[] [] திண்ணைக் கதைகள் - சிறுகதைகள்    சிறகு இரவிச்சந்திரன்  tamizhsiragu@gmail.com          அட்டைப்படம் : N. Sathya - experimentsofme@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Creative Commons Attribution Non Commercial 4.0 international license  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.          பொருளடக்கம் 1.வளையம் 5  2. வானவில் வாழ்க்கை 9  3. முள்ளாகும் உறவுகள் 13  4. ஆலிங்கனம் 15  5. தனாவின் ஒரு தினம் 18  6. அரவம் 20  7.மல்டிப்ளெக்சும் மஸ்தான் பாயும் 21  8.குப்பண்ணா உணவகம் (மெஸ்) 24  9. அவள் பெயர் பாத்திமா 28  10. சோசியம் பாக்கலையோ சோசியம் 30  11.நேரம் 36  12. விதைபோடும் மரங்கள் 40  13. தொலைக்கானல் 43  14. உயரங்களும் சிகரங்களும் 46  15. செத்தும் கொடுத்தான் 49  16. உளவும் தொழிலும் 52  17. கோழி போடணும் 56  18. மிதவை மனிதர்கள் 60  19. கூட்டல் கழித்தல் 63  20.கண்காணிப்பு 66  21.நொடிக்கொரு திருப்பம் 69   22.வௌவால் வீடு 71  23. ஏதோ ஒரு யுகத்தில் 73  24. பிரியாணி 76  25. திரிபுறம் 78  26.சரியான கட்டணம் 80  27.அபிநயங்கள் 82  28. துவக்கு 84  29. பிதாமகன் 86  30. கிளிஞ்சல் பொம்மைகள் 88  31. மிருக நீதி 90  32. ஒவ்வாமை 95  33. பலவேசம் 97  34. அப்பா 2100 100  35. உதவும் கரங்கள் 102  36. காஷ்மீர் மிளகாய் 105  37. ஆம்பளை வாசனை 108  38. சண்டை 110  39. நேர்த்திக் கடன் 112  40. மறுப்பிரவேசம் 115  41. மனக்கணக்கு 118  42. சுந்தரி காண்டம் 121  (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 121  1.சிவகாம சுந்தரி 121   2. திரிலோக சுந்தரி 123  3. வித்யா ரூபிணி சரஸ்வதி 125  4. ஜதி தாள சுந்தரி 126  5. அபிராமி அற்புத சுந்தரி 129  6. சர்வலங்கார பூஷணி சுந்தரி 131   7 . ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி 132  8. மென்பொருள் சுந்தரி பத்மலோசனி 134  43. கரடி 137  1.வளையம்   பால்ய சிநேகிதன் சாரதிதான் சொன்னான்: “ நம்ம கூட படிச்சானே கண்ணன்? அவன் ரொம்ப மோசமான நிலையிலே இருக்கானாம். “ என் நினைவுகள் தன் கோப்புகளைப் புரட்ட ஆரம்பித்தது. சட்டென்று என் நினைவுக்கு வரவில்லை கண்ணன் என்பதை என் முகம் காட்டிக் கொடுத்தது. “ என்னடா முழிக்கறே? நம்ப கண்ணண்டா! பள்ளியிலே படிக்கும்போதே பத்து ரூபாய் செலவுக்கு எடுத்திட்டு வருவானே! அவன்டா!” இப்போது பளிச்சென்று அவன் முகம் ஞாபகத்திற்கு வந்தது. கண்ணன் கொஞ்சம் குள்ளம். அதனாலேயே எந்த விளையாட்டிலும் அவன் இருக்கமாட்டான். அப்படி எந்த விளையாட்டிலும் சேராத நானும் சாரதியும் தான் அவனது நண்பர்கள். ஆனால் நாங்கள் ஒன்றும் குள்ளம் இல்லை. சராசரி உயரம். பள்ளி விட்ட அரை மணி நேரத்தில் நான் வீடு வரவில்லையென்றால் ஊரைக் கூட்டி விடுவாள் என் பாட்டி. ஆளுக்கொரு திசையென்று என் மாமாக்களை அலைய விட்டு விடுவாள். அதனால் இறுதி வகுப்பு முடிந்த மணி அடித்தவுடன் முண்டியடித்துக் கொண்டாவது முதலில் வரும் பேருந்தில் ஏறி விடுவேன். சாரதி கதை வேறு மாதிரி. அப்பா இல்லாத பையன். அம்மா தன் வீட்டாரின் ஆதரவோடு இவனைப் படிக்க வைக்கிறாள். வாழ்வாதாரத்திற்கு தையல் வேலை, எம்ப்ராய்டரி என்று ஏதோ செய்து கொண்டிருக்கிறாள். அதனால் சாரதிக்கு குற்ற உணர்ச்சி அதிகமாகி, பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு ஓடிவிடுவான். உடை மாற்றிக் கொண்டு அம்மாவுக்கு உதவியாக இருப்பான். மதிய உணவு இடைவேளையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் கூட, என் வயதொத்த பையன்கள் ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பர். நானும் சாரதியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். அப்படி ஒரு நாள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் கண்ணன் எங்களை நெருங்கி வந்தான். அவனும் என் வகுப்புதான். துணைப்பாடம் தமிழ்தான். ஆனாலும் யாரோடும் பேசமாட்டான். அவனது உயரக்குறைவாலோ, அல்லது அவனது தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலோ – அவன் எப்போதுமே வகுப்பில் கடைசி மாணவன் – எப்போதுமே அவன் முன்வரிசையில் தான் உட்கார வைக்கப்பட்டிருப்பான். அதனால் அவனோடு பேசும் வாய்ப்பு குறைவானதாயிருந்தது. “ நீங்கள்ளாம் விளையாட மாட்டீங்களா? “ வெறுமனே தலையாட்டினோம் நானும் சாரதியும். யாரோடும் பேசாத கண்ணன் எங்களோடு பேசிய அதிர்ச்சியிலிருந்து நாங்கள் மீளவில்லை. “ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? எங்கிட்ட பத்து ரூபா இருக்கு. “ பத்து ரூபாய் என்பது அந்த காலத்தில் பெரிய தொகை. எங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அதற்கும் தலையாட்டினோம். முன்வாசல் கேட்டின் அருகில் நின்றிருக்கும் ரிட்ஸ் ஐஸ்கிரீம் வண்டி. பால் ஐஸ் பத்து பைசா. சாக்கோபார் இருபத்துஐந்து பைசா. அதற்கெல்லாம் கூட வசதியில்லை எங்களிடம் அப்போது. ஒரு ரூபாய்க்கு பத்து ஐஸ். பத்து ரூபாய்க்கு நூறு ஐஸ் என்று கணக்கு போட்டது எங்கள் மனம். கூடவே இவனுக்கு எப்படி கிடைத்திருக்கும் பத்து ரூபாய் என்று ஆராய்ச்சி வேறு. வீட்டிற்குத் தெரியாமல் எடுத்திருப்பானோ? நாளை இவன் மாட்டிக்கொண்டால் ஐஸ்கிரீம் சாப்பிட்ட நாமும் மாட்டிக் கொள்வோமோ என்கிற அச்சம் வேறு. ஆனாலும் கால்கள் கண்ணனைத் தொடர்ந்துதான் போய்க்கொண்டிருந்தன. கண்ணன் நாலு சாக்கோபார் வாங்கினான். அவனுக்கு இரண்டு. எங்களுக்கு ஆளுக்கு ஒன்று. அதன்பிறகு ஐஸ்கிரீம் ருசிக்கு அடிமையானதில் எங்கள் அச்சங்கள் பறந்தோடின. இன்னமும் நெருக்கமானபிறகு ஓட்டலுக்கு எல்லாம் கூட்டிப் போவான். ஆப்பிள் மில்க் ஷேக் அவன் அறிமுகப்படுத்தியதுதான். அதேபோல பட்டாணி மசால் தோசை. முன்கூட்டியே சொல்லி விடுவான் கண்ணன். “ நாளைக்கு உடுப்பி கார்னர் போறோம்.. வீட்ல சொல்லிடுங்க.. “ அதற்கேற்றாற்போல் ஏதாவது சொல்லி பாட்டியிடம் தாமதத்திற்கு அனுமதி வாங்கி விடுவேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, ஒரு நாள் கண்ணனின் தந்தை பள்ளிக்கு வரும்வரை. எங்களுக்கும் அவரைப் பார்க்க ஆவல். எல்லாத் தேர்விலும் தோற்கும் மகனுக்கு தினமும் பத்து ரூபாய் செலவுக்குத் தரும் அவதார அப்பா அல்லவா அவர். தலைமை ஆசிரியரிடம் கண்ணனின் அப்பா பேசிக்கொண்டிருந்தார். கட்டுக்குடுமி. பஞ்சக்கச்சம், முழுக்கை வெள்ளைச் சட்டை, காதில் வைரக் கடுக்கன், சட்டைக்கு மேலே பித்தான் இல்லாத பழுப்பு நிறக் கோட்டு. கண்ணன் எதுவும் நடக்காதது போல் எங்களுடம் நின்று கொண்டிருந்தான். “ என்னடா ஆச்சு ? “ “ என்னை பள்ளியை விட்டு எடுக்கறாங்க “ “ ஏண்டா? நீ சரியா படிக்கலியே அதனாலயா? “ “ ஆமா.. இப்பத்தான் எங்கப்பாவுக்கு தெரிஞ்சது.. அதான்..” “ இப்பதான் தெரிஞ்சதா? மதிப்பெண் பட்டியலை அவர் பார்க்கறதே இல்லையா? “ “ அவருக்கு நேரமில்லை.. பெரிய வக்கீல். எப்பவும் அவரைச் சுத்தி ஆளுங்க இருந்திட்டே இருப்பாங்க “ “ அப்ப அட்டையிலே கையெழுத்து? அம்மா போடுவாங்களா?” “ சிலசமயம் அவங்களும் போடுவாங்க.. அவங்களுக்கும் நேரமில்லைன்னா நானே போட்டுடுவேன். “ எங்களுக்கு சிரிப்பு வந்தது. இவன் ஏதோ தமாஷ் பண்ணுகிறான். ஆறாங்கிளாஸ் பையன் அப்பா கையெழுத்தை போடுவதாவது? கண்ணன் சரசரவென்று ஒரு நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தான் வெற்றுத் தாளில் கிறுக்கினான். “ இது எங்க அப்பா கையெழுத்து.. இது அம்மாது. “ அப்போதே அஸ்தியில் சுரம் கண்டு விட்டது எங்களுக்கு. அப்போது விலகியவர்கள் தான் நானும் சாரதியும். அவனும் பள்ளியை விட்டு போய்விட்டான். பின் தொடர்பே இல்லை. இப்போது மீண்டும் கண்ணன்.   கண்ணன் வசித்த பகுதி சென்னையின் கிழக்குத் தாம்பரம். மேடவாக்கமோ மாடம்பாக்கமோ ஏதோ ஒரு இடம். ஆனால் தாம்பரத்தின் மையப்பகுதியில், அவன் ஒரு தொலைபேசி மையம் வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. “ எ கார்னர் ஷாப்.. நெக்ஸ்டு ஒன் ஹொட்டேல் “ என்று குரல் அரட்டையில் கணிப்பொறி வழியாக, அமெரிக்க ஆங்கிலத்தில் சொன்னவன் ஆனந்த் ஜனார்த்தனன். எங்கள் பள்ளியில் எல்லோருடைய பெயரும் தந்தை பெயருடந்தான் பதிவேட்டில் இருக்கும். சாரதிக்குக் கூட சாரதி திருமலாச்சாரி என்று பெயர். ஆனால் வகுப்பெடுக்க வந்த ஆங்கிலோ இந்திய ஆசிரியை மார்கரெட்டுக்கு, அந்தப் பெயர் வாயில் நுழையாத்தால், அவனை சாரதி டி சி என்றே பதிவு செய்து விட்டார். கண்ணனின் பெயர் கண்ணன் கோதண்டராமன். மிஸ் அவனை கண்ணன் கோ தண்டராமன் என்றே உச்சரிப்பார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அரியோ சிவனோ அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதித்து விட்டார்கள் போல. அவன் உருப்படாமல் போனான். சாரதியைப் பற்றி இங்கே கொஞ்சம் சொல்லியாக வேண்டும். பெரும்பாலும் அவன் சாப்பிடுவது பழைய சாதமும் தயிரும் என்பதால், அவன் உடம்பு கரணை கரணையாக இருக்கும். போதாதற்கு அரிசி வடிகஞ்சியில் பள்ளிச்சீருடையான காக்கி அரை நிக்கரை நனைத்துக் காயப்போட்டு, ஈரம் இருக்கும்போதே கையால் நீவி விட்டு, பட்டாக்கத்தி போல் முனை கூராக நீட்டிக் கொண்டிருக்கும்படி போட்டுக் கொண்டு வருவான். போதாததற்கு முடியை ராணுவ வீரன் போல் வெட்டியிருப்பான். அடிக்கடி முடி வெட்ட வசதி இல்லாததால் இந்த ஏற்பாடு. நல்ல உயரம். அதற்கேற்ற ஆகிருதி. இறுதி வகுப்பை முடித்து, பள்ளியை விட்டு நாங்கள் வெளியேறும்போது அவன் மட்டும் தனித்துத் தெரிந்தான். இன்னும் சொல்லப்போனால், நாங்களெல்லாம் பையன்களாக இருந்தபோது அவன் மட்டும் வளர்ந்த ஆள் போல இருந்தான். அந்தத் தோற்றம்தான் கண்ணன் விசயத்தில் எங்களுக்கு உதவப் போகிறது என்று எனக்கு அப்போது தெரியாது. அழுக்கடைந்த எம் ஜி ஆர் சிலைக்குப் பின்னால் நெரிசல் மிக்க ஷண்முகம் சாலையில் இருந்தது கண்ணனின் கடை. கடை என்று கூடச் சொல்ல முடியாது. மாடிப் பாடியின் கீழுள்ள மூன்றுக்கு ஆறு என்கிற சரிவான இடத்தில் ஒரு தொலபேசியுடன் இருந்தது கடை. வாசற்படி அருகில் மட்டும்தான் ஆறடி உயரம். உள்ளே போகப்போகக் குறுகிவிடும்படியான அமைப்பு. “ குள்ளன் அவன் ஒயரத்துக்கு ஒத்தா மாதிரிதான் கடையைப் பிடிச்சிருக்கான் “ என்று சிரித்தான் சாரதி. கடையில் கண்ணன் இல்லை. வெளியே போயிருப்பதாகக் கடையில் இருந்த பையன் சொன்னான். கொஞ்சம் தாஜா பண்ணிய பிறகு எதிர் திசையில் கைக்காட்டினான். “ அங்கன நிக்கிறாரு.. செகப்பு கட்டம் போட்ட சட்டை.” அவன் சுட்டிக் காட்டிய இடம் ஒரு அடகுக் கடை. மதன்லால் சேட் என்று போட்டிருந்தது. காலியான ஷெல்புகளில் ஒன்றிரண்டு வெள்ளி விளக்குகள் காணப்பட்டன. சிகப்பு சட்டைக்காரன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். சேட் பலமாக இடதும் வலதுமாகத் தலையாட்டிக் கொண்டிருந்தான். பேச்சு வார்த்தை வெற்றி பெறாத சூழலில், தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அவன் கடையை விட்டு இறங்கினான். ‘ கண்ணனா அது! அழுக்கேறிய சட்டை, இஸ்திரி போடாத சாயம் போன பேண்ட், சீவாத தலைமுடி ‘ ஏற்கனவே குள்ளம்.. இதில் தாழ்வு மனப்பான்மையால் ஏற்பட்ட கூன் வேறு. மனது நொறுங்கிப் போனது. இவனை மீட்டெடுக்க வேண்டும் என்று இதயம் ஒரு அவசரத் தீர்மானம் போட்டது. கடைக்கெதிரே ஆட்கள் நிற்பதைக் அவன் கால்கள் தானாக விலகி எங்களைச் சுற்றிப் போக ஆரம்பித்தன. சாரதி பலமாக அவன் தோளைப் பிடித்துத் திருப்பினான். திரும்பிய அவன் முகத்தில் கலவரம் சூழ்ந்தது. அச்சத்துடன் எங்கள் முகங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். “ எங்களைத் தெரியுதா? “ சாரதியின் குரலின் இயல்பான அதிகாரத்தோரணை அவ¨¨ மிரட்டியிருக்க வேண்டும். தெரியாது என்பது போல் தலையாட்டினான். “ தெரிய வைக்கிறாம் வா “ என்று அவனைப் பக்கத்தில் இருந்த உடுப்பி ஓட்டலுக்குள் தள்ளிக் கொண்டு போனான் சாரதி. ஒதுக்குப்புறமாக ஒரு மேசையைப் பார்த்து அமர்ந்தோம். கல்லாவைப் பார்த்தான் சாரதி. கூரையின் மின்விசிறி உடனே ஓடத் தொடங்கியது. மைசூர் மசாலா தோசை, மங்களூர் போண்டா என்று மூவருக்கும் ஆர்டர் செய்து விட்டு, மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கும் கண்ணனிடம் திரும்பிச் சொன்னான் சாரதி “ ஏண்டா இன்னுமா எங்களை அடையாளம் தெரியல.. இல்ல சாக்கோபார் சாப்பிட்டாத்தான் நெனவு வருமா? “ கண்ணனின் கண்களில் ஒரு ப்ளாஷ். “ சாரதி? “ அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அவன் இறுக்கத்தைத் தளர்த்து, விசயத்தைக் கறந்தோம். அவன் கதை சுருக்கமாக. படிப்பு ஏறாமல் அப்பாவின் தொழிலைத் தொடர முடியாமல், அவரும் இறந்து போக நிர்கதியற்று, அம்மா வழி உறவில் ஒரு பெண்ணைக் கைப்பிடித்து இரண்டு பெண் குழந்தைகள். தொலைபேசி மையத்தில் வாடகை கூட கொடுக்க முடியாத வியாபாரம். மாசக் கடைசி கைக்கடிக்கு சேட்டுக் கடையில் நகைகள் எல்லாம் வைத்து, வட்டி ஏறி மூழ்கி, அவனே மூழ்கும் நிலைமை. “ இப்போ என்ன பிரச்சினை? “ என்றேன் நான். “ ஒரு வளையல்.. ஒரு சவரன்.. தேஞ்சு போய் அரைதான் தேறும்.. அதுவும் மூழ்க்டும் போலிருக்கு..” “ எத்தனயோ மூழ்கிருக்கு.. ஒனக்கு என்ன புதுசா என்ன? “ சட்டென்று அவன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது. ஐம்பது சொச்சம் வயதான ஒரு வளர்ந்த ஆண் பிள்ளை அழுதால் சகிக்காது. சுதாரித்துக் கொண்டு கண்ணன் சொன்னான்: “ எங்க அம்மாவொட கடைசி நகை. என் மனைவி அதை அம்மா படத்துக்கு முன்னால பூஜையறையில வச்சு தெனம் வெளக்கேத்துவா.. ஒரு வருசமா ஏத்தறதில்ல.. “ ‘ சேட்டை ஏத்தச் சொல்லறதானே ‘ என்று சொல்ல நினைத்து அடக்கிக் கொண்டேன். மறுபடியும் முகாரி ஆரம்பித்து விட்டதென்றால்.. கண்ணனை கடையில் உட்கார வைத்து விட்டு என்னையும் இழுத்துக் கொண்டு சேட்டு கடை நோக்கி நடந்தான் சாரதி. கறுப்பு பேண்ட், வெள்ளைச் சட்டையை டக் இன் பண்ணியிருந்தான். அவன் நடையும் உடையும் ஒரு சிபிஐ ஆபிசர் தோற்றத்தைக் கொடுத்தன. வேலை விசயமாக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் போய் வந்ததால் அவனுக்கு அத்துணை இந்திய மொழிகளும் சரளம். சேட்டு பேரேடை வைத்துக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தான். “ தர்வாஜா பந்த் கரோ.. சார் ஸோ பிஸ்.. பத்மாஷ்..’ என்று ஏதேதோ அடுக்கிக் கொண்டிருந்தான் சாரதி. “ யே கியா? “ “ காங்க்கண்.. கண்ணன் சாப் “ யே சோர்.. “ என்று கையை ஓங்கினான் சாரதி. “ கிதர் யே காங்க்கண்? “ மிகவும் மெலிசாக இருந்தது அந்த வளையல். கண்ணன் சொன்ன மாதிரி அரை சவரன் தான் தேறும்போல. “ 6000 ரூபா வளையலுக்கு ஆயிரம் ரூபா கொடுத்திருக்கான் திருடன். வட்டி அஞ்சாயிரம்.. பகல் கொள்ளை “ இன்னும் கொஞ்சம் மிரட்டலில் வளையலைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் சாரதி. கண்களை உருட்டி, சுட்டு விரல் எச்சரிக்கையுடன் கடையை விட்டு வெளியேறினோம். “ ஏண்டா அவன் போலிசுன்னு ஏதாவது போயிட்டான்னா, கண்ணன் மாட்டிக்குவான். கூடவே நாமளும்.” மத்ய வர்க்க பயம் என்னைப் பேச வைத்தது. “ மாட்டான்.. திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி நடுங்கிட்டிருக்கான். போலிசுன்னு போனா இன்னும் செலவாகும்னு அவனுக்குத் தெரியும்.” இந்தக் கதையின் ட்விஸ்ட் இப்போதுதான் வருகிறது. மறந்து விட்ட பையை எடுக்க மீண்டும் உடுப்பி ஓட்டலுக்கு போனபோது, கண்ணன் அவன் கடையில் இல்லை. “ திரும்ப இப்படி ஆவாது சேட்டு.. ஏதோ ஒரு வெலையப் போட்டு வளையலை வச்சுக்கிட்டு காசு குடு.. இல்லன்னா என் பிரண்டுதான் அந்த ஆபிசரு.. போன் போடட்டா? “செல் போனைக் கையிலெடுத்துக் கொண்டிருந்தான் கண்ணன் அந்தச் சேட்டுக் கடையில்.                                                           2. வானவில் வாழ்க்கை   “ மைசூருக்கு பக்கத்திலேயாமே? சாந்தா சொன்னாள் “ செல்லம்மாள் குரலில் குதூகலம் தெரிந்தது. இனிமே லீவுக்கு மாயவரம் போக வேண்டாம். புது இடம் ஒன்று கிடைத்து விட்டது. வருடா வருடம் மாயவரம் போய் பிள்ளைகளும் செல்லம்மாவும் அலுத்துப் போயிருந்தார்கள். மூன்று வேளையும் சோறு, மாமரத்து ஊஞ்சல் எல்லாம் போரடிக்க ஆரம்பித்து விட்டது. எல்டிசி என்றால் எனக்கு மாயவரம் தான். அங்கேதான் என் அம்மாவைப் பெற்ற தாத்தா இருக்கிறார். பூர்வீக வீடு இருக்கிறது. மூன்று கட்டு வீடு. உள்ளே நுழைந்து விட்டால் செல்போன் சிக்னல் கூடக் கிடைக்காது. அவசர அழைப்பு என்கிற பெயரில் வங்கி நிர்வாகம், என் விடுப்பை பாதியில் முறிக்க இயலாது. அதோடு கூடப் படித்த சின்னச்சாமி தகவல் தெரிந்தவுடன் ஓடோடி வருவான். கையில் மல்லாட்டை மூட்டையும் அப்போது பறித்த மாவடுகளும் இருக்கும். சின்னச்சாமி நாலாப்பு வரை என்னோடு படித்தவன். பேர்தான் சின்னச்சாமி. ஊரில் அவன் பெரிய சாமி. அவன் அப்பா அந்த காலத்திலேயே தலையாரி! இவனும் கையெழுத்து போடவும் நாலு எழுத்து படிக்கத் தெரிந்தால் போதும் என்று கல்வியை விட்டு விட்டான். அதோடு சரசுவை அவன் காதலித்ததும் ஒரு காரணம். சரசு! உள்ளூர் பலசரக்குக் கடை கோவிந்தனின் மகள். பெரிதாக சாதி வித்தியாசம் இல்லை. கொஞ்சம் வசதி வித்தியாசம் இருந்தது. சரசு தான் தன் மனைவி என்றான, பின் சின்னச்சாமி தன் வீட்டுக்கு வேண்டியவைகளையும், தன் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு வெண்டிய பொருட்களையும் கோவிந்தன் கடையிலேயே வாங்குவான். என்னையும் அங்கேயே வாங்கச் சொல்வான். சின்னச்சாமி சரியாக ஒரு மணிக்குத்தான் கோவிந்தன் கடைக்குப் போவான். அப்போதுதான் கோவிந்தன் சாப்பிட வீட்டிற்குப் போவார். சரசு கடையில் இருப்பாள். சின்னச்சாமிக்கு கடையின் பொருட்கள் இருக்குமிடம் அத்துப்படி! மேல் வரிசையில் இருக்கும் பொருட்களையே முதலில் கேட்பான். இழுத்து செருகிய பாவாடையுடன் சரசு மேலேறி எடுக்கும்போது வாளிப்பான அவளது இடுப்பில் அவனது கண்கள் மொய்க்கும். அவன் கிறங்கிப் போவான். சரசுவுக்கும் அவனது பார்வை தெரியும். ஆனாலும் அவளுக்கு என்னமோ அது பிடித்திருந்தது. சின்னச்சாமியின் காதல் தனக்குப் பிடிக்கிறது என்பதை அவள் எப்படி சொல்வாள்? வேறு எப்படி? பொருட்களோடு கொஞ்சம் ஆரஞ்சு மிட்டாய் கட்டி வைப்பாள். மறுநாள் அதை திருப்பும் சாக்கில் சின்னச்சாமி அந்த பொட்டலத்தில் கொஞ்சம் மல்லாட்டை போட்டு வைப்பான். காலப்போக்கில் சின்னச்சாமிக்கு கல்யாண வயது வந்ததும், டவுன் வியாபாரியின் மகள் பேசி முடிக்கப் பட்டதும் நடந்தது. சின்னச்சாமி தீர்க்கமாக சொன்னான். “ உள்ளூர் யாவாரி இருக்கும்போது டவுன் யாவாரி எதுக்கு? எனக்கு சரசுவைப் பிடிச்சிருக்கு. தோதுபடுமான்னு அவ அப்பாவைக் கேளுங்க” “ யாரு? சரசுவா? லட்சுமியாட்டம் இருக்குமே பொண்ணு “ என்று ஆதரவு கொடுத்தாள் அப்பம்மா! அதுக்கு அப்புறம் எதிர்ப்பு இல்லை. கோவிந்தன் கடை நிர்வாகம் இப்போது சின்னச்சாமி கையில். மதிய சாப்பாட்டிற்கு அவன் வீட்டிற்கு போவதில்லை. கடைப் பையனே அதை இங்கு கொண்டு வந்து விடுவான். ஏன்? சின்னச்சாமிக்கு வயது வந்த இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்! “ மைசூர் பக்கம் தான்.. ஆனா மூணு மணிநேரம் பயணிச்சாதான் சேர முடியும்“ ஒரு வாரத்தில் அந்த ஊரைப்பற்றி முழு விவரமும் விரல் நுனியில் வைத்திருந்தாள் செல்லம்மா. “மலை கிராமமாம்.. பழமும் தேனும் மலிவாக் கெடைக்குமாம்” “ ஆனா அரிசி சோறு கெடைக்காது.. அதுக்கு மலையிறங்கி நாப்பது கிலோமீட்டர் போகணுமாம் “ என் கவலை எனக்கு. “ அதென்னங்க பிரமாதம்.. மூட்டையா வாங்கிப்போட்டா அது பாட்டுக்கு கெடக்குது.. “ எனக்கு முன்னால் போய் விடுவாள் போல அவளுக்கு ஆர்வம் கொப்பளித்தது. அரங்கல் துர்க்கம் என்று பெயர் கொண்ட அந்த மலைக் கிராமத்தில் ஏன் வங்கிக் கிளை திறந்தார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது புள்ளி விவரக் கணக்கில் பின் தங்கிய மலைக்கிராமங்களில் வங்கிச் சேவை என்று ஏதோ ஒரு நிதி அமைச்சர் மைய மக்கள் மன்றத்தில் படித்திருக்கலாம். அதை நிறைவேற்ற திறக்கப்பட்டிருக்கலாம். நாற்பது மைல் மலைப்பாதையில் வளைந்து வளைந்து கொண்டு போய் சேர்த்தது நாங்கள் போன ஜீப். “திண்டி ஏதும் சிக்கல்லா.. கீளே போனா ஒந்து ஓட்டல் இதே.. இட்லி சென்னாகிதே.. அஷ்டே!” வழி நெடுக இது மாதிரி அரிய தகவல்களைத் தந்து பீதீயை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார் ஜீப் டிரைவர் பெத்தண்ணா. மலைப்பாதைப் பயணத்தை விட, அவர் சொன்ன தகவல்களே வயிற்றைப் புரட்டி எடுத்தது. ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்ததாக இருந்தது அந்த வீடு. ஒரு தேர்ந்த ஓவியனின் கைவண்ணத்தில் மிளிர்ந்த, ஒரு தலை சிறந்த ஓவியம் போன்றதொரு தோற்றத்தைக் கொடுத்தது, பின்னால் தெரிந்த நீல வானம். முதல் பார்வையிலேயே, மனதினை அள்ளிக் கொண்டு போவதான ஒரு தோற்றம். சிறிய படிகள் தரையிலிருந்து அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றன. அந்த வீட்டைப் பொறுத்தவரையில், என்னை முதலில் ஈர்த்த விசயம் அதன் கூரையில் கட்டப்பட்டிருந்த ஒரு வெண்கல மணிதான். முன்னால் பணியிலிருந்த மேலாளர் அந்த வீட்டை எனக்காக ஏற்பாடு செய்திருந்தார். எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில், நான் குடும்பத்தோடு அங்கு வந்து சேர்ந்தேன். குடும்பம் என்றால், என் துணைவி செல்லம்மாள், பத்து வயது மகள் சௌபர்ணிகா, இரண்டு வயது அப்பு குள்ளன், அறுபது வயதான என் தாயார். அந்த வீட்டைக் கட்டியவன் ஒரு சிறந்த ரசனைக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். வீட்டிற்கு அழைத்துச் செல்லும் படிகள் வெள்ளை நிறப் பூச்சு அடிக்கப் பட்டிருந்தன. அந்தக் குன்றின் தன்மைக்கு ஏற்றவாறு அவை வளைந்து நெளிந்து மேலேறின. கொஞ்சம் எட்டி நின்று பார்க்கும் போது, பச்சைப் புல்வெளி நடுவில் ஒரு ஓடை ஓடுவது போலவே அவை காட்சியளித்தன. சாமான்கள் போட்டது போட்டபடி இருக்க, வாண்டுகள் வீட்டைச் சுற்றி வர ஆரம்பித்தார்கள். கூடவே சரமாரியான கேள்விகள். அப்பு மழலை வினாடி வினாவே நடத்திவிட்டான். அந்தப்பக்கமாகப் போன சில பழங்குடியினர் நின்று, நிதானித்து, தயங்கி, ஏறிட்டார்கள்.  தூணுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டு, அப்பு எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். சௌபா பெரியவள். உள்ளூர பயம் இருந்தாலும், ஓட எத்தனிக்கும் கால்களுடன், கதவருகில் நின்றிருந்தாள். பழங்குடியினர் வண்ண மயமான ஆடைகளில் இருந்தார்கள். சிவப்பு அவர்களது விருப்பத்திற்கேற்ற நிறமாக இருந்தது. ஆண்கள் மேலாடை இன்றி திறந்த மார்புடன் காட்சியளித்தார்கள். உழைப்பு அவர்களது உடலில் திரட்சியான தசைகளாக மாறி இருந்தது. பெண்கள் மார்பினை மறைக்கும் கச்சைகளும், சிறிய பாவாடைகளும் அணிந்திருந்தார்கள். அவர்கள் மாராப்பு மறுக்கப் பட்ட சமூகத்தவர் என்பது பார்வையிலேயே புரிந்தது.. ஏதோ மொழியில் பேசினார்கள். கன்னடம் போலிருந்தது அது. என் மனைவி பெங்களூர்காரி. “ செல்லம் “ என்றழைத்தேன் நான். “ என்னங்க “ என்றபடியே ஒரு கையில் கரண்டியுடன் வந்தாள் அவள். “ என்னாவோ பேசறாங்க. கன்னடம் மாதிரியிருக்குது “ சிறிது நேரம் உற்றுக் கேட்டுவிட்டு “ அது கன்னடம் இல்லைங்க. துளு” என்றாள். அவள் குரலில் ஒரு மகிழ்ச்சி துள்ளல் தெரிந்தது. கொஞ்ச நேர உரையாடலுக்குப் பிறகு,  அவர்கள் போய்விட்டார்கள். செல்லம் ஏகப்பட்ட தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளே வந்தாள். நான் சன்னல் வழியாக அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார்கள். ஒற்றை வரிசையில் அவர்கள் நடந்து போவது, சரிவில் ஒரு சர்ப்பம் நெளிந்து போவதைப் போலவே இருந்தது. மாலை நான்கு மணியிருக்கும். மதிய உணவும், உணவுக்குப் பின்னான உறக்கமும் ஒரு வித மந்த உணர்வைக் கொடுத்திருந்தது. நாளை முதல் வேலைக்குச் செல்ல வேண்டும். அதற்க்கப்புறம் இம்மாதிரி மாலைகள் எனக்குக் கிடைக்குமா என்று சந்தேகம். அதனால் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல்  முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். வாசற்படிகளுக்கு முன்னால் இரண்டு மூன்று நாற்காலிகளைப் போட்டுக் கொண்டு உட்காரும் அளவிற்கு கொஞ்சம் இடம் இருந்தது. வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய வீடாயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவர்களது வீடுகளில்தான் இது போன்று ·ஃபோயர் என்று ஒரு இடம் இருக்கும்.  