[]         திருப்பாத தரிசனம்   (சப்த விடங்கத் தலங்களின்  பத்தியுலா)  - கைலாஷி    muruganandams@rediffmail.com  அட்டைப்படம் : பிரசன்னா -  udpmprasanna@gmail.com    மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை : Creative Commons Attribution -NonCommercial-ShareAlike     உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம், விற்பனை கூடாது                திருப்பாத தரிசனம்    சப்த விடங்கத் தலங்களின்  பத்தியுலா         []                 சமர்ப்பணம்       []     அடியேனது மூத்த தமக்கையாருக்கு                                    பொருளடக்கம் முன்னுரை 7  1. எண் ஏழின் சிறப்புகள் 10  2. விடங்கம் 14   3. தலங்கள் 16  4.சோமாஸ்கந்த மூர்த்தம் 19  5. தியாகேசர் பூவுலகம் வரச் செய்த லீலை 24  6. சப்த விடங்கத்தலங்களின் பொதுச் சிறப்புகள் 29  7. தியாகராஜர் எனப் பெயர் வரக்காரணம் 31  8. சிவதாண்டவங்கள் 33  9. சிவயோக சாதனையே சப்த விடங்கத்தலங்கள் 37  10. சப்த விடங்க நடனங்களின் தாத்பர்யம் 42  11. திருப்பாத தரிசனத்தின் சிறப்பு 44  12. திருவாரூர் திருக்கோவில் தோன்றிய காலம் 46  13. திருவாரூர் திருத்தலத்தின் சிறப்புகள் 49  14. தியாகேசபெருமானுக்கே உரிய தனிப்பெரும் சிறப்புகள் 59  15. ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் கருவறை திருசுற்று 67  16. ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் சுற்றுக்கோயில்கள் 74   17. அல்லியங்கோதை அம்பாள் 78   18. கமலாம்பாள் 80  19. ஆரூர் வரலாறு கூறும் திருமண்டபங்கள் 85   20. திருவாரூரின் சிறப்பு மிகு தீர்த்தங்கள் 90   21. ஆருர் அரநெறி அசலேஸ்வரர் 95   22. திருவாரூர் பரவையுண்மண்டலி 99   23. திருவிளமல் 101   24. திருப்பள்ளி முக்கூடல் 104   25.திருவாரூரின் திருவிழாக்கள் 106  26. ஆரூருக்குரிய இசைக் கருவிகள் 114   27. நீதி காத்த திருவாரூர் 117   28. இரண்டு அரசர்கள் 120  29.மாணிக்க நாச்சியார் 122  30.சோமாசி மாற நாயனார் 124   31.அம்பர் மாகாளம் 126   32. ஆருரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே 129  33.திருநாகை - ஸ்ரீ ரத்ன சிம்மாசன பாரவார தரங்க சுந்தர விடங்கர் 142  34. திருநள்ளாறு – ஸ்ரீஉன்மத்த நடன நக விடங்க செண்பகத் தியாகேசர் 150  35. திருமறைக்காடு (வேதாரண்யம்) – ஸ்ரீரத்ன சிம்மாசன ஹம்ஸ நடன புவனி விடங்கர் 161  36. திருக்காறாயில் (திருக்காரவாசல்) – ஸ்ரீகனக சிம்மாசன சுவேத சாமந்தி புஷ்பாலங்கார குக்குட நடன ஆதிவிடங்கர் 170  37. திருவாய்மூர் – ஸ்ரீகமல நடன நீல விடங்கர் 176  38.திருக்கோளிலி - (திருக்குவளை) ஸ்ரீபிரம்ர நடன அவனி விடங்கர் 182  தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத் தலங்கள் 188  39. திருவொற்றியூர் - மாணிக்க தியாகேசர் 188  40. திருவான்மியூர் தியாகேசர் 201  41. திருக்கச்சூர் அமிர்த தியாகர் 209  42. சப்த விடங்க தலங்கள் பத்தியுலா 217  ஆசிரியரைப் பற்றி 221                              முன்னுரை   அடியேனுக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் அடியேனது தந்தையார் தெய்வத்திரு. உ.சா.சுப்பிரமணியன் அவர்கள்.  ஓர் புத்தகத்தை வாசிக்கும் போது நாம் ஒரு புது  அனுபவத்தை பெறுகின்றோம் என்று அவர் கூறுவார்.  தாயார் தெய்வத்திரு. சு.சரவணம்மாள் அவர்கள் உணவு ஊட்டும் போது ஆன்மீகக் கதைகளைக் கூறி ஆன்மீகத்தையும் சேர்த்து ஊட்டினார் என்றால் தந்தையார் சிறு வயதிலேயே எங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள பொது நூலகத்திற்கு அடியேனையும் மற்ற குழந்தைகளையும் அழைத்துச் சென்று சித்திரப்பட புத்தகங்களை எடுத்துக் கொடுத்து படிக்கச் சொல்லி பொது அறிவை வளர்த்தார். புத்தகம் வாசிக்கும் பழக்கமும் ஏற்பட்டது.அப்போது படித்த பெலிக்கனின் கதை, ஓநாய் பையன் கதை முதலிய நூல்கள் இன்றும் பசுமரத்தாணிப் போல மனதில் பதிந்துள்ளது. ஆறாம் வகுப்புப் படிக்கும் போது தன்னுடைய நூலக உறுப்பினர் கணக்கை அடியேன் பெயரில் மாற்றிக் கொடுத்தார். பின்னர் பல புத்தகங்களைப் வாசிக்க ஆரம்பித்தேன். தந்தையார் மற்றும்  உடன் பிறந்தவர்கள் புத்தகங்களில் முழுவதும் மூழ்கியவர்கள்  என்பதால் அப்பழக்கம் அடியேனையும்  எளிதாகத் தொற்றிக் கொண்டது. அக்காலத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் கிடையாது என்பதால் பலருக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தது.  தமக்கைகள் வழிகாட்டியபடி சரித்திர புதினங்களை படிக்க ஆரம்பித்த போது கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஒரு முறை படித்து விட்டு மறந்து விடக்கூடிய புதினமா அது?. இது வரை எத்தனை முறை படித்திருப்பேன் என்பதற்கு ஒரு கணக்கே இல்லை. அதில் வரும் ஒரு சம்பவம் இந்நூலை எழுதுவதற்கு ஒரு பொறி எனலாம்.  அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா? இதோ சொல்லி விடுகிறேன். பொன்னியின் செல்வனில் ஒரு சம்பவம், அருள்மொழிவர்மர் திருவாரூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த போது அங்கிருந்த ஆலயத்தார்களைப் பார்த்து “இக்கோயிலின் இறைவருக்கு தியாகராஜர் என்று ஏன் பெயர் வந்தது”? என்று கேட்பார். தேவர்களுக்குள் மகாதேவரும் மூவர்களில் முதல்வருமான சிவபெருமான் மூன்று உலகங்களிலும் வாழும் உயிர்கள் உய்யும் பொருட்டுச் செய்த தியாகங்களை ஆலயத்தார்கள் எடுத்துச் சொன்னார்கள். மூன்று உலகங்களையும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல பெருமான் தம்முடைய பக்தர்களுக்கு அருள் புரியுமாறு மேற்கொண்ட கஷ்டங்களைப் பற்றிக் கூறினார்கள். உயிர்கள் உய்யும் பொருட்டு தவக்கோலம் பூண்டு மயானத்தில் தவம் புரிந்ததைப் பற்றிச் சொன்னார்கள். எல்லா உலகங்களுக்கும் இறைவர் பிக்ஷாடன மூர்த்தியாகத் தோன்றி பிச்சை எடுத்த வரலாற்றைக் கூறினார்கள். தில்லை அம்பலத்தில் வந்து ஆடியதுப் பற்றிச் சொன்னார்கள். பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்பினால் அடிபட்டது பற்றியும் கூறினார்கள்.   அத்தியாகராஜப்பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருவாரூரில் பழைய காலத்தில் அருள்மொழிவர்மரின் முன்னோர்கள் வசித்து வந்ததையும், மனுநீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்கும் பொருட்டு தன் அருமை மகனையே தியாகம் செய்த அற்புதத்தையும் நினைவூட்டினார்கள்”,  என்று கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் எழுதியுள்ளார். அப்பொன்னியின் செல்வன் புதினமே தியாகத்தை அடிப்படையாக கொண்டதுதானே. ஐந்தாம் பாகத்தின் தலைப்பும் “தியாகச்சிகரம்”தானே. அன்று முதலே அத்தியாகராஜ எம்பெருமானை தரிசிக்க வேண்டும் என்று ஒரு ஆவல். மேலும் “தில்லானா மோகனாம்பாள்” திரைப்படம் பார்த்த போது திருவாரூர் தியாகராஜப்பெருமான் கோவிலைப் பற்றி அப்படத்தில் வந்த குறிப்புகள் அந்த ஆவலை அதிகப்படுத்தியது.  பல வருடங்கள் கழித்து  வேலை நிமித்தமாக காரைக்கால் வந்த போதுதான் அவ்வாசை அவனருளால் நிறைவேறியது. தியாகராஜப் பெருமானை திருவாரூரில் முதன்முறை தரிசித்த போது, சரணம் அடைய  திருப்பாத தரிசனம் கிட்டவில்லையே என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது ஆருத்ரா தரிசனத்தன்றும், பங்குனி உத்திரத்தன்று மட்டுமே திருப்பாத தரிசனம் கிட்டும், நித்தியப்படி முகதரிசனம் மட்டும்தான் என்று கூறி ஆவலை இன்னும் அதிகப்படுத்தினர்.  பின்னர் ஆருத்ரா தரிசனத்திற்காக காத்திருந்து திருப்பாத தரிசனமும் பெற்றேன். அவரது அபிஷேகங்கள்,  திருநடனம், தேரோட்டம், தெப்போற்சவம் ஆகியவற்றை தரிசிக்கும்  பெரும் பாக்கியமும் கிட்டியது. சப்தவிடங்க தலங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். காரைக்கால் பகுதியில் பணி என்பதால் திருநள்ளாற்றில் எழுந்தருளியுள்ள நகவிடங்க செண்பகத் தியாகேசரை பின்னர் பலமுறை தரிசிக்கும் பெரும் பாக்கியம் கிட்டியது அவரது பிரம்மோற்சவத்தின் போது ஒரு தடவை அன்பர்களுடன் ஒரு அடிமையாக அவரை எழுந்தருளப் பண்ணும் பாக்கியமும் சித்தித்தது. இவரது  வைகாசி விசாக அபிஷேகத்தை  பல முறை தரிசனம் செய்ய வைத்தார். குறிப்பாக ஆருத்ரா தரிசனத்தன்று இவருக்கும் நடராசப்பெருமானுக்கும் ஒரே காலத்தில் அபிஷேகம் நடப்பதை தரிசிக்கும் பேறு கிட்டியது. அப்பெருமான் திருத்தேரில் பவனி வரும் அழகை பல முறை தரிசிக்க வைத்தார். அடியேனுடன் பணிபுரியும் ஒரு அன்பர்,  நாங்கள் ஒரே நாளில் சப்த விடங்கத்தலங்கள் ஏழினையும் தரிசனம் செய்வோம் என்று கூறினார். அங்கு வசித்த போது ஏழு தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலவில்லை, அவனருளால் தானே அவன் தாள் வணங்க முடியும். பின்னர் பல வருடங்கள் கழித்து ஒரு புனித பயணத்தின் போது   இவ்வேழு தலங்களையும் ஒரே சமயத்தில் தரிசிக்கும் பாக்கியம் சித்தித்தது.  “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்றபடி அவ்வனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்நூல்.  வாருங்கள் ஏழு தியாகராஜர்களையும் தரிசிப்போம். முசுகுந்த சக்கரவர்த்தியால் இந்திரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு இம்மூர்த்திகள் எழுவரும் கொண்டு வரப்பட்டனர். இவர்களுள் திருவாரூர் வீதி விடங்கப்பெருமான் திருமால் தன் மார்பில் வைத்து பூஜித்த மூல மூர்த்தி ஆவார். மற்ற ஆறு மூர்த்திகள் திருநள்ளாறு, திருநாகை, திருக்கோளிலி, திருமறைக்காடு, திருவாய்மூர், திருக்காறாயில் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ளனர். வாருங்கள் அன்பர்களே இவர்களை ஒவ்வொருவராக தரிசிக்கலாம். தியாகராஜர் எப்போதும் முக தரிசனம் மட்டுமே தந்தருளுகின்றார். அவரின் திருப்பாத தரிசனத்திற்காக காத்துக்கிடக்க வேண்டும்.  தரிசனம் காண்பதே பெரும் பாக்கியமென்பதால் இந்நூலுக்கு “திருப்பாத தரிசனம்” என்று தலைப்பு.    சப்தவிடங்கத்தலங்களுடன்,  திருவாரூர் போலவே தியாகேசர் சுந்தரருக்காக தூது சென்ற திருவொற்றியூர் தலம் மற்றும் தொண்டை மண்டலத்தின் உபய விடங்கத்தலங்களைப் பற்றிய தகவல்களும், திருவாரூரிலும், அருகிலும் உள்ள சில தேவாரப்பாடல் பெற்ற தலங்களைப் பற்றிய குறிப்புகளும்   இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.   ஒரு யாத்திரை நூலாக இல்லாமல் சப்த விடங்க தலங்களின் சிறப்புகளை கூறும் நூலாக அமைத்துள்ளேன். இனி மேல் இந்த யாத்திரை செல்ல நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைவாக அடியோங்கள் சென்ற சப்தவிடங்க தலயாத்திரை பற்றி ஒரு சிறு குறிப்பையும் கொடுத்துள்ளேன். ஒவ்வொரு தலத்தைப் பற்றியும் எண்ணற்ற நூல்கள் தமிழிலும், வடமொழியிலும் உள்ளன. அவைகளை இந்த அவசர உலகத்தில் படிக்க யாருக்கு அவகாசம்  உள்ளது? மேலும்  பல தடவை இவ்வாலயங்களுக்குச் செல்லும் போது அத்தலங்களின் சிறப்பை கூறுவதற்கு யாரும் இருப்பதில்லை, இத்தலங்களைப் பற்றிய அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில் கிடைப்பதும் இல்லை என்பதால் பல அன்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட சில தகவல்களை ஒன்றாக சேர்த்து  அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சியே இந்நூல். அவற்றை எழுதிய, அடியேனுக்கு உணர்த்திய அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். குறிப்பாக பட்டினத்தார்தாசன் திரு.காசி அவர்கள் திருவாரூர் பற்றிய பல அரிய தகவல்களை அளித்தார், தியாகராசரின் பங்குனி உத்திர பாத தரிசனத்திற்கும் அழைத்துச் சென்றார் அவருக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய திருவாரூர் திருக்கோவில் என்னும் நூலும், அடியார்க்கு நல்லான் எழுதிய நீலோத்பலம் என்னும் நூலும் திருவாரூர் திருத்தலத்தைப்பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தன. ஒரு தேனி பல்வேறு மலர்களுக்கு சென்று தேனை சேகரிப்பது போல இத்தலங்களைப் பற்றிய பல்வேறு செய்திகளை சேகரித்து அளிக்க முயற்சி செய்துள்ளேன்.                       வாருங்கள் ஜகத்தீரே சிவானந்தத் தேன் கொட்டிக் கிடக்கின்றது அதில் ஒரு சிறு துளியை சுவைக்கலாம். இந்நூல் வருங்காலத்தில் இத்தலங்களுக்கு செல்ல விழைகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்று நம்பி அத்தியாகராஜப்பெருமானின் திருப்பாதங்களில் இந்நூலை சமர்ப்பணம் செய்கின்றேன்.                                                           1. எண் ஏழின் சிறப்புகள்   எம்பெருமான் தியாகராஜராக சப்த அதாவது ஏழு தலங்களில் எழுந்தருளி அருள் பாலிப்பதால் எண் ஏழின் சிறப்புகளை முதலில்  காணலாமா அன்பர்களே. சப்த  என்ற வடமொழி சொல்லுக்கு ஏழு என்றொரு பொருள் உண்டு. ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண். ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் எனப் பொருள். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும். காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்கால மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கப்படுகின்றது. ஏழு என்பதற்கு அளவில்லாது என்றொரு பொருளும் உண்டு. ஆகவே எண்ணற்றப் பிறப்புக்ளை ஏழு பிறவிகள் என்று ஆன்றோர்கள் வகுத்தனர்.  சப்த ரிஷிகள், சப்த மாதர்கள், சப்த ஸ்வரங்கள், சப்த கன்னியர், சப்த கிரி என ஏழின் பெருக்கங்கள் பல உள்ளன அவற்றில் சிலவற்றைப் பற்றிக் காணலாம்.   அப்பர் பெருமான், திங்களூரில் அப்பூதி அடிகளின் பாம்பு தீண்டி இறந்த மகனை சிவபெருமானின் அருளினால் உயிருடன்  எழுப்பிய பதிகத்தில் எண் ஏழின் சிறப்பை இவ்வாறு பாடுகின்றார். ஏழுகொலாம் அவர் ஊழி படைத்தன ஏழுகொலாம் அவர்கண்ட இருங்கடல் ஏழுகொலாம் அவர் ஆளும் உலகங்கள் ஏழுகொலாம் இசையாக்கின தாமே   - ஒவ்வொரு ஊழிக் காலத்தின் தொடக்கத்திலும் இறைவன் படைக்கும் உயிரினங்கள் ஏழு வகைப்பட்டன. அவர் படைத்த கடல்கள் ஏழு வகை, அவர் ஆட்சி செய்வன ஏழு உலகங்கள், அவர் தோற்றுவித்த இசை ஏழு வடிவமுடையவை. சப்த மாதர்கள் என்று வணங்கப்படும் அன்னையர்கள் எழுவர் ஆவர். சண்ட முண்டர்கள் என்னும் அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும் ஆண் பெண் இணைப்பில் பிறக்காமலும் அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்தில் இருந்து தோன்றியவர்கள் இந்த சப்த மாதர்கள். இவர்கள் சப்த கன்னியர் என்றும் அழைக்கப்படுகின்றனர். பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, வைணவி, வாராகி, இந்திராணி,  சாமுண்டி என்ற ஏழு கன்னியர் சப்தமாதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். பிராம்மி தோலுக்கும், மகேசுவரி நிணத்திற்கும், கௌமாரி இரத்ததிற்கும், நாராயணி சீழிற்கும், வாராகி எலும்பிற்கும், இந்திராணி தசைக்கும், சாமுண்டி நரம்பிற்கும் அதிதேவதைகள் என்றும் புராணங்கள் பகர்கின்றன.  மகேசுவரி சினத்தையும், வைணவி பேராசையையும், பிராம்மி காமத்தையும், கௌமாரி மாயையையும், இந்திராணி குற்றம் கண்டுபிடித்தலையும், சாமுண்டி கோள் சொல்லுவதையும், வாராகி பொறாமையையும் அழிக்கும் தெய்வங்கள். சப்த கன்னியரையும் வழிபட இவ்வேழு தீய குணங்களும் அழியும். மோட்சபுரிகள் என்று காசி காண்டம் போற்றும், இறைவனின் தொடர்பினால் முக்தி அளிக்கும் நகரங்கள் காசி, அயோத்தி, மதுரா,  மாயாபுரி என்னும் அரித்வாரம், காஞ்சி, உச்சயினி, துவாரகை  என்று ஏழு. அனுமன், விபீடணன், மகாபலிச் சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமன் ஆகியோர் சஞ்சீவிகள் எழுவர். அனுமன் தன்னலம் பாராமல் இராமருக்கு சேவை புரிந்ததற்காகவும்,  விபீடணன் அண்ணன் என்றும் பாராமல் இராவணனுக்கு நியாயத்தை உணர்த்தியதற்காகவும், மகாபலி தன்னையே தானமாக இறைவனிடம் ஒப்படைத்ததற்காகவும், மார்க்கண்டேயர் இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக எமனையே வென்றதாலும், வியாசர் மகாபாரதம் என்னும் அழியா காவியத்தை எழுதி அதை வாசிப்பவர்களின் பாவங்களைப் போக்கி அருள் புரிந்ததாலும், பரசுராமர் தான் கொண்ட கடமையில் இருந்து விலகாமல் தந்தை சொல்லை மந்திரமாக கொண்டதாலும், அசுவத்தாமன் இறுதி வரை கட்சி மாறாமல் கவுரவர்களுக்கு விசுவாசமாக இருந்ததாலும் சஞ்சீவி நிலையை அடைந்தனர். இவ்வாறு சாகா வரம் பெற்ற சஞ்சீவிகள் ஏழு.  நமது பாரத நாட்டை வளப்படுத்தும் சப்த நதிகள்  கங்கை, யமுனை, கோதாவரி, சரசுவதி, நர்மதா, சிந்து, காவிரி ஆகியவை ஆகும். தினமும் நாம் நீராடும் போது, நாம் அந்நீரை கங்கையாகக் கருதிக் குளிக்க வேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. எனவே நீராடத் துவங்கும் முன் கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று கொண்டு “கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்” என்று கூறிவிட்டு நீராடினால் சாதாரண குளியல் கூட புனித நீராடல் ஆகிவிடும் என்பது ஐதீகம். இவ்வாறு புண்ணிய நதிகள் ஏழு.  அகத்தியர், காஷ்யபர், அத்திரி, பரத்வாஜர், வியாசர், கவுதமர், வசிஷ்டர்  என்று   சப்த ரிஷிகள் ஏழு. தேவர், மக்கள், விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்  என்று தோற்றங்கள் ஏழு. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்று பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு.  ஒரு வாரத்திற்கு ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என  நாட்கள் ஏழு  'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - என்று ஒளவையார். பாடியபடி, உப்பு, தேன், கள், தயிர், பால், கருப்பஞ்சாறு, தண்ணீர்   என  கடல்கள் ஏழு.  ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு என்று வானவில்லின்  நிறங்கள் ஏழு. (இவை ஏழும் சூரியனின் ஒற்றைத் திகிரியை இழுக்கும் ஏழு குதிரைகள் என்று கூறுவர்).   மானிட உடல் உருவாக காரணமான தாதுக்கள்;  இரசம், உதிரம், மாமிசம், கொழுப்பு மஜ்ஜை, மூளை, சுக்கிலசுரோணிதம் என்று தாதுக்கள்  ஏழு. எண்களில் மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஏழு.   வால்மீகி இராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்காந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம்   என்று   காண்டங்கள் ஏழு.  ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிக்கா  என்று இப்பூவுலகின் கண்டங்கள் ஏழு.   உத்தமோத்தம   தலங்களுக்கு   வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்று அமைய வேண்டிய புண்ணியங்கள் ஏழு.  மூலாதாரம்,  ஸ்வாதிஸ்டானம்,  மணிபூரகம்,   அனாகதம்,  விசுத்தி,  ஆக்ஞை,   சகஸ்ராரம் (அ) பிரம்மாரந்திரம் என்று உடலை கட்டுப்படுத்தும் சக்கரங்கள் ஏழு.  நாம் - முதல் தலைமுறை,  தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை, பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,  பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை, ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை , சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை , பரன் + பரை - ஏழாம் தலைமுறை என்று தலைமுறைகள் ஏழு. தன்னை  ஒன்றாவதாக எண்ணிக் கொண்டு தகப்பன், பாட்டன், பெரிய பாட்டன் மூவரை மேலேயும், மகன், பேரன், கொள்ளுப் பேரன் என கீழே மூவரையும் கணக்கிட்டால் ஏழு தலைமுறை ஆகும் என்றொரு கணக்கும் உண்டு. இவ்வாறு தலைமுறைகள் ஏழு. இசையில் ஏழு ஸ்வரங்கள் ச,ரி,க,ம,ப,த,நி  என்று ஏழு.  ஷட்ஜம்: ரிஷபம் முதல் நிஷாதம் வரையிலுள்ள 6 ஸ்வரங்களையும் பிறப்பிக்க முன்னோடியாக இருப்பதால் முதல் சுரம் ஷட்ஜம் எனப்பட்டது. (வடமொழியில், ஷட் - ஆறு).   ரிஷபம்: இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக்கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.  காந்தாரம்: காந்தர்வ சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது. மத்திமகைக்கிளைம்: ஏழு சுரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் சுரம் மத்திமம் எனப்பட்டது.  பஞ்சமம்: ஏழு சுரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து). தைவதம்: தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது.  நிஷாதம்: ஷட்ஜம் முதல் ஆறு சுரங்களும் தன்னிடம் கசரம் பெற்றதால், ஏழாவது சுரம் நிஷாதம் எனப்பட்டது.  தமிழிசையில் இவை குரல், தத்தம், கைக்கிளை, உழை, இளி, உளரி, தாரம் என்றழைக்கப்படுகிறது. தவிலுக்குரிய தாளச்சொற்கள் தா, தீ, தொம், நம், கி, ட, ஜம் என்று ஏழு. இவை சிவபெருமானுடைய ஐந்து முகங்களிலிருந்து தோன்றின.   வடக்கு நோக்கிய வாம தேவ முகத்திலிருந்து தா, தீ ஆகிய சொற்களும்,  தெற்கு நோக்கிய அகோர முகத்திலிருந்து கி, ட என்ற சொற்களும்,, மேற்கு நோக்கிய சத்யோஜாத முகத்திலிருந்து ஜம் என்ற சொல்லும்,, கிழக்கு நோக்கிய தத்புருஷ முகத்திலிருந்து நம் என்ற சொல்லும்,, மேல் நோக்கிய ஈசான முகத்திலிருந்து தொம் என்ற சொல்லும் தோன்றின. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு. ஒவ்வொரு திருக்குறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டினால்  அதுவும் ஏழுபகுதிகளாக வரும். திருக்குறளில் "கோடி' என்ற சொல்  பயின்று வந்துள்ள இடங்கள் ஏழு.   சத்யலோகம், தபோலோகம், ஜனோலோகம், மஹர்லோகம், சுவர்லோகம், புவர்லோகம், பூலோகம்  என்று மேலுலகங்கள் ஏழு.  அதலலோகம், விதலலோகம், சுதலலோகம், தலாதலலோகம், மகாதலலோகம், ரஸாதலலோகம், பாதாளலோகம் என்று கீழுலகங்கள் ஏழு. (இவையிரண்டையும் சேர்த்து ஈரேழு பதினாலு லோகம் இப்பிரபஞ்சத்தில் உள என்பது மரபு.)   மயிலுக்குப் போர்வை அளித்த பேகன், முல்லைக்குத் தேர் தந்த பாரி, ஈர நன்மொழி கூறிய காரி, நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்த ஆய், நெல்லிக் கனியை ஔவைக்கு அளித்த அதியமான், துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன்.  நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கிய நள்ளி, தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு (யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன் ஓரி,  என்று கடை வள்ளல்கள் எழுவர்.  ஏழு இடங்கள் என்பது சப்தஸ்தானம் என்பது வடமொழியில் அழைக்கப்படுகின்றது. தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தான  திருவிழாக்கள்  அல்லது ஏழூர்த் திருவிழா எனப்படும், ஏழு ஊர்கள் இணைந்து கொண்டாடும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அவற்றுள் தஞ்சாவூர்  மாவட்டத்தின் திருவையாறு சப்த ஸ்தான திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. நந்திகேஸ்ரரின் திருமண விழாவைக் கொண்டாடும் விதமாக திருவையாறு ஐயாரப்பர் திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு இறுதியாக திருவையாற்றுக்குத் திரும்பும் சப்தஸ்தான திருவிழா சிறப்பானது. திருவையாற்றை மையமாகக் கொண்டு திருவையாறு சப்தஸ்தான விழா நடப்பதைப் போல தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தான விழா நடைபெறுகிறன. அவை சக்கராப்பள்ளி சப்தஸ்தானம், மயிலாடுதுறை சப்தஸ்தானம், கும்பகோணம் சப்தஸ்தானம், கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம், திருநல்லூர் சப்தஸ்தானம், திருநீலக்குடி சப்தஸ்தானம், கஞ்சனூர் சப்தஸ்தானம், நாகப்பட்டினம் சப்தஸ்தானம் ஆகியவை ஆகும். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மலை மகள் பார்வதி,  சப்த மாதர்கள் மற்றும் அநவித்யநாதசர்மா, அனவிக்ஞை  தம்பதியினர் வழிபட்ட  சப்த மங்கை  தலங்கள்  அமைந்துள்ளன. அவையான திருச்சக்கராப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய சப்த மாதர் தலங்கள் ஏழு.  கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் திருவேங்கடவன் அருள் பாலிக்கும் திருமலையில்  அடங்கியுள்ள மலைகள்  சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி என்று ஏழு.   திருமயிலையில் சிவபெருமான் கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விரூபாட்சீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று அருள் பாலிக்கும் தலங்கள் ஏழு.    ஆலமுண்ட நீலகண்டனாக, விடங்கராக, புண்ணியபுரி நாதனாக, மறை தேடும் பிறையனாக, சர்வலோக நாயகனாக, வேதாந்தச் சுடராக, ஆனந்த ஸ்வரூபியாக, ஏழைகளின் கற்பகமாக, பரஞ்சுடராக, கருணைக் கடலாக, மாசற்ற மணி விளக்காக, தயாநிதியாக, அமர்ந்தாடும் அழகராக,  தியாகவிநோதனாக சிவபெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலங்களும்  ஏழு. இது வரை எண் ஏழில் அமைந்த சில சிறப்புகளைப் பற்றிக் கண்டோம், வாருங்கள் அன்பர்களே அடுத்து விடங்கம் என்றால் என்ன என்று காணலாம்.                                                   2. விடங்கம்   []   அனைத்து தியாகத்தலங்களிலும் எம்பெருமான் விடங்கராக எழுந்தருளி நித்யப்படி அபிஷேகம் கண்டருளுகின்றார். வி+டங்கம் என்றால் உளியினால் செதுக்கப்படாதது என்று பொருள். “டங்கம்” என்றால் உளி. பொன், வெள்ளி உலோகச் சிற்பங்களைச் செதுக்கும் உளிக்கும் இப்பெயர் பொருந்தும்.  எனவே உருவமாக தோன்றியவர் என்பது ஐதீகம். தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட இந்த லிங்க சொரூபங்கள் உளியால்(டங்கம்) செய்யப்படாமல் அவருடைய மனோசக்தியினால் செய்யப்பட்டவை என்று ஒரு  நம்பிக்கையும் உண்டு. சுயம்பு என்பது தானாகத் தோன்றுவது. விடங்கம் என்பது உருவாகக் கிடைப்பது. எம்பெருமானை ”வில் ஆண்ட மேரு விடங்கன்” அதாவது ‘மேருவை வில்லாக   ஆண்ட அழகன்’  என்று  ஆனந்த சேந்தனார் தமது திருப்பல்லாண்டிலும், ”கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி! கயிலை மலையானே போற்றி! போற்றி!” அதாவது ” திருக்கரத்தில் அனல் ஏந்திய அழகனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல” என்று அப்பர் பெருமானும் பாடியபடி அழகர் என்றொரு பொருளும் உண்டு. மேலும் ஆண்மையுடையவர்;   காமம் மிக்கவர் என்ற பொருள்களிலும் இப்பெயர் வழங்கப்படுகிறது.  விடர் + அங்கம் விடங்கமானது. விடர் எனில் வெடிப்பு. பிளவில் வெளிப்பட்ட சுயம்பு என்றும் பொருள் கொள்ளலாம். பிளவென்றால் சலனப்பட்ட பிரம்ம பிளவில் தோன்றிய  திருமேனியாம். பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோறு அமுதம்ஒத்து அவர்க்கே தித்தியா இருக்கும், தேவர்காள்! இவர்தம் திருவுரு இருந்தவா காணீர்; சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்குஓர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலாவினாரே. பொருள்: தேவர்களே! சிவபெருமானிடத்துப் பத்தியோடு தியானிப்பவர்கள் அவனுடைய அருளைப்பருக, அவர்கள் பருகுந்தோறும் அமுதம் போல் அவர்களிடத்தில் அவ்வருள் இனிமை வழங்கும். இவருடைய அழகிய உருவம் ஒளி வீசிக் கொண்டிருப்பதைக் காணுங்கள். எம்பெருமானார் அருட்சத்தியாகியும், மங்கலமாகிய சிவமாகியும், உலகுகளை எல்லாம் படைத்த ஒப்பற்ற முழு முதற்பொருளாகியும், உலகங்கள் தோன்றுவதற்கு வித்தாகியும் விளங்கித் திருவாரூர் முதல்வராய் வீதிகளில் உலாவரும் அழகராய் அஜபா நடனம் என்னும் கூத்து நிகழ்த்துகிறார் என்று பகர்கிறது பூந்துருத்தி நம்பி காடவர் நம்பி திருவிசைப்பாவில் திருவாரூரைப் பற்றிப் பாடிய இப்பாடல்.     விடங்கர் என்பது திருவீதிகளில் பவனி வரும் திருமேனிகளாகும். வீதி விடங்கர் - தெருவில் உலா வரும் அழகர். இது திருவாரூர்  தியாகராசரின் திருநாமம். திருவாரூரில் புற்றிடம் கொண்டார் திருமூலட்டானத்தேயிருக்க, வீதியில் எழுந்தருளி வந்து காட்சி வழங்குபவராதலின், இப்பெயர் உடையாராயினார். தஞ்சை கல்வெட்டுகளில் தெட்சிண மேரு விடங்கர் எனவும், திருவாரூர் அரநெறி கல்வெட்டில் தன்மவிடங்கதேவர் என்றும் சோமாஸ்கந்தர் திருமேனிகள் குறிப்பிடப்படுகின்றன.   வீதி விடங்கர்  வீதியில் எழுந்தருளுங்கால் நடனம் புரிந்து வருதலும், அந்நடனம், “அசபா நடனம்” என்று போற்றப்படுதலும், அந்நடனத்தை இவர் முதற்கண் திருமாலின் இதயத்தில் இருந்து புரிந்தவராதலும் அறிந்து கொள்க. இவர் இங்கே வந்து நடமாடுவதற்கு  காரணம் இவருடைய  மாப்பெரும் கருணை. மனுநீதி சோழனுக்காக வீதியில் வந்து ஆடிய காரணத்தால் இவர் வீதிவிடங்கர். விடங்கர் எனப்படும் தியாகேசர் யோகத்தோடு தொடர்புடையவராக விளங்குகிறார்.  “கடம்பூர் மேவிய விடங்கா போற்றி” என்பது மாணிக்கவாசகர் வாக்கு. சிவயோகியின் முதுகுத்தண்டாகிய குலபதம் என்கிற ராஜவீதியில் வெற்றாகத் திரிகின்ற அன்னப்பறவை என்பது ஆன்றோர் விளக்கம். அஜபா மந்திர தீட்சை பெற்று சிவராஜயோகம் பயில்கின்ற யோகியர்க்கு,  பெருமானை தரிசிக்கும் போது தியாகேசர் தரிசனம் தருவார் என்பது ஐதீகம்.   நாம் தரிசிக்க இருக்கின்ற சப்தவிடங்க தலங்களில் அருள் பாலிக்கும் விடங்கர்கள் யார் என்று காண்போமா அன்பர்களே: திருவாரூர்      வீதி விடங்கர்     அஜபா நடனம்         மௌன நடனம் திருநாகை     சுந்தர விடங்கர்    தரங்க நடனம்      கடல் அலையோசை நடனம் திருநள்ளாறு     நக விடங்கர்      உன்மத்த நடனம்       பித்த(ஆவேச) நடனம் திருமறைக்காடு  புவனி விடங்கர்    ஹம்சபாத நடனம்     அன்னநடை நடனம் திருக்காரவாசல்  ஆதி விடங்கர்     குக்குட நடனம்        கோழி நடனம் திருவாய்மூர்     நீல விடங்கர்      கமல நடனம்          தாமரை நடனம் திருக்கோளிலி    அவனி விடங்கர்   பிரம்ர நடனம்         வண்டு நடனம் பிற்காலத்தில் விடங்கர் தலங்கள் பெருகின. கொங்கு நாட்டில் கூடக்கொடுவாய், கடத்தூர் போன்ற தலங்களில் கொங்கு விடங்கீஸ்வரர் அருள் பாலிக்கின்றார். சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன்  இராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலில் அருள் பாலிக்கும் எம்பெருமான் தட்சிண மேரு விடங்கர் எனப்பட்டார். இது வரை விடங்கம் என்றால் என்ன என்று கண்டோம் இனி தலங்களின் சிறப்பு என்று காணலாம் அன்பர்களே.                3. தலங்கள்   தலம் என்பதற்கு இடம், புனித இடம், க்ஷேத்திரம், பூமி, உலகம், உடலுறுப்பு        (கைத்தலம் முதலியன) நிலம் (நன்செய்), தலைநகரம் என்று பல பொருள் உண்டு. சப்தவிடங்க தலங்களில் இச்சொல் சிவபெருமான் தியாகேசப்பெருமானாக எழுந்தருளி அருள் பாலிக்கும் புனித இடத்தைக் குறிக்கின்றது. தலம் என்பதை கோவில் என்றும் அழைக்கின்றோம். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி.  கோவில் – கோ-அரசன்; இல்-இல்லம். ஆதி காலத்தில் அரசர்கள் வாழ்ந்த அரண்மனைக்கே கோவில் என்று பெயர். கோ என்பதற்கு தலைவன் என்று ஒரு பொருள் உண்டு. எனவே அனைத்து படைப்புகளுக்கும் தலைவனாக விளங்கும் இறைவனின் இல்லத்தைக் கோவில் என்று அழைக்கின்றோம். மேலும் கோட்டம் என்றும் ஆலயம் என்றும் பொருள் உண்டு. ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியான இறைவன் தனது மாப்பெருங்கருணையினால் உலக உயிர்கள் இன்னலழிந்து இன்புற்றுய்ய, தன் மனமிரங்கி, அருவ நிலையிலிருந்து இறங்கி பல தலங்களில் உருவத்திருமேனி கொண்டு அருள்பாலிக்கும் இடங்களே ஆலயங்கள். ஆலயம் – ஆ என்றால் ஆன்மா; லயம் என்றால் வயப்படுதல் அல்லது ஒன்று படுதல். ஜீவாத்மா ஆகிய மனிதர்களை பரமாத்மாவாகிய இறைவனுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஏற்ற இடமே ஆலயம். “இருஞ்சுரபிக்கு எங்கும் உருக்கான ஒண்ணாத பால், முலைப்பால் விம்மி ஒழுகுவது போல வெளிப்பட்டு அருள்வன் அன்பர்க்கே” என்று சிவஞான சித்தியார் பாடியபடி கோமாதாவின் மடியிலிருந்து எப்படி பால் சுரக்கின்றதோ அது போல, தெய்வீக அருளைத் தேக்கி வைத்து நமக்கு அருளும் தலங்கள் ஆலயங்கள் ஆகும். நமது அஞ்ஞான இருளை அகற்றி ஞான தீபத்தை ஏற்றி வைக்கும் தலங்கள் ஆலயங்கள் ஆகும். ”ஆலயந் தானும் அரனெனத் தொழுமே” என்பது சிவஞானபோத சூத்திரமாக அமைந்துள்ளது.  ஆலயங்கள் ஆண்டவனைச் சிந்திக்க வைக்கும் இடங்கள் என்பதை இவ்வடிகள் வலியுறுத்துகின்றன.  “ஆலயம் தொழுவது சாலவும் நன்று“, என்பது ஔவையின் கூற்று ஏனென்றால், இறைவன் குடி கொண்டுள்ள ஆலயங்களில் நிலவும் தெய்வீகத் தன்மை நம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தொன்மைமிக்க ஆலயங்களின் அமைவிடம் கட்டுமானம் ஆகியவையும் அவற்றில் நிலவக்கூடிய விண்காந்த சக்தி,  மின் காந்த சக்தி ஆகியவை நமது மனம் தூய்மை அடையவும் வாழ்க்கை வளம் பெறவும் உதவுகிறது என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை. திருக்கோவில்கள் நம் நாட்டின் எண்ணரிய சிறப்புக்கும் பெரும் புகழுக்கும் காரணமாக விளங்குகின்றன. இவை வரலாற்றினையும் அடியார் பெருமையினையும் பறை சாற்றுவதுடன் கலைக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன.  ஆலயங்கள் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல அவை அனைவரும் ஒன்றாகக் கூடும் சமுதாயக் கூடங்களாகவும் கல்விச்சாலைகளாகவும், நீதிபீடங்களாகவும் விளங்கின என்பதை அறிவோம். எனவே திருக்கோயில்களிடத்து மக்கள் அளவற்ற நம்பிக்கை வைத்தனர். அளவற்ற கொடைகளை வழங்கி,  திருக்கோயில்களைச் சார்ந்த அறக்கட்டளைகளின் முதலீட்டைப் பெருக்கினர். முடியுடை அரசர்கள் நிவந்தங்கள் வழங்கினர்; இறையிலி நிலங்களை வழங்கினர். திருக்கோயில்கள்  பத்திமையின் விளைநிலம்! தமிழ்நாட்டின் வரலாற்றில் திருக்கோயில் ஏற்ற பங்கு அளவற்றது! காலத்தை வென்று நிற்கக்கூடியது ஆகும். அத்துடன் அன்றைய ஆலயங்கள் வரலாற்று பெட்டகங்களும் ஆகும். கலை வளர்க்கும் மையங்களாகவும், இடர்க் காலங்களில் மக்களுக்கு புகலிடம் வழங்கும் மையங்களாகவும் விளங்கியுள்ளன. விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் காவிரி உற்பத்தியாகும் குடகு மலையிலிருந்து அம்மாநதி கடலில் சங்கமமாகும் இடம் வரையில் 108 ஆலயங்களை எடுப்பித்தான் என்று சரித்திரம் கூறுகின்றது. சாதாரண காலங்களில் இவ்வாலயங்கள் கடவுளை ஆராதிப்பதற்கு பயன்படுவது போலவே பெருவெள்ளம் வந்து உடைப்பெடுக்கும் காலத்தில் மக்கள் இவ்வாலயங்களின் மண்டபங்களில் மீது ஏறி தப்பித்துக்கொள்வதற்கு உதவும் என்பதற்காக ஆதித்தசோழன் இவ்வாறு அமைத்தானோ?   போர் செய்யும் போது பெரும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுகின்றது. ஆனால் இது போன்று ஆலயங்களை அமைக்கும் போது அவை கலை, கலாசாரம், பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகின்றன என்பதால் தானோ நமது தமிழ்நாட்டு மன்னர்கள் பிரம்மாண்டமான பல ஆலயங்களை அமைத்தனர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் ஆலயங்களை ஒட்டி வளர்ந்தன, பிள்ளைத்தமிழ், உலா போன்றவை பக்தி இலக்கியங்கள் ஆகும். தேவாரமும் திருவாசகமும் மாற்று மத ஆதிக்கத்தினால் சைவம் தன்னிலை இழந்த போது புத்துயிரூட்டின, ஆலயங்கள் மூலமாக இன்றும் கலை, கலாசாரப் பண்பாடுகள்  வளர்க்கப்படுகின்றன. சமயநெறிகள்,  ஆன்மீக  சிந்தனைகள்  மக்களுக்கு  உணர்த்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன.  இன்றும் பலருக்கு வாழ்வாதாரமாக திருக்கோவில்கள் விளங்குகின்றன என்பது கண்கூடு. ஆலயங்கள் என்பவை மனிதர்கள் தாங்கள் விரும்பிய இடத்தில் விரும்பிய உருவத்தை நிறுத்தி வழிபடும் இடங்கள் மட்டும்  அல்ல. எல்லாவற்றையும் கடந்த பரம்பொருள் பெருங்கருணையோடு தானே வெளிப்பட்டுத் தோன்றியும் வந்து வழிபட்ட மகாமுனிவர்கள், அருளாளர்கள், அடியார்கள் ஆகிய அனைவருக்கும் அருள் மழையைப் பொழிந்தும் பேரின்பம் அளித்த இடங்கள் ஆகும். நமது பரதகண்டமெங்கும் அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ்ந்த ஆலயங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவற்றில் ஒரு சிலவற்றையாவது தரிசனம் செய்து மனிதப்பிறவியின் பயனை முழுமையாக அடைய வேண்டும் என்பதற்காக பெரியோர்கள் பன்னிரு ஜோதிர்லிங்கத்தலங்கள், அஷ்டவீரட்டத்தலங்கள், பஞ்சத் திருசபைத் திருத்தலங்கள், பஞ்சபூதத்திருத்தலங்கள், பாடல் பெற்ற திருத்தலங்கள், சப்தவிடங்க திருத்தலங்கள் என்று பலவாறு வகுத்து வைத்தனர். தற்போது தமிழ்நாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் அமைந்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில்,  திருவரங்கம், தஞ்சை பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோயில்கள் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்தவை. பிள்ளையார்பட்டி, மகாபலிபுரம், திருப்பரங்குன்றம், நரசிங்கம் எனப்படும் மதுரை ஒத்தக்கடை, சிங்கபெருமாள் கோவில் முதலிய ஊர்களில் மலைகளில் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில்களும் ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டே உள்ளன.  சிலப்பதிகாரம், புறநானூறு, பரிபாடல் முதலிய நூல்களில் எவ்வகைக் கோயில்கள் இருந்தன என்று கடவுளரின் பெயர்கள் குறிப்பிட்டு, விரிவாக சொல்லப்பட்டுள்ளன. அப்பர் பெருமான் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர் தமிழிலும், வராகமிகிரர் வடமொழியிலும்  ஆலயங்களைப் பற்றிய பல  அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அப்பர் பெருமான் பாடிய தேவாரத்தில் கரக்கோயில், இளங்கோயில், கொகுடிக்கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் என்று பலவகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார். தொல்லியல் துறையின் அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி தமிழில் கோயில் என்பதற்கு பழங்காலத்திலேயே பல சொற்கள் இருந்ததையும் பட்டியலிட்டுள்ளார். 'கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கந்த சருக்கரையும் மெழுகும் என்றயிவை பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும்' என்று விளக்குகிறார். அதாவது தெய்வத் திருமேனிகளைச் செய்ய இப்பத்துப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. ஆதிகாலத்தில் ஆலயங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன? அவை மரம் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டன. அவை பருவமழை, வெயில் போன்ற காலநிலையாலும், படையெடுப்புகளாலும் அழிக்கப்பட்டன. இன்றும் கூட கேரளம், கர்நாடகா  முதலிய மாநிலங்களில் மரக் கோயில்கள் இருப்பதைக் காணலாம். பல்லவர் காலத்தில் குடவரைக் கோவில்கள் அமைப்பது ஆரம்பம் ஆனது. அதற்கு பிறகு பிறகால சோழர்களின் காலத்தில் ஆலயம் முழுவதும் கற்றளியாக அமைப்பதாக வளர்ந்தது.   'பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும் கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில், கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்,  இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து, தாழ்ந்து, இறைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே' என்று அப்பர் பெருமான், தேவார ஆறாம் திருமுறையில் விவரிக்கிறார். தேவார மூவரும், மாணிக்கவாசகரும் 300-க்கும் மேலான புனிதத் தலங்களைப் பாடிப் பரவியுள்ளனர். அப்பர் பெருமான் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த வராகமிகிரர் எழுதிய 'பிருஹத் சம்ஹிதா’ எனும் சம்ஸ்கிருத நூலில், 20 வகைக் கோயில்களைக் குறிப்பிடுகிறார். வெறுமனே பெயர்களை மட்டும் சொல்லாமல் அவற்றின் நீள, அகலம், கருவறையின் (கர்ப்பக் கிரகம்) அளவு ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார். ஆலயங்களில் ரிஷிகள் தங்களின் தவ வலிமையை சேமித்து  வைத்திருக்கின்றனர்  அதிலிருந்து நாம் எடுத்துக் கொள்கிறோம். தெய்வ மூர்த்தங்களிடமிருந்து தெய்வாநுக்கிரகம் கிடைக்கின்றது. மந்திரபூர்வமான ஆராதனைகளால் நமக்கு ஆலயத்திலிருந்து ஆத்மார்த்தமான நன்மை நிறைய உண்டாகின்றது என்பது உண்மை. ஆகவே  வள்ளலார் பெருமானும் தலங்கள் தோறும் சென்று அவ்விடையமர்ந்த தம்பிரான் திருத்தாளினை வணங்கி வலங்கொளும்படி என்னையும் கூட வா என்கின்றனை வாழி என் நெஞ்சே! என்று பாடியுள்ளார். தேவாரப் பாடல்பெற்ற தலங்கள் 274  அவற்றில் பொன்னி வடகரையதனில் அறுபதுடன் மூன்று  புகழ் பெறு தென்கரையதனில் நூற்றிருபத்தேழு என்று  190  தலங்கள் சோழ நாட்டில் அமைந்துள்ளன. நாம் தரிசிக்க செல்லும் சப்தவிடங்கத்தலங்களும் சோழநாட்டில்தான் அமைந்துள்ளன. இதுவரை சப்த என்னும் எண் ஏழின் சிறப்பினையும், விடங்கம் என்பதன் விளக்கத்தையும், தலங்களின் சிறப்புகளைப் பற்றியும் கண்டோம், வாருங்கள் இனி சப்த விடங்கத் தலங்களில் தியாகராஜராக எம்பெருமான் அருள்பாலிக்கும் சோமாஸ்கந்த மூர்த்தத்தின் சிறப்புகளைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.           4.சோமாஸ்கந்த மூர்த்தம்   []   திருவான்மியூர் தியாகேசர் இறைவனின் உருவத்திருமேனிகள் மகேசுவர மூர்த்தங்கள் என்றழைக்கப்படுகின்றன. மகேசுவரத் திருமேனிகள் இருபத்தைந்தாகும். இவை வியத்தலிங்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.  வியத்த என்ற சொல்லுக்கு வெளிப்பட்டு விளங்குவது என்பது பொருள். இத்திருமேனிகள் போகவடிவம், யோகவடிவம், வேகவடிவம் என்று மூவகைப்படும். போகவடிவம் உயிர்களுக்கு உலக இன்பத்தை வழங்கும் பொருட்டு மணக்கோலம் கொண்டிருப்பது. யோகவடிவம் இறை இன்பம் வேண்டுபவர்களுக்கு ஞானத்தை வழங்கும் பொருட்டு ஞானாசிரியர் கோலம் கொண்டு இருப்பது. வேகவடிவம் என்பது இறைவனை நினைத்து வழிபடும் அன்பர்களின் துயரத்தை நீக்கும் பொருட்டு போர்க்கோலம் கொண்டு விளங்குவது. இவற்றுள் சோமாஸ்கந்த மூர்த்தம் போகவடிவம் ஆகும். அருட்குழவியும் அன்னை உமையும் அருகிருக்க அருள் பாலிக்கும் கோலமாகும். திருக்கயிலாயத்தில் எழுந்தருளியிருப்பது போல அருட்காட்சி தரும் கோலமாகும். இவரே தென்னக சிவாலயங்களின் பிரதான மூர்த்தம் ஆவார். சிவாலயங்களில் திருவிழாக்களின் போது பஞ்சமூர்த்திகள் (ஐந்து எழுந்தருளும் திருவுருவங்கள்) அருள் பாலிக்கின்றனர் கணேசர், வள்ளி தெய்வானை உடனுறை முருகர், சோமாஸ்கந்தர், அம்பிகை, சண்டேசர். ஐவருள் தத்துவச் சிறப்புமிகுந்த தனித்தன்மை வாய்ந்த வடிவம் சோமாஸ்கந்தர் ஆவார். திருமாலுக்கு உமையவளால் ஏற்பட்ட சாபத்தைப் போக்க சிவபெருமானால் அளிக்கப்பட்ட திருமேனியே சோமாஸ்கந்த மூர்த்தி எனப்புராண நூல்கள் கூறுகின்றன. இவரை பள்ளிகொண்ட பெருமாள் தன் மார்பில் வைத்து பூசித்தார் எனவும், அதில் மகிழ்ந்த விரிசடை கடவுள் மகிழ்ந்து தன் தேவியுடன் தோன்றி சாப விமோசனம் அளித்தார். பின்னர் இப்புனித மூர்த்தியை இந்திரன் பெற்று வழிபட்டு வந்தான், பின் முசுகுந்தன் இவரை பூவுலகிற்கு கொண்டு வந்து திருவாரூரில் தாபித்தார் என புராண நூல்களும், பூசை முறைகளும். ஓவியங்களும், சிற்பங்களும் கூறுகின்றன. சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது முதுமொழி. சிவம் நிலை ஆற்றல் என்றால், சக்தி இயங்கு ஆற்றல். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இவை இரண்டின் ஒத்திசைவு அவசியம். அதனால் இறைவன், சிவாலயங்களில் சிவபெருமான்  எப்போதும் தனியாக எழுந்தருளுவதில்லை. சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிரதோஷநாயகர் என்று எப்போதும் உமையம்மையுடன்தான் எழுந்தருளுகின்றார். சோமாஸ்கந்த மூர்த்தத்தில் உமையுடன் முருகரும் இணைந்து இல்லறத்தாராக, இனிய கணவராக பாசமிக்க தந்தையாக கவின்மிகு கருணை வடிவினராக அருள்பாலிக்கின்றார். எனவே குழந்தை நாயகர், இளமுருகு உடனுறையும் அம்மையப்பர், சச்சிதானந்தம், சிவனுமைமுருகு, அம்பிகா குக சம்யுக்தன், சோமாஸ்கந்த ஸ்வரூபன், உமா குமார சகிதன், ஸ்ரீசோமாஸ்கந்த வீதி விடங்க சாம்ப பரமேஸ்வரன் என்று பலவாறு அழைத்து மகிழ்கின்றனர் அன்பர்கள். சிறப்புப் பெற்ற சோமாஸ்கந்த மூர்த்தத்தை புராணங்கள் தியாகராஜரின் திருமேனி என்று குறிக்கின்றன. எனவே இம்மூர்த்தத்தின் சிறப்புக்களைப் பற்றிக் காணலாம் அன்பர்களே. தியாகராஜரின் இரகசியத் திருமேனி சைவம் சாக்தம், காணபத்யம், ஸ்காந்தம் ஆகிய நான்கு மதங்களையும் சிறப்புற விளங்க செய்கின்ற வகையில் அமைந்துள்ளது. திருமால் தனது மார்பில் தியாகராஜரை வைத்து பூசிப்பது ஜீவாத்மா - பரமாத்மா அத்வைத உறவைக் குறிக்கின்ற ஹம்சவித்யா என்பதையும், அஜபா நடனத்தையும் உணார்த்துவதாகும். சிதம்பரம் சிதாகாசத்தையும், காஞ்சிபுரம் பிலாகாசத்தையும் குறிப்பது போல திருவாரூர் அக்ஷராகாசத்தைக் குறிக்கிறது. திருவாரூர் பெருமான் சப்தகோடி மந்திரங்களின் மூச்சுக்காற்று. அனைத்து மந்திரங்களின் ஜீவ அக்ஷரம். ஸ்ரீதியாகராஜர் திருமாலின் பிராண நாடியாக எழுந்தருளுகின்றார். விஷ்ணு என்னும் புருஷரின் உச்சுவாச நிச்சுவாசங்களின் எழுச்சி-வீழ்ச்சிகளில் அவர் மார்பில் அமர்ந்திருக்கும் தியாகராஜர் ஆடுகின்றார். உலகைக் காத்து உய்விப்பதற்காக சிவபெருமான் ராஜகம்பீர ராஜராஜேஸ்வர உருவம் எடுத்து திருவாரூரில் எழுந்தருளுகின்றார். இரத்தின சிம்மாசனமும் வீரவாளும் இவர் அருளரசர் என்பதை உணர்த்துகின்றன. சிவராஜமூர்த்தியின்   திருமுகத்தையும், கொண்டி அம்பாளின் திருமுகத்தையும், இரத்தின சிம்மாசனத்தையும், வீர வாட்களையும் மட்டுமே   தினமும் தரிசிக்க இயலும், மார்கழி திருவாதிரையன்று  வலது திருப்பாதத்தையும், பங்குனி உத்திரத்தன்று இடது திருப்பாத தரிசனம் மற்றும் தரிசிக்கலாம். உடன் வைர கவசம் போர்த்தப்பட்ட ஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ஐயனின் திருமேனியே இரகசியம். எனவே இவரின் சில அம்சங்களை மட்டுமே நாம் உணரும் வண்ணம் தியாகேசரின் திருமேனி பொன்னாலும், மணியாலும் மணங்கமழ் மலர்களாலும் மறைக்கப்பட்டுள்ளது. திருமுகம் தவிர மற்ற அங்கங்கள் தியாக வண்ணம் என்னும் 21 பரிவட்டங்களால் சுற்றிச் சுற்றி  மறைக்கப்படுகின்றது. இவரது திருமேனியின் முன்பக்கம் இதயபாகத்தின் மேல் பட்டயம் அமைத்து அதில் ஸ்ரீவித்யா மந்திரத்தை விளங்கச் செய்திருப்பதை குறிக்கின்றது. “பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்  ஐஐஞ்சின் அப்புறத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே” என்றும் “ஆரூரில் கண்டடியேன் அயர்ந்தவாரே” என்றும்  அப்பர் பெருமான் பாடியபடி மகேசுவர மூர்த்த இருபத்தைந்திற்குள் ஒன்றான சோமாஸ்கந்த மூர்த்தத்தை குறிக்காது என்பது ஒரு சிலரின் கருத்து.  இன்னும் சிலர் ஐஐஞ்சு என்பதை   பிருத்வி முதல் பிரக்ருதி வரையான 25 தத்துவங்களைக் கடந்து, தத்வாதீதனாக விளங்குகிறார் என்பர்.  இதை எம்பிரான் தோழர் சுந்தரர் ’இன்ன தன்மையன் என்றறியா யொண்ணா எம்மான்” என்று பாடுகின்றார். லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் மனோவாசாமகோசரா என்னும் நாமம் இதையே குறிப்பிடுகின்றது. இவ்வாறு மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதவராக விளங்கிகின்றார் தியாகேசர். அஜபா மந்திர தீட்சை பெற்று, சிவராஜ யோகம் பயில்கின்ற யோகியர்களுக்கும் மற்றும் அவ்வகை உபாசகர்களுக்கும் தியாகேசப்பெருமான் என்றாவது தன்னுருவை காட்டுவார் என்பது ஐதீகம். ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமே சோமாஸ்கந்தர். அ - எம்பெருமான், உ- உமையம்மை ம- ஸ்கந்தர் எவ்வாறு அகார, உகார, மகாரத்தின்   சங்கமத்தால் ஓம் என்னும் பிரணவம் உருவாகின்றதோ அதுபோல ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமாக விளங்குகிறார் தியாகராஜர். மூலாதாரத்தில் காமகலை வடிவத்தில் சித்சக்தி விளங்குகின்றாள். சிவசக்தியான குண்டலினி மேல் முகமாய் எழும்போது அது ஸ்கந்தன் என்றழைக்கப்படுகின்றது. கந்தன் எனில் ஒன்று சேரப்பெற்றவன் என்று பொருள். இதுவே சோமாஸ்கந்த மூர்த்தம். (ஸக+உமா+ஸ்கந்தர்). வலப்புறத்தில் வீராசனத்தில் கையில் மானும் மழுவும் ஏந்தி ஐயனும், இடப்புறத்தில் சுகாசனத்தில் கையில் மலருடன் அம்மையும் இருவருக்கும் நடுவிலே நின்ற நிலையிலே அப்பன் முருகனும் விளங்க குடும்ப சகிதமாக ஐயன் காட்சி தரும் மூர்த்தமே தியாகராஜ மூர்த்தம் ஆகும். ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை ஞாலமேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவே மாலையானதொன்று அழிவின்றி வைகுமாறதொக்கும் இரவு பகல் என்று இருந்தாலும் இரண்டும் சேர்ந்து நாள் என்று ஆவது போல பகலையும் இரவையும் இணைக்கும் மாலைப் பொழுதாக முருகன் இருக்கின்றான் என்று கச்சியப்பசிவாச்சாரியார் கந்தபுராணத்தில் பாடுகின்றார். ஆம் மூவரும் இணைந்து சிவமூர்த்தமாக ஒன்றாக அருள் பாலிக்கின்றனர்.   ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தர் என்கிறார் காஞ்சி பரமாச்சாரியார்.  ஸத்-சித்-ஆனந்தம் என்று கூறுவார்களே அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேச்வரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து   சக்தியைக் காட்டுகின்ற சித் அம்பாள்; இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கின்றது. அந்த ஆனந்தமே சுப்பிரமணியர். சிவம் என்ற மங்களமும், அம்பாள் என்ற காருண்யமும், கலந்த பரம உத்க்ருஷ்டமான (உயர்வான) ஸ்தானம் சுப்பிரமணியர்; ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகின்றோம். சப்தவிடங்க ஸ்தலங்களில்   தியாகராஜராக வணங்குகின்றோம் என்பது பெரியவா வாக்கு. நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையுந் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே.   கடம்பமாலையை விரும்பி அணிவதால் முருகன் கடம்பன், அக்கடம்பனை பெற்றவள் அம்பாள், அவளை தன் வாமபாகத்தில் கொண்டவர் சிவபெருமான் என்று இப்பாடலில் சோமாஸ்கந்த மூர்த்த்தை அப்பர் பெருமான் பாடுவதாகவும் மஹா பெரியவா கூறுகிறார். ஸ்தாணுவாக மரமாக சிவபெருமான் இருக்கும் போது அவரை விட்டு விலகாமல் கொடியாக அம்பாள் விளங்குகிறாள் எனவே அவள் அபர்ணா, அப்போது ஸ்கந்தர் விசாகராக இருக்கிறார்  என்பது அவர் விளக்கம். சத் என்னும் சிவனுக்கும் சித் என்னும் அம்மைக்கும் நடுவே ஆனந்தமே வடிவான கந்தனோடு அமைந்த சோமாஸ்கந்தர் ஈசான முகத்தில் தோன்றியவர் ஆவார். சிவன்+உமை+ஸ்கந்தன் = சத்+சித்+ஆனந்தம் = உண்மை+அறிவு+இன்பம் அதாவது உண்மையும் அறிவாகிய நன்மையும் இணைந்தால் கிடைப்பது இன்பம் என்பதை சோமாஸ்கந்த மூர்த்தம் உணர்த்துகின்றது. சோமாஸ்கந்த மூர்த்தம் அருமை+எளிமை+அழகு,   இதை மாணிக்கவாசகர் அருமையில் எளிய அழகே போற்றி என்று திருவாசகத்தில் போற்றுகின்றார். இம்மூர்த்தத்தில் சிவபெருமான் கடந்த நிலையையும், உமையம்மை கலந்த நிலையையும் ஸ்கந்தன் கவர்ந்த நிலையையும் காட்டுகின்றனர். அதாவது கணவன், மனைவி, குழந்தை என்று இல்லறத்தின் முழுமையான வடிவம் என்பர். எனவே குழந்தையைப் பெற்றோர் நடுவில் வைத்து கொண்டாடும் கோலாகல மூர்த்தம் இது. திருவாரூர் நான்மணிமாலையில் குமரகுருபரசுவாமிகள்  தம்மேனி வெண்பொடியால் தண்ணளியால் ஆரூரர் செம்மேனி கங்கை திருநதியே – அம்மேனி மானே யமுனை; அந்த வாணி நதியும் குமரன் தானே குடைவோம் தனித்து என்று ஆழித்தேர் வித்தகரான தியாகராஜ சுவாமி, ஐயன் கங்கையாகவும், அம்மை யமுனையும், ஸ்கந்தன் சரஸ்வதியாகவும் விளங்கும் நாம் குடைந்து நீராடும் திரிவேணி சங்கமமாக அருள் பாலிக்கின்றனர் என்று பாடுகின்றார்.  உரு மூன்றும் ஆகி உணர்வு அரிதாம் ஒருவனுமே   (மாணிக்கவாசகர்)  மூவுருவத்து ஓர் உருவாய்                              (அப்பர்)   தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள் ஆயானே ஆய நல் அன்பர்க்கு அணியானே சேயானே            (சம்பந்தர்) -    என்று இம்மூவுருவ விடங்க மூர்த்தியை, சோமாஸ்கந்த மூர்த்தியை தேவாரப்பாடல்களில்  நால்வர் போற்றியுள்ளனர். ஐயனும் அம்மையும் சேர்ந்த ஐக்கிய ஆனந்த ஸ்வரூபத்தை. சிவ-சக்தி இணைந்த ஆனந்தத்தை அதிவீரராம பாண்டியர் இவ்வாறு பாடுகின்றார், உரகா பரணத் திருமார்பும் உமைஒப் பனையாள் இடப்புறமும் சிரமா லிகையும், புரிசடையும் செய்ய வாயும், கறைமிடறும் வரதா பயமும், மழுமானும் வயங்கு கரமும், மலரடியும், கருவா புரியான் வெளிப்படுத்திக் காட்சி கொடுத்து நின்றானே    சர்ப்பாரணத்தை அணிந்த திருமார்பும், இடப்பாகத்தில் உமையம்மையும், பிரம்ம கபாலங்களால் தொடுத்த  சிரமாலையும், விரி சடையும், பவளம் போல் சிவந்த திருவாயும், நீலகண்டமும், அன்பர்க்கு வரமும், அபயமும் அளிக்கும் திருக்கரங்களும், மானும், மழுவும் தாங்கி, தாமரைப் போன்ற திருவடிகளுடன் சிவபெருமான்  திருக்கருவையில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சிற்பரத்தினம் என்ற நூலில் இம்மூர்த்தி மூன்று வடிவங்களால் விளக்கப்படுகிறார். சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் இடக்காலை மடித்து வைத்து, வலக்காலைத் தொங்க அமைத்து விளங்குகிறார். புலித்தோலையும் பட்டினையும் உடுத்த இவர் நான்கு கரங்களுடையவர். வலக்கரங்கள் இரண்டிலும் பரசுவும் (மழு), அபயமும், இடக்கரங்கள் இரண்டிலும் மானும், வரதமும் அல்லது சிம்மகரணமுத்திரையும் அமைந்துள்ளன. இவர் வலது காதில் மகர குண்டலம் அணிந்திருப்பார். ஜடா மகுடமும், சர்ப்பக்கணங்களும், பற்பல அணிகலன்களும் இவர் பூண்டிருப்பார். சிவபெருமானுக்கு இடப்பக்கம் தேவி அமர்ந்திருப்பாள். அவளது இடக்கால் கீழே தொங்க, வலது காலை மடித்து அமர்ந்திருப்பாள். அவளது இருகரங்களுள் வலக்கரம் தாமரை மலரையும் இடக்கரம் சிம்ஹகரணம் அல்லது ஆசனத்தில் வைத்த நிலையில் கொண்டிருக்கும்; சிவபெருமானுக்கும் உமைக்கும் நடுவே கந்தன் சிறுகுழந்தையாக நிற்கிறார். இவர் உமையின் மடியில் அமர்ந்தோ, நடனமாடிக் கொண்டோ இருத்தலும் கூடும். கரண்ட மகுடம் மகர குண்டலங்கள், சன்னவீரம் ஆகியவற்றை அணிந்திருப்பார். அவரது இருகரங்களுள் வலக்கரம் தாமரை மலர் வைத்திருக்கலாம்; அல்லது இரு கரங்களிலும் தாமரை மலர் இருக்கலாம். தேவியின் வலக்கரத்தில் நீலோற்பல மலரும், இடக்கரம் வரதமும் கொண்டிருத்தலும் உண்டு. அம்பிகை பச்சை நிறத்தினளாகச் சிவப்பு பட்டாடை அணிந்து விளங்குவாள். கந்தன் நடனமாடும் கோலத்தில் இருப்பின் அவனது இடக்கரம் பழத்தையும், வலக்கரம் சூசி முத்திரையும் கொண்டிருக்கும். சில வடிவங்களில் இடக்கரம் தொங்க விடப்பட்ட நிலையில் அமைந்திருக்கும். சோமாஸ்கந்தர் வடிவத்தைத் தொழுவார் இல்லறத்தில் நன்மக்களோடு நலம் பல துய்த்து மகிழ்வர் என்பது ஐதீகம். இதுவரை தியாகராஜர் என்று கொண்டாடப்படும் சோமாஸ்கந்த மூர்த்தத்தின் சிறப்புகளைப் பார்த்தோம். வாருங்கள் தேவலோகத்திலிருந்து தியாகேசர் பூலோகம் வரச் செய்த லீலைகளைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.                                                     5. தியாகேசர் பூவுலகம் வரச் செய்த லீலை []   இந்திரனும் முசுகுந்தனும் தியாகராஜரை தொழல் இவ்வரலாறு தியாகராஜ லீலையில் உள்ளது. ஒரு சமயம் பரமேசுவரன் தேவதச்சனான விசுவகர்மாவை அழைத்து “தாம் பூவுலகத்தில் நிலையாக தங்கியிருந்து  அன்பர்களுக்கு அருள் பாலிக்க விரும்புகிறோம். அதற்கு யாம் தேர்ந்தெடுத்த தலம் சோழ மண்டலத்திலுள்ள இயற்கையெழில் நிரம்பிய  திருவாரூர் ஆகும். அங்கு யாம் எழுந்தருள ஏற்றதொரு பெரிய கோயிலை அமைப்பாயாக” என்றார். அதன்படியே விசுவகர்மாவும், காட்டை சீர்படுத்தி புதிய நகரம் அமைத்து அதன் நடுவில் அழகிய ஆலயத்தை அமைத்தான். இறைவன் எழுந்தருளப் போகின்றான் என்று முனிவர்கள், தேவர்கள், கந்தவர்கள், யக்ஷர்கள் மனிதர்கள் அனைவரும் திருவாரூரில் கூடினர். நகரத்தை அலங்கரித்தனர். ஆண்டு தொடக்கமான வசந்தகால பௌர்ணமியில், குரு சந்திரயோகம் கூடிய கடக லக்கின முகூர்த்தத்தில்  சிவபெருமான் வேத மேடையில் சோமாஸ்கந்தராக  தியாகராஜராகவும், அருகே வன்மீக நாதராக சுயம்பு லிங்க வடிவிலும் தோன்றியருளினார். அகத்தியர் முதலிய முனிவர்கள் பெருமானுக்கு புனித தீர்த்தங்களினால் நீராட்டி சிவாகம விதிப்படி பூசைகள் புரிந்தனர். எம்பெருமானும் அவர்கள் முன் தோன்றி வரங்கள் அருளினார். அன்று முதல் பூலோக கயிலாயமான திருவாரூரில் வீற்றிருந்து அருளாட்சி நடத்துகின்றார் ஸ்ரீதியாகராஜப் பெருமான். எண்ணிலா உலகின் மிக்க எண்ணிலாப் பதியி ருப்ப வண்ணவேல் மைந்த னோடும் மரகத வல்லி யோடும் நண்ணிவீற் றிருப்ப ஞான நாயகன் விழைந்தான் எண்ணில் அண்ணல் ஆரூர்முன் செய்த புண்ணியம் புகலற் பாற்றே என்று தலபுராணம் திருவாரூர் புகழ் பாடுகின்றது. இவ்வாறு சிவபெருமான் தானே உகந்து வந்து அமர்ந்த தலம் திருவாரூர் என்பது ஒரு வரலாறு. மற்றொரு வரலாறு: ஒரு சமயம் திருமால் மகப்பேறு வேண்டி சிவபெருமானைக் குறித்து தவம் செய்தார். அத்தவத்திற்கு மகிழ்ந்த அம்மையப்பர் அவருக்கு காட்சியளித்தனர். சிவபெருமான் அவருக்கு சந்தான பாக்கியம் அருளினார். அவ்வரத்தை ஐயன் வழங்கும் போது திருமால் உமையம்மையை வணங்கத் தவறினார். தன்னை திருமால் மதிக்கவில்லை என்று சினந்த உமையம்மை, முகுந்தனை நோக்கி “தமையனே! பெருமான் அளித்த வரத்தால் பிறக்கும் மகன் அவராலேயே அழிவான்”  என்று சாபமிட்டாள்.  அதனால் கவலை கொண்ட திருமால் சிவபெருமானை வேண்ட அவரும் அம்மையுடனும் ஸ்கந்தனுடனுமான சோமாஸ்கந்த மூர்த்தியாக உடன் விடங்கரான லிங்கத்துடனும் தோன்றினார். சோமாஸ்கந்தரைக்  கண்டு ஆனந்தம் கொண்ட திருமால் தியாகேசர் திருமேனியை தன் திருமார்பில் சுமந்து வைகுண்டம் சென்று திருப்பாற்கடலில் ஆதிசேடன்   மேல் பள்ளி கொண்டு   அஜபை மந்திரத்தின் ஆனந்தம் பெற்று  அரியதொரு பூசை செய்தார்.  இவ்வாறு திருமால் திருமகள் இருவருக்கும் புத்திரப்பேறு தந்தருள புற்றிடங்கொண்ட புனிதரை திருமால் பாற்கடல் எடுத்துச் சென்றார். அங்கு தன் இதயக்கமலமான மார்பில் வைத்து யோக நிலையில் பூசித்து வந்தார். அவர் மார்பில் எழுந்தருளியிருந்த தியாகேசப்பெருமான் முகுந்தன் விடும் மூச்சின் அசைவினாலும், பாற்கடலின் அலைகளின் அசைவினாலும் இடையறாது ஆடிக்கொண்டிருந்தார்.  பூசைக்கு மகிழ்ந்த அம்மையப்பர் மீண்டும் காட்சி தந்தருளினர். திருமால் அம்பிகையிடம் தன் மகனுக்கு அவள் தந்த சாபத்தை நீக்கியருளும்படி வேண்டினார். முகுந்தனின் துதிகளால் மகிழ்ந்த உலகம்மை “தமையனே! என் சாபம் தடையின்றி நடந்தே தீரும். உன் மகன் அழிவான். மீண்டும் நானே அவனை உயிர்த்தெழச் செய்வேன். அவன் உடலின்றி அநங்கனாய் எனது சேனையின் தலைவனாகத் திகழ்வான். அவன் மன்மதன் என்று பெயரேற்று பொன் வசந்தப் பூச்சொரியும் அழகனாய், காதலின் கடவுளாய் திகழ்வான் என்று அருளினாள். அன்னை மன்மதனை உயிர்ப்பிதத்தை லலிதா சகஸ்ரநாமத்தில் உள்ள “ ஹரநேத்ராக்னி ஸந்தக்த காமஸஞ்சீவ நௌஷதி: “ என்ற நாமம் – சிவனது நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை உயிர்பித்த சஞ்சீவினி மருந்து என்று போற்றுகிறது. ( விஷய கர்மம் எரிந்தபின் தான் ஆத்மகாமம் பிறக்கும் என்பது தெளிவு ).   பின்னர் மூவரும் அவர் பூசித்த ஸ்ரீதியாகராஜ மூர்த்தத்தில் கலந்தனர். பின்னர் இந்திரனின் அமரலோகத்தில் பூசைகளை ஏற்று மீண்டும் திருவாரூர் திருமூலட்டானம் அருகே தனிக்கோயிலில் பூச நட்சத்திரம் கூடிய குரு சந்திர யோகம் அமைந்த நன்னாளில் எழுந்தருளினார். திருமாலின் ஆணவத்தை ஒடுக்கி, பின் திருமகளின் தவத்திற்கு மகிழ்ந்து, அவளுக்கு திருமாலினை திருமணம் செய்தருளியதோடு புத்திரப்பேறு தந்தருள் செய்ததும் திருவாரூர் திருத்தலம் என்பதால், மகப்பேறு வேண்டுபவர்கள் இத்தலம் வந்து தியாகேசரை வணங்கி தங்கள் குறை நீங்கப்பெறுகின்றனர். “வான் பழித்து  இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்; ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்; என்று மாணிக்கவாசக சுவாமிகள் பாடியபடி தியாகேசர் வானுலகம் விடுத்து பூவுலகம் புகுந்த இன்னொரு வரலாறு, ஒரு சமயம் வாற்கலி என்ற அசுரனால் தேவர்கள் கடுந்துயருக்கு ஆளாயினர். அப்போது அவர்கள் பிரம்மனிடம் முறையிட அவர் தேவர்களை திருப்பாற்கடலுக்கு அழைத்துச் சென்றார், அப்போது திருமால் தன் மார்பில் வைத்து பூசித்துக் கொண்டிருக்கும் ஹம்சமந்திர சொரூபம், தியாகசிந்தாமணி – ஆகிய தியாகேசப்பெருமானையும் விடங்கரையும்  இந்திரனுக்கு அளித்தார். பெருமானை நீ ஆராதித்து வர உன் துன்பம் விலகும், நலம் பல பெருகும் என்றருளினார். பின்னர் திருமால், பாற்கடலை விட்டு நீங்கிச் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடும் தில்லையம்பதி அடைந்து, எம்பெருமானை  நான்கு மாதங்கள் வழிபட்டு, பின்னர் வாற்கலியை எதிர்த்து போரிட்டு அழித்தார். திருமால் அளித்த  தியாகருடன் இந்திர லோகம் அடைந்த  இந்திரன் கற்பக மலர்களாலும், பாரிஜாதத்தாலும் பெருமானை ஆராதித்து தன் துன்பம் நீங்கப்பெற்று தேவர் குழாத்துடன் இன்புற்றிருந்தான். இவரருளால் இந்திரன் ஜெயந்தன் மற்றும் ஜெயந்தி ஆகிய பிள்ளைகளைப் பெற்றான்.  ஆகவே பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் தியாகேசப்பெருமானை வழிபட நிச்சயம் அவர் பிள்ளை வரம் அருளுவார் என்பது ஐதீகம். தியாகராஜப்பெருமான் அமரருலகத்தை விடுத்து பூவுலகிற்கு எழுந்தருளி மாந்தர்களுக்கு தன் லீலைகள் மூலம் அருள் செய்ய திருவுளம் பற்றினார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தவர் முசுகுந்த சக்கரவர்த்தி ஆவார். ஒரு சமயம் ஐயனின் வெள்ளிப்பனிமலையாம் கயிலை மலையிலே அம்மையும் ஐயனும் ஏகாந்தமாக ஒரு சோலையிலே வில்வ மரத்தடியில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது அம்மரத்தின் மேலிருந்த ஒரு குரங்கு வில்வ இலைகளால் அம்மையப்பரை அர்ச்சனை செய்தது. அதனால் கோபமுற்ற உமையம்மை அக்குரங்கை சினந்தாள். கருணா மூர்த்தியாகிய பெருமான் “இன்று சிவராத்திரி என்று அறியாமலே அது நம்மை வில்வத்தால் அர்சித்துள்ளது. எனவே அதற்கு அருள்வோம்” என்று, அதன் பக்திக்கு மெச்சி அக்குரங்கிற்கு மண்ணுலகில் சக்ரவர்த்தியாக பிறக்கும் வரம் அளித்தார். அவரும் மண்ணுலகில் முசுகுந்த சோழ சக்ரவர்த்தியாக பிறந்தார். மண்ணுலகிலும் தன் நிலை மாற வேண்டாம் என்று குரங்கு முகத்துடனே இருந்தார் சிவநெறியுடன் வாழ்ந்தார். முசு என்றால் குரங்கு, மேலும் அவர் பிறந்த போது குந்தம் என்ற ஆயுதத்துடன் பிறந்ததால் முகுந்தன் என்று அழைக்கப்படலானார். சோழ மண்டலத்தில் அரிச்சந்திரன் மரபில் வந்த கருவூரைத் தலைநகராகக் கொண்ட சோழமன்னர் குலத்தில் பிறந்து முசுகுந்த சக்கரவர்த்தி அரசு புரிந்து வந்தார். அவர் வசிட்ட முனிவரிடம் சென்று, முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் சிறந்தது என்று வினவி, அவரது உபதேசப்படி வெள்ளிக்கிழமை விரதத்தை முறையாக பல காலம் அனுஷ்டித்து வந்தார். முருகப்பெருமானும் முசுகுந்தன் முன் தோன்றியருளினார். அரசனும், வீரபாகு முதலான நவ வீரர்களையும் தமக்கு துணையாக தந்தருள வரம் வேண்டினார். முருகப்பெருமானும் அவ்வாறே அருளினார். அவர்களும் பூவுலகில் பிறந்து முசுகுந்தன் சுற்றத்தராக விளங்கி அவருக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்தனர். எனவே முசுகுந்த சக்கரவர்த்தி யாராலும் வெல்ல முடியாதவராக திகழ்ந்தார். ஒரு சமயம் வலன் என்னும் அசுரன் இந்திரன் மேல் படையெடுத்து வந்தான். அஞ்சி நடுங்கிய இந்திரன் திருமாலை சரண் அடைந்தான். திருமால், இந்திரனிடம் “அவ்வசுரன் மானுடரால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாக வேண்டும்” என்று வரம் பெற்றுள்ளான். எனவே நீ பூமண்டலத்தில் முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியை பெற்று அவனை வெல்வாயாக என்று ஆலோசனை கூறினார். இந்திரன், முசுகுந்த சக்கரவர்த்தியிடம் ஒரு தூதுவனை அனுப்பி அவரை அழைத்து வரக் கூறினான்.  முசுகுந்தரும் நவ வீரர்களுடன் இந்திர லோகம் சென்று, தேவ சேனாதிபதியாகத் தலைமை தாங்கி அவுணர் சேனைகளையெல்லாம் அழித்தார். பின்னர் இந்திரனும் வலனை தன் குலிசாயுததால் கொன்றான். வலனைக் கொன்றததனால் இந்திரன் வலாரி எனப்பெயர் பெற்றான். இந்திரன், தனக்கு உதவிய  முசுகுந்த சக்கரவர்த்திக்கு தேவலோகத்தைச் சுற்றிக் காட்டி அக மகிழ்ந்தான். காமதேனு, கற்பக மரம், அமுதசுரபி முதலிய தேவலோக செல்வங்களை காண்பித்த பின், எழிலார்ந்த அமராவதியில் தியாகப்பெருமான் திருவோலக்கம் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஆலயத்தை அடைந்தனர். முசுகுந்தன் தியாகேசரைக் கண்டவுடன் அவரருளால் அவர்பால் ஈர்க்கப்பட்டார். மகிழ்வுடன் ஐயனை வணங்கி நின்றார். சிவபெருமான் உமாதேவியாரும் சுப்பிரமணியரும் ஒரு பக்கத்தில் பொருந்தத் திருக்கயிலாயத்தில் எழுந்தருளியுள்ளதைப் போல இந்திரன் வழிபடும் தியாகேசப் பெருமான் அங்கு விளங்குவதைக் கண்டு முசுகுந்தன் பேருவகை கொண்டார்.  அச்சமயம் இந்திரனுக்கு கேட்காதவாறு முசுகுந்தனுக்கு மட்டுமே கேட்கும்படி தியாகேசர் பேசினார். வாசவன் கேளாவண்ணம் மன்னவன் தன்னை நோக்கி தேசுறு செல்வ ஆரூர்த் திருநகர் கொடுபோய் எம்மை பூசனை புரிதி என்றான் புகழ்மறை தந்த வாயால் ஈசன் எம்பெருமான் ஞாலத்து எண்ணிலா உயிர்கள் உய்ய - பூவுலகில் சோழமண்டலத்தில் திருவாரூர் என்னும் திருத்தலத்தில் தாம் எழுந்தருள திருவுள்ளம் பற்றியுள்ளதால், தம்மை இந்திரனிடம் கேட்டுப் பெற்று பூவுலகில் தம்மை நிலைபெறச் செய்யுமாறு பணித்தார்.  மறு நாள் போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாட, இந்திரன் முசுகுந்தனை தேவசபையில் கௌரவித்து தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு மாலை அணிவித்து  பல்வேறு பரிசுகளை அளித்தான். பின்னர் முசுகுந்தனை நோக்கி, “நண்பனே! வேண்டிய வரத்தைக் கேள்; அதனை நீ செய்த உதவிக்கு உனக்கு நினைவுப் பரிசாக உனக்குத் தர வாக்களிக்கின்றேன்” என்றான். எப்போதும் ஐயனின் திருவடிகளையே தன் நெஞ்சில் இறுத்தி வணங்கிக் கொண்டிருக்கும் முசுகுந்த சக்ரவர்த்தி, “ஐய நீ பூசை ஆற்றும் அமலனை தருதி” அதாவது  நீ வணங்கிக் கொண்டிருக்கும் தியாகராஜரை நான் மண்ணுலகில் சென்று எம் குடிமக்கள் உய்யும் பொருட்டு கோவில் கொள்ள செய்ய வேண்டும் எனவே நீ எனக்கு தியாகராஜரை கொடுத்து அருள வேண்டும்  என்றார். அதைக் கேட்ட தேவேந்திரன் அதிர்ச்சியுற்று, பசுவைப் பிரியும் கன்று போல் மனந்தளர்ந்து இரங்கி புலம்பி   தியாகராஜரை பிரிய மனமின்றி, இம்மூர்த்தி வைகுந்தத்தில் திருமால் பூசித்தவர், அவர் உத்தரவு இல்லாமல் தமக்கு வழங்க முடியாது என்று மறுதலித்தான். இருவரும் பாற்கடலில் அரிதுயில் கொண்டிருக்கும் திருமாலிடம் சென்று விண்ணப்பித்தனர்.  திருமால், எம்பெருமான் பூவுலகில் உள்ளவர்களுக்கு   அருளும் பொருட்டு எழுந்தருள திருவுள்ளம் பற்றியுள்ளதையும் முசுகுந்தனின் வரத்தின் மூலம் அவ்விருப்பத்தை நிறைவேற்ற உள்ளார் என்பதை தன் யோக சக்தியால் அறிந்தார். திருமால் இந்திரனை நோக்கி“,   அமரர்களின் வேந்தே! உதவி செய்தவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரத்தை விரும்பியவாறு அருள்வதே   முறையாகும், எனவே நீ தியாகேசரை முசுகுந்தனுக்கு அளித்துவிடு என்றருளினார். இந்திரன் தியாகப்பெருமானை பிரிய மனமில்லாமல், முசுகுந்தரை அன்றிரவு மட்டும் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டி சஞ்சலத்துடன் சென்றான். இந்திரன் பின்னர் தேவதச்சன் விச்வகர்மாவை அழைத்து தன்னிடமிருந்த தியாகராஜப்பெருமானின் திருமேனியைப் போலவே   மேலும் ஆறு திருமேனிகளை செய்து தருமாறு பணித்தான். மூலமூர்த்தியுடன் அவர்களையும் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தான். மறுநாள் முசுகுந்தனை தியாக மூர்த்தங்கள் உள்ள மணிமண்டபத்திற்கு அழைத்துச் சென்று, நண்பனே! இங்கிருக்கும் தியாகராஜ மூர்த்தங்களுள் விரும்பியதை எடுத்துக் கொள் என்றான்.  ஒன்றே போலிருந்த ஏழு மூர்த்திகளையும் ஒரு சேரக் கண்ட முசுகுந்தன் ஒரு கணம் திகைத்தான். பிறகு மனதை திடப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு மூர்த்தியின் முன் நின்று கைகூப்பி வணங்கினான். திருமால் வழிபட்ட தெய்வத்திருமேனியின் முன் சென்று வணங்கிய போது தம்மையே கேட்டுப் பெறுமாறு அவருக்கு திருவாக்கு ஒலித்தது. அம்மூலமூர்த்தியையே முசுகுந்தன் தேர்ந்தெடுக்க இந்திரனும் எம்பெருமான் திருவுள்ளக் குறிப்பின்படியே இவ்வாறு நிகழ்கின்றது என்பதை உணர்ந்தான். எனவே மூலமுர்த்தியுடன் மற்ற ஆறு மூர்த்திகளையும் முசுகுந்தனிடம் அளித்தான். பூஜா விதானங்களையும் நல்கி விடை கொடுத்தான். முசுகுந்தன் சப்த மூர்த்திகளையும் ஒரு பெரிய தேரில் வைத்து பூலோகம் கொண்டு வந்தான். முசுகுந்தரும் தியாகராஜரை பூலோகத்தில் பிரதிஷ்டை செய்ய ஒரு தலத்தை தேர்ந்தெடுக்க வேண்டி திருவாருரை ஒரு தட்டிலும் ஏனைய பூவுலகை ஒரு தட்டிலும் வைத்து நிறுக்க திருவாரூரே  எடை அதிகமாக இருக்க மூல மூர்த்தியை இங்கு பிரதிஷ்டை செய்ய தனது தலைமை விசுவகர்மாவை அழைத்து வன்மீகநாதரின் ஆலயத்தின் அருகில் ஒரு ஆலயம் அமைக்குமாறு பணித்தான். விசுவகர்மாவும் முசுகுந்தனின் ஆணைப்படி திருவாரூரில் ஒரு அழகிய கோவிலையும், அழகிய குளத்தையும் அமைத்தான். முசுகுந்தன் அக்கோவிலுக்கு குடமுழுக்கு செய்து திருவிழாக்களும் நடக்க ஏற்பாடு செய்தான், பின்னர் இந்திரன், தேவர்கள்,  முனிவர்கள்   ஆகியோர்களை அழைத்து தியாகேசப்பெருமானுக்கு 1. திருமால் பூஜா விதானங்கள், 2. இந்திரன் பூஜா விதானங்கள் மற்றும் 3. முசுகுந்தன் பூஜா விதானங்கள் என்று மூன்று விதானங்களின்படி அனைத்து ஆராதனைகளும் முறைப்படி நடக்க ஏற்பாடு செய்தான். முசுகுந்தன் ஏனைய மூர்த்திகளை தனியொரு மண்டபத்தில் வைத்து பலகாலம் ஆராதித்துப் பின்னர் அத்திருமேனிகளை முறையே திருநள்ளாறு, திருநாகைக் காரோணம், திருவாய்மூர், திருக்கோளிலி, திருக்காறாயில், திருமறைக்காடு ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.  இந்த ஏழு தலங்களும் சப்த விடங்க ஸ்தலங்கள் என போற்றப்படுகின்றன .சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு  காரார் மறைக்காடு காறாயில் – பேரான ஏத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி சத்த விடங்கத்தலம் - என்ற பழம்பாடல் சிவபெருமான், விடங்கப்பெருமானாக, தியாகராஜராக எழுந்தருளி அருள் பாலிக்கும் இத்தலங்களை பட்டியலிடுகின்றது. கந்தபுராணத்தில் தட்சகாண்டத்தில் கச்சியப்பச் சிவாச்சாரியார்  முசுகுந்த சக்ரவர்த்தியால் தியாகராஜர் திருமேனி இந்திர லோகத்திலிருந்து  திருவாரூர் வந்த இவ்வரலாற்றைப் பாடியுள்ளார். இதுவரை தியாகேசர் விண்ணுலகம் விடுத்து எவ்வாறு திருவாரூரில் வந்து கோயில் கொண்டார் என்ற வரலாறுகளைக் கண்டோம் வாருங்கள் இனி சப்தவிடங்கத்தலங்களின் பொது சிறப்புகள் என்னவென்று காணலாம் அன்பர்களே.                                                       6. சப்த விடங்கத்தலங்களின் பொதுச் சிறப்புகள் []   சப்த விடங்கத் தலங்கள் அனைத்தும் சோழ வளநாட்டில் திருவாரூரைச் சார்ந்தே அமைந்துள்ளன. திருவாரூரில் இருப்பது போலவே இந்த ஆறு தலங்களிலும் கருவறையின் தென்கிழக்கில் தனிச் சந்நதியில் பொற்சிம்மாசனத்தில் தியாகராஜர் இருந்தாடும் அழகராக, உமையம்மை மற்றும் ஸ்கந்தனுடன் சோமாஸ்கந்தராக முக தரிசனம் மட்டும் அருளியவாறு எழுந்தருளியுள்ளார். பெருமானின் திருமேனிகளின் உடல் பரிவட்டத்தால் மூடப்பட்டே வழிபாடு நடைபெறுகின்றது. திருமேனிகளின் ஆடை, அணிகலன்களை முற்றிலுமாக அகற்றக்கூடாது என்பதனை வழிபாட்டு நெறியாக கடைப்பிடிக்கின்றனர். உடனுறையும் நின்ற கோல அம்பாள் நீலோத்பலாம்பாளாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். இத்தலங்களின் விநாயகரும் தியாக விநாயகராக அருளுகின்றார்.  இரத்தின சிம்மாசன மேடையும், மேற்கட்டும் முன்புறம் வீரகட்கங்களும் நேர் எதிரில் செப்பாலான நின்ற இடபமும், அவரைத் தொழுபவராக  (பரவையார் உடனாய) சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அமைந்துள்ளனர். இத்தலங்களில் தென்றல் வரும் வாயிலும் அமைக்கப்பட்டுள்ளன.  எம்பெருமான் விடங்கராகவும் எழுந்தருளி நித்தியப்படி அபிஷேகம் கண்டருளுகின்றார்.  முசுகுந்தார்ச்சனை கண்டருளுகிறார். தேவலோகத்தில் தியாகராஜப் பெருமானுக்கு தேவர்கள் பூசை செய்ததன் நினைவாக ஓராண்டில் ஆறு நாட்கள் மட்டுமே தியாகராசருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது, இவ்வபிஷேக சமயத்தில்தான் ஸ்கந்தரை தரிசிக்கமுடியும். தினப்படி அபிஷேகம் விடங்கப்பெருமானுக்குத்தான்.       அனைத்துத் தலங்களும் தேவாரப்பாடல் பெற்றவை. நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நின்ற கோலத்தில் அமைந்துள்ளன. வசந்தோற்சவம் கண்டருளுகின்றனர். தேரில் மட்டுமே உலா வருவர், நடனத்துடன் எழுந்தருளும் போது தியாகராஜ யந்திரம் என்னும் வாரையில் எழுந்தருளுவார். பெருவிழாக் காலங்களில் பட்டம் கட்டி அனுதினமும் உலா வருபவர் சந்திரசேகரர் என்பவை எம்பெருமான் தியாகராஜராக எழுந்தருளி அருள் பாலிக்கும் சப்த விடங்கத்தலங்களின் பொதுச் சிறப்புக்கள் ஆகும். தியாகராஜ யந்திரம்: தியாகேசர் எழுந்தருளும் போது வாரை, தண்டு என்றழைக்கப்படும் தியாகராஜ யந்திரத்தில் எழுந்தருளுகின்றார். பெருமான் நடனம் நிகழ்த்த ஏதுவாக அமைந்தது இம்மாணிக்கத்தண்டாகும். இது பிள்ளைத்தண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. மூங்கில் வாரைகளில் திண்டுகளில் வைத்து சிம்மாசனத்தை வைப்பதைத் தவிர, இறுக்கிக் கயிற்றால் கட்டுகிற வழக்கமில்லை. இம்மணித்தண்டை வாரைகளில் ரகசிய கயிற்றால் பொருத்தி பிறர் காணா வண்ணம் விழிப்பரமர் என்ற மரபைச் சேர்ந்தவர்கள் பெருமான் பீடத்தோடு வாரைகளை இணைக்கின்றனர். இதனைத் பிள்ளைத் தண்டு இரகசியம் என்பர். இம்மணித்தண்டு சிவராஜயோகியின் முதுகுத்தண்டு (Spinal Cord) ஆகும். அஜபா நடனம் யோக நெறி பற்றியதல்லவா? அன்பர்களே. விடங்கத் தலங்களில் நவகிரகங்கள்: சிவாலயங்களில் நவகிரகங்களை நிலைப்படுத்தி வணங்க பலவகையான முறைகளைப் பூசாபத்ததி நூல்கள் குறிக்கின்றன. இவற்றில் இரண்டு முறைகள் உள்ளன. முதல்வகை ஆகம முறை என்றும் மற்றது வைதீக முறை ஆகும். ஆகமநெறிப்படி அமையும் நவகிரகப் பிரதிஷ்டையில் நடுவில் சூரியன் மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கச் சுற்றிலும் அமைந்த கிரகங்கள் அவரை நோக்கியவாறோ அல்லது வெளிப்புறம் நோக்கியோ காட்சியளிக்கின்றார். வைதீக முறையில் அமையும் நவக்கிரக பிரதிஷ்டையில் நடுவில் சூரியன் கிழக்கு நோக்கி நிற்க சுற்றிலும் கிரகங்கள் நாற்திசைகளையும் நோக்கி ஒன்றையொன்று பார்க்காத வண்ணம் நிலைப்படுத்தப்படுகின்றது. இதற்கு முற்றிலும் மாறாகத் தியாகராஜ ஸ்தலங்களில் நவகிரகங்கள் ஒரே வரிசையில் தெற்கு அல்லது மேற்கு நோக்கியவாறு அமைக்கப்படுகின்றன. திருவாரூர், திருக்குவளை, திருவாய்மூர், நாகப்பட்டினம் முதலிய தலங்களில் இவ்வமைப்பைக் காணலாம். தியாகராஜர் உயிர்களின் கோள்களை நீக்கி இன்பமளிப்பவர். அவருடைய சந்நதியில் நவகிரகங்களின் செயல்பாடுகள் இல்லை. அதனால் அவர்களுடைய வக்கிரங்கள் இன்றி ஒரே வரிசையில் நிற்கின்றனர் என்பதொரு ஐதீகம். நவகிரகங்கள் தியாகராஜப்பெருமானின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவை அனுக்கிரக நவக்கிரகங்கள் ஆகும். நின்ற நந்தி: பொதுவாக சிவாலயங்களில் நந்தியெம்பெருமான் முன், பின் கால்களை மடக்கிப் படுத்த கோலத்தில் அருள் பாலிப்பார். ஆனால் சப்த விடங்கத்தலங்களில் நின்ற கோலத்தில் செப்புநந்தி அருள்பாலிக்கின்றார். தியாகராஜபெருமானுக்கு முன்னால் படுக்கக்கூடாது என்ற மரியாதையின் நிமித்தம் இவ்வாறு நின்ற நிலையில் உள்ளார் என்று கூறுவர். அனைத்து சப்த விடங்கத்தலங்களிலும் திருத்தேருக்கு எழுந்தருளுபவர் தியாகரே. இவருக்குரிய பெருந்திருவிழா வசந்த விழா என்றழைக்கப்படுகின்றது திருமறைக்காட்டில் மாசியிலும், திருவாரூரில் பங்குனியிலும், மற்ற தலங்களில் வைகாசியிலும் வசந்த விழா சிறப்பாக நடைபெறுகின்றது. வைகாசி மாதம் என்பது வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் பிற்பகுதி ஆகும். எனவே வைகாசி விசாகத்தில் கோவில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.  இதனால் மழை நன்றாகப்பொழியும் என்பது நம்பிக்கை. சப்த விடங்கத் தலங்களிலும் தியாகராஜருக்கு நெய் விளக்கிட்டு, காய்ந்த திராட்சையும், கற்கண்டும் நைவேத்தியம் செய்ய, பூர்வ ஜென்ம பாபங்கள் நீங்கி முக்தி கிட்டும்.    இனி திருவாரூரிலிருந்து மற்ற விடங்கத்தலங்களுக்கு இடையேயான தூரம்: திருவாரூரிலிருந்து திருநள்ளாறு 35 கி.மீ தூரத்திலும், நாகபட்டினம் 25 கி.மீ தூரத்திலும், திருக்கோளிலி 20 கி.மீ தூரத்திலும், திருவாய்மூர் 23 கி.மீ தூரத்திலும், திருக்காரவாசல் 10 கி.மீ தூரத்திலும், திருமறைக்காடு 60 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளன.  சப்த விடங்கத்தலங்களின் பொது சிறப்புக்களைப் பற்றி கண்டோம் இனி எம்பெருமானுக்கு தியாகராஜர் என்னும் திருநாமம் ஏன் என்று காணலாமா? அன்பர்களே.       7. தியாகராஜர் எனப் பெயர் வரக்காரணம் []   ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும் ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடையானும் ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும் ஆயிரம் பேர்   உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே என்று அப்பர் பெருமான் பாடியபடி ஆயிரம் திருநாமம் கொண்டவர் சிவபெருமான் ஆயினும் தியாகராஜர் என்ற திருநாமம் அடியேனை மிகவும் ஈர்த்தது.  எனவே அப்பெயருக்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவா அடியேன் மனதில் எழுந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம் படித்தபோது அதற்கான ஓர் விடை கிடைத்தது. அதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.    திரு.கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புனிதத்தில் - அருள்மொழிவர்மர், திருவாரூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த போது அங்கிருந்த ஆலயத்தார்களைப் பார்த்து “இக்கோயிலின் இறைவருக்கு தியாகராஜர் என்று ஏன் பெயர் வந்தது” என்று கேட்டார். அதற்கு ஆலயத்தார்கள் “தேவர்களுக்குள் மகாதேவரும் மூவர்களில் முதல்வருமான சிவபெருமான் மூன்று உலகங்களிலும் வாழும் உயிர்கள் உய்யும் பொருட்டுச் செய்த தியாகங்களை ஆலயத்தார்கள் எடுத்துச் சொன்னார்கள். மூன்று உலகங்களையும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல பெருமான் தம்முடைய பக்தர்களுக்கு அருள் புரியுமாறு மேற்கொண்ட கஷ்டங்களைப் பற்றிக் கூறினார்கள். உயிர்கள் உய்யும் பொருட்டு தவக்கோலம் பூண்டு மயானத்தில் தவம் புரிந்ததைப் பற்றிச் சொன்னார்கள். எல்லா உலகங்களுக்கும் இறைவர் பிக்ஷாடன மூர்த்தியாகத் தோன்றி பிச்சை எடுத்த வரலாற்றைக் கூறினார்கள். தில்லை அம்பலத்தில் வந்து ஆடியதுப் பற்றிச் சொன்னார்கள். பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்பினால் அடிபட்டது பற்றியும் கூறினார்கள். அத்தகைய தியாகராஜப்பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருவாரூரில் பழைய காலத்தில் அருள்மொழிவர்மரின் முன்னோர்கள் வசித்து வந்ததையும், மனுநீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்கும் பொருட்டு தன் அருமை மகனையே தியாகம் செய்த அற்புதத்தையும் நினைவூட்டினார்கள்”   என்று படித்தேன். இவை மட்டுமா இன்னும் ஏதாவது காரணம் உள்ளனவா என்று யோசித்த போது அடியேன் மனதில் தோன்றிய சில எண்ணங்கள்.  பாற்கடலைக் கடைந்த போது பாற்கடலில் இருந்து வந்த மகாலட்சுமி, அமிர்தம், ஐராவதம், சிந்தாமணி,  கற்பக மரம், பாரிஜாதம் உச்சைசிரவசு, காமதேனு  போன்ற  சிறந்தவற்றை எல்லாம் மற்ற தேவர்களுக்கு அளித்து விட்டு தான் மட்டும்  எவருமே விரும்பாத, ஆலகால விடத்தை ஒரு நொடியில் விழுங்கி தேவர்கள், முனிவர்கள், மானிடர்கள் மற்றும் சகல ஜீவராசிகளையும் காத்த பரம கருணாமூர்த்தி எனவே அவரை தியாகராஜர் என்று கொண்டாடுகிறோம்.  அவ்வெம்பிரானை நாம் திருநீலகண்டர் என்றழைத்துப்  போற்றுகின்றோம். அக்கருணைக்கடல், தாயினும் சிறந்த தயாபரன், அணிவது புலித்தோல் ஆடை, ஆபரணங்களோ பாம்புகள், இருப்பதோ சுடுகாடு. அவர் யோகத்தில் அமர்ந்ததும் பனி சூழ்ந்த  திருக்கயிலாயம், அணிவதோ கொன்றை, எருக்கு,  ஊமத்தை போன்ற பிறர் விரும்பாத  மலர்கள், வாகனம் நந்தி. இவையெல்லாமும் யாரும் விரும்பாதவை ஆயினும் அவற்றை  இவர் விரும்பி ஏற்றுக்கொண்டார். எனவே அவர் தியாகராஜர்.  பூமியையே பாதாளத்திற்கு அழுத்திவிடக்கூடிய வேகத்துடன் பாய்ந்து வந்த ஆகாய கங்கையை தன் சடையில் தாங்கி இஞ்ஞாலத்தைக் காத்த  பெருமான் இவர், இவரை கல்லாலும், வில்லாலும் அடித்தும், காலால் உதைத்தும், கோடரியால் வெட்டியும்  பல அடியார்கள் வழிபட்டாலும் அவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்டு அவர்களுக்கெல்லாம் அருளினார், தன் அன்பனுக்காக பிரமனும், திருமாலும், தேவர்களும் முனிவர்களும் காணா மலர்ப்பாதம் தோய திருவாரூரின் வீதிகளிலே நடந்தார், திருக்கச்சூரிலே வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்தார், நரிதனைப் பரியாக்கி, பரிதனை நரியாக்கி,  பிட்டுக்கு மண் சுமந்து அரசனிடம் பிரம்படியும் பெற்றார், தன் பக்தைக்காக தானே தாயுமாகி  வந்து பிரசவம் பார்த்தார். பிள்ளையை பேணினார்,   இவற்றால் அன்றோ  நாம் தாயிற் சிறந்த தயாவான தத்துவனை   நாம் தியாகராஜர் என்று கொண்டாடுகின்றோம். வாருங்கள் அன்பர்களே இருந்தாடும் அழகராக எம்பெருமான் சப்த விடங்க ஸ்தலங்களில் எழுந்தருளி அருள் பாலிப்பதால் அவர் ஆடும் தாண்டவங்களைப் பற்றி அடுத்து காண்போம்.                                 8. சிவதாண்டவங்கள்   சைவ ஆகமங்களில், பஞ்ச சபை, பஞ்சபூத தலங்கள், சப்த விடங்கம், அட்ட வீரட்டானம் போன்ற சிறப்பு திருத்தலங்களில் சைவ தத்துவங்களோடு பலவிதமான நடன வகைகளையும் சிவபெருமான் நிகழ்த்தியுள்ளதாக தேவாரப் பாடல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இவ்வாறு ஐயன் நடனமாடுவதால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்றும், அவரது ஒவ்வொரு அசைவும் அண்டத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்யவே எனவும் திருமுறைகள் பகர்கின்றன. பல தலங்களில் பல்வகையான ஆடல்களை அவர் நிகழ்த்தியிருந்தாலும், மிகவும் போற்றப்படுவது ஏழு வகையான தாண்டவங்களே. பரத நாட்டியத்தை உலகுக்குக் கொடுத்த பரத முனிவர், 108 வகையான ஆடங்களை இறைவன் எம்பெருமான் ஆடியிருப்பதாகக் கூறுகிறார். அவையே தாண்டவ பேதங்கள் எனவும் கரணங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. தனது ஆடலின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை ஆற்றுகின்றார் சிவபெருமான். அத்தாண்டவங்கள் அல்லது நடனங்களை அவர் ஆடி நம்மை எவ்வாறு ஆட்டுவிக்கிறார் என்பதை விவரமாகப் பார்ப்போமா அன்பர்களே. காளிகா தாண்டவம்: அன்னை சிவகாமி, காளியாகக் கோபம் கொண்டு நிற்கையில், அவளது கோபத்தைத் தணித்து, தானும் அவளும் வேறல்ல என்பதை உலகுக்கு உணர்த்த ஆடிய தாண்டவமே காளிகா தாண்டவம். ஐந்தொழில்களில் முதலாவதாகிய ஆக்கல் (படைத்தல்) செயலைக் குறிப்பது காளிகா தாண்டவம் ஆகும். இத்தாண்டவத்திற்கு முனி தாண்டவம் என்ற பெயரும் உண்டு.   இத்தாண்டவக் கோலத்தில் இறைவன் எட்டு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கின்றார். வலத்திருக்கரங்களில் சூலம், உடுக்கை ஆகியவற்றை ஏந்தியும், அபய கரத்துடனும், இடத்திருக்கரங்களில் மணி, அக்னி, பிரம கபாலம் ஏந்தி  கஜ ஹஸ்தமும் (வீசு கரம்) காட்டியபடி திருக்காட்சி தருகிறார். இத்தாண்டவத்தை உயிர்களைப் படைக்கும் போது ஆடும் தாண்டவம். திருநெல்வேலியில் தாமிர சபையில் இத்தாண்டவத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இந்நடனக் கோலத்தில் இறைவனை தரிசித்தால் கர்ம வினைகள் நீங்கி, வாழ்வில் இன்பம் மலரும், கடன் தொல்லைகள், தாழ்வு மனப்பான்மை ஆகியவை விலகும்  என்று ஆகமங்கள் பகர்கின்றன.  சந்தியா தாண்டவம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விடம் வெளிப்பட்டது. உலக நன்மைக்காக சிவபெருமான் அதனை அருந்தினார். விடத்தின் வீரியத்தால் அவர் செயலிழந்து உறைந்து அன்னை பார்வதியின் மடியில் சாய்ந்து கொண்டார். அந்த சில கணங்கள் பூமி அப்படியே நின்றுவிட்டது. எவ்வுயிர்க்கும் மூச்சுக் காற்றுக்கூடக் கிடைக்கவில்லை. உலகைக் காப்பாற்ற தேவர்கள், சிவபெருமானை மயக்கம் தெளிந்து எழுமாறு மனமுருகி வேண்டினர். மாலை நேரத்தில் மெல்லக் கண் மலர்ந்தார்  ஆலமுண்ட நீலகண்டர். உலகம் மீண்டும் உயிர் கொண்டது. மகிழ்ச்சியில் மூழ்கிய தேவர்களின் விருப்பத்திற்கேற்ப பிரதோஷ காலத்தில் இறைவன் நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே ஆடிய நடனமே சந்தியா தாண்டவம் ஆகும் எனவே இத்தாண்டவம் பிரதோஷ தாண்டவமென்றும் அழைக்கப்படுகின்றது. உயிர்களைக் காக்க ஆடப்படும் தாண்டவம். மதுரையில் வெள்ளியம்பலத்தில் ஆடிய தாண்டவம் இச்சந்தியா தாண்டவமாகும். உமா தாண்டவம்: அன்னையும் அப்பனுமாக சேர்ந்து ஆடும் கோலம் உமா தாண்டவம் எனப்படுகிறது. இக்கோலத்தில் அபஸ்மார புருஷனை மிதித்தபடி ஆடுகிறார் எம்பிரான். ஒரு கரம் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டுகிறது. காத்தல் தொழிலை இத்தாண்டவம் குறிப்பதாகக் கருதுகிறார்கள். உலகம் நிலை பெறவும் இந்நடனமே காரணம் என்று சொல்வோரும் உண்டு. இறையனாரை இந்தக் கோலத்தில் மனக்கண்ணால் கண்டு தரிசித்தாலே தம்பதிகளுக்குள் ஒற்றுமை நிலவும். ஊர்த்துவ தாண்டவம்: தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என கோபம் கொண்டு அன்னை உமை, காளியாக மாறினாள். சிவனை விட்டு விலகியதால் மேலும் உக்கிரம் கொண்டாள். அதனால் தில்லை வாழ் மக்கள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரும் பாதிப்பு அடைந்தனர். காளியை மீண்டும் சிவகாமியாக மாற்ற எண்ணியும் அதனால் உலகுக்கு அருள் செய்யவும் திருவுள்ளம் கொண்டார் ஆடல் வல்லான். அதனால் காளியோடு போட்டியிட்டு ஆடினார். சிவபெருமானின்  நடனத்திற்கு எவ்விதத்திலும் சளைக்காமல் காளி ஆடினாள். இவ்வாறு இருவரும் இவ்வாறு ஆடிக்கொண்டிருந்த போது   சிவபெருமான் ஒரு நொடியில் தனது காதணியை கீழே விழச் செய்து, அதனைத் தன் திருவடிகளால் தூக்கி மீண்டும் தனது காதில் அணிந்து காலை வானத்தை நோக்கி உயர்த்திய வண்ணம் ஆடினார். பெண் என்பதால் காலை அவ்வாறு உயர்த்தமுடியாமல் எம்பெருமானின் உயர்த்திய காலை பார்த்தவண்ணம் நின்றாள் காளி. அக்கோலமே ஊர்த்துவ தாண்டவம் எனப்படுகிறது. அதனால் சிவபெருமானுக்கு ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. காடும் கடலும் மலையும் மண்ணும் விண்ணும் சுழல அனல் கையேந்தி ஆடும் அரவப்புயங்கன் எங்கள் அப்பன் இடம் திருஆலங்காடே   என்று காரைக்காலம்மையார் பாடிய திருவாலங்காட்டில் அருளும் தாண்டவக்கோலமே ஊர்த்துவத்தாண்டவக் கோலம் ஆகும். இத்தாண்டவம் ஐந்தொழிலில் அருளலைக் குறிக்கின்றது. காளியுடன் ஆடியதால் காளி தாண்டவம் எனப்படுகின்றது. மிக வேகமாகச் சுழன்று ஆடுவதாகையால் சண்ட தாண்டவம் என்றும் அழைக்கப்படுகின்றது.   கௌரி தாண்டவம்: இறைவன் தேவையில்லை கருமமே அனைத்து பலன்களையும் தரவல்லது என்று தாருகாவனத்து இருடிகள் கர்வம் கொண்டனர். மேலும் தங்களது மனைவிகளின் கற்பின் மேலும் அவர்களுக்கு மிகுந்த கர்வம் இருந்தது. எனவே அவர்களின் கர்வத்தை அடக்க இறைவர் பிட்சாடன மூர்த்தியாய் வந்தார். மகா விஷ்ணுவும்  மோகினி அவதாரம் எடுத்து உடன் வந்தார். அப்போது இருவரும் இணைந்து ஆடிய நடனம் இது. எப்போதும் தன்னுடனே இணைந்து ஆடும் இறைவனாரின் மற்றொரு நடனத்தை தான் மட்டும் காண ஆசை கொண்டாள் கௌரிதேவி. அவளுக்காக திருக்கயிலாயத்தில் இறைவன் ஆடிக்காட்டியதே கௌரி தாண்டவம் எனப்படுகிறது. இத்தாண்டவம் ஆடும்போது வலப்பக்கம் நந்தியும் இடப்பக்கம் கௌரியும் இருப்பர். ஆனந்த தாண்டவத்தில் இல்லாத கோலமாக ஒரு கையில் நாகம் காணப்படும். அதுவே கௌரி தாண்டவம். கஜ சம்ஹார தாண்டவம்:.   தாருகா வனத்து முனிவர்களின் கர்வத்தை ஒரு யானையாக மாற்றினார் சிவ பெருமான். அந்த யானை மதங்கொண்டு எம்பெருமானை நோக்கி ஓடி வந்தது. அந்த ஆணவ யானையை அழித்து அதன் தோலை தனக்கு ஆடையாக அணிந்து,  அதன் தலை மேல் ஆடி  முனிவர்களுக்கு நல்லருள் தந்த தாண்டவமே கஜ சம்ஹார தாண்டவம் எனப்படுகிறது. ஆனந்த தாண்டவம்: பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இறைவன்  தில்லையில் ஆடிய திருநடனமே ஆனந்த தாண்டவம். ஐந்தொழில்கள், ஐம்பூதங்கள், ஒரு நாளின் ஐந்து பொழுதுகள் ஆகியவற்றைக் குறிக்கின்றது, இந்நடனம். இதனைக் களி நடனம் என்றும் கூறுவார்கள். நடராஜனாக தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் எம்பெருமானுக்கு  தில்லை கூத்தர், அம்பலக்கூத்தர் என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.   குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.   பொருள் : வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும் என்று அப்பர் பெருமான் பாடிய மிகச் சிறந்த தாண்டவமாக ஆனந்த தாண்டவம் சொல்லப்படுகிறது. இந்நடனத்தை மூலமாகக் கொண்டே பதஞ்சலி முனிவர் யோக சாத்திரத்தை வடிவமைத்தார் எனவும், பரத முனிவர் பரத சாத்திரத்தை அமைத்தார் எனவும் சம்ஹிதைகள் கூறுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமாக ஆனந்த தாண்டவம் அறியப்படுகிறது. ஆனந்த தாண்டவம் பிரபஞ்ச இயக்க நடனம் என்று போற்றப்படுகிறது. இத்தோற்றத்தில் இறைவனை தரிசிக்க வாழ்வில் இன்பம் நிலைக்கும். ஏழு  தாண்டவங்களையும் ஆடி, மக்களுக்கு அருள் செய்து ஆட்கொள்ளும் இறைவனது திருவடியைப் பணிவோம். இத்தாண்டவங்களால்   சப்த ஸ்வரங்கள் தோன்றின   என்று கூறுகிறார்கள். ஆடத் தொடங்கும் போது ஆரோஹணமும் ஆடி, முடிக்கையில் அவரோஹணமும் ஆக, ஸரிகமபதநி என்று ஏழு ஸ்வரங்களும் நமக்குக் கிடைத்தன. இவையெல்லாம் நின்றாடும் நடனங்கள்.  