[] திராவிட வாசிப்பு   வாசிப்பும் மீள்வாசிப்பும்   [ann1][Image] இதழ்: 1                                                 SEPTEMBER 2019 இதழ்: 1                                                 SEPTEMBER 2019 Page 2   Page             திராவிட வாசிப்பு - அறிவு சார் சமூகத்தை படைக்க..   அறிவை அடித்தளமாக கொண்டு இயங்குபவை திராவிட இயக்கங்கள். அறிவுக்கு அடிப்படை புத்தகங்களை வாசித்தல். திராவிட இயக்கங்கள் நடத்திய படிப்பகங்கள், பதிப்பகங்கள், பத்திரிக்கைகள் எண்ணற்றவை. திராவிடம் என்பது ஆழமான, அதே நேரத்தில் பரந்துபட்ட கருத்தியல். அதற்கு மானுடவியல் , பண்பாட்டு, சமூக அரசியல் அடையாளம்   திராவிட வாசிப்பு - அறிவு சார் சமூகத்தை படைக்க..   அறிவை அடித்தளமாக கொண்டு இயங்குபவை திராவிட இயக்கங்கள். அறிவுக்கு அடிப்படை புத்தகங்களை வாசித்தல்.             மின்னூலாக்கம்       :       அ.ஷேக் அலாவுதீன்        தமிழ் இ சர்வீஸ், tamileservice17@gmail.com   வெளியீடு       :       FreeTamilEbooks.com   உரிமை      :       CC-BY-SA உரிமை      : கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லோரும் படிக்கலாம் பகிரலாம்                 திராவிட இயக்கங்கள் நடத்திய படிப்பகங்கள், பதிப்பகங்கள், பத்திரிக்கைகள் எண்ணற்றவை. திராவிடம் என்பது ஆழமான, அதே நேரத்தில் பரந்துபட்ட கருத்தியல். அதற்கு மானுடவியல் , பண்பாட்டு, சமூக அரசியல் அடையாளம் இருக்கிறது. இத்தகைய பரந்த கருத்தியலை குறித்து படிக்கவும், பேசவும், எழுதவும் நிறைய இருக்கிறது. அந்த எண்ணத்தில் தான் இந்த இணைய மின்னிதழை தொடங்குகிறோம். இதில், வரலாற்றில் நடந்த விஷயங்களையும், நடக்கும் விஷயங்களையும் ஒரு சேர கொடுக்க முனைகிறோம். ஒரு அறிவுசார் திராவிட சமூகத்தை படைக்க இந்த மின்னிதழும் சிறு பங்களிப்பை தரும் என நம்புகிறோம். திராவிட மாதமான செப்டம்பரில் இதன் முதல் இதழ் வெளிவருவது மகிழ்ச்சி. இதை பேரறிஞர் அண்ணா சிறப்பிதழாக கொண்டு வருகிறோம். தோழர்கள் வாசித்து, இந்த கருத்துகளை பரப்ப வேண்டுகிறோம். தொடர்ந்து வாசிப்போம். திராவிடத்தால் எழுந்தோம்! திராவிடத் தீ பரவட்டும்! நன்றி! இந்த இதழில்:   செப்டம்பர் எனும் திராவிட மாதம் — புதிய பரிதி வழிகாட்டி!! - மருத்துவர். ப்ருனோ அண்ணா வழியில் களம் காண தயாராகுவோம்! - கனிமொழி MV அரசியல் தலைவரல்ல அவர், அண்ணன் — சாந்தி நாராயணன் அண்ணா என்னும் உலகத் தலைவர்! - வழக்கறிஞர். கணேஷ் பாபு அண்ணா என்பது ஒருவரைத் தான்- அருள் பிரகாசம் நவீன தமிழகத்தின் சிற்பி - அகிலா தேவி எனக்கென்று எந்தத் தனி ஆற்றலும் இல்லை. என் தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டுச் சக்தியின் உரிமையாளன் நான் - ரெபெல் ரவி தி.மு.க பெயர் தோன்றியது எப்படி? திராவிடத்தின் இன்றைய தேவை           செப்டம்பர் எனும் திராவிட மாதம் — புதிய பரிதி                    ஒழுங்கற்றவையில் ஒரு ஒழுங்கைத் தேடுவதும், தொடர்பில்லாத சம்பவங்களில் இருக்கும் பொதுத்தன்மையை கண்டடைவதும் மனித மனதிற்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செயல். இந்தக் கட்டுரையும் அதைத்தான் செய்ய முயல்கிறது. "Remember Remember the fifth of November" என்கிற வாசகத்தை நாம் பலமுறை கேட்டிருப்போம். கத்தோலிக்க அடிப்படைவாத்திற்கு ஆதரவாக மன்னரையும் நாடாளுமன்றத்தையும் எதிர்த்து சதி செய்த guy fawkeys தூக்கிலிடப்பட்ட தினம் என்றாலும் இந்த வாசகம், மக்கள் குறித்து கவலைப்படாமல் வல்லாதிக்கம் செலுத்தும் அரசருக்கும் நாடாளுமன்றத்துக்கும் எதிராக இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல... திராவிடர்கள் அனைவருக்கும் ஒரு வாசகம் உண்டு. Remember Remember the Month of September… ஏனென்றால் செப்டம்பர் மாதம் என்பது திராவிடர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு தந்தவை ஒன்றல்ல ரெண்டல்ல.. இந்த உலகத்தில் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி அதனை களத்துக்கும் எடுத்துச் சென்று அதை மக்களிடம் பொருத்தி அதனை மேலும் மேலும் செம்மைப்படுத்திய ஒரு தத்துவவாதி இருந்தார் என்றால் அது அனேகமாக பெரியாராகத்தான் இருக்கமுடியும். அதே போல் ஒரு சித்தாந்தத்தை தோற்றுவித்தவரிடம் முரண்பட்டு அவருடைய சித்தாந்தத்தையே ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்தவர் ஒருவர் இருந்தார் என்றால் அது அண்ணா மட்டுமாகத்தான் இருக்கமுடியும்.  இவர்கள் இருவரும் பிறந்த மாதம் என்பதற்காகவே செப்டம்பரை திராவிடர்கள் கொண்டாடலாம்... ஆனால் இவர்கள் இருவரை மட்டும் திராவிடர்களுக்கு செப்டம்பர் வழங்கவில்லை.. இன்னும் சில ஆயுதங்களையும் படிப்பினைகளையும் அம்மாதம் திராவிடர்களுக்கு வழங்கியுள்ளது. மோசமான ஒடுக்குமுறைதான் புரட்சிக்கு தோற்றுவாய் என்பதைப் போல பிராமண அல்லாதோரின் எழுச்சிக்கு பாடுபட்ட திராவிட இயக்கத்தின் தோற்றத்திற்கு வித்திட்டது, பிராமணர்கள் நிரம்பிய ஒரு இயக்கம். அதன் பெயர் ஹோம் ரூல் இயக்கம். அன்னிபெசண்ட் தலைமையில் இயங்கி வந்தது. இந்திய சுயாட்சிதான் அதன் நோக்கம் என்ற போதும் காங்கிரஸின் ஆதரவுடன் தொடங்கப்பட்டிருந்ததால் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் அதில் இணைந்தனர். காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பான்மையினர் பிராமணர்களாக இருந்த காரணத்தினால் ஹோம் ரூல் இயக்கம் பிராமணர்களின் கூடாரமாக மாறியது. மயிலாப்பூர் வழக்கறிஞர்கள் ஹோம் ரூல் இயக்கத்தை ஆக்கிரமித்தனர். ஏற்கனவே பிராமணர்களின் வல்லாதிக்கத்திற்கு எதிராக திராவிடர் சங்கத்தை நடத்தி வந்த டாக்டர் சி. நடேச முதலியாருக்கு இந்த அணிவகுப்பு ஆபத்தானதாகப் பட்டது. அவர் பிராமணரல்லாத முக்கியப் பிரமுகர்களை கொண்டு தனி இயக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என நினைத்தார். விளைவு சர் பிடி தியாகராயர், டி.எம்.நாயர், திவான் பகதூர் பி.ராஜரத்தின முதலியார் ஆகியோருடன் இணைந்து தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. அது ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்கிற பத்திரிகையை நடத்தி வந்ததால் நீதிக்கட்சி என்று நாளடைவில் மாறியது. இந்த நீதிக் கட்சியின் தொடக்கத்திற்கு வித்திட்டது ஹோம் ரூல் இயக்கம். ஹோம் ரூல் இயக்கம் தொடங்கப்பட்டது , 1916 ஆம் ஆண்டு 12 ஆம் தேதி. மாதம்? செப்டம்பர்! அதுமட்டுமல்ல 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் திராவிட இயக்கங்களின் மூலமாகக் கருதப்படும் நீதிக்கட்சி வெற்றிகரமாக ஆட்சி செய்து முடித்திருந்தது. காங்கிரஸில் இருந்த பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் முதல் ஆட்சியில் பிராமண அல்லோதோர் அதிகம்பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். மாண்டேகு-செம்ஸ்போர்டு பரிந்துரையின் பேரில் இரட்டை ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட தேர்தல் என்பதால் காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்திருந்தது. தனது முதல் ஆட்சி காலத்தில் நீதிக்கட்சி எதற்காகத் தொடங்கப்பட்டதோ அந்தப் பணிகளை நிறைவேற்றுவதில் துரிதமாக இயங்கியது. அரசு வேலைவாய்ப்பில் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 1921 ஆம் ஆண்டு ஓ. தணிகாசலம் செட்டியார் மசோதா ஒன்றை கொண்டுவந்தார். அனைத்து சமூகத்தினருக்கும் அரசுப்பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றது அந்த மசோதா. அதை பிராமணர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் நிறைவேற்றியது நீதிக்கட்சி. அதே போல் 1920 ஆம் ஆண்டு தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் திவான் பகதூர் கிருஷ்ண நாயர் கொண்டு வந்த மசோதா மூலம் ஆண்களைப் போல பெண்களும் வாக்களிக்கலாம் என்கிற நிலையை உருவாக்கியது. இதில் பயனடைந்தது பிராமணப் பெண்களும்தான் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. அத்துடன் பஞ்சமர் என்கிற சொல்லுக்குப் பதிலாக ஆதி திராவிடர் என்கிற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது , தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனி அலுவலர்கள் நியமனம் செய்தது, அறநிலையத்துறை அமைத்து பிராமணர்களின் கோட்டையான கோயில்களை பிராமணரல்லாதார் கைகளுக்கு கொண்டு வந்தது என பலவற்றை செய்த நீதிக் கட்சி அரசு செப்டம்பரில் முடிவுற்றது. ஆனால் அதுதான் திராவிட பேரியக்கத்தின் தொடக்கம். நீதிக்கட்சியின் சமூக செயல்பாடுகள் அடுத்த தேர்தலிலும் அவர்களுக்கு வெற்றியை வழங்கியது. இருப்பினும் நீதிக்கட்சியில் ஏற்பட்ட பிளவின் காராணமாக 1926 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியது. பிறகு பல்வேறு அரசியல் அந்தர் பல்டிகளுக்குப் பிறகு நீதிக்கட்சியின் ஆதரவு மூலம் சுப்புராயன் ஆட்சி நடத்தத் தொடங்கினார். இந்தக் காலகட்டங்களில் பெரியாரும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி இருந்தார். அவருடைய வழிகாட்டுதலின் படி அவரது நீண்டகால கோரிக்கையான கம்யூனல் ஜி.ஓ.வை சுப்புராயன் அரசு கொண்டு வந்தது. இந்த சாதனையை செய்த சுப்புராயனின் ஆட்சிக்காலமும் 1930 செப்டம்பரில்தான் நிறைவுற்றது. இம்முறை அதே செப்டம்பர் மாதத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது நீதிக்கட்சி. இந்தநிலையில்தான் 1934 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திரும்பப் பெற காங்கிரஸ் நேரடியாக தேர்தல் களத்தில் குதித்தது. பலம் வாய்ந்த காங்கிரஸை எதிர்கொள்ள பெரியாரிடம் தஞ்சம் அடையும் முடிவுக்கு வந்திருந்தது நீதிக்கட்சி.  ஆனால் பெரியார் காங்கிரஸின் எதிரி என்பதற்காக மட்டும் நீதிக்கட்சியை வழிநடத்த ஒப்புக்கொள்ளவில்லை. அவர் ஒரு வேலைத்திட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கும் நீதிக்கட்சிக்கும் அனுப்பி வைத்தார். விவசாய நலன், தொழிலாளர் நலன் என சோசலிசப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த அந்த வேலைத்திட்டத்தில்  ”மதங்கள் அரசியலில், நிர்வாகத்தில் எவ்வித சம்மந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்கவேண்டும்” போன்ற திராவிடக்கருத்துகளும் இருந்தன என்பதை சொல்லத் தேவையில்லை. பிராமணர்களின் கையில் இருந்த காங்கிரஸ் அதை நிராகரிக்க பிராமணரல்லாதோர் வசம் இருந்த நீதிக்கட்சி அதனை ஏற்றுக் கொண்டது. ஏற்றுக்கொண்ட தினம் 1934 ஆம் ஆண்டு 29 ஆம் தேதி செப்டம்பர் மாதம். அதுதான் பெரியார் கட்டமைத்த திராவிட தத்துவத்திற்குள் நீதிக்கட்சி நுழைந்ததற்கான முதல் படி.. தமிழர்கள் என்றாலே இன்றும் கூட வடக்கத்தியர்களுக்கு இந்தி எதிர்ப்புக்காரர்கள்தான். தமிழர்கள் அதனை இந்தி திணிப்புக்கான எதிர்ப்பு என்று திருத்திச் சொன்னாலும் அவர்களுக்கு அது மூளையில் ஏறுவதில்லை. காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர்கள் காட்டிய வேகம் அவ்வளவு வீரியமிக்கது. 