[] [cover image] தூறல் துளிகள் செவல்குளம் செல்வராசு FreeTamilEbooks.com CC BY-NC-ND-SA 4.0 தூறல் துளிகள் 1. தூறல் துளிகள் 1. நன்றி 2. அணிந்துரை 3. மதிப்புரை 4. முதல் துளிகள் 2. இன்றும் கூட… 3. குறுங்கவிதைகள் 4. முதல் தொடுதல் 5. சொர்க்கம் 6. இது சூளுரையல்ல வாளுரை 7. உனக்காக சில கவிதைகள் 8. புதிய போர்வீரன் 9. காதலின் கானம் 10. இன்னும் அழுதுகொண்டிருக்கிறது என் பேனா 11. குறுங்கவிதைகள் 12. வினோத கானம் 13. எழுதப்படாத குறிப்புகள் 14. உனக்காக சில கவிதைகள் 15. முதியோர் இல்லத்திலிருந்து ஒரு வரவேற்பு 16. விற்பனையாகாத ரோசாக்கள் 17. இன்று நீ நாளை நான் 18. தலைப்புகளின்றி தவிக்கும் கவிகள் 19. மூன்றாவது நாள் 20. எனக்கும் தெரியும் 21. குறுங்கவிதைகள் 22. கனவா ? நினைவா ? 23. உனக்காக சில கவிதைகள் 24. உண்மையில்(லை) கற்பனைதான் 25. குறுங்கவிதைகள் 26. சிவப்பு விளக்குப்பகுதி சிறுமிகள் 27. முத்தம் 28. ராசா ராணி 29. அன்புள்ள அக்காவிற்கு… 30. உனக்காக ஓர் கடிதம் 31. காகிதப் பூ 32. கருப்பு மலருக்காக… 33. எங்கே சென்றாய் ? 34. எங்கே சென்றாள்? 35. ஒருநாள் மட்டும் 36. கடைசிப் பக்கம் தூறல் துளிகள் தூறல் துளிகள்   செவல்குளம் செல்வராசு   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC BY-NC-ND-SA 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Thooral_Thuligal} நன்றி அணிந்துரை கவிஞர். ம.திருவள்ளுவர் பாதுகாப்பு மேலாண்மைத் துறை பாரத மிகுமின் நிறுவனம் திருச்சி-14 ச.செல்வராசு என்னும் தொழில்நுட்பக் கலைஞனின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கிறது இந்தக் கவிதை நூல்… ஒரு இளைஞனுக்கே சொந்தமான அத்தனையும் பதிவாகியிருக்கின்றன கவிதைகளாய்… ஈழம், டீச்சர், தபால்காரர், காதலி, சின்னச்சின்ன ஞாபகங்கள், விதவை, சமுகம், சிவப்பு விளக்குப் பகுதி சிறுமி. அக்கா, பிரிவு என பலவும் பரிமாறப்பட்டிருக்கிறது. மூன்றாம் வகுப்பு ஆசிரியருக்குப் பயந்து இரண்டாம் வகுப்பிலேயே இரண்டாண்டுகள் இருக்க நினைத்தது என்னும் வரிகள் நினைத்தாலே இனிக்கும் பசுமரத்தாணிகள்! என்றாவது ஒருநாள் ஈழத்தின் சிரிப்பொலி உன் காதுகளை எட்டும் உண்மையிலேயே இது சூளுரையல்ல தீப்பொறி பறக்கும் வாளுரையாகவே ஒலிக்கிறது இன்றோடு முடிகிறது எட்டாம் வகுப்பு கோடை விடுமுறை நான் இன்னும் பருவமடையவில்லை மகிழ்ச்சியாய் இருக்கிறது. எப்படியாவது ஒன்பதாம் வகுப்பில் பாதி படித்து விடலாம் என்னும் வரிகளில் மின்னுகிறது இன்னும் தீராத பெண்ணின் தாகமும், சமூகத்தின் விழிப்புணர்வின்மையும்! ‘ஒருநாள் மட்டும்’ கவிதையில் ஒரு நடுத்தர வயது நடுத்தர வர்க்க ஆடவனின் தாம்பத்திய தவிப்பை வெளிப்படுத்துவது நளினம். இப்படியாக… இந்த நூல் முழுமையும் பரவிக் கிடக்கிறது கருப்பொருளும் கவித்துவமும்! ஆங்காங்கே சினிமாவுக்கான சந்தமும் – சாரமும் கேட்கிறது. 20 வயதில் தூறல் துளிகளைப் பிரசவித்திருக்கும் இளம் கவி செவல்குளம் செல்வராசு காலம் வழங்கும் அனுபவங்களால் மேலும் செதுக்கப்பட்டு உரிய தருணத்தில் கவியரசாக மலர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். திருச்சி அன்புடன் மா.திருவள்ளுவர் 16.09.2009 மதிப்புரை தென்னம்புலம் கவிஞர் த.வேதையன் கூடுதல் பொறியாளர் ( பணிநிறைவு ) பாதுகாப்பு மேலாண்மைத் துறை முன்னாள் முத்தமிழ் மன்ற பொதுச்செயலாளர் பாரத மிகுமின் நிறுவனம் திருச்சி-14 திக்கெல்லாம் புகழ்மணக்கும் திருநெல்வேலி என்பது நற்றமிழ் வாக்கு. அம்மாவட்டத்தில் பிறந்த இளவல் ச.செல்வராசுவின் கவிதைத்தொகுப்பைப் படித்து என்னுரை எழுத வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்வடைகிறேன். இவர் படித்ததோ தொழிற்கல்வி என்னைப் போன்றே. எழுதி இருப்பதோ புதுக்கவிதை. தமிழுக்கும், மனித உணர்வுக்கும் ஆக்கம் சேர்க்கும் நற்கவிதை, ஈழத்தமிழரின் தொப்புள்கொடி உறவை நனைவூட்டி முத்துகுமாரின் தியாகத்தை ‘சூளுரையல்ல வாளுரை’ கவிதையில் காட்டியிருப்பது தமிழர்களை தன்னிலை உணரச்செய்யும். முத்துக்குமாரை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகம் செய்யும். ‘இன்றும் கூட’ கவிதை சமூகத்திற்குச் சாட்டையடி. ‘புதிய போர்வீரன்’ கவிதை வரிகள் வீரத்தாயின் வீரத்தையும் விதவைபடும் அவலத்தையும் எதிரொலிக்கிறது. உப்பில்லா உணவு உணர்ச்சிகளைத்தான் அடக்கும் உன் நினைவுகளை என்ன செய்யும்? என்ற வரிகள் ஒவ்வொரு இளம்விதவையின் குரலாகவே கேட்கிறது. ‘எழுதப்படாத குறிப்புகள்’ நாம் அனைவரும் நிச்சயமாய் கடந்து வந்தும் எழுதப்படாத குறிப்புகள்தான். ‘முதியோர் இல்லத்திலிருந்து ஓர் வரவேற்பு’ தலைப்பே கவிதை. தொப்புள்கொடி உறவும்கூட தோற்றுத்தான் போகிறது தலையணை மந்திரத்தின் முன் என்ற கசப்பான உண்மையை கவிஞரின் பேனா கக்கியிருப்பது கவனிக்கத்தக்கது.‘எனக்கும் தெரியும்’ புதுக்கவிதையில் சிலேடை முயற்சி புதுமை. குறுங்கவிதையில் மஞ்சள் வானில் கருப்பு நிலா வர்ணனை புதுமை. எங்கள் அழகு அழியும்வரை எப்பொழுதும் இரவுதான் தூங்குவதற்கு மட்டும் அனுமதியில்லை உயிரை மாய்த்துக்கொள்ள தூக்கில் தொங்கலாம் தாவணி இருக்கிறது தனிமைதான் இல்லை சிவப்பு விளக்குப் பகுதி சிறுமிகள் கவிதையின் வரிகள் மனதை நெருடும் வரிகள் ‘ராசா ராணியில்’ நாமும் குழந்தை நினைவுகளை நிச்சயமாக அசைபோடுவோம். கிழியாத சட்டை போட்டவன்தானே ராசவாகலாம் உணர்வுப்பூர்வமான வரிகள். ‘ஒருநாள் மட்டும்’ , தலைபுகளின்ரி தவிக்கும் கவிகள்’ , ‘மூன்றாவது நாள்’வயதை மீறிய எழுத்துகள் என்றாலும் விரசமின்றி ரசிக்கும்படியாக உள்ளது.’எங்கே சென்றாய்’ இதுவரை படித்திராத புதுமை. ‘கடைசிப் பக்கம்’ நிர்வாண உண்மைகளைத் தொட்டிருக்கிறது கவிஞரின் எழுதுகோல். மொத்தத்தில் கற்பனையில் மிதக்காமலும் வார்த்தை தேடி வர்ணனையில் மூழ்காமலும் மெல்லிய உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் செவல்குளம் செல்வராசுவின் கவிகள். நல்முறையில் இளம்கவி நடைபயில்க வாழ்க! வளர்க, நற்றமிழ் கவியாத்து மாந்த இனம் மாண்புறச் செய்க. இதய அன்புடன் த.