[] நூல் பெயர்: துயர்மிகுவரிகள் (கட்டுரைகளும், கவிதைகளும்) ஆசிரியர்: ப.மதியழகன் மின்னஞ்சல்: mathi2134@gmail.com கைபேசி: 9597332952, 9095584535 பதிப்பு: ஜூன் 2018 வெளியீடு: freetamilebooks.com மின்னூலாக்கம்: ப.மதியழகன் அட்டைப்படம்: கரங்கள் பதிப்பகம் Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work   உள்ளடக்கம்   முன்னுரை தாய் வாழ்க்கை கவலையில்லாத மனிதன் மெளனத்துயர் கடவுள் பிரார்த்தனை சாவின் அழகு வேதனைப் பாதை இறையுணர்வு நான் யார்? கருவறை வாசனை எதையோ தொலைத்தேன் கனவின் விலாசம் உன்னதத்தைத் தேடி இன்னொரு வாசல் பரிதவிப்பு மகாபுருஷர் காலடி மகாவீரர் நஞ்சு கவிதைகள்     முன்னுரை   இந்த வாழ்வு மனிதனிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொள்கிறது. ஏமாற்றங்களை எதிர்கொள்ளும் போது மனிதன் துயரப்படுக்கையில் விழுகிறான். நம்பிக்கை விதைகள் ஒருநாள் முளைவிடும் என்பது மனிதனின் கனவு தான். ஆயுள் முழுவதும் எதிர் நீச்சல் அடித்துக் கொண்டிருக்க மனிதனால் முடியாது. வாலிபத்தில் சுவர்க்கமாக தெரிந்த உலகத்தில் போகப் போக நரக இருள் கவிகிறது. மனிதன் தான் ஒரு பாவப்பிறவி என்பதை உணர்கிறான். அவனுக்கு மன்னிப்பு தேவையாய் இருக்கிறது. உயிர்களெல்லாம் பிறப்பு இறப்பு என்ற இரு எல்லைகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. உடலின் தேவையை பூர்த்தி செய்வதால் தொடர்ந்து துன்பத்தையே பரிசாகப் பெறுகிறோம்.   வாழ்வின் அர்த்தத்தைத் தேடியவர்களின் முடிவு கொடுமையானதாகவே அமைந்துள்ளது. உண்மையின் வழியைப் பின்பற்றுபவர்கள் சொற்பமெனினும் அவர்களுக்கு எதன் தரிசனம் கிடைத்ததென்று தெரியவில்லை. முடிவு விடுதலையளிக்கும் என்பதால் தான் மனிதன் துயரங்களைப் பொறுத்துக் கொள்கிறான். கடவுளின் அகதரிசனம் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் குறைவு தான். அற்பமான சுகத்தை அனுபவிக்கும் ஆசைதான் மனிதனை வலையில் சிக்க வைக்கிறது. பாவிகளின் கூடாரத்தில் யார் உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர். கடவுள் நிழல் கூட விழாத கைவிடப்பட்ட இவ்வுலகத்தில் மீட்பு சாத்தியமில்லாதது. உடலுக்குள் சிறையிருப்பது மரணத்திற்குப் பின் விடுதலை பெறுகிறது. அதுவும் சிறிது காலமே, பிறகு அது பிறவி சுழற்சியில் சிக்கிக் கொள்கிறது. விதி ஒன்று இந்த உலகில் செயல்படுவதாக நீங்கள் எப்போதேனும் உணர்ந்து கொண்டால் அதுவே கடவுள்.     ப.மதியழகன் 115,வள்ளலார் சாலை, ஆர்.பி.சிவம் நகர், மன்னார்குடி - 614001. திருவாரூர் மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா. cell:9597332952, 9095584535 mathi2134@gmail.com       தாய்   மனித வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது. வயிற்றில் சுமக்கும் போது குழந்தைக்கும் சேர்த்து அவளே உண்கிறாள். கனவுகளோடு பெற்றெடுக்கும் அவள் தன் கண்போல குழந்தையைப் பாதுகாக்கிறாள். குழந்தை எதற்காக அழுகிறது என்று அவளுக்கு மட்டுமே தெரியும். குழந்தை தூங்க வேண்டுமென்றால் அவள் தாலாட்டுப் பாட வேண்டும். தொப்புள் கொடி உறவு ஆயுள் முடியும் வரை தொடர்கிறது. அன்னை இட்ட தீ அடிவயிற்றில் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் குலதெய்வமாக தாயே இருக்கிறாள். வாழ்க்கைப் பாதையில் தடுமாறி வழுக்கி விழும் போதெல்லாம் அவன் தாயின் மடியில் சாய்ந்தே ஆறுதலடைகிறான்.கோயில் கர்ப்பக்ருஹ இருளில் தாயின் முகத்தையே அவன் காண்கிறான்.   அம்மா ஆகும் போதே பெண்கள் தெய்வமாகிவிடுகின்றனர். அவளுடைய தாய்ச்சியைத் தொடும் ஆட்டமாகத்தான் இவ்வுலகம் இதுநாள்வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. பூக்களை எப்போதும் செடிகள் சொந்தம் கொண்டாடியதில்லை. அவளுக்குப் பிறகான வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. உன் கைப்பிடித்தபடி அலையில் நான் கால் நனைத்ததை இன்னும் நான் மறக்கவில்லை. வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடிக் களைத்து உனது மடியில் தலை சாய்கிறேன் நீ என் தலை கோதி தூங்க வைக்கிறாய். இரவில் ஆயிரம் நட்சத்திரக் கண்களைக் கொண்டு நீ என்னை கவனித்துக் கொண்டே இருக்கிறாய்.   காலம் உன்னை என்னை விட்டு தொலைதூரம் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இந்த வண்ணத்துப்பூச்சி ஒருநாள் வானை அளக்கும் என்று நீ இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறாய். பிரமாண்டமானக் கோயிலைக் கண்டால் பரசமடைவோம் ஆனால் சிதிலமடைந்த கோயிலில் இருக்கும் தெய்வம் பக்தனுக்காக ஏங்குவதை கண்டுகொள்ள மாட்டோம். ஒவ்வொரு தாயும் வாழ்க்கையெனும் கானகத்தில் மகனை விட்டுவிட்டு புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடுகின்றனர். மீதிப் பயணத்தை அவன் அவளின் நினைவுகளைச் சுமந்து கொண்டே கடக்க வேண்டியிருக்கிறது. வாழ்க்கை அவளை சிரிக்க விடவில்லை. விதியை நொந்து கொள்வதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்.   அவளுடைய கவுச்சி வாசனை வேண்டியதாய் இருக்கிறது நான் தூங்குவதற்கு. என் கேள்விக்கெல்லாம் மெளத்தையே பதிலாகத் தந்தாய் ஆனால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது. அம்மாக்கள் வேர்களைப் போல தங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிறிதளவும் சுயநலமின்றி எப்படி அவளால் இருக்க முடிகிறது. உடம்புக்கு நோவென்றாலும் எனக்குப் பின்னால் தூங்கி எனக்கு முன்னால் எழுந்து விடுவாள். பெற்றுவிட்டதோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல் இன்றும் என்னைச் சுமந்து கொண்டுதான் இருக்கிறாள். சுயமாக இரையைத் தேடிக் கொள்ளத் திறனற்ற பறவையாகத்தான் நான் இன்றும் இருக்கிறேன். கருவறையில் குடியிருக்கும் கடவுளுக்குக் கூட இவ்வளவு கருணை இருக்குமா என்று தெரியவில்லை.   நான் கைக்குழந்தையாக இருந்தபோது எப்படி பார்த்துக் கொண்டாளோ அப்படித்தான் இப்போதும் பார்த்துக் கொள்கிறாள். நினைவுகள் என்னை அலைக்கழிக்கும் போது அவளது நிழலில் தான் இளைப்பாறுகிறேன். நான் வெயிலில் நடக்கும் போதெல்லாம் நீ தான் முகிலாக வந்து நிழல் தருகிறாய். மழை பெய்யும் போது சிறு தூறல் கூட என் மீது விழா வண்ணம் சேலைத் தலைப்பால் என் தலையை மூடிக் கொள்வாய். நினைவு நதியில் நான் நீந்திக் கொண்டிருக்கும் போதெல்லாம் நீ கரையில் நின்று கொண்டு என்னை வாவென்று அழைக்கிறாய். அவளின் பேரன்பை விவரிக்க நான் வார்த்தைகளின்றி தவிக்கிறேன். எனது கனவுலகைக் கூட அவள் தான் ஆள்கிறாள். கருணை தான் மனிதனிடமிருந்து கடவுளை வேறுபடுத்துகிறது.   எனது ஆயுள் முடியும் வரை என்னில் எங்கோ ஒரு மூலையில் நீ வாழ்ந்து கொண்டிருப்பாய். நான் ஒருவனே உலகம் என்று வாழும் உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். வானம் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் மழை பொழிவது போல எனது மகள் உனது பாசமழையில் இப்போது நனைந்து கொண்டிருக்கிறாள். வெறும் தோற்றப் பொலிவில் என்ன உள்ளது ஒப்பனை அறையில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும் உன்னைப் போன்ற அழகு யாருக்கும் வராது. குடும்பக் கப்பல் பேரலைகளால் தள்ளாடும் போதெல்லாம் எங்களை தப்பிக்க விட்டுவிட்டு நீ ஏன் தண்ணீரில் மூழ்குகிறாய். வாழ்க்கைச் சக்கரத்திற்கு அச்சாணியாக நீ இருப்பதால் தான் இவ்வளவு தொலைவைக் கடக்க முடிந்தது. அம்மா உன் பேரன்பை வர்ணிப்பதற்கு தமிழில் வார்த்தைகளே கிடையாது.                       வாழ்க்கை   வாழ்க்கை தனது ரகசியத்தை யாருக்கும் வெளிக்காட்டாது. நாளை என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது. நம் கண்முன் இறப்பு நேரிடும் போது கூட நம்மை மரணம் நெருங்காது என்றே நாம் நினைக்கிறோம். மனிதன் பலனை எதிர்பார்த்தே செயல்களைச் செய்கிறான். விதியின் கைகள் மனிதனின் கழுத்தை நெரிக்கிறது. மறதியும், தூக்கமும் மனிதனுக்கு இல்லையெனில் வாழ்வு நரகமாயிருக்கும். வாழ்வில் எப்போதும் வசந்தம் வீசிக் கொண்டிருக்காது. மூன்று வேளை உணவருந்தினாலும் பசிநெருப்பை அணைக்க முடிவதில்லை. மனிதன் பரிதாபத்திற்குரிய ஒரு ஜீவன். அவனது ஒரு எல்லை மிருகமாகவும் மற்றொரு எல்லை கடவுளாகவும் உள்ளது. அவனது சிந்தனைக் கூட சிறைப்பட்டுத்தான் கிடக்கிறது.   அணையும் விளக்கு பிரகாசமாக எரிவது போலத்தான் அவனது வாழ்வு. அவனுக்கு ஒரு நம்பிக்கை தம்மைவிட உயர்ந்த அனைத்தும் தனக்கு மேலாக இருக்குமென்று. அதனால் தான் இறைவன் வானத்திலிருப்பார் என்றெண்ணி அண்ணாந்து பார்த்து இறைஞ்சுகிறான். எவ்வளவு போராடியும் அவனால் வாழ்வின் இரும்புச் சட்டங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அவனது பூமியில் அவன் அன்னியமாய்த் தான் இருக்கிறான். மனிதன் கடவுளிடமிருந்து வேறுபடுவது கருணையினால் தான். இயற்கை அவனை மடியில் வைத்து தாலாட்டினாலும் மனிதன் அமைதியற்றவனானவே அலைந்து கொண்டிருக்கிறான். புலன்களை பாவக் காரியத்துக்கு ஒப்புக் கொடுத்து மனிதன் தூங்கிக் கிடக்கிறான்.   உயிர்த்தெழுந்த இயேசுவின் கண்களில் மன்னிப்பின் ஒளி தெரிந்தது. அதைப் பார்த்து மனிதன் பேதலித்துப் போனான். கடவுள் மனிதனுக்கு துயரக் கோப்பையை பரிசளித்தார். அதிலிருக்கும் மதுவைக் குடித்து மனிதன் கேட்பாரற்று வீதியில் விழுந்து கிடக்கிறான். போலிபுகழ்ச்சியின் மூலம் சாத்தான் மனிதனிடமிருந்த தனக்கான காரியத்தை சாதித்துக் கொள்கிறான். வாழ்வின் கோரப்பிடியில் சிக்கி மனிதன் பைத்தியமானான். மரணத்தின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து சவப்பெட்டிக்கு அருகிலேயே நெடுநாட்கள் காத்திருக்கிறான். வெண்ணிறச் சிறகுகளை உடைய மரணப் பறவை பூமியைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.   அற்ப மனிதர்கள் தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொண்டதைப் பார்த்து சாத்தான் சிரித்துக் கொண்டிருந்தான். கடவுளின் அசரீரியை இவ்வுலகில் ஏழைக் கவிஞனால் மட்டுமே கேட்க முடிந்தது. கடவுளின் இறுதி ஊர்வலத்தில் எந்த மனிதனால் கலந்து கொள்ள முடியும். ஆதாமின் சந்ததியினரின் அழுகுரலுக்கு இறைவன் செவிகொடுப்பதில்லை. சுவர்க்கத்திலிருந்து விரட்டப்பட்டவர்களின் கனவில் கூட இறைவன் தோன்றுவதில்லை. இவ்வுலகில் மனுஷகுமாரனோடு உண்மையும் மரித்துவிட்டது.     கவலையில்லாத மனிதன்   கவலையில்லாத மனிதன் ஒன்று இறந்துவிட்டான் இல்லையெனில் இன்னும் பிறக்கவில்லை. வாழ்வுப் பெருங்கடலின் அலைகள் தான் மனிதன். ஆழ்கடலில் பொக்கிஷம் இருப்பது தெரியாமல் அலைகள் கரையையே நாடுகிறது. இப்பரந்த உலகில் கவிஞன் துயரத்தின் வாரிசாக மட்டுமே இருக்கிறான். ஊரில் முக்கியத்துவம் யாருக்கு கொடுக்கிறார்கள் என்றால் பணம் உள்ளவர்களுக்கே. அறிவுஜீவிகள் கூட பணக்காரர்களுக்குப் பின்னால் தான் அணிவகுக்கிறார்கள். அடிமைப்பட்டிருக்கிற மனிதனுக்குத்தான் சுதந்திரத்தின் அருமை தெரியும். ஒரு நபரின் வங்கிக் கணக்கில் பலகோடி இருக்கட்டும் அதனைக் கொண்டு ஒருநாள் தூக்கத்தை அவரால் விலைக்கு வாங்க முடியுமா.   கப்பலை கடலில் செலுத்துவதற்கு மாலுமியின் பங்கு சிறிது கடவுளின் பங்கு பெரிது. அஸ்திரத்தை பிரயோகிக்க அவ்வளவு யோசிப்பார்கள் அந்நாட்களில் இப்போது அப்படியா. நிராகரிப்பின் வலி விஷம் தோய்த்த அம்பு உடலின் மீது தைய்ப்பதை விடக் கொடுமையானது. வாழ்வில் ஒருமுறையேனும் அன்பின் கரங்கள் உன்னை ஆரத்தழுவிக் கொண்டிருக்கக் கூடும். உடலளவில் செய்யப்படாத தீங்குகளால் பாவமில்லை என மனிதன் கருதுகிறான். அவரவர் பாதையை சுயமாக தேர்ந்தெடுக்க வசதியாகத்தான் பல மதங்கள் தோன்றியுள்ளது. ஆன்மிக வழியில் ஞானப்பாதை கடுமையானது. பக்திப் பாதை எளிமையானது.   இவற்றை ஏன் உங்கள் முன் வைக்கிறேன் என்றால். கஷ்டத்தில் உழலுகிறேன் காப்பாற்று என தங்களை கடவுளிடம் ஒப்புக் கொடுத்தால் தீங்குநேராமல் அவர்களைப் பாதுகாப்பது அவனுடைய கடமை. சரணடையும் போது சுமையை இறைவன் மீது இறக்கி வைத்து விடுகிறீர்கள். ஆண்டவனிடம் பற்று வைக்கும் போது அங்கு நம்பிக்கை வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ராம நாமத்தின் மீது வைத்த நம்பிக்கையால் தான் அனுமனால் கடல் தாண்ட முடிந்தது. பிரஹலாதன் வைத்த நம்பிக்கையினால் தான் பிரம்மம் தூணை உடைத்துக் கொண்டு காட்சி தந்தது. கல்லான அகலிகை ராமன் கால் பட்டதும் பெண்ணாகவில்லையா. திரெளபதியின் அசைக்க முடியாத நம்பிக்கைதானே அவள் மானத்தைக் காத்தது. ஆத்மா அழிவில்லாதது என அர்ஜுனனை நம்பச் செய்வதற்கு அருளப்பட்டது தானே கீதை.   வாழ்வின் குரல் எப்போதும் மரணத்தைப் பற்றியே பேசுகிறது. சாமானியனுக்கும் சக்கரவர்த்திக்கும் ஒரே விதி தான். அகந்தை தான் மரணத்தைக் கொடுமையாக்குகிறது. நான் என்கிற அகந்தை தான் கடவுளை மறைத்துக் கொண்டுள்ளது. அந்த திரைச்சீலை விலகினால் தெய்வத்தின் தரிசனம் கிடைக்கும். இறை சக்தி மனிதன் மூலமாக வெளிப்படுகிறது ஒருவரிடம் அது கூடுதலாகவும் இன்னொருவரிடம் குறைவாகவும் காணப்படுவதற்கு கர்மவினை காரணமாக இருக்கலாம். அவதாரங்கள் அனைத்தும் மனிதன் கடவுள் நிலையை அடையலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஏற்பட்டதாகவே தோன்றுகிறது.   வாழ்வுத் தீவில் மனிதஇனம் நிரந்தரமாக வசிக்க முடியாது. அந்நிலையில் மனிதனுக்கு புகலிடம் தருவதற்கு யார் முன்வருவார்கள். தனிமையின் மேகம் என் மனவானில் இடியாக குமுறுகிறது. விதியின் கைகள் ஒரு பந்தைப் போல மனிதனை தூக்கி எறிந்து விளையாடுகிறது. கடவுள் இல்லாத மறைவான இடமொன்றை யாராலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. புத்தரால் கூட ஞானக்கடலின் சிறுதுளியைத் தான் விவரிக்க முடிந்தது. சத்தியம் ஒன்றே கடவுளிடம் நம்மை கொண்டு செல்லும் என்பதே இயேசுவின் போதனையாக அமைந்தது. குழந்தையிடம் அகப்பட்டுக் கொண்ட கொசு போன்று தான் இறைவனின் கைகளில் மனிதன்.   எஜமான் விசுவாசமுள்ள வேலைக்காரர்களிடமே பொறுப்பை ஒப்படைப்பான். ஒருவனிம் இருக்கும் செல்வமே மக்களில் நால்வரை அவன்பால் ஈர்க்கச் செய்கிறது. உண்மையை உணர்ந்தவர்கள் விவாதத்தில் பங்கேற்க மாட்டார்கள். ஞானத்தை விளக்க வார்த்தைகள் போதாது. தெய்வீக விளக்கின் ஒளி மூலமாகவே நாம் இந்த உலகைக் காண்கிறோம். சாத்தானுக்கு வாய்ப்பு தராமல் மனதைக் கோயிலாக வைத்துக் கொண்டால் இறைவன் வந்து குடியேறுவான். பூமியுடனான பிணைப்பை அறுத்துக் கொள்ள மனிதர்களால் முடிவதில்லை. கடவுளின் கருணையைப் பற்றி நாம் சந்தேகம் கொள்ள தேவையில்லை அவர் தான் மனிதனுக்கு பூமியில் அடைக்கலம் தந்துள்ளார். மனிதனின் தேவைகள் அனைத்தையும் ஒரு தந்தையைப் போல அவர் நிறைவேற்றுகிறார். இப்பூமியில் அன்பே ஆட்சி செய்ய வேண்டும் என கடவுள் விரும்பினார். கடவுளுக்குள்ள அதிகாரம் மனிதனின் கண்களை உறுத்துகிறது. மரணப்புதிருக்கு விடைகாண அவன் இன்றுவரை முயன்று கொண்டிருக்கிறான்.                           மெளனத்துயர்   விதியின் கைகளில் மனிதன் ஒரு விளையாட்டுப் பொம்மை. தனது துயரத்துக்கு இந்த நாளிலாவது விடுதலை கிடைக்கட்டும் என்று எண்ணித்தான் படுக்கையிலிருந்து எழுகிறான். எத்தனையோ தெய்வங்கள் இருந்தும் எந்தக் கடவுளும் அவனுடைய சுமையைத் தாங்கிக் கொள்ள முன்வரவில்லை. வாழ்க்கையில் வசந்தம் மட்டுமே வீசிக்கொண்டிருக்காது என்று அவன் அறிவதில்லை. கடலில் கால்நனைக்க அலைகள் ஓயும் வரை காத்திருப்பது அறிவுடைமையாகுமா. எவ்வளவு காலத்திற்கு மேகங்களால் சூரியனை மறைத்துக் கொண்டிருக்க முடியும் அதன் கிரணங்கள் பூமியை வந்தடைந்தே தீரும் இல்லையா?   கையேந்தும் இடத்திற்குக் கீழே புதையலிருப்பதை பிச்சைக்காரன் அறிவதில்லை. வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுமென்று ஒவ்வொரு மனிதனும் கனவு காண்கிறான். தற்போதைய நிலையில் இருள் சூழ்ந்திருந்தாலும் எதிர்காலத்தில் வெளிச்சம் வரும் என்று தான் மனிதன் தவங்கிடக்கிறான். ஏதாவதொரு நம்பிக்கை வேண்டியதாய் இருக்கிறது மனிதனுக்கு வாழ்க்கையில் நடைபோடுவதற்கு. வெட்டியான் செத்த பிணத்திலிருந்து கோணித்துணியை உருவிக் கொள்வதைப் போல வாழ்க்கை மனிதனிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு தான் விடுகிறது.   மனிதர்கள் பிறக்கும் போது கடவுளாய் இருக்கிறார்கள், வளர்ந்ததும் சாத்தான் ஆகிவிடுகிறார்கள். தான் நினைத்த ஒன்றை அடைவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிகிறார்கள். பகலில் பொருட்களைக் காண விளக்கு ஏந்திச் செல்பவன் முட்டாள் அல்லவா. தெய்வத்திடம் செல்வத்தைத் தவிர வேறென்ன கேட்கிறோம். கப்பித்தானிடம் நம்பிக்கை இல்லையென்றால் கப்பலில் பயணம் செய்ய முடியுமா. ஆட்டுமந்தையைப் போல் அவர் பின்னால் அணிவகுக்கின்றீர்களே நீங்கள் பின்பற்றிச் செல்பவர் உத்தமரா என்று உங்களுக்குத் தெரியுமா. பொறுமையாக நீங்கள் தட்டினால் திறக்காத கதவுகள் உண்டா. நிச்சயமாக சாவோம் என்று தெரிந்திருந்தும் சத்தியத்தின் பக்கம் நிற்க உங்களால் முடியுமா?   