1938 ஆம் ஆண்டு தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து இந்தி திணிப்பு எதிர்ப்பு படை ஒன்று உருவானது. பாவேந்தர் பாரதிதாசனின் பாடலைப் பாடியபடியே ஒரு பெரும்பயணத்தை மேற்கொண்டது அப்படை. திருச்சி உறையூரில் தொடங்கி 234 ஊர்களைக் கடந்து, 87 பொதுக்கூட்டங்களை நடத்தி, 42 நாட்களாக நடந்த நெடும்பயணம் நிறைவுற்ற தினம் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி. அதே தினத்தில் சென்னை கடற்கரையில் கூடிய 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பேசிய பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினார். ஏற்கனவே சிலர் இந்த கோஷத்தை ஏற்கனவே சிலர் இந்த கோஷத்தை முன்வைத்திருந்த போதும் பெரியார் முன்மொழிந்த பின் அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்த முழக்கம் இன்றளவும் தமிழகத்தில் ஏதேனும் ஒரு மூலையில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. என்னதான் நீதிக்கட்சி பெரியாரின் தலைமையின் கீழ் வந்திருந்தாலும், அதன் முக்கியஸ்தர்கள் பிராமணரல்லாதோராக இருந்தாலும் சாதி ஒழிப்பில் ஆர்வம் காட்டதவர்களாகவும், அரசு பதவி பட்டத்தின் மேல் அதிகம் நாட்டமுடையவர்களாகவும் இருந்தனர். இவர்களை எல்லாம் களையெடுக்க நினைத்த பெரியார் அண்ணாவைக் கொண்டு சில முற்போக்கு தீர்மானங்களை நிறைவேற்றினார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் 1944 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கரை சந்திக்க விரும்பினர். இந்தியா முழுவதும் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும் அம்பேத்கர் தங்களுக்கு ஆதரவு அளித்தால் பெரியாரை வென்றுவிடலாம் என்பது அவர்களது கணிப்பு. சென்னை கன்னிமாரா ஹோட்டலில் சண்டே அப்சர்வர் பி.பால சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க பெரியார் போல ஒரு தலைவரும், பெரியார் முன்மொழிந்தது போன்ற தெளிவான திட்டங்களும் தேவை என்று உரையாற்றினார். இந்த நிகழ்வை “சோறு போட்டு உதை வாங்கிய கதை” என்று குடியரசு பத்திரிகையில் கிண்டலடித்தார் பெரியார்.  பெரியாரும் அவரது திராவிட கொள்கையுமே சீர்திருத்ததிற்கான வழி என அம்பேத்கர் உறுதி செய்த தினம் 24 செப்டம்பர். பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை கட்டமைக்க தற்போது சிலர் முயல்வதைப் போல இருவரும் உயிருடன் இருக்கும் போதே முயற்சி எடுக்கப்பட்டது. ஒரு செப்டம்பர் நன்னாளில் அது தோல்வியைச் சந்தித்தது. அது மட்டுமல்ல திராவிடர் கழகத்திற்கான லட்சியங்கள் வரையறுக்கப்பட்ட மாதமும் செப்டம்பர்தான். 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி திருச்சி புத்தூர் மைதானத்தில் கூடிய மாநாட்டில்தான் திராவிட நாடு என்கிற கருத்தியல் முழுமை பெற்றது. சாதி,மத, பேதங்கள் மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவது அனைத்துவிதமான சுரண்டல்களில் இருந்தும் மக்களைக் காப்பாற்றுவது போன்றவை லட்சியங்கள் பட்டியலில் இருந்தன என்பதைக் கூற வேண்டியதில்லை. அதே போல் அந்த மாநாட்டில்தான் திராவிட இயக்கத்தின் அமைப்பு கட்டமைப்பு ரீதியாக எவ்வாறு இருக்கவேண்டும் என்பதும் இறுதி செய்யப்பட்டது.தமிழக கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருப்புச் சட்டை படையின் துவக்கமும் அத்தினமே. இன்றளவும் தமிழகத்தில் கருப்புச் சட்டைக்காரர் என்றால் அது பெரியார் கொள்கைகளைப் பின்பற்றக் கூடியவர் என்றே அர்த்தம். கறுப்பு சட்டை அணிந்து ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் சாதி, மதக் கொடுமைகளையும், மூட நம்பிக்கைகளையும் இளைஞர்கள் தட்டிக் கேட்கத் தொடங்கினர். அதற்கான வித்து போடப்பட்டது செப்டம்பரில். அண்ணாவுக்கு கருப்புச் சட்டை அணிவதில் உடன்பாடு இல்லாத நிலையில் இந்தக் கருப்புச் சட்டை 1945 செப்டம்பர் மாதத்தில் தொடங்கிய விரிசல் விதை 1947 செப்டம்பர் மாதத்தில் முளைவிடத் தொடங்கியது. ஏற்கனவே சுதந்திர தினம் குறித்த விவகாரத்தில் பெரியதாக வளர்ந்திருந்த விரிசல் இப்போது உடைப்புக்கான தொடக்கமாக மாறியது. சுதந்திர தினம் என்பது பிரிட்டிஷ்காரர்களை மாற்றிவிட்டு பிராமணர்களை அமரவைப்பது என்று கூறி பெரியார் எதிர்த்திருந்தார். இரண்டு சுரண்டல்காரர்களில் ஒரு சுரண்டல்காரனிடம் இருந்து விடுதலை கிடைத்துவிட்டது என்று அண்ணா சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருந்தார். இந்த நிலையில்தான் 1947 செப்டம்பர் 14 ஆம் தேதி திராவிட பிரிவினை மாநாடு ஒன்று பெரியார் தலைமையில் கூடியது. மாநாட்டில் அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை. இதனால் கொந்தளித்த பெரியார் ஆதரவாளர்கள் சிலர் அண்ணாவின் படங்களை கொளுத்தும் சம்பவம் கூட நடைபெற்றது. ஆனால் கறுப்புச் சட்டை படைக்கு அப்போதைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி தடைவிதித்ததும் மீண்டும் பெரியாரும் அண்ணாவும் இணைந்தனர். தனக்குப் பின் அண்ணாதான் தலைவர் என்று பெரியார் ஈரோடு மாநாட்டில் தெரிவித்தார். ஆனால் அண்ணா தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்ததால் வேறொரு நபருக்கு தலைமையையும் திராவிடர் கழகத்தின் சொத்துக்களையும் மாற்ற நினைத்தார் பெரியார். அதற்கு அவர் ஈ.வி.கே.சம்பத்தை தேர்ந்தெடுத்த நிலையில் அவரும் அண்ணாவின் தீவிர விசுவாசியாக இருக்க தனக்கு பணிவிடை செய்து வந்த மணியம்மையிடம் சொத்துக்களையும் கட்சியையும் ஒப்படைப்பது என்று முடிவெடுத்தார். அப்போது இந்து மதச் சட்டப்படி ஒரு பெண்ணுக்கு தத்து எடுக்கும் உரிமையும் இல்லை.. தத்துப்போகும் உரிமையும் இல்லை. ஆகையால் பெரியார் மணியம்மையை திருமணம் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. 70 வயது பெரியார் 32 வயது மணியம்மையை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். அதனை தீவிரமாக எதிர்த்தனர் அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும்.. இந்த நிலையில் திருமணம் முடிந்தது. அத்தோடு செப்டம்பர் 10 , 1949 ஆம் ஆண்டு கே.ஏ. மணியம்மையின் பெயர் ஈ.வெ.ரா. மணியம்மை என்று மாற்றப்பட்டதாக குடியரசில் செய்திகள் வந்தன. ஏற்கனவே கொந்தளித்திருந்த அண்ணா அணியினர் 17 செப்டம்பர் 1949 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு இல்லத்தில் கூடினர். முக்கிய நிர்வாகிகள் இணைந்து பெரியார் தலைமையில் நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் கொண்டு வந்தனர். திமுக உருவானது. அன்று பெரியாரின் பிறந்த தினம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. திமுகவின் உருவாக்கம் தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலேயே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. தேசியக்கட்சி அல்லாமல் ஆட்சியைப் பிடித்த முதல் மாநிலக் கட்சி என்பதில் தொடங்கி சுயமரியாதை திருமணம், பெண்களுக்கு சொத்துரிமை, கைரிக்‌ஷா ஒழிப்பு போன்றவற்றோடு எண்ணற்ற சமூகநீதி திட்டங்களை இந்தியாவில் முதன்முதலாக செயல்படுத்தியது திமுகதான் என்பது கருணாநிதியின் மறைவுக்குப் பின்னான செய்தித்தாள்களை வாசித்திருந்தாலே புரிந்திருக்கும். மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசுகள் மெல்ல மெல்ல பறித்துக் கொண்டிருக்கையில் இன்று கருணாநிதி அமைத்த ராஜமன்னார் குழு முக்கியத்துவம் பெற்று வருகிறது. எப்போதும் மத்திய அரசே மாநில அரசுகளுடனான உறவு குறித்து முடிவு செய்யும் நிலையில் கருணாநிதி, மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக ராஜமன்னார் குழுவை நியமித்தார். 383 பக்க அறிக்கையை அந்தக் குழு சமர்பித்தது. இந்த அறிக்கை தமிழகத்திற்கு மட்டுமல்ல இலங்கைக்கும் மிக முக்கிய ஆவணமாக இருந்தது. ஈழத் தமிழர் பிரச்சனை சமயத்தில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையின் போதும் நார்வே பேச்சிவார்த்தையின் போதும் இதன் பரிந்துரைகளை முன்வைத்து விவாதங்கள் நடந்தன. மேலும் ஜோதிபாசு மேற்கு வங்க முதல்வராக இருந்த போது ராஜமன்னார் குழுவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்ம் என்று மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கை அனுப்பியதும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இந்தக்குழு அமைக்கப்பட்டது செப்டம்பர் 22 1969. செப்டம்பர் மாதத்தில் நிகழ்ந்த அல்லது நிகழத் தவறிய நன்மை ஒன்று உண்டு. திமுகவின் தலைமைக்கு கருணாநிதி வந்த பிறகு திமுகவில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். அதிமுக என்கிற பெயரில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியையும் பிடித்தார். இருவரின் கொள்கைகளும் திராவிடம்தான் என்ற போதும் திமுகவும் அதிமுகவும் பரம எதிரிகள் போல மோதிக் கொண்டன. (இங்கே அதிமுகவை ஒரு முழுமையான திராவிடக்கட்சி என்று கூறமுடியுமா என்கிற கேள்விகள் எழலாம் ஆனால் அது தனி விவாதம். நடைமுறையில் திமுக போல் இல்லையென்றாலும் அதன் பெயரில் இருந்த திராவிடம் என்கிற வார்த்தைக்காகவும் திமுகவை விட அண்ணாவின் மேல் பற்றுக் கொண்டவர்கள் எனபதைக் காட்டிக் கொள்வதற்காகவும் அதிமுக திராவிட திட்டங்களை முன்வைக்க நேர்ந்தது என்பதை மறுக்கமுடியாது.) இந்த சமயத்தில்தான் அதிமுகவும் திமுகவையும் இணைக்கும் முயற்சி ஒன்று நடைபெற்றது. ஜனதா தளக் கட்சியை சேர்ந்த பிஜு பட்நாயக் அந்த முயற்சியை மேற்கொண்டார். மேடைகளிலும் ஏடுகளிலும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த எம்ஜிஆரையும், கருணாநிதியையும்1979 ஆம் ஆண்டு தனிமையில் சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர் தேர்வு செய்த நாள் செப்டம்பர் 12 . சந்திப்பில் இருவருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. எம்ஜிஆர் முதல்வராகவும் கருணாநிதி கட்சியின் தலைவராகவும் இருக்கமுடிவு செய்யப்பட்டது. கட்சியின் பெயர் திமுகவென்றும் கட்சியின் கொடி அதிமுகவின் கொடி என்பதும் கூட இருவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.. ஆனால் அடுத்த நாளே அதிமுக மேடையில் எம்ஜிஆர் இருக்கும் போதே கருணாநிதியையும் திமுகவையும் அதிமுக பேச்சாளர்கள் விமர்சிக்க அந்த இணைப்பு நிகழவில்லை. ஒரு வேளை அந்த இணைப்பு இணைந்திருந்தால் இத்தனை ஆண்டு காலமாக நடந்து வந்த திராவிடம் vs திராவிடம் அரசியல் தமிழகத்தில் நடந்திருக்காது. கருணாநிதி , எம்ஜிஆர் ஆகியோரின் வழி மட்டுமல்ல ஜெயலலிதாவின் வழியிலும் செப்டம்பர் மிகவும் முக்கிய மாதமாகப் பார்க்கப்படுகிறது. எம்ஜிஆருடன் திரைப்படங்களில் நடித்து பின்பு அவரது கட்சியிலும் இணைந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கிய ஜெயலலிதா விரைவிலேயே அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற பொறுப்பைப் பெற்றார். கட்சியில் இருந்து வளர்ந்து வந்த ஜெயலலிதா எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் போதே திடீரென கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். அவரது கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது எனப் பலரும் கணித்த நிலையில் அவர் 1986 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் இந்த அரசியல் மறுபிரவேசம் நடந்தது ஓரு செப்டம்பர் மாதத்தில்... அன்று அவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை எனில் எம்ஜிஆர் இருக்கும் போதே அவரால் கட்சியில் இருந்து விலக்கிவைக்கப்பட்டவர் என்கிற முத்திரையோடு ஜெயலலிதா இருந்திருப்பார்.