[] []                                         திராவிடர்  இயக்க பார்வையில் பாரதி                                                     வாலாசா வல்லவன்  நூல் : திராவிடர்  இயக்க பார்வையில் பாரதி ஆசிரியர் : வாலாசா வல்லவன் மின்னஞ்சல்  : vallavankuil@gmail.com    மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். பொருளடக்கம் 1. பாரதியின் உயிர் மூச்சு தமிழா ? ஆரியமா? 5  2. பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன? 19  3. பாரதியின் பார்ப்பன இன உணர்வு 39  4. பாரதியின் பார்வையில் திராவிடர் இயக்கம் 52  5. பாரதி விரும்பிய பெண் விடுதலை எத்தகையது? 61  6. பொதுவுடைமை பற்றி பாரதி 69  7. மதங்கள் பற்றிப் பாரதியின் பார்வை 79  8. ஆர்.எஸ்.எஸ். தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி 87  9. ஆய்வாளர்கள் காட்டும் பாரதி 97    1.  பாரதியின் உயிர் மூச்சு தமிழா ? ஆரியமா?    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கி.பி. 1882க்கும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் கி.பி. 1921க்கும், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் சி. சுப்பிரமணிய பாரதி. இவர் வாழ்ந்த காலம் தீவிரமான இந்திய சுதந்திரப் போராட்டக் காலம். இக்கால கட்டத்தில் இவருடைய எழுத்தும் நடையும் சுதந்திரம், மொழி, சமூகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. அதனால் இவரை ‘மாபெருங் கவிஞர்’ என்றும் ‘தேசியக் கவிஞர்’ என்றும் மக்கள் அழைக்கலாயினர். இவர் எழுதிய மொழி மற்றும் சமூகத் தொடர்பான கவிதைகளிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும், தமிழுணர்வை விட ஆரிய உணர்வே மேலோங்கியிருப்பதை அறிய முடிகிறது. ஆகவே “பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா?” என்பதைக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய முற்படுவோம். இவருடைய எழுத்துப் பணி (மொழி பெயர்ப்பாளராக) 1904இல் சுதேசமித்திரன் இதழில் தொடங்குகிறது.  இவ்விதழில் “வந்தே மாதரம்” என்னும் தலைப்பில், இவர் எழுதிய ஆரியச் சார்பான பாடல்களைக் காணலாம். “ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டஎம் அன்னையின் மீது திகழ் அன்பெனு மேன்கொடி வாடிய காலை அதற்குயிர் தந்திடுவான் ....    ....    .... வீரிய ஞானம் அரும்புகழ் மங்கிட மேவிய நல் ஆரியரை மிஞ்சி வளைத்திடு புன்மை... ....    ....    .... வாழிய நல்ஆரிய தேவியின் மந்திரம் வந்தே மாதரமே”1 இவர், இதே சுதேசமித்திரனில் 1906 இல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில், “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப் பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே ....   ....   .... வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப் பேதைக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே!”2 எனக் கூறி, இங்கு “ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத நாடென்றும்,அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம் மறைந்து போயினவே” என்றும் மிகவும் வருத்தப்படுகிறார். இதே ஆண்டில், இவர் எழுதிய “சத்திரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது”என்னும் பாடலில், “வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர். ....    ....   .... பிச்சை வாழ்வுதந்த பிறருடைய ஆட்சியில் அச்சமுற் றிருப்போன் ஆரியன் அல்லன், புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு அன்பிலா திருப்போன் ஆரியன் அல்லன். மாட்டுதீர் மிலேச்சர் மனப்படி ஆளும் ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன் ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர்   யாரிவர் ஊர்அவர் யாண்டேனும் ஒழிக!3 என்று சிவாஜி, தன் படைவீரர்களுக்கு இசுலாமியரின் கொடுமையைக் கூறியதாக, பாரதி எடுத்தியம்புகிறார். இங்கு, ‘அன்பிலாதிருப்போன் ஆரியன் அல்லன்’ என்று சிவாஜி கூறியதாகப் பாரதி கூறுகிறார். ஆனால் உண்மையிலேயே ஆரியர்கள் அன்புடையவர்களாக இருந்தால் சிவாஜிக்கு ஏன் முடிசூட்ட முன்வரவில்லை? அவர் சூத்திரன் என்பதால்தானே! சிவாஜி ‘போன்சலே’ என்ற சூத்திர சாதியில் பிறந்ததால், ஆரியப் பார்ப்பனர்கள் சிவாஜி முடிசூட்டிக் கொள்ளப் பெரும் தடையாயிருந்தனர். பிறகு சிவாஜியிடம் பெரும் தொகையாகப் பணமும் செல்வமும் பெற்றுக் கொண்டபின் சிவாஜி முடிசூட்டிக் கொள்ள ஒப்புதல் தந்தனர்.4  அப்படி இருக்கும்போது ஆரியர்கள் அன்புடையவர்கள் என்று சிவாஜி எப்படிக் கூறியிருப்பார்? “ஆரிய பூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தே மாதரம்” என்று 1907 இல், சுதேசமித்திரனில் இவர் எழுதிய “வந்தேமாதரம்” பாடலில் கூறுகிறார். இங்கு இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்கிறார். “அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே வெற்றி தருந்துணை நின்னருள் அன்றோ? ....           ....       .....       .... .... . ஆரிய நீயும் நின்அற மறந்தாயோ? வெஞ்செயல் அரக்கரை விரட்டிடுவோனே வீரசிகாமணி, ஆரியர் கோனே” 5                                       (இந்தியா,1908) என்று பாரதியார் “ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்” என்னும் பாடலில் கூறுகின்றார், இங்கு யாதவ குலத்தில் பிறந்த சூத்திரக் கடவுளை ஆரியர் கோன் என்கிறார். பாரதியார் தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பைச் “செந்தமிழ் நாடு”, “தமிழ்”ஆகிய தலைப்புகளில் “செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே .....     ......       ..... வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு” “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்” 6 என்று தமிழ் நாட்டையும் தமிழ் மொழியையும் புகழ்ந்து பாடியுள்ளார். இப்பாடல்களை இயல்பான தன்னுணர்ச்சியுடன் பாரதி பாடவில்லை என்பதற்குச் சான்றுகள் உள்ளன. 1915 இல் சுதேசமித்திரனில் ‘தமிழ், தமிழ்நாடு’ முதலியவற்றின் சிறப்பைக் குறித்து, எழுதும் சிறந்த கவிதைக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் பரிசளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதைப் பாரதியார் பார்த்தும் பார்க்காததுபோல் விட்டுவிட்டார். ஆனால் இதைப் பார்த்த பாரதியின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்பிரமணி அய்யரும் மற்றும் சில நண்பர்களும் விளம்பரத்தைக் கூறி, கவிதை எழுதும்படி வேண்டினர்.’ அவர்களின் கட்டாயத்தின் பேரிலேயே இப்பாடல்களைப் பாரதியார் எழுதியதாக பாரதியின் நண்பர் எஸ்.ஜி. இராமானுஜலு நாயுடு கூறியுள்ளார். 7 இதே கருத்தைப் பாரதிதாசன் அவர்களும் கூறியுள்ளார். “தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப் பாக்கள் தந்தால் அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று சான்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார் தேன்போற் கவியொன்று செப்புகநீர் என்றுபல நண்பர் வந்துபாரதியாரை நலமாகக் கேட்டார் ....       ......         ..... செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்றெழுதித் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால் எழுதி முடித்தார்.” 8 என, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுகிறார். இவ்வாறாகப் பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும்தான், “செந்தமிழ் நாடெனும் போதினிலே”என்ற பாடலையும், “யாமறிந்த மொழிகளிலே” என்ற பாடலையும் எழுதினார், இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம்  பரிசாக ரூ.100 அளித்தது. 9 பாரதியார் பரிசுப் போட்டிக்காக மேலே கண்ட பாடலை எழுதும்போது மட்டும் தமிழையும் தமிழ்நாட்டையும் மிகவும் உயர்வாக எழுதுகிறார். ஆனால் அதே ஆண்டில் தனிப்பட்ட முறையில் “சுதேச கீதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக “ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்து - நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான். மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை மூண்ட நல்அன்பொடு நித்தம் வளர்த்தார்; ஆன்ற மொழிகளினுள்ளே - உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.” 10 என்று பாரதி கூறுகிறார். இங்குத் தமிழுக்கு இலக்கணம் இல்லாதிருந்தது போலவும், ஆரியப் பார்ப்பனர்கள்தான் இலக்கணம் வகுத்துக் கொடுத்தது போலவும் பாரதி கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் அவர் ஆரியம்தான் உயர்ந்த மொழி என்றும் கூறுகின்றார். தமிழ்த்தாய் பற்றி எழுத வந்த பாரதியாருக்குத் தமிழ் மொழி உயர்ந்த மொழி என எழுத மனம் வரவில்லை போலும்! பாரதியார் எழுதிய கவிதைகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், கால வரிசைப்படியாகத் தொகுத்து 700 பக்கங்கள் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ், தமிழ்நாடு ஆகியவற்றைப் பற்றி 11 பக்கங்கள் மட்டுமே உள்ளன.11 இந்தப் பதினோரு பக்கங்களிலும் கூடத் தமிழை, தமிழ் நாட்டை உயர்த்திச் சொல்ல மனம் வராமல் ஆரியத்தையே உயர்த்திக் கூறுகிறார் பாரதியார். பாரதியார் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும் தன்னுடைய மூதாதையர்களின் மொழியாகிய ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழி என்பதோடு அதைத் தெய்வ மொழியாகவும் கூறுகிறார். “நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை  மிகவும் அற்புதமானது.அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷை களையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை  என்கிறோம்,” 12 இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது: “தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே”13 என்கிறார் பாரதியார். இந்தியாவிலுள்ள அனைத்துச் செல்வங்களையும் ‘ஆரிய ஸம்பத்து’ என்கிறார் பாரதியார். “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலேயே துளஸிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி - இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ் மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் - இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆர்ய ஸம்பத்து.“14 இதில் திருக்குறள், சிலப்பதிகாரம், ஆண்டாள் திருமொழி, முதலிய தமிழ் இலக்கியங்களை ஆரியச் செல்வம் என்கிறார் பாரதி. மேலும் பௌத்தர்களின் எல்லோரா ஓவியங்கள், தஞ்சை மராட்டியர்களின் தஞ்சை மகால், சாஜகானின் தாஜ்மகால் முதலியவற்றையும் ‘ஆரியச் செல்வம்’ என்கிறார். மற்றவர்களின் உழைப்பில் விளைந்த கலை, இலக்கியம் முதலியவற்றை ஆரியச் செல்வமாகப் பாரதி உரிமை கொண்டாடுவது அவரின் அளவு கடந்த ஆரிய வெறியைக் காட்டுவதாகவே அமைகின்றது. ‘உலகில் உள்ள எல்லா நாகரிகங்களுக்கும் மூலமாக இருப்பது ஆரிய நாகரிகமே’ என்கிறார் பாரதியார். “ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், பிற இடங்களிலும் காணப்படும் நாகரிகங்களுக்கெல்லாம் முந்தியதும் பெரும்பான்மை மூலாதாரமுமாக நிற்பது ஆரிய நாகரிகம். அதாவது பழைய சமஸ்கிருத நூல்களிலே சித்தரிக்கப்பட்டு விளங்குவது. இந்த ஆரிய நாகரிகத்துக்குச் சமமான பழமை கொண்டது தமிழருடைய நாகரிகம் என்று கருதுவதற்குப் பல விதமான சாஷ்யங்களிருக்கின்றன” 15 என்கிறார் பாரதியார். ஆகவே தமிழர் நாகரிகம் ஆரியத்தை விட உயர்ந்த நாகரிகம் என்று கூறுவதற்கு இவருக்கு மனம் வரவில்லை. தமிழர் நாகரிகம், ஆரிய நாகரிகத்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும். கால்டுவெல் அவர்களின் ஆய்வு நூலான ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் முதல் பதிப்பு 1856ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பும் பாரதியின் காலத்திலேயே 1915ஆம் ஆண்டில் வெளிவந்தது. பாரதி கால்டுவெல் அவர்களின் நூலைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாரதி போன்ற சமஸ்கிருதப் பற்றுக் கொண்ட பார்ப்பனப் பண்டிதர்களைக் குறித்து கால்டுவெல் கூறுவதைப் பார்ப்போம். ‘சமசுகிருதத் துணை வேண்டாத் திராவிடத் தனித்தன்மை’ என்ற தலைப்பில் கால்டுவெல் கூறுகிறார்: “திராவிட மொழிகள் வடஇந்திய மொழிகளிலிருந்து பற்பல இயல்புகளில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும் அத்திராவிட மொழிகள், வடஇந்திய மொழிகளைப் போலவே, சமசுகிருதத் திலிருந்து பிறந்தவையாகச் சமசுகிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன. தாங்கள் அறிந்த எப்பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண்டிதர்கள்.”16 1915இல் சூலைத் திங்களில் ‘ஞானபானு’ என்னும் இதழில் பாரதியார் தமிழில் எழுத்துக் குறை என்னும் தலைப்பில் “சமஸ்கிருதத்தில் க, ச, ட, த, ப, ற போன்ற வல்லின எழுத்துகளுக்கு வர்க்க - எழுத்துகள் இருப்பதுபோல், தமிழில் வர்க்க எழுத்துகள் இல்லாததால், தமிழில் எழுத்துக் குறையுள்ளது”17 என்கிறார். ஒரு மொழியிலுள்ள ஒலிகள், அதற்குண்டான குறியீடுகள் மற்ற மொழியில் இல்லாதிருந்தால், அது அம்மொழியின் குறைபாடு ஆகாது. ஏனெனில், ஒலிப்பு, ஒலிக்குறியீடு என்பவை அம்மொழிக்கே உரிய இயற்கையான இயல்புகள் ஆகும். ஆகவே சமசுகிருத வர்க்க எழுத்துகள் தமிழில் இல்லை என்று பாரதியார் குறைப்பட்டுக் கொள்வது ஏற்புடையது ஆகாது. பாரதியின் இக்கூற்றை அறிஞர் வ.உ.சி. அவர்கள் 1915 செப்டம்பர்த் திங்களில் அதே ‘ஞானபானு’ ஏட்டில் கடுமையாக மறுத்துக் கூறியுள்ளார். “தமிழில் எழுத்துக் குறை என்று சொல்லுபவர்கள் பெரும்பாலும் சமசுகிருதச் சார்புடையவராகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படிக்காதவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தமிழுக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் என்னும் உன்னத நூலையும், அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருக்குறள் முதலிய இலக்கிய நூல்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்” என்கிறார்.18 தமிழில் எழுத்துப் பற்றாக்குறை என்பதைக் காரணம் காட்டி, அதையே வாய்ப்பாகக் கருதி, வேண்டுமென்றே தமிழில் வடமொழிச் சொற்களை அளவுக்கு அதிகமாகக் கலந்து எழுத ஆரம்பித்தார் பாரதியார். இதை அவருடைய பிற்கால எழுத்துகளில் காணலாம். “மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பங்களூர், திருச்சினாப் பள்ளி, தஞ்சாவூர், புதுச்சேரி, கும்பகோணம் இத்யாதி ஷேத்ரங்களில் வஸிக்கும் இங்கிலிஷ் பிராமணர்களுக்குள்ளே ஸந்தியா வந்தனம் எவ்வளவு சொற்பம்? தீர்த்தபானம் கூட நடக்கத்தான் செய்கிறது. ராமராமா? இந்த ரிஷிகளெல்லாரும் என்ன பிராயச்சித்தம் பண்ணுகிறார்கள்? என் மாப்பிள்ளை ரங்கூனில் நித்ய கர்மானுஷ்டங்கள் தவறாமல் நடத்தி வருகிறானென்று கேள்வி. அவன் வந்தால் ஜாதிப்ரஷ்டன் தானே? ப்ராயச்சித்தம் பண்ணினால் கூட நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.”19 இது 1917 சூன் 21இல் சுதேசிமித்திரன் ஏட்டில் ‘ப்ராயச் சித்தம்’ என்னும் தலைப்பில் பாரதியார் எழுதிய கதையின் ஒரு பகுதி. (பாரதியார் தன் பெயரைக் கூட ஸி. ஸுப்பிரமணிய பாரதி என்றே எழுதி உள்ளார்.) இது குறித்து ஆய்வாளர் க. கைலாசபதி கூறுவதாவது: “1949இல் ஓமந்தூரார் அரசு பாரதி நூல்களின் பதிப்பு உரிமையை வாங்கியது. 1950 இல் அரசு பாரதி நூல்கள் பதிப்புக் குழு ஒன்றை உருவாக்கியது. அக்குழுவில் இருந்த ரா.பி. சேதுப்பிள்ளை, மு. வரதராசனார் போன்றோர் பாரதியின் கவிதைகளில் மூலப்படியில் இருந்த கிரந்த எழுத்துகளை முழுமையாக நீக்கிவிட்டதாகவும், 1909 இல் வெளிவந்த ஜன்மபூமியில் ஸமர்ப்பணம் முகவுரை ஆகியவற்றின் கீழ் ஸி.ஸுப்பிரமணிய பாரதி என்றே கையொப்பமிட்டுள்ளார்” 20 என்றும் ஆய்வாளர் க. கைலாசபதி கூறியுள்ளார். பாரதியாருக்குத் தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடு இல்லை என்பதைப் பற்றி அவருடைய நண்பர் வ.ரா. குறிப்பிடுவதாவது: “தமிழ்ப் பண்டிதர் பதவிக்குப் பாரதியாரிடமிருந்த இலட்சணங்கள் விநோதமானவை. எட்டயபுர சமஸ்தான வித்வான்கள் அளித்த பாரதி என்ற பட்டமொன்றே முதல்தரமான இலட்சணம் என்றே எண்ணுகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் நன்னூல் (இலக்கண) சூத்திரங்களைத் தலைகீழாய்ச் சொல்ல முடியுமே, அந்தச் சாமர்த்தியம் பாரதியாருக்குக் கொஞ்சங்கூடக் கிடையாது. நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அதைப் படித்து நெட்டுருப் பண்ணியிருப்பாரா என்பது சந்தேகம்தான். தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம் மூன்றும் மொழி மூவிடத்து மாகும் இந்தச் சூத்திரத்தைப் பாரதியார் எப்படியெல்லாமோ கேலி செய்வார். நன்னூல் தற்போது இருக்கிற நிலையில் பாரதியாருக்குத் துளிக்கூடப் பிடித்தம் இருந்ததில்லை. நன்னூலிலே இவ்வளவு வெறுப்புக் கொண்ட பாரதியார் எவ்வாறு தமிழ்ப் பண்டிதர் உத்யோகம் பார்த்தார் என்பது குறித்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.” 21   ஒருமுறை எட்டயபுரம் பள்ளியில் மாலை நேரத்தில் திருக்குறளைப் பற்றிப் பேச பாரதியாரை அழைத்திருந்தனர். பாரதியாரும் ஒப்புக் கொண்டு பேசவந்தார். அங்கு ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி’ என்று மாரியைப் பற்றியே இருபது நிமிடங்கள் கையைக் காலை ஆட்டிப் பாடிக்கொண்டு இருந்தார். தலைமை வகித்தவர் திருக்குறளைக் குறித்துப் பேசும்படி கூறினார். “நான் குறள் படித்து வெகு காலம் ஆகிவிட்டது. அது வெகு நல்ல நூல். இரண்டொரு அடி நினைப்பிருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாம். ஆகா எவ்வளவு உண்மை”22 என்று கூறி விட்டு கூட்டம் முடிந்து விட்டதாகப் பாரதியே அறிவித்து விட்டு வெளியேறி விட்டார் என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளார். இதே காலக்கட்டத்தில் திருக்குறளைப் பற்றி வ.உ.சி. என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளல் நலம். “தமிழர்களெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்தில்லாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை. நேசிப்பதுமில்லை.” 23  கோயமுத்தூர் சிறையில் வ..உ..சி. தம்மைச் சந்தித்த பரலி சு.  நெல்லையப்பரிடம்     இவ்வாறு கூறியுள்ளார்.   இவருடைய  தமிழ்ப்  பற்றுதான்  என்னே! இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் வரவேண்டும் என்று முதன்முதலில் சொன்னவர் பாரதியே! 1906இலேயே இக்கருத்தை இவர் வலியுறுத்தியுள்ளார். 15.12.1906 இந்தியா வார ஏட்டில் ‘இந்தி பாஷைப் பக்கம்’ என்னும் தலைப்பில் இவர் கூறுவதாவது: “தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். தமிழ்ப் பாஷையே நமக்குப் பிரதானமாய் இருக்க ஹிந்திப் பாஷையை அப்பியஸிக்க என்ன அவசியம் இருக்கிறது என்று (என்பதை?) சொல்லுகின்றோம். இந்தியா பலவித பிரிவுகளுடையதாய் இருந்த போதிலும் உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கிணங்க அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும், ஹிந்தியும் தெலுங்கர் தெலுங்கும் ஹிந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்பார்களானால் நமக்குப் பொதுப்பாஷை ஒன்றிருக்கும். தமிழர், தெலுங்கர் முதலானவர்கள் கூடச் சிறிது பிரயாசையின் பேரில் ஹிந்தியைக் கற்றுக் கொள்ளலாம்.” 24 இது அன்றைய காங்கிரசின் கொள்கை. திலகரின் பேச்சைக் கேட்டே பாரதி இவ்வாறு எழுதியுள்ளார். இந்தியைப் பொதுமொழி என்று 1906 இல் கூறிய பாரதி, 1920 இல் தன்னுடைய கருத்தை  மாற்றிக் கொண்டு, சமசுகிருதம்தான் இந்தியாவுக்கும் பொது மொழியாக வேண்டும் என்று கூறுகிறார். சுதேசமித்திரன் (11.1.1920) இதழில் ‘ஒளிர்மணிக் கோவை’ என்னும் தலைப்பில் பாரதி கூறுவதாவது: “இந்தியாவுக்குப் பொது பாஷையாக ஹிந்தியை வழங்கலா மென்று ஸ்ரீமான் காந்தி முதலிய பல பெரியோர்கள் அபிப்ராயப் படுகிறார்கள். ஆனால் பாரத தேச பக்த சிரோ ரத்தினமென்று கூறத்தக்க ஸ்ரீமான் அரவிந்த கோஷ் முதலிய வேறு பலர் ஸம்ஸ்க்ருத பாஷையே இந்தியாவுக்குப் பொது பாஷையென்றும், நாம் அதைப் புதிதாக அங்ஙனம் சமைக்க வேண்டியதில்லையென்றும், ஏற்கனவே ஆதிகாலந் தொட்டு அதுவே பொதுபாஷையாக இயல் பெற்று வருகிறது என்றும் சொல்லுகிறார்கள். ... ... ... ஸம்ஸ்கிருத பாஷையில் படித்துத் தேர்ச்சி பெறுதல் கடினமானதால் அதைத் தேச முழுமைக்கும் பொதுப் பாஷையாகச் செய்தல் சௌகரியப்படாதென்று சிலர் சொல்லுகிறார்கள். பழைய வழிப்படி படிப்பதானால் இவர்கள் சொல்வது ஒருவாறு மெய் எனலாம். ஆனால் இக்காலத்தில் அந்நிலைமை கடந்து சென்று விட்டது. இப்போது பண்டாரகர் என்னும் பம்பாய்ப் பண்டிதர் உபாயத்தியாயர் இல்லாமலே ஸம்ஸ்க்ருத பாஷையை ஏழெட்டு மாசங்களில் கற்றுக் கொள்ளும்படியான ஆரம்ப நூல்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள் முதல் புஸ்தகம் ஏற்கனவே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அவ்வழியை இன்னும் சுலபமாய்ச் செய்யலாம். பஞ்ச தந்திரத்தை அர்த்தத்துடன் மூன்று முறை உருப்போட்டால் எவனும் தட தடவென்று தட்டில்லாமல் ஸம்ஸ்க்ருதம் பேசக்கூடிய திறமை பெற்று விடுவான்“25 எனப் பாரதியார் விளக்கம் தந்து  சமசுகிருதம் பொது மொழியாக வேண்டும் என்று கூறுகிறார். பாரதியார் சமசுகிருதத்தின் மீது கொண்ட வெறியினால் சப்பானில் சமசுகிருதம் எப்பொழுது எவ்வாறெல்லாம் பரவியது என்பதைத் தன்னுடைய ‘பருந்துப் பார்வை’ என்னும் கட்டுரையில் ஆய்வு செய்து எழுதியுள்ளார். 26 உலகில் சுமேரியா, சப்பான், கொரியா, அங்கேரி, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் மொழிகளில் தமிழ் மொழிக் கூறுகள் ஏராளமாகக் கலந்துள்ளன. எங்கெல்லாம் தமிழ் பரவியிருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், சமசுகிருதம் எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை ஆய்வுசெய்கிறார். அறிஞர் முனைவர் பொற்கோ அவர்கள் தமிழ் மொழியும் சப்பான் மொழியும் மரபு ரீதியாகவே உறவுள்ளவை என்பதைத் தம் ஆய்வின்27 மூலம் நிறுவியுள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். இதுகாறும் நாம் அறிந்தவற்றில் பாரதியினுடைய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் முதலானவை ஆரிய மொழி, ஆரிய நாகரிகம், ஆரியப் பண்பாடு போன்றவற்றை உயர்த்திப் பேசுவதாகவே உள்ளன. இவருடைய தாய்மொழி தமிழாக இருந்தாலும், அதைப் பற்றி உயர்த்திப் பேசாமல் ஆரிய மொழியே சிறந்த மொழி, அம்மொழியே இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆகவே ‘பாரதியின் உயிர் மூச்சு தமிழல்ல, ஆரியமே’ என இவ்வாய்வின் மூலம் காண்கிறோம்.   அடிக்குறிப்பு   1. பாரதியார் கவிதைகள், சந்திரகாந்தன்(தொ.ஆ) ப.34 நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை - 1994. 2. மேற்படி நூல் ப.31 3. மேற்படி நூல் ப.31 4. மாபெரும் புரட்சி வீரன் சிவாஜி, டென்னிஸ்கின் கெய்டு, நேஷனல் புக் டிரஸ்ட், ப.35, தில்லி 1966. 5. பாரதியார் கவிதைகள், ப.57-58 6. பாரதியார் கவிதைகள். ப. 110-111 7. ரா.அ. பத்மநாபன் (தொ.ஆ) பாரதியைப் பற்றி நண்பர்கள், ப.262-264, வானதி பதிப்பகம், சென்னை,1982. 8. பாரதிதாசன் கவிதைகள், ப. 169, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1991. 9. கோ. கிருட்டிணமூர்த்தி, பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு, ப. 36, த.நா. ஆய்வுக் கழகம், சென்னை, 1991. 10. பாரதியார் கவிதைகள், ப.113 11. பாரதியார் கவிதைகள். ப. 110-120 12. பாரதியார் கட்டுரைகள், ப.46, வானதி பதிப்பகம், சென்னை, 1981. 13. மேற்படி நூல் ப.264 14. மேற்படி நூல் ப. 54 15. பாரதியார் கட்டுரைகள் ப.264 16. கால்டுவெல், திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் ப.60, தமிழாக்கம் புலவர் கா.கோவிந்தன், வள்ளுவர் பண்ணை, சென்னை, 1959. 17. ஆ.இரா. வேங்கடாசலபதி (தொ.ஆ) வ.உ.சியும் பாரதியும், ப. 124 மக்கள் வெளியீடு, சென்னை, 1994. 18. மேற்படி நூல் ப. 128,129 19. பெ. தூரன், பாரதி தமிழ், ப.264, வானதி பதிப்பகம்,   சென்னை. 1986. 20. க. கைலாசபதி, பாரதி ஆய்வுகள், ப. 180 நி.செ.பு.நி. 1984. 21. வ.ரா. மகாகவி பாரதியார், ப.28, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1983 22. சுத்தானந்த பாரதி, கவிக்குயில் பாரதியார், ப.74, 75, தெ.இ.சை.சி.நூ.ப.க., சென்னை, 1981. 23. என். சம்பத், பெ.சு.மணி, வ.உ. சிதம்பரம் பிள்ளை, ப.244, பப்ளிகேஷன்ஸ் டிவிசன் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு - 1995. 24. சி.எஸ். சுப்பிரமணியம், பாரதி தரிசனம், ப. 443,444 நி.செ.பு.நி., சென்னை, 1975. 25. ரா.அ. பத்மநாபன் (தொ.ஆ.) பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.274,275. 26. பாரதியார் கட்டுரைகள், ப.430. வானதி பதிப்பகம், சென்னை, 1982. 27. Dr. Pon. Kothandaraman ‘A Comparative Study of Tamil and Japanese’, P.53, International Institute of Tamil Studies, Madras, 1994.    2. பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன?     பாரதியார் ‘சுதேசமித்திரன்’ இதழில் மொழி பெயர்ப்பாளராகச் சேர்ந்தபின், அவ்விதழின் ஆசிரியர் ஜி. சுப்ரமணிய அய்யரின் தொடர்பால் அவருக்கு விடுதலையுணர்வு ஏற்பட்டது. இதன் பின்னர் 1905இல் காசியில் நடந்த காங்கிரசு மாநாட்டிற்கு இவர் சென்று வந்தார். வரும் வழியில் கல்கத்தாவில் விவேகானந்தரின் உதவியாளர் நிவேதிதா தேவியைச் சந்தித்து, அவரிடம் உபதேசம் பெற்றார். நிவேதிதா தேவியின் அருளுரையும், வங்கப்பிரிவினையால் ஏற்பட்ட எழுச்சியும் பாரதியை ஒரு  தீவிரவாதியாக மாற்றின. ‘சுதேசமித்திரன்’ மிதவாதப் போக்குடையது; பாரதியோ தீவிரவாதியாக மாறிவிட்டார். பாரதிக்கும், சுதேசமித்திரனுக்கும் கருத்து வேறுபாடு தோன்றவே, பாரதி அதிலிருந்து விலகி மண்டயம் சீனிவாசன் குடும்பத்தார் தொடங்கிய ‘இந்தியா’ வார ஏட்டில் 1906 இல் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். 