மாயா ஜாலம் காட்டும் செப்படுவித்தைக்காரன் கடவுளுக்கு நிகரானவனாக முடியுமா. மாகடலை பார்க்கும் போதெல்லாம் மனிதன் சிறு தூசு என்று உணரமுடிகிறதா. வாழ்வில் சூழ்ந்துள்ள மூடுபனி விலக மனதில் ஞானச்சூரியன் உதிக்க வேண்டும். எந்த மொழியில் பிரார்த்தனையை ஏறெடுத்தாலும் கடவுள் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேய்ப்பன் பிரசங்கம் செய்வதற்கு ஏன் கல்வாரிமலையை தேர்ந்தெடுத்தார். வேதனைப்படுபவர்களுக்கு காலம் நீண்டு கொண்டே செல்கிறது.   இந்த உலகில் கடவுளால் கூட ஏகாந்தமாய் இருக்க முடிவதில்லை. கோயிலில் வீற்றிருக்கும் தெய்வத்திடம் வேண்டுதல்களை ஒப்பித்த பின் மனம் வாயிலில் கழற்றிப் போட்ட செருப்பைத் தேடி ஓடுகிறது. பணத்தை பூட்டி வைக்காமல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் நாளையே மரணம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாம். இரை தேடத்தான் பறவைகளுக்கு சிறகுகளை கொடுத்திருக்கிறான் இறைவன். மரண வெள்ளத்தில் மூழ்கப் போகும் உலகைப் பற்றி வருணிக்க என்ன இருக்கிறது. இரகசியங்களை நெருங்க நெருங்க தீப்பற்றிக் கொள்கிறது எனது உடல். இறைத் தூதர்களுக்கு சொந்த மண்ணில் கனம் இருக்காது. புவிச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தான் நாமனைவரும்.   பூமியில் நடைபெறும் காரியங்களைப் பார்த்தால் கடவுளுக்கு கருணையில்லை என்பதையே காட்டுகிறது. இருண்ட வாழ்வில் வெளிச்சம் கொடுக்கும் ஒரே ஒரு விளக்கையும் கடவுள் அணைத்துவிடுகிறார். மனிதனின் இறுதி நாளில் கசப்பான நினைவுகளே மனதில் வந்து அலைமோதும். சாத்தான், கடவுள் என்ற இருசக்திகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு மனிதன் பைத்தியமாகிறான். இரவின் நிழலை கடைசி வரை சூரியனால் காண முடியவில்லை. தோலால் மூடப்பட்ட வெறும் கூடுதான் மனிதன். மனித வாழ்க்கையில் உண்மைக்கும், பொய்க்கும் இடையே தராசுத் தட்டு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.   பலவீனமான மனிதனின் மனதை கெட்ட ஆத்மாக்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அப்பாவிகளை சித்ரவதை செய்வது கடவுளுக்கு உவப்பாக இருக்கிறது. மனிதனின் முயற்சிகளையெல்லாம் இயற்கை தோற்கடித்து விடுகிறது. ஆணவத்தால் ஆடுபவர்களையெல்லாம் கடவுள் கண்டுகொள்ளாவிட்டாலும் இயற்கை காவு வாங்கியேத் தீருகிறது. ஏமாளிகளை கைப்பாவையாக்கி காரியத்தை சாதித்துக் கொள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுள் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை காட்டலாம். ஆனால் விதி வெகுநியானமானது. மனிதர்களை அது பேதம் பிரிக்காது. அரசனுக்கு என்ன நேர்கிறதோ அதுவே ஆண்டிக்கும் நேர்கிறது. சத்தியத்தைக் காப்பாற்ற துணிபவர்கள் எல்லாருமே அவதாரங்கள் தான்.                       கடவுள்   கடவுள் மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. ஆதிசங்கரர் உலகம் மாயை என்றார். அஞ்ஞானத்திலிருந்து பார்க்கும் போது உலகம் மாயை தான். ஞானிகளின் கண்களுக்கு இந்த உலகம் பிரம்மம். நாம் இல்லாத போது உலகம் இருந்தது. நாம் இல்லாது போகும் பின்பும் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும். கடவுளை நம் உருவத்தில் பொருத்திப் பார்ப்பதே தவறு. எல்லைக்குட்பட்ட மனத்தினால் கடவுளை அறிய முடியுமா என்பதே கேள்விக்குறி.   கடவுளின் கருவியாகத்தான் மனிதன் செயல்படுகிறான். எந்தவொரு செயலைச் செய்வதற்கும் மனிதனுக்கு விருப்பார்வம் இருந்தால் தான் செய்ய முடியுமென்பதல்ல. அச்செயலைச் செய்வதற்கு கடவுள் பின்னாலிருந்து உந்தித் தள்ளுகிறார். கடவுளுக்கு பெயர் வைத்து நபராக்கிவிடுகிறோம். மனித உடலிலிருந்து கடவுள் செயல்படுவாரானால் விருப்புவெறுப்புகளுக்கு ஆட்பட்டுபோவார். கடலில் உயிர்வாழும் மீன்கள் கடலைப் பற்றி ஆராய்வது போலத்தான் நாம் உலகத்திலிருந்து கொண்டு கடவுளைப் பற்றி கேட்பது.   கடவுள் நீங்கள் எண்ணிக்கொண்டிப்பது போல ஒரு நபரல்ல. மனிதன் தோன்றிய காலத்திற்கு முன் அவர் இங்கே இருந்திருப்பார். அப்போது அவருக்கு என்ன உருவம் இருந்திருக்கும். கடவுளுக்கு அகந்தை கிடையாது அவருக்கு அந்நியமாய் யாரும் கிடையாது. கடவுள் எதற்கும் பொறுப்பு ஏற்க மாட்டார். நெருப்பை வைத்து விளக்கையும் ஏற்றலாம் வீட்டையும் கொளுத்தலாம். அதற்கு நெருப்பு பொறுப்பேற்க முடியாது. காற்றையே உங்களால் சிறைப்படுத்த முடியாத போது கடவுளை பெயர் வைத்து உடலுக்குள் அவரை எப்படி சிறை வைக்க முடியும். இயேசு தன்னை இறைமகன் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர் கடவுளுக்கும் தனக்குமிடையேயான ஒரு சுவரை உடைத்துவிட்டார். ஆனால் சாதாரண மனிதர்கள் ஆலயங்களுக்குச் சென்று வருவதோடு தனது கடமைகள் முடிந்துவிட்டாதக் கருதுகிறார்கள்.   கடவுளை வைத்து மனிதன் விளையாட்டுக் காட்டுகிறான். மக்களை அச்சப்பட வைத்து அடிமையாக்குகிறான். பிரச்சனைகளை நீங்களே உருவாக்கிக் கொண்டு அதைத் தீர்க்க கடவுளை அழைக்கிறீர்கள். கடவுள் ஒருபோதும் உங்களுக்கு முன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார் ஏனெனில் அவர் உயிர்த்தன்மை. கருவறையிலிருந்து வெளிவந்த எவரும் கடவுளாக இருக்க முடியாது என்பது நிச்சயமாகிறது. ஏனென்றால் உடலெடுத்தால் அகங்காரம் அங்கே எழுகிறது. உயிர்த்தன்மை உங்களைப் பற்றி கவலை கொள்ளாது. நீங்கள் இல்லாமல் போனாலும் அதன் இருப்பு இங்கே இருந்து கொண்டுதான் இருக்கும். யாருமே இல்லாத நிலையில் ஒருவன் தன்னை ஆண் என்று உணர்ந்து கொள்வது சாத்தியமில்லாதது.   முழுமை தன்னை எல்லைக்கு உட்பட்டதாக ஆக்கிக் கொள்ளாது. எல்லைக்கு உட்பட்டதானால் அது உயிர்த்தன்மையாக இருக்க முடியாது. இந்த மனம் தான் உலகக் காட்சிகளை கண்முன் விரியச் செய்கிறது. ஆன்மாவுக்கும் உயிர்த்தன்மைக்கும் இடையே மனம் தான் திரையாக மூடியிருக்கிறது. அழகு அசிங்கம் என்று கடவுள் பேதப்படுத்துவதில்லை. மனிதனே பிரித்து வைக்கிறான். நல்லது கெட்டது பற்றி முழுமை உங்களுக்கு பாடம் எடுக்காது. மனிதனின் உள்ளுணர்விற்கு உயிர்த்தன்மையின் ஒளி கொஞ்சம் படுகிறது.   முழுமை தீர்ப்பு வழங்காது தான். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் இந்தப் பூமியில் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஆத்மாவுக்கு அழிவில்லை என்று சொல்லிக் கொண்டு உடலைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. உயிர்த்தன்மையின் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளும் மனிதன் கடவுளாகலாம். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. கடவுள் மனிதனாய் இருந்தால் ஏதாவதொன்றை பயன்படுத்தி அவரை வசியம் செய்துவிட ஏதுவாகிறது. அவன் எல்லையில்லாதவன் எனும்போது உங்கள் சாமர்த்தியம் அவனிடம் எடுபடாது. பேராசைக் கொண்ட சமூகம் ஊழலைகத் தான் பிரசவிக்கிறது.   ஒழுக்கமற்ற சமுதாயம் சடங்குகளுக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொள்கிறது. பாவகாரியங்களுக்கு பயந்து நடுங்காதீர்கள் என்பதே அதன் வேத வாக்காக உள்ளது. அன்பை நீங்கள் உங்கள் மனத்தில் விதைத்தால் முழுமை அதை மண்ணைப் பிளந்து கொண்டு வளர வழிவகை செய்யும். அருவருப்புமிக்க ஒன்றை நீங்கள் ஒதுக்கித்தள்ளும் போது, அழகு தன்னை உங்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்குகிறது. மனிதனாக இருக்க முயற்சி செய்யும் யாவரும் அன்புக்கும் வெறுப்புக்கும் மத்தியில் ஊசலாடித்தான் ஆகவேண்டும். அன்பின் நறுமணத்தை நீங்கள் முகர்ந்தால் கடவுளின் தரிசனம் தேவையிருக்காது. கடவுளின் கிரணங்கள் மூலம் உங்கள் இதயம் மலர்வதற்கு வாய்ப்பளியுங்கள். வாழ்க்கை இருண்ட இரவுதான் விடியல் சமீபமாய் இருக்கிறது முழுமை அதனை வெளிப்படுத்த உங்களிடம் வேண்டுவது சிரத்தையை மட்டுமே.   நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் தோன்றுவார் என்பது நம்பிக்கைதான். பாவிகளை நியாயந் தீர்க்க கடவுள் அவர்கள் முன் தோன்றததான் வேண்டுமா. நம் வாழ்க்கையின் அர்த்தம் ஏன் கடவுளை அடைதலாக இருக்கக் கூடாது. இறந்த பிறகு மதச்சடங்குகளின்படிதான் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே நீங்கள் கடவுளைக் காண முடியாது முடியாது. ஏனென்றால் மதம் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்க மாட்டார். மனிதன் பின்பற்றும் ஒவ்வொரு மதமும் கிணறுபோன்றது தான். கிணற்று நீரும் அடியாழத்தில் செல்லும் கடலுடையதே. இந்தக் கிணற்றுநீர் அடியாழத்தில் சென்று கடலை அடைகிறதல்லவா நீங்கள் அங்கு செல்ல வேண்டும். எவ்வளவு நாட்கள் அலையாய் இருப்பீர்கள் சலனமற்ற கடலாகிவிடுங்கள். கடலில் இருக்கும் போது நீங்கள் கடவுளைப் பற்றி கேள்வி எழுப்ப மாட்டீர்கள்.         பிரார்த்தனை   பிரார்த்தனை உரையாடல் ஆகமுடியாது. பிரார்த்தனையில் பக்தன் பேசுகிறான் கடவுள் பேசுவதில்லை. பொருளற்ற வாழ்க்கையில் மனிதனுக்கு பிடிமானமளிப்பதே பிரார்த்தனைதான். பிரார்த்தனை என்பது நல்லதற்கு நன்றி கூறும் விதமாகவும் கெட்டதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டி முறையிடுவதாகவும் இருக்க வேண்டும். பிரார்த்தனையில் கடவுள் மெளனமாக இருக்கிறார். அதற்காக அவன் பிரார்த்தனையை செவிமடுக்கவில்லை என்று அர்த்தமில்லை. பிரார்த்தனையின் போது பக்தன்விடும் கண்ணீர் அவன் பாவங்களைக் கழுவுகிறது.   இந்த உலகில் பிரார்த்தனை நடக்காத நேரமே கிடையாது. கடவுளின் படைப்பு பூரணமானவை இல்லை என்பதால் பிரார்த்தனையின் மூலம் நமது கஷ்டங்களை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது. கடவுளுக்கு வேறுபல வேலைகள் இருக்கலாம். ஆனால் பரதேவதைகள் இந்த வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கின்றன. வார்த்தைகளால் எந்த அளவு வெளிப்படுத்த முடியும் உங்கள் துயரத்தை. தேவாலய வாசலில் நீங்கள் கால் வைக்கும் போதே உங்கள் சரித்திரம் முழுவதையும் அவர் தெரிந்து கொள்கிறார். நீங்கள் நுழையும் போதும் கடவுள் மெளனமாயிருந்தார். நீங்கள் உங்கள் பிரார்த்தனை ஏறெடுத்த பின்பும் அவர் மெளனத்தைக் கடைபிடித்தார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்.   பிரார்த்தனையின் போது உங்கள் அகந்தை கரைகிறது கடவுளின் அருள் உங்கள் மீது இறங்க அது வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அன்பே கடவுள் என்றால் அவர் மனிதர்கள்படும் அவஸ்தையை நியாயப்படுத்தி பேச மாட்டார். கடவுளுக்குத் தெரியும் உங்கள் தோள் மீது சுமையை சுமத்தினால் நீங்கள் இளைப்பாற இடம் தேடுவீர்கள் என்று. துன்பப்படும் போது மனம் விழித்துக் கொள்கிறது. அது கடவுளுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயலுகிறது. கஷ்டங்கள் நாம் மேற்கொண்ட முடிவுகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க நல்வாய்ப்பாக அது அமைகிறது.   அஞ்ஞானத்தில் மூழ்கியுள்ள பெரும்பாலான மக்களிடமிருந்து ஒரு சிலரைத்தான் கடவுள் தட்டி எழுப்புகிறார். பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடவேண்டுமென்ற வேட்கையைத் தூண்டுகிறார். பணம் மிதமிஞ்சி இருந்தால் அவர்கள் தேவாலயத்தின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க மாட்டார்கள். வாழ்க்கையின் அர்த்தத்தை அதிரகசியமாக தன்னுள் புதைத்து வைத்திருக்கிறார் கடவுள். கடவுளைக் காட்டுகிறேன் என்று சொல்பவர்களிடம் ஏமாந்து போக வேண்டாம். பிரார்த்தனை மூலம் நீங்கள் தட்டும் போது அந்தக் கதவு திறந்து கடவுளின் தரிசனத்தைக் காண்பீர்கள்.   ஒரு மனிதனின் இதயத்தில் அன்பை பிரவேசிக்கச் செய்ய ஆயிரம் ஆண்டுகள் ஆகுமென்றால் அதையும் பொறுமையுடன் செய்து முடிப்பார் கடவுள். வெறும் சடங்கு போல பிரார்த்தனை செய்யக் கூடாது கடவுள் செவிமடுப்பார் என்ற உள்ளுணர்வுடன் பிரார்த்தனையை ஏறெடுக்க வேண்டும். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவர்கள் கடவுள் நமக்கு அளித்தார் என்ற நன்றியுணர்வுடன் இருக்க மாட்டார்கள். வாழ்க்கையே ஒருவருக்கு பிரார்த்தனை ஆகும் போது அவன் மெளனமாய் இருக்க அவன் வழியே கடவுள் பேச ஆரம்பிக்கிறார்.   வாழ்க்கையின் நிச்சயமற்றத் தன்மையை நாம் உணரும் போது நமக்கு இன்னொரு வாசல் திறக்கிறது. வற்புறுத்திப் பெறலாம் என்ற நினைப்பு மனிதனுக்கு வரக்கூடாது. பணிவன்புடன் பிரார்த்தனையை ஏறெடுத்தால் தேவன் செவிமடுப்பார். எது நமக்கு நன்மை தருமோ அவற்றை மட்டும் கடவுள் நமக்களிப்பார் என்ற புரிதல் வேண்டும். எனது விருப்பத்தை உங்கள் முன் வைக்கிறேன் எனும் போது இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை கடவுளிடம் ஒப்படைத்துவிடுகிறீர்கள். மனிதனால் உருவாக்கப்பட்டதை விட்டுவிடுங்கள் இயற்கையோடு பேசுங்கள் அது உங்களுக்கு கண்டிப்பாக கடவுளைக் காட்டும்.   பிரார்த்தனை மனிதனுக்கும் கடவுளுக்கும இடையேயுள்ள பாலமாக செயல்படுகிறது. அருள் காற்று வீசிக் கொண்டுதான் உள்ளது நீங்கள் தான் பாய்மரத்தை விரிக்க வேண்டும். அன்பானவர்களின் கண்களில் கருணை நிரம்பி இருக்கும். பிரார்த்தனையை மனித குலம் இழந்துவிடக்கூடாது ஏனெனில் கடவுளின் அருள் கிரணங்கள் அதன் வழியாகவே பாய்கிறது. கடவுள் மீது குற்றம் சுமத்தாதீர்கள் நம் மனத்தில் என்ன உள்ளதோ அதுவே வெளியில் வெளிப்படுகிறது.   புனிதமான எந்த ஒன்றையும் மனிதன் வணங்க வேண்டுமென்றுதான் கடவுள் விருப்பப்படுகிறார். சத்தியத்துக்கு பிரதிவுபகாரமாக சிலுவையை ஏற்றுக் கொண்ட இயேசு தான் சீடர்களின் கால்களை புனிதநீரால் கழுவுகிறார். வாழ்க்கைக் கடலைக் கடக்க உதவும் இந்த உடலாகிய படகுக்கு என்ன நேருமோ என்ற அச்சத்தை இறைவனிடம் ஒப்பிவித்துவிடுங்கள். வாழ்க்கை ரயில் பயணம் போன்றது உங்கள் சுமைகளை இன்னும் தலையில் சுமக்காதீர்கள். நியாயத்தீர்ப்பு நாளில் தேவனுக்கு கொடுப்பதற்கு பாவ மூட்டையை சுமந்து வராதீர்கள். உயிர்த்தெழுந்த இயேசு வெள்ளிக் காசுக்காக காட்டிக் கொடுத்த யூதாஸுக்கு பாவமன்னிப்பு வழங்கியிருப்பார். நான் கடவுள் என்று சொல்பவன் எவனும் கண்டிப்பாக சாத்தானாகத்தான் இருப்பான் என்பதை மறக்காதீர்கள்.                     சாவின் அழகு   இயற்கை பாம்பாக இருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விழுங்கி ஏப்பம் விடுகிறது. உலக அழிவை முன்னிட்டு பரப்பப்படும் வதந்திகள் இன்றளவும் குறைந்தபாடில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரை அவனளவில் உலகம் அழிந்து தானே போகிறது. மரணம் இதைத் தானே ஆதிகாலம் தொட்டு நிகழ்த்தி வருகிறது. சாவை மறப்பதற்குத் தானே மனிதன் ஆசை வலையில் விழுந்து கிடக்கிறான். மரண சர்ப்பம் பிறந்ததிலிருந்து அவனைத் தொடர்ந்து கொண்டு தானே வருகிறது. உடலை கடன் கொடுத்த கடவுளுக்கு அதை திருப்பிக் எடுத்துக் கொள்ள உரிமையில்லையா?   மரணவிதி இவ்வுலகில் இயங்குவதால் தானே அவ்வப்போது அவதாரங்கள் நிகழ்கிறது. கடைத்தேற்ற வந்தவர்களை கல்லால் அடித்து விரட்டியவர்களின் சந்ததிகள் தானே இவர்கள். மரணத்தின் நிழல் நம்மீது கவியும் போது மனம் உண்மை பேச விழைகிறதல்லவா? வானத்து சந்திரன் எத்தனை சாம்ராஜ்யங்களை, சக்கரவர்த்திகளை, பேரழகிகளைக் கண்டிருக்கும். பலகோடி பேர்களை உண்டு செரித்த வயிறல்லவோ மண்ணுக்கு. சாம்பலை நதியில் கரைக்கும் போது கூட தோன்றுகிறதா? இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது என்று!   கடவுளின் கிருபை வேண்டுமென்றால் அவனது படைப்பான சகமனிதர்களை நேசிக்க வேண்டுமல்லவா? பாவிகளை இரட்சிக்கத்தான் வந்தார் இயேசு, அதற்காக பாவக்கணக்கினை தொடர்ந்து கொண்டிருந்தால் மீட்பு சாத்தியமாகுமா? கடவுளின் குரல் எல்லா மனிதனுக்குள்ளும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது, ஆனால் அவன் சாத்தானுக்கே ஏவல் புரிகிறான். சாவு நம்மை அழைக்கும் போது நான் வரமாட்டேனென்று சொந்த பந்தங்களை காரணம் காட்ட முடியுமா?   மரண வெள்ளம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது ஒருநாளும் மனிதர்களை தரம்பிரித்து பார்த்ததில்லை. விதி வெகு நியாயமாக நடந்து கொள்கிறது. உலக நாடக மேடையில் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கலைந்து பயணத்தைத் தொடர்வதே மரணம். நான் ராஜா வேடமிட்டேன் எனக்கு கடவுளுக்கு அருகில் இடம் கொடுக்க வேண்டுமென்றால் முடியுமா? கடவுள் தனக்குப் பிரியமானவர்களாக யாரையும் கருதுவதில்லை. அடித்தால் செத்துவிடுகிறதே கொசு அதைவிட நாமொன்றும் மேலானவர்கள் அல்ல.   அற்பபுழுக்களான நாம் பிறரைவிட நாம் உயர்ந்தவர் என்றும், நாடு,மொழி,இனம் என்று நம்மை நாமே பிரித்து வைத்திருக்கிறோம். மரணத்தை பொறுத்தவரை மர்மத்தின் முடிச்சை மனிதனால் எந்நாளும் அவிழ்க்க இயலாது. குளத்தில் நீந்தும் மீன் தன்னைக் கடவுள் என்று எண்ணிக் கொண்டால் நாம் என்ன செய்வது. நடந்தேற வேண்டிய ஒன்றை நிறுத்த மனிதன் படாதபாடுபடுகிறான், ஆனால் மனிதனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. வான மண்டலத்தை ஆராயும் அவனால் கடவுளின் நிழலைக்கூட நெருங்க முடியாது. இல்லை என்பவர்கள் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள், உண்டு என்பவர்கள் தான் விசாலமான வானத்தை அளந்து பார்க்க விழைகிறார்கள். மரண ஆற்று வெள்ளத்தில் மனிதர்கள் வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள். கரை சேர்ந்தவரகள் யாரென்று கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.   