இதனால் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் தலைமைப் பொறுப்பை அவரால் ஏற்றிருக்க முடியுமா என்பதும் கேள்விக் குறியே. இதில் வருந்தத்தக்க சுவாரஸ்யம் என்னவெனில் எம்ஜிஆருக்குப் பிறகு தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்த ஜெயலலிதா கடைசியாக செப்டம்பர் மாதத்தில்தான் மருத்துவமனையில் உடல்குறைவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவர் நலம்பெற்று திரும்பவேயில்லை. இதுதவிர, அண்ணாயிசம் என்கிற 29 பக்க அதிமுகவின் கொள்கை அறிக்கையை எம்ஜிஆர் வெளியிட்டது, தற்போது தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் முதன்முறையாக முதல்வராக அறிவிக்கப்பட்டு அதிகார வட்டத்திற்குள் வந்தது என குறிப்பிடும்படியான நிறைய நிகழ்வுகள் இந்த செப்டம்பர் மாதத்தில் நடந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவர் தலைவராக எதிர்கொள்ளவிருக்கிற முதல் மாதமாக காத்துக் கொண்டிருக்கிறது செப்டம்பர். - புதிய பரிதி [Image]     வழிகாட்டி!! - மருத்துவர். ப்ருனோ   அன்றொருநாள் எங்கோ ஒரு வனாந்திரத்தில் என்ன செய்வதென்பது புரியாமல் எங்கு செல்வதென்பது தெரியாமல் ஆளுக்கொரு திசையில் நாளுக்கொரு வேலை செய்து கொண்டிருந்தோம் நீ வரும் வரை காடு மேடு அலையவேண்டாம் எங்கள் பாதுகாப்பை உறுதிசெய்கிறேன் என்றாய் எங்களை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறேன் என்றாய் திரளாக வந்தோம் குழுவாய் சேர்ந்தோம் உன்னைத்தொடர்ந்தோம் உன்பின் நடந்தோம் வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது ஆழமோ மிகுதி சுழல்களோ அதிகம் திகைத்து நின்றோம் கவலைப்படாதீர்கள் என்றாய் மரங்களை கட்டி படகு செய்தாய் ஒரு துடுப்பும் செய்தாய் படகோட்ட கற்றும் தந்தாய் மறுகரைக்கு அழைத்தும் வந்தாய் கரைசேர்ந்த பின் தொடர்ந்து நடந்தோம் படகையும் துடுப்பையும் கரையிலேயே விட்டு விட்டோம் அவற்றை துறந்து விட்டோம் படகென்பது ஆற்றைக்கடக்கத்தானே என்று நீ சொல்லித்தந்தாய் சிலரோ ஆறென்பது படகோட்ட என்று நினைத்தார்கள் ஆற்றைக்கடந்த பின்னர் படகை விட்டு விடுவது சந்தர்ப்பவாதம் என்றவரகள் கூறுகிறார்கள் கரையை அடையாமல் ஆற்றினுள்ளேயே தொடர்ந்து சுற்றி சுற்றி வருகிறார்கள் வழியில் கொடிய விலங்குகளுள்ள ஒரு காடு குறுக்கிட்டது அதை எப்படி கடப்பதென்றோம் வாளெடுக்க சொன்னாய் நீ காட்டினுள் எதிர்படும் விலங்குகளை வெட்டச்சொன்னாய் நீ காட்டை கடந்த வுடன் வாளை வீசியெறியச்சொன்னாய் நீ காட்டை கடந்த பின்னர் வாளை தூக்கியெறிவது சந்தர்ப்பவாதம் என்றவரகள் கூறுகிறார்கள் நாட்டினுள் வந்து பேனாவை எடுக்காமல் காட்டினுள் தொடர்ந்து வெட்டிக்கொண்டே சுற்றி வருகிறார்கள் அது சந்தர்ப்பவாதமல்ல மாறாக அதுதான் சமயோஜிதம் என்று புரிந்து கொள்ள அவர்களுக்கு சந்தர்ப்பம் அமையவில்லையா அல்லது சமயோஜிதம் இல்லையா என்று தெரியவில்லை சுழல்கள் மிகுந்த ஆற்றையும் கடந்து கொடிய மிருகங்கள் நிறைந்த காடுகளையும் கடந்து வயல்களையும், வரப்புகளையும் கடந்து உன்னோடு வந்தோம் இறுதியாக கோட்டை முன் வந்து நின்றோம் கோட்டைக்குள் செல்வதெப்படி என்று கேட்டோம் ஆளுக்கொரு யோசனை சொன்னார்கள் மதிலில்கயிறு கட்டி ஏறலாம் என்றார் ஒருவர் கோட்டையை பீரங்கி வைத்து தாக்கி உடைக்கலாம் என்றார் மற்றொருவர் வழியில் வாளை வீசியது தவறென்றார் சிலர் வாளுடனோ, வேலுடனோ வந்திருந்தால் கோட்டையை பிடிப்பது எளிதென்றார்கள் சிலர் அப்படியெல்லாம் செய்தால் கோட்டை சேதமாகிவிடும் நாம் உள்ளே சென்றபின்னர் நமக்கு தான் தொல்லை என்றாய் நீ பின் எப்படி செல்ல முடியும் என்று கேட்டோம் வாயில் வழியாக அழைத்து செல்கிறேன் என்றாய் நீ வாயில் பூட்டியுள்ளதே என்றோம் வாயிலை திறக்கும் சாவி உள்ளது என்றாய் நீ வெறும் சாவியை மட்டும் வைத்துக்கொண்டு கோட்டைக்குள் செல்ல முடியாதென்றார் பலர் முறுவல் மட்டும் பூத்தாய் நீ அது தான் நேர்வழி என்றாய் அப்படி சென்றால் தான் மரியாதை என்றாய் நீ சாவி மரத்தாலானதா இரும்பிலானதா அல்லது தங்கத்தாலனாதா என்று கேட்டோம் காகிதத்தாலானது என்றாய் நீ முறையாக நிரந்தரமாக கோட்டைக்குள் அழைத்து செல்லும் காகிதத்தாலான அந்த சாவியின் பெயர் வாக்குச்சீட்டென்றாய் நீ!!  - மருத்துவர். புரூனோ           அண்ணா வழியில் களம் காண தயாராகுவோம்! - கனிமொழி MV   “நாங்கள் இன்னும் இருட்டில் வைக்கப்பட்டுள்ளோம்; எங்கள் வாழ்வில் ஒளி இல்லை; நாங்கள் மகிழ்ச்சியாகவே வாழவில்லை, துக்கமே எங்களுக்குத் துணையாக இருக்கிறது” என்பதை உலகத்துக்குப் பறைசாற்றத்தான் கருஞ்சட்டை அணியச் செய்தார் பெரியார் என்று பெரியாரின் மனதை சரியாக படம் பிடித்துக்காட்டியவர் பேரறிஞர் அண்ணா. தந்தை பெரியாரின் உழைப்பு அரியணை ஏற்றப்பட்ட வேண்டும் என்றால் அதற்கு அரசியல் களம் காண வேண்டும் என்ற கருத்தால் தந்தை பெரியாரை விட்டு விலகி வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949 ஆம் ஆண்டு தொடங்கினார். விலகல் என்பது உடலளவில் மட்டும் தானே தவிர மனதளவில் - கருத்தளவில்- கொள்கையில் பெரியாரோடு மட்டுமே பேரறிஞர் அண்ணா அவர்கள் பயணித்தார். விலகலின் தொடக்கத்தில் வலியின் வேதனை எப்போதும் இருக்கும். அங்கு சொற்கள் ஆயுதமாக பயன்படுத்தும் போக்கும் இருக்கும். ஆனால் தன்னளவில் அறிஞர் அண்ணா எந்த இடத்திலும் தந்தை பெரியாரை மதிப்புக் குறைவாக பேசியது இல்லை; விலகல் வெற்றியைத் தான் ஈட்டி தந்திருக்கிறது என்பதை 18 ஆண்டுகள் கழித்து வரலாறு உரைத்த போது தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் நெகிழ்ந்து ஒருவரை ஒருவர் இறுக்கமாக பற்றிக் கொண்டனர். இந்தப் பற்றுதல் இரு தலைவர்களும் உயிருடன் இருந்த போதே நடந்த ஒன்று. ஆனால் சிலர் இன்று திராவிடர் இயக்கங்களையும் , திராவிட அரசியலையும் எப்போதுமே பிரித்து வைக்கும் நோக்கோடு பொய்யுரைகளை மக்கள் மன்றத்தில் கூறி ஆகாயத்தில் கோட்டை கட்டுகின்றனர். ஆகாய கோட்டை தமிழ்நாட்டில் பெரியார் கட்டி எழுப்பிய கொள்கைக் கோட்டையை தகர்த்துவிடும் என்ற கற்பனையில் காவியம் படைக்கின்றனர். கற்பனையில் அல்ல குருதி சிந்தி பேரறிஞர் அண்ணாவும் அவர் தம்பிகளும் பாதுகாப்பு அரணை தமிழ்நாட்டிற்கு உருவாக்கி தந்தனர். அண்ணா அவர்கள் முதலமைச்சராக முதல் முறை அரியணை ஏறிய போது அவர் செய்த மூன்று முக்கிய அறிவிப்புகளுமே தந்தை பெரியாரின் குரல் என்பதை வரலாறு அறிந்த எவரும் மறுக்க இயலாது. சென்னை ராஜதானி இனி தமிழ்நாடு என்று அழைக்கப்படும் என்பதும் , சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்பதும் , தமிழ்நாட்டில் என்றென்றும் இருமொழிக்கொள்கை தான் இங்கு இந்திக்கு இடமில்லை என்பதும் பேரறிஞர் அண்ணா அண்ணாவின் குறுகிய ஆட்சிக் காலம் என்றாலும் என்றென்றும் நிலைத்து நிற்கும் சட்ட வடிவங்கள். அறிஞர் அண்ணாவை பொறுத்தவரை தந்தை பெரியாரின் கருத்துகளை சற்று தேன் தடவி அது மருந்து என்ற எண்ணம் ஏற்படாதவாறு மக்களின் மூடநம்பிக்கை - அடிமை போதை தீர தந்தவர். தந்தையிடம் சற்று கண்டிப்பு உண்டு தாயான அண்ணாவோ கனிவான கண்டப்புடன் தந்தை பெரியார் விரும்பிய தமிழ் நாட்டை கட்டமைக்க அடித்தளம் இட்டவர். கலைஞர் அந்த அடித்தளத்தின் மீது ஆரியபுரியனர் அஞ்சிடும் வண்ணம் திராவிடர்க்கு கோட்டை எழுப்பிய கொள்கைத் தங்கம்.  தமிழ் நாட்டை கட்டமைக்க அடித்தளம் இட்டவர். கலைஞர் அந்த அடித்தளத்தின் மீது ஆரியபுரியனர் அஞ்சிடும் வண்ணம் திராவிடர்க்கு கோட்டை எழுப்பிய கொள்கைத் தங்கம். தான் தோற்றுவித்த திமுகவை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சீராட்டி பாராட்டி உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. 1949 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 இல் திமுகவைத் தொடங்கிய அண்ணா அடுத்த 9 மாதங்களில் 2300 க்கும் அதிகமான கூட்டங்களில் உரையாற்றினார். 2 வருடத்திற்குள் 3500 கூட்டங்கள் நடைபெற்றது. சராசரியாக மாதம் 145 கூட்டங்கள். ஒரே நாளில் 27 கூட்டம் வரை கூட உரையாற்றி உள்ளார். அண்ணாவின் பேச்சாற்றாலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஒரு செய்தியை அனைவரும் குறிப்பிடுவார்கள். மாலை 5 மணிக்கு ஓர் ஊரில், 6:30 மணிக்கு இன்னோரு ஊரில், 8 மணிக்கு மற்றொரு ஊரில் , 9:30 மணிக்கு வேறு ஊரில் என்று விடிய விடிய மேடைகளில் உரையாற்றினாலும் ஒரு ஊரில் பேசியதை ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்த ஊரில் உரையாற்றும்போது பேசியது இல்லை. கோவா விடுதலை போராட்டம் பற்றி பேசுவார், அடுத்த கூட்டத்தில் நெப்போலியன் போனபார்ட் பற்றியும் பேசுவார் , கோசிமின் பற்றியும் பேசுவார். இந்த செய்தியை படிக்கும் போதெல்லாம் எத்துனை சிறந்த அறிவாற்றலை கொண்ட தலைவரை முதலமைச்சராக நாம் பெற்றிருந்தோம் என்று எண்ணி வியப்படையாமல் இருக்க முடியாது. அண்ணாவை பொறுத்த வரையில் தான் மட்டுமே கட்சி, தான் மட்டுமே முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரல்ல; தம்பிகளுக்கு அரசியல் ஞானம் வேண்டும் என்று சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருந்தவர். தன்னைப் போலவே இரண்டாம் கட்டத் தலைவர்கள் படையை தயார்படுத்தியவர்.  