[] 1. Cover 2. Table of contents தூக்குத் தண்டனை தூக்குத் தண்டனை   கல்கி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/thooku_thandanai மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு : விக்கிமூல பங்களிப்பார்கள் அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reader : Wikisource Constributors Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc தூக்குத் தண்டனை 1 அமாவாசை இரவு. திவான் பகதூர் ஜட்ஜ் அஸ்டோ த்தரமய்யங்கார் சுகமான பஞ்சு மெத்தைப் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டிருந்தார். என்ன புரண்டாலும் தூக்கம் வருகிற வழியாயில்லை. தலைப் பக்கத்துத் தலைகாணியைக் கால் புறத்திலும், கால் புறத்துத் தலைகாணியைத் தலைப்புறத்திலும் வைத்துக் கொண்டு பார்த்தார். அப்படியும் தூக்கம் வரவில்லை கடிகாரத்தில் மணி அடிக்கத் தொடங்கிற்று. “ஒன்று, இரண்டு, மூன்று…” என்று எண்ணிக் கொண்டே வந்தார். பன்னிரண்டு மணி அடித்து ஓய்ந்தது. “இனிமேல் கட்டாயம் தூங்க வேண்டியதுதான்” என்று ஜட்ஜ் அய்யங்கார் திடசங்கல்பம் செய்து கொண்டு கண்களை இறுக மூடினார். அப்போது அவருடைய மனக் கண்ணின் முன்பாக ஒரு பயங்கரக் கோரக் காட்சி தென்பட்டது. முதலில் எங்கேயோ வெகு தூரத்தில் உள்ளது போல் அந்தக் காட்சி மங்கலாய்த் தெரிந்தது. தூக்கு மேடையில் தூக்கு மரத்தில் ஒரு உருவம் தொங்கி இலேசாகக் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. சட்டென்று அந்தக் காட்சி, தூக்கு மரம், அதில் தொங்கிய உருவம் எல்லாம் வெகு சமீபத்தில் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. பால் வடியும் அழகிய வாலிபனுடைய முகம். ஆனால், முகத்தில் உயிர்க்களை இல்லை. கண்கள் விழித்தது விழித்தபடியே இருந்தன. உயிரில்லாத அந்தக் கண்கள் திவான் பகதூரின் இருதயத்தை ஊடுருவிப் பார்ப்பது போல் அவருக்கு உணர்ச்சி உண்டாயிற்று சட்டென்று அய்யங்கார் எழுந்து உட்கார்ந்தார். படுக்கையிலிருந்து கீழே குதித்தார். ஜன்னல் ஓரமாகச் சென்று ஜன்னல் கதவைத் திறந்தார். குளிர்ந்த காற்று உள்ளே ’விர்’ரென்று வந்தது. கொஞ்சம் ஆசுவாசம் ஏற்பட்டது. அய்யங்கார் ஜன்னல் ஓரமாக நின்று வெளியே தோட்டத்தில் பார்வையைச் செலுத்தினார். ஆஹா! அது என்ன! அதோ அந்த மரத்தின் கிளையில் ஏதோ தொங்குகிறாப் போல் இருக்கிறதே? ஐயோ?…படீரென்று ஜன்னல் கதவைச் சார்த்தினார் அய்யங்கார். இருட்டில் தடவிக் கொண்டே சென்று, ‘ஸ்விட்ச்’ இருக்குமிடம் கண்டுபிடித்து, மின்சார விளக்கை ஏற்றினார். அலமாரியைத் திறந்து கையிலகப்பட்ட புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தார். புத்தகத்தைப் பிரித்தார். ஆகா! புத்தகத்திற்குள் ஏதாவது தேள் ஒளிந்திருந்து அவர் கையில் கொட்டி விட்டதா என்ன? புத்தகத்தை அப்படித் திடீரென்று போட்டு விட்டுக் குதிக்கிறாரே? தேளுமில்லை கீளுமில்லை; அந்தப் புத்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தமாயிருந்தது தான் காரணம். திவ்யப் பிரபந்தத்தைப் பார்த்ததும் உபய வேதாந்தஸார உபந்நியாச சக்ரவர்த்தி சடகோபாச்சாரிய ஸ்வாமிகள் மதகுப்பட்டி கலக வழக்கில் கூறிய சாட்சியம் அய்யங்காருக்கு ஞாபகம் வந்தது. அவர் என்ன சாட்சி சொன்னார்? “மதகுப்பட்டிக் கலகம் நடந்த அன்றைக்கு முதல் நாள் இரவு நானும் திருமலையும் திருச்சி ஜங்ஷன் வெயிட்டிங் ரூமில் திவ்யப் பிரபந்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்!” என்றார். “பெரியாழ்வார் பாத சாட்சியாகவும் திருமங்கையாழ்வார் திருவடி சாட்சியாகவும் சத்தியமாய்ச் சொல்கிறேன்” என்று ஆணையிட்டார். சடகோபாச்சாரிய ஸ்வாமியை அஷ்டோ த்தரமய்யங்காருக்கு வெகு காலமாகத் தெரியும். பரம பக்தர்; சிறந்த அறிவாளி; உயர்ந்த ஒழுக்கமுள்ளவர். எத்தனையோ தடவை அவரிடம் அஷ்டோ த்தரமய்யங்கார் திவ்யப் பிரபந்த பாசுரங்களைக் கேட்டு மனமுருகிக் கண்ணீர் வடித்திருக்கிறார். அப்பேர்ப்பட்டவருடைய சாட்சியைப் பொய்ச்சாட்சி என்று தள்ளிவிட்டு, போலீஸ் சாட்சியத்தையே உண்மையென்று ஏற்றுக் கொண்டு திருமலைக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டியதாயிற்று! சடகோபாச்சாரியின் சாட்சியம் உண்மையாக இருக்குமோ? திருமலை நிரபராதிதானோ? குற்றமற்ற பையனையா நாளைப் பொழுது விடிந்ததும் தூக்கில் போடப் போகிறார்கள்? அந்தப் பாதகம் தம்முடைய தலையிலா விடியப் போகிறது? ஐயோ! இந்த ஜட்ஜ் உத்தியோகத்தை என்னத்திற்காக ஏற்றுக் கொண்டோ ம்? வக்கீலாகவே இருந்து காலத்தை ஓட்டி இருக்கக் கூடாதா?… இப்படி அய்யங்காரின் மனம் எண்ணாததெல்லாம் எண்ணி அலைந்தது. 2 மதகுப்பட்டிக் கலகமும், அதன் பயனாக விளைந்த மதகுப்பட்டிக் கலக வழக்கும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம்; ஆனால் தேசமெங்கிலும் அப்போது குழப்பமாய் இருந்தபடியால் நேயர்கள் சிலர் மறந்து போயிருக்கவும் கூடும். எனவே, வழக்கின் விவரங்களை இங்கே சுருக்கமாகக் கூறுகிறேன். சென்ற வருஷம் (1942) மகாத்மா காந்தி முதலியவர்கள் கைதியான புதிதில் மதகுப்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு அரை மைல் தூரத்தில், யாரோ, ஒரு தண்டவாளத்தைக் கழற்றி நகர்த்தியிருந்தார்கள். நல்ல வேளையாக விபத்து ஒன்றும் நேரவில்லை. பொழுது விடியும் சமயத்தில் வந்த முதல் ரயில் வண்டியின் டிரைவர் ரயில் பாதையில் தண்டவாளம் நகர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டான். அரைமணிக்குள் பாதை சரி செய்யப்பட்டு வண்டியும் போய்விட்டது. பிறகு மதகுப்பட்டி போலீஸார் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். அநேக வீடுகள் சோதனை போடப்பட்டன. ஹைஸ்கூலுக்குப் போய் எல்லா வகுப்புகளும் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஆறு மாணாக்கர்களைக் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனார்கள். அந்த ஆறு பேரைத் தொடர்ந்து பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் அவ்வளவு பேரும் கோஷித்துக் கொண்டு வெளிக் கிளம்பினார்கள். அன்று மதகுப்பட்டி வீதிகளில் புரட்சி கோஷங்கள் வானளாவ எழுந்தன. கூச்சலின் பலத்தைக் கொண்டு மட்டும் சுயராஜ்யம் கிடைப்பதாயிருந்தால், அன்று மதகுப்பட்டிக்கு இரட்டிப்பு சுயராஜ்யம் கிடைத்திருக்க வேண்டும். பள்ளிப் பிள்ளைகளின் பெருங் கோஷத்தைக் கேட்டு வியாபாரிகள் பீதியடைந்து மளமளவென்று கடைகளை அடைத்தார்கள். வீதிகளில் கூட்டம் அதிகமாயிற்று. போலீஸ் ஸ்டேஷனைச் சுற்றியும் கூட்டம் சேர ஆரம்பித்தது. ஸ்டேஷனுக்குள் அடைக்கப்பட்டிருந்த மாணாக்கர்கள் ஜன்னல் வழியாக வெளியில் நின்ற கும்பலைப் பார்த்துவிட்டு “புரட்சி ஓங்குக!” என்று கோஷமிட்டார்கள். வெளியில் நின்ற கூட்டத்தார் பதில் கோஷம் செய்தார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே மாணாக்கர்களை அடிக்கிறார்கள் என்ற வதந்தி கிளம்பி அந்த ஜனக் கூட்டத்தில் அதி வேகமாகப் பரவிற்று. ஜனங்களின் கொதிப்பு அதிகமாயிற்று. சமீபத்தில் ரோடு ரிப்பேர் செய்வதற்காகக் கப்பிக் கற்கள் கொட்டப்பட்டிருந்தன. இதனால் ஜனங்களின் கொதிப்பு வெளியாவதற்கு சௌகரியம் ஏற்பட்டது. கப்பிக் கற்கள் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் பறந்தன. போலீஸ்காரர்கள் கையில் துப்பாக்கியுடன் வெளி வந்து கூட்டத்தை நோக்கிக் குறிபார்த்தார்கள். இதன் பலனாகக் கூட்டத்தின் வெறி அதிகமாயிற்று. ஜனங்கள் ஸ்டேஷனை இன்னும் நெருங்கி வந்தார்கள். போலீஸ் துப்பாக்கியிலிருந்து வேட்டுக்கள் கிளம்பின. இரண்டொருவர் காயம்பட்டு விழுந்தனர். கூட்டம் ஒரே பாய்ச்சலாகப் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் பாய்ந்தது. துப்பாக்கியில் ரவைகள் தீர்ந்து விட்டபடியால் போலீஸ் சேவகர்கள் ஸ்டேஷனுக்குள் ஓடிப் புகுந்து கொண்டார்கள். கூட்டத்தில் ஒரே ஜயகோஷம் ஆரவாரம். இத்துடன் நின்றதா? இல்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் ஒரு சில மண்ணெண்ணெய் டிப்போக்கள் இருந்தன. கூட்டத்தில் சிலர் டிப்போவின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மண்ணெண்ணெய் டின்களை எடுத்து வந்தார்கள். புகை குடிப்பவர்கள் சிலர் நெருப்புப் பெட்டி கொடுத்து உதவினார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் புகையும் நெருப்பும் எழுந்தது. இதற்குள்ளாகத் தகவல் தெரிந்து ஜில்லா மாஜிஸ்ட்ரேட், போலீஸ் ஸுபரிண்டெண்ட் முதலியவர்கள் பெரிய போலீஸ் படையுடன் வந்து சேர்ந்தார்கள். இந்தத் தடவை நிஜமான துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது. சிலர் உடனே உயிர் துறந்து விட்டார்கள். பலருக்குக் காயம் ஏற்பட்டது. ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் கூட்டம் கலைந்து போயிற்று. தீயும் அணைக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் கட்டிடம் பாதிக்கு மேல் எரிந்து போயிற்று. அன்று மதகுப்பட்டியே சுடுகாடு மாதிரி இருந்தது. ஜனங்கள் யாரும் வெளியில் தலைகாட்டவில்லை. பிரேதங்களை எடுத்துச் சென்று தகன சம்ஸ்காரம் செய்யக் கூட முதலில் யாரும் முன் வரவில்லை. உறவினர்களுக்குத் தெரிவிப்பதற்கு வெகு நேரம் ஆகி விட்டது. கடைசியில் தகவல் எப்படியோ தெரிந்து காரியங்கள் நடந்தேறின. மறுநாள் மதகுப்பட்டியில் பிரிட்டிஷ் அதிகாரம் தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கியது. எங்கே பார்த்தாலும் போலீஸ் மயமாக இருந்தது. போலீஸார் வீடு வீடாகப் புகுந்து, முதல் நாள் கலகத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்து வந்தார்கள். மொத்தம் 186பேர் கைது செய்யப்பட்டனர். பின்னால் இவர்களில் முப்பது பேர் தகுந்த சாட்சியமில்லையென்று விடுவிக்கப்பட்டனர். பாக்கி 156 பேர் மேல் கேஸ் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியப் பாதுகாப்புச் சட்டத்திலும் பீனல் கோடிலும் உள்ள செக்ஷன்கள் இந்தக் கேஸில் பிரயோசனப்பட்ட மாதிரி இதுவரை வேறு எந்தக் கேஸிலும் உபயோகப்பட்டது கிடையாது என்று பிரசித்திப் பெற்ற ‘கிரிமினல்’ வக்கீல்கள் சொன்னார்கள். திவான் பகதூர் ஜட்ஜ் அஸ்டோ த்தரமய்யங்காரின் கோர்ட்டில் உரிய காலத்தில் மேற்படி கலக வழக்கு விசாரணைக்கு வந்தது. 3 மதகுப்பட்டிக் கலக வழக்கில் முதலாவது எதிரி திருமலை என்னும் இளைஞன். இவன் பேரில் மொத்தம் ஒன்பது செக்ஷன்கள் பிரயோகிக்கப்பட்டன. தண்டவாளத்தை பெயர்த்தது முதற்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குத் தீ வைத்த வரையில் பல குற்றங்கள் சுமத்தப்பட்டன. திருமலையின் சார்பாகப் பிரபல வக்கீல்கள் வைத்துப் பலமான எதிர் வழக்கும் ஆடப்பட்டது. திருமலை அவனுடைய பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை. மதகுப்பட்டிக்கே அவன் செல்லப்பிள்ளை. நல்ல அறிவாளி; முகவெட்டும் வாக்குச் சாதுர்யமும் உள்ளவன். சிறந்த ஒழுக்கம் படைத்தவன்; பொதுக் காரியங்களில் அளவற்ற ஊக்கமுடையவன். இத்தகைய குணங்களினால் அவன் மதகுப்பட்டி வாசிகளின் அன்பையும் மதிப்பையும் கவர்ந்திருந்தான். காங்கிரஸ் கமிட்டியானாலும் சரி, சங்கீதசபையானாலும் சரி, பழைய மாணவர் சங்கம் - கூட்டுறவு பண்டக சாலை - இலவச வாசக சாலை - எதுவானாலும் சரி, திருமலைக்கு ஒரு முக்கியமான நிர்வாகப் பொறுப்பு இருந்தே தீரும். எந்தப் பொதுக் காரியத்துக்கானாலும் பணம் வசூலிப்பதற்குத் திருமலை கிளம்பினால் ஒரே சுற்றில் வேண்டிய பணத்தைச் சேர்த்துக் கொண்டு கிளம்பி விடுவான். வேறு யார் போனாலும் மதகுப்பட்டி வாசிகளிடம் பணம் கிளம்புவது சிரமமான காரியமாயிருக்கும். இம்மாதிரியெல்லாம் பொதுக்காரியங்களில் திருமலை ஈடுபட்டிருந்தமையால் மதகுப்பட்டி அதிகாரிகளுக்கும் அவனுக்கும் எப்போதும் சஷ்டாஷ்டமாகவே இருந்தது. அப்படிப்பட்ட திருமலைதான் மேற்படி கலக வழக்கில் முதலாவது எதிரி. திருமலையின் சார்பாக சொல்லப்பட்ட எதிர் வழக்கு என்னவென்றால், மதகுப்பட்டியில் கலகம் நடந்த தினம் அவன் ஊரிலேயே இல்லை. அன்று சாயங்காலந்தான் மதகுப்பட்டிக்கு வந்தான் என்பது. இதற்குத் திருமலையின் சார்பாகச் சாட்சி கூறியவர் உபய வேதாந்தஸார உபந்நியாச சக்கரவர்த்தி சடகோபாச்சாரிய ஸ்வாமிகள் என்பவர். அன்று சாயங்காலம் அவர் ஸ்ரீரங்கத்தில் உபந்நியாசம் செய்துவிட்டு ரயிலுக்கு வந்ததாகவும், ரயில் தவறி அங்கே இருந்த திருமலையைப் பார்த்ததாகவும், அந்தப் பிள்ளையாண்டானைத் தமக்கு ஏற்கனவே தெரியுமென்றும், இரண்டு பேரும் வெகு நேரம் வரையில் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறினார். “எதைப் பற்றிப் பேசினீர்கள்?” என்று கேட்டதற்கு “முக்கியமாக திவ்யப் பிரபந்தப் பாசுரங்களில் உள்ள கவிதைச் சுவையையும் பக்திப் பெருக்கையும் பற்றிப் பேசினோம்” என்றார். “அதைத் தவிர வேறு எந்த விஷயத்தைப் பற்றியாவது பேசினீர்களா?” என்று திருமலையின் வக்கீல் கேட்டார். “தேசத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த விபரீதமான காரியங்களைப் பற்றியும் பேசினோம்.” “விபரீத காரியங்கள் என்றால் என்ன?” “ரயில் தண்டவாளத்தைப் பெயர்ப்பது முதலிய காரியங்கள்.” “அதைப் பற்றி என்ன பேசினீர்கள்?” “ரயில் பிரயாணம் ரொம்பவும் அபாயகரமாகப் போனது பற்றிப் பேசினோம். ‘இதனாலெல்லாம் என்ன பிரயோஜனம் ஏற்படப் போகிறது? நம்முடைய ஜனங்கள் தானே கஷ்டப்படுவார்கள்? ஒரு ரயில் வண்டி கவிழ்ந்தால், எத்தனை உயிர்ச்சேதம் ஏற்படும்? எத்தனை குடும்பங்கள் துன்பமடையும்’ என்று நான் சொன்னேன். திருமலை என்னுடைய அபிப்ராயத்தை முழுவதும் ஆமோதித்தான். தந்தியறுப்பது, தண்டவாளம் பெயர்ப்பது முதலியவை பலாத்காரக் காரியங்கள் தான் என்றும், மகாத்மா காந்தி அந்தக் காரியங்களை ஒருநாளும் அனுமதித்திருக்க மாட்டாரென்றும், ஐந்தாம் படைக்காரர்கள் அவருடைய பெயரைப் பொய்யாக உபயோகப்படுத்துகிறார்கள் என்றும் சொன்னான்.” இந்தச் சமயத்தில் கவர்ன்மெண்ட் தரப்பு வக்கீல் ஆட்சேபித்து, மேற்படி அபிப்ராயங்கள் எல்லாம் சாட்சியம் ஆகாதென்றும், அவைகளைப் பதிவு செய்யக் கூடாதென்றும் கூறினார். இத்துடன் சடகோபாச்சாரிய ஸ்வாமியின் சாட்சியம் முடிந்தது. சடகோபாச்சாரி ஸ்வாமியின் சாட்சியத்துக்கு நேர் மாறாகப் போலீஸ் தரப்புச் சாட்சிகள் சொன்னார்கள். போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த கூட்டத்தில் திருமலையும் இருந்தானென்றும், அவன் போலீஸ் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று கொண்டு, மண்ணெண்ணெய் டின்னை வெளியிலிருந்து வாங்கி உள்ளே இருந்தவர்களிடன் கொடுத்ததைக் கண்ணால் பார்த்ததாகவும் சொன்னார்கள். கேஸ் விசாரணையெல்லாம் சாங்கோபாங்கமாக நடந்தது. நூற்றுக்கணக்கான சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். கடைசியில் தீர்ப்புக் கூறும் நாள் வந்தது. முதல் எதிரி திருமலை சம்பந்தமாகத் தீர்மானம் செய்வதில் தான் ஜட்ஜ் அஷ்டோ த்தரமய்யங்காருக்கு ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டது. அவருக்கும் அவருடைய மனசாட்சிக்கும் பெரிய போராட்டம் நடந்தது. சடகோபாச்சாரிய ஸ்வாமிகளின் சாட்சியம் உண்மையாகவே தோன்றிற்று. அம்மாதிரி ஒரு சம்பவத்தை அவர் கற்பனை செய்திருக்க முடியாது. அவ்வளவு பச்சையான பொய் சொல்லக் கூடியவரல்ல; சொல்ல வேண்டிய அவசியமும் அவருக்கில்லை. ஆனால் போலீஸ் தரப்பின் திட்டமான சாட்சியத்தை நிராகரிப்பது - ‘பெரிய இடத்து’ அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அடுத்த பட்டமளிப்பில் தமக்கு ஸி.ஐ.இ. பட்டம் வருமென்று அய்யங்கார் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். கேவலம் இதற்காக வேண்டி ஒரு காரியம் செய்யப் போவதில்லை; ஆனால் என்ன முகாந்திரத்தைக் கொண்டு ஐந்து போலீஸ்காரர்களின் சாட்சியத்தை நிராகரித்து ஒரு வைஷ்ணவ உபந்நியாசகரின் சாட்சியத்தை ஒப்புக் கொள்வது? - இப்படிச் செய்தால் தம் பேரிலேயே ஒரு வேளை சந்தேகம் ஏற்பட்டாலும் ஏற்படலாமல்லவா? ஏன் லஞ்சம் வாங்கிக் கொண்டு, விடுதலை செய்ததாகச் சொன்னாலும் சொல்வார்கள். பார்க்கப் போனால், ஜட்ஜுனுடைய கடமை என்ன? கோர்ட்டில் தாக்கல் ஆகியிருக்கும் சாட்சியத்தைக் கொண்டு தானே, ஜட்ஜ் தீர்ப்புச் சொல்ல வேண்டும்? எல்லாம் வல்ல தெய்வத்தின் சாட்சியாகத்தான் போலீஸ்காரர்களும் சாட்சி சொல்லியிருக்கிறார்கள் - அவர்கள் எல்லாம் பொய் சொல்லியிருக்கிறார்கள் - சடகோபாச்சாரியார் மட்டும் தான் நிஜம் சொன்னார் என்று தீர்மானிப்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது? இவ்விதமெல்லாம் அஷ்டோ த்தரமய்யங்காரின் மனதில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. கடைசியில் போலீஸ் சாட்சிதான் ஜயமடைந்தது! மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனையும், பன்னிரெண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு இரண்டு வருஷம் முதல் பத்து வருஷம் வரையில் சிறைவாசமும் அளிக்கப்பட்டது. துக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரில் திருமலையும் ஒருவன். தீர்ப்புச் சொல்லப்பட்ட அன்றைக்குக் கோர்ட்டில் திருமலையின் தகப்பனாரும் தாயாரும் வந்திருந்தார்கள். சடகோபாச்சாரியாரின் சாட்சியத்தின் பேரில் திருமலைக்கு விடுதலை கிடைத்துவிடலாமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அல்லது சிறைவாச தண்டனையோடாவது போகுமென்று நம்பினார்கள். இதற்கு மாறாக, தூக்குத் தண்டனை என்று கேட்டதும், திருமலையின் தாயார் அங்கேயே பிரக்ஞை தப்பி விட்டாள். திருமலையின் தகப்பனார் “அடேய் திருமலை! அடேய் திருமலை! எங்கேடா போய்விட்டாய்?” என்று கதறிக் கொண்டு சாலையோடு நெறிக் கெட்டு ஓடத் தொடங்கினார். திருமலையின் தங்கை கர்ப்பமாயிருந்தாள். தீர்ப்பைக் கேட்டதும், அவளுக்குக் குறைபிரசவம் ஆகி ஆஸ்பத்திரியில் கொண்டு போட்டார்கள். ஐந்தாறு நாளைக்கெல்லாம் அவள் கண்ணை மூடினாள். 4 மதகுப்பட்டிக் கலக வழக்கில் தீர்ப்புச் சொன்ன நாளிலிருந்து அஷ்டோ த்தரமய்யங்காரின் மனம் சரியான நிலைமையில் இல்லை; திருமலை விஷயத்தில் அநியாயம் செய்து விட்டோ மோ என்ற எண்ணம் அவர் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. தூக்குத் தண்டனைக் கைதிகளின் சார்பாக கவர்னருக்குக் ‘கருணை விண்ணப்பம்’ செய்யப்பட்டிருக்கிறது என்று அறிந்தபோது, அய்யங்காருக்குச் சிறிது திருப்தி ஏற்பட்டது. கவர்னர் கருணை செய்து தூக்குத் தண்டனையை ரத்து செய்துவிட்டால் தம்முடைய பொறுப்பு நீங்கி விடும் என்று எண்ணினார். ஆனால் கவர்னர் அவ்விதம் கருணை செய்யவில்லை. அய்யங்காரின் மனத்திலிருந்த பாரமும் நீங்கவில்லை. நாளுக்கு நாள் அந்தப் பாரம் அதிகமாயிற்று. தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தினம் நெருங்க நெருங்க இரவில் அவருக்குத் தூக்கம் வருவதே அரிதாயிற்று. திருமலையின் குற்றமற்ற இளம் முகம் அவர் மனக் கண்ணின் முன் அடிக்கடி தோன்றியது. சர்க்கார் தரப்புச் சாட்சியங்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அவன் முகத்தில் தோன்றிய வியப்பும் திகைப்பும் அப்படியே அவருடைய நினைவுக்கு வந்தது. ’இதென்ன அபாண்டம்? அன்று நான் ஊரிலேயே இல்லையே?" என்று அவன் கதறியதும் ஞாபகத்துக்கு வந்தது. நினைத்துப் பார்க்க பார்க்க அந்தக் குரலில் உண்மை தொனித்ததாக அவருக்குத் தோன்றியது. “ஐயோ! நாம் அநீதிதான் செய்து விட்டோ மோ? அந்தப் பிள்ளையின் அகால மரணத்துக்கு நாம் தான் பொறுப்பாளியாவோமோ?” என்று எண்ணிய போதெல்லாம், அவருடைய நெஞ்சு திக், திக் என்று அடித்துக் கொண்டது. இரவு ஒரு மணி. இரண்டு மணி, மூன்று மணியும் ஆயிற்று. அய்யங்கார் இப்பொது சாய்வான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தார். அவருடைய கண்கள் சில சமயம் தாமே மூடிக் கொள்ளும். அடுத்த நிமிஷம் திடுக்கென்று தூக்கி வாரிப் போட்டுக் கண்ணைத் திறந்து பார்ப்பார். “திருமலையைத் தூக்கில் போட இன்னும் நாலு மணி நேரந்தான் இருக்கிறது - இன்னும் மூன்றரை மணிதான் பாக்கி” என்று மனம் ஒரு புறத்தில் கணக்குப் போட்டுக் கொண்டேயிருக்கும். அதிகாலை ஆறு மணிக்குள் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்கில் போடுவது வழக்கமென்று அவருக்குத் தெரியும். ஆகையினால் தான் மணியை அவ்வளவு கவலையுடன் எண்ணினார். தூக்க மயக்கத்தில் அய்யங்காருக்கு ஒரு அதிசயமான யோசனை தோன்றிற்று. அந்த யோசனை எப்படி அவர் மனத்தில் உதித்ததென்பதை அவராலேயே சொல்ல முடியாது. திடீரென்று தோன்றியது. சில சமயம் கைதிகள் சிறையிலிருந்து தப்பித்து ஓடி விடுகிறார்கள் அல்லவா? அதிலும் அரசியல் கைதிகள் - புரட்சிக் கைதிகள் சிறையிலிருந்து தப்புவது சகஜமல்லவா? சுபாஷ் போஸ் கூடப் போலீஸாரை ஏமாற்றி விட்டுக் கம்பி நீட்டி விடவில்லையா? அந்த மாதிரித் திருமலையும் ஏன் சிறையிலிருந்து தப்பி ஓடி விடக் கூடாது? அவ்வளவு துணிச்சலும் சாமர்த்தியமும் அந்த சாதுப் பையனுக்கு எங்கே வரப் போகிறது? - அவன் குற்றம் செய்யாதவனாயிருந்தால் கட்டாயம் ஓடி விடுவான். அதற்குப் பகவான் கூட உதவி செய்வார். ஏன் செய்ய மாட்டார்? டிங், டிங், டிங், டிங் மணி நாலு அடித்தது. “ஐயோ! நேரம் நெருங்கிவிட்டதே!” என்று, அய்யங்கார் மனம் திடுக்கிட்டது. அதே சமயத்தில் அவருடைய அறையின் கதவு சிறிது திறந்து, ஜில்லென்று காலைக் காற்று உள்ளே வந்தது. கதவை மூடலாமென்று அய்யங்கார் எழுந்திருக்கப் பார்த்தார். ஆனால் எழுந்திருக்கவில்லை. அப்படியே திகைத்து உட்கார்ந்து விட்டார். ஏனெனில், திறந்த கதவு வழியாக ஒரு மனித உருவம் உள்ளே வந்தது. ஆ! இது யார்? இந்த இளம் முகம் யாருடையது! சந்தேகமென்ன? ‘திருமலைதான்’ - ஆகா! இவன் எப்படி இங்கே இந்த நேரத்தில் வந்தான்! நாம் எண்ணியது போல் உண்மையாகவே சிறையிலிருந்து தப்பித்துக் கொண்டு வந்து விட்டானா? - அப்படியானால் கெட்டிக்காரன் தான். திருமலை நிதானமாக நடந்து வந்து அய்யங்காருக்கு எதிரில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தான். சற்று நேரம் இருவரும் ஒருவரையொருவர் உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். திருமலையின் முகத்தில் சொல்ல முடியாத ஒரு இரக்க பாவம் காணப்பட்டது. அய்யங்காரின் கண்களில் கண்ணீர் ததும்பிற்று. அவர் பேச ஆரம்பித்தபோது அவருடைய குரலை அவராலேயே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு கம்மிப் போயிருந்தது. “யார்? திருமலைதானே” என்றார் அய்யங்கார். “ஆமாம்; அடியேன் திருமலைதான்” “பொழுது விடிந்தால் ஆறு மணிக்குள்” என்று அய்யங்கார் தடுமாறினார். “ஆமாம்; ஆறு மணிக்குள் தண்டனை நிறைவேற வேண்டியது.” “நல்ல வேளை நீ தப்பி வந்தது…” “நல்ல வேளையா?” “ஆமாம்; நல்ல வேளைதான். உன்னைத் தண்டித்தது பற்றி எனக்கு மனச் சமாதானமே ஏற்படவில்லை. நீ சிறையிலிருந்து ஏன் தப்பித்துக் கொள்ளக்கூடாது என்று நான் கூடச் சற்று முன்பு நினைத்தேன்.” திருமலையின் முகத்தில் ஆச்சரியம் தாண்டவமாடிற்று! “நீ தப்பித்து வந்தது பற்றிச் சந்தோஷந்தான் ஆனால்…” “ஆனால் என்ன?” “நீ இங்கு வந்ததுதான் பிடிக்கவில்லை. இங்கே என்னத்திற்காக வந்தாய்?” “முக்கியமாக உங்களைப் பார்ப்பதற்குத்தான் நான் சிறையிலிருந்து தப்பினேன்.” “என்ன? என்னைப் பார்ப்பதற்கா?” “ஆமாம்; தூக்குத் தண்டனையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நீங்கள் பெரிய பக்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சடகோபாச்சாரியார் ரொம்பவும் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட தாங்கள் என்னைப் பொய்யனென்று நினைத்தது தான் ரொம்பவும் வருத்தமளித்தது. சத்தியமாகச் சொல்கிறேன்; நான் அன்றைக்கு மதகுப்பட்டியில் இல்லை. திருச்சி ஜங்ஷனில் தான் இருந்தேன். சடகோபாச்சாரி ஸ்வாமிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன்.” “நீ சொல்வதை முழுதும் நம்புகிறேன். சடகோபாச்சாரியாரும் நிச்சயமாய்ப் பொய் சொல்லியிருக்க மாட்டார். தீர்ப்பு எப்படியோ பிசகாய்ப் போய்விட்டது. நீ தப்பி வந்ததே நல்லதாயிற்று. ஆனால் இங்கே நீ அதிக நேரம்…” “இல்லை, இங்கே அதிக நேரம் தாமதிக்கவில்லை. உங்களிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன். என் வார்த்தையை இப்போதாவது நம்புகிறீர்களே, ரொம்ப சந்தோஷம் போய் வருகிறேன். நமஸ்காரம்” திருமலை ஒரு கும்பிடு போட்டுவிட்டு எழுந்திருந்து போனான். மறுபடியும் அய்யங்காருக்குத் திடுக்கென்று தூக்கிவாரிப் போட்டது. இந்தத் தடவை நாற்காலியிலிருந்து அவர் எழுந்து திறந்திருந்த கதவண்டை போய், அப்பாலிருந்த தாழ்வாரத்தில் பார்த்தார். அங்கே ஒருவரையும் காணவில்லை. வாசற்கதவைப் போய்ப் பார்த்தார். கதவு உட்புறம் பந்தோபஸ்தாகத் தாளிடப்பட்டிருந்தது! திருமலை எப்படி உள்ளே வந்தான். எப்படி வெளியே போனான்? “சீ! வெறும் பிரமை! திருமலையாவது வரவாவது?” என்று எண்ணமிட்டவராய், அஷ்டோ த்தரமய்யங்கார் தமது அறைக்குத் திரும்பினார். மணி ஐந்தடித்தது. இரண்டு நாளைக்குப் பிறகு ஜட்ஜ் அஷ்டோ த்தரமய்யங்கார் தினசரிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த போது, ஒரு மூலையில் சின்ன எழுத்தில் அச்சிட்டிருந்த பின்வரும் செய்தி, அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. ‘தூக்குக் கைதியின் மரணம்’ “மதகுப்பட்டிக் கலக வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டிருந்த திருமலை. சிறைச்சாலையில் முந்தாநாள் காலை நாலு மணிக்கு இயற்கை மரணமடைந்தான். எனவே, கைதியைத் தூக்குப் போட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.” மேற்படி செய்தியைப் படித்ததும் அய்யங்காருக்குத் தலை சுற்றியது. அதே நேரத்தில்தான் திருமலை தம்முடைய அறையில் வந்து பேசினான் என்பது நினைவு வந்தது. அய்யங்கார் திடீரென்று கீழே விழுந்தார். டாக்டர்கள் வந்து பார்த்துவிட்டு, “மாரடைப்பினால் மரணம்” என்று தெரிவித்தார்கள்! தேவகியின் கணவன் 1 தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஆண்டுதோறும் சுதேசிப் பொருட்காட்சி நடத்துகிறவர்களை வாழ்த்துகிறேன். அந்தப் பொருட்காட்சி காரணமாக என் வாழ்க்கையில் வெகு காலமாய் மர்மமாக இருந்து வந்த ஒரு விஷயம் துலங்கியது. என் மனதில் சுமந்திருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியது. அடிக்கடி என்னைச் சிந்தனையில் ஆழ்த்தி என் நிம்மதியைக் குலைத்து வந்த ஒரு சந்தேகம் நிவர்த்தியாகி என்னுடைய உள்ளத்தில் அமைதி ஏற்பட்டது. இந்த வருஷத்துச் (1950 பெப்ருவரி, மார்ச் மாதங்களில் எழுதப்பட்டது) சுதேசிப் பொருட்காட்சிக்கு நான் போகவில்லை. சென்ற வருஷத்தைக் காட்டிலும் இந்த வருஷம் எவ்வளவோ சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பதாக எல்லாரும் சொன்னார்கள். ஆனாலும் நான் போகவில்லை. போகலாமா, வேண்டாமா என்று யோசனை செய்து, வேண்டாம் என்று முடிவு கட்டினேன். போயிருந்தால், அங்கே நான் தேவகியைச் சந்தித்த இடத்துக்கு என் கால்கள் என்னை இழுத்துக் கொண்டு போயிருக்கும். பழைய ஞாபகங்களில் மூழ்கிப் போயிருப்பேன். எல்லாரும் பார்க்கும் காட்சிகளில் என் மனம் சென்றிராது. ஆடல் பாடல்களிலோ நாடகம் நடனங்களிலோ நான் எவ்விதம் கருத்தைச் செலுத்த முடியும்? சித்திரக் காட்சிக்குள் சென்றால், தேவகியின் சித்திரம்தான் என் மனக் கண்முன்னால் தோன்றும். மின்சார சக்தியின் அற்புதங்களைக் காட்டும் இடத்துக்குள் சென்றால், அங்கே திடீரென்று தேவகியை நான் பார்த்த உடனே என் உடம்பில் பாய்ந்து குலுக்கிப் போட்ட மின்சார சக்தியைத் தான் நினைத்துக் கொள்வேன். ஒரு வருஷமா? இரண்டு வருஷமா? இருபத்தைந்து வருஷத்துக்குப் பிறகு அவளை நான் பார்த்தேன். கன்னிப் பெண்ணாகத் துள்ளித் திரிந்து கொண்டிருந்தவளை மூன்று குழந்தைகளின் தாயாராகப் பார்த்தேன். ஆயினும், பார்த்த தட்சணமே அடையாளம் தெரிந்து போய்விட்டது. கொஞ்ச நஞ்சம் சந்தேகம் இருந்தாலும், செக்கச் சிவந்த அவள் கன்னத்தில், காதின் ஓரத்தில் இருந்த அழகிய மச்சம் அந்தச் சந்தேகத்தைப் போக்கி விட்டது. தேவகியும் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு விட்டாள் என்பது அவள் என்னைப் பார்த்துப் பிரமித்து நின்றதிலிருந்து தெரிந்தது. அவள் கையைப் பிடித்துக் கொண்டு வந்த குழந்தை அவளைப் பிடித்து இழுத்ததைக் கூடக் கவனியாமலே நின்றாள். என் மனக் கொந்தளிப்பை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “ஹெட்மாஸ்டர் பெண் தேவகிதானே?” என்று நாத்தழுதழுக்கக் கேட்டேன். “ஆமாம்; நீங்கள் கிட்டாதானே?” என்றாள் தேவகி. “ஓகோ! இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறாயே?” என்றேன். “எப்படி மறக்க முடியும்?… என்றைக்காவது ஒரு நாள் உங்களைச் சந்திப்போம் என்கிற நம்பிக்கை என் மனதில் இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது நிறைவேறிவிட்டது!” என்று தேவகி கனிவுடன் கூறினாள். “அப்படியா? என்னைச் சந்திக்கும் விருப்பம் கூட உனக்கு இருந்ததா? அது என்னுடைய பாக்கியந்தான்!… இந்தச் சென்னைப் பட்டணத்தில் தான் நீ இருக்கிறாயா? ஜாகை எங்கே?… உன்னுடைய கணவர்… இந்தக் குழந்தைகளின் தகப்பனார்… அவர் இங்கே வரவில்லையா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன். “வீட்டுக்கு வாருங்கள்! எல்லாக் கதையும் சாவகாசமாகச் சொல்கிறேன்!” என்று தேவகி கூறிய வார்த்தைகளிலேயே கண்ணீர் கலந்திருந்ததாகத் தோன்றியது. அவளுடைய வீட்டு விலாசத்தைத் தெரிந்து கொண்டேன். பிறகு பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றேன். அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டுக்கு வரும்படி தேவகி சொல்லியிருந்தாள். அது வரையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகச் சென்று கொண்டிருந்தது. அந்த நீண்ட யுகங்களை யெல்லாம் பழைய சம்பவங்களை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்திக் கொண்டு கழித்தேன். 2 ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த சம்பவம். ஆனாலும் நேற்று நடந்ததுபோல் என் ஞாபகத்தில் இருக்கிறது. ஹைஸ்கூலில் ஆறாவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன். என் தகப்பனாரின் மரணம் காரணமாக நடுவில் மூன்று வருஷம் என் படிப்புத் தடைப்பட்டிருந்தது. ஆகையால் என் வகுப்பில் வாசித்த மற்றப் பிள்ளைகளைக் காட்டிலும் எனக்கு வயது அதிகம். பதினேழு முடிந்து பதினெட்டாவது பிறந்திருந்தது. ஆனால் பள்ளிக்கூடம் போகாத மூன்று வருஷமும் நான் சும்மா இருந்து விடவில்லை. நன்றாகப் படித்திருந்தேன். ஆகையால் இப்போது வகுப்பில் கெட்டிக்காரப் பையன் என்று பெயர் வாங்கியிருந்தேன். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் எல்லாரும் என்பேரில் பிரியமாயிருப்பார்கள். அந்த வருஷத்தில் புதிதாக வந்திருந்த ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்காரும் என்னிடம் மிக்க அபிமானமாயிருந்தார். அவரைக் காட்டிலும் அவர் மனையாளுக்கு என்னிடம் பிரியம் அதிகம். அந்தத் தம்பதிகள் எங்கள் ஊருக்கு வந்த புதிதில் நான் அவர்களுக்கு மிக்க ஒத்தாசையாயிருந்தேன். புதுக் குடித்தனம் போடுவதற்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். இதிலிருந்து அந்த மாமிக்கு என்னை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. தினசரி காலையில் பலகாரம் காப்பி எனக்கு ஹெட்மாஸ்டரின் வீட்டிலேதான். ஒரு நாளைக்கு நான் அவர்கள் வீட்டுக்குப் போகாவிட்டால், “கிட்டா! நேற்றைக்கு எங்கே காணோம்? இந்த மாதிரி நீ ‘ஆப்ஸெண்ட்’ போட்டால், ஹெட்மாஸ்டரிடம் சொல்லிப் பரீட்சையில் ‘ஸைபர்’ போட்டுவிடச் சொல்வேன்!” என்று மாமி சண்டை பிடிப்பாள். இப்படிச் சிலகாலம் ஹெட்மாஸ்டர் வீட்டுக்கு நான் செல்லப் பிள்ளையாயிருந்தேன். அவர்கள் வந்த புதிதில் அவர்களுடைய வீட்டில் அந்தத் தம்பதிகளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. பிறகு ஒரு நாள் ரங்கநாயகி அம்மாள் திடீரென்று ஒரு செய்தி சொன்னாள். அவர்களுடைய குமாரி தேவகி அடுத்த வாரம் சென்னைப் பட்டணத்திலிருந்து வரப்போவதாகச் சொன்னாள். அதுவரையில் அவர்களுக்கு ஒரு புதல்வி உண்டு என்னும் விஷயமே தெரியாமலிருந்தது. எனவே, அந்தச் செய்தியைக் கேட்டவுடன் எனக்கு வியப்பாயிருந்தது. வியப்பு மட்டுமில்லை; காரணம் சொல்ல முடியாத ஒரு பரபரப்பு உண்டாயிற்று. வரப்போகிற தேவகியைப் பற்றி எல்லா விவரங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றிற்று. மாமியிடம் சாதுர்யமாகப் பல கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டேன். தேவகிக்கு வயது பதினைந்து; நாலாவது பாரம் பாஸ் செய்திருந்தாள். அவளை எங்கள் ஊருக்கு அழைத்துக் கொண்டு வர முதலில் பத்மநாப ஐயங்கார் இஷ்டப்படவில்லை. எங்கள் ஊர் பட்டணத்திலும் சேர்ந்ததில்லை; பட்டிக் காட்டிலும் சேர்ந்ததில்லை. இரண்டும் கெட்ட ஊர். பெண்களுக்குத் தனியாக ஹைஸ்கூல் கிடையாது. ஆண் பிள்ளைகள் ஹைஸ்கூல் மட்டுந்தானிருந்தது. ஆகையினாலே தேவகியின் படிப்பைக் கெடுக்க வேண்டாம் என்று பட்டணத்தில் பாட்டி வீட்டிலேயே அவளை விட்டு விட்டு வந்தார்கள். ஆனால் அதிக காலம் செல்லப் பெண்ணைப் பிரிந்திருப்பதற்குத் தாயார் தகப்பனார் இரண்டு பேராலும் முடியவில்லை. ஆகையால் சில நாளைக்கெல்லாம் அவளை அழைத்துக் கொண்டு வரத் தீர்மானித்தார்கள். அழைத்துக் கொண்டு வந்து புருஷப் பிள்ளைகளின் ஹைஸ்கூலிலேயே சேர்த்துவிடவும் முடிவு செய்தார்கள். ரங்கநாயகி அம்மாள் இதற்கு ஆட்சேபணைகள் பல சொல்லாமலில்லை. ஆனால் பத்மநாப ஐயங்கார், “நானே ஹெட்மாஸ்டராயிருக்கும் போது என்ன கவலை? என்னை மீறி என்ன நடந்துவிடும்? கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோய் விடுமா? யாராவது ஏதாவது உளறிக் கொண்டு போகட்டும். இந்தக் காலத்தில் வைதிக குடும்பத்துப் பெண்கள் சாதி விட்டுச் சாதி கல்யாணம் செய்து கொள்கிறார்கள். கப்பலேறிச் சீமைக்குப் போகிறார்கள். வக்கீல் பரீட்சை பாஸ் செய்துவிட்டு நாலு கைச் சட்டை போட்டுக் கொண்டு கோர்ட்டில் வந்து பேசுகிறார்கள். அவர்களையெல்லாம் யார் தள்ளிவைத்து விட்டார்கள்? என் பெண் என் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பதற்கு என்ன வந்துவிட்டது?” என்று அடித்துப் பேசினார். அதன் பேரில் ரங்கநாயகி அம்மாளும் சம்மதித்தாள். எங்கள் ஹெட்மாஸ்டரின் மனைவி கொஞ்சம் உலகப் போக்கை அறிந்த பெண்மணி. தன் புதல்வி ஆறாவது பாரம் வரையிலாவது படித்தால்தான் நல்ல இடத்தில் கலியாணம் ஆகும் என்ற எண்ணம் அந்த அம்மாளின் மனதில் இருந்தது. “நீயே சொல்லு, கிட்டா! இவருக்கோ மாதம் சம்பளம் நூற்றைம்பது ரூபாய். காப்பிச் செலவுக்கே ஐம்பது ரூபாய் ஆகிவிடுகிறது. இந்த இலட்சணத்தில் பணங் காசு எப்படிச் சேரும்? பத்தாயிரம், இருபதினாயிரம் என்று வரதட்சணை கொடுத்துக் கலியாணம் பண்ணிக் கொடுக்க நமக்கு யோக்யதை உண்டா? குழந்தைக்குக் கொஞ்சம் படிப்பாவது இருந்தால் தானே, சுமாராக நல்ல இடமாகப் பார்த்துக் கலியாணம் செய்து கொடுக்கலாம்?” என்று ரங்கநாயகி அம்மாள் என்னிடம் சொன்னதற்கு நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அந்த விஷயமாக என் மனதில் அச்சமயம் அபிப்பிராயம் ஒன்றும் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் மாமிக்கு யாரிடமாவது தன் மனதிலிருந்ததைச் சொல்லித் தீர்க்க வேண்டியதாயிருந்தது. ஆகையால் என்னைப் பிடித்துக் கொண்டாள். “என்னடா, கிட்டா! ஒன்றும் பதில் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறாயே? உன் அபிப்பிராயம் என்ன? தேவகியின் படிப்பை நிறுத்த எனக்கும் இஷ்டமில்லைதான். ஆனால் இந்த ஊர் கொஞ்சம் பட்டிக்காடாயிருக்கிறதே என்று பார்க்கிறேன். புருஷப் பிள்ளைகள் படிக்கும் வகுப்பிலேயே தேவகியையும் உட்கார்ந்து படிக்கச் சொன்னால், இந்த ஊர்க்காரர்கள் ஏதாவது வம்பு வளர்க்க மாட்டார்களா?” என்று ரங்கநாயகி அம்மாள் மறுபடியும் வற்புறுத்திக் கேட்டாள். “நீங்கள் எதற்காகக் கவலைப்படுகிறீர்கள், மாமி! ஹெட்மாஸ்டருக்குத் தெரியாத விஷயமா? அவர் செய்யும் ஏற்பாடு சரியாகத்தான் இருக்கும்” என்று நான் சொல்லி வைத்தேன். “என்னதான் அவர் எல்லாம் தெரிந்தவராயிருந்தாலும், இந்த விஷயம் நன்றாய் யோசித்துச் செய்ய வேண்டிய காரியம் அல்லவா? எந்தப் பக்கம் பார்த்தாலும் தர்ம சங்கடமாயிருக்கிறது. எனக்கும் சரி, அவருக்கும் சரி, குழந்தையை விட்டு விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. தூங்குவதற்குக் கண்ணை மூடினால் தேவகிதான் கனவிலே வந்து நிற்கிறாள். எங்கள் விஷயந்தான் இப்படி என்றால், குழந்தையும் ‘நான் வந்து விடுகிறேன்’ என்று கடிதத்துக்கு மேல் கடிதமாக எழுதுகிறாள். ‘பெண் கல்வி’ ‘பெண் கல்வி’ என்று வாய் கொண்ட மட்டும் எல்லாரும் கூச்சல் போடுகிறார்களே? இந்த ஊரில் பெண்களுக்கு என்று ஒரு ஹைஸ்கூல் இல்லை, பாரேன்!” என்றால் மாமி. “இந்த ஊரில் பெண்களுக்கு ஹைஸ்கூல் வைத்தால் என்ன பிரயோஜனம், மாமி? பெஞ்சுகளும் நாற்காலிகளுந்தான் படிக்க வேண்டும். இந்த ஊர்ப் பெண்கள் யாரும் நாலாவது வகுப்புக்கு மேல் தாண்டிவருவதேயில்லை!” என்றேன் நான். 3 ஹெட்மாஸ்டரும் நானும் தேவகியை அழைத்துக்கொண்டு வருவதற்காக ரயில்வே நிலையத்துக்குப் போயிருந்தோம். தெரிந்த மனிதர்களுடன் தேவகியைக் கூட்டி, ரயிலேற்றி அனுப்புவதாகச் சென்னையிலிருந்து கடிதம் வந்திருந்தது. ரயில் எப்போது வரப் போகிறது என்று எனக்கு ஒரே ஆவலாயிருந்தது. கடைசியாக, ரயில் வந்தது. நாங்கள் நின்ற இடத்துக்கு எதிரிலேயே தேவகி இருந்த வண்டியும் நின்றது. ரயிலுக்கு வெளியே முகத்தை நீட்டி ஹெட்மாஸ்டரைப் பார்த்துக் கையை ஆட்டிய பெண்ணைப் பார்த்ததும் அவள் தான் தேவகி என்று எனக்குத் தெரிந்துவிட்டது. கோண வகிடும் சுருட்டை மயிரும் குறுகுறுவென்ற முகமும் கறுப்பான புருவமும் கண்ணிமையுமாகத் தோன்றிய தேவகியின் முகத்தை ரயில் சட்டங்களுக்கு நடுவில் அன்றைக்கு எப்படிப் பார்த்தேனோ, அப்படியே இன்றைக்கும் ஞாபகத்துக்கு வருகிறது. “அப்பா! வந்துவிட்டேன்!” என்று சொன்ன அவளுடைய குரலைக் கேட்டதும் என் நெஞ்சு மேலெழுந்து தொண்டையை அடைத்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. ரயிலிலிருந்து தேவகி கீழே இறங்கியதும் எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா? “மாமி சுத்தப் பைத்தியம்! இப்படி ரம்பை, மேனகையெல்லாம் தோற்றுப் போகும்படி அழகு படைத்த பெண்ணுக்குக் கலியாணம் ஆவதைப் பற்றியா கவலைப்படுவது? இவளுக்குப் படிப்பு இருந்தால் தான் கலியாணம் ஆகுமா? பத்தாயிரம் இருபதினாயிரம் வரதட்சணை இந்தப் பெண்ணுக்கா கொடுக்க வேண்டும்? பைத்தியக்காரத்தனந்தான்! இவளைக் கலியாணம் செய்து கொள்ளுகிறவன் அல்லவா இவளைப் பெற்றவர்களுக்குப் பத்தாயிரம், இருபதினாயிரம் பணம் கொடுக்க வேண்டும்? அப்படிக் கொடுத்தாலும் அது இவளுக்கு ஈடாகுமா?” என்று இப்படியெல்லாம் என் மனம் நினைத்தது. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியேறியபோது தேவகியின் பெட்டியை நான் தூக்கிக் கொண்டு போனேன். அப்படி அவளுடைய பெட்டியைத் தூக்கியது எனக்குப் பெருமையாயிருந்தது. ஜட்கா வண்டியில் முதலில் தேவகியை ஏறச் சொல்லிவிட்டு ஹெட்மாஸ்டர் ஏறிக் கொண்டார். பிறகு என்னையும் ஏறிக்கொள்ளச் சொன்னார். நான் தயக்கத்துடன் ஏறி உட்கார்ந்தேன். வண்டி நகரத் தொடங்கியதும் தேவகி, “இவர் யார் அப்பா?” என்றாள். அதுவரையில் யாருமே என்னைப் பற்றி அவ்விதம் மரியாதையாகப் பேசியதில்லை. எங்கள் ஊரில் சிறு பெண்கள்கூடப் புருஷப் பிள்ளைகளை ‘அவன்’ ‘இவன்’ என்றுதான் சொல்வார்கள். தேவகி எனக்கு மரியாதை கொடுத்துப் பேசியது எனக்கு அளவில்லாத பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. பட்டணத்தில் வளர்ந்த பெண்களின் நாகரிகம் எப்படியும் உயர்வுதான் என்று எண்ணிக் கொண்டேன். எப்போதும் சளசளவென்று பேசும் பழக்கம் உடைய எனக்கு அன்றைக்கு, அந்த ஜட்கா வண்டியில் போகும்போது, எதனாலோ பேசவே தோன்றவில்லை. தகப்பனாரும் மகளும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு மௌனமாயிருந்தேன். நடுவில் ஒரு தடவை தேவகி “இவருக்கு ரொம்ப சங்கோசம் போலிருக்கிறது. பேசாமல் வருகிறாரே?” என்றாள். “அதெல்லாம் ஒன்றுமில்லை; அப்பாவும் பெண்ணும் பேசும்போது நடுவில் குறிக்கிட வேண்டாம் என்று இருக்கிறான். உன் அம்மாவுக்கு இவன் செல்லப் பிள்ளை. எதற்கெடுத்தாலும் ‘கிச்சாமியை அனுப்புங்கள்!’ என்பாள். இவனால் எனக்கு வீட்டு விஷயமான கவலையே இல்லாமலிருக்கிறது!” என்றார் ஹெட்மாஸ்டர். அவரிடம் அப்போது எனக்கு எல்லை கடந்த நன்றி உணர்ச்சி உண்டாயிற்று. ஹெட்மாஸ்டர் குடியிருந்த வீட்டின் வாசலில் சில மந்தாரை, பவளமல்லி முதலிய புஷ்பச் செடிகளுக்கு மத்தியில் ஒரு பழைய காலத்துச் சாதி முல்லைக் கொடியும் வளர்ந்து படர்ந்து பூத்துக் கொட்டியிருந்தது. ஒடிந்து விழுந்து விடுவாளோ என்று தோன்றும்படி ஒல்லியான தேகத்துடன் தேவகி அந்த வீட்டுக்குள் புகுந்தபோது, பெண்களைப் ‘பூங்கொடி’ என்று சொல்வதின் பொருத்தம் எனக்கு விளங்கிற்று. இன்றைக்குக் கூட நான் தேவகியைப் பற்றி நினைத்தால், அந்த சாதி முல்லைக்கொடியும் அதில் பூத்திருந்த மலர்களின் மணமும் சேர்ந்து எனக்கு ஞாபகம் வருகின்றன. 4 தேவகி எங்கள் ஊருக்கு வந்து சில நாள் வரையில் என் வாழ்க்கையே குதூகல மயமாயிருந்தது. வழக்கம் போலவே ஹெட்மாஸ்டர் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்தேன். அம்மாவுக்கு உதவி செய்தது போலவே மகளுக்கும் உதவி புரிந்து வந்தேன். சில சமயம் கணக்கு முதலிய பாடங்களில் தேவகி சந்தேகம் கேட்டால் சொல்லிக் கொடுப்பேன். தேவகிக்கும் என்னை ரொம்பப் பிடித்து விட்டதாகத் தோன்றியது. அம்மாவைப் போலவே பெண்ணும் ஒரு நாள் நான் அவர்கள் வீட்டுக்குப் போகாவிட்டால், “எங்கே நேற்றுக் காணோம்?” என்று கேட்கத் தொடங்கினாள். அவர்களுக்குள் ஒரு வித்தியாசம் என்னவென்றால், தாயார் என்னிடம் பிள்ளை முறை பாராட்டி என்னை ஏக வசனத்தில் அழைப்பாள். புதல்வி மரியாதையாக ‘வாங்கள்’ ‘போங்கள்’ என்று கூறுவாள். இவ்விதம் சிலகாலம் நான் ஆனந்த மயமான வானுலகத்தில் சஞ்சரித்து வாழ்ந்து வந்தேன். திடீரென்று அந்த வானில் கருமேகம் ஒன்று தோன்றியது. முதலில் சிறியதாகத் தோன்றியது வர வரப் பெரிதாகிப் படர்ந்தது. இடியும் மின்னலும் புயலும் மழையும் தொடர்ந்து வந்தன. தேவகி எங்கள் பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது பாரத்திலே சேர்ந்தாள். வகுப்பில் எல்லாப் பிள்ளைகளும் பெஞ்சிகளில் உட்கார்ந்திருப்பார்கள். தேவகிக்கு மட்டும் சற்றுத் தள்ளி ஒரு தனி நாற்காலி போடப்பட்டிருக்கும். அதில் அவள் உட்கார்ந்து கொள்வாள். இதைக் குறித்துச் சில மாணாக்கர்கள் ஒரு விதமாகப் பேசுவதுண்டு என்று எனக்குத் தெரிய வந்தது. பராபரியாகக் கேள்விப்பட்டேனேயன்றி, என் காதில் அத்தகைய பேச்சு எதுவும் விழாமல் கொஞ்ச நாள் வரையில் இருந்தது. ஆகையால், மனதிற்குள் ஆத்திரப்பட்டேனே தவிர அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கடைசியாக, ஒரு நாள் என் காதுபடக் கேட்டு விட்டேன். ஆறாவது பாரத்தில் இரண்டு வருஷம் தேறாமல், மூன்றாவது வருஷம் படித்த ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் வைத்தியநாதன். பணக்கார வீட்டுப் பிள்ளை. அகம்பாவம் பிடித்தவன். வம்புப் பேச்சுப் பேசும் வழக்கம் ரொம்ப உண்டு. ஆசிரியர்களைப் பற்றிக்கூடச் சில சமயம் கன்னாபின்னா என்று மரியாதைக் குறைவாகப் பேசுவான். அவனோடு நான் சகவாசமே வைத்துக் கொள்வதில்லை. ஒருநாள் நான் ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போய்விட்டு ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது வைத்தியநாதனும் இன்னொரு பையனும் சாலை ஓரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைச் சுட்டிக் காட்டி வைத்தியநாதன் ஏதோ சொன்னான். இன்னொரு பையன் ‘ஓஹோ!’ என்று சிரித்தான். அதைக்கூட நான் பொருட்படுத்தவில்லை. நான் பாட்டுக்குச் சாலையின் இன்னொரு ஓரமாகப் போனேன். ஆனால் வைத்தியநாதனுக்கு அன்றைக்கு ஏதோ பிசாசு பிடித்திருந்தது. ஆகையால் என் காதில் விழும்படி அவன் ஹெட்மாஸ்டர் பெண் தேவகியைப் பற்றிப் பேசினான். என்னையும் அவளையும் சேர்த்தே பேசினான், என்ன பேசினான் என்று இங்கே எழுதி என் பேனாவையும் காகிதத்தையும் கறைப்படுத்த நான் விரும்பவில்லை. அதைக் கேட்டேனோ இல்லையோ, எனக்கு ஆவேசம் வந்துவிட்டது. அவ்வளவு தைரியமும் தேகபலமும் எனக்கு எப்படி அச்சமயம் வந்தன என்பதை நினைத்தால் இப்போது கூட வியப்பாயிருக்கிறது. ஒரே பாய்ச்சலில் அவனருகில் சென்று அவன் கன்னத்தில் பளீர் என்று ஒரு அறை விட்டேன். வைத்தி நல்ல தடியன்; ‘புட்பால்’ நன்றாக ஆடுவான். காற்பந்து ஆடி ஆடிக் காலில் அவனுக்கு வைரம் பாய்ந்திருந்தது. என்னை ஒரு உதைவிட்டான். என் முழங்காலில் பட்டுப் பிராணனே போய்விட்டது. ஆயினும் நான் பணிந்து விடவில்லை. இரண்டு பேரும் சிறிது நேரம் துவந்த யுத்தம் செய்தோம். வீதியில் விழுந்து புரண்டோ ம். வைத்தி என் கழுத்தைப் பிடித்து நெருக்க ஆரம்பித்தான். எனக்கு மூச்சுத் திணற ஆரம்பித்துவிட்டது. நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் எங்கள் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் வந்தார். ஹெட்மாஸ்டரைக் காட்டிலும் அவர் பிள்ளைகளின் கட்டுப்பாட்டை நிலை நிறுத்துவதில் கண்டிப்பானவர். அவர் எங்கள் அருகில் வந்து அதட்டியதும் இருவரும் சண்டையை நிறுத்தினோம். இருவரையும் அவர் கடுமையாகத் திட்டிவிட்டுப் பள்ளிக்கூடம் வந்ததும் தண்டிக்கப் போவதாகச் சொன்னார். வைத்தி உடனே “என் பேரில் தப்பில்லை, ஸார்! நான் பாட்டுக்குச் சுந்தரத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது இவன் தான் வலுச்சண்டைக்கு இழுத்தான். திடுதிடுவென்று வந்து கன்னத்தில் பளீர் என்று அறைந்தான். சுந்தரத்தை வேணுமானால் கேட்டுப் பாருங்கள்!” என்றான். “சுந்தரத்தைக் கேட்பதென்ன? இவனையே கேட்கிறேன். வைத்தி சொல்வது உண்மையா?” என்று என்னைப் பார்த்து ஆசிரியர் அதட்டிக் கேட்டார். நான் பதில் சொல்லாமல் திகைத்து நின்றேன். வைத்தி கூறியது என்னவோ உண்மைதான். முதலில் வைத்தியின் கன்னத்தில் அறைந்தவன் நான் தான். ஆனால் எதற்காக? அந்தக் காரணத்தை வெளியிட்டுச் சொல்ல எனக்கு இஷ்டமில்லை. அதைச் சொல்வதைக் காட்டிலும் ஆசிரியரின் தண்டனையைப் பெறுவதற்கும் மற்றவர்களிடம் அவமானப் படுவதற்கும் தாயாராயிருந்தேன். தேவகியையும் என்னையும் சேர்த்து வைத்தி பேசிய ஆபாச வார்த்தைகளை எப்படி நான் திருப்பிச் சொல்வேன்? சொன்னால் அந்தப் பேச்சு ஊரெல்லாம் ஒரு நிமிஷத்தில் பரவி விடுமே? அதைவிட என் நாவைத் துண்டித்து விடுவதே மேல் என்று நினைத்தேன். உதவித் தலைமை ஆசிரியர் ஜகதீசய்யர் ஹெட்மாஸ்டரிடம் எங்கள் தெருச் சண்டையைப் பற்றிச் சொல்லிவிட்டார். ஹெட்மாஸ்டர் என்னை அழைத்து விசாரித்தார். வைத்தியுடன் வலுச் சண்டைக்குப் போனதற்குக் காரணம் கேட்டார். நான் சொல்ல மறுத்தேன். வேறு யாரிடம் சொன்னாலும் அவரிடம் சொல்லக் கூடாதல்லவா? கடைசியில் “இந்தத் தடவை மன்னித்துவிட்டேன். இனிமேல் இப்படியெல்லாம் செய்யாதே!” என்று எச்சரித்தார். அத்துடன் அச்சம்பவம் முடிந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால் ஹெட்மாஸ்டர் என்னை நடத்திய முறையில் சீக்கிரத்திலேயே வித்தியாசத்தைக் கண்டு கொண்டேன். பழைய அபிமானமும் நம்பிக்கையும் என்னிடம் இல்லையென்றே தோன்றியது. அவர்களுடைய வீட்டுக்கு நான் வருவதைக் கூட அவ்வளவாக அவர் விரும்பவில்லையென்று காணப்பட்டது. அதைக் காட்டிலும் முக்கியமாக, நானும் தேவகியும் பேசுவதைப் பார்த்தால் ஹெட்மாஸ்டரின் முகம் சுருங்கிற்று. “தேவகி! என்ன வீண் பேச்சு? போய்ப் பாடத்தைப் படி!” என்பார். இதுமட்டுமல்லாமல் என்னிடம் அவர் தனிமையில் பேச நேரும்போது “கிருஷ்ணசாமி! தேவகிக்கு ஒரு நல்ல வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் வாழ்க்கையில் ரொம்பவும் வறுமையால் கஷ்டப்பட்டவன். தேவகியையாவது நல்ல பணக்காரப் பிள்ளைக்குப் பார்த்துக் கொடுத்து விட விரும்புகிறேன். பணக்காரப் பிள்ளையாயிருந்தால் மட்டும் போதாது; குறைந்தது பி.ஏ. படித்தவனாயிருக்க வேண்டும். பெருமாளுடைய சித்தம் எப்படியிருக்கிறதோ? உனக்கு யாராவது நல்ல வரன் தெரிந்திருந்தால் சொல்லு!” என்று கூறுவார். இந்த வார்த்தை என் நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போலிருக்கும். எனக்கு நானே புத்தி சொல்லிக் கொண்டு ஆறுதல் அடையப் பார்ப்பேன். “தேவகிக்கு எப்படியும் ஒரு நாள் கலியாணம் நடக்க வேண்டியதுதானே? ஆஸ்திபாஸ்தி ஒன்றுமேயில்லாத நாம் அதைப்பற்றி யோசித்து என்ன பயன்? நமக்குப் படிப்பும் கொஞ்சம். பி.ஏ. வகுப்பை எட்டிப் பார்க்கவும் முடியாது. வயதுப் பொருத்தம் கூட இல்லை. பின்னே, எதற்காகக் கவலைப்பட வேண்டும்? ஹெட்மாஸ்டர் சொல்வது நியாயந்தானே?” என்று பலவிதமாக எண்ணி யோசித்து முடிவு செய்வேன். ஆனாலும் தேவகிக்குக் கலியாணம் நடக்கப் போகிறது என்ற எண்ணம் என் மனதில் ஏதோ ஒரு வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. “வைத்திக்கும் எனக்கும் சண்டை எழுந்த காரணத்தைப் பற்றி ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்திருக்குமோ, ஒரு வேளை சுந்தரம் சொல்லியிருப்பானோ?” என்று எண்ணி எண்ணி என் உள்ளம் தத்தளித்தது. அல்லது வைத்தியே ஒருவேளை ஏதாவது உளறியிருக்கலாம்; குற்றத்தை என்பேரில் சுமத்தியிருக்கலாம். ஆனாலும் அதைப்பற்றி யாரிடமும் பேசவோ, கேட்கவோ முடியவில்லை. சண்டைக்குப் பிறகு வைத்தியும் நானும் பேசுவதேயில்லை. என்னைப் பற்றி அவன் நான் இல்லாத சமயங்களில் ஏதேதோ கோள் சொல்லி அவதூறு பேசி வருகிறான் என்று தெரிந்திருந்தது. ஆயினும் பழைய அநுபவம் காரணமாக அதைப்பற்றிக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்துவிட்டேன். இரண்டாவது தடவை அவனோடு சண்டை போட எனக்கு இஷ்டமில்லை. இப்படியாகக் காலம் போய்க் கொண்டிருந்தது. என் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த புத்துணர்ச்சியும் ஆனந்தமும் மறைந்துவிட்டன. கவலையும் சந்தேகமும் மனதை அரித்துக் கொண்டிருந்தன. இவ்வளவுக்கு மிடையில் தேவகி எப்போதும்போல் என்னிடம் பிரியம் காட்டி வந்தது ஒன்றுதான் ஒருவாறு திருப்தி அளித்து வந்தது. “ஏன் இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வருவதில்லை?” என்று தேவகி என்னைப் பார்க்கும் போதெல்லாம் கேட்கத் தவறுவதில்லை. ஆனால் அவளுடைய தகப்பனார் நான் வருவதை விரும்பவில்லையென்று அவளிடம் நான் எப்படிச் சொல்வேன்? சொன்னால்தான் அதில் பயன் என்ன? 5 ஒரு நாள் ரங்கநாயகி அம்மாள் என்னைக் கூப்பிட்டு அனுப்பி, “கிட்டா! கோவிலுக்குப் போய் பெருமாளையும் தாயாரையும் சேவித்து விட்டு வரவேணும். நீ என் கூட வருகிறாயா?” என்று கேட்டாள். மாமியின் அன்புக்கு மாறு சொல்ல முடியாமல் சம்மதித்தேன். மாமியுடன் நான் கோவிலுக்குப் போவதை யாராவது பையன்கள் பார்த்தால், “கிச்சாமி மறுபடியும் ஹெட்மாஸ்டர் வீட்டு மாமியைக் காக்காய் பிடிக்கிறான்!” என்று சொல்லிப் பரிகசிப்பார்கள் என்பது தெரிந்துதானிருந்தது. அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. தைரியமாகப் பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு மாமியைத் தொடர்ந்து போனேன். வழியில் மாமி அநுதாபம் நிறைந்த குரலில், “கிட்டா! என்னிடம் நீ நிஜத்தைச் சொல்லிவிடு. இவருக்கு - தேவகியின் அப்பாவுக்கு - உன் பேரில் என்ன கோபம்? நீ என்ன அப்படிப்பட்ட குற்றத்தைச் செய்து விட்டாய்? எதுவாயிருந்தாலும் என்னிடம் சொல்லி விடு! நான் அவரிடம் பேசிச் சரிப்படுத்துகிறேன்!” என்றாள். மாமியின் அன்பு என்னை உருக்குவிட்டது. அழமாட்டாக் குறையாக நான் உண்மையைச் சொல்லிவிட்டேன். உண்மை என்றால், வைத்திய நாதன் உளறியதை அப்படியே சொல்லிவிடவில்லை. ஒரு மாதிரி அவனுடைய வம்புப் பேச்சைப் பற்றிக் குறிப்பாகச் சொல்லி, அதனால் நேர்ந்த சண்டையைப் பற்றியும் சொன்னேன். இதைக் கேட்ட மாமி, “அழகாயிருக்கிறது! இதற்குத்தானா உன் பேரில் எரிந்து விழுகிறார்? ஊரிலே நாலு காலாடிகள் ஏதாவது பேசிக் கொண்டுதானிருப்பார்கள். இப்படி நடக்கலாம் என்று நான் எதிர்பார்த்ததுதானே? ‘இந்தப் பட்டிக்காட்டு ஊரில் புருஷப் பிள்ளைகளின் பள்ளிக் கூடத்தில் தேவகியைச் சேர்க்கலாமா?’ என்று அப்போதே நான் சொன்னேன். அதைக் கேட்காமல் சேர்த்து விட்டார். இப்போது உன் பேரில் கோபித்துக் கொண்டு என்ன பயன்? ஹெட்மாஸ்டர் என்னமோ ரொம்ப நல்லவர் தான். ஆனால் கேட்பார் பேச்சைக் கேட்கும் சுபாவம் கொஞ்சம் உண்டு. அந்த உதவித் தலைமை வாத்தியார் ஜகதீசய்யர் ஏதோ இல்லாததும் பொல்லாததும் சொல்லி வத்தி வைத்திருக்கிறார். நீ, பாவம், என் வயிற்றில் பிறந்த பிள்ளை மாதிரி எவ்வளவோ விசுவாசமாயிருந்தாய். தேவகிக்கு உடன் பிறந்த தம்பி, தமையன் ஒருவரும் இல்லையே என்ற குறை எனக்கு உண்டு. அந்தக் குறை தீரும்படி நீ அவளுடைய கூடப் பிறந்த தமையன் மாதிரி பிரியமாக இருந்தாய். பாவம்! ஊரில் உள்ளவர்கள் சேர்ந்து உன்னை ஆகவொட்டாமல் அடித்துவிட்டார்கள். ஆனால் நீ கொஞ்சங்கூடக் கவலைப்படாதே! நான் இவரிடம் சொல்லிச் சரிப்படுத்தி விடுகிறேன். பெருமாள் சந்நிதியிலும் தாயார் சந்நிதியிலும் நான் இன்றைக்கு உனக்காகவே வேண்டிக் கொள்ளப் போகிறேன்!” என்றாள். இந்த அன்பான வார்த்தைகளினால் என் மனம் மேலும் உருகிவிட்டது. பெருமாளையும் தாயாரையும் சேவிக்கும்போது அன்றைக்கு நானும் அவ்விதமே வேண்டிக் கொண்டேன். “ஹெட்மாஸ்டருக்கு என் பேரில் இருந்த அன்பும் மதிப்பும் முன் போலவே ஏற்படவேண்டும்” என்று பிரார்த்தித்தேன். என்னுடைய பிரார்த்தனையும் மாமியின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை. சில நாளைக்கெல்லாம் ஹெட்மாஸ்டர் பழையபடி என்மேல் பிரியமாயிருக்கத் தொடங்கினார். இது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி தந்தது. ஆயினும் நான் ஊருக்குப் பயந்து, அதாவது மற்றப் பையன்களின் வம்புப் பேச்சுக்குப் பயந்து, கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டேன். முன்போல் தினசரி இரண்டு வேளையும் ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போவதில்லை. அடியோடு போகாமல் இருப்பதுமில்லை. வாரத்துக்கு இரண்டு மூன்று தடவை போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருவேன். தேவகியாவது மாமியாவது கேட்டால், “இந்த வருஷம் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்குப் போகவேண்டும் அல்லவா? பாடங்கள் கஷ்டமாயிருக்கின்றன. சிரத்தையாகப் படிக்க வேண்டியிருக்கிறது. படித்து நல்ல மார்க் வாங்கிப் பாஸ் செய்தால் தானே பள்ளிக்கூடத்துக்குக் ‘கிதாப்’ உண்டாகும்? ஹெட்மாஸ்டருக்கும் நல்ல பெயர் ஏற்படும்?” என்று பதில் சொல்வேன். ஆனால் ஹெட்மாஸ்டரிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் என் மனதில் ஏற்பட்டிருந்த அபிமானம் மட்டும் எள்ளளவும் குறையவில்லை. இப்படிச் சில மாதங்கள் சென்றன. அரை வருஷப் பரீட்சை முடிந்து கிறிஸ்துமஸ் விடுமுறையும் கழிந்தது. தை மாதம் பிறந்தது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று ஒரு பழமொழி உண்டு அல்லவா? எனக்கும் ஒரு வழிபிறந்தது. அதாவது ஹெட்மாஸ்டர் வீட்டில் முன்போல் நெருக்கமான பழக்கம் ஏற்படுவதற்கு ஒரு வழி பிறந்தது. அது, தேவகிக்குக் கலியாணம் நிச்சயமான செய்திதான்! கிறிஸ்மஸ் விடுமுறைக்காக நான் கிராமத்துக்குப் போய்விட்டுத் திரும்பியதும் இந்தச் செய்தியை அறிந்தேன். ஹெட்மாஸ்டரும் அவர் மனையாளும் எனக்கு ஆள்மேல் ஆள் விட்டார்கள். நானும் அவசரமாய் அவர்கள் வீட்டுக்குப் போனேன். “தேவகிக்குக் கலியாணம் நிச்சயமாகியிருக்கிறது” என்கிற செய்தியைக் குதூகலத்துடன் சொன்னார்கள். வரனும் ரொம்ப நல்ல வரன் என்று தெரிந்தது. எங்கள் ஹெட்மாஸ்டர் மிக நல்ல மனிதர்; அவருடைய மனையாளோ மகா உத்தமி. அப்படிப்பட்ட தம்பதிகளுடைய ஆசை நிறைவேறாமற் போகுமா? “உங்களுடைய குணத்துக்குத்தான் இவ்வளவு நல்ல வரன் கிடைத்தது” என்று சொன்னேன். பையன் ஒரு தாசில்தாருடைய மகன். பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான். வரதட்சணை கூட அதிகம் கேட்கவில்லையாம். பெண்ணின் அழகையும் சமர்த்தையும் பார்த்து அதிக நிபந்தனை ஒன்றும் போடாமல் கலியாணத்துக்கு ஒப்புக் கொண்டு விட்டார்களாம். முன்னேயெல்லாம் ‘தேவகிக்குக் கலியாணம்’ என்ற பேச்சு எனக்குக் கிலேசத்தை அளித்தது என்று சொன்னேன் அல்லவா! இப்போது கலியாணம் நிச்சயமாகி விட்டது என்று தெரிந்ததும் எனக்கு எந்தவிதமான கிலேசமும் ஏற்படவில்லை. என் தலையிலே இருந்த சுமையும் இருதயத்தை அமுக்கிய பாரமும் இறங்கிவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாகிக் குதூகலம் ஏற்பட்டது. தேவகியின் சமர்த்துக்கும் அழகுக்கும் இவ்வளவு நல்ல வரனுக்குக் கலியாணம் ஆகவேண்டியது நியாயந்தான். பத்மநாப ஐயங்கார்-ரங்கநாயகி அம்மாளின் உத்தம குணத்துக்கு, அவர்களுக்கு இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்க வேண்டியதும் நியாயந்தான். எல்லாம் கடவுளுடைய கருணை. பெருமாளையும் தாயாரையும் ரங்கநாயகி அம்மாள் சேவித்ததின் பலன் கைமேல் கிடைத்துவிட்டது. எனக்கும் ஒரு பெரிய பொறுப்புத் தீர்ந்தது. ஹெட்மாஸ்டரிடம் நான் கொண்டிருந்த பக்திக்கு எவ்விதமான களங்கமும் சொல்வதற்கு இனிமேல் யாரும் துணியமாட்டார்கள் அல்லவா? இத்தகைய எண்ணங்களினால் நான் அளவிலாத உற்சாகமடைந்து கலியாண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டேன். முன்போல் பெரும்பாலும் ஹெட்மாஸ்டர் வீட்டிலேயே காலங்கழிக்கத் தொடங்கினேன். பந்தலை அப்படிப் போட வேண்டும், மேளத்துக்கு இன்னாரைச் சொல்ல வேண்டும், சமையலுக்கு இன்னாரை ஏற்பாடு செய்ய வேண்டும், இன்னின்ன சாமான்களை இன்னின்ன இடத்தில் வாங்கிச் சேகரம் செய்ய வேண்டும், கலியாணக் கடுதாசி இப்படி அச்சடிக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் இடைவிடாமல் மாமியுடன் விவாதித்து வந்தேன். கலியாண ஏற்பாடுகள் சம்பந்தமாக என்னால் இயன்ற ஒத்தாசைகளையும் மாமிக்குச் செய்து வந்தேன். ஆனால் இந்தக் கலியாண ஏற்பாடுகளிலும் பேச்சு வார்த்தைகளிலும் கொஞ்சங்கூட உற்சாகங்காட்டாமலிருந்தாள் தேவகி. “எனக்குக் கலியாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? அம்மாவும், அப்பாவும் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்! கொஞ்சங்கூட எனக்குப் பிடிக்கவில்லை!” என்று தேவகி அடிக்கடி சொன்னாள். சாதாரணமாகக் கன்னிப் பெண்கள் எல்லாருமே கலியாணப் பேச்சு வந்தால் இப்படிப் பிடிக்காதது போலக் காட்டிக் கொள்வதுண்டு. தேவகியும் அவ்விதந்தான் வெளிக்குச் சொல்லுகிறாள் என்று முதலில் நினைத்தேன். அவள் அப்படிப் பேசும்போதெல்லாம் பரிகசித்துச் சிரித்தேன். போகப் போக, தேவகி உண்மையாகவே கலியாணத்தை ஆட்சேபிக்கிறாளோ என்ற சந்தேகம் உதித்தது. அப்போது அவளிடம் எதிர்க்கட்சி பேசிப் புத்திமதியும் சொன்னேன். “உன் தாயார் தகப்பனாருக்கு நீ ஒரே பெண். உனக்குக் காலா காலத்தில் கலியாணம் பண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவர்களுக்கு ஆசையாயிராதா? அதை நீ ஆட்சேபித்து என்ன லாபம்? இந்த மாதிரி வரன் தான் சுலபத்தில் கிடைக்குமா? பையன் பி.ஏ. படிக்கிறானாம்!…” என்று வரனைப் பற்றி வர்ணிக்கத் தொடங்கினேன். அதற்குத் தேவகி, “பி.ஏ. என்றால் அவ்வளவு அதிசயமா? எத்தனையோ ஆயிரம் பேர்கள் பி.ஏ. படிக்கிறார்கள். கலியாணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டம் இருக்க வேண்டாமா? இந்தக் காலத்தில் ‘பெண்கள் விடுதலை’ என்றும், அதுவென்றும், இதுவென்றும் பேசுகிறார்களே? நான் ‘கலியாணம் வேண்டாம்’ என்று சொல்லும்போது என்னை நிர்ப்பந்தப் படுத்துவது என்ன நியாயம்? எல்லாம் தெரிந்த எங்கள் அப்பாவே இப்படிச் செய்கிறதுதான் எனக்கு அர்த்தமாகவில்லை! நீங்களாவது என் அப்பா - அம்மாவிடம் கொஞ்சம் எனக்காகப் பேசுவீர்கள் என்று நினைத்தேன். நீங்களும் அவர்களுடைய கட்சி பேசுவது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!” என்றாள். இதைக் கேட்டதும் எனக்கு உண்மையாகவே கொஞ்சம் தயக்கம் உண்டாகிவிட்டது. ஒரு வேளை தேவகிக்கு இஷ்டமில்லாத பையனுக்கு அவளைப் பலவந்தமாகக் கலியாணம் செய்து கொடுத்துவிடப் பிரயத்தனம் செய்கிறார்களோ என்ற கவலை ஏற்பட்டது. “ஆமாம், தேவகி! அந்தப் பையனை உனக்கு உண்மையாகவே பிடிக்கவில்லையா, என்ன? அப்படியானால்…” என்பதற்குள், தேவகி, “அப்படியானாலுமில்லை, இப்படியானாலுமில்லை. அந்தப் பையனை எனக்குப் பிடிக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எங்கே வந்தது? சாப்பாடே இல்லையென்று சொல்லும்போது ‘இலை பொத்தல்’ என்று புகார் சொன்ன கதையாக அல்லவா இருக்கிறது? எனக்குக் கலியாணம் பண்ணிக் கொள்ளவே இஷ்டமில்லை. பி.ஏ., எல்.டி., பாஸ் செய்துவிட்டு ‘டீச்சர்’ உத்தியோகத்துக்குப் போய்ச் சுதந்திரமாய் வாழவேண்டும் என்று எனக்கு விருப்பமாயிருக்கிறது. மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்று என்னைக் கேட்டால் என்ன பிரயோஜனம்? என்னைப் பார்க்க வந்த பையனை நான் முகம் எடுத்துப் பார்க்கவேயில்லை. பின்னே, எப்படிப் பதில் சொல்ல முடியும்?” என்றாள். இதிலிருந்து தேவகியின் ஆட்சேபமெல்லாம் வெளிப்படைக்குத்தான் என்று நான் தீர்மானித்துக் கொண்டேன். பிறகு “இந்த மாதிரியெல்லாம் அசந்தர்ப்பமாய்ப் பேசாதே! கலியாணம் பண்ணிக் கொள்ளாமல் ’நன்னரி’யில் சேர்ந்து விடுவதெல்லாம் ஐரோப்பியர்களுக்குச் சரி; ஹிந்துக்களாகிய நமக்குச் சரிப்படுமா? அந்தமாதிரி எண்ணத்தை அடியோடு மறந்துவிடு! அப்பா அம்மா சொல்கிறபடி கேளு!” என்று அழுத்தமாய்ப் புத்திமதி சொல்லத் தொடங்கினேன். “இப்போது இப்படித்தான் ‘கலியாணம் வேண்டாம்’ என்று சொல்லிக் கொண்டிருப்பாய். நாளைக்குக் கலியாணம் ஆகிவிட்டால் என்னையெல்லாம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாய். ‘கிட்டா’ என்று ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்துபோய் விடுவாய்!” என்று சில சமயம் பரிகாசமும் செய்தேன். இந்தமாதிரி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஹெட்மாஸ்டரோ அல்லது மாமியோ வந்துவிட்டால், உடனே தேவகி பேச்சை நிறுத்திவிட்டு யோசனையில் ஆழ்ந்து விடுவாள். அவள் அப்படி என்ன யோசனை செய்தாள் என்பது அவளுக்கும் அவளது அந்தராத்மாவுக்குந்தான் தெரியும். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அந்த பரந்தாமனுக்கும் ஒரு வேளை தெரிந்திருக்கலாம். 6 கலியாணத் தேதி குறிப்பிட்டாகிவிட்டது. பந்தக்கால் முகூர்த்தம் நடந்து, கலியாணக் கடுதாசி அச்சிடவும் கொடுத்தாகிவிட்டது. கலியாணத்துக்கு வேண்டிய சாமான்களில் பாதிக்குமேல் சேகரம் செய்தாகி விட்டது. மணப் பெண்ணுக்கு நிச்சயதார்த்தப் புடவையும் மாப்பிள்ளைக்கு முகூர்த்த வேஷ்டியும் கூட வாங்கியாகிவிட்டது. இவ்வளவு ஏற்பாடுகளும் ஆன பிறகு, திடீரென்று ‘ஹெட்மாஸ்டர் பெண்ணின் கலியாணம் நின்று போய் விட்டது’ என்ற வதந்தி ஊரில் பரவியது. என் தாயாரைப் பார்ப்பதற்காக இரண்டு நாள் நான் கிராமத்துக்குப் போயிருந்து திரும்பி வந்தேன். திரும்பி வந்தவுடனே அந்தச் செய்தி காதில் விழுந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையை அறிந்து கொள்வதற்காக அவசர அவசரமாக ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போனேன். வீட்டு வாசலில் கலியாணத்துக்காகப் போட்டிருந்த பந்தலை ஆட்கள் அப்போதுதான் பிரித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி என் மனதில் சொல்ல முடியாத வேதனையை உண்டு பண்ணியது. வீட்டுக்குள்ளே போனேன். ஹெட்மாஸ்டராவது, அவர் மனைவியாவது அங்கே காணப்படவில்லை. தேவகி மட்டும் கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தாள். சந்திரபிம்பம் போன்ற அவளுடைய முகம் வாடி வதங்கியிருந்தது. அவளுடைய தலை மயிர் அவிழ்ந்து தொங்கியது. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியதின் அடையாளங்கள் காணப்பட்டன. “தேவகி! இது என்ன? பந்தலை ஏன் பிரிக்கிறார்கள்? நான் கேள்விப்பட்டது உண்மையா?” என்றேன். “ஆமாம், கிட்டா! உண்மைதான். கலியாணம் நின்று போய்விட்டது. நான் ‘வேண்டாம் வேண்டாம்’ என்று அடித்துக் கொண்டேனே, அதை இவர்கள் கேட்டால்தானே? அப்போது நான் சொன்னதைக் கேட்கவில்லை; இப்போது நன்றாய் அவமானப் பட்டார்கள். இவர்களுக்கு நன்றாய் வேண்டும்! இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்!” என்றாள். தேவகியின் இனிய குரலில் அவ்வளவு குரோதம் எப்படி வந்து புகுந்தது என்று ஆச்சரியப்பட்டேன். “என்ன காரணம்? கலியாணம் ஏன் நின்றது?” என்று கேட்டேன். “என்ன காரணமோ! என்னைக் கேட்டால், எனக்கு என்ன தெரியும்? அப்பாவும் அம்மாவும் என்னைப் பிடுங்கி எடுப்பது போதாது என்று நீ வேறே கேள்வி கேட்பதற்கு வந்துவிட்டாயா?” என்றாள் தேவகி. கோபத்திலும் ஆத்திரத்திலும் மரியாதை கூடத் தவறிவிட்டாள்! ஆயினும் அதற்காக அவளைக் குற்றம் சொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை. இந்தச் சமயத்தில் வீட்டு வாசலில் ஹெட்மாஸ்டரின் குரல் கேட்டது. “ஏண்டா! இன்னுமா பந்தலைப் பிரித்தாகவில்லை? சீக்கிரம் பிரித்து எறிந்து விட்டுத் தொலையுங்களடா!” என்று பத்மநாப ஐயங்கார் சத்தமிட்டுக் கத்தினார். அது ஹெட்மாஸ்டரின் குரல்தானா? ஆமாம், அவருடைய குரலேதான்! ஹெட்மாஸ்டரின் குரல்தான் அவ்வளவு கர்ணகடூரமாகியிருக்கிறது! பாவம்! ஹெட்மாஸ்டருக்கு மனதில் எவ்வளவு தாபம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது ஊகிக்கக் கூடியது தானே? அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும், என்ன விதமாக ஆறுதல் சொல்லுவது என்றும் யோசித்தேன். யோசித்துக் கொண்டே வீட்டு வாசற்புறம் போக நாலு அடி எடுத்து வைத்தேன். இதற்குள் பத்மநாப ஐயங்கார் உள்ளே வந்து விட்டார். வந்தவர், என்னைப் பார்த்தார். ஐயோ! அந்தப் பார்வை! சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்துத் திரிபுரத்தை எரித்துவிட்டார் என்பதில் எனக்குச் சிறிதும் அதிசயம் கிடையாது! ஆனால் அன்றைக்குத் தேவகியின் தகப்பனார் என்னைப் பார்த்த பார்வை என்னை ஏன் எரிக்கவில்லை என்பதைப் பற்றிய அதிசயந்தான் இன்னமும் எனக்குத் தீரவில்லை. சற்று நேரம் தீ எழும் கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தவர், சட்டென்று நிதானித்துச் சமாளித்துக்கொண்டு, "ஓகோ! நீ வேறு துக்கம் விசாரிக்க வந்து விட்டாயா! சரி! இங்கே வா!’ என்று சமிக்ஞையும் காட்டிவிட்டு அவருடைய சொந்த அறைக்குள் நுழைந்தார். உடலெல்லாம் பதற, நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ள நானும் உள்ளே போனேன். இதற்குள் அவர் நிதானித்துக் கொண்டு விட்டதாகத் தோன்றியது. குரலில் அவ்வளவு கடுமையில்லை; சாவதானமாகத்தான் பேசினார். ஆனால் அவர் கூறிய விஷயம் என்னைக் கதி கலங்க அடித்துவிட்டது. “கிருஷ்ணசாமி! நான் சொல்வதைச் சரியாக வாங்கிக் கொள். பதில் பேசாதே! இனிமேல் நீ இந்த ஊரில், என்னுடைய பள்ளிக்கூடத்தில், படிக்கச் சௌகரியப்படாது. நியாயமாக உன்னை பள்ளிக்கூடத்திலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டும். அதற்கு வேண்டிய முகாந்தரம் இருக்கிறது. ஆனால் நீ தகப்பனில்லாத ஏழைப் பையன். நீ எப்பேர்ப்பட்ட பெரிய தீங்கு செய்திருந்தபோதிலும் உன்னை அடியோடு கெடுத்துவிட எனக்கு விருப்பமில்லை. நாளைக்குப் பள்ளிக்கூடம் வந்தாயானால் உனக்கு ‘டிரான்ஸ்பர் சர்டிபிகேட்’ கொடுத்து விடுகிறேன். எப்படியும் இந்த வருஷம் போனது போனதுதான். அடுத்த வருஷத்தில் வேறு எந்த ஊர் ஹைஸ்கூலிலாவது சேர்ந்துபடி, இங்கே செய்ததுபோல் அயோக்கியத்தனம் செய்யாமல், யோக்கியமாக நடந்துகொள்! என்னால் உன்னை மன்னிக்க முடியாது. கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள். கடவுளின் கருணை எல்லையற்றது. அவர் ஒரு வேளை உன்னை மன்னித்தாலும் மன்னிக்கக் கூடும்!” மேற்கூறிய வார்த்தைகளை அப்படியே ஹெட்மாஸ்டர் கூறியதாக நான் உறுதி சொல்ல முடியாது. இம்மாதிரி தோரணையில் பேசினார் என்றுதான் சொல்லலாம். ஏற்கெனவே கலக்க முற்றிருந்த என் மனதில் அவர் கூறிய வார்த்தைகள் அவ்வளவு தெளிவாகப் பதியவில்லை. எல்லாம் ஒரே குழப்பமாயிருந்தது. ஆயினும் விஷயம் என்னவென்பது விளங்கிவிட்டது. நான் ஏதோ மன்னிக்க முடியாத பெரிய குற்றம் செய்து விட்டேன். அதனால் அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தில் இனி நான் படிக்கமுடியாது. அந்த வருஷம் வேறு ஊர்ப் பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர்ந்து படிக்கவும் முடியாது. ஒரு வருஷம் போனதுதான்! படிப்பைப்பற்றி அவ்வளவாக நான் கவலைப் படவில்லை; வாழ்நாளில் ஒரு வருஷம் என்ன பிரமாதம்? ஆனால் ஹெட்மாஸ்டர் என் விஷயத்தில் அவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டதுதான் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தது. அப்படிப்பட்ட தண்டனை பெறுவதற்கு நான் குற்றம் என்ன செய்தேன்? ‘குற்றம் என்ன?’ ‘குற்றம் என்ன?’ என்று என் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் துடிதுடித்துக் கேட்டது; ஒவ்வொரு நரம்பும் அலறி அழுது கேட்டது. தயங்கித் தட்டுத் தடுமாறி என் நாவும், “ஸார்! நான் என்ன குற்றம் செய்தேன்? எதற்காக என்னைப் பள்ளிக்கூடத்திலிருந்து தள்ளுகிறீர்கள்?” என்று கேட்டது. “அட அயோக்கியா! கேள்வி வேறு கேட்கிறாயா? போ! என் கண் முன் நிற்காமல் போய்த் தொலை! இனி என் முகத்திலேயே விழிக்காதே! இங்கே நின்றாயோ உன்னைக் கொன்று விடுவேன். மேலே ஒரு வார்த்தை பேசினாலும் உன்னை ‘டிஸ்மிஸ்’ செய்து விடுவேன்! கெட் அவுட்!” என்று ஹெட்மாஸ்டர் கூச்சலிட்டார். மேலே நான் அங்கு நின்றால், என்னை அவர் கொல்வது ஒருபுற மிருக்கட்டும்; வரம்பு மீறிய கோபத்தினால் அவருடைய உயிருக்கே ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடும் என்று தோன்றியது. விம்மிக் கொண்டே அந்த வீட்டிலிருந்து வெளியேறினேன். பந்தலில் இருந்த கீத்துகளை யெல்லாம் இதற்குள் பிரித்துக் கீழே போட்டிருந்தார்கள். கம்புகள் மட்டும் நின்றன. போகிற போக்கில் அந்தக் கம்புகளில் ஒன்றைப் பிடுங்கிக் கிழே தடாரென்று போட்டு விட்டுப் போனேன். வீதியில் நடந்தபோது எட்டுத் திசைகளும் சுழன்றன. சூரியன் இருண்டு பட்டப்பகல் நள்ளிரவாயிற்று. வானம் இடிந்து என் தலையில் விழுந்து அமுக்கி மூச்சுவிட முடியாமல் திணறச் செய்தது. இந்த நிலையில் எப்படியோ தட்டுத் தடுமாறித் தள்ளாடி என்னுடைய அறைக்குப் போய்ச் சேர்ந்தேன். 7 கழுகுக்கு மூக்கில் வேர்க்கும் என்று ஒரு பழமொழி உண்டு. சமீபத்தில் எங்கேயாவது இரை கிடைப்பதாயிருந்தால் கழுகுக்கு மூக்கில் வேர்க்குமாம்! வைத்திக்கும் சுந்தரத்துக்கும் அப்படியே மூக்கில் வேர்க்கும் போலிருக்கிறது. நான் வந்திருப்பதையும் என்னுடைய மனோ நிலையையும் தெரிந்து கொண்டு அவர்கள் என்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தார்கள். அவ்வளவாக நான் அவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்வதில்லையென்று சொல்லியிருக்கிறேன். ஆயினும் விஷமிகளுக்கு வெட்கம் ஏது? என்னைத் தேடி வந்து சேர்ந்தார்கள். எனக்கு ஏற்பட்டிருந்த துக்கத்தையும் அவர்கள் பேரில் வந்த கோபத்தையும் வெகு பிரயாசைப் பட்டு நான் அடக்கிக் கொண்டேன். கொஞ்சம் நான் பொறுமையாயிருந்தால், தேவகியின் கலியாணம் தடைப்பட்ட காரணத்தை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம் என்று என்னுடைய உள்ளுணர்ச்சி சொல்லிற்று. “எங்கே அப்பா வந்தீர்கள்? என்ன விசேஷம்!” என்று கேட்டேன். “என்ன விசேஷமா? ஊரெல்லாம் ஒரே அமர்க்களமாயிருக்கிறது; ’என்ன விசேஷம் என்று மெள்ளக் கேட்கிறாயே? ஹெட்மாஸ்டர் பெண்ணின் கலியாணம் நின்று போனது உனக்குத் தெரியாதா?” என்றான் வைத்தியநாதன். “அது தெரியாமல் இருக்குமா? தெரியும். அதற்காக நாம் என்னத்தைச் செய்வது?” என்றேன் நான். “என்னத்தைச் செய்வதாவது? ஏன்? பேஷாகச் செய்யலாம். நம்மில் யாராவது ஒருவர் தேவகியைக் கலியாணம் செய்து கொள்ளலாம். ‘போட்ட பந்தலைப் பிரிக்க வேண்டாம்’ என்று ஹெட்மாஸ்டரிடம் சொல்லலாம்” என்றான் சுந்தரம். “பேஷான யோசனைதான். இதை நீ ஹெட்மாஸ்டரிடம் சொல்லிப் பார்ப்பதுதானே? என்னிடம் சொல்லி என்ன பிரயோஜனம்?” என்றேன். “ஹெட்மாஸ்டரிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் நீ தேவதா விஸ்வாசம் வைத்திருந்தாயே என்று உன்னிடம் சொன்னோம். நீ என்னடா என்றால், ஏனோ தானோ என்று பேசுகிறாய். அது போனால் போகட்டும். கலியாணம் ஏன் நின்றது என்பதைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்குமே?” என்றான் வைத்தி. “எனக்குத் தெரியாது, அப்பா, எனக்கு ஒன்றும் தெரியாது.” “சும்மாச் சொல்கிறாய்! உனக்குத் தெரியாமல் இருக்குமா?” “சத்தியமாய் எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்திருந்தால், சொல்லுங்கள்! கேட்கிறேன்.” “உனக்கே தெரியாது என்றால், எங்களுக்கு எப்படித் தெரியும்? ஆனால் ஊரில் அதைப் பற்றிப் பலவிதமாய்ப் பேசிக் கொள்கிறார்கள்.” “ஊரில் என்ன பேசிக் கொள்கிறார்கள்?” “சம்பந்தி வீட்டாருக்கு ஏதோ ஒரு மொட்டைக் கடிதம் இந்த ஊரிலிருந்து போனதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.” “அப்படி அந்த மொட்டைக் கடிதத்தில் என்ன எழுதியிருந்ததாம். கலியாணம் நின்று போகும்படி?” “தேவகி வேறொரு பையன் மீது காதல் கொண்டிருப்பதாக அந்தக் கடிதத்தில் எழுதியிருந்ததாம்.” “இது என்ன முட்டாள்தனம்? ஒரு மொட்டைக் கடிதத்தை நம்பியா கலியாணத்தை நிறுத்தி விடுவார்கள்? அந்த சம்பந்திகள் அவ்வளவு முட்டாள்களா?” “இல்லை, அப்பா! அதில் இன்னொரு சூட்சுமம் இருக்கிறது. அந்த மொட்டைக் கடிதம் கலியாணப் பெண் தேவகி எழுதியது போலவே எழுதியிருந்ததாம். அதில் அந்தப் பெண், தான் காதலிப்பது இன்னார் என்று கூட எழுதியிருந்தாளாம்…” என் நெஞ்சு இப்போது தடக், தடக் என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. மேலே வைத்தி என்ன சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவலாயிருந்தது. “அப்புறம்?” என்றேன். “தேவகி யார் பெயரைக் குறிப்பிட்டிருப்பாள் என்று நீதான் சொல்லேன், பார்க்கலாம்.” “எனக்கு எப்படித் தெரியும்? கடிதத்தை நான் பார்க்கவில்லையே?” “பார்க்காவிட்டால் என்ன? உனக்குத் தெரியாமலா இருக்கும்?” “தெரியவே தெரியாது. மொட்டைக் கடிதத்தைப் பற்றிய செய்தியே இப்போது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.” “ஆமாம், அப்பா, ஆமாம்! உனக்கு ஒன்றுமே தெரியாது. நீ பால் மணம் மாறாப் பாலகன். நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன். இதற்காக என் பேரில் கோபித்துக் கொள்ளாதே! அந்தக் கடிதத்தில் தேவகி உன்னுடைய பெயரைக் குறிப்பிட்டு உன்னை அவள் காதலிப்பதாக வெட்ட வெளிச்சமாய் எழுதியிருந்தாளாம்!” “சிவ சிவா! பொய்! சுத்தப் பொய்!” என்றேன் நான். ஆயினும் என் நெஞ்சு ஏன் அப்படி விம்மி மேலெழுந்தது? என் தலைக்குள் ஏன் அவ்வளவு பெரிய அலைகள் குமுறி மோதின? சுந்தரம் மேலும் கூறினான்:- “இன்னொரு விஷயங்கூட ஊரில் பேசிக் கொள்கிறார்கள், கிட்டா! உனக்குத் தெரிந்திருப்பது நல்லது என்று சொல்கிறேன். உண்மையில் தேவகி அந்தக் கடிதத்தை எழுதவில்லையென்றும், தேவகி எழுதியது போல, அவளுடைய எழுத்தை ‘போர்ஜரி’ செய்து வேறு யாரோ எழுதிவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.” “ஐயோ! இது என்ன அநியாயம்? அப்படி யார் செய்திருப்பார்கள்?” “என்னடா அப்பா, பரமசாதுவைப் போல் பேசுகிறாயே? நீ தான் அந்தப் ’போர்ஜரி’க் கடிதம் எழுதினாய் என்றல்லவா ஊரில் பேச்சாயிருக்கிறது?” எனக்கு வந்த கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் அளவேயில்லை. என் பொறுமை அதன் எல்லைக்கு வந்து விட்டது. கடைசியாக ஒரு பெருமுயற்சி செய்து “வைத்தி! சுந்தரம்! நீங்கள் என்னோடு சண்டை பிடிப்பதற்காக வந்திருக்கிறீர்களா? அப்படியானால் சொல்லிவிடுங்கள். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவானேன்?” என்று கேட்டேன். “சேச்சே! அதெல்லாம் ஒன்றுமில்லை, அப்பா! உன்னோடு சண்டை பிடித்து எங்களுக்கு இப்போது என்ன ஆகவேணும்? இது நல்லவர்களுக்குக் காலம் இல்லை. ஏதோ நீ எங்கள் ‘கிளாஸ்-மேட்’ ஆயிற்றே, வெளியே பேசிக் கொள்வதை உன் காதிலே போட்டு வைக்கலாம் என்று வந்தால், நீ இப்படிச் ‘சண்டைக்கு வந்திருக்கிறீர்களா?’ என்று கேட்கிறாய். அழகாய்த்தானிருக்கிறது. நாங்கள் போகிறோம்!” என்று சொல்லிவிட்டு இருவரும் போய்த் தொலைந்தார்கள். அறைக்கு வெளியில் போனதும் அவர்கள் சிரித்துக் கொண்டுபோன சத்தம் என் காதில் விழுந்தது. 8 வைத்தியநாதனும் சுந்தரமும் சேர்ந்து சிரித்த சிரிப்பின் ஒலி என்னை நெருப்பாகத் தகித்தது. அவர்களுடைய சிரிப்பில் இடி விழட்டும் என்று சபித்தேன். என் உள்ளத்தில் அவ்வளவு பேரும் புயலை அவர்கள் உண்டு பண்ணிவிட்டுப் போனார்கள். அவர்கள் கூறியதையெல்லாம் ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்தேன். அவற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கலாம் என்றும் சிந்தித்தேன். மாப்பிள்ளை வீட்டாருக்கு மொட்டைக் கடிதம் போனது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். கலியாணம் தடைப்பட்டதற்கு ஏதேனும் காரணம் இருந்து தீரவேண்டும் அல்லவா? ஆனால் அந்தக் கடிதம் எழுதியது யாராயிருக்கும்? தேவகியே எழுதினாள் என்பது உண்மையாயிருக்குமா? அதில் என் பெயரைக் குறிப்பிட்டிருந்ததும் நிஜமாயிருக்க முடியுமா? - அதை எண்ணும் போதே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஆனால் கொஞ்சம் நிதானித்து யோசித்து அது உண்மையாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். என்னைப் பற்றித் தேவகி அப்படி எழுதியிருக்கும் பட்சத்தில் சற்று முன்னால் என்னை அம்மாதிரி வரவேற்றிருக்க மாட்டாள். அவ்வளவு அலட்சியமாகவும் வெறுப்பாகவும் பேசியிருக்க மாட்டாள். என்னிடம் அவள் காதல் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மையாயிருக்கும் பட்சத்தில், ஹெட்மாஸ்டர் காலிலே விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்ளலாம். தேவகிக்குத் தகுந்த கணவனாவதற்கு நான் பெரும் பிரயத்தனம் செய்வதாக வாக்குறுதி அளிக்கலாம். அவளை நான் மணந்து கொள்வதற்கு அவர் கூறும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அது உண்மையாயிருக்க முடியாது. தேவகி அத்தகைய கடிதம் எழுதியிருக்க முடியாது. பின், யார் எழுதியிருக்கக்கூடும்? ஏன்? இந்த அயோக்கிய சிகாமணி வைத்தியும் சுந்தரமும் செய்த வேலையாக இருக்கலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்து என்னையும் அவமானப்படுத்தி சந்தி சிரிக்கவைப்பதற்கு அவர்கள் இந்தச் சூழ்ச்சி செய்திருக்கலாம். சட்டென்று ஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வந்தது. தேவகி வியாசங்கள் எழுதிய நோட் புத்தகத்தை ஒரு தடவை நான் என் அறைக்கு எடுத்து வந்திருந்தேன். அவளது வியாசம் ஒன்றைத் திருத்திக் கொடுப்பதற்காகத்தான். அதே சமயத்தில் வைத்தியும் என் அறைக்கு வந்திருந்தான். அந்த நோட் புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ அதைப்பற்றிக் ’கிறுதக்’காகக் கூடக் கேட்டான். அப்புறம் அன்றைக்கு அந்த நோட் புத்தகத்தைக் காணாமல் நான் தேடியதும், அதைப் பற்றிக் கவலைப் பட்டதும், திடீரென்று மறுநாள் அந்த நோட் புத்தகம் என் அறையில் வந்து முளைத்திருந்ததும் ஞாபகத்துக்கு வந்தன. அந்தக் கணத்தில், குற்றவாளி யார் என்பது என் மனத்திற்கு ஐயமற விளங்கிவிட்டது. அந்த அயோக்கியன் வைத்தியினுடைய வேலைதான். இதைப்போய் உடனே ஹெட்மாஸ்டரிடம் சொல்லி என் பேரிலுள்ள சந்தேகத்தையும் தப்பெண்ணத்தையும் போக்கிக் கொள்ளவேண்டும். குற்றவாளி யார் என்பது ருசுவாகிவிட்டால், பிறகு நின்றுபோன கலியாணத்தைத் திரும்பவும் பேசி முடித்து நடத்தி வைப்பது கூடச் சாத்தியமாகலாம் அல்லவா? இப்படியெல்லாம் ஆகாசக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டு மறுபடியும் ஹெட்மாஸ்டரின் வீட்டுக்கு விரைந்து சென்றேன். அடடா! அங்கே எனக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது? நான் எவ்வளவோ அன்பும் மதிப்பும் வைத்து என்னுடைய இருதயத்திலே கோயில் கட்டிப் பூசை செய்து வந்த தெய்வமாகிய தேவகி இப்படி என் பேரில் அபாண்டமான பெரும் பழியைப் போடுவாள் என்று நான் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? ஆனால் அவள் பேரில் குற்றம் சொல்லுவதிலும் பயனில்லைதான். அவள் என்ன செய்வாள், பாவம்? சந்தர்ப்பங்களின் சேர்க்கை அப்படி அவள் கூட என்பேரில் சந்தேகப்படும்படியாகச் செய்து விட்டது. நான் ஹெட்மாஸ்டரின் வீட்டுக்குள் புகுந்த போது தேவகி விசித்து அழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஹெட்மாஸ்டர் இரையும் சத்தமும் அவருடைய மனைவி தன் பெண்ணுக்குப் பரிந்து ஏதோ சொல்லும் சத்தமும் கூடக் கேட்டது. இந்தச் சமயத்தில் நான் உள்ளே போய் உண்மையை வெளிப்படுத்தித் தேவகியை அவளுடைய தந்தையின் கோபத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற ஆசையுடன் தடபுடலாகப் பிரவேசம் செய்தேன். ஆசை அதிகமாகிற பொழுது அறிவு மழுங்கிவிடும் என்பது எவ்வளவு உண்மையான வார்த்தை! நான் உள்ளே சென்றதும் அந்த மூன்று பேரும் பூசை வேளையில் கரடி புகக் கண்டவர்கள் போல் மிரண்டு விழித்து என்னைப் பார்த்தார்கள். ஹெட்மாஸ்டர் என்னைப் பார்த்ததும் ஏதோ சொல்ல வாயெடுத்தவர், பேசவே முடியாதவராய், திறந்த வாய் திறந்தபடி நின்றார். மாமியோ கண்ணீர் ததும்பிய கண்களோடு என்னைப் பார்த்தாள். ‘பாவம்! இந்தச் சமயத்திலா நீ வந்து சேர வேண்டும்?’ என்று மாமியின் கண்கள் கருணையோடு கூறின. தேவகிதான் முதலில் வாயைத் திறந்து பேசினாள், அடடா! எவ்வளவு கர்ண கடூரமான வார்த்தைகள் அவளுடைய வாயிலிருந்து வெளி வந்தன? தேவகியின் குரலைக் குயிலின் குரலோடும் அவளுடைய பேச்சைக் கிளியின் மழலையோடும் ஒப்பிட்டுப் பார்த்து இறுமாந்திருந்த என்னை அவளுடைய கொடுமையான வார்த்தைகள் எப்படிப் புண்படுத்தி வேதனை செய்தன? “என்னைப் போட்டு ஏன் பிடுங்கி எடுக்கிறீர்கள், அப்பா! உங்கள் அருமைச் சிஷ்யன் கிச்சாமி, இவன் தான் என்னுடைய வியாச நோட் புத்தகத்தை எடுத்துப் போய்ச் சில நாள் வைத்திருந்தான். இந்தத் தடியன் தான் என்னுடைய எழுத்து மாதிரி எழுதி அந்தப் பொய்க் கடிதம் போட்டிருக்கவேண்டும்!” என்றாள் தேவகி. அவ்வளவுதான்; ஹெட்மாஸ்டர் ரௌத்ராகாரமடைந்து என்னை நோக்கி நடந்து வந்தார். “அடபாவி! சண்டாளா! என்னுடைய குடியைக் கெடுத்துவிட்டு மறுபடியும் என்ன தைரியமாய் இந்த வீட்டுகுள்ளே நுழைகிறாயடா!” என்று அலறிக்கொண்டே என்னருகில் வந்து என் கழுத்தைப் பிடித்து வேகமாக ஒரு தள்ளுத் தள்ளினார். தள்ளிய வேகத்தில் எதிரிலேயிருந்த சுவரிலே போய் முட்டிக் கொண்டேன். ஒரு நிமிஷம் என் பொறி கலங்கிற்று. “ஐயையோ! உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா, என்ன? அந்தப் பிள்ளை பேரில் உங்கள் கோபத்தைக் காட்டுகிறீர்கள்?” என்று மாமி பரிந்து கூறியது கிணற்றுக்குள்ளிருந்து பேசியதுபோல் என் காதில் விழுந்தது. மாமியின் குரல் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வீட்டை விட்டு வெளியேறினேன். பிறகு அந்த வீட்டுக்குள் நுழையவே இல்லை. அன்றிரவே அந்த ஊரை விட்டுக் கிளம்பி விட்டேன். பள்ளிக்கூடத்தில் ‘டிரான்ஸ்பர் சர்டிபிகேட்’ வாங்குவதற்காகக் கூடத் தாமதிக்கவில்லை. மறுபடி ஹெட்மாஸ்டர் முகத்தில் விழிக்கவே நான் விரும்பவில்லை. அன்றிரவு கிளம்பியவன் தான்; பிறகு அந்த ஊரின் எல்லையைக் கூட இன்று வரையில் நான் மிதிக்கவில்லை. அன்றைய நிகழ்ச்சி, - அன்று எனக்கு நேர்ந்த அதிர்ச்சி, - என்னுடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைக்க காரணமாயிருந்தது. கிராமத்துக்குப் போய் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கல்கத்தாவுக்குப் பிரயாணமானேன். கல்கத்தாவில் என்னுடைய தூரத்து உறவினர் ஒருவர் இருந்தார். பெரிய கம்பெனியில் அவர் மானேஜர் உத்தியோகம் பார்த்தார். அவரை அண்டி முதலில் அவருடைய வீட்டில் சமையல் வேலை செய்தேன். பிறகு அவருடைய கம்பெனியில் குமாஸ்தாவானேன். நாளடைவில் பொறுப்புள்ள பெரிய உத்தியோகங்கள் கிடைத்தன. கடைசியில் சென்னையிலேயே மேற்படி கம்பெனியின் கிளை ஆபீஸுக்கு மானேஜரானேன். பணமும் பல வசதிகளும் என்னைத் தேடிக் கொண்டு வந்தன. பல வருஷ காலம் மணம் செய்து கொள்ளாமலே இருந்தேன். என் முப்பதாவது வயதில் வாழ்க்கையின் தனிமையைப் பொறுக்க முடியாமல் கலியாணம் செய்து கொண்டேன். என்னுடைய இல்வாழ்க்கையைப் பற்றிக் குறை ஒன்றும் சொல்வதற்கில்லை. நம் நாட்டில் பெரும்பாலோருடைய இல்வாழ்க்கையைப் போல் என் குடும்ப வாழ்க்கையும் லோகாபிராமமாக நடந்து வருகிறது. எப்போதாவது சில சமயங்களில், ஹெட்மாஸ்டர் பெண் தேவகியைப் பற்றி நான் நினைத்துக் கொள்வதுண்டு. அவளை மணந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்திருக்கும் என்று அசட்டுக் கனவுகள் காண்பதுண்டு. அப்பொழுதெல்லாம், கடைசிச் சந்திப்பில் அவள் என்பேரில் சுமத்திய அநியாயப் பழியை நினைந்து அவள் பேரில் வெறுப்பை வேண்டுமென்று வருவித்துக் கொள்வேன். ஆயினும், அது என்ன அதிசயமோ, தெரியவில்லை! எவ்வளவு முயன்றாலும் தேவகியைப் பற்றி வெறுப்பாக என்னால் நினைக்க முடிவதில்லை. அவள் எங்கே இருக்கிறாளோ, அவளுடைய வாழ்க்கையின் சுக துக்கங்கள் எப்படியோ, - என்று நினைக்கும் போது ஒரு தனிப்பட்ட அநுதாப உணர்ச்சி ஏற்படும். தேவகியைப் பற்றிய சிந்தனையில் நான் ஆழ்ந்திருக்கும்போது யாராவது ஏதாவது கேட்டால் என் காதிலேயே ஏறாது. சுய ஞாபகம் வந்ததும் “என்ன சொன்னீர்கள்? ஏதோ ஞாபகமாய் இருந்துவிட்டேன்!” என்பேன். பொருட் காட்சி மைதானத்தில் தேவகியைத் திடீரென்று பார்த்ததிலிருந்து அவள் விஷயமான அநுதாப உணர்ச்சி ஒன்றுக்கு நூறு மடங்காயிற்று. அவளுடைய தோற்றத்தையும் ஆடை ஆபரணங்களையும் பார்த்தால் அவ்வளவு செழிப்பான நிலையில் அவள் இருக்கக்கூடும் என்று தோன்றவில்லை. குழந்தைகளைப் பார்த்தாலும் அப்படியேதானிருந்தது. பாவம்! என்ன கஷ்டப் படுகிறாளோ, என்னமோ? அவளுக்கு நான் ஏதேனும் உதவி செய்வது சாத்தியமானால், அதைக் காட்டிலும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றுமே இராது. அது மட்டுமல்ல; தேவகியும் அவளுடைய தந்தையும் என்பேரில் கொண்ட சந்தேகம் ஆதாரமற்றது என்பதை எப்படியேனும் நிரூபிக்க வேண்டும். அப்படி என் பேரில் அவர்கள் அநியாயப் பழி சுமத்தியதற்காக வெட்கப்படும்படியும் செய்ய வேண்டும்! - இந்த ஒரு காரியம் நிறைவேறினால் பிறகு என் வாழ்க்கையில் குறைபடுவதற்கே இடம் ஒன்றுமிராது. அது நிறைவேறுகிற வரையில் என் உள்ளத்தில் குறையும் வேதனையும் இருந்து கொண்டுதானிருக்கும். ஹெட்மாஸ்டர் பத்மநாப அய்யங்காரும், அவளுடைய உத்தம பத்தினியான ரங்கநாயகி அம்மாளும் உயிரோடு சௌக்கியமாயிருக்கிறார்களா? அதைக்கூடத் தேவகியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டேனே? என்றாலும், பாதாகமில்லை; எல்லாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரிந்து போகிறது! 9 ஞாயிற்றுக் கிழமை பொழுது விடிந்தது. காலையில் நான் விழித்து எழுந்ததும் என் மனதில் உண்டான முதல் நினைவு, அன்றைக்குத் தேவகியின் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான். பொழுது விடிந்தவுடனேயே, காரை எடுத்துக் கொண்டு தேவகியின் வீட்டுக்குப் போக வேண்டும் என்று தோன்றியது. அந்த எண்ணத்தைப் பலவந்தமாகக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அவ்வளவு சீக்கிரமாகப் போனால், யாராவது சிரிப்பார்கள். மேலும் அப்போது பனிக்காலம். காலை ஏழு மணிவரையில் மூடுபனி கொட்டிக் கொண்டிருந்தது. சில வீடுகளில் அதற்குள் எழுதிருக்கக் கூட மாட்டார்கள். அதிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிச்சயமாக நேரங்கழித்தே எழுந்திருப்பார்கள். காலை எட்டு மணி வரையில் பனியின் சிலு சிலுப்பு இருந்தது. பொழுது விடிந்து எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்துக் காப்பி சாப்பிட அவகாசம் கொடுக்க வேண்டுமல்லவா? கடைசியாக, எட்டரை மணிக்குப் புறப்பட்டேன். தேவகி கொடுத்திருந்த விலாசம் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு சந்து. அந்தச் சந்தைக் கண்டு பிடித்து, வீட்டு நம்பரையும் கண்டு பிடிப்பதற்குள், மணி ஒன்பது ஆகிவிட்டது. ஆனால் நான் எண்ணியது போல் வீடு அவ்வளவு மோசமாயில்லை. அது ஒரு மச்சு வீடு. கீழ்க் கட்டிலும் மேன் மாடியிலும் பல அறைகள் உள்ள விசாலமான வீடு. காரைக் கொண்டு போய் நிறுத்தியதும் யாராவது வீட்டுக்குள்ளிருந்து வந்து விசாரிப்பார்கள் என்று நினைத்தேன். யாரும் வெளியே வருகிற வழியாக இல்லை. வீட்டு வாசலில் படிகட்டில் நின்று, “ஸார்! ஸார்!” என்றேன். கீழ்க்கட்டிலிருந்து பதில் ஒன்றும் வரவில்லை. மேலேயிருந்து, ஒரு கடுமையான புருஷக் குரல், “யார் அங்கே?” என்று சத்தமிட்டது. ஒரு விநாடி “இது என்ன வம்பு? ஒரு வேளை விலாசம் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் வேறு யார் வீட்டுக்காவது வந்து விட்டோ மா?” என்று நினைத்தேன். வாசற் படிக்கட்டிலிருந்து வீதியில் இறங்கி அண்ணாந்து பார்த்தேன். மேல் மாடி அறையின் ஜன்னல் கதவை யாரோ படீர் என்று சாத்தினார்கள். மேல் கட்டில் வேறு யாராவது குடியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டு மறுபடியும் வாசற்படி ஏறிக் கதவண்டையில் வந்து “ஸார்! ஸார்!” என்றேன். அதற்கும் பதில் இல்லாமற் போகவே, தைரியத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, கதவை இரண்டு தட்டி “தேவகி! தேவகி!” என்றேன். பிறகு, பாதி சாத்தியிருந்த கதவைத் திறந்தேன். உள்ளே முற்றத்தில் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயண்டை ஒரு வேலைக்காரி பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். ஒரு குழந்தை குழாயண்டை நின்று குழாயிலிருந்த தண்ணீரில் கையை வைத்து விசிறி அடித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்ததும் என் மனம் நிம்மதியடைந்தது. அந்தக் குழந்தை பொருட் காட்சி மைதானத்தில் தேவகியுடன் நான் பார்த்த குழந்தைதான். ஆகவே, இது தேவகியின் வீடு என்பதில் சந்தேகமில்லை. ஒரு வேளை உள்ளே சமையற்கட்டில் தேவகி இருக்கலாம். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டேயிருப்பதால் நான் மெதுவாய்க் கூப்பிட்டது காதில் விழவில்லை போலும். என்னுடைய இரண்டு கையையும் பலமாகத் தட்டவே வேலைக்காரி நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். கையை அலம்பிவிட்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டே என் அருகில் வந்தாள். “என்னாங்க, சாமி!” என்றாள். “தேவகி அம்மாளைப் பார்ப்பதற்காக வந்தேன். அந்த அம்மாளின் வீடு இதுதானே?” என்றேன். “அம்மா அடுத்த வீதிக்குப் போயிருக்காங்க. ஒரு சிநேகிதி அம்மாளின் குழந்தைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம். அதற்காகப் போயிருக்காங்க!” என்றாள் வேலைக்காரி. “எப்போது திரும்பி வருவார்கள்?” “தெரியாதுங்க. அனேகமாக இப்பவே வந்தாலும் வந்துடுவாங்க!” இதென்ன தொந்தரவு என்று நினைத்துக் கொண்டு, “வீட்டிலே வேறு யாருமில்லையா! அந்த அம்மாளின் புருஷர்?…” என்றேன். வேலைக்காரி கொஞ்சம் திகைத்து நின்றுவிட்டு, “அவங்க வெளியூருக்குப் போயிருக்காங்க! இன்னும் திரும்பி வரவில்லைங்க!” என்றாள். அவளுடைய திகைப்பின் காரணம் அப்போது எனக்குப் புரியவில்லை. பிற்பாடு தெரிந்தது. “தேவகி அம்மாளின் தகப்பனார் பத்மநாப ஐயங்கார் இருக்காரா?” என்று கேட்டேன். “அவரு இருக்காரு! அதோ அந்தக் காமரா அறையிலே எட்டிப் பாருங்க!” என்று சொல்லிவிட்டு வேலைக்காரி தன்னுடைய வேலையைப் பார்ப்பதற்குப் போய் விட்டாள். வேலைக்காரி சுட்டிக் காட்டிய அறையின் கதவு சாத்தியிருந்தது. சற்று நேரம் உட்கார்ந்திருக்கலாம் என்றால் ஒரு பெஞ்சியா, நாற்காலியா ஒன்றும் கிடையாது. மேலும், அந்த வேலைக்காரி காமரா உள்ளுக்குள் எட்டிப் பார்க்கச் சொன்னதின் அர்த்தம் என்ன? அந்த அறை ஜன்னலின் கீழ்ப்பாதிக் கதவுகள் சாத்தியிருந்தன. அருகில் சென்று மேற்பகுதி வழியாக எட்டிப் பார்த்தேன். உள்ளே நான் பார்த்த காட்சி ஒரு நிமிஷம் என்னைப் பிரமிக்கும்படி செய்து விட்டது. ஒரு வயதான மனிதர் அந்த அறையின் சுவர் ஓரமாகத் தலைகீழாக நின்று கொண்டிருந்தார். அவருடைய தலையை ஒரு தலையணையில் வைத்துக் கொண்டிருந்தார். கால்களைச் சுவர் மீது சாத்தியிருந்தார். மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டு நின்றார் என்பது தெளிவாயிருந்தது. ஆனால் அவருடைய முகம் எனக்குத் தெரியவில்லை. எனினும் அவர் ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்காராக இருக்கலாம் என்று தோன்றியது. முகத்தைப் பார்த்தால் நிச்சயமாய்ச் சொல்லி விடலாம். ஆயினும் தலைகீழாக நின்று கொண்டிருக்கிறவரிடம் எப்படிப் பேசுவது? ஜன்னல் ஓரமாகவே நின்று காத்துக் கொண்டிருந்தேன். ஒரு நிமிஷத்துக்கெல்லாம் அந்த மனிதரின் கால்கள் கீழே வந்தன. அவர் எழுந்து நின்றார். அறைக்குள் மங்கலான வெளிச்சமே யிருந்த போதிலும் அவர் பத்மநாப ஐயங்கார் தான் என்பது தெரிந்துவிட்டது. இதுதான் சமயம் என்று “ஸார்! ஸார்!” என்றேன். ஐயங்கார் என் பக்கம் சட்டென்று திரும்பிப் பார்த்துக் கடுகடுப்பான முகத்துடன் “யார் அது, சுத்த நியூஸென்ஸ்! இந்த வீட்டில் ஒரு நிமிஷமாவது ‘பிரைவஸி’ என்பதே கிடையாது!” என்றார். “மன்னிக்கவேண்டும் ஸார்! நான் தான் உங்கள் பழைய மாணாக்கன் கிச்சாமி! என்னை ஞாபகம் இல்லையா?” என்றேன். உடனே ஹெட்மாஸ்டரின் முகம் மலர்ந்தது. “அடே டேடேடே! நம்ம தண்டாங்கோரை கிச்சாமியா? வா! வா! தேவகி கூடச் சொன்னாள், நீ வருவாய் என்று. நான் தான் மறந்துவிட்டேன். வா! உள்ளே வா!” என்று சொல்லிக் கொண்டே வந்து அறையின் கதவைத் திறந்தார். உள்ளே போனதும் தானும் உட்கார்ந்து என்னையும் ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு என்னை நன்றாய் உற்றுப் பார்த்து விட்டு, “ஆமாம், நீ கிச்சாமிதான்! ஆனால் எப்படி மாறிப் போயிருக்கிறாய்? ஷர்ட்டு, கோட்டு, கையிலே ரிஸ்ட்வாச்சு, பையிலே பார்க்கர் பேனா எல்லாம் பிரமாதமாயிருக்கிறதே; வாசலில் நிற்கிற கார் கூட உன்னுடையது தானாக்கும்! ஜோரான ஸ்டூடி பேக்கர் கார் அல்லவா? தேவகி சொன்னது சரிதான். நல்ல பணம் சம்பாதிச்சுட்டே போலிருக்கிறது. எல்லாம் பெருமாளுடைய அருள். ரொம்ப சந்தோஷம். ஆனாலும் எப்படி மாறிப் போயிருக்கிறாய்? என்னுடைய ‘ஸ்டூடண்ட்’ கிச்சாமி நீதான் என்று நம்புவதே கஷ்டமாய்த் தானிருக்கிறது. இப்போது எங்கே இருக்கே? என்ன செய்யறே? எல்லாம் சவிஸ்தாரமாய்ச் சொல்லு பார்க்கலாம்?” என்றார். “பிஸினஸ் செய்து கொண்டிருக்கிறேன், ஸார்! ஏதோ உங்கள் ஆசீர்வாதத்தினாலே இது வரை எல்லாம் சௌக்கியமாகவே இருந்து வருகிறது. தியாகராஜ நகரிலே வசித்து வருகிறேன். தாங்கள் இங்கே வந்து ரொம்ப வருஷம் ஆகிவிட்டதோ?” “ஏன்? ரிடையர் ஆனதிலிருந்து இங்கேதான் இருந்து வருகிறேன். வேறு எங்கே போகிறது? இது என் பிதிரார்ஜித வீடு.” “அப்படியா? ரொம்ப சந்தோஷம்! உங்களை நான் பார்த்துக் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷம் இருக்குமே? ஆனால் உங்களுடைய தோற்றத்தில் மட்டும் மாறுதலே இல்லை. அன்று மாதிரியே இன்றைக்கும் இருக்கிறீர்கள், ஸார்!” “நீ சொல்கிறது உண்மை. வயது எனக்கு இப்போது 75 ஆகிறது. ஆனால் நான் இதைச் சொன்னால் ஒருவரும் நம்புவதில்லை. எல்லாரும் அறுபது வயதுதான் மதிப்பிடுகிறார்கள். எதனாலே இப்படி இருக்கேன் தெரியுமா! எல்லாம் யோகாசனத்தின் மகிமைதான். நீ வருகிறபோது கூட ஆஸனந்தான் செய்து கொண்டிருந்தேன். நீ வேணுமானால் பாரு! நான் நூறு வயது இருக்கப் போகிறேன். நான் சுரம் தலைவலி என்று படுத்து இன்றைக்கு வருஷம் பதினைந்து ஆகப்போகிறது.” “எந்த வருஷத்திலே, ஸார், நீங்கள் ரிடையர் ஆனீர்கள்? ரிடையர் ஆனவரையில் தண்டாங்கோரையில் தான் ஹெட்மாஸ்டராயிருந்தீர்களா!” “ஆமாம், கிட்டா, ஆமாம்! வேறு எங்கே நான் போகிறது? தண்டாங்கோரையிலே அந்த நாட்களை நினைத்தாலே எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. அதுவும் நீங்கள் எல்லாம் படித்துக் கொண்டிருந்த போது, எப்பேர்ப்பட்ட நல்ல ஸெட்? நீங்கள் எவ்வளவு சிரத்தையாய்ப் படித்தீர்கள்! உபாத்தியாயர்களிடம் எவ்வளவு மரியாதையாயிருந்தீர்கள்! - இந்தக் காலத்துப் பிள்ளைகள் அடியோடு கெட்டுப் போய் விட்டார்கள்! படிக்கிறதில்லை, பரீட்சைப் பேப்பரைத் திருடப்பார்க்கிறது; அப்படித் திருடிப் பரீட்சைப் பேப்பர் முழுதும் தெரிந்திருந்தாலும், பரீட்சையிலே சரியாகப் பதில் எழுதி மார்க் வாங்க முடிகிறதில்லை! இந்தக் காலத்து மாணாக்கர்கள் ரொம்ப ரொம்ப மட்டமானவர்கள். அடாடா! நீங்கள் எல்லாம் படித்தபோது எவ்வளவு நன்றாயிருந்தது? அப்போது வகுப்புகளுக்கு வருவதே ஒரு சந்தோஷம்!” “எனக்குக் கூட அந்த நாட்களை நினைத்துப் பார்த்தால் எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது, ஸார்! உங்களிடம் படித்த பிறகு வேறு யாரிடமும் படிக்க நான் இஷ்டப்படவில்லை.” “ஆமாம், ஆமாம்! நீ டிரான்ஸ்பர் சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளக் கூட வரவில்லை பாவம்! உன்னை வீணாக…” “அதனால் என்ன, ஸார்! ஒன்றும் குறைவில்லை. அப்படியே படிப்பை விட்டு விட்டுப் போய் ‘பிஸினஸ்’ துறையில் சேர்ந்ததினாலேதான் இன்றைக்கு நான் நன்றாயிருக்கிறேன். என்னுடைய ஆபீஸில் எனக்குக் கீழே முப்பது ’கிராஜுவேட்’டுகள் குமாஸ்தா வேலை பார்க்கிறார்கள், ஸார்!” “ரொம்ப சந்தோஷம். நான் ஆதியிலிருந்து என் கீழ் படித்த மாணாக்கர்களுக்கெல்லாம் இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘உத்தியோகம் உத்தியோகம் என்று ஆலாய்ப் பறக்காதீர்கள்! ஏதாவது வியாபாரம், கைத்தொழில், பாங்கிங்க், - இப்படிப் பார்த்துப் புகுந்து கொள்ளுங்கள்’ என்று படித்துப் படித்துச் சொல்வேன். நீ ஒருவனாவது என்னுடைய வார்த்தையை மதித்து நடந்து இந்த மாதிரி நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறாயே, அதைப் பற்றி எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது. ஆனால், பாவம், உன் மாமிதான் கண்ணை மூடி விட்டாள். என்னைப் பரிதவிக்க விட்டுப் போய்விட்டாள். இன்றைய தினம் அவள் உயிரோடிருந்து நீ ‘ஜம்’ என்று ‘ஸ்டூடி பேக்கர்’ காரில் வந்து இறங்கியதைப் பார்த்திருந்தால் அப்படியே பூரித்துப் போயிருப்பாள். அவளுக்கு உன் பேரில் அலாதியான பிரியம். எத்தனையோ மாணாக்கர்கள் என்னிடம் படித்திருக்கிறார்கள். அவளிடமும் பக்தியுடன் பழகியிருக்கிறார்கள். ஆனால் உன்னிடம் அவளுக்கு ஏற்பட்ட பாசத்தைப் போல் வேறு யாரிடமும் ஏற்படவில்லை. தண்டாங்கோரையில் புதுக் குடித்தனம் போட்ட போது நீ செய்த உதவிகளைப் பற்றி அவள் சொல்லாத நாள் கிடையாது. என்னிடம் கூட அவளுக்கு ரொம்பக் கோபம். உன் பேரில் நான் அநியாயமாய்ப் பழி போட்டுத் துரத்திவிட்டேன் என்று. ஆனால் அந்த நிலைமையில் நான் என்ன செய்திருக்க முடியும், கிச்சா! நீயே சொல்லு!” “ஆமாம், ஸார்! நீங்கள் என்ன செய்திருக்க முடியும்?” என்றேன் நான். ரங்கநாயகி அம்மாள் காலமாகி விட்டாள் என்னும் செய்தி என்னைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. மாமி கடைசி வரை என்னை நினைவு வைத்துக் கொண்டிருந்தாள் என்பது என் மனதை உருக்கி விட்டது. இதே சமயத்தில் வாசலில் கலகலவென்று பேச்சுக் குரல் கேட்டது. அடுத்த நிமிஷம் தேவகி தன்னுடைய மூத்த குழந்தைகள் இருவருடனும் வீட்டுக்குள்ளே வந்தாள். என்னைப் பார்த்ததும், “ஓகோ! கிட்டாவா? வாசலில் நிற்கும் மோட்டார் கார் உங்களுடையது தானா? யாருடையதோ என்று பார்த்தேன். நீங்கள் இன்றைக்கு வருகிறதாகச் சொன்னதையே மறந்து போய் விட்டேன். நல்லவேளை! ஆண்டு நிறைவு நடந்த வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புத்தியும் தட்டிக் கழித்து விட்டு வந்தேனே? அதுவே நலதாய்ப் போயிற்று!” என்றாள். ஸ்திரீகளின் சபல சித்தத்தைப் பற்றி என்னவென்று சொல்வது? இன்றைக்கு என்னை அவள் தான் வரும்படி சொன்னாள். ஆனால் நானே வருகிறேன் என்று சொன்னதாக இப்போது சொல்கிறாள். அது மட்டுமல்லாமல், என்னை வரச் சொல்லிவிட்டு, அதை அடியோடு மறந்தும் போய் விட்டாள்! நானோ மூன்று நாலு நாளாய்க் கனவிலே கூட அதே நினைவாயிருந்தேன். நன்றாயிருக்கிறதல்லவா, கதை? 