[] []       மாணிக்கவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருவெம்பாவை (உரையுடன்)   ஆசிரியர் பார்வதி இராமச்சந்திரன். tsparu2001@gmail.com    மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com    உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.     அட்டைப்படம், மின்னூலாக்கம் – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com     அட்டைப்பட மூலம் - https://www.flickr.com/photos/balu/40117988   பொருளடக்கம் திருவெம்பாவை 4  பாடல் 1 5  பாடல் 2 8  பாடல் 3 12  பாடல் 4 17  பாடல் 5 22  பாடல் 6 26  பாடல் 7 30  பாடல் 8 34  பாடல் 9 38  பாடல் 10 42  பாடல் 11 47  பாடல் 12 51  பாடல் 13 55  பாடல் 14 58  பாடல் 15 62  பாடல் 16 66  பாடல் 17 69  பாடல் 18 72  பாடல் 19 76  பாடல் 20 82    திருவெம்பாவை   https://ta.wikipedia.org/s/l72    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.   திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.  திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும். பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது. தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது    பாடல் 1 சத்தியை வியந்தது!!!   ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க்கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்!   பொருள்: “ மார்கழி வந்து விட்டது!!! ‘ யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவார் ‘  (சிவஞான சித்தியார் )   என்று சிவனார் திருப்பாதம் போற்றித் தொழுதேத்தும் பொழுது புலர்ந்து விட்டது!!!.. ஒளி பொருந்திய, வாள் போன்ற நீண்ட விழிகளை உடைய பெண்ணே!!!..முதலும் முடிவும் இல்லாத அருட்பெரும் சோதியான இறைவனை நாங்கள் எல்லோரும் புகழ்ந்து பாடுகின்றோம்!!.. இதைக் கேட்டும் நீ ஏன் எழவில்லை?!! உன் செவிகளுக்கு என்னவாயிற்று?!!!.. ஓசை புகாத வலிய காதுகளா அவை?!!. நாங்கள் ஈசனாரின் வார்கழல்களை வாழ்த்திய ஒலி, ஒரு பெண்ணின் செவிகளில் விழுந்ததுமே, அவள், இறைவன் நினைவால் பரவசமெய்தி,  விம்மி விம்மி அழுது, தான் , தன் உடல் என்ற உணர்வினை இழந்து, மலர் நிறைந்த படுக்கையின் மேலிருந்து புரண்டு கீழே நிலத்தில் விழுந்து, மூர்ச்சித்தாள். என்னே அவள் தன்மை!!! இப்போது கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். முதலில் பாவை நோன்பு பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். பாவை நோன்பு என்பது மிகப் பழங்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் நோன்பு. மார்கழி நீராடல், தைந்நீராடல் (திருவாதவூரடிகள் புராணத்தில் கூறப்பட்டவாறு மார்கழிநீராடல் திருவாதிரைக்குப் பத்துநாட்கள் முன் தொடங்கித் திருவாதிரையில் முடிவு பெறும்.  தைந்நீராடல் மார்கழித் திருவாதிரையில் தொடங்கி நடைபெறும்) என்ற பெயர்களால் இது அறியப்படுவதாகக் கூறுகிறார்கள். இந்தப் பாடல்கள், இம்மாதத்தில் பெண்கள் ஒன்று கூடி,  விடியலில் தம் தோழியர் இல்லந்தோறும் சென்று, அவர்களை எழுப்பிக் கொண்டு நீராடச் செல்லும் முறையில் அமைந்துள்ளன. இங்கு, உண்மையில், 'உறங்குவதாக'க் குறிப்பது,   மல இருளாகிய‌ தூக்கத்தில் மூழ்கியுள்ள ஆன்மாக்களையே(‘மலவிருளுற் றுறங்காமல் மன்னுபரி பாகரருள் செலமுழுக வருகவெனச் செப்பல்திரு வெம்பாவை’ =திருப்பெருந்துறைப் புராணம்). அத்தகைய ஆன்மாக்களை, பக்குவம் பெற்ற, உயர்நிலையை அடைந்த ஆன்மாக்கள், இறையருளைப் பெறுவதற்காக அழைத்தலே தோழியர் கூவி அழைத்தல். 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்பதற்கேற்ப, இறைவனது திருவருளை வணங்கி வேண்டுகிறது இந்தப் பாடல். 'அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள' (குறள்).   'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி'== திருவண்ணாமலையில் அருளப் பெற்றது திருவெம்பாவை என்பதால், அங்கு சோதி வடிவாய், விண்ணையும் மண்ணையும் கடந்து இறைவன் திருவுருக் கொண்டது இங்கு கூறப்படுகின்றது. இறைவன், முழுமுதற் பரம் பொருள் என்பதும், கருணையில் மிக்கவன் என்பதும் இங்கு உரைக்கப்படுகின்றது. வாள்தடங்கண் மாதே வளருதியோ === மங்கையரின் விழிகளுக்கு உவமையாக, வேல், மான்,மீன், வாள் முதலியவற்றைக் கூறுதல் வழக்கம். இங்கு குறிப்பாக‌ 'வாள்' கூறப்பட்டது சற்றே சிந்திக்கத் தக்கது. வாளை, கூர்மையான அறிவின் அடையாளமாகச் சொல்வதுண்டு. இங்கு வாள் என்பதை   மெய்யறிவு என்னும் பொருளில் கொள்ளலாம். அறிவுக்கண்ணாகிய மூன்றாவது கண் திறந்து விழிக்காது உறங்குவதே மறைபொருளாகக் குறிப்பிடப்படுகின்றது. போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்   மெய்யான பக்தர்கள், இறைவன் திருநாமம் கேட்டதும், கண்ணீர் பெருக்கி ஆனந்தப் பரவச நிலையை அடைவார்கள். அத்தகைய ஆன்மீக உயர்நிலையை நீயும் அடைய வேண்டும் என்று தோழியை அழைப்பது போல் நம்மையும் அழைக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!!. []   பாடல் 2 பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.   பொருள்: இந்தப் பாடலில், தோழியர், தம் தோழி ஒருத்தியை, துயில் நீங்கி எழுமாறு அழைத்தலும், அதற்கு, எழுப்பப்பட்டவளின் மறுமொழியும் அமைந்துள்ளன. பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் ====== 'சீரான, நேர்த்தியான ஆபரணங்களை அணிந்த பெண்ணே, நாம் இரவும் பகலும் பேசிக் கொண்டிருக்கும் போது, 'என் பாசம் எல்லாம் அந்த சோதி வடிவான இறைவனுக்கே!' என்பாய். ஆனால் அதை ஏன் இப்போது அருமையான பஞ்சணையின் மேல் வைத்தாய்?!!'  என்று தோழியர் கேட்க,   நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடம்ஈதோ ========  அதற்கு, எழுப்பப்பட்ட பெண், 'சீசீ, நீங்கள் கேலியாகப் பேசும் மொழிகளில் இவையும் சில என்று கருதத் தகுமோ?!! என்னோடு விளையாடுவதைப் போல் என்னை ஏசும் இடம் இதுவோ?' என்று பதிலுரைத்தாள்.   விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய் ======== இதற்கு, எழுப்பியவர்கள், 'சிவனாரின் பொற்பாதங்களைத் தொழுவதற்கு தேவர்கள் விரும்புகிறார்கள்.ஆயினும், அதைத் தொழுவதற்கேற்ற தம் தகுதி பற்றி ஐயம் கொண்டு நாணுகிறார்கள். அத்தகைய மலர்ப்பாதங்களை, நாம் தொழுவதற்காக, தந்தருள எழுந்தருளும் ஒளி வடிவினன், சிவ லோகத்தை உடையவன்,, தில்லைச் சிற்றம்பலமாகிய சிதம்பரத்துள்ளிருக்கும் ஈசனுக்கு அன்பர்களாகிய நாங்கள் யார்?, உனக்கு அயலார் அல்ல என்று தெரிந்து தெளிவாயாக' என்று பதில் கூறினார்கள்.   சற்றே விரிவாக: இந்த இரண்டாவது பாடலில், முழுமுதற்கடவுளான இறைவனின் அருவுருத் தன்மையும், பிரபஞ்ச இயக்கத்தை அவர் நடத்துதலும் சூட்சுமமாகக் கூறப்படுகின்றது. பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்== முதற் பாடலில், 'ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி' என்றவர், இப்போது 'பரஞ்சோதி' என்று சிவப் பரம்பொருளைக் குறிக்கிறார். இதே பாடலில், 'தேசன்' என்ற சொல்லால், ஒளி வடிவினன் என்பதாக இறைவனைக் குறிக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். 'சோதி' என்கின்ற சொல், மிகுந்த பொருளாழம் உடையது. 'அலகில் சோதியன்'   என்றும், சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய ஆதி மாலயன் காணா வளவின. என்றும்,  சேக்கிழார் பெருமானும்,   மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப் பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. (திருமந்திரம் – 131)   என்று திருமூலரும்  போற்றிப் பரவுகிறார்கள். சோதி என்பது இவ்விடம், ஞான ஒளியைக் குறிக்கும். இறைவன் எல்லாம் கடந்து நிற்கும் பரஞ்சோதியானவன் என்பது கருத்து. சோதி என்பது, இறைவனின் அருவுருவத் தன்மையை சூக்குமமாகக் குறிக்கிறது. அதாவது அருவம்= உருவமில்லா, உருவம்= உருவோடு கூடிய, ஆகிய இவ்விரண்டு தன்மைகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குவது இறைவனாரின் சோதிப் பிழம்பான உருவம். லிங்கத் திருமேனியும் அவ்வாறே. இவ்வுரு குறிப்பது, சுத்த மாயையில் நிகழும் படைப்புத் தொழிலை. உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே.  –   என்கிறது  சிவஞானசித்தியார்.   நேர் இழையாய் என்பதை, சிறந்த நேர்த்தியான ஆபரணங்கள் என்று மட்டுமல்லாது, ஒரு ஆன்மாவிற்குச் சிறந்த ஆபரணங்களாய் அமையும் நேர்மை முதலான குணங்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம். விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் என்றது, தேவர்கள் ஏதேனும் காரணம் பற்றியே இறைவனைத் தொழுவார்கள் என்பதை உணர்த்துவதற்காக. எவ்வித ஆசைகளும் இன்றி, இறைவனை மட்டுமே வேண்டித் தொழும் மானிடர்களுக்கு அவன் எளியவன். தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம்’ ====   பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலமும், பரந்த ஞானப் பெருவெளியைக் குறிப்பதாகிய சிதம்பரத்துள் இருக்கும் ஈசன் என்று இறைவனைப் போற்றுகிறார் மாணிக்கவாசகப் பெருமான். பிரபஞ்ச இயக்கத்தைக் குறிப்பதே நடராஜர் தத்துவம். 'தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசன்'  என்று   இறைவனைக் குறிப்பதும் இதன் காரணம் பற்றியே. ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.=== இறைவனுக்கு அடியாராகிய நாம் ஒருவரை ஒருவர் எள்ளி நகையாட மாட்டோம் என்பதை உணர்ந்து, எழுந்து வருவாயாக என்பது கருத்து.  சில நேரம், ஆன்மீக உயர்நிலையை அடைந்தோர் பரிபக்குவமில்லாத ஆன்மாக்களை  இடித்துரைத்தல், அவர்களை உயர் நெறியில் திருப்பும் பொருட்டேயாம். அதனைப் பெரிதாக எண்ணலாகாது என்பது உட்கருத்து. மாணிக்க வாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!..     []   பாடல் 3 முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன்ஆ னந்தன் அமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.   பொருள்: இந்தப் பாடலும் உரையாடல் நடையிலேயே அமைந்துள்ளது. தோழியர், தம் தோழி ஒருத்தியின் வீட்டு வாயிற்படிக்கு வருகிறார்கள். எப்போதும் காத்திருப்பவள் அந்தத் தோழி. இன்றோ அவள் இல்லக் கதவு கூடத் திறக்கக் காணோம். அதனால், தோழியர், தம் தோழியை நோக்கி, “ முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன்ஆ னந்தன் அமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் “   =============  முத்தைப் போல் ஒளி வீசும் வெண்ணிறமான  பற்கள் மின்ன புன்னகை செய்பவளே!!,  நீ எப்போதும் எங்களுக்கு முன்பே எழுந்து, எங்கள் எதிரே வந்து, சிவனார் என் தந்தை, ஆனந்தமான வடிவுடையவன், இறவா நிலை தரும் அமுதத்தின் உருவானவன் என்றெல்லாம், வாயூறும்படி இனிப்பாகப் பேசும் தன்மையுடையவள். இன்று நீ, அவ்வாறெல்லாம் செய்யாது இன்னும் உறங்குதல் ஏன்?. வந்து உன் வாசற்கதவைத் திற!!.. என்கிறார்கள்.   “ புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ” ========  அதற்கு உள்ளே இருக்கும் தோழி, 'நீங்களெல்லாம், சிவனடியார்க்கு உளவாகிய பத்துக் குணங்களைக் கொண்டிருப்பவர்கள், ஈசனின் பழமையான அடியார்கள்(அதாவது பக்குவம் மிகுந்த பழமான‌வர்கள்). ஒழுக்க நெறிகளை விடாது ஓம்புபவர்கள். நானோ புதியவள் அத்தனை பக்குவமில்லாதவள். எனது குறைகளைத் தீர்த்து, உங்களுள் ஒருத்தியாக என்னை ஏற்றுக் கொண்டால் அது தீயதாய் முடியுமோ!'  என்று  பதிலுரைக்கிறாள். “ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை “  ======  அதற்கு தோழியர், 'உன் அன்புடைமையை நாங்கள் அறிய மாட்டோமா?, நன்றாக அறிவோம். நம் போல்,சித்தம் அழகானவர்கள், சிவனைப் பாடாது இருப்பாரோ! (ஆகவே, நீயும் எழுந்து வந்து பாடு!).   “ இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய் “  ===== நீ எழுந்து வருதல், சிவனைச் சிந்தித்தால்,சிவனைப் பாடுதல், ஆகிய  .இவ்வளவே எங்களுக்கு வேண்டும்என்று பதிலுரைக்கிறார்கள். இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம். சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மைகளுள் ஒன்றான பதியாகிய இறைவனார், முதல் பாடலிலும், பாசம் இரண்டாவது பாடலிலும், பசு வாகிய ஆன்மாக்களைக் குறித்து மூன்றாவது பாடலிலும்  மறைமுகமாகச் சுட்டுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான். தோழி, 'இறைவனை, தன் தந்தை எனப் பேசுகிறாள்' என்று சொல்வதன் மூலம்,உயிர்களுக்கு எல்லாம் பதியாகிய, இறைவனைச் சுட்டி, அதன் மூலம் உயிர்கள் பற்றிக் குறிப்புத் தருகிறார். உயிர்கள், மாயையால் மயங்கும் தன்மையுடையன. ஆன்மீக உயர் நிலையை அடைந்த ஞானியரைக் கூட மாயையின் மந்திரக்கோல் தட்டாது விட்டு வைப்பதில்லை. ஞானியரும் யோகியரும் எந்நேரமும் மாயையின் சதிராட்டத்துக்கு ஆட்படாது தம்மைத் தற்காத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. இப்பாடலில், பக்தி மிகுந்திருந்த தோழி, ஒரு நாள் உறக்கம் விட்டே எழாததால் தோழியர் அவளை எழுப்புகிறார்கள். அவளை மீண்டும் சிவபக்தி செய்ய அழைக்கிறார்கள். பாசத்தால் சூழப்பட்ட உயிர்கள், உயர் நிலை நோக்கி எழுந்து வருங்கால், அவ்விதமே தொடர வேண்டும் என்பதும், எக்காரணம் பற்றியும், பழைய நிலைக்குத் திரும்புதல் சரியல்ல என்பதும் உட்பொருளாகச் சொல்லப்பட்டது. முத்தன்ன வெண்ணகையாய் = முத்து என்பது நவக்கிரகங்களில் சந்திரனுக்குரியது. சந்திரன் மனோகாரகன். அம்பிகையின் அம்சமே சந்திரபகவான் என்றும் கூறுவதுண்டு. ஒரு பரம்பொருளாகவும், அருவுருவினனாகவும் இறைவனைத் துதித்த மாணிக்கவாசகப் பெருமான், இந்தப் பாடலில், உருவில் இரண்டான, அம்மையப்பனாகத் துதிக்கிறார். மேலும்,  மஹாமாயையான அம்பிகையின் கருணை இருந்தாலன்றி, மாயத்திரை விலகாது. பரிபூரண நிலை கிட்டாது. ஆகவே மறைமுகமாக அம்பிகையைத் துதிக்கிறார். முத்து மாலை அணியும் போது, பெண்களுக்கு அழகும் மென்மையும் மேம்படுகின்றது. சந்திரனின் சாதகமான ஒளி அலைகள் ஈர்க்கப்பட்டு, பெண்களின் பிரத்தியேக நோய்கள் தீர்கின்றன. மன அமைதி, படபடப்பு குறைதல், மன ஒருமைப்பாடு, தெளிந்த சிந்தனை ஆகியவை ஏற்படுகின்றன. பெண்தெய்வங்கள், முத்து மாலை அணிந்திருப்பதாகக் கூறுவர். ( வார்குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே' அபிராமி பட்டர் ) மனமானது முத்தைப் போன்ற வெண்மையும், தெளிந்த சிந்தனை மற்றும் நற்குணங்களாகிய ஒளியும் பொருந்தி இருந்தாலே, இறைவனை அடைய முடியும். மனத்தூய்மையின் முக்கியத்துவமும் இவ்வரியில் சுட்டப்பட்டது. யோகியரும் ஞானியரும், புன்னகை பூத்த மலர்ந்த முகத்தினர். அந்நிலையில் இருப்பவள் தோழி என்பது, 'வெண் நகையாய்' என்று கூறப்பட்டது. “ பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர் “ == இந்த வரிக்கு, 'ஈசன் மீது பற்று வைத்திருப்பவர்' என்றும் பொருள் கூறுவதுண்டு. ஆயினும், பத்து உடையீர் என்பது, சிவனடியார்க்கு உளவாகிய பத்துக் குணங்களையே குறிப்பது கண்கூடு(பத்து குணங்கள்== சிவனடியார்கள், சிவனைச் சிந்திக்கையில், 1. அவர் குரல் தழுதழுக்கும்,2. நாக்குழறும்,3.