வேதையன் திருச்சி 18.09.2009 முதல் துளிகள் என் ஒவ்வொரு நாள் தனிமையிலும் எனக்குள் தமிழ் தன் தூவானத்தைக் கவிதையாய் தூவிக்கொண்டுதான் இருக்கிறது, அதில் சிலவற்றைத்தான் தூறல் துளிகளாய்த் தொகுத்து என் உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இது என் முதல் கவிதைத் தொகுப்பு. ஒவ்வொரு தனிமையிலும் எதையாவது எழுத வேண்டும் என என் பேனா எத்தனிக்கும். எழுதிய பின்பு இது கவிதைதானா? என்று மனம் பரிதவிக்கும்.இல்லை என சிலவற்றை மறுதலிக்கும். இன்பமாய் சிலவற்றைக் காகிதத்திற்குப் பரிசளிக்கும். என் கவிதைகள் வார்த்தை அலங்காரங்களையும், கண்கள் காணாக் கற்பனைகளையும், வரிசையாய் வர்ணனைகளையும் கட்டாயமாய்த் திணிக்க முற்படுவதில்லை. என் ஒவ்வொரு உணர்வின்போதும் இயல்பாய் மனதில் எழும் வார்த்தைகளையே வரிசைப்படுத்தி இருக்கிறேன். என் கவிதைகளின் கருப்பொருளை மட்டுமே நான் தீர்மானிக்கிறேன் அதன் நீளமும் நிறுத்தமும் என் பேனாவே தீர்மானிக்கும். எனவேதான் கவிதைகளின் நீளம் சற்று அதிகமாய் இருக்கிறது. வரிகள் குறைதலால் என் கவிதைகள் ஊனமாவதாய் உணர்கிறேன். ஏனெனில் என் கவிதைகள் பெரும்பாலானவை உண்மைகள். என் அல்லது என்னைச் சுற்றிய நண்பர்கள் மற்றும் உங்களின் உண்மை உணர்வுகளாய் இருக்கும். சூழ்நிலைகள் கவிஞனை உருவாகுகிறது. வாய்ப்புகள் அவனை வெளிப்படுத்துகிறது. நான் கவிதைத் தொகுப்புவெளியிடும் ஆசையில் அச்சகங்களின் படியேறியது 17-ம் அகவையில். வாழ்த்துக்கள் கிடைத்த அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இன்று வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது. உருவாக்கியிருக்கிறேன். தூறல் துளிகள் நான் கவிஞனாகும் கனவில் எடுத்த முழுமுயற்சியின் முடிவல்ல. எழுத்தாளனாகப் பரிணமிக்கும் உறுதியில் எடுத்துள்ள முதல் முயற்சியின் துவக்கம். எதில் நீங்கள் தீர்மானமாய் இருக்கிறீர்களோஅதைச் சோதிக்கவே பல தடைகள் ஏற்படும் என்பார்கள்;. நான் அதை உணர்ந்திருக்கிறேன் இத்தொகுப்பு மூலம். என்றோ வந்திருக்க வேண்டிய தூறல் துளிகள் பல தடைகளையும் தாண்டியே இன்று உங்களை வந்தடைந்திருக்கிறது. எனக்குள் கவிதை விதைத்த எல்லா நண்பர்களுக்கும், இதுதான் கவிதை எனக் காட்டிக் கொடுத்த கண்மணி ஆசிரியருக்கும், கவிதை கற்றுக்கொள்ள நூலகத்தில் கவிதைப்புத்தகங்கள் திருடிக் கொடுத்த பால்ய நண்பன் மருதையாவுக்கும், இத்தொகுப்பிற்கு சிறப்பான முறையில் மதிப்புரை அளித்து உதவிய திரு.த,வேதையன் அவர்களுக்கும், அணிந்துரை அளித்த திரு.மா.திருவள்ளுவர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நெஞ்கில் ஓர் இடம் தேடும் செவல்குளம் செல்வராசு இன்றும் கூட… இன்றோடு முடிகிறது எட்டாம் வகுப்பு கோடை விடுமுறை நான் இன்னும் பருவமடையவில்லை மகிழ்ச்சியாய் இருக்கிறது. எப்படியாவது ஒன்பதாம் வகுப்பில் பாதி படித்து விடலாம். என் எதிர்ப்புகளும் சப்தங்களுமின்றி இன்றிரவு நடக்கவிருக்கிறது ஓர் கற்பழிப்பு கலையில்தான் நடந்தது எனக்கு கட்டாயத் திருமணம். குறுங்கவிதைகள் பொருள் விளங்காக் குறுங்கவி தினமும் உன் ஒருநொடிப் பார்வை தற்செயலாய்த்தான் காண நேர்ந்தது மஞ்சள் வானில் ஒரு கருப்பு நிலா உன் உள்ளங்கையில் மச்சம் நான் அடிக்கடி பொறாமைகொள்வது உன் பாலாடை மேனியில் படரும் மேலாடை மீதுதான் முதல் தொடுதல் என் எட்டாம் வகுப்பு கணக்கு வாத்தியாரை மிகவும் பிடிக்கும் எனக்கு அவர்தான் முதன்முதலில் அவள் கையால் என்னைக் குட்டு வாங்க வைத்தவர் சொர்க்கம் இன்று முழுவதும் வகுப்பறை சொர்க்கம்தான் கணக்கு வாத்தியார் வரவில்லை. இது சூளுரையல்ல வாளுரை இது தனிமனிதன் ஒருவனைத் தலையில் தூக்கியாடும் தரித்திரக் கவியுமல்ல சங்க காலக் கோமானின் சாகசம் எடுத்தியம்பும் சரித்திரக் கவியுமல்ல மரித்துக்கொண்டிருக்கும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்காக எழுப்பப்படும் மரண ஓலங்களின் எதிரொலி மரத்துப்போன இதயங்களைத் தட்டி எழுப்பும் இடியோசை 2009 சனவரி 29 தமிழக வரலாற்றின் கருப்பு நாள் கொலுவை நல்லூரில் சாமானியனாய்ப் பிறந்தவன் எம் ஈழத்தமிழருக்காய் இன்னுயிர் ஈந்து எங்கள் மனங்களில் ஆணி அடித்த நாள் “அழிகிறது தமிழீழம்” என்று எங்கள் தினசரிப் பத்திரிகைகள் செய்தி தாங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில்… பரபரப்புச் செய்தியாகிப்போன தோழன் முத்துகுமாரின் மரணத்திற்காக எழுதப்பட்ட கண்ணீர் அஞ்சலி அல்ல இது வீர வணக்கம் நீ இருண்டு போன ஈழத்திற்கு ஒளியேற்றுவதற்காக எரிந்து போன மெழுகுவர்த்தி காய்ந்து போன அடர்காட்டில் விழுந்த அக்கினிக் குஞ்சு எம் மனங்களில் தீமூட்ட எரிந்து போன தீக்குச்சி நீ இட்ட தீயினில் இறுகிய இரும்பு உள்ளங்களும் உருகித்தான் போகும் உணவுக்காக அழுதுகொண்டிருந்த ஒவ்வொரு பாமரனையும் உணர்வுக்காக அழவைத்தவன் நீ போரில் உயிர் துறந்த சிப்பாய்கள் ஏராளம் ஆனால் நீ போர் நிறுத்தத்திற்காய் உயிர் துறந்த தளபதி நீ மெழுகுவர்த்தியாய் உருகிப் போனதற்காய் என்னால் ஏங்கத்தான் முடிகிறது ஏற்றுக்கொள்ள முடியவில்லை இனி நாங்கள் மெழுகுவர்த்தியாய் உருகப் போவதில்லை துப்பாக்கியாகத்தான் வெடிக்கவிருக்கிறோம் மரண சாசனம் எழுதிவைத்துவிட்டு மறைந்த மாணிக்கமே கேள் இது சூளுரையல்ல; வாளுரை எனக்கு என் பேனாவே வாள் எங்கள் வானில் நீ என்றும் மறையா நட்சத்திரம் என்றாவது ஒரு நாள் ஈழத்தின் சிரிப்பொலி உன் காதுகளை எட்டும் அப்போது மகிழ்ந்து உன் கைகள் தட்டும். உனக்காக சில கவிதைகள் களவாடச் சொல்கிறது மனம் நீ குளியலறைச் சுவரில் ஒட்டி வைத்த பொட்டுகளையும் கூட தாவணிக்கு நன்றி என்றும் உன் சுடிதார் மறைத்துக் கொண்டிருக்கும் மச்சத்தை இன்று எனக்கு காட்டிக் கொடுத்ததால் என் கண்களில் படும் வெற்றுக் காகிதங்கள் எல்லாம் பெரும்பேறு