வசந்தத்திற்கு தயாராகும் மரம் சருகுகளை உதிர்க்கத்தான் செய்யும், அதற்காக மரம் அழுகிறதா என்ன? பூமிக்கு வருகைதர நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சத்தியத்தைக் கடைப்பிடிப்பதால் நம்மை மக்கள் கல்வீசித்துரத்துவார்கள் என்றால், தப்பித்து ஓடாதீர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்த இயேசுவை நினைத்துக்கொண்டு அவர்களை நெருங்குங்கள்!                                                     வேதனைப் பாதை   மைதானத்தில் உதைபடும் பந்தாய் தான் மனித வாழ்க்கை இருக்கிறது. இத்தனை வேதனைகளைத் தாங்கிக் கொண்டு எதற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் சில வேளைகளில் மனித மனத்தில் எழத்தான் செய்கிறது. கவலையை மறக்க மதுவை நாடி ஓடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. மனதிற்கும் அங்குசம் தேவையாய் இருக்கிறது. இல்லையென்றால் மதம் பிடித்து தன்னிலை தவறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. மனிதனின் சுயநலம் தான் வாழ்க்கையை நரகமாக்குகிறது.   கண்டுபிடிப்புகள் புறவசதிகளை மேம்படுத்த உதவுகிறதே தவிர மனத்தை மேம்படுத்த சிறு அளவிலும் உதவவில்லை. மனம் தீய எண்ணங்களின் கூடாரமாகவும், பேய்களின் வசிப்பிடமாகவும் இருக்கிறது. பெளதிக உலகில் மனதின் கருவியாகவே உடல் இருக்கின்றது. மனிதனின் அகந்தைதான் மனம். மனம் நசியும் போதுதான் இறைக் காட்சிகள் தோன்றத் துவங்கும். கடவுளின் எண்ணத்தின் பிரதிபலிப்பே இவ்வுலகம். மனித எண்ணத்தின் பிரதிபலிப்பே கண்டுபிடிப்புகள்.   ஒருவர் தனது மனதால் இன்னொருவருடைய மனதில் ஒர் எண்ணத்தை உருவாக்குவது சாத்தியம் தான். கடவுள் தான் இப்பணியைச் செய்து வருகிறார். அவருடைய பேரண்ட மனம் தான் மனிதனுடைய மனதில் எண்ணத்தை எழச் செய்கிறது. கடவுள் தனது இந்த அற்புதசக்தியை சில நபர்களுக்கு வரமாக அருளுகிறார். ஆனால் அவர்கள் இந்த மாயவித்தையை மனிதர்கள் மீது பிரயோகப்படுத்துவதில்லை. அவர்களை ஞானிகள் என்கிறோம். அவர்கள் இச்சைக்கு அப்பாற்பட்டு இருக்கிறார்கள். கடவுளை அடைவதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. எதிரிகளின் சாம்ராஜ்யத்தில் ஒற்றர்கள் வேவு பார்ப்பதைப் போல சாத்தான் தனது பிரதிநிதிகள் மூலம் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பூமியில் தனது கைவரிசையை காட்டி வருகிறான்.   தனக்கு ஆட்பட்ட மனத்தை பொம்மையாக ஆட்டுவிப்பது சாத்தானுக்கு கைவந்த கலை. கடவுளை நாடும் மனம் கோயிலாகவும், சாத்தானை நாடும் மனம் குகையாகவும் இருக்கிறது. சாத்தான் மனிதனை கேடயமாகப் பயன்படுத்தி கடவுளிடம் மோதுகிறான். ஒரு பெண்ணைக் கண்டதும் காதல் தோன்றுமாயின், கடவுள் ஜெயிக்கிறார். காமம் எழுமாயின் சாத்தான் சிரிக்கிறான். மனிதன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கவே கடவுள் விரும்புகிறார். மனிதன் மீது தனது ஆளுமையை செலுத்தி, அவனை கைப்பாவையாக மாற்றவே சாத்தான் விரும்புகிறான்.   குற்றவாளிகளின் கூடாரமாக சாத்தான் இந்த உலகத்தை மாற்றி வைத்திருக்கிறான். புலன்களை வேட்டையாட விட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்தோமானால், அந்திம காலம் வேதனை மிகுந்ததாக இருக்கும். சாத்தானின் குரலை மறுதலிக்கும் போதுதான், மனிதனின் மெய்யான வாழ்வு தொடங்குகிறது. ஞானத்தந்தையான கடவுள் தனது குமாரனை ஒருக்காலும் கைவிடுவதில்லை. உலகத்தின் பாரத்தை அவர் சுமந்தாலும் தனது படைப்பு பூரணத்துவம் பெறுமென்று அவர் வெகுகாலமாக காத்திருக்கிறார்.   ஆணுக்கு கடவுளைக் காண்பதற்கு தடையாக பெண் இருக்கிறாள். அவள்தான் தாயும், காதலியும். தாய் தனது மகன் கடவுளைக் காண தாமே தடையாக இருப்பதை உணர்ந்து நகர்ந்து கொள்கிறாள். காதலிக்கு விலகிக் கொள்ள விருப்பமில்லை, விலகினால் தன் கட்டுப்பாட்டுக்கு உட்பட தயங்குவான், தன்னை அலட்சியப்படுத்தி, தான் கிழித்த லெட்சுமணக் கோட்டை தாண்டிவிடுவான் என்ற பயம் அவளுக்கு.   எந்த உடலை பேணிப் பாதுகாக்கிறோமோ அந்த உடல் இறுதியில் தீயிக்கு தான் இரையாகப் போகிறது. அழகு அழகு என்று எதைக் கொண்டாடுகிறார்கள் மனிதர்கள், குருதியையும், எலும்பையும் போர்த்தியுள்ள தோலைத்தானே. உறக்கம் ஆறுதல் அளிக்கிறது. விடியல் வேதனையாற்றில் நீந்த வாவென அழைக்கிறது. அன்பு உங்களைப் புனிதப்படுத்தும், கடவுளை உங்களை நோக்கி அழைத்து வரும். வெறுப்பு உங்களை மிருகமாக்கும். இறந்த பிறகும் மனம் சாந்தியடையாமல் இன்னொரு உடல் தேடி உங்களை அலையவைக்கும்.   இதோ வானிலிருந்து பெய்யும் மழை மனிதர்களைப் புனிதப்படுத்தும். இதன் மூலம் கடவுளின் கருணை வெளிப்படுகிறதல்லவா? எல்லா கதவுகளையும், ஜன்னல்களையும் நீ சார்த்திவிட்டாலும், கடவுளின் கண்கள் மட்டும் உன்னை கவனித்துக் கொண்டிருக்கும்.                               இறையுணர்வு   கடவுள் கருணையே வடிவானவராக இருக்கிறார். மனிதர்களுக்கு ஞானத் தந்தையாக விளங்கும் அவர், அதற்காக பிரதிபலனை எதிர்பார்த்து ஏங்கவில்லை அவர். அதற்கு ஈடாக அன்பு ஒன்றையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். கடவுள் புல் தழைப்பதற்கு மழையை அனுப்புகிறார். மனிதர்களுக்கு அதனைவிட மேலானவற்றை அவர் செய்வார். ஒரு மதத்திற்குரிய கடவுளல்ல அவர். மனிதர்களுக்கான கடவுள். பேதத்தை ஏற்படுத்தி நீங்கள் மோதிக் கொள்வதை வேடிக்கைப் பார்க்கும் கடவுளல்ல அவர். உங்களின் அன்னையை விட அன்வு மிகுந்தவர்.   கடவுளின் வாசற்கதவு எப்போதாவது தட்டப்படும் போது வியந்து போகிறார். கைவிடப்பட்ட உலகில் கடவுளைத் தேடுவது யாரென்று. இயற்கை கடவுளின் ஆளுமைக்கு உட்பட்டதா என்றால், ஆம் என்றும் கூறலாம் இல்லையென்றும் கூறலாம். இந்தப் விசாலமான பூமியில் மனிதக்கடவுளும், இயற்கையின் அதிபதியும் மோதிக் கொள்கிறார்கள். மனிதக்கடவுளிடம் அன்பு மட்டுமே இருக்கிறது. இயற்கையிடம் ஆயுதம் இருக்கிறது. கடவுள் இந்தப் பூமியில் அன்பு விதையை விதைத்துள்ளார். அது வளர்ந்து விருட்சமாக கோடிக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகலாம்.   மனிதனும் மற்ற உயிரினங்களும் புவியீர்ப்பு சக்தியை எதிர்த்தே செயல்படுகின்றன. வளர்இளம் பருவத்தில் ஈர்ப்பு சக்தியை எதிர்த்து நம்மால் திறம்பட செயலாற்ற முடியும், வயது ஏற ஏற ஈர்ப்புவிசையை எதிர்க்கும் ஆற்றல் படிப்படியாக குறையத் தொடங்கும். உடல் தளர்ந்ததும் காந்த விசையைப் போல் செயல்பட்டு உடலின் இயக்கத்தை இறுதியில் நிறுத்துகிறது. உலகம் அழியும் வரை இயற்கை மனித இனத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.   கடவுள் அன்பிற்குரிய பாதைக்கு நம்மை அழைக்கிறார். இயற்கையோ மனிதனின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டது. கொலைகாரனானாலும் என் மகன் என்று தாய் கரிசனம் காட்டுவதைப் போல கடவுள் நடந்து கொள்கிறார். இயற்கையோ கண்டிப்பாக தன் விதி பின்பற்றப்பட வேண்டும், அதன்படி அவன் ஆயுட்காலத்திலேயே குற்றத்திற்கான தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறது.   மனிதன் ஆத்மாவோடு பிறப்பதில்லை. தமது செயல்களால் இறைவனிடமிருந்து பரிசாக ஆன்னாவை பெற்றுக் கொள்கிறான். காந்தியைப் போன்ற வெகு சிலரே ஆத்மாவை பரிசாகப் பெற்றிருக்கக் கூடும். மரணத்திற்கு பின்னால் சூன்யம் என்கிறார் புத்தர். இது ஒரு வகையில் உண்மை, எப்படியென்றால் பாவ காரியத்தில் ஈடுபட்டவன் இறப்புக்கு பிறகான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லப்படமாட்டான். பூமியில் புனிதராக வாழ்ந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் வானரசில் கடவுளோடு இன்றும் வாழ்ந்து கொண்டிக்கிறார்கள். மனதால் கூட பாவம் செய்யாதவர்கள் குறைவுதான், எனவே ஏறத்தாழ வெகுசிலரைத் தவிர மற்ற அனைவரும் சூன்யத்தையே தண்டனையாகப் பெறுகிறார்கள்.   பஞ்சபூதங்களாலான ஆகாயம், பூமி, நீர், காற்று, நெருப்பு, இவை ஒத்துழைக்கவில்லை என்றால் உலக அழிவைச் சந்தித்துவிடும். இயற்கையின் உந்துதல் தான் மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது. உலகம் போர்க்களமாக மாறியதற்கு இயற்கையே காரணம். குற்றவாளிக்கு இயற்கை தரும் தண்டனை என்னவென்று கடவுள் அறிந்தேயிருக்கிறார். கடவுளை உதாசீனப்படுத்தும் மனிதன், இயற்கையைக் கண்டு அச்சம் கொள்கிறான். எதிர்க்க வலுவில்லாமல் மறைவிடம் தேடி ஓடி ஒளிந்து கொள்கிறான். கடவுள் கீழே இறங்கி வந்தாலும் மனிதனின் இயல்பை மாற்ற முடியாது என்கிறது இயற்கை.   இயற்கை அனுமதிக்கும் வரைதான் மனிதன் பூமியை ஆள முடியும். மனிதக்கடவுள் துயரம் மிகுந்தவராக இருக்கிறார். உண்மையின் வழி நடப்பவர்கள் இறுதிக்காலத்தில் கூக்குரலிடும்போது அவரிடமிருந்து மெளனமே பதிலாக வருகிறது. மனிதக்கடவுள் மனிதனுக்கு உணர்த்த நினைப்பது இதுதான். மண்ணுக்கு நீ இரையாகும் முன்பே விழித்துக்கொள், இல்லையென்றால் ஒவ்வொருவருக்கும் இறப்பு மிக்க் கொடியதாக அமைந்துவிடும். மேலும் கடலில் எழும் அலைகளுக்கு எங்கிருந்து கட்டளை வருகிறதென்று இன்று வரை எனக்குத் தெரியாது என்கிறார். இயற்கையின் கைதியாகிவிட்ட மனிதனை தன்னால் மீட்க முடியாத கையாலாகாத தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொள்கிறார்.                               நான் யார்?   படிப்பு, வேலை, பணம், செளந்தர்யமான பெண் இவை கிடைத்தும் மனிதனால் நிம்மதியாக இருந்துவிட முடிகிறதா? நினைத்ததை அடைந்தவுடன் அது தன் மதிப்பை இழந்துவிடுகிறதல்லவா? பெரிய ஆள் ஆகவேண்டும் படி, படி என்கிறார்கள். அயல் நாடுகளுக்கு பயணம் செய்து பொருள் ஈட்ட சொல்கிறார்கள். கிடைக்கின்ற பணத்தை மனையில் முதலீடு செய்ய யோசனை கூறுகிறார்கள். கைநிறைய சம்பாதிக்கிறான் என்று சொல்லியே கல்யாணத்தை முடித்து விடுகிறார்கள். இத்துடன் முடிந்ததா இன்னும் இன்னும் என்றுதானே உறக்கமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.   பணத்தால் சகலத்தையும் விலைக்கு வாங்கிவிடலாம. நிம்மதியை விலைக்கு வாங்க முடியுமா? கவலை மூட்டையை முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்துவிடுகிறதல்லவா? மனிதனின் கணிப்புகள் மெய்யாகும்போது அவன் தன்னைக் கடவுளாக நினைத்துக் கொள்கிறான். கணிப்புகள் பொய்க்கும்போது குழம்பித் தவிக்கிறான். உடலைப் பேணுவதிலேயே மனிதன் கவனம் முழுவதும் இருக்கிறது. தோற்றத்தை வைத்துதான் அவனை எடைபோடுகிறது இவ்வுலகம்.   நேற்றிலும், நாளையிலும் வாழும் மனிதன் இன்றைய கணத்தை தவறவிட்டுவிடுகிறான். புலன்களை கட்டுக்குள் வைக்க மனிதன் முயல்வதில்லை. ஆயுள் முடியும் வரை புலன்களுக்கு அடிமைப்பட்டுத்தான் கிடக்கிறான் மனிதன். நல்லதை மனிதன் தேடிப் போக வேண்டி இருக்கிறது. கெட்டவைகள் வீட்டு வரவேற்பறைக்கே வந்து வாவென அழைக்கிறது. மனம் தவறான வழியிலேயே உடலை செலுத்துகிறது. பெண்ணையும். பொன்னையும் காட்டி காட்டி மனிதனின் ஆசைத் தீயை வளர்க்கிறது.   ஆசை நெருப்பு உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஆகுதியாக இன்னின்ன வேண்டும் என்று அது பட்டியலிட்டுத் தருகிறது. மனம் தனது இச்சைக்கு விருந்து படைக்கத்தான் இவ்வுலகம் என்று மனிதனை நம்பச் செய்கிறது. மனிதன் கடவுளை தனது வேலைகளை சிரமமின்றி முடித்து தரும் தரகராகவே நினைத்து வருகிறான். கோடிகோடியாக உண்டியலை நிரப்பினாலும் அதற்கு வட்டியாக நிம்மதியைப் பெற முடியுமா? காகிதத்துக்கு மதிப்பு அளிப்பது மனிதன் அது கடவுளிடம் செல்லுபடியாகுமா என்று யோசிக்க வேண்டாம்.   எதைச் செய்தேனும் தனது காரியத்தைச் சாதித்துக் கொள்வதே மனிதனின் குறிக்கோளாக இருக்கிறது. கோயிலுக்குச் சென்று பணத்தை பிச்சையாக கேட்கவே தெரிந்திருக்கிறது அவனுக்கு. பிறரைப் பயன்படுத்தி எவ்வளவு பொருள் ஈட்டலாம் என்பதிலேயே தான் மனிதன் குறியாக இருக்கிறான். வசதி பெருகப் பெருக லாபநஷ்ட கணக்கு தான் அவன் மூளை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. இயற்கையின் அழகை ரசிக்கத் தவறிவிடுகிறான். பிரியம் காட்டினால் அதை சாக்காக வைத்து பணம் கேட்பார்களோ என்ற பயம் வந்துவிடுகிறது அவனுக்கு. உண்மையான வருமானத்தை மூடி மறைத்து வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி விடுகிறான்.   நாடி தளர்ந்ததும் மரணத்துக்கு பிறகான வாழ்க்கைக்கு உத்திரவாதம் தருபவர்களிடம் பேரம் பேசுகிறான். வசதியாக வாழ்ந்த என்னால் அங்கு கடவுளுக்கு சாமரம் வீச முடியாது என்கிறான். பரலோக தேவதைகளை தனது செல்வத்தால் விலைபேச முடியாது என்ற நிலை வரும் போது மரணத்தை தள்ளிப்போட முயன்று பார்க்கிறான்.   வெளியுலக பொருட்களைச் சேர்க்க ஆர்வம் காட்டும் மனிதன். உள்ளுக்குள் இருக்கும் புதையலை மறந்து விடுகிறான். சேர்த்து வைத்த பணத்தால் தூக்கத்தை விலைக்கு வாங்க முடியாமல் தவிக்கிறான். மெய்யான வாழ்வு மனிதனின் அடையாளத்தை துறக்கச் சொல்கிறது. மரணம் மனிதனை நெருங்க நெருங்க அவன் மனநிம்மதியை நாடி ஓடுகிறான்.   அவனுடைய தேடுதலின் உச்சத்தில் கடவுள் குருவாக அவனுக்கு காட்சி தருகிறார். மனதை உண்முகப்படுத்தச் சொல்லும் அவர். நீ உடலல்ல, மனமல்ல தூய ஆன்மா என்று போதிக்கிறார். நான் யார் என்று உன்னையே நீ கேட்டுக்கொள் விடை கிடைக்கும் என்கிறார். படைத்தவனே பாரத்தை தாங்குபவன் நீயல்ல என்கிறார். உடலால் இருக்கும் வரை கடவுள் எஜமான் பக்தன் பணியாள். உடல் வீழ்ந்துவிட்டால் ஆத்மா பரமாத்வோடு ஒன்று கலந்துவிடும் என்று அத்வைத சித்தாந்தத்தை அவனுக்கு அருளுகிறார்.                               கருவறை வாசனை   கிளைகளை ஒவ்வொன்றாக வெட்டி எறிந்துவிட்டு மரத்தை வேரோடு சாய்ப்பதை போலத்தான் மரணம் நம்மை நெருங்குகிறது. உறவுகளின் இழப்பு நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நமது நம்பிக்கை நீரூற்று கொஞ்சம் கொஞ்சமாக வற்ற ஆரம்பிக்கிறது. பிரியமானவர்களின் இறப்பு மரணத்தைவிடக் கொடியதாக இருக்கிறது. வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளும் அவர்களை நினைவுபடுத்திக் கொண்டேயுள்ளது. உயிரோடு இருக்கும்போது அவர்களிடம் மனம் கோணும்படி தான் நடந்து கொண்டது ஞாபகம் வருகிறது. வீதியில் நடக்கும போது அவளின் குரல் போல் உள்ளதே என திரும்பிப் பார்க்க நேரிடுகிறது.   பெண்ணிடமுள்ள புனிதத்தன்மைதான் ஆணை ஈர்க்கிறது. அவளுடைய கண்கள் மூலமாகத்தானே பத்து மாதம் இவ்வுலகைப் பார்த்து வந்தோம். ஒருவனுடைய வாழ்க்கைக்கு பிள்ளையார்சுழி போடுவதும், முற்றுப்புள்ளி வைப்பதும் பெண்ணாகவே இருக்கிறாள். உடல் வலிமையை விட மனவலிமை பெண்ணுக்கு அதிகமாக இருக்கிறது. உலகில் வாழும் எல்லோரும் அவளின் வாய் வழியாகத்தான் உணவை உட்கொண்டோம், அவளி்ன் இரத்தத்தைத் தான் பாலாய் குடித்தோம். வயிற்றிலிருக்கும் போது அவள் பேசுவதைக் கேட்டுத்தான் தாய்மொழியை கற்றுக் கொள்கிறோம். ஒரு உயிரை உலகத்துக்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபமான காரியமா என்ன.   வாலிபத்தில் அம்மாவின் சாயலுள்ள பெண்களால் தான் ஆண் அதிகம் கவரப்படுகிறான். நிம்மதியற்ற நேரத்தில் அம்மாவின் மடியில் சாய்ந்து கொண்டு உறங்குவதையே அவன் விரும்புகிறான். அவளின் கொலுசு சத்தம் தான் அவன் கேட்கும் முதல் சங்கீதம். தாயின் வயிற்றிலிருந்து அவன் வெளிவந்துவிட்டாலும், தனது மனஊஞ்சலை விட்டு மண்ணில் அவனை இறக்கிவிடுவதே இல்லை அவள். அவளுடைய மனம் பாதுகாப்பு அரண்போல அவனைப் பாதுகாக்கிறது. அம்மா மட்டும் அறிந்த அவனுக்கு அப்பா எனும் புது உறவை அவள் தான் அறிமுகப்படுத்துகிறாள். புது வாசலை அவனுக்கு திறந்துவிடுவதும் அவள்தான். அவனுடைய சிறகுகளை முறிக்கும் எண்ணம் அவளுக்கு வருவதே இல்லை. அவன் அம்மா என்று மழலையில் அழைக்கும் போது அவளின் தாய்மை உணர்வு பூரித்துப் பொங்குகிறது.   உறக்கம் வரும்வரை அவள் அவனுடைய தலையை வருடிக் கொண்டிருக்கிறாள். தனக்கு அப்புறம் இவனை யார் கண்ணும்கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்வி அப்பொழுது அவள் மனதில் எழுகிறது. காலம் அவனை வெயிலில் அலைய வைக்கும் போதெல்லாம், அவள் தன் புடவைத் தலைப்பால் அவன் உடலை போர்த்தி அழைத்துச் சென்றது அவனுக்கு ஞாபகம வரும். ஒரு பெண்ணை அவன் எதிர்கொள்ளும் போதெல்லாம் அவனுடைய அம்மாதான் அப்பெண்ணின் உள்ளிலிருந்து அவனை வாஞ்சையுடன் பார்க்கிறாள்.   இப்போது தடுமாறி விழும் அவனை தாங்கித் தூக்க அவள் இல்லை. பசி வயிற்றைக் கிள்ளும் போது அவள் நிலா காட்டி சோறு ஊட்டியது ஞாபகத்திற்கு வருகிறது. அவன் மனக்கலக்கத்தில் இருக்கும் போதெல்லாம் கனவில் அவள் வந்து ஆறுதல் கூறுவாள். அவன் உழைத்துக் களைத்து மாலையில் வீடு திரும்பும் போது, தென்றலாக வந்து தழுவிக் கொள்வதும் அவள்தான். நதிநீரில் கால் நனைக்கும் போதெல்லாம் அவளின் காணாமல் போன மெட்டி காலடியில் நிரடுவதாகவே அவனுக்குத் தோன்றும். மின்தடையால் உறக்கம் வராமல் புரண்டு படுக்கும் போது அவள் மழை இரவில் கொசுக்களை விரட்ட இரவு முழுவதும் பனைவோலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வரும்.   