10 தேவகி உள்ளே வந்து உட்கார்ந்ததும் ஹெட்மாஸ்டர் “பார்த்தாயா, தேவகி? நம்ம தண்டாங்கோரை கிச்சாமி எப்படி ஜோராய் ‘ஸ்டூடி பேக்கர்’ கார் வைத்துக் கொண்டு இருக்கிறான், பார்த்தாயா? சற்றே நீ இவனுடன் பேசிக் கொண்டிரு. நான் ஸ்நானம் செய்து விட்டு வந்து விடுகிறேன்” என்று சொல்லிப் போனார். தேவகி தன் குழந்தைகளை ஒவ்வொருவராய்க் கூப்பிட்டு, “இதோ உங்கள் சித்தியா வந்திருக்கிறார். நமஸ்காரம் பண்ணு!” என்றாள். (வைஷ்ணவர்கள் சித்தப்பாவைச் ‘சித்தியா’ என்று சொல்வது வழக்கம்.) “இவர் எங்கள் சித்தியாவா? இத்தனை நாள் எங்களை ஏன் வந்து இவர் பார்க்கவில்லை?” என்றது ஒரு குழந்தை. அதற்கு, “இப்போதுதான் உங்கள் சித்தியாவுக்கு தயவு வந்திருக்கிறது. அதற்கு நான் என்ன செய்கிறது?” என்றாள் தேவகி. இதற்குப் பதில் சொல்லவே எனக்குத் தெரியவில்லை. குழந்தைகள் நமஸ்காரம் செய்துவிட்டு அவரவர்களும் கையில் ஒரு புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். “அந்த நாளில் நீ படிப்பிலே கெட்டிகாரியாக இருந்தது போலவே உன் குழந்தைகளும் இருக்கிறார்கள்” என்றேன் நான். “போதும், போதும். நான் படித்த இலட்சணத்தை நீங்கள் தான் மெச்ச வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கே போகாமல் படிப்பை நிறுத்திவிட்டேன். ஆனால் அது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் தான் திடீரென்று ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சர்டிபிகேட்’ கூட வாங்கிக் கொள்ளாமல், மாயமாய்ப் போய் விட்டீர்களே?” என்றாள். இவ்வளவு சீக்கிரத்தில் அந்த விஷயத்தைப் பற்றிப் பேச எனக்கு இஷ்டமில்லை. கடைசியில் தேவகியிடம் விடை பெற்றுக்கொண்டு போகும்போது அந்த ‘போர்ஜரி’ கடிதத்தின் உண்மை வெளியாயிற்றா என்று கேட்க நினைத்தேன். ஆரம்பத்திலிருந்து அதைப் பற்றிக் கேட்டுப் பேச்சை விரஸமாக்குவானேன்? ஆகையால், பேச்சை வேறு பக்கம் திரும்ப விரும்பி, “தேவகி! உன் தாயார் காலமாகி விட்டாளாமே? இப்போதுதான் ஹெட்மாஸ்டர் சொன்னார்!” என்றேன். உடனே தேவகி கடல் மடை திறந்ததுபோல் தன் தாயாரைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அன்னையின் அருமை பெருமைகளைப் பற்றியும் அற்புத குணங்களைப் பற்றியும் வர்ணித்துக் கொண்டேயிருந்தாள். எனக்கும் மாமியைப் பற்றிக் கேட்கப் பிரியமாயிருந்தது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் இங்கே சொல்லிக் கதையை வளர்த்த நான் விரும்பவில்லை. மேலே விஷயத்துக்குப் போகிறேன். திடீரென்று தேவகி, “அம்மாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் எனக்கு நேரம் போவதே தெரிவதில்லை. இனிமேல்தான் அடுப்பு மூட்டித் தளிகை செய்தாக வேண்டும். நான் போகட்டுமா? அப்பா சீக்கிரம் வந்து விடுவார்!” என்றாள். “எனக்கும் போக வேண்டியதுதான். நேரமாயிற்று. ஆனால் உன் புருஷனைப் பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையே, தேவகி! அவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் நான் முக்கியமாக வந்தேன். அவர் வீட்டில் இப்போது இல்லையா? ஒரு வேளை ஊரிலேயே இல்லையா?” என்று கேட்டேன். தேவகி அந்தப் பழைய நாட்களில் சில சமயம் திடீரென்று சிந்தனையில் ஆழ்ந்து பேசாமலிருப்பாள் என்று சொன்னேன் அல்லவா? அந்தமாதிரி இப்போதும் இருந்தாள். திடீரென்று அவளுடைய பிராயத்தில் இருபது வயது குறைந்து பழைய கன்னிப் பெண் தேவகியாக மாறிவிட்டதாகவே தோன்றியது. யோசனையில் ஆழ்ந்திருந்த அந்த நிமிஷத்தில் அவளுடைய முகபாவம் அப்படியிருந்தது. “தேவகி! இருபத்தைந்து வருஷத்தில் நீ கொஞ்சம் கூட மாறவில்லை” என்று நான் சொன்னதும், அவள் திடுக்கிட்டுப் பகற் கனவிலிருந்து விழித்துக் கொண்டவாளாய், “என்ன கேட்டீர்கள்?” என்றாள். “உன்னுடைய புருஷரைப் பற்றித்தான் கேட்டேன்; அவரைப் பார்க்க முடியாதா?” என்றேன். தேவகி சிறிது நேரம் உச்சிமோட்டைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, “ஆம், அவரைப் பார்க்க முடியாது. அது பெரிய கதை. இப்போதே சொல்ல வேண்டுமா?” என்றாள். 11 தேவகி தன்னுடைய கணவனைப் பற்றி “இப்போதே சொல்லத்தான் வேண்டுமா?” என்று கேட்டபோது, அவளுடைய குரலில் எல்லையில்லாச் சோகம் தொனித்தது. நான் எதிர்பார்த்தபடியே அவளுடைய இல்லற வாழ்க்கை துர்ப்பாக்கிய வாழ்க்கைதான் போலும்! என் இருதயம் கனிந்து உருகிற்று. கண்ணில் கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “உனக்கு அது கஷ்டம் தருவதாயிருந்தால், இப்போது சொல்ல வேண்டாம். இன்னொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம்!” என்றேன். “இல்லை, இல்லை! அதை இப்போதே சொல்லி விடுவதுதான் நல்லது. அந்த விஷயம் ஒன்று மனதில் பாரமாய் இருப்பானேன்?” என்று தேவகி சொல்லிவிட்டுத் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ஒருவாறு கூறினாள். அதன் சுருக்கம் வருமாறு:- தேவகிக்கு முதலில் நிச்சயிக்கப்பட்ட கலியாணம் நின்று போன மூன்று வருஷத்துக்குப் பிறகு வேறு வரனுக்குக் கலியாணம் ஆயிற்று. கலியாணம் ஆனதும் குடும்பம் சென்னைக்குக் வந்து விட்டது. தேவகியின் கணவன் வைத்தியக் கல்வி படித்துத் தேறி டாக்டர் ஆனான். ஹைதராபாத் சமஸ்தானத்தில் டாக்டர்களுக்கு நல்ல வருமானம் என்று கேள்விப்பட்டு இருவரும் அங்கே போனார்கள். எதிர்பார்த்த படியே அங்கு நல்ல வருமானமும் வந்தது. பல வருஷ காலம் அவர்களுடைய இல்லற வாழ்க்கை சந்தோஷமாக நடந்து வந்தது. பிறகு, ஹைதராபாத்துக்குச் சனியன் பிடித்தது! ரஸாக்கியர்களின் கொடூர ஆட்சி அந்த நவாப் சமஸ்தானத்தில் ஏற்பட்டது. அத்துடன் கம்யூனிஸ்டுகளின் தொல்லையும் சேர்ந்து கொண்டது. ஹைதராபாத்தில் வசித்த ஜனங்கள் எல்லாரையும் போல் தேவகியும் அவள் குடும்பத்தாரும் எப்போதும் என்ன ஆபத்து நேருமோ என்று கதிகலங்கிக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்கள். ஒருநாள் இரவு பத்து மணிக்கு யாரோ சிலர் அவர்களுடைய வீட்டு வாசலுக்கு வந்து தடதடவென்று கதவை இடித்தார்கள். கதவைத் திறந்ததும் கறுப்பு முகமூடி அணிந்த ஐந்தாறு தடியர்கள் வீட்டுக்குள் புகுந்தார்கள். டாக்டரை அவருடைய மருந்துப் பெட்டியையும், மற்ற அவசியமான கருவிகளையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். ‘ஏதோ வைத்தியத்துக்குத் தானே கூப்பிடுகிறார்கள்?’ என்று எண்ணி டாக்டர் அவர்களுடன் சென்றார். வாசலில் போலீஸ் வண்டியைப் போன்ற கூண்டு மோட்டார் வண்டி ஒன்று நின்றது. அதில் டாக்டரை ஏற்றி அழைத்துப் போனார்கள். அன்றைக்குப் போனவர் அப்புறம் திரும்பி வரவேயில்லை. எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் அவர் இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தேவகி தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தன் தந்தையின் வீட்டில் தஞ்சம் புகுந்தாள். அது முதல் அப்பாவின் ஆதரவில் இருந்து வருகிறாள். எவ்வளவோ பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பார்த்தும், ஹைதராபாத் சர்க்காருக்கு மனுப் போட்டுப் பார்த்தும், தேவகியின் கணவனைப் பற்றி நாளது வரையில் தகவல் ஒன்றும் தெரியவில்லை! இந்தத் துயரமான, பீதிகரமான வரலாற்றைத் தேவகி சொல்லிவிட்டு, கண்களில் துளித்த கண்ணீரைப் புடவைத் தலைப்பினால் துடைத்துக் கொண்டு “நான் வீட்டு வேலையைப் பார்க்கப் போகட்டுமா? இன்னும் சொல்ல வேண்டியது, பேச வேண்டியது எவ்வளவோ இருக்கிறது! இன்னொரு நாள் சொல்கிறேன்” என்றாள். அவள் போவதற்காக எழுந்து நின்றதும் எனக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. “தேவகி! என்னிடம் நீ கொஞ்சம் கூடச் சங்கோசப் படக்கூடாது. உனக்கு ஏதாவது எப்போதாவது என்னால் ஆகக்கூடிய உதவியிருந்தால் உடனே சொல்ல வேண்டும். அப்படி உனக்கு உதவி செய்யக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவேன்” என்றேன். தேவகி சில கண நேரம் யோசனை செய்துவிட்டு, “ஆமாம்; நானே ஒரு உதவி உங்களைக் கேட்கலாமென்றுதானிருந்தேன். நாளை மாலை இன்னொரு தடவை பொருட்காட்சிக்குப் போகவேண்டும் என்று குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். பஸ்ஸில் இவர்களை அழைத்துக் கொண்டு போய் வருவது ரொம்பவும் கஷ்டமாயிருக்கிறது. உங்களிடம் தான் பெரிய மோட்டார் வண்டி இருக்கிறதே! நாளை சாயங்காலம் சுமார் நாலு மணிக்கு வந்து எங்களைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போக முடியுமா?” என்று கேட்டான். “இது என்ன பிரமாதம்? பேஷாக வந்து அழைத்துப் போகிறேன்!” என்று உற்சாகத்துடன் சொன்னேன். தேவகி சமையல் உள்ளுக்குச் சென்றதும், நானும் வெளிக் கிளம்பலாம் என்று யத்தனித்தேன். அச்சமயம் ஹெட்மாஸ்டர் ஸ்நான அறையிலிருந்து வந்துவிட்டார். “என்ன, கிருஷ்ணசாமி! புறப்படுகிறாயா?” என்றார். “புறப்பட வேண்டியதுதான்; உங்களிடம் விடை பெறுவதற்காகத்தான் காத்திருக்கிறேன்!” என்றேன். அவருடைய அறைக்குள் போனதும் “சற்றே உட்காரு, அப்பா, கிருஷ்ணசாமி! அவசரம் ஒன்றும் இல்லையே? கொஞ்சம் கழித்துப் போகலாம் அல்லவா?” என்றார். அதன்படியே நான் உட்கார்ந்தேன். ஏனெனில் என்னுடைய சந்தேகத்தை இன்னும் நான் நிவர்த்தி செய்து கொண்டபாடில்லை. தேவகியின் கையெழுத்துப் போல் எழுதியிருந்த அந்த ‘போர்ஜரி’ கடிதத்தை எழுதியது யார் என்னும் உண்மை அவர்களுக்குப் பிற்பாடு தெரிந்ததா? குற்றவாளி நான் இல்லை என்பதை அவர்கள் அப்புறமாவது தெரிந்து கொண்டார்களா? இதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆர்வம் அதிகமாயிருந்தது. ஆனால் அந்தப் பேச்சை எடுப்பதற்குச் சங்கோசமாயிருந்தது. நான் உட்கார்ந்தும் ஹெட்மாஸ்டர் “தேவகி உன்னிடம் என்ன சொன்னாள்? என் பேரில் ஏதாவது புகார் சொன்னாளா? நான் யோகாசனம் செய்வது பற்றிக் குறை சொல்லியிருப்பாளே?” என்று கேட்டார். “அதெல்லாம் இல்லை, ஸார்! உங்களைப் பற்றி தேவகி ஏன் புகார் சொல்லப் போகிறாள்? பாவம், அவளுக்கு நேர்ந்த கஷ்டகாலத்தில் நீங்களாவது தஞ்சம் கொடுப்பதற்கு இருந்தீர்களே? தேவகியின் புருஷனுடைய கதியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நினைக்க நினைக்க ரொம்ப வருத்தமாயிருக்கிறது!” என்றேன். “ஓஹோ! புருஷனைப் பற்றியும் சொல்லி விட்டாளா? என்ன சொன்னாள்?” என்றார் ஹெட்மாஸ்டர். “ஹைதராபாத்தில் நடந்ததையெல்லாம் சொன்னாள். ஒரு நாள் இராத்திரி கறுப்பு முகமூடி போட்டுக் கொண்டு ஐந்தாறு பேர் வந்து டாக்டரை அழைத்துக் கொண்டு போனதைப் பற்றிச் சொன்னாள். அப்புறம் அவர் திரும்பியே வரவில்லையாமே?” “அதை உன்னிடமும் சொல்லி விட்டாளா? கிருஷ்ணசாமி! நான் சொல்கிறேன், கேள்! தேவகி என்னுடைய பெண்தான். இருந்தாலும் அவள் சில சமயம் செய்கிறது எனக்குப் பிடிக்கிறதில்லை. இந்த மாதிரி வருகிறவர் போகிறவர்களிடம் எல்லாம்…” என்று ஹெட்மாஸ்டர் கூறியதும் நான் குறுக்கிட்டேன். “என்ன, ஸார், அப்படிச் சொல்கிறீர்கள்? என்னை வருகிறவர், போகிறவர்களோடு சேர்த்து விட்டீர்களே? ஏதோ பழைய விசுவாசத்தை நினைத்து என்னிடம் தன்னுடைய கஷ்டத்தைச் சொல்லலாம் என்று எண்ணித்தான் தேவகி சொன்னாள். அதற்காக நீங்கள் தேவகியைக் கோபித்துக் கொள்ள வேண்டாம்!” என்றேன். ஹெட்மாஸ்டர் தம்முடைய பிசகை உணர்ந்தவர் போல், “ஆமாம், கிருஷ்ணசாமி, உன்னிடம் சொன்னால் தவறில்லைதான். ஆனாலும் நாம் தான் கஷ்டப்படுகிறோம் என்றால், நம்மைச் சேர்ந்தவர்களிடமெல்லாம் நம்முடைய கஷ்டங்களைச் சொல்லி அவர்களையும் அநாவசியமாகக் கஷ்டப்படுத்தக் கூடாது அல்லவா?” என்றார். “சிநேகிதம் என்பது பின் எதற்காக? நம்முடைய கஷ்டங்களைச் சொல்லிக் கொள்வதற்கும் சமயா சமயங்களில் உதவியாயிருப்பதற்குந்தானே? என்னை வேற்று மனிதனாக நீங்கள் நினைக்கக் கூடாது. அது இருக்கட்டும்… உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அந்தக் கறுப்பு முகமூடி தரித்தவர்கள் ரஸாக்கியர்களாயிருப்பார்களா? அல்லது கம்யூனிஸ்டுகளாயிருப்பார்களா? ஹைதராபாத்தில் எனக்குத் தெரிந்த வர்த்தர்கள், - செல்வாக்கு உள்ளவர்கள், - சிலர் இருக்கிறார்கள். உங்கள் மாப்பிள்ளையைக் கண்டு பிடிப்பதற்கு நான் ஏதாவது முயற்சி செய்து பார்க்கட்டுமா?” என்று கேட்டேன். “பேஷாக முயற்சி செய்து பார்க்கலாம்; ஆனால் பலன் ஒன்றுமிராது!” என்றார் ஹெட்மாஸ்டர். அவர் இவ்விதம் கூறிய தொனி என் மன அமைதியைக் கெடுத்தது. “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் எல்லாப் பிரயத்தனங்களும் செய்து பார்த்து விட்டீர்களா?” என்று கேட்டேன். “நான் ஒரு முயற்சியும் செய்யவில்லை!” என்றார் தேவகியின் தந்தை. பிறகு என் அருகில் வந்து மெல்லிய குரலில், “கிருஷ்ணசாமி! தேவகியின் சுபாவம் இன்னும் உனக்குத் தெரியவில்லையா? பாவம்! உன்னை அவள், ஏமாற்றி விட்டாள். அவள் வார்த்தையை நீ நம்பவே நம்பாதே அவ்வளவும் கட்டுக் கதை. தேவகியின் கணவன் இந்த ஊரிலேதான் இருக்கிறான்!” என்றார். இதைக் கேட்டதும், எனக்கு எவ்வளவு திகைப்பு ஏற்பட்டிருக்குமென்பதை வாசகர்களே ஊகித்து அறிந்து கொள்ளலாம். “தேவகி அவ்வளவு பொய் புனை சுருட்டுச் சொல்லுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான். அப்படியானால் உங்கள் மாப்பிள்ளை இந்த ஊரில் தான் இருக்கிறாரா? இந்த ஊரில் என்றால் எங்கே?” என்றேன். “பைத்தியம் பிடித்தவர்கள் எங்கே இருப்பார்களோ, அங்கேதான்!” “என்ன, என்ன?” “ஆமாம், கிருஷ்ணசாமி! ஒரு நாள் உனக்கு உண்மை தெரியாமலிராது. இந்த அசட்டுப் பெண் அதை மறைத்து வைக்க முயல்வதால் என்ன பயன்? என் மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் பைத்தியம். கொஞ்சம் என்ன? ஒரே முற்றின பைத்தியம். அதுவும் சில நாளாய்…” என்று நிறுத்தினார். அதற்கு மேலே கேட்பதற்கு எனக்கும் விருப்பம் இல்லை. மனம் ஒரேயடியாய்க் குழம்பி விட்டது. தேவகியிடம் முன்னைக் காட்டிலும் அதிக அநுதாபம் ஏற்பட்டது. அவள் என்னிடத்தில் பொய் சொன்னது பற்றி எனக்குக் கொஞ்சமும் கோபமோ மனஸ்தாபமோ ஏற்படவில்லை. தன் புருஷன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று எந்த ஸ்திரீதான் தயக்கமின்றிச் சொல்வாள்? புருஷனைப் பற்றிக் கேட்டதும் தேவகியின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் எனக்கு நினைவு வந்தன. பாவம்! அவளைப் போய்க் கேட்கப் போனேனே? புண்ணிலே குச்சியை எடுத்துக் குத்துவது போல. ஹெட்மாஸ்டர் இவ்விதம் சொன்ன பிறகு, அந்தப் பழைய ‘போர்ஜரி’ கடிதத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்கக் கூட எனக்கு மனம் வரவில்லை. அதற்கு இப்போது என்ன அவசரம்? பிறகு கேட்டுக் கொண்டால் போகிறது. “சரி, ஸார்! போய்விட்டு நாளை வருகிறேன்! குழந்தைகளைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போவதற்காகத் தேவகி நாளை சாயங்காலம் வரச் சொல்லியிருக்கிறாள்” என்று கூறிவிட்டுக் கிளம்பினேன். அதே சமயத்தில் அந்த வீட்டின் மேல் மச்சிலிருந்து ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று சொல்ல முடியாது. சிம்மத்தின் கர்ஜனை, புலியின் உறுமல், ஓநாயின் ஊளை, - இவற்றையெல்லாம் விட அந்தச் சத்தம் பயங்கரமாயிருந்தது. கதைகளிலே நாம் படித்திருக்கும் ராட்சதர்கள் ஒருவேளை அப்படித்தான் சத்தமிடுவார்கள் போலும். என் உடம்பிலும் ஒவ்வொரு ரோமமும் குத்திட்டு நின்றது. என்னுடைய கால்கள் கீழே நிலைத்து நிற்க முடியாமல் நடுநடுங்கின. “ஸார்! ஸார்! இது என்ன?” என்று கேட்டேன். “எது என்ன என்று கேட்கிறாய்? அடுத்த வீட்டில் ஏதோ புருஷன் பெண்டாட்டி சண்டை போலிருக்கிறது! அதைப் பற்றி நமக்கு என்ன?” என்றார் ஹெட்மாஸ்டர். அந்த வீட்டிலிருந்து நான் கிளம்பிச் சென்ற போது ரேழி நடையில் வைத்திருந்த சைக்கிளில் கால் தடுக்கிற்று. கட்டை விரலில் காயம் உண்டாயிற்று. ஆனால் காயம்பட்டது என்பதாக எனக்கு அப்போது தெரியவேயில்லை. வீடு சென்ற பிறகுதான் தெரிந்தது. வாசலில் நின்ற மோட்டாரில் நான் ஏறி உட்கார்ந்து காரைச் செலுத்திய போது ’ஸ்டியரிங்’கில் வைத்த என் கைகள் நடுங்கின; ’ஆக்ஸிலேட’ரில் வைத்த என் காலும் நடுங்கிற்று. மோட்டாரை விடுவதற்கு முன்னால் தற்செயலாக அந்த வீட்டின் மேல் மாடிப் பக்கம் பார்த்தேன். திறந்திருந்த ஜன்னல் வழியாக ஒரு பயங்கரமான மனித உருவம் என்னை நோக்கிக் கொண்டிருந்தது. அந்த உருவத்தின் முகத்தில் பைத்தியம் என்று எழுதி ஒட்டியிருந்தது! 12 அன்றைக்கும் மறுநாளும் எனக்கு தேவகியின் நினைவாகவே இருந்தது. ஆனாலும் அவளைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொள்வது என்று தெரியவில்லை. அவளுடைய கணவனைப் பற்றிய உண்மை என்ன? ஹைதராபாத் குழப்பத்தின் போது அவனை ரஜாக்கர்கள் கொண்டு போனார்கள் என்பதும், பிறகு அவன் திரும்பி வரவேயில்லை என்பதும் உண்மையா? அல்லது தேவகியின் தகப்பனார் கூறியபடி அவனுக்குப் பைத்தியம் பிடித்துப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்பது உண்மையா? அல்லது என் கண்ணாலே பார்த்தபடி, அதே வீட்டில் மேல்மாடியில் அந்தப் பைத்தியம் பிடித்த கணவனை அடைத்துப் போட்டிருப்பது உண்மையா? எல்லாவற்றையும் சேர்த்து யோசித்துப் பார்க்கும்போது கடைசியில் நான் கண்ணால் கண்டதே உண்மையாயிருக்கலாம் என்று தோன்றியது. தேவகியும் அவள் தகப்பனாரும் கூறிய பொய்களுக்குச் சுலபமாகக் காரணம் கண்டு பிடிக்கலாமல்லவா? பாவம்! தேவகிக்குத் தன்னுடைய கணவனைப் பற்றிய உண்மையைச் சொல்வது கஷ்டமாகத்தானேயிருக்கும்? அதிலும் என்னிடம்? அந்த வேலைக்காரி முதலில் பதில் சொல்லத் தயங்கிவிட்டுப் பிறகு எங்கேயோ தேவகியின் கணவன் போயிருப்பதாகவும் திரும்பி வரவில்லையென்றும் சொன்னாள், அல்லவா? புதிய மனிதர்களிடம் அந்த மாதிரி சொல்லும்படியாகத் தேவகி அவளுக்குக் கட்டளையிட்டிருக்க வேண்டும். தேவகியின் தகப்பனாருக்குப் பாவம், அவ்வளவு முழுப் பொய் சொல்ல விருப்பமில்லை. அவர் பாதி உண்மையைச் சொன்னார். தேவகியின் கணவனுக்குப் பைத்தியம் என்று ஒப்புக் கொண்டார். ஆனால் அதே வீட்டு மாடியில் தேவகியின் கணவனை அடைத்து வைத்திருக்கிறது என்று சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. அதனாலேயே பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்னார். இதையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த போது ஒரு பக்கத்தில் எனக்கு எவ்வளவோ பரிதாபமாயிருந்தது. தேவகிக்கு இந்தக் கதியா வரவேண்டும்? இப்படிப்பட்ட புருஷனா அவளுக்கு வாய்க்க வேண்டும்? அடடா! ஹெட்மாஸ்டர் எப்படியெல்லாம் சொப்பனம் கண்டு கொண்டிருந்தார்? என்னென்ன ஆகாசக் கோட்டைகளைக் கட்டினார்? கொஞ்சமும் சங்கோசமில்லாமல் என் முகத்துக்கு நேரே தேவகிக்குப் பணக்காரக் கணவனாக வரன் பார்க்கிறேன்; உனக்கு அவளைக் கொடுக்க முடியாது; அந்த எண்ணத்தை விட்டு விடு!" என்று பச்சையாகச் சொன்னாரே? இத்தனைக்கும் நான் அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவரிடம் பிரஸ்தாபிக்கவேயில்லையே? யாரோ காலிப்பயல்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டும் ஊர் வதந்தியை வைத்துக் கொண்டும் என் பேரில் எரிந்து விழுந்தாரே? என் மீது அபாண்டமான பழியும் சுமத்தினாரே? இப்போது என்ன ஆயிற்று? தேவகிக்கு எப்படிப்பட்ட கணவன் வாய்த்தான்? கடவுளே! என்னைப் பரமயோக்யன் என்று அதுகாறும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் மனதின் ஆழத்தில் ஒளிந்திருந்த தீய பிசாசின் வலிமை தெரிந்தது. தேவகி அப்படிப்பட்ட துர்க்கதியை அடைந்திருக்கக் கண்டது வெளிப்படையாக என் மனதில் பரிதாபத்தை உண்டாக்கிய போதிலும் உள்ளுக்குள்ளே ஒருவித திருப்தியையும் உண்டாக்கிற்று. அத்துடன், அத்தகைய பரிதாப கதிக்கு உள்ளான தேவகிக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் முன் வந்து நின்றது. இந்த எண்ணத்தோடு கூட தேவகியைப் பற்றிய தாழ்வான ஒரு எண்ணமும் என் மனதில் உதிக்கக் கண்டேன். சீச்சீ! பைத்தியக்காரப் புருஷனை மேல் மாடியில் அடைத்துப் போட்டுவிட்டு இவளுக்குப் பொருட்காட்சி வேடிக்கை என்ன வேண்டிக்கிடந்தது? அடுத்த வீதி ஆண்டு நிறைவுக் கல்யாணத்துக்குப் போக எப்படி மனம் வந்தது? எவ்வளவு கடின நெஞ்சு அவளுக்கு? ஒரு தடவை போனது போதாது என்று இன்னொரு நாளும் பொருட் காட்சிக்குப் போக வேண்டுமாமே? அடாடா! ஒரு காலத்தில் நான் இவளை தேவ கன்னிகை என்று நினைத்துப் போற்றினேன் அல்லவா? இவளுடைய பணிவிடைக்காக என் வாணாளையே அர்ப்பணம் செய்யத் தயாராகயிருந்தேன் அல்லவா! சீ! ஆனால் கொஞ்சம் நிதானித்துப் பார்த்தால், அவள் பேரில் அவ்வளவு நிஷ்டூரம் சொல்வதற்கு இடம் என்ன இருக்கிறது? எப்படியும் மூன்று குழந்தைகளுக்குத் தாயார். அந்தக் குழந்தைகளைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டியதுதானே அவசியம? புருஷனுக்கு ஏதோ துர்க்கதி நேர்ந்து விட்டது என்பதற்காகக் குழந்தைகளையும் கஷ்டப்படுத்துவது நியாயமாகுமா? நாலு இடங்களுக்கு அழைத்துக் கொண்டு போய்க் காட்டினால்தானே குழந்தைகள் தந்தையின் நிலையை மறந்து சந்தோஷமாயிருக்க முடியும்? இப்படி முன்னுக்குப் பின் முரணான எண்ணங்களால் என் உள்ளம் கலங்கிக் கொண்டிருந்தது. என் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு நானே சமாதானம் கண்டு பிடித்துத் திருப்தியடையப் பார்த்தேன். ஆயினும் பூரண திருப்தி ஏற்படவில்லை. மறுநாள் திங்கட்கிழமை, நான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனபோது வழியில் பார்க்டவுனில் ‘டாக்டர் சுந்தரம் எல்.ஐ.எம்.’ என்று போட்டிருந்த போர்டு என் கண்களைக் கவர்ந்தது. ஏற்கெனவேயே சில சமயம் நான் இந்த போர்டைப் பார்த்துவிட்டுக் கட்டிடத்தையும் உற்றுப் பார்த்திருக்கிறேன். சுந்தரம் என்று பெயருள்ள எத்தனையோ ஆயிரம் பேர் நாட்டில் இருக்கிறார்கள். ஆயினும் இந்த ‘டாக்டர் சுந்தரம்’ போர்டு எனக்குத் தண்டாங்கோரையில் என்னுடன் ஹைஸ்கூலில் படித்த சுந்தரத்தை நினைவூட்டிற்று. அதற்கு ஒரு காரணமும் இல்லாமற் போகவில்லை. இரண்டொரு தடவை அந்த ஆயுர்வேத மருந்துக் கடையில் ஜன்னல் வழியாக ஒரு முகம் தெரியும். அந்த முகம் ஏதோ எப்போதோ எனக்குத் தெரிந்த முகம் போலத் தோன்றும். பல தடவை இதைப் பற்றி யோசித்து, ‘ஆமாம்; இவன் அந்தத் தண்டங்கோரை சுந்தரமாயிருக்கக் கூடும்’ என்று தீர்மானித்தேன். காரிலே அந்த வழியாகப் போய்க் கொண்டிருக்கையில் ஏற்பட்ட மின்னல் எண்ணங்கள் இவை. மோட்டாரை நிறுத்தி விசாரிப்பதற்கு வேண்டிய அக்கறை அப்போதெல்லாம் எனக்கு ஏற்படவில்லை. எதற்காக விசாரிக்க வேண்டும்? விசாரித்து அந்த சுந்தரமாயிருந்தால் தான் என்ன பயன்? இவனுடைய சிநேகத்தைப் புதுப்பித்துக் கொண்டு இப்போது எனக்கு ஆக வேண்டியது என்ன? ஒன்றுமில்லை! ஆனால் நான் இந்தத் திங்கட்கிழமையன்று அந்த வழியாகப் போனபோது, காரை நிறுத்தி அவன் தண்டாங்கோரை சுந்தரம்தானா என்று விசாரிப்பதற்குத் தடுக்க முடியாத ஆர்வம் கொண்டேன். காரை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே போனேன். சுந்தரம் மாதிரிதான் இருந்தது. ஆனால், அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அவனிடம், வைத்தியம் பார்த்துக் கொள்ள வந்தவர்கள் யாரும் அப்போது அங்கு இருக்கவில்லை. நான் அவன் மேஜைக்கெதிரே கிடந்த பெஞ்சியில் உட்கார்ந்ததும், “உங்களுக்கு என்ன உடம்பு? எங்கே, கையைக் காட்டுங்கள்!” என்று வைத்திய பரிசீலனை செய்யத் தயாரானான். நான் கொஞ்சம் தயங்கினேன். “சீக்கிரம் சொல்லுங்கள். எனக்கு இன்றைக்குச் சீக்கிரம் டிஸ்பென்ஸரியைச் சாத்திக் கொண்டு போகவேண்டும்” என்றான். “நான் உடம்பு பார்த்துக் கொள்ள வரவில்லை. எனக்கு உடம்பு ஒன்றுமில்லை. வேறொரு விஷயம் விசாரிப்பதற்காக வந்தேன். ஒரு வேளை நீங்கள் என் பழைய சிநேகிதனாயிருக்கலாம் என்று நினைத்தேன். டாக்டர்! நீங்கள் தண்டாங்கோரை ஹைஸ்கூலில் எப்போதாவது படித்ததுண்டா?” என்று கேட்டேன். அவன் என்னை அதிசயத்துடன் உற்றுப் பார்த்து, “ஆமாம், படித்திருக்கிறேன். நீங்கள் யார்? ஒரு வேளை… ஒரு வேளை … அடேடே! நம்ம கிச்சாமி போலிருக்கிறதே!” என்றான் . “ஆமாம், சுந்தரம்! நான் அந்த கிருஷ்ணசாமி தான்!” “பலே! பலே! நம்ம ‘சோப்பளாங்கி’ கிருஷ்ணசாமியா? மன்னித்துக் கொள்! அப்போது, நாம் பள்ளிக்கூடத்தில் படித்தபோது, நீ யாரோடும் சண்டைக்கு வரமாட்டாயல்லவா? யாராவது உன்னோடு சண்டைக்கு வந்தாலும் நீ பின்வாங்கிப் போய்விடுவாயல்லவா? அதனால் உன்னை நாங்கள் ‘சோப்பளாங்கி கிச்சாமி’ என்று சொல்வோம். உன் காதிலும் விழுந்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன? கார், கீர் வைத்துக் கொண்டு ஜோராய் இருக்கிறாப் போலிருக்கிறதே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” நான் நடத்தும் தொழிலைப் பற்றிச் சுந்தரத்திடம் சொன்னேன். அவனும் தன்னைப் பற்றி சுருக்கமாகச் சொன்னான். தண்டாங்கோரையில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு இந்த பட்டணத்துக்கு வந்து ஆயுர் வேத கலாசாலையில் சேர்ந்து மூன்று வருஷம் படித்து எல்.ஐ.எம். பட்டம் பெற்று டாக்டர் ஆனானாம். வைத்தியத் தொழிலிலும் மருந்து விற்பனையிலும் மாதம் முந்நூறு, நானூறு ரூபாய் அவனுக்கு இப்போது வருமானம் வருகிறது என்று அறிந்தேன். “உங்கள் வீட்டில் யாருக்காவது ஏதாவது வியாதி என்றால், நேராக இங்கே வந்துவிடு. மருந்துகள் எல்லாம் நானே சாஸ்திரீயமாய்ச் செய்கிறேன். டைபாய்டு சுரத்துக்கு ஒரு மருந்து கண்டுபிடித்திருக்கிறேன். இங்கிலீஷ் வைத்தியத்தில் டைபாய்டு சுரத்துக்கு மருந்தே கிடையாது என்று தெரியுமல்லவா! உன் முகம் கூட அவ்வளவு நன்றாயில்லை. ஒரு மாதிரி வெளுத்துப் போயிருக்கிறது. ஆறு மாதம் நீ சியவனப்பிராஸ லேகியம் விடாமல் சாப்பிட்டால் குணம் தெரியும். அப்புறம் அதை விடவே மாட்டாய். இன்னொரு நாளைக்கு வா, மற்ற மருந்துகளைப் பற்றி விவரமாகச் சொல்லுகிறேன். இன்றைக்குக் கொஞ்சம் எனக்கு அவசர வேலையிருக்கிறது. போகட்டுமா?” என்று எழுந்தான். “கொஞ்சம் உட்கார், சுந்தரம்! இன்னொரு நாளைக்கு அவசியம் வந்து உன்னிடமுள்ள மருந்துகளிலெல்லாம் ரகத்துக்குக் கொஞ்சமாக வாங்கிப் போகிறேன். ஒரு முக்கியமான விஷயம் உன்னைக் கேட்கலாம் என்று இன்றைக்கு வந்தேன். அதை மட்டும் சொல்லிவிட்டுப் போ! நாம் படித்த போது ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்கார் என்று இருந்தாரே? அவரைப் பற்றியும் அவர் குமாரி தேவகியைப்பற்றியும் உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்க வந்தேன். தெரிந்தால் சொல்லு!” சுந்தரம் என்னை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்து விட்டு, “அவர்களைப் பற்றி என்ன கேட்கிறாய்? உனக்கு என்ன தெரிய வேண்டும்?” என்றான். “அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?” “இந்த ஊரில்தான் எங்கேயோ இருக்கிறார்கள் என்று கேள்வி. நான் கூட இரண்டொரு தடவை பார்த்திருக்கிறேன். சிந்தாதிரிப் பேட்டையிலோ கோமளீசுவரன் பேட்டையிலோ இருக்கிறார்கள் போலிருக்கிறது. நீ எதற்காகக் கேட்கிறாய்?” “ஆமாம். அவர்கள் சிந்தாதிரிப் பேட்டையிலே தான் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வீடு கூட எனக்குத் தெரியும். நேற்று அவர்கள் வீட்டுக்குப் போய் வந்தேன்.” “அப்படியா! ரொம்ப சரி! நீதான் போய் வந்திருக்கிறாயே, என்னை என்ன கேட்கிறாய்?” “ஒன்றுமில்லை. தேவகியின் புருஷனைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டேன்!” “தேவகியின் புருஷனைப் பற்றி உனக்கு என்ன இவ்வளவு கவலை?” “இல்லையப்பா! அவள் புருஷனைப் பற்றிப் பலவிதமாகக் கேள்விப்பட்டேன். ஒருவேளை உண்மை உனக்குத் தெரிந்திருக்கலாமோ என்று எண்ணிக் கேட்டேன். வேறொன்றுமில்லை!” “பலவிதமாக அப்படி என்ன கேள்விப் பட்டாய்?” நேற்றுக் காலை தேவகியின் வீட்டில் நடந்ததையெல்லாம் சுந்தரத்திடம் சொன்னேன். தேவகி சொன்னதும், அவள் தகப்பனார் சொன்னதும், நான் பார்த்ததும் ஒன்றுக்கொன்று முரணாயிருந்ததையும் சொன்னேன். “அவ்வளவும் பொய்! உன்னை நன்றாய் ஏமாற்றிவிட்டிருக்கிரார்கள்!” என்றான் சுந்தரம். “அவ்வளவும் பொய்யா? பின் எதுதான் உண்மை? உனக்குத் தெரியுமா?” என்றேன். “அவள் புருஷன் எப்போதோ ’கயா’வாகி விட்டான்! உனக்கு விதவா விவாகம் செய்து கொள்வதில் அபிப்பிராயம் இருந்தால்…” “சீச்சீ! இது என்ன சுந்தரம்? அபஸ்மாரமாய்ப் பேசுகிறாயே? எனக்குப் பெண்டாட்டி பிள்ளைகுட்டி எல்லாரும் இருக்கிறார்கள்.” “ரொம்ப சரி! அப்படியென்றால் பேச்சை விட்டுவிடு!” “என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று சொன்னாயே? அது என்ன என்று மட்டும் சொல்லி விடு! பாவம்! அவர்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருந்தது!” “பரிதாபமா? அந்த நீலி நன்றாகத்தான் உன்னை மயக்கி விட்டிருக்கிறாள். என்னைக் கேட்டால் அவள் வசிக்கும் வீட்டுப் பக்கமே போகாதே என்பேன். தேவகியின் கணவனை ரஸாக்கர்கள் கொண்டு போகவும் இல்லை; அவனுக்குப் பைத்தியம் பிடிக்கவும் இல்லை. ஆசாமி தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போய்விட்டான்!” “ஐயோ! எப்போது? எதற்காக?” “எப்போது என்று எனக்குத் தெரியாது. சில வருஷம் ஆயிற்று என்று கேள்வி. எதற்காகத் தற்கொலை செய்து கொண்டான் என்றா கேட்கிறாய்? எல்லாம் அந்தப் பரதேவதை தேவகியின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் தான்! கிச்சாமி! நீ கூட அந்த நாளில் தேவகியைக் கலியாணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணம் வைத்திருந்தாயல்லவா?” “கிடையவே கிடையாது! அந்தப் பொய்க் கதையைக் கட்டி விட்டவர்கள் நீயும் வைத்தியுந்தான்.” “அப்படியே யிருக்கட்டும். நீ தேவகியைக் கலியாணம் செய்து கொள்ளாதது உன் அதிர்ஷ்டந்தான். அதனாலேதான் நீ இன்றைக்குப் பிழைத்திருக்கிறாய். இல்லாவிட்டால் அவள் புருஷம் செய்தது போல் நீயல்லவா தற்கொலை செய்து கொண்டிருப்பாய்! போகட்டும். நான் புறப்படட்டுமா?” என்று கேட்டுக் கொண்டே சுந்தரம் எழுந்து நடந்து ரேழியில் நிறுத்தியிருந்த சைக்கிள் வண்டியைச் சரிபார்க்க ஆரம்பித்தான். நானும் காரில் ஏறிக் கொண்டு புறப்பட்டேன். சுந்தரம் கூறியது இன்னும் என் மூளையைக் குழப்பி விட்டது என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? அவன் சொன்னதே ஒரு வேளை உண்மையாயிருக்குமோ என்றும் சிந்திக்க ஆரம்பித்தேன். எது எப்படியிருந்தாலும் தேவகியிடம் ஒத்துக் கொண்டபடி இன்று சாயங்காலம் அவள் வீட்டுக்குப் போய் அவளையும் குழந்தைகளையும் பொருட்காட்சிக்கு அழைத்துப் போக வேண்டியது. பிறகு எப்படி உசிதமென்று தோன்றுகிறதோ, அப்படி நடந்து கொண்டால் போகிறது. இவ்விதம் எண்ணமிட்டுக் கொண்டே வீடு சென்றேன். ஆனால் விவரமாகாத ஏதோ ஒரு விஷயம் என் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அது என்னவென்று ஆனமட்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தேன். ஆனாலும் அது ஞாபகத்துக்கு வரவில்லை. ‘தொண்டையிலிருக்கிறது வாயில் வரமாட்டேனென்கிறது’ என்று சில சமயம் சொல்லுகிறோமல்லவா? அந்த மாதிரி என் உள்ளத்தில் தெளிவில்லாத ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருவது போல் தோன்றி, ஆனால் ஞாபகத்துக்கு வராமல் தொல்லைப்படுத்தியது. 13 அன்று மாலை நான் சிந்தாதிரிப்பேட்டையில் தேவகியின் வீடு சென்ற போது குழந்தைகள் மூன்று பேரும் அழகாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு பொருட்காட்சிக்குப் புறப்படச் சித்தமாயிருந்தார்கள். வாசலில் என் மோட்டார் போய் நின்றதும் அவர்கள் “அம்மா! சித்தியா வந்து விட்டார்!” “தாத்தா! கார் வந்து விட்டது!” என்று கோஷமிட்டது என் காதில் விழுந்தது. என்னைப் பார்த்ததும் ஹெட்மாஸ்டர், “வந்து விட்டாயா, கிருஷ்ணசாமி! இவர்களுடைய பேச்சை நான் நம்பவில்லை. நீ வருவாய் என்றே எதிர்பார்க்கவில்லை. வண்டியுடன் வந்தவரையில் விசேஷந்தான்!” என்றார். தேவகி சிரித்த முகத்துடன் வந்து என்னை வரவேற்றாள். தேவகியின் இனிமையான தோற்றத்தையும் டாக்டர் சுந்தரம் அவளைப் பற்றிக் கூறியதையும் என் மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்த்தேன். அவன் கூறியது போல் இவள் பொல்லாத நீலியாக இருக்க முடியுமா, இவளுடைய தொல்லையைப் பொறுக்காமல் இவள் கணவன் தூக்குப் போட்டுக் கொண்டிருக்க முடியுமா என்று வியந்தேன். அவளுடைய கழுத்தின் என் கவனம் சென்றது. இரண்டு மெல்லிய சங்கிலிகள் அவள் கழுத்தை அலங்கரித்தன. ஆனால் அவற்றில் மாங்கலியம் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. தேவகி என்னை வரவேற்ற பின்னர் அவளுடைய தந்தையைப் பார்த்து, “அப்பா! நான் சொன்னேனே, பார்த்தீர்களா? இவர் ஒரு நாளும் வரமாட்டார் என்று நீங்கள் சொன்னீர்களே? யாருடைய வாக்குப் பலித்தது? போகட்டும்; நீங்கள் இன்று நாடகத்துக்கு வரப்போகிறீர்களா, இல்லையா? ஐந்து நிமிஷத்துக்குள் வராவிட்டால் உங்களை விட்டு விட்டு நாங்கள் புறப்பட்டுப் போய் விடுவோம்!” என்றாள். “இதோ வந்து விட்டேன், தேவகி! நான் இன்றைக்கு நாடகத்துக்கு வராவிட்டால் அப்புறம் இந்த வீட்டில் இருக்க முடியுமா? எல்லாரும் சேர்ந்து என் பிராணனை வாங்கிவிட மாட்டீர்களா? கொஞ்சம் பொறுங்கள்! இதோ டிரஸ் பண்ணிக் கொண்டு வந்து விடுகிறேன்!” என்று சொல்லிவிட்டுத் தம்முடைய அறைக் கதவைப் படார் என்று சாத்திக் கொண்டார். நான் தேவகியைப் பார்த்து “உன்னுடைய அப்பாவுக்கு என் பேரில் உள்ள கோபம் எல்லாம் போய்விட்டதா?” என்று கேட்டேன். “என்ன கோபம்?” என்று தேவகி வியப்புடன் கேட்டாள். “தண்டாங்கோரை பள்ளிக்கூடத்தில் படித்த போது என் பேரில் அப்பா ஒரு நாள் ரொம்பக் கோபித்துக் கொண்டாரே, ஞாபகம் இல்லையா?” “அழகாய்த்தானிருக்கிறது. அதையெல்லாம் அப்பா மறந்து போய் எவ்வளவோ நாள் ஆயிற்று. உங்கள் பேரில் அப்பாவுக்கு ரொம்ப அபிமானம். அப்பா அம்மா இரண்டு பேரும் கொஞ்ச நாள் வரையில் உங்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்கள். அடாடா! நீங்கள் எல்லாரும் அந்த நாளில் உபாத்தியாயர்களிடம் எவ்வளவு பக்தி விசுவாசத்துடன் இருந்தீர்கள்? என்னிடத்திலே கூடத்தான் எவ்வளவு மரியாதையாக இருந்தீர்கள்? இந்தக் காலத்துப் பிள்ளைகளும் இருக்கிறார்களே? கொஞ்சமும் மட்டு மரியாதை இல்லாதவர்கள்! கொஞ்ச நாளைக்கு முன்பு குவீன் மேரிஸ் காலேஜில் நடந்த கார்னிவல் கொண்டாட்டத்தில் ஆண் பிள்ளை மாணாக்கர்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே! இவர்களுந்ந்தான் விழுந்து விழுந்து இங்கிலீஷ் படிக்கிறார்கள்! இங்கிலீஷ் கதைகளில் ’ஷிவல்ரி’யைப் பற்றி எவ்வளவெல்லாம் இருக்கிறது? அதையெல்லாம் இவர்கள் படித்து என்ன பயன்? ஏட்டுச் சுரைக்காய்தான்! நம்முடைய மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடியாவது இவர்கள் ஸ்திரிகளிடம் பக்தி விசுவாசத்துடன் நடந்து கொள்கிறார்களா? அதுவும் இல்லை. இந்தக் காலத்து மாணாக்கர்களுக்கு இங்கிலீஷ் நாகரிகமும் வரவில்லை; நம்முடைய பழைய தர்மமும் பயன்படவில்லை. இரண்டிலும் உள்ள தீமைகள் மட்டும் இவர்களுக்கு வந்திருக்கின்றன. இதைப் பற்றி அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். தண்டாங்கோரை ஹைஸ்கூலில் நீங்கள் எல்லாரும் அந்த நாளில் என்னிடம் எவ்வளவு மரியாதையாக நடந்து கொண்டீர்கள் என்று அடிக்கடி பாராட்டிப் பேசுவார்!…” இப்படியாக தேவகி கடல் மடை திறந்தது போல் பிரசங்கம் செய்து கொண்டே போனாள். மூச்சு விடாமல் பேசும் அவளுடைய சுபாவம் இன்னமும் அப்படியேதான் இருந்தது என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அவள் கூறியதெல்லாம் உண்மையென்று என் மனம் ஒப்பவில்லை. ஏன்? நான் படித்த காலத்திலே கூடப் பெண்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளத் தெரியாத காலிப் பசங்கள் இருக்கத் தான் செய்தார்கள். வைத்தியநாதனும் சுந்தரமும் இருக்கவில்லையா! அதையெல்லாம் மறந்து விட்டு இவள் பிரமாதமாய்ப் பேசிக் கொண்டே போகிறாளே! போனால் போகட்டும்! எனக்கு என்ன வந்தது? அந்தக் கடிதத்தைப் பற்றிய உண்மையை மட்டும் எப்படியாவது தெரிந்து கொள்ள விரும்பினேன். ஆகையால் தேவகியின் பேச்சில் பலவந்தமாகக் குறுக்கிட்டு, “அதெல்லாம் இருக்கட்டும், தேவகி! அந்தக் கடிதத்தைப் பற்றிய உண்மை அப்புறம் தெரிந்ததா?” என்றேன். “எந்தக் கடிதம்?” என்று தேவகி தலையைக் கோணலாக வைத்துக் கொண்டு கேட்டாள். “எந்தக் கடிதமாவது? உனக்கு நிச்சயம் செய்திருந்த முதல் கலியாணத்தைத் தடைசெய்த கடிதந்தான்!…” php programmers “அதுவா?” என்று கேட்டுவிட்டுத் தேவகி கலீரென்று சிரித்தாள். எனக்கோ கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. அந்தக் கடிதத்தினால் நான் அடைந்த துன்பம்தான் எத்தனை? இப்போது நினைத்தாலும் மனம் வெட்கி வேதனை அடைகிறது! ஆனால் இவள் அதைக் குறித்துச் சிரிக்கிறாள்! சிரிப்பைச் சட்டென்று நடுவில் நிறுத்திவிட்டு, “ஆமாம்; அப்படியானால் அந்தக் கடிதத்தை நீங்கள் எழுதவில்லையா?” என்று கேட்டாள். “சத்தியமாய் எழுதவில்லை!” என்று நான் ஆத்திரமாய்க் கூறினேன். “அடே அப்பா! அதைப்பற்றி இப்போது என்னத்துக்கு இவ்வளவு ஆத்திரம்? போனது போய்விட்டது. நீங்கள் அதை எழுதவில்லை யென்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு அவ்வளவு தைரியம் இல்லையென்பதும் எனக்குத் தெரியும். ஆகையால் நானே எழுதிவிட்டேன்!” என்று தேவகி ஒரு அணுகுண்டைப் போட்டாள். “நீ எழுதினாயா! நீயா எழுதினாய்? அப்படியானால் என் பேரில் பழி சொன்னாயே, ஏன்?” என்று மேலும் ஆத்திரத்துடன் கேட்டேன். “அது ஒரு காரியத்துக்காக எழுதினேன். ஒரு காரியம் என்ன? உண்மையைச் சொல்லி விடுகிறேனே! எனக்கு அப்பா நிச்சயம் செய்திருந்த கலியாணம் பிடிக்காததால் எழுதினேன். அப்பா கோபித்துக் கொண்ட போது உங்கள் பேரில் பழியைப் போட்டு வைத்தேன். அந்தச் சமயத்துக்கு அப்படிச் சொல்ல வேண்டியிருந்தது. அப்புறம் அப்பாவின் கோபம் தணிந்த பிறகு உண்மையை ஒப்புக் கொண்டேன். அதற்குள் நீங்கள் போயே போய் விட்டீர்கள். அதற்கு நான் என்ன செய்கிறது!” என்றாள் தேவகி. என் மனம் அப்போது ஒரு பக்கம் கோபத்தினாலும் ஒரு பக்கம் பச்சாத்தாபத்தினாலும் குழப்பம் அடைந்தது. அந்தக் கலியாணம் பிடிக்கவில்லையென்றால், வேறு யாரிடமாவது இவளுடைய மனம் சென்றிருந்ததா? அது ஒருவேளை நானாகவே இருக்குமா? அவசரப்பட்டு மனம் வெறுத்து ஊரை விட்டுப் போனதினால் என் வாணாளையே பாழாக்கிக் கொண்டேனா? அப்படி எண்ணியபோது தேவகியை மணம் செய்து கொள்ளாதது என் அதிர்ஷ்டந்தான் என்று டாக்டர் சுந்தரம் கூறியது நினைவு வந்தது. இவள் யாரோ ஒருவனைக் கலியாணம் செய்து கொண்டு தானே இருக்க வேண்டும்? அவன் யார்? அவனுடைய கதி என்ன? டாக்டர் சுந்தரம் சொன்னதுபோல் அவன் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்தானா? அல்லது அந்த வீட்டு மாடி ஜன்னல் வழியாகப் பார்த்த பைத்தியந்தான் இவளுடைய புருஷனா? புருஷனுடைய நிலைமை அப்படியிருக்கும்போது இவள் பொருட்காட்சிக்கு நாடகம் பார்க்கப் புறப்படுகிறாளே? இதை என்னவென்று சொல்வது? இவள்தான் இப்படி என்றால், இவள் தகப்பனாரும் அல்லவா ஒத்துக்கு மத்தளம் போடுகிறார்! அவளுடைய புருஷனைப் பற்றியும் அந்த வீட்டு மாடிமேல் உள்ள ஆளைப் பற்றியும் தேவகியைக் கேட்பதற்கு மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். ஆனால் அந்தச் சமயத்தில் ஹெட்மாஸ்டர் கோட்டு, தலைப்பாகை முதலியவை அணிந்து கொண்டு புறப்படத் தயாராக வந்து விட்டார். எனவே ஒன்றும் கேட்க முடியவில்லை. வாசலில் காரில் ஏறி உட்கார்ந்த பிறகு என் கண்கள் மட்டும் மேலே மச்சு ஜன்னலை உற்று நோக்கின. அங்கே இப்போது அந்தப் பயங்கர முகத்தைக் காணவில்லை. பாவம்! அந்தப் பைத்தியத்தை உள் அறையில் போட்டுப் பூட்டி விட்டார்களோ, என்னமோ? அல்லது அதனால் தொந்தரவாயிருக்கிறதென்று பைத்திய ஆஸ்பத்திரிக்கு அப்புறம் அனுப்பி விட்டார்களோ, என்னமோ! இருந்தாலும் இந்தத் தேவகியைப் போல் இருதயமற்ற ஸ்திரீயை உலகத்திலேயே காண முடியாது! இவளுடைய வலையில் நான் விழாமல் தப்பியது நான் செய்த புண்ணியந்தான். சீச்சீ! இது என்ன கேவலமான எண்ணம்! துர்ப்பாக்கியசாலியான தேவகியை நாமும் சேர்ந்து நிந்திக்க வேண்டுமா? இவளுக்கு நேர்ந்த கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு வேளை நானே காரணமாயிருந்திருக்கலாம். அப்படி அவசரப்பட்டுக் கொண்டு தண்டாங்கோரையை விட்டு நான் புறப்படாதிருந்தால், இவளுடைய வாழ்க்கையே வேறு விதமாயிருந்திருக்கலாம் என்னுடைய வாழ்க்கையுங் கூடத்தான்!… இத்தகைய எண்ணங்கள் என் மனத்தை அலைத்துக் கொண்டேயிருக்கையில் பொருட்காட்சியும் வந்துவிட்டது. தேவகி முதலியவர்கள் காரிலிருந்து அவசர அவசரமாக இறங்கினார்கள். நாடகமேடை மைதானத்துக்குப் போவதில் அவர்களுக்கிருந்த பரபரப்பைச் சொல்லி முடியாது. நான் வண்டியிலிருந்து இறங்காமலிருப்பதைக் கண்ட தேவகி “நாடகம் பார்க்க நீங்கள் வர வில்லையா?” என்று கேட்டாள். “நீங்கள் போய் இடம் பிடித்துக் கொண்டு உட்காருங்கள். எனக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது. பார்த்து விட்டுப் பிறகு வந்து விடுகிறேன்!” என்றேன். “திரும்பி வீட்டுக்குப் போவதற்கு எங்களைத் திண்டாட விட்டு விடாதீர்கள்!” என்றாள் தேவகி. “அப்படியெல்லாம் செய்வேனா? கட்டாயம் வந்து உங்களை அழைத்துப் போகிறேன்!” என்றேன். “அவசியம் நீங்கள் வந்து நாடகத்தையும் பார்க்க வேண்டும். இன்று நாடகம் ரொம்ப நன்றாயிருக்குமாம்!” என்று சொல்லிக் கொண்டே தேவகி விரைவாக நடந்தாள். அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் போனார்கள். 14 எனக்கு நாடகம், ஸினிமா என்றாலே அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அதிலும் அன்றைக்கு என் மனோ நிலைமை நாடகம் பார்த்து ரஸிப்பதற்கு அனுகூலமாக இல்லை. உண்மையாகவே காரியமும் கொஞ்சம் இருந்தது. அதை முடித்துவிட்டு இரவு ஏழரை மணிக்குத் திரும்பவும் பொருட்காட்சி மைதானத்துக்குப் போனேன். நாடகம் இன்னும் நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்க ஏராளமான கூட்டம். அத்தனை ஆயிரம் பேரும் நாடகப் பைத்தியம் பிடித்தவர்கள் என்ற எண்ணமே எனக்கு வியப்பு அளித்தது. அந்தப் பெருங் கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நின்று நாடக மேடையைக் கவனித்தேன். அச்சமயத்தில் நாடக மேடையிலும் ஒரு பைத்தியம் நின்று கொண்டிருந்தது! கோரமான முகத்துடனும் கோரணிகளுடனும் அந்தப் பைத்தியம் ஏதேதோ பயங்கரமாகக் கத்திக் கொண்டிருந்தது. அந்தக் கத்தலின் கோரமானது ஒலிபெருக்கியின் மூலம் வந்தபோது இன்னும் அதிக கோரமாய் ஒலித்தது. முதலில் சற்று நேரம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்புறம் சற்றுப் புரிந்தது. நாடக மேடையில் ஒரு பாழடைந்த வீட்டில் நின்று அந்தப் பைத்தியக்காரன் சத்த மிட்டான். அந்த வீட்டில் ஒரு காலத்தில் வசித்திருந்த அவனுடைய மனைவி மக்களை எண்ணிப் புலம்புவதாகத் தோன்றியது. தேவகியும் அவள் தகப்பனாரும் குழந்தைகளும் கூட்டத்தில் எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்தேன். நாடக மேடைக்கு வெகு சமீபத்தில் அவர்கள் காணப்பட்டார்கள். கடவுளே! இவர்களுடைய புத்தியை என்னவென்று சொல்வது? வீட்டிலேயே ஒரு பைத்தியத்தை வைத்துக் கொண்டு இங்கே நாடகத்திலும் பைத்தியத்தைப் பார்க்க இவர்கள் வந்தார்களே? இந்த இலட்சணத்தில் எனக்குக்கூட “ரொம்ப நல்ல நாடகம்; பார்க்கத் தவற வேண்டாம்!” என்று எச்சரித்தார்களே! இவர்களுடைய கல் நெஞ்சையும் ராட்சத குணத்தையும் என்ன வென்று சொல்லுவது? பிறகு நாடக மேடையில் நடந்த துரிதமான சம்பவங்கள் எனக்கு மேலும் மேலும் வியப்பை அளித்தன. அந்தப் பைத்தியக்காரன் அந்தப் பாழும் வீட்டின் விட்டத்தில் ஒரு கயிற்றை மாட்டி அதில் தூக்கிட்டுக் கொள்ள முயன்றான். அப்போது விட்டம் திடீரென்று முறிந்து அவன் தலையில் விழுந்தது! அச்சமயம் யாரோ ஒரு ஸ்திரீ தலை தெறிக்க ஓடி வந்து கீழே கிடந்த பைத்தியக்காரனைக் கட்டிக் கொண்டு அழுதாள். இத்துடன் அக் காட்சி முடிவடைந்தது. அடுத்த காட்சியில் அந்தப் பைத்தியக்காரன் ஒரு ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடந்தான். அவனுக்குச் சுயப் பிரக்ஞை வரப் போகிறது என்று டாக்டர் சொன்னார். பிரக்ஞை வந்ததும் அவன் முன்போல் பைத்தியம் போல் கூச்சலிடாமல் சாவதானமாகப் பேசினான். அவன் அருகில் இருந்த ஸ்திரீ “இப்போது ஹைதராபாத்தில் ரஸாக்கியர் ஆட்சி இல்லை. நைஜாம் ராஜ்யம் சுதந்திர இந்தியாவோடு சேர்ந்து விட்டது!” என்று சொன்னாள். உடனே அவன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து உற்சாகமாகப் பேசினான். அவனும் அந்த ஸ்திரீயும் சிறிது நேரம் கொஞ்சிக் குலாவினார்கள். பிறகு நாடக மேடையில் இருபது முப்பது பேர் கூட்டமாய் நின்று, “கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!” என்று பாடினார்கள். பிறகு திரை விழுந்தது. நாடகமும் முடிந்தது. இதெல்லாம் என் மனதில் எவ்வளவு குழப்பத்தை உண்டாக்கியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? தேவகி முதலியவர்கள் என்னிடம் சொன்னதற்கும் இந்த நாடக நிகழ்ச்சிகளுக்கும் இருந்த பொருத்தம் எப்படி ஏற்பட்டது? தற்செயலாக ஏற்பட்டதா? அல்லது… அல்லது… யோசிக்க யோசிக்கக் குழப்பம் அதிகமேயாயிற்று. அந்தக் குழப்பத்துக்கிடையே தேவகியும் அவளுடைய குழந்தைகளும் நின்ற இடத்தைக் கண்டு பிடித்து அங்கே போய்ச் சேர்ந்தேன். நாடகம் பிரமாதம் என்பதாகச் சிலாகித்துப் பேசிக் கொண்டே அவர்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்து காரிலும் ஏறிக் கொண்டார்கள். என்னிடம் அவர்கள் அபிப்பிராயம் கேட்டபோது நானும் “நாடகம் நன்றாயிருந்தது!” என்று சொல்லி வைத்தேன். வீட்டுக்குப் போனதும் எல்லாச் சந்தேகங்களையும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு விடுவது என்று தீர்மானித்தேன். ஆனால் வீடுவந்து சேர்ந்து அவர்கள் எல்லாருடனும் நானும் உள்ளே போனதும் ஒன்றுமே கேட்க எனக்கு மனம் வரவில்லை. என்னத்தைக் கேட்பது? எப்படிக் கேட்பது? எது கேட்டாலும் அசட்டுப் பட்டம் எனக்கு வந்து சேரும் என்று தோன்றியது. ஆகவே விடைபெற்றுக் கொண்டு போக எண்ணி, “நான் போய் வரட்டுமா?” என்றேன். “நன்றாயிருக்கிறது. அதற்குள்ளே போகிறதாவது? இவர்களுடைய அப்பா இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். அவரையும் பார்த்துவிட்டுச் சாப்பிட்டு விட்டுப் போகலாம்!” என்றாள் தேவகி. “இவர்களுடைய அப்பாவா? அது யார்?” என்று கேட்டேன். “இன்னும் உங்களுக்குத் தெரியவில்லையா, என்ன? தெரிந்துகொண்டு விட்டீர்கள் என்றல்லவா இருந்தேன்? இன்று நாடகத்தில் ’ஹீரோ’வாக நடித்தவர்தான்!” என்றாள் தேவகி. “அப்படியா? முந்தாநாள் நான் கேட்டபோது ஏதோ ஹைதராபாத்தில் நடந்ததாகச் சொன்னாயே?” “ஆமாம்; அதுவுந்தான் நாடகத்தில் வந்ததே! நான் சொன்னபடியே அவரைக் கறுப்பு முகமூடி அணிந்த ரஸாக்கர்கள் வந்து அழைத்துப் போனார்களே?” என்றாள் தேவகி. “அப்படியானால் முந்தாநாள் இந்த வீட்டு மச்சுமேல் இருந்தவர்?…” “அவரேதான்! முந்தாநாள் நீங்கள் வந்திருந்தபோது மச்சுமேல் கடைசி ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. வேஷம் கூடப் போட்டுப் பார்த்துக் கொண்டார்கள். அதனாலேதான் உங்களை இவரால் பார்த்துப் பேச முடியவில்லை. ‘யாருக்கும் சொல்லக் கூடாது’ என்று கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தார்! நான் சொன்னதை யெல்லாம் நீங்கள் நிஜம் என்றே நினைத்துக் கொண்டீர்களா, என்ன?” எனக்கு அளவில்லாத கோபம் வந்தது. பொய்யும் சொல்லிவிட்டு அதை நம்பியதற்காக என் பேரில் குற்றமும் அல்லவா சொல்கிறாள்? அழகாயிருக்கிறது காரியம்! இந்தச் சமயத்தில், உள்ளே உடுப்பைக் கழற்றி வைப்பதற்காகப் போயிருந்த ஹெட்மாஸ்டர் வந்தார். “அப்பா! இவரிடம் முந்தாநாள் நீங்கள் உண்மையைச் சொல்லவில்லையா?” என்று தேவகி கேட்டாள். “சொல்லாமல் என்ன? முக்காலே மூன்று வீசம் உண்மையைத்தான் சொன்னேன். உன் புருஷன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்னேன். இந்த வீடு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்லையென்று யார் சொல்லுவார்கள்? இல்லாவிட்டால் இப்படிப்பட்ட அழகான நாடகத்தைப் போட உன்னுடைய புருஷனுக்குத் தோன்றியிருக்குமா!” என்றார் பத்மநாப ஐயங்கார். அவர் சொன்னபடி இந்த வீடு பைத்தியக்கார ஆஸ்பத்திரியோ, என்னமோ! ஆனால் இங்கு வந்ததின் பலன் என்னை இவர்கள் பைத்தியமாக அடித்து விட்டார்கள் என்பது நிச்சயம்! என்னுடைய இந்த அபிப்பிராயத்தை உறுதிப் படுத்துவதற்கு அப்போது இன்னொரு சம்பவம் நேர்ந்தது. வாசலில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டது. “அப்பா வந்துவிட்டார்!” என்று குழந்தைகள் குதித்தார்கள். ஆம்; அடுத்த நிமிஷம் அவர்களுடைய அப்பா வீட்டுக்குள் பிரவேசித்தார். அந்த அப்பா யார் என்று நினைக்கிறீர்கள்? பிரபல ஆயுர்வேத வைத்தியரான டாக்டர் சுந்தரம் எல்.ஐ.எம். அவர்கள்தான்! அன்று காலையில் டாக்டர் சுந்தரத்தின் மருத்துவ சாலையில் அவனை விட்டுப் பிரிந்த போது ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றும் ஞாபகத்திற்கு வரவில்லையென்று சொன்னேன் அல்லவா? அது என்னவென்று இப்போது பளீர் என்று நினைவு வந்தது. அந்த வீட்டு ரேழியில் முந்தா நாள் என் காலில் தடுக்கிக் காயப்படுத்திய அதே சைக்கிள் தான் டாக்டர் சுந்தரத்தின் மருத்துவ சாலையிலும் இருந்தது. அசோக சக்கரக்கொடி இரண்டிலும் இருந்தது என்பது இப்போது நினைவுக்கு வந்தது. டாக்டர் சுந்தரம் என்னைப் பார்த்ததும், “ஹலோ! கிருஷ்ணசாமி! இந்த வீட்டுப் பக்கமே வராதே என்று சொன்னேனே, அதை உண்மையாக எடுத்துக் கொண்டு விடுவாயோ என்று பயந்து போனேன். நீ வந்தது பற்றி ரொம்ப சந்தோஷம். நாடகம் எப்படி இருந்தது? உனக்குப் பிடித்திருந்ததா?” என்று கேட்டான். நான் பதில் சொல்வதற்குள் குழந்தைகள் “ரொம்ப நன்றாயிருந்தது, அப்பா!” என்று கூச்சலிட்டார்கள். தேவகி சுந்தரத்தைப் பார்த்து, “போதும், போதும்! இந்த மாதிரி அசந்தர்ப்ப நாடகத்தை இனிமேல் நீங்கள் போடவே வேண்டாம். எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. நீங்கள் பைத்தியமாக நடித்தபோது உண்மையிலேயே உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று எனக்குப் பயமாய்ப் போய்விட்டது. அப்புறம் யாரோ ஒரு தடியன் புடவையைக் கட்டிக் கொண்டு வந்து உங்களைப் ‘பிராண நாதா!’ என்று அழைத்தபோது எனக்குச் சகிக்கவேயில்லை. இந்த மாதிரி நாடகம் போடவில்லையென்று யார் அழுதார்கள்?” என்றாள். அப்போது சுந்தரம் தேவகியின் தகப்பனாரைப் பார்த்து, “பாருங்கள், மாமா! இந்த அழகான கதையைக் கற்பனை செய்து கொடுத்ததே இவள்! இப்போது என் பேரில் குற்றம் சொல்கிறாள்! இதற்கு நான் என்ன செய்கிறது?” என்றான். இந்தச் சமயத்தில் நான், “ஆமாம்; உன் மனைவிக்கு அந்த நாளிலிருந்தே இது வழக்கந்தானே? தான் செய்த காரியத்துக்குப் பழியைப் பிறர் தலையில் போடுவது?” என்றேன். சுந்தரம் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். “ஓகோ! அந்த போர்ஜரி கடிதத்தைப் பற்றிச் சொல்கிறாயோ? அது தேவகி மட்டும் செய்ததில்லை; அவளும் நானும் சேர்ந்து யோசனை செய்து பண்ணிய காரியந்தான். அதை இன்னும் நீ மறக்கவில்லையா?” என்றான். “விஷயமே எனக்கு இப்போதுதானே தெரிந்தது? இனிமேல் மறந்துவிடவேண்டியதுதான்” என்றேன். ஹெட்மாஸ்டர் அப்போது, “சுந்தரம்! நியாயமாக நீயும் தேவகியும் கிருஷ்ணசாமியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் என்னை ஏமாற்றியதாவது போகட்டும். தேவகிக்கு இஷ்டமில்லாத இடத்தில் கலியாணம் நிச்சயம் செய்தது என்னுடைய பிசகு. அதனால் நான் அடைந்த தொந்தரவுக்கு உங்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஆனால் கிருஷ்ணசாமியின் பேரில் பழியைப் போட்டீர்களே? அது ரொம்ப அநியாயம்! எத்தனை வருஷமாகியும் அது இன்னும் அவன் மனதில் உறுத்திக் கொண்டிருக்கிறது! நீங்கள் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளாவிட்டால் உங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்!” என்றார். “இதெல்லாம் ஒன்றும் வேண்டியதில்லை, ஸார்! யார் யாரை மன்னிக்கிறது?” என்றேன் நான். ஹெட்மாஸ்டரின் வார்த்தைகள் என்னை உருக்கிவிட்டன. “ஆமாம், அப்பா! அவர் அப்படியெல்லாம் மனதில் ஒன்றை வைத்துக் கொள்கிறவர் அல்ல, அவருடைய நல்ல சுபாவம் அப்போதே நமக்குத் தெரியுமே?” என்றாள் தேவகி. “மனதில் கோபம் வைத்துக் கொள்கிறவனாயிருந்தால் இன்றைக்கு இந்தச் சந்து வீட்டைத் தேடி வந்திருப்பானா? நான் அவ்வளவு அவனைப் பயமுறுத்தியிருந்துங்கூட!” என்றான் சுந்தரம். “சுந்தரம்! மற்ற எதைப்பற்றியும் எனக்குக் கோபம் இல்லை. ஆனால் தேவகியின் தொல்லையைப் பொறுக்காமல் அவளுடைய புருஷன் தூக்குப்போட்டுக் கொண்டான் என்று சொன்னாயே, அதை மட்டும் நான் மறக்க முடியாது!” என்றேன். “ஆம், அப்பா, கிருஷ்ணசாமி! உன்னிடம் சொன்னதை நிறைவேற்றலாம் என்றுதான் பார்த்தேன். தூக்குப் போட்டுக்கொள்ள முயன்ற போது விட்டம் முறிந்து என் தலையில் விழுந்தால் அதற்கு நான் என்னத்தைச் செய்கிறது? என் பேரில் வஞ்சனை இல்லை!” என்றான் சுந்தரம். “போதும் இந்தப் பேச்சு! முகத்தில் இன்னும் கொஞ்சம் பைத்தியக் களை இருக்கிறது! குழாயடிக்குச் சென்று முகத்தை நன்றாய் சோப்புப் போட்டுத் தேய்த்து அலம்பி விட்டு வாருங்கள்! அதற்குள் நான் இலையைப் போடுகிறேன்” என்றாள் தேவகி. “இன்றைக்கு இந்த வீட்டில் சாப்பாடுகூட உண்டா? தளிகை யார் செய்தார்கள்!” என்றான் சுந்தரம். “நாடகத்திற்குப் புறப்படுவதற்கு முன்பே தளிகை செய்து வைத்து விட்டுத்தான் கிளம்பினேன். புளியோதரை செய்திருக்கிறேன். கிருஷ்ணசாமி! உங்களுக்குக் கூடப் புளியோதரை பிடிக்குமே? அம்மா செய்து போட்டால் ஆசையோடு சாப்பிடுவீர்களே!” என்றாள் தேவகி. அப்போது தேவகியின் தாயார் ரங்கநாயகி அம்மாளைப்பற்றிய ஞாபகங்கள் என் மனதில் பொங்கி எழுந்தன. அடாடா! எத்தனை அன்பு! எவ்வளவு அபிமானம்! அந்த அம்மாள் கையினால் பாகம் செய்த புளியோதரை, திருக்கண்ணமுது முதலியவைகளை எவ்வளவு ஆசையோடு அந்த நாளில் சாப்பிட்டிருக்கிறேன்! “எனக்குப் புளியோதரை பிடிக்கும் என்பது வாஸ்தவந்தான். ஆனால் இன்றைக்கு வேண்டாம். வீட்டுக்குப் போகவேண்டும்” என்று சொல்லிக் கொண்டு கிளம்பினேன். “அப்படியானால் இன்னொரு நாள் சாப்பிடுவதற்குக் கட்டாயம் வரவேண்டும்” என்றாள் தேவகி. “ஆம், அப்பா! பழைய சிநேகத்தை மறந்து விடாதே! அடிக்கடி வந்து கொண்டிரு!” என்றான் சுந்தரம். அவனுடைய அழைப்பை ஹெட்மாஸ்டரும் ஆமோதித்தார். “கிருஷ்ணசாமி! இன்னொரு நாள் வந்தால் உனக்கு யோகாசனத்தைப் பற்றி எல்லாம் சொல்கிறேன்!” என்றார். “அவர் சொல்வது ஒன்றையும் நீ நம்பாதே! யோகாசனத்தின் மகிமையைப் பற்றி அவர் பிரமாதமாகப் பிரசங்கம் செய்வார். அவருடைய அலமாரியில் பார்த்தால் ஐந்தாறு வித லேகியம் வைத்திருப்பார். நீ ஒருநாள் என்னுடைய டிஸ்பென்ஸரிக்கு வா! ஆறு மாதம் சியவனப்பிராஸ லேகியத்தைச் சாப்பிட்டுப் பார்!” என்றான் சுந்தரம். “அவர் கிடக்கிறார்! நீங்கள் மருந்துக் கடைக்குப் போக வேண்டாம். இங்கே வாருங்கள்!” என்றாள் தேவகி. குழந்தைகள், “சித்தியா! நாளைக்கு வந்து எங்களைக் காரில் ஏற்றிக் கொண்டு பீச்சுக்கு அழைத்துப் போங்கள்!” என்றன. “ஆகட்டும்! இன்னொரு நாள் அவசியம் வருகிறேன்!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். காரில் ஏறி உட்கார்ந்ததும், “இந்தச் சிந்தாதிரிப்பேட்டைப் பக்கமே இனிமேல் தலைகாட்டுவதில்லை!” என்று எண்ணிக்கொண்டேன். எல்லாருமாகச் சேர்ந்து எனக்கு அசட்டுப் பட்டம் கட்டிப் பைத்தியமாக அடித்து விட்டார்களே? போனால் போகட்டும்! எப்படியாவது அவர்கள் சௌக்யமாக இருந்தால் சரி. தேவகியும் அவளுடைய கணவனும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதுதான் வேண்டியது. ஹெட்மாஸ்டரும் உற்சாகமாக இருக்கிறார். வேறு என்ன வேண்டும்? வெள்ளிய நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது. பனியினால் உலகமே குளிர்ந்திருந்தது. பழைய நினைவுகள் குமுறிக் கொண்டு வந்தன. கடைசியாக, இந்தச் சுந்தரமா தேவகியைக் கலியாணம் செய்து கொண்டான்? என்னையும் வைத்தியநாதனையும் அடிக்கடி சண்டை மூட்டி விட்டு இவன் பரம சாதுவைப் போல் நடித்தவன் அல்லவா? அந்த நடிப்புத் திறமைதான் இன்றைக்கு அவனிடம் பிரகாசிக்கிறது! பொல்லாத அமுக்கன்! ஏதோ போகட்டும்! தேவகி தன் மனதுக்கொத்த புருஷனை மணந்து திருப்தியாக இருக்கிறாள் அல்லவா? அதுதான் வேண்டியது. அன்று வரை நான் அறியாத மன நிம்மதியை அன்று கண்டேன். அந்த நிம்மதியைக் குலைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ஆகையினாலேயே சிந்தாதிரிப்பேட்டைக்கு அப்புறம் நான் போகவில்லை. இந்த வருஷத்துப் பொருட்காட்சிக்குக் கூடப் போகவில்லை. தேவகியின் வாழ்க்கை இப்படியே நீடித்துச் சந்தோஷமாயிருக்கும்படி பெருமாள் அருள் புரியட்டும். ‘கல்கி வார இதழ் 12-5-50 - 12-3-50’ நாடகக்காரி 1 சென்ற ஆண்டில் சோழ நாட்டில் கடும் புயலுடன் சேர்ந்து வந்த பெருமழையைப் பற்றி நேயர்களுக்கு நினைவிருக்கலாம். சிலர் அதைக் ‘கடவுளின் கருணை மழை’ என்றார்கள். வேறு சிலர், “இப்படிப் பயங்கரமான புயலில் ஏறிக் கொண்டுதானா வர வேண்டும்? இனிய செந்தமிழையொத்த மெல்லிய தென்றல் காற்றிலே மிதந்து வரக் கூடாதா?” என்றார்கள். அவரவர்களுக்கு நேர்ந்த சௌகரிய - அசௌகரியங்களைப் பொறுத்து எதையும் முடிவு செய்வது தான் மானிட இயற்கை. எனக்கு அச்சமயம் கடவுளின் கருணையின் பேரில் வந்த கோபம் இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில், அக்கருணையின் காரணமாக நான் நள்ளிரவில் மாயவரத்துக்கும் சீர்காழிக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடும்படி நேர்ந்தது. கதையோ, கட்டுரையோ, விறுவிறுப்பாக ஓட வேண்டும் என்றால் அதை ரெயிலிலே ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. இந்தக் கதை என்னமோ ரெயிலிலேதான் ஆரம்பமாகிறது. அதிலும் ஸிலோன் போட் மெயிலில் ஆரம்பமாகிறது. ஆனாலும் என்ன பயன்? அதிவிரைவாகச் செல்ல வேண்டிய அந்த ரெயில் சீர்காழிக்கும் வைத்தீசுவரன் கோயிலுக்கும் நடுவில் சுமார் மூன்று மணி நேரம் ஸ்தம்பித்து நின்று விட்டது. ‘ஸ்தம்பித்து நின்றது’ என்றா சொன்னேன்? அர்த்தமில்லாத வழக்கச் சொற்கள் அப்படியாக நம்மை அடிமைப்படுத்தி விடுகின்றன. நான் ஏறியிருந்த போட் மெயில் முன்னாலும் போகாமல் பின்னாலும் போகாமல் நின்றதே தவிர ஸ்தம்பித்து நிற்கவில்லை. மணிக்கு என்பது மைல் வேகத்தில் அடித்த புயற்காற்று அதைத் தாக்கிக் கொண்டிருக்கும் போது ரெயில் எப்படி ஸ்தம்பித்து நிற்க முடியும்? பூமிக்குள்ளே நெடுந்தூரம் வேர் விட்டு நிலை பெற்றிருந்த பெரிய பெரிய மரங்கள் எல்லாம் தடால் தடால் என்று கீழே விழுந்து கொண்டிருந்த போது ரெயில் மட்டும் எப்படி அசையாமல் இருக்க முடியும்? ரெயில் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டுதான் இருந்தது. ரெயிலுக்குள் இருந்தவர்களின் உயிர்களும் ஊசலாடிக் கொண்டிருந்தன. இப்படி மூன்று யுகம் போலக்கழிந்த மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ரெயில் பின்னோக்கிச் செல்லத் தொடங்கியது. மிக மிக மெதுவாக ஊர்ந்து சென்று காலை ஐந்து மணிக்கு மாயவரம் ரெயில் நிலையத்தை அடைந்தது. சீர்காழிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் ரெயில் பாதை மிகவும் சேதமாகி விட்டபடியால், இனி மூன்று நாள் அந்தப் பக்கம் ரெயில் போவதற்கில்லையென்றும், சென்னைக்குப் போகிறவர்கள் திருச்சிக்குத் திரும்பிப் போய் அங்கிருந்து விருத்தாசலம் வழியாகப் போக வேண்டும் என்றும் மாயவரத்தில் சொன்னார்கள். இதனால் எனக்கு ஏற்பட்ட மனச் சோர்வுக்கு அளவில்லை. ஆண்டவன் கருணை இப்படியா நம்மைச் சோதிக்க வேண்டும் என்று கிலேசப்பட்டுக் கொண்டு திருச்சிக்குத் திரும்பிப்போன முதல் ரெயிலில் ஏறினேன். அற்ப அறிவு படைத்தவர்களாகிய மானிடர்கள் நன்மை என்று குதூகலிக்கிற காரியங்கள் பெருந் தீமையாக முடிகின்றன. அவர்கள் தீமை என்று நினைத்து வருந்தும் காரியங்களிலிருந்து எதிர்பாராத நன்மைகள் விளைகின்றன. ஏற்கனவே பலமுறை இந்த உண்மையை வாழ்க்கை அநுபவத்தில் கண்டிருந்தும் அச்சமயத்தில் மறந்து போனேன். ஐயம்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்தபோதுதான் இருள் நீங்கி ஒளி உண்டாயிற்று. ஐயம்பேட்டை கந்தப்பப் பிள்ளையும் அவருடைய தவுல் வாத்தியமும் என் வண்டியில் ஏறி அமர்ந்ததும், அவருடைய தவுல் வாத்தியத்தின் இடி முழக்க நாதத்தைப் போலவே, இறைவன் கருணையின் உண்மை இயல்பு என் உள்ளத்தில் வெடித்துக் கொண்டு உதயமாயிற்று. “வருக! வருக! அகில பூமண்டல தவுல் வாத்திய ஏக சக்ராதிபதியே! வருக!” என்று முகமன் கூறிக் கந்தப்பப் பிள்ளையை வரவேற்றேன். ‘திருவழுந்தூர்ச் சிவக்கொழுந்து’, ‘வீணை பவானி’ போன்ற அருமையான கதைகளைச் சொன்னவரை இம்மாதிரிச் சந்தர்ப்பத்தில் பார்த்தால், உற்சாகம் பீறிக் கொண்டு கிளம்புவதற்குக் கேட்பானேன்!-ரெயிலும் உற்சாகமாக ஊதிக் கொண்டு கிளம்பியது. ஐயம்பேட்டை கந்தப்பனும் சென்னைக்குத்தான் வருகிறார் என்று அறிந்ததும் என் மனச் சோர்வெல்லாம் பறந்துவிட்டது. நான் சீர்காழி வரையில் போய்த்திண்டாடிவிட்டுத் திரும்பியதைப் பற்றிச் சொன்னேன். அவர் புயலினால் அந்தப் பக்கத்தில் விளைந்த சேதங்களைப்பற்றிச் சொன்னார். பிறகு, "இன்னல் கூட்டி இன்பம் ஊட்டி இந்திர ஜால வித்தை காட்டி" என்று முனகும் குரலில் பாடி நிரவல் செய்யத் தொடங்கினார். திடீரென்று நிரவலை நிறுத்தி, “ஆமாம்; ஆண்டவனுக்கு இதெல்லாம் இந்திர ஜால வித்தை; அநுபவிக்கிற நமக்கோ சொல்லமுடியாத அவஸ்தை!” என்று சொன்னார். ஏதோ ஒரு கதையை மனதில் வைத்துக் கொண்டு தான் அவர் இப்படிப் பேசுகிறார் என்று ஊகித்துக் கொண்டேன். (ஐயம்பேட்டை கந்தப்பன் தம் வாழ்க்கையில் கண்டு கேட்ட வரலாற்றைத்தான் சொல்லுவார். ஆனால் அந்த வரலாறு கதையைக் காட்டிலும் அதிசயமாக இருப்பது வழக்கம். அதனாலேயே கதை என்று குறிப்பிடுகிறேன்.) அவருடைய மனதில் உள்ளதை எப்படி வெளியே கொண்டு வருவது என்று யோசித்தேன். “பிள்ளைவாள்! நீங்கள் முன்னொரு தடவை சொன்ன ‘வீணை பவானி’ கதையை ரேடியோவில் நாடகமாகப் போட்டார்களே கேட்டீர்களா?” என்றேன். “உலக வாழ்க்கையே நாடகம். அதிலே சிலர் அரங்க மேடையில் ஏறி நாடகம் ஆடுகிறார்கள். அப்படி ஆடும் நாடகக்காரர்கள் - நாடகக்காரிகள் வாழ்க்கையிலும் எத்தனையோ நாடகங்கள்!” என்றார் கந்தப்பன். “எத்தனையோ நாடகக்காரர்கள் நாடகக்காரிகளை உங்களுக்குத் தெரிந்திருக்கும்” என்றேன். “பாலாமணி என்ற பிரசித்தமான நாடகக்காரியைப் பற்றி ஐயா கேள்விப்பட்டிருக்குமே?” என்றார் கந்தப்ப பிள்ளை. “கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால் பார்த்ததில்லை.” “ஆனால் சின்ன பாலாமணி என்று கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள்!” “கேள்விப் பட்டதில்லை. அப்படி ஒரு நாடகக்காரி இருந்தாளா, என்ன?” “ஆமாம்; இரண்டு வருஷம் மிகப் பிரசித்தியாக இருந்தாள். பிறகு தெய்வத்துக்கே பொறுக்காமல் போய்விட்டது! ஆனால் தெய்வத்தைச் சொல்லி என்ன பயன்? மனிதர்களுடைய அறிவீனத்துக்குத் தெய்வம் என்ன செய்யும்?” “மனிதர்களை ஏன் இவ்வளவு மூடர்களாகவும் துஷ்டர்களாகவும் கடவுள் படைக்கிறார் என்று அவர் பேரில் குற்றம் சொல்லலாம் அல்லவா? - அது போகட்டும். யாரோ சின்ன பாலாமணி என்கிறீர்களே? அது யார்? உங்களுக்குத் தெரியுமா?” “ஏழு வயது முதல் எடுத்து வளர்த்தவன் ஆயிற்றே? எனக்குத் தெரியாமல் எப்படியிருக்கும்?” என்றார் கந்தப்பப் பிள்ளை. இன்னும் சில கேள்விகள் அவரைக் கேட்டுத் தூண்டிய பிறகு கந்தப்பன் கதையைக் கூறலானார். 2 கும்பகோணத்தில் திருமருகல் நாதஸ்வரக்காரரின் கச்சேரிக்கு நான் தவுல் வாசித்துக் கொண்டிருந்த போது முதன் முதலில் அந்தக் குழந்தையைப் பார்த்தேன். விஜயதசமித் திருநாள் அன்று ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சூர சம்ஹாரத்துக்காக வீதி வலம் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தார். ஒவ்வொரு கோவிலிலிருந்தும் அன்றைக்குச் சுவாமி புறப்பாடு நடப்பது வழக்கம். ஆனாலும் சின்னக் கடைத் தெரு வியாபாரிகள் அந்தக் கடைத் தெருவில் இருந்த சிறிய கோயிலில் நடத்தி வந்த உற்சவந்தான் ஊரிலே பிரமாதப்படும். நவராத்திரி ஒன்பது நாளும் உற்சவம் நடத்துவார்கள். ஒவ்வொரு தினமும் சங்கீதக் கச்சேரிகளும் நாதஸ்வரக் கச்சேரிகளும் நடைபெறும். விஜயதசமிக்கு ஒவ்வொரு வருஷமும் நமது தமிழ்நாட்டிலேயே மிகப் பிரசித்தியடைந்த நாதஸ்வரக் கோஷ்டியைப் பல மாதங்களுக்கு முன்பே ஏற்பாடு செய்து விடுவார்கள். சின்னக் கடைத் தெரு வியாபாரிகள் அழைத்து விட்டால், நாதஸ்வர வித்வான்களும் அதை ஒரு பெருமையாகக் கருதுவார்கள். வேறு யார் அதிகப் பணம் கொடுத்து கூப்பிட்டாலும் போகமாட்டார்கள். கடைத்தெரு முழுவதும் அன்று அமோகமாக அலங்கரிக்கப்பட்டுக் காட்சி அளிக்கும் பல இடங்களில் பந்தல் போட்டிருப்பார்கள். ஒவ்வொரு பந்தலிலும் நாதஸ்வரக் கோஷ்டியார் நின்று வாசிக்க வேண்டும். அந்நாளில் கும்பகோணத்தாரின் சங்கீத ரஸனைக்கு இணையே கிடையாது போங்கள்! எவ்வளவோ அற்புதமாக முன்னலங்காரமும் பின்னலங்காரமும் செய்து முருகனை எழுந்தருளப் பண்ணுவார்கள். ஆனாலும், சுவாமி தரிசனம் செய்யும் கூட்டத்தைக் காட்டிலும் நாதஸ்வர கோஷ்டியைச் சூழ்ந்து நிற்கும் ஜனக் கூட்டந்தான் அதிகமாயிருக்கும். அன்றைக்கு இவ்வாறு ஒவ்வொரு பந்தலிலும் நின்று நின்று நாதஸ்வரக் கச்சேரி நடந்து கொண்டிருந்த போது, கச்சேரியைத் தொடர்ந்து வந்து கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு சிறிய பெண் குழந்தையைப் பார்த்தேன். அந்த சிறு குழந்தை கூட்டத்தில் எப்படியோ புகுந்து அடித்துக் கொண்டு வந்து எல்லாருக்கும் முன்னால் வந்து நின்றது. இது என் கவனத்தைக் கவர்ந்தது. நாதஸ்வர இசையைக் கேட்டுக் கொண்டு, அந்தக் குழந்தை சில சமயம் பூரித்து மலர்ந்த முகத்துடனே காணப்படும். சில சமயம் தவுல் வாத்தியத்தில் கவனம் செலுத்திக் கையினால் தாளம் போட்டுக் கொண்டிருக்கும். இன்னும் சில சமயம் மகுடி வாத்தியத்தைக் கேட்டு பாம்பு படம் எடுத்து ஆடுமே, அம்மாதிரி கண்களைப் பாதி மூடிக்கொண்டு, தலையை இலேசாக ஆட்டிக்கொண்டு நிற்கும். சில சமயங்களில் அதன் உடம்பு முழுவதுமே ஆடும். தாமரைக்குளத்தில் இலேசாகக் காற்றடிக்கும்போது பாதி மலர்ந்தும் மலராமலும் இருக்கும் தாமரைப் புஷ்பம் அதன் நீண்டு உயர்ந்த தண்டுடன் ஆடுமே, அந்தக் காட்சி எனக்கு நினைவு வரும். திருமருகல் நாதஸ்வரக்காரர் அன்றைக்கு அபாரமாகத்தான் வாசித்துக் கொண்டிருந்தார். ஆனால் என்னுடைய நினைவு முழுதும் அந்தச் சிறு பெண் குழந்தையின் பேரிலேயே இருந்தது. ஒவ்வொரு பந்தலுக்கும் நாதஸ்வர கோஷ்டி வந்து நின்றவுடனே, நான் அந்தக் குழந்தை வந்துவிட்டதா என்று பார்த்துக் கொண்டிருப்பேன். கூட்டத்தை விலக்கிக் கொண்டு, அந்தக் குழந்தை முன்னால் வந்து நின்ற பிறகுதான் எனக்கு என்னுடைய வாசிப்பில் கவனம் செல்லும். அப்போது அந்தப் பெண்ணின் பரவசமான முகத் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டுதான் வாசிப்பேன். ஊர்வலம் முடிந்து சுப்பிரமணியசுவாமி சூரசம்ஹாரம் செய்யும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்ட பிறகு, நான் என் தவுல் வாத்தியத்தைச் சிஷ்யப் பிள்ளையிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, அந்தக் குழந்தையை அருகில் அழைத்து, “உன் பெயர் என்ன, குழந்தை?” என்று விசாரித்தேன். “என் பெயர் நீலமணி” என்றது அந்தக் குழந்தை. “உன் அப்பா, அம்மா யார்?” என்று கேட்டேன். “அப்பா இல்லை. அம்மா மட்டுந்தான் இருக்கிறாள். எங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா, மாமா! அழைத்துப் போகிறேன்! அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நீங்கள் வந்து பார்த்தால் ரொம்பச் சந்தோஷப்படுவாள்!” என்றது அந்தக் குழந்தை. “ஆகட்டும் அம்மா, வருகிறேன்” என்று வாக்குக் கொடுத்துவிட்டேன். அப்படிப்பட்ட சங்கீத ரஸனையுள்ள குழந்தையைப் பெற்ற தாயாரைப் பார்க்க எனக்கும் ஆவல் உண்டாகி இருந்தது. என்னுடைய பதிலைக் கேட்டுவிட்டு அந்தக் குழந்தை குதூகலமாகக் குதித்துக் கொண்டு ஓடிப் போய் விட்டது. பிறகு, பக்கத்திலிருந்தவர்களை விசாரித்ததில் நான் ‘வருகிறேன்’ என்று வாக்குக் கொடுத்தது அவ்வளவு உசிதமான காரியம் அல்ல என்று தெரிந்தது. அந்தக் குழந்தையின் தாயாருக்கு மரகதமணி என்று பெயர். சங்கீதத்தில் கொஞ்சம் பயிற்சி உண்டு. சில காலம் கச்சேரிகள் கூடச் செய்து கொண்டிருந்தாள். தனிகர் ஒருவர் சிநேகமானார். கலியாணம் செய்து கொண்ட மனைவியைப் போலவே அவளை வைத்துப் பராமரிப்பதாகச் சொன்னார். மரகதமணி சங்கீதக் கச்சேரி செய்வதை விட்டுவிட்டாள். சிலகாலம் அந்யோந்யமாகத்தான் இருந்தார்கள். இந்த மாதிரிச் சிநேகமெல்லாம் அநேகமாக எப்படி முடியும் என்பது தெரிந்த விஷயமேயல்லவா? சில வருஷங்களுக்கெல்லாம் ஏதோ காரணத்தினால் ஒருவருக்கொருவர் பிடிக்காமல் போய்விட்டது. தனிகர் மரகதமணியின் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டார். பெரிய ஆஸ்தி படைத்த செல்வர் அந்தப் பெரிய ஆஸ்தியிலிருந்து ஏதோ கொஞ்சம் மரகதமணிக்கு எழுதி வைத்து விடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர காரியத்தில் நடைபெறவில்லை. கடைசியாக, அவர் இம்மாதிரித் தொல்லைகளுக்கு இடமில்லாத மறு உலகத்துக்குப் போய்விட்டார். மரகதமணி தன் சின்னஞ் சிறு குழந்தையுடன் வறுமை வாழ்க்கை நடத்தி வந்தாள். எப்படியோ காலம் போய்க் கொண்டிருந்தது. மனக்கவலையினால் உடம்பிலும் நோய் வந்து விட்டது. படுத்த படுக்கையாகி விட்டாள். தாயும் பெண்ணும் இப்போது நிராதரவாக இருக்கிறார்கள்… இந்த வேதனை தரும் வரலாற்றை அறிந்த பிறகு, “இப்போது அவர்களுக்கு ஜீவனம் எப்படித்தான் நடக்கிறது?” என்று கேட்டேன். “தாயாரிடம் இருந்த நகை நட்டுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய் வருகின்றன. அந்தக் குழந்தைக்கு நல்ல குரல். எங்கேயாவது பாட்டுக் கச்சேரி, நாதஸ்வரக் கச்சேரி என்றால் போய்விடும். கேட்ட பாட்டுக்களை பாடம் பண்ணிவிடும். ரெயிலிலே ஏறிப் பாட்டுப்பாடி பிச்சை எடுத்துத் தினம் எட்டணா பத்தணா சம்பாதித்துக் கொண்டு வரும். அந்தக் குழந்தையின் குரல் இனிமையையும் முகக்களையையும் பார்த்து ரெயில் அதிகாரிகள் சும்மா விட்டுவிடுவார்கள். சில சமயம் இம்மாதிரி உற்சவ காலங்களில் முச்சந்திகளில் நின்று பாட்டு பாடுவதும் உண்டு. சங்கீத ரஸனையும் தாராள உள்ளமும் படைத்தவர்கள் ஓர் அணா - இரண்டு அணா கூடக் கொடுத்துவிட்டுப் போவார்கள்” என்று பதில் கிடைத்தது. இதையெல்லாம் கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. அந்தக் குழந்தையின் நிலைமை இப்படியா இருக்க வேண்டுமென்று இரங்கினேன். ஆனாலும், இம்மாதிரி இடங்களுக்கு உதவி செய்வதாக எண்ணிப் போனாலும் ஏதாவது சங்கடத்தில் வந்து முடியும் என்று நினைத்து அங்கே போகும் எண்ணத்தை விட்டுவிட்டேன். உள்ளூரிலும் சரி, வெளியூரிலும் சரி, கடவுள் அருளால் எனக்கு நல்ல அந்தஸ்து ஏற்பட்டிருந்தது. கௌரவம் வாய்ந்த பெரிய மனிதர்களின் சிநேகமெல்லாம் கிடைத்திருந்தது. அசட்டுத்தனமாக எங்கேயாவது போய்க் காலை விட்டுக் கொண்டு வீண் தொல்லைக்கு ஆளாகக்கூடாது என்று மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன். இந்த உறுதியில் நிலைத்திருந்தேனானால் பின்னால் எவ்வளவோ சங்கடங்களுக்கு உள்ளாகாமல் தப்பித்துக் கொண்டிருப்பேன். அந்தச் சின்னஞ்சிறு குழந்தை ஒரு நிமிஷத்தில் என் மன உறுதியைக் குலைத்து விட்டது. நான் தங்கியிருந்த ஜாகைக்கே அது வந்துவிட்டது. “மாமா! எங்கள் வீட்டுக்கு வருவதாகச் சொன்னீர்களே, எப்போது வருகிறீர்கள்? அம்மா ரொம்பச் சந்தோஷப்பட்டாள். கேட்டுவரச் சொன்னாள்!” என்றது. அந்தக் குழந்தையின் உள்ளத்தைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. “அதற்கென்ன, சாயங்காலம் வருகிறேன், குழந்தை!” என்றேன். பக்கத்திலே இருந்த இரண்டொருவர் சிரித்ததைக் கேட்டதும் எனக்கு முனைப்பு அதிகமாகிவிட்டது. என் சுபாவந்தான் ஐயாவுக்குத் தெரியுமே? நல்லது, கெட்டது என்று என் பகுத்தறிவுக்குப் பட்டபடிதான் செய்வேனே தவிர, நாலுபேர் ஏதாவது சொல்லிவிடுவார்களே என்று பயந்து எதுவும் செய்யமாட்டேன். ஊருக்குப் பால் குடிக்கிற வழக்கமே என்னிடம் கிடையாது. யாராவது வம்பு பேசுகிறார்கள், அவதூறு சொல்லுகிறார்கள் என்று அறிந்தால், அந்தக் காரியத்தில் எனக்கு இன்னும் அதிக ஊக்கம் உண்டாகிவிடும். பக்கத்திலிருந்தவர்களின் சிரிப்பையுங் கேட்டு குழந்தையின் முகத்தில் தோன்றிய ஏமாற்றத்தையும் பார்த்ததும், “சாயங்காலம் என்ன? இப்போதே உன்னுடன் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போனேன். php programmers குழந்தையைப் பார்த்தபோது உண்டான இரக்கத்தைக் காட்டிலும் தாயைப் பார்த்தபோது அதிக இரக்கம் உண்டாயிற்று. அந்த அம்மாளின் பேச்சும் குணமும் அவ்வளவு உயர்வாயிருந்தன. ஆனால் தேக நிலைமை மிக மோசமாயிருந்தது. அதிக காலம் உயிர் வாழ்ந்திருக்கமாட்டாள் என்றே தோன்றியது. மூச்சு திணறிக் கொண்டு, உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு பேசுகிறவளைப் போல், மெல்லிய குரலில் பேசினாள். ஊர் வம்பு பேசவில்லை; தன்னுடைய சோகக் கதையைச் சொல்ல ஆரம்பிக்கவும் இல்லை. பழைய காலத்து சங்கீதக்காரர்கள் - நாதஸ்வரக்காரர்களைப் பற்றியே பேசினாள். அப்போது அவள் முகம் மலர்ச்சி அடைந்ததைப் பார்த்து எனக்கும் திருப்தியாய் இருந்தது. இந்த மட்டும், சீக்கிரத்தில் இறந்து போகப் போகிற ஓர் அநாதை ஸ்திரீக்கு இந்த உதவியாவது நம்மால் செய்ய முடிந்ததே என்று சந்தோஷப் பட்டேன். நீலமணி பக்கத்தில் உட்கார்ந்து வெகு சுவாரஸ்யமாக எங்கள் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தாள். விடைபெற்று புறப்படவேண்டிய சமயம் நெருங்கிய போது, நாஸுக்காக வீட்டுச் செலவு பற்றிக் கவலைப் படவேண்டாமென்றும் எனக்குத் தெரிந்த டாக்டரை அனுப்பி வைத்தியம் பார்க்கச் சொல்வதாகவும் கூறினேன். கடைசியாக, “அம்மா! நீ எவ்வளவோ நன்றாயிருந்தவள்; இப்போது இந்த கதிக்கு வந்து விட்டாய். ஆனாலும் இந்தக் குழந்தையைப் பிச்சை எடுக்கப் போகச் சொல்வதை மட்டும் நிறுத்தி விடு. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு!” என்றேன். “நானா போகச் சொல்கிறேன், ஐயா! வேண்டாம் வேண்டாம் என்று தான் முட்டிக் கொள்கிறேன். கேட்காமல் போய்விடுகிறாள்!” என்று மரகதமணி கண்ணீர் ததும்பக் கூறினாள். அப்போது நீலமணி, “மாமா! நான் பிச்சை எடுக்கப் போவதாக யார் உங்களுக்குச் சொன்னார்கள்?” என்று கணீர் என்ற குரலில் கேட்டாள். நான் சிறிது திகைத்துப் போனேன். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பேச்சை எடுத்திருக்கக்கூடாது என்று எண்ணினேன். மறுபடியும் அந்தக் குழந்தை, “ஏன் மாமா! பதில் சொல்லுங்கள். நான் பிச்சை எடுப்பதாக யார் சொன்னார்கள்? நான் ஒன்றும் பிச்சை எடுக்கவில்லை! கச்சேரி செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன். இருநூறு ரூபாய் முந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு பாடினால் அது மட்டும் கச்சேரியா? இரண்டு அணா, மூன்று அணா வாங்கிக் கொண்டு பாடினால் அது பிச்சையா?” என்றாள். நான் அதற்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனேன். என்னை அறியாமல் பூரிப்புப் பொங்கி வந்தது. அவள் தாயாரின் முகத்திலும் கொஞ்சம் புன்னகையைக் கண்டேன். கலகலவென்று சிரித்துக் கொண்டே குழந்தையைக் கட்டி அணைத்துக் கொண்டு “நீ ரொம்பக் கெட்டிக்காரப் பெண்! பலே சமர்த்து! என்னுடன் வந்துவிடு! உன்னைப் பெரிய சங்கீதக்காரியாக்கிவிடுகிறேன்” என்றேன். அப்போது மரகதமணி “அப்படியே செய்யுங்கள் ஐயா! இவளைச் சமாளிக்க என்னால் முடியவில்லை! நீங்கள் அழைத்துக் கொண்டு போங்கள்!” என்றாள். பேச்சு வாக்கில் ஏதோ சொல்லி வைத்தேன். அவ்வாறு காரியத்தில் நடந்தேறும்படி கடவுள் செய்து விட்டார். ஆறு மாதத்துக்கெல்லாம் மரகதமணி இறந்து போனாள். இந்தக் குழந்தை பட்ட துயரத்தை என்னால் சொல்ல முடியாது. நல்ல வேளையாக அச்சமயம் நான் கும்பகோணத்தில் இருக்கும்படி கடவுளின் அருள் இருந்தது. தாயின் ஈமக்கடன்களை முடித்துவிட்டுக் குழந்தையை என் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்ச் சேர்ந்தேன். முதலில் என் வீட்டைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் அருவருப்புக் காட்டினார்கள். யாரோ வீதியிலே திரிந்த பிச்சைக்காரப் பெண்ணைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டதாக முணுமுணுத்தார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. சில நாளைக்குள்ளேயே நிலைமை மாறி விடும் என்று அறிந்திருந்தேன். குழந்தை நீலமணி என் குடும்பத்தாரைச் சொக்குப்பொடி போட்டு மயக்குவது போல் மயக்கிவிட்டாள். அவளுடைய குறுகுறுப்பான கண்களும், சுறுசுறுப்பான நடத்தையும், மழலைப் பேச்சும், இனிய பாட்டும் எல்லாரையும் வசீகரித்து விட்டன. “குழந்தையைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லாமலே போய்விட்டது. அதற்குப் பதிலாக நான் நீலமணியை எதற்காவது கண்டிக்கும்படி நேர்ந்தால் என் வீட்டில் எல்லாரும் என் பேரில் பாய ஆரம்பித்து விடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுப்பது தவறு என்பதை நான் அறிவேன். அப்படி இடங்கொடுத்து கெட்டுப் பாழாய்ப்போன பெரிய மனிதர்கள் வீட்டுக் குழந்தைகள் எத்தனையோ பேரையும் எனக்குத் தெரியும். நீலமணியினுடைய குழந்தை வாழ்க்கையை உத்தேசிக்கும்போது அவளை ரொம்பவும் கண்டித்து வளர்க்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்திருந்தேன். ஆனாலும் ஒன்றும் பயன்படவில்லை. எனக்கே அந்த அநாதைக் குழந்தையைக் கண்டிக்கச் சாதாரணமாய் மனம் வருவதில்லை. எப்போதாவது அருமையாக அவளைக் கோபித்துக் கொண்டால் என் வீட்டில் எல்லோரும் என் பேரில் சண்டைக்கு வந்தார்கள். எப்படியோ குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லித் தாஜா பண்ணிப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வந்தேன். வெகு நன்றாகப் படிப்பும் வந்து கொண்டிருந்தது. ஆனால் நடுநடுவில் பழைய பழக்க வழக்கங்கள் வந்து கொண்டிருந்தன. திடீரென்று ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து காணாமற் போய் விடுவாள். ஊரில் உற்சவம் ஏதாவது நடந்தால் அங்கே வேடிக்கைப் பார்க்கப் போய் விடுவாள். பாட்டுப் பாடிக் காசு வாங்கவும் ஆரம்பித்து விடுவாள். சில சமயம் ரெயில்வே நிலையத்துக்குப் போய் ரெயில் ஏறிப் பாடத் தொடங்கி விடுவாள். இரண்டு மூன்று ஸ்டேஷன் பாடிக்கொண்டு போய்விட்டு, “குழந்தையைக் காணோமே?” என்று எல்லோரும் கவலையுடன் தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில் கையில் எட்டணா ஒரு ரூபாய்க் காசுடன் திரும்பி வருவாள். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். “குழந்தை! நான் இந்த ஊரில் கௌரவமாய் வாழ்க்கை நடத்துகிறேன்! என் மானத்தை வாங்காதே!” என்று அடிக்கடி எடுத்துச் சொன்னேன். “நான் எங்கேயோ கிடந்து வந்தவள் என்று தான் எல்லோருக்கும் தெரியுமே, மாமா! உங்களுக்கு என்னால் கௌரவக் குறைவு எப்படி ஏற்படும்?” என்று அவள் ஒரு சமயம் பதில் சொல்வாள். இன்னொரு சமயம், “ஏன், மாமா! நீங்கள் கச்சேரிக்குப் போய் நூறு இருநூறு சம்பாதித்துக் கொண்டு வருகிறீர்களே? அதில் கௌரவக் குறைவு ஒன்றும் இல்லையே? அதுபோல் நானும் எனக்குத் தெரிந்த பாட்டைப் பாடிக் கச்சேரி செய்து என்னால் இயன்றதைச் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன். இதில் என்ன பிசகு?” என்பாள். இன்னும் ஏதாவது நான் கடுமையாகப் பேசி விட்டால், ஒரு நாள் என் வீட்டை விட்டு, ஊரைவிட்டே ஓடிப்போய்விடப் போகிறாளே என்ற பயம் எனக்கு உண்டாகி விட்டது. அதற்குப் பிறகு, “நடக்கிறது நடக்கட்டும்; கடவுள் இருக்கிறார்!” என்று விட்டு விட்டேன். 3 ஏழெட்டு வருஷ காலம் என் பராமரிப்பிலேயே நீலமணி வளர்ந்து வந்தாள். அந்தக் குழந்தைக்குச் சங்கீதத்தில் இயற்கையாக உள்ள ஞானத்தை அறிந்திருந்த படியால் பாட்டு வாத்தியார் வைத்துப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தேன். சங்கீதம் என்னமோ அவளுக்கு நன்றாகத்தான் வந்தது. ஆனால் பாட்டு வாத்தியார்களோடு எப்போதும் சண்டைதான். ஸரலி வரிசை, கீதம், வர்ணம் என்று வரிசைக் கிரமமாகப் பாட்டு ஆரம்பிப்பார். அவைகளையெல்லாம் நீலமணி சரியாகப் பாடம் பண்ணமாட்டாள். “அந்தக் கீர்த்தனத்தைச் சொல்லிக் கொடுங்கள்!” “இந்தப் பாட்டைப் பாடிக் காட்டுங்கள்!” என்று ஆரம்பித்து விடுவாள். பாட்டு வாத்தியார்களுக்குப் போதும் என்று ஆகிவிடும். “இந்தப் பெண்ணுக்குச் சொல்லிக்கொடுக்க எங்களால் ஆகாது” என்று போய் விடுவார்கள். இம்மாதிரி ஐந்து பாட்டு வாத்தியார் மாற வேண்டியதாயிற்று. நானும் சில சமயம் சொல்லிக் கொடுக்கப் பார்ப்பேன். அதாவது, சொல்லிக் கொடுக்கிற பாவனையாக நீலமணியைப் பாடச்சொல்லிக் கேட்பேன். “பாட்டு வாத்தியார்கள் கெட்டார்கள்! இந்தக் குழந்தைக்கு வந்திருக்கிற சங்கீதம் வேறு யாருக்கு வந்திருக்கிறது? பெரிய பெரிய வித்வான்கள் பிரமிக்கும்படியான பாட்டு அல்லவா இது? சங்கீததெய்வத்தின் அருளினால் வந்த சங்கீதம் அல்லவா இது?” என்று மனத்தில் எண்ணிக் கொள்வேன். வெளிப்படையாகச் சொன்னால் குழந்தை கொஞ்சம் முறையாகக் கற்பதும் நின்று விடப் போகிறதேயென்று பயந்து மனத்திற்குள்ளேயே வைத்துக் கொள்வேன். நீலமணிக்கும் பதினேழு வயது ஆயிற்று. “இந்தப் பெண்ணை இனிமேல் என்ன செய்வது?” என்ற கவலை என் மனத்தில் உண்டாகத் தொடங்கியது. இந்த நிலைமையில் நான் யாழ்பாணத்துக்கு ஒரு கச்சேரிக்குப் போகும்படி நேரிட்டது. யாழ்பாணத்துக்காரர்கள் நல்ல சங்கீத ரஸிகர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே? சங்கீதத்திலேயும் நாதஸ்வர சங்கீதத்தில் அவர்களுக்கு மோகம் அதிகம். வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற வேற்றுமை மனோபாவம் அவர்களிடம் கிடையாது. தமிழ் நாட்டிலிருந்து பிரபல நாதஸ்வர வித்வான்கள் எல்லாரையும் அடிக்கடி கோயில் உற்சவங்களுக்கு வரவழைப்பார்கள். எல்லாருடைய வாசிப்பையும் நன்றாக கேட்டு ஆனந்திப்பார்கள். நாதஸ்வர வித்வான் யாரைக் கூப்பிட்டாலும் தவுலுக்கு மட்டும் தவறாமல் என்னைக் கூப்பிடுவார்கள். என் குடும்பத்தார் அடிக்கடி தங்களையும் ஒரு முறை இலங்கைக்கு அழைத்துப் போகும்படி கேட்பதுண்டு. நானும் ‘ஆகட்டும்’ ‘ஆகட்டும்’ என்று தட்டிக் கழித்து வந்தேன். இந்தத் தடவை மூன்று உற்சவக் கச்சேரிகள் சேர்ந்தாற்போல் வந்தபடியால் சுமார் இருபது நாள் வரை இலங்கையில் நான் தங்க வேண்டியதாயிருந்தது. குடும்பத்தை அழைத்துப் போவதற்கு இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று எண்ணி எல்லோருமாகப் போகத் தீர்மானித்தோம். சில காலமாக நீலமணி மிக்க உற்சாகக் குறைவுடன் கிறுக்குப் பிடித்தவள் போல் இருந்தாள். “ஒரு நாள் நம்முடைய மானத்தை வாங்கிவிட்டு ஓடிப் போய்விடுவாளோ?” என்று கூட எண்ணினேன். உண்மையைச் சொல்லப் போனால் நீலமணியை உத்தேசித்தே குடும்பம் முழுவதையும் அழைத்துப் போக முடிவு செய்தேன். இலங்கைப் பிரயாணச் செய்தி அறிந்ததும் நீலமணி உற்சாகம் அடைந்தாள். “பிரயாணம் என்றைக்கு மாமா?” என்று அடிக்கடி கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தாள். கடைசியாகப் பிரயாண நாளும் வந்தது. இந்த காலத்தைப் போல் ஆகாச விமானத்தில் ஏறிச் சில மணி நேரத்தில் இலங்கை போய் இறங்குகிற வசதி அப்போது கிடையாது. பிரயாணத்தில் எவ்வளவோ அசௌகரியங்கள் இருந்தன. சில சமயம் நரக வேதனையாகவே இருந்தது. எங்கள் கோஷ்டியில் அசௌகரியம் ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஒரே உற்சாகத்துடன் இருந்தவள் நீலமணி ஒருத்திதான். இதன் காரணம் எனக்குப் பின்னால் தெரிந்தது. நீலமணியின் தாயார் மரகதமணி அம்மாள் சந்தோஷமாக வாழ்ந்த நாளில் அவளும் நீலமணியின் தகப்பனாரும் இலங்கைக்கு வந்திருந்தார்களாம். அந்த அழகான தீவில் பல இடங்களுக்குப் போயிருந்தார்களாம். அங்கே அவர்கள் பார்த்த அதிசயங்களையெல்லாம் பற்றி அடிக்கடி மரகதமணி தன் அருமை மகளுக்குச் சொல்வதுண்டாம். “அப்போதெல்லாம் அம்மாவின் முகமே தனியான களை பெற்று விளங்கும்” என்றாள் நீலமணி. சின்னஞ்சிறு பிராயத்தில் கேட்டிருந்த இலங்கைத் தீவின் அதிசயங்கள் நீலமணியின் உள்ளத்தை அவ்வளவுக்குக் கவர்ந்து விட்டிருந்தன. அதனாலேதான் இலங்கைப் பிரயாணம் என்றதும் அவ்வளவு துடிதுடித்தாள். இதையெல்லாம் கொழும்புக்குச் சென்ற பிற்பாடு தான் நீலமணி சொல்லி நான் தெரிந்து கொண்டேன். ஆம்; முதலிலே கொழும்பிலேதான் எனக்குக் கச்சேரி இருந்தது. நாலு நாளைக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் கச்சேரி. கொழும்புக் கச்சேரி முடிந்ததும் நீலமணியையும் என் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு அந்த அழகிய நகரைச் சுற்றிக் காட்டப் புறப்பட்டேன். இதற்கிடையில் கொழும்பில் அப்போது தமிழ் நாட்டில் பிரபலமாயிருந்த நமச்சிவாயம் கம்பெனியாரின் நவீன நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன என்று கேள்விப்பட்டேன். சில காலம் தமிழகத்தில் மிகப் பிரசித்தி பெற்றிருந்த நமச்சிவாயம் நாடகக் கம்பெனியைப் பற்றி நீங்கள் அவசியம் அறிந்திருப்பீர்கள். நமச்சிவாயம் சிறுபிள்ளை. வசீகரமான நல்ல குணம் வாய்ந்த பிள்ளை. முதலில் அவன் “புதுக்கோட்டை மீனலோசனி கானவர்த்தினி ஒரிஜினல் பால மோகன பரமானந்தா டிராமா கம்பெனி”யில் நடித்துக் கொண்டிருந்தான். சீக்கிரத்தில் பெயரும் புகழும் பெற்றான். அவனை எத்தனையோ போட்டி நாடகக் கம்பெனிகள் அதிகப் பணம் கொடுத்துக் கொத்திக் கொண்டு போகத் தயாராயிருந்தன. ஆனால் அப்போதே பையன் நமச்சிவாயம் தன் வாழ்க்கையின் துருவ நட்சத்திரத்தைத் தெரிந்து கொண்டிருந்தான். சொந்தத்தில் நாடகக் கம்பெனி வைத்து நடத்தி உலகத்தையே ஓர் ஆட்டு ஆட்டி வைத்துவிட வேண்டுமென்று இலட்சியத்தைக் கொண்டிருந்தான். ஆகையால் மைனர் பருவம் முடிந்தவுடனேயே நாடகக் கம்பெனி நடத்திப் பெயர் வாங்கினான். ‘அதிரூப மோகனாங்கி’, ‘குலோப்ஜான் வைஜயந்தி’, ‘பூலோக அற்புத அரம்பை’ முதலிய புதுமையான நாடகங்களை அரங்கேற்றிப் புகழ் பெற்றான். தமிழ நாட்டிலேதான் இப்படியென்றால் இலங்கையிலுள்ள தமிழர்களையெல்லாம் அவனுடைய நாடகங்களின் மூலம் பைத்தியமாக அடித்துவிட்டான்! அப்படிப்பட்ட ஜகப் பிரசித்தி பெற்ற நமச்சிவாயம் கொழும்பு நகரில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தான். என் கச்சேரி நடந்த மறுநாள் குடும்பத்துடன் நான் நாடகம் பார்க்க போயிருந்தேன். நமச்சிவாயத்தை எனக்கு முன்னாலேயே நன்றாகத் தெரியும். பழைய மீனலோசனி கம்பெனியில் என் கையினால் ஒரு தடவை மெடல் வாங்கியிருக்கிறான். கொட்டகையில் என்னை அவன் பார்த்துவிட்டு கண் பார்வையினாலே வியப்பையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டான். மறுநாள் நாங்கள் தங்கியிருந்த ஜாகையில் எங்களைப் பார்க்கவும் வந்துவிட்டான். விதி என்று சொல்லுகிறார்களே, அது இதுதான் என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன். ஏனெனில், நாடகம் பார்த்து விட்டதிலிருந்து நீலமணி எங்கள் ஜாகையில் அதைப் பற்றியே ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாள். நாடகத்தில் நடித்தவர்கள் போல் நடித்துக் காட்டினாள்; பாடியவர்களைப் போல் பாடிக் காட்டினாள். பேசியவர்களைப் போல் பேசிக் காட்டினாள். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம். முக்கியமாக, அந்த நாடகத்தில் கதாநாயகி வேஷம் போட்டவனைப் போல் நீலமணி பேசிப்பாடி நடித்துக் காட்டியது எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தது. இப்படி நாங்கள் சிரித்துக் கொண்டிருந்த சமயத்திலே தான் நமச்சிவாயம் வந்து சேர்ந்தான். எல்லாரும் அவசரமாகச் சிரிப்பை அடக்கிக் கொண்டோ ம். நமச்சிவாயம், “என்ன, மாமா! நான் வரும்போது ஒரே சிரிப்பாயிருந்ததே!” என்று கேட்டான். “எல்லாம் உன்னுடைய பிரபாவத்தைப் பற்றித்தான்!” என்று பொதுப்படையாகச் சொன்னேன். நமச்சிவாயம் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் விழித்துவிட்டு “நீங்கள் நாடகம் பார்க்க வந்ததற்கு ரொம்பச் சந்தோஷம், மாமா! அதற்கு வந்தனம் செலுத்தவே வந்தேன். நாடகம் எப்படி இருந்தது? உங்களுக்குப் பிடித்ததா?” என்று கேட்டான். “நாடகம் நன்றாயிருந்தது. எனக்கு மட்டுமல்ல; என் குடும்பத்தார் எல்லாருக்கும் ரொம்ப ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் ஏதோ புதுமையான நாடகம் என்று விளம்பரம் செய்திருந்தாயே; பழைய நாடகந்தானே?” என்றேன். “யார் சொன்னது? புது நாடகந்தான், மாமா! எங்கள் கம்பெனி வாத்தியாரே புதிதாக எழுதியதல்லவா?” என்றான். “அது என்னமோ, அப்பா! உங்கள் வாத்தியாரே ஒருவேளை ‘காப்பி’ அடித்து உன்னை ஏமாற்றி விட்டாரோ, என்னமோ? இந்த நாடகம் ஏற்கெனவே நான் பார்த்திருக்கிறேன். என் மகள் கூடப் பார்த்திருக்கிறாள். சந்தேகமிருந்தால் இதோ நிரூபித்துக் காட்டுகிறேன், பார்!” என்று சொல்லிவிட்டு நீலமணியைக் கூப்பிட்டு, “குழந்தை நாம் இந்த நாடகத்தை முன்னால் ஒரு தடவை தஞ்சாவூரில் பார்த்திருக்கிறோமல்லவா? சில பாத்திரங்களைப் போல் நீ நடித்துக் காட்டு! அப்போது தான் இவர் நம்புவார்” என்று சொன்னேன். முதலில் நீலமணி கூச்சப்பட்டாள். கொஞ்சம் தாஜா செய்த பிற்பாடு, திடீரென்று கூச்சத்தை உதறித் தள்ளிவிட்டு, ’பூலோக அற்புத அரம்பை’யில் யார் யார் எப்படிப் பேசினார்கள், பாடினார்கள், நடித்தார்கள் என்று கொஞ்சம் கொஞ்சம் செய்து காட்டினாள். கதாநாயகி வேஷம் போட்ட பையனைப் போல் நீலமணி நடித்துக் காட்டிய போது எங்களுடன் சேர்ந்து நமச்சிவாயமும் விழுந்து விழுந்து சிரித்தான். கதாநாயகனாக நடித்த நமச்சிவாயத்தைப் போல மட்டும் நீலமணி செய்து காட்டக் கண்டிப்பாக மறுத்து விட்டாள். பழைய நாடகம் என்று நான் சொன்னது இந்தத் தமாஷுக்காகத்தான் என்பதை நமச்சிவாயம் ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டான். விடை பெற்றுச் செல்லும்போது, “மாமா! எங்கள் நாடகத்தில் இவ்வளவு குறைகள் இருக்கின்றன என்பதை இன்றைக்குத்தான் நன்றாக அறிந்தேன். ஆனால் என்ன செய்வது? கிடைக்கிற நடிகர்களைக் கொண்டுதானே நடத்த வேண்டியிருக்கிறது? ஆனால் ஜனங்களுக்கு என்னமோ பிடித்திருக்கிறது!” என்றான் நமச்சிவாயம். “அது தான், தம்பி, வேண்டியது! மற்றது எப்படி இருந்தால் என்ன?” என்றேன் நான். நமச்சிவாயம் போன பிறகு நீலமணி, “இது என்ன மாமா? இப்படி என்னைச் சந்தியில் இழுத்து விட்டீர்கள்? அவர் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார் ‘அதிகப் பிரசங்கி, அடங்காப் பிடாரி’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டு போகமாட்டாரா?” என்று கேட்டாள். “எண்ணிக் கொண்டு போவது என்ன? உண்மையும் அப்படித்தானே? நீ அதிகப் பிரசங்கி - அடங்காப் பிடாரிதானே? அதில் என்ன சந்தேகம்?” என்றேன் நான். வழக்கமாக நீலமணியிடம் பேசுகிறபடி வேடிக்கையாகத்தான் சொன்னேன். ஆனால் அவள் வழக்கம் போல் சிரித்துவிட்டுப் போகாமல், குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள். “இது என்னடா வம்பு?” என்று எனக்கு வேதனையாகப் போய்விட்டது. அவளை ஒருவாறு சமாதானப் படுத்தினேன். அன்றிரவு நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டு விட்டபடியால், அந்தச் சம்பவம் அதோடு போய்விட்டது என்று நினைத்தேன். ஆனால் அது போகவில்லை; விடாமல் எங்களைத் தொடர்ந்து வந்தது. யாழ்ப்பாணத்திலேதான் நாங்கள் அதிக நாள் தங்கினோம். ஒரு கோயில் உற்சவம் முடிந்து இன்னும் ஓர் உற்சவத்திற்காகக் காத்திருந்த சமயத்தில் நமச்சிவாயம் வந்து சேர்ந்தான்; முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தான். கொழும்பில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த நமச்சிவாயம் கம்பெனியை யாழ்ப்பாணத்தார்கள் ஒரு ‘ஸ்பெஷல்’ நாடகத்துக்காகத் தருவித்திருந்தார்கள். வரும் வழியில் ஸ்திரீ வேஷக்காரனுக்கு சுரம் வந்துவிட்டது. அதைப்பற்றி வெளியில் சொன்னால் வேறுவிதமான இடைஞ்சல்கள் ஏற்படும். இந்தியாவிலிருந்து வந்தவர்களில் யாருக்காவது சுரம் வந்துவிட்டதாகத் தெரிந்தால், இலங்கையில் தொத்து வியாதிச் சிறைச்சாலையில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்கள். அப்புறம் உயிர் பிழைத்து வெளியில் வருவதற்கு எவ்வளவு நாள் ஆகுமோ தெரியாது! இந்த நிலைமையில் என்ன செய்வது? ‘ஸ்பெஷல்’ நாடகத்தை ரத்து செய்வதா? என்ன காரணத்தைச் சொல்லி ரத்து செய்வது? நாடகத்துக்கு அழைத்திருந்தவர்கள் ஏராளமாகப் பணம் செலவிட்டு விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அவர்களுக்குப் பண நஷ்டம். நமச்சிவாயத்துக்குப் பெயர் நஷ்டம். அழமாட்டாக் குறையாக இந்த விவரங்களையெல்லாம் நமச்சிவாயம் என்னிடம் சொன்னான். “நாளைக்குத்தானே, தம்பி நாடகம்? அதற்குள் ஸ்திரீ வேஷக்காரனுக்குச் சுரம் சரியாகிவிடுகிறது!” என்றேன். “அப்படித் தோன்றவில்லை, மாமா! நூற்றைந்து டிகிரி சுரம். மேடைக்கு வந்து மயக்கம் போட்டு விழுந்து விட்டால் என் கதி என்ன ஆகிறது?” என்றான். “அதுவும் ஒரு நடிப்பு என்று வைத்துக் கொள்கிறது” என்று சொல்லிவிட்டு நகைத்தேன். நமச்சிவாயத்துக்கு நகைப்பு உண்டாகவில்லை. அழுகையும் ஆத்திரமுந்தான் வந்தன. அச்சமயத்தில் என் நாவில் எந்தக் குட்டிச்சாத்தான் வந்து உட்கார்ந்து கொண்டதோ, என்னமோ தெரியவில்லை. “நம் நீலமணியை வேண்டுமானால் நடிக்கச் சொன்னால் போகிறது!” என்றேன். உடனே நமச்சிவாயத்தின் முகம் மலர்ந்தது; “தங்களிடம் அதைக் கேட்கலாமென்றுதான் வந்தேன்; ஆனால் கேட்பதற்கு என்னவோ தைரியம் வரவில்லை” என்றான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. தமாஷ் பேச்சு சில சமயம் எவ்வளவு இக்கட்டுகளில் கொண்டு வந்து விட்டு விடுகிறது! அதிகம் வளர்த்துவதில் பயனில்லை, நமச்சிவாயம் தான் வந்த காரியத்தை நிறைவேற்றிக் கொண்டு தான் போனான். தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் கச்சேரி செய்வதாகவோ, நாடகம் போடுவதாகவோ இலங்கையில் விளம்பரம் செய்துவிட்டு, அப்படி நடக்காமற் போனால் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் எல்லோருக்குமே கெட்ட பெயர் உண்டாகும். இம்மாதிரி சில முறை இலங்கையில் நடந்து, தமிழ்க் கலைஞர்கள் கெட்டப் பெயர் வாங்கியிருக்கிறார்கள். ஆகையால் இவ்வளவு விளம்பரம் செய்த பிறகு நாடகம் நடந்தால் தான் நல்லது என்பதைப் பற்றிச் சந்தேகமில்லை. நமச்சிவாயத்துக்கு ஏதாவது ஒத்தாசையாயிருப்பதில் எனக்கும் திருப்திதான். ஆனால் நீலமணியை நாடக மேடை ஏறி நடிக்கச் செய்யலாம் என்கிற எண்ணம் அந்த நிமிஷத்துக்கு முன்னால் என் கனவிலே கூடத் தோன்றியதில்லை. நீலமணியிடம் இதை நாங்கள் தயங்கிப் பிரஸ்தாபித்ததும், அவள் ஒரு நிமிஷ நேரங் கூட தாமதிக்காமல் சம்மதித்தது என்னை ஆச்சரியத்தில் முழுக அடித்துவிட்டது. கொழும்பில் வேடிக்கையாக நடித்துக் காட்டச் சொன்ன போது அவள் தயங்கிய அளவு கூட இப்போது தயங்கவில்லை. பூர்வ ஜன்ம வாசனை என்று இதைத் தான் சொல்லுகிறார்கள் போல் இருக்கிறது. அவளுடைய உடம்பிலும், உடம்பில் ஓடிய இரத்தத்திலும், உள்ளத்திலும், உயிரின் ஒவ்வோர் அணுவிலும் நாடகக் கலையின் ஜீவசக்தி ததும்பித் துடித்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடில், ஒரு வருஷ காலத்திற்குள்ளே தமிழ் நாடெங்கும் ‘சின்ன பாலாமணி’ என்று பெயர் வாங்கியிருக்க முடியுமா? உடனே ஒத்திகையும் ஆரம்பமாகி விட்டது. பாட்டு கூத்து இம்மாதிரி காரியங்களில் நீலமணிக்கு அபாரமான ஞாபக சக்தி உண்டு. இப்போதோ அவளுக்கு ஒரு புது ஆவேசம் உண்டாகியிருக்கிறது. ஒரு பகல் ஒரு ராத்திரி ஒத்திகையில் எல்லாவற்றையும் பாடம் செய்துவிட்டாள். நூறு தடவை அந்த நாடகத்தில் நடித்தவள் போல் அவ்வளவு இயற்கையாகப் பாடவும், பேசவும் செய்தாள். நடிப்போ அவளுக்கு இயற்கையாக வந்தது. ஒத்திகையில் திருப்திகரந்தான்; மேடையில் ஏறிப் பெரிய ஜனத்திரளைப் பார்த்தவுடன் பயந்து போகாமல் இருக்க வேண்டுமே என்று எனக்குத் திக்குத் திக்கு என்று அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் நாடகத்தில் திரை தூக்கிச் சிறிது நேரத்திற்குள்ளேயே என் பயம் தீர்ந்துவிட்டது. நீலமணியிடம் சபைக் கூச்சம் என்பதே தென்படவில்லை. சபையில் கூடியிருந்த யாழ்ப்பாணத்துப் பொறுக்கி எடுத்த ரஸிகர்களோ ஆண்பிள்ளை பெண் வேஷம் போட்டுக் கொண்டு வந்து நடிப்பதற்குப் பதிலாக ஒரு பெண்ணே கதாநாயகியாக நடிக்கிறாள் என்று தெரிந்தவுடனேயே கரகோஷத்தின் மூலம் தங்கள் உற்சாகத்தைக் காட்டிவிட்டார்கள். அப்புறம் நீலமணி மேடைக்கு வரவேண்டியது தான். சபையிலே ஒரே ஆராவாரம் எழுந்தது. போகப் போக நீலமணியின் உற்சாகம் அதிகமாகி வந்தது. நாடகம் யாரும் எதிர்பாராத அளவில் அமோகமான வெற்றியுடன் முடிந்தது. மறு நாள் நமச்சிவாயம் என்னிடம் வந்து, “மாமா! என் மானத்தை காப்பாற்றினீர்கள்!” என்று காலைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான். பற்பலவிதமாகத் தனது நாடகத் திறமையையெல்லாம் காட்டி எனக்கும் நீலமணிக்கும் நன்றி செலுத்திவிட்டுக் கொழும்புக்குப் பிரயாணமானான். வழக்கமாக ஸ்திரீ வேஷம் போடுகிற பையனுக்கு சுரம் இறங்க ஆரம்பித்து விட்டது என்று தெரிந்த நானும் மனநிம்மதி அடைந்தேன். யாழ்ப்பாணத்தில் என்னுடைய கச்சேரிகள் முடிந்ததும் ஊருக்குத் திரும்பினேன். 