பெறுகின்றன உன் பெயர் எழுதப்படுவதால் இன்று விடியலுக்கு முன்னரே எழுந்துவிட்டேன் நேற்றுஅதிகாலை உன் தவறிய அழைப்பு புதிய போர்வீரன் அன்றுபோலவேதான் இன்றும் நீ சிரித்துக் கொண்டிருக்கிறாய் புகைப்படத்தில் உன் வசீகர முகத்திற்கு கூடுதல் அலங்காரமாய் என்னிடமிருந்து நீ எடுத்துக்கொண்ட பூவும் பொட்டும். அயர்ந்த தூக்கத்தில் வரும் ஐந்து நிமிடக் கனவாய் முடிந்துவிட்டது நம் இல்லற வாழ்க்கை செவ்விதழ் சிறுஇதழ் என வர்ணித்தாயே இந்த இதழ்கள் சிரிப்பை மறந்து சில மாதங்களாகிவிட்டன இந்நாட்டுக்கு இன்னுயிர் ஈந்தாய் அல்லவா எல்லையில் அதற்குக் கைம்மாறாய்த்தான் இச்சமுதாயம் எனக்களித்துள்ளது புத்தாடை வெள்ளையில் மாங்காய் தின்னக் காலம் வந்ததென கடிதம் நான் எழுதிக்கொண்டிருக்கையில் தந்தி வந்தது மாமா நீ இறந்தாய் என்று இராணுவ மரியாதையுடன் உனக்கு அஞ்சலி ஒரே ஒரு நாள் மட்டும் அவமரியாதை அவலங்கள் இனி எனக்கு தினம்தினமும் சீதேவி என்றவர்கட்கும் இன்று நான் சகுனத்தடையாம் தங்கமே என்றவர்கள் தரித்திரம் என்கிறார்கள் உப்பில்லா உணவு உணர்சிகளைத்தான் அடக்கும் உன் நினைவுகளை என்ன செய்யும்? நீர்ப்பாசியாய் உன் நினைவுகள் நிச்சயம் முடிப்பேன் உன் கனவுகள் இன்னும் நான் வாழ்ந்துகொண்டிருப்பதே இன்னுமொரு போர்வீரனை என் வயிற்றில் சுமந்துகொண்டிருப்பதால்தான். காதலின் கானம் (கல்லூரிச் சிட்டு ஒன்றின் இதயத் துடிப்புகளுக்கு எழுத்து வடிவம் எடுத்தது என் பேனா) காதலின் சிறகால் பறந்து கானம் படிக்கத்துடிக்கும் என் காலினைக் கட்டிப் போட்டது தந்தையின் பாசக்கயிறு கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் என்னைவிட அதிகமாய் கடன்களைச் சுமந்துகொண்டிருக்கும் என் தந்தையின் நிலை என்னைச் சுற்றிய சிலந்தி வலை காதலின் காரணத்திற்காக தந்தையின் கனவுகளுக்குக் கொள்ளி வைப்பதா ? – இல்லை தந்தையின் கனவுகளுக்காக காதலைச் சற்று தள்ளிவைப்பதா ? தந்தையை விடுத்து காதலில் வெல்வதா ? தன்னையேவென்று காதலைக் கொல்வதா? கடமைகளைக் கருதும் என் மனதில் காதல் கலந்தது தப்பான கருத்ததா ? இல்லை என் தலை எழுத்தா ? இரண்டையும் விரும்புவது பெண்குணம் இருதலைக் கொள்ளியாய் என் மனம். இன்னும் அழுதுகொண்டிருக்கிறது என் பேனா இன்னும் அழுதுகொண்டிருக்கிறது என் பேனா. ஆம் ! விதி என்ற பெயர்தனிலே தங்கள் சதிகட்குக் கால் முளைக்கவிட்டு சாதி என்று பெயருமிட்டு இணையத் துடித்த இருமனங்களைப் பிரித்து எரியூட்டி மகிழ்ந்த அவர்களின் ஈனச் செயலுக்காக இன்னும் அழுதுகொண்டிருக்கிறது என் பேனா மாற்றான் தெரு நாயொன்று மார்கழியில் இங்கு வந்ததென்று கட்டிவைத்துக் கொல்லும் கண்மூடிகளுக்கு எப்படித் தெரியும் காதலின் அருமை திருமணப் பத்திரிகை அச்சிட வேண்டிய பெற்றோரே அவளை ஏனோ தினசரிப் பத்திரிகையின் செய்தியாக்கிவிட்டார்கள் இறந்துபோன இந்தக் காதலர்கள் இன்றும் என் கிராமப் பிஞ்சுகளுக்கு எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அந்தக் காதல் புறாவின் சிறகொடித்து அவளை சிறைப்படுத்தியதால் மட்டும் சிதைந்து போய்விடவில்லை அவள் அவசர அவசரமாய் அம்மான் ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டதால்தான் மரணம் அவளுக்கு நிர்பந்திக்கப்பட்டது மனதிலே அவனிருக்க மாமன் தரும் பட்டாடை மயிலுக்கு விருப்பமில்லை அதனால்தான் அவன்தந்த அரக்கு நிற தாவணியில் விதி முடித்துக்கொண்டாள் ஆண்பறவை இறந்து போனால் இரைகூட உண்ணாமல் இறந்திடுமாம் அன்றில் பறவை இங்கு நடந்தது வேறு இந்தப் பெண்பறவை இறந்ததால்தான் அவன் இறந்துவிட்டான் உணவாக நஞ்சருந்தி கோழையின் செயலென சிலர் பேசிக்கொண்டார்கள் முட்டாளின் முடிவென சிலர் முடித்துக்கொண்டார்கள் இனிவரும் காதலர்களுக்கு எச்சரிக்கை என சிலர் மார்தட்டிக்கொண்டார்கள் இன்னும் அழுதுகொண்டிருக்கிறது என் பேனா… …. ஆம் ! இன்றும் அழுதுகொண்டிருக்கிறது என் பேனா… குறுங்கவிதைகள் இன்று என் உலகம் நிசப்தமாகிவிட்டது கொலுசுகளை ஏன் கழட்டிவைத்தாய்! தினமும் ரசிக்கும் நிலா இன்று அழகாய் இல்லை அருகில் நீ. வெகுநேரம் சிரமப்பட்டு ஒரு குறுங்கவி எழுதினேன் உன் ஒரு நொடி முறுவலுக்காக. அடிக்கடி நகம் கடிப்பேன் நீ என்னைத் திட்டுவதற்கு… வினோத கானம் இந்தக் குயில் விடியலில் கூவவில்லை விடியலுக்காகக் கேவுகிறது விடியாத இரவை விரட்டிடமுடியாமல் வெள்ளைப்புறா பாடும் வினோத கானம் இது மணிப்புறாவின்சாதி என்றால் மணாளன் மாண்டவுடன் மாண்டிருப்பேன் நான் மனிதப்பிறவி ஆகிவிட்டேன் மனைவி மட்டும் இறந்துவிட்டால் மறுமாதம் மணநாள்தான் ஆடவர்க்கு மணாளன் இறந்துவிட்டால் திருநாளும் வெறும்நாள்தான் மங்கையர்க்கு மணமாகி மறுமாதம் மண்டான் கணவன் நான் பள்ளிக்குச் செல்லாமல் பட்டம் பெற்றேன் விதவை என்று வாசமுடன் பூத்த மலரை வாசலிலே வீசிவிட்டார்கள் இன்றளவும் வாடுகிறேன் இனிமையைத் தேடுகிறேன் என் வயதுப் பெண்களெல்லாம் இனிமையில் திளைத்திருக்க நான் மட்டும் ஏனோ தனிமையில் விழித்திருக்க தங்கை தன் கணவனுடன் தணிவாய்ப் பேசும் சத்தத்திலும் தவறுதலாய் என் கண்ணில்படும் இளசுகளின் பகல் முத்தத்திலும் என் மனம் படும் பாட்டை எவ்வாறு வெளியில் சொல்ல? இரவினில் என்னைத் தனிமை கொல்ல எப்படி நான் இரவை வெல்ல? வீட்டிற்கு வெளியில் சென்றால் விலை கேட்கும் இளவட்டம் இதை வெளியில் சொன்னால் தே(ள்) மொழியில் சில பட்டம் பருவகாலத்தில் சருகாய்ப் போன என் வாழ்வின் ரணங்களை கண்ணீர் உறிஞ்சிய தலையணைதான் அறியும் என் போன்ற விதவைகள் வாழ்வு என்று தான் விடியும்? எழுதப்படாத குறிப்புகள் வயதும் நினைவிலில்லை காரணமும் நினைவிலில்லை அன்றொரு நாளில் அப்பாவிடம் அடிவாங்கி கால் சட்டை நனைத்தது மூன்றாம் ஆசிரியருக்குப் பயந்து இரண்டாம் வகுப்பிலேயே இரண்டாண்டுகள் இருக்க நினைத்தது ஊர்ப்புற நூலகத்தில் சிறுவர் மலர் புத்தகத்தைத் தெரியாமல் திருடியது துவக்கப் பள்ளி நாட்களிலே தோழி அவள் விரல்கள் என் உள்ளங்கை வருடியது தும்பி பிடித்து