1906ஆம் ஆண்டு இறுதிவாக்கில் பாரதியார் பால பாரதச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இச்சங்கத்தின் சார்பில் அறைக் கூட்டங்களும் பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இச்சங்கத்தின் சார்பில் பாரதி விஜயவாடாவிற்குச் சென்று விபின் சந்திரபாலரைச் சந்தித்தார். அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து 1907 மே மாதத்தில் திருவல்லிக்கேணி கடற்கரையில் பேச வைத்தார்.1 1907 செப்டம்பரில் விபின் சந்திரபாலா கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து, இச்சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பாரதி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இச் சங்கத்தின் சார்பிலேயே 1907 சூரத் காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.சூரத் மாநாட்டில் தீவிரவாதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் குறைந்தபட்சம் 100 பிரதிநிதிகளையாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று, வ.உ.சி.யுடன் கலந்து, பேசி முடிவு செய்தார். சூரத் மாநாட்டுப் பிரதிநிதிகளின் பயணச் செலவின் ஒரு பாதியை வ.உ.சி.யும், இன்னொரு பாதியை மண்டயம் சீனுவாசனும் ஏற்கும்படிச் செய்தார் பாரதி. 2 1907இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரசுக் கூட்டத்தில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் கடுமையான மோதல் நடந்தது. மிதவாதிகள் சிலர் நாற்காலிகளைத் தூக்கி மேடையில் நின்ற திலகரை அடித்தனர். அவரைச் சென்னைத் தொண்டர்கள் கவசம் போல் சுற்றி நின்று தடுத்தனர். மிதவாதிகளின் கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்த அடியாட்கள் திடீரென்று பெரிய கம்பிகளுடன் மேடைக்கு வந்து சென்னைத் தொண்டர்களை நையப் புடைத்தனர். இதனால் ஆத்திரமுற்ற தீவிரவாதிகள் கால் செருப்பைக் கழற்றி  மேடையில் நின்ற மிதவாதத் தலைவர்களை அடித்தனர். இதனால் மிதவாதத் தலைவர்கள் காவல்துறையை வரவழைத்தனர். மாநாட்டைக் கலைத்து விட்டதாகவும் அறிவித்தனர்.3 காங்கிரசுக் கட்சியில் உட்கட்சிப் பூசல் என்பது இவ்வாறு 1907 - லிலேயே ஏற்பட்டது. 1907இல் சூரத் காங்கிரசு சண்டையில் முடிந்து விடவே, தீவிரவாதிகள் மறுநாள் தனியாகக் கூடித் தனிக் கட்சியாகச் செயல்பட முடிவு செய்தனர். சென்னை மாகாண புதிய கட்சியின் செயலராக வ.உ.சி. சூரத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்.  வ.உ.சி.யின் முயற்சியால் சென்னைத் திருவல்லிக்கேணி கங்கை கொண்டான் மண்டபத்தில் ‘சென்னை ஜன சங்கம்’ என்ற அமைப்பு 11-1-1908 இல் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் நோக்கங்களாவன: சுதேசியம்; அன்னியப் பொருள் மறுப்பு குறித்துப் பிரச்சாரம் செய்தல்; உடற்பயிற்சிக் கழகங்கள் நடத்துதல்; சுதேசியப் பிரச்சாரத்துக்கு இளைஞர்களைத் தயார் செய்தல் முதலியன ஆகும். இச்சங்கம் ஏற்பட்ட பிறகுதான் சென்னை நகரில் ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும் அதிகமாயின. இதனால் அரசின் பார்வை இவர்கள் பேரில் விழுந்தது.4 வ.உ.சி. அவர்களின் முயற்சியால் 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பனி லிமிடெட்’ என்னும் பெயரில் புதிய கம்பெனி அமைக்கப்பட்டது. கம்பெனியின் மூலதனம் ரூ.10,00,000. இதில் பங்கு ஒன்றுக்கு ரூ.25 வீதம் 40,000 பங்குகளாகச் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.5 ஏட்டளவில் அமைந்த இத்திட்டத்தைச் செயலளவில் நிறைவேற்ற வேண்டி மூலதனத்தைத் திரட்ட பெரும் பாடுபட்டவர் வ.உ.சி. அவர்கள். வட இந்தியா நோக்கிச் சென்றபோது “மீண்டும் தமிழகம் திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன். இல்லாவிட்டால் அங்கேயே கடலில் வீழ்ந்து மாய்வேன்” என்று வீரசபதம் செய்து புறப்பட்டார். வ.உ.சி. அவர்கள் பம்பாய் சென்ற போது, அவருடைய மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு இருந்தார். மனைவியோ நிறைமாத கர்ப்பவதி. இந்தச் சூழலில் வ.உ.சி. ஊர் திரும்ப வேண்டும் என உறவினர்கள் வேண்டினர். வ.உ.சி யோ ‘என் மக்களை இறைவன் பார்த்துக் கொள்வான்’ என்று கூறிவிட்டார்.6 வ.உ.சி.யின் கடும் முயற்சியின் விளைவாக ‘எஸ்.எஸ்.காலியோ, எஸ்.எஸ். லாவோ’ என்னும் பெயர்கள் கொண்ட இரு ஸ்டீமர்கள் வெவ்வேறு தேதிகளில் 1907 மே மாதத்தில் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தன. வ.உ.சி.க்கு இருந்த தனிப் பெருஞ் செல்வாக்குக் காரணமாகத் தூத்துக்குடி - கொழும்புவிற்கு இடையே சுதேசிக் கப்பல் போக்குவரத்து வெற்றிகரமாக நடந்தது.7 இதனால் ஆங்கிலேயர்களின் கப்பல் கம்பனிக்கு  இழப்பு ஏற்படவே அவர்களுக்கு வ.உ.சி.யின் மீது ஆத்திரம் அதிகமாயிற்று. வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பாரதி, இம்மூவரும் 1906 முதல் தமிழகத்தில் சுதேசிய உணர்வை தீவிரமாக வளர்த்தனர். இருந்தபோதிலும் வ.உ.சி. மீது தான் ஆங்கிலேயருக்குக் கோபம் அதிகம். 1907 செப்டம்பரில் விபின் சந்திரபாலர் கைது செய்யப்பட்டதை முன்னரே குறிப்பிட்டோம். அவருக்கு 6 மாதம் வெறும் காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. விபின் சந்திரபாலரைக் கைது செய்ததைக் கண்டித்து 17-9-1907 இல் ஒரு கண்டனக் கூட்டமும், 28-9-1907 இல் பாரதி தலைமையில் கண்டன ஊர்வலமும் நடைபெற்றன.8 விபின் சந்திரபாலரின் விடுதலையைக் கொண்டாட 9-3-1908 இல் காவல் துறையின் இசைவுடன் சென்னையில் ஊர்வலமும் கூட்டமும் நடத்தப்பட்டன. இக்கூட்டத்தின் முடிவில் பாரதி கூறியதாவது: “நம் இயற்கை உரிமையில் குறுக்கிடாத சட்டங்களுக்கு நாம் கட்டுப்படுவோம். ஆனால் சட்டங்கள் நம் இயற்கை உரிமையில் குறுக்கிடுமேயானால் சட்டங்களை மீறுவோமாக.”9 என்று முழங்கினார். வ.உ.சி.யும் விபின் சந்திரபாலர் விடுதலை நாளைத் தூத்துக் குடியில் கொண்டாட ஏற்பாடு செய்தார். இதைத் தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர் வின்சிச் 8.3.1908 முதல் தூத்துக்குடியில் முகாமிட்டு வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரை 11.3.1908 அன்று கைது செய்தான். அதனால் திருநெல்வேலியில் மக்கள் கொதித்தெழுந்தனர். வ.உ.சி.க்குப் பின்ஹே என்ற நீதிபதி  இரு ஆயுள் தண்டனைகள் (40 ஆண்டுகள்) விதித்தான். சுப்பிரமணிய சிவாவிற்கு 10 ஆண்டுகள் தண்டனை கொடுத்தான். உயர்நீதிமன்றம் வ.உ.சி.யின் தண்டனைக் காலத்தை 10 ஆண்டுகளாகக் குறைத்தது. மேல் முறையீட்டின் பேரில் 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அவர் பெற்றது கடுமையான கடுங்காவல் தண்டனை ஆகும். முதலில் சணல் உரிக்கும் எந்திரம் சுற்றும் வேலையில் விடப்பட்டார். வ.உ.சி.யின் கைகளில் தோல் உரிந்து புண்ணாகி விட்டன. பின்பு கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் எள் செக்கை இழுக்கச் செய்தனர். சிறிது காலம் கல் உடைக்கச் செய்தனர். வ.உ.சி.யின் சிறைக் கொடுமைகள் சொல்லி மாளாதவை.10   ‘இந்தியா’ இதழில் 1908 பிப்ரவரி முதற்கொண்டு வெளியிடப் பட்ட கட்டுரைகள், கவிதைகள், கருத்துப் படங்கள் ஆகியவை குறித்துச் சென்னை நகரப் போலீஸ் கமிஷ்னர் தலைமைச் செயலருக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆளுநர் மன்ற உறுப்பினர்களில் பலர், இந்தியா பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டினர். இதன்படி இந்தியா ஏட்டின் மீது நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.11   ‘இந்தியா’ இதழின்  ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டுடன் ஒரு போலீஸ்காரன் இந்தியா அலுவலகத்திற்கு வந்து, அப்போது தான் வெளியேறிக் கொண்டிருந்த பாரதியிடம் வாரண்ட் ஒன்றை நீட்டினான். அதைப் படித்த பாரதி, “இது, ஆசிரியருக்கா? ஆசிரியர் நானல்ல” என்று கூறிவிட்டு வெளியேறினார்.12 பாரதிக்குச் சிறை செல்ல விருப்பம் இல்லை. எனவே வீட்டுக்குக் கூடச் செல்லாமல், தன் மனைவியிடம் கூடக் கூறாமல், அன்று இரவே இரகசியமாக யாருக்கும் தெரியாமல் தப்பிப் புதுச்சேரிக்குச் சென்று விட்டார். அவர் சிறைக்குப் பயந்துதான் சென்றார் என்பதை ‘இந்தியா’ இதழின் உரிமையாளர் மண்டயம் சீனிவாசன் கூறியுள்ளார். “பாரதியார் சிதம்பரம் பிள்ளையின் சிறைவாசத்தைக் கண்ட பிறகு தாம் எக்காரணத்தாலும் அப்படிச் சிக்கிக் கொள்ள விரும்ப வில்லை. ‘உரு நிலை தவறி வெறி கொண்டு நம்மைத் துன்புறுத்தப் புகும் ஸர்க்கார் கையில் நமக்குத் தப்ப வழியிருக்கும்போது நாம் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? துஷ்டனைக் கண்டால் தூர விலக வழியிருக்கும்போது, தூர விலகிப் போவோம்’ என்று சொல்லி அவர் புதுச்சேரி செல்லத் தயாரானார். புதுவையில் என் நண்பரான சிட்டி குப்புசாமி அய்யங்காருக்கு ஒரு கடிதம் எழுதி அவரிடம் கொடுத்து அவரைப் புறப்படச் செய்தேன்.”13 பாரதியார் எப்படிப் புதுச்சேரி சென்றார் என்பதைப் பற்றிப் பாரதியின் நண்பர் நீலகண்ட பிரமச்சாரி கூறியுள்ளதாவது: வழக்கமான தனது கிராப்புத் தலையை வைதிகக் குடுமித் தலையாக மாற்றிக் கொண்டு, எழும்பூரில் ரயிலேறினால் தெரிந்து விடுமென்று, சைதாப்பேட்டையில் ரயிலேறிப் புதுவை போய்ச் சேர்ந்தார். அவரது குடும்பம் சென்னையிலேயே இருந்தது.14 பாரதியார் புதுவை சென்ற போது இரயிலில் அவர் மனம் என்ன பாடுபட்டது என்பதைப் பாரதியின் மனைவி செல்லம்மாள் கூறுகிறார். “பாரதியாருக்கு மனதில் ஏதேனும் ஒன்று தோன்ற ஆரம்பித்து விட்டால், அது கொஞ்ச நேரத்தில் போகாது. ரயில் ஏறிய பிறகும் போலீசாரிடம் அகப்படாமல் புதுவை போய்ச் சேர வேண்டுமே என்று கவலைப்பட்டாராம். ரயிலில் யார் வந்து ஏறினாலும், டிக்கெட் பரிசோதகர் வந்தாலும், ஸ்டேஷன் மாஸ்டர் வந்தாலும், போலீசாரால் அனுப்பப்பட்டுத் தம்மைக் கவனிக்க வந்த நபர்களாகவே தோன்றுமாம். பின்பு அச்சமுற்றோன் அழிவான் என்ற மொழிகளை ஞாபகம்படுத்தி மனத்தைத் தேற்றிக் கொள்வாராம்.”15 மேலும் செல்லம்மாள் அவர்கள் கூறியதாவது: “பாரதியாருடன் புதுவை சென்ற நண்பர் அவரைப் புதுவையில் விட்டு விட்டுக் கூடலூர் சென்று என் தமையனிடம் இந்த விஷயத்தைக் கூறினார். அதை என் தமையனார் கேட்டு, பாரதியாரைப் போய்ப் பார்த்து, அவருக்குத் தேவையான துணிமணி முதலியவற்றை வாங்கிக் கொடுத்து விட்டுச் சென்னைக்கு வந்து என்னை அழைத்துப்போய் எங்கள் ஊராகிய கடயத்தில் கொண்டு விட்டார்.”16 ‘இந்தியா’ இதழின் பதிவு பெற்ற ஆசிரியர் முரப்பாக்கம் சீனிவாசன் என்பவர் 21.8.1908இல் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு உண்மையில் எதையும் எழுதத் தெரியாது. பெயருக்குத்தான் அவர் ஆசிரியர். எனவே 12.9.1908இல் இந்தியா ஏட்டின் உண்மையான உரிமையாளர் எஸ். என். திருமலாச்சாரியையும், உண்மையான ஆசிரியரான சி.சுப்பிரமணிய பாரதியையும் விசாரணைக்குப் பயந்து புதுச்சேரிக்கு ஓடினர் எனக் காவல் துறை குறிப்பு எழுதி உள்ளனர்.17 பாரதியார் புதுவை சென்ற சில நாட்கள் கழித்து எஸ்.என். திருமலாச்சாரியும் அங்குச் சென்றார். மீண்டும் புதுவையில் இந்தியா இதழை அச்சடிக்கத் தொடங்கினர். தமிழக அரசினர் 1910இல் ‘இந்தியா’ இதழைத் தமிழக எல்லைக்குள் வரவிடாமல் செய்யவே, அது நின்று போயிற்று.  இந்தக் காலக்கட்டத்தில் 1910 ஏப்ரல் 4ஆம் தேதி அரவிந்தர் புகலிடம் தேடிப் புதுவை வந்து சேர்ந்தார். அதே ஆண்டு அக்டோபரில் வ.வே.சு, அய்யரும் புதுவை வந்து சேர்ந்தார். இவர்களுடன் பாரதி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சந்தித்து உரையாடி வந்தார். இவர்கள் வேதம், உபநிடதம் இவற்றின் பொருட்களைப் புரிந்து கொள்வது குறித்து விவாதம் செய்து வந்ததாகச் செல்லம்மாள் கூறுகிறார்.18 புதுவையில் இவர்கள் மீது போலீஸ் கண்காணிப்பு இருந்து வந்தது. 1911 இல்  வாஞ்சிநாதன் புதுவை சென்றார். ஆஷ்துரையைக் கொல்வதற்கு வ.வே.சு. அய்யர் வாஞ்சிநாதனுக்கு அங்கு ஒரு மாதம் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார். தினந்தோறும் விடியற்காலை 4 மணிக்குக் கரடிக்குப்பம் ஓடையில் நேராகக் குறிபார்த்துச் சுடுவதற்கு வ.வே.சு. அய்யர் வாஞ்சிக்குப் பயிற்சி கொடுத்துள்ளார்.19 வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொலை செய்ய முயன்றது பாரதிக்குத் தெரியும் என்பதைப் பலர் கூறியுள்ளனர். “புதுச்சேரி கிருஷ்ணப் பிள்ளை தோட்டம். நாற்பது பாரத மாதா சங்க வீரர்கள் ஒரு மரத்தடியிலே கூடியிருக்கின்றனர். 14.6.1911 அன்று காளி பூஜை நடக்கிறது. பாரதியின் காளிப்பாட்டு முழங்குகிறது. உள்ளே ஒற்றர் புகாமல் மாடசாமி தோட்டத்தைக் காத்து நிற்கிறான். பாரதியார் ஆவேசத்துடன் பாடுகிறார்...” என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளதைப் பாரதி ஆய்வாளர் தொ.மு.சி. ரகுநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.20 வாஞ்சிநாதன் ஆஷைக் கொலை செய்வது என்று தணிந்து விட்டதை நீலகண்டர் ஏற்கவில்லை. “இதனால் புதுவையில் நீலகண்டருக்கும் வாஞ்சிக்கும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டது. கவி பாரதியாரும் வாஞ்சியின் பக்கம்தான் ஆதரவைத் தெரிவித்தார்” என்று நீலகண்டரின் தம்பி லட்சுமி நாராயண சாஸ்திரி கூறியுள்ளார். 21 7.6.1911 அன்று ஆஷ் துரையைக் கொலை செய்து விட்டுத் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்த வாஞ்சிநாதனின் சட்டைப் பையில் பாரதியின் மறவன் பாட்டும், ஒரு கடிதமும் இருந்தன. எனவே இக்கொலைக்குப் பாரதியாரும் உடந்தை என அரசு குற்றம் சாட்டியது.22 பாரதியைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.1000 பரிசு என அரசு அறிவித்தது. ஆஷ் துரையை வாஞ்சிநாதன் ஏன் சுட்டுக் கொன்றான் என்பதை அவன் சட்டைப் பையில் இருந்த கடிதம் மூலம் அறிய முடிகிறது. அக்கடிதத்தில் பின் வருமாறு கண்டிருந்தது: “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜூனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை. இப்படிக்கு, சு.வாஞ்சி அய்யர்.” 23 என்ற கடிதம் அவனது சட்டைப் பையில் இருந்தது. ஆஷ் துரையைக் கொன்றதனால் வாஞ்சி நாதனைப் பெரிய தியாகி என்று பலர் கூறுகின்றனர். விடுதலைப் போராட்ட வீரன் வாஞ்சி என்றும் கூறுகின்றனர். ஆனால் வாஞ்சி எழுதியுள்ள கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இந்து தர்மம் ஆங்கிலேயர்களால் அழிகிறதே என்ற எண்ணத்தினால் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறதே தவிர உண்மையான தேச விடுதலையின் பொருட்டன்று என்பதேயாகும். ஆஷ் கொலைக்கும் பாரதிக்கும் தொடர்பு உள்ளது என்பதை முன்பு சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனால் பாரதியார் தண்டனைக்குப் பயந்து, தனக்கும் அக்கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என 8.4.1914 இல் இங்கிலாந்தின் தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மெக்டனால்டுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “ஆஷ் வழக்கு விசாரணையில் வெளியான மற்றொரு விஷயம், கொலைக்குப் பல மாதங்களுக்கு முன்பு அவர் புதுச்சேரி வந்தார் என்பதாகும். ஆனால் அவரைப் புதுவையில் பார்த்ததாகச் சாட்சியம் அளித்த தபால் ஆபீஸ் குமாஸ்தா கூட ... வாஞ்சி அய்யர் என் வீட்டுக்கு வந்தார் என்றோ ... என்னைச் சந்தித்து என்னுடன் காணப்பட்டார் என்றோ சொல்லத் துணியவில்லை.”24 இக்கடிதத்தில் மேலும் பாரதி எழுதியிருப்பது என்னவென்றால், 1912 இலேயே தன் நிலையை விளக்கிச் சென்னை கவர்னராக இருந்த லார்டு கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். 25 சென்னை கவர்னராக லார்டு பெண்ட்லாண்டு வந்ததும் பாரதி தன் நிலையை விளக்கி அவருக்கும் ஒரு நீண்ட கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 26 “நான் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி மூன்று வருஷங்களுக்குப் பிறகு, தொலைதூரத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் ஒரு சிற்றூரில் யாரோ ஒருவர், கொடுங்கோன்மைக்குப் பெயர் வாங்கிவிட்ட ஒரு கலெக்டரைச் சுட்டுக் கொன்றாரென்பதால், போலீஸ் கீழ் மட்ட ஆட்களது யோசனையின் பேரில் பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை அந்தக் கொலைச் சதிக்கு உடந்தையாக்கி என் மீது வாரண்டு பிறப்பித்தது... ஆனால் மேன்மை தாங்கிய கவர்னரின் விருப்பம் கூட அவருடைய பிற்போக்கான சகாக்களால் தடுக்கப்படுகிறதென நான் கருத வேண்டியிருக்கிறது. ஆகையால் பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவராகிய உங்களுக்கு நான் இந்த வேண்டுகோளை அனுப்புகிறேன்... நீங்கள் எனக்கு லார்டு பெண்ட்லாண்ட் நீதி வழங்க அவருக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்.” 27 பாரதியின் இக்கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்ன? பாரதி ஆங்கிலேயரின் தயவின் மூலம் வழக்கு எதுவும் இல்லாமல்  இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார். இப்போது அவரிடமிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு என்பதே போய் விட்டது. மேலே கண்ட கடிதத்தை எழுதிய அதே 1914 ஆம் ஆண்டில் தான், பாரதி அச்சமில்லை என்ற பாடலை இயற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும் ......     ......       ....... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! 28 பாரதி ஆங்கில ஆட்சியின் தயவை நாடி 1912, 1913, 1914 என்று தொடர்ந்து அவர்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த போதுதான் இப்பாடலை அவர் இயற்றியுள்ளார். பெரும்பாலான தமிழறிஞர்களும், பாரதி ஆய்வாளர்களும், இப்பாடலை மேற்கோள் காட்டிப் பாரதியின் வீரத்தைப் புகழ்கின்றனர். ஆனால் உண்மையில் பாரதி வீரமுடன் வாழ்ந்தாரா என்றால் இல்லை என்பதுதான் இதன் மூலம் நமக்கு விடையாகக் கிடைக்கிறது. 1916 மே25 இல் சுதேசமித்திரனில் ‘சுய ஆட்சியைப் பற்றி ஒரு யோசனை’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கருத்து வருமாறு : “பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சி கொடுக்க  வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்தோறும் லட்சக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த ஷனமே பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” 29 என்ற முடிவுக்கு வந்து விட்டார். பாரதிக்கு ஆங்கிலேயரைத் துரத்த வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மாறிவிட்டது. 1916இல் ஆங்கிலேயர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே அவர் கருத்து கொண்டிருக்கிறார். 1916 டிசம்பர் 26ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் அவர் எழுதுகிறார்:  “எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு-செலவு உட்பட எல்லா விவகாரங் களுக்கும், மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் சேர்ந்து விண்ணப்பம் செய்கிறோம்.” 30 பாரதிக்குப் புதுவை வாழ்க்கை கசந்தது. முதல் உலகப் போரின் முடிவினால் பிரிட்டிஷ் அரசின் அணுகு முறையில் மாற்றம் இருக்கும் எனக் கருதி பாரதி தமிழகம் வர சென்னை அரசுக்கு எழுதிக் கேட்டுக் கொண்டு, 20.11.1918 அதிகாலை தன் மனைவி, மைத்துனர் ஆகியோருடன் புதுவை எல்லையைக் கடந்து விடுகிறார். சென்னை மாகாணப் போலீஸ் திருப்பாதிரிப்புலியூரில் பாரதியை மட்டும் கைது செய்து, கடலூர் துணை நீதிபதி முன் கொணர்ந்தனர். 1914ஆம் ஆண்டு இந்திய நுழைவுத் தடைச் சட்டத்தின் கீழ் பாரதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.31 கடலூர் வழக்கறிஞர்கள் சடகோபாச்சாரியும், நடராஜ அய்யரும் பாரதியை ஜாமீனில் விடுவிக்க முயன்று தோற்றனர். பாரதிக்குக் கடலூர்  சப்-ஜெயில் வசதியற்றது என்று பாரதி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கேப்பர் குவாரியிலுள்ள கடலூர் ஜில்லா மத்திய சிறைக்கு மாற்றினார்கள். 32 பின்னர் பாரதி கடலூர் சிறையில் இருந்தபடியே சென்னை மாநில ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-         Om Sakthi District Jail, Cuddalore, 28 November - 1918. To, His Excellency Lord Pentland, Governor, Fort St.George, Madras.   The Humble petition of C.Subramania Barathi,   May it please your excellency,   It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy. I.G (C.I.D) was send by your Excellency’s Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any  restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position. Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in  the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a  man of my birth and status and full of dangerous possibilities to my health. I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding. I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life. I beg to remain Your Excellency’s most obedient Servant C. Subramania Bharathi. (G.O. No.1331 dt. 18.12.1918 Public) 32   இக்கடிதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது, பாரதி புதுவையில் இருந்தபோதே சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுதி, சென்னை அரசு டி.ஐ.ஜி.யைப் புதுவைக்கு அனுப்பி பாரதியை விசாரித்து, அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இல்லை என்று தெரிந்து அரசுக்குத் தெரிவித்த பிறகுதான் பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் பாரதி வந்ததாகக் கூறுகிறார் என்பதே.  அரசியலை விட்டு அறவே ஒதுங்கி சட்டத்துக்குட்பட்டு அமைதியான பிரிட்டிஷ் குடிமகனாக வாழ ஒப்புக்கொள்கிறார். ஆங்கில ஆளுநர் நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறார். 33 கடலூர் சிறைக்கு ரங்கசாமி அய்யங்கார் வந்து பாரதியைக் கண்டார். பின் ரங்கசாமியின் முன் முயற்சியால் அன்னிபெசண்டு, சி.பி. இராமசாமி அய்யர், நீதிபதி மணி அய்யர் ஆகியோர் பாரதியின் விடுதலை குறித்து ஆளுநரைச் சந்தித்து வேண்டினர்.34 மாநில அரசு மீண்டும் டி.ஐ.ஜி.யை அனுப்பியது. கீழ்க்கண்ட நிபந்தனைகளின் பேரில் பாரதி விடுதலை செய்யப்பட்டார். அவை:   1. நெல்லை மாவட்டத்தில் பாரதி விரும்பும் இரண்டு ஊர்களில் எதிலாவது ஒன்றில் மட்டுமே வாழ்க்கை நடத்த வேண்டும். 2. பாரதியின் படைப்புகள், பேச்சுகள் ஆகியவற்றை முன் கூட்டியே குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பி அவற்றைத் தணிக்கை செய்த பின்னரே வெளியிட வேண்டும். 3. அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் பாரதி நீங்கி விட வேண்டும்.” இந்த  மூன்று  நிபந்தனைகளையும்  எழுத்துப் பூர்வமாகப் பாரதி ஒப்புக் கொண்ட பின்னர் மாவட்ட நீதிபதி 14.12.1918 இல் பாரதியை விடுதலை செய்தார். 35 ஆகவே, பாரதி சிறையில் இருந்த  மொத்த  நாள்கள் 20.11.1918 முதல் 14.12.1918 வரையுள்ள 25 நாள்களேயாகும். அதற்குள் அன்றைய பார்ப்பன உலகமே அதிர்ந்து போய் அவருடைய விடுதலைக்குப் பாடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலே கண்ட நிபந்தனைகளைப் பாரதி ஏற்றுக் கொண்டு  நேராகக் கடயம் சென்று விட்டார். அங்கே சமயத் தொடர்பாகப் பேசியும், எழுதியும் வந்தார். அரசியல் வாடை என்பதே அவரிடம் துளியும் இல்லை. மேலே கண்ட நிபந்தனைகளைத் தாம் ஏற்றுக் கொண்டுள்ளதைப் பற்றிப் பரலி சு, நெல்லையப்பருக்குப் பாரதி எழுதியுள்ள கடிதத்திலும் குறித்துள்ளார். 21 டிசம்பர் 1918 இல் இக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. “ஸ்ரீமான் நெல்லையப்ப பிள்ளைக்கு, நமஸ்காரம். நான் ஸெளக்யமாகக் கடயத்துக்கு வந்து சேர்ந்தேன்..... ‘பாஞ்சாலி சபதம்’ இரண்டு பாகங்களையும் ஒன்றாகச் சேர்த்து அச்சடிப்பதற்குரிய ஏற்பாடு எதுவரை நடந்திருக்கிறதென்ற விஷயம் தெரியவில்லை. இனிமேல் சிறிது காலம் வரை நான் ப்ரசுரம் செய்யும் புஸ்தகங்களை போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் காட்டி அவருடைய அனுமதி பெற்றுக் கொண்ட பிறகே ப்ரசுரம் செய்வதாக ராஜாங்கத்தாருக்கு நான் ஒப்பந்தமெழுதிக் கொடுத்திருக்கிறேன்...... அப்படியே காண்பித்தாலும் தவறில்லை; நமது நூல் மாசற்றது. டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் ஹானிங்டன் எனக்கு மிகவும் அன்புள்ள ஸ்நேஹிதர். தங்கமான மனுஷன். ஆதலால் அநாவசியமான ஆஷேபங் கற்பித்து நமது கார்யத்தைத் தடை செய்பவரல்லர். நீயே மேற்படி நூலை அவரிடங் காட்டி அனுமதி பெற்றுக் கொள்ளுக....” உனதன்புள்ள சி. சுப்பிரமணிய பாரதி. 36   பாரதி, காந்தியைச் சந்தித்தாரா? முதலில், இது குறித்து வ.ரா. கூறுவதைப் பார்ப்போம். “1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தி சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜி கத்தீட்ரல் ரோடு இரண்டாம் நம்பர் பங்களாவில் குடியிருந்தார். காந்தி வழக்கம்போல் திண்டு மெத்தையில் சாய்ந்து கொண்டு வீற்றிருந்தார்... ஒரு பக்கத்துச் சுவரில் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்து நின்று கொண்டிருந்தனர். அந்தச் சுவருக்கு எதிர் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார்கள். நான் வாயில் காப்போன். யாரையும் உள்ளே விடக் கூடாது என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு. அந்தச் சமயத்தில் பாரதியார் மடமடவென வந்தார். “என்ன ஓய்” என்று சொல்லிக்கொண்டே, அறைக்குள்ளே நுழைந்து விட்டார். உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. பாரதியார் : மிஸ்டர் காந்தி, இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப்போகிறேன். அந்தக்   கூட்டத்துக்குத் தாங்கள்தலைமை வகிக்க முடியுமா? காந்தி : மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன? மகாதேவ : இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு நாம் வேறொரு இடத்தில் இருக்க வேண்டும். காந்தி : அப்படியானால் இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா? பாரதி : முடியாது, நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி. தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன். பாரதியார் போய்விட்டார். நானும் வாயில்படிக்குப் போய்விட்டேன். பாரதியார் வெளியே போனதும், “இவர் யார்?” என்று காந்தி கேட்டார்”..... ராஜாஜி தான் அவர் எங்கள் தமிழ் நாட்டுக்கவி என்று சொன்னார். அதைக் கேட்டதும், “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்றார் காந்தி” என்று வ.