அவனுக்கு உடல் சுகவீனமடையும் போதெல்லாம், வீட்டில் அவன் கூடவே யாரோ நடமாடுவது போல அவனுக்குத் தோன்றும். அவன் எந்ததேசத்துக்கும் அதிபதி இல்லையென்றாலும் அவளுக்கு ராஜா தான். அவனுக்கு மேகமாக வந்து நிழல் தருபவளாகவும், மழையாக வந்து தாகம் தீர்ப்பவளாகவும் அவளே இருக்கிறாள். அவன் தாயை நினைத்து கண்ணீர்விடும் சமயங்களில் அவள் தன் வயிற்றை வாஞ்சையுடன் தடவிப் பார்த்துக் கொள்கிறாள்.   அவள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலை அவன் கேட்க நேரும் போதெல்லாம் கண்ணீர் அரும்புகிறது. அவளுக்கு பின் செல்லப் பெயரால் அவனை யாரும் அழைப்பது இல்லை. காபி மட்டும் சாப்பிட்டுவிட்டு காசு இல்லாததால் அடுத்தவர் தோசை சாப்பிடுவதை பசியோடு பார்க்கும் போதெல்லாம், அவள் பள்ளிக்கு கொடுத்தனுப்பும் சாப்பாடு பிடிக்காமல் அதை சாப்பிடாமல் வைத்து மாலையில் அவள் முன்பு வீசியெறிந்தது ஞாபகம் வரும். பேருந்தில் அம்மாவின் கைப்பிடித்து நிற்கும் குழந்தையைக் கண்டால் அவன் எழுந்து இடம்விடுவான். விலாசம் கேட்டு வெயிலில் குழந்தையோடு அலையும் பெண்ணுக்கு சோடா வாங்கிக் கொடுப்பான். குழந்தையோடு மழையில் நனையும் பெண்ணுக்கு தனது குடையில் இடம் கொடுப்பான். வாசற் கதவை அவள் எப்போது வேண்டுமானாலும் தட்டலாம் என்பதால் அவன் இரவில் கதவை தாழிடுவதில்லை. அம்மாவின் சாயல் இருக்கிறதேயென்று முன்சென்று முகம் பார்த்து ஏமாந்திருக்கிறான்.   பீரோவிலுள்ள சேலைகளில் இன்னும் அவள் வாசமடிக்கிறது. அவள் பிரியத்துடன் எடுத்துக் கொடுத்த நைந்து போன சட்டையை இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். காலத்தின் கைகளில் தன்னை ஒப்படைத்துப் போன அவளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான். டிரங்கு பெட்டியில் அவள் எழுதி அஞ்சல் செய்யப்படாத கடிதத்தை இன்று வரை அவன் கோடி முறையாவது படித்திருப்பான்.               எதையோ தொலைத்தேன்   நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தேசிய ஒருமைப்பாடு என்ற கட்டுரையைத் தான் காலாண்டிலும், அரையாண்டிலும், முழுஆண்டிலும் கேட்டிருந்தார்கள். பத்தாம் வகுப்பு விடுமுறையில் இவனோடு வயது குறைந்த நண்பர்களோடு பேப்பரும், பேனாவுமாக கிணற்றடியில் உட்காரந்து எழுத ஏதாவது தோன்றாதா என தவங்கிடப்போம். குடியிருந்த காலனியில் பக்கத்து வீட்டு மாமி தரும் நாவலை வயதுக்கு மீறிய பொறுமையுடன் உட்கார்ந்து படிப்பான். ஆறாம் வகுப்புக்கு தமிழ் மீடியத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மாறிய போது இவன் படித்த ஆரம்பப்பள்ளியில் தமிழுக்கு வகுப்பெடுத்தார்கள் கவர்னர் என்ற ஆங்கில சொல்லை பாதுகாவலர் என்று நான் மொழிமாற்றம் செய்தேன். டீச்சர் அன்போடு திருத்தவில்லையென்றால் அன்றோடு தமிழ் வேண்டாம் வராது என்று ஓடிவந்திருப்பேன்.   அப்பா வாரந்தோறும் வாங்கி வரும் தேவியை யார் முதலில் படிப்பது என அக்காவிற்கும், எனக்கும் போட்டி நடக்கும். அக்கா கிசுகிசுவை படித்துவிட்டுத்தான் இவனிடம் தருவாள். இவன் தலையங்கத்தை படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பான். சிறுவயதில் இந்தியா நமது தாய்நாடு என்று இவன் மனதில் வேரூன்றிவிட்டது. பேருந்து நிலையத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் வால்போஸ்டரை சுட்டிக் காட்டி இந்தியா டுடே வாங்கித் தரும்படி அப்பாவை நச்சிரிப்பான். கட்டுரைப் போட்டிக்கு எழுதித் தரும்படி இவன் எந்த ஆசிரியரிடமும் போய் கெஞ்சியதில்லை. இவனே யோசித்து தயார் செய்துவிடுவான். ஆனால் தமிழ்வாத்தியார் தன்னிடம் எழுதி வாங்கியவனைத்தான் தேர்வு செய்வார்.   பள்ளிக்குச் செல்ல மறுத்து அடம்பிடித்ததால் அம்மா இவனை பள்ளிவரை அடித்து இழுத்து வந்தது இவனுக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. அடிக்கு பயந்து பள்ளிக்கு போகமாட்டேனென்று அதற்கப்புறம் அடம்பிடித்ததில்லை. ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் தான் படித்தான். தாளாளர் தன் மனைவியை மாணவர்களுக்கு எதிரிலேயே அவர் முடியைப் பிடித்து அடித்து இழுத்துச் செல்வார். இதனால் அவர் எப்போது பள்ளிக்கு நுழைவாரோ என்ற பயவுணர்வு மாலை பள்ளி விடும்வரை இருந்து கொண்டேயிருக்கும். பள்ளிக் கடிகாரத்தின் பெரிய முள் பன்னிரெண்டைக் கடக்கும் போது சற்று வேகமாக நகரும் பெரிய முள் பன்னிரெண்டை நெருங்கும் போதெல்லாம் பாடத்தைவிட்டுவிட்டு ஒரு கூட்டமே கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்.   ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியிலிருந்து இவனை பாதியிலேயே அப்பா வீட்டுக்கு அழைத்து வந்தார். தாத்தா இறந்துவிட்டதாக அம்மா சொன்னாள். அதனை இவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பேருந்தில் தாத்தா ஊருக்கு போய் இறங்கினோம். மரநாற்காலியில் அவர் உட்காரவைக்கப்பட்டு இருந்தார். தாத்தாவை அசைவற்ற நிலையில் பார்த்தவுடன், எப்போது வந்தாலும் கண் தெரியாத தாத்தா ஆரஞ்சு சுளை மிட்டாய் கொடுத்து தன்னை அவர் பக்கத்தில் அழைத்து முகத்தை வாஞ்சையோடு தடவிப் பார்ப்பார். இப்போது ஏன் அப்படி செய்யவில்லை என இவனுக்கு வருத்தாமாக இருந்தது. சிறிது நேரத்தில் கண்ணாடி பாட்டிலில் வாங்கி வைத்திருந்த மிட்டாயின் மீது கவனம் திரும்பியது.   அப்பா வழி பாட்டியையும், அம்மா வழி பாட்டியைும் இவன் பார்த்ததே இல்லை. பாட்டியின் மடியில் படுத்து கதை கேட்டு உறங்கும் பாக்கியம் இவனுக்கு கிடைக்காமல் போனது. முடிவெட்ட செல்லும் போதெல்லாம் ரஜினி கிராப் வெட்டிவிடச் சொல்லும்படி வீடடிலேயே அப்பாவிடம் சொல்லி அழைத்து வருவான். சலூன் கடைக்காரர் முடியை வெட்டாமல் அப்படியே விடுவது தான் ரஜினி கிராப் என்று சொன்னது இன்னும் இவனுக்கு ஞாபகமிருக்கிறது.   அக்காவோடு வளர்ந்தாலும் வேறு பெண்களைப் பார்க்கும் போது வேற்றுகிரக வாசிகளைப் பார்ப்பது போல் தான் பார்ப்பான். இவன் வீசும் கல்லுக்கு மட்டும் ஏன் புளியம் பழம் விழுவதில்லை என இன்றும் யோசித்துக் கொண்டிருக்கிறான். வேலியோர தட்டானைப் பிடிக்கும் போது முள் எத்தனை முறை காலைப் பதம் பார்த்தாலும் இவனுக்கு வலிப்பதில்லை. இவன் கோர்வையாக கதை சொல்வதைப் பார்த்து கூட்டம் மகுடிப்பாம்பாய் மயங்கும். கதை கேட்பதற்கென்றே இவனைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.   பத்தாம்வகுப்பு முடித்த பின் சில தடங்கல்களால் செகண்ட் குரூப் எடுக்க வேண்டி வந்தது. அது ஒரு கிறித்தவப் பள்ளி. இவன் வகுப்பில் ஏழே பேர் என்பதால் வகுப்புக்கு வாத்தியார்கள் யாரும் வருவதில்லை. கூண்டுக்கிளி வாய்ப்பு கிடைத்தால் தப்பிக்கத்தானே பார்க்கும். படிக்கிறேன் என்று சொல்லி ஊரைச் சுற்றித்திரிந்தது தான் மிச்சம். சுதாரித்துக் கொண்டு இங்கே படித்தால் தேற முடியாது என்று முடிவெடுத்து பாலிடெக்னிக் படிப்புக்கு அச்சாரம் போட்டான் இவன்.   அப்பா, அம்மா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பொய்யாக்கி கடைசி செமஸ்டரில் அரியஸ் வைத்து வெளியே வந்தான். எதிர்பாராத இந்த தோல்விதான் இவன் வாழ்க்கையையே மாற்றியது. இவன் தொலைத்த காலமே இவனை தன் கால்களால் பந்தாடியது. அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக சென்னைக்கு குடிபெயர்ந்தோம். நண்பர்களுடனான தொடர்பு அறுந்தது. அப்பாவின் காசில் சொகுசாக இருந்ததால் கிடைத்த இடத்தில் உடம்பை வளைத்து வேலை செய்ய முடியவில்லை இவனால். தன்னை வருத்திக் கொண்டானா அல்லது திருத்திக் கொண்டானா எனத் தெரியவில்லை, சென்னையில் வசித்த ஏழு வருடங்களில் எந்த தியேட்டரிலும இவன் காலடி பட்டதில்லை.   ஏதோ ஒரு வார இதழில் பாலகுமாரனின் குருவைப் பற்றியத் தொடரின் ஒரு பகுதியை தற்செயலாக படிக்க நேர்ந்தது. அதன் பாதிப்பால் அவரின் எழுத்துக்களைத் தேடி அலைந்தேன். அரசு நூலகத்தில் அவர் எழுதிய புத்தகம் ஒன்றிரண்டு தான் கிடைத்தது. ஏதேச்சையாக சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருக்கையில் பழைய புத்தக்கடையில் வெளியே சிதறிக் கிடந்த புத்தகத்தில் பாதி கிழிந்த நிலையில் அவர் புகைப்படத்தைப் பார்த்தேன். அவரது ஐம்பது நாவல்களை அங்கே தான் பொறுக்கி எடுத்து படித்தேன். அந்த பாலகுமாரன் என்ற கண்டிப்பான பெரியவர் தான் குருவாக இவனுக்கு தமிழ் மூன்றாடுகள் தமிழ் கற்றுத்தந்தார். அவர் எழுதிய குரு என்ற புத்தகம் இவன் பார்வையை முற்றிலும் மாற்றியது உள்ளுக்குள் மாற்றம் நிகழ்ந்தது. பாலகுமாரன் விதைத்த விதை தான் நான் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டு தாக்குப்பிடிப்பேனா என்று பார்ப்போம்.                                             கனவின் விலாசம்   கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்தின் ஆழத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று எனது அறை தங்கக்கிரணங்களால் சூழப்பட்டு அதீத வெளிச்சத்துடன் காணப்பட்டது. இதை நான் கண் திறந்து பார்க்கவில்லை. மனக்கண் இதையெல்லாம் எனக்குத் தெரியப்படுத்தியது. இரண்டு பரதேவதைகள் எனது அறைக்குள் பிரவேசித்தன. ஒரு பரதேவதைக்கு இறக்கை இருந்தது. வெள்ளைக் நிறத்தில் முட்டி தெரிகிற மாதிரி கட்டை கவுன் போட்டிருந்தது. தன் பெயர் pretty பரதேவதை என அது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. இன்னொரு பரதேவதைக்கு இறக்கை சிறிய அளவில் காணப்பட்டது. கறுமை நிறத்துடன் கண்கள் பெரிதாக அவலட்சணமாக காட்சியளித்தது. அதன் பெயர் ugly பரதேவதையாம்.   இரண்டு பரதேவதைகளும் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடியே நடனமாடின. Pretty பரதேவதை நல்ல ஆத்மாவை கடவுளிடம் கூட்டிச் செல்லும் வேலையை செய்யவல்லது. Pretty பரதேவதை என்னிடம் ‘வாழ்க்கையைப் பற்றி உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கடவுளிடம் நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்’ என்றது. நான் சம்மதம் தெரிவிக்கவே, என் கையைப் பிடித்துக் கொண்டு பறக்க ஆரம்பித்தது.   சுவர்க்கத்தை அடைந்தோம். அங்கு ஒரு மனித உருவம் நாற்காலியில் அமர்ந்தபடி மேசையின் மீது பரீட்சை அட்டையை வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தது. தொள தொள ஆடையும் சிகப்பு நிற சால்வையை தோளில் போர்த்தியபடி இருந்த அந்த உருவம், என்னை நோக்கி கவனத்தை திருப்பியது. கருணை பொங்கும் முகத்தோடு ‘வந்துவிட்டாயா’ என்றது. ‘நீ எழுதிய துயர்மிகு வரிகள் என்னை இங்கே தூங்கவிடாமல் செய்தது. எனக்கு இங்கே புத்தக அலமாரி உள்ளது. உன்னுடையை தொகுப்பையும் நான் சேகரித்து வைத்துள்ளேன். பேச்சுத் துணைக்கு நீ வந்துவிட்டதால் எனக்கு இனி போரடிக்காது. யாரை இங்கு அழைக்கலாம் என்று யோசித்தபோது நீ தான் என் நினைவுக்கு வந்தாய். உன்னைக் கண்டால் எனக்கு வியப்பாக உள்ளது. நீ விடாமல் தட்டிக் கொண்டே இருந்தாய், இப்போது உனக்காக என் கதவை திறந்துவிட்டேன். உள்ளே பிரவேசித்துவிட்டாய் இனி உன் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்’ என்றார். முதல் முறையாக கடவுளிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் நான் என்ற உணர்வு ஏற்பட்டது.   தனக்கு எதிரேயுள்ள இருக்கையில் என்னை அமரச் செய்தார். என் கேள்விகளை எதிர்கொள்ள அவர் ஆயத்தமானார். ‘நான் வாழ்க்கையின் பொருள் என்ன?’ என்றேன். அவர் தன் மெளத்தை கலைத்து ‘பிறப்பையும், இறப்பையும் நான் தான் தீர்மானிக்கிறேன், இல்லை என்று சொல்லவில்லை. பணத்தைத் தேடி நீங்கள் ஓட ஓட கடவுளுக்கும் உங்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. மகத்தான ஒரு வாய்ப்பாக வாழ்க்கையை மனிதன் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டான். பணத்தை கொண்டு எல்லாவற்றையும் சாதித்துக் கொள்ளலாம் என்கிற போது மனிதனுக்கு நான் தேவையில்லாமல் போய்விட்டேன். இளகிய மனம படைத்த என்னை மனிதன் ஏமாற்றிவிட்டான்.   வாழ்க்கைப் பாடத்தை மனிதன் சரிவரப் படிக்கவில்லை. கடவுளுக்கு காணிக்கையை அள்ளித்தந்து அவரை சாந்தப்படுத்திவிடலாம் என நினைக்கிறான். சொத்துக்காக தன் கூடப்பிறந்த சகோதரனையே கொல்ல முயல்கிறான். பச்சிளம் குழந்தைகளை தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறான். வயோதிகத்தில் கூட தன் தவறுகளை அவன் உணர்வதில்லை. மனிதர்கள் தங்களுக்குள் அன்பை வெளிப்படுத்தி வாழ்வதையே நான் விரும்புகிறேன். எனக்கு பணம் ஒரு பொருட்டல்ல. வாழ்க்கை ஒரு பந்தயமுமல்ல. அன்பு செய்ய மனிதனுக்கு கிடைத்திருக்கும் மகத்தான வாய்ப்பு.   அடர்ந்த மெளனம். திரும்பவும் என் மனதைக் குடைந்து கொண்டிருந்த அக்கேள்வியை கடவுள் முன் வைக்கிறேன்.’மனிதர்களுக்கிடையில் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்?’ ‘எனது படைப்பு தான் மனிதன் ஆனாலும் நான் அவனை அடிமைப்படுத்த நினைக்கவில்லை. ஆனால் மனிதனுக்கு அடிமைகள் தேவைப்படுகிறார்கள். மனிதன் சக மனிதனை தன்னைவிடத் தாழ்ந்தவன் எண்ணச் செய்வதில் வெற்றி அடைகிறான். கடவுள் பெயரால் பேதத்தை ஏற்படுத்தி தனது ஆளுமையை நிலைநாட்டுகின்றான். பணத்தை வைத்து மனிதனை எடைபோடுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஏழைகள் பணக்காரர்களைவிட தாழ்ந்தவர் அல்ல. எத்தகைய சோதனை வந்தாலும் வாழ்க்கையில் உண்மையைக் கைவிடாதவர் எனக்குச் சமமானவர். மெய்யான வாழ்வுக்காக தன்னலத்தை கொல்கின்றவன் என்னை அடையும் பாதையில் அடியெடுத்து வைக்கிறான்.   மேசையின் மீது கண்ணாடி தம்பளரில் உள்ள தண்ணீரை அருந்திவிட்டு, எனது அடுத்த கேள்வியை எதிர்நோக்குகிறார். என் மனதை குடைந்து கொண்டிருந்த கேள்வி ஒன்றை அவர் முன் வைக்கிறேன். ‘மரணத்திற்கு பின் என்ன நடக்கும்?’ ‘இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சி உச்சகட்டத்தில் உள்ளது. நான் இருக்கும் கிரகத்தை அவனால் நெருங்க முடியவில்லை. மரணத்துக்கு காரணமாணவன் நானென்று தெரிந்தால், அவன் என்னை விட்டுவைக்க மாட்டான். மரணத்திற்கு விடைகாண மனிதனால் முடியாது. கண்ணெதிரே பிறர் சாவதைப் பார்க்கும் போது தான் சாவோம் என்ற எண்ணம் மட்டும் மனிதனுக்கு வருவதேயில்லை. வயோதிகத்தில் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் ஏற்படத் தொடங்கும். ஆனால் மனிதர்கள் கிழவன் ஏதோ உளறுகிறான் என்பார்கள். உலகை வென்ற அலெக்ஸாண்டர் தனது உள்ளங்கையில் வைத்து அதை கொண்டு செல்ல முடிந்ததா? நாளை நாம் உயிரோடிருப்போம் என்பது கூட உறுதியில்லை அல்லவா? நிகழ்காலத்தை தவறவிட்டுவிடுபவனால் எதிர்காலத்தில் மட்டும் அப்படி என்ன அற்புதம் நிகழ்ந்துவிடும். பிறந்துவிட்டால் இறப்பை எதிர்கொண்டுதானே தீர வேண்டும். மரணத்தில் நீ பூமியில் செய்த செயல்களுக்கான பலனைப் பெற்றுக் கொள்வாய். நீ உத்தமன் என்றால் மறுமைநாளில் நீ என்னைச் சந்திக்கும் போது உன் தலை கவிழாது. மனிதனின் எல்லாச் செயல்களும் அவனை மரணத்திற்கே இட்டுச் செல்கின்றன.   பிறந்தது முதல் மரணநிழல் மனிதனை நெருங்கிக் கொண்டேயுள்ளது. மரணத்திற்கு தப்பி ஓடுபவன் எமனின் காலடியில் தான் போய் விழுவான். உங்கள் வாழ்க்கையில் சத்தியத்துக்கு நீங்கள் இடமளித்திருந்தால், மரணத்தைக் கண்டு பயப்படவேண்டாம். உனக்கு மரணிக்க சம்மதமெனில் மரண ரகசியத்தை உன்னிடம் மட்டும் பகிர்ந்து கொள்கிறான்’ என்றார் கடவுள். வாழ்க்கையில் மகத்துவம் புரிந்த எனக்கு வாழ்ந்து பாரக்க ஆசை வந்தது. மரணத்தை நேரடியாக எதிர்கொண்டு கொள்கிறேன் என்ற கூறிவிட்டு கடவுளிடமிருந்து விடை பெற்றேன் நான்.                                 உன்னதத்தைத் தேடி   துயரநீர்ச் சுழலில் சிக்கிக் கொண்டுவிட்டேன். விதி வாழ்க்கையின் லகானை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. கடவுள் என்னை துயரத்தின் வாரிசு ஆகுக என்று கட்டளையிட்டார். கொழுத்த ஆடு மேய்ப்பனின் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும். வாழ்க்கையின் விதிமுறைகளை அனுசரிப்பதற்குப் பதிலாக கல்லறையில் படுத்துக் கொள்ளலாம். பிறப்புக்கும், இறப்புக்கும் மத்தியிலுள்ள வாழ்க்கை குரங்கு கை பூமாலையாக ஆகிவிட்டது. வலியவர்கள் தன் பணவலிமையால் எதையும் சாதித்துக் கொள்கின்றனர்.   நல்லவனும், கொலைகாரனும் ஒரே தெய்வத்தைத் தான் வணங்குகிறார்கள். குற்றவாளி சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பிவிடுகிறான். அவனது பாவம் மன்னிக்கப்பட்டதாக ஆகிவிடுமா? அப்பாவி வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து தற்கொலை செய்து கொள்கிறான். இதன் மூலம் அவன் கடவுள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறான். கடவுள் தன் படைப்பு பூரணத்துவம் அடையும் வரை காத்திருப்பார் என்றால், இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு முடிவே இல்லாமல் போய்விடுமல்லவா?   