[]       திமிரழகி   M விக்னேஷ்         திமிரழகி M விக்னேஷ் © ஆசிரியர் | முதல் பதிப்பு: பிப்ரவரி 2019     Designed by [MinEkavi (2)]                   நூல் :  திமிரழகி ஆசிரியர் : .M விக்னேஷ் மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com       உரிமை :Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.       நூல் குறிப்பு   எண்ணற்ற காதல் கதை களங்கள் கடந்து வந்திருக்கும் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் . " திமிரழகி " ஓர் பெண்மையின் மாறுபட்ட பரிணாமம். அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு போன்றவற்றோடு ஒருசேரும் ஒப்பில்லா ஓர் குணம் "திமிர்" ஓர் ஆணின் ரசனைக்கு உயிர் கொடுத்து நண்பனாய், காதலனாய்,காவலனாய் ,கணவனாய் அவன் ரசிக்கும் தன்னவளின் அழகிய பெண்மையின் தொகுப்புகளே ,இந்த " திமிரழகி" . இளம் காதலர்கள் ,காதல் திருமணம் செய்தவர்கள் , வயோதிக காதலர்கள் ,காதல் துணை இழந்தவர்கள் போன்றோருக்கு , தங்களின் காதல் நினைவு கூட்டினை ஒருமுறையாவது என் வரிகள் வருடும் என நம்புகிறேன்.   முன்னுரை     தாயாக ,சேயாக மண்ணில் பிறந்து, பூமியை மேலும் அழகாக்கும் பதுமைகள் . இலக்கணங்களுக்குள் அடைபடா ,பெண்ணழகின் இலக்கணம் வர்ணித்து களைத்தனர் பல கவிஞர்கள்.நிலவோடு வர்ணித்து நிலவும் தேய்ந்தது ,பூவோடு வர்ணித்து வாசமும் தீர்ந்தது .பெண்மையின் அச்சம், மடம் ,நாணம், பயிர்ப்பை அலசியே, ஆண்களின் ஆயுள் அத்தியாயம் முடிகிறது .நெடுநேரம் மனச் சிந்தனை ,என் சிந்தையில் புலப்படுகிறது எக்கவிஞரும் சிந்தித்தில்லா புதுப் பெண்மையின் அரிதார தூரிகை "திமிர்".   “வடித்து முடிக்கிறேன் நான் ரசித்த பெண் பதுமையின் திமிர் அழகை”   " திமிரழகி"   [Image] பெயர் வேண்டுதல்   வெள்ளி கொலுசு ஒலி ஒலிக்க, ரெட்டை வால் ரிப்பன் மினுமினுக்க , வெண் நிலாவில் வார்த்த சிற்பமொன்று , எனை கடந்து போகிறது, மெல்லக் கொன்று . கைதட்டி அழைத்தேன், உன்பெயர் சொல்லி அழைக்க , உன் முறைத்த பார்வைகளோ, என் கேள்விகளுக்கு பதில் உரைக்க , அழகிய பெயரொன்றை ,மனதில் பதிக்கிறேன் . இன்னவள் மறுபெயர், “திமிரென” மெல்லச் சிரிக்கிறேன் ...!     [Image] விலகாத விழிகள்   வகுப்பறை கணித கோட்பாடுகளில் கொள்கையில்லை , இன்னவள் கயல்விழி காணா நாழிகை இல்லை , ஜன்னல் வேப்பமர காற்றோ ஆயின, வெப்பக்காற்றாய் . என்னவள் முறைத்த பார்வையில், என் நெற்றி வியர்வையும் ஓடின எறிதனல் ஊற்றாய் . என் விழி நோக்கி, அணைந்த தனலாய் வினவுகிறாய் ,ஏன் இந்த பார்வை ? உயிர் பிரியும் உடலாய், ஓர்நொடி உறைகிறேன். பதில் தெரியா கேள்வியாய் ,வாய் மூடி கதறுகிறேன் -நான் ...!     [Image] முதலாம் உலகப்போர்   வார்த்தைகள் தேடி கோர்த்து ,நேர்த்தியாய் தொடுத்தேன் மழுப்பல்கள் . திமில் கொண்ட காளையாய் ,நீ திமிறி தொடுத்ததில் விழுந்தது ,வார்த்தை சறுக்கல்கள் . சுயதன்மானம் சூடுபோட்டது ; ரோஷமோ என் கோபத்திற்கு தீனிபோட்டது . மூளுகிறது மீண்டும் ஒரு சிரியா போர் வார்த்தைகள் வலுவாய் கொட்டிமுடிக்கிறேன், ஒரு வார்த்தை போர் . சுயநினைவிற்கு வரும் நொடி, உன் இமையோரம் நீர்த்துளி . குற்றஉணர்வில் கூனிக்குறுகுகிறேன்; ஓர் முதலாம் உலகபோர்க்கு முடிவுரை எழுதுகிறேன்.     [Image] கருணை மனு   வீசிப்போன பெரும் புயலின் பாதிப்புகள் , மாதம் ஆறாகியும் சரியானபாடில்லை . பேசமுயலும் போதெல்லாம், நின் இமைகளில் புயல் சின்னம் . பாய் மர படகாய் ,உன் திமிரலைகளில் தவழ்கிறேன் . மன்னிக்க அனுப்பிய, புறா தூதுகள் யாவும் ஆயின உன் கோபப் பருந்துக்கு உணவுகள் ‘ காத்திருக்கிறேன், நின் கடைக்கண் கருணைக்கு…     [Image] பாவ மன்னிப்பு   மாதங்கள் ,வருடங்களாய் மாற, பேசிய வார்த்தைகள் ஆறா ரணமாய் உன்னுள் வாழ , உன் கைபிடித்து இழுத்து, மன்னிக்க வேண்டுகிறேன் . உன் கண்ணாடிவளையல், பட்டு வழியும் குருதியில், என் தலைகனம் கரைகிறேன். பிடிவாதத்தின் பிறப்பிடமாய் ,அவ்விடம் நகர்கிறாய் .மௌனமாய், உன் திமிரால் என்னை எரிக்கிறாய் சிந்தும் என் கண்ணீரில், உன் விழி தரிசனம் விழுகிறது . அந்நொடி, உன் திமிரின் கயிறுகள் மெல்ல தளர்கிறது.     [Image]   கொஞ்சம்(ல்) பார்வை   இறக்கிவைத்தேனடி, இதய பாரங்கள் , உன் இமை நாடி தேய்ந்தன ,என் இமை பாதங்கள் . காதோரம் தொட்டிலாடும் உன் சின்ன கம்மல் , அத்தொட்டிலை தொட்டு ஆட்டிவிட , ஏங்கும் என் பிஞ்சு விரல்கள் வால் நட்சத்திரமாய் நின் கருவிழி, எனைக்கண்டு மறைகிறது இனம்புரியா நிகழ்வோடு, ஓர் பூவிதழ் மலர்கிறது . வெளிக்காட்டா ஓர் புன்சிரிப்பை, திமிரெனும் ஒற்றை புள்ளியில் அடைபடுகிறது .     [Image]   முதல் உரையாடல்   இஷ்ட தெய்வங்கள் எல்லாம் வேண்டிக்கொண்டு ,மூன்றடி முன்சென்று , பெருமூச்சில் தொடங்குகிறேன் ,முதல் உரையாடல் . குல சாமியை கும்பிட்ட தைரியம், மண் பார்த்து வார்த்தை விழுகிறது . உன் கண்பார்த்து பேச, புது தெய்வத் தேடல் தொடங்குகிறது . நின் முகம் பார்க்காமல், முழு உரையாடல் முடிக்கிறேன் . தொடங்குகிறது ஒரு நிசப்தம் -திமிர்பார்வையில் கரிச்சுக் கொட்டும் வார்த்தையில் முடிகிறது உரையாடல் சகாப்தம்     [Image] தோழி   நாட்கள் நகர்த்தி , தயக்கங்கள் தளர்த்தி , உன்னோடு ஒன்றாகிறேன் . இன்னவள் என்னவளாக்க, நடைபோடுகிறேன் . அடிக்கடி நான் பேசும் நய்யாண்டி பேச்சுக்கள், நீ சிரித்து நான் ரசிக்கும் பொழுதுபோக்குகள் . மெல்ல காதல் அரும்புகள் முளைவிடுகிறது. நின் திமிரில் யாவும் கருகி எரிகிறது.     [Image]   ஆடு புலி ஆட்டம்   காதலோடு என் நெருக்கங்கள் , புதினமாய் உன் தயக்கங்கள் , புதிதாய் புதிர்போடும் புதுபொழுதுகள் . இருவருக்குள் பிறக்கிறது புரிதலோடு புதுவிடியல்கள் . அனைத்தையும் பளிச்சென அறிந்தும் ,காண்கிறாய் வேடிக்கை வெளிப்படுத்தும் போதெல்லாம் ,திசைதிருப்பும் பேச்சுகளே வாடிக்கை சிந்தித்து நகர்த்தும் காய்களில் ,தொடங்குகிறேன் காதல் ஆட்டம். தொடங்குகிறாய் நீயும் ,ஆடுபுலியாட்டம் - ஆட்டுவிக்கும் புலியாய் நீ நின் திமிர்.     [Image] கவன ஈர்ப்பு தீர்மானம் நிலவு சுற்றும் பூமியாய், உனை சுற்றி என் இரவுகள் தேர்வுக்காக ஒருநாளும் சிந்தித்தில்லா, மூளைக்குள் நீள்கிறது ஓர்ச் சிந்தனை . வாய்ப்பாடு ஏறா என் மண்டைக்குள் ,மனப்பாடம் ஆகிறது உனக்குப் பிடித்ததும், பிடிக்காததும் . போர்கொண்டு உனை அடைவதா ?அல்ல மனம் வென்று உன்னை அடைவதா ?-முடிவில் , அடிக்கல் இட்டுத் தொடங்குகிறேன் உன் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் . அடிபணிவதே என் ஆயுதம் , உன் மனம் நோக்கியே தொடங்குகிறது ஒரு பயணம். முடிவா ,தொடக்கமா ?’முடிவில்லா வினாவாய் நான் ..’   [Image]   சோதனை முயற்சி   மனம் வென்று ,மாலை சூட நாடுகிறேன் messenger கள் . இரவு பகல் பாராது மேற்கொள்கிறேன் இடைவிடா உரையாடல்கள் , கடலளவு கடலை போட்டும் ,ஏனோ கரையவில்லை உன் மனம். கால் அளவு கண்ணீர் ஓடினால், ஒருவேளை கரையுமோ இப்பெண் மனம் தன்மானம் தரைமட்டமாகி, தலைகனம் தாழ்வாய் நகர்கிறது. என் பொறுமையை சோதிக்கும் பேச்சுகளே, தினம் வாடிக்கையானது . புலம்பித் தீர்க்கிறேன் புலப்படுகிறது ,கல்லுக்குள்ளும் ஈரம் உண்டென்று..     [Image]   இறுதி சுற்று   மனம் தளராமல் தொடுத்த கணைகள், யாவும் பயனற்றது . பொறுமை தாளாது மனம் தொடுத்து , மூளை பயணிக்கிறது.காரணம் - காதல் அளவற்றது தேடி பிடித்து வைக்கிறேன் ,இமையோடு இமை நெருக்கங்கள் வைத்த இமை விலகும் முன் ,இதழோடு தொடரும் நெருக்கங்கள் . காதல் உறவை பகிரும் முன் ,உறவாடிடும் எச்சில் உறவுகள் . சிவக்கிறது முதலில் இதழ் ,இரண்டாவது என் கன்னம் . ஒருசேர விட்டு செல்கிறாய் ,கன்னம் பதிந்த விரலையும்,காதலையும் ...     [Image] முடிவின் தொடக்கம்   மௌனமாய் கரையும் மூன்று மண்டலங்கள் - முகத்தின் மேல் எறியப்பட்டது, இன்றோடு எழுதிய மூவாயிரமாவது மன்னிப்பு கடிதங்கள் . இறுதியாய் சொல்லிவிட்டு கிளம்புகிறேன் , உன்னோடு சேர்ந்து ,உன் திமிருக்கும் முடிவுரை தருகிறேன் -நாட்கள் நகர, திமிராய் திரிந்த உன்மனதில் தடுமாற்றம் . உன் திமிரை கடத்தி ,உந்தன் பெண்மை ஆடும் ஆட்டம் . கேள்வியும் நீ ,பதிலும் நீ, என்னைப்போலவே பரிதாபமாய் உன் முன் முகக்கண்ணாடி.     [Image] காந்த எதிர்ப்பு   தாரகை பார்த்து நடந்த நாட்கள் நகர்கிறது, தரை பார்த்து நடக்கும் மாற்றங்கள் நிகழ்கிறது. ஒரு ஜான் நீ முன்வர, ஒருமுளம் நகர்கிறேன் . உயிர் இல்லா உடலில் ,உயிரியல் காந்த எதிர்ப்பு வினை செயலாக்குகிறேன். தவம் கிடந்து கிடைக்காத பார்வை ,இன்று இலவசமாய் . வலிய பேச்சும் ,திமிரில்லா உந்தன் பாவனையும் புதுவிதமாய். எதிர்த்து பேசும் உன் நாவிலே, இன்று எதார்த்த பேச்சுக்கள் . எதிர்ப்புகள் ஏதும் கிளம்பும் முன், விடைபெறுகிறேன் . “ஆகிறாள் என்னவள் ... ஏன் இவள்?”     [Image] காதல் விபத்து   காதல் ,தவறி விழுந்து எழுந்தேன். ஏனோ ? கால் தவறி ,மண்ணில் வீழ்ந்தேன் நானோ. காதலை விட வலிகுறைவுதான் ,இருந்தும் . காண்கிறேன் திமிர்பார்வையில் ஓரத்துளிகள். கண் தூசி போலும் ,எண்ணி கிளம்புகிறேன் . கனத்த குரல் ஓசை ஒன்றினை ,மெதுவாய் மெல்ல உணர்கிறேன் . காணாத காட்சி ஒன்று ,மெல்ல புரிகிறது .இது கா(த)ல் விபத்தென்று.     [Image] மனமோடு உரையாடல்   சண்டைகள் துறந்து ,சங்கடங்கள் மறந்து தொடங்குகிறோம் மனமோடு உரையாடல். பெண்மையின் நளினம் ,பட்டுப்பூச்சி சிறகாய் இதழ் முறுவல் மண்ணோடு மாக்கோலம், மனம் விட்டு பேசியதும் தொடங்குகிறது கார்காலம் . கொட்டும் மழையில் வெட்டும் மின்னல்கள் , போர்வென்ற கஜினியாய், என் உள்ளுக்குள் பெருமிதம் ! இருந்தும் திமிரில்லா பெண்ணவள் ,ஆகிறாள் முழுப்பெறா என்னவள்.     [Image] புரிதல்   என் மறுமொழியோடு, தொடங்குகிறது உரையாடல் . காதல் அத்தியாயம் எழுதும் முன், வகுக்கிறேன் கோட்பாடுகள். பிரிதல் இல்லா உறவு வேண்டும் ,நல் புரிதலாய் நீ வேண்டும் . மனம் பிரியா ,ஊடல் வேண்டும் ஊடல் முடிவில் கூடல் வேண்டும் . கவிதை பொய்களில், உனை நனைக்க வேண்டும் ;நடமாடும் ஹைக்கூவாய் உனை ரசிக்கவேண்டும் . தவறுகளில் ,செல்ல அடிகள் வேண்டும் ;அடிகளின் முடிவில் இதமாய் அணைப்புகள் வேண்டும் . நாளும் திமிராய் நீ இருந்தல் வேண்டும் .நின் திமிரில் பெண்மை இலக்கணம் நானும் படைத்தல் வேண்டும்.   [Image] தோழனே காதலனே   பேசிய பேச்சுகள் முடியும் முன், விடைபெற்றது கார்மேகம் மழை, குளிர் ,வெளி மட்டுமல்ல இருவர் உள்ளங்களிலும் காதலோடு பார்ப்பதா ? கர்வத்தோடு உனை பார்ப்பதா ? நிலைதடுமாறி நிற்கிறேன் .இப்படியும் ஒரு ஆண்மையா ?கண்டுவியக்கிறேன் . தோளோடு தோள் உரச இஷ்டம் இல்லை ;நல்ல தோழனாய், உன்னை புரிய ஏதும் கஷ்டம் இல்லை தற்காலிக விடை கொடுக்கிறேன் என்னுள் காதலுக்கு, இழப்பை ஈடு செய்ய காத்திருக்கிறேன் உனக்கு - எதிர்கால கணவனுக்கு ...     [Image]புது தொடக்கம்   நாட்கள் யாவும் அழகாய், நின் கடைக்கண் பார்வையோ கனிவாய் , அள்ளி அணைத்து , காதல் காட்டுவாய் என்றிருந்தேன் . அடித்து நொறுக்கும், திமிரினால் வீழ்ந்தேன் . அன்பு கலந்த அடாவடி செயல்கள் காதலை விட ,நான் அதிகம் மெய் சிலிர்க்கும் நின் செயல்கள் ஊதும், புகைபஞ்சுக்கு விழுகிறது தர்ம அடி . தட்டிக்கேட்க, ஒருத்தி இருக்காள் என்பதை உணர்த்தும் இடி..         [Image] கவிஞன்   உன் காதல் பெற்றெடுத்த பிள்ளையாய், என்னுள் ஓர் கவிஞன் வாண்டு சேட்டைகளும் ,திமிர் நடைகளும் திகட்டாத ரசனைகள் எழுதிக்காட்டுகிறேன் முதல் கவிதை, எல்லைக்குள் அடைபடா புதுக்கவிதை . படித்துப் பார்த்ததும், இதழோரம் சிரிப்புகள் காதல் வந்தால் தான் கவிதை வருமோ ? வெளிப்படும் திமிர் உயிர் இலக்கணம் காகிதம் மடித்தெடுத்து, நடைபோடும் நதியே . கவிதை சங்கமிக்கிறது , நின் தோள் தொங்கும் பையினில் ...     [Image] விடுமுறை   புதிதாய் ஓர் போதை, பழக்கம் பெயர் காதல் வாரம் ஆறு நாட்கள், வேகம் தெரியா கடிகாரம் அவள் இல்லா நாளிலே, நொடிமுள்ளும் ஆயின யுகமுள். வீடு நிறக்க உறவுகள் இருந்தும், தொற்றிக்கொள்ளும் தனிமைகள் கட்டிலும் ,தலையணையும் ஆகும் நினைவுமண்டபம் தட்டு சர்க்கரைப்பொங்கல் கூட, கசப்பாய் உவர்ப்பாய் மாறும் மனம் கொள்ளும் போதை இதுவாகும் ,விடியும் காலை அவள் பார்வையே அதற்கு மருந்தாகும் .     [Image] இயல்பு நிலை   மறுநாள் மாலையாய் கோர்க்கிறேன், நீ இல்லா ஓர் நாளை . மண்டையில் தட்டிவிட்டு மணிரத்தினம் படம் என்கிறாய் காதலோடு அலையாதே என்ற அறிவுரைகள் கனவோடு எழுந்திடு, என்ற நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொண்டே எழுகிறாய் . கைபிடித்து இழுக்கும் நொடி ,பழக்கதோஷம் போலும் விழுகிறது , மீண்டுமொரு விரல் அச்சு படிவம் -இம்முறை கிடைக்கிறது, நீர் ஓத்திடங்கள் வடிவம் இதழ் .   [Image] மனப்பேச்சு   இதழ் ஒத்திடங்கள் முடித்தபின், நகர்கிறேன் உன்னிடம் நேற்று நான் பட்ட வேதனையை, என் மனம் மட்டுமே அறியும் விடாத சிரிப்பலைகள், காதல் போதையில் நானும் அளவிட முடியா காதல் அடக்கி ஆள்கிறேன் நாளும் ஆள பிறந்த ஆண்மகனாய், உன்னை ஆளாக்க வாய் மூடுகிறேன் இன்று தருவதோ சிற்றின்பம், என்று நிறைவாகும் பேரின்பம் ? காலமே, கருணை காட்டு .என் காதலே ,வாழ்க்கையை அழகாக்கு   [Image]   உடமையாக்கம்   அந்திமாலை, கல்லூரி முடியும் வேளை- நீ வரும்வரை எதேச்சையாய் அழகு பெண்ணோடு, அரைமணிநேர அரட்டைகள் ; கண்டும் காணாமல் வருகிறாய், நடையில் ஓர் திமிர் ; நீ வந்ததை அறிவிக்கும் உன் வாசனை எச்சில் விழுங்கி, பேச்சுக்கள் வர காலதாமதம் மேல்நோக்கிய விழி காண்கிறேன்; முறைத்த பார்வைக்கே சரணடைகிறேன் . நிலம் சிந்தும் துளி கண்ணீர் உனக்கு; சில துளி சிந்தும் செந்நீர் எனக்கு.   [Image] நான்காம் பரிணாமம்   முடிகிறது 48 மணிநேரம் ,சிறிதளவும் குறையா கோபம் விடாது அழைத்த அலைபேசி அழைப்புகள் ஓய்ந்தே போனது ஒருமணி நேர இடைவெளியில் ,உன்னிடம் ஒரு அழைப்பு வெடிக்கும் வெடிகுண்டு wire போல மெல்ல அழுத்தி ,காதில் வைக்கிறேன் "இன்னும் கோபம் உள்ளது" என்ற வார்த்தையோடு துண்டிக்கப்படும் இணைப்பைக் காண்கிறேன். அழுவதா...?