ரா. கூறுகிறார்.37 காந்தி சென்னைக்கு வந்தது 18.3.1919 இல். அன்று மாலையே கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் காந்தி பேசிய பின் மூன்று பேர் மூன்று மொழிகளில் சொற்பொழி வாற்றினார்கள். மதுரை ஜார்ஜ் ஜோசப் ஆங்கிலத்திலும், வ.உ.சி. தமிழிலும், ஹரி சர்வோத்தமராவ் தெலுங்கிலும் பேசினார்கள்.38 20.3.1919 இல் காந்தியின் வருகைக்கு நன்றி தெரிவித்து கடற்கரையில் ஒரு பெரும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சரோஜினி நாயுடு, டி.வி. கோபாலசாமி முதலியார், எஸ். சோமசுந்தர பாரதி (இவர் தமிழில் பேசினார்) ... சத்தியமூர்த்தி தீர்மானங் கொண்டு வந்தார்.39 இந்தக் காலக்கட்டத்தில் பாரதியார் காவல் துறைக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி கடயத்தில் இருந்தார். 1919 மே மாதத்தில்தான் பாரதி அரசிடம் நிபந்தனை தளர்வு பெற்றதாக கோ. கேசவன் குறிப்பிட்டுள்ளார்.40 அப்படியிருக்கும்போது 1919 மார்ச்சில் காந்தி சென்னை வந்தபோது, பாரதி எப்படி சென்னைக்கு வந்திருக்க முடியும்? 1919 பிப்ரவரியில் பாரதி காந்தியைச் சென்னையில் சந்தித்தார் என்பது எப்படிச் சரியாகும்? பாரதி 1919இல் சென்னை வந்தார் என்றால் எத்தனை நாள் இருந்தார்? எங்கே தங்கினார். என்பதற்கு அவருடைய வாழ்க்கை வரலாற்றில் எங்குமே சான்றுகள் கிடைக்க வில்லையே! மேலும் காந்தி வந்திருந்தபோது ராஜாஜி, சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார் எல்லாரும் வீட்டில் இருந்தனர் என்றும், அதே நேரத்தில் அவர்கள் யாரையும் கேட்காமலேயே பாரதி நேரடியாக முன்பின் பார்த்திராத காந்தியிடம் தாம் பேசவிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்க அழைத்ததாகவும் வ.ரா. கூறுகிறார். அப்படியானால் சென்னையில் பாரதிக்குக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து கொடுத்தது யார்? பாரதிக்கு அப்போது எந்த வகையான அரசியல் உணர்வு இருந்தது? சென்னையில் தனியாகக் கூட்டம் நடத்த அவருக்கு என்ன வாய்ப்பு இருந்தது? காந்திக்கு ராஜாஜிதான் பாரதியை அறிமுகப்படுத்தினார் என வ.ரா. கூறுகிறார். ஆனால் காந்தியோ ராஜாஜியைப் பற்றிக் கூறும்போது, சென்னையில் அவரோடேயே நாங்கள் தங்கினோம்.  ஆனால் அவருடன் இரு தினங்கள் தங்கியிருந்ததற்குப் பின்னாலேயே இதை நான் கண்டுபிடித்தேன். ஏனெனில் நாங்கள் தங்கியிருந்தது ஸ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்காருக்குச் சொந்தமான பங்களாவாகையால் அவருடைய விருந்தினராகவே நாங்கள் தங்கியிருக்கிறோம் என்று எண்ணினேன். ஆனால் மகாதேவ தேசாய் எனக்கு விஷயத்தைக் கூறினார். அவர் வெகு சீக்கிரத்தில் இராஜகோபாலாச்சாரியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டுவிட்டார். இராஜகோபாலாச்சாரியாரோ தமது சங்கோஜத் தன்மையினால் எப்பொழுதும் பின்னுக்கே இருந்து வந்தார். ஆனால் மகாதேவ தேசாய் இவருடன் நீங்கள் நெருங்கிய பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு நாள் சொன்னார் என்று காந்தி கூறுகிறார்.41  இதிலிருந்து காந்தியும், இராஜாஜியும் அப்போதுதான் முதல் முறையாகச் சந்தித்தார்கள்; எனவே சரியான பேச்சுப் பழக்கம் இல்லை என்பது தெரிகிறது. அப்படி இருக்கும்போது ராஜாஜி எப்படிப் பாரதியைக் காந்திக்கு அறிமுகப்படுத்தியிருக்க முடியும்? பாரதி காந்தியைச் சந்தித்தார் என்றும் பாரதி ஒரு பெரிய மகான்; அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று காந்தி கூறினார் என்றும் வ.ரா. கூறுவது பாரதிக்குப் புகழ் வரவேண்டும் என்பதற்காக ஜோடிக்கப்பட்ட ஒரு கற்பனையேயாகும் என்றால் அது மிகையாகாது. உண்மையிலேயே பாரதியைக் காந்தி அப்படிப் போற்றி யிருந்தால், பாரதியின் மறைவு 11.9.1921 இல் நேர்ந்த சில நாள்கள் கழித்து, 15.9.1921 இல் காந்தி சென்னைக்கு வந்து 10 நாள்களுக்கு மேல் தமிழகத்தில் தங்கிப் பல இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசியிருந்தும், பாரதியைப் பற்றிக் காந்தி எங்குமே குறிப்பிடப் படவில்லை எனத் ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலாசிரியர் அ. இராமசாமி குறிப்பிடுகிறார்.42 உண்மையில் பாரதி மீது காந்தி உயர்ந்த மதிப்பு வைத்திருந்தால் அவரைப் பற்றிப் பேசியிருக்க மாட்டாரா?    திலகர் மறைந்தபோது, 1.8.1920 இல் அங்குச் சென்றார் காந்தி. திலகரின் பாடையைத் தூக்குவதற்குத் தோள்கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த பார்ப்பனர்கள், “நீ வைசியன், இந்தப் பாடையைத் தொடக்கூடாது” எனக் கூறி, அவரைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள்.43 திலகரின் மறைவிற்குக் காங்கிரசில் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தனர். காந்தியும் நேருவும் நேரில் சென்றிருந்தனர். ஆனால் இதுபோன்ற எதுவுமே பாரதிக்குக் காந்தியால் நடைபெற வில்லையே! 27.8.1920 இல் திருநெல்வேலியில் தமிழ்நாடு காங்கிரசின் மாகாண மாநாடு நடந்தது. அப்போது பாரதி கடையத்தில் தான் இருந்தார். திருநெல்வேலி அங்கிருந்து மிக அருகில்தான் உள்ளது. எனினும் அம்மாநாட்டிற்குப் பாரதியார் செல்லவில்லையே ஏன்?44 பாரதி காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்டாரா? பாரதி காந்தியைப் புகழ்ந்து பாடல் எழுதியுள்ளார் என்பது உண்மை. ஆனால் காந்தியின் ஒத்துழையாமைக் கொள்கையைப் பாரதி ஏற்றுக் கொள்ளவில்லை. 12.8.1920இல் காந்தி சென்னையில் பேசும்போது, ஒத்துழையாமையை மிகத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். “பதினாறு வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் தாய் - தந்தை அனுமதியளிக்காவிட்டாலுங் கூடத் தங்கள் மனசாட்சி ஏற்றுக் கொள்வதானால் கல்லூரிகளையும், பள்ளிகளையும் புறக்கணிக்க வேண்டும்” 45  என்று கூறினார். பாரதி இதை மறுத்து 30.12.1920 இல் சுதேசமித்திரன் ஏட்டில் எழுதியதாவது: “இப்போது காண்பிக்கப்பட்டிருப்பதாகிய முதற்படியின் முறைகளால், அந்தப் பயன் எய்துவது சாத்தியமில்லை. தேசாபிமானிகள் மாத்திரமே சட்டசபை ஸ்தானங்களைப் பகிஷ்காரம் செய்ய, மற்ற வகுப்பினர் அந்த ஸ்தானங்களையெல்லாம் பிடித்துக் கொள்வார்கள். இந்தியாவில் ஆங்கில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்தல் அரிதென்று தோன்றுகிறது. இங்ஙனமே வக்கீல்கள் தம் உத்தியோகங்களையும், பிள்ளைகள் படிப்பையும் விடும்படிச் செய்தல் இப்போது நம்மால் முற்றிலும் ஸாதிக்க முடியாத விஷயமாகத் தோன்றுவதுடன் குறிப்பிட்ட பயனெய்தி விடுமென்று தீர்மானிக்கவும் இடமில்லை.” 46 1921 இல் பாரதி சென்னை மாகாணத்தில் அரசியல் வளர்ச்சி என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார். அதில் புதுவையில் “நான் எவ்வளவோ தடுத்தும் கூட இந்தியா ஏட்டில் தீவிரமான கருத்துகள் வெளிவர அனுமதிக்கப்பட்டன” 47 என்று எழுதியுள்ளார். மேற்கண்ட சான்றுகளின் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், பாரதி 1906 முதல் 1908 வரை ஏகாதிபத்திய எதிர்ப்பில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்றும் 1908 இல் புகலிடம் தேடிப் புதுவைக்குச் சென்றவுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு குறைய ஆரம்பித்து, பாரதியின் கடைசிக் காலத்தில் அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வே இல்லாமல் போயிற்று என்பதே உண்மையாகும். அடிக்குறிப்பு   1. கோ. கேசவன், பாரதியும் - அரசியலும் ப.76 2. மேற்படி நூல் ப.77,78 3. வ.உ.சி. யும் பாரதியும் (தொ.ஆ.) இரா.வெங்கடாசலபதி, மக்கள் வெளியீடு, சென்னை, ப.31,32 4. கோ. கேசவன், பாரதியும் - அரசியலும், ப.79 5. என். சம்பத், பெ.சு.மணி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ப.98 6. மேற்படி நூல் ப.102 7. மேற்படி நூல் ப.105 8. கோ. கேசவன், பாரதியும் - அரசியலும் ப.77 9. மேற்படி நூல் ப.80 10. என். சம்பத், பெ.சு.மணி, வ.உ. சிதம்பரம் பிள்ளை, ப.173-183 11. கோ.கேசவன், பாரதியும் - அரசியலும் ப.108 12. பிரேமா நந்தகுமார், சுப்பிரமணிய பாரதி, ப.32 13. வ.உ.சி.யும் பாரதியும், ப.152 14. பாரதியைப் பற்றி நண்பர்கள் (தொ.ஆ.) இரா.அ. பத்மநாபன், ப.58 15. பாரதியார் சரித்திரம், செல்லம்மா, ப.55 16. மேற்படி நூல், ப.57 17. கோ.கேசவன், பாரதியும்- அரசியலும் ப.209 18. பாரதியார் சரித்திரம், செல்லம்மா, ப.65 19.   V.V.S. Iyer. R.A. Padmanaban, P.111  20. தொ.மு.சி. ரகுநாதன், பாரதி காலமும் கருத்தும், ப.410 21. மேற்படி நூல், ப.411 22. பாரதி புதையல் பெருந்திரட்டு (தொ.ஆ) ரா.அ. பத்மநாபன், ப.22 23. ஆ. சிவசுப்பிரமணியன், ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும், மக்கள் வெளியீடு, ப.30 24. பாரதியின் கடிதங்கள் (தொ,ஆ.) ரா.அ. பத்மநாபன், ப.47 25. மேற்படி நூல் ப.51 26. மேற்படி நூல் ப.53 27. மேற்படி நூல் ப.55 28. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.நி. 1994, ப.254 29. பாரதித் தமிழ் (தொ.ஆ.) பெ.தூரன். ப.175 30. மேற்படி நூல் ப.223 31. கோ.கேசவன், பாரதியும் அரசியலும் ப.130 32. பாரதியின் கடிதங்கள், ப.57 33. ப.இறையரசன், இதழாளர் பாரதி, நி.செ.பு.நி,, ப.396,398 34. ரா.அ. பத்மநாபன், சித்திரபாரதி, ப.138 35. கோ.கேசவன், பாரதியும் அரசியலும், ப.130,131 36. பெ. தூரன், பாரதித் தமிழ் (தொ.ஆ.) ப.297,298 37. வ.ரா., மகாகவி பாரதியார், பழனியப்பா பிரதர்ஸ், ப.163-165 38. அ. இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, ப.235-237 39. மேற்படி நூல் ப.239 40. கோ,கேசவன், பாரதியும் அரசியலும், ப.214 41. அ.இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, ப.245 42. மேற்படி நூல், ப.319 43. தனஞ்செய்கீர் லோக்மான்ய திலகர், பாப்புலர் பிரகாசன், பம்பாய் (ஆங்கில நூல்), ப.442 44. கோ.கேசவன், பாரதியும் அரசியலும், ப.214 45. அ.இராமசாமி, தமிழ் நாட்டில் காந்தி, ப.274 46. பெ.தூரன், பாரதித் தமிழ் (தொ,ஆ) ப.340 47. பாரதிப் புதையல் பெருந்திரட்டு ப.553     3.  பாரதியின் பார்ப்பன இன உணர்வு         பாரதிக்கு இளமைக் காலம் முதலே பார்ப்பன இன உணர்வு இருந்து வந்துள்ளது என்பதை வாழ்க்கை வரலாறு, கவிதைகள், கதைகள், கட்டுரைகள் முதலியவற்றைப் படிக்கும் போது அறிய முடிகிறது. ஆகவே இவருடைய பார்ப்பன இன உணர்வு எத்தகையது என்பது இவண் ஆராயப்படுகிறது. பாரதியார் தன்னுடைய சுயசரிதையைக் ‘கனவு’ என்ற தலைப்பில் 1910இல் வெளியிட்டுள்ளார். இதில் இவருடைய இளமைக் காலத்தில் தன்னுடைய தந்தைக்கு வறுமை நிலை வந்ததைக் கூறும் போது கீழ்க்கண்ட வாறு கூறுகிறார்: பார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்திய பாழடைந்த கலியுகம் ஆதலால் வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே மேன்மை கொண்ட தொழில் எனக்கொண்டனன் 1 எனக் கூறுகிறார். பார்ப்பனர்கள் உடல் வியர்க்க வேலை செய்யக்கூடாது என்பது மனு தர்மத்தின் விதி. இந்தப் பாழாய்ப் போன கலியுகத்தில் தன்னுடைய தந்தை வியர்வை சிந்திப் பொருள் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேர்ந்தது என்று உளம் நொந்து கூறுகிறார். ‘சமூகம்’ என்ற தலைப்பில் பாரதி நால்வருணத்தை மிகவும் வலியுறுத்திப் பாடுகிறார்: வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான் நீதி நிலை தவறாமல் - தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன் பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி நாலு வகுப்புமிங்கு ஒன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச் சிதைந்தே - செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி 2 இங்குப் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும் என்கிறார் பாரதி. நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்கிறார். அப்படியானால் பார்ப்பானுக்கு என்றைக்கும் சூத்திரன் உழைத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்; பார்ப்பான் கோவில் பூசை செய்து விட்டு நோகாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார். ‘கண்ணன் என் தந்தை’ என்ற பாடலிலும் பாரதி நால் வருணத்தைக் கெடுத்து விட்டார்களே எனக் கூறி வருந்துகிறார்: நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதர் 3 என்கிறார். பாரதி தமிழகத்தில் வாழ்ந்தாலும் வடவரின் ஆரியக் கலாச்சாரத்தை விரும்பினார் என்பதைப் பின்வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது: வேள்விகள் கோடி செய்தால் - சதுர் வேதங்கள் ஆயிரம் முறைப்படித்தால் மூளும் நற்புண்ணியந்தான் 4 பாரதியின் பாடல்களில் சில பார்ப்பனர்களைக் கண்டிப்பது போலத் தோன்றும். அவற்றைப் படித்து விட்ட, அறிஞர்களில் சிலர், பாரதி பார்ப்பனர்களை எப்படியெல்லாம் கண்டிக்கிறார் பாருங்கள் என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொள்ளுவதோடு, பாரதியைப் பார்ப்பனிய எதிர்ப்பாளர் எனக் காட்ட முனைகின்றனர். உண்மையில் பாரதி அந்த எண்ணத்தோடுதான் அப்படிப் பாடினாரா என்பது ஆய்வுக்குரியதாகும். எடுத்துக்காட்டாக, ‘ஸ்வதந்திரப் பள்ளு’ என்ற பாடலில் பாரதி பின்கண்டவாறு எழுதுகிறார்: பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே - வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே 5 இந்தப் பாடலைப் பாரதி பள்ளர்கள் களியாட்டம் ஆடுவதாகக் கருதி இயற்றியுள்ளார். எனவே பாரதி மகிழ்ச்சியோடுதான் இப்பாடலை இயற்றியுள்ளார் என எண்ணத் தோன்றும். பாரதியின் இப்பாடலுக்கு மயங்காத தமிழ் அறிஞர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இந்தப் பாடலை இவர் மகிழ்ச்சியோடு பாடவில்லை என, ‘இந்தியா’ ஏட்டின் உரிமையாளர்களில் ஒருவரான மண்டயம் சீனிவாசன் கூறுகிறார். “எம்மிடம் பாரதியார் அடிக்கடி வருவதுண்டு. எது பாடினாலும்,  தான் விஷேஷமாக எது எழுதினாலும், என்னிடத்தில் அதை முதலில் வந்து காட்டாமல் இருக்க மாட்டார்.  நான் என்ன வேலையா யிருந்தாலும் அதைச் சட்டை செய்யாது,  தனியிடத்திற்கு அழைத்துப் போய் அதைப் படித்துக் காட்டுவார்.  அவருடைய ‘பூபேந்திர விஜயம், சுதந்திரப் பள்ளு, ஞானரதம்’ முதல்பகுதி இவைகளை அவர் ஆவேசத்தோடு படித்துக் காட்டியது எனக்கு இப்பொழுதும் ஞாபகமிருக்கிறது. ‘பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’ என்ற பாட்டில் தாழ்ந்த நிலைமையில் கிடக்கும் பார்ப்பானை ஏன் பழிக்கிறீர் என்று நான் கேட்டதற்கு, நான் பழிக்கவில்லையே,  அவன் அந்த உயர்ந்த நிலைக்கு அருகனல்ல, தாழ்ந்து கிடக்கிறான் என்று தானே நானும் சொல்கிறேன் என்றார்”6 எனப் பாரதியின் பார்ப்பன நண்பரே கூறியுள்ளார். அதைப் போல ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்ற பாடல். இந்தப் பாடலைப் படித்தவுடன் பாரதி பார்ப்பனர்களை  எவ்வளவு கடுமையாகச் சாடுகிறார் எனத்தோன்றும். இந்தப் பாடலை முழுமையாகப் படித்துப் பார்த்தால்தான் இதன் பொருள் நன்கு விளங்கும். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வாளராக இருந்தபோது எழுதப்பட்டது இப்பாடல். அப்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டும்தான் காவல் துறையில் பணியாற்றினார்கள். நம்மவர்களால் சாதாரணக் காவலர் வேலையில் கூடச் சேர முடியாத காலம் அது. காவல் துறையில் பணியாற்றிய பார்ப்பனர்கள் பாரதிக்குச் சில துன்பங்களை விளைவித்து வந்தனர். (ஆதாரம் : பாரதி - காலமும் கருத்தும்; ஆசிரியர் : தொ.மு.சி. இரகுநாதன்) எனவேதான் பாரதி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு - ஐயோ நாளெல்லாம் சுற்றுதலே உழைப்பு பாயும் கடிநாய்ப் போலிசுக் - காரப் பார்ப்பனுக் குண்டிதிலே - பிழைப்பு பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால் பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான் யாரானாலும் கொடுமை இழைப்பான் - துரை இம்மென்றால் நாய்போல உழைப்பான். முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் சொல்வார் மூன்றுமழை பெய்யுமடா மாதம் இந்நாளில் பொய்மைப் பார்ப்பார் - இவர் ஏதும் செய்தும் காசுபெறப் பார்ப்பார்7 இப்பாடல் மூலம் பாரதி உணர்த்துவது என்ன? வேதம் ஓதும் பார்ப்பானை உயர்த்திப் போற்றும் பாரதி வெள்ளையனிடம் போலீசாக இருக்கும் பார்ப்பனர்களை மட்டுமே கண்டிக்கிறார். பார்ப்பான் மற்றவர்களால் அய்யர் என்று அழைக்கப்படவேண்டும் என்பதே பாரதியின் உட்கிடக்கை என்பது இதன் மூலம் புலனாகிறது. பாரதி புதுவையில் இருந்தபோது கனகலிங்கம் என்ற ஆதித் திராவிடருக்குப் பூணூ ல் மாட்டி விட்டு, “உன்னை இன்று முதல் பார்ப்பான் ஆக்கி விட்டேன்” என்று கூறினார். இதனால் பாரதி ஒரு சாதி ஒழிப்பு வீரர் என்று பலர் கருதுகின்றனர். கனகலிங்கம் என்பவர் வள்ளுவர் சாதியைச் சேர்ந்தவர். வள்ளுவர்கள்தான் ஆதித் திராவிடர்களின் வீடுகளுக்குப் புரோகிதம் செய்யச் செல்வார்கள். பறைச்சேரிக்குப் பார்ப்பனர்கள் செல்வதில்லை. பார்ப்பனர்கள் மேல்சாதியினர் வீடுகளில் செய்யும் சடங்குகளைப் பறைச்சேரியில் வள்ளுவர்கள்தான் செய்வார்கள். எனவேதான் பாரதி கனகலிங்கம் என்ற வள்ளுவனுக்குப் பூணூல் மாட்டி விட்டு, ‘உன்னைப் பார்ப்பான் ஆக்கிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். கனகலிங்கம்  வள்ளுவன்தான் என்பதை பாரதியே உறுதிப்படுத்தியுள்ளார்: “எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன்மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன். அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு.”8 இந்து மதத்தைக் காப்பதற்காகப் பார்ப்பனர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி.  இதையேதான் பாரதி செய்துள்ளார். ஆரிய சமாஜ்யம் இதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.  ஆதி திராவிடர்கள் பிற மதங்களுக்கு செல்லாமல் இருப்பதற்காகச் செய்யப்படும் செயல் இது.  இதை எப்படிப் புரட்சிகரமானச் செயலாகக் கருத முடியும்? நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த நாட்டினில் இல்லை; குணம் நல்ல தாயின்             எந்தக் குலத்தினரேனும்; உணர் வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம். 9 என்று பாரதி பாடியுள்ளதால், பாரதிக்குச் சாதி உணர்வு இல்லை எனப் பலர் கருதுகின்றனர். பாரதி நந்தனை ஏன் உயர்வாகப் பாடினார் என்றால், நந்தன் ஒரு பார்ப்பன அடிமை என்பதாலேயே. தில்லை நகருக்கு வந்தவன் ஊருக்குள் கூட நுழையவில்லை. பல நாட்கள் தில்லை நகரின் எல்லையிலேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். தீட்சிதர்கள் கனவில் சிவன் தோன்றி நந்தனைத் தீக்குளிக்கச் செய்து அழைத்து வரும்படிக் கூறியதாக நந்தனிடம் கூறி, தீக்குளிக்கச் செய்தனர். நந்தன் தீயில் இறங்கிச் செத்தான். ஆனால் அவன் பார்ப்பன வடிவம் பெற்றுச் சிவனடி சேர்ந்ததாகப் பார்ப்பனர் கதை கட்டி விட்டார்கள். நந்தன் புரட்சிகர குணமேதுமின்றி, பார்ப்பனர்கள் சொல்லியபடியெல்லாம் செய்ததால்தான் பாரதி நந்தனைப் புகழ்கிறார். குணத்தினால் ஒருவன் மேல்சாதி ஆக முடியாது என்று பாரதிக்குத் தெரியாதா என்ன? பாரதி மனுநீதி முதலான சாத்திரங்களை ஆழமாகப் படித்தவர். பாரதி நந்தனைப் பார்ப்பான் எனப் புகழ்வது ஒரு வஞ்சகமே. பாரதியின் சமகாலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்காக அரசியல், சமுதாய இயக்கம் நடத்திய அயோத்திதாசப் பண்டிதர் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா ஆகியவர்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே, ஏன்? அதற்குப் பதிலாக நந்தனையும் சாமி சகஜானந்தரையுமே பாரதி ஆதித்திராவிடர்களுக்கு வழிகாட்டிகளாகக் காட்டுகிறாரே, ஏன்? பாரதி மீசை வைத்துக்கொண்ட  காரணத்தினால் கூட, சிலர் இவர் பார்ப்பனர்களுக்கு எதிர்ப்பாக மீசை வைத்துக் கொண்டதாக நம்புகின்றனர். ஆனால் உண்மை அப்படி இல்லை. பாரதியே கூறக் கேட்போம்: “வேத பூமியாகிய ஆரிய வர்த்தத்தில் பிராமணர்களில் மீசை இல்லாமலிருப்பது சாஸ்திர விரோதமென்ற பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போனதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருஷங்களுக்கு முன்பு நான் ஸ்ரீகாசியில் ஜய நாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து வாசிக்கப்போனேன். நான் தமிழ் நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ்நாட்டுப் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகச் சவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சரியப்பட்டனர். எப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளேயே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத் தீர்த்தான். ‘உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரம் தவறாமல் செத்துப் போய்க்கொண்டிருக்கிறார்களா?’ என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதின் காரணத்தை அறிந்து கொண்டு, “அப்படி யில்லையப்பா! தமிழ் நாட்டில் பிராமணர் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிவித்தேன்” 10 என்று பாரதி கூறியுள்ளார். பாரதி காசியில் படித்ததால் வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்பற்றி மீசையை வைத்துக் கொண்டார் என்பதே உண்மை. சென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க் என்னுமிடத்தில் டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசும்போது பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். இது குறித்துப் பாரதி எழுதுவதைப் பார்ப்போம். “சென்னைப் பட்டினத்தில் நாயர், கஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.” 11 “என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத்தான் நடத்துகின்றார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?” 12 டாக்டர் நாயரின் ஸ்பர்டேங்க் உரையைப் படித்துப் பார்த்தால் அதில் அவர் பார்ப்பனர்களை அடியுங்கள் உதையுங்கள் என கூறியதாகத் தெரியவில்லை. அவருடைய கூட்டம் கேட்டுவிட்டு வந்த சிலர் ஆத்திரமுற்று ஒரு சில பார்ப்பனர்களை அடித்ததாகவே வைத்துக்  கொள்வோம். சென்னையில் உள்ள பார்ப்பனரை அடித்தால் புதுவையில் உள்ள பாரதிக்கு ஏன் கோபம் வர வேண்டும்? பாரதி 20.11.1918 வரை புதுவையில் இருந்தார். டாக்டர் நாயர் பஞ்சமர் மாநாட்டில் பேசியது 7.10.1917இல். பெரியார் சொல்லுவாரே, “கன்னியாகுமரியில் உள்ள பார்ப்பானுக்கு கொட்டினால் காஷ்மீரில் உள்ள பார்ப்பானுக்கு நெறிகட்டிக் கொள்ளும்” என்று, அது, பாரதிக்கும் இங்கு முற்றிலும் பொறுந்திவிடுகிறது. ‘ஆரியர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?’ என்பதைப் பாரதி ஆய்வு செய்து எழுதுகிறார். “ஆரியராகிய நாம் ஏன் வீழ்ச்சி பெற்றோம்? நமது தர்மங்களை இழந்ததினால். அறிவை அபிவிருத்தி செய்தல்; பல்லாயிர வகைப்பட்ட சாஸ்திரங்கள், அதாவது அறிவு நூல்களைப் பயிற்சி செய்து வளர்த்தல், தர்மத்தை அஞ்சாது போதனை செய்தல் முதலியன பிராமண தர்மங்களையும், வீரத் தன்மையைப் பரிபாலித்தல் முதலிய ஷத்திரிய தர்மங்களையும் வியாபாரம், கைத்தொழில் என்ற வைசிய, சூத்திர தர்மங்களையும் நாம் சிதைய இடங்கொடுத்து விட்டோம்... இதுவே நமது வீழ்ச்சியின் காரணம்.” 13 பாரதி தன் கதைகளில் கூட, பார்ப்பனச் சாதியின் உயர்வைப் பற்றியே கூறுகிறார். ‘பிராயச்சித்தம்’ என்ற கதையில் சாதிகெட்ட பார்ப்பனனைச் சாதியில் சேர்க்க ரூ.50,000 செலவு செய்யும்படிக் கூறிக் கதையை முடிக்கிறார். அக்கதையின் சுருக்கம் வருமாறு: “ஆங்கிலம் படித்த ராமச்சந்திரய்யர் என்பவர் வெளிநாடு சென்று ‘மேரி குட்ரிச்’ என்ற வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வருகிறார். இங்கு வந்தவுடன் அந்த வெள்ளைக்காரப் பெண் நம்ம ஊர் பார்ப்பனப் பெண்களைப் போலவே ‘மடிசார்’ புடவை கட்டிக்கொள்கிறாள். தன் பெயரையும் ஸீதா தேவி என்று மாற்றி வைத்துக் கொள்கிறாள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு அசல் பார்ப்பனப்பெண் போலவே மாறிவிட்டாள். அவள் கணவன் கடல் கடந்து வந்ததினாலும், வேறு இனத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாலும், அவனை மீண்டும் பிராமணர் சாதியில் சேர்க்க அவ்வூர் பார்ப்பனர்கள் மறுக்கிறார்கள். அப்போது மாஷாபூப் தீஷிதர் என்பவர், “ப்ராம்ஹணா மமதேவதா! (பிராமணர் எனக்குத் தெய்வம்) என்று ஸ்ரீமந் நாராயணனே சொல்லுகிறார்; அப்படியிருக்கையில் யாரும் பிராமணப் பதவியிலிருந்து நழுவக் கூடாது, நழுவினாலும் மறுபடி சேர்ந்து கொள்ள வேண்டும்” என்கிறார். இக்கதையின் முடிவில், ரூ. 50,000 செலவு செய்து (ப்ராயச் சித்தம்) சாதி கெட்ட பார்ப்பனரான ராமச்சந்திர தீட்சிதரைப் பார்ப்பனச் சாதியில் சேர்த்துக் கொள்வதாகக் கதை முடிகிறது.” 14 பாரதியார் தன்னுடைய கடைசிக் காலத்தில் எழுதிய கதை ‘சந்திரிகையின் கதை’. இக்கதை முழுவதையும் எழுதி முடிக்கும் முன்பே அவர் இறந்து விட்டார். இக்கதையில் சுப்புசாமிக் கோனாருடைய மகள் மீனாட்சியின் மீது கோபால் அய்யங்காருக்குக் காதல் ஏற்படுகிறது. அந்த அய்யங்கார் இடையர் வீட்டிற்கு வந்து பெண் கேட்கிறார். அதற்கு அந்தக் கோனார், ‘நான் சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். சூத்திரச் சாதியைச் சேர்ந்தவன் நான். என்னுடைய பெண்ணைப் பிராமணருக்குக் கலியாணம் செய்து கொடுப்பதனால் எனக்குப் பாவம் வந்து சேரும். எனவே எனக்கு இதில் சம்மதம் இல்லை’ என்கிறார். இதைக் கேட்ட கோபால் அய்யங்கார்... ‘நிஜமான பிராமணன் பிராமண குலத்தில் மாத்திரமன்றி மற்ற நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாமென்று சாஸ்திரம்  சொல்லுகிறது.  