ஐயன் இருந்தும் ஆடுகின்றார்,   இவற்றையே இவர் சப்த விடங்கத்தலங்களில் அமர்ந்தும்  ஆடி அருளுகின்றார், அதில் முதன்மையானது அஜபா நடனம். அஜபா நடனம்: இது நாதாந்த நடனம், புயங்க நடனம் என்றும் வழங்கப்படுகின்றது.  மேலும் கீழுமாக ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும், அடியவர்கள் மந்திரத்தை மானசீகமாக ஏற்கும் நிலையில் உள்ளம் மகிழ்ந்து ஆடுவது அஜபா நடனமாகும். அதாவது உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய் வரும் உன்னத இயக்கத்தை உணர்த்துவது அஜபா நடனம். திருமால் பிள்ளைப்பேறு பெற பெருமானை தன் மார்பில் வைத்து பூசித்த போது அவரது மூச்சுக்காற்றிலே பெருமானை நிலை நிறுத்தி இதயத்தில் வைத்து மானசீக பூசை செய்ய பெருமான் அவரது இதயத்தில் ஆனந்தத்தாண்டவம் ஆடினார். அப்போது மகாவிஷ்ணுவின் மூச்சுக்காற்றின் தாளத்திற்கேற்ப சிவபெருமான் ஆடிய நடனமே அஜபா நடனமாகும். உள்ளே செல்லும் காற்று ’ஹம்’ என்ற ஒலியின் மூலம் ’அஹம்’ (நான்) என்று ஜீவாத்மாவை குறிக்கின்றது. வெளியேறும் காற்று ’ஸ’ (அது) என்று பரமாத்மாவை குறிக்கின்றது.  இவ்வாறாக   நான், அது, அஹம் ஸ:  அல்லது ஹம்ஸ: என்ற அத்வைத தத்துவமான ஹம்சவித்தையை குறிப்பதால் இந்நடனத்திற்கு ஹம்ச நடனம் என்றும் பெயர். அஜபா என்பதற்கு ஜெபிக்கப்படாதது என்று பொருள். ஹம்ஸம் என்பது ஒப்பற்ற மந்திரம் என்றும் கூறுவர். உடலில் உள்ள இடகலை, பிங்கலை நாடிகளின் வழியாக இயங்கும் மூச்சுக்காற்றின் இயக்கத்துடன் நிகழ்வது அஜபா மந்திரம்.   அஜம் என்றால் மலைப்பாம்பு. பாம்பு மூச்சு விடுகின்ற போது மேலே உயர்ந்து வீங்கிக் காணப்படும். பாம்பில் திருமால் யோக நித்திரை கொள்வதால், மஹா விஷ்ணுவின் மார்பில்  தியாகேசன் விற்றிருப்பதால் முன்னே, பின்னே, ஓடி- ஆடி குதித்து பக்கத்தில் சாய்ந்து ஆடுகின்ற ஆட்டம் அஜபா நடனம் ஆகும். ஜபம் என்பது குருவால் உபசரிக்கப்பட்ட ஒரு மந்திரத்தை நாவால் உச்சரிப்பது. அஜபம் என்றால் அவ்வாறு உச்சரிக்கப்படாதது. உச்சரிக்கப்படாததை பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்றால், நாமாக நனவுடன் உச்சரிக்கவில்லை என்றாலும், நம்மை அறியாமல் நாம் ஒவ்வொருவரும் உண்மையில் உச்சரித்துக்கொண்டே இருக்கின்றோம். ஆம் ஒரு வினாடி கூட தவறாமல் 24 மணி நேரமும், ஒரு நாளைக்கு 21600 தடவைகள் உச்சரிக்கின்றோம். நாம் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் போது ’நானே அவன்” ’அவனே நான்’ என்று பொருள் படும் ஹம்ஸ ஸோஹம் என்னும் மகா சிரேஷ்டமான , ஹம்ஸ காயத்ரி மந்திரத்தொனியை எழுப்புகின்றோம் அதுவே அஜபை என்பது. அஜபா நடனம் பிராணாயாமப் பயிற்சியின் விளக்கமேயாகும். அஜபா நடனப் பதிகம் நீடுசந்த் ரோதயம் போல்வதன மசையவருள் நிறைகமல நயனமசைய நின்றநதி மதியசைய வொன்றுசடை முடியசைய நிகழ்மந்த காசமசையத் தோடலர் செவந்தியந் தோடசைய மார்பில் தொடுத்தசெங் குவளையசையத் துங்கமழு மானசைய வங்கதஞ் சதகோடி சூரியர்கள் போலசையமால் தேடுமர வக்கிண் கிணிப்பாத மசையவொரு செம்பொன்மலை வல்லியசையச் செய்யகும ரேசர்நடு நின்றசைய நவரத்ன சிம்மா சனத்திருந்தே ஆடுமுன் னசபைநட மடியனென் றுங்காண அருளுவாய் தியாகேசனே அசைவில்கம லேசனே அசபா நடேசனே ஆனந்த உல்லாசனே.                                                                                                                          (ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்)  அஜபா நடனம் போலவே மற்ற சப்த விடங்கத்தலங்களும் இருந்தாடும் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்களே.   ஆரூரில் தியாகேசப்பெருமான் ஏன் ஆடுகின்றார் என்பதற்கு இகழ்வது போல காளமேகப்புலவர் பாடியப் பாடல் இது ஆடாரோ பின்னையவ ரன்பரெலாம் பார்த்திருக்க நீடாரூர் வீதியிலே நின்றுதான் – தோடாரும் மெய்க்கே பரிமளங்கள் வீசுந் தியாகேசர் கைக்கே பணமிருந்தாக் கால் கையில் பணம் (படமெடுத்து ஆடும் பாம்பு) இருந்தால், தியாகேசர் மாலை சூட்டிய உடம்பெல்லாம் மணக்கும் வாசனைப் பொருள்களைப் பூசிக்கொண்டு, அன்பர் எல்லாரும் பார்த்திருக்கும்படி, திருவாரூர் வீதியிலே ஆடாரோ, பின்னை.  பணம் என்பதை  பாம்பின் படத்திற்கும்  செல்வத்திற்கும் சிலேடையாக பாடுகின்றார்.  இது வரை இறைவன் ஆடும் நடனங்களைக் குறித்து பார்த்தோம்.  வாருங்கள் அன்பர்களே ஐயன் இத்தலங்களில் ஆடும் நடனம் எவை, அவை உணர்த்தும் தத்துவம் என்ன என்பதைக் காணலாம்.                       9. சிவயோக சாதனையே சப்த விடங்கத்தலங்கள் []   இந்திரன் தியாகரை வழிபடும் சிற்பம் – திருநாகை ஆண்கள் சுழன்று சுழன்று ஆடுவது தாண்டவம் எனவும், பெண்கள் நளினமாக   ஆடுவது  லாஸ்யம் என்றும் அழைக்கப்படுகின்றது. சப்த விடங்கத் தலங்களில் இருந்தாடும் அழகராக ஒவ்வொரு நடனத்துடன் அருள் பாலிக்கின்றார். மேலும் இலிங்க ரூபமாக விடங்கராகவும், எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.  ஐயன் இருந்தாடும் நடனங்கள் ஏழும் சிவயோக சாதனையைக் குறிக்கின்றன. திருவாரூர்      வீதி விடங்கர்     அஜபா நடனம்         மௌன நடனம் திருநாகை      சுந்தர விடங்கர்    தரங்க நடனம்        கடல் அலையோசை நடனம் திருநள்ளாறு     நக விடங்கர்      உன்மத்த நடனம்       பித்த(ஆவேச) நடனம் திருமறைக்காடு  புவனி விடங்கர்    ஹம்சபாத நடனம்     அன்னநடை நடனம் திருக்காரவாசல்  ஆதி விடங்கர்     குக்குட நடனம்        கோழி நடனம் திருவாய்மூர்     நீல விடங்கர்      கமல நடனம்          தாமரை நடனம் திருக்கோளிலி    அவனி விடங்கர்   பிரம்ர நடனம்         வண்டு நடனம் தியாகராஜப் பெருமான் கொலுவீற்றிருந்து அருள்பாலிக்கும் திருவாரூர் உள்ளிட்ட சப்த விடங்கத்தலங்களுக்கு  சிவயோக சாதனையாளர்களால் இத்தலங்களுக்குச் சிவயோக முறையில் சிறப்பான விளக்கம் தரப்படுகின்றது. அதன்படி இவை மனித உடலில் உள்ள ஆறு ஆதாரங்களுடன் உச்சியில் உள்ள கபால வாயிலையும் சேர்த்த ஏழு தளங்களைக் குறிக்கும் குறியீடு என்பர். அண்டத்திலுள்ளது தான் பிண்டத்திலுள்ளது .  மேலும், சிவயோக சாதனையால் எழும் குண்டலினி சக்தியானது ஒரு ஆதாரத்திலிருந்து மறு ஆதாரத்திற்குச் செல்லும் நிலையையே இத்தலங்களின் தியாகராஜ நடனங்கள் குறிக்கின்றன என்றும் சிவயோகத் தியானத்தில் தோன்றும் ஒளிக்காட்சியையே விடங்க லிங்கங்கள் உணர்த்துகின்றன என்றும் கூறப்படுகின்றது. பல்வேறு சமயங்கள் பலவகையான யோக சாதனைகளைப் பற்றிப் பேசுவதால் சைவசமயம் பேசும் யோக சாதனை சிறப்புப் பெயரால் சிவயோக சாதனை எனப்பட்டது. இந்த யோகவித்தையைப் பயில்பவர்கள் சிவபெருமானை யோகேஸ்வரரென்றும், 'பரமயோகி' என்றும் அழைத்தனர். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவருமே தேவாரத்துள் பல இடங்களில் சிவபெருமானைப் 'பரமயோகி' என்று குறித்துள்ளதைக் காணலாம். திருவாரூரில் சிவபெருமான் தியாகராஜ கோலத்தில் இராஜயோகியாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார் என்று யோக மார்க்கத்தினர் கூறுகின்றனர். யோக சாதனையின் முதல்படி, உடலில் கருவாய்க்கும், எருவாய்க்கும் நடுவில் உள்ள மூலாதாரம் என்னுமிடத்தில் பாம்பு வடிவில் சுருண்டு உறங்கிய நிலையில் இருக்கும் மூலாதார சக்தியை விழிப்புறச் செய்து அதனை மேல் நோக்கி எழுப்புவதாகும். இதனை எழுப்புவதற்குக் குருவின் அருளுடன் பிராணாயாமம் என்னும்  மூச்சுக் காற்றுப் பயிற்சியும் தேவையாகும். யோக சாதனையால் எழுந்த அச்சக்தியானது, (பின்னர் மூலாதாரத்திற்கு நான்கு விரற்கிடை) மேலுள்ள சுவாதிஷ்டானம், தொப்புளுக்கு நேரேயுள்ள மணிபூரகம், இருதயத்திலுள்ள அநாகதம், கழுத்திலுள்ள விசுத்தி, புருவமத்தியிலுள்ள ஆக்ஞா ஆகிய ஆறு சக்கரங்களில்  படிப்படியாக மேலேறிச் சஞ்சரித்துப் பின்னர் கபாலவாயில் என்னும் பிரமரந்திரம் வழியாக வெளிப்பட்டுத் தலைக்குமேல் உள்ள ஸஹஸ்ராத்தை அடைந்து இறையின்பத்தை அனுபவிக்கின்றது. இப்படி மனித உடலில் உள்ளதாகச் சொல்லப்பட்ட ஆறு ஆதாரங்களும் கபாலவாயில் என்னும் ஏழாவது தலமுமே, பூவுலகில் சப்தவிடங்கத் தலங்களாக உள்ளன என்று கூறப்படுகின்றது. இனி இவை எவ்வாறு சப்தவிடங்கத் தலங்களோடு ஒன்றுகின்றன என்று பெரியோர்கள் கூறியுள்ளதைக் காணலாம். இவற்றுள் முதன்மைத்தலமான திருவாரூர் என்பது மூலாதாரத் தலமாகும். மூலாதாரத்தில் உயிர்ச்சக்தியாகிய குண்டலினி பாம்பு வடிவில்  கிடக்கின்றது என்பதைக் குறிக்கவே அங்கு புற்றின் வடிவமாக  பெருமான் வீற்றிருப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது. மூலாதார சக்கரத்தின் அதிதேவதை விநாயகர் ஆவார். இவர் மூலாதார கணபதி என்ற பெயரில் திருவாரூரில் தூணொன்றில் எழுந்தருளியுள்ளார். இரண்டாவதான சுவாதிஷ்டானம் என்ற ஆதாரத்தைக் குறிக்கும் தலம் திருக்காறாயில் ஆகும். இந்த இரண்டாவதான ஆதாரத்தைக் குண்டலினி சக்தி அடையும்போது யோக சாதனைகளைச் சுற்றிலும், தெய்வீக மணம் கமழும் அந்தத் தெய்வீக வாசனையில் குறியீடாகவே இத்தலம் கருஞ்சந்தனமாகிய காறாயில் வனம் (கார்+அகில்) என்று அழைக்கப்படுகின்றது. அதனையடுத்து மூன்றாவதான மணிபூரகம் என்னும் ஆதாரம் நாகப்பட்டினம் என்று குறிக்கப்படுகின்றது. கட்டுக்கடங்காத சக்தியுடன் எழுந்த குண்டலினி சக்தி நிதானத்துடன் பாம்பு போல் வட்டமிட்டுச் சஞ்சரிக்கும் இடமாதலின் பாம்பையும், அதன் மணியையும் குறிக்கும் வகையில் இது நாகப்பட்டினம் எனப்பட்டது. நான்காவது ஆதாரமான அநாகதத்தைக் குறிக்கும் தலம் திருநள்ளாறு ஆகும். ஏழு ஆதாரத்தலங்களில் இது நடுவில் இருப்பதால் (நள்+பாதி). ஆறு வழி பாதிவழியில் இருப்பது என்ற பொருள்பட நள்ளாறு எனப்பட்டது. ஐந்தாவதாக கண்டத்தில் விளங்கும் விசுத்தி என்பது திருக்கோளிலி என்ற தலமாகக் குறிக்கப்பட்டுள்ளது. குண்டலினி சக்தி அநாகதத்திலிருந்து விசுத்திக்குச் செல்லும் பாதை மிகவும் கடினமானதாகும். உரிய குருவின்றி இச்சாதனையில் ஈடுபடுபவர்களுக்கு சாதனையில் கடும் மயக்கம் உண்டாகும். சமயத்தில் மரணமும் நேரும். இவ்விடத்தில் சாதகன் செல்வதை நெருப்பாலும் மயிர்ப்பாறும் மயிர்ப்பாலமும் என்று சித்தர்கள் பரிபாஷையில் கூறுவர். இதனைக் கடந்து விசுத்தியை அடைந்து விட்டால் குண்டலினி சக்தி வெற்றியடைந்து விட்டது என்றே கூறலாம். குண்டலினி சக்தியின் குற்றங்களை நீக்கி மேன்மையடைய வைப்பதால் இது கோளிலி எனப்பட்டது (கோள்+ இலி = குற்றமில்லாத இடம்) என்பர். ஆறாவது ஆதாரமான ஆக்ஞா என்பதே திருமறைக்காடு எனும் தலமாகக் குறிக்கப்பட்டுள்ளது. புருவமத்தியில் விளங்கும் ஆக்ஞா என்ற ஆதாரத்தில் சக்தியேறி நிற்கும் போது நெற்றிக்கண் என்னும் ஞானக்கண் திறக்கின்றது. இது திறந்துவிட்டால் உலகிலுள்ள அனைத்து வேதங்களையும்  சாதகன் ஓதாது உணர்ந்து விடுகின்றான். அதனால் இது வேதவனம் என்றும் மறைக்காடு என்றும் குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆறு ஆதாரங்களைக் கடந்த குண்டலினி சக்தி கபாலவாயில் வழியாக வெளிப்பட்டு தலைக்கு மேல் பன்னிரண்டு விரற்கிடை தூரத்திலுள்ள ஸஹஸ்ராரத்தை அடையும். ஏழாவதாக விளங்கும் கபாலவாயிலே திருவாய்மூர் என்ற தலமாகச் சொல்லப்பட்டுள்ளது.  திருவாகிய கடவுட்காட்சிக்கு வாயாக (வழியாக) இருக்கும் காரணத்தால் இது திருவாய்மூர் என்றழைக்கப்பட்டது. எட்டாவதாக விளங்குமிடமே சிதம்பரப் பெருவெளியாகிய ஸஹஸ்ராரமாகும். இதில் சிவபெருமான் ஓயாது ஆனந்த  நடனம் புரிகின்றார். அதனால்தான் குண்டலினியின் ஆதி இருப்பிடமான திருவாரூரைச் சிதம்பரத்திற்கு மூத்த முதல் திருத்தலம் என்று குறிக்கின்றனர். அதனாலேயே திருவாரூரில் மாலை வழிபாட்டைக் கண்டவர்கள் சிதம்பரத்தில் கலைகளை ஒடுக்கும் நிகழ்ச்சியான அர்த்தசாமத்தையும் காண வேண்டுமென்றும் கூறுகின்றனர். இதன் மூலம் சப்தவிடங்கத் தலங்களின் பெயர்கள் யோக நெறியில் சொல்லப்படும் ஆதாரங்களோடு பொருளால் ஒன்று பட்டு நிற்றலை அறிய முடிகின்றது. இனி தியாகராஜரின் நடனத்திற்கும், குண்டலினி சக்தி பயணம் செய்வதற்கும் உள்ள தொடர்பைக் காணலாம். குண்டலினி சக்தி மூலாதாரத்தில் விழித்தெழுந்து ஸஹஸ்ராரத்திற்குச் செல்லும் பாதையானது ராஜபாட்டை என்றும் யோகவழி என்றும் குலபதம் என்றும் பலவாறு அறிஞர்களால் குறிக்கப்படுகின்றது. இவ்வழியில் குண்டலினி சக்தி ஒரே சீராகச் செல்வதில்லை. முட்டி மோதி பலவகை சோதனைகளைக் கடந்தே வெற்றியை எட்டுகின்றது. இப்பயணத்தின் பல்வேறு நிலைகளே தியாகராஜரின் நடனங்களாகச் சொல்லப்பட்டுள்ளது என்பர் யோகியர்கள். மூலாதாரத்தில் விழிப்புற்ற கனல், சுவாதிட்டானத்தை அடைய மேற்கொள்ளும் நிலையே திருவாரூர் தியாகராஜரின் அஜபா நடனமாகச் சொல்லப்பட்டுள்ளது. முதலில் ஜெபிக்கப்படாத அஜபா மந்திர முயற்சியில் எழுந்த குண்டலினி கனலாகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. இதனால் சாதகனின் உடலில் வெப்பம் அதிகமாகிறது. இச்சக்தி கட்டுக் கடங்காமல் நிலை கொள்ளாமல் குதிக்கும் தீக்கொழுந்தினை ஒத்ததாக உள்ளது. 'அஜபா' என்னும் சொல், 'வாய்வழியால் உச்சரிக்கப்படாதது' என்ற பொருளுடையது. நாம் ஒவ்வோர் முறை மூச்சுவிடும் போதும் 'ஸோஹம்' என்னும் மந்திரத்தை மனத்தால் உறைத்து நின்று எண்ணுதலே அஜபா தியானமாகும். இம்முறையில் தியானிக்கையில் ஒரு நாளுக்கு 21,600 முறை இதயத்திலுள்ள சிறு இடைவெளியில் ஏற்படும் அசைவே ஞான நடனமாகும். இவ்வசைவே அஜபா நடனமாகும். இதனையே 'ஊன் நில் ஆவி உயிர்க்கும் பொழுதெல்லாம் - நான் நிலாவி இருப்பன் என் நாதனை' என நாவுக்கரசர் ஆரூர்ப் பதிகத்தில் விளக்கியுள்ளார். சிவயோக சாதனைப்படி நம் உடலில் குண்டலினி யோக மார்க்கத்தில்  பிரவேசிக்கும் போது முதலில் ஏகமுகமாக தியானம் கூட வேண்டும். அதற்கு ஆதாரமான மந்திரங்கள் சித்திக்க வேண்டும். முதல் தலமான  திருவாரூர்  ஸ்ரீகமலாம்பிகை  மந்திர பீடத்தில் குட்டிகாசனத்தில் அமர்ந்திருப்பாள்  ஸ்ரீகமலாம்பா உடனுறை ஸ்ரீதியாகராஜரை தியானித்தால் மனம் ஓரு முகப்பட்டு,  குண்டலினியானது மூலாதாரத்திலிருந்து அஜபையாக கிளம்பும். திருவாரூர் அஜபா நடனம். பாம்பு ஊர்வது போல்  பரமேஸ்வரனின் தாண்டவம் அஜபா தாண்டவம்.!  நமக்குள் நடப்பதை எம்பெருமான்  ஏற்று அருளுகிறார். சுவாதிஷ்டானத்திலிருந்து மணிபூரகம் செல்லும் கதியை உணர்த்துவது திருக்காரவாசல் தியாகரின் நடனமாகிய குக்குட நடனமாகும். இது துள்ளுதல் குறைந்து, போருக்குச் செல்லும் கோழியானது இடமும் வலமும் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துப் பார்த்து முன்னேறியும் சற்று நிதானித்தும் சுழன்றும் தாக்குவது போல் ஆடும் நடனமாதலின் குக்குட நடனம் எனப்பட்டது. குண்டலினி இப்போது   கோழி போல் தத்தி தத்தி நடக்கிறது,. ஊர்தலை விட நடை சற்று அதிகமாகி  கோழி போல் செல்கிறது  எச்சரிக்கையின்றி செயல்பட்டால் குண்டலினி சக்தி அவிந்து விடுவதுடன் மீண்டும் அதனை எழுப்பக் கடும் முயற்சி தேவை என்பதை இது உணர்த்துகின்றது. கோழியும் அக்னியும் மற்றொரு குறியீடு என்பது குறிப்பிடத்தக்கதாகும். மணிபூரகத்திலிருந்து - அநாகத்தை அடையும் மனநிலையைக் குறிப்பது நாகைத் தியாகராஜரின் வீசி நடனம் என்கின்ற பாராவார தரங்க  நடனமாகும். பாராவாரம் என்றால் கடல். தரங்கம் என்றால் அலைகள். முதலில் மிக்க ஆவலுடன் ஆர்ப்பரித்து கட்டுக்கடங்காது பயணம்  செய்த குண்டலினியின் நிலை பின்னர் சற்று அடங்கிச் செயல்பட்டது.  இங்கு இன்னும் அடங்கி கடல் அலைகள் கழன்று கழன்று விழுவது போல அமைந்திருக்கின்றது. இதனால் பாராவார தரங்க நடனம் எனப்பட்டது. அதாவது முதலில் வேகமாக போவதும் திரும்புகையில் நிதானமாகவும் குண்டலினி முன்னேறுதல் வேகமடைகிறது!   இதனையடுத்ததாகிய அநாகதத்திலிருந்து விசுக்திக்குச் செல்லும் வழி கடுமையானதென்று முன்னமேயே கூறப்பட்டது. சாதகன் இதில் பயணம் செய்யும்போது இது அவனைப் பைத்தியக்காரனைப் போல ஆக்குகின்றது.  அது தீர சாதகர்கள் பாகற்காயும்  தூதுவளைக்கீரையும் உண்ணுகின்றனர்.  இந்நிலை உன்மத்த   நிலையாதலின் இந்நடனம் உன்மத்த நடனம் எனப்பட்டது.  திருநள்ளாற்று பிரான் உன்மத்தம் பிடித்தவர் போலாடுகிறார். அதில் ஓர்  ஆக்ரோஷம் இருக்கும்.  கத்தி வீசுதல் போல் வீச்சமிருக்கும்  இதுவே அநாகதத்தில் வீற்றிருக்கும் நள்ளாற்று நம்பனின் உன்மத்த நடனமாக விளங்குகின்றது. அடுத்ததாக விசுத்தியிலிருந்து ஆக்ஞா என்ற ஆதாரத்திற்குச் செல்லும் வழி சற்று எளியதென்றாலும் அதிலும் பல தடைகளைக் கடக்க வேண்டியதாகிறது. நம் யோக சாதனையில் அதி  முக்கியமான இடம் ஆக்கினை திறத்தல்! லேசில் திறக்காது. நாம் வண்டின் கால்களான  காமம் முதலான   குற்றங்களை  அடக்கிவிட்டால், தேனெடுக்கலாம். இப்பயணம் மேலும் கீழும் பக்கவாட்டிலும், வட்டமிட்டும், சுழன்றும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் இது பூவினைச் சுற்றி எழுந்தும் தாழ்ந்தும் வட்டமிட்டும் பறக்கின்ற வண்டின் ஆட்டத்திற்கு இணையாகச் சொல்லப்பட்டது. இப்பிரமர நடனம் என்ற வண்டு நடனமே கோளிலிப் பெருமானுக்கு நடனமாகச் சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்ஞா சக்கரத்தில் நிலைபெற்று எல்லாவற்றையும் உணர்ந்து கொண்ட சக்தி அன்னம் நடப்பதுபோல் அடிமேல் அடிவைத்து அசைந்து அசைந்து சென்று கபாலவாயிலை அடைகின்றது. எனவே, இது ஹம்சபாத நடனம் எனப்பட்டது.  அன்னம்   போல் பாலையும்  நீரையும் பிரிப்பது போல் நாம் யார் எங்கிருந்து வந்தோம்? எங்கு போக வேண்டுமென்பது, தெள்ளிய பால் போல புரியும் பரமசிவம் யார்! வேறு யாருமல்ல நாம் தான். எப்போது எப்படி பரமசிவமாகலாம்? சிவயோக சாதனைப்படி ஐந்தெழுத்து  ஓதி, ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெருஞ்ஜோதியை  தியானித்து, பிராணாயமத்தால் அருட்சக்தியான குண்டலினியை எழுப்பி, மேற்சொன்ன  சாதனைகளை செய்து சித்தி பெற்றால் பரமஹம்ஸமெனும் பரமசிவம் நாம்தாம் என உணரமுடியும்!  இப்பிரபஞ்சம் இறுதியில் வேதப்பொருளான பிரணவமெனப்படும் ஓங்காரநாதத்தில் அடங்கும்! அத்தனை ஜீவராசிகளும் ஒலித்துகள்களாகத்தான்  இணைய வேண்டும். அந்த ஓங்காரநாதத்தில் சஞ்சரிக்கும் ஹம்ஸமே சிவசக்தியாகும்.  அதை உணர்த்தும் பொருட்டு வேதநாயகனான சிவனார்  வேதாரண்யத்தில்  ஹம்ஸ நடனமாடுகிறார்.  இதுவே திருமறைக்காட்டுத் தியாகராஜரின் நடனமாகச் சொல்லப்பட்டுள்ளது.   இறுதியாகக் கபாலவாயிலைத் திறந்து கொண்டு மேலே செல்லும் சக்தி தாமரை மலர் குளத்தின் நீரில் மெல்லிய நீரலைகளுக்கு ஏற்ப ஆடியாடி அசைவது போல வருத்தமின்றி எளிதாகச் செல்லுகின்றது. ஆக்ஞை திறத்தலையும் அதற்கு முன் நமக்குள் நிகழ்தலையும் காட்டுதலே அம்ருத மதனம் எனப்படும்.  தேவாசுரர்கள் இணைந்து அமிர்தம் கடையும் போது  முதலில் வந்தது ஆலகால விடம் தானே! அந்த ஆலகால விடத்தை எம்பெருமான் ஏற்க! அது  தாக்கமலிருக்கும் பொருட்டு, தேவியான கண்டத்திலேயே  நிறுத்தினாள். காம்யார்த்த பலன்களாக அஷ்டசித்திகளின் வடிவம் தான்  காமதேனு,  கற்பகவிருட்சம், உச்சைச்வரம் , ஐராவதம்,  சிந்தாமணி, சந்திரன், போன்றவைகள். முத்தாய்ப்பாக உண்மையான செல்வமான மகாலட்சுமி வருகிறாள். எப்படி! கமலமாக!    கமலத்திலிருந்து கமலமாக, கையில் கமலமேந்தி, கமலம்  போல் அசைந்து அசைந்து வருகிறாள். இந்நடனத்தினை திருவாய்மூரில் எம்பெருமான் ஆடுகின்றார். கமலநடனம்  அழகாக நடைபெறுகிறது. இடையில்     அட்டமாசித்தி வேண்டுமென அதிலிறங்கி விட்டால் சிவத்தைக்  காண இயலாது!   அதையும்  அடக்கி அதையே சாதனமாக்கி விட்டால் மட்டுமே  சிவத்தை நெருங்க முடியும்!  கமலமாக அதாவது தாமரைபோல் அசைந்து நளினமாக, தண்ணீர்க்குள்ளிருந்தாலும் கொஞ்சமும் தன்னிடம் தண்ணீரின் இணைப்பில்லாமல், மிளிர்கிறது நறுமணத்துடன். அது போலவே நாமும் சம்சாரத்திலேயே இருந்தாலும் அதில் ஒட்டாமலிருக்க வேண்டுமென புரிகிறதல்லவா! இதனால் இது கமல நடனமாகத் திருவாய்மூர் விடங்கர்க்குச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறாக குண்டலினி சக்தி பயணம் மேற்கொள்ளும் பலவகையான நிலைகளைக் குறிப்பதே தியாகராஜரின் நடனங்கள் என்று கூறுகின்றனர் பெரியோர்கள். ஒளிக்காட்சியும் விடங்கலிங்கமும்:  இதனையடுத்து சாதகனுக்கு யோக சாதனையின் போது தோன்றும் ஒலி நிலைகளை பற்றி இவ்வாறு கூறியுள்ளனர்.  யோகப் பயிற்சியின் போது சாதகர்களின் உள்ளுக்குள்ளேயே ஒளி தோன்றுகின்றது. இச்சாதனை வளர வளர ஒளியின் வண்ணம் மாறி மாறி அமைகின்றது. இதனைக்குறிக்கும் வகையில் தியாகராஜர் சந்நிதியில் வண்ண லிங்கங்கள்  அமைக்கப்பட்டுள்ளன என்பர்.  (இவற்றில் பெரும்பாலானவை தற்போது  இடம் மாறிவிட்டன, களவாடப்பட்டன என்றும் அவற்றிற்குப் பதிலாக ஸ்படிகம் அல்லது மரகத லிங்கங்கள் வைக்கப்பட்டன எனவும் கூறுவர்). யோக சாதகனின் உடலில் குண்டலினி எழுந்ததும்  அவன் தனக்குள்ளே அதிக சூட்டையும் செம்மணியின் ஒளி பரவுவதையும் உணர்கின்றான். அதுவே 'மாணிக்கத்திரள்' எனப்பட்டது. இதனையொட்டியே திருவாரூரில் வீற்றிருக்கும் பெருமான் மாணிக்கத் தியாகர் என்று அழைக்கப்படுகின்றார். இதனைக் கடந்து சுவாதிட்டானத்தை அடையும் போது சாதகன் இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) வண்ணமான காட்சியைக் காண்கின்றான். அதனைத் தொடர்ந்து மணிபூரகத்தினை அடையும்போது பொன்நிறமான மஞ்சள் ஒளிவெள்ளத்தைக் காண்கிறான். இதனையொட்டியே செம்மஞ்சள் நிறமான கோமேதலிங்கம் நாகப்பட்டினத்தில் வைத்து வழிபடப்பட்டு வருகின்றது. இதனையடுத்த அநாகத்தினை அடையும்போது பச்சை ஒளி தோன்றுகின்றது. இதுவே பச்சைக்கல்லால் அமைந்த திருநள்ளாற்று மரகதவிடங்கராகப் போற்றப்படுகின்றது. இதனையடுத்து அவன் விசுத்தித் தலத்தில் கருநீல நிறத்தைக் காண்கிறான். அதற்கு மேலே புருவமத்தியில் நீல நிறம் பிரகாசிக்கின்றது. இந்நீலநிறம்  அறிவுக்கண்ணாக வெளிப்படும். ஆதலின் இது நீலலோகிதம் எனப்பட்டது. அதனையடுத்த கபாலவாயிலில் வெளிரிய நீல நிறம் தோன்றுகின்றது. இதனைக் குறிக்கவே ஏழாவது தலமான திருவாய்மூரில் வீற்றிருக்கும் தியாகர் நீல விடங்கர் என்று அழைக்கப்படுகின்றார். இங்கு நீலக்கல் லிங்கம் வழிபாட்டில் உள்ளது. இங்கு சொல்லப்பட்டவை ஏழு நிறங்கள் என்றாலும் இதனுள் பின்னால் சொல்லப்பட்ட கருநீலம், நீலம், வெளிர்நீலம் ஆகிய மூன்றுமே நீல நிறத்தின் சாயலேயாகும். எனவே சாதகன் நீலநிற ஒளியைத் தன்னுள் காண்பதே சாதனையின் வெற்றியாகக் கொள்ளப்பட்டது. இவ்வெற்றியை நினைவு கூறவே திருவாரூர் தியாகராஜரின் வலப்பக்கம் நீலநிறப்பட்டில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்பர் பெரியோர்கள்.  மேலும் தியாகராஜருக்கு நீலநிறங்கொண்ட கழுநீர்ப் பூக்களால் (நீலோத்பலம்) அர்ச்சனை செய்யப்படுகின்றது. இவ்வாறு பலவகையிலும் சிவயோக நெறியின் குறியீடாகவே தியாகராஜ வழிபாடு விளங்குவதை யோக அறிஞர்கள் குறித்துள்ளனர். வாருங்கள் இனி எம்பெருமானின் இந்நடனங்கள் எவ்வாறு இயற்கையுடன் இணைந்துள்ளது என்பதைக் காணலாம்.             10. சப்த விடங்க நடனங்களின் தாத்பர்யம் []   இறைமையும் இயற்கையும் வேறு வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ஒன்றோடு ஒன்றாகவும், ஒன்றுக்குள் ஒன்றாகவும் இருப்பவை. இறைமை என்பது இயற்கையின் தாய். இயற்கை என்பது இறைவனின் தன்மைகளுள் ஒன்று.  இவ்வேழு திருத்தலங்களிலும், இறைவன், நிகழ்த்தும் ஏழு விதமான நடனங்களும் இயற்கையோடு இணைந்து தொடர்பு கொண்டிருப்பது இவற்றின்  தனிச்சிறப்பு,  ஒவ்வொரு  நடனமும் நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகின்றது என்று பெரியோர்கள் கூறுவர்.  சப்த விடங்கத்தலங்களில் இரண்டு கடற்கரையோரம் அமைந்துள்ளன அவை திருநாகைக்காரோணம் மற்றும் திருமறைக்காடு ஆகும், ஒன்று ஆரண்யத்தில் அமைந்த தலம், தர்ப்பாரண்யமான திருநள்ளாற்றுத்தலம் அது மற்ற நான்கு தலங்களும் மருத நிலத்தில் அமைந்துள்ளன. சப்த விடங்கத்தின் முதல் தலம் இம்மண்ணில் பிறந்தாலே முக்தி தரும் திருவாரூர். இத்தலத்தில் ஈசன் வீதி விடங்கராக   அஜபா நடனம் ஆடுகின்றார். இந்நடனத்தின் சிறப்பு, மனித உடலில் உள்ள அனைத்து சக்கரங்களிலும் மூச்சுக்காற்று சென்று, இயங்கி அசைவதை உணர்த்துகின்றது. அடியார்களின் உள்ளத்தில் தியான காலத்தில் ஆடும் நடனம்.  இரண்டாவது தலமான திருக்காறாயில், ஆதி விடங்கர் ஆடிய குக்குட நடனம். குக்குடம் என்றால் கோழி. தான் படைத்த உயிர்களை, இறைவன் தனது அருட்கரங்களால் காக்க ஆடிய நடனம் குக்குட நடனம். மூன்றாவதாக  திருநாகைக்காரோணம் கடற்பகுதி எனவே இத்தலத்தில் சுந்தரவிடங்கராக தரங்க  நடனத்தில் கடல் அலைகள்  ஆடுவது போல  ஆடுகின்றார்.     நான்காவதாக திருநள்ளாறு தலத்தில் நக விடங்கராக உன்மத்த நடனம்  ஆடுகின்றார். இறைவனை அடைந்தவருக்கு குறைவில்லா ஆனந்தம் என்றும் உண்டு என்பதை  இந்நடனம்  உணர்த்துகின்றது.  ஐந்தாவது தலமான திருக்கோளிலியில் பிரமர நடனத்தை அவனி விடங்கர் ஆடும் அழகே அலாதி. கோள் என்றால் கிரகம். கோளிலி என்றால் கிரகம் இல்லாதிருப்பது.  ஒன்பது கோள்களும் செயலற்று, திருக்கோளிலியில் ஆடிய சிறப்பு. ஆன்மாக்கள், ஈசனை அடைய, கடினமாக உழைத்து, பேறு அடைவதன் அமைதியை காட்டும் நடனம்  ஆறாவது திருமறைக்காடு எனப்படும், வேதாரண்யம். இதில் புவனி விடங்கராக ஈசன்  ஆடிய ஹம்ஸபாத நடனத்தின்  சிறப்பு. பாலில் கலந்த நீரை பிரித்தெடுத்து அருந்தும் அன்னம். அதுபோல் உயிர்கள், நன்மை, தீமை புரிந்து, அறிந்து, உணர்ந்து வாழ வேண்டும் என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. ஏழாவதாக, திருவாய்மூர், கமல நடனம். நீலவிடங்கராக ஈசன் ஆடியதை, மருத நிலத்தில் தாமரை மலர்கள் நிறைந்திருக்கும். அத்தாமரை மலரைப் போல் உலகப் பற்றுக்களில் மூழ்கி விடாமல் நாம் மேலெழுந்து   இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்று சொல்லும் நடனம் இத்தலத்தின் கமல நடனம். இதுவரை சப்தவிடங்கதலங்களில் ஐயன் ஆடும் நடனத்தின் தாத்பர்யம் என்னவென்றும் அவை   இயற்கையோடு இணைந்துள்ளன என்று கண்டோம் வாருங்கள் இனி ஒவ்வொரு தலமாக சென்று அமர்ந்தாடும் அழகரைத் தரிசிக்கலாம்.                                               11. திருப்பாத தரிசனத்தின் சிறப்பு []   பரமனடியார்கள் அல்லும் பகலும் அனவரதமும் இறைவனது பாதாரவிந்தங்களை தரிசிப்பதற்காக ஏங்குகின்றனர். அடியார்களுக்கு இறைவனின் திருப்பாத தரிசனமே பரமானந்தம் பெறுவதற்கு, அந்தமில்லாத இன்பமான, அழிவில் வீடுப் பேறு அளிக்கும் என்பது   பெரியோர் துணிபு. எனவே திருவள்ளுவர் கற்றதானாலாய பயன் கொள் வாலறிவன் நற்றாள் தொழார் எனின், மலர் மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார், வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல, பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவனடி சேராதார் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். மாணிக்கவாசகரும் முதலில் சிவபெருமானின் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து நாமத்தைப் போற்றி பின்னர் இறைவனது திருத்தாள் மலர்களையே போற்றுகின்றார். நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க என்று துவங்குகின்றது திருவாசகம். மேலும்   இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகம மாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்தாண்ட    வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்கு சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடி போற்றி  என்று பலவாறு போற்றிப் பாடியுள்ளார். இறைவன் குருவாக வந்து மாணிக்கவாசகரை ஆட்கொண்டது திருப்பாத தீட்சை அளித்துதான். இறைவன் காலைக் காட்டி தன்னை ஆட்கொண்ட திறத்தை மாணிக்க வாசகர்   இணையார் திருவடிஎன்    தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள்     அத்தனையுந் துறந்தொழிந்தேன் – என்று இறைவனது திருவடி அவர் தலையில் பட்டவுடன் சம்சார மாயையாகிய பந்த பாசங்கள் அனைத்தும் விலகி சிவஞானம் பெற்றதைப் பாடுகின்றார்.   அப்பர் பெருமானும் அவனருளால் திருவையாற்றில் திருக்கயிலாய காட்சி கண்டபின் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் என்று ஆனந்தப் பரவசத்துடன் பாடுகின்றார். வாகீசருக்கும் சிவபெருமான் திருநல்லூர் திருத்தலத்தில் திருவடிதீட்சை தந்தருளினார்.  சம்பந்தரும் தமது பதிகத்தில் கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் - என்று இறைவன் திருபாதத்தை அடைந்தவர்களை எத்தீவினையும் அண்டாது  என்று ஆணையிட்டு கூறுகிறார்.  வைணவத்திலும் கிடந்த கோலத்தில் அருள் பாலிக்கும் பெருமாளை தரிசனம் செய்யும் போது முதலில் திருவடியையும் அதற்கு பிறகே திருமுடியை தரிசனம் செய்வது உத்தமம் என்பது ஐதீகம்.   தண்மல ரும்பொழிற் றென்கம லேசர்க்குச் சாத்துகின்ற ஒண்மலர் சொன்மலர்க் கொவ்வாது போலுமற் றோர்புலவன் பண்மலர் சாத்திப் பணிகொண்ட வாபச்சை மால் சிவந்த கண் மலர் சாத்தியுங் காண்பரிதான் கழன்மலரே    என்று குமரகுருபரர், திருவாரூர் நான்மணி மாலையில் பாடியபடி திருமால் தனது சிவந்த கண்களையே மலராக சார்த்தியும் காண முடியாத கமலேசரின் சிறப்புப்பெற்ற திருப்பாத தரிசனம் சப்த விடங்கத்தலங்களில்  நித்தியமும் கிடைப்பதில்லை. தியாகராஜப் பெருமானுடைய திருமேனி ஒரு இரகசியம் என்பதால், முக தரிசனம் மட்டும் தினமும் கிட்டுகின்றது. திருவாரூரில் மார்கழி திருவாதிரையன்று வலது திருப்பாத தரிசனமும், பங்குனி உத்திரத்தன்று இடது திருப்பாத தரிசனமும் தந்தருளுகிறார் வீதி விடங்கப்பெருமான். இது நிஜ பாத தரிசனம் என்றும் அழைக்கப்படுகின்ரது.  ஆகவே அவன் அருளால் அந்நாள்களில் அங்கு சென்றால் மட்டுமே திருப்பாத தரிசனம் கிட்டும். மற்ற சப்த விடங்கத்தலங்களிலும் இது போலவே வருடத்திற்கு இரு முறை மட்டுமே திருப்பாத தரிசனம் கிட்டுகின்றது. தியாகேசரின் திருப்பாத தரிசனம் இவ்வளவு சிறப்பானது என்பதால் இந்நூலுக்கு திருப்பாத தரிசனம் என்று பெயரிட்டிருக்கிறேன்.  மேலும் பதஞ்சலி, மற்றும் வியாக்ரபாதருக்கு சிவ பெருமான் திருப்பாத தரிசனம் அளித்த திருவிளமல் ஆலயத்தைப் பற்றிய குறிப்பும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.       12. திருவாரூர் திருக்கோவில் தோன்றிய காலம் []   திருமால் தனது மார்பில் தியாகரை வைத்து வழிபடும் கோலம் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான இறைவன் தோன்றிய போதே இத்திருக்கோவில் தோன்றியதோ என்பதை அப்பர் சுவாமிகள் இவ்வாறு பாடுகின்றார் ஒருவனாய் உலகத்தே நின்ற நாளோ  ஓருருவமே மூவுருவமான நாளோ கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ   காமனையும் கண்ணழகால் விழித்த நாளோ மருவனாய் மண்ணும்விண்ணும் தெரித்த நாளோ மான்மறிக்கையேந்தியோர் மாதோர் பாகஞ் திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாகக் கொண்ட நாளே! என்பதிலிருந்து இத்தலத்தின் பழந்தொன்மையை அறியலாம். சிவபெருமான் ஒருவனாய் அவன் மட்டும் உலகத்தில் நின்ற போதே இக்கோவிலில் குடிகொண்டாரோ என்று வினவுகிறார் அப்பர் பெருமான். அது மட்டுமன்றி பத்து பாடல்களிலும் சிவபெருமான் புரிந்த அத்தனை தீரச்செயல்களையும் குறிப்பிட்டு அவை அனைத்திற்கும் முன் தோன்றிய கோயில் திருவாரூர் என்று பாடுகிறார்.  இத்திருக்கோவில் தில்லையை விட பழமையானது என்பதால் இத்திருத்தலத்தில் திருச்சிற்றம்பலம் கூறும் வழக்கம் கிடையாது. இப்பதிகத்தின் ஒரு பாடலில் அப்பர் பெருமான், பிறப்புகள் எட்டு, குற்றங்கள் எட்டு, புலன்கள் எட்டு, பொழில்கள் எட்டு, காட்சிகள் எட்டு, காப்புகள் எட்டு, இடர்கள் எட்டு, கால பேத அளவுகள் எட்டு, நன்மலர்கள் எட்டு, திசைகள் எட்டு இப்படி இவையனைத்தும் தோன்றுவதற்கு முன்னரே ஈசன் திருவாரூரில் குடி கொண்டதாகவும் பாடுகின்றார்.  உலகில் முதலில் தோன்றிய ஊர் திருவாரூர் என்பது ஒரு நம்பிக்கை. சாக்த தந்திரங்களில் உள்ள வரலாறு.  சிவம் நாறும் வீதிகளும், கிளிகளும், நாகனவாய் புட்களும் நிறைந்த இத்தலத்தில் எம்பெருமான் எப்போது கோவில் கொண்டார் என்று தெரியாது. ஒரு சமயம் திருமால், இந்திரன் முதலான தேவர்கள் ஒன்று கூடி ஒரு யாகம் செய்ய எண்ணி,  குருக்ஷேத்திரமே அதற்கு தக்க இடம் என்று தேர்ந்தனர்.  யாகம் செய்வதிலே போட்டி ஏற்பட்டது. யார் அதிகமான நாட்கள் யாகம் செய்கின்றனர் என்பதே போட்டி. போட்டியில் திருமால் வெற்றி பெற்றார். முன்னவன் அருளால் ஓமகுண்டத்திலிருந்து ஒரு திவ்ய வில் வெளி வந்தது.  அந்த வெற்றிக் களிப்பில் யாகத்தின் மூலம் கிடைத்த வில்லைக் கொண்டு தேவர்களை அவர் துரத்த ஆரம்பித்தார். அவரிடமிருந்து தப்புவதற்காக தேவர்கள் ஓட்டம்  எடுத்து பராசக்திபுரமான திருவாரூரில் அடைக்கலம் புகுந்தனர்.  துரத்திக் கொண்டு ஓடி வந்த திருமால்   திருவாரூரை அடைந்த போது களைப்பின் மிகுதியால் வில்லின் மேல் தன் தலையை வைத்து ஓய்வெடுத்தார்,  மெல்ல உறங்கிப் போனார். அப்போது தேவகுருவின் ஆலோசனைப்படி தேவர்கள் கரையான் வடிவம் எடுத்து அவ்வில்லின் நாணை அறுத்தனர், அறுந்த நாண் திருமாலின் தலையைக் கொய்தது. தங்கள் தவறை உணர்ந்த தேவர்கள் பரம கருணா மூர்த்தியான சிவபெருமானை வேண்ட, அவரும்  இத்தலத்தில் தோன்றி விஷ்ணுவைக் காப்பாற்றி பின் வெண்மணலால் ஆன புற்றில் சுயம்புவாக சிவலிங்க மூர்த்தியாகக் கோவில் கொண்டார். எனவே இவர் புற்றிடங்கொண்டார், வான்மீக நாதர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். ஐயனின் மற்ற திருநாமங்கள் ஆரூரன், திருமூலட்டநாதர் ஆகியவை ஆகும். ஐயனின் கருவறையில் அம்மை போக சக்தியாக பிரியாவிடை அம்மையாக எழுந்தருளி இடது கையை ஊன்றிய வண்ணம் அமர்ந்த கோலத்தில்  அருள் பாலிக்கின்றாள். அம்மை சந்நிதியை விட்டு வெளியே வருவதில்லை என்பதால் படிதாண்டா பத்தினி எனப்படுகிறாள். யாகத்தில் தியாக சிந்தாமணி - தேவ சிந்தாமணி தோன்றல்: சிவபெருமான் தேவர்களை நோக்கி “தேவர்களே! திருமால் முறையாக யாகத்தை முடித்திருந்தால், மேலும் அனேக அரும்பெரும் பொருட்களைப் பெற்றிருக்கலாம்; ஆனால் திருமாலின் ஆணவத்தினால் யாகம் முடிவுறாது நின்று போனது. நிறைவு பெறாத யாகம் தீமையைத் தரும் எனக்கூறி திருமாலின் உடலில் குதிரையின் தலையைப் பொருத்த, திருமால் உயிர்தெழுந்தார். அவரே ஹயக்ரீவர். பின்னர் அவரைக் கொண்டு யாகத்தைத் தொடறுமாறு சிவபெருமான் அருளினார். தேவர்கள் திருவாரூரில் பெரியதொரு யாகசாலை அமைத்து திருமாலை யாக கர்த்தாவாக அமரச்செய்து, பாதியில் நின்று போன யாகத்தை தொடர்ந்து யாகத்தை முடித்தனர். சிறப்புற நடந்த யாகத்தின் நிறைவாக சிவபெருமான் திருமேனி தோன்றியது, தேசுபயில் நாரணன்பால் இனிது பெற்று செஞ்சுடர் வேற்குமரனொடும் தேவியொடும் வாசவன் பூசனை புரிந்த தேவ சிந்தாமணி. அவ்வரிய திருமேனியே, தியாக சிந்தாமணி - தேவ சிந்தாமணி என்றழைக்கப்படும் ஸ்ரீதியாகராஜப்பெருமான். திருவாரூர் பெரியகோவிலில் சந்திரசேகரர் எழுந்தருளும் சந்நிதியின் முகமண்டபத்தில் புடைப்புச் சிற்பமாக இவ்வரலாறு செதுக்கப்பட்டுள்ளது. மாலவன் யாகம் செய்ய அவ்வேள்வி அக்னியில் இருந்து வில் தோன்றுதல், அவ்வில்லால் தேவர்களை திருமால் தக்குதல்,  தேவர்கள் கூடி நிற்றல், திருமால் வில்லின் மீது தலையை வைத்து உறங்குதல், பிரமன் திருமாலின் தலையை பொருத்துதல், திருமால் சிவபூசை செய்தல்,  விடை மேல்  அம்மையப்பர் காட்சி தருதல், இளமுருகு உடனுறை அம்மையப்பரை திருமால்  வணங்குதல், தியாகரை மான் மழு ஏந்திய சிவபெருமான் திருமாலுக்கு அளித்தல்,  தியாக வினோதரை திருமால் வழிபடுதல்,  இந்திரனுக்கு தியாகராஜரை அளித்தல், நான்முகன் துலாக்கோலினால் தலங்களை நிறுத்தல், வன்மீகர் மற்றும் தியாகராஜர் அருகருகே எழுந்தருளியுள்ள சிற்பங்களைக் காணலாம். சுமார் 300 வருடங்களுக்கு முற்பட்ட எழிலார்ந்த பேசும் பொற்சித்திரங்களாம் ஓவியங்கள் சந்திர சேகர மண்டபம், தேவாசிரிய மண்டபம், தியாகராஜ சுவாமி சன்னதி, வான்மீகர் சன்னதி பின்புறம், அசலேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்றன. இவற்றைக் காணக் கண் கோடி வேண்டும். திருக்கோவில் விமானத்திலும், புறச்சுவர்களிலும், கமலாலயத்தின் படிக் கட்டுகளின் சிறு சிறு மண்டபங்களிலும், பல அரிய சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன. இரண்டாவது புராண வரலாறு:  ஒரு சமயம்  மகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை பிரிந்து வருண தேவனிடம் சிறு பிராயம் முதல் வளர நேரிட்டது. ஒரு பெரிய போர் தேவர்களுக்கும், மது கைடபர் என்ற அசுரர்களுக்கும் நடைபெற்ற போது மகாவிஷ்ணு அசுரர்களை வென்று வாகை சூடினார் .அதன் வாயிலாக அப்போது இளம் பெண்ணாக வளர்ந்துவிட்ட லக்ஷ்மி தேவியின் மனதில் அவர் இடம் பெற்றார். மகாவிஷ்ணுவை தனது மனதில் கணவனாக வரித்துக் கொண்ட திருமகள், அந்த எண்ணம் பூர்த்தியாக பராசக்திபுரம் வந்து புற்றிடங்கொண்டார் என்கிற திருமூலட்டானேசுவரரை தரிசித்து, பின்னர் கடுந்தவம் மேற்கொண்டார். அத்தவத்தில் மனங்கசிந்த ஈசுவரன், லக்ஷ்மி தேவிக்கு காட்சியளித்து திருமாலை மணக்கவும்,  மன்மதனை மகவாகவும் அருளினார்.  திருமகளின் வேண்டுகோளையேற்று இப்பதி கமலாலயம் என்ற திருநாமம் பெறவும் அருளினார். அன்றிலிருந்து பராசக்திபுரத்தை மக்கள் கமலாலயம் என்றும் அழைக்கத் தொடங்கினர். திருமகள் வழிபட்ட தலம் என்பதை . . . . .மலர் மென்பாவை துள திருவும் என்னும் முடிவில் மங்கலமுமெய்த விழுமிதின் நோற்றுப் பெற்ற வியன் திருவாரூர் -  என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.                                                       13. திருவாரூர் திருத்தலத்தின் சிறப்புகள் []   திருவாரூர் கிழக்கு இராஜகோபுரம் நாம் முதலில் தரிசிக்கின்ற தலம் சப்தவிடங்க தலங்களில் முதன்மைத் தலமான திருவாரூர் ஆகும். வெள்ளை நுண் மணலால் ஆன புற்றாக சுயம்புவாக மூலவராக அருள் பாலிக்கின்றார். திருமாலும், வாசவனும்  பூசித்த மூல தியாகராஜமூர்த்தி உற்சவராக இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். வாருங்கள் திருவாரூரின் சிறப்புகளை முதலில் காணலாம்.    பாடிளம் பூதத்தினானும் பவளச்செவ்வாய் வண்ணத்தினானும் கூடிளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும் ஓடிளவெண் பிறையானும் ஒளிதிகழ் சூலத்தினானும் ஆடிளபாம் பசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே. என்று அப்பர் பெருமான் பாடிய சிவபெருமான், நம்மை எல்லாம் உய்விக்க சுயம்புவாக வெண் மணலால் ஆன லிங்க வடிவில் திருமூலட்டானராகவும்,  ஆலமுண்ட நீலகண்டனாக, தியாகராஜ மூர்த்தியாக, அம்மையுடனும், ஸ்கந்தனுடனும், வீதி விடங்கராகவும் அருள் பாலிக்கும் தலமே திருவாரூர். சப்தவிடங்க ஸ்தலங்களுள் முதன்மையானது இத்தலம். சைவ சமய மரபில் பெரிய கோவில் என்றால் அது திருவாரூரைக் குறிக்கும். விராட் புருஷனுடைய மூலாதாரத் தலமாகவும், பூமிதேவியின் ஹிருதய கமல தலமாகவும் விளங்கும் தலம்.    …பரவைமனை மீதி லன்று ஒரு பொழுது தூது சென்ற பரமனரு ளால்வ ளர்ந்த ….. குமரேசா – என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியபடி திருமாலும் நான்முகனும் காண முடியாத திருவடிகளால் இம்மண்ணுலகில் தன் தோழனான சுந்தரருக்காக எம்பெருமான் பரவையாரிடம்  தூது சென்ற  பெருமையுடையது சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குகின்ற இத்தலம். முக்தி தலங்களுள் பிறக்க முக்தி தரும் தலம். எனவே வன்தொண்டரும், எம்பிரான் தோழருமான சுந்தர மூர்த்தி நாயானார் "திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்"  என்று தனது திருத்தொண்டர் தொகையிலே பாடுகின்றார். மாணிக்கவாசகரும் திருவார் பெருந்துறை மேய பிரான் என்பிறவிக்  கருவேரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை  அருவாய்ரூருவமுன் ஆய பிரான் அவன் மருவும்  திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமே  என்று கொண்டாடுகிறார். திருவாரூர் பிறந்தவர்களிடம் எமன் வரமாட்டான். முக்திப்பேறு தந்து இறைவனே அழைத்துக் கொள்வார் என்பதால் திருவாரூர் பிறக்க முக்தித்தலம் ஆகும். ஆம் ஆரூர் பெருமானை வழிபட்டால் எல்லாம் கிட்டும் அவர் ஒன்றை மட்டும் அளிக்க இயலாதவராய் இருக்கிறார். என்ன அது மறு பிறவி! எனவே இது முக்தித் தலம்.  ஆம் “உதித்தவர் உதித்திடாத ஆரூர்” ஆகும். நமி நந்தி அடிகளுக்கு இறைவன் திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரையும்  சிவகணங்களாகக் காட்டினார், இதனை   “ஞான மறையோய்! ஆரூரில் பிறந்தாரெல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்” என்றருளிச் செய்கின்றார் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான். மற்ற முக்தித்தலங்கள் தில்லையில் தரிசிக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, காசியில் இறக்க முக்தி. மற்ற தலங்களில் நாம் முயன்றால் முக்தி பெறுவது சாத்தியம். திருவாரூரில் பிறந்து முக்தி பெறுவதென்பது பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே சாத்தியம். ஏனெனில் பிறப்பினை நிர்ணயிப்பது,  நமது நிலைக்கு அப்பாற்பட்டது. இதனால்தான் திருவாரூர் பிறந்தார்கள் அனைவரும் தொகையடியார்களாக போற்றி வணங்கப்படுகின்றனர். மக்கள் கல்லாலும் உலோகத்தாலும் கடவுளர் உருவத்தை அமைத்து வழிபடுவதற்கு முன்னர் மரத்தையும், புற்றுகளையும் வழிபட்டனர். ஆதலின் புற்று வழிபாடு தொன்மையானது.  எனவே   சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது மன்று மாமலராள் வழிபட்டது வன்னி யாறு மதி பொதி செஞ்சடைச் சென்னியார் திருவாரூர் திருநகர் - என்று பாடல்பெற்ற திருவாரூர்   பஞ்ச பூதத்தலங்களில் பிருத்வி தலம் ஆகும். இறைவன் வெள்ளை மணலாலான இலிங்க ரூபத்திலேயே சுயம்புவாக  இத்தலத்தில் தோன்றியதால், இத்தலம்  பஞ்ச பூதத்தலங்களில் பிருத்வி (நிலம்) தலமாகும்.  திருவாரூரில் உள்ள ஆர் என்னும் விகுதி -பிருத்வி (பூமி)  இதையே குறிக்கின்றது. தேவேந்திரன் அமைத்த அயிர் எனும் ஒருவகை நுண்மணல் புற்றில் தோன்றியவரே மூலவர் வன்மீகநாதர். “அயிராவணமே எம் அம்மானே” என்பது அப்பர் வாக்கு. ஆறதனில் மணல் குவித்து   காமாட்சி உமை  அரிய தவம் புரிந்த திருக்கச்சி என்னும் காஞ்சி தலத்தையும் பிருத்வி தலமாக கருதுகின்றனர். அத்தலத்திலும் ஐயன் சுயம்பு, மணலால் ஆனவர்.  மற்ற பஞ்சபூத்தலங்கள் அப்புத்தலம் (நீர்) - ஜம்புகேஸ்வரம் என்னும் திருவானைக்கா, அக்னித்தலம் - திருவண்ணாமலை, ஆகாயத்தலம் – சிதம்பரம், வாயுத்தலம் – திருக்காளத்தி ஆகும். ஆதாரத் தலங்களுள் குண்டலினி சக்தியின் மூலாதாரமாக விளங்கும் தலம் திருவாரூர். பூமியாகிய விராட புருஷனின் மூலாதாரச் சக்கரமாக இத்தலம் விளங்குகின்றது. எனவே   இத்தலம் திருமூலட்டானம் என்றும் வழங்கப்படுகின்றது. மற்ற ஆதாரத்தலங்கள் சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல், மணிபூரகம் (நாபி) - திருவண்ணாமலை, அநாகதம் (இதயக் கமலம்) - சிதம்பரம், விசுத்தி (கழுத்து) - திருக்காளத்தி, ஆக்ஞை (புருவ மத்தி) - காசி, சகஸ்ராரம் (உச்சி) - திருக்கயிலாயம். நமது பாரத முழுவதும் சக்தி பீடங்களென்று அம்பிகை சிறப்புடன் விளங்கும் 64 பராசக்தி பீடங்களுள் முதன்மையானதாகவும் ஆதார பீடமாகவும் போற்றப்படுகின்றது திருவாரூர். மேலும் அம்பாளின் அக்ஷித்தலங்களுள் ஒன்று. அம்மை இத்தலத்திலே கமலாம்பாளாக யோக நிலையிலே கோவில் கொண்டுள்ளாள். திருமகளும் அலைமகளும் வழிபட்டதால் கமலாலயபுரம் என்று புகழ் பெற்ற தலம். இத்தலத்தின் விரிந்து பரந்த திருக்குளமான கமலாலயத்தின் பரப்பளவு கோவிலின் அளவே. கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்து வேலி என்பது பழமொழி. (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம், 700 அடி அகலம் ஆகும்) மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகள் மட்டுமல்ல தமிழகத்திலேயே மிகப்பெரியதான ஆழித்தேரை உடைய தலம். பெரிய தேரான ஆழித்தேரில் அஜபா நடனமிட்டு தியாகேசர்  உலா வரும் தலமும் இதுவே. சங்கர சேவகனென்னும் சோழ அரசனது வேண்டுகோளின்படி ஸ்ரீதியாகேசர் அரச வடிவங்கொண்டருளி பல வருடங்கள் அரசாட்சி செய்த தலம். திருமால், திருமகள், பிரம்மா, மன்மதன், இந்திரன், யமன், அகத்தியர், விசுவாமித்திரர், மகாபலி, துர்வாசர், முசுகுந்தன், தசரதன், ஸ்ரீராமன், லவ-குசர். புரூரவசு, தேவர், யட்சர், கின்னரர், கிம்புருடர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்,  மாணிக்க வாசகர், தண்டி அடிகள், சோமாசி மாற நாயனார், விறண்மிண்டர் என பலரும் தியாகேசரை வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம்.   திருவந்திக்காப்பழகர் என்ற திருநாமத்திற்கேற்ப தியாகராஜப் பெருமானுக்கு செய்யப்படும் அறுகால பூசைகளுள்  திருவந்திக்காப்பு (சாயரட்சை பூஜை) மிகவும் சிறப்பானது. தியாகராஜப்பெருமானின் மாலை பூஜை பிரதோஷ பூஜைக்கு இணையானது. எனவே இப்பூசை நித்திய பிரதோஷ பூசை எனறழைக்கப்படுகிறது இப்பூசையின் போது தேவேந்திரன், தேவர் குழாத்துடன் கலந்து கொள்கிறான் என்பது ஐதீகம். எனவே ஆரூர் நித்ய பிரதோஷ தலம் ஆகும். அர்ச்சகர் நீண்ட அங்கி, தலைப்பாகை அணிந்து தேவேந்திரன் கோலத்தில் கமலை நாதரை பூசிக்கின்றார். மற்ற தலங்களின் சிறப்பு பூசைகள் திருக்குற்றாலத்தில் திருவனந்தல் பூசையும், இராமேஸ்வரத்தில் காலை பூசையும், திருவானைக்காவில் மதிய பூசையும், மதுரையில் இராக்கால பூசையும், தில்லையில் அர்த்தஜாம பூசையும் சிறப்பு. 33 ஏக்கர் பரப்பளவில் (14 லட்சம் சதுர அடி) நிலப்பரப்பில் அமைந்துள்ள இவ்வாலயம் இந்தியாவின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட ஆலயம் ஆகும். திருவாரூரில் கோவிலில் மொத்தம் 84 விநாயகர்கள் உள்ளனர். அம்மன் சன்னதி பிரகாரத்திலுள்ள நடுக்கம் தீர்த்த விநாயகர் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள், மனப்படப்பு இருப்பவர்கள் வழிபட நன்று.  கமலாலய குளக்கரையில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையாரை பெண்கள் பொன் நகை வாங்குவதற்கு முன் வணங்குகின்றனர். சிவன் சன்னதி முதல் பிரகாரத்தில் ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூவின் மீது நடனம் ஆடும் நிலையில் உள்ள மூலாதார விநாயகரை யோகம் பயில்பவர்கள் வழிபட நன்று. மூலாதாரத்தின் அதி தெய்வமான கணபதியே, பரமானந்தத்தின் உருவகமான ஆடல்வல்லான் போன்று நடனமாடி மூலாதாரத்தின் (குண்டலியின்) பெருமையை உலகுக்கு உணர்த்துகின்றார்.   வாதாபி கணபதி முத்துசுவாமி தீட்சிதரின் பாடல் பெற்றவர். சேரமான் பெருமாள் அளித்த 120 பட்டிணப்படி பொற்காசுகளால் உருவானவர் ஐங்கலக்காசு பிள்ளையார் இவர் தியாகராஜஸ்வாமிக்கும் வான்மீகநாதருக்கும் இடையில் அமர்ந்திருக்கின்றார். பிரம்மோற்சவத்தின் போது பஞ்சமூர்த்தியாக வலம் வருபவர் இவரே.  ஆகாய விநாயகர் மூன்றாம் சுற்றில் தென்புற   வளாகத்தில் எழுந்தருளியுள்ளார். சுந்தரர் வெள்ளை யானையில் கயிலை செல்வதை அறிந்த பரவை நாச்சியார் விநாயக அவசர அவசரமாய்   பூசை செய்ய   பிள்ளையார் எப்போதும் போல பூசிக்கப் பணிந்தார். பூசை முடிந்த பின் பரவையை துதிக்கையால் தூக்கி   கயிலையின் வாயிலில் சேர்ப்பித்தாராம். தட்டஞ்சுற்றி மண்டபத்தில் பத்து திருக்கரங்களுடன் மடியில் தேவியை அணைத்த வண்ணம்  அருட்காட்சி நல்குகிறார் வல்லப கணபதி.  வீதி விடங்க விநாயகருக்கு பின் உள்ள பிரம்ம நந்தியை மழை வேண்டி பிரார்தித்து நீர் நிரப்பினால் மழை பெய்யும் என்பது ஐதீகம், வாதாபி கணபதி, ஆசை விநாயகர், உச்சிஷ்ட கணபதி, பொற்கம்ப விநாயகர், ஆகியோர் சிற்ப சிறப்பாலும், பக்திச் சிறப்பாலும் போற்றப்படுகின்றனர். திருவாரூர் ஆலயத்தில் 8 துர்க்கைகள் அருள் பாலிக்கின்றனர். முதல் பிரகாரத்திலுள்ள மகிசாசுரமர்த்தினியே முக்கிய பிரதான துர்க்கை. இத்துர்க்கை நுளம்பபாடியிலிருந்து வெற்றிச் சின்னமாகக் கொண்டு வரப்பட்ட அம்மன். மேலும் இரண்டு துர்க்கை சன்னதிகள் முதல் பிரகாரத்திலும், இரண்டாம் பிரகாரத்தில் நான்கு துர்க்கைகளும், கமலாம்பாள் சன்னதியில் ஒரு துர்க்கையுமாக எட்டு துர்க்கை சன்னதிகள் சிறப்பாக திருவாரூரில்  ஆலயத்தில் அமைந்துள்ளன. எம்பெருமான் இத்தலத்திலே விடங்கராகவும், இருந்தாடும் அழகாராக, தியாகராஜப் பெருமானாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். டங்கம் என்றால் உளி, உளியால் செதுக்கப்படாமல் தானே தோன்றியதால் இவர் விடங்கர். திருவாரூர் வீதி விடங்க செண்பக தியாகர்,  மரகத மேனியர் ஆவார். திருவீதியில் வரும் இறைவன் அழகைக் கண்டு பக்தர்கள் காமுறும் செயலைக் கொண்டே இறைவனுக்கு “வீதி விடங்கர்” என்ற பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும் என்பது ஆன்றோர் கருத்து. நித்தியப்படி அபிஷேகம் இவருக்குத்தான்.  தினமும் மூன்று முறை காலை, உச்சிக்காலம் மற்றும் அர்த்தசாம பூசையின் போது மரகத வீதி விடங்கருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. இவருக்கு வெள்ளிக் கவசம் சார்த்தி பாதுகாத்து வருகின்றனர். சேலை யுடையழகா தேவரகண் டாகழுநீர் மாலை யழகா மணிமார்பா - வேலை   அடங்கார் புரமெரித்த வாரூரா வீதி விடங்கா பிரியா விடை -   என்று காளமேகப்புலவர் தியாகேசனைப் போற்றுகின்றார். மதுரையில் எம்பெருமான் 64 திருவிளையாடல்கள் புரிந்தருளினார், திருவாரூரிலோ எம்பெருமான் 364 திருவிளையாடல்கள் புரிந்து அருளியுள்ளார். நந்தி இத்தலத்திலே தியாகராஜபெருமானுக்கு எதிரிலே மற்ற சிவாலயங்களில் உள்ளது போல் படுத்த கோலத்தில் இல்லாமல் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார், தியாகராஜபெருமானுக்கு முன்னால் படுக்கக்கூடாது என்ற மரியாதையின் நிமித்தம் இவ்வாறு நின்ற நிலையில் உள்ளார் என்பர். இவ்வாறு நந்தியெம்பெருமான் நிற்பதைக் கண்டு மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிணை அடியார் குறைக்கிரங்கிப் பெருமான்நீ எழுந்தருளின் துணையடிகள் கன்றமுனம் தூது சென்றார் போலடையாது அணைகுதியென் வெரிநிவர்ந்தென் றருள்நோக்கி நிற்பது போல் இணையில் விடங் கப்பெருமான் எதிர்நிற்கும் மால்விடையே பெருமானே! முன்பொருகால் தோழன் சுந்தரருக்காக பாத மலர்கள் நோக, மண் தோய தூதுவனாய் நடந்து சென்றாயே! அது போல் இனி நடந்து போகக் கூடாது. அப்படி செல்வதென்றால் என் முதுகில் ஏறிக்கொண்டுதான் செல்ல வேண்டும்” என்கிற குறிப்போடு நின்ற கோலத்தில் நந்தியெம்பெருமான் காட்சி தருகின்றார் என்று பாடுகின்றார். நவக்கிரகங்கள் தியாகராஜரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தலம். இப்பதி பூலோக கயிலாயம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரகங்களும் ஒரே வரிசையில் கிழமைக்கேற்ப தியாகராஜரை வழிபடும் நிலையில் விளங்குகின்றன. தியாகேசர் சன்னதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இவ்வாறு தீபவடிவில் தியாகேசரை வழிபடுவதாக ஐதீகம். சதயகுப்தன் என்ற அசுரன், தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே அவன்  நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான். பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர். சிவன், “என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எத்தொந்தரவும் கொடுக்கக்கூடாது” என்ற நிபந்தனையின்படி நவக்கிரகங்களைக் காப்பாற்றினார். எனவே, நவக்கிரகங்கள் திருவாரூரில் நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன. கிரகங்கள் பக்தர்களுக்குத் தொல்லை கொடுக்கிறதா?  என்பதைக் கண்காணிக்க விநாயகர் சிலை, கிரகங்களின் சன்னதியில் உள்ளது. எனவே “திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும்” என்பார்கள் என்றொரு ஐதீகமும் உண்டு. நவகிரகத்தலங்களுள் திருவாரூர் சந்திரன் பரிகாரத்தலம். இவ்வாலயத்தில் இரண்டு சண்டிகேஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் பிறக்க முக்தி என்பதால் எமனுக்கு இங்கு வேலையில்லை என்பதால் எமனே இங்கு சண்டிகேஸ்வரராக, எமசண்டிகேஸ்வரராக எழுந்தருளியுள்ளான். எமசண்டிகேஸ்வரரின் திருவுருவம் ஜடாமுடி தாடியுடன் உள்ளது.   பூங்கோவில் என்றும் நடுவண நாதர் கோவில் என்றும் அழைக்கப்படும் இத்திருக்கோவிலில் 100 க்கு மேற்பட்ட சன்னதிகள், 5 திருச்சுற்றுகள் அவற்றில்  3 பெரிய பிரகாரங்கள், 12 பிரம்மாண்டமான மதில்கள்,  9 இராஜ  கோபுரங்கள், 80 விமானங்கள், வரலாறு கூறும் 13 மண்டபங்கள்,   14 மதில்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 84 விநாயகர்கள், 365 சிவலிங்கங்கள், 80 தனித்துவம் கொண்ட விமானங்கள், ஆயிரம் கற்தூண்கள்,  என்று 15 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து அமைந்திருக்கின்றது. ஏழு கோபுரங்களையும் இந்திர லிங்கத்தின் அருகில் உள்ள கல்லின் மேல் நின்று தரிசிக்கலாம். இவ்வாலயத்திற்குள் சென்று விட்டால் குவிந்த கரங்களை விரிப்பதற்கு வழியே இல்லை. அவ்வளவிற்கு அடுத்தடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. கும்பாபிஷேகத்தின் போது மூன்று நாட்களில்தான்  அனைத்து சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் செய்ய இயலும். அவ்வளவு சன்னதிகளை கொண்ட தலம். அரசர்களும் எண்ணற்ற பக்தர்களும் காலந்தோறும் திருவாரூர்ப் பெருமானைப் பூஜித்து வாழ்வும் வளமும் பெற்றுள்ளனர். இவ்வாறு ஆயிரக்கணக்கானவர்களால் நிறுவப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்களைக் காட்டும் வகையில் ஆயிரம் சிறு சிறுலிங்கங்களை கொண்ட சகஸ்ரலிங்கம் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வூர் இறைவர் தியாகராஜரிடம் தோழமை கொண்டு பழகினர் என்பது வரலாறு. இவரது தாயார் இசை ஞானியார் மற்றும் இல்லாள்  பரவை நாச்சியாரின் அவதாரத்தலமும் திருவாரூர். சுந்தரர் பரவையார் திருமணம் நடந்த தலம், பின்  திருவொற்றியூரிலே தான் இழந்த இடக்கண்ணை பதிகம் பாடி சுந்தரர் பெற்ற தலம். சுந்தரருக்காக எம்பெருமானே தன் திருப்பாதம்  நிலத்தில் பதிய பரவையாரிடம் தூது நடந்த தலம். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த தலம். தேவார பாடல் பெற்ற அரநெறி என்னும் அசலேஸ்வரம், ஆனந்தேஸ்வரம், ஆடகேஸ்வரம், சித்தீஸ்வரம், விஸ்வகாமதேஸ்வரம் என்று எண்ணற்ற சிவ சன்னதிகளையும் கொண்ட தலம்.  ஸ்ரீகமலாம்பாள் திருவாரூக்கு எழுந்தருளி தவக்கோலம் கொண்ட போது தோன்றிய மூர்த்தமே ஆடகேஸ்வரம் ஆகும். அருகே பரவை நாச்சியார் மண்ணால் கட்டி வழிபட்ட பரவையுண் மண்டலி திருக்கோவிலும் உள்ளது. கமலாலய திருக்குளத்திற்கு நடுவே நாக நாதர் கோயில் எனப்படும் திருக்கோயிலையும் கொண்டு தனிச் சிறப்புடன் பொலிவுறும் அருமையான தலம் ஆரூர்.   சக்தி வாய்ந்த தியாகராஜ சக்கரம் தியாகேசரின் வலப்பக்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் நம்முடைய பாவங்களையெல்லாம் நீக்கி அருளும் விமோசன தலம். திருவாரூர் தலத்தின் தலவிருட்சம் சிவப்பு பாதிரி மரம் ஆகும். இம்மரம் பூக்கும் ஆனால் காய்க்காது. இம்மரம் விதையின்றி ஒரு கிழங்கிலிருந்து வெடித்து வந்து நான்கு கிளைகளாக அமைந்துள்ளன. நால் வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் ஆணவத்தைக் களைந்து விருட்சமாகின. திருவாரூர் ஆலயத்தில் யாக சாலை, மகா யாக சாலை, பிள்ளையார் யாக சாலை, முருகன் யாக சாலை என்று பல  யாக சாலைகள் உள்ளன. அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் காப்பியமான திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தின் மூலமான திருத்தொண்டர் தொகை பாடப்பட்ட தலம். இப்பாடலுக்கு “தில்லை வாழ அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று முதல் அடி எடுத்துக்கொடுத்தவர் ஆருர் தியாகேசர் ஆவார். இத்திருத்தலத்தின் தேரும் திருவிழாவும் திருக்கோயிலும் திருக்குளமும் இவ்வூர் பஞ்சமுக வாத்தியம் எனப்படும் குடமுழாவாத்தியமும் இவ்வூர்த் தேவாரங்களில் வைத்துப் பாடப் பெற்றுள்ளன.   திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சைவசமய குரவர் நால்வராலும் பாடல் பெற்றது இத்தலம்.  330 தேவாரப் பாடல்களும், திருவாசகப் பாடல்களும் இத்தலத்தைப் போற்றுகின்றன.  மொத்தம் 41 திருப்பதிகங்கள் பெற்ற தலம், பதிகங்களின் எண்ணிக்கையில் சீர்காழிக்கு அடுத்ததாக இரண்டாவதாக விளங்குகின்ற தலம். காவிரித் தென்கரைத் தலங்களில் மிகவும் அதிகமான பாடல் பெற்ற தலம். அப்பர் பெருமானின் அதிகமான பாடல் பெற்ற தலம். எங்குமே கண்டறிய முடியாத எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளை திருவாரூரில் கண்டு கொண்டேன். கண்டவுடன் அவன் ஒருவனைத்தவிர மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டேன் என்று அப்பர் பெருமான் இத்தலத்தைப் பாடிப் பரவுகிறார். ஒன்பது திருமுறைகளிலும் பாடல் பெற்ற தலம். மூவர் முதலிகள் பாடிய முதல் ஏழு திருமுறைகளில் இடம் பெற்ற தலங்கள் மூன்றினுள் ஒன்று.  மற்ற தலங்கள் திருமறைக்காடு மற்றும் கச்சி ஏகம்பம் ஆகியவை ஆகும். அருணகிநாதர் தமது திருப்புகழில் இத்தலத்து முருகனைப் பற்றி ஏழு பாடல்கள் பாடியுள்ளார், அதில் மனுநீதிச்சோழனின் கதையையும் உரைத்துள்ளார். இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளில் நெடுகிலும் போற்றி பாடப்பட்டு உள்ளது. சங்கீத மும்மூர்த்திகள் - தியாகையர், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரும் கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர், அந்தககவி வீரராகவ முதலியார்,  மாமன்னர் சகாஜி,  வள்ளலார் இராமலிங்க அடிகள் ஆகியோரும் திருவாரூரைப் பாடியுள்ளனர். கலம்பகம், பிள்ளைதமிழ், குறவஞ்சி போன்ற மற்றும் எண்ணிறந்த செந்தமிழ் இலக்கியங்களிலும் இவ்வாலயம் போற்றிப் பாடி சிறப்பிக்கப் பெற்றுள்ளது. அஜபா ரஹஸ்யம், ஆடகேச்வர மஹாத்மியம், கமலாலய மஹாத்மியம், நாகர கண்டம், தியாகராஜ லீலை, சமத்காரபுர மஹாத்மியம், தியாகராஜ மஹாத்மியம், தேவயாகபுர மஹாத்மியம், தேவாஸ்ரய மஹாத்மியம், முசுகுந்தபுர மஹாத்மியம், ரமாகயா மஹாத்மியம், ஸ்ரீபுர மஹாத்மியம், ஸ்கந்தபுர மஹாத்மியம், க்ஷேத்திரவர மஹாத்மியம் என்று பல சமஸ்கிருத நூல்கள் இத்தலத்தை பற்றி உள்ளன.  இது தவிர தெலுங்கு, மராட்டி ஆகிய மொழிகளிலும்  இத்தலத்தைப் பற்றிய  நூல்கள் உள்ளன. தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன்சடைமுடி மேல் திங்கள் சூடி கார் ஊரா நின்ற கழனிச்சாயல் கண்ணார்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் ஓரூரா உலகெலாம் ஒப்பக்கூடி உமையாள் மணவாளா என்று வாழ்த்தி ஆரூரா! ஆரூரா!  என்கின்றார்கள் அமரர் தம் பெருமானே எங்குற்றாயே! – என்று தேவர்கள் யாவரும் உலகெங்கும் தேடி பல உலகத்தவரும் திருவாரூக்கே வந்து விட்டார்கள் என்று அப்பர் பெருமான் இத்தலத்தின் பெருமையை சம்பந்தப் பெருமானுக்கு விளக்குகின்றார். சம்பந்தர் தொலைவில் இருந்து திருவாரூரை தரிசித்த போது பொன்னுலகம் போல் அவருக்கு காட்சி தந்ததாம். சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் திருமலை சிறப்பாக கயிலை மலையையும், திருநாட்டு சிறப்பாக சோழ நாட்டையும், திருநகர சிறப்பாக திருவாரூரையும் அதன் நடுநாயகமாக அமைந்துள்ள பூங்கோயிலையும் சிறப்பித்து பாடியுள்ளார். அதில் திருவாரூர் மிகவும் தொன்மையானது என்றும், திருமகளால் வழிபடப்பெற்றது, என்றும் சுந்தரர் பொருட்டு பரவையிடம் தூது சென்ற போது இறைவனின் தாமரையடிகளின் மணம் தெருவில் வீசுகின்றது என்றும் போற்றுகின்றார். திருவாரூரின் நடுநாயகமாக விளங்கும் பூங்கோவிலை இனையவகை அரநெறியில் எண்ணிறந்தோர்க் கருள்புரிந்து முனைவரவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர்மேல் புனையும் உரை நம்மளவில் புகலலாந் தகமையதோ? அனையதனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில் - என்று சிறப்பித்துப் பாடுகின்றார். சோழ மன்னர்களின் இராஜதானி அதாவது  தலைநகரங்கள் ஐந்தினுள் ஒன்று திருவாரூர். பிற்காலச் சோழர்கள் முடிசூடிக் கொள்ளுமிடமாகவும் விளங்கிய தலம். சோழர்கள் மட்டுமல்லாமல் பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சை நாயக்கர் மற்றும் மராட்டிய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இவ்வாலயத்தை சிறப்பாக நிர்வகித்துள்ளனர். சோழ மண்டலத்தை ஒரு சிவாலயமாகக் கருதினால் கருவறை (மகாலிங்கம்) திருவிடைமருதூர் என்றும் அதன் பரிவாரத்தலங்களில் சோமாஸ்கந்தர் தலமாக திருவாரூர் விளங்குகின்றது. மற்ற பரிவாரத்தலங்கள் திருவலஞ்சுழி – விநாயகர், சுவாமிமலை – சுப்பிரமணியர், சிதம்பரம் – நடராஜர், சீர்காழி – பைரவர், சேய்ஞலூர் – சண்டிகேஸ்வரர், ஆலங்குடி – தக்ஷிணாமூர்த்தி, திருமாந்துறை – சூரியன்   என்பது ஐதீகம். மாணிக்க வாசகர் பாடிய திருவாசகத்தலங்கள் எழினுள் ஒன்று,  மற்றத் தலங்கள் தில்லை, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், திருத்தோணிபுரம் என்னும் சீகாழி, திருப்பெருந்துறை, உத்திரகோச மங்கை ஆகும். நமிநந்தி அடிகள், செருந்துணை நாயனார், தண்டி அடிகள், கழற்சிங்க நாயனார், விறன்மிண்டர், போன்றோர் திருத்தொண்டு செய்து முக்தி அடைந்தது இத்தலத்தில்தான்.   சோழ மன்னர்களுள் தன்னிடம் சரணடைந்த ஒரு புறாவுக்காக தன் தசையையே அறிந்து கொடுத்த சிபி சக்கரவர்த்தியும், ஒரு பசுவின் துயர் துடைக்க தன் குலத்திற்கு ஒரே மகன் என்ற போதும் அவனையே  தேர்க்காலில் பலியிட்ட மனு நீதி சோழனும் தலை நகராகக் கொண்டு ஆண்ட தலம். ராஜராஜ சோழனின் பாட்டியார் செம்பியன் மாதேவி அவர்களால் மண்தளியாயிருந்த அசலேஸ்வரர் சந்நிதியை கற்றளியாகக்  கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.  இச்சந்நிதியை பார்த்தே பிற்காலத்தில் தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்டதாக ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகிறார்கள்.  அனைத்து புகழ் மிக்க மன்னர்களின் கை வண்ணமும் கல்வெட்டும் இத்திருக்கோவிலில் உள்ளன. அவர்களின் 91 கல்வெட்டுகள் ஆரூரின் பெருமைகளையும், தியாகராஜரின் லீலைகளையும், கோயிலுக்கு அவர்கள் செலுத்திய நன்கொடைகளைப் பற்றியும், திருவிழாக்களின் சிறப்புகளைப் பற்றி அறியவும் உதவுகின்றன. செப்பேடுகளில் ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு அளித்த  அறக்கட்டளைப் பற்றிய செய்திகள் உள்ளன. இத்தலத்தில் தருமபுர ஆதீன குரு முதல்வர் ஸ்ரீஞானசம்பந்த சுவாமிகள், கமலை ஞானப்பிரகாசரை தம் குருவாக ஏற்றுகொண்டு உபதேசம் பெற்று சொக்கலிங்க மூர்த்தி பூசையினை ஏற்றுக்கொண்டார்கள். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகையர், சியாமா சாஸ்திரி மற்றும் முத்துசுவாமி தீக்ஷிதர் வாழ்ந்த தலம் திருவாரூர். முத்துசுவாமி தீக்ஷிதர் கமலாம்பாள் நவாவரண கீர்த்தனை இயற்றியுள்ளார். பராசக்தியை ஸ்ரீசக்கர வடிவில் வழிபடுவது மரபு.  ஸ்ரீசக்கரத்தின் ஒன்பது ஆவரணங்களையும் ஒவ்வொன்றாக பூஜிக்கும் முறைகளையும் அவற்றில் எழுந்தருளியிருக்கும் ஆவரண தேவதைகளின் சக்திகளையும் தெளிவாக விளக்குகின்றன நவாவரண கீர்த்தனைகள். திருவாரூரின் சிறப்புகளைப் பற்றி கூரும் ஒரு பாடல் பெருந்தொகை என்ற நூலில் காணப்படுகின்றது இதோ அப்பாடல் சங்குதீர்த்த தந்திருச் சாளரவாயில் வீர சிங்காதனத் திருவந்திக் காப்புப் – பங்குனிமா தத்திருநா டீர்தீர்தந் திருவினா தன்கோயில் உத்திர பாதத் திருவாரூர். – சங்கு தீர்த்தம், தென்றல் வரும் திருச்சாளரவாயில், வீர சிம்மாசனம், திருவந்திக்காப்பு பூசை, பங்குனி மாதத்தில் கமலாலயத்தில் நீராடுதல் ஆகியவை தியாகவிநோதர் உத்திர பாத தரிசனம் அருளும் திருவாரூரின் சிறப்பு என்று இப்பாடல் பாட்டியலிடுகிறது. தெய்வக் கைங்கரிய பணிகளுக்கு ஏற்ப ஆலயப்பணியாளர்களுக்கு பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டன.  தியாகரஜரை பூஜை செய்வோர் நயினார் எனவும், ஆபரணங்களை பாதுகாப்போரை பொற்பண்டார் எனவும், தீப விளக்கு கைங்கரியம் புரிவோரை பரமராயர், சுவாமி திருவுருக்களை சுமப்போரை விழா பிரமராயர், பாரி நாயனம் இசைப்போரை நயினார் அடியார், அபிஷேக தீர்த்தம் சுமந்து வருவோரை திருமஞ்சனர், நைவேத்தியம் தயாரிப்போரை பரிசாரகாரர் எனவும்,. இறைவர்  முன் தேவாரம் ஓதுபவர்கள் கொண்ட சிறப்பு பெயர் திருப்பதிகம் விண்ணப்பிப்பார் எனவும் அழைக்கப்படுகின்றனர்.  இத்தேவாரப் பதிகங்களின் சிறப்புப் பெயர் “ கல்வெட்டுகள் திருப்பதிகம் “ ஆகும்.  திருவாரூர் ஆலயத்தில் இன்றளவும் பணியாற்றி வரும் பணியாளர்கள் நாயன்மார் பெயர்களால் சுட்டப்பெறுவது மரபாக உள்ளது. 1. மெய்க்காவலர் – விறண்மிண்டர் 2. திருமாலைத்தொடுப்பவர் – செருந்துணைநாயனார். 3. ஆலயத்தில் தீபமிடுபவர் – நமிநந்தியடிகள். 4. ஆலய நிர்வாக அதிகாரி – தண்டியடிகள். 5. அடியார் உபசரிப்பு – ஏயர் கோன் கலிக்காமர் 6. தூதுவளை இலை அளிப்பவர் – சோமாசி மாறனார்.    தியாகேசர் அஜபா நடனமாடி  ஆலய உட்பவனி வரும் போது செண்டை மாலை (ஒரு ஜான் நீள மல்லி, செவ்வந்திப் பூ, மலர்களால் கட்டியது.) அணிந்திருக்க ஒவ்வொரு திசைக்குரிய தேவதை குறித்து, ஆலயத்தில் பணிபுரியும் ஒருவர் உரத்த குரலில் சொல்லி வரும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. அவர் கொண்ட பெயர் பூத நிருத்தம் என்பதாகும். இதன் தொடர்பாக ஈசான திசையில் உற்சவர் வரும்பொழுது ஆலய முட்டுக்காரர் என்பவர் சுத்த மத்தளத்தை தன் தலை மீது கட்டியுள்ள பரிவட்டத்தில் வைத்து மேலே இருகைகளையும் தூக்கியவாறு அதனை வாசிப்பார். எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே பந்தம் வீடவை யாய பராபரன் அந்த மில் பக ழாரூ ரானெறி சிந்தை யுள்ளும் சிரத்துள்ளுந் தங்கவே – என்று அப்பர் பெருமான் பாடிய இத்தனை சிறப்புகள் பெற்ற திருவாரூரில் இறைவர்: புற்றிடங்கொண்டார், தியாகராஜர், அசலேஸ்வரர். இறைவி: சோமகுலாம்பிகை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள், கொண்டி அம்மன்,  வண்டார்குழலி. தல விருட்சம்: சிவப்பு பாதிரி மரம். தீர்த்தம்: கமலாலயம், சங்கு தீர்த்தம், காய தீர்த்தம், வாணி தீர்த்தம் முதலியன ஆகமம் : காமிகம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் மற்றும் பலர். திருவாரூர் பிறந்தார்கள்: பிறக்க முக்தி தரும் திருத்தலம் திருவாரூர் ஆகும். எனவே வன்தொண்டர், தம்பிரான் தோழர் நம்பியாரூரர் “திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்று பாடியுள்ளார். சேக்கிழார் பெருமானும்  திருத்தொண்டர் புராணத்தில் திருக்கயிலை விற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார் பெருக்கிய சீர்த்திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால் தருக்கிய ஐம்பொறியடக்கி மற்று அவர்தான் வணங்க ஒருக்கிய நெஞ்சுடையவர்க்கே அணிதாழும் உயர்நெறியே என்று பாடியுள்ளார். மலையரையன் பொற்பாவை உடனாய கயிலை நாதனை மட்டுமல்லாமல் அப்பெருமான் அமர்ந்த சீர்மிகு திருவாரூரையும் புகழ்ந்து அத்திருத்தலத்தில் பிறப்பவர்கள் அனைவரும் சிவகணங்கள் என்று ஏத்துகின்றார். இத்தலத்திற்குத்தான் எத்தனை எத்தனை பெயர்கள்.  பராசக்திபுரம், தேவயாகபுரம், கந்தபுரம், முசுகுந்தபுரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாகிரியாபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம் ஆகியவை அவற்றுள் சில. இத்தலத்திற்கு இப்பெயர்கள் விளங்கும் காரணம் என்னவென்று காணலாம். தேவர்கள் கறையான் வடிவம் கொண்டு இயற்றிய புற்றில் இந்திரன் சிவபாவனை செய்ய, அப்புற்றில் எம்பெருமான் சுயம்புவாக  - புற்றிடங்கொண்ட ஈசனாக எழுந்தருளியதால்  -  வன்மீக நாதபுரம். பிரம்மனின் உடலாகிய பிரம்மாண்டத்திற்கு மூலாதாரமாக விளங்குவதாலும், யோகநெறிக்கு உதவுகின்ற காரணத்தாலும் – மூலாதாரத்தலம். (ஆர் = மண், ஆர் + ஊர் = ஆரூர்.) ஐம்பூதங்களில் மண்ணைக் குறிப்பதாலும், மூலாதார சக்கரத்தின் தத்துவம் பிருத்வி என்பதாலும் – பிருத்வித்தலம். முன்னாளில் பெருமானைச்சுற்றி சாமரங்கள் வீசும் பூமரங்கள் அமைந்திருந்தாலும், நிலமகளின்(பூதேவி) இதயக்கமலமாக விளங்குவதாலும் – பூவிதயப் பெருங்கோயில். பரையாகிய ஆதிபராசக்தி இவ்வூர் சேர்ந்து தவமியற்றிதால் – பரையூர் - பராசக்திபுரம்.  உலகம்மை கமலாம்பாள்  என்று பெயர் கொண்டதால், திருமகள் வழிபட்டு பேறு பெற்றதால் – கமலாலயம் - கமலாபுரி   திருமகள் வருணனின் மகளாக பிறந்து, மது கைடபரை  வென்ற திருமாலை மணக்க தவம் செய்த தலம் என்பதால் - ஸ்ரீபுரம்.  பிற விடங்கத்தலங்களில் விளங்கும்  தியாகராஜ மூர்த்தங்கள் தேவதச்சன் விசுவகர்மாவால் உருவாகப்பட்டதாலும், திருப்பாற்கடலில், திருமால் தனது இதயக் கமலத்தில் வைத்து ஆராதித்த மூலமூர்த்தியான வீதிவிடங்கப்பெருமான் எழுந்தருளியிருப்பதால் – சப்த விடங்க முதன்மைத் தலம்  ஸ்ரீதியாகராஜப் பெருமான் வீதிவிடங்கரானதால் – வீதிவிடங்கம்.  சோமாஸ்கந்த தத்துவம் விளக்கமுறும் தலமானதாலும், இவ்வாலயத்தின் உள்ளார்ந்த தத்துவ இரகசியங்களில் கந்தப்பெருமான் தனிப்பெரும் சிறப்புடன் விளங்குவதாலும். பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திர தோஷம் நீக்கி சத்புத்திர பேறு அளிக்கவல்ல திறத்தால் – கந்தபுரம்.  சமற்காரன் என்ற மன்னன் பலகாலம் தவம் செய்து தொழு நோய் நீங்கப்பெற்றதால் – சமத்காரபுரம்.  முனிவர்கள், மன்னவர்கள் மட்டுமல்ல தேவரும் மற்ற தெய்வங்களும் இத்தலத்தில் சிவபூசை செய்து வரம் பெற்றமையால் – க்ஷேத்திரவரபுரம். இத்தலத்தில் பிறந்தவர்களுக்கு மீண்டும் பிறவா முக்தியை நல்குவதால் (இத்தலத்தில் உதித்தவர் பின்னும்  உதித்திடாததால்) – முக்தித்தலம். திருமாலின் தலைமையில் தேவர்கள் கூடி சிவபெருமானைக் குறித்து இத்தலத்தில் யாகம் இயற்றியதால் – தேவயாகபுரம். தசரதன் இத்தலத்தில் தங்கியிருந்த போது தன்னையும் தன் தேசத்தையும் பிடிக்க வந்த சனியை எதிர்கொண்டு வாதிட்டு பிறகு சனீஸ்வரனுக்கு நண்பனாக, மன்னனுக்கு மட்டுமின்றி இப்பதியில் இனி உட்புகேன் என சனிபகவான் வாக்களித்தமையினால் – கலி செலா(புகா) நகரம். வேதங்களின் ஆணவத்தை களைந்து அவைகளை பெருமான் இங்கே மரமாக்க அதனால் வேதங்கள் தனித்தனியே சிவலிங்கங்களை நிறுவி சிவபூசை செய்ததால் – வேதபுரி; மறையூர். அட்ட வசுக்கள், ஏகாதச உருத்திரர்கள், பன்னிரு  ஆதித்தியர்கள், இரு அசுவினி தேவதைகள் ஆகிய முப்பத்துமூன்று கோடி கணங்கள் கூடி நாடி கந்தமாகும் இக்கோயில் ஆடகேச்சுரத்தை கொண்டு விளங்குவதால் – அமாவாசை அற்புதம். விண்ணுலகை விடுத்து பூவுலகில்  திருவாரூரை விரும்பி இங்கே வந்து வீதி விடங்க தியாகராஜராக கோலோச்சும் பெருமானின் சத்திரிய பேரழகைக் கண்டு களிக்க அமரர்கள் தங்கள் முறை வரும் சமயம் பார்த்து ஆயிரங்கால் மண்டபத்தில் விரும்பி தங்கியிருப்பதால் – தேவாசிரியபுரம்.  இத்திருத்தலத்தின் அந்திக்காப்பின் பொது ஏனைய சிவதலங்களின் சிவகலைகள் அனைத்தும் இத்தலத்தில் ஒடுங்குவதால் – திருத்தலங்களின் தாய்.  “உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையான் நடுவில் நீயிருத்தி” என்று மாணிக்கவாசகப்பெருமான் பாடியபடி, ஐயனின் உட்புகுந்து அம்மையும், அம்மையின் உட்புகுந்து ஐயனும் பிரிவற அபின்ன பாவத்தில் இத்தலத்தில் விளங்குவதால் – அந்தர்கதேசுவரம். விண் துறந்து ஆரூர் மண் புகுந்த தியாகராஜர் கோலோச்சுவதால் – பூலோக கயிலாயம்.  தன்னகத்தே உள்ள உயிர்கள் மட்டுமல்ல, தரிசிக்க வரும் மற்ற ஊர் அன்பர்கள் இங்கே பெருமானின் அருட்திறத்தால் சிவகணங்களாவதால் “ஸ்பரிஷ தோஷம்” நீக்கும் தலம் என்பதால் – சர்வ தோஷ நிவர்த்தித் தலம்.  சமயக்குரவர்களும் புலவர் பெருமக்களும், சான்றோர்களும் சமய மணம் கமழ பக்தி நலம் பெருக சைவ நெறி பரப்ப,  தில்லைக்கும் மேலான களமாக அமைந்ததால் – சைவ சமயத்தின் தலைமைப் பீடம். சைவர்களுக்கு கோயில் என்றால் தில்லை என்று குறிக்கும் கல்வெட்டு மொழி மரபில் திருவாரூர் – பெரிய கோயில்.  நாம் வணங்குவதை மறைந்திருந்து தேவர்களும் காண்கின்ற பெருமை பெற்ற – தேவசிந்தாமணி பீடம். அருமைப் புதல்வன் என்றும் பாராமல் அவன் மீது தேரைச் செலுத்தி பசுவின் துயர் துடைத்த மனுநீதிச் சோழன்  அரசாண்ட – நீதித்தலம்.  சோழ மன்னர்கள் முடி கவித்துக்கொள்ள விருப்பமொடு தேர்ந்தெடுத்த  ஐந்து நகரங்களில் ஒன்றான காரணத்தால் – மணிமுடி நகரம்.  இதுவரை எம்பெருமான் தியாகேசராக அருள் பாலிக்கும் திருவாரூர் தலத்தின் தனி சிறப்புகளைப் பற்றிக் கண்டோம் வாருங்கள் அன்பர்களே அத்தியாகேசப்பெருமானுக்கே உரிய சிறப்புகள் என்ன என்று காணலாம்.   ஆரூரா!                                            தியாகேசா!!               14. தியாகேசபெருமானுக்கே உரிய தனிப்பெரும் சிறப்புகள் []   சிவபெருமானுக்கு மகேசுவரன் என்றொரு திருநாமம் உண்டு. அதை மகத் ஐஸ்வர்ய:  அதாவது சகல ஐஸ்வர்யங்களும், மங்கலங்களும் நிறைந்தவர் என்று பொருள். இது தியாகராஜப்பெருமானுக்கு, சாலப்பொருந்தும் வாருங்கள் அன்பர்களே தியாகேசருக்கு உள்ள தனிப்பெரும் சிறப்புகள் எவை என்று விரிவாகக் காணலாம். இரத்தின சிம்மாசனம்: முத்து விதானத்தின் கீழ்  தியாகேசர் எழுந்தருளும் சிம்மாசனம் ஸ்ரீபீடம், இரத்தின சிம்மாசனம், மந்திர சிம்மாசனம் என்றழைக்கப்படும் ஆசனம் ஆகும். யோகிகள் துவாதசாந்த மந்திர சிம்மாசனம் என்றும் அழைப்பர். தங்கத்தகடுகள் வேய்ந்த சந்தன மரத்தால் செய்யப்பட்ட இச்சிம்மாசனத்தில் கலை நயம் மிக்க நகாசு வேலைப்பாட்டைக் காணலாம். நான்கு சிம்மங்கள் தாங்கி நிற்பதால் சிம்மாசனம் எனப்படுகிறது. பூமாலை- புஷ்ப விருஷ்டி : ஆராதனையின் போது தேவர்கள் தேவ துந்துபிகளை முழக்கி கற்பக மலர்களை மழை போலப் பொழிவர். இதனை மலர் மழை அல்லது புஷ்பவிருஷ்டி என்பர். இது தியாக கற்பர் விண்ணுலகத்தை விடுத்து பூவுலகம் வந்தவர்  என்பதை உணர்த்துகின்றது.  எனவே சிறப்பு பூசனையின் போது அர்த்தமண்டபம் தொடங்கி மகாமண்டபம் வரை மலர்ப் பந்தல் அமைக்கப்படுகின்றது. தற்போது தியாகேசர் பவனி வரும் போது பன்னீர் தெளித்தும் மலர்கள் தூவியும் வழிபடுகின்றனர். புஷ்பாஞ்சலி : சுத்த நிருத்தம் என்னும் நடனத்திற்குப் பிறகு  பெருமான் மீது பூக்களைத் தூவி அஞ்சலி செய்தல் புஷ்பாஞ்சலி எனப்படும். தேவ கன்னிகை அரம்பையர்கள் தினமும் புஷ்பாஞ்சலி செய்வதாக ஐதீகம். முன்னாளில் பதியிலார் என்ற உருத்திரகணிகையர் இப்புஷ்பாஞ்சலியை செய்வது வழக்கமாக இருந்தது.   வெண்கவரிகள்: மயிர் நீக்கின் உயிர் வாழாக் கவரிமானின் முடியினால் செய்யப்பெற்ற வெண்சாமரங்கள் அரசனின் சின்னம். எனவே அமரர்கள் துதிக்கும் இராஜாதிராஜனான  தியாகராஜனுக்கு வெண்கவரி கொண்டு வீசுவது வழக்கம். மாலை நேர பூசையின் போதும், பவனி வரும் போதும் வெண் கவரி வீசுகின்றனர். வீரகண்டயம் – வாள்:  பெருமானின் முன்பாக சாய்வாக இரண்டு வாள்கள் வைக்கப்பெற்றுள்ளன. அவை வீரகட்கம், ஞான கட்கம் ஆகும் பெருமான் மாமன்னனாக சத்திரியராக எழுந்தருளியிருப்பதால் பெருமானின் பராக்கிரமத்தை காட்ட வீர வாள். அடியார்களின்  மும்மலங்களை அறுத்து  சாயுச்சியம் என்கிற மேலான பதவியை நல்குவது ஞானவாள். சரஸ்வதி பூசையன்று சிறப்பு அபிஷேகம் செய்வித்து பின் உறையிலிடுவர்.  பொதுவாக இறைவன் தேரில் வலம் வருவதை அருளல் என்பர். ஆனால் ஆருரில் ஆழித்தேரோட்டம் அழித்தல் என்னும் சம்காரத்தை உணர்த்துகின்றது. எனவே ஆழித்தேரோட்டத்தின் போது இவ்வாள்கள் தேரின் மையப்பகுதியில் வைக்கப்படுகின்றன. தியாக பரிவட்டம்: தியாகராஜனுக்கு அணிவிக்கப்பெறும் நீண்ட துணியே பரிவட்டம், 21 பரிவட்டங்கள் கொண்டு உள் அலங்காரம் நடைபெறுகின்றது.  வெள்ளை வேட்டியில் ஐந்து கோடுகளை உடையது பரிவட்டம். ஒவ்வொரு சோமவாரத்தன்றும் இரகசிய அபிஷேகத்திற்குப்பின் இவை மாற்றப்படுகின்றது. தியாகராஜர் சிம்மாசனத்தின் மையப்பகுதியில் அமர்ந்துள்ளார், அவரது இடப்பக்கம் கொண்டிஅம்மை. வலப்புறம் பூமி தத்துவத்தை குறிக்க நீல நிறப்பட்டுத்துணியில் சரிகையால் ஒரு லிங்க வடிவம் பொறித்த பட்டு அணிவிக்கப்படுகின்றது. குசுமப்பட்டும் மான்தோலும்: ஒரு காலத்தில் பெருமானுக்கு செம்பட்டாலான ஆடைகள் அணிவிக்கப்பட்டு வந்தன. இதனை குசுமப்பட்டு என்றழைத்தனர். குளிர் காலத்தில் மெல்லிய மான்தோலால் ஆன ஆடைகளும் பெருமானுக்கு அணிவிக்கப்பட்டன. கிருஷ்ணகந்தம் – தியாக விநோதம்: மாலையில் சுவாமி அணியும் கருஞ்சாந்தே கிருஷ்ணகந்தம். பதினெட்டு மூலிகைகள், சந்தனம், நெய் கொண்டு இது தயாரிக்கப்படுகின்றது. இச்சாந்தை பெருமானின் செவ்வந்தி தோடுகளில் பூசி அணிவிப்பர். திருவந்திக் காப்பின் முடிவில் அன்பர்களுக்கு வழங்கப்படும் விபூதியில் கலந்து வழங்குகின்றனர். இதை “தியாக விநோதம்” என்பர்.  ஆழி தேரோட்டத்திற்கு முதல் நாள் மாலையில் சிறப்பு பூசை செய்து அணிவிக்கின்றனர். இதற்கு “திருச்சாந்து” என்றழைக்கின்றனர். நறுந்திலகம்: பெருமானுக்கு தேவ சாயரட்சை என்கிற திருவந்திக்காப்பின் முன் பச்சை கற்பூரம், குங்குமப்பூ, சந்தனம் கலந்த செந்நிறத் திரவியத்தை திலகமாக அணிவிக்கின்றனர். அபிஷேக காலத்திலும் ஐயனுக்கு நறுந்திலகம் அணிவிக்கப்படுகின்றது. தலைச்சீரா: இது பெருமானின் திருமுடியை அலங்கரிக்கும் ஒரு வகை அணியாகும். உயர்ந்த ஜாதிக்கற்களைப் பதித்து கலைநயத்துடன் சதுர வடிவில் உருவாக்கப்பட்ட அணிகலன். இது சூளாமணி என்றும் அழைக்கப்படுகின்றது. எனவே  திருநாவுக்கரசர் எம்பெருமானை “சூளாமணி சேர் முடியான்” என்று  பாடிப்பரவுகின்றார். கங்கையும் பிறையும்: தலைச்சீராவின் இருபுறமும் பிறைநிலவு போன்ற இரண்டு அணிகலன்கள் காணப்படுகின்றன.  இதில் ஒன்று பெருமானின் சடையில் இலங்கும் கங்கை. மற்றது வளரும் இளம்பிறை. ஆகவே அப்பர் பெருமான். “நீரூரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலாத்திங்கள் துண்டத்தாய்” என்று போற்றிப் பாடுகின்றார். கங்கையை தாங்கி பூமியை காத்த தியாகத்தையும்,  தட்சனின் சாபம் பெற்ற சந்திரனுக்கு அருளிய திறத்தையும் இவை உணர்த்துகின்றன. சம்பந்தப்பெருமான் கோளறு பதிகத்தில் “மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து  என் உளமே புகுந்த அதனால்” என்று பாடுகின்றார். துவாதசாந்தத்தில் குவியும் சாதகனின் மனமும், அதனால் அவன் சிரசை சுற்றி விளங்கும் சோமவட்டம் ஒரு பிறை என்றும், யோகியின் சிரசில் விளங்கும் குண்டலினியே கங்கையாகிய மற்றொரு பிறையாகும் என்பர் பெரியோர். செவ்வந்தித் தோடு: பிறைகளுக்குக் கீழே மலர்களால் அமைக்கப்பட்ட இத்தோடு அணிவிக்கப்படுகின்றது. செவ்வந்தி கிடைக்காத காலத்தில் மல்லிகை, சண்பகம் மற்றும் பன்னீர் இலைகளால் இவை கட்டப்படுகின்றன. கிருஷ்ணகந்தம் இத்தோடுகளில் பூசி பெருமானுக்கு அணிவிக்கின்றனர். எனவே பெருமான் “செவ்வந்தித் தோடழகர்”  என்று போற்றப்படுகின்றார். திருப்பணி: பெருமானுக்கு அணிவிக்கப்படும் மாலைகள் ஆகும். முல்லை, மல்லிகை, ரோசா போன்ற நறுமணம் மிகுந்த மலர்களால் ஆனவை. செவ்வந்தித்தோடு, திருப்பணி இரண்டும் சேர்ந்து பூத்தோடு கரவாரம் என்பர். தியாகேசர் ஸ்ரீவித்யை நாதரானதால் மணங்கமழ் மலர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இண்டை மாலை என்றும் அழைக்கப்படும் இம்மாலைகளை திருவந்திக்காப்பின் போது சார்த்திக்கொண்டு அருள்பாலிக்கின்றார். சிரமாலை: தியாகராஜரின் மார்பை அலங்கரிக்கும் மாலை இது. கல் பதக்கங்களின்  இருபுறமும் இம்மாலை அலங்கரிக்கின்றது. இத்தலைகள் பிரம்மனின் சிரம் என்பது ஐதீகம். பிரம்மனின் காலம் முடிந்த பிறகு அவன் தலையை பெருமான் அணிந்து கொள்கிறார். இப்படி எண்ணிலடங்கா பிரம்மாக்களின் தலை ஐயனின் சிரமாலையில் உள்ளது. குமரகுருபரர் திருவாரூர் நான்மணி மாலையில் இதனை “வள்ளமுலை கலைமடந்தை மகிழ்நர்தலை மாலை சிரமாலையாகக் கொள்ளுவது” என்று பாடுகிறார். பெருமான் தத்துவாதீதன் மட்டுமல்ல காலாதீதன் என்பதை இப்பிரம்மசிர மாலை உணர்த்துகின்றது. எனவே “தலையுருவ சிரமாலை சூடினான்“ என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார். ஆழிவளைக் கையான்:  பெருமானின் திருக்கரங்களில் அணிகின்ற மோதிரங்களுக்கும் காப்புக்கும் ஆழிகள் என்று பெயர். எனவே பெருமானை “ஆழிவளைக் கையானும் ஆரூர் அமர்ந்த அம்மான்” என்று திருவாரூர் தேவாரம் போற்றுகின்றது. செங்கழுநீர் பூக்கள்: சிவபெருமானுக்குரியவை செங்கழுநீர் பூக்களாகும். வடமொழியில் இது கல்ஹார புஷ்பம் என்றழைக்கப்படுகின்றது. இவ்வரிய மலர் பெருமானுடைய பூசைக்காகவே  பெருமானுடன் தேவருலகத்திலிருந்து திருவாரூர் வந்தததாம்.  பெருமானுக்கு பூசைக்கு பயன்படுத்த ஐந்து வேலி பரப்புடைய ஒரு ஓடை கோயிலுக்கு கிழக்கே அமைந்துள்ளது. இக்குளத்தின் ஒரு பகுதியில் அம்பாள் தன் நாமம் கொண்ட நீலோத்பல மலரும் பயிரிடப்படுகின்றது. பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்… எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றியைந்த ஓடையாக இவ்வோடை  விளங்குகின்றது. அந்திக்காப்பு: தியாகராஜப்பெருமானுக்குரிய தனிப்பெரும் சிறப்புடைய பூசை திருவந்திக்காப்பு என்றழைக்கப்படுகின்றது. விண்ணுலகம் விடுத்து அடியார்களுக்காக திருவாரூரில் அமர்ந்தாடும் வீதிவிடங்கப்பெருமானை  மகாவிஷ்ணு பூஜிக்கும் சிறப்புடையதால் இது தேவசாயரட்சையாகும்   தேவர்கள் அமரருலகம் விடுத்து பூலோகம் வந்து பெருமானுடைய இப்பூசையில் பெருமானை தரிசிக்கின்றனர். திருவந்திக்காப்பின் போது  அலங்காரமும், உபச்சாரங்களும் விரிவாகவும் சிறப்பாகவும் அமைகின்றன. இதனால் பெருமானுக்கு “அந்திக்காப்பழகர்” என்பது சிறப்புப்பெயர். இப்பூசையின் போது அனைத்து சிவாலயங்களின் சிவ கலைகள் அனைத்தும் ஆரூர் பெருமானிடம் ஒடுங்குகின்றது என்பது ஐதீகம். முனிவர்களும்,  ரிஷிகளும் வணங்க வருவதால் இது நித்ய பிரதோஷம் என்னும் சிறப்புடையது. திருச்சாலகம்: தியாகேசர் திருவோலக்கம் கொண்டு எழுந்தருளியுள்ள கருவறையின் இரு புறமும் எதிரெதிராக தென்றல் தவழ்ந்து வர ஏதுவாக இரண்டு சன்னல்கள் உள்ளன, இத்திருச்சாலகம், திருச்சாளரம் எனப்படுகின்றது. தேவாச்சிரியம் – திருக்காவணம்: தியாகரை தரிசிக்க வரும் தேவர்கள் தங்கள் முறை வரும் வரை தங்கியிருக்கும் மண்டபம். எனவே சமயம் பார்த்து காத்திருக்கும் தேவாச்சிரிய மண்டபம் என்றழைக்கப்படுகின்றது. விரும்பி தங்கியிருத்தல் என்பது ஆச்சிரியம் எனப்படும். தற்போது இது ஆயிரங்கால் மண்டபமாக திகழ்கின்றது. வசந்த காலத்தில் “பக்தர் காட்சிக்கு” எழுந்தருளுவதற்கு முன்னர் இம்மண்டபத்தில் அபிஷேகம் கண்டருளுகின்றார். திருமருந்து: தியாகேசப்பெருமான் வீதிகளில் அஜபா  நடனமாடி  பவனி வந்து  ஆலயத்தில் எழுந்தருளியதும் அவரது அசதி நீங்க அவருக்கு சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் கலந்து தயாரிக்கப்பட்ட திருமருந்து நிவேதனம் செய்யப்படுகின்றது. இது போன்று தவளப்புளி, அம்பாரப்புளி என்ற மருந்துகளும் நிவேதனம் ஆகின்றன. திருமந்திரம்: “முத்தி தருவது நீறு” என்று ஆளுடையப்பிள்ளை சம்பந்தப்பெருமான் போற்றிய திருநீறு. இவ்வாறு போற்றப்படும் திருநீறு திருவந்திக்காப்பு நிறைவு பெற்ற பின்னர் கிருஷ்ண கந்தம் கலந்து வழங்கப்படுகின்றது இது “திருமந்திரம்”  என்றழைக்கப்படுகின்றது. வசந்தவிழா:  திருமால் தியாகேசரை பூசை செய்து பெற்ற மைந்தன் வசந்தன் என்னும் மன்மதன், அவன் போற்றி வழிபட்ட விழா வசந்த விழாவாகும்.  எனவே எம்பெருமானுக்கு வசந்த வைபவ தியாகராஜர் என்று திருநாமம்.  இரதியும், மன்மதன் என்னும் வசந்தனும், அவன் இளவல் சாமனும் இந்நாளில்  தியாகேசரை வழிபடுகின்றனர். பதிகம் பாடுதல்: பொதுவாக சிவாலயங்களில் திருமுறைகளைப் பாடுவதற்கு முன்னும் பின்னும் “திருச்சிற்றம்பலம்” என்று கூறுவது மரபு. ஆனால் திருவாரூரில் மட்டும் பதிகங்களைப்  பாடும் போதும் முடிக்கும் போதும் “ஆரூரா தியாகேசா” என்று  இரு முறை கூறப்படுவது சிறப்பு அம்சமாகும். ஏனெனில் திருவாரூர் திருத்தலம்  தில்லைக்கு முற்பட்ட தலம் என்பதால் இச்சிறப்பு. இத்தலத்தில் திருமுறைகளை இரண்டு பேர் பாடுகின்றனர். ஒருவர் பாடுவார் இன்னொருவர் அலரிப் பாடுவது இத்தலத்தின் தொன்மையாகும்.   ஆயிரம் பெயருடையான்: ஆரூர் பெருமான் ஆயிரம் பெயருடையான். ஆயிரம் என்பது அளவில்லாத என்கிற பெருமிதமான பொருளையும் குறிக்கும்.  அப்பர் பெருமான் இதை “எண்ணரிய திருநாமம் உடையான் தன்னை” என்று தமது திருவாரூர் பதிகத்தில் பாடுகின்றார் மாணிக்கத்தண்டு: தியாகராஜப்பெருமானின் அஜபா நடனத்தை நிகழ்த்த உதவும் வகையில் அமைந்ததே திருவாடு தண்டு, இது மாணிக்கத்தண்டு. என்றும் வாரை என்றும் பிள்ளைத்தண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. மூங்கில் வாரைகளில் திண்டுகளில் வைத்து சிம்மாசனத்தை வைப்பதைத் தவிர, இறுக்கிக் கயிற்றால் கட்டுகிற வழக்கமில்லை. இம்மணித்தண்டை வாரைகளில் ரகசிய கயிற்றால் பொருத்தி பிறர் காணா வண்ணம் விழிப்பரமர் என்ற மரபைச் சேர்ந்தவர்கள் பெருமான் பீடத்தோடு வாரைகளை இணைக்கின்றனர். இதனைத் பிள்ளைத் தண்டு இரகசியம் என்பர். இம்மணித்தண்டு சிவராஜயோகியின் முதுகுத்தண்டு (Spinal Cord) ஆகும். அஜபா நடனம் யோக நெறி பற்றியதல்லவா? அன்பர்களே. விடங்கர்: பெருமான் திருமேனி இரகசியம் என்பதால் இவருக்கு செய்ய வேண்டிய அபிஷேகங்கள் இவரின் பிரதி உருவமான மரகத சிவலிங்கத்திற்கே நடைபெறுகின்றது. இவர் வீதிவிடங்கர் என்றழைக்கப்படுகின்றார்.  வீதி விடங்கர் மரகத மேனியர். சதுரவடிவ வெள்ளி ஆவூடையாரின் மேல் நிலைபடுத்தபட்டுள்ளார். இம்மரகத விடங்கர் வெள்ளிப் பேழையில் தியாகேசப்பெருமானுக்கு வலப்பக்கம் எழுந்தருளியுள்ளார். தினமும் மூன்று வேளை இவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. இவருக்கு சார்த்தப்பட்ட சந்தனம் மருத்துவ குணம் கொண்டது. நின்ற இடபம்: பொதுவாக சிவபெருமானின் சன்னதியில் நந்தியெம்பெருமான் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிப்பார். ஆனால் சப்த விடங்க தலங்களில்   நின்ற கோலத்தில்  செப்பு நந்தியாக அருள் பாலிக்கின்றார். இறைவன் சத்திரியக் கோலத்தில்   எழுந்தருள்வதால்   ஆயத்த நிலையில் காட்சி தருகிறார் என்பது ஐதீகம். தியாகராஜபெருமானுக்கு முன்னால் படுக்கக்கூடாது என்ற மரியாதையின் நிமித்தம் இவ்வாறு நின்ற நிலையில் உள்ளார் என்றும்  கூறுவர்.  மேலும் தன் தோழன் சுந்தரருக்காக தன் பாத மலர்கள் நோக தூது சென்ற காரணத்தால், பெருமான் அவசரத்தில் நந்தி மேல் அமர்ந்து செல்லாமல், திருவீதியில் நடந்தே சென்றார். இனி இவ்வாறு நடக்கக்கூடாதென்று அவர் புறப்படும் போது பெருமானைத் தாங்கிச்செல்ல தானும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக   எழுந்து ஆயுத்தமாக நிற்கின்றது என்றும் கூறுவர். இவர் செம்பால் வார்க்கப்பெற்றவர் என்பதும் ஒரு சிறப்பு. கட்டியங் கூறல்: மன்னர்களின் வருகையை உணர்த்துவதே கட்டியங்கூறல். இத்தலத்தில் தியாகவிநோதர் இராஜகோலத்தில் கொலு வீற்றிருப்பதால், அவர் பவனி வரும் போது தியாகராஜரின் வருகையை உணர்த்தும் கட்டியங்கூறும் முறை பல்லாண்டுகளாக ஆரூரில் போற்றப்பெறும் நெறி ஆகும். திரைக்குப்பின் சுத்த மத்தளம்: தியாகப்பெருமான் திருவிழாவில் பதினெட்டு வகையான வாத்தியகோஷம் முழங்கும். குறிப்பிட்ட சில விழாக்களின் போது சுத்தமத்தளம் வாசிக்கும் கலைஞர்களுக்கு பட்டு பரிவட்டம் சூட்டி மரியாதைகள் செய்யப்படும். பின்னர் அவர் சுவாமிக்குப் பின்புறமாக நின்று கொண்டிருக்க திரை இடப்படும். உடன் சுத்தமத்தள வாத்தியம் முழங்கும். லயவடிவான இப்பூசை தியாகருக்கே உரிய ஒரு சிறப்பாகும்.   பூத நிருத்தம்: சந்திரசேகரர் திருவிழாவின் போது ஈசான திசைக்கு இறைவன் திருமேனி எழுந்தருளும் போது முட்டுக்காரர் சுத்த மத்தளத்தை தலையில் கட்டியுள்ள பரிவட்டத்தின் மேல்வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் உயர்த்திய வண்ணம் மத்தளத்தை வாசிப்பார். இதற்கு பூத நிருத்தம் என்று பெயர். இவ்வாறு வாசிக்கும் போது பூத கணங்கள் சந்திரசேகரர் முன்பு நிருத்தம் புரிவதாக ஐதீகம். எனவேதான் முட்டுக்காரர் தலைக்கு மேலாக மத்தளம் இசைக்கிறார். தியாகேசரின் கணங்கள்:  தியாகராசப் பெருமான் இராஜாதிராஜர் என்பதால் அவர் எப்போதும் தனியாக வீதிகளில் எழுந்தருளுவதில்லை. அருமணி தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப்பாடியார் உரிமையால் தொழுதெழுவார் உருத்திரப் பல் கணத்தார் விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள் தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே   இதில் முதலாவதாக சொல்லப்பட்டுள்ள அரம்பையர்கள் வானுலக மடந்தையர்கள். அவர்கள் பெருமானை பிரிய மனமின்றி பூவுலகில் பதியிலார் மரபில் தோன்றித் தியாகேசனையே பதியாக அடைந்தவர்கள் என்பார்கள். மற்றவர்கள் எம்பெருமானின் கணங்கள் ஆவர்.  1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுதெழுவார் – ஆதி சைவர், 3.உருத்திர பல்கணத்தார் – சிவ கணத்தார், 4. விரிசடை விரதிகள் – துறவிகள், 5. அந்தணர், 6. சைவர், 7. பாசுபதர் – சங்கிராந்த சமவாதி, 8. கபாலிகள் – ஆவேச சமவாதி. தேவர் தொழு நாயகன்: வானுலக தேவர்கள் தினமும் அந்திக்காப்பின் போது பெருமானை வழிபடுகின்றார். மாலை கால பூசைக்கு சற்று முன்னதாகவே தேவாசிரிய மண்டபத்தில் அவர்கள் காத்திருப்பதால் அம்மண்டபத்திற்கு சமயம் பார்த்துக் காத்திருக்கும் தேவாசிரியம் என்று பெயர். எனவே எம்பெருமானுக்கு தேவர் நாயகன் என்று திருநாமம். அப்பர் பெருமானும் நாளும் வானோர் சிறப்பொடு பூசிக்கும் திருவாரூரில், அமரர்கள் தம்பெருமான், என்றெல்லாம் பாடுகின்றார். மேலும் எம்பெருமானுக்கு தேவநாயகன், தேவரகண்டர் முதலான திருநாமங்களும் உண்டு. இவை யாவும் தியாகேசரை ஓயாது தேவர்கள் பணிந்து மகிழ்வதைக் குறிக்கும் அருள் மொழிகளாகும்.      சோமகுல இரகசியம்:  திருவாரூரில் இவ்வளவு சிறப்புகளுடன் எழுந்தருளியுள்ள தியாகேசரின் முழு மூர்த்தத்தையும் யாரும் கண்டதில்லை. தில்லை இரகசியம் போல திருவாரூர் இரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோமகுல இரகசியம் என்பர். சுவாமியின் மார்பை ஸ்ரீசக்கரம் அலங்கரிப்பதால் முழு திருமேனியையும் காண முடியாது.   