நூலில் கட்டி கல்தூக்க வைத்து மகிழ்ந்து சிரித்தது வாலறுந்து அது இறந்து போக தனியாய்ச் சென்று தேம்பி அழுதது கடவுளுக்கு நீர் தர மறுத்ததாய் ஓணான் மீது குற்றம் சாட்டி அதற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய சிறுவர் கூட்டத்தில் நானும் இருந்தது பள்ளி முடிந்து வீட்டிற்கு வேகமாய் ஓடும்போது சுவரில் மோதி முன்பற்கள் உடைந்து விழுந்தது ஆடை அவிழ்ப்பு நாடகமொன்றை அறியாமல் நான் காணநேர்ந்தது அறியாத வயதில் எனக்கு அவள் மேல் காதல் வந்தது அம்மன் கோவில் திருவிழாவில் அவளை முதலாய்த் தாவணியில் ரசித்தது அன்றொரு நாளில் அவசரமாய் அவளிடம் ஒருமுறை முத்தம் ருசித்தது இப்படியாய் இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் இன்றுவரை என் தினசரிக் குறிப்பேட்டில் எழுதப்படாத குறிப்புகளாக… …. உனக்காக சில கவிதைகள் காலை படித்த சிறுகதை முதல் காலைக் கடித்த சிற்றெறும்பு வரை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் உன்னிடம் மட்டும் நாம் பேசிக்கொண்டிருக்கையில் தற்செயலாய் உன் கைகள் தாவணி சரிசெய்கிறது எனக்கு கவிதை பிறக்கிறது இன்று எப்படியாவது கண்டுபிடித்துவிடவேண்டும் நம் சந்திப்புகளின்போது முதலில் முறுவலிப்பது நீயா. நானா என்று ஒரு மணி நேரமாய்க் காத்திருந்த வழக்கமான அந்த ஒருநொடி நிகழ்வு நடந்தேறியபின் உணர்ந்தேன் உன்னைப் பார்த்ததும் என் உதடுகளும் என்னைப் பார்த்ததும் உன் உதடுகளும் அனிச்சைப் புன்னகை உதிர்க்கப் பழகியிருப்பதை முதியோர் இல்லத்திலிருந்து ஒரு வரவேற்பு குழிந்த கன்னங்களில் கோடிழுக்கும் கண்ணீர்த் துளியால் உனக்கு எழுதப்படும் கடைசிக் கடிதம் இது என்றோ இறந்துபோன உன் பாசத்திற்காக இன்றுவரை காத்திருந்த தாயின் மரணத்திற்காக உன்னை அழைக்கும் மரண அழைப்பிதழ் இது நான் உன்னைக் காண விரும்பியதால் நீ காப்பகம் வருவதாய்ச் சொல்லி மாதமும் இரண்டானது இன்றும் வரவில்லை இறக்கும்முன் உன்னைப் பார்க்க நினைத்த இறுதி ஆசையும் நிராசையானது கருவறையில் உன்னைச் சுமந்த கடன் தீர்க்கவா என்னைக் காப்பகத்தில் விட்டுவிட்டாய் ? மாதம் ஒருமுறை வரும் காப்பகத்தின் கட்டணக் கடிதமாவது என்னை உனக்கு நினைவுபடுத்துகிறதா ? இனிமேல் அதுவும் வராது அன்பில் ஏதும் குறைவைத்தேனா அறியவில்லை பேதை நெஞ்சம் இந்த அன்னையைவிடப் பெரிதுதானா அவள் கொடுத்த கட்டில் மஞ்சம் ? தொப்புள்கொடி உறவும் கூட தோற்றுத்தான் போகிறது தலையணை மந்திரத்தின் முன் தாரமாக ஒருத்தி வந்து தாய் என்னைப் பகைத்ததற்கு தனித்து இங்கு விட்டுவிட்டாய் தலைமகனே புத்தி கேட்டுவிட்டாய் வாழும்போது தள்ளிவைத்தாய் வளமாக நீ வாழ்க வாழ்க !! செத்த பின்பு கொள்ளி வைக்கச் செல்வமே வருக வருக !! விற்பனையாகாத ரோசாக்கள் நடைபாதைக் கடையில் பூக்கள் விற்கும் நங்கை இவள் பெயரோ சரோசா மாலைநேரம் வழக்கமாய் வாருத்தத்துடன் வீடு திரும்புகிறாள் விற்பனையாகாத ரோசாக்களுடன் என் விபரம் அறிந்த வயது முதல் தாவணியில்தான் இவளைப் பார்க்கிறேன் தாவணிக்குள் மறைந்து இவள் தன் வயதை மறைத்த போதும் தலைநரை காட்டிக்கொடுக்கிறது வயதை பதின்வயதுகள் கடந்து வந்து பத்து ஆண்டுகள் முடிந்திருக்கும் ஆனால் இவளின் பதின்வயது கல்யாணக் கனவுகள் இன்னும் கனவுகளாகவே இருக்கிறன இவள் வயதுப் பரிமளாவுக்கு இரண்டு குழந்தைகள் ஏற்கெனவே இப்போதும் அவள் ஐந்து மாதம் ஐந்து வயது இளையவள்தான் அடுத்த வீட்டு அமலா அவளுக்குக் கையில் ஒன்று வயிற்றில் ஒன்று சித்திரையில் பூத்த சித்ராவுக்கு ஆவணியில் திருமணப் பேச்சு தாலி வாங்கி ஆலமரம் இவள் கட்டித்தான் பார்த்தாள் தெய்வமும் அருட்பார்வை பார்க்கவில்லை தேடிவந்து யாரும் பெண் கேட்கவில்லை காய்த்த மாமரம்தான் கல்லெறிவார் யாரும் இல்லை எழில் சற்றுக் குறைந்ததாலும் ஏழையாய் இவள் பிறந்ததாலும் கல்யாணச் சந்தையில் இன்றும் விற்பனையாகாமல் ஒவ்வொரு ஊரிலும் எத்தனையோ (ச)ரோசாக்கள் வாழக்கூட கூலி கேட்கும் ராசாக்கள் வாழும்வரை இருக்கத்தான் செய்வார்கள் இன்று நீ நாளை நான் காரிருளே கசிந்திடாத கார்த்திகைத் திருநாளில் வீடுதோறும் விளக்கெரிய வீதிதோறும் வெளிச்சம் திரிய நாதியின்றி ஊர் முடிவில் நங்கை வீடோ இருண்ட வீடாய் வாரி முடித்த கூந்தலிலே வாசமலர் ஊஞ்சலாட மஞ்சள்முக நெற்றியிலே மதி போன்ற பொட்டுமிட்டு நட்சத்திர கண்களிரண்டில் நன்கு இவள் மையெழுதி வழியிலே விழி பார்த்திருந்தாள் அவன் வரவுக்காகக் காத்திருந்தாள் காத்திருக்கும் காரிகை இவள் காதலனை எதிர்நோக்கும் காதலியுமல்ல! கணவனை எதிர்நோக்கும் மனைவியுமல்ல! எவனையோ எதிர்நோக்கும் ஏழைக்குயில் விதியால் வஞ்சிக்கப்பட்ட வேசிமகள் காத்திருக்கும் கண்களிலே கசிந்து வந்த கண்ணீரின் கவிதை இது வேசிக்குப் பிறந்துவிட்டேன் வேறு என்ன பாவம் செய்தேன் ? வேலை தேடிச் சென்றாலும் தினம் வேட்டையாடப்பட்டேன் நான் வேசியாக்கப்பட்டேன் செல்லாக் காசாய் அவள் ஆனதால் சிற்றாடைச் சிறுமியை இருக்கும்போதே என்னைச் சில்லறை விலையில் விற்றுவிட்டாள் பள்ளி செல்லும் வயதினிலே பள்ளியறை அனுப்பிவைத்தாள் நான் பேதையாக இருந்தபோதே பலர் போதை தீர்க்க வழி கொடுத்தாள் பகலில் அவளின் பகட்டாடை தக்க வைக்க எனக்கு இரவில் நிர்வாணம் நிற்பந்தமாக்க்கினாள் இந்தக் கிளியை அவள் வளர்த்ததே இரவில் மட்டும் எங்கள் வீடு தேடும் பணக்காரப் பூனைகளுக்காகத்தான் படுக்கையிலே கிடக்கும் அவள் பாடையிலே போகும் முன்னே பாவியாக்கிவிட்டாளே – என்னைப் பாரம் சுமக்க விற்றாளே இருக்கும் எந்தாய் இவளுக்கு ஒருவேளை உணவளிக்க இருட்டினிலே என் உடலை எவனுக்கோ விருந்தளிப்பேன் இறந்த பின்பு இவளுக்கு ஈமக்கடன் செய்திடவும் நான் இறக்கும் முன்பு எவனுக்கோ காமக்கடன் தீர்க்க வேண்டும் என் போன்ற அவலநிலை எதற்கு வேண்டும் சிசு உனக்கு இப்போதே அழிந்திடடி என் இளம் வயிற்றில் எள் உண்டு சிறிது காலம் பொறுத்திருடி நான் சீக்கிரமே வந்திடுவேன் அம்மாவின் சிதை அழித்து அரளி விதைதான் அரைத்து தலைப்புகளின்றி