உதடுகள் துடிக்கும்,4. மெய் சிலிர்க்கும், 5.வியர்க்கும், 6. மயிர்க்கூச்செறியும், 7. கால்கள் பின்னும், 8. கண்களில் நீர் அரும்பும், 9. அன்பு மீதூற அழுவதும் தொழுவதும் செய்வர், 10. தன் உணர்வு  இழந்து சமாதி நிலை எய்துவர். 'பாங்குடையீர்' என்பதை, தொடர்ந்த யோக சாதனையில் ஈடுபட்டு விடாது ஒழுகுபவர் என்றும் பொருள் கொள்ளலாம். இதன் மூலம் எழுப்பும் தோழியர், பரிபக்குவ நிலையை அடைந்த ஆன்மாக்கள் என்பது மீண்டும் நிறுவப்படுகின்றது. 'சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை'== மிக ஆழமான பொருளுடையது இந்த வரி. மனம் அழகியர் என்று கூறாமல் சித்தம் அழகியர் என்று கூறுதல் சிந்திக்கத் தக்கது. இறைவன் உயிர்களின் சித்தாகாசத்தினுள் வீற்றிருப்பவன். ஆகாசம், பூதாகாசம், சித்தாகாசம், சிதாகாசம் என மூவகைப்படும். நாம் வெளியில் பார்ப்பது பூதாகாசம். சித்தாகாசம் ஏற்கெனவே நடந்தது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும் உள்ளடக்கியுள்ளது. இதன் ஒவ்வொரு அணுவும் ஞானமயமானது. ஞான மயமான இறைவன் அதில் வீற்றிருக்கிறான். நாம் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே, இந்த சித்தாகாசத் தொடர்பினால்,  நாம் வாழப் போகும்  வாழ்வு குறித்து அனைத்தும் அறிந்து கொள்கிறோம், ஆயினும்,பிறக்கும் போது மாயையால் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு விடுகின்றன. சிதாகாசம் என்பது படைப்பவனையே குறிக்கும். 'அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும்' என்கிறார் அபிராமி பட்டர். தொடர்ந்த தியானத்தின் மூலம், எண்ணங்களற்ற நிலையை அடைந்து, அதைக் கடந்த சிதாகாச நிலையில் இறைவனோடு ஒன்றியிருப்பவர்கள், மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் தோழிகள் என்பது உட்குறிப்பு. பெரும்பாலான நூல்களில், 'இத்தனையும் வேண்டும்' என்பதற்கு, 'உன்னைப் போய் எழுப்ப வந்தோமே, எங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்' என்பதாகப் பொருளுரைக்கப்பட்டிருக்கிறது. ’பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே; அன்பால்.'   என்ற வரிகளுக்கொப்ப, மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தோர், அதனின்றும் வழுவியர் பால் இரக்கம் கொண்டு திருத்த முனைவரே அன்றி சலித்துக் கொள்ள மாட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து. 'மாயையால் வழுவிய நீ, மீண்டும், உன் யோக சாதனைகளைத் தொடர்ந்து, எம் போல் ஆகுதல் வேண்டும். இவ்வளவும் உன் ஆன்மா கடைத்தேற, நீ செய்தல் வேண்டும்' என்பதையே, 'இத்தனையும் வேண்டும்' என்ற சொல் குறிக்கிறதென்று நினைக்கிறேன். மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!.     []   பாடல்  4 ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந் தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.   பொருள்: இந்தப் பாடலும் உரையாடலாகவே அமைந்திருக்கிறது. தோழியர் அனைவரும் ஒன்று கூடி வந்து விட்டனர். உறங்கும் தோழிக்கு, எழுந்து வர மனமில்லை. ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ ======  தோழியர், 'ஒளி வீசும் முத்தைப் போல புன்னகை செய்பவளே!!, உனக்கு இன்னமும் விடியவில்லையா?'என்று கேட்க, வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ ======== அதற்கு எழுப்பப்பட்டவள், 'கிளி போல் அழகிய சொற்களைப் பேசும் நம் தோழியர் எல்லாரும் வந்து விட்டார்களா?' என்று உள்ளிருந்தே குரல் கொடுக்கிறாள். “ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந் தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய் “. =======  தோழியர், 'நாங்கள் எண்ணிச் சொல்லுவோம், ஆனால் அத்துணை காலமும், நீ தூங்கி, காலத்தை வீணே கழிக்காதே (அளவுக்கு மீறிய உறக்கம் ஆபத்தே. உறக்கத்தை, 'கெடு நீரார் காமக் கலன்'களுள் ஒன்றெனக் கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகை.). நாங்கள் எண்ணிச் சொல்வதையும் இப்போது செய்ய மாட்டோம்   விண்ணில் வாழும் தேவர்களுக்கு இறவா நிலை தரும் மருந்தாகிய அமுதம் போன்றவனை, வேதத்தின் உண்மைப் பொருளை, கண்களுக்கு இனிமையாக காட்சி தருவானை மனமாரப்  பாடி, உருகி, உள்ளம் நெகிழ்ந்து நின்றுகொண்டிருக்கிறோம். வேண்டுமானால், நீயே வந்து எண்ணிப் பார். எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய்த் தூங்குவாயாக'. என்று பதிலுரைக்கிறார்கள்.   இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம். நாம் செய்த நல்வினையின் காரணமாக, ஞானிகள் நம்மை வழிநடத்த வரும் போது,  சோம்பியிருக்காது அவர் தம் சொல் கேட்டு நடக்க வேண்டும். இல்லையேல், 'முக்தி தருகிறேன்' என்று முனிவர் வாக்குறுதி அளித்தும் கேளாது பிள்ளைப் பாசத்தால் கட்டுண்டு, பலபிறவி எடுத்து உழன்ற மிட்டாய் வியாபாரியின் கதையாகி விடும்.   இப்பாடலில், சாதகர்கள், சோம்பியிருக்காது, குருவின் சொல் கேட்டு, ஆன்ம சாதனைகளைத் தொடர்ந்து  முயற்சியுடன் பயிற்சி செய்ய‌ வேண்டும் என்பது சொல்லப்படுகின்றது. 'ஒள்நித் தில நகையாய்' என்று இப்பாடலிலும், தோழியின் புன்னகைக்கு முத்தின் ஒளி ஒப்பிடப்படுகின்றது. 'இன்னம் புலர்ந்தின்றோ' என்று 'உனக்கு இன்னமும் விடியவில்லையா?' என்று கேட்பது. ' இந்தப் பொல்லாத பிறவிச் சுழலில் இருந்து மீள வேண்டும் என்ற அறிவு இன்னும்  உன் புத்திக்கு உதிக்கவில்லையா?' என்று கேட்பதாகக் கொள்ளலாம். மிகப் பெரும் துயரிலிருந்து மீண்டவர்களை, நாம் இப்போதும், 'உனக்கு விடிவு காலம் பிறந்து விட்டதா!!' என்று கேட்பதுண்டு. 'வண்ணக் கிளிமொழியர்' என்று தோழியர்களைக் குறிப்பிடுவதிலும் உள்ளார்ந்த பொருளுண்டு. கிளி,  பூரண‌ ஞானத்திற்கு அறிகுறியாகச் சுட்டப்படுகின்றது. மதுரையை ஆளும் மீனாளும், அரங்கனை ஆளும் ஆண்டாளும் திருக்கரங்களில் கிள்ளையை ஏந்தி அருள் புரிகிறார்கள். ( மதுராபுரி நாயிகே நமஸ்தே மதுராலாப சுகாபிராம ஹஸ்தே )   மஹா மந்த்ரிணீயாக, கலைகளில் சிறக்க வரமருளும் ஸ்ரீராஜ சியாமளையும், ஸ்ரீலலிதையும் தம் திருக்கரங்களில் கிளியை ஏந்தி இருக்கிறார்கள். ஸ்ரீஆண்டாளின் திருக்கரங்களில் இருக்கும் கிளி, சுகப்பிரம்ம ரிஷியே என்று சொல்வதுண்டு. ஸ்ரீபாஸ்கரராயரிடம் கேட்கப்பட்ட, 'சதுஷ்ஷஷ்டி கோடி யோகினிகளின்(ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்) பெயர்கள் என்ன?' என்ற கேள்விக்கு, ஞானஸ்வரூபிணியான அம்பிகை, கிளியின் உருவில், ராயரின் தோள்களில் அமர்ந்து கொண்டு, பெயர்களை அவருக்குக் கூறினாள் என்பார்கள். ஆக, ஞானத்தின் உயர்நிலையில் இருக்கும் தோழியரைச் சுட்ட, 'கிளி மொழியார்' என்ற வார்த்தையைச் சொல்கிறாள் தோழி. எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே ====  'நாங்கள் எண்ணி, உள்ளதை உள்ளவாறு சொல்கிறோம்' என்றது எண்ணிக்கையை அல்ல. நாங்கள் தியானித்து அறிந்த பரம்பொருளை, உள்ளது உள்ளவாறே உனக்குத் தெளிவாக அறிவிக்கிறோம்(அதாவது உபதேசித்து வழிநடத்துகிறோம்). ஆனால் நாங்கள் சொல்லும் போது தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு, நீ வெறுமே கண்களை மூடிக் கொண்டு, பலவாறு எண்ணமிட்டால், பரம்பொருளைப் பற்றி அறியமாட்டாய். நீயும் உன் தரப்பில் இருந்து ஆர்வமுடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதே, நாங்கள் உனக்கு உபதேசிக்கும் போது, உன் சாதனை மார்க்கம் எளிதாகும்(உபதேசம் பெறுமுன்பாக, சாதகன் ஓரளவுக்கேனும் பக்குவ நிலை பெற்றிருத்தல் அவசியம்). இல்லையேல், இப்பிறவி வீணே கழியும்' என்பது உட்பொருள்.   இதன் மூலம், என்னதான் குருமூலம் உபதேசங்கள் பெற்றாலும், சாதகன், சோம்பித் திரியாது, முனைப்புடன் முயல வேண்டும். இல்லையேல் எல்லாமும் அவம்(வீண்) என்பது விளக்கப்படுகின்றது. 'விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை'== இறைவனது திருவடிகளில், வேதங்கள் தண்டைகளாக‌  உறைகின்றன. ( மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட மாலாட நூலாட மறையாட திறையாட'  ( நடராஜர் பத்து ) ).   விண்கடந்து மண்கடந்து நின்ற மறையோனின் கேசாதி பாத வர்ணனை இங்கு செய்யப்படுகின்றது. விஸ்வரூப தரிசனத்தைத் துதிப்பதற்கு ஒக்கும் இது. கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந் தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். =====  இதில், 'கண்ணுக் கினியான்' என்பது, அகக் கண்ணுக்கு இனிமையானவன் என்பது பொருள். அதாவது அகக்கண்ணால் பார்க்கப்பட வேண்டியவன்.   பக்தர்கள் பேரானந்தப் பரவச நிலையில், இறைவனை நினைத்து, உருகி, நெகிழ்ந்து ஒன்றி இருக்கும் போது அவர்களைப் புற உணர்வுகள் தீண்டா. அதனால், 'நீயே வந்து எண்ணிக் கொள்' என்றார்கள்.     “ நீயேவந் தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய் “. =====   ஊழி முதல்வனை, ஞான உருவானவனைத் தொழுதலே பேரானந்தம் என்று நாங்கள் சொல்கிறோம். நீ இது பற்றி அக்கறை கொள்ளாது, மாயையின் வசப்பட்ட உறக்கமே இன்பமென்று எண்ணுகின்றாய். சற்று, முயற்சித்து அதிலிருந்து விலகி வந்து எங்களோடு சேர்ந்து பரம்பொருளை சிந்தனை செய். நாங்கள் சொன்னதில் ஏதேனும் குறைவு இருக்குமாயின், நீ மீண்டும் சென்று மாயையின் வசமான மற்ற போகங்களில் ஈடுபடு' என்பது மறைபொருள்.   இதில்  பரிபக்குவ நிலையை அடைந்த பக்தர்களின் உறுதிப்பாடு வியக்க வைக்கும் வகையில் வெளிப்படுகின்றது. ஒரு முறை அந்தப் பேரானந்த அனுபவ நிலை கிடைக்கப்பெற்றவர்கள், தன் முயற்சியால் மீண்டும் சிற்றின்பச் சேற்றினுள் அழுந்த விரும்ப மாட்டார்கள். எனவே, தோழியாகிய பக்குவமற்ற ஆன்மாவை, இவ்வாறு உறுதிபடக் கூறி, சிவசிந்தனை செய்ய அழைக்கிறார்கள் மற்ற தோழியர். மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!!.     []   பாடல்  5 மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம் போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன் றோல மிடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.   பொருள்: “ மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம் போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் “  =====  சிவனாரின் திருவடியை அறிய வேண்டுமென்று திருமால் முயற்சி செய்தும் கை கூடவில்லை. அவரது திருமுடியைக் காண வேண்டும் என்ற பிரமனது முயற்சியும் வெற்றி பெற வில்லை. இவ்வாறு, திருமாலும் பிரமனும்  அறிய முடியாத அண்ணாமலையாரை நாம் அறிவோம் என்று, பாலும், தேனும் போல் சுவையுடைய பொய்களைப் பேசும் வஞ்சகீ, உன் வாசல் கதவைத் திறவாய்.   “ ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன் றோல மிடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய் “. =====  இப்பூவுலகினரும், வானுலகினரும்,பிற உலகினரும், அறிவதற்கு அரிதாக இருக்கின்றவர் எம்பெருமான். அவரது அழகையும், நம் மீது கொண்ட பெருங்கருணையினால் நமது குற்றங்களை எல்லாம் பொறுத்து ஆட்கொண்டருளும் தகைமையையும் வியந்து பாடி, சிவனே சிவனே என்று நாங்கள் முறையிடினும், அதை உணராது துயில் நீங்காது இருக்கின்றாய். இதுவோ வாசம் வீசும், சாந்தினால் ஒப்பனை செய்யப்பட்ட‌ கூந்தலை உடைய உனது தன்மை!!!.   இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம். மாலறியா, நான்முகனுங் காணா  மலையினை: 'திருமாலும், பிரமனும் அறிய முடியாத மலை' என்ற வரி, திருவண்ணாமலையையும், மலை போல் பெரியவன் இறைவன் என்பதையும் ஒரு சேர வெளிப்படையாகக் குறிக்கிறது. திருவெம்பாவை திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது என்பது இவ்விடத்தில் நினைவில் கொள்ளத் தக்கது. ( “  வேதக் காட்சிக்கும் உபநிடதத் துச்சியில் விரிந்த போதக் காட்சிக்கும் காணலன்” (கந்தபு. 3 : 21 : 127)) வாய்க்கு அழகு உண்மை பேசுதல், உள்ளத்திற்கு அழகு நேர்மையாக இருத்தல். உண்மையில் அக அழகே அழகு. புற அழகு மறைந்து போவது. பக்குவமில்லாத தோழி, இங்கு, 'நான் இறைவனை நன்கு அறிவேன்' என்று பொய் (பொக்கங்களே= பொய்கள்) கூறுகின்றாள். பால் மன அமைதியைத் தருவது. தேன், தேனீக்களால் சோம்பலின்றி சேகரிக்கப்படுவது. அதனை சுயநலமின்றி, பிறருக்குத் தேனீக்கள் தருகின்றன. மன அமைதியும், தன் நலம் வேண்டாத ஆணவமற்ற தன்மையையும் கொண்டிருப்போர், தங்களைப் பிறர் உயர்வாக எண்ணுவதற்காக தேவையற்ற பொய்களைக் கூறார். இதன் மூலம், பாலும் தேனும் ஊறுதல் போல அதாவது, தன்னலம் இல்லாத அமைதியானவள் போல், தன்னை காட்டிக் கொள்ளும் தோழியின் குணநலன் விளக்கப்படுகின்றது. 'பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்' என்றது, 'உன்னிடம் இல்லாத நற்குணங்களை, இருப்பனவாகப் பொய் கூறும், வஞ்சகி, உன் அறிவினால், உன் உள்ளத்து நிலையை அறிந்து கொள்' என்பதன் குறிப்பாகும். சத்தியமே இறைவன். சத்தியமல்லாத குணங்கொண்ட தோழி 'வஞ்சகி' என கடிந்து அழைக்கப்பட்டாள். 'சிவனே சிவனேயென்றோலம் இடினும் உணராய் உணராய்காண்' என்றது எத்துணை சொல்லியும் கேளாது உலக மாயையில் ஆழ்ந்திருக்கும் தோழியைக் குறித்து வருந்தியது. எத்தனையோ மஹான்கள் அவதரித்த இந்தப் புண்ணிய பூமியில், ஆணித்தரமாக, திரும்பத் திரும்ப உபதேசிக்கப்பட்ட அவர்களது உபதேச மொழிகளைச் சற்றும் எண்ணாது, மனக் கதவை திறவாது பூட்டி வைத்திருக்கும் பக்குவமில்லாத ஆன்மாக்களைக் குறித்து வருந்துவதாகும் இது. 'ஏலக் குழலி ' என்பதற்கு, 'நன்கு ஒப்பனை செய்யப்பட்ட, சாந்தணிந்த கூந்தலை உடையவள்' என்பது பொருள். இதனால், அழியும் இவ்வுடலை ஒப்பனை செய்து அழகு படுத்துபவள் தோழி என்பது குறிப்பு. இவ்வுலகப் பொருட்கள் பால் உள்ள பற்று விடவில்லை தோழிக்கு. இவள் எங்ஙனம் இறைவனை அறிவாள்? என்பது மறைபொருள். 