பக்தி இலக்கியம் தமிழ் மொழியின் அழகியலைப் பயன்படுத்தி பக்தி வளர்த்தது; மதத்தை வளர்த்தது. அறிஞர் அண்ணா அதே தமிழ் மொழியின் அழகையும் எழிலையும் கொண்டு தந்தை பெரியாரின் பகுத்தறிவை வளர்த்தார்- சமூக நீதியை மக்களிடம் எடுத்துச் சென்றார் . தண்தமிழ் மொழியில் சமூக கொடுமைகளுக்கு எதிரான கருத்துகளை எரிமலையின் தனலாய் தன் சொற்கள் கோர்த்து கேள்வி எழுப்பினார். ஒரு பெரும் அரசியல் மாற்றத்தை இருண்டிருந்த தமிழ்நாட்டின் அரசியலில் முன்னெடுத்தார். நீதிக்கட்சியின் தோல்விக்கு பின் பார்ப்பனர் அல்லாதோரின் அரசியல் பாதையை செப்பனிட்டு சாமான்யர்களின் அரசியல் பாதையாய் மாற்றிக்காட்டிய பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். ராஜாஜியோடு கூட்டணி வைத்தபோதும் கொள்கை அளவில் பெரியாரோடு மட்டுமே கூட்டணி என்பதை தேர்தலில் வெற்றி பெற்றவுடனே தெளிவாக்கினார்! அண்ணா அவர்கள் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்த போது அண்ணாவின் ஆங்கில மொழிப்புலமையை கண்டு ஒரு அமெரிக்க நிருபர் ‘அண்ணாதுரை எங்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டார்?’ என்றாராம். அண்ணா பெற்ற மொழிப்புலமையை அவர் தன்னோடு மட்டும் நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை; தன் தாய் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையினரும் அந்த புலமையை பெற வேண்டும் என்று எண்ணினார். இருமொழிக் கொள்கை என்று சட்டமன்றத்திலே சட்டமேற்றினார்; அதனுடைய வீச்சை என் அனுபவத்தில் உணர்ந்து இந்த செய்தியை எழுதுகிறேன். 2010 ஆம் ஆண்டு பண்பாட்டு பரிமாற்ற நிகழ்ச்சிக்காக     சென்னையில் இருந்து ஒரு குழு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு வந்தோம். எங்களிடம் ஒரு அமெரிக்கர் கேட்ட கேள்வி, ‘இந்தியாவின் வட பகுதியில் இருந்து கூட இங்கு விருந்தினர்களாக வந்திருக்கின்றனர், அவர்கள் அனைவரிடமும் இல்லலாத ஆங்கில உச்சரிப்பும் - சரளமும் உங்களிடம் எப்படி இருக்கிறது’? என்றார். அவரிடம் பெருமையாக எங்கள் மாநிலத்தில் அறிஞர் அண்ணா என்ற அரசியல் தலைவர் இருமொழிக்கொள்கை என்று தமிழும் ஆங்கிலமும் படிக்க வேண்டியத் தேவையை பல ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டு வந்தார். அவர் போட்ட விதை இன்று விழுதுகளாக நாங்கள் உருவாகி இருக்கிறோம் என்றேன். அதைச் சொல்லும் போது தான் உள்ளத்தில் எத்துனண நெகிழ்ச்சி! இன்றைக்கு உலகெங்கிலும் எங்கெல்லாம் இந்தியர்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் ஜாதிக் கொடுமை தலைவிரித்தாடுகிறது. அந்த வகையில் யேல் பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அண்ணா அவர்கள் தந்த பதிலையும் பார்க்கலாம். “ஜாதிப் பிரிவுகள் இன்னும் இந்தியாவில் இருக்கின்றனவா? அவை எவ்வளவு தூரம் அரசியலில் நுழைந்திருக்கின்றன?”என்ற கேள்வி கேட்கப்பட்டதும் அறிஞர் அண்ணா கூறுகின்றார் , “ஜாதி மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டுவருகிறது. முழுவதும் செத்துவிட்டது  என்று நான் கூற மாட்டேன் . மக்கள் மனோபாவம் மாறிக்கொண்டு வருகிறது. அரசியலில் புகும் முன்னரே எங்கள் கட்சி ஜாதிக் கொடுமைகளைப் பேசிப் பரப்புரை செய்தது. தென்னாற்காடு மாவாட்டத்தில் தான் வன்னியர் மக்கள் அதிகம் . அங்கே எப்பொழுதும் எல்லா கட்சிகளும் அந்தச் ஜாதிக்காரரையே வேட்பாளராக நிற்கச் சொல்வார்கள். ஆனால் நாங்களோ அந்தத் தொகுதிகளில் வன்னியர் அல்லாத வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றோம். மக்கள் , ஜாதிக்காக ஓட்டுப் போடுவதில்லை. கொள்கைக்காக , மனிதருக்காகத் தான் ஓட்டுப் போடுகிறார்கள் என்பதை திமுகவின் வெற்றி நிரூபித்தது’ என்றார். இந்த சமூக மாற்றத்தை பொறுத்துக்கொள்ள இயலாமல் தான் திமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று இன்றளவும் பலர் களம் இறக்கப்படுகின்றனர்; பின்னர் காலம் அவர்களை களத்தில் இருந்து விரட்டி அடித்துள்ள உண்மைகளை நாம் அறிவோம். இன்று தமிழ்நாடு மிக இக்கட்டான அரசியல் சுழலை சந்திக்கின்றது. நடந்திடும் இந்த திராவிடர் - ஆரியர் போரில் வெற்றி நமதாக அண்ணா சொன்ன வாக்கியத்தை நினைவில் ஏந்துவோம்; “பட்ட மரம் துளிர்த்திடும் பான்மைபோல , எந்தையர் நாட்டிலே இன்றுள்ள இழிநிலை போக்கி, இடர்களை நீக்கி, மிடியினைத் தாக்கி, சுடர்தனைக் காண வேண்டுமாயின் , நாம் ஒவ்வொருவரும் , எத்துனண அளவுக்குப் பாடுபட வேண்டும் , தொல்லைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும்!?” பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியது போல எந்த தொல்லைகள் வந்தாலும் அதைத் தாங்கிக்கொண்டு களம் காண தயாராகுவோம்!   வாழ்க தந்தை பெரியார்! வாழ்க பேரறிஞர் அண்ணா ! வாழ்க கலைஞர்! [WhatsApp Image 2019-09-14 at 11]- கனிமொழி. MV                              அரசியல் தலைவரல்ல அவர், அண்ணன் — சாந்தி நாராயணன்   1950-60களில் துணைக்கண்டத்தின் கல்வி பெற்றோர் விழுக்காடு முப்பதுக்கும் கீழே. வர்ணாசிரமத்தின் மேலடுக்கு தாண்டி மிக குறைந்த விழுக்காட்டினரையே கல்வி பற்றிய புரிதல் எட்டியிருந்த நேரம். ஆனால், சென்னை மாகாணத்தில் அப்போது ஒரு புதிய இளைஞர் படை உருவாயிருக்கிறது. அவர்கள் தேநீர் கடைகளிலும், முடிதிருத்தும் நிலையங்களிலும், சந்தையின் பக்கங்களிலும் குழுமி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முறையான பள்ளிக்கல்வியை பெறாதவர்கள். விவசாயமும் இன்னபிற கூலி தொழில்களும் செய்து வருகிறவர்கள். அவர்களின் உரையாடல்கள் பகுத்தறிவு பேசுகின்றன. இலக்கியங்களை அவர்கள் தரம் பிரிக்கிறார்கள். பெரும் புலவர்களைப்போல் மொழியை கையாள்கிறார்கள். உலகநாடுகளின் அரசியல் வரலாறுகளை, புரட்சிகளை, அதன் பின்னிருந்த சூழல்களைப் பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் கவிஞராக அல்லது பேச்சாளர்களாக இருக்கிறார்கள். ஒரு சிலர் ,பத்திரிக்கையின் ஆசிரியர்களாகவும் இருக்கின்றனர். சிலர் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் தேனீர் கடையில் அமர்ந்திருக்கிறீர்களா அல்லது ஒரு பல்கலைக்கழகத்தின் விவாத அரங்கில் இருக்கிறீர்களா என்று மலைத்துப் போவீர்கள். அத்துணைபேரும் அடிக்கடி மேற்கோள் காட்டுகிற மனிதர் ஒருவர். அந்த இளைஞர்கள், அவரை அரசியல் தலைவராக அல்ல. குடும்பத்தின் மூத்தசகோதரனை பற்றிப் பேசுவதுபோல் பேசுகிறார்கள். அவர்தான் அண்ணா. காஞ்சிபுரத்தின் ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்து பின்னாளில் தமிழகத்தின் அண்ணனாக மாறிவிட்டிருந்த அண்ணா என்கிற அண்ணாதுரை. இந்தியா போன்று கல்வியறிவில் பின்தங்கிய, பழமைவாதங்களும் மதநம்பிக்கைகளும், உலகில் எங்குமில்லாத ஜாதி என்கிற அடிமைத்தனமும் வேர் விட்டிருக்கிற நிலத்தில் ஒரு முற்போக்கான தத்துவத்தை, மக்களின் ஏற்றுக்கொண்ட தத்துவமாக, அரசியல் கொள்கையாக மாற்றியதில் அண்ணாவை போல் வெற்றி பெற்றவர் யாரும் இல்லை என்று சொல்லலாம். சுதந்திரத்திற்குபின் துணைக்கண்டம் முழுவதும் காங்கிரசின் இந்திய தேசிய அரசியலுக்கு மாற்றாக, பல்வேறு இன மொழி பண்பாட்டு தனித்தன்மைகளை உடைய மக்களுக்கு நீதி செய்யும் வகையில், வலிமைவாய்ந்த முற்போக்கு அரசியலே இல்லை என்பதான நிலை. பொதுஉடைமைக் கொள்கையாளர்கள் இப்போதுபோல் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தமுடியாமல் இருந்த தருணம். பெரியார் சமூகநீதியை,மொழி உரிமையை அரசியல் உரிமையை, காங்கிரஸ் பெற்றுத்தரப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார். கல்வி, அரசியல், அதிகார உரிமைகள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையவேண்டும் என்ற கொள்கை கொண்டு, எந்த தியாகத்திற்கும் தன்னை உட்படுத்திகொள்ளத் தயங்காத பெரியாருக்கு, வாக்கு அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில் தயக்கம் இருந்தது. பெரியார் நீதிக்கட்சியை ஆதரித்தார். நீதிக்கட்சி வலிமை இழந்தபோது மாற்று அரசியல் முயற்சிகளை மேற்கொண்டார். வேறு வழியில்லாதபோது, தான்எதிர்த்த காங்கிரசில் இருந்தே காமராஜரை ஆதரிக்கிறார். இயக்கஅரசியலில் இருந்துகொண்டு ஆட்சி அதிகாரத்தின் எல்லா ஒடுக்குமுறைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி போராடிக்கொண்டே இருந்தார். இந்த இடத்தில் தான் பெரியாரிடம் தத்துவார்த்த அரசியலைப் பயின்ற அண்ணா, பெரியாரின் அதே இலக்கிற்கான பயணத்தில் துணிந்து மாற்றுவழியை கண்டடைகிறார். திராவிடம் என்கிற சமத்துவ சமூகநீதிக் கொள்கை, ஒரு குழுவின் குரலாக இருக்கும்வரை அது மக்களுக்கான தேவையை நிறைவுசெய்யமுடியாதென்று, தனி இயக்கம் காண்கிறார். அது தான் திராவிட முன்னேறக் கழகம். தனக்கான இளைஞர் படையை அவர் கட்டியமைக்கிறார். தனது உரைகள் எழுத்துகள் கலை வடிவங்கள் அனைத்தும் கொண்டு தம்பிகளை உருவாக்குகிறார். மக்களிடம் போ,மக்களோடு வாழ்ந்திரு,மக்களிடம் கற்றுக்கொள், மக்களை காதலி,மக்கள் பணியாற்று,மக்களோடு திட்டமிடு எனச் சொல்லி அவர்களை தலைவர்கள் ஆக்குகிறார். தன் தம்பிகள் உலகறிவு பெற்றிட வேண்டும் எனும் நோக்கில், தான் படித்த மேற்குலக புதுமைகளை எல்லாம் அழகு தமிழ் கடிதங்களாக்குகிறார். தன் தொண்டர்களை அடிமைகளாய் அல்லாமல், அறிவார்ந்தவர்களாய் அந்தக்கடிதங்கள் மூலம் செதுக்கினார். தம்பிகள் தன்னை மிஞ்சியவர்களாக வளர்வது காண்கிறார். முரண்பட்டாலும், நம் தலைவர் பெரியார்தான், தான் தலைவர் அல்ல.தளபதி தான் என்பதை உணர்த்துகிறார். தந்தை பெரியாருக்கு பக்கத்தில் அண்ணாதுரை அண்ணனான தருணங்களில் ஒன்று அது. ஒரு பக்கம் புனிதமென்று தமிழர்கள் ஏமாந்து நம்பிக்கொண்டிருந்த அனைத்தையும் ஒன்று விடாமல் உடைத்துப் போட்டுக்கொண்டே இருக்கிறார் பெரியார். இன்னோர் பக்கம் பிறப்பிலிருந்து இறப்பு வரை எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது பிற்போக்குச் சிந்தனைகள். அவற்றிக்கு உள்ளேதான், தங்கள் பண்பாடும், மொழிவரலாறும் சிக்கிக் கிடப்பதாக தமிழர்கள் எண்ணி இருந்தனர். அதில் ஓரளவு உண்மையும் இருந்தது. சாமான்யர்கள் பெரியாரை வந்தடைய பெரும் தாவலைச் செய்யவேண்டியதிருந்தது. அந்தத் தாவலைச் செய்யமுடியாத மலைப்பிலே பெரியாரை ஏக்கமாய்ப் பார்த்துவிட்டு ஒதுங்கிப்போய்க் கொண்டிருந்தன எளியோர் உள்ளங்கள். எண்ணிப்பாருங்கள். திருக்குறளில் கூட பெண்ணடிமை கருத்துகள் உண்டு என்கிறார் பெரியார். தமிழர்களோ, கம்பராமாயணத்தின் பக்தியில் லயித்துப்போயிருந்தார்கள். கட்டுப்பாடுமிக்க தந்தையிடம் விலகியிருக்கிற சிறு பிள்ளையின் முரண்பாட்டோடுதான் தமிழர்கள், பெரியாரோடு இருந்தார்கள். இருவருக்கும் இணைப்பாக, அண்ணாவும் அவர் தம்பிமார்களும்தான் தமிழர்களுக்கு அவர்கள் பண்பாடுகளும் மொழி பற்றும் சிதையாதவற்றை மீட்டுக்கொடுத்தனர். கம்பராமாயணத்தை தூர ஏறி, சிலப்பதிகாரத்தை கையில் எடு என்று அண்ணாவும் அவர் தம்பிகளும் சொன்னதன் காரணம் அது தான். ஆரியம் சொல்லும் தீபாவளி தவிர்த்து, பொங்கல் தமிழர் விழாவாக மீட்டெடுக்கப்பட்டது. பிள்ளையாரை உடைப்பதுமில்லை, பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதுமில்லை என்று பகுத்தறிவை சொன்னார். இப்படியே தான், தமிழர்கள் தாங்கள் இழந்துவிட்டதாகக் கருதிய பொன்னுலகக் கனவை மீட்டு, அதை எதிர்கால புத்துலகத்தின் இலக்கின் வழியில் இணைத்துவிட்டவர் அண்ணா. பிரிவினை