நித்தியப்படி முக தரிசனம் மட்டுமே நமக்கு  கிட்டும். திருவாரூரில் முக தரிசனம் திருவிளமரில் பாத தரிசனம் என்பது ஐதீகம். திருப்பாத தரிசதனத்தன்று மட்டும் ஸ்கந்தனையும் சேர்த்து தரிசனம் பாக்கியம் நமக்கு கிட்டும். திருவாதிரையன்று வியாக்ர பாதருக்கும் பதஞ்சலிக்கும் எம்பெருமான் இடதுபாத தரிசனத்தை தந்து அருளியதால்  வருடத்தின் அந்த ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 3 மணிவரை பிரம்மாவும், திருமாலும் காண முடியாத   வீரக்கழலணிந்த இடதுபாத தரிசனத்தை ஆதிஷேசன் மேல் வைத்த  நிலையில்  நாம் காணலாம் மேலும் கொலுசு, சிலம்பு அணிந்த அம்மையின் வலபாதத்தை தாமரை மலரின் மேல்  நாம் கண்டு ஆனந்தம் கொள்ளலாம். என்னே ஒரு அற்புதமான காட்சி அது அன்றே முழுதும் வைரங்களால் போர்த்தப்பட்ட ஸ்கந்தனையும் காணும் பேறு நமக்கு கிட்டும். பங்குனி உத்திரத்தன்று  பக்த ஜன சேவையின் போது  இவ்வாறே  வலது பாத தரிசனம் பெறலாம். அபிஷேகம்: எம்பெருமான் மஹா அபிஷேகம் கண்டருளும் புண்ணிய நாட்கள் சித்திரை மாதப் பிறப்பு, ஆடி மாத ஐயனம், ஐப்பசி விஷு, மார்கழி திருவாதிரை, தை முதல் நாள், பங்குனி உத்திரம் ஆகும். விழாக் காலங்களில் தியாகேசர் தேரிலிருந்து இறங்கி ஆலயத்தின் உள்ளே வந்ததும் இராஜநாராயண மண்டபத்தில் அன்றிரவே பஞ்ச மூர்த்திகளுடன் பிராயச்சித்த அபிஷேகமும் பக்தர் காட்சிக்கு முன்பு பகலில் மகா அபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகின்றன. இவை தவிர சூரிய மற்றும் சந்திர  கிரகண காலங்களில் பெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். சோமவார அலங்காரத்திற்கு முன் உரிமையில் தொழுதெழுவார் ஆகிய நயனார்கள் இரகசிய அபிஷேகம் செய்கின்றனர். தியாகராஜருக்கு செய்யப்படும் அபிஷேகத்தை காண்பதே ஒரு அற்புத அனுபவம் என்றால் மிகையாகாது. பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், கருப்பஞ்சாறு, 108 சங்கு தீர்த்தம், வலம்புரி சங்கு தீர்த்தம், காண்டாமிருகத்தின் கொம்பில் நிரப்பப்பட்ட நீர், கும்ப நீர் ஆகியவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெறுகின்றது. அபிஷேகத்திற்குரிய நீரில் ஏலம், இலவங்கம், விளாமிச்சை வேர் கலக்கின்றனர். இவர் இரகசிய மூர்த்தி என்பதால் சுவாமி, அம்பாள், ஸ்கந்தனின் திருமேனிகள் துணியால் மறைக்கப்படுகின்றன. தலையில் உள்ள மகுடம் தெரியாதவாறு பன்னீர் இலைகளால் ஆன இண்டை அணிவிக்கப்படுகின்றது. பாதங்களை மறைத்து விடுகின்றனர். அபிஷேகத்தின் போதும் கூட  அன்பர்களுக்கு முக தரிசனம் மட்டுமே கிட்டுகின்றது. திருப்பாத தரிசனம்: மார்கழி திருவாதிரை நாளில் இடது திருப்பாத தரிசனமும், பங்குனி உத்திர நாளிலும் வலது திருப்பாத தரிசனம் பெறலாம். உடன் உமையம்மையின் பாதத்தையும் தரிசிக்கலாம், பெருமானின் பாதத்தை ஆதி சேஷனும், அம்மையின் பாதத்தை தாமரையும் தாங்குவது போல அலங்காரம் செய்திருப்பார்கள். தாமரை – மூலாதார பத்மம்; நாகம் – குண்டலினி சக்தி. இந்நாட்களில் மட்டும் ஸ்கந்தரை வைர கவசத்தில் தரிசிக்கலாம். இதனை உருத்திர பாத தரிசனம் என்பர். ஆரூரன் சன்னதி போல் ஆருரன் ஆலயம் போல் ஆரூரன் பாதத்து அழகு போல் – ஆரூர் மருவெடுத்த கஞ்சமலர் வாவி போல் நெஞ்சே! ஒரு இடத்தில் உண்டோ உரை? என்று ஒரு தனிச் சுவடிப் பாடல் ஆருரின் பெருமைகளில்   தியாகேசரின் திருப்பாத அழகையும் பட்டியலிடுகின்றது. மார்கழித் திருவாதிரையன்று தில்லையில் சிவபெருமானின் இடது பாத தரிசனத்தைப் பெற்ற பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள், திருவாரூர் வந்து பங்குனி உத்திர தினத்தன்று பெருமானின் வலது  திருப்பாத தரிசனத்தைப் பெற்றனர் என்பது ஐதீகம். சிவராஜ யோகத்தில் சாதகனுக்கு ஏற்படும் ஆகாய சம்மியம் அல்லது நாத சம்மியம் என்கிற அனுபவமே பாததரிசனம் என்பர். திருவாரூரில் முகதரிசனம், விளமரில் திருப்பாத தரிசனம் என்பர்.  தியாகேசரின் பாத தரிசனம் விளமரில் கிட்டுகின்றது. எனவே திருப்பாத தரிசனத்தன்று விளமரிலிருந்து பதஞ்சலி வியாக்ரபாதர் உற்சவத்திருமேனிகள் திருவாரூர் எழுந்தருளுகின்றனர். பின்னழகு: பெருமானின் முன்னிலும் மும்மடங்கு பின்னழகு எழிலார்ந்த தோற்றம் உடையது. எழிலார்ந்த தங்கக்கவசம் சார்த்தியுள்ளனர். அழகாக சடை பின்னியுள்ளனர். மணிகள் இழைத்த இச்சடை பெண்ணுக்கு உரியது போல உள்ளது. மேலும் பெருமானின் முழங்கைகளையும் இறக்கைகளையும் தரிசிக்கலாம். சடைப்பின்னல் பெருமான் ஸ்ரீவித்யா தந்திரத்தோடு தொடர்புடையவர் என்பது குறியீடு. இறக்கை இவர் ஹம்ஸ மந்திர வடிவினர்   என்பதை குறிக்கின்றது. பெருமானின் பின்னழகு பேரழகு. இதனால் “முன்னிலும் மும்மடங்கு பின்னழகர்” என்று   போற்றப்படுகிறார்.  ஆழித்தேரிலும், பாத தரிசன நாட்களிலும் பெருமானின் பின்னழகை திவ்யமாக  தரிசிக்கலாம்.   கிண்கிணிக் காலழகர்: பெருமானின் பாதங்களில் கிண்கிணிகள் அணிவிக்கப் பெற்றுள்ளன. எனவே இவர் கிண்கிணிக் காலழகர் ஆயினார். இத்திருவடிகளை நாவுக்கரசர் ஆடரவக் கிண்கிணிக்கா லன்னானோர் சேடனை ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே என்று பாடி பரவியுள்ளார். குமரகுருபரரும் “ஆரூர்க் குழகனார் கிங்கிணிக் காலழகனாரே” என்று போற்றியுள்ளார். திருநாமம்: எம்பெருமானின் வடிவமோ இப்படியென்றால் நாமமோ எண்ணிலடங்காது. ஆதிரையான்,  கூத்துகந்தான், ஆடல் வல்லான், அசைந்தாடிய பெருமான், அடிக்காயிரம் பொன்னளிப்பவர், அந்தியும் சந்தியுமாடுவார், அசைந்தாடும் அப்பர்,  இரத்தின சிங்காதிபதி, இருந்தாடழகர், தக்கார்க்குத்தக்கான், தேவார கண்டப்பெருமான்,  கம்பிக்காதழகர், கமலேசர்,  கருணாகரத் தொண்டைமான், கிண்கிணிக் காலழகர்,  தியாகப் பெருமான், தியாக சிந்தாமணி, தியாக வினோதர், தேவ சிந்தாமணி, தேவ நாயகன், தேவரகண்டப் பெருமான், திருவந்திக்காப்பழகர், முன்னிலும் மும்மடங்கு பின்னழகர், செங்கழுநீர் அழகர், செவ்வந்தித் தோடழகர், வள்ளல், வீதி விடங்கப்பெருமான், தேர் ஊர்ந்த செல்வன், ஆழித்தேர் வித்தகன், பவனி விடங்கர்,  விடங்கராய் வீதி போந்தார், கமல வசந்த தியாகர், வசந்த வைபோகத் தியாகர், செம்பொன் தியாகர், கனகமணித்தியாகர், கமல வசந்த  நிறை செல்வத்தியாகர், செல்வக்கமலை பிரான், கமலை நாதர்  என்பதெல்லாம் தியாகரின் காரணப்பெயர்கள். அற்புதமான இரத்தின சிங்காதனத்திலே இவர் அராகச்சையும், ஆடரவ கிண்கிணி காலையும், ஐந்து கோடுகளை உடைய பரிவட்டத்தையும், உடைவாளையும், உதர பந்தனத்தையும், வீரகண்டயத்தையும், ஞான கண்டயத்தையும், தலைச்சீராவுடன் தியாக விநோதமென்னும்  திலகத்துடனும், அற்புத காட்சி தருகின்றார்.  பாகம் பிரியா அம்மையின் நாமம் கொண்டியம்மன். தியாகராசப்பெருமானுக்கு உரிய அலங்கார மலர்கள்: எம்பெருமானுக்குரிய தனித்துவம் வாய்ந்தது செங்கழுநீர் மலர். மேலும் முல்லை, மல்லிகை, ரோஜா, சாமந்தி, சம்பங்கி, மருக்கொழுந்து மற்றும் வெட்டிவேர் ஐயனின் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. தியாகராஜப்பெருமானுக்கு உகந்த நிவேதனம்: தூதுவளைக் கீரையும், பாகற்காய் கறியும் விருப்பமான நிவேதனம். நெய்யினால் மட்டுமே செய்யப்பட்ட பெரிய மூங்கில் தட்டு அளவிலான தேன்குழல், பெரிய அளவிலான வடை மற்றும் இனிப்பு சூயம் ஆகியவை  நிவேதனப் பொருட்களில் சிறப்பானவை.   தியாகேசர் சன்னதியில் இசைக்கப்படும் இசைக் கருவிகள்: 1.சுத்த மத்தளம், 2.கர்ணா, 3.சங்கு, 4.எக்காளம், 5.நகரா, 6.நமுகி (நட்டு முட்டு), 7.கிடுகிட்டி (கொடு கட்டி), 8.புல்லாங்குழல், 9.தாரை, 10.பாரி நாயனம், 11.பஞ்சமுக வாத்தியம் (குடமுழா), 12.தவண்டை, 13.பேரிகை, 14.பிரம்மதாளம், 15.வாங்கா, 16.திருச்சின்னம், 17.தப்பட்டை, 18.முகவீணை. இவற்றுள் திமிரி நாயனம், பாரி நாயனம், முகவீணை, யாழ், தவில் மத்தளம் ஆகியவற்றை இந்திரன் தியாகராஜ மூர்த்திகளை முசுகுந்த சக்கரவர்த்திக்கு அளித்த போது உடன் அளித்தான் என்பர். அர்ச்சனை: தியாகேசருக்கு திருமாலால் செய்யப்பட்ட ஆயிரம் நாமங்கள் கொண்டது முகுந்தார்ச்சனை. இந்திரன் செய்து மகிழ்ந்தது இந்திரார்ச்சனை. தியாகராஜரை இந்திரனிடன் பெற்றுத் திருவாரூர் தலம் திரும்பிய போது முசுகுந்தன் நடத்திய அர்ச்சனையே முசுகுந்த சகஸ்ரநாமாவளி. இம்மூன்றும் சிறப்புற அமைந்து பெருமானுக்கு பெருமை சேர்க்கின்றது. இவற்றில் முசுகுந்தார்ச்சனை தியாகேசரின் பரத்துவம், லட்சணம், குணம், லீலை, பக்தி மேம்பாடு, அடியவர்களிடம் காட்டும் பரிவு, சுவாமியின் திருநாமத்தில் உள்ள தியாகம் என்ற சொல் பற்றிய வேதாந்த ரகசியங்கள், அஜபா நடனம், திருவாரூர் திருத்தலத்தின் மகாத்மியம், கமலாலய திருக்குளம், தியாகேசரின் இரத்தின சிம்மாசனம், ஞான கட்கம், வீர கட்கம், திருச்சாலகம், ஆழித்தேர் பற்றிய செய்திகள் பற்றிய நாமாக்களைக் கொண்டுள்ளது. திருவாரூர் தீவட்டிகள்: திருமலைக்கு குடை போல திருவாரூருக்கு தீவட்டி சிறப்பு. ஐந்தடி உயரமும், நல்ல பருமனும் உடையது இத்தீவட்டி. இத்தீவட்டியில் நெய் உபயோகப்படுத்தப்படுகின்றது. தியாகேசரின் வலப்பக்கமும், இடப்பக்கமும் முன்னும் பின்னுமாக நால்வர் இத்தீவட்டிகளை ஏந்திச் செல்கின்றனர். தீவட்டி கொழுந்துவிட்டெறிய நெய் வார்க்க பின்னால் ஒருவர் வெள்ளியினால் செய்த பன்னீர் சொம்பு போன்ற பாத்திரத்துடன் தொடர்ந்து வருவார். இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்தது திருவாரூர் தீவட்டிகள். தியாகேசர் வழிபாட்டில் முத்திரைகள்: தியாகராஜ வழிபாட்டில் அனேக முத்திரைகள் இடம் பெறுகின்றன. முன்னாளில் பூஜை செய்யும் அர்ச்சகர் முத்திரைகளை மந்திர பூர்வமாகச் சொல்ல ஆலய ஆடற்பணிப் பெண்கள் முத்திரைகளை அபிநயத்துக் காட்டினர். முத்திரைகள் தெய்வத்தன்மை பொருந்தியதாகப் போற்றப்பட்டன. முத்திரைகளைக் காட்டுவதால் தேவர்கள் மகிழ்கின்றனர் என்று பூஜா பத்ததி நூல்கள் கூறுகின்றன. இதனால் இதனைக் காட்டும் பெண்கள் சிறப்புடன் போற்றப்பட்டனர். இவர்கள் 'கைகாட்டும் முறைக்காரிகள்' என்றழைக்கப்பட்டனர். தியாகேசரின் பணியாளர்கள்: தியாகேசனை தீண்டிப் பூசிக்கும் வழிவழி உரிமையுடையவர்கள் “உரிமையில் தொழுதெழுவார்” எனும் நயனார்கள் ஆவர். இவர்கள் துர்வாசரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் நயனார்கள் என்றழைக்கப்படுகின்றனர். இவர்களை அடுத்து   விழுப்பரமர்கள் எனப்படும் வம்சத்தைச் சார்ந்தவர்கள் தியாகேசர் அஜபா நடனம் புரியும் போது பெருமானைத் தாங்கும் பேறு பெற்றவர்கள். திருவாரூரில் வாழ்ந்து வழிபாடு செய்த நாயன்மார்கள்: சைவக்குரவர்கள் என்று போற்றப்படுகின்ற நால்வர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி   நாயனார், மாணிக்க வாசகர் நால்வருமே திருவாரூர்ப் பெருமானைப் போற்றிப் பாடியுள்ளனர். திருத்தொண்டர் தொகை பாடக் காரணமாக இருந்த விறன்மிண்ட நாயனார்,   கமலாலயக் குளத்தில் நீராடி கண் பார்வை பெற்ற தண்டியடிகள் நாயனார், எம்பெருமானின் பூசைக்குரிய மலரை முகர்ந்த அரசியின் மூக்கை அரிந்த செருந்துணை நாயனார், மனைவியே  ஆனாலும் சிவ அபராதத்திற்காக அரசியின் கரத்தை துண்டித்த கழற்சிங்க நாயனார், இறைவனின் தரிசனம் பெற்ற சோமாசிமாற நாயனார்,  தம்பிரான் தோழர் சுந்தரர்,    கழற்றறிவார் எனப் புகழ் பெற்ற சேரமான் பெருமாள் நாயனார், கமலாலயத்து நீரால் விளக்கேற்றிய  நமிநந்தியடிகள், எம்பிரான் தோழர் சுந்தரரின் பெற்றோர்களான சடையனார் மற்றும் இசைஞானியார், ஆரூர் பெருமான்  வடக்கு வாயில் வகுத்தருள அதன் வழி வந்து வழிபட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் மற்றும் தொகையடியார்களில் திருவாரூர் பிறந்தார்கள் அனைவரும் திருவாரூரோடு தொடர்பு கொண்டவர்கள்.  இவையெல்லாம் மகேச்வரரான தியாகேசப்பெருமானுக்கே உரித்தான சிறப்புகள் ஆகும். வாருங்கள் அன்பர்களே இனி இவ்வரிய ஆலயத்தை வலம் வந்து இத்தலத்தில் உள்ள சன்னதிகளை தரிசிக்கலாம்.                         15. ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் கருவறை திருசுற்று   நமது உடலில் ஐந்து கோசங்கள் அமைந்துள்ளது போல திருவாரூர் கோயிலும் ஐந்து சுற்றுகளைக் கொண்டுள்ளது. திருவீதிகள் - அன்னமய கோசம், மடவிளாகங்கள் – பிராணமய கோசம், பெரிய சுற்று – மனோமய கோசம்,   இரண்டாம் சுற்று – விஞ்ஞானமய கோசம்,   கருவறை திருச்சுற்று – ஆனந்தமய கோசம். இவ்வாலயத்தில் மொத்தம் 7 இராஜ கோபுரங்கள் அலங்கரிக்கின்றன. தென்வடலாக 656 அடி அகலமும், கிழமேற்காக   846 அடி நீளமும் சுமார் 30 அடி உயரமுள்ள பிரம்மாண்ட வெளி மதிலில் மொத்தம் 4 பெரிய கோபுரங்கள், மற்றும் ஒரு சிறு கோபுரமும் அணி செய்கின்றன. இரண்டாம் மதிலை இரண்டு திருக்கோபுரங்களும், மூன்றாம் மதிலை அணுக்கன் திருக்கோபுரமும் அலங்கரிக்கின்றன. திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 118 அடி உயர அதன் கிழக்கு   இராஜகோபுரமாகும். இக்கோபுரம் மகாமதுரம் என்று வாஸ்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கட்டப்பட்டுள்ளது. மேல் தளம் வரை கருங்கல் அதற்கு மேல் 6 பிரஸ்தலங்கள் 7 துவாரங்களுடன் எழிலாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் ஒரு கலை களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. கோட்டங்களில் தெய்வத்திருவுருவங்கள் அமைந்துள்ளது இக்கோபுரத்தின் ஒரு சிறப்பு. சிவபெருமானின் பல்வேறு கோலங்கள், எண் திசைக் காவலர்கள், ஆதித்தன், திருமால் திருவுருவங்கள், நாட்டியச் சிற்பங்கள், யாளி வரிசையின் எழிற்கோலம் ஆகியவை இக்கோபுரத்தை அலங்கரிக்கின்றன. இக்கோபுரத்தை அமைத்தவன் நம் தோழன் என்று இறைவனால் அழைக்கப்பட்ட மூன்றாம் குலோத்துங்கன், “திருக்கயிலை சிவனருளால் தேசமெல்லாம் புகழ்ந்து பாட அரசோச்சிய” பெருமகன்.  அவனது சிற்பமும்  மற்றும் அவரது குரு, பதினெட்டு சிவபுராணங்களை தெளிவாக அறிந்த, சித்தாந்த ரத்னாகரம் என்னும் நூலை இயற்றிய ஈஸ்வர சிவர் எனும் சோமேஸ்வரர்  ஆகிய இருவரது சிலைகள் மற்றும்  பல கல்வெட்டுகளும்  அமைந்துள்ளன என்று இக்கோபுரத்தில் உள்ள கல்வெட்டுகளில் உள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். வெளிப்புற வாயிலின் வலப்புறம் விநாயகர் திருக்கோவிலும், இடப்புறம் முருகர் திருக்கோவிலும் உள்ளன.  கிழக்கு கோபுரத்தின் உட்புறத்தில் உள்ள 1000 கால் தூண்கள் முற்காலத்தில் திருவிழாவின் போது பந்தல் போட அமைக்கப்பட்டது. காவணம்  என்று  பண்டைக் காலத்தில் அழைக்கப்பட்டது.   மேலைக் கோபுரம் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இரு புறமும் நாட்டிய மங்கைகள் மற்றும் புராண சிற்பங்கள்  இக்கோபுரத்தில் இடம்பெற்றுள்ளன. கமலாலயத் திருக்குளத்தை ஒட்டி இவ்வேழு நிலை மேலைக்கோபுரம் அமைந்துள்ளது. இக்கோபுரம், கமலாலயம் மற்றும் ஆழித்தேர் மூன்றையும் ஒரே நேரத்தில் தரிசிப்பது பரவசமூட்டும் காட்சியாகும். இக்கோபுரத்தை சுமார் 650 எழிலார்ந்த சுதை   சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. அவற்றில் சிவகதைகளும், மாலவன்,  நான்முகன், சரபமூர்த்தி, மற்ற தேவர்களின் சுதை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன  தென்புறத்தில் சரபரையும் தரிசிக்கலாம். இக்கோபுரத்தின் நுழை வாயிலில்  சொல்லின் செல்வர் அருள்பாலிக்கின்றார்.   மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள  வடக்கு கோபுரம் நீலகண்ட யாழ்ப்பாணர் தன்னை வந்து வணங்குவதற்காக எம்பெருமான் வகுத்த வாசலில் அமைந்த கோபுரம் ஆகும். இக்கோபுர நுழை வாயிலின் கூரையில் நவக்கிரக சிற்பங்கள் அடங்கிய இராசிச் சக்கரம் உள்ளது. இக்கோபுரத்தில் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கர் மற்றும் கமலை ஞானப்பிரகாசர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பிரகாரத்தின் கிழக்கு மதிலில் வட கீழ்த்திசையில் கீழைச்சிறிய  கோபுரம் உள்ளது, இக்கோபுரம் தேவாசிரிய மண்டபத்தின் கிழக்கு வாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. உட்பகுதியில் சண்டிகேஸ்வரர் சிற்பம் இடம் பெற்றுள்ளது.  வடமேற்கு மூலையில் தெற்கு கோபுரமும் அமைந்துள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு கோபுரங்கள் கிழக்கு மற்றும் மேற்கில் அழகு செய்கின்றன. மேலைக்கோபுரத்தை விஜயநகர மன்னர் இலக்கண்ண தண்ணநாயகர்  சார்பாக நாகராசர் அமைத்ததாக கல்வெட்டு  பகர்கின்றது. கீழைக் கோபுரம் ஆரியன் கோபுரம் என்றழைக்கப்படுகின்றது. இக்கோபுரத்தின் வெளிப்புறம் விநாயகர் மற்றும் முருகர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. வெளி கோட்டத்தில் வலப்புறம் கண்ணப்பர் சிற்பமும், இடப்புறம் விறன்மிண்ட நாயனாரின் சிற்பமும் இடம் பெற்றுள்ளது. தம்பிரான் தோழரையும், இறைவனையும் விலக்கிய இந்நாயானாரை வணங்கிய பிறகே திருக்கோவிலின் உள்ளே புக வேண்டும் என்பது மரபு. மந்திரமயமான கருவறை திருச்சுற்றாகிய ஆனந்தமய கோசத்திற்குள் செல்ல அமைந்த கோபுரம் “அழகியான் கோபுரம்”. புற்றிடங்கொண்டார் சன்னதிக்கு எதிராக இக்கோபுரம் அமைந்துள்ளது.  கோபுர வாசலில் சுதையாலாகிய பிரம்மாண்ட   கம்பீரமும், கர்வமும் நிறைந்த துவாரபாலகர்கள். எதிரே கொடிக்கம்பம் இக்கொடிக்கம்பத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் முதலாம் சரபோஜியின் சிலை இடம் பெற்றுள்ளது.  கருவறையில் திருமாலின் கர்வத்தை நீக்க புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றிய புற்றிடம்கொண்டார். இவருக்கு தெற்கே ஐங்கலப் பொற்காசு விநாயகர், இவருக்கும் தெற்கே விண் துறந்து ஆருர் மண் உவந்து  வந்தமர்ந்து அருள் புரியும் கமல வசந்த தியாகேசர். அழகியான் கோபுரத்தை அமைத்தவன் சுந்தர சோழன்.  இவனே   ஐந்து கலம் பொன் கொண்டு விநாயகரை அமைத்தான் எனவே இவர் அழகிய சோழ விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றார். வாயிற்கூரையில் 27 நட்சத்திரங்களின் தேவதைகளும், 12 இராசிகளில் மூன்று சக்கர கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள அருமையான சிற்பம். ஐங்கல பொற்காசு விநாயகருக்கு வடப்புறம் புற்றிடங்கொண்ட ஈசர் சுயம்புவாய்  எழுந்தருளி அருள் பாலிக்கும் பூங்கோயில்.   “ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ”  “நிலந்தரத்து நீண்டுருவம் ஆன நாளோ” “கோலமே நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ அணியாரூர் கோயிலாக்கொண்ட நாளோ” என்று பலவிதமாகப் பாடி இறைவன் அருவமாயும், உருவமாயும் கோயில் கொண்டது முதலில் ஆரூரில்தான் என இத்தலத்தின் தொன்மையைப் பாடுகிறார் திருநாவுக்கரசர். அப்புராதனன், திருமூலட்டானன், திருமகளின் தவத்திற்கிணங்கி திருமாலை அவளுக்களித்த பெருமான், கற்றவர்கள் உண்ணும் அருட்கனி, கழலடைந்தார் செல்லும் கதி, அற்றவருக்கு ஆரமுதமானவர் அருள் பாலிக்கின்றார். திருவாரூர் சக்திபுரம் என்பதால் இம்மூர்த்தம் சற்றே வாமபாகத்தில் அமைந்துள்ளது. எத்தலத்தும் தீராத சாபம், தோஷம் இத்தலத்தில் இவர் முன் தீரும், இவர் முன் தீரா சாபம் எத்தலத்தும் தீராது என்று தலபுராணம் கூறுகின்றது. ஒரு கோடி முனிவர்கள் இப்பெருமானை போற்றி துதித்த போது அனைவருக்கும் பொதுவாக காட்சி தராமல் முனிவர் தம் வகையறிந்து; தவமறிந்து தனித்தனியாக காட்சி தந்தருளிய “தக்கார்க்கு தக்கான்”. வெள்ளிக் கவசமிட்டு புற்றுரையும் பெருமான். இவரை கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி அற்றவர்கட் காரமுதமா னாய் போற்றி அல்லலறுத் தடியேனை யாண்டாய் போற்றி மற்றவ ரொப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்று மருந்தே போற்றி செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி என்று போற்றிப் பாடியுள்ளார் நாவுக்கரசப்பெருமான். புற்றிடங்கொண்டார் எனும் திருமூலட்டானேசுவரர், பெரிய லிங்க வடிவில் முப்பட்டை பூண்டு, அகன்ற ஆவுடையாரில் திருக்காட்சி தருகிறார். அது தரிசிக்கும் பக்தர்களை மெய் சிலிர்க்கவைக்கும் திருமூலட்டானர், வன்மீக நாதர், திருமூலஸ்தானமுடையார், ஆரூர் அதிபதி, பூர்வாரூர்வாசி, ஸ்ரீஆரூரதிபஸ்ய என்று பல திருநாமங்களில் அழைக்கப்படுகின்றார்.  ஐயனுக்கு வெள்ளிக்கவசம் சார்த்தியுள்ளனர்.  ஐயனுடன் போக சக்தி - பிரியாவிடை அம்மை,   சோமகுலாம்பிகை என்ற திருநாமத்துடன் பிருத்வி தலம் என்பதை உணர்த்தும் விதமாக அமர்ந்த நிலையில் ஒரு திருக்கரத்தை முழங்காலில் அமர்த்தி, மறு திருக்கரத்தை தரையில் ஊன்றிய கோலத்தில் நான்கு யாளிகள் தாங்கிய மேடை மேல் கம்பீரமாக அமர்ந்து அருள்பாலிக்கின்றார். கருவறையுடன் அமைந்த அந்தராளம் நான்கு கற்றூண்களை உள்ளே பெற்று திகழ்கிறது. அந்தராள வாயிலின் வெளிப்புறம் துவார பாலகர்கள், நிலையின் மேல்  சிவபெருமானின் திருமணக்காட்சி இடம் பெற்றுள்ளது. இவரின் முக மண்டபமும், தியாக விநோதரின் முக மண்டபமும் இணைந்துள்ளது. மஹாமண்டபத்தில் இருந்து நாம் பெருமானை தரிசிக்கின்றோம். நந்தி மண்டபத்தின் கூரையில் 11X11 சிறு சதுரங்களில் 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளின் நுண்ணிய சிற்பங்கள் அருமை. நந்தியெம்பெருமான் அவருக்கு பின்னே பித்தளைக் கண்ணாடி போன்ற அமைப்பு. இது எதற்கென்று விசாரித்தபோது பிரம்மஹத்தி போன்ற பெரும்பாவம் செய்தவர்கள் ஆலயத்திற்குள் நுழையும் போது அவர்களின் பாவத்தை இக்கண்ணாடி இழுத்துவிடுமாம் அதன் பிறகு அவர்கள் இறைவனை தரிசிக்கலாம் என்று கூறினார்கள்.   திரு மூலட்டானரான புற்றிடம் கொண்ட பரம்பொருள் கருவறைச் சுவற்றிலும் கூரையிலும் அருமையான ஓவியங்கள். சிவ மூர்த்தங்கள் அனைத்தும் அப்படியே தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாப்பதற்காக  தற்போது கண்ணாடி சட்டம் அமைத்திருக்கின்றனர். கருவறைச் சுவற்றில் சுற்றிலும் உள்ள தூண்களுக்கு இடையே சுதை வடிவமாகப் பின் திருக்கரங்களில் மான் மழு தாங்கிய தட்சிணா மூர்த்தி, இருபுறமும் அன்ன மூர்த்தி வராக மூர்த்தியாக விளங்கும் அரி அயனுடன் லிங்கோற்பவர் உள்ளனர்.  கோட்டங்களின் மேல்புறத்தில் எழிலுறு மகரதோரணங்கள் அணி செய்கின்றன. ஐம்பதற்கும் மேற்பட்ட சிற்பதொகுதிகளும் பூங்கோயிலில் இடம்பெற்றுள்ளன அவற்றுள் துர்க்கை, ஆலிலைக் கண்ணன், கஜசம்ஹார மூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.   பூங்கோயிலாம் இப்புனிதத் திருக்கோயிலுக்கு மாமன்னன்  மூன்றான்  குலோத்துங்கன் பொன் வேய்ந்து பொற்கோயிலாக்கினான். பாண்டிய நாட்டை வெற்றி கொண்டு திரிபுவன வீரதேவன் என்று பட்டம் சூடிப் பெருமையோடு திரும்பிய இம்மன்னர், பாண்டி நாட்டு பண்டாரத்திலிருந்து கொண்டு வந்த பொன்னால் புற்றிடங்கொண்டாரின் திருக்கோயிலை பொன்மயமாக்கினான் என்றும் மற்றும் அவன் செய்த பல்வேறு திருப்பணிகளையும் பல கல்வெட்டுகள் இயம்புகின்றன. வன்மீகர் எழுந்தருளும் பூங்கோயில் அருகே  பொற்கோயிலில் வீதி விடங்க தியாகேசப் பெருமான் எழுந்தருளியுள்ளார். கருவறை விமானத்திற்கு மாமன்னன்  இராசேந்திர சோழன் பொன் வேய்ந்தான். ஒரு காலத்தில் தியாகேசர் சன்னதி பொற்கோயிலாக இருந்துள்ளது. “கங்கை நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காசனத்திருந்த செம்பியர் கோன்” – என்னும் இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழீச்சரம் என்னும் பெருங்கோவிலை எடுத்த பெருமையுடையவன். இப்பெருமகன் தன் ஆருயிர் காதலி அனுக்கியார் பரவை என்னும் நங்கையோடு தேரில் திருவாரூர் திருவீதிகளில் பவனி வந்தான்.  பரவை நங்கையார் எல்லையற்ற சிவபக்தி உடையவள்.  அவளுக்கு உடனிருக்கை அளித்து தேரில் பவனி வந்ததன் நினைவாக ஒரு குத்துவிளக்கும் திருவாரூர் கோவிலில் வைத்தான் இராஜேந்திர சோழன். இதைக் கல்வெட்டிலும் பொறித்தான். பரவை நங்கை அதுவரை செங்கற்கட்டாக இருந்த வீதிவிடங்க தேவரின் கோவிலை கருங்கற்கோவிலாக புதுப்பித்து 20634 கழஞ்சு எடையுள்ள பொன்னால் கர்ப்பகிரகம் முழுவதையும் பொற்தகடு போர்த்தி அலங்கரிக்க செய்தாள். 42000 பலம் எடையுள்ள பொற்தகடுகளைக் கொண்டு கதவுகள், மண்டபத்தூண்கள் மற்றும் விதானங்களை அலங்கரித்தாள் என்று கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் அப்பெருமாட்டி தியாகப்பெருமானுக்கு இரண்டு  சாமரங்கள் அளித்தாள்.  பச்சை பாவை உமை நங்கை, பாவை சரியா முலை நங்கை என்ற இரு பாவை விளக்குகளை வீதிவிடங்கர் முன் வைக்க அளித்தாள். மேலும் பாவைகளுக்கு பொன்னணிகளை அளித்த செய்தியையும் கல்வெட்டில் காணலாம். ஆனால் இன்று வெறும் கற்கோவிலாகத்தான் உள்ளது. இப்பொற்கோவில் எம்பெருமான் எழுந்தருளும் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபத்துடன் விளங்குகின்றது. மகா மண்டபத்தில் நின்ற செப்பு நந்தியும் பலி பீடமும் உள்ளன. பாற்கடலில்  திருமால் மார்பில் விளங்கியது போல பெருமாளின் சிரசாகிய கருவறை விடுத்து, திருமாலின் திருமார்பாகிய அர்த்தமண்டபத்தில்  ராஜகம்பீர ராஜராஜேஸ்வர கோலம் கொண்டு, “சிங்கஞ் சுமந்த செழுமணித் தவிசிற் கங்குலும் பகலுங் கலந்தினி திருத்தாங் கிடவலம் பொலிந்த விறைவியும் நீயும் நடுவண் வைகு நாகிளங் குழவியை ஒருவிரினெரு விருள்ள நெக்குருக . . . . என்று திருவாரூர் நான்மணி மாலையில் குமரகுருபர சுவாமிகள் பாடியபடி இளமுருகு உடனுறையும் அம்மையப்பராக, திருக்கயிலை நாதராக  தியாகவினோதர்  தரிசனம் அருளுகின்றார்.  திருமாலின் சிரசாகிய கருவறை ஸ்ரீவாசம் அல்லது லட்சுமி வாசம் என்கிற விலாசத்துடன் தாழிடப்பட்டு விளங்குகிறது.  மகா மண்டபம் பெருமாளின்   வயிறு,  தொடை, திருப்பாதம் என்று ஐதீகம்.   தென்னன் திருவாசல் எனப்படும் தென்புற வாயில் வழியாக எம்பெருமான் திரிபுர சம்காரத்திற்காக வெளியே வருவார். இத்திருவாசல் பித்தளை கவசம் பூண்டுள்ளது.  வாசல் பக்க சுவற்றின் இரு புறமும் இந்திரனும், முசுகுந்தனும் புடைப்புச் சிற்பங்களாய் தியாகேசரை தொழுத வண்ணம் காட்சி தருகின்றனர். சித்தந் தெளிவீர்காள், அத்த னாரூரைப் பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.   என்று அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய  ஆயிரம் திருநாமம் கொண்ட தியாகராசப் பெருமான் ஸ்ரீபீடத்தில் இரத்தின சிம்மாசனத்தில் முகம் காட்டி, உடல் மறைத்து தரிசனம் தருகின்றார். உடனுறையும் அம்பிகை கொண்டியம்மையும் இவ்வாறே. இருவருக்கும் இடையில் கந்தன் தன்னுரு காட்டாது அமர்ந்துள்ளார். தியாகேசர் கங்கை மற்றும் வளர் பிறையை இருபக்கமும் தரித்திருக்கின்றார். இவரின் முன்புறம் இவரது பராக்கிரமத்தை உணர்த்தும் வீரகட்கம் மற்றும் அஞ்ஞானத்தை   வேரறுக்கும் ஞானகட்கம். பெருமான் எழுந்தருளும் மண்டப விதானத்தை தாங்கும் நான்கு தூண்களும் நான்கு வேதங்கள். இவையும் பித்தளை கவசம் பூண்டுள்ளன. தியாக கற்பத்தின் சிரசிற்கு மேலே அக்னி பந்தல்; திருநீற்றுப் பந்தல்; முத்து விதானம் என்கிறது அப்பர் தேவாரம். காமகலா சொரூப அதி ரகசிய மூர்த்தமாகிய இவரை நடை சார்த்தும் முன்னர் மறைத்துச் சூழ வெளிர் சிவப்பிலான திரஸ்கரணி என்ற திரையால் மறைக்கின்றனர். கண்டவர் தம் மனத்தை கவர்ந்திழுக்கும் மந்தகாச புன்னகையுடன் தியாக விநோதம் என்னும் நறுந்திலகத்துடன், பொன்னாலும், மணியாலும், மணங்கமழ் மலர்களாலும் திருமேனி மறைத்து கலாதீதன்; தத்வாதீதனை மனமார தரிசிக்கின்றோம். ஐயனின் திருக்கோலம் கண்டு நெஞ்சு நெகிழ்கின்றது, கண்ணீர் மல்குகின்றது.   தியாகேசர் சந்நிதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் பெருமானை வழிபடுவதாக ஐதீகம்! பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கின்றது. ஐயனுக்கு வலப்புறத்தில்  ஒரு இரும்புப்பெட்டியில் பாதுகாப்பாக   வெள்ளிப் பேழையில் மரகத வீதி விடங்கப்பெருமான் எழுந்தருளுகிறார். அனு தினமும் காலசந்தி, உச்சிக்காலம், மாலை இரண்டாம் காலம் என்று  மூன்று முறை அபிஷேகம் கண்டருளுகின்றார். பின்னர் சந்தனம் சாற்றப்பட்டு மலருடன் பேழையில் எழுந்தருளுகின்றார். மஹா மண்டபத்தில் செப்பு நின்ற கோல நந்தி   அதன் பின்னர் பித்தளை கண்ணாடி அமைப்பு. இருவருக்கும் இடையில் ஐங்கலக்காசு விநாயகர். உற்சவ காலங்களில் பஞ்ச மூர்த்தியாக உலா வருபவர், தேரோட்டம் காண்பவர் இவரே. தியாகேசப்பெருமானின் கோட்டத்தில் ஐந்து தலை பாம்பு சுருண்டு படுத்துக் கிடக்க அதன் நடுவில் தாமரையின் மேல் பாசம் அங்குசம் மோதகம் தந்தத்துடன் நர்த்தன கணபதியாக மூலாதார கணபதி,   தட்சிணா மூர்த்தி, மகாவிஷ்ணு,   பிரம்மா,   மகிஷாசுரமர்த்தினி ஆகியோரை சேவிக்கலாம். இரு பெருமான்களையும் தரிசித்த பின்னர் வாருங்கள் அன்பர்களே கருவறைத் திருச்சுற்றை வலம் வரலாம். இத்திருச்சுற்றின் பெரும்பகுதி மண்டபங்களால் சூழப்பட்டுள்ளது.  கிழக்கு திருச்சுற்றில்  அழகியான் கோபுரத்திற்கு அருகே மிகப்பெரிய சிவசூரியன், அருகே சூரியன் நிறுவிய ஆதித்த லிங்கம், அடுத்து தியாகேசரை தொழுதவாறு எம்பிரான் தோழர் சுந்தரர் பரவை நாச்சியாருடனும் தன் தோழர் சேரமான் பெருமாளுடனும் அருள் பாலிக்கின்றார். சாயரட்சை பூசையின் போது தியாகராஜப்பெருமானுக்கும் எம்பிரான் தோழர் சுந்தர முர்த்தி நாயனாருக்கும் ஒரே சமயத்தில் ஆரத்தி நடைபெறுகின்றது.  அடுத்த சன்னதி கமலாலய திருக்குளத்தை செப்பனிட்ட தண்டியடிகள். இத்திருசுற்றின் தென்கிழக்கு மூலையில் இத்தலத்திற்கே உரிய   குடமுழா என்கிற பஞ்சமுக வாத்தியம். அடுத்து சைவத்தின் மேற்சமயம் வேறில்லை அதில்சேர் சிவமாம் தெய்வத்தின் மேல்தெய்வம் இல்லெனும்  நான்மறை செம்பொருள் வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும், திருவாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர்  பொன் தாள் எம் உயிர்த்துணையே என்று நாம் பாடிப்பரவும், அப்பர், சம்பந்தர்,  மாணிக்கவாசகர் சன்னதி.  அக்னி மூலையில் மணித்தண்டு பாதுகாக்கும் அறை. திருச்சுற்றின் தென்புறம் நடைமேடையில் “அரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே” என்று சுந்தரர் பணிந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் பஞ்சலோகத் திருமேனிகள். அடுத்து விலாசமான பிறை மாடத்தில் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான். அடுத்து அறுபத்து மூவர் மற்றும் தொகையடியார்களின் கற்திருமேனிகள். எதிரே  தெற்கு வாயில். பித்தளை கவசம் பூண்டுள்ளது. ஒரு புறம் இந்திரனும், மறுபுறம் முசுகுந்தனும் தியாகேசரை வணங்கும் புடைப்பு சிற்பம். தியாகேசர் அஜபாநடனமிட்டு இவ்வாசல் வழியாக வெளியே வருவார். கருவறை சுவரில் திருமால் பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் தன் மார்பில் தியாகேசரை வைத்து பூசிக்கும் சுதை சிற்பம். கண்ணாடி கொண்டு பாதுகாப்பு செய்திருக்கின்றனர். அருகில் தென்றல் வரும் சாளரம். கல்வெட்டுகள் நிறைந்த தியாக ராசர் கருவறைச் சுவற்றில் தட்சிணா மூர்த்தி திருமால் பிரம்மன் திருவுருவங்கள் கற்திருமேனியாக அமைந்துள்ளன.  மேலை பிரகாரத்தில் ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு உய்ய அறம் வளர்த்த அன்னபூரணி. அடுத்து அழகுத் திருமேனியாக இடபத்தின் மேல் ஒயிலாக சாய்ந்து கொண்டு நிற்கும் “காட்சி கொடுத்தார்”. அடுத்து தல விநாயகர் என்றழைக்கப்படும் வாதாபி கணபதி. முத்துசாமி தீட்சிதரின் “வாதாபி கணபதிம் பஜேஹம்” என்கிற கிருதி இவர் திருமுன்னே பிறந்தது. பஞ்ச முக விநாயகர், அடுத்து ஆயிரம் லிங்க உருவங்கள் அமைந்த சகஸ்ரலிங்கம், விசுவநாதர், அடுத்து சித்திர பீடம். அகத்தியர் நிறுவிய இப்பீடத்தில் சப்த கோடி மந்திர சாரம் ஆவாகனம் செய்யப்பட்டுள்ளது. தீயசக்திகளால் துன்புறுவோர் இங்கு வழிபட ஆபிச்சார பிரயோகங்களை எதிர்கொள்ள இயலும். அடுத்து பிட்சாடனர் – உற்சவ மூர்த்தி. அடுத்து வருணன் மகளாக பிறந்து திருமாலின் கரம் பற்ற வேண்டி தவம் இயற்றிய திருமகள் சன்னதி. தனி சன்னதியில் திருமகளை சன்னல் வழியாகத்தான் சேவிக்க இயலும். வடமேற்கில்  நீதானெத் தணையாலும்- நீடுழிக் க்ருபையாகி; மாதானத் தனமாக- மாஞானக் கழல்தாராய் வேதாமைத் துனவேளே- வீராசற் குணசீலா; ஆதாரத் தொளியானே- ஆரூரிற் பெருமாளே – என்று திருப்புகழில் அருணகிரிநாதர் பாடிய   வள்ளி தெய்வானை உடனாய  சுப்பிரமணியர் சன்னதி.   அடுத்து சந்தனாச்சாரியார் கற்திருமேனிகள். இத்திருச்சுற்றின் வடமேற்கு மூலையில் நவக்கிரகங்கள் நேர் வரிசையில் காணப்படுகின்றன. திருவாரூர் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்கள் என்பதால் அவர்களின் மீது தங்களின் ஆணை செல்லாது என்று திகைத்து நிற்கின்றனரோ? அருகே சனிபகவான் பூசித்த லிங்கம், அதன் அருகே சனியின் ஆலோசனையினால் நளன் பூசித்த லிங்கம். நவக்கிரக மாடத்தூண் ஒன்றில் சிறிய பிறையில் நெல்லிக்கனி பிள்ளையார். வடக்கு திருச்சுற்றில் இரண்டு துர்க்கைகள், திருநீலகண்டர், லிங்கோத்பவர் எழுந்தருளியுள்ளனர்.  சண்டிகா மகிஷாசுரமர்த்தினி தனிக் கோட்டத்தில் எட்டுக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். நுணுக்கமான வேலைப்பாடுகளுடன்  கூடிய அற்புதத் திருமேனி. திருவிழிகளில் அபார கருணையும், நாசி வளைவில் ரௌத்ரமும் கலந்த தோற்றம், இவளை வழிபட சத்ரு பயம், வழக்கு, நோய், தீய சக்திகளின் பாதிப்பு சூரியனைக் கண்ட பனி போல விலகும். நவமியில் பூசித்தால் நன்மை அனைத்தும் வழங்குகின்றாள். பௌர்ணமியன்று பூசித்தால் பரிபூரண வாழ்வளிப்பாள். இச்சுற்றில் ஆதி சங்கரரின் கற்திருமேனி உள்ளது. அவரின் ஆணவம் களைய கமலாம்பிகை சுவடி ஒன்றை கருவறையில் வைத்து அதனை குருக்கள் கனவிலும் எடுத்துரைத்து மறுநாள் அச்சுவடியின் விளக்கத்தை ஆதிசங்கரரிடம் குருக்கள் கேட்க  சரசுவதியின் அருள் பெற்ற சங்கரர் புரியாமல் சங்கடப்பட கமலாம்பிகையின் சரண் பணிந்து ஆணவம் நீங்கினார் என்கிறார்கள். புற்றிடங்கொண்டாரின் சன்னதியின் வடபுறம் நிர்மால்ய வாசலுக்கு நேராக ருணஹரேஸ்வரர். பிறவிக் கடனை தீர்ப்பதுடன்,  தீராத நோய்களையும், திரும்பி வராத கடனையும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், இவரை வழிபடும் பக்தர்களுக்கு தீர்த்து வைப்பதால் இவர் ருண விமோசனர் என்றழைக்கப்படுகிறார். இலிங்க ரூபத்தில் அருள் பாலிக்கும் இவரை அமாவாசையன்று அபிஷேகம், உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டால் மிகவும் பலன் கிட்டும். தற்போது பித்தளைக் கவசத்தில் ஒளிர்கின்றது இவர் சன்னதி. இவருக்கு அருகே ஆதி சண்டிகேஸ்வரர். அற்புதமான செப்புத்திருமேனி. வீதி விடங்கப்பெருமான் திருவீதி வலம் வரும் போது பஞ்சமூர்த்திகளில் ஒருவராக வலம் வருபவர், பங்குனி உத்திரப் பெருவிழாத் திருநாள் குறித்து ஓலை அறிவிப்பவர்,  எம்பெருமானின் ஆழித்தேரோட்டத்தின் போது உடன் வலம் வருபவரும் இவரே. இவர் பூசித்த லிங்கத்திருமேனி இவரது சன்னதிக்கு  அருகில் உள்ளது. அனைத்து சிவாலயங்களிலும் ஒரு சண்டிகேஸ்வரர் மட்டுமே அருள் பாலிப்பர் ஆனால் திருவாரூரில் மட்டும் இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் பாலிக்கின்றனர். முதலாமவர் ஆதி சண்டிகேஸ்வரர், இரண்டாமவர் எம சண்டிகேஸ்வரர்.  திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்களே ஆவர். ஆதலால் எமனுக்கு இவ்வூரில் வேலை இல்லை என்பதால் அவன் தியாகேசரிடம் முறையிட  எம்பெருமானும் கருணையுடன்  எமனுக்கும்  சண்டிகேஸ்வரப் பதவி அளித்தார் என்பது ஐதீகம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 எமனுக்கு சண்டிகேஸ்வர பதவி கொடுத்த தலம் என்பதால், எமபயமுள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடுவது நலம் பயக்கும். எமசண்டிகேஸ்வரர் சடை, தாடியோடு ஒரு காலை ஊன்றி முழங்காலில் முகம் வைத்து,   நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். மனு வேந்தனை சோதிக்கப் புறப்பட்ட தியாகேசப் பெருமான் தாய்ப்பசு வேடம் கொண்டார். எமனை அழைத்தார், ஆணையிட்டார். எமன் கன்றாகினான். வீதிவிடங்கன் தேர்க்காலில் கன்று (எமன்) மாய்ந்தது. எமன் உயிர்த்தெழும் வரை சண்டிகேஸ்வரரை எமன் பதவிக்குரிய பணியை பார்க்கப் பணித்தார் பெருமான் என்பர் பெரியோர். வடக்குத் திருச்சுற்றின் இறுதியில் கிளிக்குறடு மேடையில் சந்திரசேகரர், தருணேந்து சேகரியுடன் அருள் பாலிக்கின்றார். தியாகேசர் திருமுன் பட்டம் புனைந்து திருக்கோயில் உற்சவங்களில் எழுந்தருளுபவர் இவர். சந்திரனுக்குரிய இவ்வாலயத்தில் ஈசான மூலையில் எழுந்தருளியுள்ள இவர் சாதகனின் சிரசில் ஈசான அனுபவத்தை உணர்த்துகிறார். வடகிழக்குப்பகுதியில் காலபைரவர் அருள் பாலிக்கின்றார். இவரது திருமேனியில் 12 இராசி சக்கரங்களும் உள்ளன என்பர். அடுத்து ஐயனின் ஐம்முகங்களைக் குறிக்க பஞ்ச லிங்கங்கள். இவர்கள் வன்மீகர் எழுந்தருளும் பூங்கோயில், தியாகேசர் எழுந்தருளும் பொற்கோயில் முதல் திருசுற்றில் அருள் பாலிப்பவர்கள்.   புற்றிடங்கொண்டார் மற்றும் தியாகேசரின் கருவறை சுற்றுச்சுவரில் பெருமானின் பல ஆடற்கரணங்கள் அவரே ஆடுவது போல அருமையான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. அஷ்டபுஜங்களுடன் ஸ்வதிக்க கரணத்திலும், விஷ்ணுக்கிராந்த கரணம், ஊர்த்வஜானு கரணம், நிகுஞ்சிதம், லலிதம், ஊர்த்துவதாண்டவம் என்று பல் வேறு ஆடற்கரணங்களின் ஓவியங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. அவையனைத்தையும் இப்போது புதிதாக வர்ணம் தீட்டி கண்ணாடி காப்பிட்டு காப்பாற்றியுள்ளனர். இனி இரண்டாம் சுற்றில் அமைந்துள்ள சன்னதிகள் எவை என்று காணலாம் அன்பர்களே.   ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!!                                       16. ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் சுற்றுக்கோயில்கள்   புற்றிடங்கொண்டாரின் கருவறைக்கு மேற்கே திருமகள் சிவலிங்கத்தை தாபித்து திருமாலை கணவனாக பெற்றாள்.  அதற்கு வடக்கில் பிரம்மன் சிவலிங்கம் தாபித்து அர்சித்து பலன் பெற்றான்.  மேற்கு பக்கம் அக்னியும், அதற்கு வடக்கில் தேவர்கள் விருத்திராசுரனை வதைக்க வரம் வேண்டி ஒரு இலிங்கத்தை தாபித்து வணங்கினர்.  அதற்கு வடக்கில் இந்திரன் ஒரு சிவலிங்கத்தை நிறுவினான்.  அதற்கு வடதிசையில் அசுவினி தேவர்கள் சிவலிங்கம் நிறுவி மலர்களால் அர்ச்சித்து பல விதமான சித்திகளைப் பெற்றனர்.  மேற்கே இயமனும், வாயு திக்கில் ஜேஸ்டாவும் சிவபூசை செய்தனர். ஈசான திக்கில் சுக்கிரன் சிவலிங்கம் நிறுவி வழிபட்டு இறந்தாரை எழுப்பும் மிருத சஞ்சீவி மந்திர சக்தியைப் பெற்றார்.   மூலத்தானத்தின் கிழக்கில் இந்திரன் சிவ பூசை செய்து அகலிகை கொடுத்த சாபத்தில் இருந்து விடுபட்டான்.  அதற்கு வடபால் விசுவதேவரும், அதன் வடக்கே வேதங்கள் பூசித்த இலிங்கங்கள் உள்ளன அதன் வடபால் கலைமகள் பூசித்த இலிங்கம் அமைந்துள்ளது.  வடபுறம் திருமால் சிவபூசை புரிந்தார்.  அதற்கு வடக்கே ஆணவத்தால் சிவபெருமானை அவமதித்த தட்சன் பூசித்தான். மேலும் துர்க்கை, சப்த மாதர்கள், யமன், விநாயகர், வாலி, நாரதர், தும்புரு, வசிட்டர், அருந்ததி,   வீரபத்திரர், காளி, சந்திரன், சூரியன், நளன், மன்மதன், சாஸ்தா, நந்தி, பிருங்கி வாயு, கௌசிகர், காசியபர், உபமன்யு, பரசுராமர், பகீரதன், வாசுகி, அனந்தன், கார்க்கோடகன், தட்சன், பதஞ்சலி ஆகிய ஐந்து சிறந்த நாகங்கள், சனற்குமாரர், பஞ்ச பாண்டவர்கள் இன்னும் பலர் பூசித்த இலிங்கங்கள் உள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் உள்ள விஸ்வகர்ம லிங்கத்திற்கு ஒற்றைப் படை எண்ணிக்கையில் செங்கல் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டால் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இவ்விஸ்வகர்மேஸ்வரர் சன்னதி பீடம் முதல் கலசம் வரை கருங்கல்லாலேயே அமைந்துள்ளது. விமான கோஷ்டம் மற்றும் கருவறை கோட்டங்களில் உள்ள சிற்பங்களும் கருங்கல்லால் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இனி பிரகாரத்தில் அமைந்திருக்கும் சில சிறப்புமிக்க சன்னதிகளைக் காணலாம். ஆனந்தேச்சுரம்:  வன்மீகர் எழுந்தருளும் பூங்கோயிலுக்கு வடமேற்காக   தேவதீர்த்தத்தின் கிழக்காகவும், கமலாம்பாள் ஆலயத்திற்கு தென்கிழக்காகவும் ஆனந்தீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கின்றது.   வைகாசி மாதம் விசாகத்தன்று புனிதமான தேவதீர்த்தத்தில் நீராடி ஆனந்தேஸ்வரரை வழிபட சிறப்பு.  காஞ்சி மன்னன் பத்திரசேனனும் அவனது மனைவி கமலாவதியும் தமது முற்பிறவியில் வணிகனாக இருந்ததாகவும் செல்வத்தை எல்லாம் இழந்து திருவாரூர் அடைந்து கமலப்பொய்கையிலிருந்து மலர் கொய்து மாலை கட்டி விற்கும் போது ஒரு வைகாசி விசாகத்தன்று மாலை விற்காமல் போகவே அதை தியாகேசருக்கு சமர்ப்பித்து இரவு முழுவதும் இறைவனை தொழுது பசியினால் இருவரும் இறைவனடி சேர்ந்தனர். முற்பிறவியின் புண்ணியத்தால் காஞ்சி நகரில் அரச பரம்பரையில் பிறந்தான். அவன் மனைவியும் தேசனாம்புரியில் அரச பரம்பரையில் பிறந்தாள். இருவருக்கு திருமணமும் முடிந்தது. இப்பிறப்பிலும் ஆனந்தேஸ்வரரை மறக்காமல் வணங்கி திருக்கயிலாயம் அடைந்தனர். ஆனந்தேஸ்வரர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவரின் தென்புறம் கமலமுனி சித்தர் சமாதி உள்ளது. இது கபில முனி சித்தியான இடம் என்று கருதுவாரும் உண்டு. வாராகி, கௌமாரி புடைசூழ முகடி, தவ்வை, மூத்தவள் என்றழைக்கப்படும் ஜ்யேஷ்டா தேவி கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். இவள் மாதர்களின் கரு உறுப்பு, மாதவிடாய் தொடர்பான சிக்கல்களை தீர்த்தருளுகின்றாள். இக்கோவிலின் தென்புற பிறை மாடத்தில் இரு புறமும் சனகாதி முனிவர்கள் வீற்றிருக்க நடுவே இராஜேந்திர சோழனும் அவனது காதலி பரவை நங்கையும் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். கருவறையின் வடபுறம் கூத்தாடும் பிள்ளையார் அருள் பாலிக்கின்றார். அவரை நாம் ஒரு பக்கத்திலிருந்து எட்டிப் பார்த்தால் அவர் நம்மை நோக்கி தலையை சாய்த்துப் பார்ப்பது போல தோன்றும்.  தியான மண்டபத்துடன் கூடிய ஆலயம் இது. ஆனந்தேஸ்வரத்தின் இன்னொரு வரலாறு. ஆலய இரண்டாம் பிரகாரத்தில் இடம் பெற்ற சிவலிங்கத்தை ஒரு காலத்தில் மங்கண முனிவர் என்ற புண்ணிய புருஷர், அருகே உள்ள வாணி தீர்த்தத்தில் நீராடி, நாள்தோறும் பூஜித்துவந்தார். அதன் நற்பலனாக அவருக்கு பெரும் சித்துகள்  கைவரப் பெற்றது. அதனால் பெரும் களிப்புக்கு ஆளான அவர் தரையிலிருந்து ஜிவ் என எழுந்து பூமிக்கும் வானுக்குமாக ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்தார். இதனால் ஏற்பட்ட விபரீத விளைவாக மூன்று உலகங்கள், கடல், மலைகள் என அனைத்தும் அதிரத் தொடங்கின. போதாதற்கு சிவ மைந்தன் விநாயகனும் அக்கூத்தை தானும் ஆடத்தொடங்கிவிட்டார். இதனால் அச்சமுற்ற தேவர்கள் பிரம்மதேவன் தலைமையில் கூட்டமாகச் சென்று சிவபெருமானிடம் சரண் புகுந்தனர். உடனே ஈசன் ஆனந்த கூத்து நிகழ்த்தும் மங்கண முனிவரிடம் சென்று காட்சி தந்து “முனிவா, ஆட்டம் போதும். நிறுத்திக்கொள்! நீ இதுவரை பக்தியுடன் பூஜித்த லிங்கம் “ஆனந்த ஈசன்“ என இனி அழைக்கப்படுவார். இந்த ஊர் ஆரூர் என்ற பெயரோடு ஆனந்தபுரம் என்ற பெயரையும் கொள்ளும் என வரமளித்ததோடு மேலும் இப்படி அருளினார். “இம்மூர்த்தியை ஒரு தரம் நினைப்பவர், நாவினால் புகழ்பவர், காண்பவர் கொலைப்பழி கொண்டவராக இருந்தாலும் கோடி பாவங்களை செய்திருந்தாலும் அவை அழிக்கப்பட்டு முக்தியை அடைவர்.” மேலும் எவரொருவர் ஆனந்த ஈசனை வைகாசி மாத விசாக நாளில்,  இரவில் உணவு உறக்கம் நீக்கி செழுமை மிக்க 1000 தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்துவிட்டு, மறுதினம் எளியோருக்கு தானம் புரிந்து பாராயணம் முறைப்படி மேற்கொள்ள, அவர்கள் இவ்வுலகில் இந்திரனுக்கு ஒப்பான செல்வம் பெற்று சிறந்து நீடூழி வாழ்ந்து பின்னர் முக்தியின்பத்தையும் அடைவர்!” என அருளி மறைய, மங்கண முனிவர் கூத்தை நிறுத்திவிட்டு, களிப்புடன் இறைவன் காட்சி தந்த இடத்தை நமஸ்கரித்தார். அன்றிலிருந்து அச்சிவலிங்கத்தை ஆனந்தேசுவரன் என்ற பெயரில் பக்தர்கள் வணங்க ஆரம்பித்தனர்.  மங்கண முனிவர் ஆனந்தக் கூத்தை நிகழ்த்தியபோது தானும் நடனம் புரிந்த விநாயகர் “ஆனந்த நடன விநாயகர்“ ஆவார். ஆடகேச்சுரம்: பூங்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் தென்புறம் தல விருட்சத்தின் அருகே காணப்படும் சிறு கோயிலே ஆடகேச்சுரம். இச்சன்னதிக்கு மூலாதார பத்மம், சுஷும்னா வாயில், குல குண்டம், நாக பிலம், நாடி கந்தம், மோக்ஷ துவாரம் என்று பல்வேறு இராஜயோகம் தொடர்பான பல பெயர்களும் உண்டு.  இச்சன்னதியில் பிலவாயில் ஒன்றுள்ளது. இதை நாகபிலம் என்பர். இப்பெரும்பிலத்தில் அநாதியாய் உமையோடு இலங்கொளி ஆடகேச்சுரப்பேர் ஒப்பிலா மூர்த்தி உலகெல்லாம் உய்ய ஊழிதொறும் வீற்றிருக்கின்றார். “இலங்கு அணியாம் பல் நாகம்”      (திருவாசகம்) என நாக தெய்வத்திற்கு அருள் புரிந்து நாகங்களை அணிகலன்களாக அணிந்து கொண்ட நாகேசுவரர் ஆடகேசுவரத்தில் உருவம் இல்லாமல் எழுந்தருளியுள்ளார். இங்கு நாகம் வந்த துளை உள்ளது.  ஈசன் உருவம் இல்லாமல் இருப்பதால் அந்தர கேச புரம்  என்று திருவாரூருக்குப் பெயர்.  இவரை. பிரம்மா, விஷ்ணு, இந்திரன், திக்பாலகர்கள், சப்த நதிகள், தேவ கணங்கள், ருத்ர கணங்கள் சனகாதி முனிவர்கள் பூசித்துள்ளனர். எம்பெருமான் தேவர்கள் எழுப்பிய புற்றில் ஆடகேசத்து புகுந்ததை அப்பர் பெருமான்   நீள் வான முகடதனை தாங்கி நின்ற நெடுந்தூணை பாதாளக்கருவை ஆரூர் ஆள்வானை கடுகச் சென்று அடைவேன் – என்று பாடுகிறார். இம்மூர்த்தியை தொழும் மானிடர் யாவரும் அமரர் உலகம் சென்று அந்தம் இல் இன்பம் பெறுவர். ஆடகேஸ்வரரை சித்திரை மாத சதுர்த்தியன்று இரவு பூசிக்க இந்திரப்பதவியடைவர் என்றும்.  இம்மூலாதார பத்மத்தில் உள்ள நான்கு இதழ்களில் வரதா, ஸ்ரீ, ஷண்டா, சரஸ்வதி ஆகிய சக்திகளும், மையத்தில் சிவ குருவான ஞானஸ்கந்தர் ஸ்தாபித்த சக்தி வேலும் விளங்குவதாயும், சித்திரை மாதம் வளர்பிறை சஷ்டியன்று     இரவு, சக்திகள் நால்வரையும் தொழுபவர் வேண்டியதை எல்லாம் அடைவர் என்றும் திருவாரூர் புராணம் கூறுகின்றது.  சிவராஜ யோகத்தின் குறியீடாக இவ்வாலயம் அமைந்துள்ளது.     இச்சன்னதியில் உருவ வழிபாடோ, அலங்காரங்களோ, வேறு ஆரவாரங்களோ கிடையாது. ஆகையினால் இயற்கை சூழலுடன் கூடிய அமைதி தவழும் தியான மண்டபமாக திகழ்கின்றது. எனவே தூய அன்பர்கள் மன ஒருமையுடன் தொழுது தியானிக்க அமைதியான சூழலோடு அமைந்துள்ளது. இச்சன்னதியின் அருகில் வருபவர்கள். அவர்களை அறியாமலே ஈர்க்கப்பட்டு, பயபக்தியுடம் உள்ளே வந்து அமர்ந்து தியானத்தில் அமர்வர் என்பது கண்கூடு.   பிராணன் ஒவ்வொரு மனிதரிடத்திலும் மூலாதாரத்தில் இருந்து கொண்டு இயங்குகின்றது. பிராணனையே குண்டலினி என்று கூறுவர். குண்டலினி ஒரு பாம்பைப் போல சுருண்டு மூலாதாரத்தில் உறங்குகின்றது என்று கூறுகின்றது யோக மரபு. இச்சன்னதிக்கு அருகில் தலமரம் அமைந்துள்ளது. இம்மரத்தின் நுனி கிளைகள் எல்லாம் வளைந்து நெளிந்து செல்லும் பாம்பைப் போலவும், இலைகள் எல்லாம் படம் எடுத்த பாம்பின் தலையைப் போலவும் தோற்றமளிக்கின்றன. கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள இதன் ஒரு மலரைக் காம்புடன் சேர்த்துப் பார்த்தால் ஒரு அழகிய பறவையைப் போல தோற்றமளிக்கின்றது. மலரின் நடு வயிற்றுப்பகுதியை சற்று கிழித்துப் பார்த்தால் விரல்களுடன் கூடிய ஒரு பறவையின் கால்களைப் போல மலர்களின் இரு மகரந்த தாள்கள் வெளி வரும். மரத்தின் அடியில் கணபதி அமர்ந்திருக்கின்றார். இதைப் போன்றதொரு உருவகம்தான் ஸ்ரீதியாகராஜர் சன்னதியிலுள்ள மூலாதார கணபதியும். குண்டலினி எழும்பி விட்டால் காமம் கெட்டு ஒழியும் என்பதை விளக்கவே இச்சன்னதிக்கு எதிரே உள்ள காமத்தின் உருவான நந்தி உடல் சோர்ந்து, தலை ஒரு பக்கம் சாய்ந்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக பலி பீடத்தில் பிற ஆசைகளை பலி கொடுத்துவிட்டு மேலே சென்றால் கைலாசத் தியாகரை தரிசிக்கலாம். கைலாயத்திற்கும் உயர்ந்தது எதுவும் இல்லை என்பதை உணர்த்த கைலாசநாதருக்கு மேலே ஸ்தூபி ஏதும் அமைக்கப்படவில்லை.  வடப்புறம் ரௌத்ர துர்க்கை சன்னதி. சித்தீசுவரம்: இவ்வாலயமும் ஒரு தல வரலாற்றைக் கொண்டுள்ளது. சிறந்த சிவ பக்தனான அரசன் அம்சன் நீண்ட காலம் பஞ்சாட்சர ஜெபத்தை கடுமையாக ஜெபித்து, அதனால் சில சித்துக்கள் கைவர பெற்றான். அம்மன்னனை சித்தீசன் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அனைவரும் அழைத்தனர். சித்தீசனுக்கு புத்திர பேறு கிடைக்காத நிலையில் அவன் சுக்கிராச்சாரியாரை சந்தித்து, வணங்கி  அதற்கான வழிமுறைகளை அருள வேண்டினான். அவர் தந்த ஆலோசனையின் படி மன்னன் ஒரு சிவலிங்கத்தை நிறுவி, வழிபட்டு, அதன் பலனாக புத்திர பேற்றை அடைந்தான். அந்த லிங்கம் குடி கொண்ட இடம்  மன்னன் பெயரால் சித்தீசுவரமானது.  ஒரு சந்தர்ப்பத்தில் அந்தணர் குலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், தண்ணீர் பாம்பை பிடித்து விளையாடுகையில், அவன் பாம்புடன் முனிவர்கள் பலர் தவம் செய்யும் இடத்திற்கு சென்றுவிட்டான். அப்பாம்பை அவர்கள் மீது அவன் குழந்தைத் தனமாக வீச, நிஷ்டையில் ஆழ்ந்திருந்த ஒரு முனிவரின் ஏகாந்த நிலையை பாதித்து விட்டது. அச்செயலால் அவர் சினமுற்று, சிறுவனை சபித்துவிட்டார். பாதிப்புற்ற சிறுவன் கண்ணீர் மல்க அம்முனிவரிடம் மன்னிப்பு கோரினான். சற்று கோபம் தனிந்த முனிவர், சாப விமோசனம் அருளிய முறையில் அவன் சித்தீசுவரர் முன்பு தினமும் ஷடாட்சர மந்திரத்தை ஓதி, சிவனருளால் சாபம் நீங்கப் பெற்றான் என்ற செய்தியும் தல வரலாற்றில் உள்ளது. விசுவகர்மேசுவரம்: தியாகேசர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இடம் பெற்றுள்ள தனி கருங்கற் பணிகள் நிறைந்த கோயிலாக திகழும் விசுவகர்மேசுவரம். அழகிய கொடுங்கைகளும், வரிகளும், திருவுருவங்களும் செறிந்து இதற்கு அணி சேர்க்கின்றன. சிற்பக்கலையை பின்னனியாக கொண்ட ஆலய நாயகர் விசுவகர்மேசுவரர் அருட்காட்சி அளிக்கிறார். புதிதாக வீடு கட்ட எண்ணமிடும் பக்தர்கள், வேலையை ஆரம்பிக்கும் முன்பாக சில செங்கற்களை இவ்விறைவன் முன்பு வைத்து பூஜை செய்யும் வழக்கமும் உள்ளது. இங்கே தட்சிணாமூர்த்தி, கணபதி, துர்க்கை, பிரம்மா, முதலான தெய்வங்களையும் ஒருங்கே தரிசிக்கலாம்.  ரௌத்ர துர்க்கை – இராகு கால துர்க்கை – எரிசின கொற்றவை: திருவாரூர் ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தனி சன்னதியில் ரௌத்ர துர்க்கை நின்ற கோலத்தில் எட்டுக் கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். இவள் சன்னதியில் இராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்தக் காரியங்களை முடித்து இராகு தோஷத்தினால் உண்டாகும் திருமணத் தடைகளை நிவர்த்தி செய்கிறாள் இத்துர்க்கை. பிரதி வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இராகுகால பூஜை விசேஷம். பதவி உயர்வு வேண்டுவோரும், பணி மாற்றம் வேண்டுவோரும் இத்துர்க்கையை வழிபடுகின்றனர். சப்த மாதர்கள்: திருக்கோவிலின் இரண்டாம் திருச்சுற்றில் மணிமண்டபம் அருகே வடக்கு நோக்கி சப்த மாதர்கள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். பழமையான பல்லவர் கால மூர்த்தமாகும். பல்லவர், சோழ, பாண்டியர், விசயநகரர், மராட்டியர் போன்ற பல்வேறு அரச பரம்பரையினர் வழிபட்ட அம்மன்கள் இவர்கள் ஆகும். மேதா தட்சிணாமூர்த்தி: தட்சிணாமூர்த்திக்கு வழக்கமாக பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர் ஆகிய 4 சீடர்களுடன் அருள் பாலிப்பார். திருவாரூர் திருத்தலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் தலம் திருவாரூர். இடபத்தின் மேல் அமர்ந்து ஞானம் உபதேசிக்கும் கோல தட்சிணாமூர்த்தியை மேதா தட்சிணாமூர்த்தி என்பர். இடபதேவர் தர்மத்தின் வடிவம், தர்மத்தின் பொருளை உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியுடன் இடபதேவரையும் வழிபடுவது சிறப்பு. அனுமந்தேஸ்வரர்:  சீதையைத் தேடி இலங்கை சென்ற போது இராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகிப் போன அனுமனது வால் இரணமாயிற்று, பல தலங்களுக்கு சென்றும் புண் ஆரவில்லை. பின்னர் ஆரூரை அடைந்த அனுமன் ஒரு இலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். ஈசன் அருளால் மீண்டும் அழகிய வால் பெற்றார் ஆஞ்சநேயர். அவர் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கின்றார்.  தீயினால் ஏற்படும் காயங்களை நிவர்த்தி செய்பவர் அனுமந்தேஸ்வரர். ஒட்டுத் தியாகராஜர்: சுந்தரருக்காக தியாகராஜர் காட்சி கொடுத்த கோயில். இச்சிறுகோயில் வடக்கு இராஜ கோபுரத்தின் எதிரே உள் பிரகாரத்தில் உள்ளது.  எம்பிரான் தோழரான சுந்தரர் ஒரு நாள் தியாகேசரை தரிசிக்கச் சென்றபோது தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியார்களை வழிபடாது சென்றார். இதனால் கோபம் கொண்ட விறண்மிண்ட நாயனார் சுந்தரரை ஆலயத்திற்குள் செல்ல முடியாதபடி தடுத்தார். இதனால் மனம் வருந்திய சுந்தரருக்கு தியாகேசப்பெருமான் தனியே காட்சிக்கொடுத்தார். அவரே இந்த ஒட்டுத் தியாகராஜர் ஆவார். ஜுரதேவர்: இத்திருக்கோவிலின் இரண்டாம் திருச்சுற்றில் இராஜநாராயண மண்டபத்தின் வெளிப்புறம் தென்முகமாய் ஜுரதேவர் சன்னதி உள்ளது. இவர் த்ரிபாதர். மாகேசுவர மூர்த்தங்களில் ஒருவர். விடாத காய்ச்சல் இருப்பின் ரசம் நிவேத்யம் செய்ய உடன் காய்ச்சல் நீங்கும். இச்சன்னதி இப்போது பித்தளைக் காப்பில் மிளிர்கின்றது திருத்தமனக நந்தவனம்: இரண்டாம் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் நாவுக்கரசர் திருநாமத்தால் இரண்டாம் குலோத்துங்க சோழனால் உருவாக்கப்பட்ட நந்தவனம் உள்ளது.  தியாகப்பெருமானுக்கும், நம்பியாரூரருக்கும், நங்கை பரவையாருக்கும் பச்சை சாத்தும் திருவிழாவின் போது மருக்கொழுந்து (தமனகம்) சார்த்துவதற்காக இந்நந்தவனம் தோற்றுவிக்கப்பட்டதாக இம்மன்னனின் கல்வெட்டு பகர்கின்றது. இதுவரை பூங்கோவிலை வலம் வந்து இரண்டாம் சுற்றில் அமைந்துள்ள சில சன்னதிகளை தரிசித்தோம் வாருங்கள் இனி இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அம்மன் இருவரையும் தரிசிக்கலாம். செவ்வந்தித் தோடழகா போற்றி              17. அல்லியங்கோதை அம்பாள் []   சிவாலயங்களின் தனி அம்மன் சன்னதிகள் திருகாமக்கோட்டம் என்றழைக்கப்பட்டன. திருவாரூரில் இரண்டு திருகாமக்கோட்டங்கள் அமைந்துள்ளன. அவையான கமலாம்பாள் மற்றும் நீலோத்பலாம்பாள் சன்னதிகள் ஆகும்.   தண் செய் காவிரி பாய்ந்து பொன் கொழிக்கும் சோழ வள நாட்டின் மருத நிலத்தில் அமைந்திருப்பதால் இவ்வாலயத்தில்  அம்மையின் பெயர்களும் இம்மருத நிலத்தில் மலரும் மலர்களின் பெயராகவே அமைந்துள்ளன. கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், என்ற திருநாமத்துடன் அம்மை இக்கோவிலில் இரு வடிவங்களில் அருள் வழங்குகிறாள்.   பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது ஊரில்லை காணும் ஓளியது ஒன்றுண்டு கீழில்லை மேலில்லை கேள்வியிற் – பூவே என்று சிறப்பித்துப் பாடப்பட்டுள்ள நீலோற்பவ மலரின் பெயரிலேயே நீலோத்பலாம்பாள் என்றும் அல்லியங்கோதை என்றும் அழைக்கப்பெறும் ஆதி சக்தி இரண்டாம் பிரகாரத்தில் தனி சன்னதியில் திருக்கரத்தில் கருங்குவளை மலரை ஏந்தி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். வன்மீகர் மற்றும் ஸ்ரீதியாகராஜர் எழுந்தருளும் முதல் சுற்றுக்குச் செல்லும் அழகியான் கோபுரம் வாயில் எதிரே உள்ள கொடிமரத்திற்கு வடக்கே அமைந்துள்ளது அல்லியங்கோதை அம்பாள் சன்னதி. தெற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் உலகம்மை அருள் பாலிக்கின்றாள். மகாமண்டபத்தில் சீரிய தோற்றத்தில் சிங்காரவேலவன் கையில் வில் ஏந்தி அருள் பாலிக்கின்றார். மகா மண்டபத்திற்கு கிழக்கே நான்கு வேதங்களும் பூசித்த நான்கு சிவலிங்கங்கள். இம்மண்டபத்தின் உட்புறச்சுவரிலும் கூரையிலும் எழிலார்ந்த தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் காலத்து  ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. தியாகேசரை திருமாலும், முசுகுந்தனும் வணங்கும் கோலம், அவருக்கு நேர் எதிரே பரவை, சங்கிலி நாச்சியார்களுடன் சத்திரிய கோலத்தில் வண்தொண்டர் சுந்தரர், கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், மகாலக்ஷ்மி, சரஸ்வதி, துவாரபாலகிகள், விநாயகர்,  மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகர், ஐயனின் சத்யோஜாத, வாமதேவம், தத்புருஷ, அகோர, ஈசான கோலங்கள், மாணிக்க நாச்சியார் வரலாறு, சோமாசி நாயனார் யாகத்திற்கு தியாகராஜர் நீசராக, உமையம்மை கள் கூடம் தாங்கி, விநாயகர் மற்றும் முருகர் இரு குழந்தைகளாக உடன் வர, நான்கு வேதங்களை நான்கு நாய்களாக பிடித்துக்கொண்டு தோளில் இறந்த கன்றுக்குட்டியுடன் மேளம் வாசித்துக்கொண்டு வரும் அம்பர் யாக ஓவியம், தியாகேசனை வழிபடும் மன்னர் சரபோஜி மற்றும் அரசியார் பாய்சாய்ப் ஓவியங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன அப்படியொரு கலை நுணுக்கம்.  உட்கூரையில் அற்புதமாக மலர்களின் ஓவியங்கள் கண்ணுக்கு விருந்து. பள்ளியறை இணைந்த அர்த்த மண்டபம்.  அதை அடுத்து இரண்டாம் நிலையில் சரவிளக்கு. அபிஷேக ஓடமேடை, அம்பிகையின் உற்சவத்திருமேனி. இதையடுத்து கருவறை சரவிளக்கு. அன்னை அல்லியங்கோதை உயிரோவியம், பார்க்கத் தெவிட்டாத திருமுகம். அம்பாளின் அருகில் தோழியானவள் பால முருகனை தோள் மீது சுமந்து நிற்க அம்மையின் இடத்திருக்கரம் பாலமுருகனின் விரலை பற்றியபடி இருக்கும், வலக்கரத்தில் நீலோத்பல மலரை (கருங்குவளை) வைத்துக்கொண்டு ஒயிலாக சாய்ந்து நிற்கும் அருமையான தோற்றம். அம்மை யோக முடிவாக கிரியா சக்தியாக   இல்லற மாண்பை விளக்குவதாக ஆதி சக்தியாக  அருள் பாலிக்கின்றாள்.  அல்லியங்கோதை அம்பாளை தொல்லை மா ஞாலமாதித் தொகையிலா அண்டம் நல்கிச் செல்வ, மான் கருணையாழுஞ் சிறகால் அணைத்துப் போற்றும் மல்லச் செழுநீர் வாவி வண் கமலாலயத்துள் அல்லியங்கோதை என்னும் அன்னத்தை அகத்துள் வைப்பாள்- என பக்தர்கள் பாடி துதிக்கின்றனர்.  அம்பிகையின் உற்சவத் திருமேனி மேலும் எழிலாய் அமைந்துள்ளது. நின்ற திருக்கோலம், சிரசில் அரசிக்கே உரிய மணிமுடி, மை தோய்ந்த இமையோடு  அருள் வழங்கும் சுடர்விழிகள், பிறை உதழில் திருநீற்றுக் கீற்று, செதுக்கி வைத்த நாசி, தீவினைகளை பொடியாக்கும் இதழ்முறுவல், சங்குக் கழுத்து, காதணி, மூக்கணி, மார்பு வடம், இடை மேகலை, சூடகம், வளையல், நீலோற்பல மலரேந்தும் வலத்திருக்கரம், வலத்திருக்கால் உந்தி, இல்லையென்னும் மின்னலிடை சற்றே ஒடிந்து இடத்திருப்பாதம் பதிந்து, சேடியின் இடத்தோளில் அமர்ந்த செல்லப்பிள்ளையாம் முருகப்பெருமானின் உச்சி நீவும் இடத்திருக்கரம்.  திருத்தமான முன் கொசுவம் வைத்து, தழைய உடுத்திய புடவை, முந்தானைத் தலைப்பினை முன் பக்கம் செருகி, ஐயன் அளந்த இரு நாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் வளர்க்கும் பெருமாட்டியாய் சிவானந்த தென்றலில் ஒசிகின்ற திருவுருவமாய், மங்கலப் பெண் கொடியாய் எழுந்தருளி அருள் பாலிக்கும் அற்புத திருக்கோலம். பிற சிவத்தலங்களில் காண முடியாத புதுமையான தத்துவத் திருக்காட்சி. நீலோத்பலாம்பிகை இடக்கரவிரலால் குமரக்குழந்தையின் உச்சி நீவும் பாவனை – ஆன்ம பரிபாலனம் என்னும் அனுக்கிரக முத்திரை எனக்கூறுவர் ஆன்றோர். சேடிப்பெண் பிருத்வி தத்துவம் என்றும், அம்பிகை துவாதசாந்தம் ஆகிய ஆகாயம் என்பது ஐதீகம். அன்னையின் பேரழகை முத்துசுவாமி தீட்சிதர் பல்வேறு இராகங்களில் கிருதிகள் பாடியுள்ளார். அர்த்தஜாம பூசைக்குப்பிறகு எம்பெருமான் நீலோத்பலாம்பாள் சன்னதிக்கு எழுந்தருளுகின்றார். பள்ளியறை பூசை இங்கு நடைபெறுகின்றது. தியாகேசர் சன்னதியிலிருந்து சுவாமி புறப்பட்டு சங்கம், கொம்பு, பிரம்மதாளம் மற்றும் ஓம் நமசிவாய முழகத்துடன் நீலோத்பலாம்பாள் சன்னதி எழுந்தருளுகின்றார். அங்கு அர்த்த மண்டபத்தில் பொன்னூசல் கண்டருளுகிறார்.  அம்மையப்பருக்கு அலங்கார தீபாரதனை உபசாரம் சிறப்பாக நடக்கின்றது. பால் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆதிசக்தியாம் அல்லியங்கோதையை சேவித்தோம் அடுத்து கமலாம்பாளை சேவிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.              18. கமலாம்பாள் []   ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலாபுரம், பராசக்திபுரம், பரையூர், கமலாலயம் என்றெல்லாம் திருவாரூரை அழைக்கக் காரணமாக உள்ள கமலாம்பாள் பெரிய கோவிலின் மூன்றாம் திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் வடகீழ்த்திசையை நோக்கிய வண்ணம் தனிக் கோவில் கொண்டுள்ளாள்.  உலகெலாம் காக்கும் அருள்நாயகி இங்குத் தவக்கோலம் பூண்டு அருள்பாலிக்கின்றாள்.  கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், பிரகாரம், நந்தி, பலி பீடம், கொடிமரம், அனுக்கிரக மண்டபம் மற்றும் தனித்த திருமதில்களுடன் இக்கோயில் அமைந்துள்ளது. கமலாம்பாளுக்கு இவ்வாறு அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பு. த்ரிநேத்ராம் துவிபுஜாம் ஸ்யாமாம் கரண்டமகுடான் யோகாசன சம்யுக்தாம் ஊறு ஹஸ்த சமன்விதாம் நீலோத்பலதராம் தேவீம் பாதுகா குடிகாசனாம் ஏவம் த்யாயேத் பராசக்தீம் அர்ச்யித்வா விசேஷத: பொருள்: முக்கண்கள், இரு தோள்கள், சியாமள நிறம், கரண்ட மகுடத்துடன் யோகாசனத்தில் ஒரு திருகரத்தை தொடையில் வைத்து, மறு திருக்கரத்தில் நீலோத்பல மலரைத் தாங்கிய தேவி, திருப்பாதங்களை குடிகாசனத்தில் அமர்ந்திருக்கின்றாள். அப்பராசக்தியை அர்சிக்கின்றேன். மகா மண்டபத்தில் கொடி மரத்திற்கு தென் புறம் நீலவேணி சமேதராய் உச்சிஷ்ட கணபதி அன்னைக்கு எதிராக அருள் பாலிக்கின்றார். ஆதிகாலத்தில் அம்பாள் மிகவும் உக்ரமாக இருந்த்தாகவும், அம்பாளின் உக்ரத்தைக் குறைக்க இவ்வாறு அவரது மகனின் சன்னதியை அம்மனுக்கு எதிரே அமைத்தனர் என்பர்.  கோபுர வாயிலின் மேற்கூரையில் பத்து முத்திரைகளும் பத்து துவாரங்களாக அமைந்திருக்கின்றன. அர்த்தமண்டபத்தில் அம்பிகையின் வாமபாகத்தில் மந்திரிணியாகிய இராஜ மாதங்கி. ஸசாமர-ரமாவாணீ-ஸவ்ய தக்ஷிண- சேவிதா (இடத்தும் வலத்தும் லக்ஷ்மியும்(செல்வமும்) சரஸ்வதியும்(கல்வியும்) சாமரங் கொண்டு சேவிக்கப்படுபவள்) என்றபடி இம்மண்டபத்தின் நிலைவாசல் வெளிப்புறம் சாமரம் வீசும் அலைமகள் மற்றும் கலைமகள் இருவரும் துவாரபாலகிகளாய் யாழும், வீணையும் தாங்கி சுதை வடிவில் விளங்குகின்றனர். கருவறையின் அணுக்க வாயிலின் இருபுறமும் சங்க நிதியும் பத்ம நிதியும் அமைத்துள்ளனர்.   திருசுற்றில் தென்மேற்கு மூலையில் அட்சர பீடமும், திருவாசியும் உள்ளன. திருவாசியில் மாத்ருகா அட்சர மாலை எனப்படும் ஐம்பத்தொரு அட்சரங்களும் எழுதப்பட்டுள்ளன.  அட்சர பீடத்தின் உட்பொருள், மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியிலிருந்து முதலில் அவ்யக்தமான விளங்காத சப்தம் உண்டாகிறது. சப்த ப்ரஹ்மம் என்ற குண்டலினியிலிருந்து சக்தியும், சக்தியிலிருந்து த்வனியும், த்வனியிலிருந்து நாதமும், நாதத்திலிருந்து நிரோதிகையும், நிரோதிகையிலிருந்து அர்த்தேந்தும், அர்த்தேந்திலிருந்து பரையும், பரையிலிருந்து மத்யமையும், மத்யமையிலிருந்து வைகரீயும் பிறக்கின்றன. இந்த வைகரீதான் அகரம் தொடங்கி க்ஷகரம் ஈறான அட்சரங்களின் உருவங்களாய் மலர்கின்றது. பரா ப்ரத்யக்-சிதீ-ரூபா பச்யந்தி பரதேவதா | மத்யமா வைகரீ-ரூபா பக்த மானஸ-ஹம்ஸிகா || - (லலிதா சகஸ்ரநாமம்) பிந்து மூலாதாரத்தில் இச்சா சக்தி வடிவமாய் பரா என்றும், சுவாதிட்டானத்தில் ஞான சக்தி வடிவில் பச்யந்தி என்றும், இதயத்தில் கிரியா சக்தியாக விளங்கி மத்யமை என்றும், முகத்தில் வைகரீ என்றும் பெயர் பெறுகின்றது. இதில் முதல் மூன்றும் காதில் படாத த்வனிகள், நான்காவதான வைகரீதான் அகாரம் முதல் க்ஷகாரம் ஈறான காதில் படும் வர்ணங்கள். எனவே யாவற்றுக்கும் மூல காரணமாயிருக்கும் குண்டலினியே சப்தபிரஹ்மம் என்ற பெயராலும் கமலாம்பிகை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள். சிதம்பரம் சிதாகாசம் எனில் திருவாரூர் அக்ஷராகாசம். கமலாம்பிகையே மாத்ருகா ஸ்வரூபிணி என்பதால் துர்வாசர் நிருதி திக்கில் அக்ஷர பீடத்தை நிறுவியுள்ளார். இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.  பீடத்தின் மத்தியில் புவனேஸ்வரி பீஜம் பொறிக்கப்பட்டுள்ளது. ஐயனின் சன்னதியில் அகத்தியரின் சித்ரபீடம். அம்மனின் சன்னதியில் அட்சர பீடம். “எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள்” என்ற அருள்நந்தி சிவம் கூறியது கமலாம்பாளுக்கு சாலப் பொருந்துகின்றது. கமலாம்பாளின் ஆலயத்தில் சங்கரநாராயணி, இராஜராஜேஸ்வரி, நடுக்கம் தீர்த்த விநாயகர், காசியபலிங்கம், வள்ளி தெய்வானையுடன் கருணை புரியும் முருகவேள், சண்டிகேஸ்வரி, வாக்தேவி, வீணையின்றி விளங்கும் ஆதி சரசுவதி ஆகியோர் பிரகாரத்தில் அருள் பாலிக்கின்றனர். மேலும், ஜமதக்னி, கௌதமர், வசிஷ்டர், விசுவாமித்திரர் பூசித்த சிவலிங்கங்கள், விஷ்ணு துர்க்கை ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். கிழக்குச்சுற்றில்  சதாசிவத்தின் சுத்த சக்தியாகிய  உற்சவர் மனோன்மணி தென்முகமாய் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் தரிசனம் தருகின்றாள். ’வாக்கும் மனமும் கடந்த மனோன்மணி’ சாதகனின் புருவ நடுவில் விளங்கும் பெருமையுடையவள். மனோன்மணி விளங்கும் பீடத்தை இரண்டாம் சன்னதி என்று அழைப்பது மரபு. சாதகன் சிரசில் விளங்கும் பிரம்மரந்திரம் – சகஸ்ர கமலம் முதல் சன்னதி; புருவ மத்தி இரண்டாம் சன்னதி.   வெளிப்பிரகாரத்தில் அற்புதமான ஓவியங்களைக் கண்டு களிக்கலாம். அம்மனின் கோபுரத்தின் உச்சியில் ஆகாச பைரவர் காவல் காத்து வருகின்றார். இவர் சித்தி பைரவர் ஆவார்.    கமலாம்பாள் ஆலயம், அம்பாள் பெண்ணின் ஐந்து நிலைகளாக வணங்கப்படும் ஐந்து அக்ஷித்தலங்களுள்  ஒன்று. காசியில் உறையும் விசாலாக்ஷி குழந்தையாகவும், காஞ்சியில் வீற்றிருக்கும் காமாக்ஷி  சிறுமியாகவும், நாகையில் விளங்கும் நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாகவும் (யௌவனப்பருவம்), திருவாரூரில் திகழும் (கமலாம்பிகை) கமலாக்ஷி இளம் பெண்ணாகவும், மதுரையில் அரசாளும் மீனாக்ஷி  திருமணமான சுமங்கலிப்   பெண்ணாகவும் வணங்கப்படுகிறார்கள்.  சக்தி பீடங்களில் அம்பாள் விசாலாக்ஷியாக அம்மன் அருள் பாலிக்கும் காசி மணி கர்ணிகா பீடம் ஆகும், காமாக்ஷியாக அருள் பாலிக்கின்ற காஞ்சி  காமகோடி பீடம் ஆகும், மீனாக்ஷியாக அருள் பாலிக்கும்  மதுரை  இராஜ மாதங்கி சியாமளா பீடம் ஆகும். அன்னை கமலாம்பாளாக (கமலாக்ஷி) அருள் பாலிக்கும் திருவாரூர் கமலை பீடம் ஆகும். மேலும் 64 பராசக்தி பீடங்களுள் முதன்மையானதாகவும் ஆதார பீடமாகவும் போற்றப்படுகின்றது. ஏனென்றால் திருவாரூர் மூலாதாரத் தலம் அல்லவா? நெறிகளில்  காஞ்சி வேக நெறியையும், தில்லை போக நெறியையும் திருவாரூர் யோக நெறியையும் உணர்த்துகின்றன. கமலாம்பாள் யோக நெறிகளில் குண்டலினி சக்தியை அடையும் வழிபாட்டு நெறியைக் காட்டுகின்றாள்.  அஜபாகல்பம் என்ற நூல் இந்நெறியை விரிவாக விளக்குகிறது. விளங்கு தென்னாரூர் வியன்பதி தழைக்க உளங்கனிவாக யோகாசனத்தில் அண்டருந் துதிக்க அரசிருந்தருள் பூ மண்டலம் துதிக்க வளர் பராசக்தி – கமலாம்பாள் காலம் கடந்த மூர்த்தியாய் ஸ்ரீசக்ரேச்வரி, லலிதா திரிபுர சுந்தரி – ராஜ யோக சுகி – திரிபுரேசி – சாகம்பரி - ஞான சக்தியாக அருள் பாலிக்கின்றாள். கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெருந்தேவியரின் சங்கமம் கமலாம்பாள். தன் சிரசில் பரமேஸ்வரனைப் போல கங்கையையும், சந்திரனையும் பிறையாக சிரசில் கரண்ட மகுடத்தில் சூடிக்கொண்டு, அஞ்சன விழிகளை மூடிக்கொண்டு, சிவானந்த தென்றலை சுவாசித்து, மோனம் ததும்பும் ஞானத்தின் உச்சியில் சிவராஜ யோகத்தில் அருள் பாலிக்கின்றாள். துறவறம் மேற்கொண்டோர்களுக்காக அன்னை கமலாம்பிகையாக யோக கோலத்தில் கால் மேல் காலிட்டு குட்டிகாசனத்தில் ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் ஆகிய மூன்றடுக்கு பீடத்தில் மகாராணியைப் போல் அருட்காட்சி தருகின்றாள்.  வலது திருக்கரத்தில் கமலம் ஏந்தி, இடது திருக்கரத்தை தொடையில் வைத்த அருட்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள் ஆருர் கமலாம்பிகை. அன்னை  அசபை வித்தைக்கு அரணாக அமைந்தவள். கமலாம்பிகை வன்மீக நாதரைப் போலவே சுயம்பு. இவ்வாறு இரு அம்மன் சன்னதிகளிலும் உமையவளின் திருவுருவங்கள் இரு வேறுபட்ட நிலைகளில் காணப்படுவது ஒரு சிறப்பு. பராசக்தி மகாத்மியம் என்னும் நூலில் உள்ள பாடல் ஒன்று கமலாம்பிகையின் தவத்திற்கான காரணத்தை இயம்புகின்றது. அறந்தழைய கலைத் தெரிவை வனப்பெய்தச் சசியெனும் பேரரிவை வாழ நிறங்கெழுபூ மடந்தை யொடுநில மங்கை மங்கலத்தில் நிறைந்து மல்கப் பிறங்குமுயிர் தொகை யனைத்தும் களிகூரத் தவம்புரியும் பீடுசான்ற சிறந்த கமலாலய நாயகி செம்பொற் சேவடிகள் சென்னி சேர்ப்போம் பொருள்: தர்மம் தழைத்தோங்கவும், கலைமகள், இந்திராணி, மகா லட்சுமி, பூதேவி இவர்கள் சகல மங்களங்களுடன் வாழவும், சகல உயிர்களும் இன்புறவும், பீடும் பெருமையும் நிறைந்த கமலாலயத் திருத்தலத்து நாயகி கமலாம்பிகை தவம் இயற்றுகிறாள். சுத்த சித்தி நிலை என்பது யோக நிலையிலே தோன்றுவதே ஆகும், கமலாம்பாள் அதற்கு அருள் புரிகின்றாள். முக்தி அடைய அற நிலையில் வாழ்ந்திட வேண்டும், அற நிலையில் வாழ்ந்திட பொருள் வேண்டும், அப்பொருளை உயிர்கள் அனைத்திற்கும் தந்துதவ வேண்டும் இப்படி மனத்தூய்மையோடு அறம் புரிந்தால் இன்பம் பெறலாம். இப்பேரின்ப வாழ்க்கையோடு அன்னையை தியானம் செய்தால் அவள் மாயையை அகற்றி மனம் தூய்மை பெற அருளுவாள். காமகலா ரூபிணி ஸ்ரீகமலாம்பாள். விளையாட்டாக உலகைப் படைத்து உயிர்களை அருள்வயப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் பிரம்மமே சிவம் – சக்தி என்ற கூறுகளாக பிரிந்தது. இவ்வாறு பிரிந்த சிவமும் சக்தியும் மீண்டும் இணைந்தன. இந்த சிவமும் சக்தியும் இணைந்த அபேத பாவமே காமகலை என்பதாகும்.  காமம் என்பது சிவம், கலா என்பது சக்தி.   சிவம் பிரகாச பிந்து, சக்தி விமர்ச பிந்து, இந்த விமர்ச பிந்துதான் சித்சக்தி. சித்சக்தியின் வெளிப்பாடே மாயை. மாயையிலிருந்து பரிணமிப்பதே காட்சிக்குத் தட்டுப்படுகின்ற உலகப் படைப்பு. அம்மையே தன் அருள் திறத்தால் ஆன்மாக்களுக்கு அப்பனை உணர்த்துகின்றாள். இவளுக்கு அருட்சக்தி என்ற திருநாமமும் உண்டு. இக்காமகலைதான் சகல பிரபஞ்ச சிருஷ்டிக்கும் காரணமாக உள்ளது. இத்தகைய காமகலை அதிடித்து விளங்கும் பீடமே கமலாலய சக்தி பீடம் ஆகும். பிரணவ சாதனையான குண்டலினி உணர்வில் சாதகன் சித்சக்தியால்தான்  சிவத்தை உணர்கிறான். இந்த சித்சக்தியே  ஆதார நிலையான கமலாம்பிகை. அம்பாளின் உற்சவத்திருமேனி மனோன்மணி. வாக்கும் மனமும் கடந்த மனோன்மணி என்பார் திருமூலர். சிவம்(காமா), சக்தி(கலா) வெவ்வேறாக பிரிந்திருப்பினும் தத்துவத்தால் இரண்டும் ஒன்றே. காமேஸ்வரர், காமேச்வரி இவர்களின் சாமரஸ்ய வடிவமாக இருப்பதாலும், காமா என்ற பெயருடன் கலா ரூபமாக திழ்வதாலும்,  அம்பிகைக்கு காமகலா என்று திருநாமம். காமம் என்பது விருப்பம் என்று பொருள்படும். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற புருஷார்த்தங்களில் காமம் என்பது இல்லறத்தில் நல்வழியில் பொருளீட்டலும், தர்மம் செய்யவும் ஆசைப்படுதல். துறவறத்தில் முக்தியை விரும்புதல். ஆகவே காமத்திற்குப் பிறகு மோட்சம். இதனால் காமகோடி என்ற பெயர் அம்பாளுக்கு ஏற்பட்டது. காமம் அனைத்தும் காணாமற்போன கோடி இடமான அத்வைதமாக அம்பாள் விளங்குகிறாள். காமகலையாகும் ஸ்ரீகமலாம்பிகையே மகாசோடசி, ஸ்ரீவித்யை, பஞ்சதசாக்ஷரி, பாலை, பகளா, மாதங்கீ, ஸ்வயம்வர கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகை, மகாவாராகி, இராஜ மாதங்கி, திரஸ்கரணி, சுகச்யாமளை, லகுச்யாமளை, அஸ்வாரூடா, பிரத்யங்கிரா, தூமவதி, சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி, பிரம்மானந்த சித்கலை. ஒரு காலத்தில் மாமுனிவர் துர்வாசரால் பூஜிக்கப்பட்ட கமலாம்பிகை தன்னை முழு மனதோடு வழிபடும் பக்தர்களுக்கு அருள்பவற்றை இப்பாடல் உரைக்கிறது.   கல்வியு ஞானமும் பல்வகை போகமுங் கட்டழகுஞ் செல்வமு மின்பமு நன்மனையாளுந் தைறலரசு நல்லன மைந்தருஞ் சித்தியு மத்தியு நாடியுனைப் பல்வகைப் பக்தி புரிவோர்க் கருளும் பராசக்தியே.    அறம், பொருள், இன்பத்தை நீலோத்பலாம்பாளும், தவ நிலை மேற்கொண்டு முக்தியான வீடுப்பேறு அருளுபவள் கமலாம்பாள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான  முத்துசுவாமி  தீக்ஷிதர்  ஸ்ரீவித்தை எனப்படும்                      ஸ்ரீசக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு கமலாம்பிகை நவாவரண கிருதிகள்  பாடியுள்ளார். அவை தொகுக்கப்பட்டுத் தினமும் அம்பாளின் முன் இசைக்கப்படுகின்றன. ஆடிப்பூரத்தின் போது அம்பாளுக்கு 10 நாட்கள் பிரம்மோற்சவம் கொடியேற்றம், தினமும் இரவு வாகன சேவை, தேரோட்டம் என்று சிறப்பாக நடைபெறுகின்றது. கமலாம்பாள்  ஆடிப்பூரத்தன்று தீர்த்தம் வழங்குகின்றாள். அன்றிரவு அம்மனுக்கு வெள்ளை சார்த்தி மகிழ்கின்றனர், பூரம் கழித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  மறு நாள் சித்ரோபசார விடையாற்றி உற்சவம். ஐப்பசி பூரத்தன்று சிறப்பு மங்கல வழிபாடுகள் நடைபெறுகின்றது.  தீபாவளியன்று மகாலட்சுமிக்கு சொர்ணாபிஷேகம். பௌர்ணமியன்று கமலாம்பிகைக்கு வழிபாடும், திருவிளக்கு பூசையும் சிறப்பாக நடைபெறுகின்றது. அம்மன் சன்னதிக்கு அருகே வலப்புறம் கமலமுனி சித்தர் பீடம் உள்ளது. கமலாம்பிகை திருக்கோவிலின் உட்பொருள் உணர்ந்து  தரிசனம் செய்பவர்களுக்கு பாரத தேசத்தில் விளங்கும் 51  சக்திபீடங்களையும் தரிசித்த நிறைவு கிட்டும். எனவே நாடெங்கிலும் இருந்து ஸ்ரீவித்யா உபாசகர்கள் குருவின்  வழிகாட்டுதலின் பேரில் திருவாரூரை தரிசிக்க வருகின்றனர். ஸ்ரீபுரம் என்பது திருவாரூர். ஸ்ரீநகரம் என்றும் அழைப்பர். கமலாம்பிகையே காமகலை என்னும் சித்சக்தி. இவளே லலிதை மற்றும் மகா திரிபுரசுந்தரி. இவள் நிலை பெற்று விளங்கும் சக்கரம் ஸ்ரீசக்கரம் ஆகும். இவளின் ரதம் ஸ்ரீசக்ர ராஜ ரதம் ஆகும். அல்லியங் கோதை நல்வன் மீகநாதருக்கார்ந்த கொண்டி மெல்லியல் பாகம் பிரியாள் நன்பா லொத்த மென்மொழியாள் நல்ல தியாக வினோதருக்காகி நலமருளிப் பல்லியல் நாமம் பெறுவாள் கமலை பராசக்தியே அசபை மந்திரத்தின் உந்துதலால் குண்டலினியை மூலாதாரத்திலிருந்து எழுப்பி சிரசுக்கு மேல் விளங்கும் ஒளி மண்டபத்தில் சீவனின் நினைவை கலக்கச் செய்தலே சிவயோகமாகிய பிரணவ வித்தை.   இந்த யோக வித்தைகளின் அடித்தளமாகிய குலம் மூலாதாரத்திற்கு கீழ் வெளிர் சிவப்பானதால் கமலத்தின் பெயர் கொண்டு கமலாம்பிகையாகவும், சாதனையின் முடிவில் சிரசின் மேல் அகுலமாக வெளிர்நீல ஒளியுணர்வில் சாதகன் சிவத்தை உணர்வதால் நீலோத்பல மலரைப் பெயராகக் கொண்டு ஒரு அம்பிகையும் எழுந்தருளியுள்ளனர். நீலோத்பலாம்பாளே யோக முடிவு.  சாதனையின் சந்திரதீபம் உணர்த்த வன்மீகருக்கு அருகில் அமர்ந்தவள் சோமகுலாம்பிகை. பரியங்க யோகம் உணர்த்தியதால் ஆரூர் அண்ணலின் அருகே அமர்ந்தவள் கொண்டி என பெயரேற்றாள் என்று விளக்கம் தருவர் பெரியோர். அன்னையர் இருவரையும் தரிசித்தப்பின் வாருங்கள் அன்பர்களே  திருவாரூர் ஆலயத்தில் உள்ள மண்டபங்களின் சிறப்புகளைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.                                 19. ஆரூர் வரலாறு கூறும் திருமண்டபங்கள்   திருவாரூர் திருக்கோயில் எவ்வளவு சிறப்பு பெற்று திகழ்கின்றதோ அது போலவே திருக்கோவிலில் உள்ள மண்டபங்களும் சிறப்புப் பெற்று திகழ்கின்றன.  வசந்த மண்டபம், நர்த்தன மண்டபம், பள்ளித்தாம மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம், அர்த்த மண்டபம், பாகற்காய் மண்டபம், கண்டிராஜா மண்டபம், கணு மண்டபம், திருக்கண் மண்டபம், அனுக்கிரக மண்டபம், பிரவசன மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், நந்தி மண்டபம், தட்டஞ்சுற்றி மண்டபம், தியாகராஜப்பெருமான் திருவிழாக் காலங்களில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் பக்தக்காட்சி மண்டபம், மார்கழி திருவாதிரையில் பொன்  ஊசல் ஆடும் ஊஞ்சல் மண்டபம், முசுகுந்த சக்கரவர்த்தி ஸ்ரீதியாகராஜ மூர்த்தியை நிலைபெறச் செய்ய எல்லாத் தலங்களின் மண்ணையும் எடையிட்டு இறுதியில் திருவாரூரை தேர்வு செய்த மண்டபம் மற்றும் திருக்கோவில் பராமரிப்பதற்காக மன்னர்கள் தங்கள் எடைக்கு எடை  பொருள்களை காணிக்கையாக அளித்த துலாபார மண்டபம், புராணங்கள் ஓதப்படும் புராண மண்டபம், பங்குனி உத்திரத் திருநாள் நடைபெறும், தியாகேசர் எண்ணெய்க் காப்பு கண்டருளும், திருவாதிரையன்று திருப்பாத தரிசனம் தந்தருளும் இராஜநாராயண மண்டபம்,  பசு மணி அடித்து நீதி கேட்ட ஆராய்ச்சி மண்டபம், மணி மண்டபம்,  கமலாம்பாள் சன்னதிக்கு முன்னர் உள்ள கமலாம்பாள் மண்டபம், சபாபதி மண்டபம், அக்காலத்தில்  பொது மன்றமாகவும், மக்கள் கூடும் இடமாகவும் விளங்கிய இராசேந்திர சோழன் மண்டபம், ஊர் சமையினர் கூடி பல முடிவுகளை எடுத்த பொது மன்றமாக திகழ்ந்த கொங்குவேளாளர் திருமண்டபம், அம்மன் செப்புத்திருமேனிகள் உறையும், தியாகேசரின் வழிபாடு முறைகளையும், புராணக்கதைகளையும் வண்ண ஓவியங்களாக கொண்டுள்ள சந்திரசேகரர் மண்டபம்,  மற்றும்  அம்பலவாணனின் சபாமண்டபம் என்றழைக்கப்படும், எம்பிரான் தோழர் சுந்தரர் திருத்தொண்டர் தொகை பாடிய,  பல சிறப்புகளைக் கொண்ட தேவாசிரிய மண்டபமும் இத்திருக்கோவிலில் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம்- தேவாசிரிய மண்டபம்: “திருவாரூர் பெருமை திகழ்கின்ற தேவாசிரியன் என்னும் திருக்காவணம்”  என்னும் சிறப்புப்பெற்ற  ஆயிரங்கால் மண்டபம் தேவாசிரிய மண்டபம் எனப்படும். சிவனோடொக்கும் அடியார்கள் உறையும் இடம் தேவாசிரிய மண்டபம். பூங்கோயில் பெருமானும் தேவாசிரிய மண்டப அடியார்களும் ஒன்றே என்பதால் தேவர்களும் அடியார்களை வணங்கிச் செல்வதால் இது தேவாசிரிய மண்டபம் எனப்பட்டது. தேவாசிரிய மண்டபம் சைவத்தைக் காத்த இடம். சுந்தரர் பெருமான் அவதார நோக்கம் நிறைவேறிய இடம். பெரிய புராணத்திற்கு வித்திட்ட இடம். ஆண்டவன் சிறப்பும் அடியார்கள் பெருமையும் விளங்கிய இடம். சிவபெருமான் “தில்லை வாழ் அந்தணர்”  என அடியெடுத்துக் கொடுக்க சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடியருளிய இடம். தியாகராஜப் பெருமான் ஆழித்தேர் விழா முடித்து இங்கு எழுந்தருளி மகாபிஷேகம் கொண்டு செங்கோல் செலுத்துவதால் இது இராஜதானி மண்டபம் எனப்படும். இம்மண்டபமே இத்த்ருக்கோயிலில் உள்ள மண்டபங்களில் மிகப்பெரியது ஆகும்.  இரண்டாம் குலோத்துங்கனின் அமைச்சர்களுள் ஒருவராகத் திகழ்ந்த அருண்மொழியார் தம் மன்னன் அனபாயன் சீவக சிந்தாமணி என்ற சமண காப்பியத்தை பெரிதும் பாராட்டியமை கண்டு; அவனை சைவமாகிய உண்மை நெறியில் ஆட்படுத்த எண்ணினார். சிவகதைகளே இம்மைக்கும், மறுமைக்கும் உறுதி தந்து வீடு தருவன என்று வலியுறுத்தினார். அது கேட்ட மன்னன் அச்சிவகதைகள் யாவை? எனக் கேட்டனன்.  அதற்குத் திருவாரூர் இறைவன் தாமே முதலடி எடுத்துத்தந்த, நம்பியாரூரர் பாடிய திருத்தொண்டதொகை பாடியதாகவும், பின்னர் அதனை விரித்துத் திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்று  சிவபாத சேகரன் இராஜராஜன் மூலம் திருமுறைகளை வெளிக்கொணர்ந்த நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி பாடியதாகவும் எடுத்துக்கூறினார். இதனால் மகிழ்ந்த அனபாயனின் விருப்பப்படி அருண்மொழியாராகிய தெய்வச்சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணத்தை பாடியருளினார். இத்தகைய சிறப்புகள் பெற்ற பெரிய புராணம் என்னும் சைவ சமய காப்பியத்தின் மூல நூலாகிய அமைந்தது தம்பிரான் தோழர் சுந்தரர் பாடிய “திருத்தொண்டதொகை” ஆகும். இது அரும்பி மலர்ந்த இடம் தேவாசிரியமண்டபம் என்றால் அதன் பெருமையை யாரே அளவிட முடியும். எனவே இம்மண்டபத்தின் பெருமையை சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் விறண்மிண்ட நாயனார் புராணத்தில் “திருவாரூர் பெருமை திகழ்கின்ற தேவாசிரியனிடைப் பொழிந்து மருவ நின்ற சிவனடியார்”. என்று போற்றிப்பாடுகின்றார்.  திருஞான சம்பந்தரரும், திருநாவுக்கரசரரும் தேவாசிரிய மண்டபத்தை தொழுத பிறகே பூங்கோயிலுக்கு சென்றனர் என்றும் குறிப்பிடுகின்றார். திருவொற்றியூரிலிருந்து திருவாரூர் திரும்பிய சுந்தரர் பரவை நாச்சியாருக்காக இம்மண்டபத்தில் காத்திருந்தார். தில்லையம்பலத்தான் ஆரூரில் உள்ள தேவாசிரிய மண்டபத்தில் தன் தேவியுடன் அமர்ந்து அழகிய பாவையரின் நடனத்தை கண்டான். தியாகேசனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் முதலில் தேவாசிரிய மண்டபத்தை வணங்கியபின் விறன்மிண்ட நாயனார் அனுமதி பெற்ற பின்னரே கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். சுந்தரர் காலத்தில் திருத்தொண்டர்தொகை மலர்ந்ததிலிருந்து அதன் தொடர்ச்சியாகப் பிற்காலத்தில் பல நூல்கள் இம்மண்டபத்தில் அரங்கேறியுள்ளன. கிழக்கு கோபுரம் தாண்டி மூன்றாம் பிரகாரத்தின் வட திசையில்  நூற்றுக்கணக்கான கல் தூண்களைக் கொண்ட இம்மண்டபம் அமைந்துள்ளது. சுமார் 210 அடி நீளமும் 140 அடி அகலமும் கொண்ட இம்மண்டபத்தின் உள்ளே காணப்படும் அநேக சிற்பங்கள் நமது மூதாதையரின் திறன் பற்றிப் பேசும். மண்டப நுழைவாயில் படிக்கட்டின் அருகே, அமர்ந்த நிலையில் காணப்படும் சிங்கம், துதிக்கையை தூக்கிய நிலையில் காட்சி தரும் யானை, ரிஷபம், குதிரை, யாளி போன்ற சிற்பங்கள் நம்மை அசர வைக்கின்றன. காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஆயிரங்கால் மண்டபத்தில் பல சன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மண்டப மத்தியில் மேடை ஒன்று உயர்ந்து காணப்படுகிறது. இங்கு காணப்படும் 300க்கும் மேற்பட்ட கல் தூண்கள், மண்டபத்தின் பெருமையை கூட்டுகின்றன. மத்திய மேடையில் சித்திரை திருவிழா காலத்திலும், விசேஷ நாட்களிலும் அருள்மிகு தியாகராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பண்டை நாட்களில் தியாகவிநோதனாம் வீதி விடங்கப்பெருமான் இம்மண்டபத்தில் உள்ள சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆடலும், பாடலும் கண்டு களித்தார்  என பல் கல்வெட்டுகள் பகர்கின்றன.   இம்மண்டபத்தின் வடப்புறத்தில் மையத்தில் உள்ள உயர்ந்த சபையை 42 தூண்கள் அலங்கரிக்கின்றன. இம்மேடையின் மேற்கூரையை ஒட்டிய விளிம்பில் ஒரு எழில்மிகு சிற்பத்தொகுதி அமைந்துள்ளது. இதன் நடுப்பகுதியில் வீதிவிடங்கப்பெருமான் உமையவளுடனும், உள்ளம் கவர்ந்த முருகனுடனும் வீற்றிருக்கின்றார், இவருக்கு வலப்புறத்தில் நின்ற கோல நீலோத்பலாம்பாள். அடுத்து வலப்புறம் உள்ள பகுதியில் நான்கு கரங்களுடன், ஆழியும், சங்கமும் ஏந்தி திருமால் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக அபயம் அளிக்கின்றார். இவரை அடுத்து விநாயகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் அருளுகின்றார். தியாகருக்கு இடப்புறம் மாலவன் குடமுழவம் இசைக்க, நான்முகன் வணங்கி நிற்க,  வலது காலை மேலே உயர்த்தி, ஊர்த்துவ தாண்டவ கோலத்தில் விரிசடைப் பெருமான் ஆடுகின்றார். அருகே ஆட்டத்தில் தோற்ற காளிதேவி தன் இரு கரங்களையும் விரித்த நிலையில் நாணத்துடன் நிற்கின்றாள், அடுத்து முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். இச்சிற்ப தொகுதிக்கு இருபுறமும் இரண்டு நடனப்பெண்கள் ஒயிலாக ஆடுகின்றனர்.   []     முசுகுந்தர் ஏழு தியாகர்களையும் ஒரே தேரில் பூலோகம் கொண்டு வரும் ஓவியம் இம்மண்டபத்தில் விண்ணுலகம் விடுத்து தியாகேசர் திருவாரூர் வந்த லீலை அற்புத ஓவியங்களாக கூரையில் வரையப்பட்டுள்ளதை அன்பர்கள் கண்டு இன்புறலாம். தஞ்சை மாராத்திய மன்னை சஹாஜி என்பவரின் காலத்தில் “ஓவியர் சிங்காதனம்” என்பவர் தேவாசிரிய மண்டபத்தின் உட்புற விதானத்தில் நெடிய தொகுப்பு ஓவிய காட்சிகளை விளக்கங்களோடு தீட்டியுள்ளார். இதில் முசுகுந்த புராணம் முழுமையாக வரையப்பெற்றுள்ளது. கி.பி. 1700ல் திருவாரூரில் எவ்வாறு வசந்த விழாவும், பங்குனித் திருவிழாவும் நடைபெற்றது என்பதை விளக்கங்களுடன் வரைந்துள்ளார். ஒவ்வொரு ஓவியத்தின் கீழும் அக்காட்சி விளக்கம் தமிழில் எழுதப்பட்டுள்ளது.  சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் இவ்வோவியங்கள் அன்று நடந்தவைகளுக்கு ஒரு சான்று.   முசுகுந்த புராண காட்சியில்  முகுந்தனும் வாசவனும் வழிபட்ட மூல மூர்த்தி மற்ற ஆறு விடங்கர்களுடன்  திருவாருக்கு தேரில் எழுந்தருளும் காட்சி மிகவும் சிறப்பான ஒன்றாகும். மனுநீதிச் சோழனின் வரலாற்றோடு இணைந்த பிற்கால புராணக் கதைகள் பலவும் வண்ண ஓவியமாக தேவாசிரிய மண்டபத்தின் வடபுறச் சுவரில் தீட்டப்பட்டுள்ளன. ஆனால் இன்று அவை இயற்கையின் சீற்றத்தால் சிதைந்து கிடக்கின்றன.  திருவாரூர் செல்லும் போது தேவாசிரிய மண்டபத்தில் அவசியம் இவ்வோவியங்களை கண்டு களியுங்கள். இராஜ நாராயணன் திருமண்டபம் : இம்மண்டபம் கோயிலின் இரண்டாம் பிரகார கொடி மரத்திற்கும் அயன் கோபுரம் என்ற ஆரியன் கோபுரத்திற்கும் இடையில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 155 அடி; அகலம் 57 அடி. அக்காலத்தில் குடிமக்கள் கூடும் பொதுமண்டபமாக அது பயன்படுத்தப்பட்டுள்ளது. கலைச் சிறப்புகள் கொண்ட பல கல் தூண்கள் இதில் உள்ளன. பெரும்பாலான ஆலய விழாக்கள் அக்காலத்தில் இம்மண்டபத்தில்  நடைபெற்றன. இன்றும் பல திருவிழாக்கள் இந்த மண்டபத்தில்தான் நடைபெறுகின்றன. பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக அருள்மிகு தியாகேசருக்கு “எண்ணெய் காப்பு உற்சவம்” நடைபெறுவது இங்குதான். திருவாதிரை திருநாளன்று சிறப்பு அலங்காரங்களுடன் தியாகேசர் அபிஷேகம் கண்டருளி  பக்தர்களுக்கு  திருப்பாத தரிசனம் தருவதும் இம்மண்டபத்தில்தான். இம்மண்டபத்தின் வலப்பக்க முகப்பில் விநாயகரும் இடப்பக்கம் துர்க்கையும், தென் புறம் ஜ்வஹரேஸ்வரரும் வீற்று அருளாட்சி தருகின்றனர். இம்மண்டபத்தைப் பற்றிய குறிப்பு பல கல்வெட்டுகளில் உள்ளன.  சபாபதி மண்டபம் : இத்திருக்கோவிலின் பெரிய மண்டபங்களில் இம்மண்டபம் ஒன்றாகும். இது திருக்கோயிலின் மேலக் கோபுரம் அருகே தென்புறம் அமைந்துள்ளது. இதை வன்மீகாதிபதி சபை என்றும் அழைக்கின்றனர். இம்மண்டபத்தின் மத்தியில் காணப்படும் மேடையில்தான் சில குறிப்பிட்ட திருவிழாக்களின்போது இறைவன் எழுந்தருளுகிறார். இங்கே கல் தூணில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர் சிலைகள் கண்ணைக் கவர்வன.   கமலாம்பாள் மண்டபம்: இம்மண்டபம் அமைதி சூழும் மண்டபமாக இது காட்சியளிக்கிறது. திருக்கோயிலின் மூன்றாம் சுற்றின் வடமேற்கு மூலையில் இது அமைந்துள்ளது. இங்கு  காமக்கலையாள் என சிறப்பிக்கப்படும் அருள்மிகு கமலாம்பாள் குடிகொண்டு எழிற்காட்சி தந்து பக்தர்களை மகிழ்வித்து வருகிறாள். முன் மண்டபம் அழகுமிகு நுணுக்கமான பல மனங்கவர் சிற்பங்களை உடைய தூண்களைக் கொண்டுள்ளது. இம்மண்டபத்தின் தூண்களின் மேல் உள்ள உத்திரம் முழுவதையும் மிகச்சிறிய கற்சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. இவற்றில் விநாயகர், கஜலட்சுமி, ரிஷப வாகனர், மயில் மேல் அமர்ந்த முருகர், ஊர்த்துவத்தாண்டவர், காளி, கஜ சம்ஹார மூர்த்தி, கிடந்த கோல திருமாலின் மார்பில் தியாகராஜர், உமையம்மை, பூதங்கள், நாட்டியப் பெண்கள், மத்தளம் வாசிப்போர் என்று பல சிற்பங்களை கண்டு களிக்கலாம். அக்காலத்தில் ஆண்ட மன்னர்களின் கலை ரசனையை வெளிப்படுத்துவதாகவும் இவை உள்ளன. மண்டபத்தின் விதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 12 இராசிகளுடன் கூடிய சிற்பங்கள், மேலிருந்து கீழே தொங்குவதாக காணப்படும் தாமரை மொட்டுக்கொத்து சிற்பம், கிளி போன்ற அமைப்புகள் பிரமிக்கச் செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதே மண்டபத்தின் தென்பகுதியில் உச்சிஷ்ட கணபதி அருட் காட்சியளிக்கிறார். சாக்த நெறி அடிப்படைத் தோற்றத்துடன், காணப்படும் இவர் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பார் என்பது வழிவழியாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களின் கர்ப்ப சம்பந்த கோளாறுகளை போக்கி அருள்வாராம். திருவாரூர் ஆலயத்தின் மண்டபங்களைப் பற்றி இதுவரை கண்டோம், இனி இறைவனே தன் திருப்பாதம் தோய நடந்த திருவீதிகளின் சிறப்பைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.  திருவாரூர் திருவீதிச் சிறப்பு: பூலோக கயிலாயமாகிய திருவாரூரின் திருவீதிகளில் தெய்வங்கள், தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், சிவகணங்கள், அடியார்கள், அரசர்கள், சங்கீத மும்மணிகள் நடந்துள்ளனர்.  தியாகேசப்பெருமான் இரு முறை திருமாலும் பிரம்மனும் காண முடியாத தனது பாதபங்கயம் தோய பரவை நாச்சியாரை சமாதானம் செய்வதற்காக தூதுவராக சென்ற வீதி அடிமுடி தேடிய வீதி என்றறியப்படுகின்றது.  