அந்த இடம் மாலையின் ரம்மியத்தை அனுபவிக்க சிறந்த இடமாகத் தோன்றியது. குழந்தைகள் குதூகலத்தில் துள்ளிக் கொண்டிருந்தார்கள். “என்னா? என்னமோ பேசிகிட்டிருந்தயே. யாராம் அவுங்க. எங்கிருக்காங்களாம்“ என்றேன். “ பக்கத்து கிராமமாம். மலசாதி சனங்க. முன்னால ஒரு பொண்ணு நின்னுகிட்டிருந்திச்சே. அதும்பேரு கங்கம்மா. வூட்டு வேலைக்கு வரட்டுமான்னு கேட்டுச்சு. நாளையிலேர்ந்து வரச் சொல்லியிருக்கன்.” “ முன்ன பின்ன தெரியாத ஊரு. எப்படி வூட்டுக்குள்ளாற வுடறது “ என்றாள் அம்மா. “ சூது வாது தெரியாத வெகுளி சனங்க. என்னாத்த எடுத்துப்பிட போறாங்க. “ அம்மா வாயடைத்துக்கொண்டாள். ஆமா! மேலே மணி ஒண்ணு இருக்குதே. இன்னாத்துக்காம். “ “ஆனையெல்லாம் நடமாடற எடமாம் இது. ராவுல இப்படி அப்படி போவுமாம். அதனால் வாச வெளக்கை அணைக்கக் கூடாதுன்னு கங்கம்மா சொல்லிச்சு. ஆளில்லாத வூடுன்னா ஆனை புகுந்துடுமாம்.” எனக்கு கொஞ்சம் உதறலெடுத்தது. பழைய மேலாளர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. வெளி மாடத்தில் இரவு எப்பொழுதும் விளக்கேற்றி வைப்பார்கள் அவர்கள் வீட்டில். எல்லாம் ஆனை பயம்தான். விளக்கெரிப்பதற்கென்றே மரப்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணை பழங்குடியினரிடம் கிடைக்குமாம். அதன் வாசனையில் ஆனைகள் வராதாம். தீடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. அதை மழை என்று கூட சொல்ல முடியாது. கொஞ்சம் தூறல் நிறைய காற்று. ஆனாலும் நகரவாசிகளான எங்களுக்கு இது கூட மழைதான். ஆதவன் மலை முகடுகளின் பின்புறம் மறைந்து கொண்டிருந்தான். ஆயிரம் கரங்களுடைய வீரன் ஒருவன், தன் உருவிய வாட்களை உறைகளில் இட்டுக் கொண்டே, பின்வாங்குவது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது அது. உலகத்துடனான அன்றைய போர் முடிந்து விட்டது அவனுக்கு. ‘இன்று போய் நாளை வா’ என்று உலக மக்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, அவன் தன் இருப்பிடத்திற்கு போகிறான். திடீரென்று ஒரு வானவில் பளிச்சென்று தோன்றியது வானில். ஒரு பிரம்மாண்ட திரையில் ஒரு அறுபதடி ஓவியன் தன் வண்ணங்களை தீற்றிக் கொண்டிருப்பது போல் தோற்றமளித்தது அது. அதன் ஊடாக பெரிய காதுகளை உடைய ஒரு யானை மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தது. “ ஆனை “ என்றான் அப்பு குள்ளன். “ மள ‘ என்றாள் என் கான்வெண்ட் மகள். “ மழை “ என்று திருத்தினேன் நான். “ அவ நாக்குல வசம்பை வச்சி தேக்கணும் “ என்றாள் என் மனைவி. “ சின்ன வயசிலேர்ந்து பாக்கை அள்ளிப் போட்டுக்கும். படிக்கிற புள்ள பாக்கு துன்னக்கூடாதுன்னு தலைபாடா அடிச்சிகிட்டேன். கேட்டுச்சா. இப்ப நாக்கு தடிச்சி போச்சி. எப்பிடி  ள வரும் “ என்றாள் அம்மா. பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. எந்த வசம்பை வைத்து என் அம்மா நாக்கில் தேய்ப்பது.                                                       3. முள்ளாகும் உறவுகள்   சேதுவும் பாலனும் கெஞ்சிப் பார்த்தார்கள். கதறிப் பார்த்தார்கள். ஆனாலும் கோமளா மசியவில்லை. விற்றே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள். இருவரும் சங்கமேஸ்வரனைப் பார்த்தார்கள். அவர் முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக் கொண்டார். அவர் கடைக்கண் ஓரம் ஈரம் கசிந்தது. மூன்று கட்டு வீடு. முன்னால் ஆயிரம் சொச்சம் சதுர அடி. பின்னால் ஆயிரம் சொச்சம் சதுர அடி. முன்னால் ஒரு பூங்காவைப் போல் மலர் தோட்டம். பின்னால் காய்கறித் தோட்டம். அத்தனையும் சங்கா, அவரை அப்படித்தான் அவரது சகோதரர்கள் சேதுவும் பாலனும் கூப்பிடுவார்கள், தன் கைப்பட, கண்பட வளர்த்தது. விட மனசில்லை. ஆனால் என்ன பண்ணுவது. கோமளாவிற்கு ஒவ்வாமை நோய். எதை சுவாசித்தாலும் இழுப்பு வந்து விடும். அதனால் பத்து வருடங்களாக தாளிப்பு இல்லாத தாம்பத்தியம். சேதுவும் பாலனுமே வீட்டை வாங்கிக் கொண்டார்கள். இன்றோடு பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. அலுவல் காரணமாக எங்கெங்கோ போய்விட்டு இப்போது சென்னைக்கு குடி பெயர்ந்திருக்கிறார் சங்கமேஸ்வரன். கோமளவல்லி கல்யாணத்தின் போது கொஞ்சம் ஒல்லி. இப்போது இரண்டு பெற்றுப் போட்டவுடன் பெருத்துப் போய் விட்டாள். உடலில் கொஞ்சம் பலம் வந்தவுடன் ஒவ்வாமை தீண்டாமை போல் விலகி விட்டது. கூடவே எது நல்லது எது ஆபத்து என அறிந்து கொண்ட பட்டறிவு. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் இருந்தது அந்தக் குடியிருப்பு. தாவர விஞ்ஞானி சங்கமேஸ்வரன் குடியிருக்கும் வீடு அது. சங்கமேஸ்வரன் செடிகளின் பால் அதீத அன்பு கொண்டவர். அவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதால் அவரால் நினைத்தவண்ணம் செடிகளை வளர்க்க முடியவில்லை என்றொரு ஆதங்கம் உள்மனதில் எப்போதும் குடிகொண்டிருந்தது. சங்கமேஸ்வரன் அரசு உத்யோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். வயது அறுபத்தி நான்கு. வேளாண்மைத் துறையில் இருந்து ஓய்வு பெற்று ஆறு வருடங்கள் ஆயிற்று. சங்கமேஸ்வரனுக்கு ஒரு மனைவியும் இரண்டு மகள்களும் உண்டு. மகள்களுக்கு திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். அவர் இன்னமும் அங்கு போகவில்லை. ஆனால் அவரது மனைவி கோமளவல்லி இரண்டு முறை அங்கு போய் விட்டு வந்திருக்கிறார். அவர் சொன்ன விசயங்கள் அவரது ஆவலை மேலும் தூண்டின. ‘ பதிமூணாவது மாடிங்க.. எதிரே பூங்கா.. என்ன விதமான செடிகள், மலர்கள்.. இன்பா கிட்ட கூட சொன்னேன்.. அப்பா வந்திருந்தா திரும்பியிருக்கவே மாட்டாருன்னு..’ வானை நோக்கி கட்டிடங்களைக் கட்டிவிட்டு பூங்காக்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். அடுக்குமாடி கட்டிடம் கட்டும்போதே தீர்மானமாக சொல்லிவிட்டார், தனக்கு ஒரு படுக்கை அறை போதும் என்றும் மீதமுள்ள இடத்தில் மாடித் தோட்டமாவது அமைக்க வேண்டும் என்று. கோமளவல்லிக்காக மாடி தோட்ட அறை கண்ணாடித் தடுப்புகளால் மூடப்பட்டது. பூவின் வாசம் உள்ளே வராது. வெளியே வீசும். ‘ ரெண்டு மகளுங்கன்னு சொல்றீங்க.. அவங்க வந்தா தங்க இடம் இருக்காதே? ‘ கட்டிடக்காரன் அதீதமாகக் கவலைப்பட்ட்டான். ‘ தேவைன்னா ஹால்ல படுத்துக்கறேன்.. அதுவும் வேணுமின்னா இருக்கவே இருக்குது என் பூங்கா.. மாடிப்பூங்கா. ‘ அவரது பிடிவாதத்திற்கு முன்னால் கோமளவல்லியின் வாதம் எடுபடவில்லை. பூங்கா அமைத்தே விட்டார். நூலகத்திற்கு சென்று தோட்டக்கலை நூல்களை வாங்கி பிரதி எடுத்து தினமும் ஒரு செடி என்று சேர்த்து இன்று அவரிடம் இருபத்தி ஐந்து செடிகள் இருக்கின்றன. சில அழகுக்கு, பல மருத்துவத்திற்கு. இரண்டாவது மகள் இன்பா என்கிற இன்பவல்லி நாளை வருகிறாள். அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறாள். குடும்பத்தின் முதல் ஆண் வாரிசு. முதல் பெண்ணுக்கு இன்னமும் கருத்தரிக்கவில்லை. காலையிலிருந்தே ஒரே களேபரம். கோமளவல்லி ஏக உற்சாகத்தில் இருந்தாள். பேரனை பார்க்கப்போகும் சந்தோஷம். காலை ஆறுமணிக்கு விமானம் தரையிரங்குமாம். ஏழரை மணிக்கு வந்து விடுவார்களாம். இன்பாவுக்கு பிடித்த பிடிக் கொழுக்கட்டை, சின்ன வெங்காய சாம்பார் என்று காலை நாலு மணிக்கே எழுந்து செய்ய ஆரம்பித்து விட்டாள். சங்கமேஸ்வரன் ஐந்து மணிக்கு எழுந்து வாக்கிங் போய் விட்டு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு, கொஞ்ச நேரம் அவைகளை வருடி கொடுத்து விட்டு குளிக்கப் போனார். ஆறு மணிக்கு மகிழுந்து வந்து விடும். அவர்தான் விமான நிலையம் போகப் போகிறார். மகிழுந்துவில் இருந்தபோது இன்பா எப்படி தன் தோட்டத்தைக் கண்டவுடன் குதிக்கப் போகிறாள் என்று கற்பனை செய்து பார்த்தார். சிறு வயதிலிருந்தே அவள் இயற்கை பிரியை. தினமும் சைக்கிளில் பூங்கா போக வேண்டும் என்று அடம் பிடிப்பாள். அவள் ரசனைக்கேற்றாற்போல் வெளிநாட்டில் அவள் வீட்டருகிலேயே பூங்கா அமைந்தது அதிர்ஷ்டம் தான் என்று எண்ணினார். அவள் மகனுக்கு பூங்கா பிடிக்குமா? பேரனைக் கைப்பிடித்து ஒவ்வொரு தொட்டியாக அழைத்துச் சென்று செடிகளையும் அதன் வாசத்தையும் குணங்களையும் விளக்க வேண்டும். சிறு மூளை. ஒரே நாளில் அத்தனையும் திணிக்கக் கூடாது. ஒரு நாள் ஒரு தாவரம். விமானம் தரையிரங்கி அரை மணி நேரத்தில் அவர்கள் வந்து விட்டார்கள். இன்பா கொஞ்சம் சதை போட்டிருந்தாள். அவள் பின்னால் டிராலியைப் பிடித்துக் கொண்டு ஒரு வெள்ளைக்காரக் குழந்தை.. அட அது வெள்ளைககாரக் குழந்தை இல்லை. அவர் பேரன் தான். சாமான்களை பின்னால் ஏற்றிய பிறகு சங்கமேஸ்வரன் சொன்னார்: ‘ போரூர்.. கெளம்பினோமே அங்கதான்.. ‘ ‘ அப்பா இப்ப வீட்டுக்கு வேணாம்பா.. நான் நட்சத்திர ஓட்டல்ல அறை போட்டிருக்கேன். சட்டுனு கிளைமேட் மாறினா இவனுக்கு ஒத்துக்காது.. அதுவுமில்லாம வீட்டுல தோட்டம் போட்டிருக்கீங்களாமே? பூ வாசம் டஸ்ட் அலர்ஜி ஏதாவது ஒத்துக்கலைன்னா இவங்க அப்பா என்னை கொன்னுடுவாரு..’ இப்போதெல்லாம் சங்கமேஸ்வரன் தெருவிலிருக்கும் பூங்காவுக்கு போய் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறார். அவரது மாடி தோட்டம் அறையாகிவிட்டது. பேரன் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் கோமளவல்லி இரண்டு வருடங்களாக.               4. ஆலிங்கனம்   சதாசிவ சாஸ்திரிகளுக்கு மேலுக்கு முடியவில்லை. போளூர் கிராமத்தில் இருந்த சொற்ப அந்தணர்களும் பட்டணம் போய் விட்டார்கள் பிழைக்க. மனைவியில்லாத சோகம், வறுமை, யாசிக்காத வைராக்கியம் அவரை இன்னும் படுக்கையில் கிடத்தி விட்டது. இருந்த ஒரே ஓட்டுவீட்டின் வாசற்திண்ணையில் யாராவது கொஞ்சம் அரிசி வைத்து விட்டுப் போவார்கள். அதையும் அவர் தொடமாட்டார்தான். ஆனால் வாழ வேண்டிய மகன் பசியில் துடிப்பானே என்று எண்ணி எடுத்துக் கொள்வார். கொடுப்பது யாரென்று தெரிந்தால் தான் யாசகம். தெரியாத போது இறைவன் கொடுத்ததாக இருக்கட்டும் என எண்ணிக் கொள்வார். வீட்டின் முன் இருந்த ஒரே மாமரத்தின் பருத்த அடிபாகத்தில் கட்டப்பட்டுக் கிடக்கும் வேதா மாடு. விடியல் சிவப்பும் வெள்ளையும் கலந்த தோலுடன் அம்சமாகக் காட்சி அளிக்கும் அது. தினமும் குளித்து, அதை ஒரு முறை சுற்றி விட்டுத்தான் மற்ற காரியமே சாஸ்திரிகளுக்கு. அவரைப் பொருத்தவரை வேதா ஒரு காமதேனு. எதைக் கேட்டாலும் கொடுக்கும் என்கிற நம்பிக்கை. பசுவின் ஒவ்வொரு பாகத்திலும் தேவாதி தேவர்கள் வசிப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. அதன் கோமியம் தான் வீடு சுத்தி. சாணம்தான் வரட்டி. பால்தான் ஆகாரம். வேதாவுக்கும் யாசகம் கேட்காமலே புல்லுக்கட்டு யாராவது போட்டு விடுகிறார்கள். ஒற்றைப் பனைமரம் போல் நிர்கதியாக நிற்கும் சதாசிவ சாஸ்திரிகளுக்கு மேலும் ஒரு சோதனை வந்தது. நாற்கர சாலை வரப்போகிறதாம். அரசு அவர் வீட்டைக் கேட்டது. மாவட்ட ஆட்சியாளர் புண்ணியவான். மேலிடத்தில் சொல்லி, கோயில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அவர் வேலை பார்த்து வந்த சிவன் கோயிலும் சிதிலமாகி இடிந்தே போனது. அதனால் வருமானமும் முடங்கிப் போனது. சாம்பசிவ குருக்கள் அந்த ஊருக்கு வந்த போது பதினாறு வயசிருக்கும். போளுர் கிராமத்திலிருந்து, அவருடைய அப்பாதான் அவரை இங்கே கூட்டிக்கொண்டு வந்தார். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மாட்டு வண்டியில் இருவரும் வந்தது இன்னும் அவருடைய ஞாபகத்தில் நிற்கிறது. ஒத்தை மாட்டுவண்டி. வெள்ளை நிறம், வெய்யில் மழையில் கொஞ்சம் மங்கி மாநிறமாக இருந்தது அந்த மாடு. ஆனால் அதன் கொம்பு வெகு ஜோர். சும்மாவா சொன்னார்கள் மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்று. எப்பவோ கிடைத்த வர்ண மிச்சங்களை, அந்த மாட்டு வண்டிக்காரன், அவன் ரசனைக்கேற்ப, அதன் கொம்புகளில் தடவியிருந்தான். தேர்ந்த வேலையாக இல்லாவிடினும், அது அந்த மாட்டுக்கு அழகு சேர்த்திருந்தது. அதன் கழுத்தைச் சுற்றி அவன் கட்டியிருந்த மணி வண்டியின் ஓட்டத்திற்கு ஏற்றார்போல் ஒலித்துக் கொண்டிருந்தது. செம்மண் பாதையில் வண்டி போன போது சுற்றிலும் பசுமையான வயல்கள் கண்ணுக்கு இதமாக இருந்தன. சாம்புவிற்கு அவருடைய அப்பா சின்ன வயசிலிருந்தே தேவாரம், திருவாசகம் போன்றவற்றையெல்லாம் முறையாக பயிற்சி கொடுத்திருந்தார். சின்ன வயசிலிருந்தே அவருக்கு முருகன் மேல் அளவிடமுடியாத பக்தி. கந்த புராணக்கதைகளை கேட்டவாறே, அம்மா சாதம் ஊட்டியதும் கொஞ்சம் பெரியவனானதும், கோயிலில் நடக்கும் கதாகாலட்சேபங்களுக்கும் போனதும், அவருக்கு முருகன் மேல் அபார பிரியத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது. ஓரளவுக்குமேல் படிக்க வைக்க முடியாத குடும்ப சூழ்நிலை காரணமாக, அவரும் வேலை தேடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேலை செய்வதாக இருந்தால் அது முருகன் கோயிலில்தான், முருகன் காலடியில்தான், என்று ஒரு ஆசையை வைராக்கியமாகவே அவர் வளர்த்துக் கொண்டிருந்தார். சாம்புவைப் பிரிய அவருடைய அப்பாவிற்கு மனமில்லைதான். ஆனாலும் அவர் இருந்த போளூரில் ஒரே ஒரு சிவன் கோயில் தான் இருந்தது. அதில் தான் அவர் அர்ச்சகராக இருந்தார். அவருக்குப் பிறகு சாம்புவிற்கு அந்த வேலை கிடைக்குமென்றாலும் சாம்புவிற்கு அதில் விருப்பமில்லை. அதனால்தான் இந்த மாட்டுவண்டி பிரயாணம்.   