'அறிவரியான் கோலமும், கோதாட்டுஞ் சீலமும்' என்றது, இறைவனாரின் திருக்கோலத்தையும், சீலத்தையும் ஒருங்கே சுட்டுவன. அவ்வாறு உள்ளும் புறமும் மெய்யழகு பொருந்தியவன், மெய்யழகை அன்றி வேறெதையும் விரும்பான். இறைவனார் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரமனையும், தாழை மலரையும் இறைவனார் சபித்தார். ஆகவே, உண்மையல்லாதவரையும், நிலையல்லாதவற்றை நிலையானது என்று எண்ணி மயங்குவாரையும் இறைவன் விரும்பான் என்பது உட்கருத்து. மேலும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். இப்பாடலில் இறைவன் ஐந்தொழில்படுவது விளக்கப்படுகின்றது. பிரமனும், திருமாலும், ஆக்கல், காத்தல் தொழில்களைக் குறிக்கிறார்கள். 'ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்' என்ற வரி, யாரும் அறியாத என்று இறைவனாரின் மறைத்தல் தொழிலையும், 'ஆட்கொண்டருளி' என்பது அருளலையும், 'கோதாட்டுஞ் சீலமும்' (கோது=குற்றம்) குற்றங்களை, மும்மலங்களை நீக்குதல் என்ற பொருளில் அழித்தலையும் சுட்டுகின்றது. 'கோலமும்' என்றது நம் முன் தோன்றும் நிலையற்ற‌ உலகப் பொருட்கள். மேலும், ஞாலமே, விண்ணே, பிறவே என்று மூன்று 'ஏ' காரங்கள் சேர்த்தது,  எண்ணுப் பொருள். இதன் மூலம், அனைத்து உலகங்களும் எண்ணப்பட்டன. ஆகவே, அனைத்து உலகங்களையும் தன்னுள் அடக்கிய, எல்லா உலகங்களிலும் நிறைந்து நின்ற, ஈசனாரின் 'விராட் ஸ்வரூபம்' விவரணம் செய்யப்பட்டது. 'உலகெலாம் நிறைந்து உள்ளும் புறம்புமாய' விமலனின் பேரொளி மயமான திருவுருவை இவ்வுலக வாழ்வினின்று விடைபெறும் சமயத்தில் நினைக்கும் பேறு பெற்றவர், பேரின்ப வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம். பேரொளி மயமாக இறைவன் தோன்றிய திருவண்ணாமலையை நினைக்க முக்தி கிட்டும் என்பதன் தாத்பர்யம் இதுவே  என்பது என் கருத்து. மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!.     []   பாடல் 6 மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.   பொருள்: “ மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ “ =====  "மான் போல‌ மருளும் பார்வை அழகையுடைய பெண்ணே!!, 'நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்' என்று நேற்று  நீ சொன்னாய். அப்படி சொல்லிச் சென்ற நீ போன திசையைச் சொல்வாயாக.. 'நாம் நேற்று சொன்ன சொல்லைக் காக்கவில்லையே' என்ற நாணம் சிறிதும் இல்லாமல், இன்று நீ இன்னமும் எழாமல் தூங்குகின்றாயே?!!.. உனக்கு இன்னமும் பொழுது விடியவில்லையா!!.. "   “ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் “ ====  "இப்பூவுலகும், வானுலகும், பிற உலகங்களும் அறிவதற்கு அருமையானவன், நம் மீது பெருங்கருணை கொண்டு, தானாகவே உவந்து, நம்மை ஆட்கொண்டருள வந்தவனின் நெடிய கழல்கள் அணிந்த திருவடிகளைப் பாடி வந்த எமக்குப் பதில் கூறுவதற்காக, உன் வாய் திறவாய்."   “ ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய் “. ====  "நாங்கள் இவ்வளவு கூறியும், பக்தியால் உன் உடல் உருகி மெலியவில்லை..இவ்வாறு நீ இருப்பது உனக்குத் தான் பொருந்தும்.. எமக்கும் பிறருக்கும் தலைவனாய் இருக்கும் எம்பெருமானை எழுந்து வந்து பாடுவாயாக!!!.."   இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.. 'மானே'==='மான் போலும் பார்வையை உடைய பெண்ணே'== தோழி நேற்று, தாமதமாக வந்து சேர்ந்து கொண்டவள். 'தாமதமாகிவிட்டதே' என்ற அச்சத்தால், 'நாளை நானே வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன்' இன்று உறுதி கூறினாள். இன்று அதை செயல்படுத்தவில்லை..இவ்விதம் அச்சத்தால் சொன்ன மொழி உடையவளாதலின் 'மானே' என்று அழைக்கப்பட்டாள். ' நாணாமே'....சொன்ன சொல்லில் உறுதிப்பாடு இல்லாமல் இருப்பதோடு அதற்காக நாணப்படாமலும் இருக்கின்றாள்.. 'திசை பகராய்' என்றது.. சொல்லுக்கும் செயலுக்கும்  பொருந்தாத தோழியின் இயல்பைக் குறித்து, கேலியாகச் சொன்னது.. 'தலையளி' என்பது பெருங்கருணையை குறிக்கும். 'வந்தோர்க்குன் வாய்திறவாய்'=== நாங்கள் எம்பெருமானைக் குறித்து பாடியும், எழுந்து வராமல், எங்களுக்குப் பதிலும் கூறாமல் இருக்கிறாய் என்றது,  சொன்ன சொல்லைக் காக்காத, குற்றமுள்ள நெஞ்சையுடைய‌ தோழி,  பதில் கூறி, உண்மையை ஏற்காமலிருப்பதைச் சுட்டியது. ‘ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்'== பக்தியால் உருகி, உடல் மெலியாது இருக்கின்றாய் என்றது, தோழி தன் பக்தி நிலையில் பூரணமடையாது இருக்கின்றாள் என்பதைக் குறிப்பதாகும். 'உனக்கே உறும்'  என்றது, இத்தகைய இயல்பு உனக்குத் தான் பொருந்தும் என்பது போல் கூறி,  அவ்வாறு இருக்கலாகாது என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்கள். இதன் மூலம் பக்தர்கள்,உண்மை, நேர்மை முதலான நறுங்குணங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பது மீண்டும் சொல்லப்படுகின்றது. 'எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனை' ==  கோன் என்றால் அரசன். எமக்கும் ஏனோர்க்கும் என்று இருவிதமாக விரித்தது, எம் போல் சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் உள்ளோருக்கும், அவ்விதம் இல்லாத உன் போன்றோருக்கும் அரசன், தலைவனாகிய இறைவனைப் பாடுவதே அறிவுடைமை என்பதை உணர்ந்து தெளிந்து பாட வருவாயாக என்று அழைக்கிறார்கள். மேலும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.. மாயையாகிய மயக்கத்தில் ஆழ்ந்து, துயிலுகின்றவள் தோழி. அதைக் குறிக்க மானே என்றார். 'அவ்விதம் மயங்கியிருக்கின்றோமே'என்ற சிந்தனையும் இன்றிஇருக்கின்றாள் தோழி என்பதை 'நாணாது' என்றார். 'வானே நிலனே பிறவே' ==  முந்தைய பாடலில், 'விண்' என்ற சொல்லால் மேலுலகங்கள்  அனைத்தையும் குறித்தவர், இப்போது 'வான்' என்று வான் முதலாகிய ஐம்பூதங்களையும் குறிக்கிறார். பஞ்ச பூதங்களாக விரிகின்றவர் இறைவன் என்பதையும், பஞ்ச பூதங்களையும் படைத்தவர் எம்பெருமான் என்பதையும் இது ஒருசேரக் குறிப்பதாகக் கொள்ளலாம். ‘இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங் காற்றுமாகி, அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி’ ==அப்பர் சுவாமிகள் அறிவரியான் என்பதற்கு அறிவினால் அறிவதற்கு அரியவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் அவன் அன்பர் தம் பக்திக்கு எளியவன். தானே வந்து  ஆட்கொண்டருளும் கருணைப் பெருங்கடல். அவனைப் பாடி உருகி, உடல் மெலிவாரைத் தாமே வந்து ஆட்கொள்வான். பாடி மனங்குழைவோரின் பக்திக்கு எளியவன் இறைவன். எமக்கும் ஏனோர்க்கும் என்று இரு விதமாக விரித்ததையும் சற்று உற்று நோக்கலாம். இவ்வுலகம் இரட்டைத் தன்மைகள் நிறைந்ததாய் உள்ளது. அவையனைத்திற்கும் அவன் ஒருவனே இறைவன். ('உளதாய் இலதாய்'  அருணகிரிநாதர்).  இதன் மூலம் ஒரே பரம்பொருள் என்பதும் புலப்படுத்தப்படுகின்றது. மேற்கூறிய கருத்துக்கள், மாணிக்கவாசகப் பெருமானின் கீழ்க்கண்ட திருவாசக வரிகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே.   மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!.     []   பாடல் 7 அன்னே இவையும் சிலவோ பலஅமரர் உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ் சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.   பொருள்: ‘ அன்னே இவையும் சிலவோ ‘ ====  அன்னையே,  எம்பெருமானது திருவிளையாடல்களில் இதுவும் சில போலும். ‘ பலஅமரர் உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் ‘ ====  தேவர்களும், யக்ஷர்கள், கின்னரர்கள் முதலான மற்ற விண்ணோர்களும் நினைப்பதற்கும் அரியவன், ஒரு பரம்பொருள், மிகப் பெரும் புகழுடையவன், அவனுடைய சின்னங்கள் ஒலிக்கும் ஒலி கேட்கும் முன்பே 'சிவ' என்றே வாய் திறப்பாய்.   ‘ தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ் சொன்னோங்கேள் வெவ்வேறாய் ‘ ====  'தென்னாடுடைய சிவனே' என்று யாம் கூறி முடிக்கும் முன்பாக, தீயோடு சேர்ந்த மெழுகு போல் உருகுவாய், என் பெருந்துணைவன், என் அரசன், அமுதம் போன்றவன் என்று நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இறைவனைப் புகழ்கின்றோம்.   ‘ இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய் ‘. ====  அதைக் கேட்டு இன்னமும் நீ உறங்குகிறாயா?!!.. வலிய, இரக்கமற்ற நெஞ்சை உடைய அறிவிலிகள் போல், ஏதும் செய்யாது படுத்திருக்கின்றாயே?!!, தூக்கத்தின் பெருமையை என்னெவென்று சொல்வது?.   சற்று விரிவாகப் பார்க்கலாம்.. 'அன்னே'==இப்பாடலில் எழுப்பப்படும் பெண், எம்பெருமான் மீது பெரும் பக்தியுடையவள். ஆதலில் அவள் 'அன்னையே(அன்னே) என்று விளிக்கப்பட்டாள். இவையும் சிலவோ: இதற்கு இருவிதமாகப் பொருள் கூறுகின்றனர். 'உன் குணங்களுள் இவையும் சிலவோ' என்பது ஒரு பொருள். 'இறைவனது திருவிளையாடல்களுள் இவையும் சில போலும்' என்பது ஒரு பொருள். ஆயின், முதலில் 'அன்னையே' என்று விளித்தமையால், பக்தி மீதூறப் பெற்றவள் தோழி என்பது விளங்குகிறது. அத்தகைய தன்மையுடையவளிடத்து, குணக்குறைபாடு காண்பதரிது. இறைவனார், தம் சோதனை போன்றே, இம்மாதிரியான குணக்குறைபாடுகளை அவளிடத்து, தோன்றச் செய்திருக்கிறார் என்பது தோழியரின் உறுதிப்பாடு என்பதாகப் பொருள் கொள்ளுதலே சரியென நினைக்கிறேன். ‘ பலஅமரர் உன்னற் கரியான் ‘ == 'அமரர்கள் நினைப்பதற்கும் அரியவன்' என்றதன் காரணம், அமரர்கள், அவ்வப்போது, தம் ஆற்றல்களை முதன்மைப்படுத்தி, செருக்கடைவார்கள்.  அந்தச் செருக்கை அடக்கும் பொருட்டு, சிவனார் அவர் சிந்தைக்கு எட்டாது மறைந்தருளுவார்.   ( 'விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்றன்னை' …….. சிவபுராணம்).   ‘ ஒருவன் ‘ = ஒரே பரம்பொருளான சிவனார். ‘இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்'== இதற்கும் இருவிதமாகப் பொருளுரைக்கின்றனர்.== அதிகாலையில், பெரும் புகழுடைய‌ சிவனார் திருக்கோயில் திறக்கும் போது, சங்கு முதலிய திருச்சின்னங்கள் முழங்கும். அதைக் கேட்டுத் துயில் நீங்கும் தோழி, 'சிவாய நம' என்று உச்சரித்தே துயில் நீங்குவாள் என்பது ஒரு பொருள்... சிவனடியார்களது சின்னங்களாகிய, உருத்திராக்கம், விபூதி முதலியவற்றின் பெயர்களைக் கேட்ட மாத்திரத்திலேயே, சிவனாரின் திருநாமத்தை உச்சரித்து மெய்சிலிர்ப்பாள் தோழி என்பது மற்றொரு பொருள்..  ஆயினும் இங்கே சில யோக சம்பந்தமான செய்திகள் மறை பொருளாயிருப்பதால், முதலில் கூறிய பொருளே ஏற்புடையதென்று நினைக்கின்றேன். ‘ தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்’ === திருக்கோயில் திறந்து, திருச்சின்னங்கள் ஊதப்பெற்ற பின், அடியார்கள் சிவனாரைப் பாடுவர். அவ்விதம்   'தென்னாடுடைய சிவனே' என்று அவர்கள் துவங்கிப் பாடுதலை முடிக்கும் முன்னரே, தீயிலிட்ட மெழுகு போல் பக்தியால் உள்ளம் உருகுவாள் தோழி. 'என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ் சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ' =====  இத்தகைய இயல்புடைய தோழி, தோழியர், இறைவனைத் தனித்தனியாகப் புகழ்ந்து பாடிய போதும், அதைக் கேட்ட வண்ணம் துயிலுகின்றாள்...உலக மாயையின் விளையாட்டுத் தான் என்னே!!..   'என் ஆன், என் அரையன், இன் அமுது' என்று மும்முறை கூறியது, கவனத்தில் கொள்ளத்தக்கது. பிறவிப் பெருங்கடலைக் கடக்க அவன் ஒருவனே துணைவன், அவனே மன்னுயிர்களின் தலைவன், பிறவா நிலையை அருள வல்லவன் அவன் ஒருவனே. இதை நெஞ்சத்துள் வைத்து, ஊக்கமுடன் சாதனா மார்க்கத்தில் முயல வேண்டும் என்பது கருத்து. வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.== 'பேதையர்' என்றது, இங்கு அறிவில்லாத தன்மையைக் குறிக்கிறது. வாளா கிடப்பது, செயலேதும் இன்றி சும்மா இருப்பதைச் சுட்டியது. தோழி இன்று ஏனோ உறக்கத்தின் வசப்பட்டு விட்டாள்..ஏதும் செய்யாது என்றது, சிவ சிந்தனை செய்யாது, சிவனார்குரிய பூசனை முதலியவற்றில் ஈடுபடாது, தோழி உலக விஷயங்களின் பால் செல்வதையே. ஈசனைத் தொழும் செயலே செயல், மற்றதெல்லாம் செயலல்ல என்பது தோழியரின் துணிபு. ஆன்மீக உயர்நிலையை அடைந்தோர், எவ்விதத்திலும் கீழ் நிலைக்கு இறங்கலாகாது. இறைவன் சோதனை போல், அவர்களைப் பக்குவப்படுத்தும் பொருட்டு, மாயையில் ஆழ்த்துவான். தளராத பக்தி வைராக்கியத்தால் அவற்றினின்று மீளுதல் வேண்டும் என்பது உட்பொருள்.. என்னே துயிலின்  பரிசு என்றது, தோழி மேல் குற்றமில்லை.. ஈசனாரின் லீலையால், மாயையின் வசப்பட்டாள் தோழி என்பதை உணர்ந்து, மாயையை நொந்து கூறியதாம். பரிசு என்பது இங்கு நொந்து கூறும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. இதில் மறைபொருளாயிருக்கும் யோக ரகசியங்களுள் ஒன்று மட்டும்.. 'இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே ' ===== திருச்சின்னங்களில் சங்கு முதலானவை ஊதும் ஒலி என்பது, தியான நிலையில், ஒருவர் சிதாகாசத்தில் ஒடுங்கும் போது, சங்கிற்கு நிகரான ஒலி சகுண பிரம்ம நிலையில் கேட்கும். நிர்க்குண பிரம்மத்தில் அது கேட்பதில்லை..   தியானத்தின் மூலம், தோழி எய்தியுள்ள ஆன்மீக உயர்நிலையை விவரிக்கும் சொல் அது.. ( சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே சாதி விடாத குணங்கள்நம் மோடு சலித்திடும் ஆகாதே அங்கிது நன்றிது நன்றெனும் மாயை அடங்கிடும் ஆகாதே ஆசையெ லாம்அடி யார்அடி யோம்எனும் அத்தனை ஆகாதே (திருப்படை ஆட்சி.==மாணிக்கவாசகப் பெருமான்)) .   மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!!!   []   பாடல் 8 கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.   பொருள்: அதிகாலைப் பொழுதில்  நாம் காணும் காட்சிகள் இப்பாடலில் விவரிக்கப்படுகின்றது.. வாழி (வாழி' என்ற சொல், ஐந்தாவது வரியின் துவக்கமாக இருந்தாலும், விடியற்காலையில், தோழி எழும்  வேளையில் மங்கலச் சொல்லாக, 'நீ வாழ்வாயாக' என்ற பொருளில் முதலில் கூறப்பட்டது..) பெண்ணே, நீ வாழ்வாயாக... ‘ கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்’  ====  கதிரவன் உதயமாகும் முன்பாகக் கோழி கூவுகிறது.. நாரை முதலான பறவைகள், சத்தமிடத் துவங்குகின்றன... ‘ ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் ‘ ====  திருக்கோயில்களில், ஏழு ஸ்வரங்களாலான இசையை எழுப்பும் ஏழு வித இசைக் கருவிகள் ஒலிக்கத் துவங்குகின்றன. வெண்சங்கு ஒலிக்க, திருக்கோயில்களில் பூசைகள் துவங்கி விட்டன. ‘ கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ ‘  =====  சோதி உருவானவரும், ஒப்புவமை இல்லாத,  கருணைப் பெருங்கடலுமான சிவபெருமானது நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம்..உனக்கு அது கேட்கவில்லையா!!..   ‘ ஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ‘  ===  இது எத்தகைய உறக்கமோ?!!வாயைத் திறந்து பதிலுரைக்கக் கூட‌ மாட்டேன் என்கிறாயே?!!!...