மேலும் புகழ் ஆபரணத்திருவீதி, செந்தாமரை நாறிய திருவீதி, சித்துக்கள் நிறைந்த திருவீதி, பொன் பரப்பிய திருவீதி, ஆழித்தேரோடும் திருவீதி என்று பல திருவீதிகள் சிறப்புப் பெற்றவை. வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள் சோதிகள் விட்டுச் சுடர் மாமணிகள் ஒளித்தோன்றச் சாதிகளாய் பவள முத்துத் தாமங்கள் ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – என்று திருநாவுக்கரசர் தேரூரும் திருவாரூர் நெடுவீதி பற்றியும் அன்று நிகழ்ந்த பங்குனி உத்திரத்திருவிழா, மார்கழி ஆதிரைத்திருவிழா ஆகியவற்றில் தான் கண்ட காட்சிகளை அழகாகப் பாடியுள்ளார். இவ்வீதியில்தான் மனு நீதி சோழன் தன் மகனை தேர்க்காலில் இடறினான். ஆரூரா ஆரூரா என்கிறார்கள் அமரர்கள் தம் பெருமானே எங்குற்றாயே? என்று இவ்வீதிகளில் அப்பர் பெருமான் ஆரூரனை தேடித் திரிந்த  திருவீதியல்லவா ஆரூர் திருவீதிகள். இவ்வளவு சிறப்பு மிக்க வீதிகளில்தான் இன்று வசந்த உற்சவத்தின் போது  தியாகராஜர் ஆழித்தேரில் பவனி வந்து அருளுகின்றார். அப்பர் பெருமான் அவர் கண்ட ஆழித்தேரோட்டத்தை நாடிக்காணமாட்டாத தழலாய நம்பனை, திருவாரூர் அம்மானை, ஆரூர் வீதியில் பாடுவார், பணிவார், பல்லாண்டு இசை கூறும் பக்தர்கள் ஆகியோர் சித்தத்துள் புகுந்து தேடிக் கண்டு கொண்டேன் என்று பாடுகின்றார். அப்பர் பெருமான் “தேரூரும் நெடுவீதி” என்றும் சேக்கிழார் பெருமான் இதை “தேரோடும் நெடுவீதி திருவாரூர்” என்றும், “மங்குல் தோய் மாடவீதி” என்றும் “முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒரு பால் வெற்றி அரசிளங்குமரன் போலும் அணிமணி மாடவீதி” என்று பலவாறு போற்றிப் பாடுகின்றார். திருமகள் தவம்செய் செல்வத் திருவாரூர் பணிவன் என்ன ஒருவன்ஏழ் அடிநடந்து மீண்டிடின் ஒப்பில்காசி விரிபுனல் கங்கையாடி மீண்டவன் ஆவன் என்றால் இருடிகாள் ஆரூர்மேன்மை பிரமற்கும் இயம்ப வற்றோ? என்று திருவாரூர் பாடல் ஒன்றில் இத்தலத்தின் திருவீதிகளின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.   இது வரை திருவாரூர் ஆலயத்தின் மண்டபங்களின் சிறப்புகளைப் பற்றிக் கண்டோம் வாருங்கள் இனி இத்தலத்தின்  தீர்த்தங்களின் சிறப்புகளைப்பற்றிக் காணலாம்.   சித்தந் தெளிவீர்காள், அத்த னாரூரைப் பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.                                         20. திருவாரூரின் சிறப்பு மிகு தீர்த்தங்கள்   தலம், தீர்த்தம், மூர்த்தி என்னும் முப்பெருமைகளும் உடையது திருவாருர். சகல புண்ணிய தீர்த்தங்களும் விரும்பி அடைந்து உறையும் தலம் திருவாரூர், எனவே இத்தலம் சர்வ தீர்த்த ஆசிரயம் என்றும் அறியப்படுகின்றது.  திருவாரூரில் பல தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளேயும், புறத்தேயும் அமைந்துள்ளன.  சங்கு முனிவரால் உண்டாக்கபட்ட சங்கு தீர்த்தம் கிழக்கு கோபுரம் உட்புறம் தேவாசரியம் அருகே அமைந்துள்ளது. சங்க முனிவர் இதில் நீராடி தமது அறுபட்ட கரங்களை மீண்டும் பெற்றார். சித்ரா பௌர்ணமியன்று நீராட தொழுநோய் நீங்கும். சமற்காரன் என்ற மன்னன் இவ்வாறு இத்தீர்த்தத்தில் நீராடி தொழுநோய் நீங்கப்பெற்றான் என்று தலவரலாறு இயம்புகிறது. நந்தவனத்தில் அமைந்திருப்பது பார்வதி தீர்த்தம், மேற்குப் பக்க நந்தவனத்திற்கு அருகில் அமைந்திருப்பது பெரிய கேணி வாணி தீர்த்தம், நவராத்திரி மற்றும் பௌர்ணமி அன்று மேதா சூக்தம் அல்லது சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்து இத்தீர்த்த்த்தில் நீராடல் சிறப்பு.. ஊமையாக இருந்த ஒரு மன்னன் இத்தீர்த்தத்தில் நீராடி பேசினான் மற்றும் கமலாம்பிகையின் தரிசனமும் பெற்றான் என்று சரஸ்வதி தீர்த்தத்தின் சிறப்பு திருவாரூர் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. கமலாம்பிகை திருக்கோவிலின்  கமலாம்பிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம் இரண்டும் கேணிகள். வடக்கு கோபுரம் அருகே அமைந்துள்ளது  முக்திக்கேணி தீர்த்தம், அம்பிகை தன் மூக்குத்தியை  தவறவிட்ட மூக்குத்தி கேணி என்பர் சில அன்பர்கள். பாதிரி மரத்தின் அருகே பாதிரீஸ்வரர் தீர்த்தம் இருந்துள்ளது.  இரண்டாம் திருச்சுற்றில் ஆடகேச்சுரம் அருகே அமைந்துள்ளது திருத்தீர்த்தம் (இலட்சுமி தீர்த்தம்). கிழக்கே மடப்பள்ளி அருகே அமைந்துள்ளது கௌமாரி தீர்த்தம். கௌமாரியின் விருப்பத்தை ஏற்று இறைவன் நடனமாடிய பகுதி, இத்தீர்த்தத்தில் பௌர்ணமியன்று நீராட அனைத்து துன்பங்களும் விலகும். நீலோத்பலாம்பாளின் ஆலயத்திற்கு பின்புறம் அமைந்துள்ளது அகத்திய தீர்த்தம்.  ஆனந்தீச்வரர் கோவில் அருகில் அமைந்துள்ளது ஜ்யேஷ்டா தீர்த்தம். மேலும் விடங்கர் தீர்த்தம், வேத தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்,  கயா தீர்த்தம், அமுத தீர்த்தம், முக்தி தீர்த்தம்  ஆகிய தீர்த்தங்களும் உள்ளன. செங்கழு நீர் ஓடை, ஓடம் போக்கி ஆறு என்றழைக்கப்படும் கபில  தீர்த்தம் ஆகியவையும் இத்தலத்தின் தீர்த்தங்கள். இவ்வூரில் அமைந்திருக்கும் கிணறுகள் கூட புண்ணிய தீர்த்தமாக கூபஆதி என்றழைக்கப்படுகின்றன.  திருவாரூரில் அமைந்துள்ள தீர்த்தங்களில் தலையானதும் திருவாரூரின் சிறப்பான தீர்த்தமும் ஆனது கமலாலய திருக்குளம். வாருங்கள் அதன் சிறப்புகளைக் காணலாம். கமலாலயத்தின் சிறப்பு:    சிவபெருமானின் ஆனைப்படி திருவாரூர் நகரமும், ஆலயமும், கமலாலய திருக்குளமும் முசுகுந்த சக்கரவர்த்தியால் நிர்மாணிக்கப்பட்டது என்கின்றன புராணங்கள். கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் கமலாலயத்தின் சிறப்பை நாம் அறியலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம் ஆகும்) திருவாரூர் தீர்த்தங்களில் கமலாலயத் தீர்த்தம் மிக தொன்மை வாய்ந்தது. பராசக்தியால் தோற்றுவிக்கப்பட்டது, தேவதீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது. மூன்றரைக் கோடி விண்ணுலகத் தீர்த்தங்களும் திருவாரூர் திருத்தலத்தின் 21 தீர்த்தங்களுள் அடங்கும். []     கமலாலய திருக்குளம் திருவாரூரில் மட்டுமே ஆலயத்தின் பெயரிலேயே கமலாலயக்குளம் அமைந்துள்ளது. திருக்கோவிலின்  மேற்கு வாயிலை ஒட்டி சதுர வடிவில் நேர்த்தியான சாலைகள் சூழ கண்டோர் நெஞ்சை மகிழ வைக்கும் பாங்குடன் மையத்தில் ஒரு சிறு கோவிலுடன் எழிலாக அமைந்துள்ளது கமலாலய திருக்குளம். சேரமான் பெருமாள் நாயனார் தமது திருவாரூர் மும்மணிக்கோவையில் திண்ணிய கரைகளுடன் திகழ்ந்த இத்திருக்குளம் பற்றிப் பாடியுள்ளார். கமலாலய குளத்தின் மையத்தில் யோகாம்பாள் உடனாய நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. அழகிய திருக்குளத்துக்கு மேலும் எழில் சேர்க்கும் விதமாக அதன் மையப்பகுதியில் மிதக்கும் ஆலயம் போல், கோபுரத்துடன் கோயில் உள்ளது. அங்கே குடிகொண்டுள்ளார் அருள்மிகு யோகாம்பாள் உடனுறை நாகநாத சுவாமி. இந்த அம்பாளை குண்டலினி நாக சக்தியாகவும், ஈசுவரனை சிவராஜ யோக சக்தியாகவும் கருதி வழிபாடு செய்கிறார்கள் பக்தர்கள். பிரதோஷ காலத்தில் இவர்களை வழிபட சகல நன்மைகளையும் பெறலாம். அச்சமயத்தில் படகு சவாரி உள்ளது.   நாக தோஷம் உள்ளவர்கள்  நாகநாதரை வழிபட அத்தோஷம் அகலும்.  பல அழகிய செடி கொடி மரங்களுடன் காட்சி தரும் இவ்வாலயத்தின் பிரகாரங்களில் பல பரிவார தேவதைகளும் காட்சி தருகிறார்கள். “அலை புனல் ஆரூர் அமர்ந்து உறை அழகன்” என்று   கமலாலய குளத்தின்  நடுவே உள்ள நாக நாதர் கோயிலைச் சேரமான் பெருமாள் நாயனார் போற்றுகிறார்.  இந்நடுக்கோயிலை சுற்றி ஆதி சேது, விநாயக சேது, குமார சேது, ருத்திர சேது, கௌரி சேது, விஷ்ணு சேது, லெக்ஷ்மி சேது, பிரம்ம சேது, வாணி சேது, சோம சேது, வனிதா சேது, இந்திர சேது, அக்னி சேது, துர்க்கா சேது, ஆதித்ய சேது, என்று மொத்தம் 16 ஸ்நான கட்டங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் உள்ள ஒரு சிற்பத்தில் குரங்கு முகமுடைய  முசுகுந்தன் சிவலிங்கத்திற்கு திருமஞ்சனம் ஆட்டுதலும், அருகே இரு முனிவர்கள் அமர்ந்து ஆசி கூறுவதும் வடிக்கப்படுள்ளது.  மூன்றரைக் கோடி விண்ணுலகத் தீர்த்தங்களை அடக்கிய திருவாரூர் கமலாலய குளத்தில் பங்குனி உத்திரத்தன்று நீராடினால், கும்பகோண க்ஷேத்திரத்தில் 12 மகாமகம் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பங்குனி உத்திர திருநாளன்று, கமாலாலயத்தில் நீராட வேண்டும். பின்னர், ஆரூரின் சமீபத்தில் உள்ள குருவி இராமேசுவரம் என்ற இடத்தில் தம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். அதன் பின்னர், அருகில் உள்ள கேக்கரை என்ற குளத்தில் க்ஷேத்திர பிண்டத்தை போட்டுவிட்டு, பின்பு சுவாமி தரிசனம் முடித்து, கடைசியாக தியாகேசன் திருக்கோயில் வந்து பிரம்ம முகூர்த்தத்தில் இறை பூஜை செய்து வழிபட்டால், தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.  கமலாலயத்தின் நேர்த்தியான கருங்கல் படிகள், காசியில் கரையெல்லாம் துறையானது போல அமைந்துள்ளது. 64 தீர்த்த கட்டங்கள் அமைந்த திருவாரூர் கமலாலயம் 25 ஏக்கர் விஸ்தீரணம், என்றுமே வற்றாத புண்ணிய தீர்த்தம் ஆகும். கீழ்க்கரையில் 12 கட்டங்களும், மேற்கரையில் 13 கட்டங்களும், நடுவிலாங்கோவிலில் 16 கட்டங்களும், தென்கரையில் 20 கட்டங்களும், வடகரையில் 19 கட்டங்களும் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொரு பெயரும். அதில் குளித்தபின் கொடுக்க வேண்டிய தானம் பற்றியும், அங்கு நீராடினல் உண்டாகும் பலன் பற்றியும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.  இந்த 64 ஸ்நான கட்டங்களில் தலையாய சிறப்பினைக் கொண்டது, தேவ தீர்த்த கட்டம் கமலாலயத் திருக்குளத்தின் சமீபமும் ஆலய மேல கோபுரம் எதிரே அமைந்துள்ள  “மாற்றுரைத்த பிள்ளையார்” என்னும் பெயருடைய விநாயகர் குடி கொண்ட சிறு கோயில் அருகில் தேவ தீர்த்த கட்டம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தேவர்களின் அதிபதி இந்திரன் இழைத்த கொடுமைகளிலிருந்து பாதிக்கப்பட்ட மன்னன் திரிசங்கு இத்தேவ தீர்த்தத்தில் நீராடி அதிலிருந்து விடுதலை அடைந்ததாக தல வரலாறு கூறுகிறது.  திருவாரூர் தியாகராஜப் பெருமானின் 364 லீலைகளில் பெரும்பாலான கதைகளில், கமலாலயத்தின் பெருமை, அருமை, அற்புதம், அதிசயம் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. தேவர்கள், மகாமுனிவர்கள், அருளாளர்கள், அடியார்கள் தீர்த்தமாடிய சிறப்புடையது கமலாலயம். திருவாரூர் புராணத்தில் தேவதீர்த்தச் சருக்கத்திலும் இக்குளத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. துர்வாச முனிவருக்காக சிவபெருமான் கமலாலய தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார். அதனால் இத்தீர்த்தத்திற்கு கங்காஹரதம் என்றும், துர்வாசரின் தாபத்தை தீர்த்ததால் தாபஹாரணி என்றும் திருநாமம் உண்டு. இக்குளத்தின் தென்கரையில் துர்வாச முனிவர் கமலாம்பிகையை பூசித்த   திருமடம் உள்ளது. தன்னால் உருவாக்கப்பட்ட ஹம்ஸ தீர்த்தம் என்னும் புண்ணிய புஷ்கரணியை தியாகேசர் வற்றச்செய்து, அதன் தீர்த்தத்தை கமலாயத்தில் சேரச்செய்தார். கமலாலயத்தில் பங்குனி உத்திரத்தன்று தீர்த்தவிழா நடைபெறும், மற்றும் விஷு, மார்கழித்திருவாதிரை, அருணோதயம், மகோதயம் முதலான புண்ணிய காலங்களிலும் தீர்த்தவிழா நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவும் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பாக நடைபெறுகிறது. []   கமலாலயக் குளத்தில் புனித நீராடுவதால் பாவங்கள் கரையும் என்பதற்கான ஒரு கதை உண்டு.  கமலாலய குளத்தில் இறைவன் முதியவர் வேடத்தில் வந்து தவறி விழுந்தார், அவரின் மனைவி பதறிப்போய், “என் கணவரைக் காப்பாற்றுங்கள்” என்று சத்தம் போட்டார். அவ்வழியே வந்த சுந்தரர் அவரை காப்பாற்ற வந்த போது, முதியவரின் மனைவி, “நீங்கள் எப்பாவமும் செய்யாதவராக இருந்தால் மட்டுமே என் கணவரைக் காப்பாற்ற வேண்டும் என நிபந்தணையிட்டார். சுந்தரரும் கமலாலய குளத்தில் நீராடியவர் என்பதால் அந்நிபந்தணைக்கு உட்பட்டு அக்கிழவரை காப்பாற்றினார். இதன் மூலம் கமலாலயத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் விலகும் என்று அம்மையப்பர் உணர்த்தினர்.  கமலாலய குளத்தில் மாற்றுரைத்தப் பிள்ளையார் சன்னதிக்கு அருகில் உள்ள மண்டபத்தின் கூரையில் இவ்வரலாறு கவின் மிகு ஓவியமாக வரையப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் தெய்வ சேக்கிழார் தண்டியடிகள் புராணத்தில் கமலாலயத்தின் சிறப்பைப் பாடுகின்றார். சிறந்த தீர்த்தக்குளமாக இருந்த கமலாலயத்தை சமணர்கள் தூர்த்துப் பாழிகள் கட்டி உறைந்தனர் எனவும் அதனால் வெகுண்டெழுந்த தண்டியடிகள் தாம் பிறவி அந்தகராக இருந்த போதும், கரையில் கயிற்றைக் கட்டி அதனைப் பிடித்துக் கொண்டு சென்று குளத்தை தூரெடுத்து தூய்மைப் படுத்தினார் என்றும், இதனால் விரிசடைக் கடவுளும் மகிழ்ந்து அவருக்கு பார்வை அருளினார் இதனை செங்கண் விடையார் திருக்கோயிற் குடபால் தீர்த்தக் குளத்தின் பாங் கெங்கும் அமணர்ப்பாழிகளா யிடத்தாற் குறைபா டெய்துதலால்   அங்கந் நிலைமை தனைத்தண்டி யடிகள் அறிந்தே யாதரவால் இங்கு நானிக்குளம்பெருகக் கல்ல வேண்டு மென்றெழுந்தார் – என்று பாடுகிறார் சேக்கிழார். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது. இவரை சுந்தரர் நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் என்று போற்றுகிறார்.  கமலாலய குளத்தில் எம்பெருமான் நிகழ்த்திய  சில அதிசயங்கள்,  தண்டியடிகள்  பிறவி அந்தகராக இருக்கும் போது கமலாலய தீர்த்தத்தில் மூழ்கி கண் பார்வை பெற்றார். நமிநந்தி அடிகள்  இத்திருக்குளத்தின் நீரை எடுத்து விளக்கேற்றினார். சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக 12 ஆயிரம் பொன் கட்டிகளை திருமுதுகுன்ற ஆற்றில் இட்டு திருவாரூர் கமலாலய குளத்தில் இருந்து பொன்னை எடுத்தார். அப்பொன்னின் மாற்று சரிதானா என்று சரி பார்த்து விநாயகர் கூறினார். இவர் மாற்றுரைத்த பிள்ளையாராக இன்றும் கமலாலய திருக்குளக்கரையில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். திகழ்ந்த பங்குனி யுத்திர நாளினில் தேவதீர்த்தப் பொய்கை மகிழ்ந்து மூழ்கிய யடயா டகம்பசு மாநிலம் முதற்றானம் புகழ்ந்து நூன்முறை வஞ்சமின் புற்றிடங் கொண்டோனே அகங்கொ ளன்போடு போற்றினோர் முத்தியாங்கடைதல் சத்தியமம்மா – தேவர் தொழும் நாயகரான திருமூலட்டானரை வணங்கி பங்குனி உத்திர திருநாளன்று தீராத பாவங்களையும் போக்கும் கமலாலய திருக்குளத்தின் 64 தீர்த்தக் கட்டங்களுள் பிரதான தீர்த்தக் கட்டமான  தேவதீர்த்த கட்டத்தில் நீராடியோர் சகல வித செல்வங்களையும் இகபர சுகங்களையும் அடைந்து இந்திரனுக்கு ஒப்பான வாழ்வடைவதோடு பிறவிக் கடன் தீர்ந்து தியாகேசன் பதம் அடைவார் என்பது சத்தியம் என்பது தலபுராணம்.   இவ்வளவு சிறப்புகள் கொண்ட இக்குளத்தில் ஒரு முறை மூழ்கி நீராடினால் சிவலோகம் அடைந்து சாமீப முக்தி பெறுவர். பங்குனி உத்திர நாளில் இத்தேவதீர்த்தத்தில் நீராடி தானம் செய்து புற்றிடங்கொண்டாரை போற்ற முத்தி கிட்டும். சிதம்பரம் திருமறைஞானசம்பந்த நாயனாரால் இயற்றப்பட்ட கமலாலய சிறப்பு என்னும் நூல் 1547 திருவிருத்தங்களைக் கொண்ட 94 பகுதிகளைக் கொண்டதாகும். அந்நூலில்   அசலேஸ்வர சருக்கம், தேவ தீர்த்த சருக்கம், கயா தீர்த்த சருக்கம் தசரத சருக்கம் என்று பல சருக்கங்கள் உள்ளன.  தசரத சருக்கத்தில் கூறப்பட்டுள்ள ஓர் வரலாறு. இராமபிரானின் தந்தையும், அயோத்தி மன்னனான தசரத சக்கரவர்த்திக்கும் கமலாலய ஆரூருக்கும் தொடர்பு உண்டு எனில் அது ஆச்சரியத்தையே தரலாம். அத்தொடர்பை விளக்கும் புராணக் கதையைப் பார்ப்போம். தசரதன் தந்தையான அசன் திருவாரூரில் சிவபெருமானையும் அம்பாளையும் பூசித்து தசரதனை மகனாகப் பெற்றான். தசரதன் வேதங்கள் முதலான நூல்களை ஆய்ந்தறிந்த பண்டிதனாக திகழ்ந்தான், ஒரு சமயம் ஆதித்தன் புதல்வனான சனிபகவான் ரோகிணியை பேதித்துக்கொண்டு செல்ல இருப்பதால், அதன் விளைவாக மழை இன்றி நாட்டில் பஞ்சம் தோன்றக்கூடும் பசியால் மண்ணுலகில் மனிதரெல்லாம் துன்புறுவர். பன்னிரெண்டாண்டுகள் துன்பம் நிகழும் என்று புரோகிதர்கள் தசரதனிடம் கூறினர். கார்த்திகை நட்சத்திரத்தை விட்டு ரோகிணிக்குச் செல்ல சனி பகவான் இரதத்தில் ஏறி செலுத்திய போது தசரதன் அங்கு சென்றான். ரோகிணியை ஊடறுத்துச் செல்லக்கூடாது. என் விருப்பத்தை மிறிச் செல்வாயானால் வாளினால் உன்னை கூறு செய்வேன் என்றான். அவனது வீர்த்தை கண்ட சனி அவன் வேண்டிக்கொண்டபடி ரோகிணையை பேதிக்காமல் அதன் பக்கமாய் சுற்றுக்கொண்டு சென்றான்.  தயரதன் சனியிடம், சனிக்கிழமை நல்லெண்ணெய் ஸ்நானம் செய்வோரை எந்நாளும் இடர் செய்யக்கூடாது. அன்று மறையோருக்கு எள், அன்னம் முதலியவற்றை அளிப்போருக்கு அட்டம சனியிலும் துன்புறுத்தக்கூடாது. பசுநெய்,   எள் முதலான திரவியங்களைக் கொண்டு தில ஹோமம் செய்கின்றவர்களை ஏழரைச் சனியிலும் துன்புறுத்தக்கூடாது என்று பல வரங்களையும் கேட்டார். சனியும் அவ்வாறே வரம் அளித்தார்.  தசரதனின் பராக்கிரமத்தை கண்டு இந்திரன் தசரதனை நண்பனாக்கிக் கொண்டான். ஒரு சமயம் தசரதன் இந்திரலோகம் சென்று நட்பு பாராட்டி திரும்பி வந்தான். பிள்ளைப் பேறில்லாதவன் என்று அவர் உட்கார்ந்திருந்த இடத்தை நீர் தெளித்து சுத்தம் செய்தான். இதை நாரத முனிவர் மூலம் அறிந்த தசரதன் மீண்டுமொரு முறை இந்திரலோகம் சென்றான் இம்முறையும் இவ்வாறே இந்திரன் செய்வதைக் கண்டு மனம் நொந்த தசரதன் திருவாரூர் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து பூசை செய்ய தியாகேசரும் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்றார். மன்னனும் புத்திரப்பேறு வேண்டினார். இந்நகரில் கமல மலர் தடாகம் அமைத்து அதன் கரையில் திருமாலை வழிபட அவரே உனக்கு மகவாய் பிறப்பார் என்று அருளினார். தயரதனும் திருவாரூர் வந்து கமலாய குளத்தில் நீராடி புற்றிடங்கொண்டாரை வணங்கி இராமனை மகனாகப் பெற்றார். இவ்வாறு புத்திரப்பேறு தரவல்ல திருத்தலம் திருவாரூர் -  கமலாலயம். இத்திருக்குளத்து நீரால் விளக்கு எரித்தார் நமிநந்தியடிகள், கண் பெற்றார் தண்டியடிகள், மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை சுந்தரருக்கு இங்கு வழங்கியது ஆகிய சிறப்புகள் மட்டுமல்லாமல், ஆளுடையப்பிள்ளையாரும், அருள் திருநாவுக்கரசரும் மற்றும் பல நாயன்மார்களும் புனித நீராடியதும் இத்திருக்குளத்தில்தான்.   இது வரை திருவாரூரின் தீர்த்தங்களின் சிறப்பைப் பற்றிக் கண்டோம் வாருங்கள் திருவாரூர் ஆலயத்தின் பிரகாரத்தில் அமைந்துள்ள நான்கு முக்கியத் திருக்கோயில்களான அசலேசம், ஆடகேசம், அனந்தீச்சுரம், சித்தீசுரம் என்பனவற்றுள் அசலேசமே அரநெறி என்றழைக்கப்படுகின்றது. மற்ற மூன்று திருக்கோவில்களின் சிறப்பை முன்னரே கண்டோம். வாகீசர்  தமது திருவிருத்தத்திலும், தாண்டகப் பகுதியிலும் பாடிய அசலேசத்தின் சிறப்பை  அடுத்துக் காணலாம்.                          21. ஆருர் அரநெறி அசலேஸ்வரர்   பொருங்கைமத கரியுரிவை யானைப் பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை கரும்புதரு கட்டியை இன்னமிர்தைத் தேனை காண்பரிய செழுஞ்சுடரைக் கனககுன்றை இருங்கனம மதிலாரூர் மூலட்டானத் தெழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் அருந்தவனை அரநெறியிலப்பன் தன்னை அடைந்தடியேன் அருவினை நோய் அறுத்தவாறே   என்று அப்பர் பெருமான் பாடிய அரநெறி ஆலயம் புற்றிடங்கொண்டார் ஆலயத்தை விட மிகவும் பழமையானதாகவும், முதன்மையானதாகவும் இருந்துள்ளது. திருவாரூர் திருக்கோவில் வளாகத்தில் இரண்டாம் பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள திருக்கோவிலே அரநெறி. இறைவன் - அசலேசுவரர்; இறைவி  - வண்டார்குழலி என்கிற புவனேஸ்வரி. சுவாமிக்கு திருஅரநெறி பட்டாரகர், அரநெறி ஆழ்வார் என்ற திருநாமங்களும் உண்டு. சமற்காரன் என்ற அரசனின் கடும் தவத்துக்கு மகிழ்ந்து அவன் பிரதிஷ்டை செய்த இலிங்கத் திருமேனியில் சலியாது எழுந்தருளியதால் அசலேசர் என்று திருநாமம். அசலேசுவரரோடு, பஞ்சபூத லிங்கங்களாக இறைவன் காட்சி தருவது சிறப்பு. தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு தாம் வேண்டியவாறு வரம் தந்து அருள் பாலிப்பவர் இவர். அப்பர் பெருமான் மற்றும் சேக்கிழாரின் பாடல்களின் மூலம் இவ்வாலயத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம். கமலாலய சிறப்பு என்னும் தலபுராணத்தில் அசலேஸ்வரத்தின் சிறப்பு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சமற்காரன் என்னும் மன்னர் ஒரு சமயம் காட்டிற்கு வேட்டையாட சென்ற போது கன்றுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த மானின் மீது கணை தொடுத்தான். அதனால் மான் மன்னனுக்கு குட்ட நோய் பற்றுமாறு சாபம் கொடுத்தது. நோய் தீர வேண்டி சமற்காரன் பல் வேறு ஆலயங்களுக்குச்சென்று பல்வேறு தீர்த்தங்களில் நீராடினார். ஆயினும் நோய் தீரவில்லை. நிறைவாக அரசன் திருவாரூரை அடைந்தான். அங்கிருந்த அந்தணர்களிடம் தன் உடலின் அவலத்தை மாற்றும் உபாயம் வினவ அவர்களும் சங்க தீர்த்தத்தில் நீராட உனது உடலுற்ற நோய் நீங்கும் என்று அத்தீர்த்தத்தின் சிறப்பைக் கூறினர். ஒரு சமயம் சங்கமுனி என்ற அந்தணன், வனத்தில் லிகிதமுனி என்னும் முனிவரின் ஆசிரமத்தில் நுழைந்து மிகுந்த பசியால் நீதி நூல்களில் கூறப்பட்ட விதிகளை மீறி அங்கிருந்த கனியை புசித்தான். அதற்கு தண்டனையாக தனது கரங்களை வெட்ட சங்கமுனி வேண்ட லிகித முனி அவனது கரங்களை துண்டித்தார். சங்கமுனி வனத்தை விடுத்து திருவாரூரை அடைந்து பந்தவினை தீர்க்கும் பாற்குண்டம் என்னும் சங்க தீர்த்தத்தில் நீராடி புற்றிடங்கொண்ட புனிதனை பணிந்து போற்றி கடுந்தவம் செய்தான். அவனது தவத்திற்கு இரங்கி விமலேசன் அம்மையுடன் ரிஷபாரூடராக எழுந்தருளி வேண்டிய வரம் கேட்க என்று பணித்தார்.  சங்க முனியும் இழந்த இரு கரங்ளை பெற வேண்டும் என்று இறைஞ்சினான். பெருமானும் சித்திரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமியில் உபவாசம் இருந்து சங்க தீர்த்தத்தில் நீராட உன் உடல் குறை தீரும் என்று அருளினார். சங்க முனியும் அவ்வாறே புற்றிடங்கொண்ட பெருமானை துதித்து சங்க தீர்த்தத்தில் நீராடி தன் உடற்குறை நீங்கப்பெற்றார். எனவே மன்னா நீயும் இத்தீர்த்தத்தில் உனது குட்ட நோய் தீரும் என்று உபாயம் அருளினர். அரசனும் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பாற்குண்டம் என்னும் சங்கதீர்த்தத்தில் சித்ரா பௌர்ணமியன்று நீராடி தன் உடல் நோய் தீரப்பெற்றான். அந்தணர்களுக்கு ஒரு கிராமத்தை பரிசளித்தான். பின்னர் தனது பாவத்தை தீர்த்த சங்க தீர்த்ததின் கரையில் அமர்ந்து பல நூறு வருடங்கள் தவம் செய்தார்.  மன்னனது தவத்திற்கு மகிழந்த விடையேறும் விமலன் காட்சி தந்து வரம் அளித்தார். அரசனும் பெருமானே சிறப்பு மிக்க இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை நிலை பெற கருதினேன். அதில் கணப்போதும் நீங்காமல் உறைதல் வேண்டும் என்று வேண்டினான். பெருமானும் அந்த லிங்கத்தினின்றும் பிரியோம் என்றும் தமக்கு அசலேஸ்வரம் என்று திருநாமம் விளங்கும் என்றும் அருளினார். அசலேஸ்வரரை மாசி மாத சதுர்த்தியன்று (சிவராத்திரி) பசு நெய்யாலும், கம்பளத்தாலும் அருசித்தவர்கள் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் தீவினைப்பயன் நீங்கி புனிதம் எய்துவர் என்று திருவாரூர் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின்றும் பெருமான் நீங்காதிருப்பாரா? என்ற ஐயம் மன்னன் மனதில் எழுந்த போது தியாகேசர் ஆகாய வாணியின் மூலம் லிங்கத்தின் நிழல் ஒரு பக்கமே அன்றி மறு திசையில் விழாது என்று அருளினார். தேவாரப் பாடல் பெற்ற அசலேச்சுரம் அரநெறி என்றே அழைக்கப்படுகின்றது. அப்பர் பெருமான் எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே பந்தம் வீடவை யாய பராபரன் அந்தமில் புகழ் ஆரூர் அரனெறி சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே - என்று பாடியுள்ளார்.  அரன்நெறி – அரநெறி, அதாவது சிவநெறி, சிவனை அடையும் நெறி என்றும், அ(ஹ)ரநெறி- பாவத்தைப் போக்கும் நெறி  என்றும் பொருள் உண்டு. பல நாயன்மார்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஆலயம் அசலேச்சுரம் ஆகும்.   நீரால் விளக்கேற்றிய நமி நந்தி அடிகள்: அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – என்று சுந்தரர் போற்றிய  நமி நந்தி அடிகள்  இவ்வாலயத்தில் தீபம் ஏற்றுபவராக பணி புரிந்தவர் இவர்.  ஒரு நாள் விளக்கேற்ற எண்ணெய் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கேற்ற எண்ணெய் கேட்டார்.  அது ஒரு சமணரின் வீடு. அதில் இருந்த சமணர்கள், அடிகளை நோக்கி “கையில் ஒளிவிட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள் இறைவனுக்கு” விளக்குத் தேவையில்லை என்று எள்ளி நகையாடி எண்ணெய் இல்லை என்று கை விரித்து விட்டனர். மேலும் “விளக்கெரீப்பீராகில் நீரை முகந்து எரிப்பீராக’ என்று ஏளனமாக கூறினர். அதைக் கேட்ட அடிகள் கவலையுற்றார். அசலேசுவரர் சன்னதிக்கு சென்று வீழ்ந்து வணங்கினார். அப்போது ஒரு ஆகாயவாணி ஒலித்தது. இவ்வாலயத்தில் உள்ள திருக்குள நீரை முகந்து வந்து விளக்கேற்று என்று பெருமான் அருளினார். அவ்வாணி கேட்ட அடிகளும் கமலாலய திருக்குளத்தை அடைந்து நீரை முகந்து வந்து திரியிட்டு விளக்கேற்றினார். இவ்வாறு நீரால் விளக்கெரித்த அற்புதம் நிகழ்ந்த கோவில் இது. நமிநந்தியடிகளின் பெருமையை வாகீசப் பெருமான் “ஆருர் நறுமலர் நாதன் அடித்தொண்டர் நம்பிநந்தி  நீரால் திருவிளக் கிட்டமை நீணாடறியு மன்றே”, என்றும் “தொண்டர்க்கு ஆணி” என்றும் “நந்தி பணி கொண்டருளும் நம்பன்” என்றும் போற்றியுள்ளார். நமிநந்தி அடிகளது பெருமையை அறிந்த சோழ மன்னன் திருவாரூர் பெருமானுக்குரிய அனைத்து பூசைகளையும், சிறப்பு விழாக்களையும் நமிநந்தியடிகளையே பொறுப்பேற்று நடத்தச்செய்தான். ஒரு சமயம் ஆரூர் பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது நாயனார் கண்டு மகிழ்ந்து தம்மூருக்கு திரும்பினார்.  பலரை தொட்டு வந்ததால் தீட்டு உண்டாயிற்று என எண்ணி வீட்டிற்கு வெளியே இருந்து தம் துணைவியாரை நீர் கொண்டு வர பணித்தார். வாசல் திண்ணையில் திருவருளால் அடியார்க்கு உறக்கம் வந்தது. அவர் கனவில் ஆரூர் பெருமான் “அன்பனே! திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்களே!’ என்று அருளினார். மறுநாள் திருவாரூர் புகுந்து அங்குள்ளோர் அனைவரும் சிவசொரூபர்களாக விளங்குவது கண்டு வியந்து அடிவீழ்ந்து வணங்கினார். திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார் பெருக்கிய சீர்த்திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால் தருக்கிய ஐம்பொறியடக்கி மற்று அவர்தான் வணங்க ஒருக்கிய நெஞ்சுடையவர்க்கே அணித்தாழும் உயர்நெறியே – என்று சேக்கிழார் பெருமான் திருவாரூர் பிறந்தார் புராணத்தை பாடியுள்ளார். அரசியின் மூக்கை அரிந்த செருந்துணை நாயனார்:  செருந்துணையார் இவ்வாலயத்தில் இறைவனுக்கு பூமாலை கட்டித் தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் காடவ குல வேந்தனாகிய கழற்சிங்கர் தனது தேவியோடு திருவாரூர் வந்து இத்திருக்கோவிலினுள் வழிபடச்சென்றார். அப்போது அச்சங்காதேவி இறைவனுக்கு மாலை தொடுப்பதற்காக வைத்திருந்த மலரை எடுத்து முகர்ந்தாள். இதைக்கொண்டு கோபம் கொண்ட செருந்துணையார் “இறைவனுக்கு சார்த்த இருந்த மலரை முகர்ந்த மூக்கை அரிந்தார்”. செருந்துணை நாயனார் பூமாலை தொடுத்த இடம் என நம்பப்படும் முக மண்டபத்தின் ஒரு பகுதியில் இன்றும் பூமாலைகள் தொடுக்கப்படுகின்றன. இவ்வாலயத்திற்கே சிறப்புடைய செங்கழுநீர் மாலையும் இப்பள்ளித்தாம மண்டபத்தில் தொடுக்கப்படுகின்றது.   அரசியின் கையை வெட்டிய கழற்சிங்க நாயனார்: கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் - என்று வண்தொண்டர் பாடிய கழற்சிங்கர் அரசி செய்த தவறை உணர்ந்து அவள் செய்த தவறுக்கு பூவை முதலில் எடுத்த கையையன்றோ முதலில் தண்டித்தல் வேண்டும் என்று தன் வாளினால் அத்தேவியின் செங்கையை வளையொடும் வெட்டினார். ஆலய வழிபாட்டிற்குரிய மலர்கள் எங்கிருந்தாலும் அவற்றை நுகர்தல் கூடாது என்ற அரன் கோயில் நெறியில் இருந்து பிறழாது தனது பட்டமகிஷியே ஆனாலும் அவளது கரத்தையே துணித்த கழற்சிங்கனை விண்ணவரும், மண்ணவரும் “மறுவிய வாச மலர் மழை பொழிந்து” வாழ்த்தினார்கள் ரிஷப வாகனத்தில் உமையம்மையுடன் எம்பெருமான் எழுந்தருளி இருவருக்கும் அருள் பாலித்தார். எம்பெருமான் தோழர் சுந்தரரை விலக்கிய விறன்மிண்ட நாயனார்: விரி பொழில் சூழ் கொன்றையார் விறன்மிண்டற்கு அடியேன் - என்று தம்பிரான் தோழர் போற்றிய  இந்நாயனார் இவ்வாலயத்தில் மெய்க்கவலாராக பணி புரிந்தார். தேவாசிரிய மண்டபத்தில் அமைந்திருந்த அடியார்களை வணங்கத் தவறியதால் சுந்தரரை விலக்கி வைத்து திருத்தொண்டர் தொகை பாட காரணமாக இருந்தவர் விறண்மிண்டர் ஆவார். இவ்வாலயம் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னன் சமற்கார பெருமானாரால் கட்டப்பட்டது.  ஆதிகாலத்தில் செங்கற்கோவிலாக இருந்தது, பின்னர் 10ம் நூற்றாண்டில் சோழப் பேரரசி செம்பியன் மாதேவி இக்கோவிலையை முழுவதும் கற்றளியாக மாற்றிக் கட்டினார். தனி தேவாரப் பாடல் பெற்ற தலம். அப்பர் பெருமான் திருத்தாண்டகம் பாடியுள்ளார். தனி கொடி மரம், தனி திருமந்திரம் உள்ளது. துவாரபாலகர்களின் அங்க அழகு அப்படியே சொக்க வைப்பது. பிரம்மாண்ட நந்தி, கொடிமரம், பலி பீடம் மூன்றும் ஒரே நேர் கோட்டில் இல்லாமல் விலகி இருக்கின்றன. இத்திருக்கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், இடைநாழி, மகாமண்டபம், முகப்பு மண்டபம், வெளி மண்டபம் கொண்டு எழிலாகவும், பிரம்மாண்டமானதாகவும் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் தியாகராஜப்பெருமானுக்கு விழாக்கள் நடைபெறுகின்றன. சதுரவடிவ கருவறையில் அசலேஸ்வரர் வட்ட வடிவமான ஆவுடையாருடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். உருளை வடிவ பாணத்தில் கோடுகள் அமைந்துள்ளன. முன் பகுதியில் செப்புத் திருமேனியராக அம்பாள் வண்டார் குழலி காட்சி தருகிறாள். கருவறை வெளியே கம்பீர வடிவில் இரு பக்கமும் துவார பாலகர்களும், மண்டப நந்தியும் இடம் பெற்றுள்ளனர்.  இத்திருக்கோயிலின் முன் மண்டப இடப்பக்கம் பிள்ளையாரும் இரண்டு இலிங்கங்களும் இடம் பெற்றுள்ளன.  ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று ஐயனின் ஐம்முகங்களை குறிக்கும்  ஐந்து லிங்கத்திருமேனிகள் உள்ளன. இரண்டாம் மண்டபத்தில் இடப்புறம் உமாசகிதர், நடராஜர், சிவகாமி அம்பாள், போக சக்தி உற்சவத் திருமேனிகளும், வலதுபுறத்தில் செருந்துணை நாயனார், விறமிண்ட நாயனார், கழற்சிங்கர், சங்கா தேவி, நமி நந்தியடிகள் ஆகியோரின் மூலத்திருமேனிகளும் அமைந்துள்ளன. நந்தியெம்பெருமானுக்கு கூரை உள்ளது. அரசி செம்பியன் மாதேவியால் கற்றளி கோயிலாக உருவான இதன் அழகிய விமானத்தில் பண்டைய சோழ கால சிற்பச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாலயம் ஒரு கலைக்கூடம் என்றால் அது மிகையாகாது.  மகா மண்டபம், முகப்பு மண்டபம், நடராசர் சபை மண்டப விதானத்திலும், சுவற்றிலும், பல வண்ண பழங்கால ஓவியங்கள் கண்ணுக்கும் மனத்திற்கும் விருந்து. மாப்பெருங்கருணை கொண்டு வானுலகை விடுத்து பூலோகத்திற்கு தியாகேசப்பெருமான் வந்த வரலாறு, அருமையான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மேலும் காலசம்ஹார மூர்த்தி, துர்கா பரமேஸ்வரி, சரபர் ஓவியங்கள் அருமை. இவற்றை வரைந்தவர் “சிவம் ஓதுவார்”.  படிகளில் அற்புதமான உயிரோட்டமுள்ள கற்சிலைகள் அலங்கரிக்கின்றன. மேற்கு நோக்கிய இவ்வாலயத்தின் விமானத்தின் நிழல் கிழக்குப்பக்கம் மட்டும் விழும்படி கட்டப்பட்டுள்ளது இது தஞ்சை பெரிய கோயிலின் விமானத்திற்கு முன்னோடி என்றும் கூறலாம்.  இவ்வாலயத்தில் கோட்டங்களில் கங்கை, திருமகள், முருகன், கணபதி, அகத்தியர், அர்த்தநாரீஸ்வரர், பிச்சாடனர், பிரம்மா, இலிங்கோத்பவர், துர்க்கை திருமேனிகள் எழிலாக அமைந்துள்ளன. துர்கா தேவி தன் திருக்கரங்களில் திரிசூலம், ஆழி, சங்கம், வாள், தனுசு, கேடயம் ஏந்தி அபய கரம் அருள் பாலிக்க மகிடன் தலை மேலும், வெண்கொற்றக் குடைக்கு கீழும் எழிலாக  அருள் பாலிக்கின்றாள். தேவிக்கு அருகே சிரப்பலி கொடுக்கும் வீரனின் உருவத்தையும் காணலாம்.  இவ்வாலயத்தின் கோமுகியின் எழிலும் வியக்கும்படி உள்ளது. பல அரிய சுதை வடிவங்களையும் கண்டு களிக்கலாம். இத்திருக்கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அசலேசம் எனும் அரநெறி ஆலயம் சிறந்த கலைக் கருவூலம் மட்டுமல்லாமல் ஒரு வரலாற்றுப் பெட்டகமும் ஆகும்.  திருவாரூர் ஆலய வளாகத்திலேயே அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற ஒரு தலத்தைத் தரிசித்தோம் வாருங்கள் திருவாரூரில் அமைந்துள்ள மற்றொரு தேவாரப்பாடல் பெற்ற தலத்தை தரிசிக்கலாம்.                                  22. திருவாரூர் பரவையுண்மண்டலி   திருவாரூரில் அமைந்துள்ள மூன்றாவது தேவாரப்பாடல் பெற்ற தலம். கீழ வீதியில் ஆழித்தேரின் எதிரே விளங்கும் பழனியாண்டவர் கோயில் எதிரே அமைந்துள்ளது சீர்மிகு செல்வத் திருவாரூரில் பூங்கோயில், அரநெறி என்னும் அசலேசம், பரவையுண் மண்டலி ஆகிய மூன்று தேவாரத் தலங்கள் உள்ளன. இத்தலத்து இறைவனின் திருப்பெயர் தூவாயர், இறைவியின் திருப்பெயர் பஞ்சின் மெல்லடியாள். துர்வாசர் வழிபட்ட பெருமான் என்பதால் இத்தலத்து இறைவனை துர்வாச நாயனார் என்று அழைக்கின்றனர். ஆனால், தூவாயர் என்றே பெயரே புராணங்களில் காணப்படுகிறது. இக்கோயில் பிராகாரத்தில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் விநாயகருக்கு அருகே துர்வாசரின் சிலை உள்ளது. பரவை என்பது கடல். மண்தளி என்பது மண்கோயில். கடலை உட்கொண்ட மண்கோயில் என்ற அடிப்படையில் இக்கோயிலுக்குப் பரவையுண்மண்டலி என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை பிரளய காலம் வந்தது. அப்போது கடல் பொங்கி எழுந்தது. இதையடுத்து உலகை காப்பாற்றக் கோரி, தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் துர்வாச முனிவரிடம், திருக்கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைத்து வழிபட்டால், கடல் அமைதி அடையும். உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறினார். அதன்படி துர்வாச முனிவரின் தலைமையில், மற்ற முனிவர்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி குளம் அமைத்து ஈசனை வழிபட்டு வந்தனர்.  முனிவர்கள் செய்த பூஜையில் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், பொங்கி வந்த கடலை, அக்னி மூலையில் முனிவர்கள் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்துக் கொண்டார். துர்வாச முனிவர் பூஜித்து வழிபட்டவர் என்பதால், இத்தல இறைவன் ‘துர்வாச நாதர்’ என்ற பெயரையும் பெற்று சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.. முற்காலத்தில் மண்ணால் அமைக்கப்பட்டிருந்த இக்கோயில், பிற்காலத்தில் கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் அருள்பாலிக்கும் பெருமான், தூவாயர் என்பதை சுந்தரர் பாடல் மூலம் அறிய முடிகிறது சுந்தரமூர்த்தி நாயனார்  திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டபோது அவர் மேல் காதல் கொண்டு அவர் கேட்டுக் கொண்டபடி அவரை விட்டுப் பிரிவதில்லை என்று இறைவன் திருமுன்னர் உறுதி மொழி கூறி திருமணம் செய்து கொண்டார். ஆனால், சிலகாலம் சென்று இளவேனில் காலம் வந்தது. திருவாரூரில் அப்போது நடைபெறும் வசந்த விழாவை நினைத்தார் சுந்தரர் இதை பொங்கு தமிழ்ப் பொதிய மலைப் பிறந்து பூஞ்சந்தனத்தின் கொங்கணைந்து குளிர்ச்சாரலிடை வளர்ந்த கொழுந்தென்றல் அங்கணையத் திருவாரூர் அணிவீதி அழகரவர் மங்கலநாள் வசந்தம் எதிர் கொண்டருளும் வகை நினைந்தார் - என்று சேக்கிழார் பாடுகின்றார்.   தியாகேசர் மேல் கொண்ட பக்தியால், அவரது அவ்வசந்த விழாவை தரிசிக்க ஆவல் கொண்டு தாம் சங்கிலி நாச்சியாருக்குக் கொடுத்திருந்த உறுதிமொழியை மீறி திருவாரூர் தலத்திற்கு பயணம் மேற்கொண்டார். சுந்தரர் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதுமே அவரது கண்கள் இரண்டும் ஒளி இழந்தன. பார்வை இழந்த சுந்தரர் மிகுந்த சிரமத்துடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டார். காஞ்சிபுரம் சென்றபோது ஏலவார் குழலி ஏத்தி வழிபட்ட காலகாலனை கம்பனெம்மானைப் பாடி இடக்கண் பார்வை பெற்றார். பிற தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்து திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூரில் முதலில் பரவையுண் மண்டலிக்கு (துர்வாசர் கோயில்) வந்து அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு, தூவாயா! தொண்டு செய்வார் படுதுக்கங்கள் காவாயா! கண்டு கொண்டார் ஐவர் காக்கினும் நாவாயால் உன்னையே நல்லன சொல்லு வேற்கு ஆவாஎன் பரவையுண் மண்டலி அம்மானே எனத் தொடங்கி பத்து பாடல்களை மனமுருகப் பாடினார். பின்னர் திருமூலட்டானம் சென்று வன்தொண்டர் என்பதால்  ‘கண்பார்வையைத் திருப்பித்தா’ என்று அவர் ஈசனிடம் உரிமையுடன் உருகி வேண்டிய பாடல்களுள் ஒன்று.  விற்று கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பி ஆட்பட்டேன் குற்றமொன்றும் செய்த தில்லை கொத்தை யாக்கினீர் எற்றுக் கடிகேள் எண்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே  -   என்பது அப்பாடல். சுந்தரரின் வேண்டுதலைக் கேட்ட திருமூலட்டானர் அவருக்கு வலது கண் பார்வை தந்தருளினார். ஐயன் சன்னிதியை ஒட்டி தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. இந்த அம்மனை சுந்தரர், ‘பஞ்சேரும் மெல்லடி யாளை ஓர் பாகமாய்’ என்று பாடுகிறார். இதற்கு இந்தத் தலத்து அம்பாள், பஞ்சை விடவும் மென்மையான பாதங்களை உடையவள் என்பது பொருள். மூலவரின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், நான்முகன், துர்க்கை ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐயப்பன் சன்னிதியும், துர்வாச முனிவர் வழிபட்ட சிவலிங்கமும், கன்னி மூலையில் கணபதியும், வள்ளி – தெய்வானை சமேத முருகப்பெருமானும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். வடக்கில் நந்தவனமும், அதன் அருகே தீர்த்தக் கிணறும் உள்ளன. இவ்வாலயத்தில் உள்ள அனைத்து விக்கிரகங்களும், விஸ்வகர்மாவால் செய்யப்பட்டது என்கிறது தல புராணம். சனி பகவான் தெற்கு நோக்கியபடி, அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுவாமியின் மகாமண்டபத்திற்கு முன் உள்ள மண்டபத்தில், கயிலாயநாதரும், அவர் அருகே சுந்தரரும், பரவை நாச்சியாரும், சுந்தரரின் தோழர் சேரமான் பெருமானும் கைகூப்பியபடி நிற்கின்றனர். எதிரே மேற்கு நோக்கிய நிலையில் பைரவர் காட்சியளிக்கிறார்.  இத்திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் இக்கோயிலுக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானையும் தரிசித்து அவனருளும் பெறலாம். வாருங்கள் அன்பர்களே அடுத்து ஐயன் நித்ய பாத தரிசனம் தந்தருளும் திருவிளமல் தலத்தை தரிசிக்கலாம்.                        23. திருவிளமல்   மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்  ஒத்தக நகமணி மிளிர்வதொ ரரவின ரொளிகிளர்   அத்தக வடிதொழ வருள்பெரு கண்ணொடு முமையவள்   வித்தக ருறைவது விரிபொழில் வளநகர் விளமரே -   என்று ஆளுடையப்பிள்ளையார் பாடிய தலம் திருவிளமல்.  சிவாலயங்களில் பாத தரிசனம் என்பது பக்தர்கள் இறைவனின் திருவடியைக் கண்டு வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டதாகும். இந்தப் பாத தரிசனம் பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய இரு ரிஷிகளுக்குத்தான் முதன் முதலில் கிடைத்தது. அப்படிக் கிடைத்த சிறப்புமிக்க ஆதி முதல் தலம் விளமர் என்றழைக்கப்படும் திருவிளமல்.  திருவாரூரில் தியாகராஜரின் திருமுக தரிசனம் காண்பவர்கள் 3 கி.மீ தொலைவில் உள்ள திருவிளமல் என்னும் சிவாலயத்தில் சென்று ருத்ரபாத தரிசனம் காண்பது சிறப்பு. வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவரும், பதஞ்சலி என்னும் பாம்பு முனிவரும் வணங்கிய தலம் திருவிளமல் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களுள் 90வது தலம். விளமல் என்றால் திருவடி என்று பொருள். இத்தலத்தை பதஞ்சலி மனோகரர் ஆலயம் என்பர். திருவாரூர் புராணத்தில் திருஞானசம்பந்தர் இக்கோயிலின் இலிங்கத்தை வியந்து பாடியுள்ளார். தேவாரத்தில் திருநாவுக்கரசர் கயிலாயநாதரை எங்கெங்கு காணலாம் என குறிப்பிடும் பாடலில் விளமலைப் பற்றிய குறிப்பு உள்ளது. மாணிக்கவாசகரும் தம் சிவபுராணத்தின் பல இடங்களில் விளமல் தலத்தின் புகழ் பாடுகிறார். திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கி.மீ தூரத்தில், தஞ்சை செல்லும் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.   பரந்தாமனை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு அன்றென்னவோ மகாவிஷ்ணு மிகுந்த பாரத்துடன் இருப்பதாகத்தோன்றியது. மகா விஷ்ணுவிடமே ஆதிசேஷன் விளக்கம் கேட்க, ‘‘கலி பிறப்பதற்கு முன்னால் சிவத்தின் மகிமையை ரிஷிகள் அனைவரும் உணர வேண்டும். அவர்களால் உலகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக சிவபெருமான் பிச்சாண்டியாகவும், மகாவிஷ்ணுவாகிய நான் மோகினிப் பெண்ணாகவும் வேடமிட்டோம். ரிஷிகளை நான் மயக்கி அவர்கள் என் பின்னால் வந்த போது பிச்சாண்டியான சிவபெருமான் ஆனந்த நர்த்தனம் ஆடினார். அதைக் கண்டு நானும், முனிவர்களும், யோகிகளும் மெய்மறந்து நின்றுவிட்டோம். அக்காட்சியை நினைத்துக் கொண்டிருந்ததால் நான் உனக்கு பாரமாகத் தோன்றுகிறேன்‘‘ என பதில் அளித்தார். உடனே, ஆதிசேஷன், தானும் சிவபெருமானின் நர்த்தனத்தைக் காண விரும்பித் தவம் இயற்றினார். சிவபெருமானும் அவர் முன் தோன்றி, அளித்த வரத்தின்படி அத்திரி முனிவர் - அனுசுயா தேவிக்கு பிள்ளையாக பதஞ்சலி என்ற பெயருடன் வியாக்ரபுரத்தில் பிறந்தார் ஆதிசேஷன். வியாக்ரபாதரோடு தில்லையில் மகாசிவனின் ஆனந்த நடனத்தைக் கண்டு பரவசப்பட்டார். பிறகு, பதஞ்சலியும் வியாக்ரபாதரும் சிவபெருமானிடம் அவருடைய அஜபா நடனத்தையும் ருத்ர தாண்டவத்தையும் காண விரும்புவதோடு, அவரது திருவடி தரிசனத்தையும் என்றென்றும் எல்லோரும் தரிசிக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டார்கள். அதைக் கேட்ட சிவன், அவ்விருவரையும் ஸ்ரீபுரம் எனும் திருவாரூர் செல்லப் பணித்தார். இதன் பிறகு பதஞ்சலியும் வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள். ஊர் முழுவதும் சிவலிங்க சொரூபமாக இருப்பதைக் கண்டு பூரிப்படைந்த அவர்கள், திருவாரூர் கமலாம்பாளை வணங்கும் பொருட்டு பதஞ்சலி தன் உடலைப் பாம்பு வடிவமாகவும், வியாக்ரபாதர் புலிக் கால் கொண்டவராகவும் மாறினார்கள். சிவலிங்கங்கள் நிறைந்த ஊரில் தங்கள் பாதம் படக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு உருமாறினார்கள். அப்போது கமலாம்பாள் கூறியபடி, விளமல் என்னும் இடத்தில் பதஞ்சலி விமலாக்க வைரம் என்ற தேவலோக மண்ணால் லிங்கத்தைப் பிடித்து வைக்க, அவர் முன் சிவன் தோன்றினார். உடனே பதஞ்சலி தேவகாந்தாரி ராகத்தில் பாட, அப்பாடலுக்கு சிவன் ‘அஜபா’ நடனம் ஆடி, இரு முனிவர்களுக்கும் திருவடி தரிசனம் தந்தார். இதனை மகாவிஷ்ணு, பிரம்ம தேவர், முசுகுந்த சக்ரவர்த்தி, தேவாதி தேவர்கள் அனைவரும் புடை சூழ நின்று தம் நிலை மறந்து கண்டு களித்தார்கள். “பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக “ என்று மாணிக்கவாசகர் போற்றுகின்றார்.   இவ்வாறு முனிவர்கள் இருவரும் திருப்பாத தரிசனம் கண்ட தலம் விளமல் தலத்தின்  இறைவர்: பதஞ்சலி மனோகரர், விளமல் விமலன். இறைவி: மதுரபாஷினி – யாழினும் தேன் மொழியம்மை தீர்த்தம்: அக்னி தீர்த்தம், தலவிருட்சம்: வில்வம், கிளுவை பாடியவர்: திருஞானசம்பந்தர். சிறப்பு: சிவபாத தலம், சக்தி பீடங்களில் ஸ்ரீவித்யா பீடம். தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி வழிபாடு செய்த தலங்களுள் ஒன்று. சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கின்றார். மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது லிங்கம் தீபஜோதியாய் ஒளிரும். சிவபெருமான் காட்டிய ருத்ர பாதத்திற்கு இன்றளவும் தினமும் பூசைகள் அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தலம் திருவடித் க்ஷேத்திரம், சிவபாத தலம் என்றும் அழைக்கப்படுகின்றது.  குருக்கள் அனைத்து தலங்களின் சிவபெருமானின் நாமங்களையும் கூறி ருத்ரபாதத்திற்கு அபிஷேகமும், அர்ச்சனையும் செய்யும் தலம். ஆலய முகப்பிலேயே அக்னி தீர்த்தத்தை காணலாம். விளமலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் ஆடி மற்றும் புரட்டாசி மஹாளய அமாவாசையன்று பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்பு. திங்கட்கிழமை, அமாவாசை அல்லது சஷ்டி தினங்களில் தம்பதி சமேதராய் வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு நெய்யிட்டு அன்னம் சாத்தி வழிபட்டால், புத்திர பாக்கியம் கிட்டும். திக்குவாய் உள்ள குழந்தைகள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள், அக்னி தீர்த்தத்தில் நீராடி அம்பாளையும், ஈசனையும்  வழிபட சர்வ விமோசனம் பெற்று சகல சௌபாக்கியங்களும் பெறுவர். இத்தலத்தில் ஒரு பிடி அன்னதானம் செய்தால் பல அசுவமேத யாகம் செய்த பலனைப் பெற முடியும். இவ்வாலயம் சோழ மண்டலத்தில் அன்னதானக் கட்டளையாக தொன்று தொட்டு விளங்கி வந்துள்ளது.  நுழைவாயிலின் இருபுறமுள்ள விநாயகர், சுப்ரமணியரை வணங்கி விட்டு வெளிப் பிரகாரத்தில் நுழைகிறோம். அங்கேயுள்ள நந்தி சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்து ஆடிய  வடகிழக்கு திசை நோக்கி இருப்பதைக் காணலாம். பிரகாரம் நந்தவனமாக உள்ளது. பிரகாரத்தில் சனீஸ்வரன், சந்திர, சூரியர், விநாயகர், கஜலட்சுமி, சன்னதிகள் அமைந்துள்ளன. முன்மண்டபத்தில் பதஞ்சலியின் திருவடிவமும் மகாமண்டபத்தில் வியாக்ரபாதர் திருவடிவமும் உள்ளன. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.    அதைக் கடந்து உள்பிராகாரம் சென்றால் நந்தி வடகிழக்கு திசையை நோக்கி தலையை திருப்பியுள்ளதைக் காணலாம். சிவபெருமான் ரிஷிகளுக்கு பாத தரிசனம் அருள இ இம்மூலையில் திருநடனம் ஆடியதால் நந்தியின் தலை இத்திசையை நோக்கியவாறு உள்ளது.  தென்திசை நோக்கி க்ஷேத்ரபால பைரவர் அருளுகிறார்.  இந்த க்ஷேத்ரபால பைரவர் தனித்துவத்தோடு அருள்கிறார். நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபால பைரவர் இருப்பதால் இத்தலத்தில் நவகிரகம் கிடையாது. இவர் நவகோள்களைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டவர். இவரை தரிசனம் செய்பவர்களுக்கு நவகிரகங்கள் கெடுதல் செய்யாது.  கருவறையில் ‘பதஞ்சலி மனோகரர்’ எனும் திருப்பெயரோடு ஈசன் அருளாட்சி நடத்துகிறார். மூலஸ்தானத்தில் இலிங்கம், அதற்குப்பின் பதஞ்சலி முனிவருக்குக் காட்சி தந்த நாட்டியப் பெருமான் - நடராஜர், முன்புறம் சிவபெருமானின் திருப்பாதங்கள் என்று ஒரே சன்னதியில் சிவபெருமானின் மூன்று வடிவங்களை ஒரு சேர தரிசிக்கலாம். திருவாரூரில் தியாகராஜரின் திருமுக தரிசனத்தையும் திருவிளமலில் ருத்ர பாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால் பிறவா நிலை எய்துவர்.   பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறும், இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.  பித்ருக்களுக்கு முறையாக திதி கொடுக்க முடியாதவர்கள் அமாவாசையன்று கமலாலய குளத்தின் பிதுர் கட்டத்திலும், பின்னர் விளமலில் அக்னி தீர்த்தத்திலும் நீராடி, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட பித்ரு தோஷம் விலகும். அம்பாளின் அமுதமான திருப்பெயர் ‘யாழினுமென் மொழியாளம்மை’. வடமொழியில் மதுரபாஷினி, மஞ்சுளவாணி என்றும் அழைக்கப்படுகிறாள். சூரியனையும் சந்திரனையும் பிறையாகக் கொண்ட அம்பாள் மதுரபாஷினி, சகல சௌபாக்கியங்களையும் வழங்கும் சடாட்சர தேவியாக இராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக விளங்குவதால் இத்தலம்    சக்தி பீடங்களில் வித்யா பீடமாக விளங்குகின்றது. சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பது போல அம்மனுக்கு சந்திரனைப் போல குளிர்ச்சியான நெற்றிக்கண்ணுடன் அருள் பாலிக்கின்றாள்.  தினமும் அம்பாளை வணங்கி வந்தால் கலைகள், கல்விகளில் பெயரும் புகழும், வளர்ச்சியும் பெருகும். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்னர் மதுரபாஷினி அம்மனுக்கு அர்ச்சனை செய்து பின்பு பள்ளியில் சேர்க்கும் நடைமுறை உள்ளது. கல்வியில் சிறந்து விளங்க அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை தோறும் மகா சக்தி ஸ்ரீவித்யா பூஜை நடைபெறுகின்றது.   இங்குள்ள இராஜ துர்க்கை, இடத்திருக்கரத்தில் கிளியுடன் இருப்பதால் மதுரை மீனாட்சியின் அவதாரம் என்கிறார்கள். வலதிருக்கரத்தில் சூலம் மற்றும் சிம்மத்துடன் அஷ்டபுஜ துர்க்கையாக அருள் பாலிக்கின்றாள். செவ்வாய் தோஷம், இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இராஜ துர்க்கையை வழிபட தோஷம் விலகும். மஹாலட்சுமியும் இருபுறமும் ஐராவதங்கள் புடை சூழ அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களின் நோய்கள், துயரங்கள் நீங்குவதால் எமனுக்கு வேலை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் எமசண்டிகேஸ்வரர், கையில் ஆயுதம் எதுவுமின்றி, மலர்களுடன் பூஜை செய்யும் கோலத்தில் வீற்றிருக்கிறார். ஆலயத்திற்குள் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சூரியன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோரை தரிசிக்கலாம். சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடிய தலமாதலால், மார்கழி திருவாதிரை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர சிவராத்திரி மற்றும்  சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு ஆடிப்பூரம், நவராத்திரியன்று அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஆடிப்பூரத்தன்று அம்மனின் பாத தரிசனம் மற்றும் அன்னாபிஷேகம் காணலாம்.  திருவாரூர் தியாகேசப்பெருமான் பாத தரிசனம் தந்தருளும் ஆருத்ரா தரிசனத்தன்றும், பங்குனி உத்திரத்தன்றும் இவ்வாலயத்தில் இருந்து பதஞ்சலியும், வியாக்ரபாதரும் திருவாரூர் எழுந்தருளுகின்றனர். விளமலில் பெருமானின் திருப்பாத தரிசனம் பெற்றோம் அடுத்து திருவாரூர்க்கு அருகில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற  திருபள்ளி முக்கூடல் தலத்தை தரிசிக்கலாம்.                24. திருப்பள்ளி முக்கூடல்   பங்குனி உத்திர திருநாளன்று, கமாலாலயத்தில் நீராடிய பின்னர், ஆரூரின் அருகே உள்ள இத்தலத்தில்  வந்து  தம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது என்றொரு ஐதீகம் உள்ளதால் இத்தலத்தின் சிறப்புகளைப் பற்றிக் காணலாம் அன்பர்களே. அரிக்கு அரியான் பள்ளி  எனப்படும் திருப் பள்ளியின் முக்கூடல்    ஆதியில்  பட்சி ராமேஸ்வரம், குருவி ராமேஸ்வரம், வில்வாரண்ய க்ஷேத்திரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. ஜடாயு இத்தல ஈசனை வழிபட்டதாக தலபுராணம் விவரிக்கிறது. சீதையை கவர்ந்து கொண்டு இலங்கையை நோக்கி இராவணன் புஷ்பக விமானத்தில் பறந்து கொண்டிருந்ததைக் கண்ட இராம பக்தனான ஜடாயு பட்சி, சீதையைக் காத்திட அவனுடன் போராடியது. அதில் இராவணனால் இறக்கைகள் வெட்டப்பட்டு, திருவாரூருக்கு வடக்கே வில்வ வனமான இங்கே வந்து வீழந்தது. அப்போது ஜடாயு கலங்கிய நிலையில் சர்வேஸ்வரனை பிரார்த்தனை செய்து "நான் கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடாலேயே உயிரை விட வேண்டுமா?' என்று கதறியது. இறைவன் ஜடாயுவிற்கு அருள் செய்யும் வண்ணமாகத் திரிவேணி சங்கமத்திற்கு நிகரான முக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்கி, அதில் நீராடினால் சப்த சாகரம் உள்ளிட்ட எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலன் கிட்டுமெனக் கூறி அதன்படி முக்கூடல் தீர்த்தத்தில்  நீராடிய ஜடாயு பாப விமோசனமும், முக்தியும் பெற்றார். ஆதலால் குருவி ராமேஸ்வரம் என்று இத்தலம் அழைக்கப்பெற்றது.  முக்கூடல் தீர்த்தம் ஏழு கடல்களும், பதினாறு தீர்த்தங்களும் அடங்கிய "ஷோடச சேது” என்று போற்றப்படுகிறது. இத்தீர்த்தம் கோயிலின் எதிரே அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடுவோர், பதினாறு பேறும் பெறுவர் என்பது உறுதி!. கயாவில் தர்ப்பணம் செய்த பலன் இத்தீர்த்தக்கரையில் செய்ய கிட்டும் எனவே “கேக்கரை” என்றும் அழைக்கப்படுகின்றது, விநாயகப் பெருமானும் இத்தல சிவனை பூஜித்து பேறு பெற்றுள்ளார். மூர்க்கரிஷி, கௌதமர் ஆகிய முனிவர்கள் பூஜித்த தலம் தபோவதனி என்ற அரசி குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்து அஞ்சனாட்சி அம்மையை வழிபாடு செய்ய அம்மனே தாமரை மலரில் அழகிய குழந்தையாகத்  தோன்றினாள். அப்பெண் மணப்பருவம் அடைந்தபோது இறைவன் வேதியராக வந்து மணம் புரிந்தருளினார்.   சிறிய கிராமம். அதன் நடுவே சிறிய அளவிலான ஆலயம், கிழக்குமுக ஆலயத்தின் எதிரே தடாகம் அமைந்துள்ளது. இராஜகோபுரம் இல்லை. தோரணவாயிலின் படிகள் ஏறி உள்ளே செல்ல முக மண்டபம், நான்கு தூண்களுடன் உள்ளது. சுவாமி சன்னதியும், அம்பாள் சன்னதியும் ஒரே அடித்தளத்தின் மீது தரைமட்டத்திலிருந்து சுமார் ஆறடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளது. ஒரே மகாமண்டபத்துடன் இறைவன் சன்னதி. அர்த்தமண்டபம், கருவறை கொண்டு கிழக்கு முகமாகவும்; அம்பாள் சன்னதி அந்தராளம், மூலஸ்தானம் அமைப்பில் தென்முகமாகவும் அமைந்துள்ளது. இந்த அமைப்பின் காரணமாக மகா மண்டபத்தில் நின்றவாறே சுவாமியையும், அம்பாளையும் ஒரே சமயத்தில்  தரிசிக்க இயலும். இறைவன் முக்கோணநாதேஸ்வரர் சுயம்பு மூர்த்தம். வடமொழியில் த்ரிநேத்ரேஸ்வரர் அதாவது முக்கண் எம்மான் என்பதே மருவி முக்கோணநாதேஸ்வரராகி விட்டது.  ருத்ராட்ச பந்தலின் கீழ் பிராகாசமூர்த்தியாக திருவருள் பொழிகின்றார். இறைவி-அஞ்சனாட்சி, மை மேவு கண்ணி அம்மை,  நின்ற வண்ணம் புன்னகை சிந்தி புத்தொளி வீசி ஒளிர்கின்றாள்.  ஏனைய கோஷ்ட மூர்த்தங்களும் ஆலயத்தினை அழகாய் அலங்கரிக்கின்றனர். பன்னிரண்டு அமாவாசைகள் இத்தல தீர்த்தத்தில் நீராடி, ஈஸ்வரனுக்கும், அம்பிகைக்கும் வில்வம் மற்றும் கொன்றை பூவினால் அர்ச்சனை செய்து வழிபட புத்திரபேறு, திருமண பிராப்தம், சகல தோஷ நிவர்த்தி மற்றும் இஷ்ட சித்திகள் என யாவையும் பெறலாம் என்பது நம்பிக்கை  ஆராத இன்னமுதை அம்மான்றன்னை  அயனொடு மாலறியாத ஆதியானை தாராக மலர் கொன்றை சடையான்றன்னைச் சங்கரனை தன்னொபாரில்லாதானை நீரானை காற்றானைத் தீயானானை   நீள்விசும்பாய் ஆல்கடல்களேழுஞ் சூழ்ந்த பாரானைப் பள்ளியின் முக்கூடலானை பயிலாதே பாழே உழன்றவாறே.   என்று திருநாவுக்கரசர் இத்தலம் மீது ஒரு பதிகம் பாடி சிறப்பித்துள்ளார். அப்பதிக பாடல்களில் இத்தலத்தை பள்ளியின் முக்கூடல் எனப்போற்றுகின்றார். இத்தலத்தில் உறைகின்ற  பெருமானை பல காலும் சிந்திக்காமல், பயனில்லாமல் தடுமாறி திரிந்து உழன்ற செயல் இரங்கத்தக்கது என்றும், நாட்களை பாழாக்கியதாகவும்  ஒவ்வொரு பாடலிலும்  வருந்துகிறார்  அப்பர் பெருமான். இதுவரை திருவாரூரிலும், அருகிலும்   உள்ள தேவாரத்தலங்களைப் பற்றி கண்டோம் வாருங்கள் இனி திருவாரூரில் நடைபெறும் திருவிழாக்களின் சிறப்புகளைப் பற்றிக் காணலாம்.                                                       25.திருவாரூரின் திருவிழாக்கள்   திருவாரூர் திருவாதிரைத் திருவிழாவை அப்பரடிகள் கண்டு வணங்கி அதன் சிறப்பை முத்து விதானம் மணிபொன் கவரி முறையாலே பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே வித்தகக் கோல வெண்தலைமாலை விரதிகள் அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!  என்று  ஓர்  திருப்பதிகத்தினால் சம்பந்த பெருமானுக்குக் கூறியருளியிருக்கிறார்கள். அவரது காலத்தில் மிகவும் சிறப்பாக திருவாதிரை விழா கொண்டாடப்பட்டிருக்கின்றது.   திருவாதிரைத் திருப்பாத தரிசனம்: தற்போது திருவாதிரையன்று தியாகராஜப்பெருமான் தனது இடது பாத தரிசனம் தந்தருளுகின்றார். தனுர் (மார்கழி) மாதம் என்பதால் பத்து நாட்கள் மாணிக்க வாசக சுவாமிகள் இராஜநாராயண மண்டபம் எழுந்தருளி   அறநெறியார், நீலோத்பலாம்பாள், மற்றும் வன்மீகநாதர் சன்னதிகளில் திருவெம்பாவை விண்ணப்பிக்கின்றார். கல்யாண சுந்தரர், பார்வதி, சுக்கிரவார அம்மன் பக்த காட்சி மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்து பின் இரவு யதாஸ்தானம் திரும்புகின்றனர்.  ஆருத்ரா தரிசனத்திற்கு அஜபா நடனத்துடன் இராஜ நாராயண மண்டபம் எழுந்தருகிறார் கமல வசந்த தியாகர், அங்கு அவருக்கு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகின்றது.   நள்ளிரவில் மஹா அபிஷேகம் கண்டருளி, அதிகாலையிலிருந்து திருப்பாத தரிசனம் தந்தருளுகிறார். திருவிளமலில் இருந்து பாத தரிசனம் காண பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் திருவாரூர் எழுந்தருளுகின்றனர். அன்று நாள் முழுவதும் திருப்பாத தரிசனம் காணலாம்.  வசந்த விழா: மகாயோகீஸ்வரராக சிவபெருமான் திருக்கயிலாயத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். சிவசக்தி ஐக்கியம் உண்டாகி அதன் மூலம் ஆணவமாம் சூரர் குலத்தை கருவறுக்கும் தலைமகன் தோன்ற வேண்டி தேவர்கள் அவர் தவத்தை கலைக்க மன்மதனை வேண்டினர். மன்மதனும் அகங்காரம் கொண்டு, அவர் மேல் தன் பாணத்தை எய்தினான், ஆனால் எம்பெருமானின் நெற்றிக் கண்ணால் சாம்பரானான். அதனால் துன்புற்ற இரதிதேவி தன்னுடைய மாமனாரான திருமால் முன்பு சோமாஸ்கந்தரான தியாகராஜப்பெருமானை பூசித்ததைப் போல தானும் பெருமானையும், உமையம்மையையும், கந்தனையும் பூசித்தாள். தேவி தன் வரத்தின் படி மன்மதனை உயிர்ப்பித்து இரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படி அருள் செய்தாள். இரதியும் மன்மதனும் மகிழ்ந்து பெருமானுக்குப் பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தனர். எனவே இவ்விழா அவன் பெயரால் வசந்தவிழா என்றழைக்கப்படுகின்றது. ஆருர் பெருமானுக்குரிய திருவிழாக்களுள் வசந்த விழாவே தலைசிறந்ததாகும்.         இப்பெருவிழாவை அப்பர் சுவாமிகள் முன்னின்று நடத்துவதாக ஒரு மரபு திருவாரூரில் இன்றும் உண்டு. அது போலவே தைப்பூச விழாவை திருஞானசம்பந்தர் முன்னின்று நடத்தியதாகவும் மரபு உண்டு. எனவே ஆரூரில் தைப்பூச விழாவை ஞானசம்பந்தர் விழா என்றும் அழைப்பர். தைப்பூச விழாவின் போது சம்பந்தர் திருமேனியை எழுந்தருளச் செய்து விக்னேஸ்வரர் ஸ்தம்பத்தினை சண்டிகேசுவரர் சன்னதியிலும், பிரபா ஸ்தம்பத்தை  ஆயிரங்கால் மண்டபத்தின் வாயிலிலும், ரதஸ்தம்பத்தை தேரடியிலும் நடுகின்றனர். இது ஆழித்தேர் திருவிழாவிற்கு பூர்வாங்கமாகும். இதற்கு பின் தமிழ்மொழி பண்டாரம், கோயில் கணக்கர், ஆலய சிப்பந்திகள் மற்றும் தியாகரை பூசிக்கும் நயனார் பெருமான் திருமுன் தேர்த்திருவிழா பற்றிய மடலைப் படிப்பர். அத்திருமுகத்தில் ஆண்டின் பெயரும் விழாத்தேதியும் இடம் பெற்றிருக்கும். பெருமானே திருவிழாவிற்கு அனைவரையும் அழைக்கும் திருமுகமாகும் இது. விக்னேஷ்வரர் பூசை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் அங்குரார்ப்பணம். அடுத்து தியாகேசர் ஆதியில் வைகுண்டத்திலும் பின்னர் அமரர் உலகத்திலும்  சில நாட்கள் வாசம் செய்ததால், அனைத்து தெய்வங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும்  பூவுலகத்தோருடன் ஆழித்தேரோட்டத்தில் கலந்து கொள்வதாக ஐதீகம்.  எனவே துவஜாரோகண நாளன்று திருமண்டபத்தில் அன்னப்பாவாடை விரிக்கப்பட்டு, தியாகருக்கு அமுது நிவேதனம் செய்த பின், அவர் முன்றிலில் சிறப்புடன் தயாரிக்கப் பெற்ற சர்க்கரை பொங்கலை தரையில் பரப்பப்பட்டுள்ள நீண்ட வாழை இலைகளில் பரப்பி பாவாடையாக செய்து அதற்குரிய வழிபாடு செய்து, பிறகு அப்பாவாடை அமுது  விழாவிற்கு வந்துள்ள  தேவர்களுக்கும் சிவகணங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றது.   அடுத்து மஹாத்வஜாரோகணம் என்கிற பெரிய கொடியேற்றம் முதல் அப்பர் சுவாமிகள் திருமேனியை உலா வரச்செய்வர். அச்சமயம் தியாகப்பெருமான் திருமுன் இராஜநாராயணன் மண்டபத்தில் அப்பர் பெருமான் இத்ததிருவிழாவை முன்னின்று நடத்துகிறார் என்பதை குறிக்கும் வண்ணம் சிவனடியார்களுக்கு கோவணமும் புதிய திருவோடும் வழங்கப்படுகின்றது.  மறு நாள் கொடியேற்றம். ரிஷபம் மற்றும் மங்கலப் பொருட்கள் வரையப்பெற்ற கொடி ஏற்றப்படுகின்றது. அப்போது பாரசைவர் சுத்தமத்தளம் இசைப்பர். இதன் பின் வேள்விகள் தொடங்கும். முதல் ஏழு நாட்கள் கணபதி, சுப்பிரமணியர் உற்சவம் நிகழும். இதன் பிறகு மூன்று நாட்கள் பக்தோத்சவம் எனப்படும் மூவர் முதலிகளின் திருவிழா நடைபெறும். இவ்விழாவில் அதிகாரநந்தி, சண்டிகேசர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் திருமேனிகள் திருவிழா நடைபெறும்.  அதனை அடுத்து ஒரு நாள் கால பைரவர் திருவிழா. மறுநாள் காட்சி கொடுத்த நாயனார் திருவுலா, மறுநாள் சந்திரசேகரர் பட்டம் ஏற்பார். திருவாரூர் திருத்தலத்தில் சிவபெருமான் தியாகராஜராக எழுந்தருளுவதாலும், இராஜாதிராஜ க்ஷத்திரிய திருக்கோலம் என்பதாலும் இவர் இரத்தின சிம்மாசனத்தில் அன்றி மற்ற வாகனங்களில் எழுந்தருளுவதில்லை. எனவே இவருக்குரிய திருநாட்களில், பட்டம் பெற்ற சந்திரசேகரர் திருவீதி உலா வந்து அருள் பாலிக்கின்றார். இப்பட்டம் ஏற்கும் நாளே சந்திரசேகர பட்டோற்சவம் என்றழைக்கப்படுகின்றது. இவ்விழாவை முசுகுந்த சக்கரவர்த்தி முன்னின்று நிகழ்த்துவதாக ஐதீகம். இவ்வுற்சவத்தில் சந்திரசேகரர் திருவுலா வரும் போது எட்டு திசைகளிலும் திக்பிரயோக மந்திரங்களும், திக் பலிகளும் தருவர். ஈசான திக்கில் சந்திரசேகரர் எழுந்தருளும் போது முட்டுக்காரர் தலையில் பரிவட்டம் கட்டிக்கொண்டு சுத்தமத்தளத்தை தலை மேல் வைத்துக்கொண்டு மத்தளத்தை முழக்குவார். இப்படி பூதநிருத்தியமாடிய பின் பட்டம் புனைந்த சந்திரசேகரர் திருவீதிகளில் உலா வந்தருளுவார். சந்திரசேகரர்  கேடக உற்சவம் ஐந்து நாட்கள் நடைபெறுகின்றது. ஐந்தாம் நாள் உச்சிக் காலத்தில் வன்மீகநாதருக்கு உச்சிக் காலத்தில் பிரசனார்த்தம் சகஸ்ரகலசாபிஷேக உற்சவம்.  1008 கலசங்கள் வைத்து ஹோமம் செய்து வெண்ணை சாற்றி அபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.         இதன் மறு நாள் தியாகப்பெருமானின் வசந்த உற்சவம் துவங்குகின்றது. (பங்குனி மாத கார்த்திகை நட்சத்திரத்தில்) பூங்கோயிலின் எட்டு திக்குக்களிலும் “அஷ்டகொடி விழா” என்னும்  கொடியேற்றத்துடன் இத்திருவிழா சிறப்பாக துவங்குகின்றது.  அன்று முதல் நாள் பெருமான் சுத்தமத்தள தாளத்திற்கேற்ப அஜபா நாட்டியமாடி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளுவார். மறு நாள் இந்திரவிமான உற்சவம். சந்திரசேகரர் இந்திர விமானம், பூத வாகனம்,  வெள்ளி யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளுகின்றார். மறு நாள் வீர கண்டயம் இரதத்திற்கு செல்லுதல், திருக்கயிலாய வாகனம், ஆயில்ய நட்சத்திரத்தில் தியாகப்பெருமான் ஆழித்தேருக்கு எழுந்தருளும் மகாரதாரோகணம் நிகழ்வுறும்.  பின்னர்  ஆழித்தேரில் ஆரூரர் திருவீதிகளில் ராஜ கம்பீரமாக  உலா வந்தருளுகின்றார். ஆழிதேரோட்டம் நிறைவு செய்த பின் தியாகராஜர் தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பங்குனி உத்திரம் உதயத்தில் சபாபதி தீர்த்தம், கௌதம தீர்த்தம், மதியம் மூன்று மணி அளவில் சந்திரசேகர சுவாமி தேவதீர்த்தம் அவபிருதஸ்நானம், இரவு தியாகராஜ சுவாமிக்கு மஹா அபிஷேகம் மறுநாள் தியாகராஜ சுவாமி பதஞ்சலி, வியாக்ரபாத மகரிஷிகளுக்கு பாத தரிசனம் அருளுதல். வசந்த உற்சவ நிறைவாக பக்தகாட்சி உற்சவத்தன்று காலை பக்தகாட்சி மகாபிஷேகம், இரவு பக்தகாட்சி மகாஉற்சவம் தியாகேசர் அஜபா நடனமாடியபடி யதாஸ்தானம் எழுந்தருளுகின்றார்.  இவ்வாறு வசந்த விழா மிகசிறப்பாக திருவாரூரில் நடிபெறுகிறது. மூவர் முதலிகள் காலத்திலும் திருவாரூரில் திருவிழாக்கள் சிறப்பாக நடந்துள்ளது என்பதை பல தேவாரப்பதிகங்களில் காணலாம். அவற்றுள் ஆனந்த சேந்தனார் திருப்பல்லாண்டில் குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.   பொருள் : வேய்ங்குழல்இசை, யாழின்இசை, கூத்தாடுதலின் ஓசை, துதித்தலின் ஓசை என்பன கூட்டமாகப் பெருகித் திருவிழா நாளில் நிகழ்த்தப்படும் ஓசையோடுகூடி வானத்தளவும் சென்று பெருகி மிகுகின்ற திருவாரூரில் இளைய காளையை வாகனமாக உடைய சிவபெருமானுக்குப் பரம்பரை பரம்பரையாக அடிமையாய் அத்தகைய குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்கின்ற அடியவர் குடும்பங்களில் பிறந்த பழ அடியாரோடும் கூடி எம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக என்று திருவிழாக்களின் சிறப்பையும், திருவாரூர் அடியார்களின் சிறப்பையும் பாடியுள்ளார். இனி  வசந்தவிழாவின் ஒரு அம்சமான உலகப்புகழ் பெற்ற ஆழிதிருத்தேரோட்டத்தைப் பற்றிக்  சற்று விரிவாகக் காணலாம்.  []   ஆழித்திருத்தேர்: திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு, வேதாரண்யம் விளக்கழகு என்பது பழமொழி. அத்தகைய அழகுடையது திருவாரூர்த் தேர். தமிழகத்திலுள்ளச் ஆலயங்களிலும் திருவாரூரின் தேரே மிகப்பெரியதாகும். இதனால் இத்தேரை “ஆழித்தேர்” என்று அழைக்கின்றனர். 'ஆழி' என்பது சக்கரமாகும். மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தியாகேசரின் முகுகுந்த சகஸ்ரநாமத்தில் ரதப்பிரியன் – தேரில் உலா செல்ல விருப்பமுள்ளவர், பூமிதரன் - திரிபுரங்களை எரித்த அந்நாளில் பூமியை தேராகக் கொண்டவர், கலாரதன்- 64 கலைகளையே இரதமாகப் பெற்றவர், சதார சக்ர சம்யுக்த ரதோகரன சோபனன் – எப்போதும் ஒழிவின்றி ஓடிக்கொண்டிருக்கும் மேலான தேரில் உலா வரும் மங்கல சொரூபன் என்ற பல நாமாக்கள் தியாகேசர் தேரில் உலா வரும் பாங்கைக் குறிப்பிடுகின்றன. குமரகுருபரரும் தியாகேசனை  “தேரூர்ந்த செல்வத்தியாகனே ஆரூர வீதிவிடங்கா” என்று போற்றிப் பாடுகின்றார். பொதுவாக இறைவன் தேரில் வலம் வருவதை அருளல் என்பர். ஆனால் ஆருரில் ஆழித்தேரோட்டம் அழித்தல் என்னும் சம்காரத்தை உணர்த்துகின்றது. தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணாசுரன் என்ற மூன்று அசுரர்கள் பல்நெடுங்காலம் தவம் செய்து வெள்ளிக்கோட்டை, இரும்புக்கோட்டை, பித்தளைக்கோட்டை ஆகிய அரண்மனைகளை பரிசாகப்பெற்றனர். ஆணவத்தால் மூவரும் தாம் பெற்ற கோட்டைகளுடன் பறந்து சென்று பல நகரங்களையும் அழித்து வந்தனர். முனிவரும், தேவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். போரிட தேர் தயாரானது. பூமி தேர் பீடமானது, நந்தியும், முகுந்தனும் அச்சாக உருமாறினர், அஷ்டதிக் பாலகர்களும், சூரிய சந்திரர்களும் பத்து சக்கரங்களாயினர். ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் மூன்றும் தேர்த்தட்டுகளாயின. 64 கலைகளும் விதான கால்களாக மாறின, ஏழு மேல் உலகங்களும் தேரின் விதான கூரையாக மாறின. நால் வேதங்கள் குதிரைகளாயின, சாரதியாக பிரம்மன் அமர்ந்தார், பெருமானுக்குத் துணையாக சூலினி துர்க்கை சென்றாள். தக்க தருணத்தில் மேருவை வில்லாக வளைத்து, வாசுகியை நாணாக்கி, ஏழு கடலையும் அம்புராதூணியாக முதுகில் அணிந்து தேரில் தியாகேசப்பெருமான் ஆரோகணித்தார். அரக்கர் மூவரும் தாம் பெற்ற வரங்களினால் வெற்றி உறுதியென கோட்டைகளுடன் பறந்து வந்து விண்ணதிர சிரித்தனர். பெருமானின் தேரின் உறுப்புகளான இந்திராதி தேவர்கள் கர்வம் கொண்டனர். இறைவன் தேரிலிருந்து இறங்கி தனித்து நின்றார். கோட்டைகளில் இருந்து கொண்டு கொக்கரித்த அசுரர்களை பார்த்து புன்முறுவல் பூத்தார். மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாயின. தவவலிமையின் செருக்கால் உதித்த அரக்கர்களின் ஆணவமும், தேவர்கள் மனத்தில் உதித்த ஆணவமும், ஆருரனின் அரும்பும் புன்னகையால் அழிந்தொழிந்தன. இப்புராண அடிப்படையே ஆழித்தேர் திருவிழாவாகும். ஆணவம் ஒழிந்த மூன்று அரக்கர்களில் தாரகாட்சன், வித்யுன் மாலி ஆகிய இருவர் ஐயனின் கருணையினால் ஐயனின் வாயில் காவலன் ஆயினர், வாணாசுரன் ஐயன் ஆடுகின்ற ஆடலுக்கு மணி முழவம் முழக்கும் கலைஞன் ஆயினான். முப்புரம் என்பது மும்மலங்கள் என்பது சித்தாந்தம். “முப்புரமாவது மும்மலக் காரியம் அப்புரம் எய்தமை யாரரிவாரே” – என்பது திருமூலர் வாக்கு. இவ்வாறு முப்புரங்களை எரித்ததை உணர்த்தும் வகையில் தியாகேசர் ஆழித்தேரோட்டம் கண்டருளுகின்றார். ஈசனைத் தேரில் அலங்கரித்து பவனி வரச்செய்வதால் அவரது திருப்பார்வையால் மும்மலம் அழியும், மழை பெய்து நாடு வளம் பெறும். ஊர் செழிக்கும், இத்தேரை நாம் ஒன்று கூடி இழுப்பதால் ஒற்றுமை உணர்வு ஓங்கும். உயர்வு தாழ்வு என்ற பேதம் ஒழியும், மனம் மகிழ்வுறும். வீதி விடங்கர் என்று சிறப்பு பெயர் கொண்ட தியாகேசர், மாட வீதிகளில் ஆரோகணித்து வர வேண்டும் என விரும்பிய, மன்னன் விக்கிரம சோழன் அகல விதிகளில் எழிலாக பவனி வர ஆழித் தேர் என்ற பெரிய தேரை ( எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் ) உருவாக்கித் தந்தான். இத்தேர் அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி பிரம்மாண்டமாகவே உள்ளது. மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.  தேர்களை நடமாடும் கோவிலாகக் கருதலாம். வாருங்கள்  இனி ஆழித்தேரோட்டத்தைப் பற்றிய சில சுவையான தகவல்களைக் காணலாம். போழொத்த வெண்மதியஞ்சூடிப் பொலிந்திலங்கு வேழத்துரி போர்த்தான் வெள் வளையாள் தான் வெருவ ஊழித் தீயன்னானை ஓங்கொலிமாப் பூண்டதோர் ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே -  என்று திருநாவுக்கரசர் பாடுகிறார். அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு. இதன்மூலம் அதற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம்.   1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது. 1765ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பல நூற்றாண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட தேரோட்டத்துக்கு 1926ம் ஆண்டில் ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது. அவ்வாண்டில் தேர் ஓடிக் கொண்டிருக்கும்போது, அது பெரும் தீ விபத்துக்குள்ளானது. கொழுந்துவிட்டு எரியும் தீக்கு அஞ்சி, மேலே தேர் தட்டில் இருந்த பலர் அதிலிருந்து கீழே குதித்தனர். ஆனால் ஆழித் தேரின் தலைமைக் கொத்தனாரான திரு முத்து கொத்தனார் என்பவர், மற்றவர்களைப் போல் தன் உயிரைக் காத்துக்கொள்ள முயற்சிக்காமல், தியாகேசர் திருமேனியை பாதுகாக்க முயன்றார். சமயோசிதமாக அவர் இறைத் திருமேனியை அசுர வேகத்துடன் தன் இருகரங்களால் பீடத்துடன் தள்ளிக்கொண்டு போய் கைக்கு கிடைத்த கயிறுகளைக் கொண்டு கட்டி கீழே தள்ளிவிட்டார். மேலே என்ன நடக்கிறது என்று திகிலோடு பார்த்துக் கொண்டிருந்த பக்தர்கள் பலர் கூடி இறைத் திருமேனியை, கீழே விழாமல் தாங்கிப் பிடித்து ஆலயத்திற்குள் கொண்டு சென்றனர்.  பிறகு பக்தர்கள்  நிதி திரட்டி  இரண்டாண்டுகள் தீவிர முயற்சி செய்து புதிய தேரை உருவாக்கினர் அப்புதிய தேர்  1930ல் ஓடத் தொடங்கியது. இத்தேர், இன்று வரை ஆரூர் வீதிகளில் ஆண்டு தோறும் பவனி வருகிறது. 1930 முதல் 1948 வரை தடையேயேதுமின்றி வீதி உலா வந்த தேருக்கு மீண்டும் சோதனை வந்தது. ஏதோ காரணத்தால் தேரோட்டம் நின்றுவிட்டது. பிறகு 1970ம் ஆண்டில், நவீன தொழில்நுட்பத்தை பயன் படுத்தி, பாரத் மிகு மின் நிறுவனத்தினர் மூலம் இரண்டு பெரிய இரும்பு அச்சுகள், நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டு தேர் புதுப்பிக்கப்பட்டது. அப்போது ஹைட்ராலிக் பிரேக்களும் அமைக்கப்பட்டது, அது  முதல், தொடர்ச்சியாக சில ஆண்டுகள் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. எதனாலோ மீண்டும்  தேரோட்டம் தடைபட்டது. மீண்டும் 1989ம் ஆண்டு அரசு எடுத்த பலத்த முயற்சியால் வெகு சிறப்பாக தேரோட்டம் தொடர்ந்தது. மீண்டும் தடை ஏற்பட, 2010  தேர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு தேரோட்டம் இப்போது  சிறப்பாக நடைபெறுகின்றது. மிகுந்த எடை கொண்ட தேர் என்பதால் தேரைத் தள்ள தற்போது புல்டோசர் பயன்படுத்தப்படுகிறது திருப்பங்களில் இரும்பு பலகைகளில் கிரீஸ் தடவி, ஹைட்ராலிக் பிரேக்கின் உதவியுடன் அனாசயமாக திருப்பி விடுகின்றனர். முற்காலத்தில் மனித சக்தியால் மட்டுமே ஓடியதால் தேர் நிலை வந்து சேர மூன்று, நான்கு நாட்கள் பிடித்தன, அப்போது தியாகராஜ சுவாமிக்குரிய பூசைகள் தேரிலேயே நடைபெற்றன. ஆனால் இன்று ஒரே நாளில் ஆழித்தேர் நிலைக்கு வந்து விடுகிறது. ஆழித்தேரின் அமைப்பு: தேரின் அழகு அதன் பீடங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் தனி சிறப்புடையதாகும். தேரின் கட்டமைப்பு எண் கோண வடிவில் உள்ளது. ஆழித்தேரின் அமைப்பு ஒவ்வொரு புராண தத்துவத்தை விளக்கும் விதத்தில் அமைந்துள்ளது.    பிரபஞ்ச வடிவான தேர், சரீரமயமான தேர். ஆசியாவின் இரண்டாவது உயரமான தேர் என்ற சிறப்பும் உண்டு. தேரின் எடை ஏறத்தாழ 300 டன்களாகும், தேரின் அடிபீடம் 30 அடி உயரம். அலங்கரிக்கப்பட்ட பின் உயரம் 115 அடிகள், சக்கரங்கள் 4, அதன் விட்டம் 9 அடிகள், 400 அடி நீளமும் 20 அங்குல சுற்றளவும் உடைய வடங்கள் 6, 20 பட்டைகள் கொண்டதாக அலங்கரிக்கப்படுகின்றது. 30 கிலோ முதல் 45 கிலோ வரை எடையுள்ள 450 முட்டுக்கட்டைகள், பரப்புக் கட்டைகள் சுமார் 750 வரை பயன்படுத்தப்படுகின்றது. இதைத் தவிர திருப்பங்களில் பெரிய இரும்புத்தகடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய குதிரை -4, பாம்பு யாளம்-1, யாளம்-2, ரிஷபம்–8, பிரம்மா-1, துவார பாலகர்–2, கமாய்கால்–2, மேல்கிராதி-4, கீழ்கிராதி-2, பெரிய கத்தி கேடயம்-2, பூக்குடம்-16, ராஜாராணி–2, கிழவன் கிழவி-2, சுருட்டி-4, இலை-8,  பின் பக்கம் கமாய்கால்-6, அம்பராத்தோணி-2 பொம்மைகள் அனைத்தும் தேரின் முன்பகுதி சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு  குதிரைகள், பாம்பு யாளம் இவற்றின் நீளம் 30 அடியாகும். இப்பொம்மைகள் எல்லாம் காகிதக்கூழால் செய்யப்படுகின்றன இத்தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59மீ விட்டம் கொண்டவை. ஆழித்தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார், சிறு உறுதலம், பெரிய உறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசன பீடம் என ஏழு அடுக்குகளைக் கொண்டது. இத்தேரின் நான்காவது நிலையில் தியாகராஜ சுவாமி வீற்றிருப்பார். அப்பீடம்  மட்டுமே 31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது.  இத்தேரில் ஒரு சுரங்க வழி உள்ளதும் ஒரு சிறப்பாகும். முற்காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்கப் பயன்பட்டது. அப்போதெல்லாம் தேர் நிலைக்கு வர வாரக்கணக்காகுமாம். பின்னர் அது படிப்படியாக குறைந்து நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது இரும்பு சக்கரங்கள் மற்றும் ஹைட்ராலிக் பிரேக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதாலும்,  இயந்திரங்கள் மற்றும் தொழில் நுட்பத்தின் உதவியாலும் ஒரே நாளில் நிலைக்கு வந்து விடுகின்றது. திருவாரூர் ஆழித்தேர் தத்துவம் நிறை அமைப்பை பறைசாற்றும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. தேரில் காணப்படும் 4 குதிரைகள் நான்கு வேதங்களையும், ஆறு வடங்கள் 6 அங்கங்களையும் , தேரின் மேல் பகுதியில் இடம் பெறும் சட்டங்கள் .கயிற்றின் நாண்கள் ஆகியவை 64 கலைகளையும், 96 தத்துவங்களையும் குறிப்பதாக ஐதீகம். ஆழித்தேரில் சிவனின் திருவிளையாடல்களைக் கூறும்  600க்கும் மேற்பட்ட  சிற்பங்கள் உள்ளன.  இவ்வளவு பிரம்மாண்டமான ஆழித்தேர் பூரண அலங்காரத்துடன் தியாகராஜ சுவாமியுடன் ஆடி ஆடி அசைந்து 150 மணிகள் ஒலிக்க உலா வரும் அழகே தனி. அவ்வழகைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஆழித்தேரோட்டத்தின் போது திருவாரூரில் குவிகின்றனர். குறிப்பாக கமலாலயக்குளம், மேற்கு இராஜகோபுரம் அருகே வரும் போது மூன்றையும் ஒன்றாக தரிசிப்பவர்கள் பேறு பெற்றோர் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. இத்தேரில் தியாகேசர் பவனி வரும் அழகை அப்பர்  பெருமான் இவ்வாறு போற்றுகின்றனர். மாயப்போர் வல்லானை, மாலை தாழ் மார்பானை, ஆடுந்தீக்கூத்தானை ஆழித்தேர் வித்தகனை நான் கண்ட ஆரூரே..! என்று கூறி மயங்கி நாடிக் காணமாட்டாத தழலாய நம்பனை திருவாரூர் அம்மானை ஆரூர் வீதியில் என்று பாடுவார். தேவாரத்தில் சிறப்பிக்கப்பட்ட தேராகும் ஆழித்தேர். தியாகராஜப்பெருமானுக்குரிய முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனையில் ஆழித்தேரின் அமைப்பும், அதில் பெருமான் உலா வரும் அழகும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. தேரை பிரபஞ்ச வடிமாக கூறும் போது உயிர், உயிரற்றவை, இடம், காலம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் வடிவமாகக் கொள்ளலாம். தேரின் கீழ்த்தட்டுகள் பூமிக்கு கீழே உள்ள பாதாள லோகங்களைக் குறிக்கின்றன. மையப்பகுதி பூமண்டலம், மேலுள்ள விதானப்பகுதி மேல் உலகங்கள். இதன் ஆறு சக்கரங்களும் ஆறு பருவங்கள். இதனை இயக்கும் சாரதி பிரம்ம தேவன், அவனுள் இருந்து முதலும் முடிவுமற்ற  காலத்தை வழி நடத்திபவர் தியாகராஜர்,  நான்கு குதிரைகளும் நான்கு வேதங்கள் மற்றும் அதன் குறிக்கோளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை குறிக்கின்றது. தேரை இழுக்க பயன்படும் ஆறு வடங்கள் ஆறு சாத்திரங்கள், தேரின் மையத்தில் அமைந்துள்ள நான்கு வாயில்கள் நான்கு வேதங்களின் மகா வாக்கியங்கள். இதன் 64  கால்களும்  64 கலா தத்துவங்கள், தத்துவம் கடந்து சிவலோகத்தில்  சாலோக, சாரூப சாமீப சாயுச்சிய பதவிகளைக் கடந்து  சிவனோடு ஒன்றுதலை கலசம் உணர்த்துகின்றது. ஒற்றைக்குடை சிவத்தொடு இரண்டறக்கலந்து பரவெளியில் ஒன்றிவிட்ட  நிலையைக் குறிக்கும். தேரை சரீர வடிவமாகவும் காணலாம் அப்போது, உட்சக்கரங்கள் இரண்டும் சூரிய, சந்திர நாடிகளான இடகலை, பிங்கலை நாடிகளைக் குறிக்கும். இவற்றை இணைக்கும் மையக் கட்டையே நாடி சக்கரமாகும். வெளி சக்கரத்தின் மையக்கட்டைகள் இரண்டும் சிதக்னி குண்டத்தின் சிவசக்தி அம்சங்கள். வெளி நான்கு சக்கரங்களும் மூலாதாரத்தின் நான்கு இதழ்கள். இவ்விதழ்களின் விரிவால் இடகலை பிங்கலை  செயல்பட்டுக் குண்டலினி சக்தி மேலெழும்புகிறது. தேரின் அடிப்பகுதி ஆன்ம தத்துவம், நடுப்பகுதி வித்யா தத்துவம், மேல் பாகம் சிவத்தத்துவம். வித்யா தத்துவத்தில் 64 கலைகளும் 64 கால்களாக நிற்கின்றன. இதன் நடுவே   இருதயம் என்ற குகையாகிய தகராலயத்தில் யோகராஜராக தியாகேசப்பெருமான் வீற்றிருக்கின்றார். யோக வித்தையையும், தியாகராஜ இரகசியத்தையும் அறிந்தவர் சிந்தனையின் ஓட்டத்தை அடக்கி சிதாகாசத்தை அடைந்து சகஸ்ர கமலத்தில் விளங்கும் பரசிவத்துடன் கலந்து பேரின்பமடைகிறார். பஞ்ச மூர்த்திகளுக்குமாக ஐந்து தேர்கள் உள்ளன. விநாயகர், கமலாம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேர்கள் பரமேசனின் தேர் நாளுக்கு   முன்னதாகவே   பவனி வரச்செய்து பின்னரே ஆழித்தேரை இழுப்பது வழக்கமாக உள்ளது. ஆழித்தேர் பற்றிய குறிப்புகள் மூவர் தேவாரம், பெரிய புராணம் மற்றும்  கல்வெட்டுகளில் உள்ளன. பக்தகாட்சி: திருவாரூரை ஆண்டுகொண்டிருக்கும் தியாகேச பெருமானை ஒருமுறை குபேரன் தனது நாடான குபேரபுரியை ஆள வருமாறு பணிந்தான் குபேரபுரி செல்ல மனமில்லாமல் திருவாரூரிலேயே இருக்க சித்தமானார் தியாகேச பெருமான். குபேரன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, நான் குபேரபுரியை ஆள வர வேண்டுமெனில் என்னுடைய நடனத்தின் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொன் அளிக்கவேண்டும் என தியாகேசர் குபேரனிடம் கேட்க அவ்வாறே அளிப்பதாக குபேரன் ஒப்புக்கொண்டான்.               முதலாம் பிரகாரத்தில் தியாகேசர் திருநடனம் புரிந்தபோது, ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொன் என குபேரன் தான் அணிந்திருந்த மொத்த நகைகளையும் அளிக்க நேரிட்டு பின் தன் மனைவி அணிந்திருந்த நகைகளையும் அளித்தான் .    இரண்டாம் பிரகாரத்திற்கு சென்ற போது தனது சேனைகள் அணிந்திருந்த அனைத்து பொன்களையும் பொருட்களையும் அளிக்க வேண்டியதாயிற்று . மூன்றாம் பிரகாரத்திற்கு சென்று ஆரூர் பக்தர்களுக்கு நடனத்துடன் காட்சி அளித்துவிட்டு குபேரபுரி செல்லலாம் என தியாகேசர் குபேரனிடம் கூற குபேரனும் அவ்வாறே ஆகட்டும் என கூறினான். ஆனால் தியாகேசர் நீண்ட நெடியதும், காணக்கிடைக்காததும், கண்கொள்ளாததும், மெய்சிலிர்க்க வைப்பதும், அதிர்வலைகளை ஏற்படுத்துவதும், நொடிக்கு ஓராயிரம் அடிகளுடன் கூடியதுமாகிய தனது நடனத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்க, தியாகேசனின் அடுத்த அடிக்கு கொடுப்பதற்கு பொன், பொருள் ஏதும் இல்லாமல் குபேரபுரியின் செல்வக் கிடங்கு காலியாகி குபேரன் செய்வதறியாது திகைத்து நின்றான். உடனே தியாகேசபெருமான் தோல்வியுற்ற *குபேரனிடம் இருந்து பெற்ற பொன், பொருள் என அனைத்தையும் பல மடங்காக்கி குபேரனிடம் அளித்து, குபேரபுரி சென்று நல்லாட்சி புரிந்திடுக என ஆசி வழங்கி அனுப்பினார். பின் “ஆரூரில் இருப்பதே இன்பம்” என கூறி யதாஸ்தானம் எழுந்தருளினார். இச்சம்பவத்தினை அனைவரும் அறிய வேண்டும் வகையில் ஆண்டுதோறும் தேரோட்டம் முடிந்து, அபிஷேகம் கண்டருளி பாத தரிசனம் அளித்து  தியாகேசர் யதாஸ்தானம் செல்லும் முன் பக்தகாட்சி உற்சவம் ஆரூரில் சிறப்பாக நடைபெறுகிறது.  பக்தர்கள் குபேரர்களாக இருந்து திருநடனத்துடன் காட்சி கொடுக்கும் தியாகேசனுக்கு பக்தியுடன் மலர் தூவி அளிக்கின்ற புஷ்பத்தில் பொன், வெள்ளி சேர்த்து அளிக்கிறார்கள் அவ்வாறு அளிக்கப்படும் பொன்னையும், பொருளையும் தியாகேசப் பெருமான்  பலமடங்காக்கி பக்தர்களுக்கே திரும்ப அளித்து அருள் பாலிப்பார் என்பது ஐதீகம். இது வரை வசந்த விழாவின் சிறப்புகளைப் பற்றி கண்டோம் அடுத்து இத்தலத்தில் நடைபெறும் மற்ற திருவிழாக்களைப் பற்றிக்காண்போம். தெப்பத்திருவிழா சிறப்பு: பங்குனி உத்திரத்தன்று கமலாலயத்தில் பெரிய அழகியத்   தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.  தெப்பத்தில் கல்யாண சுந்தரர் மூன்று முறை பவனி வருகின்றார்.  தெப்பம் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இத்திருவிழா ஆண்டுதோறும் 3 நாட்கள் இரவில் நடைபெறும். தெப்பத்தில் 500 முதல் 600 பக்தர்கள் அமரலாம். தெப்பத்தில் இசைக்கச்சேரிகள், நாதஸ்வரக் கச்சேரிகள் இரவு தொடங்கி விடிய விடிய 3 நாளும் தொடர்ச்சியாக நடைபெறும். மெய்யன்பர்களின் கண்ணுக்கும் காதுக்கும் மகிழச்சி வழங்கும் தெப்போற்சவம் அவசியம் காண வேண்டிய ஒன்றாகும். ஆடிப்பூர விழா: கமலாம்பாளுக்கு ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெறுகின்றது. கொடியேற்றத்துடன் பத்து நாள் உற்சவமாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. தினமும் மாலையில் கேடயம், பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், திருக்கயிலாய வாகனம் என்று மனோன்மணியம்மன் வாகன சேவை தந்தருளுகின்றாள். 9ம் திருநாளன்று  ஆழித்தேர் போன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் மாட வீதி வலம் வந்து அருளுகின்றாள்.  ஒன்பதாம் திருநாள்  இரதாரோகணம் கமலாம்பாள் தேரோட்டம் கண்டருளுகிறாள். ஆழித்தேர் போலவே அம்மன் தேரும் அலங்கரிக்கப்படுகின்றது. மதியம் தேரில் எழுந்தருளுகின்றாள் கமலாம்பாள், மாலை வடம் பிடிக்கப்படுகின்றது, இரவு தேரோட்டம், மின் விளக்கு அலங்காரத்தில், பக்தர்களின் ஆரூரா! கமலாம்பா! என்ற கோஷத்துடன் தேரோட்டத்தைக் காண்பதே ஒரு அருமையான அனுபவம். தினமும் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை அம்மனுக்கு நடக்கின்றது. ஆடிப்பூரத்தன்று காலை அம்பாள் தீர்த்தம் கொடுக்கின்றாள். மாலை வெள்ளை சார்த்தல், அம்மனுக்கு வளையல் அலங்காரம் மற்றும் ஆடிப்பூரம் கழித்தல், மறு நாள்   சைத்ரோபசார விடையாற்றியுடன் ஆடிப்பூர விழா நிறைவடைகின்றது. நிறைபணி திருவிழா:  புரட்டாசி மாதம் பௌர்ணமியன்று மாலை தேவேந்திர பூஜை என்றும்  தேவேந்திர சாயரட்சை என்றும் அழைக்கப்படும் நிறைபணி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அனைத்து தலங்களிலும் எம்பெருமானின் திருமேனிக்கு மலர் மாலைகளையும், மலர்ச்சரங்களையும் சூட்டுதலே வழக்கம். ஆனால் தியாகருக்குரிய சிறப்பு திருப்பணி சாத்துதலாகும். இங்கு மல்லிகை, முல்லை, செவ்வந்தி, பவளமல்லி போன்ற சுகந்த மலர்களை மாலையாகவோ சரமாகவோ தொடுக்காமல், தியாகப்பெருமான் மீது மலர்களைத் தூவித் தூவி அலங்கரிக்கும் முறையே பணி சாத்துதலாகும். பணி சாத்துதலுக்கு என்றே ஒரு தனி விழா நடைபெறுகின்றது. இதனை “நிறைபணி உற்சவம்” என்றழைப்பர். புரட்டாசி மாதம் பூரட்டாதி நாளன்று செங்கழுநீர் ஓடையிலிருந்து செங்கழுநீர்ப் பூக்கள் கொய்யப்பெற்று அவற்றைப் பல்லக்கில் வைத்து திருவாரூரின் பவனி வரச்செய்து, தியாகப்பெருமான் திருமுன்னர் கொண்டு சென்று பூஜைகள் செய்து பணி சார்த்தப்பெறும். அப்போது இத்திருக்கோயிலின் மரபுவழி மாலை தொடுப்பவரான “திருமாலைக்கட்டி” என்ற ஊழியர் கோயில் மரியாதையான பரிவட்டம் கட்டி கௌரவிக்கப்படுவார். இதுவே நிறைபணி உற்சவமாகும் ஆடி சுவாதி சுந்தரர் குரு பூசை: வன்தொண்டர் திருக்கயிலாயம் சென்ற தினமான ஆடி சுவாதி திருவாரூரில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. காலை நம்பி ஆரூரர் பரவை நாச்சியார் திருக்கல்யாணம், இரவு அறுபத்து மூன்று நாயன்மார்களுடன், 63 நாதஸ்வரங்களுடன் மாடவீதி உலா வருகின்றார், மாலை வெள்ளை யானை வாகனத்தில் சுந்தரர் திருக்கயிலாயம் செல்லும் உற்சவம் என்று சுந்தரர் குரு பூசை திருவாரூரில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. மாசி நெல் அட்டித்தரும் விழா : திருவாரூர் திருவீதிகளில் மாசி உத்திரத்தன்று ஈசன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள பூதகணங்களைப் போல வேடமணிந்தவர்கள் உடன் வருவர். அன்று பரவைக்காக திருக்கோளிலி எம்பெருமானிடம் சுந்தரர் பெற்ற நெல்லை பூத கணங்கள்  இரவில் கொண்டு வந்து திருவாரூரில் சேர்த்த விழா. அன்றைய தினம் பூத கண வேடமிட்டவர்களிடம் நெல் கோட்டையைக் கொடுத்து வாங்கிக் கொள்ள தான்ய விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். இது வரை திருவாரூரில் சிறப்பாக  நடைபெறும் சில திருவிழாக்களைப் பற்றிக் கண்டோம் வாருங்கள் இனி ஆரூருக்கே உரிய சிறப்பு இசைக் கருவிகள் என்ன என்று காணலாம்.                       26. ஆரூருக்குரிய இசைக் கருவிகள்   பஞ்சமுக வாத்தியம் (குட முழா): தாட உடுக்கையன் தாமரைப்பூஞ்சேவடியன் கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான் ஆடரவக்கிண் கிணிக்காலன்னனோர் சேடனை ஆடுந்தீக் கூத்தனை நான் கண்டது ஆருரே  என்று அப்பர் பெருமான் பாடியபடி திருக்கால்களில் கிண்கிணி சதங்கைகள் ஒலிக்க ஆருரன் ஆடும்போது ஒலிக்கப்பெறும்  வாத்தியங்களில் ஒன்று குடமுழா என்றழைக்கப்படும் பஞ்சமுக வாத்தியம்.  இந்திரனிடமிருந்து முசுகுந்த சக்கரவர்த்தி தியாகராஜரை பெற்று பூவுலகிற்கு கொண்டு வந்த போது உடன் செங்கழுநீர்ப்பூ, பஞ்சமுக வாத்தியம், வெள்ளை யானை, பாரி நாதஸ்வரம் சுத்த மத்தளம், இரத்தின சிம்மாசனம், கட்கம் ஆகியவற்றையும் சேர்த்தே திருவாரூருக்கு கொண்டு வந்தார். இப்பஞ்சமுக வாத்தியத்தை இசைக்க கந்தவர்களையும், இந்திரன் உடன் அனுப்பி வைத்தானாம். பஞ்சமுக வாத்தியம் இத்தலத்தின் தனிச்சிறப்பு ஆகும். தனித்துவமாக இசைக்கப்படும் இவ்விசைக்கருவியை ஐம்முக குடமுழா என்றும் அழைக்கின்றனர். புதுமையான இவ்வாத்தியத்தை இன்றளவும் வாசிக்கும் ஒரே தலம் திருவாரூர். சிவகணங்களின் தலைவரான நந்தியெம்பெருமானும், திரிபுர தகனத்திற்குப் பின் செருக்கழிந்த  வாணாசுரனும் தன் ஆயிரம் கரங்களைக் கொண்டு வாசித்த வாத்தியம். இன்றும்  மாலை நேரப் பூஜையாகிய திருவந்திக் காப்பின் போது பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகின்றது.  