள். இப்போது உங்களுக்கு என்மேல் உள்ள ஆசை போய்விட்டது. அவர்: அவ்வளவுதானே! செய்தால் போயிற்று. என் பல் செட்டை எடுத்துக்கொண்டு வா!! `இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளவே முடியாது!’ பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும்  ஆண்களுடன் சேர்ந்து படித்த பெண்களால்கூட ஆண்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஒரு பெண் தன் தந்தைக்கு மிக நெருங்கியவளாக இருந்தால்தான் பிற ஆண்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பருவ வயதிலும் அவர்களுடைய உறவின் இறுக்கம் தளர்ந்துவிடாமல் இருக்கவேண்டும். இரு பாலருக்குமே ஏன் இவ்வளவு குழப்பம் என்றால், ஆண்களின் மனப்போக்கும், பெண்களுடையதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கணவர் அனுதினமும் `ஐ லவ் யூ!’ சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனெனில், ஆண்கள் பெண்களைப்போல் அவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்கள். மாறாக, செயலில் காட்டுவர். வீட்டையோ, தோட்டத்தையோ சுத்தப்படுத்துவார்கள். சமையலறையில் உடைந்த சாமான்களை பழுதுபார்ப்பார்கள். இது புரிந்து, கணவனும் மனைவியும் ஒரே காரியத்தில் – அது விளையாட்டோ அல்லது உடலுறவோ --ஈடுபட்டால் உறவு பலப்படும். சொந்தக்கதை முப்பது வருடங்களுக்குமுன், தெரியாத்தனமாக நான் நிறைய ஆர்கிட் செடிகள் வாங்கினேன். நோஜாச்செடி ஐந்து வெள்ளியென்றால், ஆர்கிட் செடியின் விலை அதைப்போன்று மூன்று மடங்கு. பூத்தால் வாரக்கணக்கில் அப்படியே இருக்குமே! ஆனால், அவைகளைப் பூக்கவைக்க பட்ட பாடு! ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு பெரிய பேசினில் தண்ணீர் நிரப்பி, அதில் எருவைப்போட்டுக் கலக்கி, ஒவ்வொரு செடியாக பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். என்னுடன் ஒத்துழைத்த கணவருக்கு உற்சாகமாக இருந்தது. Felt romantic. ஒரே வேலையில் இணைந்து செய்கிறோமே! எனக்கோ செடிகளைப் பராமரிப்பதே தலையாய வேலையாகிப் போயிற்று. விடுமுறை நாளில் எங்கும் உல்லாசமாகச் செல்ல முடியவில்லை. ஒரு வருடம் நன்றாகப் பூத்தபின், `இந்தக் கஷ்டத்திற்கு கணவருடன் சண்டை போடுவதே மேல்!’ என்று தோன்றிப்போக, செடிகளைப் பிறருக்குக் கொடுத்துவிட்டேன்.   பிரத்தியேகமான பொழுதுபோக்கு ஒரே காரியத்தைச் செய்தாலும், நெடுநேரம் ஒன்றாக இணைந்திருந்தால் அலுப்புத் தட்டாதா! கணவன் மனைவி இருவருக்குமே தனித்தனி பொழுதுபோக்கும், தனியாகக் கழிக்க அவகாசமும் அவசியம். (தேனிலவு இதில் சேர்த்தியில்லை). வெவ்வேறு பொழுதுபோக்காக இருந்தாலும், அவைகளைப்பற்றி கலந்து உரையாடினாலே நண்பர்களைப்போல நெருக்கம் ஏற்படும். கவனக்குறைவல்ல `என் கணவர் நான் பேசும்போது கவனிப்பதே கிடையாது. அவருக்கு என்னைவிட தினசரியைப் படிப்பதும், தொலைகாட்சியும்தான் முக்கியம்!’ என்று அலுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஒன்று புரிவதில்லை. மனைவி பேசும்போது, `உம்,’ `சரி’ என்று முனகியபடி, வேறு எதிலோ கவனம் செலுத்துவதுபோல் காணப்பட்டாலும், அவர்களுக்குக் காது கேட்கும். கவனமும் உண்டு. புகழுங்கள் ஆண்கள் தம் மனைவியைப்பற்றிப் பிற ஆண்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். `இதையெல்லாம் மனைவியின் எதிரே கூறினால், அவள் கை ஓங்கிவிடுமோ?’ என்ற பயம் எழ, அவளிடம் வீறாப்பு காட்டுவார்கள். இரு தரப்பினருக்கும் பாராட்டு வேண்டியிருக்கிறது. வெளியில் அலைந்துவிட்டு வரும் மனைவி,  `நல்லவேளை, பாலைக் காய்ச்சி வைத்துவிட்டீர்கள்!’ என்று கணவனிடம் நன்றி தெரிவிக்கிறாள். பதிலுக்கு, `இன்று பயற்றங்காய் பொரியல் முறுமுறுவென்று, நன்றாக இருந்தது!’ என்று மனைவியைப் பாராட்டுகிறான். அவள் உற்சாகமாக, `எண்ணை அதிகமாகாது இருக்க, கடைசியில் ஓட்ஸைப்போட்டு, சற்று வதக்கினேன்,’ என்பாள். அடுத்தமுறை, இன்னும் கவனமாகச் சமைப்பாள். இப்படி ஒருவர் செய்யும் நற்காரியத்தை உடனுக்குடன் புகழலாமே! சண்டை போடுவதைவிட இம்முறை எளிதானது. நல்ல பலனையும் அளிக்கும். 9. நிறைவுகளைப் பட்டியலிடுங்கள்   எப்போதும் மகிழ்ச்சியின்றியே காணப்படுகிறவர்கள் யார்மேலாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒருவரும் அன்று அகப்படவில்லையா? `எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!’ என்று தம்மையே குறை கூறிக்கொண்டு இருப்பார்கள். எவரிடமாவது தம் குறைகளைச் சொல்லிக்கொண்டால் வேதனை குறைகிறது என்று நினைத்தவர்களாகப் பலரும் தம் பாரத்தைப் பிறர் தலையில் ஏற்றிவைப்பார்கள். சொல்பவருக்கு மனம் எளிதாக ஆகிறதோ, என்னவோ, கேட்க நேர்ந்தவருக்கும் தாமே அனுபவித்ததுபோன்ற உணர்வு ஏற்பட, அவரது மகிழ்ச்சியும் குன்றிவிடும். கதை சிறு வயதிலேயே தாயை இழந்த பத்மாசனி தந்தையின் செல்ல மகளாக வளர்ந்தவள்.  புக்ககத்திற்குப் போனபோது, அவள் உலகமே மாறிவிட்டது போலிருந்தது. படுத்த நிலையிலேயே ஓயாது அதிகாரம் செய்த மாமியாரை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை. அடிக்கடி தன் சகோதரனின் பிறந்தகத்திற்கு வந்து, மாமியாரைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பாள். பிறரது முகத்திலும் வருத்தம் தென்படுவது ஆறுதலாக இருக்கும்.   அருமையாக வளர்ந்த பெண்ணை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யாருக்கும் புரியவில்லை. அவளுடைய சோகம் வீட்டிலிருந்தவர்களையும் ஓரளவு பற்றிக்கொண்டது.    `இவர்களாவது நம்மைப் புரிந்துகொண்டு, நம்மீது அன்பு செலுத்துகிறார்களே!’ என்று நினத்தவள்போல், அதையே வழக்கமாகக் கொண்டாள் பத்மாசனி. வரும்போதெல்லாம் மாமியாரைப்பற்றிய புகார்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நான், “தன் வீட்டில் நிம்மதியே இல்லை என்றுதான் இங்கு வருகிறாள். ஆனால், மாமியாரைப்பற்றியே புகார் செய்துகொண்டிருந்தால், நிம்மதி எப்படிக் கிடைக்கும்? பேச்சை மாற்றிவிடுங்கள்!” என்று உபாயம் கூறினேன். இம்முறையால் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் சற்று நிம்மதி கிடைக்கும். மாமியார் மட்டுமின்றி, பெற்ற குழந்தைகளைப்பற்றிகூட புகார் செய்யும் தாய்மார்கள் உண்டு. கதை: போட்டா போட்டி பாலம்மா தன் ஒரே மகளின் வீட்டுக்குப் போயிருந்தாள். அங்கு பெண்ணின் மாமியாரும் தங்கியிருக்க, குழந்தை வளர்ப்பிலிருந்து சமையல்வரை இரு தாய்மார்களுக்கும் மறைமுகமான போட்டி. `ஏனடா போனோம்!’ என்றாகிவிட்டது பெண்ணைப் பெற்றவளுக்கு. முகத்தைச் சுளித்துக்கொண்டு, “ஐயே! யாராவது பெண்வீட்டில் போய் தங்குவார்களா!” என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தாள். தனக்கு ஒரு பெண் இருப்பதால்தானே இப்படி அவதிப்பட நேர்ந்தது என்று நினைக்க ஆரம்பித்தவள்போல், அவளைப்பற்றியும் ஓயாது குறை கூற ஆரம்பித்தாள். அவளது புலம்பலைச் சகிக்க முடியவில்லை உறவினருக்கு. “நீ ஏன் சும்மா அதையே சொல்றே? எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான்!” என்று ஒருத்தி கூறி, அவள் வாயை அடைத்தாள். நானும் அப்படித்தான்! கவுன்செலிங் செய்யும்போது, `எங்கள் குடும்பத்திலும் இப்படித்தான் நடக்கிறது!’ என்று கூறுவது உடனே பலனளிக்கும். `நான் மட்டும் தனியாக கஷ்டப்படவில்லை,’ என்ற நிம்மதி எழ, புகார் செய்பவர் சற்று அடங்குவார். எல்லாருக்கும்  நிகழ்காலத்தில் பெரிதாக எந்த பிரச்னையும் இருப்பதில்லை. இருந்தாலும், எதைப்பற்றியாவது யோசித்து, குறை கூறி, அனுதாபம் தேடுவது சிலரது குணம். அவர்களைப் பொறுத்தவரை, அனுதாபமும் அன்பும் ஒன்று. `அலுவலக நண்பர்கள் படுத்தும் பாடு..!’ அவர்களைவிட்டு விலக வேண்டியதுதானே! நம் நிம்மதியைக் கெடுக்க நினைப்பவர்கள் நண்பர்களே இல்லை. “இந்த அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமம்..!’ பிறரைப்பற்றி அவர்பின்னால் பேசினால் அவர் மாறுவாரா, என்ன! நம் நிம்மதிதான் கெடும். `நான் சிறுவயதில் பட்ட துயரம் இருக்கிறதே..! சிரிப்பே கிடையாது!’ இன்று அதைப்பற்றிப் பேசினாற்போல், என்றோ நடந்தது மாறிவிடப்போகிறதா? சிறு வயதில் சிரிப்புதான் முக்கியம் பிற்கால வாழ்க்கையில் எந்த இடர் வந்தாலும், அதைத் தாங்கும் சக்தி அளிக்கவல்லது சிறுவயதில் ஒருவர் அனுபவிக்கும் மகிழ்ச்சி. இது புரியாது, படிப்பு, பணம், பதவி என்ற நோக்கத்துடன் குழந்தைகளை விரட்டிக்கொண்டே இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு முன்னேறினாலும், என்ன அடைந்தாலும், சிரிப்பு மட்டும் அண்டாது. கதை பெற்றோர் அண்ணன்மார்களை மட்டும் படிக்க வைத்துவிட்டார்களே,  தான் பட்டதாரி இல்லையே என்ற பெருங்குறை ரதிமலருக்கு. பிற பட்டதாரி ஆசிரியைகளுடன் காரணமின்றி சண்டை பிடித்துக்கொண்டிருப்பாள். தன் மகள் அனுசூயாவாவது படிப்பில் எல்லாரையும் மிஞ்சவேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது அவளுக்கு. நிறைய மதிப்பெண்கள் வாங்காவிட்டால், அறையில் பூட்டிவைப்பது, பட்டினி போடுவது என்று பலவாறாக மகளுக்குத் தண்டனை அளித்திருக்கிறாள் ரதிமலர். என் மகளுடன் ஒன்றாகப் படித்துவந்தவள் மகள் அனுசூயா. தினமும் தன் தாய் செய்யும் கொடுமைகளைச் சொல்லி வருந்துவாளாம். பதினாறு வயதான என் மகளுக்கோ, தோழிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. என்னிடம் ஆலோசனை கேட்டாள். “எங்கம்மாவும் அப்படித்தான்! என்று சொல்லி வை,” என்றேன். உடனே, “நீ அப்படி இல்லை என்று அவளுக்குத் தெரியும்!” என்றாள். (பள்ளிப் பருவத்தில் வற்புறுத்தி எந்நேரமும் படிக்கவைத்தால், பிற்காலத்தில் புத்தகம் என்றாலே ஒரு வித பயம், அருவருப்பு ஏற்பட்டுவிடும் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்). எட்டாம் வகுப்பின் அரசாங்கப் பரீட்சையில் நிறைய மதிப்பெண்கள் வாங்கி தாயை மகிழ்வித்த அனுசூயா அடுத்த ஆண்டில் அதற்கு எதிர்மாறாக எல்லாவற்றிலும் தோல்வியுற, தலைமை ஆசிரியை விழித்துக்கொண்டாள். அப்பெண்ணை அழைத்து விசாரிக்க, அவள் கதறியபடி தன் தாயின் போக்கை விவரித்தாளாம். இன்று அனுசூயா நிறையப் படித்து, நல்ல உத்தியோகத்தில் இருக்கிறாள். மகிழ்ச்சி? சிறு வயதில் இழந்தது மீண்டும் கிடைக்குமா? கற்பித்தலும் சுதந்திரமும் சிறு வயதில் தம் குழந்தைகள் பக்கத்திலேயே உட்கார்ந்து ஒவ்வொரு பாடத்தையும் சொல்லிக்கொடுக்கும் தாய்மார்கள் அவர்களுக்குச் சுதந்திர உணர்வு அவசியம் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.   சிலருக்கு இடைநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைக்குக் கற்பிக்கத் தெரியாமல் போகலாம். அப்போது தானே எதையும் சமாளிக்கத் தெரியாது அல்லல் படுவார்கள் சிறுவர்கள். கதை “என் காலத்தில் கல்வி வித்தியாசம். இல்லையா?” என்றாள் என்னைப் பார்க்க வந்த ஒரு தாய். நான் சும்மா தலையாட்டி வைத்தேன். மகன் அமீர் படிப்பில் சுமார் என்ற வருத்தம் அவளுக்கு என்பது புரிந்தது. “எனக்கு அவனுக்குச் சொல்லிக்கொடுக்கத் தெரியவில்லை,” என்றாள் பரிதாபகரமாக. நான் அவளைக் குற்றம் சொல்லிவிடுவேனோ என்ற அச்சம் அவளுக்கு. “சும்மா பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளுங்கள். அது போதும். அவன் ஏதாவது விவரித்தால் கேட்டுக்கொள்ளுங்கள்,” என்றேன். `அம்மாவுக்கு நம் நலனில் ஆர்வம் இருக்கிறது!’ என்று ஏற்படும் உற்சாகமே ஒரு சிறுவனை முன்னுக்குக் கொண்டுவந்துவிடும். தீய நட்பை நாடாத குணம் வரும். ஓரிரு மாதங்களிலேயே அமீரிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. படிப்பில் ஆர்வம் மிகுந்து, கலகலப்பாக ஆனான்.     கவலையே இல்லாதவர்களோ? உம்மணாமூஞ்சிகளாக இருப்பவர்கள், சிரித்த முகத்துடன் காணப்படுகிறவர்களைப் பார்த்து `இவர்கள் வாழ்க்கையில் வருந்தத்தக்கதாக எதுவுமே நடந்திருக்காதா!’ என்று ஆச்சரியப்படுவார்கள். உண்மையில், துன்பத்தையும் துயரத்தையும் அனுபவிக்காதவர்களே கிடையாது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. மன இறுக்கமா? ஒருவருக்குத் தன்னையே பிடித்துப்போனால், பிறரது வித்தியாசத்தைப் பெரிதுபடுத்தி, நொந்துபோக மாட்டார். தங்களிடமும் சிறிது கருணையும், அன்பும் காட்டலாமே! காற்றாட வெளியில் போவது, நல்ல புத்தகங்களைப் படிப்பது, இனிய இசையைக் கேட்பது, நண்பர்களுடன் உறவாடுவது, நறுமணமுள்ள மலர்களை முகர்வது – இப்படி எத்தனை வழிகள் இல்லை, நிம்மதி அளிக்க! மாமியாரைக் குறைகூறியபடி இருந்த பத்மாசனிக்கு ஆதரவான கணவர், அன்பும் அறிவுமாக இருந்த பிள்ளைகள், பணத்தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை எல்லாமே கிட்டியிருந்தன. இவைகளை எண்ணி திருப்தி அடைந்திருக்கலாமே! கிடைக்காத ஒன்றுக்காக அநாவசியமாக நோவானேன்! உங்களிடம் இருக்கும் நிறைவுகளைப் பட்டியலிடுங்கள். குறைகளை அல்ல. 10. கூடா நட்பும் தண்டனையும்     “உனக்கு என்ன வந்துவிட்டது? நல்ல பையனாக இருந்தாயே?” என்று என் பதின்ம வயது மாணவன் நவாவியைக் கேட்டேன், மலாய் மொழியில். சிறிதுகூட தயக்கமே இல்லாது வந்தது அவனது பதில்: “என் நண்பர்கள் அவ்வளவுபேரும் விஷம்!” “தகாத உறவு என்று தெரிந்தே ஏன் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாய்?” என்று நான் கேட்டபோது, அவனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஏழைகளான பெற்றோருக்குப் பிள்ளைகளின் அத்தியாவசியத் தேவைகளை நிரப்புவதற்கே பொழுது போய்விடுகிறது, அதனால் தகுந்த கவனிப்பின்றி பிள்ளைகள் தான்தோன்றித்தனமாக நடக்கிறார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், நவாவியைப்போல வசதிமிக்க குடும்பத்திலிருந்து வந்த சிறுவர்களும் பாதைமாறிப் போகிறார்களே, ஏன்? பல பெற்றோர் குழந்தைகள் தவறு செய்தாலும் கண்டிக்க மாட்டார்கள். கேட்டால், `அவர்கள் மனம் நொந்துவிடும். பெற்றோருக்கு நம்மிடம் அன்பில்லை என்று நினைத்து அவமானம் அடைந்துவிடுவார்கள்!’ என்று பலவாறாகச் சொல்வார்கள். ஒரு வேளை, திருத்த நினைத்தாலோ கெஞ்சலாகச் சொல்வார்கள். யாரும் அதைச் செவிகொடுத்துக்  கேட்பதில்லை. இத்தகைய வளர்ப்புமுறையால் தான் என்ன செய்தாலும் சரிதான் என்று தோன்றிப்போகிறது சிறுவர்களுக்கு. அவர்களுக்குப் பன்னிரண்டு வயதாகும்போது, பெற்றோர் சற்று அடக்க முயல்கிறார்கள். ஐந்திலேயே வளைத்திருக்கவேண்டும். காலங்கடந்து திருத்துவது இயலாத காரியமாகிவிடுகிறது. அந்த வயதுக்கே உரிய எதிர்க்கும் குணத்துடன், `என் பெற்றோருக்கு என்னைப் புரிவதேயில்லை!’ என்று தம்மை ஒத்த மாணவர்களிடம் குறை கூறுகிறார்கள். நண்பர்களுடன் ஒன்றாக இணையும்போது, அவர்களுடைய பழக்கவழக்கங்களையும் ஏற்பது தனி மகிழ்ச்சி. தீய பழக்கங்களைப் பெற்றோர் கண்டித்தால், அவர்கள் வேண்டாதவர்களாகி விடுகிறார்கள். பரவும் கசப்பு பெற்றோரிடம் கொண்ட காழ்ப்பு ஆசிரியைகளிடமும் பரவுகிறது. `என்னைப் புரிந்துகொள்கிறவர்கள் நண்பர்கள் மட்டும்தான்!’ என்பார்கள். `உன் நண்பர்கள் உருப்படாதவர்கள்!’ இப்படிச் சொன்னால், எந்தப் பையன்தான் ஏற்பான்? (சில பெண்களும் இதில் சேர்த்தி). பொதுவாக, நண்பர்களைக் குறை கூறாது, அவர்களுடைய பழக்கவழக்கங்களை மட்டும் குறிப்பிடலாமே! “அவர்கள் சிகரெட்டில் ஆரம்பித்து, இன்று போதை மருந்துவரை போய்விட்டார்கள். இப்பழக்கம் சட்ட விரோதம் என்பது ஒருபுறமிருக்க, உன் ஆரோக்கியம் கெடும். படிப்பும் வீணாகும்,” என்று பொறுமையாக எடுத்துச்சொல்லும் பெற்றோர் மகனை சிறுகச் சிறுக மாற்ற முடியும். ஒரு தண்டனையானது அதிலிருந்து கற்கும்படி அமையவேண்டும். கதை சுந்தர் கல்வி பயின்ற பள்ளிக்கூடத்தில் பாடம் நடக்கையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருந்தது. மீறினால், மறுநாள்தான் தவறிழைத்த மாணவன் அதைத் திரும்பப் பெறமுடியும். சுந்தர் நன்றாகப் படிப்பவன். அவனுடைய போதாத காலம், அவனுடைய கைத்தொலைபேசி பிடுங்கப்பட்ட அன்று வெள்ளிக்கிழமை. திங்கள்வரை அது இல்லாது, அவனுக்குக் கை ஒடிந்ததுபோல் ஆயிற்று! தலைமை ஆசிரியையிடம் எவ்வளவு கெஞ்சியும் பயனில்லாமல் போயிற்று. `நீயே இப்படிச் செய்யலாமா?’ என்று கைவிரித்துவிட்டாள். இனி எந்த விதியையும் அலட்சியப்படுத்தக்கூடாது என்ற புத்தி வந்தது பையனுக்கு. தொலைகாட்சி, கணினி விளையாட்டுகளும் இளவயதினருக்கு மோகம் அளிக்கும் சாதனங்கள்.  உல்லாசமாகப் பொழுதைப் போக்க இவை இருக்கையில், யாராவது வீட்டுப்பாடம் செய்வார்களா! பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து உண்மையை அறியும் பெற்றோர் குறிப்பிட்ட காலம் இவை இரண்டும் கூடாது, வீட்டுப்பாடத்தை முடிக்க வேண்டும் என்று தடை உத்தரவு போடலாம். இங்கு `காலம்’ என்பது சில மாதங்கள். அவர்களுக்கு முதலில் பொறுக்க முடியாமல் இருக்கும். பிறகு பழகிவிடும். வகுப்பில் நல்ல பெயர் எடுக்கும்போது, தொலைகாட்சியின் முக்கியத்துவம் குறைய, பொறுப்பு வந்துவிடும். வீண் தண்டனைகள் சிலவித தண்டனைகளால் பயனுள்ள எதையும் கற்க மாட்டார்கள் சிறுவர்கள். உதாரணமாக, `பாடம் படிக்காது, இன்னொரு முறை தொலைகாட்சிமுன் உட்கார்ந்தாயோ..!’ என்று மிரட்டினால் பயமும் எதிர்ப்பும்தான் எழும். மாறாக, `அரைமணி நேரத்திற்குமேல் கணினி கூடாது. பரீட்சை நெருங்குகிறது! சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டாம்?’ என்று பொறுமையாக வழிகாட்டுவது சிறுவர்களைப் பொறுப்பானவர்களாக ஆக்கும்.      எது கூடாத நட்பு? நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கும் மாதவனை அவன் வகுப்பிலிருந்த பிற மாணவர்கள், “உரு! கடம்!’ என்றெல்லாம் கேலி செய்வதைக் கண்டிருக்கிறேன். எதையும் புரிந்துகொள்ள முயற்சி எடுக்காது, மணிக்கணக்காக மனப்பாடம் செய்கிறான், இப்படிச் செய்வது பெண்களின் குணம் என்று அந்த கேலிக்கு அர்த்தம்.   மாதவனோ, தன் பொறுப்பை உணர்ந்திருந்தான். சக மாணவர்களின் கேலியை அலட்சியப்படுத்தினான். சில ஆண்டுகளுக்குப்பின் அவன் மேற்படிப்புக்கு ஆயத்தமாக, அவனை நையாண்டி செய்தவர்கள் பின்தங்கிப் போனார்கள். முன்னேறவிடாத முட்டுக்கட்டைகள் சிறு குழந்தைகள் தாம் நல்லவர்களா, புத்திசாலியா என்று அறிய பெற்றோரது பாராட்டை எதிர்நோக்குவது இயற்கை. `நீ உருப்படமாட்டே!’ என்று சொல்லிக்கொண்டே இருந்தால் குழந்தைகளுக்கு நற்புத்தி வரும் என்று  எண்ணிய பெற்றோர் வாய்த்திருந்தால், சிலர் பெரியவர்களானபின்னும் அதேபோல் பழிக்கும் நண்பர்களையே நாடுகிறார்கள். தம்மை அவர்கள் முன்னேறவிடாது தடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. நாம் அடையும் மகிழ்வும், தன்னம்பிக்கையும் பிறரிடமிருந்துதான் பெறவேண்டும் என்ற நிலை ஓரளவு சரியாக இருக்கலாம். அதற்காக எப்போதும் பிறரையே நாடுவது பலகீனம் அல்லவா? நண்பர்கள் மட்டுமல்ல, சில சமயம், வாழ்க்கைத்துணைகூட ஒருவரை தாழ்த்தக்கூடியதுதான். கதை: பயங்கொள்ளிகளின் ஆயுதம் தன்னைவிடப் பலவிதங்களில் சிறந்திருந்த மனைவியை ஓயாது மட்டம்தட்டி, பலர் முன்னிலையில் `முட்டாள்’ என்று பழித்தால் தான் உயர்ந்துவிட்டதாக எண்ணும் ஆண்களில் சுதாகரும் ஒருவன். அவன் மனைவி சுமதிக்கு உற்றார் உறவினர் எவரும் அருகில் இருக்கவில்லை. அதனால் கணவன் அவளை எப்படி நிந்தித்தபோதிலும் அனுதாபம் காட்டவோ, அறிவுரை வழங்கவோ எவரும் இல்லை. படித்த பெண்ணானாலும் மரியாதை கருதி, `இதுதான் தமிழ் பெண்ணுக்கு அடையாளம்!’ என்று பொறுத்துப்போனாள். மனைவியை மட்டுமின்றி, அவளுடைய பெண் உறவினர்கள் யாராவது வந்தால், அவர்களையும் தாக்குவதுபோல் பேசத் துணிந்தான் சுதாகர். மனைவியை தாழ்த்திப் பேசும் ஆண்கள் உலகிலுள்ள எல்லாப் பெண்களையும் அப்படியே நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். அபூர்வமாக சில பெண்கள் எதிர்க்கையில், ஒரேயடியாகப் பயந்துவிடுவார்கள். (என்னை ஒருவர் அப்படி நடத்தியபோது, நான் எழுதியவைகளின் நீண்ட பட்டியலை அவரிடம் மௌனமாகக் கொடுத்தேன். புரட்டிவிட்டு, `பயமா இருக்கே!’ என்றார். அதன்பின் ஒரே மரியாதை!) பயந்தாங்கொள்ளிகளின் ஆயுதம் அடங்கிப்போகும் பெண்களை மிரட்டுவதோ? அதன்மூலம் தாம் தைரியசாலிகள்தாம் என்று தமக்கே தைரியம் சொல்லிக்கொள்கிறார்களோ? ஆரம்பத்திலேயே எதிர்க்காது, விட்டுக்கொடுத்துப்போனது சுமதி செய்த தவறு.  மனைவியின் எதிர்ப்பின்மை அவனுடைய பலத்தை அதிகப்படுத்துவதுபோல் இருக்க, வன்முறையில் இறங்கினான் சுதாகர். பிறர் நம்மை ஏற்கவேண்டும் என்று நம் சுயகௌரவத்தை விட்டுக்கொடுத்தால் பிறருக்கு மட்டுமின்றி, நமக்கும் நம்மையே பிடிக்காதுபோகும் அபாயம் இருக்கிறது. நண்பர்களோ, உறவினர்களோ, நம் ஆற்றலை முழுமையாக வெளிக்காட்டாதிருக்க தடை போட்டால், அவர்கள் தொடர்பு வீண்.     11. நண்பர்களும், மரக்கட்டைகளும்   பிறருக்கு நல்லது செய்ய நினைப்பவர்களை இக்காலத்தில் அபூர்வமாகத்தான் காணமுடிகிறது. உலகின் போக்கு இவர்களுக்கு கசப்பாக ஆகிவிடுவதில் என்ன அதிசயம்? நல்லவர்களை `முட்டாள்’ என்று கருதும் உலகத்தில் அல்லவோ இருக்கிறார்கள்! எவரைப் பார்த்தாலும், `இவரிடமிருந்து எதைப் பெறலாம்?’ என்றே சிந்தனை நிலைத்திருக்கும் காரியவாதிகள் மலிந்திருக்கும் உலகம் இது. ஒன்றும் பெறமுடியாது என்ற நிலை வரும்போது காணாமல் போய்விடுவார்கள். பள்ளி நாட்களில் மிகச் சிலருடன் உண்டாகும் நட்பு நீடித்திருக்கும். இது மகிழ்ச்சி அளிக்கும் சமாசாரம். ஏனெனில், உத்தியோகம் பார்க்கும் பருவம் வந்தால், பெரும்பாலோர்க்கு போட்டி, பொறாமை, புறம்பேசுவது  போன்ற வேண்டாத குணங்களும் கூடவே எழுந்துவிடுகின்றன. அதனால் யாரையும் எளிதாக நம்புவது கடினம்.   நட்பு பலப்படுத்தும் நாம் அறியாமலே நமக்குள் சில திறமைகள் இருக்கும். அவர்களை வெளிக்கொணர்பவர்களின் நட்பு நம்மை பலப்படுத்தும் தன்மையது. கதை நல்ல உத்தியோகத்திலிருந்த இளைஞர் பாஸ்கர். “எனக்கு இசை என்றால் கொள்ளை ஆசை. சிறு வயதில் எங்கள் குடும்பம் ஏழ்மையில் மிகவும் அவதிப்பட்டது. அதனால் கற்க இயலவில்லை,” என்று குறைப்பட்டார். “இப்போது கற்றுக்கொள்ள என்ன தடை? போயேன்!” என்றார் நண்பர் எரிச்சலாக. (நமக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள் எப்போதும் இனிமையாகத்தான் பேசுவார்கள், பேசவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது). முகம் மலர, உடனே ஓர் இசை வகுப்பில் தன் பயணத்தை ஆரம்பித்தார் பாஸ்கர். `இனி நீ பாட்டு கற்றுக்கொண்டு என்ன லாபம்? கச்சேரியா செய்யப்போகிறாய்?’ என்ற ரீதியில், கேலிச்சிரிப்புடன் நண்பர் பேசியிருந்தால்? (முகத்தில் சிரிப்பு மாறாது எப்போதும் இருப்பவர்களே சந்தேகத்துக்கு உரியவர்கள். இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில்லை. பிறரைக் கவர (ஏமாற்ற?) வேண்டும் என்ற நோக்கம்தான்!) `நம்மால் செய்ய முடியாததை இவன் சாதித்துவிடப்போகிறானே!’ என்ற கலக்கமும் சிலரை அப்படிப் பேச வைக்கிறது. நம் மன நிம்மதிக்காக அப்படிப்பட்டவர்களைத் தவிர்க்க வேண்டும். முடியாவிட்டால், அவர்கள் கூறுவதையாவது அலட்சியம் செய்ய வேண்டும். கச்சேரி செய்யும் அளவுக்கு இசைத்திறன் வளராவிட்டால் என்ன? பாடும்போதே மகிழ்ச்சியும், பின்னர் திருப்தியும் கிடைக்கிறதே, போதாதா? ஒருவருக்கு அவரது மகிழ்ச்சிதான் முக்கியம் – அவரது செய்கை பிறருக்குத் தீங்கு விளைவிக்காததாக இருக்கும்வரை. நம் குறைகளையே நாம் பெரிதாகக் கருதி மறுகும்போது, நம் வருத்தத்தை மேலும் தூண்டிவிடுபவர்கள் நண்பர்களில் சேர்த்தியில்லை. நெருங்கியவரெல்லாம் நண்பர்களா? `உனக்கு என்னைவிட உன் பொழுதுபோக்குதான் முக்கியம்!’ என்று நெருங்கியவர் குறைப்பட்டால், அது நம் தவறல்ல. பிடித்தமான பொழுதுபோக்கு மன இறுக்கத்தைக் குறைத்து, நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கூட்டும் வல்லமை படைத்தது. பிறருக்குப் பயந்து, நமது மகிழ்ச்சியை எதற்காக விட்டுக்கொடுக்க வேண்டும்? நாம் அனுமதித்தாலே ஒழிய, பிறர் நம்மை ஆட்டுவிக்க முடியாது. கேள்வி: யார் ஆட்டுவிக்கிறார்கள்? பதில்: பிறர் நம்மை ஏற்க வேண்டுமே என்ற தாபத்துடன் சுயகௌரவத்தை விட்டுக்கொடுப்பவர்கள். இவர்களுக்குப் பிறரைப் பாராட்டவோ, மதிக்கவோ தெரிவதில்லை. தம் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிக்கவும் வழி புரிவதில்லை. `பிறரை மேலே தூக்கிவிடும்போது நாமும் உயரலாமே!’ என்ற எண்ணமே இவர்களுக்கு உதிப்பதில்லை. ஏன் ஆட்டுவிக்கிறார்கள்? தம்மைப்போல் அல்லாதவர்களைக் கண்டு அச்சம் எழுவதால். எப்படி? தம்மைப்போன்று இல்லாதவர்களையும் இழித்தும், பழித்தும் தம்மைப்போல் ஆக்க முயற்சிக்கிறார்கள். `என்னைப்போல்தான் பலரும் இருக்கிறார்கள்!’ என்ற திருப்தியாவது எழுமே! அப்படிச் செய்யும்போது, தாமும் கீழேயேதான் இருக்க நேரிடும் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை. கதை அப்போதுதான் முதன்முறையாக அவளைத் தூதரகத்தில் நடந்த விழாவொன்றில் சந்தித்திருந்தேன்.   “எழுதுவதைத் தவிர நீ வேறு என்ன செய்கிறாய்?” என்று கேட்டாள். (`உனக்கெல்லாம் எப்படி அழைப்பு கிடைத்தது?’ என்று வெளிப்படையாகக் கேட்டால் மரியாதைக்குறைவாக இருக்குமே!) அவளுடைய உள்நோக்கம் புரிந்து, “உருப்படியாக ஒன்றுமில்லை!” என்று பதிலளித்தேன், அசிரத்தையாக.   “நானும் என் கணவரும் கோலாலம்பூர் பிரதான சாலையில் ஒரு  பெரிய கட்டடத்தை வாங்கி, அதில் கல்லூரி நடத்துகிறோம், தெரியுமா?” என்று பெருமையுடன் தெரிவித்தாள். நான் அவளைப் பார்த்துப் பிரமிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் பெருமை பேசியவளைப் பார்த்து, “அப்படியா?” என்றேன், அலட்சியமாக. நம் நம்பிக்கைக்கு உகந்த நண்பர்கள் இவ்வாறு நம்மைக் கவரவேண்டும் என்ற நோக்கத்துடன் எதையும் செய்யவோ, சொல்லவோ மாட்டார்கள். நம்மீது பொறாமையும் எழாது. வாழ்க்கை ஒரு பயணம் ஓரிடத்திலிருந்து இன்னொரு ஊருக்கு ரயிலில் பயணம் செய்கிறோம். வழியில் எத்தனையோ அசந்தர்ப்பங்கள். ரயில் தாமதமாக வருகிறது. பெட்டியில் ஒரே கும்பல், சத்தம். வாங்கும் உணவும் கெட்டுவிட்டதுபோல் இருக்கிறது. இத்தனையையும் சகித்துக்கொண்டு, நாம் செல்லுமிடத்திற்கு வந்து, அங்கு உறவினர்களைப் பார்த்ததும் கலகலப்பு மீண்டுவிடுகிறது. பட்ட கஷ்டங்களெல்லாம் வெறும் கதைகளாகிவிடுகின்றன. இப்படித்தான் நம் தினசரி வாழ்க்கையில் எதிர்ப்படுகிறவர்களால் என்ன இடர் வந்தாலும், அவைகளால் மனம் தளராது இருப்பதே மகிழ்ச்சியைத் தக்கவைக்கும். இன்னலை விளைவிப்பவர்கள் -- ஆற்று நீரில் மோதி விலகும் மரக்கட்டைகள். இவர்கள் நம்மை அதிகம் பாதிக்க விடக்கூடாது. யாரைத்தான் நம்புவது? நாம் எப்படி இருந்தாலும் ஏற்பவர்களே நல்ல நண்பர்கள். இவர்களுடன் சேர்ந்திருக்கையில் எளிதாகச் சிரிப்பு வரும். நம் உடலோ, மனமோ நொந்திருக்கையில், அதை நாம் சொல்லாமலேயே புரிந்துகொள்வார்கள். அப்போதெல்லாம் ஆறுதலாகப் பேசி, அல்லது பேச்சை வேறு திசையில் கொண்டு சென்று, நம் மனப்பாரத்தை லேசாக்குவார்கள். எண்ணிக்கை எதற்கு? `எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்!’ என்று பெருமை பேசிக்கொள்பவர்கள் அவர்களில் எத்தனைபேர் உண்மையானவர்கள் என்று நினைத்துப்பார்க்கிறார்களோ? நிறையச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்வதைவிட சத்து நிறைந்த உணவு சிறிதாகிலும் போதுமே!       12. சிறு வெற்றி, பெரு மகிழ்ச்சி   `நான் ஏன்தான் இப்படி எளிதாக மனம் தளர்ந்துவிடுகிறோனோ!’ என்று அலுத்துக்கொள்கிறவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் 95% பேர் இருக்கிறார்கள். நூற்றில் மூன்று பேர்தான் வெற்றிப்பாதையில் நடக்கிறார்களாம். அவர்களுக்கு மட்டும்தான் திறமை, அதிர்ஷ்டம் எல்லாம் வாய்த்திருக்கிறதோ? இல்லை. அவர்களுக்கும் குறைகள் இல்லாமலில்லை. ஆனால், வாழ்வை எப்படி எதிர்கொள்வது என்பது புரிந்தவர்கள் அவர்கள். தம்மையுமறியாது மற்றொருவர் விரிக்கும் வலையில் விழுந்துவிடுகிறார்கள் பிறர்.   யாரை எளிதாக வீழ்த்த முடியும்? 1 `என்னால் என்னவெல்லாம் முடியாது?’ என்ற வீண்யோசனைக்குத் தம்மை உட்படுத்திக்கொள்பவர்களை. “சந்திரனைப் பிடிக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டால், நட்சத்திரமாவது கிடைக்கும்”. (திரு.அனுபவசாலி) அதாவது, `கணக்குப்பரீட்சையில் நூற்றுக்கு நூறு வாங்குவேன்!’ என்று முனைந்தால், அறுபது மதிப்பெண்களாவது கிடைக்கும். `எப்படியோ தேர்ச்சி பெற்றால் போதும்!’ என்றால்…? 2 `இப்போது எந்தவிதப் பிரச்னையும் கிடையாது. புதிதாக ஒன்றை ஆரம்பித்து மாட்டிக்கொள்வானேன்!’ என்று ஏற்கெனவே குழம்பி, தாம் வகுத்த பாதையில் மாற்றமின்றி, ஆனால் சலிப்புடன், நடப்பவர்களை. 3 `எளிதானது, எல்லாரும் செய்கிறார்களே!’ என்று கூடாத காரியத்தைத் துணிந்து செய்பவர். (`தலைமை அதிகாரிகளே லஞ்சம் வாங்கும்போது, நாம் வாங்கினால் என்ன தப்பு?’) 4 ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அது எதிர்பார்த்தவகையில் நடக்காவிட்டால் மனம் தளர்ந்துவிடுபவர்கள். அதன்பின், `நான் முட்டாள், அதிர்ஷ்டம் இல்லாதவன்,’ என்று தம்மைத்தாமே குறை கூறிக்கொண்டிருப்பார்கள். இது அடக்கமா? `உனக்குத்தான் அதிர்ஷ்டமே கிடையாதே!’ என்று கூறியே இப்படிப்பட்டவர்களை வீழ்த்துவது எளிது. அவர்களும் தாம் நினைத்தது சரிதான் என்று நம்பிவிடுவார்கள். 5 மனோதிடமின்றி, எதையும் ஒத்திப்போடுபவர்கள் -- `சரியான தருணத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!’ என்ற சாக்குடன். என்னுடன் வேலைபார்த்த ஓர் ஆங்கில ஆசிரியை, “நான் ஐம்பது வயதுக்குப்பின் தினசரிகளுக்கு எழுதப்போகிறேன்!” என்பாள். “அது என்ன கணக்கு?” என்று கேட்டபோது, “சரியான காரணத்தைத்தான் வைத்திருக்கிறேன்,” என்று நழுவினாள். காரசாரமாக எழுதினால். நிறைய அல்லல்களைச் சந்திக்க நேரிடும் என்று என்னைப் பார்த்துப் பயந்துபோயிருப்பாள். இது நடந்து இருபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. அவள் எதையும் எழுதியதாகத் தெரியவில்லை. செய்ய வேண்டியதை இன்றே ஆரம்பிக்கலாமே! விளைவுகளுக்குப் பயந்துகொண்டே இருந்தால், எதையும் சாதிக்க முடியாது. கனவிலேயே சுகம் கனவிலேயே சுகம் காண்பவர்கள் அதை நனவில் செயலாற்ற முனைவதில்லை. `நான் வெளிநாட்டில் வேலை பார்த்து, ஐந்தே வருடங்களில் லட்சாதிபதி ஆகப்போகிறேன்!’ என்றவர்களைப் பார்த்திருக்கிறேன். கனவு மட்டும் போதுமா? செயலில் காட்டி, கண்ட கனவை நனவாக்கும் துணிவும் வேண்டுமே! காலையில் ஆறு மணிக்கு சாப்பாட்டுக்கடை ஒன்றில் வேலைபார்க்க வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவர் இரவு ஒன்பது மணிக்குத்தான் தன் அறைக்குத் திரும்புவார். (மிகவும் களைப்பாகத் தென்பட்ட ஒரு பரிசாரகரை நான் விசாரித்துத் தெரிந்துகொண்ட செய்தி இது). சம்பளம் தாய்நாட்டில் கிடைப்பதைவிடப் பன்மடங்கு அதிகம் என்றாலும், அயல்நாட்டில் அத்தியாவசியமான எல்லா பொருட்களுக்கும் விலையும் கூடுதல்தானே? கனவு கனவாகவே போய்விடும் என்று புரியும்போது வாழ்க்கையில் சலிப்புதான் ஏற்படுகிறது. குறுகிய காலத்தில் வெற்றி காண நினைப்பது அசட்டுத்தனம். அதற்கு குறுக்கு வழியில் போனால்தான் உண்டு. உழைப்பு மட்டும் போதுமா? நம்பிக்கை, துணிச்சல், பொறுமை ஆகியவைகளும் வெற்றிகாண அவசியமான தன்மைகள். தன்முனைப்பு நாம் ஒரு காரியத்தைத் துவங்குமுன், `உன்னால் முடியும்,’ என்று ஊக்குவிப்பவர்கள் அரிது. `நான் செய்து காட்டுகிறேன்!’ என்று மனதுக்குள்ளேயே சவால் விட்டு, துணிந்து நமக்குப் பிடித்த ஒரு காரியத்தில் ஈடுபட்டால் சிறிதளவாவது வெற்றி கிட்டும். அப்போது, நம் நம்பிக்கையைக் குலைக்கப்பார்த்தவர்கள், `எனக்கு முதலிலேயே தெரியும், நீ வெற்றி பெறுவாய் என்று!’ என்பதுபோல் மாறுவார்கள்! இப்படிப்பட்ட உலகின் நோக்கைப் புரிந்துகொண்டால், எளிதில் மனம் தளரமாட்டோம். சிறு வெற்றிகள் வரும்போது அவைகளுக்காக மகிழக் கற்கவேண்டும். எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு உடையவர் எடுத்த எடுப்பிலேயே புதினம் எழுத முயற்சிக்கலாமா? அவர் பெயரில் ஒரு துணுக்கு வெளியானாலும் மகிழ்வதே முதல் படி. அப்போது எழும் மகிழ்வில், உற்சாகத்தில், இன்னும் முயற்சிகள் எடுக்க முனைவார். ஆனால், ஒரு சிறு வெற்றி கிடைத்தவுடன், `நான் சாதித்துவிட்டேன்!’ என்ற பூரிப்புடன் ஒரே நிலையில் இருந்தால் தோல்விதான் எழும். தோல்வியிலிருந்து கற்க `ஏதாவது செய்யலாமா?’ என்று ஓய்ந்த நேரத்தில் குருட்டு யோசனை செய்வது எந்த பலனையும் அளிக்காது. மாறாக, `இதுதான் செய்யப்போகிறேன்!’ என்ற முடிவெடுத்துக்கொள்வது அவசியம். நம்மையும் அறியாமல் தகுந்த வழிமுறைகள் புலப்படும். தவறாகிவிட்டது. அதனால் என்ன? தடைகளும், தவறுகளும் தவிர்க்க முடியாதவை. இயன்றவரை முயற்சித்தால், தானே சரியான பாதை தெளிவாகும்.   `ஒரே முயற்சியில் நீங்கள் எதையாவது கண்டுபிடித்திருக்கிறீர்களா?’ என்று ஒரு விஞ்ஞானியைக் கேட்டபோது, `பல முறை முயன்றபின், ஒரு காரியத்தை எப்படிச் செய்யக்கூடாது என்று கற்றேன்!’ என்று பதில் வந்ததாம். பிரபல எழுத்தாளர்களைக் கேளுங்கள், `அடித்துத் திருத்தாமல், என்றாவது உங்கள் படைப்புகளைப் பிரசுரத்திற்கு அனுப்பி இருக்கிறீர்களா?’ என்று.   தவறுகள் புரியாமல் ஒரு காரியத்தைத் திருப்தியாகச் செய்வது என்பது இயலாத காரியம். அதனால் மனமுடைந்து போகாது, இனியும் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதே வெற்றிக்கு அறிகுறி. எதிர்பார்த்த வெற்றி கிடைத்தபின்னரும், அதிலேயே தேங்கிவிடாது, இலக்கை உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். தன்னையே உணர்ந்துகொண்டு, விடாமுயற்சி செய்பவரை வீழ்த்துவது கடினம்.   13. ஆத்திரத்தை ஆத்திரத்தால் வெல்ல முடியுமா?   “நேற்று எனக்கு என் கணவர்மேல் ஒரே கோபம்!” என்றாள் என் சிநேகிதி குமுதினி. நான் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். “ஒரு நாள் விட்டு ஒரு நாள் குப்பையை வெளியில் போடவேண்டியது அவருடைய கடமை. அவரோ மறந்துவிட்டதுபோல் இருந்தார். எல்லா வேலையும் நானே செய்ய வேண்டும் என்றால் எப்படி? அதான் அவரோடு பேசுவதை நிறுத்திவிட்டேன்”. அப்போது வந்த என் கணவர், “உங்கள் கணவர் எப்படி இருக்கிறார்?” என்று குமுதினியை விசாரித்தார், மரியாதையை உத்தேசித்து. அவள் பதில் சொல்லுமுன் நான் முந்திக்கொண்டேன். “தெரியாது. அவள் நேற்று ராத்திரியிலிருந்து அவருடன் பேசுவதில்லை!” நாங்கள் மூவரும் சேர்ந்து சிரித்தோம். எந்த தாம்பத்தியத்தில்தான் பிணக்குகள் இல்லை? இம்மாதிரி – சில நாட்கள் `மௌன விரதம்’ கடைப்பிடிப்பது -- உணர்ச்சிபூர்வமான ஒரு மிரட்டல்தான். சிறுபிள்ளைத்தனம் என்று தோன்றலாம். ஆனால், கோபத்தையோ, ஏமாற்றத்தையோ, தடுமாற்றத்தையோ வெளிக்காட்ட வேறு வழி தெரியாததால் இப்படிச் செய்கிறோம். பால்யப்பருவத்தில் இம்மாதிரியான நடத்தை சாதாரணமாக நிகழ்வது. என் சக ஆசிரியை மிஸஸ்.சிங், “நேற்று எனக்கு என் மகன்மேல் ஒரே கோபம். நான் சொல்வதையே கேட்பதில்லை. Go to hell! (நரகத்திற்குப் போ!) என்று கத்திவிட்டேன்,” என்றாள். குற்ற உணர்ச்சியா, இல்லை பேச ஏதோ ஒன்று கிடைத்ததே என்பதாலா என்று புரியவில்லை. இதையேதான் சிறுவர்களும் எதிர்பார்க்கிறார்கள். சிறுவர்கள் அப்படி நடந்தால், கவனியாது இருந்துவிடுவதே நலம். நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கீழே விழுந்துவிட்டால், அழுதபடி தாயை அடிப்பார்கள்! தம் வேதனையை வேறு எப்படித்தான் வெளிக்காட்டுவது! (எங்கள் வீட்டுப் பூனைக்குட்டியும் அப்படித்தான்.  தூக்கம் வந்துவிட்டாலோ, தொலைகாட்சியில் வருத்தமான காட்சி வந்தாலோ, தாங்கமுடியாது என்னை அடிக்கும். உணர்ச்சிப்பெருக்கை வெளிக்காட்ட அதற்குத் தெரிந்த வழி அது. காட்சி புரியாவிட்டாலும், சோக இசை புரியும் போலிருக்கிறது).   