(உன் வாயைத் திறந்து பதிலாவது கூறு என்பதாகவும் கொள்ளலாம்) ‘ ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய் ‘. ====   திருக்கரங்களில் சக்கரம் ஏந்திய திருமாலைப் போல் இறைவனாரிடம் அன்புடையவள் ஆவேன் என்று நீ உறுதி கூறிய திறம் இவ்வாறோ?!!! ஊழிக்காலமாகிய பிரளய காலத்தில், யாரிடம் இவ்வுலகப் பொருட்கள் எல்லாமும் ஒடுங்குகிறதோ, முதல்வனாகிய அந்த  இறைவனை, உமையொரு பாகனைப் பாட எழுந்து வாராய்!!!!   இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.. 'வாழி' என்ற சொல், தோழி நன்கு வாழ்தலை, அதாவது ஆன்மீகப் பெரு வாழ்வு வாழ்தலை உடையவள்.. ஆகவே ' நீ வாழ்வாயாக' என்று வாழ்த்தி, அவ்விதம் பெருவாழ்வு வாழ விரும்புபவளுக்கு பேருறக்கம் தகாது என உணர்த்தினர்... கோழி முதலான பறவைகள் சிலம்புவது, விட்டு விட்டு ஒலிக்கும் அவற்றின் குரலோசையை மட்டுமல்லாது, ஆன்மீக விழிப்பு நிலை ஏற்பட்டு, யோக சாதனை பயில்வாருக்கு, குறிப்பிட்ட சில நிலைகளில் கேட்கும் ஓசைகள் சங்கேதமாக உணர்த்தப்பட்டன.. வெண்சங்கின் ஓசையும் அவ்வாறே.. ‘ கேழில் பரஞ்சோதி, கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ.’. ====  இது, 'ஒருவருக்கும் ஒப்புவ‌மையில்லாத சோதி வடிவானவனும் கருணை வடிவானவனுமான இறைவனது உயர்ந்த புகழைப் பாடினோம்' என்று வெளிப்படையான பொருள் தந்தாலும், இதில் 'விழுப்பொருள்கள்' என்ற சொல் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது..   ஒரு சொல்லில் பொதுப் பொருள் மட்டுமல்லாது, சிறப்புப் பொருள் கண்டு தெரிந்து தெளிதல் வேண்டும்.. உதாரணமாக, 'அரிய நான்மறை ஆறங்க மாய்ஐந்து புரியன்'..இதில் ஐந்து புரியன் என்பதைப் பார்க்கலாம். பொதுப் பொருள்: ஐந்தொழில் புரியும் இறைவன்.. சிறப்புப் பொருள்..அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என்னும் ஐங்கோசங்களாக உறைபவன். இவை உயிர்க்கு இடமாக அமைவதால் புரி எனப்பட்டன. இது போல, 'விழுப்பொருள்கள்' என்பதற்கு சிறப்புப் பொருளாக கீழ்க்கண்டவை சொல்லப்படுகின்றன. ஒருவருக்கும் சமமில்லாத இறைவனின், பொது இயல்பை மட்டுமல்லாது சிறப்பு இயல்பையும் அறியத் தகுந்த‌ சிவஞானம் சித்திக்க வேண்டும்..என்பது ஒரு பொருள்.. (விண்ணவ ரும்அறி யாத விழுப்பொருள் இப்பொருள் ஆகாதே எல்லைஇ லாதன எண்குணம் ஆனவை எய்திடும் ஆகாதே (திருப்படை ஆட்சி.. மாணிக்கவாசகப் பெருமான்) ).   மாபெரும் யோக ரகசியங்கள் அறிந்துள்ள பாடலின் நுண்பொருளையும் ஆய்ந்து அறிந்து உணரத் தலைப்பட வேண்டும் என்பது இரண்டாவது பொருள். அது போல், 'கேழில் பரஞ்சோதி' என்பதற்கு 'அஞ்ஞான இருளை நீக்கும் சோதியான சிவபெருமான்' என்னும் பொருளும் கூறப்படுகின்றது. 'ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ'.====  'நஹி நிந்தா ந்யாய'த்தின் அடிப்படையில், ஒரு தெய்வம் பற்றிச் சொல்லும் போது, மற்ற தெய்வங்கள் அந்தத் தெய்வத்தைத் துதித்ததாகச் சொல்வது மரபு... அவ்வழியில், ஒரு புராணக் கதை இந்த வரியில் நினைவுபடுத்தப் படுகின்றது.. 'சக்கரப்படை' வேண்டி, சிவனாருக்கு ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யத் துவங்கினார் திருமால். சிவ லீலையால், பூசை செய்யும் வேளையில், எடுத்து வைத்திருந்த ஆயிரம் தாமரை மலர்களில், ஒன்று குறைந்தது. தாமரை மலரை ஒத்த தம் திருக்கண்களில் ஒன்றையே ஆயிரமாவது மலராக எம்பெருமானுக்கு அர்ப்பணம் செய்ய முயன்ற போது, எம்பெருமான் தடுத்து, 'புண்டரீகாக்ஷன்' என்னும் திருநாமத்தையும், சக்கரத்தையும் தந்தருளினார்  என்பது புராணம்.. ஆகவே, 'ஆழி தனக்குக்  கிடைப்பதற்காக, நெறிமுறை தவறாது பக்தியுடன் பூசனைகள் செய்த திருமாலைப் போல், பக்தியில் சிறந்தவள் ஆவேன்' என்று தோழி கூறிய உறுதி,  இது போல் தூங்குவதில் வந்து முடிந்ததைக் கண்டு நகைத்தனர் தோழியர். ( தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி் (போற்றித் தாண்டகம், அப்பர் சுவாமிகள்) ).   ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். ====  இதில் ஏழைப்பங்காளன் என்பதற்கு மூன்று விதமாகப் பொருள் கூறப்படுகின்றது..   ஏழைகளுக்காக இரங்குபவன்,ஏழைப்பங்களான்' என்று கருணையில் மிக்கவனான எம்பெருமானைக் கூறுவது ஒரு விதம். ஏழை==பெண், உமை.. சிவனார் மாதொரு பாகனாகத் திகழ்வதைச் சுட்டுவது ஒரு விதம்.. ஏழை என்ற சொல், உண்மையில் இறைகருணையாகிய செல்வம் இல்லாதவரைக் குறிக்கும்...அவ்விதம் கருணையைப் பெறாது, பெற முயலாது இருப்போரையும் தம் கருணையால் காப்பவன் இறைவன் என்பதால் 'ஏழைப் பங்காளன் என்று  குறிக்கப்பட்டார். 'பங்காளனையே' என்று 'ஏ' காரமாகக் கொண்டது, நீ வழிபடு தெய்வமாகக் கொண்ட சிவனைத்தான் பாடு என்கிறோம் என்பதாகப் பொருள் கொண்டு, தோழியின் ஏக தெய்வ வழிபாட்டுச் சிறப்பை உணர்த்திற்று.. மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!!!   []   பாடல் 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.   இது வரை நாம் ஓதிய பாடல்களில், தோழியர்கள், தம்மைச் சேர்ந்தோரை ஒவ்வொருவராக எழுப்பிய வகை கூறப்பட்டது. இந்தப் பாடலில், அவர்கள் எல்லோரும் பாவை நோன்புக்காக ஒருங்கு கூடிய பின், முதற்கண் இறைவனைப் பாடித் துதிப்பது கூறப்படுகின்றது.. பொருள்: ‘ முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே ‘  ====  காலத்தால் மிகவும் முற்பட்டனவென்று அறியப்பட்ட பழம்பொருள்களுக்கும், முற்பட்ட பழமையான பரம்பொருளே!!.. ‘ பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே ‘ ====  பின்னர் தோன்றப்போகும் புதிய பொருள்களுக்கும் புதிய பொருளாகி நின்ற தன்மை உடைய இறைவனே!!. ‘ உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்’ ===  உன்னை ஆண்டவனாகப் பெற்ற, சிறப்புப் பொருந்திய அடியார்களாகிய நாங்கள், உன் தொண்டர்களது திருவடிகளையே வணங்குவோம்!!..அவர்களுக்கே உரிமை உடையவர்களாக எங்களைக் கருதிக் கொள்வோம்!!..   ‘ அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்’ ===  அத்தகைய சிவபக்திச் செல்வர்களே எங்களுக்கு கணவராவார்கள்!!.. அவர்கள் உகந்து கட்டளையிட்ட பணிகளை, அவர்கள் மனதோடு பொருந்தி நின்று, அவர்களுக்கு அடியவராய் ஏவல் செய்து முடிப்போம்.   ‘ இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய் ‘. ====  எங்கள் பெருமானாகிய இறைவனே!!.. எங்களுக்கு நாங்கள் விரும்பிய இம்முறையிலான வாழ்வைக் கிடைக்குமாறு அருள் செய்வாயாக. அவ்விதம் செய்வாயாயின், நாங்கள் குறையும் இல்லாது இருப்போம்!!   இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.. 'முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே' ==  இது இறைவனாரின் கால தத்துவத்துக்கு அப்பாற்பட்ட தன்மையைச் சொன்னது. இறைவனாரே உலகப் பொருட்களின் தோற்றத்துக்குக் காரணமாயினாராதலின், அனைத்திற்கும் முற்பட்டவரானார்..என்றும் புதிதான பேரானந்த நிலையின் உருவாய் நின்றிருப்பதால், புதிய பொருள்களுக்கும் புதியவரானார்.   ( முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின் மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை என்னானை என்னப்பன் என்பார்கட்(கு) இன்னமுதை அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய் .(திருவம்மானை==மாணிக்கவாசகப் பெருமான்.)   (  மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை ஒப்பானை யொப்பிலா வொருவன் தன்னை உத்தமனை நித்திலத்தை யுலக மெல்லாம் வைப்பானைக் களைவானை வருவிப் பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. (அப்பர் சுவாமிகள்) ).   உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் =====  இறையருள் கிடைப்பதற்கு உயிர்கள் செய்கிற முயற்சியே சமயநெறியாகும். சமய நெறிகள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன.   (  சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம் தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும் நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம் நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர் (சிவஞான சித்தியார்) ).     சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாத(தாச) மார்க்கம் ஆகியவற்றை சரியை (உடலால் வழிபடுவது), கிரியை(உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது), யோகம் (உள்ளத்தால் வழிபடுவது), ஞானம் (எங்கும் இறையருட்கருணையையே காண்பது) என்றும் கூறுவர். இதில், தாச மார்க்கம் இப்பாடலில் விளக்கப்படுகின்றது.. இறையனாருக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு செய்வதே  தாச மார்க்கம்   இதன் மூலம், சாலோகம்  (இறைவனுடைய உலகம்) செல்லுகின்ற பேறு கிட்டும். பெருமான் மீது பக்தி மீதூறப் பெற்ற இறையடியார்களே தம் கணவராக வர வேண்டும் என்றதும், அவர்தம் மனதோடு பொருந்தி வாழ்ந்து, அவர் இட்ட பணியைச் செய்து முடிப்பதாகக் கூறியதும் இறையடியார்க்குச் செய்யும் அரும்பணியின் பெருமையை உணர்த்தியது.. ‘ இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய் ‘ ===  'எம் தலைவனாகிய நீர், இது ஒன்றையே அருளுவீராயின் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை' என்றது 'தாசமார்க்கத்தின்' பெருமையை எடுத்துரைத்தது..   உழவாரப் பணி செய்த அப்பர் பெருமானும், அடியார்கட்கமுதளித்து உய்ந்த அப்பூதி அடிகளாரும் தாச மார்க்கத்தினால் இறை கருணை பெற்ற அருளாளர்களுக்குச் சிறந்த உதாரணங்கள்.. பாவை நோன்பு நோற்றலின் பயனாக, நல்லதொரு கணவரை வேண்டும் பாடலான இதை பக்தியுடன் பாடித் துதிப்பவருக்கு நல்லதொரு மணாளன் அமைவார் என்பது பெரியோர் கூற்று. மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!   []   பாடல் 10 பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். பாவை நோன்புக்காக ஒருங்கு கூடிய மகளிர், நீராடலுக்காக நீர்த்துறையைச் சென்று அடைந்து, அங்கு தமக்கு முன்பாக வந்திருந்த, திருக்கோயிலில் பணி புரியும் மகளிரைக் கண்டு, அவர்களோடு சேர்ந்து, இறைவன் புகழைக் கூறித் துதிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. பொருள்: ‘ பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே ‘ ======= இறைவனின்  திருப்பாத கமலங்கள், கீழ் உலகங்கள் ஏழினுக்கும் கீழாக,     சொற்களால் அளவிட முடியாதவையாக‌ இருக்கின்றன.. அவனது திருமுடியும், மேலுள்ள எல்லாப் பொருட்களுக்கும் மேலான, முடிவான‌ இடமாய் விளங்குகிறது.   ‘ பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் ‘ ===== அவன் திருமேனி ஒரு வகையானதல்ல.. மாதொரு பாகன் அவன். ‘ வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்  ‘ =====  வேதங்கள் முதலாக, விண்ணுலகத்தார்,  மண்ணுலகத்தார் யாவரும் துதித்தாலும், அவன் பெருமையை ஓதி முடிக்க இயலாது. நமக்குச் சிறந்த‌ தோழன். தொண்டர்கள் நடுவில் இருப்பவன்.   ‘ கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய் ‘ ======  . குற்றமொன்றில்லாத குலத்தினராகிய‌, கோயில் பணிசெய்யும் பெண்களே!!. அவன் ஊர் எது?, பேர் எது?, உற்றவர் யார்?, அயலவர் யார்?, அவனைத் தக்கவாறு புகழ்ந்து பாடும் வகை என்ன?..     சற்றே விரிவாக.. 'பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்'== பாதாளம் என்று தெளிவாகக் குறித்தமையால், இது பாதாளம் ஈறான கீழ் ஏழு உலகங்களைக் (அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் ) குறித்தது. 'சொற்கழிவு பாதமலர்' என்றது சொல்லால் விவரிக்கவொண்ணாத பெருமையுடைய, இன்ன மாதிரியானது என்று அளவிடப்பட இயலாத திருவடித் தாமரைகள் என்பதைக் குறித்ததாம்.. இதன் மூலம் இறைவன் எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் என்பது உணர்த்தப்பட்டது. 'போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே' === 'கொன்றை முதலான  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமுடியானது, மேலுள்ள பொருள் யாவற்றிற்கும் மேலான முடிவாக அமைந்தது' என்னும் பொருளில் சொல்லப்பட்டாலும் இது சற்றே ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. திருவடிகள் கீழ் ஏழு உலகங்களைத் தாண்டியும் நின்றது. ஆகவே, 'திருமுடி' என்ற குறிப்பினால், மேலிருக்கும் திருமுடியானது, மேலுலகங்கள் ஏழையும் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்) கடந்து நின்றது என்று பொருள் கொள்ளலாம். 'எல்லாப் பொருள்முடிவே' என்றதால், மேலுள்ள அதாவது, மேலானதென்று கருதத்தக்க பொருட்கள் எல்லாவற்றிலும் மேலான பெருமையுடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். 'திருமுடி' என்ற குறிப்புச் சொல்லால், எல்லாவற்றிலும் உயர்ந்தவன் இறைவன் என்பது புலனாயிற்று..முடிந்த முடிவான மெய்ப்பொருள் இறைவனே!! முதலில் பாதாளம் என்று உலகங்களை மட்டும் உணர்த்தியவர், இம்முறை எல்லாப் பொருள் என்று முடித்தது, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனின் வியாபகத் தன்மையை உணர்த்த. 'வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்' =====  வார்த்தைகளால் ஓதி முடிக்க முடியாத‌ (உலத்தல்==முடிதல்), பெரும் சிறப்புடைய ஒரு தோழன் என்றது, இறைவனாரைக் காட்டிலும் சிறந்த தோழன் இல்லை என்பதை உணர்த்திற்று. இதன் மூலம், சமய நெறிகளுள்  ஒன்றாகிய 'சகமார்க்கம்' குறிப்பாக உணர்த்தப்படுகின்றது.   சிவநெறியில், யோகத்தை, சகமார்க்கம் அதாவது ஒத்து நிற்கும் தோழமை நெறி என்று கூறுவர். இறைவடிவை ஒத்தநிலை கிட்டச் செய்யும் நெறியாதலின் தோழமை நெறி எனப்பட்டது. யோகம் என்பது இங்கு அட்டாங்க யோகமே. சன்மார்க்கமாகிய சுத்த ஞானத்தின் தன்மையை உடையது சகமார்க்கம். ( சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம் பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந் துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே. (திருமூலர்) ).   'தொண்டருளன்' ====  இதை அடியார்கட்கு நடுவில் இருப்பவன் என்றும் அடியார்தம் உள்ளத்து இருப்பவன் என்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்.. ( இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே. (ஔவையார்) ).   'கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்'==== முற்காலத்தில், பெண்கள், திருக்கோயிலில் பணிசெய்து வாழும் வாழ்வினை விரும்பி ஏற்கும் வகை இருந்தது. அப்படி விரும்புவாராயின், அவர்கள், திருக்கோயில் அருகில் இருக்கும் கன்னி மாடத்தில் வசிப்பர். இறைவன் திருக்கோயில் பணிகளான விளக்கிடுதல் முதலியவற்றை மேற்கொள்வர்..