4 நீலமணியின் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன் அல்லவா? அந்தக் கவலை என் மனத்திலிருந்து தீர்ந்து போய் விட்டது. நீலமணி விரைவில் என் பொறுப்பிலிருந்து போய் விடுவாள் என்று நிச்சயம் செய்து கொண்டேன். அந்தப்படியே நடைபெறவும் செய்தது. ஆனால் அன்று எழுதிய எழுத்தை அழித்து எழுத வல்லவர் யார்? சில காலம் வரைக்குந்தான் நான் நீலமணியை மறந்து அவளைப் பற்றிய கவலை அதிகம் இல்லாமல் இருக்க முடிந்தது. சீக்கிரத்திலேயே நமச்சிவாயம் ஐயம்பேட்டையில் என்னுடைய வீடு தேடி வந்து சேர்ந்தான். அவன் வந்த சமயம் நான் வீட்டில் இல்லை. நமச்சிவாயமும் நீலமணியும் ஒருவாறு பேசி முடிவு செய்துகொண்டு என்னிடம் சம்மதம் கேட்பதற்காகக் காத்திருந்தார்கள் என்று தோன்றியது. நமச்சிவாயம் கம்பெனியில் பிரதான ஸ்திரீவேஷம் போட்டுவந்த பையன் சண்டை பிடித்துக்கொண்டு போய்விட்டானாம்! நீலமணியுடன் நடித்த பிறகு வேறு யாருடனும் நடிப்பதற்கு நமச்சிவாயத்துக்கும் பிடிக்கவேயில்லையாம். இப்படி அப்படி என்று ஏதேதோ சுற்றி வளைத்துச் சொல்லிக் கொண்டு போனான். அவனுடைய பேச்செல்லாம் எனக்கு தேவையாயிருக்கவில்லை. ஏற்கனவே நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். இந்தப் பெண்ணுக்குக் கலியாணம் பண்ணிவைப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இவள் சாதாரணக் குடித்தனக்காரப் பையன் ஒருத்தனைக் கலியாணம் செய்து கொண்டு அவனுக்குச் சமையல் செய்து போட்டுக் கொண்டு வீட்டில் நிம்மதியாக வாழக் கூடியவளும் அல்ல. இவளை இப்படியே வெகுகாலம் கலியாணம் இல்லாமல் என் வீட்டில் வைத்துக் கொண்டிருக்கவும் முடியாது. ஆகையால் கடவுளே பார்த்துத்தான் எங்களை அச்சமயம் இலங்கைப் பிரயாணம் அனுப்பி வைத்திருக்க வேண்டும். நீலமணியை நமச்சிவாயத்தின் கையில் பிடித்துக் கொடுத்து அனுப்பிவிட வேண்டியதுதான். நமச்சிவாயமும் அறிவாளியான பிள்ளை. அப்படியொன்றும் ஒழுக்கம் கெட்டவன் என்று பெயர் வாங்கவில்லை. அவனுடைய நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டால் சீக்கிரத்தில் ஒருநாள் இவர்களுக்குத் திருமணம் நடந்துதான் தீரும். கலியாணத்துக்குப் பிறகும் இவளை நாடக மேடையில் ஏற்றி நடிக்கச் செய்வானா என்பது இவர்கள் இருவரையும் பொறுத்த காரியம். அவ்வளவு தூரத்துக்கு நான் இப்போது அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பானேன்? தெய்வ சித்தத்தின்படி எல்லாம் நடந்துவிட்டுப் போகிறது…" இவ்வாறு மனத்தில் எண்ணிக் கொண்டு, முதலில் கொஞ்ச நேரம் ஆட்சேபிப்பது போல் ஆட்சேபித்தேன். பிறகு “நீலமணி இஷ்டப்பட்டால் சரிதான்; நான் குறுக்கே நிற்கவில்லை” என்றேன். கடைசியில் என்னுடைய சம்மதத்தையும் கொடுத்தேன். நமச்சிவாயத்தைத் தனிமையில் அழைத்து, “விலையில்லாத பொக்கிஷத்தை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். அதைப் போற்றிப் பாதுகாப்பது உன் கடமை. அவசரப்பட்டு ஒரு தீர்மானத்துக்கும் வந்து விடாதீர்கள். கொஞ்ச நாள் நாடக மேடையோடு உங்கள் உறவு இருந்து வரட்டும். ஐந்தாறு மாதத்துக்குப் பிறகு இரண்டு பேரும் பரிபூரணமாக இஷ்டப்பட்டால் கலியாணம் செய்து கொள்ளுங்கள். அதுவரையில் என் வயதான தமக்கையை நீலமணியுடன் அனுப்பி வைக்கிறேன். அவர்கள் தனி ஜாகையில் வசிக்க வேண்டும். நானும் அடிக்கடி வந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன்” என்றேன். நமச்சிவாயத்துக்கு அப்போதிருந்த பரவசத்தில் நான் எது சொன்னால் தான் ஆட்சேபிக்கப் போகிறான்? எல்லா நிபந்தனைகளையும் ஒப்புக் கொண்டான். அப்புறம் சில மாத காலம் நமச்சிவாயம் - நீலமணி நாடகம் தமிழ் நாட்டையே அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருந்தது. ரெயிலிலே, திருவிழாவிலே, திருமணக் கூட்டங்களிலே, நாலுபேர் சந்திக்கும் இடங்களிலெல்லாம் நமச்சிவாயம் - நீலமணி நாடகங்களைப் பற்றியே பேச்சாயிருந்தது. முக்கியமாக, ‘கனவு’ என்னும் ஒரு நாடகம் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இந்தக் காலத்தில் ‘சமூக சித்திரம்’ என்று சொல்லுகிறார்களே; அம்மாதிரிப் பாணியில் அமைந்தது ‘கனவு’ என்னும் ஒரு நாடகம் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இந்தக் காலத்தில் ‘சமூக சித்திரம்’ என்று சொல்லுகிறார்களே; அம்மாதிரிப் பாணியில் அமைந்தது ‘கனவு’ என்னும் நாடகம். அதில் ஒரு கதாநாயகனும் கதாநாயகியும் சந்திக்கிறார்கள்; காதலிக்கிறார்கள். சில காலம் சந்தோஷமாக வாழ்கிறார்கள். பிறகு அவர்களைத் தொல்லைகள் தொடர்கின்றன. வாழ்க்கைத் தொல்லைகளின் காரணமாகக் காதலும் கசந்து போகிறது. கதாநாயகியின் பேரில் அகாரணமாகச் சந்தேகப்பட்டுக் கதாநாயகன் அவளைத் துன்புறுத்தி வருகிறான். இதற்கிடையில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. கதாநாயகன் பேரில் பொய் வழக்கு ஜோடிக்கப்படுகிறது. அவன் சிறையில் தள்ளப்படுகிறான். கதாநாயகி பல இன்னல்களுக்கு உள்ளான பிறகு அவளுடைய அருமைக் குழந்தையுடன் நடுத்தெருவில் பிச்சையெடுத்து ஜீவிக்கும்படி நேரிடுகிறது. கேளுங்கள், வேடிக்கையை! நீலமணி சிறு குழந்தையாயிருந்தபோது ரெயிலில் பாட்டுப்பாடிப் பிச்சை எடுத்தாள் அல்லவா? நாடகத்திலும் அந்த வழக்கம் அவளை விடவில்லை. நாடக மேடையில் நீலமணி பிச்சை கேட்டுப் பாடிக்கொண்டு வந்த போது சபையோர்களில் கண்ணீர் விடாதவர்கள் யாருமில்லை. அவர்களில் பலர் காசுகளையும், கால் ரூபாய் அரை ரூபாய்களையும் மேடையின் மீது எறிவார்கள். நீலமணியைத் தொடர்ந்து வந்த அவளுடைய சின்னஞ்சிறு மகன் (நாடகக் கதையிலே வரும் மகனைத்தான் சொல்கிறேன்) அந்தக் காசுகளைப் பொறுக்கிச் சேர்ப்பான். சிலர் ரூபாய் நோட்டுகளை மேடை மீது எறிவதுண்டு. சில நாளைக்கு இப்படி மேடையில் எறியப் படும் பணமே ஐம்பது அறுபது ரூபாய் ஆகிவிடும். பிச்சை எடுக்கும் காட்சிக்குப் பிறகு கதாநாயகி தன் மகனுடன் தன்னந்தனியான காட்டுப் பாதையில் வழி நடந்து போவாள். இருவரும் ஒரு மரத்தடியில் உட்காருவார்கள். நீலமணி களைப்புத் தாங்காமல் மரத்தில் சாய்ந்தபடி தூங்கிவிடுவாள். அப்போது ஆகாச மார்க்கத்தில் கந்தர்வன் ஒருவன் தேவ ரதத்தில் ஏறிக்கொண்டு வருவான். அவன் தன் மனைவியுடன் சண்டைப் பிடித்துக் கொண்டு வந்தவன். மரத்தில் சாய்ந்து கிடந்த நீலமணியைப் பார்ப்பான். இவளைக்கொண்டு தன் மனைவிக்கு ஒரு பாடங் கற்பிக்க எண்ணுவான். அதாவது, அவளைக் காட்டிலும் அழகான பெண்கள் பூலோகத்திலே உண்டு என்று நிரூபித்துக் காட்ட விரும்புவான். உடனே பூமியில் இறங்கி நீலமணியின் தூக்கம் கலையாமல் அவளைத் தூக்கிக்கொண்டு கந்தர்வலோகத்தில் அவனுடைய மாளிகையின் பூந்தோட்டத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். அங்கே நீலமணிக்கு அவன் உபசாரம் செய்வதைக் கந்தர்வப் பெண் வந்து பார்ப்பாள். கந்தர்வனைக் கோபித்து அவனை அப்பாற் போகச் செய்துவிட்டு நீலமணியிடம் அவளுடைய கதையைக் கேட்பாள். கேட்ட பிறகு அவளிடம் அனுதாபப்பட்டு “நீ இங்கேயே என்னுடன் இருந்துவிடு. உனக்கு ஒரு குறைவுமின்றி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பாள். நீலமணி கந்தர்வபுரியின் அற்புத அழகு வாய்ந்த பூந்தோட்டங்களில் சித்திர விசித்திரமான பல வர்ண மலர்களையும் அந்த மலர்களைச் சுற்றிச் சுற்றிப் பறந்த பட்டுப் பூச்சிகளையும் பார்த்துக் கொண்டு உலாவி வருவாள். ஆனாலும் அவளுடைய மனத்தில் நிம்மதி ஏற்படாது. பூத்துக் குலுங்கிய மந்தார விருட்சத்தின் அடியில் நின்று ராகமாலிகையில் ஒரு விருத்தம் பாடுவாள். அந்தப் பாடலை நீங்கள் அவசியம் கேட்டிருப்பீர்கள். "பெற்ற தாய்தனை மக(வு) மறந்தாலும் பிள்ளையைப் பெறுந் தாய் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் உற்ற தேகம் உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் நற்றவத்தவர் இதயத்தே ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே…" இதுதான் பாடல், இதன் கடைசி அடியான “நமச்சிவாயத்தை நான் மறவேனே” என்று நீலமணி பாடும் போது உடலும் உள்ளமும் உயிரும் உருகும்படி உணர்ச்சியுடன் பாடுவாள். அதைக் கேட்டுச் சபையோர் மனங் கசிந்து கண்ணீர் பெருக்கும் நிலையில் இருக்கும் போது, பூலோகத்தில் விடப்பட்ட கதாநாயகனையும் கந்தர்வன் அங்கே கொண்டு வந்து சேர்ப்பான். மூன்றாவது முறை நீலமணி, “நமச்சிவாயத்தை நான் மறவேனே” என்று பாடும்போது, நமச்சிவாயமே அவள் பின்னால் வந்து நின்று அவளுடைய கண்களைப் பொத்துவான். இந்தக் கட்டத்தில் நாடகக் கொட்டகையில் உண்டான ஆரவாரத்துக்கு இணையாகத் தமிழ்நாட்டு நாடகமேடை சரித்திரத்தில் எப்போதும் ஏற்பட்டதில்லை. அதற்கு முன்னுமில்லை; பின்னுமில்லை. மரத்தடியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரப் பெண் கண்ணை விழித்துப் பார்ப்பாள். அவ்வளவும் கனவு என்று உணர்ந்து ஏமாற்றம் அடைவாள். அருகிலிருந்த தன் அருமை மகனைக் காணாது திகைப்பாள், பைத்தியம் பிடித்தவள் போல ஓடுவாள். அப்போது எதிரே ஒரு சிப்பாய் அவள் மகனை அழைத்துக் கொண்டு வருவான். அந்தச் சிப்பாய் அன்று தன்னை விட்டுப் போன கணவன் தான் என்பது அறிந்து கதாநாயகி மகிழ்வாள். இத்துடன் நாடகம் முடிவுறும். இந்தக் ‘கனவு’ என்னும் சமூகசித்திரம் தமிழ் நாட்டுப் நாடகப் பிரியர்களை அந்த நாளில் பைத்தியமாக அடித்துக் கொண்டு வந்தது. நமச்சிவாயம் - நீலமணியின் நாடகமேடை வெற்றியைப் பற்றிக் கேட்கக் கேட்க எனக்கு எவ்வளவோ பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனால் அவர்களுடைய சொந்த வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக இல்லையென்று அறிந்து உற்சாகக் குறைவு உண்டாயிற்று. ஓயாமல் அவர்கள் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், எந்தச் சமயத்தில் என்ன நேருமோ என்று தனக்குப் பயமாயிருக்கிறதென்றும் என் தமக்கை எனக்கு அடிக்கடி சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தாள். முதலில் சில காலம் நான் அதை அலட்சியம் செய்து வந்தேன். காலப்போக்கில் எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று மனத்தைத் திருப்தி செய்து கொண்டிருந்தேன். ஆனால் தமக்கைசொல்லி அனுப்புவது நின்றபாடில்லை. கடைசியாக, இனி அலட்சியம் செய்வதற்கில்லையென்று தோன்றி, ஒரு நாள் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது சென்னை ஒற்றைவாடையில் நாடகம் நடந்து கொண்டிருந்தது. பார்க்டவுன் சந்து ஒன்றில் நாடகக் கம்பெனியின் ஜாகை பக்கத்திலேயே நீலமணியின் வீடு. நான் அங்கே போன போது உள்ளேயிருந்து பெருங் கூக்குரல் வந்து கொண்டிருந்தது. நீலமணி - நமச்சிவாயம் இவர்களுடைய குரல்கள் தான். வீட்டுக்குள் நுழையும் போது எனக்கு நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. என்னை பார்த்ததும் இருவரும் சண்டையை நிறுத்தி முகமலர்ச்சியுடன் என்னை வரவேற்றார்கள். சாமான்கள் உள்ளே வந்து சேர்ந்து வண்டிக்காரனைத் திருப்பி அனுப்பிய பிறகு, “நான் வரும்போது ஒரே கூக்குரலாயிருந்ததே, என்ன விசேஷம்?” என்று கேட்டேன். “நீங்களே கேளுங்கள், மாமா! உங்கள் அருமை மகளை நீங்களே கேளுங்கள்” என்றான் நமச்சிவாயம். “ராகமாலிகையை எந்த ராகத்தில் முடித்தால் என்ன மாமா! ‘பேஹாக்’ கில் முடிக்காமல் மத்திய மாவதியில் முடித்துவிட்டதாகச் சண்டை பிடிக்கிறார்?” என்றாள் நீலமணி. “எந்த ராகத்தில் முடிந்தாலுந்தான் ஒன்றுமில்லையே? மத்தியமாவதியில் முடிக்காமல் நான் சொன்னபடி ‘பேஹாக்’ கில் முடிப்பதுதானே?” என்றான் நமச்சிவாயம். “பாடுகிறது நான் தானே? எனக்கு இஷ்டமான ராகத்தில் நான் பாடுகிறேன்” என்றான் நீலமணி. “பாடுகிறவர்களுக்காகப் பாட்டா? கேட்கிறவர்களுக்குப் பாட்டா? நீங்கள் சொல்லுங்கள், மாமா!” என்றான் நமச்சிவாயம். “கேட்கிறவர்கள் அப்படியொன்றும் மத்தியமாவதியைக் கேட்டுக் காதைப் பொத்திக் கொள்ளவில்லையே? கொட்டகை இடிந்து விழும்படி கரகோஷ ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்களே!” என்றாள் நீலமணி. “உன் பாட்டைக் கேட்டா கரகோஷம் செய்தார்கள்? நான் மேடையில் அச்சமயம் தோன்றியதற்காக அல்லவோ கரகோஷம் செய்தார்கள்!” என்றான் நமச்சிவாயம். “அப்படி இருக்கும் போது, நான் எந்த ராகத்தில் பாடினால் என்ன? எப்படிப் பாடினால் என்ன?” என்றாள் நீலமணி. “மாமா! உங்கள் மகளுக்குக் கர்வம் அசாத்தியமாகத் தலைக்கேறிவிட்டது. இனி உருப்படப் போவதேயில்லை. ஊரில் உள்ள முட்டாள் பயல்கள் எல்லம் ‘ஆஹு’ என்று புகழ்ந்து இப்படி இவளைக் கர்வம் பிடிக்கச் செய்துவிட்டார்கள்!” என்று குறைப்பட்டான் நமச்சிவாயம். “ஊரில் உள்ளவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றால் அவர்களுக்குத்தானே நாம் நாடகம் ஆடுகிறோம்? நாம் மட்டும் என்ன?” என்றாள் நீலமணி. “கேட்டீர்களா, மாமா! இவள் எனக்கு முட்டாள் பட்டம் சூட்டுவதை! இவளை மேடையில் ஏற்றி நாடெங்கும் புகழ்பெற்ற நாடகக்காரியாக்கியதற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! இல்லையா?” என்றான் நமச்சிவாயம். அதற்குப் பதில் நீலமணி என்னமோ சொல்லத் தொடங்கிச் சொல்ல முடியாமல் விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள். இதையெல்லாம் கேட்டு எனக்கு உண்மையிலேயே சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் போய்விட்டது. அந்தச் சந்தேகமான நிலையில் சிரித்துத்தான் வைப்போமே என்று உடம்பு குலுங்கச் சிரித்தேன். “அட அசட்டுக் குழந்தைகளா!” என்று இரண்டு பேரையும் மாற்றி மாற்றிப் பார்த்துப் பார்த்துச் சிரித்தேன். “மாமா! எங்களைப் பார்த்து நீங்கள் மட்டுந்தானா சிரிப்பீர்கள்? ஊரே சிரிக்கும்” என்றான் நமச்சிவாயம். “ஆமாம், தம்பி! நீங்கள் இப்படி அற்ப விஷயத்துக்குப் பெரிய சண்டையாகப் போடுகிறீர்கள்! இதன் உண்மை தெரியாதவர்கள் ஒன்றைப் பத்தாக்கி ஊசியை உலக்கையாக்கி ஊரெல்லாம் டமாரம் அடித்து வீண் வதந்திகளைப் பரப்பி விடுவார்கள். பிறகு ஊரே உங்களைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கி விடும்! ஜாக்கிரதை!” என்றேன். உடனே பேச்சை மாற்றினேன், யோக க்ஷேமங்களை விசாரித்தேன். அவர்களுடைய நாடகங்களைப் பற்றி நாடெல்லாம் புகழ்வதையும் கூறினேன். இரண்டு பேரையும் தனித்தனியாகப் பார்த்து நல்ல வார்த்தையாகப் புத்திமதி கூறினேன். நான் கூறியவற்றை இரண்டு பேரும் அப்படி அப்படியே ஒப்புக் கொண்டார்கள். தங்களுடைய குற்றத்தை உணர்ந்தவர்கள் போல் பேசினார்கள். “ஒரு நல்ல நாள் பார்த்து ஏதாவது ஒரு கோயிலுக்குப் போய்க் கலியாணம் செய்து கொண்டு விடுங்கள். குழந்தை ஒன்று பிறந்து விட்டால் அப்புறம் சின்ன விஷயங்களைப் பற்றிச் சண்டைபோட அவகாசம் இராது” என்றேன். இருவரும் ஒப்புக்கொண்டு என்னையே முகூர்த்த நாள் பார்க்கும்படி சொன்னார்கள். நான் உடனே மறுவாரத்திலேயே முகூர்த்த நாள் குறிப்பிட்டேன். இரண்டு பேரையும் பொறுக்கியெடுத்த சில சிநேகிதர்களையும் மட்டும் திருநீர்மலைக்கு அழைத்துச் சென்று திருமணத்தைச் சுருக்கமாக முடித்து வைத்தேன். பிறகு, நிம்மதியுடன் ஊருக்குத் திரும்பினேன். 5 திருமணத்துக்கு நான் குறிப்பிட்ட முகூர்த்த நாளில் என்ன கோளாறு இருந்ததோ தெரியவில்லை. நான் ஊருக்குத் திரும்பிச் சில நாளைக்குள்ளே இடி விழுந்தாற் போன்ற செய்தி சென்னையிலிருந்து வந்து விட்டது. நீலமணி கடித்தத்துக்கு மேல் கடிதமாக எழுதியிருந்த நாலைந்து கடிதங்களையும் சுசீந்திரம் உற்சவக் கச்சேரிக்குப் போய்த் திரும்பி வந்த பிறகு சேர்ந்தாற்போல் படித்ததில் துயரமும் பீதியும் கொள்ளும்படி நேர்ந்தது. நான் சென்னைக்குப் போயிருந்த போதே நமச்சிவாயத்தின் தொண்டை கம்மியிருந்ததையும் அவன் கமறிக் கமறி அடிக்கடி இருமியதையும் கவனித்தேன். உடம்பும் சிறிது இளைத்திருந்தது. சென்னையில் நாள்தோறும் இடைவிடாமல் நாடகம் நடந்து வந்தது தான் இதற்குக் காரணம் என்று எண்ணிக் கொண்டேன். சில நாளைக்கெல்லாம் நமச்சிவாயத்துக்கு உடம்பு ரொம்ப பலவீனமாகிச் சுரமும் வந்து விட்டதாம். டாக்டரை அழைத்துப் பார்த்ததில் அவர் அந்தப் பயங்கரமான செய்தியைச் சொன்னாராம். பையனுக்கு டி.பி.வியாதி என்றும், உடனே நாடகம் ஆடுவதை நிறுத்தி பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், தகுந்த சிகிட்சையும் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிடில் வியாதி முற்றி உயிருக்கே அபாயம் வந்து விடும் என்று சொன்னாராம். அந்த நாளில் இப்போது வந்திருப்பது போன்ற ‘ஸ்ட்ரெப்டோ மைஸின்’ முதலிய மருந்துகள் இல்லை. டி.பி. வியாதி வந்து விட்டது என்றால் பிழைப்பது துர்லபம் என்று தான் அர்த்தம். ஆனால் நமச்சிவாயமோ டாக்டர் சொன்னதை நம்பாமல், ’எனக்கு டி.பி.யும் இல்லை; கி.பி.யும் இல்லை" என்று சொல்லி, மேடை ஏறியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தான். இதன் பலனாக, ஆளை அடியோடு கிழே தள்ளி விட்டது. “மாமா உடனே புறப்பட்டு வாருங்கள்! தாமதித்தால் எங்களை உயிரோடு காணமாட்டீர்கள்!” என்று நீலமணி அலறிப் புடைத்துக் கொண்டு கடைசிக் கடிதத்தில் எழுதியிருந்தாள். நானும் அலறிப் புடைத்துக் கொண்டு புறப்பட்டுப் போனேன். அங்கே எல்லாம் அல்லோலகல்லோலமாகத்தான் இருந்தது. நாடகத்தை நிறுத்தி ஒருவாரம் ஆயிற்று. நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மாதக்கணக்காகச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. கொட்டகை முதலாளியும் இன்னும் பலரும் தங்களுக்குச் சேரவேண்டிய பாக்கிக்காக வந்து கொண்டிருந்தார்கள். நாடகக் கம்பெனிகளுக்குப் பெயரும் புகழும் பெருகுவதையொட்டிப் பணச் செலவும் அதிகமாகிக் கொண்டுவரும். ஆட்கள் அதிகமாகச் சேர்ந்து கொண்டுவருவார்கள். ஆடம்பரம் பெருகிக் கொண்டு வரும். காட்சி ஜோடனைகளில் பணம் ஏராளமாகப் போய்க் கொண்டேயிருக்கும்; சுற்றி உள்ளவர்கள் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் கம்பெனியை மூடும்படி நேர்ந்தால், கம்பெனிச் சொந்தக்காரரின் கதி அதோகதிதான். ஏதோ கடவுள் என்னை அச்சமயத்தில் அங்கே கொண்டு போய்ச் சேர்த்தார். நான் கணக்கு வழக்குகள் பார்த்து, கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஒன்றுக்குப் பாதி கொடுத்துத் தீர்த்தேன். மொத்த முடிவில், நமச்சிவாயத்துக்குக் கடன்பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் தங்கி நின்றது. கும்பகோணத்தில் எனக்குத் தெரிந்த நல்ல டாக்டர் இருப்பதையும், அவரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி நமச்சிவாயத்தையும், நீலமணியையும் அழைத்துக் கொண்டு போனேன். கும்பகோணத்தில் எனக்கு ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டிலேயே அவர்களுக்கு ஜாகை ஏற்படுத்திக் கொடுத்தேன். டாக்டர் ஒரு மாதம் வைத்தியம் பார்த்தபின், “நெருக்கடியான நிலைமை தீர்ந்து விட்டது; இனி மேல் நான் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. நமச்சிவாயத்தை மதனப்பள்ளிக்கு அழைத்துப் போய் அங்கே இரண்டு வருஷம் இருக்கச் செய்ய வேண்டும்” என்று சொன்னார். இந்தக் காலத்தில் புண்ணியவான்கள் ஜில்லாவுக்கு ஒரு க்ஷயரோக வைத்தியசாலை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்போதெல்லாம் மதனப் பள்ளிக்குப் போனால் தான் அந்தக் கொடிய வியாதிக்கு சிகிச்சை என்று இருந்தது. மதனப்பள்ளிக்குப் போய் இரண்டு வருஷம் இருப்பதற்கு ஐயாயிரம் ரூபாய் பணம் வேண்டும். இதற்கு எங்கேபோவது என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கையில் எதிர்பாராத உதவி ஒன்று கிட்டியது. கும்பகோணத்தில் அப்போது வேறொரு நாடகக் கம்பெனியார் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். நமச்சிவாயத்தின் நிலைமையை அறிந்து அவனுக்கு உதவிசெய்யும் முறையில் அவர்கள் ஒரு யோசனை கூறினார்கள். அதாவது, நீலமணி அவர்களுடைய கம்பெனியில் பத்து ‘ஸ்பெஷல்’ நாடகங்களில் நடித்தால் நாடகத்திற்கு ஐந்நூறு ரூபாய் வீதம் ஐயாயிரம் முன் பணமாகவே தருவதற்கு முன்வந்தார்கள். நாடகத்துக்கு வசூலே சாதாரணமாக ஆயிரம் ரூபாய்க்குமேல் ஆகாது. நீலமணிக்கு மட்டும் ஐந்நூரு ரூபாய் என்றால், உதவி செய்யும் நோக்கத்துடனே தான் அவர்கள் சொன்னார்கள் என்பதைப் பற்றிச் சந்தேகமே இல்லை. இதை நமச்சிவாயமும் உணர்ந்துதான், ‘ஸ்பெஷல்’ நாடகங்களில் நீலமணி நடிப்பதற்கு அவன் சம்மதம் கொடுத்தான். ஆனால் நீலமணி பிடிவாதமாக மறுதளித்தாள். நமச்சிவாயம் இருக்கும்போது இன்னொருவருடன் மேடையில் ஏறி நடிக்க முடியாது என்று சொன்னாள். “அப்படியானால் நான் செத்துத் தொலைந்து போய் விடவேண்டும் என்கிறாயா? அதற்குப் பிறகு இன்னொருவனுடன் நடிப்பாயா?” என்று ஏடாகூடாமாகப் பேசினான் நமச்சிவாயம். நீலமணி ஆத்திரம் தாங்காமல் பொருமி அழுதாள். மறுபடியும் நான் தலையிட்டுத் தகராறைத் தீர்த்து வைத்தேன். நீலமணியைச் சமாதானப்படுத்தி அவள் நடிக்க ஒப்புக் கொள்வதுதான் உசிதம் என்றும் நமச்சிவாயத்தினிடம் அவளுடைய உண்மை அன்புக்கு அது தான் ருசுவாகும் என்றும் எடுத்துக் கூறி ஒப்புக் கொள்ளச் செய்தேன். நீலமணியின் ‘ஸ்பெஷல்’ நாடகங்கள் பத்தும் இரண்டு மாதத்துக்குள் நடைபெறுவதாக ஏற்பாடு. ஒன்றைவிட ஒன்று மிஞ்சிய மகத்தான வெற்றியாக, நாடகங்கள் நடந்து வந்தன. இந்த ‘ஸ்பெஷல்’ நாடகங்களின் போதுதான் நீலமணிக்குச் ‘சின்ன பாலாமணி’ என்று சிலர் பெயர் கொடுத்தார்கள். கடலூரிலிருந்தும் திருச்சிராப்பள்ளியிலிருந்தும் மதுரையிலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் நாடகம் பார்க்க ஜனங்கள் வந்தார்கள். இந்த ஜனங்கள் வழக்கமாக வரும் ரெயில்களுக்கு ‘நீலமணி ஸ்பெஷல்’ என்ற பெயரும் ஏற்பட்டது. இவ்வளவு அமோகமான வெற்றிக்கு மத்தியில் நமச்சிவாயத்தின் மனோநிலை மட்டும் நாளுக்கு நாள் கெட்டுப் போய் வந்தது. முதலில் நீலமணி நடிப்பதற்குச் சம்மதம் கொடுத்தவன், தான் இல்லாமலே அவள் நாடகத்தில் வெற்றி அடைந்து வருகிறாள் என்பதைப் பார்க்க பார்க்க எரிச்சல் அடைந்தான். அவனுடைய எரிச்சலை வளர்ப்பதற்கு முக்கியமாக ஒரு காரணம் ஏற்பட்டது. “பெற்ற தாய்தனை மக(வு) மறந்தாலும்” என்னும் பாட்டில் தன்னுடைய பெயர் வருவதால் அதை மட்டும் நீலமணி பாடக்கூடாது என்று அவன் சொல்லியிருந்தான். பாடுவதில்லையென்று அவளும் உறுதி கொண்டிருந்தாள். ஆனால் நாடகத்துக்கு வரும் மகாஜனங்களின் இயல்பு அபூர்வமானது. அவர்களுக்குத் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவதில் ஆர்வம் அதிகம். அவர்கள் கோரிக்கையை நடிகர்கள் நிறைவேற்றாவிட்டால் ரகளைசெய்து விடுவார்கள். முதல் நாள் நாடகத்திலேயே சிலர், “பெற்ற தாய்தனை” என்று கத்தினார்கள். அதை நீலமணி பொருட்படுத்தாமல் வேறொரு விருத்தம் பாடி சமாளித்தாள். மறுநாள் சபையோர் அதற்கு இடங் கொடுக்கவில்லை. மூலைக்கு மூலை எழுந்து நின்று “பெற்ற தாய் பாடு!” என்று கட்டளையிட்டதுடன் பாடாவிட்டால் உட்காரமாட்டோ ம் என்று பிடிவாதம் பிடித்தார்கள். நாடக நிர்வாகிகள் நீலமணியிடம், “பாடாவிட்டால் கலகம் உண்டாகும்” என்று எச்சரித்ததன் பேரில் அவளும் பாட நேர்ந்தது. அந்தப் பாட்டைப் பாடும் போது இயற்கையாக அவளுடைய உணர்ச்சி மிகுந்திருந்தபடியால் ராகமாலிகை பிரமாதமாக அமைந்துவிட்டது. ஜனங்களும் கையைக் கொட்டித் தீர்த்துவிட்டார்கள். அதற்குப் பிறகு நீலமணி ஒவ்வொரு நாளும் சபையோர் கேட்பதற்கு இடம் வையாமல் அந்தப் பாடலைப் பாடிவிட்டாள். “பாடாவிட்டால் கலகம் நேர்ந்து நாடகம் குழப்பத்தில் முடிந்திருக்கும்” என்பதை நமச்சிவாயத்துக்கு அவள் எடுத்துச் சொன்னாள். அதை அவனும் வெளிப்படையில் ஒப்புக்கொண்டான். இருந்தாலும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தான். நீலமணி நாடகக் கொட்டகைக்குப் போய் வெற்றி மாலை சூடிக் கொண்டு வருவதும் தான் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டியிருப்பதும் அவனுடைய மனவேதனையையும் எரிச்சலையும் நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே வந்தன. இரண்டொரு முறை அவனை நான் பார்க்கப் போயிருந்தேன். நாஸுக்காக நாடகத்தைப் பற்றிய பேச்சையே எடுக்காமல், மேலே அவனுக்கு நடக்க வேண்டிய சிகிச்சையைப் பற்றிப் பேசினேன். டாக்டரைக் கொண்டு மதனப்பள்ளிக்குக் கடிதம் எழுதச் சொல்லியிருப்பதாகக் கூறினேன். “மதனப்பள்ளிக்கு நான் எங்கே போகப் போகிறேன்? மரணப் பள்ளிக்குத்தான் போகப் போகிறேன்!” என்றான் அவன். “சீச்சீ! இது என்ன பேச்சு? தம்பி!” என்று சமாதானமாக ஏதோ அவனுக்குச் சொல்லிவிட்டு ஊருக்குத் திரும்பினேன். எனக்கும் என்னுடைய ஜோலிகள் இருந்தன. நான் இவர்களையே எப்போதும் கட்டிக் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா? என்னுடைய சம்பாத்தியத்தைக் கொண்டு பிழைக்க வேண்டிய ஜீவன்கள் பதினைந்து பேர் என் குடும்பத்தில் இருந்தார்கள். நான் கச்சேரிக்குப் போய் வராவிட்டால் என் குடும்பம் நடப்பது எப்படி? ‘ஸ்பெஷல்’ நாடகங்கள் எட்டு முடிந்த பிற்பாடு, சிக்கல் உற்சவத்துக்குப் போய்விட்டு நான் ஐயம்பேட்டைக்குத் திரும்பி வந்தேன். கும்பகோணத்தில் நிலைமை மிக்க நெருக்கடி என்று தெரிந்தது. என் தமக்கை, “அந்தப் பையன் ஒவ்வொரு சமயம் பெட்டியைத் தூக்கிக் கொண்டு தேசாந்திரம் போகிறேன்” என்று கிளம்புகிறான். ஒரு சமயம் நீ மருந்து வைத்துத்தான் என் உடம்பு கெட்டுவிட்டது என்கிறான். துப்பாக்கியை எடுத்துக் காட்டிச் சுட்டு விடுவேன் என்று பயமுறுத்துகிறான். இன்னொரு சமயம் கையில் அக்கினித் திராவகத்தை வைத்துக் கொண்டு ‘குடித்துச் செத்துப் போகிறேன்’ என்கிறான். வீடு ஒரே பயங்கரமாயிருக்கிறது. எந்த நிமிஷம், என்ன விபரீதம் நேருமோ தெரியவில்லை. நீ உடனே போய்ப் பார், தம்பி! அவர்களைப் பிரித்துத் தனித்தனியே விட்டு விட்டால் கூடத் தேவலை போல் இருக்கிறது!" என்றாள். என் இரட்டை மாட்டுப் பெட்டி வண்டியை உடனே பூட்டச் சொல்லிக் கும்பகோணத்துக்குக் கிளம்பினேன். அன்றைக்குத் தீபாவளிக்கு முதல் நாள். கும்பகோணத்து வீதிகள் ஒரே கோலாகலமாக இருந்தன. எங்கே பார்த்தாலும் டப் டுப், டப் டபார் என்று சீன வெடிகள் வெடித்துக் கொண்டிருந்தன. கம்பி மத்தாப்பூக்களிலிருந்து பொழிந்த வர்ண ஒளிப்பொறிகள் கண்களுக்கு விருந்தாக இருந்தன. விஷ்ணு சக்கர வாணங்கள் பூமியிலிருந்து சுழன்று சுழன்று வானை நோக்கிச் சென்று படாரென்று வெடித்து மறைந்தன. இவற்றிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த புகை மூக்கில் ஏறி மூச்சுத் திணறும்படி செய்தது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் புது வஸ்திரங்களும் வாணங்களும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கடைத்தெருக்கள் ஜே ஜே என்று இருந்தன. ஆனால் என் நெஞ்சு மட்டும் திக், திக் கென்று அடித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாவி சண்டாளன் என் அருமைக் குழந்தையை என்ன செய்யப் போகிறானோ, என்னமோ என்று எண்ணிய போதெல்லாம் அடி வயிறு விம்மி எழுந்து மார்பை அடைத்தது. ஒவ்வொரு தடவை பட்டாசு வெடித்த போதும் என் தலையில் ஏதோ வெடித்தது போல் தோன்றியது. கடைத் தெருவில் சிறிது வண்டியை நிறுத்தி, நமச்சிவாயத்துக்குப் புது வேஷ்டியும், நீலமணிக்குப் புதுச் சேலையும் வாங்கிக் கொண்டு போனேன். வீட்டை நெருங்க நெருங்க, என் நெஞ்சுத் துடிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. உடனேயே ஐயம்பேட்டைக்குத் திரும்ப நான் விரும்பியபடியால், வண்டியைப் பூட்டு அவிழ்க்காமல் அப்படியே நிறுத்தி வைக்கச் சொல்லிவிட்டு புது வஸ்திரப் பொட்டணங்களுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். உள்ளே இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டு நடையில் சிறிது தயங்கி நின்றேன். “விடுகிறாயா மாட்டாயா?” “விடமாட்டேன்!” “என்னைத் தடுக்க உனக்கு என்ன அதிகாரம்?” “என்னைத் தாலி கட்டி நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா? அந்த அதிகாரந்தான்!” “நீ எனக்கு மனைவியும் அல்ல; நான் உனக்குப் புருஷனும் அல்ல, உன் மாமாவுக்காகச் செய்த காரியம். நான் இப்போது புறப்பட்டுத்தான் போவேன். ரெயிலுக்கு நேரமாகிவிட்டது. வழியை விடு! இப்படி அதைக்கொடு!” “விடமாட்டேன்; கொடுக்க மாட்டேன்!” “கொடுக்காவிட்டால் உன்னை இதோ இந்தக் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேன்!” “பேஷாகச் சுட்டுக் கொன்றுவிட்டுப் போங்கள்!” நமச்சிவாயம் துப்பாக்கியால் சுடுவதாகப் பயமுறுத்தியதை நான் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. நாடக மேடைகளில் உபயோகப்படுத்தும் விளையாட்டுத் துப்பாக்கி ஒன்று அவன் வைத்திருந்தான். அதில் குண்டு கிடையாது. சுட்டால் வெளிச்சமும் புகையும் தான் வரும்!… டப்! டுப்! டப்! டபார்!… “வீல்” என்று ஒரு கோரமான குரல் காதில் விழுந்தது. யாரோ தடால் என்று விழும் சத்தமும் கேட்டது. அலறிப் புடைத்துக் கொண்டு உள்ளே ஓடினேன். நீலமணி அலங்கோலமாகத் தரையில் விழுந்துகிடந்தாள். அவள் உடம்பு துடித்துக் கொண்டிருந்தது. அவள் முகத்தைப் பார்த்ததும் “ஐயையோ!” என்று நான் அலறினேன். உடனே அவள் அருகில் பாய்ந்து சென்று உட்கார்ந்தேன். “என்ன, மாமா? என்ன?” என்று கேட்டுக் கொண்டே நமச்சிவாயம் அருகில் உட்கார வந்தான். “அட பாவி! சண்டாளா! துரோகி! என்ன காரியம் செய்துவிட்டாய்?” என்று அவன் தோளைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கித் தூரத் தள்ளினேன். நமச்சிவாயம் ஆவேசம் வந்தவன் போல், “அடே நீ யாரடா என்னைப் பிடித்துத் தள்ளுவதற்கு?” என்று பலமாகக் கூச்சலிட்டுக் கொண்டு திரும்பி வந்தான். என்னுடைய கோபம் எல்லையைக் கடந்து விட்டது. உடனே குதித்து எழுந்து நமச்சிவாயத்தின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, “அடே பாதகா. அவளுடைய வாழ்க்கையைத்தான் பாழாக்கி விட்டாய்! அவள் உயிரோடிருப்பது கூட உனக்குப் பொறுக்கவில்லையா?” என்று சொல்லிக் கொண்டே அவன் கழுத்தைப் பிடித்து இறுக்கத் தொடங்கினேன். நான் செய்வது என்னவென்று எனக்கே தெரியவில்லை. நமச்சிவாயத்தின் விழிகள் பிதுங்கின. அவன் தொண்டையிலிருந்து உருத்தெரியாத பல மாதிரியான சத்தங்கள் எழுந்தன. கடவுள் என்னைக் கொலைகாரன் ஆக்காமல் தடுத்தாட் கொண்டார்! விசித்திரமான, எதிர்பாராத முறையில் குறுக்கிட்டார். அண்டகடாகங்கள் வெடித்துவிட்டன என்று சொல்லும்படியான ஒரு சத்தம் எழுந்தது. வீட்டின் முன் புறத்திலிருந்துதான், ஆயிரம் பேரிடிகள் சேர்ந்தாற்போல் நீடித்து இடித்தது போன்ற சத்தம். நூறு எம்ட்டன் குண்டுகள் ஒருமிக்க வெடித்தது போன்ற சத்தம். என் காதின் நரம்புகள் தெறித்து அறுபட்டுவிட்டதாகத் தோன்றியது. என் மண்டையே ஆயிரம் சுக்கலாகிவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. அந்த வெடிச் சத்தத்தின் அதிர்ச்சியினால் நமச்சிவாயத்தின் கழுத்திலிருந்து என் கைகள் வெளிவந்தன. இரண்டு பேரும் தூர தூரப் போய் விழுந்தோம். ஒரு நிமிஷ மூளைக் குழப்பத்துக்குப் பிறகு நேர்ந்தது என்ன என்பது என் அறிவுக்குப் புலனாகிவிட்டது. அந்த வீட்டின் முன் அறை மட்டும் என் சிநேகிதர் ஒருவர் வசத்தில் இருந்தது. அவர் பலசரக்கு வியாபாரி. தீபாவளி சமயத்தில் அவர் பட்டாசுக்கட்டுக் கடையும் நடத்துவார். பெரிய பெரிய கள்ளிப் பெட்டிகளில் வரும் பட்டாஸ் கட்டுகள், மத்தாப்புப் பெட்டிகளை அந்த அறையில் போட்டுப் பூட்டி வைத்திருப்பார். கொஞ்சங் கொஞ்சமாகத் தேவைப்படும்போது சில்லறை விற்பனைக் கடைக்கு எடுத்துப் போவார். அந்த அறைக்குள் எப்படியோ நெருப்புப் பொறி பறந்து விழுந்து, பட்டாசுப் பெட்டிகளில் தீப்பிடித்து விட்டது என்பதை அறிந்து கொண்டேன். மறுநிமிஷம் வீடு ஒரே புகை மயமாகி விட்டது. முன் அறையின் கூரை தீப்பற்றி எரிவதையும் கண்டேன். வீட்டைப்பற்றி நான் அப்போது கவலைப் படவில்லை. வெடி விபத்தினால் விளையக்கூடிய மற்ற தொல்லைகளைப் பற்றியும் சிந்திக்கவில்லை. உடனே குதித்து எழுந்து நீலமணியை எடுத்துத் தோளின் மீது போட்டுக் கொண்டு புகை நெருப்பின் வழியாக வாசற் பக்கம் ஓடினேன். தயாராய் நின்ற வண்டியில் அவளைப் போட்டுவிட்டு நானும் ஏறிக்கொண்டேன். “ஓட்டு! ஓட்டு! டாக்டர் வீட்டுக்கு ஓட்டு!” என்று கத்தினேன். பத்து நிமிஷத்துக்கெல்லாம் வண்டி டாக்டர் ராமசர்மாவின் வீட்டுவாசலில் போய் நின்றது. அந்த புண்ணியவான் - அவரைப் போல் தயாள குணமுள்ள டாக்டர் இப்போது யார் இருக்கிறார்கள்? - நீலமணியை வண்டிக்குள்ளேயே பார்த்துவிட்டு “நேரே ஆஸ்பத்திரிக்கு விடுங்கள்!” என்றார். அவரும் மோட்டாரில் இன்னொரு டாக்டரையும் நர்ஸையும் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார். தீபாவளி ராத்திரியாயிற்றே என்று பாராமல் இரவெல்லாம் கண் விழித்து நீலமணிக்குச் சிகிச்சை செய்தார்கள். நான் உணர்ச்சியும் உயிரும் அற்றவனாக ஆஸ்பத்திரி வாசலிலேயே காத்திருந்தேன். “பிழைத்தால், புனர் ஜன்மந்தான்!” என்றார் டாக்டர். ஆனாலும் பிழைக்க வைத்துவிட்டார். ஒரு வாரத்துக்கெல்லாம் உயிருக்கு அபாயமில்லை என்று தெரிவித்தார். ஆயினும் ஆஸ்பத்திரியிலிருந்து நீலமணியை ஐயம்பேட்டைக்கு அழைத்துப் போவதற்கு ஆறுமாதம் ஆயிற்று. கும்பகோணத்தில் என் வீட்டில் லைசென்ஸ் இல்லாமல் வெடிக்கும் சாமான்களை வைத்திருந்ததற்காக என்பேரில் ஒரு வழக்கு வந்தது. அதற்கு நான் பொறுப்பாளி இல்லையென்று வக்கீல் வைத்து வாதாடித் தப்பித்துக் கொண்டேன். ஆறுமாதத்திற்கு பிற்பாடு இன்னொரு தொல்லை நேர்ந்தது; திருப்பிக் கட்டப்பட்ட அதே வீட்டில் நாட்டு வெடி குண்டுகள் இரண்டு வெடித்தன. ‘கும்பகோணம் வெடி குண்டு வழக்கு’ என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வழக்கிலும் என்னைப் போலீஸார் சம்பந்தப்படுத்தினார்கள். நான் மகாத்மா காந்திக் கொள்கையில் பக்தியுள்ளவன் என்றும் அஹிம்சாவாதி என்றும் ஊரில் நூறு பிரமுகர்கள் சாட்சி கூறினார்கள். இதனால் அந்த வழக்கிலிருந்தும் தப்பிப் பிழைத்தேன். பிற்பாடு, ஒரு தப்புத் தண்டாவுக்கும் போகாமல் மற்றவர்கள் காரியத்தில் தலையிடாமல், ‘நான் உண்டு; என் தொழில் உண்டு’ என்று மானமாகக் காலட்சேபம் செய்து வருகிறேன். 6 கந்தப்பப் பிள்ளையின் கதை முடிந்தது. எழும்பூர் ரெயில் நிலையமும் வந்து சேர்ந்தது. நாங்கள் பிரிந்து போக நேர்ந்த போது, “கந்தப்பப் பிள்ளை! இப்போது நீலமணி எங்கே இருக்கிறாள்? என்ன செய்து கொண்டிருக்கிறாள்?” என்று கேட்டேன். “சில வருஷ காலம் பிரம்மஹத்தி பிடித்தவள் போல இருந்தாள். பிற்பாடு சங்கீதத்தில் கவனம் செலுத்தினாள். நல்ல திறமை பெற்றுவிட்டாள். ஆனால் வெளியில் வந்து பாடுவதில்லை. எப்படி வருவாள்? ரேடியோ என்பதாக ஒன்றைக் கண்டுபிடித்தார்களே, அந்தப் புண்ணியவான்கள் நன்றாயிருக்கவேணும்! சில சமயம் நல்ல சங்கீதத்துக்கும் ரேடியோவில் இடங் கொடுக்கிறார்கள். மூன்று மாதத்துக்கு ஒரு தடவை போய் ரேடியோவில் கச்சேரி செய்து விட்டு வருகிறாள். சங்கீதம் ஒன்று தான் இப்போது அவளுக்கு ஜீவாதாரமாயிருந்து வருகிறது!” என்றார் கந்தப்பப் பிள்ளை. “சங்கீதத்துடன் தங்களுடைய அன்பும் ஆதரவும் சேர்ந்திருக்கின்றன அல்லவா?” என்றேன் நான். “அடுத்தவாரத்தில் கூட நீலமணியின் ரேடியோக் கச்சேரி இருக்கிறது; முடிந்தால் கேளுங்கள்!” என்றார் கந்தப்பப் பிள்ளை. “அவசியம் கேட்கிறேன். ஆனால் நீலமணிக்கு என்ன தான் நேர்ந்தது? அந்த முக்கியமான விஷயத்தை நீங்கள் சொல்லவில்லையே?” என்று கேட்டேன் நான். “தெரியவில்லையா, ஐயா! வேறு யாருடனும் அவள் நாடகமேடையில் ஏறி நடிக்கக் கூடாது என்பதற்காக அந்தச் சண்டாளப் பாவி அக்கினித் திராவகத்தை அவள் முகத்தில் ஊற்றிக் குரூபியாகச் செய்து விட்டான்! அவன் எப்பேர்ப்பட்ட ராட்சஸனாயிருக்கவேண்டும்? இவ்வுலகில் மனித உருக்கொண்ட ராட்சஸர்களும் இருக்கிறார்கள்!” என்றார் கந்தப்ப பிள்ளை. நான் ஊகித்ததை தான் அவர் சொன்னார் என்றாலும் என் உள்ளத்தில் அப்போது சொல்ல முடியாத அருவருப்பும் பயங்கரமும் தோன்றின. “ஆனால் இந்தச் செய்தி ஊரில் ஒருவருக்கும் தெரியாது. பட்டாசுப் பெட்டிகள் வெடித்த விபத்தினால் நீலமணிக்கு இப்படி நேர்ந்தது என்றே நம்பினார்கள். டாக்டர் ராமசர்மாவுக்கு மட்டும் தெரியும். என்னுடைய வேண்டுகோளின் பேரில் அவர் யாரிடமும் சொல்லவில்லை. இன்றைக்குத்தான் முதன் முதலாகத் தங்களிடம் சொன்னேன்!” என்றார் கந்தப்பப் பிள்ளை. “அந்த ராட்சஸன் - நமச்சிவாயம் பிற்பாடு என்ன ஆனான்?” என்று கேட்டேன். "யார் கண்டார்கள்? நான் திரும்பிப் போய் இடிந்து விழுந்து எரிந்து கொண்டிருந்த வீட்டில் தேடிப் பார்த்த போது அவனைக் காணவில்லை. அவன் என்ன ஆனான் என்று விசாரிக்கவும் இல்லை. பல மாதம் கழித்து நீலமணி என்னிடம் அவனைப் பற்றிக் கேட்டதற்கு ‘அவன் க்ஷயரோகத்தினால் செத்து ஒழிந்துவிட்டான்’ என்று சொல்லி விட்டேன். “ஒரு வேளை உண்மையிலேயே செத்துத்தான் போய் விட்டானோ, என்னமோ?” “அவ்வளவு பொல்லாதவர்களுக்கு இந்த உலகில் சாவு வருகிறதில்லை. ஐயா! எங்கேயோ உயிரோடு தான் இருக்கிறானாம். வேறு நாடகக் கம்பெனியில் அன்றாடச் சம்பளத்துக்கு நடிக்கப்போய் வருகிறானாம், கதாநாயகனாத் தோன்றி ஆர்ப்பாட்டம் செய்த காலம் போய்விட்டது. இப்போது திரை தூக்கக் கூப்பிட்டாலும் போகிறானாம். பெயரைக் கூட மாற்றி வைத்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி. அவ்வளவு கொடூரமான காரியம் செய்தவனுக்குத் தன் பெயரைச் சொல்லவே வெட்கமாகத் தானே இருக்கும்?” என்றார் கந்தப்பப் பிள்ளை. கல்கத்தாவில் தமிழர்கள் சேர்ந்து நடத்தும் விழாவுக்காகக் கந்தப்பப் பிள்ளை அன்றிரவு கல்கத்தா மெயிலில் போகிறார் என்று தெரிந்து கொண்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். நாலு நாளைக்கெல்லாம் திரும்பவும் கந்தப்பப் பிள்ளையைப் பார்க்க நேரிடுமென்று நான் எதிர் பார்க்கவில்லை. திடுதிப்பென்று அவர் என வீடு தேடி வந்து சேர்ந்தார். “இது என்ன? கல்கத்தாவில் இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்?” என்று கேட்டேன். “வழியில் விஜயவாடா அமளியில் சிக்கிக் கொண்டேன். ரெயில் மேலே போகவில்லை. திரும்பி வந்து விட்டேன்” என்றார். “அடிதடி காயம் ஏதாவது உண்டோ ?” “எனக்கு ஒன்றுமில்லை. அந்தத் தடிப்பயல் நமச்சிவாயத்துக்கு நல்ல அடி. முன்னொரு நாள் அவன் நீலமணிக்குச் செய்த கொடுமைக்கு விஜயவாடா ஆந்திரர்கள் பழி வாங்கி விட்டார்கள். செம்மையாக வெளுத்துவிட்டார்கள்!” என்று எக்களிப்புடன் சொல்லிப் பிறகு விவரங்களையும் கூறினார். கந்தப்பப் பிள்ளையின் நாதஸ்வரக் கோஷ்டி பிரயாணம் செய்த அதே ரெயிலில், கல்கத்தாவில் நடந்த அதே விழாவுக்காகத் தமிழ் நாட்டிலிருந்து ஒரு நாடகக் கோஷ்டியாரும் சென்றார்களாம். பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தையடுத்து ஆந்திர நாட்டில் ரெயில் நிறுத்தும் படலமும் கலவரப் படலமும் நடந்தனவல்லவா? இவர்கள் சென்ற ரெயில் விஜயவாடா சேர்ந்த போது, அங்கே ரெயில்வே நிலையத்தில் அமளி துமளி சிகரத்தை அடைந்திருந்ததாம். ரெயிலில் ஒவ்வொரு வண்டிக்குள்ளும் ஆந்திர சகோதரர்கள் ஏறி, “ஆந்திர ராஜ்யமு காவல!” என்று கத்தினார்கள். யாராவது தமிழர்கள் வண்டியிலிருப்பதைப் பார்த்தால், “அரவவாடு சாவல” என்றும் சேர்த்துக் கொண்டார்கள். நமச்சிவாயம் முன்னமே முரடன் என்பது தெரிந்த விஷயம். அவனுடைய முரட்டுக் குணம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் மாறவில்லை. அவனுடைய வண்டியில் ஏறிய ஆந்திரர்கள், “ஆந்திர ராஜ்யமு காவல!” என்று கத்தியபோது, “என்னிடம் ஆந்திர ராஜ்யமு லேது. சோதரலாரா, லேதவே லேது! இல்லவே இல்லை! வேண்டுமானால் என் பெட்டியை நீவே சோதித்துப் பார்த்துக்கவல!” என்று நமச்சிவாயம் தெலுங்கும் தமிழும் கலந்து கேலியாகச் சொன்னானாம். அவன் தமிழன், கேலி செய்கிறான் என்று அறிந்து ஆந்திரர்கள், “அரவவாடு சாவல!” என்று கத்தினார்கள். உடனே நமச்சிவாயத்துக்கும் கோபம் வந்தது. “உனக்கு ஆந்திர ராஜ்யமு காவல என்றால், அதற்கு அரவவாடு எதற்காகச் சாக வேண்டும்? நீ சாவல! உங்கப்பன் சாவல! உங்க பாட்டன், பூட்டன் சாவல!” என்று இரைந்தானாம். உடனே அவர்கள் வண்டியில் புகுந்து அவனை வெளியில் பிளாட் பாரத்தில் இழுத்துப் போட்டு அடி அடி என்று அடித்துவிட்டார்களாம். முகம் உடம்பு எல்லாம் இரத்த விளாறாகிவிட்டதாம். நாடகக் கோஷ்டியைச் சேர்ந்த மற்றவர்கள் விஜயவாடாவிலிருந்து மறுநாள் புறப்பட்ட வேறு ரெயிலில் ஏறிப் போய் விட்டார்கள். தவுல் கந்தப்பப் பிள்ளையோடு போன நாதஸ்வர வித்துவான் மிரண்டு போய் ஊருக்குத் திரும்பி விட்டார். கந்தப்பப் பிள்ளையும், படுகாயம் பட்டுக் கிடந்த நமச்சிவாயத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார். “சில பேருக்கு உயிர் ரொம்பக் கெட்டி, ஐயா! நமச்சிவாயம் டி.பி. வியாதியில் சாகாமல் பிழைத்தான். இப்போது ஆந்திரா வெறியிலும் சாகாமல் பிழைத்து விட்டான். ஆஸ்பத்திரியிலேதான் இருக்கிறான். அவனுடைய குணம் மட்டும் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை. கேளுங்கள், இந்த வேடிக்கையை! - நேற்றிரவு ரேடியோவில் நீலமணியின் கச்சேரி கேட்டீர்களா?” என்றார் கந்தப்ப பிள்ளை. “ஆமாம்; கேட்டேன்! மிக்க நன்றாயிருந்தது! உயர்ந்த சங்கீதம்!” என்றேன். “கேட்டதற்கு ஏதேனும் அடையாளம் சொல்லுங்கள், பார்க்கலாம்!” என்றார் கந்தப்பன். “கடைசியில் ராகமாலிகையாக அந்தப் பழைய பாடலையே பாடினாள். மத்தியமாவதியில் முடித்தாள். ‘நமச்சிவாயம்’ என்ற பெயரைச் சொல்ல எப்படித்தான் அவளுக்கு மனம் வந்ததோ என்று நான் ஆச்சரியப்பட்டேன்” என்றேன். “சில பேருடைய தலையெழுத்து அது! இந்தப் போக்கிரி அதைக்கேட்டு என்ன சொன்னான் தெரியுமா? ஆமாம்; ஆஸ்பத்திரியில் ரேடியோ இருக்கிறது. நீலமணியின் கச்சேரியின் போது திறந்து வைத்திருந்தார்கள். ராகமாலிகை முடிந்ததும் நமச்சிவாயம் என்னிடம் ‘மாமா! அவளை மன்னித்துவிட்டேன் என்று சொல்லுங்கள்!’ என்றான். அது போதாது என்று, ‘மாமா! எப்படியாவது அவளை நான் ஒரு தடவை பார்க்க வேண்டும், மாமா! நேரிலேயே அவளை நான் மன்னித்து விட்டதாகச் சொல்லவேண்டும்’ என்றான். எப்படியிருக்கிறது கதை? இவன் அவளை மன்னிப்பதாம்! எப்படிப்பட்ட கிராதக உள்ளம் படைத்தவனாயிருக்க வேண்டும்? உலகில் எந்தக் கெட்ட குணத்துக்கும் மன்னிப்பு உண்டு, ஐயா! அகங்காரம் என்கிற பேய்க் குணத்துக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது!” என்றார் கந்தப்பப் பிள்ளை. “உண்மைதான்; நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டேன். “நான் எதற்காகக் குறுக்கே நிற்பது என்று யோசிக்கிறேன். நீலமணியிடம் போய்ச் சொல்லி விடுகிறேன்! அப்புறம் அவள் இஷ்டம்! இன்னும் அவள் சிறு குழந்தையா என்ன? யோசித்து விருப்பம் போல் முடிவு செய்யட்டும்! மேலும், இந்த துஷ்டன் பிழைப்பதே துர்லபம் என்கிறார்கள். சாகப் போகிறவனிடம் நமக்கு என்னத்திற்காக வன்மம்?” என்றார் கந்தப்பப் பிள்ளை. “அதுதான் சரி! உங்கள் முடிவை மெச்சுகிறேன். நீலமணியிடம் பேசும்போது, அன்றைக்கு என்ன நடந்தது என்பதை மறுபடியும் விவரமாய்க் கேட்டு விடுங்கள்!” என்றேன். “என்றைக்கு நடந்ததைக் குறிப்பிடுகிறீர்கள்?” “தீபாவளிக்கு முதல் நாள், கும்பகோணத்தில் உள்ள உங்கள் வீட்டில் வெடி வெடித்த அன்று, நீங்கள் நீலமணியை வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு டாக்டரிடம் ஓடிய அன்றுதான்.” சில தினங்களுக்கு முன்னால் ஸ்ரீ கந்தப்பப்பிள்ளையைக் கடைசியாகச் சந்தித்தேன். அவர் சிறிது முக மலர்ச்சியுடனே காணப்பட்டார். “ஐயா சொல்லியனுப்பியது மிகவும் நல்லதாய்ப் போயிற்று!” என்று சந்தோஷமாகக் கூறினார். “எதைப் பற்றிச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டேன். "நீலமணியிடம் நன்றாய் விசாரிக்க வேண்டுமென்று சொன்னீர்களே, அதைப்பற்றித்தான்! விசாரித்துத் தெரிந்துகொண்டது நான் முன்னம் எண்ணியதற்குக் கொஞ்சம் மாறாக இருந்தது. கொஞ்சம் என்ன? ரொம்பவும் மாறுதலாக இருந்தது. அன்றைக்கு நமச்சிவாயம் நீலமணியைவிட்டு விட்டு எங்கேயாவது கண்காணாத தேசத்துக்கு ஓடிப் போய்விடப் போகிறேன் என்று வற்புறுத்திச் சொன்னானாம். சொன்னதோடல்லாமல், வீட்டு வேலைக்காரப் பையனை வண்டி கொண்டுவரச் சொல்லி அதில் பெட்டி - படுக்கை முதலிய சாமான்களையும் ஏற்றி அனுப்பி விட்டானாம். அவனுடைய கைப்பெட்டியை மட்டும் நீலமணி பிடுங்கி வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்றும், போகக் கூடாது என்றும் பிடிவாதம் பிடித்தாளாம். அவன் மீறிப் போவதாயிருந்தால், அவன் கண் முன்னாலேயே உயிரை விட்டுவிடுவதாகக் கூறினாளாம். அந்த முட்டாள் எதற்காக அக்கினித் திராவகம் வாங்கி வைத்திருந்தானோ, கடவுளுக்குத்தான் தெரியும். தன் உயிரைத் தான் வாங்கிக் கொள்வதற்கோ, அல்லது நீலமணியைச் சும்மா பயமுறுத்துவதற்கோ தெரியாது. அதை நீலமணி கையில் எடுத்துக் கொண்டு நமச்சிவாயம் ஓர் அடி எடுத்து வைத்தாலும் அக்கினி திராவகத்தைச் சாப்பிட்டு உயிரை விட்டு விடுவேன் என்று கூறினாளாம். நமச்சிவாயம் அதை அவள் கையிலிருந்து வாங்குவதற்காக என்னவெல்லாமோ சாமர்த்தியமெல்லாம் செய்து பார்த்தான். விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்து அவளைச் சுட்டுவிடுவதாகப் பயமுறுத்தினான். “நல்லதாய்ப் போயிற்று; உங்கள் கையாலேயே கொன்று விடுங்கள்!” என்றாள் அவள். ‘உன்னைக் கொன்று என்ன பயன்? உன்னைக் கலியாணம் செய்து கொண்ட என்னைச் சுட்டுக் கொள்கிறேன்’ என்று சொல்லித் தன் பேரிலேயே துப்பாக்கியைத் திருப்பி சுட்டுக் கொண்டான். அந்தப் பேதைப் பெண் அதை உண்மை என்று நம்பி அக்கினித் திராவகப் புட்டியை வாயண்டை கொண்டுபோய் விட்டாள். நமச்சிவாயம் சட்டென்று அவள் கையிலிருந்த திராவகப் புட்டியைத் தட்டிவிட்டான். புட்டி தூர விழுந்தது என்றாலும் அதிலிருந்து சில துளிகள் அவள் முகத்தில் சிந்தி விட்டன. அவள் நினைவிழந்து விழுந்து விட்டாள். பிறகு நடந்தது ஒன்றும் அவளுக்குத் தெரியாது. இவையுங் கூட வெகு நாளைக்குப் பிறகு தான் ஒவ்வொன்றாக அவள் நினைவுக்கு வந்தன. நமச்சிவாயம் செத்து விட்டான் என்று சொன்னதை அவள் நம்பி விட்டாள். பட்டாசுக்கட்டுப் பெட்டிகள் வெடித்து வீடு எரிந்ததில் அவன் இறந்ததாக நான் சொன்னது கொஞ்சம் அவளுக்கு ஆறுதலாய் இருந்தது. இல்லாவிடில் அவனை இவளே கொன்றுவிட்டதாக எண்ணி மறுபடியும் பிராணத்தியாகம் செய்ய முயன்றிருப்பாள். இப்போது நமச்சிவாயம் உயிரோடிருப்பதைப் பற்றி நான் சொன்னதும் உடனே புறப்பட்டு என்னோடு வந்து விட்டாள். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இருவரையும் சேர்த்து வைத்துவிட்டு வந்தேன். ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?’ என்று கம்பர் சொன்ன பிரகாரம் அவர்கள் இருவரும் ஆனந்தக் கடலில் மூழ்கித் திளைத்திருப்பதைப் பார்த்துவிட்டு வந்தேன்!" என்று சொன்னார் கந்தப்பப் பிள்ளை. “அப்படியானால், நமச்சிவாயம் இந்தக் கண்டத்துக்கும் பிழைத்துக் கொள்வான் என்று சொல்லுங்கள்!” என்றேன். “சிலருடைய உயிர்தான் ரொம்பக் கெட்டி என்று சொன்னேனே, ஐயா! நமச்சிவாயமும் நீலமணியும் இன்னும் பல்லாண்டு ஆனந்த வாழ்க்கை நடத்தப் போகிறார்கள்.” “ததாஸ்து! ரொம்ப ரொம்பச் சந்தோஷம்! கந்தப்பப் பிள்ளை! இன்னும் ஒரு விஷயம் தாங்கள் சொல்லாமல் பாக்கி வைத்திருக்கிறீர்கள். அந்த வெடிகுண்டு வழக்கைப் பற்றிச் சொல்லுகிறேன். அதன் உண்மை என்ன?” “அப்படி இப்படி என்று அடி மடியில் கையைப் போடப் பார்க்கிறீர்களே?” என்றார் கந்தப்பப் பிள்ளை. “சொல்லலாம் என்றால், சொல்லுங்கள். இல்லாவிட்டால் ஒன்றும் சொல்ல வேண்டாம்!” என்றேன். “இனிமேல் சொல்வதற்கென்ன? தாராளமாகச் சொல்லலாம். நான் வெடிகுண்டு தயாரிப்பதில் ஈடுபட்டது உண்மைதான். வெள்ளைக்காரன் மேல் போடுவதற்காகவும் அல்ல; பிரிட்டிஷ் கவர்ன்மெண்டைத் துரத்துவதற்காகவும் அல்ல. அரசியலில் நான் காந்தி மகானுடைய கட்சியைச் சேர்ந்தவன். என் மகள் மீது அக்கினித் திராவகத்தை ஊற்றிய பஞ்சமாபாதகன் மேல் வெடிகுண்டைப் போட்டு அவனைக் கொன்று விடுவதென்று முடிவு கட்டிக் கொண்டேன். இதற்காகவே, வேறு அரசியல் நோக்கத்துடன் வெடிகுண்டு தயாரிக்க முன் வந்த பிள்ளைகளுக்கு இடவசதி முதலியவை தந்து உதவினேன். தெய்வாதீனத்தைப் பாருங்கள்! தயாரான வெடிகுண்டுகள் தாமே வெடித்துக் கொண்டு இரகசியத்தை வெளிப்படுத்தி விட்டன. என்னையும் பெரும்பாவம் செய்யாமல் காப்பாற்றின. நான் உத்தேசித்திருந்தபடி செய்திருந்து, பிறகு நீலமணியிடம் உண்மையை அறிந்து கொண்டிருந்தால் என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? கடவுள் தடுத்தாட் கொண்டார்! முருகனின் கருணையே கருணை!” என்று கூறிய கந்தப்பப் பிள்ளை, கண்களைப் பாதி மூடிய வண்ணம் மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டு பின் வரும் பாடலைப் பாடினார்: வருவாய் மயில்மீ தினிலே! வடிவே லுடனே வருவாய்! தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் முருகா! முருகா! முருகா! பரிசல் துறை காவேரி நதியின் பரிசல் துறையில் அரச மரம் ஒன்று செழிப்பாக வளர்ந்து, கப்பும் கிளையுமாகப் படர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. இளங்காற்று வீசிய போது அதனுடைய இலைகள் ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்பட்ட ‘சலசல’ சப்தம் மிகவும் மனோகரமாயிருந்தது. அரச மரத்துடன் ஒரு வேப்ப மரமும் அண்டி வளர்ந்து இருந்தது. இவற்றின் அடியில் இருந்த மேடையில் ஒரு கல்லுப் பிள்ளையார் எழுந்தருளியிருந்தார். பிள்ளையார் சதா சர்வதா இருபத்திநாலு மணி நேரமும், அவருக்கெதிரே கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு காப்பி ஹோட்டலைப் பார்த்த வண்ணமாய் இருந்தார். ஆனால் அவருக்கு ஒரு அரை கப் காப்பி எப்போதாவது யாராவது கொடுத்தது உண்டோ என்றால், கிடையாது. சில சமயங்களில் காப்பிக் கொட்டை வறுக்கும் போது வரும் வாசனையை அநுபவிப்பதுடன் அவர் திருப்தி அடைய வேண்டியிருந்தது. வேலம் பாளையம் ஒரு சின்னஞ் சிறிய கிராமம். அதற்குச் சமீபத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் பதின்மூன்று மைல் தூரத்திலிருப்பது. கிராம வாசிகள் ரொம்பவும் சாமான்யமான ஜனங்கள். குடியானவர்களும், கைக்கோளர்களும், ஹரிஜனங்களும்தான் அங்கே வசித்தார்கள். காவேரிக் கரையில் இருந்தும் ஜலக் கஷ்டம். அவ்விடம், காவேரி ஆற்றின் தண்ணீர் சாகுபடிக்குப் பயன் படுவதில்லை. பூமி அவ்வளவு மேட்டுப் பாங்காயிருந்தது. சாதாரணமாய், கரையிலிருந்து வெகு ஆழத்தில் ஜலம் போய்க் கொண்டிருக்கும். பெரும் பிரவாகம் வருங்காலத்தில் அரச மரத்தின் அடிவேரைத் தொட்டுக் கொண்டு போகும். இப்படிப்பட்ட பட்டிக்காட்டிலே கொண்டு வந்து காப்பி ஹோட்டல் வைத்திருந்தார் ஒரு பாலக்காட்டு ஐயர். அவர் வட துருவங்களுக்குப் போய்ப் பார்த்து, அங்கே கூட ஹோட்டல் அதிகமாகி வியாபாரம் கம்மியாய்ப் போனதைத் தெரிந்து கொண்டுதான் இந்தப் பட்டிக்காட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். பரிசல் துறையிலிருந்து கிராமம் கொஞ்ச தூரத்திலிருந்தது. பரிசல் துறைக்கு அருகில் இரண்டே கூரைக் குடிசைகள். அவற்றில் ஒன்றிலேதான் ஹோட்டல். அதன் வாசலில் இங்கிலீஷிலே “டிரிப்ளிகேன் லாட்ஜ்” என்றும், தமிழிலே “பிராமணாள் காப்பி - டீ கிளப்” என்றும் எழுதிய போர்டு ஒன்று தொங்கிற்று. அன்று சந்தை நாள் ஆகையால் ஹோட்டலில் வியாபாரம் அதிகம். உள்ளே ஐந்தாறு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் இரண்டொருவர் தையல் இலையில் வைத்திருந்த இட்டிலியை வெகு சிரமத்துடன் விண்டு விண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். “ஐயரே! எங்கே, ஒரு கப் காப்பி ’அர்ஜெண்’டாக் கொண்டாரும் பார்க்கலாம்” என்றார் அவர்களில் ஒருவர். “ஏஞ்சாமி! நீங்க காப்பியிலே தண்ணீ ஊத்தற வழக்கமா, தண்ணியிலே காப்பி ஊத்தற வழக்கமா” என்று கேட்டார் ஹாஸ்யப் பிரியர் ஒருவர். “ஐயர் பாடு இனிமேல் கொண்டாட்டந்தான். காவேரித் தண்ணியெல்லாம் எடுத்துக்கிட்டு வந்து காப்பி, டீன்னு சொல்லி வித்துப்பிடுவாரு. காங்கிரஸ் கவர்மெண்டிலேதான் கள்ளுக்கடையை மூடிடப் போறாங்களாமே?” என்றார் மூன்றாவது பேர் வழி. “ஆமாம், போங்க! இந்த மாதிரிதான் எத்தனையோ நாளாய்ப் பேசிக்கிட்டிருக்கிறாங்கோ!” என்றார் ஒரு சந்தேகப் பிராணி. “இந்தத் தடவை அப்படியெல்லாம் இல்லை; நிச்சயமாய் சாத்திவிடப் போகிறார்கள். இப்போது காங்கிரஸ்தானே கவர்மெண்டே நடத்தறது? உத்தரவுகூடப் போட்டுட்டாங்களாம். அக்டோ பர் மாதம் முதல் தேதியிலிருந்து ஒரு சொட்டுக் கள்ளு, சாராயம் இந்த ஜில்லாவிலேயே பேசப்படாது.” “கள்ளுக்கடை மூடினால் ஐயருக்கு ரொம்பக் கொண்டாட்டம் என்கிறீங்களே? நிஜத்திலே அவருக்குத்தான் ஜாஸ்தி திண்டாட்டம்” என்றார் ஒரு வம்புக்கார மனுஷர். “அது என்னமோ? கொஞ்சம் வியாக்யானம் பண்ணுங்க!” என்றார் ஒரு கல்விமான். “ஆமாம்; பொழுது சாய்கிற வரைக்கும் ஐயர் காப்பிக் கடையிலே இருக்கிறாரு. பொழுது சாய்ந்ததும் கடையை மூடிக்கிட்டு எங்கே போறாரு கேளுங்க. என் வாயாலே நான் சொல்லலை. அவரையே கேட்டுக்கங்க…” அப்போது உள்ளேயிருந்து, “இந்தா கவுண்டரே! இப்படியெல்லாம் பேசினால் இங்கே ஒண்ணும் கிடைக்காது. காப்பி வாயிலே மண்ணைப் போட்டுடுவேன்” என்று கோபமான குரல் கேட்டது. “சாமி! சாமி! கோவிச்சுக்காதிங்க. இனிமே நான் அப்படி உங்க கிட்டக்கச் சொல்லலை, சாமி!” என்றார் கவுண்டர். அப்போது பரிசல் துறையிலிருந்து, “ஏ ஓடக்காரத் தம்பி, எத்தனை நேரம் நாங்க காத்துக்கிட்டிருக்கிறது?” என்று ஒரு கூக்குரல் கேட்டது. மேற்சொன்ன ரஸமான சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் மூலையில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன், “ஐயரே! இட்லி கிட்லி ஏதாவது கொடுக்கப் போகிறாயா, நான் போகட்டுமா?” என்றான். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவன், “அதோ பார்த்தாயா, சுப்பண்ணா! பத்ரகாளி போறாள்!” என்றான் பக்கத்திலிருந்தவனிடம். ஓடக்காரத் தம்பி உடனே எட்டிப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி தலையில் கத்திரிக்காய்க் கூடையுடன் பரிசல் துறைக்குப் போய்க் கொண்டிருந்தாள். அவ்விடம் அரசமரத்துப் பிள்ளையார் இருந்த இடத்துக்குக் கீழே சுமார் 30, 40 அடி ஆழம் இறங்கித்தான் தண்ணீர்த் துறைக்குப் போக வேண்டும். ஒரு கையால் தலைக் கூடையைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கை ஊசலாட, இடுப்பு நெளிந்து நெளிந்து அசைய அந்த இளம்பெண், ஓடத்துறைக்கு இறங்கிக் கொண்டிருந்த காட்சியை அசப்பிலே பார்த்தால் உயர்தர சித்திரக்காரன் எழுதிய ஒரு சித்திரக் காட்சியைப் போல் தோன்றியது. ஓடக்காரத் தம்பி அவளைப் பார்த்த உடன், “சரி, சரி, இந்த ஐயர் இட்லி கொடுப்பார் என்று காத்திருந்தால், அடுத்த வெள்ளிக்கிழமைச் சந்தைக்குத் தான் போகலாம்” என்று சொல்லிக் கொண்டு எழுந்து விர்ரென்று வெளியே சென்றான். அவன் போனவுடன் ஹோட்டலில் பின்வரும் சம்பாஷணை நடந்தது:- “என்ன, பழனிச்சாமி திடுதிப்பென்று கிளம்பி ஓடிட்டான்.” “காரணமாகத்தான். அந்தப் பொண்ணைக் கட்டிக்க வேணுமென்று இவனுக்கு ரொம்ப ஆசை. அவள் அப்பன் காளிக் கவுண்டன் ‘கூடாது’ என்கிறான். ‘கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனுக்கு இரண்டாந் தாரமாகத்தான் கட்டிக் கொடுப்பேன்’ என்கிறான். காளிக் கவுண்டன் பெரிய மொடாக்குடியன். தெரியாதா உனக்கு?” “அதேன் பத்திரகாளி என்று அவளுக்கு பேரு? அவள் அப்பன் வைச்சது தானா?” "அவள் நிஜப் பேரு குமரி நங்கை, ரொம்ப முரட்டுப் பெண். அப்பனுக்கு அடங்கமாட்டாள். ஊரிலே ஒருத்தருக்குமே பயப்பட மாட்டாள். அதனால்தான் ‘காளிமவள் பத்திரகாளி’ என்று அவளுக்குப் பெயர் வந்தது. “அவளைக் கட்டிக்க வேணுமென்று இந்தப் பையனுக்கு ஆசை உண்டாச்சு பாரேன்! என்ன அதிசயத்தைச் சொல்ல?” குமரி நங்கை பரிசலின் சமீபம் வந்ததும் அதில் ஏற்கனவே ஏறியிருந்தவர்களைப் பார்த்து, “ஏன், ஓடக்காரர் இல்லையா, என்ன” என்றாள். “அதோ பார் பின்னாலே!” என்றான் பரிசலில் இருந்தவர்களில் ஒருவன். குமரி நங்கை திரும்பிப் பார்த்தாள். பழனிச்சாமி அவளுக்கு வெகு சமீபமாய் வந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் காரணமில்லாமல் திடுக்கிட்டாள். பரிசலில் இருந்தவர்களில் சிலர் சிரித்தார்கள். ஆனால், பழனிச்சாமி இதையெல்லாம் சற்றும் கவனிக்காதவன் போல் விரைவாகச் சென்று பரிசலில் ஏறினான். குமரி நங்கை ஏறினாளோ இல்லையோ, பரிசல் இரண்டு தடவை நின்ற இடத்திலேயே வட்டமிட்டு விட்டு, விர்ரென்று போகத் தொடங்கியது. படகிலிருந்தவர்கள் ஏதேதோ ஊர்வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பழனிச்சாமியாவது குமரி நங்கையாவது வாயைத் திறக்கவில்லை. அக்கரை நெருங்கியதும், பழனிச்சாமி பரிசலைச் சிறிது நிறுத்தி, “துட்டு எடுங்க!” என்றான். எல்லாரும் இரண்டு அணா கொடுத்தார்கள். ஒருவன் மட்டும் ஒரு அணா பத்து தம்பிடி கொடுத்துவிட்டு, “இரண்டு தம்பிடி குறைகிறது தம்பி! வரும்பொழுது தருகிறேன்” என்றான். குமரி நங்கையும் கையில் இரண்டணாவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்; அதைப் பழனிச்சாமி கவனிக்கவுமில்லை; வாங்கிக் கொள்ளவுமில்லை. பரிசலைக் கரையிலே கொண்டு சேர்த்து விட்டுக் கீழே குதித்தான். எல்லாரும் இறங்கினார்கள். குமரி நங்கை கடைசியாக இறங்கி, இரண்டணாவை நீட்டினாள். பழனிச்சாமி அப்போதும் அதைப் பாராதவன் போல் இருக்கவே, அவள் பரிசலின் விளிம்பில் அதை வைத்து விட்டுப் போய் விட்டாள். சூரியன் மேற்குத் திக்கில் வெகு தூரத்திலிருந்த மலைத் தொடருக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தான். அங்கே ஆகாயத்தில் சிதறிக் கிடந்த மேகங்கள் தங்க நிறம் கொண்டு பிரகாசித்தன. பரிசல் துறையின் அந்தண்டைக் கரையில் ஒரு சில்லறை மளிகைக்கடை இருந்தது. உப்பு, புளி, சாமான்கள் அதில் வைத்திருந்தன. வாழைப்பழக் குலைகளும், கயிற்றில் கோத்த முறுக்குகளும் தொங்கின. பழனிச்சாமி அந்தக் கடை வாசலில் உட்கார்ந்து கொண்டு கடைக்காரச் செட்டியாருடன் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய கவனம் பேச்சில் இல்லையென்று நன்றாய்த் தெரிந்தது. ஏனெனில் அடிக்கடி அவன் சாலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். யாருடைய வரவையோ எதிர் பார்த்துத் தவித்துக் கொண்டிருப்பவன் போல் காணப்பட்டான். கடைசியாக, தூரத்தில் சாலையின் வளைவு திரும்புகிற இடத்தில் குமரி நங்கை வருவதை அவன் கண்டான். உடனே, துள்ளிக் குதித்து எழுந்து, “செட்டியாரே, போய் வாரேன்,” என்று சொல்லி விட்டு நதிக்கரைக்குப் போனான். அங்கே அப்போது வேறு யாரும் இல்லை. பரிசல் காலியாக இருந்தது. சந்தைக்கு வந்தவர்கள் எல்லாரும் திரும்பிப்போய் விட்டார்கள். குமரி நங்கை தண்ணீர்த் துறைக்குக் கிட்டத்தட்ட வந்த போது, பழனி பரிசலைக் கரையிலிருந்த அவிழ்த்துவிட்டு அதில் ஏறிக் கொண்டான். குமரி தயங்கி நின்றாள். வேறு யாராவது வருகிறார்களா வென்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு ஒருவரும் காணப்படவில்லை. “நீ வரவில்லையா? நான் போகட்டுமா? இனிமேல் திரும்பி வரமாட்டேன். இதுதான் கடைசித் தடவை” என்றான். குமரி இன்னமும் தயங்கினாள். மறுபடியும் சாலைப் பக்கம் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள். “இதோ பார் சந்தைக்கு வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். நீ இப்போது உடனே வராவிட்டால், இராத்திரி இங்கேயே தங்க வேண்டியதுதான்” என்றான். குமரி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தலை குனிந்தபடி சென்று பரிசலில் ஏறினாள். பரிசல் போக ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் வரை வேகமாய்ப் போயிற்று. பிறகு, ரொம்பத் தாமதமாய்ப் போகத் தொடங்கியது. குமரி நங்கை மேற்குத் திக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சூரியன் மலைவாயில் இறங்கி விட்டது. அவ்விடத்தில் சற்று முன் காணப்பட்ட மஞ்சள் நிறம் விரைவாக மங்கி வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இருட்டியே போய்விடும். அதற்குள் படகு கரைசேராதா என்ன? பழனிச்சாமி அவளுடைய முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தான். அவள் முகத்தில் அவன் என்னத்தைத் தான் கண்டானோ, தெரியாது. தினம் பார்க்கும் முகம் தானே? அப்படிப் பார்ப்பதற்கு அதில் என்ன தான் இருக்கும்? சற்று நேரத்துக்கெல்லாம் இருட்டிப் போய்விடும். அப்புறம் அந்த முகத்தை நன்றாய்ப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தினால் தானோ என்னமோ, கண்ணை எடுக்காமல் பார்த்த வண்ணம் இருந்தான். குமரி நங்கைக்கு உள்ளுணர்வினாலேயே இது தெரிந்திருக்க வேண்டும். அவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். “ஏன் என்னை இப்படிப் பார்க்கிறாய்?” என்றாள். “நீ ஏன் என்னைப் பார்க்கிறாய்?” “நான் எங்கே பார்த்தேன்?” “நீ பார்க்காவிட்டால் நான் உன்னைப் பார்த்தது எப்படித் தெரிந்தது?” குமரி சற்றுப் பேசாமல் இருந்தாள். பிறகு, “பரிசல் ஏன் இவ்வளவு தாமதமாய்ப் போகிறது?” என்று கேட்டாள். “காரணமாய்த்தான். இரண்டு வருஷமாய் நான் உன்னை ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு நீ பதில் சொல்லவில்லை. இன்றைக்கு பதில் சொன்னால் தான் பரிசலை அக்கரைக்குக் கொண்டு போவேன்” என்றான். குமரி பேசவில்லை. பழனி மறுபடியும், “இதோ பார் குமரி! உன் முகத்தை எதற்காகப் பார்க்கிறேன் என்று கேட்டாயல்லவா? சொல்லுகிறேன். இன்று காலையில் நான் உன் முகத்தில் விழித்தேன். முதல் பரிசலில் நீ வந்தாய். அதனால் இன்றைக்கு எனக்கு நல்ல அதிர்ஷ்டம். ஏழு ரூபாய் வசூலாயிற்ரு. இன்னொரு பரிசல் வாங்குவதற்குப் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றோடு ரூபாய் ஐம்பது சேர்ந்து விட்டது” என்று சொல்லி, பரிசலின் அடியில் கிடந்த பணப்பையை எடுத்து ஒரு குலுக்குக் குலுக்கி விட்டு மறுபடி கீழே வைத்தான். “நீ மட்டும் என்னைக் கல்யாணம் செய்து கொண்டால், தினமும் உன் முகத்தில் விழிக்கலாமே, தினமும் எனக்கு அதிர்ஷ்டம் வந்து கொண்டிருக்குமே என்று பார்க்கிறேன்” என்றான். “இப்படி ஏதாவது சொல்லுவாய் என்று தான் உன் பரிசலில் தனியாய் ஏறப்படாது என்று பார்த்தேன்…” “பின் ஏன் இவ்வளவு நேரங்கழித்து வந்தாய்?” “சீக்கிரம் போனால், கத்திரிக்காய் விற்ற பணம் அவ்வளவையும் அப்பன் கள்ளுக் கடைக்குக் கொண்டு போய்விடும். ‘அது’ கடைக்குப் போன பிறகு நான் வீட்டுக்குப் போனால் தேவலை என்று கொஞ்சம் மெதுவாய் வந்தேன். இருக்கட்டும்; நீ இப்போது சீக்கிரம் பரிசலை விடப் போகிறாயா, இல்லையா?” “முடியாது அம்மா, முடியாது!” என்று பழனி கையை விரித்தான். பரிசல் தள்ளும் கோலைக் கீழே வைத்துவிட்டு, குமரியின் சமீபமாக வந்தான். “இன்றைக்கு நீ என்னிடம் அகப்பட்டுக் கொண்டாய், சுவாமி கிருபையினால். உன்னை நான் விடப் போவதில்லை. நீ என்னைக் கட்டிக் கொள்கிறதாக சத்தியம் செய்து கொடு. கொடுத்தால் பரிசலை விடுகிறேன். இல்லாவிட்டால் மாட்டேன்” என்றான். குமரி இதற்குப் பதில் சொல்லவில்லை. அவள் முகத்தில் கோபம் ஜொலித்தது. “கிட்ட வராதே! ஜாக்கிரதை!” என்றாள். “கிட்ட வந்தால் என்ன பண்ணுவாய்? சத்தியம் செய்து கொடுப்பாயா! மாட்டாயா?” “மாட்டேன்.” “பின்னே, அந்தக் கள்ளுக் கடைக்காரனையா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?” “சீ! வாயை மூடு!” “அதெல்லாம் முடியாது. உன்னை நான் விட மாட்டேன். நீ என்னைக் கட்டிக் கொள்ள மாட்டேனென்றால், நான் உன்னை கட்டிக் கொள்ளப் போகிறேன்” என்று சொல்லி, பழனி இன்னும் அருகில் நெருங்கினான். “என் பெயர் என்ன தெரியுமா? ‘பத்திரகாளி!’” என்றாள் குமரி. “நீ பத்திர காளியாயிருந்தால் நான் ரண பத்திரகாளி” என்று பழனி சொல்லி, அவளுடைய தோளில் கையைப் போட்டான். உடனே, குமரி அந்தக் கையை வெடுக்கென்று ஒரு கடி கடித்தாள். “ஐயோ!” என்று அவன் அலறிக் கொண்டு கையை எடுத்ததும், ’தொப்’பென்று தண்ணீரில் குதித்தாள். அவள் குதித்தபோது பரிசல் ஒரு பெரிய ஆட்டம் ஆடி ஒரு புறமாய்ப் புரண்டது. அப்போது, குமரியின் கூடை, பழனியின் மேல் துணி, பணப்பை எல்லாம் ஆற்றிலே விழுந்தன. பழனிக்கு ஒரு நிமிஷம் வரை இன்னது நடந்தது என்றே தெரியவில்லை. பரிசல் புரண்டபோது பரிசல் தள்ளும் கோல் ஆற்றில் போய் விடாதபடி இயற்கை உணர்ச்சியினால் சட்டென்று அதை எடுத்துக் கொண்டான். பிறகு, குமரி நங்கை அந்தப் பிரவாகத்தில் நீந்துவதற்கு முயன்று திண்டாடுவதைப் பார்த்துத்தான் அவனுக்குப் புத்தி ஸ்வாதீனம் வந்தது. “ஐயோ! குடி முழுகிப் போச்சே!” என்று அவன் உள்ளம் அலறிற்று. அவசரமாய்ப் படகைச் சமாளித்துக் கொண்டு, பிரவாகத்துடன் குமரி போராடிக் கொண்டிருந்த இடத்துக்குப் போய், “குமரி, குமரி! நான் செய்தது தப்புத்தான். ஏதோ கெட்ட புத்தியினால் அப்படிச் செய்து விட்டேன், மன்னித்துக்கொள். இனிமேல் உன்னைத் தொந்தரவே செய்வதில்லை. சத்தியமாய்ச் சொல்லுகிறேன். இப்போது இந்தக் கழியைப் பிடித்துக் கொண்டு மெதுவாய்ப் பரிசலில் ஏறிக்கொள்” என்று கதறினான். குமரி அவனை ஒரு பார்வை பார்த்தாள். பழனி, “என் தலைமேல் ஆணை. உன்னை இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன். ஏறிக் கொள்” என்றான். குமரி அவன் நீட்டிய கழியைப் பிடித்துக் கொண்டு, பரிசலின் அருகில் வந்தாள். ஒரு கையால் கழியைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையை உயர நீட்டினாள். பழனி அதைப் பிடிப்பதற்குத் தயங்கினான். “கையைக் கொடு!” என்றாள். அவன் கொடுத்ததும் ஒரு எம்பு எம்பி பரிசலுக்குள் ஏறினாள். பரிசல் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு மறுபடி சரியான நிலைமைக்கு வந்தது. அவள் ஏறினவுடனே பழனிச்சாமி அவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பாராமல் பரிசலில் இன்னொரு பக்கத்துக்குப் போனான். வெகு வேகமாகப் பரிசல் தள்ள ஆரம்பித்தான். குமரி இருந்த பக்கம் பார்க்கவேயில்லை. குமரி இப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய துணியில் இரத்தக் கறை பட்டிருந்ததைப் பார்த்ததும் அவளுக்குத் துணுக்கென்றது. அவன் அருகில் போய்ப் பார்த்தாள். கையில் அவள் கடித்த இடத்தில் இன்னமும் இரத்தம் பெருகிச் சொட்டிக் கொண்டிருந்தது. குமரியின் உள்ளத்தில் சொல்ல முடியாத வேதனை உண்டாயிற்று. கொஞ்சம் துணி இருந்தால் காயத்தைக் கட்டலாம். பழனியின் மேல் துண்டு கிடந்த இடத்தைப் பார்த்தாள். அந்தத் துண்டைக் காணவில்லை. அங்கிருந்த பணப் பையையும் காணவில்லை! குமரியின் நெஞ்சு மீண்டும் ஒரு முறை திடுக்கிட்டது. தான் நதியில் குதித்த போது பரிசல் புரண்டதில் பணப்பையும் மேல் துண்டும் வெள்ளத்தில் விழுந்திருக்க வேண்டும்! ஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டு, குமரி தன்னுடைய சேலைத் தலைப்பில் ஒரு சாண் அகலம் கிழித்தாள். அதைத் தண்ணீரில் நனைத்து பழனியின் கையில் கடிபட்ட இடத்தில் கட்டிவிட்டாள். பிறகு, பரிசலின் இன்னொரு பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். அப்புறமுங்கூடப் பழனி அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை. கீழ் வானத்தின் அடியில் உதயமாகிக் கொண்டிருந்த பூரண சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பெரிய ’கண்ட’த்திலிருந்து தப்பிப் பிழைத்த பிறகு உள்ளத்திலே ஏற்படக் கூடிய சாந்தி அவள் மனத்தில் இப்போது ஏற்பட்டிருந்தது. கடவுளே! எப்பேர்ப்பட்ட தப்பிதம் செய்து விட்டேன். அதனுடைய பலன் இந்த மட்டோ டு போயிற்றே! எல்லாம் உன் அருள்தான்! கையில், குமரி பல்லால் கடித்த இடத்தில் ‘விண் விண்’ என்று தெறித்துக் கொண்டிருந்தது. அதை அவன் இலட்சியம் செய்யவில்லை. கோலுக்குப் பதிலாகத் துடுப்பை உபயோகித்து முழு பலத்துடனும் தள்ளினான். சிறிது நேரத்துக்கெல்லாம் பரிசல் கரையை அடைந்தது. இருட்டுகிற சமயம் ஆற்றங்கரையோடு இரண்டு வாலிபர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். பழனியும் குமரியும் மட்டும் பரிசலில் வந்து கரை சேர்ந்ததைக் கண்டு, அவர்களில் ஒருவன் சீட்டி அடித்தான்! இன்னொருவன் தெம்மாங்கு பாடத் தொடங்கினான். கரை சேர்ந்ததும் குமரி பரிசலிலிருந்து குதித்தாள். பழனியுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவசரமாய்க் கரையேறிச் சென்றாள். பழனி சற்று நேரம் பரிசலிலேயே இருந்தான். பிறகு அதைக் கரையில் வழக்கமான இடத்தில் கட்டிப் போட்டுவிட்டு, வீடு நோக்கி நடந்தான். நடக்கும் போதே அவனுடைய கால்கள் தள்ளாடின. தேகம் நடுங்கிற்று. ஆனால் வீட்டுக்குப் போய்ப் படுத்துக் கொண்ட பிறகுதான், தனக்குக் கடும் ஜுரம் அடிக்கிறது என்பது அவனுக்குத் தெரிய வந்தது. நதிக் கரையில், காப்பி ஹோட்டலுக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு கூரை வீடுதான் பழனியின் வீடு. அதில் அவனும் அவன் தாயாரும் வசித்து வந்தனர். ஆனால் இச்சமயம் பழனியின் தாயார் வீட்டில் இல்லை. அவளுடைய மூத்த மகளின் பிரசவ காலத்தை முன்னிட்டு மகளைக் கட்டிக் கொடுத்திருந்த ஊருக்குப் போயிருந்தாள். பழனி, காலையும் மத்தியானமும் காப்பி ஹோட்டலில் சாப்பிடுவான்; இராத்திரியில் சமையல் செய்து சாப்பிடுவான். இப்போது சுரமாய்ப் படுத்ததும், அவன் பாடு ரொம்ப சங்கடமாய் போயிற்று. பக்கத்தில் வேறு வீடு கிடையாது. காப்பி ஹோட்டல் ஐயர் கொண்டு வந்து கொடுத்த காப்பித் தண்ணியைக் குடித்து விட்டுக் கிடந்தான். ஐயரும் பகலில்தான் காப்பி ஹோட்டலில் இருப்பார். இருட்டியதும் கதவைப் பூட்டிக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த தம்முடைய வீட்டுக்குப் போய் விடுவார். சுரமாய்ப் படுத்து மூன்று நாள் ஆய்விட்டது. இந்த நாட்களில் ஆற்றில் பரிசல் போகவில்லை. ஆகையால் ஊரெல்லாம் ஓடக்காரத் தம்பிக்கு உடம்பு காயலா என்ற சமாசாரம் பரவியிருந்தது. பழனிசாமி முதல் நாளே அம்மாவுக்கு கடுதாசி எழுதிப் போட்டுவிட்டான். நாளை அல்லது நாளன்று அவள் வந்து விடுவாள் என்று எதிர்பார்த்தான். அதுவரை ஒரு நிமிஷம் ஒரு யுகமாகத் தான் கழித்தாக வேண்டும். மூன்று நாள் சுரத்தில் பழனி ரொம்பவும் மெலிந்து போயிருந்தான். கை வீக்கம் ஒரு பக்கம் சங்கடம் அளித்தது. அன்று சாயங்காலம் எழுந்து விளக்கு ஏற்றுவதற்குக் கூட அவனுக்கு உடம்பில் சக்தியில்லை. “விளக்கு ஏற்றாமல் போனால்தான் என்ன?” என்று எண்ணிப் பேசாமல் படுத்திருந்தான். உள்ளே நன்றாய் இருண்டு விட்டது. திறந்திருந்த வாசற்படி வழியாக மட்டும் சிறிது மங்கலான வெளிச்சம் தெரிந்தது. பழனி அந்த வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். ஏனெனில், அந்த வாசற்படியில் ஒரு பெண் உருவம் தெரிந்தது. அந்த வேளையில் யார் அங்கே வரக்கூடும்? “யார் அது?” என்று கேட்டான். “நான் தான்” என்று குமரி நங்கையின் குரலில் பதில் வந்தது. பழனி சற்று நேரம் ஸ்தம்பித்துப் போய்விட்டான். “விளக்கு இல்லையா?” என்று குமரி கேட்டாள். “மாடத்தில் இருக்கிறது. இதோ ஏற்றுகிறேன்” என்றான் பழனி. “வேண்டாம். நீ படுத்திரு. நான் ஏற்றுகிறேன்” என்று சொல்லி, குமரி சுவரில் மாடம் இருக்கும் இடத்தைத் தடவிக் கண்டு பிடித்து விளக்கு ஏற்றினாள். “உனக்கு காயலா என்று சொன்னார்கள். பார்த்துப் போகலாமென்று வந்தேன். என்னால் தான் உனக்கு இந்தக் கஷ்டம் வந்தது. என்னால் எல்லாருக்கும் கஷ்டந்தான்…” “ரொம்ப நன்றாய் இருக்கிறது. நீ என்ன பண்ணுவாய்? நான் பண்ணினதுதான் அநியாயம். அதை நினைக்க நினைக்க எனக்கு வேதனை பொறுக்கவில்லை. என்னமோ அப்படிப் புத்திகெட்டுப் போய்விட்டது. நீ மன்னித்துக் கொள்ள வேண்டும்.” “நான் மன்னிக்கவாவது? என்னால்தான் உனக்கு எவ்வளவோ கஷ்டம். பரிசலில் வைத்திருந்த பணம் ஆற்றோடு போய்விட்டதல்லவா? அதற்குப் பதில் பணம் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லி, ஒரு துணிப்பையை எடுத்து, அதற்குள்ளிருந்த பழைய பத்து ரூபாய் நோட்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்த்துவிட்டு பையைப் பழனிச்சாமியின் பக்கத்தில் வைத்தாள். பழனி ரொம்பக் கோபமாய்ச் சொன்னான். “இந்தா பேசாமல் இதை எடுத்துக் கொண்டு போ. அப்படி இல்லையானால் நான் நாளைக்கே உன் அப்பனிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவேன்” என்றான். “ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? பரிசல் வாங்குவதற்குச் சேர்த்து வைத்த பணம் போய் விட்டதே? இனி என்ன செய்வாய்?” “போனால் போகட்டும்; இந்தப் பரிசலும் போனாலும் போகட்டும். நான் செய்த தப்புக்கு இதெல்லாம் போதாது. குமரி, நான் இந்த ஊரைவிட்டே போய்விடத் தீர்மானித்து விட்டேன். அப்படிப் போனால்தான் உன்னை என்னால் மறக்க முடியும்?” என்றான். அப்போது குமரி நங்கையின் கண்களிலிருந்து பொல பொலவென்று ஜலம் உதிர்ந்தது. பழனி அதைப் பார்த்துவிட்டு, “இது என்ன குமரி, நான் ஊரைவிட்டுப் போவதில் உனக்கு வருத்தமா?” என்றான். “நீ ஆண் பிள்ளை, ஊரை விட்டுப் போவாய்; என்னை மறந்தும் போய் விடுவாய். ஆனால் என்னால் உன்னை மறக்க முடியாது” என்று விம்மிக் கொண்டே கூறினாள். “நிஜமாகவா, குமரி! நான் என்ன கனாக் காண்கிறேனா!” என்றான் பழனி. பிறகு, “அப்படியென்றால், என் மேல் இத்தனை நாளும் ஏன் அவ்வளவு கோபமாய் இருந்தாய்? என்னைக் கட்டிக் கொள்ள ஏன் மறுத்தாய்? கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனைக் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறாய் என்கிறார்களே, அது என்ன சமாசாரம்?” என்று கேட்டான். “அது பொய். நான் கள்ளுக் கடைக்காரனைக் கட்டிக்கப் போகிறதில்லை. எங்க அப்பன் அப்படி வற்புறுத்தியது நிஜந்தான். நான் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்பன் கள்ளுக் குடிக்கிறவரையில் நான் கல்யாணமே கட்டிக்கிறதில்லையென்று ஆணை வைத்திருக்கிறேன்..” “என்ன? என்ன?” என்று பழனிச்சாமி வியப்புடன் கேட்டான். “சத்தியமாய்ச் சொல்லுகிறேன்; அதுதான் நிஜம்.” “அப்படின்னா, உங்கப்பன் குடிக்கிறதை விட்டுட்டா, அப்புறம்?…” “நடக்காததைப் பற்றி இப்போது யோசித்து என்ன பிரயோசனம்?…” என்றாள் குமரி. கண்களிலிருந்து மறுபடியும் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அப்போது தண்ணீர்த் துறையில் யாரோ பேசும் குரல் கேட்டது. குமரி திடுக்கிட்டு, “நான் போகிறேன். என்னால் உனக்கு எவ்வளவோ கஷ்டம். எல்லாவற்றையும் மன்னிச்சுக் கொள்” என்று கூறி விட்டு, போகத் தொடங்கினாள். பழனி “குமரி, குமரி! இந்தப் பணத்தை நீ எடுத்துக் கொண்டு போக வேண்டும். என்னிடம் பரிசல் வாங்கப் பணம் இருக்கிறது. நீ எடுத்துக் கொண்டு போகாவிட்டால், உங்க அப்பனிடம் கொடுத்து விடுவேன்” என்றான். “ஐயோ! அவ்வளவும் கள்ளுக்கடைக்குப் போய் விடுமே!” என்று சொல்லிக் கொண்டு குமரி அவன் அருகில் வந்தாள். பழனி பணப்பையை நீட்டினான். குமரி அதைப் பெற்றுக் கொண்டாள். அவளுக்கு அப்போது என்ன தோன்றிற்றோ என்னவோ, சட்டென்று அவனுடைய உள்ளங்கையைத் தூக்கித் தன் முகத்தில் ஒற்றிக் கொண்டாள். பிறகு விரைவாக வெளியில் சென்றாள். குமரி போனதும் கொஞ்ச நேரம் பழனி பரவச நிலையிலிருந்தான். அவனுடைய உடம்பிலும் உள்ளத்திலும் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் மறுபடியும் வாசலில் காலடிச் சத்தம் கேட்கவே, பழனி பரவச நிலையிலிருந்து கீழிறங்கினான். “யாராயிருக்கலாம்?” என்று யோசிப்பதற்குள்ளே, காளிக் கவுண்டன் உள்ளே வருவதைக் கண்டதும், அவனுக்குச் சொரேல் என்றது. ஒரு கணத்தில் என்னவெல்லாமோ தோன்றி விட்டது. குமரி அங்கு வந்துவிட்டுப் போனதைப் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறான் என்றும், தன்னைக் கொன்றாலும் கொன்று போடுவான் என்றும் எண்ணினான். தன் கதி எப்படியானாலும், குமரிக்கு என்ன நேருமோ என்று எண்ணியபோது அவனுடைய நெஞ்சு பதை பதைத்தது. “தம்பி! இரண்டு நாளாய் உனக்குக் காயலாவாமே? உன் ஆயா கூட இல்லையாமே? பார்த்துவிட்டுப் போக வந்தேன்” என்று காளிக் கவுண்டன் பரிவான குரலில் சொன்னபோது பழனிக்கு எவ்வளவு ஆச்சரியமாய் இருந்திருக்கும்? முதலில், அவனால் இதை நம்ப முடியவேயிலை. பரிகாசம் செய்கிறான், சீக்கிரம் தன் உண்மை சொரூபத்தைக் காட்டுவான் என்று பழனி நினைத்தான். அப்படியொன்றும் நேரவில்லை. காளிக் கவுண்டன் கடைசி வரையில் ரொம்பப் பிரியமாகப் பேசினான். கிட்டவந்து உட்கார்ந்து உடம்பைத் தொட்டுப் பார்த்தான். “வீட்டிலிருந்து கஞ்சி காய்ச்சிக்கொண்டு வரட்டுமா?” என்று கேட்டான். “ஆயா நாளைக்குக் கட்டாயம் வந்து விடுவாளா?” என்று விசாரித்தான். உடம்பை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளும்படி புத்திமதி கூறினான். “தம்பி! நான் சொல்கிறதைக் கேளு, நீ இப்படி இன்னமும் கல்யாணம் கட்டாமலிருக்கிறது நன்றாயில்லை. ஒரு பெண்ணைக் கட்டிப் போட்டிருந்தால், இப்படி தனியாய்த் திண்டாட வேணாமல்லவா? உன் ஆயாதான் இன்னும் எத்தனை நாளைக்கு உழைப்பாள்? அவளுக்கும் வயசாச்சோ, இல்லையோ?” என்றான். பிறகு, “எது எது எந்தக் காலத்தில் நடக்கணுமோ, அது அது அந்தக் காலத்தில் நடந்து விட்டால்தான் நல்லது. அதுதான் நான் கூட நம்ம குமரியை இந்த ஐப்பசியில் கட்டிக் கொடுத்திடணும்னு பார்க்கிறேன். அவளுந்தான் எத்தனை நாளைக்கு அப்பனுக்கும், சீக்காளி ஆயாவுக்கும் உழைச்சுப் போட்டுண்டே இருக்கறது?” என்று சொல்லி நிறுத்தினான். மறுபடியும் அவன் கோபம் வந்தவனைப்போல், “இந்த அதிசயத்தைக் கேளு, தம்பி! நம்ப கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டன் இருக்கான் அல்லவா, அவனுக்கு இப்போ மறுதரம் பெண் கட்டிக்க வேண்டி ஆசை பிறந்திருக்கிறது. அவன் நாக்கு மேலே பல்லைப் போட்டு என்னிடம் பெண் கேட்டான். நான் கொடு கொடு என்று கொடுத்திட்டேன். ‘அடே குடிகெடுக்கிற கள்ளுக்கடைக் கவுண்டா! உனக்கு இனிமேல் கட்டையோட தான் கல்யாணம்!’ என்று சொல்லிவிட்டேன்” என்றான். கடைசியில் "சரி தம்பி, நாளைக்கு வந்து பார்க்கிறேன். உடம்பை நல்லாப் பார்த்துக்கோ! என்று சொல்லிவிட்டுப் போனான். அவன் பேசப் பேசப் பழனிக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாய் இருந்தது. பேசும் போதெல்லாம் கவுண்டனிடமிருந்து கள்ளு நாற்றம் குப் குப் என்று வந்து கொண்டிருந்தபடியால், அவன் குடி வெறியில் தான் அப்படிப் பேசி இருக்க வேண்டுமெனத் தோன்றியது பழனிக்கு. மதுபானத்தின் எத்தனையோ சேஷ்டைகளில் இப்படித் திடீரென்று உறவு கொண்டாடுவதும் ஒன்றாயிருக்கலாமல்லவா? மறுநாள் பழனியின் தாய் வந்து விட்டாள். பிறகு இரண்டு மூன்று தினங்களில் பழனிக்கு உடம்பு சரியாய்ப் போய்விட்டது. கை வீக்கமும் வடிந்தது. அடுத்த வெள்ளிக்கிழமை சந்தைக்கு அவன் பரிசல் தள்ளத் தொடங்கி விட்டான். ஆனால் அவன் காளிக் கவுண்டனைப் பற்றி எண்ணியது தவறாய்ப் போய் விட்டது. அவன் பழனியிடம் கொண்ட அபிமானம் குடிவெறியில் ஏற்பட்டதல்லவென்று தெரிந்தது. அடிக்கடி அவன் பழனிசாமியின் வீட்டுக்கு வந்து பேசத் தொடங்கினான். பழனியின் தாயாரிடம் பழனியின் கல்யாணத்தைப் பற்றிக் கூடப் பேசலானான். “அவன் அப்பனில்லாத பிள்ளை; அவனுக்கு உங்களைப் போல் நாலு பெரிய மனுசாள் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைத்தால்தான் உண்டு” என்றாள் பழனியின் தாயார். “அதற்கென்ன, நானாச்சு! கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றான் கவுண்டன். காளி கவுண்டனிடம் ஏற்பட்டிருந்த இந்த அதிசயமான மாறுதலின் காரணம் பழனிக்குப் புலப்படவில்லை. இதில் ஏதாவது “சூது” இருக்குமோ என்று அவன் சந்தேகித்தான். அதனால், அவன் மனத்தில் சாந்தி இல்லாமல் போயிற்று. ஒரு நாள் காலையில் காப்பி ஹோட்டலில் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவன் காதில் விழுந்த சில வார்த்தைகள் பளிச்சென்று அவனுக்கு உண்மையை உணர்த்தின. “அடுத்த வெள்ளியிலிருந்து பரிசல்காரத் தம்பிக்குக் கொண்டாட்டந்தான். ஒரு பரிசல் போதாது; மூன்று பரிசல் விடலாம்” என்றான் ஒருவன். “அது என்ன அப்படி?” என்று இன்னொருவன் கேட்டான். “ஆமாம்; அக்டோ பர் முதல் தேதி தான் இங்கே கள்ளுக்கடை மூடப் போகிறார்களே? அப்புறம் இந்த ஊர்க் குடிகாரன்களெல்லாம் அக்கரைக்குப் போய்த் தானே குடிக்க வேணும்?” “அப்படி யாரடா இரண்டும் இரண்டும் நாலணா பரிசல் காசு கொடுத்துண்டு குடிக்கப் போறவனுக?” “எல்லாம் போவானுக, பாரு! போகாதே இருப்பானுகளா? நாலணா கொடுத்தாத்தானா? பரிசல்காரத் தம்பியிடம் சிநேகம் பண்ணிக்கிட்டா சும்மாக் கொண்டு விட்டுடறாரு!” இந்தப் பேச்சு பழனியின் காதில் விழுந்ததும் “ஓஹோ!” என்ற சப்தம் அவன் வாயிலிருந்து அவனை அறியாமலே வந்தது. பிறகு அவர்கள் பேசியது ஒன்றும் அவன் காதில் படவில்லை. அப்படிப் பெரிய யோசனையில் ஆழ்ந்து விட்டான். செப்டம்பர் 30ம் தேதி வேலம்பாளையம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. அன்று தான் கள்ளுக்கடை மூடும் நாள். அன்று தான் குடிகாரர்களுக்குக் கடைசி நாள். பெருங்குடிகாரர்களில் சிலர் அன்றெல்லாம் தென்னை மரத்தையும் பனைமரத்தையும் கட்டிக் கொண்டு காலம் கழித்தார்கள். சிலர் நடு வீதியில் கள்ளுப் பானையை வைத்துச் சுற்றி சுற்றி வந்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுதார்கள்! உண்மையில் அவர்களுடைய நிலைமை பார்க்கப் பரிதாபமாகத் தானிருந்தது. ஆனால், காளிக் கவுண்டன் மட்டும் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இது அநேகம் பேருக்கு ஆச்சரியம் அளித்தது. காளி அன்று சாயங்காலம் பழனிசாமியிடம் போய், “தம்பி! நாளைக்குப் பொழுது சாய எனக்கு அக்கரையில் கொஞ்சம் வேலையிருக்கிறது. என்னைப் பரிசலில் இட்டுப் போக வேணும்” என்றான். “அதற்கென்ன, மாமா? என்னுடைய பரிசல் இருந்தால் அதில் முதல் இடம் உங்களுக்குத்தான்” என்றான் பழனி. அக்டோ பர் முதல் தேதி பிறந்தது. ஊரிலுள்ள ஸ்திரீ, புருஷர், குழந்தைகள் எல்லோரும் அன்று காலை எழுந்திருக்கும் போது ஒரே எண்ணத்துடன் தான் எழுந்தார்கள்; “இன்று முதல் கள்ளு, சாராயக்கடை கிடையாது” என்று. அநேகர் எழுந்ததும் முதல் காரியமாகக் கள்ளுக் கடையைப் போய்ப் பார்த்தார்கள். அங்கே கள்ளுப் பானைகள் இல்லாதது கண்டு அவர்கள் “இப்பேர்ப்பட்ட அற்புதமும் நிஜமாகவே நடந்து விட்டதா?” என்று பிரமித்துப் போய் நின்றார்கள். இந்தப் பரபரப்புக்கு இடையில் இன்னொரு செய்தி பரவிற்று. “பரிசல் துறையில் பரிசலைக் காணவில்லையாம்!” என்று. இது காளிக் கவுண்டன் காதில் விழுந்ததும், அவன் விரைந்து நதிக்கரைக்குப் போனான். அங்கே, பழனிசாமி முகத்தைக் கையினால் மூடிக்கொண்டு அழுது கொண்டு இருப்பதையும், நாலைந்து பேர் அவனைச் சுற்றி நின்று தேறுதல் சொல்லிக் கொண்டு இருப்பதையும் கண்டான். சமீபத்தில் போய் விசாரித்ததில், நேற்று ராத்திரி வழக்கம் போல் பழனி பரிசலைக் கரையிலேற்றி முளையில் கட்டிவிட்டுப் போனதாகவும், காலையில் வந்து பார்த்தால் காணோம் என்றும் சொன்னார்கள். காளிக் கவுண்டன், பழனியிடம் போய், “தம்பி! இதற்காகவா அழுவார்கள்? சீ, எழுந்திரு. ஆற்றோரமாய்ப் போய்த் தேடிப் பார்க்கலாம். அகப்பட்டால் போச்சு; அகப்படாமல் போனால், இன்னான் தான் போக்கிரித்தனம் பண்ணியிருக்க வேணுமென்று எனக்குத் தெரியும். கள்ளுக்கடைக் கவுண்டன் தான் செய்திருக்க வேண்டும். உனக்கு வரும்படி வரக் கூடாது என்று. அவனைக் கண்டதுண்டம் பண்ணிப் போட்டு விடுகிறேன். வா, போய்ப் பார்க்கலாம்” என்றான். அன்றெல்லாம் பரிசலைத் தேடிக் கொண்டிருந்தார்கள்; பரிசல் அகப்படவேயில்லை. சாயங்காலம், நேற்றுக் கள்ளுக்கடை இருந்த இடத்தில் இன்று பஜனை நடந்தது. காளிக் கவுண்டனும் போயிருந்தான். பஜனையில் பாதி கவனமும், பரிசல் மட்டும் கெட்டுப் போகாமல் இருந்தால் அக்கரைக் கள்ளுக்கடைக்குப் போயிருக்கலாமே என்பதில் பாதிகவனமுமாயிருந்தான். கள்ளுக்கடை மூடி ஏழெட்டு தினங்கள் ஆயின. அந்த ஏழெட்டு நாளில் ஊரே புதிதாய் மாறியிருந்தது. அந்த கிராமத்தின் ஆண் மக்களில் கிட்டத்தட்டப் பாதி பேருக்கு மேல் குடித்தவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குடிகாரன் இருந்தான். ஆகவே, கள்ளுக்கடை மூடிய சில நாளைக்கெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் காசு மிஞ்சியிருந்தது. கடை சாமான்கள் முன்னை விடத் தாராளமாய் வாங்க முடிந்தது. மனுஷ்யர்களுடைய புத்தியும் அதற்குள் நன்றாய் மாறி ஸ்திரப் பட்டுவிட்டது. முன்னெல்லாம் குடித்துக் கெட்டு அலைந்ததை எண்ணிய போது அவர்களுக்கே வெட்கமாயிருந்தது. இப்படி மாறியவர்களில் ஒருவன் காளிக் கவுண்டன். அவன் ஒரு நாள் பழனியிடம், “தம்பி! பரிசலை எந்தப் பயலோதான் ஆற்றில் இழுத்து விட்டிருக்கிறான். உனக்கு அதனால் எவ்வளவோ நஷ்டம். அவனைக் கண்டால் நான் என்னவேணாலும் செய்து விடுவேன். ஆனாலும் ஒரு விதத்தில் பரிசல் கெட்டுப் போனதும், நல்லதாய்ப் போயிற்று” என்று சொன்னான். “அது என்ன மாமா, அப்படிச் சொல்றீங்க? பரிசல் கெட்டுப் போனதில் நல்லது என்ன?” என்று பழனி கேட்டான். காளி சிரித்துக் கொண்டு, பழனியின் முதுகில் தட்டிக் கொடுத்தான். “தம்பி, நீ குழந்தைப் பிள்ளை. உனக்கு ஒன்றும் தெரியாது. நான் என்னத்துக்காகப் பரிசலில் அக்கரைக்கு வரேன்னு சொன்னேன், தெரியுமா? இந்த ஊரிலே கள்ளுக்கடை மூடி விடறதினால, அக்கரைக் கடைக்கு போகலாமின்னுதான்…” “அக்கரையிலே மட்டும் ஏன் கடைய வச்சிருக்காங்க?” என்று பழனி கேட்டான். “அது திருச்சிராப்பள்ளி ஜில்லா. அந்த ஜில்லாவிலே இன்னும் கடையை மூடலை. அடுத்த வருஷம் தான் மூடப் போறாங்களாம்.” “ஏன் மாமா! அடுத்த வருஷம் நிச்சயம் கடை மூடிட்டால், அப்புறம் எங்க போறது?” “நல்ல கேள்வி கேக்கறே. அப்புறம் எங்கே போறது? பேசாமல் இருக்க வேண்டியதுதான்!” “அப்படி இப்பவே இருந்துட்டா என்ன, மாமா?” “அதற்குத்தான் குடிகாரன் புத்தி பிடரியிலே என்கிறது. எப்படியோ, பரிசல் கெட்டுப் போனாலும் போச்சு, எனக்கும் கள்ளுக்கடை மறந்து போச்சு” என்றான் காளி. பிறகு, எதையோ நினைத்துக் கொண்டவன் போல், “ஒரு சமாசாரம் கேளு, தம்பி… குமரி இருக்காள் அல்ல, அவள் நான் குடிக்கிற வரையில் கல்யாணம் கட்டிக்கிறதில்லை என்று ஆணை வைத்திருந்தாள். சுவாமி புண்ணியத்திலே குடிதான் இப்போ போயிருச்சே! இந்த ஐப்பசி பிறந்ததும் முகூர்த்தம் வச்சுடறேன். பேசாமே அவளை நீ கட்டிக்கோ. ரொம்ப கெட்டிக்காரி; அந்த மாதிரி பெண் உனக்கு அகப்படமாட்டாள்” என்றான். ஐப்பசி மாதம் முதல் வாரத்தில் பழனிசாமிக்கும் குமரி நங்கைக்கும் கல்யாணம் நடந்தது. ரொம்பக் கொண்டாட்டமாய் நடந்தது. கல்யாணம் ஆனதும் பழனிச்சாமி வடக்கே போய்ப் புதுப் பரிசல் வாங்கிக் கொண்டு வந்தான். வழக்கம் போல் பரிசல் துறையில் பரிசல் ஓடத் தொடங்கியது. ஆனால் சாயங்கால வேளைகளில் மட்டும் பழனி குறிப்பிட்ட சில பேரைப் பரிசலில் ஏற்றிக் கொண்டு போக மறுத்து விடுவான். பழைய பரிசல் என்ன ஆயிற்று என்பது தெரியவேயில்லை. அதை எப்படிக் கண்டு பிடிக்க முடியும்? பரிசலின் சொந்தக்காரனே நடு நிசியில் எழுந்து வந்து, பரிசலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் எறிந்து விட்டிருக்கும் போது, அந்த இரகசியத்தை அவனாகச் சொன்னாலன்றிப் பிறரால் எப்படிக் கண்டு பிடிக்க முடியும்? பாங்கர் விநாயகராவ் முதற் காட்சி நேரம் : காலை ஒன்பது மணி. இடம் : மயிலாப்பூர், “பத்ம விலாசம்” பங்களாவில் முன்புறத்து ஹால். பாத்திரங்கள் : விநாயகராவ், எம்.எல்.சி., அவருடைய மகன் கங்காதரன்; யுவர் சங்கத் தொண்டர்கள். தொண்டர்கள் : நமஸ்காரம், நமஸ்காரம். விநாயகராவ் : வாருங்கள்; உட்காருங்கள். [உட்காருகிறார்கள்.] விநாயகராவ் : நீங்கள் யார், எதற்காக வந்தீர்கள், தெரியவில்லையே? முதல் தொண்டர் : நாங்கள் யுவர் சங்கத் தொண்டர்கள். அடுத்த வாரம் சட்டசபையில் பூரண மதுவிலக்குப் பிரேரேபணை வரப்போகிறதல்லவா? அதைத் தாங்கள் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள வந்தோம். இரண்டாம் தொண்டர் : வேறொரு வேண்டுகோளும் இருக்கிறது. தயவு செய்து தாங்கள் தங்களுடைய தென்னை மரங்களைக் கள்ளுக்கு விடக்கூடாது. முதல் தொண்டர் : சட்டசபையில் தாங்கள் நியமன அங்கத்தினர் என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் தங்களுடைய வாக்களிக்கும் சுதந்திரத்தை யாரும் மறுக்க முடியாது. விநாயகராவ் : ஏழைகள் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரமப்படுவது குறித்துச் சந்தோஷம். நானும் என் கடமையைச் செய்வேனென்று நீங்கள் நம்பியிருக்கலாம். தொண்டர்கள் : நமஸ்காரம், போய் வருகிறோம். [போகிறார்கள்] விநாயகராவ் : முன்னுக்கு வரக்கூடிய பிள்ளைகள் இப்படிக் கெட்டுப் போகிறார்கள்…ஓஹோ! மணி பத்தாகி விட்டது. [எழுந்து உள்ளே செல்கிறார்.] இரண்டாம் காட்சி நேரம் : மாலை மூன்று மணி இடம் : “மஹாராஜா ஹொடே”லில் ஓர் அறை. பாத்திரங்கள் : விசுவநாதன், அப்பாசாமி, பத்பநாபன், அனந்தகிருஷ்ணன், ராமநாதன், கங்காதரன் பத்மநாபன் (மோட்டார் சப்தம் கேட்டு) : அடே விசுவம்! பேபி வருகிறது. விசுவநாதன் : பொஸொட்டோ வுக்குப் போய் அங்கிருந்து சினிமா போகலாம். [வாசலில் மோட்டார் வந்து நிற்கிறது. கங்காதரனும் ராமநாதனும் இறங்கி உள்ளே வருகிறார்கள்.] அனந்தகிருஷ்ணன் : அடே, ராமநாதன் கூடவா? இவனை எங்கே பிடித்தாய்? கங்காதரன் : வழியில் அகப்பட்டான்; அழைத்து வந்தேன். ராமநாதன் : உளறாதே! நானல்லவா உன்னைப் பிடித்தேன்? பத்ம (கையைத் தட்டி) : அடே பையா! இரண்டு பேருக்கு டிபன் கொண்டு வா! அனந்த : ஏன்? எல்லோருக்கும் கொண்டு வரச் சொல்லேன்? இன்னொரு முறைதான் சாப்பிடுவோமே? விசுவ : சை! சை! பொஸொட்டோ வுக்குப் போக வேண்டும். மறந்துவிடாதே. ராம : பாவிப் பசங்களே! புதுச்சேரிக்குப் போனீர்களாமே? அனந்த : பாவியாவது? நீதான் கொடுத்து வைக்காத பாவி! [இதற்குள் சிற்றுண்டி வருகிறது. சாப்பிடத் தொடங்குகிறார்கள்.] அப்பா : பட்டணத்தில் ஒன்பது ரூபாய்க்கு விற்கும் ‘சாம்பேன்’ அங்கே மூன்று ரூபாய். எவ்வளவு வித்தியாசம் பார்! ராம : உண்மையாகவே நீங்கள் குடித்ததாகவா சொல்கிறீர்கள்? என்ன துணிச்சல் உங்களுக்கு? அனந்த : சுகமனுபவிக்கப் பிறந்தவர்கள் வெள்ளைக்காரர்கள்தானப்பா! ராம : கங்காதரன் துணிந்த தல்லவா எல்லாவற்றையும்விட ஆச்சரியம்? கங்கா : எனக்கென்னவோ இன்னும் சந்தேகமாய்த் தானிருக்கிறது. நாம் அவ்வளவு தூரத்துக்குப் போவது சரியல்ல என்ன நினைக்கிறேன். விசுவ : நீ இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பாய். காரியத்தில் ஒன்றும் குறைவில்லை. கங்கா : ஒரு சமாசாரம்; இன்று எங்கள் வீட்டுக்கு ‘யூத் லீக்’ தொண்டர் இருவர் வந்தார்கள். சட்டசபையில் வரப்போகும் மதுவிலக்குப் பிரேரேபணைக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களை லா காலேஜில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. பதும : எனக்குத் தெரியும் அவர்களை, கதர்ப்பித்தர்கள். ராம : ரொம்ப சரி; ஒரு சிகரெட் கொடு. பதும : அதுதான் கிடையாது. வாங்க வேண்டும். விசுவ : வழியில் வாங்கிக் கொள்ளலாம். கிளம்புங்கள். கங்கா : எங்கே போவதாக உத்தேசம்? விசுவ : முன்னமே சொன்னேனே? சினிமாவுக்கு - வழியில் பொஸொட்டோ வில் இறங்கிவிட்டு. கங்கா : எனக்குப் பிடிக்கவில்லை. ராம : எனக்கும் பிடிக்கவில்லை. பதும : சை! சை! ராமு! உனக்காகத்தானே முக்கியமாய்ப் போகவேண்டுமென்பது? கங்கா : வோட்டு எடுத்துவிடலாம். விசுவம் : நல்ல யோசனை. பொஸொட்டோ வுக்குச் சாதகமானவர்களெல்லாம் கை தூக்குங்கள். [கங்காதரனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் கை தூக்குகிறார்கள்] கங்கா : பெரும்பான்மையோர் வாக்கின்படி நடக்க நான் கடமைப்பட்டவன். அப்பா : மாட்டேனென்றால் யார் விடுகிறார்கள்? [எழுந்து வெளியே போகின்றனர்.] மூன்றாம் காட்சி நேரம் : காலை ஏழு மணி. இடம் : “பத்ம விலாஸம்” கொல்லைப்புறம். பாத்திரங்கள் : விநாயகராவின் மனைவி சிவகாமியம்மாள், வேலைக்காரி தாயி. சிவகாமி : ஏண்டி, தாயி! நேற்று ஏன் வரவில்லை? உன் மகளை அனுப்பினாயே? அவளால் என்ன வேலை செய்ய முடிந்தது? இப்படிப் பண்ணினால் உன்னைத் தள்ளிவிடுவேன். தாயி (கண்ணில் நீர் ததும்ப) : அப்படிச் செய்யக் கூடாது, அம்மா! காப்பாற்றவேண்டும். புருஷன் சண்டைபோட்டு அடித்துவிட்டார். நேற்றெல்லாம் எழுந்திருக்கவே முடியவில்லை. சிவகாமி : ஐயோ! உன் புருஷன் அவ்வளவு பொல்லாதவனா? ஐயாகிட்டச் சொல்லிப் போலீஸில் எழுதிவைக்கச் சொல்லட்டுமா? தாயி : அவர் நல்லவரம்மா! பாழுங்கள்ளு அப்படிப் பண்ணுகிறது. முந்தாநாள் சம்பளங் கொடுத்தாங்க. குடித்துவிட்டு வந்துவிட்டார். சிவகாமி : சம்பளம் எவ்வளவு? தாயி : பஞ்சுஸ்கூலில் மாதம் 22 ரூபாய் சம்பளம். சௌக்கியமாய் இருக்கலாம். ஆனால் சம்பளத்தில் முக்கால்வாசி குடிக்குப் போகிறது. ஆறு ஏழு ரூபாய் கூட இட்டேறுவதில்லை. சிவகாமி : நல்லவரென்று சொல்கிறாயே? நீ சொல்லிக் குடிக்காமல் செய்யக்கூடாதா? தாயி : எவ்வளவோ செய்து பார்த்துவிட்டேன். நல்ல புத்தியா யிருக்கும்போது குடிப்பதே இல்லை என்று சொல்லுவார். சாமியை வைத்துக்கூட சத்தியம் செய்திருக்கிறார். ஆனால் ஆலையிலிருந்து எந்தப் பாதையாக வந்தாலும் வழியில் பாழும் கடை ஒன்று… சிவகாமி : இந்தக் கடைகளை ஏன் தான் வைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. தாயி : காந்தி மகாத்மா வந்து கள்ளு சாராயக் கடைகளை மூடப்போகிறார் என்று முன்னே சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒன்றையுங் காணோம். சிவகாமி : சரி, காப்பிக்கு நேரமாகிவிட்டது. சீக்கிரம் காரியத்தைப் பார். [உள்ளே போகிறாள்.] நான்காம் காட்சி நேரம் : இரவு ஒன்பது மணி. இடம் : “பத்ம விலாஸம்” தோட்டத்தில் சலவைக் கல் மேடை. பாத்திரங்கள் : விநாயகராவ்; சிவகாமி அம்மாள்; கங்காதரன்; மாப்பிள்ளை பரமேஸ்வரன். பரமேஸ்வரன் : நாளை சட்டசபையில் பிரேரேபணை வரப்போகிறதல்லவா? நீங்கள் எப்படி வாக்களிக்கப் போகிறீர்கள்? விநாயக : நான் தான் அரசாங்கக் கட்சியாயிற்றே? பரமே : அதற்காக மனச்சாட்சியை அடியோடு விற்றுவிடலாமா? விநாயக : ரொம்பத் தெரிந்தவன் போல் பேசுகிறாயே? உண்மையில், இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் கொள்கைதான் சரி என்பது என் கருத்து. நீங்கள் யோசனையே செய்யாமல் பிறர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு குதிக்கிறீர்கள். சிவகாமி : என்ன சண்டை? எனக்கும் சொல்லுங்களேன். கங்கா : கள்ளு, சாராயக் கடைகளை எல்லாம் எடுத்துவிட வேண்டுமென்று நாளை சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப் போகிறார்களாம். அப்பா அதற்கு விரோதமாக ஓட்டுக் கொடுக்கிறாராம். இதற்காக மாப்பிள்ளை சண்டை பிடிக்கிறார். சிவகாமி : அந்த இழவு கடைகள் என்னத்திற்காக? நான் மாப்பிள்ளை கட்சிதான். விநாயக : நீ கலால் மந்திரியாகும்பொழுது அப்படியே செய்யலாம். பரமே : சந்தேகமென்ன? சட்டசபையில் ஸ்திரீகள் மட்டும் பெரும்பான்மையோரா யிருந்தால் இன்னும் எவ்வளவோ நல்ல காரியங்கள் எல்லாம் செய்திருப்பார்கள். சிவகாமி : இன்று காலையில் வேலைக்காரி சொன்னாள். எனக்குப் பரிதாபமாயிருந்தது. அவள் புருஷனுக்கு ஆலையில் இருபத்தைந்து ரூபாய் சம்பளமாம். முக்கால்வாசிக்குமேல் குடியில் தொலைத்து விடுகிறானாம். ஏழைகள் ஏன் இப்படி அவதிப்பட வேண்டும்? விநாயக : ஏனா? நீ சுகமாகக் கைகால் அசக்காமல் உட்கார்ந்து சாப்பிடுவதற்கும், உன் மாப்பிள்ளை எஞ்ஜினியருக்குப் படித்து உத்யோகம் பெறுவதற்கும், கங்காதான் மோட்டாரில் சவாரி செய்வதற்கும் தான். சிவகாமி : ஏதாவது தத்துப் பித்தென்று பேசாதீர்கள். அதற்கும் இதற்கும் என்ன வந்தது? விநாயக : கள்ளுக்கடைக்குச் சென்று குடிக்கத்தான் வேண்டுமென்று சர்க்கார் ஜனங்களைக் கட்டாயப்படுத்துகிறார்களா? கங்கா : கள்ளுக்கடையை வைத்துக் கொண்டு குடிக்காதே என்றால் என்ன பிரயோஜனம்? பரமே : விளக்கில் வந்து விழுந்து சாகும்படி விட்டில் பூச்சிகளை யாராவது கட்டாயப்படுத்துகிறார்களா? விநாயக : நீங்கள் உலகமறியாதவர்கள். ஆலையில் வேலை செய்வதும், மூட்டைகள் சுமப்பதும் எவ்வளவு கஷ்டமான வேலைகள் தெரியுமா? இத்தகைய வேலை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏதேனும் சந்தோஷம் வேண்டாமா? குடி ஒன்று தான் இருக்கிறது. அதையும் நீங்கள் ஒழித்துவிடச் சொல்கிறீர்கள். பரமே : குடியினால் உடம்புக்குக் கெடுதல் என்று எத்தனையோ வைத்தியர்கள் சொல்லியிருக்கிறார்களே? விநாயக : வைத்தியர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்வார்கள். கள்ளு உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சி என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள். சிவகாமி : எப்படியிருந்தாலும் ஏழைகள் பணமெல்லாம் கள்ளுக்கடைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டாமா? விநாயக : பத்துப் பாத்திரம் தேய்க்கவும், வீடு வாசல் பெருக்கி மெழுகவும் நீ தயாராய் இருக்கிறாயா, சொல். சிவகாமி : எனக்கேன் தலையிலெழுத்து? ஏதாவது கேட்டால் ஏதாவது சொல்கிறீர்களே? விநாயக : அவசரப்படாதே! உன் பெண்ணாவாது நாட்டுப் பெண்ணாவது அந்த வேலைகளைச் செய்யத் தயாரா? சிவகாமி : ஒரு நாளும் செய்யமாட்டார்கள். விநாயக : வேலைக்காரி உங்களுக்கு அவசியம் வேண்டுமல்லவா? சிவகாமி : ஆமாம். விநாயக : சரி, உன் வேலைக்காரி புருஷன் வாங்கும் சம்பளம் ரூபாய் இருபத்தைந்தையும் வீட்டுக்குக் கொண்டு வந்தால், அவல் ஒன்றரை ரூபாய் சம்பளத்துக்கு உனக்கு வேலை செய்ய வருவாளா? யோசித்துப் பார். சிவகாமி : ஏன் வரமாட்டாள்? விநாயக : ஏனா? அந்த இருபத்தைந்து ரூபாயைக் கொண்டு அவர்கள் சௌக்கியமாகக் காலட்சேபம் செய்வார்கள். புருஷன் அவளை வேலைக்கு அனுப்ப மாட்டான். அப்படி வந்தாலும் பணிந்து வேலை செய்ய மாட்டாள். ஒரு வார்த்தை அதட்டிப் பேசினால் “போ, அம்மா, போ” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள். பரமே : அது உண்மைதான். நமக்கு அவசியமானால் அதிகச் சம்பளம் கொடுத்துத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். விநாயக : இப்பொழுதே நமது கிராமத்தில் பண்ணை ஆட்கள் சொன்னபடி கேட்பதில்லை என்று காரியஸ்தர் எழுதுகிறார். கள்ளுக்கடையும் இல்லா விட்டால் என்ன ஆகும் தெரியுமா? இருக்கட்டும். நீ எஞ்ஜினியரிங் காலேஜுக்குச் சம்பளம் என்ன கொடுக்கிறாய்? பரமே : 140 ரூபாய். விநாயக : கங்காதரன் காலேஜுக்கு 180 ரூபாய் சம்பளம் கொடுக்கிறான். ஆனால் உங்களுடைய படிப்புக்காக மொத்தம் எவ்வளவு செலவு ஆகிறது தெரியுமா? நீங்கள் கொடுக்கும் சம்பளத்தைப் போல் குறைந்தது ஐந்து மடங்கு செலவாகிறது. சமீபதத்தில் முத்துக்கருப்பஞ் செட்டியார் கலா சாலைக்காக கணக்குப் பார்த்தார்கள். மொத்தம் வருஷத்தில் ஐந்து லட்சம் ரூபாய் செலவாகுமென்றும், அதில் ஒரு லட்சம் ரூபாய்கூட மாணாக்கர் சம்பளத்தில் கிடைக்காதென்றும் ஏற்பட்டன. இதற்குத்தான் கள் வருமானம் வேண்டும். பரமே : இது அதர்மமல்லவா? ஒரு சிலர் படித்து ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம் வாங்குவதற்காக எத்தனையோ ஏழைகள் கண்ணீர் விட வேண்டுமா? இது என்ன நியாயம்? விநாயக : அதற்கென்ன செய்வது? ஹிம்ஸை தான் இயற்கை தருமம். புழு, பூச்சிகளைத் தின்று பட்சிகள் உயிர்வாழுகின்றன. பட்சிகளைத் தின்று மிருகங்கள் பிழைக்கின்றன. மிருகங்களைக் கொன்று தின்றும், வேலை வாங்கியும் மனிதன் ஜீவிக்கிறான். மனிதர்களுக்குள்ளே ஏழைகளை வேலை வாங்கிப் பணக்காரர்கள் வாழ்கிறார்கள். எல்லாவற்றையும் துறந்து சன்னியாசியாய்ப் போவதாயிருந்தால் ஒன்றும் வேண்டியதில்லை. உலகத்தில் வாழ்வதாய் இருந்தால் பிறருக்குத் துன்பம் கொடுத்தே ஆக வேண்டும். சிவகாமி : எல்லாம் அவரவர் தலை எழுத்தின் படிதான் நடக்கும் போலிருக்கிறது. பரமே : தலையாவது? எழுத்தாவது? எல்லாம் மனிதன் செய்வதுதான். கள்ளுக்கடைப் பணம்தான் கல்விக்கு என்பது ஏன்? மற்றும் எத்தனையோ செலவுகளைக் குறைக்கக்கூடாதா? விநாயக : அதுதான் முடியாத காரியம். அரசாங்கத்தார் இராணுவச் செலவைக் குறைக்க மாட்டார்கள். உத்தியோகஸ்தர் சம்பளத்தையும் குறைக்க முடியாது. பாக்கி எல்லாம் போகட்டும். தென்னை மரங்களைக் கள்ளுக் குத்தகைக்கு விடுவதில் நமக்குச் சராசரி மாதம் எண்ணூறு ரூபாய் வருகிறது. ஒரு சிரமம் கிடையாது. இந்த வருமானத்தை நான் எப்படி விட முடியும்? வேறு யார்தான் விடுவார்கள்? சிவகாமி : ஏழைகளின் பாவம் வீண் போகாது. [எழுந்து போகிறார்கள்.] ஐந்தாம் காட்சி நேரம் : இரவு எட்டரை மணி. இடம் : “பத்ம விலாஸம்” முன்புறத்து ஹால். பாத்திரம் : விநாயக ராவ், சிவகாமி, பரமேசுவரன். பரமேசுவரன் : சட்டசபையில் முடிவு என்ன ஆயிற்று? விநாயகராவ் : சரியான முடிவுதான். பரமே : பிரேரேபணை தோல்வி யடைந்துவிட்டதல்லவா? விநாயக : முதல்தரமான தோல்வி; மூன்றில் ஒரு பங்கு வோட்டுக் கூடக் கிடைக்கவில்லை. பரமே : இந்த அநியாயத்திற்கு எப்போது விமோசனமோ தெரியவில்லை. சிவகாமி : சாப்பிடப் போகலாமா? கங்கு இன்னும் வரக்காணோமே? விநாயக : ஏன் இவ்வளவு தாமதம்? சினிமாவுக்குப் போயிருந்தாலும் இதற்குள் திரும்பியிருக்கலாமே? பரமே : மோட்டார் சத்தம் கேட்கிறது. நான் போய்ப் பார்த்து வருகிறேன் [வெளியே போகிறான்] சிவகாமி (இரகசியமாக) : ஒரு சமாசாரம் அல்லவா? ரொம்பக் கவலையாய் இருக்கிறது. கொஞ்ச நாளாகக் கங்கு ஒரு மாதிரியாக இருக்கிறான். விநாயக : என்ன சொல்கிறாய்? கங்குவுக்கு என்ன? சிவகாமி : நாட்டுப் பெண் இன்றுதான் சந்தேகப்பட்டுச் சொன்னாள். அதன் மேல் எனக்கும் சந்தேகமாயிருக்கிறது. இரவில் முன்போல் சீக்கிரம் வருவதில்லை. வாயில் துர்வாசனை வீசுகிறது என்று சொல்கிறாள். விநாயக : சீச்சி! என்ன உளறுகிறாய்? கங்காதரனா அப்படி எல்லாம் போகிறவன்? சிவகாமி : ஒன்றுமில்லாமலிருக்க வேண்டுமென்றுதான் தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மனக்கலக்கமா யிருக்கிறது. வெள்ளைக்கார ஓட்டல்கள் இருக்காமே? அங்கே போகிறானோ என்று தோன்றுகிறது. சேர்வாரோடு சேர்ந்து எத்தனையோ பிள்ளைகள் கெட்டுப் போகிறார்களே? [பரமேசுவரன் உள்ளே வருகிறான்] பரமே : வேறு யாருடைய வண்டியோ போயிற்று. கங்காதரனைக் காணோம். [டெலிபோனில் மணி அடிக்கிறது.] விநாயக : அது யார், பாரப்பா. பரமே (டெலிபோனில்) : யார்? போலீஸ் ஸ்டேஷனா? - ஆமாம். - துக்க சமாசாரமா? என்ன? என்ன? - (அரை நிமிஷங் கழித்துத் திரும்பி) ஐயோ விபத்தாம், கங்காதரனை ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்களாம். படுகாயமாம். சிவகாமி : அடபாவி! மோசம் செய்துவிட்டாயா ஐயோ! என்ன செய்வேன்? விநாயக (பதைபதைப்புடன்) : ஓடு! டிரைவரைக் கூப்பிட்டு மோட்டார் கொண்டு வரச்சொல்லு. (டெலிபோன் அருகில் சென்று) ஹலோ! யார் அங்கே விபத்து எப்படி ஏற்பட்டது தெரியுமா? டெலிபோன் குரல் : ராயரிடம் சொல்ல வேண்டாம். நன்றாய்க் குடித்திருந்தானென்று போலீஸ் சார்ஜெண்டு சொல்லுகிறார். விநாயக : என்ன? நம்முடைய டிரைவரா குடித்துவிட்டிருந்தான்? டெலிபோன் குரல் : டிரைவர் அல்ல. ராயர் மகனே வண்டி ஓட்டினானாம். குடிவெறியில் எதிரே வந்த பஸ்ஸுடன் மோதிவிட்டான். நீங்கள் யார்? விநாயக : ஐயோ! [கீழே விழுந்து தரையில் தலையை மோதிக் கொண்டு அழுகிறார்.] பாழடைந்த பங்களா ரொம்பவும் தெரிந்த சிநேகிதர்கள் யாராவது என்னிடம் ஒரு கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து “இதைக் கட்டாயம் விகடனில் போடச் சொல்லுங்கள்” என்று கூறும்போதெல்லாம் நான் மனத்திற்குள், “நாளைக்குப் பல்லாவரத்திற்குப் போக வேண்டியதுதான்” என்று சொல்லிக்கொள்வது வழக்கம். இது ஏன் என்றால், ஒரு முறை ரொம்பவும் பிராண சிநேகிதர் ஒருவர் ஒரு நகைச்சுவைக் கட்டுரையை என்னிடம் கொடுத்து, அதை விகடனில் வெளியிடும்படி சொன்னார். அதில் நகைச்சுவையைவிட அழுகைச் சுவைதான் அதிகமாயிருந்தது. ஏனென்றால், சென்னை நகரின் வீதிகளில் ஒன்றுக்கு ‘ராடன் பஜார்’ (Rattan Bazaar) என்று பெயர் அமைந்த பொருத்தத்தைப் பற்றி அவர் அதில் எழுதியிருந்தார். ‘ராடன்’ என்றால், பிரம்பு. அச்சமயம் அந்த வீதியில் மறியல் செய்த தொண்டர்களுக்குப் பிரம்படி வைபவம் நடந்துகொண்டிருந்தது. அக்கட்டுரையை விகடனில் அப்போது போட்டிருந்தால், இன்று எனக்கு இதை எழுதும் சிரமமும், உங்களுக்கு இதைப் படிக்கும் சிரமமும் இல்லாமற் போயிருக்கும். அவ்வளவு முன்யோசனை அப்போது இல்லாமற் போகவே, அந்தக் கட்டுரையைப் பற்றி ரொம்பவும் தொல்லையடைந்தேன். ஆனால் அந்த நண்பரே அதைத் தீர்த்து வைத்தார். அன்று மத்தியானம் கொஞ்சம் பல்லாவரத்திற்குப் போய் வரவேண்டுமென்று நான் சொல்ல, நண்பர் தமது மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு போவதாகச் சொன்னார். அவ்வாறே சைக்கிளின் பின் பீடத்தில் நான் உட்கார்ந்து கொள்ள, அவர் சைக்கிளை விட்டுச் சென்றார். கிளம்பும்போது அவருடைய நகைச்சுவைக் கட்டுரை என்னிடம் இருந்தது. பல்லாவரம் போய்ச் சேர்ந்த போது பார்க்கையில் கட்டுரையைக் காணவில்லை! உடனே இதை அவரிடம் தெரிவித்தால், போன காரியம் ஆவதற்குள் திரும்பிவிடுவார் என்று பயந்து, காரியம் ஆன பிறகுதான் தெரிவித்தேன். அதுவும், அவருடைய மோட்டார் சைக்கிளின் குலுக்கிப் போடும் சக்தியைப் பற்றி ஓர் அத்தியாயம் புகழ்ந்துவிட்டு விஷயத்தைச் சொன்னேன். மனுஷ்யரின் முகத்தில் ஓர் ஈ கொசு கூட ஆடவில்லை. “போகிறது. உம்மை நீரே கெட்டுப் போக்கிப் கொள்ளாமல் இருக்கிறேரே; அதுவே பெரிய காரியந்தான்” என்றார். திரும்பி வரும் வழியில் ஏதாவது வெள்ளையாய்த் தெரிந்த இடத்தில் எல்லாம் சைக்கிளை நிறுத்தி நிறுத்திப் பார்த்துக் கொண்டு வந்தார். அப்படி நிறுத்திய இடத்திலெல்லாம், அது எங்கே அகப்பட்டு விடுகிறதோ என்று எனக்கும் திக்குத்திக்கு என்று அடித்துக் கொண்டிருந்தது. நல்ல வேளையாய் அகப்படவில்லை. ஆனால், இப்போது நான் உங்களுக்குச் சொல்ல வந்த விஷயம் அதுவன்று. பல்லாவரத்துக்கு ஒரு காரியமாகப் போனேன் என்று கூறினேனல்லவா" அந்தக் காரியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று தான் இதை எழுத ஆரம்பித்தேன். தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள என் சிநேகிதர் ஒருவர் தேகசுகத்துக்காகப் பல்லாவரத்தில் வந்து சில காலம் வசிக்க விரும்பினார். அவ்வூரில் ஒரு வீடு வாடகைக்கு அமர்த்திக் கொடுக்கும்படி எழுதியிருந்தார். நான் பல்லாவரம் போனது இதற்காகத்தான். அங்கே விஸ்தாரமான சாலையின் இரு புறங்களிலும் உள்ள பங்களாக்களை ஒவ்வொன்றாய்ப் பார்வையிட்டு வந்தோம். அவற்றில் ஒரு பங்களா என் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. அது விசாலமான ஒரு தோட்டத்திற்கு நடுவில் அமைந்திருந்தது. பழைய காலத்து பங்களா. கட்டிடத்தின் அமைப்பும், சுவர்களின் நிலைமையும் அதனுடைய பழமையை நினைவூட்டின. எங்கே பார்த்தாலும் ஒட்டடையும் , தூசியும் படிந்திருந்தபடியால் வெகு காலமாக அதில் யாரும் குடியிருக்கவில்லையென்று தெரிய வந்தது. பளிச்சென்று பிரகாசமாயிருந்த இடமோ, வஸ்துவோ அந்தப் பங்களாவில் கிடையாது. அறைகளில் பூஞ்சக்காளம் பூத்திருந்தன. எப்படிப்பட்ட குதூகல புருஷனையும் அந்தப் பங்களாவிற்குள் கொண்டு விட்டால், அவன் உற்சாகம் குன்றிப் போய் மயான காண்டம் நடிப்பதற்குச் சித்தமாகி விடுவான். அவனை நல்லதங்காளாக நடிப்பதற்குத் தயார் செய்துவிடுவது கூடப் பிரமாதமாகாது. இவ்விஷயத்தில் தோட்டமும் பங்களாவுடன் ஒற்றுமையுணர்ச்சி கொண்டிருந்தது. பூ என்ற நாமதேயம் அந்தத் தோட்டத்தில் கிடையாது. விசாலமாகப் படர்ந்த மாமரங்களும், உயரமாய் வளர்ந்த தென்னை, கமுகு மரங்களும் நிறைய இருந்தன. மாமரங்களின் அடியில் வெகுகாலமாக உதிர்ந்த இலைகள் அப்படியே கிடந்து மடிந்து நல்ல உரமாகியிருந்தன. தென்னை மரங்களிலும், கமுகு மரங்களிலும் பழைய காலத்துக் காய்ந்த கட்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு தென்னை மரத்தில் இடி விழுந்து மட்டைகள் எல்லாம் எரிந்து போய்விட, மரம் மட்டும் மொட்டையாய் நின்றது. அடர்த்தியான மரநிழலில் ஒரு பெரிய கிணறு இருந்தது. அதில் ஜலம் இழுப்பதற்கு வசதி எதுவும் காணோம். பக்கத்திலிருந்த ஒரு தொட்டியில் கன்னங்கறேலென்று கொஞ்சம் ஜலம் தேங்கியிருந்தது. அது வெகு காலத்துத் தண்ணீராயிருக்க வேண்டுமென்பதில் சந்தேகமில்லை. எனவே, அதைப் புண்ணிய தீர்த்தம் என்று கூடச் சொல்லலாம். பொதுவாக, அந்தப் பங்களா நமது ஹிந்து சமூகத்துக்கும், ஸநாதன தர்மத்துக்கும் சிறந்த உதாரணமாயிருப்பதாக எனக்குத் தோன்றிற்று. பலமான அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டது; விசாலமானது; பழமையானது; அழகு பொருந்தியது. கொஞ்சம் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்; தரைக்குப் புதிய தளவரிசை போட வேண்டும். சுவர்களின் உளுத்துப் போன மேற்பூச்சைச் சுரண்டிவிட்டு சிமிண்டு பூசி வெள்ளை அடிக்கவேண்டும்; தோட்டத்தையும் சுத்தம் செய்து சில புதிய புஷ்பச் செடிகளை வைத்து விட வேண்டும். இதெல்லாம் செய்துவிட்டால் வீடு எவ்வளவு நன்றாய் ஆகிவிடும்! இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில் அங்கே தோட்டக்காரன் வந்தான். அவனும் அந்த பங்களாவுக்குப் பொருத்தமானவன் தான். ரோமம் நரைத்து, முகம் சுருங்கி, உடம்பு தளர்ந்தவன். “இந்த வீட்டுக்கு என்னப்பா வாடகை?” என்று கேட்டேன். “அறுபது ரூபாயுங்க” என்றான். இவ்வளவு பெரிய மாளிகைக்கு 60 ரூபாய்தானா வாடகை என்று ஆச்சரியப்பட்டேன். “நீங்க குடித்தனம் வரப்போகிறீர்களா?” என்று கேட்டான். “ஆமாம்; வரலாமென்றுதான் பார்க்கிறேன்.” “இப்படித்தான் ரொம்பப் பேர் சொல்லிவிட்டுப் போறாங்க” என்றான் கிழவன். அவன் சொன்னது வாஸ்தவம் என்பதற்குப் பங்களாவே சாட்சி சொல்லிற்று. “ஏன் ஒருவரும் வருவதில்லை?” என்று கேட்டேன். “அதென்னவோ எனக்குத் தெரியாது. குடித்தனம் வருகிறதாயிருந்தால் சொல்லுங்க. இன்னும் அஞ்சு ரூபாய் குறைச்சுக்கூடக் கொடுப்பாங்க” என்றான். அந்த வீட்டைப் பற்றிய மர்மம் ஏதோ இருக்க வேண்டுமென்று உடனே எனக்குத் தோன்றிப் போயிற்று. பக்கத்தில் சாலை ஓரத்தில் ஒரு சோடா, வெற்றிலை பாக்குக் கடை இருந்தது. அங்கே சென்று நானும் என் கட்டுரை நண்பரும் இரண்டு சோடா சாப்பிட்டோ ம். கடைக்காரனுக்குச் சுமார் 30-35 வயதிருக்கலாம். நாங்கள் போனபோது அவன் ஆரணி குப்புசாமி முதலியாரின் ரெயினால்ட்ஸ் நாவல் மொழிபெயர்ப்பு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான். எங்களிடம் சில்லறை வாங்கிக் கொண்டதும் மறுபடியும் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினான். கொஞ்சம் விஷயம் தெரிந்த மனிதன் இவன் என்று, எண்ணி, வீட்டைப் பற்றி விசாரிக்கலாமென நினைத்தேன். “பக்கத்துப் பங்களாவுக்கு ஏன் ஒருவரும் குடித்தனம் வருவதில்லை. உனக்குத் தெரியுமா?” என்று கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டேன். கடைக்காரன் ஒரு நிமிஷம் யோசனை செய்வதுபோல் இருந்தான். பிறகு, “நமக்கென்னத்துக்குங்க அந்த வம்பெல்லாம்? இரண்டு பீடா வாங்கிக் கொள்ளுங்க, ஸார்!” என்றான். அப்படியே நாங்கள் வாங்கிப் போட்டுக் கொண்டோ ம். பின்னர், “இல்லையப்பா! இந்த வீட்டுக்குக் குடி வரலாமா என்று யோசிக்கிறோம். ஆனால் ரொம்ப நாளாய்ப் பூட்டிக் கிடக்கிறதே, ஏதாவது விசேஷமிருக்குமோ வென்று சந்தேகமாயிருக்கிறது. அதுதான் உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டது” என்றேன். “விசேஷமில்லாமல் நாற்பது வருஷமாய் ஒரு வீடு பூட்டிக் கிடக்குமா?” என்றான் கடைக்காரன். “அந்த விசேஷத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றுதான் உன்னைக் கேட்கிறது.” “அப்படியானால் இந்த பெஞ்சில் உட்காருங்கள், சொல்கிறேன். பெரிய கதை” என்றான் கடைக்காரன். நாங்கள் உட்கார்ந்தோம். கடைக்காரன் கதை சொல்லி முடிப்பதற்குள் இரண்டு கலர், இரண்டணா பெப்பர்மிண்டு, முக்காலணா வெற்றிலை பாக்கு இவ்வளவும் தீர்த்துவிட்டோ ம். அவன் சொன்னதில் வீண் வளர்த்தல்களை விட்டுவிட்டு விஷயத்தை மட்டும் இங்கே சொல்கிறேன்: 2 துபாஷ் வரதராஜ முதலியார் என்று ஒருவர் இருந்தார். அவருக்குப் பிதிரார்ஜிதச் சொத்தோடு சுயார்ஜிதச் சொத்தும் ஏராளமாயிருந்தது. வெகுகாலம் அவருக்குச் சந்தானம் இல்லாமலிருந்து கடைசியாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருடைய மனைவிக்கு க்ஷயரோகத்தின் அறிகுறிகள் இருப்பதாகவும், பல்லாவரத்தில் குடியிருந்தால் நல்லதென்றும் வைத்தியர்கள் சொன்னதன்மேல் முதலியார் இங்கே குடி வந்தார். அச்சமயந்தான் இங்கேயே நிரந்தரமாய் வசிக்கலாமென்ற எண்ணத்துடன் இந்தப் பங்களாவை எண்பதினாயிரம் ரூபாய் செலவு செய்து கட்டினார். ஆனால் பங்களா கட்டி முடிவதற்குள் அவருடைய மனைவி காலமானார். பாவி மனிதர் அதற்குப் பிறகு இளைய தாரமாக ஒருத்தியை மணந்தார். அவளுடனும், மூத்த தாரத்தின் பெண் செங்கமலத்துடனும் புது வீட்டில் குடித்தனம் செய்யலானார். ஆனால் ஆரம்பத்திலிருந்தே அவருடைய இளைய தாரத்துக்குச் செங்கமலத்தின் மேல் அசூயையும் துவேஷமும் வளர்ந்து வரத் தொடங்கின. தான் இந்தக் கிழவனைக் கட்டிக் கொள்ள வேண்டி வந்ததில் ஏற்பட்ட கோபம், ஆத்திரம் எல்லாவற்றையும் அந்த ஏழைப் பெண்ணின் மேல் காட்டலானாள். முதலியாரோ, ஒரு பக்கத்தில் தம் இளம் மனைவியின் மோகாந்தகாரத்தில் மூழ்கியிருந்தார்; மற்றொரு பக்கம் செங்கமலத்தின் மீது தம்முடைய உயிரையே வைத்திருந்தார். இவர்கள் இரண்டு பேருக்கும் பரஸ்பர நேசம் உண்டுபண்ண அவர் செய்த முயற்சியெல்லாம் வீணாயிற்று. கடைசியாக, செங்கமலத்துக்கு வயது பன்னிரண்டானபோது முதலியார் ஒருநாள் அவளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார். அச்சமயம் அவள் தன் சிற்றன்னையின் மேல் ஏதோ புகார் சொன்னாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கற்பகம் தன்னை மீறிக் கோபங் கொண்டவளாய் அச்சமயம் கறிகாய் நறுக்கிக் கொண்டிருந்த கத்தியை எடுத்துக் கொண்டு ஓடி வந்து செங்கமலத்தை ஒரே குத்தாய்க் குத்திவிட்டாள். பாவம்! அந்தப் பெண் உடனே செத்து விழுந்து விட்டது. முதலியார் தவியாய்த் தவித்தார். கொல்லப்பட்டவளோ தம் அருமைப் பெண்; கொலைகாரியோ தம் ஆசை மனைவி. என்ன செய்வார், பாவம்! வெளியில் தெரிந்தால் கற்பகம் தூக்கு மேடைக்குப் போக நேரிடும். பயங்கரமும், துக்கமும் கொஞ்சம் ஆறினபிறகு, அவரும் அவர் மனைவியுமாகச் சேர்ந்து கொல்லையில் ஒரு பள்ளம் தோண்டி அதில் பிரேதத்தைப் புதைத்தார்கள். செங்கமலம் அவளுடைய மாமா வீட்டுக்குப் போயிருப்பதாக முதலியார் அக்கம் பக்கத்தாருக்குச் சொல்லிவிட்டார். ஏதோ சந்தேகப்பட்டு விசாரித்த போலீஸ்காரர்களுக்கு ஏராளமான பணங்கொடுத்து அமுக்கிவிட்டார். அப்புறம் முதலியார் அதிக காலம் உயிர் வாழவில்லை. “செங்கமலம்! செங்கமலம்!” என்று புலம்பிக் கொண்டேயிருந்து பிராணனை விட்டார். அவருடைய ஆவி அந்தப் பங்களாவின் தோட்டத்தில் உலாவிக் கொண்டேயிருக்கிறது. இரவு நேரங்களில், “செங்கமலம்! செங்கமலம்!” என்று பரிதாபமான குரலில் கூப்பிடும் சத்தம் அந்தத் தோட்டத்தில் அடிக்கடி கேட்பதுண்டு. கடைக்காரன் கதையை முடித்ததும், “ஆமாம்! இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன். கடைக்காரன் புன்னகை புரிந்தான். “உங்களுக்கு நம்பிக்கையில்லையல்லவா? அதனால்தான் நான் ஒருவருக்கும் சொல்வதில்லை. நீங்கள் கேட்டபடியால் சொன்னேன். போகட்டும்; இன்னும் ஒரு கலர் சாப்பிடுகிறீர்களா?” என்றான். அவனைத் தூண்டித் துரு எடுத்து மறுபடியும் கேட்டதில், “நீங்கள் ஒரு தோட்டக்காரக் கிழவனைப் பார்த்தீர்கள் அல்லவா? அவன் தான் செங்கமலத்தின் பிரேதத்தை உடனிருந்து புதைத்தவன். அவன் சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது. இப்படியே அவன் இன்னும் இரண்டொருவரிடம் சொல்லியிருக்கிறான் போல் இருக்கிறது. எப்படியோ விஷயம் ஒருவாறு பரவிவிட்டது. அதனால் தான் ஒருவரும் அந்தப் பங்களாவுக்குக் குடிவருவதில்லை” என்றான். இது போன்ற கதைகள் இதற்கு முன் நான் எத்தனையோ கேட்டிருக்கிறேன். பட்டணங்களில் “கொலை நடந்த வீடு” என்றும், “பேய் வாழும் வீடு” என்றும் பல வீடுகளுக்கு எப்படியோ பெயர் வந்து விடுகிறது. அந்த வீடுகள் மலிவான வாடகைக்குக் கிடைப்பது வழக்கம். நான் கூட ஒரு முறை 50 ரூபாய் வாடகை வரக்கூடிய அத்தகைய வீடு ஒன்றில் 16 ரூபாய் வாடகை கொடுத்துவிட்டு இருந்திருக்கிறேன். அந்த வீட்டில் பேய் இருந்திருந்தால் அது சுத்தப் பயங்கொள்ளிப் பேயாயிருந்திருக்க வேண்டும்; என்னிடம் அது பேச்சு மூச்சுக் காட்டவில்லை. ஆனால் இந்தச் சோடாக் கடைக்காரனின் கதை என்னவோ ஒரு மாதிரி என் மனதில் பதிந்து விட்டது. அது முழுதும் பொய் என்று நினைக்க முடியவில்லை. அந்தப் பங்களாவின் தோற்றம், கதை ஒரு வேளை நிஜமாயிருக்கலாமோ என்று கருதுவதற்கு இடங் கொடுத்தது. அந்த வீட்டை என் சினேகிதருக்குப் பார்ப்பதில் பயனில்லையென்று தீர்மானித்து வேறு ஒரு சின்ன வீடு நாற்பது ரூபாய் வாடகையில் அமர்த்திவிட்டுத் திரும்பிச் சென்றோம். எனினும், அந்தப் பாழடைந்த பங்களாவின் ஞாபகம் மட்டும் என் மனத்திலிருந்து போகவில்லை. சுருங்கச் சொன்னால், அந்தப் பங்களாவில் நான் குடியேறுவதற்குப் பதில், பங்களா என் உள்ளத்தில் குடியேறிவிட்டது. ஏதாவது தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கையில், திடீரென்று கற்பகம் கையில் சூரிக்கத்தியுடன் ஓடி வந்து தந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் செங்கமலத்தைக் குத்தப்போகும் காட்சி என் மனக்கண் முன் தோன்றும். அப்புறம் வேலை ஒன்றும் கொஞ்ச நேரத்துக்கு ஓடாது. இதனுடைய நிஜம், பொய்யைக் கண்டு பிடித்து நிச்சயம் பெறாவிட்டால், என் வாழ்க்கையே துன்பமயமாகிவிடுமென்று பயப்படலானேன். 