கோரிக்கைகள் தடைசெய்யப்பட்டபோது, அண்ணா உறுதி காட்டியிருந்தால், அந்நேரமே குருதி வழிந்தோடும் களமாக தமிழகத்தை மாற்றிவிடும் சூழல் இருந்தது. எம் கோரிக்கையின் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. கோரிக்கையை கைவிடுகிறோம் என்று அவர் எடுத்த முடிவு தான், இந்நாளில் ஈழத்துக்கும் தமிழகத்திற்கும் உள்ள வேறுபாடு. அதுதான் அதிகாரஆவல் உள்ள தலைவனுக்கும், பாசமுள்ள ஒரு அண்ணனுக்கும் உள்ள வேறுபாடு. அதிகாரத்தின் பிடியை, தனக்கு கீழ்உள்ள தொண்டர் ஒருவர் கையில்கொடுத்து, அவருடைய உத்தரவில் நடக்க ஆவல் கொண்ட தலைவர் வரலாற்றில் யாரும் உண்டா?. அண்ணா செய்தார். தம்பி வா, தலைமை ஏற்க வா, ஆணையிடு, அடங்கி நடக்கிறோம் என, தனக்கு அடுத்த நிலையில், தன்னிலும் இளையவரான நாவலர் நெடுஞ்செழியனை அழைத்தபோது, உலகம் கண்டிராத ஒரு உன்னதத் தலைவன் எனத் தமிழகம் அண்ணாவைக் கண்டது. இந்தியை திணிக்க முயன்ற அன்றைய காங்கிரஸ் அரசு, நீட்டிய துப்பாக்கிகளுக்கும், வாட்டிய தீயின் நாக்குகளுக்கும் தங்கள் உயிரை பலியிட்டுக்கொண்டிருந்த தமிழகத்தின் மாணவர்களைப் பார்த்து, ஒரு சகோதரனைப் போல் பதறினார். போராட்டத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் உயிர்கொடை செய்வதை நிறுத்துங்கள் என்று மாணவர்களை சமாதானம் செய்து, உயிர்பலிகளை நிறுத்தி போராட்டத்தை கழகத்தின் வாயிலாக முன்னெடுத்தார் அண்ணா. எந்த பெரியாரோடு முரண்பட்டோரோ, அந்த பெரியாரிடம் தன் தம்பிமார்களோடு தாங்கள் பெற்ற ஆட்சி ஆதிகாரத்தை காணிக்கையாக்கினார். இயக்கத்தின் இலக்கு எது, தங்கள் கொள்கைத்தலைவர் யார் என்று உறுதியை, தம்பிகளோடு தமிழகத்திற்கும் உரக்கச் சொன்ன நாள் அது. இரண்டாண்டு மட்டுமே ஆட்சியில் இருந்தபோதும், தமிழ்நாடு பெயர்மாற்றம் முதல் சுயமரியாதை திருமண சட்ட அங்கீகாரம் வரை அடுத்துவரும் ஆட்சிகளுக்கு அகலமான பார்வைகளையும் கொள்கைத் தெளிவையும் கொடுத்துவிட்டுப்போனார். இன்றைக்கும் அரசியல் ஆவல் உள்ளோர்களுக்கு, கொள்கையை மக்கள்வயப்படுத்துவது, இயக்கத்தை கட்டமைப்பது, அரசியல்நகர்வுகள் வகுப்பது, ஆட்சி அதிகாரத்தில் தத்துவார்த்த தாக்கத்தை ஏற்படுத்துவது வரை , பழகிப் படிக்கவேண்டிய பாடமாக, லட்சியமாக அண்ணாவே இருக்கிறார். இன்னும் அண்ணாவை பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதலாம், சுருக்கமாக சொல்வதென்றால், “அவர் எடுத்த அரசியலுக்கு எதிர்அரசியல் இன்று வரை தமிழகத்தில் இல்லை” இன்றும் தமிழகத்தில் தலைவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு முறை அண்ணன் தம்பி, உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம் என்றே தான் இருக்கிறது. அவர் கண்மூடிய நாளில் சென்னையில் அவர் இறுதி அஞ்சலிக்கு கூடிய மக்கள் கூட்டம் அவரோடு தமிழர்களுக்கு இருந்த பாசப்பிணைப்பை சொல்லும். கோடி மக்கள் திரண்டு தங்கள் அண்ணனை வழி அனுப்பி வைத்த தருணம் அது. அண்ணா - அவர் அரசியல் தலைவர் அல்ல. பாசமுள்ள அண்ணன் — சாந்தி நாராயணன் முத்துராமானுஜம் (PASC - AMERICA வெளியிடும், The Common Sense மாத இதழில் பிப்ரவரி 2019 வெளியீட்டில் இந்த கட்டுரை வெளியானது)           அண்ணா என்னும் உலகத் தலைவர்! - வழக்கறிஞர். கணேஷ் பாபு   அண்ணாவின் சித்தாந்தம் உலகில் அனைவருக்கும் பொதுவானது, எந்த பிரச்சனையைக் குறித்தும் அவரது கருத்து உலகத் தரமானதாக இருந்தது என்பதையெல்லாம் தாண்டி அவர் பல சமயங்களில் உலகப் பிரச்சனைகளை எவ்வளவு நுட்பமாக உள்வாங்கியிருக்கிறார் என்பதை அவரது எழுத்துக்களை படிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறது. Non-proliferation, World Disarmament conference போன்ற சர்வதேசப் பிரச்சனைகளைப் பற்றியெல்லாம் இன்றுக்கூட மாநிலத் தலைவர்கள் பேசுவது அரிதாக இருக்கிறது. ஆனால் அவைக் குறித்தெல்லாம் அவர் 1950களிலேயே மிக இயல்பாகவும், அழுத்தமாகவும் தன் கருத்தை முன்வைத்திருக்கிறார். திராவிடநாடு கோரிக்கை அப்போது நடைமுறையில் இருந்தது அவரது சர்வதேச பார்வைக்கும், நிலைப்பாடுகளுக்கும் ஒரு மிக முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு அரசியல் விடயங்கள் பற்றி தி.மு.கழக உடன்பிறப்புகளுக்கு விவரிக்கும் சாக்கில் போகிற போகிற அவர்களுக்கு சுவைப்பட சர்வதேச அரசியலையும் பயிற்றுவிக்கும் பேரறிஞர் அண்ணாவின் பாணி அலாதியானது. 30.10.1960 அன்று தன் தம்பிகளுக்கு அவர் 'முடியரசு-குடியரசு' பற்றி எழுதிய கடிதத்தில் இப்படி எழுதுகிறார்:  'உலகப்பெருந்தலைவர்கள் கூடிப் போர்க்கருவிகள் ஒழித்திட, மாநாடு நடாத்துகிறார்கள், தம்பி! கூர்ந்து பார்த்தால், ஒவ்வொரு தலைவரும், தம்மிடம் இல்லாத போர்க்கருவிகள், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது; தமக்குச் சாத்தியமாகாத எந்தப் போர் முறையும் திட்டமும், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது என்பதைத்தான் மிகச் சாமர்த்தியமாகப் பேசி வருவது புரியும். 1932-ல் ஜெனிவா நகரில், போர்க்கருவிகள் ஒழிப்புக்கான மாநாடு ஒன்று நடைப்பெற்றது. சோவியத் நாட்டு லிட்வினாப் இப்போது குருஷேவ் வலியுறுத்தியது போலவே, போர்க்கருவிகள் ஒழிக்கப்படவேண்டும் என்ற திட்டம் கொடுத்துப் பேசினார். அப்போது ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்த மாட்ரியாகா என்பவர் ஒரு கதை கூறினார். "காட்டிலே உள்ள மிருகங்களெல்லாம் கூடி, ஒன்றை ஒன்று கொன்றுக்குவித்திடும் கொடுமையை ஒழிக்க வழிவகை என்ன என்று மாநாடு நடத்தின. காட்டரசனான சிங்கம், கெம்பீரக் குரலில், கழுகைப் பார்த்தப்படி, 'நாமெல்லாம் கூர்மையான மூக்குகளை ஒழித்துவிடவேண்டும்' என்று கூறிற்று; புலி, யானைப் பார்த்தப்படி 'ஒழிக்கப்படவேண்டியது தந்தங்கள்!' என்று பேசிற்று; யானையோ, புலியைப் பார்த்துக்கொண்டே 'கோரமான பற்களையும் கூரான நகங்களையும் ஒழித்தாகவேண்டும்' என்று முழக்கமிட்டது. இப்படி ஒவ்வொரு மிருகமும் தன்னிடம் எது இல்லையோ, எதை வைத்துக்கொண்டு மற்ற மிருகங்கள் கொல்லும் வலிவு பெறுகின்றனவோ, அவைகளை ஒழித்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் பேசின. கடைசியாகக் கரடி எழுந்தது, கனிவுடன், 'கொல்லும் செயலுக்குப் பயன்படும் எல்லாமே ஒழிக்டப்படத்தான் வேண்டும் - கொடிய வாய், கூரான நகம், நீண்ட கூரிய மூக்கு - எல்லாம் - புவியெங்கும் இருந்துவருகிற, கட்டித் தழுவிக்கொள்ளும் முறை தவிர, மற்றதெல்லாம் ஒழிக்கப்பட்டாக வேண்டும்' என்று கூறிற்று". தம்பி! கரடி, கட்டிப்பிடித்தே மற்றதைக் கொல்லவல்லது. எனவே கரடி அதுமட்டும் இருக்கவேண்டும், மற்றவை ஒழிய வேண்டும் என்று பேசிற்று என்பதாகக் கூறினார், ஸ்பெயின் நாட்டுக்காரர். அது சோவியத்தைக் கிண்டல் செய்யப் பேசப்பட்டது. ஆனால் இதிலே தொக்கி நிற்கும் உண்மை, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு வலிவு எதுவோ, அதை ஒழிக்கவே, போர்க்கருவி ஒழிப்பு மாநாடு நடத்துகிறது, என்பதுதான். . .' அன்று பேரறிஞர் அண்ணா எழுதியப்படி இந்தக் குழிப்பறிக்கும் விளையாட்டுதானே இன்றுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஈரான், ஈராக், வடகொரியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிக்கிடையில் நடந்துவருகிறது? தகவல்கள் விரல்நுனியில் கிடைத்திட எத்தனையோ வழிகள் உள்ள இந்தக் காலத்திலேயே நம்மில் பலரும் அறியாத சர்வதேசச் செய்திகளையும், அதன் ஆழமானக் கோணங்களையும் அச்சுப் பத்திரிகைகள் மட்டுமே இருந்த அந்தக் காலத்தில் அண்ணா அவற்றை எங்கே/எப்படி படித்திருப்பார் என்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது! ஒரு பேட்டியில் மருத்துவர் எழிலன் அவர்கள் சொன்ன செய்தி நினைவுக்கு வருகிறது. தலைவர் கலைஞரின் இறுதி ஆண்டுகளில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற மருத்துவர் எழிலன் ஒருமுறை தலைவரிடமே, "அய்யா ஒருவேளை அண்ணா மறையாமல் இன்னும் 20-30ஆண்டுகள் உயிரோடு இருந்து தி.மு.கவை வழிநடத்தியிருந்தால் கட்சி எப்படியிருந்திருக்கும்?" என்றுக் கேட்டிருக்கிறார். "மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தி.மு.கவை அண்ணா ஒரு சர்வதேசக் கட்சியாக உருவாக்கியிருப்பாருப்பா" என்று விடையளித்திருக்கிறார் தலைவர் கலைஞர். ஆம்! கலைஞர் என்னும் உன்னதத் தலைவருக்கு உயிருள்ளவரை வழிகாட்டிய உலகத் தலைவர் பேரறிஞர் அண்ணா. -Ganesh Babu                                                     அண்ணா என்பது ஒருவரைத் தான்- அருள் பிரகாசம்   அன்பின் உருவமாக, அறிவின் இமயமாக, பண்பின் சிகரமாக, அஞ்சா நெஞ்சனாக, ஆற்றல் மறவனாக, சுயமரியாதை சுடராக, சிந்தனைச் சிற்பியாக, தென்னாட்டு காந்தியாக, இன்னாட்டு பெர்னாட்ஷாவாக, ஏழைப் பங்காளியாக, எல்லோருக்கும் அண்ணனாக, அறிஞர் அண்ணாவாக, பேரறிஞர் பெருந்தகையாக, தமிழ் உணர்வாக, தமிழர் வாழ்வாக, திராவிடர் முரசாக, தித்திக்கும் தேனாக, எத்திக்கும் புகழ் பரப்பி, என்றென்றும் எல்லோர் நெஞ்சிலும் வாழ்கின்ற வள்ளல் அண்ணா. அண்ணாவின் பிறந்தநாள் தமிழர்களின் எழுச்சிநாள். அண்ணாவின் பிறந்தநாள் தமிழர் உரிமை முழக்க நாள். அண்ணாவின் பிறந்தநாள் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒப்பற்ற நாள். ஆம் சாதி மத பேதமின்றி அனைவரும் அன்புடன் அண்ணா என்று அழைக்கும் ஒரே தலைவர் அவர். எல்லோருக்கும் அண்ணன் அவர். அறுபத்து நான்காம் நாயன்மார் என்று போற்றிப் புகழப்படும் ஆன்மிகச் செம்மல் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் 1975 ஆம் ஆண்டு அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய உரை அண்ணாவின் பெருமையை என்றென்றும் எடுத்துரைக்கும். அந்நாள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் மேடையில் இருக்க அந்த தமிழ்த்தாத்தா அண்ணாவைப் பற்றி பேசியது கேட்டால் மாற்றுக் கருத்து உடையவர் மனங்களிலும் அண்ணா எப்படி வீற்றிருந்தார் என்பதை அறிய முடியும். கொள்கையால் கருத்தால் மாறுபட்டவர்களையும் அரவணைத்துப் போகும் பக்குவம் அவர்களாலேயே பாராட்டப்படவும் மெச்சப்படவும் நல்லெடுத்துக்காட்டாக விளங்குவது திராவிட இயக்கத் தலைவர்களின் நற்குணம். பெரியார், அண்ணா, கலைஞர் எல்லோரும் அத்தகைய பண்பினைப் பெற்றவர்கள். வாரியார் அவர்கள் ஆற்றிய அந்த உருக்கமான உரையில் அண்ணாவைப் பற்றி குறிப்பிடுகிறார் ”இறுதிவரை மூச்சிலும் பேச்சிலும் பிறருக்காகவே வாழ்ந்து அண்ணா தெய்வமானார்” என்று. வாரியார் அண்ணாவைப் பற்றி மேலும் சொல்கிறார் “ அண்ணா என்ற சொல்லுக்கு அணுகி அருள் புரிதல் என்று பொருள். அணுகுதல் என்றால் நெருங்குதல். கிணற்றில் விழுந்தவனை கிணற்றில் குதித்துதான் காப்பாற்ற வேண்டும்.