அதனுடன் 21 வகையான இசைக்கருவிகளும், 18 வாத்தியங்களும் இசைக்கப்படுகின்றன. கூடுமே குட முழவம் வீணை தாளங் குறுநடை சிறுபூதம் முழக்க மாக்கூத்தாடுமே  என்று அப்பர் பெருமான் குட முழவத்தின் இசையில் தாளத்தில் ஆரூர் கூத்தன் ஆடும் அழகைப் பாடுகிறார். ஐம்முக குழவம் ஒரே வாயையுடைய தோல் கருவி அடியில் பெரிய மண் பானை வடிவம் போன்றும், அதற்கு மேல்புறம் ஐந்து வாய்களும் உள்ள கருவியாகும். சிவ வழிபாட்டில் பஞ்சதேக மூர்த்தியின் வழிபாட்டையொற்றி பஞ்சமுக வாத்தியம் தோன்றியது என்பர். பஞ்சமுக வாத்தியத்திலிருந்து உண்டாகும் ஐந்து ஒலியானது ஐந்து நடனங்களுக்கு உரியது என்பர். இவ்வாத்தியம் தேவாரப்பாடல் மற்றும் சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது என்பது ஒரு சிறப்பு. இக்குடமுழாவை வாசிப்பவர்கள் பாரசைவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். இவர்கள் நந்தி வழியில் தோன்றியவர்கள் என்பது ஐதீகம். இவர்கள் சுத்த மத்தளத்தையும் இசைக்கும் நுணுக்கம் அறிந்தவர்கள். இவர்கள் தற்போது முட்டுக்காரர்கள் என்றழைக்கப்படுகின்றனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் பாடிய நவாவரண கீர்த்தனைகளை அவரிடம் பயின்ற முட்டுகாரர்களால் தாளமாக்கப்பட்டு இன்றும் வாசிக்கப்படுகின்றன. இன்று திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஆலயங்களில் குடமுழா வாசிக்கப்படுகின்றது. சுத்தமத்தளம்: இது ஏனைய மத்தளங்களைக் காட்டிலும் மிக நீண்டதாக இருக்கும், திருவந்திக்காப்பு, மற்ற தீபாராதனைக் காலங்களிலும் குடமுழா இசைக்கப் பெறாத போதும் இசைக்கப்படுகின்றது. இதனையும் பாரசைவர்களே இசைக்கின்றனர். வசந்த விழாவின் போது பூத நிருத்தத்தின் போது சுத்த மத்தளம் இசைக்கப்படுகின்றது. கொடுகொட்டி: இதுவும் ஒரு தாளக்கருவி, சிவாபெருமானுக்கு மிகவும் பிரியமானது. தற்போது ஆழித் தேரோட்டத்தின் போது மட்டுமே வாசிக்கப்படுகின்றது. பூஜைக் காலங்களில் உபயோகிப்பது மிகவும் அருகிவிட்டது. இதை இசைப்பவர்கள் பார சைவர் அல்லாதவர்கள். பாரி நாயனம்: ஒரு வித நாதஸ்வர கருவியாகும். தியாகேசருக்குரிய பத்து அங்கங்களில் ஒன்றாகும். இப்பாரிநாயனம் இத்திருக்கோவிலில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. நாதஸ்வரம் என்னும் நீண்ட இசைக் கருவியிலிருந்து பாரிநாயனம் சற்று வேறுபட்டது (அளவில் சிறியது). எனவே இதன் ஒலி பெருகி  சற்று மாறுபட்டிருக்கும்,  சீவாளியும் நீளமாக இருக்கும். இவ்விசைக்கருவியில் சின்ன சின்ன விதிகளில் குறிப்பிட்ட ராகங்களில் வாசிக்கலாம் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இவ்விசை கருவி வீதிவிடங்கப்பெருமானின் பூஜை வேளைகளிலும், தேவாரப்பண், தீக்ஷிதர் கிருதிகளையும் வாசிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. பாரி நாயனத்தைப் பற்றிய குறிப்புகள் புராணத்தில் உள்ளன. மற்ற தலங்களில் பூசை நடப்பதைக் குறிக்க கெட்டிமேளம் வாசிப்பர். ஆனால் இந்த பாரிநாதஸ்வரம் இறைவனின் அங்கம் என்பதால் பூசை வேளையில் மந்திர ஒலியுடன் இணைந்தது இந்த நாதஸ்வர ஒலியாகும். அதனால் பாரி நாதஸ்வரத்தில் கெட்டி மேளம் வாசிப்பது கிடையாது என்பது மிகவும் சிறப்பு.   மல்லாரி: இறைவழிபாட்டிற்கு முக்கிய அங்கம் பெரும் இசையில் நாதஸ்வரம், தவில், ஒத்து, தாளம் ஆகியவை ஒருங்கே இணைந்து சுவாமி புறப்பாட்டின் போது நாதஸ்வரத்தில் வாசிப்பதற்கென்றே  ஏற்படுத்தப்பட்ட மல்லாரி, ரக்கி, ஒடக்கூறு, எச்சரிக்கை போன்ற இசை வகைகளில் மல்லாரி முக்கிய இடம் பெற்று வாசிக்கப்படுகின்றது. திருக்கோயில்களில் சுவாமி புறப்பாட்டின் போது வாசிக்கப்படும் மல்லாரி, இறைவனின் திருவுலாக்காட்சியை தாளக் கலைஞர்களின் உறுதுணையுடன் நாதஸ்வரத்தில் தயாராவதைக் கட்டியம் கூறும் ஒரு வகை மல்லாரி வாசிக்கும் போது நாதஸ்வர தவில் கலைஞர்கள் மல்யுத்தம் புரிவது போல் இசையில் மல்லுக்கு நிற்கும் காட்சியினால் இவ்வகை இசை மல்லாரி என பெயர் பெற்றிருக்கலாம். பஞ்சமுக பரமனின் பாதச்சலங்கையில் ஒலித்து பவனி வரும் நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் இணைந்து ஆலாரிப்புடனே தாளம் தவிலுடன் தழுவி குழலில் நடனம் செய்யும் மல்லாரி என்று சொல்லும் காவியக் கலையிதுவே என மல்லாரி விளக்கச் செய்யுள் ஒன்று கூறுகின்றது. மல்லாரி வாசிக்கத்தொடங்கும் முன்பு தவிலில் இறைவனின் பஞ்ச முகத்தைப் போற்றும் வகையில் ஐந்தெண் கொண்ட கண்ட ஜதியில் வாசிக்கப்படுவது அலாரிப்பு எனப்படும். அலாரிப்பு வாசிக்கப்பட்ட பிறகே நாதஸ்வரத்தில் கம்பீர நாட்டை ராகத்தில் மல்லாரி வாசிக்கப்படுகின்றது.  கம்பீர நாட்டையும் ஐந்து சுரங்களைக் கொண்ட ராகமாகும். இறைவன் கம்பீரமாக எழுந்தருளி வருவதை போற்றும் வகையில் கம்பீர நாட்டை ராகத்தில் மல்லாரி வாசிக்கப்படுகின்றது. பின்னர் ராக மாலிகையாக கம்பீர நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் ஆகிய கன பஞ்ச ராகங்களில் வாசிப்பது மரபு. இவ்வைந்து ராகங்களின் சிறப்பாக பவனி வருங்கால் நாட்டை பக்திப்பெருக்கால் கௌளை பரம் ஜோதியே ஆரபி பந்தத்தை மறக்க வராளி பரமனைப்பாதி ஸ்ரீ என்று கூறப்படுகிறது. சுவாமி பவனி வருவதைக் குறிக்க நாட்டை ராகமும், பரமனை பணிய குழுமியிருக்கும் பக்தர்களின் மனதில் பக்திரசம் பெருகச்செய்ய கௌளை ராகமும், பரஞ்ஜோதியே இறைவன் என்பதை உணர்த்த ஆரபி ராகமும், பந்த பாசங்களை மறந்து மனதை ஒரு நிலைப்படுத்த வராளி ராகமும், பரமனின் பாதி பார்வதிதேவி என்பதை உணர்த்த ஸ்ரீராகமும் சிறப்பு வாய்ந்தவைகளாகும். ஐந்து வகை மல்லாரி இசை: திருமஞ்சனம் எடுத்து வரும் போது வாசிப்பது தீர்த்த மல்லாரி.  நிவேதனம் எடுத்து வரும் போது வாசிப்பது தளிகை மல்லாரி, பூர்ண கும்பம் எடுத்து வரும் போது  வாசிப்பது கும்ப மல்லாரி, சுவாமி தேருக்கு புறப்படும் போது வாசிப்பது தேர் மல்லாரி, சுவாமி புறப்பாட்டின் போது வாசிப்பது புறப்பாட்டு மல்லாரி என மல்லாரி இசை ஐந்து வகைப்பாடு கொண்டுள்ளது.  தியாகராஜ சுவாமியின் புறப்பாட்டின் போது வரிசையாக நாதஸ்வரக் கலைஞர்களும், தவில் கலைஞர்களும் எதிரெதிரே நின்றபடியே வாசிக்கும் அழகு கண்ணுக்கும் காதிற்கும் விருந்து என்பதில் எந்த ஐயமுமில்லை. நாதஸ்வரத்திற்கே உரிய மல்லாரி தற்போது நாட்டிய நிகழ்ச்சிகளிலும், வயலின் முதலிய இசைக் கச்சேரிகளிலும் இடம் பெறுவது இதன் சிறப்பிற்கு சான்று. இனி திருவாரூக்கே உரித்தான சில சிறப்புகளைப் பற்றிக் காணலாம்                                                  27. நீதி காத்த திருவாரூர்   திருவாரூரைத் தலை நகரைக் கொண்டு ஆட்சி செய்த மனுநீதிச் சோழமன்னன் செம்மையான சிவபக்தர். யாருக்கும் எவ்விதக்குறையும் இருக்கக்கூடாது என்பதற்காக, யார் வேண்டுமானாலும் தன்னை வந்து மிக எளிதாகச் சந்திப்பதற்காக அரண்மனை வாசலில் ஆராய்ச்சி மணி கட்டி வைத்திருந்தார். பிள்ளைப் பேறு இல்லாத மனு வேந்தர் அதற்காக இலிங்கப் பிரதிஷ்டை செய்து பூசித்தார். இவ்விலங்கம் திருமூலட்டானார் பிரகாரத்தில் உள்ளது. திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு சிவபூசை செய்த பேரரசனுக்கு  தியாகேசரின் திருவருளால் அழகிய புதல்வன் பிறந்தான். அவனுக்கு வீதிவிடங்கன் என்று பெருமானின் பெயரையே சூட்டினான். இளவரசனாக உயர்ந்த அவன் ஒரு நாள் தேர் ஏறி வீதியுலா சென்றான். வீதியில் தேர் சென்று கொண்டிருந்த போது கன்றுக்குட்டி ஒன்று குறுக்கே பாய்ந்தோடி வந்தது. அதை சற்றும் எதிர்பாராத இளவரசனால் தேரை உடனே நிறுத்த இயலவில்லை. இதனால் அக்கன்றுக்குட்டி தேர் சக்கரத்தில் சிக்கி இறந்தது. பசுவின் கன்று இறந்ததைக் கண்ட இளவரசன் பதைபதைத்தான். கன்றை இழந்து கதறியழுத தாய்ப்பசு மனுசோழன் அரண்மணையை அடைந்து ஆராய்ச்சி மணியைக் கொம்பினால் அடித்தது. கட்டிய நாளிலிருந்து ஒரு நாளும் ஒலிக்காத மணி திடீரென ஒலித்ததைக் கேட்டு மன்னர் வியப்படைந்தார். முகமெல்லாம் கண்ணீர் மல்க தாய்ப்பசு மணியடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நடந்த நிகழ்ச்சியைக் காவலர்கள் வேந்தனுக்கு உரைத்தனர். பசுவிற்குத் தன் மகனால் உண்டான துயரத்தை கண்டு துன்பம் அடைந்தார். எவராலும் தீர்க்க முடியாத பசுவின் துன்பம் கண்டு துயரம் தாளாமல் துடித்தார். நீதி கேட்டு வந்து நிற்கும் தாய்ப்பசுவிற்கு நியாயம் வழங்க முடிவு செய்தார். எவ்வீதியில் பசுக்கன்று தேர் சக்கரத்தில் சிக்கி மடிந்ததோ அதே வீதியில் இளவரசனையும் தேர்சக்கரத்தில் மடியச் செய்யுமாறு மந்திரிக்கு ஆணையிட்டார். மன்னனின் ஆணையை கேட்டு மந்திரி தன் உயிரையே மாய்த்துக்கொண்டார். மனுநீதிச்சோழர் தாமே தேரின் மேல் ஏறி தவப் புதல்வனை வீதியில் கிடத்தி மகனான இளவரசன் மேல் தேர் சக்கரத்தை ஏற்றினார். மண்ணவர் கண் மழை பொழிந்தார் வானவர் பூ மழை பொழிந்தார் அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி – மழவிடை மேல் விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப்பெருமான் என்றபடி நீதிநெறி நின்ற தந்தையும் புதல்வனும் வீதியில் புரிந்த செயற்கரிய செயலைக் கண்டு வீதிவிடங்கப் பெருமான் திருக்காட்சி தந்தருளினார். பசுக்கன்று, மந்திரி, இளவரசன் ஆகிய அனைவரும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தனர். தியாகேசரின் திருக்காட்சி கண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்த மன்னர் உயிர் பெற்று எழுந்த மகனை வாரி அனைத்து உள்ளம் மகிழ்ந்தார். தாய்ப் பசு கன்றிடம் ஓடிச் சென்று பாலைச் சொரிந்தது. மனுநூல் கூறியவாறு, நீதியை யார்க்கும் எவ்வுயிர்க்கும் பொதுவில் வைத்துச் செயல்பட்ட மனு வேந்தன் மனுநீதிச் சோழன் என்று புகழ் பெற்றார். தமிழகத்தின் பெருமைக்கு குறிப்பாக சோழப் பெருமன்னர்களின் சிறப்புக்கு திலகமாக விளங்கும் இவ்வரிய நிகழ்ச்சி திருவாரூர் திருவீதியில் நடைபெற்று, இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது இத்திருக்கோயிலின்  பெருமைக்கு ஒரு சான்று. எம்பெருமான் தியாகேசனே தாய்ப்பசுவாகவும், தர்மதேவதையான எமதர்மராஜா கன்றாகவும் மாறி மனுநீதிச் சோழன் பெருமையை உலகிற்கு உணர்த்தினர் என்பர் பெரியோர். மனுநீதி சோழனின் சிலை சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் பாரபட்சமின்றி நியாயம் வழங்கவேண்டுமென்பதை இது உணர்த்துகின்றது. இந்நிகழ்வை வாயிற் கடை மணி நடுநா நடுங்க  ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான் தன்  அரும் பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்  பெரும் பெயர்ப்புகார் என் பதியே”   நீதி தவறாமல்  திருவாரூரை ஆண்ட, அறம் பிழையாமல்  ஆட்சி செய்த மனுநீதிச்  சோழன்  குறித்து  சிலப்பதிகாரத்தில் கண்ணகி  வாயிலாக  இளங்கோவடிகள்  மூன்றே வரிகளில் பாடியுள்ளார்.  திருவாரூரில் கீழைக்கோபுர வாயிலை ஒட்டி மூன்றாம் பிரகாரத்தின் வடகீழ் மூலையில் ஓர் சிறிய கோபுர வாசல் உள்ளது. இதை விட்டவாசல் என்றழைப்பர். ஆழித்தேருக்கு எழுந்தருளும் போது ஈசான மூலையில் உள்ள இவ்வாசல் வழியாகத்தான் தியாகேசர் அஜபா நடனத்துடன் எழுந்தருளுவார். ஆத்ம பூஜையை மறந்த இந்திரன் தன் கலைகளை இழந்து நீச வேடத்துடன்  கிழக்கு வாசலில் காத்திருப்பதால், தனது அருட்பார்வை அவன் மேல் படக்கூடாது என்று பெருமான் விட்டவாசல் வழியாக செல்கிறார் என்பர்.   இவ்வாயிலின் வெளிப்புறம் திருவீதியில் மனு நீதி சோழனின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் அடங்கிய தேரினைப் போன்று வடிவமைக்கப்பட்ட மண்டபம் அமைந்துள்ளது. ஆறு தூண்கள் அணி செய்யும் இம்மண்டபம் நான்கு தேராழிகளும் இரண்டு குதிரைகளும் பூட்டிய வண்ணம் காட்சி தருகின்றது. மண்டபத்தின் உட்பீடத்தில் எழில் மிகு சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. மனுவின் பிரிய மகன் விருத்தன் நிலத்தில் கிடக்கின்றான். தேரின் அருகே சிறிய நான்கு கால் மண்டபம் அதில் ஓர் மணி, உயிர் நீத்த கன்று, கன்றை இழந்த பசு சிற்பங்கள், கன்றின் வயிற்றில் தேர் சக்கரம் ஏறிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. கற்தேரின்  மத்தியில் அழகிய பீடத்தில் வீதி விடங்கப் பெருமான் அமர்ந்திருக்கின்றார். மான் மழுவேந்தி நந்தியின் தலை மேல் வலது கரத்தை வைத்த கோலத்தில் உமையம்மையுடன் எழிலாக காட்சி தருகின்றார். பெருமானுக்கு வலப்புறம் பசுவும் கன்றும். இடப்புறம் மனு வேந்தன், கரம் கூப்பிய வண்ணம் மனுவின் மகன் பிரிய விருத்தனும், அமைச்சர் உபயகுலாமவனும் நிற்கின்றனர். இந்நினைவு கூடத்தின் தென்புற சுவரில் மனுநீதிச் சோழனின் வரலாறு ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் விசுவகன்மீஸ்வரம் சன்னதியின் கருவறை வெளிப்புறம் இவ்வரலாறு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.  திருவாரூர்த் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத் தென்புறச் சுவரிலுள்ள விக்கிரம சோழர் கால கல்வெட்டொன்றில், வீதி விடங்கப்பெருமானே பேசுவது போன்று இவ்வரலாறு இடம்பெற்றுள்ளது. திருவாரூரில் ஆடற்கரணங்கள்: பரத முனிவர் இயற்றிய நாட்டிய இலக்கண சாத்திர நூலில் 108 ஆடற்கரணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெரிய கோவிலின் உட்சுவர்களில் இக்கரணங்களில் 87 வகை சிற்ப வடிவில் எழிலாக விளங்குகின்றன. இது போன்ற கரணங்களை தில்லையிலும், திருக்குடந்தையிலும், திருமுதுகுன்றத்திலும், திருவண்ணாமலையிலும் காணலாம். திருவாரூரிலும் பல அபூர்வமான கரணங்களைக் காணலாம். கீழைக்கோபுர சுவர்களிலும், கல்தேரின் புறச்சுவர்களிலும் மங்கையரின் ஆடற்கரணங்களைக் காணலாம், புற்றிடங்கொண்டாரின் சன்னதி புறச்சுவர்களிலும், கூரையிலும்  சிவபெருமானின் ஆடற்கரணங்களைக் கண்டு  களிக்கலாம். திருவாரூக்கே உரிய சில பழமொழிகள்: 1. ஒரு பெண் மெதுவாக நடந்து வருவதை திருவாரூர் தேர் அசைவது போல் அசைந்து வருகிறாள் என்று கூறுவார்கள்.   2. பெண்களுக்கு அலங்காரம் செய்வதை திருவாரூர் தேரழகு செய்வது போல செய்ய வேண்டும் என்பார்கள். 3. ஒருவரை திட்டும் போது “ஏன் திருவாரூர் தீவட்டி போல் நிற்கின்றாய்? என்பார்கள். 4. கலியுகம் முடியும் போது கமலாலயம் வற்றி, காராம்பசு பால் கறந்து, கல் தேர் ஓடி, கமலாம்பாள் கல்யாணம் நடக்கும் என்று கூறுவார்கள். 5. பெரிய சொத்து வைத்திருக்கிறார் பாரு… கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்து வேலி என்பர். 6. திருவாரூர் தேரழகு, திருவிடை மருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு வேதாரண்யம் விளக்கழகு. 7. தியாகராஜப்பெருமானைப் பற்றி அசைந்தாடி அகிலமும் ஆட்டுந்தியாகர், ஆடாதும் அடிபாகற்க் காய் பறிக்கும் தியாகர் என்று பழமொழிகள் உள்ளன. 8. கையில் வெண்ணயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவார் போல் என்னும் பழமொழி போல பட்டினத்துப் பிள்ளை ஆரூரர் இங்கிருக்க  அவ்வூர்த் திருநாளென்று ஊரூர்கள் தோறும் உழலுவீர் – நேரே உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர் விளக்கிருக்கத் தீதேடு வீர் திருவாரூர் உடையார் இவ்விடத்தில் இருக்க, அவ்வூரில் திருநாள் என்று ஊர்கள் தோறும் சென்று அலைவோரே! நேராக மனக்கருத்தை ஆராயாத மூடர்களாக நீங்கள் தீபம் இருக்க நெருப்பை தேடுகின்றீர்கள்  என்று பாடியுள்ளார். அமர்ந்தாடும் அழகரோடு ஆனந்தக் கூத்தாடும் அழகரையும் பற்றிக் காண்போமா அன்பர்களே.                                        28. இரண்டு அரசர்கள்   சைவ சமயப் பேருலகில் இரண்டு ராஜாக்கள் பிரசித்தம், தில்லையில் ஆனந்த நடமாடும் நடராஜருக்கும் திருவாரூரிலே இருந்து அஜபா நடமாடும் தியாகராஜருக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றிக் காணலாமா அன்பர்களே? ஆதிரையான்: சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இந்நாளில் இருவரும் திருவிழாக் கண்டருளுகின்றனர். நடராஜர் திருவாதிரைக்கு முதல்நாள் திருத்தேரோட்டம் கண்டருளி அலங்கார மகாபிஷேகம் கண்டருளி ஆனந்த நடனமாடிக்கொண்டு ஆருத்ரா தரிசனமளித்து கனக சபைக்கு எழுந்தருளுகின்றார்.  திருவாரூரிலும் திருவாதிரை நாள் தனிப்பெரும் சிறப்புடையதாக விளங்குகிறது. அன்று தியாகப்பெருமான் தனது வலது பாத தரிசனம் தந்தருளுகின்றார்.   தேர் ஊரும் செல்வர்:  இரு இராஜாக்களும் தேரில் மட்டுமே வலம் வரும் பெருந்தகுதியுடையவர்கள். இப்படி பவனி வந்த பிறகு பெரிய அளவில் சாந்தி அபிஷேகமும் நடைபெறுகின்றது. தியாகேசர் உலாவரும் ஆழித்தேர் சிறப்பு அகிலம் அறிந்த ஒன்று. ஆரூர் பெருமான் ஆழித்தேர் வித்தகன் ஆவான்.   கூத்தப் பெருமான்: தில்லை எம்பெருமான் ஆனந்தத் தாண்டவம் காட்டி அருளுகின்றார். தியாகராஜரோ இருந்து ஆடுகின்றார்.  பாற்கடல் அலையில் பள்ளி கொண்ட பரமனின் மூச்சுக்காற்றுக்கேற்றவாறு அஜபா நடனம் ஆடுகின்றார்.  ஆறு அபிஷேகம்: தேவர்களின் ஒரு நாள் மானிடர்களுக்கு ஒரு வருடம். ஆகவே தேவர்கள் சிவபெருமானுக்கு செய்யும் ஆறு கால பூசையே ஆறு அபிஷேகங்கள். நித்தியப்படி அபிஷேகம் விடங்கருக்கு தில்லையில் அவர் ஸ்படிக லிங்கம், திருவாரூரில் மரகத லிங்கம்.  கிரகண காலங்களில் அபிஷேகம் நடைபெறுவது திருவாரூரின் சிறப்பு.   இரகசியம்: சிதம்பர இரகசியம், தில்லை கூத்தனின் வலப்புறம் அமைந்துள்ள திருவம்பல சக்கரம் எனப்படும்  ஆகாச சக்கரம் என்பர். அதற்கு குறியீடாக தங்க  வில்வ, கொன்றை மாலைகள் தொங்குகின்றன. திருவாரூரில் பெருமானின் திருமேனியே இரகசியம். இதை அப்பர் பெருமான் “பொய்யஞ்சி வாய்மைகள் பேசி புகழ் புரிந்தார்க்கு  அருள் புரியும் ஐஐஞ்சின் அப்புறத்தான் என்று பாடுகின்றார். இதுவே சோமகுல இரகசியம்.  திருச்சாலகம்:  தில்லையில் 96 கண்கள் கொண்ட வெள்ளியால் போர்த்தப்பட்ட சன்னல் உள்ளது. தியாகேசர் எழுந்தருளும் ஸ்ரீபீடத்தின்   இருபுறமும் தென்றல் தவழ்ந்து வரும் திருச்சன்னல்கள் உள்ளன. வலப்புற திருச்சாலகத்தின் அருகில் அரம்பையர் வழி வந்த பதியிலார் அந்நாளில் வானுலகத்தில் பெருமான் இருந்ததை நினைவூட்டும் வண்ணம் பாடுவார்கள்.  இடப்புறம் புல்லாங்குழல் இசைப்பர்.   செங்கழுநீர்த் தாமம்:   பெருமான்கள் இருவரும் செங்கழு நீர் மாலை விரும்பி அணிவதால் செங்கழுநீர் தாமத்தர்.  தியாகேசரை முசுகுந்தன் அடையாளம் கண்டது இம்மாலையினால்தான். எனவே எம்பெருமானோடு வானுலகத்திலிருந்து செங்கழுநீர் மலரும், நீலோத்பல மலரும் வந்தன. இன்றும் இரண்டும் அஞ்சனை வேலி ஆரூர் ஒடையில் மலர்கின்றன.   கோயில்: சைவ சமயத்தில் கோயில் என்றால் அது தில்லையைக் குறிக்கும். பெரிய கோயில் திருவாரூரைக் குறிக்கும். ஆரூரில் பூங்கோயில் என்றால் தில்லையில் பொற்கோயில். சிதம்பரம் – ஆகாயம், திருவாரூர் – பூமி. இருவரும் விண்ணாகி மண்ணாகி அன்பர்களுக்கு அருளுகின்றார்.  வேதவேள்வியில் விளைந்தவர்கள்: திருமால் செய்த யாகத்தீயிலிருந்து தியாகராஜனது திருமேனி வெளிப்பட்டது என்பது ஒரு ஐதீகம். தில்லையில் பிரம்மன் நிகழ்த்திய வேள்வியிலிருந்து இரத்தின சபாபதி தோன்றியதாக ஐதீகம்.   மந்திர சிறப்பு: ஆனந்த நடராச மூர்த்திக்கு உரிய மந்திரம் திருவைந்தெழுத்து. ஆரூரரின் மந்திரம் அஜபா மந்திரம். இதனை அன்ன மந்திரம் என்பர். திருமூலர் “ஏற்றி இறக்கி  இருகாலும் பூரித்து காற்றைப் பிடிக்கும் கணக்கறியும்” என்ற யோகியருக்கு உரியது   சக்கரங்கள்: தில்லையெம்பெருமானுக்கு சிதம்பர சக்கரம், தியாகேசருக்கு ஹம்ச சக்கரம்.   திருமூலட்டானம்: தில்லையிலும், திருவாரூரிலும் எழுந்தருளி அருள் பாலிக்கும் மூல லிங்க மூர்த்திக்கு திருமூலட்டானேஸ்வரர் என்று திருநாமம். ஆரூரில் திருமூலட்டானத்தில் எழுந்தருளும் புற்றிடங்கொண்ட ஈசர் தான்தோன்றி.   பதஞ்சலியும் வியாக்ரபாதரும் பெற்ற தரிசனம்: இருவரும்  தில்லையில் ஆனந்த தாண்டவ தரிசனத்தையும், திருவாரூரில் பாத தரிசனத்தையும் பெற்றனர்.   முப்பெருந்தேவியர்: திருவாரூரில் கமலாம்பிகை – நீலோத்பலாம்பிகை என்று இரண்டு அம்பாள் தனிக்கோவிலில் அருள் பாலிக்கின்றனர். தில்லையில் சிவகாமி, மூலட்டான நாயகி (உமைய பார்வதி) என்று இரண்டு அம்பாள்கள் தனிக்கோவில்களில் அருள் பாலிக்கின்றனர். ஆரூரில் அம்மானுடன் பிரிதலின்றி உடல் மறைத்து கொண்டி அம்மனும். தில்லையில் கூத்தப்பிரானுடன் சிவகாமவல்லியாகவும் அருள் பாலிக்கின்றாள்.   சிறப்பு பூசைகள்: நித்யப்பிரதோச தலமான திருவாரூரில் சாயரட்சை பூசையின் போது அனைத்து சிவாலயங்களின் கலைகளும் மூலட்டானரிடத்தில் அடங்குகின்றன. அது போல தில்லையில் அர்த்தசாம பூசையின் போது அனைத்து சிவாலயங்களின் கலைகளும் மூலட்டானரிடத்தில் அடங்குகின்றன.  அடியெடுத்துக் கொடுத்தமை:  இருவரும் அடியார்களின் பெருமையைப் புகழ்ந்து பாட அடியெடுத்துக் கொடுத்தவர்கள்.  தியாகேசர் சுந்தரருக்கு திருத்தொண்டர் புகழ் பாட “தில்லை வாழ் அந்தணர்” என்று அடு எடுத்துக் கொடுத்தார். சபா நாயகரோ பெரிய புராணம் பாட “உலகெலாம்” என்று சேக்கிழார் பெருமானுக்கு அடி எடுத்துக் கொடுத்தார்.   திருவாரூரில் தியாகேசர் 364 திருவிளையாடல் புரிந்துள்ளார் அவற்றுள் இரண்டைப் பற்றிக்காணலாம்.                                    29.மாணிக்க  நாச்சியார்   நீலோத்பலாம்பாள் சன்னதியின் மகாமண்டபத்தில் அற்புதமான கண்ணுக்கு விருந்தாக பல வர்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  அவற்றுள் தியாகராஜப்பெருமான் நடத்திய திருவிளையாடல்கள் 364ல் இரண்டு திருவிளையாடல்கள் சித்திரங்களாக இடம் பெற்றுள்ளன எனவே அவற்றை சற்று விரிவாகக் காணலாம். முதலாவதாக மாணிக்க நாச்சியர் சரிதம்.  நாயகனின் பெண்பால் நாச்சி. நாச்சு என்றால் நாட்டியம் எனவே நாச்சியார் என்றால் ஆடல் மகள் என்றோர் பொருளும் உண்டு. தமிழகத்து கணிகையர்கள் தங்கள் பெயருடன் இப்பதத்தை சேர்த்துக் கொண்டனர். இவர்கள் சமயப்பணியில் சரித்திரம் படைத்தவர்கள். அரசவைக்கு அணிகலனாக விளங்கியவர்கள். ஆலய பூசையில் அங்கம் வகித்து ஆண்டவனுக்கே அர்ப்பணிக்கப்பட்டவர்கள். பரமனுக்கு காணிக்கையான பவித்திரமானவர்கள் என்பதால் பரத்தையர் என்றழைக்கப்பட்டார்கள். “கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்” என்று மாணிக்கவாசகர் பாடிய இவர்கள்  கல்வெட்டுகளில் பதியிலார், தளியிலார், தளிச்சேரிப்பெண்டுகள்  என்றெல்லாம் குறிக்கப்பட்டுள்ளனர். பரமனைத் தலைவனாகக் கொண்டவர்கள் என்பதால் பதியிலார். கோயிலை இல்லமாகக் கொண்டவர்கள் என்பதால் தளியிலார்.  கோயிலை ஒட்டிய வளாகத்தில் வாழ்ந்தவர்கள் ஆதலினார் தளிச்சேரி பெண்டுகளாயினர்.  சோழ அரசர்கள் இவர்களில் சிறந்தவர்களை தலைக்கோலி பட்டம் கொடுத்து சிறப்பித்தனர். சிவபாத சேகரன் இராஜராஜ சோழன் தென்திசை மேரு  என உலகமே வியந்து போற்ரும் தஞ்சை பெருங்கோயிலைக் எடுத்த போது அங்கு இயல், இசை, கூத்து என்ற அனைத்துக் கலைகளும் வளர ஆக்கம் அளித்தான். அதை கல்வெட்டிலும் எழுதினான். இப்பெருமகன் 400க்கும் மேற்பட்ட பல்வேறு ஊர்களில் பணிபுரியும் ஆடல் மகளிர்களில் தலை சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து தஞ்சை பெரிய கோயிலில் நடனமாட நியமித்தான் அவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுத்தான் அவர்களுக்கு ஊழியம் செய்ய பணீயாளர்களையும் நியமித்தான். அக்காலத்தில் இவ்வாறு சிறப்புடன் விளங்கினர் ஆடல் மகளிர். இவர்கள் என்றும் விதவையாவதில்லை. இவள் தாலி புனிதமானது. சிவாலயங்களில் இவர்கள் தேவாரத் திருப்பதிகங்களுக்கு அபிநயம் பிடித்து ஆடினர்.  திருவாரூரில் இருந்த பதியிலார் மரபில் மாணிக்க நாச்சியார் பிறந்தார். இவர் வளர வளர, தியாகேசப்பெருமான் மேல் இவர் கொண்ட பக்தியும் வளர்ந்தது. முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்  மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்  பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்  பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்  அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்  அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்  தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே  என்று அப்பர் பெருமான் பாடியது போல இவர் திருவாரூர்ப் பெருமான் மேல் காதலாகி கண்ணீர் மல்கி பிச்சியாகி வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு வித்தியாசமான ஆன்மீக வேட்கை இருந்தது. அது என்னவென்றால் “எம்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க” என்றபடி சிவனடியாரிடமே அற்றைப் பரிசங்கொள்ள விரும்பினார். ஒரு நாள் சிவனடியார் யாரும் வராததால் இவர் காத்துக்கொண்டிருந்தார்.  இவரது மேன்மையை உலகத்தோர்க்கு உணர்த்த திருவுள்ளம் கொண்ட தியாகேசப்பெருமான்  ஒரு நாள்  மாலை ஒரு வயோதிக அடியார் கோலத்தில் மாணிக்க நாச்சியார் இல்லத்திற்கு எழுந்தருளினார். அவரை வரவேற்று தம் குல மரபுப்படி அற்றைப்பரிசம் வேண்டினார். வயோதிகரும் தன்னிடம் வேறு எதுவுமில்லை என்று தாம் அணிந்திருந்த கண்டிகையை கழற்றி நாச்சியாருக்கு அளித்தார்.   நாச்சியாரும் மகிழ்ச்சியுடன் அவரை உபசரிக்க  ஆரம்பித்தார். உணவருந்தும் போது விக்கல் வந்து முதியவராக வந்த இறைவர் இறந்தார் போல வீழ்ந்தார், அவரே எம் கணவராவர் என்று நாச்சியாரும் அவருடன் உடன் கட்டையேறினார். அப்போது கமலவசந்த தியாகேசர் தன்னுரு காட்டி அவருக்கு சிவபதம் அளித்தார். இவரது ஆலயம் இராஜவீதியில் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. தியாகேசர் வயோதிகராக பூமியில் எழுந்தருளி மாணிக்க நாச்சியாருக்கு அருளிய திறத்தைப் பற்றிக் கண்டோம் அடுத்து சோமாசி மாற நாயனாருக்கு எவ்வுருவில் வந்து அருள் பாலித்தார்  என்ற  சரிதத்தைப் பற்றி அடுத்துக் காணலாம் அன்பர்களே.                                                     30.சோமாசி மாற நாயனார் []   “அம்பரான் சோமாசிமாறனுக்கும் அடியேன்” -  என்று வன்தொண்டர் போற்றிய அந்தணர் குலத்தில் அவதரித்து மாறர் என்ற இயற்பெயரைக் கொண்டு திருவம்பர் என்ற திருத்தலத்தில் வாழ்ந்தவர் இந்நாயனார். சிறந்த சிவபக்தர். சிவனடியார்களை பெரிதும் போற்றி வணங்கி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார். அத்துடன் சிவபெருமானை போற்றும் சிவயாகத்தை அவர் விதிமுறை தவறாமல் செய்து வந்தார். இவ்வாறு சோம யாகம் செய்து வந்ததால் சோமயாஜி என்று அழைக்கப்பட்டவர் தமிழில் சோமாசி என்றழைக்கப்படலாயினார்.   இவர் ஒரு சமயம்  தனது மனைவி சுசீலையுடன் சோமயாகம் செய்ய விரும்பினார்! அப்பெருமைமிகு யாகத்தில் ‘அவிர்பாகம்' பெற, திருவாரூர் தியாகேசப் பெருமானையே அழைக்க விரும்பியது நாயனாரின் உள்ளம்! அப்பரமனையே "அவிர்பாகம்' பெற அழைப்பது அவ்வளவு எளிதானதா என்ன? "யாரை அணுகினால் இது சாத்தியமாகும்?' என எண்ணினார்! உடன் அவர் மனத்திரை முன் வந்து நின்றார், அவரது  குரு நாதராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள்! அவர்தான் தம்பிரான் தோழனாயிற்றே! உடன் திருவாரூருக்குப் புறப்பட்டார்! சுந்தரர் தீராத கபம், நெஞ்சு சளியினால் அவதிப்பட்டு வந்தார் அதை அறிந்த சோமாசிமாற நாயனார் தினமும் தூதுவளை பூ, காய், கீரையினை அவரது இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.  சுந்தரரின் மனைவி பரவையாரும் அதனைச் சமைத்து இட சுந்தரர் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். அதை உண்டதால் நாள்பட்ட அவரது கபம் தீர்ந்து நிவாரணம் கிடைக்கப் பெற்றார். இப்பேருதவியைச் செய்த மாறனாருக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக சுந்தரர் ஏதாவது செய்ய விழைந்தார். ஒரு நாள் சுந்தரரை சந்தித்த சமயத்தில் தான் செய்யவிருக்கும் யாகத்தில் தியாகேசர் நேரில் கலந்து கொண்டு "அவிர்பாகம்' பெற வேண்டுமென்ற தனது வேட்கையை அவரிடம் தெரிவித்தார் சோமாசி மாறர்! அவ்வேண்டுகோள், சுந்தரர் வாயிலாக தியாகேசருக்கு எட்டியது! சுந்தரர் மூலமாக தியாகேசரைப் பணிந்த சோமாசியாருக்கு அசரீரி வாக்காக "நான் அந்த யாகத்தில் கலந்து கொள்கிறேன். ஆனால் எப்போது, எப்படி, எந்த உருவத்தில் வருவேன் என்பதைத் தெரிவிக்க மாட்டேன். என்னை கண்டு அச்சப்படவோ, அருவருப்படையவோ வேண்டாம்'' என்று கூறியருளினார். சோமாசியாருக்கு பெரு மகிழ்ச்சி! எவ்வுருவில் வந்தால் என்ன? இறைவன் வருவதே பெரும் பாக்கியம்தானே!! வைகாசி மாதம், ஆயில்ய நட்சத்திரம் கூடிய நன்னாளில், திருவம்பரில்  "அச்சம் தீர்த்த கணபதி” ஆலயம் எதிரே யாகசாலை அமைக்கப்பட்டு, யாக பூஜை இனிதே தொடங்கியது! வேத விற்பன்னர்களின் வேத கோஷங்களோடு தொடங்கிய யாகத்தில் அப்பொழுது அவிர்பாகம் தர வேண்டிய நேரம்! இறைவன் வரவில்லை! ஆனால் அதற்கு மாறாய் சற்று தூரத்தில் ஒரு வினோதக் கூட்டம்! யாகத்துக்குப் பொருந்தாத அக்கூட்டத்தினரைக் கண்ட வேதியர்கள், நாலாபுறமும் பறந்தோடினர்! சோமாசியாரோ யாகத்திற்கு பங்கம் விளைந்துவிடுமோ என அஞ்சினார்!. அவர்கள் கண்ட காட்சி தலைபாகை கட்டிய ஆஜானுபாகுவான ஓர் ஆண்மகன் சண்டாள ரூபத்தில் தோளில் இறந்த கன்றுக்குட்டியை சுமந்து கொண்டு  முன்னே வர, அவனது மனைவி கள்  குடம் சுமந்தபடி பின்னே வர, இரண்டு சிறு பாலகர்கள் உடன் வந்தனர், அவர்கள் தோற்றத்தைப் பார்த்தவர்கள் பதைத்தனர்! மாறரோ ஒரு கணம் கண்மூடி கணபதியை தியானித்தார்! அச்சம் தீர்த்த கணபதியின் திருவருளால் உண்மை உணர்ந்தார்!  ஸ்தாணுவும், ஈசனும், ஜகத்பிரபுவும், சூலபாணியும், உலக நாயகனும், பூதநாதனும், கபாலமாலிகாபரணும், கட்வாங்கதாரியும், ஜகந்நாதனும், பிறைசூடியும், சர்வாரணபூஷிதனும், உமாநாதனும், ஞானிகளின் உள்ளத்தில் உறைபவனும், அகங்காரமற்றவர்கள் உள்ளத்தில் உறைபவனுமாகிய தியாகேசரே இவ்வேடத்தில் வந்திருக்கிறார் என்று அவருக்குப் புரிந்தது! அடுத்த கணம் ஓடிச் சென்று அவர்கள் திருமுன் விழுந்து, அவர்களை வணங்கி வலம் வந்தார் நாயனார். பேரொளிப் பிரவாகமாக ரிஷபத்தின் மீது தேவியுடன் அத்தருணத்தில் எழுந்தருளி, அற்புத தரிசனம் தந்து, அவிர்பாகத்தினைப் பெற்று, அருள் புரிந்து மறைந்தார் ஆரூர் அண்ணல்!! சோமயாஜி மாற நாயனார் நடத்திய புனிதமான சோமயாகம் நடந்தது "கோயில் திருமாளம்' என்று அழைக்கப்படும் திருத்தலத்தில், அம்பர் மாகாளத்திற்கும் அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் சாலையோரத்தில் உள்ள ஒரு மண்டபம் ஆகும். அவ்விடத்தை இன்று "பண்டார வாடை திருமாளம்' என்று அழைக்கின்றனர். தியாகேசப் பெருமான், பார்வதி மற்றும் விநாயகர் மற்றும் முருகர் தங்கள் திருவடி தோய நடந்த   அம்பர்மாகாள தலத்தின் சிறப்புகளைப் பற்றிக் காணலாம்.                                      31.அம்பர் மாகாளம்   ஒரு மனிதனுடைய ஆயுளை நீடிக்கக் கூடிய தலங்கள் உலகத்தில் மூன்று. அதில் முதலாவது உஜ்ஜயினி மாகாளம், இரண்டாவது கோயில் தொண்டை மண்டலத்தின்  இரும்பை மாகாளம், மூன்றாவது காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் இவற்றை அவசியம் தங்கள் வாழ்நாள்களில் பக்தர்கள் சென்று தரிசிக்க வேண்டும் என்று தல புராணங்கள் தெரிவிக்கின்றன. பொன்னி நதி பாய்ந்து வரும் சோழ தேசத்தில், எண்ணற்ற திருத்தலங்கள், புகழ் பல கொண்டு மகோன்னத மகிமைகளோடு திகழ்கின்றன. அவ்வகையில் ஓர் சிறப்புத் தலமாய் அமைந்துள்ளது, "அம்பர் மாகாளம்' என்றழைக்கப்பட்டு, தற்போது "கோவில் திருமாளம்' எனத் திரிந்துள்ள ஊராகும். காவிரி தென்கரையில் திருப்பதிகம் பெற்ற தலங்களில் 55வது தலம்.  அடையார்புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து மடையார் புனல் அம்பர் மாகாளம் மேய விடையார் கொடி எந்தை வெள்ளைப் பிறைசூடும் சடையான் கழல் ஏத்தச் சாரா வினைதானே என்று  இத்தலத்தை திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களால் பாடியுள்ளார். இத்தலத்தில் ஐயன் மஹாகாளநாதராகவும் அம்பிகை ராஜமாதங்கி எனும் பயக்ஷ அம்பிகையாகவும் திருவருள் புரிகின்றனர். ஐயனை காளகண்டேஸ்வரர் என்றும் அழைத்து மகிழ்கின்றனர் பக்தர்கள். இத்தல இறைவனை மஹாகாள முனிவர், காளிதேவி, வாசுகி மாநாகம், மதங்க முனிவர், உதங்க முனிவர், மன்மதன், மகுடவர்தன மஹாராஜா, மருத மன்னன், சோமாசி மாற நாயனார், விமலன் என்கிற அந்தணன் ஆகியோர் வழிபட்டுப் பெரும் பேறுகளைப் பெற்றுள்ளனர். புராண காலத்தில் இத்தலத்தில் அம்பன், அம்பராசுரன் என்ற இரண்டு அசுர குமாரர்கள் இருந்தனர். அவர்கள் நல்லோரைத் துன்புறுத்துவதில் அளவற்ற இன்பம் கண்டு வந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பரமனை வணங்கி, தங்கள் பரிதாப நிலையைக் கூறினர். அந்நிலையில், அம்பிகையின் திருவருட் திறத்தால், அம்பராசுரனையே அம்பன் கொன்றுவிட்டான். பின்னர் மாகாள நாதர் தனது தேவியை நோக்க, குறிப்பறிந்த பார்வதி, காளியாக மாறி "அசுர சம்ஹாரம்' செய்தாள். இறப்பதற்கு முன் காளி தேவியின் கோர ரூபம் கண்டு பயந்த அம்பன், எருமைக் கிடாவாக உருமாறினானாம்! அவ்வாறு அவன் மாறிய இடம், "கிடா மங்கலம்' என்று இன்றழைக்கப்படுகிறது. எருமைக் கிடாவாக மாறிய அவனை விரட்டிச் சென்ற காளி, "அம்பகரத்தூரில்' அவனைக் கொன்று அழித்ததாகத் தல புராணம் கூறுகின்றது. இன்றும் ஈசனது கட்டளைப்படி சிவராத்திரி நான்கு காலங்களிலும் முறையே அம்பர் மாகாளம், அம்பர், இளையாத்தங்குடி, திருச்சாத்தமங்கை ஆகிய தலங்களில் சிவனை காளியன்னை வழிபடுவதாக ஐதீகம். அம்பகரத்தூர் காளியை வழிபட்ட பின் கோவில் திருமாளத்திற்கு வந்து, காளி உருவாக்கிய லிங்கத்தை வழிபடுவதும், பின் மூலவரை தரிசிப்பதும் தொன்று தொட்டு வரும் மரபாகும். அம்பன், அம்பாசுரன் போன்ற அசுரர்களை வதைத்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் தீர காளி வழிபட்டதால் "மாகாளம்' என்று இத்தலத்திற்கு  பெயர்.  மேலும் நாககன்னிகை வழிபட்டு அருள்பெற்ற தலம். மதங்க முனிவர் வழிபட்டு உமையம்மையை தன் மகளாகப் பெற்ற புராண சிறப்புடைய தலம்.  மதங்க முனிவர் இத்தலத்தில் தங்கி, இறைவனை வணங்கி, தனக்கு புத்திர பாக்கியம் வேண்டினார்! அதன்படி ஈசனருளால் ஓர் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு "ராஜ மாதங்கி' எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார். அப்பெண்ணும் வளர்ந்து பருவமடைந்தாள்! பார்வதி தேவியே தனக்கு மகளாகப் பிறந்ததை அந்நிலையில் உணர்ந்த முனிவர், பரவசப்பட்டார். மதங்கரின் பிரார்த்தனையை ஏற்று, இத்தலத்தில் ஈசனை மணந்து, திருமணக் கோலத்திலே அருள் பாலிக்கின்றாள் இராஜ மாதங்கி. மணக்கோலத்தில் இங்கே வீற்றிருந்த வேளையில் தேவியானவள் பரமேஸ்வரனிடம் கேட்ட வரத்தின்படி, திருமணத் தடையுள்ளவர்கள் இங்கு வந்து இரு சிவப்பு அரளி மாலைகளை இத்தல ஈசனுக்கும் அம்பிகைக்கும் அணிவித்து, அதில் ஒரு மாலையை பிரசாதமாகப் பெற்று தம் கழுத்தில் அணிந்து கொண்டால் உடனே அவர்களுக்கு திருமண வரம் கிட்டுகிறது. மதங்கரிஷி இங்கு தவம் செய்து அம்பிகையையே மகளாகப் பெற்றார். அந்த ராஜமாதங்கியே பயக்ஷ அம்பிகையாகவும் திருவருள் புரிகின்றனர்.  மிருகசீரிஷ நட்சத்திரத்தின் மரமான கருங்காலி மரம் இத்தலத்தின் தலமரமாகவும் மாகாள வாவி எனும் தீர்த்தம் தல தீர்த்தமாகவும் இங்கே திகழ்கின்றன.  கோயில் திருமாளத்தில் அம்பிகை மிகவும் சாந்நித்யம் கொண்டு விளங்குகின்றாள். அம்பாள் காதில் பக்தர்களுடைய குறையை சிவாச்சாரியார் தெரிவித்து அர்ச்சனை செய்விக்கும் ஓர் அதிசய வழக்கம் இவ்வாலயத்தில் உள்ளது. இவ்வழிபாட்டில் கோரிக்கைகள் நிறைவேறுவதை பக்தர்கள் அனுபவப் பூர்வமாக கூறுகின்றனர். இந்த அம்பிகை. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் இத்தல பயக்ஷயாம்பிகைக்கு சிறப்பு வழிபாடுகள், மூலமந்திர ஜபம், வேத பாராயணம், யாகங்கள் போன்றவை வெகு விமரிசையாக நடைபெறுகின்றன அஷ்ட மாநாகங்களில் ஒன்றான வாசுகி நாகம், தனக்கு ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷத்தை நீக்கிட, பல தலங்களுக்கும் சென்று வழிபட்டது! இருப்பினும் பலனில்லை! இறுதியில் பரமனின் திருவருளால் இந்த மாகாளம் வந்து, சர்வேஸ்வரனை வணங்கிட உரிய பலன் கிட்டியது! எனவே இராகு பரிகாரத்திற்கும், நாக தோஷ நிவர்த்திக்கும், புத்திர தோஷத்திற்கும், திருமணத்தடை உள்ளவர்களுக்கும்  உகந்த தலமாகிறது, அம்பர் மாகாளம்! வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வாசுகிக்கு பால் அபிஷேகம் செய்து பலன் பெறுகின்றனர் பக்தர்கள். விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்க தேவமாதர்கள் துணையுடன் மன்மதன் சென்று அவர் மேல் காம பாணங்களைத் தொடுத்து அவரால் சாபம் பெற்றான். பின் மன்மதன் இத்தலம் வந்து மஹாகாளநாதரை வணங்கி தன் சாபம் நீங்கப்பெற்றதால் இத்தலம் மாரபுரி என்றும் அழைக்கப்படுகின்றது. புலத்தியர் மரபில் வந்த சம்சாரசீலன் என்பவனிடம் தேவேந்திரன் தோற்று இத்தல இறைவனிடம் சரணடைய, சுவாமி பைரவ கோலம் கொண்டு சம்சாரசீலனைக் கொன்று இந்திரனை மீண்டும் அமராவதிக்கு அரசனாக்கினார். எனவே இத்தலத்திற்கு இந்திரபுரி என்று பெயர் ஏற்பட்டது சட்டைநாதருக்கு தனி சன்னதி உள்ளது.   வருடா வருடம் வைகாசி ஆயில்யத்தன்று  தியாகேசப்பெருமான் சோமாசி மாற நாயனாரின் யாகத்திற்கு எழுந்தருளிய திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  தியாகராஜப் பெருமான் அவ்வமயம் திருவாரூர் விடுத்து அம்பர் மாகாளத்திற்கு எழுந்தருளுவதால், அன்று திருவாரூர் தியாகேசர் சந்நிதியில் உச்சிகால பூஜை கிடையாது என்பது இன்று வரையிலும் கடைபிடிக்கப்படும் மரபு. இவ்விழாவினைக் காண வருவோர் பருகிட நீர் மோரும், பானகமும் பொது மக்கள் அளிக்கின்றனர். தெருவெங்கும் மாக்கோலம் போடப்பட்டு, விழாக் கோலம் காண்கிறது அம்பர் மாகாளம் மதியம் 12.00 மணியளவில் ஆயில்ய நட்சத்திர நேரத்தில் தியாகராஜப் பெருமான் உற்சவ மூர்த்தி நீச வேட அலங்காரத்துடனும் தோளில் இறந்த கன்றுக் குட்டியை தாங்கிய வண்ணமும், நீலோத்பலாம்பிகை நீசப்பெண் வடிவத்தில் தலையில் மதுக்குடம் தாங்கியும் யாக சாலைக்கு எழுந்தருளி அவிர்பாகம் பெறும் நிகழ்ச்சியும்,  சோமாசிமாற நாயனாருக்கு எம்பெருமான் உமாதேவியருடன் ரிஷபாரூடராய் காட்சியளித்தலும் நடைபெறும். அன்று ஆலயத்தில் சோமயாஜி நாயனார் குரு பூஜையும் நடைபெறுகின்றது. சோமயாகத்தின் மறுதினம் மகநட்சத்திரத்தின் உதயகாலத்தில் மதங்கன், உதங்கன், மகுடவர்த்தன மகாராஜா, அதிகார நந்தி போன்றோர்க்கு ஈசன் மோட்சம் அளித்த வரலாறு விழாவாக நடத்தப்படுகிறது. ஆலயம் ஒரு கட்டு மலை மேல் அமைந்துள்ளது. கோச்செங்கணான் அமைத்த மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று.  அரசலாற்றின் வட கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அற்புதமாய் நிமிர்ந்து நிற்கிறது. அதோடு நாற்புறமும் ஓங்கி நிற்கும் திருமதில்கள். உள்ளே இரண்டு பிராகார அமைப்புகள். இவற்றில் வெளிப்பிராகாரம் மிகவும் விசாலமானது. கோயில் வாயில் உள் சென்றால் நேராக நந்தி, பலிபீடம் மற்றும் கணபதி காட்சி தருகிறார், விலாசமான முற்றம், வடகிழக்கு மூலையில் கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. அடுத்து அதிகார நந்தி கோபுரம் என்றழைக்கப்படும் இரண்டாம் ராஜகோபுரம் மூன்று மாடங்கள் கொண்டு அகலவாட்டில் உள்ளது. இங்கேயும் "துவார கணபதி' வீற்றுள்ளார். அக்கோபுரத்தினுள் சென்றால் இடப்புறம் சூரியனும், கிழக்குத் திருமாளிகைப் பத்தியில் தனி சனீஸ்வரர், காசி விஸ்வநாதர் மற்றும் தண்டபாணி சுவாமியும் சந்நிதி கொண்டுள்ளனர். அதையொட்டி தெற்கு முகமாக உள்ள மண்டபத்துள் சிவகாமியுடன் அருட்காட்சி தருகின்றார் ஸ்ரீ நடராஜ மூர்த்தி. பின் சபா மண்டபம், மகா மண்டபம், இடை மண்டபம், அர்த்த மண்டபம், மூலஸ்தானம் ஆகிய அமைப்பிலான பெரும் சுவாமி சந்நிதி உள்ளது. சபா மண்டபத்தின் இடப்புறம் நீலோற்பலாம்பாளுடன் கூடிய தியாகராஜர், யாக சாலைக்கு வந்த, நின்ற கோலத்தில் தனி சந்நிதி கொண்டு அருள்புரிகின்றார். இவரும் தினமும் முக தரிசனம் மட்டுமே தந்தருளுகின்றார். வைகாசி ஆயில்யத்தன்று மட்டுமே பாத தரிசனம் கிட்டுகின்றது.  உடன் ஆதி நரமுக குழந்தை கணபதியும், குழந்தை முருகனும் உள்ளனர். அடுத்ததாக மகா மண்டபம். இங்கே உற்சவ விக்ரஹங்களின் அணிவகுப்பு! சோமாசி மாறர், அவரது துணைவியார், சுந்தரர், பரவையார், சோமாஸ்கந்தர், தனி அம்பாள், காளிதேவி மற்றும் மதங்க முனிவர் ஆகியோரது சிலா வடிவங்கள் உள்ளன. பின் இடை மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை,  கருவறையுள் கருணை நாயகனாய், சிறிய லிங்கத் திருவுருவில் பேரருள் புரிந்து, அருமையாக நமக்கு தரிசனமளிக்கின்றார் ஸ்ரீ மாகாளநாதர். (ஐந்து மாகாளத் தலங்களில் இதுவும் ஒன்று). இவரை வணங்கி, ஆலய வலம் வருகையில் உட்பிராகாரத்தின் தொடக்கத்தில் சுதை வடிவிலான பத்ரகாளியினை தரிசிக்கின்றோம். அடுத்ததாக சோமாசி மாறர், தன் மனைவி சுசீலையுடன் கற்சிற்பமாக நற்காட்சி தருகின்றார். பின்னர், அறுபத்து மூவர் தரிசனம். தொடர்ந்து நாகர்கள், பிரம்மா, நால்வர், அகத்திய லிங்கம் மற்றும் யோக சுப்ரமணியர் போன்ற சிலாரூபங்கள் அணி செய்கின்றன. தென்மேற்கில் கிழக்கு பார்த்தபடி தல கணபதி சந்நிதி கொண்டுள்ளார். உற்சவர் மனிதமுகத்துடன் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில், வாசுகி நாக தேவதையின் தனி சந்நிதியுள்ளது. இங்கே இச்சிலை மீது 9 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சட்டை உரித்ததை அடையாளமாகப் பாதுகாத்து வைத்துள்ளனர். வெளி பிராகாரத்தில் நந்தி மண்டபம் அருகே மருதமன்னன் பூஜித்த லிங்கம் தனி சந்நிதியில் உள்ளது! தென் திசையில் "மோக்ஷ லிங்க” சந்நிதி, மேற்கு முகமாக அமைந்துள்ளது. இங்கே காளிதேவியின் தனி சந்நிதி. இதில் கற்சிலையாக அம்பிகை அற்புத தரிசனமளிக்கின்றாள். மிக பிரம்மாண்டமான இவ்வாலயத்தின் வலப்புறம், அம்பாளின் தனிக் கோயில் அழகே அமையப் பெற்றுள்ளது. வெளிப்புற மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைப்பிலான அம்பாள் சந்நிதி ஆகியன ஒரே பிராகாரத்துடன் விளங்குகின்றன. "ராஜ மாதங்கி' என்று போற்றப்படும் இந்த அன்னைக்கு, "அச்சம் தீர்த்த நாயகி” என்ற அழகிய தமிழ்ப் பெயரும் உண்டு. முதலாம் குலோத்துங்கச் சோழனால் கற்றளியாக்கப்பட்டது இவ்வாலயம். சோழர் காலக் கல்வெட்டுகள் பல ஆலயத்தில் உள்ளன. இத்தலத்தின் விருட்சமாகத் திகழும் கருங்காலி, மிருகசீர்ஷ நட்சத்திரம் மற்றும் விருச்சிக ராசிக்கு உகந்த மரமாகும். சங்க காலத்தில் "மாரோடம்' என்றழைக்கப்பட்ட, தோல் நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்ட இம்மரம், செவ்வாய் தோஷத்தையும் போக்கவல்லது. தல தீர்த்தமாக ஆலயத்தின் எதிரே "மாகாள வாவி' விளங்குகிறது. காசியில் பிறந்த விமலன் எனும் அந்தணர் இத்தல தீர்த்தத்தில் நீராடி மழலை வரம் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூர் - மயிலாடுதுறை பேருந்து மார்க்கத்தில் பூந்தோட்டத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் நன்னிலம் வட்டத்தில் உள்ளது இத்தலம். கும்பகோணம் - பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் பேருந்து தடத்தில் கோயில் திருமாளத்தில் இறங்க வேண்டும். இது வரை சோமாசி மாற நாயனாருக்காக தியாகேசர் ஆடிய நாடகத்தையும், அம்பர் மாகாளத்தின் சிறப்புகளையும் பற்றிக் கண்டோம். வாருங்கள்  இனி எம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் சிறப்பைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.  32. ஆருரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே   []   திருவாரூரின் பெருமைகளைப் பற்றிக் கூறும் போது எம்பிரான் தோழர், வன்தொண்டர் சுந்தரரைப் பற்றிக் கூறாமல் முழுமையடையாது. இதோ அவர் வரலாறு, ஒரு நாள் திருக்கயிலையில் எம்பெருமான் கண்ணாடியில் தன் திருமேனி நிழலைக் கண்டு “சுந்தரா, வருக என்றழைக்க அந்நிழல், உருவம் பெற்று வந்தது. அவரே ஆலால சுந்தரர்.  இவர் எம்பெருமானுக்கு மலர் கொய்து மாலை தொடுக்கும், திருநீற்றுக்கிண்ணம் ஏந்தும் அணுக்கத் தொண்டராக பணி புரிந்தார். நம்பியாரூரன் என்னும் சுந்தரரின் வரலாற்றை பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் இவ்வாறு கூறுகின்றார். ஒரு சமயம் கயிலை மலையில் பல்லாயிரம் முனிவர்கள் சூழ உபமன்யு முனிவர் அமர்ந்திருந்தார். அப்போது தென்திசையிலிருந்து சுடர் ஒன்று வரக்கண்டு அவர் எழுந்து நின்று வணங்கினார். ’பரமனைத் தவிர வேறு யாரையும் வணங்காத தாங்கள் இச்சோதியை வணங்கக் காரணம் யாது’? என்று முனிவர்கள் வினவ, அவர் ’நம்பியாரூரன் நாம் தொழும் தன்மையான்’ என்று போற்றி அவர்களுக்கு சுந்தரரின் வரலாற்றைக் கூறுகிறார். திருக்கயிலையில் எம்பெருமானுக்கு மலர்த்தொண்டு செய்து வந்த ஆலால சுந்தரர் ஒரு நாள், நந்தவனத்தில் உமையம்மைக்கு மலர் கொய்யும் கமலினி, அநிந்திதை என்கிற  மதிமுக மங்கையரைக் கண்டு மையலுற்றார். எனவே சிவபெருமான் ”மண்ணுலகில் பிறந்து காதலின்பம் கலந்து பின் வருக” என்று அருளினார். அதற்கு சுந்தரர் பெருமானே  “உலகியலில் அடியேன் மயங்கும் போது தடுத்தாளக் கொள்ள வேண்டும்“ என்று வேண்டுகிறார். பெம்மானும் அவ்வண்ணமே அருளினார். திருமுனைப்பாடி நாட்டில் நாவலூர் என்னும் தலத்தில், சடையனாருக்கும், இசைஞானியாருக்கும் திருமகவாகத் தோன்றினார். பெற்றோர் இவருக்கு நம்பியாரூரன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். ஒரு நாள் சுந்தரர் வீதியில் மணித்தேர் உருட்டி விளையாடும் போது இவரைக் கண்டு மயங்கிய அந்நாட்டு அரசர் நரசிங்க முனையர் அவரை அரண்மணைக்கு அழைத்துச் சென்று தனது மகனாக வளர்த்தார். இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.  சுந்தரர் மணப்பருவம் எய்தினார். புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாரின் பெண்ணை திருமணம் பேசத் தொடங்குகின்றனர். திருமணத்திற்கு முதல் நாள் காப்பணிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் காலையில் ஒரு கிழ வேதியர் வடிவில் சுந்தரரை ஆட்கொள்ள வந்த இறைவர் ஆரூரரை நோக்கி உமக்கும் எமக்கும் பெரு வழக்குள்ளது அதை தீர்த்த பின் நீர் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். மேலும் நாவலூரனாகிய நீ  எனக்கு வழி வழி அடிமை என்றார் அம்முதியவர்.  எங்காவது ஒரு வேதியர் மற்றோர் வேதியருக்கு அடிமையாவது உண்டோ? நீர் என்ன பித்தரோ என்றார் நம்பியாரூரர். முதியவர் உமது பாட்டனார் எழுதிக் கொடுத்த அடிமை சாசன ஓலை என்னிடம் உள்ளது என்று காட்டினார். அவ்வோலையை பார்க்க வாங்கிய ஆருரர் ஓலையை கிழித்தெறிந்தார். முதியவர் சிரித்து நீ கிழித்தெறிந்தது படி ஓலைதான், மூல ஓலை திருவெண்ணெய் நல்லூரில் உள்ளது, அங்கு சென்று வழக்குரைப்போம் என்று அவர்களை அழைத்துச் சென்றார். அங்கு அவையோர் முன்னிலையில் “திருநாவலூரில் வாழும் அருமறை வல்ல ஆதி சைவனாகிய ஆரூரன் எழுதியது; வெண்ணெய் நல்லூரில் வாழும் முனிவர் பெருமானாகிய பித்தனுக்கு யானும் என் குடும்பத்தில் வழிமுறை வழிமுறையாக இனி வருபவர்களும் அடித்தொண்டு செய்வதற்கு இதுவே ஆவண ஓலையாகும், இருத்திறத்தேமும் உள்ளம் ஒத்த நிலையில் இதனை எழுதிக்கொடுத்தேன். இதற்கு இவை என் கையெழுத்து” என்று எழுதப்பட்ட ஒலையைக் காட்டினார். அவையோரும் கையெழுத்தை சரி பார்த்து இவ்வாறு தீர்ப்பு வழங்கினர்.  நம்பியாரூரரே! நீர் வழக்கில் தோல்வி அடைந்து விட்டீர் இனி முறைப்படி இம்முதியவருக்கு அடிமை செய்தலே உமது கடமையாகும் என்றனர். வழக்கில் வென்ற முதியவரிடம் அவையோர் நீவிர் திருவெண்ணெய் நல்லூரர் என்றால் தமது இல்லம் எதுவென்று வினவ, தியாகராஜரான எம்பெருமான் அனைவரையும் திருவருட்துறை என்னும் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து மறைந்தார். முதியவரை காணாது கூவிய ஆருரன் முன் விடை வாகனத்தில் உமையம்மையுடன் தரிசனம் தந்த சிவபெருமான் முன்னர் வேண்டியபடி “யாமே வந்து உம்மை தடுத்தாட்கொண்டோம்”  என்று திருவாய் மலர்ந்தருளினார். தம்மை ஆட்கொண்ட கருணைக் கடலை ஆருரர் மனம் நெகிழ்ந்து வணங்கி நின்றார். இறைவன் அவரை நோக்கி எம்மை வன்மையான சொற்களால் பேசியதால் நீவிர் வன்தொண்டார்  ஆவீர். நமக்கு அன்பினாற் செய்யத்தக்க சிறந்த வழிபாட்டிற்குரிய மந்திரம் சுவை மிகுந்த திருப்பாட்டேயாகும், ஆதலால் இவ்வுலகில் தம்மை செந்தமிழால் பாடிப் பரவுமாறு பணித்தார். ஆரூரரும், அடி நாயேன் தம்முடன் வழக்குரைத்த நாம் எவ்வாறு பாடுவது என்று முறையிட நீவிர் எம்மை அழைத்த பித்தா என்றே தொடங்கிப்   பாடுக என்று அருளினார். சுந்தரரும் “பித்தா பிறைசூடி பெருமானே”   என்று தொடங்கிப் பாடினார். இவ்வரலாற்றை   சுந்தரை இன்னொரு பாடலில் இவ்வாறு கூறுகின்றார்.    . .    கற்பகத்தினை கனக மால் வரையைக் காமகோபனை கண்ணுதலானை சொற்பதப்பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில் அற்புதப் பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆளது கொண்ட  நற்பதத்தினை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே - இவ்வாறு சம்பந்தரை பாலைக் கொண்டும், அப்பரை சூலை கொண்டும் ஆண்டு கொண்டருளிய சிவபெருமான் சுந்தரரை ஓலை கொண்டு ஆண்டருளினார். மாணிக்க வாசகரை குருவாக வந்து காலைக் காட்டி ஆண்டு கொண்டார்.   பிறகு ஆரூரர் தமது ஊரான திருநாவலூர் வந்து இறைவனைப் பாடினார், திருவதிகையில் சிவபெருமான் தமது திருவடி தீட்சை தந்தருளினார். தில்லை வந்து ஆனந்தக்கூத்தனை தரிசனம் செய்து பின்னர் சீகாழி சென்று இறைவனின் தரிசனம் பெற்று காவிரிக் கரையின் பல தலங்களை தரிசித்து திருவாரூர் சென்று அடையும் போது, இறைவன் அங்கிருந்த அடியார் முன்னர் தோன்றி “நம் ஆரூரனாகிய வன்றொண்டன் நாம் அழைக்க இங்கு வருகின்றான். நீங்கள் மகிழ்ந்து அவனை எதிர்கொண்டு அழைப்பீராக” என்று அருள் செய்து மறைந்தருளினார். அடியார்களும் ஆரூரை அலங்கரித்து சுந்தரரை எதிர் கொண்டழைத்தனர். ஆரூரரும் எந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள பெருஞ்சிறப்புடைய பதியும் இத்திருவாரூரே, இங்கெழுந்தருளியுள்ள  இறைவர் எளியேனையும் ஆண்டு கொள்ள வல்லரோ என்று அன்புகூர்ந்து அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்று பொருள் படும்படி “ஆரூர் ஈசன் எமை ஆள்வரோ கேளீர்” என்று  பதிகம் பாடிக்கொண்டே ஆலய வாயிலை அணுகினார். அப்போது மூலட்டாத்தனத்திலிருந்து யாவரும் கேட்கும் படியாக “நம்பியாரூரனே தோழமையாக உமக்கு நம்மை தந்தோம். நீ எம்மால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற நாளில்   நீ கொண்ட கல்யாணக் கோலத்தையே எப்போதும் மேற்கொண்டு இந்நிலவுலகில் இன்புற்று வாழ்வாயாக” என்றொரு அருள் வாக்கு வானில் தோன்றியது. அவரும் வீதிவிடங்கப் பெருமானை வணங்கினார். திருமணக் கோலப் பெருமாள் என்றும் தம்பிரான் தோழர் என்றும் போற்றப்பட்டு பூங்கோவிலமர்ந்த பெருமானை வழிபட்டு வரலானார். திருக்கயிலையில் உமையம்மையின் சேடிகளில் ஒருவரான கமலினியார் பூவுலகில் திருவாரூரில் கணிகையர் குலத்தில் பிறந்து, பரவை என்ற திருப்பெயருடன் வளர்ந்து திருவாரூரர்க்கு சேவை செய்து வரும் காலத்தில் சுந்தரரை ஆலயத்தில்  கண்டு காதல் கொண்டார். அவர் யார் என்று தம் பாங்கியரிடம் வினவ அவளும், மாலும் அயனுங் காணுதற்கரிய சிவபெருமானே இவ்வுலகில் மறையவராகி வந்து வலிய ஆட்கொள்ளப்பட்ட நம்பியாரூரர் என்று பகர்ந்தாள். சுந்தரரும் பரவையாரின் பேரழகில் ஈடுபட்டு அயலே நின்றவர்களிடம் என் மனம் கவர்ந்த மயிலியலாகிய இவள் யார்? என்று வினவ, அவர்கள் அவர் நங்கை பரவையார் வானோர்க்குந் தொடர்வரிய தூய்மையுடையார் என்று பகன்றனர். தம்பிரான் தோழரும் தன்னை ஆட்கொண்ட வள்ளலை அடைந்து பரவையாரை தனக்கு வாழ்க்கைத் துணையாகத்   தந்தருளும்படி வேண்டினார். இரவில் இறைவன் சிவனடியார் முன் தோன்றி பரவையாரை சுந்தரருக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு அருளினார். சுந்தரர் முன்பு தோன்றி, நங்கை பரவையை உனக்கு வாழ்க்கைத் துணையாகத் தந்தோம். இன்ன வகையே நம்முடைய அடியார்களும் அறிந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளோம், என்றருளிச் செய்து பரவையார் முன் தோன்றி உனக்கும் நம்பியாரூரனுக்கும் நாளை திருமணம் நிகழும் என்று கூறி மறைந்தருளினார். மறு நாள் இறைவன் பணித்த வண்ணம் அடியார்கள் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரருக்கும் பரவையாரை திருமணஞ்செய்து கொடுத்தனர்.  இதை சுந்தரர் ஏழிசையா யிசைப்பயனா யின்னமுதா யென்னுடைய தோழனுமாய் யான் செய்யுந் துரிசுக்களுக் குடனாகி மாழையொன் கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாருயிர் இறைவனையே என்று பாடியுள்ளார். இவ்வாறு நம்பியாரூரர் பரவையாருடன் கூடி இறைவனை வழிபட்டு வரும்  நாட்களில், ஒரு நாள் புற்றிடங்கொண்டாரை வணங்கச் செல்லும் போது தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியார்களை வணங்காமல் சென்றார். அதனால் சினமுற்ற விறன்மின்டர் என்ற அடியார், சிவனடியார் திருக்கூட்டமானது, தன்னை பேணாது செல்லும் நம்பியாரூரனுக்கும் புறம்பு, அவனுக்கு பிரானாகிய சிவபெருமானுக்கும் புறம்பு என்று வெகுண்டுரைத்தார்.   சுந்தரர் முன் இறைவன் தோன்றி அடியார்களின் திருத்தொண்டின் திறத்தை அவருக்கு   அறிவுறுத்தியருளி, நம்முடைய அடியார்களை முறைப்படி வணங்கி அவர்களது திருத்தொண்டின் திறத்தை விரித்துரைக்கும் திருப்பதிக சொன்மாலை பாடிப் போற்றுவாயாக என்று பணித்தருளினார். நம்பியாரூரரும் அடியார் திறத்தினை அடியேனுக்கு உணர்த்தி அருள வேண்டும் இறைஞ்ச எம்பெருமானும், தில்லை வாழ் அந்தணர் அடியார்க்கும் அடியேன் என்று அடி எடுத்துக் கொடுத்து மறைந்தார்.    இறைவனால் அடியெடுத்துக் கொடுக்கப்பெற்ற நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருக்கும் அடியார்களை அடி வீழ்ந்து வணங்கி அவ்வடியார்களின் திருப்பெயர்களை முதலில் எடுத்தோதி, அவர்கள் எல்லோருக்கும் தனித்தனியே தான் அடியேன்  என்று பணி மொழி பகர்ந்து தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்து குயவனார்க்கும் அடியேன் இலையே யென்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாற னடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் கொன்றையார் விறன்மிண்டர்க்கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே என்று திருத்தொண்டர்த் தொகை திருப்பதிகத்தினைப் பாடி போற்றி தேவாசிரிய மண்டபத்தில் அடியார்களுடன்  அமர்ந்திருந்தார். இவ்வாறு திருவாரூரில் ஆரூரர் வாழ்ந்து வரும் காலத்தில் குண்டையூர் கிழார் என்னும் வேளாளர் அவருக்கு வேண்டிய நெல். பருப்பு முதலிய உணவுப் பொருட்களை வழங்கி வரலானார். ஒரு வருடம் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டது. வழக்கம் போல் சுந்தரருக்கு நெல் அனுப்ப முடியவில்லையே என்று இறைவனை அவர் இறைஞ்ச, அவரும் தன் அன்பனுக்காக நெல் மழை பொழிய வைத்தார். அதை எவ்வாறு திருவாரூருக்கு அனுப்பவது என்று புரியாத குண்டையூர் கிழார் சுந்தரருக்கு செய்தி அனுப்பினார். அவரும் குண்டையூர் வந்து நீள நினைந்தடியே னுமை நித்தலுங் கைதொழுவேன் வாளென கண் மடவா ளவள் வாடி வருந்தாமே கோளிலி யெம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை யெம்பெருமான் அவை யட்டித்தரப் பணியே.  என்று அருகில் உள்ள திருக்கோளிலி எம்பெருமானிடம் நெல்லை எடுத்துச் செல்லுதற்கு ஆட்கள் தந்தருளுமாறு விண்ணப்பித்தார். இன்று பகற்பொழுது நீங்கியதும் நமது பூதகணங்கள் குண்டையூரில் உள்ள நெற்குவியலை பரவையார் திருமாளிகையிலும் திருவாரூர் வீதிகளிலும் நிறைத்து விடும் என்று ஒரு அருள் வாக்கு  விசும்பிடை தோன்றியது. அது போலவே இரவில் பூதகணங்கள்  நெல்லை திருவாரூரில் கொண்டு வந்து சேர்த்தன. தன் தோழனுக்காக சிவபெருமான் செய்த அற்புத திருவிளையாடல்கள் பலப் பல அவற்றுள் சிலவற்றை இப்பாடல் இயம்புகின்றது. வெங் கரா வுண்ட பிள்ளையை நல்குமே; வெள்ளை யானையின் மீதேறிச்  செல்லுமே: மங்கை பாகனை தூது நடத்துமே; மருவியாறு  வழிவிட்டு நிற்குமே: செங்கலாவது தங்கமதாக்குமே; திகழும் ஆற்றிட்டு செம்பொன் எடுக்குமே; துங்க வன் பரி சேரர்க்கு நல்குமே ; துய்ய நாவலூரர்ச் சுந்தரர் பாடலே. இவ்வாறு இறையருளால் சுந்தரர் பதிகம் பாடி நடந்த சில திருவிளையாடல்களைகளை இனிக்காணலாம் அன்பர்களே. இவ்வாறு திருவாரூரில் பரவையாருடன் ஆரூரர் இன்பமாக வாழ்ந்து வரும் காலத்தில் ஒரு வருடம் பங்குனியுத்திர நாள் வருகின்றதே அதற்கு வரும் அன்பர்களுக்கு அன்னம் பாலிக்க பொருள் போதாதே என்று பரவையார் விசனப்பட, ஆரூரர் திருப்புகலூரை அடைந்து இறைவனை தொழுது வணங்கி அருகில் உள்ள அடியார்கள் திருமடத்திற்கு செல்லத் திருவுளம் கொண்டு அடியார்களுடன் கோவில் வாசலில் சிறிது சமயம் அளவளாவியிருந்தார். இறைவன் அருளால் அவருக்கு உறக்கம் வர அப்படியே அங்கேயே திருப்பணிக்காக வைத்திருந்த செங்கற்களை தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு உறங்கிப்போனார். விழித்தெழுந்தபோது அச்செங்கற்கள் பொன் கட்டிகளாக மாறியிருந்தன. இறைவனின் கருணையைப் போற்றிப்பாடியருளினார்.  ஆரூரர் திருவாரூர் வரும் வழியில் இறைவன் திருப்பணையூரில் தனது நடனத் திருக்காட்சியை காட்டியருளினார். அவ்வரிய காட்சியை ஒரு பதிகத்தால் போற்றிப்பாடிய வன்தொண்டர் திருவாரூரை அடைந்து பரவையாருடன் மகிழ்ந்திருந்தார்.   இறைவன் எழுந்ததருளியுள்ள பல் வேறு திருத்தலங்களை தரிசிக்க வேண்டி புறப்பட்டு சென்ற போது பல்வேறு சோழநாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்து விட்டு திருவாலம்பொழிலில் தங்கியிருந்தார். அன்றிரவு அவர் துயிலும் போது இறைவன் அவரது கனவில் தோன்றி மழப்பாடிக்கு வர மறந்தாயோ?  என்று வினவி மறைந்தருளினார். துயிலெழுந்த சுந்தரர் காவிரியின் வடகரையிலுள்ள அத்தலத்திற்கு சென்று இறைவனை பொன்னார் மேனியனே புலித்தோலை யரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி வேறு யாரை நினைக்கேனே – என்ற அற்புதமான திருப்பதிகத்தினை பாடி அருளினார். பிறகு பாச்சிலாசிராமம் என்னும் தலத்தை அடைந்து இறைவனை இகழ்ந்து பாடி பொன் பெற்றார் பின் கொங்கு நாட்டை அடைந்து காவிரிக்கரையின் பாண்டிக் கொடுமுடியில் “நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” என்னும்   நமச்சிவாய பதிகத்தை அருளினார். அடுத்து பேரூரில் இறைவன் தில்லை மன்றுள் நின்றாடும் எழில் கோலத்தை காட்டியருளினார். அவ்வழகிய திருக்காட்சியைக் கண்டு  அளவிலா ஆனந்தம் அடைந்த சுந்தரர் தில்லையம்பலவன் திருக்கூத்தினைக் கண்டு கும்பிடப்பெற்றால் இனிப் புறம்போய் எய்துதற்கு யாதுளது? என்று பாடி தில்லையை நோக்கி செல்லும் வழியில் திருமுதுகுன்றத்திற்கு அருகில் வந்த போது திருக்கூடலையாற்றுக்கு சுந்தரரை வரச்செய்ய இறைவன் தானே அந்தண வடிவில் வந்து வழிகாட்டி திருக்கூடலையாற்றுக்கு அழைத்துச் சென்று மறைந்தார். வடிவுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழ லுமையோடும் கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில் அடிகளிவ் வழிபோந்த அதிசயமறியேனே – என்னும் திருப்பதிகத்தைப் பாடி தமக்கு வழித்துணையாக வந்த வள்ளலை வணங்கிப் போற்றி திருமுதுகுன்றத்தை அடைந்தார். திருமுதுகுன்றத்தில் இறைவனைப் பாடி பன்னீராயிரம் பொற்காசுகள் பெற்றார். அவற்றை தமக்கு திருவாரூரில் தந்தருளுமாறு விண்ணப்பம் செய்தார். இப்பொன்னை மணிமுத்தாற்றிலிட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள்க என்று அசரீரி ஒலித்தது. சுந்தரரும் மாற்றுக்காக பொன்னை மச்சம் வெட்டி எடுத்துக்கொண்டு ஆற்றிலிட்டார். பின்னர் தில்லைக் கூத்தனை தரிசனம் செய்ய தில்லை ஏகினார். தில்லையை அடைந்து வடக்கு வாயில் வழியாக அம்பலவாணரை ஆனந்தமாக தரிசனம் செய்து “மீகொங்கில் அணி காஞ்சிவாய்ப் பேரூர்ப் பெருமானை புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே” என்று இறைவன் பெருங்கருணையுடன் தமக்கு ஆனந்த தாண்டவ கோலத்தை தமக்கு பேரூரில் காட்டியதை போற்றி பதிகம் பாடி திருவாரூரை அடைந்து பரவையாருடன் மகிழ்ந்திருந்தார். பின் ஒரு நாள் சுந்தரர் திருமுதுகுன்றப் பெருமாள் நமக்கு அளித்த பொன்னை மணி முத்தாற்று நீரில் புக விட்டு வந்தோம். அப்பொன்திரளை இறைவன் அருளால் கமலாலய திருக்குளத்திலிருந்து எடுத்து வருவோம். நீயும் உடன் வருக பரவரையாரை அழைத்தார். அதைக் கேட்டு பரவையார், முறுவலித்து இஃது என்ன அதிசயம் என்றார். நங்கையே நம்பெருமானருளால் அப்பொன் முழுவதையும் குளத்திலே எடுத்து உனக்கு தருவது பொய்யாகாது என்று உரைத்து புற்றிடங்கொண்டாரை வணங்கி வலஞ்செய்து கமலாலய திருக்குளத்தை அடைந்து பரவையாரை கரையில் நிற்கச்சொல்லிவிட்டு தாம் குளத்தில் இறங்கி பொன்னைத் தேடினார். சுந்தரின் மிஞ்சு தமிழ் பதிகம் பெறவேண்டி இறைவன் பொன் தோன்றாவண்ணம் செய்தார். அந்நிலையில் பரவையார் தமது கணவரைப் பார்த்து; ஆற்றிலேயிட்டு குளத்திலே தேடுவீர், இறைவனின் திருவருளை அறியும் முறை இதுவோ” என நகைத்துரைத்தார்.  அது கேட்ட சுந்தரர் ‘முதுகுன்றமர்ந்த பெருமானே, பரவையிவள் நகைத்துரையாதபடி தேவரீர் அடியார்க்கு முன்னம் அருளிய வண்ணம் செம்பொன்னைத் தந்தருளக என்று வேண்டினார். பொன்செய்த மேனியீனீர் புலித்தோலை அரைக்கசைத்தீர் என்று  பதிகம் பாடத் துவங்கினார். ஏத்தாதிருந்தறியேன் இமையோர்தனி நாயகனே மூத்தாயுலகுக்கெல்லா முதுகுன்றமர்ந்தவனே பூத்தாருங் குழலாள்  பரவையிவள் தன்முகப்பே கூத்தா தந்தருளாய்  கொடியேனிட்டளங் கெடவே என்ற ஒன்பதாவது பாடலைப் பாடிய போது பொற்திரள் குளத்தில் அகப்பட்டது. பொன்னின் மாற்று சிறிது குறைவாகப் பட்டபோது விநாயகப்பெருமான் தோன்றி பொன்னின் மாற்றை உறுதி செய்தார். இன்றும் மாற்றுரைத்த பிள்ளையார் கமலாலய திருக்குளத்தின் கரையில் அருள் பாலிக்கின்றார்.   இறைவன் எழுந்தருளியுள்ள மற்ற தலங்களை தரிசிக்க ஆருரரிடமிருந்து விடைபெற்று திருநள்ளாறு, கடவூர், வலம்புரம், சாய்க்காடு திருப்புன்கூர் ஆகிய தலங்களை தரிசித்த பின்னர் திருக்கோலக்காவில் எம்பெருமானின் தரிசனம் பெற்று சீர்காழியை வலம் வந்து வணங்கி ஆளுடையப்பிள்ளையை போற்றிப் பாடி, திருக்குருகாவூரை நோக்கி செல்லலானார் தன் அன்பன் பசியாலும் தாகத்தாலும் வருந்தி வருவதை உணர்ந்த இறைவன் ஆங்கோர் நிழற்பந்தர் அமைத்து பொதிச்சோறோடு காத்து நின்றார். அடியார்களுடன் அப்பந்தரை அடைந்த சுந்தரர் இறைவன் அளித்த பொதிச்சோற்றை உண்டு, நீர் பருகிய பின் சிறிது நேரம் துயிலமர்ந்தார். அவ்வமயம் இறைவன் பந்தரோடும் மறைந்தார். துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர் தமக்கு பொதிச்சோறளிக்க வந்தவர் எம்பெருமானே என்று தெளிந்து   திருக்குருகாவூர் ஆலயம் சென்று இத்தனை யாமற்றை அறிந்திலே யென்பெருமான்   பித்தரே யென்றும்மைப்  பேசுவார் பிறரெல்லாம் முத்தினை மணிதன்னை மாணிக்க முளைத்தெழுந்த வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே என்று திருப்பதிகம் பாடி உணவளித்து உயிர்காத்த பெருமானை உளங்குளிர வணங்கினார். பின்னர் தில்லை, தமது அவதாரத்தலம் திருநாவலூர் முதலிய திருப்பதிகளைத் தரிசித்து தொண்டை நாட்டை அடைந்தார். தொண்டை நாட்டில் திருக்கழுகுன்றத்தை தரிசித்து விட்டு திருக்கச்சூர் ஆலக்கோயிலை வந்தடைந்து அங்கு வீற்றிருக்கும் பெருமானை தரிசனம் செய்து பின்  மதிற்புறத்தின் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். உச்சிப் பொழுதாகியும் அவருக்கு அமுது சமைத்தளிக்கும் பரிசனங்கள் வராததால் மிகவும் பசியுடன் அமர்ந்திருந்தார். அடியார் பசியுடன் அமர்ந்திருப்பதை பொறாத சிவபெருமான் ஒரு அந்தணராக, அங்கு வந்து, வன்தொண்டரை நோக்கி, ’நீர் பசியால் மிகவும் வாட்டமடைந்துள்ளீர்’, யான் சிறிது நேரத்திற்குள், இங்குள்ள இல்லங்களில் இரந்து உணவு கொண்டு வருமளவும் இவ்விடத்திலேயிரூப்பீராக’ என்று சொல்லி அண்மையிலிருந்த இல்லங்களில் திருவமுதும், கறியும் இரந்து பெற்று அதை ஆருரருக்கு அளித்தார். அந்தணருடைய பேரன்பை கண்டு மகிழ்ந்த சுந்தரர் அவ்வமுதை விருப்புடன் பெற்று அடியார்களுடன் அமுது செய்தார். அந்நிலையில் உணவு இரந்தளித்த மறையவர் மறைந்தார். சிவபெருமானின் கருணையை உணர்ந்த சுந்தரர், ’வெம்மை மிகுந்த இவ்வுச்சிப்பொழுதிலே திருவடி வருந்த வீடுதோறும் சென்றிரந்து   எமக்கு சோறளித்த கருணையை என்னென்பேன்’, என நெஞ்ச நெக்குருகி மெய்ம்மயிர் சிலிர்ப்ப கண்ணீர்ரும்பி, மலைமேல் மருந்தாகிய ஆலக்கோயிற் பெருமானை முதுவாயோரி கதறமுதுகாட் டெரிகொண்டாடல் முயல்வானே மதுவார் கொன்றைப் புதுவீசூடும் மலையான் மகள்தன் மணவாளா கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டாலடியார் கவலாரே அதுவே யாமா றிதுவோ கச்சூரா லாக் கோயிலம்மானே  என்று பதிகம் பாடி போற்றினார். பின்னர் அங்கிருந்து கச்சியம்பதியடைந்து மலை மகள், உமை நங்கை வழிபட்ட காலகாலனை கம்பனெம்மானை, ஏகம்பனை பணிந்தார், கச்சியில் சில நாட்கள் தங்கி  காமகோட்ட நாச்சியாரையும் தரிசனம் செய்தார், திருமேற்றளி, திருஓணகாந்தன் தளி ஈசனை நெய்யும் பாலுந் தயிருங்கொண்டு நித்தல் பூசணை செய்யலுற்றார் கையிலொன்றுங் காணமில்லைக் கழலடி தொழுதுயின்னல்லால் ஐவர் கொண்டிங் காட்டவாடி யாழ்குழிப்பட்டழுந்து வேனுக்கு உய்யுமாறொன் றருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளியுளீரே என்று பதிகம் பாடி  பொன்னைப் பெற்று மகிழ்ந்தார். பின்னர் கச்சி அனேகதங்காவதம், பனங்காட்டூர், திருமாற்பேறு, திருவல்லம் தரிசித்து திருக்காளத்தி அடைந்து காளத்தியப்பரை பணிந்தார். அம்மலையிலிருந்தவாறே திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) மற்றும் திருக்கேதாரத்தலங்களைப் பாடினார். பின்னர் பல தலங்களை தரிசித்தவாறே கடற்கரையிலுள்ள திருவொற்றியூர் தலத்தை அடைந்து அத்தலத்தில் எழுந்தருளியுள்ள புற்றிடங்கொண்டாரையும் தியாகேசனையும்  தரிசித்து அத்தலத்தில் தங்கியிருந்தார். திருக்கயிலை மலையில் ஆலால சுந்தரரை கண்டு மயங்கிய இருவருள் ஒருவரான   கமலினியார் திருவாரூரில் பரவையாராக அவதாரம் செய்து சுந்தரரை மணந்ததை முன்னரே பார்த்தோம். மற்றவரான அநிந்திதையார், தொண்டை நாட்டில் ஞாயிறு என்னும் ஊரில் வாழும் ஞாயிறு கிழார் என்பாரின் மகளாகத் தோன்றி, சங்கிலியார் என்னும் பெயருடன் வளர்ந்து வந்தார். அவரும் திருமணப்பருவம் எய்தினார், பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய முனைந்த போது, சிவபெருமான் அருள் பெற்ற ஒருவரையே யான் மணத்தற்குரியேன். எனவே திருவொற்றியூர் சென்று சிவத்தொண்டு செய்ய விரும்புவதாய் கூறினார். ஞாயிறு கிழாரும் திருவொற்றியூரில் ஒரு கன்னி மாடம் அமைத்துக் கொடுத்தார் அதில் சங்கிலியார் வாழ்ந்து எழுத்தறியும் பெருமானுக்கு மலர் கைங்கரியம் புரிந்து வரலானார்.   ஒரு சமயம் சுந்தரர் இறைவனுக்கு திருத்தொண்டு செய்து வரும் சங்கிலியாரை காண நேர்ந்தது. அவர் மேல் காதல் கொண்டார். ஒற்றியூரரிடம் சென்று  மங்கை பங்கராயிருந்தும் கங்கையைச் சடையில் கரந்தருளும் பெருமானே, இத்திருக்கோவிலில் நுமக்கு திருமாலை தொடுத்து எனது உள்ளத்தை நெகிழ்வித்த சங்கிலியைத் தந்தருளி எனது துயரத்தை போக்குவீராக என்று  வேண்டினார். இரவு அவரது கனவில் எம்பெருமான் தோன்றி ’இவ்வுலகத்தவர் யாராலும் அடைதற்கரிய தவச்செல்வியாகிய சங்கிலியை உனக்கு மணஞ்செய்து தருவோம்’ என்று அருளினார். அதே பிரகாரம் சங்கிலியின் கனவில் தோன்றி ’சாரும் தவத்து சங்கிலியே, யான் இயம்புவதை கேட்பாயாக, என் பால் மிக்க அன்பு பூண்டவனும், அன்றி திருவெண்ணெய் நல்லூரில் யாவரும் காண என்னால் தடுத்தாட்கொள்ளப்பட்டவனும், என் அன்பிற்குரிய தோழனுமாகிய சுந்தரன், உன்னை மனைவியாக தனக்கு தருமாறு வேண்டி நின்றான். நீ மகிழ்ச்சியுடன் அவனை மணந்து கொள்வாயாக’ என்று பணித்தருளினார். சங்கிலியாரும் எம்பெருமானே!   தங்களது ஆணையை தலைமேற்கொண்டேன், நும்மால் அருளிச்செய்யப் பற்றவர்க்கு யான் உரியேன். ஆயினும் அவர் திருவாரூரின் மேல் மிக்க அன்பு கொண்டவர் என்றாள். அது கேட்ட இறைவர், ’பெண்ணே, அவர் உன்னைப் பிரியேன் என்று சபதஞ்செய்து தருவான் என்று கூறியருளினார். அவ்வண்ணமே அவர் சுந்தரரிடம் சங்கிலிக்கு உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று சபதஞ்செய்து கொடுக்குமாறு பணித்தார். சுந்தரரும் பல் வேறு ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசிக்காமல் எவ்வாறு இருப்பது என்று நினைத்து, இறைவரைப் பணிந்து எம்பெருமானே அடியேன் சங்கிலிக்கு ‘நின்னைப்பிரியேன்’ என்று சபதஞ்செய்து கொடுக்க  நும் முன் வரும் போது தேவரீர் ஆலயத்தை விட்டு அருகில் உள்ள மகிழ மரத்தடிக்கு எழுந்தருள வேண்டினார். இறைவனும் அதற்கு சம்மதித்து பின் சங்கிலியின் கனவில் தோன்றி ‘நங்கையே, சுந்தரன் உனக்கு சபதஞ்செய்து தர இசைந்துள்ளான். அவன் திருக்கோயிலில் நம் திருமுன்பு சபதஞ்செய்ய வந்தால் நீ அதற்கு உடன்படாமல், மகிழமரத்தடியில் சபதஞ்செய்து தரும்படி கேட்பாயாக’ என்று கூறி மறைந்தருளினார். மறு நாள் மகிழ மரத்தடியில் சங்கிலியாருக்கு சபதஞ்செய்து கொடுத்து இறைவனருளால் அவரை மணஞ்செய்து இன்பமாக வாழ்ந்து வரும் போது இளவேனிற் பருவம் எய்தியது. அப்பருவத்தில் திருவாரூரில்  தியாகப்பெருமானுக்கு நடைபெறும்  வசந்த விழா  நினைவு வர, ஓற்றியூரரிடம் விடை பெற்றுக் கொண்டு ஆரூர் நோக்கி புறப்பட்டார். திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் அவரது இரு கண்களும் ஒளியையிழந்தன. வழி தெரிந்து நடக்க முடியாத நிலையில் மூர்ச்சையடைந்தார். செய்வதறியாமல் சங்கிலிக்கு செய்து கொடுத்த சபதத்தை   மீறியாதால் இவ்விதம் ஏற்பட்டது என்பதை உணர்ந்து பதிகம் பாடி இறைவனை வேண்டினார், ஆயினும் இறைவன் மனமிரங்கவில்லை, உடன் வந்த தொண்டர்கள் உதவியுடன் திருமுல்லைவாயிலை அடைந்து மாசிலாமணீசரை பணிந்து ’சங்கிலிக்கா வென்கண்கொண்ட பண்ப நின்னடியேன் படுதுயர் களையாய் பாசுபதாஞ் சுடரே’ என்று வேண்டியும் இறைவன் அருளவில்லை. பிறகு திருவெண்பாக்கத்தில் ஈசனை நீர் இக்கோயிலிலுலீரோ? என்று வினவ இறைவனும் ’உளோம் போகீர்’ என்று மொழிந்து ஒரு ஊன்று கோலை கொடுத்தனுப்பினார். பின்னர் பழையாலங்காடு திருவூறல் முதலான  தலங்களை தரிசித்து பின் கச்சி ஏகம்பம் ஏகினார். இறைவனை மனமுருகி வேண்ட அவரும் இடக்கண்ணை கொடுத்தருளினார். இடக்கண்ணைப் பெற்றமையால் இறைவரது அருள் மேனியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர் ஆலந்தானுகந்தமுது செய்தானை ஆதியை அமரர் தொழுதேத்துஞ் சீலந்தான் பெரிது முடையானை சிந்திப்பாரவர் சிந்தையுளானை ஏலவார் குழலாளுமை நங்கை என்றும்  ஏத்தி வழிபடப்பெற்ற காலகாலனை கம்பனெம்மானை காணக்கண் அடியேன் பெற்றவாறே  என்று பாடிப் போற்றி சில காலம் கச்சியம்பதியில் தங்கியிருந்தார். பின் தொண்டைமண்டலத்தை விடுத்து சோழமண்டலம் வந்து பல பதிகளை தரிசித்து திருத்துருத்தியடைந்து உடல் நோய் நீங்கப்பெற்று திருவாரூர் வந்தடைந்தார். ஆரூரில் பரவையுண்மண்டலி ஆலயத்தில் இறைவனைப் போற்றி தனது வலக்கண்ணையும் தந்தருளுமாறு  பதிகம் பாடி வேண்டினார். பின்னர் திருமூலட்டானத்தை அடைந்து மீளா அடிமை உமக்கே என்னும் பதிகம் பாடி வலக்கண் ஒளியையும் பெற்று இரு கண்களாலும் பூங்கோயிலமர்ந்த பெருமானின் திருமேனியை கண்டு மகிழ்ந்து ஆடிப்பாடி துதித்து பேரின்ப வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தார். பின்னர் தேவாசிரிய மண்டபத்தில் தங்கியிருந்தார். ஆரூரர் பூங்கோயிலமர்ந்த பெருமானை வணங்கச்சென்ற போது அவரது பரிசனங்களில் சிலர் பரவையாரது மாளிகை சென்றனர். திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்ததனால் சினம் கொண்ட பரவையார் அவர்களை மாளிகைக்குள் அனுமதிக்கவில்லை. எனவே அவரது சினத்தை தணிக்க நடைமுறை அறிந்த சில பெரியோர்களை அனுப்பினார். அவர்கள் கூறிய நியாயங்களை ஏற்றுக் கொள்ளாமல் பரவையார், ’குற்றம்  பொருந்திய நம்பியாரூரர் சார்பாக நீவிர் இவ்வாறு கூறுவீர்களாயின் என்னுயிரைத் துறப்பேன் என்றார். அவர்களும் சுந்தரர்பாற் சென்று  நடந்ததனை கூறி அமர்ந்தனர். இதனால் துன்பமுற்ற சுந்தரர், தம் தோழராகிய வீதி விடங்கப்பெருமானின் திருவடிகளை நினைந்து போற்றி ’என்னை அடிமை கொண்டருளிய பெருமானே! முன்னை வினையால் இத்துன்பத்திற்கு காரணமாகிய பரவையின் பால்  நீரே இந்த இரவுப்பொழுதிற் சென்று அவள் என்பாற் கொண்ட ஊடலை தணிவித்தருள்வீராயின் அல்லால் உயிர் தரித்தல் இயலாது’ என்று வேண்டி போற்றினார். தன் அன்பன் துன்பப்படுவதைக் கண்டு காணப்பொறாத எம்பெருமான், தம்மை வழிபடும் மறையவர் கோலம் கொண்டு,  பிரம்மனும் திருமாலும் காண முடியாத திருப்பாதங்கள் மண்ணில் தோய திருவாரூரின் வீதிகளில் நடந்து சென்று பரவையாரின் மாளிகையை அடைந்து ’பரவையே கதவைத் திறந்திடுக’ என்று கதவினைத் தட்டி அழைத்தார். எம்பருமானுக்கு பூசை செய்யும் இப்பெரியவர் நள்ளிரவில் இங்கு வந்தது   என்ன காரணம் பற்றியோ என்று அஞ்சிக் கதவைத் திறந்து அவர் இங்கு எழுந்தருளிய காரணத்தை வினவினார். அவரும் ’நம்பியாரூரர் இங்கு வருவதற்கு நீ இசைதல் வேண்டும்’ என மறையவர் பணித்தருளினார். அதற்கு பரவையார் பங்குனி திருநாளுக்கு பொன் கொண்டு வரச்சென்றவர் திருவொற்றியூரடைந்து சங்கிலியாற் பிணிப்புண்டவருக்கு இங்கு ஒரு சார்பும் உண்டோ? அவர் பொருட்டு தாங்கள் இங்கு வந்தது சரியல்ல என்று மொழிந்தார். மறு முறை சினம் தணிந்து ஆரூரரை அன்புடன் வரவேற்க வேண்டும் என்று வற்புறுத்திக்கூற பரவையாரும் வெகுளியுடன், ’அருமறை முனிவராகிய நீர் பொருத்தமில்லாத இக்காரியத்தின் பொருட்டு நள்ளிரவில் இங்கு வருதல் நுமது பெருமைக்கு ஏற்றதன்று. ஒற்றியூரில் நிலைத்த மனம் கொண்டவரை இங்கு வர இசைய மாட்டேன்’ நீர் விரைவில் இவ்விடத்தை விட்டு அகல்வீராக’ எனச் சினந்தோன்றக் கூறினார். மறையவரும் சுந்தரரிடம் திரும்பிச் சென்றார். தமக்காக தூது சென்ற இறையவரை எதிர்நோக்கிக் காத்திருந்தார். எம்பெருமானும் வன்தொண்டரை   நோக்கி ’யாம் நினது வேண்டுகோளின்படி பரவை வீட்டிற்குச் சென்று அவளுக்கு நியாயங்களை எடுத்துரைத்தோம், எனினும் அவள் இசையவில்லை என்றார். இறைவராகிய தாங்கள் எடுத்துரைத்தும் பரவை மறுப்பது விந்தையே. ஐயனே! நீவிர் எனது அடிமைத் திறத்தை விரும்பாவிடில் வலிய வந்து ஆட்கொண்டது எதற்காக? அருளாளராகிய தாங்கள் அடியேன் படும் துன்பத்தைக் கண்டிரங்கி அவள் பாற் சேர்த்திலிராயின், என்னுயிர் நீங்குவது திண்ணம் என்று’ தளர்ந்தார். ஈசனும் தனது தோழனது தளர்ச்சி கண்டு மறு முறை பரவையாரது மாளிகையை அடைந்தார். இம்முறை தன்னை எல்லோரும் அறிந்து கொள்ளுதற்குரிய உண்மைத் திருக்கோலத்துடன் தேவர், முனிவர், சித்தர் புடைசூழ பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினார். இறைவரைக் கண்ட பரவை அடி வீழ்ந்து வணங்கினார். சிவபெருமான், பரவையாரை  நோக்கி ’நங்கையே தோழனாகிய சுந்தரன் நட்புரிமையால் நம்மை ஏவ மீளவும் வந்தோம்.  நீ முன்பு போல் மறுத்துரையாது நின் பிரிவால் வருத்தமுறும் சுந்தரன் நின்னை அடைதற்கு இசைய வேண்டுமென்று பணித்தருளினார். அவ்வருள் மொழியை செவிமடுத்த பரவையார், ’இவ்வாறு முழுமுதற் கடவுளான ஆரூர்ப்பெருமானை அலைக்கழித்தேனே’ என மனங்கலங்கிக் கண்ணீர் மல்கி, அடியேன் செய்த தவப்பயனால் அருமறை முனிவராக வந்தவரும் நீர்  தாமோ? இங்ஙனம் நள்ளிருளில் ஒளிர் வளர் பாதம் தரையிற்பட்டு வருந்த அன்பருக்காக அங்கும் இங்கும் உழல்வீராகி எளி வந்தருளினீராயின், சிறியேன் இதற்கு  உடன்படாமல் வேறு என் செய்வேன், என்று இறைஞ்சினார். இறைவனும் ’நங்கையே, நீ நின் பெருந்தன்மைகேற்ப நன்கு மொழிந்தனை’ என்று கூறி சுந்தரரை அடைந்து, நின் மேல் பரவை கொண்ட கோபத்தை தணிவித்து வந்தோம், என்று திருவாய் மலர்ந்தருளினார். சுந்தரரும், எந்தை பிரானே, போகம் வீடு என்னும் இருமையின்பத்தினையும் அடியேற்கு வழங்கினீர், இனி எளியேற்கு இடரொன்றுமில்லை என்று கூறி இறைவனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். பின்னர் தனது பரிசனங்களுடன் பரவையாரின் மாளிகைக்கு புறப்பட்டருளினார். பரவையாரும் பாங்கியருடன் அவரை நிறைகுடம், நல் விளக்கு, நறும் புகையுடன் மனையின் வாசலிலே  வணங்கி வரவேற்றார். சுந்தரர் பரவையாருடைய செங்கையினைப் பற்றிக்கொண்டு திருமாளிகையின் உள் அடைந்தார். இருவரும் இறைவனின் எளி வந்த கருணையினை நினைத்துருகி மாறிலா மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். தன் பொருட்டு தாமரை மலரினும் மெல்லிய பாதங்கள் நோக எம்பெருமான் இருமுறை தூது சென்ற எளி வந்த கருணையினை சுந்தரர் ’அடியேற் கெளிவந்த தூதனைத் தன்னை தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை நள்ளாறனை மறந்து நான் உய்வனோ!    என்று நெஞ்சம்  நெக்குருகிப் போற்றியுள்ளார். பரவையாரின் மாளிகை தற்போதும் ஆலயத்தின் தெற்கு கோபுரத்திற்கு  அருகில் உள்ளது. அதில் தம்பதி சமேதராக சுந்தரரும் பரவையும் திருமணக் கோலத்தில்  அருள் பாலிக்கின்றனர். ஆரூர் ஆலயம் செல்லும் அன்பர்கள் அருகில் உள்ள இறைவன் பாதம் பட்ட மாளிகைக்குச் சென்று வாருங்கள். நம்பியாரூரர் தமது மனைவி பரவையின் ஊடலை தணித்தற்பொருட்டு நள்ளிரவில் இருமுறை தூது சென்று வரும்படி பணித்தார் என்ற செய்தி நாடெங்கும் பரவியது. சோழநாட்டில் திருப்பெருமங்கலத்தில் வேளாளர் மரபில் தோன்றிய ஏயர் கோன் கலிக்காமர் என்ற திருவருட்செல்வர் மனம் வெதும்பி வருந்தினார்.  தொண்டன் வேண்டினாலும் இறைவன் எவ்வாறு ஒத்துக்கொள்ளலாம் என்று மறுகினார். அப்போது இறைவர் கலிக்காமரை வாட்டும்  சூலை நோயை தீர்த்தருளுமாறு  சுந்தரரைப் பணித்தார். சுந்தரரும் அவ்வாறே செய்தி அனுப்பினார். இறைவனை ஏவல் கொண்ட வன்தொண்டன் எனது நோயைத் தீர்க்க இங்கு வந்தால் நான் செய்வது என்னாகும் என்று கலிக்காமர் தம் வயிற்றை வாளால் கிழித்துக்கொண்டு உயிர் துறந்தார். சுந்தரர் வந்து கலிக்காமர் நிலையினைக் கண்டு அவர் வயிற்றிலிருந்த குறுவாளை உருவி தன்னை மாய்த்துக்கொள்ள முனைந்தபோது இறைவன் அருளினால் ஏயர்க்கோன் கலிக்காமர் உயிர்பெற்றெழுந்து வன்தொண்டர் கையிற்பற்றிய வாளினைப் பற்றி தடுத்தார். அன்பர் உயிர் பெற்றமை கண்டு ஆரூரர் அவரை  வீழ்ந்து வணங்கினார். கலிக்காமரும் வாளை எறிந்து விட்டு நம்பியாரூரர் திருப்பாதங்களில் பணிந்தார். இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு தோழர்களாயினர். ஒன்றாக திருப்புன்கூர் சென்று இறைவனைப் பணிந்து ஏயர்கோனின் சூலை நோயாகிய கடும் பிணியை தீர்த்தருளியதை …ஏத நன்னிலம் ஈரறுவேலி ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து….. என்று போற்றினார்.  பின்னர் திருவாரூரையடைந்து திருமூலட்டானரை வணங்கி மகிழ்ந்தினர். பின் ஏயர்கோன் கலிக்காமர் புறப்பட்டு சென்றார்,  ஆரூரர் திருநாகைக் காரோணம் சென்று பதிகம் பாடி பொன்னும் பொருளும் நறுமணப்பொருள்களும் பட்டாடைகளும் கடுகிச்செல்லும் குதிரையும் பரிசாகப் பெற்றார்.    திருவஞ்சிக்குளத்தை ஆண்டு வந்த பெருமாக்கோதையார் என்ற சேரமன்னன் தில்லையில் அம்பலக்கூத்தனிடம் சுந்தரரின் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டு திருவாரூர் அடைந்தார். சுந்தரர் அவரை வரவேற்று தோழராக ஏற்றுக்கொண்டார். எனவே அவர் சேரமான் தோழர் என்றழைக்கப்பட்டார். கார்கொண்ட கொடைக்கழறிற்றரிவார் என்னும் சேரமான் பெருமாளை பூங்கோவில் அழைத்துச் சென்றார் இருவர்  புற்றிடங்கொண்டாரை தரிசித்தனர். சேரமான் பெருமாள், திருமும்மணிக்கோவையென்னும் செந்தமிழ்ப் பனுவலை எம்பெருமான் முன்னிலையில் விண்ணப்பித்தார். பின்னர் இருவரும் பரவையாரின் மாளிகையை அடைந்து அவரது விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டு மகிழ்ந்திருந்தனர். ஆரூரர், ஆலவாய் முதலிய பாண்டிய நாட்டுத்திருப்பதிகளை தரிசிக்க விரும்பினார். சேரமான் பெருமாளும் தனக்கு திருமுகம் அனுப்பிய எம்பெருமானை தரிசிக்க உடன் புறப்பட்டார். இருவரும் திருமறைக்காடு,   அகத்தியான்பள்ளி, கோடிகுழகர் ஆகியோரை தரிசித்து திருஆலவாயை அடைந்தனர். அப்போது பாண்டி நாட்டை அரசாண்ட பாண்டிய மன்னனும், பாண்டியன் மகளை மனம் செய்த சோழ மன்னனும், சேரமான் பெருமாள் ஆகிய மூவேந்தர்களும் திருஆலவாய்ப் பெருமாளை வணங்கினர். பின்னர் மூவேந்தர்களும் திருப்பூவணம், திருவாப்பனூர், திருவேடகம் திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களை தரிசித்தனர். பாண்டிய மன்னரும் சோழ மன்னரும் அங்கிருந்து விடைபெற தோழர்கள் இருவரும் தமது யாத்திரையைத் தொடர்ந்தனர். பின்னர் திருப்பரங்குன்றத்திலிருந்து திருக்குற்றாலம், திருநெல்வேலி, திருராமேச்சுரம் அடைந்து இராமர் வழிபட்ட பெருமானைப் பாடினார், அங்கிருந்தே ஈழ நாட்டிலுள்ள மாதோட்டக்கேதீச்சரத்தை எண்ணி வழிபட்டு திருப்பதிகம் பாடினார். பின்னர் திருச்சுழியல் தலத்தில் இவர்கள் தங்கி இருந்த போது கனவில் எம்பெருமான் எழுந்தருளி ’யான் இருப்பது கானப்பேர்’ என்று கூறி மறைந்தருளினார். பதிகம் பாடிக்கொண்டே கானப்பேர் வந்து ஈசனைத்துதித்து பின் திருப்பலீச்சுரம் தரிசித்து திருவாரூர் அடைந்து பரவையாரின் மாளிகையில் தங்கினார்கள். சேரமான் பெருமாள் சுந்தரரை சேரநாட்டிற்கு எழுந்தருள பிரார்தித்தார், இருவரும் புற்றிடங்கொண்டாரிடம் அனுமதி பெற்று புறப்பட்டு முதலில் திருவையாற்றை அடைந்தனர், அப்போது காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது, சுந்தரரும் பதிகம் பாடி ஐயாருடைய அடிகளே என்று இறைஞ்ச இறைவனும் ஓலம் என்று கூற காவிரியாற்றில் வெள்ளம் விலகி வழிவிட்டது. சுந்தரரும், சேரமான் பெருமாளும் அடியார்களுடன் ஆற்றைக் கடந்து ஐயாரப்பனையும், அறம் வளர்த்த நாயகியையும் வணங்கினார். பின்னர் இருவரும் திருவஞ்சிக்களத்தை அடைந்தனர். சேரமான் பெருமாள் சுந்தரரை அஞ்சைக்களத்தப்பர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இறைவனை வழிபட்டு பின்னர் அரண்மனையடைந்து சேரமான் பெருமாளின் விருந்தோம்பலை அனுபவித்து சில நாள் தங்கியிருந்தார். அச்சமயம் திருவாரூர்ப்பெருமானின் நினைவு வர பொன்னு மெய்ய்பொருளுந் தருவானைப் போகமுந் திருவும் புனர்ப்பானைப் பின்னை யென்பிழையைப் பொறுப்பான பிழையெலாந்தவிரப் பணிப்பானை இன்ன தன்மைய யென்ற்றியவொண்ணா எம்மானை எளிவந்தபிரானை அன்னம்வைகும் வயற்பழத்தணி யாரூரனை மறக்கலுமாமே என்று பதிகம்பாடி குறிப்பினாலுணர்த்த, தன் தோழரைப் பிரிய மனமில்லாவிட்டாலும் ஆரூரருக்கு விடை கொடுத்து பெரும் செல்வத்தை  பொதி செய்து ஆட்களின் மேல் ஏற்றி அனுப்பினார். சுந்தரரும் தம் தோழரை அன்பினால் தழுவி விடைபெற்று சேரநாட்டை விடுத்து கொங்குநாட்டின் திருமுருகன் பூண்டி என்னும் தலத்தைக் கடக்கும் போது    அவ்வூரில் கோயில் கொண்ட சிவபெருமான், பூதகணங்களை நோக்கி   ’நீங்கள் வேடுவராகிச் சென்று சுந்தரனுடைய பொருள்களை கவர்ந்து கொள்மின்’ என்று பணித்தருளினார். அவர்களும் வில் அம்புடன் சென்று பொருட்களைப் கவர்ந்து சென்றனர். சுந்தரர் ஆலயத்திற்கு எழுந்தருளி பதிகம் பாடி திருமுருகன்பூண்டியில் ஏதுக்கிக்கிருந்தீர் எம்பிரான்  நீரே என்று கோபத்தோடு வினவ இறைவனும் பொருட்களை  திரும்ப அளித்து அருளினார். பின்னர் திருவாரூர் அடைந்து சிலகாலம் புற்றிடங்கொண்டாரை தரிசித்து மகிழ்ந்திருந்தார். மீண்டும் தமது தோழர் சேரமான் பெருமாளை நினைந்து மலைநாடு செல்லத் திருவுளங்கொண்டார். செல்லும் வழியில்   திருப்பொக்கொளியூர் என்னும் அவிநாசியை அடைந்த ஆரூரர் ஒரு வீதியின் வழியாக சென்றார். அப்போது  ஒரு வீட்டிலிருந்து மங்கள ஓசையும் எதிர் வீட்டில் இருந்து அழுகை சத்தமும் கேட்டது. என்னவென்று வினவிய போது இரு பிள்ளைகளும் சில வருடங்களுக்கு முன் மடுவிற்கு நீராட சென்ற போது ஒரு சிறுவனை முதலை விழுங்கி விட்டது. தப்பி வந்த சிறுவனுக்கு உபநயனம் எனவே அவ்வீட்டிலிருந்து மங்கள ஓசையும் முதலை உண்ட சிறுவனின் வீட்டில் இருந்து ஓலமும் வருகின்றது என்று கூறினர். அச்சிறுவனுக்காக உருகிய சுந்தரர் தன்னை அம்மடுவுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். அம்மடுவின் கரையில் எழுந்தருளிய சுந்தரர் முதலையானது தான் உண்ட புதல்வனை உயிருடன் கரையிற்கொண்டு தரும்படி செய்வீராக என்று திருப்பொக்கொளியூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிடம் வேண்டி பதிகம் பாடினார்   உரைப்பா ருரையுகந் துள்கவல்லார் தங்களுச்சியாய் அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்    புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவிநாசியே கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே என்று பதிகத்தின் நான்காம் பாடலைப்  பாடிய போது  காலன் மடுவிலிருந்த முதலையின் வயிற்றிலே சென்ற வருடங்களின் வளர்ச்சியுடன் கூடியதாய்  அப்புதல்வனின் உயிரைக் கொண்டு வந்து புகுத்தினான். உடனே முதலை மடுவிலிருந்து வெளிப்பட்டு கரையிலே  முன் தான் விழுங்கிய புதல்வனை உமிழ்ந்தது. இறைவனருளால் உயிர்பெற்ற அப்பாலகனை ஆலயத்திற்கு அழைத்துச்சென்று தொழச்செய்து அவனுக்கு உபநயனமுஞ் செய்துவித்தருளினார். பின் திருவஞ்சிக்களத்தை அடைந்து சேரமான் பெருமாளுடன் அளவளாவி சேரநாட்டு தலங்களை தரிசித்து மகிழ்ந்திருந்தார். ஒரு நாள் அஞ்சைக்களத்தப்பரிடம் கண்ணீர் சோர, நிலமிசை வீழ்ந்திறைஞ்சி இறைவனிடன், ’அடியேன் இவ்வுலக வாழக்கையை வெறுத்து நீங்கினேன். அடியேனை நின் திருவடியிலே சேர்த்தருளல் வேண்டும்’ என்று ’தலைக்குத்தலை மாலை” என்று முதற் குறிப்புடைய  பதிகத்தை பாடிப் போற்றினார். அடியார்களின் கருத்தறிந்து முடிக்கவல்ல கயிலைப் பெருமான், சுந்தரரது  பாசத்தளையை அகற்றி ஈறிலாப் பேரின்ப வாழவைத் தந்தருள திருவுளங்கொண்டார். நம்பியாரூரரை திருக்கயிலாயம் அழைத்து வர தமது வெள்ளை யானையான ஐராவளத்துடன் தேவர்களை  திருவஞ்சிக்களத்திற்கு அனுப்பியருளினார். திருவஞ்சிக்களத்தை அடைந்த தேவர்கள், தாங்கள் இவ்வெள்ளையானையின் மீதமர்ந்து திருக்கயிலைக்கு உடனே வருதல் வேண்டுமென்பது சிவபெருமானின் அருளிப்பாடாகும். தாங்கள் ஏவியவற்றை செய்ய நாங்கள் காத்திருக்கின்றோம் என்று விண்ணப்பித்தனர். ஈசனது அருளாணையை ஏற்றுக்கொண்டார். அண்டர்கள் போற்ற வெள்ளை யானையின் மேலமர்ந்து தன் தோழரான சேரமான் பெருமாளை மனத்தில் நினைத்துக்கொண்டே திருக்கயிலை மலைக்கு செல்வாராயினர். இறைவனருளால் தம் தோழர் திருக்கயிலை செல்வதை அறிந்த சேரமான் பெருமாள் திருவஞ்சிக்களத்து ஆலயத்தை அடைந்து சுந்தரர் வெள்ளை யானையின் மேல் செல்வதைக் கண்டார். தமது குதிரையின் காதில் திருவைந்தெழுத்தை உபதேசித்தார். அவ்வளவில் அக்குதிரை பறக்கும் ஆற்றல் பெற்று வெள்ளை யானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்வதாயிற்று. சேரமான் பெருமாளும் தேவர் குழாமும் முன் செல்ல பின் சென்ற நம்பியாரூரர், தானெனை முன்படைத்தா னதறிந்துன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ    நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ள மத்தயானை யருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை யுத்தமனே! என்ற நொடித்தான்மலை  திருப்பதிகத்தினைப் பாடிக்கொண்டே திருக்கயிலை மலையின் தென்றிசை வாயிலை அணுகினார். இவ்வாறு சுந்தரர் கயிலையை அடையும் போது வருணன் கடற்தெய்வமாகிய வருணன் சுந்தரர் திருவடிகளில் மலர் தூவி வழிபட்டனன்  என்பதும், வேத ஆகமங்களைக் கற்றுவல்ல மெய்யடியார்கள்  கூறும் அரன் நாமமும் தோத்திரங்களும் வேதவொலியும் எதிர்ந்திசைப்பச் சிவனடித் தொண்டு பூண்ட வாணன் என்பான் சுந்தரரை வரவேற்றான் என்பதும், இந்திரன் பிரம்மன், திருமால் முதலிய தேவர்களெல்லாம் சுந்தரரை எதிர்கொண்டழைத்தனர் என்பதும்,  ஐயனின் வெள்ளை யானையின் மேல் வரும் சுந்தரரைக் கண்ட முனிவர்கள் இவர் யார் என்று இறைவரை  வினவ, ’இவன் நந்தன் ஆரூரன்’ என சிவபெருமான் வாய் மலர்ந்தருளினார் என்பதையும் இந்நொடித்தான்மலை பதிகத்தில் சுந்தரர் பாடியுள்ளார். இவ்வின்னிசை பதிகத்தை அவர் வருணனிடம் கொடுத்தருள அவன் அதை திருவஞ்சிக்களத்திலே உய்த்து தெரிவித்தான்.  (நொடித்தல் – அழித்தல், நொடித்தான் – மகா சங்காரகாரணனாகிய சிவபெருமான். அப்பெருமான் எழுந்தருளிய திருமலை கயிலையாததால் அது நொடித்தான் மலையாயிற்று.) இருவரும் யானையிலிருந்தும் குதிரையிலிருந்தும் இறங்கி பல வாயில்களைக் கடந்து திருவணுக்கன் வாயிலை அடைந்தனர். அவ்வாயிலில் சேரமான் பெருமாள் உள்ளே புக அனுமதியின்றி தடைபட்டு நின்றார். அவரது கெழுதகை நண்பராகிய சுந்தரர் பெருமான் முன்பு சென்று ’கங்கை சடைக்கணிந்த கடவுளே, நின் திருவடிகளை வணங்கி மகிழ்தற் பொருட்டு கழற்றறிவாராகிய சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிற்புறத்தே வந்து நிற்கின்றார் என்று விண்ணப்பஞ்செய்தார். அதனைக் கேட்ட சிவபெருமான் மகிழ்ந்து பெரிய தேவராகிய நந்தியை நோக்கி, சேரனைக் கொணர்க, என்று பணித்தருளினார். அவரும் விரைந்து சென்று சேரமானை அழைத்து வந்தார். அழைத்து வரப்பெற்ற கழற்றறிவார் இறைவன் திருமுன் வீழ்ந்திறைஞ்சி நின்றார். இறைவன் சேரமானை நோக்கி, ’யாம் அழைக்காமல் இங்கு வந்த காரணம் யாது?’ என்று வினவியருளினார். அது கேட்ட சேரவேந்தர், இறைவனை இறைஞ்சி, ’எம்பெருமானே, அடியேன் நம்பியாரூரரின் திருவடிகளைப் போற்றி அவரேறிய வெள்ளை யானைக்கு முன்னே அவரை சேவித்துக்கொண்டு வந்தேன். நினது அருட்பெருவெள்ளம் அடியேனை ஈர்த்துக்கொண்டு புகுதலால் இங்கு தங்கள் முன் வரப்பெற்றேன். எனது பாசத்தளையை அகற்றுதற்பொருட்டு வன்தொண்டரது தோழமையை தந்தருளிய பெருமானே, மறைகளாலும், முனிவர்களாலும் அளவிடுதற்கரிய பெருமானாகிய நின்னை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு திருவுலாப்புறம் என்ற செந்தமிழ்ப்பனுவலொன்றை பாடி வந்துள்ளேன். அத்தமிழ்ப் பனுவலைப் நின் திருச்செவியில் ஏற்றருள வேண்டுமென்று விண்ணப்பஞ்செய்தார். அதற்கு சிவபெருமான் சேரனே, அவ்வுலாவை சொல்லுக என்று பணித்தருளினார். சேரமான் பெருமாளும் தாம் பாடிய பனுவலை இறைவன் திருமுன் எடுத்துரைத்து அரங்கேற்றினார். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் அவரை நோக்கிச் சேரனே நீ நம்பியாரூரனாகிய ஆலால சுந்தரருடன் கூடி நீவிர் இருவீரும் நம்   சிவகணத்தலைவராய் இங்கு நம்பால் நிலை பெற்றிருப்பீராக எனத்திருவருள் புரிந்தார். சிவபெருமான் அருளிய வண்ணம் நம்பியாரூரர் அணுக்கத்தொண்டு புரியும் ஆலால சுந்தரராகவும், சேரமான் பெருமாள் சிவக்கணத்தலைவராகவும் திருக்கயிலையில் திருத்தொண்டு புரியும் பேரின்ப வாழ்வில் திளைத்து வாழ்ந்திருந்தார்கள். நம்பியாரூரரை மணந்து வாழ்ந்த பரவையாரும், சங்கிலியாரும் சிவபெருமானின் திருவருளால் திருக்கயிலையடைந்து முறையே கமலினியாராகவும், அநிந்திதையாராகவும், உமையம்மைக்கு தாங்கள் செய்து வந்த அணுக்கத்தொண்டினைச் செய்து மகிழ்ந்தார்கள். இது எம்பிரான் தோழர் வன்தொண்டர் சுந்தரர் வரலாறு. இது வரை திருவாரூர் இரத்தின சிம்மாசன அஜபாநடன வீதி விடங்கரை தரிசித்தோம் அடுத்து ஸ்ரீரத்ன சிம்மாசன  பாரவார தரங்க  நடன சுந்தர விடங்கரை திருநாகை தலத்தில் தரிசிக்கலாம் அன்பர்களே வாருங்கள்.                     