இந்த விஷயத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், என்னிடத்தில் தமிழில் மனு ஸ்மிருதி இருக்கிறது. உங்களிடம் அந்த நூ78-790லைக் காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்துப் பாருங்கள்’ என்கிறார்.15 இக்கதையின் மூலம் பார்ப்பனர்கள் எந்தச் சாதியில் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்பதைப் பாரதி மனுநீதியை ஆதாரம் காட்டி முடிக்கிறார். ஆனால் பார்ப்பனப் பெண்களைப் பிற சாதியில் திருமணம் செய்விக்கப் பாரதி எதிர்ப்பாகவே இருந்துள்ளார் என்பதைப் பின்வரும் சான்று மூலம் அறியலாம். “பாரதி கடயத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, பாரதி நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால்தான் என்ன? என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்விக்க வேண்டியது.  அதன் பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்” என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப் பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச்சேர்ந்தார். அப்போது காலை 11 மணி இருக்கும். நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக் கைகளைப் பற்றி விமர்சிக்கவும் ஊரார் பயப்படுவார்கள். மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தம் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார். வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம் “உன் போன்ற மானங் கெட்டவர்களின் செய்கையால் தானே நாராயணப்பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று” என்று சொல்லி, அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்து விட்டார். அர்ச்சகர் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப்பிள்ளைக்குக் கட்டுக் கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி பாரதியின் மைத்துனர் அப்பாதுரையை வரச் சொன்னார். பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியைக் கடயத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக் கட்டிவிடப் போவதாக எச்சரித்தார் நாராயணப்பிள்ளை. பாரதி வீட்டில் ஒரே குழப்பம்; கலக்கம். முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2.30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள். பாரதி புறப்பாட்டு வரும் செய்தி சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி ஐயங்காருக்கும், நண்பர் வக்கீல் எஸ். துரைசாமி ஐயருக்கும் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது.” 16 எனப் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள ரா.அ.பத்மநாபன் கூறியுள்ளார். பாரதி சென்னைக்கு வந்தது கூட ஒரு விபத்துதான். அரசியல் நடத்த அவர் சென்னைக்கு வரவில்லை. பார்ப்பனப் பெண்ணைக் கீழ்ச்சாதிக்காரன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது  பார்ப்பன ஆண் எந்த சாதி பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதுதான் அவரின் கருத்தாக உள்ளது. பாரதியார் ‘ஞானரதம்’ என்ற கதையில் நால்வருணத்தை வலியுறுத்தியுள்ளார். “ஜனங்களுக்கு ஏற்படக் கூடிய துன்பங்களுக்கெல்லாம் அறிவின்மையே காரணமாதலாலும், அந்த அறிவின்மை ஏற்படாமற் பாதுகாப்பதே பிராமணன் கடமையாதலாலும் பிராமணர்களே பொறுப்பாளிகளாவார்கள். ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் சூத்திர தர்ம போதனையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண்மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும். ஷத்திரிய தர்மத்திற்கும், பிராமண தர்மங்களுக்கும் ஊனம் நேரிடுமாயின் ஜன சமூகம் முழுவதுமே ஷீணமடைந்து போய்விடும்” 17 என்கிறார். இந்த உலகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர 1917இல் பாரதி கூறும் வழி என்னவென்றால் மீண்டும் நால்வருணம் தோன்ற வேண்டும் என்பதே: “கலியுகம் ஐயாயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு புதுயுகம் பிறக்கும். அதுதான் கலியுகத்துக்குள்ளே கிருதயுகம். அப்போது இந்த உலகமே மாறும்; அநியாயங்களெல்லாம் நொறுங்கித் தவிடு பொடியாகி விடும். நாலு குலம் மறுபடியேற்படும். அந்த நாலு குலத்தாரும் வெவ்வேறு தொழில் செய்து பிழைத்தாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்ய மாட்டார்கள். அன்பே தெய்வமென்று தெரிந்து கொள்வார்கள். அன்பிருந்தால் குழந்தையும் தாயும் ஸமானம்; ஏழையும் செல்வனும் ஸமானம். அப்போது மாதம் மூன்று மழை நேரே பெய்யும், பஞ்சம் என்ற வார்த்தையே இராது. தெற்குத் தேசத்தில் பிராமண குலத்தில் கபில முனிவரும் அகப்பேய்ச் சித்தரும் திரும்பி அவதாரம் செய்வார்கள். அவர்கள் ஊரூராகப் போய் ஜனங்களுக்குத் தர்மத்தைச் சொல்லி ஜாதி வழக்கை எல்லாம் தீர்த்து வைப்பார்கள். அப்போது தர்மம் நிலை பெறும்.18” 1919 சூன் மாதம் பாரதி கடயத்தில் இருந்தபோது அவர் மகள் தங்கம்மாவிற்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்தினம் வரை பாரதிக்கு இச்செய்தி தெரியாது. மறுநாள் காலை திருமணம் நடக்க வேண்டும். பாரதியின் மைத்துனர் அப்பாதுரைக்குத் தூக்கமே வரவில்லை. விடியற்காலை 4 மணிக்குத் தங்கை செல்லம்மாவை அழைத்துக் கொண்டு பாரதியிடம் சென்று, ‘இன்று உன் மகள் திருமணம். நீ வந்து தாரை வார்த்து உன் பெண்ணைக் கன்னிகாதானம் தர வேண்டும்’ என்றனர். பாரதி மகிழ்ச்சியுடன் ‘சரி’ என்றார். அங்கேயே அவசர அவசரமாக வெந்நீர் தயாராயிற்று. பாரதி ஸ்நானம் செய்து, அழகாகப் புத்தாடை அணிந்து கிரமமான முறையில் மணப்பந்தலுக்கு வந்தார். வழக்கமான தலைப்பாகை கோட்டு இன்றி, நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்து, பளிச்சென்ற பூணூ லுடன், பஞ்ச கச்சக் கோலத்தில் அவரைக் கண்டோர் வியந்து மகிழ்ந்தனர். அதை விட ஆச்சரியம் தந்தது அவர் ஸம்ஸ்க்ருத மந்திரங்களை அழுத்தந் திருத்தமாக அர்த்தபுஷ்டியுடன் உச்சரித்துப் பக்திச் சிரத்தையுடன் கிரியைகளை நடத்தியதாகும்”19 மேற்கண்ட தகவலைப் பாரதி வரலாற்று நூல் ஆசிரியர் ரா.அ. பத்மநாபன் தெரிவிக்கிறார். கடைசிக் காலத்தில் எல்லோருக்கும் பூணூ ல் அணிவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். அவர் கூறுவதைப் பாருங்கள்: “ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியபடி, எல்லோரையும் ஒரேயடியாக பிராமணர்களாக்கிவிட முடியுமென்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்களிருக்கச் செய்து விட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்ராயம். எந்த ஜாதியாகயிருந்தாலும் சரி, அவன் மாம்ஸ பஷணத்தை நிறுத்தும்படிச் செய்து அவனுக்கு ஒரு பூணூ ல் போட்டுக் காயத்ரி மந்திரம் கற்பித்துக் கொடுத்து விட வேண்டும்.”20 மேற்கண்ட சான்றுகளினால் பாரதிக்கு இளமையில் காசியில் படித்த காலந் தொட்டு கடைசிக் காலம் வரையிலும், பார்ப்பன இன உணர்வு மேலோங்கி இருந்தது என்பதை ஒவ்வொருவரும் அறியலாம்.   அடிக்குறிப்பு   1. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ, ப.311 2. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ. ப.371 3. மேற்படி நூல், ப.566 4. மேற்படி நூல், ப.233 5. மேற்படி நூல், ப.83 6. வ.உ.சி.யும் பாரதியும் (தொ.ஆ.) இரா.வெங்கடாசலபதி ப.141 7. பாரதி புதையல் பெருந்திரட்டு ப.22 8. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.395 9. பாரதியார் கவிதைகள், ப.277 10. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.29 11. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப. 12. மேற்படி நூல், ப.394 13. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.458 14. மேற்படி, ப.115-123 15. பாரதியார் கவிதைகள், வானதி பதிப்பகம், ப.219 16. சித்திரபாரதி, ரா.அ. பத்மநாபன், ப.164 17. பாரதியார் கதைகள், ப.72,73 18. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.244,245 19. சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.148 20. பாரதியார் கட்டுரைகள், ப.401     4. பாரதியின் பார்வையில் திராவிடர் இயக்கம்          1916ஆம் ஆண்டின் கடைசியில் சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேசனார் மற்றும் பலர் ஒன்றாகச் சேர்ந்து அரசியலிலும், சமூகத்திலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பார்ப்பனரல்லாதார் இயக்கமான “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த இயக்கம் பார்ப்பனரல்லாதார் உயர்விற்காகவும் உரிமைக்காகவும் பாடுபட்டது. அந்தக் காலக்கட்டத்தில் பாரதி இவ்வியக்கத்தைப் பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதை இங்கே காண்போம். பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றிப் பாரதியார் 1917இல் சுதேசமித்திரனில் எழுதியதாவது:- “இந்தப் பிராமணரல்லாதார் கிளர்ச்சி”, கால கதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்க ளிருக்கின்றன. முதலாவது, இதில் உண்மை இல்லை. உண்மையாகவே இந்தியாவில் ஜாதிபேதங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற ஐக்கிய புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் சேர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும், ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, முனிசிபாலிடி, சட்டசபை முதலியவற்றில் கௌரவ ஸ்தானங்களையும் தாமே அடையவேண்டுமென்ற ஆவலுடையவர்களே இக்கிளர்ச்சியின் தலைவராக வேலை செய்து வருகிறார்கள். ‘பிராமணரல்லாதார்’ என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது. ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து கொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது; எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப் போலவே இந்த முறையால் பந்தப்பட்டிருக்கிறார்கள். பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம் சம்பந்தம், சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன. ‘பிராமணரல்லாதார்’ என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு, இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன்..” “பொய்யும் புனைவுமாகத் திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும்”1 என்று பாரதி கூறியுள்ளது எவ்வளவு பெரிய ஏமாற்று, புரட்டுத்தனம்! இந்தப் பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சி பொய்யான கிளர்ச்சியாம்; அதன் தலைவர்கள் பதவி வெறி பிடித்தவர்களாம்; ஆரியர்கள், திராவிடர்கள் என்று கூறி அபாண்டமான அர்த்தம் கற்பித்துக் கொண்டார்களாம். அந்தக் கிளர்ச்சியில் உண்மை இல்லாததால் விரைவில் அழிந்து விடும் என்று பாரதி கூறியுள்ளார். ஆனால் அவ்வியக்கம் அன்று தென்னாட்டில் மட்டும்தான் இருந்தது. இன்றோ அது இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம் பாரதியின் கணிப்பில்தான் உண்மையில்லை என்பது தெரிகிறது. பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சினை வந்தவுடன் பாரதி பார்ப்பனர்களைக் காப்பதற்காக, ஆர்.எஸ்.எஸ். பாணியில் வேண்டுமென்றே ஒரு குழப்பமான கருத்தை எழுதுகிறார். பிராமணர் யார்? ஓர் உபநிஷத்தின் கருத்து  என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு பாரதி எழுதியுள்ளார்: “பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன் என்று வேத சாஸ்திரத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்று பரிசோதிக்கத் தக்கதாகும்... பிராமணன் வெள்ளை நிறமுடையவன்; ஷத்திரியன் செந்நிறமுடையவன்; வைசியன் மஞ்சள் நிறமுடையவன்; சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும் உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரமஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின் பிறப்புப் பற்றிப் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று... ஏனெனில் பல ரிஷிகள் ஜந்துகளுக்குப் பிறந்திருக்கிறார்கள், ஆயின் அறிவினால் பிராமணன் என்று கொள்வோமாயின் அதுவுமன்று. அப்படியானால் யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி  ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.”2 வேதம், உபநிடதம், மனுநீதி முதலியவற்றை நன்கு படித்த பாரதியாருக்குப் பிறப்பினால்தான் பிராமணன் என்பது தெரியாதா என்ன? தெரியும். நம் முன்னோர்கள் பிராமணர் அல்லாதார் வளர்ச்சிக்கு என ஒரு கட்சி வைத்தவுடன் நம் மக்களைக் குழப்பத்தில் தள்ளவே பாரதி இக்கருத்தை எழுதியுள்ளார். இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பாரதியின் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள். பாரதியைப் பின்பற்றித்தான் துக்ளக் ‘சோ’ “எங்கே பிராமணன்?”  என்று எழுதினார் போலும்! 1920 டிசம்பர் 1ஆம் தேதியன்று பாரதியார் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ‘திராவிடக் கஷி’ என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆரியர் - திராவிடர் என்பதெல்லாம் பொய் என்றும், கிறித்தவப் பாதிரிகள் இந்து மதத்தை அழிக்க இக்கதைகளைக் கட்டி விட்டதாகவும் கூறுகிறார். “ஹிந்து மதத்தை வேரறுத்து, இந்தியாவில் கிறிஸ்து மதத்தை ஊன்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு வேலை செய்து வரும் அப்பாதிரிகள்,  ஹிந்து மதத்துக்குப் பிராமணரே இதுவரை காப்பாளிகளாக இருந்து வருதல் கண்டு அந்த பிராமணரை மற்ற ஜாதியார் பகைக்கும்படிச் செய்தால் தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினார்கள். இங்ஙனம் மற்ற ஜாதிப் பிள்ளைகளுக்கு ஹிந்து மதத்தில் துவேஷ புத்தியுண்டாக்குவதற்கு அடிப்படையாகப் பிராமணத் துவேஷம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கருத்துடையோர் சென்னை நகரத்து முக்கியமான கல்விஸ்தலங்கள் சிலவற்றிலுமிருந்து நெடுங்காலமாக வேலை செய்து வருகிறார்கள். காமம் குரோதம் முதலிய தீய குணங்களை வேதம், அஸுரரென்று சொல்லி அவற்றைப் பரமாத்மாவின் அருள்வடிவங்களாகிய தேவர்களின் உதவியால், ஆரியர் வெற்றி பெறுவதற்குரிய வழிகளைப் பற்றிப் பேசுகிறது; இந்த உண்மையறியாத ஐரோப்பிய ஸம்ஸ்க்ருத வித்வான்கள் சிலர் அஸுரர் என்று முற்காலத்தில் ஒரு வகுப்பு மனிதர் இந்தியாவில் இருந்தார்களென்றும், அவர்களை ஆரியர் ஜயித்து இந்தியாவின் ராஜ்யத்தைப் பிடித்துக்கொண்டு அதன் பூர்வ குடிகளைத் தாழ்த்தி விட்டனரென்றும் அபாண்டமான கதை கட்டி விட்டார்கள். இதை மேற்கூறிய கிறிஸ்துவப் பாதிரிகள் மிகவும் ஆவலுடன் மனனம் செய்து வைத்துக் கொண்டு தம்மிடம் இங்கிலிஷ் படிப்புக்காக வரும் பிள்ளைகளில் பிராமணரைத் தவிர மற்ற வகுப்பினர் தென்னிந்தியாவில் மாத்திரம் அஸுர வம்சத்தாரென்றும், ஆதலால் பிராமணர் இவர்களுக்குப் போன யுகத்தில் (வேதமெழுதிய காலத்தில்) விரோதிகளாக இருந்தனரென்றும், ஆதலால் இக்காலத்தில் அந்தப் பிள்ளைகள் அஸுரக் கொடியை மீளவும் தூக்கிப் பிராமணரைப் பகைக்க வேண்டுமென்றும் போதிக்கத் தொடங்கினார்கள்... ஆனால் இதில் மற்றொரு விநோதமுண்டு. அஃதியாதென்றால் இந்தியாவில் பிராமணர்களிலேயே முக்கால் பங்குக்குமேல் பழைய சுத்தமான ஆரியர்கள் அல்லரென்றும் விசேஷமாகத் தென்னிந்தியாவில் இவர்கள் பெரும்பகுதி அஸுர வம்சத்தாருடன் கலந்து போனவர்களின் சந்ததியாரென்றும், அப்பாதிரிகளும் அவர்களுக்கு இந்த அம்சத்தில் குருக்களான ஐரோப்பியப் பண்டிதரும் தெரிவிக்கிறார்கள். எனவே பிராமணராகிய நாங்கள் இப்போது உங்களைப் போல அஸுரராய் விட்ட பிறகும் நீங்கள் எங்களைப் பகைக்க வேண்டுமென்று அந்தப் பாதிரிகள் போதிப்பது முன்னுக்குப் பின் முரண்படுகின்றதன்றோ? மேலும் இந்தத் திராவிடர் என்போர், அஸுர, ராஷஸர்களின் ஸந்ததியா ரென்பதும், அவர்களிடமிருந்து பிராமணர் ராஜ்யம் பிடித்த கதையும் யதார்த்தமென்று வேடிக்கைக்காக ஒரு ஷணம் பாவனை செய்து கொள்வோம். அப்படிக்கிருந்தாலும் அந்த ஸம்பவத்தின் பிராமணரின் மந்திரத்தால் அஸுரர்களை ஜயித்ததாகத் தெரிகிறதேயன்றி மாக்ஸ்முல்லரின் கருத்துப் படிக்கும் பிராமணர் அரசாண்டதாகத் தெரியவில்லை.” பிராமணர்களையடுத்து ஷத்திரியர்களே ராஜ்ய மாண்டனரென்று தெரிவிக்கப்படுகிறது. இது நடந்தது ஐரோப்பிய பண்டிதரின் கணக்குப்படிப் பார்த்தாலும் எண்ணாயிர வருஷங்களுக்குக் குறைவில்லை. இப்படியிருக்க அந்தச் சண்டை மறுபடி மூட்டுவது என்ன பயனைக் கருதி? 3 இப்போது தெரிகிறதா பாரதி எந்த முகாமில் இருந்தார் என்று? அன்று பாரதி கூறிய இந்தக் கருத்தைத்தான் இன்றைய ஆர்.எஸ்.எஸ். காரர்களும் வேதவாக்காகக் கொண்டுள்ளனர். பாரதி தன் சாதிக்கு உயர்வு வேண்டும் என்கிறபோது மூச்சுக்கு முந்நூறு தரம் ஆரியர் வீரத்தைப் பற்றிப் பேசுகிறார். அதற்கு எதிர்ப்பாகத் திராவிடர்கள் கட்சியைத் தொடங்கியவுடன் ஆரியர் - திராவிடர் போராட்டம் பொய்க்கதை என்றும் கிறித்துவப் பாதிரிகளின் தூண்டுதல் என்றும் கதை அளக்கிறார். பாரதிக்குத் திராவிடர் இயக்கத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருந்தது என்பதை, அவர் நண்பர் ஆர். சீனிவாசவரதன் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது. அவர் 1920இல் திருநெல்வேலியில் நடை பெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரசு மாநாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்புகையில் கடயத்தில் பாரதியைச் சந்தித்தபோது நடந்த சம்பவம் இது. “பாரதியிடம் அவ்வூர் அன்பர்கள் சிலர் வந்தனர். நடந்த சம்பாஷணையிலிருந்து அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போலத் தோன்றிற்று. ‘அன்பர்களே! ஆரியர்களுக்கு முன்னால் திராவிடர்கள்; அவர்களுக்கு முன்னால் ஆதித் திராவிடர்கள். அதற்கு முன் இருந்தது மிருகங்கள்; ஜீவராசிகள். அவை வாழ்ந்த இடத்தை வெட்டித் திருத்தி வீடு கட்டிப் பயிர் செய்து நாம் வாழ்கின்றோம். அவை உரிமை கொண்டாடினால் அனைவரும் அவைகளிடம் விட்டு விட்டுப் போகவேண்டியதுதான்!’ என்று பாரதி கூறினார்”4 என்கிறார். டாக்டர் டி.எம். நாயர் ‘ஜஸ்டிஸ்’ இதழில் திராவிடருக்குத் தனிநாடு கொடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைக் கிண்டலடித்துப் பாரதி கூறியது இது. இப்படிப்பட்ட பாரதியைத்தான் நம்மில் பலர் போற்றுகிறார்கள் என்பது வேதனையாக உள்ளது. திராவிட இயக்கத்தின் தலைவர்களைத் தேச விரோதிகள் என்கிறார் பாரதியார். “டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கஷியார் என்ற போலிப்பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்ய பாஷா விரதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது”5 என்று கூறுகிறார் பாரதியார். டாக்டர் நாயர், தியாகராய செட்டியார் போன்றவர்களெல்லாம் 1916 வரையில் காங்கிரசில் இருந்தவர்கள்தான். அதில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் கண்டு சகிக்க முடியாமல்தான் 1916 இல் திராவிடர் இயக்கத்தைத் தொடங்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். டாக்டர் நாயர் சுய நலமே இல்லாதவர் என்பதைப் பாரதியே 1906 இல் எழுதியுள்ளார். 1906ஆம் ஆண்டு சென்னை நகராட்சி உறுப்பினர்களில் இருந்து ஒருவரைச் சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். அன்று 32 உறுப்பினர்கள் வந்திருந்தனர். அவர்களில் நால்வர் போட்டியிட்டனர். முதல் முறை ஓட்டு வாங்கிய விவரம்:   டாக்டர் டி.எம். நாயர் 10 பி.எம். சிவஞான முதலியார் 10 ஸர்.வி.ஸி. தேஸிகாச்சாரி 6 சர்.பிட்டி.தியாகராய செட்டியார் 5 கூடுதல் 31 16 ஓட்டுக்குமேல் வாங்கினால்தான் ஒருவராவது சட்டமன்றத்திற்குச் செல்ல முடியும். எனவே தியாகராய செட்டியார் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இரண்டாம் முறை ஓட்டுகள் பெற்ற விவரம்: டாக்டர் டி.எம்.நாயர் 14 பி.எம். சிவஞான முதலியார் 11 ஸர்.வி.ஸி. தேஸிகாச்சாரி   7 கூடுதல் 32 சபைத் தலைவர், குறைவாக ஓட்டு வாங்கிய தேசிகாச்சாரியாரை விலகிக் கொள்கிறாரா என்றார். அவர் விலக மறுத்துவிட்டார். இதேநிலை நீடித்தால் மாநகராட்சியின் சார்பாக ஒருவரும் சட்டமன்றம் செல்ல முடியாது. எனவே டாக்டர் டி.எம். நாயர் அதிக வாக்குகள் பெற்றும் தான் போட்டியிலிருந்து விலகிவிட்டார். அந்த நேரத்தில் பாரதி எழுதியதாவது: “தக்க சமயத்தில் டாக்டர் நாயர் விலகிக் கொள்ளாவிட்டால் சரியான மெஜாரிட்டி (16 வோட்டு) எவருக்கும் கிடைக்காமல் கார்ப்பரேஷன் மெம்பர் சட்டசபையில் இருப்பதற்கே இடமில்லாமல் போயிருக்கும். அதனால் கார்ப்பரேஷனுக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டிருக்கும். அந்த அவமானம் ஏற்படாமல் தடுத்த பெருமை டாக்டர் நாயருக்கே உரித்தாகும். என்றபோதிலும் மிகவும் தகுதி பெற்றவரும் அதிக வோட்டுகள் பெற்றவருமாகிய டாக்டர் நாயர் விலகிக் கொண்டமை மிகுந்த வருத்த முண்டாக்குகிறது.”6 இப்படி 1906 இல் டாக்டர் நாயரைப் பற்றிப் பெருமையாக  எழுதிய பாரதி 1917இல் டாக்டர் நாயரைத் தேசவிரோதி என்று எழுதுகிறார் என்றால் என்ன காரணம்? திராவிடர்கள் தனி இயக்கம் தொடங்கி விட்டார்களே என்ற ஆத்திரம்தானே! வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 1916 காலக் கட்டத்தில் பாரதி பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரரா என்ன? இல்லையே! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் 1916 டிசம்பர் 26 இல் பாரதி, சுதேசமித்திரன் ஏட்டில் ஆங்கிலேயர் வெளியேற வேண்டாம் என்றுதானே எழுதியுள்ளார்!   “எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு-செலவு உட்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்கவேண்டும். அவ்வளவுதான்; மற்றபடி ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை”7 என்கிறார் பாரதி.  1916 ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்ன பாரதி நீதிக்கட்சித் தலைவர்களைத் தேசவிரோதிகள் என்று கூறுவது பார்ப்பனச் சாதி வெறி ஒன்றைத் தவிர வேறென்ன? நீதிக்கட்சி அமைச்சரவை அமைந்தபோது அதையும் கிண்டலாகவும், குத்தலாகவும் எழுதுகிறார் பாரதி. “புதிய யுகம் வரப்போகிறது; மாண்டேகு ஸ்வராஜ்யக் குட்டி போடப்போகிறார் என்று சத்தம் போட்டதெல்லாம் கடைசியாக வெங்கட்ட ரெட்டி, ஸுப்பராயலு ரெட்டி, ராமராயனிங்கார் என்ற மூவரும் நம்முடைய மாகாணத்துக்கு மந்திரிகளாக வந்திருக்கிறார்கள். இஃதென்ன விநோதம்!” என்கிறார் பாரதியார். பாரதியார் டிராம் வண்டியில் செல்வது போலவும் எதிரிலே இரண்டு பேர் உரையாடுவது போலவும் ஒரு கற்பனைச் சித்திரம் வரைந்துள்ளார். அதிலே ஒரு முதலியார் கூறுவதாகப் பாரதி எழுதுகிறார். “பிராமணர்கள் வந்தால் அதியமாக ஆங்கிலேய உத்தியோகஸ்தருக்கு அடிமைப்பட மாட்டார்கள். எனவே ஜனங்களுக்குக் கொஞ்சம் நியாயம் கிடைக்கும். மற்றக் கூட்டத்தார் இன்னும் சரியாகப் படிக்கவில்லை.” கலாசாலை மாணாக்கராகிய ஒரு அய்யர் கூறுவதாகப் பாரதி எழுதுவதாவது: “பிராமணரைத் தவிர வேறு ஜாதியாரை நியமிப்பதில் பிராமண துவேஷம் ஒன்றையே பெருங்கடமையாகவும் பரம தர்மமாகவும், ஜன்ம லஷ்யமாகவும் நினைக்கிறவர்களை விட்டு, இதர ஜாதியாரிலும் பிராமண துவேஷமில்லாதவர்களையே லார்ட் வில்லிங்டன் நியமித்திருக்கவேண்டும்’ என்றார். மீண்டும் முதலியார் கூறுவதாகப் பாரதி எழுதுவதாவது: ‘இதுவரை பிராமணரைப் பகைத்துக் கொண்டிருந்த போதிலும் இப்போது மந்திரி ஸ்தானம் கிடைத்ததிலிருந்தேனும், இவர்கள் அதிகப் பொறுப்புணர்ச்சியுடன் விசால புத்தி உடையவர்களாய்த் தமது பெயரைக் காத்துக்கொள்ள வேணும். இயன்றவரை எல்லா வகுப்பினருள்ளும் பஷாபாதமில்லாமல் பொதுவாக நடந்து வர முயற்சி செய்வார்களென்று நம்புகிறேன்’ இவர் சொல்லியதில் ஒருவித உண்மையிருக்கக் கூடுமென்று என் புத்திக்குப் புலப்பட்டது என்கிறார் பாரதி.”8 இது நீதிக்கட்சி அமைச்சரவைக்குப் பாரதி விடுத்த எச்சரிக்கை என்றே கொள்ளலாம். வகுப்புரிமைக் கொள்கையை ஏற்று முதன் முதலில் நீதிக்கட்சி ஆட்சியில் 1921இல் ஆணை பிறப்பித்த உடனேயே அதை மிகக் கடுமையாக எதிர்த்தவர் பாரதியார். 1921 சனவரி 19ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் வகுப்புரிமையைக் கண்டித்து பாரதி எழுதியதாவது: “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முறையை ஒழித்து விடவேண்டும், அது வெறும் சதி, ஏமாற்றென்பது ருஸுவாய் விட்டது. பிராமணரல்லாதாருக்குத் தனியாக ஸ்தானங்கள் ஏற்படுத்தியது புத்தியில்லாத குழந்தை விளையாட்டன்றி மற்றில்லை”9   என்கிறார் பாரதி. பாரதி வகுப்புரிமையை எதிர்த்த காரணம் அது பார்ப்பனர்களுக்குப் பாதகமாக இருந்தது என்பதால்தான்.  பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்த காலத்தில் வகுப்புரிமையை எதிர்த்ததாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் அக்காலக் கட்டத்தில் பாரதிக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு என்பது துளியும் இல்லை. மாறாக வருணாசிரமத்தில் அக்கறையுள்ளவராய் இருந்தார். இவரை விடத் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்த வ.உ.சி. 1920லேயே வகுப்புரிமையை ஆதரித்துத் திருநெல்வேலி காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அது வருமாறு : “இந்த மாநிலத்தில் நிலவும் தற்பொழுதைய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு பொது வேலைகளிலும், கௌரவ உத்தியோ கங்களிலும் பிராமணன், பிராமணரல்லாத சமூகங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும்”10 என்கிறார் வ.உ.சி. (இந்து 25.6.1920) மேற்கண்ட ஆதாரங்களால் 1916 முதல் 1921 வரை (அதாவது அவர் சாகும்வரை) பாரதியார் பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய திராவிடர் இயக்கத்தை மிகத் தீவிரமாக எதிர்த்தும், பார்ப்பனியத்தை ஆதரித்தும் வந்துள்ளார் என்பதை அறியலாம்.   அடிக்குறிப்பு   1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.402,404 2. மேற்படி நூல், ப.404-407 3. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.349-351 4. பாரதியைப் பற்றி நண்பர்கள் (தொ.ஆ) ரா.அ. பத்மநாபன், வானதி பதிப்பகம், ப.185 5. பாரதியார் கட்டுரைகள், ப.352 6. பாரதி தரிசனம் முதல் தொகுதி, நி.செ.பு.நி. -348,349 7. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.223 8. மேற்படி நூல், ப.381 9. மேற்படி நூல், ப.393 10. வ.உ.சிதம்பரம் பிள்ளை, என். சம்பத்-பெ.சு.மணி, பப்ளிகேசன்ஸ் டிவிசன், 1995, புதுதில்லி - ப.224,225     ***** 5. பாரதி விரும்பிய பெண் விடுதலை எத்தகையது?     1904ஆம் ஆண்டில் சுதேசமித்திரன் இதழில் பாரதி மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றியபோது சென்னை திருவல்லிக் கேணியில் இருந்த வைத்தியநாத அய்யர் என்பவர் ‘சக்ரவர்த்தினி’ என்னும் பெயரில் பெண்களுக்கான மாத இதழை நடத்தினார். இந்த இதழில் பாரதியார் 1904 முதல் 1906 வரை ஆசிரியராக இருந்து வந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில்தான் பாரதியார் பெண் விடுதலைக்காக மிகத் தீவிரமாக எழுதியுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் காணலாம். “பரிபூரண ஸமத்துவம் இல்லாத இடத்தில், நாம் ஆண் மக்களுடன் வாழ மாட்டோம்! என்று சொல்லுவதானால் நமக்கு நம்முடைய புருஷராலும், புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மை உடையன வாயினும் நாம் அஞ்சக் கூடாது.  சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. தர்மத்திற்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். பிறரும் இறக்கத்தான் செய்கிறார்கள், ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள்! நாம் வெற்றி பெறுவோம்”1 எனப் பாரதி பெண் விடுதலைக்காகப் பாடுபட, பெண்களை அழைக்கிறார். மேலும் தீவிரமாகப் பாரதி கூறுகிறார். “நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மத முண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால், இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன்; எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்றுகொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன்; நீ அடித்து வெளியே தள்ளினால் ரெஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிடவும் வேண்டும்.”2 பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஆண்கள்தான் ஒழுங்காக இருக்க வேண்டும் என்கிறார் பாரதி. “அடப்பரம மூடர்களே! ஆண்பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் பதிவிரதைகளாக எப்படி இருக்க முடியும்? பதிவிரதயத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகிறது. சீச்சி! மானங்கெட்ட தோல்வி, ஆண்களுக்கு அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை.”3 தொடக்க காலத்தில் உடன்கட்டை ஏறும் சதியைப் பாரதி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார். “எண்ணிறந்த ஸ்திரீஹத்தி புரிந்து, இத்தேசத்துக்கெல்லாம் அழிக்க முடியாத பெரும் பழி கொடுத்த ஸதி தஹன மென்னும் அரக்கனை மிதித்துக் கொல்லும்படியாக முதலிலே துக்கப்பட்ட ராம் மோஹனரின் திருவடியை நாம் மறந்துவிட்டால் நமக்கு உய்வுண்டாமா?”4 எனப் பெண்களிடம் கேட்கிறார் பாரதியார். பாரதியார் இன்னும் ஒருபடி மேலே போய் ஸதியில் எரிக்கத் தயார் நிலையில் சுடுகாட்டில் இருந்த ஒரு இராசபுத்திரப் பெண்ணை (அக்பர் ஆட்சியில் சதிக்குத் தடைஇருந்தது எனப் பாரதி குறிப்பிட்டுள்ளார்), ஒரு முகமதிய வாலிபன் அந்த இராச புத்திரர்களைக் கொன்று அந்தப் பெண்ணை மீட்டுச் செல்கிறான்; அந்த முசுலீம் வாலிபனுக்கும், அந்த இராசபுத்திரப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்து, திருமணம் நடப்பதாகத் துளஸிபாயி என்னும் கதையில் பாரதி கூறியுள்ளார்.5 தொடக்கக் காலத்தில் பாரதியார் குழந்தை மணத்தை எதிர்த்தார்; கலப்புத் திருமணங்களை ஆதரித்தார்; பெண்கள் விவாகரத்து செய்து கொள்வதையும் ஆதரித்துள்ளார்.  ஏன், பெண்கள் திருமணத்தை விரும்பவில்லை என்றால் திருமணமே செய்து கொள்ளாமல் கூட விட்டு விடலாம் என்று கூறியவர், பிற்காலத்தில் தன் கருத்துகளைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொள்கிறார். கற்பு நிலை யென்று சொல்ல வந்தால் இரு கஷிக்கும் அஃதுபொதுவில் வைப்போம் வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் 6 (கும்மி) இப்படிப் பெண் விடுதலைக் கும்மிப் பாடலை இயற்றிய பாரதிதான் பின்வருமாறும் எழுதுகிறார்: “ஸாவித்திரி, ஸீதை, சகுந்தலை முதலிய பெண்களின் சரிதைகளைக் கேட்கும் போது, இத்தகையோர்களுக்கு இம்மாதிரி மனப்போக்கு எவ்விதம் ஏற்பட்டதென்று நினைத்து நினைத்து மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. இம்மாதிரியான கற்புடை இத்தேசத்துப் பெண்களுக்கு என்றும் ஒரு சிறந்த புவனமாக விளங்கி நின்றமை நமது நாட்டிற்கே ஒரு பெருமை ஆகும்.” 7 மேலே, பாரதி மாதிரிக்குக் காட்டியிருக்கும் பெண்கள் தங்கள் கணவனுக்காகவே வாழ்ந்தவர்கள்; பல இன்னல்களை அனுபவித்தவர்கள். அவர்களைத்தான் பாரதி கற்புடைய பெண்களுக்கு உதாரணமாகக் காட்டுகிறார். 1908 வரை பெண் விடுதலை பற்றிப் பாடிய பாரதி, புதுவைக்குச் சென்று வாழ்ந்த காலத்தில், மதவாதியாகவும் பெண்விடுதலை யுணர்வு அற்றவராகவும் வாழ்ந்ததைச் சில சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. கற்பு என்பதை எப்பாடுபட்டாவது பெண்கள் காக்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்துகிறார். “தமிழ்நாட்டு மாதர்க்கு மட்டுமேயன்றி உலகத்து நாகரிகதேசங்களிலுள்ள ஸ்திரீகளுக் கெல்லாம் கற்பு மிகச்சிறந்த கடமையாகக் கருதப்படுகிறது. அதைக் காக்கும் பொருட்டாக ஒரு ஸ்திரி எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் தகும்.”8 பாரதி ஒரு மதவாதி. எனவே பதிவிரதத் தன்மையில் அதிக நம்பிக்கை கொள்கிறார். “ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருந்தால் நன்மையுண்டாகும். பதிவிரதைக்கு அதிக வீரமும் சக்தியும் உண்டு. சாவித்திரி தனது கணவனை எமன் கையிலிருந்து மீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது.”9 எனக் கூறுகிறார். 1906இல் சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் துளஸிபாயி என்னும் கதையின் மூலம் வன்மையாகக் கண்டித்த பாரதி, புதுவை சென்றபின், தீவிர மதவாதியாக மாறிய காரணத்தால் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஆதரிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். 1910 பிப்ரவரியில் ‘கர்மயோகி’ இதழில் பாரதி எழுதியதாவது: “நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரீகளே மஹா ஸ்திரீகளாவார்கள்.” 10 1909 ஆகஸ்ட் ‘இந்தியா’ இதழில், ஒழுக்கம் உள்ள பெண்களைப் பற்றிப் பாரதி கூறும்போது, “ஓ இந்தியனே! சீதை, சாவித்திரி, தமயந்தி இவர்களும், இன்னும் இவர்களைப் போன்ற ஸ்திரி ரத்தினங்களும் உன் பெண்மணிகளாவர். ஒழுக்கத்திற்கு அவர்களை நமக்கு முன்மாதிரியாக வைத்துக் கொள்ளலாம்”11 என்கிறார். இன்னும் பிற்காலத்தில் 1920 மே மாதத்தில் ‘தேசியக் கல்வி’ என்ற தலைப்பில் பாரதி எழுதும்போது பெண்கள் விவாகரத்து செய்து கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அதுகுறித்து இவர் கூறுவதாவது : “காதல் - விடுதலை வேண்டுமென்று கூறும் கஷியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித, பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது... அக்னி சாஷி வைத்து ‘உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை’ என்று சத்யம் பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் சஹிக்கத்தக்க அல்லது சஹிக்கத் தகாத பந்தங்களாகவே முடிகின்றன வென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்ளுதலே நியாயமென்றும், இல்லாவிட்டால் மனுஷ்ய ஸ்வதந்திரமாகிய மூலாதாரக் கொள்கைக்கே ஹானி உண்டாகின்ற தென்றும், ஆதலால் ‘விவாகம் சாச்வபந்தம்’ என்று வைத்தல் பிழையென்றும் மேற்படி கஷியார் சொல்லுகிறார்கள்... .... ஆனால் தேசியக் கலவியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம், மேற்படி விடுதலைக் காதற்கொள்கையை அங்கீகாரம் செய்தல் சாத்தியமில்லை... விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மண வாழ்க்கைக்கும் பொருந்தாது. மண வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும். இன்று ஒரு மனைவி, நாளை வேறு மனைவி, என்றால் குழந்தைகளின் நிலைமை என்ன ஆகும்? குழந்தைகளை எப்படி நாம் சம்ரஷணை பண்ண முடியும்? ஆதலால் குழந்தைகளுடைய சம்ரஷணையை நாடி ஏகபத்னிவிரதம் சரியான அனுஷ்டானம் என்னு முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்டது.”12 இந்துக் கலாச்சாரத்தைக் காக்க வேண்டிய கடமையைப் பாரதி நம் நாட்டுப் பெண்களிடம் ஒப்படைக்கிறார். பிறகு அவர்கள் எப்படி விடுதலையடைய முடியும்? “தமிழ்நாட்டு மாதராகிய என் அன்புக்குரிய சகோதரிகளே! இத்தனைப் பழமையும், மேன்மையுஞ் சான்ற இரண்டு பகுதிகளின் கலப்பாகுந் தன்மையால் பாரத தேசத்திலேயே மற்றப் பிரதேசங்களிலுள்ள நாகரிகத்தைக் காட்டிலும் கூட ஒருவாறு சிறப்புடையதாகக் கருதுவதற்குரிய ஆரிய, திராவிட நாகரிகம் உங்களுடைய பாதுகாப்பிலிருக்கிறது. இதனை மேன்மேலும் போஷித்து வளர்க்கும் கடமை உங்களைச் சார்ந்தது.”13 தமிழர் நாகரிகம் அல்லது திராவிடர் நாகரிகம் உயர்ந்த நாகரிகம் என்று கூற மனமில்லாமல் ஆரிய, திராவிட நாகரிகம் உங்கள் பாதுகாப்பில் உள்ளது என்கிறார். முன்பு ஆரியர் - திராவிடர் என்பதே பொய் என்று கூறியவர் இப்போது அதை ஏற்றுக் கொள்கிறார். பாரதியின் கதைகளில் கூடப் பெண்களுக்கு விடுதலை அளிப்பதாக இல்லை. ஏழைப் பெற்றோர் வசதியின்மை காரணமாக ஒரு முதிய பிராமணனுக்குத் தம் மகளை மணம் முடித்து வைக்கின்றனர். முதிய வயதான கணவன் உயிருடன் இருக்கும்போதே, காந்தமணி என்ற அந்த பிராமணப் பெண் வேறு ஒரு கணவனைத் தேடிக் கொண்டு அவனுடன் வாழ்வதைப் பாரதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவளைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றிவிடுகிறார் என்று பாரதியின் கதைமகளிரின் பாத்திரங்களை ஆய்வு செய்த வ.உமாராணி கூறுகிறார். 14 பாரதி இறுதிக் காலத்தில் எழுதிய கதையாகிய ‘சந்திரிகையின் கதை’ யில் வரும் விசாலாட்சி என்பவள் ஒரு இளம் விதவை. அவள் மறுமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள். அவ்வாறே மறுமணம் செய்து கொள்கிறாள். அவள் கணவன் பெயர் விசுவநாத சர்மா. திரு மணமாகி ஒன்றரை ஆண்டுகளில் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. இருந்தபோதிலும் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்து வருகிறாள். இதைத் தெய்வீகக் காதல் என்கிறார் பாரதியார். 15 இதில் என்ன தெய்வீகத் தன்மை இருக்கிறது? அந்தக் காலத்திலேயே பாரதி இவ்வளவு முற்போக்காகப் பெண் விடுதலையைப் போற்றி இருக்கிறாரே என்று காட்டுபவர்கள் அவருடைய தொடக்க காலக் கட்டுரைகளையே காட்டுகின்றனர். அவருடைய பிற்கால எழுத்துகள் என்பவை முழுக்க முழுக்க மதம் சார்ந்தவை. எனவே அதில் பெண்கள் விடுதலை குறித்துச் சிறப்பாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம். பெண் விடுதலையைப் பற்றிப் பாட்டும், கட்டுரையும் எழுதிய பாரதி, தன்னுடைய குடும்பத்திலுள்ள பெண்களுக்கு விடுதலை கொடுத்தாரா? இதோ பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன் கூறுகிறார்: “மாதர் சுதந்திரம் பாடிய கவிஞர் வீட்டில் அவர் இட்டதே சட்டம். செல்லம்மா தவிப்பு சொல்லி மாளாது”16 என்கிறார். “ஒருநாள் பாரதி, 14 வயதான தமது மூத்த மகள் தங்கம்மாவைத் தம்முடன் கடயத்திலிருந்து ஐந்து மைலில் உள்ள ஒரு ஐயனார் கோயிலுக்கு வருமாறு உத்தரவிட்டார். அக்கோவில் மலைச்சாரலில் காட்டு நடுவே உள்ளது... தங்கம்மா தயங்கி வரமறுத்ததால் பாரதிக்குக் கோபம் வந்துவிட்டது. மகள் கன்னத்தில் விரல் பதிய அறைந்து விட்டார். தடுக்க வந்த மைத்துனர் மீதும் இளைய மாமனார் மீதும் காறி உமிழ்ந்தார்.” 17 பாரதிதான் பெண் விடுதலைக்கு முதன் முதலாக ஓங்கிக் குரல் கொடுத்தவர் என்று கூறுவாருமுளர். ஆனால் அவருக்கும் முன்னால் தமிழகத்தில் 1882 இல் இந்து ‘சுயக்கியான சங்கம்’ (ழiனேர குசநந கூhடிரபாவ ருniடிn) என்ற ஒரு அமைப்பு பாடுபட்டு இருக்கிறது இந்து மதத்தில் சீர்திருத்தம், பார்ப்பனர் புறக்கணிப்பு, விதவைத் திருமணம், கலப்புத் திருமணம், பெண்கல்வி பேணல் போன்றவை இச்சங்கத்தின் நோக்கங்களாக இருந்துள்ளன. அதற்காக இச்சங்கத்தாரால் ‘தத்துவ விசாரிணி’, ‘தத்துவ விவேசினி’ என்ற தமிழ் ஏடுகளும், ஆங்கிலத்தில் ‘கூhந கூhiமேநச’ என்ற ஏடும் நடத்தப்பட்டுள்ளன. விதவைத் திருமணம் குறித்து அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு: “பக்குவ காலத்தில் மணம் செய்யாமல் சிறு வயதிலேயே மணத்தை முடித்து யவ்வனப் பருவம் வருவதற்கு முன்னே பெண் காலம் சென்றால் பிள்ளைக்கு மறுவிவாகம் புரியலாமென்றும், பிள்ளை காலம் சென்றால் பெண் மறு விவாகம் புரியப்படாதென்றும் கருதி நமது தேசத்தில் சில வகுப்பார் தவிர பிராமணர் முதலிய சில வகுப்பார் மறுமணம் செய்யாது வருகின்றனர். இப்படிச் செய்யாதிருந்தாலுண்டாகிய தீங்குகள் எண்ணிறந்தன.... யவ்வனப் பருவமடைந்த பிறகுதான் பெண்களுக்கு விவாகம் செய்யலாமென்றும், கணவரையிழந்த சிறுமியர்களுக்குப் புனர்விவாகம் செய்யலாமென்றும், இடந்தராது போன காரணம் யாதோ! அறிவிற் சிறந்த மகான்களே! யோசியுங்கள்!”18 (‘தத்துவ விவேசினி’, 17.2.1881) இப்படிப் பாரதிக்கு முன்பே பு. முனிசாமி நாயகர், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர், ‘தமிழன்’ ஏடு நடத்திய அயோத்தி தாசபண்டிதர் மற்றும் பலர் சேர்ந்து இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்து புதிய சமூகம் அமையவும் பெண் விடுதலையடையவும் பாடுபட்டுள்ளனர். இந்து மதத்திலுள்ள ஆபாசங்களைப் படம் பிடித்துக் காட்டுகிற தன்மையில், ‘இந்துமத ஆசார ஆபாச தரிசினி’ என்னும் கவிதை நூலை அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகர் 1890 களிலேயே எழுதி வெளிப்படுத்தினார். ஆனால் பாரதியோ 1904 முதல் 1908 வரையில் பெண் விடுதலையில் தீவிரமாக இருந்து, 1908க்கு பிறகு மிதவாதியாக மாறிவிட்டார். 1920 கால கட்டத்தில் தீவிர இந்து  மதவாதியாகிவிட்ட காரணத்தால் அவரால் பெண் விடுதலை குறித்து எதையும் எழுத இயலாமல் போய்விட்டது. பாரதி கடைசிக் காலத்தில் பெண்விடுதலை பற்றிய நோக்கம் இன்றி இருந்ததோடு  பெண்ணடிமைக் கருத்துக்களைக்  கொண்டிருந்தார் என அறிய முடிகிறது.   அடிக்குறிப்பு   1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.243 2. மேற்படி நூல், ப.258,59 3. மேற்படி நூல், ப.245 4. மகாகவி பாரதியார் சக்கரவர்த்தினி கட்டுரைகள், (தொ,ஆ.) சீனிவிசுவநாதன், வானவில் பிரசுரம், ப.95 5. மேற்படி நூல், ப.101 6. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.நி., ப.359 7. மகாகவி பாரதியார், சக்கரவர்தினி கட்டுரைகள், ப.87 8. பாரதியார் கட்டுரைகள், ப.271 9. பாரதியார் கட்டுரைகள், ப.244 10. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.331,332 11. மேற்படி நூல், ப.379 12. பாரதியார் கட்டுரைகள், ப.350,351 13. மேற்படி நூல், ப.265 14. பாரதியின் கதை மகளிர், ப.36-38 15. பாரதியார் கதைகள், வானதி பதிப்பகம், ப.246-251 16. சித்திரபாரதி, ரா.அ. பத்மநாபன், ப.121 17. மேற்படி நூல், ப.140 18. 110 ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைச் சிந்தனைகள், வே.ஆனைமுத்து, பெரியார் 115வது பிறந்தநாள் மலர், 1993, ப.12,13       6. பொதுவுடைமை பற்றி பாரதி   பொதுவுடைமைக் கொள்கையில் பாரதிக்கு எத்தன்மையான புரிதல் இருந்தது என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம். 1905இல் ருசியாவில் ஒரு புரட்சி தோன்றி தோல்வியில் முடிவுற்றது. ஆனால், அந்தப் புரட்சி இயக்கம் மேலும் மேலும் வளர்ந்து வந்தது. அவ்வப்போது அங்கு நடந்த நிகழ்ச்சிகளை ராய்ட்டர் என்ற செய்தி நிறுவனம் தந்தி மூலம் பத்திரிகை அலுவலகங்களுக்குத் தெரிவித்து வந்தது. அக்காலக் கட்டத்தில் இந்தியா ஏட்டில் பொறுப்பாசிரியராக இருந்த பாரதி 30.6.1906இல் ருசியாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சி என்ற தலைப்பில் எழுதியதாவது: “ருஷ்யாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சிச் சின்னங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜார் சக்கரவர்த்தியின் அநீதிச் சிங்காதனம் சிதைந்து கொடுங்கோன்மை துண்டுத் துண்டாகக் கழிவு பெற்று வரும் ருஷ்யாவில் அமைதி நிலைக்க இடமில்லை. சில இடங்களில் நிலச் சேனையுடன் சேனைக்காரர்களும், ராணுவமும் கலகம் தொடங்கித் தொழிலாளிகள் கூட்டமும் சேர்ந்து விடுகின்றனர்.”1 1906 சூலை 7ஆம் தேதி, ரஷ்யாவில் ஏற்படும் புரட்சி குறித்து அச்சமடைவதாகப் பாரதி எழுதியுள்ளார் : “சென்ற வாரம் ருஷ்யாவைப் பற்றி எழுதிய குறிப்பிலே அத்தேசமானது ஒரு பெரிய ராஜாங்கப் புரட்சியேற்படும் (நிலையிலுள்ளது) என்று தெரிவித்தோம். அதற்கப்பால் வந்து கொண்டிருக்கும் தந்திகள் நமது அச்சத்தை ஊர்ஜிதப்படுத்தி  விட்டன. கைகலப்புகள் தொடங்கிவிட்டனவென்றால் ராஜாங்கம் எத்தனைத் தூரம் அமைதி கெட்ட நிலையிலிருக்க வேண்டு மென்பதை எளிதாய் ஊகித்து அறிந்து கொள்ளலாம்.”2 புரட்சி நடக்கிறது  என்றால்  நமக்கு உரிமை உணர்ச்சியும், எழுச்சியும் உண்டாகும். ஆனால் பாரதியோ, அச்சமுண்டாகிறது என்பதோடு புரட்சி நடப்பதால் ராஜாங்கம் அமைதி கெட்டு விடும் என்கிறார். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது யாதெனில் பாரதி போல்ஷ்விக்குகளின் புரட்சியை 1906 முதலே ஆதரிக்கவில்லை என்பதேயாகும்.ஆனால் அதே நேரத்தில் ஜாரின் கொடுங்கோன்மையை அவர் எதிர்க்கிறார் என்பதை அவருடைய கட்டுரைகளின் மூலம் அறிய முடிகிறது. “ஒரு விஷயம் மட்டிலும் இங்குப் பலகாலமாக அறிவுறுத்துதற் குரியது. ருஷ்ய ஜனங்களாகிய ஆடுகள் மீது அரசேற்றும் கடுவாய் அரசனும் அவனது ஓநாய் மந்திரிகளும் நெடுங்காலமாய்த் தரித்திருக்க மாட்டார்கள். இவர்களின் இறுதிக் காலம் வெகு சமீபமாக நெருங்கி விட்டதென்பதற்குத் தெளிவான பல சின்னங்கள் புலப்படுகின்றன. நீதி ஸ்வரூபியாகிய சர்வேசனது உலகத்திலே அநீதியும், ருஷ்ய ஓநாய்த் தன்மைகளும் நிலைக்கமாட்டா”3 என்கிறார். 1906இல் போல்ஷ்விக்குகள் நடத்திய புரட்சியைப் பாரதி ராஜாங்கத்திற்கு எதிரான கலகங்கள் என்றே எழுதுகிறார். “இப்பொழுது மறுபடியும் பெரும் கலகம் தொடங்கி விட்டது. ருஷ்ய சக்ரவர்த்தியின் சிங்காதனம் இதுவரை எந்தக் காலத்திலும் ஆடாதவாறு அத்தனைப் பலமாக இருக்க இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. பிரதம மந்திரியின் வீட்டை, வீட்டின் விருந்தின்போது வெடிகுண்டு எறியப்பட்டதும், சைன்யத் தலைவர்கள் கொலையுண்டதும், ராஜ விரோதிகள் பகிரங்கமாக விளம்பரங்கள் பிரசுரிப்பதும், எங்கே பார்த்தாலும் தொழில்கள் நிறுத்தப்படுவதும், துருப்புகளிலே ராஜாங்கத்தாருக்கு விரோதமாகக் கலகங்கள் எழுப்புவதும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்வதும் ஆகிய கொடூர விஷயங்களைப் பற்றித் தந்திகள் வந்த வண்ணமாகவேயிருக்கின்றன.”4 இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், ஜாரின் கொடுங்கோன்மையை எதிர்க்கும் பாரதி, ஜாரின் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களைக் கலகக்காரர்கள் என்றும் அவர்கள் கொடூரமான செயல்கள் செய்வதாகவும் காண்கிறார். ஜார் அரசனின் கொடுங்கோன்மையை 1906 இலேயே எதிர்த்த பாரதி, 1917இல் பிப்ரவரியில் நடைபெற்ற முதலாளித்துவப் புரட்சியில் கெரன்ஸ்கி தலைமையில் டூமாவுக்குள் (நாடாளுமன்றத்திற்குள்) சென்றபோது ஜாரை சிறையில் அடைத்தனர். அப்போதுதான் பாரதி  ஜாரின் வீழ்ச்சியைக் குறித்துப் புதிய ருஷ்யா - ஜார் சக்ரவர்த்தியின் வீழ்ச்சி என்ற தலைப்பில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அப்பாடல் வருமாறு : மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே ஆகாவென் றெழுந்தது பார்யுகப் புரட்சி கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான் ......     .......     ....... இரணியன்போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜாரெனும் பேர்இசைந்த பாவி. ......     ......     ....... இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்து விட்டான் ஜாரரசன்....  5 1917 பிப்ரவரியில் நடைபெற்ற இப்புரட்சியில் பாட்டாளிகளும், முதலாளிகளும் சேர்ந்தே ஜாரை எதிர்த்துப் புரட்சி நடத்தினர். இதில் முதலாளிகள் தற்காலிகமாக வென்று டூமாவுக்குள் சென்றனர். இப்புரட்சியை ஒரு தெய்வீக நிகழ்ச்சியாக்கி “மாகாளி பராசக்தி கடைக்கண் காட்டியதால் தான் புரட்சி நடந்தது” என்கிறார் பாரதி. நம் நாட்டுப் பொதுவுடைமைவாதிகள் பலரும் பாரதி அக்டோபர் புரட்சியை வாழ்த்திப் பாடியதாகவே கூறுகிறார்கள். அதற்கான சான்றாதாரம் இப்பாடலில் ஏதுமில்லை. இப்பாடல் முழுவதும், ஜாரின் வீழ்ச்சியைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. ஜார் வீழ்ச்சியுற்றது அக்டோபர் புரட்சியில் அல்ல. அதற்கு முன்பே பிப்ரவரியில் நடைபெற்ற புரட்சியிலேயாகும். பாரதி அக்டோபர் புரட்சியை ஆதரித்துப் பாடியிருந்தால், லெனின் கொள்கைகளை, அப்போதே கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லையே. லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க அரசு நிலப் பிரபுக்களின் நிலங்களைப் பிடுங்கி ஏழை விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்தபோது பாரதி அதை மிக வன்மையாகக் கண்டிக்கிறார். “இந்தக் கொள்கை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின் அதிகாரத்தின்கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும், தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொதுவுடைமை ஆகிவிட்டது. ஆனால், இந்த முறைமை போர் பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவிவருவது எனக்கு சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக் கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க சமத்துவம் சகோதரத்துவம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண்டோர் அவற்றைக் குறித்து, வெட்டு, பீரங்கி, துப்பாக்கிகளினால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கையென்று நான் நினைக்கிறேன்.” 6 மேலும் லெனின் போன்றவர்களை, பாரதி, மறைமுகமாக ஒன்றும் தெரியாத மூடர்கள் என்று கூறுகிறார். “கொலையாலும் கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்” என்று கூறிவிட்டு, இதற்கடுத்த வரியிலேயே பாரதி கூறுகிறார் : “இதற்கு நாம் என்ன செய்வோம்! கொலையாளிகளை அழிக்கக் கொலையைத்தானே கைக்கொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்கிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணணுமே யொழியக் குறைக்காது. பாவத்தைப் புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும்... கொலையையும், கொள்ளையையும், அன்பினாலும், ஈகையாலும்தான் மாற்ற முடியும். இதுதான் கடைசி வரை கைகூடிவரக்கூடிய மருந்து. மற்றது போலி மருந்து.” 7 மேலே கண்ட பாரதியார் கருத்து மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், பாரதி ஒரு மதவாதி; எனவே அவர் புரட்சி வழியை ஆதரிப்பதற்குப் பதிலாக ‘தர்மகர்த்தா முறை’ சோசலித்தையே ஆதரிக்கிறார் என்பது புலப்படும். மேலும் அவர் கூறுகிறார் : “லெனின் வழி சரியான வழி இல்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோமாதலால் இந்தியாவின் ஸாத்தியா ஸாத்தியங்களைக் கருதியேதாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும், முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்ப மாட்டார்கள். எனவே, கொள்ளைகளுடன் கொலைகளும், சண்டைகளும், பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயலவேண்டும்.” 8 பாரதி மேலே கூறியபடி அதற்கான வழி வகைகளையும் கூறியுள்ளார். இக்கட்டுரையை எழுதும்போது பாரதி கடயத்தில் இருந்தார். எனவே கடயத்தையே உதாரணமாகக் கொண்டு பின்வரும் கருத்தை முன்வைக்கிறார். “கடயத்தில் மொத்தம் 30 பெரிய மிராசுதார்களும் பல சில்லரை நிலஸ்வான்களும் உள்ளனர். அவர்களாகவே வந்து ஏழைகளிடம் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தம் என்னவென்றால், ‘அதாவது எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி ‘தொழில் நிர்வாக சங்கம்’ என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த்தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில் (மதப்பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியன சம்பந்தமாகிய நானா வகைப்பட்ட கைத்தொழில்கள். அவை இந்தக் கிராமத்திற்கு மொத்தம் இவ்வளவு நடைபெற வேண்டுமென்றும், அத்தொழில்களின் இன்னின்ன தொழிலிற்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்றும் மேற்படி தொழில் நிர்வாகச் சங்கத்தார் தீர்மானம் செய்வார்கள். அந்தப்படி கிராமத்திலுள்ள நாம் அத்தனைபேரும் தொழில் செய்ய வேண்டும். அந்தத் தொழில்களுக்குத் தக்கபடியாக ஆண்பெண் குழந்தை முதலியோர் இளைஞர் அத்தனை பேரிலும் ஒருவர் தவறாமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பிள்ளை பிள்ளை தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்தப்படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகளின் மேல் ஆணையிட்டு ப்ரதிக்ஞை செய்து கொடுக்கிறோம் இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஏற்பட்ட விஷயத்தை எங்களில் முக்கியஸ்தர் கையெழுத்திட்டு செப்புப் பட்டயம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம். இங்ஙனம் ப்ரதிக்ஞை செய்து, இதில் கண்ட கொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் கிராமத்தில் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும், பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். ஒரு கிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து பின்னர் அதனை உலகத்தாரெல்லாருங் கைக்கொண்டு நன்மை யடைவார்கள்.” 