3 பல்லாவரத்தில் நான் அமர்த்தியிருந்த ஜாகைக்கு என் நண்பர் குடி வந்து சில தினங்களுக்குப் பிறகு அவரை ஒரு முறை பார்த்து வருவதற்குச் சென்றேன். க்ஷயரோகம், கொசுக்கடி, தமிழ் நாடகமேடை, முதல் நாள் நடந்த கோர பஸ் விபத்து முதலிய உற்சாகமான விஷயங்களைப் பற்றிப் பேசியான பிறகு, என் நண்பர், “அதெல்லாம் இருக்கட்டும்; பேய்களைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று பரபரப்புடன் கேட்டார். “பேய்களைப் பற்றியா?” என்று, என் காதுகளை நம்பமுடியாமல் திரும்பக் கேட்டேன். “ஆமாம்; பேய்களைப் பற்றித்தான்.” “பேய்களைப் பற்றி என் அபிப்பிராயம், அவை சுத்தப் பேய்கள் என்பதே. இருக்கட்டும்; என்னைப் பற்றிப் பேய்களின் அபிப்பிராயம் என்ன என்று நீங்கள் சொல்ல முடியுமா?” என்று கேட்டேன். “ஹா ஹா ஹா! நீங்கள் இப்படித்தான் ஏதாவது சொல்வீர்களென்று தெரியும்; பேய்களுக்கு உங்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் என்று தெரிய வேண்டுமானால் இந்தச் சாலையில் உள்ள பத்தாம் நம்பர் பங்களாவுக்குப் பாதி ராத்திரியில் போய் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்றார். உடனே எனக்குத் துணுக்கென்றது; மாற்றாந் தாயால் குத்திக் கொல்லப்பட்டுக் கோர மரணம் அடைந்த செங்கமலம் என் மனக்கண்முன் வந்தாள். அந்தப் பங்களாவைத்தான் இவர் குறிப்பிடுகிறார் என்று அறிந்து, விவரமாகச் சொல்லும்படி கேட்டேன். துபாஷ் வரதராஜ முதலியாரின் கதையை நான் கேட்டிருந்தபடியே அவர் சொல்லி வந்தார். ஆனால் முடிவு மட்டும் வித்தியாசமாயிருந்தது. அந்த வித்தியாசமான முடிவு என் நெஞ்சு பதைபதைக்கும்படி செய்தது. அவ்விவரம் பின் வருமாறு: பிஞ்சிலே பழுத்தது என்பார்களே, அந்த மாதிரியான பெண் செங்கமலம். தன்னுடைய தாயார் எஜமானியாயிருக்க வேண்டிய வீட்டில் வேறோர் அயலாள் வந்து அதிகாரம் வகிப்பது அவளுக்குப் பிடிக்க வில்லை. நாளுக்கு நாள் அவளுடைய குரோதம் வளர்ந்து வந்தது. முதலியாரின் இளைய மனைவி, செங்கமலத்தின் மீது எவ்வளவோ பிரியம் வைத்து ஆசையுடன் நடத்தியும் பிரயோஜனமில்லாமல் போயிற்று. ஓயாமல் அழுவாள்; எரிந்து விழுவாள்; சண்டை பிடிப்பாள். “என் அம்மாவைக் கொன்றவள் நீ தானே?” என்பாள்; “என்னையும் விஷங் கொடுத்துக் கொன்றுவிடு; உன் மனம் குளிர்ந்து விடும்” என்பாள். கற்பகம் ஒருநாள் இதையெல்லாம் சகிக்க முடியாமல், முதலியாரிடம் சொல்லித் துக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். முதலியார், “அதற்கென்ன செய்யலாம்? அவள் தாயாரைக் கொண்டிருக்கிறாள்; இன்னும் கொஞ்ச நாளில் கலியாணம் பண்ணி அனுப்பிவிடலாம். அதுவரையில் பொறுத்துக் கொண்டிரு” என்று ஆறுதல் கூறினார். இதையெல்லாம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த செங்கமலம் திடீரென்று அவர்கள் முன் வந்து, “நான் இருப்பதுதானே உங்களுக்குக் கஷ்டமாயிருக்கிறது? இதோ என் தாயார் என்னைக் கூப்பிடுகிறாள், போகிறேன்” என்று கூறி முதலியாரும் கற்பகமும் பிரமித்து நின்று கொண்டிருக்க இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை சட்டென்று எடுத்து மார்பில் குத்திக் கொண்டு உயிரற்ற பிணமாய்க் கீழே விழுந்தாள். முதலியார் தோட்டக்காரனுடைய உதவியுடன் பிரேதத்தை ஒரு பெட்டியில் போட்டு மூடி, கொல்லையில் குழி தோண்டிப் புதைத்தார். பிறகு, அந்த வீட்டைக் காலி செய்துவிட்டுப் பட்டணத்துக்குக் குடிபோய்விட்டார். அதுமுதல் தினந்தோரும் இராத்திரியில் முதலியாருடைய மூத்த சம்சாரத்தின் ஆவி பங்களா வாசல் முகப்பில் வந்து நின்று “செங்கமலம்! செங்கமலம்!” என்று கூப்பிடுகிறதாம். “இதோ வந்துவிட்டேன். அம்மா!” என்று சொல்லிக் கொண்டு செங்கமலத்தின் ஆவி வெளியே வருகிறதாம். இரண்டு ஆவிகளும் இராத்திரியெல்லாம் பங்களாவின் தோட்டத்தைச் சுற்றுகின்றனவாம். இந்த வரலாற்றைக் கேட்டதும் எனக்கு என்ன நினைப்பதென்று தெரியவில்லை. அந்தக் குழந்தை செங்கமலத்தின் பரிதாப கதிக்காக நான் காட்டிய அநுதாபம், பட்ட துயரம் எல்லாம் வீண்போல் இருக்கிறதே! உண்மையில் கற்பகம் அல்லவோ நமது அநுதாபத்துக்கெல்லாம் உரியவளாகிறாள்? எது உண்மை? எது பொய்? என் நண்பரைப் பார்த்து, “ஆமாம், நீங்கள் இவ்வூருக்கு வந்து பத்து நாள் தானே ஆயிற்று? அதற்குள் இந்த விவரமெல்லாம் எப்படித் தெரிந்தது?” என்று கேட்டேன். “அந்தப் பங்களாவுக்குப் பக்கத்தில் ஒரு சோடாக்கடை இருக்கிறது. அந்தக் கடைக்காரன் சொன்னான்” என்று என் சிநேகிதர் கூறியதும், எனக்கு ஏற்பட்ட எரிச்சலுக்கு அளவேயில்லை. “அடே! என்னவெல்லாம் கயிறு திரிக்கிறான் அவன்! மறுபடியும் அவனைக் கண்டு இதன் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் விடுவதில்லை” என்று தீர்மானித்தேன். 4 “என்ன, அப்பா! சௌக்கியமா?” என்று கேட்டதும், கடைக்காரன் முன் போலவே கையிலிருந்த நாவலை மூடிவிட்டு, “வாருங்க, ஸ்வாமி! ரொம்ப நாளாச்சே பார்த்து, நம்ம மேலே தயவே இல்லையே!” என்றான். பிறகு, “உட்காருங்க; பேஷான ரஸ்தாளி வாழைப்பழம் வந்திருக்குங்க; ரெண்டு பழம் சாப்பிடுங்க” என்று கூறினான். நானும் என் சிநேகிதரும் பெஞ்சியில் உட்கார்ந்து ரஸ்தாளிப் பழங்களைக் கையில் வாங்கிக் கொண்டோம். பிறகு நான் “ஏன், அப்பா! நீ எங்களுக்குச் சொன்ன கதையெல்லாம் நீயே கற்பனை செய்ததா, அல்லது கையில் உள்ள நாவலில் இருக்கிறதா?” என்று கேட்டேன். “அதென்ன ஸார் அப்படிச் சொல்கிறீர்கள்? பார்த்தீர்களா, இதற்குத்தான் நான் சொல்லமாட்டேன் என்கிறது” என்று கூறி தனக்கு ஏதோ பெரிய அநீதி நாங்கள் செய்து விட்ட தோரணையில் பரிதாபமாய்ப் பார்த்தான். “போகட்டும்; செங்கமலம் கொல்லப்பட்டாளா, தற்கொலை செய்து கொண்டாளா? அதை மட்டும் நிஜமாய்ச் சொல்லிவிடு” என்றேன். “ஸார்! நீங்கள் ஏன் என் பேரில் அவநம்பிக்கைப் படுகிறீர்களென்று எனக்குத் தெரியும். உங்களிடம் ஒரு விதமாயும், இவரிடம் வேறு விதமாயும் நான் சொன்னேன்; வாஸ்தவந்தான். நான் சொன்ன இரண்டும் நிஜமில்லை தான்; ஆனால் ஏன் அப்படி சொன்னேன் தெரியுமா? நிஜமாக நடந்ததைச் சொன்னால் நீங்கள் ஒருநாளும் நம்ப மாட்டீர்கள். அப்படி ஒருவரும் நம்பமுடியாத விஷயத்தைச் சொல்லி என்ன பிரயோஜனம்? வீண்வாய்ச் சேதந்தானே?” என்றான். “அந்த அசல் நிஜத்தையுந்தான் சொல்லிவிடேன்; கேட்டு வைக்கலாம்” என்றேன். “ஆஹா! கேட்பதாயிருந்தால், பேஷாய்ச் சொல்கிறேன்; எனக்கென்ன நஷ்டம்? - அடே பையா, வீராசாமி! இரண்டு கிளாஸில் ஐஸ் போடடா!” என்று அதிகாரமாய்க் கூவினான் கடைக்காரன். கடையிலே பையன் யாரையும் காணாதிருக்கவே, “யாரை இவன் உத்தரவிடுகிறான்?” என்று ஆச்சரியப்பட்டேன். கடைக்காரன் தானே ஐஸை அலம்பிப் போட்டான். என்னைப் புன்னகையுடன் பார்த்து, “இந்தக் கடையில் நான் தான் எஜமான்; பையனும் நான் தான்!” என்றான். இவன் பெரிய நாவலாசிரியன் மட்டுமல்ல, நகைச்சுவை ஆசிரியனுங்கூட என்று எண்ணிக் கொண்டேன். அவன் இம்முறை சொன்ன விவரம் வருமாறு: வரதராஜ முதலியார் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டவரையில் முன் சொன்னதெல்லாம் வாஸ்தவந்தான். அதற்குப் பிறகுதான் சம்பவங்கள் மாறுபடுகின்றன. வீட்டிற்கு மாற்றாந்தாய் வந்ததிலிருந்து செங்கமலத்தின் சுபாவம் மாறுதலடைந்து வந்தது. விளையாட்டு, குதூகலம் எல்லாம் போய், ஓயாமல் எதைப்பற்றியோ சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். தோட்டக்காரனிடம் ஒரு நாள் அவள் பேசியதிலிருந்து உண்மை தெரிய வந்தது. தினந்தோறும் இரவில் தூங்கும்போது இறந்து போன அவளுடைய தாயார் பங்களா வாசலில் வந்து, “செங்கமலம்! செங்கமலம்!” என்று கூப்பிடுவது போலவும், தான் அவளைக் காண்பதற்குச் சென்றதும் தன்னைக் கட்டி அணைத்துக் கொண்டு, “என் கண்ணே! பழிவாங்கு! பழிவாங்கு!” என்று சொல்லிவிட்டு மறைந்து விடுவது போலவும் கனவு கண்டு கொண்டிருந்தாள். கடைசியாக ஒருநாள் இரவு கனவில் செங்கமலத்தின் தாய் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று வெகு நாளாய்ப் பூட்டிக் கிடந்த ஓர் அலமாரியைத் திறந்து, அதற்குள்ளிருந்த சூரிக் கத்தியைச் சுட்டிக் காட்டிவிட்டு மறைந்தாளாம். மறுநாள் செங்கமலம் அந்த அலமாரியைத் திறந்து பார்த்தபோது அதற்குள் ஒரு சூரிக் கத்தி வாஸ்தவமாகவே இருந்ததாம். சில தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் முதலியாரிடம் கற்பகம் தன்னுடைய குறைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். செங்கமலத்தை ஏதோ பிசாசு பிடித்திருக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் இப்படி அவள் படுத்த மாட்டாளென்றும் சொல்ல, முதலியார், “என்ன செய்யலாம்? அவள் தாயார் உயிரோடிருக்கும்போதே பிசாசாய்த்தான் இருந்தாள். இப்போது அசல் பிசாசாய் வந்து பெண்ணைப் பிடித்திருக்கிறாள் போல் இருக்கிறது” என்றாராம். இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த செங்கமலம் ஓட்டமாய் ஓடி, அலமாரியில் இருந்த சூரிக் கத்தியை மறைத்து எடுத்துக் கொண்டு வந்து, “ஆமாம், நானும் பிசாசுதான்! என் அம்மாவும் பிசாசுதான்!” என்று கூவிக் கொண்டே சட்டென்று சூரியை எடுத்து கற்பகத்தின் மார்பில் குத்தி விட்டாள். “அடி பாவி! சண்டாளி! என்ன செய்துவிட்டாய்?” என்று முதலியார் கதறிக் கொண்டு எழுந்திருப்பதற்குள் செங்கமலம் அதே சூரிக் கத்தியை தன்னுடைய மார்பிலும் குத்திக் கொண்டு பிணமாய் விழுந்தாள். தோட்டக்காரனுடைய ஒத்தாசையினால் அவர்கள் இரண்டு பேருடைய உடல்களையும் தோட்டத்தில் புதைத்த முதலியார் தாமும் சில தினங்களுக்கெல்லாம் சித்தப் பிரமை பிடித்தவராய்த் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்தார். அதுமுதல் இரவு நேரங்களில் அந்த நாலு பேருடைய ஆவிகளும் அந்தப் பங்களாத் தோட்டத்தில் அலைந்து கொண்டிருக்கின்றன. தினந்தோறும் இருட்டிக் கொஞ்ச நேரத்திற்கெல்லாம், முதலியாருடைய மூத்த மனைவியின் ஆவி பங்களா வாசலில் வந்து நின்று, “செங்கமலம்! செங்கமலம்!” என்று கூப்பிடுகிறது; உடனே செங்கமலத்தின் ஆவி, “அம்மா! இதோ வந்து விட்டேன்!” என்று கூவிக் கொண்டு ஓடி வருகிறது. பிறகு இரண்டு ஆவிகளும், “பழி வாங்கு! பழி வாங்கு!” என்று அலறிக் கொண்டு தோட்டத்தில் பாய்கின்றன; அங்கே முதலியாருடைய ஆவியும் அவருடைய இளைய மனைவியின் ஆவியும், “அடி பாவி! சண்டாளி! பிசாசே!” என்று கதறிக் கொண்டு கூத்தாடுகின்றன. இவ்வாறு நாலு ஆவிகளும் இரவு முழுதும் அந்த தோட்டத்தில் சுற்றிச் சுற்றி அலைந்து கொண்டிருக்கின்றன. சோடாக் கடைக்காரன் மேற்படி கதையைச் சொல்லி முடித்த போது எங்கள் தேகத்தில் இருந்த ரோமங்களெல்லாம் குத்திட்டு நின்றன. சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்து விட்டபடியால் பயங்கரம் அதிகமாயிருந்தது. “இவன் சொல்வது பெரும் புளுகு; இப்படியெல்லாம் நிஜமாக நடந்திருக்க முடியாது” என்று என்னுடைய அறிவு அடிக்கடி இடித்துக் கூறி வந்தும், பிரயோஜனமில்லை. அதிலும், அந்தப் பங்களாவின் தோற்றம் மனத்தின் முன் வந்தபோது, “ஒருவேளை நிஜமாய்க் கூட இருக்கலாமோ?” என்று தோன்றிற்று. ஆனால், அவன் கூறிய மூன்று விவரங்களில் எது நிஜம்? எது பொய்? கற்பகம் செங்கமலத்தைக் கொன்றாளா? அல்லது செங்கமலந்தான் கற்பகத்தைக் கொன்றாளா? செங்கமலமும் முதலியாரும் தற்கொலை செய்து கொண்டது உண்மையா? - இப்படியாக என்னுடைய மனத்தைக் குழப்பிவிடும் சக்தி ஒரு மனிதனுக்கு இருக்கும் என்று நான் நினைத்ததேயில்லை. பல்லாவரவாசிகளில் இன்னும் சிலரை மறுநாள் விசாரித்தேன். அவர்கள் எல்லாரும், “வெகு காலமாய் அந்தப் பங்களா பூட்டிக்கிடக்கிறது. ஒருவரும் குடி வருவதில்லை. அதில் ஏதோ கொலை நடந்ததென்றும், பேய் குடி கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்” என்று பொதுப் படையாகக் கூறினார்களே தவிர, ஒருவராவது திட்டமான விவரம் தெரிவிக்கவில்லை. என் மனம் அமைதி இழந்தது. அபாரமாய்க் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. இதனுடைய நிஜம், பொய்யைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்று எண்ணிய போதெல்லாம் பற்களை நறநறவென்ரு கடிக்கத் தொடங்கினேன். தூக்கத்தில் என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள் கண்டு விழித்துக் கொள்வேன். உடம்பெல்லாம் வியர்வையினால் நனைந்திருக்கும். எனக்குத்தான் ஏதோ பேய்களின் சேஷ்டை ஏற்பட்டு விட்டதென்பதாக என்னுடைய வீட்டார் பயப்படலாயினர். 5 இரண்டு மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் மாலை ஏழு மணிக்கு என் நண்பர் வீட்டுக்கு மறுபடியும் போனேன். அச்சமயம் வீடு பூட்டியிருந்தது. அவர் பட்டணத்துக்குப் போயிருக்கிறாரென்றும் சீக்கிரம் வந்து விடுவாரென்றும் வேலைக்காரன் சொன்னான். சற்று நேரம் வாசலிலேயே நின்று கொண்டிருந்தேன். பிறகு பாழடைந்த பங்களாவின் ஞாபகம் வந்தது. இரவு நேரத்தில் அதைப் பார்த்துவிட வேண்டுமென்னும் அவா ஏற்பட்டது. ஒரு பக்கம் பயமாயிருந்தாலும், மற்றொரு பக்கம் அந்த அவாவை அடக்க முடியவில்லை. ஆகவே, அங்கிருந்து கிளம்பிச் சாலையோடு போனேன். பாழடைந்த பங்களாவை அடைந்ததும் சாலையில் நின்றபடி எட்டிப் பார்த்தேன். பங்களாவின் வெளித் தாழ்வாரத்தில் மின்சார விளக்கு பளிச்சென்று எரிந்து கொண்டிருந்ததைக் கண்டதும் எனக்கு உண்டான வியப்பைச் சொல்லி முடியாது. வீட்டினுள்ளிருந்தும் மின்சார விளக்கு வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. கடைசியில் யாரோ துணிந்து குடித்தனம் வந்துவிட்டார்கள் போல் இருக்கிறது! அத்தகைய தீரர்கள் யார் என்று தெரிந்து கொள்ள எனக்குப் பேராவல் உண்டாயிற்று. ஒரு வேளை அவர்கள் மூலமாய் இந்தப் பங்களாவைப் பற்றிய உண்மை வெளிப்பட்டாலும் வெளிப்படலாமல்லவா? எனவே, திறந்திருந்த மதில் கேட்டின் வழியாக நுழைந்தேன். தோட்டம் நன்றாய்ச் சுத்தம் செய்யப் பட்டிருந்தது. புதிய பூந்தொட்டிகள் கூடக் கொண்டு வைத்திருந்தார்கள். நலசம்பங்கியின் வாசனை கம்மென்று வந்து கொண்டிருந்தது. பங்களாவின் வாசற்புறத்தை உற்று நோக்கினேன். புதிதாக வெள்ளையடித்துப் பளிச்சென்று இருந்தது. சாலைக்கும் பங்களா வாசலுக்கும் நடு மத்தியில் சென்று கொண்டிருந்தபோது, சாலை கேட்டில் ஒரு மோட்டார் வந்து நின்றது போல் சப்தம் கேட்டது. அதே நிமிஷத்தில் பங்களாவின் முகப்புத் தாழ்வாரத்தில் ஒரு ஸ்திரீயின் உருவம் தென்பட்டது. அவள், “செங்கமலம்! செங்கமலம்!” என்று கூவினாள். என் உடம்பு நடுங்கிற்று. அடுத்த கணத்தில் ஒரு சிறு பெண் பங்களாவின் உள்ளிருந்து, “ஏன் அம்மா!” என்று கேட்டுக் கொண்டு வெளியே வந்தாள். அச்சமயம் மூர்ச்சை போய் விழாமல் நான் எப்படித் தைரியமாய் நின்றேனோ, பகவானுக்குத்தான் தெரியும். நான் நின்ற இடத்திலேயே சற்று நேரம் திகைத்து நின்றிருக்க வேண்டும். பின்னால் காலடிச் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தேன். அங்கே, தனலக்ஷ்மி பாங்கி ஏஜெண்ட் முருகேச முதலியாரைக் கண்டதும் எனக்கு எப்படி இருந்திருக்குமென நினைக்கிறீர்கள்? “ஹலோ! நீங்களா! யாராவது திருடனோ என்றல்லவா பயந்து போனேன்?” என்றார் முருகேச முதலியார். இவரை எனக்கு மூன்று நான்கு வருஷத்துப் பழக்கம். சங்கீதக் கச்சேரி ஒவ்வொன்றிலும் இவர் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வார். “அது என்ன ராகம்? இது என்ன கீர்த்தனை?” என்று நச்சரித்துப் பிராணனை எடுத்து விடுவார். ஆனாலும் ரொம்ப நல்ல மனுஷர்; ரஸிகர். ஆகையால் அவரிடம் ஒரு மாதிரி எனக்குச் சிநேகம் என்றே சொல்லலாம். முதலியார் என் கையை விளையாட்டாகப் பிடித்ததும், என் கை நடுங்குவதை அறிந்திருக்க வேண்டும். “என்ன ஸார், உங்களுக்கு உடம்பு? எங்கே வந்தீர்கள் ஸார் இந்த நேரத்தில்?” என்று மளமளவென்று கேட்க ஆரம்பித்து விட்டார். “போய் உட்காருவோம்; எல்லாம் சொல்கிறேன்” என்றேன். நாங்கள் பங்களா வாசலை அடைந்ததும் அங்கே நின்றிருந்த ஸ்திரீ உள்ளே போய்விட்டாள். சிறு பெண் மட்டும் முதலியாரைக் கட்டிக் கொண்டு, “அப்பா! ஏன் இவ்வளவு நேரம் இன்று?” என்று கேட்டாள். நாங்கள் உட்கார்ந்து சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர், அந்தப் பெண்ணும் ஸ்திரீயும் நான் ஊகித்தபடியே முதலியாரின் பெண்ணும் மனைவியுந்தான் என்று தெரிந்து கொண்டேன். பிறகு, அந்தப் பங்களாவைப் பற்றி நான் கேள்விப்பட்ட வரலாறுகளையெல்லாம் கூறி, அன்று பங்களாவில் நுழைய நேர்ந்த காரணத்தையும் தெரிவித்தேன். முதலியார் சிரித்த சிரிப்பில் அந்தப் பழைய பங்களா இடிந்து விழுந்து விடுமோ என்று தோன்றிற்று. சிரிப்பு அடங்கிய பிறகு கூறியதாவது: “நீங்கள் கேட்ட கதையில் உள்ள கதாபாத்திரங்கள் எல்லாம் நிஜமானவர்கள்தான்; ஆனால் சம்பவங்கள் தான் உண்மையல்ல. வரதராஜ முதலியார் என்பவர் என்னுடைய பாட்டனார். என்னுடைய தாயார் பெயர் செங்கமலம், அவளுடைய பெயரைத்தான் என் பெண்ணுக்கு இட்டிருக்கிறேன். என் தாயாருக்கு மூன்று வயதிருக்கும் போதே என்னுடைய பாட்டி இறந்து விட்டாள். அவள் சாகும் போது, முதலியார் தனியாயிருந்தால் தம் பெண்ணைச் சரியாய் வளர்க்க முடியாதென்றும், ஆகையால் தன்னுடைய தங்கையையே மறுமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்திவிட்டுச் சென்றாள். முதலியார் அப்படியே செய்தார். என் தாயார் தன் சிற்றன்னையைச் சொந்தத் தாய் என்றே நினைத்து வந்தாள். அவ்வளவு அருமையாக அந்த அம்மணியும் அவளை வளர்த்து வந்தாள். ஆனால் துரதிஷ்டவசமாகக் கொஞ்ச காலத்துக்கெல்லாம் அவளும் டைபாய்டு சுரம் வந்து இறந்து போனாள். அதற்கு மேல் தான் என் பாட்டனார் இந்த வீட்டில் இருக்க மனம் கொள்ளாமல் புரசவாக்கத்துக்குக் குடிபோனது. என் தாயாரைக் கலியாணம் பண்ணிக் கொடுத்தவுடனே, அதாவது நான் பிறப்பதற்கு முன்னமேயே அவர் இறந்து போனாராம். அவரும் சரி, சென்ற வருஷத்தில் காலமான என் தாயாரும் சரி, எல்லாரையும் போல் சாதாரணமாய்த்தான் இறந்தார்கள். கொலை, குத்து ஒன்றும் இல்லை. இந்தச் சென்னைப் பட்டணத்திலே தான் மனுஷ்யர்களுடைய பிராணனைக் கொண்டு போவதற்கு எவ்வளவோ வியாதிகள் காத்திருக்கின்றனவே; கொலை, தற்கொலைகூட வேண்டுமா?” இதைக் கேட்டதும், என் இருதயத்தில் ஏற்றி வைத்திருந்த ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்துவிட்டது போல் இருந்தது. அந்தச் சோடாக் கடைக்காரனுடைய விஷம புத்தியை ஒரு புறத்தில் நான் வெறுத்த போதிலும் அவனுடைய கற்பனைத் திறனை வியக்காமல் இருக்கக் கூடவில்லை. "எல்லாம் சரிதான்; ஆனால் சென்ற நாற்பது வருஷ காலமாய் இந்தப் பங்களா பூட்டப்பட்டிருந்தது எதனால்? என்று மிஞ்சியிருந்த என்னுடைய சந்தேகத்தையும் கேட்டேன். “ஓஹோ? அதுவா? என் பாட்டனார் இருந்தவரையில், தம் இரண்டு மனைவிகளைப் பறிகொடுத்த இந்த ஊருக்குத் திரும்பி வருவதில்லையென்று தீர்மானித்திருந்தார். பங்களாவை வாடகைக்கு விடவும் மனமில்லை. அவர் இறந்தவுடன் அவருடைய சொத்துக்களின் மேல் வியாஜ்யம் ஏற்பட்டது. தாயாதிக்காரர்கள் தங்களுக்குச் சேர வேண்டுமென்றார்கள். என் தாயாருக்குத்தான் எல்லாச் சொத்தும் என்று என் தகப்பனார் வழக்காடினார். உயில், பந்தகம், அடமானம், முன் பாத்தியம், பின் பாத்தியம் - இப்படி என்னவெல்லாமோ ’கொளறுபடிபிகேஷன்’கள் கிளம்பின; கேஸ், ஜில்லா கோர்ட்டில் ஏழு வருஷமும், ஹைகோர்ட்டில் ஆறு வருஷமும், பிரிவி கௌன்ஸிலில் மூன்று வருஷமும், மறுபடி ஹைகோர்ட்டில் எட்டு வருஷமும் நடந்து கடைசியாக ஆறு மாதத்துக்கு முன்பு தான் தீர்ப்பு ஆயிற்று. சொத்துக்கள் எல்லாம் என்னைச் சேர்ந்தன. வழக்கு நடந்த வரையில் இந்தப் பங்களாவும் மற்ற சொத்துக்களும் ரிஸீவர் வசம் இருந்தன. வீட்டு வாடகை நஷ்டமாகிறதேயென்று ரிஸீவருக்கு என்ன கவலை? போதாதற்கு, அதற்கு முன்னாலேயே ஊரில் பேய் வதந்தி வேறு கிளம்பிவிட்டது போலிருக்கிறது!” என்று முதலியார் முடித்தார். இவ்வாறு, அந்தப் பங்களாவில் இத்தனை நாளும் குடியிருந்த பேய், ‘வியாஜ்யம்’ என்னும் பேய்தான் என்று அறிந்து கொண்டவனாய், மனநிம்மதியுடன் முதலியாரிடம் உத்தரவு பெற்றுச் சென்றேன். பிரபல நட்சத்திரம் முன்னுரை நுரையும் நொங்குமாகப் போகும் வேகவதி ஆறு ‘வா வா’ என்று என்னை அழைத்துக் கொண்டிருக்கிறது. நதியில் அடைக்கலம் புகுவதற்கு அமாவாசை இரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதுவரையில் காலத்தைப் போக்கியாக வேண்டும். அதுவரை என் அறிவையும் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். வேலையில்லாமல் சும்மா இருந்தால் மனம் அதிகமாகக் குழம்புகிறது. தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பயங்கரமான அந்தகாரம் வந்து சூழ்கிறது. ஆகா! அமைதியான நல்ல தூக்கம் தூங்கி எத்தனை காலமாயிற்று. ஆம், ஏதாவது வேலையில் மனத்தைச் செலுத்த வேண்டுமென்பதற்காகத்தான் என் கதையை எழுதத் தொடங்குகிறேன். ஒரு வருஷத்துக்கு முன்பு நான் ’பிரபல நட்சத்திர’மாயிருந்த காலத்தில் பத்திரிகையில் என்னைப் பற்றி அடிக்கடி ஏதாவது செய்தி பிரசுரித்துக் கொண்டிருப்பார்கள். நான் எந்த தெருவில் எந்த வீட்டில் இருக்கிறேன்; அது சொந்த வீடா, வாடகை வீடா, எத்தனை ரூபாய் வாடகை, தினம் எவ்வளவு தடவை நான் காப்பி சாப்பிடுகிறேன், என்றெல்லாம் கேள்விகளும் பதில்களும் வெளியாகிக் கொண்டிருக்கும். அதெல்லாம் அந்தக் காலம். இப்போது ’பிரபல நட்சத்திர’ப் பதவியிலிருந்து நான் விழுந்து ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. என் உண்மையான வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதில் இப்போது யாருக்காவது சிரத்தை இருக்குமா என்பதை நான் அறியேன். இந்த எனது துயர சரித்திரத்தை, சினிமா நட்சத்திரமாக விரும்பும் எந்தக் குடும்ப ஸ்திரீகளாவது படிக்க நேர்ந்தால், அவர்களுக்கு நிச்சயமாய் இது உபயோகமாயிருக்குமென்று நம்புகிறேன். இதை எழுதி முடிக்கும் வரையில் பகவான் என்னுடைய அறிவை மட்டும் தெளிவாக வைத்திருக்க வேண்டும். 1. கல்யாணம் கதையை எங்கே, எப்படி ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை. நான் பிறந்தது, வளர்ந்தது இதிலெல்லாம் விசேஷம் ஒன்றும் கிடையாது. என் தகப்பனார் வக்கீல். அவருக்கு நான் நாலாவது பெண். என் தமக்கைமார்களுக்கெல்லாம் நல்ல வரன்களைத் தேடிக் கலியாணம் செய்து கொடுத்து விட்டார். அப்போதெல்லாம் அவருக்குச் சம்பாத்தியமும் அதிகமாக வந்து கொண்டிருந்தது. அப்பாவுக்குத் தள்ளாமை அதிகமாக ஆக ஆக வருமானமும் குறைந்தது. வீட்டில் தரித்திரம் தாண்டவமாடத் தொடங்கிற்று. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, எல்லாரும் இந்தத் துக்கிரி பிறந்த அதிர்ஷ்டம் என்று என்னைத் தூற்றுவார்கள். நான் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ‘எனக்குத் தான் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது’ என்று மனத்துக்குள் சொல்லிக் கொள்வேன். சில சமயம் வெளியிலும் சொல்வேன். என் தாயார் மட்டும் என் கட்சியில் இருந்து, ’ஆமாண்டி கண்ணே! உனக்குத்தான் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது; உன் அக்காமார்கள் எல்லோரையும் காட்டிலும் நீதான் நல்ல இடத்தில் வாழ்க்கைப் படப் போகிறாய். உன்னால் தான் எங்கள் தரித்திரம் தீரப் போகிறது" என்று சொல்லிக் கொண்டிருப்பாள். பள்ளிக் கூடத்தில் நான் இரண்டாவது பாரம் வரையில் தான் படித்தேன். ஆனால் படிப்பதில் எனக்கு அந்த நாளிலேயே ஆர்வம் அதிகம். விக்ரமாதித்யன் கதை முதற்கொண்டு, பத்திரிகைகளில் அந்த வாரம் வெளியான தொடர்கதை வரையில் எல்லாவற்றையும் படித்து வந்தேன். இதனாலெல்லாம் என்னென்னமோ பகற் கனவுகள் காண ஆரம்பித்தேன். கதைகளில் வருவது போல் ‘சகல லட்சணங்களும் பொருந்திய இளங்குமரன் எனக்காக எங்கேயோ பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறான். திடீரென்று ஒரு நாள் அவன் எங்கிருந்தோ வந்து, என் மேல் காதல் கொண்டு சகலரும் அறிய என்னைக் கரம் பிடித்துக் கல்யாணம் செய்து கொண்டு போகப் போகிறான்; நாடு நகரமெல்லாம் அதைப் பார்த்து அதிசயிக்கப் போகிறது’ என்று அடிக்கடி எண்ணமிடுவேன். தகுந்த வரன் கிடைக்காத காரணத்தினால் என் கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. கற்பனா லோகத்தில் நான் கண்டு வந்த இராஜகுமாரன் வரும் பொருட்டாகவே, என் கல்யாணம் நிச்சயிக்கப்படாமல் தட்டிப் போய் வருகிறது என்று நான் நம்பினேன். அவன் எப்போது வருவான், எந்த ரூபத்தில் வருவான் என்றெல்லாம் சிந்தனை செய்தேன். நாளாக ஆக, என்னுடைய உள்ளத்தின் தாபமும் வளர்ந்து வந்தது. பொறுமைகுன்றியது. “ஏன் இன்னும் வரவில்லை?” என்று ஊர் பெயர் தெரியாத என் கற்பனை மணாளனிடம் கோபம் கொள்ள ஆரம்பித்தேன். இன்னும் எங்கள் வீட்டு வாசலிலே நின்று தெரு வீதியில் அவர் வரவை எதிர் நோக்கலானேன். நான் பார்ப்பதற்கு நன்றாயிருப்பேனென்று அந்த நாளிலேயே எல்லோரும் சொல்வார்கள். “உன் அழகுக்காகவே உன்னை யாராவது வந்து கொத்திக் கொண்டு போய்விடுவான்” என்று என் பாட்டி சொல்வதுண்டு. இதைப் பற்றி நான் உள்ளுக்குள் ரொம்பவும் கர்வம் கொண்டிருந்தேன். நாலு பேர் உள்ள இடத்தில் இருக்கும் போதெல்லாம் எல்லோரும் என் அழகையே பார்த்துப் பிரமித்துப் போய் நிற்பதாக நான் எண்ணிக் கொள்வேன். என் வீட்டு வாசலிலே நிற்கும் போதும் இந்த அழகு கர்வம் என் உள்ளத்தில் பொங்கிக் கொண்டு தானிருக்கும். அதற்குத் தகுந்தாற்போல், போவோர் வருவோர் எல்லோரும் என்னை உற்றுப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள். இவ்விதம் பார்த்தவர்களில் நல்ல தோற்றமும் நாகரிகமும் வாய்ந்த இளைஞன் யாராவது இருந்தால், “என்னை மணந்து அழைத்துப் போக வரும் கந்தர்வ குமாரன் இவன் தானோ?” என்று எண்ணமிடுவேன். அந்த இளைஞர்களில் பலர் நான் நிமிர்ந்து பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டு போய்விடுவார்கள்; இன்னும் சிலரைப் பார்த்ததும் எனக்கே வெறுப்பு உண்டாகிவிடும். ஒரு சிலர் மட்டும் சமிக்ஞைகளினாலும் நேரிலேயும் என்னிடம் காதல் பாஷை பேசத் தொடங்கினார்கள். ஆனால், அவர்களுடைய நிலைமை இன்னதென்று அறிந்ததும் எனக்குண்டான ஏமாற்றத்துக்கு அளவேயில்லை. ஒருவனுக்குக் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள்; இன்னொருவன் வக்கீல் குமாஸ்தா; வேறொருவன் பெயில் ஆன பி.ஏ. - ஆகா நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கந்தர்வ குமாரன் இவர்களிலே ஒருவனாக இருக்க முடியுமா? எல்லாம் மனோராஜ்யமா? வெறும் ஆகாசக் கோட்டையா? இவ்வளவு அழகையும் வைத்துக் கொண்டு, கேவலம் கன்னிகையாகவே, அப்பா அம்மாவுக்குப் பாரமாகவே இருக்கப் போகிறேனா! பகவானே! இதற்காகவா, எனக்கு இவ்வளவு அழகையும் அறிவையும் கொடுத்தாய்? அழகிலே மட்டுமல்ல? அறிவிலும் நான் நிகரில்லாதவள் என்று தான் அப்போதெல்லாம் எண்ணியிருந்தேன்! உண்மையிலேயே நான் எவ்வளவு மந்த அறிவு படைத்தவள் என்பதைப் பகவான் எனக்கு விரைவிலேயே காட்டிக் கொடுத்து விட்டார். நான் என் வீட்டு வாசலில் நின்று ஸ்வயம்வரம் நடத்திய காலத்தில் ஒருநாள் கலாசாலை ஆசிரியர் ஒருவர் அந்த வழியே போவதைக் கண்டேன். அவருக்கு வயது சுமார் முப்பது தானிருக்கும். ஆனால், அவருடைய தலைப்பாகையும், நீளமாய்த் தொங்கிய கறுப்புச் சட்டையும், மூக்குக் கண்ணாடியும் அவருடைய வயதை அதிகப் படுத்திக் காட்டின. அவரைப் பார்த்தவுடனே எனக்கு ஒருவிதமான பயபக்தி உண்டாயிற்று. அவர் என்னைப் பார்த்த பார்வையோ என்னுடைய பயத்தை அதிகமாக்கியது. “ஏன் இப்படித் தெரு வீதியில் நின்று போவோர் வருவோரைப் பார்த்துப் பல்லை இளித்துக் கொண்டிருக்கிறாய்? நல்ல குடும்பத்துப் பெண்ணுக்கு இது அழகா?” என்று அவர் என்னைக் கேட்பது போலிருந்தது. ஆனால் என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன். “இவர் என்ன மகாப் பெரியவர். இவருக்கு எதற்காக நாம் பயப்பட வேண்டும்?” என்று நினைத்து நினைத்து அசட்டுத் தைரியத்தை அதிகமாக்கிக் கொண்டேன். அவர் வீதி வழியாகப் போகும் சமயம் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே வாசலில் போய் நிற்கவும், அவரை விழித்துப் பார்க்கவும் ஆரம்பித்தேன். இதெல்லாம் எனக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அந்த வேடிக்கை விரைவில் வினையாக முடிந்தது. ஒரு நாள் என் தாயார் திடீரென்று கூப்பிட்டுப் பரவசமாகக் கட்டி அணைத்துக் கொண்டு, “அடி அம்பு! கடைசியில் உனக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டதடி, உன் கலி தீர்ந்து விட்டதடி! ‘எப்போ வருவாரோ? எப்போ வருவாரோ?’ என்று பாடிக் கொண்டிருப்பாயே? அவர் வந்துவிட்டாரடி!” என்றாள். அப்போது எனக்கு உடம்பெல்லாம் புளகாங்கிதம் ஏற்பட்டது. என் உள்ளத்திலே ‘அவர் வந்து விட்டாரா? அவர் யார்? எப்படி இருப்பார்?’ என்ற கேள்விகள் பொங்கின. ஆனால், வாயில் ஒரு வார்த்தையும் வரவில்லை. அம்மா அவளாகவே சொன்னாள்: “ஆமாண்டி கண்ணே! நிஜந்தாண்டி. இந்த ஊர் காலேஜிலே புரொபஸராம்! 250 ரூபாய் சம்பளமாம். ரொம்பப் படிப்பாளியாம். பிரின்ஸிபால் வேலை கூட ஆகுமாம். கல்யாணமே வேண்டாம் என்று இதுவரையில் சொல்லிக் கொண்டிருந்தாராம். உன் அதிர்ஷ்டம் அப்பேர்ப்பட்டவருடைய மனது மாறி விட்டது.” இதற்குள் பாட்டி “அதுதான் நான் சொல்லிக் கொண்டிருந்தேன். நம்ம அம்புவின் அழகுக்காகவே அவளை யாராவது வந்து கொத்திக் கொண்டு போய் விடுவான் என்று அப்போதெல்லாம் என் வார்த்தையில் உங்களுக்கு நம்பிக்கைப் படவில்லை” என்றார். காலேஜ் புரொபஸர் என்று அம்மா சொன்னதுமே என் மனது பதைத்தது. சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக “பாரடி அம்மா, பாட்டியை! என் அழகுக்காகவே யாரோ வந்து விட்டார்களாம்! நீ சொல்லுகிறவர் இன்னும் என்னை வந்து பார்க்கக் கூட இல்லை. அதற்குள்ளே பாட்டிக்கு அவசரம்!” என்றேன். அப்போது அம்மா, புன்னகையுடன், “இல்லேடி கண்ணே; பாட்டி அவசரப்படவில்லை. கல்யாணம் நிச்சயமான மாதிரிதான். அவர் தினம் இந்த வீதி வழியாக காலேஜுக்குப் போகிற போது உன்னைப் பார்த்திருக்கிறாராம். அவரே அப்பாவைக் கூப்பிட்டனுப்பி, ‘எனக்கு உங்கள் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க இஷ்டமா?’ என்று கேட்டாராம். பணம் காசு என்று ஒன்றும் பேசப்படாது என்று சொல்லிவிட்டாராம். எல்லாம் தீர்மானமாகி விட்டது. முகூர்த்தத் தேதி வைக்க வேண்டியதுதான் பாக்கி. அதற்காகத்தான் அப்பா ஜோசியரண்டை போயிருக்கார்” என்று சொல்லி, ஆசையோடு என் நெற்றியில் கையை வைத்து திருஷ்டி கழித்தாள். நான் அவளிடமிருந்து திமிறிக் கொண்டு ஓடினேன். காமரா உள்ளுக்குள் சென்று கதவைத் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு தரையில் படுத்தேன். என் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகிற்று. ஏன் என்று எனக்கே தெரியவில்லை. “அவரையா கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறோம்?” என்று எண்ணியபோது, ஒரு பக்கம் திகிலாயிருந்தது. இன்னொரு பக்கம் பெருமையாகவும் இருந்தது; அப்பேர்ப்பட்ட படிப்பாளி என் அழகு வலையில் விழுந்துவிட்டாரல்லவா? ஆனால் அந்த மனிதருடனா வாழ்க்கை முழுவதும் கழிக்கப் போகிறோம் என்று நினைத்தபோது, என்னமோ செய்தது. சற்று நேரத்துக்கெல்லாம் அம்மா கதவை இடித்தாள். “அம்பு! கதவைச் சாத்திக் கொண்டு என்ன செய்கிறாய்? அப்பா வந்துவிட்டார். முகூர்த்தம் வைத்துக் கொண்டு வந்திருக்கிறார். உன்னைக் கூப்பிடுகிறார்!” என்று குதூகலமான குரலில் சொன்னாள். நான் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அம்மா என் முகத்தைப் பார்த்து விட்டு, “அடி அசடே! அழுதாயா, என்ன?” என்று கேட்டாள். நல்ல வேளையாகப் பாட்டி, “அழுகையாவதடி; குழந்தைக்கு ஆனந்தக் கண்ணீர் வந்திருக்கடி!” என்றாள். அம்மா, “என் கண்ணே!” என்று என்னைக் கட்டி அணைத்துக் கொண்டாள். சாதாரணமாய்க் குடும்பங்களில் அடியும் வசவும் பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்குக் கூடக் கல்யாணம் என்று ஏற்பட்டு விட்டால் தனி மகிமை உண்டாகி விடுகிறது. எல்லாரும் கல்யாணப் பெண்ணை அருமை பாராட்டவும் கொஞ்சவும் ஆரம்பித்து விடுகிறார்கள். ஏற்கனவே நான் செல்லப் பெண்; அதிலும் இப்போது எனக்கு ‘அதிர்ஷ்டம்’ வேறே வந்திருந்தது. ஆகவே எல்லாரும் என்னைப் படுத்தி வைத்த பாட்டைச் சொல்லவா வேண்டும்? கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. அம்மா அப்பா முதலியவர்களுக்குத் தலைகால் தெரியவில்லை. ‘தடபுடல் ஒன்றும் வேண்டாம்’ என்று மாப்பிள்ளை சொன்ன போதிலும் ‘கிடைக்காத சம்பந்தம் கிடைத்திருக்கிறது’ என்ற பெருமையினால் அப்பா ஆடம்பரமாகவே கல்யாண ஏற்பாடுகளைச் செய்தார். குறிப்பிட்ட முகூர்த்தத்தில் கல்யாணம் நடந்தது. எல்லோருக்கும் ஒரே சந்தோஷம். மாப்பிள்ளை நலங்கிடுவதற்கு வரவில்லை என்ற ஏமாற்றம் அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் உண்டு. இதை மறைப்பதற்காக அம்மா, “அவர் என்ன சாமான்யப்பட்டவரா? எல்லாரையும் போல் நலங்கிட உட்காருவாரா?” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்! இன்னும் என்னை அடிக்கொரு தடவை கட்டிக் கொண்டு உச்சி முகர்ந்து, “நீ அதிர்ஷ்டக்காரி அம்பு! கொடுத்து வைத்தவள்” என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த நம்பிக்கையுடனேயே அம்மா என் கல்யாணமாகிச் சில காலத்துக்கெல்லாம் கண்ணை மூடினாள். நானும் இன்றைக்கு இந்தச் சந்தோஷமான இடத்திலேயே நிறுத்திவிட்டு கண்ணை மூடித் தூங்குவதற்குப் பிரயத்தனம் செய்கிறேன். 2. இல்லறம் நேற்று இரவு நான் நிம்மதியாகத் தூங்கினது போல் சென்ற ஆறு மாதத்தில் தூங்கினதில்லை. ஆற்றில் அடைக்கலம் புகுவது என்று தீர்மானித்ததின் பலனோ, அல்லது என் கதையை எழுதத் தொடங்கி இளம் வயதின் ஞாபகங்களை எழுதியதனால் தானோ தெரியவில்லை. கல்யாணம் ஆன உடனேயே நானும் என் கணவரும் எங்கள் இல்வாழ்க்கையைத் தொடங்கினோம். இல்வாழ்க்கையைக் குறித்து நான் என்னவெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தேனோ, அதற்கெல்லாம் நேர்மாறுதலாக எங்கள் வாழ்க்கை நடந்தது. புருஷர்கள் மனைவிகளை ஆடுமாடுகளைப் போல் நடத்துவதையும், அடிப்பதையும், துன்புறுத்துவதையும் நான் பார்த்திருக்கிறேன். அவ்விதமாக என்னை அவர் கொடுமைப் படுத்தவில்லை. என்னை வைதோ, கோபமாகப் பேசியதோ கூடக் கிடையாது. வெகு மரியாதையுடன் என்னை நடத்தினார். பேசும்போதெல்லாம் இனிய வார்த்தைகளையே பேசினார். இதனாலெல்லாம் எனக்கு மனநிம்மதி ஏற்படவில்லை. ஏனோ, துக்கம் துக்கமாக வந்தது. என் அழகையோ, அலங்காரத்தையோ அவர் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை. சில சமயம் அவர் என்னை ஆவலுடன் உற்றுப் பார்ப்பார். ஏதோ சொல்லப் பிரயத்தனப்படுகிறவர் போல் தோன்றும். ஆனால் ஒன்றும் சொல்ல மாட்டார். வர வர, என் அழகை நான் வெறுக்க ஆரம்பித்தேன். அலங்காரம் செய்து கொள்வதில் என் ஆசை போய் விட்டது. சில நாள் குளிக்காமலும், நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமலும் தலை வாரிக் கொள்ளாமலும் இருப்பேன். அப்போதும் அவர் வாய் திறந்து ஒன்றும் சொல்ல மாட்டார். அவருக்குச் சதா அவர் வேலையே சரியாயிருந்தது. காலேஜுக்குப் போகும் நேரம் போக அவருடைய புத்தக அறைக்குள்ளேதான் இருப்பார். அப்படி ஓயாமல் படிப்பதற்கு எழுதுவதற்கும் என்னதான் இருக்குமோ, எனக்குத் தெரியாது. அதாவது, அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என் கணவர் காலேஜில் சரித்திரப் புரொபஸர் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். இந்தியாவின் பழைய சரித்திரத்தைப் பற்றி அவர் ஏதோ முக்கியமான ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாராம். நமது இந்திய தேசத்துக்கும் சீனா தேசத்துக்கும் பழைய காலத்தில் ஏற்பட்டிருந்த உறவைப் பற்றி சில மிகவும் முக்கியமான உண்மைகளை அவர் கண்டுபிடித்தாராம். எங்கள் கல்யாணமான புதிதில் அவர் தம் ஆராய்ச்சியைப் பற்றிச் சில சமயம் என்னுடனே பேச ஆரம்பிப்பதுண்டு. ஆனால் அவர் சொல்வது ஒன்றுமே எனக்கு விளங்காது. அதிலே எனக்குச் சிரத்தையும் இல்லை. எனவே, அவர் பேசிக் கொண்டேயிருக்கும் போது, நான் நடுவில் “மெஜஸ்டிக் சினிமாவில் மேனகா படம் வந்திருக்காமே?” என்று சொல்லி வைப்பேன். அவருக்குச் சீ என்று போய்விடும். புத்தக அறைக்குப் போய் ஏதாவது எழுத ஆரம்பித்து விடுவார். எனக்கோ, அவர் சீன தேசத்தின் மேல் செலுத்தும் கவனத்தில் நூறில் ஒன்று என் மீது செலுத்தக் கூடாதா என்று தோன்றும். இப்படி நாளாக ஆக, அவரும் நானும் எட்டி விலகிப் போய்க் கொண்டிருந்தோம். ஒரே வீட்டுக்குள் இருந்த போதிலும், சில தினங்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாத நிலைமை ஏற்பட்டு விட்டது. நாளுக்கு நாள் என்னுடைய மன நிம்மதி குலைந்து வந்தது. அவர் மேல் வெறுப்பும் கோபமும் வளர்ந்தன. என்னுடைய தாபத்தையும் கோபத்தையும் பன்மடங்கு அதிகமாக்கும்படியான ஒரு சம்பவம் இப்போது நேர்ந்தது. என் கணவருக்கு ஒரு தங்கை உண்டு. அவருடைய புருஷனுக்கு டில்லியில் வேலை. எனக்குக் கல்யாணமாகி மூன்று வருஷத்துக்குப் பிறகு ஒரு தடவை அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். ராஜம் முதலில் வந்துவிட்டாள். அவள் புருஷன் தம் சொந்த ஊருக்குப் போய் விட்டு ஒரு வாரத்துக்குப் பிறகு வந்தார். அவர் வருவதற்கு முன் அந்த ஒரு வார காலமும் எனக்குச் சிறிது உற்சாகமாயிருந்தது. ராஜம் எங்கள் கல்யாணத்தின் போது கூட பரிகாசம் செய்து மானத்தை வாங்கினாள். “அண்ணா நித்திய பிரம்மச்சாரி என்று சொல்லிக் கொண்டிருந்தான்; பிள்ளையாருக்குக் கல்யாணம் ஆகும் போது தான் தனக்கும் கல்யாணம் என்று வீம்பு பிடித்துக் கொண்டிருந்தான். பொம்மனாட்டி என்றாலே தலையைக் குனிந்து கொள்வான். அப்படிப்பட்டவனை உன் மாய வலையில் சிக்க வைத்து விட்டாயேடி! என்ன பொடி போட்டு மயக்கினாயடி?” என்றெல்லாம் கேலி செய்தாள். என் மேனி நிறம், முகவெட்டு, கண்ணின் அழகு இதையெல்லாம் பற்றி அவள் வர்ணித்து, “அண்ணா காத்திருந்தாலும் காத்திருந்தான், முதல் நம்பர் அழகியாகப் பார்த்துப் பிடித்தான்” என்று அவள் சொன்ன போதெல்லாம் நான் வெட்கப்பட்டுத் தலை குனிந்து கொண்டாலும் மனத்திற்குள் எவ்வளவோ சந்தோஷமும் கர்வமும் அடைந்தேன். ஆகவே, ராஜம் இப்போது வந்ததும் எனக்கு உற்சாகமாயிருந்தது. அவளும் முன்போலவே சிரிப்பும் பரிகாசமுமாய் இருந்தாள். அவளுடைய பரிகாசங்கள் எனக்கு முன்போல் சந்தோஷத்தை உண்டாக்கவில்லையானாலும், நான் என் மனோநிலையை வெளிக்குக் காட்டவில்லை. கூடிய வரையில் நானும் குதூகலமாயிருப்பதற்கு முயன்றேன். எங்களுடைய பரிகாசப் பேச்சுக்களில் சில சமயம் என் கணவரும் வந்து சேர்ந்து கொண்டார். என்னுடைய வாழ்க்கையிலே ஒரு மாறுதல் ஏற்படப் போவது போல் தோன்றியது. ஆம்; என் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படத்தான் செய்தது. ஆனால் நான் எதிர்பார்த்த முறையில் அன்று. ராஜம் வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு அவளுடைய கணவர் வந்து சேர்ந்தார். அவர் வண்டியிலிருந்து இறங்கியதும் அவர்கள் சந்தித்த காட்சியைப் பார்த்த போதே என் மனத்தில் முள் தைத்தது போலிருந்தது. ராஜமும் நானும் சந்தோஷமாகச் சிரித்து விளையாடிப் பேசிக் கொண்டிருந்ததற்கும் முடிவு ஏற்பட்டது. அவள் அவருடனேயே அதிக நேரத்தைச் செலவழிக்க ஆரம்பித்தாள். அவர்களுக்குப் பேசுவதற்கு என்ன தான் இருக்குமோ என்று எனக்கு வியப்பாயிருந்தது. ஒருவரையொருவர் கேலி செய்து கொள்வதையும், கொஞ்சிக் குலாவுவதையும் பார்க்கப் பார்க்க என்னுடைய மனக் கசப்பு அதிகமாக வளர்ந்தது. சாயங்காலம் ஆனதும் அவர்கள் பாட்டுக்கு வெளியே கிளம்பி விடுவார்கள். கடைத்தெருவுக்கோ, கோயில் குளத்துக்கோ, சினிமா டிராமாவுக்கோ போய் விட்டு உல்லாசமாக இராத்திரி திரும்பி வருவார்கள். அப்போது என்னை என்னமோ செய்யும். வீட்டிலேயே இருப்பு கொள்ளாது. உள்ளுக்கும் வாசலுக்கும், மாடிக்கும் கீழுக்குமாக ஒரு காரியமும் இல்லாமல் போய் வந்து கொண்டிருப்பேன். அப்போது இவர் காலேஜிலிருந்து வருவார்; “எங்கே அவர்கள் இல்லையா?” என்று கேட்பார். எனக்குத் தொண்டை அடைக்கும். “சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள்” என்பேன். மேலே நான் ஏதாவது சொல்லுவதற்குள், அவர் தம் அறைக்குப் போய்ப் புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்து விடுவார். ஒரு நாளைக்கு ராஜமும் அவள் கணவரும் மாடி அறையில் இருந்தார்கள். அது எனக்குத் தெரியாமல் அந்த அறையின் கதவைத் திறந்து விட்டேன். அப்போது நான் கண்ட காட்சி என் நெஞ்சில் ஈட்டியைச் செலுத்துவது போலிருந்தது. ராஜத்தின் கணவர் தரையில் உட்கார்ந்திருந்தார். ராஜம் அவருடைய மடியிலே தலையை வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அவள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க, அவர் குனிந்த வண்ணம் அவளுடைய கன்னங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் அவசரமாக படீரென்று கதவைச் சாத்திவிட்டுக் கீழே இறங்கிப் போனேன். எதனாலோ எனக்கு அழுகை அழுகையாக வந்தது. கீழே ஓர் அறைக்குள் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டேன். தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினேன். அத்தனை காலமும் அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் இப்போது பொங்கிக் கொண்டு வந்தது. வெகு நேரம் வரையில் அழுது கொண்டிருந்தேன். கண்கள் வீங்கிப் போயின. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ராஜம் வந்து கதவை இடித்தாள். நான் கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்து விட்டு, “ஐயையோ! இதென்னடி மன்னி” என்று அலறிவிட்டாள். “அசடே! பைத்தியமே! மாடிக்கு வந்து கதவைத் திறந்ததற்காகவா இப்படி அழுகிறாய்? என்னடி மோசம் முழுகிப் போயிற்று? இவர் அப்படியெல்லாம் சங்கோஜப்படுகிறவர் அல்ல. நீ வேணுமானால் பார்! நாளைக்கு நீ இருக்கிறபோதே என்னை மடியில் தூக்கி வைத்துக் கொள்ளச் சொல்கிறேன். இதற்காக அழுவார்களா?” என்று இப்படிப் பேசிக் கொண்டே போனாள். அவளுடைய பேச்சு இன்னமும் என் நெஞ்சை அதிகமாகப் பிளந்தது என்பதை அவள் என்ன கண்டாள்? நான் மெதுவாகச் சமாளித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு, “அதற்காக இல்லை அக்கா! தலைவலி மண்டையைப் பிளக்கிறது!” என்றேன். உண்மையாகவே தலையையும் வலிக்கத்தான் செய்தது. கண்ணில் நீர் வரவேண்டியது தான். “இதோ நானும் வருகிறேன்” என்று எனக்குத் தலைவலியும் வந்து விடுவது வழக்கம். அதற்கப்புறம் எனக்கு அடிக்கடி கண்ணீரும் தலைவலியும் சேர்ந்து வந்து கொண்டிருந்தன. ராஜம் இதனால் கவலையடைந்தாள். ஒரு நாள் அவள் அண்ணாவிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது என் காதிலே விழுந்தது. “ஏன் அண்ணா, மன்னி இப்படி இருக்கிறாள்?” “எப்படி இருக்கிறாள்?” என்றார் அவர். “உனக்குக் கண்ணே இல்லையா, அண்ணா! ஓயாமல் அழுது அழுது மன்னிக்குக் கண் வீங்கிப் போகிறதே? தெரியவில்லையா?” “எல்லாம் தெரிகிறது! ராஜம்! ஆனால் நான் என்ன செய்யட்டும்? நான் உன் மன்னியைக் கல்யாணம் செய்து கொண்டது பெரிய பிசகு. புத்தி அப்போது கொஞ்சம் சபலித்துவிட்டது. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன்” என்றார். “ரொம்ப அழகாயிருக்கிறது. இப்படியெல்லாம் பேசாதே, அண்ணா! வீட்டுக்கு வீடு வாசற்படி. அங்கங்கே அப்படித்தான் இருக்கும். எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகப் போய்விடும்!” என்றாள் ராஜம். சில நாளைக்கெல்லாம் ராஜம் ஊருக்குப் போய் விட்டாள். ஆனால், ஒன்றும் சரியாகப் போகவில்லை. நாளாக ஆக, என் மனக்கசப்பு வளர்ந்து கொண்டிருந்தது. நான் கண்ணீர் விடுவதையும் குப்புறப் படுத்துக் கொண்டு விம்முவதையும் அவர் சில சமயம் பார்ப்பார். அவருடைய மெல்லிய காலடி சத்தத்திலிருந்து அவர்தான் வருகிறார் என்று நான் தெரிந்து கொள்வேன். ஒரு வேளை அவர் என் பக்கத்தில் உட்காரமாட்டாரா, உட்கார்ந்து என்னைச் சமாதானப் படுத்த மாட்டாரா என்று சில சமயம் மனத்திற்குள் எண்ணுவேன். ஆனால், அவர் தலையில் அடித்துக் கொண்டு, “சனியன், பீடை!” என்று சொல்லி விட்டுப் போய்விடுவார். வேறு சில சமயம், “ஐயோ! என் புத்தி இப்படியா கெட்டுப் போக வேணும்?” என்று சொல்லிக் கொண்டே போவார். நானோ, ‘என்னத்துக்காகப் பகவான் நம்மைப் படைத்தார்?’ என்று எண்ணமிடத் தொடங்கினேன். அவர் படைத்ததினாலேதான் என்ன? நல்ல வேளையாக, செத்துப் போவதை அந்தப் பகவானால் கூடத் தடுக்க முடியாதல்லவா?" “சாவு”, “மரணம்” என்ற மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினேன். எனக்குக் கல்யாணம் ஆனவுடனேயே என் தாயார் காலமாகி விட்டாள் என்று சொன்னேனல்லவா? என் தகப்பனார் பிறகு வேலையிலிருந்து விலகிக் கொண்டார். என் மூத்த தமக்கை ஹைதராபாத்தில் இருந்தாள். அவளுக்குப் பெரிய குடும்பம். அப்பா, பேரன் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டு ஹைதராபாத்திலேயே இருந்தார். அவருக்கு என் தீர்மானத்தைக் குறித்துக் கடிதம் எழுத முயன்றேன். அப்போதெல்லாம் எனக்கு அவ்வளவு நன்றாக எழுதத் தெரியாது. விஷயத்தைச் சொல்ல முடியாமல் திண்டாடினேன். ஆகவே, நாலைந்து தடவை கடிதத்தைப் பாதி வரையில் எழுதிக் கிழித்துப் போட்டு விட்டேன். இப்படி நான் பாதி எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் மட்டும் நான் கிழித்துப் போடாமலே காணாமல் போய் விட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை! அவர் ஒரு வேளை எடுத்திருப்பாரோ என்று ஒரு கணம் சந்தேகம் உதித்தது. ஆனால் அவருக்கு அப்படிப்பட்ட சுபாவம் கிடையாது. என்னுடைய அறைக்குள்ளேயே அவர் வருவதில்லை. ஆனாலும், பின்னால் நடந்ததை எண்ணிப் பார்க்கும் போது, முதலில் நான் சந்தேகப்பட்டது தான் உண்மையோ என்றும் தோன்றுகிறது. கடைசியில், நான் என் தகப்பனாருக்குக் கடிதம் போடவேயில்லை. அதற்குள்ளேயே நான் எதிர்பாராத அந்த விபரீதச் சம்பவம் - என் வாழ்க்கையை அடியோடு மாற்றிய நிகழ்ச்சி நடந்து விட்டது. இரவு நேரங்களில் என் கணவர் வெகு நேரம் புத்தக அறையில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பார். நான் படுக்கை அறையில் கட்டிலில் படுத்துப் புரண்டு கொண்டிருப்பேன். சில சமயம் அழுது கொண்டே தூங்கி விடுவேன். அவர் வரும் போது விழித்துக் கொண்டிருந்தாலும், தூங்குவதுபோல் ஜாடை செய்வேன். அவர் வந்து படுத்து ஐந்து நிமிஷத்தில் காடாந்த நித்திரையில் ஆழ்ந்து விடுவார். அன்று இரவு வரும் போது அந்த மாதிரி தான் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன். அவர் என் தலைமாட்டில் வந்து நின்ற போது எனக்குச் சற்று வியப்பாயிருந்தது. இதென்ன ஒரு நாளும் இல்லாத திருநாள்? எதற்காக இங்கே வந்து நிற்கிறார்? அடுத்த விநாடி, அவருடைய கரம் என்னுடைய நெற்றியை தொட்டது. இன்னும் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க மூச்சை அடக்கிக் கொண்டிருந்தேன். ஆச்சரியம்! ஆச்சரியம்! அவர் குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டார்! கல்யாணம் ஆனதிலிருந்து, ஒரு தடவையாவது இம்மாதிரி அவர் செய்ததை நான் அறியேன். பிறகு அவருடைய காலடிச் சத்தம் கேட்கவே கண்ணைச் சிறிது திறந்து பார்த்தேன். அவர் கதவை மெதுவாய்த் திறந்து கொண்டு வெளியே போனார். எனக்கு என்னமோ வயிற்றில் பகீர் என்றது. இன்னதென்று தெரியாத பீதி உண்டாயிற்று. சற்று உற்றுக் கேட்டேன். வாசற் கதவு திறக்கும் சத்தம் வெகு இலேசாகக் கேட்டது. உடனே பரபரப்புடன் எழுந்திருந்தேன். அவருடைய அறைக்கு ஓடினேன். அவர் மேஜை மீது ஒரு கடிதம் எழுதி வைத்து, அதன் மேல் பாரமும் வைத்திருந்தது. பிரித்துப் பார்த்தேன். நான் பயந்தபடியே தான் அதில் எழுதியிருந்தது. இரண்டே இரண்டு வரிதான்! "அன்பார்ந்த அம்முலுவுக்கு, உனக்குப் பரிபூரண விடுதலை கொடுத்து விட்டு நான் போகிறேன். நீ சௌக்கியமாக இருப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்திருக்கிறேன்! இப்படிக்கு …." கடிதத்தை அப்படியே போட்டு விட்டு, நான் வாசற்பக்கம் ஓடினேன். தெரு முனையில் அவருடைய வெள்ளை வேஷ்டி நட்சத்திர வெளிச்சத்தில் இலேசாகத் தெரிந்தது. அந்தத் திசையை நோக்கி ஓடினேன். அப்போது மேற்காற்று நாள்; ஹோ என்ற இறைச்சலுடன் காற்று ‘விர் விர்’ என்று அடித்துக் கொண்டிருந்தது. புழுதியை வாரி மேலே அடித்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் தலைவிரி கோலமாக ஓடினேன். தெருவில் ஒரு பிராணி கிடையாது. அந்தக் காற்றுக்கும் புழுதிக்கும் பயந்து தெரு நாய்கள் கூட வீட்டுத் திண்ணையில் பதுங்கிக் கிடந்தன போலும்! நான் நினைத்தபடியே அவர் தெரு முனையில் இருந்த சந்தில் திரும்பினார். வேகவதி நதிக்குப் போகும் சந்து தான் அது. நானும் அந்தச் சமயத்தில் திரும்பப் போனேன். அவர் நதிக்கரையை அடைந்தார். நேரே நதியில் இறங்கி விட்டார்; நதியில் பிரவாகம் பூரணமாய்ப் போய்க் கொண்டிருந்தது. காற்றின் வேகத்தினால் பிரம்மாண்டமான அலைகள் கிளம்பிக் கரையை மோதிக் கொண்டிருந்தன. நான் நதிக்கரையை அடைந்த போது அவர் வெள்ளத்தில் மார்பு அளவு ஜலத்துக்குப் போய் விட்டார். எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிற்று. கூச்சல் போட வரவில்லை. ஒரு கணம் மங்கிய இருட்டில் அவர் தலை மட்டும் வெள்ளத்தின் மேல் தெரிவது போலிருந்தது! அடுத்த கணம் தலையும் வெள்ளத்துக்குள்ளே போய்விட்டது. அப்புறம் ஒரே அந்தகாரந்தான்! சொல்ல முடியாத பீதி என்னைப் பற்றிக் கொண்டது. திரும்பி வீட்டை நோக்கி ஓடினேன்; கண் தெரியாமல் குருட்டாம் போக்காய் ஓடினேன். வழியில் பலமுறை தடுக்கி விழுந்தேன்! வீட்டுக்கு எப்படிப் போய்ச் சேர்ந்தேனோ தெரியாது. அறைக்குள் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டு தரையில் விழுந்தேன். மனத்தினால் ஒன்றுமே சிந்திக்க முடியவில்லை. தூக்கமும் இல்லாமல், விழிப்பும் இல்லாமல் உணர்ச்சியேயில்லாமல் மரக்கட்டையைப் போல் கிடந்தேன். ஆனால், மார்பு மட்டும் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. அந்த அடிப்பானது, ‘விடுதலை விடுதலை விடுதலை’ என்ற பல்லவிக்குத் தாளம் போடுவது போலிருந்தது. 3. வெள்ளித்திரை நாளைய தினம் அமாவாசை! சென்ற மூன்று இரவுகளில் நான் எழுதியதையெல்லாம் இன்று மத்தியானம் படித்துப் பார்த்தேன். இடையிடையே சில சம்பந்தமில்லாத சொற்களும், அர்த்தமில்லாத வாக்கியங்களும், குழப்பமான எழுத்துக்களும் காணப்பட்டன. அவற்றையெல்லாம் அடித்துச் சரிப்படுத்தினேன். பகவானே! நாளைய இராத்திரி வரையில் எனக்கு நல்ல நினைவு இருக்க வேண்டும். பிறகு வேகவதியில் அடைக்கலம் புகுந்து உன் பாதாரவிந்தத்தை வந்து அடைவேன். மேலே கூறிய விபரீத சம்பவம் நடந்த போது, அப்பா சென்னைப் பட்டணத்தில் என் இன்னொரு அக்கா வீட்டில் இருந்தார். என் தந்தியைப் பார்த்துவிட்டு, அவர் ஓடி வந்தார்; நல்லவேளையாக, என் கணவர் எழுதி வைத்த சீட்டைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதை அவரிடம் கொடுத்தேன். அன்றிரவு நான் கண்டதை அப்பாவிடம் கூடச் சொல்லவில்லை. அப்பா அந்தக் கடிதத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று விஷயத்தைத் தெரிவித்தார். போலீஸ்காரர்கள் ஏதேதோ முயற்சி செய்து பார்த்ததாகவும் தகவல் ஒன்றும் தெரியவில்லையென்றும் சொன்னார்கள். சில சமயம் வெள்ளத்தில் போனவர்களின் உடல்கள் கரையில் ஒதுங்குவது வழக்கமல்லவா? அந்த மாதிரி அவருடைய உடல் ஒதுங்குமோ என்று சில சமயம் நான் எண்ணி நடுங்குவேன். ஒரு வாரம் வரையில் அம்மாதிரி எதுவும் செய்தி வராமலிருக்கவே, இந்தப் பாவி உள்ளத்தில் ஒருவித அமைதி உண்டாயிற்று. ஏனெனில், அவர் நிச்சயமாக இறந்த செய்தி தெரிந்தால் என்னை இல்லாத அலங்கோலங்கள் எல்லாம் செய்து விடுவார்கள் அல்லவா? அதற்காகத்தான் பயந்தேன். சில நாளைக்குப் பிறகு அப்பா என்னைச் சென்னைப் பட்டணத்துக்கு அழைத்துப் போனார். அங்கே மீனா அக்கா வீட்டில் தங்கினோம். மீனா அக்காவின் புக்ககத்தில் எல்லோரும் குஷிப் பேர்வழிகள். நாகரிக வாழ்க்கையில் பற்று உடையவர்கள். அதோடு சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஓயாமல் சங்கீதம், நாட்டியம், நாடகம், சினிமா இவைகளைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருக்கும். இப்படிப் பட்ட இடத்திலே இருந்தால், நான் என்னுடைய துக்கத்தை மறந்திருக்க முடியும் என்று என் தகப்பனார் எண்ணினார். அதோடு பெண்களின் கல்வி ஸ்தாபனம் ஒன்றில் என்னைச் சேர்ந்து படிக்கச் செய்யலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. மீனா அக்கா வீட்டில், முதலில் சில நாள் என்னிடம் எல்லாரும் அனுதாபத்துடன் நடந்து கொண்டார்கள்; துக்க முகத்துடனே பேசினார்கள். வீட்டிலேயே சில நாள் கலகலப்புக் குறைவாயிருந்தது. நாளடைவில் நிலைமை மாறிப் பழையபடியே சிரிப்பும் விளையாட்டுமாயிருக்கத் தொடங்கினார்கள். எல்லாரும் சந்தோஷமாயிருக்கும் இடத்தில் நான் மட்டும் முகத்தைத் தூக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. என்னுடைய இளம் பிராயத்துக் குதூகல சுபாவம் மறுபடியும் மேலோங்கியது. எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகவும், சிரிக்கவும் தொடங்கினேன். அதோடு இல்லை; பாடவும் தொடங்கினேன். மீனு அக்காவின் வீட்டுக்கு ஒரு சிநேகிதர் அடிக்கடி வருவார். அவர் பெயர் பட்சிராஜன். மீனு அக்காவின் மைத்துனருடன் அவர் காலேஜில் ஒன்றாய்ப் படித்தவராம். தமிழ் டாக்கிகள் ரொம்பக் கேவலமாயிருப்பது பற்றியும் அவற்றைச் சீர்திருத்த வேண்டியதைப் பற்றியுமே அவர் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார். பாட்டில் அவருக்கு ரொம்பப் பிரியம். ஒருநாள் நான் பாடுவதைக் கேட்டு விட்டு அவர், “இது யார் இவ்வளவு அற்புதமாய்ப் பாடுகிறது? என்ன மதுரமான சாரீரம்? மைக்குக்கு எவ்வளவு பொருத்தமான குரல்” என்று சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. எனக்குப் புளகாங்கிதம் உண்டாயிற்று. நாளடைவில் என்னுடைய கூச்சத்தை விட்டு, புருஷர்களுக்கு முன்னால் பாட ஆரம்பித்தேன். நான் பாடும் போது அவர் அப்படியே மெய் மறந்து கேட்பார். அவருக்குப் புகைப்படமெடுக்கத் தெரியும். ஒரு நாள் கேமரா எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் எல்லோரையும் படம் எடுத்தார். “உங்களையும் ஒன்று எடுத்து வைக்கட்டுமா?” என்றார்; முதலில் நான் மறுத்தேன். எல்லோரும் வற்புறுத்தியதின் பேரில் சம்மதித்தேன்! மறுநாள் அவர் படத்தை எடுத்துக் கொண்டு வந்து, “உங்களுடைய குரல்தான் ’மைக்’குக்கு ஏற்றது என்று நினைத்தேன், முகமும் திரைக்காகவே ஏற்பட்டது போலிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே கொடுத்தார். அதற்கு முன்னால் என்னை நன்றாகப் படம் எடுத்ததேயில்லை! அவர் எடுத்த படத்தைப் பார்த்ததும் எனக்கே கர்வமாயிருந்தது; “நாம இவ்வளவு அழகாகவாயிருக்கிறோம்?” என்று அதிசயித்தேன். “இந்த அழகினால் என்ன பிரயோஜனம்?” என்ற ஏக்கமும் மனத்தில் உண்டாயிற்று. “அதற்குப் பிறகு அவர் இன்னும் பல தடவை என்னைப் படம் பிடித்தார்; அதோடு,”உங்களைப் போன்றவர்கள் சினிமாவில் சேர்ந்தால் தான், தமிழ் சினிமாவுக்கு விமோசனம்" என்று அடிக்கடி சொல்லி வந்தார். நானும் என் மனதில், “பிரபல நட்சத்திரம் ஆவதற்கே நான் பிறந்திருக்கிறேன்” என்று தீர்மானித்துக் கொண்டேன். டாக்கியில் நடிப்பதைப் பற்றியே கனவு காண ஆரம்பித்தேன். இம்மாதிரி என் மனம் சபலப்பட்டிருப்பதை என் அக்கா எப்படியோ தெரிந்து கொண்டாள். சில சமயம் நானும் பட்சிராஜனும் பேசிக் கொண்டிருப்பதை அவள் ஒட்டுக் கேட்டதாகத் தெரிகிறது. அவள் என்னைத் திட்ட ஆரம்பித்தாள். எனக்குக் கோபமாய் வந்தது. “உனக்கு என்ன? குழந்தை குட்டிகளுடனும் ஆசைக் கணவனுடனும் சௌக்கியமாயிருக்கிறாய். எனக்கு மட்டும் வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டாமா? என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டேன். ஒரு நாள் விஷயம் முற்றி விட்டது. அக்கா பட்சிராஜனிடம்”சினிமா, சினிமா என்று சொல்லி ஏன் அவள் மனத்தைக் கெடுக்கிறீர்கள்? இப்படியெல்லாம் பேசுவதாயிருந்தால், நீங்கள் இந்த வீட்டுக்கு வரவேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே நான், “அவர் இந்த வீட்டுக்கு வரக் கூடாதென்றால் நானும் போய்விடுகிறேன்” என்றேன். அக்கா திகைத்துப் போனாள். கடைசியில், “உங்கப்பா வரட்டும்; அவரைக் கேட்டுக் கொண்டு எது வேணுமானாலும் செய்” என்றாள். அச்சமயம் ஹைதராபாத்துக்குப் போயிருந்த அப்பாவுக்குக் கடிதம் எழுதினாள். அப்பா வந்த பிறகு சில நாள் அவருக்கும் எனக்கும் ஒரே போராட்டமாயிருந்தது. “நம் குலத்தில் உண்டா? கோத்திரத்தில் உண்டா? சினிமாவில் நடிக்கவாவது? கூடவே கூடாது!” என்று சொன்னார். “எந்த விதத்திலாவது பெயர் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையே எனக்கு வேண்டியதில்லை” என்றேன் நான். கடைசியில் நான் தான் வெற்றி பெற்றேன். என்னுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாயிருந்தவர் பட்சிராஜன் தான். அவரை எப்படியோ அப்பாவுக்குப் பிடித்து விட்டது. ஒரு நாள் பட்சிராஜன் வந்து, குடும்ப ஸ்திரீகளையே பெரும்பாலும் நடிகைகளாகத் தேர்ந்தெடுத்து ஒரு டாக்கி எடுக்கப் போவதாகவும், எங்களுக்குச் சம்மதமானால் என்னைக் கதாநாயகியாகத் தேர்ந்தெடுப்பதாகவும் சொன்னபோது, அப்பா தம் சம்மதத்தைக் கொடுத்துவிட்டார். அன்றிரவு அளவிறந்த சந்தோஷத்தினால் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. பின்னால் நான் எவ்வளவோ ஏமாற்றத்துக்கும் மனத்துயருக்கும் ஆளாக வேண்டியிருந்தது. கதாநாயகி வேஷம் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு மட்டமான வேஷந்தான் கிடைத்தது. இந்தத் தடவை அந்த வேஷத்தில் நடித்து நல்ல பெயர் வாங்கி விட்டால், அடுத்த தடவை கதாநாயகி வேஷம் கிடைக்குமென்று பட்சிராஜன் தேறுதல் கூறினார். எதனாலோ அவர் பேச்சில் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டாயிற்று. உண்மையில் அவர் சொன்னபடியே நடக்கவும் நடந்தது. முதல் டாக்கியில் மட்டமான வேஷத்திலேயே நான் நல்ல பெயர் சம்பாதித்தேன். அது வெளியான சில நாளைக்குள்ளேயே, இன்னொரு டாக்கிக்குக் கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தார்கள். பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக ஒப்பந்தம் நடந்தது. பட்சிராஜனிடம் எனக்கு அளவிறந்த நன்றியுண்டாயிற்று. “உங்களால் அல்லவா எனக்கு இவ்வளவு பெருமையும் வந்தது?” என்று ஆயிரம் தடவை சொன்னேன். என்னால் ஒன்றுமே நடக்கவில்லை உங்களுடைய முகவெட்டுத்தான் காரணம்; உங்களுடைய சாரீரந்தான் காரணம்" என்று சொல்வார். இரண்டாவது டாக்கி எடுப்பதற்காக நாங்கள் கல்கத்தா போனோம். அங்கே ஐந்து மாத காலம் தங்க வேண்டியதாக ஏற்பட்டது. இந்தப் படம் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில், நடந்த ஒரு சம்பவம் என் மனத்தில் எப்படியோ மிக ஆழமாய்ப் பதிந்தது. “இது என்ன பிரமாத விஷயம்?” என்று நானே பல தடவை எண்ணமிட்டிருக்கிறேன். என்றாலும் எதனாலோ அச்சம்பவம் என் மனத்தில் மிகவும் முக்கியத்தை அடைந்துவிட்டது. ஒரு நாளைக்கு ஸ்டுடியோவில், “இன்றைக்கு யாரோ ஒரு பிரமுகர் ஷுட்டிங் பார்க்க வரப் போகிறார்” என்று பிரஸ்தாபம் வந்தது. அவரை வரவேற்பதற்காக ஏற்பாடுகள் நடந்தன. வரப்போகிறவர்களின் பெயர் ‘பாபு சம்பு பிரஸாத்’ என்று சொன்னார்கள். “அவர் என்ன அவ்வளவு பெரிய மனிதரா? எதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம்!” என்று விசாரித்தேன். பாபு சம்பு பிரஸாத் மகா மேதாவி என்றும் அவருடைய ஆராய்ச்சிகள் அவரை உலகப் பிரசித்தமாக்கியிருக்கின்றன வென்றும், சமீபத்தில் அவருக்குச் சர்வகலாசாலையார் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என்றும் சொன்னார்கள். பட்சிராஜனே அவரைப் பற்றிப் பிரமாதமாகப் பேசினார். “ஒருவேளை இங்கே ஸெட்டுக்கு வந்தாலும் வருவார். அப்போது உன்னை அறிமுகப்படுத்தப் போகிறேன். நீ அவரிடம் தைரியமாகப் பேச வேண்டும்” என்றார். “அவர் என்ன பாஷையில் பேசுவார்?” என்று கேட்டேன். “இந்த வங்காளிகளே சுய பாஷையில் அபிமானம் கொண்டவர்கள். எப்போதும் வங்காளியில் தான் பேசுவார்கள். ஆனால் நாம் தென்னிந்தியர்கள் என்று தெரிந்தால் இங்கிலீஷில் பேசலாம். உனக்குத் தான் தெரியுமே? ஏதாவது கேட்டால் பளிச்சென்று பதில் சொல்லு” என்றார். அவ்வளவு பெரிய உலகப் பிரசித்தமான மேதாவியைப் பார்க்க நானும் ஆவலுடன் இருந்தேன். கடைசியாக அவர் மத்தியானம் வந்தார். வங்காளிகளில் பெரும்பாலாரைப் போல் அவரும் நீண்ட தாடி வளர்த்துக் கொண்டிருந்தார். அவருடன் ஒரு பெரிய கும்பலே வந்தது. ஸ்டுடியோ நிர்வாகிகள் அவருக்கு ரொம்பவும் மரியாதை செய்து எல்லாவற்றையும் காட்டிக் கொண்டு வந்தார்கள். எங்களுடைய ஸெட்டுக்கு அவர் வந்ததும், பட்சிராஜன் அவரை வரவேற்று, என்னையும் அறிமுகப்படுத்தி வைத்தார். “இவர் உயர் குடும்பத்துப் பெண். கலையின் மேல் உள்ள ஆர்வத்தினாலேயே சினிமாவில் நடிக்க முன்வந்திருக்கிறார்” என்று அவர் கூறிய போது எனக்கு மிகவும் பெருமையாயிருந்தது. அவருக்கு மனத்திற்குள் நன்றி செலுத்தினேன். அப்போது அந்தப் பிரமுகர், என்னைப் பார்த்து, “நீங்கள் உயர் குடும்பத்துப் பெண்ணாயிருந்து இம்மாதிரி நடிப்புக் கலையில் சிரத்தை கொண்டது மிகவும் சந்தோஷிக்க வேண்டிய காரியம். உங்களைப் போன்றவர்களால் தான் சினிமா உத்தாரணம் ஆக வேண்டும். ஆனால், சினிமா தொழில் ஒழுக்கம் கெட்டுப் போகிறதென்று சாதாரணமாய் ஓர் அபிப்பிராயம் இருந்து வருகிறது. உங்களைப் போன்றவர்கள் அதைப் பொய்யாக்க வேண்டும்” என்றார். இதையெல்லாம் இங்கிலீஷில்தான் சொன்னார். என்னை என்னவோ செய்தது. அவருக்கு பதில் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், நா எழவில்லை. பட்சிராஜன் என்னைப் பார்த்து, “ஏதாவது பதில் சொல்லுங்கள்” என்றார். “எனக்காக நீங்களே சொல்லுங்கள்” என்றேன் நான். உங்களுடைய புத்திமதிக்காக மாலதி ரொம்பவும் வந்தனம் செலுத்துகிறாள்" என்றார் பட்சிராஜன். அப்போது பாபு சம்பு பிரஸாத் அவருடைய கூரிய கழுகுக் கண்களால் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டுப் போய்விட்டார். அந்த மேதாவிக்கு நான் அச்சமயம் வந்தனம் செலுத்தாவிட்டாலும் இப்போது செலுத்துகிறேன். அவருடைய புத்திமதி என் விஷயத்தில் அநாவசியமென்றாலும், எவ்விதக் காரணமும் இல்லாமல், முன்பின் தெரியாத என்னிடம் அவர் சிரத்தை எடுத்துக் கொண்டாரல்லவா? அவருடைய பார்வையையோ, பேச்சையோ என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. என் இரண்டாவது டாக்கியினால் என் புகழ் பிரமாதமாக வளர்ந்து ‘ஓஹோ’ என்று ஆகிவிட்டது. மாலதியின் படம் வராத பத்திரிகையே கிடையாது (‘மாலதி’ என்னுடைய வெள்ளித்திரைப் பெயர்; பட்சிராஜன் அளித்த பெயர்) தமிழ்நாட்டுப் பட்டணங்களின் சுவர்களில் எல்லாம் மாலதியின் புன்னகை வதனம் காட்சி தந்தது. இப்படி நான் புகழின் சிகரத்தையடைந்திருந்த சமயத்திலே தான், என் தந்தை என்னை இவ்வுலகில் அநாதையாக விட்டு விட்டுக் காலமானார். வெகு நாளாக எங்கள் குடும்பத்திலிருந்த சமையற்காரியைத் தவிர, நான் வேறு துணையில்லாதவளானேன். ஆனால் அதிக நாள் துணையின்றி இருக்கவில்லை. இரண்டாவது டாக்கியில் என் புகழ் பெருகியதிலிருந்து அதுவரை என்னைப் பகிஷ்காரம் செய்திருந்த உறவினர்கள் எல்லாம் என்னைத் தேடி வந்து உறவு கொண்டாடத் தொடங்கினார்கள். வெகு தூரத்து பந்துக்களெல்லாம் வந்தார்கள். சிலர் வேலைக்காக வந்தார்கள். சிலர், டாக்கியில் சேர்வதற்குச் சிபாரிசுக்காக வந்தார்கள். வேறு சிலர் பொருளுதவி தேடி வந்தார்கள். சிலர், பிரபல நட்சத்திரத்தின் பந்து என்ற பெருமையை நிலை நாட்டிக் கொள்வதற்காகவே வந்தார்கள். “அபலைப் பெண்ணாச்சே?” என்று இரக்கப்பட்டு வரவு செலவுக் கணக்கைக் கவனித்து ஒழுங்குபடுத்துவதற்கு அநேகர் சித்தமாயிருக்கிறார்கள்! இதனாலெல்லாம் நான் அடைந்த தொல்லைகளைச் சொல்லி முடியாது. அவர்களை எல்லாம் வைத்துச் சமாளிப்பது பெருங் கஷ்டமாயிருந்தது. இவ்வளவு தொல்லைகளுக்கிடையில், எனக்கு உண்மையில் உற்ற சிநேகிதராக நடந்து கொண்டவர் பட்சிராஜன் ஒருவர் தான். அவரால் எனக்கு ஒரு விதமான கஷ்டமும் கிடையாது! எல்லாவிதத்திலும் ஒத்தாசையாகத்தான் இருந்தார். அப்பா காலமான பிறகு அவரிடம் தான் என் பணம் வரவு செலவுகளை ஒப்புவித்திருந்தேன். அவரும் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டு அடிக்கடி என்னிடம் கணக்கு ஒப்புவித்து வந்தார். எனக்கும் அவருக்கும் இருந்த உறவைப் பற்றி ஊரில் பல வகையாகப் பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவரோ என்னுடைய மனப் போக்கை அறிந்து, என்னை மிகவும் மரியாதையாக நடத்தி வந்தார். ஒரு தடவையாவது அவர் வரம்பு மீறி நடந்ததில்லை. என் மனத்தில் மட்டும் சில காலமாக ஒரு சஞ்சலம் தோன்றியிருந்தது. ‘எத்தனை நாளைக்கு இம்மாதிரி நாதனற்றவளாக இருப்பது? இவ்வளவு தூரம் நமக்கு உதவி செய்திருப்பவரை ஏன் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது?’ என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று. இப்படியிருக்கையில் ஒருநாள் பட்சிராஜன் அந்த ஆச்சரியமான - என்னை ஒரேயடியாகப் பெருமையின் சிகரத்துக்குக் கொண்டு போன செய்தியுடன் வந்தார். “மாலதி! இன்று தான் என் உள்ளம் குளிர்ந்தது. உன்னுடைய அடுத்த காண்டிராக்ட் ஒரு லட்சத்திற்குக் குறையக் கூடாது என்று தீர்மானித்தேன். இதோ ஒரு லட்சத்துப் பத்தாயிரத்துக்குக் காண்டிராக்ட்!” என்றார். நான் பிரமை பிடித்தவள் போலானேன். பத்து நிமிஷம் வரையில் என்னால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. பிறகு “இது கனவில்லையே? டாக்கியில் ஒரு காட்சி இல்லையே?” என்று கேட்டேன். “இதோ பார்!” என்று ஒரு நகல் ஒப்பந்தத்தில் எண்ணாலும் எழுத்தாலும் ‘ஒரு லட்சத்துப் பத்தாயிரம்’ என்று போட்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டினார். “நல்ல நாள் பார்த்து கையெழுத்துப் போட வேண்டியது தான் பாக்கி” என்றார். நான் அவருடைய கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணில் நீர் ததும்ப, நாத் தழுதழுக்க, “என் உயிர் உள்ளவரையில் நான் உங்களை மறக்க மாட்டேன்” என்றேன். ஆம்; அவரை என் உயிர் உள்ளவரையில் - நாளை நள்ளிரவு வரையில் - என்னால் மறக்க முடியாது! ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் செய்த அற்புதமான காரியத்தையும் நான் மறக்க முடியாது தான்! சீக்கிரத்திலேயே மேற்படி ஒப்பந்தம் முடிந்தது. கையெழுத்து ஆயிற்று. தென்னிந்தியாவின் டாக்கித் தொழிலை முழுவதும் கைப்பற்றுவதென்று இலங்கையிலிருந்து ஒரு முதலாளி ஏராளமான பணத்துடன் வந்திருந்தார். தென்னிந்தியாவிலுள்ள பிரபல நட்சத்திரங்களையெல்லாம் அவர் ஒப்பந்தம் செய்து கொண்டு வந்தார். அவர் தான் என்னையும் மேற்படி பெருந் தொகைக்கு ஒப்பந்தம் செய்தார். நாற்பதினாயிரம் ரூபாய் அட்வான்சும் கொடுத்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு - டாக்கி எடுப்பதற்குப் பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அந்த இடி போன்ற செய்தி வந்தது. என் ஆகாசக் கோட்டை இடிந்து தூள் தூளாயிற்று. பட்சிராஜன் திடீரென்று காணாமற் போய்விட்டார்! சினிமா உலகில் ‘எக்ஸ்ட்ரா’ பெண்கள் என்று ஓர் இனம் உண்டு. தோழிப் பெண்கள் முதலிய சில்லறை வேஷங்களில் நடிப்பதற்கு அவர்களை அன்றாடம் சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ‘எக்ஸ்ட்ரா’ பெண் ஒருத்தியுடன் பட்சிராஜன் அந்தர்த்தியானமாகி விட்டார்! அவர் மட்டும் அந்தர்த்தியானமாகவில்லை. பாங்கியில் இருந்த என் பணம் ரூ.40,000மும் அவரோடு அந்தர்த்தியானமாகி விட்டது. பட்சிராஜனை நான் பரிபூரணமாய் நம்பி, அவரிடமே என் வரவு செலவை ஒப்புவித்திருந்தேன் என்று சொன்னேனல்லவா? புதிய ஒப்பந்தப்படி வந்த அட்வான்ஸ் தொகையை அவர் தம் பேரிலேயே பாங்கில் போட்டுக் கொண்டிருந்தார். அவரே அதை வாங்கிக் கொண்டும் போய் விட்டார். “ஆகா! இந்தப் பட்சிராஜன் எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனிதர்? வேறொரு மனிதனாயிருந்தால், நாம் இப்படித் தன்னந்தனியாய் அவரையே நம்பி இருப்பதற்கு இவ்வளவு நேர்மையாய் இருப்பானா? நம்மிடம் ஒன்றையுமே கோராமல் இப்படி அன்புடன் இருக்கிறாரே? இவர் தெய்வப் பிறவிதான்!” என்று பலமுறை நான் எண்ணியது உண்டு. பட்சிராஜன் என்னத்தைக் கோரி என்னிடம் அவ்வளவு அன்பாயிருந்தார் என்பது இப்போதுதான் தெரிந்தது. 4. வீ ழ்ச்சி பட்சிராஜன் பறந்து போய் ஏறக்குறைய இப்போது ஒன்றரை வருஷமாகிறது. இந்த ஒன்றரை வருஷத்தில் என்னுடைய வாழ்க்கையை நினைத்தாலே எனக்குப் பயங்கரம் உண்டாகிறது; மூளை குழம்புகிறது. இலங்கை முதலாளிக்கு எழுதிக் கொடுத்த ஒப்பந்தத்தின்படி டாக்கியில் நடித்தேன். இந்த டாக்கி எடுத்து முடிவதற்குள் ஒரு வருஷத்திற்கு மேலாயிற்று. இந்தக் காலத்தில் முதலாளி, டைரக்டர், ஸ்டூடியோ மானேஜர், பிரதான ஆண் நடிகர் எல்லோருமாகச் சேர்ந்து என்னைப் படுத்தி வைத்த பாட்டைச் சொல்ல முடியாது. ஆண் துணையில்லாமல் ஒரு அபலை ஸ்திரீ அகப்பட்டுக் கொண்டால், உலகத்தில் - அதுவும் சினிமா உலகத்தில் - அவளை என்ன பாடுபடுத்தி வைப்பார்கள் என்னும் பாடத்தை நன்றாக அறிந்து கொண்டேன். என்னுடைய பரம விரோதிக்குக் கூட அப்பேர்ப்பட்ட கதி வரவேண்டாமென்று பகவானைப் பிரார்த்திக்கிறேன். தொல்லை பொறுக்க முடியாமல், பல தடவை “என்னால் முடியாது” என்று நின்று விடத் தோன்றியது. ஆனாலும், பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்தேன். டாக்கி முடிந்ததும், அட்வான்ஸு தொகை போகப் பாக்கி பணம் வந்துவிடுமல்லவா? அப்புறம் சினிமாவுக்குத் தலை முழுகி விட்டு ‘ராமா கிருஷ்ணா’ என்று பகவானைத் தியானித்துக் கொண்டு காலங் கழிக்கலாம். அந்த எண்ணத்திலேதான் பட்சிராஜன் ரூ.40,000 கொண்டு போனதைப் பற்றிக் கூட நான் அதிகம் கவலைப்படவில்லை. டாக்கியின் முடிவு நெருங்க, எனக்குச் சேர வேண்டிய பாக்கி பணத்தைச் சரியாகக் கொடுப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு வந்தது. எனவே, டாக்கி முடிவதற்குள் இன்னும் ஒரு பகுதியாவது வாங்கி விட வேண்டுமென்று நினைத்து ஒரு நாள் முதலாளியின் ஆபீஸுக்குப் போய்ப் பணம் வேண்டுமென்று கேட்டேன். அவர் ஒரு பேய்ச் சிரிப்பு சிரித்து விட்டு, “இந்த டாக்கி முடிந்து அடுத்த டாக்கியும் முடியும் வரை பணம் என்ற பேச்சைப் பேசாதே!” என்றார். எனக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. “என் உயிர் போனாலும் நான் இன்னொரு டாக்கியில் நடிக்க மாட்டேன்” என்றேன். “அப்படியானால் ஒப்பந்தப்படிஅட்வான்ஸு தொகை ரூ.40,000த்தையும் கக்கிவிட வேண்டும்!” என்றார். அப்போதுதான் எனக்கு விஷயம் தெரிந்தது. அந்தப் பாதகன் பட்சிராஜன் என்னை எப்பேர்ப்பட்ட படுகுழியில் தள்ளிவிட்டுப் போய்விட்டான் என்று புரிந்தது. ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் ஒரு டாக்கிக்கு அல்ல, நாலு டாக்கிக்கு என்று தெரிந்தது. இந்த செய்தியினால் திகைத்துப் போய் நான் வீடு திரும்பினேன். முதலில் நான் நம்பவே இல்லை. வீடு திரும்பியதும், ஒப்பந்தத்தை எடுத்து வாசித்துப் பார்த்தேன். அதில் நாலு படங்களுக்கு என்று தான் கண்டிருந்தது. என் கொஞ்சப் பிராணனும் போய் விட்டது. நாலு படங்களில் நடிப்பதா? அதுவும் இந்தப் பாவிகளிடம்? ஒரு நாளும் இல்லை; உயிர் போனாலும் இல்லை. இன்னொரு நாள் முதலாளியிடம் பேசினேன். நல்ல வார்த்தையாக என்னை ஒப்பந்தத்திலிருந்து விடுதலை செய்து விடும்படி கேட்டேன். அவர் பிடிவாதமாக ‘முடியாது’ என்றார். மேலும் நான் வற்புறுத்தியபோது, “அட்வான்ஸு தொகை ரூ.40,000த்தையும் கொண்டுவை! விடுதலை செய்கிறேன்” என்றார். அதற்கு “நான் எங்கே போவேன்? பட்சிராஜன் கொண்டுபோய் விட்டாரே?” என்றேன். “எனக்குத் தெரியும், உங்கள் மோசடியெல்லாம்! நீங்கள் இரண்டு பேரும் கலந்து பேசிக் கொண்டு, இப்படித் தகிடுதத்தம் செய்யப் பார்க்கிறீர்கள்!” என்றார். அப்போது எனக்கு ஆவேசம் வந்துவிட்டது. அந்த ஆவேசத்தில் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் இரைந்து கத்தினேன். மேலே பேச்சு முற்ற முற்ற என்னவெல்லாமோ சொல்லி விட்டேன். “எல்லோரையும் குத்திக் கொன்று விடுவேன்.” “ஸ்டுடியோவைக் கொளுத்தி விடுவேன்” என்று சொன்னதெல்லாம் சொப்பனத்திலே சொன்னது போல் எனக்குப் பிற்பாடு ஞாபகம் வந்தது. இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அதுமுதல் நான் ஸ்டூடியோவுக்கு வர மறுத்து விட்டேன். ஒரு நாளைக்கு ஸ்டூடியோ மானேஜர் வந்து என்னை நல்ல வார்த்தை சொல்லி அழைத்துப் போனார். முதலாளியின் ஆபீஸில் போய் நான் உட்கார்ந்ததும் என்னுடைய குரல் அடுத்த அறையிலிருந்து வருவதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன். முன்னொரு நாள் முதலாளியிடம் இதே ஆபீஸில் பேசியதெல்லாம் தெளிவாகக் கேட்டது. “எல்லோரையும் குத்திக் கொன்று விடுவேன்” “ஸ்டூடியோவைக் கொளுத்தி விடுவேன்” என்று நான் கத்தியதெல்லாம், திரும்பக் கேட்டது! எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் எடுத்து விட்டது. அப்போது அந்த முதலாளி யமன் சொன்னான். ’உனக்கு இருபது வருஷங் கடுங்காவல் தண்டனை விதிப்பதற்கு இதோ சாட்சியம் இருக்கிறது. என்ன சொல்கிறாய்? சொன்னபடி கேட்டுக் கொண்டு நாலு படங்களில் நடிக்கிறாயா? அல்லது இன்றைக்கே அரஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கட்டுமா? நான் பதில் ஒன்றும் சொல்லாமல் பாதிப் பிராணனுடன் வீடு போய்ச் சேர்ந்தேன். ஆனால், என் மனது மட்டும் இரும்பாயிற்று. அன்று வேண்டுமென்றே எனக்கு ஆத்திரமுண்டாக்கிக் கண்டபடி பேசும்படி செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் ஒலிப்பதிவு செய்ய முன் கூட்டியே ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். தாங்கள் பேசியதையெல்லாம் வெட்டியெறிந்து விட்டு, என் பேச்சை மட்டும் வைத்துக் கொண்டு என்னைப் பலவந்தப் படுத்தப் பார்க்கிறார்கள். என்ன கேவலமான சூழ்ச்சி. என்ன இரக்கமற்ற அக்கிரமம்! “நமக்காச்சு; இவர்களுக்காச்சு. என்ன ஆனாலும் இனிமேல் படத்தில் மட்டும் நடிப்பதில்லை” என்று உறுதி செய்து கொண்டேன். இதை எப்படிச் சாதிக்கலாம் என்று அன்றிரவெல்லாம் ஒரு விநாடி கூடக் கண்ணை மூடாமல் சிந்தனை செய்தேன். கடைசியில், ஒரு யுக்தியைக் கண்டு பிடித்தேன்! வேறொன்றுமில்லை. பல கதைகளில் கதாநாயகிகள் கையாண்டிருக்கும் யுக்திதான். ஆனால் அந்த யுக்தி என் விஷயத்தில் என்ன விபரீதமான பலனைக் கொடுத்திருக்கிறது? ஸ்வாமி! பகவானே! நல்ல வேளையாக, இன்னும் ஒரு மணி நேரந்தான் பாக்கியிருக்கிறது. இந்த ஒரு மணி நேரம் என் அறிவைத் தெளிவாக வைப்பாய், ஸ்வாமி! யுக்தி இன்னதென்று சொல்லவும் வேண்டுமா! பைத்தியம் மாதிரி நடிக்கும் யுக்திதான். மறுநாளே அதைக் கையாள ஆரம்பித்தேன். சமையற்கார அம்மாளிடம் மட்டும் விஷயத்தை அந்தரங்கமாகச் சொல்லி விட்டு மற்றபடி யார் வந்து கேட்டாலும் “ஆமாம்; பட்சிராஜன் பறந்து போய் விட்டார்” என்று பதில் சொல்ல, ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தேன். டாக்கி முதலாளி என்னவெல்லாமோ பிரயத்தனம் செய்தார். யார் யாரோ டாக்டர்களையெல்லாம் பிடித்து அனுப்பினார். எல்லோருக்கும் நான் பல்லவியைப் படித்தேன். ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவ்விதம் நாள் போய்க் கொண்டிருந்தது. என்னைப் போல் கிட்டத்தட்ட உருவமுள்ள ஒருத்தியைப் பிடித்துப் பாக்கிப் படத்தை எப்படியோ முடித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால், முதலாளி மட்டும் என்னை விடுவதாகக் காணவில்லை. மறுபடியும் மறுபடியும் என் உடம்பு எப்படியிருக்கிறதென்று பார்க்க யாரையாவது அனுப்பிக் கொண்டேயிருந்தார். என் உடம்பு நன்றாய்த்தானிருந்தது. ஆனால் நாளாக ஆக, என் அறிவுக்குத் தான் ஏதோ ஏற்பட்டு வந்தது. இரவில் தூக்கம் என்பது அடியோடு போய் விட்டது. திடீரென்று இருள் சூழ்ந்தது போல் அறிவு சூனியமாகி விடும். அப்போது என் வாய் மட்டும் ஏதோ பிதற்றிக் கொண்டிருக்கும். நான் பைத்தியம் என்று நடித்தது போக, உண்மையாகவே எனக்குச் சித்தப் பிரமை ஏற்பட்டு வருகிறது என்பதை உணரலானேன். சமையற்கார அம்மாள் என் விஷயத்தில் காட்டிய கவலையிலிருந்து இதைத் தெளிவாக அறிந்து கொண்டேன்! ஒரு பெரிய பீதி என்னைப் பிடித்துக் கொண்டது. பைத்தியம் முற்றிய ஸ்திரீகள் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் பயங்கர அலங்கோல நிலைமையை நானும் அடைந்து விடுவேனோ? ஒரு நாளும் இல்லை. இப்படிப்பட்ட கதி நேர்வதற்கு முன்னால், அறிவுத் தெளிவு சிறிதேனும் இருக்கும் போதே, என் துயர வாழ்க்கையை முடித்துவிட வேண்டும். இந்த தீர்மானத்துடனே தான் இவ்வூருக்கு வந்து சேர்ந்தேன். கதை முடிந்து விட்டது. யாராவது இதைப் பார்ப்பார்களோ? பார்த்து எப்போதாவது பிரசுரிப்பார்களோ, நான் அறியேன். என்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டேன்… இதோ மணி பன்னிரண்டு அடிக்கிறது! கிளம்ப வேண்டியதுதான். ஏழு வருஷங்களுக்கு முன்னால் ஓர் அமாவாசை இரவில் இப்படித்தான் இருள் சூழ்ந்திருந்தது! இன்று போலவே தான் அன்றும் மேல் காற்று ‘விர் விர்’ என்று வீசி வீட்டையே கிடுகிடுக்கச் செய்தது. வேகவதி நதியும் அன்று போலவே இன்றும் நொங்கும் நுரையுமாக அலையெறிந்து போய்க் கொண்டிருந்தது. “மறு உலகம் என்பது உண்டானால், அங்கே என் கணவரை நான் அவசியம் சந்திப்பேன். அவருடைய பாதங்களில் விழுந்து இந்தப் பாவியை மன்னியுங்கள்” என்று கேட்டுக் கொள்வேன். இதுதான் என் வாழ்க்கையில் கடைசி மனோரதம். இதற்காகத்தான் அதே வேகவதியாற்றுக்கு, அதே நள்ளிரவு நேரத்தில் கிளம்பிச் செல்கிறேன்! வேகவதித் தாயே! இதோ வந்து விட்டேன். மறு ஜன்மத்தில் உன்னிடம் அடைக்கலம் புகுந்து அமைதி பெறுகிறேன். முடிவு கனவிலும் நினையாத காரியம் நடந்துவிட்டது. கதைகளிலே கேட்டறியாத சம்பவம் நடந்துவிட்டது. என் வாழ்க்கை புனிதமாகி விட்டது. நான் புத்துயிர் பெற்றேன். என் குருட்டுத் தனத்தினால், நான் இழந்த பாக்கியத்தை மீண்டும் பெற்றேன். வாழ்க்கை சோகமயமாயிருந்தபோது, என் கதையை எழுத வேண்டுமென்று தோன்றிற்று; இப்போது அந்த விருப்பம் கொஞ்சமும் எனக்கு இல்லை. ஆனாலும் அவருடைய வற்புறுத்தலுக்காகவே இதை இப்போது எழுதுகிறேன். மேலே நான் எழுதியிருப்பதையெல்லாம் அவர் படித்தார். “பாக்கியையும் எழுதிவிடு; பெயரையும் ஊரையும் மட்டும் மாற்றிப் பிரசுரித்தால் எவ்வளவோ பேருக்கு உபயோகமாயிருக்கலாம்” என்றார்! உபயோகமோ, இல்லையோ, அவர் சொல்லியதற்காக எழுதி விடுகிறேன். அன்றிரவு சரியாகப் பன்னிரண்டாவது மணிக்குப் புறப்பட்டு வாசற் கதவைச் சத்தமின்றித் திறந்து கொண்டு வெளியே வந்தேன். என் மனத்தில் ஓர் அதிசயமான அமைதி அப்போதே ஏற்பட்டு விட்டது. தெருவில் அந்த வேளையில் யாராவது வந்து தொலைக்கப் போகிறார்களே என்று சிறு கவலை மட்டும் இருந்தது; ஆனால் ஒரு பிராணியைக் கூடச் சந்திக்கவில்லை. நதிக்கரையை அடைந்ததும், பின்னால் காலடிச் சத்தம் கேட்டதுபோல் தோன்ற, நெஞ்சில் துணுக்கம் ஏற்பட்டது. “யாராவது வந்து தடுத்து விட்டால்?” என்று நினைத்ததும் கதிகலங்கிற்று. அவசரமாகவே ஜலத்தில் இறங்கினேன். வெள்ளம் பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது. அவ்வளவு நேரமும் மனத்தில் இருந்த தைரியம், துணிச்சல் எல்லாம் எப்படியோ போய், இன்னதென்று சொல்ல முடியாத பீதி ஏற்பட்டது. குளிரினால் நடுங்கிய உடம்பு, பீதியினால் அதிகம் நடுங்கிற்று. என்னையறியாமல் பற்களை நரநரவென்று கடித்துக் கொண்டேன். இவ்வளவுடன் தண்ணீரில் மேலும் மேலும் இறங்கிக் கொண்டுதானிருந்தேன்! ஜலம் இடுப்பளவுக்கு வந்தது. வெள்ளத்தின் வேகம் இழுக்கத் தொடங்கியது. ஜலம் மார்பளவுக்கு வந்தது. இழுப்பின் வேகம் அதிகமாயிற்று. இனிமேல் நாம் விரும்பினாலும் கரையேற முடியாது என்று தோன்றிய அதே சமயத்தில், பின்னால் யாரோ தண்ணீரில் இறங்குவதுபோல் சலசலவென்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அந்த இருட்டில் ஓர் உருவம் - மனித உருவந்தான் - விரைவாக என்னை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்ததாக மங்கலாகத் தெரிந்தது. என் வாழ்க்கையில் அதுவரையில் அறியாத பயங்கர பீதியை அந்தக் கணத்தில் நான் அடைந்தேன். ஒரே ஒரு கணந்தான். அடுத்த கணத்தில் அந்த உருவம் ஏழு வருஷங்களுக்கு முன்னால் அதே இடத்தில் மூழ்கி மறைந்த என் நாதரின் உருவம் தான் என்பதை அறிந்தேன். “கிறீச்” என்ற ஒரு சத்தம் என் வாயிலிருந்து வந்து, அந்த நதிப் பிரதேசமெல்லாம் எதிரொலிக்கச் செய்தது. அடுத்த கணம் நான் நீரில் மூழ்கினேன். ஒரு நொடிப் பொழுது, என் அறிவில் ஒரு பிரகாசம் ஏற்பட்டது. பின்னர், அறிவைப் பேரந்தகாரம் வந்து சூழ்ந்தது. மறுபடியும் நான் கண்ணை விழித்தபோது அவருடைய மடியில் என் தலை இருப்பதையும், அளவிலாத பரிவுடனே அவர் என்னைக் குனிந்து நோக்கிக் கொண்டிருப்பதையும் கண்டேன். உலக வாழ்க்கையில் நான் அடையாத பாக்கியத்தை மறு உலகில் அடைந்திருப்பதாக முதலில் எனக்குத் தோன்றியது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம். இது இந்த உலகம் தான் என்று தெரிந்தது. சற்று நேரம் பேச முடியவில்லை. மனம் மட்டும் ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தது. பேசும் சக்தி வந்ததும், “தாடி மீசையெல்லாம் எப்போது எடுத்தீர்கள்?” என்று கேட்டேன். அவர் ஆச்சரியத்தினால் பிரமித்து, “உனக்கு எப்படித் தெரிந்தது?” என்றார். அதற்குப் பதில் சொல்லாமல் “தங்களுடைய புத்திமதியை நான் மறக்கவில்லை. அதை நிறைவேற்றினேன்” என்றேன். மீண்டும் அவர், “உனக்கு எப்படித் தெரிந்தது? எப்போது தெரிந்தது?” என்று கேட்டார். “தண்ணீரில் மூழ்கியவுடனே பளிச்சென்று தெரிந்தது. அடுத்த நிமிஷம் நினைவு தப்பி விட்டது” என்றேன். … தொடர்ச்சி … ஆம்; கல்கத்தா ஸ்டுடியோவில் என்னைப் பார்த்துப் புத்திமதி சொன்ன பாபு சம்பு பிரஸாத் என்னுடைய கணவர்தான். அப்போது அது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவருடைய கூரிய கண்களின் பார்வை என் மனத்திற்குள்ளேயே பதிந்து கிடந்தது. நாங்கள் இல்லறம் நடத்திய போதெல்லாம், அம்மாதிரி அவர் என்னைப் பார்த்தது கிடையாது. மறுபடியும் அன்றிரவு கழுத்தளவு தண்ணீரில் நான் நின்று தத்தளித்தபோது, நட்சத்திர வெளிச்சத்தில் அதே பார்வையைக் கண்டேன். தண்ணீரில் மூழ்கிய தருணத்தில், “அந்த வங்காளிப் பிரமுகர் உண்மையில் என் கணவர்தான்” என்னும் உள்ளுணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய உள்ளுணர்வு உண்மையை சொல்லிற்று என்பதை அவரே இப்போது உறுதிப்படுத்தினார். அவர் வீட்டை விட்டுக் கிளம்பிய போது நதியில் விழுந்து உயிரை விடுகிற எண்ணமே அவருக்கு இருக்கவில்லையாம். எங்கேயாவது கண்காணாத தேசத்துக்குப் போய்விடுவதென்று கிளம்பினாராம். நான் பின்னால் தொடர்ந்து வருவேன் என்று தெரிந்து கொண்டு நதியில் மூழ்கி விட்டதாக என்னை நம்பும்படி செய்துவிட்டால், நான் நிம்மதியாயிருப்பேன் என்றெண்ணி அவ்விதம் ஆற்றில் இறங்கி மூழ்கினாராம். கொஞ்ச தூரம் தண்ணீரிலேயே மூழ்கிச் சென்று பிறகு சத்தம் செய்யாமல் நீந்திக் கரையேறினாராம். முன்னாலேயே அவர் உத்தேசித்து வைத்திருந்தபடி, கல்கத்தாவுக்குச் சென்று, மாறு பெயர் வைத்துக் கொண்டு ஆராய்ச்சிகளை நடத்தி வந்த போதிலும், என்னுடைய ஞாபகம் மட்டும் அவருக்குப் போகவேயில்லையாம். சீக்கிரத்தில் நான் ’பிரபல நட்சத்திர’மாகி விட்டபடியால், என்னுடைய வாழ்க்கையையும் நடவடிக்கைகளையும் அவரால் பத்திரிகைகளின் மூலம் கவனித்து வர முடிந்ததாம். கடைசியில், எனக்கு ஏதோ பெரிய சங்கடம் நேர்ந்துவிட்டதென்பதை ஒருவாறு தெரிந்து கொண்டு என்னைத் தேடி இந்த ஊருக்கு வந்து சேர்ந்தாராம். அதே தெருவில் ஒரு வீட்டில் இருந்து கொண்டு, என்னை எப்படிச் சந்திப்பது என்ற தயக்கத்துடன், இரவும் பகலும் எங்கள் வீட்டின் மேலேயே கண்ணாயிருந்தாராம். கடைசியில் சரியான சமயத்தில் என் உயிரையும் காப்பாற்றி, எனக்குப் புது வாழ்வையும் அளிப்பதற்கு வந்து சேர்ந்தார். கல்கத்தாவில் வங்காளிப் பெயர் வைத்துக் கொண்டு வேலை பார்த்ததில், அவருக்கு இன்னொரு பெரிய அநுகூலம் ஏற்பட்டதென்று சற்றே குதூகலத்துடன் அவர் சொன்னார். சென்னை மாகானத்தில் இருந்த வரையில், அவருடைய சரித்திர ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றி ஏனென்று கேட்பார் இல்லையாம்! கல்கத்தாவுக்குப் போய் வங்காளிப் பெயருடன் அதே முடிவுகளை வெளியிட்டதும், இந்தியா தேசம் முழுவதும் அவருடைய பெயர் பிரபலமாகி விட்டதாம்! அப்புறம் சென்னைப் பத்திரிகைகள் கூட அவரைப் பற்றிப் பிரமாதமாய் எழுதினவாம்! சென்ற ஏழு வருஷ காலத்தில் இந்த வேடிக்கை ஒன்றுதான் அவருக்கு நினைக்கும் போதெல்லாம் சிரிப்பை உண்டாக்கி வாழ்க்கை கசந்து போகாமல் செய்து வந்ததாம்! “ஏழு வருஷம் நான் சுதந்திர வாழ்க்கை நடத்தியாயிற்று; நீயும் ஏழு வருஷம் சுதந்திரமாக வாழ்ந்தாய்; சுதந்திர வாழ்க்கை எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது. உனக்கு எப்படி அம்பு?” என்று கேட்டார். அவருடைய குனிந்த முகத்தையும், கனிந்த கண்களையும் ஏறிட்டுப் பார்த்த வண்ணம் நான் சொன்னேன்: “தங்களுடைய மடியில் தலை வைத்துப் படுக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக நான் ஏழரை வருஷம் நரக வாழ்வு நடத்த வேண்டியிருந்தது! இனிமேல் என்னத்திற்கு?” புலி ராஜா 1 நமது கதாநாயகர் பிரிதிபந்தபுரம் மகாராஜா அவர்களை, ஹிஸ் ஹைனஸ் ஜமேதார் - ஜெனரல், கிலேதார் - மேஜர், சத வியாக்ர ஸ்ம்ஹாரி, மகா ராஜாதி ராஜ விசுவபுவன ஸம்ராட், ஸர் ஜிலானிஜங்ஜங் பகதூர் எம்.ஏ. - டி.ஏ.ஸி.டி.சி., ஸி.ஆர்.ஸி.கே என்றும் சொல்வதுண்டு; ‘புலி ராஜா’ என்று சுருக்கமாகச் சொல்வதும் உண்டு. அவருக்குப் ‘புலி ராஜா’ என்ற பெயர் ஏன் வந்தது என்பதைத்தான் இங்கே சொல்ல முன் வந்திருக்கிறேன்; ஆனால் முன் வருவது போல் வந்துவிட்டுப் பின் வாங்கும் உத்தேசம் எனக்குக் கொஞ்சம் கூடக் கிடையாது. "ஸ்டூகா’ பாம்பர் விமானம் வந்தாலும் நான் பயப்படப் போவதில்லை, ’ஸ்டூகா’தான் என் கதைக்குப் பயந்து ஓடும் படியிருக்கும். புலி ராஜாவைப் பற்றி மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை முதலிலேயே சொல்லிவிடுவது அவசியமாகிறது. ஏனெனில், அவரைப் பற்றிப் படிக்கும் போது, அப்பேர்ப்பட்ட அஸகாய சூரனைக் கண்ணால் பார்க்கவேண்டுமென்ற ஆசை எல்லாருக்கும் அளவில்லாமல் உண்டாகி விடும். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதற்கு வழி கிடையாது. பரதன் ராமனிடம் தசரதரைக் குறித்துச் சொன்ன பிரகாரம் உலகிலே பிறக்கும் ஜீவர்களெல்லாம் கடைசியாக எந்த இடத்துக்குப் போய்ச் சேருகிறார்களோ, அங்கே நமது புலி ராஜாவும் விஜயமாகிவிட்டார். சுருங்கச் சொன்னால், புலி ராஜா இறந்து போனார்! அவர் எப்படி இறந்து போனார் என்பது ஒரு அதிசயமான விஷயம். அதைக் கதையின் கடைசியிலேதான் சொல்ல வேண்டும். ஆனால், அவருடைய மரணத்தில் ஒரு பெரிய விசேஷம் என்னவென்றால், அவர் பிறந்த காலத்திலேயே, அவர் ஒருநாள் இறந்தும் போவார் என்று ஜோசியர்கள் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார்கள்! “குழந்தை வீராதி வீரனாகவும் சூராதி சூரனாகவும் தீராதி தீரனாகவும் விளங்குவான். ஆனால்…” என்று மென்று விழுங்கினார்கள். “என்ன சமாசாரம்” என்று அழுத்திக் கேட்டதன் பேரில், “சொல்லக்கூடாது; ஆனாலும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த ஜாதகனுக்கு ஒரு காலத்தில் மரணம் நேரிடும்” என்றார்கள். அந்தச் சமயத்தில் ஒரு பெரிய அதிசயம் நடந்தது. பிறந்த பத்து தினங்கள்தான் ஆன ஜிலானி ஜங்ஜங் பகதூர் வாயிலிருந்து ஒரு ஆச்சரியமான வார்த்தை கிளம்பிற்று. “பிரகஸ்பதிகளே!” என்பதுதான் அந்த வார்த்தை. எல்லாரும் அப்படியே பிரமித்துப் போய் நின்று விட்டார்கள் ஒருவரையொருவர் பார்த்து விழித்தார்கள். “நான் தான் பேசினேன், பிரகஸ்பதிகளே!” இந்தத் தடவை சந்தேகத்துக்கே இடமில்லை. பிறந்து பத்தே நாளான குழந்தைதான் அவ்வளவு திவ்வியமாகப் பேசியிருக்கிறது! தலைமை ஜோசியர் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி விட்டு குழந்தையை உற்றுப் பார்த்தார். “பிறந்தவர் யாவரும் இறந்துதானே தீர வேண்டும்? அதற்கு நீங்கள் என்ன ஜோசியம் சொல்வது? மரணம் எந்த விதத்தில் நேரும் என்று சொன்னாலும் அர்த்தம் உண்டு” என்று சின்னஞ்சிறு கீச்சுக் குரலில் யுவராஜா திருவாய் மலர்ந்தார். ஜோசியர் தலைவர், மூக்கிலே விரலை வைத்து அதிசயித்தார். பத்து நாள் குழந்தை பேசுகிறது. அதோடு இல்லை - இவ்வளவு புத்திசாலித்தனமான கேள்வி கேட்கிறது என்றால் இதென்ன, யுத்த இலாகா அறிக்கைகளைப் போல் தோன்றுகிறதே தவிர, நம்பக் கூடியதாயிருக்கிறதா. தலைமை ஜோசியர், மூக்கிலிருந்து விரலை எடுத்துவிட்டு யுவராஜாவை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார்:- “ரிஷப லக்கினத்தில் யுவராஜா ஜனனம். ரிஷபத்துக்கும் புலிக்கும் பகை. ஆகையால், புலியினால் மரணம்.” புலி என்ற வார்த்தையைக் கேட்டதும் யுவராஜா ஜங்ஜங் பகதூர் பயந்து நடுங்கியிருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை. புலி என்று கேட்டதும் யுவராஜா ஒரு உறுமல் உறுமினார். பிறகு இரண்டு பயங்கரமான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வெளி வந்தன:- “புலிகள் ஜாக்கிரதை!” மேலே கூறிய சம்பவம் பிரதிபந்தபுரத்தில் வழங்கி வந்த வதந்தியேதான். ஆனால், பின்னால் நடந்தவைகளைக் கொண்டு பார்க்கும்போது அது உண்மையாயிருக்கலாமென்றே தோன்றுகிறது. 