33.திருநாகை -  ஸ்ரீ ரத்ன சிம்மாசன பாரவார தரங்க சுந்தர விடங்கர் []   அடுத்து நாம் தரிசிக்க இருக்கின்ற சப்த விடங்கத்தலம். பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும் ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான் தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே. -   என்று ஆளுடையப்பிள்ளையார் பாடிய திருநாகைத்தலம் ஆகும்.   தஞ்சைத் தரணியின் கிழக்குக் கடற்கரையோர நகரங்களில் ஒன்று நாகப்பட்டினம். இந்நகரின் மையப்பகுதியில் ‘நாகைக் காரோணம்’ என்ற தேவாரப் பாடல் பெற்ற  சிவசக்தித்தலம் அமைந்துள்ளது. இங்கு நீலாயதாக்ஷி அம்பிகை உடனாய காயாரோகணேஸ்வரப் பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவரே நீலோத்பலாம்பாள் உடனாய சுந்தர விடங்கராகவும் அருள் பாலிக்கின்றார். புண்டரீக முனிவரை இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்து கொண்ட தலம் என்பதால் நாகைக் காரோணம் . அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி நல்கிய தலம்.   பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங் கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. என்று பாடிய  சுந்தரருக்கு இறைவன் குதிரை, முத்து மாலை, பட்டு, கஸ்தூரி, கமழ் சாந்து முதலானவை வழங்கியத்தலம். அன்றுமுதல் இக்கோவிலில் குதிரை வாகன விழா, சுந்தரருக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறும். பதினெண்சித்தர்களுள் ஒருவரான அழுகிணி சித்தர் ஜீவசமாதி ஆன தலம். இத்தலவிருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோயிலின் தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும் போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது. சிறப்பு மூர்த்தியாக நாகாபரணப் பிள்ளையார் அருள் புரியும் தலம்.  காசியைப் போல இத்தலமும் முக்தி மண்டபத்துடன் திகழ்கிறது  என்பது சிறப்பு.  சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய தலம் . நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகம் சென்று நாககன்னியைக் கூடிப்பெற்ற புதல்வனே தொண்டை நாட்டை அரசாண்ட இளந்திரையன் எனப் பத்துப்பாட்டால் அறிகிறோம். பொன்னி நாடெனும் கற்பக பூங்கொடி மணி போல் நன்மை சான்றது நாகபட்டினத் திருநகரம் என்று சேக்கிழார் பெருமான் இத்தலத்தை சிறப்பித்துப் பாடியுள்ளார்.  அம்பாள், முருகன், திருமால், அகத்தியர், வசிஷ்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபாட்டு அருள்பெற்ற தலம் . மதுரை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஸ்ரீமீனாக்ஷி அம்மன் திருக்கோவில். மதுரையம்பதி, பாடல் பெற்ற மிகப்பெரிய சிவஸ்தலமாகவும், சோமசுந்தரக் கடவுளின் உறைவிடமாகவும் திகழ்கின்ற போதிலும், மீனாக்ஷி அம்மன் ஆலயம் என்பதே பிரசித்தம். அதுபோல நாகப்பட்டினம் திருக்கோவில், சிவபெருமானின் சப்த விடங்க ஸ்தலங்களிலே ஒன்று என்ற போதிலும், காரோணம் என்ற சிறப்புடையதாயினும் அம்மனின் பெயரால் நீலாயதாக்ஷி அம்மன் ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது. அம்மன் அருளாட்சி நடைபெறும் அறுபத்து நான்கு சக்தி தலங்களில் ஒன்று இவ்வாலயம். தாய்மையின் உருவகமாகப் போற்றப்படும் இறைவடிவமாகிய அம்பாள், பெண்மையின் ஐந்து படிநிலைகளை (பருவங்களை), ஐந்து வெவ்வேறு க்ஷேத்திரங்களில் தாங்கி நின்று அருள்பாலிக்கிறாள். அவற்றில், காசியில் உறையும் விசாலாக்ஷி குழந்தையாகவும், காஞ்சியில் வீற்றிருக்கும் காமாக்ஷி சிறுமியாகவும், நாகையில் விளங்கும் நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாகவும், திருவாரூரில் திகழும் கமலாம்பிகை இளம் பெண்ணாகவும், மதுரையில் அரசாளும் மீனாக்ஷி திருமணமான சுமங்கலிப் பெண்ணாகவும் வணங்கப்படுகிறார்கள். இந்த ஐந்து க்ஷேத்திரங்களில் நடுநாயகமாக, கன்னிப்பெண் வடிவமாக அம்மன் திருக்காட்சி கொடுத்து தெய்வீக அருள் புரியும் சக்தி பீடம் இத்திருநாகைக் காரோணம் என்றழைக்கப்படும் நாகபட்டினம். இங்கே அம்பாளின் திருநாமம் நீலாயதாக்ஷி. இதன் பொருள், நீல நிறக் கண்ணுடையாள் என்பது. தூய தமிழில் கருந்தடங்கண்ணி என்று அம்மனுக்குத் திருப்பெயர். கருணை நிறைந்த திருக்கண்களைக் கொண்ட அம்பாள் என்று பொருள்.  இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவளாக போற்றப்படுகிறாள். கவலைகளைப் போக்குகின்ற கருந்தடங்கண்ணியாக வணங்கப்படுகிறாள். நாகை நீலாயதாக்ஷி அம்மன் மீது முத்துஸ்வாமி தீட்சிதர் பாடிய “அம்பா நீலாயதாக்ஷி கருணா கடாக்ஷி சர்வ லோக சாக்ஷி” என்ற சுருதி, கர்நாடக இசை மேடைகளிலும், கலைகளைப் போற்றும் பக்தர்கள் நெஞ்சங்களிலும் இனிமையாய் ஒலிக்கிறது. இத்தலம், சோழநாட்டு காவிரித் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற     82-வது தலம் ஆகும். திருநாவுக்கரசர் நான்கு பதிகங்களும், பிள்ளைப் பெருமானாகிய திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும்,  எம்பெருமான் தோழராகிய சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனைப் பாடியுள்ளார். இராமலிங்க அடிகளாரும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். காயாரோகணர்: இத்தலத்தில் இறைவனுக்கு காயாரோகணேஸ்வரர் என்று திருநாமம். காயாரோகணம் என்பது மருவி காரோணம் என்று அழைக்கப்படுகிறது. புண்டரீக முனிவரை  சிவபெருமான்  காயத்தோடு  தன் திருமேனியில் ஆரோகணம் செய்து கொண்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. காய ஆரோஹணம் அதாவது உடலுடன் சேர்த்துக் கொள்ளுதல்  என்று பொருள்.  எனவே பெருமான், காயாரோகணர் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறார். புண்டரீக முனிவரின் உருவத்தை ஒரு கற்றூணில் காணலாம்.   இறைவனின் திருமேனியில் பீடத்தில் பிரம்மனும், திருமால் ஆவூடையிலும், சப்த ரிஷிகளை புலத்திலும் அமர்த்திக்கொண்டதாக ஐதீகம். சப்த ரிஷிகளுக்கும் இறைவன் சோமாஸ்கந்த வடிவில் காட்சியருளியதை மூலவருக்கு  பின்னால் கருவறையின் மேற்கு சுவரில்  சிற்ப வடிவில் காணலாம்.  மஹா சங்கார காலத்தில் அனைத்து உயிர்களையும் தம்முள் ஐக்கியமாக்கி கொண்டதை இது குறிக்கின்றது. பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டதால் இத்தலத்தை ஆதி புராணம் என்றும் சுவாமியை ஆதி புராணேச்வரர் என்றும் தல புராணம் குறிப்பிடுகிறது. மேலும் அரவநகரம், பார்ப்பதீஸ்வரம், சிவராசதானி என்றும் இத்தலம் அறியப்படுகின்றது.    []   காரோணம் என்று பெயருடைய திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று உள்ளன; 1. நாகைக் காரோணம், 2. குடந்தைக் காரோணம், 3. கச்சிக் காரோணம் ஆகியவை ஆகும். ஆதி சேஷன் வழிபட்ட தலம்: ஸ்ரீமகாவிஷ்ணு சயனித்திருக்கும் பெருமை பெற்ற நாகங்களின் தலைவனாகிய ஆதிசேஷன், ஒருமுறை சிவராத்திரியின் போது இத்தலத்தில் இறைவனை நாகேஸ்வரராகத் துதித்து வழிபட்டார் என்கின்றன புராணங்கள். பூவுலகை எப்போதும்  தாங்கிக்கொண்டிருப்பதால் ஆதிசேஷன் தன் பலத்தை எல்லாம் இழந்தார், இழந்த பலத்தை மீண்டும் பெற ஒரு மகாசிவராத்திரியன்று  காலையில் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவில், நண்பகலில் திருநாகேஸ்வரம், மாலையில் திருப்பாம்புரம் ஆகிய இடங்களில் சிவபெருமானை வழிபட்டு, இறுதியாக திருநாகையில் உள்ள இத்தலத்தில் தனது பூஜையை ஆதிசேஷன் நிறைவு செய்தாராம். அதனால் இத்தலத்திற்கு  நாகப்பட்டினம் என்று பெயர் ஏற்பட்டது. ஆதிசேஷன் வழிபாடு நடத்தியதால், இத்தலம் ராகு, கேது பரிகார ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது. ஆதிசேஷனின் மகளை, சிவபக்தரான சாலீசுக மஹாராஜா திருமணம் செய்துகொண்டதாகவும் தலவரலாறு இயம்புகிறது. சுந்தர விடங்கர்: கரை மலி கடல் சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பமாமே   என்பது அப்பர் பெருமான் பாடிய இத்தலத்தில்  மூலவர்  கருவறைக்கு இணையாகத் தெற்கில் தியாகராஜரின் சந்நதி அமைந்துள்ளது. இதில் பெரிய மேடைமீது முத்து விதானத்தின் கீழ் தியாகராஜப்பெருமான் அழகிய இரத்தின  சிம்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார். இவருக்குச் “நீலோத்பலாம்பாள் உடனுறை ஸ்ரீரத்ன சிம்மாசன பாரா வார தரங்க நடன ஸ்ரீசுந்தரவிடங்கர்’ என்பது திருநாமம். இவருக்கு முன்புறத்திலும் இரண்டு வீரகட்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.  நின்ற நந்தியெம்பெருமானையும் தரிசிக்கின்றோம்.   இவருடைய நடனம் பாராவார தரங்க நடனம் என்று அழைக்கப்படும். பாராவாரம் என்றால் கடல். தரங்கம் என்றால் அலைகள். கடலின் மீது தோன்றும் அலைகள் கரைமீது சுழன்று வீழ்ந்தும் தணிந்தும் அடிப்பது போன்று உயர்ந்தும் தாழ்ந்தும் இவர் ஆடுவதால் தியாகராஜ நடனம் “பாராவார தரங்க நடனம்” என்றழைக்கப்படுகின்றது.  “விளத்திதானம்”  என்றும் “வீசி நடனம்” என்றும் அழைக்கப்படுகிறது. கடல் அலை அசைவது போன்ற நடனம் என்று இதற்குப் பொருள். எனவே இவர் அலைநடன தியாகேசர். கடற்கரை நகரமான நாகப்பட்டினத்துக் இறைவன், கடல் அலை போல் நடனமிடுவது பொருத்தம்தானே. இவருடைய சந்நதியில் முன்னாளில் கோமேதகத்தால் ஆன அழகிய இலிங்கம் பிரதி விடங்க லிங்கமாக வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. அது களவுபோய் விட்டதால் தருமையாதீனக் குருமகா சந்நிதானத்தால் அளிக்கப் பெற்ற ஸ்படிக லிங்கத்தை வைத்து பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. விடங்கருக்கு காலை 8 மணி மற்றும் இரவு 9 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.  மற்ற சப்த விடங்கத் தலங்களைப் போலவே முகதரிசனம் மட்டுமே தந்தருளுகின்றார் சுந்தர விடங்கர். வைகாசி விசாக விழாவின் போதும், மார்கழி திருவாதிரையன்று வலது பாத தரிசனம் தரிசனம் தந்தருளுகிறார் தியாகராஜ சுவாமி. திருவாதிரையன்று அதிகாலை மூன்று மணிக்கு ருத்ர ஹோமமும் தொடர்ந்து சிறப்பான ருத்ராபிஷேகமும் நடைபெற்று  பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு வலது பாத தரிசனம் தந்தருளுகின்றார். மாலை ஆறு மணிக்கு விசேஷ முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகின்றது.  தியாகராஜருக்கு முன்புறம் மகாமண்டபத்தில் உலோகத்தாலான நின்ற நிலையிலுள்ள இடபமும் அவருக்குப் எதிரே  பரவை நாச்சியார் உடனாய சுந்தரமூர்த்தி சுவாமிகளும் எழுந்தருளியுள்ளனர். தியாகேசருக்கு ஆண்டிற்கு ஆறுகால அபிஷேகத்துடன் கிரகண புண்ணிய கால அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. சப்தவிடங்கத் தலங்களில் அமைந்துள்ள தியாகராஜர் சந்நிதிகளில் மிகவும் பெரியது இதுவேயாகும்.   இச்சந்நிதி மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் விரிவுபடுத்திக் கட்டப்பட்டுள்ளது.  இவனுடைய 14வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு இக்கோயிலைப் புதுப்பித்தது பற்றியும், மருதமங்களமுடைய மலைமேல் அமர்ந்தவன் என்கிற வானவன் விழுப்பரையன் அழகிய விடங்கருக்குப் பொன்னும் மணியும் ஆபரணங்களும் கொடையாக அளித்ததையும்  குறிப்பிடுகின்றது. இத்தலத்தின் புராணம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் பாடப்பெற்றதாகும். இதிலுள்ள சுந்தரவிடங்கப்படலம் நாகை அழகிய விடங்கரின் பெருமைகளை விரிவாகப் பேசுகின்றது. முசுகுந்தன் இங்கு வழிபட்டுத் தமது பிரம்மஹத்திக் குற்றத்தைப் போக்கிக் கொண்டான் என்று இப்புராணம் கூறுகிறது. சுந்தரவிடங்கரைக் ‘காரோணச் சிந்தாமணி’ என்று புராணம் குறிக்கின்றது. பிள்ளைப்பேறு அருளும் பெருமானாக இவர் விளங்குகின்றார்.  நகரின் மத்தியில் இக்கோயில் 180 மீட்டர் நீலம், 75 மீட்டர் அகலம் நிலப்பரப்பு கொண்டு, இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு (கடற்கரையை) நோக்கி மிக பிரம்மண்டமாக அமைந்துள்ளது  இத்திருக்கோவில். நுழை வாயிலில் நாகாபரணப் பிள்ளையார் திருவுடம்பில் நாகத்துடன் தலையில் ஐந்து தலை நாகம் குடைப்பிடிப்பது போன்ற தோற்றத்துடன் அமர்ந்துள்ளார். நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின் போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது அத்துடன், வெண்கலத்தால் ஆன பஞ்சமுக வினாயகரும் விசேஷமானவர்.  அடுத்து சுதையால் ஆன பிரம்மாண்ட சுதை  நந்தி. அடுத்து முக்தி மண்டபம். முக்தி மண்டபத்தில் வள்ளலார் பெருமான் தங்கியிருந்து தமிழ் விருந்தளித்துள்ளார். பிரகாரத்தில் அதிபத்த நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது. மேலும் வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், ஆறுமுகர், காசி விஸ்வநாதர், பைரவர், அறுபத்து மூவர், மாவடிப் பிள்ளையார், அருணாசலேஸ்வரர், வெண்ணெய்ப் பிரான் எட்டு கரங்களில் ஆயுதங்களுடன், அஷ்டபுஜ பைரவர்', அஷ்டபுஜ காளி ஆகியோர் சன்னதிகளும் உள்ளன. எண்திசைகளுக்கு அதிபதிகளான அஷ்டதிக் பாலகர்கள்,  சிலை வடிவில் காட்சி தருகின்றனர்.  நான்கு தந்தங்கள் கொண்ட, இரண்டு யானைகள் அபிஷேகம் செய்தபடி இருக்க வீற்றிருந்த கோலத்தில் அருளும் கஜலட்சுமியையும்  தரிசிக்கலாம்.  மதில் சுவர் முழுவதும் பல சுதை சிற்பங்கள் அமைத்திருக்கின்றார்கள் அது அருமையாக உள்ளது.   மற்ற ஆலயங்களில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர், இங்கு சிம்ம வாகனத்துடன் காட்சி தருவது ஒரு தனி சிறப்பு. புண்டரீக தீர்த்தக்கரையில் பைரவர் சன்னதி அமைந்துள்ளது. புண்டரீகர், சிவனை வழிபட்டபோது, காசியின் கங்கை தீர்த்தம் இங்கு பாதாளத்திலிருந்து பொங்கியது. அப்போது கங்கைக்கரையில் உள்ள பைரவரும், இங்கு எழுந்தருளினார். இவரே இங்கு, "காலசம்ஹார பைரவராக' அருளுகிறார். இவருக்கு பின்புறம் சிம்ம வாகனம் இருக்கிறது. காலனை (எமன்) சம்ஹாரம் செய்த சிவனே, இங்கு பைரவர் வடிவில் அருளுவதாக ஐதீகம். இவர் எமனுக்குரிய தென்திசையை நோக்கியிருப்பதால், ஆயுள் பலம் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள். இவர் உக்கிரமானவராக காட்சி தருவதால், சாந்தப்படுத்த எதிரில் இரண்டு விநாயகர்களை ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.      செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத் தேன்மொழியார் வந்து வலஞ்செய்து மாநட மாட மலிந்த செல்வக் கந்த மலிபொழில் சூழ்கட னாகைக்கா ரோணமென்றும் சிந்தை செய்வாரைப் பிரியா திருக்குந் திருமங்கையே.   பொருள்: சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும், வெள்ளிய பற்களையும் , தேன் போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு, செல்வம் மிகுந்ததும், நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள், என்று அப்பர் பெருமான் பாடிய இத்தலத்தின் மூலவர் பெரிய பாணத்துடன் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி தருகின்றனர். அக்ஷி தலங்களுள் ஆசீர்வாதம் அளிக்கும் அபய கரத்துடன் அருள் பாலிப்பவள் நீலாயதாக்ஷி அம்பாள்.    மூலவரின் பின்புறம் தனி மாடத்தில் சிவனார், அம்மை மற்றும் கந்தருடன் அமர்ந்த கோலமான சோமாஸ்கந்தர் திருவடிவம் உள்ளது . துவாரபாலகர்களின் அருகில் ஒருபுறம் விநாயகரும், மற்றொருபுறம் அதிகார நந்தியும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர் முதலியோர் திருக்காட்சி அளிக்கின்றனர். தக்ஷிணாமூர்த்தி 8 சீடர்களுடன் அருள் பாலிப்பது  ஒரு தனி சிறப்பு. சுவாமி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் 12 ராசி சக்கரம் உள்ளது. ஆறுமுகர்  திருவாசியுடன் சேர்த்து 12 திருக்கரங்களில், ஆயுதங்களுடன் எழிலாக தரிசனம் அளிக்கின்றார். ….. ஞால வட்ட முற்ற வுண்டு நாகமெத்தை யிற்றுயின்ற நார ணற்க ருட்சு ரந்த    மருகோனே- நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்களைந்த நாக பட்டி னத்த மர்ந்த பெருமாளே -  இத்தல முருகனை அருணகிரிநாதர்  திருப்புகழில் பாடியுள்ளார். சண்டிகேஸ்வரர் சன்னதி, கோஷ்டத்தை ஒட்டி இல்லாமல் பிரகாரத்திலிருந்து விலகியுள்ளது. நடராஜர் சபையில் சிவகாமி அம்மையுடனான நடராஜர், பிட்சாடனர், காட்சி நாயகர் உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம்  அம்பாள் எதிரிலுள்ள நந்தி தன் கழுத்தை திருப்பி, சிவன் சன்னதியையும் பார்த்தபடி உள்ளது.  அதற்கான ஐதீகம் அம்பிகை கன்னிப்பெண் என்பதால், அன்னையை காவல் காக்கும் படி எம்பெருமான் வேண்டிக்கொண்டதால் நந்தியின் வலக்கண் அம்பிகையையும்,  அதே சமயம் எம்பெருமானையும் நோக்க இடது கண் சிவனையும்,  பார்த்தபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. எனவே, இந்நந்தியை "இரட்டைப் பார்வை நந்தி' என்று அழைக்கிறார்கள். கண் தொடர்பான நோய்கள் நீங்க, இந்நந்தியிடம் வேண்டிக்கொள்ளலாம். “காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே” என்று அம்மையின் ஞானப்பாலுண்ட சம்பந்தப் பெருமான் பாடிய இக்கோவிலின் தல விருட்சம், மாமரம். இதனடியில் அருள் பாலிக்கும்  மாவடி விநாயகர் சக்தி வாய்ந்தவர். இவ்வாலயத்தில் இரண்டு புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தெற்குப் பகுதியில் தேவ தீர்த்தமும், மேற்குப் பகுதியில் புண்டரீக முனிவரால் உருவாக்கப்பட்ட புண்டரீக தீர்த்தமும் உள்ளன. சற்று வித்தியாசமாக நவகிரகங்கள் ஒரே வரிசையில் இல்லாமல்,  ஒரு வரிசைக்கு மூன்று பேராக, மூன்று வரிசைகளில் மேற்கு நோக்கி சுவாமியை பார்த்த வண்ணம் உள்ளனர்.  தசரதர் பிரதிஷ்டை   செய்த சனீஸ்வரர் தனி சன்னதியில் அருளுகின்றார்.    அதிபத்த நாயனார் வரலாறு: இத்தலத்துடன் தொடர்புடைய நாயனார் அதிபத்தர் ஆவார். அதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும். அதிபக்தர் என்பதே அதிபத்தர் என்று வழங்கப்படுகிறது. இத்தலத்தில் வழிபட்ட நாயனார் அதிபத்த நாயனார் ஆவார். இவர்  நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் குலத்தில் அவதரித்தார். குல வழக்கப்படி  மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வந்தார். இவர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு தினமும் தனக்குக்  கிடைக்கும் மீன்களில் சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும் இந்த வழமை தவறாது வந்தார்.  ஒரு சமயம் தொடர்ந்து பல  நாளுக்கு ஒரு மீன் என்றவாறே கிடைத்து வந்தது. அப்போதும் அந்தவொரு மீனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபத்தர் பசியோடு இருந்தார். அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர். தொடர்ந்து வந்த நாளெல்லாம் இவ்வாறு ஒரு மீன் கிடைப்பதே வழக்கமாக  நிகழ்ந்தது. ஆயினும் அதிபத்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு  முதல் மீனை  அர்ப்பணிக்கும் செயலை செய்து  தொடர்ந்து வந்தார். அதிபத்தரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் சாதாரண மீனுக்கு பதிலாக பொன்மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார். அம்மீன் ரத்தின மணிகள் பதிந்த பொன்மீனாக இருந்தது. அதனை வலையில் பிடித்த வலைஞர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபத்தரிடம் கூறினார்கள். அன்றைய நாளில் அம்மீன் ஒன்றே கிடைத்தமையால், வழக்கம் போல் அதனை சிவபெருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம் செய்தார். அதிபத்தரின் பக்தியை பாராட்டும் படியாக சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார். அதன் பின் அதிபத்தருக்கு முக்தியளித்தார். இவரை  “விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்” என்று  திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் போற்றுகின்றார். இனி இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றிக் காணலாம்.  ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா மிகவும்  சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தியாகராஜர் திருத்தேரோட்டம் கண்டருளி பாத தரிசனம் தந்தருளுகின்றார். ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கியமும், ஆனி கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவமும் நடைபெறுகிறது. சிவ பெருமான் சாலிசுக மன்னனுக்கு திருமணக் கோலத்துடன் காட்சி கொடுத்து முக்தி மண்டபத்திலிருந்து அதிகாலை புறப்பட்டு, பஞ்சகுரோச யாத்திரையாக, பொய்யூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய தலங்களுக்குச் சென்று, மறுநாள் காலை, நாகை அடைந்து, கோபுர வாசல் தரிசனம் நடைபெறுகிறது.   அம்பிகை இத்தலத்தில் திருமணப்பருவத்திற்கு முந்தைய கன்னியாக, 'யௌவன பருவ' கோலத்தில் காட்சி தருகிறார். எனவே ஆடிப்பூர விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடி பரணியன்று கொடியேற்றம், பத்து நாள் விழாவாக  வெகு விமரிசையாக நடக்கிறது. ஆரம்ப நாள் மூலவர் அம்மனுக்கு சந்தனக்காப்பு, காணக் கண் கோடி வேண்டும்.  காலையிலும், இரவிலும் அம்மன் வித விதமான அலங்காரத்துடனும், பூதம், ரிஷபம், பால யானை, என்று பல வாகனங்களில்  பரிவாரத்துடன் எழுந்தருளி நகரில் ஊர்வலம் வந்து  அருட்காட்சி அருளுகின்றாள். அம்மன் முன்னும் பின்னும் நாதஸ்வர கலைஞர்களும், ஓதுவார்களும் வாசித்தபடி ,ஓதியபடி வருவர் .நான்கு வீதிகளிலும் மேடை அமைத்து கச்சேரி நடக்க்கிறது. இரவில் கச்சேரி நடந்து ஸ்வாமி கோவிலை திரும்ப அடைய விடிகாலை ஆகி விடும். கச்சேரியை கேட்க பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வந்து விடிய விடிய கேட்டு செல்கிறார்கள். அவரவர் வீட்டு கல்யாணம் போல காலை, மாலை எந்நேரமும் கோவிலில் திரளாக கூட்டம். மக்கள் தங்கள், தங்கள் வீட்டு வாசல் முன் நீர் தெளித்து கோலமிட்டு விமரிசையாக வரவேற்கின்றனர். ஆடிப்பூரம் அன்று காலை அம்மன் அலங்காரமாக கோவில் பிரகாரத்தில் வரும்போது சிறப்பு இசைக் கச்சேரி நடைபெறுகிறது. அம்மன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து அருட்காட்சி தருகிறாள், அப்போது  நீலாயதாக்ஷி அம்மனின் பின்னலங்காரம் மிகவும் விசேஷமாக இருக்கும். அதைக்  காணும் விதத்தில் சுற்றிவர கண்ணாடிகள் வைக்கப்படும். பூப்படைந்த பெண்ணுக்கு நடக்கும் அத்தனை சடங்குகளும் அம்மனுக்கு அன்று நடக்கின்றது, ஆடிப்பூரம் கழிப்பு காலை 1 மணிக்குள் முடியும். இரவில் சிறப்பு  வாண வேடிக்கைகள் நடக்கும். ஆடிப்பூரத்தன்று இரவு ஸ்ரீநீலாயதாக்ஷி அம்மன் வெண்மை நிற ஜரிகை புடைவையை அணிந்து, அருட் காட்சி தருகின்றாள் இது வெள்ளை சார்த்தல் என்றழைக்கப்படுகின்றது. பின்னர் பூரம் கழித்தல் நிகழ்ச்சி,   இரவில் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் இரதத்தில் ஊர்வலம் வருவார் அம்மன் அதைக் காண கண் கோடி வேண்டும்.  வலம் முடித்து உஷ்ணாபிஷேகம் கண்ட பின்னரே அம்பாள் கோயிலுக்குள் எழுந்தருளுகின்றாள். மறு நாள் சரஸ்வதி அலங்காரத்தில் ஊஞ்சல் விழா. பிரசாத படையல் மிகவும் சிறப்பு.  கல்யாண விருந்து போல அன்னதானம் நடைபெறுகின்றது. அனைவரும் தங்கள் வீட்டுக் கல்யாணம் போல வந்து இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். அடுத்து ருத்ராபிஷேகம், சின்ன ரதம், புஷ்ப்பல்லக்குடன் திருவிழா சிறப்பாக நிறைவு பெறுகின்றது. அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான் அருள் செய்த விழா ஆவணி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெறுகிறது. அன்று அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் அதிபத்தர்  உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான்  வெள்ளி ரிஷப வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளுகின்றார் , அவருக்கு  தங்க மீனை படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும்  நிகழ்ச்சி நிகழ்கிறது. அதிபத்த நாயனார் வாழ்ந்த செம்படவர்சேரி தற்போது நம்பியாங்குப்பம் என்றழைக்கப்படுகின்றது.   ஆடி - தை அமாவாசை மற்றும் மாசி மக நாட்களில் சமுத்திர தீர்த்த வாரியும், விநாயகர் சதுர்த்தியின் போது விஸ்வரூப விநாயகர் விழாவும்,  ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம்,  திருக்கார்த்திகை, சிவராத்திரி, முதலான உற்சவங்களும்,   தியாகராஜப் பெருமானுக்குப் பங்குனி உத்திர விழாவும்  இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி சுவாதியன்று நம்பி ஆரூரர் பரவை நாச்சியார் திருக்கல்யாணம், அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் திருவீதி உலா, திருக்கயிலாயக் காட்சி.  மற்ற ஆலயங்களில்  பிரதோஷ காலத்தில்,  சிவபெருமான்  ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் மோகினி வடிவில் பெருமாளும்  உடன் புறப்பாடாகிறார் என்பது சிறப்பு. பிரதோஷ வேளைக்கு முன்பாக, பெருமாளின் மோகினி அவதாரம் நிகழ்ந்ததால், பிரதோஷத்தன்று மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகிறார். இவரை பிரதோஷத்தின்போது மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனாரின் மூலஸ்தானத்திற்குள் பெருமாளை தரிசிக்கலாம்.   பதினெண் சித்தர்களில் ஒருவரான அழுகுணி சித்தரின் ஜீவ சமாதி இவ்வாலயத்தில் அமைந்துள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றது. பௌர்ணமி தோறும் பாயச நைவேத்யம் படைத்து சிறப்பு பூஜை செய்துவழிபடுகின்றனர். “கற்றார் பயில் கடல் நாகைக்காரோணம்” என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு. நாகை காரோணத்தை நினைப்பவரை விட்டு திருமங்கை விலக மாட்டாள் என்பது அப்பர் வாக்கு. காளமேகப் புலவர் இவ்வூருக்கு வந்தபோது பசியால், வீதியில் பாக்கு  விளையாடும் பாலகர்களை நோக்கிப் "சோறு எங்கு விக்கும்?" என்று கேட்டார். அச்சிறுவர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினர். (விற்கும் என்பது பேச்சு வழக்கில் விக்கும் என வழங்குதலும் உண்டு.) புலவர் சிறுவர்கள் மீது கோபங்கொண்டு, அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு சுவரொன்றில் "பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு..." என்று எழுதி நிறுத்தி விட்டு, பசி தீர்ந்து எஞ்சிய பகுதியைப் பாடி முடிப்போம் என்று சென்று, பசியாறி வந்து பார்க்கும் போது, அப்பாடலின் இரண்டாமடி "நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை" என்று எழுதி இருப்பதைக் கண்டு, சிறுவர்களின் கல்வியறிவை மெச்சிச் சென்றார் என்பது தனிப்பாடல் திரட்டில் காணப்படும் வரலாறு.   தூமென் மலர்க்கணை கோத்தூத்தீ வேள்வி தொழிற் படுத்த காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோண நின் நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் சாமன்று உரைக்கத் தருதிகண் டாய் எங்கள் சங்கரனே    என்று அப்பர் பெருமான் பாடியபடி உயிர் பிரிகின்ற காலத்து நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து நாமத்தை பரவ அருள் புரிய வேண்டும் என்று கடல் நாகைக் காரோண  சுந்தர  விடங்கரை வேண்டுவோம்.  எம்பெருமான் சுந்தர விடங்கராக அருள் பாலிக்கும் திருநாகைத்தலத்தை தரிசித்தோம் வாருங்கள் இனி உன்மத்த நடன நக விடங்க செண்பகத் தியாகேசகரை  திருநள்ளாற்றில் தரிசிக்கலாம் அன்பர்களே.                    34. திருநள்ளாறு – ஸ்ரீஉன்மத்த நடன நக விடங்க செண்பகத் தியாகேசர் []   அடுத்து நாம் தரிசிக்க இருக்கின்ற விடங்கத்தலம் திருநள்ளாறு ஆகும். இத்தலத்தின் சிறப்பு பச்சைப் பதிகம் பெற்றதாகும். அது என்ன பச்சைப் பதிகம் சிவபெருமானின் அருளினால் திருநள்ளாறு பதிகம் தீயில் இட்ட போதும் எரியாமல் இருந்ததால் இத்தலப் பதிகம் பச்சைப் பதிகம் என சிறப்புப் பெற்றது. வாருங்கள் முதலில் அவ்வரலாறு என்ன என்று காணலாம். கூன்பாண்டியன் என்ற மன்னன் மதுரையை ஆண்டு வந்தான். அப்போது மதுரைப் பகுதியில் சமணர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்தது. எனவே மன்னனும் சமணப் பற்றுடையவானாகினான். ஆனால் அரசி மங்கையர்க்கரசியார் மட்டும் அரசன் இசைவு பெற்று சைவ சமயத்தை பின்பற்றியிருந்தார். சீகாழிப்பதியில் அவதரித்த திருஞான சம்பந்தப்பெருமான், அம்மையின் ஞானப்பால் உண்டு  சிவஞானம் பெற்ற செய்தியை அறிந்த மங்கையர்க்கரசியார் அமைச்சர் குலச்சிறையாரை திருமறைக்காட்டிற்கு அனுப்பி அப்பிள்ளையாரை மதுரைக்கு வரவழைத்தார். ஆளுடையபிள்ளையாரும் மதுரைக்கு வந்து ஒரு மடத்தில் தங்கியிருந்தார். ஞானப்பிள்ளையார் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் தீயிட்டனர். அதனால் ஈசன் பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோயை அளித்தார். சமணர்கள் மற்றும் சம்பந்தப்பெருமான் இருவரும் அரசனின் நோயை தீர்க்க முயன்றனர். சமணர்கள் செய்த வைத்தியம் பலனளிக்கவில்லை மாறாக அரசனது நோய் அதிகமாகியது. ஞானப்பிள்ளையார் திருநீற்றுப் பதிகம் பாடி ஈசனது திருநீறு பூசி அரசனது நோயை போக்கினார். அது வரை கூன் பாண்டியனாக இருந்த மன்னனை நின்றசீர் நெடுமாறனாக்கினார். தோற்ற சமணர்கள் பிள்ளையாரை அனல் வாதத்திற்கும், புனல் வாதத்திற்கும் அழைத்தனர். சமணர்களுடன் அனல் வாதம் செய்த போது சம்பந்தர் தாம் அருளிய பதிகங்கள் அடங்கிய ஓலை சுவடிகளில் ஈசனை வேண்டி கயிறு சாத்திப் பார்த்ததில் திருநள்ளாற்றின் இப்பதிக ஓலை கிடைத்தது. அதனை "தளரிளவளரொளி" என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே தீயில் இட்டார். என்னே அதிசயம்! அந்த ஓலை எரியாமல் அப்படியே பச்சையாகவே இருந்தது. எனவே அப்பதிகம் "பச்சைப் பதிகம்" என்று அழைக்கப் படுகின்றது. சமணர்கள் இட்ட ஓலை எரிந்து சாம்பலாகியது. இவ்வாறு சைவ சமயம் மீண்டும் தழைத்தோங்கியது. இப்பதிகத்தின் முதல் பாடல் போக மார்த்த பூண்முலையாள் தன்னொடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே! பொருள்: போகமார்த்த பூண்முலையாளை தன் இடபாகத்தில் கொண்ட எம்பெருமான், வெள்ளை எருது மேல் எழுந்தருளும் எம்பெருமான் தனது கோவண ஆடையின் மேல் அணிந்துள்ளது அரவக் கச்சை. அப்பெருமான் எழுந்தருளியுள்ள தலம் நள்ளாறு" என்று திருநள்ளாற்றிலே எழுந்தருளியிருக்கும் "போக மார்த்த பூண் முலையாள் உடனுறை தர்ப்பாரண்யேஸ்வர சுவாமியை" குறித்து பாடிய பதிகம் ஆகும் இத்தகைய சிறப்புடைய இத்திருத்தலத்தையும் இத்தலத்தில் அருள் பாலிக்கும் போகமார்த்த பூண் முலையாள் உடனாய தர்ப்பாரண்யேஸ்வரப் பெருமானையும்,  நீலோத்பலாம்பாள் உடனாய  நக விடங்க செண்பக தியாகேசரையும் தரிசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே. புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் பகுதியில் திருநள்ளாறு அமைந்துள்ளது. காரைக்காலுக்கு மேற்கே 5 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து  45 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 23 கி.மீ தொலைவிலும்  இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தின்  கணபதி "சொர்ண விநாயகர்" எனப்படுகிறார், இக்கோவிலுக்கு திருப்பணி செய்து வந்த மன்னன் பொருளில்லாது தவித்த போது விநாயகப் பெருமானே மன்னனுக்கு பொற்காசுகளை கொடுத்து திருப்பணியை முடிக்கச் செய்ததால் இத்தலத்து விநாயகருக்கு இப்பெயர். இத்தலத்து முருகனை அருணகிரி நாதர்  தமது திருப்புகழில் பாடியுள்ளார். நவ கிரகத் தலங்களுள் சனி பகவானின் தலமாக விளங்கும் சிறப்புடையது இத்தலம்.   நளனுக்கு நன்னெறி காட்டியதால் நள்ளாறு என்னும் பெயர் ஏற்பட்டது என்பர்.  நளன் சனியின் பிடியிலிருந்து விலகி ஆறுதல் பெற்றதனால் திருநள்ளாறு. மேலும் அரசலாறுக்கும் நூலாற்றுக்கும் நடுவில் இருப்பதால் இப்பெயர் வந்தது என்பர். இத்தலத்தின் மற்ற பெயர்கள் பிரமன் வழிபட்டதால் "ஆதி புரி", தல விருட்சம் தர்ப்பை என்பதால் "தர்ப்பாரண்யம்", நீலோத்பலாம்பாள் உடனுறை நக விடங்க செண்பக தியாகர் எழுந்தருளியிருப்பதால் "நக விடங்க புரம்" என்றும், நளன் வழிபட்டதால் "நளேச்சுரம்" என்றும், விஷ்ணு வழிபட்டதால் "விஷ்ணு புரம்" என்றும் இந்திரன் வழிபட்டதால் "இந்திரபுரி" என்றும் அழைக்கப்படுகின்றது. புராண காலத்தில் படைப்புக் தொழிலால் செருக்கடைந்த பிரம்மா, சிவபெருமானால் தண்டிக்கப்பட்டு சிருஷ்டி தொழிலை இழந்தார். எம்பெருமானை வேண்டி பூசனை புரிவதற்காக பிரம்மன் வந்த இடமே தர்ப்பாரண்யம் என்ற இத்தலம் ஆகும்.     அந்தணர்களின் மரபுப்படி தர்ப்பைகளால் ஆன கூர்ச்சத்தில் சிவபெருமானை ஆவாகனம் செய்து பிரம்மா பூஜை செய்தார். அந்த கூர்ச்சம் வைத்த இடத்தில் பிரம்மாவினுடைய பக்திக்கிரங்கி சிவபெருமான் கூர்ச்சத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாய் தோன்றினார். எனவே இலிங்கம் தர்ப்பைக் கொழுந்துகள் சேர்ந்தது போல் உள்ளது. பிரம்மன் அங்கு ஒரு ஆலயம் அமைத்தான் பிரம்மனைத் தொடர்ந்து மஹா விஷ்ணுவும், விராட மன்னன் போஜன், சிகண்டி, துரோணர், கௌதம ரிஷி, அகஸ்திய மகரிஷி, கலிங்க மன்னன், அஷ்டதிக் பாலகர்கள் எண்மரும், நளனும் இத்திருத்தலத்தில் பூஜைகள் செய்து புண்ணியப் பேறு பெற்றனர். இவ்வரலாறுகள் எல்லாம் இக்கோவிலின் கூரையில் மிக அழகிய ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் அம்மையின் சன்னிதிக்கெதிரே திருவிளையாடற் புராணத்தின் ஒவியங்களும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. நக விடங்க செண்பக தியாகர்:  தர்ப்பாரண்யேஸ்வர்ருக்கு வலப்புறம் திருவோலக்க மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய தியாகராஜரின் சந்நதி அமைந்துள்ளது. இதனுள் தியாகராஜர் பெரிய வெள்ளி விதானத்தின் கீழ் வெள்ளி மஞ்சத்திலுள்ள சிம்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு முன்பாக இரண்டு வீரகட்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. அம்பாள் நீலோத்பலாம்பாளாக திரிபங்கியாக வலதிருக்கரத்தில் நீலோத்பல மலரை ஏந்திய கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். இவருக்கு நகவிடங்கர் என்ற பெயர் வழங்குகின்றது. நாகவிடங்கர் என்ற பெயரே, மருவி நகவிடங்கர் என வழங்குகிறதென்பர். 'நாகம் பூண்டு கூத்தாடு நள்ளாறனே' என்று தேவாரம் குறிப்பதால் இவர் நகவிடங்கர் என்று அழைக்கப்பட்டார் என்பர். மேலும் நகர் என்பதற்கு மலை என்பது பொருள். இவர் மலைபோல கம்பீரமாக இருப்பதால் இப்பெயர் பெற்றார் என்பர். இவருக்குச் 'செண்பகத்தியாகர்' என்பதும் சிறப்புப் பெயராகும் வைகாசி மாதம் பூரட்டாதியில் கொடியேற்றி தொடர்ந்து வசந்தவிழா தேரோட்டம் பக்தக்காட்சி ஆகியன நடைபெறுகின்றன. விழாவில் தியாகராஜர் பெரிய தேரிலும், நீலோத்பலாம்பாள் சிறிய தேரிலும், மற்றும் முருகர், கணேசர், சண்டிகேசர் என்று பஞ்சமூர்த்திகளும் வலம் வருவது  கண்கொள்ளாக் காட்சியாகும்.  ஆலயத்தின் வடமேற்கில் தியாகராஜர் எண்ணெய்க்காப்பு (அபிஷேகம் கொண்டருளும்) பெரிய மண்டபம் உள்ளது. வசந்த மண்டபம், திருவோலக்க மண்டபம் ஆகியனவும் உள்ளன. வசந்த விழாவின் போது ஆலயப் பிராகாரத்தில் தியாகராஜர் வலம் வந்து எட்டு திசையிலும் கொடியேற்றி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார். மேலும் திருவிழாவின் போது தியாகராஜர் இக்கோயிலில் அமைந்துள்ள இடையன்- இடைச்சியருக்குப் பக்தகாட்சி அருளும் ஐதீகமும் நடைபெறுகின்றது. கோயிலுக்கு ஒரு கி.மீ. தொலைவில் சம்பந்தரோடை என்ற ஒரு ஓடை உள்ளது. இங்கு மலரும் செங்கழுநீர் பூக்களைக் கொண்டே தியாகராஜருக்குத் தினசரிப் பூஜைகள் நடைபெறுகிறது  என்று கூறுகின்றனர். இங்குள்ள தியாகருக்குப் 'புத்திரத்தியாகர்' என்பதும் பெயராகும், நெடுநாளாகப் புத்திரப் பேறு இன்றி வருந்திய இந்திரன் இவரை நோக்கித் தவம் புரிந்தான். இப்பெருமான் அவனுக்கு இந்திரலோகத்தில் இன்பத்திற்கு மட்டுமே இடமுண்டு. இனவிருத்திக்கு இடமில்லையாதலால் ஆயிரம் யாகங்களைச் செய்து முடித்து இந்திரனாகும் தகுதி பெற்றிருந்த ஒரு மன்னனை அவனுக்கு மானச மைந்தனாகக் கொடுத்தார். அவனே ஜயந்தன் என்ற இந்திர குமாரனாவான்,  ஜயந்தனும் இவரை வணங்கிப் பேறுபெற்றான் என்பர். மரகத விடங்கர்:  இவருடைய சந்நதியில் ஜாதிப்பச்சைக் கல்லாலான அளவில் பெரிய  மரகதலிங்கம் அமைந்துள்ளது. இம்மரகத விடங்கருக்கே  ஐந்து கால நாட்பூஜைகள் நடைபெறுகின்றன.  தியாகப்பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகின்றது. உன்மத்த நடனம் : இத்தலத்தில் எம் ஐயன் ஆடும் நடனம் உன்மத்த நடனம், உன்மத்தம் என்பதற்கு பித்து பிடித்தவன் என்று பொருள், எனவே இவரின் நடனம் மேலும் கீழுமாக மாறி மாறி ஆடும் நடனமாகும். வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் போது தியாகப்பெருமான் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் போதும்,  தேருக்கு எழுந்தருளும் போதும், இடையனுக்கு காட்சி தரும் போதும் யதாஸ்தானத்தை விட்டு எம்பெருமான் வரும் போது இத்திருநடனத்திலேயே வந்தருளுவார். இடையனுக்கு காட்சி கொடுத்த லீலை :  எம்பெருமானுக்கு ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லை தூய பக்தியையே அவர் விரும்புகின்றார் என்பதை பல தலங்களிலே  தனது திருவிளையாடல்களின் மூலம் உணர்த்தியுள்ளார் அத்தகைய ஒரு திருவிளையாடல் தான் இடையனுக்கு காட்சி கொடுத்த லீலை. தியாகருடைய அபிஷேகத்திற்கு ஒரு இடையன் தினமும் பால் கொடுத்து வந்தான். ஒரு நாள் கோவில் அதிகாரி அப்பாலை தனது உபயோகத்திற்காக எடுத்து கொண்டுவிட்டார். அன்றைய தினம் பார்த்து அரசன் கோவிலுக்கு அபிஷேகத்தை பார்வையிட வந்தவர், குருக்கள் பால் அபிஷேகம் செய்யாததைக் கண்டு ஏன் என்று வினவ, அபிஷேகப் பாலை இடையன் கொடுக்கவில்லை என்று கோவில் அதிகாரி பொய் கூறினான். கோபம் கொண்ட மன்னன் இடையனைக் கூப்பிட்டு விசாரிக்க, அவன் தான் பாலை கொடுத்ததாகக் கூறினான். மன்னன் நீ பால் கொடுத்ததற்கு யார் சாட்சி என்று வினவ, இடையனும், அந்த தியாகப்பெருமானே சாட்சி என்றான். அப்படியென்றால் உனது இறைவனை சாட்சிக்கு அழை என்று மன்னன் கூற, இடையனும் மனமுருகி தூய பக்தியுடன் பெருமானையே சாட்சிக்கு அழைத்தான். தனது அன்பனுக்காக அங்கே தோன்றிய எம்பெருமான் தவறு செய்த அதிகாரியின் தலையை கொய்து உண்மையை அரசனுக்கு உணர்த்தினார். பின் இடையனின் வேண்டுகோளுக்கிணங்கி கோவில் அதிகாரியை மன்னித்து உயிருடன் எழுப்பித் தந்தார். திருக்கோவிலின் வாயிலில் இடையன், இடையனின் மனைவி மற்றும் கோவில் அதிகாரியின் சிலைகள் இன்றும் உள்ளன. வைகாசி பிரம்மோற்சவத்தின் பதினெட்டாம் நாள் இடையனுக்கு காட்சி கொடுத்த இந்த லீலை இப்போதும் நடத்தப்படுகின்றது. தர்ப்பாரண்யேஸ்வர்ருக்கு எதிரே உள்ள கொடிமரம் சற்று விலகி உள்ளது, பொய் கூறிய அதிகாரியின் தலையைக் கொய்ய சூலத்தை எறிந்த போது அது செல்ல ஏதுவாக கொடி மரம் விலகியது என்பது ஐதீகம்.   சனீஸ்வர பகவான்: நவகிரகத் தலங்களுள் சனித்தலமாகவும் விளங்குகிறது இத்தலம். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவர் சனி. சூரியனின் இன்னொரு மனைவியான சஞ்ஞிகையின் பிள்ளைகளை சாயாதேவி கொடுமைப் படுத்தினாள். சஞ்ஞிகையின் மகனான இயமன் தன் சிறிய தாயான சாயாதேவியைக் காலால் உதைக்க, அவன் கால் முறியுமாறு சபித்தாள். இயமன் சனியை அடிக்க அதில் சனியின் கால் முறிந்தது. தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால் சனிக்கு ஒரு கண் பறிபோனது. எனவே சனி வேகமாகச் செல்ல இயலாது. அவனுக்கு மந்தன், சனைச்சரன் என்ற பெயர்களும் உண்டு. மெல்லச் செல்பவன் என்று பொருள். நான்கு கரங்களும் காகத்தை வாகனமாகவும் கொண்டவர். ஜாதகத்தில் ஆயுள் காரகனாக விளங்குபவர்.  .நவக்கிரகங்களுள் சனியைப் போல கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை என்று பழமொழி உள்ளது. அத்தகைய சனி பகவான் இத்தலத்தில் சிவபெருமானின் கருணையினால் சனீஸ்வரன் என்ற பட்டம் பெற்று, நளனுக்கு அருளி, ஆயுதங்கள் இல்லாமல் தனியாக அனுகிரக மூர்த்தியாக விளங்குகின்றார். மற்ற கிரகங்களுடன் இல்லாமல் தனியாக சனி பகவான் மட்டும் எழுந்தருளியுள்ள தலம் இத்தலம். மற்ற தலங்களைப் போல் அல்லாமல் இங்கு சனிபகவானுக்கு ஐந்து கால பூஜை நடைபெறுகின்றது. சனியின் மற்ற பெயர்கள் வருமாறு மந்தன், காரி, கரியோன், முடவன், அந்தன், நீலன், கதிர்மகன், கீழ்மகன், பங்கு, மேற்கோள், சௌரி, முதுமகன், சந்தில், சாவகன் என்று சேந்தன் திவாகரம் செப்புகின்றது. சனி பகவானுக்குரிய நாள் சனிக்கிழமை, தானியம் எள், நெய் விளக்கேற்றி  எள் படைத்து வழிபட்டால்  சனிபகவானின் கருணையை பெறலாம்.  சனி பகவான் இத்தலத்திற்கு வந்து கோவில் கொண்ட நளனின் கதையை சிறிது பார்ப்போமா? நளன் சரித்திரம்:  மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது தாங்கள் இவ்வளவு துன்பம் அனுபவிக்கின்றோமே என்று வருந்திய போது  வேத வியாசர்  தங்களை விட கொடிய துன்பத்தை அடைந்தான் நளன்,  என்று நளனின் சரித்திரத்தை அவர்களுக்குக் கூறுகின்றார். ஒரு காட்டில் ஒரு வேடனும் அவன் மனைவியும் ஒரு குகையில் வசித்து வருகின்றனர். ஒரு நாள் ஒரு முனிவர் அங்கு வருகின்றார். தங்களை நாடி வந்த முனிவரை அவ்வேடுவ தம்பதியினர் வரவேற்று சிறப்பாக உபசரித்தனர்.  இரவாகிவிட முனிவரையும் தன் மனைவியையும் அச்சிறு குகையினுள் உறங்கச் சொல்லிவிட்டு, வேடன் குகைக்கு வெளியே உறங்கினான். இரவு ஏதோ துஷ்ட மிருகம் வந்து அவனை கொன்று தின்று விட்டு சென்றது. காலை வேடுவச்சியும் தன் உயிரை நீத்தாள். அவர்கள் இருவருமே நளன், தமயந்தியாகவும், முனிவர் அன்னமாகவும் பிறந்தனர்.     நில வளமும் நீர் வளமும் நிறைந்த நிடத நாட்டு மன்னனாக நளன் பிறந்தான்.  வீரமும், ஈரமும், அழகும், ஆற்றலும், தயையும் கொடையும் நிரம்பியவனாக விளங்கினான். விதர்ப்ப நாட்டு மன்னன் மகளாக  தமயந்தி பிறந்தாள்.  மிகவும் அழகும் குணமும் நிரம்பியவளாக விளங்கினாள். அன்னமாகப் பிறப்பெடுத்த முனிவரால் இருவரும் காதல் வயப்பட்டனர். தமயந்தியின் சுயம்வரத்தில் தேவர்கள் நால்வர் மற்ற மன்னர்களுடன் நளனைப் போல் உருவெடுத்து அமர்ந்திருந்தனர். கண்கள் இமைத்தலும், பாதங்கள் பூமியில் பதிதலும், சூடிய மாலை வாடுதலும் மனித இயல்பல்லவா? இதை வைத்து தமயந்தி நளனுக்கு சரியாக மாலை சூடினாள். இதனால் கோபம் கொண்ட கலி புருஷன் பன்னிரண்டு வருடம் கழித்து ஒரு நாள் சரியாக புறங்கால்களை கழுவாததால் அவனைச் சேர்ந்தான். நளனது தமையன் முறை கொண்ட புட்கரனுடன் நடந்த சூதாட்டத்தில் தன் செல்வம், படை, அரச பதவி எல்லாவற்றையும் தோற்ற நளன், தன் மனைவியுடன் காடு ஏகினான். மனைவியுடன் ஒரு பாழடைந்த மண்டபத்தில் அவர்கள் இருந்த போது இரண்டு சுவர்ண பறவைகள் அங்கு வர, தமயந்தி அவற்றைப் பிடித்து தர கேட்க அவற்றின் பின்னே நளன் சென்றான். அப்பறவைகள் அவன் அரையில் உடுத்தியிருந்த ஒற்றை ஆடையையும் பறித்துக்கொண்டு புஷ்கரன் ஆடிய பகடைக்காய்கள் நாங்கள் என்று பறந்து சென்று விட்டன. வேறு வழியில்லாமல் தனது மனையின் ஆடையை கிழித்து வாங்கி உடுத்திக் கொண்டான். தன்னுடன் தமயந்தியும் ஏன் துன்பப்பட வேண்டும் என்று நினைத்து அவளை விட்டு விலகினான். கார்கோடகன் என்ற பாம்பு தீண்ட அவனது உடலும் கருத்தது தன் சுய உருவத்தை இழந்தான். அப்பாம்பு அவனுக்கு ஒரு உடையை கொடுத்து சமயம் வரும் போது நீ இவ்வாடையை அணிந்தால் உன் பழைய உருவை அடைவாய் என்று கூறியது. பின்னர் நளன் அயோத்தி அரசனிடம் சென்று தேரோட்டியாக பணி புரிந்து வந்தான். இதற்கிடையில் தமயந்தி மிகவும் தொல்லைக்கு ஆளாகி இறுதியாக தன் தந்தையின் நாட்டை அடைந்தாள். தன் கணவன் அயோத்தியில் அடையாளம் தெரியாமல் உருமாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்தாள். அவள் தந்தை நளனுடன் அவளை சேர்த்து வைப்பதற்காக மீண்டும் சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்து, அதற்கு அயோத்தி மன்னனையும் அழைத்தார். தேரோட்டி வந்த நளன் அரசனுக்கு தேரோட்டும் கலையைக் கற்றுத்தர அரசனும் நளனுக்கு சூதாடும் போது வெல்ல உதவும் கணிதக்கலையை கற்றுத்தந்தான்.  உண்மையுணர்ந்து தன் மனைவி மக்களுடன் சேர்ந்து புஷ்கரனுடன் மீண்டும் சூதாடி இழந்த இராச்சியத்தை திரும்பப் பெற்று நிடத நாட்டை ஆண்டு வரலானான். ஆனாலும் அவன் சித்த பிரமை பிடித்தவன் போல் இருப்பதை கேள்வியுற்று நாரத முனிவர் அவனிடம்  வந்து தீர்த்த யாத்திரை மேற்கொண்டு தென்னாடு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபடுமாறு அறிவுறுத்தினார். அதன் படி நளனும் காளிந்தி, சோணை நதி, காசி, கலிங்கேச்சுரம், கழுக்குன்றம், அண்ணாமலை, திருப்பருப்பதம், விருத்தாசலம், தீர்த்தகிரி, முக்கூடல், சிதம்பரம், சீர்காழி, புள்ளிருக்கு வேளூர், திருவெண்காடு, திருப்பனந்தாள், திருக்கடையூர் தரிசனம் செய்து கோகர்ணத்தை அடைந்து ஒரு மாதம் தங்கி சிவபெருமானை வழிபட்டான். அங்கு பரத்துவாச முனிவர் தர்ப்பாரண்யம் அடைந்து வினை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தினார். தர்ப்பாரண்யம் வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட சனி நீங்கியது. நீங்கிய சனியும் கோபுரத்தின் இடப்பக்கத்தில் கோவில் கொண்டான். நளன் விடுதலை பெற்று முதலில் விநாயகரை தொழுது தானங்கள் பல செய்தான். பிறகு சிவபெருமான் தரிசனம் அளித்தார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தினால் நளன் இறைவனிடத்தில் வரங்களை வேண்டினான்.  இங்கு என்னைப்போல் ஸ்ரீசனிபகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு ஸ்ரீசனிபகவான் அருள் செய்து துன்பம் போக்கி நலம் பல செய்திடல் வேண்டும் என்று ஒரு வரமும். இரண்டாவதாக இத்தலத்தின் ஒருகாத விஸ்தீரணம் பரப்புகளில் சனிபகவான் அனுக்கிரஹ பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்று ஒரு வரமும் மூன்றாவதாக, இப்பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் என் பெயரில் விளங்கிட வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் அவ்வாறே அருளினார். பின்னர் நளன் திருப்பணிகள் செய்து முடித்து திருக்கோவில் அமைத்து, தன் பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்து மகுடாகமத்தில் உள்ளபடி பூசை, திருவிழா நடத்தினான்.  வைகாசி மாத புனர்பூச நாளில்  கொடியேற்றி, தேர்த்திருவிழா நடத்தி, வைகாச விசாக நாளில் தீர்த்தவாரியுடன் சிறப்பாக திருவிழா கொண்டாடினான். ஆகையால் இங்கு நளனுக்கு விமோசனம் அளித்தபடியால் இறைவனுக்கு ஸ்ரீநளேஸ்வரர் என்ற பெயரும் திருக்குளத்திற்கு நளத்தீர்த்தம் என்ற பெயரும் இவ்வூருக்கு திருநள்ளாறு என்ற பெயரும் விளங்கலாயிற்று.  இவ்வரலாற்றை திருஞானசம்பந்தர்   விளங்கிழை மடந்தை மலைமங்கை யொருபாகத் துளங்கொள விருத்திய வொருத்தனிட மென்பர் வளங்கெழுவு தீபமொடு தூப மலர்தூவி நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே என்று பாடியுள்ளார். நளன் சரித்திரம் மிகவும் பெருமை வாய்ந்தது. இச்சரிதத்தை கேட்பவர்களுக்கு சனி பகவானால் எவ்வித துன்பமும் ஏற்படாது. சனி தோஷத்திற்கு பரிகாரம் செய்பவர்கள் முதலில் நளதீர்த்தம் சென்று அத்தீர்த்த குளத்தை வலமாக பிரதட்சிணம் செய்து குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி தமயந்தி குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும். பின்னர் நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ ஒன்பது முறை ஸ்நானம் செய்து தலை முழுக்காட வேண்டும். பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக்குளத்திலும் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். பிறகு கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து ஸ்ரீசொர்ண கணபதியை முதலில் வழிபட்டு ஸ்ரீசுப்ரமணியர் சன்னதியை தரிசனம் செய்து பின், மூலஸ்தானத்தில் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரருக்கு அர்ச்சனை பூஜைகள் செய்து ஸ்ரீ தியாகேசர் சன்னதியை தரிசிக்க வேண்டும். பிறகு இரண்டாவது முறை வலமாக வந்து அம்மன் சன்னதியை அடைந்து அர்ச்சனை பூஜைகள் முடித்துக்கொண்டு கடைசியாக சனிபகவான் சன்னதியில் வந்து வழிபடுதல் வேண்டும். அவரவர்களுடையே வசதிக்கும், சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, தீபாராதனை, அபிஷேகம், ஜபம், ஹோமம், தர்ப்பணம், தானம் முதலியன செய்யலாம். காலை, மாலை இரு வேளையிலும் சனிபகவானை நவப்பிரதட்சிணம் செய்வது நல்ல பயன் தரும்.  2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப் பெயர்ச்சி இத்தலத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. சனி தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் குறிப்பாக சனிக்கிழமை வந்து நள தீர்த்தில் எண்ணெய் தேய்த்து நீராடி, சனிபகவானை வழிபட, அத்தோஷத்திலிருந்து விடுபடுவர் என்பது ஐதீகம். எனவே சனிக் கிழமைகளில் பக்தர்கள் இக்கோவிலில் குவிகின்றனர். பிரம்மோற்சவத்தின் போதும் சனிப்பெயர்ச்சியின் போதும் சனி பகவான் தங்க காக வாகனத்தில் காட்சி தந்து அருள் பாலிக்கின்றார். திருநள்ளாற்றின் சிறப்புமிகு தீர்த்தங்கள்: ஆதி காலத்தில் திருநள்ளாற்றில் 13 தீர்த்தங்கள் இருந்தன என்று தலபுராணம் கூறுகின்றது. பிரம்மன், கலைமகள், அன்னப்பறவை, இந்திரன், திசைபாலர் எண்மர் தத்தம் திசைகளில் லிங்கமும் தீர்த்தமும் அமைத்தனர். மேலும் திருமால், காசிபன், வாயு, நளன், அகத்தியன் உருசி, போஜன், பாஞ்சாலன் ஆகியோரும் நள்ளாறரை வழிபட்டுள்ளனர்.  இத்தலத்தின் தீர்த்த நீர் பட்டாலே வினை போம் என்பது  ஐதீகம்.  மஹா விஷ்ணு வழிபட்ட போது அவர் பெயரால் உருவாக்கியது விஷ்ணு தீர்த்தம். பிரம்மனுக்கு விரும்பிய வரத்தை அளித்து சிருஷ்டிகர்த்தாவாக மீண்டும் நியமித்தார் எம்பெருமான். எனவே பிரம்மன் தன் தண்டாயுதத்தால் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு உருவாக்கிய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகும். இது கோயிலுக்கு நேர் கிழக்கில் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராட பிரம்மபதம் கிட்டும் என்பது ஐதீகம். பிரம்மனோடு கூட நாமகளாம் சரஸ்வதியும் சிவபூஜை செய்து நலம் பல பெற்றாள். சரஸ்வதி(வாணி) தீர்த்தம் அம்மன் சன்னதிக்கு எதிரே மதிலை ஒட்டி அமைந்துள்ளது. இதில் நீராடுபவர்களுக்கு அனைத்து கலை ஞானங்களும் கிட்டும். பேச்சுதிறன் பெற  வாணி தீர்த்தம் ஆடுக என்கிறது தலபுராணம்.  பிரம்மனின் வாகனமான அன்னப்பறவையும் சிவபூஜை செய்து சிறப்புகளை அடைந்தது. ஹம்ஸ தீர்த்தம் ஆலயத்திற்கு வடக்கில் அமைந்துள்ளது. அன்ன தீர்த்தம் பசுக் கொலை பாவமும் தீர்க்கும். ஆவணி பௌர்ணமி மூழ்க குறைகள் நீங்கும்.  இத்தலத்தின் மற்ற தீர்த்தங்கள் தெற்கு மட விளாக குளம் மற்றும் நள தீர்த்தம் ஆகும். நள தீர்த்தத்தில் நீராட சகலவிதமான துன்பங்களும் அனலிடைப்பட்ட மெழுகு போல் மறைந்து விடும். அருகில் நளனுக்காக சிவபெருமான் தன் சூலாயுதத்தால் கங்கையை வரவழைத்த நளகூபம் அமைந்துள்ளது. இதில் யாரும் நீராடுவதில்லை. இறைவன் அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  பாராய்க் கனலாய் நீராகிப் பகரும் காலாய் வானாகிச் சீரார் தருப்பை வனமூலம் சிறந்த முளையாய்ச் செழுங்கனியாய் வேராய் வித்தாய் அடங்காத வெவ்வே ருவாய் உருவாகிப் பேராய் என்நா வினில்ஊறும் பெம்மான் எனவும் பிறப்பறுமே   என்று பாடல் பெற்ற இத்தலத்தின் மகிமையைப்பற்றி கூறும் புராணம் ஒன்று தமிழில் உள்ளது.  அதில் உள்ள சில வரலாறுகள். அசுவமேத யாகம் செய்த கலிங்க நாட்டு அரசனைக் காண அந்தணன் ஒருவன் சென்றார். விதி வசத்தால்  அவர்  காத்திருப்பதை அரசன் மறந்துவிட்டான். வெகு நேரம் காத்திருந்த அந்தணர் கோபமுற்று அரசனும் அவனது மனைவி மக்களும் காட்டு யானைகளாக மாற சாபம் கொடுத்தார். மன்னனும், மனைவி மக்களும் காட்டு யானைகளாக  காட்டில் திரிந்து கொண்டிருந்தனர். நாரதமுனிவர் அவர்களை சந்தித்து உண்மை நிலைமையை  உணர்த்தி, சாப விமோசனம் பெற  திருநள்ளாறு செல்ல  பணித்தார் அவர்களும்  திருநள்ளாறு சென்று மாசி மக  நாளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி  இறைவனை துதித்து  சாப விமோசனம் பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தனர். கோதாவரி நாட்டு மன்னன் தூயகண்டவர்மன் புத்திர காமேஷ்டி யாகம் செய்து மகப்பேற்றை அடைந்தான். அதற்காக அவன் அந்தணர்களுக்கு பல்வேறு தானங்கள் செய்தான். அப்போது இரு அந்தணர்களுக்கிடையே ஏற்பட்ட பூசலில் ஒரு பசு மாட்டை கொன்று விட்டனர். அதனால் அவர்களுக்கு கோஹத்தி பாவம் ஏற்பட்டு கானகத்தில் அலைந்து கொண்டிருந்தனர்.   உரோசம முனிவர் திருநள்ளாறு வந்து ஆங்கு காலனை காலாலுதைத்த முக்கண் கடவுளை வணங்குமாறு அறிவுரை கூறினார். அவர்கள் திருநள்ளாறு வந்து  கோவிலின் அருகில் நின்று கொண்டிருந்தனர். தீர்த்தங்களில் நீராடி வருபவர்களின் சிரசிலிருந்து வீழ்ந்த நீர் அவர்களின் மேல் பட அவர்களின் பாவம் நீங்கியது.  அவர்கள்  அத்தீர்த்தங்களில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி அவரின்  திருவருள் பெற்று சிவலோகம் அடைந்தனர்.  ஒரு சமயம் அவந்தி நாட்டு மன்னன் உருசிராஜன், பாரத்வாஜ முனிவரை அணுகி வணங்கி, தானங்களில் சிறந்தது எது என விளக்குமாறு வேண்டினான். அதற்கு அவர் தானங்களில் சிறந்தது அன்னதானம். அதைவிடச் சிறந்தது காலமறிந்து அன்னதானம் அளித்தல், அதைவிடச் சிறந்தது காவிரி நதி தீரத்தில் அன்னதானம் அளித்தல். அதைவிட உயர்ந்தது சிவாலயத்தில் அன்னம் பாலித்தல், அச்சிவாலயங்களுள் திருநள்ளாறு ஆலயத்தில் அன்னதானம் அளித்தால் அதுவே உலகில் உயர்ந்தது என்றார். அத்தலத்தில் முசுகுந்தர் விடங்கப்பெருமானை நிறுவியுள்ளார், அவரை வணங்கி பின்னர் கோபுரத்து சனி பகவானை பூசை செய் உன் வினை தீரும் என்றார்.  அவ்வாறே உருசிராஜனும் திருநள்ளாறு சென்று தனுர் மாத பௌர்ணமியில் அன்னதானங்களோடு அடியவர்களுக்கு  வேண்டுவன கொடுத்து இறைவனைத் துதித்தான்.  இறைவனும் மகிழ்ந்து பல்வேறு வரங்கள் தந்து மறைந்தான்.  காம்பீலி நாட்டில் வாழ்ந்த ஒரு வணிகனின் இரு மைந்தர்கள் விதி வசத்தால் பரத்தையர் பால் சென்று செல்வம் எல்லாம் இழந்து, களவாடி பிடிபட்டு சிறை சென்று, அங்கிருந்து தப்பி கானகம் சென்று அலையும் காலத்தில் ஒரு அந்தணர் அவர்களுக்கு நற்புத்தி கூறி திருநள்ளாறு செல்லுமாறு அறிவுறுத்த அவர்களும் திருநள்ளாறு வந்து முக்குளத்தில் நீராடி மூன்று மாதம் நள்ளாற்றில் தங்கி அங்கேயே மரணமடைய, திருநள்ளாற்றில் வழிபட்டு இறந்தால் நற்பேறு பெற்றனர். இரண்டாம் பிரகாரத்தின் மதில் சுவற்றில் இவ்வரலாறுகள் எல்லாம் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.  மூவராலும் பாடல் பெற்ற தலம்:  சிட்டமர்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால் சுட்டுமாட்டிச் சுண்ண வெண்ணீறாடுதன்றியும் போய் பட்டமர்ந்த சென்னி மேலோர் பால் மதியஞ்சூடி நட்டமாடும் நம் பெருமான் மேயது நள்ளாறே ! என்று திரிபுர அசுரர்களின் அழியாத கோட்டைகள் மூன்றனையும் தனது நெற்றிக் கண்ணினால் எரித்த, பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறாடி, செஞ்சடையிலே இளமதியஞ் சூடிய எம்பெருமான் உன்மத்த நடனம் செய்யும் தலம் திருநள்ளாறே என்று ஞான சம்பந்தப் பெருமானாலும், மற்றும் அப்பர், சுந்தராலும் பாடல் பெற்றது இத்தலம். தேவாரத்தலங்களில் காவிரி தென் கரை தலங்களில் 52வது தலம். சம்பந்தர் நான்கு பதிகங்களும், வாகீசர் இரண்டு பதிகங்களும் சுந்தரர் ஒரு பதிகமுமாக மொத்தம் ஏழு பதிகங்கள் பெற்ற தலம். கோவில் அமைப்பு:   திருநள்ளாற்றுக் கோவில் அழகும், அருளும் நிறைந்த ஓர் கலைக்கோவிலாகும். கோவிலில் நுழையும் போது இப்போது புது ஏழு நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கின்றது. இந்த இராஜ கோபுரத்திற்கும் அடுத்துள்ள இரண்டாம் கோபுரத்திற்கும் இடையில் உள்ள மண்டபத்தின் தூண்களில் நடராஜப்பெருமானின் பல்வேறு ஆடற்கோலங்கள் எழிலார் சுதைச் சிற்பங்களாக மிளிர்கின்றன.  இம்மண்டபத்தைக் கடந்து சென்றால் மூன்று நிலை ராஜ கோபுரத்தின் வழியாக கோவிலுக்குள் நுழைகின்றோம் இவ்வாயில் இடப வாயில் என்றும் அழைக்கப்படுகின்றது. நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் தியாகரை தனது நெஞ்சில் வைத்து வழிபடும் மஹாவிஷ்ணுவின் பள்ளி கொண்ட திருக்கோலத்தை தரிசிக்கின்றோம். வெளி பிரகாரத்தின் மதில் சுவர்களில் நளனுடைய சரித்திரமும் மற்றும் இத்திருக்கோவிலுக்கு சம்பந்தப்பட்ட மற்ற வரலாறுகளும் ஓவியமாக வரையப் பட்டுள்ளன. வெளிப்பிரகாரத்தில் நந்தவனம், இளவேனில் மண்டபம், அருள்மிகு காளத்தியப்பர் சன்னதி ஓரு சிற்றாலயமாக எழிலுற அமைந்திருக்கிறது. காளத்தியப்பர் சிவஜோதியாக வீற்றிருக்கிறார், கற்பக விநாயகர் ஆலயமும் இச்சுற்றில் அமைந்துள்ளது. சனி பகவானுக்கு எள் விளக்குப் போடும் இடமும் உள்ளது. இத்தலம் சனி பகவானுக்கு மட்டுமில்லாமல் ராகு, கேது இவர்களுக்காகவும் வழிபட வேண்டிய தலமாகும்.   ஸ்ரீசனிபகவான் சன்னதி இரண்டாவது கோபுர வாயிலின் வலது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சனிபகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும்.  உக்ரமூர்த்தியாகிய சனீஸ்வரன் இங்கு அனுக்கிரக தேவதையாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகின்றார். ஏனைய நவக்கிரகங்கள் இத்தலத்தில் தனியாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பதும் இவருடைய முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.  நளச்சக்கரவர்த்தியை துன்புறுத்தி கொண்டிருந்த ஸ்ரீசனிபகவான் நளன் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரை வந்து வணங்கி தரிசித்தவுடன் விலகி விடுகின்றார். பின்பு எம்பெருமானுடைய அருளாணையின் வண்ணம் பக்தர்களுக்கு அருள் வழங்கும் அனுக்ரக மூர்த்தியாக ஈஸ்வரப்பட்டம் பெற்றுக்கொண்டு துவார தேவதையாக இரண்டாவது கோபுர வாயிலில் விளங்குகின்றார். உட்பிரகாரத்தில் தியாகருக்கு எதிராக நகவிடங்கப் பெருமாளை வணங்கும் சுந்தர மூர்த்தி நாயனார் சன்னதி,  தெற்கு பிரகாரத்தில் அறுபத்து மூவரின் திருவுருவச் சிலைகளும், நளன் வழிபட்ட நள லிங்கம், கலி நீங்கப்பெற்ற நளன் ஆகியோரை தரிசனம் செய்யலாம்.  மேற்குப் பிரகாரத்தில் சொர்ண விநாயகரின் சன்னதியும், சப்த விடங்கத் தலங்களின் சிவலிங்கங்களின் சன்னிதியும், அருணகிரி நாதரால் பாடல் பெற்ற சிங்கார வேலவரின் சன்னதி உள்ளது.  தேவியர் இருவருடன் எழிலாக அருட்காட்சி தருகின்றான் முத்துக்குமரன், இவரை நச்சு வெண்பட மீதணை வார்முகில் பச்சை புய னார் கரு டாசனர் நற்க ரந்தநு கோல்வளை நேமியர் மருகோனே- நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி யிச்சை கொண்டொரு வாரண மாதொடு நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் பெருமாளே. என்று  அருணகிரி நாதர் திருப்புகழில் பாடியுள்ளார். அடுத்து  திருமகள் சன்னதியை தரிசிக்கின்றோம், வடக்கு பிரகாரத்தில் தியாகர் எண்ணைக் காப்பு கண்டருளும் எண்ணைக் காப்பு மண்டபம் அழகிய சிறிய சிற்பங்களுடன் கூடிய தூண்களுடன்  அமைந்துள்ளது. மேலும் தல விருட்சமான தர்ப்பையும் உள்ளது. இப்பிரகாரத்தின் இறுதியில் தெற்கு நோக்கி ஆடல் வல்லானின் சன்னதி அமைந்துள்ளது. ஈசான மூலையில் பெரிய உருவில் பைரவர் அருள் பாலிக்கின்றார். கிழக்கு சுற்றில் மேற்குப் பார்த்தபடி சூரியன் சன்னதி உள்ளது. ஐயனின் கோட்டத்தில் ஆலமர் செல்வனும், சிறிய மஹா விஷ்ணு, பிரம்மா உருவங்களுடன் லிங்கோத்பவரும், பிக்ஷாடணரும், துர்க்கையும் அருள் பாலிக்கின்றனர். கருவறையின் வடபால் கருணை வடிவமாக துர்க்கை விளங்குகிறாள்.  துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளி, நவராத்திரி, பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் சப்த ரிஷிகள் பூசித்த லிங்கங்கள் மற்றும் சப்த விடங்க தலங்களின்  லிங்கங்களுடன் மொத்தம் 17 சிவலிங்கங்களை தரிசிக்கலாம். சோழர் காலத்திய கல்வெட்டுகள்  இவ்வாலயத்தில் உள்ளன. கோவிலை இவ்வாறு வலம் வந்தபின் கொடி மரத்தின் முன் நாம் நிற்கின்றோம். பலி பீடம் சற்று விலகியுள்ளதைக் காணலாம். தியாகர் மற்றும் தர்ப்பாரண்யேஸ்வரரின் சன்னதிகள் உயரமாக அமைந்துள்ளன. மற்ற விடங்கத்தலங்களைப் போலவே தர்ப்பாரண்யேஸ்வரருக்கு வலப் பக்கத்திலே தியாகரின் சன்னதியும் அவருக்கு நேர் எதிரே பரவையார் உடனாய சுந்தர மூர்த்தி நாயனாரின் சன்னதியும் அமைந்துள்ளது. மரகத விடங்கர் இரும்புப் பெட்டியிலே வைத்து பாதுகாக்கப்படுகின்றார். அபிஷேக காலங்களில் மட்டுமே அவரது தரிசனம் கிடைக்கும்.  போகமார்த்த பூண் முலையாள் அம்பாள் சன்னதி முதல் பிரகாரத்தில் சோபன மண்டபத்தில் அமைந்துள்ளது. சனீசுவர பகவான் சன்னதி கிழக்கு முகமாய் அம்பாள் சன்னதிக்கு முன்புறம் அமைந்துள்ளது. திருமறைக் காட்டிலிருந்து மதுரைக்கு சென்று  வெப்பு நோயால்  அவதிப்பட்ட கூன்பாண்டியனை திருநீற்றுப் பதிகம் பாடி அவனது வெப்பு நோயை நீக்கி, அவனை நின்றசீர் நெடுமாறனாக்கிய பின்னும் சமணர்கள் அனல் வாதத்திற்கு அழைத்த போது இப்பச்சைப் பதிகம்  வேகாமல் அப்படியே நின்றது. இவ்வாறு சைவ சமயத்தின் புணருத்தாரணத்திற்கு பிராணனாக இருந்த இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் அம்பிகை பிராணேஸ்வரி, பிராணாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றாள். அத்திர நயனி என்றொரு திருநாமமும் அம்பாளுக்கு உண்டு. அம்மையின் தனி சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது, அதற்கு அடுத்து பள்ளியறையும் அமைந்துள்ளது. பள்ளியறை முழுதும் பல கோணங்களில் அமைந்துள்ள கண்ணாடிகளில் அம்மையின் முழு உருவத்தையும் காண முடிகின்றது. கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்: மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும் வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமல னைஅடி யேற்கெளி வந்த தூதனைத் தன்னைத் தோழமை யருளித் தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும் நாத னைநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே  பொருள்:  உமையம்மைக்கு உடம்பின் இடப் பக்கத்தைக் கொடுத்தவனும், மாணிக்கம் போன்றவனும், தன்னைப் பணிகின்றவர்களது வினையை அழிக்கின்ற, வேத முதல்வனாய் உள்ளவனும், வேதத்தின் வழி வேட்கின்ற வேள்வியை உடையவர்கள் வணங்குகின்ற தூயவனும், அடியேனுக்கு எளிமையாய்க் கிடைத்த தூதனும், தன்னை எனக்குத் தோழமை முறையினனாக அளித்து, அடியேன் செய்த குற்றங்களைப் பொறுக்கும் தலைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன். ஒன்றையும் நினையேன் என்று வன்தொண்டர் பாடிய இத்திருக்கோவிலில் தினமும் ஐந்து கால பூஜை நடைபெறுகின்றது.  காலையில் சூரிய பகவானுக்கு பூஜை நடந்தபின் ஐயனுக்கு திருப்பள்ளியெழுச்சியுடன் மற்ற பூஜைகள் தொடங்குகின்றன.   இத்திருக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் முதல் நாள் தியாகருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. வைகாசி மாதம் வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. முதல் ஐந்து நாட்கள் வினாயகர் உற்சவமும் அடுத்த ஐந்து நாட்கள் முருகர் உற்சவமும் அதற்கடுத்த 4 நாட்கள் அடியார் உற்சவமும் நடைபெறுகின்றது. பின் செண்பக தியாகரின் உற்சவம், ஐந்தாம் திருநாள்  பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுர தரிசனம் (தெருவடைச்சான் சப்பரம்)  சேவை தந்தருளுகின்றனர். தங்க ரிஷப வாகனத்தில் அருட்காட்சி அருளுகின்றார் எம்பெருமான். ஏழாம் நாள் திருத்தேரோட்டம், பஞ்ச மூர்த்திகளுக்குமாக ஐந்து தேர்கள் வலம் வருகின்றன. இரவே சொர்ண விநாயகர், வள்ளி – தேவசேனா சமேத முருகர், சண்டிகேஸ்வரர்களுடன்  சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு உன்மத்த நடனத்துடன் எழுந்தருளும் தியாகர் மற்றும் நீலோத்பலாம்பாள்  மறு நாள் அதிகாலை வடம் பிடிக்கபட்டு தேரோட்டம் முடித்து, எண்ணெய்க் காப்பு மண்டபம் எழுந்தருளி பிராயச்சித்தாபிஷேகம் கண்டு யதாஸ்தானம் திரும்புகின்றனர். பாரத் மின் மிகு நிறுவனத்தினரின் மூலம்  திருத்தேர்கள்  இரும்பு சக்கரங்கள் மற்றும் ஹைட்ராலிக் பிரேக்குகளுடன் புதிக்கப்பட்டதால் தற்போது தேரோட்டம் ஒரே நாளில் முடிந்து விடுகின்றது. திருநள்ளாறா தியாகேசா என்று பக்தர்கள் தேர்களை இழுக்கும் நாமும் அவர்களுடன் கலந்து கொண்டு தேரை இழுப்பதே ஒரு இனிமையான அனுபவம். பிராயச்சித்தபிஷேகத்தின் போது மரகத விடங்கரையும் எண்ணைக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்கின்றார். அப்போது அவரை நாம் நீண்டநேரம் தரிசிக்கலாம். மிகவும் விஸ்தாரமாக அபிஷேகம் நடக்கின்றது. காணக்கொடுத்து வைத்திருக்க வேண்டும். அடியேனுக்கு பலமுறை ஐயனின் தேரோட்டத்தையும் அபிஷேகத்தையும் தரிசிக்கும் பாக்கியத்தை இறைவன் அருளினார் என்பது அவரது கருணையே. மறு நாள் பிரம்ம தீர்த்தத்தில் தெப்போற்சவம் நடைபெறுகின்றது. தெப்போற்சவம் முடிந்தவுடன், சனி பகவான் தங்க காக வாகனத்தில் வீதி உலா வருகின்றார். அன்றுதான் நளனுக்கு சனி நீங்கியதாக ஐதீகம். மறு நாள் தியாகர் இடையனுக்கு காட்சி கொடுத்த லீலை நடைபெறுகின்றது. வைகாசி விசாகத்தன்று காலை நடராஜர் பிரம்ம தீர்த்ததிற்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்க  பிரம்மோற்சவம் நிறைவடைகின்றது.   []   தியாகேசர் – நீலோத்பலாம்பாள் திருத்தேர்கள் ஆனி மாதம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. ஆடி மாதம் எம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி நாயனாரின் உற்சவம் நடைபெறுகின்றது. புரட்டாசி மாதம் பௌர்ணமி அன்று தியாகருக்கு "நிறைபணி விழா" மிக சிறப்பாக நடை பெறுகின்றது. பிராணேஸ்வரிக்கு 9 நாட்கள் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்றது. ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டி உற்சவம். கார்த்திகை சோமவாரங்களில் 108 சங்காபிஷேகமும் நிறை வாரம் 1008 சங்காபிஷேகமும் நடை பெறுகின்றது. கார்த்திகை தீபத்தன்று பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளி சொக்கப்பனை கொளுத்தப்படுகின்றது. மார்கழி மாதம் பத்து நாள் "ஆருத்ரா தரிசன" திருவிழா நடை பெறுகின்றது தினமும் இரவு மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இசைக்கப்படுகின்றது. திருவாதிரை நாள் அருணோதய காலத்தில் ஒரே சமயத்தில் தியாகருக்கும் சிவகாம சுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கும் ஏக காலத்தில் அபிஷேகம் நடை பெறும் அது மற்ற எக்கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சி. மாசியில் மஹாசிவராத்திரியன்று இரவு நான்கு ஜாம அபிஷேகம் மட்டுமல்லாமல், சந்திரசேகரர்  தங்க ரிஷப வாகனத்தில் அருட்காட்சி அருளுகின்றார். மேலும் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. எல்லாரோலும் நன்கு அறியப்பட்ட இத்தலத்தின்  திருவிழா சனிப் பெயர்ச்சியாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது இத்திருவிழா கொண்டாடப்படுகின்றது. சனி பகவானுக்கு விசேஷ ஹோமங்களும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றது. பின்னர் அவர் தங்க காக வாகனத்தில் காட்சி தருகின்றார். சனிப் பெயர்ச்சியின் போது இந்தியாவெங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வருகின்றனர். உள்ளா றாததோர் புண்டகரி கத்திரள் தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக் கள்ளா றாதபொற் கொன்றை கமழ் சடை நள்ளா றாஎன நம் வினை நாசமே! சோதி வடிவாக விளங்குகின்ற தாமரைப் பாதங்களை உடைய கொன்றை மாலை சூடிய நள்ளாற்றின் சிவபெருமானே என்று நாம் கூற நம் விணைகள் அனைத்தும் அழிந்துபடும் என்று அப்பர் பெருமானின் கூற்றுக்கிணங்க நாமும் திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரையும், பிராணாம்பிகையையும், நக விடங்க செண்பக தியாகரையும், சனீஸ்வரரையும் வழிபட்டு நம் வினைகள் நீங்கி நலம் பெறுவோமாக. அடுத்து புவனி விடங்கராக எம்பெருமான் அருள் பாலிக்கும் திருமறைக்காடு திருத்தலத்தை தரிசிக்கலாம் அன்பர்களே.                                   35. திருமறைக்காடு (வேதாரண்யம்) – ஸ்ரீரத்ன சிம்மாசன ஹம்ஸ நடன புவனி விடங்கர் []   சப்தவிடங்கத்தலங்களில் அடுத்து நாம் தரிசிக்க இருக்கின்ற தலம் திருமறைக்காடு ஆகும். திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவிலும் வேதாரண்யம் அமைந்துள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் அகத்தியம்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது.  ஒதுவார் தம்மை நன்னெறிக்கு உய்க்கும் இறைவன் உறையும் தலங்களும் அப்பரும், சம்பந்தரும் திருமுறை பாடி அற்புதம் நிகழ்த்திய தலம். இனிய வயல்கள், நெடிய உப்பங்கழிகள், படர்நெறிக்காடு, மடல்விரி தாழைகள், வேதமாக்கடல் சூழ அமைந்த தலம். கடலோரத்தில் அமைந்த தலம் என்பதால் மருத நிலத்தின் வளமையைக் காண இயலாது.   இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஐந்தும், திருஞானசம்பந்தர் பதிகம் நான்கும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 10 பதிகங்கள் உள்ளன. சுந்தரருடன் சேரமான் பெருமாளும் வழிபட்ட தலம்.  தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது. வேதாரண்யம், வேதவனம், ஆதி சேது, தென் கயிலாயம், பரமயானம், ஞானபூமி, திருமறைக்காடு என்றும் அறியப்படுகின்றது. அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார் திங்களைக் கங்கையோடு திகழ்தரு சடையில் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே   என்று பாடிய அப்பர் பெருமான் அடைபட்ட திருக்கதவினை திறப்பிக்கவும், சம்பந்தப்பெருமான் திருக்காப்பிடப்படவும்  இனிய தமிழால் பாடிய தலம். இராமர், இராவணனை கொன்ற வீரஹத்தி தோஷம் தீர வழிபட்ட தலமாகையால்  கோடிக்கரை என்றும் அழைக்கப்படுகின்றது  திருக்கோவிலில்களில் விளக்கிடுவதின் சிறப்பை உணர்த்திய தலம். திருமாலினுடைய  வாமன அவதாரம் மாவலி சக்கரவர்த்தியை அடக்குவதற்காக ஏற்பட்டது. அத்தகு மாபலி எவ்வாறு  மாவலியைப் பெற்றான் என்பதற்கான வரலாறு. ஒரு நாள் இரவு அர்த்தயாமம் முடிந்து திருமறைக்காடு ஆலயக்கதவு திருக்காப்பிடப்பெற்றது. அப்போது கருவறையில் இருந்த மங்கத்தொடங்கியது. அவ்விளக்கை தூண்டி எரியச் செய்பவர்களுக்கு இம்மையில் அரச பதவியையும் மறுமையில் சிவகதியையும் அளிப்பேன் என்று அப்பன் அம்மையிடம் கூறினார். திருக்கதவங்கள் அடைபட்டபின் யார் வந்து விளக்கைத் தூண்டப்போகிறார்கள் என்று அம்மை நகைத்தாள்! எங்கிருந்தோ ஒரு எலி  பசியால் உந்தப்பட்டு  இக்கோவிலில் எரியும் விளக்கின் நெய்யை உண்ண வந்தது. ஆனால் அணையும் நிலையில் இருந்த திரியை தன் மூக்கால் தூண்டிவிட்டதால், மறு பிறப்பில் மாவலி சக்கரவர்த்தியாக  பிறந்து பெருமாளுக்கு தானம் வழங்கிய பெருமை பெற்றார். இவ்வரலாற்றை அப்பர் பெருமான் திருகுறுக்கை தேவாரத்தில் நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக் கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாம் குறைவறக் கொடுப்பர்போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே. பொருள் : வேதங்கள் பூசித்த திருமறைக்காட்டில் நீண்டு எரியும் திறத்ததாகிய விளக்கினைக் கறுத்த நிறத்தை உடைய எலி தன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நிலஉலகம்,  தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் ஆளுமாறு குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார் என்று பாடிப்பரவுகின்றார்.   திருவிளையாடற்புராணம் அருளிய பரஞ்சோதி முனிவரின் அவதாரத்தலம். அவரே இத்தலத்தின் தலபுராணத்தையும் இயற்றியுள்ளார். காசியில் இறக்கமுத்த கமலையிற் பிறக்கமுத்தி தேசுறு சிதம்பரத்தைத் தெரிசிக்க முத்தியாகும் மாசிலா மேன்மை பூண்ட மறைசையம் பதியோ கூறில் ஆசறு தீர்த்தம் தன்னில் ஆடவே யளிக்குமுத்தி   என்று இத்தலத்தின் சிறப்பைப் பாடுகின்றார் அவர். கமலை ஞானப்பிரகாசரின் வழியில் வந்த  அகோரசிவத் தியாகராச பண்டாரம் என்றும் அழைக்கப்பட்ட அகோர முனிவர் இயற்றிய இன்னொரு தல புராணமும் உள்ளது. தாயுமானவ சுவாமிகளும் திருமறைக்காட்டில் பிறந்தவர். திருச்சியை ஆட்சி செய்த விஜயரங்க சொக்கநாதரிடம் அமைச்சராக இருந்தார். சைவ சித்தாந்தம் அத்வைதம் ஆகிய இருநிலைகளிடையே ஒருவகை சமரசம் கண்டவர்.  தேவாரத்திருத்தலங்களில் காவிரி தென் கரைத்தலங்களுள் 125வது தலம் ஆகும். சக்தி பீடங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்த சுந்தரி பீடத்தை பெற்று விளங்கும் தலம். நடராசரின் பதினாறு சபைகளுள் பன்னிரண்டாவது  தேவ பக்த  சபை எனப்படும் தலம். இத்தலத்தின் மையத்தில் யாழைப்பழித்த மென்மொழியாள் உடனாய திருமறைக்காட்டு மணவாளர் (வேதாரண்யேஸ்வரர்) ஆலயம் பெருங்கோயிலாகத் திகழ்கின்றது. இந்த ஆலயத்தில் கருவறைக்கு இணையாகக் கிழக்கு நோக்கியவாறு பெரிய மகாமண்டபம் உள்மண்டபம் ஆகியவற்றுடன் பெரிய தூண்களைக் கொண்டுள்ள மிகப்பெரிய தியாகராஜரின் தனி ஆலயம் உள்ளது. இதில் 'புவனி விடங்கர்' என்ற பெயரில் தியாகராஜர் எழுந்தருளியுள்ளார். இவருடைய சந்நதியில் 'புவனி விடங்கர்' என்ற மரகதலிங்கம் எழுந்தருளி வைக்கப் பட்டுள்ளது. உயர்வகை ஜாதி மரகதக் கல்லால் அமைந்த இந்த இலிங்கம் விலை மதிப்பற்றதாகும். இவ்விடங்கருக்கு அனுதினமும் காலையிலும் மாலையிலுமாக இரண்டு வேளைகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாசி மகத்தை தீர்த்த நாளாகக் கொண்டு வசந்த விழா நடைபெறுகின்றது, ஒரு காலத்தில் ஐந்து மரத்தேர்கள் இருந்தன அவை பழுதடைந்து விட்டதால் பல வருடங்கள் தேரோட்டம் நடைபெறவில்லை, பின்னர் 2017ம் ஆண்டு புதிய மரத்தேர் செய்யப்பட்டு ஹம்ஸநடன புவனி விடங்கத் தியாகேசர் தேரில் எழுந்தருளி அருள் பாலித்தார். பின்னர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தியாகராஜருக்குரிய ஆறு அபிஷேகங்களும் கிரகண புண்ணிய கால அபிஷேகங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன. இத்தலத்தில் தியாகேசர் ஆடும் நடனம் ஹம்ஸபாத நடனம் ஆகும். இறைவன் ஒயிலாக நடந்து வரும் ஒரு அன்னப்பறவையானது மெல்ல மெல்ல அன்ன நடைபோல் அடிபெயர்ந்து ஏற்ற இறக்கத்தோடு ஆடுவதுபோல் ஆடுவது  என்பது ஒரு விளக்கம். இதன் தத்துவம் என்ன என்பதை காஞ்சி மஹாப் பெரியவர் இவ்வாறு விளக்கியுள்ளார்.. மூச்சை உள்ளுக்கு இழுத்து  வெளியில் விடும் போது “ஹம்”, “ஸ்” என்ற ஒலிகளைப் போலவே சப்த சலனம் அமையும். இதுவே  “ஹம்ஸ” மந்த்ரம் என்பது. அதோடு “அஹம் ஸ:” என்பதற்கு “நான் அவன்”, அதாவது, “ஜீவாத்மாவான நானே ஈச்வரன், அதாவது பரமாத்மா” என்று அர்த்தம். ‘நானே அவன்’ என்று மாத்திரம் நிறுத்திவிட்டால் ஜீவாத்மாதான் ஈச்வரன் என்று குறுக்கிவிட்டதாக விபரீத அர்த்தமும் செய்து கொள்ளலாமல்லவா? அதனால், “(பரமாத்மாவான) அவனே நான்” என்று சேர்த்துச் சொன்னதால்தான் முழுசாகச் சொன்னதாகும். “அவனே நான்” என்பது “ஸ: அஹம்”. ஸந்தியில் இது “ஸோஹம்” என்றாகும். “ஹம்ஸ:” என்பதோடு “ஸோஹம்” என்பதையும் சேர்த்துச் சொல்வதுதான் ஹம்ஸ மந்திரம். நாம் புத்தி பூர்வமாக உத்தேசித்து மற்ற மந்திரங்களைப் போல இந்த ஹம்ஸ மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டே போனால், அந்த சப்த சலனங்கள்தான் இயற்கையாகவும் சாந்த சமாதிக்கு அழைத்துப் போகும் ப்ராண ஸஞ்சாரத்திற்கு உரியதாக இருப்பதால், ஜீவாத்மா பரமாத்மாவுடன் அபேதமாயிருக்கும் சாந்த நிலைக்கு இந்த சாதனை அழைத்துப் போகும்போது ஒரு கட்டத்தில் ஜபம் நின்று “அஜபா”வாகும்; சுவாசம் தன்னால் ஹம்ஸ மந்த்ரம் என்று சொல்வதுடன் நடக்க ஆரம்பிக்கும். ‘ஸோஹம்’ என்பதிலுள்ள ‘ஸ’வும் ‘ஹ’வும் தேய்ந்து தேய்ந்து ஒடுங்கிப்போய் ‘ஓம்’ என்ற பிரணவம் மட்டும் நிற்கும். அது அப்படியே போய் துரீயம் என்பதான உத்தம ஸ்திதியில், ஆத்மாவில் ஐக்கியப்படுத்திவிடும்.  அந்த ஓங்கார நாதத்தில் சஞ்சரிக்கும் ஹம்ஸமே சிவசக்தியாகும்.  அதை உணர்த்தும் பொருட்டு வேதநாயகனான சிவனார்  வேதாரண்யத்தில்  ஹம்ஸ நடனமாடுகிறார். ஹம்ஸ நடனமே அஜபா நடனமுமாகும்.  இவருடைய சந்நதிக்கு நேர் எதிரில் நின்ற இடபம் உள்ளது. அதற்குப் பின்னணியில் அமைந்த விமானத்தில் இவரைத் தொழுது நிற்பவராக பரவையாரூடன்  சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அமைந்துள்ளார். திருவாரூரில் நடப்பது போலவே 29 நாள் மாசி மாதப் பெருந்திருவிழாவில் சந்திரசேகருக்குப் பட்டம் கட்டும் 'பட்டோற்சவம்' சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. புவனி விடங்கருக்கு பின் புறம் இராமர் பூசித்த இராமநாதர் சன்னதி அமைந்துள்ளது. இவரது மண்டபத்தில் வீரபத்திரர் அருள் பாலிக்கின்றார். காசியைப் போல விசுவநாதர், விசாலாட்சி, காலபைரவரை இத்தலத்தில் தரிசிக்கலாம். இக்கோயில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றது. யாழைப் பழித்தன்ன மொழி மங்கை ஓர் பங்கன் பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இடம்பேணில் தாழைப்பொழில் ஊடேசென்று பூழைத்தலை நுழைந்த வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே  என்று தம்பிரான் தோழர் சுந்தரர் பாடிய திருமறைக் காட்டின் இறைவர்: திருமறைக்காடர்,வேதாரண்யேஸ்வரர்,வேதவனநாதர், இறைவி: வேதநாயகி, யாழினும் இனிய மொழியாள், வீணா விதூஷிணி தல மரம் :வன்னிமரம், புன்னைமரம், தீர்த்தம் : வேததீர்த்தம்(எதிரிலுள்ள கடல்), மணிகர்ணிகை வழிபட்டோர் :அகத்தியர், வசிஷ்டர், கௌதமர், விசுவாமித்திரர், நாரதர், மாந்தாதா, முசுகுந்த சக்கரவர்த்தி, ஸ்ரீராமர், தேவாரப் பாடல்கள் :சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர்,  இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர்  பெரிய சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார். மறைக்காட்டு மணாளர் என்றும் அழைக்கப்படுகிறார். கோவிலின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. கருவறை அதனையொட்டி அர்த்த மண்டபம், மகா மண்டபம், தியாகேசர் மண்டபம் முதலியன உள்ளன. கருவறையைச் சுற்றி திருச்சுற்று மாளிகை உள்ளது. மகா மண்டபத்தின் கூரையை  இராசி மண்டலம்  அலங்கரிக்கின்றது.  இத்திருச்சுற்றில் கருவறைக்கு நேர் கிழக்காக சிறிய கோபுரம் ஒன்று உள்ளது. இக்கோபுரத்தை ஒட்டி நீண்ட தூண் மண்டபம் உள்ளது. இரண்டாம் திருச்சுற்றில் வடக்கே அம்பாள் ஆலயம் உள்ளது. கோவிலைச் சுற்றி பெரிய மதிலும், கிழக்கும், மேற்குமாக இரண்டு கோபுரங்களும் உள்ளன. ஆலயம் முழுவதும் பல இடங்களில் திருமுறைப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. உள் திருச்சுற்று சுவற்றில் பெரிய புராண ஓவியங்கள் எழிலாக வரையப்பட்டுள்ளன.  தட்சிணா மூர்த்தி தவிர வேறு கோஷ்ட மூர்த்திகள் இல்லை. எம்பெருமான் அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டி அருளிய கோலத்தை மறைக்காட்டு மணாளர் கோலமாக கண்டு தரிசிக்கலாம். கருவறை சுவரோடு இணைந்த சிற்பமாக இல்லாமல் சுவருக்கு சிறிது தள்ளி இலிங்கப்பெருமானுக்கு பின்னால் அம்மையப்பர் சிற்பம் அமைந்துள்ளது. மணவாளரின் இடத்திருக்கரமும், அம்மையின் வலத்திருக்கரமும் கோர்த்த பாவனையில் உள்ளது. கல்யாண சுந்தரர் போல நின்ற கோலம் அல்ல, அமர்ந்த கோலம், இடையில் ஸ்கந்தர் இல்லை. ஐயனின் வலத்திருக்கரம் அபய கரமாகவும், அம்மையின் இடது திருக்கரம் வரத கரமாகவும் உள்ளது. திருக்கயிலையில் அம்மையப்பரின் திருமணத்திற்காக சகல ஜீவராசிகளும் கயிலையில் கூடிய போது வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. உலகை சமன் படுத்த குள்ள முனி  அகத்தியரை தென் திசைக்கு இறைவன் அனுப்பினார். அப்போது அகத்தியர் வேண்டிக்கொண்டபடி திருமணக்கோலத்தை இறைவன் பல் வேறு தலங்களில் காட்டி அருளினார்  இத்தலத்தில் சித்திரை மாதம் வளர்பிறை சப்தமியன்று கணங்கள் புடைசூழ அம்மையுடன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே சித்திரையில் திருமண விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. சஷ்டியன்று மறைக்காட்டு மணாளருக்கு  சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது அன்றைய தினம் அம்மையப்பரின் முழு அழகையும் கண்டு களிக்கலாம். அபிஷேகத்திற்குப் பின்னர் அம்மையப்பருக்கு சந்தனக் காப்பு சாத்துகின்றனர். இச்சந்தனப்பூச்சு பின்னர் அடுத்த வருடம்தான் களையப்படுகின்றது. தினமும் வஸ்திரமும், மாலைகளும் மற்றுமே மாற்றப்படுகின்றது.  அகத்தியருக்கு கல்யாணக் கோலம் காட்டியதால் இத்தலம் தென் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள இறைவி, யாழினும் இனிய மொழியாள் என்று அழைக்கப்படுகிறாள். இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தைவிட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர் கொண்டுள்ளாள். இதனால், இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் தரிசனம் அருளுகின்றாள். துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். பட்டீஸ்வரத்தில் உள்ளது போல சிம்ம வாகனத்துடன் அஷ்டபுஜ துர்க்கையாக அருள் பாலிக்கின்றாள்.  சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். கஜலட்சுமி சுதை வடிவமாக தனி சன்னதியில் அருள் புரிகின்றாள். இவ்வாறு முப்பெரும் தேவியரையும் இத்தலத்தில் தரிசனம் செய்யலாம். இவ்விடத்தில், இராமர் சமுத்திர ஸ்நானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. இராமர் பூஜித்த இராமநாதர் சந்நிதியும் புவனி விடங்கர் சன்னதிக்கு பின் புறம் அமைந்துள்ளது. இராவணனைக் கொன்றதால் இராமனுக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால், இத்தலத்திலுள்ள விநாயகர், வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி, கோயிலின் மேற்கு வெளிப் பிராகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது. இவர் சன்னதிக்கு எதிரே பிரம்மஹத்தி மேடை அமைந்துள்ளது.  இச்சந்நிதிக்குக் கொடிமரமும் உள்ளது. சுவாமி அம்பாள் விநாயகர் ஆகிய மூவருக்குமாக மூன்று கொடி மரங்கள் இத்தலத்தில் உள்ளன. விநாயகர் சந்நிதிக்கு அருகில் மேலக்குமரன் சந்நிதியும் உள்ளது. இத்தலத்தில் உள்ள இந்த முருகப்பெருமான் அருணகிரிநாதரால் வாலஇ ளப்பிறை தும்பை யாறுக டுக்கை கரந்தை வாசுகி யைப்புனை நம்பர்  தருசேயே மாவலி யைச்சிறை மண்ட ஓரடி யொட்டி யளந்து வாளிப ரப்பியி லங்கை   யரசானோன் மேல்முடி பத்தும ரிந்து தோளிரு பத்தும ரிந்து வீரமி குத்தமு குந்தன்    மருகோனே- மேவுதி ருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து வேதவ னத்தில மர்ந்த     பெருமாளே . என்று  திருப்புகழில் பாடப்பெற்றவர். இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்க்கோட்டில் காட்சி அளிக்கின்றன.  அம்மையப்பரின் திருமணக்கோலத்தை தரிசிக்க இவ்வாறு உள்ளன என்பது ஐதீகம். இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர், பிரம்ம ரிஷி ஆக வேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக்கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர். நடராசர் தூண்கள் கொண்ட மண்டபம் உடைய உயரமான தனி சன்னதியில் அருள் புரிகின்றார். இவரது சன்னதி வாசலில் பதஞ்சலி, வியாகிரபாதர் சிற்பங்கள் எழிலாக அமைந்துள்ளன. மண்டபக்கூரையில் ஒவ்வொரு ஊழியிலும் படைப்புக்காலம் முதல் முடிவு வரை நடராசர் ஆடும் பல்வேறு நடனங்கள் வண்ண ஓவியங்களாக மிளிர்கின்றன. மூன்று கால் மூன்று திருக்கரங்கள், மூன்று திருமுகங்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள் பாலிக்கின்றார். காட்சி கொடுத்த நாயகர் சன்னதியில் இரண்டு  சுழலும் தூண்கள் அமைந்துள்ளன. பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் இத்தூண்களை சுற்றினால் மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். பலர் சுற்றியதால் ஒன்று கீழே விழுந்து விட்டது. மற்றது விழும் நிலையில் உள்ளது. முசுகுந்தன் ஸ்தாபித்த சோழ லிங்கம், மகாபலி ஸ்தாபித்த சேர லிங்கம், உக்கிரகுமாரனாக தோன்றிய முருகன் பூசித்த பாண்டிய லிங்கம் பிரகாரத்தில் அருள் பாலிக்கின்றனர். சப்த மாதர்கள் குளக்கரை லிங்க சன்னதியிலும், பிடாரி, விஸ்வாமித்திரர், பதஞ்சலி வன்னி மரத்தடியிலும், விசுவாமித்திரர் புன்னை மரத்தடியிலும் அருள் பாலிக்கின்றனர். இக்கோவிலில் இரண்டு பிராகாரங்களும், வன்னி மரம், புன்னை மரம் என்று  இரண்டு தல விருட்சங்களும் உள்ளன. இவற்றுள் வன்னி மரத்தில் ஒரு புறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் மறு புறம் உருண்டையானதாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பு. வன்னி மரத்தடியில் நாகர் மேடை அமைந்துள்ளது. பெரிய ஆதிசேஷன் உருவம் அமைந்துள்ளது. அடியோங்கள் இந்த யாத்திரை சென்ற சமயம் மழை வேண்டி நந்தியெம்பெருமானுக்கு தண்ணீர் நிரப்பி வைத்திருந்தனர்.  முதல் பிராகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்னேஸ்வர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும், திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்துதான், இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக்கரிக்க, ஆலயத்தின் உள்ளே இருக்கும் இக்கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே, கிழக்கே கடல் உள்ளது. இதை வேத தீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக்கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால், 100 முறை சேதுவில் நீராடுவதற்கு சமம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சந்நிதிக் கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் - இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகவும் விசேஷமாகவும் கருதப்படுகிறது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்றுவிடும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. உலகம் வியக்கும் அழகு வாய்ந்த செப்புத்திருமேனிகள் இத்தலத்தில் அமைந்துள்ளன. நடராசர், சிவகாமி அம்மன், அம்பாளுடன் ரிஷபத்தில் சாய்ந்த கோலத்தில் காட்சி கொடுத்தார், சண்டிகேஸ்வரர், பிக்ஷாடணர், கல்யாண சுந்தரர், மற்றும் அதிகாரநந்தி  செப்புத்திருமேனிகள் இத்தலத்தில் எழிலாக விளங்குகின்றன. தல புராண வரலாறு:  ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து, இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் தொடங்குவதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்று உணர்ந்த வேதங்கள், கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக, ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலுக்குள் சென்று வந்தனர்.  ஒருமுறை, திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டுக்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விவரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்ததாகக்  கூறினர். இந்நிலையை போக்குவதற்காக சம்பந்தப்பெருமான்  வேண்டுதற்படி  அப்பர்   கதவம்   திறப்பிற்பதற்காக பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ மண்ணிலா னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே  என்று பாடத்தொடங்கி பதிகமாகத் தொடர்ந்தது. இறுதிப் பாடலில்  அப்பர் இறைவனை ’இரக்கமொன்றிலீர்’ என்று ஊடல் கொள்ள இனியும் சோதித்தல் தகாது என்று கதவை திறக்க செய்தார். திறந்த கதவை மூடவேண்டும் அல்லவா? திருஞானசம்பந்தர்  “சதுரம் மறைதான் துதிச்செய் துவணங்கும்   மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறை மைந்தா இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்   கதவங் திருக்காப் பிக்கொள்ளுங் கருத்தாலே”  என்று ஒரு பாடல் பாடியவுடன்      திருக்கதவம் சார்த்திக்கொண்டது. இவ்வாறு தமிழால் பாடி கதவை திறக்கவும், மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு. அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி, இத்தலத்தில் பிரம்மோற்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புனலில் ஏடெதிர் செல்லென செல்லுமே புத்தனார் தலை தத்தெனத் தத்துமே கனலில் ஏடிடப் பச்சென்று இருக்குமே கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே பனையில் ஆண்பனை பெண்பனை ஆக்குமே பழைய என்பு பொற்பாவை யதாக்குமே சிவனராவிடம் தீரென தீருமே செய்ய சம்பந்தர் செந்தமிழ் பாடலே   தலை கொள் நஞ்சமு தாக விளையுமே; தழல்கொள் நிறு தடாகமதாகுமே கொலை செய் ஆனை குனிந்து பணியுமே; கோள ராவின் கொடு விடம் தீருமே; கலை கொள் வேத வனப்பதி தன்னிலே கதவு தானும் கடுகத்திறக்குமே; அலை கொள்வாரியிற் கல்லும் மிதக்குமே அப்பர் போற்றும் அருந்தமிழ் பாடலே.   வெங் கரா வுண்ட பிள்ளையை நல்குமே; வெள்ளை யானையின் மீதேறிச்  செல்லுமே: மங்கை பாகனை தூது நடத்துமே; மருவியாறு  வழிவிட்டு நிற்குமே: செங்கலாவது தங்கமதாக்குமே; திகழும் ஆற்றிட்டு செம்பொன் எடுக்குமே; துங்க வன் பரி சேரர்க்கு நல்குமே ; துய்ய நாவலூரர்ச் சுந்தரர் பாடலே   பெருகும் வைகைதனையடைப் பிக்குமே ;பிரம்படிக்கும் பிரானடி கன்றுமே; நரியெலாம் பரியாக நடத்துமே; நாடி மூகைதனை பேசுவிக்குமே; பரிவிற் பிட்டுக்கு மண் சுமப்பிக்குமே; பரமன் ஏடெழுத கோவை பாடுமே; வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே; வாதவூரர் வழங்கிய பாடலே என்ற இப்பாடல்கள் எம்பெருமானின் அருளால் நால்வர்கள்  பதிகம் பாடி சப்த விடங்கத்தலங்களிலும் மற்ற தலங்களிலும்  செய்த அற்புதங்களைப் பட்டியலிடுகின்றது. இத்தலத்தில்தான், திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடி அருளினார். சம்பந்தர் வாழ்ந்த காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த அரசன் நெடுமாறன், சைவ சமயத்தை விட்டு விலகி சமண மதத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்தான். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று பாண்டிய நாட்டு மக்களும் சமண மதத்தை சார்ந்து வாழ்ந்து வந்தனர். அவன் மனைவி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். மன்னர் சமண மதத்தை ஆதரித்து சைவத்தை புறக்கணிப்பது குறித்து கவலைப்பட்ட அரசி, அமைச்சருடன் கலந்து ஆலோசித்தார்.   சம்பந்தரைப் பற்றி விவரம் அறிந்திருந்த அமைச்சர், அரசியிடம் அவர் பற்றி எடுத்துச் சொல்ல, திருமறைக்காட்டில் தங்கியிருந்த சம்பந்தருக்குப் பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி, பாண்டிய நாடு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் சொல்லிவிட்டுப்போக சம்பந்தர் வந்தார். சமணர்களால் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாகியிருந்த அப்பர் பெருமான், சம்பந்தரிடம் மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும், தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்றும் சொல்லி அவரை மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அப்போது சிவபெருமான் அடியார்களுக்கு நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று சம்பந்தப்பெருமான் பாடிய பதிகம் தான் கோளறு பதிகம், பின்னர் மதுரை சென்று திருஆலவாயான் அருளால் திருநீற்றுப் பதிகம் பாடி அரசனது வெப்பு நோயையும் தீர்த்து கூன் பாண்டியனாக இருந்தவனை நின்ற சீர் நெடுமாறனாக்கி, அவனை சைவனாக்கினார். சமணர்களை அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் வென்று சைவ சமயத்தின் பெருமையை நிலை நாட்டினார். இத்தலத்தில் தினசரி ஆறுகால பூசை நடைபெறுகின்றது. நித்திய பூசை வேதாரண்யேச்வரரிடமிருந்தே தொடங்குகிறது. பின்னர் புவனி விடங்கருக்கும், பிற தெய்வங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும், அம்பாளுக்கும், நிறைவாக வீரஹத்தி விநாயகருக்கும் பூசைகள் நடைபெறுகின்றன.  பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள புவனி விடங்க லிங்கத்திற்கு  காலை சந்தி மற்றும் சாயரட்சை ஆகிய இரு வேளைகளில் மட்டும் நைவேத்தியத்துடன் அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றது. இனி இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி காணலாம். சித்திரை மாதப்பிறப்பன்று புவனி விடங்கருக்கு அபிஷேகம். சித்திரை பரணியன்று சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக் கறி கேட்ட பிக்ஷாடணர் விதி உலா. சித்திரை வளர்பிறை சப்தமி மணக்கோல விழா அன்று அகத்தியன் பள்ளியிலிருந்து அகத்தியர் திருமறைக்காடு எழுந்தருளி சிவசக்தியின் மணக்கோலம் கண்டருளுகின்றார். சதயத்தன்று திருநாவுக்கரசர் குருபூசை அர்த்தமண்டபத்தில் அப்பர் பெருமானை இரவு முழுவதும் வைத்திருக்கின்றனர். வைகாசியில் பத்து நாள் வசந்த விழா கல்யாண சுந்தர்ர் மாலை பிரகார வலம் வந்தருளுகின்றார். பத்தாம் நாள் தீர்த்தவாரியின் போது ந்ந்திக்கு ஏற்பட்ட மீன் சாபத்தை போக்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. வைகாசி மூலத்தன்று சம்பந்தர் திருக்கல்யாணமும் சிவசோதியில் கலக்கும் நிகழ்வும் நடைபெறுகின்றது. ஆனி மாதத்தில் மாணிக்க வாசகர் குரு பூசை நடராசர் சன்னதியில் நடைபெறுகின்றது. ஆனி உத்திரத்தன்று சிவகாமியம்மையுடன் நடராசர் திருவீதியுலா. ஊடல் உற்சவம். ஆடிப்பூரத்தை ஒட்டி அம்பாள் உற்சவம் கொடியேற்றத்துடன் நடைபெறுகின்றது. தினமும் காலையும் மாலையும் அம்பாள் கணபதியுடன் திருவீதி வலம் வந்தருளுகின்றாள். காலை புறப்பாடு கேடயத்திலும், மாலை காமதேனு, அன்ன வாகனம், இந்திர விமானம், பூத வாகனம், சிம்ம்ம், யானை, ரிஷபம், கைலாச வாகனம் முதலிய வாகனங்களில் எழுந்தருளுகின்றாள். ஒன்பதாம் நாள் இரதோற்சவம். பத்தாம் நாள் இரவு ஆடிப்பூரத்தன்று இரண்டாம் காலத்தில் தோஷம் கழிப்பு, புஷ்பப் பல்லக்கு.  ஆடி சுவாதியன்று சுந்தரரும், சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் ஏகும் விழா. ஆவணியில் வீரஹத்தி விநாயகருக்கு கொடியேற்றத்துடன் பத்து நாள் உற்சவம். ஆவணி மூலத்தன்று புட்டுத்திருவிழா கல்யாண சுந்தரர் மாணிக்கவாசகருக்கு அருளுகின்றார். புரட்டாசி பௌர்ணமியன்று சாயரட்சையில் தியாகேசருக்கு தேவேந்திர ஆராதனை. நவராத்திரியில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், கொலுக்காட்சி தருகின்றாள் அம்பிகை. விஜயதசமியன்று அம்பு போடல். ஐப்பசி முதல் நாளன்று தியாகருக்கு சிறப்பு அபிஷேகம். பௌர்ணமியன்று உச்சி காலத்தில் அன்னாபிஷேகம். கந்தர் சஷ்டித் திருவிழா. கார்த்திகை சோமவாரத்தன்று சாயரட்சையில் 1008 சங்காபிஷேகம். திருக்கார்த்திகையன்று சொக்கப்பனை. மார்கழியில் திருவெம்பாவை உற்சவம் திருவாதிரையன்று நடராசர் திருவீதி வலம் வந்தருளுகின்றார். மார்கழி வியதியபாதத்தன்று இத்தல வரலாற்றை அடிப்படையாக்க் கொண்ட நான்கு வேதங்களுக்கு  காட்சி அளிக்கும் விழா. தை மாதசங்கராந்தியன்று புவனி விடங்கருக்கு அபிஷேகம். மாட்டுப் பொங்கலன்று அம்பாள் மணிகர்ணிகையில் தீர்த்தவாரி. மட விளாகம் உலா.   தைப்பூசத்தன்று  வீரஹத்தி விநாயகர்  தேவாமிர்த தீர்த்தவாரி. பிரம்மோற்சவ பத்திரிக்கை சுவாமி சன்னதியில் வாசிக்கப்பெறுகின்றது. சுந்தரர் அகத்தியன் பள்ளி எழுந்தருளி அகத்தியரை வெற்றிலை பாக்குடன் பிரம்மோற்சவத்திற்கு அழைத்து விட்டு வருவார்.   மாசி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் திருக்கதவம் திறக்கவும், அடைக்கவும் செய்த விழா. அர்த்தநாரீசுவரர், காட்சி கொடுத்த நாயகர், சந்திர சேகரர், புவனி விடங்கர் ஒவ்வொரு நாளும் திருவீதி வலம் வந்து அருளுகின்றனர். இத்திருவிழாவின் போது சந்திரசேகரர்  கோடியக்காடு  மோடி மண்டபம்  சென்று வருகின்றார். புவனி விடங்கர் ஹம்ஸபாத நடன தரிசனம் தந்தருளுகின்றார். மஹா சிவராத்திரியன்று நான்காம் காலத்தில் கண்ணப்பருக்கு அனுக்கிரகம் அளித்தல். வில்வ மரத்தில் இருந்து இறைவனை மிருகங்கள் கொல்லுமோ என்று கண் விழித்து காத்திருந்து வில்வ தளங்களை பறித்து போட்டுக்கொண்டிருந்த கண்ணப்பருக்கு இறைவன் அருட்காட்சி அருளுகின்றார். பங்குனி உத்திரத்தன்று கங்கைக்கு பாவ விமோசனம் நல்கிய விழா. அன்றைய தினம் மணிகர்ணிகையில் கங்கை எழுந்தருளுவதாக ஐதீகம். கங்கைக்கு சிவப்பு வஸ்திரம், திருமாங்கல்யம் சமர்ப்பித்து பாவ விமோசனம் அருளுகின்றார் பெருமான். திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, மன்னார்குடி மதிலழகு, வேதாரண்யம் விளக்கழகு என்றபடி, எலி அறியாமலே விளக்கைத் தூண்டி மறு பிறவியில் மன்னனாகும் பேறு பெற்றதால், இத்தலத்தில் விளக்கேற்றம் மிகவும் சிறப்பு. மூலவர் சன்னதியில் இறைவனை நோக்கி செல்லும் ஒவ்வொரு படி நிலையிலும் அடுக்கடுக்காக மாடங்கள் கட்டப்பட்டுள்ளன. முதல் மாடம் தொடங்கி, இறுதி மாடம் வரை செல்ல செல்ல அகலம் குறைந்து ஒவ்வொரு விளிம்பும் மற்றொன்றின் தொடக்கமாக அமைந்துள்ளது. தை அமாவாசையன்று இத்தலத்தில் இலட்ச தீபம் ஏற்றப்படுகின்றது. மேலும் திருக்கார்த்திகை, தீபாவளியன்றும் மாடம் முழுவதும் தீபமேற்றப்படுகின்றது. புயல் காலத்தில் அனைவருக்கும் அபயம் அளிக்கும் பிரம்மாண்ட ஆலயமாக திருமறைக்காடர் ஆலயம் அமைந்துள்ளது. அடியோங்களுக்கு அன்னம் பாலித்த பெருமான் இவர். அக்கதையை பின்னர் வரும் ஒரு பகுதியில் காணலாம். உப்பு சத்தியாகிரகம் தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் நடந்தது. வேதாரண்யம் உப்பிற்கும், புகையிலைக்கும் புகழ் பெற்றது. திருமறைக் காட்டில் ஹம்ஸபாத நடன புவனி விடங்கரின் தரிசனம் பெற்றோம் அடுத்து குக்குட நடன திருக்காறாயில் ஆதி விடங்கரை தரிசிக்கலாம் அன்பர்களே.                                   36. திருக்காறாயில் (திருக்காரவாசல்) – ஸ்ரீகனக சிம்மாசன சுவேத சாமந்தி புஷ்பாலங்கார  குக்குட நடன ஆதிவிடங்கர் []     கலையானே கலைமலி செம்பொற் கயிலாய மலையானே மலைபவர் மும்மதின் மாய்வித்த சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில் நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே பொருள்: எண்ணெண் கலைகளின் வடிவாய் விளங்குபவன். கலைகளின் பயனாய்ச் சிறந்த சிவந்த பொன்மயமான கயிலாய மலைக்கு உரியவன். தன்னோடு மலைந்த அசுரர்களின் முப்புரங்களை மாய்த்த வில்லை உடையவன். புகழ்மிகுந்த திருக்காறாயில் என்னும் தலத்தை நிலையாகக் கொண்டவன் என்று இவ்வாறு போற்றுபவர் மேல் வினைகள் நில்லா என்று ஆளுடையப்பிள்ளை பாடிய,  சப்த விடங்கத்தலங்களுள் ஒன்றான  திருக்காறாயில் தலம்  திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் திருவாரூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவாரூர் – நாரண மங்கலம் – திருநெல்பேர் – பின்னவாசல் வழியாக திருக்காரவாசலை அடையலாம்.  பூர்வசன்ம பாபம் நீக்கும் இத்தலம் சாலையோரத்திலேயே அமைந்துள்ளது. ஆதியில் இவ்விடம் கறுப்பு அகில் மரங்களால் நிறையப்பெற்றிருந்ததால் திருக்காரகில் என அழைக்கப்பட்டது என்றும் அதுவே பின்னாளில் திருமுறைகளில் திருக்காறாயில் என வழங்கப்பட்டதென்றும் கூறுகின்றனர். இந்நாளில் அப்பெயர் திரிந்து 'திருக்காரவாசல்' என வழங்குகிறது. இத்திருக்காறாயில் தலம் தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 119வது தலம் ஆகும். தேவதாருவனம், கபாலபுரம், பிரம்மபுரம், பித்தவனபுரம் என்ற நாமங்களும் இத்தலத்திற்கு உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'பனசாரண்யம்', 'காளாகருவனம்' என்று பெயர். கபித்தவன் என்பவன் தொண்டு செய்து வாழ்ந்த தலம் என்பதால் பித்தவனபுரம். கபால முனிவர்க்கு இறைவன் காட்சி கொடுத்த தலம் என்பதால் கபாலபுரம். அகத்தியருக்கு   காட்சி தந்த தலம். திருஞானசம்பந்தர் இத்தலத்தின் பதிகம் பாடியுள்ளார்.  சேஷதீர்த்த நீரைப் பருக தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத்தலத்தின் இறைவன்: கண்ணாயிரநாதர், கண்ணாயிரமுடையார் (சகஸ்ர நேத்ரேஸ்வரர்)  அம்மை : கயிலாய நாயகி. தீர்த்தம்: சேஷ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் தலவிருட்சம் :பலா/அகில் தியாகேசர்: ஆதி விடங்கர் திருநடனம் : குக்குட நடனம் தேவாரம்: திருஞானசம்பந்தர் -  நீரானே நீள்சடை மேலொர்நி ரைகொன்றைத் இறைவன் அபராத சகேஸ்வரர் (குற்றம் பொறுத்த நாதர்) என்றும் அழைக்கப்படுகின்றார். இத்தலத்தின் அருகில் திருநெல்லிக்கா, திருக்கைசினம், திருக்கோளிலி ஆகிய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் அமைந்துள்ளன. பிரம்மாவிற்கு ஒரு சமயம் தான் எல்லாரையும் விட பெரியவர் என்று கர்வம் வந்தது அதனால் சிவபெருமானையும் வழிபட மறந்தார். எனவே சிவபெருமான் அவரது கர்வத்தை அடக்க, படைப்புத் தொழிலை அவரிடமிருந்து பறித்தார். ஆகையால் விஷ்ணுவின் ஆலோசனைப்படி பிரம்மன் காவிரிக்கரையில் காரைவனத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்தார். பிரம்மனின் தவத்திற்கு மகிழந்த சிவபெருமான் ஆயிரம் கண் கொண்ட கண்ணாயிரப் பெருமானாக பிரம்மனுக்குக் காட்சி அளித்துப் படைப்புத் தொழிலை திருப்பி அளித்தார். எனவே இத்தலத்தின் மூலவர் கண்ணாயிரநாதர் என்றழைக்கப்படுகிறார். பிரம்மாவைத் தவிர இந்திரனும், இலக்குமியும், கபால முனிவரும், பதஞ்சலி முனிவரும் கண்ணயிரநாதரை தங்கள் பழி தீர வழிபட்டுள்ளனர் என்பது ஐதீகம். திருவாரூர் கமலாலயக் குளத்தில் புனித நீராடுபவர்கள் இந்திரன் ஆவதை பொறுக்க முடியாமல் இந்திரன் கமலாலயக்குளத்தை தூர்க்கக் கூறிய பழி தீர இத்தல இறைவனை வழிபாடு செய்து தன் பாவம் நீங்கப் பெற்றான். மகாலக்குமிதானே அழகி என்றும், தன் கணவன் மகாவிட்டுணுவே முழுமுதற் கடவுள் என்றும், தன் மைந்தன் மன்மதனே சிறந்த அழகன் என்றும் பெருமை பேசி வந்த பழி பாவம் தீர இத்தல இறைவனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றாள் என்பது ஐதீகம்.   .நீரானே நீள்சடை மேலொர்நி ரைகொன்றைத் தாரானே தாமரை மேலயன் றான்றொழும் சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் ஊரானே யென்பவ ரூனமி லாதாரே.  பொருள்: நீண்ட சடைமுடிமீது ஒப்பற்ற கங்கையை அணிந்தவன். வரிசையாகத் தொடுக்கப்பட்ட கொன்றை மாலையைச் சூடியவன். தாமரைமலரில் எழுந்தருளிய பிரமனால் வணங்கப்படும் புகழாளன். சீர்விளங்கும் திருக்காறாயில் எனப்படும் ஊரினன். இவ்வாறு அவனைப் போற்றிக் கூறுவார் குற்றம் இலராவர். என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய  கண்ணாயிரநாதப் பெருமான் இத்தலத்தில் சுயம்பு சிவலிங்கமாக கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் அருள் பாலிக்கின்றார். அம்பாள் கைலாயநாயகி அக்கமாலை தாமரை மலர் தாங்கி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றாள். கமல பஞ்சாவரண யந்திரம் என்னும் மஹா யந்திரத்தின் பிந்து ஸ்தான நாயகி ஷமாவதித் தாயார் (பொறுமை நாயகி) என்றும் அம்பாளை அழைக்கின்றனர்.  ஒரே சமயத்தில் ஐயனையும் அம்மையையும் தரிசிக்க முடியும்படியான அற்புதமான அமைப்பு. மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும் சப்தவிடங்களுள் ஒன்று இத்தலம். ஐயனின் சன்னதிக்கு  முன்னர் துவாரபாலகர்கள் அருள் பாலிக்கின்றனர். ஐயன் மற்றும் அம்மன் சன்னதிகளின் முகப்பில் அருமையான ஓவியங்களை காணலாம்  மற்ற சப்த விடங்கத் தலங்களைப் போலவே இத்தலத்திலும் கயிலாயநாயகி உடனாகிய கண்ணாயிரநாதர் கோயிலில் கருவறைக்கு இணையாகத் ஆதி விடங்க தியாகராஜர் சன்னிதி அமைந்துள்ளது.  இச்சன்னிதியில் விதானத்துடன் கூடிய உயர்ந்த மேடை மீது சிம்மாசனத்தில் நீலோத்பலாம்பாள் உடனுறை “கனக சிம்மாசன சுவேத சாமந்தி  புஷ்பலங்கார குக்குட நடன ஆதி விடங்க தியாகேசர்” எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். முன்புறம் வீர, ஞான  கட்கங்களைக் காண்கிறோம்.  (இவருடைய சன்னிதியில் இருந்த  மரகதலிங்கம்  திருட்டுப் போனது 17 ஆண்டுகளுக்குப்பின்  தற்போது திரும்ப கிடைத்துள்ளது.) தியாகராஜருக்குரிய ஆறு அபிஷேகங்கள் கிரகண  புண்ணிய கால அபிஷேகங்கள்,  யாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. இத்தியாகராஜர் 'ஆதிவிடங்கர்' என்றழைக்கப்படுகிறார்,   அநாதியான சிவபெருமான் உலகத் தோற்றத்தின் ஆதியாகவும் இருப்பதையே இப்பெயர் உணர்த்துகிறது. நாடொறும் காலையில் இச்சந்நிதியில் விடங்க லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.  மற்ற சப்த விடங்கத்தலங்களைப் போலவே இத்தலத்திலும் நந்தியெம்பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார்.  குக்குட நடனம்: இவர் ஆடும் திருநடனம் குக்குடநடனம் எனப்படுகின்றது. இது போருக்குச் செல்லும் கோழியானது இடமும் வலமும் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துப் பார்த்து முன்னேறியும் சற்று நிதானித்தும் சுழன்றும் தாக்குவது போல் ஆடும் நடனமாதலின் குக்குட நடனம் எனப்பட்டது. வைகாசி விசாகத்தில் பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. பழைய கோயிலை முழுவதுமாகப் பிரித்தெடுத்துவிட்டு நல்ல கருங்கல்லால் கலை வேலைப்பாட்டுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் அஜபா நடனத்தைக் கண்டு களித்த பதஞ்சலி முனிவர் அனைத்து நடனங்களையும் காட்டி அருள வேண்ட தியாகேசர் அவருக்கு சப்த நடனங்களையும் காட்டி அருளினார். பரவை உடனாய சுந்தரர் சன்னதி தியாகரின் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வூர்த் தலபுராணம் வடமொழியில் அமைந்திருந்தது அதனை தேவகோட்டை வித்துவான் சொ.வேலுசாமிக் கவிராயர் மொழி பெயர்த்து எழுதியுள்ளார். இது 1924ம் ஆண்டில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் முன்பகுதியாக உள்ள தோத்திரப்பாக்கள் தேவகோட்டை வித்துவசிகாமணி சிதம்பரஞ் செட்டியாரால் பாடப்பெற்றுள்ளன. இதில் நைமிசாரண்ய சருக்கம் தொடங்கி நாற்பது சருக்கங்களில் இத்தலவரலாறு கூறப்பட்டுள்ளது. இந்நூலில் முசுகுந்தன் தியாகராஜரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தது அவருடைய சிங்காதனச் சிறப்பு. அவருக்குச் செய்ய வேண்டிய அபிஷேக முறை, தியாகராஜ ரகசியம் ஆகியன விளக்கமாகத் தனித்தனிச் சருக்கங்களில் கூறப்பட்டுள்ளன. இதில் விடங்கப் பெருமானுக்குச் செய்ய வேண்டிய உபசாரங்கள் விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக தியாகராஜருக்கு அணிவிக்கப்படும் தியாகப்பரிவட்டம் என்னும்  துணிகளை விவரிக்கும் பகுதியைக் கூறலாம்.  இதன்படி சதுரவடிவான பூமி தத்துவ பூந்துகில் நான்கும், அரைவட்ட வடிவாயுள்ள நீர் தத்துவ ஆடை ஐந்தும், முக்கோண வடிவான அக்னி, தத்துவ ஆடை மூன்றும், அறுகோண வடிவாயுள்ள வாயு தத்துவ ஆடை மூன்றும் ஆக இருபத்தியொரு ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்று குறித்திருப்பது சிறப்பு. அனைத்து சப்த விடங்கத்தலங்களிலும் தியாகேசரின் திருமேனி இவ்வாறு 21 பரிவட்டம் கொண்டே மறைக்கப்படுகிறது.   மேலும் காறாயில் ஆதிவிடங்கர் வெள்ளைச் செவ்வந்தி மலர்களைச் சிறப்பாக சூடுகின்றார் என்றும் இந்நூல் குறிக்கின்றது. இந்நூலில் உள்ள சிங்காசன விதிச்சருக்கம் தியாகராஜரின் சிம்மாசனத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தைக் கூறுகிறது. அதன்படி இச்சிம்மாசனம் நல்ல சந்தன மரத்தால் செய்யப்பட்டு தங்கத்தகடுகளால் கவசமிடப்பட வேண்டும். சந்தன மரத்திற்குப் பதிலாகத் தேவதாரு மரத்தையும் பயன்படுத்தலாம்.  அது மத்திம பலனைத் தருவதாகும். தங்கத் தகடுகளால் கவசம் அமைப்பது உத்தமம் என்றும் வெள்ளியால் அமைப்பது மத்திமம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் நான்கு கால்களும் நான்கு வலிய சிங்கங்களால் தாங்கப்பட வேண்டும். இதன் எட்டு திக்கிலும் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அமைய வேண்டும். நான்கு பக்கமும் கற்பவிருட்சம், காமதேனு, இடபங்கள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். நடுவில் மலர்ந்த தாமரையும் அதன் மீது ஸ்ரீசக்கரம் அமைந்திருக்க அதன் நாற்புறமும் பிரம்மா, விஷ்ணு உருத்திரன் மகேசன் முதலிய தேவர்களின் உருவங்கள் அமைந்திருக்க வேண்டும். இது பிருத்வி பிரஸ்தாரத்தின் வடிவமாகும். இதன் மீது அமர்த்தியே தியாகராசரைப் பூசிக்க வேண்டும். இவ்வமைப்பில் தான் திருவாரூர் பெருமாளின் சிம்மாசனம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தியாகராஜ வழிபாட்டினை விளக்கும் பல அரிய விரிவான செய்திகளை இந்நூல் குறிப்பிடுகின்றது. வாருங்கள் இனி இத்திருக்கோவிலை வலம் வந்து தரிசிக்கலாம். []   இராஜகோபுரம் இல்லை. கொடி மர விநாயகர், கவசம் பூண்ட கொடிமரம், பலிபீடம்,  உயரத்தில் நந்தி சன்னதி. இரண்டாவது நுழைவாயிலில் மூன்று நிலை கோபுரம் உள்ளது. பிரகாரத்தில்  எம்பிரான் தோழர் சுந்தரர், உற்சவமூர்த்திகள் சன்னதியில் விநாயகர், சோமாஸ்கந்தர், ஆடிப்பூர அம்பாள், சந்திரசேகரர், பிக்ஷாடணர், ஆடல் வல்லான், காட்சி கொடுத்தார்,  வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பிடாரி, நால்வர், சேக்கிழார் சண்டிகேஸ்வரர் உற்சவ மூர்த்திகளை தரிசிக்கலாம்.  தியாகராஜர் சபை, கன்னி மூல கணபதி,  பிச்சைத்தேவர், அகத்தீஸ்வரர், கௌதமேஸ்வரர், இந்திரபுரீஸ்வரர், விஸ்வநாதர், விசாலாட்சி, மாரியம்மன், ஆறுமுகசுவாமி, கஜலட்சுமி, நாகர், சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர்,  நால்வர்-சேக்கிழார், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள.  கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி (ஞானமகாகுரு), மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன.  ஞானமகாகுரு தலையில் குண்டலினி சக்தியுடன் அருள் பாலிப்பது சிறப்பு. ஞான மகாகுரு எதிரில் அகத்தியரை சுவடி படிக்கும் கோலத்தில் தரிசிக்கலாம். நவக்கிரகங்கள் வழக்கமான முறையில் அமைந்துள்ளன.  மூலவருக்கு முன்புறம் நடராஜசபை மண்டபத்தின் தூண்களிலும் கலை நுணுக்கம் மிகுந்த சிற்பங்களைக் கண்டு களிக்கலாம்.   ஆடல் வல்லானுடன், காட்சி தந்த நாயனார் உற்சவர் மிகவும் அழகு, நந்தி மேல் ஒயிலாக சாய்ந்த நிலையில் உமையம்மையுடன் எழிலாக தரிசனம் அளிக்கின்றார். தாசி ஒருத்திக்கு காட்சி தந்தவர் ஆதலின் இப்பெருமானுக்கு 'காட்சி தந்த நாயனார்' என்று பெயராம். நடராசர் சன்னதியின் முகப்பில் உள்ள கற்சிற்பங்கள் மிகவும் அருமை. பதஞ்சலியும், வியாக்ரபாதரும் அப்படியே தத்ரூபம். மண்டபத் தூண்களிலும் கலை நுணுக்கம் மிகுந்த அற்புத சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கூரையிலும் வண்ண மயமான  சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. முப்பொழுதுகளான காலை, பகல், இரவு வணங்க மூன்று பைரவர்கள் இத்தலத்தில் அருள் பாலிக்கின்றனர். இவர்கள் முறையே காலை பைரவர், உச்சிக்கால பைரவர், அர்த்தஜாம பைரவர் – சொர்ணகர்ஷண பைரவர் என்றழைக்கப்படுகின்றனர். பைரவர் சன்னதி  இலக்குமி  சன்னதிக்கு எதிரே அமைந்திருப்பதால் சொர்ணகர்ஷண பைரவரை வழிபட இழந்த பொருளை திரும்பப் பெறலாம் என்பது ஐதீகம். மேற்கு பிரகாரத்தில் பிரமோத விநாயகர் எழுந்தருளியுள்ளார். பிரமோதம் என்றால் பெருமகிழ்ச்சி என்று பொருள். இவரை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும் அதன் மூலம் பெரு மகிழ்ச்சி ஏற்படும் என்பதால் இவருக்கு இத்திருநாமம். தாயானே தந்தையு மாகிய தன்மைகள் ஆயானே யாயநல் லன்பர்க் கணியானே சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில் மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே என்று சம்பந்தப்பெருமான் பாடிய மூர்த்தி, தலம் கீர்த்தி என்ற முச்சிறப்புகளையும் கொண்ட இத்தலத்தில் இரண்டு தீர்த்தங்கள் உள. வடக்குப்பிரகாரத்தில் உள்ள சேஷதீர்த்தம் ஒரு கிணறு ஆகும். ஆதிசேஷன் (பதஞ்சலி) இக்கிணற்றின் வழியாக வந்து இறைவனை வழிபட்டதால் இத்தீர்த்தத்திற்கு இப்பெயர். புரட்டாசி மாதம் பௌர்ணமியன்று இந்திரன் சேஷதீர்த்தத்தில் நீராடி இத்தல கடுக்காய் பிள்ளையாரை தரிசிப்பதாக ஐதீகம் எனவே  இந்திரதீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது. இத்தீர்த்தம் மருத்துவ குணம் மிகுந்தது, பௌர்ணமி அன்று அம்பாளுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர். இதனால் நாள்பட்ட நோய்கள் குறிப்பாக சருமநோய்கள் குணமாகின்றன. கண் நோய் உள்ளவர்கள் இங்கு தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து,  தீர்த்தத்தில் நீராடி, பிரசாதமாக தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பிரசாதமாக பெற்று சாப்பிட்டு வந்தால் கண்  நோய் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம்.  மற்றொரு தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலுக்கு வெளியே உள்ள குளம் ஆகும். இத்தலப் பிள்ளையார் கடுக்காய் பிள்ளையார் என்று அழைக்கப்படுதற்கான வரலாறு. வணிகன் ஒருவன் வர்த்தகத்திற்காக செல்லும் போது பிரம்ம தீர்த்தக்கரையில் இளைப்பாறினான். அவன் வண்டியில் ஜாதிக்காய்கள் இருந்தன. அவனுடன் விளையாட வினாயகர் ஒரு சிறுவனாக வந்து மூட்டைகளில் என்ன இருக்கின்றது என்று வினவினார். வணிகனும் பொய்யாக கடுக்காய் என்று கூறினான். வினாயகர் புன்னகை புரிந்து அப்படியே ஆகுக என்று அருளினார். சந்தையை அடைந்த வணிகன் மூட்டைகளைத் திறந்து பார்க்க அனைத்தும் கடுக்காயாக மாறி இருப்பது கண்டு திகைத்தான். அழுது கொண்டே தான் செய்த குற்றத்திற்காக மன்னிப்பு கேட்டு இறைவனிடம் இறைஞ்சினான். வினாயகர் அவன் முன் தோன்றி அவன் பிழை பொறுத்து கடுக்காய்களை ஜாதிக்காய்களாக மாற்றியருளினார், இவர் சன்னதி பிரம்ம தீர்த்தக் கரையில் அமைந்துள்ளது. ஒரு சமயம் இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடந்த போது பார்வையற்ற பெண்ணொருத்தி, பக்கத்தில் உள்ள 'வெள்ளையாறு' என்னுமிடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். கும்பாபிஷேகத்தின் போது கூட்டத்தினர் எழுப்பிய குரலொலி கேட்டுத் தன்னால் பார்க்க  அதைக் காண முடியவில்லையே என்று சிவபெருமானை  உருக்கமுடன் பிரார்த்திக்க, இறைவன் அப்பெண்ணுக்குக் கண்பார்வை தந்து, அப்பார்வையும் நம் பார்வையைப் போல் சதாரணமாக இல்லாமல் ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகுமாறு ஒளி தந்து அருளும் புரிந்து, அவளும் பார்த்து மகிழுமாறு செய்தாராம். இதனால் இறைவனுக்குக் 'கண்ணாயிரநாதர்' என்று பெயர் வந்தது என்றோர் ஐதீகமும் உண்டு. இத்தலத்தில் வில்வமரத்தில் மூன்று தளமாக இல்லாமல்  கொத்துக் கொத்தாக இலைகள் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. கோவிலுக்கு வெளியே வசந்த மண்டபம் அமைந்துள்ளது. சமீபத்தில் புது திருத்தேரை தியாகேசப்பெருமானுக்கு அர்ப்பணித்துள்ளனர். திருஞானசம்பந்தரரின் பதிகம் இரண்டாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பெருமானை உள்ளன்போடு துதிப்பவர்கள் வினையாவும் தீர்ந்து விடும், காராயிலில் இறைவன் இருக்கின்றார் என்று நினைத்தாலே வாழ்க்கையில் முன்னேறுவர் என்று தமது பதிகத்தில் பாடியுள்ளார் ஆளுடைப்பிள்ளையார். தமது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் மேல் வினை நில்லாவே என்று பாடியுள்ளார். நாடொறும் ஆறுகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. வைகாசியில் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. திருவாரூர் போலவே வசந்த விழாவாக சிறப்பாக நடைபெறுகின்றது. கொடியேற்றம், பின்னர் சந்திரசேகருக்கு பட்டம் கட்டுகின்றனர். அடுத்து ஆதி விடங்கப்பெருமான் குக்குட நடனத்துடன் கோவிலுக்கு வெளியே  உள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார். தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா. மாலையில் பூதம், கற்பக விருட்சம், யானை, வெள்ளி ரிஷபம், திருக்கயிலாயம் என்று   பல்வேறு வாகனங்களில் வீதியுலா.  தியாகேசர் திருத்தேரோட்டம் கண்டருளி வைகாசி விசாகத்தன்று தீர்த்தவாரி நடைபெறுகின்றது திருப்பாத தரிசனம் தநதருளுகின்றார். மேலும் தமிழ் மாதப் பிறப்பு, தியாகராஜர் அபிஷேகம், நடராஜர் அபிஷேகம், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, வியாழன் தோறும் குரு வழிபாடு, கார்த்திகையில் முருகன் வழிபாடு, காலாஷ்டமி பைரவர் பூஜை, அமாவாசை, பவுர்ணமி ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்வாலயத்தில் பல கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டில் இப்பெருமானின் பெயர் 'காறாயில் மகாதேவர்' என்று குறிக்கப்பெற்றுள்ளது. ஆதி விடங்கரின் தரிசனத்திற்குப் பின் திருக்கோளிலி அவனி விடங்கரை தரிசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.                                37. திருவாய்மூர் – ஸ்ரீகமல நடன   நீல விடங்கர் []   அடுத்து நாம் தரிசிக்க இருக்கின்ற தலம் திருவாய்மூர் ஆகும். எங்கும் நிறை பரபிரம்மான சிவ பரம்பொருள் பல தலங்களில் எண்ணற்ற திருவிளையாடல்கள் புரிந்துள்ளார். இவ்வாறு மண்ணுலகில் அப்பெருமான்  திருவிளையாடல் (லீலை)  புரிந்த தலமாக போற்றப்படுகிறது  லீலாஹாஸ்யபுரம் என்னும் திருவாய்மூர். வாய்மையூர் என்பதே வாய்மூர் என்று மருவியது என்பர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இத்தலம்  124ஆவது தலமாகும். திருநாவுக்கரசருக்கும், திருஞானசம்பந்தருக்கும்  திருக்கயிலாயக் காட்சி நல்கிய தலம். கயிலாய மலை நந்தியெம்பெருமான் மற்றும் சர்ப்ப வாகனத்தில் இரண்டு தென் முகக்கடவுள் அருள் பாலிக்கும் தலம். வடக்கு நோக்கிய கல்யாண துர்க்கை அருளும் தலம். அமர்ந்த கோல முருகன், கேது  மனித ரூபத்தில் உள்ள தலம்.  இத்தலத்திற்கு அப்பர் பெருமானின் இரு பதிகங்களும், சம்பந்தப்பெருமானின் ஒரு பதிகமுமாக மூன்று பதிகங்கள் உள்ளன. சுந்தரரும் திருவாய்மூர் மணாளர் என்று பாடியுள்ளார். காசிப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்த புதல்வர்களில் ஒருவன் பலா மரத்தடியில் லிங்கப் பரம்பொருளைப் பூசித்துப் பரமன் திருவருளால் வாயு மண்டலத்திற்கு அதிபதியாய் வாயு தேவன் ஆனதால் வாயூர் என்று பெயர் பெற்று வாய்மூர் என்று ஆயிற்று. தட்சிணா மூர்த்தியின் நெற்றிக் கண் பொறியால் திருமால் மைந்தன் மன்மதன் எரிந்து உடலும் எஞ்சாமல் பிடி சாம்பலானது கண்டு லிங்கப் பரம் பொருளை வழிபட்டுத் தொழுத இரதிதேவிக்கு அருளிச் செய்ததற்கு ஏற்ப மன்மதனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து வாழ வைத்த மகேசுவரனின் வாய்மை காரணமாக வாய்மையூர் என்று பெயர் பெற்று வாய்மூர் என்று ஆயிற்று. திருவாரூர் – வேதாரண்யம் பேருந்து மார்க்கத்தில் திருவாரூரில் இருந்து 25 கி.மீ தூரத்திலும், திருநெல்லிக்கா என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து 13 கி.மீ தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.  திருக்குவளைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது . நாகப்பட்டினம்  திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள சீரா வட்டம் பாலம் என்ற இடத்தில் இருந்து  2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சாலையோரத்தில் கிழக்கு நோக்கியவாறு திருக்கோயில் அமைந்துள்ளது. ஆலயத்தில் முன்புறம் பாவ விமோசன பிரசண்ட தீர்த்தம் என்ற பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. ஒரே பிராகாரம் கொண்ட இக்கோயிலில் கருவறைக்கு இணையாகத் தெற்குப் பிராகாரத்தில் தியாகராஜரின் மண்டபம் அமைந்துள்ளது.  இதில் அழகிய பெரிய  மஞ்சத்தினுள் அமைந்த இரத்தின சிம்மாசனத்தில் அல்லியங்கோதை அம்பாள் உடனுறை நீலவிடங்கர் என்ற பெயரில் தியாகராஜர் கொலு வீற்றிருக்கின்றார்.  ஐப்பசி மாதப்பிறப்பன்று இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. மேலும் இவருடைய சன்னதியில் அரிய நீல ரத்தினக் கல்லால் ஆன சிவலிங்கம் விடங்கராக வைத்துப் பூஜிக்கப்படுகின்றது. இவர் ஏனைய விடங்கர்களை விட அளவில் சிறியவர். உயர்ந்த வகை ஸ்படிகலிங்கம் ஒன்றும் உள்ளது.     தினமும் இரு முறை விடங்கருக்கு பால், சந்தனம், பன்னீர் முதலிய திரவியங்களினால் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது. இவருடைய நடனம் கமல நடனம் எனப்படுகின்றது. மருத நிலப்பகுதி அல்லவா?  ஐயனும் அப்பகுதியின் இரத்தினமான தாமரை மலர் ஆடுவது போல் ஆடுகின்றார். தண்ணீர் நிறைந்த குளத்தில் தாமரை மலர் தென்றல் வீசுவதற்கேற்ப ஆடுவதுபோல இவர் ஆடுதலின் இவருடைய நடனம் கமலநடனம்  எனப்பட்டது.  தினமும் மாலையில் சிறப்பு வழிபாடும் அவ்வேளையில் வடையும், புட்டும் நிவேதனம் செய்யப்படுகின்றன. இவருடைய கோயில் பொற்கோயில் என்றழைக்கப்படுகிறது. திருநாவுக்கரசர் திருவாரூரில் தியாகராஜப்பெருமான் பவனி வரும் அழகைக் கண்டு பரவசமடைந்து 'ஆதிரை நாளால்' அது வண்ணம் என்று பாடியது போலவே வாய்மூர் அடிகளான தியாகேசர் பவனி வந்த அழகையும் கண்டு களித்துப் 'பாட அடியார் பரவக்கண்டேன்' என்ற பதிகத்தினை அருளிச் செய்துள்ளார்.  அப்பதிகத்தில் மெல்லியலும்  விநாயகனும் தோன்றக்கண்டேன் என்று பாடியுள்ளதால், திருவாரூர் விழாவில் பக்தர்கள் பாடியாடி சித்தர்கள் சூழ்ந்து நிற்க, பதினெண் கணங்கள் உடன்வர, விநாயகரும், பார்வதியும் உடன்வர பக்தர்கள் கழல் வலங்கொண்டு உடன்வர, பெருமான் வலம் வந்தது போலவே இங்கும் வலம் வந்த அழகைக் கண்ணாரக் கண்டு களித்து ‘வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே’ என்று பாடுவது படித்து இன்புறத்தக்கதாகும். தளிரிள வளரென வுமைபாடத் தாளம் மிடவோர் கழல்வீசிக் கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார் விளரிள முலையவர்க் கருணல்கி வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல் வளரிள மதியமொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே. பொருள் : தளிர்களோடு கூடிய இளங்கொம்பு போல , உமையம்மை அருகிருந்து பாடவும் , தாளம் இடவும் ஒப்பற்ற தழலை உடைய கையை வீசி, விளங்கும் மாணிக்க மணியை உடைய பாம்பை இடையிலே கட்டி ஆடும் பொய்வேடத்தை உடையவர். தம்மை விரும்பும் பருத்த தனபாரங்ளை உடைய மகளிர்க்கு அருள் நல்கித் திரு நீறுபூசி, முடிமேல் பிறையணிந்து காட்சி தருபவர். திருவாய்மூர் அடிகளாகிய அவர் வருவார் காணீர் என்று சம்பந்தப்பெருமான் தான் சிவ பெருமானை கண்ட கோலத்தை பதிகத்தில் பாடியுள்ள இத்தலத்தின்    இறைவன்: வாய்மையர், வாய்மூர் நாதர், வாய்மூர் அடிகள் அம்மை:   க்ஷீரோப வசனி  -  பாலின் நன்மொழியாள் தல விருட்சம்: பலா தீர்த்தம்: சூரிய தீர்த்தம் வழிபட்டோர்: பிரம்மன், சூரியன், தேவேந்திரன், நவகோள்கள், வால்மீகி முனிவர். தியாகேசர்: நீல விடங்கர். திருநடனம் : கமல நடனம். தேவாரப் பாடல்கள்: தளிரிள வளரென வுமைபாடத்- திருஞானசம்பந்தர்,  எங்கேயென்னை இருந்திடந்தேடி – அப்பர். இத்திருவாய்மூர்ப் பெருமானை பிரம்மனும், சூரியனும் ஒன்பது கிரகாதிபதிகளும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இங்கு வருடத்தில் கதிரவன் ஒளி சிவலிங்கத்தின் மீது விழுவதால் அப்போது சூரிய பூஜை நடை பெறுகிறது. சூரிய பூஜை செய்வதால் நேத்திர ஸ்தலமாக விளங்குகிறது. பிறவியிலேயே கண் தெரியாத இளைஞர் ஒருவர் நந்தியாவட்டை பூவை 48 நாட்கள் சிவன் மீது வைத்து பூஜை செய்து அதை அவர் கண் மீது வைத்துக் கொண்டதால் மூன்று மாதங்களில் கண் ஒளி பெற்றார். மூலவருக்கு இத்தலத்தில்  அபிஷேகம் உண்டு. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினாலும், வாய்மூர்நாதர் மேல் வைத்த சந்தனம், விபூதி இவற்றைப் பூசிக் கொண்டாலோ இவர் மருந்தாய்ப் பிணி தீர்க்கிறார். “ருத்ராட்ச பந்தலின் கீழ் அருளுகின்றார் திருவாய்மூர்நாதர். வடக்கு பிரகாரத்தில் அம்பாள் பாலின் நன் மொழியாள் சிவ பூசைக்காக மலரும்  ருத்ராட்ச மாலையும் தாங்கிய கோலத்தில் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றாள். அம்மனுக்கு வாகனமாக நந்தி இருப்பது ஒரு சிறப்பு. அம்பாளை தேவேந்திரனும், தியாகேசப்பெருமானை வால்மீகி முனிவரும்  வழிபட்டுள்ளனர். சூரியன் - சாயா தேவியின் புதல்வர்களான யமனுக்கும்,  சனி பகவானுக்கும் இடையே ஒரு சமயத்தில் பகை உண்டானது. சனிக்கு யமன் சாபமளிக்கின்றார். தன் தாய் சாயாதேவியின் ஆலோசனையின் பேரில் சனி பகவான்,  கால பைரவாஷ்டமி தினமான கார்த்திகை மாத தேய் பிறை அஷ்டமியன்று  திருவாய்மூர் வந்து அஷ்ட பைரவரை வழிபடுகின்றார். எனவே அவருக்கு ஈசன் அருளால் கிரகப்பதவி கிட்டியது. எனவே இத்தலம் காசிக்கு இணையான தலமாக  கருதப்படுகின்றது. ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர், ஸ்வர்ண பைரவர் என்று எட்டு பைரவர்கள் வீற்றருளும் தலமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. அஷ்ட பைரவர்களில் அகோர பைரவர் நல்ல பதவியைக் கொடுப்பார். ஆனந்த பைரவர் திருமணத்தடை நீக்குவார். பாதாள பைரவர் மனைக்கட்டு பிரச்சினைகள் தீர்த்து வைப்பார். கால பைரவர் வியாதிகள் தீர்ப்பார்; யம பயம் நீக்குவார். ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் செல்வத்தைக் கொடுப்பார். ஈஸ்வர பைரவர் எதிரிகள் நீக்குவார். உத்தண்ட பைரவரை வழிபட்டால் வழக்குகள் வெற்றி பெறும். பால பைரவர் மழலைச் செலவம் அருளுவார். இங்கு அஷ்ட பைரவரை வேண்டிக்கொண்டு நம்முடைய விண்ணப்பத்தை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அவரிடம் வைத்து விட்டால் நம் வேண்டுதல் நிறைவேறியவுடன் பால் அபிஷேகம் செய்து நம் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். தற்போது ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர் மற்றும் பால பைரவர் ஆகிய நான்கு மூர்த்தங்கள் மட்டுமே உள்ளன. மற்ற மூர்த்தங்களுக்கு பதிலாக சுக்குமா தண்டங்கள் ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டுள்ளன. பைரவரின் அருளால் சாபம் நீங்கப்பெற்ற இந்திரனின் மகன் ஜயந்தன் இத்தலத்தில் சித்திரை மாதம் முதல் வெள்ளியன்று வழிபடுகின்றார்களோ அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளும், புத்திரப்பேறும் தந்தருள வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். இறைவனும் அவ்வாறே ஜயந்தனுக்கு அருள் புரிந்தார். இன்றும் சித்திரை மாத முதல் வெள்ளியன்று ஜயந்தன் பூசை நடைபெறுகின்றது. ஞாயிற்று கிழமையன்று பைரவர்களுக்கு ருத்ராபிஷேகம் அல்லது விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட, தோஷங்களினால் தடைபட்ட திருமணம் கூடி வரும். வெள்ளிக் கிழமைகளில் வில்வ பத்திரத்தினால் அர்ச்சனை செய்ய வறுமை நீங்கி வளம் பெறலாம். சனிக்கிழமைகளில் சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி மூலம் வரும் தொல்லைகள் நீங்கும். மற்றும் இத்தல பைரவர்களை வழிபட இழந்த சொத்துக்களை திரும்பக் கிடைக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடையும். தோரண வாயிலுடன் அமைந்துள்ளது ஆலயம். எதிரே அழகு மிளிர, பரந்து விரிந்து காணப்படுகின்றது தல தீர்த்தமான பாவ விமோசன பிரசண்ட தீர்த்தம். பிரம்மா முதலான தேவர்கள், தாரகாசுரனுக்கு பயந்து பறவை வடிவெடுத்து சஞ்சரிக்கும் போது, இத்தலம் அடைந்து இத்தீர்த்தத்தில் நீராடி, திருவாய்மூர் நாதனை வழிபட்டு பாவம் நீங்கப்பெற்ற பெருமை உடையது. இக்குளக்கரையில் திருக்குள வினாயகர் சன்னதி அமைந்துள்ளது.  ஊருக்கு மேற்கு திசையில் சூரியனால் உண்டாக்கப்பட்ட சூரிய தீர்த்தமும், இவ்வாலயத்திற்கு தெற்கே பாயும் அரிச்சந்திரா நதியும் தீர்த்தமாக திகழ்கின்றன. இராஜகோபுரத்திற்கு வெளியே   வினாயகப்பெருமானுடன் கூடிய  பலிபீடம்,  கொடிமரம்,  நந்தி மண்டபம் அமைந்துள்ளது ஒரு தனி சிறப்பு. ஒரு காலத்தில் இரண்டு பிரகாரங்கள் இருந்திருக்கலாம்.  அடுத்து  மூன்று நிலை இராஜ கோபுரம் ஐந்து  கலசங்களுடன் எழிலாக அமைந்துள்ளது உள்ளே தென்புறம் மடப்பள்ளி, வடபுறம்   அஷ்ட பைரவர்கள் சன்னதி.  கிழக்கு நோக்கி தியாகர், திருவாய்மூர் நாதர்,  அப்பருக்கு காட்சியளித்த வேதாரண்யேஸ்வரர் என்று மூன்று  சன்னதிகள் மஹா மண்டபம் மற்றும் அந்தராளத்துடன் அமைந்துள்ளன. திருவாய்மூர் நாதர் சுயம்பு, சற்று இடப்புறம் சாய்ந்த வண்ணம் அருள் பாலிக்கின்றார். இவர் சன்னதியில் துவாரபாலகர்கள் காட்சி அளிக்கின்றனர். பங்குனி மாதம் 12, 13 நாட்களில் சூரியனின் கதிர்கள் சுவாமி, அம்பாள் திருமேனியைத் தழுவுகின்றன. மூலவருக்கு தென்புறம்  நீலோற்பலாம்பாள் உடனுறை நீலவிடங்க தியாகேசர், அனைத்து சப்த விடங்கத்தலங்களைப் போலவே ஐயனுக்கு  முன்னே வீர, ஞான கட்கங்கள் மற்றும் நின்ற கோல செப்பு நந்தி அமைந்துள்ளது.  ஐயனுக்கு வலப்புறம் வேதாரண்யேஸ்வருக்கு தனி சன்னதி உள்ளது.  மஹா மண்டபத்தில் தெற்கு நோக்கி ஆடல் வல்லான்  புதுமையான உன்னத கோணத்தில் அட்டாணிக்கால் இட்டு சாந்தமே வடிவாக அருட்காட்சி அளிக்கின்றார். அருகே  தியாகேசப்பெருமானுக்கு கட்டுப்பட்டு நவகிரகங்கள் ஒரே வரிசையில் காட்சி அருள்கின்றனர். திருவாய்மூர்ப்பெருமானின் கருவறைச் சுவற்றில் நான்கு தூண் மண்டபத்தில் வேதமும் வேதப் பொருளும் உரைத்த  ஞான தட்சிணா மூர்த்தியும், தியாகேசர் கருவறைச் சுவற்றில் முழந்தாள் மீது கரம் வைத்து நந்தியின் மேல் அமர்ந்துள்ள  காம தகனராகிய யோக தட்சிணா மூர்த்தியும் காட்சி தருகின்றனர். முயலகன் மாறியுள்ளான். யோக தட்சிணா மூர்த்தி கூரை கூம்புக் கூரையாக அமைந்துள்ளது. திருவாய்மூர்ப் பெருமான்  கருவறைப் பின்புறச் சுவற்றில் அடிமுடி காண இயலா லிங்கோற்பவரும்,  தியாகர் கருவறைப் பின்புறச்  சுவற்றில் மகா விஷ்ணுவும் அருள் பாலிக்கின்றனர். தெற்கு கோஷ்டத்தில்  வினாயகர் இரு பக்கமும் அடியார்கள் வணங்க நர்த்தன கோலத்தில் எழுந்தருளியுளார். வட கோஷ்டத்தில் துர்க்கை வித்தியாசமான கோலத்தில் திருக்கரத்தில் ஒலை சுவடி ஏந்தி, சிம்ம வாகனத்துடன் எழிலாக அருள் பாலிக்கின்றாள். பிரதான கணபதி சன்னதி தென்மேற்கிலும், மேற்கில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதியும், வடமேற்கில் கஜலக்ஷ்மி சன்னதியும் அமைந்துள்ளன. அம்பாள் சன்னதி ஐயனுக்கு இடப்புறம் அமைந்துள்ளது.   பல சித்தர்கள் வாய்மூரை வழிபட்டுப் பூசித்துள்ளனர். வாய்மூர்ப் பெருமானாகிய வாய்மூர் நாதரையும் நீல விடங்கரையும் வழிபட்ட வால்மீகிச் சித்தர் என்பவர் பிரதிட்டை செய்து பூசித்த லிங்க சன்னதி பிரகாரத்தில் உள்ளது. வால்மீகிச் சித்தர் சிவ பூசை செய்யும் காட்சி வாய்மூர் நாதர் கருவறைச் சுவற்றில் காணப்படுகிறது. சிவ பூசைக்காக சித்தர் உண்டாக்கிய கிணறு சித்தர் கூபம், சித்தர் தீர்த்தம் என்ற பெயரில் பிரகாரத்தில் உள்ளது. திருவாய்மூருக்கு ஒன்றாக வந்து தீர்த்தம் உண்டாக்கி சிவ பூசை செய்த  சூரியன் முதல் கேது வரையிலான  கிரக தேவர்கள் பிரகாரத்தில் வரிசையாக உள்ளனர். இவர்கள் பிரதிட்டை செய்து தொழுது வழிபட்ட லிங்க மெய்ப் பொருள் பிரகாரத்தில் உள்ளது. அருகே சூரியனும் சந்திரனும் உள்ளனர். அப்பருக்கும் சம்பந்தருக்கும் காட்சி கொடுத்த ஆடல் வல்லான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இவரது வாசலில் வியாக்ரபாதர், பதஞ்சலி சுதை சிற்பங்கள் அருமை. வல்லப கணபதி, துவார கணபதி மற்றும் காட்சி கொடுத்தார்  வாயிலில் விரல் காட்டி விநாயகர் கணபதி அருளுகின்றார். நாராயணி வழிபட்ட லிங்கம் அருகில் சங்கு சக்கரத்துடன் நாராயணி அருளுகின்றாள். சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன, வைகாசியில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.    அல்லிய மலர்புல்கு விரிகுழலார் கழலிணை யடிநிழ லவைபரவ எல்லியம் போதுகொண் டெரியேந்தி யெழிலொடு தொழிலவை யிசையவல்லார் சொல்லிய அருமறை யிசைபாடிச் சூடிள மதியினர் தோடுபெய்து வல்லியந் தோலுடுத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே     அடுக்கடுக்கான இதழ்களை உடைய மலர்களைச் சூடிய விரிந்த கூந்தலை உடைய மகளிர் தம் திருவடிகளைப் பரவ நள்ளிரவில் அனலேந்தி ஆடும் அவ்விறைவர் அம்மகளிரது பரவுதலை ஏற்றருளுபவர். வேதங்களைப் பாடிக்கொண்டு, இளமதி சூடி ஒரு காதில் தோடணிந்து புலித்தோலுடுத்தி வருவார். அவ்வாய்மூர் இறைவரைக் காணீர்  என்பதில்  மகா சங்கார தாண்டவத்தைப் பல்வேறு கூறுபாடுற்ற சத்திகள் ஒருங்கு சேர்ந்து காணும் உண்மை உணர்த்தியுள்ளார்  தம்முடைய பதிகத்தில் ஆளுடையபிள்ளையார். இனி அப்பர் பெருமானுக்கும், சம்பந்தப்பெருமானுக்கும் தமது தரிசனத்தை இறைவன் நல்கியதைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.  வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில், மறைக்காட்டு நாதர் ஆலயத்தின் அடைக்கப்பட்ட திருக்கதவங்களை தனது கெஞ்சு தமிழால் பாடித்திறக்க வைத்தார் திருநாவுக்கரசப் பெருமான்.  மீண்டும் அக்கதவங்கள் மூடித் திறக்கும் படியாக கொஞ்சு தமிழில் பாடினார் அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப்பிள்ளையான திருஞானசம்பந்தர்,  ஒரு பாடல் பாடியவுடனே கதவங்கள் அடைபட்டன.  வாகீசப்பெருமான் பத்து பாடல்களைப் பாடிய பின்னரே கதவுகள் திறந்தன. ஆனால் ஆளுடையப்பிள்ளை ஒரு பாடல் பாடிய உடனே கதவுகள் அடைபட்டன  இதை எண்ணி நெஞ்சுருகி  நின்றார் அப்பர் பெருமான். தனது பாடலில் இனிமை குறைந்ததோ என்று எண்ணிக் கலங்கி தமது திருமடத்தில் கண் மூடிப்படுத்திருந்த அப்பர் பெருமான் முன் தோன்றிய சிவபெருமான் “திருவாய்மூருக்கு  வா என்னோடு” என்று அழைத்துச்சென்றார்.  தமது பதிகத்தில் அப்பர் பெருமான் இத்திருவிளையாடலை இவ்வாறு பாடுகின்றார் எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண் டங்கே வந்தடை யாள மருளினார் தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று போனா ரதென்கொலோ. பொருள்: தென்னை மரங்கள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர். என்னை எங்கே என்று தேடி, இருந்த இடத்தைக் கண்டு கொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர், திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்ன?  மேலும் மன்னு மாமறைக் காட்டு மணாளனார் உன்னி யுன்னி யுறங்குகின் றேனுக்குத் தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி என்னை வாவென்று போனார தென்கொலோ? பொருள்: எம்பெருமானையே நினைந்து நினைந்து உறங்குகின்ற எளியேனுக்கு நிலைபெற்ற பெருமையுடைய மறைக்காட்டுறையும் மணவாளர் தன்னை வாய்மூர் இறைவனும் ஆனதை விளங்கக்கூறி என்னை அங்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்ன? என்று வியந்து கனத்த இருட்பொழுதில் ஈசன் மின்னொளி காட்டி முன் செல்ல பின்னே சென்றார். அப்பரைக் காணாத சம்பந்தப்பெருமான் இருளில் அவர் அவர் தனியாகச் செல்வதை உணர்ந்து அவர் பின்னே தானும் சென்றார். வழிகாட்டிச் சென்ற ஒளிச்சுடர் திருவாய்மூர் பொற்கோவில் அருகில் சென்றவுடன் மறைந்து விட்டது. ஆளுடையப்பிள்ளையாரும் வந்து சேர்ந்தார். அப்போது வாகீசப்பெருமான் திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ் உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே. பொருள்: வேதங்களாற் பூசிக்கப் பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும், செந்தமிழ்ப் பாடலை உறுதியுடன் பாடி அடைப்பித்தவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் இதோ நின்றார்; திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ? இவர் பித்தரேயாவர் காணீர் என்று பாடியவுடன் பரமன் உமையுடன் கூடி இடபத்தின் மேல்  திருநடனமாடியபடி இருவருக்கும் திருக்காட்சி அளித்தார். அம்மையப்பரை தரிசனம் செய்த ஆனந்தத்தில் சம்பந்தப்பெருமான்    சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர் பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் பாம்பொடு நூலவை பசைந்திலங்கக் கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய வாடல்வெண் டலைபிடித் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே. பொருள்: பிறை சூடியவராய், சுடர் முடியவராய், திருநீறு பூசியவராய் மழுவேந்தியவராய், கொன்றை மாலை சூடியவராய், பாம்பும் முப்புரி நூலும் அணிந்தவராய், காந்தள் போன்று முகிழ்த்த கையினராகி, தாருகாவன முனி கன்னியர் பலி பெய்யுமாறு பிரம்ம கபாலத்தை ஏந்தியவராய் திருவாய்மூர் இறைவர் வருவார் என்று பதிகம் பாடி அருளினார். அப்பர் பெருமானும் பாட அடியார் பரவக் கண்டேன் பத்தர் கணம்கண்டேன் மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன் அங்கை அனல்கண்டேன் கங்கையாளைக் கோடல் அரவார் சடையில் கண்டேன்கொக்கினிதழ் கண்டேன் கொன்றை கண்டேன் வாடல் தலையொன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே!!  பொருள்: அடியார்கள் பாடிப் பரவவும் பத்தர் கணம் சூழ்ந்து நிற்கவும் பூத கணங்கள் நெருங்கவும் ஆடற்கேற்ற முழவம் முழங்கவும் அழகிய திருக்கரத்தில் அனல் ஏந்தியவரும், காந்தட்பூவும்,   அரவமும் பொருந்திய சடையில் கங்கையைத் தரித்தவரும், கொக்கிறகைச் சூடியவரும், கொன்றை மாலையை அணிந்தவரும்,  பிரம்மனின் உலர்ந்த தலையோட்டினைக் கையில் கொண்டவரும் ஆக வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்  என்று தான் கண்ட கோலத்தை அற்புதமாகப் பாடுகின்றார். அப்பர் பெருமானுக்கு இறைவன் முதன் முதலாக தரிசனம் அளித்த தலம் என்பதால் மற்ற தலப்பதிகங்களிலும் க்ஷேத்திரக் கோவையிலும் திருவாய்மூரைப் போற்றிப் பாடியுள்ளார். திருவாய்மூர் பெருமானை “பரிந்தேத்தும் அன்பருக்குத் தக்க பரிசளிப்பார்” என்று அருளுகிறார். சம்பந்தப்பெருமானோ எத்துன்பத்தில் ஒருவர் இருந்தாலும் “திருவாய்மூர் நாதா” என்று நினைத்தால், உடனே வந்து அருள் புரிவார் என்று அறுதியிடுகின்றார்.பட்டினத்தாரும், இராமலிங்க வள்ளலாரும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். வள்ளலார் தம் பாடலில் “காய்மூர்க்கரேனும் கருதில் கதி கொடுக்கும் வாய்மூர்க்கமைந்த மறைக்கொழுந்தே” என்று போற்றுகிறார். நிதி பற்றாக்குறை காரணமாக பல வருடங்களாக  இங்கு பெருந்திருவிழாக்கள் நடைபெறுவதில்லை. வைகாசி பெருந்திருவிழா ஏகதின உற்சவமாகக் கொண்டாடப்படுகின்றது.  அன்று பகலில் சந்திரசேகரர் தீர்த்தம் கொடுப்பதும் இரவில் பஞ்சமூர்த்தி விழாவும் நடைபெறுகின்றன.  மார்கழித் திருவாதிரையன்று தியாகராஜர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார். பல்லவ, சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்ட இவ்வாலயத்தில் சோழர் கால முப்பதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பராந்தக சோழன் இத்தலத்தில் சதய நட்சத்திரத்தில் திருவாய்மூர் நாதருக்கு திருமஞ்சனம் நடத்திய பின்னரே மகுடம் சூட்டிக்கொண்டான். திருவாய்மூரில் நீல விடங்கரை தரிசித்த நாம் அடுத்து திருக்கோளிலியில் பிரம்ர நடன அவனி விடங்கரை தரிசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.              38.திருக்கோளிலி - (திருக்குவளை) ஸ்ரீபிரம்ர நடன அவனி விடங்கர் []   சப்தவிடங்க தலங்களின் வரிசையில் அடுத்து நாம் தரிசிக்கின்ற தலம் திருக்கோளிலி ஆகும். நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய வன்புசெய்வோ மடநெஞ்சே யரனாமம் கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக் கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே. பொருள் : அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாள்கள் பல போவதற்கு முன்னரே நீலகண்டனாய சிவபிரானுக்கே அடியவராக விளங்கி அவனிடத்து அன்பு செய்வோம். அவ்வரனது திருநாமங்களைப் பலகாலும் கேட்பாயாக. அவ்வாறு கேட்பின் நம் சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிந்து நம் மனமாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருளும் இறைவன் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார் என்று அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடைய பிள்ளை போற்றிப் பாடிய இத்தலம்  திருக்குவளை என்றும் அழைக்கப்படுகிறது.  திருவாரூரில் இருந்து தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவில் எட்டுக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அருகில் உள்ள புகை வண்டி நிலையம் திருநெல்லிக்காவல். திருவாரூரிலிருந்தும், திருக்கைச்சினத்திலிருந்தும் பேருந்துகள் உள்ளன.  கொள்ளிக்காடு – கொளப்பாடு வழியாக திருக்குவளையை அடையலாம். திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.   திருக்குவளை மூவராலும் பாடல்பெற்ற காவிரி தென்கரைத்தலம். எட்டுக்குடிக்கு முன்பு திருக்குவளையும் எட்டுக்குடியைத் தாண்டி திருவாய்மூரும் ஆக இவ்விரு சப்தவிடங்கத்தலங்களும் அருகருகே அமைந்துள்ளன. தேவாரப்  பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 123வது தலமாகும். இவ்வாலயத்தின் வாயிலில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. பிரம்மன் வெண்மணல் கொண்டு சிவலிங்கம் செய்து வழிபட்டுப் பேறு பெற்ற இடமாகும். சுவாமி பிரமபுரீஸ்வரர் என்றும் அம்பிகை வண்டமர் பூங்குழலாள் என்றும் அழைக்கப்படுகின்றார். அம்மன் சன்னதியில் முன்னர் தேனடை இருந்ததாம். கோள் என்பதற்குக் குற்றங்கள் என்பது பொருள் இங்கு வழிபடும் அன்பர்களின் கோள் தன்னை இறைவன் நீக்கி அருள்பாலிப்பதால் இத்தலம் கோளிலி எனப்பட்டதென்பர். “கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்“ என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. வன்தொண்டர் சுந்த்ரர் திருக்கோலக்கா பதிகத்தில் “கோளிலிப் பெருங்கோயில்” என்று சிறப்பித்துப் பாடுகின்றார்.  இறைவன்  நவகிரகங்களின் குற்றங்களை நீக்கி அருள்பாலித்ததால் இத்தலம் கோளிலி எனப்பெயர் பெற்றதென்றும் கூறுவர். கோளிலிநாதரை வழிபடுவதால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் நவக்கிரக தோஷம் இருந்தால் அவை நீங்கி விடும் என்பது இத்தலத்தின் சிறப்பு. இத்தலத்தில் பிரமன், திருமால், இந்திரன், சந்திரன் அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் முதலிய பலர் வழிபட்டுப் பேறடைந்துள்ளனர். காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண் நீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை ஆற்ற னையம ருந்திருக் கோளிலி ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே. பொருள்: காற்று வடிவானவனும், கடல் விடம் உண்டவனும், வெண்ணீறணிந்தவனும், நிமிர்ந்த புன்சடை உடைய அண்ணலும் , சடையிற் கங்கையாற்றினை உடையவனும் ஆகிய திருக்கோளிலியில் அமரும் இடபத்தை உடையானை, அவன்றன் திருவடிகளையே தொழுது ஏத்துவீராக  என்று திருநாவுக்கரசர் பாடிய  இத்தலத்தில் அருள் பாலிக்கும்   இறைவர் : பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்.  இறைவி: வண்டமர் பூங்குழலி.  தல மரம் : தேற்றாமரம்  தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்.  வழிபட்டோர் : பிரம்மன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் முதலியோர்.   தியாகேசர்: அவனி விடங்கர்  திருநடனம்: பிரம்ர நடனம் தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. நாளாய போகாமே நஞ்சணியுங்.  2. அப்பர் - 1. மைக்கொள் கண்ணுமை, 2. முன்ன மேநினை யாதொழிந்.  3. சுந்தரர் - 1. நீள நினைந்தடி யேனுமை.  கருவறைக்கு இணையாகத் தென்பகுதியில் மகாமண்டபம், திருவோலக்க மண்டபத்துடன் கூடியதான தியாகராஜரின் சபை உள்ளது.  இதில் தியாகராஜர் பெரிய விதானத்தின் கீழ்  வெள்ளி சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றார். இவருடைய திருநாமம் அவனி விடங்கர் என்பதாகும். இந்த அவனியைத் தான் இருந்த இடத்தில் இருந்தே ஆட்டுவதால் இப்பெயர் பெற்றார் என்பர். இவரை ‘ஊழிப்பரன்’ எனவும், ‘செல்வத்தியாகேசர்’ எனவும் குறிப்பர். முன்புறம் வீர கட்கங்கள் உள்ளன. மகாமண்டபத்தில் செப்பாலான நின்ற இடபம் உள்ளது. மகாமண்டபத்தின் முகப்பின் மீது பள்ளி கொண்டுள்ள திருமால் தனது மார்பில் தியாகராஜரை வைத்துப் பூஜிக்கும் காட்சி சுதைச் சிற்பமாக இடம் பெற்றுள்ளது. தியாகேசருக்கு எதிரே சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவையாருடன் எழுந்தருளியுள்ளார்.  தேவாரத்துள் இப்பெருமான் ‘விண்ணுளோர் தொழுதேத்தும் விளக்கு’ என்று குறிக்கப்பட்டுள்ளார். இவருடைய திருநடனம் பிரம்ர நடனம் எனப்படும். மருதநிலப்பகுதி அல்லவா, எனவே தாமரை மலரில் தேன் பருகி களித்திருக்கும் வண்டின் நடனமே ஐயனின் நடனமானது.  பூவினில் தேனெடுக்கும் வண்டு அப்பூவைச் சுற்றிச் சுற்றி எழுந்தும் தாழ்ந்தும் பறந்தும் பிறகு பூவில் அமர்ந்து குடைந்து தேன் குடித்து ஆடுவது போல் ஆடுதலின் இந்நடனம் ‘பிரம்ர நடனம்’ (வண்டு நடனம்) எனப்பட்டது.   இங்கு மரகத விடங்க லிங்கம் உள்ளது. இவ்விடங்கருக்கு  நாட்பூஜைகள் செய்யப்படுகின்றன. தினமும் காலை 9 மணி அளவிலும், மாலை 6 மணி அளவிலும் மரகத விடங்கருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. அவனி விடங்கர் மீது “திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி உலா' என்ற நூல் பாடப்பட்டுள்ளது. சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்த இந்நூலில் திருக்கோளிலியின் புராணச் சிறப்புகள் தலவரலாறுகள் யாவும் சிறப்புடன் பேசப்படுகின்றன. இத்தலத்தில் முசுகுந்தார்ச்சனை சிறப்பாக நடைபெறுகின்றது. மார்கழியில் ஆருத்ரா தரிசனத்தன்று தியாகராஜர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளிப் திருப்பாத தரிசனம் அளிக்கின்றார். சித்திரை மாதப்பிறப்பு அயன விழாக்கள் முதலிய நாட்களில் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தல வரலாறு:  இத்தலத்திற்குப்  பிரமதபோ வனம், கதகாரண்யம் (தேற்றாமர வனம்.) புஷ்பவனம், தென்கயிலை, பாண்டவபுரம் எனப்பல பெயர்களுண்டு.  பாண்டவர்கள் சிவ பூசை செய்து வழிபட்டதால் பாண்டவபுரம். இறைவன் பார்த்தனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கிய தலம்.. விநாயகர் – தியாக விநாயகர், முருகன் – சுந்தர வடிவேலர். சபாநாதர் தரிசனம் மிகவும்  அழகானது.  கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் இரட்டை  மதில்களுடன்  ஆலயம் அமைந்துள்ளது. திருக்கோயில்  பூமி மட்டதிலிருந்து சற்று கீழாக அமைந்துள்ளது.  உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. கொடிமரம் தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உட்பிராகாரத்திற்கு எதிரே வெண் மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தரும் சுவாமி சன்னதியும், தென்புறம் தியாகேசர் சன்னதியும் உள்ளன. கோளிலி நாதர் சன்னதியும், அதன் தென்பால் அவனிவிடங்கத் தியாகராசரின் சன்னதியும் இணைப்பு பெற்ற ஒரே  மகாமண்டபத்துடன் அமைந்துள்ளன.  ஆரூர் போன்றே இங்கு  மணல் லிங்கம் மூலவராகக் கவசத்துடன் காணப் பெறுவது ஒரு சிறப்பு. மூலவர் சன்னதி, தியாகேசர் சன்னதி, மற்றும்  அம்மன் சன்னதி மூன்றும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. அவனி விடங்கருக்கு எதிரே இரு மண்டபங்கள்.  பிரம்மபுரீசருக்கு இடது புறம் நேரே தனி நுழை வாயிலுடன் கூடிய சபையில் நடராசர் மூர்த்தம்  இல்லை. இங்கு தேவியருடன் முருகப் பெருமானின் உற்சவ மூர்த்தி தரிசனம் அளிக்கின்றார். ஆடல் நாயகன் வெளிப் பிரகாரத்தில் விமானத்துடன் கூடிய தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றார். ஆனந்த தாண்டவர் வித்தியாசமாக இரு கால்களையும் மடித்தவாறு ஆடுகிறார். தியாகேசருக்கு எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிரகார வலம் வரும் போது தென்மேற்கில் தியாக விநாயகரும், அடுத்து விசுவநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. முருகப்பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது இவரது திருநாமம் சுந்தர வடிவேலர். வண்டமரும் பூங்குழலி அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன.  மூலமாகிய மூவர்க்கும் மூர்த்தியைக் காலனாகிய காலற்கும் காலனைக் கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச் சூலபாணிதன் பாதம் தொழுமினே என்று அப்பர் பெருமான் பாடிப்பரவிய  வெண்மணலால் ஆன  பிரம்மபுரீஸ்வரருக்கு அமாவாசை தினங்களில் அர்த்தஜாம பூஜையின் போது  மட்டும் அருகம் புல்லால் தோய்த்து சாம்பிராணி தைலம் திருமேனியில் தடவப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது. பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். பீமன் பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இங்கு இறைவனை வழிபட்டதால் நீங்கியது. பகாசுரன் மற்றும் பிரம்மஹத்தி உருவம் முன் கோபுரத்தில் உள்ளது.  பிரம்மன் சிவ பூசை செய்யும் காட்சி சுவற்றில் கல் சிற்பமாகவும் நுழை வாசல் முகப்பில் சுதை வடிவமாகவும் உள்ளது. தேவர்கள் சிவ பூசை செய்யும் காட்சி சுவற்றில் உள்ளது  நவக்கிரகங்கள் ஒரு முகமாகத் தென்திசையை நோக்கி விளங்குகின்றன. சுவாமி கருவறையின் கற்சிற்பங்கள்  மிகவும் அழகாக அமைந்துள்ளன. அவற்றின் கலை நுணுக்கம் மிகவும் அருமையாக உள்ளது.  வடபுறம் அர்த்தநாரீசுவரர், கல் மேனி நடராசர்,  ஆலிங்கன மூர்த்தி,  பிரம்மா, மகிஷாசுரன் இல்லாமல் சாந்த  துர்க்கை, எழிலாக  உமாமகேசுவரர் தென்புறம் தேவகோட்டங்களில் முறையே நடராஜர், நர்த்தன கணபதி, பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி மூர்த்தங்களும் உள்ளன. மேற்பால் சங்கு சக்கரத்துடன் திருமால் உருவமுள்ளது. பிராகாரத்தின் கீழ்ப்புறம் சந்திர சூரியர் உருவங்களும், இரண்டாம் கோபுர தென் மதிலில் பஞ்சபாண்டவர் பூஜித்து வழிபடும் கோலமும், பிரம்மன் வழிபடுவதும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் அகத்திய லிங்க சன்னதி அமைந்துள்ளது. அகத்தியர் பூஜித்த மூர்த்தி இவர். தனிக் கருவறை மற்றும், அர்த்தமண்டபத்துடன் இச்சன்னதி விளங்குகிறது. மேலும் இந்திரன், சந்திரன் வழிபட்ட மூர்த்திகளும் இவ்வாலயத்தில் அருள் பாலிக்கின்றனர். அவனி விடங்கர் கருவறைச் சுவற்றில்  தட்சிணாமூர்த்தியும்,  லிங்கோற்பவரும் காட்சி தருகின்றனர்.  மதுரைச் சொக்கலிங்கப் பெருமானுக்கும்,  திருவண்ணாமலைச் சோதி லிங்கப் பரம் பெருமானுக்கும் தனிச் சந்நிதிகளில் உள்ளன. காசி விசுவ நாதர்,  விசாலாட்சியும் தனிச் சந்நிதிகளில் உள்ளனர்.  குண்டையூர் கிழார் தனிச் சந்நிதியில் உள்ளார். ஆலயத் திருப்பதிகங்கள் பொறிக்கப்பட்ட சலவைக்கற்கள் சுவாமி சந்நிதியில் பதிக்கப் பெற்றுள்ளன. []   பிரம்ம தீர்த்தம் ஆலயத்திற்கு அருகில்  சந்திரநதி கிழக்கு நோக்கி ஒடுகிறது. கோயிலுக்கு எதிரில் பிரம்ம தீர்த்தமும், தென்புறம் இந்திர தீர்த்தமும், மேற்புறம் அகத்தியர் தீர்த்தமும் உள்ளன. அம்பாள் சந்நிதியில் கிணறு வடிவில் சத்தி தீர்த்தம் உள்ளது. புனிதமான இந்நீரே அபிஷேகத்திற்குப் பயன்படுகிறது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) சன்னதி உள்ளது. இத்தலத்தின் வடபால் அருகில் குண்டையூரும் வலிவலமும், தென்பால் முருகன் தலமான எட்டுக்குடியும், மேற்கில் கச்சனமும், கிழக்கில் சந்திரதீர்த்தம் கடலொடு சங்கமமாகுமிடமான காமேசுரமும் உள. இது நீராடும் துறையாக விளங்குகிறது. தை, ஆடி, மஹாளய பட்ச அமாவாசைகளில் மக்கள் இத்துறையில் நீராடுகின்றனர். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்கள் - மாசிமகத்தில் 'நெல் அட்டிச் செல்லும் விழா,  மற்றும் கார்த்திகை ஞாயிறு நாட்கள், முசுகுந்த அர்ச்சனை, வசந்த உற்சவம், தைப்பூசம் முதலியன. வைகாசிபெருவிழா 24 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. வசந்த மண்டபத்தில் 10 நாட்கள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் தியாகேசர். பின்னர் தேரோட்டம் கண்டருளி வைகாசி விசாகத்தன்று தீர்த்தவாரி நடைபெற்று வலது பாத தரிசனம் தந்தருளி யதாஸ்தானம் திரும்புகிறார். திருஞானசம்பந்தர், தம் திருப்பதிகத்தில், கோள்களின் தீமையகலும் குறிப்பினையும், மார்க்கண்டேயன், சண்டீசர்க்கு அருள் செய்தது. பாண்டவர்கள் வழிபட்டது, பாணபத்திரர்க்கு, அருச்சுனனுக்கு, நமிநந்தியடிகளுக்கு, இராவணனுக்கு அருள் புரிந்தது போன்ற குறிப்புகள் உள்ளன. நாவுக்கரசரின் திருப்பதிகத்தில், (திருக்குறுந்தொகை) உபமன்யு முனிவர்க்கும் பாற்கடலீந்த வரலாறு சொல்லப்படுகிறது. பரவையாருக்காக நெல்லீந்த லீலை : திருக்குவளைக்கு அருகே உள்ள தலம் குண்டையூர். இவ்வூரில் வாழ்ந்த குண்டையூர்கிழார் சுந்தரர் மேல் அன்பு கொண்டு நாள்தோறும் திருவாரூரில் பரவை நாச்சியாரை மணந்து இல்லறம் இனிதே நடத்திக்கொண்டிருந்த   சுந்தரருக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.  ஒரு சமயம் அம்பெருமாட்டியின் இல்லத்தில் நெல் இருப்பு குறைவு  பெற்றமையால், பங்குனித் திருவிழா வருகின்றதே அப்போது அடியவர்களுக்கு அமுது செய்ய முடியாதே என்று   அவள் வாடிய போது  சுந்தரர் குண்டையூர் கிழாரிடம் சென்று நிலைமையை உரைத்தார். சுந்தரருக்கு அனுப்புவதற்குப் போதிய நெல் இல்லாமல் தவித்த குண்டையூர் கிழார் திருச்சோற்றுத் துறை நாதனை எண்ணி சிவ பூசை செய்து வழிபட்டார். கிண்ணம் பால் கேட்ட உபமன்யு முனிவருக்காகப் பால் கடலையே அனுப்பி வைத்த பெருங் கருணைப் பராபரன் குண்டையூர் கிழாருக்கு மலை மலையாக ஊர் முழுவதும் நெல் மழை பொழிய அருளினார். குண்டையூரில் நிறைந்த நெல் மலைகளைக் கண்டு வியந்து எம்பெருமானை போற்றிய  குண்டையூர் கிழார் சுந்தரருக்கு பெருமானின் பேரருளைத் தெரியப்படுத்தினார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் வந்து நெல் மலைகளைக் கண்டார். திருக்கோளிலிப் பெருமானான இலிங்கப்பரம் பொருளையும் அவனி விடங்கரையும் வழிபட்டுத் துதித்து நெல் மலைகளைத் திருவாரூர் கொண்டு செல்வதற்கு அருள் புரியுமாறு ஆரூரர்  கோளிலிப் பெருமான் முன் சென்று பதிகம்  பாடி இறைஞ்சினார். அப்பதிக பாடலில் ஒன்றாக, ‘‘நீள நினைந்து அடியேன் உம்மை நித்தலும் கை தொழுவேன் வாள் எனக் கண் மடவாள் அவள் வாடி வருத்தாமே கோள் இலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் ஆள் இல்லை எம்பெருமான் அட்டித் தரப் பணியே’’  - எனப்பாடி நெல் மலையை எடுத்துச் செல்ல ஆட்களைத் தருமாறு வேண்டினார். கோளிலி நாதர் பூத கணங்களை அருளிச் செய்தார். அவை நொடிப் பொழுதில் நெல் மலைகளைத் திருவாரூரில் கொண்டு சேர்த்தன. சுந்தரர் ஊர் முழுவதும் அறிவிக்க திருவாரூர் மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் இல்லத்தின் முன் குவிந்திருந்த நெல்லை எடுத்துக் கொண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தனர். ஊருக்கெல்லாம் உண்டி கொடுத்து உயிர் கொடுத்த குண்டையூர் கிழார் சந்நிதி திருக்கோளிலியில் சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்க வாசகர் ஆகிய  தெய்வீக நால்வர் சந்நிதியை அடுத்து அமைந்துள்ளது. திருக்குண்டையூரில் நெல் அளந்த நாதர் திருக்கோயில் உள்ளது. இவ்வரலாற்றைச் சேக்கிழார் பெருமான்  பெரியபுராணத்தில் விரிவுற எடுத்துரைத்துள்ளார். மாசி மகநாளில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு நெல் அட்டித்தரும் விழா மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. அப்போது பஞ்ச மூர்த்திகள் குண்டையூருக்குச் சென்று விழா காண்கின்றனர்.  குண்டையூர் சிவாலயத்தின் தென் பாரிசத்தில் சுந்தரருக்காக குண்டையூர் கிழார் நெல் அளித்த இடத்தில் நெல் அளந்த மேடை உள்ளது. அங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தின் மக நட்சத்திரத்தின் மறுநாள் திருக்குவளை  (திருக்கோளிலி) சிவாலயத்திலிருந்து சுந்தரரின் திருவுருவம் (செப்புத்திருமேனி) எடுத்துச் செல்லப் பெற்று அவன் முன்பு அம்மேடையில் நெல் அளந்து  அளிக்கும் திருவிழா நடைபெறுகின்றது.  பின்னர்  பூதகணங்களைப் போன்று வேடமிட்டவர்கள் நெல்லை திருவாரூரில் உள்ள பரவையாரின் திருமாளிகைக்கு கொண்டு வந்து சேர்க்கும் விழா நடைபெறுகின்றது. திருக்கோளிலி சிவாலயத்தின் முக மண்டபத்தின் மேற்தளத்துப் பார்வை பகுதியில்  இந்திரனும், முசுகுந்த சக்கரவர்த்தியும் வணங்க திருமால் தன் மார்பில் தியாகேசப்பெருமானை வணங்கும் கோலம், பிரம்மன் பூசித்தது, மூவரும் தேவாரம் பாடியது மற்றும் சுந்தரருக்காக குண்டையூர்கிழார் அளிக்கும் நெல், நெல்  மலையாகக் காணப்பெறுவது, இடபாரூடராக சிவபெருமான் உமையோடு காட்சி நல்குவது, பூத கணமொன்று பரவை நாச்சியார் முன்பு நெல்லைத்  தலையில் கோட்டையாக வைத்துச் சுமந்து வரும் காட்சி ஆகிய அழகிய சுதை சிற்பங்களை தரிசிக்கலாம்.  இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட திருக்கோயிலாகும். சுவாமி அம்பாளுக்கு ஏராளமான ஆபரணங்களும் தியாகராசருக்கு வெள்ளி சிம்மாசனம், விடங்கருக்கு பெட்டகம், சுவாமிக்கு நாகாபரணம் முதலியன சமர்பித்து கும்பாபிஷேகமும்  திருப்பணி செய்துள்ளனர். இக்கோயிலில் 19 கல்வெட்டுகள் - சோழர், பாண்டியர் காலத்தியவை, கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 'திருக்கோளிலி உடைய நாயானர்' என்றும், தியாகேசர் 'அவனி விடங்கத் தியாகர்' என்றும் குறிக்கப்படுகிறார். இக்கோவிலின் வடக்குவீதி 'திருமறைக்காடன் திருவீதி' எனப்படுகிறது. சோழப்பெருமன்னன் ராஜராஜன் காலத்தில் அருமொழி  தேவவளநாட்டு அளநாட்டிலும், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன் ஆகிய சோழ மன்னர்கள் காலத்தில் ராஜேந்திர சோழ வளநாட்டு இடை  அள நாட்டிலும், பாண்டியன் இரண்டாம் ஜடாவர்மன் சுந்தரன் காலத்தில் ராஜேந்திர சோழ வள நாட்டு வண்டாழை வேளூர் கூற்றத்திலும்  திருக்கோளிலி என்னும் இவ்வூர் திகழ்ந்ததாகக் கல்வெட்டுச் சாசனங்கள் குறிக்கின்றன. மேலும் சோழ மன்னர்கள் காலத்தில் விளக்கிடவும் விழாக்கள் கொண்டாடவும் அடியவர்களுக்கு அமுது செய்விக்கவும் தானம் அளிக்கப்பட்ட செய்திகளைக் கூறுகின்றன. இதன்மூலம் இக்கோயிலில் முப்பது வட்டத்துக் காணி உடையார் என்ற சிவப்பிராமணர்கள் இருந்தனர். இவர்களிடம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்ற மன்னனின் 18வது ஆட்சியாண்டில் திருவாதிரை நாள்விழா கொண்டாட 800 பொற்காசுகளைக் கொடுத்த செய்தி ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.  மால தாகி மயங்கும் மனிதர்காள் காலம் வந்து கடைமுடி யாமுனம் கோல வார்பொழிற் கோளிலி மேவிய நீல கண்டனை நின்று நினைமினே.  பொருள் : மயக்கத்தை உடையவராகி மயங்கும் மனிதர்களே! உமக்குரிய காலம் வந்து இறுதியுறுவதன் முன்னம், அழகுடைய நீண்ட பொழில்களை உடைய கோளிலியில் விரும்பி உறைகின்ற நீல கண்டனை ஒன்றி நின்று நினைப்பீராக! `யாக்கை நிலையாமையைக் கருதிப் பேரருளாளனை நினைந்து உய்க’! என்று அப்பர் பெருமான் பாடியுள்ளார்.  காரைக்காலில் பணி புரிந்து கொண்டிருந்த போது  ஒரு தடவை அடியேன் இவரை தரிசிக்க சென்ற போது மரகத விடங்கரின் அபிஷேகத்தைக் தரிசிக்கும் பெரும் பாக்கியத்தை அருளினார். கிராமத்து கோவில் என்பதால் குருக்கள் மதியம் 12 மணியளவில் தான் வந்தார். ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளத்தில் நீராடி ஆலயத்தை திறந்து நிர்மால்ய தரிசனம் செய்து வைத்தார். பின்னர் தியாகராசர் சன்னதியில் மரகத லிங்க அபிஷேகம் தரிசனம் செய்யும் பாக்கியம் வாய்த்தது. அத்தடவை திருக்குவளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தையும் சென்று தரிசித்தோம். கோளிலி மேவிய  அவனி விடங்கப் பெருமானை தரிசித்த நாம் அடுத்து நீல விடங்கராக பெருமான் அருள் பாலிக்கும் திருவாய்மூரை தரிசிக்கலாம்.  இது வரை சோழ மண்டலத்தின் தியாகேசப் பெருமானின் சப்த விடங்கத்தலங்கள் ஏழினையும் தரிசித்தோம். அடுத்து தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத்தலங்கள் மூன்றினையும்  தரிசிக்கலாம் அன்பர்களே.                தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத் தலங்கள் 39. திருவொற்றியூர் - மாணிக்க  தியாகேசர்   []   கல்யாண சுந்தரர் சோழ மண்டலத்தின் சப்தவிடங்க தலங்களைப் போல தொண்டை மண்டலத்தில் தியாகேசர் அருள் பாலிக்கும் மூன்று தலங்கள் உபவிடங்கத் தலங்கள்  என்று போற்றப்படுகின்றன இத்தலங்களின் சிறப்பை இப்பாகத்தில் காணலாம் அன்பர்களே.   வடவேங்கடம் முதல் தென் குமரி ஆயிடை செந்தமிழ் நாட்டின்  ஓர் மண்டலம்,  பல்லவர்கள் சிறப்புடன் ஆண்ட தொண்டை மண்டலம். தொண்டை மண்டலம் சான்றோருடைத்து என்பது சான்றோர்களின் வாக்கு. இத்தொண்டை மண்டலத்தில் முப்பத்திரண்டு சிவாலயங்கள் மூவரால் பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.  அவற்றுள் தர்மமிகு சென்னையில் கடற்கரையோரம் அமைந்த தலங்கள் மூன்று. அவையாவன திருவான்மியூர், திருமயிலை, மற்றும் திருவொற்றியூர் ஆகும். இவற்றுள் திருவான்மியூரும், திருவொற்றியூரும் தொண்டை நாட்டின்  உபவிடங்க தலங்கள். எம்பெருமான் இருந்தாடும் அழகராக, தியாகராஜராக அருள் பாலிக்கும் தலங்கள். மற்றொரு உபவிடங்கத்தலம் திருக்கச்சூர் ஆகும். இவற்றுள் திருவொற்றியூரும், திருக்கச்சூரும் எம்பிரான் தோழர்  சுந்தரருடன் தொடர்பு கொண்டவை. சப்த விடங்கத்தலங்களைப் போலவே இந்த உபவிடங்கத்தலங்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவையாவன இவை மூன்றும் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள். பௌர்ணமியன்று தியாகராசருக்கு சிறப்பு அபிஷேகமும் நடனக்காட்சியும் சிறப்பாக நடைபெறுகின்றது.  பெருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி முழு நிலவை ஒட்டி திருவொற்றியூரிலும், பங்குனி முழு நிலவை ஒட்டி திருவான்மியூரிலும், சித்திரை முழுநிலவை ஒட்டி திருக்கச்சூரிலும் தியாகேசப்பெருமான், நடனக்காட்சியுடனும் உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. தியாகராஜ தலம் என்பதால், சோமாஸ்கந்தர் பஞ்சமூர்த்தியாக வலம் வருவதில்லை, சந்திரசேகரரே  பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் திருஉலா வருகின்றார். பஞ்ச மூர்த்திகளில் அம்மையும் தனியாக வலம் வருவதில்லை. தியாகராஜர் இரவு பஞ்சமூர்த்திகள் திருஉலா முடிந்தபின் அம்மையுடன்  மாட வீதி உற்சவம் கண்டருளுகிறார்.  இனி திருவொற்றியூரின் சிறப்புகளை முதலில் காணலாம் அன்பர்களே. உலகம் தோன்றிய போது, தோன்றிய முதல் ஊர் திருவொற்றியூர்,   எனவே இத்தலத்திற்கு ஆதி புரி என்ற பெயர் உண்டு. திருவொற்றியூர் ஞான பூமி, முக்தி ஸ்தலம், சிவபெருமான் தமது இருந்தியக்கும் கூத்தை (அமர்ந்த நிலையில்) பத்மதாண்டவம் என்னும் அனுக்கிரக நடனத்தை நந்தியெம்பெருமானுக்கு ஆடி அருள் பாலித்த தலம்.  திருக்கயிலை நாதர் - மலையரையன் பொற்பாவை பார்வதியின் திருமணத்தின் போது வடக்கு உயர்ந்து, தெற்கு தாழ, இறைவன் பணிக்க தென் திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு இறைவன் கல்யாண சுந்தரராக அருட்காட்சி நல்கிய தலம். இறைவன் தன்னை பூசித்து வந்த வாசுகி என்னும் பாம்பை தன்னுள் ஒற்றிக்கொண்டதால் “ஒற்றீசர்” என்றும் அழைக்கப்படுகிறார், எனவே இத்தலம் ஒற்றியூர் ஆனது. பிரம்மா, மஹா விஷ்ணு, ஆதி சேஷன், வாசுகி என்ற இரு நாகங்கள், சந்திரன் ஆகியோருக்கு சிவசாயுஜ்ஜியப்பதவி அளித்த தலம். இராமரின் திருக்குமாரன் இலவன் பிரதோஷ காலத்தில் பூஜித்த தலம். காசிக்கு நிகராக ஸ்வர்ண பைரவர் தனிக்கோவில் கொண்டு அருள் பாலிக்கும் தலம். இக்கலிகாலத்தில் கருணைக் கடலான  வடிவுடையம்மன், பசியோடிருந்த வள்ளலாருக்கு அவரது  அண்ணி ரூபத்தில் வந்து அமுது படைத்தத் தலம். 27 நட்சத்திர லிங்கங்களை தன்னகத்தே கொண்ட தலம். முசுகுந்தன், ஐயடிகள் வழிபட்ட தலம்.  முற்றுந்துறந்த முனிவராகிய பட்டினத்தடிகள் இறைவன் அருள் பெற்று கடற்கரையில் சமாதி அடைந்த தலம். உதிரத்தால் விளக்கெரிக்க முயன்ற கலிய நாயனார் முக்தி பெற்ற தலம். எம்பிரான் தோழர் சுந்தரர் சங்கிலி நாச்சியாரை, சிவபெருமான் மகிழ மரத்தில் சாட்சியாக இருக்க மணம் புரிந்த தலம்.  ஆதி சங்கரர் 8 பாடல்கள் பாடிய தலம்.  தொண்டைமான் சக்கரவர்த்தி வழிபட்ட காளி வட்டப்பாறை அம்மனாக அருள் பாலிக்கும் தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்றான தலம். ஓம் என்ற பிரணவத்தின் உட்கருத்தை விளக்கும் ஏக பாத திருமூர்த்திகளின் திரு வடிவம் அமையப் பெற்ற தலம். பிரளயக் கால அக்னி குண்டம் அமைந்துள்ள தலம் என பல சிறப்புகள் இத்தலத்திற்கு உண்டு. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இது 253-து தலம் ஆகும். தொண்டை நாட்டுத்தலங்களில் 19வது தலம். சிவபுரி, பத்மபுரி, வசந்தபுரி, பிரம்மபுரி, நிரந்தரபுரி, கவசபுரி, பூலோக சிவலோகம், அழியா நகரம், ஔதம்பர க்ஷேத்திரம், குணாலயம் என்றெல்லாம் போற்றப்படும் தலம். நினைத்தாலே யமபயம் நீக்கும் தலம், இத்தலத்தின் எல்லையை மிதித்தாலே துன்பம் விலகும். இறந்தால் பிரம்மனுக்கும் எட்டாத சிவபதம் கிட்டும். அன்னதானம் செய்தால் இந்திரப்பதவி கிட்டும். இத்தலத்திலுள்ள கல் எல்லாம் சிவலிங்கம், நீரெல்லாம் கங்கை, உணவெல்லாம் அமிர்தம் என்று தலபுராணம் பேசுகின்றது. பாட்டும் பாடி பரவித் திரிவார் ஈட்டும் வினைக டீர்ப்பார் கோயில் காட்டும் கலமுந் திமிலும் கரைக்கே ஓட்டும் திரைவா வொற்றியூரே! என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற இத்தலத்தின் தலவரலாறு. பிரளய காலத்தில் உலகம் அழிவுற்று மீண்டும் புதிதாக உலகம் தோன்றும், அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளய காலத்தின் போது உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை, எனவே உலகம் அழியாமல் காக்கும்படி அத்தி வனத்தில்  சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவபெருமான் அவரது வேண்டுகோளை ஏற்றார். பின் பிரம்மாவின் வேண்டுதலுக்காக இலிங்க ரூபமாக எழுந்தருளினார். அக்னி குண்டமே கோயிலாக உருவானது.  பிரளயம் நீங்கி உலகம் தோன்றிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து இறைவர் ஆதிபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார் என்பது ஒரு ஐதீகம். பிரம்மா வேண்ட சிவபிரான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். வெப்பம் ஒன்று கூடி சிறு கோள வடிவமானது. அக்கோள வடிவம், மகிழ மரத்தடியில் சிவலிங்கமாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் என்ற பெயர் என்றாயிற்று என்பது இன்னொரு ஐதீகம். வடமொழியில் ஔதம்பர க்ஷேத்திரம் என்றழைக்கப்படுகின்றது. நாகராஜவான ஆதிசேடன் வழிபட்டதால் "படம்பக்க நாதர்" என்றும் அழைக்கப்படுகின்றார். இறைவன் தன்னுடைய பூதப்படைகளை இத்தலத்திற்கு காவலாக அமைத்ததால் பூலோக சிவலோகம் என்றும் அறியப்படுகின்றது. உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்ற வாசுகி என்ற நாகம் சுயம்பு மூர்த்தியை தினந்தோறும் வழிபட்டு வந்தது, அதனால் மனம் மகிழ்ந்த ஈசன் வாசுகிக்கு அருள புற்று வடிவாகத்தோன்றி தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டார். ஒற்றியூர் வாழ் இறைவன் பாம்பையும் மதியையும் சூடி,  அவரே பாம்பாகி; படம்பக்க நாதராகி அருள் பாலிக்கின்றார். பாம்பும், மதியும் பற்றுக்கொண்டு சிவபெருமான் முடியை அலங்கரிப்பது போல் பக்தியுடன் அவன் பாதங்களை பிடித்து தொழுதால் நமக்கு நற்கதி கிடைக்கும் என்று பாடுகிறார் அப்பர் பெருமான். ஏட்டு வரியில் நீங்கல் என்ன எழுத்தறியும் நாட்டமலரும் திருநுதலார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் பாடியபடி இறைவன் எழுத்தறியும் பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார். ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் அயோத்தியை ஆண்ட  சூரியகுல  மன்னனான மாந்தாதா எல்லாத் தலத்தின் படித்தரத்தையும் குறைத்து அனுப்பிய கட்டளை ஓலையில் இவ்வூர்  இறைவனே ஒருவரும் அறியாதபடி "ஒற்றியூர் நீங்கலாக மற்றையூர்க்கிக்கட்டளை" என்று  அரசனுக்கும், ஓலை நாயகத்திற்கும் தெரியாதவாறு வரி பிளந்து எழுதி அனுப்பியதால் இவர் "எழுத்தறியும் பெருமாள்". வள்ளலார் சுவாமிகள் எழுத்தறியும் பெருமாளைப் பற்றி பாடிய ஒரு பாடல் இதோ உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணி உழந்து புண்ணாக நெஞ்சம் புழுங்கி நின்றேன் புண்ணியனே கண்ணான உன்றன் கருணை எனக்களிக்க எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமாளே!. ஈசர்  லிங்க ரூபமாக புற்றிலே சுயம்புவாக உருவானவர், எனவே இவர் "வன்மீக நாதர்" என்றும்  "புற்றிடம் கொண்டார்"  என்றும் அழைக்கப்படுகிறார்.  மேலும் மகாதேவ பட்டாரகர், திருவொற்றியூர் மகாதேவர், ஒற்றியூர் ஆழ்வார், திருவொற்றியூருடைய  நாயனார், ஆதிபுரீஸ்வரர், எழுத்தறியும் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். திருவொற்றியூரிலே எம்பெருமான் "மாணிக்க தியாகராகவும்" எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஐயனின் சபை ஔதம்பர சபையாகும்.  தியாகேசரின் மற்ற திருநாமங்கள் காரணி விடங்கர், இளமை தந்த நாயனார், கொழுந்தீஸ்வரர். ஐயனின் நின்றாடும் கூத்தை கண்டு மகிழ்ந்த நந்தியெம்பெருமான், இறைவனின் இருந்தாடும் அழகைக் காண விழைந்தார். இறைவனும் “பாலாறு பாயும் தொண்டை நாட்டில் நான் சுயம்புவாக தோன்றிய திருவொற்றியூரில் சென்று தவம் செய்தால் ஆசை நிறைவேறும் என்றார்.  நந்தியும் ஒற்றியூர் வந்து நந்தி தீர்த்தம் உண்டாக்கி தவம் புரிந்து ஐயனின் பத்மதாண்டவத்தை தரிசிக்கும் பேறு பெற்றார். நாள் தோறும் சிவபெருமானின் நடனம் கண்ட திருமால் ஒரு நாள் அந்நடனக்காட்சி மனதில் தோன்றாது வருந்தி நிற்க  மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று திருவொற்றியூர் வந்தால் எமது பத்மதாண்டவ  நடனக்காட்சி கிடைக்கும் என்ற ஒலி கேட்டு திருவொற்றியூர் வந்து தவம் செய்து ஐயனின் நடனத்தை திருமகளுடன் கண்டு களித்தார். ஒரு சமயம் காசி மன்னன் இறைவனின் திருநடனம் காண ஆவலுடன் ஒற்றியூர் வந்தான். அவன் வருவதற்கு முன்பே நடனம் முடிந்து விட, மனம் வருந்திய மன்னனை அமைதியுறச் செய்து மீண்டும் அவனின் அன்பு உள்ளத்திற்காக திருநடனம் காட்டியருளினார். தான் இருக்கும் இடத்தில் கங்கையும் இருக்க வேண்டும் என்று மன்னன் வேண்ட இறைவனும் அவ்வாறே அருள் செய்தார். இத்தீர்த்தத்திற்கு காசி தீர்த்தம் என்று பெயர். []   திருவொற்றியூர் மாணிக்க தியாகர் இறைவர் தீண்டாத் திருமேனியர். நான்கு யுகங்களுக்கும் முற்பட்ட இத்தலத்தின் மூலவரை தொட்டு பூசை செய்ய முப்பத்து முக்கோடி தேவர்களும் பேரவா கொள்கின்றனர். இறைவன் தான் சுயம்புத்திருமேனி என்பதால் தன்னை பூஜிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று மறுத்து விடுகிறார். ஆயினும் பிரம்மா, மஹா விஷ்ணு, வாசுகி என்கிற நாகம்  இம்மூவரும் இறைவனை  பூஜிக்க கடும் தவம் செய்கின்றனர். இறைவன் கருணைக் கடல் அல்லவா! எனவே அம்மூவர் மட்டும் கார்த்திகை பௌர்ணமி தொடங்கி  மூன்று நாட்கள் பூஜிக்க அனுமதி அளித்தார் என்பது ஐதீகம். எனவே ஆதிபுரீஸ்வரருக்கு  நித்ய அபிஷேகம் கிடையாது, எப்போதும் சுவாமிக்கு தங்கக்கவசம் பூட்டப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கவசம் கலையப்பட்டு சுவாமிக்கு புனுகு, ஜவ்வாது பூசப்பட்டு சாம்பிராணி தைலத்தினால் மூன்று நாட்களுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது, இந்நாட்களில் மட்டுமே சுவாமியை  கவசம் இல்லாமல்  அப்படியே புற்றாகவே முழுமையாக கண்டு தரிசிக்க இயலும். சுவாமி மீது சார்த்தி எடுத்துக் கொடுக்கப்படும் தைலம் மிகவும் சிறப்பானது. அதை பூஜை அறையில் வைக்க வேண்டும். குழந்தைகளின் கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, போன்ற அனைத்தையும் நீக்கும் அற்புத மருந்து அது. இச்சாந்தை நெற்றியில் அணிய சகல தோஷங்களும் அகலும்.   ஆதிசங்கரர் ஒரு சமயம் ஆதிபுரீசரை வணங்க ஒற்றியூர் வந்தார். அருகே கொற்றவை தெய்வமான வட்டப்பாறை அம்மனைக் கண்டார். தனயனைக் கண்ட தாயாருக்கு மகனுடன் சற்று விளையாட ஆவல். சன்னதியின் எதிரில் உள்ள கிணற்றின் மேல் பாயை விரித்து அதில் அமர்ந்து சொக்கட்டான் ஆட விரும்பினாள். அச்சமயம் கவுளி சொல்லியது. சாத்திரங்களுக்கு விளக்கம் கண்ட ஆதிசங்கரர், அக்கவுளியின் அருகில் சென்றார், என்ன அதிசயம்! ஆதிப்புரீசர் கௌலீசராக வந்து சங்கரருக்கு உபதேசம் அளித்தார். அதனை அருகே இருந்து திருமால்  செவி மடுத்தார். படம்பக்கநாதருக்கு தெற்குப்புறத்தில் கௌலீசர் சன்னதியும், அதில் தட்சிணா மூர்த்தி ரூபத்தில் ஆதிசங்கரருக்கு உபதேச காட்சியும் பின்புறமுள்ள திருமாலின்  இடது திருவடியில் நமது வலது காதை வைத்து கேட்டால் அலை ஓசை கேட்கும் என்பது ஐதீகம். காபாலிகர் வழிபட்டவர் கௌலீஸ்வரர் என்பது சிலரது கூற்று.  சொக்கட்டானை இறைவன் திருவுள்ளப்படி ஆதிசங்கரர் கிணற்றில் தவற விட்டார். சொக்கட்டனை எடுக்க வட்டப்பாறையம்மன் கிணற்றில் இறங்க, சிவனாரின் உபதேசப்படி கிணற்றை மந்திர சாசனத்தால் மூடி  அம்மனின் உக்கிரத்தை ஆதி சங்கரர் குறைத்தார். ஆதிசேஷன் மகனான தொண்டைமான் சக்கரவர்த்தி காஞ்சியை தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அச்சமயம் உரோமச முனிவர் பேரும் புகழுடன் விளங்கினார். குறும்பர்களோடு போரிட்டு செல்வம் இழந்து நின்ற தொண்டைமானுக்கு உரோமச முனிவர் தன் கையிலுள்ள தர்ப்பைப்புல்லை ஆதிபுரீசராக நினைத்து போரிடு என்றார். தொண்டைமானும் அவ்வண்ணமே செய்ய குறும்பர்கள் தோற்று ஓடினர். இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக தொண்டைமான் இக்கோவிலை கற்றளியாக மாற்றினான் என்று செவிவழி புராணம் கூறுகின்றது.  முதலாம் குலோத்துங்கன்  திருக்கோவில் முழுவதும் திருப்பணி செய்துள்ளான். இரண்டாம் குலோத்துங்கன் வட்டப்பாறை அம்மன் திருமதில், மண்டபம் கோபுரம் அமைத்தான். இத்திருவொற்றியூர் திருத்தலத்தில் எல்லாம் இரண்டு என்று இயம்பும் வண்ணம் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர், என இரண்டு, அம்பாள் வடிவுடையாம்பிகை, வட்டபாறையம்மன் என இரண்டு, அத்தி, மகிழம் என இரண்டு தல விருட்சம்  இரண்டு, பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு,  காரணம்,  காமீகம் என இரண்டு ஆகம  பூஜைகள், இறைவன் மற்றும் இறைவிக்கு தனி கொடி மரங்கள்  என,  இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. அரசனுக்கு அளிக்கும் பொருட்டு, தம்மிடம் நிறைந்த அன்புடைய ஏலேல சிங்கனுக்கு மாணிக்கங்களை அருளியதால் ஐயனுக்கு மாணிக்க தியாகர் என்னும் திருநாமம். எல்லா தியாக விடங்க தலங்களைப் போலவே இங்கும் மாணிக்க தியாகருக்கு மூலவரின் வலப்பக்கத்திலே தனி சன்னதி அமைந்துள்ளது.  நாரதர், தும்புரு, தேவர்கள் ஆகியோரின் கலை நயம் மிகுந்த சிற்பங்களுடன் அமைந்த முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது இவரது தனிக் கோவில். தியாகர் என்றாலே நடனம் தானே இங்கு எம்பெருமான் ஆடும் நடனம் "பத்ம தாண்டவம்"  ஆகும். இத்தலத்தில் எம் ஐயன் ஆருத்ரா தரிசனத்தின் போதும், மாசி பிரம்மோற்சவத்தின் போதும் " பதினெட்டு வகை நடன திருக்காட்சி" தந்து அருளுகின்றார். வைகாசி மாத வசந்தோற்சவத்தின் போது ஒன்பது வகை நடனக்காட்சி அருளுகின்றார். ... தத்தமி தாள மொடு மருமலர் தியாகர் மகிழ் தரணி புகழ் ஒற்றியூர் வாழ் தங்க மலர் நாதர் சடை கங்கை உருவான கொடி திங்கள் ஒளிவான வடிவே! என்று தியாகரும் எம் அம்மை வடிவுடை நாயகியும் ஆடி வரும் நடனத்தை காண கண் கோடி வேண்டும். []   திருவுடை – வடிவுடை – கொடியிடை  அன்னையர் தொண்டை மண்டலத்தின் மூன்று மகா சக்தி தலங்களில் இத்தலம் ஞான சக்தித் தலம் ஆகும். இங்கே எம் அம்மை வடிவுடை நாயகி ஞான சக்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். மற்ற சக்தி தலங்கள் திரு முல்லை வாயிலின் கொடியிடை நாயகி கிரியா சக்தி, மேலூரின் திருவுடை நாயகி இச்சா சக்தி.  "எவரொருவர் பௌர்ணமி அன்று இந்த மூன்று சக்திகளையும் தரிசிக்கின்றார்களோ அவர்களுக்கு எம் அம்மையின் பூரண கடாட்சம் கிட்டும்" என்பது  ஐதீகம். அதுவும் வெள்ளிக் கிழமையன்று பௌர்ணமியும் சேர்ந்து வந்தால் அத்தினத்தில் தரிசிப்பது மிகவும் சிறப்பு. அம்மைக்கு வட கிழக்கு மூலையில் இங்கே தனிக் கோவில் உள்ளது, அம்பாள் வடிவுடையம்மை, திரிபுர சுந்தரி என்றும் அழைத்து போற்றுகின்றனர் பக்தர்கள்.  தெற்கு நோக்கி  நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள் அன்னை. வள்ளலாருக்கு அவர் அண்ணியைப் போன்ற தோற்றத்தில் வந்து நேரில் உணவளித்த கருணை தெய்வமான, வடிவுடையம்மன் மீது அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் 100 பாடல்களை கொண்ட "வடிவுடை மாணிக்க மாலையை" பாடியுள்ளார்.  அதில் ஒரு பாடல் இதோ: அணியே அணி பெறும் ஒற்றித் தியாகர் தன் அன்புறு சற் குணியே எம் வாழ்க்கை குல தெய்வமே மலைக்கோன் தவமே பணியேன் பிழை பொறுத்தாட் கொண்ட தெய்வப்பதி கொள் சிந்தா மணியே என் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே! எம் அன்னையின் அழகே அழகு அம்மை பெயருக்கு ஏற்ப அழகின் உருவமாகத் திகழ்கின்றாள். நான்கு திருக்கரங்கள் அபய வரத திருக்கரங்களுடன் பக்தர்கள் குறை கேட்கும் விதமாக தலையை வலப்புறம் சாய்த்தவாறு அருள் பாலிக்கிறாள்.  ஈசன் சன்னதியில் அவ்வளவு கூட்டம் இல்லை ஆனால் தாயின் சன்னதியில் கூட்டம் அலை மோதுகின்றது. ஆதி சங்கரர் ஸ்தாபித்த அம்மன் என்பதால் அவர் நியமித்தபடி எம் அம்மையின் கோவிலில் இன்றும் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகளே பூஜை செய்கின்றனர். அம்பாளின் பொலிவான திருமுகத்தை பார்த்து விட்டால் நமது கவலைகள் எல்லாம் பஞ்சாக பறந்து விடும். வெள்ளிக்கிழமை அன்னையை தரிசனம் செய்வது மிகவும் சிறந்த பலனைத்தரும். இன்றும் வெள்ளிக்கிழமைகளில்  விடியல் காலை விசுவரூப காட்சி காணலாம். அது இன்று நேற்றல்ல தொன்று தொட்டு தொடரும் ஒரு மெய்ஞான காட்சி அதை வடிவுடை அம்மன் விருத்தத்தில் வரும் இப்பாடல் மூலம் அறியலாம் சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி சோதியாய் நின்ற உமையே சுக்கிரவார பெருமையும் கண்டு உனது சேவையும் சொல்லவும் எளிதாகுமோ ...... வடிவுடையம்மன் மேல் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராசரும் ஐந்து கீர்த்தனைகள் பாடியுள்ளார்.  ஞானவடிவாம்பிகே தயாபரி என்று அம்பாளை போற்றியுளார். அதில் வெள்ளிக் கிழமை தரிசனத்தின் சிறப்பைப் பற்றியும் கூறியுள்ளார். தொண்டை நாட்டில் சக்தி தலங்கள் அமைந்ததற்கான வரலாறு. பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அப்பாறை வெடித்து மூன்று பாகங்களாக சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விட துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு அருட்காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாள். சிற்பியும் அவ்வாறே மூன்று சிலைகளை வடித்து பிரதிஷ்டை செய்தார். இம்மூன்று அம்பிகையரையும் பௌர்ணமியன்று  காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளில் வழிபடுவது சிறந்த பலனைத்தரும். அன்றைய தினம் மூன்று சன்னதிகளும் நாள் முழுவதும் திறந்திருக்கும். காலை திருவுடையம்மனை மஞ்சள் வஸ்திரம் சார்த்தி நெய் தீபம் ஏற்றி, வெற்றிலை பாக்குடன் அர்ச்சனை செய்ய திருவாகிய செல்வம், குழந்தைப்பேறு, தொழில் அபிவிருத்தி உண்டாகும். மதியம்   வடிவுடையம்மனுக்கு  சிவப்பு வஸ்திரம் சார்த்தி வழிபட வாக்கு வன்மை , திறமையான கல்வி அளிப்பாள்.  