9 பாரதியின் மேலே கண்ட இந்தப் பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்றினால் அசல் நால்வருணம்தான் நீடிக்கும். நிலம் நில உடைமையாளர்களுக்குச் சொந்தமாகவே இருக்கும். சோற்றுக்காக ஏழைகள் தலைமுறை தலைமுறையாக அவர்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவரவர் தகுதிக் கேற்ற வேலை என்று பாரதி சொல்வது குலத்தொழில் முறைப்படி தொழில் நடைபெற வேண்டும் என்பதேயாகும். கூட்டுமுயற்சியினால் வரும் பலனை எல்லோருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டும் என்று பாரதி சொல்லவில்லை. ஆகவே இக்கூட்டு முயற்சியினால் விளையும் பலன் முழுக்கவும் நிலவுடைமையாளருக்கும், சமுதாயத்தில் மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் போய்சேரும் என்பது வெளிப்படை. நம் நாட்டில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பாரதி காணும் ஒரே தீர்வு “கலியுகம் ஒழிந்து மீண்டும் கிருதயுகம் வரவேண்டும். அப்போது மீண்டும் நால்வருணம் ஏற்படும். அப்போது மாதம் மும்மாரி பொழியும். அப்போதுதான் பஞ்சமும் இராது என்பதுதான் அவரின் இறுதிகாலக் கொள்கையாகும்.” 10 பாரதி, லெனினின் கொள்கையைக் கண்டித்துப் பல மாற்று வழிகள் கூறிக்கொண்டிருந்த காலத்தில்தான், பாரதியுடன் நெருங்கிப் பழகிய கனக. சுப்புரத்தினம் (பின்னாளில் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார்)  லெனின் புரட்சி ஏற்படுத்தியவுடன், லெனினைப் புகழ்ந்து பாடல் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாடல் வரிகளாவன : யுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின் உறவாகி நின்ற லெனினே! அகமாகி நின்ற லெனின் அறிவாகி நின்ற லெனின் அரசாள வந்த லெனினே! சுகமாகி வந்த லெனின் துணையாகி வந்த லெனின் சுதந்திர மான லெனினே! இகமாகி நின்ற லெனின் எமையாள வந்த லெனின் இறையாகி வந்த லெனினே! நறவூறுகின்ற மொழி பொருளார்க்கும் என்றவழி நடைகொண்டு வந்த லெனினே! உறவாகி உலகெங்கும் உழைப்பாளர் ஆட்சிநெறி உரமாக்கி வைத்த லெனினே! 11 ......     ......     ...... இப்பாடலை, பாரதிதாசன் பாரதியோடு புதுவையில் இருந்த போதே, 1918 பிப்ரவரி மாதத்தில் ‘ஜனவிநோதினி’ எனும் ஏட்டில் எழுதியுள்ளார் எனப் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றை ஆய்ந்து எழுதியுள்ள கோ. கிருட்டிணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். 12 லெனின் அக்டோபர் புரட்சியை ஏற்படுத்தியதற்காக அவர் உயிருடன் இருக்கும் போதே அவரைப் பாராட்டிக் கவிதை எழுதிய ஒரே தமிழ்க் கவிஞன் கனக. சுப்புரத்தினம் ஒருவர்தான் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மையாகும். மேலும் 1924இல் லெனின் மறைவுற்றபோது லெனினுக்கு இரங்கற்பா எழுதிய தமிழ்க்கவிஞர் பாரதிதாசன் ஒருவரே ஆவார்! ஆனால் நம் நாட்டுப் பொதுவுடைமைவாதிகளோ, லெனின் கருத்துகளுக்கு முரண்பாடான கருத்துகளைக் கொண்ட பாரதியாரைப் புகழ்ந்து பேசுவதையும், எழுதுவதையுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். ஆனால் பாரதிதாசனைப் பற்றி இவர்கள் கண்டுகொள்ளுவதே இல்லை. அதற்குக் காரணம் என்ன என்பதை நான் கூறுவதை விட நம் புரட்சிக் கவிஞர் கூறியுள்ளதே சிறப்பாக உள்ளது. அவை வருமாறு: நான் பொதுவுடைமைக்குப் பகைவனா? இதுஅறிவெனத் தெரிந்தநாள் முதல் புதுவையில் சுதந்திரம் சமத்துவம் சகோத ரத்துவம் மூன்றும் என்னுயிர் உணர்வில் ஊறியவை என்பாட் டாலே வளர்ந்த இயக்கம் தன்பாட் டுக்குத் தப்புத் தாளம் பின்பாட்டுப் பாடும் பிழைப்புக் கெல்லாம் என்னை விற்காத தால்ஏதும் அறியாத கொள்ளைப் பயல்களைக் கொண்டேசுகின்றனர் இவர்கள் யாரென எனக்குத் தெரியும் புரட்சியின் பேரால் புரட்டு செய்பவர்கள் தொழிற்சங் கத்தால் தோழர்கள் உழைப்பை வழிப்பறி செய்யும் வலஇட சாரிகள் தாய்மொழிப் பற்றும் தன்இனப் பற்றும் தாய்நாட்டுப் பற்றும் சற்றும் இல்லாதவர் முடிந்த வரைக்கும் முந்நூல் கொள்கையில் அடிதொழு திருக்கும் அடிமைகள் மார்ச்சு லெனின் நூல்களை எல்லாம் நுனிப்புல் மேய்ந்து கால்படித் தமிழால் மேற்படி யாரின் விளக்கெண்ணெய் மொழியால் விளங்காது செய்பவர் உருசியன் ஒதுக்கும் ஒரு கோடிப் பணத்தையும் வரிசையாய்ப் பகுத்து வாழ்வு நடத்திடும் பொறுக்கி களாகப் போன தினாலே குறிக்கோள் உயர்ந்த பொதுமைக் கொள்கை வெறிச்சென்று போனது; வெற்றியில் தாழ்ந்தது. பாட்டா ளிகளின் கூட்டம் குறைந்தது மூட்டிய போர்க்குணம் முடம்கொண் டழிந்தது கண்டிதனைக் கழறுவ தாலே அறிவிலா முண்டங்கள் என்ன முழுக்க முழுக்க பொதுவுடைமைக் கெதிரி என்று முழங்குவர். 13 மேற்கண்ட சான்றுகளால் பாரதியார் தொடக்கம் முதல் இறுதி வரை பொதுவுடைமைக் கொள்கையினை எதிர்த்து வந்தார் என்பதனை அறியலாம்.  இப்படிப்பட்ட பாரதியைத்தான் பொதுவுடைமைவாதிகள் தூக்கிப் பிடிக்கின்றனர். தீக்கதிர் பாரதி நூற்றாண்டுச் சிறப்பு மலரை வெளியிட்டது. ஆனால் பாரதிதாசனைப் பொதுவுடைமைவாதிகள் இருட்டடிப்பு செய்வதோடு பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை கண்டுகொள்ளவேயில்லை.  இப்படி இருந்தால் பொதுவுடைமை இயக்கம் எப்படி வளரும்.   அடிக்குறிப்பு   1. பாரதி தரிசனம் தொகுதி (1) நி.செ.பு.நி. ப.300 2. பாரதி தரிசனம் தொகுதி (1), ப.301 3. மேற்படி நூல், ப.302 4. மேற்படி நூல், ப.303 5. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.நி. ப.123 6. பாரதியார் கட்டுரைகள், ப.451 7. மேற்படி நூல், ப.453 8. மேற்படி நூல், ப.456 9. மேற்படி நூல், ப.454-458 10. பெ.தூரன், பாரதி தமிழ், ப.244 11. பாரதிதாசன் கவிதைகள், பெருமக்கள், மணிவாசகர் பதிப்பகம், ப.19 12. கோ. கிருட்டிணமூர்த்தி, பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு, ப.65 13. புரட்சி ஏடு 1.1.1963.     *****       7. மதங்கள் பற்றிப் பாரதியின் பார்வை   பாரதி ஒரு மதவாதி என்பது அனைவரும் அறிந்த செய்தி. பொதுவாக அவர் எல்லா மதங்களையும் சமமாக மதித்தார் என்று, இன்று வரை பாரதியைப் பற்றிய நூல் ஆசிரியர்கள் பெரும்பாலோர் கூறியுள்ளனர். ஆனால், அது உண்மையா? இல்லையா? என்பதைப் பற்றி இங்குக் காண்போம். பாரதியின் பார்வையில் இந்துமதம் ஒன்றுதான் உலகிலேயே உயர்ந்த மதம், மற்றவையெல்லாம் தாழ்வான மதங்களே என்பது அவரின் கருத்து. முதலில் பௌத்த மதம் குறித்துப் பாரதியின் கருத்துகளைப் பார்ப்போம்: “யாகங்களே பெரும்பாலும் பசுவதைகளும், குதிரைக் கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்கியமாகப் பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோச்ஷத்துக்கு வழி என்ற போலி வைதிகரைப் பழிசூட்டி அந்தக் கொலைச் சடங்குகளால் மனிதன் நரகத்துக்குத்தான் போவான் என்பதை நிலைநாட்டிய புத்த பகவானும், அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும், இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்தி விட்டார்கள். அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்று ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சங்கராச்சாரியார் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துகளைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரங்களாகச் சேர்த்துக் கொண்டார் ... ... அவர் ஹிந்து தர்மத்துக்குச் செய்த பேருபகாரத்துக்காக ஹிந்துக்களிலே பெரும்பாலோர் அவரைப் (ஆதிசங்கரனை) பரமசிவனுடைய அவதாரமாகக் கருதிப் போற்றினார்கள்.1 பௌத்த மதமே துறவு நெறியை உலகில் புகுத்திற்று. அதற்கு முன் அங்கங்கே சில சில மனிதர் துறவிகளாகவும், சில சில இடங்களில் துறவிக் கூட்டத்தாராகவும், ஓரிரு இடங்களில் வல்லமை உடையவர்களாகவும் இருந்தனர். பௌத்த மதம்தான் எங்கு பார்த்தாலும் இந்தியாவை ஒரே சந்நியாசி வெள்ளமாக ஆக்கியது. உலக வாழ்க்கையாகிய ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்தது. உலகமெல்லாம் பொய்மயம் என்றும், துக்கமயம் என்றும் பிதற்றிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி, மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்தமதத்துக்கு உண்டு. அதை நல்ல வேளையாக இந்தியா உதறித்தள்ளி விட்டது. பின்னிட்டு புத்த தருமத்தின் வாய்ப்பட்ட பர்மா முதலிய தேசங்களிலும் புத்தமதம் இங்ஙனமே மடத்தை வரம்பு மீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது. பாரதியார் பௌத்த மதத்தின் மீது எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறியலாம். 1912 இல் பகவத்கீதைக்கு முன்னுரை எழுதும்போது இக்கருத்துகளை அவர் எழுதியுள்ளார். பௌத்த மதத்துறவிகளைக் கொலைகள் செய்தே அழித்து ஒழித்த ஆதிசங்கரனைப் பாரதியார், சிவபெருமானின் அவதாரமாகவே காண்கிறார். சோவியத்தில் புரட்சி என்றால் கொலைகள், கொள்ளைகள் அதை ஏற்க முடியாது என்பவர், ஆதிசங்கரனின் கொலைகளை மட்டும் ஆதரிக்கக் காரணம் என்ன? பௌத்தத்தால் ஆட்டங்கண்ட நால்வருணத்தையும் பார்ப்பனர்களின் உயர்வையும், மீண்டும் புத்துயிர் பெறச் செய்தவன் ஆதிசங்கரன் என்பதால்தானோ? அடுத்து இசுலாமிய மதத்தைப் பற்றி பாரதியின் கருத்துகளைப் பார்ப்போம். இசுலாமியர்கள் பல மனைவியரை மணந்து கொள்வதையும், இசுலாமியப் பெண்கள் தலையின் மேல் முக்காடு துணி (கோஷா) போட்டுக் கொள்வதையும் (ரெயில்வே ஸ்தானம்’ என்ற கதையில் பாரதி நையாண்டி செய்கிறார். அவை வருமாறு : ஒருநாள் தென்காசி இரயில்வே ஸ்டேஷன் வெளிப்புறத்தில் பலர் உட்கார்ந்து கொண்டு  இருந்ததாகவும், பாரதியார் அங்குச் சென்றதாகவும், இரயில் வண்டி அன்று 1 மணி நேரம் தாமதமாக வருவதாகக் கூறினார்களாம். பாரதியார் தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிது தூரம் சென்றாராம். அங்கு ஒரு மரத்தடியில் ஒரு மகமதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டாராம். அவன் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வந்து கொண்டிருந்ததாம். தம்பி ஏன் அழுகிறாய்? என்று பாரதியார் உருது மொழியில் அவனிடம் கேட்டதாகவும், அதற்கு அந்த முகமதிய வாலிபன் சொல்லியதாகப் பாரதி எழுதுகிறார் : எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும் ... என் தந்தை லாட்டரி சீட்டு வாங்கினார். அதில் ஒரு கோடி ரூபாய் விழுந்தது. அதை வைத்து வியாபாரம் செய்து ஏழு கோடி பணம் சேர்த்தார். என் தந்தைக்கு நான் ஒரே மகன். எனக்கு 15 வயது ஆகும்போது என் தந்தை இறந்து விட்டார். அந்தச் சொத்து முழுவதும் எனக்கு வந்தது. என் வீட்டை மேற்பார்வை செய்ய என் சிறிய தகப்பனார் நியமிக்கப்பட்டிருந்தார். என் தந்தை இறக்கும் தருவாயில் என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார் முதலாவது வேலையாக, தம்முடைய மூன்று குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். என் பிதா இறந்த இரண்டு வருஷங்கள் ஆகுமுன்னரே மேற்படி விவாகம் நடைபெற்றது. என் சிறிய தகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண் பிரஜைதான் அவருக்குண்டு. ஆகவே என்னுடைய சொத்து வெளிக் குடும்பங்களுக்குப் போய்விடக்கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. என் தாயாருக்கு எனக்கு ஒரே பெண்ணைத்தான் மணம் புரிவிக்க வேண்டும் என்று எண்ணம். அதனால் சிறிய தகப்பனார் என்னை வேறு ஊருக்கு அழைத்துப் போய் என் தாயாருக்குத் தெரியாமல் அவருடைய மூன்று பெண்களையும் எனக்கு மணம்முடித்து வைத்து விட்டார். சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார் என் செய்கையால் ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலேயே உயிர் துறந்து விட்டாள். சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது.... இதனிடையே என்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும்பாடு சொல்லுந்தரமன்று. அதோ பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் தெரிகிறதன்றோ? நடுவேயிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக்கொருத்தியாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மன ஒற்றுமை இல்லை என்பது பிரத்யஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அவருக்கு வயது இருபத்திரண்டு. அடுத்தவள் பெயர் குலாப்  பீவி. அவருக்கு  வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி  வயது  பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறார். குலாப்பிடம் வார்த்தைப் பேசுவது ஆயிஷாவுக்கு சம்மதமில்லை.” 2 பாரதியார் சுதேசமித்திரனில் மேற்கண்ட கற்பனைச் சித்திரத்தை 22.5.1920 இல் எழுதினார். இதை ஓர் உண்மைச் சம்பவம் போலவே பாரதி எழுதியிருக்கவே, ஓர் இசுலாமியர் அதைத் படித்து விட்டு, பாரதியிடம் வந்து, ‘ரெயில்வே ஸ்தானம்’ என்றொரு கதை எழுதியிருந்தீர்களே அது மெய்யாக நடந்த விஷயமா? வெறும் கற்பனைக் கதைதானா?” என்றார். “வெறும் கற்பனை” என்று நான் சொன்னேன். “என்ன கருத்துடன் எழுதினீர்” என்று கேட்டார் வந்தவர். இந்த ‘ரெயில்வே ஸ்தானம்’ என்ற கதையிலும் ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால் அதனின்றும் அவனுக்குக் கஷ்டம்தான் விளையும் என்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்து கொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகு மென்பதும் மேற்படிக் கதையினால் குறிப்பிடப்படும் உண்மைகளாகும் என்றேன். அப்போது அந்த முஸ்லீம் நண்பர் (அந்தக் கதையில் ஒரு பிழை இருக்கிறது’ என்றார். ‘என்ன பிழை?’ என்று கேட்டேன். அக்கதையில் ஒரு முகமதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண் (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடன் இருக்கும் போதே அவருடன் பிறந்த மற்ற ஸ்தீரியை ஒரு முஸ்லீம் மணம் புரிந்து கொள்ளக்கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை என்று அந்த முகமதிய நண்பர் சொன்னார். இதைக் கேட்டவுடன் நான் : ‘சரிதான். எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்களுக்குள்ளே உண்டாதலால் அது போல் முஹம்மதியர்களுக்குள்ளேயும் இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதி விட்டேன். எனவே அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப் பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தாரென்பதை மாற்றித் தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தாரென்று திருத்தி வாசிக்கும்படி ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் எழுதிவிடுகிறேன்  என்றேன்’, என்று பாரதி எழுதியுள்ளார். தன்னிடம் வந்தவரிடம் பாரதி, ‘உங்களுக்குள்ளே ஸ்தீரிகளை அந்தப்புரத்தில் மறைத்து வைப்பதாகிய கோஷா வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?’ என்று கேட்டார். அந்த முகமதிய நண்பர் : ‘முகம்மது நபி (ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப் போய் விட்டது. பிறகு முகமது நபி அதை மீளவும் விதியாக்கினார்’ என்றார். ‘அதிலே திருத்தங்கள் செய்யக் கூடாதா?’ என்று பாரதி கேட்க, அந்த முஸ்லீம் நண்பர், ‘கூடாது.  ஏனென்றால் முகமதுதான் கடைசி நபி. அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்தரவுகள். அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை’ என்றார். பாரதியார் : தென்ஜில்லாக்களிலே தமிழ் பேசும் முஸ்லீம் (ராவுத்தர்)களுக்குள்ளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே! என்று கேட்டார்.... இப்படிப் பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே சென்றது. பாரதி கடைசியாகத் துருக்கி தேசத்தில் ஸ்திரீகளுக்குள்ளே பிரமாண்டமான விடுதலைக் கிளர்ச்சி நடந்து வருவதைப் பற்றியும், ‘கோஷா’ வழக்கத்தை ஒழித்து விட்டுக் கல்வி கேள்விகளில் தேர்ச்சியடைவதையும் கூறினார். வந்த முஸ்லிம் எனக்குத் தெரியாது என்று கூறிச் சென்று விட்டார்.3 பாரதியார் அல்லாவைப் பற்றிப் பாடல் பாடியுள்ளாரே, அவரை எப்படி நீங்கள் குறை சொல்ல முடியும் எனச் சிலர் கேட்கலாம். 20.6.1920இல் பாரதி கடயத்தில் இருந்தபோது சில இசுலாமியர்கள் பாரதியை அழைத்து பொட்டல் புதூரில் இசுலாம் மார்க்கம் குறித்து ஒரு சொற்பொழிவு நிகழ்த்தக் கூறினார்கள். அப்போதுதான் பாரதியார் அல்லா, அல்லா என்ற பாடலைப் பாடினார். நபிகள் நாயகத்தின் வரலாற்றை மிக விரிவாகவும் சிறப்பாகவும் பேசி  முடிக்கும் தருவாயில், நபிகள் ஏன் ஏசு நாதரை ஒரு மகானாக, கடவுளின் அவதாரமாக ஏற்றுக் கொள்ளவில்லை?  என்ற கேள்வியைக் கேட்டு விட்டுத்தான் வந்தார். இசுலாமியர்கள் தேசப்பற்று அற்றவர்கள் என்பது பாரதியின் கருத்து. இதை ‘இந்தியா’ ஏட்டில் ஒரு கருத்துப்படம் வெளியிட்டு பாரதி விளக்கியுள்ளார். மே 1, 1909 இல் இப்படம் வெளியிடப்பட்டது.4 கிறித்துவ மதத்தையும் பாரதி கடுமையாக விமர்சனம் செய்கிறார். இந்துமதத்தைப் புகழும் பாதிரிகளை மிக நல்லவர்கள் என்கிறார். இந்து மதத்தைக் குறை கூறும் பாதிரிகளை மூடப் பாதிரிகள் என்கிறார். “சென்னை கிருத்து கலாசாலையில் டாக்டர் மில்லர் என்று ஒரு பாதிரி இருந்தார். அவர் நல்ல புத்திசாலி என்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்ற எல்லா மதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். சாதாரணப் பாதிரி கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்து கொண்டார். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்து போய் மஹத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்திரிகளை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை எல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.”5 இன்னும் ஒரு படி மேலே போய் பாரதியார், “கிறிஸ்துவ விவிலிய நூலில் வரும் தேவகுமாரன் என்பது வேறு யாருமல்ல; நம்முடைய சுப்ரமணியன்தான்” என்கிறார். ‘வேணு முதலி விசித்திரம்’ என்ற தலைப்பில் இதுகுறித்து அவர் எழுதுகிறார். “வேணு முதலி நேற்று மாலை இருபது, முப்பது கிறிஸ்துவப் புத்தகங்கள், துண்டுப் பத்திரிகைகள், குட்டிப் புஸ்தங்கள் இவற்றையெல்லாம் ஒரு பெரிய மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து என் மேஜையின்மேலே எள்ளு போட இடமில்லாமற்படி விரித்தான்... இதை இவன் ஏன் வாங்கினானென்று எனக்குத் தெரியவில்லை.... ‘இவற்றை ஏன் வாங்கினாய்’ என்றேன். ‘அத்தனையும் சேர்த்து ஒன்றரை ரூபாய்க்கு மேலே போகவில்லை’ என்றான்.... ‘பாவமன்னிப்பு தொடர்பான காகிதங்கள் இனாமாக வாங்கினேன் அறியவும்’” என்றான். நான் புன்னகை செய்தேன். “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற குறளை எடுத்துச் சொன்னேன். வேணுமுதலி சொல்கிறான் : ‘காளிதாஸரே, நான் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே வாங்கினேன்... இந்த யுத்தம் (முதல் உலகப் போர்) முடிந்தவுடன் நான் ஐரோப்பாவுக்குப் போவேன். அங்கே ஹிந்து தர்மத்தை நிலை நிறுத்தப் போகிறேன். ஆதலால் எனக்கு ஐரோப்பாவில் ஏற்கனவே வழங்கிவரும் மதத்தைப் பற்றி ஸம்பூர்ண ஞானம் இருக்க வேண்டுமென்று கருதி இவற்றை வாங்கினேன்’ என்றான்...6 வேணுமுதலி மார்க் எழுதின சுவிசேஷத்தில் பதிமூன்றாம் அதிகாரத்தைத் திருப்பி பின்வருமாறு வாசிக்கலானான்.   “யேசு சொல்லுகிறார்... அந்த நாட்களில் அந்த உபத்திரவத்திற்குப் பிறகு சூரியன் அந்தகாரப்படும். சந்திரன் ஒளி கொடாது. வானத்தின் நஷத்திரங்கள் விழும். வானங்களிலுள்ள சக்திகள் அசைக்கப்படும். அப்போது மனுஷ குமாரன் மிகுந்த வல்லமையோடும் மஹிமையோடும் மேகங்களின் மேல் வருவதை உலகத்தார் காண்பார்கள்’ என்று வாசித்து முடித்தான். பிறகு என்னை நோக்கி ‘காளிதாசரே இந்தக் கதையின் குறிப்பென்ன? மனுஷ குமாரன் யார்?’ என்று கேட்டான். ‘எனக்கொன்னும் சரியாக விளங்கவில்லை என்றேன்’. வேணுமுதலி சொல்கிறான்: “ஐரோப்பாவிலுள்ளவர்கள் வெளிப்படையாக அர்த்தம் சொல்லுகிறார்கள். யுக முடிவில் யேசுநாதர் வரப்போவதாகவும், அப்போது மேற்கண்ட உற்பாதங்களெல்லாம் நடக்குமென்றும் நினைக்கிறார்கள். நான் இதற்கெல்லாம் அத்யாத்மப் பொருள் சொல்லுகிறேன். கிறிஸ்து மதம் ஆசியாக் கண்டத்தில் உண்டானது. மதங்களே ஆசியாவில்தான் பிறந்தன. ஐரோப்பியருக்கு ஞான சாஸ்திரம் ஏற்படுத்தத் தெரியாது. ஆசியாவிலிருந்து கொண்டு போன ஞான சாஸ்திரங்களை அவர்கள் நேரே அர்த்தந் தெரிந்து கொள்ளவில்லை. மேற்படி மார்க் எழுதின வசனங்களில் சொல்லியபடி மனுஷனுக்குள்ளேயே ஆத்மஞானத்தால் பிறப்போனாகிய குமாரதேவன் அதாவது ஸுப்ரமண்ய  மூர்த்தியாகிய அக்னிதேவன் மனுஷ்யனுக்குள்ளேயே ஏழு லோகங்களும் இருக்கின்றன. தேவர், அஸுரர், இராவுசர், சித்தர், சாத்தியர், கின்னர், கிம்புருஷர், பூதப்ரேத, பிசாசூர், மனுஷ்ய மிருகபஷி, நாகர் முதலிய சகலமும் நம்முடைய அந்தக் காரணத்திலேயே உள்ளவையாகும். மேற்சொல்லிய யுத்தர்கள் பூமியதிர்ச்சிகள் முதலியன எல்லாம் அந்தக் காரணத்தினால் ஞான குருவாகிய ஸுப்ரமண்ய மூர்த்தி தோன்றி ஜீவன் முக்தியாகிய அமிர்த நிலையைக் கூட்டுவதற்கு முன்பு தனக்குள்ளே தோன்றும் பல உத்பாதங்களாகக் கருதப்படும். இதற்கெல்லாம் ஐரோப்பிய கிறிஸ்தவர் உட்பொருள் கொள்ளாமல் புறப்பொருள் கொள்வது அவர்களுடைய ஞான சாஸ்திர பரிச்சயக் குறைவைக் காட்டுகிறது. இதைக் கேட்டவுடன் பாரதி “தனக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. தலைவலி எல்லாம் பறந்தோடிவிட்டது” 7 என்கிறார். பாரதியின் ஆர். எஸ். எஸ். மூளை பைபிளை எப்படியெல்லாம் ஆய்கிறது பார்த்தீர்களா? மேற்கண்ட சான்றுகள் மூலம் பாரதியாருக்குப் புத்தமதம், கிருத்தவ மதம், இசுலாமிய மதம் முதலியவற்றின் மேல் வெறுப்பும், இந்து மதத்தின்மேல் அதிக விருப்பமும் இருந்தது என்பதை அறியலாம்.   அடிக்குறிப்பு   1. மகாகவி பாரதியின் பகவத் கீதை (உரைவிளக்கம்) நர்மதா வெளியீடு, சென்னை 1995. ப.38,39 2. பாரதியார் கட்டுரைகள், ப.295-307 3. மேற்படி நூல், ப.74 4. பாரதியின் கருத்துப்படங்கள் (தொ.ஆ) இரா. வெங்கடாசலபதி, நர்மதா வெளியீடு, சென்னை 1994, ப.119 5. பாரதியார் கட்டுரைகள், ப.82 6. மேற்படி நூல், ப.411 7. பாரதி புதையல் பெருந்திரட்டு, (தொ.ஆ.,) ரா.அ.பத்மநாபன், வானதி பதிப்பகம், சென்னை 1982, ப.107,100                       8. ஆர்.எஸ்.எஸ். தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி       ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம். “இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை. எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.” 1 “இந்திரன், அக்கினி, வாயு, வருணன் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளைத் தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்து மதம் ஒற்றுமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதீக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆசார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன” என பாரதி கூறுகிறார்.   1 "வேதம், உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும். 2 புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொதுவேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ராமணமாகக் கொண்டு, இதர தேவ தூஷணை செய்யும் அம்சங்களையும் பிராணமில்லாதன என்று கழித்துவிட வேண்டும். 3. வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும் ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான பிரச்சாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்.” 2 மதமாற்றம் குறித்து அப்போதே பாரதி மிகவும் கவலைப்பட்டார். “இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமான முடையவர் களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது.... ஆம்... ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைப்பட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல வாலில் நெருப்புப் பிடித்தெரியும்போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும்போது பார்த்துக் கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும்போது தூங்குகிறார்கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடர்”3 என்றார் பாரதி.பொருளாதார வளர்ச்சிக்கு வழி சொல்லாமல் மதக் கண்ணோட்டத்தில் மக்களைப் பெருக்க வேண்டும் என்கிறார். மேலும் இவர் இந்து தர்மத்தைப் பற்றிக் கூறும்போது, “ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப் படுவோமேயன்றி அழிந்து போய் விட மாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்றும் வறுமை மிகுதிப் பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்குச் சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தை கவனியாமல் அசிரத்தையாக இருப்போமேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை”4 என்கிறார் பாரதியார். 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம்தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் உலகம் முழுவதும் ஹிந்து தர்மத்தை; பரப்ப வேண்டும் என எழுதியுள்ளார். சோவியத்தில் அக்டோபர் (நவம்பர்) புரட்சி ஏற்பட்ட பிறகுதான் பாரதி இதை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஹிந்து தர்மம் பரவும்படிச் செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா, ஸ்வாமி விவேகானந்தரைப் போலப் பத்துப் பேர் இப்போது இருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக் கொடியை உலகமெங்கும் நாட்டலாம்... சண்டை காலந்தான் நமக்கு நல்லது (முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடைபெற்றது. அந்தச் சமயத்தில்தான் பாரதி இதை எழுதியுள்ளார்). இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நூற்றுக்கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும், ஜமீன்களையும், செட்டியார்களையும், மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.” 