தவிக்கும் கவிகள் அடிக்கடி தூக்கம் கலைகிறது தொடர்வண்டி நிலையம் அருகில் வாடகை வீடு … … மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது இளம் தம்பதிகளுக்கு … … கடைத் தெருவில் யாரோ ஒருத்தி கடந்து செல்கிறாள்… மல்லிகை வாசம் வெறுப்பாய் இருக்கிறது மனைவி இன்று ஊரில் இல்லை மூன்றாவது நாள் நடுஇரவில் விழித்துவிட்டேன் அருகில்தான் தூங்கிக் கொண்டிருக்கிறாள் படுக்கையறையில் மெல்லிய வெளிச்சம் மின்விசிறிக் காற்றில் பறக்கிறது அவளின் காதோர முடிகளும் கலைந்து போன மேலாடையும் மனதினுள் ஓர் மௌன யுத்தம் இன்று மட்டும் அவளை எழுப்ப வேண்டாம் இன்றோடு முடிகிறது மூன்றாவது நாள். எனக்கும் தெரியும் சப்தம் நீங்கி வழிவிட்டது நிசப்தம் ஓங்கி பலம் சேர்த்தது விழிகள் இரண்டும் மூடிப் போனது விரல்கள் எதையோ தேடிப் போனது சிலமட்டும் காய்க்கும் மாமரப் பூக்களாய் சிந்தையின் சிலதுளி செயலாய் ஆனது திரௌபதி சேலையாய் ஆசைகள் நீண்டது தீராத ஆசைகள் தீராமல் தீர்ந்தது கற்பனை என்னும் வளம் விரிந்தது கவிதை முதன்முதலாய் இன்று எழுதப்பட்டது புத்திளம் பூவையை வர்ணனை செய்தான் புதுக்கவி எழுதி கற்பனைகள் நெய்தான் வார்த்தை வராது வசமிழந்து துடித்தான் முணுமுணுக்கும் வார்த்தைகளில் முழுக்கவியும் வடித்தான் உள்ளிருக்கும் எண்ணங்களை முழுகவியாய் வடித்தான் பாதாதி கேசம் வரை பாஎழுதி உணர்ந்தான் இதழ்கள் எதையோ அசைபோட்டது இனிதாய் ஏதோ இசை கேட்டது வேலையும் முடிந்தது விரல்களும் சோர்ந்தது கவிதையும் முடிந்தது காகிதம் நிறைந்தது கவிதை படிக்கும் உள்ளம் கொண்டோர் கருப்பொருள் இரண்டினைப் புரிந்து கொள்வீர் இரண்டும் புரிந்து ஏற்றுக் கொண்டால் இரட்டுற மொழிதல் எனக்கும் தெரியும் குறுங்கவிதைகள் நீ என்னை கடந்து செல்கையில் என் பார்வை இறங்க மறுக்கிறது உன் இரட்டை சடையிலிருந்து அந்த நீலநிறச் சுடிதார் நிச்சயமாய் அழகில்லை நீ அணியும் முன்பு வரை எந்தப் பூவிலும் இப்படி ஒரு மென்மையில்லை இன்னொருமுறை தொடு ஒன்றும் புரியவில்லை என்ன கேட்டாய் ? ஒற்றைப் புருவ நெளிவில் கனவா ? நினைவா ? திரைப்படம் பார்த்து திரும்பும் வழியில் கோடை மழைவரக் குளிர்ந்ததென் நெஞ்சம் காட்டுவழிப் பாதையில் கட்டிவைத்த ஒட்டுவீட்டில் ஒதுங்கி நின்றோம் உடனிருந்தவள் அத்தை மகள் உள்ளங்கையில் தேனாய் அவள் உடைந்த ஓட்டில் ஒழுகிய நீரோ ஒதுங்கிய எங்களின் இடைவெளி குறைத்தது மொத்தமாய் நனைந்தும் தாகம் எடுத்தது மோகமோ எந்தன் சிந்தை கெடுத்தது ஆசைப் பார்வையை அவள் மேல் தொடுத்தேன் அறியாதவள் போல் அவளும் நடித்தாள் அனுமதியின்றி செய்தேன் சில தொல்லை அவளிடம் எதிர்ப்பு ஏதும் இல்லை நனைந்த மேனியில் கண்கள் நடந்தன நாணம் என்பதை காமம் கடந்தது வாரிய கூந்தலும் கைகளில் கலைந்தது வாலிபக் கரங்களில் வளையல்கள் உடைந்தன உச்சி முகர்ந்து ஒருகனம் உருகினேன் நெற்றி நின்ற நீர்த்துளி பருகினேன் நேத்திரம் இரண்டில் சூத்திரம் படித்தேன் நேற்றைய கனவுகள் நிகழ்ந்திடத் துடித்தேன் கன்னம் சிவப்பாய் வண்ணம் மாற்றினேன் உதடுகள் இணைத்து வெப்பம் ஏற்றினேன் கழுத்தின் பின்புறம் கைகளைப் பதித்தேன் காதல் கடந்து காமத்தில் குதித்தேன் கழுத்தின் கீழே கண்டேன் மச்சம் கலையா கலிங்கம் அதுவே மிச்சம் மயக்கும் சிற்றிடை ஏக்கமாய் கடந்தேன் மற்றவை கடந்து தாள்வரை நடந்தேன் குஞ்சலம் ஆடும் இடங்கள் ரசித்தேன் சஞ்சலம் மிகுந்து வெறியில் பசித்தேன் வாழைத்தண்டு கால்கள் தொடர்தேன் பந்தல் கொடியாய்ப் பாவையைப் படர்ந்தேன் ஒருதுளி மழைநீர் நெற்றியில் பொட்டிட உணர்ச்சி வந்து கண் விழித்துப் பார்த்தேன் உறங்கிக் கொண்டிருந்தேன் ஒட்டுத் திண்ணையில் மழையைக் கடிந்தேன் கனவைக் கலைத்ததற்கு உனக்காக சில கவிதைகள் என்னிடம் இரவல் வாங்கிய புத்தகத்தில் நீ கொடுத்தனுப்பிய பரிசு மஞ்சள் விரல் தடங்கள் நீ வெட்கப்ப்படும்போதேல்லாம் என்னைப் பார்க்க மறுக்கிறாய் என்னைப் பார்க்கும்போதெல்லாம் வெட்கப்படுகிறாய் … காதலைச் சொல்ல வேண்டும் கைபேசி எண்களையாவது தா உண்மையில்(லை) கற்பனைதான் வெகு வருடங்களுக்குப்பின் அந்த மரப்பெட்டி இன்று தான் பரணிலிருந்து இறக்கப்பட்டது இலந்தையின் கிளைகள் போல முதுமை வரைந்த கோடுகள் முகமெல்லாம் சுருக்கங்கள் இவர் உலகம் நிசப்தமாகி எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன காதுகள் பெயருக்குத்தான் அரசு பேருந்தின் அலறல் ஒலியும் மாதா கோவில் மணியோசையும் மட்டும்தான் மெதுவாய்க் கேட்குமாம் அவரைக் கடந்து செல்பவர்களை அடையாளம் காணுமளவிற்கு கண்பார்வை இருந்தது வியப்புதான் மரகதப் பாட்டியின் மறைவிற்குப் பின் இவரைச் சுற்றி மனித வாசனையே இல்லாமல் போய்விட்டது அந்தத் தபால்காரத் தாத்தாவுக்கு இப்போது எப்படியும் எழுபதைத் தாண்டியிருக்கும் அவர்களுக்குத்தான் குழந்தைகள் இல்லை என்றாலும்எங்கள் தெருவில் எல்லோரும் அவர்களின் குழந்தையாய் வளர்ந்தவர்கள்தாம் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளாத எல்லாவற்றையும் இந்த மரப்பெட்டியில்தான் பத்திரப்படுத்தியிருந்தார் தாத்தா கருப்பு வெள்ளையில் அவரின் காதலியின் படமும்(!) மரகதப் பட்டியின் மஞ்சள் நிற பட்டுப் புடவையும், கிழிந்துபோன அவரின் கல்யாண வேட்டி சட்டையும், பாட்டியின் மூக்குக் கண்ணாடியுமாக இன்னும் என்னிடம் சொல்லாத எத்தனையோ புதையலாய் நிதானமாய் ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தார் 25.06.70என்று முத்திரையிடப்பட்டிருந்தது இன்னும் பிரிக்கப்படவே இல்லை பெறுநர் முகவரி “மூக்கன் கீழத்தெரு” என்னால் பட்டுவாடா செய்ய முடியாமல் போன ஒரே ஒரு காதல் கடிதம் இது தான் என்றார் கடிதம் வந்த அன்றுதான் மூக்கன் ஜமீன் வீட்டுக் காளை முட்டி இறந்து போனானாம் கடிதத்தைப் பிரித்துப் படித்தேன் “அன்பே … நலம் என்று எழுதும் நிலையில் நானில்லை நேற்றுதான் ஊத்துமலை ஜமீனிலிருந்து என்னைப் பெண் பார்த்துச் சென்றார்கள் வருகிற முகூர்த்தத்தில் திருமணமாம் உயர்ந்த