அல்ல சிரிப்பதா...? அழகிய ராட்சசியாய் நீ காதலின் நான்காம் பரிணாமம் காட்டிச் செல்கிறது திமிர் ...   [Image] ரசிகன்   தேதிகளில், குறிப்பு வைக்க வேண்டிய, முக்கிய நாட்களில் ஒன்று . எனக்காக ,நீ பிறப்பெடுத்ததாய் சொல்லப்படும் நாள் இன்று நாட்கள் முழுக்கக் கழிந்தும், வாழ்த்துக்களோடு நின்றுபோனது -வாடிய முகத்தோடு நீ அந்தி மாலை, சராசரி காதலனாய் இல்லா உன் திமிரின் ரசிகனாய் ,ஓர் கடிதத்தோடு நான் . காரணமின்றி கண்களில் நீர் கரிசல் ;காதலோடு பற்றிக்கொள்ளும் இறுக்கம் அணைப்புகளில் நிகழும் இரு இதய இணைப்புகள் -இறுதியில் நீட்டுகிறேன் . வளர்ந்தாலும் ,குழந்தையாய் வாழும் உனக்கு பரிசாகும் "பால் பாட்டில் "   [Image]   எதிர்கால கேள்விகள்   விதையாய், செடியாய், மரமாய் வளர்ந்து நின்றது காதல் -அதோடு விரைவாய் முடியும் தருவாயில் ,நம் கல்லூரி இறுதிநாட்கள் மனதோடு அசைபோடும் ,எதிர்கால கேள்விகள் பத்தோடு பதினொன்றாய், கல்லூரி காதலென முடியுமோ ? பக்குவமில்லா வயதின் காதலென எண்ணி, பட்டென்று முடியுமோ ? சாதி மத பேதம் பார்த்து, அடிதடியாய் முடியுமோ ? அல்ல, என்னுயிர் என்னை விட்டு, உன்பாதத்தில் முடியுமோ ?விடியாத வினாக்கள் ..?   [Image] மணப்பொருத்தம்   முகம் பார்த்து கதை சொல்ல ஆரம்பிக்கிறாய் என் எதிர்கால கேள்விக்கும் விடைதருகிறாய் சினிமா பட பாணியை விட்டொழி, நிகழ்கால எதிர்மறையை மனதில் அழி . பிரச்சனைகள் வந்தாலும் நடைபோடுவோம்; எதிர்காலம் வாழ்த்த நடைபழகுவோம் ; பத்தோடு, பதினொன்றாய் பிரியும் காதல் அல்ல -இரு உடல் ஓர் உயிரின் சகாப்தம், என்று அறிவாய் நீயும் மெல்ல…   [Image] சிந்தனையும் செயலும்   நெடுநேரம் ஓடிமுடிகிறது ,என்னவளின் எதிர்கால கேள்விகள் சட்டென்று போட்டு உடைக்கிறேன், வீட்டினுள் என் காதல் கதைகள் பக்குவப்பட்ட பெற்றோர், பக்குவமாய் எடுத்துரைக்க கெட்டிமேள தவலின், ஒரு கொட்டு ஓசை உணர முடிகிறது நிதர்சன உண்மையாய் புலப்படுகிறது ,காதலை தவிர பெரிதாக எதுவும் இல்லை. அவள் காதலை தவிர்த்து, சேர்த்த சொத்தும் ஏதுமில்லை இன்று விளங்குகிறது ,அவள் காட்டாத முழு காதல் அர்த்தங்கள்   [Image] அவசரம்   உன் சிந்தனை முற்றி, தொடுகிறாய் குழப்பத்தின் எல்லை பக்குவமாய் போட்டுடைக்கிறாய் ,நம் காதலின் எல்லை இதுவரை எனக்கு நீ தந்த அடிகள் யாவும், ஒருசேர உனக்கு ; வலிதாங்காது நீ அளுவதுதானோ, ஆண்டவன் கணக்கு எல்லா காதலர்களின் வாழ்க்கைபோல, நம் வாழ்க்கை ஆகின ஒருகனம் இதுவே, நீ செய்த வாழ்க்கையின் மிக பெரிய முட்டாள் தனம் அடிக்கிறது அவசர அழைப்பு மணி ,என்னாகும் ?நம் காதல் இனி ...????   [Image] அவசர கால பிரகடனம் என் பேரார்வங்கள் புதைத்து, விடியற்காலையிலே நிற்கிறேன் ஐடி கம்பெனி வாசலில். நடந்து முடிகிறது மாலை வரை, பல ரவுண்டு கள் இறுதியில், கையில் பத்தாயிரம் சம்பளத்தில் ஒரு வேலை . உன் வீட்டில் பேச அடிப்படையாய் இதுவாவது தேவை கல்லூரியில் இன்றோடு உன் கால் பட்டு ,நாட்கள் ஐந்தாகிறது தேடிப் பிடித்து நுழைகிறேன் உன் வீட்டுக்குள் இனி நடப்பது யாவையும், எழுதி வைக்கிறேன் என் இதய கூட்டுக்குள்.   [Image] சோதனை வீட்டுக்கு வெளியில் செருப்போடு, தன்மானத்தையும் கழட்டிவிட்டேன் . நான் ரசித்த கயல் விழிப்பார்வைக்கு, மானத்தையும் விற்றுவிட்டேன்-தொடங்குகிறது சாதியோடு கேள்விக்கணைகள் பாரம்பரியம் வரை, நீண்டு குரல்வளை நெருக்குகிறது . எனை அடக்கி ஆள உன் அப்பன் கொண்ட ஆயுதம் அந்தஸ்து சூடுபோட்ட புண்ணின் மேல், மிளகாய் துகள்கள் அனைத்தையும் சகிக்கிறேன்; சாகாவரம் பெற நம் காதலுக்கு. உதட்டில் மாறா சிரிப்போடு, தொடங்குகிறேன் என் பதில்களை - நான் .   [Image] காதல் தண்டனைகள்   கண்ணிய பேச்சோடு எடுத்துவைக்கிறேன் ,என்னவளின் அருமை பெருமைகள் சமரசம் மேற்கொள்ள, தொடர்கிறேன் பலபேச்சுகள் அறவே தவிர்க்கிறேன், மரியாதை குறைவான பேச்சுக்கள் அந்தஸ்தில்லா அகதி நான், சாதி இல்லா சாமானியன் நான் அன்பில் வரைந்த ஓவியம் ஒன்று, எடைபோடுகிறது பணம் இன்று இறுதியில் மானம் மறந்து விழுகிறது கண்ணீர்த்துளி இதை தவிர இல்லை வழி - காதல் தண்டனைகள்   [Image] தாயை போலப்பிள்ளை விழும் கண்ணீர்த்துளிகளில் கரைகிறது ,ஓர் மனம் அதுவே தாயின் குணம் தாயை போலப்பிள்ளை போலும், வீராப்புகள் உன் திமிர் போலவே தகர்கிறது அவகாசங்கள் வேண்டி, தாயுள்ளம் எனை திருப்பி அனுப்ப தொடங்குகிறது உன் வீட்டினுள், ஒரு இரண்டாம் உலகப்போர். இறுதியில் வெற்றி நம் காதலுக்கு ; வீடு சேரும் முன் அழைக்கிறது அலைபேசி, மீண்டும் ஒரு வெடிகுண்டு பயம் ; காதில் வைக்கிறேன்; மெல்லிய குரலில் “வீட்டில் வந்து பேசுங்க” என்ற ஒற்றை வரியோடு முடிகிறது உன்னிடம் மரியாதை பேச்சுக்கள், முடிவல்ல இது தொடக்கமே ...   [Image]   நிச்சையம் நிச்சயம்   கல்லூரி அத்தியாயம் முடிய, குடும்ப அத்தியாயம் தொடங்க -நிச்சயம் ஆகிறது நிச்சையம் ஜோசியரோ கட்டம் போட்டு, கிரகங்களோ திட்டம் போட்டு, விழுகிறது ஒரு ஆண்டு இடைவேளை . இனம்புரியா இடைவெளி இருவருக்குள், நேற்றுவரை காதலன், நாளை பொழுது கணவன் மனம் ஏற மறுக்கிறது ஒரு நிசப்தம், இருவருக்குள் பிறக்கிறது ஓரப் பார்வையிலே உன் வினா ??உணர்கிறேன். உன் பார்வைக்கு பதில் எழுத தயாராகுகின்றேன்.   [Image] தவ பயன் இனம் புரியா, இறுக்கங்கள் நம்முள் . ஏதுமில்லா மாற்றங்கள் ,நம் காதலுள் ஏனடி வீண் தயக்கம்? இவ்விதழும் பார்வையும் எனக்கு மட்டும். காதல் கட்டுப்பாடுகள் தகர்த்திடு , இனியாவது முழு காதலோடு அணைத்திடு , இச்ஜென்மம் மோச்சம் கிட்டட்டும் நின் திமிரால் ,இவ்வாழ்வு வரமாகட்டும் [Image]   அளவிலா காதல்   தயக்கங்கள் யாவும் தகர்க்கிறாய், காதலின் அளவை வெறுக்கிறாய் .. காதலிலாவது விழுந்தது ஒரு சில அடிகள் health insurance செய்யும் அளவு இனி விழுமோ? அடிகள் . புதிதாய் தோன்றுகிறது, “மாமா” என்ற வாக்கியம். எந்த படத்தின் வசனமோ ?என்று கேட்கும் பொழுது வீடுவரை வந்து அடித்து செல்வது தண்ட செலவு நாட்களும் நகர ,நெருக்கங்கள் தொடர்கிறது; முடிவிலா தொடர்கதை ஆனது.   [Image] காதல் கல்யாணம் நின் அணைப்பில், வருடமோ, மாதமாய் மாற அரங்கேறுகிறது கல்யாண நிகழ்வுகள் . வெள்ளை தோலுக்கு, வெண்ணிலா பட்டும் வழிக்காத தாடிக்கு, விழுகிறது ஒரு கொட்டு . தேர்வாகிறது, இருவிரல் ஓர் அமைப்பு மோதிரம் வழிகிறது ,ஆனந்த கண்ணீர் .. என்னை அறியாமல் ஒரு சிரிப்பு. வெளிப்படுகிறது திமிரின் ஆட்டம் ..வேண்டுகிறேன் மீண்டும் கிடைக்குமா இதழ் ஒத்திடங்கள் ??     [Image] முதல் முத்தம்   விடிந்தால் கிடைக்கும் பதவி உயர்வு, அதற்கு முன் சந்திக்கிறோம் காதலர்களாய், கொட்டும் பனி இரவு காதலர்களாய் நாம் இருக்கும் ,கடைசி சிலமணிநேரங்கள் . ஏனோ இனம்புரியா நெருக்கம் மனதிலும் தடுமாற்றம் விழிகொஞ்சும், இதழ் கொஞ்சும், காதலோடு முதல் இதழ் முத்தம் பத்து வருடத்துக்குப் பின் சென்ற, ஞாபகம் வந்து மறைகிறது. முழு மூச்சாய் காதல் பரிமாற்றம், மேலும் இதழோடு தொடங்குகிறது ...   [Image] காதல் மனைவி அக்னியும் ,உன் திமிரின் சாட்சியாய் கட்டும் மஞ்சள் கயிற் விழும் அர்ச்சனையில், கண்கொட்டாது காண்கிறேன் ;உன் விழியில் ஓருயிர் .. காதலின் வெற்றிவாக்குகளில் கிடைத்த வெற்றியாய், உன் நெற்றி திலகம் பலமுறை திமிரால் ,காலில் விழவைத்த பழக்கம் மெட்டியிடும்போது, இமைகளோ வான் நோக்கும் . பரிமாறப்படும் விரல் மோதிரங்கள், இனிதே நிறைவேறிடும் காதல் கல்யாணங்கள் அணைந்த இருட்டில் தொடங்குகிறது, புது பொருள் தேடல் காதலின் சாட்சியாய் விதைக்கப்படுகிறது, புது விதைகள்.   [Image]புதுப்பொழுதுகள்   இடுப்பில் சிக்குண்ட சேலையும் , காதோரம் உன் அழகேற்றும் கூந்தலும் , ஒருநாளில் எத்தனை மாற்றங்கள், ரசிக்கும் முன் விழும் திட்டுகள் . அடி விழும் முன், பதுங்குகிறேன் குளியலறையில் ஆள் மயக்கும் உணவுகளோ ,சமையல் அறையில் . இனி வாழும் வாழ்க்கை அர்த்தமாகும் .   [Image]அடுப்படி அடிதடி   உப்பில்லா பண்டம் குப்பையிலே ,ருசியில்லா உந்தன் சமையலோ என் தட்டினிலே. பசியோடு வந்தவனுக்கு, புத்து கண் முட்டையும் பாலும் மிச்சம் காதலில் ஜெயிச்சவனின் சாபக்கேடு, தோசையை கிண்டல் செய்ய ,தோசை கரண்டி சூடாய் பதில் பேசுகிறது . என்றுமே மாறாத ஒன்றாய் , உன் காதலும் திமிரும் ரசிப்பதா?, இல்லை தலைவிதியென உன் சமையலை ருசிப்பதா? குழம்புகிறேன் விடை தருகிறாய் இதழ் முத்தங்களில்.   [Image] காதல் சாட்சி   வீடெங்கிலும் நிசப்தம், புரியாத புதிராய் உன் தயக்கம் . தயக்கத்தினுள் ஒளிந்திருக்கும் வெட்கம் உன் முதல் பிறந்தநாள் பரிசாய் ,நான் தந்த பால் பாட்டில் மேஜைமேல் . தட்டுப்படுகிறது, உன் திமிர்பார்வையின் அர்த்தம். உதிரன் இல்லா என் உதிரத்தில், ஓர் உயிர் . இரு கன்னம் பற்றி ,கைகள் கோர்த்து ,மடிசாய்கிறேன் . விழியெங்கிலும் நீர்த்துளிகள் நம் காதல் சாட்சியம் ஓர் உயிர் இளந்தளிர்.   [Image] முதல் பிரிவு   மகிழ்ச்சியின் மாதம் எட்டு, வரப்போகிறது ஒரு சில மாதங்களில் நம் காதல் சொத்து , கண்டு உனை காதலித்த நாள் முதல், பிரிவென்பது கண்டதல்ல . வளைகாப்பு முடித்த கையோடு காண்கிறேன், அப்பிரிவை நானும் என்ன சொல்ல ?? பள்ளியில் விட்டுச் செல்லும் தாயாய் ,எனைவிட்டுச் செல்கிறாய் பிரிவின் கோர வலி ,வேண்டுகிறேன் . இரண்டு திங்களே ,விரைவாய் நீ கரைந்திட..   [Image] மறு பிறப்பு   இறுகப் பிடித்த கைகளோடு, நீ கத்தும் சத்தங்கள் ஒரே நேரத்தில் ,இருவருக்கும் பிரசவவலி உயிர் அற்ற ஜடமாய் மாறிப்போகிறேன் இப்பிறவிக்கு ஒரு குழந்தை போதும் ,முடிவாகிறேன் எண்ணற்ற இன்னல் தாண்டி, மண்ணைத் தொடுகிறது நம் காதல் சின்னம் . கையில் ஏந்தி, உன் முகம் பார்க்கிறேன் . இன்று ஆகிறாள் என்னவள் ,ஓர் குழந்தையின் அன்னையவள்!!   [Image] புதுவரவு   பிஞ்சு பாதங்கள் ,தவழும் நிகழ்வுகள் இன்றோடு உனைசேர்த்து ,என் குழந்தையின் எண்ணிக்கை இரண்டு குழந்தையோடு பெரும் பொழுது நீ செலவிட, வாடியது என் முகம் . குறிப்பால் கண்டு கொள்கிறாய் இரு குழந்தையின் அன்னையாய் அரவணைக்கிறாய் சுமைகள் தாண்டிய சுகமானது நீ இருக்கும் இந்த நான்கு சுவரே ,என் சொர்க்கமாகுது   [Image] கால ஓட்டங்கள்   நடை பழக்கும் காதல் அழகியே, நிறைவாகிறது, நம் முதலாம் திருமண நாட்கள் . கட்டிய மஞ்சள் கயிறும், நின் கயல் விழி பார்வையும் என்றும் மாறாதடி நடக்கும் நம் மகன் ,ஓட பழகிவிட்டான் கால ஓட்டங்களிலிலும், தொய்வில்லா நின் கரிசனம் தாய் இல்லா குறை தீர்கிறது . என்னவளே என் தாயாகும் பாக்கியம் ,கிடைக்கப் பெறுகிறது…   [Image] நரைக்கா காதல் வருடங்கள் உருண்டோட, எட்டிப்பார்க்கும் வெள்ளை முடி காதோரம் நீ பூசி விடும் ,கருப்பு மை . வயதானாலும் குறையாத, உன் அரவணைப்புகள் . shave செய்ய மொடைப்பட்டு, பிளேடு கையுமாய், நீ துரத்தும் நிகழ்வுகள் இன்றும் தொடர்கிறது. பிள்ளைகள் தாண்டி, வீடெங்கிலும் பேரப்பிள்ளைகள் முடியாத வயதிலும், இன்னொரு பெண்ணோடு பேசும் போது விழும் குட்டுகள் மறையவில்லை இன்றும், முதல் நாள் உன்னைக் கண்ட நிகழ்வுகள்   [Image]   பிரியா விடை காதலின் கடைசி அத்தியாயம் , எனக்கு முன் நீ செல்ல வேண்டும், என்பது தான் உன் விருப்பமோ ? படுத்த படுக்கையில் நீ ,தேடுகிறேன் என் திமிரழகியை .. கையெங்கிலும் சுருக்கங்கள், இம்முறை அணைக்கிறேன் இதமாய் . விழவில்லை குட்டுகள், மாறாய் வழிகிறது இமையோரம் கண்ணீர் . அசைபோடும் பழையபேச்சுகள் ,உன்கண்முன்னே நம் காதல் அத்தியாயங்கள் . எடுத்துக் கொடுத்து படிக்கச் சொல்கிறாய், முதல் காதல் கடிதம் கடிதம் முடியும் முன் முடிகிறது காதல்.   [Image] திமிரழகி சுற்றியும் ஒரு தனிமை நினைவுகள் வீடெங்கிலும் ஒலிக்கும், நின் உரையாடல்கள் shave செய்யா தாடியுடன், கசங்கிய சட்டையுமாய் என் கோலம் துரத்திக் கொண்டு ஓடவோ, திட்டித் தீர்க்கவோ நீ இல்லா அவலம் . எடுத்துப் படிக்கிறேன் கடைசியாய் வாசித்த காதல் கடிதம் .ஆயிரமாவது முறையாய்; கடைசிவரை கழட்டாத, நம் நிச்சய மோதிரங்கள் முதல் பிறந்தநாள் பரிசும் ,கேட்பார் அற்று கிடக்கிறது நரைத்த தலைக்கு மைபூசும் போதெல்லாம், ஏங்குகிறேன் நின் கைகள் . கார்மேகம் சேரும் போதெல்லாம் வாடுகிறேன் நீ இல்லா தனிமைகள் . திருப்பி பார்க்கிறேன், கல்யாண புகைப்படங்கள் கையோடு புரட்டிப்போடுகிறது பழைய நினைவுகள் உன்னோடு வாழ்ந்த நாட்கள் யாவும்,வரைந்து முடிக்கிறேன் என் முதல் புத்தகம் . என் எல்லை இல்லா காதல் சாம்ராஜ்ய இளவரசிக்கு …   "திமிரழகி" ஆசிரியர் குறிப்பு   என் பெயர் விக்னேஷ் .M , கவிதை படைப்புகளில் இது என் ஆறாவது புத்தகம்.தமிழ் மேல் கொண்ட பற்றை , பயின்ற கணிப்பொறியியல் வழி மேம்படுத்தும் நோக்கத்தோடு,மின்னணு புத்தகங்கள் எழுதத் தொடங்கி, இன்று என் ஆறாவது புத்தகத்தை வெளியிடுகிறேன் .மேலும்தமிழ்மொழிவளர்ச்சிக்காகவும் , சுயஎழுத்தாளர்களின் படைப்புக்களை மின்னணு மாற்றமாக பதிப்பிட வழிவகை செய்யவும், “மின்கவி”(https://www.minekavi.com )என்ற வலைத்தளத்தை உருவாக்கி நிறுவியுள்ளேன் . தனிமனித அடையாளம் உருவாக்கும் நோக்கத்தோடும், இக்காலத்திற்கேற்ப எளிய வரிகள் கொண்ட கவிதைகள் படைக்கும் நோக்கத்தோடும் மின்னணு புத்தகங்களை Amazon Kindle Direct Publishing வழி படைத்து வருகிறேன் . மேலும் என் படைப்புகளை freetamilebooks.com தளத்திலும் பதிவிட்டு வருகிறேன் .         “வாசகர்களாகிய தங்களின் மேலான ஆதரவும் மற்றும் புத்தகம் தொடர்பான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன “.       தொடர்புகொள்ள:     புத்தகம் மற்றும் நூல் ஆசிரியர் தொடர்பான கருத்துக்களை பதிவிட   https://mvigneshportfolio.wordpress.com/     Ph.no: 9626227537 Mail id: vykkyvrisa@gmail.com