கோயிலிலிருந்து அளிக்கப்படும் உணவையே உண்டு வாழ்வர். இவ்வாறு வாழும் வாழ்வினை மேற்கொண்டவர்கள், பின்னாளில் இல்லறம் ஏற்க விரும்புவாராயின் அதற்குத் தடை ஏதுமில்லாதிருந்தது..நம்பிஆரூரரை மணந்த சங்கிலியார் முதலில் இவ்வாறு கன்னிமாடத்தில் வாழ்ந்து, பின் ஆரூரரை மணந்தார் என்ற கூற்று இருக்கிறது. கோயிலுக்குப் பிணையானவர்கள், கோயிலோடு பிணைக்கப்பட்டவர்கள்  ஆதலினால் கோயில் பிணாப்பிள்ளைகாள் என்றார். இதற்கு, 'குற்றமொன்றில்லாத குலத்தையுடைய சிவனாரின் திருக்கோயில் பணி செய்யும் பெண்களே'  என்றும் ஒரு பொருள் கொள்ளலாம். ஏதவனூர்== 'அவனுக்கென்று ஒரு ஊர் இல்லை.. எல்லா ஊரும் அவன் ஊரே!!.. இவ்வுலகம் எல்லாம் அவனுடையது' என்ற பொருளில் இது, இறைவனின் எல்லாமான தன்மையைப் பேசுகிறது. ஏதவன்பேர்==== 'அவனுக்கென்று ஒரு திருப்பெயரில்லை.. ஆயிரம் ஆயிரம் திருநாமங்களை உடையவன்' என்ற பொருளில், இது இறைவனின்  அளவில்லாத பெருமையை வியந்து கூறியது.. ஆருற்றார்==='அவனுக்கு உற்றவர்கள், உறவினர்கள் யார்?' என்ற பொருளில் இது அனைத்துலகமும்   இறைவனுக்கு உள்ளிருப்பவை. உறவாக நிற்பவை என்பதை உணர்த்திற்று. உயிர்களுக்கு உற்றவன் இறைவன் ஒருவனே என்பது மற்றொரு பொருளாம். உயிர்களுக்கு இறைவன் உறவு ஆதலின், இறைவனுக்கும் உயிர்களே உறவு.. ( '’உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் யாருளரோ’  (அப்பர் சுவாமிகள்) ).   'ஆரயலார்'===இறைவனுக்கு அந்நியர் யார்? என்ற பொருளில், அந்நியர் யாருமில்லை என்பதை அறிவித்து, அவனைக் கடந்ததொரு பொருளில்லை என முடிந்தது. ( "திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.” (திருத்தெள்ளேணம்) ).   'ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.'அத்தகைய சிறப்புப் பொருந்திய இறைவனைப் பாடும் வகை என்ன? என்று கோயிற் பணி செய்யும் பெண்களிடம் வினவுகிறார்கள் பாவை நோன்பு நோற்பவர். இறைவனுக்கு அருகே இருந்து பணி செய்யும் பெண்கள் என்பதால், அவனைப் பாடும் வகையை இறைவனார் அருளியிருக்கக் கூடும் என்று நினைத்து வினவுகின்றார்கள்... 'இறைவனைக் குறித்துச் சிறந்த வகையில் போற்றிப் பாடுவது என்பது இயலாத ஒன்று' என்று வியந்து கூறியதாகவும் பொருள் கொள்ளலாம்.. மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!!!!!.   []   பாடல் 11 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல் செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்.   பொருள்: இப்பாடல், தோழியர் எல்லாம் ஒருங்கு கூடி நீராடுங்கால்,இறைவனின் பெருமையைப் போற்றி உரைத்தது.. ஆரழல்போல்  செய்யாவெண் ணீறாடி ===========நிறைந்து ஒளி வீசும் நெருப்பு போன்ற செந்நிறம் உடையவனே!!..வெண்மை நிறமான திருநீற்றில் மூழ்கியவனே!!... செல்வா,  சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா,  ஐயா ========== எங்கள் செல்வமாகிய ஈசனே!!.. சிற்றிடையையும், மை பூசிய கருவிழிகளையும் உடைய மடந்தையான  உமையின் மணவாளனே!!.. அழகனே!!!.. மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ========================================= வண்டுகளால் மொய்க்கப் பெற்ற மலர்களையுடைய அகன்ற தடாகத்தில், 'முகேர்' என்ற ஒலி எழும்படி, புகுந்து, கரங்களால், குடைந்து, குடைந்து மூழ்கி எழுந்து, உன் திருவடிகளைப் பாடி, பரம்பரை அடியவர்களாகிய நாங்கள் வாழ்ந்தோம்.. நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் , உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் ==================== நீ எங்களை ஆட்கொண்டருளும்  பொருட்டுச் செய்யும் விளையாடல்களினால் , துன்பங்கள் நீங்கி இன்பம் பெறுபவர்கள், அவற்றை எந்தந்த வகைகளில் பெறுவார்களோ, அந்தந்த வகைகளில் எல்லாம் பெற்று முடித்தோம்!!.. எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்.===========இனி மீண்டும் இந்தப் பிறவிச் சுழலில்  அழுந்தி இளைக்காமல் எங்களைக் காப்பாயாக!!!... இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..... இப்பாடலில், பின் வரும் வரிகளில் இறைவனைப் போற்றி, விளித்தமையால், அவற்றை முன் கொண்டு பொருள் கொள்ளலாயிற்று.. ஆரழல்போல்  செய்யாவெண் ணீறாடி செல்வா....செந்நிறமுடைய உடலெங்கும் திருநீறு பூசி அருளினார் ஆதலின், 'வெண்ணீறாடி' என்றார். 'விபூதி' என்பது செல்வத்தையும் குறிக்கும்..நித்யவிபூதியையும் குறிக்கும்.. பிறவி எடுத்தவர்கள் பெற வேண்டிய செல்வம் சிவனார் ஆதலின் 'செல்வா' என்றார். 'சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா'..முந்தைய பாடலில் உமையை 'பேதை ' என்றவர், இங்கு 'மடந்தை' என்கிறார்..பெண்களின் ஏழு பருவங்களுள் ஒன்றான 'மடந்தை' திருமணமான பெண்ணைக் குறிக்கும்..மடந்தையை மணந்தவன் என்ற குறிப்பினால், இறைவன் போக வடிவமாய் இருப்பது உணர்த்தப்பட்டது. மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி================= மொய்யார் என்பதற்கு, மொய் ஆர் எனப் பிரித்து.. நெருங்குதல் என்னும் பொருளையும் கொள்ளலாம்.. நெருங்கி நீராடுதல் பொருட்டு, முகேர் என்ற ஒலி வரும்படி, பொய்கையுள் புகுந்ததாகக் கொள்ளலாம்.. கையாற் குடைந்து, குடைந்துன் கழல்பாடி==மிகவும் ஆழ்ந்து தியானிப்பதன் மூலம் இறைவன் திருவடி தரிசனம் பெறலாம்... 'குடைந்து, குடைந்து' என்பது மேன்மேலும் ஆழ்ந்து இறைவனை சிந்திப்பதைக் குறித்தது..   நீராடும் போது, இறைவனைத் துதிக்கின்றார்கள்.. உள்ளத்தில் உறைந்திருக்கும் இறைவனைத் துதித்து நீராடும் பாங்கு, மானசீக பூஜைக்கு ஒத்தது.. ஆகவே  இது கிரியையாகிய சற்புத்திர மார்க்கத்தைச் சொல்வதாகும்.. 'நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்'===இறைவனார் புரியும் ஐந்தொழில்களும் அவருக்கு விளையாட்டே.. ( 'சொன்ன இத்தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னில் முன்னவன் விளையாட்டு என்று மொழிதலும் ஆம் உயிர்க்கு'(அருணந்தி சிவாச்சாரியார் ))... ஐந்தொழில்களையும் உயிர்களை ஆட்கொண்டருளும் பொருட்டே விளையாடல் போல் இறைவன் செய்கிறார். 'வழியடியோம்' என்று பரம்பரை அடியவர்களாகிய நாங்கள் என்பதைத் தோழியர் முன்னர் குறிப்பிட்டபடியால், இவர்கள் புண்ணிய ஆத்மாக்களே!!... 'குடைந்து, குடைந்து நீராடி வாழ்ந்தோம்' என்றதால், இவர்கள் பல பிறவிகளாக சாதகர்களே என்பதும் விளங்கியது. வீடு பேறு எய்துதற்கு, செய்த புண்ணியத்துக்கான பலன்களையும் அனுபவித்துத் தீர்த்தல் வேண்டும்..அந்த வகையில், வெவ்வேறு உலகங்களில், இன்பங்களை பல படிகளில் நுகர்ந்து முடித்தோம் என்றார்கள்.. இந்த வரியை இன்னும் கொஞ்சம் நுட்பமாக விளக்க விரும்புகிறேன்.. மனித ஆத்மா, ஸ்தூல சூட்சும, காரண சரீரங்களுக்குள் அடைபட்டிருக்கிறது..ஸ்தூல உடலை விட்ட சாதகர்கள், தங்கள் சூட்சும கர்ம வினைகளிலிருந்து விடுதலையாக வேண்டி, புதிய சூட்சும உடலில் பிறப்பெய்தி, சூட்சும உலகத்திற்குச் செல்கிறார்கள்.. அங்கு முழுமை எய்திய பின்னர், காரண உலகத்திற்குச் செல்ல வேண்டும். இவ்வாறு பல பிறப்புகள் எடுத்து, பலன்களை முழுவதுமாகத் தீர்த்து விட்டோம்.. என்கிறார்கள் தோழியர். 'உய்வார்கள்' என்பதனால், இறைவனடியாராகி, துன்பம் நீங்கப் பெற்று இன்பம் பெற்றமை தெளிவுபடுத்தப்பட்டது. 'உய்ந்து ஒழிந்தோம்' என்பதனால், பலன்களை எல்லாம் அனுபவித்துத் தீர்த்தமை புலப்படுத்தப்பட்டது.. ஆகவே, 'நீ எங்களுக்கு வீடு பேறு அருளல் வேண்டும் என்றனர்.. மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!     []   பாடல்  12   ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந் தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.   பொருள்: ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந் தீர்த்தன் =============நம்மைப் பந்தித்த பிறவியாகிய துயர் நீங்குவதற்காக, நாம் சேர்ந்து,மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் இருப்பவன். இங்கு பிறவியாகிய துயர், வெப்பமாகக் கருதப்படுகின்றது.. அது நீங்க.. இறைவனாகிய தீர்த்தத்தில் மூழ்கி எழுதல் வேண்டும் என்பது பொருள். நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன் ============= சிற்றம்பலமாகிய தில்லையில், ஒரு திருக்கரத்தில் அனலேந்தி ஆடுகின்ற கூத்த பிரான். இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய ============= விண்ணுலகு, மண்ணுலகு உள்ளிட்ட எல்லா உலகங்களையும், காத்தும், படைத்தும், நீக்கியும் விளையாடுபவனாகிய இறைவனது புகழைப் பேசி, வளையல்கள் ஒலிக்க, அணிந்திருக்கும் நீண்ட அணிமணிகள் அசைந்து ஓசை எழுப்ப, அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய் ================= பொய்கையில் நிறைந்துள்ள, வண்டுகளால் மொய்க்கப் பெற்ற மலர்கள், நம் அழகிய கருங்கூந்தல் மேல் விளங்க, நீரைக் குடைந்து, நம்மை உடையவனாகிய இறைவனது பொற்பாதத்தைத் தொழுது ஏத்தி, பெரிய மலைச்சுனை நீரில் மூழ்கி நீராடுவாயாக. (குளத்துள் மூழ்கும் போது, பொய்கையின் மலர்கள் கூந்தலைச் சேருதல் இயல்பு. வண்டுகள் ஆர்க்கும் அந்த மலர்கள், கூந்தலைச் சேர்ந்ததை, 'அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் ' என்று வருணித்தார்.) சற்றே விரிவாக..... 'ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந் தீர்த்தன்'=== 'ஆர்த்த' என்ற சொல்,இங்கு இரு இடங்களில், இரு வேறு பொருளில் கையாளப்படுகின்றது. 'பந்தித்த, பிணித்த' என்ற பொருளில் முதலில் கையாளப்படுகின்றது..'நம்மைப் பிணித்த பிறவித் துயர் கெட நாம் செய்ய வேண்டுவது என்னவென்றால், நாம் ஈசனாகிய தீர்த்தத்தில் மகிழ்ந்து ஆடுதல் வேண்டும்' என்றார். இங்கு ஆளுடைய பிள்ளையின் 'பச்சைப் பதிகம்' நினைவு கொள்ளத் தக்கது. ( போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.)   'தீர்த்தன்' என்ற சொல்லால் இறைவனைக் குறித்தது, இறைவனின் புனிதத்தன்மையை விளக்குதற்காம்... இறைவனின் அபிடேக நீரைத் தீர்த்தம் என்போம். மிகச் சிறந்த ரிஷிகள்,முனிவர்கள், பக்தர்கள் ஏற்படுத்திய நீர்நிலைகளும் அவர் தம் சக்தியை உள்வாங்கி 'தீர்த்தம்' எனப்படுகின்றது.. ஆகவே, புனிதனான இறைவனைச் சேர்ந்து, மகிழுவதால் நாமும் புனிதமடைந்து, நம் பிறவிப் பிணி அகலும் என்பது உணர்த்தப்படுகின்றது. 'நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்'==ஞானாகாசமாகிய சிற்றம்பலத்தினுள் இறைவன் கூத்தாடுகின்றான்.. பிரபஞ்ச இயக்கமே இறைவனது திருக்கூத்து, ..நற்றில்லைச் சிற்றம்பலத்தினுள் என்று குறிப்பாகச் சொன்னமைக்கு கீழ்க்கண்ட பாடலை விளக்கமாகக் கொள்ளலாம். ( அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப் பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.(திருமந்திரம்))   பொன்னம்பலமாகிய தில்லையே அனைத்து அண்டங்களாகவும், ஆலயத்தின் ஐந்து ஆவரணங்களே ஆகாயமாகவும் கொள்ளப்படுகின்றது.. ஆலயத்தின் முதல் ஆவரணத்தினுள் உள்ள திரு அம்பலமே,   ஐந்தொழில் செய்யும் சக்தியாக அமைய‌, இறைவன் திருநடனம் செய்கின்றான்.பொன்னம்பலம் என்பதை 'சிதாகாசம்' எனவும் கொள்ளலாம். 'தில்லை' என்பது 'இருதய' ஸ்தானமாகும். ( 'மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும் சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.(திருமந்திரம்))   அண்டத்திலிருப்பதே பிண்டத்திலும் என்பதற்கிணங்க.. சிவனார், அண்டம், பிண்டம் இரண்டிலும் இருக்கும் பொற்பதிகளில் நடமிடுவதை..'தீயாடுங் கூத்தன்' என்று விளக்கினார். 'தீ' என்று குறித்தது.. இறைவனார் சங்கார(சம்ஹார) மூர்த்தியாகி,  அழித்தல் தொழில் செய்தலைக் குறித்தது. இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி===== ஐந்தொழிலும் சிவனார்க்கு விளையாடலே..வான், குவலயம் என்பதோடு 'எல்லோமும்' எனத் தன்மையிடத்தால் குறித்தது, 'நம் எல்லோரையும்' என்பதாக. மனிதப் பிறவி தேவர்களினும் மேம்பட்டது. தேவர்களும் மானிடப் பிறவியை விரும்புகிறார்கள்.. இறைவனால் ஆட்கொள்ளப்படும் பேறும் மனிதர்களுக்கே கிடைக்கிறது.. ஆகவே, மனித இனைத்தை உயர்வுபடுத்துவதற்காக அவ்வாறு கூறினார். காத்தும், படைத்தும், கரந்தும் என்று, காத்தல் தொழிலை முன்னிறுத்தியது...இறைவனது காத்தருளுதல் என்ற இரு தொழில்களையும் சேர்த்து உணர்த்துவதற்காக..அழித்தல் தொழில் முன்பே குறிக்கப்பட்டது. வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய======== 'வளை'   என்ற சொல், 'உடல் உணர்வைக் குறிப்பால் உணர்த்துவதற்காக, பல இடங்களில் தத்துவார்த்தமாகக் கையாளப்படுகின்றது. ( நங்கை மீர்எனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன் தெங்கு சோலைகள் சூழ்பெ ருந்துறை மேய சேவகன் நாயகன் மங்கை மார்கையில் வளையும் கொண்(டு)எம் உயிரும் கொண்டுஎம் பணிகொள்வான் பொங்கு மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மின்னிப் பொலியுமே.(சென்னிப் பத்து, மாணிக்கவாசகப் பெருமான் ) ).   இப்பாடலில், 'வளையும் கொண்டு' என்றது, உடல் உணர்வைக் கடந்ததற்கு அறிகுறியாகச் சுட்டப்படுகின்றது. உடல் உணர்வின் காரணமாக, எழும் வெளி ஆரவாரங்களின் ஒலிகளையே ஆபரணங்களின் ஒலி என்றார். மனதை ஆழ்ந்த தியான நிலையில் ஈடுபடுத்தி (குடைந்து) நம்மை உடையவனாகிய இறைவனின் பாதங்களைச் சிந்திப்பது அவற்றை நீக்க உதவும்..(அவ்வாறு செய்து) 'இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்'=========இருவினைகளால் ஏற்படும், பிறவியைக் கடப்பாயாக‌!! என்றருளினார்.. சமயநெறிகளில், சன்மார்க்கம் இவ்வாறாக அருளிச்செய்யப்பட்டது. மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!! []   பாடல் 13 பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.   பொருள்: இந்தப் பாடலில், நீராடும் பொய்கையையே உமையாகவும் சிவனாகவும் உருவகப்படுத்திக் கூறுகிறார் அடிகள். 'பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்===' கரிய குவளை மலர்களாலும், செந்தாமரை மலர்களாலும் பொய்கை நிரம்பி இருக்கிறது. இது உமையம்மையின் சியாமள நிறத்தையும், சிவ னின் சிவந்த நிறத்தையும் குறிக்கிறது..குவளை மலர்கள் அம்மையின்  திருவிழிகளையும், தாமரை மலர் சிவனின் திருவிழிகளையும் குறிப்பதாகவும் கொள்ளலாம். 'அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்'======= பொய்கையில்  ஆங்காங்கு நாரை முதலான நீர்ப்பறவைகள் சத்தமிடுகின்றன...  