சாதியில் பிறந்த ஒரே ஒரு பாவத்திற்காக உயிரை மாய்த்துக் கொள்கிறேன் இக்கடிதம் உன் கையில் கிடைக்கும் நேரம் நான்……” குறுங்கவிதைகள் உன் கைக்குட்டை உறிஞ்சாமல் விட்ட ஒருதுளி வியர்வையையும் கூட கவனித்துவிடுகின்றன என் கண்கள் நீ எவ்வளவு மறைத்தாலும் பார்த்துவிடுகிறேன் தினமும் உன் பவளப் பற்வரிசையை எத்தனை முறை ஒத்திகை பார்த்தாலும் உளறிவிடுகிறேன் உன்னிடம் மட்டும் அமாவாசையை மறந்து நிலவைத் தேடுகின்றன கண்கள் இன்று கல்லூரி விடுமுறை சிவப்பு விளக்குப்பகுதி சிறுமிகள் இனி அழுது பயனில்லை நாங்கள் ஏற்கனவே விற்கப்பட்ட ரோசாக்கள் முட்களையும் தாண்டி ரோசாவை லாவகமாய் பறிக்கும் உலகத்தில் முட்களில்லா ரோசாக்கள் நாங்கள் எங்கள் அழகு அழியும் வரை விடியலே கிடையாது எப்பொழுதும் இரவு தான் தூங்குவதற்கு மட்டும் அனுமதியில்லை ஆயுள் முடிவதற்குள் தப்பிச் செல்ல வழிஇருக்கிறது செல்லும் இடம்தான் இல்லை நாங்கள் உறவுகளாலேயே விற்கப்பட்ட ரோசாக்கள் உயிரை மாய்த்துக் கொள்ள ஒரே ஒரு வழிதான் தூக்கில் தொங்கலாம் எப்பொழுதும் காலடியில்தான் தாவணி இருக்கிறது தனிமைதான் இல்லை முத்தம் உன்னைப்பற்றி புகழும் போது என் உதடுகள் விருப்பப்பட்டது உன் மென்மையைச் சோதிக்க வேண்டுமாம் உள்ளங்கையைத் தா என் உதடுகள் ஒருமுறை உன் மென்மையை உணர்ந்து கொள்ளட்டும் ராசா ராணி வெறிச்சோடிக் கிடக்கிறது வெள்ளைச்சாமித் தாத்தா வீட்டுத் திண்ணை இன்று பெளர்ணமி வெளிச்சம் இருந்த போதும் வெறிச்சோடிக் கிடக்கிறது எங்கே போனார்கள் எங்கள் சிறுவர்கள் எங்கள் ஆரம்பப் பள்ளி நாட்களில் நான்கடி அகலமும் ஏழடி நீளமுமான அந்தத் திண்ணைதான் எங்களின் ராசாங்க மேடை திண்ணையின் கிழக்கு ஓரத்தில் தலைவைத்துத் தூங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த திண்டுதான் ராசாவுக்கான அரியணை எங்கள் ராசா ராணி விளையாட்டில் எப்போதும் வாத்தியார் மகன்தான் ராசா ஆம்!கிழியாத சட்டை போட்டவன்தானே ராசாவாகலாம். அவனின் ஆணைகளின் படி ராணி மட்டும் அடிக்கடி மாற்றப்படுவார்கள் ஒருநாள் ராசா தேவகியை ராணியாகக் கட்டளையிட்டான் எங்கள் தெருவின் தேவதைகளில் ராணியாக நடிக்க மறுத்த முதல் தேவதை அவள்தான் அன்று தேவகியும் நானும் புன்னகை பரிமாறிக்கொண்டதில் பொறாமை கொண்ட ராசா எங்களுக்கு விதித்த தண்டனை இருவரும் விளையாட்டில் இருந்து அன்று நீக்கப்பட்டோம் அந்தப் பெளர்ணமி நாளில்தான் அவள் எனக்கு முதன்முதலாய் நிலவை ரசிக்கக் கற்றுக்கொடுத்தாள் விளையாட்டு கலைந்து அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு ராணியாக அரியணை ஏறினாள் அவளருகே ராசாவாக நான் இன்றும் பௌர்ணமிகள் அவளையே நினைவுபடுத்துகின்றன அவள் மகனுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாளோ தெரியவில்லை என் மகளின் பெயர் தேவகி அன்புள்ள அக்காவிற்கு… அன்புள்ள அக்காவிற்கு இப்படி எழுதி எத்தனை ஆண்டுகாளாகிவிட்டன உனக்குத் திருமணமான சிலநாட்களில் இப்படி எழுதியதாய் ஞாபகம் அப்போது நம் தெருவில் பட்டாளத்தாரின் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்தது அன்றைய நாளிலிருந்து இன்றுவரை நான் அதிகமாய்க் கடிதம் எழுதியது உனக்கு மட்டும்தான் காலையிலிருந்து என் கைபேசியில் குறுந்தகவலுக்கான ‘டிங் டிங்’ ஒலியில் எல்லாம் எதிர்பார்த்தது உன் பெயர்தான் உன்னிடமிருந்து ஒரு தவறிய அழைப்பையாவது எதிர்பார்த்தேன் ஏமாற்றமே மிஞ்சியது இன்றைய நாட்களில் தொலைபேசிகளால் நம் தூரம் குறைந்தது கைபேசிகளால் நம் கடிதம் மறைந்தது அதனால்தான் இன்று சில வருடங்களுக்குப் பின் கடிதம் எழுதுகிறேன் இன்று எந்த நாள் நினைவிருக்கிறதா உனக்கு? புதிய புத்தக வாசனை உனக்குப் பிடிக்கும் என்பாய் பூக்காமல் உதிரும் மொட்டுக்கள் பார்த்து வருத்தம் கொள்வாய் புளியமரத்தில் ஊஞ்சலாட மிகப் பிடிக்கும் என்பாய் புளி தின்றால் அம்மா உன்னை அடிக்கும் என்பாய் வண்ணங்களில் பிடித்தது வான் நீலம் என்பாய் வாலறுந்த பல்லி பார்த்தால் பயத்தில் சத்தம் செய்வாய் நினைவிருக்கிறதா உனக்கு? எறும்பு பற்றிய என் முதல் கவிதையின் முதல் ரசிகை நீதான் எனக்கு பட்டாசு இல்லாத ஒரு தீபாவளியில் நீதான் எனக்கு உன் வீட்டிலிருந்து மத்தாப்பு திருடிக்கொடுத்தாய் திருசெந்தூர் செல்லும் வழியில் முதன் முதலாய் காற்றாலைகளை நீதான் எனக்குக் காட்டினாய் என் அம்மாவிற்கு அடுத்ததாய் பௌர்ணமியில் நீ தான் எனக்கு நிலாச் சோறு ஊட்டினாய் நான் முதன்முதலில் கடலோடு விளையாடியதும் கூட உன்னோடுதான் இப்படியாக உன்னைப் பற்றிய எதையுமே நான் இன்னும் மறக்கவில்லை நீ மட்டும் எப்படி மறந்தாய் ? இன்று என் பிறந்த நாள் என்பதை. உனக்காக ஓர் கடிதம் நான் அ ஆ பழகிய நாட்களிலேயே எனக்குள் எழுந்த முதல் கவிதை நீ வெள்ளைக் காகிதமாய் இருந்த என் மனதில் காதல் வரைந்த முதல் ஓவியம் நீ காதல் என்ற வார்த்தைக்கு பொருள் அறியுமுன்னரே நமக்குள் உண்டான பிணைப்பை இன்று உணர்கிறேன் காதலாய் முதல் காதல் என நான் உச்சரிக்கும் போதே நினைவில் வருவது உன் வளையோசை சிரிப்பும் வசீகர முகமும்தான் எழுது கோலுடன் நான் சிநேகிக்கும் முன்னரே சிலேட்டுக்குச்சியால் எழுதிய முதல் கவிதை உன் பெயர்தான் விளையாடும்போது ஏற்பட்ட சிராய்ப்புக் காயங்களில் நீ தொட்டுத் தடவிய எச்சில் மருந்து பாவாடையில் கடித்து எனக்கு நீ பகிர்ந்து கொடுத்த அந்தப் பாக்கு மிட்டாய் சுற்றும் பம்பரம் பிடித்து உன் கைகளில் விட்ட போது உலகமே கையில் வந்ததாய் சிரித்தாயே ஓர் மத்தாப்புச் சிரிப்பு இவையெல்லாம் இன்றும் என் ஞாபகக் கிடங்கில் பத்திரமாய் உள்ளது பாண்டி விளையாடுகையில் கீழே விழுந்து நீ அழுதபோது என் விரல்களில்பட்ட கண்ணீர்த்துளி இன்றும் ஈரமாகத்தான் உள்ளது நம் காதல் துவக்கப்பள்ளியில் துவங்கி நடுநிலைப்பள்ளியில் முடிந்து போனது எனக்கு காதலைப் பரிசளித்து விட்டு நீதான் காலச்சக்கரத்தால் எங்கோ காணமல் போனாய் இன்றும் என் பால்யகாலக் கனவுகளில் நீதான் வந்து