5 சண்டை காலந்தான் நமக்கு நல்ல காலம், மதத்தை வெளிநாடுகளில்  நிலைநாட்ட இதுவே ஏற்ற தருணம் என்கிறார் பாரதியார். அவரைப் பின்பற்றித்தான் இன்றைய இராமகோபாலன் போன்றோர் “மூன்றாம் உலகப்போர் மூளுகிறது என்று நினைத்துக் கொள்வோம். அந்த வேளையில் ஆசிய நாடுகள் தங்களைக் காத்துக் கொள்ள ஒன்று பட்டு நிற்க வேண்டி வரும். அப்போது இயல்பாகவே பாரதம் ஆசியக் கூட்டமைப்பின் தலைமை ஏற்கும். அந்த நிலையில் அகண்ட பாரதமோ, அதற்குச் சமமான நிலவரமோ உதயமாவது சாத்தியம்” என எழுதியுள்ளார் போலும். மேலும், “இப்பொழுது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களையெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கக் கோடாலியாய் இருக்கும்”6 என்கிறார் பாரதியார். இந்தியாவிற்குப் பாரத தேசம் என்ற பெயர்தான் வேண்டும் என்பதற்கான காரணத்தை பாரதி கூறுகிறார். “பாரதம் பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்யாகுமரி முனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்று சேர்த்து அதன்மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்திய படியால் இந்நாட்டிற்கு ‘பாரததேசம்’ என்ற பெயர் உண்டாயிற்று.”7 இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இந்தப் பெயர்தான் வேண்டும் என்கின்றனர். பாரதியார் கூறுவதுபோல் இந்தியா முழுவதையும் பரதன் ஆண்டதாக வரலாற்றுச் சான்று ஏதும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. இந்தியாவில் 56 தேசம் இருந்ததாகவும், 56 அரசர்கள் ஆண்டதாகவும் தான் பாரதக் கதையிலும் காணமுடிகிறது. ஆங்கிலேயர் வருவதற்குமுன் இந்தியா என்ற ஒரே நாடு இருந்ததற்கான சான்று எதுவுமே இல்லை. இசுலாமியர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது மத மாற்றம் ஏற்பட்டது குறித்துப் பாரதியார் குறிப்பிடுவதாவது: “திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாதிபதியொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல் யாதொரு சண்டையுமின்றி தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில் ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்”8 என்கிறார் பாரதியார். ஆனால் உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததற்குச் சான்றாதாரம் நமக்குக் கிடைக்கவில்லை. மாறாக, திப்புசுல்தான் பார்ப்பனர்களை ஆதரித்த செய்திகள்தான் நமக்குக் கிடைக்கின்றன. திப்புவின் ஆட்சியில் 45,000 முதல் 50,000 பார்ப்பனர்கள் அரசுப் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் உரிமையைக் கூட அவன் ஏற்றுக் கொள்ளாமல் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடமே ஒப்படைத்துள்ளான். திப்பு, சிருங்கேரி சங்கரமடத்திற்கு 1791இல் எழுதிய கடிதம் மூலம் இதை அறிய முடிகிறது. There are more than 45 to 50 thousand Brahmins in our service. It is wondered if the Government alone is  bestowed with Judiciary powers of handling their cases and punishing them for offences like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises  is given to you. You could punish them in any manner as given in sastras.9  இன்னும் ஒரு படி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்கச் சாஸ்தரா சண்டி ஜபம் நடத்த திப்பு சிருங்கேரி சங்கராச்சாரியைக் கேட்டுக் கொண்டார். ஓராயிரம் பார்ப்பனர்கள் 40 நாட்கள் ஜபம் செய்தார்கள். அந்தச் செலவு முழுவதையும் திப்புவே ஏற்றுக் கொண்டார். 10 இப்படிப்பட்ட திப்புவா, பாரதி கூறுவது போல, பார்ப்பனரைக் கொடுமைப்படுத்தியிருப்பார்? பாரதிக்கு இஸ்லாமியரின் மீது இருந்த வெறுப்பையே இது காட்டுகிறது. பறையர்களின் பேரில் பாரதி இரக்கங் காட்டுவதாகப் பலர் எழுதுகிறார்கள். ஏன் பாரதி அவ்வாறு செய்தார் என்றால், அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்குப் போய்விடுகிறார்கள் என்ற எண்ணத்தில்தான். “1200 வருஷங்களுக்கு முன்பு, வட நாட்டிலிருந்து மதம் மாறியவர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்த போது, நம்மவர்களின் இம்சை பொறுக்க முடியாமல் வருத்திக் கொண்டிருந்த பின்னர், பறையர் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிகாசம் சொல்கிறது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது.”   ..... எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்களையும், முக்கியமாகத் திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள். ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. மடாதிபதிகளும், ஸந்நிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள், ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம் நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை நமது சமூகத்திலே சேர்த்து, அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூரண விரோதிகளாக மாறி விடுவார்கள்.11 சாதிக் கொடுமையினால் ஒடுக்கப்பட்டவர்கள் அதிக அளவில்மதம் மாறிய காரணத்தால் பாரதியார் கிழச்சாம்பன் கூறுவதைப் போல மதமாற்றம் வேண்டாம் என்பது பற்றி எழுதியுள்ளார்.கிழச்சாம்பான் சொல்லுகிறார்:“ஹிந்து மதத்திலே எங்களுடைய நிலைமை தாழ்ந்திருக்கிற தென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்ந்தால் எங்களுடைய நிலைமை மேன்மைப்படுமென்றும் சொல்லி கிறிஸ்துவப் பாதிரிகள் எங்களிலே சிலரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்தார்கள். அதில் யாதொரு பயனையும் காணவில்லை. நூற்றிலொருவனுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. மற்றவர்களெல்லாரும் துரைமாரிடத்தில் சமையல் வேலை பண்ணுதல், பயிரிடுதல், குப்பை வாருதல் முதலிய பழைய தொழில்களைத்தான் செய்து வருகிறார்கள். எனக்கு முன்னோருடைய மதமே பெரிது. கிறிஸ்துவர்களுடன் எங்களுக்குக் கொடுக்கல் வாங்கல், சம்மந்தம், சாப்பாடு ஒன்றுமே கிடையாது. என்ன கஷ்டமிருந்தாலும் நாங்கள் ஹிந்து மதத்தை விடமாட்டோம்.”12 பாரதி இந்து மதத்தை நிலைநிறுத்த எப்படியெல்லாம் சிந்திக்கிறார் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. ஆக முகமதியர்களையும், கிறித்துவர்களையும் எதிரிகள் என்றே பாரதியார் குறிப்பிடுகிறார். இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். போடுகின்ற பசுவதைத் தடுப்புச் சட்டம் என்ற கூச்சலை அன்றே போட்டவர் பாரதியார் ஆவார். 1917 நவம்பர் 8ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் பசுவதைத் தடுப்பைப் பற்றி எழுதியுள்ளதாவது. பசுவின்  சாணத்துக்கு நிகரான அசுத்த நிவாரண மருந்து உலகத்தில் அக்னியைத்தான் சொல்லலாம். வீட்டையும். யாகசாலையையும். கோவிலையும். நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம். அதனைச் சாம்பல் ஆக்கி அச்சாம்பலை வீபூதி என்று ஜீவன் முக்தியாக வழங்குகிறோம். பசுமாடு பத்தினிக்கும் மாதாவுக்கும் ஸமானம். அதன் சாணமே வீபூதி. அதன் பால் அமிர்தம், வைத்தியரும் யோகிகளும் பசுவின் பாலை அமிர்தம் என்கிறார்கள். வேதமும் அப்படியேதான் சொல்கிறது. பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக  வணங்குவதால், நாங்கள் பெரும் பகுதியாக வாழ்வதும், எங்களுடைய  பூர்வீக சொத்துமாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும். இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர் சாஹெப், தமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார். ஹிந்துக்களின் கண்ணுக்குப் படாமல் என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொண்டு போங்கள்”13 என்கிறார் பாரதியார்.   இன்றைக்குக் கிறித்துவ மிஷனரி பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதை, பாரதியார், 18.8.1906இலேயே மிஷின் பாடசாலைகளை விலக்கி வைத்தல் வேண்டும் என்று கூறி, இந்தியா ஏட்டில், தலையங்கம் எழுதியுள்ளார். அதில் படிப்பவர்கள் இந்து மதக் கடவுள்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களுக்குத் தேசபக்தி வராது. கிறிஸ்துவர்களாக மாறிவிடுவார்கள். எனவே அவர்களை அப்பள்ளிகளில் சேர்க்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். 14 1906முதலே பாரதியார் கிறித்தவர்களைத் தேசபக்தி அற்றவர்கள்; இந்த மதத்தைக் கெடுக்க வந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 1909இல் இசுலாமியர்கள் தேசபக்தி அற்றவர்கள் என்றும் ‘இந்தியா’ ஏட்டில் கருத்துப் படம் போட்டு எழுதியுள்ளார். இன்றைய ஆர்.எஸ்.எஸ். காரர்கள், “இந்தியாவில் மொழிப் பிரச்சினை தீர ஒரே வழி - சமசுகிருதம்தான்  இந்தியாவின் பொது மொழியாக வேண்டும்”15 என்கின்றனர். இதே கருத்தைப் பாரதி, இந்தியாவிற்குப் பொது மொழியாக சமசுகிருதம்தான் வரவேண்டும் என்று 1920இலேயே எழுதியுள்ளார்.16 ஆர்.எஸ்.எஸ். காரர்கள் சமசுகிருதம் மட்டும்தான் (தேவ பாஷை)  தெய்வமொழி என்கின்றனர். பாரதியும் இதே கருத்தைத் தான் கூறியுள்ளார். 17 பாரதி, இன்னும் ஒரு படி மேலே போய், இந்தியாவிற்குச் சுதந்திரம் ஏன் தேவையென்றால் இந்து தர்மத்தைக் காப்பாற்றவே என்று, 1921இல் ‘லோக குரு பாரதமாதா’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக்கிடக்கிறது. ஆனால் இக்கொள்கையை முற்றும் அனுஷ்டித்தல் அன்னிய ராஜ்ஜியத்தின் கீழே ஸாத்யப் படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி. 18 பாரதி அகன்ற பாரதக் கொள்கை உடையவர். என்றைக்கும் இந்தியா உடையக் கூடாது என்பதில் மிகவும் உறுதியானவர்; பாரதியின் காலத்திலேயே 1917இல் தெலுங்கர்கள் தங்களுக்குத் தனி மாகாணம் தேவை என்ற கொள்கையை முன்வைத்தார்கள். அப்போது பாரதி கீழ்க்கண்ட கருத்துகளை முன் வைக்கிறார்: “என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கை யெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது. ஆனாலும் அந்தச் சமயத்தில் ஆந்திரத்தைத் தனிப்பிரிவாக ருஜுபடுத்துவதைக் காட்டிலும், ஆப்கான் முதல் குமரி வரை  உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் மதபேதம், ஜாதிபேதம், குலபேதம், பாஷாபேதம் ஒன்றும் கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடல், ஒன்று.” 19 பாரதி பாப்பா பாட்டில் கூட, சேதமில்லாத இந்துஸ்தானம் அதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா என்றுதானே கூறியுள்ளார்? இன்றைய ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் போலவே பாரதியும் உடன் கட்டை ஏறி இறந்து போனவர்களை உத்தமிகள் என்று கூறுகிறார். 20 இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கொள்கைகளை அன்றைக்கு வகுத்துக் கொடுத்தவர் பாரதியார் என்று ஆணித்தரமாக நாம் சொல்லலாம். சுருங்கக் கூறின் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருதல், இசுலாமியரும், கிறித்துவரும், மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தேசபக்தி அற்றவர்கள், கிறித்தவர் பள்ளிகளில் இந்து மாணவர்களைச் சேர்க்கக் கூடாது. முகமதியர்களும், கிறித்துவர்களும் இந்துக்களின் விரோதிகள், இந்தியா முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்து மதத்தைப் பரப்ப வேண்டும். இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிளவுண்டு மடியக் கூடாது, வேதத்தையும், தர்மத்தையும் நிலைக்கச் செய்ய வேண்டும், மீண்டும் நால்வருணம் வரவேண்டும், வகுப்புரிமை கூடாது, ஆரியர், திராவிடர் என்பது பொய், பாரதமாதா, லோக குரு பசுவதை கூடாது சமஸ்கிருதம் உயர்ந்த மொழி அது இந்தியாவிற்கு பொதுமொழியாக வரவேண்டும். முதலான ஆர்.எஸ்.எஸ். காரர்களின் எல்லாக் கொள்கைகளையும் வகுத்துக் கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அன்றே கெட்டியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் பாரதியாரே என்பதை அவரது எழுத்துகளிலிருந்து அறிய முடிகிறது.      அடிக்குறிப்பு   1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.423 2. மேற்படி நூல், ப.121-123 3. மேற்படி நூல், ப.379 4. மேற்படி நூல், ப.381 5. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.281-282 6. பாரதி புதையல் பெருந்திரட்டு, (தொ.ஆ.) ரா.அ. பத்மநாபன், வானதி பதிப்பகம்,  சென்னை 1982, ப.478 7. பாரதியார் கட்டுரைகள், ப.53 8. மேற்படி நூல், ப.176 9. Tippu Sultan, A Fanatic? V. Jalaja Sakthidasan, Ninhyananda Jothi nilayam, P25 Chennai-28.. 10. மேற்படி நூல், ப. 11. பாரதியார் கட்டுரைகள், ப.334,335 12. பாரதி தமிழ் (தொ.ஆ) பெ. தூரன், வானதி பதிப்பகம், ப.241 13. மேற்படி நூல், ப.278-280 14. பாரதி தரிசனம் தொகுதி 1, நி.செ.பு.நி, ப.258 15. M.S. Golwaker Bunch of Thoughts. Page 150  16. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.274, 275 17. பாரதியார் கட்டுரைகள், ப.46 18. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.500,501 19. பாரதி தமிழ் (தொ.ஆ.) பெ.தூரன், ப.255 20. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.331,332   9. ஆய்வாளர்கள் காட்டும் பாரதி   பாரதியார் - தமிழ் மொழிக் காவலர், விடுதலை வீரர், பொதுவுடைமைவாதி, முற்போக்குவாதி என்றெல்லாம் ஆய்வாளர்கள் பலர் ஆராய்ந்து தம் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இவ்வாய்வாளர்களின் கருத்துகள் சரிதானா? இல்லையா? என்பதைப் பற்றி இவண் ஆரோய்வோம். பாரதியைப் பற்றி நூல்கள் எழுதிய ஆய்வாளர்களைப் பொதுவாக நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. பாரதியை முழுக்க முழுக்கப் பொதுவுடைமைவாதியாகக் காட்டும் சி.பி.ஐ., சி.பி.அய்.(எம்) கட்சிகளைச் சார்ந்தவர்கள். 2. பாரதியைத் தமிழ்மொழிக் காவலராக, தமிழ்மொழி, பண்பாடு, கலை வளர்ச்சிக்காகப் பாடுபட்டவராகக் காட்டும் ம.பொ.சி. போன்றவர்கள். 3. பாரதியை ஆரியச் சார்பானவர் எனக் காட்டுபவர்கள். 4. பாரதி புரட்சியாளர் இல்லை என்றாலும் அவர் ஒரு பிற்போக்குவாதி அல்ல எனக் காட்ட முனைபவர்கள் எனப் பிரிக்கலாம். பொதுவுடைமைவாதிகள் பாரதியைப் பற்றிக் கூறும் கருத்துகளைப் பார்க்கலாம். முதலில் ப.ஜீவா அவர்கள் பாரதியைப் பற்றிக் கூறியுள்ள கருத்துகளை எடுத்துக் கொள்வோம். தோழர் ஜீவா அவர்கள் 1935 முதலே பாரதியை மேடைகளில் புகழ்ந்து பேச ஆரம்பித்தார். ஆன்மீகவாதியான பாரதியைப் பொருள் முதல்வாதியாக ஜீவானந்தம் எடுத்துரைத்து விளக்கிய பொழுது சில இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது 1 என்று பெ,சு,மணி குறிப்பிடுகிறார். பாரதியார் சோவியத்தில் ஜார் வீழ்ச்சி குறித்து எழுதிய பாடலான, மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாளங்கே ஆகாவென்றெழுந்ததுபார் யுகப் புரட்சி என்ற பாடலை மேற்கோள் காட்டி, பாரதி அக்டோபர் புரட்சியை ஆதரித்ததாகக் கூறுகிறார். அது உண்மை இல்லை என்பதைப் பொதுவுடைமைப் பற்றிப் பாரதி என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளேன். “சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் போகப் போக வெற்றி மேல் வெற்றி சூடிவரும் உலகளாவிய ஜனநாயக - சமதர்ம இயக்கத்தின் முக்கியமான அம்சங்கள் மூன்று. 1)அடிமை நாட்டு மக்கள் விடுதலை, 2) பாட்டாளி மக்கள் விடுதலை, 3) பெண் மக்கள் விடுதலை. இந்த அம்சங்கள் நெஞ்சை அள்ளும் விதத்தில் முழுப் பொலிவோடு, எதிரொலிப்பதைப் பாரதி பாடல்களில் பரக்கக் காணலாம்.” 2 என்கிறார் ஜீவா. பாரதி இதை எந்தக் கட்டத்தில் பாடினார் என்பதுதான் நம்முடைய கேள்வி. தொடக்கக் காலத்தை மட்டுமே சுட்டிக் காட்டுவது எப்படி ஆய்வாகும்? பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்ற பாடலைப் பாடிக்காட்டி, பாரதி சாதியைத் தூள் தூள் ஆக்குவதாக ஜீவா கூறுகிறார். 3 பாரதி இப்பாடலை அந்த எண்ணத்தில் பாடவில்லை என்பதைப் பாரதியின் பார்ப்பன இனஉணர்வு என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளேன். பாரதி, “வர்க்கப் போரைப் போற்றினான், வம்பர் வாழ்வைத் தூற்றினான்” 4 என ஜீவா கூறுவது வெறும் வேடிக்கையாக உள்ளது. பாரதி எப்போது வர்க்கப் போரைப் போற்றிப் பாடினார்? பாரதி வர்க்கப் போரைக் கடுமையாகத் தாக்கி ‘செல்வம்’ என்ற கட்டுரையில் எழுதியுள்ளாரே. பாரதி, கம்பனை ஒரு மானுடன் என்று கூறிவிட்டாராம். இதனால் ஜீவாவின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. இது எத்தனை மெய்? ‘கம்பன் ஒரு மானுடன்; அவன் காவியம் மானிட மகா காவியம்’ 5 என்கிறார் ஜீவா. மதவாதியின் மானுடப் பற்று என்பது போலியானது, மார்க்சியவாதியின் மானுடப் பற்று என்பதுதான் உண்மையானது. கம்பனை ஒரு மானுடன் என ஜீவா கூறுவது சற்றும் பொருத்தமற்றது. கம்பன் காவியத்தில் சோசலிசத்தைக் காண்கிறார் ஜீவா. இவரைப் போன்றவர்கள் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டுதான் மார்க்சிய ஆசான் எங்கெல்ஸ், ‘கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ என்ற நூலை எழுதினார் போலும். “ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் விஞ்ஞானபூர்வமான நாஸ்திகனே”6 என்கிறார் ஜீவா. இதைத்தான் மார்க்சியத்தின் அடிப்படைச் சித்தாந்தமும் கூறுகிறது. ஆனால் பாரதி போன்றவர்களுக்கு விதிவிலக்கு கொடுக்கிறார் ஜீவா. ஜனசக்தி பொன்விழா மலரில் நான் ஒரு நாஸ்திகன் என்ற தலைப்பில் ஜீவா கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் பாரதியைப் பற்றி எழுதும் போது ஜீவா கூறுவதாவது: “நான் ஒரு நாஸ்திகனான கம்யூனிஸ்ட். அப்படியானால் ஆஸ்திக உணர்ச்சியுள்ள கம்யுனிஸ்டுகளும் இருக்கிறார்களா? இருக்கக் கூடாது என்றில்லை. ஒரு மதத்திலும் நம்பிக்கையில்லாத நாஸ்திகர்களுக்கு மட்டும்தான் தொழிலாளர்களின் அரசியல் கட்சியாகிய கம்யூனிஸ்ட் கட்சியில் இடமுண்டு என்று கட்சியின் திட்டமோ, கட்சியின் ஸ்தாபன விதிகளோ திட்டவட்டமாகக் கூறவில்லை. நேர்மாறாக, தொழிலாளர் கட்சி, மத நம்பிக்கைகளைப் பலாத்காரமாக எதிர்ப்பது தவறு என்று மார்க்சிய அறிஞர்கள் கூறியுள்ளனர்” 7 என ஜீவா கூறுகிறார். இது மார்க்சியத்திற்கு எதிரான கண்ணோட்டமாகும். இப்படி இருந்தால் பொதுவுடைமைக் கட்சி எப்படி உருப்படும்? பெரியாரை ஒரு சாதி ஒழிப்பு வீரராக ஜீவா ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது குறித்து அவர் கூறுவதாவது: ஆனானப்பட்ட கௌதம புத்தன் ஜாதியை ஒழிக்க முயன்றான். முடியவில்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் முயன்றார்கள்; முடியவில்லை. “நான் ஜாதியை ஒழித்து விடுவேனென்று ஈ.வெ.ரா. கத்தியைக் கையில் எடுக்கிறார். நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதீயப் பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக் கட்டிவிடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி சில்லரை பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்து விட முடியுமென்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்.”8   இந்த 20ஆம் நூற்றாண்டில் பெரியார் ஒரு பெரிய பட்டாளத்தையே வைத்துக் கொண்டு சாதி ஒழிப்பிற்காகப் பல கிளர்ச்சிகளை  நடத்தியவர். அதற்காக அரசியல் சட்டத்தையே எரித்து பல ஆயிரம் பேரை சிறைக்கு அனுப்பியவர்.  பெரியாரைப் போல இந்த நூற்றாண்டில் சாதி ஒழிப்பிற்காகக் கடுமையாகப் போராடியவர்கள் எவரும் இல்லை. பாரதியார் சாதி ஒழிப்பிற்காக எந்தப் போராட்டத்தை நடத்தினார், நாலுவரிப் பாட்டைத் தவிர! சாதி ஒழிப்பிற்காக நேரடிப் போராட்டம் நடத்திய பெரியாரை குருட்டுப் பைத்தியக்காரன் என்கிறார்; நாலு வரிப்பாட்டை எழுதிய பாரதியைச் சாதி ஒழிப்பு வீரன் என்கிறார் ஜீவா. இது ஜீவாவிற்குச் சுயமரியாதை இயக்கத்தின் மீதும், பெரியாரின் மீதும் இருந்த காழ்ப்பைக் காட்டுகிறதே தவிர நடுநிலை ஆய்வாக அமையவில்லை. பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த பி.இராமமூர்த்தி பாரதியை மாபெரும் புரட்சி வீரர் என்கிறார். “செந்தமிழ் நாடெனும் போதிலே” என்ற பாட்டைச் சுட்டிக் காட்டிக் தமிழ் உணர்வாளர் என்கிறார். இதே பாடலைப் பாரதிதாசன் பாடினால் பிரிவினைவாதி, தேசத்துரோகி என்பார். மேலும் அவர் பாரதி குறித்துக் கூறுவதாவது: “1919க்குப் பிறகு சென்னையில் சுதேசமித்திரனில் பணியாற்றிய காலத்து, நீ திருவல்லிக்கேணி கடற்கரையில் செய்த கர்ஜனைகள் இன்னும் என் காதில் ஒலிக்கின்றன” 9 என்று கூறுகிறார். பாரதி 1918 நவம்பரில் ஆங்கில ஆட்சிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்ட பிறகு அரசியல் கூட்டங்களில் பேசியதே இல்லை. ஆனால் பி. இராமமூர்த்தி 1919க்குப் பிறகும், பாரதி கர்ஜித்த கர்ஜனை தன் காதுகளில் இன்றும் ஒலிப்பதாகக் கூறுவது பொய்யே தவிர உண்மை இல்லை. எம்.ஆர். வெங்கட்ராமன் என்பவர், ‘தீக்கதிர்’ பாரதி நூற்றாண்டு சிறப்பு மலரில் பாரதி சில நினைவுகள் என்ற கட்டுரையில் எழுதுவதாவது: “ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தவுடன் நடந்த ஒரு சம்பவத்தைத் துரைசாமி அய்யர் அடிக்கடிக் குறிப்பிடுவார். அச்சம்பவத்தைப் பற்றி அவர் கூறும்போது, மாலை சுமார் ஏழு மணி இருக்கும். மண்ணடி ராமசாமித் தெருவில் உள்ள தன் வீட்டில் துரைசாமி அய்யர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று பாரதியார் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் கையில் ஒரு கத்தி, கண்களில் கனல் பறக்கிறது. பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று ஆவேசத்துடன் பேச்சு, துரைசாமி அய்யரைச் சாப்பிடவிடவில்லை. அவரைக் கையும் பிடியுமாக அப்படியே இழுத்துக் கொண்டு கடற்கரையை நோக்கி செயின்ட் ஜார்ஜ் கோட்டை வாயிலை அடைந்தார். அங்குள்ள வெள்ளைக்கார சிப்பாய்களைச் சண்டைக்கு இழுக்க வேண்டுமென்பது பாரதியாரின் நோக்கம், வேடிக்கை பார்க்கச் சில சிறுவர்கள் மட்டும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். விளைவு என்ன ஆனாலும் சரி என்று கிளம்பிவிட்டார் பாரதியார். அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தனர்” 10 என்கிறார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது 13.4.1919 இல், அந்நேரத்தில், பாரதி ஆங்கில ஆட்சிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, ஆங்கில அரசின் விருப்பப்படி கடயத்தில் வசித்து வந்தார். “அவர் ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து எதையும் எழுதவில்லை என்று ஆய்வாளர் கோ.கேசவனும் கூறியுள்ளார்.”11 பாரதியைப் பற்றி அளவுக்கு மீறிப் பார்ப்பனர்கள் பல பொய் கதைகளைக்  கட்டி உண்மைச் சம்பவம் போலவும், தாங்கள் நேரில் பார்த்தது போலவும் எழுதி அவரை உயர்த்திக் கூறியுள்ளனர். உண்மையில் ரௌலட் சட்டத்தையும் ஜாலியன் வாலாபாக் படுகொலையையும் வன்மையாகக் கண்டித்தவர் விடுதலை வீரர் வ.உ.சி.யே. அன்னிபெசன்ட் அம்மையார் ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்தார். அந்த அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கம் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருக்கவே திலகரும், பாரதியும் அன்னிபெசன்டை ஆதரித்தனர். ஆனால் வ.உ.சி. மட்டும் தான் அன்னிபெசன்ட் ஆங்கிலேயரின் கையாள் என்பதைப் புரிந்து கொண்டு அவரை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளார்.12   அன்னிபெசன்ட் பஞ்சாப் படுகொலையை ஆதரித்தார் என்பதற்குப் பின்வரும் சான்றும் உள்ளது: 1923 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்குத் தலைவர் ஈ.வெ.ரா காரியக் கமிட்டிக் கூட்டத்தில் சத்தியமூர்த்தி அய்யர், நீதிக்கட்சித் தலைவர் பி. தியாகராய செட்டியாரை ‘டயர்’ என்றும், பனகல் அரசரை ‘இராட்சசன்’ என்றும் வருணித்தார். இதனைப் பொறுக்காமல் எஸ்.இராமநாதன் எழுந்து, “ஒத்துழையாமையைச் சட்டவிரோதம் என்று கூறிக் காந்தியைக் கைது செய்யச் சொன்ன சீனிவாச அய்யங்காரும், பஞ்சாப் அட்டூழியத்தை ஆதரித்து, செங்கல்லால் அடித்தவர்களை இரும்புக் குண்டாலடித்தார்கள் வெள்ளையர்கள். இதிலென்ன தவறு? என்று கூறிய பெசன்டு அம்மையும், டயரும், ராட்சசியும் அல்லவா? என்று பதிலடி கொடுத்தார்.”13   எஸ். இராமநாதன். மற்றுமொரு பொதுவுடைமையாளர் பி. பரமேசுவரன் கூறுவதாவது: “பாரதி சொல்லிலும் செயலிலும் சாதி வேற்றுமையை வெறுத்தவன். பூணூல் அணிய உரிமையற்றவர்கள் என்று விலக்கப் பட்ட, தாழ்த்தப் பட்டவனுக்கு அதை அணிவித்தான். பூணூ லின் புனிதத் தன்மைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினான் என்கிறார். ஆனால் பாரதி எல்லோரையும் இந்துமதத்துக்கு இழுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பூணூல் அணிவித்துள்ளார். இக்கருத்தைக் கவனத்தில் கொள்ள மறுத்த பரமேசுவரன் அவரைப் புரட்சியாளராகக் காட்டுகிறார். மேலும் இவர் பாரதியைப் பெண் விடுதலையாளராகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரராகவும் காண்கிறார். பாரதி அக்டோபர் புரட்சியை வரவேற்றதாகவும் குறிப்பிட்டு  பாரதியை, “பரலோகத்திற்குப் பாதை காட்டியவரல்ல;  இம்மண்ணுலகிலேயே புது வாழ்வைக் காணத் துடிக்கும் மக்களின் கவிஞர்” என்று கூறுகிறார். 14 பொதுவாகப் பாரதியைப் புகழ்ந்து எழுதும் அனைவருமே பாரதியின் தொடக்கக் காலமான 1906 முதல் 1908 வரை உள்ள காலத்தில் எழுதிய பகுதியை மட்டுமே கண்டு, அவர் வாழ்நாள் முழுதும் அதே நிலைப்பாட்டில் வாழ்ந்தவர் எனக் காட்டுகின்றனர். பாரதியின் அரசியல் வரலாற்றின் தொடக்கத்தையே மீண்டும் மீண்டும் கூறி அவரின் பிற்கால நிலைப்பாடுகளைக் கண்டு கொள்ளாமல் மறைத்து விடுவது நேரிய ஆய்வு முறையன்று. பொதுவுடைமைக் கட்சியினர் அனைவரும் மற்றுமுள்ள முற்போக்காளர்களும் திட்டமிட்டே இதைச் செய்கின்றனர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர்களை விட ஒருபடி மேலே போய்விட்டார் பேராசிரியர் ந. பிச்சமுத்து. “அரசு பற்றிப் பாரதியார் கூறும் உண்மைகள் வியாசரின் கருத்துகளா அல்லது பாரதியின் கருத்துகளா என்பது மகாபாரதத்தோடு ஒப்பு நோக்கி எடுக்க வேண்டிய முடிவு என்றாலும், பாரதியார் அரசு பற்றிக் கூறும் கருத்துகள் மேதை லெனின் அவர்கள் அரசும், புரட்சியும் என்னும் நூலில் கூறும் கருத்துகளோடு ஒத்திருப்பது மனங்கொளத்தக்கது.... அரசு பற்றிய லெனினியக் கொள்கையைத் தமிழ் மண்ணில் அறிமுகப்படுத்திய முதல் கவிஞர் பாரதி”15 என்று கூறுகிறார். இது எவ்வளவு பெரிய பொய்? உண்மையில் பாரதியாருக்கு மார்க்சியத்தின் அடிப்படைகள் எதுவுமே தெரியாது  என்று குறிப்பிட்டு  செ.