நீராடுவோர், நீராடும் போது ஏற்படும் ஒலி, அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்கள் ஏற்படுத்தும் ஒலி, ஐந்தெழுத்தை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலி இவ்வாறாக, மேலும் மேலும் எழும்பும் ஒலியலைகளாலும் நிரம்பி இருக்கின்றது பொய்கை . இதையே  'அங்கு அங்கு உருகும் இனத்தால்'  என்று விரித்து, பொய்கையில் , ஆங்காங்கே பக்தி  மேலிட உருகி நிற்கும் தொண்டரினத்தால் என்றும் பொருள் கொள்ளலாம்.. 'குருகு' என்பது உமையம்மையின் 'வளையலை'யும் குறிக்கும். 'பின்னும் அரவத்தால்' என்பதை, பெருமானின் திருமேனியெங்கும் ஆபரணமாக ஊர்ந்து விளையாடும் நாகங்களையும் குறிக்கும். 'தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்'===மலம் என்பது இவ்விடத்தில்  'அழுக்கு' எனப் பொருள்படும்.. தங்கள் அழுக்குகளை நீக்கிக் கொள்ள குளத்தில் மூழ்குதற்காக வந்து சேர்கிறார்கள் மானிடர்கள். மும்மலங்களாகிய, 'ஆணவம், கன்மம், மாயை' ஆகியவற்றை நீக்குதற் பொருட்டு, அம்மையப்பனின் இணையடி சேர்பவர்களையும் இது குறிக்கிறது.. சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படும் 'திரிபுர சம்ஹார'த்தின் தத்துவ விளக்கம் இதுவே!!. 'எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த' இவ்வாறான ஒற்றுமைகளினால், குளமானது, அம்மையைப்பனை ஒத்திருக்கிறது. பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்ப  ========== ஊற்றிலிருந்து பொங்கும் நீரானது, மேலும் மேலும் அலையலையாய்  எழும்பி வரும் மடுவில், நாம் மூழ்கி, நம் சங்கு வளையல்களும், சிலம்பும் சேர்ந்து ஒலிக்கும் படியாக, 'கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்க ======= பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.'=== இறைவனது நினைவால் நம் மார்புகள் பூரித்து விம்ம, பொங்கி வரும் நீரையும் தாமரை மலர்களையும் உடைய இந்தப் பொய்கையில் நாம் மூழ்கி நீராடுவோமாக.   இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்!!.. பிரபஞ்ச இயக்கம் இறைவனாரின் திருக்கூத்து.. இறைவனும் இறைவியுமாக, இந்தக் கூத்தில் பங்காற்றுகிறார்கள்..   ( கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும் கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக் கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.(திருமந்திரம்) ).   ஆகவே, அம்மையையும் அப்பனையும் சேர்ந்தே துதிக்கின்றனர் பாவை மகளிர். இப்பாடலும் யோகநெறிகளுள் சிலவற்றைத் தன்னகத்தே மறைபொருளாகக் கொண்டிருக்கிறது.. 'பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்' என்றது ஆழ்ந்த தியான நிலையில் ஈடுபடுதலைக் குறித்தது. இவ்வாறு ஈடுபட்டு, சிவனருளால் மும்மலங்கள் நீங்கப் பெறுதல் வேண்டும். 'வளை' என்பது முன் சொன்ன பாடலில் சொன்னது போல் உடல் உணர்வையும், 'அரவம்' குண்டலினி சக்தியையும் குறிக்கிறது.. மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!. []   பாடல் 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.   பொருள்: காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்======காதுகளில் பொருந்திய 'குழை' என்ற ஆபரணம் ஆட, பைம்பூண் கலனாடக்=====பசும்பொன்னால் செய்யப்பட்ட  மற்ற ஆபரணங்கள் அசையவும்,   கோதை குழலாட=====கூந்தலில் சூடிய நீண்ட மாலைகள் ஆடவும், வண்டின் குழாமாடச்=======மாலைகளை மொய்க்கும் வண்டுகளின் கூட்டம் அசையவும், சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடி===== குளிர்ச்சியான நீர் பொருந்திய பொய்கையில் நீராடி, தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேத நாயகனான சிவபிரானைப் போற்றி, அந்த வேதப் பொருளான சிவபிரான்,  நமக்கு ஆகும் வண்ணம் பாடி (அதாவது, நாமே சிவனாகும் சிவசாயுஜ்யம்  கிட்ட வேண்டும் என்று பாடி), சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி======சோதி உருவான இறைவனின் தன்மையைப் பாடி, இறைவன் திருமேனியில் சூடியுள்ள கொன்றை மாலையைப் பாடி, ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடி ========இறைவன் அனைத்திற்கும் முதலாகிய திறனை வியந்து பாடி, இறைவன், அனைத்தையும் ஒடுக்கும் முறைமை குறித்துப் பாடி, பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்====நம்மை நம் பக்குவ நிலைகட்கு ஏற்ப அருள் பாலித்து, ஆன்மீக உயர்நிலைக்கு உயர்த்தியருளும்,  வளையலை அணிந்த திருக்கரங்களை உடைய‌ அம்பிகையின் திருவடிகளின் தன்மையைப் பாடி ஆடுவாயாக!! சற்றே விரிவாக.. இந்தப் பாடல், நீராடும் மகளிர் இறைவனைத் துதித்துப் பாடியவாறே நீராடுதலைக் கூறுகிறது. அதோடு, இறைவனாரின் திருக்கூத்தின் மகிமையையும் புகழ்ந்துரைக்கிறது.. இதில் காணப்படும் முதல் சில வரிகள், இரு பொருள் பட அமைந்திருக்கின்றன. அவற்றை மட்டும் தருகிறேன்.. சிவபிரான், காதில் அணிந்திருக்கும்  குழையாட(குழை, தொடி என்பன இருபாலருக்கும் அணிகளாயின). அணிந்திருக்கும் அழகிய அணிகலனாகிய நாகங்கள் ஆட, ( கீளலா லுடையு மில்லை கிளர்பொறி யரவம் பைம்பூண் தோளலாற் றுணையு மில்லை தொத்தலர் கின்ற வேனில் வேளலாற் காயப் பட்ட வீரரு மில்லை மீளா ஆளலாற் கைம்மா றில்லை யையனை யாற னார்க்கே.(அப்பர் பெருமான்) )   (இடப்பாகத்து உகந்த‌ உமையம்மை அணிந்திருக்கும் பசும்பொன்னாலாகிய அணிகலன்கள் அசைந்து ஆட என்றும் பொருள் கொள்ளலாம்.) 'கோதை குழலாட'===கோதை என்றால் மாலைகள் என்றும் ஒரு பொருள் உண்டு. விரிசடையில் அன்பர்கள் சூடிய மலர்மாலைகள் அசைந்தாட என்றும், கோதை = பெண் என்பதால் எம்பிராட்டி என்னும் பொருள் கொண்டு அம்பிகையின் குழலாட என்றும் பொருள் கொள்ளலாம்.  ( கையார் வளைசிலம்பக் காதார் குழையாட மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச் செய்யானை வெண்ணீ(று) அணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க்(கு) அல்லாத வேதியனை ஐயா(று) அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். (மாணிக்கவாசகப் பெருமான்) ) இதில் 'பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை' என்று உமையம்மையைப் போற்றும் வரியை நாம் சற்று ஆழ்ந்து சிந்திக்கலாம்.. முத்தி அடைய வேண்டும் என்கிற ஆவல் உயிர்க்கு ஏற்படவேண்டும். இந்த ஆவல் பெருகப் பெருக, அது உயிருக்கு, மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனி மூலமாக உயிருக்கு ஞானம் ஏற்படும். உயிரின் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நீங்கும் நிலை அடைதலே மலபரிபாகம். மலபரிபாகத்தின் பயனாக, இன்பத்தின் பால் விருப்பும், துன்பத்தின் பால் வெறுப்பும் கொள்ளாது இவற்றைச் சமமாகப் பாவிக்கும் இருவினை ஒப்பு ஏற்படும். இந்த நிலை எய்திய பின், சத்திநிபாதம் (இறையருள் வீழ்ச்சி) உயிருக்கு நிகழும். சத்திநிபாதம், மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும். 'மந்ததரம் என்பது, அரக்கு வெயிலில் உருகுவது போல.  மெழுகு வெய்யிலில் உருகுவது போல மந்தம்.   தீவிரம் என்பது நெய் சூட்டினால் இளகுவது போன்றது.  நெய் நெருப்பிலிட்டதும் உருகி ஒன்றுவது போன்றது தீவிரதரம்' என்று பெரியோர்கள் அருளியிருக்கிறார்கள். இங்கு 'பேதித்து' என்பது சத்திநிபாதமாகிய இறையருள்வீழ்ச்சியையே சுட்டுகிறது..நான்கு வகைகளாக உயிரின் தன்மைக்கேற்ப நிகழும் சத்திநிபாதம், இறைவியின் பெருங்கருணையையே சார்ந்திருக்கிறது. இதில், அரக்கு, மெழுகு,மற்றும் நெய் ஆகியவை மனிதரின் பக்குவ நிலைகளுக்கு ஒப்பிடப்படுகின்றது. இவ்வாறாக இருக்கும் வேறுபட்ட பக்குவ நிலைகளுக்கு ஏற்ப பலவித இன்பதுன்ப அனுபவங்களைத் தந்து அவர்களை உயர்த்துவது  இறைவியே!!. ஒவ்வொரு மனிதரின் பரிபக்குவ நிலையும் வெவ்வேறு வகைப்படும். அவர்களுக்கு அருள்புரிந்து, அந்தந்த வகைகளுக்கேற்ப பல்வேறு அனுபவங்களின் மூலம் அவர்களைப் பக்குவப்படுத்தி, ஆன்மீக உயர்நிலையை அருளுவது அன்னை சக்தியின் செயலே!!.. மாயையின் மந்திரக்கோலை அவளன்றி வேறு யாராலும் விலக்க இயலாது.. மூடியிருக்கும் மாயையாகிய திரையை அவளே விலக்க வல்லவள். அதன் பின்னே பெருமானின் நல்லருள் வீழ்ச்சி உயிருக்குக் கிடைக்கும்.. இவ்விதம் அன்னை, உயிர்களுக்குத் தக்கவாறு அருள்புரிந்து உயர்த்துவதையே ' நம்மை வளர்த்தெடுத்து' என்றார். அம்மையப்பனைப் போற்றி அருள்பெறுவோம்!!.. மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!! []   பாடல் 15 ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.   பொருள்   இந்தப் பாடல், அன்பு மேலீட்டால் உருகி நின்ற பெண்ணொருத்தியைப் பார்த்து, நீராடும் பெண்கள் தமக்குள் பாடுவதாக அமைந்திருக்கிறது.. வாருருவப் பூண்முலையீர்== கச்சணிந்த  அணிகளுடன் கூடிய கொங்கைகளை உடையவர்களே!!!.. ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்======= ஒவ்வொரு சமயம் எம்பெருமான் திருப்பெயரை உரைப்பதில் ஆரம்பித்தவள், இப்போது எப்போதும், சிவபிரானின் புகழை ஓயாது உரைக்கும் வாயின‌ள் ஆனாள்...மனம் உருகி, ஆனந்தம் மேலிட,விழிகளிலிருந்து நீங்காது பொழியும் நீர்த்தாரைகளுடன், பூமியின் மேல் விழுந்து, எழாது சிவபிரானையே வணங்குவாள். வேறொரு தெய்வத்தை வணங்கியறியாள். பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்  வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.===== பெரிய தலைவனாகிய சிவபிரானின் பொருட்டு, ஒருவர் பித்தாகும் விதம் இவ்வாறோ?!!!..இவ்விதம் ஒருவரைப் பேரானந்தத்தில் ஆழ்த்தி ஆட்கொண்டருளும் சிவபிரானது திருவடிகளைப் புகழ்ந்து பாடி,  அழகிய தோற்றமுடைய  மலர்களால் நிரம்பப் பெற்ற, பொய்கையில் குதித்து நீராடுவோமாக!!!!!!.. சற்றே விரிவாக: பெண்கள் ஒருவரை ஒருவர் முதலில் அழைத்துக் கொண்டு, அதன் பின், ஆன்மீக நிலையில் உயர்ந்த   பெண்ணைச் சுட்டிக்  காட்டிப்  பாடுவதால், 'வாருருவப் பூண்முலையீர்!!' முதலில் வந்தது. எப்போதும் இறைவனை நினைந்து உருகும் அடியவர்களுக்கு, அவர்களது பக்தியின் பலனாக, மஹான்களின் தரிசனமும் சத்சங்கமும் கிடைக்கிறது.   அவ்விதம் வாராது வந்த மாமணியான ஒரு பெண் துறவியை, சமாதி நிலையில் நீராடும் துறையில் கண்டு, அந்நிலை தோன்றும் வழி குறித்தும், அந்தத் துறவியைக் குறித்தும் புகழ்ந்து... நமக்கும் அந்நிலை வருதல் வேண்டும் என்ற வேண்டுதலோடு நீராடும் பான்மை கூறப்பட்டது. உள்ளுறையாக, ஆன்மீக உயர்நிலையை அடையும் விதமும் கூறப்பட்டது.. வாருருவப் பூண்முலையீர்...என்பதால் மார்பில் கட்டை விரல் அளவில் ஜோதிஸ்வரூபமாக அமையும் இறைவனை நோக்கி, தாமும் பரிபக்குவ நிலையில் உயர்நிலையை அடைய வேண்டும் என்று வேண்டி நின்றமையாகவும் இதைக் கொள்ளலாம்.. ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே======= முதலில் இறைவனின் திருநாமத்தை எப்போதாவது சொல்ல ஆரம்பித்து, பின்பு, இறைவனின் மீது அன்பு சிறிது சிறிதாக அதிகரிக்கிறது.. நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் ==== இறைவனின் மீது அன்பு முதிர்ந்து பேரன்பான நிலையில், ஓயாது வாய் 'நம்பெருமான் சீர்' ஒன்றையே முழங்குகிறது.. எப்போதும் இறைநாமத்தின் மணம் வாயில் நிறைந்திருக்கிறது.. இது 'வாக்கு' முழுமையும் இறைவனோடு ஒன்றுதல்.. சித்தங் களிகூர=== நாமம் கூறக் கூற, மனம் சிறிது சிறிதாக அடங்கத் தொடங்குகிறது.. எண்ணங்கள் மெல்ல மெல்ல அடங்கி, தியான நிலை கை கூடுகிறது.. சித்தாகாசத்தில், இறைவனோடு மனம் முழுமையும் ஒன்றுகிறது..ஆனந்த நிலையின் அனுபவம் கிட்டுகின்றது. இது மனம் முழுமையும் இறைவனோடு ஒன்றுதல்.. 'பாரொருகால் வந்தனையாள்===' இறைவனையே உடலால் எந்நேரமும் தொழுது வணங்கும் நிலை.. இது, 'காயம்' அதாவது உடலால் இறைவனோடு ஒன்றும் நிலை.. இவ்வாறு வாக்கு,மனம், காயம்  ஆகிய அனைத்தாலும் இறைவனோடு ஒன்றும் நிலை வரும் போது, குருவருளால் 'சமாதி நிலை' கிட்டும்..சவிகல்ப,நிர்விகல்ப சமாதி நிலை வரும் போது, தானே அழுவது, சிரிப்பது முதலான நிலைகள் அமைவது இயல்பு. இதன் காரணமாக, மற்றவர்கள் அவர்களை 'பித்து' என்று கூறுவதும் இயல்பே!!..  (  நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச் செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப் புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. (புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் ==மாணிக்கவாசகப் பெருமான்) ). 'நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, என்றும் வணங்குவது உன் மலர்த் தாள், எழுதா மறையின் ஒன்றும் அரும் பொருளே, அருளே, உமையே, இமயத்து அன்றும் பிறந்தவளே, அழியா முத்தி ஆனந்தமே!' என்று அபிராமி பட்டர் உரைப்பதும் இதுவே.. இது சிலருக்கு ஒரு பிறவியிலும் சிலருக்கு பல பிறவிகளில் செய்யும் தொடர்ந்த முயற்சிகளின் மூலமும் கைகூடும்.... ஆன்மீக முன்னேற்றத்தின் ஒவ்வொரு நிலையையும் உபநிஷதங்கள் வகைப்படுத்தி இருக்கின்றன... சித்தர், ஜீவன் முக்தர், பராமுக்தர் என்ற நிலைகள் கூறப்படுகின்றன. பராமுக்தர், சில தெய்வீகக் காரணங்களுக்காக, மிக அரிதாக, பூமியில் தேகமெடுக்கின்றார். எப்போதாவது நடக்கும் நிகழ்வு இது.. 'பார் ஒரு கால் வந்தனை' என்பதால் அவ்விதம் எப்போதோ ஒரு முறை வரும் அவதார உருவினள் என்பதாகவும் கொள்ளலாம்.. எப்போதும் சமாதி நிலையின் பேரானந்த அனுபவத்தில் இருப்பதால், எப்போதாவது ஒரு முறை இவ்வுலக நினைவுக்கு வருகின்றாள் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். 'ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்'=== அழகிய தோற்றமுடைய‌ மலர்கள் நிறைந்துள்ள உள்ளமாகிய பொய்கையில் ஆழ்ந்து நீராடி(தியானித்து), வித்தகர் தாள் போற்றுமாறு கூறுகிறார். இங்கு மலர்கள் ,' மணம் வீசும் ' என்றல்லாது, 'அழகிய தோற்றமுடைய' என்று வருகிறது. யோக நெறியில் ஒவ்வொரு படியிலும் பெம்மானின் தரிசனம் வெவ்வேறு முறையில் கிட்டும்.. அழகிய தோற்றமுடைய மலர்கள், சிவனாரின் தரிசனங்களை மறை பொருளாகக் குறித்தன. மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!   []   பாடல் 16 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.   பொருள்: முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை====மேகமே!! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேலே எழும்பி, எம்மை உடையவளாகிய உமையவளின் திருமேனி போல் கருநீல வண்ணம் கொண்டாய். ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி====எம்மை அடிமை கொண்டவளின் சின்னஞ் சிறிய சிற்றிடை போல் மின்னி விளங்கி, எங்கள் பிராட்டியாகிய அம்பிகையின் திருவடியிலிருக்கும் சிலம்பின் ஒலி போல் இடித்து, திருப்புருவம் என்னச் சிலைகுலவி==== அம்பிகையின் திருப்புருவம் போல் வானவில் இட்டு,   நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு==== ந‌ம்மை அடிமை கொண்ட அம்பிகையைப் பிரியாத எம் தலைவனாகிய சிவபிரானின் அடியார்களுக்கும், முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்===== நமக்கும், அவள் உள்ளம் உவந்து, முந்திச் சுரக்கின்ற இன்னருள் போல, ( மழையாகப்)பொழிவாயாக!.. சற்றே விரிவாக: இந்தப் பாடலில், இறைவன் அம்பிகையின் மூலமாகவே உயிர்களுக்கு அருளுவான் என்பது குறிக்கப்பட்டது.. ஐயனின் அருள் அம்பிகையின் மூலமாகவே முதலில் கிடைக்கப்பெறும். அதாவது அம்பிகையே முதலில் அருளுபவள். அதன் பின்னரே எம்பிரான் அருள் கிடைக்கும். இந்தப் பாடல் 'எதிர்நிலை உவமம் (விபரீதோபமாலங்காரம்) கையாளப்பட்டிருக்கிறது..பாடு பொருளை, உவமிக்கப்படும் பொருளாகக் கூறுவது மரபு. அங்ஙனம் இன்றி, இங்கு மாற்றிக் கூறப்படுகின்றது. உதாரணமாக, அம்பிகையின் திருமேனி கார்மேகம் போல் திகழ்கிறது என்றுரைக்காது, மேகம், அம்பிகையின் திருமேனி போல் திகழ்கிறது என்கிறார்.  பாவை நோன்பு, பெரும்பாலும் மழை வேண்டியே கடைபிடிக்கப்படுவதால், பாவையர் மழை வேண்டிப் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. உள்ளுறையாக, உமையம்மையின் அருள் மழை பொழிய வேண்டுவதாகவும் இது அமைந்திருக்கிறது. இப்பாடலில் வரும் 'உடையாள்' என்ற பதத்தை சற்று ஆழ்ந்து சிந்திக்கலாம். முதல் முறை வரும் உடையாள்== அனைத்துலகத்தையும் உடையவள் என்ற பொருளில் வரும். எம்மை ஆளுடையாள்== இது, அம்மை, முழுமையாக ஆட்கொண்டருளி, இவ்வுலக விடயங்களிலிருந்து(மாயையிலிருந்து) நீக்கி, தன் வழியில் சேர்த்துக் கொள்பவள் என்பதைக் குறிக்கும்.   நந்தம்மை ஆளுடையாள்== நம்தம்மை ஆளுடையாள்..இப்போது நம் அனைவரையும் உடையவள் என்பது, எல்லாப் பொருள்களிடத்தும், ஆன்ம ஸ்வரூபமான இறைவனையே  காணும் ஆன்ம போதக் காட்சியைப் பெற்று விட்டமையைக் குறிக்கிறது. அம்பிகையின் அருளால், மாயத் திரை விலகி, சிவனருள் சித்திக்கப்பெற்றது.            ( மாடு நகைவாள் நிலாஎ றிப்ப     வாய்திறந் தம்பவ ளந்து டிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும்     பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித் தேடுமின் எம்பெரு மானைத் தேடிச்     சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி ஆடுமின் அம்பலத் தாடி னானுக்     காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே.(மாணிக்கவாசகப் பெருமான்) ). இதில் சூக்குமமாக, சாதகர்களுக்கு அம்பிகை அருள் செய்யும் பான்மை விளக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்..'நந்தம்மை' என்ற சொல்லை ஆழ்ந்து ஆராய்தல் வேண்டும் என்றும் குறிக்கின்றனர். பெரிய ஐந்தெழுத்தாகிய(ஸ்தூல பஞ்சாட்சரம்) 'நமசிவாய' மந்திரத்தின் மகிமையைத் துதிப்போம்!!.. மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!. []   பாடல்  17   செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.   பொருள்   கொங்குண் கருங்குழலி ==== மணம் வீசும் அழகிய, கருங்கூந்தலை உடைய பெண்ணே!! செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக=======செந்நிறமான விழிகளையுடைய திருமாலிடத்தும், பிரம்மனிடத்தும், தேவர்களிடத்தும் இல்லாத‌ ஓர்  பேரானந்தம் நம்மிடத்துப் பொருந்தும்படியாக, நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி==== நம்மைச் செம்மைப்படுத்தி, நம் இல்லங்கள் தோறும்  (தானே உவந்து) எழுந்தருளி, செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை==== சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிமலர்களைத் தந்தருளும் வீரனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை====எப்போதும் சுரக்கும் அருளால் அழகு பெற்ற திருவிழிகளை உடைய அரசனை, அடியார்களுக்கு அமுதம் போன்றவனை, நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்=============== நம் தலைவனாகிய எம்பிரானைப் பாடி, நலம் திகழ, தாமரை மலர்களால் நிறைந்துள்ள பொய்கையில் குதித்து நீராடுவோமாக! இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.. பேரானந்த நிலையில் இறைவனோடு ஒன்றுதலாகிய இன்பம், நம் போல்வருக்கு மட்டுமே கிட்டும்..தேவர்கள் நினைத்தாலும் அவர்களால் அடைய முடியாத இன்பம் இது... யோக நெறியைப் பற்றி ஆழமாக அறிந்தவர் மட்டுமே இதை உணர முடியும்!.. அதனாலேயே 'மானிடப் பிறவி அரிது' என்று போற்றப்படுகின்றது. பேரானந்த நிலைக்கு ஈடு இணை இல்லையாதலால் 'எங்கும் இலாததோர் இன்பம்' எனப்பட்டது. 'கருங்குழல்' என்று சிரம் குறிக்கப்பட்டது. சஹஸ்ரதள பத்மம், சஹஸ்ராரம், துரியம், தசஷடதள பத்மம், அதோமுக மஹாபத்மம், சஹஸ்ராரம்புஜம் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சஹஸ்ராரம், நம் உச்சந்தலையில் அமைந்துள்ளது. ‘நம் தம்மைக் கோதாட்டி’ என்பதை, 'நம்மைப் பெருமைப்படுத்தி' எனவும் சில உரையாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். கோது என்பது குற்றம் என்ற பொருளிலும் வருவதால், நம்மிடம் இருக்கும் குற்றங்களை நீக்கிச் செம்மைப்படுத்துவதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். மும்மலங்கள் நீக்கப்படுவது இங்கு உள்ளுறையாகக் குறிக்கப்படுகின்றது. 'இங்கு நம் இல்லங்கள் தோறும்' என்றது, ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியே அருள் செய்யும் பான்மையையே!.. 'எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை'== வெளிப்படையாகப் பார்க்கும் போது, இறைவன் அடியார்கள் மேல் அருள்கூர்ந்து அவர்களுக்கு அருள் செய்யும் பான்மை விளக்கப்பட்டது.. அடியார்கள் மேல் கருணை மீதூற அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்த எம்பிரானின் பெருங்கருணைப் பேராறு குறித்து, இங்கு சொல்லப்படுகின்றது.  பங்கயப் பூம்புனல் என்று ஈற்றடியில் குறிப்பிடுவது,  ஆயிரம் இதழ் தாமரையாகிய சஹஸ்ராரத்திலிருந்து பெருகும் அம்ருத தாரையே...யோகிகளுக்கு இது மழையெனப் பொழிவதால் அது பூம்புனல் எனப்பட்டது.. பிறவாநிலையருளும் யோக மார்க்கம், மிக நுட்பமாக இந்தப் பாடலில் விளக்கப்படுகின்றது. தக்கதொரு குருமுகமாக,  இதன் நுட்பங்களை அறிவது மிகவும் நன்மை பயக்கும். மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!   []   பாடல் 18 அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.   பொருள்: அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்==== அண்ணாமலையாரின் திருவடி மலர்களை, தேவர்கள் தொழுகின்றனர். இறைவனின் திருவடிகளின் பிரகாசத்தில், தேவர்கள் சிரத்தில் அணிந்திருக்கின்ற கிரீடங்களில் இருக்கும் ரத்தினங்கள் ஒளியிழந்து விடுகின்றன. கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகல ==== கண்களுக்கு நிறைவான சூரியனின் ஒளிக்கதிர்கள் வந்து இருளை நீக்கும் போது, குளிர்ச்சியான ஒளி பொருந்திய நட்சத்திரங்கள், ஒளி மங்கி மறைகிறது.. அந்த வைகறைப் பொழுதில், 'பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி === பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் ஆகி, ஒளி நிரம்பிய ஆகாயமாகி, இந்நிலவுலகு முழுதுமாகி, இவை அனைத்திலிருந்து நீங்கியும் விளங்குகிற. கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.====நம் அகக்கண்ணால் கண்டு மகிழத்தக்க அமுதமாய் இருக்கும் இறைவனின் திருவடிகளைப் பாடி, பெண்ணே, பூக்களால் நிரம்பியுள்ள இந்தப் பொய்கையில் மகிழ்ந்து நீராடுவாயாக!! இப்போது சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.. தேவர்கள் அண்ணாமலையாக, ஜோதி ஸ்வரூபமாக நின்ற இறைவனின் திருவடி மலர்களை விழுந்து வணங்கும் போது, அவர்கள் சிரத்தில் அணிந்துள்ள கிரீடங்களில் இருக்கும் ரத்தினங்களின் ஒளி மங்கியதாகச் சொல்வது, தேவர்கள், தம்மைப் பற்றிய பெருமிதம் நீங்கப் பெற்றார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகும். தேவர்கள், நான், எனது என்னும் ஆணவம் நீங்கப் பெறாதவர்கள். இறைவனின்றும் தம்மை வேறுபட்டவனாய் நினைத்து, ஏதேனும் பலனை வேண்டியே இறைவனை வழிபடுகின்றவர்கள்.  ( வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனநின்பால் தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மையெலாம் தொழவேண்டிச் சூழ்த்துமது கரமுரலும் தாரோயை நாயடியேன் பாழ்த்தபிறப்பு அறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே.(திருச்சதகம், மாணிக்கவாசகப் பெருமான்) ).   இறைவனின் திருவடி மலர்களின் பிரகாசம் என்பது இறைவனின் ஜோதி தத்துவத்தைக் குறிக்கிறது.சிவலிங்கத்தின் மேல்பாகம் சிவஜோதி என்றும், அடிபாகம் ஆத்ம ஜோதி என்றும் கூறப்படுகின்றது..  ( சத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர் சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி முத்தர் அனுபவ ஜோதி - பர முத்தியாம் ஜோதிமெய்ச் சித்தியாம் ஜோதி சிவசிவ(திருவருட்பா) ). கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்== அறியாமையாகிய இருள் நீங்குவதற்காக, ஞான ஒளியாகிய சூரியன் வந்து உதிக்கிறது... அறியாமையால் ஏற்படும் ஆரவாரங்களாகிய தாரகைகள் ஒளி இழக்கின்றன. அஞ்ஞானம் நீங்கி ஞான ஒளி பரவுவதைக் குறிக்கின்றது இது. பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்=== இறைவனின் சர்வ வியாபகத் தன்மையைக் குறிக்கிறது இது.. 'பிறங்கொளி சேர் விண்ணாகி' என்பதையே  'விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் எண்ணிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்== என்று சிவபுராணத்திலும் உரைக்கின்றார் மாணிக்கவாசகப் பெருமான். 'இத்தனையும் வேறாகிக்'===இவ்வுலகப் பொருள்கள் அனைத்தினுள்ளும் நிறைந்து, அதனினும் நீங்கி நிற்பது பரம்பொருளின் வியக்கத் தகுந்த‌ தன்மை..  மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.(திருமூலர்) என்ற திருமந்திரப் பாடல் இதற்கு விளக்கம் தரும். 'ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் ' என்ற அபிராமி அந்தாதிப் பாடலும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையாய் இன்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. (அப்பர் சுவாமிகள்)   என்ற தேவாரப் பாடலும்  இதையே உரைக்கின்றது. கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். ===இங்கு 'கண்' என்பது அகக்கண்ணைக் குறிக்கும். நம் எல்லோருடைய உள்ளத்திலும் உறையும் இறைவனை அகக்கண்ணால் காண இயலும்.. அவ்வாறு காண்பதற்கும் இறைவனி கருணை வேண்டும். அந்தக் கருணையைப் பெற, இறைவனின் கழல்கள் ஒலிக்கின்ற திருவடியைப் பாடிப் பக்தி செய்தல் வேண்டும்.. அவ்வாறு அகக்கண்ணால் காணும் போது, இறைவனின் கருணையால், அமுதாகிய பிறவா பெருநிலை கிட்டும்... கீழ்க்கண்ட பாடலைப் பொருத்திப் பார்க்கையில், இப்பாடலின் உள்ளுறை புலப்படும்.. புறத்துள்ஆ காசம் புவனம் உலகம் அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே. ( திருமந்திரம்).   மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!. []   பாடல் 19 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள் எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.   பொருள்: எங்கள் பெருமான்! ============== எங்கள் தலைவனே!   உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் உனக்கொன் றுரைப்போம்கேள்===== "உன் கையில் இருக்கும் குழந்தை உனக்கே அடைக்கலமாகும்" என்று பலகாலமாக வழங்கி வருகின்ற பழமொழியைப் புதுப்பிக்கிறோம் என்று அஞ்சிக் கொண்டே உன்னிடம் ஒன்று சொல்வோம், கேட்பாயாக. எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க========== எம் கொங்கைகள் உன் அன்பர்கள் அல்லாதாரின் தோள்களைச் சேராதிருக்கட்டும். எம் கரங்கள், உனக்கன்றி, மற்றொருவருக்கு, எந்தப் பணியும் செய்யாதிருக்கட்டும். இரவும் பகலும், எம் விழிகள், உன்னையன்றி,  வேறொரு பொருளைக் காணாதிருக்கட்டும்.. இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.======= இந்த உலகில், இவ்விதமான எங்கள் வேண்டுகோளை நீ நிறைவேற்றுவாயாகில், சூரியன் எத்திசையில் உதித்தால் எங்களுக்கு என்ன? இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்... ///உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்/// ஒரு குழந்தையைப் பெற்ற தாயிடம் சென்று, 'உன் கையிலிருக்கும் உன் குழந்தை உன்னையே அடைக்கலமாகக் கொண்டுள்ளது, அதை நீ கருத்துடன் காக்க வேண்டும்' என்று சொல்லத் தேவையேயில்லை.. அதை அவளே நன்கு அறிவாள்.  அதனால் அவ்வாறு சொல்வது பொருளற்றது.. இறைவனிடம், 'நாங்கள் உன்னையே அடைக்கலமாகக் கொண்டுள்ளோம்' என்று சொல்வதும் அவ்வாறே.. இப்போது பாவை மகளிர் இறைவனிடம் வேண்டும் பொருளும் இத்தன்மையதே என்பதால், 'இவ்வாறு பொருளின்றி நாங்கள் கூறுவதற்காக கோபம் கொள்ளாதே' என்று வேண்டுகோள் வைத்தனர்.' நாங்கள் சொல்வது, 'உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்னும் இந்தப் பொருளற்ற பழமொழி போன்றது' என்பது உட்பொருள்... இதற்காக, இறைவன் கோபம் கொள்வாரோ என்று தாங்கள் அஞ்சுவதையே  'அச்சத்தால்' என்று தெரிவித்தனர். 'கோபம் வேண்டாம்' என்று மறைமுகமாகக் கோரினர். இறைவன், பாவை மகளிரின் கோரிக்கைகள் அனைத்தையும் அறிவான். அவர்கள் தன் மீது வைத்த பக்தியினை அறிந்திருப்பதால், அந்த வழியினின்றும் அவர்களைத் தவற விடான். இருப்பினும், பாவை மகளிருக்கு, 'தம் ஊழ்வினையால் இறைநெறியைத் தவற விட்டு விடுவோமோ' என்ற அச்சம் அறியாமையால் தோன்றியது..(இதனால் கோரிக்கை வைப்பவர்கள் பக்குவமற்ற ஆன்மாக்கள் என்பதும், அவர்கள் பரிபக்குவ நிலையை நாடுகிறார்கள் என்பதும் அதன் விளைவே இந்த வேண்டுகோள் என்பதும் புலப்படும்) எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க=== திருமணம் ஆன பின்னர், கணவனின் மனப்போக்கையே மனைவி அனுசரிப்பது இல்லற தர்மம். இறைநெறியில் செல்லும் கணவன் வாய்த்து விட்டால் அதையன்றி மனைவி பெறக் கூடிய பேறு வேறு இல்லை.. இறைவனையே நாடி, அனுதினம் தொழுது பூசிக்கும் கணவனுக்குத் துணை நிற்பது ஒன்றே மனைவிக்கு வீடு பேறு வாய்க்கச் செய்து விடும்.. உள்ளும் புறமும் இறை நாமம் துலங்குவது சற்றும் சிரமமின்றி நடைபெறும். தன் முயற்சியால், 'இறைவனைத் தொழ வேண்டும்' என்றில்லாமல் தொண்டர் பணி செய்தலே இறை பணியுமாகி விடும். உலகியல் வழியிலும், ஆன்மீக வழியிலும் இவ்விதம் கணவனும் மனைவியும் ஒத்து நடப்பது போற்றத் தகுந்ததொரு நிலை. அந்நிலை தமக்கு வாய்க்க வேண்டுமென்பது பாவை மகளிரின் வேண்டுகோள்.. 