அதைப் போல ஏழை எளியோரை நெருங்கி அவர்கள் குறை தீர்த்தவர் அண்ணா” என்கிறார். ”திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவபெருமானை அண்ணா என்று அழைக்கிறார். மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு அண்ணா எடுத்துக் காட்டாக திகழ்கிறார். மனிதன் என்றால் சிந்திப்பவன் மனம் உடையவன் என்று பொருள். .மனிதன் தனது சிந்தனையினால் அறிவு ஆற்றலினால் அரிய குணங்களினால் தெய்வமாக முடியும். அப்படி ஆனவர்தான் அண்ணா” என்று அண்ணாவைப் போற்றுகிறார். அண்ணாவின் சொல்லாற்றல் சொல்லி மாளாது. ஒருமுறை சட்டமன்றத்தில் அண்ணாவை மடக்க வேண்டும் மாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அண்ணா தந்த பதில் அவரது ஆழ்ந்த அறிவுக்கும் சமயோசித தன்மைக்கும் எடுத்துக் காட்டாகும். நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் பேருந்துகளிலெல்லாம் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அண்ணாவின் அமைச்சரவையில் இருந்த போக்குவரத்துத் துறைக்கும் பொறுப்பான பொதுப்பணித் துறை அமைச்சர் கலைஞர். திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம்பெற்றதைக் கேலி செய்து எதிர்க்கட்சியினர் பொதுக் கூட்டங்களில் பேசினார்கள். சட்ட மன்றத்திலேயே ஒரு முறை எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் தந்திரமாக ஒரு கேள்வியைக் கேட்டார். பேருந்தில் ‘யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு’ என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவா? இக்கட்டான நிலையில் ஆட்சியாளர் அகப்பட்டுத் தவிக்க வேண்டும் என்று எண்ணி எழுப்பப்பட்டக் கேள்வி இது! டிரைவர் . . . கண்டக்டருக்காக என்றால் தொழிளாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும். பொதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும். இந்த கேள்விக்கு முதல் அமைச்சரான அண்ணா கொடுத்த பதில் சாதுர்யமானது மட்டுமல்ல - மிகவும் நுணுக்கமானதுமாகும். நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார். இந்த உடனடி பதில்அடி கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அசர வைத்துவிட்டது. இதைப் போல பொருத்தமாகத் தெளிவுடன் உடனே பதில் சொல்லும் அறிவாற்றல் அவரிடம் மிகுதியாக அமைந்திருந்தது. 1949 ஆண்டு அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட முனேற்றக் கழகம் 1952 பொதுத் தேர்தலில் நேரடியாக பங்கேற்கவில்லை. அப்போது காமராசரும், காங்கிரசாரும் அண்ணாவையும், கழகத்தினரையும், வெட்டவெளியில் பேசி என்ன பயன் - முடிந்தால் சட்ட சபைக்கு வாருங்கள் என்றனர். 1957 ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு 15 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு திமுக சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டனர். 1962-ல் 50 சட்டமன்ற உறுப்பினர் ஆனார்கள். தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா என்றவர்கள் எதிர்கட்சியில்லை நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று குறை கூறி திமுகவை கேலியும், கிண்டலும் செய்தனர். அப்போது அண்ணா, ‘நீங்கள் எதிர்கட்சி சரியில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரையில் நீங்களே அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்’ என்று குறிப்பிட்டார். அதுதான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடந்தது மட்டுமல்லாமல் அப்படி ஏளனம் ஏகடியம் பேசியவர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாமல் அண்ணாவின் பெயரை சொல்லாமல் யாரும் இனி ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது. அண்ணாவின் வாதத்திறமைக்கும், சமயோசிதமான கூர்த்த மதியுடன் பதில் கூறும் தன்மைக்கும் எடுத்துக்காட்டாக இதை போல பல்வேறு நிகழ்சிகளைக் குறிப்பிட முடியும். ஏற்றத் தாழ்வெனும் இருட்டறை தன்னில் எறிந்திடும் தீபம் போற்றிடும் புனிதப் பண்புகள் படைத்த பெருமகன் அண்ணாவின் பிறந்தநாளில் அனைவருக்கும் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள். செப்பரும் வித்தகன் அண்ணா செப்பிய வழியில் அயராது உழைப்போம் .... - சண். அருள்பிரகாசம் (அருள் பேரொளி ) 1 கருணாம்பிகை காலனி வேளச்சேரி சென்னை-600 042 செல்பேசி +91 9444446579 [Image]   நவீன தமிழகத்தின் சிற்பி - அகிலா தேவி   ஒருவருடைய வாழ்வை 30 ஆண்டுகள் கல்வி 10 ஆண்டுகள் சமூகப்பணி 20 ஆண்டுகள் அரசியல் களம் என்று பகுமாக பிரித்து தன் வாழ்வின் அர்த்தத்தை இன்று வரை அறுவடை செய்து கொண்டிருப்பவர் எங்கள் அறிஞர் அண்ணா. வேறு எந்த அரசியல் தலைவரும் இன்று வரை செய்யாத வகையில், இளைஞர்களை நல்வழிப்படுத்தி, சுயமரியாதையில் எழ செய்து, படிக்க சொல்லிக்குடுத்து, எழுத கற்றுக்கொடுத்து, பேச மேடைகளை அமைத்துக்கொடுத்து அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர். ஜனநாயக நாட்டில் அதிகாரத்தை எளியவர்களும் அடைவதற்கான நவீன அரசியல் இயக்கம் கண்டவர் அண்ணா. அமைப்பு ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் தன் காலத்திற்குப் பிறகும் கூட வலிமையாக இருக்கும்படியான ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஒரு தலைவனுக்கு மிக நவீனமான பார்வை வேண்டும், அது அண்ணாவிடம் நிறையவே இருந்தது. நவீன தமிழகத்தின் சிற்பி என்று அண்ணாவை சொல்லலாம். எல்லா ஜாதியினரும் கருப்பில் சிவப்பில் பத்திரிக்கையடித்து , ஜாதி பார்க்காமல் அனைவரின் பெயரையும் பத்திரிக்கையில் போட்டு ஒரே மேடையில் அனைவரையும் அமர வைத்து துண்டு போடும் அந்த கட்டமைப்பை ஏற்படுத்தியவர். லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து, சாதி மத பேதங்களை கடந்து அவர்களை ஒரு தத்துவத்தின் குடையின் கீழ் ஒருங்கிணைத்து, அரசியல் களத்தில் வெற்றி பெறச் செய்து அதிகார நிழலில் அமரவைத்து இன்று வரை தலைமுறைகளை செழுமைப் படுத்திக்கொண்டிருப்பவர் அண்ணா. ஜாதி சங்கங்கள் இருந்த காலத்தில் ஒவ்வொரு ward க்கும் படிப்பகம், நூலகம் என்று பாமர மக்களிடம் அரசியல் தெளிவு ஏற்படுத்தியவர். CNA என்று தன்னுடைய அரசியல் வாழ்வை ஆரம்பித்து இன்று தமிழ்நாட்டின் அனைவருக்கும் அண்ணாவா திகழ்ந்து இன்று வரை திராவிடத்தை தளைக்க வைத்துக்கொண்டிருக்கும் அறிஞர் அண்ணாவின் வழி வந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். -  அகிலா தேவி கோயமுத்தூர்       எனக்கென்று எந்தத் தனி ஆற்றலும் இல்லை. என் தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டுச் சக்தியின் உரிமையாளன் நான் - ரெபெல் ரவி   தமிழ் கூறு நல்லுலகால், பேரறிஞர் அறிஞர், தென்னாட்டு பெர்னார்ட் ஷா, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி கரிபால்டி என்றெல்லாம் அழைக்கப்பட்ட, ஆனால் சாமான்யராகவே தன்னைக் கடைசி வரைக் கருதிக் கொண்ட, தமிழகம் இதுவரை கண்டிராத மாபெரும் அறிவிஜீவி, அண்ணா என்கிற காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை 15 செப்டம்பர் 1909 ல் காஞ்சியில் பிறந்தார். மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்று, அறிவால் மட்டுமே உலகை நோக்கி, இதயத்தால் அதனை நேசித்திட்ட, பெருந்தகை அண்ணா, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சரானது..தமிழகம் இன்றும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறாகும். அவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார். பெரியாருடன் எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். 1957 ஆம் ஆண்டு வரை தி.மு.க, ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே இருந்துவந்தது. 1957 ல் நடைபெற்ற தேர்தலில் கலந்து கொள்ள முடிவு செய்த கழகம், அத்தேர்தலில் 15 இடங்களை வென்றபோது அண்ணாவும் சட்ட மன்ற உறுப்பினரானார். தொடர்ந்து தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து வந்த அண்ணாவும் தி மு க வும், தமிழ் மக்களின் வாளும் கேடயமும் போல…ஆனது வரலாறு நமக்குச் சொல்லும் சேதி. மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியதன் மூலம், தி.மு.க வை பலம் மிக்க அரசியல் இயக்கமாக வழி நடத்திச் சென்றார், அண்ணா. விளம்பர உத்தியில் 360 டிகிரி..என்பது ஒரு குறியீடு. பார்க்கும் இடந்தோறும் நீக்கமற ஒரு பொருள் பற்றியே பேச வைப்பது. அதை அண்ணா, அன்றே செய்தார். பத்திரிகை ஊடகம், சினிமா, நாடகம்,பொதுக்கூட்டம், திண்ணைப் பிரச்சாரம்..எல்லாவற்றிற்கும் மேல் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் செய்த மென்மையான் அறிவுப் பிரச்சாரம்…என எங்கு பார்த்தாலும் திமுக பற்றியே பேச்சு… இதற்கிடையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போர், விலைவாசி உயர்வு, எல்லா மக்கள் பிரச்னைகளிலும் காமராசரின் கள்ள மவுனம்… அண்ணாவின் மாபெரும் ராஜதந்திரம். இவையெல்லாம் சேர்ந்து, அசைக்கவே முடியாத கோலியாத்தைச் சிறுவன், தாவீது சாய்த்தது போல் அண்ணா, காங்கிரஸ் பேரியக்கத்தை வேரும் வேரடி மண்ணுமாய் வீழ்த்தினார். 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். அறிஞர் அண்ணா பற்றி அற்புதமான பல விஷயங்களை இங்கே தொகுத்துத் தருகிறோம். அண்ணா, அரசியலில் இலக்கியம்..இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் ஈடுபட்டவர். சிறுகதை, நெடுங்கதை, சரித்திர நெடுங்கதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள், உரையாடல்கள், கடிதங்கள் என எல்லா பிரிவிலும் தனி முத்திரை பதித்தார், அதே நேரத்தில் பொதுக்கூட்ட மேடைகளில் பூங்காற்றாய் வீசினார். தமிழக இந்தி எதிர்ப்பு வரவாற்றின் முதல் முறை சிறை சென்றவர் அண்ணாதான் - 1938-ல் இந்தியை எதிர்த்து சிறை சென்றவர். தான் எழுதிய சந்திரோதயம் எனும் சமூக நாடகத்தில் தானே மூன்று வேடங்களில் நடித்து இயக்கி தன் தோழர்களையே நடிக்க வைத்தவர். 