சமூகம் சாத்தானுக்கு ஏவல் புரிகிறது. கடவுளை சாந்தப்படுத்த யாகங்களே போதும் என சமூகம் நினைக்கிறது. பரிசோதனை எலிக்கு கருணை காட்டாத மனிதன் கடவுளிடம் கருணையை எதிர்பார்க்க முடியுமா? நாளை நடைபெற இருப்பதை இன்றே அறிந்துகொண்டால் தூக்கம் வருமா? கடவுளைப் பொறுத்தவரை மனிதன் மண் தான். மண்ணிலிருந்து தோன்றியவன் இறுதியில் மண்ணுக்கு இரையாகிறான். கடவுள் மனிதன் மூலமாக வெளிப்படுகிறார். கடவுளை மறுப்பவனிடமிருந்து கூட அவன் வெளிப்படலாம். ஆனால் அந்த வெளிப்பாட்டில் மனிதர்களுக்கிடையே வேறுபாடு உள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து வெளிப்படும் கடவுளால் அவரைச் சுற்றி அதிர்வலைகளை ஏற்படுகிறது. கடவுளைத் தேடுபவர்களை அவரின்பால் அது ஈர்க்கிறது. மனிதர்களுக்கு இடையே நிலவும் சக்தி அளவிலான வேறுபாடுகளுக்கு பூர்வ ஜென்ம பலன் காரணமாக இருக்கலாம்.   உண்மை என்னவென்று யாருக்குத் தெரியும். சில வேளைகளில் செயலைச் செய்ய வேண்டுமென்ற விருப்பார்வம் எதனால் எங்கிருந்து ஏற்படுகிறதென்று யோசித்துப் பாரக்க வேண்டும். இல்லறத்தான் ஞானியைப் பார்த்து இவர் போல எல்லாத்தையும் துறந்துவிட்டு கெளபீனதாரியாக பிச்சையெடுத்து சாப்பிடலாம் என்று எண்ணுகிறான். சந்நியாசியின் மனதோ ஒரு பெண்குட்டியோடு வாழ்ந்து குழந்தை குட்டிகளோடு சுகமாய் இருந்திருக்கலாம் என இல்லறத்தானைப் பார்த்து உள்ளுக்குள் ஏங்குகிறது. இக்கரைக்கு அக்கரை பச்சை.   முனைவராக இருந்தாலும் வாழ்க்கைப் பாடத்தை சரியாகப் படிக்காமல் வெற்றி கிட்டாது. புல்லாங்குழல் தான் மனிதன், அதை லயத்தோடு இசைப்பவன் கடவுளாக இருக்கிறான். கடவுள் கோடிக்கணக்கான கண்களால் இவ்வுலகைக் காண்கிறான். கோடிக்கணக்கான கைகளால் செயல் புரிகிறான். யாருக்கும் அவன் விதிவிலக்கு அளிக்கவில்லை. மரணத்தை பொதுவில் வைத்து மனிதனின் வாழ்க்கையில் திருவிளையாடல் புரிகிறான். விடிவதற்கு சில நாழிகைக்கு முன் பூமி மீது காரிருள் கவிந்திருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான்.   நாளை என்ன நடக்கும் என்று யாராலும் கணித்துச் சொல்ல முடியாது. யூகங்களைப் பெரிதுபடுத்தி அதை உலகம் பூராவும் திட்டமிட்டு பரப்புகிறார்கள். உலகம் அழியப்போகிறது என்ற பயத்தை மக்களின் மனத்தில் தோன்றச் செய்வதே அவர்களின் நோக்கம். இப்படி கோடிக்கணக்கான மனிதர்களின் பயவுணர்வு காற்றலைகளை பாதிக்கிறது. உலக அழிவை விரைந்து கொண்டு வருகிறது. எண்ணத்தின் ஆற்றலால் மனிதன் எப்படி உயர்ந்தானோ, அப்படியே அழிவையும் தேடிக் கொள்கிறான்.   வாழ்க்கைப் புத்தகத்தில் சுவாரஸியமே அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாதது தான். எல்லோரும் சாகப் போகிறவர்கள் தான். எந்தவொரு மனிதனும் எதிரிக்கு முன்னால் பிணமாக கூலர் பாக்ஸில் தான் கிடத்தப்பட்டிருப்பதை விரும்பமாட்டான். மறதி கடவுள் தந்த வரம். இல்லையென்றால் மனிதனின் சித்தம் கலங்கிவிடும். பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை மனிதனின் ஆயுள் குறைவு தான். அந்த வாழ்வைக் கொண்டாடாமல் அதைத் தவறவிட்டுவிடுகிறான். அன்பே கடவுள் என்ற புத்தர் பிறந்த மண்ணில் தான் சகமனிதனை திட்டமிட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்வதும் அரங்கேறுகிறது.   அடிமைப்படுத்துதலுக்கு எதிராக முதலில் கிளர்ச்சியை தூண்டிவிட்டவர் இயேசு. அவரது வானரசு என்ற கோட்பாட்டை அவரின் சீடர்களே கூட முழுமையாக புரிந்து கொண்டார்களா எனத் தெரியவில்லை. மதக் கட்டுப்பாடு மிகுந்த அன்றைய சூழலில் அவர் செய்தது மாபெரும் புரட்சி. ஓய்வு நாளில் அற்புதங்கள் செய்ததால் யூதர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. யூதர்கள் அதிகாரத்தால் அன்று ஜெயித்தார்கள், ஆனால் கொள்கையால் இயேசுவிடம் தோற்றார்கள். உலக மக்கள்தொகையில் அதிகம் பேர் கிறித்தவ மதத்தை பின்பற்றுவதே இதற்கு சாட்சி.   சத்தியத்தைப் பின்பற்றுபவர்களின் கண் பார்த்து பேசுவது இயலாத காரியம். மனோவேகத்தில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் போர் நடந்த குருட்சேத்திர யுத்தக்களத்துக்கு நம்மால் செல்ல முடிகிறதல்லவா? கோயிலின் பிரம்மாண்டமான கோபுரத்துக்கு முன் நாம் நம்மை சிறு எறும்பாக உணர்கிறோமா இல்லையா? புத்தர் இறந்துவிட்டார் அவர் போதனைகள் இன்றும் வாழ்கிறது. தர்மச்சக்கரம் சுழன்று கொண்டேயுள்ளது. அநீதியை எதிர்த்து சத்தியத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு சோதனைகள் தோன்றலாம், கிருஷ்ணனின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ஜெயித்தால் மண்ணை ஆள்வாய். மரணித்தால் சுவர்க்கம் புகுவாய் எனவே மனந்தளராமல் முன்னேறிக் கொண்டேயிரு.         இன்னொரு வாசல்   ஆசைப்பட்டது கிடைத்தவுடன் நாம் இதைத்தான் தேடினோமா என்று எண்ணுகிறோம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு நெருப்பு எரிந்து கொண்டுதானுள்ளது. அந்த நெருப்புக்கு எண்ணெய்விட்டு வளர்ப்பது நாமே. உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் செல்வத்தைத் தேடி ஓடுகிறார்கள். மீதி பேர் பெண்களையெல்லாம் தன் ஆசைநாயகி ஆக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். நல்லவர் ஒருவர் உள்ளார் எனில் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை போலத்தான் உண்மையை தேடும் ஒருசிலருக்காகத்தான் இந்த உலகம் இன்றுவரை நிலைத்துள்ளது.   தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே நோக்கத்துடன் அதர்மத்துக்கு தோள் கொடுத்தால் வம்சத்துக்கே தீராப்பலி வந்துசேரும். சித்தார்த்தன் மனிதன்படும் துயரங்களுக்கான காரணத்தைத் தேடி ஓடினான். அவனை அரண்மனையிலிருந்து வெளியேற்றிய சக்தியே அவனுக்கு ஞானத்தைப் பரிசளித்தது. உண்மையின் பாதையை தேர்ந்தெடுத்ததால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார் இயேசு. தச்சன் மகனின் பேச்சைக் கேட்க கூட்டம் கூடியது, ஏனெனில் பிரசங்கத்தில் உண்மை இருந்தது. கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டவர்கள் விட்டில் பூச்சியைப் போல் நெருப்புக்கு இரையாவார்கள். உண்மையின் ஒளிக்கு விளம்பரங்கள் தேவையிருக்காது.   பேரழகிகளையெல்லாம் ஒருநாள் மரணம் விழுங்கப்போகிறது. அவர்களை நினைத்து ஏங்கிக் கிடப்பதால் பயனொன்றுமில்லை. தோலில் சுருக்கத்தையும், கேசத்தில் நரையைும் பரிசாகக் கொடுத்து காலம் எப்படி அவளை சின்னாபின்னப்படுத்தியுள்ளது என்று பார். நீ மட்டுமே குழம்புவதாக நினைக்காதே, போர்க்களத்தில் அர்ஜூனன் குழம்பவில்லையா? எதையும் உன்னை ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதிக்காதே. இடம் கொடுத்தால் ஆயுள் முழுவதற்கும் அதற்கு அடிமையாக இருக்க வேண்டியிருக்கும். இயேசுவின் போதனைகளில் கூட நீ முரண்பாடுகளைக் காணலாம். அதனைக் காரணமாக வைத்து அவரின் உண்மைத் தன்மையை சந்தேகிக்காதே.   ஒரு செயலைச் செய்வதற்குரிய விருப்பார்வம் கடவுளிடமிருந்து வருகிறது. எந்த சக்தி நம்மை பிறக்க வைத்ததோ அந்த சக்தி நம்மை கருவியாக உபயோகப்படுத்தி தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறது. கடவுளின் கைகளில் பொம்மைகளைவிட நாம் மேலானவர்களல்ல. எல்லைக்குட்பட்ட மனம் தனது நம்பிக்கைகள் பொய்க்கும்போது பரிதவிக்கிறது. இப்போது அந்த மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்வது கடவுளின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆலயத்தில் திரைச்சீலையை விலக்கினால் தெய்வத்தின் தரிசனம் கிடைப்பது போல், மனத்திற்கும் ஞானத்திற்கும் இடையேயான திரையை நீ விலக்க வேண்டும். எல்லாம் உன்னுள்ளே உள்ளது. வெளியில் கிடைக்கும் தோல்வி போன்ற அழுத்தங்களே உன் மனம் உண்முகப்பட காரணமாகிறது.   இழந்துவிட்ட சுவர்க்கத்தை நினைத்து மனிதன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. புறவுலகை சகல வசதிகளோடும் அமைத்துக் கொண்ட மனிதனுக்கு கடவுள் தேவைப்படாத பொருளாகிவிட்டார். இத்தனை வசதிகள் சுவர்க்கத்தில் இல்லாவிட்டாலும் அங்கு நிம்மதி கிடைக்கும். இதை மனிதன் உணர்வதில்லை. கடவுளைக் கண்டவர்கள் சராசரி வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்வார்கள். பைத்தியமாக, பிச்சைக்காரர்களாகத் தான் அவர்கள் இவ்வுலகில் அலைந்து கொண்டிருப்பார்கள். மதம் ஒரு வாசல் அதற்காக இந்த வாசல் வழியாக மட்டும் சென்றால் தான் கடவுள் வெளிப்படுவார் என்பதில்லை. இறப்புக்கு பிறகும் மதச்சடங்குள் பின்பற்றப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.   இந்த நூற்றாண்டில் மதகுருமார்கள் சட்டத்திற்கு முன் நிற்கவைக்கப்படுகிறார்கள். நாத்திகர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்டுகிறார்கள். கட்டற்ற சுதந்திரம் எனும் போதும் அதற்கு நாமே ஒரு எல்லை வகுத்துக் கொள்வது நல்லது. பக்குவமற்ற ஆட்களால் கருத்து மோதல் கொலையில் போய் முடிகிறது. ஒரு மனிதன் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆன்மீக வாழ்வில் முன்னேற்றமே இல்லையென அலுத்துக் கொள்ளக் கூடாது. ஆன்மீகப் பாதையில் கடவுளை அடைவதற்கு இன்னும் சில அடிகளே இருக்கலாம். புதையல் கிடைக்கவில்லை என அலுத்துக் கொண்டு மேற்கொண்டு தோண்டுவதை நிறுத்தக்கூடாது. பொறுமையோடு நடை போட்டோமானால் வாழ்வின் நோக்கம் இந்த ஜென்மத்திலேயே நிறைவேறும்.   வாழ்க்கையைத் துறந்து பக்கிரியாக அலைபவர்களிடம் போய், உலகியல் ரீதியிலான வெற்றிக்காண வழிமுறைகள கேட்கிறார்கள். நாளை நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையால் தான் படுக்கையில் வீழ்கிறார்கள். வருத்தப்படுபவர்களுக்கு உதவாமல் அது அவர்களின் கர்மபலன் என்று வேடிக்கைப் பார்த்தால் கடவுளின் கோபத்திற்கு ஆளாவோம். கல்லை பொன்னாக்கினால் போதும் மனிதர்கள் யாரையும் கடவுளாக ஒத்துக்கொள்வார்கள். பணத்தை தேடியே ஓடிக்கொண்டிருப்பது காற்றினைச் சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகும்.   ‘நான் இருக்கிறேன். நான் மட்டுமே இருக்கிறேன். ஆணும், பெண்ணுமாக நானே இவ்வுலகில் நிறைந்திருக்கிறேன். இந்த அலைகள் எழுவதற்கு நானே காரணம். கிழக்கு சிவப்பதற்கு நானே காரணம். பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே நீ உலாவிக் கொண்டிருக்கிறாய், நான் பிறக்கவுமில்லை, இறக்கவுமில்லை என்றும் நிலையாய் இருக்கிறேன். அன்பை வெளிப்படுத்த ஒரு உதடையும், அரிவாளை ஓங்க ஒரு கையையும் நானே தேர்ந்தெடுக்கிறேன். ஓர் இரவுக்காகத் தான் மனிதர்களைப் படைத்து ஆட்டுவித்து வருகிறேன். இதோ வலைவிரிக்கிறேன் மீன்களுக்காக அல்ல மனிதர்களுக்காக.   நான் பைத்தியக்காரன் தான் அப்படியென்றால், நான் படைத்த உலகம் பைத்தியக்கார விடுதி தானே. மேய்ப்பன் எப்பொழுதும் தப்பிய ஆட்டைத்தான் தேடிக் கொண்டிருப்பான். ஆட்டுமந்தையில் எந்த ஆடு எப்போது உணவாகும் என்று ஆட்டுக்குத் தெரியாது. ஆட்டிடம் சம்மதம் கேட்டா பலியிடுகிறார்கள். இது மனிதனுக்கும் பொருந்தும். மரணநிழல் மனிதனை துரத்திக் கொண்டேயுள்ளது. அவளை நான் நெருங்கிக் கொண்டே இருக்கிறேன்--’. கடவுள் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார். ஆதாம் ஏவாளை கடவுளிடமிருந்து காப்பாற்றி கொண்டு சென்றுவிட்டான். கடவுள் ஆதாமை என்ன செய்தார் என்று தெரியாது. ஆனால் ஏவாள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருந்து கொண்டு ஆதாமை தேடிக் கொண்டிருக்கிறாள். தாயானாலும், தாரமானாலும் சிவகாமியின் சிந்தனை சிவனைப்பற்றியதே.                                               பரிதவிப்பு   சுயசிந்தனையை வரமாக பெற்ற மனிதன் தனது நிம்மதியை பறிகொடுத்துவிட்டான். தன்னுணர்வு பெற்றவர்கள் கடந்த காலத்தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கின்றனர். மனதுக்கு பிடித்தவை அமையாத போது இறக்கும் வரை அதற்காக ஏங்கித் தொலைக்க வேண்டியிருக்கிறது. தனக்கு வாய்த்தது போதுமென்ற மனநிறைவு இங்கே யாருக்கும் வருவதில்லை. அழகு என்பதை தோற்றத்தோடு சம்மந்தப்படுத்திப் பார்க்கிறார்கள் மக்கள். பணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனிதன், பணம் சேர்ந்தவுடன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அலட்சியப்படுத்துகிறான்.   அடுத்த வேளை உணவுக்கு உழைத்தாக வேண்டுமென்றால், பம்பரமாய் சுழல வேண்டியிருக்கும். வங்கிக் கணக்கில் ஒரு கோடி இருந்தால் யார் தான் சுமை தூக்க முன்வருவார்கள். வறுமை சிலுவையைவிட சுமையானது. உலகின் இத்தனை ஓட்டங்களுக்கும் காரணம் அரை ஜான் வயிறுதான். எண்ணிப்பாருங்கள் எத்தனை கோடி கால்களை நனைத்திருக்கும் இந்தக் கடலலை. சதுரங்க ஆட்டத்தில் வெட்டுண்ட சிப்பாய்களுக்காக சக்கரவர்த்தி துக்கம் அனுசரிப்பதில்லை.   ஆன்மாவுக்கு தாங்க இயலாத சுமையை அளித்து, அந்த மனிதன் பரிதவிக்கும் போது தனக்குள் சிரித்துக் கொள்பவன் கடவுளா? தந்தையானவர் மகனுக்கு என்ன தேவை என்பதை அறிந்திருக்க வேண்டாமா? வாழ்க்கை கப்பல் கரை சேரும் என்ற உத்தரவாதத்தைக் கடவுளால் கூட தர முடியாது. பகலைத் தேடுகிறது இரவு, இரவைத் தேடுகிறது பகல் அதன் நோக்கம் நிறைவேற சிறிதளவாவது சாத்தியக்கூறுகள் உண்டா? இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். சில சங்கடமான சூழ்நிலைகளில் உள்ளுக்குள் இருக்கும் ஏதோவொன்று உங்களை வழிநடத்துவதை அறிந்திருக்கின்றீர்களா?   மதுவும், மங்கையும் இல்லாவிட்டால் வாழ்வு நிம்மதியையும், சுவாரஸியத்தையும் இழந்துவிடும். எஜமானன் தான் கொடுத்த வெள்ளிக் காசினை வைத்து உழைத்து அதை இரட்டிப்பாக்கும் வேலைக்காரனையே விரும்புவான், அப்படியே கடவுளும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உனக்கு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் அதற்கான பலனை உரிய நேரத்தில் தந்தையானவர் மகனுக்கு தந்துவவுவார். ஒரு கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் எத்தனை உழைப்பு இருக்கிறது. உலகைப் படைக்க கடவுள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்.   முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்தவர்களுக்கு வெற்றியின் அருமை தெரியாது. இன்றுடன் ஆயுள் முடிவடைகிறது என்று எண்ணிக்கொண்டால் வேலையை முடிப்பதற்கு நேரமே போதாது. பணக்கார கனவான்களிடம் பசியைப் பற்றிக் கேட்டால், கிலோ என்ன விலை என்றுதான் கேட்பார்கள். இயற்கை என்னை ஏற்றுக் கொண்டதினால் தான் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். பாதுகாப்பின்மை உணர்வுதான் மேலும் மேலும் பணத்தைச் சேர்க்க மனிதனைத் தூண்டுகிறது. பெண்ணின் மீது காட்டும் அதீதமான காதலை கடவுளின் மீது திருப்பினால் ஞானம் கிட்டும்.   இந்த உலகத்தை கடவுள் ஒருவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். ஒப்பந்தக்காரர் மனித வளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நன்கறிந்து இருக்கிறார். எஜமான விசுவாசம் அதிகமாக இருப்பவர்களே இவ்வுலகில் பணக்காரராக இருக்கிறார்கள். கோடி கோடியாக கொட்டுபவனைவிட பையிலிருக்கும் ஒத்தை ரூபாயை உண்டியலில் போட்டு போகுபவனே உயர்ந்தவன். நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பவர்களை இவ்வுலகில் விரல்விட்டு எண்ணிவிடலாம். கொலை செய்வதைவிட மனிதனின் நம்பிக்கைச் சுவரை உடைத்தெறிவது மகாபாவம்.   ஒரு மனிதனை நியாயந்தீர்க்க மனதால் கூட தீமை செய்யாதவர்களாக இருக்க வேண்டும். இந்த பாவிகளுக்கான உலகத்தில் மன்னிப்பு கடவுளின் வழியாக இருக்கிறது. புத்தர், இயேசு போன்றவர்கள்தான் மனித எல்லைக்கு உயர்ந்தனர். நாமெல்லோரும் வெறும் ஆட்டு மந்தைகள் தான். மரம், மலையும் கூட மகிழ்ச்சியாக இருக்கிறது. மனிதன் தன் மெய்யான நிலையை அறிந்துகொள்ள முடியாதபடி அவனது சிந்தனைத்திறன் தடுக்கிறது. நான் இல்லாமல் போகும்போது உலகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். உலகிற்கு சாதாரண மனிதனின் இருப்பு அவ்வளவு முக்கியமானதில்லை.   மனிதனுக்குள் சமாதானம் உண்டானால், கருணை ஊற்றாக அவன் உள்ளம் திகழ்ந்தால் நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் உடைப்பட்டுவிடும். இனிமேலும் என்நாடு என்மக்கள் என்ற குறுகிய கண்ணோட்டம் தேவைப்படாது. மகான்களின் போதனைகளை கொலைகாரன் கூட தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான். கடவுளே பூமிக்கு வந்தால் கூட அதிசயத்தை நிகழ்த்திக் காட்டச் சொல்வார்கள். சித்து விளையாட்டில் ஈடுபவன் தன்னைப் பின்பற்றுபவர்களை மரணத்தில் இருந்து காக்க முடியுமா?   இந்த உலகம் கைதிகளின் கூடாரம். மனிதன் தன்னைத் திருத்திக் கொள்ள இறைவன் வழங்கும் அரிய வாய்ப்பு. இரட்சகர்கள் தன் அகந்தையைக் கொன்றதினாலேயே இறைவனைக் கண்டனர். எல்லைக்குட்பட்ட மனதால் இறைவனைக் காண முடியாது என அவர்கள் உணர்ந்திருந்தனர். மரணம் இந்த உலகத்தில் சமத்துவத்தை நிலைபெறச் செய்கிறது. ஏற்கனவே நிகழ்ந்தது மீண்டும் நிகழக் கூடிய சாத்தியக்கூறுகள் நிறைந்த உலகமிது. நடக்கப் போவதை தலைகீழாக நின்றாலும் நம்மால் தடுத்து நிறுத்த முடியாது.   