'இறை நெறியில் நிற்பவரே எமக்குக் கணவராக வர வேண்டும்..' என்பது முதல் வேண்டுகோளாயிற்று.. எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க======== 'எங்கள் கரங்கள் உமக்கல்லாது பிறருக்குப் பணி செய்யாதிருக்கட்டும்' என்பதை சற்று சிந்திக்கலாம். 'இறைவனுக்கு மட்டுமே பணி' என்றால் இல்லறத்தின் பிற கடமைகள் என்னாவது?' என்ற கேள்வி இங்கு எழும்..இறைநெறியில் நிற்பவரே கணவர் என்னும் போது, அவர் செய்யும் எந்தச் செயலும் இறையனார்க்கான பூசனையாகவே திகழும்.. அவரது செயல்களுக்கு உதவுவதே இறைவனுக்கான பணி. இதை வேறொரு விதமாகவும் சிந்திக்கலாம்.. இதற்கு முந்தைய பாடலில், இறைவனின் சர்வ வியாபகத் தன்மையைக் குறித்துப் பாடினர் மகளிர். ஆகவே, இல்லறமும், இறைவனின் இருப்பிடமே.. இல்லறக் கடமைகளை, இறைவனுக்குச் செய்யும் தொண்டாக எண்ணி  நிறைவேற்றுவது, இறை பணியாகவே அமையும்.. இதன் மூலம், செய்யும் எந்தச் செயலையும், இறைவனுக்கான பணியாகக் கருதிச் செய்ய வேண்டும் என்பதும் புலப்படுகிறது. இப்படி இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யும் போது 'நான், எனது' என்ற ஆணவம் அழிந்து, உயிருக்கு நற்பேறு கிட்டுகிறது. 'பகவத் கீதை' சொல்லும் கர்மயோகம் இதுவல்லவா? 'கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க'== இவ்விதமாக, இறைபணியாகவே கருதி, ஒவ்வொரு செயலையும் செய்யும் போது, எங்கும், எதுவும் இறைவனாகவே தோற்றமளிக்கக் கூடிய நிலை வாய்க்கும்.. உதாரணமாக, அடியார்களுக்கு அன்னமிடும் போது, 'அடியார் இறைவனே' என்ற எண்ணம் மீதூற, அந்தப் பணியைச் செய்வதால், அடியார்கள் இடத்தில் ஆண்டவனே குடிகொண்டிருப்பது போன்ற பாவனை ஏற்படும்..'யத் பாவம் தத் பவதி' (நீ என்ன எண்ணுகிறாயோ அதுவாகவே ஆவாய்) என்பதை ஒட்டி, இது உண்மையாகி, அகத்தில் உறைந்திருக்கும் ஆன்ம ஸ்வரூபம் புறத்திலும் தன் தன்மையைக் காட்டியருளும். இதுவே 'ஆன்ம போதக் காட்சி'... எல்லாப் பொருட்களிலும் இறைவனே நிறைந்திருப்பதை மனமார உணரும் போது, இரவும், பகலும், கண்கள் எதை நோக்கினாலும் அதில் இறைவனே தென்படுவான். அந்நிலை தமக்கு வாய்க்க வேண்டுமென்று வேண்டுகின்றனர் பாவை மகளிர். இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்...====== 'இவ்விதமாக நாங்கள் வாழும் முறைமை எங்களுக்கு நீ அருள் செய்தாயென்றால், எங்கள் பிறவித் துயர் ஒழியும்.. உன்னோடு இணைந்திருக்கும் சாயுஜ்ய நிலை கிட்டும்.. அந்நிலை வந்த பின், ஞாயிறு உதிப்பதும் மறைதலும் இயல்பாகிய இவ்வுலகைப் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையேயில்லை.. அது பற்றி, பிறவிச் சுழலில் ஆட்படுவோர் அல்லவா கவலைப்பட வேண்டும்' என்கின்றனர் பாவை மகளிர்.. இரவும் பகலும் இறைவனையே கண்டு, இறைபணியையே செய்யும் நிலை வாய்க்கும் போது, இறுதியில் இறைவனோடு ஒன்றும் முக்திப் பேறு வாய்ப்பது மிக இயல்பு.. அந்த 'சிவசாயுஜ்ய' நிலை கிட்ட வேண்டும் என்பதே உட்பொருள்.. இப்பாடலில், 'சிவனாரன்றி வேறு யாருக்கும் தாம் ஆட்படாதிருக்க வேண்டும்' என்ற தம் உள்ளக் கிடக்கையையே இவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகின்றனர் பாவை மகளிர். இக்கருத்தையே இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் -சுடர்உருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்னெஞ் சவர்க்கு     அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற் பாகப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள் என்று அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையும்,   வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல் வெய்ய வினைப்பகையும் பைய நையும் எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம் அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர் செவ்வான வண்ணரென் சிந்தை யாரே. என்று திருத்தாண்டகத்தில் அப்பர் சுவாமிகளும்   புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும்     புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து     ஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான்     எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக் கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம்     கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் நிற்பன். என்று சிவஞான சித்தியாரில் அருணந்தி சிவாச்சாரியாரும் உரைக்கின்றார்கள்.. அடியார் உள்ளம், திருவுள்ளம் அறியும் எனினும், அறியாமையால் இவ்விதம் கேட்கத் தலைப்பட்டனர். இவ்வாறு தாம் கேட்பது பொருளற்றது என்பதை உணர்ந்தே.. 'வெகுளி வேண்டா' என்று வேண்டுகோள் விடுத்தனர். பாவை மகளிர், தம் கோரிக்கைகளை, 'வேண்டும்' என்று நேர்நிலை தோன்றக் கேட்காமல், 'சேரற்க, செய்யற்க' என்று எதிர்நிலை தோன்றுமாறு கேட்டது, தம் நிலையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக. அடியார்க்கிரங்கும் பெருமான் அகலாது நம் நெஞ்சத்துறைவானாகுக!! மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி   []   பாடல் 20 போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.   பொருள்: போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்=========== எல்லாப் பொருள்களுக்கும் முதலாக ஆதியாக‌ இருக்கின்ற உன் திருவடி மலர்களுக்கு வணக்கம்!... (இறைவா) அவற்றை எங்களுக்கு அருளி ஆட்கொள்ள வேண்டும் போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்============ அனைத்துப் பொருள்களுக்கும் முடிவாக இருக்கின்ற  செந்நிறமான தளிர்களை ஒத்த திருவடிகளுக்கு வணக்கம்.. ( இறைவா) அவற்றை எங்களுக்கு அருளி ஆட்கொள்ள வேண்டும் போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்========எல்லா உயிர்களும் தோன்றுவதற்குக் காரணமாக நின்ற பொன்னை ஒத்த திருவடிகளுக்கு வணக்கம்.. போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்=========== எல்லா உயிர்களும் நிலைபெறும் இடமாக‌ இருக்கின்ற பூப் போன்ற மென்மையான, ஒலிக்கின்ற கழல்களை அணிந்த திருவடிகளுக்கு வணக்கம். போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்=========== எல்லா உயிர்களுக்கும் முடிவு எய்துவதற்குக் காரணமாக இருக்கின்ற இணையடிகளுக்கு வணக்கம். போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்======== திருமாலும் பிரம்ம தேவனும் எவ்வளவு முயற்சித்தும் காண  முடியாத திருவடித் தாமரைகளுக்கு வணக்கம். போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்============== நம் அனைவரையும் ஆட்கொண்டருளும் பொன்மலர்களை ஒத்த திருவடிகளுக்கு வணக்கம். போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.================ இவ்விதமாக இறைவனைப் போற்றி   நாம் அனைவரும் மகிழ்ந்து மார்கழி நீராடுவோமாக!   இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.. ஆதி அந்தமில்லா அருட்பெருஞ்சோதியாகிய இறைவனது இணையடிகளைப் போற்றுவது என்பது மானிடப் பிறவி எடுத்ததன் மிக உயர்ந்த பயனாகச் சொல்லப்படுகிறது..இவ்வாறு போற்றுதல் ஒன்றே பிறவிப் பயனைப் பெற்றுத் தரும். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.   அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி  நீந்தல் அரிது. என்கிறார் திருவள்ளுவர்.. இறைவனது திருவடிகளைப் போற்றுவது மிக உயரிய செயல் 'இறைவனைப் போற்றுகிறோம்' என்று சொல்லாமல், குறிப்பாக, இறையனாரின் இணையடிகளைப் போற்றுவதற்குக் காரணம் உள்ளது..இறைவனை எத்தனை உருவில் நாம் வழிபட்டாலும், எத்தனை முகங்களுடையவராய், திருக்கரங்கள் உடையவராய் நாம் துதித்தாலும், அவரது இணையடிகள்  மட்டும் இரண்டு.. மானிடர்களாகிய நாம், நம் இருகரங்களால் 'சிக்'கெனப் பிடித்துக் கொண்டு பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கு உதவும்படிக்கு திருவடிகள் இரண்டு மட்டுமே.. நாம் ஒருவரது ஆசிகளைப் பெற விரும்பினால், அவர்களது பாதங்களைத் தொட்டுத் தான் வணங்குகின்றோம். பாதங்களைத் தொட்டு வணங்குவது என்பது, ஆணவம் நீங்கிய நிலை... இறுமாப்பு இல்லாமல், பிறரது வாழ்த்துக்களைப் பெறும் பொருட்டு அவரது பாதங்களைத் தொடுகிறோம்.. ஆக, ஆணவமற்ற நிலையில், இறைவனின் அருட்புனலில் ஆடும் பொருட்டு, பாவை மகளிர், இறைவனின் திருவடிமலரிணையைப் போற்றித் துதிப்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்========== 'போற்றி' என்ற சொல்லுக்கு, போற்று என்றும் பொருள் கொள்ள இயலும்..போற்றுக என்றால் காப்பாயாக என்றும் பொருள்... இங்கு போற்றி அருளுக என்னும் போது, உன் திருவடிகளைப் போற்றுகின்றோம். அவற்றை எங்களுக்கு அருளி ஆட்கொள்ள வேண்டும் என்பது பொருள் இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்...   அவனே அனைவருக்கும் ஆதி ஆயினான். எல்லாப் பொருட்களுக்கும் முதல் ஆவது இறைவன் இணையடிகளே.. போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்.. ==== எல்லாப் பொருட்களுக்கும் முதல் யாரோ அவரே முடிவும். அவரது இணையடிகளே முடிவாக, எல்லாப் பொருட்களும் சென்று சேரும் இடமாக  இருக்கின்றன.. அவற்றை செந்தளிர்கள் என்றது, பரம்பொருளின், 'அழித்தல்' என்னும் சம்ஹாரத் தொழிலைப் புகழ்ந்து.. ஐம்பூதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிறம் குறியீடாகக் குறிக்கப்படுகின்றது.. ஐம்பூதங்களின் வடிவாய் இருப்பவன் இறைவன்.. இதனையே'நிறங்களோர் ஐந்துடையாய்' என்று போற்றுகிறோம். அதன் படி, பஞ்ச பூதங்களில் நெருப்புக்க்குரிய நிறம் சிவப்பு.. சம்ஹாரத்தைச் செய்யும் அனலை தம் ஒரு திருக்கரத்தில் ஏந்தியே கூத்தாடுகிறார் எம்பிரான். அந்த சிவப்பு நிறத்தைக் குறித்தே 'செந்தளிர்கள்' என்றார். முடிவுக்குக் காரணமான திருவடிகள் என்பதால் 'செந்தளிர்கள்' ஆயிற்று. சேவடி(செம்மையான நிறம் பொருந்திய திருவடிகள்) தொழுவோருக்கு மனோவிகாரங்கள் அற்ற நிலை வாய்க்கும்  என்று சொல்லப்படுகிறது.. 'போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்'==== 'ஆதி' என்பது எல்லாவுலகும் தோன்றக் காரணனாய் நிற்கும் நிலையைக் குறித்தது..(அதாவது, ஆதி, அந்தம் என்னும் 'காரண நிலை' முதல் இரு வரிகளில் வந்தது. அடுத்த வரிகளில் 'காரிய நிலை' வருகிறது.) 'தோற்றமாம்' என்பதன் மூலம் படைப்புத் தொழில் விளக்கப்பட்டது.. இறைவன் 'பொன்னார் மேனியன்'.. ஆக, இறைவனது திருப்பாதம் பொற்பாதம்.. பொன்னை ஒத்த நிறமும், பிரகாசமும் உள்ள பாதம் எனவும் பொருள் கொள்ளலாம். மேலும் பஞ்ச பூதங்களில் பூமிக்கான நிறமாகக் குறிப்பது பொன்னிறத்தை..அதனாலும் படைப்புத் தொழிலைச் செய்யும் பாதம் பொற்பாதம் ஆனது. ( பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு வன்கால் கருமைவளர் வான்தூமம் - என்பார் எழுத்து லவரய அப்பாராதிக்கு என்றும் அழுத்தமதாய் நிற்கும் அது. (உண்மை நெறி விளக்கம்) ) போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்== இதில், இறைவனார், உயிர்களைக் காக்கும் பான்மை கூறப்பட்டது.. எல்லா உயிர்களும் நிலைபெறுவது இறையனாரின் திருவடி மகிமையாலேயே..கழல்கள் அணிந்த பூப்போன்ற மென்மையான சேவடிகள் என்று உரைப்பது, இறைவ ன்  தன் கருணையால் உயிர்களைக் காத்தருளுதலைக் குறிப்பதற்காக. போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்== ஈறு என்பதை முடிவு என்றும் கொள்ளலாம்.. நிறைவு என்றும் கொள்ளலாம்.. இங்கு இறையனார் உயிர்களுக்கு அருட்பேறு தந்து ஆட்கொண்டு, மீண்டும் பிறவாநிலையளித்தலால் அவரது திருவடிகளை இணையடிகள் என்றார். அத்திருவடிகளில் சேர்ந்து விட்டால் ,ஆதி, அந்தம், தோற்றம், போகம் எதுவும் இல்லை.. எல்லாம் நிறைந்து முடிந்தது.. ஆகவே 'ஈறு' என்ற சொல்லால், நிலைத்த ஒடுங்குதலை, முக்திப் பேறைக் குறித்தார். இணையடிகள் என்பதால், அம்மை, அப்பன் இருவரது திருவருளையும் பெற்றாலே முக்திப் பேறு கிட்டும் என்பதைக் குறித்தார். அர்த்தநாரீஸ்வரனான இறைவனின் திருவடிகளில் ஒன்று உமையம்மையுடையதல்லவா!!  ( மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே .( அப்பர் பெருமான்) ) போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்== 'காணாத' என்ற சொல், இங்கு இறைவனின் மறைத்தல் தொழிலைப் புலப்படுத்துகிறது. ஐயனின் 'திரோதானம்' இங்கு வருகிறது.. இறைவனது அருட்சக்தியின் ஒரு கூறே திரோதான சக்தி. மறைத்தல் என்பது இறைவன் தன்னை அறிய விடாது உயிர்களின் அறிவை மறைத்தல். உண்மையில் மறைப்பது ஆணவம்.ஆணவ மலம் செயற்படச் செயற்படத்தான் அதன் சத்தி படிப்படியாகத் தேயும். அதன் சக்தி தேயும் போது, உயிரறிவு மறைப்பு நீங்கி விளக்கம் பெறும். இறைவனை உணரும் தகுதி ஏற்படும். போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்=== இவ்விடத்தும் இறைவனது திருவடிகளை 'பொன் மலர்கள்' என்று குறித்தார். முன்பு 'பொற்பாதம்' என்றவிடத்து, பிரகாசமும் நிறமும் குறித்தவர், இங்கு மலரொத்த மென்மையைக் குறிக்கின்றார். மென்மை, கருணையைக் குறிக்கும்..கருணையோடு கூடிய அருட்சக்தியால் தக்க சமயத்தில் உயிர்களை ஆட்கொண்டருளுகிறார் இறையனார். 'எம்மை, அடிமையாகக் கொண்டு ஆட்கொண்டருளுக' என்ற பாவை மகளிரின் வேண்டுதலாகவும் இதைக் கொள்ளலாம். இதன் மூலம், ஆதி, அந்தம் இல்லாத இறைவன், ஆதியும் அந்தமும் ஆகி, உயிர்களைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து,  அருளும் ஐந்தொழில் திறன் கூறப்பட்டது. இதையே மாணிக்கவாசகப் பெருமான் சிவபுராணத்தில், ஈசனடி போற்றி எந்தையடி போற்றி நேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி என்று போற்றுகிறார். திருமூலர் திருமந்திரத்தில், போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே என்று போற்றுகின்றார். இப்பிரபஞ்ச இயக்கத்துக்கே காரணமான ஐயனின் திருவருளைப் போற்றிப் புகழ்ந்து, முதலும் முடிவும் அவனே! முத்தமிழ் தந்ததும் அவனே மும்மலம் தீர்ப்பதும் அவனே முழுமுதல் கடவுள் அவனே   என்று தென்னாடுடைய சிவன் பதம் போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவனைத் தொழுது, அவனருளாலே இயன்ற இச்சிறு பணியை அடியார்கள் திருப்பாதங்களில் சமர்ப்பித்து வணங்குகிறேன்.. திருவெம்பாவை பொருளுரை நிறைவுற்றது.. மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!   []