சிறுவர்களோ, பெரியவர்களோ, நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த விடலாமா? பல சந்தர்ப்பங்களில் நம்மையும் அறியாமல் அப்படித்தான் செய்துவிடுகிறோம். சிலர் எதற்கெடுத்தாலும் பிறர்மீதே குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, தாமும் நிம்மதியில்லாமல், பிறருக்கும் நிம்மதி கிடைக்காமல் செய்வார்கள். எதிர்பார்ப்புகள் மிகையாக இருப்பதும் ஒரு காரணம். கதை உமாராணி செல்லமாக வளர்ந்தவள். மூன்று அண்ணன்களுக்குப்பிறகு பிறந்ததால், அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. தமிழ் திரைப்படங்களில் வரும் குழந்தைகள்போல் அவள் பெரியவர்களை எதிர்த்துப் பேசுவாள். அதையும் வியந்து பாராட்டுவார்கள், `எவ்வளவு தைரியமாகப் பேசுகிறாள்!’ என்று. இப்படி வளர்ந்தவள், கணவன் சிவராமனும் எல்லா விஷயங்களிலும் அவளை அனுசரித்துப் போகவேண்டுமென்று எதிர்பார்த்ததில் அதிசயமில்லை. தான் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அளவுக்கு மீறிய கோபம் எழ, உதட்டை இறுக்கியபடி, சில நாட்கள் அவனுடன் பேசுவதைத் தவிர்த்தாள். எதற்கெடுத்தாலும் அவள் குற்றம் கண்டிபிடிக்க, அவன் பதிலுக்குக் கத்த, அவர்கள் உறவே கசப்பாகிவிடுகிறது என்று சில மாதங்களில் புரிந்துகொண்டான் சிவராமன். `உன்னைப் பாதிப்பது எது? சொன்னால்தானே புரியும்?” என்று ஒரு தடவை சொல்லிவிட்டு, அகன்றுவிடுவதே சரியான முறை என்று தோன்றிப்போயிற்று. இந்த குழந்தைத்தனம் தான் சொன்னதாலோ, செய்ததாலோ இல்லை, அவள் வளர்ந்த முறையால்தான் என்று தெளிந்தான். பெற்றோர், அண்ணன்மார்களை மகாராணிபோல் அதிகாரத்துடன் நடத்தியவள் இல்லையா! அவளுடைய கோபத்தை அலட்சியம் செய்தான். அவனிடம் எந்த எதிர்ப்பும் இல்லாதுபோக, உமா அந்த நடத்தையைக் கைவிட்டாள்.   `என்னுடன் ஒருவர் மோதுவதா!’ என்று ஆணவம் தலைதூக்கும்போதுதான் சச்சரவுகள் எழுகின்றன. கதை ஒரு பலசரக்குக்கடைக்கு நான் போனபோது, கடையை மூட அரைமணியே இருந்தது. நான் எப்போதும் போகும் கடைதான். என்னென்ன சாமான் வேண்டும் என்று நான் கூற, “முன்னாலேயே வந்திருப்பதுதானே? இவ்வளவு லேட்டா வந்து கழுத்தறுக்கறீங்களே!” என்று கடைச் சிப்பந்தி எரிந்துவிழுந்தார். `கடை இன்னும் திறந்துதானே இருக்கிறது? உங்கள் வேலை எங்களைக் கவனிப்பதுதானே?’ என்ற ரீதியில் நானும் ஆத்திரப்படவில்லை. பிறர் நம்மீது ஆத்திரப்படுவது, அனேகமாக, அவர்கள் ஏதோ குழப்பத்தில் இருப்பதால்தானே! பிறரது நடத்தைக்கெல்லாம் நாம் பொறுப்பேற்று, குற்ற உணர்ச்சிக்கோ, கோபத்திற்கோ ஆளாவது முட்டாள்தனம். `நாள் பூராவும் வேலை செய்து களைத்துப் போயிருக்கிறார், பாவம்! அத்துடன், அயல்நாட்டுக்கு வந்திருப்பதால் குடும்பத்தினரைவிட்டுப் பிரிந்திருக்கும் ஏக்கம் வேறு!‘ என்று புரிந்தது.    “எங்கே இருக்கிறது என்று காட்டுங்கள். நானே எடுத்துக்கொள்கிறேன்!” என்று ஓரிரு சாமான்களை எடுக்க, அவருக்கு அழுகை வந்துவிட்டது. இன்னொரு கடையில், சில வருடங்களாக வேலை பார்த்துவந்த கணபதியை எனக்குத் தெரியும், எல்லாரிடமும், மலாய், ஆங்கிலம், தமிழ், இந்தி என்று பல மொழிகளிலும் கலகலப்பாகப் பேசுவார். திடீரென்று அவர் நடத்தை மாறியது. ஒரே சிடுசிடுப்பு. ஏதாவது கேட்டால், மரியாதை இல்லாது கத்தினார். சற்று யோசித்ததில், அடுத்த தெருவிலேயே குளிர் சாதன வசதியுடன் அக்கடையின் பெரிய கிளை ஒன்று திறக்க, கூடுதல் சம்பளத்துடன் அதை வகிக்க இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று ஆத்திரப்படுகிறார் என்று ஊகித்தேன். அவரே நொந்திருக்கும்போது, நானும் அவர் மனதைக் காயப்படுத்த வேண்டுமா என்று விலகிப்போனேன். எப்படிச் சமாளிப்பது? நமக்கு ஆத்திரம் ஏற்பட்டாலோ, அல்லது பிறர் நம்மீது ஆத்திரப்பட்டு அவர்களைப்போல் நம்மையும் மாற்ற முயன்றாலோ, நமது உணர்ச்சிப்பெருக்கை அடக்க சிறந்த வழி மூச்சை ஆழமாக உள்ளிழுத்து விடுவதுதான். எல்லோரிடமும் அடிக்கடி ஆத்திரப்படுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்களை, `அது அவர் வந்த வழி. அவர் எப்படியோ தம் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போகட்டும்!’ என்று விடவேண்டியதுதான். கெடப்போவது அவரது ஆரோக்கியம்தானே!   14. எப்படியெல்லாம் கையாள்கிறார்கள்!   `பெண் என்றால் ஆணுக்கு அடங்கி இருக்கவேண்டும்!’ பெண்கள் கல்வியறிவு பெறுவதே தகாத காரியம் என்றிருந்த காலத்தில் எவரெவரோ எழுதி வைத்துவிட்டுப்போனது. ஆணாதிக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் தற்காலத்திலும் நம்புவது – தமக்குச் சாதகமாக இருப்பதால். இன்று பெண்களும் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். உத்தியோகம் வகித்து, சொந்தக்காலில் நிற்கவும் முடிகிறது. அவர்களை இப்போது நேரிடையாக எதிர்த்தால், ஆத்திரம்கொண்டு எதிர்ப்பார்களே! அதனால், அவர்களே உணராதபடி கையாள்வது வழக்கமாக ஆகிவிட்டது. பிறரைக் கையாள்வதற்கு எத்தனை எத்தனையோ வழிமுறைகள்! 1 போலியான புகழ்ச்சிமூலம். எந்தப் பெண்ணும், `நீ எவ்வளவு அழகு!’ `உன்னைமாதிரி வெகுளித்தனமாக சிரிப்பவர்களை இப்போது எங்கே பார்க்க முடிகிறது!’ என்றெல்லாம் பலவாறாகப் பாராட்டினால், உடனே மயங்கிவிடுவாள். 2 வேறு எந்த கவனமும் இல்லாததுபோல் அவளையே கூர்ந்து கவனிப்பது. (பல நாட்டுப் பெண்களும் இதற்குத்தான் மயங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்). 3 போலியான கரிசனத்தால். `இந்த இளம் வயதில் உனக்கு இவ்வளவு பொறுப்புகளா!’ `நீ வயதுக்குமீறிய  புத்திசாலி. அதனாலேயே உன்னை ஒருவருமே புரிந்துகொள்வது கிடையாது, இல்லையா?’ 4 இனிமையான பேச்சு. ஒரு பெண்ணுக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதைப்பற்றியே பேசி, அவள் நம்பிக்கையையும், நட்பையும் பெறுவதற்கு ஒரு நல்ல வழி இது. 5 ஒருவரது மனதைப் புண்படுத்திவிட்டு, அளவுக்கு மீறி, திரும்பத் திரும்ப மன்னிப்பு கோருவது. 6 ஒரு பெண் வேடிக்கை என்றெண்ணி எதையாவது ரசித்துக் கூறுகையில், பெரிதாகச் சிரிப்பது. 7 பரிசுகள் வழங்குவது.   (இவற்றில் சில வழிகளைப் பெண்களும் கையாளக்கூடும்). `நான் சொன்னதைக் கேட்க யார் இருக்கிறார்கள்!’ என்று கழிவிரக்கத்துடன் பேசி, பச்சாதாபத்தை உண்டுபண்ணுவது. 8 கத்துவது. இம்முறை பலிக்காதுபோனால், அழுவது. (சிறு குழந்தைகளுக்கு இத்தன்மை இயற்கையாகவே அமைந்திருக்கிறது). வாழ்க்கைத்துணையோ, நண்பர்களோ, ஒருவரின் நம்பிக்கையைப் பெற்றபின், தமக்குச் சாதகமானதை சூழ்ச்சி செய்தாவது படியவைக்கிறார்கள் பலரும். இலக்கானவர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல் புரிய வைக்கிறார்கள். கதை சிவானி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்வி படித்தபோது காதலனாக அமைந்தவன் ராஜா. காதல் மயக்கத்தில், அவனுக்குப் போதைப்பழக்கம் இருந்தது அப்போது அவளுக்குத் தெரியவில்லை. சில மாதங்கள் உல்லாசமாகக் கழிந்தன. `உனக்கு உண்மையில் என்மேல் காதல் இருந்தால், நான் சொன்னதைக் கேட்பாய்,’ என்று ராஜா வற்புறுத்த ஆரம்பித்தான். முதலில் மறுத்த சிவானி, அவன் பேச்சில் மயங்கி, ஓரிரு முறை அவனுடன் சேர்ந்து போதை மருந்தை உடலில் செலுத்திக்கொண்டாள். விரைவிலேயே அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாது போயிற்று. பணத்திற்கு என்ன செய்வது? அதற்கும் ஒரு வழி காட்டினான் காதலன். போதை மருந்தை விற்பனை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாள் சிவானி. `புத்தி கெட்டுப்போய் அவனோட சேர்ந்து, என் வாழ்க்கையையே பாழடிச்சுக்கிட்டேன்!’ என்று கதறினாள் சிவானி. (மலேசிய தொலைகாட்சியில் பார்த்தது). பிறரைத் தம் வசப்படுத்த விரும்புகிறவர்கள்  தாமே சிறந்தோங்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் பிறரை ஏளனம் செய்தும், அச்சமுறுத்தியும் அவர்களுக்குத் தம்மேலேயே சந்தேகம் எழச் செய்துவிடுவார்கள். `எனக்குத் தெரிந்துவிட்டது. உனக்கு யாரோ காதலன் இருந்திருக்கிறான்!’ என்று மிரட்டி மனைவியின் பணிவைப் பெற முயற்சிப்பார்கள் சிலர். பழி உண்மையாக இல்லாவிட்டாலும், பெண்ணுக்கு அச்சமும் துக்கமும் எழும். பொறுக்க முடியாது அவள் எதிர்த்தால், சாமான்களைத் தூக்கிப்போட்டு உடைத்தல். `விவாகரத்துதான் ஒரே வழி!’ என்று மிரட்டுவான். குடும்ப அமைதி கெடுமே, குழந்தைகள் அஞ்சுவார்களே என்று பணிந்துவிடுகிறாள் பெண். `நீங்கள் ஓயாமல் என்னைக் கட்டுப்படுத்துகிறீர்கள்!’ என்ற எதிர்ப்பு எழுந்தால், அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதும் ஒரு கலைதான் லாவகமாக பேச்சை மாற்றக்கூடும். `நான் சிறு வயதில், உன்னைப்போல் மகிழ்ச்சியாக இருக்கவில்லை!’ (அந்தஸ்து வித்தியாசத்தில் மணம் புரிந்துகொள்பவர்கள் கையாளும் முறை). வலிய வரவழைத்துக்கொண்ட அலுப்பு: `உனக்கு என்னை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்!’ கதை “உனக்குக் கடையில் இருப்பதை எல்லாம் வாங்கிவிட வேண்டும்!” பாஸ்கரன் கத்தியது எல்லாருக்கும் கேட்கும்படி அமைந்தது. அவன் தன் மனைவியைத்தான் வார்த்தைகளால் தாக்கினான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை. “எனக்கென்று வாய்த்தாயே! அடிமுட்டாள்!” என்ற சீறல் வேறு! முகம் சிறுக்க, தாரா சுற்றுமுற்றும் பார்த்தாள். அனைவரும் எதுவும் காதில் விழாததுபோல் தத்தம் காரியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் அந்தப் பேரங்காடியில். வீட்டுக்கு வந்ததும், அழுகையுடன், ஒரு பொது இடத்தில் கணவன் தன்னை அவமானகரமாக நடத்தியதை பதின்ம வயது மகளிடம் முறையிட்டாள் தாரா. “ஒன்றைப் பத்தாக்குவதே இவள் வேலை! சும்மா சொல்கிறாள்,” என்று சமாளித்தான் பாஸ்கரன். மனைவியிடம், “நீயே ஏதேதோ கற்பனை செய்துகொள்கிறாய்! நான் எங்கே அப்படிச் சொன்னேன்!” என்று அப்பாவித்தனமாகக் கூற, அவளுக்குக் குழப்பம் உண்டாகியது. பல முறை அப்படியே நடக்க, தாராவின் பொறுமை மீறியது. “இன்னொரு முறை நீங்கள் அப்படி நடந்தால், நானும் அங்கேயே பதிலுக்குக் கத்துவேன்!” என்று மிரட்டினாள். அடுத்த முறை, அவள் ஒவ்வொரு சாமானைக் கையில் எடுக்கும்போதும், `இது எதற்கு? அநாவசியம்!’ என்று பாஸ்கரன் ஆட்சேபிக்க, அவள் வாங்கவில்லை. (அவர்களுக்குப் பணப்பிரச்னை கிடையாது. அதிகாரம் செய்பவன்தான் ஆண் என்ற மனப்பான்மை கொண்ட மனிதர்களுள் ஒருவன் பாஸ்கரன்). “சாப்பிட நொறுக்குத்தீனி ஒன்றுமே இல்லையே1” என்று குறைப்பட்டபோது, “எதுவுமே வாங்காதே என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? எப்படிப் பண்ணுவது?” என்று தாக்கினாள் மனைவி.   பயம், மரியாதை, கலாசாரம் என்று ஒரேயடியாக விட்டுக்கொடுத்துவிட்டால், நம்மையே நம்மால் மதிக்க முடியாது போகலாம். அல்லது, நம் அதிர்ஷ்டத்தைக் குறை கூறிக்கொண்டே இருப்போம். முடிவெடுப்பது உன் கையில்தான்! சில சமயம், நண்பர்களோ, உறவினர்களோ, `நீ இதுதான் செய்யவேண்டும், இப்படித்தான் செய்யவேண்டும்!’ என்று வற்புறுத்துவார்கள். சாப்பாட்டு சமாசாரமோ, உடை வாங்குவதோ எல்லாவற்றிலும் அவர்களின் குறுக்கீடு இருக்கும். நம் உணர்வுகளைவிட அவர்களது உணர்வுக்கு எதற்காக அதிக மதிப்புக் கொடுத்து நடக்கவேண்டும்? (விருந்தோம்பல் என்ற பெயரில் நம்மை அளவுக்குமீறி சாப்பிட வைத்து, மறுநாள் வயிற்றுக்கோளாறால் அவதிப்பட வைப்பவர்கள் சிந்திப்பார்களா?!)     15. தலைவரும், அதிகாரியும்   நிறுவனமோ, குடும்பமோ, எந்த தலைவருக்கும் ஒரே நியதிதான். பிறர் சொல்வதைக் காதுகொடுத்து கேட்டுவிட்டு, சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி வேலையைப் பகிர்ந்தளித்துவிட்டு ஒதுங்கிவிட்டால் எந்தக் காரியமும் சிறப்பாக முடியும். நானே வல்லவன்! பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் பொதுக்கூட்டம் நடைபெறும்போது, ஒரே குரல்தான் ஒலிக்கும் – தலைமை ஆசிரியரது. `பதவி கிடைத்துவிட்டது. இனி நான் கற்க வேண்டியது எதுவுமில்லை!’ என்ற அகங்காரம்! பாதிக்கப்படுபவர்கள் என்னவோ மாணவர்கள்தாம். தலையை நிமிர்த்திக்கொண்டு எல்லாரையும் விரட்டிக்கொண்டே இருக்கவேண்டும், அப்போதுதான் தம் பேச்சுக்கு மறுபேச்சே இருக்காது, தாம் நினைத்தபடி நடப்பார்கள் என்று எண்ணிய தலைவர்கள் நிலைப்பது கிடையாது. இவர்களுக்குத் தம் குறை நிறைகள் புரிவதில்லை. எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அடுத்த வகுப்பிற்கான மணி அடித்ததுமே ஆசிரியர்கள் அறைக்கு வெளியே நின்றுகொண்டு, சுழலும் கதவைப் பிடித்து நிற்பார். “Teachers! Go to class!” என்று ஆசிரியர்களை தத்தம் வகுப்பிற்குப் போகப் பணிப்பார். `நான் ஒரு பெரிய அதிகாரி!’ என்ற பெருமிதம் அவரை அப்படி நடக்க வைத்திருக்கலாம். ஆனால், ஒரு நல்ல தலைவர் இப்படி நடக்கமாட்டார். எல்லா அதிகாரிகளையும் `தலைவர்’ என்று ஏற்க இயலாது. ஒவ்வொரு முறையும் இப்படியே அதிகாரம் செய்ய, எங்களுக்கு எரிச்சல் மூண்டது. நாங்கள் என்ன மிருகங்களா, ஓயாமல் ஒருவர் விரட்ட? “நமக்காக கதவைத் திறந்துவிடுகிறாரே! அவர் கையில் ஆளுக்குப் பத்து காசு வைத்துவிட்டுப் போகலாமா?” என்று ஓர் ஆசிரியை கேட்க, அனைவரும் பெரிதாகச் சிரித்தோம். இயலாமையைத் தணித்துக்கொள்ள கேலி பேசுவதும் ஒரு வழி. குறைகளைப் பெரிது பண்ணுகிற அதிகாரி ஒரு தலைவரானவர் தன் கீழ் இருக்கும் ஒவ்வொருவரின் குணாதிசயத்தையும், குறை, நிறைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். குறைகளையே பெரிதுபடுத்திக்கொண்டிருந்தால், யாருக்குத்தான் கடமை உணர்வுடன் செயலாற்றப் பிடிக்கும்! பிறரிடம் நல்லவிதமாக நடந்துகொண்டால்தானே நல்லெண்ணம் நீடித்திருக்கும்? கதை தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருவர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவள் மஹானி. எதிர்பாராத அல்லது நடக்கக்கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டால் அவைகளை எப்படிச் சமாளிப்பது என்று அமைதி குலையாது யோசிக்கும் திறமை அமைந்திருக்கவில்லை அவளுக்கு. சிபாரிசுதான் மஹானியை தலைமை ஆசிரியையாக உயர்த்தி இருந்தது. அதனால் பதவிக்கு ஏற்ற மனத்துணிவு இருக்கவில்லை. ஒரு முறை, மாணவர்கள் புகை பிடிக்கக்கூடாது என்ற பள்ளி விதிமுறையை மீறிய மாணவர்களைத் திட்டப்போனாள் மஹானி. அவர்களோ, `அந்த ஆசிரியர், இந்த ஆசிரியர்,’ என்று சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு, `அவர்கள் மட்டும் சிகரெட்டு பிடிக்கிறார்களே!’ என்று அவளையே திருப்பிக்கேட்டார்கள், திமிருடன். மஹானி தன் நிதானத்தை இழந்தாள். தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களின் மரியாதையைக் காப்பது தன் கடமை என்று உணரத் தவறினாள். விளைவு? பள்ளியெங்கும், ஏன், ஒவ்வொரு வகுப்பறையிலும், அவள் கத்தியது கேட்கும்படி ஒலிபெருக்கியில், மாணவர்கள் கூறியதைப் பரப்பினாள் – அந்த ஆசிரியர்களின் பெயர்களையும் மறவாது குறிப்பிட்டு! அதன்பின், பரிதாபத்துக்கு உரிய அந்த ஆசிரியர்கள் எந்த முகத்துடன் மாணவர்களை நிமிர்ந்து பார்ப்பார்கள்? `தன்னையே பிறர் தட்டிக்கேட்கும்படி வைத்துவிட்டார்களே இந்த ஆசிரியர்கள்!’ என்ற பதட்டம்தான் ஏற்பட்டது. `ஆசிரியர்கள் இங்கு மாணவர்கள் இல்லை. அவர்களும் உங்களைப்போல் இருக்க வேண்டிய அவசியமில்லை!’ என்று அடித்துச்சொல்லும் தைரியம் மஹானிக்கு இருக்கவில்லை. முட்டாள்தனமாக தன் கீழ் வேலை பார்த்த ஆசிரியர்களைத் தாக்கி, அவர்களுடைய மரியாதையையும் இழந்தாள். நல்ல தலைவர் எந்நிலையிலும் நிதானம் தவறாது இருக்க முயலவேண்டாமா? சொந்தக் கதை மாணவர்கள் சட்டைக்காலர்வரை நீண்ட தலைமுடி வளர்த்துக்கொள்ளக்கூடாது என்ற விதி மலேசியப் பள்ளிகளில் உண்டு. அதை மீறிய ஒரு மாணவனை நான் கண்டித்தபோது, “நீங்கள் மட்டும் முடியை நீளமாக வளர்த்துக்கொண்டிருக்கிறீர்களே!” என்று சாடினான் நான் நிதானமாக, “நான் ஆணுமில்லை, இங்கு படிக்க வந்த மாணவனுமில்லை,” என்று பதிலளித்தேன். என்னைக் கேவலப்படுத்துவதாக நினைத்து அவன் கூறியது அவனுக்கே அவமானத்தை விளைவித்தது. முகம் சிறுக்க அப்பால் போனான். மாற்றவேண்டியதை மாற்று! ஒரே நிலையில் இருப்பது ஒருவருக்குப் பாதுகாப்பான உணர்வை அளிக்கலாம். ஆனால், `மாறுதல்’ என்பது பல சமயங்களில் நன்மை விளைவிக்கும். மாறும் காலத்திற்கேற்ப நாமும் மாறத் தயாராக இருக்கவேண்டும். எந்த மாறுதலையும் ஏற்கத் துணிவற்ற தலைவர்கள் பிறர் சொல்வதைக் கேட்பதில்லை. தம் சொற்படி கேட்காதவர்களுக்குத் தண்டனை அளிக்கவும் தயங்குவதில்லை. இப்போக்கினால் அவர்களுக்கும் நிம்மதி கிடையாது, அவர்கள் சொற்படி நடப்பவர்களுக்கும், ஏன், எதிர்ப்பவர்களுக்கும்கூட நிம்மதி பறிபோய்விடும். குறுக்கீடு எதற்கு? எந்தக் காரியமும் செய்ய ஆரம்பிப்பதற்குமுன் அதன் நெளிவு சுளிவுகளைப்பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டால் குழப்பம் வராது. வேலையைப் பிறருக்குப் பகிர்ந்தளித்தபின் அடிக்கடி குறுக்கிடும் தலைவர்களைப்பற்றி என்ன சொல்ல! இப்போக்கினால் வேலையும் தாமதமாகும், செய்பவருக்கும் எரிச்சல் மூளும். தகுதி இருக்கிறதா என்று முதலிலேயே பார்த்துத்தானே வேலையை அளித்திருப்பார்கள்? பின் எதற்காக குறுக்கிடுவது? மாறாக, அவர்களுடன் இணைந்து செய்தால் உறவு பலப்படும். விறைப்பாக நடந்துகொள்வதற்குப் பதில் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினால், இரு தரப்பினருக்கும் நிறைவாக இருக்குமே!    பிழைகளே பாடம் ஒரு வேலையில் புதிதாக நியமனம் ஆனவுடன் தவறுகள் புரிவது இயற்கை. அதனால் மேலதிகாரி கண்டபடி தாக்கினால், முன்னேறுவது எப்படி? அறியாமல் செய்யும் பிழைகளைப் பாடமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் இருந்தால், பொறுப்புகள் அதிகரிக்கும்போது மன உளைச்சலும் அதிகமாகாது தடுக்கலாம். அப்படியே ஒருவர் பிழை புரிந்தாலும், தலைவர் பலபேர் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தாது, தனியாக அழைத்துச் சொல்லலாமே! ஒரு குடும்பத்தலைவியிடமிருந்து கற்ற பாடம் “உன் தாய் உன்னை ஓயாமல் திட்டிக்கொண்டே இருக்கிறாளா! உன்னால் எப்படி பொறுக்க முடிகிறது?” ஒரு பெண் தன் தோழியைக் கேட்டாள், அதிசயத்துடன். “நான் சரியாக நடந்துகொள்ளாததால் திட்டுகிறாள். அதோடு, தனியாக அழைத்துத்தானே செய்கிறாள்!” என்ற பதில் வந்தது. அந்த தாய் மகளைத் திருத்தும் நோக்கத்துடன் கடுமையாகப் பேசியிருக்கலாம். பிரச்னை என்று வந்தால், அதை எப்படி மாற்றுவது என்றும் வழி காட்டியிருக்கலாம். ஆனால், மகளுடைய நிலையில் தன்னை வைத்துப் பார்த்து, அவளுடைய தன்னம்பிக்கைக்குப் பங்கம் வராதபடி நடந்துகொண்டாள். அதனால் வருத்தம் உண்டானாலும், தாய்மீது கோபம் எழவில்லை மகளுக்கு. ஒரு தலைவர் முறைகேடாக நடந்தால், பிறரும் அவ்வழியைத்தான் பின்பற்றுவார்கள். (`தலைவரே அடிக்கிறார், நாம் செய்தால் என்ன?’ – இது லஞ்ச ஊழல் பெருகியிருக்கும் நாட்டில் ஒருவர் தன்கீழ் வேலை பார்த்தவர்களுக்குக் கூறிய அறிவுரை!)) `நகத்தைக் கடிக்காதே!’ என்று ஓயாமல் மகளைக் கண்டிக்கும் தாய்க்கே அப்பழக்கம் இருந்தால், மகள் எப்படித் திருந்துவாள்? பிறரிடம் தாம் எதிர்பார்ப்பதன்படி தாமும் நடப்பவர்களே சிறப்பான வழிகாட்டிகளாக அமைகிறார்கள். 16. போதுமென்ற மனமே..   இளம் வயதினர் எதை எதையோ எட்டிப் பிடிக்க விரும்புவர். அந்த முயற்சியில் என்னென்ன அபாயங்கள் காத்திருக்குமோ என்ற அச்சத்தால் மூத்தவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறுவார்கள்: `போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து!’ இந்த அறிவுரையை ஏற்று நடந்தால், இறுதியில் இளைஞர்களுக்கு ஏமாற்றம்தான் ஏற்படும். விரும்பியதை அடைவது என்றால் பிறருக்குச் சேரவேண்டியதை தட்டிப் பறிப்பதல்ல. இருப்பினும், இன்றைய உலகில் பலரும் பணம், பதவி என்று பேராசையை வளர்த்துகொண்டே போக, எந்தப் பதவியில், ஏதாவது செய்து, அமர்ந்தால் குறுகிய காலத்தில் பெரும் பொருள் திரட்டலாம் என்று மட்டுமே அவர்கள் சிந்தனை போகிறது. பணம், புகழ், அல்லது சமூக அந்தஸ்து என்று நாடுபவருக்கு அதெல்லாம் கிடைத்தாலும் நிறைவு கிட்டுமா என்பது சந்தேகம்தான். அளவுக்கு அதிகமான சொத்தால் நிறைவா? அரசியல் என்பது மக்களுக்காக என்று யார் கூறினார்கள்? இத்துறையைத் தேர்ந்தெடுப்பவர்களில் பெரும்பான்மையோர் தம் வாழ்நாட்களில் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு சொத்து சேர்க்கின்றனர். கோடி கோடியாகப் பணம், நகை, கார், பங்களா என்று எவ்வளவு சேர்த்தாலும் மனநிறைவு கிட்டுவதில்லை. திருப்தி கிடைக்காதபோதுதான் ஆசைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஒரு பெண்ணுக்கு ஆயிரக்கணக்கான காலணிகள் எதற்கு? நூறு காரட் எடைகொண்ட வைர அட்டிகையை அணியத்தான் முடியுமா? இதையெல்லாம் அவர்கள் யோசிப்பதே கிடையாது. “தன் சுகத்தையே பெரிதாக எண்ணி வாழ்பவனுக்கு இறுதியில் ஏமாற்றம்தான்!” (ஐன்ஸ்டீன்). அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க, வெறுமைதான் ஏற்படுகிறது. அந்த வெறுமையைப் போக்க, மேலும் கொள்ளையடித்தாக வேண்டும். சட்டத்தின் பிடிகளில் அகப்பட்டுக்கொண்டால், `என்மேல் எந்தத் தவறும் இல்லை, எல்லாம் எதிரிகளின் சதி!’ என்று சாதிப்பார்கள்! பாராட்டால் நிறைவா? `நாம் மிகுந்த செல்வந்தராக ஆனால் எல்லாரும் மதிப்பார்கள். நம் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்,’ என்று கணக்குப்போட்டு, திறமை, உழைப்பு, அதிர்ஷ்டம் எல்லாம் சேர, ஒருவர் பணக்காரராக ஆகலாம். ஆனால், பிறர் பாராட்ட வேண்டும் என்ற இலக்கைக் குறி வைத்தால், அதை அடையும்போது நமக்கும் மகிழ்ச்சி கிட்டும் என்பது என்ன நிச்சயம்? `பிறர் பாராட்டினால்தான் நம் மனம் குளிரும்’ என்றிருப்பவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்றே தோன்றுகிறது. எதிர்பார்த்த பாராட்டு கிடைக்காதபோது மனம் வெம்பிப்போவார்கள். நம் மகிழ்ச்சிக்கு எப்போதும் பிறரை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். பிடித்ததைச் செய் சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள் உயர்நிலைப்பள்ளியில் மேலும் படிக்க கணக்கு, விஞ்ஞானம் என்று பாடங்களை பள்ளியே தேர்ந்தெடுத்துவிடும். குறிப்பிட்ட மாணவருக்கோ மொழி, கலை என்று வேறு எதிலாவதுதான் மனம் லயிக்கும். `இதெல்லாமா நாளைக்கு உனக்கு சோறு போடப்போகிறது?’ என்று பெற்றோரும் அவநம்பிக்கை அளிப்பார்கள். ஒரு சிலர் ஓய்வு நேரத்தில் தம் மனம் விரும்பும் பொழுதுபோக்கில் ஈடுபடுவார்கள். அதில் ஈடுபடும்போதே இவ்வளவு மகிழ்வாக இருக்கிறதே என்று எண்ணுபவர்களுக்குத்தான் நிறைவு கிட்டுகிறது. இருப்பினும், தம் மனம் நாடுவதை நோக்கித் துணிச்சலுடன்  பயணம் செய்பவர் மிகக் குறைவு. தம் இலக்கில் குறியாக இருப்பவர்களுக்குத் தானே சரியான பாதை புலப்படும். அவ்வழியில் ஏற்படக்கூடிய தவறுகள், தோல்விகள் ஆகியவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் அறிவார்கள். எவ்வளவுதான் திறமையும் ஆர்வமும் இருந்தாலும், வெற்றியும், அதனால் கிடைக்கும் நிறைவும் நீடிக்க வழியில் எழக்கூடும் உயர்வு மனப்பான்மையைத் தவிர்க்கக் கற்க வேண்டும். ஆனாலும், பிறருடைய குறைகளில் கவனம் செலுத்தி `நான் அப்படி இல்லை!’ என்ற அற்பதிருப்தி கொள்ளும் மனப்பான்மையை எத்தனை பேரால் தவிர்க்க முடிகிறது! கதை நடராஜன் வாத்தியக் கலையில் வல்லுனர். வசதிகுறைந்த பல மாணவர்களுக்கு இலவசமாகவே பயிற்சி அளித்தார். அவர்கள் அவரைக் கடவுளாகவே பாவித்ததில் அதிசயமில்லை. நடராஜனின் செருக்கு மிகுந்தது. `என்னைவிட சிறப்பாக யாரால் வாசிக்க முடியும்!’ என்று நினைக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக, தன்னையொத்த, தன்னைவிட பிரபலமான வாத்தியக்காரர்களைப்பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தார். சிஷ்யர்களும் அக்கதைகளைக் கேட்டுச் சிரிப்பார்கள். குருபக்தியைப் பின் எப்படித்தான் வெளிக்காட்டுவது! நடராஜன் கூறியதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும், பிறர் என்ன தவறு செய்கிறார்கள் என்பதிலேயே கவனம் போயிற்று. கச்சேரியை ஆரம்பிக்குமுன், திமிருடன் சக கலைஞர்களை சண்டைக்கு இழுப்பார். நாளடைவில், எவரும் நடராஜனுடன் இணைந்து வாசிக்க முன்வரவில்லை. `எல்லாருடனும் எப்போதும் சண்டை போடுவார்!’ என்று புகார்கள் எழ, அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.   ஒருவர் எப்போது நிறைவடைகிறார்? பள்ளிச் சிறுவர்களைக் கேட்டால், `பரீட்சை முடிந்து, அதில் திருப்திகரமாக எழுதிவிட்டால்!’ என்பார்கள். மாதக்கணக்கில் உழைத்துப் படித்த களைப்பு அப்போது நினைவில் நிற்காது. உடல் நோக பல காலம் பயிற்சி செய்துவிட்டு, பார்வையாளர்கள் பாராட்ட தம் திறமையைக் காட்டும்போது விளையாட்டு வீரர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். ஆரம்பத்தில், அவர்களுடைய நோக்கம் பிறர் பாராட்ட வேண்டும் என்பதாக இருந்திருக்காது. தமக்குப் பிடித்த விளையாட்டில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருப்பார்கள். அவ்வளவுதான்.  அதில் வெற்றியும் கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி. சில பிரபலமானவர்கள் இசைக்கச்சேரி செய்யும்போது, அடிக்கடி கைதட்டல் கேட்கும். பாவம் அதிகமிருக்காது. `இவர்கள் ஆத்மார்த்தமாகப் பாடுகிறார்களா, இல்லை, எப்படிப் பாடினால் ரசிகர்களைக் கவரலாம் என்று கணக்குப்போட்டுப் பாடுகிறார்களா?’ என்று இசைஞானம் உள்ளவர்களின் சிந்தனை போகும். ஒருவர் தான் பாடுவதில் மனமும் ஒன்றினால்தான் ரசிக்க முடியும். `என் குரலின் இனிமையை வைத்துக்கொண்டே பிறரைக் கவர்ந்துவிடுவேன்!’ என்ற மனப்பான்மை எழுந்தால், அவர் தன் திறமையை முழுமையாகப் பயன்படுத்த முயற்சிக்க மாட்டார். இதனால் அவருக்கும் நீடித்த நிறைவு கிட்டப்போவதில்லை. ஆக்ககரமாக எதைச் செய்ய வேண்டுமானாலும் நம் முழுமையான கவனத்தை அதில் செலுத்தவேண்டும் என்று புரிந்தவர்கள்தாம் நிறைவடைகிறார்கள். எதைத் தேடுகிறோம் என்று புரியாது அலைவது வீண் முயற்சிதான். `வெற்றிமேல் வெற்றி அடைபவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். ஏனென்றால், அடுத்து எதில் வெற்றி பெறலாம் என்றே அவர்கள் யோசனை போகும்,’ என்று ஒருவர் கேலியாக எழுதியிருந்தார். வெற்றி என்பது ஒரு முடிவு இல்லை, மனநிறைவு தரும் இன்னொரு முயற்சியின் தொடக்கம் என்று அவருக்குப் புரியவில்லை. கல்வியால் நிறைவு நம் திறமையை முழுமையாக வெளிக்கொணர கல்வி ஒரு சாதனம். திறமையை வெளிப்படுத்த முடியாதபோது மனம் குழம்பிவிடுகிறது. கதை ரேணுகா அழகிய பெண். அழகிலேயே கவனம் செலுத்தியதில் படிப்பு ஏறவில்லை. அவளுடைய அழகில் மயங்கிய ஒருவனுக்குக் கல்யாணம் செய்துவைத்து விட்டார்கள் -- பதின்ம வயதிலேயே. தன்னையொத்த பெண்கள் சுதந்திரமாக, வேலைக்குப் போவதைப் பார்த்து தான் எதையோ இழந்துவிட்டதுபோல் நினைக்க ஆரம்பித்தாள். தன் வாழ்க்கை இப்படியேதான் கழிந்துவிடும், பெரிதாக எதிர்பார்க்க எதுவுமில்லை என்று எழுந்த எண்ணம் எல்லார்மேலும் கோபமாக மாறியது. “இவளை எப்படிப் பொறுத்துப்போகிறீர்கள்?” என்று ஓர் உறவினர் கேட்டதற்கு, கணவர் பொறுமையாகப் பதிலளித்தார்: “இவளுக்கு வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. புதிதாக எதையும் கற்கும் ஆர்வமும் கிடையாது. எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருப்பதால்தான் அலுப்பு!” ஓயாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி, தன்னுடன் பிறரையும் வருத்துவானேன்! கிடைத்ததைக்கொண்டு திருப்தி அடைந்தாலே போதுமே! ஆக்கபூர்வமாக எதையாவது செய்தால் மனம் அமைதி பெறும், நிறைவாகவும் இருக்கும். நன்றியைக்கூட எதிர்பாராது பிறருக்கு உதவுவதே உண்மையான நிறைவை அடையும் வழி.   17. தொழில் நுட்பமா, உறவினரா?   பொது இடங்களுக்கு மூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்களை அழைத்துப்போனாலே திண்டாட்டம்தான். அவர்களை எப்படிச் சமாளிப்பது என்றே புரியாது, அவர்களை கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் மிகச்சிலரைவிட, அடியையும், திட்டையும் நம்புகிறவரே அதிகம்.   பெரியவர்களும் குழந்தைகளுடன் எங்காவது காத்திருக்கையில் இனிமையாகப் பொழுதைக் கழிக்க எத்தனை முறைகள் இல்லை! சிறுவனின் விரல்களைப் பிடித்து, `ஒன்று, இரண்டு..,’ என்று எண்களைச் சொல்லிக்கொடுக்கலாம். இல்லாவிட்டால், ஒரு துண்டு காகிதத்தை மடித்து, `படகு’ என்று  அவனிடம் கொடுத்தால், அந்தப் புதிய விளையாட்டுச் சாமான் சிறிது நேரம் ஆர்வமூட்டி அவனை அமைதிப்படுத்தும். கைப்பையில் தயாராக வைத்திருக்கும் துண்டுக் காகிதத்தை எடுத்து, அதில் அவனுக்குப் பிடித்த எதையாவது வரைந்தால், பூரிப்புடன் அமர்வான். அடுத்த முறை, அவனிடமே காகிதத்தையும் பேனாவையும் கொடுத்தால், உருண்டையாக எதையாவது போட்டுவிட்டு, பெருமையுடன் தாயிடம் காட்டுவான். பக்கத்திலிருப்பவர் `என்ன இது?’ என்று கேட்டால், `புலி!’ என்று ஆணித்தரமாக பதில் வரும். அடுத்த முறை, அதுவே கோழியாக மாறினாலும் மாறும்! சிறுவர் புத்தகத்திலிருந்து மிருகங்களின் பெயர்களை வாசித்துக் காட்டுவது நல்ல பொழுதுபோக்கு. பல முறை காட்டினாலும் குழந்தைகளுக்கு அலுக்காது. (சற்றுப் பெரியவர்களானதும், அவர்களே படிக்கும் புத்தகங்களை செல்லும் இடத்திற்கெல்லாம் எடுத்துவந்தால் படிப்பில் ஆர்வம் பெருகும். நேரத்தையும் வீணாகக் கழிக்கமாட்டார்கள்). இந்த எல்லா வழிகளிலும் தாயின் ஈடுபாடும் இருப்பதால் அவளுக்குக் குழந்தையுடன் அதிக நெருக்கம் ஏற்படும். இந்த முறைகளெல்லாம் பழமையாகிவிட்டன. அதனாலேயே பலருக்கு அலுப்பைத் தருகிறது. `ஏனடா விடுமுறை வருகிறது என்றிருக்கிறது! என் மூன்று வயது மகன் ஓயாது கேள்விகள் கேட்கிறான்!’ என்று என் சக ஆசிரியைகள் அலுத்துக்கொள்வார்கள். `அதுதான் மிக சுவாரசியமான பருவம்! அவர்கள் கேட்பது நமக்குச் சிரிப்பை வரவழைக்கும்!’ என்று நான் கூறியபோது, அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். (உதாரணம்: `நான் ஒன் வயத்திலேருந்து வந்தேனா! ஏம்மா என்னை முழுங்கினே?’) கதை வங்கி ஒன்றில், கனகா மகன் ராஜனையும் உடன் அழைத்து வந்திருந்தாள். அவன் ஓரிடத்தில் அமராது, குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டிருந்தான். தத்தம் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றவர்கள் முகம் சுளித்தார்கள். அவமானம் தாங்காது, தாய் சிறுவன் முதுகில் இரண்டு அறைவிட்டாள். நிலைமை மோசமாகியது. அலறிக்கொண்டே ஓட ஆரம்பித்தான் அவன். வேறு வழி புலப்படாது, தன் கைப்பையைத் திறந்து, ஒரு பொருளைக் காட்டினாள் தாய். ராஜன் ஓடோடி வந்தான். அப்பொருள்: கைத்தொலைபேசி. அடுத்த பல நிமிடங்களுக்கு அவன் நகரவேயில்லை. தானே அச்சாதனத்தை இயக்கி, ஏதேதோ விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தான். கண்ணுக்கு மிக அருகில் வைத்துக்கொண்டான், உற்சாகம் அதிகமாக, அதிகமாக. தாயும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவனை அமைதிப்படுத்த வீட்டில் அவள் கையாண்ட வழி அது. முதலிலேயே தோன்றாது போய்விட்டதே என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள். தற்காலத்தில், குழந்தைகளுக்கு விதவிதமான விளையாட்டுச் சாமான்கள்-- தொழில் நுட்பத்துடன் கூடியவை – கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒலியுடன் திரையில் பார்க்க முடிவதால் எதையும் விளக்க வேண்டியதில்லை. பெற்றோரின் குரலைக் கேட்கவேண்டிய நேரத்தில் ஒரே தொனியில் ஒலிக்கும் அந்த இயந்திரக்குரல். (பிறந்த குழந்தைக்குக்கூடத் தாயின் குரல் புரியும். இந்த இயங்திரக் குரலைக் கேட்டே வளரும் குழந்தைகளோ குரலில் ஏற்ற இறக்கமில்லாமல் அதுபோலவே பேச முற்படுகிறார்கள்). இன்றைய குடும்பங்களில், அப்பா கணினியின் எதிரே காலத்தைக் கழிப்பார். அம்மா – தொலைகாட்சி அல்லது தொலைபேசி. மகனோ..! உறவினர் வீட்டுக்குப் போனால், தன் கணினி விளையாட்டு முடியும்வரை பையன் நாம் வந்திருப்பதைக் கண்டுகொள்ள மாட்டான். ஒரே ஊரிலிருக்கும் நெருங்கிய உறவினர்களைவிட கண்காணாத நாட்டில் வசிக்கும் நண்பர்களுடன் அரட்டை (chat) அடிப்பதில்தான் அவனுக்கு ஆர்வம். பரீட்சைக்குப் படிக்கும்போதும் தன் கையிலேயே  தொலைபேசியை வைத்துக்கொண்டிருப்பான், அவனுடைய ஓர் அங்கம்போல. அடிக்கடி அதில் கவனம் போவதில் படிப்பது மனதில் நிலைக்காது. உருப்போடுவதும், உருப்படாத பொழுதுபோக்குகளும் விஞ்ஞானம் போன்ற சில பாடங்களில் மனனம் செய்வது மாணவர்களுக்கு இயலாத ஒன்றாகிவிடுகிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். (இரண்டு மூன்று முறை உரக்கப் படித்துவிட்டு, அதையே எழுதிப் பார்ப்பது சரியான முறை. என்றும் மனதைவிட்டு அகலாது). கதை முன்காலத்தில், `மனக்கணக்கு’ என்று பள்ளிகளில் குழந்தைகளைத் தயார் செய்வார்கள். ஒன்று, இரண்டு என்று வரிசையாகச் சொல்வது, அல்லது கூட்டல், கழித்தல் போன்றவை. எழுதுகோல் உதவியின்றி, மூளை ஒன்றே கருவியாக, இந்தக் கணக்குகளைப் போடவேண்டும். நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கையில், எங்கள் ஆசிரியை அல்ஜீப்ராவை நின்ற நிலையில் பதினைந்து, இருபது படிகளை வரிசையாகச் சொல்லிக்கொண்டே போவார். நிறையப் படிக்கும் பழக்கமுள்ள ஓரிரு மாணவிகளுக்கு மட்டும்தான் புரியும். வேறு மாநில ஆரம்பப் பள்ளியில் மனக்கணக்கு போதிக்கப்பட்டிருந்ததால் ஆசிரியை கையாண்ட முறையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மற்றவர்கள் `புரியவில்லை!’ என்று ஓரிரு முறை சொல்லிவிட்டு, திட்டு வாங்கியபின் வாயே திறக்க மாட்டார்கள். வகுப்பு முடிந்து ஆசிரியை வெளியே போனதும், `Take over, Nirmala!’ என்று கத்துவார்கள். நான் கரும்பலகையில் எழுதி விளக்குவேன். அப்போது எனக்குப் பன்னிரண்டு வயது. (அண்மையில், `எந்த வயதில் நீ ஆசிரியையாக ஆனாய்?’ என்று யாரோ கேட்டபோதுதான் இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது). ஏன் மனக்கணக்கு? மூளையை விரைவாகச் செயல்பட வைக்கும். அடிக்கடி இம்முறையைப் பின்பற்றினால், மூளையிலுள்ள தசைகள் வலுவடைகின்றன. அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுகிறது. உதாரணமாக, 30% தள்ளுபடி என்று ஏதாவது கடைவாசலில் அறிவித்திருந்தால், நாம் எவ்வளவு மிச்சப்படுத்த முடியும் என்பதற்கு கால்குலேட்டரையோ, பேனா, காகிதத்தையோ தேடவேண்டியதில்லை. உடனடியாக விடையைக் கண்டுபிடித்துவிட முடியும். இப்போதெல்லாம் கரும்பலகையில் இரண்டு ஆப்பிள் + இரண்டு ஆப்பிள் என்று வரைந்தால்தான் குழந்தைகளுக்குப் புரிகிறது. Abstract thinking குறைந்துவிட்டது – மூளை பாதிக்கப்படுவதால். ஒரு பாலர் பள்ளியில், குழந்தைகளுக்கு மனக்கணக்கு என்பது இயலாத  காரியமாக இருந்தது. பள்ளியிலிருந்து பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்: `உங்கள் குழந்தையை ஒரு நாளைக்கு இருபது நிமிடங்களுக்குமேல் தொலைகாட்சியைப் பார்க்க விடாதீர்கள்!” சில மாதங்களிலேயே குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரிந்தது. புத்தகங்கள் படிப்பதும் கணினியும் படிக்கும்போது மூளைக்கு வேலை கொடுக்கிறோம். அதனால் எத்தனை வயதானாலும் அது நன்கு இயங்குகிறது. கதைப்புத்தகங்களைப் படிக்கையில், கதை மாந்தர்களின் பெயர்கள் மட்டுமின்றி, அவர்களிடையே உள்ள தொடர்பு, அவர்களுடைய பின்னணி என்று பல சமாசாரங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமே! அதனால் நினைவாற்றல் பெருகுகிறது. `நீங்க யாரு? எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே!’ என்று நம் நெருங்கிய உறவினர்களைக் கேட்க வேண்டிய நிலை ஏற்படாது. கணினியை இயக்கியபடியே தொலைபேசி, பக்கத்தில் இருப்பவருடன் அரட்டை என்று பொழுதைப் போக்கும்போது கவனம் சிதறிப்போகிறது. ஆனால், ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால், முழுமையான கவனம் அதிலேயே செலுத்தப்படுவதால் மனம் அமைதி காண்கிறது. திரையை வெறிப்பதைவிட நல்ல புத்தகங்களைப் படித்தால் மூளையாவது வளருமே!   18. திரையால் பாதிப்பு   இரவெல்லாம் கண்விழித்து கணினி விளையாட்டில் ஈடுபட்டிருப்பவருக்கு நேரத்துடன் அலுவலகத்திற்குச் செல்ல முடியவில்லை. எழுந்தபின்பும், `எப்போதடா மீண்டும் கணினிமுன் உட்காருவோம்!’ என்ற ஏக்கம். கார் ஓட்டிப்போகும்போது ஏதோ நினைவுடன் ஓட்டுவதில் விபத்துகள். மந்தமாகிவிட்டான். பிறரது உணர்வுகளை திரையில் பார்த்து ரசிப்பதும் போதைதான்  கவனக்குறைவு, தூக்கமின்மை, ஒரு மந்தமான மனநிலை (mood), அதிகம் யோசியாது ஒரு காரியத்தில் இறங்குவது (impulsive), நடத்தையில் மாற்றம் – எல்லாமே திரை தரும் போதையால்தான். கதை அண்மையில் மலேசியாவில் பதினாறு வயதுச் சிறுவன் ஒருவனுக்கு அவனது கைத்தொலைபேசியே யமனாக ஆகியது. அக்கருவியை `சார்ஜில்’ போட்டுவிட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட கம்பிவழி இசையைச் செவிமடுத்தபடி இருந்தவன் பகலிலேயே தூங்கிப்போனான். மதிய உணவிற்கென்று அவனை எழுப்ப வந்த தாய் மகனது உடல் சில்லிட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். காதிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. பிரிட்டனில் வீடியோ விளையாட்டுகளைக் காரணமாகக் காட்டி, இருநூறு தம்பதியர் விவாகரத்து கோரியுள்ளனராம்! பன்னிரண்டு மணி நேரத்தைக் கணினியின்முன் கழித்த மாணவன் ஒருவன் வகுப்பில் தூங்கிவிடுகிறானாம். படிப்பிலும் சோடையாகிவிட்டான். `இன்றைய கலாசாரம்!’ என்று அலட்சியமாக விட்டுவிட முடியுமா? டோப் அமீன் (dopamine) என்ற ரசாயனப்பொருள் நம் மூளையிலுள்ள நியூரான்களில் (நரம்புகளில்) சுரக்கின்றன. அது சுகமான உணர்வை எழச் செய்யும். அடிக்கடி இப்படி உணர்ந்தால் ஆனந்தமாக இருக்குமே என்ற கிறக்கம் எழ, அதுவே போதையாகிறது. மது, சூதாட்டம், கஞ்சா, ஹெரோயின் போதைப்பொருட்கள் அனைத்துமே ஒருவரை அடிமைப்படுத்துவது இந்த டோப் அமீனைச் சுரக்க வைப்பதால்தான். குழந்தைகள் இருபது நிமிடங்களுக்குமேல் திரையை உற்றுப் பார்க்கும்போது, கண்கள் கிறங்க, போதை நிலைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் அந்தச் செயலிலிருந்து விலக எளிதில் சம்மதிக்க மாட்டார்கள். கைகால்களை உதைத்துக்கொண்டு அழும் குழந்தையின் காதைப் பிடித்து அறைக்கு வெளியே கொண்டுவிட நேரிடும். (பெரியவர்களின் எல்லை நாற்பது நிமிடங்கள். இருபது வினாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டுத் தொடரலாம்). மிகச் சிறு வயதில் திரையையே நோக்குவதால் மூளையின் முன்பகுதி பாதிக்கப்படுகிறது. இதனால் திட்டமிடல், எது முக்கியம் என்று தீர்மானிப்பது குறைந்துவிடுகிறது. பிறரது துயரங்களை உணர்ந்து கருணையுடன் நடப்பது இயலாத காரியமாகிவிடுகிறது. இதனால் உறவுகளின் நெருக்கமும் குறையும். தனிமையும், அதனால் எழக்கூடும் மன இறுக்கமும் தொடரும். வீடியோ விளையாட்டுகளில் ஜெயிக்கும்போது அளவுக்கு அதிகமாக குதூகலிப்பவன் தோற்கையில் – என்னமோ உலகமே இடிந்துவிட்டதுபோல் – அலறுவான். ஆனால், அவனுடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட தகவலை எப்படிச் செயல்படுத்துவது என்று புரியாது. வளர்ந்தபின்னர், ஒரு சிலருக்கு மணிக்கட்டில் பொறுக்க முடியாத வலி. David Price என்ற பந்தாட்டக்காரர் ஒருவருக்கு அப்படி ஏற்பட்ட வலியால், முக்கியமான போட்டி ஒன்றிலிருந்து விலக நேரிட்டது. பல மாணவர்களுக்கு பரீட்சையில் எழுதக்கூட முடியாத நிலை. சில கணினி விளையாட்டுகளை இலவசமாகப் பெற முடியும் என்றாலும், அவைகளுக்கான கருவிகளைத் தனித்தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும். விளையாட்டில் விரைவாக முந்த, பெற்றோரின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி விடுகிறார்கள் மாணவர்கள். சில சமயம், என்ன வாங்குகிறோம் என்றே புரியாது வாங்கிவிடுகிறார்கள். கதை மலேசியாவில், வக்கீல் படிப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன் இப்படித்தான்  தன் பெற்றோருக்குப் பல்லாயிரம் ரிங்கிட் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டான். கடனை அடைக்க அவர்கள் சொத்தை விற்கும்படி நேர்ந்தது. போதாக்குறைக்கு, கல்லூரியிலிருந்தும் விலக்கப்பட்டான். காலங்கடந்து, அழுகிறான். `இந்தக் கொடும் போதைக்கு அடிமை ஆகாதீர்கள்!’ என்று ஊடகங்கள்வழி வேண்டுகோள் விடுக்கிறான். கடந்த காலத்தில் `அடிமைகள்’ தமக்குச் சுதந்திரம் கிடையாது என்ற உண்மை நிலையை உணர்ந்திருந்தார்கள். இன்றோ, கணினிக்கு அடிமையானவர்களுக்குத் தம் நிலை புரிவதில்லை. தனிமையில்தான் நம் பிரச்னைகளை அலசி, நம்மைப்பற்றி உணரவும் முடியும். எல்லாவற்றிற்கும் கைத்தொலைபேசியையும், கணினியையும் நாடினால், நமக்கென்று சிறிது நேரத்தைக்கூட ஒதுக்க முடியாது போய்விடுகிறதே! போதைப் பழக்கத்தை ஒழிக்க மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இருப்பதுபோல், திரை போதைக்கு அடிமையான மாணவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் சில நாடுகளில் உள்ளன. அங்கு போதைக்குக் காரணமான தொழில் நுட்பம் சார்ந்த கருவிகள் கிடையாது. சத்து நிறைந்த உணவு, தூக்கம் தவிர குழுக்களில் கலந்துரையாடி (“நான் ஒரு போதைப்பித்தன்!”) சிகிச்சை பெறும் வசதியும் உண்டு.   பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவதை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம் என்று பரிந்துரைக்கிறார் இவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஒருவர். “முன்பெல்லாம் தனிமையில் ஒருவன் சிரித்துபடி இருந்தால், அவனைப் பைத்தியம் என்போம் – கைத்தொலைபேசி கண்டுபிடித்தபின் அந்நிலை மாறிவிட்டது” (ஒரு தத்துவஞானி). இந்த ஆண்டுமுதல், கணினி விளையாட்டுகளால் வரும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீடு செய்யலாம்! “ரோபாட் மனிதனைப்போல் உணர்ச்சிகளுடன் மாறிக்கொண்டிருக்கிறது. மனிதனோ, இயந்திரமாக மாறிக்கொண்டிருக்கிறான்!” என்கிறார் ஒருவர். `பிறர் குழந்தைகள் எப்படியோ தொலையட்டும்! கண்காணிக்க வேண்டியது அவர்கள் பெற்றோரின் பாடு!’ என்று விட்டேற்றியாக, `சிலிகான் பள்ளத்தாக்கின் ஜாம்பவான்கள்’ தாம் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். `நம் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்களோ!’ என்ற கவலை அவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. அவர்களுடைய குழந்தைகளைத்தாம் தொழில் நுட்பக் கருவிகளே இல்லாத உயர்தர பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்களே! ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பேட்டியில் கூறியது: “குழந்தைகள் தொழில் நுட்பக் கருவிகளுக்காக அதிக நேரத்தைச் செலவிடுவதை எங்கள் வீட்டில் அனுமதிப்பதில்லை!”   19. நல்லதொரு முடிவு   `இன்று என்ன சமையல் செய்யலாம்?’ `மழை வரும்போல இருக்கிறதே! துணியை வெளியில் உலர்த்தலாமா, வேண்டாமா?’ அன்றாட வாழ்க்கையில், இப்படி ஏதாவது முடிவு எடுத்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இவைகளால் பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஆனால், நாம் வருத்தத்திலோ, ஆத்திரத்திலோ மூழ்கி இருக்கையில் எடுக்கும் முடிவுகள் அப்படியில்லை. `எனக்கு வந்த கோபத்திலே, என்ன செய்யறோம்னு புரியாம செஞ்சுட்டேன்!’ என்று எத்தனை குற்றவாளிகள் தம் குற்றங்களை நியாயப்படுத்தி இருக்கிறார்கள்! காதல் வயப்பட்டு இருக்கும் தருணங்களிலும் முடிவு எடுக்கக்கூடாது என்கிறார், இதோ ஓர் அனுபவசாலி. கதை தன்னுடன் படித்த மேகலாவை மணக்க விரும்பினான் மதன். அவனுடைய பெற்றோர் சம்மதிக்கவில்லை. காரணம்: வெகு காலமாக போரில் ஈடுபட்டிருக்கும் நாட்டிலிருந்து வந்த பெண் அவள்! பிடிவாதமாக தன் காதலியையே மணந்தவர், “எதுக்கெடுத்தாலும் சண்டை போடறா. நான் குறுகிப்போகிறமாதிரி பேசறா!” என்று என்னிடம் சலித்துக்கொண்டார். தாய்நாட்டில் வளர்ந்தபோது, அண்டை அயலில் உள்ளவர்களில் யாராவது அடிக்கடி போருக்குப் பலியாகிக்கொண்டு இருந்ததைப் பார்த்தே வளர்ந்தவள் மேகலா. அதனாலோ, என்னவோ, இனம்புரியாத கோபம் அவளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. முதலில் அதைப் பெரிதாக நினைக்கவில்லை மதன். ஈராண்டுக்குள், “எங்கப்பா, அம்மா சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும்! கேக்காம போனது என் தப்பு!” என்று பலமுறை புலம்பினார். “எந்த விஷயத்திலும் என் மனம் நோகும்படி பேசிவிடுகிறாள்! நீங்கள் அவளுக்குப் புத்தி சொல்லுங்களேன்!” என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். மதனின் பெற்றோருக்கு எப்படித் தெரியும் இத்தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்று? “வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்கள், இல்லையா?” என்ற பதில் வந்தது. “நான்தான் அவசரப்பட்டுட்டேன்!” சரியான முடிவுகள் அனுபவத்திலிருந்து வருகின்றன என்றால், தவறான முடிவுகளிலிருந்து அனுபவம் வருகிறது. மனைவியை அடிக்கடி மாற்ற முடியுமா? எப்படியோ பொறுத்துப்போக வேண்டியதுதான். மதனின் பொறுமையால், மனைவியும் மாறிப்போனாள். நான் அப்போது அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட விரும்பவில்லை. பத்து ஆண்டுகளுக்குப்பின், மேகலா வெகுவாக மாறியிருந்தாள். “எனக்குச் சண்டையே பிடிக்காது!” என்றாள். அவளை வார்த்தையால் தாக்கியவர்களிடமிருந்து ஒதுங்கிப்போனாள். இதனால் உத்தியோகத்தில் மேலும் பல சங்கடங்கள். “அடுத்த தடவை, எப்படி நன்னா சண்டை போடறதுன்னு நான் சொல்லித்தரேன்!” என்று நான் தொலைபேசியில் எங்கள் உரையாடலை முடிக்கும் தருணத்தில் கூற, பெரிதாகச் சிரித்தாள். சரியான முடிவுகளை எடுப்பவர்கள் வெகு சிலரே. இவர்கள் அவசரப்பட மாட்டார்கள். தம் இலக்கு எது என்ற தெளிவு உண்டு. அதை அடைய வேண்டிய முயற்சிகளை எடுப்பார்கள். வழியில் எந்த இடர் வந்தாலும், துணிந்து நாற்பார்கள். முடிவும் மீடியாவும் `நான் திரைத்துறையில் சாதிக்கப்போகிறேன்!’ என்று இங்கு எனக்குத் தெரிந்த ஒருவர் தான் பார்த்த நல்ல உத்தியோகத்திலிருந்து விலகினார். வெளிநாட்டிற்குச் சென்று, திரைப்படக் கல்லூரியில் பயிற்சியும் பெற்றார். ஆனால், அத்துறை அவர் நினைத்தமாதிரி இருக்கவில்லை. நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏமாற்றத்தில் பிறருடன் சண்டை போட ஆரம்பித்தார். வாழ்க்கையே வெறுத்துப்போயிற்று. கதை செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்த அழகி கன்னிகா. பதினைந்து வயதிலேயே `என் துறை இதுதான்!’ என்று `மாடலிங்’ செய்வதைத் தேர்ந்தெடுத்திருந்தாள். பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படிப்பை அப்போதே அரைகுறையாக நிறுத்தினாள். நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அவைகளைப் பெற எப்படி நடந்துகொண்டாலும் தவறில்லை என்று முடிவெடுத்தாள். கடினமான, சவாலாக அமையும் ஒன்றைச் செய்வது என்று முடிவெடுத்தால் பல இடர்கள் விளையத்தான் செய்யும். மாற்றத்தால் சிலவற்றை இழக்க நேரலாம். ஆனால், மேலும் சிலவற்றை அடையலாம் என்று சமாதானம் அடைந்தாள். முடிவு சரியோ, தவறோ, தளர்ச்சி அடைவதால் பயன் ஏதுமில்லை. தவறாக இருந்தாலும், அதை எப்படிச் சரியாக்கலாம் என்று யோசித்து நடந்தால் மனம் தெளிவடையும். `பிறர் என்ன சொல்வார்களோ! எல்லாரும் செய்கிறார்களே!’ என்று ஒருவர் எடுக்கும் முடிவு அவருக்கு நன்மையோ, நிம்மதியோ பயப்பதாக இருக்கும் என்று கூற முடியாது. கதை மலேசியாவுக்குப் போய் வேலை செய்து பிழைக்க வேண்டும் என்ற முடிவெடுத்து வந்தார் மகாலிங்கம். அங்கு கைநிறையப் பொருள் ஈட்டி, தன்னைவிட அதிக அந்தஸ்துள்ள பெண்ணை மணக்கலாம் என்று கனவு கண்டார்.   தான் நினைத்தபடி புதிய வாழ்க்கை சொர்க்கமில்லை என்று விரைவிலேயே உணர்ந்து, அதிர்ச்சியும் வருத்தமும் ஒருங்கே அடைந்தார். கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக இருந்ததால், எதிர்பார்த்தபடி நிறைய சேமிக்க இயலவில்லை. தன்னையொத்த பலருடன் ஒரே அறையில் படுக்க வேண்டிய சூழ்நிலை. உறவினர்களைப் பிரிந்து தனிமையில் வாடியதுடன், கலாசார வேறுபாடுகள் வேறு! எல்லாவற்றையும் ஏற்று, `பிறர் நம்மைப் பலவந்தப்படுத்தவில்லையே! நாமேதானே வந்தோம்!’ என்று தன்னம்பிக்கையுடன் மனதைத் திடப்படுத்திக்கொண்டார்.   சில வருடங்களுக்குப்பின், அவர் நினைத்தமாதிரியே திருமணமும் அமைந்தது. அவர் எதிர்பாராதது: பிழைப்புக்காக மனைவியை விட்டுப் பிரிய நேர்ந்ததுதான். மூன்று வருடங்களுக்கு ஒருமுறையே அவளுடன் இருக்க முடிந்தது. அவசர முடிவு மலேசியாவில் ஆண்டுதோறும் நடக்கும் தீபாவளிச் சந்தையைப்பற்றி விசாரித்தார் காஞ்சிபுரத்தில் இருந்த தறிக்காரர். “பட்டுடன் எதையாவது கலந்து, `இது நல்ல பட்டு!’ என்று சாதித்து, அதிக விலையில் விற்கிறார்கள் அந்தச் சமயத்தில். `மாணிக்கக் கற்கள் பதித்தது!’ என்று பிளாஸ்டிக்கில் செய்த மணிகளைப் பதித்த வளையல்களை விற்கிறார்கள்,” என்று நான் ஏமாந்த கதைகளைக் கூற, “நாங்க அப்படியெல்லாம் ஏமாத்திப் பிழைக்க வேண்டாம்!” என்று ஆத்திரத்துடன் கூறி, நல்லதொரு முடிவெடுத்தார் அந்த அபூர்வமான யோக்கியர். சில கடைகளில் தரமான, எந்தக் கலப்புமில்லாத பட்டுப்புடவைகளை விற்றார்கள். அதனால் விலை அதிகமாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. இது புரியாத பாமர மக்கள் ஏமாந்து, `முதல் கடையில் மலிவாக இருக்கிறது!’ என்று வாங்கிப்போக, தரமான பொருளை விற்றவருக்கு வியாபாரம் ஆகவில்லை. அடுத்த ஆண்டு, தரமான அந்தக் கடை வராததைக் கவனித்தேன். எதிர்பார்த்தபடி, பிறர் சிலாகித்தபடி, லாபம் கிடைக்காதிருந்திருக்கலாம். இன்னொரு அவசர முடிவு. முதலிலேயே சரியாக விசாரிக்காததால் வந்த வினை. மணக்க அவசரம் `நான் காதலித்தவளை மணந்திருந்தால், வாழ்க்கை இன்பகரமாக இருந்திருக்கும்!’ பெற்றோரின் மிரட்டலுக்கு அடிபணிந்தோ, அல்லது உயர்ந்த நிலைக்கு ஆசைப்பட்டோ, தன் தகுதிக்கு மீறி மணந்தவரின் புலம்பல் இது.   இவர் என்ன செய்திருக்க வேண்டும்? முதலிலேயே நன்றாக யோசித்திருக்க வேண்டும்: என்னைவிட அதிகம் படித்தவளை மணந்தால், என் பொருளாதார நிலைமை உயரலாம். ஆனால், மனைவி என்னை மதிப்பாளா? அதற்குமுன், நானே அவளை மிரட்டிவிட்டால்? என்று யோசனை போகிறது. ஆரம்பத்திலேயே இவ்வளவு குழப்பம் எழுந்தால், இல்லற வாழ்க்கை இனிக்குமா? ஓயாத போட்டியும், பொறாமையும்தான் எழும். எடுப்பார் கைப்பிள்ளை `பத்து வருஷங்களுக்கு முன்னாலேயே இப்படிச் செய்திருந்தால், எத்தனையோ பணத்தை மிச்சமாக்கியிருக்கலாம்!’ மது, சிகரெட் பழக்கத்தை விடும் முயற்சியில் இறங்கியிருப்பவர். அதுதான் படத்திற்குப் படம் இவைகளால் ஏற்படும் அபாயங்களைப்பற்றி எச்சரிக்கிறார்களே! விளையாட்டாய், நண்பர்களின் சவாலை ஏற்று ஆழந்தெரியாமல் கால் விட்டுவிட்டு, ஆரோக்கியக்குறைவு, குடும்பத்தில் பூசல் என்று காலங்கடந்து வருந்துவானேன்! யார் நம் நலனை விரும்பி, நல்ல யோசனைகளைக் கூறுகிறார்கள் என்று ஆராய்ந்து நடந்தால், இப்படி வருந்த நேரிடுமா? 20. அனுபவங்களா, அவதியா?   `நான் பட்ட கஷ்டங்கள்! அப்பப்பா! நாய்கூடப் படாது!’   தான் பட்ட கஷ்டங்களையும், அதனால் அனுபவித்த துயரத்தையும்பற்றிப் பேசினால், பிறர் அனுதாபப்படுவார்கள் என்று எண்ணுகிறவர்கள் நம்மில் பலர். இவர்கள் ஒன்றை மறக்கிறார்கள். `கஷ்டங்கள்’ என்றால் அனுபவம் பெறுவது. இன்னொருமுறை அதே தவற்றைச் செய்யாது, அதே பாதையில் நடக்காமல் இருக்கத் தூண்டும் விவேகத்தை அளிப்பது. இது புரியாது, என்றோ பட்ட அவதிகளால் எந்தப் பாடத்தையும் கற்காமல் இருப்பவன் மீண்டும் மீண்டும் அதே தவற்றைச் செய்கிறான். துன்பங்களையே அடுக்கடுக்காக அனுபவிக்கிறான்.   நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டிருப்போம். ஆனால், இன்றைய நிலையை அடைய படிப்படியாக ஒவ்வொன்றையும் தாண்டி வந்திருக்கிறோம். சிறு வயதில் பெற்றோரும், ஆசிரியர்களும் திட்டியபோது அவர்கள்மீது ஆத்திரமும், நம்மீதே பரிதாபமும் கொண்டிருப்போம். தன்னிரக்கம் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைதான். யோசித்தால், நாம் இப்படித்தான் நல்வழிபடுத்தப்பட்டோம் என்று புரியும். கசப்பை மறந்துவிடுவோம். அனுபவம் ஒன்று, பாடம் வெவ்வேறு கதை சந்திரா, கலா இருவரும் பதின்ம வயதாக இருந்தபோதும், ஆண்-பெண் உறவைப்பற்றி நினைத்தாலே பாவம் என்பதுபோல் வளர்க்கப்பட்டிருந்தார்கள். கருத்தரிப்பு போன்ற `கெட்ட’ வார்த்தைகளை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. அதனாலேயே, தகாத நடத்தை கொண்ட உறவினன் ஒருவனால் இருவரும் பாதிப்படைந்தார்கள். சில காலம்தான். ஆனால், அதன் விளைவோ..! முதலில் எந்த ஆணைப் பார்த்தும் பயம் எழுந்தாலும், காலப்போக்கில், நடந்ததில் தன் தப்பு ஏதுமில்லை என்று தெளிந்தாள் மூத்தவள் சந்திரா. பத்து சதவிகிதத்திற்கும் குறைந்தவர்கள் செய்யும் அடாத காரியங்களால் மீதி இருப்பவர்களையும் நோவது என்ன நியாயம் என்ற கேள்வி எழ, ஆண்கள் எல்லாருமே தீயவர்கள் இல்லை என்று நிச்சயித்தாள். கேடுகெட்டவர்களைப் பார்த்தவுடனேயே அவர்கள் குணம் புரிந்து, விலகவும், எதிர்க்கவும் முடிந்தது. மோசமான அனுபவம் ஒன்றால் நல்ல பாடம் கிடைத்தது. ஆண்களுடன் சரளமாகப் பழக முடிந்தது. தங்கை கலாவோ, நடந்தது வெளியில் தெரிந்தால், தன்மீதுதான் பழி விழும் என்று பயந்தாள். (அவள் பயமும் ஒரு விதத்தில் நியாயமானதுதான். `நீ முதலில் என்ன செய்தாய்?’ என்று வதைப்பட்ட பெண்களைக் கேட்பதுதானே உலக வழக்கு!). `எல்லா ஆண்களுமே மோசக்காரர்கள்!’ என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தாள். `அழகாக, இளமைத் தோற்றத்துடன் இருந்தால்தானே ஆண்கள் தகாத இச்சையுடன் அருகில் வருவார்கள்!’ என்று யோசனை போக, தன் தோற்றத்தில் அக்கறை செலுத்த மறுத்தாள். உடல் பருமனாகியது. ஓயாத மனக்குழப்பத்தில் என்னென்னவோ நோய்கள் வந்தன. வயது முதிர்ந்தபின்னரும் ஆண்களைப்பற்றிய அவளது அவநம்பிக்கை மாறவில்லை என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். ஒரே மாதிரியான அனுபவங்கள் இருந்தாலும், வாழ்வில் நிகழும் எதிர்பாராதவைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே ஒருவரது குணாதிசயம் அமைகிறது. மனதைச் சஞ்சலப்படுத்திய நிகழ்வுகள் நடந்து முடிந்தபின் சற்று நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதியை அனுபவிக்காமல், வருத்தத்தையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பதால் எப்படி! நடந்து முடிந்ததை `வேண்டாத அனுபவம்!’ என்று ஒதுக்கி, அதிலிருந்து சரியான பாடத்தைக் கற்றிருந்தால், கலாவும் தைரியசாலியாக ஆகியிருப்பாள். நிம்மதியை இழந்திருக்கமாட்டாள். என்ன செய்வது! மனோதிடம் சொல்லிக்கொடுத்து வருவதில்லையே! `தவறு நிகழ்ந்துவிடுமோ!’ என்ற பயத்திலேயே மூழ்கியிருந்தால், புதியதாக எதையும் செய்யத் துணிவில்லாது போகிறது. இன்பத்தை அனுபவிக்க அதற்கு நேர்மாறான நிலையையும் உணர வேண்டாமா? வெயிலில் நிழலின் அருமையை உணர்வதுபோல்தான். சுயமாக அனுபவிக்க விடுங்கள்! சில பெற்றோர் குழந்தை கீழே விழுந்தால் துடிதுடித்துப்போவார்கள். அவர்களுடைய பரிதவிப்பில் குழந்தையும் தன்னிரக்கத்துடன் பெரிதாக அழும். இதற்காக குழந்தை நடக்க விடாமலே தடுத்துவிட முடியுமா? மீண்டும் எழுந்து, நடக்கத் துணிந்தால்தானே நடை பழகும்? வாழ்க்கையும் இதுபோல்தான். தவறு நிகழ்ந்துவிட்டதே என்று கலங்குவது வீண். கசப்பான அனுபவங்களும், தவறான முடிவுகளும், அவைகளால் ஏற்படும் தோல்வியும்தான் நல்ல பாடங்களைப் புகட்டும். கடந்த காலத்திலேயே வாழ்ந்துகொண்டு, ஓயாது அதைப்பற்றிப் பேசினால்மட்டும் அவை மாறிவிடப்போவதில்லை. தவறுகளைத் தவிர், கவனம்! செய்யும் காரியத்தால் வரக்கூடிய துன்பங்களை, தவறுகளை, எப்படித் தவிர்ப்பது என்ற கவனம் அவசியம். ஒன்றரை வயதான குழந்தையிடம், `இந்தப் பாத்திரம் சூடு! தொடாதே!’ என்றால் அதற்குப் புரியாது. மிக லேசான சூடாக இருக்கும் ஒன்றில் அதன் கையை வைத்து, “ஊ..!” என்று பயமுறுத்தினால், கையை உடனே பின்னுக்கு இழுத்துக்கொண்டு, தானும் அதே ஓசையை எழுப்பும். அதன்பின், ஊசிமுனை போன்ற அபாயமான எதையும் அப்படியே சொல்லிக்காட்டலாம். இம்முறையால், வலியை அளிப்பவைகளைத் தவிர்க்க வேண்டும் என்று புரிந்துவிடுகிறது. குழந்தையின் அனுபவமும் வளர்கிறது. அனுபவங்கள் என்றால் பிறர் அனுபவித்ததிலிருந்து கற்பதும்தான். நான் அஜந்தா குகைகளைப் பார்க்கப் போனபோது, வெள்ளைக்காரப் பெண்மணிகள் முன்னெச்சரிக்கையாக காலுறை அணிந்து வந்திருந்தார்கள். நானோ, வெறுங்காலுடன்! தரைச் சூட்டில் பாதம் புண்ணாகி, ரத்தம் வடிய ஆரம்பித்தது. சில நாட்கள் அவதி. பாதம் சரியானவுடன், ஆரம்பப் பள்ளிப் பாட புத்தகங்களில் பார்த்தவைகளை நேரில் அனுபவித்த ஆனந்தம்தான் நிலைத்து நிற்கிறது. வலி மறந்துவிட்டது. அங்கு செல்ல விரும்பும் பிற உறவினர்களுக்கு என் அனுபவம் பாடமாக அமைகிறது. இருப்பினும், ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவமும், அதனால் அவர் அடைந்த உணர்ச்சிகளும் பிறருக்கும் அதே விளைவை அளிக்கும் என்று கூறமுடியாது. `எதிர்வீட்டு குண்டு மாமி கைத்தடி பிடித்துக்கொண்டு நடந்துதான் வழுக்கி விழுந்துவிட்டாள். அதனால் நான் என்னுடையதை உபயோகிக்கவே இல்லை!’ காலில் அறுவைச் சிகிச்சை நடந்தபின் மருத்துவமனையில் கொடுத்த கருவியை உறையிலிருந்தே பிரிக்காது வைத்ததை ஒரு மாது என்னிடம் பகிர, எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவசியம் என்று கருதிதானே கொடுத்திருப்பார்கள்? யாருடைய வேண்டாத அனுபவத்தையோ பின்பற்றினால், கால் குணமாக இன்னும் அதிக நாட்களாகாதா? புதிய அனுபவங்களா! எதற்கு? `புதிய அனுபவங்களால் என்னென்ன வருமோ! நான் இருக்கிறபடியே மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறேன்!’ என்று ஒரே வட்டத்தில் சுழன்றுகொண்டிருந்தால் சலிப்புதான் மிகும். `சிலருக்குத்தான் வாழ்க்கை நன்றாக அமைகிறது!’ என்று பொருமுவதால் என்ன பயன்? நம் வாழ்க்கையை நாமே அமைத்துக்கொள்ளும் துணிவுடன் நடந்துகொண்டால் இப்படி ஆகுமா? `புதிய இடங்களுக்கு உல்லாசப்பயணம் போவதா! வீண் அலைச்சல்! அங்கு உணவு ஒத்துக்கொள்ளுமோ, என்னவோ! ஏதாவது உடல் உபாதை வந்துவிட்டால்?’ என்ற அச்சமே சிலரை பயணங்கள் என்றாலே தயங்க வைக்கிறது. அஜீரணம், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, ஒவ்வாமைக்காக என்று பலவகையான மருந்துகளை முன்னெச்சரிக்கையாக எடுத்துப்போனால் கவலையே இல்லை. சீனர்களின் வழக்கு `அவள் சொல்வதைக் கேள்! நீ அரிசி சாப்பிட்டதைவிட அதிகமாக உப்பு சாப்பிட்டிருக்கிறாள்!’ வயதில் மூத்தவர் சொல்லைக் கேட்கவேண்டும் என்று வலியுறுத்த சீனர்கள் இப்படிச் சொல்கிறார்கள். சில சந்தேகங்கள் எழுகின்றன: வயது முதிர்ந்துவிட்டதால் மட்டும் ஒருவரை அறிவிலும் சிறந்தவர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? அவரது நேரத்தை, அனுபவங்களை, அவர் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் முக்கியமில்லையா? திறமையும் சோதனைகளும் திறமையால், அதனால் வரும் வெற்றிகளால் மகிழ்ச்சி, கர்வம் என்று ஏதேதோ கிடைக்கலாம். ஆனால் சோதனையால்தான் சீரிய பாடங்களைக் கற்க முடியும். ஒருவரது குணமும் புடம் போடப்படுகிறது.