சிரித்துக் கொண்டிருக்கிறாய் சிற்றாடைச் சிறுமியாய் பறந்து போன பட்டாம்பூச்சியே உன் வண்ணங்கள் இன்றும் என் எண்ணங்களில் மிதந்து கொண்டுதான் இருக்கின்றன அஞ்சலுக்கு வராத இந்தக் கடிதம் அச்சுக்கு வந்த பின் நீயும் என்னை நினைப்பாய் நிச்சயமாய்… காகிதப் பூ பௌர்ணமியின் பால்நிலா ஊரையே நனைத்துக்கொண்டிருக்கிறது என் மனம் மட்டும் அமாவாசையாய் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறது நிரம்பி வழியும் இறுக்கமான இந்த நிசப்தத்திலும் கூட என் காதுகளில் கானமாய் காதலியின் கீச்சுக்குரல் வார்த்தைகளுக்குப் பொருள்கூற அகராதிகள் அதிகமுண்டு மௌனங்களுக்குப் பொருள்கூற அகராதி ஒன்றேயொன்று காதல்… காவியங்களுக்கு உரை எழுதும் பலருக்கும் கடினமான பணிதான் காதலியின் கண் அசைவுக்கு உரை எழுதுவது அறிஞர் பட்டம் பெற்றவரும்கூட அறியாத அந்த வித்தை காதலர்களுக்கு மட்டும் கைவந்த கலை எங்களுக்குள் காதல் வந்த காலம் அல்லது காதலுக்குள் நாங்கள் சென்ற காலம் மட்டுமே வசந்த காலமாய் என் பழைய தினசரிக் குறிப்பில் நான் வசித்துப் பார்த்த வசந்த காலங்களை வாசித்துப் பார்க்க விரும்பி இதோ … … பரண் மேலிருந்த பழைய குறிப்பேட்டைத் தூசி தட்டுகிறேன் அவளுக்கே தெரியாது எனக்குக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்தது அவள்தான் என்று நான் பக்கங்களில் பயணிக்கும் இந்நேரம் பக்கம் வந்து பேசிச் செல்கிறாள் களங்கமில்லாக் காதலில் தொடமுடிந்த தூரத்தில் தொடாமலிருந்த அவளை தொட முடியா தூரத்தில் தொட்டுப் பார்க்கிறேன் நான் அவளிடம் என் காதல் பற்றிப் பேச முனையும் போதெல்லாம் எதிர்காலம் பற்றிப் பேசியே முற்றுப் புள்ளி வைப்பாள் ஏப்ரல், மே எல்லோருக்கும் கோடை காலம் எங்களுக்கு வசந்த காலம் எங்களின் காலை உரையாடல்களே சூரிய மறைவிலும் முற்றுப்பெறாமல் எச்சமாகத்தான் இருக்கும் என் காதல் தோட்டத்தின் கருப்பு ரோசாவுக்கு கல்யாணமாம் நண்பன் வழிச் செய்தி என் கடந்த காலக் காதலைக் கவிதையாய் எழுதிவிட்டுக் குறிப்பேட்டை மூடி வைத்தேன் என் காலம் கடந்த காதல் என்றும் காகிதப் பூவாய் வாசமும் இல்லாமல் வாடவும் இல்லாமல் என்றும் எனக்குள் அழகாக கருப்பு மலருக்காக… நினைவுப் பரிசாய் ஒரு கவிதை வேண்டுமாம் கல்லூரியின் கடைசி நாளில் அவள் கேட்கிறாள் தூக்கு தண்டனைக் கைதியிடம் கேட்கப்படும் கடைசி ஆசையைப் போல எடுத்துவரவும் தோன்றவில்லை விட்டு வரவும் மனமில்லை பேருந்து இருக்கையில் யாரோ விட்டுச் சென்ற ஒற்றை ரோசா… உன்னை நினைவுபடுத்துவதால் எங்கே சென்றாய் ? மொழி தெரியாத இந்த ஊரில் நான் வந்திறங்கிய முதல் நாளில்தான் நடந்தது நம் முதல் சந்திப்பு அன்று எனக்கு உன் மொழிதான் புரியவில்லை உன் கோபப் பார்வை நன்றாகவே புரிந்தது ஏனோ என்னை உனக்குப் பார்த்ததும் பிடிக்கவில்லை எனக்கும் கூட உன் கோபப் பார்வையால் உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை அன்றைய நாட்களில் தினமும் காலை அலுவலகம் செல்கையிலும் மாலை என் அறைக்குத் திரும்பையிலும் உன் பார்வையிலிருந்து எப்படியாவது தப்பிவிட விரும்புவேன் சில நேரங்களில் மாட்டிக்கொண்டு பயந்துகொண்டிருப்பேன் அப்படியான ஒரு மாலையில்தான் அந்தத் தெருக்கோடி இட்லிக்கடைப் பாட்டி உன்னிடம் இந்தியில் எதோ சொன்னாள் நீயும் மௌனமாய் நகர்ந்தாய் அன்றிலிருந்துதான் நாம் நண்பர்களானோம் அதன்பின்புதான் என் காலை மாலை உணவுகளில் உனக்கும் ஒரு பங்கு பழக்கமானது இப்போதெல்லாம் என்னை வழியனுப்பி வைப்பதும் வரவேற்கக் காத்திருப்பதும் உன் அன்புப் பார்வையே அதிகாலை எழுந்து என் அறைக்கதவு திறக்கப்படும்போது நீ என் வாசலில் நிற்பாய் நடுஇரவு கடந்து நான் தூங்கச் செல்கையிலும் நீ தூங்காமல் விழித்திருப்பாய் தூக்கம் கலைந்த இரவுகளில் நான் புரண்டு படுக்கும்போதும் வெளியில் நீ விழித்திருப்பதை உன் சப்தங்கள் மெய்பிக்கும் அந்தக் கார்த்திகை மார்கழி இரவுகளில் மட்டும் காணாமல் போயிருப்பாய்! அதன் பரிசுதான் இதோ என் அருகே இரு குட்டிகள் சில நேரங்களில் நான் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கையில் சிலர் சிரித்துவிட்டுச் செல்வார்கள் வாய் மட்டுமே பேசும் என நினைப்பவர்களுக்கு எப்படித் தெரியும் உன் கோலிக்குண்டு கண்களும் குட்டி வாலும்கூட பேசும் என்று வழக்கமாய் இருப்பதுபோல் இன்று மாலை நீ எனக்காகக் காத்திருக்கவில்லை இரவு நேரமாகியும் நீ இன்னும் வீடு திரும்பவுமில்லை உன்னைக் காணா ஏக்கத்தால் என்னோடு உன் குட்டிகளும் வெகுநேரமாய்த் தெருவையே பார்த்துக்கொண்டிருக்கின்றன காலையிலிருந்து தெருவில் உன்னை யாருமே பார்க்கவில்லையாம் நீ அடிக்கடி கடக்கும் பரபரப்புச் சாலையிலும் இன்று எந்த விபத்துமே நடக்கவில்லையாம் இதுபோல் இதுவரை நடந்ததுமில்லை எங்கே சென்றாய்??? எங்களைத் தவிக்கவைத்துவிட்டு நீ எங்கே சென்றாய்??? எங்கே சென்றாள்? “நாகர்கோவில் ரயில் விபத்து” தொலைகாட்சியில் செய்தி பார்த்ததும் என்னையும் அறியாமல் மனம் அந்த லின்சி டீச்சரைப் பற்றிய நினைவுகளைத்தான் அசைபோடுகிறது அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள் முதலில் இருப்பாளா? அப்படியே இருந்தாலும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பாளா? அவளை இவ்வளவு நாள் நினைக்காமல் இருந்தும் ஏனோ மறக்க முடியவில்லை மனம் எனும் ஆழியின் ஆழத்தில் புதைந்து போன அந்த மதிமுகம் மெதுவாய் மேலே மிதந்து வருகிறது அவள் புடவை மடிப்பில் பொறாமை கொள்ளாத கண்டாங்கி மயில்கள் யாரும் எங்கள் ஊரில் இல்லை சுடிதார் என்றொரு ஆடை இருப்பதை எங்கள் ஊருக்கு அறிமுகம் செய்தவளும் அவள் தான் எனக்கு எழுத்துக்களை மட்டுமல்ல இயேசுவையும் அறிமுகம் செய்து வைத்தவள் அவள் எங்காவது சிலுவை மோதிரம் பார்க்கும் போதும் அவள்தான் என் நினைவில் சிரிக்கிறாள் என் வீட்டை அடுத்த இரண்டாவது வீட்டில் தான் அவள் தங்கியிருந்தாள் தாய் தந்தை இல்லையென்றும் நாகர்கோவிலில் ஏதோ ஒரு