பொன்னேரி பக்கத்தில் ஒரு முருகன் கோயில் இருப்பது அவருடைய உறவினர் ஒருவர் மூலமாக தெரிய வந்திருந்தது. அந்தக் கோயிலைப் பார்க்கும் ஆர்வத்தில்தான் அவரும் சாம்புவும் இப்போது இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். மெயின் ரோட்டிலிருந்து அந்தக் கிராமத்துக்குச்செல்ல ஒரு செம்மண் பாதை அமைத்திருந்தார்கள். அந்த செம்மண் பாதையின் முகப்பில் ஒரு வளைவு அமைக்கப்பட்டிருந்தது. ஆண்டார்குப்பம் முருகன் கோயிலுக்கு செல்லும் வழி என்று யாரோ ஒரு முருக பக்தனான பெரும்புள்ளி அமைத்த வளைவு அது. ஒரு டீ கடையும், ஒரு மளிகைக் கடையும் அதனருகில் இருந்தன. வழி நெடுக வேறு எந்தக் கடையையும் காணவில்லை. பாதையில் கொஞ்ச தூரம் போன உடனேயே முருகன் கோயில் கோபுரம் பிரம்மாண்டமாகத் தெரிந்தது. மாட்டுவண்டியைப் பார்த்த உடனேயே கோயில் தர்மகர்த்தா வெளியே வந்தார். விவரம் சொன்னவுடன் அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். கோயிலில் அப்போது அவ்வளவாக கூட்டம் இல்லை. ஓரிரண்டு பேர்தான் இருந்தார்கள். முருகன் சந்நிதிக்கு உள்ளேயே அழைத்துச்சென்றார் அந்த தர்மகர்த்தா. முருகன் சிலை ஆறடி உயரம். கையில் வேல். சிலை மிக அழகாக செதுக்கப்பட்டிருந்தது. சாம்பு வைத்த கண் வாங்காமல் முருகனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரையறியாமல் அந்த முருகனிடம் அவருக்கு ஒரு லயிப்பு ஏற்பட்டுவிட்டது. இனி என் காலம் இந்த முருகனோடுதான் என்று அந்த கணமே தீர்மானித்துவிட்டார். கண்ணை மூடிக்கொண்டு கணீர் குரலில் திருப்புகழை அவர் பாட ஆரம்பித்தது அந்தக் கோயிலின் நாற்புற சுவர்களில் மோதி திரும்பவும் முருகனையே சரணடைந்தது. ஊரில் உள்ளவர்களுக்கு இந்தப் பாடல் மந்திர இசையாக மாறியது. அவர்கள் கவனம் முழுவதும் கோயில் பாலும் அந்தக் குரலின் பாலும் திரும்பியது. சாம்பு கண்ணைத் திறந்த போது அவரைச் சுற்றி ஒரு பெரும் கூட்டமே நின்றிருந்தது. பின்னர் தர்மகர்த்தா வீட்டில் காபியும் சிற்றுண்டியும் சாப்பிட்டுவிட்டு அவர்கள் புறப்படும்போது அந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. சாம்பு எதிர்பார்த்ததுதான். தர்மகர்த்தாவின் விருப்பமும், ஊர் ஜனங்களின் விருப்பமும், ஒன்றாக இருக்க சாம்பு அடுத்த வாரத்திலேயே அந்தக் கோயிலில் அர்ச்சகராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதற்கப்புறம் பதினைந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. நடுவில் சாம்புவுக்கு கல்யாணம் நடந்தது. அது நடந்தே பத்து வருடங்கள் ஓடிவிட்டன. தேவிகா சாம்புவைக் கட்டிக் கொண்டு வந்த நாள் முதலே எதையும் எதிர்பார்க்காதவளாக ஆகிப் போனாள். அவளூக்கென்று அபிலாஷைகள் கிடையாது. சாம்புவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே அவள் கடமையாகக் கொண்டாள். மாட்டுச்சாணத்தில் திருநீறு செய்வதும், சாம்புவின் உடைகளைத் துவைத்து உலர்த்துவதுமாக அவள் பொழுது கழிந்தது. மடிசாரில் அவளும், பஞ்சகச்ச வேட்டியில் சாம்புவும் வெளியே விசேசங்களுக்குப் போகும்போது, ஊர் மக்கள் முருகனை மறந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு தேஜஸ் அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அவர்களுக்கு வாரிசில்லை என்பதுதான் சதாசிவ சாஸ்திரிகளுக்கு இருந்த ஒரே குறை. அப்பா சதாசிவ சாஸ்திரிகள், வேதா மாட்டைப் பிரிய முடியாமல், போளூரிலேயே தங்கிவிட்டார். அவர் போய் சேர்ந்து, போனவருடம் ஆப்தீகம். அவர் போன அடுத்த நாளே வேதா மாடும், எதையும் உண்ணாமல் உயிர் நீத்தது அதிசயம். வேதாவின் வாரிசுகள் வளர்ந்து, இன்னமும் போளூர் நிலங்களில் மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். சாம்பு முதன்முதலில் ஏறிக் கொண்டு வந்த மாட்டுவண்டியை இழுத்தது, வேதாவின் மகன் குமரன் தான். குமரன் இன்னமும் சாம்பு வீட்டில்தான் இருக்கிறான். இந்த பதினைந்து வருடங்களில் கோயிலும் மாறித்தான் போய்விட்டது. இப்போது அந்தக் கோயில் அரசின் அறநிலையத்துறையின் கீழ் வந்துவிட்டது. கோயிலின் சொத்துக்கள் சரிபார்க்கப்பட்டு அதன் வருமானம் கணக்கெடுக்கப்பட்டது. சாம்புவுக்கு ஒரு வீடும் அரசு தந்திருந்தது. கோயில் நிலத்தில் சாகுபடியாகும் நெல் மாதத்திற்கு பதினைந்து படி அவருக்கு கொடுக்கச் சொல்லி அரசு ஆணை இருந்தது. சமீபத்தில் அந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் கூட நடந்தது. ஆறு கால பூஜை , விஷேச அர்ச்சனை, சிறப்பு வரிசை என்று கோயில் பிரபலமாகிவிட்டது. இந்தக்கோயிலில் பதினாறு வயது சிறுமியாக வேலைக்கு வந்தவள் தான் கண்ணம்மா. அவள் புருஷன் அந்தக் கோயிலில் வாட்சுமேனாக இருந்தான். அவனைக் கல்யாணம் செய்துகொண்டு, இந்த ஊருக்கு வந்தவள்தான் அவள். பிள்ளை பிறப்பிற்குக்கூட அவள் அம்மா வீட்டிற்கு போகவில்லை. சாம்புவுக்கு காலை பூஜைக்கு பூ பறித்துக் கொடுப்பதிலிருந்து, அபிஷேகத்திற்கு தண்ணீர் கொண்டுவருவது வரை அவள் வேலை. மிச்ச நேரம் கோயிலைக் கூட்டி சுத்தம் பண்ணுவதும், அவள் வேலைதான். அவள் மகள் வள்ளி, அம்மாவுடன் கூட வருவாள். முருகன் மீது அவளுக்கு அலாதி பிரியம். தெப்பக்குளத்தில் மீன்களுக்கு போடுவதற்காக, பக்தர்கள் வாங்கும் பொர் பொட்டலங்களில் உள்ள முருகன் படங்களையெல்லாம், அவள் சேகரித்து வைத்திருப்பாள். சத்துணவைக் காரணம் காட்டி, கண்ணம்மா அவளை அரசு ஆரம்பப் பள்ளியில் சேர்த்திருந்தாள். அங்கும் அவளுடைய நோட்டுப்புத்தகங்களெல்லாம் முருகன் படம் போட்டதாகவே இருக்கும். அவளுக்கு இப்போது பதினாறு வயது. “உன்னிய கட்டிக்க எந்த முருகன் வரப்போறானோ” என்று கண்ணம்மா அங்கலாய்ப்பாள். “வேறெந்த முருகன் வருவான். இந்த முருகன்தான் வருவான்” என்று வள்ளி பதில் சொல்லுவாள். சாம்புவின் குரல் கேட்கும்போதெல்லாம், வள்ளி கோயிலுக்கு ஓடோடி வந்துவிடுவாள். சிறுமியாக இருக்கும்போதே, அவள் சாம்புவின் குரலுக்கும், திருப்புகழுக்கும் பழக்கப்பட்டிருந்தாள். இரவு ஒலைக் குடிசை வெளியே, கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி அவள், அந்த பாடல் வரிகளை, நினைவுக்கு கொண்டு வந்து திரும்பப் பாடிப்பார்ப்பாள். செந்தமிழ், நாப்பழக்கத்தால் அவளுக்கு வசமாகியது. பாடப்பாட குரலும் இனிமையாயிற்று. இப்போதெல்லாம் சாம்புவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் வள்ளிதான் பாடுகிறாள். அவளுக்கும் கூட்டம் சேர்கிறது. தினமும் மலர் மாலை ஒன்று அவள் கையாலேயே கோர்க்கப்பட்டு கோயிலுக்கு வந்துவிடும். முருகனுக்கு அணிவிக்கப்படும் முதல் மாலை அதுதான். வீட்டுக்கு விலக்காகி நிற்கும் நாட்களில், கண்ணம்மாவே மாலையைக் கொண்டு வந்து தந்துவிடுவாள். அப்போதும் வள்ளி திருப்புகழ் பாடுவதை நிறுத்த மாட்டாள். ஆனால் அவள் எதிரில் முருகன் இருக்க மாட்டான். வேதா மகன் குமரன் இருப்பான். கண்ணம்மா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாள். வள்ளி மறுத்துப் பேசி தோற்றுப் போனாள். ஆடிக் கிருத்திகை அன்று, கோயிலில் கூட்டம் அலை மோதியது. வள்ளியின் முதல் மாலைக்காக சாம்பு காத்திருந்தார். அதோ வள்ளி வந்துவிட்டாள். அவள் கையில் பெரிய மாலை. மூருகனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டுவந்த வள்ளி, ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவள் போல் காணப்பட்டாள். சாம்பு மாலையை வாங்க கை நீட்டினார். வள்ளி அவரையும் தாண்டி சந்நதிக்குள் நுழைந்தாள். அவள் கையாலேயே முருகன் கழுத்தில் மாலை போடப் போனாள். சாம்புவுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது. அவளைத் தடுக்கும் நோக்கத்துடன், இடையில் புகுந்தார். கண்களைத் திறந்த வள்ளி திகைத்துப் போனாள். அவள் கொண்டுவந்த மாலை இப்போது சாம்புவின் கழுத்தில் இருந்தது. முருகன் கை வேல் லேசாக அசைந்தது போலிருந்தது அவளுக்கு. அடுத்த கணம் அவள் சாம்புவின் காலடியில் இருந்தாள். சாம்பு அவள் தோள்களைத் தொட்டுத் தூக்கினார். அவளைத் தாங்கிக்கொண்டே வெளியே நடந்தார். கோயில் வாசலில் ஒரு வேனில் வந்திறங்கிய பக்தர்கள் கூட்டம் ஒன்று ‘ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என்றது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு சாம்பு நடந்து கொண்டிருந்தார். அவரது அணைப்பில் வள்ளி. முருகன் திருக்கல்யாணத்தைப் பார்த்த பரவசம் பக்தர்களுக்கு. வீட்டில் பிரளயம் வெடிக்கப்போகிறது என்று ஊர் முழுக்கப் பேசிக்கொண்டார்கள். வீடு வந்ததை உணர்ந்து சாம்பு நிமிர்ந்து பார்த்தார். கண்ணம்மா கண்களில் நீர் பொங்க, புடவையால் வாய் பொத்தி அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள். வாசலில் நெற்றி நிறைய குங்குமத்துடன், வாய் நிறைந்த புன்னகையுடன் தேவிகா நின்றிருந்தாள். அவள் கையில் ஆரத்தி தட்டு இருந்தது. 5. தனாவின் ஒரு தினம்   பட்டினப்பாக்கத்திலிருந்து கோட்டூர்புரம் செல்லும் போது பேருந்தில் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலைக் பலமுறை கடந்திருக்கிறான். உள்ளே எப்படி இருக்கும் என்கிற எண்ணம் கூட அவனுக்கு வந்ததில்லை. அதெல்லாம் அவன் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவன் பெயர் தனசேகர். தான்யா என்கிற புனைப்பெயரில் ஏதாவது கவிதை எழுதுவான். ஏதாவது ஒரு சிற்றிதழ் அதை வெளியிடும். தனா பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒன்றில் குடியிருக்கிறான். அது கட்டப்படும்போது அப்போதைய ஆளுங்கட்சியின் வட்டம் ஒன்று பினாமி பெயர்களில் வளைத்துப் போட்ட பல குடியிருப்புகளில் அதுவும் ஒன்று. அவனுடன் இன்னும் மூன்று பேர் இருக்கிறார்கள். அசோக்ராஜா, பாரதிராஜா பாதிப்பில் சினிமாவுக்கு வந்தவன். பழுப்பேறிய காகிதங்கள் அடங்கிய நான்கைந்து பைல்களில் அவன் கதைகள் மக்கிக் கொண்டிருக்கின்றன. அவன் தினமும் ஏதாவது ஒரு ஷீட்டிங் சென்று வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறான். கிடைக்கும் பேட்டாவில் வாரக் கடைசியில் தண்ணி போட்டுவிட்டு கதை சொல்ல ஆரம்பித்துவிடுவான். அவன் இயக்குரானால் தனாதான் பாடலாசிரியர். அறையில் இன்னொருவன் பாண்டு. ஆனால் அவனை எல்லோரும் பல்லாண்டு என்று தான் கூப்பிடுவார்கள். அத்தனைக்கு அவன் முன் பல் துருத்திக் கொண்டு இருக்கும். முக்கால் மண்டை வழுக்கையுடன் நீள முடி வளர்த்து ரப்பர் பேண்ட் கொண்டு குடுமி போல் கட்டியிருப்பான். எப்போதும் கருப்பு கலரில் முஸ்லீம் கேப் அணிந்திருப்பான். அதில் இரண்டு சில்வர் கலர் பிச்சுவாக்கள் எக்ஸ் போல இருக்கும். அதிகம் பேச மாட்டான். அடிக்கடி இரண்டு மூன்று நாட்கள் காணாமல் போவான். வரும்போது கை நிறைய பணத்தோடு வருவான். இது தவிர பகலில் தூங்கிக் கொண்டே இருக்கும் ராமசாமி. ராமசாமி கொஞ்சம் வயசாளி. இரவு காவலாளியாக ஏதோ வங்கியில் பணி புரிகிறார். அதனால் பகலெல்லாம் தூக்கம். எந்நேரமும் தூங்கிக் கொண்டே இருக்கும் அவர் எப்போது சாப்பிடுவார் என்று தனா யோசித்திருக்கிறான். ஆனால் அவர் சாப்பிடுவது உண்டு என்பது எப்போதாவது மூலையில் கிடக்கும் வாழையிலை குப்பை சொல்லிவிடும். நம் கதையில் தனா தான் முக்கியம். மற்ற மூன்று பேர் இல்லை. சோதனையாக அன்று அவன் போன பேருந்து அடையார் பார்க் ஓட்டல் முன் முனகிக் கொண்டு நின்று போனது. தனா முப்பது ரூபாய்க்கு சரவணாவில் வாங்கிய டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்த்தான். இன்னமும் இருபது நிமிடங்களில் அவன் பட்டறையில் இருக்கவேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரது இல்லத்துக்கு எதிரில் கோட்டூர்புரம் பாலத்தின் இறக்கத்தில் கரையோரமாக இருக்கும் நான்கைந்து தகரக் கொட்டகையில் ஒன்றில் இருக்கிறது அந்த லேத் பட்டறை. ஒன்பது மணிக்குப் போனால் ஆறு மணி வரையில் நீளமான இரும்புத்துண்டங்களை கடைய வேண்டும். கை விட்டுப் போகும். ஆனால் வேறு வழியில்லை. அதுவே பூவாவுக்கு வழி. ஊரில் தம்பி தங்கை படித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா ஆடு மாடு மேய்த்து ஏதோ அவர்களை