1943- முதல், பேச்சிலும் எழுத்திலும் அடுக்கு மொழியைக் கையாண்டு, மக்களை ஈர்த்தவர். நாடகத்துறையிலும் அண்ணா சரித்திரம் படைத்தார். ஒரே இரவில், ஓர் இரவு எனும் நாடகத்தை எழுதி, ஓர் இரவில் நடக்கும் நிகழ்ச்சிகளையே மையமாக வைத்து, அதனை நடாத்தி மாபெரும் வெற்றி பெற்றார். ஓர் இரவு நாடகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை பின்னோக்கிய காட்சிகளாக ((Flash Back) முதன்முதலில் அமைத்தவர் - வேலைக்காரி எனும் நாடகத்தில் வழக்கு மன்ற காட்சிகளை அமைத்து, நாடக மேடையில் முதன்முதலில் கோர்ட்டைக் கொண்டு வந்தவர் அண்ணா தான். வர். சமகாலத்தில் வாழ்ந்த, ஆனால் தன்னை வசை பாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரிசாமி போன்றவர்களுக்கு நிதி திரட்டித் தந்தவர் அண்ணா. புலவர்களிடம் சிக்கித்தவித்த செந்தமிழை விடுவித்து, அதனைப் பாமரர்களிடம் கொண்டு சேர்த்தவர் அண்ணா. வசனம் எழுத மிக அதிக ஊதியம் முதன்முதலில் அண்ணாதான் ஓர் இரவு திரைப்படத்திற்கு வாங்கினார். ஊடகத்தின் வீச்சை நன்கறிந்த, அதைப் பயன் படுத்திடக் கிட்டிடும் வாய்ப்புகளை நழுவ விட்டதேயில்லை. அகில இந்திய வானொலியில் பல தலைப்புகளில் பல நேரங்களில் சொற்பொழிவு ஆற்றியவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த சொற்பொழிவாளாராக விளங்கிய முதல் தமிழர் அண்ணாதான். கம்பராமாயணம், பெரிய புராணம் இவற்றை, நன்கு கற்றுத்தேர்ந்து, புலவர்களும், தமிழறிஞர்களும் மறுக்க முடியாத அளவில் வாதங்களை எடுத்து வைத்து வாதிட்டு, சநாதனத்தில் சங்கை அறுத்தவர் அண்ணா. அவரது நுண்மாண் நுழைபுலமும், நவில்தொறு நூல்நயமும், தகர்க்க முடியாத தர்க்க அறிவும்…ஆதி சங்கரரையே அண்ணா வாதத்தில் வீழ்த்தி இருப்பார் என சநாதனிகளே சொல்ல வைத்தது. தான் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதையே ஜனநாயக முறையில் மக்களிடம் கருத்து கேட்டறிந்து..அதன் படி தேர்தல் அரசியலுக்குள் நுழைந்த மகத்தான ஜன்நாயகவாதி அவர். காட்சிக்கு எளியவர் எனினும் கருத்துக்கள் அத்தனையும் எரிமலைக் குழம்பாய் வெளிப்படும்.. அவரது நாடகங்கள், நூல்கள் அனைத்துமே, அநீதிக்கெதிராய் வீசப்பட்ட அணு ஆயுதங்கள்….நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், கட்டை விரல், இளங்கோவின் சபதம், பிடிசாம்பல், தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில் ஒமகுண்டம் இப்படி. தனது சொற்பொழிவுகளைக் கேட்க, மக்கள் கட்டணம் செலுத்தி வரவழைத்து, கட்சி நிதி திரட்டினார்..இன்று குவார்ட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்தாலும், கூட்டத்தில் வந்து தூங்கிடும் மக்களைத்தான் பார்க்கிறோம். தன் கட்டுப்பாட்டிற்குள் கட்சி இருந்தபோதே தனக்கு அடுத்து இருந்தவரை, கட்சியின் பொதுச் செயலாளராக்கி அவரின் தலைமையின் கீழ் பணிபுரிந்த பெரு மனதும், தன்னம்பிக்கையும் நிறைந்திருந்த ஒரே அரசியல் வாதி அண்ணா தான். சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவராக இருந்தபோது அன்றைய முதல்வரை தன் தொகுதிக்கு அழைத்துச் சென்று, தொகுதிமக்களுடன் நேருக்குநேர் சந்திக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அண்ணா. கட்சி மாநாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி அறிவு விளக்கம் தந்தவர் அண்ணா, கலையை எந்த நேரத்திலும் அவர் கைவிட்டாரில்லை. இந்த நாட்டு மக்கள், அறிவியல் அறிஞருக்கும், மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும், அரசியல்வாதிகளுக்கல்ல எனச் சொன்ன முதல் அரசியல்வாதி அண்ணாதான். அரசியல் போராட்டத்தில் கைதாகி தனக்குத் தானே வாதாடிய முதல் அரசியல்வாதி அண்ணாதான். திராவிடநாடு பிரிவினை கோரிக்கையை இந்தியத் துணைக்கண்ட நாடாளுமன்றத்திலேயே முழங்கிய அஞ்சா நெஞ்சினர் அண்ணா. அடைமொழி தருவதில் அவருக்கு நிகர் அவரே. தன் காலத்தில் பல துறைகளில் சிறப்புடன் வாழ்ந்த பெருமக்களை அடைமொழியுடன் அழைத்தார் - அதவே பின்னாளில் நிலைபெற்றது. வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சித்தனைச்சிற்பி சிங்காரவேலர், உத்தமர் காந்தி, கொடுமுடி கோகிலம் (கே.பி.சுந்தராம்பாள்), நடிகமணி டி.வி.நாராயணசாமி, நடிப்பிசைப் புலவர் (கே.ஆர்.ராமசாமி) என…. பெரியாரைப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி 20 ஆண்டுகள் தலைவரைத் தாக்காமல் கட்சி நடத்தி அரசையும் கைப்பற்றிப் பகைமை மறந்து, தலைவரைப் பார்த்து இந்த ஆட்சி தங்களுக்கு காணிக்கை என அறிவித்த மனிதருள் மாணிக்கம்-அண்ணா. தேர்தல் பிரச்சாரத்தில் சுவரொட்டிகளில், மனதில் பதியவைக்கும் கருத்துக்களைச் சுருங்கச்சொல்லிப் பிரச்சாரத்தில் புதிய உத்தியைக் கையாண்டவர் அண்ணா. உலகிலேயே முதன் முறையாக, எரியும் குடிசைகளை அகற்றி ஏழைகளுக்கு எரியா வீடுகள் கட்டிக் கொடுத்தவர் அண்ணாதான். அமெரிக்க பல்கலைகழகமான யேல் பல்கலைக்கழகம் சப்பெலோசிப் எனும் சிறப்பைப் பெற்ற முதல் தமிழர் - முதல் ஆசிரியர் அண்ணா. என் ஜி ஓ என்றழைக்கப் படும், அரசு சாரா நிறுவனத்தை முதன் முதலில் அண்ணாதான் சீரணி என்கிற பெயரில் துவக்கினார். பொதுத்தொண்டில் ஆர்வமுள்ள எவரும் எந்த பலனும் எதிர்பாராமல் ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய சிறு சிறு பணிகளில் ஈடுபட்டு தங்கள் உழைப்பை நல்கும் திட்டமிது. தன் உள்ளத்தை திறந்துக் காட்டி, எதையும் மறைக்காமல், இயலாததை இயலாது என்றும், தவறாயிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன், திருத்திக்கொள்கிறேன் என்றும் சொன்ன முதல் அரசியல்வாதி அண்ணா. எனக்கென்று எந்தத் தனி ஆற்றலும் இல்லை. என் தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டுச் சக்தியின் உரிமையாளன் நான் - எனச் சொன்ன மாபெரும் தலைவர் அண்ணா. அண்ணா பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்…அண்ணாவின் கொள்கைகள் எல்லோருக்கும் வெற்றி தேடித்தரும்..அவரைப் பின்பற்றி நடந்தால் வெற்றி நிச்சயம்.. அதற்கு, கலைஞரும் எம்ஜிஆருமே சாட்சி… - ரெபெல்ரவி 15/09/2019  [Image]   தி.மு.க பெயர் தோன்றியது எப்படி? - க. திருநாவுக்கரசு                    “என்னப்பா அரங்கண்ணல், வண்டல், காட்டுவெள்ளம்." "அப்புறமா என்னன்னா! சும்மா உதாரணத்தையும் கண்ணீர்த் துளிகளையும் காட்டிகிட்டேயிருந்தா போதுமா? ஒரு Decision வேண்டாமா போன இடங்களிலேயெல்லாம் என்னென்ன பேசுறாங்க தெரியுமா..." இது மதி. "இப்படிப் பேசுறவங்க, கொட்டிட்டா; அள்ள முடியுமான்னு தவிக்கிறாங்கன்னும் பிறகு பேசுவாங்கப்பா!" - இது அண்ணா. “இருந்தாலும் அண்ணா! ரொம்ப 'டிலே" பண்றதும் சரியில்லே; அதுக்காக அவசரப்படுணும்னு நான் சொல்லலே..." இது செழியன். "அப்போ ஒரு கட்சி ஆரம்பிக்கிற சூழ்நிலை வந்தாச்சு! அதுதானே உங்க எண்ணம். அரங்கண்ணல்! PAD அய்க் கொண்டா...சொல்லுங்கப்பா ஒரு பேர் கட்சிக்கு... " "தமிழ்நாடு சோசியலிஸ்ட் கட்சி - இது எப்படின்னா இருக்கு? - வேலாயுதம் (வாணன்) "இதெப்பாரு வேலாயுதம்! நம்ப புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கிறதா இருந்தா அதிலே திராவிடர் என்பதும் இருக்கணும்; கழகம் என்பதும் இருக்கணும்... ஆமாம்! அது முக்கியம்." திராவிட சோசியலிஸ்டுக் கழகம் - திராவிட சமதர்மக் கழகம் - திராவிட சமுதாயக் கழகம் - திராவிட தீவிரவாதிகள் கழகம் - இப்படி ஒவ்வொருவரும் மதத்துக்குப் பட்டதைச் சொல்லலானோம். அண்ணா எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார்கள். பிறகு ஆங்கிலத்தில் சொல்லிப்பார்த்தோம். Dravidian Forward Block—Dravidian Progressive Association, Dravidian Vanguard Party என்று பட்டியல் போட்டோம். அண்ணா கேட்டார்கள் இந்தப் பெயர் எப்படியிருக்கு? "எந்தப் பெயர் அண்ணா?" Dravidian Progressive Federation — அதாவது Dravidian- ம் வருகிறது - Federation ம் வருகிறது. தமிழில் திராவிட முன்னேற்றக் கழகம். “ரொம்ப நல்லாயிருக்கு!" என்று ஒரே குரலில் சொன்னோம். "அதிலும் கொஞ்சம் யோசிங்க! என்று சொல்லலாமா? Dravidian அதாவது திராவிடர் என்பதா - திராவிட என்பதா" என்று அண்ணா எங்களை யோசிக்கச் செய்தார்! "ஆமாண்ணா! திராவிடர் என்றால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கி விடுவது. அதிலும் நாம் எல்லாம் ரேஷனலிஸ்டுகள். பகுத்தறிவுக்குக் கொள்கைகளை யார் ஒத்துக்கிட்டாலும் நம்ம கட்சியிலே இருக்கலாம். அய்யாவுக்கும் நமக்கும் இந்த விஷயத்திலே நிச்சயம் "டிஃபரென்ஸ்" தெரிஞ்சே ஆகணும். அதனால "திராவிட" என்று நிலப்பகுதியைக் குறிக்கிறதுதான் ரொம்ப பொருத்தம்" என்று மதி அந்த யோசனைக்கு விடையிறுத்தார்.  "அப்ப நம்ப கொள்கைகளை ஒத்துக்கிட்டா அவங்களும் Dravidian தானே...? அண்ணா. கட்டுரை எழுத நான் வைத்திருந்த அட்டையில் "திராவிட முன்னேற்றக் கழகம்" என்கிற பெயர் முதன் முதலாக எழுதப்பட்டது! எல்லோரையும் கலந்து ஒரு முடிவுக்கு வரும் வரையில் இந்தப் பெயரை முடிவு செய்வதாகக் கொள்ள வேண்டாம் - என்றும் எங்களுக்குத் தெரிவித்தார் அண்ணா! சென்னைக்கு வந்து, தான் சந்தித்த ஒவ்வொருவரிடமும், என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டுக் கருத்தறிந்தார்கள். முடிவுல, "இதுதாம்பா முடிவான பெயர்!" என்று ஒரு முடிவுக்கு வந்து எழுதினார்கள். இப்படித்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் உருவாயிற்று. * * கே.ஏ. மதியழகன் தாம் வைத்திருந்த சட்டக் கல்லூரி நோட்டுப் புத்தகத்தில் தான் அண்ணா "திராவிட முன்னேற்றக் கழகம்" எனும் பெயரை எழுதியதாக அநேக மேடைகளில் பேசியிருக்கிறார். நாமும் அப்பேச்சைக் கேட்டு இருக்கின்றோம். இந்த இரு நிகழ்வுகளும் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. - க. திருநாவுக்கரசு (திமுக வரலாறு - பாகம் 1)                           திராவிடத்தின் இன்றைய தேவை - அருண்குமார் வீரப்பன்   அடிமை பட்டு கிடப்பது எல்லா இடங்களிலும் நடப்பது தான். ஆனால் தான் அடிமை பட்டு கிடக்கிறோம் என்பதை உணராமலேயே இருப்பது தான் மிக கொடுமையான விசயம். எதுவாக இருந்தாலும் கடவுள் சொல்லி இருக்கிறார் என்ற ஒற்றை மாய வார்த்தையில் அடக்கி அதையும் மக்களுக்கு புரியாத மொழியில் சொல்லி மக்களையே நம்ப வைத்திருக்கின்றனர். அடுத்த பிறவி மோட்சநிலை என்ற கற்பனைகளில் மக்களை கட்டி போட்டு அவர்களுக்கு வேண்டும் என்பதை எல்லாம் சாதித்து கொண்டார்கள். புத்தர் வள்ளலார் வைகுண்டர் சித்தர்கள் என பலரும் போராடி நீர்த்து போக செய்யவியலாத பார்ப்பனியத்தை வேரோடு அறுக்கவென்றே புயலென புறப்பட்டார் பெரியார். அதற்கு முன்னரே நம் உரிமைகளுக்கு என நீதிக்கட்சி மூலவர்கள் போராட ஆரம்பித்தார்கள் எனினும் பார்ப்பனியத்தின் பண்பாட்டு ரீதியான படையெடுப்பை முற்றிலுமாக மூர்க்கமாக எதிர்த்து நின்றவர் பெரியாரே. அவரும் அவர்தம் இயக்கமும் அவர்தம் தொண்டர்களும் இம்மண்ணிற்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியவை. மதம் என்பது அதிகாரத்தில் இருந்தவரை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அரசியல் என்பது அதிகாரத்திற்கு வந்து எப்போது அதை நாம் கையில் எடுத்தோமோ அப்போதே நாம் நம் உரிமைகளை அடைய ஆரம்பித்தோம். ஒரு பக்கம் அரசியல் உரிமைகளுக்காக பேசிக்கொண்டே மறுபக்கம் பண்பாட்டு விடுதலைக்கான வேலைகளையும் முடுக்கி விட்டார். பெண் விடுதலை பேசினார். தமிழ் மொழிக்காக போராடினார். சாதிய இழிவுகளை சாடினார். கடவுள் மறுப்பை முன்னெடுத்தார். இது எல்லாவற்றையும் விட முக்கியமாக இதை எல்லாம் காலாகாலத்திற்கும் எடுத்து செல்வதற்காக தனக்கு பின் ஒரு படையையே வழிநடத்தி சென்றார். இன்றும் தமிழகத்தில் கோலோச்சி