கிறிஸ்தவ ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்றும் எங்கள் ஊருக்கு வந்த ஆரம்ப நாட்களில் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் நல்லதை எல்லாம் கற்றுக் கொடுத்த அவர்கள் அவளுக்கு கெட்டதை அடையாளம் காணவும் கற்றுக் கொடுக்கவில்லை போலும் அடுத்த தெருவில் இருப்பவர் அன்புமணி மாமா அப்போது எங்கள் கிராமத்தின் அழகான அறிவான இளைஞர் அவர் மட்டுமாகத்தான் இருப்பார் அவ்வப்போது எங்கள் தெரு பெட்டிக்கடைக்கு வருவார் டீச்சரின் வருகைக்குப் பின் அடிக்கடி வந்தார் கண்களில் காதல் வளர்த்தவர் கடிதத்திற்கு முன்னேறியபோது என்னைத்தான் தூதுவனாய்ப் பயன்படுத்திக்கொண்டார் ஒருநாள் அம்மா கொடுத்தனுப்பிய பனங்கிழங்கை அவளிடம் கொடுக்க வீட்டிற்கு சென்றபோது மாமாவின் மிதியடி வாசலில் கிடப்பதை நான் கவனித்ததை அவள் கவனிக்கவில்லை அவர்களில் காதல் சங்கரன்கோவில் சினிமா முதல் குற்றாலம் குளியல் வரை சென்றதாம் ஊரில் சிலர் பேசிக்கொண்டார்கள் சிலநாட்கள் நள்ளிரவில் தூக்கம் கலைகையில் அவள் வீட்டிலிருந்து மாமா வெளியேறுவதை நான் பார்த்திருக்கிறேன் ஒருநாள் மாலையில் கூட்டப் புளியமரத்துத் திடலில் ஊர் கூடியிருந்தது கிடாய் மீசை பெரியப்பாவும் இன்னும் சில அடையாளம் மறந்து போன பெரிசுகளும் குற்றவாளியைப் போல டீச்சரை விசாரித்துக்கொண்டிருந்தார்கள் டீச்சர் அழுதவாறே ஏதோ சொல்வதும் மாமா அதை தலையாட்டி மறுப்பதுமாய் என்ன நடக்கிறது என்று எனக்கு அப்போது புரியவில்லை எங்கள் கிராமத்தின் மருத்துவச்சிக் கிழவி அவளிடம் ஏதோ ஒரு உருண்டையை உண்ணுமாறு கட்டாயப்படுத்திக்கொண்டிருந்தது மட்டும் நினைவிருக்கிறது பஞ்சாயத்து முடிய இரவு நேரமாகிவிட்டது மறுநாள் காலையில் டீச்சரின் வீடு பூட்டிக் கிடந்தது அன்புமணி மாமாவின் மகளுக்கு ஐந்து வயதாகிறது இப்போது பள்ளியில் சேர்க்கச் சென்றுகொண்டிருக்கிறார் டீச்சர் எங்கே சென்றாள்? இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? உயிரோடு இருப்பாளா? அப்படியே இருந்தாலும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பாளா? ஒருநாள் மட்டும் வெகுநாட்களுக்குப் பின் இன்று வானத்தில் மேகமூட்டம் மகிழ்ச்சியாய் இருக்கிறது இரவு எப்படியும் மழைவரும் இன்றுதான் வைக்க வேண்டுமா சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாலைநேரம் முடிந்து இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது அலுவலக மேலாளரைக் கடிந்துகொண்டே கால்கள் நடைபோட்டன பேருந்து நிலையம் நோக்கி மல்லி வாங்காததற்காய் தினமும் ஏளனமாய்க் கடந்து செல்லும் அதே பூக்காரரை அழைத்து மல்லி வாங்கி பக்குவமாய்க் கைப்பையில் மறைத்தாயிற்று அவளுக்குப் பிடித்த தேன்மிட்டாய் எனக்குப் பிடித்த உலர்திராட்சை இருவருக்கும் பிடித்த இஞ்சிமிட்டாய் மறக்காமல் வாங்கியாகிவிட்டது வீடு திரும்பையில் தினமும் செல்லும் பிள்ளையார் கோவில் இன்று ஒருநாள் மட்டும் வேண்டாமென முடிவாயிற்று இன்னும் வரவில்லை வீடு செல்லும் பேருந்து நேரம்8.30 நெருங்கிவிட்டது மூ(பூ)த்த மகளும், இளைய மகளும் படிக்கும் பள்ளியில் இன்று இன்பச் சுற்றுலா செல்கிறார்கள் நள்ளிரவில் புறப்படுவதாய்த் திட்டம் இரவே பள்ளிக்குச் செல்ல வேண்டுமாம் வீட்டிற்குச் செல்ல இன்னும் அரைமணி நேரமாகும் இன்றிரவு மகள்கள் வீட்டில் இருக்கமாட்டார்கள் எல்லா ஏற்பாடுகளும் சரி இன்று என்னவளுக்கு … … அப்படி இருக்க வாய்ப்பில்லை வழக்கம் போலவே காலையில் மகள்களுக்கு அவள்தானே விபூதி வைத்துவிட்டாள் எப்போதாவது வீடு வரும் உறவினர்கள் இன்று மட்டும் வந்திருக்கக் கூடாது மனதினுள் மௌனப் பிரார்த்தனை சில நிமிட நடையில் வீடடைந்துவிடலாம் நல்ல நாவலின் கடைசி பத்துப் பக்கங்கள் புரட்டும் பரபரப்பு மனதில் வாசல் நுழைந்ததும் வண்ண மயிலாய் அவள் கட்டியிருந்த கசங்காத புடவையில் கசங்குகிறது மனம் அவள் இதழ்களில் உதிரும் புன்னகை இது வழக்கத்திலிருந்து மாறுபட்டுள்ளது இன்று வானமும் மகிழ்ச்சியாயிருக்கிறது இடியும் மின்னலுமாய் வெளியில் வானம் வெகுநாட்களுக்குப் பின் இன்று வானத்தில் மேகமூட்டம் இன்னும் சிறிது நேரத்தில் எப்படியும் மழைவரும் கடைசிப் பக்கம் நாட்காட்டியின் கிழிக்கப்பட்ட காகிதங்கள் நாங்கள் எங்களை யாரும் எடுத்துப் பார்ப்பதுமில்லை யாருக்கும் நாங்கள் தேவையுமில்லை உடம்பில் மீதமிருக்கும் குருதியால் எம் ஈழ மண்ணில் எழுதப்படும் எங்கள் வாழ்வின் கடைசிப்பக்கம் இது அவன் இராணுவ விடுப்பில் வீட்டிற்குச் சென்று வெகு நாட்களாகிவிட்டதாம் மலராத சிறுமிகளையும் மார்பில் கைவைக்கிறான் எதிர்த்துக் கேட்டதால் எங்கள் ஆண்களின் இடுப்பொடிக்கிறான் என் சிசுவின் உதடுகளை நனைக்க மார்புகள் சுரக்க மறுத்ததால் இன்றுதான் இறந்தது சிசு நீங்கள் பதறவேண்டாம் இதுதான் உங்கள் செய்தித்தாள்களில் தினமும் பார்த்துப் பழகிவிட்டதல்லவா? அவர்களில் ஒருவன் அமில வார்த்தைகளால் என்னை வர்ணிக்கிறான் இன்னொருவன் என் மார்பிலேயே மரித்துப்போன என் குழந்தையைத் தூக்கி எரிந்து பிடிக்கச் சொல்லி சிரிக்கிறான் நாங்கள் கூட்டமாய் நின்று அழுவதற்கும் அனுமதி இல்லையாம் என்னைக் கட்டாயமாகத் தனியறைக்கு இழுத்துச் செல்கிறான் ஒருவன் ஏதோ விசாரிக்க வேண்டுமாம் அவர்கள் கட்டுப்பாட்டில் விசாரணைக் கைதிகள் ஆடையுடன் இருக்க அனுமதி இல்லையாம் என்னைக் கொன்றுவிடுமாறு வேண்டி கைகூப்பினேன் உணவு தருவதாய் ஒருவன் ஆசையூட்டுகிறான் நீங்கள் பதற வேண்டாம் எப்படியும் அவர்கள் விசாரணையில் நான் இறந்துவிடுவேன் ஏதோ நிவாரணப் பொருட்கள் அனுப்பியுள்ளீர்களாமே?! விறகிற்கு நீர் எதற்கு? வருவீர்கள் என்ற நம்பிக்கையில் வாய்விட்டு அழுதோம் வரவில்லை வருவீர்களா என்ற எதிர்பார்ப்பில் தினம் தினம் புலம்பினோம் வரவில்லை மௌனமாகிவிட்டோம் நீங்கள் பதற வேண்டாம் எப்படியும் அவர்கள் விசாரணையில் என்னைக் கொன்றுவிடுவார்கள் ஈழத் தமிழச்சிகள் வாழ்வின் கடைசிப் பக்கம் இது