மாலை கொடியுடையம்மனை பச்சை வஸ்திரம் சார்த்தி வழிபட குழந்தைப்பேறு, திருமணத்தடை நீங்கும், தொழில் சிறக்கும், வீரம், தொழில் ஊக்கம், வெற்றி காரிய தடை நீங்கும். வடிவுடையம்மனை வழிபட்டு பேறு பெற்றவர்கள், பிரம்மா, இந்திரன், தும்புரு, நாரதர் மற்றும் வருணன் ஆகியோர். க்ஷயரோகத்தினால் அவதியுற்ற சந்திரனின் நிலை கண்டு அவனது மனைவிகள் 27 நட்சத்திரங்களும் இந்திரனிடம் முறையிட, இந்திராணி வெள்ளி மற்றும் பௌர்ணமி நாளில் வடிவுடையம்மனை வழிபட அறிவுறை அளித்தாள். எனவே அவர்கள் வெள்ளி மற்றும் பௌர்ணமி கூடிய நாளில் அம்மனை வழிபட, அம்மன் சந்திரனின் சாபத்தை நீக்கி, ”பெண்கள் அனைவரும் சமமே!, 27 மனைவிகள் இருந்தும் ஒரு பத்னியை விரும்பியது பாவம், அதனால்தான் உனக்கு தண்டனை என்று கூறி, உன் பத்தினிகளின் விரதமே உன்னைக் காத்தது என்றாள் அம்பிகை. பின்னர் சந்திரன் வேண்டிக்கொண்டபடி பௌர்ணமி மற்றும் வெள்ளி கூடிய நாளில் வழிபடுபவர்களின் துயர் தீர்த்தருளுகின்றாள். வாழி நின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள் வாழி நின் தாள்மலர் போற்றிநின் தண்ணளி வாழி நின் சீர் வாழி என் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும் நீ வாழி என் ஆரூயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே! - வடிவுடை அம்மனிடம் தன்னையே சரணாகதி அடைந்திருக்கிறார் வடலூர் வள்ளல் பெருமான். மூவரின் தேவாரப்பாடலும் பெற்ற தலம் திருவொற்றியூர். மொத்தம் 8 பதிகங்கள் உள்ளன. ஐயடிகள் காடவர் கோன் க்ஷேத்திரவெண்பா  பாடியுள்ளார். திருஞான சம்பந்தப்பெருமான் ஒரு பதிகமும், அப்பர் 5 பதிகங்களும், சுந்தரர் 2  பதிகங்களும்  பாடியுள்ளனர்.  அமிழ்தினும் இனிய தமிழால் உயிர் வாழ்வதாக கூறிய முதுபெரும் கவிஞர் மறைமலை அடிகள் தனக்கேற்பட்ட கொடிய நோயை விலக்க வேண்டி, திருவொற்றியூர் முருகக்கடவுளை வேண்டி அவர் மீது “திருவொற்றியூர்  முருகன் மும்மணிக் கோவை” என்ற பாடல் தொகுப்பினை பாடி நோய் நீங்கப்பெற்றார். அருணகிரிநாதரும் இம்முருகன் மேல் இரண்டு திருப்புகழ் பாடியுள்ளார். தியாகராஜ சுவாமிகள் வடிவுடையம்பாள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியுள்ளார், முத்துசுவாமி தீட்சிதர் ஆதிபுரீஸ்வரம் எனும் ஒரு கீர்த்தனை பாடியுள்ளார். கவி காளமேகம், இரட்டைப் புலவர்கள், பாம்பன் சுவாமிகள், ஸ்ரீ சிதம்பர நாத முனிவர் ஆகியோரும் மற்றும் பல அன்பர்களும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். தொண்டை நாட்டுத் தலங்களுள் திருவொற்றியூரின் தலமரமான மகிழ மரமும், காஞ்சிபுரத்தில் மா மரமும் சிறப்பு பெற்றவை.  மகிழ மரத்தினடியில் எம்பெருமான் தியாகேசர் தன் தோழன் சுந்தரனிடம் ஒரு திருவிளையாடல் நடத்தினார்.  அது என்ன என்று பார்ப்போமா? நாடும் உய்ய நாமுய்ய நம்பி சைவ நன்னெறியின் சீலம் சிறக்கவும், மாதவம் செய்த தென் திசை வளர்ந்திடவும், தீதிலா திருத்தொண்டர் தொகை பாடிடவும் அதன் வழி அடியார்களை போற்றும் பண்பு நெறியினை காட்ட வந்த சுந்தரர், எம் ஐயனாலே நீ எனது அடிமை என்று தடுத்தாட்கொள்ளப்பட்டவர். அவர் திருவாரூரிலே பரவையாரை மணந்திருந்தார். ஒரு சமயம் தல யாத்திரையின் போது  திருவொற்றியூர் வந்து தங்கி இருந்தார். அதே சமயம்  ஞாயிறு கிராமத்தை சார்ந்த  சங்கிலி என்ற பெண் திருவொற்றியூரில் ஒரு கன்னி மாடத்தில் தங்கி  தியாகராச பெருமானுக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார், அப்பெண் மீது இவருக்கு காதல் பிறந்தது. ஆனால் சங்கிலியாருக்கு மண வாழ்விலே நாட்டம் இல்லாமலிருந்தது, எனவே தம்பிரான் தோழன்,  தம் தோழனாகிய இறைவனிடம் சென்று, "தியாகேசா! நீர் எமக்காக தூது சென்று சங்கிலியின் மனதை மாற்றி எம்மை மணக்க சம்மதிக்க வைக்க வேண்டும் "என்று கோரிக்கை வைத்தார். பரம கருணைக் கடலான எம்பெருமான் தனது அன்பனின் வேண்டுகோளை நிராகரிப்பாரா? அவர் அதை ஏற்றுக் கொண்டார். ஆயினும் தன் தொண்டன் ஆருரனுக்கு படிப்பினையை தர விரும்பிய எம் ஐயன் ஒரு திருவிளையாடலையும் அங்கே நடத்தினார். சங்கிலியாரிடம் தூது சென்ற பரமன் அவள் கனவிலே சென்று " சுந்தரன் எனது பரம பக்தன் எனவே நீ அவனை மணந்து கொள்வாயாக " என்று கூறினார். அவருக்கு இன்னொரு மனைவி இருக்கின்ற போது "நான் எவ்வாறு அவரை மணந்து கொள்ள முடியும்?" என்று சங்கலி வினவ, எம்பெருமான் நீ சுந்தரரிடமிருந்து அவர் உன்னை பிரிந்து செல்ல மாட்டார் என்று என் சன்னிதானத்தில் சத்தியம் வாங்கிக்கொள் என்று கூறினார்.  இறைவனே கூறும் போது சங்கிலியார் மறுப்பாரா? அவர் கூறியவாரே சுந்தரரிடம் தன்னை எப்போதும் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து தருமாறு கேட்டார். பரவையாரை முழுதும் மறக்க முடியாத சுந்தரர், இறைவன் முன் சத்தியம் செய்ய விரும்பாமல், அவரை 'இறைவனே தாங்கள் நான் சத்தியம் செய்யும் போது தங்கள் சன்னிதியில் இருக்க வேண்டாம் திருக்கோவிலில் உள்ள மகிழ மரத்தினில் இருந்து கொள்ளுங்கள்' என்று வேண்ட, இறைவனும் ஒப்புக்கொண்டார். ஆனால் சங்கிலியாரின் கனவிலே சென்று நாளை நாம் சன்னிதியில் இருக்க மாட்டோம் மகிழ மரத்தில் இருப்போம், எனவே நீ மகிழ மரத்தினடியிலே வைத்து சத்தியம் வாங்கிக் கொள் என்று கூறினார். []   சங்கிலி நாச்சியார் உடனுறை சுந்தர மூர்த்தி நாயனார் மறு நாள் பரவையார் சன்னதியில் வேண்டாம் மகிழ மரத்தடியில் வைத்து சத்தியம் செய்து தாருங்கள் என்று கேட்க உண்மையை அறிந்திருந்த சுந்தரர்  வேறு வழியில்லாமல் மகிழ மரத்தினடியில் வைத்து சங்கிலியாருக்கு, "அவளை பிரியமாட்டேன் அவ்வாறு பிரிந்தால் கண் பார்வை இழப்பேன்" என்று சத்தியம் செய்து கொடுத்தார். பின்னர்  இருவருக்கும் திருமணம் இனிதே நடந்தது. சில வருடம் கழித்து திருவாருர், வீதி விடங்கரின் ஆழித் தேரோட்டத்தை காண விரும்பிய வன்தொண்டர், திருவொற்றியூர் எல்லையைத்தாண்ட அவர் கண் பார்வை பறிபோனது. தோழனே ஆயினும் கூட தவறு செய்தால் தண்டனை பெறுவார் என்பதை இறைவன் இங்கே நடத்தி காட்டினார். பின்னர் சுந்தரர் காஞ்சி சென்று கச்சி ஏகம்பனை பாடி வலக்கண் பார்வையும், திருவாரூரிலே தியாகேசரைப்பாடி இடக்கண் பார்வையும் பெற்றார். மாசி மாத பிரம்மோற்சவத்தின் போது மக நட்சத்திரத்தன்று கோவிலின் வடக்கு பக்கம் உள்ள இந்த கற்பக விருட்சமான மகிழ மரத்திற்கு அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் கல்யாண சுந்தரர் பார்வதி அம்பாள் திருக்கல்யாண உற்சவம்  சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. காலையில் கோலாகலமாக திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. மாலை கல்யாண கோலத்தில் சுந்தரரும் சங்கிலியாரும் முன் செல்ல, எம்பெருமான்  அகத்தியருக்கு அன்று அருட்காட்சி கொடுத்த கல்யாண சுந்தரராக பின் செல்கின்றார். இவர்களைத் தொழுதவாறு அறுபத்து இரண்டு நாயன்மார்கள், அகத்தியர் லோபாமுத்திரை, பிரம்மன், விஷ்ணு, அதிகாரநந்தியெம்பருமான் ஆகியோர் எழுந்தருள்கின்றனர். வீதி வலம் முடித்து திருக்கோவிலில் மகிழ மரத்தினடியில்  கல்யாண சுந்தரர்,   சுந்தரருக்கும் சங்கிலியாருக்கும் தரிசனம்  தந்தருளுகின்றார். அன்று நடந்த சபத நிகழ்ச்சி இன்றும் நடத்திக் காட்டப்படுகின்றது. இந்நிகழ்ச்சி மகிழடி சேவை என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அறுபத்து நாயன்மார்களுள் கலிய நாயனார் வழிபட்ட தலம் இது.  படம்பக்க நாதரின் திருக்கோவிலுக்கு விளக்கிடும் திருப்பணி செய்து வந்தார் கலிய நாயனார்.  தனது அன்பனின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய  எம் ஐயனின் திருவுள்ளத்தால் கலியனார் வறுமை வாய்பட்டார், வறுமையிலும் தனது பணியை  தொடர்ந்து வந்தார் கலியனார். இருந்த செல்வம் எல்லாம் கரைந்து விட, வேறு வழியில்லாமல் தனது மனைவியையே விற்க முயன்றார் , ஆனால் யாரும் அவளை வாங்க முன் வர வில்லை. எனவே ஒரு நாள் விளக்கிட எண்ணையே இல்லாத்தால் "உடலின் உதிரத்தையே விளக்கிலே எண்ணையாக இட்டு விளக்கேற்ற முயன்றார்” அப்போது கருணைக்கடலாம் எம்பெருமான் அவருக்கு ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்து அவருக்கு சிவ லோகப் பதவி தந்தருளினார்.  படம்பக்க நாதர்  கருவறை சுற்று மண்டபத்தில் கலிய நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது. 7ம் நூற்றாண்டில் தொண்டைமான் சக்கரவர்த்தி காளியை  இங்கு வட்டப்பாறை அம்மனாக வழிபட்டார். உக்ர ரூபிணியாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதி சங்கரர் அமைத்த ஸ்ரீசக்கரம் ஒரு வட்டப்பாறையின் கீழே உள்ளதால் அம்மனுக்கு இப்பெயர்.  வட்டப்பாறையம்மன் சன்னதிக்கு எதிரே சூளாமணி பைரவருக்குத் தனிகோயில் உள்ளது. ஒரு காலத்தில் இவ்விடத்தில் உயிர்பலிகள் இருந்துள்ளன. ஆதிசங்கரர் இத்தலம் வந்த போது அவற்றை நிறுத்தினார் என்று கூறப்படுகிறது.   கவிச்சக்கரவர்த்தி கம்பர், வடமொழி வால்மீகி இராமாயணத்தை தமிழில் எழுத திருவொற்றியூர் வந்தார். இவர் வட்டப்பாறை அம்மனின் பக்தர். இவர் பகல் முழுவதும் சதுராரன பண்டிதரிடம் இராமாயணத்தை செவி வழியாகக் கேட்டு இரவு முழுவதும் இராமாயணத்தை எழுதுவார். இப்படி எழுதுவதற்கு முன் வட்டப்பாறை அம்மனை வணங்குவார். அம்மனும் தன் பக்தனின் தமிழ்த்தொண்டினை வளரச் செய்ய சாதாரணப்பெண் போல் வந்து தீப்பந்தம் எந்தினார் என்கின்றனர். கிழக்கு வெளிப்பிரகாரத்தில் நவகிரக சன்னதி, குழந்தையீஸ்வரர் சன்னதி,  சித்தி விநாயகர், பால சுப்பிரமணியர் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.  கொடி மரம், பலி பீடம், உயரத்தில் நந்தி தேவர், ஜகந்நாதர், எதிரே சிவ சூரியன், நால்வர், சகஸ்ர லிங்கம் இவருக்குதான் பிரதோஷ காலத்தில் அபிஷேகம் நடைபெறுகின்றது, இராமநாதர் அமிர்த கண்டேஸ்வரர் சன்னதிகள்.  தெற்குப் பிரகாரத்தில் அஸ்வினி முதல் ரேவதி ஈறாக 27 நட்சத்திரங்களுக்குமாக 27 லிங்கங்களை ஒரே நேர் வரிசையில் அமைத்து அதன் முன்னே அருமையான நந்தவனமும் அமைத்துள்ளனர். மேற்கு வெளிப் பிரகாரத்தில் காளி, ஆகாசலிங்கம், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர், காளத்திநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர்  சன்னதிகள் அமைந்துள்ளன. ஆலயத்தின் வடமேற்கு மூலையில் அற்புத கலை நுணுக்கம் மிக்க கற்சிலைகளுடன் கூடிய முன் மண்டபத்துடன் திருவொற்றீஸ்வரர் கோயில் எழிலாக அமைந்துள்ளது. இப்பெருமானுக்குத்தான் நான்கு கால பூஜைகளும் நடைபெறுகின்றன. இக்கோவிலின் முன்மண்டபத்தின் தூண்களில் கலை நுணுக்கத்துடன் கூடிய அற்புதமான சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. பிரம்மா-விஷ்ணு, விநாயகர்-முருகர், ஊர்த்துவத்தாண்டவர்–காளி, பட்டினத்து அடிகள்-பத்திரகிரியார், தும்புரு–நாரதர், வியாக்ரபாதர் – பதஞ்சலி, நந்தி–பிருங்கி, என்று எதிரெதிர் தூண்களில் அருமையாக இணையாக அமைத்துள்ளனர். துவாரபாலகர்கள் அழகும் சொல்லி மாளாது. மேலும் பிரம்மாவின் மானச புத்திரர்களும்,  தென்முகக் கடவுளிடம் மௌன உபதேசம் பெற்ற  சனகாதி முனிவர்கள் நால்வரும், தேவாரமும்,  திருவாசகமும் பாடியருளிய சைவ சமயக் குரவர்கள் நால்வரும் பெரிய சிற்பங்களாகவும், சிவ பெருமானின் திருக்கோல வடிவ மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுந்தரர் - சங்கிலி நாச்சியார் ஆகியோரின்  சிறிய சிற்பங்களாகவும் கண்டு களிக்கலாம். சிம்மத்தின் வாயில் இரு கல் வளையங்கள் அக்கால சிற்பிகளின் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.  தியாகராஜர் என்றாலே யோகம் தானே நுழைவாயிலின் கூரையில் ஒரு சூரிய சந்திரர்களுக்கு இடையே மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில் உடற்சக்கரங்களின் விளக்கம் அமைத்துக் காட்டப்பட்டுள்ள அழகு கண்டுணரத்தக்கது. சன்னதியின் முகப்பில் திருக்கயிலாயக் காட்சியை கண்டு களிக்கலாம்.   வடக்கு வெளிப் பிரகாரத்தில் நந்தவனேஸ்வரர், நந்தவனம் சூளாமணி, பைரவர் சன்னதி, கல்யாண சுந்தரர் சன்னதி அமைந்துள்ளது. மகிழ மரத்தை சுற்றி இரும்பு கம்பிகளினால் வேலி அமைத்துள்ளனர். அதற்கு அருகில் அழகிய சிற்பங்களுடன் கூடிய தியாகரின் வசந்த மண்டபம் உள்ளது.  வசந்த மண்டபத்தை அடுத்து சுந்தர மூர்த்தியார் மண்டபம் உள்ளது அதில் சுந்தரர் சங்கிலியாருடன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தருகின்றார். இன்றும் இம்மண்டபத்தில் பல்வேறு திருமணங்கள் நடை பெறுகின்றன. மகிழ மரத்தின் அருகே தியாகப்பெருமானின் திருப்பாதங்களை தரிசிக்கலாம். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் முருகர் குமாரசாமித் தேவன் என்றும் அழைக்கப்படுகிறார். கரியமுகில் போலு மிருளளக பார      கயல்பொருத வேலின் ...... விழிமாதர் கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர      களபமுலை தோய ...... அணையூடே விரகமது வான மதனகலை யோது      வெறியனென நாளு ...... முலகோர்கள் விதரணம தான வகைநகைகள் கூறி      விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய் அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்      அவர்கள்புக ழோத ...... புவிமீதே அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ      அமரர்குல நேச ...... குமரேசா சிரகரக பாலர் அரிவையொரு பாகர்      திகழ்கநக மேனி ...... யுடையாளர் திருவளரு மாதி புரியதனில் மேவு      ஜெயமுருக தேவர் ...... பெருமாளே –     என்று அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். இப்பாடலில் திருவொற்றியூரை திரு வளர் அதாவது லட்சுமி கடாட்சம் நிறைந்த ஊர் என்று போற்றியுள்ளார்.  கோவிலின் முன் பக்கம் அமர்ந்து இறைவனை தியானம் செய்வதற்கு ஏற்றார் போல பெரிய மணல் வெளி உள்ளது. இத்திருத்தலத்தில் எம் ஐயனின் கருவறை தொண்டை மண்டல அமைப்பான 'கஜ பிருஷ்ட விமானம்' (யானையின் பின் புறம்) என்றழைக்கப்படும் அர்த்த சந்திர அமைப்பில் அமைந்துள்ளது. மூலவர் பிரகாரத்தில் கலிய நாயனார், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தல விநாயகர் சன்னதிகள் அமைந்துள்ளன. அடுத்து ஆதி சங்கரர் சன்னதி உள்ளது. ஆச்சாரியரின் நான்கு சீடர்களும் பீடத்தில் உள்ளனர். அடுத்து ஏகாதச ருத்ர லிங்கர் சன்னதி. அடுத்து முருகன் சன்னதி. கோட்டத்தில் மஹாவிஷ்ணு பிரயோக சக்கரத்துடனும், துர்க்கை மகிடன் இல்லாமலும் தரிசனம் அளிப்பது ஒரு சிறப்பு. மூலஸ்தானத்திற்கு வெளியே அமைந்துள்ள  64கால் மண்டபத்தின் மையத்தில் ஆடற்கரணங்களின் அற்புதமான சிலைகள் அலங்கரிக்கின்றன. இம்மண்டபத்தில் நடராசப்பெருமானின் சன்னதி அமைந்துள்ளது. மூலையில் த்வனி சண்டேஸ்வரர் 6 அடி உயரத்தில் கையில் மழுவுடன் கம்பீரமாக தரிசனம் அளிக்கின்றார்.. ஆடல் வல்லானின்  பின்புற சுவற்றில் ஏகபாத மூர்த்தி சிற்பம் எழிலாக அமைந்துள்ளது. ஆசையை வென்றால் அனைத்தும் கிடைக்கும் எனும் தாரக மந்திரத்தை கொண்ட பட்டினத்தார் திருவொற்றியூரில் முக்தி பெற்று உயிரோடு ஜீவசமாதியானார். காவிரிப்பூம்பட்டிணத்தில் நகரத்து செட்டியார் மரபில் தோன்றிய இவர், இல்லறவாழ்வில் மகப்பேறு இல்லாமல் மிகவும் வருத்தம் கொண்டு சிவபெருமானை வேண்டிக்கொண்டதின் பேரில் திருவிடைமருதூர் இறைவனே வளர்ப்பு மகனாக “மருதவாணர்” என்ற பெயரில் வளர்ந்து வந்தார். ஒரு சமயம் மருதவாணர் கடல் கடந்து வாணிபம் செய்து வீடு திரும்பிய போது அவர் தனது திருக்கரத்தில் ஒரு காதறுந்த ஊசியும், ஒரு கிழிந்த ஓலையையும் மட்டுமே கொண்டு வந்தார். அவ்வோலையில் காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. சிவபெருமானைத்தவிர மற்ற எல்லா செல்வமும் நிலையற்றது என்ற ஞானம் பெற்று  அனைத்தையும் துறந்து கோவணத்துடன் ஊர் ஊராக சென்று இறைவனைப் போற்றி பாடல்களை பாடி வந்தார். தன்னைப் பெற்ற தாயார் இறந்த போது பச்சை வாழை மட்டையில் அவரை படுக்க வைத்து தனது பாடல்களின் மூலம் அவரது ஈமச்சடங்குகளை செய்தார். காசி மன்னனை உண்மை உணர வைத்தார் அவரும் பத்திரகிரியார் என்று இவரது சீடரானார். இருவரும் பல தலங்களுக்கு சென்று திருவிடைமருதூரில் இருந்த போது பத்திரகிரியாரும் இறைவனடி சேர்ந்தார். பட்டினத்தார் தனக்கு எப்போது முக்தி என்று வினவ இறைவன் அவருக்கு ஒரு பேய்க்கரும்பை அளித்து எத்தலத்தில் இக்கரும்பு இனிக்கின்றதோ அத்தலத்தில் முக்தி என்றார். திருவொற்றியூர் இறைவனை தரிசித்து வரும் வழியில் பேய்க்கரும்பு இனித்தது. எனவே அவர் திருவொற்றியூரில் தங்கினார். ஆடி மாதம் உத்திரடாத்தன்று  கடற்கரை ஓரத்தில் மீனவ சிறுவர்களுடன் சித்து விளையாடல்கள் ஆடினார். தன்னை ஒரு இடத்தில் மண்ணில் புதைக்குமாறு செய்து மற்றொரு இடத்தில் வெளியே வந்தார். இப்படி இருமுறை செய்தார். மூன்றாம் முறையாக புதைத்தபிறகு அவர் வெளியே வரவில்லை. அவர் புதையுண்ட இடத்தில் சிவலிங்கமாக காட்சி அளித்தார். இவர் திருவொற்றியூர் இறைவனைப் போற்றி 28 பாடல்கள் பாடியுள்ளார். இவை 11-ம் திருமுறையில் உள்ளன. பட்டினத்தார் முக்தி பெற்றதால் இது முக்தித்தலம். அவருடைய ஜீவசமாதி கடற்கரை ஓரத்தில் அமைதியாக காட்சி தருகின்றது. ஐயும் தொடர்ந்து விழியும் செருகி அறிவழிந்து மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன் யான் செய்யும் திருவொற்றியூருடையீர் திரு நீறும் இட்டு கையும் தொழப் பண்ணி ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே! என்று எழுத்தறியும் பெருமானிடம் பட்டினத்தடிகள் வேண்டுகிறார். “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” எனப்போற்றப்படும் இராமலிங்க அடிகள் பள்ளிப் படிப்பே இல்லாமல் பாடல் இயற்றும் திறமை பெற்றவர். இவர் சிறு வயதிலிருந்தே ஒற்றியூர் இறைவனை வணங்கி இக்கோவிலில் உள்ள தல விருட்சமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்து சிவனருள் பெற்றவர். வள்ளலார் தற்போது தங்கசாலை என்றழைக்கப்படும் இடத்திலிருந்து தினமும் நடந்து வந்து வடிவுடையம்மனை வணங்கிய பின் தன் அண்ணியார் வீட்டிற்குச் சென்று உணவருந்துவது வழக்கம். ஒரு நாள் இவர் இவ்வாறு அன்னையை தரிசித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய போது அண்ணியார் வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு தூங்கி விட்டார். அடிகளார் தூங்கும் தன்னுடைய அண்ணியை எழுப்ப மனமில்லாமல், பசியுடன் அப்படியே திண்ணையில் படுத்துக்கொண்டார். அன்பனின் பசியை பொறுக்காமல் ஸ்ரீவடிவுடையன்னை அவரது அண்ணியாரின் உருவில் வந்து அவருக்கு உணவு பரிமாறினாள். இவ்வாறு அன்னையில் அருள் பெற்ற வள்ளலார் சுவாமிகள் அம்மனைப் போற்றி “ஸ்ரீவடிவுடை மாணிக்க மாலை” என 101 பாடல்களையும், ஆதிபுரீஸ்வரரின் மீது “எழுத்தறியும் பெருமான் மாலை” என்று 31 பாடல்களையும் பாடியுள்ளார்.    வருடம் முழுவதும் திருநாள்தான் இவ்வாலயத்தில் சித்திரையில் வருடப்பிறப்பு, ஆதி சங்கரர் உற்சவம் மற்றும் வட்டப்பாறை அம்மன் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. வைகாசியில் தியாகராஜ சுவாமிக்கு பதினைந்து நாட்கள் வசந்தோற்சவம். ஆனியில் ஆடல் வல்லானுக்கு ஆனித்திருமஞ்சனமும், ஆடிப்பூரத்தன்று திருவொற்றீசருக்கும், வடிவுடையம்மனுக்கும் சந்தனக் காப்பு விழாவும், அம்மாதத்தில் சுந்தர மூர்த்தி நாயனாருக்கும், கலிய நாயனாருக்கும் உற்சவம் நடைபெறுகின்றது. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி மற்றும் மூலத்தன்று தியாகராஜர் உற்சவம் கண்டருளுகின்றார். புரட்டாசியில் வடிவுடையம்மன் நவராத்திரி உற்சவம் கண்டருளுகின்றார். விஜய தசமியன்று தியாகேசர் வீதி உற்சவம் கண்டருளுகின்றார். ஐப்பசியில் அன்னாபிஷேகமும், கந்தர் சஷ்டி லக்ஷார்ச்சனையும், பூசத்தன்று திருஞானசம்பந்தர் ஞானப்பால் விழாவும் நடைபெறுகின்றது. கார்த்திகை பௌர்ணமியன்று கவசம் திறந்து புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம், இரவு தியாகேசர் வீதி உற்சவம். மார்கழியில் முழு நிலவன்று காலை மாணிக்கவாசகர் உற்சவம், நடராஜர் ஆருத்ரா தரிசனம், மாலை தியாகேசர் பதினெட்டு நடன உள் உற்சவம். தைப்பூசத்தன்று  காலை சந்திரசேகரர் தெப்பம் இரவு தியாகராஜர் வீதி உற்சவம். மாசிமாதம் பெருந்திருவிழா. ஒவ்வொரு வருடமும் மாசி மாத முழு நிலவு  நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பெருந்திருவிழா நடைபெறுகின்றது. பிரம்மா, நந்தியெம்பெருமான், உரோமச முனிவர் ஆகியோருக்காக  தியாகேசப்பெருமான் நடனம் ஆடுவது இத்திருவிழாவின் சிறப்பு. திருவிழாவின் இரண்டாம் நாள் நந்திகேஸ்வரருக்காகவும், ஐந்தாம் நாள் பிரம்மாவிற்காகவும், ஆறாம் நாள் விஷ்ணு மற்றும் உரோமச முனிவருக்காகவும், திருவிழா நிறைவு நாளான பதினொன்றாம் நாள் உமா தேவியாரின் ஊடலை தணிக்க பந்தம்பறி நடனமும் ஆடி அருளுகின்றார். அம்மனின் பின்புறம் இருந்து ஐயனின் நடனத்தை கண்டு களிப்பது அன்பர்களாகிய  நமக்கு பெரும் பேறாகும்.  ஒன்பதாம் நாள் கல்யாண சுந்தரர் அகத்தியருக்கு திருக்கல்யாண காட்சி தந்தருளுகின்றார். உடன் கல்யாண கோலத்தில்  சங்கிலியுடன் சுந்தரரும் மற்ற நாயன்மார்களும் திருக்கல்யாணக்கோலம் கண்டு மகிழ்கின்றனர். பட்டினத்தார் மரபில் வந்த நாட்டுக்கோட்டை நகரத்தார், இத்தலத்தில் தெற்கு மாட வீதியில் ஒரு மண்டபத்தை நிறுவி, தண்டாயுதபாணி பெயரில் ஆன்மீகப்பணி செய்து வருகின்றனர். மாசிப்பெருவிழாவின் போது பவளக்கார தெருவிலிருந்து தண்டபாணி தெய்வத்தை எழுந்தருளச்செய்கின்றனர். அவர் ஐந்து நாட்கள் திருவொற்றியூரில் தங்கியிருக்கும் போது பூஜை நடத்தி அன்னதானம் செய்கின்றனர். மனமெனுந் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றிச் – சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறைதாக்கி மறியும்போது அறிய வொண்ணாது உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே. என்று அப்பர் பெருமான் பாடிய திருவொற்றியூரில்  ஆதிபுரீஸ்வரையும்,  வடிவுடை நாயகியையும்,  மாணிக்க தியாகரையும் தரிசித்த நாம் அடுத்த தொண்டை நாட்டின் உபவிடங்கத்தலமான திருவான்மியூரை தரிசிக்கலாம்.                                 40. திருவான்மியூர் தியாகேசர்   []    விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றியனே   உரையார் பல்புகழாய் உமை நங்கையோர் பங்குடையாய்   திரையார் தென் கடல்சூழ் திருவான்மியூர் உறையும்   அரையா உன்னையல்லால் அடையாது எனது ஆதரவே  என்று திருஞான சம்பந்தர் பாடிய தலம்  திருவான்மியூர்  ஆகும். இத்தலமும் சென்னையில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள மூன்று பதிகம் பெற்ற தலங்களுள் தென் பகுதியில் அமைந்துள்ளது இத்தலம். பிரம்மாவின் வாரிசான பிரதேச குமாரர் வேடுவர்களுடன் கூடி  தீய குணமுடையவராக விளங்கினார். ஒரு சமயம் தலைகீழாகத் தவம் செய்யும் ஒரு முனிவரைப் பார்த்து அவரைக் கொல்ல நினைத்து தோல்வி அடைந்து மனம் மாறி அவர் தவம் முடிக்கும் வரை காத்திருந்து அறிவுரைகள் கேட்டு கங்கைக்கரையில் தவக்கோலம் பூண்டு  முனிவரானார். அப்போது சத்திய லோகத்தில்  பிரம்மா மூலம் இராம காதையை அறிந்த நாரதர் மூலம் உபதேசம் பெற்று  இவ்வுலகுக்கு இராமாயணம் என்னும் இன்னமுதத்தை  குயிலாக மாறி கூவி  வழங்கிய வால்மீகி முனிவரானார். பின்னர் தவம் செய்யும் போது மார்க்கண்டரை சந்தித்து முக்தி அடையும் முறையைக் கேட்க அவரும் தென் திசை நோக்கி செல். ஒரு புண்ணிய இடத்தில் "நான் இருக்கிறேன்" என்ற அசரீரி ஒலி கேட்கும். அவ்விடத்தில் இறைவன் தங்களுக்கு முக்திப்பேறு அளிப்பார்  என்று கூறினார்.  அவ்வாறே தென் திசை நோக்கி வந்த வால்மீகி முனிவர் கிழக்கு கடற்கரை ஓரத்தில் நான் இங்கிருக்கிறேன் என்ற ஒலியை கேட்டு  வன்னி மரத்தடியில் சுயம்புவான மூர்த்தியை கண்டெடுத்து வழிபட, மனம் மகிழ்ந்த இறைவன் தியாகராஜராக அவருக்கு பங்குனி பௌர்ணமியன்று 18 வகை நடன காட்சி தந்தருளினார். அவர் வேண்டிக்கொண்டபடி பவளக்கொடியாம்  உமையம்மையுடன்  பக்தர்களுக்கு அருள் புரிய இத்தலத்திலே கோவில் கொண்டார். வான்மீகி  வேண்டிக் கொண்டபடி கோவில் கொண்டதால்  அவர் பெயரால் இத்தலம் வான்மியூர் என்றாயிற்று  தேவாரப்பாடல்  பெற்றதால் திரு என்னும் அடைமொழியும் சேர்ந்து திருவான்மீயூராயிற்று. வசிஷ்ட முனிவர் நடு மண்டலத்தில் விசுவநாதருக்கு பூஜை செய்ய காமதேனுவின்  உதவியை வேண்டினார், காமதேனுவும் நாள் தோறும் அபிஷேகத்திற்கு பாலை சொரிந்து வந்தது. ஒரு நாள் அது மலையிலேயே தங்கி விட்டதால் பூஜை செய்ய முடியாமற் போனதால்  அவர் இட்ட சாபத்தால், தனது புனிதத் தன்மை நீங்கி காட்டுப்பசுவாகி, அலைந்து திரிந்து,   பழைய ஞானத்தால் மருந்தீசரின் திருமேனி மீது தினம் பால் சொரிந்து பாவ விமோசனம் பெற்றது. எனவே இறைவனுக்கு பால் வண்ண நாதர், கோகரந்தீஸ்வரர் என்ற திருநாமங்களும் உண்டு. காமதேனுவின் குளம்பு பட்ட வடு இன்னும் எம்பெருமானின் திருமேனியில் உள்ளது. பாலபிஷேகத்தின் போது வடுவை தரிசிக்க இயலும். மலையரையன் பொற்பாவை பார்வதி திருக்கல்யாணத்தின் போது அனைத்து  சீவ கோடிகளும் கயிலையில் கூடியதால்  வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது அப்போது பூமியை சமன் செய்ய  வேண்டி  தென் திசை வந்த கும்ப முனி அகத்தியருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் இறைவனை நினைக்க அம்மாதொரு பாகர் உமையம்மையுடன் தோன்றி மருந்தும் அதன் வகைகளையும் கூற அகத்தியரும் நலம் பெற்றார். எனவே இறைவர் ஒளஷதீஸ்வரர், அதாவது மருந்தீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். மருந்தீசரை வழிபட்டு  அவரின் திருநீறு, அபிஷேகப் பால் ஆகியவற்றை உண்டு தங்கள் நோய் தீரப்பெற்றோர் ஏராளம். எனவே பக்தர்கள் அனைவரும் இறைவனை “திருவான்மியூர் மருந்து” என்று கொஞ்சியழைக்கின்றனர். மந்தமா கியசிந்தை மயக்கறுத் தந்தமில் குணத்தானை யடைந்து நின் றெந்தை யீசனென்றேந் திட வல்லிரேல் வந்துனி ன்றிடும்வான் மியூரீசனே   என்று திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற வான்மீக நாதர் எழுந்தருளியுள்ள இத்தலம், மூர்த்தி,  தலம்,  கீர்த்தி என்ற மூன்றும் ஒரு சேர அமைந்த தலம். பிறக்க, இறக்க முக்தி அளிக்கும் தலம், நினைத்தாலே வீடு பேறு அளிக்கும் தலம் என்று தல புராணம் கூறுகின்றது. சிறந்த பிரார்த்தனைத் தலம்.  திருவல்லிக்கேணி, திருமயிலை, வாலீஸ்வரர், கங்காதேஸ்வரர், தாண்டீஸ்வரர் ஆலயங்களின் கல்வெட்டுகளில் திருவான்மியூர் பற்றிய குறிப்புகள் உள்ளன. வேத ஆகமப்படி தேவமுனிகள் மூலம் பிரம்மாவால்  அமைக்கப்பெற்ற தலம். பிரம்மாவே திருக்கோவில், மாடவீதி, மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் திருத்தேர் மற்றும் உற்சவ விக்கிரங்கள் அமைத்து பங்குனி மாதத்தில் ஆண்டுப்  பெரு விழா   (பிரம்மோற்சவம்)  செய்து வழிபட்டார். திருமால், போர் முடித்த  பார்த்த சாரதி ஆகியோர் வழிபட்ட தலம். இராமர் சீதா பிராட்டியை தேடி வரும் வழியில் இத்தல இறைவனை வழிபட்டு வரம் பெற்றார். சந்திரன் குரு பத்தினியை சேர்ந்ததால் குரு சாபம் பெற்று இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டு குரு சாபம்   நீங்க பெற்ற தலம். மருந்தீசர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளதால் மாலை சூரியன்  பூஜை செய்வதாக ஐதீகம். சூரியனும் சந்திரனும் எம்பெருமானை இத்தலத்தில் பூசிப்பதால் இத்தலத்தில் தனி சூரியன் மற்றும்  நவக்கிரக சன்னதி கிடையாது.  இந்திரன் தான் செய்த பாவத்தின் காரணமாக பெற்ற சாபங்கள் நீங்க இத்தலத்தின் தீர்த்தங்களில் நீராடி  சிவ பூஜை செய்து தனது பாவங்களை போக்கிக் கொண்ட தலம்.  வேதங்கள் இங்கு சிவபூஜை செய்து புனிதமடைந்தன. யமன் இங்கு சிவபூஜை செய்து பழி நீங்கப்பெற்றார்.   குரங்குருவம் பெற்ற இரக்ஷகன் என்பவன் பிரம்ம லோகத்திலுள்ள கல்யாண தீர்த்தத்தில் மூழ்கியதால் பெண்ணுருவம் பெற்று,  இத்தலத்தை அடைந்து ஜென்ம நாசினியில் மூழ்கிப் பழைய வடிவத்தை பெற்ற தலம்.   பிருங்கி மகரிஷி இப்பெருமானையும் உமையம்மையும் வழிபட்டு சக்தியை நீக்கி சிவனை மட்டும் வழிபட்ட பாவம்  நீங்கப்பெற்ற தலம். நான்கு வேதங்களும் பூசித்த வேதபுரீஸ்வரர், அனுமன் பூசித்த லிங்கமும், இந்திரனது சாபம் நீக்கிய  மீனாட்சி சுந்தரேஸ்வரரும், பரத்துவாசர்  பூசித்த லிங்கமும் இத்தலத்தில் உள்ளன. வான்மீகம்’ என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மீகியூர்’ என்றானது என ஒரு  வரலாறு கூறுகிறது. வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் எனவும், அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே, ஆலயத்தின் வடக்குப் பிரகாரம் மற்றும் மேற்குப்பிரகாரம் சந்திக்கும் மூலையில் இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. விரிசடையண்ணல் இங்கே கருவறையில்  சுயம்பு மூர்த்தியாக, அருவுருவமாக  காமதேனுவின் குளம்படியின் வடுவுடன்  சிறிது வடபுறம் சாய்ந்த நிலையில் மேற்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார்.  வான்மீகி முனிவருக்கு முக்தி அளித்ததால் இவர் வான்மீக நாதர் என்ற நாமமும், காமதேனு தன் பாலை சொரிந்து வழிபட்டதால் பால் வண்ண நாதர், கோகரந்தீஸ்வரர் என்றும். உலகில் உள்ள நோய்களின் தன்மையையும், அவற்றை தீர்க்கக் கூடிய மூலிகைகளின் இயல்புகளையும் அகத்தியருக்கு உபதேசித்ததால் மருந்தீசர் என்றும், நான்கு வேதங்கள் பூசித்ததால் வேதபுரீசுவரர் என்றும்,  பாற்கடலில் தோன்றிய அமுதத்தால் வானவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டமையால் அமுதீசுவரர் என்றும் நாமம் ஏற்பட்டது.  இவருக்கு பாலாபிஷேகம் மிகவும் விசேஷமானது. வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர்,  திரிபுராந்தகர்,  சித்தநாதர் என வணங்கப்படும் ஈசர் இங்கு `தியாகராஜ பெருமான்’ என்ற பெயரில் உற்சவராகவும் கொண்டாடப்படுகிறார். இவர் ஆடும் தியாகர் என்றழைக்கப்படுகிறார். பௌர்ணமியன்றும், பெருந்திருவிழாக் காலங்களிலும் இவர் ஆடி வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.  அதிகாலை கோபூஜையும், அர்த்தஜாம பால் அபிஷேகமும் இங்கு கண்டு வழிபடத்தக்க பூஜைகள். அபிஷேகப்பால் சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இத்தலத்தின் பெருமையை சொல்ல சொல்ல நீளும். ஈசனையும், இறைவியும் ஒரு முறை தரிசிக்கும் போதே குணமளிக்கும் எளிய வைத்தியர்கள். ஒரு முறை வந்து தரிசித்துப் பாருங்கள். அதன் பிறகு அவரே உங்கள் குடும்ப வைத்தியராக மாறி விடும் அதிசயத்தை உணர்வீர்கள்.  உடல் நோயை மட்டுமல்ல பிறவி என்னும்  நோயையும்  தீர்ப்பவர் மருந்தீஸ்வரர். உயிர்களின் உறக்கத்தைக் களைத்து, அறிவுத் தெளிவை ஏற்படுத்தும் வல்லமை உடையவர் இவர்.   நவகிரகங்களுக்கு  தனிச்சன்னதி இன்மையால் இத்தலம் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்களை நீக்கவல்ல கோளிலித் தலமாகும். மார்க்கண்டேயர் இத்தலத்தில் தவமிருந்து, வன்னி மரத்தடியில் இறைவன் இடபாரூடராகக்  காட்சி தந்து வரம் அருளியபடி கிழக்கில்  பிறவா வரமளிக்கும் ஜென்மநாசினி,  தெற்கில்  மனதில் உள்ள கேடு விளைவிக்கும் காமத்தை அகற்றும் காம நாசினி, மேற்கில் செய்த பாவங்களை அழிக்கும் பாப நாசினி,  வடக்கில் ஞானத்தை நல்கும் ஞானதாயினி, நடுவே   மோட்சப்பேறு வழங்கும் மோட்சதாயினி  என்னும் ஐந்து தீர்த்தங்கள் அமைந்த தலம். இவை ஐந்தும் எம்பெருமானின் சடாமுடியில் வீற்றிருக்கும் கங்கையிலிருந்து தெரித்த ஐந்து துளிகளிலிருந்து உண்டாயின என்பது ஐதீகம். சூரியன், பிரம்மா, யமன், பார்த்தசாரதி, இந்திரன், இராமர், சந்திரன் ஆகியோர் இத்தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்றனர் என்று தல புராணம் கூறுகின்றது. வன்னி மரம்  இத்தலத்தின்  தல விருட்சமாகும். கோவிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது இவ்விருட்சம். இம்மரத்தின் அடியில் எம்பெருமான் அகத்தியருக்கு திருமணக்காட்சியருளினார் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் கல்யாண சுந்தரர் இம்மரத்தடியில் திருமணக் காட்சி இன்றும் அகத்தியருக்கு அருளுகின்றார். வான்மீகி முனிவர் சுயம்புவான மூர்த்தியை இம்மரத்தடியில் கண்டார் என்பதும் ஐதீகம்.  வைகாசி வசந்தோற்சவத்தின் போது 18 நடனக் காட்சி வன்னி மரத்தடியில் நடைபெறுகின்றது. வசந்தோற்சவத்தால் நல்ல மழை பொழியும் என்பது ஐதீகம். இத்தலம் மிகவும் பழமையான தலம் புராண வழி நோக்குமிடத்து பார்த்தசாரதி, இராமர், வான்மீகி முனிவர் ஆகியோர் வழிபட்டமையால் அக்காலத்தே இத்தலம் சிறப்புற்று விளங்கியமை  தெளிவு. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகியோர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பத்தாம் நூற்றாண்டின் சோழர் கால கல்வெட்டுக்கள் அம்மன் கோவில் சுவற்றில் உள்ளன. இறைவன் திருவான்மியூருடைய மகாதேவனென்றும், இவ்வூரை ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் என்றும் குறித்துள்ளனர். தொண்டை நாட்டுத் தேவாரத்தலங்களுள் இத்தலம் 25வது தலம் ஆகும்.  இன்று கான்க்ரீட் காடாக இருக்கும் திருவான்மியூர் அக்காலத்தில் ஒரு பக்கம் கடல் சூழ , ஒரு பக்கம் வயல்கள் சூழ நெய்தலும், மருதமும் இணைந்து காட்சியளித்த அழகை ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் இவ்வாறு பதிகம் பாடியுள்ளார்   கரையு லாங்கட லிற்பொலி சங்கம் வெள் ளிப்பிவன் திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்  என்றும் திருவான்மியூரின் கீழ்திசையில் கடல் இருப்பதால் கடலிலிருந்து முத்துக்களும், பவளங்களும் வந்து உப்பங்கழிகளில் ஒதுங்கும் அழகுடையதாகவும் கடல் மீன்கள் துள்ளி வந்து கரையில் கிடந்து உகளும் சிறப்புடையதாகவும், கடல் சூழ்ந்த நெய்தல் நிலத்திற்குரிய மலர்கள் தேன் சொரியும்படி பூத்திருக்கும் அழகுடையதாகவும்  இருந்திருக்கின்றது என்றும் கானயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம் தேனங்கிய பைம்பொழில் சூழ் திருவான்மியூர் என்றும் புகழ்ந்து பாடி இத்திருவான்மீயூர் இறைவனை வழிபடுபவர்கள் யாவரும் தேவர் உலகத்தினையும் ஆளும் வல்லமை உடையவர்கள் ஆவார்கள் என்று பலன் கூறியுள்ளார். மனதில் ஆயிரமாயிரம் கவலைகள், எத்தனையோ துன்பங்கள், குடும்ப பாரம், வேலையின்மை, உடல்நோய் எத்தனையோ சஞ்சலங்கள் இருந்தும் அதற்கு விடைகிடைக்காமல் திணறும் நேரத்தில்  இத்தலத்து இறைவனை சம்பந்தப்பெருமான் பாடியபடி திரையார் தென்கடல் சூழ் திருவான்மீயூர் உறையும் அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே என்று பாடி சரணடைய உங்கள் துன்பங்கள் அனைத்தும் தீயினில் தூசாகும். வாழ்வினில் எத்தனை துன்பம் வந்தாலும் பரவாயில்லை, ஒரு முறை இத்திருவான்மீயூர் தலம் வந்து ஈஸனை வலம் வந்து வழிபடுங்கள் “வாட்டம் தீர்த்திடும் வான்மீயூர் ஈசன் என்று அப்பர் பெருமானும்  ஒரு பதிகம் பாடியுள்ளார்.  சேக்கிழார் பெருமான் தமது  பெரிய புராணத்தில் திருவான்மியூர் தலப் பெருமை குறித்தும் பாடியுள்ளார். அருணகிரிநாதர் இத்தலத்து முருகன் மேல்   ....  திசைமாமு காழியரி மகவான்மு  னோர்கள்பண சிவநார்  ஆலமயில்               - அமுதேசர                      திகழ்பால  மாகமுற மணிமாளி   மாடமுயர                        திருவான்மி  யூர்மருவு             - பெருமாளே!       என்று  திருப்புகழ் பாடியுள்ளார். அக்காலத்திலேயே மாட மாளிகைகள் திருவான்மீயூரில் நிறைந்திருந்தது என்பதை இப்பாடல் மூலம் அறிந்து கொள்கிறோம். அப்பைய தீக்ஷிதர், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள்  மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமர குருதாச  சுவாமிகளும்  இத்தலத்தைப் பாடியுள்ளனர். ஸ்தல புராணம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் பாடியுள்ளார். கிழக்கில்  ஏழு நிலை மற்றும் ஐந்து நிலை இராஜ கோபுரங்கள்,  மேற்கில் ஐந்து நிலை கோபுரம். கிழக்கு கோபுரம் வழியாக நாம் கோவிலின் உள்ளே நுழைந்தால் நேர் எதிரே   அருணகிரியாரால் பாடல் பெற்ற முருகர் வள்ளி, தேவ சேனா சமேதராக அழகிய தூண்களுடன் கூடிய  தனி  சன்னதியிலே காட்சியளிக்கிறார். வலப்பக்கம்  முழுமுதற் கடவுளான விஜய கணபதியை தனி சன்னதியில்  கண்டு வணங்கலாம். அம்மன் சன்னதி எதிராக நான்கு தூண் ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது. அவருக்கு வலப்பக்கம் அற்புத சிற்பங்கள் நிறைந்த தூண்கள் நிறைந்த தியாகராஜ மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தூண்களில் பல எழிலான சிற்பங்கள்.  ஒரு தூணில் அனுமனும் அவருக்கு எதிரே தண்டபாணியும் எழுந்தருளியுள்ளனர்.  தனி சன்னதியில் கிழக்கு நோக்கி  எம்பெருமான்  மான், மழு ஏந்தி அபய, வரத ஹஸ்ததுடனும், வலக்காலை தொங்கவிட்டு  அமர்ந்த நிலையிலும், நடுவில் ஸ்கந்தன் நின்ற நிலையிலும், இடப்புறம் அம்மை கையில் மலர் ஏந்தி இடது காலை தொங்கவிட்ட நிலையிலும் சோமாஸ்கந்தராக,  இருந்தாடும் அழகராக, தியாகராஜராக அருள் பாலிக்கிறார் அம்மையும் திரிபுர சுந்தரியும்  தனி காட்சி தருகின்றார். பௌர்ணமி மற்றும் சிறப்பு நாட்களில் தியாகராஜரின் திருவீதியுலாவும் மற்றும் 18 திருநடனக் காட்சியும் சிறப்பாக நடைபெறுகின்றது. எம்பெருமானின் நடனத்தை காணப்பெற்றோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை. தியாகராஜர் இத்தலத்தில் ஆடும் நடனம் அஜபா நடனமாகும். அனைத்து தியாகவிடங்க தலங்களிலும் தியாகராஜர் சன்னதி   மூலவரின் வலப்பக்கம், மூலவர் நோக்கும்  திசையை நோக்கியவாறு  அமைந்திருக்கும் ஆனால் இத்தலத்தில் மாறாக, எதிரே மூலவரை பார்த்தவாறு அமைந்துள்ளது. இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் அப்பைய தீக்ஷிதர்.   ஒரு காலத்தில் திருவான்மீயூர் ஆலயம் மங்கள ஏரியின் பெரு வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்தபோது இங்கு வந்த அப்பைய தீக்ஷிதர் இறைவனை தரிசிக்க முடியாமல் போக, அவருக்காக மேற்கே திரும்பினாராம் ஈசன். தியாகராஜர் மண்டபத்திலுள்ள நுழைவாயில் வழியாக  நுழைந்தால்  மருந்தீசர் சன்னதியை அடையலாம்.  சன்னதி கருவறை மற்றும் அர்த்த மண்டபம் என்னும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. மூலஸ்தானத்தில் ஆலமுண்ட நீலகண்டர், சுயம்புவாக, அருவுருவ லிங்க ரூபமாக, மருந்தீசராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இமண்டபத்தின் தெற்குப்பகுதியில் வினாயகருடன் துவங்கி 63நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அடுத்து தாமரை மலரை ஏந்திய கஜலட்சுமி எழுந்தருளியுள்ளார். பின் சைவ சமய குரவர்கள், அதையடுத்து  வீரபாகு, அருணகிரிநாதர் இருபுறமும் கைகூப்பி நிற்க முத்துக் குமார சுவாமி  இரு தேவியருடன் எழிற்காட்சி தருகின்றார். வடக்கில் உற்சவ திருமேனிகள் அனைத்தும் அமைந்துள்ளன. அதையடுத்து  சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சன்னதி உள்ளது. அதையடுத்து 108 சிவலிங்கங்கள் பன்னிரெண்டு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியின் இறுதியில் கால பைரவர் காட்சியளிக்கிறார். இம்மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் பஞ்சலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன, இவற்றுள்  முதலாவதாகப் பெரிய அளவில் உள்ளவர் கேதாரீஸ்வரர். தீபாவளி சமயத்தில்  கேதார கௌரி விரதம் இருப்போர் இவரை பூசிப்பது வழக்கம். தீபாவளியன்று (ஐப்பசி அமாவாசை) கேதாரீஸ்வரரை வழிபட பித்ரு சாபம் தீரும், அன்று பல வட மாநிலத்தவர்களும் வந்து சிறப்பாக வழிபடுகின்றனர். உண்ணாமுலையம்மை சமேத அண்ணாமலையாரும், நின்ற கோலத்தில் சூரியனும் உள்ளனர். ருத்ராக்ஷ மண்டபத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். தெற்கிலே அறுபத்து மூவர் தொடர்கின்றனர். வடக்கு கோஷ்டத்தில் துர்க்கையம்மனும், பிரம்மாவும் அருட்காட்சி தருகின்றனர். கிழக்கு கோஷ்டத்தில் திருமால்  காட்சியளிக்கிறார். தெற்கு கோஷ்டத்தில்  ஆலமர் கடவுளும், நர்த்தன விநாயகரும் அருட்காட்சி தருகின்றனர். சுவாமி சன்னதியை விட்டு வெளியே வந்து தியாகர் மண்டபத்தைக் கடந்து வெளியே வந்து வலம் வந்தால் கொடிமரம், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். மிகவும் பழமையான கோவில் என்பதை உணர்த்தும் வகையில்   நந்தீஸ்வரரின் திரு முகம் நேராக உள்ளது. அவரை  வணங்கி மேற்கு கோபுரத்தையும் வணங்கி   திரும்பினால்  தல விருட்சமான வன்னி மரத்தை காணலாம் அதன் அடியில் நின்றாலே மெய் சிலிர்க்கின்றது எம்பெருமான் சுயும்புவாக இருந்த இடமல்லவா அங்கிருந்தே அனைத்து விமானங்களையும், கோபுரங்களையும் தரிசித்து    பாப விமோசனம் அடையலாம்.  பின் யாக சாலையை கடந்து வலம் வந்தால் அம்மனின் சன்னதியை அடையலாம். அம்பாள் சன்னதி கருவறை, அர்த்த மண்டபம்,  முன் மண்டபம், வெளி மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு  தனி பிரகாரத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் நின்ற கோலத்தில் நம்மை எல்லாம் காக்க அம்மை அஞ்ச வேண்டாம் என்று அபய கரத்துடனும், என்னை சரணடை என்று இடது கரத்தால் தனது திருவடியைக் காட்டும் வரத கரமாகவும், பக்தர்களை காப்பதோடு மட்டுமல்லாமல் துஷ்டர்களை அழிக்கவும் என்பதை உணர்த்தும் விதமாக மேற்கரங்களில் அங்குச பாசமும் ஏந்தி நளினமாக சாய்ந்த நிலையில் எழிற்காட்சி தருகின்றாள். அந்த ஜகத்ஜனனியை கண்டவுடன் நம் கவலைகள் எல்லாம் ஓடுகின்றன. என்னே நம் தாயின் எழில் பிறவி எடுத்ததின் பயனை நாம் அடைந்து விட்டதாக உணரலாம். அம்மையைக்காண பல கோடி தவம் செய்திருக்க  வேண்டும். அம்மையின் சன்னதிக்கு முன் சிம்ம வாகனமுள்ளது, அம்பாள் ஓளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறையும்  ஸ்ரீசக்ரமும் நிறுவப்பட்டுள்ளது. உட்பிரகார சுவர்களிலே அபிராமி அந்தாதி  ஒவ்வொரு பாடலுக்கும் தனித் தலைப்புடன் கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுள்ளன. “சோதி மாதவமே! யோகச் சுடரொளி விளக்கே! ஞான போகமே!  அகங்கனிந்த புனிதமே! நிறைவே! அன்பே! தீதிலாது உயிர்கள் ஓங்கு திருவான்மியூருள் மேவு நாதநாதாந்த சொக்க நாயகி” என்று துவாதாசாந்த முனிவர் இத்தல அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளார். []   திரிபுரசுந்தரி அம்பாள் மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் உற்சவர் அம்பாள், ஒன்பது கோணமும் மேவி உறைகின்ற சுக்கிர வார அம்மனாக கண்ணாடி அறையிலே தினமும் நம் அனைவருக்கும் அருட்காட்சி வழங்குகின்றாள். தலையில் கரண்ட மகுடம், பாசம் அங்குசம் தாங்கி அபய வரத திருக்கரங்களுடன் அருள் பாலிக்கின்றாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் திருவிழாக் கோலமாக  திரிபுர சுந்தரி சுக்கிரவார அம்மனாக உட்புறப்பாடு கண்டருளுகிறாள்.  அம்மனின் சௌந்தர்யத்தைக் காணக் கண் கோடி வேண்டும். அன்னையின் ஆலயத்தின் மஹாமண்டபத்தில் உள்ள  தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர்.  நரம்பு சம்பந்தமான நோய்கள், வறுமை, கடன் முதலியவற்றை நீக்கும் வல்லமை கொண்டவர். சரபேஸ்வரரின் தூணின் பின்புறம் உக்கிர நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.  வெளிப் பிரகாரத்தில் மும்முடி விநாயகர், விஜய விநாயகர், நிறைய பசுக்களை கொண்ட ஒரு பசுமடமும், நாகர் சன்னதியும் அமைந்துள்ளன. ஆலயத்தின் தெற்கு மூலையில் மடப்பள்ளியை அடுத்துக் காணப்படும் ஸ்ரீவிநாயகர் சன்னதியில் உருவத்தால் மாறுபட்ட மூன்று விநாயகர்கள் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமியன்று தியாகராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. மற்றும் பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. வைகாசியில் தியாகேசர் வசந்தோற்சவமும், பௌர்ணமியன்று 18 நடன காட்சியும், வைகாசி  விசாகமும், ஆனியில் ஆனி உத்திரமும், ஆடிப் பூரம் அம்மனுக்கும், ஆவணியில் வினாயகர் சதுர்த்தியும், புரட்டாசியில் நவராத்திரி சமயத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள்  செய்யப்படுகின்றன. ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகமும், கார்த்திகை சோமவாரங்களில் 108 சங்காபிஷேகமும், கார்த்திகை தீபத்தன்று 18 வகை நடன காட்சியும்,  மார்கழி திருவாதிரையும், திருப்பள்ளியெழுச்சியும், தைப்பூசம், மகா சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனி பௌர்ணமியை இறுதி நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.  தியாகராஜ தலம் என்பதால், சோமாஸ்கந்தர் பஞ்சமூர்த்தியாக வலம் வருவதில்லை, சந்திரசேகரரே  பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் திருஉலா வருகின்றார். பஞ்ச மூர்த்திகளில் அம்மையும் தனியாக வலம் வருவதில்லை. தியாகராஜர் இரவு பஞ்சமூர்த்திகள் திருஉலா முடிந்தபின் அம்மையுடன் உலா வருகின்றார். முதல் நாள் கொடியேற்றம் இரவில் நடைபெறுவது ஒரு சிறப்பு. கொடியேற்றத்திற்கு தியாகராஜப்பெருமானும், திரிபுரசுந்தரி அம்பாளும் எழுந்தருளுகின்றனர்.  ஒவ்வொரு நாள் வாகனமும் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றோர்களும் உடன் வலம் வருகின்றனர். இரண்டாம் நாள் காலை  சூரிய பிரபையில் காமதேனுக்கு காட்சியளிக்கிறார் எம்பெருமான். மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு அருள் பாலிக்கின்றார். மாலை சந்திரனுக்கு அருள் பாலிக்கின்றார். இரவில் தியாகேசர் பார்த்த சாரதிக்கு அருளுகின்றார். நான்காம் நாள் காலை பிருங்கி முனிவருக்கு அருள் பாலிக்கின்றார். ஐந்தாம் காலை எமனுக்கு அருள் பாலிக்கின்றார். மாலை ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் பவனி. தியாகேசர் இராமருக்கு அருளுகின்றார். ஆறாம் நாள் காலை இரட்சசுவிற்கு அருளல், இரவு தியாகேசர் இந்திரனுக்கு அருளல், ஏழாம் நாள் காலை திருத்தேரோட்டம் பிரமனுக்கு அருளல், எட்டாம் நாள்  காலை நான்கு மறைகளுக்கு அருளல் மற்றும் பரிவேட்டை விழா நடைபெறுகின்றது. ஒன்பதாம் நாள் மாலை கல்யாண சுந்தரர் திருக்கல்யாணமும், விமானக் காட்சியும், அகத்தியருக்கு கல்யாண கோலம் காட்டிய நிகழ்ச்சியும், வன்னி மர காட்சியும் நடைபெறுகின்றது, பத்தாம் நாள் காலை சந்திரசேகரர் கடலில் தீர்த்தவாரி  கண்டருளுகிறார். இரவு தியாகர் திருக்கல்யாணமும், கொடி இறக்கமும் வான்மீகி முனிவருக்கு 18 வகை நடனக் காட்சி பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. எம்பெருமானின் நடனத்தை காணும் கண்கள் பேறு பெற்றவை என்பதில் ஐயம் இல்லை ஐயன் மட்டுமல்ல அம்மையும், காவடி சிந்து,  பாம்பு நடனக் காட்சி தருகின்றாள். பதினோராம் நாள் காலை 4 மணி அளவில் பிரம்மோற்சவத்தின் சிகரமாக தியாகேசர் திரிபுர சுந்தரி அம்மனுக்கு அருள பந்தம்பரி 18 திருநடனக் காட்சி தந்தருளுகின்றார். தான் இருக்கும் போது கங்கையை இறைவன் தலையில் ஏற்றுக்கொண்டதால் அம்மை ஊடல் கொள்ள அம்மையை சமாதானப்படுத்த ஐயன் 18 நடனகாட்சி தந்து அருளுவதாக ஐதீகம். கல்லிலே கலை வண்ணம் கண்டார்கள் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது இத்திருக்கோவில், தியாகராஜ மண்டபத்தில் உள்ள  தூண்களில் செதுக்கப்பட்டுள்ள கணபதி, முருகன், தண்டபாணி, ஹனுமன், மற்றும் தூண்களின் மேல் உள்ள பூ வேலைப்பாடுகள் நமது சிந்தையை கவர்கின்றன. தூண்களின் மேல் உள்ள சிங்கங்கள் எழில் பெற செதுக்கப்பட்டுள்ளன, தியாகேசரின் சன்னதியிலும் மூன்று கால்   தூண்களூம் அவற்றில் உள்ள சிங்கங்களில் யானையும் சேர்த்து செதுக்கியிருப்பதும், மேலும் சன்னதியின் முன் சுவற்றில் உள்ள மயில் முருகர் வித்தியாமாக இடக்கரத்தில் வில் ஏந்தி காட்சியளிக்கிறார். மருந்தீசர் சன்னதி முழுவதும் தூண்கள் நிறைந்துள்ளது.  அம்மனின் வெளி மண்டபத்தில் கவின் மிகு சிற்பங்கள் நம்மை உவகை கொள்ள வைக்கின்றன.அவற்றுள் சில தபசு காமாட்சி, சரபேஸ்வரர், நரசிம்மர், குபேரர் மற்றும் சடநட சித்தர் நம் சிந்தையை கவர்கின்றன. குதிரை வீரன் சிலையில் ஐந்து மனிதர்கள் மற்றும் இரண்டு புலிகளுடன் மிக சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது , மேலும் யாழி சிற்பங்கங்களையும் கண்டு களிக்கலாம். கிழக்கு இராஜ கோபுரத்தில் மயில் மேல் முருகன் சிற்பத்தில் மயில் வாயில் ஒரு பாம்பை ஏந்தியிருப்பது ஒரு தத்ரூபம். இவ்வாலயத்தின் அருகில் சற்று தொலைவில், மகான் பாம்பன் சுவாமிகள் அதிஷ்டானம் உள்ளது. மேலும் அம்மா சக்கரை பெண் சித்தர் அதிஷ்டானமும் அருகிலேயே உள்ளது. வெளிப்பிரகாரத்தில் தேவாசரிய மண்டபத்தில் வருடத்தின் அனைத்து நாட்களும் சமயச்சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.  ஒரு ஆன்மீக நூலகமும் உள்ளது.            ஓட்டை மாடத்தி லொன்பது வாசலும்         காட்டில் வேவதன் முன்னங் கழலடி         நாட்டி  நாண்மலர்   தூவி வலஞ்செயில்              வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே   என்று திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற நோய்களையெல்லாம் தீர்த்தருளும் மருந்தீசரையும், ஆடும் அழகர் தியாகேசரையும் அவரது 18 வகை நடனத்தையும், திரிபுரசுந்தரி அம்பாளையும் தரிசிக்க திருவான்மீயூர் வாருங்கள். அடுத்து திருக்கச்சூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக பிச்சையெடுத்து உணவிட்ட அமிர்த தியாகேசரை தரிசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.                                           41. திருக்கச்சூர் அமிர்த தியாகர் []   தொண்டை நாட்டு உபவிடங்கத்திருத்தலங்களில் அடுத்து நாம் தரிசிக்கும் தியாகேசர் திருக்கச்சூர் அமிர்த தியாகேசர் ஆவார்.  எம்பெருமானது திருப்பெயரான தியாகராஜர் என்னும் பெயர் வருவதற்கான தலம் இது எனலாம். தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்த போது மலை நிற்காமல் சாய்ந்தது. அப்போது திருமால்  கூர்ம அவதாரம் எடுத்து அம்மலையை தம் முதுகில் தாங்கச்சென்றார். அதற்கு முன்னர் மலையைத் தாங்கும் வலிமை பெற  இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டார். கச்சபம் என்றால் ஆமை, எனவே இத்தல இறைவன் கச்சபேஸ்வரர் ஆனார் இத்தலமும் திருக்கச்சூர் ஆனது. ஆதி கச்சேபம் என்றும் அழைக்கப்படுகின்றது. பாற்கடலைக் கடையும் போது முதலில் விடம் வெளியே வந்தது. வலி தாங்க முடியாமல் வாசுகியும் நஞ்சைக் கக்கியது. ஆலமும் ஆலமும் இணைந்து ஆலாலமாகி சகல ஜீவராசிகளையும் மிரட்டியது. சகல தேவர்களும் திருக்கயிலை நாதரை சரணடைய அவரும் அனைவரையும் காக்க திருவுள்ளம் கொண்டு தனது அணுக்கத் தொண்டரான சுந்தரரை அவ்விடத்தை எடுத்து வர அனுப்பினார். சுந்தரரரும் விடத்தை ஒரு நாவல் போல் ஆக்கி கொண்டு வந்து இறைவனிடம் அளித்தார். எனவே இவர் ஆலால சுந்தரர் என்று அழைக்கப்பட்டார். பின் ஒரு சமயம் மலர் பறிக்கும் போது அங்கு மலர் பறித்துக்கொண்டிருந்த அம்பிகையின் சேடிகளைப் பார்த்து மயங்க இறைவன் அவரை பூலோகத்தில் பிறக்கப் பணித்தார்.  அவரும் பூவுலகில் நம்பி ஆருரராக அவதரித்து எம்பெருமான் தோழர் என்று சிறப்புப் பெற்றார். பரம கருணாமூர்த்தியான சிவபெருமானும் அவ்விடத்தை அப்படியே விழுங்கினார், அப்போது ஐயனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் உமையம்மை தனது தளிரன்ன கரத்தினால் ஐயனின் கண்டத்தை பிடிக்க அவ்விடம் அங்கேயே தங்கியது. விடத்தின் வீரியத்தினால் ஐயனின் கழுத்தும் நீல நிறமானது, அவரும் நீலகண்டர் என்று அழைக்கப்பட்டார். யாவரும் விரும்பாத விடத்தையும் விரும்பி உண்டதால் ஐயனுன் தியாகராஜர் எனப்போற்றப்பட்டார். பின்னர் தேவர்களும் அசுர்ர்களும் பாற்கடலைத் தொடர்ந்து கடைய ஐராவதம், உச்ச்சைரவசு, காமதேனு, கற்பக மரம், சிந்தாமணி, திருமகள் தோன்றினர் பின்னர் நிறைவாக அமிர்தத்துடன் தன்வந்திரி பகவான் தோன்றினார். திருமாலின் தந்திரத்தினால் தேவர்கள் மட்டும் அமிர்தத்தை பருகி  சாக வரம் பெற்றனர். இவ்வாறு அமிர்தம் பெற  திருமால் இத்தலத்தில் வழிபட்டதால் அவருக்கு நடனக் காட்சி  நல்கிய தியாகருக்கு அமிர்த தியாகர் என்று திருநாமம். சனகாதி முனிவர்கள் வழிபட்ட தலம். சனகாதி முனிவர்களுக்கு நடராசப்பெருமான் உபதேசம் செய்யும் ஐதீகம் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் திருநாள் கொண்டாடப்படுகின்றது. இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு வட்டத்தில் சிங்கபெருமாள் கோவில் எனும் ஊரில் அருகில்  அமைந்துள்ளது. திருவாரூர் போல இறைவன் கால் பதித்து நடந்த தலம்.  சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டித்தலங்களுள் 25 வது தலம் ஆகும்.  பசி என்பது ஒரு வகை பிணி(நோய்) என்பது பெரியோர் வாக்கு. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழியும் பசிப்பிணியை கருத்தில் கொண்டே வழக்கில் உள்ளது. நம் வாழ்வில் என்றும் நமக்கு உணவு கிடைத்து பசியில்லாமல் இருக்க வழிபடவேண்டிய தலம் ஆகும் இத்தலம். எனவே முதலில் பசிப்பிணியை நீக்கும் அன்னதானத்தின் சிறப்பைப் பற்றி  சிறிது காணலாமா அன்பர்களே. பண்டைய காலத்தில் திருக்கோவிலுக்கு தலயாத்திரையாக செல்பவர்களுக்கு ஆலயங்களில் உணவளிக்கப்பட்டது. இதனை சட்டிசோறு என கல்வெட்டுகள் குறிப்படுகின்றன. திருமங்கைமன்னன், இளையான்குடி நாயனார், அமர்நீதி நாயனார், அப்பூதியடிகள், மூர்க்க நாயனார், கலிகம்ப நாயனார், இடங்கழி நாயனார் ஆகியோர் அடியவர்களுக்கு அன்னம் படைத்து இறைவனருள் பெற்றவர்கள். திருவீழிமிழலையில் ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்டபோது இறை அருளால் பலி பீடத்தில் வைக்கப்பட்ட பொற்காசினை எடுத்து அப்பர் பெருமானும், திருஞானசம்பந்தரும் அடியவர்களுக்கு அமுது படைத்தனர்.  அனைத்து உயிர்களுக்கும் அமுதளிக்கும் இறைவனுக்கே அமுது படைத்து மங்காப்புகழ் பெற்றவர்கள் காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார், சிறுத்தொண்டர் மற்றும் அரிவாட்ட நாயனார் ஆவர். தனது அடியவர்கள் பசியில் துன்பப்பட்ட போது இறைவன் தானே உணவு வழங்கிய வரலாறும் உண்டு. திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலியில் நாவுக்கரசப்பெருமானுக்கு சிவபெருமான் உணவு பெற்று அளித்தார். சீர்காழிக்கு அருகில் உள்ள திருக்குருகாவூரில் சுந்தரருக்கு இறைவன் அமுதும் நீரும் அளித்ததால் அவரைப் “பாடுவார் பசி தீர்ப்பாய்   பரவுவார் பிணி களைவாய்” என்று திருப்பதிகத்தில் போற்றியுள்ளார். இறைவன் இனி இத்தலத்தில் சுந்தரருக்கு இரந்து  விருந்திட்ட வரலாற்றைக் காணலாம். திருக்கழுகுன்றத்திலிருந்து இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். அவருடன் வந்த பரிசனங்கள் இன்னும் வந்து சேரவில்லை என்பதால் அப்படியே பசியுடன் மண்டபத்தில் படுத்துக்கொண்டிருந்தார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கண்ட சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை பெற்று வந்து உணவு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர். அவரது கருணையை வியந்து ஒரு பதிகம் பாடி  ஈசனை போற்றுகின்றார், அதில் ஒரு பாடல் முதுவாய் ஓரி கதற முதுகாட்  டெரிகொண் டாடல் முயல்வானே மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே அதுவே யாமா றிதுவோ கச்சூர்ஆலக் கோயில் அம்மானே. பொருள் : பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே,  தேன்     சொரிகின்ற  கொன்றை மலரைச்    சூடுகின்ற, மலையான் மகள் மணவாளனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீர்  சென்று, முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலைகொள்ளாரோ ? என்று அகச்சான்றாக பாடியுள்ளார்.  ஸ்ரீதியாகராஜர் கோயில் என்றும் கச்சபேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இவ்வாலயம் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆலக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.  மற்றொரு கோயில், ஊருக்கு ஒதுக்குப் புறமாக, ஊரையொட்டி உள்ள மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கே சுவாமியின் திருநாமம் மருந்தீஸ்வரர். சுந்தரர் தமது பதிகத்தில் இம்மலைக்கோவிலையும் சேர்த்துப்பாடியுள்ளார்.  . இங்கே சிவபெருமான் ஊருக்கு நடுவிலும் மருந்தீஸ்வரர் மலை அடி வாரத்திலும் கோயில் கொண்டிருப்பதே சிறப்பானது என்றும் தெய்வாம்சம் நிறைந்த பூமி என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்!   ஊர்க்கோவிலின்  மூலவர்: கச்சபேஸ்வரர், விருந்திட்ட ஈஸ்வரர் அம்பாள்: அஞ்சனாட்சியம்மை, மை விழி அம்மன், கன்னி உமையாள். தல விருட்சம் : ஆல் தீர்த்தம்: கூர்ம தீர்த்தம். பாடியவர்: சுந்தரர் விழுதுகள் இல்லாத கல்லால மரம் தலவிருட்சமாக இருப்பதாலும், நீர் நிலைகள் சூழ்ந்த இடத்தில் இருப்பதாலும் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படும் இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வரர். இருந்தாலும் இவ்வாலயம் தியாகராஜசுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு இராஜ கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்த போது இக்குளத்தை உருவாக்கியதாகக்  கருதப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில்  ஆலயத்திற்கு வெளியே சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் மூஞ்சூறு மேல் விநாயகர், மயில் மேல் முருகர், துவார பாலகர்கள், பிச்சைத்தேவர்,  ரிஷபாரூட மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவர், வீர பத்திரர், கருடன், அனுமன், அனுமன் சேவை, காளிங்க நர்த்தனர், கல்கி அவதாரம், ஆமை வடிவில் மகா விஷ்ணு பூசை செய்யும் சிற்பம்  முதலான  அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  நெடிதுயர்ந்த வெளி மதிற்சுவர் அவற்றின் மூலைகளில் நந்தியெம்பெருமான்.  கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் எதிரே உள் சுற்றின் மதிலின்  மேலே ஆமை வடிவில் மகாவிஷ்ணு சிவனை வழிபடும் சுதை சிற்பம் நம்மை வரவேற்கிறது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், விஸ்வரூப  நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. நந்தியெம்பெருமான் ஒரு தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். நட்சத்திர சாளரம் வழியாக இறைவனைப் நோக்குகின்றார். சாளரத்தின்  இரு புறமும் விநாயகரும், வள்ளி தேவசேனை சமேத முருகரும் அருள் பாலிக்கின்றனர்.  பிரதோஷ தினத்தன்று இப்பெரிய நந்தி தேவருக்கு  சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. இவருக்கு நந்தியெம்பெருமானின் மண்டபத்தின் மேலே மதில் சுவற்றில் ஆடல் வல்லானின் அழகிய சுதை சிற்பத்தைத் தரிசிக்கின்றோம். பிரதோஷ தினத்தன்று கூர்ம தீர்த்தத்தில் நீராடி கச்சபேஸ்வரரை  தரிசனம் செய்ய எல்லா தோஷங்களும் விலகும், செல்வம், கல்வி, இன்பம் கிட்டும் என்று தல புராணம் கூறுகின்றது.    தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது.  நட்சத்திர மண்டபத்தில் அமிர்த தியாகராஜர் சபை உள்ளது. இவர் அமிர்தவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவிறகு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார். நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை உருவில் மகாவிஷ்ணு சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம், அனுமன்  மற்றும் முனிவர்  வழிபடும் சிற்பங்கள் உள்ளன. தூண்களின் பீடத்தில் யானை சிற்பங்கள் அருமையாக அமைந்துள்ளன. மேலும் இரு திருநீற்றுத்தூண்களும் அமைத்துள்ளனர். இம்மண்டபத்தின் முகப்பில்  பஞ்ச மூர்த்திகளின் சுதை சிற்பத்தை தரிசிக்கலாம். மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின்  சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில்  கருணையே வடிவாக அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக் கோவிலாகவே உள்ளது. அஞ்சனம் என்றால் மை எனவே மை விழி அம்மன் என்று தமிழில் அழக்கின்றனர். அம்பாளுக்கு கண் மலர் சார்த்தி வழி பட கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். அம்பாள் சன்னதிக்கு செல்வதற்கு முன் வலப்பக்கம் ஸ்ரீசக்கரம் வரைந்துள்ளனர். அமாவாசை அன்று ஸ்ரீசக்கரத்திற்கு தேன் அபிஷேகமும் சிறப்பு பூசைகளும் நடைபெறுகின்றன. அம்பாள் மஹா மண்டபக்கூரையை மீன், விருச்சிகம், கச்சபம், கௌலி, நாகம், சுறா மீன் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. ஐயனின் மஹா மண்டபக்கூரையில் சக்கரம், தாமரை மற்றும் அஷ்டதிக் பாலகர்கள் தங்கள் வாகனங்களில் அருள் பாலிக்கும் சிற்பம் அருமையாக அலங்கரிக்கின்றது. அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்திலிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். வாயில்கள் எல்லாம் தெற்குப்புறமாக அமைந்துள்ளன. ஐயனுக்கு எதிரே நட்சத்திர சாளரம், சாளரத்திற்கு அப்புறம் கயிலாய நந்தியெம்பெருமானை தரிசிக்கின்றோம்.  திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்பு லிங்கமாவார். ஐயனை தரிசிக்கும் போது மனதில் ஒரு அமைதி.  கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை சுற்றில் பின்புறம் ஞானகணபதி, சோலீஸ்வரர், களத்தீஸ்வரர், மகேஸ்வரி, மார்கசகா ஈஸ்வரர், நாகலிங்கம், நாகராஜர், இராமநாதர், காசி விஸ்வநாதர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் ஆகியோரை தரிசிக்கின்றோம்.  வடக்குச் சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதியும் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். அம்மையப்பரை வணங்கிய பின் அமிர்த தியாகராஜரை வணங்கி வெளிப்பிரகாரத்தை வலம் வரலாம். தெற்கு நோக்கி அம்மன் சன்னதிக்கு முன்னர் நட்சத்திர மண்டபத்தில் மேலே  அம்மன் சுதை உருவம் தரிசிக்கலாம். அம்மன் சன்னதிக்கு எதிரே நான்கு கால் மண்டபம்.  இப்பிரகாரம் மிகவும் விலாசமாக உள்ளது.  பச்சைப் பசேலென புல்வெளி அருமையாக உள்ளது. பல மாடுகள் கோவிலின் உள்ளே புல் மேய்ந்து  கொண்டிருப்பதைக் காண்கிறோம். மரங்களில் குரங்குகள் தாவுவதைக்  கண்ணுறலாம். கன்னி மூலையில் வேதவிநாயகர் சன்னதி அமைந்துள்ளது. கற்றளியாக கட்டப்பட்டுள்ள இச்சன்னதியின் முன் மண்டபத்தின் தூண்களிலும், கூரையிலும் அற்புதமான கற்சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. குறிப்பாக கூரையில் அமைந்துள்ள சிறிய சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக அமைந்துள்ளன. ஆமையாக திருமால்  இத்தல இறைவனை வழிபட்ட வரலாற்றையும் மற்றும் பல அற்புத நடனக்கலைஞர்கள் சிற்பத்தையும்,  புக்கொளியூர் அவிநாசியில் முதலை உண்ட பாலனை இறையருளால் வரச்செய்தது முதலான  சுந்தரர் வரலாறு ஒரு சிற்பத்தொடராக வடிக்கப்பட்டுள்ளதையும்   கண்டு களிக்கலாம்.   மூலவர் கச்சபேஸ்வரரின் விமானம் தொண்டை நாட்டுக்குரிய கஜ பிருஷ்ட அமைப்பிலும், தியாகேசர் விமானம் பிரமிட் அமைப்பிலும் உள்ளது. வடக்கில் கிழக்கு நோக்கிய சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் திருப்புகழ் வைப்புத்தலம்.  இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். அடுத்து விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும் அமைந்துள்ளது. இச்சன்னதிகள் 2009ம் ஆண்டு குடமுழுக்கின் போது  புதிதாகக் கட்டப்பட்டதாம்.  வடக்கு வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய காலபைரவர் சந்நிதியும் இருக்கிறது. இத்தலத்திலுள்ள இப்பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இச்சுற்றில் நடராஜர் சபை விமானம் மற்றும் அம்பாள் விமானத்தையும் தரிசிக்கலாம். வடகிழக்கு மூலையில் யாகசாலை அமைந்துள்ளது. கிழக்கு பக்கம் திரும்பினால் நால்வர் சுதை சிற்பத்தை தரிசிக்கலாம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்திற்குரிய மரமாகும், ஆகவே மக நட்சத்திரம் மற்றும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்தந்த   நட்சத்திர நாளன்று இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். கடக இராசியில் பிறந்தவர்கள் வியாழன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று. ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் ஆலக்கோயிலை தரிசித்து  இறைவனின் கருணையை இரந்துதாங் கொண்டு வந்து  இன்னடிசிலுங் கறியும் அரந்தை பசி தீர அருந்துவீர்  என அளிப்பப் பெருந் தகையார் மறையவர் தம் பேர்ருளின் திறம் பேணி நிரந்த பெரும் காதலினால் நேர்  தொழுது வணங்கினார்   என்று பாடியுள்ளார்.  அது போலவே தனது அன்பனுக்கு பிச்சையெடுத்து விருந்தளித்த சிவபெருமானின்  அளப்பரும் கருணையை அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள்  பசியென்னும் நெருப்பை அணைப்பதே மோட்சத்தின் திறவுகோல் இன்றொண்டர் பசியற திருக்கச்சூரின் மனைதொறும் இரக்க நடை கொள்ளும் பதம்   என்று  வியந்து பாடியுள்ளார்.    இத்தலத்தில் தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றது.  மாசி மாதத்தில் சுந்தரருக்கு விருந்திட்ட விழா சிறப்பாக நடைபெறுகின்றது. பக்தர்கள் பங்கேற்றுக்கொள்ள வசதியாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் வெள்ளை யானையில் சுந்தரர் ஆலக்கோவிலில் இருந்து மலைக்கோவிலுக்கு எழுந்தருகின்றார். சமய சொற்பொழிவுகள், திருமுறை பாராயணம் நிகழ்கின்றன. பின்னர் பல்லக்கில் சுந்தரர் ஆலக்கோவிலுக்கு திரும்பி வருகின்றார்.  ஆடி சுவாதியன்று சுந்தரர் குரு பூசை விழா சிறப்பாக நடைபெறுகின்றது. காலையில் விருந்திட்ட ஈஸ்வரருக்கும், எம்பெருமான் தோழருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பின்னர் வெள்ளை யானையில் சுந்தரர் எழுந்தருளி திருக்கயிலாயக் காட்சி கண்டருளுகின்றார். இறைவன் சுந்தரருக்கு அன்னமிட்டதால் அன்று அன்பர்களுக்கு அன்னம் பாலிப்பு சிறப்பாக நடைபெறுகின்றது.    []   ஒரு பிரதோஷத்தன்று இத்தலத்தில் வழிபடும் பாக்கியம் கிட்டியது. முதலில் சன்னதி  சுவருக்கு அப்பால் அமைந்துள்ள  மஹாநந்திக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. அடுத்து மூலவர் கச்சபேஸ்வரருக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் பூசை. பின்னர் பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில்  திருக்கோவிலை வலம் வந்தருளுகிறார். அன்பர்கள் தேவார திருவாசகங்கள் பாராயணம் செய்து உடன் வருகின்றனர், நாதஸ்வரம், தவிலின் இன்னிசையுடன் மூன்று முறை வலம் வருகின்றார் எம்பெருமான், நிறைவாக அலங்கார தீபாராதனை.   பெருவிழா சித்திரை மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி நடைபெறுகின்றது. காலை, மாலை சந்திரசேகரர் புறப்பாடு, இரவில் தியாசேசர் புறப்பாடு சிறப்பாக நடைபெறுகின்றது. தியாகேசர் பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன், பாரதி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோருக்கு தினமும் நடனக் காட்சி தந்தருளுவதாக ஐதீகம். எனவே இதை நடன வினோத பவனி என்றழைக்கின்றனர். தியாகரும் ஆடும் தியாகேசர் என்று போற்றப்படுகின்றார்.  முதல் நாள் கொடியேற்றம், மூன்றாம் நாள் காலை அதிகாரநந்தி சேவை மற்றும் ஐந்தாம் நாள் இரவு ரிஷப வாகன சேவை நடைபெறுகின்றது. ஏழாம் திருநாள் தேரோட்டம். சித்ரா பௌர்ணமியன்று காலை நடராஜர் உற்சவமும், பகலில் தீர்த்தவாரியும், இரவு தியாகேசர் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகின்றது. பதினொன்றாம் திருநாள் இரவு திருவீதி உலா கண்டருளி அதிகாலை நான்கு மணியளவில் அஞ்சனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி தியாகேசப்பெருமான் அம்மன் ஊடலைத் தவிர்க்க, பந்தம் பறி உற்சவமாக பதினெட்டு திருநடனக் காட்சி தந்தருளுகின்றார். இவ்வாலயத்தில். முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தர பாண்டியன், வீர பாண்டியன், சம்புவரையர்கள், விருப்பண்ண உடையார், நரசிங்கராயர் ஆகிய மன்னர்களின் 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் இக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகள், அமைக்கப்பட்ட நந்தவனங்கள், திருமேனிகள் ஆகியவற்றை வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் இவ்வூர் சோழ மண்டலத்து களத்தூர் கோட்டத்து செங்குன்ற நாட்டு நித்த வினோத நல்லூர் எனும் திருக்கச்சூர் என்றும் இறைவன் திருஆலக்கோயில் உடைய நாயனார் என்றும் குறிப்படப்படுகிறார்.  அடுத்து மலைக்கோவிலின் சிறப்பைப் பற்றியும் காணலாம் அன்பர்களே. மலைக்கோவில் ஊர்க்கோவிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆலக்கோவிலைப் பாடும் போது சுந்தரர் மற்றும் ஏயர்க்கோன் கலிக்காம நாயனார் இருவரும் மலைக்கோவிலையும் சேர்த்தே பாடியுள்ளனர். மேலை விதியே விதியின் பயனே விரவார் புரமூன் றெரிசெய்தாய் காலை யெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா மாலை மதியே மலைமேல் மருந்தே  மறவே னடியேன் வயல்சூழ்ந்த ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. பொருள் : மேம்பட்டதாகிய அறநெறியாயும், அதன் பயனாயும் உள்ளவனே, பகைவரது திரிபுரங்களை எரித்தவனே, காலையில் எழுந்து உன்னை வணங்குபவர் மனக்கவலையை அடியோடு நீக்குபவனே, நீலகண்டத்தை யுடையவனே, மாலைக் காலத்தில் தோன்றும் சந்திரன் போன்றவனே , மலைமேல் இருக்கின்ற மருந்து போல்பவனே, வயல்கள் நிறைந்த கரும்பாலையை உடைய இடங்களைக் கொண்ட பண்ணையை உடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, அடியேன் உன்னை மறவேன் என்று மலைக்கோவிலையும் பாடியுள்ளார். ஏயர்கோன் கலிக்காம நாயனார் “வன்றொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்தானார்” என்றும் போற்றுகின்றார்.  இவ்வூரில் அமைந்துள்ள மலைக்கு “ஔஷத கிரி“ எனும் பெயருண்டு. அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து சென்ற போது அதன் ஒரு துண்டு கீழே விழுந்து ஔஷத மலையானது. சுந்தர மூர்த்தி நாயனார் பசித்திருந்த சமயம் இம்மலையில் இறங்கி இறைவனார் பிச்சையேற்று உணவு கொணர்ந்து தமது அடியாரின் பசியாற்றிய தலம். இத்தலத்தில் கொடி மரத்தின் கீழுள்ள திருமண் திருநீற்றுத் தன்மையுடன் உள்ளது. இந்திரன் தன்னுடைய தீராத நோய்  தீர  நாரதரின் அறிவுரைப்படி மருந்தீஸ்வரர் மலையில் இருக்கும்  பலை, அதிபலை என்ற மூலிகை  வேண்டி  சிவனை நோக்கி கடும் தவம் இருந்தானாம். பலன் இல்லையாம். அதனால்,  நாரதரிடம் உபாயம் கேட்க,  அன்னையை மறந்து தவம் இயற்றியதால்,  அன்னை இந்திரனுக்கு தெரியாமல் மூலிகையை மறைத்து திருவிளையாடல் புரிகிறார் என்றாராம், தன் தவறை உணர்ந்த இந்திரன்,  அஸ்வினி, தேவர்கள் ஆகியோர் சிவ சக்தியை தியானித்தார்களாம்.  பிறகு அன்னை மனம் குளிர்ந்து மூலிகையை அருளினாராம்.  இந்திரனுக்கு மருந்து கொடுத்ததால் சிவன் இங்கே ”மருந்தீஸ்வரர்” என்றும்,  மறைத்து வைத்த மூலிகைகளின் மீது ஒளி பரப்பி இருள் நீக்க செய்து அவற்றை வழங்கியதால் அம்பாள் “அந்தக நிவாரணி“,  ”இருள் நீக்கி அம்மையார்” என்றும் அழைக்கபடுகிறார். அகத்தியரும், அழுகண்ணி சித்தரும் தவம் செய்த மரத்தடிகள் இம்மலையில் காணப்படுகிறது. அதன் அடியில் பௌர்ணமி நாளில் உட்கார்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்தால் நமது பிரார்த்தனைகள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறுமாம்.  மலைக்கோவிலின்   மூலவர்: மருந்தீசர் அம்பாள்: அந்தக நிவாரணி, இருள் நீக்கி அம்மை தலவிருட்சம் : வேர்ப்பலா. தீர்த்தம்: ஔஷதி தீர்த்தம். கோவிலின் முன்பு நான்கு கால் மண்டபம்  அழகாக காட்சி தருகின்றது இராஜகோபுரம் இல்லை நுழைவாயில் மட்டுமே கற்றளியாக உள்ளது. அதை தாண்டி ”மண்ணே மருந்தான” மருந்தீசரை தரிசிக்க நுழைவாயிலை கடந்து கோவிலின் உள்புறம் நுழையும்போதே,  நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய அழகான ஒரு கோவிலுக்குள் நாமிருப்பதை உணரலாம். இத்தலம் 108 சக்தி பீடங்களில் ஒன்றான  ”ஔஷதை” என்கிற சக்தி பீடமாகும். தெற்கு நோக்கிய வாயிலை கடந்து உள்ளே சென்றால் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபம். மண்டபத்தின் தூண்களில் துவார பாலகர்கள், இலிங்கோத்பவர்,  மாவடி சேவை  பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின்  சிற்பங்கள் கண்ணுக்கு விருந்து. சுந்தரரை நோக்கியவாறு கையில் அமுதுடன் இறைவனின் சிற்பமும் உள்ளது.  மண்டபத்தின் நடுவில் அழகாக செதுக்கப்பட்ட தாமரை போன்ற அமைப்பில் வட்டவடிவில் சிறிய சக்கரம் காணப்படுகிறது.  சுற்றிலும் இயற்கை சூழல். மிகவும் இரம்மியான அமைதியான இடம். பச்சைப் பசேலென்று அமைதியாக உள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது ஆலயம். உள்பிரகாரத்தில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி,   மேற்கு நோக்கி திருவண்ணாமலையாரை சேவித்தபடியான  அமைப்பில் வீற்றிருக்கிறார் பிள்ளையார். இங்கே வழிபட்டால் திருவண்ணாமலையில் வழிபட்ட புண்ணியம் கிடைக்குமாம். கணபதியை வணங்கிய பின் வலம் வரும்போது ஐயன் சன்னதிக்கு எதிரே ஒரு சாளரம் அதன் வழியே கொடிமரம், நந்தி, பலி பீடத்தை தரிசிக்கலாம். எம்பெருமான் மருந்தீஸ்வரராக சிவலிங்க ரூபத்தில் எழுந்தருளி மேற்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். சனகாதி முனிவர்கள் வழிபட்ட பெருமான். அஸ்வினி தேவர்கள் வழிபட்ட இறைவர். மருந்தீஸ்வரரை  வேண்டிக் கொண்டால் தீராத நோய்கள், துன்பங்கள் நீங்கும். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன.   உள்சுற்றில்  சுப்பிரமணியர் சன்னதி.  இச்சன்னதி  அருகில் நின்று  பார்க்கும் போது கோவிலின் அழகு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அருகில்  ஒரு மண்டபத்தில் நவகிரக சன்னதியும் அமைந்துள்ளது.   பிரம்ம தேவன் இங்கு தவம் செய்த இடம் என்பதால் இங்கு பிரம்ம தேவனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் உண்டு. சண்டிகேஸ்வரர் இங்கே பிரம்ம முக சண்டிகேஸ்வரராக தரிசனம் தருகின்றார். இவருக்கு ஒன்பது வாரம் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறுமாம். சகலவித இடையூறுகளும் இன்னல்களும் அகலும் என்பதும் ஐதீகம்.  பைரவர் சன்னதியும். மேலும்,  விநாயகரின் நேர் பார்வையில் நவகிரகங்கள் அமைந்து இருப்பது இக்கோவிலின் சிறப்பு.  அம்பாள் சன்னதி வெளிப்பிரகாரத்தில் தனிக்கோவிலாக  முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. மருந்தீஸ்வரர் மற்றும் இருள் நீக்கி அம்பாள் இருவரும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு சிறப்பு.  அம்பாளிடம் வேண்டிக் கொண்டால் ஆணவம், கிரக தோஷம், கண் நோய்கள் தீரும், பிரம்மஹத்தி, பித்ரு தோஷங்கள் நீங்கும்,  குறைவில்லாத வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்பாள் சன்னதி மேற்கு நோக்கி நின்ற நிலையில்  அபய வரத்துடன் நான்கு திருகரங்களுடன் காட்சி தருகிறார். அம்பாள் சன்னதிக்கு எதிரே நாக லிங்க மரம் மரத்தடியில் நாகர்கள்.   கொடி மரத்திற்கு கவசம் எதுவும் இல்லை. இதன் அடியில் உள்ள மண்ணே மருந்தாகின்றது. அடுத்து அழகாக இறங்கி செல்லும் அமைப்புடைய படிக்கட்டுகளுடன் கூடிய ”ஔஷததீர்த்த குளம்” அமைந்துள்ளது.  மாசி மகத்தில் இக்கோவிலில் திருவிழா நடைப்பெறுகிறது. இங்கு கிரிவலம் சிறப்பு,  எல்லா நாட்களிலும் எந்நேரத்திலும் கிரிவலம் வரலாம் என்றாலும்  பௌர்ணமி நாட்களில் வெறும் தேகத்தில் மூலிகைகள் அடங்கிய காற்று படுவதால் உடலில் உள்ள நோய்கள் அகலுமாம்.  மேலும். இந்திரன் கடும் தவமியற்றிய இடத்து மண்ணே மருந்தாக மாறி பூலோக வாசிகளுக்கு பயன் பெறட்டும் என்று   சிவபெருமான்  வரம் அருளினாராம். இம்மருந்தான மண்ணை விவசாய நிலங்களில் தூவினால் பயிர்கள் செழித்து வளரும் என்பது நம்பிக்கை.   இவ்வாறாக சோழ மண்டலத்தின் சப்த விடங்கத்தலங்களின் தியாகேசர்கள் மற்றும் தொண்டை மண்டலத்தின் உப விடங்கத்தலங்களின் தியாகேசர்கள்  தரிசனமும் சிறப்பாக நிறைவுற்றது. வாருங்கள் இத்தரிசனத்திற்காக சென்ற போது பெற்ற அனுபவங்களைப் பற்றி காணலாம். 42. சப்த விடங்க தலங்கள்  பத்தியுலா []   சப்தவிடங்க தலங்களை தரிசித்த அன்பர்கள் பொன்னியின் செல்வன் படித்த சிறு வயதில் இருந்தே தியாகேசரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் அடியேன் மனதில் தோன்றியது,  ஆனாலும் அவன் அருளால் தானே அவன் தாள்  வணங்க முடியும். படிப்பை முடித்து, பணிக்கு சென்று பல ஆண்டுகள் வெளி மாநிலங்களில் பணி செய்த பிறகு காரைக்காலுக்கு பணி மாற்றமாகி வந்தபோதுதான் அப்பாக்கியம் சித்தித்தது. திருவாரூரில் வீதி விடங்க தியாகராசரை தரிசிக்கும் முன்னரே திருநள்ளாற்றில் நக விடங்கரை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. சப்த விடங்க தலங்களைப் பற்றியும் அறிந்து கொண்டோம். சமயம் கிட்டியபோது அனைத்து தலங்களையும் தனித்தனியாக சென்று தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. திருவாரூர், திருநள்ளாறு, திருக்குவளை ஆகிய தலங்களில் விடங்கரின் அபிஷேகம் தரிசிக்கும் பாக்கியமும், திருவாரூர் மற்றும் திருநள்ளார் தலங்களின் தியாகராஜரின் திருநடனம்,  தேரோட்டம், அபிஷேகம்  தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. பின்னர் அங்கிருந்து மாற்றம் ஆகி வேறு மாநிலம் சென்று விட்டோம். ஒரு சமயம் நண்பர் தனுஷ்கோடி அவர்கள், சப்த விடங்க தலங்கள் அனைத்தையும் ஒரே முறை தரிசிக்க செல்லலாமா? என்றார். கரும்பு தின்னக் கூலியா என்று ஒரு ஆகஸ்ட் மாதம் நான்கு நாட்கள் விடுமுறை வந்த போது சப்த விடங்க தலங்களையும் ஒரு சேர தரிசிக்க கிளம்பினோம். சென்னையில் இருந்து ஒரு வாகனம் அமர்த்திக்கொண்டு கிளம்பினோம் சிதம்பரத்தில் ஒரு அன்பரையும் குழுவில் சேர்த்துக் கொண்டோம். அடியோங்கள் சென்ற சமயம் ஆடிப்பூரமாகவும் இருந்ததால் திருவாரூரில் கமலாம்பாளையும், திருநாகையில் நீலாயதாக்ஷி அம்பாளையும் சிறப்பு தரிசனத்தில் தரிசிக்கும் பாக்கியமும் கிட்டியது. மேலும் செல்லும் வழியில் உள்ள பல்வேறு ஆலயங்களையும் தரிசித்தோம். திருமறைக்காட்டில் இறைவன் அழைத்து உணவும் அளித்தான் வாருங்கள் சுருக்கமாக அவ்விவரங்களைக் காணலாம். சிதம்பரத்திலிருந்து முதலில் சீர்காழியில் ஸ்ரீகாழிச்சீராம விண்ணகரம் என்றழைக்கப்படும் திவ்யதேசத்தில் உலகளந்த பெருமாளையும், திருக்கோலக்காவில் திருஞானசம்பந்தருக்கு பொற்றாளம் அளித்த தாளபுரீஸ்வரரையும், ஓசை கொடுத்த நாயகியையும் தரிசித்து திருவாரூருக்காக புறப்பட்டு செல்லும் வழியில் பின்னர் திருமீயச்சூர் சென்று சிறப்பான அலங்காரத்தில் காட்சியளித்த லலிதாம்பிகையை சரணடைந்தோம். சிறுபுலியூரில் பால சயனத்தில் சேவை சாதிக்கும் கிருபா சமுத்திரப்பெருமாளை சேவித்தோம். அடுத்து வண்டு சேர் குழலி  உடனுறை பாம்புரநாதரை தரிசித்தோம். கூத்தனூரில் மஹா சரஸ்வதியை தரிசித்தோம். அங்கிருந்து கருவிலி அடைந்து ஸ்ரீசர்வாங்க சுந்தரி உடனுறை சர்குணேஸ்வரரை தரிசித்தோம்.  இத்தலத்தில் சிவசக்தியை வழிபட மறுபடியும் இனி ஒரு கருவில் பிறக்க வேண்டியிருக்காது என்பது ஐதீகம். கருவிலி அம்பாள் மிகவும் அழகு அம்பாளை ஒரு தடவையாவது தரிசித்த அன்பர்கள் பேறு பெற்றவர்கள் என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை. பின் திருவீலிமிழலையில் மாப்பிள்ளை சுவாமியை தரிசனம் செய்தோம். ஆலயம் திருக்குடமுழுக்கிற்காக தயாராகிக்கொண்டிருந்தது. அடுத்து திருக்கண்ணமங்கையில் பக்தவத்சல பெருமாளை சேவித்து திருவாரூர் அடைந்தோம். திருவாரூரில் மாலை விடங்கரின் அபிஷேகம் தரிசித்து, ஆடிப்பூர நன்னாளில் வெள்ளை சார்த்தியிருந்த கமலாம்பாளையும் திவ்யமாக தரிசித்தோம். அன்று தியாகேசரின் பள்ளியறை சேவையையும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. இவ்வாறு யாத்திரையின் முதல் நாள் சப்தவிடங்கதலங்களின் தலைமைப் பீடமான திருவாரூர் தியாகேசரை தரிசனம் செய்தோம். மறு நாள் அதிகாலை எழுந்து முதலில் திருவாரூரிலிருந்து திருக்காரவாசல் ஆலயம் சென்றோம் கிராமத்துக் கோவில் என்பதால் நடை திறப்பதற்கு சிறிது கால தாமதம் ஆனது. ஆயினும் சிறிது நேரம் தங்கி அருமையாக கோவில் முழுவதையும் சுற்றிப் பார்த்து கண்ணாயிர நாதரையும், ஆதி விடங்கரையும் அருமையாக சேவித்தோம். ஆலயம் காற்றும் வெளிச்சமும் வரும்படியாக சதுர வடிவ சாளரத்துடன் அமைந்திருப்பது ஒரு சிறப்பு.  குறிப்பாக இக்கோவிலில் அமைந்துள்ள கற்சிற்பங்களை இரசித்தோம். “நீலோத்பலாம்பாள் உடனுறை கனக சிம்மாசன சுவேத சாமந்தி  புஷ்பலங்கார குக்குட நடன ஆதி விடங்க தியாகேசர்”  என்று தியாகேசப்பெருமானுடைய அனைத்து சிறப்புகளையும் எழுதி வைத்துள்ளனர். உட்பிரகாரத்தில் தியாகரை தன் மார்பில் வைத்து திருமால் பூசை இயற்றும் சுதை சிற்பம் ஒன்றும் உள்ளது.   பால் வர கால தாமதம் ஆனதால் காலை பூசையை முழுமையாக தரிசனம் செய்தோம், பின்னர் திருக்குவளை ஆலயத்திற்கு சென்றோம்.   திருக்குவளை ஆலயம் திருக்காறாயில் ஆலயத்திற்கு அருகிலேயே உள்ளது. முன்னம் ஒரு முறை இவ்வாலயம்  தரிசிக்க சென்ற போது குருக்கள் உச்சி நேரத்திற்குத்தான் வந்தார், பின்னர் திருக்குளத்தில் நீராடி  ஆலயத்தைத் திறந்து சுவாமி தரிசனம் செய்து வைத்தார், விடங்கரின் அபிஷேகமும் தரிசிக்கும் பாக்கியம் அப்போது கிட்டியது. இத்தடவையும் அவ்வாறு நடக்குமோ என்று எண்ணினேன், ஆனால் இத்தடவை ஆலயம் திறந்திருந்தது. அருமையாக தரிசனம் செய்தோம். இவ்வாலயத்தில் சுவாமி மற்றும் தியாகேசர் இருவரது சன்னதியிலும்  கோஷ்டத்தில் அமைந்துள்ள தெய்வ மூர்த்தங்கள் அருமையாக உள்ளன. குறிப்பாக உமா மகேசுவரர், கங்கையை சடையில் தரித்துள்ளதால் கோபம் கொண்ட அம்மையை சமாதானம் செய்யும் கோலம், மற்றும் மகிடன் இல்லாமல் சாந்தமாக அருள் பாலிக்கும் துர்க்கை, தந்தையைப் போலவே கூத்தாடும் விநாயகர்  சிற்பங்கள் சிறப்பாக உள்ளன. அவனி விடங்கரை தரிசித்த பின் அருகே உள்ள ஆதி படை வீடு என்றழைக்கப்படும் எட்டுக்குடியில் தேவ மயிலில் அருள் பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தோம். அதிகாலையிலேயே திருவாரூரிலிருந்து புறப்பட்டதாலும் இரண்டு தியாகராஜ சுவாமிகளை தரிசித்த பின்  காலை சிற்றுண்டி எட்டுக்குடியில் உண்ணலாம் என்று நினைத்தோம். சரியான  கடை ஒன்றும் அங்கு இருக்கவில்லை. ஒரு அன்பர் இப்படி ஆகி விட்டதே என்று சிறிது விசனப்பட்டார். அதற்கு இன்னொரு அன்பர் கவலைப்படாதீர்கள் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் ஆண்டவன் நம்மையும் கவனித்துக் கொள்வார் என்று கூறினார். அங்கிருந்து நீலவிடங்கரை தரிசிக்க  திருவாய்மூர் புறப்பட்டு சென்றோம். திருவாய்மூர் ஆலயமும் சிறிய ஆலயம், கிராமத்துக் கோவில் என்பதால் யாரும் இருக்கவில்லை நிதானமாக ஆலயத்தை சுற்றி வந்து தரிசித்தோம்.  பிரகாரத்தில் அமைந்துள்ள பைரவர் சன்னதியையும், ஆடல் வல்லான் சன்னதியையும், கோஷ்டத்தில் எழிலாய் அமைந்துள்ள யோக தட்சிணாமூர்த்தி மற்றும் வான்மீகி சித்தர் சிவபெருமானை பூசிக்கும் சிலைகளையும் கண்டு களித்தோம். தானே அழைத்து திருநாவுக்கரசருக்கும், திருஞானசம்பந்தருக்கும்   காட்சி அளித்த இறைவனை அருமையாக தரிசித்தோம். மற்ற விடங்கத்தலங்களைப் போலவே நின்ற நந்தி மற்றும் ஒரே வரிசையில் நவக்கிரகங்கள் இவ்வாலயத்திலும் தரிசித்தோம். அடுத்து கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள திருமறைக்காட்டிற்கு புறப்பட்டு சென்றோம். வேதாரண்யத்தை அடைந்த போது உச்சிக் காலம் ஆகிவிட்டிருந்தது. ஆலயத்தின் உள்ளே நுழைந்தவுடன் அன்னதானகூடத்தினர் உணவு அருந்திவிட்டு செல்லுங்கள் என்று அழைத்தார்கள். நடை சாத்திவிடுவதற்குள் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகின்றோம் என்று கூறி விட்டு ஆலயத்தை வலம் வந்தோம். பெரிய ஆலயம். உயர்ந்த மதில் சுவர். தமிழ் பாடலுக்கு ஏற்றம் அளித்த தலம். இவ்வாலயத்தில் அமைந்துள்ள எழிலார் தெய்வ மூர்த்தங்களை திவ்யமாக சேவித்தோம்.  ஆலயமெங்கும் பதிகப்பாடல்கள் எழுதி வைத்துள்ளனர். பொறுமையாக சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த போது அன்னதானத்தினர் உணவருந்தி விட்டு செல்லுங்கள் என்று மறுபடியும் அழைத்தனர். பல முதியவர்கள் அங்கு காத்துக்கொண்டிருந்ததால் அவர்களுக்கு உணவளியுங்கள், அடியோங்கள் வெளியே சாப்பிட்டுக்கொள்கிறோம் என்று கூறினோம். ஆனால் அவர்களோ அவர்களுக்கும் உள்ளது தாங்கள் உணவருந்திவிட்டுதான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி உணவளித்தனர். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து சிவபெருமான் அவனது பிரசாரத்தை அளித்து எங்கள் பசியை ஆற்றினான்.   திருமறைக்காட்டிலிருந்து சுமார் 11 கி.மீ தூரத்தில் உள்ள கோடியக்கரைக்கு சென்றோம், கோடிக்கரை குழகரை தரிசித்தோம். இத்தலத்தின் முருகரை திருப்புகழால் அருணகிரி நாதர் பாடியுள்ளார். கோடியக்கரை கடலில் புனித நீராடினோம். இந்நூல் எழுத ஒரு வகையில் காரணமாக இருந்த பொன்னியின் செல்வன் புதினத்தில் கோடியக்கரையும், குழகர் ஆலயமும், கலங்கரை விளக்கமும்  விரிவாக கூறப்பட்டுள்ளது நினைவுக்கு வந்தது. அங்கிருந்து மற்றொரு கடற்கரை சப்தவிடங்கத்தலமான திருநாகைக்கு புறபட்டோம். திருமருகல், திருகண்ணபுரம் தரிசித்து திருநாகை அடைந்தோம். திருநாகைத்தலத்தில் ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் விருந்து என்பதால் ஆலயமே பொலிந்து கொண்டிருந்தது. நீலாயதாக்ஷி  மூலவர் அம்பாளை சிறப்பான அலங்காரத்தில் தரிசனம் செய்தோம். உற்சவர் அம்மனும் சரஸ்வதி அலங்காரத்தில் அருட்காட்சி தந்தருளினார். அம்மன் சன்னதியில் இருந்த குருக்கள் அம்பாள் யவன பருவத்தில் அருள் பாலிப்பதையும், அம்மனுக்கு எதிரே உள்ள நந்தி ஒரு கண்ணை அம்பாள் மீதும், ஒரு கண்ணை சுவாமி மீதும் வைத்துள்ள சிறப்பைப் பற்றிக் கூறினார். நெடிதுயர்ந்த மதிலின் மேல் பல்வேறு சுதை சிற்பங்கள் அருமையாக அமைத்துள்ளனர். விஸ்வரூப சுதை நந்தியையும் தரிசித்தோம். நவகிரகங்கள் ஒரே வரிசையில் நில்லாமல் மூன்று வரிசையில் நிற்கின்றன.     சப்தவிடங்கதலங்களின் நிறைவு தலமாக திருநள்ளார் தலம் சென்றோம். இங்கு விடங்கரின் அபிஷேகம் காணும் பாக்கியம் கிட்டியது. சப்த விடங்க தலங்களில் பெரிய விடங்கர் இவர்தான். இவருக்கு சார்த்திய சந்தனமும் பிரசாதமாக கிட்டியது. இவ்வாறு ஒரே நாளில் ஆறு விடங்கத்தலங்களை தரிசிக்கும் பாக்கியத்தை அருளினார் தியாகராஜர். எத்தலத்திலும் விடங்கர் அபிஷேகத்திற்காக நிற்காததால் இது சாத்தியமாகியது. அன்றிரவு கும்பகோணம் வந்து தங்கினோம். யாத்திரையின் நிறைவு நாளில் குரு பரிகாரத்தலமான திருஆலங்குடி, இராஜமன்னார்குடி இராஜகோபாலர், வடுவூர் கோதண்டராமர், திருகண்ணமங்கை பக்தவத்ஸல பெருமாள், திருக்கண்ணங்குடி தாமோதரப்பெருமாள் சேவித்து சிதம்பரம் வந்து சென்னை வந்தடைந்தோம். இவ்வாறு அவனருளால் சப்த விடங்கத்தலங்கள்  மற்ற பல ஆலயங்களையும் ஒரே தடவையில் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. ஆரூரனை ஏழு தலங்களிலும்  தரிசிக்கும் போது அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ மஹேஸ்வர அனாயாஸேன மரணம் வினாதைன்யேன ஜீவனம் தேஹி மே க்ருபயா ஸம்போ த்வயி பக்திம் அசஞ்சலாம் அடியேன் உன்னையே சரணம் அடைகின்றேன். உம்மைத் தவிர வேறு யாரையும் நம்புகிலேன். ஆகவே மஹேஸ்வரா கருணை கொண்டு அடியேனை காப்பாற்றுவாய். இன்றைக்குப் படித்தேன் நாளை காலை எழுந்திருக்கவில்லை என்பது போல் ஆயாசம் இல்லாமல் போய் சேரவேண்டும். அது வரை என்னை வறுமையில் கஷ்டப்பட வைக்கதே வேண்டிய அளவு மட்டுமே செல்வம் தருவாயாக. மேலும் எப்போதும் உம்மிடம் சஞ்சலப்படாமல் பக்தி செலுத்த அருள்வாய் என்று வேண்டிக்கொண்டேன். தாங்களும் தங்கள் கோரிக்கையை அவரிடம் வையுங்கள் நிச்சயம் நிறைவேற்றுவார். மானிடப்பிறவி பெறுவதற்கு அரியது. அது நிலையாமைத்தன்மை உடையது. வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம் என்பது சுந்தரர் வாக்கு. இந்நிலையாமைத்தன்மையை உணர்த்திய அருளாளர்கள் நிலைப்பேறு உடைய வாழ்வைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் நமக்கு சுட்டிக்காட்டிச் சென்றுள்ளனர். அவற்றுள் அப்பர் பெருமான் பாடிய ஒரு தேவாரப்பாடல். நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கரா சய போற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே என்றபடி ஆரூரனை சப்த விடங்கத்தலங்களில் தரிசிக்க அனைத்தும் சுபமாகவே அமையும் எனவே  சென்று தரிசித்து வாருங்கள் ஆரூரன் அருள் பெறுங்கள்.   நீயின்றி நினைப்பதற்கு வேறில்லை தியாகேசா! திருச்சிற்றம்பலம் சுபம்                                                                                                                                                                                                           ஆசிரியரைப் பற்றி   ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்  ஆலவாயில்  உறையும் எம் ஆதியே !   என்று இறைவன் புகழ்பாட விழையும் ஒரு சிறுத்தொண்டன்.    இவரது மற்ற மின்னூல்கள்:  https://freetamilebooks.com/ebooks/ahobila-yathra/ -  அஹோபில யாத்திரை    https://freetamilebooks.com/ebooks/mukthinath-yatra/ - முக்திநாத் யாத்திரை    https://freetamilebooks.com/ebooks/karudasevai/ -  ஸ்ரீவைகுந்த வாழ்வளிக்கும் கருடசேவை.