பணத்தையும், புகழையும் போதுமென்று சொல்ல மனம் இடம்தராது. கடவுள் ஊனமான வயிற்றை எனக்கு படைத்திருந்தால் பசி இருந்திருக்காது. போட்டி மிகுந்த உலகில் மற்றவரின் முதுகில் குத்தித்தான் முன்னேற வேண்டியிருக்கிறது. பாவ கணக்கு வழக்குகளை கையாளும் சித்திரகுப்தனுக்குத்தான் தெரியும் நான் இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டுமென்பது.     மகாபுருஷர்   மனிதனில் சரிபாதி விகிதத்தில் ஆணும் பெண்ணும் இருக்கின்றனர். இறக்கும் வரை மனிதனால் பெண்ணாசையிலிருந்து விடுபட முடியாது. பெண்ணாசையால் மீண்டும் பிறந்ததை அறிந்த பீஷ்மன் இந்தப் பிறவியிலும் பெண் மோகத்தில் சிக்கிக் கொண்டால் அடுத்து மீண்டும் பிறவியெடுக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தான். கங்கை புத்திரனான பீஷ்மன் பெண்ணைப் பற்றிய ஆசைகளை தனது மனத்திலிருந்து அடியோடு தூக்கியெறிந்து சுயக்கொலை செய்து கொண்டான்.   பீஷ்மன் ராஜ்ஜியத்தைத் துறந்தது பெரிதல்ல. லெளகீகமே வேண்டாமென்று முடிவு எடுத்தவனுக்கு அரியாசனம் எதற்கு. பாலின ஈர்ப்பிலிருந்து விடுபட்டவனுக்கு எதிரேயுள்ள ஏதோவொன்று விலகிக் கொள்கிறது. கடவுளின் தரிசனம் அவனுக்கு காணக் கிடைக்கிறது. கடவுள் நம் வழியே செயல்பட வேண்டுமென்றால் நம்மிடமுள்ள அகந்தையை அவர் வதம் செய்ய நாம் வாய்ப்பளிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல.   மனிதனின் அகந்தையை திருப்தி செய்துகொள்ள ஏற்படுத்தப்பட்டது தான் இவ்வுலகம். மனம் தான் இந்த மாயாலோகத்தை உண்டு பண்ணுகிறது. உலகில் நடந்த சமர்களுக்கெல்லாம் அகந்தையே காரணம். சில மனிதர்களின் நான் என்ற அகந்தையை கடவுள் கொலை செய்கிறார். அந்த மனிதனின் வழியே இறை சக்தி வெளிப்பட ஆரம்பிக்கிறது. சலனமற்ற குளத்தில் சூரியன் பிரதிபலிப்பதைப் போல்.   தர்ம சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது. உத்தமர்கள் சோதனைக்குள்ளாக்கப்படுவது இந்த உலகில் வழி வழியாக நடந்து வந்துள்ளது. தனது சகோதரனுக்காக அம்பையைக் கவர்ந்து வருவதும். வெல்லப்பட்ட அம்பையை ஏற்க சாளுவ மன்னன் மறுத்துவிட, தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டும் அம்பையை கருணையின்றி புறக்கணிப்பதும். நிராகரிப்பின் வலி பொறுக்க முடியாமல் அம்பை தற்கொலை செய்து கொள்வதும். பீஷ்மனை பலிதீர்க்க அவள் சிகண்டி உடலில் புகுந்து கொள்வதும். தகுந்த சந்தர்ப்பத்துக்காக அவள் காத்திருப்பதும். பீஷ்மனின் முடிவை விதி அம்பாவின் மூலமாக தீர்மானித்திருக்கிறது. வாழ்வதற்கு ஆசைப்படுபவன் பேடிகளின் மீது அம்பு எய்ய மாட்டேன் என ஒரு நாளும் சொல்ல மாட்டான்.   திரெளபதி உடைகளை துச்சாதனன் களையும் போது சத்தியத்தின் குரல் அசரீரியாக பீஷ்மனுக்கு மட்டும் கேட்டது. பெண்களை அவர்கள் விரும்பினாலன்றி வேறு யாராலும் அவர்களை நிர்வாணப்படுத்த முடியாதென்று. சபையில் நடந்தது என்னவென்று அவர் கண்ணுக்குப் புலப்படவில்லை. வெறும் காரிருளைத் தான் அவர் தன்னெதிரே கண்டார். இருக்கையிலிருந்து எழ முடியாமலும், தொண்டையிலிருந்து குரல் எழுப்ப முடியாமலும் அவர் கல்லாகிவிட்டார். சற்று நேரத்திற்கு அவர் சிலையாகிவிட்டார்.   தந்தையிடமிருந்து நீ விரும்பும் போது தான் உன் மரணம் நிகழும் என வரம் வாங்கிய பீஷ்மன். குருட்ஷேத்திர போரில் சிகண்டியால் வீழ்த்தப்பட்டான். சிகண்டி மீது அம்பு எய்திருக்கலாம் அவன் பின்பற்றி வந்த தர்மம் அதை தடுத்தது. பெண் அம்சம் கொண்டவர்களை அதுவும் போர்க்களத்தில் கூட நிராகரிக்கும் அளவுக்கு பீஷ்மனுக்கு என்ன நேர்ந்தது. சத்தியம் எந்த ரூபத்தில் வந்து யாரைச் சாகடிக்கும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அம்புப்படுக்கையில் பீஷ்மன் கிடந்த போது பீஷ்மனுக்கு மரணத்தாகம் எடுத்தது. அதைத் தணிக்கக் அவனது தாய் கங்கை வரவில்லை.                                                   காலடி   பரத கண்டம் முழுவதும் இந்துமத சனாதன தர்மம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வந்தது. மதம் மனிதனிடத்தில் உள்ள மிருகத்தை வளர்த்தெடுத்தது. மதகுருமார்கள் அரசனுக்கு இணையான அதிகாரம் பெற்றிருந்தார்கள். மடாதிபதிகளின் தவறுகளை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை. மரணம் எப்போது வேண்டுமானாலும் மனிதனை ஆட்கொள்ளலாம். மரணப்புதிரை அவிழ்ப்பதற்கு சென்றவரில் மீண்டவர் எவருமில்லை. தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத சக்திக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும். நம் கைகளில் இருக்கும் வாழ்க்கையை மரணம் பறித்துக் கொள்வதற்கு முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.   போகத்தை விட்டொழித்தால் இறந்த பின்பு சுவர்க்கம் கிடைக்கும் என்பது ஏமாற்று வேலை. இப்படிச் சொல்பவன் திரைமறைவில் ராசலீலை புரிந்து கொண்டிருந்தான். காவி உடையணிந்தவனின் மனதில் காமவிகாரங்களே நிறைந்திருந்தன. பச்சிளம் குழந்தைகள் இறக்கின்றதே அவை செய்த பாவம் என்ன. கடவுளின் படைப்பு என்றால் அவை ஏன் பூரணமடையவில்லை. உடல் ஊனத்துடன் எத்தனைக் குழந்தைகள் பிறக்கின்றது. யோகிகளையும், ஸ்திரி லோகனையும் ஒரே தீதான் எரிக்கப் போகிறது என்றால் ஐம்புலன்களையும் அடக்கி நீ என்ன சுகத்தைக் கண்டாய்.   வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு இல்லாமல் போய்விட்டது. பெண்கள் போகப் பொருளாகவே கருதப்பட்டார்கள். கும்பலாகக் கூடி இப்போது கட்சி ஆரம்பிப்பது போல அப்போது மதத்தை ஸ்தாபித்தார்கள். மக்கள் இதனைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்த்தார்கள். மரணசர்ப்பம் தீண்டியேத் தீரும் எனும் போது பயந்து ஒளிந்து கொள்வதால் என்ன லாபம் என மக்கள் கருதினார்கள். கடவுளைக் கண்டேன் எனச் சொன்னவர்களுக்குப் பின்னால் மக்கள் ஆட்டுமந்தையைப் போல் அணிவகுத்துச் சென்றார்கள். நீங்கள் இறந்த பிறகு உங்களை சுவர்க்கத்துக்கு அனுப்ப என்னால் இயலும் என சவால்விட்டவர்களின் காலடியில் மக்கள் சரண்புகுந்தார்கள்.   இறப்புக்கு பிறகான வாழ்வுக்காக கடவுளைச் சாகடித்துவிடக் கூட மக்கள் தயாராய் இருந்தார்கள். உயிரோடு இருக்கும்வரை எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி இருந்தது. யோகிகளின் உபன்யாசத்தைக் கேட்டுவிட்டு சத்தியத்தைப் பின்பற்றியவன் மட்டும் சாகாமல் இருந்துவிடுவானா என எதிர்க் கேள்வி கேட்டார்கள். மலத்தைத் தேடித் தின்னும் நாயைப் போல சுகத்தின் பின்னாலேயே மக்கள் அலைந்தார்கள். வலிமையானவர்கள் மட்டுமே வாழமுடியும் என்ற நிலையை மக்கள் ஏற்படுத்தினார்கள். அடக்கமாக இருந்தாலும் மரணம் தானே பரிசாகக் கிடைக்கிறது என எதிர்வாதம் புரிந்தார்கள். ஒருவன் மற்றொருவனை வீழ்த்த எப்போதும் தந்திரத்தோடே அலைந்தார்கள்.   தான் வாழ்வது உத்தமமான வாழ்க்கையா என சுயப்பரிசோதனை செய்து கொள்ள அவர்கள் விருப்பப்படவே இல்லை. போராடி எதனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றைய நிலையே அப்போது நிலவி வந்தது. கடவுளை நம்புகிற அடியார்களை செத்த பின்பு என்ன ஆவோம் என்று கேள்வி கேட்டு மடக்கினார்கள்.   நெறியற்றதனாலேயே காபாலிகம் மீதான ஈர்ப்பு மக்களிடம் படிப்படியாக குறைந்து போனது. உலகம் மாயை என்ற பெளத்தத்தின் பின்னால் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். கடவுள் மறுப்பு கொள்கையைக் கொண்ட புத்த மதம் அன்றைய காலகட்டத்தில் பாரதம் முழுவதும் வியாபித்திருந்தது. விஷ்ணுவின் கடைசி அவதாரமாக கருதப்படும் புத்தர் அவதரித்த பின்பு சைவ சமயத்தைக் காக்கும் பொருட்டு சிவனின் அவதாரம் நிகழ்ந்தது. பரம்பொருள் கேரளாவில் உள்ள காலடியில் வசித்து வந்த ஆர்யாம்பாளை தனது தாயாக தேர்ந்தெடுத்தது, அவர் தான் இக்கட்டான காலகட்டத்தில் இந்து மதத்துக்கு புது இரத்தம் பாய்ச்சிய ஆதிசங்கரர். இந்து சமயம் அவருக்கு மிகுந்த கடன்பட்டுள்ளது. சங்கரனின் வைராக்கியத்தாலே தான் இந்து சமயம் இன்றளவும் நிலைத்து நின்றுகொண்டு இருக்கிறது. ஆதிசங்கரர் வாழ்ந்த காலகட்டம் பற்றி மிகுந்த சர்ச்சைகள் இருந்தாலும். அவர் மேற்கொண்டது சாதாரண மனிதனால் செய்யக்கூடிய காரியங்கள் அல்ல. அவர் எழுதிய கீதா பாஷ்யமே ஆகச்சிறந்தது எனக் கொள்ளலாம்.                                 மகாவீரர்   வேத காலத்திற்கு முற்பட்ட சமணமதத்தின் இருபத்துநான்காவது தீர்த்தங்கராக மகாவீரர் தோன்றினார். இவரது காலத்தில் சமணம் பேரலையாக உலகமக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. வர்த்தமானர் என்ற பெயரில் அரச குடும்பத்தில் பிறந்தாலும் இவரின் மனம் துறவறத்தையே நாடிவந்தது. சததியமும், ஆளுமையும், வைராக்கியமும் மிகுந்தவர் ஆதலால் மகாவீரர் என இவர் போற்றப்படுகிறார். இல்லறத்தை தனது முப்பதாவது வயதில் துறந்த அவர் அதன் பிறகு பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து சாலா மரத்தினடியில் ஞானம் பெற்றார்.   திகம்பரனாக திகழும் இவரது பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். இவரே சமணத்தில் தோன்றிய கடைசி தீர்த்தங்கரர் ஆவார். அவர் உலகிற்கு மூன்று ரத்தினங்களை விட்டுச் சென்றுள்ளார். அவையாவன நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் ஆகும்.   எண்ணத்தின் பின்னாலிருந்து இறைவன் பார்க்கின்றான். உலகில் வாழும் மக்களிடத்தில் கடவுளின் வெளிப்பாட்டில் வேறுபாடு நிலவுகிறது. துக்ககரமான வாழ்க்கையை மனித குலத்திற்கு அளித்த அவன் எங்கே இருக்கின்றான் என யாருக்கும் தெரியாது. கடவுள் போகத்தை அனுபவிக்க தனக்கு ஓருடல் போதாது என்பதால் தான் மனிதனைப் படைத்திருக்கின்றானா? உயிர்களிடத்தில் பாகுபாடு காட்டும் அவனை கருணையாளன் என்று சொல்ல முடியுமா? இகலோகச் சிறையில் மெய்க்காப்பாளனாக விளங்குபவனையே நாம் கடவுள் என்கின்றோமா?   மனஅளவில் செய்யப்படும் இம்சைகளுக்கு தண்டணை வழங்க அவன் ஏன் முன்வரவில்லை. உடலளவில் செய்யாமலிருந்தாலும் மனத்தில் எண்ணுவதே குற்றமில்லையா. தான் தப்பிக்க உலக விதிமுறைகளில் நிறைய ஓட்டைகளை உருவாக்கியவன் தான் கடவுள். கடவுளின் சாயலைச் கொண்டிருப்தால்தான். மனிதன் இன்னும் மிருகமாகவே இருக்கிறான். விதியை தனது சுயநலத்துக்காக வளைக்க முற்படுபவர்களுக்கு யார் உத்வேகம் அளிப்பது. இருப்பதை வைத்து திருப்தியடையாமல் உலகையே வெல்ல நினைத்தால் ஏன் இரத்த ஆறு ஓடாது.   நீ இப்போது முன்னேற வேண்டுமென்றால் மற்றவனின் முதுகை ஏணிப்படியாக்கு என்பதையே இன்றைய சமூகம் சொல்லித் தருகிறது. உலகையே வென்ற சக்கரவர்த்திகளெல்லாம் இறுதியில் என்ன கொண்டு சென்றார்கள். வலுவுள்ளவர்கள் போராடி பெற்றுக் கொள்ளலாம் என்றால் திக்கற்றவர்கள் என்ன செய்வது. அவர்களுக்கும் கடவுள் படியளக்க வேண்டுமல்ல்வா? நீர்க்குமிழியில் சூரியன் பிரதிபலிப்பதால் அது கதிரவனை சொந்தம் கொண்டாட முடியுமா?   பணத்தை வேட்டையாடி அதன் மூலம் இறப்பதற்கு முன்பே போகத்தை அனுபவித்து தீர்ப்பதே இன்றைய வாழ்க்கையாகிறது. வாழ்க்கைக்கான நெறிமுறைகளை தீர்த்தங்கரர்கள் சொல்லியிருந்தும் எத்தனை பேர் அதனை நடைமுறைப்படுத்துகிறார்கள். போகத்தில் மிதக்கும் கடவுளைத்தானே பின்பற்றுகிறது மனிதஇனம். சுவர்க்கத்தின் கடவுச்சீட்டு மாந்த்ரீகர்களிடம் கிடைக்கும் போது உலகத்தில் சத்தியம் எவ்வாறு நிலைபெறும். கடவுள் இந்த உலகத்தை சித்ரவதைக் கூடமாக அல்லவா மாற்றி வைத்துள்ளான். புலன்களுக்கு தீனிபோடுவதிலேயே மனிதனின் வாழ்நாள் கழிகிறது.   அன்பிற்கு அர்த்தமில்லாமல் போன இவ்வுலகத்தில் மனித இனம் இனி எவ்வளவு காலத்திற்கு நீடித்திருக்கும். குற்றவுணர்ச்சி இல்லாமல் தவறு செய்பவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்தத் தவறை மூடிமறைத்து விடுகிறார்கள். மகத்தான மனிதர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை சில சமயங்களில் கடவுள் கூட மறந்துவிடுகிறார். பெண்ணை உடலாகப் பார்க்கும் இந்தச் சமுதாயம் மகாவீரரை எப்படி புரிந்து கொள்ளும். மதம் எனும் கிணற்றுக்குள் இருந்து பார்த்தால் மகாவீரரை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும். கருணையே கடவுளென போதித்த அவரைப் பற்றி இன்று எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறோம். முக்தியில் நாட்டம் இல்லாவிட்டால் கடவுள் கைகளில் உள்ள நூல் கொண்டு ஆடும் பொம்மையாக இறுதி வரை இருந்துவிட வேண்டியது தான்.                                     நஞ்சு   விகாரமான தோற்றமுடைய சாக்ரடீஸுக்கு விடை தெரிந்திருந்தது. தமக்குப் பின்னே தோன்றப் போகும் தீர்க்கதரிசிகளைப் பற்றி அவர் அறிந்தே இருந்தார். சமூகத்தின் அரண்களையெல்லாம் தமது பேச்சால் உடைத்தெறிந்தார். அவரது கூட்டத்தில் இளைஞர்கள் திரளுகிறார்கள் என்பதை ஒற்றறிந்து கிரேக்க அரசப் பிரஞைகளிடம் தெரிவித்தனர் கைக்கூலிகள். கோடியாய் குவித்து கடவுளை திருப்திபடுத்தும் உனக்கு எதிரே பசியால் வாடும் ஏழைகள் நிற்கிறார்கள் என்பது தெரியவில்லையா என்று அவர் கர்ஜித்தார். அக்காலகட்டத்தில் பத்து பேர் ஒன்று கூடி மதத்தை ஸ்தாபித்தார்கள் தான் மட்டுமே கடவுளென்று பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். வாழ்க்கை மனிதனாய் மலர்வதற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றார் சாக்ரடீஸ். வாழ்ககையின் குறிக்கோள் கடவுளை அடைவதல்ல மண்ணில் அன்பைப் பரப்புவதே என்றார். மதகுருமார்களுக்கு வளைந்து கொடுக்காமல் தான் கண்டடைந்த சத்தியத்தை போதித்தார். எந்தவித அச்சுறுத்தலையும் அவர் பொருட்படுத்தவில்லை கடவுளைக் காட்டி உங்களை அடிமையாக்க முயல்பவர்களிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்றார். அடக்குமுறையை போர்க்குணத்துடன் எதிர்த்து நில்லுங்கள் என்றார். ஏதென்ஸ் நகரைவிட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து சுகமாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் தன் கொள்கைக்காக எதையும் இழக்க தயாராக இருந்தார்.   சித்தாந்தம் சோறு போடாது என்றார்கள். ஒருநாள் உங்கள் கோட்டையைத் தகர்ப்போம் என முழக்கமிட்டார். சத்தியத்தின் வழியில் நிற்பவர்களையே அவர் மக்களை ஆளத் தகுதியுடையவர்களாக கருதினார். அரசாங்சம் மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்றார். மக்களின் நலனில் அக்கறை உள்ளவனே தலைவன் என்றார். விஷம் தடவிய குத்துவாலுடன் மரணவியாபாரிகள் அவரைப் பின்தொடர்ந்த வண்ணம் இருந்தனர். அச்சுறுத்தலுக்கு அடிபணியாத உண்மையின் வழியை நாடுபவர்களின் கூட்டத்தை அவர் நகரெங்கும் உருவாக்கினார்.   கிரேக்க அரசாங்கம் எப்படிச் செயல்படுகிறது என்று யாருக்கும் தெரியாது. அப்படியிருக்க மக்களாட்சி என்பதற்கு என்ன அர்த்தம் என்றார். ஏதென்ஸில் சமூக கட்டமைப்புகளை உடைப்பவர்கள் கடவுளுக்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்பட்டனர். உடலுக்கு முக்கியத்துவம் தராதீர்கள் ஆன்மாவைக் கண்டுகொள்ளுங்கள் என்பதே அவரது உபதேசங்களின் முக்கிய சாரமாக இருந்தது. என்னை விஷம் கொடுத்து கொன்றுவிடலாம் அவர்கள், எனது போதனைக்கு முன்னால் அக்கூட்டம் மண்டியிட்டுத்தான் ஆகவேண்டும். எந்த ஒன்றையும் விட மனிதனுக்கு உண்மையே சிறந்த செல்வம் என்றார்.   ஒருமுறை தான் என்னைக் கொல்ல முடியும் என்ற வாசகம் அவரைக் கைது செய்ய துணிந்தவர்களின் மனத்தில் கிலியூட்டியது. வீரனுக்கு தூக்கு மேடையும் மணமேடைதான் என்று அவர் நிரூபித்துக் காட்டினார். விஷம் கொடுக்க வந்த காவலாளியின் கைகள் நடுங்குவதைக் கண்ட அவர், இந்த உடல் ஒரு சிறை இதிலிருந்து விடுதலையாகிறேன் என்று மகிழ்வுடனிருங்கள் என்றார். கடவுளை உங்களால் காட்ட முடியுமா என்று கேட்டதற்கு விஷம் கொடுக்கிறீர் மறுவுலகத்தில் அவர் வசிக்கிறாரா என்றார் கேலியாக. கோப்பையில் உள்ள விஷத்தை சிறிது நேரத்தில் அருந்தப் போகிறேன் என்ற எந்தக் கலக்கமும் சிறிதுமில்லை அவர் முகத்தில். விஷம் அருந்திய சில நொடிகளில் மெல்லிய குரலில் முணுமுணுத்தார் உனக்கும் சிலுவைதானா என்று அவர் கேட்டிருக்க வேண்டும். அவரது போதனைகள் இன்றளவும் நிலைத்து நிற்க அவரது சாவே ஒரு காரணமாக அமைந்துவிட்டது. மதம் மனிதனின் சுதந்திரத்தைப் பறிக்கிறதா இல்லையா என்று அவர் உயிரோடு இருந்திருந்தால் பதில் சொல்லி இருப்பார்.   தீர்க்கதரிசிகளுக்கு இவ்வுலகம் சிலுவையையே பரிசளிக்கிறது. மதகுருமார்களிடம் சுவர்க்கத்தின் சாவி இல்லை என்று சொன்னார் சாக்ரடீஸ். சத்தியத்தைக் காப்பாற்ற போராளியாக மரணமடைவது எனக்கு பேரானந்தத்தைத் தருகிறது என்றார். சத்தியப் பேரொளி ஒன்றைவிட வேறெதுவும் கடவுள் இல்லை என்றார் தீர்க்கமாக. மனிதனின் சிந்தனையை எந்த ஒரு அரசும் சிறைப்படுத்த முடியாது என்பதை அவர் உணர்த்திச் சென்றார். உண்மையை வாழ்க்கை நெறியாகக் கொண்டவன் தயக்கமின்றி மரணதேவதையை ஆரத் தழுவிக் கொள்ளலாம் என்றார். சாக்ரடீஸுன் போதனைகள் இன்றும் ஞானத்தின் திறவுகோலாக அமைந்திருக்கின்றன. விஷத்தால் அவரது உடலைத்தான் கொல்ல முடிந்தது. அவரது போதனைகள் இன்றளவும் ஆட்சியாளர்களை கலங்கடித்துக் கொண்டுதான் இருக்கிறது. போராளியின் கூர் ஆயுதம் அவனது வார்த்தைகளே என்ற அவர் மரணத்தை வென்று காட்டினார். மதநூல்களை வைத்து மக்களை அடிமைபடுத்த நினைத்த மதகுருமார்கள் அவரைக் கண்டு அஞ்சினர். அவரது போதனையின் நெருப்பு இன்றும் மக்களிடையே பற்றி எரிகிறது.     [sleep1.jpg]கவிதைகள்   துயர்மிகு இரவில் எனது கண்கள் தூங்க மறுத்தன மரணத்தின் கைகள் என்னை ஆரத்தழுவிக் கொண்டன விழிப்பற்ற உறக்கத்தை விரும்புகிறது என் இதயம் நினைவு முட்கள் உடலெங்கும் காயத்தை ஏற்படுத்துகிறது உறக்கத்தை நாடும் எனது ஆன்மா மரணத்தை பரிசாகக் கேட்கிறது படுக்கையில் முள் விடியலை வெறுத்தொதுக்குகிறது என் கண்கள் பாரத்தை இறக்கிவைக்க தகுந்த இடம் தேடுகிறேன் நான் மரணம் எனக்கு சிறகுகள் தரட்டும் மனிதன் இல்லாத தீவுகளில் கொஞ்சநாள் இளைப்பாறட்டும் எனது ஆன்மா அமைதியின் பாடலில் லயித்திருந்தேன் சிறிதுநேரம் ஓய்வை நாடுகிறது எனதுடல் மரணத்தை யாசகமாய்க் கேட்கிறது எனது இதயம் நான் விடைபெற்றுச் சென்றதற்காக வருந்தாதீர்கள் விடுதலையின் கரத்தில் என்னை ஒப்படைத்துவிடுங்கள் பிரிவு மதிப்புமிக்கது துக்கம் மிகுந்த அழுகையால் அதைக் களங்கப்படுத்தாதீர்கள் பழிகாரா உனது தாகத்துக்கு எனது இரத்தத்தை அல்லவா கேட்கிறாய் துயரக்கடலில் என் படகு தள்ளாடுவது உங்களுக்கு வேடிக்கையாய் இருக்கிறது குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன் எனக்கு வாழ்க்கையிலிருந்து விடுதலை அளியுங்கள் விளக்கை அணைத்துவிடாதே எனது ஆன்மா அந்த வெளிச்சத்தைத் தான் நம்பியிருக்கிறது கள்ளங்கபடமற்ற ஒருவரைக்கூட என் வாழ்நாளில் நான் சந்தித்ததில்லை கடவுளின் ராஜ்ஜியத்தில் நுழைய ஆசைப்படுகிறேன் எனக்கு விடைகொடுங்கள் அப்போதாவது கடவுளின் பாடலை எனது செவிகள் கேட்கட்டும்.   தன்னைவிடவும் அதிகமாய்த் தெரிந்திருப்பவரை மனிதன் தேடிப் போகிறான் பூசாரிகள் சடங்குகள் என்ற பெயரில் அவனைச் சுற்றிலும் சுவர்கள் எழுப்பியுள்ளனர் மதகுருமார்களிடம் அனைத்துக் கேள்விகளுக்குண்டான பதிலையும் பெற்றுவிடலாம் என மனிதன் நம்பிக் கொண்டிருந்தான் வலியவர்களின் அடக்குமுறையை கடவுள் விட்ட வழியென்று எளியவர்கள் பொறுத்துக் கொண்டனர் அதிர்ச்சியான சம்பவங்களை எப்படி எதிர்கொள்வது என்று துரோகிகள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டனர் அலங்கரிக்கப்பட்ட பிணத்திலிருந்து கோடித் துணியை உருவுவதற்கு வெட்டியான் தயக்கம் காட்டுவதில்லை எனது கூக்குரல் வெளியே தெரியாமல் நினைவுச் சுவர் தடுத்துவிடுகிறது கருணையை வேண்டி நிற்கிறான் கவிஞன் அவனது உதிரத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார் கடவுள் கால்களை வருடிய அலைகள் கவிதை நீரூற்றுக்கு வழி காட்டியது வாயில்கள் திறந்திருந்தன இவனை வரவேற்கும் விதமாக சவப்பெட்டி செய்பவனுக்குத் தெரியாது தான் எப்போது சாவோமென்று களைப்பு மேலிட அவன் கீழே விழுந்தான் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் மீதமிருந்தது மரணம் அவனை சிறைப்பிடித்தாலும் உயிர்த்தெழலாம் என்ற நம்பிக்கை இருந்தது அவனுக்கு மூதாதையர்களின் ஆசி அவனுக்கிருந்ததால் தான் இலக்கின் முக்கால்வாசி துாரத்தை அவனால் கடக்க முடிந்திருக்கிறது வசந்தத்தை எதிர்கொள்ளும் நன்னாளை அவன் எதிர்ப்பார்த்திருந்தான் எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொள்ள முயன்ற அவன் இறுதியில் வெறுங்கையோடுதான் விடை பெற்றான். துயர இரவுகள் என்னை அலைக்கழிக்கிறது அந்திப்பொழுது களங்கமற்ற அவள் முகத்தை ஞாபகப்படுத்துகிறது தேவாலயத்தில் மண்டியிடும்போது மனம் கேவி அழுகிறது ஓவியச் சுடர்கள் வெளிச்சம் கொடுக்குமா நினைவோடையில் நீந்த முடியுமா துயரமூட்டையின் பாரம் மிகுந்திருக்கிறது இந்தப் பேரண்டம் காதலின் அதிர்வுகளாலேயே இயங்குகிறது மூளியாக நிற்கும் மரங்கள் வசந்தத்தை நினைத்துக் கொள்ளுமா என்ன உனக்கு நிகரானவளை சந்திக்கும் வாய்ப்பை வாழ்க்கை எனக்கு ஏற்படுத்தித் தராது மலர்ப்படுக்கையில் உன்னை படுக்க வைத்து நானுனக்கு தாலாட்டுப் பாடட்டுமா ஒவ்வொரு நாளும் யாரேனும் ஒருவர் அலையாய் எழும்பச் செய்து விடுகிறார்கள் உன் நினைவை காதல் வேள்வியில் ஆகுதியாவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா இந்த மழை உன்னையும் நனைத்திருக்குமா பேய்க்காற்றில் உதிரும் பழுத்த இலைகள் நீ மிதிப்பதற்காக உனது காலடியில் தவங்கிடக்கும் உன் மனக்கதவை தட்டிக் கொண்டிருக்கின்றன எனது கைகள் நீ திறப்பாய் என்ற நம்பிக்கையில் நிலவைப் போன்று உன் நிழலும் அன்றாடம் தேய்ந்து வளருகிறது நட்சத்திரத்தின் காதலை நிலா ஏற்றுக் கொள்ளுமா அலையென மீண்டும் மீண்டும் முயற்சியெடுக்கும் எனக்கு என்ன விடையளிக்கப் போகிறாய் மங்கிய ஒளியில் உன் முகம் ஒளிர்வதை தூரத்திலிருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன் நான் நாடுகடத்தப்படலாம் காதலுக்கு எல்லைக்கோடுகள் ஒரு பொருட்டல்ல என்பதை நீ மட்டுமே அறிவாய்.   மகத்தான பகல்பொழுதை இரவுதான் நிர்ணயிக்கிறது வருத்தப்படகுகள் கவலையாற்றில் மூழ்கவே செய்யும் கையில் அதிகாரம் இருக்கும் நபருக்குத்தான் பதவி பறிபோய்விடுமோ என்ற கவலையிருக்கும் சிலசமயம் நேசித்தவளுக்காக சிலுவை சுமக்க நேரலாம் வானக்கூரையின் கீழேயுள்ள எனக்கு காதல் விடுதலை தந்தது எதிர்ப்பார்ப்பில்லாத விருப்பம் மனிதனின் சுயநல விலங்கை உடைத்துவிடுகிறது என் பிம்பத்தை அவளுடைய கரியவிழியில் இழந்துவிட்டேன் என் நிழல்கூட அடிமையாய் அவள் காலடியில் கிடக்கிறது அவளற்ற உலகத்தில் என்னைத் தள்ளப் பார்க்காதீர்கள் சுயநல அரக்கர்கள் மலரைக் கொய்ய ஆயுதமெடுக்கும் கயவர்கள் என்னை அவளிடம் இழந்துவிட்டேன் அடைய முடியாததை எதற்காக இலக்காகக் கொண்டாய் எனக் கேட்கிறீர்களா கடவுளே என் ஆன்மாவுக்கு விடுதலை கொடு அது அவள் இருப்பிடத்தைத் தேடி பயணிக்கட்டும் வாழ்க்கைப் பெருங்கடலில் எனது மரக்கலம் திசைதவறிப் போய்விட்டது நான் கொடுத்த முத்தத்தின் ஈரம் காய்ந்து போய்விட்டது அவளை இன்னொருவன் தன் உடைமையாக்கும் போது எனது காதல் அழிந்திருக்கும் அவளது நினைவுகள் என் மரணத்திற்குப் பிறகும் என்னை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் புனிதமான காதலர்களுக்கு எனது வரிகள் சிறகுகள் கொடுக்கும் ஆதிமுதற் கொண்டு காதல் நிராகரிக்கப்பட்டவனின் மனத்தில் தான் மிகுந்திருக்கும் காதல் சரித்திரம் தோற்றவனின் குரலையே பிரபல்யப்படுத்தும் விலைக்கு வாங்குவதற்கு காதல் கடைச்சரக்கல்ல என்று அவளுக்கும் தெரிந்திருக்கும். வாழ்க்கைப் பாதையில் அடுத்து என்ன எதிர்ப்படும் என்று நாம் யூகிக்க முடியாது மரண சாசனம் எழுத யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் துயரச்சுமை அழுத்தும்போது மனம் கடவுளைப் பற்றிக் கொள்கிறது புனிதமானவர்களின் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் பல நூற்றாண்டுகளாக எதிரொலித்துக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் அறத்தை நிலைநிறுத்த கடவுள் முயன்று கொண்டிருக்கிறார் சத்தியம் சாவை பரிசாகக் கொடுத்தாலும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் வாழ்க்கையின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்கள் அப்போது தான் உண்மை பேசத் தொடங்குவார்கள் மரணத்திலிருந்து தப்பிக்கும் வழியை மனிதன் தேடிக் கொண்டிக்கிறான் இரட்சகனின் இருப்பு விடியலைக் காணுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது பாவிகளை மன்னிப்பதே கடவுளின் குணம் நதிவெள்ளம் கடலை அடைய பலமைல் தொலைவு பயணம் செய்ய வேண்டிவரும் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடத் தொடங்குபவர்கள் தூக்கத்தைத் தொலைக்கிறார்கள் மரணத்தை யாசிப்பவர்களுக்கு வாழ்க்கை முள்படுக்கையாகிறது வாழ்நாளெல்லாம் தேடினாலும் கடவுளின் காலடிச்சுவட்டை பூமியில் காண முடியாது. வாழ்க்கை எனக்கு முள்படுக்கையை பரிசாக அளித்திருக்கிறது ஏமாற்றிப் பிழைக்கத் தெரியாததால் கையில் திருவோடு ஏந்த வேண்டியிருக்கிறது உண்மையின் வழி கடவுளைச் சென்றடையலாம் அதற்குள் எனக்கு கல்லறையைத் தயாரித்துவிடுவார்கள் மரணம் பயமுறுத்துகிறது இரவில் உறக்கம்கூட வர மறுக்கிறது புத்தி பேதலித்து போனவர்களெல்லாம் கடவுளைக் குறித்து சிந்தித்து இருக்க வேண்டும் பிதாவானவர் நியாயத் தீர்க்கும் அதிகாரத்தை இந்தக் குமாரனுக்கு அளிக்கவில்லை யார் மடியில் சாய்ந்து இளைப்பாறுவதென என் மனம் ஏங்குகிறது என்னைக் கேடயமாக பயன்படுத்தி கடவுளிடமிருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள் என்னை உடல் சிறையிலிருந்து விடுதலையளிக்க உங்களால் முடியுமா நிம்மதியைத் தர என்னிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள் கடவுளே என்னிடம் உன்னை அறிமுகப்படுத்துக் கொள் உனக்கு பைத்தியப்பட்டம் கட்டமாட்டேன் கடவுளே என் மூளையில் சாத்தானின் குரலை கேட்கச் செய்யாமலிருந்தாலே போதும் நரக இருளில் தள்ளப்படுவதற்குமுன் என் குற்றங்கள் மன்னிக்கப்படுமா காலம் சென்றுகொண்டேயிருக்கிறது எல்லாவற்றுக்கும் சாட்சியாய் வானம் இந்த உலகத்திலிருந்து வெளியேறும் பாதையை நான் தேடிக்கொண்டிருக்கிறேன் இதோ இரண்டு தேவதைகள் மரணத்திற்குப் பிறகும் கடவுள் தென்படமாட்டார் என்கின்றன. பாவ காரியங்களில் ஈடுபடும்போது தன்னை மறக்கிறோம் கறைபடிந்த மனம் விலங்கு போல் பதுங்குகிறது வாழ்க்கை அதன் அர்த்தத்தைத் தேடும் விளிம்பு நிலைக்கு என்னைக் கொண்டுவந்து விட்டிருந்தது வசீகரிக்கும் அழகுக்கு அப்பால் வேடன்(கடவுள்) வலைவிரித்து காத்திருக்கிறான் விலைமகளிடம் அன்பையும் காதலியிடம் சதையையும் தேடி ஏமாந்து போகிறோம் மற்றவர்கள் விடைபெற்றுக் கொள்ளும்போது இறைவன் தனக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பான் என நம்புகிறோம் பரத்தை நாடும் ஆன்மா இந்த உடலுக்குள் சிறைபட்டிருக்கிறது உடலின் தேவையை பூர்த்திசெய்வதிலேயே காலத்தை தொலைக்கிறோம் சில மனிதர்களை விதி வழிதவறவைத்து மரணப்புதிருக்கு விடைகாண வைத்துவிடுகிறது கொழுத்த மந்தை ஆடு மேய்ப்பனின் கண்களை உறுத்திக் கொண்டேயிருக்கும் எதனைப் பெறுவதற்கும் ஒருவிலை கொடுக்க வேண்டியிருக்கிறது இந்த உலகத்தில் வாழ்க்கைப் பந்தயத்தின் இலக்கு மரணமாய் இருக்கிறது வாழ்க்கையின் ரகரியங்களை அறிய வாய்ப்பு கொடுத்த போதும் மனிதன் பெண்பித்தனாய் புதையலை கையில் வைத்துத்திரியும் குருடனாய்த் தான் இருக்கிறான். மகிழ்ச்சியாகட்டும் துன்பமாகட்டும் கண்கள் சிந்தும் கண்ணீரின் சுவை உவர்ப்புதானே நீங்கள் முயலாதீர்கள் உண்மையைப் புரிய வைப்பதற்கு கடவுளைத் தவிர யாராலும் முடியாது உனது செயலுக்கு மனிதனிடம் நியாயம் கற்பிக்க முயலலாம் கடவுளிடம் உனது நொண்டிச் சமாதானம் எடுபடாது செயல்களில் கவனம் செலுத்துபவர்கள் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள் நீ காணும் யாவும் நிரந்தரமற்றவை தொடர்ந்து அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பவை ஆசைப்பட்டதை அடைந்த பிறகு மனம் நிறைவு கொள்கிறதா என்ன மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் நோயாளியானவன் கடவுளுக்கு மிக அருகாமையில் இருக்கிறான் இருதயத்தில் அன்பை மலரச்செய்த ஒருவனுக்கே சமாதான மணிமுடி சூட்டப்படுகிறது உணர்ச்சி நெருப்பு உடலை சாம்பலாக்காமல் விடாது துயரநீர்ச்சுழலிலிருந்து தப்பியவனுக்கு காப்பாற்றியவன் கடவுளாகத் தெரிவான் உலகை கடைத்தேற்ற இனி யாரும் வரப்போவதில்லை அநியாயமாக சேர்த்த சொத்தின் பாதியை உண்டியலில் சேர்ப்பதால் பாவக்கறை மறைந்துவிடுமா சாத்தானுடன் கடவுள் சமரசம் செய்து கொண்டார் தன்னுடைய ஆளுகைக்குள் உள்ள பூமியை சாத்தானுக்கு தாரை வார்த்துவிட்டார் இனி சாத்தானே கோயில் கருவறையில் குடிகொண்டியிருப்பான் அடியார்களின் வேத கோஷத்தை காதில் வாங்கிக் கொண்டு பித்தனிடம் பிச்சைப்பாத்திரம் ஒன்றே மிச்சமிருந்தது இனி சாத்தான் விளையாடுவான் அது திருவிளையாடல் ஆகுமா? கடவுளால் படைப்புத் தொழிலை கைவிட்டுவிட முடியவில்லை மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் தனக்கே பேராபத்தாய் முடியும் என்று அவன் அறியாமலில்லை ஆடையால் உடலை மறைத்து நாகரிகமாகத் தோன்றும் மனிதன் உள்ளே இன்னும் மிருகமாகத்தான் இருக்கிறான் பிரபஞ்சத்தைக் கட்டியாள மனிதன் நினைத்த போது கடவுள் பல்லைக் கடித்தான் உண்மையின் அழைப்பை மனிதன் காதுகொடுத்தும் கேட்பதில்லை வாழ்க்கையில் தடுக்கி விழுபவர்களுக்கே ஆறுதலின் குரல் கேட்கிறது அடைக்கலம் நாடுபவர்கள் கூட தாங்கள் ஆட்டு மந்தையைப் போல் நடத்தப்பட விரும்பமாட்டார்கள் துன்பமேகத்தின் துளிகள் ஒவ்வொன்றும் உடலை துளைத்து வெளியேறுகிறது களங்கமற்றவனைத் தேடித்தேடி கடவுள் ஓய்ந்து போய்விட்டான் மாபெரும் அமைதியை தேடுவோருக்கு இறப்பின் பின்னால் அது கிடைக்க வழிவகை செய்து வைத்திருக்கிறான் இறைவன் ஆறுதல் வார்த்தைகள் முடமாகிப் போனவனைக் கூட எழ வைத்துவிடும் உண்மையின் விளக்கத்தினை பாவிகள் எளிதாக உணர்ந்து கொள்கிறார்கள் சிறைக்கூடத்தில் இருக்கும் கைதிகளிடம் சுதந்திரத்தைப் பற்றிப் பேசினால் சிலுவையில் அறைவார்கள் வரலாற்று நாயகர்கள் அப்போதைய சமுதாயத்தால் அவமதிக்கப்பட்டவர்கள் தான் தீர்க்கதரிசிகள் தான் கடவுளின் காலடியை பின்தொடர்கிறார்கள் புனிதஆத்மாக்கள் இன்னும் அடைக்கலம் தேடி அலைவது வேதனையைத் தருகிறது ஆறுதல் தேடிப் புலம்புபவர்கள் அவன் குரலைக் கட்டாயம் கேட்பார்கள். வாழ்க்கை யாருக்கும் சிவப்புக்கம்பளம் விரிப்பதில்லை தெய்வீக வாழ்வுக்காக மாம்சத்தைத் துறப்பதற்கு யாரும் முன்வருவதில்லை தவறுக்காக எந்த மனிதனும் குற்றவுணர்ச்சி கொள்வதில்லை பிறரை ஏய்த்து பிழைப்பு நடத்த எந்த தயக்கமும் காட்டுவதில்லை வருதப்பட்டு பாரம் சுமந்த ஒரேயொருவனையும் தேவாலயத்தில் சிறை வைத்தாயிற்று கணிப்புகள் தவறிப்போகும்போது மட்டுமே மனிதன் கடவுளை நினைக்கிறான் பாவமற்றவனை உண்மையின் ஒளியே காட்டிக் கொடுத்துவிடுகிறது வாழ்க்கையின் லகான் மனிதனின் கையில் இல்லை மறைந்து கிடக்கும் புதையலை மனிதனால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது எல்லைச் சுவரை உடைக்க முடியாத மனிதன் எது விடுதலை தரும் என்பதை அறியாதவனாய் இருக்கிறான் உறக்கம் மனிதனுக்கு மரணத்தை ஞாபகப்படுத்துகிறது ஆசிர்வதிக்கப்பட்டவர்களின் பேச்சு இந்தப் பூமியுடன் தொடர்புடையதாக இல்லை கோடிக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்னும் ஒரு மனிதனால் கூட கடவுள் இருக்கும் சுவர்க்கத்தில் காலடி எடுத்துவைக்க முடியவில்லை உண்மையை அறிந்தவர்களுக்கு கூட கடவுள் ஆணா பெண்ணா எனத் தெரியாது அனாதை என்றும் கருதும் போதுதான் ஆண்டவனின் துணை தேவையாய் இருக்கிறது உண்மையைக் கண்டு அலறும் போது வாழ்வு மரணக்கிணற்றில் நம்மை தள்ளிவிட்டு பேயாய்ச் சிரிக்கிறது.             துயரக்கடவுளின் வாரிசு நான் அவர் மனிதனை சிருஷ்டிக்கும் போது அமைதியற்ற மனதைக் கொண்டிருந்தார் பைத்தியக்காரனின் கனவாக அமைந்தது அவரின் படைப்பு அவர் மனிதனை கேடயமாக பயன்படுத்தி பாவ காரியத்தைச் செய்தார் இரக்கமற்ற மானுட இனம் இரவை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது கடவுளின் தேசத்தை பேய்களின் வாரிசுகள் நிர்வகித்தன கைவிடப்பட்டவர்கள் மரித்த போது கடவுள் மனதிற்குள் சிரித்துக் கொண்டார் இருளில் உழல்பவர்கள் கூக்குரலிட்டபோது கடவுள் மஞ்சத்தில் வனிதயரோடு வீழந்து கிடந்தார் கடவுள் தனது உண்மையான விசுவாசிகளை வேதனை ஆற்றில் தள்ளிவிட்டார் தன்னிடம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு மரணத்தையே பரிசாகத் தந்தார் சாவைக்கண்டு அச்சம் கொண்ட மனிதன் பெண் போதையில் மயங்கிக் கிடந்தான் இறைவன் தன்னிடம் அடைக்கலம் கேட்டு வந்தவர்களின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டான் பாதுகாப்பின்மை மனிதனைப் பயப்படச்செய்தது அதுவே அவன் கடவுளை சரணடைய ஏதுவாக அமைந்தது போராளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள் கடவுளின் கைப்பாவையாக செயல்படவே மனிதனுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது கடவுளின் கனவுப் பேரரசு பைத்தியக்கார விடுதியாக அமைந்தது வாழ்க்கையில் சலிப்புற்று மானுட இனத்தை கைவிட்டுவிட்டுப் போக அவன் முடிவெடுத்தபோதுதான் கடவுள் கொலை செய்யப்பட்டான்.             