2 யுவராஜா ஜங்ஜங் பகதூர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார். மேற்கூறிய சம்பவத்தை தவிர அவருடைய குழந்தைப் பருவத்தில் வேறு அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. மற்றச் சுதேச சமஸ்தானங்களின் யுவராஜாக்களைப் போல்தான் அவரும் இங்கிலீஷ் பசுவின் பாலைக் குடித்து, இங்கிலீஷ் நர்ஸினால் போஷிக்கப்பட்டு, இங்கிலீஷ் உபாத்தியாயரால் இங்கிலீஷ் கற்பிக்கப்பட்டு, இங்கிலீஷ் சினிமாக்கள் பார்த்து - இப்படியாக வளர்ந்து வந்தார். வயது இருபது ஆனதும், அது வரைக்கும் ’கோர்ட் ஆப் வார்ட்’ஸில் இருந்த ராஜ்யமும் கைக்கு வந்தது. ஆனால், ராஜ்யத்தில் மட்டும் மேற்சொன்ன ஜோசியக் கூற்று எல்லாருக்கும் நினைவிருந்தது. அநேகர் அதைப் பற்றிப் பேசியும் வந்தார்கள். மெதுவாக மகாராஜாவின் காதிலும் இந்தப் பேச்சு விழுந்தது. பிரதிபந்தபுரம் சமஸ்தானத்தில் காடுகள் ஏராளமாக உண்டு. அவற்றில் புலிகளும் உண்டு. “தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம்” என்ற பழமொழி மகாராஜாவுக்குத் தெரிந்திருந்தது. தன்னைக் கொல்லவரும் புலியைக் கொல்லுவதைப் பற்றி என்ன ஆட்சேபனை? - மகாராஜா புலி வேட்டையாடக் கிளம்பினார். முதல் புலியைக் கொன்றதும் மகாராஜாவுக்கு ஏற்பட்ட குதூகலத்துக்கு அளவில்லை. சமஸ்தானத்தின் ஜோசியர் தலைவரைக் கூப்பிட்டு அனுப்பினார். செத்த புலியைக் காட்டி, “இப்போது என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார். “மகாராஜா இந்த மாதிரியே 99 புலிகளைக் கொன்று விடலாம்; ஆனால்…” என்று ஜோசியர் இழுத்தார். “ஆனால் என்ன? தைரியமாகச் சொல்லும்!” “ஆனால் நூறாவது புலி விஷயத்தில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.” “சரி, நூறாவது புலியையும் கொன்று விட்டால் அப்புறம்?” “அப்புறம் என்னுடைய ஜோசியப் புத்தகங்களையெல்லாம் கிழித்து நெருப்பு வைத்துவிட்டு…” “வைத்துவிட்டு…” “தலையில் கிராப்பு வைத்துக் கொண்டு இன்ஷுரன்ஸ் கம்பெனி ஏஜண்டாகப் போய்விடுகிறேன்?” என்று ஜோசியர் சம்பந்தமில்லாமல் முடித்தார். 3 பிரதிபந்தபுரம் சமஸ்தானத்தின் காடுகளிலிருந்த புலிகளுக்கெல்லாம் அன்று முதல் கொண்டாட்டந்தான். மகாராஜாவைத் தவிர வேறு யாரும் புலி வேட்டை ஆடக்கூடாது என்று உத்தரவு பிறந்தது. தப்பித் தவறி யாராவது ஒரு புலியின் மேல் கல்லை விட்டெறிந்தால் கூட, அப்படிப்பட்ட ராஜத் துரோகத்தைச் செய்தவனுடைய சொத்துக்களெல்லாம் பறிமுதல் செய்யப்படுமென்று தண்டோரா போடப்பட்டது. மகாராஜா நூறு புலிகளை முழுசாகக் கொன்ற பிறகுதான் மற்ற காரியங்களில் கவனம் செலுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டார். அவருடைய உத்தேசம் நன்கு நிறைவேறியும் வந்தது. அபாயங்கள் அவருக்கு நேரிடாமல் இல்லை. சில தடவை துப்பாக்கிக் குறி தவறிப் புலி அவர் மேல் பாயவும், அதனுடன் கைகலந்து சண்டை போடவும் நேரிட்டது. ஒவ்வொரு தடவையிலும், அவர் தான் கடைசியில் வெற்றி பெற்றார். இன்னொரு சமயம் அவருடைய சிம்மாசனத்துக்கே ஆபத்து வருவதாயிருந்தது. ஒரு பெரிய பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர் பிரதிபந்தபுரத்துக்கு விஜயம் செய்தார். அவருக்குப் புலி வேட்டையில் ரொம்பப் பிரியம். அதைக் காட்டிலும், தாம் கொன்ற புலிக்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அதிகப் பிரியம். வழக்கம் போல் அவர் பிரதிபந்தபுரம் சமஸ்தானத்திலும், புலி வேட்டையாட விரும்பினார். ஆனால் மகாராஜா கண்டிப்பாக மறுத்துவிட்டார். “வேறு என்ன வேட்டைக்கு வேணுமானாலும் ஏற்பாடு செய்கிறேன். பன்றி வேட்டையா? ஆடுங்கள். எலி வேட்டையா? நடத்துங்கள். கொசு வேட்டையா? இதோ தயார். ஆனால் புலி வேட்டை மட்டும் இங்கே முடியாது” என்றார் மகாராஜா. “துரைதான் புலியைக் கொன்று ஆகவேண்டுமென்று அவசியமில்லை, மகாராஜாவே கொல்லலாம். செத்த புலிக்குப் பக்கத்தில், கையில் துப்பாக்கியுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதுதான் துரைக்கு முக்கியம்” என்று மேற்படி பிரிட்டிஷ் உத்தியோகஸ்தரின் காரியதரிசி சமஸ்தான திவான் மூலமாகச் சொல்லியனுப்பினார். இதற்கும் மகாராஜா சம்மதிக்கவில்லை. இப்போது கொஞ்சம் இடங்கொடுத்து விட்டால், அப்புறம் இன்னும் சில பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்களும் புலி வேட்டைக்கு வந்து சேரலாமல்லவா? இப்படி ஒரு பெரிய ஆங்கில உத்தியோகஸ்தரின் விருப்பத்துக்குக் குறுக்கே நின்றதன் பயனாக மகாராஜாவின் கையைவிட்டு ராஜ்யமே போய்விடுமோ என்று பயம் உண்டாயிற்று. இதைக் குறித்து மகாராஜாவும் திவானும் கலந்தாலோசித்தார்கள். உடனே கல்கத்தாவிலுள்ள ஒரு பெரிய இங்கிலீஷ் நகைக் கம்பெனிக்குத் தந்தி போயிற்று:- “வைர மோதிரங்களில் சில உயர்ந்த மாதிரிகள் அனுப்பி வைக்கவும்” என்று. அவ்விதமே வைர மோதிரங்கள் சுமார் ஐம்பது தினுசுகள் வந்தன. அவற்றை அப்படியே மகாராஜா மேற்படி பிரிட்டிஷ் உத்தியோகஸ்தரின் தர்ம பத்தினிக்கு அனுப்பி வைத்தார். துரைசானி அம்மாள் ஏதாவது ஒன்றிரண்டு பொறுக்கிக்கொண்டு பாக்கியைத் திருப்பி அனுப்பி விடுவாளென்று மகாராஜாவும் திவானும் எதிர் பார்த்தார்கள். ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம் துரைசானியிடமிருந்து பதில் வந்துவிட்டது:- “நீங்கள் அனுப்பிய பரிசு மோதிரங்களுக்காக மிகவும் வந்தனம்.” இரண்டு நாளைக்கெல்லாம் நகைக் கம்பெனியாரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய்க்குப் ‘பில்’ வந்தது. மூன்று லட்ச ரூபாய் போனாலும், சிம்மாசனத்துக்கு ஆபத்தில்லாமல் தப்பியது பற்றி மகாராஜாவுக்குச் சந்தோஷந்தான். 4 மகாராஜாவின் புலிவேட்டை விரதம் நன்கு நிறைவேறி வந்தது. பத்து வருஷ காலத்தில் எழுபது புலிகள் வரையில் வேட்டையாடிக் கொன்றுவிட்டார். அதற்குப் பிறகு ஒரு பெரிய இடையூறு எதிர்ப்பட்டது. பிரதிபந்தபுரம் காடுகளில் புலிகளே அற்றுப்போய் விட்டனபோல் தோன்றியது. புலிகள் ஒருவேளை கருத்தடை முறைகளைக் கையாண்டனவோ, அல்லது ‘ஹரிகரி’ செய்து கொண்டனவோ, அல்லது வெள்ளைக்காரர்களின் கையினால்தான் சாக வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டு நாட்டைவிட்டு ஓடிப் போயினவோ, தெரியவில்லை. மகாராஜா ஒரு நாள் திவானைக் கூப்பிட்டார். “திவான் சாகிப், இன்னும் முப்பது புலி இந்தத் துப்பாக்கிக்கு இரையாகித் தீரவேண்டுமென்று உமக்குத் தெரியுமா இல்லையா?” என்று கேட்டார். திவான் துப்பாக்கியைப் பார்த்து நடுநடுங்கிக் கொண்டே, “மகாராஜா! நான் புலியில்லை…” என்றார். “நீர் புலி என்று எந்த முட்டாள் சொன்னது?” “இல்லை, நான் துப்பாக்கி இல்லை” என்றார் திவான். “நீர் புலியுமில்லை, துப்பாக்கியுமில்லை திவான் சாகிப்! உம்மைக் கூப்பிட்ட காரணம் வேறு. நான் கல்யாணம் செய்து கொள்வதென்று தீர்மானித்து விட்டேன்” என்றார் மகாராஜா. திவானுக்கு உளறல் இன்னும் அதிகமாகிவிட்டது. “மகாராஜா! ஏற்கனவே எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள்; உங்களையும் கல்யாணம் செய்துகொண்டு.” “சட், என்னங்காணும் உளறுகிறீர்? உம்மை எதற்காக நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்? எனக்கு வேண்டியது புலி…” “மகாராஜா! வேண்டாம், யோசனை செய்யுங்கள் உங்கள் குலத்து முன்னோர்கள் கத்தியைக் கல்யாணம் செய்து கொண்டார்கள். நீங்கள் வேணுமானால் துப்பாக்கியைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். இந்த சமஸ்தானத்துக்குப் புலி ராஜா இருப்பது போதும்; புலி ராணி வேறு வேண்டாம்!” இதைக் கேட்ட மகாராஜா குபீரென்று சிரித்து விட்டு “புலியுமில்லை, துப்பாக்கியுமில்லை. மனுஷப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன். தற்சமயம் எந்தெந்த சமஸ்தானத்தில் புலி இருக்கிறதென்று முதலில் கணக்குத் தயார் செய்யும். பிறகு, புலி இருக்கிற சமஸ்தானத்தில் ராஜ்வம்சத்தில் கல்யாணத்துக்குப் பெண் இருக்கிறதா என்று பாரும்” என்றார். திவான் அப்படியே பார்த்தார். கடைசியில் மகாராஜாவின் விருப்பத்தின்படியே புலிகள் நிறைய உள்ள சமஸ்தானத்தில் பெண் பார்த்துக் கல்யாணமும் செய்து வைத்தார். மகாராஜா ஜங்ஜங் பகதூர் ஒவ்வொரு தடவை மாமனார் வீடு சென்றபோதும், ஐந்தாறு புலிகளைக் கொன்று எல்லாப் புலிகளின் தோலும் - சரியாக 99 தோல் - அரண்மனை ஆஸ்தான மண்டபத்தின் சுவர்களை அலங்கரித்தன. 5 கடைசியில் நூற்றுக்கு இன்னும் ஒரு புலிதான் பாக்கி என்ற நிலைமை ஏற்பட்டதும் மகாராஜாவின் பரபரப்பு மிகவும் அதிகமாயிற்று. பகலில் அதே நினைவு; இரவில் அதே கனவு. இதற்குள்ளே மாமனார் சமஸ்தானத்திலும் புலிப் பண்ணை வறண்டு போய் விட்டபடியால் புலிகள் அகப்படுவது மிகவும் பிரயாசையாய்ப் போயிருந்தது. ஆனாலும், இன்னும் ஒன்றே ஒன்றுதானே? இன்னும் ஒரு புலியை மட்டும் கொன்றுவிட்டால், அப்புறம் பயமே இல்லை. புலி வேட்டையையே விட்டுவிடலாம். ஆனால், இந்தக் கடைசிப் புலி விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். காலஞ் சென்ற தலைமை ஜோசியர் என்ன சொன்னார்? 99 புலிகளை மகாராஜா கொன்றபோதிலும் நூறாவது புலி விஷயத்தில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்! “உண்மைதான் புலி பொல்லாத மிருகம்; ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த நூறாவது புலிக்கு எங்கே போகிறது? புலி கிடைப்பது புலிப்பால் கிடைப்பதைவிடக் கஷ்டமாகிவிட்டதே?” மகாராஜா இப்படிப்பட்ட கவலையில் ஆழ்ந்திருந்த போது, அந்தக் கவலையைப் போக்கக்கூடிய ஒரு அருமையான சந்தோஷச் செய்தி வந்தது. அந்த சமஸ்தானத்திலேயே மலைக்கிராமம் ஒன்றில் திடீர் திடீரென்று சில ஆடுகள் காணாமல் போய்வந்தன. ‘முழு ஆடு விழுங்கின’ என்று பெயர் பெற்ற காதர் மியான் சாகிபுவையும், வீராசாமி நாயக்கரையும் விசாரித்து அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்று தெரிய வந்தது. புலிதான் வந்திருக்க வேண்டுமென்று நிச்சயமாயிற்று. கிராமவாசிகள் ஓடிப் போய் மகாராஜாவிடம் தெரிவித்தார்கள். அந்தக் கிராமத்துக்கு மூன்று வருஷம் வரி, வாய்தா குவிட்ரெண்ட், ஜமாபந்தி, புறம்போக்குப் பட்டி ஒன்றுமே கிடையாது என்று மகாராஜா தெரிவித்துவிட்டு, உடனே வேட்டைக்குக் கிளம்பினார். புலி இலேசில் அகப்படவில்லை. வேண்டுமென்று மகாராஜா கையில் அகப்படக் கூடாதென்றே, அது ஒளிந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. மகாராஜாவோ, புலி அகப் பட்டாலொழியக் காட்டை விட்டு வரமாட்டேனென்று பிடிவாதம் பிடித்தார். அதோடு நாளாக ஆக மகாராஜாவின் கோபமும் பிடிவாதமும் அதிகமாகி வந்தன. அதன் பயனாய் அனேக உத்தியோகஸ்தர்களுக்கு வேலை போய் விட்டது. ஒருநாள் ரொம்பக் கோபம் வந்தபோது, மகாராஜா திவானைக் கூப்பிட்டு, “சமஸ்தானத்தில் நிலவரியை உடனே இரண்டு பங்கு செய்யுங்கள்” என்றார். திவான், “பிரஜைகளுக்கு அதிருப்தி உண்டாகும், மகாராஜா! அப்புறம் நம் சமஸ்தானத்திலும் ஸ்டேட் காங்கிரஸ் ஏற்பட்டுவிடும்” என்றார். “அப்படியானால், உம்முடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டுப் போம்!” என்றார் மகாராஜா. இதற்குமேல் மகாராஜாவுக்குப் புலி அகப்படாதிருந்தால் விபரீதந்தான் என்று தீர்மானித்துக் கொண்டு வீட்டுக்குப் போனார் திவான். அங்கே சென்னை பீப்பிள்ஸ் பார்க்கிலிருந்து வாங்கிக் கொண்டுபோய் இரகசியமாய் வைத்திருந்த புலியைப் பார்த்ததுந்தான் அவருக்கு உயிர் வந்தது. அன்று இரவு நடு நிசியில் ஊரெல்லாம் அடங்கிய பிறகு, திவானும் அவருடைய வயது முதிர்ந்த மனைவியும் மேற்படி புலியை இழுத்துக் கொண்டு வந்து மோட்டாரில் ஏற்றினார்கள். ‘திவான்’ தாமே மோட்டாரை ஓட்டிக் கொண்டு போய், மகாராஜா வேட்டையாடிக் கொண்டிருந்த காட்டுக்குப் பக்கத்தில் புலியை இறக்கினார். மோட்டாரிலிருந்து இறங்க மாட்டேனென்று சத்தியாகிரகம் செய்த அந்த புலியைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளுவதற்குள் திவானுக்கு மேல் மூச்சு வாங்கிவிட்டது. மறுநாள் மகாராஜாவின் முன்னால் மேற்படி கிழப்புலியானது வந்து, “எஜமானே! என்ன ஆக்ஞை?” என்று கேட்பது போல் நின்றது. மகாராஜா அளவிறந்த உற்சாகத்துடன் துப்பாக்கியை எடுத்துக் குறி வைத்து சுட்டார் உடனே புலி சுருண்டு விழுந்தது. “நூறாவது புலியைக் கொன்று விட்டோ ம்; விரதம் நிறைவேறிவிட்டது!” என்ற மகத்தான குதூகலம் மகாராஜாவின் மனதில் தோன்றிற்று. அந்த நூறாவது புலியை தமது தலைநகரில் ஊர்வலமாகக் கொண்டு வரும்படி கட்டளையிட்டுவிட்டு, மகாராஜா மோட்டாரில் ஏறிவிரைந்து முன்னால் சென்றார். அவர் போன பிறகு, மற்ற வேட்டைக்காரர்கள் புலியின் அருகில் சென்று பார்த்தார்கள். புலியும் கண்களைப் பேந்தப் பேந்த விழித்து அவர்களைப் பார்த்தது! புலி சாகவில்லையென்றும், அதன்மேல் குண்டே பாயவில்லை யென்றும், அவர்கள் கண்டார்கள். குண்டு சமீபத்தில் போன அதிர்ச்சியினாலேயே அது அப்படி மூர்ச்சையாகி விழுந்திருந்தது! வேட்டைக்காரர்கள் யோசனை செய்தார்கள். குண்டு தவறிப்போன செய்தி மகாராஜாவுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் தங்களுடைய உத்தியோகத்துக்கு ஆபத்து என்று அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்களில் ஒருவன் புலிக்கு ஓர் அடி தூரத்திலிருந்து குறி தவறாமல் அதைக் கொன்று தீர்த்தான். பிறகு, மகாராஜாவின் கட்டளையின்படி, அந்தச் செத்தப் புலியை நகரில் ஊர்வலம் விட்டுக் கொண்டு போய்க் கடைசியில் அதைப் புதைத்து, சமாதியும் எழுப்பினார்கள். மேற்கூறிய விசேஷ சம்பவம் நடந்து சில தினங்களுக்குப் பிறகு மகாராஜாவின் குமாரனுக்கு மூன்றாவது பிறந்த தினக் கொண்டாட்டம் நடந்தது. இது வரையில் புலிவேட்டையிலேயே கவனமாயிருந்த மகாராஜா பட்டத்து இளவரசனைப் பற்றிக் கொஞ்சமும் கவனிக்கவில்லை. இப்போது அவருடைய கவனம் குழந்தையின் மீது சென்றது. பிறந்த தினத்தற்கு குழந்தைக்கு ஏதாவது பரிசு கொடுக்கவேண்டுமென்று ஆசைப்பட்டார். பிரதிபந்தபுரம் கடைத்தெருவுக்குப் போனார். கடை கடையாகத் தேடியும் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு பொம்மைக் கடையில் ஒரு சின்ன மரப் புலியைப் பார்த்தார். “இதுதான் சரியான பரிசு” என்று உடனே தீர்மானித்து விட்டார். அந்த மரப் புலியின் விலை இரண்டே காலணாதான். ஆனால், மகாராஜா கேட்கும்போது அவ்வளவு குறைந்த விலை சொன்னால் நிச்சயம் அவசரச் சட்டத்தின் கீழ்த் தண்டனை கிடைக்குமென்று தெரிந்த கடைக்காரன் “மகாராஜா! இது ரொம்பக் கலைத்திறமை பொருந்திய பொம்மை; விலை முந்நூறு ரூபாய்தான்!” என்றான். “ரொம்ப சந்தோஷம்! யுவராஜாவின் பிறந்த தினக் கொண்டாட்டத்துக்கு இது உன்னுடைய காணிக்கையாயிருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு, மகாராஜா அதை எடுத்துச் சென்றார். 6 யுவராஜாவின் பிறந்த தினத்தன்று, தகப்பனாரும் குழந்தையும் அந்தச் சின்னஞ் சிறு மரப்புலியை வைத்துக் கொண்டு விளையாடினார்கள். யாரோ பட்டிக்காட்டுத் தச்சன் செய்த பொம்மை அது ஆகையால் அதன் மேலெல்லாம் சிலாம்பு சிலாம்பாய் நின்றது. மகாராஜா அதைக் கையில் வைத்துக் கொண்டு விளையாடிய போது வலது கையில் ஒரு சிலாம்பு குத்தியது. இடது கையால் சிலாம்பைத் தட்டி எறிந்துவிட்டு மகாராஜா மேலும் விளையாடிக் கொண்டிருந்தார். சிலாம்பு குத்திய இடத்தில் மறுநாள் சின்னக் கொப்புளம் புறப்பட்டது. இரண்டு நாளில் அது பெரிய சிரங்காயிற்று. நாலு நாளைக்கெல்லாம் கை முழுவதும் புரையேறிவிட்டது. சென்னைப் பட்டணத்திலிருந்து பெரிய ஸர்ஜன்கள் மூன்று பேர் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் கூடி ஆலோசித்து, “ஆபரேஷன் செய்ய வேண்டியதுதான்” என்று தீர்மானித்தார்கள். ஆபரேஷன் நடந்தது. மூன்று ஸர்ஜன்களும் ஆபரேஷன் செய்துவிட்டு வெளியில் வந்து பின்வரும் செய்தியைத் தெரிவித்தார்கள். “ஆபரேஷன் வெற்றிகரமாய் நடந்தது; மகாராஜா காலமாகிவிட்டார்.” இவ்விதமாக நூறாவது புலியானது கடைசியில் புலிராஜாவின் மேல் வஞ்சம் தீர்த்துக் கொண்டது. புஷ்பப் பல்லக்கு புஷ்பப் பல்லக்கு வீராசாமி நாயுடு ஒரு பெரிய ஒப்பாரி வைத்தான். “காலங்கெட்டுப் போச்சுங்க. இந்தப் பாழும் மோட்டார் வண்டி வந்தாலும் வந்தது; எங்கள் பிழைப்பில் மண் விழுந்து விட்டது” என்றான். சமீபத்தில் கிராமத்துக்குப் போயிருந்தேன். வாய்க்கால்களில் புதுஜலம் ஆனந்தமாக ஓடிக் கொண்டிருந்தது. விதை தெளிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்கே பார்த்தாலும் பிரகிருதி தேவி நித்யோத்ஸவம் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். ஆனால் வாழ்க்கை மட்டும் ஒரே மயான காண்டமாயிருக்கிறது. “சோக ரஸத்தைத் தேடி இந்நாளில் நாடகங்களுக்குப் போவது எவ்வளவு அறிவீனம்; அசல் சரக்கு கிராமங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் இலவசமாய்க் கிடைக்கிறதே” என்று எண்ணினேன். அக்காலத்தில் - இருபது வருஷங்களுக்கு முன்னால் - வீராசாமி நாயுடு நல்ல நிலைமையில் இருந்தான். கோயில் திருவிழாக்களிலும், கல்யாண ஊர்வலங்களிலும், அப்போதெல்லாம் புஷ்பப் பல்லக்குக்கு அதிக கிராக்கியிருந்தது. தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய, சுமார் முப்பது ஊர்வலங்களுக்காவது புஷ்பப் பல்லக்குக் கட்டுவான். ரூபாய் முந்நூறுக்குக் குறையாமல் சம்பாதித்து விடுவான். அந்த நாள் போய் விட்டது. இப்போது இரண்டு வருஷமாக ஒரு கிராக்கி கூட அவனுக்குக் கிடைக்கவில்லை. “போன வருஷத்தில் ஒரு கிராக்கி வந்தது. அச்சாரங்கூட வாங்கி விட்டேன். ஆனால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்டது” என்றான். “ஓகோ! அதென்ன விஷயம்?” என்று கேட்டேன். நாயுடு விவரமாகச் சொன்னான். அவன் சொன்னதிலிருந்தும் இன்னும் கிராம முனிசீப் கிண்டாமணி முதலியாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதிலிருந்தும் வெளியான விவரங்களைக் கீழே தருகிறேன். அவ்விவரங்களில் சிலவற்றை நேயர்கள் அநுசிதம் என்று கருதக் கூடும். ஆகவே கொஞ்ச நேரத்துக்கு நேயர்கள் எல்லாரும் அன்னப் பக்ஷிகளாக மாறக் கடவீர்களாக. நீரையும் பாலையும் கலந்து வைத்தால் எப்படி அன்னப் பக்ஷியானது நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்துமோ, அதுபோல நீங்களும் உசிதமான பகுதிகளை விட்டு விட்டு, அநுசித விசயங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வீர்களாக. கோவிந்தகுடி கிராமத்து ‘முஸாபரி’ பங்களா எழவுபட்ட பாடுபட்டது. கர்ணங்களும், கிராம முனிசீப்புகளும், வெட்டி தலையாரிகளும் தரையில் கால் பாவாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். வாசலில் பந்தல் போட்டுத் தோரணங் கட்டிக் கொண்டிருந்தனர் சிலர். உள்ளே துடைப்பம் தேயும்படி தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தனர் சிலர். உக்கிராண அறையில் ஒருவர் கறிகாய், உப்பு, புளி சாமான்களையெல்லாம் எடுத்து ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார். அவர்தான் கிராம முனிசீப் கிண்டாமணி முதலியார். பால்ய வயது கறிகாய்களில் இருந்த ஒரு சின்ன முட்டைக்கோஸானது அவருடைய இருதயத்தைக் கொள்ளை கொண்டிருந்ததாகத் தெரிய வந்தது. அதை அவர் அப்படியும் இப்படியும் திருப்பித் திருப்பிப் பார்த்தார். முகர்ந்து பார்த்தார். வாயைச் சப்புக் கொட்டினார். அப்புறம் பெருமூச்சு விட்டார். “இனியே தெமக்குன் அருள்வரு மோவெனக் கருதி ஏங்குதே நெஞ்சமையோ!” என்று வாய்க்குள்ளே பாடத் தொடங்கினார். இதற்குள் கணக்கப்பிள்ளை காளமேக ராவ் கையில் செம்புடன் அங்கு வந்து சேர்ந்தார். “ஓ மணியக்காரரே! நானும் நீரும் இந்த உத்தியோகம் பார்க்கிறதை விட க்ஷவரம் பண்ணலாம்!” என்றார். “க்ஷவரம் பண்ணுகிறதென்றால் இலேசு என்று நினைக்கிறீர் போலிருக்கிறது. ராயரே! சென்னைப் பட்டணத்தில் ஒரு ஸலூன் இருக்கிறதாம். அதிலே ஒரு க்ஷவரத்துக்கு மூன்று ரூபாயாம்!” என்றார் முனிசீப். பிறகு, “சரிதான், போன காரியம் என்ன?” என்று கேட்டார். “ஊரெல்லாம் சுற்றி ஒன்றரைச் சேர் பால் தான் அகப்பட்டது?” என்றார் கர்ணம். இவ்வளவு தடபுடல்களுக்கும் காரணம் என்னவென்று கேட்டால், தாசில்தார் பிரம்மஸ்ரீ லஞ்சநாத சாஸ்திரி அன்று தமது தர்மபத்தினி சமேதராக அங்கு எழுந்தருள்வாரென்று செய்தி வந்திருந்ததுதான். வழக்கத்தைவிட அதிக ஜரூராக இந்தத் தடவை தாசில்தார் விஜயத்துக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஏனென்றால், சென்ற வருஷத்து ஜமாபந்தியின் போது நேர்ந்த ஒரு முக்கிய சம்பவம் கிராம உத்தியோகஸ்தர்களின் மனத்தையெல்லாம் கலக்கியிருந்ததுதான். அப்போதிருந்த தாசில்தார் திருவாளர் பெத்த பேராசைப் பிள்ளை என்பவர் தம் கையினால் சில்லறை வாங்குவதில்லையென்ற தீவிர விரதம் கொண்டவர். வாங்கினால் நோட்டுக்களாகத் தான் வாங்குவார். ஜமாபந்தியின் போது அவர் கிராம உத்தியோகஸ்தர்களைப் பட்ச பாதமில்லாமல் நடத்தினார். தலைக்குப் பத்து ரூபாய் தட்சிணை வைக்க வேண்டுமென்றார். ஒரு கணக்குப்பிள்ளைக்குப் போதாத காலம் இருந்தது. பத்திரிகைகள் படித்து வந்ததன் பலன் அது. தாசில்தாருடைய குணாதிசயங்களை ஓர் அழகான ஹாஸ்யக் கட்டுரை போல எழுதினார். இவ்வளவு ரசமான கட்டுரை எழுதி விட்டுத் தம்முடைய பெயரை மறைக்கவோ, புனை பெயர் வைத்துக் கொள்ளவோ அவருக்கு விருப்பமில்லை. அந்த வருஷம் பெரிய கலெக்டர் ஜமாபந்தி. பெரிய கலெக்டர் பல்டன் துரை ‘நெறி தவறாத நேர்மையாளர்’ ‘இந்திய ஜனங்களிடம் மிக்க அபிமானமுள்ளவர்’ என்றெல்லாம் பெயர் பெற்றவர். இதை நம்பி மேற்படி கர்ணம் தாம் எழுதிய ஹாஸ்யக் கட்டுரையை ஜமாபந்தியின் போது கலெக்டர் முன்பு சமர்ப்பித்தார். அவ்வளவுதான்! கொஞ்ச நாளைக்கு அந்தத் தாலுக்கா எமலோகம் படும்பாடு பட்டது. விசாரணையில் கணக்குப் பிள்ளையின் புகாரை ஆதரித்துச் சாட்சி சொல்ல ஒரு கிராம உத்தியோகஸ்தர் கூட முன் வரவில்லை. கர்ணத்திற்குக் கர்ணம் வேலை போயிற்று. ஸ்ரீமான் பெத்த பேராசைப் பிள்ளைக்கும் தாசில் உத்தியோகம் போயிற்று. (ஆனால் ‘ஆக்டிங் டிபுடி கலெக்டர்’ உத்தியோகம் கிடைத்தது.) மேற்படி சம்பவம் சமீபத்திலேதான் நடந்திருந்ததாகையால் திருவாளர் பெத்த பேராசைப் பிள்ளையின் ஸ்தானத்துக்கு இப்போது வந்திருந்த பிரம்ம ஸ்ரீ லஞ்சநாத சாஸ்திரியை வரவேற்பதில் கிராம உத்தியோகஸ்தர்கள் தீவிர கவனம் செலுத்தி வந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் ரிவினியூ இன்ஸ்பெக்டர் தீராத்துயரமய்யங்காரும், தாசில்தாரின் காம்ப் கிளார்க் விகாரம் பிள்ளையும் வந்து சேர்ந்தனர். சுற்றுப் பக்கத்திலிருந்து எல்லாக் கர்ணம் கிராம முனிசீப்புகளும் வந்திருக்கிறார்களா என்று அவர்கள் சோதனை செய்தபின், உக்கிராண அறைக்குச் சென்று போஜன பதார்த்தங்களைப் பார்வையிட்டனர். ஒரு பெரிய செம்பின் அடிவாரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பாலைக் கண்டதும் விகாரம் பிள்ளைக்குப் பெருங் கோபம் வந்தது. அவர் கிராம முனிசீப்பை ஓட விடவே, அவர் வெட்டி தலையாரிகளை ஓட விட்டார். விகாரம் பிள்ளை அப்பால் போனதும், ரிவினியூ இன்ஸ்பெக்டர் கிராம முனிசீப்பின் காதோடு, “ஓய்! சுத்த மோசமாயிருக்கிறீரே! பாலைத் தீர்த்தமாட்டி வைக்கிறதானேங்காணும்! வருகிறவர் சாஸ்திரிகளாச்சே!” என்றார். சுபதின, சுபயோக, சுப முகூர்த்தத்தில் தாசில்தார் லஞ்சநாத சாஸ்திரியும், அவருடைய தர்மபத்தினி ஸ்ரீமதி கற்பகாம்பாளம்மாளும், மைத்துனி சௌபாக்கியவதி செல்லக் கிளியும், குழந்தைகள் அரை டஜனும் மேற்கத்தி மாடு கட்டிய இரண்டு வில் வண்டிகளில் ஜாம் ஜாமென்று வந்து இறங்கினார்கள். வந்த களைப்பு நீங்கியதும், அம்மாள் உக்கிராண அறையைப் பார்வையிடச் சென்றாள். கணக்கப்பிள்ளை ராயர் பயபக்தியுடன் முன் வந்து “டிபன் என்ன போடச் சொல்கிறது?” என்று கேட்டார். “நீர் யார்?” “நான் தான் உள்ளூர் கர்ணம்” “பரிசாரகன் எங்கே?” அம்மாளைக் கண்டதும் கதவிடுக்கில் ஒளிந்து கொண்ட பரிசாரக முத்துவையர் இப்போது வெளியே வந்தார். “இதோ இருக்கேன்” என்றார். “நீதானா? உன் துணியைப் பார்த்தாலே சாப்பாடு வேண்டியிராது போலிருக்கே! இருக்கட்டும், சேமியா கேஸரி போடத் தெரியுமா?” “தெரியும்” என்றார் முத்துவையர். ஆனால் ராயருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஏனென்றால், சேகரித்திருந்த சாமான்களில் சேமியா இல்லை. ‘இந்த அம்மாள் வெகு கெட்டிக்காரி; எது இல்லையோ அதைப் பார்த்துக் கேட்கிறாள், பார்த்தாயா?’ என்று நினைத்துக் கொண்டு, “இதோ வாங்கி வரச் சொல்லுகிறேன்” என்றார். “ரொம்ப பேஷ்! சேமியா கூட வாங்கவில்லையா?” என்று அம்மாள் உதட்டை ஒரு மடிப்பு மடித்தாள். ராயர் “இதோ வந்து விட்டது” என்று ஓட்டம் பிடித்தார். மறுநாள் ஸ்ரீமதி தாசில்தாரிணி அவர்கள், தீராத்துயரமய்யங்காரையும், விகாரம் பிள்ளையையும் கூப்பிட்டனுப்பிய போது, அவர்கள் அஸ்தியில் சுரத்துடன் தான் போனார்கள். ஆனால் அம்மாள் வழக்கத்தை விட அதிக முக மலர்ச்சியுடன் இருந்ததைக் கண்டதும் கொஞ்சம் மனம் தேறினார்கள். “அய்யங்காரே! நம்மாத்திலே கல்யாணம் வந்திருக்கு” என்றாள் அம்மாள். இவர்களுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் “சந்தோஷம்” என்றார்கள். “ஆனால் கொஞ்சம் தர்மசங்கடமாய்ப் போய் விட்டது. இருந்தாலும் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்களே? பார்த்துக் கொள்கிறீர்கள்.” “அதற்கென்ன சந்தேகம்? பேஷா பார்த்துக் கொள்கிறோம்” என்றார்கள். எதைப் பார்த்துக் கொள்வது என்று மட்டும் அவர்களுக்கு விளங்கவில்லை. “செல்லக்கிளியைப் பெரிய இடத்தில் கொடுத்திருக்கு. உங்களுக்குத் தான் தெரியுமே, சம்பந்தி சப்ஜட்ஜ். ஒருவேளை அவர்கள் வந்தாலும் வருவார்கள். கல்யாணம் ஜெரப்பா நடத்த வேண்டும்.” இப்பொழுது கொஞ்ச விளங்க ஆரம்பித்தது. ஆனால் இவர்களுடைய ஆச்சரியமும் திகைப்பும் அதிகமாயின. இந்த ஸ்திரீயின் துணிச்சல்தான் என்ன? காம்ப்புக்கு வந்த இடத்தில் தங்கைக்கு ருது ஸ்நானக் கல்யாணம் நடத்த வேண்டுமென்று சொல்கிறாளே? இந்தச் சமயத்தில் தாசில்தார் உள்ளே வந்தார். “என்ன, ஆர்.ஐ.! (ரெவின்யூ இன்ஸ்பெக்டர்) சமாசாரம் கேட்டீர்களல்லவா? எக்கச்சக்கமாய் வந்து கல்யாணம் ஏற்பட்டிருக்கிறதே? இரண்டு வண்டி வைத்து இவர்களை ஊருக்கு அனுப்பி விடலாமென்று தோன்றுகிறது; நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” “அவர்கள் நினைக்கிறது என்ன? அதெல்லாம் பேஷாய் ‘நாங்கள் இருக்கிறோம், பார்த்துக் கொள்கிறோம்’ என்று சொல்லி விட்டார்கள். இனி மேல் கிளம்பி ஊருக்குப் போய் எல்லா ஏற்பாடுகளும் பண்ணுகிறதென்றால் முடியுமோ? நீங்களும் காம்ப்பிலிருந்து வர முடியாது. நான் தனியாய் ஒண்டிக்காரி என்ன செய்வது? என்ன, விகாரம்பிள்ளை, என்ன சொல்கிறீர்கள்?” “அம்மா சொல்கிறதும் வாஸ்தவந்தானே?” என்றார் விகாரம் பிள்ளை. தாசில்தார், ரிவின்யூ இன்ஸ்பெக்டர் முகத்தைப் பார்த்தார். “எல்லாம் இங்கேயே பேஷாய் நடத்தி விடலாம்னா!” என்றார் ஆர்.ஐ.அய்யங்கார். சற்று நேரத்துக்கெல்லாம் அங்கே கூடியிருந்த கிராம முனிசீப், கணக்கப்பிள்ளைகள் எல்லாரும் மேளக்காரன், பூக்காரன் முதலியவர்களைத் தேடிச் சென்றார்கள். அன்றிரவு கணக்கப் பிள்ளை ராயர் தமது மனைவியிடம் பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தார்:- “நீங்களும் பதினெட்டு முழம் புடைவை கட்டிக் கொண்டு பொம்மனாட்டிகள் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே! தாசில்தார் சம்சாரம் வந்திருக்கிறாள். என்ன சாமார்த்தியம்! என்ன சாமர்த்தியம்! அவளுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. இன்றைக்குக் குஞ்சாலாடு பிடிப்பதற்கான சாமான் வேண்டியிருந்தது. பரிசாரகன் பாட்டுக்குக் கண்ணை மூடிக்கொண்டு ஜாபிதா போட்டிருந்தான். ‘ஏண்டா, முந்நூறு குஞ்சாலாடுக்கு மூன்றே முக்கால் வீசை சர்க்கரைதானே திட்டம்? எப்படி நாலு வீசை போட்டிருக்கிறாய்?’ என்று தாசில்தார் சம்சாரம் கேட்டாள். பரிசாரகன் விழித்துப் போய் விட்டான். பொம்மனாட்டி என்றால் அப்படியல்லவா நாலும் தெரிந்திருக்க வேண்டும்?” “இவ்வளவு தெரிந்தவன் என்கிறீர்களே! நம்பாத்திலும் இரண்டு குழந்தைகள் இருக்கே! ‘ராயரே, இந்தாரும் இரண்டு குஞ்சாலாடு. எடுத்துக் கொண்டு போய்க் குழந்தைகளிடம் கொடும்’ என்று சொல்லத் தெரிந்ததா? என்னமோ காணாதது கண்டது போல் ஆகாசத்தில் தூக்கி வைக்கிறீர்களே?” என்றாள் ராயர் மனைவி. ராயருக்கும் இந்த விஷயத்தில் கொஞ்சம் தாசில்தார் மனைவி மேல் தாங்கல் இருந்தது. அந்த அம்மாள் அந்தண்டை, இந்தண்டை போனால் மெதுவாக ஒரு குஞ்சாலாடு சாப்பிட்டு விடலாமென்று அவர் சமையலறைப் பக்கம் அடிக்கடி போய்க் கொண்டிருந்தார். ஆனால், அது பலிக்கவில்லை. குஞ்சாலாடு பூராவும் பிடித்துக் கூடையில் அடுக்கிச் சாமான் அறையில் வைத்துப் பூட்டிய பிறகுதான் அம்மாள் நகர்ந்தாள். ஆயினும் அது கூட ராயருக்கு அந்த அம்மாளிடம் ஒரு விதத்தில் பக்தி விசுவாசத்தையே உண்டாக்கிற்று. “நம்ப வீட்டுப் பசங்களாயிருந்தால், எங்கேயாவது போய், யார் வாயையாவது பார்த்துக் கொண்டு நிற்கும். வந்தவர்கள், போனவர்கள் எல்லோரும் தலைக்கு ஒன்று எடுத்துக் கொண்டு போவார்கள். இந்த அம்மாளிடம் நடக்குமா, அது?” என்று எண்ணி வியந்தார். ஸ்நான தினத்தன்று ஊர்வலம் நடத்த வேண்டிய விஷயமாக யோசிப்பதற்கு ஓர் ஆலோசனை சபை கூடிற்று. மோட்டார் கிடைக்காது என்று தெரிந்த போது தாசில்தாரிணிக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவில்லை. “இது தெரிந்திருந்தால் டவுனுக்கே போயிருக்கலாமே?” என்று கூடச் சொன்னாள். முயற்சியில் ஒன்றும் குறைவில்லை. சுற்றுப் பக்கம் பத்து மைல் தூரத்தில் உள்ள பெரிய மிராசுதார்களின் மோட்டார்களுக்கெல்லாம் ஆள் விடப்பட்டது. இவர்களெல்லாம், நெல் கலம் கால் ரூபாய் விற்றபோது மோட்டார் வாங்கினார்கள். இப்போது அவை கொட்டகைகளில் தூங்கின. ஒன்றுக்கு டயர் இல்லை. ஒன்றுக்கு கியர் இல்லை. மற்றொன்றின் எஞ்சின் பழுது. எல்லாம் சரியாயிருந்தாலும் டிரைவர் கிடையாது. இப்படியாக மோட்டார் இல்லையென்று தீர்ந்து போன பிறகு, ஒருவர் “பழைய நாளைப் போல் புஷ்பப் பல்லக்கு வைத்தால் என்ன?” என்று கேட்டார். “பேஷ்! சரியான யோசனை” என்றாள் அம்மாள். உடனே, வீராசாமி நாயுடுக்கு ஆள் விட்டார்கள். நாயுடு வந்து அச்சாரம் வாங்கிக் கொண்டு சென்றார். புதன்கிழமை ஸ்நானம், ஊர்வலம் எல்லாம் நடைபெற வேண்டும். கிராமவாசிகள் எல்லோரும் இந்த வைபவத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். புஷ்பப் பல்லக்குக் காட்சி அவர்கள் பார்த்து இன்றைக்குப் பதினைந்து வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வீராசாமி நாயுடுவின் உற்சாகத்தையோ சொல்ல வேண்டியதில்லை. புஷ்பத்துக்கு அவன் அச்சாரம் கொடுக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டான். ஆகவே, செவ்வாய்க்கிழமை இரவு திண்ணையில் படுத்துக் கொண்டு அவன் மானஸீகமாய்ப் புஷ்பப் பல்லக்கு ஜோடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று கிராம முனிசீப் கிண்டாமணி முதலியார் வந்து, “ஓய், வீராசாமி நாயுடு! பல்லக்கும் வேண்டாம்; பாடையும் வேண்டாம்” என்று சொன்னதும், நாயுடுவுக்கு எவ்வளவு ஏமாற்றம் ஏற்பட்டிருக்குமென்று நீங்களே யோசியுங்கள். மறுநாள் அதிகாலையில் தாசில்தார் தமது பரிவார தேவதைகள் சமேதராய் வில் வண்டிகளில் பிரயாணமானார். ஊரார் எல்லோரும் வியப்பும் ஏமாற்றமும் அடைந்தார்கள். விசாரித்ததில் விஷயம் பின்வருமாறு என்று தெரிய வந்தது:- ஜில்லா கலெக்டர் பல்டன் துரை அணைக்கட்டைப் பார்வையிடுவதற்காக வருவதாகவும், வழியில் கோவிந்தகுடி முஸாபரி பங்களாவில் புதன்கிழமை மத்தியானம் ஜாகை போடுவாரென்றும், முதல் நாள் சாயங்காலம் செய்தி வந்ததாம். ஆகவே, தாசில்தாரிணி தன்னுடைய உத்தேசத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. சௌபாக்கியவதி செல்லக்கிளியின் ஜாதகத்தில் புஷ்பப் பல்லக்கு ஊர்வலம் செல்லும் பாக்கியம் விதிக்கப்பட்டிருக்கவில்லை. புதன்கிழமை அதிகாலையில் தாசில்தாரையும், அவருடைய பரிவாரங்களையும் மூட்டை கட்டி அனுப்பியதும், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஏதோ கணக்கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து ரூபாய் அணா பைசாக்களுடன் மல்லுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதற்குக் காரணம், லஞ்ச நாத சாஸ்திரியார் தம்முடைய காம்ப்புக்காக மொத்தம் கிராமாதிகாரிகளிடமிருந்து வசூலான தொகை, செலவான தொகை இவைகளுக்குக் கணக்கும், பாக்கித் தொகையும் தம்மிடம் அடுத்த காம்ப்பில் கொண்டு வந்து ஒப்புவிக்க வேண்டுமென்று அவருக்குக் கட்டளையிட்டிருந்ததுதான். மிச்சப் பணத்திலிருந்து ஒரு நிலைக் கண்ணாடி, ஒரு ஷேவிங் செட், ஒரு செண்ட் பாட்டில், இரண்டு பவுண்ட் சாக்லேட், ஒரு செட் பிரெஞ்சுப் படுக்கையறைப் படங்கள் வாங்கிக் கொண்டு வரவேண்டுமென்று தாசில்தார் சொல்லியிருந்தார். உபயவே தீராத்துயரமய்யங்கார் இவ்வாறு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கையில் கர்ணங்களும், கிராம முனிசீப்புகளும் மூலைகொருவராய் ஓடிக் கொண்டிருந்தார்கள். இந்தத் தடவை அவர்கள் பெரிய கலெக்டர் பல்டன் துரையின் திருக்குஷ்டியை நிரப்புவதற்காகக் கோழி முட்டைகளையும், குள்ள வாத்துகளையும் தேடிச் சென்றார்கள். அவர்களுடைய அவசரத்தில், அன்னங்களைக் கூட வாத்துக்கள் என்று அவர்கள் நினைத்து விடக் கூடுமாதலால், நேயர்களே! சீக்கிரம் எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளுங்கள். ஆனந்தவிகடன் 22.7.1934 போலீஸ் விருந்து “சீச்சீ! இது என்ன உலகம்? வரவர எல்லாம் தலை கீழாய்ப் போய்விட்டது” என்று கந்தசாமி தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். “பின்னே என்ன, ஐயா! இரண்டு பூரிக்கும் ஒரு கப் காப்பிக்கும் வழியில்லை என்றால் இது என்ன உலகத்தோடு சேர்த்தி?” என்று அவன் ஒரு கேள்வியைப் போட்டுக் கொண்டு, அதற்குப் பதில் சொல்வது போல் “தூ!” என்று காறி உமிழ்ந்தான். கந்தசாமியின் பொக்கிஷ நிலைமை அப்போது மிகவும் கேவலமாய்த்தான் இருந்தது. பணப் பையைத் திறந்து பார்த்தான். மூன்று காலணாக்கள் இருந்தன. ஒரு வேளை அவற்றில் ஒன்று அரை ரூபாயாய் இருந்துவிடக் கூடாதா என்ற ஆசையுடன் கையில் ஒவ்வொன்றாய் எடுத்து உற்றுப் பார்த்தான். “காலணா, அரையணா, முக்காலணா…” என்று மூன்று ஸ்தாயிகளில் சொல்லி அவற்றைச் சாலையில் விட்டெறிந்தான். கொஞ்ச தூரம் போனவன் மறுபடி ஏதோ நினைத்துக் கொண்டவன் போல் திரும்பி அவற்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். சாதாரணமாய்க் கந்தசாமிக்கு இத்தகைய நெருக்கடி ஏற்படுவதில்லை. பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வழி இல்லாவிட்டால் இன்னொரு வழி அவனுடைய தீவிர மூளை கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கும். நம்முடைய பொக்கிஷ மந்திரிகள் என்னவோ தவியாய்த் தவிக்கிறார்களே, வரிகளை எடுத்து விட்டால் சர்க்கார் வரவு செலவுக் கணக்கில் துண்டு விழுந்து விடுமென்று? அவர்கள் கந்தசாமியைக் கூப்பிட்டு, இரண்டு பூரியும் ஒரு கப் காப்பியும் மட்டும் வாங்கிக் கொடுத்து, யோசனை கேட்கட்டும். அது தான் ஒரு தொல்லை; கந்தசாமியின் மூளைக்கும் அவனுடைய வயிற்றுக்கும் நெருங்கிய சம்பந்தம் ஏதோ இருந்தது. வயிற்றில் ஒரு கப் காப்பியைப் போட்டுவிட்டு யோசனை கேட்டால், உடனே எவ்வளவு சிக்கலான பொருளாதாரப் பிரச்சனைகளையும் அவனுடைய மூளை தீர்த்து வைத்துவிடும். அந்த ஒரு கப் காப்பி இல்லையென்றால், அவனுடைய மூளையும் வேலை நிறுத்தம் செய்துவிடும். அன்று காலை கந்தசாமி தன்னுடைய பொருளாதார நிலைமையைச் சரியாகக் கவனிக்காமல் ஸலூனில் புகுந்து விட்டான். கிராப் செய்து கொண்ட பிறகு பணப்பையை எடுத்துப் பார்த்தால் சரியாக 6 3/4 அணாத்தான் இருந்தது. கேவலம் க்ஷவரக் கடையில் கடன் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை, அதெல்லாம் மரியாதைக் குறைவு. மேலும் தினசரி அங்கே போய்த் தலையை வாரி விட்டுக் கொண்டு வரவேண்டுமல்லவா? ஆகவே ஆறு அணாவைக் கொடுத்து விட்டு வெளியில் வந்தான். கையிருப்பு மூன்று காலணா. கந்தசாமி தன்னுடைய வரவு செலவுக் கணக்கைச் சரிக்கட்டுவதற்குக் கடைசியாகக் கையாண்ட முறை கைரேகை பார்த்துச் சொல்லுதல். யாரோ ஒரு வடக்கத்தியான், தான் கைரேகை சாஸ்திரத்தில் நிபுணன் என்பதாகச் சில பெரிய மனிதர்களிடம் வாங்கி வைத்திருந்த ஸர்ட்டிபிகேட் புஸ்தகத்தைக் கந்தசாமி ‘தஸ்கரம்’ செய்தான். அதை வைத்துக் கொண்டு அவன் ஆறுமாதம் வெகு அமூலாக வாழ்க்கை நடத்தினான். அப்போதெல்லாம் அவனுக்கு நல்ல வரும்படி. அவனுக்கு விருப்பம் இருந்தால் பணம் மீத்துக் கூட இருக்கலாம். ஆனால் பணம் சேர்த்து வைப்பதில் அவனுக்கு நம்பிக்கை கிடையாது. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுகிறான்; எதற்காகச் சேர்த்து வைக்க வேண்டும்? இன்று கையில் பணம் இருக்கும் போது, மறு நாளைப் பற்றிய கவலை ஏன்? நல்ல வருமானம் அளித்து வந்த ரேகை சாஸ்திரத்தைக் கந்தசாமி ஏன் கைவிட்டான் என்று கேட்பீர்கள். முதலாவது, எந்தத் தொழிலையும் நெடுநாள் கடைப்பிடிக்கும் வழக்கம் அவனிடம் கிடையாது. இரண்டாவது, அந்தத் தொழிலில் கடைசியாக நிகழ்ந்த ஒரு சம்பவமாகும். அந்தச் சம்பவத்தினால் அவனுக்கு ஏற்பட்ட வைராக்கியத்தில் சந்நியாசியாகி விடுவதாகக் கூடத் தீர்மானித்து விட்டான். நேரே அவன் பேரானந்த மடத்துப் பெரிய சாமியாரிடம் சென்று தன்னுடைய கருத்தை வெளியிட்ட போது சாமியார் தற்சமயம் தமக்குப் போதிய சிஷ்யர்கள் இருப்பதாகவும், புதிதாய் வரும் சிஷ்யர்களுக்குக் காவி வஸ்திரம் வாங்கிக் கொடுக்க மடத்தின் பொருளாதார நிலைமை இடங் கொடுக்கவில்லையென்றும் தெரிவிக்கவே, “சீ! எங்கே போனாலும் தரித்திரம் பிடித்தப் பொருளாதார நெருக்கடிதானா?” என்று எண்ணி அந்த எண்ணத்தை விட்டொழித்தான். கந்தசாமிக்கு மேற் சொன்னவாறு வைராக்கியம் உண்டு பண்ணிய சம்பவம் பின் வருமாறு: அவனுடைய ரேகை சாஸ்திர அநுபவத்தில் எப்படிப்பட்ட மனுஷ்யரானாலும் சரி, களத்ர பாக்கியத்தைப் பற்றிச் சிலாக்கியமாய்ச் சொன்னால் உச்சி குளிர்ந்து விடுவதைக் கண்டிருக்கிறான். ஆளின் வயதையும், மற்றப்படி வீடு வாசல்களின் நேர்மையையும் பார்த்துக் கொண்டு அவன் சரடு விடுவான். “ஸார்! உங்களுக்குக் கலியாணம், ஆகியிருக்க வேணும். அல்லது கூடிய சீக்கிரம் ஆகவேணும்” என்று சொன்னால், எப்படிப்பட்ட ஆசாமியின் முகமும் சற்று மலர்ந்தே தீரும். இன்னொருவரிடம் கொஞ்சம் தயக்கத்துடன், “நான் சொல்கிறேனே என்று நீங்கள் ஒன்றும் நினைத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு இரண்டு சம்சாரம் உண்டு” என்பான். உடனே அவருடைய முகத்திலே புன்னகை ஏற்படும். வேறொருவரிடம், அவருடைய நடை உடை பாவனைகளைக் கவனித்துக் கொண்டு, “ஸார்! உங்களுக்குக் கலியாணமான சம்சாரம் ஒன்று; மற்றபடி ’பிரைவேட்’டாக இரண்டொருவர் இருக்கவேணும். என் மேல் கோபித்துக் கொண்டு உபயோகமில்லை, ரேகை அப்படிச் சொல்கிறது” என்பான். உடனே மேற்படி ஆசாமியின் வாயெல்லாம் பல்லாகத் தெரியும். முழு ரூபாய்க்குக் குறைந்து அவரிடம் வாங்கிக் கொள்ள மாட்டான். மற்றொருவரிடம், “உங்களுடைய சம்சாரம் ரொம்ப பாக்கியசாலி; அந்த அம்மாள் கால் வைத்த இடம் எல்லாம் விளங்கும்” என்றும், இன்னொருவரிடம், “உங்கள் சம்சாரம் உங்களிடம் உயிராயிருப்பாள்; ஆனால் நீங்கள் தான் அந்த அம்மாவிடம் அவ்வளவு ஆசையாயிருக்கமாட்டீர்கள்” என்றும், இந்த மாதிரியெல்லாம் சொல்லி, எப்படிப்பட்ட கஞ்சனாயிருந்தாலும் வெள்ளிப்பணத்துக்குக் குறையாமல் கழட்டிவிடுவான். கடைசியாக, ஒரு தடவை மட்டும் இந்த யுக்தி பயன்படாமல் போயிற்று. அதாவது, யுக்தியின்மேல் தவறு ஒன்றுமில்லை; உபயோகித்த இடந்தான் தவறாய்ப் போயிற்று. ஒரு மனுஷ்யன் தன்னுடைய கையைக் காட்டி எல்லாம் தெரிந்து கொண்ட பிறகு தன்னுடைய சம்சாரத்தின் கையையும் பார்க்கும்படி சொன்னான். கந்தசாமி தான் சொல்வது இன்னதென்பதை நன்கு உணராமலே, “அம்மா! உங்களுக்கு கலியாணமான புருஷன் ஒன்று, மற்றபடி ’பிரைவேட்’டாக இரண்டொருவர்…” என்று உளறிவிட்டான். அவ்வளவுதான், அந்த அம்மாள் பத்ரகாளி வடிவெடுத்து, “உன்னைக் கட்டையிலே வைக்க, பாம்பு பிடுங்க!” என்று பிரமாதமாகச் சபிக்கத் தொடங்கினாள். மற்றும், “உன்னிடம் கையைக் காட்டச் சொல்லித்தே, இந்த ஜடம்!” என்று அவள் தன் புருஷனுக்குக் கொடுத்த கொடுப்பில், அந்த மனுஷ்யன் கந்தசாமியின் மேல் கைகூட வைத்து விட்டான்! கந்தசாமி அன்று எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டான். முதுகெல்லாம் வீங்கும்படி அடிபட்டதுமல்லாமல், மேற்படியாரின் வீட்டில் தான் வெள்ளிச் செம்பைத் திருட முயற்சித்ததாக ஒப்புக் கொண்டு அதற்காகத் தன்னை மன்னிக்க வேண்டுமென்று எழுதியும் கொடுத்துவிட்டு அவன் விடுதலை பெற வேண்டியதாயிற்று. இதெல்லாம் பழைய கதை. மேற்படி சம்பவத்துக்குப் பிறகு கந்தசாமி ரேகை சாஸ்திரத்தின் மூஞ்சியில் கூட விழிப்பதில்லையென்று சபதம் செய்து கொண்டான். அதன் பயனாகத்தான் இன்று அவன் பையில் மூன்றே மூன்று காலணாக்களுடன் நடந்து போக வேண்டியிருந்தது. வழியில் சாலை ஓரத்தில் ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் ஒரு பழந்துணி விரித்திருந்தது. அதில் ஓரணா நாணயம் ஒன்றும், இரண்டு காலணாக்களும் கிடந்தன. அந்த ஓரணாவை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கந்தசாமியின் கை ஊறிற்று. எனவே, தன் பையிலிருந்த காலணாவை எடுத்தான் (அதைப் போடுவதாகப் பாசாங்கு செய்துவிட்டு ஓரணாவை எடுத்துக் கொள்ளலாமென்று) ஏதோ சந்தேகம் தோன்றிற்று. சுற்றுமுற்றும் பார்த்தான். பக்கத்தில் முச்சந்தியில் நின்ற போலீஸ்காரன் தன்னை உற்றுப் பார்ப்பதைக் கவனித்தான். கையிலெடுத்த காலணாவைப் பிச்சைக்காரன் துணியில் போட்டுவிட்டு மேலே நடந்தான். கொஞ்ச தூரம் போனதும் தன்னுடைய கோபத்தையெல்லாம் சேர்த்து வைத்துத் “தூ!” என்று காறி உமிழ்ந்தான். ஒரு குருட்டுப் பிச்சைக்காரப் பயலிடங்கூட ஒன்றே முக்காலணா இருக்கிறது. தன்னிடமோ இரண்டு காலணாத் தான் இருக்கிறது என்பதை எண்ண எண்ண அவனுடைய ஆத்திரம் அதிகரித்தது. கையிலுள்ள அரையணாவுக்கு ஏதாவது ஆபத்து வரப்போகிறதே என்று பயம் உண்டாகிச் சட்டென்று அருகிலிருந்த சாயபுவின் ‘சா’க் கடைக்குச் சென்றான். ஒரு கப் ’சா’ வாங்கிச் சாப்பிட்டான். அரை கப் டீ உள்ளே போனவுடனேயே மூளை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. குடித்து முடித்ததும், “சபாஷ்! அதுதான் வேலைத்தனம்!” என்று தீர்மானித்தான். தெரியாமலா தேயிலைப் பானத்தைப் பற்றி இவ்வளவு பிரசாரம் செய்கிறார்கள்? நெல்லிப்பாக்கத்தில் பெரும்பாலும் மத்திய வகுப்பினரே குடியிருந்தார்கள். சின்னச் சின்னத் தோட்டங்களுக்கு மத்தியில் சின்னச் சின்ன பங்களாக்கள். அவற்றில் வசித்தவர்கள் அறுபது எழுபது ரூபாய் முதல் முந்நூறு நானூறு ரூபாய் வரையில் மாதச் சம்பளம் வாங்கும் உத்தியோகஸ்தர்கள், குமாஸ்தாக்கள் ஆகியோர். இடையிடையே மாஜி உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் முதலியோரும் உண்டு. காலை எட்டு மணிக்கு ஸ்ரீமான் கே. ராமகிருஷ்ணய்யர், காமரா உள்ளில் கையில் பத்திரிகையுடன் உட்கார்ந்திருந்தார். வாசல் ஜன்னல் ஓரமாய் ஒரு மனிதன் வந்து நின்று, “ஸார்!” என்று கூப்பிடவே, “யாரடா அது?” என்று அதட்டிய குரலில் எரிச்சலாகக் கேட்டார். “போலீஸ், ஸார்” என்று பதில் வரவும், கொஞ்சம் அடங்கி, “என்ன?” என்றார். “ரோந்து டியூட்டி, ஸார்!” “சரி அதற்கென்ன?” “எல்லாரும் சேர்ந்து பொங்கல் வைக்கிறோம், ஸார்!” “சரிதான், அதற்கென்ன செய்யவேணும்?” “ஏதோ உங்களுக்கு இஷ்டமானதைக் கொடுக்கலாம், ஸார்!” ராமகிருஷ்ணய்யர் ஒரு நிமிஷம் யோசித்தார். முதலில் “போலீஸ்” என்றதும், அவர் நெஞ்சில் ஏற்பட்ட துணுக்கம் இப்போது நிவர்த்தியாகி, அவன் யாசகத்துக்கு வந்திருக்கிறானென்னும் விஷயம் கொஞ்சம் சந்தோஷம் அளித்தது. “ஆமாம்; ஊரெல்லாம் திருட்டுப் பயமாயிருக்கிறது. போலீஸ்காரர்களுடைய ஒத்தாசை எவ்வளவு அவசியமானது?” என்று எண்ணினார். என்ன கொடுக்கலாமென்று சற்றுச் சிந்தித்துவிட்டு, பணப்பையைத் திறந்து நாலு அணா எடுத்தார். “நாங்கள் ஆறு பேர் ரோந்து சுத்தறோம், ஸார்!” என்றான். இன்னும் இரண்டணா சேர்த்துக் கொடுத்து அனுப்பினார். அன்று பத்தரை மணிக்குள்ளாக, கந்தசாமி ரூ.24 சொச்சம் சம்பாதித்து விட்டான். வெயில் ஆகிவிட்டது. இன்றைக்கு நிறுத்த வேண்டியது தான். ஆனாலும், முழுசாகக் கால் நூறு ஆக்கிவிட்டு நிறுத்தலாம் என்று எண்ணினான். இன்றைக்கு விழித்த முகத்தில் இன்னும் பத்து நாள் விழித்தால் போதும்; அப்புறம் கௌரவமாய் ஒரு சோடாக் கடை வைத்துக் கொண்டு காலட்சேபம் செய்யலாம்; ஏன், கலியாணம் கூடப் பண்ணிக்கலாம்! “மிஸ்டர் கே.சேனாபதி, ஜி.டி.ஏ.” என்ற போர்டு தொங்கிய வீட்டிற்குள் நுழைந்தான். முன் ஹாலில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் சேனாபதி அல்ல. அவருடைய தமையன் தீர்த்தபதி என்று கந்தசாமிக்குத் தெரியாமல் போனது ஒரு துரதிர்ஷ்டம் தான். “யார்? என்ன வேணும்?” என்று சாவதானமாய்க் கேட்டார் தீர்த்தபதி. “போலீஸ், ஸார்!” என்றதும், தீர்த்தபதியின் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டாயிற்று. அதன் கருத்து கந்தசாமிக்கு விளங்கவில்லை. “எந்தப் போலீஸ்?” “டவுன் போலீஸ்தான்.” “என்ன வேணும்?” கந்தசாமி வழக்கமான பாடத்தை ஒப்புவித்து, “உங்களுக்கு இஷ்டமானதைக் கொடுக்கலாம்” என்றான். “சரி, கொஞ்சம் இரு” என்று தீர்த்தபதி சொல்லிவிட்டு, வேலைக்காரப் பையனை அழைத்து அவனிடம் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினார். பிறகு இன்னும் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். கந்தசாமியும் நின்று கொண்டேயிருந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் உடுப்புத் தரித்த ஒரு போலீஸ்காரன் வந்தான். தீர்த்தபதியின் முன் வந்து ஸலாம் வைத்து நின்றான். தீர்த்தபதி அவனைப் பார்த்து, “என்ன வேலையடா பார்க்கிறீர்கள், நீங்கள்? சுத்த சோம்பேறிக் கழுதைகள்!” என்று திட்டிவிட்டு, “வாசலில் போய் நில்லு!” என்றார். வாசற்படிக்கு அருகில் நின்ற கந்தசாமி அந்த போலீஸ்காரனை இரகசியமாய், “எஜமான் யார்?” என்று கேட்டான். “தெரியாதா? சப்-இன்ஸ்பெக்டர் ஐயா” என்றான் போலீஸ்காரன். இம்மாதிரி நெருக்கடிகளில் தான் கந்தசாமி எவ்வளவு தீர புருஷன் என்பது வெளியாகும். எத்தகைய ஆபத்திலும் அவன் பதற்றம் அடைவது கிடையாது. இப்போது அவன் மளமளவென்று இன்ஸ்பெக்டர் அருகில் சென்று சட்டைப் பைகளில் இருந்த பணம், சில்லறை எல்லாவற்றையும் எடுத்து மேஜை மீது வைத்தான். “எஜமான் மன்னிக்க வேணும்” என்றான். “இவ்வளவு தானாடா? இன்னும் பாக்கி ஏதாவது வைத்துக் கொண்டிருக்கிறாயோ?” “தம்பிடி கூட இல்லை, எஜமான்!” “சரி, ஓடிப் போ! இனி இம்மாதிரி செய்தாயோ தொலைத்து விடுவேன்!” “எஜமான்!” “என்னடா?” “வயிறு பசிக்கிறது. நாஸ்தாவுக்கு ஏதாவது…” “சரி; தொலைத்துக் கொண்டு போ!” என்று ஸப்-இன்ஸ்பெக்டர் இரண்டணாவை எடுத்தெரிந்தார். கந்தசாமி அதை எடுத்துக் கொண்டு வெளியேறினான். வாசலில் நின்ற போலீஸ்காரனைப் பார்த்து, “எஜமான் உன்னைப் போகச் சொல்கிறார். அண்ணே! இனி உனக்கு வேலையில்லையாம்” என்று கூறிவிட்டுப் போனான். ஸப்-இன்ஸ்பெக்டர் தீர்த்தபதி, கையோடு கையாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மலையப்பெருமாளுக்கு ஒரு கடிதம் எழுதினார்: "….மாற்றலாகிப் போகும் டிபுடி சூபரின்டென்டண்ட் துரைக்கு நாம் கொடுக்க எண்ணியிருக்கும் விருந்துக்காக, என்னுடைய சந்தா ரூ.24 இத்துடன் அனுப்பியிருக்கிறேன். இப்படிக்குக் கீழ்ப்படிந்துள்ள ஊழியன் தீர்த்தபதி." கந்தசாமி கையில் இரண்டணாக் காசுடன் வீதியில் நடந்து சென்ற போது, ’உலகம் ரொம்ப சரியாய்த்தான் நடந்து வருகிறது; எல்லாம் அதது, அப்படியப்படி சேர வேண்டிய இடத்தில் தான் கணக்காய்ப் போய்ச் சேர்கிறது" என்று சொல்லிக் கொண்டு போனான். மயிலைக் காளை 1 கிருஷ்ணக் கோனான் இருபது வயதுக் காளைப் பிராயத்தை அடைந்திருந்தான். ஒரு தவறு செய்தால், பின்னால் அதிலிருந்து பல தவறுகள் நேரிடுகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணமல்லவா? இருபது வருஷத்திற்கு முன்னால் கிருஷ்ணன் இந்தப் பூமியில் பிறந்தான். அதன் பிறகு அவனுடைய அனுமதியைக் கேளாமலே வயது ஆகிக் கொண்டு வந்தது. இருபது பிராயம் நிரம்பும் காலம் சமீபித்தது. நேற்று அவனுடைய மயிலைக்காளை கெட்டுப் போய் இன்று அதை அவன் தேடி அலையும்படி நேரிட்டதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? என்னுடைய அபிப்பிராயம், அவனுடைய பிராயந்தான் அதற்குக் காரணம் என்பது. ஒரு வேளை நீங்கள் வித்தியாசமாய் நினைக்கக்கூடும். அவன் மாட்டை கவனிக்க வேண்டிய நேரத்தில் பூங்கொடியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தது தான் அதற்குக் காரணம் என்று சொல்லக்கூடும். உண்மைதான். ஆனால் அதற்கு காரணம் அவனுடைய பிராயந்தான் என்று நான் கருதுகிறேன். மாசி மாதம்; அறுவடை, போரடியெல்லாம் ஆகிவிட்டது. இந்நாட்களில் கிருஷ்ணன் மத்தியானம் சாப்பிட்ட பிறகு மாடுகளை ஓட்டிக் கொண்டு அவற்றை மேயவிடுவதற்காக போவது வழக்கம். சாதாரணமாய் அறுவடையான வயல்களிலே மாடுகள் மேயும், லயன்கரை மேஸ்திரி எவனும் வரமாட்டனென்று தோன்றுகிற சமயத்தில், கிருஷ்ணன், மாடுகளை இராஜன் வாய்க்காலுக்கு அப்பால் ஓட்டுவான். கொள்ளிடத்துக்கும் இராஜன் வாய்க்காலுக்கும் மத்தியிலுள்ள அடர்ந்த காட்டில் மாடுகள் மேயும், பொழுது சாய்வதற்குள் திரும்பி ஓட்டிக் கொண்டு வந்துவிடுவான். நன்றாக இருட்டுவதற்கு முன் வீட்டுக்கு வராவிட்டால் அவனுடைய தாயார் ரொம்பவும் கவலைப்படுவாள். நேற்று வழக்கம்போல் அவன் மாடுகளை வயல்களில் மேயவிட்டு இராஜன் வாய்க்காலின் கரையில் உட்கார்ந்திருந்தான். பூங்கொடியின் மேல் ஞாபகம் போயிற்று. அவளைப் பார்த்தே ஒரு மாதம் இருக்கும். நெருங்கிப் பேசி எத்தனையோ நாளாகி விட்டது. இப்போதெல்லாம் அவள் வெளியிலேயே வருவது இல்லை. பாவம் நோயாளி மாமனுக்குப் பணிவிடை செய்துகொண்டு வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்கிறாள். பெருமாள் கோனான் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி செத்தும் சாகாமலும் கிடப்பான்? அவன் செத்துப் போனால் அப்புறம் பூங்கொடியின் கதி என்ன? அவள் பிறகு அந்த வீட்டில் இருக்க முடியுமா? பெருமாள் கோனான் பெண்டாட்டி பெரிய பிசாசு அல்லவா? அவளிடம் பூங்கொடி என்ன பாடுபடுவாள்? இப்போது-மாமன் இருக்கும் போதே இந்தப் பாடுபடுத்துகிறாளே? என்னவெல்லாமோ யோசித்த பின்னர் கடைசியாக அவன் மனம் கல்யாணத்தில் வந்து நின்றது. ஏழைப் பெண் தான்; மாமன் செத்துவிட்டால் நாதியற்றவளாகி விடுவாள். இக்காரணத்தினால் தன் தாயார் ஒரு வேளை தடை சொன்னாலும் சொல்லலாம். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தாயார் மறுத்துச் சொன்னால் கூடக் கேட்க முடியாது என்று அவனுக்குத் தோன்றிற்று… இப்படி அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் மயிலைக் காளை இராஜன் வாய்க்காலில் இறங்கி அக்கரை போவதை அவன் கண்கள் பார்த்தன; மூளைக்குச் செய்தியும் அனுப்பின. ஆனால், அந்தச் சமயம் அவன் மூளை வேறு முக்கிய விஷயத்தில் ஈடுபட்டிருந்தபடியால் அச் செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறொரு சமயமாயிருந்தால் ‘பொழுது போகிற சமயம்; இப்போது மயிலைக் காளையை அக்கரை போகவிடக்கூடாது; காட்டில் புகுந்துவிட்டால் தேடுவது கஷ்டம்’ என்று சொல்லி உடனே ஓடிச்சென்று மறித்து ஓட்டியிருப்பான். ’த்தா! த்தா! ஏ மயிலை! என்று இரண்டு அதட்டல் போட்டால் கூட அநேகமாய் அது திரும்பியிருக்கும். இப்போதோ பார்த்துக் கொண்டே சும்மா இருந்துவிட்டான். கடைசியில், மயிலைக்காளை இல்லாமலே இரவு வீடு திரும்ப வேண்டியதாயிற்று. அதன் பலனாகத்தான் கிருஷ்ணன் இன்று ஊரெல்லாம் மாசிமகத்துக்காக ஓமாம்புலியூருக்குப் போயிருக்க, தான் மாத்திரம் காட்டிலே அலைந்து கொண்டிருக்க நேர்ந்தது. அன்று காலையில் எழுந்ததும்; அவன் பச்சை மிளகாயும், உப்பும் கடித்துக் கொண்டு பழைய சோறு சாப்பிட்டுவிட்டுக் கையில் புல்லாங்குழலுடன் கிளம்பினான். கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசித்தால் வெகு அபூர்வமாயிருக்கும். நல்ல சங்கீதம் கேட்டுப் பண்பட்ட காதுகளையுடையோரை அவனுடைய வேணுகானம் துரத்தி துரத்தி அடிக்கும் வல்லமையுடையது. ஆனால், அவனுடைய மாடுகளை அழைப்பதற்கு அந்த அபூர்வ கானமே போதுமாயிருந்தது. [இதை உத்தேசிக்கும் போது தான், பழைய பிருந்தாவன கிருஷ்ணனுடைய வேணுகான மகிமையிலும் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உண்டாகிறது.] இராஜன் வாய்க்காலைக் கடந்து அப்பாலுள்ள காட்டில் புகுந்தான். காடு என்றதும் வானமளாவிய விருக்ஷங்களையும், புலிகளையும், கரடிகளையும் எண்ணிக் கொள்ள வேண்டாம். நான் சொல்லும் கொள்ளிடக்கரைக் காட்டில் மூன்று ஆள் உயரத்துக்கு மேற்பட்ட மரம் ஒன்றுகூடக் கிடையாது. ஆனாலும் காடு காடுதான். முட்புதர்களும், மற்றச் செடி கொடிகளும் அடர்ந்து மனிதன் பிரவேசிப்பது அசாத்தியமாயிருக்கும். அபூர்வமாய் அங்குமிங்குமுள்ள ஒற்றையடிப்பாதை வழியாய் ஒருவன் உள் புகுந்துவிட்டால் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பது பிரம்மப்பிரயத்தனம் தான். பாம்புகள், கீரிகள், நரிகள் ஆகியவைதான் இந்தக் காட்டில் உள்ள துஷ்டப் பிராணிகள். இப்படிப்பட்ட காட்டில் கிருஷ்ணன் காலை நேரமெல்லாம் சுற்றி அலைந்தான். மத்தியானம் வரையில் தேடியும் பயனில்லை. கடைசியாக மாடு போனதுதான் என்று தீர்மானித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினான். தண்ணீர் குடிப்பதற்காகக் கொள்ளிடத்தின் கரையோர மடுவில் இறங்கி முதலைக்கு இரையானாலும் ஆகியிருக்கலாம். அவனுடைய நெஞ்சில் பாறாங்கல்லை வைத்தது போல் பாரமாயிருந்தது. இவ்வளவும் பூங்கொடியினால் ஏற்பட்டது என்பதை நினைக்க அவனுக்கு அவள் மேல் கோபம் வந்தது. எதற்காக அவளைப் பற்றித் தான் நினைக்க வேண்டும்? இவ்வளவுக்கும் அவள் தன்னைப்பற்றி நினைப்பதாகவே தெரியவில்லை. என்ன தான் வீட்டிலே வேலையென்றாலும், மனத்திலே மட்டும் பிரியம் இருந்தால் இப்படி இருப்பாளா? அவள் வீட்டுப்பக்கம் தான் போகும்போது கூட வெளியில் வந்து தலைகாட்டுவதில்லை. சே! அப்படிப்பட்டவளிடம் தான் ஏன் மனத்தை செலுத்த வேண்டும்? அருமையான மயிலைக் காளை நஷ்டமானதுதான் லாபம்! (‘ஓய் கிருஷ்ணக் கோனாரே! உம்முடைய மூளைக் குழப்பத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வீர் போலிருக்கிறது! நஷ்டம் எப்படி ஐயா லாபம் ஆகும்?’) இருக்கட்டும்; ஆயாளையாவது திருப்தி செய்யலாம் நல்ல பணக்கார வீட்டுப் பெண்ணாகப் பார்த்துக் கட்டிக் கொள்ளலாம். இந்த அநாதைப் பெண் யாருக்கு வேண்டும். இவளை நினைக்காமல் விட்டுவிட வேண்டியதுதான். தள்ளு! 2 சலசலவென்று சப்தம் கேட்டது. கிருஷ்ணன் சப்தம் வந்த இடத்தை நோக்கினான். யாருடைய நினைவை ஒழிக்க வேண்டுமென்று தீவிரமாகத் தீர்மானம் செய்து கொண்டிருந்தானோ அந்தப் பெண்ணின் உருவம் புதர்களை நீக்கிக் கொண்டு வெளிவந்தது. கிருஷ்ணனைப் பார்த்ததும், திருதிருவென்று விழித்தது. கிருஷ்ணன் - வேகமாய் நடந்துகொண்டிருந்த கிருஷ்ணன் - நின்று விட்டான். இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கொஞ்ச நேரம் நின்றார்கள். பிறகு சமீபத்தில் வந்தார்கள். அவர்களுடைய சம்பாஷணை சாதாரணமாய் இத்தகைய சந்தர்ப்பங்களில் காதலர்களின் சம்பாஷணை எப்படியிருக்குமோ அப்படியில்லையென்பதை வெட்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். கொஞ்ச நேரம் சும்மா நின்றபின், கிருஷ்ணன், “நீ மகத்துக்குப் போகலையா?” என்று கேட்டான். “நீ போகலையா?” “நான் தான் இங்கே இருக்கேனே; எப்படிப் போயிருப்பேன்?” “நானுந்தான் இங்கே இருக்கேனே, எப்படிப் போயிருப்பேன்?” “நீ என்ன, சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையா?” என்று சிரித்துக் கொண்டே கிருஷ்ணன் கேட்டான். பூங்கொடி பெருமூச்செறிந்தாள். “கிளியாயிருந்தால் எவ்வளவோ நல்லாயிருக்குமே? ஒரு கஷ்டமுமில்லாமல் காட்டிலே சுகமாய் பறந்து திரிந்து கொண்டிருக்கலாமே?” என்றாள். கிருஷ்ணனுக்கு அவனையறியாமல் அசட்டுத்தனமாய்ப் பேச வந்தது. “நாம் இரண்டு பேரும் கிளியாய்ப் போய் விடலாம்” என்றான். பிறகு, ஏதோ நினைத்துக் கொண்டவன் போல், “ஆமாம்! பூங்கொடி! நீ ஏன் முன்னைப் போலெல்லாம் வெளியிலேயே வருவதில்லை? உன்னைக் காணவே முடிகிறதில்லையே?” என்று கேட்டான். “உனக்குத் தெரியாதா? சொல்ல வேணுமா? ஒரு வருஷமாய்த்தான் என்னுடைய மாமன் பக்க வாயு வந்து படுத்த படுக்கையாய்க் கிடக்காரே. மாமி ஒன்றும் அவரைச் சரியாய்க் கவனிக்கிறதில்லை. நான் தான் எப்போதும் அவர் பக்கத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் அக்கம் பக்கம் போனால் கூட மாமன் கூப்பிட்டு விடுகிறார். எப்படி வெளியே வருகிறது?” “நிஜந்தான். ஆனால் இரண்டொரு தடவை என்னைப் பார்த்தபோது கூடப் பாராதது போல போய் விட்டாயே! அது ஏன்?” என்றான் கிருஷ்ணன். வெட்கத்துடன் கூடிய புன்னகை அவள் முகத்தில் ஒரு கணம் தோன்றியது. “நாம் இன்னும் சின்னப்பிள்ளைகளா, என்ன? ஆண்பிள்ளைகளுடன் பேசக் கூடாதென்று மாமி ஒரு நாள் கண்டித்தாள். அவள் சொல்கிறது நியாயந்தானே? யாராவது ஏதாவது சொல்ல மாட்டார்களா?” என்றாள். இப்போது கிருஷ்ணன் உள்ளத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது. இன்றைய தினம் பூங்கொடி எதற்காக இக் காட்டுக்கு வந்தாள்? - இந்தக் கேள்வி முன்னமே தனக்கு தோன்றாதது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது. ஒருகணம், “ஒரு வேளை நம்மைப் பார்க்கத்தான் வந்திருப்பாளோ?” என்று எண்ணினான். அந்த எண்ணமே அவன் உடம்பை ஓர் அங்குலம் பூரிக்கச் செய்தது. உடனே அப்படி இருக்க முடியாதென்று தெரிந்தது. தான் காட்டில் மயிலைக் காளையைத் தேடுவது அவளுக்குத் தெரிந்திருக்க இடமில்லை. மேலும் தன்னைப் பார்த்ததும் அப்படித் திடுக்கிட்டு நின்றாளே? ஏதோ மர்மம் இருக்க வேண்டும். “ஆமாம், இன்று எதற்காக காட்டுக்கு வந்தாய்?” என்று கேட்டான். “அதைச் சொல்லக் கூடாது” என்று கூறி பூங்கொடி பக்கத்திலிருந்த புதரிலிருந்து இலைகளைக் கிள்ளிப் போடத் தொடங்கினாள். கிருஷ்ணனுடைய மனத்தில் இப்போது பயங்கரமான ஒரு சந்தேகம் உண்டாயிற்று. வேறு யாரேனும் ஓர் ஆண்பிள்ளையைச் சந்திப்பதற்காக ஒரு வேளை வந்திருப்பாளோ? கண்ணால் கண்டிராத - வாஸ்தவத்தில் இல்லாத - ஒரு மனிதனின் பேரில் கிருஷ்ணனுக்கு அளவிலாத அசூயை உண்டாயிற்று; சொல்ல முடியாத கோபம் வந்தது. பூங்கொடி சற்று நேரம் தரையில் கால் கட்டை விரலால் கோடு கிழித்துக் கொண்ட முகத்துடன் கூறினாள். “நான் ஒன்று சொல்கிறேன். கேள்; நான் தப்புக் காரியம் எதுவும் செய்யவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன்; தப்பு ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், நான் இன்று இந்தக் காட்டுக்கு வந்தது ஒருவருக்கும் தெரியக் கூடாது. ஒருவரிடமும் சொல்லாமல் இருப்பாயா?” “ஒருவரிடமும் நான் சொல்லவில்லை. ஆனால் எதற்காக வந்தாய் என்று என்னிடம் மட்டும் சொல்லிவிடு,” என்றான் கிருஷ்ணன். “அதுவும் இப்போது சொல்லமுடியாது. சமயம் வரும் போது நானே சொல்கிறேன். அதுவரையில் நீ என்னைக் கேட்கக்கூடாது. இது ஒரு முக்கியமான காரியம். என்னிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் தப்பான காரியம் செய்வேனென்று உனக்குத் தோன்றுகிறதா?” இப்படிச் சற்று நேரம் வாக்குவாதம் நடந்தது. கடைசியில் பெண்மைதான் வெற்றி பெற்றது. “இதோ பார், பூங்கொடி! உன்னை நான் நம்புகிறேன். ஆனால், எனக்குத் துரோகம் செய்தாயென்று மட்டும் எப்போதாவது தெரிந்ததோ, அப்புறம் என்ன செய்வேனென்று தெரியாது” என்றான் கிருஷ்ணன். “துரோகமா? அப்படியென்றால் என்ன?” என்றாள், பூங்கொடி. இருவரும் இராஜன் வாய்க்கால் வரையில் சேர்ந்து போனார்கள். அங்கே கிருஷ்ணன் பின் தங்கினான். பூங்கொடி போய்க் கொஞ்ச நேரத்துக்கு பிறகு வீடு சென்றான். வீட்டுக் கொல்லையிலே மயிலைக்காளை சாவதானமாய் அசை போட்டுக் கொண்டு நின்றது. வேறு சமயமாயிருந்தால், கிருஷ்ணன் அதை நாலு அடி அடித்திருப்பான். மகத்துக்கு ஓமாம் புலியூர் போக முடியாமல் செய்துவிட்டதல்லவா? ஆனால், அச்சமயம் அவன் உள்ளம் மிகவும் குதூகலம் அடைந்திருந்தது. எனவே, மயிலைக் காளையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அதன் கன்னங்களை தடவிக் கொடுத்தான். 3 பெருமாள் கோனாரை நேயர்களுக்கு நான் அறிமுகப்படுத்தி வைக்க முடியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன். ஏனெனில், கதையில் அந்தக் கட்டத்திற்கு நான் வருவதற்கு முன்னால் அவர் காலமாகி விட்டார். அதற்காக வருத்தப்பட வேண்டாம். அவருக்குப் பதிலாக அவருடைய மனைவியைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த அம்மாளுடைய உண்மைப் பெயர் என்னமோ நமக்குத் தெரியாது. ஊரிலே எல்லாரும் பிடாரி என்று அவளை அழைத்தார்கள். அந்தப் பெயரே நமக்குப் போதுமானது. பிடாரி, பெருமாள் கோனாருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டாள். முதல் மனைவியிடம் கோனார் ரொம்ப ஆசை வைத்திருந்தார். அவளுக்குக் குழந்தை பிறக்காதது ஒன்று தான் கோனாருக்குக் குறையாயிருந்தது. அவள் இறந்த பிறகு, நம்முடைய சொத்துக்கு வாரிசு இல்லாமல் போகிறதே என்பதற்காக இன்னொரு தாரத்தை மணந்து கொண்டார். இரண்டாவது மனைவி அவருடைய விருப்பத்தை என்னவோ நிறைவேற்றி வைத்தாள். மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆனாலும், இந்தப் பிடாரியை ஏன் கல்யாணம் செய்து கொண்டோ மென்று அவர் பலமுறை வருத்தப்பட்டதுண்டு. கோனார் இறந்ததும், பிடாரி தன் தலையிலிருந்த பெரிய பாரம் இறங்கியது போல் பெருமூச்சு விட்டாள். இனிமேல் வீடு வாசல் நில புலன் எல்லாவற்றிற்கும் தானே எஜமானி. ஐந்து வயதுப் பிள்ளை மேஜராகும் வரையில் தன் இஷ்டப்படி எல்லாம் நடக்கும். ஊரையே ஓர் ஆட்டு ஆட்டி வைக்கலாம். ஸ்ரீமதி பிடாரிதேவியிடம் நீங்கள் அனுதாபம் காட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அவள் கட்சியிலும் கொஞ்சம் நியாயம் உண்டென்பதைக் கவனிக்க வேண்டும். கோனார் ரொம்பக் கண்டிப்புக்காரர். அவரிருந்த வரையில் அவளுடைய பிடாரித் தனத்தின் முழுச் சக்தியையும் வெளிக் காட்ட முடியாமலிருந்தது. அதிலும் அவர் நோயாய்க் கிடந்த காலத்தில் படுத்தி வைத்த பாடு சொல்லத் தரமல்ல. பூங்கொடி தான் அவர் பக்கத்தில் இருக்கலாம். வேறு யாராவது பக்கத்தில் போனாலும் ‘வள்வள்’ என்று விழுகிறது. இதனால் இந்தப் பெண்ணுக்குத்தான் எவ்வளவு கர்வம்! அந்தக் கொட்டத்தையெல்லாம் இப்போது பார்க்கலாம். கோனார் காலஞ்சென்று நான்கு நாள் ஆயிற்று. வர வேண்டிய உறவு முறையினர் எல்லாரும் வந்து போய் விட்டார்கள். பிடாரி அம்மாள், வீட்டில் ஒருவரும் இல்லாத சமயம் வாசல் கதவைத் தாழிட்டு விட்டு வந்தாள். கூடத்தின் மத்தியிலிருந்த களஞ்சியத்தண்டை சென்றாள். அதன் ஓர் ஓரத்தில் பெயர்த்திருந்த இரண்டு கல்லைப் பிடுங்கி அகற்றினாள். அவ்வாறு ஏற்பட்ட துவாரத்தில் கையை விட்டாள். அச்சமயம் அவளுடைய முகத்தைப் பார்த்தவர்களுக்கு ஆட்டுப் பட்டிக்குள் நுழையும் நரியின் முகம் ஞாபகத்துக்கு வந்திருக்கக் கூடும். ஆனால், அடுத்த நிமிஷம் அந்த முகத்திலேயே ஏமாற்றமும் திகிலும் கலந்து காணப்பட்டன. மறுபடியும் மறுபடியும் கையை விட்டுத் துழாவினாள். கந்தல் துணி ஒன்றுதான் அகப்பட்டது. அந்தப் பணம் எங்கே போயிருக்கும்? பத்து நாளைக்கு முன் நரசிம்மலு நாயக்கர் வந்திருந்தார். கோனார் பெட்டியிலிருந்து அவருடைய பிராமிஸர் நோட்டை எடுத்து வரும்படி சொல்லவே, பிடாரி கொண்டு போய்க் கொடுத்தாள். நாயக்கர் அதை வாங்கிக் கொண்டு ரூ.150 நோட்டுகளாக எண்ணி வைத்தார். கோனார் அதை வாங்கி ஒரு கடுதாசியில் சுற்றித் தலையணைக்குள் செருகி வைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துப் பிடாரி அவரிடம் வந்து, “பணத்தைப் பெட்டியில் வைக்கட்டுமா?” என்று கேட்டபோது “சீ! போ! உன் காரியத்தைப் பார்!” என்று எரிந்து விழுந்தார். அன்றிரவு பிடாரி சமையலறைக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு படுத்தாள். தூங்குவது போல் பாசாங்கு செய்தாலேயொழிய கண் கொட்டவேயில்லை. இரவு ஜாமத்துக்குக் கோனார் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்தார். எல்லாரும் தூங்குகிறார்களா என்று பார்த்துவிடுத் தலையணைக்குள்ளிருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டார். பிறகு மெள்ள மெள்ள நகர்ந்து சென்று களஞ்சியத்தை அடைந்தார். அந்தக் கல்லுகளைப் பெயர்த்தெடுத்த பின்னர் உள்ளே கையை விட்டு ஒரு சின்னஞ்சிரு தகரப் பெட்டியை எடுத்தார். அதற்குள் நோட்டுகளை வைத்த பிறகு மறுபடியும் முன்போல் அதைத் துவாரத்துக்குள் வைத்து மூடி விட்டுத் திரும்பப் படுக்கைக்கு வந்து படுத்துக் கொண்டார். இவ்வாறு கோனார் ரொக்கம் வைத்திருந்த இடத்தைப் பிடாரி கண்டு கொண்டாள். கோனார் இருக்கும் வரை அதை எடுப்பதற்கு வழியில்லை. சீக்காளி மனிதன்; களஞ்சியத்துக்கு எதிரிலேயே படுத்திருந்தார். நன்றாய்த் தூங்குவதும் கிடையாது. ஆனாலும் பணம் எங்கே போய் விடப் போகிறதென்று பிடாரி தைரியமாயிருந்தாள். அவர் இறந்த பிறகு பிடாரி விட்டை விட்டு நகரவில்லையாதலால் யாரும் எடுத்திருக்க முடியாது. பின் எப்படி அந்தப் பெட்டி மாயமாய்ப் போயிருக்கும்? வீட்டிலுள்ள சந்துபொந்து எல்லாவற்றையும் பிடாரி சோதனை செய்து பார்த்தாள். ஒன்றும் பயன்படவில்லை. போனது போனதுதான். சட்டென்று பூங்கொடியின் மேல் அவளது சந்தேகம் வந்து நின்றது. ‘அவள் தான் எடுத்திருக்க வேண்டும். திருடி; சாகஸக்காரி. அவளை ஒரு கை பார்க்கிறேன்’ என்று பிடாரி மனதுக்குள் எண்ணினாள். மறுநாள் பூங்கொடியைக் கூப்பிட்டு, “இதோ பார்! நிஜத்தைச் சொன்னாயானால் பேசாமல் விட்டு விடுகிறேன். நீ ஏதாவது பணம் எடுத்தாயா?” என்று கேட்டாள். பூங்கொடி அதற்கு, “நான் ஒருத்தர் பணத்தையும் எடுக்கவில்லை. பிறத்தியார் பணம் எனக்கு எதற்கு?” என்றாள். எவ்வளவோ நயத்திலும் பயத்திலும் கேட்டும் வேறு பதில் அவளிடமிருந்து வரவில்லை. கோனாருக்குப் பதினாறாம் நாள் சடங்கு முடிந்தது. அதற்கு மறுதினம் பிடாரி பூங்கொடியைக் கூப்பிட்டு, “அடியே, இங்கே பார்! நீதான் பணத்தை எடுத்திருக்க வேண்டும். வேறு யாரும் திருடன் வந்து விடவில்லை. பணத்தைக் கொடுத்தாயோ இந்த வீட்டில் இருக்கலாம். இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறிவிடு!” என்றாள். “அப்படியே ஆகட்டும். நீ இப்படிச் சொல்ல வேண்டுமென்றுதான் காத்துக் கொண்டிருந்தேன். என் மாமன் இருந்த வீட்டில் அவர் இல்லாமல் கொஞ்ச நேரமும் இருக்கச் சகிக்கவில்லை. இப்பொழுதே போய் விடுகிறேன்” என்றாள் பூங்கொடி. 4 அன்று காட்டில் பூங்கொடியைச் சந்தித்துப் பேசியதிலிருந்து கிருஷ்ணக் கோனாருடைய மனம் ரொம்பக் குழம்பியிருந்தது. காரியமெல்லாம் தாறுமாறாகச் செய்து வந்தான். பிண்ணாக்கைக் கொண்டு போய்த் தொட்டியில் போடுவதற்குப் பதிலாகக் கிணற்றில் போட்டான். எருமைக் கன்றுக் குட்டியை பசுமாட்டில் ஊட்டவிட்டான். கறவை மாட்டுக்கு வைக்க வேண்டிய பருத்திக் கொட்டையைக் கடாமாட்டுக்கு வைத்தான். தனக்குத்தானே பேசிக்கொள்ளத் தொடங்கினான். “நாம் இரண்டு பேரும் கிளியாய் பறந்து போய்விடுவோமா?” என்று இறைந்து சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரிப்பான். “எனக்கு மட்டும் துரோகம் செய்தாயோ?” என்று கூறிப் பல்லை நறநறவென்று கடிப்பான். அன்று இராஜன் வாய்க்கால் கரையில் பூங்கொடியைப் பிரிந்த சமயத்தில் ஒரு கையினால் அவளுடைய மோவாய்க்கட்டையை நிமிர்த்திப் பிடித்துக் கொண்டு தன்னுடைய முகத்தை அருகில் கொண்டு போனதும், அவள், “சீச்சீ! நாம் இன்னும் சின்னப் பிள்ளைகளா?” என்று உதறிக் கொண்டு ஓடிப்போனதும் எப்போதும் அவன் மனக்கண்முன் நின்றது. சில சமயம் அவளுடைய உருவம் அதே நிலையில் எதிரில் நிற்பதுபோல் தோன்றும். அப்போது அவனுடைய கைகளும் முகமும் கோரணிகள் செய்யும் “தெரியுமா? என்னை மறக்கக்கூடாது!” என்பான். இவற்றையெல்லாம் கவனித்த அவனுடைய தாயார் “ஐயோ! என் மகனுக்கு மோகினி பிடித்து விட்டதே!” என்று தவித்தாள். அவளுடைய உறவு முறையாருக்குள் கலியாணத்துக்குத் தகுதியாயிருந்த பெண்களைப்பற்றியெல்லாம் விசாரிக்கத் தொடங்கினாள். இலையிலே சோற்றை வைத்துக் கொண்டு சாப்பிடாமல் மகன் என்னவோ யோசனை செய்து கொண்டிருப்பதைக் காணும்போது, “அடே அப்பா! உனக்கென்னடா இப்படி வந்தது?” என்பாள். கிருஷ்ணன், “சீ! போ! உன்னை யார் கேட்டது?” என்று வள்ளென்று விழுவான். “ஐயோ! என் மகன் இப்படி ஒரு நாளும் இருந்ததில்லையே, மாரியாத்தா என் மகனைக் காப்பாற்றடி! உனக்குப் படையல் வைக்கிறேன்,” என்று வேண்டிக் கொள்வாள். பெருமாள் கோனார் செத்துப் போனதிலிருந்து கிருஷ்ணனுடைய மனக்குழப்பம் இன்னும் அதிகமாயிற்று. பூங்கொடி தாய் தந்தையற்ற அநாதையென்பதும் அவளுக்கு மாமன் வீட்டைத் தவிர வேறு போக்கிடம் கிடையாதென்பது ஊரில் எல்லாருக்கும் தெரியும். பெருமாள் கோனார் உயிரோடிருக்கும் வரை அபிமானமாய் வைத்துக் கொண்டிருந்தார். இனிமேல் அவளை யார் கவனிப்பார்கள்? பிடாரி அவளை வதைத்து விடுவாளே? ஒரு நாள் கிருஷ்ணன் தாயாரிடம் “ஏன், ஆயா பெருமாள் கோனார் செத்துப் போனாரே? இனி மேல் அந்தப் பெண் என்ன செய்யும்?” என்று கேட்டான். “எந்தப் பெண்ணடா?” “அதுதானம்மா, பூங்கொடி!” “அவளை அந்தப் பிடாரி துரத்தி விடுவாள் சீக்கிரம். இப்போதே திருட்டுப்பட்டம் கட்டி விட்டாளே, தெரியாதா உனக்கு?” “அது என்ன, அம்மா?” என்று கிருஷ்ணன் பரபரப்புடன் கேட்டான். “கோனார் ரொக்கப் பணம் வைத்திருந்தாராம். அதைக் காணுமாம். பிடாரி அந்த அநாதைப் பெண் மேலே பழியைப் போடுகிறாள். அவள் தான் எடுத்து விட்டாள் என்கிறாள். அந்தப் பெண் அப்படிச் செய்திருக்கவே செய்திருக்காது. ஏதாவது பழிவைத்துத்தானே வீட்டை விட்டுத் துரத்த வேண்டும்?” கிருஷ்ணனுடைய நெஞ்சில் முள் தைத்தது போல் சுருக்கென்றது. அன்றைய தினம் காட்டிற்கு அவள் தனியாக வந்திருந்ததும், தன்னைக் கண்டு திகைத்து நின்றதும், எதற்காக வந்தாய் என்று கேட்டதற்குப் பதில் சொல்லாமல் மூடு மந்திரம் செய்ததும் ஞாபகத்திற்கு வந்தன. உண்மையில் அந்தப் பெண் திருடிதானோ? இந்த எண்ணம் அவனுடைய நெஞ்சில் அளவிலாத வேதனையை உண்டாக்கிற்று. எவ்வளவுதான் யோசித்தாலும், அவன் ஒரு முடிவுக்கே வர வேண்டியிருந்தது. பிடாரி சொல்வது நிஜந்தான். பூங்கொடி தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும்! அதை எங்கேயோ ஒளிப்பதற்குத்தான் அன்று காட்டிற்கு வந்திருக்கிறாள். இந்தச் சந்தேகம் தோன்றவே, அன்றைய தினத்திலிருந்து கிருஷ்ணன் மாடுகளை ஓட்டிக் கொண்டு காட்டிற்குப் போன போதெல்லாம் சுற்று முற்றும் பார்த்த வண்ணம் இருந்தான். பூங்கொடி பணம் ஒளித்து வைத்திருக்குமிடம் தன் கண்ணில் ஒரு வேளை பட்டுவிடுமோ என்று அவனுடைய நெஞ்சில் திக்குத்திக்கென்று அடித்துக் கொண்டேயிருந்தது. 5 பெருமாள் கோனாரின் கருமாதிக்கு மறுநாள் காலை கிருஷ்ணன் பழையசோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அடுத்த வீட்டுக்காரி, “அமிர்தம்! சங்கதி கேட்டாயா?” என்று சொல்லிக் கொண்டு வந்தாள். “என்ன சமாசாரம்?” என்று அமிர்தம் கேட்டாள். “பிடாரி, பூங்கொடியை வீட்டை விட்டுப் போகச் சொல்லிவிட்டாள். அந்தப் பெண் அழுதுகொண்டே கிளம்பிப் போகிறது.” “ஐயோ பாவம்! அது எங்கே போகும்?” என்றாள் அமிர்தம். “அது என்ன கர்மமோ? போக்கிடம் ஏது அதற்கு? எங்கேயாவது ஆத்திலே குளத்திலே விழுந்து செத்து வைத்தாலும் வைக்கும்…” கிருஷ்ணன் அதற்குமேல் கேட்கவில்லை. சட்டென்று எழுந்திருந்து கையலம்பிவிட்டு வாசலில் வந்து பார்த்தான். பூங்கொடி தெருவைத் தாண்டி அப்பாலுள்ள பாதையில் போவதைக் கண்டான். இவன் குறுக்கு வழியாக வயல்களில் விழுந்து சென்று அந்தப் பாதையில் அவளுக்கு முன்னால் சென்று ஏறினான். பூங்கொடியின் எதிரில் சென்று வழிமறித்து நின்று கொண்டு, “எங்கே போறே?” என்று கேட்டான். “நான் எங்கே போனால் யாருக்கென்ன?” என்று பூங்கொடி சொல்லிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். “சொல்லாது போனால் நான் விடமாட்டேன்,” என்றான் கிருஷ்ணன். “சீர்காழிக்குப் போறேன்; அங்கே மில்லிலே வேலை செய்து பிழைக்கலாமென்று” “ஏன் இத்தனை நாள் இருந்த ஊரை விட்டுப் போக வேணும்?” “போகாதே பின்னே எங்கேயிருக்கிறது? மாமி வீட்டை விட்டுப் போகச் சொல்லிவிட்டாள்.” “ஏன் அப்படிச் சொன்னாள்? அவளுக்கு உன் மேலே என்ன கோபம்?” பூங்கொடி சற்று நேரம் சும்மா இருந்தாள். பிறகு, “உனக்கென்ன அதைப்பற்றி? எனக்கும் அந்த வீட்டிலே இருக்கப் பிடிக்கலை; நான் போகிறேன்,” என்றாள். “நான் சொல்கிறேன் கேள் பூங்கொடி! அந்த நாயின் பணம் உனக்கு வேண்டாம். ஒருத்தருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து அந்த வீட்டிலேயே எறிந்துவிடு…நாம்” “நீ கூட என்னைத் திருடி என்று தானே நினைக்கிறாய்? நான் எதற்காக உயிரோடு இருக்கவேணும்? விடு நான் போகிறேன்” என்று சொல்லிப் பூங்கொடி அழத் தொடங்கினாள். கிருஷ்ணன் சிறிது நேரம் சும்மா இருந்தான். பிறகு, “சரி, வா! போகலாம்!” என்றான். “எங்கே?” “வீட்டுக்கு.” “எந்த வீட்டுக்கு?” “எந்த வீட்டுக்கா? என் வீட்டுக்குத்தான். சீர்காழிக்கு நீ போகவும் வேண்டாம்; மில்லில் வேலை செய்யவும் வேண்டாம். நானிருக்கிற வரையில் அது நடக்காது.” “உன் வீட்டுக்கு வந்தால்…அப்புறம்?” “புரோகிதரைக் கூப்பிட்டுக் கல்யாணத்துக்கு நாள் வைக்கச் சொல்றது!” “திருடியைக் கட்டிக் கொண்டாய் என்று ஊரிலே சொல்ல மாட்டார்களா? உனக்கு வெட்கமாயிராதா?” “யாராவது உன்னை அப்படிச் சொன்னால் அவர்கள் நாக்கை அறுத்துவிடுவேன். அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது.” “உன் ஆயா சம்மதிப்பாளா? அங்கே போய் மறுபடியும் வீட்டை விட்டுப் போகச் சொன்னால்?” “ஆயா அப்படிச் சொன்னால் உன்னோடு நானும் வீட்டை விட்டுக் கிளம்பி வந்துவிடுகிறேன். அப்பொழுது இரண்டு பேருமாய்ப் போவோம்.” “சத்தியமாய்ச் சொன்னால் தான் வருவேன்.” “சத்தியமாய்ச் சொல்றேன். வா, போகலாம்!” 6 சுபதின, சுபலக்னத்தில் கிருஷ்ணக் கோனானுக்கும் பூங்கொடிக்கும் விவாக மகோற்சவம் நடந்தேறியது. ஸ்ரீமதி பிடாரி அம்மாளைத் தவிர மற்றபடி ஊராரெல்லாம் விஜயம் செய்து தம்பதிகளை ஆசீர்வதித்தார்கள். இவ்வளவு நல்ல பெண்ணின் பேரில் திருட்டுப் பழியைச் சுமத்தி வீட்டை விட்டுத் துரத்திய பிடாரியைத் தூற்றாதவர்கள் இல்லை. அவ்வாறே கிருஷ்ணனைப் புகழ்ந்து போற்றாதவர்களும் அந்த ஊரில் கிடையாது. எல்லாரிலும் அதிக குதூகலத்துடன் விளங்கியவள் கிருஷ்ணனுடைய தாயார் அமிர்தம்தான். தனக்குப் பேச்சுத் துணைக்கும், ஏவின வேலை செய்வதற்கும் மருமகள் ஆச்சு; பிள்ளைக்கும் புத்தி தெளிந்து முன்னைப் போல் நன்றாயிருப்பான். கலியாணச் சந்தடி அடங்கிய அடியோடு ஒரு நாள் காலையில் பூங்கொடி கிருஷ்ணனிடம் “காட்டுக்குப் போய் விட்டு வரலாம், வா!” என்று சொன்னாள். “இப்போது எதற்குக் காட்டுக்கு?” “ஒரு காரியம் இருக்கிறது. ‘நீ ஒன்றும் என்னைக் கேட்காதே; நானாகச் சொல்கிறேன்’ என்று அப்போது சொல்லவில்லையா? அந்தச் சமாசாரத்தை இன்று தெரிவிக்கிறேன், வா!” கிருஷ்ணனுக்கு விஷயம் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆவலாயிருந்தது; ஆனால் காரியம் என்னவோ சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாய் வருவதாக ஒத்துக் கொண்டான். பூங்கொடி இராஜன் வாய்க்காலில் குளிக்கச் செல்வது போல் முதலில் போனாள். கிருஷ்ணன் பின்னோடு மாடுகளை ஓட்டிக் கொண்டு சென்றான். அக்கரைச் சேர்ந்ததும், பூங்கொடி துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடத் தொடங்கினாள். மெதுவாகத் தயக்கத்துடன் நடந்த கிருஷ்ணனைச் சில சமயம் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். கிருஷ்ணனுடைய நெஞ்சு மேலும் மேலும் படபடவென்று அடித்துக் கொண்டது. கடைசியாக ஓர் ஆலமரத்தடியில் போய்ச் சேர்ந்ததும், பூங்கொடி கிருஷ்ணன் கையை விட்டுவிட்டு அந்த மரத்தின் மேல் தாவி ஏறினாள். இரண்டு கிளைகளுக்கு மத்தியில் புல்லுருவிகளால் மூடப்பட்டிருந்த ஒரு பொந்தினுள் கையைவிட்டு, அதற்குள்ளிருந்து ஒரு சிறு தகரப்பெட்டியை எடுத்தாள். “இந்தா!” என்று கிருஷ்ணனிடம் நீட்டினாள். “என்ன அது?” “வாங்கிப் பாரேன்” கிருஷ்ணன் பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தான். உள்ளே ரூபாய் நோட்டுகளும் பவுன்களும் இருந்தன. ‘கடைசியில், இவள் திருடிதானா?’ என்று கிருஷ்ணன் எண்ணினான். அந்த நினைப்பை அவனால் சகிக்கவே முடியவில்லை. அதிலும் ‘பிடாரி சொன்னதும் நிஜம். அவள் இவளை வீட்டைவிட்டுத் துரத்தியதும் நியாயம்’ என்று எண்ணியபோது அவனுடைய தலையை யாரோ பிளப்பது போலிருந்தது. “இதை எதற்காக என்னிடம் கொடுத்தாய்?” என்று கிருஷ்ணன் கோபமாய்க் கேட்டான். “சொத்தைச் சொத்துக்குரியவர்களிடம் கொடுத்து விடவேண்டுமென்று நீ அப்போதே சொல்லவில்லையா?” “ஆமாம்; என்னைக் கொண்டு போய்ப் பிடாரியிடம் கொடுக்கச் சொல்கிறாயா?” “நீ என்ன வேண்டுமானாலும் செய்; யாரிடம் வேண்டுமானாலும் கொடு. உன்னுடைய சொத்தை உன்னிடம் நான் சேர்ப்பித்து விட்டேன்,” என்றாள். கிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவோ புதிர் போடுவது போலிருந்தது. “என்ன உளறுகிறாய்?” என்று கேட்டான். “நான் ஒன்றும் உளறவில்லை. அதற்குள் ஒரு கடுதாசி இருக்கிறது; எடுத்து வாசித்துப் பார்!” என்றாள் பூங்கொடி. கிருஷ்ணன் ஆவலோடு கடுதாசை எடுத்து வாசித்தான். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது; "முத்துக் கோனான் மகன் பெருமாள் கோனான் சுயப் பிரக்ஞையுடன் மனப்பூர்வமாய் எழுதி வைப்பது என்னவென்றால் இந்தப் பெட்டியில் நானூற்றிருபது ரூபாய் பணமும், பன்னிரண்டு முழுப்பவுனும் இருக்கின்றன. இந்தப் பணம், பவுன் எல்லாம் என்னுடைய சுயார்ஜிதம். இந்தத் தொகை முழுவதையும் என்னுடைய கண்ணான மருமகள் பூங்கொடிக்குக் கலியாணப் பரிசத்துக்காக எழுதி வைக்கிறேன். அவளைக் கலியாணம் பண்ணிக் கொள்கிறவன் இது எல்லாவற்றையும் அடைய வேண்டியது. பணத்தை வீண் செலவு செய்யாமல் நிலம் வாங்குவதற்காவது வீடு கட்டிக் கொள்ளவாவது உபயோகிக்க வேண்டியது. "இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், பூங்கொடியை என்னுடைய பெண்சாதி கஷ்டப்படுத்தி ஒருவேளை உயிருக்கே அபாயம் செய்வாளென்று பயந்தும், இன்னும் பணத்துக்கு ஆசைப்பட்டு யாராவது உபயோகமற்றவன் அவளைக் கலியாணம் செய்து கொள்ள முயற்சிக்கலாமென்று நினைத்தும் பூங்கொடிக்குக் கலியாணம் ஆகும்வரை இந்த விஷயத்தை வெளிப்படுத்தாமல் இரகசியமாய் வைத்திருக்கவேணுமென்று சத்தியம் வாங்கியிருக்கிறேன். பெட்டியை எங்காவது பத்திரமாய் ஒளித்து வைத்திருக்கும்படி பூங்கொடியிடம் ஒப்புவித்திருக்கிறேன். “இந்தச் சொத்தை அடைகிறவன் என்னுடைய மருமகளுக்கு ஒருவித மனக்குறையுமின்றி எப்போதும் சந்தோஷமாய் வைத்திருக்க வேண்டியது.” மேற்படி கடிதத்தைப் படித்துவிட்டுச் சற்றுநேரம் யோசித்ததில், கிருஷ்ணனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. மாசி மகத்தன்று வீட்டில் ஒருவரும் இல்லாத சமயத்தில் பெருமாள் கோனார் பூங்கொடியிடம் அந்தப் பெட்டியைக் கொடுத்துப் பத்திரப்படுத்தும்படி சொல்லியிருக்க வேண்டும். மயிலைக் காளை கெட்டுப் போன அன்று, தான் காட்டில் அவளைச் சந்தித்தன் இரகசியம் அதுதான். பூங்கொடியும், அவளுடைய சீதனமும் தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்துக்கெல்லாம் மூலகாரணம் மயிலைக் காளை தான் என்பது கிருஷ்ணனுடைய நம்பிக்கை. யாராரோ வந்து நல்ல விலைக்கு அதை வாங்கிக் கொள்வதாகச் சொன்னார்கள். கிருஷ்ணன் அதை விற்க மறுத்து விட்டான். ஒரு சின்ன வண்டி வாங்கி அதில் மயிலைக் காளையை ஓட்டிப் பழக்கினான். தன்னையும் பூங்கொடியையும் தவிர அந்த வண்டியில் வேறு யாரும் உட்காருவதற்கு அவன் அனுமதிப்பதில்லை. மாலதியின் தந்தை 1 ரயில் சிநேகிதம் என்று வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ‘விமான சிநேகிதம்’ என்ற புதிய சொற்றொடரையும் தயவு செய்து அத்துடன் சேர்த்துக் கொள்ள வேணும். ஸ்ரீ கே.ஆர். ரங்கபாஷ்யத்துக்கும் எனக்கும் ஏற்கெனவே அறிமுகம் உண்டு என்றாலும்; விமானப் பிரயாணத்தின்போதுதான் எங்களுக்குச் சிநேகிதம் ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே அந்தச் சிநேகிதம் முற்றிக் கனிந்தது. ஒரு தடவை புது டில்லிக்கு விமான யாத்திரை சென்ற போது எனக்குப் பக்கத்தில் ரங்கபாஷ்யம் உட்கார்ந்திருந்தான். விமானத்தில் ஓரத்து ஆசனத்தில் நான் இருந்தேன். எனக்கு அருகில் விமானத்தின் சிறிய கண்ணாடி ஜன்னல் இருந்தது. ரங்கபாஷ்யம் எனக்கு அப்பால் உட்கார்ந்திருந்தபடியால் அடிக்கடி கழுத்தை வளைத்து முகத்தை நீட்டி அந்தச் சிறிய கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே பார்க்க முயன்றான். கீழே அதிகமாக ஒன்றும் அவனால் பார்க்க முடியவில்லை. இது ரங்கபாஷ்யத்தின் முக பாவத்திலிருந்து நன்கு தெரிந்தது. “நாம் வேணுமானால் இடம் மாறி உட்காந்து கொள்ளலாமே? இந்த ஜன்னல் பக்கத்துக்கு நீங்கள் வருகிறீர்களா?” என்றேன். அவன் காதில் அது தெளிவாக விழவில்லை போலும்! எனினும் என்னுடன் பேச்சுக் கொடுக்க அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு “அடுத்த இறங்குமிடம் நாகபுரிதானே?” என்று கேட்டான். நான் தலையை அசைத்தேன். “நாகபுரியாயிருக்க முடியாது. ஸெகந்தராபாத் ஒன்று நடுவில் இருக்கிறதே!” என்று அவனே மறுத்துக் கூறினான். “ஆமாம்; ஸெகந்தராபாத் ஒன்று இருந்து தொலைக்கிறது!” என்றேன் நான். “நீங்கள் டில்லிக்கா போகிறீர்கள்?” என்று ரங்கபாஷ்யம் கேட்டான். மீண்டும் தலையை அசைத்தேன். “நானும் டில்லிக்குத்தான் போகிறேன். ஆகாச விமானத்தில் இதுதான் உங்களுக்கு முதல் பிரயாணமோ?” இதென்னடா தொல்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்த வம்புக்காரனுடைய கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது? அடுத்த முறை விமானம் இறங்கி ஏறும்போது இடம்மாறி உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான். பஞ்சை அடைத்துக் கொண்டு இவனோடு யார் ஓயாமல் கத்திக் கொண்டிருப்பது? இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கையில், விமான உபசரணை ரமணி அங்கு வந்தாள். கையிலிருந்த பெப்பர்மிண்ட் பெட்டியை நீட்டி, “ஸ்வீட்ஸ் வேண்டுமா? காப்பி அல்லது டீ வேண்டுமா?” என்று கேட்டாள். ரங்கபாஷ்யம் அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தான். விளக்கெண்ணெய் குடித்தவன் முகம் போல் அவன் முகம் மாறியது. நான் அந்தப் பெண்மணி மீது இரக்கங் கொண்டு ஒரு பெப்பர்மிண்ட் எடுத்துக் கொண்டேன். “வாயில் ஏதேனும் குதப்பிக் கொண்டு இருப்பது நல்லது. விமான யாத்திரையின்போது தொண்டையில் எச்சில் விழுங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் காது வலி வந்துவிடும்” என்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். “இருக்கலாம்; ஆனால் இவளிடமிருந்து வாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. இந்த மாதிரி பெண் பிள்ளைகளை எதற்காகத்தான் ‘ஏர் ஹோஸ்ட்டஸ்’ வேலையில் அமர்த்துகிறார்களோ!” என்றான் ரங்கபாஷ்யம். ஸெகந்தராபாத்தில் இறங்கி நாங்கள் காப்பி சாப்பிடப் போன இடத்தில், அவன் மறுபடியும் ‘ஏர் ஹோஸ்ட்டஸ்’ பேச்சை எடுத்தான். “மேனாட்டாரை இதிலெல்லாம் நாம் காப்பி அடிக்க வேண்டுமா?” என்று கேட்டான். “அப்படிச் சொல்லக் கூடாது. ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலும் பெண் நர்சுகள் இருக்கிறார்களே ஏன்? சிகிச்சை, பணிவிடை, உபசரிப்பு, - இவற்றுக்கெல்லாம் மெல்லியலார் அதிகத் தகுதியுடையவர்கள். அதற்காகத்தான் இம்மாதிரி உபசரிப்பு வேலைகளுக்குப் பெண்களை நியமிக்கிறார்கள்!” என்று நான் சொன்னேன். “அதெல்லாம் இல்லை. புருஷர்களை நியமித்தால் என்ன குறைவாய்ப் போய்விடும்? இந்த பெப்பர்மிண்டைப் புருஷர்கள் கொடுக்க மாட்டர்களா? இந்த வேலைக்குப் பெண்களை நியமித்தால் பிரயாணிகள் அதிகமாக வருவார்கள் என்று உத்தேசம்?” என்று அழுத்தமாகச் சொன்னான் ரங்கபாஷ்யம். “சேச்சே! இது என்ன பேச்சு? நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது. ‘ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ வேண்டும்’ என்று நம் தலைவர்கள் எல்லாரும் சொல்லுகிறார்கள். நீ இவ்வளவு கர்நாடகமாகப் பேசுகிறாயே!” என்று சொன்னேன். “சரிநிகர் சமானத்திலும் ஒரு வரை முறை வேண்டும். ஆங்கிலோ - இந்தியப் பெண்கள் இம்மாதிரி வேலைகளுக்கு வரலாம். நம்முடைய ஹிந்து சமூகப் பெண்களுக்கு இதெல்லாம் லாயக்கில்லை” என்றான் ரங்கபாஷ்யம். மேலும் அவன், “ஏற்கெனவே விமான விபத்துக்கள் அதிகமாயிருக்கின்றன. இவர்கள் வேறு விபத்துக்களை உண்டாக்குகிறார்கள்!” என்றான். இந்தச் சம்பாஷணையைத் தொடர நான் விரும்பவில்லை. ஆனால் ஏதோ ஒருவிதமான ஆத்திரம் அவன் மனத்தில் இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. அது என்னவென்று அறிந்து கொள்ளுவதில் இலேசாக ஆவலும் உண்டாயிற்று. நாகபுரியில் காலை உணவுக்காக விமானம் இறங்கியபோது அதைபற்றிச் சிறிது விவரமாக நானே அறிந்து கொள்ளவும் முடிந்தது. 2 நாகபுரி விமான நிலையத்தில் நாங்கள் உட்கார்ந்து விமானக் கம்பெனியார் அளித்த காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ரங்கபாஷ்யம் உட்கார்ந்த மேஜையில் உட்காராமல் வேண்டுமென்றே வேறொரு மேஜையைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தேன். ஆனால் அடிக்கடி என்னுடைய கவனம் மட்டும் அவன் மீது சென்று கொண்டிருந்தது. அதுவரை சோர்வும் அலுப்பும் குடிகொண்டிருந்த ரங்கபாஷ்யத்தின் முகத்தில் திடீரென்று ஒரு மலர்ச்சியும் கிளர்ச்சியும் ஏற்படக் கண்டேன். வேறொரு விமான ரமணி அச்சமயம் நிலையத்து அறைக்குள் வந்தாள். அவள் தன்னுடன் வந்த விமான ஓட்டிகளுடன் ஒரு மேஜையில் அமர்ந்து உணவு அருந்தத் தொடங்கினாள். அவளுடைய வருகையைப் பார்த்தவுடனே தான் ரங்கபாஷ்யத்தின் முகம் மலர்ந்தது. புதிதாக வந்த விமான ரமணி கதாநாயகிகளின் இனத்தைச் சேர்ந்தவள். கவிகள் பூரண சந்திரனுக்கு ஒப்பிடுகிறார்களே அப்படிப்பட்ட வட்டவடிவமான பிரகாசமான முகம்; பவளமல்லிப் பூவின் நிறம்; கரிய பெரிய கண்கள்! அந்தக் கண்களின் இமைகள் அவ்வப் போது சடசடவென்று பட்டுப் பூச்சியின் இறகுகளைப் போல் மூடி மூடித் திறந்தன. அவளுடைய கண்களின் கருவிழிகள் அங்குமிங்கும் குறுகுறுவென்று சலனம் பயின்று கொண்டிருந்தன. அவள் கூந்தலைக் கழுத்தளவு தொங்கும்படி விட்டுத் தூக்கிச் செருகியிருந்தது அவளுடைய முகத்துக்கு ஒரு தனிச் சோபையைக் கொடுத்தது. அந்தப் பெண் அறைக்குள் வந்தபிறகு ரங்கபாஷ்யத்தின் கவனம் முழுவதும் அவளிடம் சென்றிருந்ததைக் கண்டேன். மற்றவர்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்ற கூச்சம் சிறிதுகூட இல்லாமல் அவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த விமான ரமணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தற்செயலாக ரங்கபாஷ்யம் இருந்த மேஜைப் பக்கம் அவள் பார்வை சென்றது. ரங்கபாஷ்யத்தைப் பார்த்ததும், அவளுடைய முகத்தில் இளம் புன்னகை அரும்பியது. ரங்கபாஷ்யமும் திரும்பிப் புன்னகை புரிந்தான். அவனுடைய புன்னகையில் அசடு வழிந்தது. எனினும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர்கள் ஏற்கனவே பழக்கமானவர்கள் என்று ஊகித்துக் கொண்டேன். விமான ரமணிகளால் ஏற்படும் விபத்துகளைப் பற்றி ரங்கபாஷ்யம் சொல்ல ஆரம்பித்ததில் ஏதோ ஒரு ரஸமான சம்பவம் இருந்திருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்! விமானங்கள் புறப்படும் நேரம் ஆகிவிட்டதென்று ஒலிபெருக்கிகளின் ராட்சதக் குரல் எச்சரித்தது. புதிதாக வந்த விமான ரமணி எழுந்தாள்; ரங்கபாஷ்யம் அதைப் பார்த்துவிட்டு விரைந்து நடந்துபோய் அவள் பக்கத்தை அடைந்தான். “நீங்கள் இன்று டில்லி விமானத்தில் வரவில்லையா?” என்று கேட்டான். “இல்லை! நான் பம்பாய்க்குப் போகிறேன். விமானத்தில் ஏறினால் இன்னமும் உங்களுக்குத் தலை சுற்றி மயக்கம் வருகிறதா?” என்று கேட்டாள் அந்த ரமணி. ரங்கபாஷ்யம் லேசாகச் சிரித்துவிட்டு, “உங்களுக்கு அது ஞாபகம் இருக்கிறதே! மிக்க சந்தோஷம்!” என்று சொன்னான். அவர்கள் நடந்து கொண்டே பேசியபடியால் அப்புறம் பேசிய வார்த்தைகள் என் காதில் சரியாக விழவில்லை. அந்தப் பெண் ரங்கபாஷ்யத்திடம் விடைபெற்றுக் கொண்டு பம்பாய் விமானத்தை நோக்கிச் சென்றாள். ரங்கபாஷ்யம் அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தான். நான் அவன் அருகில் சென்று, “நம்முடைய விமானமும் புறப்படப் போகிறது” என்றேன். “நாமும் போக வேண்டியதுதான்!” என்றான் ரங்கபாஷ்யம். “ஒருவேளை நீர் அந்த விமான மேனகையுடன் பம்பாய்க்கே போய்விடுவீரோ என்று நினைத்தேன்” என்று நான் அவனை எகத்தாளம் செய்தேன். ரங்கபாஷ்யம் அதற்காகக் கோபம் அடையவில்லை. “போவதற்கு எனக்குச் சம்மதந்தான். ஆனால் டிக்கட்டை வேறு வழியில் மாற்றிக் கொடுக்க மாட்டார்களே!” என்றான். விமானத்தில் போய் ஏறிக் கொண்டோ ம். ரங்கபாஷ்யம் ஏதேதோ மனோராஜ்யங்களிலும் பகற் கனவுகளிலும் ஆழ்ந்திருந்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. எங்கள் விமானத்தின் ‘ஏர்ஹோஸ்ட்டஸ்’ கொண்டு வந்து நீட்டிய பெப்பர்மிண்டைக் கூட அருவருப்பில்லாமல் எடுத்துக் கொண்டான். குவாலியர் விமானக் கூடத்தில் விமானம் இறங்கியதும் வழக்கம் போல் சிற்றுண்டி சாப்பிடும் இடத்துக்கு சென்றோம். அவனுக்குப் பக்கத்தில் நானாகவே போய் உட்கார்ந்து கொண்டேன். மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுத்தேன். உண்மை வாழ்க்கையிலிருந்து ஏதேனும் ஒரு கதை புனைவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், அதை அலட்சியமாக விட்டுவிடக் கூடாதல்லவா? “அந்தப் பெண்ணை உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா?” என்று கேட்டாள். “நீங்கள் ஒன்றும் தப்பாக நினைத்துக் கொள்வதில்லையென்றால் சொல்கிறேன். எனக்கும் யாரிடமாவது சொல்லி யோசனை கேட்க வேண்டுமெனத் தோன்றுகிறது” என்றான் ரங்கபாஷ்யம். “ஒன்றும் தப்பான காரியம் இல்லாவிட்டால், அதைப் பற்றி நானும் தப்பாக நினைத்துக் கொள்ளவில்லை. பிறத்தியாருக்கு யோசனை சொல்ல நான் எப்போதுமே தயார்!” என்றேன் நான். மெள்ள மெள்ள அவன் விஷயத்தை சொன்னான். அப்படியொன்றும் பிரமாத விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவனோ உலகத்தில் இதை விட முக்கியமானது வேறு என்ன இருக்க முடியும் என்று நினைத்ததாகத் தோன்றியது. 3 ரங்கபாஷ்யம் சென்ற மாதத்தில் ஒரு தடவை டில்லிக்கு வந்துவிட்டுத் திரும்பியபோது, டில்லி விமான நிலையத்தில் சென்னைக்குப் புறப்படும் விமானத்தில் ஏறப்போனானாம். சிறிய ஏணிபோன்ற படிகட்டுகளின் மூலமாகவே விமானத்தில் ஏற வேண்டும். ரங்கபாஷ்யம் அந்தப் படிகட்டுகளில் ஏறி விமானத்தில் ஒரு காலை வைத்தபோது ஊன்றி வையாமல் தடுமாறி விழப் பார்த்தான். அப்போது அங்கே நின்ற விமான ரமணி சட்டென்று அவனுடைய கரத்தைப் பிடித்து நிதானப் படுத்தி விமானத்தில் ஏற்றி விட்டாள். சம்பிரதாயமாக அவளுக்குத் “தாங்க்ஸ்” சொன்னான். “விழுந்துவிடப் பார்த்தீர்களே? தலை கிறுகிறுத்ததா?” என்று அந்தப் பெண் தமிழில் கேட்டதும், இவனுக்கு ஒரே வியப்பும் மகிழ்ச்சியுமாகப் போய்விட்டது. ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் விமானத்திற்குள் போய் இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டான். மறுபடி அந்தப் பெண் கையில் பெப்பர்மிண்ட் பெட்டியுடன் வந்தபோது, “அப்போது ஒரு கேள்வி கேட்டீர்களே, அதற்கு நான் பதில் சொல்லட்டுமா!” என்றான் ரங்கபாஷ்யம். “என்ன கேள்வி கேட்டேன்?” என்றாள் அந்தப் பெண். “தலை கிறுகிறுத்ததா என்று கேட்டீர்கள். இந்த உலகத்து மனுஷனுக்கு முன்னால் திடீரென்று தேவலோகத்து மேனகை வந்து நின்றால், தலை கிறுகிறுத்து மயக்கம் வராமல் என்ன செய்யும்?” என்றான். அந்த மேனகை புன்னகை செய்துவிட்டு அப்பாற் போய் விட்டாள். ரங்கபாஷ்யமோ தனக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான். அடுத்த இடத்தில் விமானம் இறங்கியபோது அந்த விமான ரமணி இவனைத் தேடி வந்து, “என்னிடம் பேசியது போல் வேறு யாரிடமாவது பேசிவிடாதீர்கள். கன்னத்தில் அறை விழுந்துவிடும்!” என்றாள். “அதைப் பற்றிப் பயமேயில்லை. வேறு யாரிடம் அப்படி நான் பேச முடியும்?” என்றான் ரங்கபாஷ்யம். இவ்விதம் அவர்களுக்குள் ஏற்பட்ட பேச்சு வார்த்தைப் பழக்கம், பத்திரிக்கைத் தொடர் கதையைப் போல் சென்னைப் போகும் வரையில் நீடித்திருந்தது. சென்னையில் பிரிந்து போக வேண்டிய சமயம் வந்தபோது, அந்த விமான மேனகையின் விலாசத்தை தெரிந்து கொள்ள ரங்கபாஷ்யம் ஆனமட்டும் முயன்றான். அது முடியவில்லை. “கடவுளுடைய சித்தம் இருந்தால் மறுபடியும் எப்போதாவது நாம் சந்திப்போம்” என்றாள் விமான மேனகை. “அப்படிக் கடவுளுக்கே தான் விட்டுவிடப் போவதில்லை, நானும் கொஞ்சம் முயற்சி செய்வதாகவே உத்தேசம்” என்றான் ரங்கபாஷ்யம். விமானப் பிரயாணத்தில் இது ஒரு விசித்திரமான அனுபவம் என்று மட்டுமே முதலில் ரங்கபாஷ்யம் நினைத்தான். ஆனால் அந்த விசித்திர அனுபவம் அவனுடைய உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்துவிட்டது என்று போகப் போகத் தெரிந்தது. அந்த அனுபவத்தை அவன் மறக்க முடியவில்லை. அந்தப் பெண்ணையும் மறக்க முடியவில்லை. கிட்டதட்டப் பைத்தியம் மாதிரியே ஆகிவிட்டது. ஆகையினாலேயே மறுபடியும் டில்லிக்குப் போகும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் ஏறிய விமானத்தில் அந்த மேனகையைக் காணாதபடியால் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தான். நாகபுரியில் அவளைப் பார்த்த பிறகு தான் ஒருவாறு மறுபடியும் உற்சாகம் ஏற்பட்டது. 4 புது டில்லியில் நான் தங்குமிடத்தை ரங்கபாஷ்யம் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். நாலு நாளைக்கு பிறகு ஒரு தினம் என்னைப் பார்க்க வந்தான். வரும்போதே குதூகலத் தாண்டவம் ஆடிக் கொண்டு வந்தான். “ரங்கபாஷ்யம், என்ன இவ்வளவு குதூகலம்!” என்று கேட்டேன். “அவளை நான் மறுபடியும் பார்த்தேன்” என்றான். “அவளை என்றால் யாரை?” “உலகத்திலேயே எனக்கு இப்போது ஒரு ‘அவள்’ தான் வேறு யாராயிருக்க முடியும்?” “அந்த விமான மேனகையைச் சொல்லுகிறாயா?” “ஆமாம்; ஆனால் அவள் பெயர் மேனகை அல்ல மாலதி!” என்றான். “அவளை எங்கே பார்த்தாய்?” “நான் தங்கியுள்ள ஹோட்டலுக்கே அவளும் நேற்று வந்திருந்தால். ஒரு முக்கியமான செய்தி சொன்னாள்.” “அது என்ன செய்தி? தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை என்று சொன்னாளா?” என்றேன் நான். ரங்கபாஷ்யம் சிறிது நேரம் திறந்த வாய் திறந்தபடி ஒன்றும் தோன்றாமல் பிரமித்துப் போய் நின்றான். “ஏன் இப்படி விழிக்கிறாய்? மூர்ச்சை போட்டு விழுந்து வைக்காதே! இங்கே தரையில் ரத்னக் கம்பளம் கூடக் கிடையாது!” என்றேன். “அந்தக் கேள்வியை நான் அவளிடம் கேட்கவில்லை!” என்றான் ரங்கபாஷ்யம். “அதைக் கேட்காமல் மற்றபடி வேறு என்னத்தைக் கேட்டு என்ன பயன்? சரி, போகட்டும். வேறு என்ன அப்படி முக்கியமான செய்தி?” “மாலதி ‘ஏர் ஹோஸ்டஸ்’ வேலையை விட்டுவிடப் போகிறாளாம்!” “அடாடா! எதனால் அப்படிப்பட்ட விபரீதமான காரியத்தை அவள் செய்யப் போகிறாள்?” “என்னைப் போல் இன்னும் அநேகர் அவளிடம் ‘உன்னைக் கண்டதும் தலை கிறுகிறுத்து மயக்கம் வருகிறது!’ என்கிறார்களாம். ஏற்கெனவே விமான விபத்துக்கள் அதிகமாயிருக்கும் நிலையில், தன்னால் வேறு விபத்துக்கள் நேரிட வேண்டாம் என்று, வேலையை ராஜினாமாச் செய்யப் போகிறாளாம். வேலையை விட்டுவிட்டுச் சென்னைக்கே வந்துவிடப் போகிறாளாம்!” என்றான். “சென்னைக்கு ஏதோ துரதிர்ஷ்டந்தான்!” என்று சொன்னேன். “சென்னை நகரம் மூவேழு இருபத்தொரு தலை முறையில் செய்த தவத்தின் பயன் என்று சொல்லுங்கள்!” “அந்த மாஜி விமான மேனகை சென்னை வீதிகளில் போகும் போதெல்லாம், யாராவது தலை கிறுகிறுத்து விழுந்து கொண்டிருப்பார்களே? அதனால் சென்னை நகரின் குழி விழுந்த சாலைகள் இன்னும் மேடு பள்ளமாகி விடுமே என்றுதான் கவலைப்படுகிறேன்!” “ஆமாம். சென்னை நகரில் சாலைகள் எக்கேடு கெட்டுப் போனால் உங்களுக்கும் எனக்கும் என்ன? இவள் இந்தத் தரித்திரம் பிடித்த விமான வேலையை விட்டு விடுகிறாள் என்பது எனக்கு உற்சாகமாயிருக்கிறது. ஆண் பிள்ளைகளுடைய சகவாசமே அவளுக்குப் பிடிக்கவில்லையாம். புருஷர்களுடைய மத்தியில் இருப்பதும், வேலை செய்வதும் அருவருப்பாயிருக்கிறதாம். ஆகையால் ஒரு பெண்கள் கலாசாலையில் ஆசிரியை ஆகிறதென்று தீர்மானித்து விட்டாளாம். அந்த வேலைக்கு மனுப் போட்டிருக்கிறாளாம். ஆசிரியை வேலை கிடைத்தவுடனே சென்னைக்கு வந்துவிடப் போகிறாளாம்!… இப்போது என்ன சொல்லுகிறீர்கள்” என்று கேட்டான். “என்ன சொல்லுகிறது? அந்தப் பெண்கள் கலாசாலையைக் கடவுள் காப்பாற்றட்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றேன். “அந்தப் பெண்கள் கலாசாலை செய்த பூஜா பலன் என்று சொல்லுங்கள்.” இவ்வாறு எங்கள் சம்பாஷணை அன்றைக்கு முடிந்தது. டில்லியில் அப்புறமும் இரண்டொரு தடவை ரங்கபாஷ்யம் என்னைச் சந்தித்தான். உற்சாக கடலில் முழுகியிருந்தான். மாலதியை மறுபடியும் பார்த்து அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதையும் தெரிந்து கொண்டு விட்டானாம்! “உன் தலையில் அப்படி விதி எழுதியிருக்கும் போது அவளுக்கு வேறு கலியாணம் ஆகியிருக்க முடியுமா?” என்றேன் நான். ரங்கபாஷ்யத்திடம் அப்படி விளையாட்டாகப் பேசினேனே தவிர, அவனிடமும் அந்தப் பெண்ணிடமும் எனக்கு ஒருவித அநுதாபம் உண்டாகியிருந்தது. “உண்மையான காதலர்களை உலகம் முழுவதும் காதலிக்கிறது!” என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு. சாவித்திரி - சத்தியவான், ரோமியோ - ஜுலியத், லைலா - மஜ்னூன் போன்ற அமர காதலர்கள் இன்றைக்கும் உலக மக்களின் காதலுக்குப் பாத்திரமாகியிருக்கிறார்கள். அல்லவா? இரண்டு பேர் ஒருவரிடம் ஒருவர் அன்பாயிருந்தால், அதைப் பார்ப்பதிலேயே நமக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ரங்கபாஷ்யத்தையும் அந்த விமான ரமணியையும் பற்றி நினைத்தபோது எனக்கு அப்படித்தான் மகிழ்ச்சியாயிருந்தது. “உண்மையான காதலின் பாதை சரளமாக இருப்பதில்லை” என்று ஆங்கிலத்தில் இன்னொரு பழமொழியும் உண்டு. அது காதலர்களின் விஷயத்தில் உண்மையாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை ஏனோ என் மனதில் உதித்தது. 