வளர்த்துக் கொண்டிருக்கிறாள். ஓட்டுனர் எல்லோரையும் இறக்கி விட்டிருந்தான். அவனைச் சுற்றி ஏகக் கூட்டம். இதை எப்படி எதிர்கொள்வது என்று தனாவிற்குத் தெரியவில்லை. மயில்சாமி சூப்பர்வைசர் சவுக்கு நாக்குக்காரன். லேத்துக்கு தோதாக "ஓ" போட்டு பேசுவான். அதில் தனா சங்கடப்பட மாட்டான். எதுகை மோனையை ரசித்து விட்டு விடுவான். எதிர்த்தால் சுண்ணாம்பு தடவி விடுவான் மயில்சாமி. நிமிடங்கள் வினாடிகளைப் போல கரைந்து கொண்டிருந்தன. எல்லோருக்கும் அவசரம். ஆனால் அவனுக்கு அதுவே அவசியம். சால்ஜாப்பு சொல்ல முடியாது. ஜாபு போய்  விடும். ‘ எக்ஸ்க்யூஸ்மி ‘ குரல் வந்த திசையில் பார்த்தால் ஒரு இருபது வயசுக்காரி. படு ஸ்டைலாக இருந்தாள். நுனி நாக்கு ஆங்கிலம். டெல்லிக்காரியாம். ஊர் தெரியாதாம். ஆட்டோவில் போக பயமாம். கோட்டூர்புரம் வரை வரமுடியுமா என்றாள். ‘ அட சாலைக்கருப்பா ‘ என்றான். ஆச்சர்யம் வரும்போது அம்மா அடிக்கடி சொல்வது. இவளுடன் ஆட்டோவில் சென்றால் நேரத்துக்கு வேலைக்கு சென்று விடலாம். ஆனால் பணம் கொடுக்காமல் ஓடி விட்டால்.. அவன் மனதை அவள் படித்திருக்க வேண்டும். ‘ ஆட்டோ ‘ என்றாள். கையிலிருந்த ஐம்பது ரூபாய் தாளை அவன் கையில் திணித்தாள். சிக்னலில் நிற்கும்போது ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடிவிட்டால் ஐம்பது ரூபாய் லாபம் என்று எண்ணினான். அவள் எச்சரிக்கை பேர்வழியாக இருந்தாள். அவன் உட்கார விட்டு ஏறும் வழியில் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டாள். பாலத்தில் அவன் இறங்கும்போது அவளும் இறங்கிக் கொண்டாள். டிரைவர் கொடுத்த முப்பது ரூபாயை கவனமாக பையில் போட்டுக் கொண்டாள். ஆட்டோ டிரைவர் அவன் பாலம் இறக்கத்தில் போகும்வரை பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து அதே அடையார் பார்க் ஓட்டல் முன்பாக அவளைப் பார்த்தான். இப்போது சேலை கட்டியிருந்தாள். தமிழ் பெண் போலத் தெரிந்தாள். எவனுடனோ பேசிக் கொண்டிருந்தாள். கையில் நூறு ரூபாய் தாள் இருந்தது. ஆட்டோ ஏறி அவர்கள் போய் விட்டார்கள். இம்முறை எதிர்புறம். பத்து நாட்களுக்குப் பின் தினச்செய்தியில் போட்டார்கள். ஆட்டோ டிரைவர்களை ஏமாற்றி கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு. பக்கத்திலேயே ஏமாந்த ஆட்டோ டிரைவர்களின் படங்களைப் போட்டிருந்தார்கள். அதில் ஒன்றில் அவன் அவளுடன் போன ஆட்டோ டிரைவர் அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான். தனசேகர் இப்போதெல்லாம் தாடியுடனே திரிகிறான். கண்களில் கறுப்புக் கண்ணாடி. ஆட்டோ டிரைவர்களைப் பார்த்தால் தலையை குனிந்து கொள்கிறான்.                                           6. அரவம்   மருதன் நான்கு நாட்களாகத் தூங்கவேயில்லை. வந்தவாசிக்கு அருகிலிருக்கும் இடைக்கல் எனும் கிராமத்தில் விவசாயக் குடும்பம். கொஞ்சம் நிலம். பம்பு செட் இல்லை, கிணறு இல்லை. வானம் பார்த்த பூமி. மாரி பொய்த்துவிட்டால் நகரம் நோக்கி நகர வேண்டியது தான். ஊரின் பெரும்பாலான மக்களுக்கு இதே நிலைதான். சென்னை பெருநகரம் இவர்களைப் போன்றவர்களை வாரி அணைத்து கொள்கிறது. கட்டிட வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கும் புறநகர் பகுதிகள் இவர்களது தொழில் மையம். எங்காவது வாட்ச்மேன் வேலை கிடைக்கும். நெளிவு சுளிவு கற்றுக் கொண்டால், பெரியாள். மேஸ்திரி அன்புக்கு பாத்திரமாகி விட்டால் கொத்தனார். மருதனும் அப்படி வந்தவன் தான். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. மழைக் காலம் முன்பாக கட்டிடங்களின் மேல்தளங்களுக்கு கான்கிரீட் போட்டு விடுவார்கள். இருப்பதியொரு நாட்கள் முட்டு நிற்க வேண்டும். அப்புறம் செண்ட்ரிங் பலகைகளைக் கழட்டி கல் தச்சன் கொத்தி பூசு வேலை நடக்க வேண்டும். எப்படியும் நாற்பது நாட்கள் ஓடி விடும். அந்தக் காலத்தில் தான் மருதன் தன் ஊருக்குப் போவான். முதல் தூறலுக்கு காத்திருந்து மல்லாட்டையோ, எள்ளோ விதைப்பான். சில சமயம் கரும்பும் உண்டு. செம்மண் பூமி செழிப்பாக இருக்கும். ஒரு வாரம் மழை பெய்தால் கூட போதும். அதிக மழை பயிருக்கு ஆபத்து. விதை வேர் விட்டவுடன் சென்னை வந்து விடுவான். அவன் மனைவி கிளியம்மா பார்த்துக் கொள்வாள். அவன் ஊர் போன நாட்களில் பக்கத்து குடியிருப்பு வாட்ச்மேன் பார்த்துக் கொள்வான். அவன் போகும்போது இவன். பொங்கல் தீபாவளி காலங்களில் குடும்பத்தோடு வருவான் மருதன். மாம்பலம் கடைகளில் அலைந்து பண்டிகைத் துணிமணிகளை வாங்குவார்கள். ஒரு வருடத்திற்கு அவைதான் உடுப்பே. இந்த நான்கு நாட்களாக அவன் தூங்கவேயில்லை. செண்டரிங் அடிப்பதும், கான்கிரிட் போட ஜல்லி, மணல் ஏற்றுவதுமான வேலைகள். கம்பி வந்து இறங்கியிருக்கிறது. சிமெண்ட் மூட்டைகளை த்ரை தளத்தில் முழுவதுமாக அடுக்கியிருந்தார்கள். மீதமான பலகைகளும் கொம்புகளும் ஒருபக்கம். இன்று தான் கொஞ்சம் வேலையும் சத்தமும் குறைந்திருக்கிறது. படுக்க தோதான இடம் பார்த்தான் மருதன். செண்டரிங் பலகை! இரண்டு அடுக்காக அடுக்கப் பட்டிருந்த பலகைகள் அவனுக்கு ஒரு கட்டிலைப் போலவே காட்சியளித்தன. ‘ வா.. வந்து தூங்கு.. ‘ காலை நீட்டி தலையைச் சாய்க்கும்போதுதான் அதைக் கவனித்தான். பலகை இடுக்கிலிருந்தது அது. மினுமினுப்பாக, வரிவரியாக.. நாகசாமி.. அசையாமல் இன்னமும் கூர்ந்து கவனித்தான். வால் இடுக்கில் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டிருக்கிறது. உடம்பை அப்படியும் இப்படியும் நெளிக்கிறது. அவனுக்கும் அதற்கும் அரை அடி இடைவெளிகூட இல்லை. அசைந்தால் போட்டு விடும். கட்டை யால் அடித்து விடலாமா? நாகசாமி எங்க குலதெய்வமாச்சே.. உயிருக்கு முன்னால் தெய்வமாவது ஒன்றாவது.. கிளியம்மா, புள்ளைங்க எல்லாம் கண் முன் வந்தார்கள். கழற்றிப் போட்ட லுங்கி காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அசையும் போதெல்லாம் நாகம் தலை தூக்கிப் பார்த்தது. லேசாக படம் எடுத்தது. பாதி சாயப்போகும் நிலையில் அவன் உடல் இருந்தது. ஒரு கையால் லுங்கியை இழுத்து நாகத்தின் தலைமேல் போட்டு கெட்டியாக பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் வால் மாட்டியிருந்த பலகை தூக்கினான். வால் விடுபட்டு விட்டது. பலம் கொண்ட மட்டும் கையை வீசி லுங்கியைத் தூக்கி எறிந்தான். நிலவொளியில் நாகம் விடுபட்டு புல்லில் மறைந்தது. அன்றிரவும் மருதன் தூங்கவில்லை           7.மல்டிப்ளெக்சும் மஸ்தான் பாயும்   குன்றத்தூர் ரோடில் போனீர்களானால் பெரிய பணிச்சேரி என்று ஒரு பகுதி வரும். அந்தப் பகுதியில் போய் வாப்பா கடை என்று கேட்டால் யாரும் காட்டுவார்கள். காதர் பாய் அந்தக் கடையின் சொந்தக்காரர். இமிடேஷன் நகைகளை விற்கும் கடை அது. இப்போது பரவிக் கிடைக்கும், ஒரு கிராம் கோல்ட் கடைகளுக்கு முன்னாலேயே ரோல்ட் கோல்ட் கடைகள் சென்னையில் பிரசித்தம். அப்படி ஒரு கடைதான் காதர் பாயின் கடை. மங்களம் மாமி வாப்பா கடையில்தான் எல்லாவற்றையும் வாங்குவாள். சுற்றியிருக்கும் புர்க்கா போட்ட இளம்பெண்கள் ‘ வாப்பா.. அது.. வாப்பா இது.. என்கிறபோது ‘ வயசானவர்.. அவரைப் போய் வாப்பா, போப்பான்றயே ‘ என்று அவர்களைக் கடிந்து கொள்வாள். அப்புறம் என்ன.. புர்க்காவுக்குள் ஒரே சிரிப்பு சத்தம் தான். காதர்பாய் ஹஜ் யாத்திரை போய் விட்டு வந்தபிறகு பிறந்தவன் மஸ்தான் பாய். உண்மையிலேயே அவன் பி ஓ ஒய் பாய்தான். பதினாறு வயது. ஹ¤சைனி பள்ளியில் பத்தாவது தாண்டுவதற்குள் அவனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிவிட்டது. காதர் பாய் அறுபது வயது தாண்டியும் வெல்டராக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்த்தார். கிடைத்த கணிசமான வருமானத்தில் வாங்கிப் போட்டதுதான் இந்த பெரிய பணிச்சேரி இடம். ஆறு சென்ட் இடம் சல்லிசாகக் கிடைத்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு இஸ்லாமியக் குடும்பங்கள் இருந்தன. அவர்களெல்லாம் இறைச்சி வியாபாரத்திலோ, அல்லது பிரியாணி, சூப் கடைகளோ வைத்து பிழைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த மாதிரி கடைகள் எதுவும் அந்தப் பகுதியில் இல்லை. எல்லோரும் அண்ணாசாலை தர்காவிற்கு அருகிலோ அல்லது திருவல்லிக்கேணி பெரிய மசூதி அருகிலோ கடை போட்டிருந்தார்கள். காதர் பாய் ஆம்பூரில் பெண் எடுத்திருந்தார். அதிகம் படிப்பில்லாத பெண் நூர்ஜகான். ஆனால் அழகாக இருந்தாள். காதர் பாய் நல்ல ஆகிருதி. கலியாணம் பாய்க்கு முப்பத்தி ஐந்து வயதாகும்போதுதான் நடந்தது. அப்போது நூருக்கு பதினாறு வயது. இரண்டு வருடங்கள் ஆம்பூரிலேயே விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு போய் போய் வந்தார் காதர்பாய். வரும்போதெல்லாம் பாதாம் பிஸ்தா என்று கொடுத்து நூரைத் திங்கச் சொல்வார். அவ்வளவுக்கு நூர் மிகவும் ஒல்லி. என்ன பாதாம் பிஸ்தா சாப்பிட்டாலும் நூர் தேறவேயில்லை. முதல் பெண் ரிஸ்வானா பிறந்தபோது காதர் பாய் ஊரிலேயே இல்லை. டிரங்கால் போட்டு விவரம் சொன்னார்கள். முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததில் பாய்க்கு கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் சாக்லேட் வாங்கி நண்பர்களுடன் கொண்டாடினார். காதர் பாய் தமிழ் முஸ்லீம். லப்பே என்று சொல்வார்கள் மற்ற முஸ்லீம்கள். உருது சுட்டுப்போட்டாலும் வராது. வெளிநாட்டில் இருந்த போது, பிழைப்புக்காக, கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டார். ஆனாலும் பேசும்போது அவருக்கு குமட்டியது. தமிழ் முஸ்லீம்களாக யாரும் கிடைப்பார்களா என்று தேடியபோது கிடைத்தவன்தான் அலிபாய். அலிபாய் பழக்கவழக்கங்களில் ஒரு அந்தணன். இருபது வருடங்கள் சென்னையில் ஐயங்கார் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு, ஐம்பது சொச்ச வயதில் கத்தார் வந்தவன். அப்படியே சவுதி அரேபியா, அபுதாபி என்று சுற்றியவன். இப்போது இங்கு கடலின் நடுவில், எண்ணை எடுக்கும் நிறுவனத்தில், உதிரி பாகங்கள் வினியோகப் பிரிவில் இருக்கிறான். ஒரு அபூர்வமான வேளையில், கம்பெனி சாப்பாட்டுக் கூடத்தில், அவனைச் சந்தித்தார் காதர் பாய். தட்டு நிறைய காய்கறிகளுடன், தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார். அவர் தட்டில் எலும்புத் துண்டுகளுடன் பிரியாணி இருந்தது. அத்தனையும் குப்பைத்தொட்டியில் கொட்டி விட்டு, வேறு ஒரு தட்டு எடுத்து, காய்கறிகளையும் தயிர் சோற்றையும் நிரப்பிக் கொண்டார் காதர் பாய். அலிபாய் அருகில் போய் உட்கார்ந்தார். தட்டை பார்த்துவிட்டு, அவரை ஏறெடுத்தான் அலிபாய். சிநேகமாய் சிரித்தான். பற்றிக் கொண்டது. அலிபாய் காலை எட்டுமணி முதல் இரவு எட்டுமணி வரை வேலை செய்வான். அவனுக்கு ஓவர்டைமையும் சேர்த்து அறுபதாயிரம் சம்பளம். காதர் பாய்க்கு அதில் பாதி யிலும் பாதி. அலிபாயின் அறையைப் பகிர்ந்து கொண்டவன், வேலையை விட்டு நின்று விட்டான். காதர்பாய் எப்படியோ அலியின் அறையில் சேர்ந்து கொண்டார். இருவரும் மாதம் ஒருமுறை, நகரத்திற்கு போய், பழைய தமிழ் பட கேசட்டுகளாக வாங்கி வருவார்கள். இரவு பன்னிரெண்டு மணிவரை, அதை டெக்கில், போட்டு சின்ன தொலைக்காட்சிப் பெட்டியில் பார்ப்பார்கள். காதர் பாய் அசைவத்தை அறவே மறந்து விட்டார். ‘ என்னா ஸ்டெப்ஸ் பாய் ‘ என்று உத்தமபுத்திரனை பனிரெண்டாவது தடவை பார்த்து விட்டு சிலாகிப்பார். பாய் என்றால் உருதுவில் சகோதரன் என்று அர்த்தம். காதர் பாயைப் பொறுத்தவரை அலிபாயை ஆத்மார்த்தமாக ஒரு சகோதரனைப் போலவே உணர்ந்தார். காதர் பாய் வருடம் ஒரு முறை சென்னை வருவார். ஆம்பூர் போய் அரை மாசம் இருப்பார். அடுத்த வருடம் போனபோது, ஹசீனா இரண்டு மாதம். இப்படியே நாலு பெண் பிறந்த பின்னும், காதர் பாயின் ஆண் வாரிசு ஆசை நிறைவேறவேயில்லை. கொஞ்சம் காலம் இனிமே குழந்தை வேண்டாம் என்று தவிர்த்தார். பிள்ளைகள் பெருகியதாலும், மாமனாருக்கு வயதாகி விட்டதாலும் பெரிய பணிச்சேரியில், ஒரு ஷீட் வீடு கட்டி, குடும்பத்தை இடம் பெயர்த்தார். புது வீடு கட்டிய மகிழ்ச்சியில் நூர் கருவுற்றாள். காலம் கடந்து எதிர்பாராமல் பிறந்தவன் தான் மஸ்தான் பாய். காதர் பாய்க்கு தன் ஒரே மகனின் பேரில் ஏக வருத்தம். படிப்பு ஏறவில்லை. தொழுகைக்கும் சரியாக வருவதில்லை. ஒரே மகனை கண்டிக்கவும் முடியாமல் தண்டிக்கவும் முடியாமல் தவித்தார். காதர்பாய் வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு பெரியபணிச்சேரியில் கடை வைக்கும்போது மஸ்தானுக்கு பதினேழு வயது. விடலைகளுக்கே உரித்தான எல்லாப் பழக்கங்களும் அவனுக்கு இருந்தன. சில்க் புல்கை சட்டையை, எம்ஜிஆர் பாதிப்பில் புஜம் வரையிலும் உருட்டி விட்டு, முதல் இரண்டு சட்டை பட்டன்களை கழட்டி விட்டு சுற்றிக் கொண்டிருப்பான். இடையில் பளபளவென்று சிங்கப்பூர் லுங்கி. கண்களில் ரேபான் கூலிங்கிளாஸ். காதர் பாய் வெளிநாட்டில் இருக்கும்போதே நான்கு பெண்களுக்கும் கலியாணம் ஆகிவிட்டது. ஒன்றுக்கும் அவர் வரவேயில்லை. பணம் அனுப்பவதோடு சரி. மூணு வயதில்தான் முதல் பேரனையே பார்த்தார். அவர் அப்படிச் செய்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அவனுடன் இருந்த அலிபாய், பாஸ்போர்ட் வாங்கிக்கொண்டு லீவு எடுத்துக் கொண்டு, ஊருக்குப் போனவன்தான். வரவேயில்லை. அவனே வேலையை விட்டு நின்றுவிட்டான் என்று எண்ணினார். தன்னிடம் கூட சொல்லவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது. புதிதாக சென்னையிலிருந்து வேலைக்குச் சேர்ந்த ஒருவன், அவரிடம் பிரிக்கப்பட்ட ஒரு கடித உறையைக் கொடுத்தான். அதைப் பிரித்து படித்தபிறகுதான் உண்மையே தெரிந்தது. அலிபாய் விடுப்பு முடிந்து மீண்டும் வேலைக்குச் சேர கேட்டபோது, கம்பெனி அதைக் கண்டு கொள்ளவேயில்லை. அவனுக்குப் பதிலாக, பாதி சம்பளத்தில் இன்னொருவனை சேர்த்துக் கொண்டது. காதர்பாய்க்கு அஸ்தியில் சுரம் கண்டது போல் ஆனது. அதற்குப் பிறகு அவர் விடுப்பு கேட்கவேயில்லை. அதை கம்பெனிக்கே கொடுத்து விட்டு பணமாக வாங்கிக் கொண்டார். காதர் பாய் எல்லோரையும் போல இறைச்சி கடைதான் வைத்திருப்பார். ஆனால் அலிபாயுடன் ஏற்பட்ட பழக்கம் அவரைத் தடுத்தது. அதனால்தான் ரோல்ட் கோல்ட் நகைக்கடை வைத்தார். அவர் வருவதற்குள் பெரியபணிச்சேரி வெகுவாக மாறியிருந்தது. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்துகள் ஓடிக் கொண்டிருந்தன. நிறைய வீடுகள் வந்திருந்தன. முகத்தில் மச்சம் போல பத்துக் குடும்பங்கள் தான் இஸ்லாமியர்கள். மீதி எல்லாம் வேறு மதத்தவர்கள். ஒரு கோயில், ஒரு திருச்சபை என்று அந்தப் பகுதி வெகுவாக மாறி இருந்தது. இரண்டு சினிமா தியேட்டர்கள் கூட வந்துவிட்டன. மகள்கள் கலியாணம் ஆன சூழலில் காதர் பாய், நூருடனும், மகனுடனும் அந்த தியேட்டர்களுக்கு படம் பார்க்க போவார். வயது ஏற, ஏற மஸ்தான் அவர்களுடன் வர மறுத்து விட்டான். ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு, நண்பர்களுடன் பூந்தமல்லியோ தாம்பரமோ போய் விடுவான். அவனுக்கு ஏசியும் டிடிஎஸ்சும் வேண்டியிருந்தது. புஜங்கள் தெரிய உருட்டிய சட்டையும் பள பளவென்ற லுங்கியுமாக அவன் நண்பர்கள் புடை சூழ போகும்போது காதர் பாய் பெருமையுடன் பார்ப்பார். ‘ தூள் விக்ரம் மாதிரி இருக்கான்ல ‘ என்பார் நூரிடம். விருகம்பாக்கத்தில் மல்டிப்ளெக்ஸ் திறந்தபோது, மஸ்தானின் நண்பர்களெல்லாம் அதைப் பார்த்துவிட்டு, ஆகா ஓகோ என்று வியந்தார்கள். மஸ்தான் பாய் அதைப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தான். ஒரு டிக்கெட் விலை நூற்றிருபது ரூபாய் என்கிற போதுதான் அவனுக்கு கலக்கம் ஏற்பட்டது. மூன்று வாரம், நண்பர்களுடன் சினிமா போவதாகப் போக்கு காட்டிவிட்டு, பணத்தைச் சேர்த்தான். நூற்றைம்பது சேர்ந்தவுடன், காலையிலிருந்தே பரபரப்புடன் காணப்பட்டான். கடைசியாக வாங்கிய ரோஸ் கலர் சட்டையைப் போட்டுக் கொண்டான். புஜம் தெரிய மடித்து விட்டுக் கொண்டான். கடைசி மடிப்பில் மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுகளை மடித்து செருகிக் கொண்டான். புதிதாக வாங்கிய கறுப்புக்கலர், நாலு பேக்கட் பர்முடா நிக்கரை மாட்டிக்கொண்டான். நீலக்கலர் சில்க் லுங்கியை கட்டிக் கொண்டான். காலர் அழுக்காகி விடும் என்று, கறுப்புக் கைக்குட்டையை மடித்து, கழுத்துக்குப் பின்னால் சொருகிக் கொண்டான். வெள்ளைச் செருப்பு மாட்டிக் கொண்டான். ரேபான் அணிந்து கொண்டான். கச்சேரி ரோடு அக்பர்பாய் செண்ட் கடையில் வாங்கிய வாசனை அத்தரை உடல் முழுவதும் தெளித்துக் கொண்டான். சட்டை கசங்கிவிடும் என்று, 88ல் கடைசி படியில் பயணம் செய்து, விருகம்பாக்கம் வந்தான். மல்டிப்ளெக்ஸில் ஏகக் கூட்டம். நவநாகரீக உடைகளில் யுவன்களும் யுவதிகளும். தோளில் கறுப்புப் பை மாட்டிக் கும்பலாக இளைஞர்கள். ஐந்து மாடிக் கட்டிடம். பெரிதுபெரிதாக சினிமா விளம்பரப் படங்கள். மலைத்துப் போய்விட்டான் மஸ்தான் பாய். நான்கு யுவதிகளுக்கும் நான்கு இளைஞர்களுக்கு இடையில் தன்னை நுழைத்துக் கொண்டு, கையை மட்டும் நீட்டினான் டிக்கெட் கவுண்டரில் . மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுக்கள் இருந்தன அவன் கையில். டிக்கெட் கொடுப்பவன் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. கணினியைத் தட்டிக் கொண்டே ஒலிபெருக்கியில் ‘ பத்தரை மணிக் காட்சி, நண்பன், ஒரு டிக்கெட் ‘ என்று சொல்லி கையில் டிக்கெட்டை திணித்தான். கையில் டிக்கெட் வந்தவுடன் அவனது தன்னம்பிக்கை மீண்டது. ஸ்டைலாக உள்ளே நுழைந்தான். மாடிப்படியில் கால் வைத்தவுடன் அவை ஓட ஆரம்பித்து விட்டன. அலறிப் போய் கீழே குதித்து விட்டான். பின்னால் சிரிப்பு சத்தம் கேட்டது. கறுப்புப்பை ஆசாமிகள் கும்பலாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவனைத் தள்ளிவிட்டு ஒருவன் படியில் தாவி ஏறினான். பின்னாலேயே அவனது சகாக்கள். படிகள் ஓடத் தொடங்கின. மேலே போய் எல்லோரும் கையாட்டினார்கள். ஒருவழியாக நடப்பது நடக்கட்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனும் படியில் நின்று கொண்டான். மேலே போகும்வரை கண்ணை மூடிக் கொண்டான். இன்னமும் வேறு எதிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று கொஞ்ச நேரம், சுற்றிலும் என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தான். பை பையன்கள் சீட்டைக் காட்டிவிட்டு உள்ளே போனார்கள். அவர்களை ஒவ்வொருவராக தலை முதல் கால் வரை ஒருவன் தடவிக் கொண்டிருந்தான். நல்லவேளை அரை நிக்கர் போட்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டான் மஸ்தான் பாய். லுங்கி மடிப்புகளை நீவி விட்டு, மெதுவாக நுழைவாயில் நோக்கி நகர்ந்தான் மஸ்தான் பாய். சீட்டை நீட்டினான். அவன் தடவுவதற்கு ஏதுவாய் கைகளை அகட்டிக் கொண்டான். ஆனால் அவன் தடவவேயில்லை. ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்தான். ‘ சாரி சார்.. லுங்கி நாட் அலவுட் ‘ பத்தாம் கிளாஸ் படித்த மஸ்தான் பாய்க்கு பகிரென்றது. அல்லா இது என்னா சோதனை? லுங்கி இஸ்லாமியர்களின் உடை.. இந்திய பாரம்பரிய உடைகளில் ஒன்று என்று ஏதேதோ சொல்ல எண்ணினான். நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. ‘ ஹே ட்யூட்! நாட் கம்மிங்? ‘ என்றான் பை ஆசாமி ஒருவன். வாசலில் இருந்தவன் நாசுக்காக மஸ்தான் பாயைத் ஓரம் தள்ளிவிட்டு அடுத்த ஆட்களை கவனிக்க ஆரம்பித்தான். குழுவாக சத்தம் போட்டபடி ஒரு இளைஞர் கூட்டம் உள்ளே போனது. நாலைந்து இளைஞர்கள் கார்கோஸ் முக்கால் பேண்ட் அணிந்து உள்ளே போனார்கள். வாசலில் இருந்தவன் மரியாதையுடன் வழியனுப்பினான். ஒரு முடிவுக்கு வந்தான் மஸ்தான் பாய். பரபரவென்று லுங்கியைக் கழட்டினான். மடித்து கக்கத்தில் வைத்துக் கொண்டான். கீழே கறுப்பு அரை நிக்கர் இருந்தது. ‘ ம்? ‘ என்றான். வாயில் ஆசாமி பேசாமல் டிக்கெட்டைக் கிழித்து கையில் கொடுத்தான். இப்படித்தான் மஸ்தான் பாய் மல்டிப்ளெக்சில் அன்று படம் பார்த்தான்.               8.குப்பண்ணா உணவகம் (மெஸ்)   மாம்பலம் பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கும் காவலர் குடியிருப்பின் ஓரம், கொஞ்ச தூரம் நடந்தீர்களானால், உங்களுக்கு குப்பண்ணா உணவுக்கூடத்தைப் பார்க்காமல் இருக்கமுடியாது. இப்போது பெரும் வியாபார மையமாக மாறி விட்ட தியாகராய நகரின் பூர்வாசிரமப் பெயர்தான் மாம்பலம். அன்று காலாற கைவீசி நடக்கலாம். இன்று அடிப்பிரதட்சணம் கூட பிரம்மப்பிரயத்தனம்தான். குப்பண்ணா தன் பனிரெண்டாவது வயதில் மதராசுக்கு, அதாவது இன்றைய சென்னைக்கு வந்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அன்றைக்கு ஆந்திராவுடன் இணைத்து தமிழ்நாடு, சென்னை மாகாணம் என்று தான் அழைக்கப்பட்டிருந்தது. குப்பண்ணாவின் தகப்பனார் திருவேங்கடம் கும்பகோணத்தில் பலகாரக்கடை நடத்திக் கொண்டிருந்தார். ஓரணா ரெண்டணா வியாபாரம். ஆனாலும் சுபிட்சமாக இருந்தது வாழ்க்கை. அம்மா அலர்மேல் மங்கை, வயிறு ஒட்டி, எலும்பும் தோலுமாய் காட்சியளிப்பாள். வயிறைப் போலவே அவள் பெயரும் சுருங்கி அலமேலு ஆகிவிட்டாள் காலப்போக்கில். குப்பண்ணா திருவேங்கடத்திற்கும் அலமேலுவுக்கும் ஏழாவது பிள்ளை. முன்னது அத்தனையும் பெண் பிள்ளைகள். அக்காலத்தில் கள்ளிப்பால், நெல்மணி வழக்கமெல்லாம் இல்லை. எல்லாம் பெருமாள் கொடுத்தது. ஆனால் பிள்ளை பிறந்தால் வரம், பெண் பிறந்தால் சாபம் என்று ஒரு எண்ணம் அந்தணர்களிடையே இருந்தது என்னமோ உண்மை. குப்பண்ணா பிறந்த ஒரு வருடத்திற்குள், அவருடைய அத்தனை அக்காமார்களுக்கும் கலியாணம் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட அவரது பெற்றோரின் அந்திமக் காலத்தில் பிறந்த அருமைப் புத்திரன் அவன். திருவேங்கடத்திற்கு தன் பிள்ளையும் தன்னைப்போலவே விறகில் கிடந்து வேகக் கூடாது என்றொரு வைராக்கியம் இருந்தது. ஆனால் விதி யாரை விட்டது? குப்பண்ணாவிற்கு ஆறு வயது வரை பேச்சே வரவில்லை. ஊர் வைத்தியர் வந்து பார்த்தார். நாக்கு தடித்திருக்கிறது. தினமும் வசம்பு வைத்துத் தேய்க்க வேண்டும். கோரைப்புல்லை நுனியாக எடுத்து நாக்கு வழிக்க வேண்டும். கூடவே இந்தச் சூரணமும் என்று ஏதேதோ சொல்லிவிட்டு, நாலணா காசைக் கறந்து கொண்டு போய் விட்டார். அலமேலு தனக்கிருக்கு சொற்ப பலத்தை வைத்துக் கொண்டு, தினமும் வசம்பு தேய்த்தாள். கோரைப்புல்லால் நாக்கு வழித்தாள். கொஞ்சம்போல பேச்சு வந்தது. அவர் முதல் வார்த்தை பேசும்போது திருவேங்கடம் கடையை மூடிவிட்டு மதிய உணவுக்கு வீடு வந்தார். குப்பண்ணா வாயைத் திறந்து குழறினார். ‘ ஏன்னா கொழந்த பேசறது ‘ என்றாள் அலமேலு. திருவேங்கடமும் ஆவலுடன் வந்து காதை குப்பண்ணாவின் வாய்க்கருகே வைத்துக் கொண்டார். காதை நனைக்கும் அளவிற்கு எச்சிலுடன் குப்பண்ணா பேசிய முதல் வார்த்தை ‘ அலுவா ‘ ‘ என்னடி இது அம்மான்னு கூப்பிடுவான்னு பார்த்தா இவன் அல்வாங்கறான். இவன் சமயக்காரன் தான். விறகுதான் இவனுக்கு தலவிதி ‘ என்று தலையிலடித்துக் கொண்டார் திருவேங்கடம். ‘ பேச்சு சரியா வரலைன்னா.. அலமேலுன்னு என் பெயரைத்தான் அலுவான்றான் ‘ தாயை விட குழந்தையின் மழலையைச் சரியாக புரிந்து கொண்டவர் எவரேனும் உண்டோ? விடாப்பிடியாக, குப்பண்ணாவை, மன்னார்குடியில், ஏழு வயதில் குருகுல வாசத்திற்கு அனுப்பினார் திருவேங்கடம். ஒரு பத்து வருடம் அங்கேயே இருந்தானானால், உபாத்தியாயம் தொழிலாகி விடும். அதைவிட, சமையல் விலகிப் போகும். சொற்ப ஜீவனத்தில் ஒரு உருப்படி வெளியேறினால் சுமை குறையும். குருகுல வாசத்தில் சேர்ப்பது அப்படி ஒன்றும் சுலபமான காரியம் இல்லை. குருவின் வீட்டிலேயே தங்கி, அவருடைய பிள்ளைகள் போல இருப்பார்கள் அங்கிருக்கும் சிறுவர்கள். அவரது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பவர்கள் அவர்கள். இன்றைய மேலை நாடுகளில், இந்திய சிறுவர்கள் வீட்டு வேலைக்குச் சென்று சித்ரவதைப்படுவதின் ஆரம்பக்கட்டம் இது. குரு கோபமாக இருந்தால், இவர்கள் பாடு திண்டாட்டம். மகிழ்ச்சியாக இருந்தால், இவர்கள் பாடு கொண்டாட்டம். குருவின் வீட்டில், அந்தக் காலத்தில் ஒரு கூட்டமே இருக்கும். பயிற்சிக்கு வந்த சிறுவர்கள் போக, அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் என்று ஒரு கூட்டம். ஒரு கூட்டத்திற்கே அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் கல்வி பயில முடியும் அங்கே. இன்றும் பள்ளியாசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களைப் பற்றி படித்துக் கொண்டு தானே இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கீழ்த்தரமான செய்கைகள் எல்லாம் கிடையாது. பணியாத மாணவர்களுக்கு தண்டனைகள் உண்டு. நூறு குடம் தண்ணீர் கேணியிலிருந்து இழுத்து உள்தொட்டியில் நிரப்ப வேண்டும். தோட்டம் சுத்தம் செய்ய வேண்டும். வீடு பெருக்க வேண்டும். துணி துவைக்க வேண்டும். இப்படி. மேற்சொன்ன வேலைகள் தினமும் உண்டு. ஆனால் எல்லா