கொண்டிருக்கும் இருபெரும் கட்சிகள் அவரிடம் இருந்து தோன்றிய கிளைகளே. இன்றும் தோன்றும் அனைத்து கட்சிகளும் ஒன்று அவரை புகழ்ந்து அல்லது இகழ்ந்தே ஆரம்பிக்கின்றன. நீ யாருக்காக பேசுகிறாயோ என்ன பேசுகிறாயோ தமிழகத்தை பொறுத்தவரை பெரியார் என்னும் மாமனிதரை தாண்டி அவரை புறக்கணித்து விட்டு எந்த அரசியலையும் பேசிவிட முடியாது என்ற நிலையே என்றும் உள்ளது. பெரியாரை ஏற்றுக்கொண்டு அவரின் வழியில் பயணிக்கும் திராவிட கட்சிகள், மற்றும் இன்னபிற சமூகநீதி கட்சிகள் அவரை இகழ்ந்து அரசியல் செய்யும் மதவாத கட்சிகள் இன்னும் அவரை புகழ்வதா இகழ்வதா என்றே தெரியாமல் முழித்து கொண்டிருக்கும் தமிழ்தேசிய கட்சிகள் இவைதானே பலகால அரசியல் நிலையே. ஆனால் இவ்வளவு முக்கியமான ஒரு நபர் அரசியல் தாண்டி பொதுநீரோட்டத்தில் மக்களால் எப்படி பார்க்கப்படுகிறார்.? அவர் ஒரு கடவுள் மறுப்பாளர் என்று மட்டுமே தான். அதை தாண்டி யாரும் எதுவும் பேசுவதில்லை. பள்ளி பாட புத்தகத்தில் கூட மற்ற சில தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட அளவு முக்கியத்துவம் கூட இன்றி மூன்று பக்கங்களுக்குள் மூழ்கடிக்கப்பட்டிருப்பார். என்னுடைய வாழ்வில் படித்து முடித்து வெளியே வந்து வேலை செய்யும் வரை முகநூல் வரும் வரை திராவிடம் என்றால் என்ன பெரியார் என்ன சாதித்தார் என எதுவுமே தெரியாமல் தான் வாழ்ந்து வந்தேன். இங்கு பல குடும்பங்களில் அதுதான் சூழல். முகநூலில் கூட பெரிதும் பேசப்படாத விசயமாக இருந்த அவர் இன்று ஒரு எழுச்சிமிக்க உருவமாக உயர்ந்து நிற்கிறார். சிம்பு பெரியார் குத்து என்று ஒரு ஆல்பம் வெளியிடுகிறார் படங்களில் அவரின் புகைப்படமும் புத்தகங்களும் காட்சிகளை அலங்கரிக்கின்றன. இளைஞர்கள் இளைஞிகளின் வாட்சப் முகநூல் பக்கங்களில் மிளிர்ந்து கொண்டிருக்கிறார். என்ன காரணம் இப்போது எப்படி அவர் இவ்வளவு தீவிரமாக மக்களால் எடுத்து செல்லப்படுகிறார் என்று பார்த்தீர்களேயானால், வேறொன்றும் இல்லை நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல தான். இதுவரை நாம் சரியாக இருக்கிறோமோ இல்லையோ பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற ஒரு எண்ணத்திலேயே இருந்து வந்தோம். ஆனால் கடந்த தேர்தலில் வந்த பாஜகவின் ஆட்சியால் நம் மக்கள் மனத்தில் இயல்பான பயம் வந்து விட்டது. அதிகாரம் கிடைக்கும் வரை அமாவாசையாக இருந்த இந்துத்துவ வெறியர்கள் அதிகாரம் கிடைத்தபின் காலிகுலாவாக மாறி இப்போது செய்து கொண்டிருக்கும் கொடூரங்கள் மிகவும் அதிகம். கருத்துரிமை இன்றி அவர்களை விமர்சித்ததற்காக கொல்லப்படுவதும் பிடித்த உணவை உண்டதற்காக கொல்லப்படுவதும் பிடித்த நபரை விரும்பியதற்கும் விரும்புவதற்கும் தாக்கப்படுவதும் காதலிப்பது  தவறென்று போதிப்பதும் வளர்ச்சி என்ற முகமூடியில் அவர்கள் நடத்தி வரும் அவலங்களும் போன்று மனிதம் மறுத்து மதம் போற்றும் அவர்களின் செயல் உண்மையில் மக்களின் மத்தியில் பீதியையே ஏற்படுத்தியிருக்கிறது. அடிபட்ட பிள்ளைகள் அழுதுகொண்டே அம்மாவிடம் ஓடி வருவதை போல இப்போது எல்லாரும் பெரியாரிடமும் திராவிடத்திடமும் ஓடி வருகின்றனர். அன்று இந்துத்துவத்தை ஓட ஓட விரட்டிய அவரின் கைத்தடியே இன்றும் எல்லாருக்கும் தேவைப்படுகிறது. இன்றும் அவரின் கைகளில் இருக்கும் கதகதப்பு பாதுகாப்பு உணர்வு அனைவருக்கும் தேவைப்படுகிறது. திராவிடம் என்பது ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு. பார்ப்பனனுக்கு சத்ரியன் தலித். சத்ரியனுக்கு வைசியன் தலித். வைசியனுக்கு சூத்திரன் தலித். சூத்திரனுக்கு பஞ்சமன் தலித். பஞ்சமர்களுக்குள்ளேயே இப்போது உயர்ந்த சாதி பெருமை தலைகாட்ட ஆரம்பித்து அடுத்தகட்ட மக்களை இழிவுபடுத்தும் நிலை உருவாகியுள்ளது. அதை தாண்டி வந்தால் ஆணுக்கு பெண் தலித். பெண்ணுக்கு திருநங்கைகள் தலித். திருநங்கைகளுக்கு உடல் ஊனமுற்றவர்கள் தலித்.   இந்த ஆதிக்கம் என்பது ஓரிடத்தில் தொடங்கி அங்கேயே முடிவதல்ல. எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது. திராவிடம் என்பது ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு மட்டுமே. எங்கெல்லாம் ஆதிக்கம் இருக்கிறதோ அது எந்த விதத்தில் இருந்தாலும் அங்கே திராவிடத்தின் தேவை இருந்தே தான் தீரும். இப்போது பாசிச சக்திகளும் இந்துத்துவ வெறியர்களும் சாதி வெறியர்களும் கைகோர்த்து வரும் வேளையில் திராவிடத்தின் தேவை அதிகமாகவே தேவைப்படுகிறது. திராவிடத்தின் பலனாக நாம் பெற்ற அடைந்த ஒவ்வொன்றையும் இந்த ஐந்து வருட அடிமை ஆட்சியில் இழந்து கொண்டே தான் வருகிறோம் பெரும்பாலும் இழந்து விட்ட நிலையில் இப்போதாவது நாம் பார்த்து மறுசீரமைப்பு செய்ய வேண்டிய சூழலில் இருக்கின்றோம். இப்போதும் அது எதுவுமின்றி மீண்டும் மீண்டும் ஏமாந்து போவீர்களேயானால் முட்டாளாக ஆவது மட்டுமின்றி எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரும் தீங்கிழைத்தவர்களாகவும் ஆவோம். இன்று நாம் பல ஆண்டுகளாக போராடி பெற்ற சுதந்திரம் உரிமைகள் அனைத்தையும் இழந்து கொண்டே தான் வருகிறோம். மருத்துவம் படிப்பதற்கு சமஸ்கிருதம் முக்கியம் என்று சம்பந்தமில்லாத ஒன்றை வைத்து நமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு நீதிக்கட்சி அதனை நீக்கியது. அதன்பின் நுழைவுத்தேர்வு என்றும் நேர்காணல் என்றும் நம்மவர்களை புறக்கணிக்கும் வேலை தொடர்ந்து நடந்து கொண்டே தான் வந்தது. எல்லாவற்றையும் நீக்கி 2006 இல் கலைஞர் நுழைவுத்தேர்வையும் நீக்கினார். அதன்பின்னர் இப்போது நீட் என்ற பெயரில் திரும்பவும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் அடித்தட்டு மாணவர்களுக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பின்றி மறுக்கும் நிலையே முற்றிலும் நடந்து வருகிறது. அனிதாவையும் இழந்தோம் வருடாவருடம் இளம் பிஞ்சுகளை இழந்து கொண்டே தான் இருக்கிறோம். போக்குவரத்து துறை முழுக்க முழுக்க நஷ்டத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது. அலுவலர்களுக்கு சரிவர ஊதியம் தருவதில்லை என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் போராட்டம் நடத்த கூட உரிமை மறுக்கப்பட்டு வேலையில் இருந்து துரத்தப்பட்டனர். நெடுஞ்சாலை திட்டத்தில் ஊழல் சத்துணவு திட்டத்தில் ஊழல் என அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை எங்கெங்கு காணினும் ஊழலே மலிந்து கிடக்கிறது. ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு கொண்டு வந்திருக்கிறார்கள். நீட் வரை ஏன் விட்டு வைக்க வேண்டும். முளையிலேயே கிள்ளி விடுவோம் என்று. புதிய கல்வி கொள்கை என்பது முழுக்க முழுக்க பிராந்திய மொழிகளின் மீதும் தனித்தனி இனக்குழுக்களின் கலாச்சாரம் பண்பாட்டின் மீதும் நேரடியாக தொடுக்கப்பட்ட போர். இவ்வளவையும் தாண்டி இந்தியை கட்டாயமாக்க இன்றும் முயன்று கொண்டு தான் இருக்கிறார்கள்.. 1930 லேயே இந்தியை அதன் திணிப்பை அதன் பின்விளைவுகளை முன்னரே யூகித்து அதனை எதிர்த்தவர்கள் தான் தமிழர்கள். அதில் அந்த போராட்டத்தில் பெரியாரின் போர்ப்படை தளபதியாக விளங்கியவர் தான் அறிஞர் அண்ணா. அவர் நமக்களித்தது தான் மாநில சுயாட்சி என்பது. அவர்தாம் நாடு முழுவதும் மும்மொழி கொள்கை இருக்கும் போது இங்கு மட்டும் இருமொழி கொள்கையை கொண்டு வந்து சிங்கமென சட்டமன்றத்தில் கர்ஜித்தவர். இன்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பை எதிர்க்கும் எவரும் எடுத்து பார்த்து கொள்ள வேண்டிய குறிப்பு அறிஞர் அண்ணாவின் பேச்சுகளும் எழுத்துகளும் தான். அரை நூற்றாண்டுக்கு முன்னர் அவர் பேசியவை எழுதியவையே இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அவர் தோற்றுவித்த திமுக எனும் கட்சி மட்டுமே இன்று இந்தியா முழுவதும் பாஜக என்னும் பாசிக கட்சியை எதிர்த்து நிற்கும் வலிமை கொண்ட ஒரே கட்சியாக நிமிர்ந்து நிற்கிறது. காஷ்மீர் பிரச்சினையின் போது சென்று போராட்டம் நடத்தியது இன்று இந்தி திணிப்பு கொண்டு வர முயலும் போது இந்தி பேசாத மாநிலங்களுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று அறிக்கை வெளியிடும் வரை இன்று இந்த இந்துத்துவ பாசிச சக்தியை முழுமூச்சாக எதிர்த்து வருவது திமுக என்னும் கட்சி மட்டுமே. இன்று வரை அதன் தாரக மந்திரம் அன்று அண்ணா அவர்கள் போதித்த ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பது தான். இன்று நாடு தழுவிய அளவில் திராவிடத்தின் தேவை அதிகரித்துள்ளது. வங்காளத்தில் திராவிடத்தின் குரல் ஒலிக்கிறது. காஷ்மீருக்காக திராவிடம் டெல்லியில் நின்று கர்ஜிக்கிறது. இந்த நாடு முழுக்க முழுக்க ஒற்றைத்துவம் என்ற ஒன்றை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் போது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று அனைத்து மக்களையும் உறவினர்களாக பாவிக்கும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று எல்லா உயிர்களையும் சமமாக வாசிக்கும் தமிழனே எல்லாவற்றையும் எதிர்த்து குரல் கொடுத்து கொண்டிருக்கிறான். திராவிடம் என்ற சமூகநீதி கோட்பாட்டை கையில் ஏந்தி இந்துத்துவத்தை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறான். இந்த போராட்டம் உடனே முடிந்து விட போவதில்லை. இன்னும் பல இன்னல்களையும் அடக்கிமுறைகளையும் தொடர்ந்து சந்திக்க வேண்டியிருக்கும். எல்லா போராட்டங்களிலும் கேடயமாகவும் ஆயுதமாகவும் திராவிடமும் திமுகவும் தான் நிற்கும் என்பது தான் நிதர்சனம். ஈராயிரம் ஆண்டுகால போராட்டம். இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டி தான் இருக்கும். அவர்களின் மொழியிலேயே பதில் சொல்ல வேண்டுமானால் ‘தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும்’ என்று வேண்டுமானால் சொல்லலாம். இல்லையெனில் ரஷ்ய புரட்சி வாசகத்தில் சொன்னால், ‘இந்த போராட்டங்கள் நேற்று ஆரம்பித்தவையும் அல்ல. நாளை முடியப்போகிறதும் அல்ல’. அதனால் இறுதி வரை திராவிடம் எனும் ஆயுதத்தை துணை கொண்டு முன்னேறி சென்று கொண்டே இருப்போம். திராவிடத்தால் வளர்ந்தோம்! திராவிடத்தால் வளர்கிறோம்! திராவிடத்தால் வளர்வோம்.! - அருண்குமார் வீரப்பன்     [WhatsApp Image 2019-08-26 at 1]                 பேரறிஞர் அண்ணாவின் எழுத்து தொகுதிகள் முழுவதும் அச்சாகிறது.   புத்தக முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள: +91 9884544321 (பிரபா அழகர்)  திராவிட வாசிப்பு மின்னிதழை குறித்து உங்கள் கருத்துக்களை/ விமர்சனங்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்: dravidavaasippu@gmail.com   அடுத்தடுத்த இதழ்களை குறித்த தகவல்களை இந்த பேஸ்புக் பக்கத்தில் பெறலாம்:   https://www.facebook.com/DravidaVaasippu2.0/