5 இப்போதெல்லாம் நாடெங்கும் மாதர் சங்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாதர் சங்கத்தை என் நண்பர் ஒருவர் ‘மாதர் சங்கடம்’ என்று குறிப்பிடுவது வழக்கம். பெண்மணிகள் சங்கம் ஸ்தாபிப்பதும் சமூகத் தொண்டுகள் புரிவதும் சில சமயம் ஆண்பிள்ளைகளுக்குச் சங்கடத்தை உண்டாக்குவது உண்மைதான். ஆனால் ஆண் பிள்ளைகள் நடத்தும் சங்கங்களினால் பெண் தெய்வங்களுக்கும் சில சமயம் சங்கடம் உண்டாகத் தான் செய்கிறது. ஆகவே, சங்கங்களினால் ஏற்படும் பரஸ்பர சங்கடத்தைத் தவிர்க்க முடியாதுதான். ஒருநாள், மாதர் சமூக ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள் என்னைப் பார்ப்பதற்கு வந்து சீட்டும் அனுப்பினார்கள். ஏதோ ஒரு சமூகத் தொண்டுக்காக உதவி நாடகம் போடுகிறார்கள் என்றும், அதற்கு டிக்கெட் விற்பதற்கு வந்திருக்கிறார்கள் என்றும் அறிந்தேன். இந்த மாதிரி டிக்கட் விற்பதற்கோ சந்தா அல்லது நன்கொடை வசூலிப்பதற்கோ யார் வந்தாலும் நமக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆயினும் பெண்மணிகள் இப்படிப்பட்ட நல்ல காரியங்களுக்கு வரும்போது கண்டிப்பாக எப்படி நிராகரிக்க முடியும்? ஏதோ ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டு போகச் சொல்லலாம் என்று எண்ணி அவர்களை வரும்படி சொன்னேன். வந்த இரண்டு பேரில் ஒரு பெண்மணியைப் பார்த்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என் விமான சிநேகிதன் ரங்கபாஷ்யத்தின் உள்ளத்தைக் கவர்ந்த விமான ரமணி தான் அவள். “உங்களை நான் எங்கேயோ பார்த்த ஞாபகமாயிருக்கிறதே?” என்று மாலதியே முதலில் கேட்டுவிட்டாள். “ஆமாம் விமானப் பிரயாணத்தின் போது ஒரு தடவை நாகபுரியில் பார்த்தேன்” என்றேன். ஒன்றுக்கு இரண்டாக டிக்கட் வாங்கிக் கொண்டு, மெதுவாக ரங்கபாஷ்யத்தின் பேச்சை எடுத்தேன். “நீங்கள் விமான வேலையை விட்டு விடப் போவதாக ரங்கபாஷ்யம் அப்போதே சொன்னார்” என்றேன். ஒரு கண நேரம் அவள் ஏதோ யோசித்துவிட்டு, என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். “அவரும் இந்த நாடகத்துக்கு வருவார். டிக்கட் வாங்கிக் கொண்டிருக்கிறார்!” என்றார். இன்னும் கொஞ்சம் பேச்சுக் கொடுத்து, எந்த உதவி நாடகத்துக்காக மாலதி நன்கொடை டிக்கட் விற்கிறாளோ, அதில் அவளே வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கப் போவதாக அறிந்தேன். நான் எதிர்பார்த்தபடியே சற்று நேரத்திற்கெல்லாம் ரங்கபாஷ்யத்திடமிருந்து டெலிபோன் வந்தது. “சாயங்காலம் ஒரு அமெச்சூர் உதவி நாடகத்துக்கு டிக்கட் வாங்கியிருக்கிறேன். உங்களுக்கும் சேர்த்து டிக்கட் வாங்கியிருக்கிறேன். அவசியம் வர வேண்டும்” என்று குதூகலமான குரலில் கூறினான். நாடகத்துக்கு இருவரும் போயிருந்தோம். தலைக்கு இரண்டு டிக்கட் எடுத்துக் கொண்டு போனோம்! அமெச்சூர்கள் போட்ட நாடகம் என்ற முறையில் பார்க்கும்போது அவ்வளவு மோசமாக இல்லை. நன்றாயிருந்தது என்றே சொல்லலாம். ஆனால் ரங்கபாஷ்யத்துக்கு என்னவோ அவ்வளவாக அந்த நாடகம் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. “இது என்ன கதை? போயும் போயும் நாடகம் போட இத்தகைய கதை தானா கிடைத்தது? உலகத்தில் வேறு நல்ல விஷயமா இல்லை?” என்று முனகிக் கொண்டே இருந்தான். என்னுடைய அபிப்பிராயத்தில் அப்படி ஒன்றும் மோசமான கதை இல்லை. ஏழ்மையினால் குற்றம் செய்து சிறைப்பட்ட ஒரு கைதியின் கதையை வைத்து நாடகம் எழுதியிருந்தது. சிறையில் அக்கைதி படும் கஷ்டங்கள், அவன் தப்பி ஓடி வந்த பிறகு அடையும் துன்பங்கள் - இவைதான் முக்கியமான நாடக அம்சங்கள். எதற்காக இந்த விஷயம் ரங்கபாஷ்யத்துக்கு அவ்வளவு பிடிக்காமலிருக்க வேண்டும் என்று எனக்கு அப்போது விளங்கவில்லை. பின்னொரு காலத்தில் அதன் காரணம் தெரிந்தது. நாடகம் முடிந்ததும் “போகலாமா” என்று அவனிடம் கேட்டேன். “மாலதியைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லி விட்டுத்தான் போக வேண்டும். கதை நன்றாயில்லாவிட்டாலும் அவள் நடிப்பு என்னமோ அபாரமாகத் தானே இருந்தது?” என்றான் ரங்கபாஷ்யம். அப்படியே சபை கலையும் வரையில் காத்திருந்து அரங்க மேடைக்குச் சென்று மாலதியைப் பார்த்தோம். நாடகத்தைப் பற்றி என்னுடைய சந்தோஷத்தை நான் தெரிவித்த பிறகு, ரங்கபாஷ்யமும் தன் பாராட்டுதலைத் தெரிவித்தான். “உங்கள் நடிப்பு மிக நன்றாயிருந்தது. ஆனால் நாடகக் கதை சுத்த அபத்தம். அடுத்த தடவை வேறு ஏதாவது நல்ல விஷயத்தைப் பற்றிக் கதை எழுதி நாடகம் போடுங்கள்!” என்று சொன்னா. அச்சமயத்தில் எங்கள் இருவரையும் தவிர மூன்றாவது மனிதன் ஒருவன் அங்கே நின்று கொண்டிருந்தான். மாலதி அவனைச் சுட்டிக் காட்டி, “தயவு செய்து இவரிடம் சொல்லுங்கள். இவர் எழுதிய நாடகந்தான் இது. நான் கூட முதலிலேயே நாடக விஷயம் நன்றாயில்லையென்று தான் சொன்னேன்” என்றாள். அந்த மனிதன், “சபையில் எல்லாருக்கும் கதை ரொம்பப் பிடித்திருந்தது. பிரமாதமாகச் சந்தோஷப்பட்டு அடிக்கடி ‘அப்லாஸ்’ கொடுத்தார்கள்! தலைமை வகித்தவர் கூட நாடக விஷயத்தைச் சிலாகித்தார். இவர் ஏதோ அலாதிப் பிறவி போலிருக்கிறது. இவருக்கு மட்டும் பிடிக்கவில்லை!” என்றான். அச்சமயம் ரங்கபாஷ்யத்தின் முகம் போன போக்கு ஒரு கணம் என்னைத் திடுக்கிடச் செய்து விட்டது. மறுநிமிஷம் சமாளித்துக் கொண்டு, “சரி நாம் போகலாம்” என்றான். மாலதியிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம். 6 அப்புறம் சில காலம் ரங்கபாஷ்யம் என்னை சந்தித்துப் பேச அடிக்கடி வந்து கொண்டிருந்தான். தரையில் காலை வைத்து அவன் நடந்ததாகவே தோன்றவில்லை. ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான். இந்த நாட்களில் அவனுக்கு எதைப் பார்த்தாலும் அழகாயிருந்தது; இன்பமயமாயிருந்தது. பட்டுப் பூச்சி பறப்பதைப் பார்த்தால், “ஸார்! ஸார்! அந்தப் பட்டுப் பூச்சியைப் பாருங்கள்! அது வர்ணச் சிறகை அடித்துக் கொண்டு பறப்பது என்ன அழகாயிருக்கிறது!” என்பான். ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்து “அடடா ஆகாசத்தின் ஸ்வச்சமான நீல நிறந்தான் எத்தனை அழகு” என்பான். அதே வானத்தில் மேகங்கள் படர்ந்திருந்தால் “அடடா! வெள்ளைப் பஞ்சுத் திறனைப் போல் இந்த மேகங்கள் தான் என்ன அழகாயிருக்கின்றன! அவற்றில் சூரியகாந்தி பட்டுவிட்டால் ஒரே பொன் மயமாகி விடுகிறதைப் பார்த்தீர்களா!” என்பான். “ஆகா! இந்தத் தென்றல் காற்றுக்கு இவ்வளவு இனிமையும் சுகமும் எப்படித்தான் வந்ததோ? ‘மந்த மாருதம்’ என்று தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள்?” என்பான். ஒவ்வொரு சமயம் மனதை இன்னும் கொஞ்சம் திறந்து விட்டுப் பேசுவான். “ஸார்! இந்த அதிசயத்தைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மாலதியை நான் முதலில் சந்தித்தது சில மாதங்களுக்கு முன்னாலே தான் என்று என்னால் நம்பவே முடியவில்லை. எத்தனையோ வருடங்களாக எத்தனையோ யுகயுகமாகப் பழகியது போலிருக்கிறது” என்று ஒரு தடவை சொன்னான். “அதெல்லாம் சரிதானப்பா! கலியாணச் சாப்பாடு எப்போது போடப் போகிறாய், சொல்லு! தேதி நிச்சயமாகி விட்டதா?” என்று கேட்டேன். “தேதி நிச்சயமானால் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? முதலில் உங்களுக்குத்தான் சொல்வேன், ஸார்! எனக்கும் உற்றார் உறவினர் அதிகம் பேர் இல்லை. நீங்கள் தான் கிட்ட இருந்து நடத்தி வைக்க வேண்டும்” என்றான் ரங்கபாஷ்யம். இப்படிச் சொல்லிவிட்டுப் போன மறுநாளே அவன் உற்சாகம் அடியோடு குன்றி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தான். அவனைப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன். “என்னப்பா சமாசாரம்? ஒரு மாதிரியாக இருக்கிறாயே?” என்று கேட்டேன். “அன்றைக்கு அரங்க மேடையில் பார்த்தோமே, ஸார்! அந்தத் தடியன் ஓயாமல் மாலதியைச் சுற்றிக் கொண்டேயிருக்கிறான்! எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை!” “உனக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? அவள் கன்னிப்பெண். அதோடு படித்த பெண்; சர்வ சுதந்திரமாக வாழ்க்கை நடத்தி வந்தவள். அவள் பேரில் உன்னுடைய பாத்தியதையை நீ ஸ்தாபித்துக் கொள்வதுதானே? உன்னைக் கலியாணம் செய்து கொள்ள அவளுக்கு இஷ்டமா, இல்லையா என்று கறாராகக் கேட்டு விடு! மூடி மூடி வைப்பதில் என்ன பிரயோஜனம்? ‘பேசப்போகிறாயோ, சாகப் போகிறாயோ’ என்ற பழமொழியைக் கேட்டதில்லை? வாயுள்ள பிள்ளைதான் இந்த காலத்தில் பிழைக்க முடியும்!” என்றேன். “உண்மைதான்; உண்டு, இல்லை என்று மாலதியைக் கேட்டுவிடத்தான் போகிறேன்!” என்றான் ரங்கபாஷ்யம். ஆனால் அவ்விதம் கேட்பதற்கு இலேசில் அவனுக்குத் துணிச்சல் வரவில்லை. தள்ளிப் போட்டுக் கொண்டே காலங் கடத்தினான். ஆனால் அதே சமயத்தில் வேதனைப்பட்டுத் துடித்துக் கொண்டுமிருந்தான். அவன் மீது கோபித்துக் கொள்வதா, அநுதாபப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் ரங்கபாஷ்யம் பீதிகரமான முகத்துடன் என்னுடைய அறைக்குத் திடீரென்று வந்து சேர்ந்தான். “ஸார்! எனக்கு ஏதோ ஒரு பெரிய அபாயம் வரப் போகிறது. நீங்கள் தான் உதவி செய்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும்” என்றான். அவனுக்கு ஏதாவது மூளைக்கோளாறு நேர்ந்து விட்டதோ என்று எனக்குச் சந்தேகமாகி விட்டது. அவன் முகம் அப்படிப் பேயறைந்தவன் முகம் போலிருந்தது. பேச்சில் அவ்வளவு பதட்டமும் பயங்கரமும் தொனித்தன. சற்று ஆறுதலாகவே பேசி, “என்ன விஷயம் என்று சொல்லு. என்னால் முடிந்த உதவியை உனக்கு அவசியம் செய்கிறேன்!” என்றேன். “யாரோ ஒருவன் அடிக்கடி என்னைப் பின் தொடர்ந்து வருகிறான். என்னைக் கொலை செய்ய வருகிறானோ, வேறு என்ன நோக்கத்துடன் வருகிறானோ, தெரியவில்லை. நான் இருக்கும் அறை வாசலில் வந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டு நிற்கிறான். யார் என்று பார்க்க அருகில் சென்றால் மறைந்து விடுகிறான். என்னுடைய அறைக்குப் போகவே பயமாயிருக்கிறது. உங்களுடனேயே சில நாள் நான் இருந்து விடட்டுமா?” என்று கேட்டான். “பேஷாக இரு, அப்பனே! ஆனால் உன்னுடைய பயம் வீண் பயமாகவும் இருக்கலாம் அல்லவா? யாரோ உன்னைப் பின் தொடர்வதாக நீ நினைப்பது வெறும் பிரமையாக இருக்கலாம் அல்லவா? இந்த மாதிரி பிரமை சில சமயம் நல்ல அறிவாளிகளுக்கும் ஏற்படுவதுண்டு. சமீபத்தில் ஒரு பெரியவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவர் ஆராய்ச்சியில் சிறந்த அறிஞர் என்று பிரசித்தி பெற்றவர். ஆனால் உலகமெல்லாம் தம் பெயரைக் கெடுப்பதற்குச் சதியாலோசனை செய்வதாக அவருக்கு ஒரு பிரமை. இரண்டு பேர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டால், உடனே, ‘பார்த்தாயா? அவர்கள் என்னைப் பற்றித் தான் ஏதோ அவதூறு பேசுகிறார்கள்! அவர்கள் பேரில் வழக்குத் தொடர வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். அம்மாதிரி நீயும் ஆகிவிடக்கூடாது…” இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ரங்கபாஷ்யம், என் கையைப் பிடித்து இழுத்துச் சென்று, அறையின் பலகணி வழியாக வெளியே பார்க்கப் பண்ணினான். அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் வீதி விளக்கின் வெளிச்சம் விழாத ஒரு கம்பத்தின் மறைவில் யாரோ ஒரு ஆள் நிற்பது தெரிந்தது. “யாரோ ஒரு மனிதன் சந்தேகாஸ்பதமாகத்தான் மறைந்து நிற்கிறான். அதனால் என்ன? காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக இருக்கலாம் அல்லவா?” என்றேன். சில நாளைக்குப் பிறகு மாலதி நடித்த நாடகம் எழுதிய தினகரனை நான் சந்திக்க நேர்ந்தது. அவன் என்னோடு வலியப் பேச்சுக் கொடுத்தான். “உங்களோடு ஒருவர் நாடகத்துக்கு வந்திருந்தாரே அவர் பெயர் என்ன?” என்று கேட்டான். “ரங்கபாஷ்யம்” என்று சொன்னேன். “அது அவருடைய உண்மைப் பெயர் அல்ல!” என்று சொல்லி என்னைத் திடுக்கிடச் செய்தான். “எதனால் சொல்கிறீர்?” என்றேன். “உங்களுக்கு எத்தனை நாளாக அவரைத் தெரியும்?” “சுமார் ஒரு வருஷ காலமாகத் தெரியும்.” “அப்படித்தான் இருக்குமென்று நானும் நினைத்தேன். இதோ இந்த குரூப் போட்டோ வில் உள்ள இந்த படத்தைப் படத்தைப் பாருங்கள். இதன் கீழே எழுதியிருக்கும் பெயரையும் படித்துப் பாருங்கள்” என்றான் தினகரன். அவன் சுட்டிக் காட்டிய உருவம் கொஞ்சம் ரங்கபாஷ்யத்தின் சாயலாக இருந்தது. கீழே கே.ஆர். ராமானுஜம் என்ற பெயரும் போட்டிருந்தது. ஆனால் ஒரு குரூப் போட்டோ வில் உள்ள சிறிய மங்கலான உருவத்தைக் கொண்டு நிச்சயமாக என்ன முடிவு செய்துவிட முடியும்? “இதிலிருந்து எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அப்படியேயிருந்தாலும் உங்களுக்கும் எனக்கும் அதைப்பற்றி என்ன கவலை? பெயரை மாற்றிவைத்துக் கொள்ள ஒருவர் இஷ்டப்பட்டால், அதை நாம் எப்படி தடுக்க முடியும்?” என்று கேட்டேன். “அதற்காகச் சொல்லவில்லை, ஸார்! ஆள் மாறாட்டம் செய்து ஒரு அபலைப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திக் கொள்வது என்றால், இது மிகவும் மோசமான காரியம் இல்லையா? அப்படிப்பட்ட ஈனச் செயலைத் தடுப்பது நம்முடைய கடமை இல்லையா?” என்றான். “எனக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன. இப்போது இதை ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை” என்று சொல்லிப் பேச்சை வெட்டினேன். ஆனால் என் மனம் ஓரளவு நிம்மதியை இழந்து விட்டது. 7 இன்னொரு நாள் ரங்கபாஷ்யம் வந்தான். முகம் அடைந்திருந்த மாறுதலைச் சொல்லி முடியாது. அன்று ஆகாச விமானப் பிரயாணத்தில் அவனைப் பார்த்த போதிருந்த பால்வடியும் முகம் எங்கே? பீதி நிறைந்த பிரம்மஹத்தி கூத்தாடிய இப்போதைய முகம் எங்கே? அவனைப் பார்த்ததும் நானே பேச்சை ஆரம்பித்து விட்டேன். “என்னடா அப்பா! மாலதி கடைசியில் கையை விரித்து விட்டாளா? ஏன் இவ்வளவு சோகம்?” என்றேன். “இல்லை, இல்லை! மாலதி என்னை மணந்து கொள்ளத் தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டாள். ஏதோ ஒரு முக்கியமான பொறுப்பு அவளுக்கு இருக்கிறதாம். அதை நிறைவேற்றும் வரையில் சில நாள் பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொண்டாள். அதற்குள் இந்தப் பேரிடி என் தலையில் விழுந்துவிட்டது” என்று சொல்லிக் கொண்டே, ஒரு பத்திரிகைத் துணுக்கை எடுத்து நீட்டினான். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது:- “ஸ்ரீ மருதாசலம் செட்டியாரின் கம்பெனியில் மானேஜர் வேலை பார்க்கும் ரங்கபாஷ்யத்துக்கு எச்சரிக்கை. அவன் மிஸ் மா… என்னும் பெண்ணை மறந்துவிட்டு ஒரு வாரத்திற்குள் சென்னைப் பட்டணத்தை விட்டுப் போய்விட வேண்டியது. அப்படிப் போகாவிட்டால், அவனுடைய பூர்வாசிரமத்துப் பெயரையும் மோசடிகளையும் பற்றித் தக்க ஆதாரங்களுடன் இந்தப் பத்திரிகையில் அம்பலப்படுத்தப்படும். ஜாக்கிரதை!” இதைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்தது. இதற்காகவா இப்படி இவன் மிரண்டு விட்டான்? “இந்த மாதிரி ஆபாசப் பத்திரிகைகளை நீ ஏன் வாங்கிப் பார்க்கிறாய்? பார்த்து மனதைக் குழப்பிக் கொள்ளுகிறாய்? உனக்கு வேறு வேலை கிடையாதா?” என்று கேட்டேன். “நான் வாங்கவில்லை. இதை மெனக்கெட்டுப் பத்திரிகையிலிருந்து வெட்டி யாரோ எனக்கு தபாலில் அனுப்பியிருக்கிறான். இதை எழுதிய ஆளாகவேதான் இருக்க வேண்டும்” என்றான். “இப்படிப்பட்டவர்களின் யுக்தியே இதுதான். அதில் நீ ஏன் விழுந்துவிட வேண்டும்? சுக்குநூறாய்க் கிழித்தெறிந்துவிட்டு நிம்மதியாக உன் வேலையைப் பார்! பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் பொதுக் காரியங்களைப் பற்றி விமர்சனம் எழுதுவது பத்திரிகை தர்மம், அதற்கு மாறாகத் தனிப்பட்ட மனிதர்களின் குட்டை விடுவதாகச் சொல்லுகிறவர்கள் பத்திரிகைக்காரர்களே அல்ல. இதையெல்லாம் படிப்பதும் பிசகு; காதில் போட்டுக் கொள்வதும் பிசகு! இப்படிப்பட்ட அவதூறுகளினால் உனக்கு கெடுதல் ஒன்றும் நேர்ந்துவிடாது தைரியமாயிரு!” இவ்வாறு கூறிச் சில உதாரணங்களும் எடுத்துக் காட்டினேன். தமிழ் நாட்டில் சில பிரமுகர்களைப் பற்றி என்னவெல்லாமோ வாயில் வைத்துச் சொல்லத் தகாத ஆபாச அவதூறுகள், சில கந்தல் பத்திரிகைகளில் வெளி அந்தன. அதனாலெல்லாம் அந்தப் பிரமுகர்களுக்கு என்ன குறைந்து போய்விட்டது? ஒன்றுமில்லை என்பதை எடுத்துச் சொன்னேன். அதற்கு ரங்கபாஷ்யம் சொன்ன பதில் என்னை உண்மையில் திணறித் திக்குமுக்காடச் செய்துவிட்டது. “அந்தப் பிரமுகர்களைப் பற்றியெல்லாம் எழுதியவற்றில் உண்மை இருந்திராது. ஆகையால் அவர்கள் கவலையற்று நிம்மதியாயிருந்தார்கள். ஆனால், என் விஷயத்தில் இதில் எழுதியிருப்பது உண்மையாயிற்றே! நான் எப்படி நிம்மதியாயிருக்க முடியும்?” என்றான்! பிறகு நான் நயமாகப் பேசி வற்புறுத்திக் கேட்டதன் பேரில் அவன் தனது பூர்வக் கதையைக் கூறினான்:- ரங்கபாஷ்யத்தின் உண்மைப் பெயர் இராமானுஜம். அவன் கல்கத்தாவில் ஒரு பெரிய முதலாளியிடம் அந்தரங்கக் காரியதரிசியாக வேலை பார்த்து வந்தான். முதலாளி பல தொழில்களில் ஈடுபட்டவர். அதோடு யுத்த காண்டிராக்டுகளும் எடுத்திருந்தார். அவருக்குச் சில எதிர்பாராத பொருளாதாரக் கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன. இதனால் முறை தவறான காரியங்கள் சிலவற்றை செய்துவிட்டார். எஜமான விசுவாசம் கருதி அதற்கெல்லாம் ராமானுஜமும் உடந்தையாயிருக்க நேர்ந்தது. உண்மையில் மோசடி ஒன்றும் இல்லையென்றும் எல்லாம் சில நாளில் சரிப்படுத்தப்படும் என்று முதலாளி உறுதி சொன்னதை நம்பினான். ஆனால் திடீரென்று ஒரு நாள் அவன் நம்பியதெல்லாம் பொய்யாகிவிட்டது. முறைத் தவறுகளும் ஊழல்களும் வெளியாகிவிட்டன. அந்த ஊழல்களில் முதலாளி காண்ட்ராக்டரைத் தவிர பெரிய பெரிய ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தர்கள், என்ஜினீயர்கள் ஆகியோரும் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் செல்வாக்கின் காரணமாகத் தப்பித்துக் கொண்டார்கள். அதற்கெல்லாம், பாவம், இராமனுஜமே பொறுப்பாக்கப்பட்டான். அவனைக் கைது செய்து விசாரணையும் நடந்தது. ஏழையின் பேச்சு அம்பலம் ஏறவில்லை. இராமனுஜத்தின் பேரில் குற்றம் ருசுவாகி, அவனுக்கு இரண்டு வருஷம் சிறைத் தண்டனை கிடைத்தது! சிறையில் ஒன்றரை வருஷம் கழித்த பிறகு, இந்தியா தேசம் சுதந்திரம் பெற்றது. அந்தச் சுதந்திர நன்னாளில், புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காங்கிரஸ் மந்திரிகள் சிறைக் கைதிகள் சிலருக்கு விடுதலை அளித்தார்கள். இராமானுஜத்தைப் பற்றிச் சிறை அதிகாரிகள் மிக நல்ல அறிக்கை அனுப்பியிருந்தபடியால், இராமானுஜமும் விடுதலை பெற்றான். சென்னைக்கு வந்து முற்றும் புதிய வாழ்க்கை தொடங்கினான். மோசடி வழக்கில் அடிபட்ட பழைய பெயர் வாழ்க்கையில் வெற்றிக்கு இடையூறாயிருக்கலாம் என்று கருதிப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டு ஸ்ரீ மருதாசலம் செட்டியார் கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தான். அவனுடைய பொருளாதார அறிவின் காரணமாக அதிசீக்கிரத்தில் உயர்ந்த நிலைமைக்கு வந்தான். புதிய முதலாளியான செட்டியார் தமது தொழில்களின் முழுப் பொறுப்பையும் அவனிடமே பூரணமாக நம்பி விட்டிருந்தார். பழைய கல்கத்தா வாழ்க்கையும் அதில் ஏற்பட்ட அனுபவங்களும், ஒரு பயங்கரமான கனவு என்று எண்ணி ரங்கபாஷ்யம் அதையெல்லாம் மறந்து விட்ட சமயத்தில் இந்தப் பேரிடி அவன் தலையில் விழுந்து விட்டது. யாரோ ஒரு கிராதகன் அவனுடைய பழைய வாழ்க்கையைத் தோண்டி எடுத்து அதன் சம்பவங்களை அம்பலப்படுத்தவும் தயாராயிருந்தான் என்று ஏற்பட்டது! மேலே கண்ட சோகக் கதையைக் கூறிவிட்டு ரங்கபாஷ்யம் சொன்னதாவது: “நான் மோசடி வழக்கில் தண்டனை அடைந்த கைதி என்பது வெளியானால் கம்பெனி முதலாளி என்னை உடனே அனுப்பி விடுவார். மாலதியும் என்னைக் கண்ணெடுத்தும் பார்க்கப் போவதில்லை. அவள் மனது புண்ணாகும்! எனக்கும் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க இனித் தைரியம் உண்டாகாது. ஆகையால் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் பெங்களூருக்குப் போய் விடுவது என்று தீர்மானித்திருக்கிறேன். என்னுடைய பெங்களூர் விலாசம் உங்களுக்கு மட்டும் தெரிவிக்கிறேன். நீங்கள் யாருக்கும் சொல்லவில்லை என்று உறுதியளிக்க வேண்டும்! ஏதாவது முக்கிய விஷயம் இருந்தால் மட்டும் எனக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றான் ரங்கபாஷ்யம். அவன் மோசடி வழக்கில் அநீதிக்கு ஆளானதைப் பற்றிக் கூறியதை நான் பரிபூரணமாக நம்பினேன். இம்மாதிரி பொய் முதலாளிகள் செய்த குற்றங்களுக்குச் சம்பள ஊழியர்களைப் பொறுப்பாக்கிய வேறு சில சம்பவங்களும் அறிந்திருந்தேன். பிற்பாடு அம்முதலாளிகளே அகப்பட்டுக் கொண்டதைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். ஆகவே, ரங்கபாஷ்யத்திடம் உண்மையில் எனக்கு அநுதாபந்தான் உண்டாயிற்று. “இது என்ன, பைத்தியம்! உன்னிடம் மாலதில் உண்மைக் காதல் கொண்டிருப்பது உண்மையானால், இதற்காக அவள் மனதை மாற்றிக் கொள்வாளா? உன் கம்பெனி முதலாளியைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் மாலதி அத்தகைய நீசகுணம் உள்ளவள் அல்ல என்று நிச்சயமாய்ச் சொல்லுவேன். உன்னுடைய உண்மை நிலையை அறிந்தால் அவள் உன்னிடம் கொண்ட அன்பு அதிகமேயாகும்” என்றேன். “தயவு செய்து மன்னியுங்கள்! இத்தகைய பழியோடு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்க என்னால் முடியவே முடியாது!” என்றான் ரங்கபாஷ்யம். அவனுடைய முடிவை மாற்றச் செய்ய நான் பட்ட பிரயாசை எல்லாம் விழலுக்கு இறைத்த நீராயின. மாலதி அவனிடம் அத்தகைய சலனமற்ற உறுதியான காதல் கொண்டிருந்ததாகவும் அவன் நம்பவில்லையென்றும் தெரிந்தது; அவளுடைய மனதில் ஏற்கனவே தயக்கம் இருந்தது; அந்தத் தயக்கத்தைப் பலப்படுத்தி அவனை நிராகரிக்கும்படி செய்ய இந்தப் பழைய துரதிஷ்ட சம்பவம் போதுமானதல்லவா? “எல்லம் விதியின்படி நடக்கும்” என்று விதிமேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ரங்கபாஷ்யம் கூறியதற்கு உடன்பட்டேன். பாவம்! அவன் பட்ட வேதனையை என்னால் ரசிக்க முடியவில்லை. காலமும் கடவுளுந்தான், அவனுடைய துன்பத்தைப் போக்கி நிம்மதி அளிக்க வேண்டும். 8 ரங்கபாஷ்யம் பெங்களூருக்குப் போன பிறகு பல தடவை மாலதி என்னுடன் டெலிபோனில் பேசி அவனைப்பற்றி ஏதாவது தகவல் தெரியுமா என்று கேட்டாள். நானும் அவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை எண்ணித் “தெரியாது” என்றே சொல்லி வந்தேன். ஒரு நாள் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றாள். என்னுடைய பிரம்மச்சாரி அறைக்கு அவளை வரச் சொல்ல இஷ்டப்படாமல் நானே அவளுடைய ஜாகைக்குப் போனேன். அப்போதுதான் அவள் மனதில் ஒரு பகுதியை நான் அறிந்து கொள்ள முடிந்தது. ரங்கபாஷ்யத்திடம் அவள் உண்மையான காதல் கொண்டிருந்தாள் என்பதில் சந்தேகமில்லை. நாடகத்தை எழுதிய தினகரனை அவள் வெறுத்தாள் என்பதிலும் ஐயமில்லை. “என் தந்தை காலமானபோது எனக்கு ஒரு பணி இட்டுவிட்டுப் போனார். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காகவே காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் உங்கள் சிநேகிதர் என்ன நினைத்தாரோ, என்னமோ தெரியவில்லை தகவல் தெரிவிக்காமல் எங்கேயோ போய்விட்டார். இந்தப் போக்கிரி தினகரன் அவரிடம் ஏதாவது பொய்யும் புளுகும் சொல்லியிருப்பானோ என்றுகூட சந்தேகிக்கிறேன். இப்படியெல்லாம் உலகத்தில் விஷமக்காரர்கள் இருக்கத்தான் இருப்பார்கள். அவர்கள் பேச்சையெல்லாம் நம்பி விடலாமா? இப்படி உங்கள் சினேகிதர் செய்து விட்டாரே? இனி என் வாழ்க்கை பாழானது போலத்தான்! நான் பெரிய துரதிஷ்டக்காரி!” என்று மாலதி சொல்லிப் பொலபொலவென்று கண்ணீர் உகுத்தாள். அவளுடைய துயரத்தைத் தீர்க்கும் சக்தி என்னிடம் இருந்தது. ஆனால் அதை உடனே பிரயோகித்துவிட நான் விரும்பவில்லை. மேலும் அவள் மனதை நன்றாய் அறிந்து கொள்ள விரும்பினேன். ரங்கபாஷ்யத்தின் பூர்வோத்திரத்தை அறிந்த பிறகும் இதே மனோபாவம் அவளுக்கு இருக்குமோ என்னமோ, யார் கண்டது? அதைப்பற்றி உடனே சொல்லிப் பரீட்சை பார்க்கவும் நான் விரும்பவில்லை. கொஞ்சம் விட்டுப் பிடிக்க எண்ணினேன். ஆனால் தினகரனைப் பற்றி மட்டும் கொஞ்சம் விசாரித்து வைத்தேன். “அவன் என் தாயார் வழியில் கொஞ்சம் தூரத்து உறவு. அந்த உரிமையை கொண்டாடி என்னைத் தொல்லைப் படுத்துகிறான். என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று நம்பி, அதைப் பறிக்கப் பார்க்கிறான். ஆனால் பணம் என்னுடையதல்ல என்பது அவனுக்குத் தெரியாது. சொன்னாலும் தெரிந்து கொள்ள மாட்டான். ஒரு நாள் அவனை நன்றாய்த் திட்டிப் பாடம் கற்பித்து விரட்டிவிடப் போகிறேன். அப்புறம், இந்தப் பக்கமே வரமாட்டான்” என்றாள். தினகரனைப் பற்றிய வரையில், மாலதி பரிபூரண வெறுப்புக் கொண்டிருந்தாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுவே ஓரளவு எனக்குத் திருப்தியையும் மனச்சாந்தியையும் அளித்தது. மற்றொரு நாள் அந்தக் கிராதகன் தினகரன் என்னைத் தேடி வந்தான். ரங்கபாஷ்யத்தைப் பற்றி விசாரித்தான். “தகவல் தெரியாது” என்றேன். “அது என்ன திடீரென்று மறைந்துவிட்டான்? காரணம் ஏதேனும் தெரியுமா?” என்று கேட்டான். “தெரியாது” என்றேன். “எனக்குத் தெரியும்!” என்று சொல்லி ரங்கபாஷ்யம் காட்டிய அதே பத்திரிகைத் துணுக்கின் இன்னொரு பிரதியை என்னிடம் காட்டினான். “இதனால்தான் அந்த மோசக்காரன் ஓடிப் போயிருக்க வேண்டும்!” என்றான். தனி மனிதர்களின் சொந்த வாழ்க்கையைப்பற்றி எழுதுவதையே தொழிலாகக் கொண்ட பத்திரிகைகளைப்பற்றி நான் பலமாய்த் திட்டிக் கண்டித்தேன். “அதெல்லாம் இருக்கலாம்; ஆனாலும் அவனுடைய தலைக்கு இது தகுந்த குல்லா என்பதில் சந்தேகமில்லை. ஆகையினால்தான் மாலதியிடம் சொல்லிக் கொள்ளாமலும் விலாசம் கூடத் தெரிவிக்காமலும் இந்த ஊரைவிட்டே ஓடிப் போய்விட்டான்!” என்றான் தினகரன். தினகரனை மேலும் ஆழம் பார்க்க எண்ணி, “அப்படியானால் மாலதி விஷயத்தில் உங்களுக்கு ஒரு போட்டி ஒழிந்தது என்று சொல்லுங்கள்!” என்றேன். “ஆனாலும் ஸ்திரீகளின் விஷயமே விசித்திரமானது. இன்னும் அந்த மோசக்காரனிடமே அவள் ஈடுபட்டிருக்கிறாள். அவன் எங்கே போனான் என்று என்னை விசாரிக்கச் சொல்லுகிறாள். நன்றாயிருக்கிறதல்லவா? ஆனால் இன்னும் இந்தப் பத்திரிகையின் விஷயம் அவளுக்குத் தெரியாது. இன்றைக்குச் சொல்லப் போகிறேன்!” என்றான். “இந்த மாதிரி எச்சரிக்கை இப்பத்திரிகையில் எழுதி வெளியிட்டது யார்? நீர் தானா?” என்று கேட்டேன். “நான் இல்லை; என்னைப் போலவே ரங்கபாஷ்யத்தின் மோசடியை வெளிப்படுத்துவதில் சிரத்தையுள்ள வேறு யாரோ இருக்க வேண்டும். ஆனால் இதிலுள்ள விஷயம் உண்மை என்பதில் சந்தேகமில்லை. எனக்கே நன்றாய்த் தெரியும். உங்களிடம் தான் முன்னமே சொல்லி இருக்கிறேனே? கொஞ்சம் இருந்த சந்தேகமும் அவன் ஓடிப்போனதிலிருந்து நீங்கிவிட்டது!” என்றான். “அப்படியானால் மாலதியிடம் இதை பற்றிச் சொல்லத்தான் போகிறீராக்கும்?” என்று கேட்டேன். “இப்பொழுது நேரே அவள் வீட்டுக்குத்தான் போகிறேன்!” என்றான் தினகரன். அவன் மாலதியைப் பார்ப்பதன் விளைவு என்ன ஆகப்போகிறது என்று மிகுந்த ஆவலுடன் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். 9 மறுநாளைக்கு மாலதியே என்னைத் தேடிக் கொண்டு என் அறைக்கு வந்துவிட்டாள். “உங்கள் சினேகிதரை எப்படியாவது உடனே கண்டு பிடிக்க வேண்டும். முக்கியமான காரியம் இருக்கிறது. பத்திரிகையில் விளம்பரம் போட்டு பார்க்கலாமா?” என்றாள். “பத்திரிகையில் போடுவதனால் பயன் ஒன்றும் ஏற்படாது. நானே வேறுவிதத்தில் தேடிக் கண்டு பிடிக்கப் போகிறேன். ஆனால் அப்படிப்பட்ட முக்கியமான விஷயம் என்ன? எனக்குத் தெரியப்படுத்தலாமா?” என்று கேட்டேன். “உங்களுக்கும் தெரிய வேண்டியதுதான்! இல்லாவிட்டால் அவரைக் கண்டு பிடிப்பதில் எனக்கு நீங்கள் உதவி செய்யமாட்டீர்கள்!” என்றாள் மாலதி. மாலதி கூறியதிலிருந்து நேற்று தினகரன் என்னைப் பார்த்த பிறகு நேரே மாலதியைச் சந்திக்கச் சென்றான் என்று தெரிந்தது. சந்தித்து, மேற்படி பத்திரிக்கைத் துணுக்கை அவளிடம் காட்டினான். மோசடி வழக்கில் இரண்டு வருஷம் தண்டனையடைந்தவன் ரங்கபாஷ்யம் என்றும் அதனாலேயே இந்த விளம்பரத்தைக் கண்டதும் ஓடி மறைந்துவிட்டான் என்றும் தெரிவித்தான். ஆனால் இதன் மூலம் அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அதற்கு நேர் விரோதமான பலன் தான் உண்டாயிற்று. “அந்த மோசடி வழக்கைப்பற்றி உமக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்?” என்று மாலதி கேட்டாள். “நீ கேட்டதனாலே சொல்லுகிறேன். கல்கத்தாவிலே உன் தகப்பனார் நடத்திய கம்பெனியில் வேலை பார்த்தவன் தான் இவன். அந்தக் கம்பெனி வேலையிலே தான் மோசடி செய்துவிட்டான். நீ அப்போது ‘கான்வென்ட்’ பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாய். உனக்கு ஒன்றும் தெரியாது. உன் தந்தை இவனை முழுதும் நம்பிக் கம்பெனிப் பொறுப்புகளையெல்லாம் ஒப்புவித்திருந்தார். நம்பியவருக்குத் துரோகம் செய்துவிட்டான். இவனுடைய வழக்கு கல்கத்தாவில் நடந்தபோது தற்செயலாக நான் கல்கத்தா வந்திருந்தேன். உன் தந்தையுடன் கோர்ட்டுக்கே போயிருந்தேன். இரண்டு வருஷம் சிறைத் தண்டனை இவனுக்குக் கிடைத்தது. தண்டனை முடிந்த பிறகு இங்கு வந்து பெயரை மாற்றி வைத்துக் கொண்டு காலட்சேபம் நடத்தி வருகிறான். இப்போது பார்க்கும் வேலையிலும் என்னென்ன மோசம் செய்து வந்தானோ தெரியாது. இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அவன் தலைமறைவாகி விட்டதிலிருந்தே அவன் யோக்கியதை தெரியவில்லையா?” என்று தினகரன் சாங்கோ பாங்கமாக ரங்கபாஷ்யத்தின் மீது புகார்களைக் கொட்டி அளந்தான். அவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த மாலதி கடைசியில், “இந்தப் பத்திரிகை விளம்பரம் நீங்கள் தான் போட்டீர்களா?” என்று கேட்டாள். “ஆமாம்; நான் தான் போட்டேன். உண்மையைச் சந்தேகமறத் தெரிந்து கொள்வதற்காகப் போட்டேன். அதற்குப் பலன் கிடைத்துவிட்டது. ஆசாமி இந்த ஊரைவிட்டே கம்பி நீட்டிவிட்டான், பார்!” என்றான் தினகரன். “ஆனாலும் உம்மைப் போன்ற நீச குணமுள்ளவனை நான் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை!” என்றாள் மாலதி. இதைக் கேட்ட தினகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. மாலதியின் போக்கு அவனுக்குப் புரியவில்லை. பிறகு மாலதி நன்றாகப் புரியும்படி சொன்னாள்: “ஏதோ ஒருவன் துரதிஷ்டத்தினால் கஷ்டத்துக்கு உள்ளாகலாம். அதையெல்லாம் மறந்து புதிய வாழ்க்கை நடத்த முயற்சிக்கலாம். இம்மாதிரி மெனக்கெட்டு ஒருவருடைய பூர்வோத்திரங்களை அறிந்து பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்துவது போன்ற சண்டாளத்தனம் வேறு என்ன இருக்க முடியும்? உம்முடைய முகத்திலேயே இனி நான் விழிக்க விரும்பவில்லை. என்னைப் பார்க்க வேண்டாம்!” என்று கண்டிப்பாகச் சொல்லித் தினகரனை அனுப்பி விட்டாள். தினகரனும் பெண் குலத்தின் முட்டாள்தனத்தையும் இழி குணத்தையும் ஒரு அத்தியாயம் நிந்தித்து விட்டுப் போய்விட்டான். பிறகுதான் மாலதி என்னைத் தேடி வந்தாள். “ரங்கபாஷ்யத்தை உடனே பார்த்தாக வேண்டும். என்னால் அவ்ருக்கு நேர்ந்த கஷ்டத்துக்கு அவரிடம் கட்டாயம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும்!” என்றாள். “நீங்கள் மன்னிப்புக் கேட்பானேன்? எதற்காக?” என்றேன் நான். “என் காரணமாகத்தானே அவருக்குத் தினகரன் இத்தகைய கஷ்டத்தை உண்டாக்கினான்? அவர் ஊரை விட்டு ஓடும்படியாயிற்று? இதைத் தவிர இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது!” என்று மாலதி கூறினாள். அந்த முக்கியமான இன்னொரு காரணத்தைக் கேட்ட பிறகு என்னுடைய தயக்கம் தீர்ந்து விட்டது. பெங்களூருக்கு நானே மாலதியை அழைத்துச் செல்வது என்று தீர்மானித்தேன். 10 பெங்களூர் மெயில் துரிதமாய்ப் போய்க் கொண்டிருந்தது. வெளியில் காற்றும் மழைத் தூற்றலுமாயிருந்தபடியால் ரயிலின் கண்ணாடிக் கதவுகள் மூடப்பட்டிருந்தான். அந்தக் கதவுகளில் சளசள வென்று தூற்றல் அடித்துச் சொட்டுச் சொட்டாய் ஜலம் வடிந்து கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் விஷயம் என்னவென்பதை வாசகர்களுக்குத் தெரிவித்து விடுகிறேன். இராமானுஜம் கல்கத்தாவில் எந்த முதலாளியிடம் வேலை பார்த்து வந்தானோ அந்த முதலாளிதான் மாலதியின் தந்தை. இராமனுஜம் சிறை சென்ற பிறகு அவருடைய கம்பெனி பலவிதக் கஷ்டங்கள் அடைந்து நஷ்டமாகி வந்தது. தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன் கல்கத்தாவில் நடந்த பயங்கர கலவரத்தில் அவருடைய கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்து போயிற்று. தேசம் சுதந்திரம் பெற்றவுடன் கல்கத்தாவில் ஏற்பட்ட டாக்டர் பி.சி. கோஷின் கடுமையான ஆட்சியில் கள்ள மார்க்கெட் வியாபாரம் அடியோடு படுத்து விட்டது. இதனாலெல்லாம் மாலதியின் தந்தை நோயில் விழுந்து படுத்த படுக்கையானார். டாக்டர்களும் கையை விரித்து விட்டார்கள். இறுதிக் காலத்தில் அவருடைய மனசாட்சி அவரை மிகவும் உறுத்தியது. முக்கியமாகத் தம்மைப் பூரணமாக நம்பி விசுவாசத்துடன் வேலை செய்த இராமனுஜத்துக்குச் செய்த அநீதி அவருடைய நெஞ்சில் பெரும் பாரமாக அழுத்தியது. அவனைக் கண்டு பிடிக்க அவர் ஆனமட்டும் முயன்றும் முடியவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவன் வேறு பெயர் வைத்துக் கொண்டு விட்டான் அல்லவா? தம் அருமை மகளாகிய மாலதியிடம் விஷயத்தைச் சொல்லி, “எப்படியாவது இராமனுஜத்தைக் கண்டுபிடித்து, இந்தக் கடிதத்தைச் சேர்ப்பிக்க வேண்டும்” என்று ஒப்புவித்தார். தான் அவனுக்குச் செய்த தீங்குக்குப் பரிகாரமாகப் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துவிட்டுப் போனார். ரங்கபாஷ்யம் என்கிற இராமனுஜம் கடிதத்தைப் படித்து முடித்ததும் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு என்னைப் பார்த்து, “ஸார்! அந்தப் புண்ணியவான் என்னை இவ்வளவு கஷ்டத்துக்கு உள்ளாக்கிவிட்டு அவ்வளவையும் பத்தாயிரம் ரூபாயினால் துடைத்து விடலாம் என்று பார்க்கிறார்! இந்தாருங்கள்! இந்தப் பணத்தை அவருடைய செல்லக் குமாரியிடமே கொடுங்கள்!” என்று உறையோடு எடுத்தெறிந்தான். அப்போது மாலதி தான் பெண் என்பதைக் காட்டிவிட்டாள். கலகலவென்று அவள் கண்ணீர் பெருக்கி விம்மினாள். அதைப் பார்த்த இராமானுஜம் எழுந்து அவள் அருகில் ஓடிவந்தான். ஆனால் அருகில் வந்ததும் இன்னது செய்வதென்று தெரியாமல் அவனும் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டான். அவர்கள் ஒருவரையொருவர் சமாதானப்படுத்திக் கொள்ளட்டும் என்று வெளியேறப் பார்த்தேன். “ஸார்! ஸார்! கொஞ்சம் இருங்கள்!” என்றான் இராமனுஜம். நான் தயங்கி நின்றேன். கண்களைத் துடைத்துக் கொண்டு, “சொல்வதைப் பூராவும் சொல்வதற்கு முன் அழுதால் நான் என்ன செய்கிறது? இவளுடைய அப்பா எனக்குச் செய்த தீங்குக்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டுமானால் அதற்கு வேறு வழி இருக்கிறது. விலையில்லாச் செல்வமாகிய அவருடைய பெண்ணை எனக்குக் கலியாணம் செய்து கொடுக்க வேண்டும்! அதற்குச் சம்மதமா என்று இவளைக் கேட்டுச் சொல்லுங்கள்” என்றான் இராமானுஜம். மாலதியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “அது எப்படி ஸார், முடியுமா? சுதந்திர பாரத நாட்டில் பெண்களுக்கு மட்டும் சுதந்திரம் இல்லையா?…” என்றாள். “அப்படியானால் மெனக்கெட்டு எதற்காக என்னைத் தேடி வரவேண்டும்? இந்தப் பணம் யாருக்கு வேண்டும்? இதை எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கள்!” என்றான் இராமானுஜம். “சொல்வதை முழுதும் கேட்பதற்குள் எதற்காக இவர் அவசரப்படுகிறார்? ஸார்… நான் தான் என் சொந்த இஷ்டத்தினால் என் சுதந்திரமாக இவருக்கு என்னைக் கொடுத்து விட்டேனே…? என் தகப்பனார் எப்படி என்னை இவருக்குக் கொடுக்க முடியும்?” என்றாள் மாலதி. அவர்களை விட்டுவிட்டு நழுவுவதற்கு அதுதான் சரியான சமயம் என்று நான் வெளியேறினேன். ஒரு மாதத்துக்கு முன்பு இராமானுஜம் தம்பதிகளைப் பார்த்தேன். பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது ஆசிரியர் தினகரனைப் பற்றியும் பேச்சு வந்தது. அவனை இரண்டு பேரும் சேர்ந்து நிந்தித்ததை என்னால் பொறுக்கவே முடியவில்லை. “எதற்காக அந்த அப்பாவியைத் திட்டுகிறீர்கள்? அவன் பத்திரிகையில் அநாமதேயக் கடிதம் விடுத்ததனால் தானே நீங்கள் இன்று இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்?” என்றேன். “அநாமதேயக் கடிதம் அவனா எழுதினான்? அழகுதான்!” என்றாள் மாலதி. திடீரென்று என் மனதில் ஒரு பீதி உண்டாயிற்று. ஒரு வேளை நான் அந்தக் கடிதத்தை எழுதினதாக இவர்கள் சந்தேகப்படுகிறார்களோ என்று. “பின் யார் எழுதியது? வேறு யாரையாவது சந்தேகிக்கிறீர்களா என்ன?” என்று கேட்டேன். “சந்தேகிக்கவில்லை ஸார்! யார் எழுதியது என்று நிச்சயமாய்த் தெரியும்” என்றாள் மாலதி. இன்னும் அதிக பீதியுடன், “யார் தான் எழுதியது! உனக்கு அது எப்படி நிச்சயமாய்த் தெரியும்?” என்று கேட்டேன் நான். “நான் தான் எழுதினேன். அது எனக்கு நிச்சயமாய்த் தெரியாமல் எப்படி இருக்க முடியும்?” என்றாள் மாலதி. இந்தச் சுதந்திர யுகத்துப் புதுமைப் பெண்கள் என்ன செய்வார்கள், என்ன செய்யமாட்டார்கள் என்று யார் தான் நிச்சயமாய்ச் சொல்ல முடியும்? ரங்கதுர்க்கம் ராஜா 1 இரவு பத்து மணி (கதை ஆரம்பமாகிவிட்டது) “எச்.எம்.எஸ்.பிரிட்டானியா” என்னும் கப்பலின் இரண்டாம் வகுப்புத் தளத்தில், கப்பலின் கைப்பிடிக் கம்பிகளில் சாய்ந்து கடலை நோக்கிக் கொண்டு நிற்கிறான் ஓர் இளைஞன். அந்தக் கப்பல் பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பி இங்கிலாந்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. நாளைக் காலையில் ஏடன் துறைமுகத்தைச் சேருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலில் அந்த நிமிஷத்தில் ஐரோப்பிய நடனம் நடந்து கொண்டிருந்தது. பாண்டு வாத்தியம் முழங்கிற்று. வெள்ளைக்காரப் பிரயாணிகள் அநேகமாய் எல்லாரும் நடனத்தில் கலந்துகொண்டார்கள். இந்தியப் பிரயாணிகள் - தூங்கச் சென்றவர்கள் போக, பாக்கிப் பேர் - துரைமார்களும் துரைசானிகளும் நடனமாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நமது இளைஞன் மட்டும் தன்னந்தனியாக இங்கே நின்று கொண்டிருந்தான். ஏன்? (ஆமாம். மறந்து போனான். நியாயமாய் உங்களைக் கேட்கக் கூடாதுதான். கதை சொல்வது நீங்கள் இல்லையே? நான் அல்லவா?) அமைதியான கடல்; தாவள்யமான நிலவு; அகண்டமான ஆகாயம்; அநந்தமான நட்சத்திரங்கள். இந்த அற்புதக் காட்சியில் கருத்தைச் செலுத்தியிருந்தான் அவ்விளைஞன். அந்த நேரத்தில் அவன் மனத்திலே ஓர் அபூர்வமான எண்ணம் உண்டாயிற்று. அது விரைவில் தீர்மானமாக மாறியது. அத்தீர்மானம் என்னவென்று உங்களால் ஊகிக்க முடியுமா? - ஒரு நாளும் முடியாது என்றான். கப்பலிலிருந்து குதித்துக் கடலில் மூழ்கி உயிரை விட்டு விடுவது என்பதே அத்தீர்மானம்! இவ்வளவு உசிதமான - புத்திசாலிகள் அனைவருக்கும் முன் மாதிரியாயிருக்கக் கூடிய - தீர்மானத்துக்கு அவன் வந்ததன் காரணம் என்னவென்று சற்றே பார்க்கலாம். 2 கே.ஆர். ரங்கராஜன் ஓர் அதிசயமான இளைஞன். அவனிடம் அநேக அதிசய குணங்கள் இருந்தன. அவற்றில் எல்லாம் முக்கியமானது தனிமை வாழ்வில் அவன் கொண்டிருந்த பற்றுதான். இதற்குக் காரணம் இந்த ஏழை உலகத்தின் மேல் அவன் கொண்டிருந்த வெறுப்பேயாகும். இந்த உலகத்தில் அவனுக்குப் பிடித்த மனிதர்கள் யாருமே இல்லை. யார் என்ன பேசினாலும் அது அசட்டுத்தனமாகவே அவனுக்குத் தோன்றும். (நமக்குள் இருக்கட்டும், நேயர்களே! - உண்மையும் அதுதான் போலிருக்கிறதே? நாம் இன்று பேசுகிறதையெல்லாம் நினைவு வைத்துக் கொண்டு ஒரு வாரத்திற்குப் பின் யோசித்துப் பார்த்தால் ஒரு மாதிரியாகவே தோன்றுகிறதல்லவா?) எனவே யாரிடமும் அவன் கலகலப்பாகப் பேசுவதே கிடையாது. பிறருடைய அசட்டுத்தனத்தில் அவனுக்கு எவ்வளவு தீவிரமான நம்பிக்கை இருந்ததென்பதற்கு ஒரே ஓர் உதாரணம் சொன்னால் போதுமானது. அவன் பி.ஏ. பரீட்சையில் முதல் வகுப்பில் தேறியவன். அப்புறம் எம்.ஏ. பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தான். பணமும் கட்டி விட்டான். ஆனால், பரீட்சைக்குப் போகவில்லை. இதற்குக் காரணம், ‘நாம் எழுதுகிற விஷயத்தை அறிந்து சீர் தூக்கிப் பார்க்க யோக்கியதை உள்ளவர் இங்கே யார் இருக்கிறார்கள்?’ என்று அவன் எண்ணியதுதான். பி.ஏ. பரீட்சையில் நியாயமாகத் தான் தேறியிருக்கக் கூடாதென்றும் கைத் தவறுதலினால் தன்னுடைய நம்பரைத் தேறியவர்களின் ஜாபிதாவில் சேர்த்து விட்டார்களென்றும் அவன் சொல்வான். இந்த உலகத்தில் அவன் அலுத்துக் கொள்ளாமலும் விருப்பத்துடனும் பேசக் கூடியவர்களாக வெவ்வேறு காலத்தில் இருந்து வந்தவர்கள் மூன்று பேர். ஒருவர் அவனுடைய தாய்மாமன். தாயார் தகப்பனார் இருவரும் காலஞ்சென்ற பிறகு அவனை அருமையுடன் வளர்த்துப் படிக்க வைத்தவர் அவர் தான். அவர் ஆங்கிலக் கல்வி பயிலாதவர். ஆனால், உலக விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவர். இயற்கையாக அமைந்த நகைச்சுவையுடன் வெகு ரஸமாகப் பேசக் கூடியவர். நவீன இலட்சியங்களையும் இயக்கங்களையும் பற்றிச் சொன்னால் மிக நுட்பமாக அறிந்து கொள்ளக் கூடியவர். அவருடன் எத்தனை நேரம் பேசினாலும் ரங்கராஜனுக்கு அலுப்புண்டாகாது. அவ்வளவு அரிய குணங்களும் ஆற்றல்களும் படைத்த அந்த மனிதருக்கு ஒரே ஒரு சாமர்த்தியம் மட்டும் இல்லாமல் போயிற்று. யமனுடன் வாதாடி, “என் மருமகனை விட்டு வரமாட்டேன்” என்று சொல்லிச் சாதிப்பதற்கு அவருக்குச் சக்தி போதவில்லை. சென்ற வருஷம் அவர் காலஞ் சென்ற போது ரங்கராஜனுக்கு உலகவே சூனியமாகி விட்டதாகக் காணப்பட்டது. மூன்று மாத காலம் வரையில், “மேலே என்ன செய்யப் போகிறோம்?” என்று யோசிப்பதற்கே அவனுடைய மனம் இடங்கொடுக்கவில்லை. ‘மாமா போய் விட்டார்’, ‘மாமா போய் விட்டார்’ என்று அது ஜபம் செய்து கொண்டிருந்தது. அடுத்தபடியாக, அவனுடைய மதிப்புக்குரியவராயிருந்தவர், அவன் படித்த கிராமப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயர். முன்னெல்லாம் அவருடைய சிநேகத்திலும் ஸல்லாபத்திலும் அவன் பெரிதும் சந்தோஷமடைவதுண்டு. ஆனால், நாளாக ஆக அவருக்கும் தனக்கும் இடையில் ஒரு பெரிய அகழ் ஏற்பட்டு வருவதை அவன் கண்டான். அவருடைய மூப்பு அதிகமாக ஆக, புதிய இலட்சியங்கள், புதிய கருத்துக்கள் முதலியவற்றைக் கிரஹிப்பதற்கு வேண்டிய சக்தியை அவர் துரிதமாக இழந்து வருவதை நேருக்கு நேரே அவன் பார்த்தான். சில நாளைக்கெல்லாம் அவர்களுடைய சம்பாஷணை பழைமைக்கும் புதுமைக்கும் - அல்லது இளமைக்கும் முதுமைக்கும் நடக்கும் விவாதமாகவே மாறி வரத் தொடங்கியது. இந்த விவாதத்தின் காரம் அதிகமாக ஆக, உபாத்தியாயரின் பழைமைப்பற்று அபரிமிதமாகி ஏற்கெனவே இல்லாத மூட நம்பிக்கைகள், குருட்டுக் கொள்கைகள் எல்லாம் அவர் உள்ளத்தில் குடிகொள்ளத் தொடங்குவதை ரங்கராஜன் கண்டு மிக்க பீதியும், துயரமும் அடைந்தான். கடைசியில், அவருடன் தான் எவ்விதச் சம்பாஷணையும் வைத்துக் கொள்ளாமலிருப்பதே அவருக்குச் செய்யக் கூடிய பெரிய உபகாரமாகும் என்று தீர்மானித்தான். மற்ற ஹைஸ்கூல் உபாத்தியாயர்கள், கலா சாலை ஆசிரியர்கள் இவர்களில் யாரிடமும் ரங்கராஜனுக்கு மரியாதையாவது, சிநேகமாவது ஏற்பட்டது கிடையாது. அவர்கள் ஏதோ தண்டத்துக்கு வந்து அழுதுவிட்டுப் போனார்கள். இவன் கடனுக்குக் கேட்டுத் தொலைத்தான். அவனுடைய சகோதர மாணாக்கர்கள் விஷயத்திலும் அப்படித்தான். முதன் முதலில் அவன் ஹைஸ்கூலில் வந்து சேர்ந்தபோது, தன் பக்கத்திலிருந்த மாணாக்கனோடு பேச்சுக் கொடுத்தான். அவன் சென்ற வருஷமும் அதே வகுப்பில் இருந்தவன் என்று அறிந்ததும், “ஏன் அப்படி?” என்று கேட்டான். “ஏனா? இந்த வாத்தியார்ப் பயல் மார்க்குக் கொடுக்கவில்லை. அவன் தாலியறுக்க!” என்று பதில் வந்தபோது, அவனுடைய சகோதர மாணாக்கர்களிடன் அவனுக்கு ஏற்பட்ட அருவருப்பு, கலா சாலையை விட்டு வெளியே வரும் வரையில் சற்றும் குறைந்ததாகச் சொல்ல முடியாது. இந்தப் பொது விதிக்கு விலக்காக ஒரே ஒருவன் மட்டும் இருந்தான். அவன் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்து காலேஜில் இரண்டு வருஷம் வரையில் ரங்கராஜனுடன் சேர்ந்து படித்தவன். இந்தப் பால்ய சிநேகிதனின், ஸகவாசம் எப்போதும் ரங்கராஜனுக்கு மகிழ்ச்சியளித்து வந்தது. ஆனால் இண்டர்மீடியட் பரீட்சையில் ஒரு முறை தேறாமல் போகவே, தர்மலிங்கம் கல்யாணம் செய்து கொண்டு கிராமத்தோடு போய் விட்டான். ரங்கராஜன் காலேஜ் படிப்பு முடிந்ததும் தனது பால்ய நண்பனைத் தேடிக் கிராமத்துக்குச் சென்றான். சாயங்காலம் ஆனதும், பழைய வழக்கத்தைப் போல் “ஆற்றங்கரைக்குப் போய் வரலாம்” என்று கூப்பிட்டான். தர்மலிங்கம், “என் வீட்டுக்காரியிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன்” என்று உள்ளே போனதும், ரங்கராஜனுக்கு கண்கள் திறந்தன. உள்ளே போனவன் தன் ஒரு வயதுக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவுடன் ரங்கராஜனுக்கு நிராசை ஏற்பட்டது. நண்பனும் தானும் இப்போது வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களாகி விட்டதை அவன் கண்டான். மறுநாளே சிநேகிதனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான். 3 மாமா இருந்தபோது ஒரு சமயம் கல்யாணத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். “கல்யாணம்” என்றதும் ரங்கராஜன் காதைப் பொத்திக் கொண்டான். சராசரியில் ஸ்திரீகளை விடக் கல்வியறிவில் சிறந்தவர்களாயிருக்கும் புருஷர்களுடைய ஸகவாசத்தையே அவனால் ஐந்து நிமிஷத்துக்கு மேல் சகிக்க முடிவதில்லை. வாழ்நாளெல்லாம் பிரிய முடியாதபடி ஒரு ஸ்திரீயை யாராவது கழுத்தில் கட்டிக் கொள்வார்களா? சனியனை விலை கொடுத்து வாங்குவது போல் அல்லவா? “மாமா அம்மாமியைக் கட்டிக் கொண்டு நீங்கள் அவஸ்தைப் படுவது போதாதா? என்னையும் அப்படிக் கெடுப்பதற்கு ஏன் விரும்புகிறீர்கள்?” என்றான். “அசடே! உனக்கு என்ன தெரியும் நானும் அம்மாமியும் சில சமயம் சண்டைப் போட்டுக் கொள்கிறோம் என்பது வாஸ்தவந்தான். அதைக் கொண்டா எங்கள் இல்வாழ்க்கையை நீ மதிப்பிடுவது? உன் அம்மாமி எனக்கு இல்வாழ்க்கையில் எவ்வளவு மன நிம்மதி, எவ்வளவு உற்சாகம், எவ்வளவு ஹாஸ்யரஸம் அநுபவிப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் அளித்திருக்கிறாள் என்பதெல்லாம் உனக்கு என்ன தெரியும்?” என்று மாமா சொன்னார். “அப்படியானால், அந்தப் பாக்கியம் முழுவதையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; எனக்கு வேண்டாம்,” என்றான் ரங்கராஜன். மாமா எவ்வளவோ சொல்லியும் பயனில்லை. அவ்வாறே உத்தியோகத்தைப் பற்றியும் பிரஸ்தாபம் வந்தது. வேலை ஒன்றும் இல்லாமலிருந்தால் இப்படித்தான் ஏதேனும் குருட்டு யோசனைகள் தோன்றிக் கொண்டிருக்குமென்றும் ஏதேனும் ஓர் அலுவலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படியும் மாமா சொன்னார். பலவித உத்தியோகங்களைப் பற்றியும் வாதித்தார்கள். அதிலிருந்து நம் கதாநாயகனுடைய யோக்கியதைக்குத் தகுந்ததாக ஒருவித உத்தியோகமும் இல்லை என்பது வெளியாயிற்று. சர்க்கார் உத்தியோகமா? சிவ சிவா! அந்த வார்த்தையைக் கேட்டதுமே கிராமத்து ஜனங்களைப் போல் அறிவுத் தெய்வமும் பயந்து மிரண்டு அருகில் கூட வராதே! வக்கீல் வேலையா? பகவானே! முட்டாள் கட்சிக்காரர்களுடனும் மூட ஜட்ஜுகளுடனும் அல்லவா இழவு கொடுக்க வேண்டும்? வைத்தியத் தொழிலா? அதைப் போல் அறியாமையை அடிப்படையாகக் கொண்ட தொழிலே வேறு கிடையாது! வாத்தியார் வேலையா? மந்தபுத்தியுள்ள மாணாக்கர்களுடன் நாளெல்லாம் மாரடிப்பதைவிட வேறு எது வேண்டுமானாலும் செய்யலாம் - இப்படியே, படித்தவர்கள் பிரவேசிப்பதற்குரிய நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் விலக்கப்பட்டது. “இதெல்லாம் உனக்கு ஒன்றும் பிடிக்காவிட்டால் அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவது தானே? காங்கிரஸில் சேர்ந்து வேலை செய்யலாமே? உயர்ந்த மேதாவிகள் காங்கிரஸில் இருக்கிறார்களே?” என்று மாமா கேட்டார். அரசியல் என்றாலே ரங்கராஜனுக்குப் பிடிப்பதில்லை. ஞானசூனியர்களும், அரை குறை அறிவுள்ளவர்களுந்தான் அரசியல் முன்னணிக்கு வருகிறார்கள் என்று அவன் சொல்வான். காங்கிரஸைச் சேர்ந்தவர்களில் ஒரு நாலைந்து பேர் மட்டும் அறிவுத் தெளிவுடையவர்கள் என்று அவன் ஒப்புக் கொள்வதுண்டு; ஆனால், அவர்கள் பாடுபடுவதெல்லாம் வியர்த்தமென்றும், இந்த மூட ஜனங்கள் ஒரு நாளும் முன்னுக்கு வரப்போவதில்லை என்றும் கூறுவான். மேற்கண்டவாறு மாமா யோசனை சொன்னதும் ரங்கராஜன் அன்றைய தினசரிப் பத்திரிகையைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தான். அதில் வெளியாகியிருந்த ஓர் அரசியல் பொதுக் கூட்டத்தின் நடவடிக்கைகளையும் முதல் நாள் சட்டசபை நடவடிக்கைகளையும் படித்துக் காட்டினான். “மாமா! மகாத்மாவும், வல்லபாயும், இராஜகோபாலாச்சாரியும், ஜவஹர்லாலும் சுயராஜ்யத்துக்காகப் பாடுபடுகிறார்கள். ஆனால் இந்த ஜனங்களை வைத்துக் கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதென்பது அசாத்தியமென்றே எனக்குத் தோன்றுகிறது. அப்படியே நம்மை ஆள்வோரும் முட்டாள்களாயிருக்கும் காரணத்தினால் நாம் சுய ராஜ்யம் அடைந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அதை வைத்து நிர்வகிக்கப் போகிறவர்கள் யார்? இதோ இப்போது வாசித்தேனே, அதைப் போலெல்லாம் அர்த்தமில்லாமல் பிதற்றக் கூடிய ஏழாந்தர, எட்டாந்தர மூளையுள்ள மனிதர்கள் தானே? இவர்களிடம் இராஜ்யபாரத்தைக் கொடுப்பதற்காக நான் ஏன் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்?” என்றான். ரங்கராஜனுடைய காலத்தில் பெரும்பகுதி படிப்பில் போய்க் கொண்டிருந்தது. ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ள உயர்தர இலக்கியங்களில் அவன் படிக்காதது ஒன்றுமில்லை. நேரம் போவது தெரியாமல், ஊன் உறக்கங்களை மறந்து படித்துக் கொண்டிருப்பான். ஆனால், படிப்புங்கூடக் கசந்து போகும்படியான ஒரு சமயம் வந்தது. பண்டைக்கால ஆசிரியர்களின் சிறந்த நூல்களையெல்லாம் படித்தாகி விட்டது. இக்காலத்து ஆசிரியர்கள் எழுதுவதோ அவனுக்கு ஒன்றும் பிடிப்பதில்லை. வோட்ஹவுஸ் போன்றவர்களின் வெறும் ‘புருடை’ நூல்களில் எப்போதும் ஐந்தாறு பக்கத்துக்கு மேல் அவனால் படிக்க முடிவதில்லை. நாளடைவில் ஷா, செஸ்டர்டன், பெல்லாக் முதலியவர்கள் கூடச் சுவை நைந்த பழங்கதைகளையே படைக்கிறார்கள் என்று அவனுக்கு தோன்றலாயிற்று. அச்சமயத்தில் அவனுக்கு உயிர் வாழ்க்கையே ஒரு பாரமாய் விட்டது. மனத்தைச் செலுத்துவதற்கு ஏதேனும் ஒரு வழி விரைவில் காணாவிடில் பைத்தியம் பிடித்துவிடும் என்ற நிலைமை ஏற்பட்டது. அத்தகைய வழி அவன் யோசனை செய்யாதது ஒன்றே ஒன்று தான் பாக்கியிருந்தது; வெளி நாடுகளுக்கு யாத்திரை சென்று வரவேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு வெகு நாளாய் உண்டு. மாமா இருந்தவரையில் அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு அவ்வளவு அவசியத்தையும் அவன் அப்போது காணவில்லை. இப்போது அவசியம் அதிகமான போது சந்தர்ப்பமும் சரியாயிருந்தது. பிதுரார்ஜிதச் சொத்தில் பெரும் பகுதியை ஒன்றுக்கு பாதி விலையாக விற்றுப் பிரயாணத்துக்குப் பணம் சேர்த்துக் கொண்டான். முதலில், இங்கிலாந்துக்குச் செல்வதென்று தீர்மானித்துப் பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பிய ‘பிரிட்டானியா’ என்னும் கப்பலில் பிரயாணமானான்; மூன்று நாள் கப்பல் பிரயாணத்துக்குப் பிறகு அவனுடைய மனோநிலை எவ்வாறிருந்தது என்பது கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. 4 ரங்கராஜன், அதுவரையில் வெள்ளைக்காரர்களுடன் நெருங்கிப் பழகியதில்லை. சினிமா டாக்கிகளில் பார்த்தது தவிர அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி அவனுக்கு வேறு எதுவும் தெரியாது. ‘பிரிட்டானியா’ கப்பலில் பிரயாணம் செய்தவர்களில் பெரும்பாலோர் துரைமார்களும் துரைசானிகளுமே. மூன்று நாள் அவர்கள் சமீபத்திலிருந்து அவர்களுடைய நடை உடை பாவனைகளைப் பார்த்ததன் பயனாக அவனுடைய உத்தேசம் பெரிய மாறுதல் அடைந்தது. இந்த மாதிரி ஜனங்களிடையே இன்னும் பத்து நாள் பிரயாணம் செய்ய வேண்டும். அப்புறம்? இதே மாதிரி ஜனங்கள் மத்தியில் தான் அயல் நாட்டில் வசிக்க வேண்டும். ஏதோ கொஞ்ச காலம் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிட்டுத் திரும்பி வந்தாலோ? மறுபடியும் இந்த அசட்டு மனிதர்களிடையேதான் வாழ வேண்டும். சீச்சீ! இதென்ன வாழ்க்கை! நீலநிறக் கடலில் கம்பீரமாய் எழுந்து விழுந்து கொண்டிருந்த அலைகள் அவனை, “வா! வா!” என்று சமிக்ஞை செய்து கூப்பிட்டன. கடல் நீரில் பிரதிபலித்த சந்திர பிம்பத்தின் சலன ஒளி அலைகளும் அவ்வாறே அவனை ஆதரவுடன் அழைத்தன. வெகு தூரத்தில் வான வட்டமும் கடலும் சந்திக்கும் இடத்தில் தோன்றிய ஒரு தனி நட்சத்திரம் கண் சிமிட்டி அவனைக் கூப்பிட்டது. சமீபத்திலே பறந்த ஒரு கடற்பறவையின் குரல் அவன் செவியில், “அகண்டமான இந்தக் கடலும், வானமும் வெளியும் இருக்கையில் மனிதப் புழுக்கள் வாழும் குறுகிய இக்கப்பலுக்குள் ஏன் இருக்கிறாய்?” என்று பரிகாசம் செய்வது போல் தொனித்தது. தூரத்தில் மற்றொரு கப்பல் வருவதை ரங்கராஜன் பார்த்தான். அதிலும் இவர்களைப் போன்ற அறிவீனர்களும், மந்த மதியுடையோரும் குறுகிய புத்திக் காரர்களும், அற்பச் சிந்தனையாளர்களும் இருக்கப் போகிறார்கள். என்னே இந்த உலக வாழ்க்கை! அடுத்த விநாடி ரங்கராஜன் தலைகுப்புறக் கடலில் விழுந்தான். படாலென்று மண்டையில் ஏதோ தாக்கியது. ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் நீருக்குள்ளிருந்து கிளம்பிக் குமிழி குமிழியாய் மேலே போய்க் கொண்டிருந்தன. அவனோ கீழே கீழே போய்க் கொண்டிருந்தான். ஐயோ மூச்சுவிட ஏன் இவ்வளவு கஷ்டமாயிருக்கிறது! இந்தச் சொக்காய் மென்னியை இறுகப் பிடிக்கின்றனவே! அவற்றைக் கிழித்தெறியலாம். ரங்கராஜன் கோட்டை கழற்றிவிட்டு ஷர்ட்டைக் கிழிக்கத் தொடங்கினான். அடுத்த நிமிஷம் அவன் ஸ்மரணை இழந்தான். அதல பாதாளத்திலிருந்த எங்கேயோ மேலே மேலே போய்க் கொண்டிருக்கிறோமே; எங்கே போகிறோம்? அப்பா! இதோ கொஞ்சம் வெளிச்சம் காண்கிறது. மூச்சு நன்றாய் விட முடிகிறது. அடிவாரத்திலிருந்து மேல் பரப்புக்கு வந்து விட்டோ ம் போலிருக்கிறது. கண்களைச் சற்றுத் திறந்து பார்ப்போம். இது என்ன அதிசயம்? இங்கே எப்படி வந்தோம்? இந்த இளம்பெண் யார்? இவள் ஏன் இப்படி நம்மைப் பார்க்கிறாள்? என்ன அலட்சிய புத்தி கொண்ட பார்வை? அது என்ன மாறுதல், அவள் முகத்தில் இப்போது? என்ன சிந்தனை செய்கிறாள்? அதோ கொஞ்சம் வயதானவளாய்த் தோன்றும், அந்த ஸ்திரீ யார்? இங்கே நிற்பவர் டாக்டரைப் போல் காணப்படுகிறாரே? நாம் எங்கே இருக்கிறோம்? இது கப்பல் அறை போல் தான் இருக்கிறது. ஆனால், நாம் வந்த கப்பலில் இவர்களைக் காணவில்லையே? எல்லாம் புது முகமாயிருக்கிறதே? ஒரு வேளை தண்ணீரில் மூழ்கி இறந்து போன நாம் இப்போது ஆவி உலகத்தில் இருக்கிறோமோ? இவர்கள் எல்லாம் ஆவிகளோ? ஒரு வேளை கனவோ? கடலில் விழுந்தது கூடக் கனவில் தானோ? நிஜம் போல் தோன்றுகிறதே, மறுபடியும் கண்ணை மூடிப் பார்ப்போம். ஒரு நிமிஷம் திறந்திருந்த ரங்கராஜனுடைய கண்கள் மறுபடியும் மூடிக் கொண்டன. ரங்கராஜன் இரண்டாவது முறை கண் விழித்த போது, அவன் படுத்திருந்த அறையில் ஒருவருமில்லை. ஆனால், சில நிமிஷ நேரத்துக்கெல்லாம் காலடிச் சத்தம் கேட்டது. இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள். அவர்களில் ஒருவர் முன் தடவை கண் விழித்த போது பார்த்த இந்திய டாக்டர், இன்னொருவர் வெள்ளைக்கார டாக்டர். ரங்கராஜன் விழித்திருந்ததைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் ஏக காலத்தில், “ஹலோ!” என்று கூவினார்கள். பிறகு வெள்ளைக்கார டாக்டர், “ராஜா சாகிப்! உடம்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். ‘ராஜா சாகிப்பாவது, நாசமாய்ப் போனதாவது’ என்று ரங்கராஜன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ஆனால், வெளியில், “எனக்கென்ன தெரியும்? நானா டாக்டர்! நீங்கள் அல்லவா சொல்ல வேண்டும்?” என்றான். டாக்டர்கள் சிரித்தார்கள். வெள்ளைக்கார டாக்டர் “பேஷ்! ராஜாசாகிப் தண்ணீரில் ஓர் அமுங்கு அமுங்கியது அவருடைய மூளையை கூர்மைப்படுத்தியிருக்கிறது போல் காண்கிறது,” என்றார். “உங்களுக்கும் அந்தச் சிகிச்சை கொஞ்சம் தேவை போல் காண்கிறதே!” என்றான் ரங்கராஜன். டாக்டர்கள் மறுபடியும் சிரித்தார்கள். பிறகு, “ராஜா சாகிப்! போனது போகட்டும். இனிமேலாவது மிதமாய்க் குடியும். மது மயக்கம் பொல்லாதது” என்றார் வெள்ளைக்கார டாக்டர். “மது மயக்கமோ, காதல் மயக்கமோ?” என்றார் இந்திய டாக்டர். இப்போது ரங்கராஜனுக்கு உண்மையிலேயே தலை மயங்க ஆரம்பித்தது. “கனவான்களே! தயவு செய்து ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறீர்களா?” என்று கேட்டான். “ஒன்றல்ல, நூறு சந்தேகங்களை வேண்டுமானாலும் நிவர்த்தி செய்கிறோம், ராஜா சாகிப்! ஹிஸ் ஹைனஸ் ரங்கதுர்க்கம் ராஜாவுக்கு நாங்கள் அவ்வளவுகூடச் செய்ய வேண்டாமா!” என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். “எனக்குள்ளது ஒரே சந்தேகந்தான். நான் பைத்தியமா, நீங்கள் பைத்தியமா என்பதை மட்டும் சொல்லி விட்டால் போதும்.” ஒரு பெரிய அவுட்டுச் சிரிப்புக் கிளம்பிற்று. வெள்ளைக்கார டாக்டர் அருகில் வந்து ரங்கராஜன் முதுகில் தட்டிக் கொடுத்து, “பேஷ்! பேஷ்! நல்ல கேள்வி! ஏ! ஹஹ்ஹஹ்ஹா!” என்று மறுபடியும் சிரித்தார். அவருடைய திருவாயிலிருந்து சாராய நாற்றம் குபுகுபுவென்று வந்தது. “டாக்டரே! தயவு செய்து தூரநின்று பேசும். நான் வைதிகப் பற்றுள்ள ஹிந்து. உம்மைத் தொட்டால் தலை முழுக வேண்டும்,” என்றான் ரங்கராஜன். பிறகு, “நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. உங்களுக்கும் அது சந்தேகம் போலிருக்கிறது. போகட்டும், நீங்கள் யார் என்றாவது தயவு செய்து சொல்வீர்களா?” என்று கேட்டான். வெள்ளைக்கார டாக்டர் ஒரு நிமிஷம் யோசனையிலாழ்ந்தவர் போலிருந்தார். இந்திய டாக்டர், “ஆஹா! ராஜா சாகிப் எங்களை நாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ள அநுமதி கொடுங்கள். நான் தான் டாக்டர் சிங்காரம், குமாரபுரம் ஜமீன்தாரின் குடும்ப வைத்தியன். இவர் டாக்டர் மக்டானல். இந்தக் கப்பலின் வைத்தியர். -போதுமா? இன்னும் ஏதாவது தெரிய வேண்டுமா?” “இந்தக் கப்பலின் பெயர் என்ன?” “எச்.எம்.எஸ்.ரோஸலிண்ட்.” “நிஜமாகவா? இதன் பெயர் ‘பிரிட்டானியா’ அல்லவென்று நிச்சயமாகத் தெரியுமா?” டாக்டர் சிங்காரம் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார். ஆனால், டாக்டர் மக்டனால் சிரிக்கவில்லை. அவர் ஒரு சீட்டில், “கொஞ்சம் மூளை பிசகியிருப்பதுபோல் காண்கிறது” என்று எழுதி டாக்டர் சிங்காரத்திடம் காட்டினார். “ஓ டாக்டர் கனவான்களே! இன்னும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிடுங்கள். நான் யார்?” என்று கேட்டான் ரங்கராஜன். இப்போது டாக்டர்கள் சிரிக்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு டாக்டர் மக்டனால், “நாங்கள் யாரென்று தெரியப்படுத்திக் கொண்டோ ம். நீர் யாரென்று நீரல்லவா தெரியப்படுத்த வேண்டும்? உம்முடைய பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் ரங்கராஜன் என்று இதுவரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது சரியோ தப்போ என்று இப்போது சந்தேகமாய் விட்டது.” “இந்தச் சந்தேகம் ஏன் வந்தது?” “என்னை நீங்கள் ‘ராஜாசாகிப்’ என்று அழைப்பதனால்தான்.” “அப்படியா? அது போகட்டும். இன்னும் தூக்கக் கலக்கம் உமக்குப் போகவில்லை. சற்று நேரம் தூங்கும். அப்புறம் நாங்கள் வந்து உம்முடைய சந்தேகங்கள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்கிறோம்” என்று டாக்டர் மக்டானல் சொல்லிவிட்டு, டாக்டர் சிங்காரத்தையும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியேறினார். அறைக்கு வெளியில் சென்றதும் அவர் டாக்டர் சிங்காரத்திடம், “இது ஒரு விசித்திரமான கேஸ். தண்ணீரில் அலை வேகமாய்த் தாக்கியதால் மூளை சிறிது குழம்பியிருக்கிறது. தம்மை வேறு யாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பழைய ஞாபகம் கொஞ்சம் இருக்கிறது. அதனால்தான் ரங்கராஜ் என்று பெயர் சொல்கிறார். ரங்கதுர்க்கம் ராஜா என்பதில் ‘துர்க்கம்’ தழுவி விட்டது. இங்கிலாந்துக்குப் போகும் போது இவர் ‘பிரிட்டானியா’ கப்பலில் போயிருக்க வேண்டும், விசாரித்தால் தெரியும்,” என்று கூறினார். 2 டாக்டர்கள் வெளிச் சென்றதும் ரங்கராஜன் படுக்கையிலிருந்து எழுந்தான். முதலில் தான் அணிந்திருந்த உடைகளைக் கவனித்தான். அவை தன்னுடையவை அல்ல என்பது நிச்சயம். பிறகு அறையைச் சோதித்தான். அந்த அறையை அதற்கு முன் அவன் பார்த்ததில்லை. அதிலிருந்த சாமான்களும் அப்படியே. பெட்டிகளைத் திறந்து சோதிக்கலானான். அவற்றில் சாதாரண உடுப்புகளுடன் சரிகைப் பூவேலைகள் செய்த வெல்வெட் சட்டைகள், குல்லாக்கள் முதலியவை காணப்பட்டன. சாராயப் புட்டிகள், சிகரெட் பெட்டிகள் முதலியவை இருந்தன. இந்த அறையில் யாரோ ஓர் இளம் ஜமீன்தார் பிரயாணம் செய்திருக்க வேண்டும். டாக்டர்கள் அவனை அந்த ஜமீன்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் பரிசோதனை செய்தபோது, “ஹிஸ் ஹைனஸ் ரங்கதுர்க்கம் ராஜா” என்று தலைப்பில் அச்சிட்ட சில காகிதங்கள் அகப்பட்டன. மறுபடியும் புரட்டியபோது, சில புகைப்படங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்றைப் பார்த்ததும் ரங்கராஜன் திடுக்கிட்டான். ஏனெனில், அப்படத்திலிருந்த உருவம் அவனைப் போலவே இருந்தது. மூக்கு, முழி, உதடு, நெற்றி, தலைக்கிராப்பு எல்லாம் தத்ரூபம். உடையில் மட்டுந்தான் வித்தியாசம் காணப்பட்டது. இன்னொரு புகைப்படம் ரங்கராஜனுடைய உள்ளத்தில் விசித்திரமான உணர்ச்சியை உண்டாக்கிற்று. அவ்வுணர்ச்சியின் இயல்பு எத்தகையதென்பது அவனுக்கே சரியாக விளங்கவில்லை. அது ஓர் இளம் கன்னிகையின் படம். முதல் தடவை தான் கண்விழித்துப் பார்த்தபோது எதிரில் நின்ற பெண் இவளாய்த் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான். இவள் யார்? தன்னிடம் சிரத்தைக் கொண்டு தன்னைப் பார்க்க வந்த காரணம் என்ன? சீ! அவள் தன்னைப் பார்க்கவா வந்தாள்? வேறு யாரையோ அல்லவா பார்க்க வந்தாள்? அவனுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்? அச்சமயம் ரங்கராஜனுக்குத் தான் முன்பின் பார்த்திராத ரங்கதுர்க்கம் ராஜாவின் மீது கொஞ்சம் கோபம் வந்தது. ஆனால், உடனே சாமாளித்துக் கொண்டான். ‘என்ன நமக்குக் கூட அசடு தட்டுகிறதே!’ என்று நினைத்தான். ஆனால் உடனே, ‘நமக்கு அசடு தட்டினால் அதுவும் கொஞ்சம் உயர் தரமாய்த்தான் இருக்கும்’ என்று எண்ணிக் கொண்டான். பெட்டிகளை மூடிவிட்டு எழுந்தான். குழப்பம் நீங்குவதற்கு அவன் இன்னும் இரண்டே இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். உண்மையாகவே இந்தக் கப்பல், தான் பம்பாயில் ஏறி வந்த கப்பல் இல்லையா? இல்லையென்றால், இது எங்கிருந்து கிளம்பி எங்கே போகிறது? இரண்டாவது, தன்னை யார் என்று இவர்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த பேர்வழியின் சங்கதியென்ன? தன்னை அவனென்று இவர்கள் தவறாக எண்ணங் கொண்டிருப்பதை எவ்வாறு நிவர்த்திப்பது? ரங்கராஜன் அறையிலிருந்து வெளிவந்து நடக்க முயற்சித்தான். கொஞ்சம் பலஹீனத்தைத் தவிர, மற்றபடி தேகம் சரியான நிலைமையிலிருப்பதாக உணர்ந்தான். தளத்தின் விளிம்பு வரை சென்று கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றான். அன்று தான் இவ்வாறு நின்றதும், அப்போது தன் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களும், கடைசியில் தலைக்குப்புறக் கடலில் விழுந்ததும் எல்லாம் தெளிவாக ஞாபகம் வந்தன. ஏதோ தவறு நடந்திருக்கிறதென்றும், அதை நிவர்த்திப்பது தன் கடமையென்றும் உறுதி கொண்டான். சுற்றுமுற்றும் பார்த்தபோது, கப்பலின் ஒரு பக்கத்தில் ‘எச்.எம்.எஸ். ரோஸலிண்ட்’ என்று பெரிதாக எழுதியிருந்தது தெரிய வந்தது. எனவே, தான் வந்த கப்பல் இது இல்லையென்பது நிச்சயம். அப்போது அந்தப் பக்கம் மாலுமி ஒருவன் வந்ததைக் கண்டதும் அவனை, நிறுத்தி “இந்தக் கப்பல் எங்கிருந்து கிளம்பி எங்கே போகிறது? இப்போது எங்கேயிருக்கிறோம்?” என்று கேட்டான். அந்த மாலுமி ரங்கராஜனை ஏற இறங்கப் பார்த்துவிட்டுக் குப்பென்று சிரித்தான். “ஓ! கடலில் விழுந்த ராஜா இல்லையா நீர், இன்னொரு தடவை விழப் போகிறீரா?” என்று கேட்டான். ரங்கராஜனுக்குக் கோபம் வந்தது. “ஓய் உம்முடைய பரிகாசமெல்லாம் அப்புறம் இருக்கட்டும். இந்தக் கப்பலின் காப்டனை நான் உடனே பார்க்க வேண்டும். அவரிடம் தயவு செய்து என்னை அழைத்துப் போகிறீரா?” என்று கேட்டான். “ராஜாசாகிப் ரொம்பக் கோபமாயிருப்பது போல் காண்கிறது. வாரும், போகலாம்” என்றான் மாலுமி. ரங்கராஜன் அவனைப் பின் தொடர்ந்து சென்றான். போகும் வழியில் அந்தக் கப்பல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் போகிறதென்றும், ஏடனைத் தாண்டியாகிவிட்டதென்றும், இரண்டு நாளில் பம்பாய்த் துறைமுகத்தை அடையுமென்றும் அந்த மாலுமியிடமிருந்து தெரிந்து கொண்டான். ஒருவாறு அவனுக்கு நிலைமை தெரியவந்தது. ‘பிரிட்டானியா’ கப்பலிலிருந்து, தான் கடலில் குதிக்க எத்தனித்த அதே சமயத்தில் எதிரே ஒரு கப்பல் வரவில்லையா? அந்தக் கப்பல் தான் இது. தான் கடலில் குதித்த அதே சமயத்தில் இந்த முட்டாள் ராஜாவும் எக்காரணத்தினாலோ கடலில் விழுந்திருக்க வேண்டும். அவனை எடுப்பதற்குப் பதிலாகத் தன்னை எடுத்திருக்கிறார்கள், இந்தக் கப்பல்காரர்கள். தன்னுடைய தோற்றமும், அவனுடைய தோற்றமும் விபரீதமாக ஒத்திருந்தபடியால் அவர்கள் இந்த ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். ராஜாவின் கதி என்னவாயிற்றோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்; தன்னுடைய கடமை தெளிவானது; தான் ரங்கதுர்க்கம் ராஜா அல்லவென்பதை உடனே கப்பல் தலைவனிடம் தெரியப்படுத்தி விடவேண்டும். 3 “ஓகோ! ராஜாசாகிபா? என்ன அதற்குள் அலையக் கிளம்பிவிட்டீரே! டாக்டர் உத்தரவு கொடுத்தாரா?” என்றான் காப்டன். “டாக்டர் உத்தரவு கொடுக்கவில்லை. ஆனால், உம்மிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கிறது. அதற்காக வந்தேன்.” “அந்த முக்கியமான விஷயம் இன்னும் மூன்று நாளைக்கு பம்பாய் போய்ச் சேரும் வரையில் காத்துக் கொண்டிருக்காதா? இதோ பாரும், ராஜா சாகிப்; வானம் ஒரு மாதிரியாய் இருக்கிறது. புயல் அடிக்கும் போல் இருக்கிறது.” “நான் சொல்ல வேண்டிய விஷயம் மூன்று நாள் காத்திராது. மிகவும் அவசரமானது. முக்கியமானது.” “அப்படியானால் சொல்லும் சீக்கிரம்.” “நீர் என்னை ‘ராஜாசாகிப்’ என்று அழைக்கிறீர். என்னை ரங்கதுர்க்கம் ராஜா என்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். இது தவறு. நான் ரங்கதுர்க்கம் ராஜா அல்ல. சாதாரண மனிதன். என் பெயர் ரங்கராஜன். தற்செயலாகப் பெயர் இப்படி ஏற்பட்டிருக்கிறது.”… இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில் டாக்டர்கள் இருவரும் அங்கு வந்தார்கள். பெரிய டாக்டர் கப்பல் தலைவனுடைய காதில் ஏதோ சொன்னார். உடனே காப்டன் ‘ஹஹ்..ஹஹ்ஹா’ என்று சிரிக்கத் தொடங்கினார். கொஞ்சம் சிரிப்பு அடங்கியதும் ரங்கராஜன் கூறினான்: “நீரும் இந்த டாக்டர்களைப் போன்ற மழுங்கல் மூளை உள்ளவர் என்று நான் நினைக்கவில்லை. போகட்டும், என்னுடைய கடமையை நான் செய்து விடுகிறேன். இங்கிலாந்திலிருந்து இந்தக் கப்பலில் கிளம்பிய ரங்கதுர்க்கம் ராஜா நான் அல்ல. ஐந்து நாளைக்கு முன்பு பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பிய ‘பிரிட்டானியா’ கப்பலில் நான் இங்கிலாந்துக்குப் பிரயாணமானேன்.” “அப்படியானால் இங்கே எப்படி வந்து குதித்தீர்?” என்று கேட்டார் காப்டன். “அது எனக்குத் தெரியாது. ஏடனுக்கு இப்பால் ‘பிரிட்டானியா’ கப்பலிலிருந்து கடலில் குதித்ததுதான் தெரியும்” “ஏன் குதித்தீர்?” “உங்களைப் போன்ற மூடர்கள் வாழும் உலகத்தில் உயிர் வாழப் பிடிக்காமல் போனபடியால் தான்.” “போதும், போதும், டாக்டர் ராஜாசாகிபை அழைத்துக் கொண்டு போங்கள். சரியானபடி சிகிட்சை செய்யுங்கள்,” என்றார் காப்டன். டாக்டர்கள் ரங்கராஜனை அழைத்துக் கொண்டு சென்றதும், காப்டன் அங்கிருந்த மாலுமியிடம், “இந்தப் பையன் கதை சொல்லத் தொடங்கியதும் நான் கூட மிரண்டு விட்டேன். டாக்டர் சொன்னதுந்தான் ஒரு மாதிரி நிச்சயமாயிற்று. இந்தப் பையனுடைய கதை நிஜமென்றால், இவனைப் போன்ற இன்னொரு முட்டாள் இருக்க வேண்டுமல்லவா? உலகம் ஏககாலத்தில் இத்தகைய இரண்டு அசடுகளைத் தாங்குமா?” என்று கூறவே இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். டாக்டர்கள், ரங்கராஜனை நேரே அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் உட்கார வைத்தனர். அதே சமயத்தில் தலைப்பாகை சகிதமாக ஓர் இந்தியக் கனவான் அங்கே வந்தான். மெஸ்மெரிஸம் என்னும் வித்தையில் தாம் கை தேர்ந்தவர் என்றும், ரங்கதுர்க்கம் ராஜா தம்மை வேறு யாரோ என்று எண்ணி மயங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததென்றும், அவருடைய பிரமையைத் தாம் போக்கிவிட முடியுமென்றும் கூறினார். “எங்கே, உமது சாமர்த்தியத்தைக் காட்டும்,” என்றார் வெள்ளைக்கார டாக்டர். மெஸ்மெரிஸ்ட் ரங்கராஜன் அருகில் சென்றார். “தம்பி! நீ நான் சொல்வதைக் கேட்பாயாம். நல்ல தம்பியல்லவா? நீ சாதாரண மனிதனாய் இருப்பதற்குப் பதில், பெரிய ஜமீனுக்குச் சொந்தக்காரனாக வேண்டுமானால், நான் சொல்வதைக் கொஞ்ச நேரம் தடை சொல்லாமல் கேட்க வேண்டும். தெரிகிறதா? ஹும், ஹும்” என்றார். ரங்கராஜன் மௌனமாய் இருப்பது கண்டு, “அது தான் சரி, நல்ல பிள்ளை எங்கே சாய்ந்து கொள். கைகால்களைத் தளரவிடு. என் கணகளையே உற்றுப் பார். தூங்கு தூங்கு…” என்று பல தடவை உச்சரித்தார். ரங்கராஜன் கண்களை மூடினான். மெஸ்மெரிஸ்ட் கையால் அவனுடைய நெற்றியைத் தடவிக் கொண்டே சொல்கிறார். “நீ இப்போது உன்னை யாரோவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். உண்மையில், நீ ரங்கதுர்க்கம் ராஜா. உனக்குச் சொத்து சுதந்திரங்கள் ஏராளமாய் இருக்கின்றன. நீ குமாரபுரம் இளைய ஜமீன்தாரிணி ஸ்ரீமதி பிரேமலதா தேவியை காதலிக்கிறாய். (இப்போது ரங்கராஜனுக்குச் சிரிப்பை அடக்குவது பிரம்மப் பிரயத்தனமாயிருந்தது). நீ ரங்கதுர்க்கம் ராஜா… ரங்கதுர்க்கம் ராஜா…” இவ்வாறு பல தடவை கூறிவிட்டு, “இப்போது எழுந்திரு” என்று ஆக்ஞாபித்தார் மெஸ்மெரிஸ்ட். ரங்கராஜன் எழுந்து உட்கார்ந்தான். “இப்போது இவரை யார் என்று கேளுங்கள்,” என்று டாக்டர்களைப் பார்த்து கூறினார். டாக்டர் மக்டானல், “நீர் யார்?” என்று கேட்கவே, “நான் ரங்கராஜன்” என்று கண்டிப்பாகப் பதில் வந்தது. மெஸ்மெரிஸ்டின் முகம் விழுந்து போயிற்று. அவர், “இன்னும் மூன்று நாள் சேர்ந்தாற் போல் மெஸ்மெரிஸம் செய்தால், ராஜாவுக்குத் தமது சுய உணர்வு நிச்சயம் வந்து விடும்,” என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டு சென்றார். டாக்டர் சிங்காரம் தமது சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தார். “நான் செய்கிறேன். இப்போது மெஸ்மெரிஸம்” என்று சொல்லிக் கொண்டே அந்தக் கடிதத்தை ரங்கராஜன் பக்கம் நீட்டினார். “இந்தக் கடிதம் யார் எழுதினது, என்ன எழுதியிருக்கிறது என்று தயவு செய்து பாரும்” என்று சொல்லி ரங்கராஜன் கையில் கொடுத்தார். ரங்கராஜன் கடிதத்தை பிரித்து பார்த்தான். அதன் ஆரம்பம் அவன் மனத்தைக் கவர்ந்தது. அது ஒரு காதல் கடிதம் என்று உடனே தெரிந்து போயிற்று. அதைப் போன்ற ஆச்சரியமான காதல் கடிதத்தை யாரேனும் எழுதக் கூடுமென்பதாக அவன் கனவில் கூடக் கருதியிருக்க மாட்டான். எனவே, முகத்தில் புன்னகை ததும்ப அதை வாசித்துக் கொண்டு போனான். இதைப் பார்த்த டாக்டர் சிங்காரம், “வாருங்கள் மெஸ்மெரிஸம் வேலை செய்யட்டும்; நாம் போய்ப் பிறகு வரலாம்” என்று கூறி டாக்டர் மக்டானலை அழைத்துச் சென்றார். இரண்டு மணி நேரங்கழித்து அவர் குமாரபுரம் ஜமீன்தாரிணியையும் அழைத்துக் கொண்டு ரங்கராஜனுடைய அறையை நோக்கி வந்தபோது, கப்பல் விளிம்புக்கருகில் இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு ரங்கராஜனும் குமாரபுரம் இளைய ஜமீன்தாரிணி பிரேமலதா தேவியும் ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது அவரும் குமாரபுரம் ஜமீன் தாரணியும் அடைந்த மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. டாக்டர் சிங்காரத்துக்கு ஏற்பட்ட ஆச்சரியமிகுதியினால் அவர் வாயிலிருந்த சுருட்டு லபக்கென்று விழுந்து போய் விட்டது. ரங்கராஜனுடைய கவனத்தைக் கவர்ந்த ஆச்சரியமான காதல் கடிதத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேனல்லவா? அதைக் கடிதம் என்று சொல்வதைவிடக் காவியம் என்று சொல்வது பொருத்தமாயிருக்கும். அதனுடைய சில பகுதிகளைச் சற்று ருசி பாருங்கள்: "என் உடல் பொருள் ஆவியைக் கொள்ளை கொண்ட என் கண்ணில் கருமணி போன்ற, அருமையில் சிறந்த, பெருமையில் மிகுந்த, தேனைப் போல் இனித்த மானைப்போல் விழித்த….குமாரபுரம் இளைய ஜமீன்தாரிணி ஸ்ரீமதி பிரேமலதா தேவிக்கு ரங்கதுர்க்கம் ராஜாவாகிய நான் எழுதிக் கொண்டது. பெண் பாவாய்! என் இருதயமானது உமக்காக எவ்வாறு துடிதுடித்துக் கொண்டிருக்கிறதென்பதும், இரவிலும், பகலிலும் கனவிலும், நனவிலும் நான் எப்படி உம்மையே கண்டு, கேட்டு, வருந்தி, மகிழ்ந்து வருகிறேன் என்பதும், எல்லாம் நீர் அறிந்ததே. என்னுடைய இருதயத்தை உமக்குத் திறந்துகாட்டி, ‘நான் இருப்பதா? இறப்பதா?’ என்னும் கேள்வியை உம்மிடம் கேட்டுப் பதில் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக நானும் இந்தக் கப்பல் டோ வர் துறைமுகத்திலிருந்து கிளம்பியது முதல் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அதற்கு இதுவரையில் தக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ‘நாளைக்கு நாளைக்கென்று’ நாள் போய் வருகிறது. ‘பொறுத்ததெல்லாம் போதும். இனிப் பொறுக்க முடியாது’ என்பதற்கேற்ப இக்கடிதம் எழுதத் துணிந்தேன். இரண்டு மூன்று தடவைகளில் உம்மிடம் இந்த விஷயத்தைப் பிரஸ்தாபித்திருக்கிறேன் என்பது வாஸ்தவமே. அப்போதெல்லாம் நீர் ‘முடியாது’ என்று செப்பியிருக்கிறீர். ஆனால் மனப்பூர்வமாக அப்படி நீர் சொல்லவில்லையென்பது எனக்குத் தெரியும். ஸ்திரீகள் ‘முடியாது’ என்று சொன்னால், அது ‘சரி’ என்பதற்கு அடையாளம் என்பதை நான் அறியாதவன் அல்ல. மேலும் நான் மனப்பூர்வமாகக் கேட்கவில்லையென்றும் விளையாட்டுக்குக் கேட்கிறேன் என்றும் நீர் நினைத்திருக்கலாம். அவ்வாறு இல்லையென்றும், இந்த மாதிரி விஷயங்களில் விளையாடும் வழக்கம் எனக்கில்லையென்றும் உறுதி கூறுகிறேன். சுருங்கச் சொன்னால், நீர் என்னை மணம் புரிய இசைந்து என்னைப்போல் பாக்கியசாலி உலகில் வேறு யாருமில்லாமல் செய்ய வேண்டுமென்பதற்கு என்னுடைய காரணங்கள் வருமாறு: 1. நான் உம்மைக் காதலிக்கிறேன். 2. நீர் என்னைக் காதலிக்கிறீர். (இதை நீர் மற்றவர்களிடமிருந்து எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் என்னிடமிருந்து மறைக்க முடியாது. மனத்திற்கு மனமே கண்ணாடியல்லவா?) 3. என்னைப்போல் எல்லா வகையிலும் சிறந்த குணம், பணம், கல்வி, உருவம், அந்தஸ்து எல்லாம் பொருந்திய மணாளன் உமக்குக் கிடைப்பது அரிது. 4. உம்மைப்போல் அழகும், குணமும், கல்வியும் பொருந்தியவர்கள் அநேகர் இருக்கலாமாயினும், அவர்களுடைய துர்ப்பாக்கியத்தினால் அப்படிப்பட்டவர்கள் மேல் என் மனம் செல்லவில்லை. அதிர்ஷ்டம் உமக்கு இருக்கும்போது அவர்கள் மேல் எப்படி என் மனம் செல்லும்? 5. உமக்காக என்னையும், எனக்காக உம்மையுமே கடவுள் படைத்திருக்கிறார் என்பது திண்ணம். இதை நான் மட்டும் சொல்லவில்லை; இந்தக் கப்பலில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். ஆகவே, கடவுளுடைய விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டுமல்லவா? என்னுடைய கோரிக்கைக்கு இணங்க நீர் தயங்குவதற்கு ஒரு காரணம் இருக்கக்கூடும். உம்முடைய தகப்பனாருடைய நிலைமை எனக்குத் தெரியாதோ என்று நினைக்கலாம். ஆனால் அப்படி நினைக்க வேண்டாம். நான் அவ்வாறெல்லாம் ஏமாறுகிற பேர்வழியல்ல. உம் தகப்பனாருடைய ஜமீன் கடனில் மூழ்கியிருக்கிற விஷயமெல்லாம் எனக்குத் தெரிந்ததுதான். பின் ஏன் இந்தச் சம்பந்தத்துக்கு நான் சம்மதிக்கிறேன்? அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. உம்முடைய தகப்பனாரிடம் இராஜதந்திரம் இருக்கிறது. என்னிடம் பணம் இருக்கிறது. நாங்கள் இருவரும் சேர்ந்துவிட்டால், சென்னை அரசாங்கமே எங்கள் கையில் தான் - இந்த அபிப்பிராயம் எனக்கும் டாக்டர் சிங்காரம் அவர்களுக்கும் ஏககாலத்தில் தனித் தனியே தோன்றியது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இன்னொரு விஷயம்; நானும் டாக்டர் சிங்காரமும் சில சமயம் ஒரே விஷயத்தைச் சொல்ல நேர்ந்த போது, அவர் சொல்லிக் கொடுத்ததையே நான் சொன்னதாக நீர் சந்தேகப்பட்டீர். இந்தக் கடித விஷயத்தில் அத்தகைய சந்தேகம் உமக்கு ஏற்பட சிறிதும் நியாயம் இல்லை. இதை நானே எழுதினதுமல்லாமல் அவரிடம் காட்டக் கூடவில்லையென்பதை வற்புறுத்தி அறிவிக்கிறேன். கடைசியாக, என்னை மணம்புரிய இசையும்படி உம்மை நான் கேட்டுக்கொள்வது ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் என்பதை இங்கே தெளிவாகச் சொல்லிவிட வேண்டியது அவசியம்; அது என்னவெனில், நம்முடைய, சமஸ்தானத்தின் மானேஜர் மிஸ்டர் ஹுட்துரை சம்மதத்தின் பேரில் தான் இந்தக் கல்யாணம் நடக்கக்கூடும். சமஸ்தானம் மன்னர்களின் கல்யாணம் மற்றச் சாதாரண மனிதர்களின் கல்யாணங்களைப் போலல்ல. இது ஓர் இராஜாங்க விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மிஸ்டர் ஹுட் துரைக்கு உம்மைப் பிடித்திருக்குமென்று எனக்கும் பூரண நம்பிக்கை உண்டு. ஏனெனில், உம்மைப்போன்ற நாகரிகமடைந்த பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று அவர் பல தடவைகளில் சொல்லியிருக்கிறார். உம்மைப்பற்றி நான் தக்க முறையில் எடுத்துக் கூறினால் அவர் சம்மதிப்பதைத் தவிர வேறு வழியிராது. இந்த நிபந்தனைக்குட்பட்டு நமது கல்யாணத்தை இப்போதே நிச்சயம் செய்துவிட வேண்டுமென்று மிகவும் ஆவல் கொண்டிருக்கிறேன்! இந்தக் கடிதத்துக்குத் தாங்கள் உடனே சம்மதமான பதிலைத் தெரிவிக்க வேண்டியது. இன்று மாலைக்குள் தங்களிடமிருந்து அநுகூலமான பதில், கடித மூலமாகவோ வாய்மொழியாகவோ கிடைக்காவிட்டால் இன்றிரவு நான் தற்கொலை செய்து கொள்வேன்; அல்லது அந்த முயற்சியில் பிராணனை விடுவேன் என்பது சத்தியம், சத்தியம், சத்தியம். இங்ஙனம், நளின பூஷண ராவ் ராஜா ஆப் ரங்கதுர்க்கம் 2 மேற்படி கடிதத்தைப் படித்ததும் முதலில் கொஞ்ச நேரம் ரங்கராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. அப்புறம் சிறிது விளங்க ஆரம்பித்தது. புத்தகங்கள் நிறையப் படித்து ஜீரணிக்கப் பெறாதா பொறுக்கி எடுத்த முட்டாள் ஒருவனால் இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஜமீன்தார்கள், ராஜாக்கள் முதலியோரிடம் ரங்கராஜன் எப்போதுமே அதிக மதிப்பு வைத்ததில்லை. ஆனால் இத்தகைய கடிதம் எழுதக் கூடிய புத்திசாலி ஒருவன் அவர்களிடையே இருப்பான் என்று அவன் கூட எதிர்பார்த்தது கிடையாது. அதிலும் அந்தக் கடைசி வாக்கியம்! ஒரு விஷயம் அவனுக்கு திருப்தியளித்தது. இந்தக் கடிதம் யாருக்கு எழுதப் பெற்றதோ, அந்தப் பெண்மணி இந்த வடிகட்டின அசட்டினுடைய அதிசயமான காதலை ஏற்றுக் கொள்ளவில்லையென்பது நிச்சயம். ஆனால் உடனே இன்னோர் எண்ணம் தோன்றியது; அப்பெண் தன்னைப் பார்த்தபோது, இக்கடிதத்தை எழுதிய புள்ளி என்று தானே நினைத்திருப்பாள்? ஐயோ! அவமானமே! ரங்கராஜனுக்கு வெகு கோபம் வந்தது. அந்த முட்டாள் டாக்டரைக் கண்டு இரண்டு திட்டுத் திட்டி விட்டுக் கடிதத்தை அவரிடம் கொடுத்து வர வேண்டுமென்று கிளம்பினான். அறைக்கு வெளியே நாலடி வைத்ததும் ஓர் இளம்பெண் எதிரில் வருவதைக் கண்டான். முதன் முதலில் தனக்கு ஸ்மரணை வந்தபோது எதிரில் நின்றவளும், புகைப்படத்திலிருந்தவளும் இந்தப் பெண் தான் என்பதில் சந்தேகமில்லை. சட்டென்று ஒரு யோசனை உதித்தது. அந்தப் பித்துக்கொள்ளி டாக்டரைத் தேடிக் கொண்டு போவதற்குப் பதிலாக இவளிடம் கடிதத்தை கொடுத்து விட்டாலென்ன? நல்ல யோசனைதான். ஆனால் எனது கதாநாயகனைப் பற்றி இதைச் சொல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது. அதை நிறைவேற்ற அவனுக்குத் தைரியம் உண்டாகவில்லை. சர்வகலாசாலையின் பரீட்சை மண்டபம் எதிலும் ஏற்படாத மயக்கமும் தயக்கமும் இப்போது அவனுக்கு ஏற்பட்டன. இந்த நெஞ்சு ஏன் இப்படி அடித்துக் கொள்கிறது? பகவானே! இதோ நெருங்கி வந்துவிட்டாள், ஆனால் இந்த நாக்கு ஏன் இப்படி ஒட்டிக் கொள்கிறது? -இந்த அசந்தர்ப்பமான நிலைமையிலிருந்து அவனை என் கதாநாயகியாக்கும் விடுதலை செய்தாள். “என்னுடைய கடிதம் ஒன்று தங்களிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன். அப்படியானால் அதைத் தயவுசெய்து கொடுத்து விடுகிறீர்களா?” என்று ஸ்ரீமதி பிரேமலதா கேட்டபோது, ரங்கராஜன் இரண்டாந்தடவை சமுத்திரத்திலிருந்து தன்னை யாரோ தூக்கி எடுத்துக் காப்பாற்றியது போன்ற உணர்ச்சியடைந்தான். ஆனால், இன்னமும் சிறிது தடுமாற்றத்துடனேயே, “மன்னிக்க வேண்டும், அந்தக் கடிதம் என்னிடம் வந்ததற்கு நான் ஜவாப்தாரியல்ல. இப்போது அதைத் திருப்பிக் கொடுப்பதற்காகத்தான் அந்தப் பைத்தியக்கார டாக்டர்” என்று சொல்லிக் கொண்டே கடிதத்தை நீட்டினான். பிரேமலதா அதை வாங்கிக் கொண்டு “அவர்கள் பேரிலெல்லாம் குற்றம் சொல்லக் கூடாது. என்னுடைய தவறுதான். நான் உடனே அதைக் கிழித்தெறிந்திருக்க வேண்டியது. இருந்தாலும் ரொம்ப விசித்திரமான கடிதமாயிருந்தபடியால் வைத்திருக்கலாமென்று தோன்றிற்று,” என்று சொல்லிக் கொண்டே அதைச் சுக்கு சுக்காய்க் கிழித்துச் சமுத்திரத்தில் எறிந்தாள். இதற்குள் அவர்கள் கைப்பிடிக் கம்பிகளின் ஓரமாய் வந்திருந்தார்கள். “அந்த டாக்டர் பைத்தியம் அக்கடிதத்தை நான் எழுதினேன் என்று நினைத்துக் கொண்டிருப்பது தான் பெரிய வேடிக்கை,” என்றான் ரங்கராஜன். “அவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியவில்லை. ஒருவர் நான் இன்னார் இல்லையென்றால் ‘இல்லை; நீர் அவர் தான்’ என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம்? என்னை அப்படி யாராவது சொன்னால் கோபந்தான் வரும்,” என்றாள் பிரேமலதா. இவள் சொல்வதில் ஏதேனும் உள்ளர்த்தம் இருக்குமோ என்று ரங்கராஜன் சந்தேகம் கொண்டான். அதாவது உண்மையில் தான் ரங்கதுர்க்கம் ராஜாவென்றே எண்ணி, ஆனால், புத்தி மாறாட்டமாயிருக்கும் நிலைமையில் அதை வற்புறுத்திச் சொல்லாமலிருப்பதே நலமென்று கருதி இப்படிக் கூறுகிறாளோ என்று நினைத்தான். இதைப் பற்றி அவன் சிந்திப்பதற்குள் பிரேமலதா “ஆமாம், நீங்கள் மூடர்கள் வாழும் இந்த உலகத்தில் வாழ விருப்பமின்றிக் கடலில் குதித்ததாகக் காப்டனிடம் சொன்னீர்களாமே, அது உண்மையா?” என்று கேட்டாள். “உண்மைதான். ஆனால், அப்படிச் செய்தது தவறு என்பதை இப்போது உணர்கிறேன்” என்றான் ரங்கராஜன். “ஜலத்துக்குள் முழுகினதும் பயமாயிருந்ததாக்கும்!” என்று சொல்லி பிரேமா புன்னகை புரிந்தாள். இவ்வாறு ஒரு பெண்ணினால் பரிகசிக்கப்படும் நிலைமையைத் தான் அடையக் கூடுமென்று ரங்கராஜன் கனவிலும் கருதியதில்லை. ஒரு பக்கம் கோபம்; ஒரு பக்கம் வெட்கம். “அதெல்லாம் ஒன்றுமில்லை. பயம் என்பது எப்படியிருக்குமென்றே எனக்குத் தெரியாது.” இப்படிச் சொன்னதும் ரங்கராஜனுக்கு வெட்கமும் கோபமும் இன்னும் அதிகமாயின. ஒரு பெண்ணிடம் தான் தைரியசாலி என்பதைத் தெரிவித்துக் கொள்ளும்படியான நிலைமை வந்ததே! என்ன வெட்கக் கேடு! எக்காரணத்தினாலோ அவளை விட்டுச் செல்வதற்கும் மனம் வராததால் ஆத்திரம் இன்னும் அதிகமாயிற்று. “பின்னர் இந்தப் பச்சாதாபம் ஏன் ஏற்பட்டது?” என்றது பிரேமாவின் பரிகாசக் குரல். “என்ன பச்சாதாபம்?” “கடலில் விழுந்தது தவறு என்ற எண்ணம்.” இதற்குத் தக்க விடை கண்டுபிடிக்க ரங்கராஜன் ஒரு பெரிய மானஸிக முயற்சி செய்தான். “தங்களைப் போன்ற பெண்மணி வசிக்கக்கூடிய உலகத்தை விட்டுப் போக முயல்வது தவறேயல்லவா?” என்றான். இவ்வளவு தைரியம் தனக்கு எப்படி வந்தது என்பதை நினைக்க அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது. பிரேமலதாவின் முகத்தில் நாணத்தின் ஒரு மெல்லிய சாயை தோன்றி மறைந்தது. பின்னர் அவள், “அதுதான் உண்மையான காரணமென்றால் நீங்கள் கடலில் விழுந்ததில் தவறில்லையே!” என்றாள். “அது எப்படி?” “கடலில் விழுந்ததனால் தானே என்னைப் போன்ற பெண்மணி ஒருத்தி இருப்பது உங்களுக்குத் தெரிய வந்தது?” ரங்கராஜன் தன் மனத்திற்குள், “அப்பனே! உனக்கு நன்றாய் வேண்டும்! நீ தான் மகா மேதாவி, உலகத்திலேயே பாக்கியெல்லாம் முட்டாள்கள் என்று எண்ணியிருந்தாயல்லவா? இப்போது கேவலம் ஒரு சிறு பெண்ணுக்குப் பதில் சொல்ல முடியாமல் முழி!” என்று சொல்லிக் கொண்டான். 3 “உங்களுக்கு ஆட்சேபமில்லையென்றால் இந்த நாற்காலிகளில் உட்கார்ந்து பேசலாமென்று தோன்றுகிறது,” என்றாள் பிரேமலதா. “இதில் ஆட்சேபம் என்ன இருக்கக் கூடும்?” என்றான் ரங்கராஜன். “இல்லை; உலகத்தில் எல்லாருந்தான் உட்காருகிறார்கள். ஆனால், புத்திசாலிகளும், அவர்கள் உயிர் வாழ்வதற்கு இந்த உலகத்தைத் தகுதியாக்குகிறவர்களும் உட்காரலாமோ என்னவோ என்று சந்தேகமாயிருந்தது.” ரங்கராஜன் வாய்விட்டுச் சிரிக்க வேண்டி வந்தது. பார்த்தால் பரம சாதுவாய்த் தோன்றும் இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு வாய்த்துடுக்கு எப்படி வந்தது என்று வியந்தான். இருவரும் உட்கார்ந்தார்கள். வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய் வெளி வந்து கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று வீசிற்று. அலைகளினால் மோதப்பட்ட கப்பல் தொட்டில் ஆடுவது போல் அசைந்து கொண்டிருந்தது. “இந்த உலகம் சிலருக்கு வெறுத்துப் போவது ஏன் என்பது எனக்கு விளங்குவதேயில்லை. உலகத்தில் அநுபவிப்பதற்கு எவ்வளவு இன்பங்கள் இருக்கின்றன! உதாரணமாக, சாயங்கால வேளைகளில் கப்பல் பிரயாணத்தைப் போல் இன்பமளிப்பது வேறென்ன இருக்கக்கூடும்?” “உண்மைதான், ஆனால், இவையெல்லாம் இரண்டாந்தரமான சந்தோஷங்களே. ஒத்த மனமுள்ளவர்களின் சல்லாபமும் சேரும்போதே இயற்கை இன்பங்கள் கூட உயிருள்ளவையாகின்றன.” இந்தக் கட்டத்திலேதான், இரண்டாம் பாகத்தின் இறுதியில் கூறியபடி டாக்டர் சிங்காரமும் ஜமீன்தாரிணியும் அங்கே வந்து சேர்ந்தார்கள். தூரத்திலேயே சிறிது பிரமித்து நின்ற பிறகு, அவர்கள் அருகில் வந்தார்கள். “ராஜா சாகிப், நான் செய்த மெஸ்மெரிஸம் பலித்துவிட்டதல்லவா? ஹஹ்ஹஹ்ஹா!” என்று சிரித்துக் கொண்டு டாக்டர் சிங்காரம் ரங்கராஜன் முதுகில் தட்டிக் கொடுத்தார். ஜமீன்தாரிணி, “என்ன ராஜாசாகிப்! உடம்பு சௌக்கியமாயிருக்கிறதா?” என்று கேட்டாள். ரங்கராஜன் எழுந்து நின்று, “சௌக்கியம் தான், அம்மா! உட்காருங்கள்,” என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியைக் காட்டினான். “இல்லை, இல்லை. நாங்கள் வேறு காரியமாகப் போகிறோம். நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்” என்றாள் ஜமீன்தாரிணி. டாக்டர் சிங்காரம், “பிரேமா! ஜாக்கிரதை! ராஜா சாகிப் மறுபடியும் கம்பிக்கு அருகே போனால் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்,” என்றார். “நானும் கூட விழுவதற்கா? அவ்வளவு தியாகத்திற்கு நான் தயாராகயில்லை,” என்றாள் பிரேமா. ஆயினும் அச்சமயம் அவள் ரங்கராஜனைப் பார்த்த பார்வை அதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவிப்பதாயிருந்தது. டாக்டரும் ஜமீன்தாரிணியும் போன பிறகு ரங்கராஜன், “இந்த டாக்டரைப் போன்ற மனிதர்களுடனேயே ஒருவன் பழக வேண்டுமென்றிருந்தால் கடலில் விழுந்து பிராணனை விடலாமென்று தோன்றுவது ஆச்சரியமா?” என்றான். “நான் அப்படி நினைக்கவில்லை. அசட்டுப் பேச்சுக்களைக் கேட்பதிலும் அசட்டு மனிதர்களுடன் பழகுவதிலுங்கூட ஒரு ரஸம் இல்லையா? கடவுள் நமக்கு ஏற்படுத்தியிருக்கும் அநேக சந்தோஷங்களில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொள்ளலாமே? உதாரணமாகப் பாருங்கள்; நான் இப்போது கிழித்தெறிந்த காதல் கடிதம் எவ்வளவு ரஸமாயிருந்தது? இம்மாதிரி கடிதம் ஓர் ஆசிரியரின் கற்பனையிலிருந்து தோன்றியிருந்தால், நாம் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்போம்?” “வாஸ்தவந்தான். இந்தக் கடிதத்துக்கு உபமானமாகச் சொல்லக் கூடிய கட்டம் ஒன்று ஜேன் ஆஸ்டின் எழுதிய”பிரைட் அண்டு பிரெஜுடிஸ்" என்னும் நாவலில் வருகிறது." “காலின்ஸ், எலிஸபெத்திடம் தன் காதலை வெளியிடுகிறானே, அதைத்தானே சொல்கிறீர்கள்?” ரங்கராஜனுக்கு மிகவும் ஆச்சரியமாய்ப் போயிற்று. ஜேன் ஆஸ்டின் நாவல்களின் சுவையை அறிந்து அநுபவிப்பது எல்லாருக்கும் சாத்தியமில்லையென்பது அவன் எண்ணம். இந்தப் பெண் அதைப் படித்திருந்ததுமல்லாமல், தான் எந்த கட்டத்தை மனத்தில் நினைத்தானோ, அதையே சொல்கிறாள். “ஜேன் ஆஸ்டின் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்குமோ?” என்று கேட்டான். அவ்வளவுதான்! அப்புறம் இரண்டு மணி நேரம் புத்தகங்களையும் ஆசிரியர்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அநேகமாக ஒருவருக்குப் பிடித்த ஆசிரியர்களும் புத்தகங்களும் இன்னொருவருக்கும் பிடித்திருந்ததாகத் தெரியவந்தது. கடைசியாக, அவர்கள் பிரிந்து செல்லும் தருவாயில் பிரேமலதா, “நீங்கள் ரங்கதுர்க்கம் ராஜா இல்லையென்று எவ்வளவு சொன்னாலும் இவர்கள் கேட்கப் போவதில்லை. நானாயிருந்தால் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும் என்று பேசாமல் இருந்து விடுவேன்,” என்றாள். 2 ரோஸலிண்ட் கப்பல் பம்பாய்த் துறைமுகத்துக்குச் சாதாரணமாய் வந்து சேர வேண்டிய தினத்துக்கு மூன்று நாளைக்குப் பிறகு வந்து சேர்ந்தது. துறைமுகத்துக்குச் சுமார் இருநூறு மைல் தூரத்தில் கப்பல் வந்தபோது பெரும் புயலடித்ததாகவும், அதன் காரணமாகக் கப்பல் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தன. துறைமுகத்துக்குச் சமீபத்தில் வந்து கப்பல் நின்றதும் தயாராய் அங்கே காத்திருந்த படகு ஒன்றிலிருந்து அவசரமாய் ஒரு மனிதன் கப்பலில் ஏறினான். அவன் நேரே கப்பல் தலைவரிடம் சென்று ஒரு தந்திச் செய்தியைக் கொடுத்தான். அதைப் படித்ததும் காப்டனுடைய முகம் சிவந்ததைப் பார்த்தால், தலைகால் தெரியாத கோபம் அவருக்கு அதனால் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று ஊகிக்க இடமிருந்தது. சாதாரணமாய், மிதமிஞ்சிக் குடித்திருக்கும் போது கூட அவர் முகம் அவ்வாறு சிவந்தது கிடையாது. வந்த தந்தியைக் கையில் எடுத்துக் கொண்டு, “எங்கே அந்த மோசக்கார பையன்?” என்று கேட்டுக் கொண்டே அவர் விரைந்து நடந்தார். கடைசியாக, அவர் ரங்கராஜனைக் கண்டுபிடித்ததும், “மிஸ்டர்! எங்களையெல்லாம் நீர் ஏமாற்றி விட்டீரல்லவா? இந்தியர்களே இப்படித்தான்,” என்றார். “நானா ஏமாற்றினேன்? என்ன ஏமாற்றம்?” என்று புன்னகையுடன் ரங்கராஜன் கேட்டான். பக்கத்திலிருந்த டாக்டர் சிங்காரம், “என்ன காப்டன் இந்தியர்களைப் பற்றி இப்படி அவதூறு கூறுகிறீர்? யார் என்ன ஏமாற்றினார்கள்?” என்றார். ஜமீன்தாரிணியும் கூடச் சேர்ந்து, “என்ன, என்ன?” என்று கேட்டாள். “இதோ பாரும் இந்தத் தந்தியை,” என்று காப்டன் தந்தியை நீட்டினார். ரங்கராஜன் கையை நீட்டி தந்தியை வாங்கினான். அவன் நெஞ்சு ‘படக் படக்’ என்று அடித்துக் கொண்டது. தன் ஜீவியத்தின் அபூர்வ இன்பக் கனவு இந்த க்ஷணத்தோடு முடிவடையப் போவதாக அவனுக்குத் தோன்றிற்று. “கொண்டு வா கத்தி! இதோ இந்தக் கண்களைத் தோண்டி எறிந்து விடுகிறேன். இப்படி ஏமாற்றுகிற கண்கள் இருந்தாலென்ன? இல்லாமல் நாசமாய்ப் போனாலென்ன?” என்று அலறினார் டாக்டர் சிங்காரம். அவர் கையில் ரங்கராஜனிடமிருந்து வாங்கிய தந்தி இருந்தது. “என்ன? என்ன?” என்று தவித்தாள் ஜமீன்தாரிணி. இதோ பாருங்கள் என்று தந்தியை அவளிடம் கொடுத்தார். பிறகு ரங்கராஜனை ஒரு நொடிப் பார்வை பார்த்துவிட்டு, “பேர்வழி முழிப்பதைப் பார்!” என்றார். ஜமீன்தாரிணியும், பிரேமலதாவும் ஏக காலத்தில் தந்தியைப் படித்தார்கள். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது. “மால்டா: உங்கள் கப்பலில் பிரயாணம் செய்த ரங்கதுர்க்கம் ஜமீன்தாரைக் கடலிலிருந்து மீட்டோ ம். அவர் தம்மைப் பற்றிச் சரியான தகவல் கொடுக்க இரண்டு மூன்று நாளாகி விட்டது. அவருடைய சாமான்களையெல்லாம் லண்டனுக்குத் திருப்பியனுப்பி விடவும். எங்கள் கப்பலில் பிரயாணம் செய்த ரங்கராஜன் என்னும் வாலிபனைப் பற்றித் தகவல் தெரியவில்லை. ஒரு வேளை அவன் தங்களால் மீட்கப்பட்டிருந்தால் தெரிவிக்கவும். அவனுடைய பெட்டியிலிருந்த ரூ. 1000 சொச்சத்தைக் குறிப்பிடும் விலாசத்துக்கு அனுப்பி விடுகிறோம். - காப்டன் கட்லெட்.” ஜமீன்தாரிணி அதைப் படித்ததும் முன்னால் வந்து “காப்டன்! இது நிஜந்தானா?” என்று கேட்டாள். “எது நிஜந்தானா?” “இந்தத் தந்தி நிஜந்தானா?” “இதோ உங்கள் அருமையான டாக்டர் இருக்கிறாரே. அவருடைய கழுத்தின் மேல் தலை இருப்பது நிஜந்தானா?” “அதுதான் நானும் கேட்கிறேன். நீர் நிஜந்தானா? நான் நிஜந்தானா? இந்த உலகம் நிஜந்தானா?” என்று டாக்டர் சிங்காரம் அடுக்கினார். “வாழ்வாவது மாயம்; இது மண்ணாவது திண்ணம்” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார். “பிரேமா! வா, போகலாம்” என்று சொல்லி ஜமீன்தாரிணி பிரேமாவைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். டாக்டர் சிங்காரமும் பின்னால் போனார். அவர்கள் மூலை திரும்பும்போது, “அந்த மெஸ்மெரிஸ்டும் கப்பல் டாக்டரும் எங்கே காணோம்?” என்று பிரேமா கூறியது ரங்கராஜன் காதில் விழுந்தது. உடனே, அந்தப் பக்கம் பார்த்தான். அதற்குள் அவர்கள் மறைந்து விட்டார்கள். இன்னும் சற்று முன்பாகவே அவன் அந்தப் பக்கம் பார்த்திருந்தால் பிரேமாவின் கண்கள் அறிவித்த செய்தியை அவன் பெற்றிருக்கக் கூடும். அதற்குப் பதிலாக அவன் இப்போது காப்டனுடைய கடுகடுத்த முகத்தைப் பார்க்க நேர்ந்தது. “என்ன சொல்கிறீர இப்போது?” என்றார் காப்டன். “நீர் அல்லவா சொல்ல வேண்டும்?” “சொல்வது என்ன? இனிமேல் ஒரு நிமிஷங்கூட உம்மைப் பார்க்க எனக்கு வேண்டியிருக்கவில்லை. இந்தப் படகிலேயே இறங்கிப் போய் விடும்.” “பரஸ்பரம் அப்படித்தான், காப்டன்! இதோ நான் போகத்தான் போகிறேன். ஆனால் ஒரு விஷயம்; அன்றைய தினம் நான் உம்மிடம் வந்து, ’நான் ரங்கதுர்க்கம் ராஜா இல்லை’யென்று படித்துப் படித்துச் சொல்லவில்லையா? என் பேரில் இப்போது எரிந்து விழுகிறீரே, ஏன்?” “அதற்கென்ன செய்வது? ரங்கதுர்க்கம் ராஜாவைப் போன்ற இரண்டு முட்டாள்களை உலகம் ஏககாலத்தில் தாங்காது என்று நினைத்தேன்.” “இரண்டு பேர் அல்ல, நாலு பேரைக் கூட தாங்க முடியுமென்று இப்போது தெரிந்து விட்டதல்லவா?” “அது என்ன?” “ஆமாம், ரங்கதுர்க்கம் ராஜா ஒன்று, டாக்டர் சிங்காரம் ஒன்று, உங்கள் கப்பல் டாக்டர் ஒன்று, அப்புறம் தாங்கள்.” காப்டன் பயங்கரமான ஒரு பார்வை பார்த்து விட்டு அவசரமாய்த் திரும்பிச் சென்றார். 2 ரங்கராஜன் எடுத்துச் செல்லவேண்டிய சாமான்கள் ஒன்றுமில்லை. எனவே, உடனே கப்பலிலிருந்து படகில் இறங்கினான். படகு கரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. புயலடித்து ஓய்ந்திருந்த கடல் இப்போது வெகு அமைதியாயிருந்தது. ஆனால் அவனுடைய உள்ளக் கடலிலோ அதற்கு நேர்மாறான நிலைமை குடி கொண்டிருந்தது. அங்கே வெகு வேகமுள்ள புயல்காற்று, சுழற்காற்று, சூறைக்காற்று எல்லாம் சேர்ந்து அடித்தன. பிரமாண்டமான அலைகள் எழுந்து விழுந்தன. ‘பிரிட்டானியா’ கப்பலிலிருந்து கடலில் குதித்த வரையில் அவனுடைய ஜீவிய சம்பவங்கள் எல்லாம் அவன் மனக்கண் முன் அதிவிரைவாய்த் தோன்றி மறைந்தன. பின்னர், ‘ரோஸலிண்ட்’ கப்பலில் அவனுடைய ஐந்து நாள் வாழ்க்கையைப் பற்றி எண்ணிய போது மயிர்க்கூச்சல் உண்டாயிற்று. “இவ்வளவு பெரிய சந்தோஷம் நீடித்திருக்க முடியாது. கண் விழித்ததும் பொய்யாகும் கனவைப் போல் விரைவிலே மறைந்து மாயமாய்விடும்” என்று இடையிடையே தன் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்த பயம் உண்மையாகிவிட்டதே! “இந்தியர்களுடைய வாழ்க்கையில் இந்நாளில் புதுமை ரஸிகத்துவம் எதுவும் இருக்க முடியாது. சாரமற்ற வாழ்வு. இத்தகைய வாழ்க்கை நடத்துவதை விட இறப்பதே மேல்” என்று நான் எண்ணியது தவறு என்பதை நிரூபிப்பதற்காகவே பகவான் இந்த ஆச்சரியமான அநுபவத்தை அளித்தார் போலும்! நிகழ்ந்தது எல்லாவற்றையும் பற்றி அவன் சிந்திக்கத் தொடங்கினான். முதல் நாள் அந்த அசட்டுக் காதல் கடிதத்தை வியாஜமாகக் கொண்டு அவர்களுக்குள் சம்பாஷணை ஏற்பட்டதும், நெடு நேரம் பேசிக் கொண்டிருந்ததும், அன்றிரவெல்லாம் லவகேசமும் தூக்கமின்றித் தனது வாழ்க்கையில் நேர்ந்த இந்த அதிசயத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தன. இரவு சென்று பொழுது விடிந்ததும் ஒரே நினைவுதான். பிரேமலதாவை எப்படிச் சந்திப்பது? என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு அவளைத் தேடிப் போவது? ஆனால் கப்பலாகையால் இந்தக் கஷ்டம் அவ்வளவாகத் தோன்றவில்லை. அறையைவிட்டு வெளியே வந்தால் ஒருவரையொருவர் சந்திக்கச் சந்தர்ப்பங்களுக்குக் குறைவு கிடையாது. எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே சந்திப்பு ஏற்பட்டது. பேச்சிலே அவர்கள் ஆழ்ந்துவிட்டபோது உலகத்தையே மறந்து விட்டார்கள். ஜமீன்தாரிணி உணவு நேரத்தை ஞாபகமூட்டுவதற்கு வந்தாள். ரங்கராஜனையும் தங்களுடன் வந்து சாப்பிடுமாறு அழைத்தாள். அது முதல் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் பெரும்பாலும் அவர்கள் சேர்ந்திருக்கத் தொடங்கினார்கள். கரையோரமாகப் பலத்த புயல் அடிக்கும் காரணத்தினால் கப்பல் நங்கூரம் பாய்ச்சப்பட்டிருக்கிறதென்றும் பிரயாணம் நீடிக்கலாமென்றும் தெரிய வந்த போது ரங்கராஜனுடைய இருதயம் சந்தோஷமிகுதியினால் வெடித்து விடும் போல் இருந்தது. அந்த ஐந்து தினங்களில் முதல் இரண்டு நாளைக்கும் பிந்தைய மூன்று நாட்களுக்கும் இருந்த வித்தியாசத்தைப் பற்றி ரங்கராஜன் நினைத்தான். முதலில் நேரமெல்லாம் பேச்சிலேயே போயிற்று. பின்னால் பெரும்பாலும் மௌனம் சாதிப்பதில் சென்றது. முதலில் எவ்வளவு நாள் பேசினாலும் போதாது போலவும், அவ்வளவு விஷயங்கள் பேசுவதற்கு இருப்பது போலவும் தோன்றியது. ஆனால் போகப் போகப் பேசுவதற்கு விஷயமே இல்லை போல் ஆகிவிட்டது. ஹிருதயம் நிறைந்துள்ள போது பேச்சு வருவதில்லை. பேசினால் தன் இருதயத்தில் பொங்கிக் கொண்டிருந்த ஒரே விஷயத்தைப் பற்றித்தான் பேசவேண்டும். ஆனால் அதுவோ பேச்சு வரம்பைக் கடந்து நின்றது. அதிலும் அந்த அசட்டுக் காதல் கடிதத்தைப் படித்த பின்னர், அணுவளவேணும் அறிவுள்ளவர்கள் காதல் பேச்சுப் பேச முடியுமா? ஒன்றுந்தான் பேசுவதற்கில்லையே; விடைபெற்றுக் கொண்டு பிரிந்து போகலாமென்றால், அதற்கும் மனம் வருவதில்லை. வாய் பேசாவிட்டால், பேச்சு இல்லையென்று அர்த்தமா? கண்களோடு கண்கள், ஹிருதயத்தோடு ஹிருதயம் இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்தன. இடையிடையே வாய்க்கும் பேசுவதற்குக் கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தபோது, விஷயம் ஹிருதய சம்பாஷணையுடன் ஒத்ததாகவே இருந்தது. “இளம்பிராயத்தில் நான் ஓர் இலட்சிய கன்னிகையை என் உள்ளத்தில் உருவகப்படுத்துவதுண்டு. அவளிடம் இன்னின்ன அம்சங்கள் பொருந்தியிருக்க வேண்டும் என்றெல்லாம் நேரம் போவது தெரியாமல் சிந்தனை செய்து கொண்டிருப்பேன். ஆனால், நாளாக ஆக, ‘இது சுத்தப் பைத்தியம்; இந்த மாதிரி நமது நாட்டில் இருக்கவே முடியாது’ என்று எண்ணி விட்டு விட்டேன். வெகு நாளைக்குப் பின்னர் இன்று என் மனோராஜ்யக் கன்னிகையை நேருக்கு நேர் காண்கிறேன். ஆகையாலேயே, ஒவ்வொரு சமயம் இதெல்லாம் வெறும் பொய்யோ என்று தோன்றுகிறது,” என்றான் ரங்கராஜன். “நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். என்னுடைய இலட்சியத்தைப்பற்றி நான் அப்படிச் சொல்லிக் கொள்வதற்கில்லை,” என்றாள் பிரேமா. ரங்கராஜனுடைய முகம் வாடிற்று. பிரேமாவின் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று தூரத்திலே பறந்த கடற்பறவையை வெகு கவனமாக பார்க்கத் தொடங்கினான். “ஆமாம், நானும் சிறிது காலமாக ஓர் இலட்சிய புருஷரை மனத்தில் உருவகப்படுத்தி வந்தேன். கொஞ்ச நாளைக்கு முன்புவரை என் லட்சியத்துக்கு கிட்டத்தட்ட வரக்கூடியவரைக்கூட நான் சந்திக்கவில்லை. கடைசியாக ஒருவரைச் சந்தித்த போது, ‘இவர்தான்’ என்று தோன்றிற்று. ஆனால் அருகில் நெருங்கிப் பார்த்தால் என்னுடைய இலட்சியத்தைவிட மிக உயர்ந்து விளங்குகிறார். இன்னும் கொஞ்சம் கீழே இருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது” என்றாள். இது என்ன உண்மையா, பரிகாசமா? அவளுடைய புன்னகை இரண்டுக்கும் இடம் தருவதாயிருந்தது. மற்றொரு நாள் தமிழில் நவீன இலக்கியங்கள் அதிகம் இல்லாமலிருப்பது குறித்துப் பேச்சு வந்தது. “இவ்வளவெல்லாம் படித்திருக்கிறீர்களே, நீங்கள் ஏன் தமிழில் நல்ல நாடகம் ஒன்று எழுதக் கூடாது?” என்று பிரேமா கேட்டாள். “அந்த எண்ணம் எனக்கு வெகு நாளாக உண்டு. ஆனால் ஆனால்… இதுவரையில் அதற்குத் தூண்டுதல் ஏற்படவில்லை.” “நான் வேண்டுமானால் சொல்கிறேன்; உங்களால் நாடகம் ஒரு நாளும் எழுத முடியாது.” “ஏன் இத்தகைய சாபம்?” “நாடகம் என்றாள் அதில் எல்லாப் பாத்திரங்களும் மேதாவிகளாகவும் புத்திசாலிகளாகவுமே இருக்க முடியாது. நடுத்தரமானவர்களும் அசடுகளும் கூட வேண்டும். நீங்களோ முதல் தர மேதாவிகளைத் தவிர வேறு யாரோடும் பேச மாட்டீர்கள்; பழக மாட்டீர்கள். ஆகையால், இயற்கையாய்த் தோன்றக்கூடிய நாடக பாத்திரங்களை உங்களால் சிருஷ்டிக்க முடியாது.” “உங்களிடம் அந்தக் குறை கிடையாதல்லவா? நீங்கள் தான் டாக்டர் சிங்காரம் உள்பட எல்லாருடனும் பழகுகிறீர்களே! நீங்களே எழுதலாமே?” “என்னால் முடியாது. ஆனால் உங்களுக்கு நான் உதவி செய்யக்கூடும்.” “அப்படியானால் நாம் நாடகம் எழுதி முடிக்கும் வரையில் புயல் நீடித்திருக்க வேண்டுமே? கரை சேர்ந்தால் நான் எங்கேயோ, நீங்கள் எங்கேயோ?” “உண்மையாகவா? கரை சேர்ந்ததும் நாம் பிரிந்து போவது நிஜமாயிருந்தால், இப்போதே பிரிந்துவிடலாமே?” என்று பிரேமலதா எழுந்து செல்லத் தொடங்கினாள். அவளைச் சமாதானப்படுத்தி உட்காரச் செய்ய வேண்டியிருந்தது. அப்படியெல்லாம் நடித்தவள் அந்தத் தந்தியைக் கண்டதும் எப்படி மாறிவிட்டாள்! சீ! இதென்ன உலகம்! இவ்வளவு கல்வி, அறிவு, சாதுர்யம், சாமர்த்தியம் எல்லாம் கேவலம் பட்டம், பணம் என்னும் பைசாசங்களுக்குப் பலியாவதற்குத்தானா? - கடலில் விழுந்த தன்னைத் தப்புவித்த முட்டாளை ரங்கராஜன் அப்போது மனமாரச் சபித்தான். ஆனால் உடனே வேறோர் எண்ணமும் தோன்றிற்று. ஏன் இவ்வாறு தான் மனக்கசப்பு அடைய வேண்டும்? தன் வாழ்நாளில் இத்தகைய இனிய கனவு ஒன்று ஏற்பட்டது பற்றி மகிழ்ச்சி அடைந்திருக்கலாமே? அதைப் பற்றிய சிந்தனையில் சந்தோஷம் அடைந்திருக்கலாமே? - இப்படி எண்ணியபோது அந்தக் கனவு நிகழ்ந்த இடமாகிய ‘ரோஸலிண்ட்’ கப்பலை ரங்கராஜன் நிமிர்ந்து பார்த்தான். தானும் அவளும் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசிய அதே இடத்தில் பிரேமலதா துயர முகத்துடன் நின்று தன்னை நோக்குவது போல் ஒரு க்ஷணம் தோன்றிற்று. அடுத்த க்ஷணம் ஒன்றுமில்லை. சீ! இதென்ன வீண் பிரமை! இதற்குள் படகு கரையை அடைந்தது. பம்பாய் நகரில் பிரவேசித்ததும், ஸ்வப்ன உலகத்திலிருந்து பூவுலகத்துக்கு வந்தது போல் ரங்கராஜன் உணர்ந்தான். 