மாணவர்களும் பகிர்ந்து கொண்டு செய்வார்கள். ஆனால் தண்டனைக் காலங்களில் மற்ற மாணவர்கள் வேலை அனைத்தையுமே தண்டனைக்குரிய மாணவனே செய்ய வேண்டும். குப்பண்ணா மன்னார்குடி திருமலாச்சாரி வீட்டில் விடப்பட்டார். அவருடன் இருந்த மாணவர்கள், திருமலாச்சாரியின் கெடுபிடியைத் தாங்க முடியாமல் ஒன்றிரண்டு வருடங்களிலேயே ஓடிவிட்ட போது, குப்பண்ணா மட்டும் ஐந்து வருடங்கள் தாக்குப் பிடித்தது ஆச்சர்யம். அதற்குக் காரணம் அவருக்கு சுபாவமாகவே வந்து விட்ட சமையற்கலை. மன்னார்குடி வந்த போது, குப்பண்ணாவிற்கு சமையலெல்லாம் தெரியாது. பேச்சும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசும் அளவிற்குத்தான் இருந்தது. என்ன தைரியத்தில் திருவேங்கடம் அவரை குருகுலவாசத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதுதான் அந்தப் பகுதி அந்தணர்களின் மனதில் கேள்வியாக இருந்தது. அதைவிட ஆச்சர்யம் திருமலாச்சாரி அவரை ஏற்றுக் கொண்டது. ‘ இன்று கடை விடுமுறை ‘- என்றொரு பலகையை தொங்கவிட்டு விட்டு, மன்னார்குடி பேருந்தேறினார் திருவேங்கடம், குப்பண்ணாவுடன். கையில் ஒரு சம்புடம் நிறைய திரட்டுப்பால் இருந்தது. திருமலாச்சாரிக்கு அது நிரம்பவும் பிடிக்கும் என்று அவருக்கு யாரோ சொல்லியிருந்தார்கள். கூடவே பேருந்து நிறுத்தத்தில், ஒரு கவுளி கும்பகோணம் கறுப்பு வெற்றிலையும், பன்னீர் புகையிலையும், நெய்யில் வறுத்த சீவலும் வாங்கிக் கொண்டார். ஓலைப் பெட்டியில் அதை எல்லாம் வைத்து மேல்துண்டால் சுற்றிக் கொண்டார். நல்ல மத்தியான வெயிலில் குப்பண்ணாவும் திருவேங்கடமும் மன்னார்குடி வந்திறங்கினர். திருமலாச்சாரி வீடு அக்ரஹாரத் தெருவில் மேலண்டையில் இருந்தது. தெற்கு பார்த்த வீடு. வாசற் திண்ணை. இவர்கள் போகவும், திருமலாச்சாரி மதிய உணவு முடித்து விட்டு திண்ணையில் அமரவும் சரியாக இருந்தது. அவர் கையில் ஒரு பழைய ஓலைப்பெட்டி இருந்தது. துண்டால் விசிறியபடியே, ஒரு கையால் மூடியைத் திறந்து, ஓலைப் பெட்டியின் உள்ளே விரல்களால் துழாவினார். வெறும் விரல்கள் தான் வெளியே வந்தன. தன் மனைவியைக் கூப்பிட நிமிர்ந்த போதுதான் அவர் திருவேங்கடத்தையும் குப்பண்ணாவையும் பார்த்தார். அவர் பார்வை அவர்களை எடை போட்டது. தலையிலிருந்து ஆரம்பித்த பார்வை கைகளுக்கு வந்தபோது, கைகளைக் கூப்புவதற்காக தூக்கிய திருவேங்கடத்தின் கரங்களில் இருந்த துண்டு பிரிந்து லேசாக ஓலைப்பெட்டி கண்ணில் பட்டது. நமநமவென்ற வாய்க்கு நாலாயிரமே கிடைத்த மாதிரி ஆகிவிட்டது திருமலாச்சாரிக்கு. ‘ ஷமிக்கணும்.. அடியேனுக்கு கும்பகோணம். இவன் என் பிள்ளையாண்டான். குப்புசாமின்னு பேரு. ஒங்களாண்ட உபதேசத்துக்கு விடலாம்னு.. ‘ ஓலைப்பெட்டியைப் பார்த்துக் கொண்டே தலையாட்டினார் திருமலாச்சாரி. புதுத் துண்டில் கட்டிய ஓலைப்பெட்டி, சம்புடத்தில் இருக்கும் திரட்டுப்பால் இரண்டையும் அவர் காலடியில் இருக்கும் திண்ணையில் வைத்து விட்டு, வாய் பொத்தி நின்றார் திருவேங்கடம் . சாடையாக மகனையும் வணங்கச் சொன்னார். அவன் ஒரு படி மேலே போய், காலில் விழுந்து வணங்க ஆரம்பித்தான். ‘ இதெல்லாம் எதுக்கு? ‘ என்று ஓலைப்பெட்டியை தன்னருகில் இழுத்துக் கொண்டார் திருமலாச்சாரி. ஒரு கையால் மூடியையும் திறந்து விட்டார். ‘ கும்பகோணம் கறுப்பு வெத்தல.. நெய் சீவல், பன்னீர் புகையிலை.. சுண்ணாம்பு தரப்படாது.. ஒறவு விட்டுப்போகும்பா.. அதான் காலணா வச்சிருக்கேன்.. ‘ சுண்ணாம்பு இல்லாவிட்டால் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார் திருமலாச்சாரி. அவருடைய பழைய ஓலைப்பெட்டியில் அது மட்டும்தான் இருந்தது. குப்பண்ணா வேதம் கற்றுக்கொண்டாரோ இல்லையோ, திருமலாச்சாரி மனைவியிடமிருந்து அனைத்து சமையல் கலைகளையும் கற்றுக் கொண்டார். ‘ குர்ப்பிரம்மா, குரு விஷ்ணுகு .. ‘ என்று மற்ற சிறுவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் போது மாமி, உப்பு போடு, புளி போடு என்று சொல்லிக்கொண்டிருந்தார். திருமலாச்சாரிக்கு ஒரு குற்ற உணர்வு இருந்தது. அதனால் ‘ டேய் குப்பு.. அங்கிருந்தே இவா சொல்றதா கூடவே சொல்லிண்டு வா ‘ என்று சொல்லுவார். குருவின் சொல்லைத் தட்டாமல் குப்புவும் ‘ குருப்பிரம்மா.. உப்பு இருக்கு, குரு விஷ்ணுகு புளி இருக்கு ‘ என்று அதே ராகத்தில் சமையலும் செய்து கொண்டிருப்பான். குப்பண்ணாவின் பனிரெண்டு வயதில், திருமலாச்சாரிக்கு மதராசிலுள்ள மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலில், அர்ச்சகராக வேலை கிடைத்தது. மாசச் சம்பளம், கோயில் வீடு என்று சுபபோக வாழ்க்கை அவரை அசைத்தது. குருகுலப் பொறுப்பை தன் பிரதம சீடன் தேவநாதனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் ரயிலேறினார். தேவநாதன் இருபது வயதில் அசாத்திய பாண்டித்யம் பெற்றிருந்தான். அது மட்டும் தன் வீட்டையும் குருகுலத்தையும் அவனிடம் ஒப்படைக்க திருமலாச்சாரியைத் துண்டவில்லை. தன் ஒரே ஒரு பெண் மைதிலியும் அவனைக் கலியாணம் செய்து கொண்டதால், பூர்வீக வீட்டை மாப்பிள்ளையிடம்தான் கொடுத்து விட்டுப் போகிறோம் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு அவர் ரயிலேறினார். அவரும் அவரது மனைவியையும் தவிர, ஒரு இலவச இணைப்பாக குப்பண்ணாவும் பட்டணம் பார்க்க ரயிலேறினார். திருமலாச்சாரிக்கு ஆண்டவன் சேவை. குப்பண்ணாவிற்கு மடப்பள்ளி வேலை. தட்டுக் காசில் ஒரு பகுதி குப்பண்ணாவிற்கும் வரும். சாயங்காலம் புளியோதரையும், சர்க்கரை பொங்கலும், தயிர்சாதமும் வீட்டுக்கு வரும். ‘ நேக்கு வயசாயிண்டே போறது. கொஞ்சமானும் மந்திரங்களைக் கத்துக்கடா குப்பு. ஈ ஓ கிட்ட சொல்லி உள்ளே சேத்துண்டடறேன். ‘ என்று கெஞ்சிப் பார்த்தார் திருமலாச்சாரி. ஆனால் குப்பண்ணா ‘ மாலே மணிவண்ணா, மத்தியானம் பொங்கல்ணா ‘ என்று எதுகை மோனையோடு பாடினான். அவனுக்கு மந்திரம் உருப்போடுவதை விட, பாத்திரம் உருட்டுவது பரமானந்தமாக இருந்தது. திருமலாச்சாரி காலம் முடிந்து, அவர் மனைவி தேவநாதனோடு போய் சேர்ந்து விட்ட பிறகு, கோதண்டராமர் கோயில் கவனிப்பார் இல்லாமல் சிதிலமாகிப் போனது. பெருமாளுக்கே விளக்கில்லாத பொழுது, மடப்பள்ளிக்கு ஏது விறகு. அப்போதுதான் வாழ்க்கையின் பெரிய கேள்விக்குறி குப்பண்ணாவின் முன் எழுந்து நின்றது. கும்பகோணம் போகமுடியாது. அப்பா போயாச்சு. அம்மா அக்கா வீடுகளில் முறை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளால் சில வேலைகள் ஆகும் என்பதால் அவர்களும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியக்கா பத்மா ஒருமுறை வந்தபோது சாடையாக சொல்லிவிட்டுப்போனாள். ‘ குப்பு.. ஊருக்கெல்லாம் வந்துடாதே.. அங்க இப்ப ஒண்ணுமில்ல.. அத்திம்பேருக்கு பெரிசா வருமானம் இல்ல. அவரே மதராஸ் போலாமான்னு கேட்டுண்டிருக்கார். இங்கேயே எதையாவது ஒண்ணைப் புடிச்சிண்டு இருந்துக்கோ ‘ குப்பண்ணாவிற்கு அழையா விருந்தாளியாக எங்கும் செல்ல விருப்பமில்லை. கோயில் வீட்டை அடுத்த பட்டருக்குக் கொடுத்து விட்டார்கள். கண்ணம்மாப்பேட்டை மயானத்திற்கு அருகில், ஒற்றை வீடு பூட்டிக் கிடப்பதாக யாரோ சொன்னார்கள். பார்த்துவிட்டு வந்தார். மயானம் அருகில் என்பதால் யாரும் வர அஞ்சினார்கள். வீட்டு உரிமையாளர் ஒரு தெலுங்கு நாயுடு. ‘ மீரு தீஸ்கோண்டி.. பத்திரம் ராசி இஸ்தானு ‘ என்று சொல்லி, அப்படியே செய்தும் விட்டு, நெல்லூர் போய்விட்டார். தினம் தினம் கோயில் பிரசாதம் ருசித்ததில், அரங்கன் மகிழ்ந்து கொடுத்த வரம் அது என்று எண்ணிக் கொண்டார் குப்பண்ணா. மயானத்தில் நுழைவாயிலில் எல்லாம் மேட்டுக்குடி மக்கள், உயர் சாதி பிரேதங்கள் எரிக்கப்பட்டன. ஏழைகள், சேரி வாசிகள், கீழ்த்தட்டு மக்களின் பிரேதங்கள் குப்பண்ணாவின் வீட்டின் பின்னால்தான் எரிந்து கொண்டிருக்கும். ஆனால் அதெல்லாம் கொஞ்ச நாட்களில் மாறிப்போயிற்று. பேருந்து நிலையம் வந்தது. காவல் நிலையம் வந்தது. குப்பண்ணாவின் வீட்டுக்கு அருகில் காவலர் குடியிருப்பு வந்துவிட்டது. மயானம் சுருங்கிப் போயிற்று. திராவிட ஆட்சியில் பிரேதங்களின் பாகுபாடு மறைந்து போய்விட்டது. போக்குவரத்து அதிகமாக, குப்பண்ணா பலகாரக் கடை ஆரம்பித்தார். சுத்தமான சைவம். நெய் ஒழுகச் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, தயிர்சாதம். அவருக்குத் தெரிந்தது அதுதான். ஆனால் அதிலிருக்கும் சுவை அனைவரையும் கட்டிப்போட்டது. ஏனேன்றால் அவை தினமும் அரங்கனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டவை. முதல் கரண்டி உணவில் ஒரு துளசி கண்டிப்பாக இருக்கும். குப்பண்ணாவிற்கு இப்போது எண்பது வயது. வீடை இடித்து பெரிய உணவகமாக மாற்றியிருக்கிறார். அவரிடம் இப்போது இருபது ஆட்கள் வேலை செய்கிறார்கள். கொஞ்சம் உணவுப்பட்டியல் நவீனமாக மாறியிருந்தாலும், தொடர்ந்து கொண்டே இருக்கிறது சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும், புளியோதரையும். அதே போலத்தான் முதல் கரண்டி துளசியும்.                                                                 9. அவள் பெயர் பாத்திமா   அவளுக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் பாத்திமா. ஆனால் அந்தப்பகுதியில் இருக்கும் மக்கள் அவளுக்கு வைத்த பெயர் பஜாரிம்மா. அந்தளவுக்கு சண்டைக்காரி. சண்டைக்காரி என்றவுடன் ஏதோ இரட்டை நாடி சரீரம், கர்ணம் மல்லேஸ்வரி என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். அவள் சரீரம் ஒற்றை நாடிக்கும் குறைவு. ஆனால் குரல் இருக்கிறதே அது எட்டு ஊருக்குக் கேட்கும் மைக்செட் இல்லாமலே. அவள் புருஷன் இப்ராகிம் அவளுக்கு ஒன்றும் சளைத்தவனில்லை. அவனும் சண்டைக்காரன் தான். எதற்கெடுத்தாலும் கத்தியைத் தூக்குபவன். அவன் இறைச்சிக் கடை வைத்திருக்கிறான். அவன் ஆட்டு இறைச்சியை வெட்டும்போது பார்த்த சிலர் அவனிடம் வம்புக்கே போக மாட்டார்கள். வேர்வை நனைந்த கறுப்பு முண்டா பனியனுடன், கரணையாக இருக்கும் புஜங்களுடன், அவன் வெட்டும்போது பார்க்க பயங்கரமாக இருக்கும். இப்ராகீம் ஏர்வாடிக்காரன். பாத்திமா ஆம்பூர். ஒரு நிக்காவில் தான் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். இரவு விருந்துக்கு ஆடு வெட்டும் பணி இப்ராகிமுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ‘ கொழம்பு கொதிக்குது.. எறச்சிய வாங்கிட்டு வா ‘ பதினாறு வயது பாத்திமா ஓடினாள். ஆனால் அங்கே அவள் கண்ட காட்சி! நன்கு வளர்ந்த ஆட்டை உரிப்பதற்கு முன், தலையை வெட்டியெடுக்கும் பணியில் இருந்தான் இப்ராகீம். படுக்க வைக்கப்பட்டிருந்த ஆட்டின் தலையை வெட்டுவதற்கு வாகாக வெட்டுமரத்தின் ஓரத்தில் கிடத்தியிருந்தான். வெட்டினால் தலை துண்டாக வெளியில் விழவேண்டும். சொட்டும் ரத்தத்தைப் பிடிக்க ஒரு டேசியா கீழே வைக்கப் பட்டிருந்தது. வேலையில் கவனமாக இருந்தான் இப்ராகீம். கத்தியை ஓங்கிப்பிடித்துக் கொண்டு, பார்வையை ஆட்டின் தலையின் மேல் வைத்தபோது, நிழலாடியது. பாத்திமாவைப் பார்த்த கணம், அவன் அப்படியே உறைந்து போனான். உயரத்தூக்கிய கத்தியுடன், திமிறும் புஜங்களுடன், அவன் நிற்பது, ஊர் எல்லையில் நிற்கும் அய்யனாரைப் போலவே அவளுக்குத் தோன்றியது. தப்பு தப்பு. அது இந்து சாமியல்லவா. அவளுக்குத் தெரிந்த வரை, குரானின் ஏதாவது இருக்கிறதா என்று நினைவோட்டிப் பார்த்தாள். ஒன்றுமில்லை. திரும்பத் திரும்ப அய்யனார்தான். ‘ கொழம்பு கொதிக்குதாம்.. எறைச்சி வேணும்’ நிலைக்கு வந்தான் இப்ராகிம். ஒரே போடு. தலை எகிறி, பிரியாணி கிளறிக் கொண்டிருந்தவன் புட்டத்தில் விழுந்தது. தன்னையறியாமல் பாத்திமா சிரித்து விட்டாள். அல்லா இருகைகளையும் தூக்கி ஆசிர்வதித்தார். கல்யாணமான நாட்களில் பாத்திமா சண்டைக்காரி இல்லை. அதிர்ந்து பேசத் தெரியாத, கிராமத்து பெண்ணாகவே இருந்தாள். இப்ராகிமும் அப்படித்தான் இருந்தான். பல தொழில்கள் செய்து பார்த்து, நஷ்டமடைந்து கொண்டிருந்தான். எல்லோரிடமும் சிரித்துப் பேசுவான். சுமுகமாக இருப்பான். அதனாலேயே அவனிடம் கடன் சொல்லி, பொருள் வாங்கிவிட்டு போய்விடுவார்கள். அப்புறம் அவன் கடைப் பக்கமே வரமாட்டார்கள்.  