வயிற்றுக்காக சிங்கி அடிப்பவர்கள்தான் நாம் எல்லோரும் ருசிக்காக அல்ல பசிக்காக சாப்பிடுபவர்கள் தான் நாம் எல்லோரும் காசு பின்னால் ஓடுகின்ற மத்யதரவர்க்கம் தான் நாம் எல்லோரும் வீசியெறியப்படும் துட்டுக்காக காட்டிக் கொடுப்பவர்கள் தான் நாம் எல்லோரும் கங்கையில் முங்கினால் பாவம் தொலையும் என்று நம்புகிறவர்கள் தான் நாம் எல்லோரும் பண்ணுகிற தவறான செயலுக்கு நியாயம் கற்பிப்பவர்கள் தான் நாம் எல்லோரும் எந்தத் திசையில் செல்வது என முடிவெடுக்கத் தயங்குபவர்கள் தான் நாம் எல்லோரும் செய்த பாவத்துக்காக குற்றவுணர்ச்சியால் பீடிக்கப்பட்டு நரகத்தில் உழல்கிறவர்கள் தான் நாம் எல்லோரும் மரணம் நிகழாத வீட்டைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் தான் நாம் எல்லோரும் வாழ்வுப் புத்தகத்தில் தன் பெயரை பதிவுசெய்யாதவர்கள் தான் நாம் எல்லோரும் பிறந்துவிட்டோம் என்பதற்காக வாழ்ந்து தொலைப்பவர்கள் தான் நாம் எல்லோரும் வாழ்க்கை கடவுள் இட்ட பிச்சை என்று உணராதவர்கள் தான் நாம் எல்லோரும் பிச்சை இட்ட கடவுளை ஏன் கோயிலில் சிறை வைத்தார்கள் என்பதை தெரியாதவர்கள் போல் நடிப்பவர்கள் தான் நாம் எல்லோரும் வாழ்க்கை சலிப்பூட்டும் முன் மரணம் வந்து விடுவதற்கு இயற்கைக்கு நன்றி சொல்வோம் நாங்கள் எல்லோரும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் சாத்தானுக்கு சேவகம் பண்ணுகிறீர்கள் நீங்கள் எல்லோரும்.         விடுவித்துக் கொண்டேன் பூமியுடனான எனது பிணைப்பை முகங்களின் தேசத்தில் வாழப் பிடிக்கவில்லை வீண் விதண்டாவாதத்தில் ஈடுபட மனம் விரும்பவில்லை மனிதர்களின் பாஷை எனக்குப் புரியவில்லை வலையை அறுத்துக்கொண்டு விடுதலையாக விரும்பவில்லை பகீரதப்பிரயத்தனத்தில் ஈடுபாடமல் சாட்சியாக நின்றுவிட்டேன் என்னுடைய ரகசியங்கள் எல்லாம் என்னுடனேயே புதையட்டும் அர்ப்பணித்துக் கொண்ட சித்தாந்தத்தை என்னிடமிருந்து விரட்டியடித்தேன் போலி புரட்சிகளில் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதை நினைத்து அழுதேன் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இருப்பதை இப்போதுதான் கண்டுபிடித்தேன் அரியணையில் அமர இரட்டை வேடம் போட வேண்டுமென்று தெரிந்து கொண்டேன் தீவுகளை நோக்கி தத்தளிப்பது போல் ஆகிவிட்டது எனது நிலைமை எனது வாழ்க்கைப் புத்தகத்தில் இறுதி அத்தியாயத்தை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை வக்கற்றவனின் வரலாற்றை எவரும் படிக்க முன்வரமாட்டார்கள் நெறி பிறழ்ந்ததால் உள்ளக் கொதிப்பை வெளியிட வார்த்தைகளின்றி தவிக்கிறேன் உறைந்து போன கடலில் பிணமாக நான் மிதக்கிறேன். திசை தவறி போய் விட்டேன் அவசரமாக விரைந்த சிலர் என் வார்த்தைகளை காதுகொடுத்து கேட்கவில்லை கடந்து செல்பவர்களில் யார் அந்தப் பாதையை அறிந்து கொண்டிருப்பர் என்று அனுமானிக்க என்னால் முடியவில்லை பகல் முடிவதற்குள் சென்றுவிடுவேனா என்று எனக்குத் தெரியவில்லை கையாலாகாத தனத்தை நினைத்து என்னை நானே நொந்து கொண்டேன் என்னை அலைக்கழிப்பதில் சுகம் காணும் ஒருவன் எங்கோ இருக்கக்கூடும் கடந்த காலங்களின் பழைய நினைவுகள் வேதாளமாய் என் தோளில் அமர்ந்திருக்கிறது நான் செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் நிர்ணயிக்கும் சக்தி என்னைப் பந்தாடுகிறது காலத்தின் கைகளில் பொம்மையாக அகப்பட்டுக் கொண்ட நான் கடவுளுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருளாகிப் போனேன் திடீரென மனக்கண் திறந்து சரியான பாதை தெரியவந்தபோது கொஞ்சம் கொஞ்சமாக நான் மரணித்துக் கொண்டிருந்தேன் தீயின் நாக்கு அப்பாவியா, பாவியா என பேதம் பார்ப்பதில்லை இவன் உடலிலிருந்து உயிர் பிரிவதற்குள் இவனுக்கு ரகசியம் புரிபட்டிருக்கும். துரதிர்ஷ்டம் என்னைத் துரத்திக் கொண்டேயுள்ளது மரணத்தின் விளிம்பில் நிற்கின்றவனின் சொல் உண்மையாக இருக்கும் எனது ஜன்னல் மயானத்தில் எரியும் சிதையைப் பார்க்கவே திறக்கிறது நாளிதழில் தற்கொலை செய்திகளையே எனது கண்கள் தேடுகிறது எதிர் நீச்சல் போடுகிறவனின் வாழ்க்கை இலகுவாக அமையாது மழைத்துளியை கடலுக்கு கொண்டு சேர்க்க நதி பிரயத்தனப்படவில்லை இலை உதிர்வதைப் போலத்தான் மனிதன் இறப்பது தூங்கி எழுவதைப் போலத்தான் மனிதன் பிறப்பது தேடியதை அடைந்தவுடன் அது முக்கியத்துவமற்றுப் போவதை உணர்ந்திருக்கிறாய் அல்லவா நீ பிறப்பு காட்டிக்கொடுத்துவிடுகிறது மனிதன் மீது கடவுள் வைத்துள்ள நம்பிக்கையை பிறரால் பூர்த்தி செய்ய முடியாத இடத்தை நானடைந்த போது புத்தி பேதலித்து போயிருந்தது வாக்குறுதிகள் மீறப்படும்போது பிறர் பணத்துக்கு விலை போவது உறுதியாகின்றது வாழ்வின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் போது விரைவாக மரிக்க விஷத்தை நாடியது மனம் கண்டுகொண்ட போது கடவுள் அங்கில்லை மரணத்தைவிடவும் சிறந்த மருந்தில்லை. தற்செயலாகத்தான் நடக்கிறது எல்லாமும் வீட்டில் பதுங்கிக் கொள்வதால் விதியிடமிருந்து தப்ப முடியுமா துரோக முட்கள் எனதுடலை காயப்படுத்துகிறது இரவு ஏனோ குற்றச் செயலுக்கு இடம் கொடுக்கிறது விதி தன் கைப்பாவையாகச் செயல்படத்தான் மனிதர்களை உருவாக்கி நடமாடவிட்டிருக்கிறது மனக்குப்பையைக் கொட்ட இடம் தேடிக் கொண்டிருப்பதுதான் மனித வாழ்க்கையா ரோகம் உடலை படுத்தியெடுக்கிறது மனம் இன்னும் உணரவில்லை பாவத்தின் சம்பளம் மரணமென்று புகைப்படத்தில் இருப்பவர்களை கேட்டால் தெரியும் வீட்டில் என்னென்ன அநியாயம் நடக்கிறதென்று வேடனிடம்தான் சிக்க ஆசைப்படுகின்றன பெண்புறாக்கள். ஒருநாள் போல ஒருநாள் இல்லை எனது கூக்குரலுக்கு பதிலேதும் இல்லை போகப் போக பழகிப்போய்விடும் என்கிறார்கள் தப்பி வந்து பிறந்துவிட்டேன் இவ்வுலகில் சகிக்க முடியவில்லை இந்த உலக நடப்பு ஒவ்வொன்றையும் சர்வநிச்சயமாக கடவுளர்பூமியல்ல இது வாழ்க்கைச் சந்தையில் எதற்கும் ஒரு விலை இருக்கிறது சூதாடிகள் நன்றாக ஏய்க்கின்றார்கள் ஏமாளிகளை கடவுளின் பிரதிநிதிகள் சாத்தானுக்கு விலை போய்விட்டார்கள் இவர்களிடம் தாங்கள் சாகமாட்டோம் என்ற உத்திரவாதத்தைத் தரச் சொல்லிக் கேட்கின்றார்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் பணக்கார கனவான்கள் மறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்ச் சொல்கின்றன யார் படைத்திருப்பார் நியதிகள் ஏதுமற்ற இவ்வுலகத்தை. என் செயலை பிரதிபலிக்கும் என் நிழலுக்கு இன்று என்ன வந்தது துக்கவீட்டின் தப்புச்சத்தம் என் சமநிலையைப் பாதிக்கின்றது உடம்பு படுத்துகிறது வேறென்ன செய்யும் வியாதியின் கூடாரம்தானே அது பரமபத ஆட்டத்தில் பாம்பு தீண்டி கீழே சறுக்குவதைப் போன்றது எனது வாழ்க்கை தூக்கமும் அமைதியும் விலைக்கு வாங்க முடியாத ஒன்றாய் இருக்கிறது ஆரவாரப் பேய்கள் அடங்கிப் போகும் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன எனது வாழ்க்கைப் பாதையில் ஏனோ வசந்தம் மட்டும் குறுக்கிடுவதே இல்லை. அவன் போக்குக்குச் சென்றுதான் அவனை வளைக்க வேண்டும் கையில் காசிருந்தால் மொய் எழுத டாஸ்மாக்குக்கு போய்விடுவான் சிகரெட்டை உதட்டில் கவ்வி ஆழ இழுத்து புகையை வெளியே விடுவதில் அப்படியொரு ஆனந்தம் அவனுக்கு பகலில் போதையில் மிதப்பது இரவில் தூக்கத்தில் லயிப்பது இதைத்தவிர வேறொன்றும் செய்வதில்லை அவன் மகிழ்ச்சியானாலும் துயரமானாலும் அதைக் குடித்துக் கொண்டாடுவது அவன் வழக்கம் நீச்சல் குளத்தில் மதுவை நிரப்பி நீந்தவிடவேண்டும் அவனை அப்போதும் அவனுக்கு அந்த ஆசை போகாது குடிமகன்கள் மதுவை நோக்கி ஓடும்வரை அடிமைசாசனம் எழுதிக்கொடுத்து விடுகிறார்கள் ஆள்வோருக்கு. வார்த்தைகளின் ஊற்றுக் கண்ணைத் தேடுகிறேன் நான் நாயின் பளிங்குக் கண்கள் என்னைப் பயமுறுத்துகிறது இருபகல்களுக்கிடையே நெருக்கப்பட்ட இரவு எனது கைகளில் விலங்கினைப் பூட்டுகிறது திறன்களை வளர்த்துக் கொள்ளாத போர்வீரன் அரசனுக்கு விசுவாசமாய் இருந்து என்ன பயன் உதவிகளைப் பெற்ற அனைவரும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது உடலை வருத்தி உழைப்பவனைவிட கூர்மையான புத்திக்காரன் எளிதில் உச்சத்தை அடைகிறான் இருளான வாழ்க்கைப் பாதையை முக்கால்வாசி கடந்தாகிவிட்டது வெளிச்சத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களிடம் வாழ்க்கை தனது விசுவாசத்தைக் காட்டாது. வாழ்க்கை எனக்குப் பிடித்தமானவற்றையெல்லாம் பிடுங்கிக் கொண்டுவிட்டது பாதங்கள் ஓய்வைத் தேடுகின்றன உஷ்ணத்திலிருந்து பாதுகாத்த ஒரே செருப்பும் அறுந்துவிட்டது பாத்திரத்தின் வடிவத்தையெடுக்கும் தண்ணீரைப் போல் என்னால் மாறமுடியவில்லை ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பதால் எனது மூளை வவ்வால்களின் குடியிருப்பானது பெண், பொன், மண் இவற்றின் மீது கொண்ட ஆசையால் அலைக்கழிக்கப்பட்டவன் நான் எதையும் மன்னித்துவிடலாம் எனது முட்டாள்தனத்ததை மேதைமை என்று கர்வப்பட்டுக் கொண்ட என்னை மன்னிக்கவியலாது பரிசுத்தமான மனது தீயஎண்ணங்களால் கறைபட்டுவிட்டது ஞானத்தை அடையும் வழி இருளடைந்ததாக இருந்தது நம்பிக்கையுடன் முன்னேற தூரத்தில் ஒளி தெரிந்தது வாழ்க்கைப் பாதையை நான் கடந்து கொண்டிருக்கும் போது வேதாளம் என் தோளில் அமர்ந்து கொண்டு கேள்விகளால் என்னைத் துளைப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது தனக்கு வாய்த்ததை கடவுளின் கிருபையாக நினைப்பவனுக்குத தான் அமைதியின் கதவு திறக்கிறது ஞானத்தின் ஒளியால் அவன் நிரப்பப்படும் போது அவனது கண்களால் கடவுளைக் காண முடிகிறது. கொஞ்சமும் கவலைப்படாதீர்கள் நேற்றைய உலகம் நரக இருளில் தள்ளப்பட்டுவிட்டது நாளைய உலகம் சில நம்பிக்கையைக் கொடுத்துள்ளது அசைவற்ற தூக்கத்தில் விரியும் கனவில் ஆன்மா வேறு உடலை எடுத்துக் கொள்கிறது நொடிகள் யுகமாக நீள்கிறது வாழ்க்கை வலைப்பின்னலில் சிக்கிக் கொண்டுள்ள நாம் எப்போது இரையாவோம் எனத் தெரியாது கிடைத்த எதையும் கொண்டு மனம் திருப்தியடையாது இன்னும் என்ற வேட்கை இருப்பதால் தான் மனிதனால் மரணத்தை மறந்து பயணிக்க முடிகிறது இயற்கையைத் தோற்கடிக்க முடியாமல் மண்ணில் மக்கிப் போய் மரங்களுக்கு எருவாகிறது மனித இனம் மனித வாழ்க்கையின் அர்த்தம் ஆன்மாவை விடுதலையடையச் செய்வதே பாவத்தின் காரணமாக ஆன்மா சிறைபட நேர்ந்தால் கால சுழற்சியில் மேற்கொண்டு பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும் இறந்த பிறகு அமைதியடைய எத்தனை கிரியைகள் செய்தாலும் வினையின் பலனை அவன் அனுபவிக்காமல் விதி அவனை விட்டுவைக்கா             துயரநீர்ச்சுழலில் எனது வாழ்க்கைப்படகு அகப்பட்டுக் கொண்டது இந்த உலகில் பிரவேசித்த ஒவ்வொருவரும் பிறரைப் பார்த்து தாமும் மாம்சத்தை திருப்திபடுத்தவே கற்றுக் கொள்கிறார்கள் போகத்தில் திளைக்கும் மக்கள் கடைத்தேற்ற வந்த உத்தமர்களின் அழைப்புக்கு செவி கொடுப்பதில்லை இருண்டகாலங்களில் மாபெரும் வெளிச்சத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இருக்காது துக்க ஆறு ஒருபோதும் மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கிற்கு நம்மை அழைத்துச் செல்லாது அன்பெனும் ஓடையில் நீந்திப் பாருங்கள் துக்கத்தின் புதல்வர்கள் இரட்சிக்கப்படுவார்கள் வாழ்க்கைப் பாதையில் எந்த மரணக்கிணற்றில் தடுக்கி விழுவோம் என யாருக்கும் தெரியாது நரகத்தில் வீழ்ந்துபடுவோம் என்று தெரிந்தும் போகத்தின் பாதையையே தேர்ந்தெடுக்கிறது மனிதமனம் வாலிபத்தில் நெறிமுறைகளைப் பின்பற்றாமல் வயோதிகத்தில் வானத்தைப் பார்த்து கதறுவதால் பயனொன்றுமில்லை துயரக் கடலில் நீந்துவோருக்கு மரணமே விடுதலையை பரிசளிக்கும் உடல் நோய்களின் கூடாரம் வியாதி ஒன்றே ஞானத்தைப் பரிசளிக்கும் சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகள் கடவுளிடம் பாரத்தைப் போட்டு முயற்சியைக் கைவிடுமா காரிருள் பாதையில் துணிந்து நடப்பவனுக்கு விமோசனம் மிக அருகில் இருக்கின்றது வாழ்நாளில் ஆணிகளைநிறைய சேகரித்துக் கொள் நீ விருப்பப்பட்டாலும் சவப்பெட்டியிலிருந்து வெளியே வரமுடியாதபடி.   கடவுளுக்கு விசுவாசமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் நான்கு பேர் நம்ப வேண்டும் என்பதற்காகவே இப்படி நடிக்கிறார்கள் கடவுளின் பெயரால் வெகுஜனத்தை சுலபமாக அடிமைப்படுத்தலாம் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது கடவுளுக்கு முன்னால் கொசுவைவிட மனிதன் மேலானவனா அப்படி நினைத்தால் அவன் கடவுளே அல்ல கண்ணுக்குப் புலப்படாத சட்டமொன்று இம்மண்ணில் இயங்கிக் கொண்டிருக்கிறது சாக்ரடீஸுக்கு விஷமும் இயேசுவுக்கு சிலுவையும் தந்தது அந்த விதிதான் மரத்தில் பல கிளைகள் இருப்பதைப் போன்றது தான் தெய்வச் சிலைகள் ஆதாரம் வேரில் இருக்கிறது என்பதை அறியாதவர்களா நாம் கொடிய சிந்தனை செயல்படுத்தாவிட்டாலும் கூட அதுவொரு பாப காரியமே வாழ்க்கையின் நிழலை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம் பேய்கள் தன்னைக் கண்டு அஞ்சுபவனிடத்தில் தான் ஆட்டம் காட்டுகிறது அழிவுசக்திகளுக்கு எதிராக கடவுள் உனக்குத் துணை நிற்க மாட்டார் பிரபஞ்ச அதிபதிக்கு மனிதன் ஒரு பொருட்டேயில்லை அரசனா ஆண்டியா பூமியில் அவன் வாழ்க்கை எப்படிபட்டது என்ற கோப்புகளை இறைவன் படித்துப் பார்ப்பதே இல்லை பரிசோதனை எலிகள் எப்போது வேண்டுமானாலும் மரணத்தை எதிர்கொள்ள தயாராய் இருக்க வேண்டும் ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இவ்வுலகத்தில் சமரசத்தை கொண்டுவரும் மரணச் சட்டம் புனிதமானதாக கொண்டாடப்பட வேண்டும். ஆன்மாவின் பாடல்களை யாராவது கேட்க நேர்ந்தால் அவர்களால் அழுகையை அடக்க முடியாது அடியாழத்திலிருந்து கிளம்பும் அந்த ராகம் உயிர்களின் மேல் அன்பைப் பொழிகிறது உதடுகளிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் உச்சரித்தவுடன் மரித்து விடுகின்றன சூரியன் உதித்த உடனே ரோஜா இதழில் படிந்துள்ள பனித்துளி விடைபெற்றுச் சென்றுவிடும் இந்த உலகம் அமைதியை தொலைத்து விட்டது சத்தமற்ற சில நொடிகளைக்கூட மனிதனால் சகித்துக் கொண்டிருக்கமுடியாது மற்றவர்கள் வழிவிடுவார்கள் என எதிர்பார்த்தால் நாம் காத்துக்கொண்டிருக்கத்தான் வேண்டும் கல்லறைத் தோட்டத்தில் காலங்களின் சமாதி இருந்ததே தவிர அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்படவில்லை கடல் நடுவில் என் எண்ணப்படகு அலையில் சிக்கித் தவிக்கிறது காதலில் வீழ்ந்த என்னை மண்மகள் முத்தமிட்டுச் சொன்னாள் காதலின் பாதை மரணத்தில் முடிகிறதென்று அதலபாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருந்த நான் மரக்கிளையைப் பற்றினேன் கடவுளை நம்பி கைப்பிடியைத் தளர்த்தினேன் என் கபாலம் சிதறியது அவ்வோசை கடவுளுக்கும் கேட்டிருக்கும். இந்த இரவு மிகவும் துக்ககரமானது அதிர்ஷ்டத்தின் கதவுகள் என் வரையில் திறக்கப்படவில்லை இலைகள் சருகுகளாகும் போது காலடியில் மிதிபடத்தான் செய்கிறது வேருக்கு எதிராக இலைகள் எங்கேயாவது போராட முடியுமா ஆயுள் முழுவதும் உடலின் தேவைகளைத்தானே நாம் பூர்த்தி செய்து வருகிறோம் கடவுள் சென்ற பாதையில் வேறு காலடிகள் காணப்படுவதில்லை எனக்கு முன்னே உள்ள பாதைகள் அடைக்கப்பட்டுவிட்டன இருளின் கோரப்பிடியில் நிற்கதியாய் நின்றுகொண்டிருக்கிறேன் என்னை எதிர்ப்பவர்கள் என் பலவீனத்தையறிய இடங்கொடுத்துவிட்டேன் வாழ்க்கைப் பந்தயத்தில் ஜெயித்தவர்கள் கொண்டாடப்படுகின்றனர் தோற்றவர்கள் முயற்சியைக் கைவிட்டு விதியை நொந்து கொள்கின்றனர் கனவான்கள் ஏழைகளிடம் கருணை காட்டினால் இன்று நான் கையேந்த நேர்ந்திருக்காது மறதி என்ற ஒன்று இல்லாவிட்டால் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறுவழி இல்லை ஞானியர்கள் கூட உடலைவிட்டுச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர் உலக சட்டதிட்டங்களால் ஆன்மாவை சிறைப்படுத்த முடியாது என்பதால் தான் நான் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.               [photo.jpg]             ப.மதியழகன்(28.3.1980)   திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள், பதாகை ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து போன நிழலைத் தேடி’ 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு ‘சதுரங்கம்’ 2011ல் வெளிவந்தது.மூன்றாவது கவிதை தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ 2017ல் வெளிவந்தது.இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது. தற்போது மன்னார்குடியில் தனியார் கணினி பயிற்சி மையத்தில் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.   கடவுள் தேடல் மனிதனுத்குத் தேவையான ஒன்றா? மரணப் படகு நம்மை எங்கே அழைத்துச் செல்லும் எனத் தெரியுமா? சத்தியத்தின் குரலுக்கு நம்மால் செவி சாய்க்க முடியாதது ஏன்? தீர்க்கதரிசிகளின் புனிதச்சின்னங்கள் எதனை உணர்த்துகின்றன? மதச் சடங்குகளுக்கு மக்கள் இவ்வளவு முக்கியத்துவம் தருவது ஏன்? அவதாரங்கள் தங்கள் கருத்துக்களில் முரண்படுவது ஏன்? பாவக் கணக்குத் தீரூம் வரை மனிதன் பிறப்பெடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா? புத்தர், இயேசுவின் போதனைகள் இன்றளவும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? உயிர்த்தெழுதல் இன்று சாத்தியமா? மனிதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டானா? மறுபிறவிக் கொள்கையை நிரூபிக்க முடியுமா? மகாத்மா காந்திக்குப் பிறகு சமாதானத்தை நாடுபவர்களை ஏன் காணமுடியவில்லை? பூமிக்கு சிறிதும் சம்மந்தமில்லாதவர்கள் அதிக அளவில் நடமாடுவதற்கு என்ன காரணம்? விடைகளைத் தேடும் தீவிர முயற்சியில் அடுத்த தொகுப்பில் உங்கள் ஆதரவுடன் விரைவில் சந்திக்கிறேன். ப.மதியழகன் மன்னார்குடி                                                       11.06.18