3 ‘இனி என்ன செய்வது?’ என்னும் பிரச்சனை அரசியல் வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படுவது போல் ரங்கராஜனுடைய சொந்த வாழ்க்கையில் இப்போது அதி தீவிரமாக ஏற்பட்டது. சீமைக்கு மறுபடியும் போகும் யோசனையைக் கைவிட வேண்டியதுதான். அது கடவுளுக்கே இஷ்டமில்லையென்று தோன்றுகிறது. போதும் சீமைப் பயணம். ‘பம்பாயில் தங்கி ஏதேனும் ஒரு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து விட்டால்?’ என்று எண்ணிய போது, தானே வயிறு குலுங்கச் சிரித்தான். நாடோ டி வாழ்க்கையை வெறுத்துப் புதிய அநுபவங்களைத் தேடி அவன் புறப்பட்டதற்கு அது தக்க முடிவாயிருக்குமல்லவா? இவ்வாறு பல யோசனைகள் செய்து கொண்டேயிருந்த போது திடீரென்று அவனுடைய ஜீவிய இலட்சியம் என்னவென்பது மனத்தில் உதயமாயிற்று. அவனுடைய கை விரல்கள் துடித்தன. “கொண்டா பேனாவும் காகிதமும்” என்று அவை கதறின. நூலாசிரியத் தொழிலுக்கு வேண்டிய அஸ்திவாரம் ஏற்கனவே அவனிடம் அமைந்திருந்தது. தூண்டுகோல் ஒன்று தான் பாக்கி; அதுவும் இப்போது ஏற்பட்டு விட்டது. ஊருக்குப் போக வேண்டியதுதான்; நாவல்களும் நாடகங்களுமாக எழுதிக் குவித்துத் தமிழ் மொழியை ஆகாயத்தில் உயர்த்தியே விடுவது என்று தீர்மானித்தான். ‘பிரிட்டானியா’ கப்பலில் விட்டிருந்த பணம் வந்து சேரும் வரையில் பம்பாயில் இருந்ததாக வேண்டும். அந்த நாட்களில் அவன் அந்த நகரை முழுதும் சுற்றிப் பார்த்து விட விரும்பினான். பம்பாயில் முக்கியமாக ‘விக்டோ ரியா டெர்மினஸ்’ ஸ்டேஷன் அவனுடைய மனத்தைப் பெரிதும் கவர்ந்ததாகத் தோன்றியது. தினந்தோறும் சாயங்காலம் ‘மெட்ராஸ் மெயில்’ புறப்படும் சமயத்துக்கு ரங்கராஜன் பிளாட்பாரத்தில் உலாவி வருவதைக் காணலாம். அப்படிச் செய்ததில் அந்தரங்க நோக்கம் ஒன்றும் அவனுக்கு லவலேசமும் கிடையாது. (அவ்வாறு அவன் நம்பினான்). முன்னைப் போல் ஜனங்களைக் கண்டு வெறுப்படைவதற்குப் பதிலாக, ஜனங்களைப் பார்ப்பதிலும் அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனிப்பதிலும் அவனுக்கு ஏற்பட்டிருந்த புதிய உற்சாகமே அதன் காரணம். (இதுவும் அவனுடைய அபிப்பிராயமே.) ஆகையினால், ஒரு நாள் மாலை அவன் அவ்வாறு பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, பிரேமலதா தீடீரென்று எதிர்ப்பட்டு, புன்னகையுடன், “ஓ! உங்களை நான் எதிர்பார்த்தேன்,” என்று சொன்னபோது அவனுக்குக் கோபம் வந்தது. “அப்படியா? ஆனால், தங்களை நான் எதிர்பார்க்கவில்லை” என்றான். “பொய்! பொய்! நீங்கள் சொல்வது பொய்,” என்றாள் பிரேமா. “ரொம்ப சந்தோஷம். ரங்கதுர்க்கம் ராஜா அப்புறம் கோபித்துக் கொள்ளப் போகிறார். நான் போய்…” இந்தச் சமயம் பிரேமாவின் கண்களில் ஒரு துளி கண்ணீர் ததும்பி நிற்பதை ரங்கராஜன் பார்த்தான். உடனே, “… போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு வருகிறேன்” என்று முடித்தான். “நானும் கூட வருவதில் ஆட்சேபம் இல்லையே!” “எனக்கு ஆட்சேபம் இல்லை; ஆனால், ஒரு வேளை ராஜா சாகிப்பிற்கு” "ரங்கதுர்க்கம் ராஜாவின் பாக்கியமே பாக்கியம்! உங்களைப் போன்ற ஒருவர் தம் பேரில் இவ்வளவு அசூயை கொள்வதற்கு அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா? ரங்கராஜன் பிரேமலதாவைத் திரும்பி பார்த்தான். “அப்படியானால், நீ என்னை ரங்கதுர்க்கம் ராஜாவென்று எண்ணவில்லையா?” என்றான். “என்னைப்பற்றி இவ்வளவு தாழ்வாக நீங்கள் நினைத்த குற்றத்தை என்னால் மன்னிக்கவே முடியாது. அப்படிப்பட்ட அபஸ்மாரக் காதல் கடிதத்தை எழுதக் கூடியவனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் எனக்குத் தெரியாதென்றா நினைத்தீர்கள்?” ரங்கராஜன் மிக்க ஆச்சரியத்துடன் பிரேமலதாவின் முகத்தை நோக்கினான். “அப்படியானால், அந்தத் தந்தியைப் படித்ததும் நெருப்பை மிதித்தவர்கள் போல் எல்லாரும் சென்று விட்டீர்களே, அது ஏன்?” என்றான். “கடவுளே! அதுதானா கோபம்? கொஞ்சம் உங்களை வேடிக்கை செய்யலாமென்று நினைத்தோம். கப்பல் கரையோரமாய் போய் நிற்பதற்குள், நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் படகிலிறங்கிப் போய் விடுவீர்களென்று கண்டோமா?” 4 டிக்கட் வாங்கிக் கொண்டதும், “இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கிறதே, வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாமா?” என்று ரங்கராஜன் கேட்டான். “அதையேதான் இப்போது சொல்ல நான் வாயெடுத்தேன்,” என்றாள் பிரேமலதா. இவ்வாறு பிரேரணை ஏகமனதாக நிறைவேறவே, இருவரும் வெயிட்டிங் ரூமுக்குச் சென்றார்கள். “இந்தச் சிறு விஷயம் முதற்கொண்டு நம்முடைய மனம் இவ்வளவு ஒத்திருப்பது பெரிய ஆச்சரியமல்லவா?” “அந்தத் தைரியத்தினால்தான் உங்களைக் கட்டாயம் இன்று ரயில்வே ஸ்டேஷனில் சந்திப்போம் என்று நிச்சயமாய் நம்பியிருந்தேன். இல்லாவிட்டால், இந்த ஒரு வாரமும் என்னால் உயிர் வாழ்ந்திருக்க முடியாது.” "நாம் ஒரு தவறு செய்தோம். அதனால் தான் இவ்வளவு நேர்ந்தது. கப்பலில் நம்முடைய ஹிருதயத்தின் நிலைமையை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்திருக்க வேண்டும். ‘நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை நைந்த பழங் கதைகள் நானுடைப்பதோ’ என்று இருந்து விட்டேன். வாய்ப்பேச்சும் சில சமயம் அவசியம் என்று இப்போது தெரிகிறது." “நடுக்கடலில் நாம் சந்தித்தது ஒரு பெரிய ஆச்சரியமல்லவா?” “அதை ஆச்சரியமென்றா சொல்வது? நம்ப முடியாத அற்புதம் என்றே சொல்ல வேண்டும். இந்த உலகத்தில் உள்ள பதினெட்டுக் கோடி சொச்சம் ஸ்திரீகளில் பிரேமலதா ஒருத்தியைத் தவிர, வேறு யாரும் என்னைப் பைத்தியமாய் அடித்திருக்க முடியாது. நான் அன்று கடலில் குதித்திராவிட்டால் அவளைச் சந்தித்திருக்கவே முடியாது. இதைக் கடவுள் சித்தமென்பதா, விதி என்பதா, பூர்வஜன்ம சொந்தம் என்பதா என்று தெரியவில்லை.” இந்த முறையில் சம்பாஷணை போய்க் கொண்டிருந்தது. பைத்தியம்! எவ்வளவு சரியான வார்த்தை! இந்தத் தினுசு பைத்தியம் பிடிக்கும் போது, மகா மண்டூகங்களான ரங்கதுர்க்கம் ராஜாக்களுக்கும், மகா மேதாவிகளான ரங்கராஜாக்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லாமல் போகிறது! “பிரேமா! உன்னிடம் எனக்கு எல்லாம் பிடித்திருக்கிறது. நீ ஜமீன்தார் பெண்ணாயிருப்பது ஒன்று தான் பிடிக்கவில்லை” என்று பேச்சினிடையில் ரங்கராஜன் கூறினான். “அப்படியானால், நீங்கள் கவலையின்றி இருக்கலாம். உங்கள் காதலி மாசு மறுவற்றவள் என்று திருப்தி கொள்ளுங்கள். ஏனென்றால், நான் ஜமீன்தார் பெண் அல்ல!” என்றாள். “என்ன? என்ன? இது நிஜமா? அப்படியானால் நீ யாருடைய பெண்?” என்று கேட்டான். “டாக்டர் சிங்காரத்தினுடைய பெண் நான்” என்று பதில் வந்தது. பிரேமலதா விஸ்தாரமாகக் கூறியதிலிருந்து பின்வரும் விவரங்கள் வெளியாயின டாக்டர் சிங்காரம் ஒரு தமாஷ் மனிதர். அவர் வைத்தியப் பரீட்சையில் தேறிய தம் பெண்ணை இங்கிலாந்தில் உயர்தரப் பயிற்சி அளிப்பதற்காக அழைத்துச் சென்றார். அங்கே ஒரு சமயம் பிரேமலதாவைப் பார்த்துப் பிரேமை கொண்ட ரங்கதுர்க்கம் ராஜா டாக்டர் சிங்காரத்திடம் அவளைப் பற்றி விசாரிக்க, அவள் குமாரபுரம் ஜமீன்தார் பெண் என்றும் தாம் அவர்களுடைய குடும்ப வைத்தியர் என்றும் இவர் குறும்புக்குச் சொல்லி வைத்தார். இவர்கள், ஏறிய கப்பலிலேயே ராஜாவும் ஏறவே, அந்தத் தமாஷைத் தொடர்ந்து நடத்தி வந்தார். ரங்கராஜன் முதன் முதலில் ஸ்மரணை தெளிந்து பார்த்தவுடனேயே, அவருக்கு இவன் வேறு ஆசாமி என்று தெரிந்து போயிற்று. ஆனால், கப்பல் காப்டனும் டாக்டரும் தம்மை அலட்சியமாய் நடத்தினார்களென்று அவருக்கு அவர்கள் மீது கோபம் இருந்தது. அவர்களுக்கு அசட்டுப் பட்டம் கட்டுவதற்காகவும், பொதுவாகத் தமாஷில் உள்ள பற்றினாலும், அவன் தான் ராஜாசாகிப் என்று வறுபுறுத்திக் கொண்டு வந்தார். ரங்கராஜன் இதையெல்லாம் கேட்டு அளவிலாத ஆச்சரியம் அடைந்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. டாக்டர் சிங்காரத்தைப் பற்றித் தான் கொண்டிருந்த அபிப்பிராயம் எவ்வளவு தவறானது என்பதை நினைக்க அவனுக்குச் சிறிது வெட்கமாயிருந்தது. பிரேமலதா கடைசியில், “என் தந்தை கப்பலிலிருந்து இறங்கிய அன்றே சென்னைக்குப் போய் விட்டார். என்னையும் அம்மாவையும் ஒரு வாரம் பம்பாயில் இருந்து விட்டு வரச் சொன்னார். அதற்குள் உங்களுக்குப் ‘பிரிட்டானியா’ கப்பலிலிருந்து பணம் வந்து விடுமென்றும், எங்களை ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் சந்திப்பது நிச்சயம் என்று கூடச் சொன்னார். உங்களை நான் மணம் புரிந்து கொள்வதற்கு என் தாய் தந்தை இருவரும் கப்பலிலேயே சம்மதம் கொடுத்து விட்டார்கள்” என்று கூறியபோது, ரங்கராஜன் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தான். வறண்ட பாலைவனம் போல் இருந்த தனது வாழ்க்கை இரண்டு வார காலத்தில் எவ்வளவு அதிசய அநுபவங்கள் நிறையப் பெற்றதாகிவிட்டதென்று எண்ணியபோது அவன் உள்ளம் பூரித்தது. டிங், டிங், டிங் என்று மணி அடித்தது. ரங்கராஜனும் பிரேமலதாவும் கைகோர்த்துக் கொண்டு நடந்து வந்து வண்டியில் ஏறினார்கள். பிரேமலதாவின் தாயார் அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள். வண்டி புறப்பட்டது. ரங்கராஜன் பிரேமலதா இவர்களுடைய புதிய வாழ்க்கைப் பிரயாணம் ஆரம்பமாயிற்று. ‘இவ்வாறு நமது கதை ஆரம்பத்திலேயே முடிவடைகிறது. ஆதலின், “ஆரம்பத்திலே முடிவின் வித்து இருக்கிறது; முடிவிலே ஆரம்பத்தின் வித்து இருக்கிறது” என்னும் சிருஷ்டித் தத்துவம் இக்கதையினால் விளக்கப்படுகிறது. நான் சற்றும் எதிர்பாராதபடி இந்தக் கதை தத்துவப் பொருளை உள்ளடக்கியதாய் அமைந்து விட்டது குறித்து, தானே ஆரம்பமாயும், தானே முடிவாயும் விளங்கும் பரம்பொருளை வாழ்த்துகிறேன்.’ லஞ்சம் வாங்காதவன் 1 நடுநிசி. டாண் டாண் என்று மணி அடித்தது. மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. ஆனால் இன்னும் அவர் பைஸல் செய்ய வேண்டிய தஸ்தாவேஜிக் கட்டுகள் மேஜை மேல் மலைபோல் குவிந்து கிடந்தன! உத்தியோக பதவியில் மேலேற ஏற, சம்பளம் அதிகமாக ஆக, வேலை குறைவு என்று சாதாரணமாய் ஓர் எண்ணம் இருந்து வருகிறது. சிற்சில இலாக்காக்கள் சிற்சில பதவிகள் விஷயத்தில் இது உண்மையாக இருக்கலாம். ஆனால், நிர்வாக இலாகா உத்தியோகங்களைப் பொறுத்தவரையில் மேற்கண்ட எண்ணம் எவ்வளவு பிசகானது என்பதற்கு மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். பிரத்யட்ச உதாரணமாயிருந்தார். அதுவும் ஜில்லாக் கலெக்டர் ஆனதிலிருந்து அவர் பொழுது விடிந்தது முதல் இரவு பன்னிரண்டு மணி வரையில் உழைத்து உழைத்து ஓடாய்ப் போனதை யார் அறிவார்கள்? சர்வமும் அறிந்த ஆண்டவனுக்கும் டபேதார் சின்ன கேசவலுக்கும் தவிர, வேறு யாருக்குத்தான் தெரியும்? கிராம வெட்டியான் மேல் கிராம முனிசீப் செய்யும் புகார் முதற்கொண்டு ரயில் கவிழ்க்கும் சதியாலோசனை வரையில் அவர் விசாரணை செய்து நியாயத் தீர்ப்பு சொல்ல வேண்டும். புறம்போக்கை ஆக்ரமித்த குடியானவனுக்கு இரண்டு ரூபாய் தண்டத் தீர்வை விதிப்பது முதல் கடற்கரையோரத்தில் ஜப்பான் உளவுப் படகு வருவதைத் தடுப்பது வரையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பொறுப்பை அவர் தாங்கியாக வேண்டும். இதெல்லாம் ஒரு புறமிருக்க, இந்தச் சாமான் கட்டுப்பாடு விஷயம் வந்தாலும் வந்தது - ஐயையோ! சகிக்க முடியாத தொல்லையாய்ப் போயிற்று. மனுஷர் ஐம்பது வயது வாலிபராயிருந்தவர் ஆறே மாதத்தில் எழுபது வயதுக் கிழவனாகி விட்டார். மூக்குக் கண்ணாடியை அந்த ஆறு மாதத்தில் மூன்று தடவை மாற்ற வேண்டியதாகிவிட்டது. ஆறு மாதத்துக்கு முன்பு அவருடைய தலையில் ஆங்காங்கு இரண்டொரு வெள்ளி ரோமம் காணப்பட்டது. இப்போது தலையெல்லாம் ஒரே நரை. நல்ல வேளை! மிஸ்டர் பராங்குசத்தின் பத்தினி இரண்டு வருஷத்துக்கு முன்பே காலமாகி விட்டாள். இப்போது மட்டும் அந்த நாகரீகப் பெண்மணி உயிரோடிருந்தால், மிஸ்டர் பராங்குசம் எவ்வளவு அவதியடைய நேர்ந்திருக்கும்! இப்போதும் மிஸ்டர் பராங்குசத்திற்கு அவதி அவ்வளவு ஒன்றும் குறைவாக இல்லை; மேஜை மீது குவிந்து கிடந்த தஸ்தாவேஜுக் கட்டுகளை அவர் வெறுப்புடனே ஒரு தடவை பார்த்தார். சிவா! ராமா! இன்னும் இரண்டு மணி நேர வேலை இருக்கிறது. இப்படி உத்தியோகம் பார்த்து அணு அணுவாய் உயிரை விடுவதைக் காட்டிலும் ஒரேயடியாய்ச் செத்துத் தொலைந்து போனால் தான் என்ன? இதற்குள் மிஸ்டர் பராங்குசத்தின் பார்வை தஸ்தாவேஜுக் கட்டுக்களுக்குப் பக்கத்திலே கிடந்த பண நோட்டுக் கட்டுகளின் மேல் விழுந்தது. உடனே அவர் முகம் பிரகாசம் அடைந்தது. அவர் வேண்டாமென்று சொல்லியும் கேட்காமல் ராம்ஜி ஸேட் மேஜை மேல் வைத்து விட்டுப் போன நோட்டுகள் அவை. ஸேட் அங்கு இருந்தவரையில் மிஸ்டர் பராங்குசம் அந்த நோட்டுக்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. இப்போது தான் பார்த்தார். பார்த்துவிட்டுக் கட்டுக்களை எடுத்து ஒவ்வொன்றாய் எண்ணினார். ஒவ்வொன்றிலும் இருபது 100 ரூபாய் நோட்டு மொத்தம் பத்து கட்டு ஆக மொத்தம் இருபதினாயிரம் ரூபாய். எண்ணிப் பார்த்த கட்டுகளை மிஸ்டர் பராங்குசம் எடுத்து மேஜை டிராயர் ஒன்றுக்குள் திணித்தார். மேஜைக்கு மேலே பெரிய பவர்லைட் எரிந்து கொண்டிருந்தது. சுவர் ஓரமாய்த் தரையில் ஒரு ரெவினியூ இலாகா லாந்தர் எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து இப்போது புகை அசாத்தியமாய்க் கிளம்பியது. “கேசவா! இந்த லாந்தர் புகைகிறது; எடுத்துக் கொண்டு போ” என்றார் பராங்குசம். வெளியிலிருந்து டபேதார் வந்து லாந்தரை எடுத்துக் கொண்டு போனான். 2 கேசவன் போனதும் மிஸ்டர் பராங்குசம் ஒரு கொட்டாவி விட்டு நாற்காலியின் மேல் “அம்மாடி” என்று சாய்ந்தார். பிறகு ஒரு காகிதமும் பென்ஸிலும் எடுத்து யோசித்து சில எண்களை வரிசையாக எழுதினார். எழுதிய எண்களைக் கூட்டிய போது ஒன்பதரை லட்சம் வந்தது. “இன்னும் ஐம்பதினாயிரம் வந்து விட்டால், அப்புறம் எந்த ராஜா பட்டணம் போனாலும் சரி” என்று மிஸ்டர் பராங்குசம் முணுமுணுத்தார். பிறகு, பழையபடி தஸ்தாவேஜிக் கட்டுகளை எடுத்துப் பார்க்கத் தொடங்கினார். மிஸ்டர் பராங்குசம் தஸ்தாவேஜுக் கட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், மேற்படி ஒன்பதரை லட்சத்தின் மர்மம் என்னவென்பதை நாம் பார்க்கலாம். சென்ற ஆறு மாத காலத்தில் மிஸ்டர் பராங்குசம் லஞ்சம் வாங்கிச் சேர்த்திருந்த பணம் தான் ஒன்பதரை லட்சம். வாசகர்களுக்கு இது ஒரு ஆச்சரியமாகத்தான் இருக்கும். சாதாரணமாக ஐ.சி.எஸ். காரர்கள் மீது லஞ்சக் குற்றம் ஏற்பட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை. பெரிய அதிகாரங்களை வகிக்கும் அவர்களுக்கு லட்சம் வாங்கத் தூண்டுதலே ஏற்படக்கூடாதென்பதற்குத் தானே பெருவாரியான சம்பளம் கொடுக்கப்படுகிறது? இதெல்லாம் உண்மைதான். ஆனால், மிஸ்டர் பராங்குசம் அன்று வரையில் ஒன்பதரை லட்சம் வாங்கிச் சேர்த்திருந்ததும் உண்மைதான். இது எப்படி நேர்ந்தது என்பதைச் சொல்லுகிறோம். மிஸ்டர் பராங்குசத்தின் காலஞ்சென்ற மனைவிதான் அதற்கு முதற் காரணம். இந்தப் பாழாய்ப் போன யுத்தம் இரண்டாவது காரணம். மிஸ்ஸஸ் பராங்குசம் நாகரிகத்தில் முதிர்ந்த சீமாட்டி. இந்த நாளில் நாகரிகமாய் வாழ வேண்டுமென்றால் பணத்தையல்லவா கண்களை மூடிக் கொண்டு செலவு செய்ய வேண்டியிருக்கிறது? மிஸ்டர் பராங்குசம் ஆபீஸுக்குப் போக ஒரு கார், மிஸ்ஸஸ் பராங்குசம் லேடீஸ் கிளப்புக்குப் போக ஒரு கார், குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஒரு கார் - இப்படியெல்லாம் நாகரிக வாழ்க்கையாகிய பூதம் பணத்தை விழுங்கிக் கொண்டிருந்தது. இதனுடைய பயனாக, மிஸ்ஸஸ் பராங்குசம் கண்ணை மூடியபோது, மிஸ்டர் பராங்குசத்துக்குத் திருடர் பயம் என்பதே அடியோடு இல்லாமலிருந்தது. மடியில் கனம் இருந்தால் அல்லவா வழியில் பயம்? மிஸ்ஸஸ் பராங்குசம் பண விஷயத்தில் தாராளமாயிருந்தது போல் சந்ததிகள் விஷயத்திலும் வெகு தாராளாமாயிருந்தாள். ஐந்து பெண் குழந்தைகளையும் நாலு பிள்ளைக் குழந்தைகளையும் விட்டுச் சென்றாள். இவ்வளவு பேருக்கும் உயர்தரக் கல்வி அளித்து, கல்யாணம் பன்ணி வைக்கும் பொறுப்பு எல்லாம் மிஸ்டர் பராங்குசத்தின் தலையில் விழுந்தது. அவருக்கோ வயது ஆகிவிட்டது. உத்தியோகத்திலிருந்து ரிடையர் ஆக வேண்டிய காலம் சமீபித்திருந்தது. இந்த நிலைமையில் பாழாய்ப் போன யுத்தம் வந்து தொலைந்ததா? யுத்தத்தினால் எத்தனையோ ஜனங்கள் எத்தனையோ கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தார்கள். ஆனால் ஒரு சிலர் ஏராளமாய்ப் பணத்தை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதை மிஸ்டர் பராங்குசம் கவனித்தார். யுத்த காண்டிராக்ட்டுகளில் சிலர் லட்சம் லட்சமாய்ப் பணம் பண்ணியிருந்தார்கள். பிண்ணாக்கு வியாபாரி ஒருவர் ஏழு லட்சம் பண்ணியிருந்தார். நூல் வியாபாரிகள் சிலர் இருபது லட்சம் முப்பது லட்சம் சம்பாதித்திருந்தார்கள். செங்கள் சூளை போட்ட ஒருவர் ஏழு லட்சம் சேர்த்திருந்தார். இப்படி யுத்தத்தினாலே பலர் கொழுத்த பணக்காரர்களாகிக் கொண்டு வரும் போது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு இவ்வளவு நீடித்த ஊழியம் செய்து வந்திருக்கும் தாம் மட்டும் ஏன் ஏழையாயிருக்க வேண்டும் என்று மிஸ்டர் பராங்குசம் வியந்தார்! இத்தனைக்கும் மேற்கண்ட விதமாகப் பணம் சம்பாதித்தவர்கள் பெரும்பாலும் தம்மிடம் லைசென்ஸோ, அனுமதியோ பெற்று வியாபாரம் செய்தவர்கள் என்பதை எண்ணும் போது அவருடைய வியப்பு பன்மடங்கு ஆயிற்று! அவ்விதம் தம்மிடம் லைசென்ஸுக்கோ, பர்மிட்டுக்கோ வருகிறவர்களிடம் தாம் சற்றே கையை நீட்டினால் போதும்; வீட்டில் தனலக்ஷ்மி தாண்டவமாடத் தொடங்குவாள்! இன்னும் சில நாளைக்கெல்லாம் மிஸ்டர் பராங்குசம் இத்தனை காலமும் தாம் இவ்வளவு பரிசுத்தமாய் இருந்து கண்ட பலன் என்ன என்று வியக்கத் தொடங்கினார். தம் கண் முன்னால் லஞ்சம் வாங்கிப் பணம் சேர்த்திருக்கும் மனிதர்கள் எல்லாம் ஒவ்வொருவராய் அவர் கண் முன்னால் வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன கௌரவம் குறைந்து விட்டது? இன்னும் யோசிக்க, யோசிக்க “பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆதி ஸ்தாபகர்களான கிளைவும் வாரன் ஹேஸ்டிங்க்ஸுமே லஞ்சம் வாங்கியிருக்கும் போது, நமக்கென்ன வந்தது?” என்று அவருக்குத் தோன்றியது. பட்டினி கிடந்தவர்களின் முன்னால் நல்ல சாப்பாட்டை வைத்தால், கணக்குத் தெரியாமல் சாப்பிட்டு விடுவது இயற்கையல்லவா? அஜீரணமாகி விடுமே - வயிற்றை வலிக்குமே என்றெல்லாம் அவர்கள் யோசித்துக் கொண்டிருக்க முடியுமா? - அதே மாதிரி உத்தியோகத்தில் வெகு காலம் நெறி தவறாமலிருந்த மிஸ்டர் பராங்குசம் லஞ்சம் வாங்க ஆரம்பித்த போது, அவருக்கு நூறு கை வந்து விட்டது போலிருந்தது. அப்படிப் பணத்தை வாரிக் குவித்தார். அவருடைய டபேதார் சின்னக்கேசவலு சுமார் பதினையாயிரம் ரூபாய் சேர்த்து விட்டான் என்றால், அவர் ஒன்பதரை லட்சம் சேர்த்து விட்டதில் என்ன ஆச்சரியம்?" இப்படி மளமளவென்று குவிந்த பணத்தை எப்படிப் பத்திரப்படுத்துவது என்பதிலேதான் கஷ்டம் அதிகமாயிருந்தது. ஆறே மாதத்தில் மனுஷருக்குத் தலை நரைத்துப் போனதற்கு இந்தக் கவலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். வெள்ளிக் கட்டிகளும் தங்கக் கட்டிகளும் வாங்கினார். அப்புறம் ஷேர் மார்க்கெட்டில் பங்குகள் வாங்கினார். நாளாக ஆக, அவருக்குத் துணிச்சல் அதிகமாயிற்று. பகிரங்கமாக பாங்கிகளிலேயே பணத்தைப் போட ஆரம்பித்தார். நிலைமை இவ்வளவுக்கு முற்றிய பிறகு சர்க்கார் காதுக்கு எட்டாமலிருக்குமா? எட்டிய பிறகு சர்க்கார் தான் நடவடிக்கை எடுத்துக் கொள்ளாமலிருக்க முடியுமா? ஆனால், பராங்குசத்துக்கு இப்போது ஏற்பட்டிருந்த துணிச்சல் கவர்ன்மெண்ட் நடவடிக்கையைக் கூட ‘பூபூ’ என்று தள்ளிற்று. ’என்ன பிரமாத நடவடிக்கை எடுத்து விடப் போகிறார்கள்? பிராஸிகியூட் செய்து வழக்கு நடத்த ஒரு நாளும் தைரியம் வரப் போவதில்லை. அதனால் கவர்ன்மெண்டின் மதிப்பேயல்லவா குறைந்து போய் விடும்? இன்றைக்கெல்லாம் செய்தால் உத்தியோகத்தை விட்டு நீக்கி வைப்பார்கள். போனால் போகட்டும் இந்த உத்தியோகம் யாருக்கு வேண்டும்? இன்னும் ஐந்து வருஷம் உழைத்துப் பிறகு காணப் போகும் லாபந்தான் என்ன? பத்து லட்சம் ரூபாயுடன் இப்போதே தான் விலகிக் கொள்ளலாமே! இன்னும் ஐம்பதாயிரம் தான் பாக்கி!" இப்படி எண்ணமிட்ட மிஸ்டர் பராங்குசத்துக்கு மறுபடி கொட்டாவி வந்தது. 3 “மிஸ்டர் பராங்குசம்! உடனே புறப்படும்!” என்ற பேச்சைக் கேட்டுத் திடுக்கிட்டவராய்ப் பராங்குசம் நிமிர்ந்து பார்த்தார். எதிரே சுவர் ஓரத்தில் ஓர் கறுத்த உருவம் நின்றது. சொல்ல முடியாத பீதியினால் மிஸ்டர் பராங்குசத்தின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. தட்டுத் தடுமாறி, “நீ யார்?” என்று கேட்டார். “மேலேயிருந்து உத்தரவு கொண்டு வந்திருக்கிறேன். உம்மைக் கையோடு அழைத்துக் கொண்டு வரும்படி கட்டளை.” மேலே இருந்து உத்தரவு வரும் என்பது பராங்குசம் எதிர்பார்த்தது தான். ஆனால், இந்த வேளையில் இந்த விதத்தில் இப்படித் திடீரென்று உத்தரவு வரும் என்பதாக அவர் எதிர்பார்க்கவில்லை. பராங்குசத்தின் மார்பு தட், தட் என்று அடித்துக் கொண்டது. “ஏன் தாமதம்? கிளம்பும்!” பராங்குசம் ஈனக் குரலில், “எனக்கு இப்போது வர சௌகரியம் இல்லை” என்றார். “உம்முடைய சௌகரியத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உத்தரவு அப்படியில்லை.” பராங்குசத்தின் ஆரம்ப பீதி குறைந்தது, வர வரத் துணிச்சல் ஏற்பட்டது. “இந்தத் தஸ்தாவேஜிக் கட்டுகளில் எல்லாம் நான் கையெழுத்துப் போட்டு ஆக வேண்டும்.” “நீர் போட வேண்டியதில்லை; உமக்குப் பதில் வருகிறவர் போட்டுக் கொள்வார்.” “முக்கியமான சொந்த ஜோலிகள் இருக்கின்றன.” “இனிமேல் உமக்கு ஒரு சொந்த ஜோலியும் இல்லை.” பராங்குசம் அப்போது மேஜை டிராயரை இழுத்து ஒரு கத்தை நூறு ரூபாய் நோட்டுக்களைக் கையில் எடுத்தார். “இதோ பத்தாயிரம் ரூபாய்; திரும்பிப் போய் நான் வீட்டில் இல்லையென்று சொல்லிவிடும்.” “முடியாது, லஞ்சமெல்லாம் உம்முடனே இருக்கட்டும்.” “இருபதனாயிரம் தருகிறேன்.” “பணப்பேச்சே வேண்டாம்.” “இந்த டிராயரில் உள்ள ஐம்பதினாயிரம் ரூபாயையும் எடுத்துக் கொள்ளும்.” “நான் லஞ்சம் வாங்குவது கிடையாது. கிளம்பும் உடனே.” பராங்குசம் சற்று யோசித்து விட்டு, “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்; என் பிள்ளையப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன்” என்றார். “முடியாது; நேரம் இல்லை.” “அரைமணி நேரம் கொடும். மேல் மாடிக்குப் போய் என் கடைக் குட்டிக் குழந்தையை ஒரு தடவை கண்ணால் பார்த்து விட்டு வருகிறேன்.” “குழந்தையா? நீர் செய்த அக்கிரமங்களினாலே இன்று இந்த ஜில்லாவில் இருபதினாயிரம் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றன.” “இந்த ஐம்பதினாயிரம் ரூபாயும் கொடுத்து இரண்டு லட்சம் ரூபாய்க்குச் செக்கும் தருகிறேன். பத்து நிமிஷமாவது கொடும்.” “முடியாது. ஒரு நிமிஷம் கூடக் கொடுக்க முடியாது.” “அப்படியானால் இந்தாரும்” என்று சொல்லி, மிஸ்டர் பராங்குசம் சடக்கென்று மேஜையின் இன்னொரு டிராயரைத் திறந்தார். அதிலிருந்து ஒரு கைத் துப்பாக்கியை எடுத்து எதிரே நீட்டினார். “இப்போது என்ன சொல்கிறீர்?” என்று கூறி மிஸ்டர் பராங்குசம் பயங்கரமாகச் சிரித்தார். அவருடைய சிரிப்பின் எதிரொலியே போல் அந்தக் கறுத்த உருவமும் சிரித்தது. அடுத்த விநாடி ‘படீர்’ என்று கைத் துப்பாக்கி வெடித்தது. மிஸ்டர் பராங்குசம் மேஜை மேல் சாய்ந்தார். அவருடைய ஆத்மா தன் நீண்ட பிரயாணத்தைத் தொடங்கிற்று. 4 இரண்டு நாளைக்கெல்லம் பத்திரிகைகளில் பின் வரும் செய்தி பிரசுரமாயிற்று. “சென்ற செவ்வாய்க்கிழமையன்று இரவு ஜில்லா கலெக்டர் மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். திடீரென்று மாரடைப்பால் காலம் சென்றார்.” “மிஸ்டர் பராங்குசத்தின் மேல் லஞ்சப் புகார் அதிகமாக ஏற்பட்டு மாகாண கவர்ன்மெண்டார் அவர் மேல் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தார்கள் என்று தெரிகிறது. உத்தியோகத்திலிருந்து அவரைத் தற்காலிகமாய் நீக்கி உத்தரவில் கையெழுத்துக் கூட ஆகிவிட்டதாம். மிஸ்டர் பராங்குசத்தின் அகால மரணத்தை முன்னிட்டு மேற்படி நடவடிக்கைகள் வாபஸ் வாங்கப்படுமென்று அறிகிறோம்.” மேற்படி சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு ஜில்லா கலெக்டர் பங்களாவைப் புதிய கலெக்டர் வரப் போவதை முன்னிட்டு சுண்ணாம்பு அடித்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். டபேதார் சின்னக் கேசவலு இன்னொருவனுடன் கலெக்டரின் ஆபீஸ் அறையைச் சுத்தம் செய்ய வந்தான். “அதோ பார்த்தாயா, அண்ணே!” என்று முத்தப்பன் சுவரைச் சுட்டிக் காட்டினான். இருவரும் அருகாமையில் போய்ப் பார்த்தார்கள். ரவிவர்மா படத்தில் சத்தியவானுடைய உயிரைக் கொண்டு போவதற்காக ஒரு புகை உருவம் வருகிறதே, அந்த மாதிரியான ஒரு உருவம் சுவரில் காணப்பட்டது. அதைப் பார்த்து டபேதார் சின்னக் கேசவலு சொன்னான்: “தம்பி, ஒரு நாளைக்கு இங்கே ஹரிகேன் லாந்தர் வைத்திருந்தது. அதிலிருந்து ஒரே புகை அடித்தது. நான் தான் லாந்தரை எடுத்துக் கொண்டு போய் அணைத்தேன். அந்த லாந்தர் புகைதான் இப்படி யமனைப் போல் சுவரில் விழுந்திருக்கிறது.” “அப்படியா?” என்றான் முத்தப்பன். “இதில் வேடிக்கையைக் கேளு. அன்றைக்கு இராத்திரி தான் ரூமிலேயே பழைய கலெக்டர் துரை மாரடைத்துச் செத்துப் போனார்!” ஆமாம், ஆறே மாதத்தில் பதினையாயிரம் சம்பாதித்த டபேதார் சின்ன கேசவனுக்கு, உலகமே இப்போது ஒரு வேடிக்கையாய்த்தானிருந்தது! விதூஷகன் சின்னுமுதலி 1 சத்திரப்பட்டியைச் சுற்றிப் பதினைந்து மைல் விஸ்தீரணத்துக்கு, விதூஷகன் சின்னுமுதலியைப் பற்றி அறியாதவர் யாருமில்லை. சிறுபிள்ளைகள் முதல், கிழவர் கிழவிகள் வரையில் எல்லாருக்கும் அவனைத் தெரியும். எந்த ஊரிலே யார் நாடகம் போட்டாலும் அவனுக்கு அழைப்பு வராமலிராது. சின்னுமுதலி வருகிறான் என்றால் அன்று கூட்டம் இரண்டு மடங்குதான். அவனுடைய அகடவிகட அதிசய சாமர்த்தியங்கள் அந்தத் தாலூகா முழுவதும் பிரசித்தமாயிருந்தன. கூத்து மேடைக்குச் சின்னுமுதலி வந்துவிட்டானானால் ஒரே குதூகலந்தான். சில சமயம் கோணங்கிக் குல்லா தரித்து, புலி வேஷத்தைப் போல் கோடுபோட்ட கால்சட்டையும், மேற்சட்டையும் போட்டுக் கொண்டு வருவான். அவனுடைய நடை, உடை, பாவனை ஒவ்வொன்றும் ஜனங்களுக்குச் சிரிப்பு உண்டாக்கும். அவனுடைய பொய் மீசை நிமிஷத்துக் கொருமுறை மேலும் கீழும் போய் வரும். பேசுவதற்கு அவன் வாயைத் திறந்து விட்டாலோ சொல்ல வேண்டியதில்லை. நாடகக் கொட்டகை கிடுகிடாய்த்துப் போகும். சில சமயம் வெள்ளைக்காரனைப் போல் தொப்பி போட்டுக் கொண்டு வருவான். “லேடீஸ் அண்டு ஜெண்டில்மென்” முதலிய ஐந்தாறு இங்கிலீஷ் வார்த்தைகள் அவனுக்குத் தெரியும். இவைகளை வைத்துக் கொண்டு அரை மணி நேரம் ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்வான். “அசல் வெள்ளைக்காரன் கெட்டான்!” என்று சொல்லி ஜனங்கள் குதூகலப்படுவார்கள். என்னதான் பேசினாலும், பாட்டுப்பாடத் தெரியாவிட்டல் “விதூஷக பார்ட்” ரஸப்படுமா? சின்னுமுதலிக்குப் பாட்டுப் பாடவும் தெரியும்; ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதல், சிங்கார ரஸக்கீர்த்தனைகள் வரையில் அவன் வாயில் அகப்பட்டுப் படாத பாடுபடும். சுயமாகப் பாடும் சக்தியும் அவனுக்கு உண்டு. “இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும் அம்மென்றா லாயிரம் பாட்டாகாதா-சும்மா இருந்தா லிருப்பே னெழுந்தேனே யாயிற் பெருங்காள மேகம் பிள்ளாய்” என்று காளமேகப் புலவர் பாடினாரல்லவா? அந்தப் புலவரும் நமது சின்னுமுதலியிடம் பிச்சை வாங்க வேண்டும். அவன் வாயில் வருவதெல்லாம் பாட்டுத்தான். பிரஸங்கங்களைச் சரமாரியாய்ப் பொழிவான். “பாட்டு” என்று பாடத் தொடங்கினானேயானால் “பாட்டு, காட்டு, ஏட்டு, வாட்டு, சூட்டு, மேட்டு…” என்று அடுக்கிக் கொண்டே போவான். இவற்றின் பொருள் அவனுக்கும் தெரியாது; கேட்பவர்களுக்கும் விளங்காது. ஆயினும் இந்தப் பாட்டுக்களை எல்லாரும் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். 2 சின்னுமுதலியின் பரம்பரைத் தொழில் கைத்தறி நெசவு. ஆனால் அந்தத் தொழிலை அவன் மறந்து வெகுகாலமாயிற்று. அவனுக்கு மனைவியும், ஒரு பிள்ளையும், ஒரு பெண்ணும் இருந்தனர். மனைவியும், பதினைந்து வயதான பிள்ளையும் நன்றாக நெசவு செய்வார்கள். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தினால்தான் குடும்ப நிர்வாகம் நடந்துவந்தது. மகள் வீட்டுக் காரியங்களைப் பார்ப்பாள். சின்னுமுதலி நாடகம் நடிக்கும் இடங்களில் தனக்குக் கிடைக்கும் வெள்ளரிக்காய், தேங்காய், வாழைப்பழம், வடை, முறுக்கு முதலிய பரிசுப் பொருள்களைக் கொண்டு வருவான். அப்பொழுதெல்லாம் குழந்தைகள் அவனை ஆவலுடன் எதிர்க்கொண்டு அழைப்பர்கள். அவனுக்குப் பணங்காசும் கிடைப்பதுண்டு. ஆனால் அதுமட்டும் வீட்டுக்கு வராது. பின், எங்கே போயிற்று என்று சொல்லவேண்டியதில்லையல்லவா? ஆம்; சின்னுமுதலியின் விதூஷக சாமர்த்தியங்களுக்கெல்லாம் பெரும்பாலும் ஆதாரமாயிருந்தது கள்ளு, சாராயந்தான். ஆரம்பத்தில் கள்ளுக் குடித்து வந்தான். ஆனால் நாளடைவில் கள்ளில் அவ்வளவு ‘ஜோர்’ பிறப்பதில்லை யென்றறிந்து, சாராயத்தில் புகுந்தான். கூத்து நடத்துபவர்கள், சாராயக்கடை எவ்வளவு தூரத்திலிருந்தாலும், முன்னாடியே ஆள் அனுப்பி இரண்டு புட்டி சாராயம் வாங்கி வந்து தயாராய் வைத்திருப்பார்கள். ஆனால் வருஷம் 365 நாளுமா கூத்து நடக்கும்? கூத்தில்லாத நாட்களுக்கும் சாராயம் வேண்டுமல்லவா? எனவே, கூத்தில் கிடைக்கும் பணம் மற்ற நாட்களுக்கு உபயோகமாகும். அத்துடன், சின்னுமுதலிக்குத் தறிகள் செப்பனிடத் தெரியும். சிறுவயதில் பழகியிருந்தான். இந்த வேலையில் கிடைக்கும் கூலிப்பணத்தையும் சாராயக்கடைக்கே அர்ப்பணம் செய்து வந்தான். அவன் மனைவி பத்மாவதிக்கு இது மிகவும் கஷ்டமாய்த்தான் இருந்தது. ஆனால் அவள் என்ன செய்ய முடியும்? 1921-ம் வருஷத்தில் நடந்த காந்தி இயக்கத்தின் போது ஊரில் ஒரு முறை கட்டுப்பாடு செய்தார்கள், யாரும் குடிக்கக் கூடாது; குடித்தால் பதினைந்து ரூபாய் அபராதம் என்று. ஆனால் பஞ்சாயத்தார் முதல் ஊர்ஜனங்கள் வரையில் எல்லாரும் ஒருமுகமாகச் சேர்ந்து சின்னுமுதலி விஷயத்தில் மட்டும் விலக்குச் செய்துவிட்டார்கள். அவன் குடிக்காவிட்டால் ‘விதூஷக பார்ட்’ போட முடியாது. அவன் விதூஷகனாய் வராவிட்டால் கூத்து எதுவும் ரஸப்படாது. ஆகவே, அவனை மட்டும் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கியிருந்தார்கள். இந்த நிலைமையில் பத்மாவதி “குடிக்கவேண்டாம்” என்று சொன்னால் நடக்கிற காரியமா? 3 கலியாணம் ஆன புதிதில் பத்மாவதிக்குத் தன் கணவனைப் பற்றி மிகவும் பெருமையா யிருந்தது. எல்லாரும் அவனைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். ஆனால் அவள் மட்டும் அவன் கூத்தைப் பார்க்கப் போகாமலிருந்தாள். பார்க்கவேண்டு மென்னும் ஆவல் அவள் மனத்திற்குள் நிரம்பி யிருந்தது. ஆனால் வெட்கம் தடை செய்தது. கடைசியாக ஒருநாள் பக்கத்து ஊரில் கூத்துப் போட்டபோது அயல் வீட்டுப் பெண்கள் வற்புறுத்தி அவளைக் கூட்டிச் சென்றார்கள். கூட்டத்தின் ஓரத்தில் உட்கார்ந்து பத்மாவதி தன் புருஷன் மேடைக்கு வருவதை ஆவலுடன் எதிர் நோக்கி யிருந்தாள். கோணங்கிக் குல்லாவும், விகாரமான உடைகளும் தரித்து, கூத்தாடிக்கொண்டு சின்னுமுதலி மேடைக்கு வந்ததைப் பார்த்ததும் பத்மாவதிக்கு ‘பகீர்’ என்றது. அவன் செய்த கோரணி ஒவ்வொன்றும் பத்மாவதிக்கு அளவிலாத மனவேதனையை அளித்தது. அசங்கியமாகவும், அர்த்தமில்லாமலும் அவன் பேசிய பேச்சு அவளுக்கு நாராசமா யிருந்தது. இதற்கிடையில் மேடைக்கு மோகினிப் பெண் வந்தாள். விதூஷகன் அவளிடம் சென்று சிங்காரப் பேச்சுகள் பேசலானான். “கண்ணே பெண்ணே” என்று ஏதேதோ பிதற்றினான். பல்லைக் காட்டி இளித்தான். மோகினிப் பெண் அவன் கன்னத்தில் ஓர் இடி இடித்தாள். எல்லாரும் ’கொல்’லென்று சிரித்தார்கள். சின்னுமுதலியும் சிரித்தான். பத்மாவதிக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவள் மெதுவாய் எழுந்திருந்து தன் ஊரை நோக்கி நடந்தாள். கண்ணீர்விட்டு அழுதுகொண்டே போனாள். இதற்குப் பிறகு, கூத்தாடப் போக வேண்டாமென்றும், குடிக்க வேண்டாமென்றும் அவள் சின்னுமுதலிக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவன் கேட்கவில்லை. அவன் ஒரு வேளை கேட்பதாயிருந்தாலும் ஊரார் அதற்கு இடங்கொடுக்கவில்லை. இவ்வாறு நாள் போய்க்கொண்டிருந்தது. அவனைச் சீர்திருத்தலாம் என்ற எண்ணத்தையே பத்மாவதி விட்டுவிட்டாள். தன் குழந்தைகளே கதி என்றிருந்தாள். வீட்டுக்கு வந்தால் அவனுக்குச் சோறு போடுவாள். மற்றபடி அவன் எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்று கேட்பதில்லை. அவனும் எப்போதும் ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டிருந்தான். ஊரிலிருந்தால் சாப்பாட்டு வேளைக்கு வருவான். உடனே போய்விடுவான். குடித்துவிட்டு வீட்டுக்கு மட்டும் வருவதில்லை. 4 ஒருசமயம் இரண்டுமாத காலம் வரையில் வெளியூர்களில் சுற்றிவிட்டு ஒருநாள் மாலை வீட்டுக்கு வந்து சேர்ந்தான். உடம்பு சரியாயில்லை யென்றும் தலைவலிக்கிறதென்றும் கூறினான். உடம்பெல்லாம் பற்றி எரிகிறதென்று சொன்னான். அவன் முகம் மினுமினுவென்று பிரகாசித்தது. கண்கள் திறுதிறுவென்று விழித்தன. பத்மாவதி அவனுக்குச் சோறுபோட்டு வீட்டிலேயே படுத்துக் கொள்ளச் சொன்னாள். அப்படியே படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வராமல் முனகியவண்ணம் புரண்டு கொண்டேயிருந்தான். காலையில் வைத்தியனை அழைத்துக் காட்டவேண்டுமென்று பத்மாவதி எண்ணினாள். அவளும் குழந்தைகளும் பகலெல்லாம் வேலை செய்தவர்களாதலால் விரைவில் தூங்கிப் போனார்கள். பத்மாவதி ஏதோ சத்தம் கேட்டு விழித்தெழுந்தாள். அப்போது அவள் கண்ட காட்சி அவளை நடுநடுங்கச் செய்தது. அர்த்தராத்திரி; மண்ணெண்ணெய் விளக்கு மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது. சின்னுமுதலி தலையில் ஒரு பழைய முறத்தைக் கவிழ்த்துக் கொண்டு கூத்தாடிக் கொண்டிருந்தான். முறம் கீழே விழாவண்ணம் அவன் உடம்பையும் கைகளையும் நெளித்துக் கொடுத்து ஆடினான். பத்மாவதி இன்னதென்று சொல்லத் தெரியாத பயங்கர மடைந்தாள். மெதுவாக எழுந்து அவனருகில் சென்றாள். சின்னுமுதலி ஆடுவதை நிறுத்தி அவளை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தான். உடனே “கண்ணே பொண்ணே” என்னும் விகாரமான கூத்தாடிப் பேச்சுகளைப் பேச ஆரம்பித்தான். பத்மாவதியின் முகவாய்க்கட்டையைப் பிடித்தான்; பல்லை இளித்தான். பத்மாவதி தன்னையறியாமல் பயங்கரமான கூச்சல் ஒன்று போட்டாள். இதனால் குழந்தைகள் விழித்துக் கொண்டார்கள். மறுபடியும் சின்னுமுதலி பக்கத்திலிருந்த கூடை ஒன்றைத் தலையில் எடுத்து வைத்துக்கொண்டு ஆடினான். இதைப் பார்த்ததும் குழந்தைகளும் அழத் தொடங்கினார்கள். இதற்குள் சத்தம் கேட்டு அயல் வீட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள். எல்லாரும் சேர்ந்து சின்னுமுதலியைப் பிடித்துச் சமாதான வார்த்தைகள் சொல்லிப் படுக்க வைத்தார்கள். மறுநாள் காலையில் கொங்கணப்பட்டியிலிருந்து சமாசாரம் கிடைத்தது. அவ்வூரில் கூத்து நடந்து கொண்டிருந்தபோது, சின்னுமுதலியின் ஆர்ப்பாட்டம் வழக்கத்தைவிட அதிகமா யிருந்ததென்றும், அவன் திடீரென்று ஒரு கூச்சல் போட்டு, ஸ்திரீ வேஷம் தரித்திருந்தவனின் மூக்கைக் கடித்துவிட்டு, நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் நடுவில் புகுந்து ஓடினானென்றும், சிலர் இதுவும் ஒரு விகடம் என்று நினைத்துச் சிரித்தார்களென்றும், மற்றும் சிலர் “இன்று போதை அதிகம்” என்று பேசிக் கொண்டார்களென்றும், அப்படி ஓடியவன் திரும்பி வரவேயில்லையென்றும் கொங்கணப்பட்டியிலிருந்து வந்தவன் சொன்னான். சின்னுமுதலியின் விதூஷக நடிப்பை இன்னும் நீங்கள் பார்க்கலாம். சந்திரப்பட்டிக்கு நீங்கள் சென்றால், அவன் தன் பிதிரார்ஜித வீட்டின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து அரட்டையடித்தவண்ணமிருப்பதைக் காண்பீர்கள். கவிதைகளும், கீர்த்தனங்களும், அகட விகடங்களும், சிருங்காரப் பேச்சுகளும் அவன் சரமாரியாய்ப் பொழிந்து கொண்டிருப்பதைக் கேட்பீர்கள். ஆனால், கொங்கணப்பட்டி கூத்தில் செய்தபடி நடுவில் விழுந்தடித்து ஓடாவண்ணம், அவன் கால் ஒன்றைத் திண்ணையின் தூணுடன் சங்கிலியால் பிணைத்துக் கட்டியிருப்பதும் தெரியவரும். உங்களைக் கண்டதும் அவன் ஒண்ணரை டிராம் வாங்கி வரும்படி கெஞ்சிக் கேட்பான். “ஆகட்டும்” என்று சொன்னால் சந்தோஷமாய்ப் பேசிச் சிரிக்கப் பண்ணுவான். “மாட்டேன்” என்றீர்களோ திட்டுவான். அந்த ஊர்ச் சிறுவர் சிறுமிகளுக்குங்கூட இன்னும் அவன் சிரிப்பு மூட்டித்தான் வருகிறான். ஆனால் அவன் மனைவி பத்மாவதி அவனைக் காணும்போதெல்லாம் துக்கந்தாங்காமல் கண்ணீர் விடுகிறாள்; குழந்தைகளோ வெட்கித் தலைகுனிகிறார்கள். வீடு தேடும் படலம் 1 துவாபர யுகத்து பெர்னார்ட்ஷா என்று பெயர் பெற்ற புரொபஸர் வேதவியாசர் மொத்தம் மூன்றரைக் கோடி வார்த்தைகளைக் கொண்ட பதினெட்டுப் புராணங்களை இயற்றினார் அல்லவா! அந்தப் பதினெட்டுப் புராணங்களையும் நைமிசாரண்ய வனத்தின் சூத புராணிகர் சௌனகாதி முனிவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அவ்வளவையும் கேட்டுவிட்டு அம்முனிவர்கள் “அடடா! பதினெட்டுப் புராணத்திற்குப் பிறகு பத்தொன்பாவது புராணம் இல்லாமற் போய் விட்டதே! இனிமேல் நாங்கள் எதைக் கேட்டுக் கொண்டு தூங்குவோம்?” என்று புலம்பினார்கள். அதற்குச் சூதர், முனிவர்களே கவலை வேண்டாம். பத்தொன்பதாவது புராணமாகிய கலி புராணம் ஒன்று இருக்கிறது. அதைக் கேட்டுக் கொண்டே நிம்மதியாக தூங்குங்கள்!" என்று சொல்லி கமண்டலத்திலிருந்து ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஆசமனம் செய்துவிட்டு, பத்தொன்பதாவது கலி புராணத்தைக் கூறத் தொடங்கினார். அவ்வளவு பெருமை வாய்ந்த கலி புராணத்தில் நாட்டுப் படலத்துக்கும் நகரப் படலத்துக்கும் அடுத்தபடியான வீட்டுப் படலம் வருகிறது. வீட்டுப் படலம் என்றும் சொல்லலாம்! வீடு தேடும் படலம் என்றும் சொல்லலாம்! அல்லது ஒன்றும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டும் இருக்கலாம். எனினும் “கடமையைச் செய்யுங்கள்!” “கடமையைத் தானே செய்யுங்கள்!” “கடமையைக் கட்டாயம் செய்யுங்கள்!” என்று பகவத் கீதையில் பேராசிரியர் கிருஷ்ணபகவான் முக்காலே மூன்று வாட்டியும் கதறியிருப்பதை முன்னிட்டு, இங்கே நாம் எம் கடமையைச் செய்யத் தொடங்குகிறோம். திருவல்லிக்கேணியில் திக்கற்ற விக்ன விநாயகர் கோயில் வீதியில் ஸ்ரீ கடோ த்கஜராயர் என்பவர் பன்னெடுங்காலமாகக் குடியிருந்து வந்தார். அந்தத் தெருவில் அவர் குடியிருந்த காலத்தில் அவருடைய குடும்பம் வளர்ந்து கொண்டே வந்தது. ஒன்பது குழந்தைகளுக்குத் தகப்பனாராகி ஹிந்து சமூகத்தின் வளர்ச்சிக்குத் தொண்டு புரிந்து வந்தார். இந்தத் தொண்டின் பெருமையைச் சிறிதும் அறியாதவனான அந்த வீட்டின் சொந்தக்காரன் ஒருநாள் திடீரென்றுத் தோன்றி, “என் சொந்த வீட்டுக்கு நான் குடிவர எண்ணியிருக்கிறேன். ஆகையால் வீட்டைக் காலி செய்து அருள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். ஸ்ரீ கடோ த்கஜராயருக்கு இது ஒரு விதத்தில் மகிழ்ச்சியே அளித்தது. எத்தனை காலந்தான் மாறுதல் என்பதே இல்லாமல் ஒரே இடத்தில் வாழ்க்கை நடத்துவது? ஒரே பாழும் வீட்டில் எத்தனை காலம் குடியிருப்பது? அதைக் காட்டிலும் இன்னொரு பாழும் வீட்டுக்கு குடிபோவது ஒரு மாறுதலாயிருக்கலாமல்லவா? பழைய வீட்டுக்காரனுக்கு வாடகை கொடுக்காமல் பல வருஷம் நாமம் போட்டு வந்ததுபோல் புதிய வீட்டுக்காரனுக்கும் நாமம் போடலாம் அல்லவா? எனவே, புதிய வீடு ஒன்றை வாடகைக்குத் தேடிப் பிடிப்பது என்று கடோ த்கஜராயர் தீர்மானித்தார். அப்போதுதான் மறைந்துபோன அந்தப் பழையக் காலத்தை நினைத்து அவர் பெருமூச்சு விட நேர்ந்தது. அந்த மனிதர் சென்னைப் பட்டணத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை தொடங்கிய போது சென்னை நகரில் எங்கே பார்த்தாலும் ‘டு லெட்’ பலகை தொங்கிக் கொண்டிருக்கும். மலையாளத்து நம்பூதிரி ஒரு தடவை சென்னைப் பட்டணத்தை வந்து பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்றதும் என்ன சொன்னான் என்று ஞாபகமிருகிறதல்லவா? “மதராஸிலே உள்ள பணக்காரர்களிலே டு லெட் துரைதான் பெரிய பணக்காரன். எந்தத் தெருவிலே பார்த்தாலும் பத்து எட்டு வீட்டுக்குக் குறையாமல் டு லெட் துரையின் போர்டு தொங்குகிறது” என்று நம்பூதிரி மலையாளத்தில் சொன்னதை நான் மேலே தமிழில் எழுதியிருக்கிறேன். அப்படிப்பட்ட வளமையான காலம் இனி எப்போது வரப்போகிறதோ? இன்றைக்குச் சென்னை நகரம் முழுதும் தேடி அலைந்தாலும் ‘டு லெட்’ பலகை ஒன்றைக்கூடப் பார்க்க முடியவில்லையே! யாரோ சொன்ன யோசனையைக் கேட்டுக் கொண்டு கடோ த்கஜராயர் வீட்டுக் கட்டுப்பாடு அதிகாரியின் காரியாலயத்தைத் தேடிச் சென்றார். காலி வீடுகளுக்கெல்லாம் அந்த அதிகாரியிடம் ஜாபிதா இருக்கும் என்றும், அவரைக் கேட்டால் ஒருவேளை ஏதேனும் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொடுக்கலாம் என்றும் அவர் கேள்விப்பட்டார். எனவே, வீட்டுக் கட்டுப்பாடு அதிகாரியின் ஆபீஸ் எங்கே என்று துப்பு வைத்து விசாரித்துக் கொண்டு, அந்தக் காரியாலயத்திற்குப் போய்ச் சேர்ந்தார். மேற்படி காரியாலயத்தில் ஒரு மனிதர் மேஜை நாற்காலி போட்டுக் கொண்டு எதிரில் பெரிய தஸ்தாவேஜிக் கட்டுக்களை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவருடைய படாடோப தோரணையைப் பார்த்த கடோ த்கஜராயர் மிக்க பயபக்தியுடன் நின்று, “ஸார்! தாங்கள்தான் வீட்டுக் கட்டுப்பாடு அதிகாரியோ?” என்று கேட்டார். “ஆம், நாம் தான்! சொல்லுங்கள்!” என்றார் அந்த அதிகார தோரணைக்காரர். அவர் ‘நாம் தான்’ என்று சொன்னது கடோ த்கஜராயருக்குச் சிறிது சந்தேகத்தை அளித்தது. தஞ்சாவூர் ஜில்லா மிராசுதாரர் ஒருவரின் மனைவிக்கு உடம்பு அசௌகரியம் என்று அறிந்த சலுகையுள்ள பண்ணைக்காரன், “எஜமான்! நம்ப சம்சாரத்துக்கு உடம்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டானாம்! அந்த மாதிரியல்லவா இருக்கிறது கதை? இந்த அதிகாரி ‘நாம் தான்!’ என்று சொன்னதன் மர்மம் என்ன? அந்தச் சந்தேகத்தை மனதிலேயே வைத்துக் கொண்டு “வாடகைக்கு ஒரு வீடு தேவையாயிருக்கிறது. உங்களைக் கேட்டால் கிடைக்கும் என்று சொன்னீர்கள்” என்றார் கடோ த்கஜராவ். “நீங்கள் கெஜடட் ஆபீஸரா! அல்லது நான் - கெஜடட் ஆபீஸரா?” என்று மேற்படி ‘நாம் தான் பேர்வழி’ கேட்டார். “நான் கெஜடட் ஆபீஸருமில்லை; நான் கெஜடட் ஆபீஸருமில்லை. அதாவது இந்தச் சமயம் நான் ஒரு வித ஆபீஸருமில்லை. நீங்கள் பார்த்து கெஜடட் உத்தியோகமோ, நான் - கெஜடட் உத்தியோகமோ, எது போட்டுக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்கிறேன். நான் பெரிய குடும்பி; ஒன்பது குழந்தைகளுக்குத் தகப்பன். ஒன்பதுதான் இதற்கு மேலே இல்லை என்று சொல்லவும் முடியாது” என்றார் கடோ த்கஜராயர். “விளையாட வேண்டாம்!” என்றார், ‘நாம் தான் பேர்வழி’. “நான் விளையாடவில்லை. விளையாட்டுக்கு நான் பூரண விரோதி! ‘விளையாட்டு ஒழிக!’ என்று ஓர் இயக்கம் யாராவது ஆரம்பித்தால் அதில் முதலில் நான் தான் சேர்வேன்!” என்றார் ராயர். “நீர் கெஜடட் ஆபீஸர் இல்லை; ஆகையால் உமக்கு வீடு கிடைக்காது! போகலாம்!” “அப்படிச் சொல்லாதீர்கள்! நான் கெஜடட் ஆபீஸருக்கும் மேலே!” இதைக் கேட்ட அந்த ‘நாம் தான்’ கொஞ்சம் பயமடைந்து மேசைமேல் கிடந்த தமது பாத தாமரைகளைக் கீழே எடுத்து வைத்துவிட்டு, “அப்படியானால் உட்கார்ந்து கொண்டு பேசுங்கள்!” என்று ஒரு நாற்காலியைக் காட்டினார். “கெஜடட் ஆபீஸருக்கும் மேலே என்றால், ஒரு வேளை ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தரோ? அல்லது ரெவினியூ போர்டு மெம்பரோ?” என்று கேட்டார். “இல்லை; அதற்கும் மேலே!” “ஹைகோர்ட் ஜட்ஜோ?” “இன்னும் மேலே!” “ஆண்டவனே! அப்படியானால் தாங்கள் சட்டசபை அங்கத்தினரோ?” “இன்னும் கொஞ்சம் மேலே போங்கள், பார்க்கலாம்.” “எம்.எல்.சி.யோ?” “இல்லை; இன்னும் மேலே!” “எம்.எல்.சி.யின் மாமனாரோ? அல்லது மைத்துனரோ? அல்லது ஷட்டகரோ?” “கிடையாது; இன்னும் கொஞ்சம் மேலே போய்ப் பாருங்கள்!” “மன்னிக்க வேணும்! ஒரு வேளை தாங்கள் சர்வ வல்லமையுள்ள மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரோ?” “அதுவும் இல்லை!” “பின்னே நீ யார்?” “உம்முடைய சட்டசபை அங்கத்தினர்களையும் மந்திரிகளையும் உண்டாக்கியவன். உம்முடைய ஐ.சி.எஸ். காரர்களுக்கெல்லாம் மாதந்தோறும் சம்பளம் - படி அளக்கிறவன். உமக்கும் கூடத்தான்!” “அது யார் ஐயா, நீர்?” “இந்த தேசத்துக்கு ராஜா நான். சர்தார் படேல் அவர்களால் கூட அசைக்க முடியாத ராஜா. ‘நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று பாரதியார் சொன்னாரே. அந்த மன்னர்களில் நான் ஒரு மன்னன். அதாவது இந்தியா தேசத்துச் சுதந்திரப் பிரஜை!” இதைக் கேட்ட அந்த மனிதர் கடகடவென்று சிரித்தார். என்ன ஹாஸ்யத்தைக் கண்டு சிரித்தாரோ தெரியவில்லை. “ஓஹோ! பாரதியாரின் பாட்டை நம்பிக் கொண்டா வந்தீர்? அழகுதான்! உமக்கு வீடு வாடகைக்குக் கிடைக்காது. சும்மா வேண்டுமானால் தங்க இடம் கிடைக்கும். கீழ்ப்பாக்கத்துக்கும் பெரம்பூருக்கும் நடுவில் அந்த ஜாகை இருக்கிறது. லுனாடிக் அஸைலம் என்று பெயர்.” “அப்படியானால் அந்த ஜாகைக்குத் தான் சீட்டுக் கொடுங்களேன்!” “நான் இந்த ஆபீஸின் தலைமை அதிகாரி அல்ல. அதிகாரியின் சொந்த அந்தரங்க குமாஸ்தாதான். ஆகையால் உத்தரவு அவர் கையெழுத்தில்லாமல் நான் போட்டுக் கொடுக்க முடியாது. ஆபிஸர் ஒரு வாரம் லீவில் இருக்கிறார். அடுத்த வாரம் வந்து அவரிடம் நேரில் விண்ணப்பம் போடும்.” மிக்க ஏமாற்றத்துடனே கடோ த்கஜராவ் அங்கிருந்து கிளம்பினார். பிறகு இன்னும் சில சிநேகிதர்களை விசாரித்ததில் “ஏதேனும் ஒரு வீடு காலியாயிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளும். அதன் சொந்தக்காரனிடம் ‘வீட்டை இன்னாருக்குக் கொடுக்கச் சம்மதம்’ என்று எழுதி வாங்கிக் கொண்டு வீட்டுக் கண்ட்ரோல் ஆபீஸரிடம் போனால், சல்லிஸாக வீடு கிடைக்கலாம்” என்று சொன்னார்கள். இதன் பேரில் சென்னைப் பட்டணத்தில் காலி வீடு எங்கேனும் இருக்கிறதா என்று கடோ த்கஜராவ் பலரிடமும் விசாரிக்க ஆரம்பித்தார். தேனாம்பேட்டையில் சில நாளாக ஒரு வீடு காலியாக இருக்கிறதென்று கேள்விப்பட்டார். அந்த வீட்டைப் பார்த்துவிட்டு, வீட்டுக்காரனையும் கேட்டு வருவதாகக் கிளம்பினார். அன்று சகுனம் அவ்வளவு சரியாக இருந்ததென்று சொல்ல முடியாது. பூனை ஒன்று வீட்டு வாசலில் சிறிது நேரம் நின்று குறுக்கே போகலாமா, வேண்டாமா என்று யோசித்துவிட்டு, பிறகு எதிரே ஓடி வந்து கடோ த்கஜராயரின் கால்களின் வழியாகப் புகுந்து சென்றது. ஆனால் ராயருக்குச் சகுனத்தில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. எத்தனையோ தடவை நல்ல சகுனத்துடன் புறப்பட்டுச் சென்று, காரியம் கைகூடாமல், கைக்குடையையும் தொலைத்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார். ஆகையால் “பூனையும் ஆச்சு, ஆனையும் ஆச்சு!” என்று துணிச்சலுடன் இன்றைக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒரு டிராம் வண்டியில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டார். அந்த டிராம் வண்டியில் கொஞ்சம் எக்கச்சக்கமான சம்பாஷணை அப்போது நடந்து கொண்டிருந்தது. ஒருவர் கையில் பத்திரிகையை வைத்துக் கொண்டு அதில் போட்டிருந்த வார பலனை இரைந்து படித்தார். இன்னொருவர் குறுக்கிட்டு, “ஜோசியமாவது கீசியமாவது; எல்லாம் சுத்த ஹம்பக்!” என்றார். “அப்படி ஒரே அடியாய்ச் சொல்லக் கூடாது! ஜோசியமும் ஒரு ஸயன்ஸ்தானே?” என்றார் இன்னொருவர். “எல்லாம் அவரவர்களுடைய நம்பிக்கையைப் பொறுத்தது. வீண் சண்டை எதற்கு?” என்றார் மற்றொரு சமாதானப் பிரியர். “பாரதியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? புதிய ஆத்திச் சூடியில்”சோதிடம் தனை இகழ்" என்று ஸ்பஷ்டமாக எழுதியிருக்கிறார்!" “பாரதியார் சொல்லிவிட்டால் வேதவாக்கோ இப்படியெல்லாம் கண்டதைச் சொன்னதனாலேதான் அவர் திண்டாடிப் புதுச்சேரித் தெருவிலே நின்றார்!” இப்படியாக விவாதம் தடித்துக் கொண்டிருந்த போது நமது கடோ த்கஜராயர் சும்மா இருக்கக் கூடாதா? “இவ்வளவு என்னத்திற்கு? பரணி நட்சத்திரத்துக்கு இந்த வாரம் என்ன பலன் போட்டிருக்கிறது என்று படித்துக் காட்டுங்கள். அதன்படி நடக்கிறதா இல்லையா என்று பரிசோதித்துப் பார்த்து விடுவோம்!” என்று சொல்லி வைத்தார். பரணி நட்சத்திரத்துக்கு அந்த வாரத்திய பலன் முதல் மூன்று நாளும் அவ்வளவு சுகமில்லை என்று இருந்தது. "எடுத்த காரியத்தில் தோல்வி, மனக் கிலேசம் வியாபாரத்தில் நஷ்டம்’ என்று இப்படிப் படுமோசமாகச் சொல்லியிருந்தது. கடோ த்கஜராயருக்கு ஒரே கோபமாக வந்தது. போகிற காரியத்தில் வெற்றியடையாமல் திரும்புவதில்லை என்று மனதில் தீர்மானித்துக் கொண்டு வெளிப்படையாகவும் சபதம் கூறினார். 2 தேனாம்பேட்டையில் செல்லாக்காசுச் செட்டியார் சந்தில் எழுபத்தேழாம் நம்பர் வீடு பூட்டிக் கிடந்தது. வெகு காலமாக அதில் யாரும் குடியில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. அந்த வீட்டின் சொந்தக்காரர் எங்கே இருக்கிறார் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைக் கடோ த்கஜராயர் விசாரித்தார். அவர்கள் வீட்டுச் சொந்தக்காரரின் விலாசத்தை சொல்லிவிட்டு, “இந்த வீட்டுக்குக் குடி வந்தவர் யாரும் இரண்டு நாளைக்கு மேல் இருப்பதில்லை” என்ற செய்தியையும் தெரிவித்தார்கள். ராயர் காரணம் என்ன என்று கேட்டதற்கு முதலில் தயங்குவதுபோல் தயங்கிவிட்டு, பிறகு “இராத்திரியில் அந்த வீட்டில் பேய்கள் நடமாடுவதாகக் கேள்வி!” என்று சொன்னார்கள். “இவ்வளவுதானே! என்னைக் கண்டால் பேய்கள் எல்லாம் பறந்துவிடும்!” என்று கடோ த்கஜராயர் சொல்லிவிட்டு வீட்டின் சொந்தக்காரரிடம் போய், வாடகைக்கு வீடு வேண்டும் என்றும், வீட்டின் சாவி தரும்படியும் கேட்டார். “எத்தனையோ பேர் இம்மாதிரி வந்து வீட்டுச் சாவி கேட்டு வாங்கிக் கொண்டு போனார்கள். மறுநாளே சாவி திரும்பி வந்துவிடும்! நீரும் அப்படித்தான் செய்யப் போகிறீர். என்னத்திற்கு வீண் சிரமம்?” என்றான் வீட்டுக்காரன். “எத்தனை நாளாக இப்படி அந்த வீடு காலியாக இருக்கிறது?” என்று கடோ த்கஜராயர் கேட்டார். “நாள் கணக்குச் சொல்ல முடியாது. மூன்று வருஷத்திற்கு மேலாகிறது.” “என்ன வாடகை கேட்கிறீர்கள்?” “இந்த மாதிரி வீட்டுக்கு, இப்போது இருக்கும் வீடு கிராக்கியில், முந்நூறு ரூபாய் வாடகை வரும். எனக்கு இந்தப் பட்டணத்தில் ஆறு வீடு இருக்கிறது. இருநூறு, இருநூற்றைம்பது, முந்நூறு வரையில் வாடகை வாங்குகிறேன். இந்த வீட்டை நீர் நிஜமாக எடுத்துக் கொள்வதாயிருந்தால் எண்பது ரூபாய்க்குக் கொடுக்கிறேன்.” “சரி! இப்போதே ஒரு மாத வாடகை அட்வான்ஸு தருகிறேன். வாங்கிக் கொள்கிறீரா?” என்றார் ராயர். “அது எப்படி முடியும்? வீட்டுக் கண்ட்ரோல் அதிகாரி உத்தரவு போட்டால் அல்லவா நான் வாடகை அட்வான்ஸு வாங்கிக் கொள்ளலாம்!” “சரி; வீட்டை எனக்கு வாடகைக்குக் கொடுக்க உமக்குச் சம்மதம் என்று எழுதிக் கொடும். மற்றதெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்.” “அப்புறம் பேச்சு மாறக்கூடாது. எல்லாவற்றுக்கும் ஒரு நாள், இரண்டு நாள் அந்த வீட்டில் இருந்து பார்த்து விடுங்கள். அப்புறம் என் பேரில் புகார் சொல்ல வேண்டாம்.” “வீட்டில் பேய் நடமாடுகிறது என்ற விஷயத்தைப் பற்றித்தானே சொல்கிறீர்?” “ஆமாம்; ஊரில் இருக்கிறவர்களுக்கு வேறு என்ன வேலை? இப்படி ஏதாவது கதை கட்டி விடுகிறார்கள். அதனால் பல வருஷமாய் எனக்கு வாடகை நஷ்டம். நீங்கள் வீட்டை எடுத்துக் கொள்வதாயிருந்தால்…” “இருந்தால் என்கிற பேச்சே கிடையாது. சாவியை இப்படிக் கொடும். பேய்களுக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு! ஒரு கை பார்த்து விடுகிறேன்.” சாவியை வாங்கிக் கொண்டு அஞ்சா நெஞ்சரான கடோ த்கஜராவ் புறப்பட்டார். அன்று இரவே விஷயத்தைக் கீறிப் பார்த்து முடிவு கட்டிவிடுவது என்று தீர்மானித்தார். திருவல்லிக்கேணியில் அவருடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் டெலிபோன் இருந்தது. அந்த வீட்டுக்காரர்களைக் கூப்பிட்டு, “தயவு செய்து என் வீட்டில் சொல்லி விடுங்கள். நான் இராத்திரி முக்கிய காரியமாக ஒரு சினேகிதர் வீட்டில் தங்க வேண்டியிருக்கிறது” என்று தெரியப்படுத்தினார். 3 வெகு நாளாகத் திறக்கப்படாத பூட்டைத் திறந்து கொண்டு கடோ த்கஜராவ் அந்தப் பேய் வாழும் வீட்டுக்குள் புகுந்தார். மின்சார விளக்குப் போடப்பட்ட வீடு. சில அறைகளில் பல்புகள் கழற்றப்படிருந்தன. எனினும் சில அறைகளில் பல்புகள் இருந்தன. ஸ்விச்சைப் போட்டுப் பார்த்ததில் விளக்குகள் எரிந்தன. இது முன்னைக் காட்டிலும் அதிக தைரியத்தைக் கடோ த்கஜராவுக்கு அளித்தது. வாசற் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு விட்டுக் கொல்லைக் கதவு தாழ்ப்பாள் போட்டிருப்பதையும் பார்த்துக் கொண்டு வந்தார். பிறகு மச்சுமீது ஏறிப் பார்த்தார். அங்கே அவர் பார்த்த ஒரு விஷயம் சிறிது விசித்திரமாகத்தானிருந்தது. ஏனெனில் கீழே இருந்தது போல் மேல் மாடியில் அவ்வளவு குப்பையாக இல்லை. சமீபத்தில் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டதாகத் தோன்றியது. அது மட்டுமல்ல; மனிதர் நடமாடியதற்கு அறிகுறிகளும் காணப்பட்டன. மனிதருடைய நடமாட்டந்தான் என்பதில் சந்தேகமில்லை. பேய்களுக்குக் கால் கிடையாது. இருந்தாலும் அவற்றின் காலடிதான் தரையில் படாதே! மேலும் கடோ த்கஜராயர் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது மச்சுப் படிகளுக்கு அடிப்புறத்தில் வெளிப்புறமாகத் திறக்கும் கதவு ஒன்று இருப்பதைக் கண்டார். அதற்கு உட்புறத்தில் தாள் இல்லை; அதாவது இருந்த தாளை யாரோ கழற்றிவிட்டிருந்தார்கள். இதுவும் கொஞ்சம் விசித்திரமாகவே தோன்றியது. சிற்சில சந்தேகங்களும் ஏற்பட்டன. எல்லாவற்றுக்கும் இன்று ஒரு இராத்திரி இந்த வீட்டில் கண் விழித்திருந்து பார்த்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தார். மின்சார தீபங்களையெல்லாம் அணைத்து விட்டுக் குளிர் அடக்கமான ஒரு அறைக்கு வந்து சேர்ந்தார். நல்ல வேளையாக அங்கே ஒரு பழங்காலக் கட்டில் கிடந்தது. அதில் துணியை விரித்துப் படுத்தார். மறுபடியும் ஏதோ தோன்றவே அறையின் கதவைத் தாளிட்டுக் கொண்டு வந்து படுத்தார். இராத்திரி முழுவதும் தூங்குவதில்லையென்ற திடசங்கற்பம் கொண்டிருந்தபடியால், கண்கள் மூடுவதற்கே இடம் கொடுக்கவில்லை. பக்கத்து வீடு ஒன்றில் கடிகாரம் பதினொரு மணி, பன்னிரண்டு மணி அடித்த வரையில் தூக்கம் கிட்ட நாடவில்லை. பன்னிரண்டு மணி அடித்த பிறகு சிறிது தூக்கம் கண்ணைச் சுற்றுவது போலிருந்தது. தூங்கக்கூடாது என்று கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார். எழுந்து உட்கார்ந்து சிறிது நேரத்துக்கெல்லாம் கடோ த்கஜராவுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அறைக்கு வெளியே அந்த வீட்டுக்குள் எங்கேயோ ‘ஜல்க்’ ‘ஜல்க்’ என்ற சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் கிட்டக் கிட்ட நெருங்கி வருவதாகத் தோன்றியது. வர வர அந்த ‘ஜல்க்’ சத்தம் அருகில் வந்து அந்த அறைக்கு வெளியே நின்றது. கடோ த்கஜராவ் பயப்படவில்லை. ஆனாலும் அவருடைய மார்பு மட்டும் கொஞ்சம் பட் பட் என்று அடித்துக் கொண்டது. மேற்படி ‘ஜல்க்’ சத்தம் கூட பரவாயில்லை. அது அந்த அறை வாசலில் வந்து சட்டென்று நின்றுவிட்டதுதான் கொஞ்சம் என்னமோ போலிருந்தது. ஒரு நிமிஷத்துக்கெல்லாம் அறையின் கதவை யாரோ இரும்புக் கம்பியினால் தட்டுவது போல் கேட்டது. “யார் அது?” என்றார் கடோ த்கஜராவ். “நீ யார்?” என்றது ஒரு கம்மலான குரல். “நான் இந்த வீட்டை வாடகைக்கு வாங்கிக் கொண்டு குடி வரப் போகிறேன். நீ யார்” என்றார் ராயர். “உனக்கு முன்னால் நான் குடி வந்தவன், உனக்கு இங்கே இடமில்லை. போய்விடு!” “வீட்டு வாடகை அதிகாரியிடம் நீர் அநுமதி பெற்றுக் கொண்டீரா?” “இல்லை” “அப்படியானால் இரண்டு பேரும் விண்ணப்பம் போடுவோம். யாருக்குக் கிடைக்கிறதோ, அவர் இருக்கலாம்.” “அதெல்லாம் முடியாது. உடனே ஓடிப் போய் விடு!” மறுபடியும் அந்த ‘ஜல்க்’ சத்தம் கேட்டது. “நீ யார் என்னைப் போகச் சொல்வதற்கு?” “கதவைத் திறந்து பார்! தெரிந்து கொள்வாய்!” “கதவைத் திறக்காவிட்டால்?” “கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து உன்னை விழுங்கி விடுவேன்.” “ஓஹோ! அப்படியா! யார் யாரை விழுங்குகிறார்கள் என்று பார்க்கலாம்.” "இவ்விதம் சொல்லிவிட்டுக் கடோ த்கஜராவ் எழுந்து மின்சார விளக்கைப் போட்டார். கதவைத் திறந்து பார்த்தார். அவர் எதிர்பார்த்தது போலவே அங்கே ஒரு பேய் நின்று கொண்டிருந்தது. ராயர் மியூஸியத்தில் மனிதனுடைய உடலின் எலும்புக்கூடு வைத்திருப்பதைப் பார்த்திருந்தார். அதே மாதிரி இந்தப் பேய் இருந்தது. ஆனால் பேசிற்று. காலையும் கையையும் கழுத்தையும் ஆட்டிற்று. அப்படி ஆட்டியபோது எலும்புப் பூட்டுகள் ‘ஜல்க்’ ‘ஜல்க்’ என்று சத்தமிட்டன. “போய்விடு! போய்விடு!” என்று அந்தப் பேய் காலினால் தரையில் உதைத்துக் கொண்டு அலறியது. கடோ த்கஜராவ் தம் நெஞ்சை ஒரு கையினால் அமுக்கிக் கொண்டு சொன்னார்:- “இதோ பார்! உன்னுடைய மிரட்டலுக்கெல்லாம் நான் பயந்துவிடமாட்டேன். இந்த வீடு பெரியது; தாராளமாய் இருக்கிறது. என்னுடைய குடும்பம் பெரியதுதான் என்றாலும், இதில் நானும் என் குடும்பத்துடன் குடியிருக்கலாம், நீயும் இருக்கலாம். நீ இருப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. ஆனால் ஒரு நிபந்தனை. இராத்திரி நாங்கள் தூங்குகையில், நீ ‘ஜல்க்’ ‘ஜல்க்’ என்று சத்தமிட்டுக் கொண்டு நடமாடக் கூடாது. நடமாடாமலேயிருந்தால் நல்லது. அப்படி நடமாடினாலும் சத்தம் கேட்காதபடி நடமாட வேண்டும். தெரிகிறதா? உன்னுடைய எலும்புப் பூட்டுகளில் இப்போது சதைப்பற்று இல்லாத படியால் இப்படிச் சத்தம் கேட்கிறது. கொஞ்சம் மோபில் ஆயில் வாங்கித் தருகிறேன். அதைப் போட்டுக் கொண்டு நடமாடினால் இவ்வளவு சத்தம் கேட்காது தெரிகிறதா?” “அதெல்லாம் முடியாது. என்னை எண்ணெய் போட்டுக் கொள்ளும்படி சொல்ல நீ யார்? நான் நடமாடும் போது ‘ஜல்க்’ ‘ஜல்க்’ என்று சத்தம் கேட்டால் தான் எல்லோரும் பயப்படுவார்கள்.” “நீ சொல்வது தவறு. அதற்கெல்லாம் இந்தக் காலத்தில் யாரும் பயப்பட மாட்டார்கள். என் குழந்தைகள் பொல்லாதவர்கள், உன்னைப் பார்த்து விட்டால் மியூஸியத்திலிருந்து தப்பி வந்துவிட்டதாக எண்ணி, உன்னை எலும்பு எலும்பாகக் கழற்றி எடுத்து விடுவார்கள்.” இதைக் கேட்டவுடனே அந்தப் பேய் ‘ஓ ய் ய் ய் ய்’ என்று சத்தம் போட்டுவிட்டு ஓடியது. மச்சுப்படியின் பக்கத்தில் போய் நின்று திரும்பிப் பார்த்து, “இரு, இரு! என் அண்ணனை வரச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடியது. ஸ்ரீ கடோ த்கஜராவ் நின்ற இடத்திலேயே நின்றார்! மற்றொரு பேய் இரண்டு கையாலும் தலைக்கு மேலே ஒரு பழம் பெட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தது. இதுவும் எலும்புக் கூட்டுப் பேய்தான். ஆனால் காவித்துணியினால் ஆன ஒரு நீண்ட அங்கியைக் கழுத்திலிருந்து கால் வரை போட்டுக் கொண்டு வந்தது. ராயரின் அருகில் வந்ததும் “போடட்டுமா? போடட்டுமா?” என்றது. ராயர், “பேயே! நீ ஸினிமா பார்ப்பதுண்டா?” என்று கேட்டார். “உனக்கு எப்படித் தெரிந்தது?” என்றது பேய். “நீ பார்த்த ரத்னகுமார் படத்தை நானுந்தான் பார்த்தேன். அதில் ஒரு பேய் ’போடட்டுமா? போடட்டுமா?” என்று அசடு வழிய உளறுகிறதே, அதைப் பார்த்துத்தானே நீயும் உளறுகிறாய்?" அதைக் கேட்ட அந்தப் பேய் திடீரென்று பெட்டியைக் கீழே போட்டது. பெட்டி அதன் கால் மேலேயே விழுந்தது! வலி பொறுக்காமல் ‘வீல்’ என்று கூச்சல் போட்டுக் கொண்டு ஓட்டம் பிடித்தது. பிறகு கடோ த்கஜராயர் இனி நிம்மதியாகத் தூங்கலாம் என்று எண்ணிக் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார். பயன் என்ன? சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடியும் ‘ஜல்க்’ சத்தம் கேட்டது. முன்னை விட அதிகமாகவே கேட்டது. கதவைத் திறந்து பார்த்தால் உடம்பில் இரும்புக் கவசமும், தலையில் இரும்புத் தொப்பியும் தரித்த ஒரு எலும்புக் கூட்டுப் பேய் நின்றது. அது அணிந்திருந்த கவசங்களினால் தான் அதிக சத்தம் என்று ராயர் அறிந்து கொண்டார். “பழி! பழி!” என்று பேய் கத்திற்று. “இதோ பார்! வீண் கூச்சல் போடாதே. நீ ஹாம்லெட் நாடகத்தில் வரும் தகப்பன் - பேய்தானே?” “ஆமாம்!… பழி! பழி!” “நீ கையினால் ஆகாத உபயோகமற்ற பேய் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் தானே உனக்குத் துரோகம் செய்த மனைவியையும் சகோதரனையும் உன்னால் பழி வாங்க முடியவில்லை? உன் மகனை ஏவி விட்டு அவன் வாழ்வையும் கெடுத்தாய்! சீ! முட்டாளே! கோழைப் பேயே! போ! நீ கெட்ட கேட்டுக்கு கவசம் வேறு கேடா? இங்கே நின்றாயோ, பிடித்து மியூஸியத்துக்கு அனுப்பி விடுவேன்!” ஹாம்லெட்டின் தகப்பன் - பேய் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் வந்த இன்னொரு பேயைப் பார்த்து, கடோ த்கஜராயர் “நீ யார்” என்றார். “நான் ஜோசியப் பேய்!” “எதற்காக வந்தாய்?” “நீ என்னைப் பற்றி இன்று டிராம் வண்டியில் அவதூறு கூறினாய் அல்லவா! என் உண்மையை நிரூபிக்கவே வந்தேன். உன்னுடைய காரியம் பலிக்காமல் செய்வதற்காகவே வந்தேன்!” “பாவம்! இதற்காகவா உயிரை விட்டாய்? உன்னுடைய விதி இன்னதென்று உன் ஜோசியத்தில் தெரிந்ததா!” “தெரியாமல் என்ன? பேஷாய்த் தெரிந்திருந்தது.” இச்சமயத்தில் “ஜயபேரிகை கொட்டடா!” என்ற ஒரு கம்பீர முழக்கம் கேட்டது. முழக்கம் வந்த திசையைப் பார்த்தால் பாரதியார் வந்து கொண்டிருந்தார். அதே அல்பாகா சட்டை; கழுத்தில் அதே விதத் துண்டு; அதே மீசை; தலையில் அதே மாதிரி குஞ்சம் விட்ட தலைப்பாகை. “பயமெனும் பேய்தனை அடித்தோம்!” என்று பாரதியார் முழங்கினார். அவ்வளவுதான்; ஜோசியப் பேய் ஓட்டம் பிடித்தது. அந்தப் பேயைத் துரத்திக் கொண்டு பாரதியார் விரைந்து ஓடினார். மறுபடியும் இன்னொரு அனல்வாய்ப் பேய் வந்தது. அது வாயைத் திறந்தால் தணல் சுடர்விட்டது. மனோகரன் நாடகத்துப் பேய் அது என்று கடோ த்கஜராவ் உடனே தெரிந்து கொண்டார். “ஏ பேயே! நானே மனோகரன் நாடகத்தில் பேயாக நடித்திருக்கிறேன். உன்னைவிடப் பிரமாதமாக என்னுடைய வாயிலிருந்து அனலைக் கக்குவேன். தெரியுமா!” என்றார் ராயர். அந்தப் பேயும் ஓட்டம் எடுத்தது. கடைசியாக கடோ த்கஜராவ் கூடச் சிறிது மிரளும்படியாகப் பத்துப் பதினைந்து பேய்கள் சேர்ந்தாற் போல் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டன. “பசி பசி” என்று அவை கூச்சலிட்டன. கடோ த்கஜராவ் இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று ஒரு நிமிஷம் யோசனை செய்தார். அதற்குள் அப்பேய்கள், “பசி! உன்னை விழுங்கி விடப் போகிறோம்!” என்று ஆவேசமாக ஆர்ப்பரித்தன. “ஏ பேய்களே! உங்களுடைய பொய் எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்! பஞ்சத்தினால் நீங்கள் செத்துப் போனதாகப் பொய் சொல்லி ஊரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்! காங்கிரஸ் மந்திரிகளுக்கு அபகீர்த்தி உண்டாக்குவதற்காகவே இப்பேர்பட்ட சதியாலோசனை செய்திருக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் பஞ்சத்தினாலோ பசியினாலோ இறக்கவில்லை. வயது முடிந்ததனாலேயே செத்தீர்கள். அது உங்கள் தலைவிதி; யார் என்ன செய்ய முடியும்? உடனே எல்லோரும் ஓடிப் போய் விடுங்கள்! இல்லாவிட்டால் எங்களுடைய உணவு மந்திரி கனம் முன்ஷியைக் கூப்பிட்டுக் கொண்டு வருவேன்!” என்றார் ராயர். “உணவு மந்திரி முன்ஷி வந்தால் எங்களை என்ன செய்து விடுவார்?” “எலும்பிலே பாஸ்பரஸ் என்னும் சத்து இருக்கிறது. பூமிக்கு அது மிக நல்ல உரம். உங்கள் எலும்புகளையெல்லாம் சுக்கு நூறாய் இயந்திரத்தில் கொடுத்து உடைத்து நிலத்துக்குப் போட்டு உழும்படி செய்து விடுவார்!” இதைக் கேட்டதும் அந்தப் பஞ்சப் பேய்கள் ஒரே ஓட்டம் பிடித்தன. அப்போது எழுந்த பெரும் ‘ஜல்க்’ ஓசையில் கும்பகர்ணன் கூட விழித்தெழுந்திருப்பான். ஸ்ரீ கடோ த்கஜராவ் விழித்துக் கொண்டதில் வியப்பு இல்லையல்லவா? தாம் தூங்காமலிருக்கத் தீர்மானித்திருந்தும் எப்படியோ தூங்கிப் போய் விட்டதையும், அத்தனை நேரம் கண்டது கனவுதான் என்பதையும், உணர்ந்து கொண்டார். எழுந்து உட்கார்ந்து தம் கண்களைத் துடைத்துக் கொண்டார். “பேயுமில்லை, கீயுமில்லை! எல்லாம் பிரமை!” என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும்போது மறுபடியும் ஏதோ சத்தம் கேட்டது. ‘ஜல்க்’ ‘ஜல்க்’ என்றும், ‘சல்’ ‘சல்’ என்றும் ‘கலீர்’ ‘கலீர்’ என்றும் ஓசைகள் எழுந்தன. இது என்ன கூத்து? கடோ த்கஜராவ் நன்றாக விழித்துக் கொண்டார். அறைக் கதவைத் திறந்தார். அந்த வீட்டின் மாடியில் ஏதோ ஒரு மூலை அறையிலிருந்து அந்தச் சத்தங்கள் வந்தன. அடிமேல் அடிவைத்து மெள்ள மெள்ள நடந்து மச்சுப்படி ஏறினார். சத்தம் வந்த அறைக்கு அருகே சென்று பார்த்தார். ஜன்னல் கதவு ஒன்றே ஒன்று மட்டும் திறந்திருந்தது. அதன் வழியாக எட்டிப் பார்த்தார். உள்ளே ஐந்தாறு ஆசாமிகள் உட்கார்ந்து பணம் வைத்து சீட்டு ஆடிக் கொண்டிருந்தார்கள். வெள்ளிப் பணத்தை அங்குமிங்கும் நகர்த்திய சத்தந்தான் அவர் கேட்ட சப்தம். மேலே கூறிய விநோதமான கனவை உண்டாக்கிய ஓசையும் அதுதான் போலும்! கடோ த்கஜராவ் அடிமேல் அடிவைத்து நடந்து சென்று திறந்திருந்த வாசற்படி வழியாக வெளியேறினார். தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனைத் தேடிப் போனார் கதவை இடித்தார். ஒரு போலீஸ் சேவகர் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்து கதவைத் திறந்தார். “அங்கே ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுகிறது. உடனே வந்தால் குற்றவாளிகளைக் கைப்பிடியாகப் பிடிக்கலாம்!” என்று சொன்னார் ராயர். “உமக்கு எப்படித் தெரியும்?” என்று போலீஸ்காரர் கேட்டார். “வாடகைக்கு அந்த வீட்டைப் பேசியிருக்கிறேன். அந்த வீட்டில் இராத்திரி படுத்துக் கொண்டிருந்தேன்…” “எந்த வீட்டில்?” வீதியையும் வீட்டு நம்பரையும் கடோ த்கஜராவ் சொன்னதும், “ஐயோ!” என்று கூச்சல் போட்டு விட்டுப் போலீஸ்காரர் கதவைச் சாத்திக் கொண்டார். தம்மைப் பேய் என்று நினைத்து அவர் பயந்து போய்விட்டார் என்பது ராயருக்குத் தெரிந்து போயிற்று. அதிலிருந்து ஒரு யுக்தி உதயமாயிற்று. திரும்பவும் அந்த வீட்டுக்கே போனார். திறந்த கதவு வழியாகப் பிரவேசித்தார். “ஓய்ய்ய்ய்” என்று ஒரு கூச்சல் போட்டார். “இய்ய்ய்ய்” என்று இன்னொரு சத்தம் போட்டார். சீட்டாடிய அறையிலிருந்து குழப்பமான குரல்கள் வந்தன. மறுபடியும் ராயர் ‘கிறீச்’ என்றும் ‘ஐயோ!’ என்றும் கத்தினார். கனவில் பேய்கள் போட்ட சத்தத்தையெல்லாம் இவரும் போட்டார். மாடிப்படியில் இரண்டு முறை தடதடவென்று ஏறி இறங்கினார். சீட்டாட்ட அறைக் கதவு திறந்தது. சீட்டு ஆடியவர்கள் வெளியில் வரத் தொடங்கினார்கள். மச்சுப் படியில் பத்து அடிக்கு மேலே கடோ த்கஜராவ் நின்று கொண்டார். தன்னுடைய கறுப்புக் கம்பளியை எடுத்துத் தலை முதல் கால் வரை போட்டு மறைத்துக் கொண்டு நின்றார். அறையிலிருந்து வந்தவர்களில் ஒருவன் அந்த உருவத்தைப் பார்த்தான். ‘அதோ!’ என்று பீதி நிறைந்த குரலில் சொன்னான். மற்றவர்களும் பார்த்தார்கள் அவ்வளவுதான்! ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்கள். அவசரத்தில் கொஞ்சம் ரூபாய்களைக்கூட இறைத்து விட்டுப் போனார்கள். 4 மறுநாள் காலையில் கடோ த்கஜராவ் அந்த வீட்டுச் சொந்தக்காரரிடம் சென்று வீட்டைக் கட்டாயம் வாடகைக்கு எடுத்துக் கொள்வதாகச் சொல்லிப் போனார். வீட்டுக் கண்ட்ரோல் அதிகாரி லீவு முடிந்து காரியாலயத்துக்கு வந்ததாகத் தெரிந்தது. அவரைப் போய் பார்த்தார். எல்லா விபரமும் சொன்னார். அதிகாரி அவரைப் பார்த்து, “விடு ரொம்பப் பெரியதா? சௌகரியமானதா?” என்று கேட்டார். “ஆமாம், பெரிய வீடுதான். மிகவும் வசதியானது.” “நியாயமாக, அந்த வீட்டுக்கு என்ன வாடகை கொடுக்கலாம்?” “மாதம் இருநூறு ரூபாய் கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கலாம்.” “வீட்டுக்காரச் செட்டியார் என்ன வாடகை கேட்கிறார்?” “தொண்ணூறு ரூபாய்க்குத் தருவதாகச் சொல்கிறார்.” “ஒரு வேளை இன்னும் கொஞ்சம் குறைக்கவும் சம்மதிக்கலாம் அல்லவா?” “அதுவும் சாத்தியந்தான்!” “சரி, நீர் போகலாம். தீர விசாரித்து உத்தரவு போடப்படும்.” மறுநாள் ராயர் வீட்டுக்காரச் செட்டியாரைப் போய்க் கேட்கலாம் என்று போனார். வழியில் மேற்படி வீட்டைச் சுண்ணாம்பு அடித்துச் சுத்தம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து வியப்படைந்தார். செட்டியாரைப் போய் பார்த்தபோது தான் விஷயம் தெரிந்தது. வீட்டு வாடகை உத்தியோகஸ்தர் மிஸ்டர் பேயாழ்வார் நாயுடுகாரு மேற்படி வீட்டை அறுபது ரூபாய் வாடகைக்குத் தாமே எடுத்துக் கொண்டு விட்டார்! அந்த வீட்டுக்கு குடிவந்தவரின் பெயர் பொருத்தம் ஸ்ரீ கடோ த்கஜராயருக்கு மிக்க திருப்தி அளித்தது. அதோடு இன்னொரு ஆறுதலும் அடைந்தார். மிஸ்டர் பேயாழ்வார் நாயுடுவும் தம்மைப் போல் பெரிய குடும்பிதான் என்று தெரிய வந்தது. ராயரைக் காட்டிலும் நாயுடுவுக்கு மூன்று குழந்தைகள் அதிகம்! மொத்தம் ஒரு டஜன்! “புது வீட்டில் அம்மனிதர் குடியும் குடித்தனமுமாக நன்றாயிருக்கட்டும், குடும்பத்தை மேலும் பெருக்கிக் கொள்ளட்டும்!” என்று ராயர் மனதிற்குள் ஆசீர்வதித்தார். ததாஸ்து! வைர மோதிரம் 1 ராஜாராமன், பி.ஏ. (ஆனர்ஸ்) கடற்கரைச் சாலை ஓரமாய் நடந்து கொண்டிருந்தான். மாலை சுமார் நாலு மணியிருக்கும். ஹைக்கோர்ட்டிலிருந்து திரும்பும் மயிலாப்பூர் வக்கீல்களின் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சரசரவென்று போய்க் கொண்டிருந்தன. அந்த வண்டியில் அமர்ந்திருந்த கனதனவான்களுக்கு மட்டும், அப்போது ராஜாராமனுடைய மன நிலைமை தெரிந்திருந்தால், அப்படி அலட்சியமாய் போயிருப்பார்களா? அன்றிரவு அவர்களால் கவலையின்றித் தூங்கியிருக்க முடியுமா? சுருங்கச் சொன்னால், அப்போது ராஜாராமனுடைய உள்ளம் ஒரு லட்சம் செங்கல்லை வேகவைக்கக்கூடிய காளவாயைப் போல் எரிந்து கொண்டிருந்தது. அந்தத் தீயினால் அவன் அந்தக் கடற்கரைச் சாலையிலிருந்த கட்டிடங்களையெல்லாம் சுட்டெரித்துவிட விரும்பினான். முக்கியமாக, அந்த ஸெனட் மண்டபம், பிரஸிடென்சி கலாசாலை, புதிதாய்க் கட்டியிருக்கும் பரீட்சை மண்டபம் இவை அவன் கண்களை உறுத்தின. எதற்காக இந்தக் கட்டிடங்கள்? எதற்காக இவற்றில் ஒருவன் படிப்பதும் பரீட்சை தேறுவதும்? பி.ஏ. (ஆனர்ஸ்) பரீட்சையில் முதல் தரத்தில் தேறிய தன்னுடைய கதி இப்போது எவ்விதம் இருக்கிறது? ‘பட்டினியினால் இறந்தான்’ என்று கதைகளிலாவது, பத்திரிகைச் செய்திகளிலாவது படித்தபோதெல்லாம் ராஜாராமன் ஆச்சரியப்படுவான். ‘யாராவது பட்டினியினால் சாவார்களா? என்னதான் தரித்திரமானாலும், வயிற்றுக்குச் சோறு கிடைக்காமலா போய்விடும்? சுத்தப் பொய்யும் புளுகும்’ என்று நினைப்பான். இப்போது அவனுக்கே அந்த கதி நேர இருந்தது. இராத்திரி சாப்பாட்டுக்கு வழியில்லை! தனக்கு மட்டுமல்ல; தன் தம்பி ரகுவுக்கும் அதே கதிதான். ஆம்; தான் மட்டுமாயிருந்தால் கூடப் பாதகமில்லை. சமுத்திரத்தில் விழுந்து உயிரை விட்டாலும் விடலாம்; அல்லது போலீஸ்காரன் மேல் கல்லை விட்டெறிந்து சிறைக்குப் போகலாம். ஆனால் ரகுவை என்ன செய்வது? தனக்கு ஏதாவது நேர்ந்தால் அந்தக் குழந்தையினுடைய கதி என்னவாகும்? ரகு சாயங்காலம் வழக்கம்போல விளையாடிவிட்டு ஆறரை மணிக்குத் திரும்பி வருவான். வரும்போதே, “அண்ணா! பிஸ்கோத்து வாங்கி வந்திருக்கிறாயா?” என்று கேட்டுக் கொண்டு வருவான். அறையிலே தன்னைக் காணாவிடில் அவன் என்ன செய்வான்? தவித்துப் போக மாட்டானா?… சரிதான்; ஆனால் தான் அறையில் உயிரோடு இருந்துதான் என்ன பிரயோஜனம்? குழந்தைக்குப் பிஸ்கோத்து வாங்கிக் கொண்டு போகக் கையில் காசு எங்கே இருக்கிறது? இரண்டு வருஷத்திற்கு முன்னால் ராஜாராமனுடைய தாயார் - கிராமத்திலிருந்தவள் - திடீரென்று இறந்து போனதாகத் தந்தி வந்து அவன் உடனே புறப்பட்டுச் சென்றான். அதற்கு முன்னாலேயே அந்த அம்மாள் விற்கக் கூடிய நகை, நட்டு எல்லாவற்றையும் விற்றுவிட்டிருந்தாள். அவ்வளவையும் ராஜாராமனுடைய படிப்பும், பட்டணவாசமும் விழுங்கி விட்டன. தாயாருடைய மரணத்தினால் அந்த வருஷம் அவனுடைய படிப்பு தடைபட்டது. சில மாதம் ஊரில் இருந்து, பாக்கி இருந்த வீட்டையும் நிலத்தையும் மிகவும் பிரயாசையின் பேரில் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு, ரகுவையும் அழைத்துக் கொண்டு சென்னைப் பட்டணம் வந்து சேர்ந்தான். அந்த வருஷம் நன்றாய்ப் பரீட்சையிலும் தேறினான். அதற்குள் கையில் கொண்டு வந்திருந்த பணமெல்லாம் கரைந்துவிட்டது. சாமான்களை ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்தான். கடைசியாக மிஞ்சியிருந்த கைக்கடிகாரத்தையும் விற்றாய்விட்டது. இந்த மூன்று மாதமாக அவன் உத்தியோகந் தேடி அலையாத இடம் சென்னையில் கிடையாது; அவன் ஏறி இறங்காத ஆபீஸ் கிடையாது. அன்று மாலை கடற்கரைச் சாலை ஓரத்தில் அவன் ஏன் அவ்வளவு உள்ளக் கொதிப்புடன் நடந்து கொண்டிருந்தான் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? 2 “ஹலோ! ராஜாராம்!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். ஒரு பெரிய மோட்டார் வண்டி அவன் பின்னால் நின்றது. அதில் ஒரு பெரிய மனிதர் உட்கார்ந்திருந்தார். “நமஸ்காரம்” என்றான் ராஜாராமன். “ஏதாவது வேலையாய்ப் போகிறாயா?” என்று அப்பெரிய மனிதர் கேட்டார். “வேலையா? வேலையிருந்தால் தான் எவ்வளவோ தேவலையே?” “அப்படியென்றால் என்னுடன் வா! உட்கார்!” ராஜாராமன் வண்டியில் ஏறி அவர் அருகில் உட்கார்ந்தான். வண்டி கிளம்பியது. அந்தப் பெரிய மனிதர் ஒரு மாஜி திவான். ஒரு தடவை, ராஜாராமன் கலாசாலைத் தமிழ்ச் சங்கத்தின் காரியதரிசியாயிருந்தபோது, அவரை ஓர் உபந்நியாசத்துக்காக அழைத்திருந்தான். அச்சமயம் அந்த மாஜி திவானின் சில முக்கிய குணாதிசயங்களைப் பற்றி அவன் வெகுவாகப் புகழ்ந்து பேசினான். அவரிடம் அந்தக் குணங்கள் உண்டென்பதை அதற்கு முன் யாரும் கண்டு பிடிக்கவில்லை. உண்மையில், அவருக்கே கூட அது புதுமையாய்த்தான் இருந்தது. இன்னும் புகுந்து பார்த்தோமானால், அந்தப் புகழுரை ராஜாராமனுடைய சொந்த சரக்குமன்று. ஓர் ஆங்கில நூலாசிரியர் “கனவான் யார்?” என்ற தலைப்புடன் எழுதியிருந்த கட்டுரையை அதற்கு முதல் நாள் அவன் படித்திருந்தான். அதில் குறிப்பிட்டிருந்த குணாதிசயங்களையெல்லாம் மாஜி திவான்மேல் அவன் ஏற்றிப் பேசினான். அது எப்படியானாலும், அன்றைய தினம் மாஜி திவான், ஜாம்பவந்தனால் புகழப்பட்ட அனுமாருடைய நிலையை அடைந்தார். அவருடைய இருதயம் குதூகலத்தினால் விரிந்தது. மேலும் ராஜாராமனிடம் அவருக்கு ஓர் அபிமானம் விழுந்து விட்டது. இப்போது ராஜாராமன் தம் பக்கத்தில் உட்கார்ந்ததும் அவன் முதுகில் ஒரு பெரிய ’ஷொட்டு’க் கொடுத்துவிட்டு, “என்ன செய்து கொண்டிருக்கிறாய் இப்போது?” என்று கேட்டார். தன் கஷ்டங்களுக்கு ஒரு வேளை முடிவு வந்துவிட்டதோவென்று ராஜாராமனுக்குத் தோன்றியது. பி.ஏ. (ஆனர்ஸ்) பாஸ் செய்து விட்டு மூன்று மாதமாய் வேலைக்கு அலைந்து கொண்டிருப்பதைப் பற்றிச் சாங்கோபாங்கமாய் எடுத்துச் சொன்னான். அதைக் கேட்டதும் மாஜி திவான் தமது பிரசங்கத்தை ஆரம்பித்தார்: “நமது தற்கால நாகரிகம் அவ்வளவு இலட்சணத்தில் இருக்கிறது. வேலையில்லாதவர்கள் ‘வேலை, வேலை’ என்று அலைகிறார்கள். வேலை இருப்பவர்களோ எப்படி வேலை செய்யாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறார்கள். நம் பெரியோர்கள் எவ்வளவு நல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று இப்போது தெரிகிறதா? வர்ணாசிரமத்தை இகழ்கிறீர்களே. பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்று பிரித்து, அந்தந்தச் சாதிக்கு அந்தந்த வேலையென்று ஏற்படுத்தினார்களே அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள்!… தற்கால நாகரிகத்தைப் போய் நீங்கள் ஒசத்தியாய்ச் சொல்கிறீர்கள்!…” “நான் சொல்லவில்லையே…” என்று ஆரம்பித்தான் ராஜாராமன். “நீ என்றால் நீயா? நீ சொல்லாவிட்டால், உன்னைப் போன்றவர்கள் சொல்கிறார்கள். என் பிள்ளையாண்டான் ஆக்ஸ்போர்டில் படிக்கிறான். அவன் என்ன எழுதுகிறான் தெரியுமா? ஜவாஹர்லால் நேருவின் சரித்திரத்தைப் படித்தானாம். அவர் சொல்கிறதுதான் சரியாயிருக்காம். இந்தியாவுக்கு ’ஸோஷலிஸ’ந்தான் வேண்டுமாம். சுத்த முட்டாள்கள்! இவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்? இந்தியாவுக்கு வேண்டியது என்னவென்பதை எத்தனையோ ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் நம் ரிஷிகள் எழுதி வைத்துவிட்டார்கள். தைத்திரீய உபநிஷத் என்ன சொல்கிறது. ’அன்னாத் பிராணா: பிராணபான:…” உபநிஷத் பிரசங்கம் முடிவதற்குள் வண்டி லாயிட்ஸ் ரோட்டிலிருந்த ஒரு பெரிய பங்களாவின் கேட்டில் புகுந்து நின்றது. அப்போது ராஜாராமன் அவனைப் புளகாங்கிதமாகச் செய்த ஒரு காட்சியைக் கண்டான்; தன்னையும், தன் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், மாஜி திவானிடம் உத்தியோகம் கேட்க வேண்டுமென்ற நினைவையும் மறந்தான். வண்டியிலிருந்து இறங்குவதற்குக் கூட மறந்து போனான். அப்படி அவனை மெய் மறக்கச் செய்தவை. ஒரு பெண்மணியின் முகத்திலிருந்த இரண்டு கண்கள் தான். ‘கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்களென்னைப் பேதைமை செய்தனவே!’ என்று ஆழ்வார் பகவானைப் பற்றிப் பாடியவாறு போல, தன்னைப் பேதைமை செய்த அந்தக் கண்களையும் அவற்றைப் படைத்த பெண்ணையும் இனித் தன் வாழ்நாளில் பார்க்கப் போகிறோமென்ற எண்ணமே அவனுக்கிருக்கவில்லை. அப்படியிருக்க, இங்கே, சற்றும் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் அவளைப் பார்த்ததும் அவன் மெய்மறந்ததில் வியப்பென்ன? “இறங்கு! ஒரு சின்ன டீ பார்ட்டி கொடுக்கப் போகிறேன். நீயும் இருந்துவிட்டுப் போகலாம். பாதகமில்லை, இறங்கு! வருகிறவர்கள் எல்லாரும் ரொம்ப வேண்டுமென்கிறவர்கள் தான்” என்று மாஜி திவான் வற்புறுத்திச் சொன்ன பிறகு, ராஜாராமன் கொஞ்சம் சுய ஞாபகம் வந்து வண்டியிலிருந்து இறங்கினான். 3 போலீஸ் டிபுடி கமிஷனர் மிஸ்டர் கபாலி அவர்களுக்குச் சமீபத்தில் ‘ராவ் சாகிப்’ பட்டம் அளிக்கப் பெற்றதை முன்னிட்டு நம் மாஜி திவான் அந்தச் சிற்றுண்டி விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். ரொம்பவும் பொறுக்கி எடுத்த அத்தியந்த சிநேகிதர்கள் மட்டுந்தான் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் அண்ணனும் தங்கையுமாகிய ஓர் இளைஞனும் யுவதியும் இருந்தனர். அவர்கள் முக்கிய விருந்தினராகிய ராவ்சாகிப் கபாலியின் மருமகனும் மருமகளும். அவர்கள் பெயர்: பாலகோபால், வத்ஸலை. அவர்களுக்கு ராஜாராமனை மாஜி திவான் அறிமுகம் செய்து வைத்தார். “உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் போல் இருக்கிறதே? ஸெயிண்ட் ஜான் காலேஜில் படித்தீர்களா?” என்று பாலகோபால் கேட்டான். “ஆமாம்; கொஞ்ச நாள் தான் படித்தேன். நீங்களும் உங்கள் சகோதரியும் தினம் காரில் வருவீர்கள். உங்களை மட்டும், இறக்கிவிட்டு வண்டி உங்கள் சகோதரியுடன் போய் விடும் இல்லையா?” அதற்குள் வத்ஸலை, “நீங்கள் காலேஜ் மாடி வராண்டாவில் மூன்றாவது தூணில் சாய்ந்து கொண்டு நிற்பீர்கள், இல்லையா?” என்றான். ராஜாராமனுக்கு ரோமம் சிலிர்த்தது. இவள் தன்னைக் கவனித்திருப்பது மட்டுமல்ல; நன்றாய் ஞாபகம் வைத்துக் கொண்டும் இருக்கிறாள்! பழைய நினைவுகள் எல்லாம் அவன் உள்ளத்தில் குமுறிக் கொண்டு வந்தன. சென்ற வருஷத்துக்கு முந்திய வருஷம் கலாசாலை திறந்து சில நாளைக்கெல்லாம் ஒரு நாள் சற்று முன்னதாகவே ராஜாராமன் கலாசாலைக்குச் சென்றுவிட்டான். எனவே, மணி அடிக்கும் வரையில் மாடித் தாழ்வாரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு மோட்டார் வண்டி வந்து கலாசாலை வாசலில் நின்றது. அதில் ஒரு யுவனும் யுவதியும் இருந்தார்கள். முக ஒற்றுமையிலிருந்து அவர்கள் அண்ணனும் தங்கையுமாய்த்தான் இருக்க வேண்டுமென்று தெரிந்தது. இளைஞன் வண்டியிலிருந்து இறங்கினான்; வண்டி அந்த யுவதியுடன் போய்விட்டது. அவள் பெண்கள் கலாசாலைக்குப் போகிறாள் போலும்! வண்டி போன பிறகும், அந்தப் பெண்ணின் கண்கள் மட்டும் ராஜாராமனின் எதிரில் தோன்றிக் கொண்டிருந்தன. அம்மா! அந்தக் கண்கள் தான் எவ்வளவு விசாலமானவை! ‘கடலினும் பெரிய கண்கள்’ என்று கவி வர்ணித்திருப்பது இப்படிப்பட்ட கண்களைப் பற்றித் தான் இருக்க வேண்டும்! அடுத்த நாளும் ராஜாராமன் சற்று முன்னதாகவே கலாசாலைக்குச் சென்றான். அதே இடத்தில் நின்றான். வண்டியும் அதே நேரத்துக்கு வந்தது. இளைஞன் வண்டியிலிருந்து இறங்கியதும் என்னவோ சொன்னான். ஏதோ வேடிக்கையாக அவன் சொல்லியிருக்க வேண்டும். அதைக் கேட்டு, அந்தப் பெண் புன்னகை புரிந்தாள்; பளீரென்று ஒரு மின்னல் மின்னுவது போல் இருந்தது. பரந்த விழிகளுடன் கூடிய அந்தப் புன்னகை பூத்த முகம் ராஜாராமனுடைய உள்ளத்தில் பதிந்தது. “இவள் ஒரு ‘ஸினிமா ஸ்டார்’ ஆக வேண்டும்; அப்படி ஆனால் மேனாட்டின் பிரசித்த நடிகைகளையெல்லாம் தோற்கடித்து உலகத்தையே விலைக்கு வாங்கிவிடுவாள்” என்று அவன் முதலில் நினைத்தான். ‘சீ? இவ்வளவு சௌந்தரியமும் அப்படியா வீணாய்ப் போக வேண்டும்? இவள் மட்டும் தேச சேவையில் ஈடுபட்டால், எவ்வளவு நல்ல வேலை செய்யலாம்? இவளுடைய தலைமையின் கீழ் யார் என்ன தியாகந்தான் செய்யப் பின் வாங்குவார்கள்?’ என்று கருதினான். பிறகு, ‘இதெல்லாம் நம் தேசத்தில் நினைத்து என்ன பிரயோஜனம்? எந்த அசடு இவளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறதோ? அல்லது ஒரு வேளை முன்னமே ஆகிவிட்டதோ என்னவோ? கலியாணம் ஆகிவிட்டால் பிறகு எல்லாரையும் போல் ஜனத்தொகையை அபிவிருத்தி செய்து கொண்டு, வாழ்க்கையைத் தள்ளவேண்டியதுதானே?’ என்றெல்லாம் எண்ணமிட்டான். ராஜாராமன் மறுநாளும் அதே நேரத்தில் அதே இடத்தில் நின்றான். அன்று வண்டி அங்கே நின்றுவிட்டுக் கிளம்பிச் சென்றபோது, அந்தப் பெரிய கண்கள் ஒரு தடவை சுழன்று அவன் மேல் ஒரு வீச்சு வீசி, அவனைத் திகைக்கச் செய்து விட்டு, மறுவினாடி மறைந்தன. பிறகு, இதே மாதிரி அநேக நாட்கள் நடந்தது. அந்தக் கண்கள் என்னதான் சொல்கின்றன? அந்தப் பார்வையின் அர்த்தந்தான் என்ன? பரிகாசமா? கோபமா? மமதையா? அல்லது… மூன்று மாத காலம் ராஜராமன் ஒரு சொப்பன உலகத்தில் வாழ்ந்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அம்மா இறந்த செய்தி வர, ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். அடுத்த வருஷம் அவன் மறுபடி அதே கலாசாலையில் வந்து சேர்ந்தபோது, அந்தப் பச்சை வர்ண மோட்டார் வண்டி இந்த வருஷம் அங்கு வருவதில்லையென்று தெரிந்தது. 4 நமது மாஜி திவானுடைய வாழ்க்கையில் பழைய நாகரிகமும் புது நாகரிகமும் அழகாகக் கலந்திருந்தன. இந்தச் சிற்றுண்டி விருந்துக்கு மேஜைகள், விரிப்புகள், கிண்ணங்கள், கோப்பைகள் சகிதமாக மேனாட்டு முறையில் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் புருஷர்களுக்குத் தனி மேஜையும் ஸ்திரீகளுக்குத் தனி மேஜையும் போடப்பட்டிருந்தன. விருந்துக்கு வந்திருந்தவர்களுடைய பிரபாவங்களை இப்போது கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீமான் கங்கோத்ரி அய்யர் ஒரு வக்கீல், அவருடைய காலத்திலே அநேகம் கட்சிக்காரர்களைத் தலை மொட்டையடித்தவர். இப்போது அவருடைய முக்கியமான வேலை என்னவென்றால், உலகத்திலுள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் கடிதம் எழுதுவதுதான். அவரவர்களுக்கு எந்தெந்த விஷயத்தில் பிரமை உண்டென்று அவர் தெரிந்து கொண்டு அதைப் பற்றி எழுதுவார். மகாத்மாவுக்கு ஹரிஜன சேவையைப் பற்றியும், கிராம நிர்மாணத்தைப் பற்றியும் அவர் அநேக கடிதங்கள் எழுதியிருக்கிறார். மகாத்மாவிடமிருந்து அவருக்கு ஒரு தடவை பதில் வந்தது. “தங்களுடைய கடிதங்கள் மிகவும் ருசிகரமான விஷயங்களை உட்கொண்டவை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதை நான் நம்புகிறேன். ஆனால், நான் புலன்களை அடக்கும் விரதம் கொண்டிருக்கிறேனாதலால் அவற்றை அனுபவிக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை” என்று மகாத்மா எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை நமது வக்கீல் கண்ணாடி போட்டு மாட்டியிருக்கிறார். அதே மாதிரி, பெர்னாட்ஷாவிடமிருந்து, “தங்கள் கடிதத்தைப் படித்தேன்; இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்” என்று வந்த கடிதத்தையும், ரொமேன் ரோலண்டிடமிருந்து, “தங்கள் முப்பது பக்கங்கொண்ட கடிதம் கிடைத்தது; தங்கள் பாஷை எனக்குப் புரியாததற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்று வந்த கடிதத்தையும் கண்ணாடி போட்டுச் சுவரில் மாட்டியிருக்கிறார். அவர் அப்படிக் கண்ணாடி போட்டு மாட்டியிருக்கும் கடிதங்களில் நடுநாயகமாக விளங்குவது சென்னை மாஜி கவர்னர் ஒருவருடைய கடிதந்தான். சீமைக்குப் போய் விட்ட அந்த மாஜி கவர்னருக்கு ஸ்ரீமான் கங்கோத்ரி அய்யர் எத்தனையோ கடிதங்கள் எழுதினார்; ஒன்றுக்கும் பதில் வரவில்லை. கடைசியாக, கடவுள் அருளால் அவருடைய மனோரதம் நிறைவேறும் காலம் வந்தது. ஐயருடைய அருமை மனைவி காலஞ்சென்றாள். அவள் கைலாசப் பிராப்தி அடைந்த வரலாற்றை மிகவும் உருக்கமாக ஒரு கடிதத்தில் எழுதி, “தங்களிடமிருந்து ஓர் ஆறுதல் மொழி வந்தால் தான் உயிர் தரிப்பேன்” என்று முடித்திருந்தார். இம்மாதிரி விஷயங்களில் வெள்ளைக்காரர்கள் சம்பிரதாயத்தைக் கண்டிப்பாக அநுசரிப்பவர்கள். உடனே மாஜி கவர்னரிடமிருந்து பதில் வந்தது. “தங்கள் மனைவி தங்களைவிட்டுச் சென்று கைலாசத்தை அடைந்த விஷயம் தெரிந்து மிகவும் வருத்தப்படுகிறேன். அவளுக்கு நல்ல புத்தி ஏற்பட்டுத் திரும்பி வந்தால், மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அந்தக் கடிதம் சொல்லிற்று. அதன் பொருள் என்னவென்று ஸ்ரீமான் கங்கோத்ரி அய்யருக்கு இன்றுவரை நன்கு விளங்கவில்லையென்றாலும், கடிதம் என்னவோ கண்ணாடி போடப்பட்டு தொங்குகிறது. விருந்தினரில் இன்னொருவர் ஒரு பத்திரிகாசிரியர், அவருடைய பெயர் ராவ் பகதூர் அச்சுதராயர், முப்பத்திரண்டு வருஷமாக நடந்து வரும் அவருடைய பத்திரிகையின் பெயர் ‘குடும்பநேசன்’. அவருடைய குடும்பத்துக்கு அந்தப் பத்திரிகை நேசனாயிருப்பதில் சந்தேகமேயில்லை. அந்தப் பத்திரிகையை யார் படிக்கிறார்கள் என்பது மட்டும் ஒரு பரம ரகசியம்; மொத்தத்தில் அந்தப் பத்திரிகையில் எத்தனை விளம்பரங்கள் வருகின்றனவோ, அவ்வளவு பிரதிகளும் அதற்குமேல் பத்துப் பிரதிகளும் அச்சிடப்படுவதாக வதந்தி. ஒரு தடவை, ’குடும்பநேச’னில் விளம்பரம் கொடுப்பது பற்றி நகர சபையில் விவாதம் வந்த போது, ’குடும்பநேச’னில் விளம்பரம் செய்வதை விட நாமே தலைக்கு ஒரு பிரதி கையால் எழுதி விநியோகம் செய்துவிட்டு, விளம்பரப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளலாமே!" என்று ஓர் அங்கத்தினர் யோசனை சொன்னாராம். ஆனாலும் மேற்படி பத்திரிகையும் ஒரு முக்கியமான பொதுஜன சேவை செய்துதான் வருகிறது. மற்றப் பத்திரிகைகளில் வராத நமது மாஜி திவான் போன்றவர்களின் உருவப் படங்களும், அவர்களுடைய உயர் குணாதிசயங்களும் ’குடும்பநேச’னில் அடிக்கடி வெளியாவதுண்டு. இன்னொருவர் ஒரு பெரிய ரயில்வே உத்தியோகஸ்தர். மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவர். அந்த அந்தஸ்த்துக்குத் தகுந்தபடி தலையில் வழுக்கை விழுந்தவர். அவருக்குச் சங்கீதத்தில் ரொம்ப பிரமை. மாதம் ரூ.100 ஒரு வித்வானுக்குக் கொடுத்து அவரிடம் மூன்று வருஷம் சங்கீதம் கற்றுக் கொண்டார். முடிவில் அந்த வித்வான், “உமது மூளையில் சங்கீதம் ஏறாது” என்று ஸர்ட்டிபிகேட் கொடுக்கவே, இவர் கோபங்கொண்டு “சங்கீத வித்தையையே சீர்திருத்துகிறேன்” என்று ஆரம்பித்துவிட்டார்! அவர் இதுவரையில் புதிதாக ஒன்பதரை ராகங்களும், பதிமூன்றேகால் தாளங்களும், 356 ஸ்வரங்களும் கண்டுபிடித்திருக்கிறார். இவற்றைக் கேட்டு ஆனந்திப்பவர்களில் நம் மாஜி திவான் ஒருவராதலால், அவரிடம் ஸ்ரீமான் சி.ஆர்.சந்தர் அவர்களுக்கு அதிக மதிப்புண்டு. அடுத்தவர் ஒரு மாஜி ஸப் ஜட்ஜ். அவர், “இந்தியாவுக்கு வேண்டியதென்ன?” என்னும் பெயர் கொண்ட பிரசித்தி பெற்ற புத்தகத்தின் ஆசிரியர். அந் நூலில், கிராப்புத் தலை மோகத்தைக் கண்டித்துக் குடுமியின் அவசியத்தை வலியுறுத்தும் அத்தியாயம் மட்டும் 28 பக்கங்கள் அடங்கியது. இந்த அருமையான புத்தகத்தை அவர் இங்கிலாந்தின் பார்லிமெண்ட் சபை அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் அனுப்பி, புத்தகம் பெற்றுக் கொண்டதற்கு அவர்களுடைய அத்தாட்சிக் கையெழுத்துக்களை வாங்கி வைத்திருக்கிறார். இந்த அரிய பெரிய நூலுக்கு முன்னுரை தந்திருக்கிறவர் நம் மாஜி திவான் தான் என்றால், இவர்களுடைய பரஸ்பர நன்மதிப்பைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. ஐந்தாவது பிரமுகர் அந்த டிவிஷனின் கார்ப்பரேஷன் கௌன்ஸிலர் என்பதை அவரிடமிருந்து கிளம்பிய கார்ப்பரேஷன் வாசனையே பிரசித்தப்படுத்திக் கொண்டிருந்தது. ஆகையால் நாம் அவரைப்பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. இந்த ஐந்து பிரமுகர்களோடு மாஜி திவான், ராவ் சாகிப் கபாலி, பாலகோபால், ராஜாராம் இவர்கள் சேர்ந்து மொத்தம் ஒன்பது பேர் புருஷர்களுடைய மேஜையை அலங்கரித்தார்கள். ஸ்திரீகளுடைய மேஜையில் இருந்தவர்களைப் பற்றி நாம் ஏதாவது சொன்னால், மாஜி திவான் கட்டாயம் ஆட்சேபிப்பாராதலால், மேலே கதையைத் தொடர்வோம். சிற்றுண்டி விருந்து நடந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் மாஜி திவான் விருந்தினரின் செவிக்கும் விருந்து அளித்துக் கொண்டிருந்தார். “சோஷலிஸமாம்! இந்த ஜவஹர்லால் நேற்று பையன். இவன் பிறப்பதற்கு மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னால், மனு எழுதிவிட்டுப் போயிருக்கிறார். மனு எங்கே, இந்தக் காரல் மார்க்ஸ் எங்கே? தற்கால நாகரிகம் நமது பிள்ளையாண்டான்களுடைய கண்களை மறைத்து வருகிறது…” இடையிடையே பாலகோபால் அவருடைய வாயைக் கிளறி விட்டுக்கொண்டிருந்தான். “தற்கால நாகரிகம் தற்கால நாகரிகம் என்று மண்ணை வாரி இறைக்கிறீர்களே! தற்கால நாகரீகத்தில் எந்த அம்சத்தை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்கள்? இங்கிலீஷ் படிப்பதில், உத்தியோகம் பார்ப்பதில், பென்ஷன் வாங்குவதில், பட்டம் பெறுவதில், பிள்ளையைச் சீமைப் படிப்புக்கு அனுப்புவதில், மோட்டார் வைத்துக் கொள்வதில் - இது ஒன்றிலும் உங்களுக்கு ஆட்சேபமில்லை; பின் எதைக் குறித்துத்தான் வாயைச் செலவழிக்கிறீர்கள்?” “கேட்டீர்களல்லவா?…” என்று மாஜி ஸப் ஜட்ஜ் ஆரம்பித்தார். மாஜி திவான் அவரைப் பேச விடுவாரா? “நீங்கள் இருங்கள். அவனுக்கு நானே சொல்கிறேன் பதில். பாலகோபால்! நீ கேட்டது சரியான கேள்வி. அந்தக் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. அந்தக் கேள்விக்கு அடிப்படையான மனப்பான்மை இருக்கிறதே, அதைத்தான் ஆட்சேபிக்கிறேன். உங்களுக்கெல்லாம் நமது புராதன நாகரிகத்தில் நம்பிக்கை போய்விட்டது. அதனால் தான் இந்தக் காலத்துப் பிள்ளைகள் இப்படிப் பேசுகிறீர்கள். ஒருவனுடைய வெளிநடத்தை எப்படியிருந்தாலும், மனப்பான்மை சரியாயிருந்தால் அவனுக்குக் கதி உண்டு. உங்களுக்கு நமது புராதன நாகரிகத்தில் பக்தி சிரத்தை கிடையாது. ஜவஹர்லால் நேருவினிடம் உள்ள தப்பு இது தான்…” 5 மாஜி திவானுடைய பேச்சில் ஒவ்வொரு வார்த்தைதான் ராஜாராமன் காதில் விழுந்தது. காரணம் வாசகர்களே யூகித்துக் கொள்ளலாம். அவனுடைய கவனமெல்லாம் ஸ்திரீகள் மேஜையிலிலேயே இருந்தது. அவர்களில் அதிகமாகப் பேசிய குரல் வத்ஸலையினுடையதுதான் என்பதை அவன் அறிந்தான். இந்த மாஜி திவானுடைய வாய் சற்று ஓயாதா என்று அவனுக்குத் தோன்றிற்று. இரண்டொரு சமயம் மிகவும் தயக்கத்துடன் அவன் ஸ்திரீகள் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்தான். அதே சமயத்தில் அவளுடைய பரந்த கண்களின் கருவிழிகளும் சுழன்று தன்னை நோக்குவதைக் கண்டபோது அவனுக்கு இந்த உலக ஞாபகமே இல்லாமல் போயிற்று. ‘நிலவு செய்யு முகமும் - காண்பார் நினைவு அழிக்கும் விழியும் கலகலென்ற மொழியும் - தெய்வக் களிதுலங்கு நகையும்’ என்று கவி பாடியபோது, இத்தகைய ஒரு பெண்ணை நினைத்துதான் பாடியிருக்க வேண்டும். இப்படி அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில், அவன் தேனினும் இனியதென்று நினைத்த அந்தக் குரலிலே பின்வரும் சொற்கள் அமுதமும் நஞ்சும் தோய்ந்தனவாய் வெளிவந்தன: “ஆமாம்! மனப்பான்மைதான் சரியாயிருக்க வேண்டும்! காரியம் என்ன பிரமாதம்? இந்த சென்னைப் பட்டணத்தில் இன்றைய தினம் இரவு உணவுக்கு என்ன செய்வோம் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். குடிப்பதற்குப் பாலில்லாமல் ஒட்டி உலரும் குழந்தைகள் எத்தனையோ இருக்கின்றன. நாமோ இங்கே ஒவ்வொன்று இரண்டு அணா விலையுள்ள சீமை பிஸ்கோத்துகளில் தலைக்கு நாலைந்து தின்கிறோம். அதனாலென்ன மோசம்? நம்முடைய மனப்பான்மை சரியாயிருக்கிறதல்லவா?” மாஜி திவான் சொன்னதற்குப் பதிலாக வத்ஸலை மேற்கண்டவாறு கூறினாள். அதற்குள் திவான், “நீ கூட உன் அண்ணனுடன் சேர்ந்து விட்டாயா? ரொம்ப பேஷ்! தேசம் உருப்பட்டால் போலத்தான்” என்று கூறி, மேலே ஏதோ பேசிக் கொண்டு போனார். ஆனால், வத்ஸலையின் வார்த்தைகள் ராஜாராமனுடைய மனத்தில் வேறோர் எதிர்பாராத பலனை உண்டாக்கின. ‘இராத்திரிச் சாப்பாடு…குழந்தை…பிஸ்கோத்து…’ இவ்வார்த்தைகள் செவியில் விழுந்ததும் ராஜாராமன் கனவு உலகத்திலிருந்து விழித்துக் கொண்டான். ரகுவின் நினைவு வந்தது. ’அந்தோ! குழந்தை ராத்திரி என்ன செய்வான்? இங்கே நாம் வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுளே! ஸ்திரீ சௌந்தர்யத்தின் சக்திதான் என்ன? தன்னைத் தவிர வேறு கதியில்லாத அருமைத் தம்பியைக் கூடச் சற்று நேரம் மறக்கச் செய்துவிட்டதே! - ராஜாராமனுடைய உள்ளம் வெட்கத்திலும் வேதனையிலும் ஆழ்ந்தது. “ரகு! நீ வழக்கம்போல் ஆறரை மணிக்கு ‘அண்ணா!’ என்று கூப்பிட்டுக் கொண்டு வருவாயே? உனக்கு என்ன கொடுப்பேன்? இராத்திரி நீ பட்டினி கிடக்கவா வேண்டும்?” என்று அவனுடைய இருதயம் அலறிற்று. கண்களில் துளித்த கண்ணீர்த் துளிகளை வெகு சிரமப்பட்டுப் பிறருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டான். மாஜி திவான், மேலே பிரசங்கம் செய்து கொண்டு போனார்: “ஏற்கனவே உலகில் தர்மக் குழப்பம் அதிகமாயிருக்கிறது. எது சத்தியம், எது மித்தை என்பதை அறிய முடியாமல் ஜனங்கள் திண்டாடுகிறார்கள். ஸ்திரீகள் வேறு பொது விவகாரங்களில் புகுந்துவிட்டால் கேட்க வேண்டியதில்லை. உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? உண்மை வைரம் ஒன்றையும், இமிடேஷன் வைரம் ஒன்றையும் கொடுத்தால், எது வைரம், எது இமிடேஷன் என்று கண்டு பிடிக்க முடியுமா? இதோ, பாருங்கள்; இந்த மோதிரத்தை இன்று வாங்கினேன். இதை நிஜ வைரமல்லவென்று யாராவது சொல்ல முடியுமா?” என்று கூறிப் பக்கத்திலிருந்த மாஜி ஸப் ஜட்ஜினிடம் மோதிரத்தைக் கொடுத்தார். அதில் பதித்திருந்த ஒரு பெரிய வைரமும் இரண்டு சிறு வைரங்களும் பளபளவென்று கண்களைப் பறித்தன. மாஜி ஸப்-ஜட்ஜ் அதைப் பார்த்துவிட்டு, “ஆமாம்; அசல் வைரம் மாதிரிதான் இருக்கிறது. இருந்தாலும் கவனித்துப் பார்த்தால் தெரிந்துவிடும்” என்றார். பிறகு, அதை அடுத்தாற் போலிருந்த ராவ்சாகிப் கபாலியிடம் கொடுத்தார். அவர் அதைப் பார்த்துவிட்டு, “ரொம்ப நன்றாயிருக்கிறது. இது நிஜ வைரமென்று யாராவது நம்புவார்களா, என்ன? பைத்தியந்தான்” என்றார். மோதிரம் கைமாறிப் போய்க்கொண்டேயிருந்தது. அடுத்தபடி, வக்கீலும் அந்த மாதிரியே அபிப்பிராயப்பட்டார். பத்திரிகாசிரியர், “எனக்கு வைரங்களில் அவ்வளவு அநுபவம் இல்லை. இருந்தாலும் இதைப் பார்த்தால் சந்தேகம் ஏற்படாமலிராது” என்றார். மாஜி திவான், “ஹஹ்ஹஹ்ஹா!” என்று சிரித்தார். “பார்த்தீர்களா? கேவலம் ஒரு வைரத்தை நிஜம், பொய் என்று கண்டுபிடிக்க முடியாதவர்கள், சத்தியத்தின் ஸ்வரூபத்தை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறோம்? அது நிஜ வைரந்தான். ரூபாய் 750க்கு இப்போதுதான் வாங்கினேன் - லவனபுரம் ஜமீன்தாருக்காக” என்றார். 6 ராஜாராமனுடைய செவிகளில் இதெல்லாம் ஏறவேயில்லை. ‘வைரம்’, ‘வைர மோதிரம்’ என்பது மட்டும் காதில் விழுந்தது. அவனுடைய ஞாபகத்தில் ரகு இன்னும் சற்று நேரத்தில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி விடுவானே என்பதிலேயே ஈடுபட்டிருந்தது. மாஜி திவானுடைய பிரசங்கமோ முடிகிற வழியாய்க் காணவில்லை. அவரிடம் தன்னுடைய நிர்ப்பந்தமான நிலையைச் சொல்லி ஏதாவது அவசரமான உதவி வேண்டுமென்று கேட்க அவன் விரும்பினான். அவரிடம் அவனுடைய நம்பிக்கை இதற்குள் ரொம்பவும் குறைந்து விட்டது. தன்னில் தானே ஆழ்ந்து போயிருக்கும் அந்த மனிதருக்குப் பிறருடைய சுக துக்கங்களை உணரும் சக்தி இருக்குமா? எப்படியிருந்தாலும் இன்றைய தினம் அவரிடம் தனியாகப் பேசுவது சாத்தியமில்லை. நாளைக் காலையில் வந்து பார்க்க வேண்டியதுதான். “எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. போனால் தேவலை” என்று அருகிலிருந்த பாலகோபாலிடம் தெரிவித்தான். அவன், “உங்களை அடிக்கடி பார்க்க விரும்புகிறேன். எங்கே வசிக்கிறீர்கள்?” என்று கேட்டான். “திருவல்லிக்கேணி சுந்தரமுதலியார் தெருவில் 48ஆம் நம்பர் வீட்டு மாடி அறையில் இருக்கிறேன். ஆனால் அங்கே எத்தனை நாள் இருப்பேன் என்பது நிச்சயமில்லை” என்றான் ராஜாராம். “எங்கள் வீடு எழும்பூரில் இருக்கிறது. நீங்கள் ஒரு நாள் கட்டாயம் வரவேண்டும்” என்று பாலகோபால் சொல்லி, தன் விலாசம் எழுதிய சீட்டை அவன் கையில் கொடுத்தான். ராஜாராம் விடைபெற்றுக் கொள்வதற்காக எழுந்து நின்றான். அப்போது மாஜி திவான், ஏதோ பேசிக் கொண்டிருந்தவர், பேச்சை நிறுத்தி, “மோதிரம் எங்கே?” என்று கேட்டார். எல்லாரும், “எங்கே? எங்கே?” என்றார்கள். சுற்று முற்றும் பார்த்தார்கள். மோதிரத்தைக் காணோம். “எனக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது. நான் போய் வரட்டுமா?” என்றான் ராஜாராமன், மாஜி திவானைப் பார்த்து. அவரும் இவனைப் பார்த்தார். ஆனால் பதில் ஒன்றும் சொல்லவில்லை. மற்றவர்களைப் பார்த்து, மோதிரம் எங்கே?" என்று கேட்டார். எல்லாரும் மேஜையைப் பார்த்தார்கள். பக்ஷணத் தட்டுகளைப் பார்த்தார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். பிறகு, ஆகாயத்தைப் பார்த்தார்கள். எங்கும் மோதிரத்தைக் காணவில்லை. ராஜாராமன் நின்று கொண்டேயிருந்தான். “நான் வரட்டுமா?” என்று மறுபடியும் கேட்டான். அப்போது டிபுடி கமிஷனர் கபாலி, இனிமேல் காரியங்களை நடத்தும் பொறுப்பு தம்முடையது என்பதை உணர்ந்தார். உடனே, எழுந்து நின்று, “நண்பர்களே! ரூ.750க்கு வாங்கிய ஒரு வைர மோதிரத்தை ஐந்து நிமிஷத்துக்கு முன்னால் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது அந்த மோதிரத்தைக் காணோம் என்று நமக்கு விருந்தளித்த பெரிய மனிதர் கூறுகிறார். இது நம்மெல்லாருக்கும் அவமானம் தரக்கூடிய விஷயம். கண்யமுள்ளவர்கள் இத்தகைய சந்தர்ப்பத்தில் செய்யக் கூடியது ஒன்றுதான் இருக்கிறது. நம்மை நாமே சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டியதுதான். முதலில் ஒவ்வொருவரும் சட்டைப் பைகளை உதறுங்கள்!” என்றார். “அது தான் சரி” என்றார் மாஜி ஸப் ஜட்ஜ். “எனக்கு ஆட்சேபமில்லை” என்றார் வக்கீல். மற்றவர்கலும் சம்மதத்துக்கு அறிகுறியாக முணுமுணுத்தார்கள். கபாலி, ராஜாராமனுடைய முகத்தைப் பார்த்தார். அவன் முகத்தில் ஏற்பட்ட குழப்பத்தைக் கவனித்தார். திருடன் அகப்பட்டுவிட்டான் என்று தீர்மானித்துக் கொண்டார். போலீஸ் இலாகாவில் முப்பது வருஷம் இருந்து தலை நரைத்துப் போன அவருக்கு இந்தத் திருட்டைக் கண்டுபிடிப்பது ஒரு பெரிதா? அந்தச் சமயம் பாலகோபால் புன்னகையுடன், “சட்டையை மட்டும் உதறினால் போதுமா? வேட்டி மடிப்பில் செருகிக் கொண்டிருந்தால்? குடுமியில் வைத்து முடிந்து கொண்டிருந்தால்?