கணேசலிங்கன் கூறியுள்ளதாவது: “பாரதி, மார்க்சிய, லெனினிய கருத்துகளையோ கோட்பாடுகளையோ கற்றிருக்கவில்லை. சமூக விஞ்ஞானத்தைத் தெரிந்திருக்கவில்லை. தேசிய முதலாளிகள் கவிஞராக இருந்ததால் பாட்டாளிகளின் சுரண்டல், துன்பம் ஆகியவற்றைப் பற்றிப் பாடியோ, எழுதியோ இருக்கவில்லை. லெனினையும், லெனினின் அக்டோபர் புரட்சியையும், பாரதி வன்மையாகக் கண்டித்து எழுதினான். ரஷ்ய சோசலிசப் புரட்சி தோல்வியுறும் என்று கூறினான்.... பாரதி முதலாளித்துவப் புரட்சியை அதன் வன்முறையை ஆதரித்தான். ஆனால் பாட்டாளிகளின் வன்செயலை, புரட்சியை எதிர்த்தான்” 16 என்கிறார். “பாரதி அக்டோபர் புரட்சியைப் பாடவில்லை. 1917இல் பிப்ரவரியில் நடைபெற்ற புரட்சியைத்தான் பாடினார். அவர் ஒரு  பொருள் முதல்வாதியல்ல” என்று மங்களா என்பவர் பாரதியின் கருத்துகளை ஆய்வு செய்து கூறியுள்ளார். 17 இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த தொ.மு.சி. ரகுநாதன் “பாரதி அக்டோபர் புரட்சியைத்தான் பாடினார். பாரதி அக்டோபர் புரட்சியைப் பாடவில்லை என்று கூறுபவர்கள், அந்தக் கொள்கைமேல் வெறுப்பால் அவ்வாறு கூறுகிறார்கள்”18 என்கிறார். பாரதியைப் புரட்சிக்காரராகக் காட்டுவதற்காக இவர் ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற தலைப்பில் 550 பக்கங்கள் கொண்ட நூல் ஒன்றை எழுதியுள்ளார். இதில் பாரதியின் தொடக்க காலமான 1906 முதல் 1911 வரை அவர் எழுதியவை மட்டுமே உள்ளன. பாரதியின் கடைசிப் பத்தாண்டுகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இவர் லெனின் கொள்கையை விட, பாரதியின் கொள்கைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். பாரதியைத் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர் எனப் பலர் எழுதியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர் ம.பொ.சி. ஆவார். பாரதி தன் தம்பிக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டிப் பாரதியைத் தமிழ் இனக் காவலராக உயர்த்திப் பிடிக்கிறார் ம.பொ.சி. பாரதி தம் தம்பி சி. விசுவநாதனுக்கு 3.8.1918இல் கடிதம் எழுதினார். அதில், “எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எவ்வளவு கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ் கூட எழுத முடியாவிட்டால் சமஸ்கிருதத்திலே காயிதம் எழுது”19  என்று எழுதியுள்ளார். இதை எப்படிப் பாரதியின் தமிழ்ப் பற்று என்று சொல்ல முடியும்? அவர் தம்பியைத் தமிழில் மட்டும்தானே எழுதச் சொல்லியிருக்க வேண்டும்; இல்லையென்றால் சமஸ்கிருதத்தில் எழுது என்று ஏன் கூற வேண்டும்? இது பாரதிக்கு ஆங்கிலத்தின் மேல் இருந்த வெறுப்பைக் காட்டுகிறதே அன்றி ம.பொ. சி. கூறுவது போல் தமிழ்ப்பற்று அன்று என்பது தெரியவில்லையா? யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் என்ற பாரதியின் பாடலைப் பலர் மேற்கோள் காட்டிப் பாரதியின் தமிழ்ப்பற்றைப் போற்றியுள்ளனர். டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் இப்பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பாரதியின் தமிழ் உணர்வைப் புகழ்கிறார். 20 உண்மையில் இப்பாடலைப் பாரதி மனப்பூர்வமாக எழுதினாரா என்று இன்று வரை யாரும் ஆய்வு செய்யவில்லை. இப்பாடலைப் பாரதி 1915ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்ச்சங்கத்தின் பரிசுப் போட்டிக்காக நண்பர்களின் வற்புறுத்தலினால் எழுதினார் என்பதைப் ‘பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? என்ற முதல் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளேன். அதேபோலப் பாரதியின், செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்ற பாரதியின் பாடலையும் பலர் சுட்டிக் காட்டிப் பாரதியின் தமிழ் உணர்வைப் போற்றுகின்றனர். இப்பாடலும் மதுரைத் தமிழ்ச்சங்கம் பரிசுப் போட்டிற்காக நண்பர்களின் வற்புறுத்துதலினால் எழுதப்பட்டது என்பதுதான் உண்மை. பாரதியைப் பெண் விடுதலையாளராகப் பெரும்பாலோர் காண்கின்றனர். அவர்கள் பாரதியின் பெண் விடுதலைக்கும் இப்பாடலை மேற்கோளாகக் காட்டுகின்றனர். தி.ச. ராஜு குறிப்பிடுவதாவது:   மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்; அதை வெட்டி விட்டோமென்று கும்மியடி  21   என்ற பாடலைச் சுட்டிக் காட்டிப் பாரதியைப் பெண் விடுதலையாளராகக் காட்டுகிறார். பாரதி தொடக்கக் காலத்தில் சிறந்த பெண் விடுதலையாளராக இருந்தார் என்பதை இப்பாடல் வரிகளால் நாம் அறிகிறோம். ஆனால் பாரதி பிற்காலத்தில் தீவிர மதவாதியாய் மாறிய பின்பு அவருடைய பெண் விடுதலைக் கோட்பாடு போய்விட்டது என்பதே உண்மை. பாரதியே தன் கருத்தைப் பின்னாளில் மாற்றிக் கொண்ட பின்பு நாம் அவர் தொடக்கத்தில் கூறியதையே திரும்பத் திரும்பக் கூறுவது ஆய்வுக்கு அழகல்ல! 20.10.1906இந்தியா இதழில் பாரதி எழுதும்போது, பம்பாயிலிருந்து ‘ஹிந்து சுயராஜ்‘ என்னும் இதழின் ஆசிரியர் டாணாவாலா எழுதிய கட்டுரை இராஜதுரோகம் உடையதென்றும், ஆங்கில அரசு அவரைத் தண்டித்தது அவர்கள் கடமை என்றும் கூறி எழுதியதாவது: “தைரியம் வேண்டும், பயமில்லாமை வேண்டும்” என்று 3 பக்கம் பிரசங்கம் செய்த பத்திராதிபர், தாம் எழுதியதை ‘ஆமாம் நான் எழுதினதே நியாயமென்று எனக்குப் புலப்பட்டது; அதன் பேரில் எழுதினேன்’ என்று கோர்ட்டார் முன்பு கூறத் தைரியமில்லாமல், ஏதோ வெற்று முகாந்திரங்கள் கூறி மழுப்பிவிட்ட விஷயம் வேடிக்கை யாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. தாம் செய்ததை ஒத்துக் கொள்ளாத இவர் வியாசத்தை தைரியத்துடன் எழுதும்படி யார் கேட்டுக் கொண்டார்களோ அறியமாட்டோம்” என்று கூறியுள்ளார். இந்தியா இதழின் வெளியீட்டாளராகப் பதிவு பெற்றிருந்த சீனிவாசன் ஐந்து ஆண்டுக் கடுங்காவல் விதிக்கப்பட்டதைப் பற்றிப் புதுச்சேரிக்குச் சென்றபின் பாரதி அங்கிருந்து வெளியிட்ட இந்தியா இதழில் ‘இந்தியா கேஸ்’ என்ற ஆசிரியவுரையில்: “... ஏதோ பிறர் ஏமாற்றுதலுக்குப்பட்டுப் பிசகி நடந்து விட்டாரென்றும் அவர் செய்தது குற்றம் என்று தீர்ப்பாகி விடும் பசஷத்தில் அதற்காக அனுதாபப்பட்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார் என்றும்... சீனிவாசனின் வழக்கறிஞர் கூறியதைக் குறிப்பிட்டு, ‘நாம் எது செய்யினும் தேசத்துரோகம் செய்யோம். தேசத்துரோகிக்கு என்றும் மீளாத நரகமே பிராப்தம்’; ராஜத்துரோகக் கேசிலகப்பட்டுக் கொள்ளும் ஒவ்வொரு பத்ராதிபரும் சொல்ல வேண்டியதும் அதுவே” என்று கூறியுள்ளார். சீனிவாசனைச் சிக்க வைத்துவிட்டுப் புதுச்சேரி சென்ற பாரதி இவ்வாறு ஆசிரியவுரையில் எழுதுவது பொருத்தமாக இல்லை என்று பாரதி ஆய்வாளர் முனைவர் ப. இறையரசன் கட்டிக் காட்டியுள்ளார். 22 தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்து விட்டுத்தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும் என்று எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு கூறியுள்ளார்.23 பாரதியார் எப்போதும் தான் மட்டும் அகப்பட்டுக்கொள்ளக் கூடாது, சிறைக்குப் போகக்கூடாது என்று சந்து பொந்து வழிகளைக் கண்டுபிடித்து ஒளிந்து கொள்கிறார். மற்றவர்கள் இவ்வாறு செய்யும் பொழுது கண்டித்து எழுதுவது எந்த வகையிலும் புரட்சியாளனுக்கு உள்ள குணமாக மாட்டாது. பாரதி ஒரு மதவாதி என்றாலும் அவர் சர்வ சமயத்தையும் சமமாகக் கருதினார் எனப் பலர் எழுதுகின்றனர். முன்னாள் நீதிபதி. மு.மு. இஸ்மாயில் அவர்கள் பாரதியின் பாடல் ஒன்றைச் சுட்டிக்காட்டி, அவரைச் சர்வ மதத்திற்கும் பொதுவானவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். அப்பாடல் வருமாறு: தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம் திக்கை வணங்கும் துருக்கர் கோயிற் சிலுவை முன்னே - நின்று கும்பிடும் யேசு மதத்தார் யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்  24 இந்தப் பாடலுக்குப் பிறகு பாரதி தன் கருத்தை மாற்றிக் கொண்டு இசுலாமியர்களையும் கிறித்தவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பதை மதங்களைப் பற்றிப் பாரதியின் பார்வை என்ற என் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளேன். பாரதியார் ஒரு வேதாந்தி. அவர் இயற்கையைப் பற்றி எழுதினால் கூட அதில் வேதாந்தப் பொருள் இருக்கும் எனக் கூறும் டாக்டர் மின்னூர் சீனிவாசன் பாரதியின் குயில் பாட்டுக்கு விளக்கம் எழுதி அதில் வேதாந்தக் கருத்துகள் மிளிர்வதைச் சுட்டிக் காட்டுகிறார்: நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய் நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய் காற்றை முன்னே ஊதினாய் காணரிய வானவெளி தோற்றுவித்தாய், நின்றன் தொழில் வலிமை யாரறிவர்? என வரும் வருணனையில் (1) ரிக்வேதக் கருத்தும் சாண்டோக்ய உபநிடதக் கருத்தும் மிளர்வதைக் காணலாம். ரிக்வேதம் பத்தாவது மண்டலம் 1929 ஆம் சூக்தத்தைப் பயின்றால் மேற்காணும் வருணனை மேலும் துலங்கும் 25 என்கிறார் மின்னூர் சீனிவாசன். பாரதியை மிகவும் துல்லியமாக ஆய்வு செய்த கோ.கேசவன் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பாரதிக்கு அக்கறை இருந்ததாகக் கண்டு கூறுவதாவது: “பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு.... அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக் கோட்டைச் செட்டியார்களே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள்” என்று பாரதி கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டி, பாரதியை மனிதநேயப் பற்றாளராகக் காட்டுகிறார் கேசவன். உண்மையில் பாரதி மனித நேயத்தோடு இதைக் கூறவில்லை. “பறையர்களுக்கு இதைச் செய்யவில்லை என்றால் அவர்கள் முகமதியர்களாகவும், கிறித்தவர்களாகவும் மாறி நமக்கு எதிரிகளாகி விடுவார்கள் என்று ஆர்.எஸ்.எஸ். பாணியில் கூறியுள்ளார்.”27 ஆனால் கோ.கேசவன் பாரதியை ஓர் ஆர்.எஸ்.எஸ். முன்னோடியாகக் காட்ட விரும்பாமல், பாரதியின் கருத்தை மாற்றி அவரை மனிதநேயப் பற்றாளராகக் காட்டுகிறார். பாரதி பறையர்களைத் தாழ்வாகக் கருதுவதை நியாயப்படுத்தி எழுதி உள்ளதை கோ. கேசவன் அவர்களே ‘பாரதியாரும் சோசலிச கருத்துகளும்’ என்ற நூலில் சுட்டிக் காட்டியுள்ளார் அவை வருமாறு: “ஹிந்துக்கள் புராதன கால முதலாகவே கோ மாமிசத்தை வர்ஜனம் செய்து விட்டார்கள். ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பதைக் கண்டு ஜாதிப் பொதுமை அப்பகுதியைத் தாழ்வாகக் கருதுகிறது. இது முற்றிலும் நியாயம்” 28 எனக் கூறித் தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கி வைத்ததை நியாயப்படுத்தும்  பாரதியை ஒரு மனித நேயப் பற்றாளராக  எவ்வாறு காண முடியும்?. பாரதி இந்திய தேசிய இனங்களின் விடுதலையை ஆதரிப்பதாகக்  கோ. கேசவன் கூறுவதாவது: இந்தியப் பகுதிகளை மொழிவாரியாகப் பிரித்து அவற்றை இணைக்கும் போக்கை ‘மாதாவின் துவஜம்’ என்ற பாடலில் காண்கிறோம். சென்னை மாகாணத்தில் உள்ள கன்னடர், தெலுங்கர், மலையாளர், தமிழர் ஆகிய தேசிய இனங்களைப் பிரித்து அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாயின் மணிக்கொடியை வணங்குவதாகப் பாடுகின்றார். தேசிய இனமொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுதலையும் ஆதரிக்கின்றார். ஆனால் இந்தியாவின் அரசியல் விடுதலைக்குப் பிறகே இதைச் செய்ய வேண்டும் என்கிறார். 29 ஆனால், உண்மையில் பாரதி அப்படிக் கூறவில்லை. தெலுங்கர் தனி மாநிலமாகப் பிரிய வேண்டும் என்று 1917இல் தீர்மானம் நிறைவேற்றியபோது பாரதி கூறியதாவது: “ஆந்திரரைத் தனிப்பிரிவாக ருஜுப்படுத்துவதைக் காட்டிலும் அஸேது ஹிமாசல பர்யந்தம் உள்ள இந்துக்களெல்லாம் ஒன்று என்ற மூலமந்திரத்தை நிலைநாட்டுவதே அவசியமென்று என் புத்திக்குத் தோன்றுகிறது.  ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் மதபேதம், ஜாதிபேதம், குலபேதம், பாஷாபேதம் ஒன்றுமே கிடையாது. இந்தக் கொள்ளைதான் இந்தக் காலத்துக்கு உத்தமமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடல், ஒன்று”30 என்று கூறுகிறார். இப்படிப்பட்ட அகண்ட பாரதக் கொள்கை உடைய ஆர்.எஸ்.எஸ். முன்னோடி மூளை கொண்ட பார்ப்பன பாரதி, தேசிய இனங்களின் விடுதலையை ஆதரித்தார் எனக் கோ. கேசவன் கூறுவது விந்தையாக உள்ளது. பாரதியின் வாழ்வில் சமயம் வகித்த செல்வாக்கு கருதுதற்குரியது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் இவரது படைப்புகளில் சமயப் படைப்புகளே அதிகம் இருந்தன. சமயத்தையே தேசியமாகவும் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்டார் என வேறு ஓர் இடத்தில் கோ. கேசவன் கூறியுள்ளார். 31 “பாரதி காலத்தில் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியும் சுரண்டலும் நேரடியாக இருந்து இப்பொழுது அவற்றின் வடிவங்கள் மாறியுள்ளன. இந்நிலையில் இத்தகைய கோட்பாடுகளின் தேவை பல்கிப் பெருகி உள்ளது. இதை நிறைவேற்ற பாரதி ஓரளவேனும் உதவக் கூடிய நிலையில் உள்ளார்”32 என்று கோ.கேசவன் கூறுவது மிகவும் வியப்பாக உள்ளது. பாரதி அகண்ட பாரதம் காவிக்கொடி தூக்கிக் கொண்டவர். அவரை கோ.கேசவன் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைக்குத் துணைக்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளது. திராவிடர் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்ப்பதில் பாரதியும், கோ.கேசவனும் தோழர்கள் ஆகிவிட்டனர். எனவே  பாரதி எத்தனை முறை மன்னிப்புக் கடிதம் எழுதினாலும் கோ.கேசவன் மிகவும் எளிமையாக அது அவருடைய வாழ்வில் ஏற்பட்ட ஒரு ஊனம் என்ற அளவோடு நிறுத்தி விடுகிறார். இதை எல்லாம் விட ஆர்.எஸ்.எஸ். எண்ணம் கொண்ட பாரதியை அந்தக் கோணத்தில் காட்டாமல் ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரராகவும், மனித நேயப் பற்றாளராகவும், தேசிய இனங்களின் விடுதலைக்குப் பாடுபட்டவராகவும் பாரதியைக் காட்டுவது கோ.கேசவனின் நேர்மையான ஆய்வு முறையைக் காட்டவில்லை. பாதகம் செய்பவரைக் கண்டால் -நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா  33 என்ற பாரதியின் வரிகளைச் சுட்டிக்காட்டி, முனைவர் து. மூர்த்தி, பாரதியை வீர உணர்வுள்ளவராகக் காட்டுகிறார். ஆனால் பாரதி இந்தப் பாப்பாப் பாட்டை எப்போது பாடினார்? வெள்ளையருக்குப் பயந்து மாறுவேடத்தில் புதுவை சென்றபின் அங்கிருந்துதான் பாடினார். பாரதி எந்தக் காலக்கட்டத்திலும் தைரியத்துடனும் துணிச்சலுடனும் இருக்கவில்லை. அதற்கு மாறாக ஆங்கிலேயருக்கு அஞ்சிஅஞ்சியே அவர் செத்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மை. இல்லை என்றால் அவர் புதுவை சென்றபின், ஆங்கில அரசுக்கு ஆண்டுதோறும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருப்பாரா? “பாரதியை எவ்வளவு செதுக்கினாலும் காலனிய எதிர்ப்பாளன் என்ற நிலையில் இருந்து அவரை இறக்கிவிட முடியாது” 34 என்கிறார் து.மூர்த்தி. நாம் அவரை இறக்க வேண்டிய அவசியமே இல்லை. அவரே அந்நிலையில் இருந்து 1910க்குப் பின் தாமாகவே இறங்கிவிட்டார். 1915க்குப் பின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அவரிடம் துளியும் இல்லை என்பதே உண்மை. மொத்தத்தில் பாரதியின் தொடக்க காலத்தை மட்டுமே சுட்டிக் காட்டுவது எந்த வகையிலும் நேர்மையான ஆய்வாகாது. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதியே, இன்றைய பாரதி என்கிறார் து.மூர்த்தி. அந்தப் பாரதி என்றோ மறைந்து விட்டார் நீதிக்கட்சி தொடங்கியவுடன் பாரதியின் பார்ப்பன சுயரூபம் முழுமையாக வெளிப்பட்டு விட்டது. ‘கடல்மேல் வருணாசிரமப் பாலம்’ என்ற கட்டுரையில் பாரதி “குலத்தளவே ஆகுமாம் குணம்” என்பதோடு “அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்ளுகிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார். அப்படிப்பட்ட பாரதியை எப்படிச் சாதி எதிர்ப்பாளர் எனக் காட்ட முடியும்? “பாரதியைப் பார்ப்பான் என்றவொரு காரணத்திற்காக மட்டம் தட்டிய மூடர்கள், எங்கே இனி தான் உதைப்பட்டுச் சாக நேருமோ, என அஞ்சி, ஒதுங்கி விட்டனர்”35 எனத் து. மூர்த்தி கூறுவது விந்தையாக உள்ளது. பாரதி பார்ப்பனக் குலத்தில் பிறந்ததால்  மட்டும் நாம் அவ்வாறு கூறவில்லை. பாரதியின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்திலும் தன் சாதிக்குச் சாதகமாகவே அவர் செயல்பட்டுள்ளார் என்பதால்தான் நாம் அவரைக் கண்டிக்க வேண்டியுள்ளது. சுயமரியாதை இயக்கத்தை ஆய்வு செய்த பேராசிரியர் மங்கள முருகேசன் ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி என்ற பாரதியின் பாடல்களால் பெரியார் ஈர்க்கப்பட்டு அதனால் அவர் ரசியா சென்றார்36 என்று கூறுவது பொருத்தமாக இல்லை. குடியரசு ஏட்டின் தொடக்க காலத்தில் பாரதியின் பாட்டை மேல் அட்டையில் வெளியிட்டு வந்த பெரியார்  8.11.1925 முதல் குடி அரசு ஏடு முதல் மூன்றே மாதத்தில்  பாரதியின் பாடல் வரிகளைப் பெரியார் நீக்கி விட்டார். அதன் பிறகு பாரதியைப் பற்றி எங்கும் அவர் எழுதவில்லை. அப்படியிருக்க 1931 ஆம் ஆண்டில், பாரதியின் பாடல்களால் அவர் ஈர்க்கப்பட்டு, இரசியா சென்றார் என்பதை எப்படி ஏற்க இயலும்? பெரியாரே 1929 முதல் பொதுவுடைமைக் கருத்துகளைக் குடி அரசு ஏட்டில் எழுதி வந்தார், அதனால் சோவியத்தை நேரில் பார்க்க விரும்பி அவர் சென்றார் என்பதே உண்மை. திராவிடர் இயக்கம் பற்றி வரலாற்று ஆய்வு நூலை எழுதியுள்ள முரசொலிமாறன் அவர்கள் பாரதியார் 1915 இல் அன்னிபெசன்டின் ‘நியூஇந்தியா’ பத்திரிகையில் எழுதிய ஒரு கடிதத்தைக் கொண்டு அவரைப் பார்ப்பன எதிர்ப்பாளர் என்று எழுதியுள்ளார். 37 தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் தோன்றிய பிறகு அன்னி பெசன்டின் ஹோம்ரூல் இயக்கம் தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு அடைக்கல இடமாக இருந்தது என எழுதி உள்ளார். இந்த அடைக்கலத்தில் பாரதியும் ஒருவர் என்பதை ஏனோ எழுதாமல் விட்டு விட்டார்! குறைந்த பட்சம் திராவிட இயக்க வரலாற்று நூலில் பாரதியைப் பார்ப்பன எதிர்ப்பாளர் என்பதைச்சுட்டிக் காட்டாமலாவது இருந்திருக்கலாம். பாரதியைப் பற்றி, நான் அறிந்தவரையில், இன்றுவரை ஏறக்குறைய 525 நூல்கள் வெளிவந்துள்ளன. இதில் 500க்கும் மேற்பட்ட நூல்கள் பாரதியை வானளாவப் புகழ்ந்து கூறுபவையாக உள்ளன. இவை, பெரும்பாலும் பாரதி ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரர், பெண் விடுதலை வீரர், சாதிமறுப்பு வீரர், தமிழ் இனத்திற்காகப் பாடுபட்டவர் என்ற கோணத்திலேயே எழுதப்பட்டுள்ளன. பாரதி 1906 முல் 1910 வரையிலேதான் ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரராக இருந்தார். 1904 முதல் 1906 வரைதான் அவர் பெண் விடுதலையாளராக இருந்தார். அவர் ஆங்கிலத்தை மிகக் கடுமையாக வெறுத்தார். அதற்குக் காரணம் பார்ப்பனக் கலாசாரத்தை ஆங்கிலம் அழித்து விட்டது என்பதால்தான். இதனால் தான் அவர் தமிழில் எழுதினார். தமிழின் மீது அவருக்கு உண்மையான பற்று இல்லை என்பதை அவருடைய எழுத்துகளில் காணலாம். பாரதியார் வள்ளலாரைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. ஆனால் இராஜாராம் மோகன்ராயைப் பற்றி எழுதி உள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி எழுதவில்லை. ஆனால் ஜான்சிராணி லட்சுமிபாயைப் பற்றி எழுதியுள்ளார்; தமிழுக்கு ஆக்கம் சேர்த்த கால்டுவெல்லைப் பற்றியோ, ஜி.யூ. போப்பைப் பற்றியோ, மனோன்மணீயம் சுந்தரனாரைப் பற்றியோ பாரதியார் எழுதவில்லை, ஆனால் ஆரியமொழி உயர்ந்த மொழி என்று கூறிய மாக்ஸ்முல்லரைப் பற்றி எழுதியுள்ளார். தமிழ் இலக்கண, இலக்கியத்தின் உயர்வுகளைப் பற்றி எழுதவில்லை; ஆனால் வேத ரிஷிகளின் பாடலுக்கு உரை எழுதி உள்ளார். ஜி.யூ. போப் திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கில மொழியாக்கம் செய்து உலகத்தின் பல மூலைகளில் தமிழின் பெருமையைச் சேர்த்தார். ஆனால் பாரதியாரின் ஆங்கில மொழி பெயர்ப்பு Agni and other Poems. பாரதி ஆரிய வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் முழுவதும் பரவச் செய்தார். பாரதியார் தமிழ் இலக்கியங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். (பார்க்க; சுத்தானந்த பாரதியாரின் கவிக்குயில் பாரதியார், பக்.73,74) எல்லாம் புதிது புதிதாகச் செய்வோம் எனக் கூறிய பாரதியார் 1914 முதல் அரவிந்தரின் ஆரியா பத்திரிகையில் ஆரியர்களின் வேதங்களின் பெருமைகளைப் பற்றியே தொடராக எழுதி வந்துள்ளார். ஆரியம் கலவாத தனித் தன்மையுடைய தமிழ்மொழியோ, தமிழ் இனமோ உண்டென்று பாரதி என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. பரலி சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில் கூட “தமிழ்நாட்டில் ஒரே ஜாதிதான் உண்டு. அது தமிழ் ஜாதி; அது ஆரிய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக் குழந்தை என்றெழுது” என்றுதான் எழுதியுள்ளார். (இனம் என்பதைக் குறிக்க பாரதியார் ஜாதி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். பார்க்க: பாரதியின் கடிதங்கள், ப.158, வானதி பதிப்பகம்). பாரதியார் ஆரியச் சார்பானவர் என்பதைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ‘ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள்’ என்ற தமது நூலில் சுட்டிக் காட்டியுள்ளார். அன்றில் ஆசிரியர் சி. வெற்றிவேந்தன் அவர்கள் தமது ‘பாரதியின் மறுபக்கம்’ என்ற நூலில் பாரதியின் பாடல்களில் உள்ள ஆரியச் சார்பைச் சுட்டிக் காட்டியுள்ளார். தோழர் வெற்றிமணி அவர்கள் ‘பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே’ என்ற நூலில் பாரதியின் ஆரியச் சார்பைச் சுட்டிக் காட்டியுள்ளார். இவர்கள் மூவருமே பாரதியின் கவிதையில் உள்ள ஆரியச் சார்புகளை மட்டுமே சுட்டிக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான நூலாசிரியர்கள் பாரதியின் கவிதைகளை மட்டுமே படித்துவிட்டு பாரதியைப் பெரிய புரட்சியாளராகப் படம் பிடித்துக் காட்டுகின்றனர். கு.வெ.கி. ஆசான், ‘பாரதியார், பாரதிதாசன், பெரியார்’ என்ற நூலில் பாரதியின் ஆரியச் சார்பினைச் சுட்டிக்காட்டியுள்ளார். பாரதியின் தமிழ் உணர்வு என்பது ஆங்கில - கிறித்துவ கலாச்சாரத்திற்கு எதிரான இந்து மதக்காப்பு என்ற தன்மையில் ஆனது. பாரதி கூறுவார் நல்ல தமிழில் படிப்பவன் நல்ல இந்துவாக இருப்பான்; ஆங்கிலக் கல்வி படிப்பவன். இந்து மதப்பற்று இல்லாதவனாக ஆகிவிடுவான் என்பார். ஆனால் பாரதிதாசனுடைய தமிழ்ப்பற்று என்பது இன ரீதியிலானது. நல்ல தமிழ் படிப்பவன் நல்ல தமிழனாக இருப்பான் என்பார். பாரதியின் தமிழ் உணர்வு மதரீதியிலானது. பாரதிதாசனின் தமிழ் உணர்வு இனரீதியிலானது. பாரதி தொடக்கத்தில் முற்போக்காக இருந்து பிறகு மெல்ல மெல்ல இந்துத்துவ உணர்வில் மூழ்கி அதிகரித்துக் கொண்டே சென்றார். ஆனால் பாரதிதாசன் தொடக்கத்தில் ஆத்திகராக இருந்து சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு முழு நாத்திகராக மாறினார். ஆக பாரதியின் பரிணாம வளர்ச்சி என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை நோக்கியே தமிழரை அழைத்துச் செல்கிறது. பாரதிதாசனின் பரிணாம வளர்ச்சி என்பது தமிழனின் விடுதலையை நோக்கித் தமிழரை அழைத்துச் செல்கிறது. பாரதியின் முழுப் படைப்புகளாகிய கவிதை, கட்டுரை, கதை முதலியவற்றை ஒருசேரப் படித்து அவரைப் படம் பிடித்துக் காட்ட வேண்டும். இதுவே உண்மையான ஆய்வு.   அடிக்குறிப்பு   1. பாரதி புகழ் பரப்பிய முன்னோடிகள், பெ.சு. மணி, மணிவாசகர்,   பதிப்பகம், ப.165 2. பாரதியைப் பற்றி ஜீவா, நி.செ.பு,நி. ப.44 3. மேற்படி நூல், ப.130 4. பாரதிவழி, ஜீவா, நி.செ.பு.நி., ப.36 5. மேற்படி நூல், ப.70 6. ஜீவா என்றொரு மானுடன், பொன்னீலன், நி.செ.பு.நி., 1992 ப.168 7. ஜனசக்தி பொன்விழா மலர், ஜீவா, 1987, ப.234 8. ஜீவா என்றொரு மானுடன், பொன்னீலன், நி.செ.பு.நி., 1992, ப.169 9. தீக்கதிர் பாரதி நூற்றாண்டு சிறப்பு மலர். பி.இராமமூர்த்தி, ப.11 10. தீக்கதிர் பாரதி நூற்றாண்டு சிறப்பு மலர், எம்.ஆர். வெங்கட்ராமன், ப.13,14 11. பாரதியும் அரசியலும், கோ.கேசவன், ப.187 12. வ.உ.சிதம்பரம் பிள்ளை, என்.சம்பத்-பெ.சு.மணி, பப்ளிகேஷன் டிவிஷன், தில்லி, ப.208 13. விடுதலை நாளேடு, 2.5.1968, ப.2 14. தீக்கதிர் பாரதி நூற்றாண்டு சிறப்பு மலர், பி.ஆர். பரமேசுவரன், ப.39,40,149 15. பாஞ்சாலி சபதம் ஒரு சமூக வரலாற்றுப் பார்வை, பேரா.டாக்டர் ந.பிச்சமுத்து,   19. பாரதியும் ஆங்கிலமும், ம.பொ.சி., இன்பநிலையம், சென்னை-1961, ப.44 20. பல்கலை நோக்கில் பாரதி, பூரம் பப்ளிகேஷன், சென்னை. ப.7 21. பாரதி ஒரு வாழ்நெறி, தி.ச.ராஜு, பூம்புகார் பிரசுரம், சென்னை, 1983, ப.86 22. இதழாளர் பாரதி, முனைவர் ப. இறையரசன், நி.செ.பு.நி., 1995, ப.252 23. மேற்படி நூல், ப.253 24. தமிழகம் தந்த மகாகவி, உயர்நீதிபதி மு.மு.இஸ்மாயில், புவனேசு பதிப்பகம், 1989, ப.228. 25. பாரதியின் குயில்பாட்டு விளக்கம், டாக்டர் மின்னூர் சீனிவாசன், சென்னை, 1985, ப.52 26. பாரதியும் அரசியலும், முனைவர் கோ.கேசவன், அலைகள் வெளியீட்டகம், சென்னை 1991, ப. 27. பாரதியார் கட்டுரைகள், ப.335 28. சோசலிசக் கருத்துகளும் பாரதியாரும், கோ,கேசவன், ரசனா புக் அவுஸ், சென்னை 1977, ப.125 29. பாரதியும் அரசியலும், கோ.கேசவன், ப.89 30. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், 1982, ப.255 31. பாரதியும் அரசியலும், கோ.கேசவன், ப.182 32. மேற்படி நூல், ப. 33. பாரதியின் தத்துவ இயல் கோட்பாடுகள், து.மூர்த்தி, புலமை, டிசம்பர் 1994, ப.39 34. மேற்படி நூல், ப.41 35. மேற்படி நூல், ப.39 36. சுயமரியாதை இயக்கம், ந.மங்களமுருகேசன், ப.320 37. திராவிட இயக்க வரலாறு தொகுதி 1, முரசொலி மாறன், ப.151,152