…” என்றான். கபாலி, “பாலகோபால்! இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் கூடவா விளையாட்டு? துளிக்கூட நன்றாயில்லை. முதலில் சட்டைப் பைகளை உதறுவோம். அதில் அகப்படாவிட்டால், பிறகு எல்லாரும் தனி அறைக்குப் போய்ப் பூரண சோதனை செய்து கொள்வோம். நல்ல வேளையாக, ஸ்திரீகள் இதில் சம்பந்தப்படவில்லை” என்றார். “ஏன் அப்படி எங்களை ஒதுக்குகிறீர்கள்? மற்ற எல்லாவற்றிலுந்தான் நாங்கள் மட்டமாயிருக்கிறோம்; திருட்டுப் பட்டம் கட்டிக் கொள்வதில் கூடவா மட்டமாயிருக்க வேண்டும்?” என்று வத்ஸலை கேட்டாள். அவளுடைய குரலில் ஏளனம் அதிகமாயிருந்ததா, கோபம் அதிகமாயிருந்ததா என்று சொல்வதற்கு முடியாமலிருந்தது. கபாலி, “திருட்டு என்று யார் சொன்னார்கள்? ஞாபக மறதியாய் யாராவது சட்டைப் பையில் போட்டுக் கொண்டிருக்கலாம். அப்படியின்றி, மோதிரம் மாயமாய்ப் போயிருந்தாலும், நம்முடைய பொறுப்பை நான் கழித்துக் கொள்ளலாமல்லவா?” என்று கூறி, தமது கோட்டை அவிழ்த்து உதறினார். “எனக்கு ஆட்சேபமில்லை, ஸ்வாமி!” என்று பாலகோபாலும் தன் கோட்டை எடுத்து உதறினான். மற்றவர்களும் அப்படியே செய்தார்கள். ராஜாராமன் மட்டும் நின்றபடியே இருந்தான். “மிஸ்டர் ராஜாராம்! ஏன் நிற்கிறீர்கள்? அவசரமாய்ப் போக வேண்டுமென்றீர்களே! சட்டையை உதறிவிட்டால், உடனே போகலாமே!” என்றார் கபாலி. ராஜாராமனுக்கு என்ன நேர்ந்து விட்டது? அவன் ஏன் அப்படித் தேம்புகிறான்? அவனுடைய கண்களில் ஏன் நீர் ததும்புகிறது? ஒரு நிமிஷம் அவ்வாறு நின்றுவிட்டுக் கோபமும் துக்கமும் பொங்கிய குரலில், “நான் மாட்டேன்; என் சட்டையைக் கழற்ற மாட்டேன். எனக்குத் தெரியும் உங்கள் சமாசாரம்; என்னை அவமானப்படுத்துவதற்காகவே இப்படிச் செய்திருக்கிறீர்கள். அது வைர மோதிரமேயல்ல; அது கெட்டுப் போகவுமில்லை; சுத்தப் பொய். நீங்கள் எல்லாரும் பெரிய மனிதர்கள். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் ஏழை!…” என்று அலறினான். கபாலி, தொண்டையைக் கனைத்துக் கொண்டு, சாவதானமாக, “தம்பி! பதறாதே!…” என்று ஆரம்பித்தார். அதற்குள், ராஜாராமன், “ஆமாம்; பதறாதே! உங்களுக்கென்ன உபதேசம் செய்வதற்கு? முடியாது. நான் இந்த அவமானத்துக்கு உட்படமாட்டேன். சட்டையை உதறமாட்டேன். இதோ நான் போகிறேன். உங்களால் ஆனதைச் செய்து கொள்ளுங்கள்” என்று விம்மிய குரலில் சொல்லிவிட்டு, விரைவாக நடந்து வெளியே சென்றான். ராவ்சாகிப் கபாலி, கடகடவென்று சிரித்தார். ஆனால் மற்றவர்கள் யாருக்கும் சிரிப்பு வரவில்லை. ராஜாராமனுடைய ஆத்திரமான பேச்சும், அவனுடைய குரலில் தொனித்த துக்கமும் அவர்களையெல்லாம் பிரமை பிடித்தவர்கள் போல் ஆக்கிவிட்டன. கிணறு வெட்டப் போய்ப் பூதத்தைக் கண்டவனுடைய நிலையை அவர்கள் அடைந்திருந்தார்கள். கபாலி மட்டுந்தான் தம்முடைய நிதானத்தை இழக்கவில்லை. வெளியில் கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டிருந்த ஓர் ஆளை அவர் சமிக்ஞை செய்து கூப்பிட்டார். அருகில் வந்ததும் அவன் காதில் ஏதோ சொன்னார். அப்போது வத்ஸலை தான் இருந்த இடத்தில் எழுந்து நின்று, “மாமா! நீங்கள் என்ன சொல்கிறீர்களென்று எனக்குத் தெரியும். மிஸ்டர் ராஜாராமைப் பின் தொடர்ந்து போகச் சொல்கிறீர்கள். ஆனால், அது தேவையில்லை…” என்றாள். எல்லாரும் அவள் முகத்தை வியப்புடன் நோக்கிக் கொண்டிருக்கையிலேயே, “இதோ அந்த வைர மோதிரம், பத்திரமாயிருக்கிறது!” என்று எடுத்துக் காட்டினாள். “பரிசாரகன் உங்கள் மேஜையிலிருந்த காராபூந்தித் தட்டை இங்கே எடுத்து வைத்தான். காராபூந்திக் குவியலுக்குள் இது இருந்தது. உங்களில் ஒருவர் பேச்சு ஸ்வாரஸ்யத்தில் ஞாபக மறதியாய்த் தட்டில் போட்டிருப்பீர்கள்…” “அடடா! அந்தப் பையனைப் போய்ச் சந்தேகித்தோமே? என்ன அநியாயம்! நீ ஏன் முன்னமே சொல்லியிருக்கப்படாது?” என்று மாஜி திவான் கேட்டார். “ஏனா? உங்களுடைய புத்திசாலித்தனம் எவ்வளவு தூரம் போகிறதென்று பார்க்கத்தான்!” என்றாள். 7 சற்று நேரத்துக்கெல்லாம், பாலகோபாலும் வதஸ்லையும் மாஜி திவானின் பங்களாவுக்கு வெளியே வந்து தங்களுடைய காரில் ஏறிக் கொண்டார்கள். “டிரைவர்! திருவல்லிக்கேணிக்குப் போ!” என்றாள் வத்ஸலை. “திருவல்லிக்கேணிக்கா? எதற்காக?” என்றான் பாலகோபால். “அவரைப் பார்ப்பதற்குத்தான்.” “ஐயோ! ஏதோ விலாசம் சொன்னான்; மறந்து விட்டேனே!” “நீ மறந்து விட்டால் எனக்கு ஞாபகம் இருக்கிறது. சுந்தர முதலியார் தெரு, 48ஆம் நெம்பர்.” “அவனுக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்தது? சட்டைப் பைகளை உதறமாட்டேனென்று அவ்வளவு பிடிவாதம் ஏன் பிடித்தான்? அதுதான் எனக்குத் தெரியவில்லை.” “எனக்குந்தான் தெரியவில்லை. ஆனால் ஏதோ காரணம் இருக்கவேண்டும். அதை நான் கண்டுபிடிக்காவிட்டால், என் பெயர் வத்ஸலை அல்ல; நான் டிப்டி கமிஷனர் கபாலியின் மருமகளல்ல” என்றாள். பத்து நிமிஷத்துக்கெல்லாம் வண்டி மேற்படி வீட்டின் வாசலை அடைந்தது. கீழ்க்கட்டில் குடியிருந்த ஒருவர் வாசலில் நின்று கொண்டிருந்தார். “ராஜாராமன் இங்கேதானே இருக்கிறார்?” என்று பாலகோபால் கேட்டான். “ஆமாம்; இப்போதுதான் வெளியிலிருந்து வந்து மாடிக்குப் போனார்” என்று பதில் வந்தது. பாலகோபாலும், வத்ஸலையும் மெதுவாக அடிவைத்து மச்சுப் படிகளின் மீது ஏறினார்கள். மேலே சற்று விஸ்தாரமான திறந்த மாடி இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ஒரு சின்ன அறை இருந்தது. இவர்கள் மெதுவாக நடந்து சென்று அறையின் கதவண்டை நின்று எட்டிப் பார்த்தார்கள். ராஜாராமன் தன்னுடைய கோட்டைக் கழற்றித் தன் சட்டைப் பைகளிலிருந்து ஏதோ சாமான் எடுத்துக் கொண்டிருந்தான். அது என்ன? ஆ! மாஜி திவானுடைய விருந்தில் வைத்திருந்த பிஸ்கோத்து; அதை மேஜை மீது வைத்துவிட்டு மறுபடியும் பையில் கையை விடுகிறான். இன்னொரு பிஸ்கோத்து. இம்மாதிரி ஆறு பிஸ்கோத்துகளை எடுத்து அடுக்கி வைக்கிறான். உஸ்! தனக்குத்தானே ஏதோ பேசிக் கொள்கிறானே! “ரகு! ரகு! அவளைப் போன்ற ஆயிரம் தேவகன்னிகைகளின் காதலைக் காட்டிலும் உன்னுடைய அன்புதான் எனக்குப் பெரிது!” இது காதில் விழுந்தபோது, வத்ஸலையின் அழகிய கன்னங்கள் குழிந்தன. “அவள்” என்று அவன் குறிப்பிடுவது யாரை என்பது வத்ஸலைக்குத் தெரியாதா, என்ன? அதே சமயத்தில், “அண்ணா! அண்ணா!” என்று குதூகலமாய்க் கூவிக்கொண்டு, யாரோ மாடிப்படி ஏறி வரும் சப்தம் கேட்டது. “ரகு ஓடி வா!” என்றான் அறையிலிருந்தபடியே ராஜாராமன். அடுத்த நிமிஷத்தில், குருகுருவென்று கண்களும், சுருட்டை மயிரும், களை சொட்டிய முகமும் படைத்த ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் மாடிக்கு வந்தான். “அண்ணா! பிஸ்கோத்து வாங்கி வந்திருக்கிறாயா?…” என்று கேட்டவன் அறையின் வாசலில் இருவர் நிற்பதைக் கண்டு திகைத்துப் போனான். உள்ளே வந்து, அண்ணாவிடம் மெதுவான குரலில், ‘வெளியில் நிற்பவர்கள் யார்?’ என்று கேட்டான். ராஜாராமன் ஆச்சரியத்துடன் வெளியே வந்து பார்த்தான். பாலகோபாலையும் வத்ஸலையையும் கண்டதும் முதலில் அவனுக்கு கோபம் வந்தது. ஆனால், வத்ஸலையின் புன்னகை பூத்த முகத்தையும், அந்தக் கண்களையும் கண்டதும் கோபம் பறந்தது. அதற்குப் பதில் வெட்கம் பிடுங்கித் தின்னத் தொடங்கியது. “தங்களுடைய விலாசம் மறந்து போவதற்குள் வீட்டைக் கண்டுபிடித்து வைக்கலாம் என்று வந்தோம்” என்றான் பாலகோபால். “இவ்வளவுதானா? திருட்டுக் கண்டுபிடிக்க வந்தீர்களென்றல்லவா பார்த்தேன்?” வத்ஸலை சொன்னாள்: “ஆமாம்; திருட்டைக் கண்டுபிடிக்கத்தான் வந்தோம். ஆனால் மோதிரத் திருட்டையல்ல. மோதிரம் என்னிடந்தான் இருந்தது. காராபூந்தித் தட்டிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அதை நான் காட்டியதும் அந்தக் கிழங்களின் முகத்தில் அசடு தட்டியதை நீங்கள் பார்க்காமல் வந்து விட்டீர்கள். ஆனால், நாங்கள் வந்தது வேறு திருட்டைக் கண்டுபிடிக்க. மேஜையில் இருந்த பிஸ்கோத்துகளில் ஐந்தாறு பிஸ்கோத்துகளைக் காணோம். ஒருவேளை இங்கே இருக்குமோ என்று வந்தோம். அடடா! இதோ இருக்கே!” இவ்வாறு சொல்லி, ராஜாராமனுடைய பதிலுக்கு இடங் கொடாமல், வத்ஸலை மேஜையண்டைப் போய் அந்தப் பிஸ்கோத்துகளைக் கையில் எடுத்துக் கொண்டாள். திகைத்துப் போய் நின்ற ரகுவை பலவந்தமாகப் பிடித்திழுத்து அவன் வாயில் பிஸ்கோத்துகளைத் திணிக்கத் தொடங்கினாள். அப்போது, பாலகோபால், தனக்குள், “சரி, சரி! இந்த ராஜாராமன் பிஸ்கோத்துகளை மட்டும் திருடவில்லை. ஒரு மகா அதிகப் பிரசங்கியான பெண்ணின் இருதயத்தைக் கூடத் திருடி விட்டான் போலிருக்கிறது?” என்று எண்ணமிடலானான். “இவள் எந்த முட்டாளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாளோ?” என்று ராஜாராமன் முன்னொரு நாள் நினைத்தானல்லவா? ஆறு மாதத்திற்கெல்லாம் வத்ஸலைக்குக் கலியாணம் நடக்கத்தான் செய்தது. ஆனால், அவளைக் கலியாணம் செய்து கொண்டவனை முட்டாள் என்பதாக ராஜாராமன் இப்போது ஒப்புக்கொள்வதில்லை. அவ்வளவு ஆத்ம நிந்தனை செய்து கொள்ள யாருக்குத்தான் மனம் வரும்? ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம் ஸ்ரீகாந்தன் பெரிய மனுஷாள் வீட்டுப் பிள்ளை. அவனைப் பார்த்தவுடனேயே எவருக்கும் அது தெரிந்து போய்விடும். அவனைப் பெரிய மனுஷாள் வீட்டுப் பையன் என்பதாக லவலேசமும் சந்தேகிப்பதற்கு இடமிராது. ஸ்ரீகாந்தனுக்கும் இருபதாம் நூற்றாண்டுக்கும் இவ்வுலகில் சேர்ந்தாற்போல் ஜனனம் ஏற்பட்டது. வளர்வதிலும் அவர்களுக்குள் இந்தப் போட்டி இருந்து வந்தது. ஸ்ரீகாந்தனுக்கு ஒரு வயது நிறைந்தால், இருபதாம் நூற்றாண்டுக்கும் ஒரு வருஷம் பூர்த்தியாகும். இப்படியாக இருபதாம் நூற்றாண்டு 1931 ஆம் வருஷத்தையடைந்த போது, ஸ்ரீகாந்தனும் 31 ஆவது பிராயத்தை அடைந்தான் மேலே போவதற்கு முன்னால் இந்த முப்பது வருஷத்தில் ஸ்ரீகாந்தனுடைய சரித்திரத்தையும், அவனைச் சேர்ந்தவர்களின் சரித்திரத்தையும் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். அப்பா: ஸ்ரீகாந்தன் பிறந்தபோது ஏகாம்பரய்யர் ஜில்லா முனிசீப்; சீக்கிரத்தில் அவருக்கு ஸப் ஜட்ஜ் உத்தியோகம் ஆகவே, அய்யர்வாளைத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் “ஸ்ரீகாந்தன் பிறந்த வேளை” என்று சொன்னார்கள். பல வருஷம் உத்தியோகம் பார்த்த பின்னர், அவர் ஐம்பத்தைந்து என்று சொல்லப்படுகிற ஐம்பத்தெட்டாவது வயதில் பென்ஷன் பெற்று, இன்று வரை வாங்கிக் கொண்டு வருகிறார். ஒரு மாதமாவது வேண்டாமென்று சொல்லவில்லை. வைதிக காரியங்களை மிகவும் சிரத்தையாகப் பண்ணுகிறவர். அந்த ஊர் பஞ்சாமி கனபாடிகள் தம்முடைய பெண்ணின் கல்யாணச் செலவுக்கு அய்யர்வாளையே நம்பியிருக்கிறார். கனபாடிகளின் விரோதிகள், அய்யர்வாளின் வருஷாப்திகத்தை அவர் மேற்படி காரியத்துக்கு நம்பியிருப்பதாகச் சொல்வார்கள். அம்மா: ஸ்ரீகாந்தனுடைய தாயாரைப் பார்த்தவர்கள், ‘மகாலக்ஷ்மிக்குச் சகோதரி ஒருத்தி இருக்க முடியுமானால், அவள் இவள் தான்; இவள் அவள் தான்’ என்று சொல்லாமல் இருக்கமாட்டார்கள். பெரிய குடும்பத்தில் பிறந்தவள் இந்த மாதரசி. (இவளுக்குக் கூடப் பிறந்தவர்கள் பதினொரு பேரும், கூடப் பிறக்காதவர்கள் இன்னும் அநேகரும் உண்டு) புகுந்த குடும்பமும் இவளால் பெரிதாகியே வந்தது. இந்த அம்மாளுக்குக் கச்சேரிக்குப் போகும் புருஷனும், நல்ல இடங்களில் வாழ்க்கைப்பட்ட நாலு குமாரிகளும், அவர்களைக் கண்ணையும் கண்ணாடியையும் போல் பாதுகாக்கும் நாலு மாப்பிள்ளைகளும், திரளான பேரன் பேத்திகளும், மற்றும் பல சௌபாக்கியங்களும் இருந்தும், ஒரே ஒரு மனக்குறை மட்டும் இருந்தது. வாசலில் வந்து, “அம்மா! பிச்சை” என்று கேட்கும் பிச்சைக்காரனுக்கு ஒரு பிடி அரிசி “இல்லை!” என்று சொல்லியனுப்ப வீட்டில் ஒரு மாட்டுப் பெண் இல்லையே என்பதுதான் அந்த குறை. இத்தனைக்கும் காலாகாலத்தில் பிள்ளையாண்டானுக்குக் கலியாணம் பண்ணி வைத்ததில் குறைச்சல் உண்டா? சகோதரிகள்: ஸ்ரீகாந்தனுக்கு முன்னால் அவனுடைய பெற்றோர்களுக்கு பிறந்த நாலு புதல்விகளும் ஸ்ரீகாந்தனுடைய மூத்த சகோதரிகளாகவும் ஏற்பட்டது ஒரு விசித்திரமே. அவர்கள் ஸ்ரீகாந்தன் மேல் வைத்திருந்த பிரியத்தையோ கேவலம் மரக்கால் படியினால் அளவிட முடியாது. அவன் கைக்குழந்தையாயிருந்தபோது ஒரு நிமிஷம் அவனை அவர்கள் தரையில் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். அவனுக்குப் பல் முளைத்த பிறகு யார் அவனுக்குப் பல் தேய்ப்பது என்பது பற்றிப் பலத்த போட்டி அவர் வளர்ந்த பிறகு யார் அதைப் பின்னுவது என்று சண்டை போடுவார்கள். அவனுக்குக் கலியாணம் நடந்த போது, யார் அவனுடைய கண்களுக்கு மையிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டு, கடைசியில் நாலு பேரும் மையிடவே, அவனுடைய கண்கள் - எப்போதும் மற்ற அவயங்களின் துன்பத்துக்காக அழுகிற கண்கள் - தங்கள் சொந்தத்திற்கே அழ வேண்டியதாயிற்று. உண்மையில் அந்த நாலு நாள் கலியாணத்தின் போது தான் பட்ட கஷ்டங்களை நினைத்துக் கொண்டால் ஸ்ரீகாந்தனுக்கு இப்போது கூடக் கதிகலங்கத்தான் செய்யும். ஸ்ரீகாந்தனுடைய மனைவியைப் பற்றிச் சொல்வதில் இன்னும் நான் காலந் தாழ்த்தினால் கதை மேலே ஓடாது. ஸஹதர்மினி: ஸ்ரீகாந்தனுக்குப் பதினெட்டாவது வயதிலேயே கலியாணம் நடந்தது. அதாவது, ஐந்நூறு வேலி மிராசுதாருடைய ஒரே கடைக்குட்டிப் பெண். அப்போது அவளுக்கு வயது பன்னிரண்டு. அழுகையில் அவள் ரதிக்குச் சமமாயிருந்தாள். ஆமாம், அழுகையில் தான். (மன்மதன் இறந்ததும் ரதி அழுதது ஜகப் பிரசித்தமன்றோ?) குடுகுடுவென்று அவள் ஓடும்போது நாம் பார்த்திருந்தால், “சுவரில் எழுதிய எந்தத் திவ்ய சித்திரந்தான் இப்படி ஓட முடியும்?” என்று ஆச்சரியப்பட்டிருப்போம். ஆகவே ஸ்ரீகாந்தன் அவள் பேரில் கணக்கு வழக்கில்லாத காதல் கொண்டிருந்ததில் ஆச்சரியமென்ன? அவர்களுடைய சாந்தி கலியாணத்தன்று இரவு, ஸ்ரீகாந்தனும் அவனுடைய மனைவியும் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு, விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டு, சீட்டாடிய விவரம் கேள்விப்பட்டவர்களுக்கெல்லாம் தெரிந்தேயிருக்கும். ஆனால், அவர்களைப் பார்த்து எந்தப் பாவி பொறாமை பட்டானோ, எந்தத் துஷ்டை திருஷ்டி வைத்தாளோ, தெரியாது; சீக்கிரம் அவர்களுடைய காதல் வாழ்க்கை முடிவுற்றது. ஸ்ரீகாந்தன் மனைவிக்கு என்னவோ வந்துவிட்டது. சிலர், “வியாதி” என்றார்கள். சிலர் “இல்லை; ஹிஸ்டீரியா” என்றார்கள். வேறு சிலர், “பிசாசு பிடித்திருக்கிறது” என்றார்கள். “ஏவல், சூனியம்” என்றவர்களும் உண்டு. “மாமியார் மருந்திட்டாள்” என்றார்கள் சில பொல்லாத் துஷ்டர்கள். யார் என்ன சொன்னால் என்ன? கணவன் வீட்டுக்கு வந்த இரண்டு வருஷத்துக்கெல்லாம் அந்தப் பெண் பிறந்த வீட்டுக்குப் போனாள். போனவள் மறுபடி திரும்பி வரவேயில்லை. ஐந்தாறு வருஷம் தகப்பனார் வீட்டிலேயே நோயும் நொடியுமாய்க் காலந் தள்ளிவிட்டுக் கடைசியில் இந்தத் துக்க உலகத்தை நீத்துச் சென்றாள். அவள் புத்திசாலி என்பதில் சிறிதும் ஐயமில்லை. இனிமேல் பயமின்றி நாம் ஸ்ரீகாந்தனைப் பற்றியும் சிறிது கவனிக்கலாம். ஸ்ரீகாந்தன்: உருவத்தில் அவன் ஏறக்குறைய மன்மதனையொத்திருந்தான். மன்மதனுக்கு இரண்டு கால், இரண்டு கை, இரண்டு கண் ஒரு மூக்கு எல்லாம் (அவன் எரிந்து போவதற்கு முன்) இருந்தது போல் ஸ்ரீகாந்தனுக்கும் இருந்தன. மற்றபடி குண விசேஷங்களில் அவன் மன்மதனுடன் முற்றிலும் மாறுபட்டான். சாயங்கால வேளைகளில், கரும்பு வில்லும் கையுமாக, பிரிந்திருக்கும் ஸ்திரீ புருஷர்களைத் தேடிக் கொண்டு போவதற்குப் பதில் அவன் டவுன் ஹால் கிளப்பை நோக்கிச் சென்றான். அங்கே போய், பிங்-பாங் விளையாடினான். உண்மையில் மனைவி பிறந்தகத்திற்குப் போன பிறகு அவனுக்கு வாழ்க்கையில் இருந்த ருசியெல்லாம் இந்தப் பிங்-பாங்கின் மேல் ஏற்பட்டதேயாகும். அந்த விளையாட்டில் வெகு தேர்ச்சியடைந்து அநேக பந்தய ஆட்டங்களில் வெற்றி பெற்றுப் பல ‘கப்’ களும் வாங்கினான். அவையெல்லாம், அவனுடைய கலியாணத்தின் போது பரிசாக வந்த கண்ணாடி பீரோவில் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்ரீகாந்தன் பி.ஏ. பாஸ் செய்து எப்.எல். வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, அவனுடைய மனைவிக்கு மேற்கூறியபடி சித்தப் பிரமை ஏற்பட்டது. அத்துடன் படிப்பை அவன் விட்டுவிட்டான். உத்தியோகத்துக்கு முயற்சி செய்யவுமில்லை. பையன் மனம் ஒடிந்து போகாமல் எப்படியாவது பிள்ளையாய் இலட்சணமாய் இருந்தால் போதும் என்றிருந்த அவன் தகப்பனாரும் அவனை வற்புறுத்தவில்லை. மனைவி காலஞ்சென்ற பிறகு, அவன் தாயாரும் சகோதரிகளும் புனர் விவாகத்தைப் பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்துவார்கள். அதற்கு ஸ்ரீகாந்தன், “உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகட்டும். கலியாணம் என்ற பேச்சை எடுக்காதீர்கள்” என்று கூறுவான். அவனுடைய குரலில் தொனித்த பரிதாபமும் பிடிவாதமும் அவனுடைய தாயார், சகோதரிகளின் வாயைக் கூட அப்போதைக்கு அடைத்துவிடும். இப்படிப்பட்ட ஸ்ரீகாந்தனுடைய வாழ்க்கையில்தான் அந்த 1931-ஆம் வருஷத்தில் ஓர் அதிசய சம்பவம் நேர்ந்தது. 2 ஸ்ரீகாந்தன் பிறந்து வளர்ந்து பிங்-பாங் ஆடிய அந்நகரத்தில் அவ்வருஷ ஆரம்பத்தில், சாத்வீக மறியல் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சர்க்கார் பிரதிநிதிகள் தங்கள் கடமையைத் தடி கொண்ட மட்டும் நடத்தி வந்தனர். அவர்கள் இன்னும் பல தீவிரமான நடவடிக்கைகளையும் கைக்கொண்டனர். காங்கிரஸ் ஆபீஸ்களையும், தொண்டர் ஜாகைகளையும் பூட்டிவிட்டார்கள். தொண்டர்களுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ கொடுக்கக் கூடாதென்ற உத்தரவைத் தண்டோ ராப் போட்டுப் பகிரங்கப்படுத்தினார்கள். சில நாளைக்கு நகரமே கதிகலங்கிக் கிடந்தது. தூரத்தில் எங்கேயாவது வெள்ளைக் குல்லாவைப் பார்த்துவிட்டால் கிருகஸ்தர்கள் உடனே கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டார்கள். இப்படிப்பட்ட அதிகார அமுலை மீறுவதற்குறிய ஆண்மை அந்த நகரில் ஒரே ஒருவருக்குத்தான் இருந்ததென்று வெளியாயிற்று. அந்த ஒருவரோ பெண்ணாய்ப் பிறந்தவராயிருந்தார். அவர் பெயர் ஸ்ரீமதி வஸுந்தரா தேவி. இந்நகரத்திற்கு ஸ்ரீமதி வஸுந்தராதேவி வந்து சில மாத காலந்தான் ஆகியிருந்தது. அந்நகரின் முனிசிபாலிடியினால் நடத்தப்பட்ட பெண்கள் பள்ளிக்கூடமொன்றுக்குத் தலைமை உபாத்தியாயினியாக அவள் வந்திருந்தாள். வயது இருபது, இருபத்திரண்டு தானிருக்கும். அவளும் அவளுடைய வயது முதிர்ந்த தந்தையும் ஒரு சிறிய தனி வீட்டில் குடித்தனம் இருந்தார்கள். ஹோட்டலிலிருந்து சாப்பாடு வரவழைத்துக் கொண்டு சாப்பிட்டார்கள். வஸுந்தரா பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கும் சமயங்களில், அவள் தகப்பனார் ஒரு பழைய பிடிலை வைத்துக் கொண்டு அப்பியாசம் செய்து கொண்டிருப்பார். இவர்களுடைய வீட்டு வாசலில் ஒரு நாள் தடியடியால் நொந்து, பசியினால் மெலிந்த இரண்டு சத்தியாக்கிரஹத் தொண்டர்கள் வந்து சேர்ந்தார்கள். அச்சமயம் கிழவர் பிடில் அப்பியாசம் செய்ததைக்கூட அவர்கள் பொருட்படுத்தாமல், திண்ணையில் சோர்ந்து விழுந்தார்கள். ஏறக்குறைய அதே சமயத்தில் பள்ளிக்கூடத்திலிருந்து வஸுந்தரா திரும்பி வந்தாள். ஊரில் நடப்பதெல்லாம் அவள் கேள்விப் பட்டிருந்தாள். இதனால் ஏற்கனவே அவள் மனம் இளகியிருந்தது. இப்போது நேருக்கு நேர் அத்தொண்டர்களைப் பார்த்ததும் அவளால் சகிக்க முடியவில்லை. அவர்களை உள்ளே அழைத்துச் சென்று தங்களுக்கு வைத்திருந்த ஹோட்டல் சாப்பாட்டை அவர்களுக்கு இட்டாள். இந்தச் செய்தி நகரமெங்கும் பரவியது. அன்று முழுதும் எல்லாரும் இதைப் பற்றியே பேசினார்கள். டவுன் ஹால் கிளப்பில் பிங்-பாங் ஆடுமிடத்தில் கூட இந்தப் பேச்சு எட்டிற்று. “இதற்குத்தான் தைரியம் வேண்டுமென்கிறது. தைரியமில்லாவிட்டால் ஒருவன் என்ன மனுஷனோடு ஸார், சேர்த்தி? இத்தனைக்கும் அவள் ஒரு பெண் பிள்ளைதான். இந்த ஊரில் எந்த மீசை முளைத்த ஆண்பிள்ளைக்காவது அவளுடைய தைரியம் இருந்ததா? நான் கேட்கிறேன்” என்று ஒருவர் ஆவேசமாய்க் கேட்டார். இதெல்லாம் ஸ்ரீகாந்தனுடைய காதில் விழுந்தது. ஆனால் மனத்தில் இலேசாகத்தான் பதிந்தது. உண்மையில் அவன் அதைப் பற்றிச் சிறிதாவது சிரத்தை கொண்டான் என்று சொல்வதற்கே இல்லை. இரண்டு வாரங்கழித்து அதே மனுஷர் வஸுந்தரா என்னும் பெயரை மறுபடி பிரஸ்தாபித்தபோதுதான் ஸ்ரீகாந்தன் சிறிது கவனிக்கத் தொடங்கினான். “கேட்டயளா ஸார்! இன்று பெரிய மீட்டிங் கூடப் போகிறதாம். அதில் வஸுந்தரா தேவி தேசிய கீதம் பாடப் போகிறாளாம்” என்றார் அந்தச் சினேகிதர். “அதென்ன, ஸார்! புதுப் பெயராயிருக்கிறது? அவள் வங்காளியா, குஜராத்தியா?” என்று ஸ்ரீகாந்தன் கேட்டான். “அதுதானே வேடிக்கை? அவள் தமிழ்நாட்டு ஸ்திரீ தான்! பெயரை அப்படி மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் தகப்பனார் பெயர் ராமகிருஷ்ணய்யர். தகப்பனும் பெண்ணுந்தான் தனியாக வசிக்கிறார்கள்.” “நிஜமாகவா? எதற்காக அப்படிப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டாள்? அவர்கள் யார்? எந்த ஊர்?” “அதெல்லாம் ஒன்றும் தெரியாது. அவர்களுடைய பூர்வீகம் பெரிய மர்மமாயிருக்கிறது. அவளுக்குக் கல்யாணமாகவில்லையென்கிறார்கள் சிலர். புருஷன் செத்துப் போய்விட்டான் என்கிறார்கள் சிலர். புருஷன் எங்கேயோ இருக்கிறான் என்று வேறு சிலர் சொல்கிறார்கள். மொத்தத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டவர்கள் என்று தெரிகிறது.” ஸ்ரீகாந்தன் அன்று பொதுக்கூட்டத்திற்குச் சென்றிருந்தான். அந்தப் பொதுக்கூட்டம், காந்தி-இர்வின் ராஜி உடன்படிக்கையைக் கொண்டாடுவதற்காகக் கூட்டப் பெற்றது. வஸுந்தரா தொண்டர்களுக்கு அன்னமளித்த மறுநாளே, மகாத்மா விடுதலையடைந்து வைஸ்ராயின் மாளிகைக்குப் பிரயாணமானார். இது காரணமாகவே வஸுந்தராவின் மீது நடவடிக்கை எதுவும் அதிகாரிகள் எடுக்கவில்லை. சில நாளைக்கெல்லாம் ராஜி உடன்படிக்கையில் காந்திமகானும் வைஸ்ராய் இர்வினும் கையொப்பமிட்டார்கள். இந்தச் சந்தோஷச் செய்தியின் நிமித்தம் அந்த ஊரில் நடந்த கொண்டாட்டங்களில், ஸ்ரீமதி வஸுந்தரா நடுநாயமாக விளங்கினாள். அந்தப் பிரமாண்டமான ஜனசமுத்திரத்தின் மத்தியில் வஸுந்தரா தேசியகீதம் பாட ஆரம்பித்ததும் ஏதோ மந்திரசக்தியினால் சமுத்திரம் திடீரென்று அலை ஓய்ந்தது போல், நிசப்தம் ஏற்பட்டது. சென்ற இரண்டு மாத காலமாக யாரைப் பற்றி இடைவிடாமல் பேசியும் சிந்தித்தும் வந்தார்களோ, அப்படிப்பட்டவளை முதன் முதலாக நேருக்கு நேர் பார்க்கும்போது, அதிலும் அவள் சௌந்தர்யமும், கம்பீரமும், நாகரீகமும் வாய்ந்த யௌவன ஸ்திரீயாகவும் இருந்துவிட்டால் எவரும் பேச்சிழந்து பிரமித்து நிற்பதில் வியப்பில்லையல்லவா? ஸ்ரீகாந்தனும் இப்படித் தன் வசமிழந்து நின்றான். அன்று பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசங்கி ஒருவராவது ஸ்ரீமதி வஸுந்தரா தேவியின் துணிவைக் குறிப்பிட்டு அதை உதாரணமாக எடுத்துக் காட்டாமல் முடிக்க வில்லை. மத்தியில் ஓர் உற்சாகமுள்ள இளைஞன் எழுந்திருந்து, “ஸ்ரீமதி வஸுந்தரா தேவி நாலு வார்த்தையாவது பேசவேண்டுமென்று இங்கு அனேகருடைய கோரிக்கை” என்று இடிமுழக்கம் போன்ற குரலில் கூவினான். உடனே அந்தப் பெரிய கூட்டத்தின் எல்லாப் புறங்களிலிருந்தும் காது செவிடுபடும்படியான கோஷம் எழுந்தது. மேடையிலிருந்த தலைவர்களும் வற்புறுத்தியதன் பேரில் வஸுந்தரா எழுந்து ஒரு கும்பிடு போட்டு விட்டுப் பின்வரும் ஐந்தாறு வாக்கியங்களைச் சொன்னாள்: “சகோதரிகளே, சகோதரர்களே! நீங்கள் எல்லாரும் இவ்வளவு தூரம் என்னைக் கௌரவப்படுத்தியதற்காக மிகவும் வந்தனம். நீங்கள் எனக்குச் செய்யும் கௌரவத்தைத் தேசத் தொண்டுக்குச் செய்யும் கௌரவமாகவே நான் பாவிக்கிறேன். வாஸ்தவத்தில் நான் அப்படிப் பிரமாதமான காரியம் ஒன்றும் செய்துவிடவில்லை. பசித்து வந்தவர்களுக்குச் சாப்பாடு போடுவதென்பது நம்முடைய புராதன தர்மம். அதை நாம் ஒரு நாளும் கைவிட முடியாது. பசியுடன் என்னுடைய வீட்டு வாசலுக்கு வந்த இரண்டு தொண்டர்களுக்குச் சாப்பாடு போட்டதில் நான் என்னுடைய கடமையைச் செய்தேனே தவிர வேறொன்றுமில்லை. அத்தகைய சந்தர்ப்பம் உங்களுக்கு வந்திருந்தால், நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே உங்கள் கடமையை நிறைவேற்றியிருப்பீர்கள் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் கிடையாது. வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே!” அன்று பொதுக்கூட்டம் முடிந்து திரும்பிப் போகும் போது எல்லோரும் வஸுந்தராவைப் பற்றியே பேசிக் கொண்டு போனார்களென்று சொல்ல வேண்டியதில்லை. “ஒரு சூடு கொடுத்தாள், பார்த்தயளா, ஸார்! ’சந்தர்ப்பம் வந்தால் நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே செய்திருப்பீர்கள், என்று சொன்னாளே! பயந்து கதவை மூடிக் கொண்ட பயல்களுக்கெல்லாம் அது மனதிலே நன்றாய்த் தைத்திராதா?” என்றார் ஒருவர். “பிறத்தியாரைச் சொல்லப் போய்விட்டீரே! நீரும் நானும் என்ன செய்து விட்டோம்?” என்றார் இன்னொருவர். “நான் சொல்கிறேன், கேளுங்கள்; இனிமேல் நாமெல்லாம் வளையல் போட்டுக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்துவிட வேண்டியதுதான்” என்று மிகவும் உற்சாகத்தோடு ஒருவர் கூறினார். “பாருங்களேன், ஸார்! ஒரு புடவை உடுத்திய ஸ்திரீக்குள்ள தைரியம் இந்த ஊரிலே வேஷ்டி கட்டிய ஆண் பிள்ளைகளுக்கெல்லாம் இல்லையே? என்ன பிரயோஜனம்?” என்று ஒருவர் வைராக்கியமாய்ப் பேசினார். “அவள் புடவை உடுத்திக் கொண்டிருந்தாளே, அது ஒன்று போதும்! நம் வீடுகளிலும் தரித்திரங்கள் பதினெட்டு முழத்தைப் பிரி மாதிரி சுத்திக்கிறதே!” என்றார் இன்னும் பரவச நிலையிலிருந்த மற்றொருவர். 3 ஸ்ரீகாந்தன் வீட்டுக்குச் சென்றதும் அன்றைய பொதுக்கூட்டத்தைப் பற்றித் தன் தாயாரிடமும் சகோதரிகளிடமும் சொன்னான். (நாலு சகோதரிகளில் இரண்டு பேராவது எப்போதும் பிறந்த வீட்டில் இருப்பார்கள்) ஒரு பொம்மனாட்டி பேசினாள் என்று கேட்டதும் அவர்களும் ஆச்சரியப்பட்டார்கள். “ஏண்டா அப்பா, அவாள் என்ன ஜாதிப் பேரோ?” என்று கேட்டாள் தாயார். “சாக்ஷாத் பிராமணாள்தான் அம்மா! அதிலும் ஸ்மார்த்தாள்!” என்றான் ஸ்ரீகாந்தன். “அதுவும் அப்படியா? வடமாளோ, அஷ்டசஹஸ்ரமோ! அஷ்டசஹஸ்ரத்தில்தான் இப்படித் துணிந்து வருவார்கள்.” “பார் எவ்வளவு புத்திசாலித்தனமாய்ப் பேசுகிறாய்! ஜாதி தான் ரொம்ப முக்கியமான விஷயமாக்கும்? நீங்களும் பொம்மனாட்டியென்று பிறந்தீர்களே!” என்று வெறுப்புடன் கூறினான் ஸ்ரீகாந்தன். சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு சகோதரி, “அவளுக்கு எத்தனை வயது இருக்கும்?” என்று கேட்டாள். வஸுந்தராவைப் பற்றி யாருடனாவது ஏதாவது பேச வேண்டுமென்றிருந்தது ஸ்ரீகாந்தனுக்கு. எனவே, “இருபத்தைந்து வயதுக்குள்ளிருக்கும்” என்று பதில் சொன்னான். “ஆம்படையான், கீம்படையான் ஒருவரும் கிடையாதா?” என்று இன்னொரு சகோதரி கேட்டாள். “அதெல்லாம் உங்களுக்கென்ன கவலை?” “ஏண்டா? பின்னே கவலையில்லையா? பிராமணாளாய்ப் பிறந்து காலாகாலத்திலே கலியாணம் செய்து கொள்ளா விட்டால் நன்றாயிருக்கோ?” என்றாள் தாயார். அதற்குள் சகோதரிகளில் ஒருத்தி அம்மாவின் காதில் வந்து ஏதோ சொன்னாள். உடனே அவள், “சிவ! சிவ! காலம் கெட்டுப் போயிற்று. ஏண்டா! அவள் கழுத்தில் தாலி இருக்கோ, பார்த்தயோடா?” என்றாள். பின்னோடு, “நான் பார்த்தேன்னாக் கேட்டுடுவேன். அவள் யாராய்த் தானிருக்கட்டுமே? எனக்கென்ன பயம்!” என்று தலையை ஆட்டினாள். ஸ்ரீகாந்தன், “நீங்கள் நாசமாய்ப் போனயள்!” என்று சொல்லிவிட்டு எழுந்திருந்து சென்றான். அது முதல் ஸ்ரீகாந்தன் காங்கிரஸ் கூட்டங்களுக்கு வழக்கமாகப் போய் வரலானான். இதனால் காங்கிரஸ்காரர்கள் சிலரோடு அவனுக்குச் சினேகம் ஏற்பட்டது. கொஞ்ச நாளைக்கெல்லாம் காங்கிரஸ் ஆபீஸுக்கும் போகத் தொடங்கினான். ஒரு மாஜி ஸப்ஜட்ஜின் புதல்வன் - பணக்கார இளைஞன் - காங்கிரஸில் ஊக்கம் காட்டுவது பற்றி அவ்வூர்க் காங்கிரஸ்காரர்களுக்கெல்லாம் மிகவும் சந்தோஷமாயிருந்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதிய காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கப்பட்டபோது ஸ்ரீகாந்தன் தாலுகா காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியாக நியமிக்கப்பட்டான். அதற்கு மறுநாள் அவன் வஸுந்தராவின் வீட்டுக்குப் போனான். (அடிக்கடி பொதுக்கூட்டங்களில் சந்தித்ததில் அவர்களுக்குள் சொற்பப் பரிச்சயம் ஏற்பட்டிருந்தது) அவளிடம், “நான் காரியதரிசி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதை நன்கு நிறைவேற்றுவதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். உங்களால் தான் நான் இந்த காங்கிரஸ் வேலையில் ஈடுபட்டதே, தெரியுமல்லவா?” என்றான். வஸுந்தராவின் உள்ளத்தில் உவகை பொங்கிற்று துயரம் நிறைந்த தன்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் வருமென்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. “என்னால் இந்த உதவி செய்யத் தடையில்லை. அதைவிட வாழ்க்கையில் என்ன சந்தோஷம் இருக்கிறது. ஆனால் முனிசிபல் சேர்மன் ஏதாவது ஆட்சேபிப்பாரோ என்று தான் யோசனை செய்கிறேன்” என்றாள். “முனிசிபல் சேர்மனை நான் போய்ப் பார்க்கிறேன். அவர் வேண்டுமானால் ஆட்சேபிக்கட்டும், பார்க்கலாம். அப்படியே நேர்ந்தால் இந்த வேலை என்ன பிரமாதம்? இந்த ஊரில் நாங்கள் இவ்வளவு பேர் இல்லையா? சும்மா விட்டுவிடுவோமா?” என்றான் ஸ்ரீகாந்தன். முனிசிபல் சேர்மன் ஆட்சேபிக்கவில்லை. உண்மையில் காந்தி-இர்வின் உடன்படிக்கை அமுலிலிருந்த அந்த வருஷத்தில் ரொம்பப் பேர் திடீரென்று காங்கிரஸ் அநுதாபிகள் ஆனார்கள். சர்க்கார் அதிகாரிகள் கூடக் காங்கிரஸ் நிர்வாகிகளின் நல்ல அபிப்பிராயத்தைப் பெற விரும்பினார்கள். இந்த 1931ஆம் வருஷத்தில் தமிழ்நாடெங்கும் காங்கிரஸ் நிர்மாண வேலைகள் தீவிரமாகத்தான் நடைபெற்றன. ஆனாலும் ஸ்ரீகாந்தன் காரியதரிசியாயிருந்த தாலுகா கமிட்டியைப் போல் அவ்வளவு வேலை எந்தக் கமிட்டியும் செய்யவில்லை என்று சொல்லலாம். இந்தப் பெருமை முழுவதும் வஸுந்தராதேவிக்கே சேரவேண்டுமென்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அசந்தர்ப்பத்திலும் ஸ்ரீகாந்தன் சொல்லி வந்தான். ஒருநாள் அவர்கள் இருவரும் தனியாயிருக்க நேர்ந்த போது, “நாம் இவ்வளவு நாள் பழகிய பிறகும் உங்களுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. என்னைப் பற்றி ஒரு விவரம் பாக்கியில்லாமல் சொல்லியிருக்கிறேன். உங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் சொன்னதில்லை. இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம். ஆனால் எனக்கென்னவோ தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது” என்றான் ஸ்ரீகாந்தன். வஸுந்தரா, “உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் சொல்கிறேன்” என்றாள். “உங்களுக்குக் கலியாணமே ஆகவில்லையா?” “பேஷாய் ஆகியிருந்தது. அதற்கு அடையாளம் வேண்டுமானால் பார்க்கிறீர்களா?” என்றாள். அப்புறம் திரும்பி முதுகிலிருந்த துணியைச் சிறிது விலக்கினாள். செம்பொன் நிறமுடைய அம்முதுகின் மத்தியில் கறேலென்று இரண்டு நீளமான வடுக்கள் இருந்தன. ஸ்ரீகாந்தன் கண்களை மூடிக்கொண்டான். அவை நெருப்புச் சுட்ட வடுக்கள் என்பதை உணர்ந்த அவன், “எனக்குப் பார்க்கச் சகிக்கவில்லை” என்றான். “என் மாமியார் சூடுபோட்ட வடுக்கள். அவளுடைய பிள்ளைக்கு மருந்திட்டேனென்பது என்னுடைய முதல் குற்றம். கொடுமை பொறுக்காமல் என் தகப்பனாருக்குக் கடிதம் எழுதியது இரண்டாவது குற்றம்” என்றாள். “அப்படிப்பட்ட கஷ்டம் அனுபவித்த நீங்கள் எப்படித்தான் இவ்வளவு உற்சாகமாகயிருக்கிறீர்களோ? எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!” என்றான் ஸ்ரீகாந்தான். “முதலில் சங்கீதந்தான் எனக்கு மன ஆறுதல் அளித்தது. இந்த ஊருக்கு வந்த பிறகு உற்சாகத்திற்குப் புதிதாக இரண்டு காரணங்கள் ஏற்பட்டன. ஒன்றுதான் தேசத்தொண்டு; இன்னொன்று - இன்னொன்று உங்களுக்கே தெரியும்.” இதற்கு ஸ்ரீகாந்தன் ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான். ஆனால் தொண்டை அடைத்துக் கொண்டது. ஏதோ தெளிவில்லாத சப்தந்தான் வெளி வந்தது. கொஞ்ச நேரங் கழித்து, “உங்களைப் போன்றவர்களுடைய கதையைக் கேட்கும்போது, தேச விடுதலை கூட அவ்வளவு முக்கியமல்ல; சமூகத்திலுள்ள ஊழல்களை நீக்கப் பாடுபடுவதுதான் முக்கியமெனத் தோன்றுகிறது” என்றான். “இரண்டுக்கும் விரோதம் ஒன்றுமில்லையே. தேசத் தொண்டு, சமூகத் தொண்டு இரண்டும் சேர்ந்தாற்போல் செய்யலாமே?” என்றாள் வஸுந்தரா. 4 ஒருநாள் ராமகிருஷ்ணய்யர் வஸுந்தராவை அருகில் உட்கார வைத்துக் கொண்டு, “அம்மா, உன்னையும் ஸ்ரீகாந்தனையும் பற்றி உலகில் பலவிதமாய்ப் பேசிக் கொள்கிறார்களே? இந்தக் கிழவன் காதுக்குக் கூட அது எட்டியிருக்கிறது. அதன் உண்மை என்ன, அம்மா?” என்று கேட்டார். “என்ன, அப்பா பேசிக்கொள்கிறார்கள்?” “நீங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாய்ச் சொல்கிறார்கள்.” “அவ்விதம் நேர்ந்தால் உங்களுக்கு அது இஷ்டமாயிராதா, அப்பா! அப்படியானால் நான் கனவில் கூட…” ராமகிருஷ்ணய்யர் ஒரு பெருமூச்சு விட்டு, “குழந்தாய்! நீ எப்படியாவது சந்தோஷமாயிருக்க வேண்டும். அது தான் பகவானிடம் இரவு பகலாக நான் பிரார்த்தித்து வருவது” என்றார். ஏறக்குறைய அதே சமயத்தில் தேசத்தின் அரசியல் நிலைமையில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. மகாத்மா காந்தி இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டுக்குப் போனவர் சீமையிலிருந்து திரும்பி வந்தார். அவரை வரவேற்பதற்கு அதிகார வர்க்கத்தார் ஆயத்தமாயிருந்தார்கள். மகாத்மா காந்தி வைஸ்ராய் வில்லிங்டனை பேட்டி கேட்டதும், அது மறுக்கப்பட்டதும், பின் அவர் கைது செய்யப்பட்டதும், மீண்டும் சத்தியாக்கிரஹம் தொடங்கப்பட்டதும் சரித்திர சம்பவங்கள். இந்த நாட்களில், “ஸ்ரீகாந்தன் என்ன செய்யப் போகிறான்? ஸ்ரீகாந்தன் என்ன செய்யப் போகிறான்?” என்றே ஊரெங்கும் பேச்சாயிருந்தது. அதைப் பற்றி இரண்டு பேருக்கு மட்டும் எவ்விதச் சந்தேகமும் ஏற்படவில்லை. அவர்கள் ஸ்ரீகாந்தனும் வஸுந்தராவுந்தான். “நாளையதினம் நானும் இன்னும் ஐந்து தொண்டர்களும் காங்கிரஸ் ஆபீஸிலிருந்து கிளம்பி மறியலுக்குப் போகின்றோம். ஆனால் கடைத்தெரு வரையில்கூட விடமாட்டார்கள் போல் இருக்கிறது. தடியைத் தாராளமாகவே உபயோகிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு வந்திருக்கிறதாம்” என்றான் ஸ்ரீகாந்தன். “நானும் உங்களுடன் வருவேன்” என்று தழதழத்த குரலில் கூறினாள் வஸுந்தரா. “கூடவே கூடாது. நாம் இருவரும் முதல் நாளே போய்விட்டால் அப்புறம் ஒன்றுமே நடக்காது. குறைந்தது இரண்டு மாதமாவது நீங்கள் வெளியில் இருக்க வேண்டும்.” கொஞ்ச நேரம் விவாதம் நடந்த பிறகு, ஸ்ரீகாந்தன் சொல்லுவதுதான் சரியென்று வஸுந்தரா ஒப்புக்கொண்டு அப்படியே செய்வதாக வாக்களித்தாள். “நாளைக்கு நான் எப்படிச் சகிக்கப் போகிறேனோ தெரியவில்லை. உங்கள் மேல் விழும் அடி ஒவ்வொன்றும் என் இருதயத்தில் விழுவது போலவே எனக்கிருக்கும்” என்றாள். “அப்படி நீங்கள் சொன்னால் எனக்கு இருக்கிற தைரியமும் போய்விடும்.” “நான் சொன்னது தவறுதான்; மன்னியுங்கள், என்ன இருந்தாலும் ஸ்திரீ புத்திதானே?” “நான் வேறுவிதமாய் எண்ணிக்கொள்வேன். என் மேல் அடிவிழும்போது உங்கள் மேல் அடிகள் விழாமல் தடுப்பதாக எண்ணிக் கொள்வேன். அப்போது மும்மடங்கு தைரியம் எனக்குண்டாகும். உண்மையும் அதுதானே? என் இருதயத்தில் நீங்கள் இருக்கிறீர்களல்லவா?” அந்த 1932ஆம் வருஷத்தில் பாரதநாட்டில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் - ஏதோ தெய்வீக சக்தியினால் - மகத்தான வீர புருஷர்கள் ஆனார்கள். தடியடி, படுகாயம், பலநாள் ஆஸ்பத்திரிச் சிகிச்சை, அதற்குப் பிறகு வருஷக் கணக்கில் சிறைவாசம் இவற்றை எதிர்பார்த்துக் கொண்டு அவர்கள் பத்தி பத்தியாய்ச் சென்றார்கள். அப்படிச் சென்றவர்களில் ஸ்ரீகாந்தனும் அவனுடைய ஐந்து சகாக்களும் சேர்ந்தவர்கள். கஷ்டமென்பதையும் நொவென்பதையும் இன்னதென்று அறியாமல் உருண்டு திரண்டு வளர்ந்திருந்த அவனுடைய தோள்களிலும், முதுகிலும், கால்களிலும் அடி விழ விழ, அவனுடைய வாய் ‘வந்தே மாதரம்!’ என்று பன்மடங்கு உரத்த சப்தத்துடன் கோஷித்தது. கடைசியில் அவர்கள் ஸ்மரணையற்று விழுந்த பிறகு போலீஸார் அடிப்பதை நிறுத்தி அவர்களைச் சிறைச்சாலைக்குக் கொண்டு போனார்கள். மறுநாள் அவர்கள் எல்லாரும் ஆறு ஆறு மாதம் சிறைத் தண்டனை அடைந்தனர். அந்த இரண்டு நாளும் ஸ்ரீகாந்தனுடைய வீட்டில் அல்லோலகல்லோலமாயிருந்தது. அவனுடைய தமக்கைமார் பட்ட கவலைக்கு அளவேயில்லை. “ஐயோ! அப்பாவின் பென்ஷனுக்கு ஆபத்து வராமல் இருக்க வேண்டுமே?” என்று அவர்கள் பரிதபித்தார்கள். “அப்பவே ஒரு கால்கட்டைக் கட்டிவிடு என்று சொன்னேனே! என் வார்த்தையை ஒருவரும் கேட்கவில்லையே!” என்று அம்மா கதறினாள். அந்த மாஜி ஸப்ஜட்ஜின் நிலைமையை நான் என்னவென்று சொல்லட்டும்? ‘இனிமேல் காங்கிரஸ்காரர்கள் தானே அரசாங்கத்தில் அதிகாரம் வகிக்கப் போகிறார்கள்? அந்த லயனிலாவது பையனுக்கு ஏதாவது உத்தியோகம் ஆகட்டும்’ என்று அவர் எண்ணியிருந்தார். அதனால் தான், ஸ்ரீகாந்தன் காங்கிரஸ் காரியதரிசி ஆனதையெல்லாம் அவர் ஆட்சேபிக்கவில்லை. இப்போது அது விபரீதமாய் முடிந்தது. 5 ஸ்ரீகாந்தனுடைய துணிவையும் தியாகத்தையும் பற்றி ஊரில் எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அவனைப் பின்பற்றுவதற்கு ரொம்பப் பேர் தயாராயில்லை. “நாம் ஜெயிலுக்குப் போவதாயிருந்தால் வேறு வழிகளை அனுசரிக்கலாம்; திருடலாம்; போர்ஜரி செய்யலாம்; வேறு ஏதாவது பண்ணலாம். இந்த மறியல் சமாசாரம் மட்டும் வேண்டாம்” என்று அவர்களெல்லாம் எண்ணியதாகத் தோன்றியது. இந்த நிலைமையை வஸுந்தராவினால் சகிக்க முடியவில்லை. ஒரு வாரம் வரையில் ஏதோ முயற்சி செய்து பார்த்தாள்; அதற்குப் பிறகு, தான் வெளியில் இருப்பதில் பயன் ஒன்றுமில்லையென்று கண்டு இன்னும் இரண்டு ஸ்திரீ தொண்டர்களுடன் மறியலுக்குப் புறப்பட்டாள். புறப்பட்ட இடத்திலேயே அவர்களைக் கைது செய்து கொண்டு போனார்கள். மற்ற இருவருக்கும் மூன்று மாதமும், வஸுந்தராவுக்கு மட்டும் ஒன்பது மாதமும் சிறைவாசம் கிடைத்தது. தள்ளாத வயதில் தன்னைத் தவிர வேறு ஆதரவில்லாத தந்தையைத் தனியே விட்டுப் போவது அவளுக்கு எத்தனையோ கஷ்டமாய்த்தானிருந்தது. ஆனால் அப்போது நம் தேசத்தில் இம்மாதிரி வெறி கொண்ட செயல்களை அநேகர் செய்யத் துணிந்தனர். வேலூர் ஸ்திரீகள் சிறைச்சாலையில் அவ்வருஷம் வைக்கப்பட்டிருந்த தேச சேவிகைகளில் வஸுந்தராவைப் போல் உற்சாகமாயிருந்தவர்கள் வேறு யாருமில்லையென்றே சொல்லலாம். அவளுடைய சிந்தனைகளில் ஸ்ரீகாந்தன் அடிக்கடி வந்து கொண்டிருந்தான் என்று சொல்லவேண்டியதில்லை. வருங்காலத்தைப்பற்றி எவ்வளவு விதமாக அவள் யோசித்தாலும், அது ஸ்ரீகாந்தனில் வந்தே முடிந்தது. கடைசியில், தங்களிருவரையும் பகவானே ஒன்று சேர்த்தாரென்றும், சமூகத்தின் எதிர்ப்பு எப்படியிருந்தபோதிலும் தாங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்தே தேச சேவையில் வாழ் நாளைக் கழிக்க வேண்டுமென்றும் அவள் உறுதி கொண்டாள். ஏறக்குறைய ஆறு மாதம் சென்றபோது அவளுடைய உள்ளத்தில் பரபரப்பு அதிகம் ஏற்பட்டது. ஸ்ரீகாந்தன் சீக்கிரம் விடுதலையடைந்துவிடுவான். தன்னைப் பார்க்க வருவான் என்ற எண்ணம் அவள் மனத்தில் எழுந்து கொண்டிருந்தது. ஆறு மாதம் முடியவும் அவள் தினந்தோறும் அவனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்க்கத் தொடங்கினாள். இன்று வரும், நாளை வரும் என்று எதிர்பார்த்துப் பார்த்து ஒரு மாதம் சென்றுவிட்டது; “ஒரு வேளை விடுதலையாகி வந்ததும் மறுபடியும் சட்டமறுப்புச் செய்து சிறை புகுந்து விட்டாரோ” என்று எண்ணியபோது அவளுடைய நெஞ்சு துணுக்குற்றது. ‘ஐயோ! தான் விடுதலையடையும் வரையிலாவது அவர் வெளியிலிருக்கக் கூடாதா?’ இந்த எண்ணம் தோன்றிய பிறகு அவளால் சும்மா இருக்க முடியவில்லை. “ஊரில் முக்கிய விசேஷங்களையெல்லாம் அடுத்த கடிதத்தில் கட்டாயம் எழுதவும்” என்று தகப்பனாருக்கு எழுதினாள். தகப்பனாரிடமிருந்து பதில் வந்தது. அதில் சில வரிகள் ஜெயில் அதிகாரிகளினால் அடிக்கப்பட்டிருந்தன. அந்த வரிகளில் இரண்டு இடத்தில் ஸ்ரீகாந்தன் என்னும் பெயர் இருப்பதாக வஸுந்தராவுக்குத் தோன்றிற்று. இதனால் அவளுடைய மனச் சஞ்சலம் இன்னும் அதிகமாயிற்று. தகப்பனாருடைய கடிதத்தில் இன்னொரு விஷயமும் இருந்தது; சென்னையில் வஸுந்தரா கல்வி பயின்று தேறிய ஸேவாசிரமத்தில் ஓர் உபாத்தியாயினி வேலை காலியாயிருப்பதாகவும், வஸுந்தரா விடுதலை பெற்றதும் சென்னைக்கு வந்து அந்த வேலையை ஒப்புக் கொள்ளும்படியாகவும் தகவல் வந்திருப்பதாய் அவர் எழுதியிருந்தார். மேற்படி ஸேவாசிரமத்தின் தலைவி ஓர் அபூர்வமான ஸ்திரீ. முக்கியமாக வஸுந்தராவிடம் அவர் விசேஷ பிரியம் வைத்திருந்தார். அவள் சிறை சென்றதையும், இனிமேல் முனிசிபல் பள்ளிக்கூடங்களில் அவளுக்கு வேலை கிடைப்பது கஷ்டமென்பதையும் அறிந்து தாமாகவே இந்த ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வஸுந்தராவுக்கு இதைப் படித்ததும் புன்னகை உண்டாயிற்று. சென்னைக்குத் திரும்புவதா? ஸேவாசிரமத்தில் வேலையா? - தன்னுடைய வாழ்க்கை இப்போது ஸ்ரீகாந்தனுடைய வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டிருப்பதை அவர்கள் என்ன கண்டார்கள்? 6 ஒன்பது மாதமும் சென்றது. வஸுந்தரா விடுதலையடைந்தாள். விடுதலையில் எவ்வளவு குதூகலத்தை எதிர் பார்த்தாளோ, அதில் ஒரு பகுதி கூட ஏற்படவில்லை. சிறை வாசலில் ஒரு வேளை யாரையாவது எதிர்பார்த்திருந்து அவர் வராததனால் ஏமாற்றம் அடைந்தாளோ? வழக்கம் போல் வேலூரிலிருந்து சில காங்கிரஸ் அபிமானிகள் அவளை வரவேற்று அழைத்துச் சென்று ரயிலில் ஏற்றி விட்டார்கள். இரவு ஒரு நிமிஷங்கூட அவள் தூங்கவில்லை. இடையிடையே வண்டி நிற்கும் போதெல்லாம் பிளாட்பாரத்தில் குறுக்கே நெடுக்கே போகிறவர்களைக் கூப்பிட்டு, “ஸ்ரீகாந்தனைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்கலாமாவென அவளுக்குத் தோன்றும். ஒன்பது மாதத்துக்கு முன்பு கைதியாக ரயிலேறிய அதே ஸ்டேஷனில் இப்போது வஸுந்தரா சுதந்திரமுள்ள ஸ்திரீயாக வந்து இறங்கினாள். ஆனால் அப்போது மனத்திலிருந்த குதூகலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இப்போது இல்லை. பிளாட்பாரத்தில் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் எதிர்பார்த்த மனிதர் எங்கும் காணப்படவில்லை. ஆனால் அவளுடன் கைதியான இரண்டு ஸ்திரீகளும் வந்திருந்தார்கள். அவர்கள் அவளை வெகு பிரியத்துடன் தழுவிக் கொண்டு அழைத்துச் சென்றார்கள். வெளியே வந்ததும், அவர்கள் அமர்த்தியிருந்த வண்டியில் மூவரும் ஏறிக்கொண்டனர். சிறைச்சாலை யோக ஷேமங்களை விசாரித்த பிறகு, “இப்போது யார் இங்கே காங்கிரஸ் காரியதரிசி?” என்று வஸுந்தரா கேட்டாள். “இங்கே இப்போது காங்கிரஸுமில்லை; காரியதரிசியுமில்லை.” “நிஜமாகவா? ஸ்ரீகாந்தன் கூடவா ஒன்றும் செய்யவில்லை?” “ஸ்ரீகாந்தனா? உனக்குச் சமாசாரம் தெரியாதா?” “தெரியாதே. என்ன சமாசாரம்? மறுபடியும் ஜெயிலுக்குப் போய் விட்டாரா, என்ன?” வஸுந்தராவின் நெஞ்சு அப்போது உண்மையாகவே துடிதுடித்தது. “அவர் ஏன் ஜெயிலுக்குப் போகிறார்? அவருக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” வஸுந்தரா கொஞ்சம் ஆறுதலடைந்தாள். ‘இவர்களுக்கென்ன, பிறத்தியார்மேல் புகார் சொல்வதுதான் வேலை. அவர் ஏன் அவசரப்பட்டுக் கொண்டு ஜெயிலுக்குப் போக வேண்டும்?’ “இப்போது ஊரில் இருக்கிறாரா?” என்று கேட்டாள். “ஊரில் எப்படி இருப்பார்? அவருக்கு இன்றைக்குப் பாண்டிச்சேரியில் கல்யாணம். பாவம், அது உனக்கு எப்படித் தெரியும்?” ஐந்து நிமிஷம் கழித்துத் தழதழத்த குரலில் வஸுந்தரா கேட்டாள்: “எதற்காகப் பாண்டிச்சேரியில் கல்யாணம்?” “பெண்ணுக்குப் பதிமூன்று வயது; சாரதா சட்டத்தை ஏமாற்றுவதற்காக அங்கே போய்ப் பண்ணுகிறார்கள்!” வஸுந்தராவின் வீட்டு வாசலிலேயே அந்தச் சிநேகிதர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். ராமகிருஷ்ணய்யர் பிடில் வாசித்துக் கொண்டிருந்தவர், வாசலில் வண்டிச் சத்தம் கேட்டதும் பிடிலை நிறுத்தினார். “குழந்தாய்!” என்றார். “அப்பா!” என்று அலறிக் கொண்டு வஸுந்தரா ஓடி வந்து அவருடைய கழுத்தைக் கட்டிக் கொண்டாள். இருவரும் கண்ணீரைப் பெருக்கி விம்மி விம்மி அழுதார்கள். அரை மணி நேரம் கழித்து அழுகை ஒருவாறு நின்ற பொழுது வஸுந்தரா, “அப்பா! ஸேவாசிரமத்துக்குக் கடிதம் எழுதிவிடுங்கள்; நாம் நாளைக்கே சென்னைக்குப் புறப்படலாமல்லவா?” என்றாள். ஸுசீலா எம்ஏ நமது கதை 1941-ஆம் வருஷத்தில் ஆரம்பமாகிறது. இது கதை என்று வாசகர்களை நம்பச் செய்வதற்கு எனக்கு வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. இந்த நாளில் நிஜத்தை நிஜம் என்று நம்பச் செய்வதே கடினமாயிருக்கிறது. கதையை, கதை என்று நம்பச் செய்வது அதை விடக் கஷ்டமானதல்லவா? ஸ்ரீமதி ஸுசீலா அந்த 1941-ம் வருஷத்திலேதான் எம்.ஏ. பரீட்சையில் புகழுடன் தேறினாள். 1939-ம் ஆண்டில் ஸுசீலாவுக்கு பி.ஏ. பட்டம் கிடைத்து விட்டது. அத்துடன் திருப்தியடையாமல் மேலே எம்.ஏ. பரீட்சைக்குப் படிக்கத் தீர்மானித்தாள். அந்த வருஷத்தில் சென்னை யுனிவர்சிடிகாரர்கள் எம்.ஏ. பரீட்சைக்கு ஒரு புதிய பாடத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். அது தான் பாக சாஸ்திரம். இந்தக் காலத்து யுனிவர்ஸிடி கல்வியானது ஸ்திரீகளைக் குடும்பத்துக்கு லாயக்கற்றவர்களாகச் செய்கிறது என்று தேசத்தில் பெரிய கிளர்ச்சி நடந்ததின் பேரில், யுனிவர்ஸிடி இந்த சீர்திருத்தத்தைச் செய்தது. புதிய விஷயமான பாகசாஸ்திரத்தையே ஸுசீலா எம்.ஏ. பரீட்சைக்கு எடுத்துக் கொண்டாள். அவளுக்கு அந்த சாஸ்திரத்தைப் போதிப்பதற்கென்று ஒரு ஐரோப்பிய ஆசிரியை மாதம் ரூ.950 சம்பளத்தில் யுனிவர்ஸிடியினால் நியமிக்கப்பட்டாள். இதிலிருந்தே, நமது காங்கிரஸ் மந்திரிகளின் ஜம்பம் ஒன்றும் யுனிவர்ஸிடியினிடம் மட்டும் பலிக்கவில்லையென்று அறிந்து கொள்ளலாம். அந்த ஆசிரியையின் உதவியுடன் பாக சாஸ்திர ஆராய்ச்சியிலும் அப்பியாசத்திலும் இரண்டு வருஷம் பரிபூரணமாக அமிழ்ந்திருந்தாள் ஸுசீலா. இந்த நாட்களில் வேறு எந்த விஷயத்துக்கும் அவளுடைய மனதில் இடம் இருக்கவில்லை. ஒவ்வொரு சமயம், சீமையிலே எலெக்ட்ரிக் என்ஜினியரிங் படிக்கப் போயிருக்கும் அவளுடைய அத்தை மகன் பாலசுந்தரத்தின் நினைவு மட்டும் அவளுக்கு வருவதுண்டு. ஆனால், அடுத்த நிமிஷம், டெமொடோ அப்பத்துக்கு உப்புப் போட வேண்டுமா வேண்டாமா என்ற விஷயத்தில் அவளுடைய கவனம் சென்று, பாலசுந்தரத்தை அடியோடு மறக்கச் செய்து விடும். பாக சாஸ்திரம் சம்பந்தமான ஸுசீலாவின் சரித்திர ஆராய்ச்சிகள் அபாரமாக இருந்தன. திருநெல்வேலித் தோசை என்பது ஆதியிலே எப்போது உண்டாயிற்று. எப்போது அது சதுர வடிவத்திலிருந்து வட்ட வடிவமாகப் பரிணமித்தது, எப்போது தோசைக்கு மிளகாய்ப் பொடி போட்டுக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து நூறு பக்கத்தில் ஸுசீலா ஒரு கட்டுரை எழுதினாள். இம்மாதிரியே, கோயமுத்தூர் ஜிலேபி, தஞ்சாவூர் சாம்பார், மைசூர் ரசம், கல்கத்தா ரஸகுல்லா ஆகிய ஒவ்வொன்றைப் பற்றியும் பல நூறு பக்கம் எழுதினாள். இன்னும் ஸுசீலா மகஞ்சதாரோவுக்கு நேரில் சென்று அங்கே கண்டெடுக்கப்பட்ட 5000 வருஷத்துக்கு முந்திய சிலாசாஸனங்களை ஆராய்ந்து, இந்தியாவில் புராதன பாகசாஸ்திரத்தைப் பற்றிப் பல அற்புதங்களைக் கண்டுபிடித்தாள். உதாரணமாக, தமிழ்நாட்டில் கொழுக்கட்டை என்பது ஏற்பட்டு முந்நூறு வருஷங்கள் தான் ஆயின என்று ஸுசீலா கண்டுபிடித்துச் சொன்னாள். இதற்கு அவள் 5000 வருஷத்துக்கு முந்திய மகஞ்சதாரோ கிலாசாஸனத்திலிருந்து அத்தாட்சி காட்டியபோது, அதைப் பார்த்தவர்கள் அவ்வளவு பேரும் பிரமித்தே போனார்கள். கொழுக்கட்டையின் மேல் அவர்களுடைய மோகம் பறந்தே போய்விட்டது. இம்மாதிரி வெறும் ஆராய்ச்சிகளுடன் ஸுசீலா ஒன்றும் நின்று விடவில்லை. அப்பியாச சோதனைகளும் செய்து வந்தாள். ஸுசீலாவின் சோதனைகளுக்காகவே பெண்கள் கலாசாலை ஹாஸ்டலில் ஒரு தனிப் பகுதி ஒழித்து விடப்பட்டது. ஆரம்பத்தில், ஹாஸ்டலில் வசித்த சக மாணவிகள் அவளுடைய சோதனைகளில் ஒத்தாசை புரிந்து வந்தார்கள். அதாவது, அவள் கண்டுபிடித்த புதிய பட்சணங்களை அவர்கள் ருசி பார்த்து அபிப்பிராயம் சொல்லி வந்தார்கள். ஆனால் வர வர, இது விஷயத்தில் அவர்களுடைய ஒத்துழைப்புக் குறைந்து வந்தது. கடைசியில், ஒருநாள், ஸுசீலா செய்திருந்த ‘குளோரோபாரம் பச்சடி’யை அவர்கள் ருசி பார்த்த பிறகு, நிலைமை விபரீதமாகப் போய்விட்டது. ருசி பார்த்தவர்கள் அவ்வளவு பேரும் மூன்று நாள் வரையில் தூங்கிக் கொண்டே வகுப்புக்குப் போனார்கள்; தூங்கிக் கொண்டே படித்தார்கள்; தூங்கிக் கொண்டே தூங்கினார்கள்! இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஹாஸ்டல் மாணவிகள் ஒருவரும் ஸுசீலாவின் ’லபரேடரி’க்கு அருகிலேயே வருவது கிடையாது. எனவே, ஸுசீலா ’தன் வயிறே தனக்குதவி’ என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. கடைசியாக, பரீட்சை நெருங்கியது. அந்த வருஷம் எம்.ஏ. வகுப்பில் பாக சாஸ்திரப் பரீட்சைக்கு ஆஜரான மாணவி ஸுசீலா ஒருத்திதான். ஆனால், பரீட்சகர்களோ ஒன்பது பேர். அவர்கள் ஸுசீலா எழுதியிருந்த ஆராய்ச்சிகளையெல்லாம் படித்துவிட்டு, 100க்கு 90 மார்க் வீதம் கொடுத்தார்கள். பிறகு ஸுசீலா செய்து கொடுத்த பட்சணங்களைத் தூரத்தில் இருந்தபடியே வாசனந பார்த்து விட்டு, 100க்கு 110 மார்க் வீதம் கொடுத்தார்கள். எனவே, அந்த வருஷம் எம்.ஏ. பரீட்சையில், சென்னை மாகாணத்திலேயே முதலாவதாக ஸுசீலா தேறினாள். அவளுடைய விசேஷ ஆராய்ச்சி முடிவுகளைக் கௌரவிப்பதற்காக ‘டாக்டர்’ பட்டம் அவளுக்கு அளிப்பதென்றும், ஸிண்டிகேட் சபையார் முடிவு செய்தனர். இவ்வளவு மகத்தான கௌரவங்களை அடைந்த ஸுசீலாவுக்கு இந்த இரண்டு வருஷத்தில் ஒரு சின்ன நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் சொல்லத்தான் வேண்டும். அவளுடைய பாக சாஸ்திர ஆராய்ச்சிகளின் பயனாக அவளுடைய ஜீரணசக்தி அடியோடு போய்விட்டது! பரீட்சை முடிவு வெளியாயிற்றோ, இல்லையோ, ஸுசீலாவுக்கு வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்த வண்ணமிருந்தன. அவற்றுடன், டீ பார்ட்டிகளுக்கும், டின்னர் பார்ட்டிகளுக்கும் அழைப்புகள் வரத் தொடங்கின. முதன் முதலில் ராஜதானியில் முதலாவதாக எம்.ஏ. பரீட்சையில் தேறிய பெண்மணி அன்றோ? ஆதலின், மாதர் சங்கங்களின் ஸ்திரீகள் கிளப்புகளிலும் ஸுசீலாவுக்கு உபசார விருந்துகள் நடந்தன. அவள் திருநெல்வேலியைச் சேர்ந்தவளாதலால், திருநெல்வேலி சங்கத்தார் ஒரு விருந்து கொடுத்தார்கள். தங்கள் கலாசாலைக்கே கௌரவம் கொண்டு வந்ததற்காக, கலாசாலை ஆசிரியைகள் ஒரு விருந்து அளித்தார்கள். ’வீரத் தமிழ் மகளிர் சங்க’த்தாரும் இவர்களுக்கெல்லாம் பின்வாங்கிவிடவில்லை. அப்புறம் சினேகிதர்கள் சினேகிதரல்லாதவர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லார் வீடுகளிலும் வரிசையாக விருந்து சாப்பிட வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று சிற்றுண்டி விருந்துகளுக்குப் போக வேண்டியதாயிற்று. இந்த விருந்துகளில் எல்லாம் ஸுசீலா ஒன்றும் சாப்பிடாமல் மரியாதைக்கு உட்கார்ந்து விட்டு எழுந்து வர முடிந்தது என்கிறீர்களோ? அதுதானே முடியவில்லை? ஸுசீலா வெறுமனே உட்கார்ந்திருந்தால், “இந்தச் சாப்பாட்டையெல்லாம் நீங்கள் சாப்பிடுவீர்களா? பாக சாஸ்திரத்தில் பரீட்சை கொடுத்தவராயிற்றே?” என்று பக்கத்திலுள்ளவர்கள் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். இதற்காக ஸுசீலா ஒவ்வொரு விருந்திலும் கொஞ்சமாவது சாப்பிடத்தான் வேண்டியிருந்தது. சென்னையில் பிரசித்தமான ‘நியோவஞ்சக லஞ்ச் ஹோம்’ என்னும் ஹோட்டலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஹோட்டல் முதலாளி ஓரு கெட்டிக்கார மனுஷர். அவர் மேற்படி லஞ்ச் ஹோமின் வருஷாந்தரக் கொண்டாட்டம் நடத்தத் தீர்மானித்தார். பலமான சிபாரிசுகள் பிடித்து, அந்தக் கொண்டாட்டத்துக்கு ஸ்ரீமதி ஸுசீலா அக்கிராசனம் வகிக்கும்படி செய்தார். அவ்வளவுதான்; பிறகு சென்னையிலுள்ள ஒவ்வொரு ஹோட்டல்காரரும், ஸ்ரீமதி ஸுசீலாவைத் தங்கள் ஹோட்டலுக்கு வந்து விட்டுப் போக வேணுமென்று அழைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் எல்லோரிலும் படுகெட்டிக்காரர் ஒருவர் தமது ஹோட்டலின் பெயரையே மாற்றி, “ஸுசீலா லஞ்ச் ஹோம்” என்று போட்டு விட்டார்! இதற்கு மேல் சென்னைப் பட்டணத்தில் இருப்பதே அபாயம் என்று கருதிய ஸுசீலா உடனே திருநெல்வேலிக்குப் பிரயாணமானாள். திருநெல்வேலிக்குப் போனால் இந்த விருந்துத் தொந்தரவு ஒழியுமென்று அவள் நினைத்தது பெரிய பிசகாய் முடிந்தது. ஸுசீலாவின் தகப்பனார் திவான் பகதூர் கோமதி நாதப்பர் திருநெல்வேலியில் மிகப் பிரசித்தமானவர். பெரிய வக்கீல் என்பதோடு கூட, பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டவர். அந்த ஊரில் ’சமதர்ம சமாதி சங்க’த்துக்கு அவர்தான் தலைவர். ’கட்டாய விதவா விவாக சபை’க்கு உபதலைவர். ’தனித் தமிழ் வசை மொழிக் கழக’த்தில் அங்கத்தினர். சமூகச் சீர்திருத்தங்களில் அவருக்கு எவ்வளவு அக்கரை உண்டு என்பதை, அவர் மகள் ஸுசீலாவைப் பார்த்தே நாம் நன்கறியலாமல்லவா? இப்படிப்பட்ட சீர்திருத்தப் பிரமுகரைத் தகப்பனாராகப் பெற்ற ஸுசீலா, அவர் வாழும் ஊரில் தனக்கு விருந்து உபசாரத்தொல்லை இராது என்று நினைத்தாளென்றால், எம்.ஏ. படித்ததின் பலனாக உலக விவகாரங்களில் அவளுடைய அறிவு மழுங்கி விட்டதென்றே நாம் முடிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது. எப்படியோ, ஸுசீலா திருநெல்வேலி போய்ச் சேர்ந்தாள். ரயில்வே ஸ்டேஷனிலேயே அவளை வரவேற்பதற்காக அநேகம் பேர் கூடியிருந்தார்கள். வீடு சேர்ந்ததும் அன்றைக்குப் பெரிய விருந்து. எம்.ஏ. படித்த தமது மகளைத்தம் சிநேகிதர்களுக்கெல்லாம் பெருமையுடன் அறிமுகப்படுத்தி வந்தார் கோமதி நாதப்பர். பெருமை இராதா, ஐயா! இருபது வருஷத்துக்கு முன்னால், திருநெல்வேலியில் ஒருவர் எம்.ஏ. பட்டம் பெற்றபோது ஊரெல்லாம் தடபுடல் பட்டது. அந்த மனுஷருக்கு எம்.ஏ. முதலியார் என்றே பெயர் வந்து விட்டது. இப்போது, முதன் முதலாகத் திருநெல்வேலிப் பெண் ஒருத்தி எம்.ஏ. பட்டம் பெற்றிருக்கிறாள். அதிலும் அவள் ராஜதானியிலேயே முதலாவதாக - மீசை முளைத்த ஆண் பிள்ளைகளையெல்லாம் தோற்கடித்து விட்டு - புகழுடன் தேறியிருக்கிறாள். அப்படிப்பட்டவள் தம்முடைய பெண் என்று நினைக்கும்போது, அந்தத் தகப்பனாரின் தோள்கள் பூரித்து உயராமல் இருக்குமா? வீட்டு விருந்துக்குப்பிறகு வெளியிலும் விருந்துகள் ஆரம்பமாயின. ’சமதர்ம சமாதி சங்க’த்தில் விருந்து; ’கட்டாய விதவா சங்க’த்தில் டீ பார்ட்டி; ’வக்கீல்களின் சங்க’த்தில் விருந்து; கோ ஆபரேடிவ் யூனியனில் டின்னர்; அஞ்ஞான வாசக சாலையில் சிற்றுண்டி; முனிசிபாலிடியில் உபசாராம்; அப்புறம், சிநேகிதர்கள், பந்துக்கள் வீடுகளில் வரிசையாக விருந்து. சாப்பாட்டுக்கோ, சிற்றுண்டிக்கோ உட்கார்ந்தால், பேச்சு ஒரே மாதிரிதான். “ஏனம்மா, ஒன்றும் சாப்பிட மாட்டேனென்கிறாயே? ஆனால், உனக்கு இதெல்லாம் பிடிக்குமா? எங்கள் சாப்பாடெல்லாம் நன்றாயிருக்குமா? பாக சாஸ்திரப் பரீட்சை கொடுத்து மெடல் வாங்கியவளாச்சே?” என்று சொல்லுவார்கள். இதனாலெல்லாம் ஸுசீலாவுக்குச் சாப்பாடு என்றாலே விஷமாய்ப் போயிற்று. உணவுப் பண்டத்தைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வந்தது. சாப்பாட்டைப் பற்றிய பேச்சு எதுவும் காதில் நாராசமாக விழுந்தது. இதையெல்லாம் வாய் விட்டு யாரிடமும் சொல்ல முடியாதிருந்த படியால் சாப்பாட்டில் வெறுப்பும் துவேஷமும் பன்மடங்கு பெருகின. ஐயோ! தன்னுடைய வேதனை தன் தகப்பனாருக்குக் கூடவா தெரியாமல் போக வேண்டும்? ‘குழந்தைப் பிராயத்தில் தாயை இழந்த தன்னைத் தாமே தாயும் தந்தையுமாயிருந்து வளர்ந்தவருக்கே தன் கஷ்டம் தெரியவில்லையென்றால், மற்றவர்களுக்கு என்ன தெரியப் போகிறது?’ இந்த உலகத்தில் ஒரே ஒரு மனுஷர் தான் தன்னுடைய மனோநிலையை அறிந்து அநுதாபப்படக்கூடியவர். நல்லவேளை, அவர் சீமையிலிருந்து கப்பல் ஏறி விட்டார். சீக்கிரத்தில் வந்து விடுவார். அவர் வந்தவுடன், இரண்டு பேருமாக எங்கேயாவது மனுஷர்களே இல்லாத இடத்துக்குப் போய்க் கொஞ்ச நாள் இருந்து விட்டு வரவேணும்! அப்பா! இந்த எழவெடுத்த சமையல், சாப்பாட்டுப் பேச்சே இல்லாமல் சில நாளாவது கழியாதா? அந்த ஒரே ஒரு மனுஷர் ஸ்ரீ பாலசுந்தரம் பி.ஏ.பி.இ. என்று சொல்ல வேண்டியதில்லை. பால சுந்தரத்தின் சொந்த ஊர் தென்காசிக்கு அடுத்த நெறிஞ்சிக்காடு. சென்னையில் என்ஜீனியரிங் பரீட்சை தேறி விட்டு, சீமைக்கு உயர்தர எலெக்டிரிக் என்ஜீனியரிங் படிப்பதற்காகப் போயிருந்தான். அங்கும் புகழுடன் பரீட்சை தேறி இப்போது திரும்பி வருகிறான். இவர்கள் இரண்டு பேருக்கும் முன்னமேயே கல்யாணம் நிச்சயமாகி விட்டது. ஆனால், ஸுசீலா, எம்.ஏ. தேறிய பிறகு தான் கல்யாணம் என்று கோமதியப்பர் சொல்லியிருந்தார். பாலசுந்தரம் பம்பாய்க்கு வந்து சேர்ந்த செய்தியை ஸுசீலா தினந்தோறும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக, ஒரு நாள் தந்தி வந்தது. ஸுசீலா குதூகலமடைந்தாள். அந்த நேரத்தில் அவள் தன்னுடைய படிப்பையும் எம்.ஏ. பட்டத்தையும் மறந்து, சாதாரணமாக, டாக்கிகளில் நாம் பார்க்கும் கதாநாயகிகளைப் போல் காரியம் செய்யத் தொடங்கினாள். ஆடினாள்; பாடினாள்; முகத்தில் பவுடரைப் பூசினாள்; நெற்றியில் பொட்டு இட்டாள்; நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று அழகு பார்த்தாள்; இன்னும் என்னவெல்லாமோ அசட்டுக் காரியங்களைச் செய்தாள். பாலசுந்தரம் வந்தவுடனே, இந்தத் திருநெல்வேலியிலிருந்து தொலைந்து போய் டின்னர்களும் டீ பார்ட்டிகளும் இல்லாத இடத்தில் சிறிது காலம் நிம்மதியாக இருக்கலாம் என்ற ஆசையினால், அவள் உள்ளம் குதித்துக் கொண்டிருந்தது. இரண்டு நாளைக்குப் பிறகு பம்பாயிலிருந்து ஒரு கடிதம் வந்தது. பாலசுந்தரந்தான் எழுதியிருந்தான். ஆரம்பத்தில், ஸுசீலாவிடம் தன் கரைகாணாத காதலை வெளியிட்டிருந்தான். அவளைப் பார்க்க வேணுமென்ற ஆசையினால் தன் இருதயம் துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதைத் தெரிவித்திருந்தான். பிறகு, பம்பாயில் தான் இன்னும் சில நாள் தங்கியிருத்தல் அவசியமாயிருப்பதையும், அங்குள்ள பருத்தித் தொழிற்சாலைகளில் மின்சார சக்தியை உபயோகப்படுத்தும் விதத்தை ஆராய்ந்து விட்டு, ஒரு மாதத்திற்குள் திரும்பி வந்து விடுவதாயும் உறுதி கூறியிருந்தான். கடைசியாக, அவன் எழுதியிருந்ததாவது: "நம் மாகாணத்தில் நான் செய்ய உத்தேசித்திருக்கும் வேலைகளைத் தொடங்குவதற்கு இந்த ஆராய்ச்சி மிகவும் அவசியமாயிருக்கிறபடியால் தான் இங்கே தங்கியிருக்கிறேன். இல்லாவிட்டால், இதற்குள் அவ்விடத்துக்குப் பறந்து வந்திருப்பேன். உன்னைப் பார்ப்பதற்கு எனக்கு இருக்கும் ஆசை கடலை விடப் பெரியது. அது மட்டுந்தானா? நம் ஊருக்கு வந்து எப்போது தோசையையும், இட்லியையும், சாம்பாரையும், ரஸத்தையும் கண்ணால் காணப் போகிறோமென்று இருக்கிறது. நல்ல சாப்பாடு என்று சாப்பிட்டு இரண்டு வருஷத்துக்கு மேலாகி விட்டது. இந்த நிமிஷத்தில் ஒரு தோசைக்காக இந்த பம்பாய் நகரையே விற்று விடுவதற்கு நான் தயாராயிருக்கிறேன். ஆகா! ஒரு முறுக்கு மட்டும் இப்போது கிடைத்தால்? சீச்சீ! என்ன காரியம் செய்கிறேன்? பாக சாஸ்திர எம்.ஏ. ஆகிய உனக்குக் கேவலம் தோசையையும் முறுக்கையும் பற்றி எழுதுகிறேனே? தயவு செய்து மன்னிக்க வேணும். கூடிய சீக்கிரம் அவ்விடம் வந்து, நீ செய்யப் போகிற முருங்கைக்காய் ஹல்வா, புளியம்பழப் பாயாஸம், வேப்பங்காய்ப் பொரியல், பம்புளிமாஸ் பொடித் துவட்டல் முதலியவற்றை ருசி பார்க்க நாக்கைத் தீட்டிக் கொண்டிருக்கிறேன். இப்படிக்கு, பாலசுந்தரம் இதை வாசித்ததும், ஸுசீலா கிட்டத்தட்ட வெறி பிடித்தவள் போலானாள். அந்தக் கடிதத்தைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்தாள். பிறகு, அந்தச் சுக்கல்களைப் பொறுக்கிச் சேர்த்து, பம்பாயில் பாலசுந்தரத்தின் விலாசத்தைக் கண்டு பிடித்தாள். பிறகு அவனுக்கு ஒரு கடிதம் எழுதினாள். "உன் கடிதம் கிடைத்தது. உன்னை நான் மனப்பூர்வமாக வெறுக்கிறேன்; அடிவயிற்றிலிருந்து உன்னைத் துவேஷிக்கிறேன். உன் முகத்தில் விழிக்கவும் விரும்பவில்லை. "சீ! இந்தப் பாழும் மனுஷர்களுக்கு உண்பதையும் தின்பதையும் தவிர உலகத்திலே வேறொன்றிலும் ஞாபகம் செல்லாதா? இப்படிக்கு, ஒரு காலத்தில் உன்னைக் காதலித்த ஸுசீலா." மேற்படி கடிதத்தை உறையில் போட்டுத் தபாலுக்கு அனுப்பி விட்டு, ஸுசீலா மிகுந்த மனச்சோர்வுடன் ஸோபாவில் சாய்ந்தாள். அப்போது உலகமே அவளுக்கு ஒரு வரண்ட பாலைவனமாகத் தோன்றியது. பூமியில் எதற்காகப் பிறந்தோம், எதற்காக உயிரோடிருக்கிறோம் என்று சிந்திக்கத் தொடங்கினாள். அச்சமயம், வேலைக்காரப் பையன் ஒரு பத்திரிகையைக் கொண்டு வந்து கொடுத்தான். ஸுசீலா அதைப் பிரித்து மேலெழுந்தவாரியாகப் பார்த்துக் கொண்டு போனாள். கொட்டை எழுத்தில் இருந்த ஒரு தலைப்பு அவளுடைய கவனத்தைக் கவர்ந்தது. “ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதம்” என்று படித்ததும், பளிச்சென்று நிமிர்ந்து உட்கார்ந்தாள். “தமிழ்க் கோவில்கள் தமிழ்த் தெய்வங்களுக்கே!” “ஆரியத் தெய்வங்களின் அட்டூழியம்” “சாகும் வரையில் பட்டினி; அதற்குப் பிறகு?” மேற்படி தலைப்புகளை வரிசையாகப் படித்ததும் ஸுசீலாவின் உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சிகளை யாரால் வர்ணிக்க முடியும்? அளவிலாத ஆவலுடன் அந்தத் தலைப்பின் கீழ் கொடுத்திருந்த விவரங்களைப் படிக்கலானாள். ஹிட்லர் குருசாமியைப் பற்றித் தமிழர் எல்லாருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும். “ஆம்; தெரியும்” என்று மரியாதையாக ஒப்புக் கொண்டு விடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் தமிழர்களே இல்லை என்று நான் சொல்லி விடும்படி நேரிடும், ஜாக்கிரதை! அவருடைய பெயருக்கு முன்னால் ‘ஹிட்லர்’ என்னும் அடைமொழி ஏன் வந்தது என்று நீங்கள் கேட்கலாம். கேளுங்கள், கேளுங்கள்; நன்றாய்க் கேளுங்கள். ஆனால் அதற்குப் பதில் மட்டும் உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அது என்னவென்பது எனக்குத் தெரியாது; குருசாமிக்குந் தெரியாது; உங்களுக்கு அது தெரிய வேண்டுமென்று, விரும்புவது வீண் ஆசையேயல்லவா? நமது ஹிட்லர் குருசாமி தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் செய்திருக்கும் தொண்டுகளைச் சொல்வதைக் காட்டிலும், சொல்லாமலிருப்பதே நலமாகும். ஏனெனில், அவற்றைச் சொன்னால், நீங்கள் “இப்போதே அவருக்கு ஓர் உருவச் சிலை செய்து ஒருவரும் பார்க்காதவிடத்தில் வைத்தாக வேண்டும்” என்று கிளம்பி விடுவீர்கள். அவர் செய்துள்ள தொண்டுகள், ஒன்றல்ல, இரண்டு அல்ல, எவ்வளவோ! உதாரணமாக, அவர் தமது இரண்டாவது வயதிலேயே தமிழின் சுவையைக் கண்டு அனுபவித்தவர். அந்த நாளிலேயே “அம்மா” “அப்பா” என்னும் இனிய தனித் தமிழ்ச் சொற்களைச் சொல்வதற்காக, வாயிலிருந்த விரலை எடுப்பதற்குக்கூட அவர் தயாராயிருந்தார். இன்னும் அவருக்குக் கொஞ்சம் வயதான பிறகு, “அ, ஆ, இ, ஈ” என்னும் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அந்தத் தமிழ் எழுத்துக்களின் மேல் அவருக்கு இருந்த மோகம் காரணமாக, மொத்தம் மூன்று வருஷம் “அ, ஆ” கற்றுக் கொள்வதிலேயே கழித்தார். இன்னும் தமிழன்பு காரணமாகவே அவர் ஸ்கூல் பைனல் பரீட்சையில், இங்கிலீஷில் மட்டும் நாலு வருஷம் ‘கோட்’ அடித்துக் கொண்டிருந்தார். பிறகு, பெரிய இடத்துச் சிபாரிசு காரணமாக அவருக்கு ஒரு சர்க்கார் காரியாலயத்தில் குமாஸ்தா வேலை கிடைத்தது. ஒரு நாள் காரியாலயத்தில் வேலை செய்ய வேண்டிய நேரத்தில் அவர் தமிழின் இன்பத்தில் மிதமிஞ்சிச் சொக்கி விட்டார். அவருடைய கண்கள் மூடின; தலையும் சாய்ந்தது; பெருமூச்சு வந்தது. அப்போது அங்கே வந்த தலைமை அதிகாரி, “குருசாமி தூங்குகிறார்!” என்று முட்டாள்தனமாக எண்ணினார். எண்ணியதோடு இல்லாமல், அவரை வேலையை விட்டும் தள்ளி விட்டார்! எனவே, ஹிட்லர் குருசாமி தமிழுக்காக இந்தப் பெரிய தியாகத்தைச் செய்யும்படியாக நேர்ந்தது. பின்னர், அவர் வேலை தேடுவது என்ற வியாஜத்தை வைத்துக் கொண்டு, தமிழ் நாடெங்கும் சுற்றிப் பார்த்து வந்தார். தமிழ் நாட்டைப் பார்ப்பதென்றால், தமிழ்நாட்டுக் கோவில்களைப் பார்க்காமல் முடியுமா? தமிழ் நாட்டுக் கோயில்களைப் பார்க்கப் பார்க்க, அவருக்கு வயிற்றைப் பற்றிக் கொண்டு எரிந்தது. “தமிழ்நாடு தமிழர்களுக்கே” என்ற பேச்சு அவர் காதில் எப்போதோ விழுந்திருந்தது. அப்படியானால், தமிழ்நாட்டுக் கோவில்களும் தமிழ் நாட்டுத் தெய்வங்களுக்கே உரிமையாக வேண்டுமல்லவா? ஆனால், இப்போதைய நிலைமை என்ன? தமிழ் நாட்டுக் கோவில்களில் இருக்கும் தெய்வங்கள் தமிழ் நாட்டுத் தெய்வங்களா? இல்லவே இல்லை. பரமசிவன் எந்த தேசத்தவர்? சிவ சிவா! அவருடைய இருப்பிடம் கைலையங்கிரியன்றோ? கைலையங்கிரி, வடகே, ரொம்ப ரொம்ப வடக்கேயல்லவா இருக்கிறது? ஆகவே, பரமசிவன் அசல் வடக்கத்தித் தெய்வம். அவர் பத்தினி பார்வதியோ, இமவானின் புத்திரி. விநாயகர், சுப்பிரமணியர் எல்லோரும் அசல் ஆரியக் குஞ்சுகள். பெருமாள் கோவிலோ கேட்க வேண்டியதில்லை. மகா விஷ்ணு - பெயரைப் பார்த்தாலே, ஆரியத் தெய்வம் என்று தெரிகிறது. அவருடைய அவதாரங்களும் வடநாட்டிலேதான். இராமர், கிருஷ்ணர், நரசிம்மர் - ராம ராமா! தமிழ் நாட்டுக்குக் கோவில்களில் போயும் போயும் ஒரே திராவிடத் தெய்வத்துக்குத்தான் இடமளிக்கப்படுகிறது. அவர்தான் அனுமார்! - ஆனால் அந்த அநுமாரோ ஆரியத் தெய்வமான ராமரின் சேவகர்; அவருடைய அடிமை! இந்த மாதிரி அவமானம் தமிழ் நாட்டுக்கும் தமிழர்களுக்கும் வேறு உண்டா? இந்த அவமானத்தைத் துடைக்கும் வழிதான் என்ன? நமது கோவில்களிலிருந்து இந்த வடநாட்டு ஆரியத் தெய்வங்கள் அவ்வளவு பேரையும் அப்புறப்படுத்தி விட வேண்டும். பரமசிவனையும் பார்வதியையும், மகா விஷ்ணுவையும், பூதேவி ஸ்ரீ தேவிகளையும், ராமனையும், கிருஷ்ணனையும், நடராஜாவையும், தக்ஷிணா மூர்த்தியையும் கழுத்தைப் பிடித்துத் தள்ளி விட்டு, அவர்கள் இருந்த இடத்தில் தூய தமிழ்த் தெய்வங்களாகிய வீரன் இருளன், சங்கிலிக் கறுப்பன், பெத்தண்ணன், பாவாடை ராயன், வழி மறிச்சான் ஆகியவர்களைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இது தான் வழி. இதைச் செய்யாத வரையில், தமிழர்களின் அவமானம் தீர்ந்ததாகாது. ஆனால், தமிழர்கள் இந்தக் காரியத்தைச் செய்வதற்கு இலேசில் முன் வருவார்களா? வர மாட்டார்களே? மானமற்ற மக்களாயிற்றே இவர்கள்? இவர்களுக்கு மானத்தை ஊட்டித் துள்ளி எழச் செய்வதற்கு வழி என்ன? ஆ! இதோ கண்டு பிடித்தாயிற்று! காந்தி தான் காட்டியிருக்கிறாரே! உண்ணா விரதம் இருப்பதுதான் வழி. அப்போதுதான் இந்த மானமற்ற தமிழர்களுக்குக் கொஞ்சமாவது சூடு சுரணை வரும்! இந்த எண்ணம் தோன்றியதுதான் தாமதம்; ஒரு மின்னல் மின்னும் நேரத்தில் ஹிட்லர் குருசாமி ஒரு முடிவுக்கு வந்தார். “இதோ உண்ணாவிரதம் ஆரம்பித்து விட்டேன். தமிழ் நாட்டிலுள்ள கோவில்களிலிருந்து ஆரியத் தெய்வங்கள் அத்தனையும் துரத்தப்படவேண்டும். அவை என்னிடம் வந்து இத்தனை நாளும் தமிழ் நாட்டுக் கோவில்களில் குடியிருந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போக வேண்டும். அதற்குப் பிறகுதான் நான் உண்ணா விரதத்தை நிறுத்துவேன். இல்லாவிடில் உயிர் போகும் வரையில் சாப்பிட மாட்டேன். அதற்கு பிறகு உசிதம் போல் செய்வேன். இது நிச்சயம்! இது சத்தியம்! வீரன், இருளன், காட்டேரி ஆணையாக இது முக்காலும் சத்தியம்!” என்று அவர் ஓர் அறிக்கை விடுத்தார். அவ்வளவுதான், உடனே ஓடி வந்தார்கள். நாலா பக்கத்திலிருந்தும், நாலைந்து வீரத்தியாகிகள், “ஹிட்லர் குருசாமிக்கு ஜே!” என்றார்கள். அவரைச் சென்னைப் பட்டணத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு மச்சு வீடு பிடித்து அதில் கொண்டு போய் வைத்தார்கள். இந்த நெருக்கடியான நிலைமையில், ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதம் சரிவர நடந்தேறுவதற்காகச் செய்ய வேண்டிய முயற்சிகளைப் பற்றித் தீவிரமாக ஆலோசித்தார்கள். கடைசியில், ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தார்கள். அதாவது, “ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரத நிதி!” என்று ஒரு நிதி திரட்டத் தீர்மானித்தார்கள். ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதச் செய்தி தமிழ் நாடெங்கும் விஷப் புகையின் வேகத்தில் பரவியது. அந்தச் செய்தியானது ஏற்கெனவே விழித்திருந்தவர்களுக்கு இன்னும் அதிக முழிப்பை உண்டாக்கிற்று; தூங்கினவர்களையோ முதுகில் தட்டி இன்னும் நன்றாய்த் தூங்கப் பண்ணியது; முக்கியமாக அந்த வருஷம் நடக்க இருந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்தவர்களிடையில், அச்செய்தி மிகவும் பரபரப்பை உண்டாக்கியது. இந்தப் பரபரப்பை நேயர்கள் உள்ளபடி அறிந்து கொள்வதற்கு, அப்போது தமிழ் நாட்டின் அரசியல் நிலைமையைப் பற்றி அவர்களுக்குக் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். இன்னும் காங்கிரஸ் மந்திரிகள்தான் ஆட்சி புரிந்து கொண்டிருந்தனர். ஆனால் மாகாண சுயாட்சி ஏற்பட்டு நாலு வருஷம் ஆகிவிட்டபடியால் சீக்கிரத்தில் பொதுத் தேர்தல் நடக்க இருந்தது. காங்கிரஸுக்கு விரோதிகள் எல்லாரும், காங்கிரஸுடன் போட்டி போடலாமா, வேண்டாமா, போட்டியிட்டால் என்ன சாக்கை வைத்துக் கொண்டு போட்டியிடுவது என்று யோசனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, இந்த உண்ணாவிரதத்தின் செய்தி பரவவே, பரபரப்புக்குக் கேட்கவா வேண்டும்? உடனே அவரவர்களும், “ஹிட்லர் குருசாமி உண்ணாவிரத நிதி”க்குப் பணம் வசூலிக்கத் தொடங்கினார்கள். மேற்படி உண்ணா விரதத்துக்குக் காங்கிரஸ் சர்க்காரால் ஏதும் பங்கம் விளையாமல் பார்த்துக் கொள்ளும் பொருட்டு ஆங்காங்கே தொண்டர்படை சேர்த்தும் சென்னைக்கு அனுப்பினார்கள். உண்ணாவிரதம் ஆரம்பித்து ஒரு வாரம் இருக்கும். ஒரு நாள் காங்கிரஸ் எதிர்ப்புப் பத்திரிகையில் பின்வரும் வீராவேசத் தலையங்கம் வெளியாயிற்று: "ஒரு தமிழ் மகன் பட்டினி கிடக்கிறார்! ஏழு நாளாக அன்ன ஆகாரமின்றிக் கிடக்கிறார்! எனினும், அவருடைய மன உறுதி குன்றவில்லை! அவருடைய தேக நிறை குறையவில்லை அவருடைய உள்ளம் தளரவில்லை! அவருடைய உடம்பு மெலியவில்லை! ஆனால் இந்தக் கல்மனக் காங்கிரஸ் மந்திரிகள் சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு காந்தியோ, ஒரு ஜவஹர்லாலோ, ஒரு சுபாஷ்போஸோ பட்டினி கிடந்தால், இந்தப் பாவிகள் பார்த்துக் கொண்டிருப்பார்களா? ஆம்; அவர்கள் எல்லாம் வட நாட்டு ஆரியர்கள் - ஆகையால் விழுந்தடித்து ஓடுவார்கள். ஆனால் நமது ஹிட்லர் குருசாமி கேவலம் ஒரு தமிழ் மகன் தானே? அவன் பட்டினி கிடக்கட்டும்; பட்டினி கிடந்து சாகட்டும் அல்லது சாகாமலிருக்கட்டும் என்று சும்மா இருக்கிறார்கள். தமிழர்களே! மானமில்லாத தமிழர்களே! மதியில்லாத தமிழர்களே! இந்த அநியாயத்தை, அக்கிரமத்தை, அநீதியை, ஆரியக் கொடுமையை எத்தனை நாள் சகித்துக் கொண்டிருப்பீர்கள்!" மேற்கூறிய பத்திரிகை அலறல் பயன்படாமற் போகவில்லை. மறுநாள் முதல், மந்திரிகளின் வீட்டு வாசலில் நாலு பேர் அல்லது மூன்று பேர் அல்லது இரண்டொருவர் பெருங் கூட்டமாக வந்து நின்று கூச்சலிடத் தொடங்கினார்கள். “ஹிட்லர் குருசாமி அடியோடு வாழ்க!” “ஆரியத் தெய்வங்கள் நீடூழி ஒழிக!” என்ற இவ்விதமான கோஷங்கள் வானத்தைப் பிளந்து கொண்டு சென்று அண்டை அயல் வீடுகளில் கூடக் கேட்கத் தொடங்கின. ஆனால், ஆலயங்களிலுள்ள தெய்வங்கள் மட்டும் கொஞ்சமும் அசைந்து கொடுப்பதாயில்லை; காங்கிரஸ் மந்திரிகளும் காது கொடுப்பதாயில்லை. ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதம் ஆரம்பமானதிலிருந்து, அதைப் பற்றிய செய்திகளைத் தினந்தோறும் வெகு ஆவலுடன் ஸுசீலா கவனித்து வந்தாள். குருசாமியின் பேரில் அவளுக்கு ஏற்பட்ட நன்மதிப்புக்கு ஒரு அளவேயில்லை. “சாப்பாட்டைத் துச்சமாகக் கருதும் ஒரு மனுஷனாவது உலகில் இருக்கிறானல்லவா? வயிற்றைக் கட்டிக் கொண்டு அழாதா இவனல்லவோ வீர புருஷன்? ஆஹா! அவன் தான் எப்படியிருப்பானோ? என்னமாய்ப் பேசுவானோ?” என்று எண்ணாததெல்லாம் எண்ணி, எட்டாத கோட்டையெல்லாம் கட்டினாள். ஒரு வாரம் ஆயிற்று. பத்து நாள், பதினைந்து நாள், இருபது நாளும் ஆயிற்று. அதற்கு மேல் ஸுசீலாவுக்குத் திருநெல்வேலியில் இருப்புக் கொள்ளவில்லை. அந்த வீர புருஷனை, இலட்சிய புருஷனை, இருபது நாள் சமையலையும் சாப்பாட்டையும் மறந்திருக்க கூடிய மகாதீரனை, உடனே சென்று நேரில் பார்க்காவிடில் தன் ஆவி ஒரு கணமும் தரிக்காது என்று தீர்மானித்தாள். தகப்பனாரிடம் சொல்லவே, இந்த மாதிரி முன்னேற்றமான இயக்கங்களில் அதி தீவிர அநுதாபங் கொண்டவரான கோமதியப்பர் உடனே தயங்காமல் விடை கொடுத்தார். ஸுசீலா சென்னைக்கு ரயில் ஏறினாள். ஆனால் அந்தோ! அந்த ரயிலுக்கு வழியில் ஆபத்து ஒன்றும் நேரிடவில்லையென்பதை ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறோம். நிற்க. ஸுசீலா எம்.ஏ. சென்னைக்குப் பிரயாணமான சமாசாரம் அவள் வருவதற்கு முன்பே சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டது. ஹிட்லர் குருசாமி தங்கியிருந்து வீட்டில் இந்தச் செய்தியானது மிகவும் கலக்கத்தை விளைவித்தது. குருசாமி தானே ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று ஸுசீலாவை வரவேற்பேன் என்றதால் மேற்படி கலக்கம் நேர்ந்தது. மற்றவர்கள் அவனை ரொம்பவும் கேட்டுக் கொண்டு அப்படிச் செய்யாமல் தடுத்தார்கள். தாங்கள் போய் அவளைத் தக்கபடி வரவேற்று அழைத்து வருவதாகச் சொன்னார்கள். அப்படியே சென்று அழைத்து வந்தார்கள். ஸுசீலா அந்த வீட்டுக்குள் காலை வைத்ததும், அவள் கேட்ட முதல் கேள்வி என்னவென்று நினைக்கிறீர்கள்? அவளுடைய இருதய அந்தரங்கத்திலிருந்து, “அவர் எங்கே?” என்னும் வார்த்தைகள் மகத்தான தாபத்துடன் வெளிவந்தன. “மாடியில் இருக்கிறார்” என்றதும் அவளுடைய கால்கள் மெத்தைப் படிகளின் வழியாக அவளை மாடியில் கொண்டு போய்ச் சேர்த்தன! ஆஹா! அங்கே ஸுசீலா தன் ஆயுளிலேயே முதன் முதலாக ஹிட்லர் குருசாமியைப் பார்த்தாள்; குருசாமியும் ஸுசீலாவைப் பார்த்தான். வலது கண் வலது கண்ணுடனும் இடது கண் இடது கண்ணுடனும் இரு கண்கள் இரு கண்களுடனும் ஏக காலத்தில் சந்தித்தன. ஆஹா! அந்தச் சந்திப்பின் பெருமையை என்னால் வர்ணிக்க முடியுமா? அதை வர்ணிப்பதற்கு ஒரு கம்பனோ ஒரு காளிதாஸனோ அல்லது ஒன்றரைக் கம்பனோ ஒன்றரைக் காளிதாஸனோ தான் வல்லவர்களேயன்றி என் போன்றோர்களால் அது நினைக்கவும் முடியாத காரியமல்லவா? ஸுசீலா வந்து சேர்ந்த செய்தி அறிந்ததும், சென்னை ‘வீரத் தமிழ்’ மகளிர் சங்கத்தைச் சேர்ந்த பெண்மணிகள் நாலைந்து பேர் வந்து சேர்ந்தார்கள். அன்று முதல், இவர்களே ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதத்தை நடத்தி வைக்கத் தொடங்கினார்கள். இரண்டொரு நாளைக்கு முன் ஒரு பொல்லாத தமிழ்ப் பத்திரிகையில், “ஹிட்லர் குருசாமி உண்ணாவிரதம் ஆரம்பித்து இருபது நாளாகிறது. அவர் இதே முறையில் இன்னும் எண்பது நாள் உண்ணாவிரதம் நடத்தத் தீர்மானித்திருப்பதாக அறிகிறோம். இந்த நூறு நாள் உண்ணாவிரதத்தில் தமது தேக நிலையில் ஒரு அணுவளவு கூடக் குறைவதில்லையென்றும் அவர் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்!” என்பதாக ஒரு கேலிக் குறிப்பு வெளியாகியிருந்தது. ரயில் பிரயாணம் செய்யும் போது ஸுசீலா இதைப் பார்த்தாள். அப்போது அவளுடைய மனதிலும் சிறிது ஐயம் தோன்றியது. இப்போது ஹிட்லர் குருசாமியைப் பார்த்த பிறகு அந்த சந்தேகம் எவ்வளவு அநியாயமானது என்பதை உணர்ந்தாள். ஆகா! சூதுவாதற்ற இத்தகைய சாது முகத்தையுடையவர், இப்படி அசட்டு முழி முழிக்கும் கண்களையுடையவர் - எங்கேயாவது ஏமாற்றும் வேலையில் இறங்குவாரா? ஒரு நாளும் இல்லை. எனினும், சந்தேகப் பிராணிகளுடைய சந்தேகங்களையெல்லாம் தீர்க்கும் பொருட்டு ஸுசீலா ஒரு ஏற்பாடு செய்தாள். அன்று முதல், தினந்தோறும் ஹிட்லர் குருசாமியின் எடையை நிறுத்து அவர் வசிக்கும் வீட்டு வாசலில் போர்டில் எழுதப் போவதாக அறிவித்தாள். ஸுசீலா வந்தது முதல், ஹிட்லர் குருசாமி இருந்து வீடு ஜே ஜே என்று ஆயிற்று. அந்த அதிசயமான உண்ணாவிரத வீரனைப் பார்ப்பதற்கும், வீரத் தமிழ் மங்கை ஸுசீலாவைப் பார்ப்பதற்குமாக ஜனங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். அந்த வீட்டில் நிரந்தரமாக வசிப்பவர்கள் முப்பது, நாற்பது பேர் ஆகி விட்டார்கள். ‘உண்ணாவிரத நிதி வசூல் கமிட்டி’யைச் சேர்ந்தவர்கள், மந்திரிகள் வீட்டு மறியல் தொண்டர்கள், வெளியூர்களிலிருந்து ஹிட்லர் குருசாமிக்குத் தொண்டு செய்ய வந்தவர்கள், ’வீரத் தமிழ் மகளிர்’, இவ்வாறு நாளடைவில் கூட்டம் பெருகிற்று. இவர்களுக்கெல்லாம் கீழே தினம் மூன்று வேளை சமையல், சாப்பாடு எல்லாம் ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. ஆனால், அந்தோ! மேலே ஹிட்லர் குருசாமி, சமையல் வாசனையை மட்டும் முகர்ந்து கொண்டு கிடந்தான். ஸுசீலா வந்தது முதல் அவனுடைய தேகத்தின் நிறையும் மளமளவென்று குறைந்து வந்தது. தோற்றத்திலும் நாளுக்கு நாள் மெலியத் தொடங்கினான். முதலில் இரண்டு மூன்று நாட்கள் குருசாமிக்கு இது கஷ்டமாகவே இல்லை. உண்மையில் அவனுக்குப் பசியே தோன்றவில்லை. இடைவிடாமல் ஸுசீலாவின் ஞாபகமாகவே இருந்தான். ஆஹா! இத்தகைய ஒரு பெண்மணியின் நன்மதிப்பைப் பெற்றோமே! இந்த பாக்கியத்துக்காக உண்ணாவிரதம் மட்டுந்தானா இருக்கலாம்? ஒன்றும் சாப்பிடாமலே கூட இருக்கலாமே? - என்று இவ்விதம் எண்ணமிட்டான். முதல் சந்திப்பில், அவளிடம் அவனுக்கு ஏற்பட்ட வியப்பு - இவள் தானா எம்.ஏ. ஸுசீலா என்ற ஆச்சரியம் - அந்த இரண்டு மூன்று நாள் நெருங்கிய பழக்கத்தில் பரிபூர்ணமான காதலாகவே மாறிவிட்டது. ஆஹா! இத்தகைய பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வதல்லலவா வாழ்வு? மற்றதெல்லாம் வாழ்வு ஆகுமா? தகப்பனார் பெரிய வக்கீல் ; சொத்தோ ஏராளம்; இவளோ எம்.ஏ. படித்தவள்; ஓ! இவளுடன் நடத்தும் இல்வாழ்க்கைதான் எவ்வளவு இன்பகரமாயிருக்கும்? இந்த நினைவுகளுக்கிடையில் இன்னொரு பயங்கரமான எண்ணம் வந்து குறுக்கிடும். சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்? முதலில் தான் உயிரோடிருக்க வேண்டுமே? அப்போதுதானே காதல், கல்யாணம், இல்வாழ்க்கை, இவற்றினாலெல்லாம் பிரயோஜனம் உண்டு? நாளாக ஆக அவனுக்கு இந்த நினைவே அதிகமாக வந்து கொண்டிருந்தது. நாலைந்து நாள் பட்டினிக்குப் பிறகு அவனுக்கு மாரை அடைக்கத் தொடங்கிய போது, உடம்பை என்னமோ செய்த போது, அவன் ஒரு முக்கியமான தீர்மானத்துக்கு வந்தான். அதாவது ஸுசீலாவுக்காக, அவளுடைய காதலுக்காக, தான் உயிர் வாழத்தான் வேண்டும் என்று முடிவு செய்தான். அதற்குரிய வழிகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான். திடீரென்று அவளுக்கு ஏமாற்றமளித்து, அவளுடைய காதல் முறிந்து போகும்படியும் செய்யக் கூடாதல்லவா? இதற்கிடையில், சென்னை நகரெல்லாம் அமளி துமளியாயிருந்தது. தினந்தோறும் ஏழெட்டுப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்கள் நடந்தன. அவற்றில் கூடியிருந்தவர்களில் ஒருவர் விடாமல் அத்தனை பேரும் ஆச்சரியமான நீள அகலங்கள் வாய்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். “பார்க்கப் போனால், இந்தக் கோவில்களிலுள்ள தெய்வங்கள் வெறுங் கல்லே அல்லவா? கல்லுக்கு உயிர் உண்டா? உயிரில்லாத கல்லுக்காக வேண்டி உயிருள்ள மனுஷன் உயிரை விட வேண்டுமா? இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சர்க்காரின் அநியாயத்தை என்னவென்று சொல்வது?” என்று பிரசங்கிகள் கர்ஜித்தார்கள். ஸுசீலா சென்னைக்கு வந்து சேர்ந்த ஐந்தாம் நாள் மாலை, கடற்கரையில் ஒரு பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மாகாணம் முழுவதிலிருந்தும் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அப்படிப்பட்ட கூட்டத்திற்குத் தமிழ்த்தாய் ஸுசீலாவும் வந்து பேசுவது அவசியம் என்று கருதப்பட்டது. அதிகமான வற்புறுத்தலின் பேரில், ஸுசீலா கிளம்பினாள். அவ்வளவு முக்கியமான கூட்டத்திற்குப் போகாமலிருக்கக் கூடாதென்று உண்ணாவிரத விடுதியிலிருந்து ஒவ்வொருவராக எல்லோருமே கிளம்பிச் சென்றார்கள். ஆரம்பத்திலேயே ஸுசீலாவைப் பேசச் சொன்னார்கள். ஸுசீலா பேசினாள். பொதுக் கூட்டத்திலே அவள் பேசுவது இதுதான் முதல் தடவையானாலும் அற்புதமாய்ப் பேசினாள். மனம் உருகப் பேசினாள். கடைசியில், “இங்கே நாம் பொதுக் கூட்டம் போட்டுக் கொண்டும் பேசிக்கொண்டும் கரகோசம் செய்து கொண்டுமிருக்கிறோம். இந்த நேரத்தில் அங்கே அந்த வீர புருஷரின் - உயிர்…” இந்த இடத்தில் ஸுசீலாவின் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்ணில் ஜலம் பெருகிற்று. மேலே பேச முடியாமல் உட்கார்ந்து விட்டாள். இந்தக் காட்சி, கூட்டத்தில் ஒரு மகத்தான கிளர்ச்சியை உண்டாக்கிற்று. ஆண் பிள்ளைகள் “அந்தோ! அந்தோ!” என்றார்கள். வீரத் தமிழ் மகளிர் விம்மி அழத் தொடங்கினார்கள். ஸுசீலாவுக்கு அப்போது மனதில் உண்மையாகவே ஒரு கலக்கம் உண்டாகியிருந்தது. தான் அங்கு உட்கார்ந்திருக்கையில், ஹிட்லர் குருசாமிக்கு ஏதோ பெரிய ஆபத்து நேர்ந்து கொண்டிருப்பதாக அவளுடைய உணர்வு சொல்லிற்று. உடனே போய் அவனைப் பார்க்க அவள் இருதயம் துடிதுடித்தது. அருகிலிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு அவள் மேடையிலிருந்து பின்புறமாக இறங்கிச் சென்றாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் கழுகுக் கண் படைத்த பத்திரிகை நிருபர்கள். ‘ஏதோ ஹிட்லர் குருசாமியைப் பற்றிச் செய்தி வந்துதான் இவள் இப்படிக் கூட்டத்தின் நடுவில் எழுந்து போகிறாள்’ என்று அவர்கள் நினைத்தார்கள். ஆகவே, அவர்களும் ஒவ்வொருவராக நழுவிச் சென்றார்கள். ஸுசீலா இருதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, விடுதியின் வாசலில் போய் இறங்கினாள். கதவைச் சப்தமிடாமல் திறந்து கொண்டு மாடி மீது ஏறிச் சென்றாள். அங்கே ஹிட்லர் குருசாமியைக் காணாததும், அவளுக்கு உயிரே போய்விட்டது போலிருந்தது. கீழே இறங்கி வந்தாள். வீட்டில் சமையற்காரன் ஒருவன் தான் இருந்தான். அவனைக் கேட்கலாமென்று சமையலறையின் கதவைத் திறந்தாள். அந்தோ! அங்கே அவள் கண்ட காட்சியை என்னவென்று சொல்வது? எப்படிச் சொல்வது? சுருங்கச் சொன்னால் தலையில் விழ வேண்டிய இடி தவறிக் கீழே விழுந்தால் எப்படித் திகைப்பாளோ, அப்படித் திகைத்துப் போனாள் ஸுசீலா! எதிரில் இலையைப் போட்டுக் கொண்டு, அதில் சாம்பார் சாதத்தைத் துளாவிப் பிசைந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தான், ஹிட்லர் குருசாமி. அவனுடைய ஆயுள் பலம் கெட்டியாயிருந்த படியால்தான் அந்தச் சமயம் ஸுசீலா வந்தாள் என்று சொல்ல வேண்டும். இல்லாவிடில், ஐந்து நாள் பட்டினிக்குப் பிறகு அப்படி ஒரேயடியாகக் குழம்புச் சாதத்தைத் தீட்டியிருந்தால், அவன் கதி என்ன ஆகியிருக்குமென்று சொல்ல வேண்டுமா? ஸுசீலாவைக் கண்டதும், ஹிட்லர் குருசாமி ஒரு நிமிஷ நேரம் அசட்டு முழி முழித்தான். அப்புறம் துள்ளி எழுந்து வந்து, ஸுசீலாவின் முன்னால் மண்டியிட்டுக் கை குவித்தான். “ஸுசீலா! ஸுசீலா! என்னை மன்னி! உன்னுடைய காதலுக்காகத்தான் நான் இந்த காரியம் செய்தேன்…” என்றான். அப்போது, குருசாமி ஒரு கணம் நிமிர்ந்து ஸுசீலாவின் முகத்தைப் பார்த்தான். பிறகு, அந்த முகத்தை அவன் தன் வாழ்நாளில் எப்போதும் பார்க்கவேயில்லை! அடுத்த நிமிஷத்தில், அந்தோ! அந்தச் சமையலறைக்குள் திமுதிமுவென்று ஐந்தாறு பத்திரிகை நிருபர்கள் வந்து நுழைந்தார்கள். ஸுசீலா இன்னும் இரண்டு நாள் சென்னையில் இருந்தாள். இத்தனை நாளும் ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதத்தை நடத்தி வைத்தவர்கள் ஸுசீலாவைச் சூழ்ந்து கொண்டு, இனிமேல் இயக்கத்தை அவளே தலைமை வகித்து நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். “ஹிட்லர் குருசாமி காங்கிரஸின் ஒற்றன்” என்று அவர்கள் ஆணையிட்டார்கள். இதைத் தாங்கள் முன்பே சந்தேகித்ததாகவும், ஆனால் அன்றிரவு, உண்ணாவிரத நிதிக்கு அதுவரை வசூலாகியிருந்த ரூ. 350யும் அமுக்கிக் கொண்டு அவன் ஓடிப்போனதிலிருந்துதான் அது நிச்சயமாயிற்று என்றும் சொன்னார்கள். இனிமேல் ஸுசீலாதான் தங்களுடைய தலைவி என்றும், அவள் மட்டும் உண்ணாவிரதம் ஆரம்பித்தால் தாங்கள் முன்போலவே கூட இருந்து நடத்தி வைப்பதாகவும் உறுதி கூறினார்கள். ஆனால், ஸுசீலாவுக்கு இதனாலெல்லாம் போன உற்சாகம் திரும்பி வரவில்லை. அன்றிரவு வெளியான பத்திரிகையைப் பார்த்த பிறகு, அவளுக்கு நிராசையே உண்டாகி விட்டது. பத்திரிகையில் இரண்டு விஷயங்கள் வெளியாகியிருந்தன. ஒன்று, ஹிட்லர் குருசாமி வெளியிட்டிருந்த அறிக்கை. அது வருமாறு:- "நான் உண்ணாவிரதத்தை நிறுத்தியது குறித்து பலர் பலவிதமான சந்தேகங்கள் கொள்ளாமலிருப்பதாகத் தெரிவதால், இந்த அறிக்கையை வெளியிடுவது என் கடமையாகிறது. நான் உண்ணாவிரதத்தைக் கை விட்டது, தமிழ் நாட்டின் மேன்மையைக் காப்பதற்காகவே தவிர வேறில்லை. அதாவது, நமது அருமைத் தமிழ் மூதாட்டியாகிய ஔவையாரின் அருள்மொழியை மெய்யாக்குவதற்குத்தான் அவ்வாறு செய்தேன். ஔவை என்ன சொல்லியிருக்கிறாள்? "மானங் குலங்கல்வி, வண்மை அறிவுடைமை, தானந்தவ முயற்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேற் காமுறு தல்பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்" என்று சொல்லியிருக்கிறாரல்லவா? அப்படியிருக்க, தீவிரமான பசி எடுத்த பிறகும் நான் அந்தப் பத்தையும் பறந்து போகச் செய்யாமலிருந்தால், ஔவை வாக்கல்லவா பொய்த்து விடும்? நிற்க. என்னுடைய உண்ணாவிரதத்தின் போது எனக்குத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் மர்மங்களைப் பற்றியும் ஸ்திரீகளின் ஆழங் காண முடியாத உள்ளத்தின் இயல்பைப் பற்றியும் அநேக விஷயங்கள் தெரிய வந்தன. அவையெல்லாம் தமிழ் மக்களைத் திகைத்து, திடுக்கிட்டு, திக்கு முக்காடச் செய்பவையாயிருக்கும். சமயம் வரும் போது அவற்றை யெல்லாம் தைரியமாக வெளிப்படுத்த நான் கொஞ்சமும் பின் வாங்க மாட்டேன்." ஸுசீலா இதைப் படித்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டாள். ஹிட்லர் குருசாமியின் மேல் அவளுக்கு முதலில் வந்த கோபம் மாறி அநுதாபம் உண்டாயிற்று. பாவம், கள்ளங்கபடில்லாத சாது. தற்சமயம் தன்னைச் சூழ்ந்திருக்கிறவர்களை விட அவன் எவ்வளவோ மேலல்லவா? அவளுடைய கவனத்தைக் கவர்ந்த இன்னொரு விஷயம் பின்வரும் பெரிய தலைப்புகளின் கீழ்க் காணப்பட்டது. “இந்தியாவின் பயங்கரமான ஜன அபிவிருத்தி” “உணவுப் பஞ்சத்தைத் தடுக்க வழி என்ன?” இந்தத் தலைப்புகளின் கீழே, சீமையிலிருந்து சமீபத்தில் திரும்பி வந்த ஸ்ரீ பாலசுந்தரம் பி.ஏ., எம்.இ.ஓ.பி.எச். சின் படமும், அவரைப் பத்திரிகை நிருபர் பேட்டி கண்ட விவரமும் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதில், ஸ்ரீ பாலசுந்தரம் எல்லாருக்கும் தெரிந்த சில ஆச்சரியமான விஷயங்களை எடுத்துக் காட்டியிருந்தார். 1930-ல் இந்தியாவின் ஜனத்தொகை 35 கோடி. 1940-ம் வருஷ ஜனக் கணிதியின்படி 39 1/2 கோடு, பத்து வருஷத்தில் 4 1/2 கோடி அதாவது 100-க்கு 12 1/2 வீதம் ஜனத்தொகை பெருகியிருக்கிறது. ஆனால், உணவு உற்பத்தியோ 100-க்கு 2 1/2 வீதம் தான் அதிகமாயிருக்கிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் கூடிய சீக்கிரம் தேசத்தில் பயங்கரமான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுத்தானே தீர வேண்டும்? ஆகையால், தேசத்தில் உள்ள அறிவாளிகள் எல்லாரும் உடனே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினாலன்றி, அப்புறம் நிலைமை சமாளிக்க முடியாமல் போய்விடும். இது சரிதான்; ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடி ஏற்படாமல் தடுப்பதற்கு ஸ்ரீ பாலசுந்தரத்தின் யோசனைகள் தான் என்ன? அவர் இரண்டு யோசனைகள் கூறியிருந்தார். ஒன்று, உணவுப் பொருள் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சி. இதற்காக, மேனாட்டார் கைக்கொள்ளும் நவீன விவசாய முறைகளை நாமும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, நமது நாட்டில் உள்ள மலை அருவிகளிலிருந்தெல்லாம் மின்சார சக்தி உண்டு பண்ணவும், அந்த மின்சார சக்தியைப் புதுமுறை விவசாயத்துக்குப் பயன்படுத்தவும் முயல வேண்டும். தாம் உடனே இந்த முயற்சியில் இறங்கப் போவதாகத் தெரிவித்து விட்டு அவர் மேலும் கூறியதாவது:- “ஆனால், இது மட்டும் போதாது. எவ்வளவுதான் இந்த வழியில் முயற்சி செய்தாலும், நாற்பது கோடி ஜனங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் தயாரிப்பதற்கே இன்னும் பத்து வருஷம் செல்லும். இதற்கிடையில் ஜனத் தொகை பெருகிக் கொண்டே போனால்…? ஆகவே, இந்தியாவில் குறைந்தது ஒரு கோடிப் பேர் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருப்பது என்ற விரதத்தைக் கைக் கொள்வது அவசியம். நான் அத்தகைய விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதற்காக ஒரு அகில் இந்திய சங்கம் ஸ்தாபிக்கலாமென்றும் எண்ணியிருக்கிறேன். ஆனால் சில சந்தர்ப்பங்களில், அதாவது…” ஸுசீலா அவ்வளவுதான் படித்தாள். அளவிலாத அருவருப்புடன் பத்திரிகையைக் கீழே போட்டாள். இதற்கு முன்னால், இவ்வுலகம் வரண்ட பாலைவனமாக அவளுக்குத் தோன்றிற்று என்றால், இப்போது புயற் காற்றினால் அலைப்புண்டு கொந்தளிக்கும் கடலைப் போல் காணப்பட்டது. இந்த தொல்லைகளையெல்லாம் மறந்து, எங்கேயாவது சில காலம், அமைதியாக இருந்து விட்டு வரவேணும். மனுஷ்ய சஞ்சாரமே இல்லாத இடமாக இருந்தால் ரொம்ப நல்லது. அத்தகைய இடம் எங்கே இருக்கிறது? ஏன்? வேறு எங்கே போய்த் தேட? குற்றாலம் ஒன்றுதான் அத்தகைய இடம்! ஆம்; குற்றாலத்துக்குப் போவதுதான் சரி. அங்கே பங்களா இருக்கிறது. பக்கத்தில் தோட்டக்காரன் குடித்தனமாயிருக்கிறான். அங்கே நேரே போய்விட வேண்டியது. அங்கிருந்து தகப்பனாருக்குக் கடிதம் எழுதி விட்டால் போகிறது. ஸுசீலா குற்றாலத்துக்குப் போவது என்று தீர்மானித்த போது இரவு எட்டரை மணி. அதற்குள் எக்ஸ்பிரஸ் வண்டி போய்விட்டது. ஆனால் மறுநாள் வரையில் காத்திருக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை. ஆதலின் பாஸஞ்சர் வண்டியிலேயே பிரயாணம் ஆனாள். இந்த வண்டி சாவகாசமாக அசைந்து ஆடிக் கொண்டு தென்காசிக்குப் போய்ச் சேர்ந்த போது மாலை ஆறு மணியிருக்கும். உடனே, வண்டி வைத்துக் கொண்டு குற்றாலத்துக்குப் புறப்பட்டாள். குற்றாலத்தில் ’கோமதி பங்களா’வின் வாசலில் போய் வண்டி நின்றது. ஸுசீலா இறங்கினாள். பங்களாவுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டதும் பெரிய ஆச்சரியமாகப் போயிற்று. பங்களாவில் யார் இருக்கக் கூடும்? இதற்குள் வாசலில் வண்டி வந்து நின்றதைக் கண்டு, தோட்டக்காரன் ஓடி வந்தான். ஸுசீலாவைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்றான். அப்புறம், “இது என்ன, அம்மா, இது? எங்கிருந்து வரீக? தனியாகவா வந்தீக? ஐயா பின்னாலே வராகளா?” என்றான். “ஐயா வரவில்லை. நான் மட்டுந்தான் வந்தேன். வீட்டிலே யாரு, மாடசாமி!” என்று கேட்டாள். “தெரியாதுங்களா? நம்ம நெறிஞ்சிக்காடு ஐயாதான்.” ஸுசீலாவுக்குத் தலை சுழன்றது. இந்த மாதிரி நேரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. பாலசுந்தரத்தின் மேல் ஏற்கெனவே வெறுப்பு. அதிலும், தான் இப்படி அவமானப்பட்டு வந்திருக்கும் நிலைமையிலா அவரைப் பார்ப்பது? ஆனாலும் இப்போது திரும்பிப் போவது இயலாத காரியம். “நான் வந்திருக்கேன், வீட்டை ஒழித்துக் கொடுத்தால் தேவலை என்று போய்ச் சொல்லு.” தோட்டக்காரன் தயக்கத்துடன் போனான். சற்று நேரம் கழித்துத் திரும்பினான். “இராத்திரியிலே இத்தனை நேரத்துக்கப்புறம் எங்கே போறது என்று கேக்கறாக. மெத்தை அறை காலியாய்த்தான் இருக்கு. அதிலே உங்களை இருந்துக்கும்படி சொல்றாக” என்றான். ஸுசீலாவுக்கு இது சிறிது திருப்தியையளித்தது. மாடசாமியைச் சாமான்களை எடுத்து வரச் சொல்லிவிட்டு, நேரே மெத்தை அறைக்குப் போனாள். சற்று நேரத்துக்கெல்லாம் சமையற்காரப் பையன் வந்தான். “சாப்பாடு கொண்டு வரட்டுமா, அம்மா?” என்று கேட்டான். “ஐயா கேக்கச் சொன்னாகளா?” “நான் தான் ஐயாவைக் கேட்டேன். ‘அந்த அம்மாகிட்ட போய்ச் சாப்பாடுன்னு சொன்னாச் சண்டைக்கு வருவாகடா. நீ. வேணாப் போய்க் கேட்டுப்பாரு’ என்றாக.” ஸுசீலாவுக்கு ஆத்திரமாய் வந்தது. “எனக்குச் சாப்பாடு வேண்டாம்” என்றாள். சமையற்காரன் போய்விட்டான். அப்போது ஸுசீலா, என்னதான் எம்.ஏ. படித்தவளாயிருந்தாலும், பெண்ணாய்ப் பிறந்தவள் பெண்தான் என்பதை நிரூபித்தாள். குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி அழுதாள். அன்றிரவு ஸுசீலா வெகு நேரங் கழித்துத்தான் தூங்கினாள். ஆதலின், காலையில் எழுந்திருப்பதற்கும் நேரமாயிற்று. ஏழு மணிக்கு மேல் எழுந்திருந்து கீழே வந்தபோது, தோட்டக்காரன் சமையல் பாத்திரங்களை எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்தான். சமையற்காரன் கையில் ஒரு பொட்டலத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தான். “என்ன இதெல்லாம்? ஐயா எங்கே?” என்று கேட்டாள். “ஐயா மலை மேல மரப் பாலத்துக்குப் போயிருக்காக. அவகளுக்குத் தோசை எடுத்துண்டு போறேன். ஜாகையை மாற்றிவிடச் சொல்லிட்டாக” என்றான். ஸுசீலாவின் கண்களில் நீர் துளித்தது. தோட்டக்காரனைப் பார்த்து, “நானும் மரப்பாலத்துக்குத்தான் போறேன். ஐயாவைப் பார்ப்பேன். நாங்க திரும்பி வரும் வரை ஐயா சாமான் இங்கேயே இருக்கட்டும்” என்றாள். குற்றாலம் மலையில் மரப் பாலத்துக்குச் சமீபத்தில், அருவி விழுந்து விழுந்து ஒரு சிறு சுனை ஏற்பட்டிருக்கிறது. அதன் நாலு பக்கத்திலும் வெள்ளை வெளேரென்ற சுத்தமான பாறைகள். அந்தப் பாறை ஒன்றின் மேல் பாலசுந்தரம் உட்கார்ந்திருந்தான். காலடிச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சமையற்காரனுடன் ஸுசீலாவைப் பார்த்ததும் அவன் சிறிதும் வியப்புக் காட்டவில்லை. “ஏது, இப்படி எதிர்பாராத சந்தோஷம்?” என்றான். “எதிர்பாராதது என்பது சரி; ஆனால் சந்தோஷமா என்பது தான் சந்தேகம்” என்றாள் ஸுசீலா. இதற்குப்பதிலாக பாலசுந்தரம் ஒரு புன்னகை புரிந்தான். “அது எப்படியாவது இருக்கட்டும். ஜாகை மாற்றச் சொன்னீர்களாமே? அது வேண்டியதில்லை. நான் இன்று சாயங்காலமே ஊருக்குப் போய் விடுவேன்” என்றாள். “ரொம்ப வந்தனம். ஜாகை மாற்றுவது எனக்கும் அசௌகரியந்தான்” என்றான் பாலசுந்தரம். உடனே, சமையற்காரனைச் சற்று எட்டி அழைத்துப் போய், அவனிடம் ஏதோ சொல்லி விட்டு வந்தான். “இதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு நாம் எத்தனை நாள் பொழுது போக்கியிருக்கிறோம்? அதெல்லாம் நினைத்தால் கனவு மாதிரி இருக்கிறது” என்றாள் ஸுசீலா. அப்புறம் இரண்டு பேரும் சற்று நேரம் பழைய ஞாபகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “இருக்கட்டும்; எனக்குப் பசிக்கிறது. தோசை எங்கே? சாப்பிடலாம்” என்றாள் ஸுசீலா. “ஐயையோ! இதென்ன கூத்து?” என்றான் பாலசுந்தரம். “என்ன? என்ன?” என்றாள் ஸுசீலா. “உனக்குப் பசிக்கிறது என்கிறாயே? தோசை கீசை என்றால் உனக்குக் கோபம் வரப்போகிறதென்று, பழனியைத் திருப்பி எடுத்துக் கொண்டு போய்விடச் சொன்னேனே?” என்றான். ஸுசீலா இடி இடியென்று சிரித்தாள். அந்த மாதிரி அவள் சிரித்து எத்தனையோ காலமாயிற்று. “சரி; இப்போது என்ன செய்யலாம்?” என்றாள். செய்வது என்ன? மத்தியானம் வரையில் காத்திருக்க வேண்டியதுதான். மத்தியானச் சாப்பாடு தேனருவிக்குக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறேன். அங்கே போய் விடலாம்" என்றான் பாலசுந்தரம். தேனருவிக்குப் புறப்பட்டார்கள். வழி நெடுகிலும் தங்களுடைய பழைய ஞாபகங்களைப் பற்றியே பேசிக் கொண்டு போனார்கள். வழியில் அநேக இடங்களில் பாறைகளில் ஏறியும், பள்ளங்களைத் தாண்டியும் போக வேண்டியதாயிருந்தது. அங்கெல்லாம், பாலசுந்தரம் ஸுசீலாவின் கையைப் பிடித்துத் தூக்கி விடுவது அவசியமாயிற்று. கடைசியில் பதினொரு மணிக்குத் தேனருவிக்கு வந்து சேர்ந்தார்கள். !!!!! இந்த ஆச்சரியக் குறிகளையே தேனருவியின் வர்ணனையாக நேயர்கள் பாவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தேனருவியின் சுனையில் இருவரும் ஸ்நானம் செய்தார்கள். துணிமணிகளை உலர்த்திக் கட்டிக் கொண்டார்கள். பிறகு, மேலே கவிந்த ஒரு பாறையின் நிழலில் உட்கார்ந்து, பழனியை எதிர்பார்க்கலானார்கள். பசி தெரியாமல் பொழுது போவதற்காக, பாலசுந்தரம் தன்னுடைய சீமை அனுபவங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். ஆனால் நடுநடுவே, ஸுசீலா, தன் மணிக்கட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டும், “இன்னும் பழனி வரவில்லையே?” என்று கேட்டுக் கொண்டும் இருந்தாள். கடைசியாக, ஒன்றரை மணிக்கு, பழனி தலையில் கூடையுடன் தூரத்தில் காணப்பட்டான். உடனே இருவரும் எழுந்து போய்ச் சுனையின் அருகில் உட்கார்ந்தார்கள். பாறையை ஜலத்தை விட்டு நன்றாய் அலம்பிச் சுத்தமாக்கி வைத்துக் கொண்டார்கள். ஆச்சு! இதோ பழனி கிட்ட வந்துவிட்டான். அங்கே ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்கு அவன் தாவிக் குதித்தாக வேண்டும். “அடே! ஜாக்கிரதை! கூடையைப் போட்டுக் கொண்டு விழாதே!” என்றான் பாலசுந்தரம். இப்படி அவன் சொல்லி வாயை மூடினானோ இல்லையோ, பழனியின் கால், தாவிக் குதித்த பாறையில் வழுக்கிற்று. ஒரு ஆட்டம் ஆடினான். கையை விரித்துச் சமாளிக்க முயன்றான். திடீரென்று விழுந்தான். விழுந்தவன் நல்ல வேளையாகக் கையை எட்டி இரண்டு பாறைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். ஆனால், கூடை! ஐயோ! கீழே பள்ளத்தில் தண்ணீரில் விழுந்து உருண்டு கொண்டிருந்தது. அதிலிருந்த உணவுப் பண்டங்களை மீன்கள் போஜனம் செய்து கொண்டிருந்தன. பாலசுந்தரம் ஓடி வந்து, பழனியைக் கையைக் கொடுத்துத் தூக்கி விட்டான். அவனும் ஸுசீலாவும், பாவம், பழனியைத் திட்டு திட்டு என்று திட்டினால், பசி நீங்குமா? என்ன செய்வதென்று யோசித்தார்கள். “காலையில் திருப்பிக் கொண்டு போன தோசை வீட்டில் இருக்கு. இதோ போய்க் கொண்டு வந்து விடுகிறேன்” என்றான் பழனி. “சரி! போ! மரப்பாலத்துக்கே கொண்டு போ. அதற்குள் நாங்களும் அங்கே வந்து விடுகிறோம்” என்றான் பாலசுந்தரம். மாலை ஐந்து மணி சுமாருக்கு மரப்பாலத்துக்கருகில் உட்கார்ந்து தோசை சாப்பிட்டு விட்டு, ஸுசீலாவும் பாலசுந்தரமும் கீழே போகக் கிளம்பினார்கள். “பசி என்றால் எப்படி இருக்கும் என்று இன்றைக்குத்தான் எனக்குத் தெரிந்தது” என்றாள் ஸுசீலா. “நமது நாட்டில் தினந்தோறும் இம்மாதிரி பசிக் கொடுமையை அனுபவிக்கிறவர்கள் கோடிக்கணக்கான பேர்” என்றான் பாலசுந்தரம். “நிஜமாகவா! ஐயோ! எப்படித்தான் பொறுக்கிறார்கள்? இத்தனை நாளும் எனக்கு யாராவது பிச்சைகாரன் ‘பசி எடுக்குது, அம்மா! பிச்சைபோடு, அம்மா! பிச்சைபோடு, அம்மா!’ என்றால் கோபம் கோபமாய் வரும்” என்றாள் ஸுசீலா. “இந்தியாவின் ஜனத்தொகை 40 கோடி. இதில் பாதிபேர் - 20 கோடிப் பேர் ஓயாமல் பசித்திருப்பவர்கள். கூடிய சீக்கிரத்தில், நமது தேசத்தில் உணவு உற்பத்தி அதிகமாக வேண்டும். இல்லாவிட்டால்…” ஸுசீலாவுக்கு, பத்திரிகையில் வாசித்ததெல்லாம் ஞாபகம் வந்தது. அவள் பெருமூச்சு விட்டாள். அப்போது பாலசுந்தரம் ஸுசீலாவைக் கையைப் பிடித்து நடத்திக் கொண்டிருந்தான். “இப்போது நாம் போவது போலவே, வாழ்க்கை முழுவதும் கைகோத்துக் கொண்டு போக முடியுமானால்…” என்றான். ஸுசீலா வெடுக்கென்று கையைப் பிடுங்கிக் கொண்டாள். “நீங்கள்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளாத விரதம் எடுத்தவர்களாயிற்றே!” என்றாள். பாலசுந்தரம் விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு, விஷயம் என்னவென்று விசாரித்தான். ஸுசீலா தான் பத்திரிக்கையில் படித்ததைச் சொன்னாள். “படித்ததை முழுதும் படிக்காமல் பாதியில் விட்டு விட்டால், அதற்கு நான் என்ன செய்வது?” என்றான். “பின்னால் என்ன சொல்லியிருந்தது?” என்று கேட்டாள். “ஆனால், இந்த விரதத்துக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. ‘இந்தப் பெரிய தேசத் தொண்டில் ஒருவனுக்கு உதவி செய்யக் கூடிய வாழ்க்கைத் துணைவியாகக் கிடைத்தால், அந்த நிலைமையில் கல்யாணம் செய்து கொள்வதே அதிக பயனுள்ளதாகும்’ என்று கடைசியில் சொல்லியிருந்தேன்.” ஸுசீலா சற்று நேரம் யோசித்து விட்டு, “அம்மாதிரி நான் உங்களுக்கு உதவியாயிருப்பேன் என்று தோன்றுகிறதா?” என்றாள். “உன்னைப் போல் உதவி எனக்கு வேறு யார் செய்ய முடியும்? நான் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தால், அவற்றை எப்படி சரியாக உபயோகிப்பது என்று நீ ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லலாமல்லவா?” ஸுசீலா இப்போது விழுந்து விழுந்து சிரித்தாள். “ஆமாம்; நீங்கள் ஒரு பக்கம் ஜனங்களின் பசிக்கு உணவு உற்பத்தி செய்தால், நான் இன்னொரு பக்கத்தில் அவர்களுக்குப் பசியேயில்லாமல் அடித்து விட முடியும்!” என்றாள். “ஆனால், அவர்கள் குற்றாலத்துக்கு வந்தால், மறுபடியும் பசி உண்டாகி விடும்!” என்றான் பாலசுந்தரம். இரண்டு பேரும் சேர்ந்து சிரித்தார்கள். அந்தச் சிரிப்பின் ஒலி அருவியின் சலசல சப்தத்துடன் கலந்தது! FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.