நஷ்டம் வராமல் என்ன செய்யும். ஊரிலிருந்து அவ்வப்போது பணம் வரும். வேறு தொழிலுக்கு மாறுவான் இப்ராகிம். இப்படியே வாழ்க்கை ஓடி, இரண்டு பிள்ளை பெற்றாகிவிட்டது. பிள்ளைகளை அதட்டி வளர்த்தே பாத்திமாவின் குரல் உயர்ந்து விட்டது. முதல் பையன் ஆரீஸ் ஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. அவன் பென்சிலை, பக்கத்து சீட் பையன் எடுத்திருக்கிறான். திருப்பித் தரவில்லை. புது பென்சில். வீடு தேடி போய் நின்றாள் பாத்திமா. நல்ல  கல்லு வீடு. வாசலில் கார் எல்லாம் இருந்தது. அழைப்பு மணியை அழுத்தினாள். ‘ யாரு? என்னா வேணும் ‘ பாத்திமாவால் அவள் குரலையே நம்ப முடியவில்லை. ‘ என்னா வேணுமா.. காரு பங்களான்னு இருக்கறீங்க.. படிக்கிற உங்க பிள்ளைக்கு ஒரு பென்சில் வாங்கித் தரமுடியாதோ.. பாவப்பட்ட எங்க பையன் பென்சில் தான் கேக்குதோ ‘ அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, அந்தப் பையன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘ ஏண்டா பரதேசி.. ஏண்டா அவன் பென்சிலை எடுத்தே? அதைக் கொண்டாந்து விட்டெறி ‘ பாத்திமா உக்கிரமானாள். ‘ எடுக்கும்போது பதவிசா எடுப்பீக.. குடுக்கும்போது பிச்சை போடறாப்பல விட்டெறிவீங்களோ.. ஒரு பென்சிலுக்கு வக்கில்லைன்னாலும் வாய் மட்டும் நீளுது ‘ சப்த நாடியும் அடங்கிப்போனாள் பங்களாக்காரி. பையன் பென்சிலை மெதுவாக கொண்டு வந்து நீட்டினான். அதற்குள் சீவி சீவி, பாதியாக்கிவிட்டிருந்தான். ‘ சிவறதுன்னா உங்க ஆத்தா தலையை சீவறதுதானே.. சீவி சீவி என் பையன் பென்சிலை பாதியாக்கிட்டியே ‘ உள்ளே போய் ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள் அந்த அம்மாள். இதற்கும் அம்மா கத்தப் போகிறாள் என்று எதிர்பார்த்தான் ஆரிஸ். பத்து ரூபாயை வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள் பாத்திமா. ரவிக்கையில் வைத்திருந்த சின்னப் பர்சில் செருகிக் கொண்டாள். பங்களாக்காரியின் முகத்தில் புன்னகை அரும்பத் தொடங்கியது. ஆரிஸ¤க்கும் கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. ‘ இன்னும் ஒரு வாரத்துக்கு ஒம்பையன், எம்பையன் பென்சிலை எடுக்கலாம்னு சொல்லு, என்னா ‘ பங்களா முகம் இறுகிப் போனது. விஷயம் விஷம்போல் ஊரில் பரவியது. சொல்லாத கதைகளெல்லாம் பாத்திமாவைப் பற்றி உலவ ஆரம்பித்தன. அப்போதுதான் பாத்திமாவுக்கே புரிந்தது தன் குரலில் இருக்கும் உஷ்ணமும் உறுதியும். புதிதாக இறைச்சிக் கடை ஆரம்பித்தான் இப்ராகிம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, கடையில் உட்கார ஆரம்பித்தாள் பாத்திமா. அவளைப் பார்க்கும் எவரும் கடன் சொல்வதில்லை. சொன்னால் வீட்டுக்கு வந்து என்னவெல்லாம் பேசுவாளோ. வியாபாரம் லாபத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் அவள் இல்லாத நேரமாகப் பார்த்து, கடன் சொல்லுபவர்கள் ஓரிருவர் இருக்கத்தான் செய்தார்கள். இப்ராகிமால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பாத்திமா ஏதேதோ முயற்சி செய்து பார்த்தாள். எந்நேரமும் கடையிலே இருப்பது என்று முடிவு செய்தாள். ஆனால் அது வேறு பிரச்சினைகளை கொண்டு வந்து நிறுத்தியது. பள்ளி விட்டு வந்த பிள்ளைகள், படிக்காமல் தெருவில் இறங்கி விளையாடுவதால், படிப்பின் மீதான் அவர்களது கவனம் பாழ்பட்டது. மழை நாட்களில் வீட்டுக்குள்ளேயே  நண்பர்களை வரவழைத்து விளையாட ஆரம்பித்தார்கள். பொருட்கள் காணாமல் போக ஆரம்பித்தன. கூடவே அடிக்கடி உடல் நிலையும் அவளது குழந்தைகளுக்கு மோசமாக ஆரம்பித்தது. தான் இருக்கும்போது மட்டும் கடையைத் திறப்பது என்று ஒரு திட்டத்தை செயல்படுத்தினாள் பாத்திமா. ஆனால் அவர்களது வாடிக்கைக்காரர்கள் வேறு கடை நோக்கி  போக ஆரம்பித்தார்கள். இன்னமும் இப்ராகிமின் கடைக் கறியின் தரமும் எடையும் புரிந்து கொண்டவர்கள் காத்திருந்து வாங்கிப் போனார்கள். ஆனால் அது குடும்பத்துக்கு போதுமான வருமானத்தைத் தரவில்லை. செல்லியக்கா தான் அந்த யோசனையைச் சொன்னாள். “ வாயில்லாப் பூச்சியா இருக்கானே உன் புருசன்? உன்னை மாதிரி வெடுக்குனு நாலு வார்த்தை பேசுனா, கடன் கேக்கறவன் கேப்பானா? வாங்கினவன் திருப்பித் தராம இருப்பானா?” பாத்திமாவுக்கு பொறி தட்டியது. தன் குரல் ஏன் உயர்ந்தது. தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துத் தானே? அதேபோல கடனுக்கு வியாபாரம் என்பது வணிகனுக்கு எதிரான அநீதிதானே? அதை தன் புருசன் உணர்ந்து கொண்டால்! அன்றிரவு தணிந்த குரலில் இப்ராகிமுடன் பேசிக் கொண்டிருந்தாள் பாத்திமா. புருஷனிடம் அவள் குரல் உயருவதேயில்லை. ‘ என்னங்க.. கடையில கடன் கேட்டா குரலை உசத்துங்க.. சிரிச்சிக்கிட்டே நின்னீங்கன்னா கடைய மூட வேண்டியதுதான். நிக்காவுல மொதம்மொத பாத்தப்போ கத்திய தூக்கிட்டு எவ்வளவு வெறப்பா நின்னீங்க.. அத மாதிரி நிக்கணுங்க ‘ புரிந்து கொண்டது போல் தலையை ஆட்டினான் இப்ராகிம். உண்மையிலேயே புரிந்து கொண்டானா? இல்லை ஆடுகளுடன் பழகிய தோஷமா? இப்போதெல்லாம் யாரும் இப்ராகிம் கடையில் கடன் சொல்வதில்லை. அவர்களுக்குத் தெரியாது அவன் ஆட்டைத் தவிர வேறு யாரையும் வெட்டியதில்லை என்று.     10. சோசியம் பாக்கலையோ சோசியம்   ராகவன் உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தான். “ ஜனனி, வாக்கிங் போயிட்டு வரேன்.” கை வேலையை போட்டு விட்டு ஜனனி ஓடி வந்தாள். எதிரில் நின்று கொண்டாள். ஜனனி என்றைக்கும் போலவே புதுமலர் போல இருந்தாள். அழகாக உடுத்தியிருந்தாள். தலையைப் படிய வாரி இருந்தாள். வில்லாக வளைந்திருந்த புருவங்களுக்கு மேலே அளவான சைசில் சிகப்பு பொட்டு வைத்திருந்தாள். ராகவன் அவளையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். “ பராசக்தி, பராசக்தி “ அவள் வாய் மூன்று முறை உச்சரித்தது. தெருவின் இடமும் வலமும் பார்த்தாள். யாரும் எதிர்படவில்லை. முக்கியமாக அந்தத் திருட்டுப் பூனை கண்ணில் படவேயில்லை. “ என்ன ஜனனி இது? தினமும்தான் வாக்கிங் போறேன். அதுவும் தெருக்கோடில இருக்கற பார்க்குக்கு? அதுக்கு ஏன் இந்த பில்ட் அப்? “ “ சும்மா இருங்கோ? உங்களுக்கு வியாழன் தோஷமாம்” “ இன்னிக்கு புதன் தானே? “ “ கிண்டல் பண்ணாதீங்கோ. எதிர்பாராத விபத்துன்னு போட்டிருக்கான். சன் டிவிலேயும் அதேதான் சொன்னான்.” “ நீ எதுக்க வந்தா மட்டும் விபத்து விலகிப் போயிடுமோ? “ “ நெறஞ்ச சுமங்கலி எதுக்க வந்தா எந்த தோஷமும் வெலகிடுமாம்.” “ இது யாரு கலைஞரா? ஜெயாவா?” “ சங்கரா.. அத விடுங்கோ.. போனமா வந்தமான்னு இருக்கணும்.. அந்த நிஷ்டூரம் நாராயணனோட, பேச்செல்லாம் வச்சிக்கப்படாது” நிஷ்டூரம் நாராயணன் என் அண்டை வீட்டுக்காரன். புறநகர் பகுதி எனும் அத்துவானக் காட்டில் நான் வீடு கட்டிக் கொண்டு வந்தபோது, எனக்கு முன்பே குடிவந்து தைரியம் சொன்னவன். எனக்கு அவன் பேசுவது பிடிக்கும். ஜனனிக்கு அவனைக் கண்டாலே ஆகாது. “ வாஸ்துலாம் ஹம்பக் சார். ஈசான மூலை, அதான் நார்த் ஈஸ்ட், அங்கேதான் கிச்சன் இருக்கணூம்பான். ஏன் சவுத் வெஸ்ட்ல வெச்சா அடுப்பு அணைஞ்சுடுமா? இல்ல அரிசி வேகாதா ?” என்பான். எல்லோரும் ஓய்வுக்குப் பிறகு தி ஹிண்டுவில் ஆரம்பித்து, பிரிண்டட் அண்டு பப்ளீஷ்டு பை வரை படித்து காலத்தை ஓட்டும்போது, இவன் செவ்வாய் கிழமை பேப்பருடன் வரும் சோசிய மலர்களை மட்டும் வைத்துக் கொண்டு, அக்கு வேறு ஆணி வேறாக அலசுவான். “ லாஸ்ட் வீக் கும்பத்துக்கு போட்டிருந்ததை அப்படியே இந்த வீக் மேஷத்துக்கு போட்டிருக்கான். சுத்த ஃபிராடு. எல்லாம் பெர்முடேஷன் காம்பினேஷன் கணக்கா போயிடுத்து. இதிலே சோசிய செம்மல் ரங்கபாஷ்யம்னு பேரு வேற “ “ பட் நாணா.. ஒங்க வீட்ல கிச்சன் நார்த் ஈஸ்ட் தானே” என்று ராகவன் சீண்டுவான். “ அதுக்குக் காரணம் வாஸ்து இல்ல.. வஸ்து.. ஹாலு, பெட்ரூம்னு ஆளாளுக்கு ப்ளான் போட்டதுல கிச்சன் ஒதுங்கி ஒதுங்கி ஓரமாப் போயிடுத்து. இருந்த காசுல எட்டடி கூட வராதுன்னுட்டான் மேஸ்திரி. இருந்த சிமெண்டைப் போட்டு ஒப்பேத்தினேன். ஒரு வருஷம் வரைக்கும் மேடையே இல்ல. தரையிலேதான் சமையல். நான் நான்ரீபேயபல்  பிஎஃப் வாங்கித்தான் மேடையே போட்டேன்.” நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் ராகவனின் நண்பன் ரவி வந்திருந்தான். இருவரும் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அண்டை வீட்டு நாராயணன் அவன் வீட்டுக் காம்பவுண்டில் நடை போட்டுக் கொண்டிருந்தான். “ அது நாராயணன்தானே? “ “ ஆமாம்! அவனை உனக்குத் தெரியுமா? “ “ வெறுமே தெரியுமான்னு கேக்காதே! வெவரமாவே தெரியும். “ ராகவனின் காது மடல்கள் நீள ஆரம்பித்தன. “ சொல்லு சொல்லு “ என்றான். “ இப்ப வேணூன்னா அவன் சேலையூர் நாராயணனா இருக்கலாம். ஆனா இதுக்கு முன்னாடி அவன் சிதம்பரம் நாராயணன்.. “ “ என்னடா பெரிய சிதம்பர ரகசியம் மாதிரி புதிர் போடற.. நாராயணன் சிதம்பரத்தில இருந்ததா ஒரு தடவை கூட என்கிட்ட சொல்லலியே? “ “ எப்படிச் சொல்லுவான்? சொல்லிக்கறா மாதிரி இருந்தாத்தானே? “ சிதம்பரம் நடராசர் கோயிலை ஒட்டிய அக்ரகாரத்தில் மொத்தம் 46 வீடுகள். எல்லாம் வாசற் திண்ணையுடன் கூடிய ஓட்டு வீடுகள். அதில் எட்டாவது வீட்டில் இருந்தது கிருஷ்ண சர்மாவின் குடும்பம். வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்த எல்லா அந்தணர்களும் பெயருக்கு பின்னால் சர்மா என்றோ சாஸ்திரி என்றோ போட்டுக் கொண்டிருந்த காலம் அது. பிராம்மணர்கள் வயதில் மூத்தவர்களைப் பார்க்கும்போது சமஸ்கிருத மொழியில் தன்னை இன்ன கோத்திரம், இன்ன சூத்திரம், இன்ன பெயர் என அறிமுகப் படுத்திக் கொள்வர். அதில் பெயருடன் சர்மன் என்று சேர்த்துச் சொல்ல வேண்டும். அது மருவி சர்மா ஆகிவிட்டது. சர்மன் என்றால் பெயர். வைதீகத் தொழிலைக் கொண்டவர்கள் சாஸ்திரிகள். அவர்களது வாரிசுகள் வைத்யநாத சாஸ்திரி, சீனிவாச சாஸ்திரி என தம்மை அழைத்துக் கொண்டார்கள். கிருஷ்ணன் சாஸ்திரி இல்லை. அதனால் சர்மா! கிருஷ்ணன் அக்கிரகாரத்தில் ஒரே சோசியர். சாஸ்திரிகள் பஞ்சாங்கம் பார்த்து நல்ல நாள் குறித்துக் கொடுப்பார்கள். கிருஷ்ணன் ஜாதகம் பார்த்து நல்லது கெட்டது சொல்வார். அதற்குப் பரிகாரமும் சொல்வார். பத்துக்கு ஆறு அது அப்படியே பலித்ததில், கணக்கின் விதிப்படி அவர் சோசியர் என அறியப்பட்டார். கிருஷ்ணனுக்கு ஒரே மகள். அபிராமி. எட்டாவது படிக்கும்போதே அவள் பெரிய மனுஷி ஆகிவிட்டதாலும், ஒன்பதுக்கு சிதம்பரத்திற்கு வெளியே போக வேண்டும் என்பதாலும், அவள் படிப்பு நிறுத்தப்பட்டது. அந்தணர் பெண்கள் பூப்பெய்தும் நேரத்தைக் கொண்டு ஜாதகம் கணிப்பதில்லை. மற்ற சாதியினர் அதைச் செய்வதற்குக் காரணம், பிறப்பு நாள், நேரம் பெரும்பாலும் அவர்களுக்குத் தெரிவதில்லை. அபிராமி பிறந்த நேரத்து ஜாதகம் அவ்வளவு ஒசத்தியில்லை என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். சிரம தசைகள் கூடி நின்ற ஜாதகம். திருமணமும், பிள்ளைப்பேறும் பெரும் தடைகளைக் கொண்டது என அவர் அறிந்து வைத்திருந்தார். அதனால்தான் அவருக்கு ஒரு விபரீத எண்ணம் வந்தது. அபிராமி பூப்பெய்திய நேரத்தைக் கொண்டு புதிய ஜாதகம் ஒன்றைக் கணித்தார். கட்டம் போட்டுப் பார்த்ததில், பிறப்பு ஜாதகத்தை விட அது தேவலாம் என்று இருந்தது. யாருக்கும் தெரியாமல் அதையே அபிராமியின் பிறப்பு ஜாதகமாக மாற்றி விட்டார். என்னதான் மாற்றினாலும் விதி விடுமோ! அபிராமிக்கு வயதானதே தவிர வரன் கிடைக்கவில்லை. அப்போது அதிர்ஷ்டவசமாக நாராயணன் அவரைத் தேடி வந்தான். “ நமஸ்காரம். எம் பேர் நாராயணன். திருக்குறுங்குடி சாமிநாத சர்மாவோட பிள்ளை. இங்கே கோயில்ல சீட்டு போடற வேலை கெடைச்சிருக்கு.. தங்க இடம் தேடிண்டிருக்கேன். ஒங்களப் பாக்கச் சொன்னார் சங்கர தீட்சிதர்.. “ பையன் சுருட்டை முடியுடன் அழகாக இருந்தான். நாலு முழ வேட்டியும், கட்டம் போட்ட கைத்தறி சட்டையும் அணிந்திருந்தான். கிராப்பும் இல்லாமல் குடுமியும் இல்லாமல் ஒரு மாதிரி தலை வாரியிருந்தான். பாக்கெட்டில் சின்ன சீப்பு எட்டிப் பார்த்தது. வேறு யாராவதாக இருந்தால், கிருஷ்ணன் யார் பக்கமாவது கைக்காட்டி விட்டிருப்பார். வீட்டில் வயசுப் பெண்ணை வைத்துக் கொண்டு பிரம்மச்சாரிக்கு இடம் கொடுப்பது புத்திசாலித்தனம் இல்லை என்பதை அவர் அறிந்தே இருந்தார். கூடவே ஊரின் ஏச்சும் பேச்சும் கேட்க வேண்டி வரும். ஆனால் அன்று அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. “ புழக்கடையிலே ஒரு ரூம் இருக்கு.. தட்டு முட்டு சாமான் போட்டு வச்சிருக்கோம். சரிப்படுமான்னு பாரு.. “ எட்டுக்கு எட்டு அறை. ஓரத்தில் மண்ணால் கட்டிய அடுப்பும், அதன் மேல் புதைத்த பித்தளை குண்டானும் இருந்தன. சுத்தமாக காற்றோ வெளிச்சமோ இல்லாத அறை. “ மாமா! இது வென்னீர் உள்ளுன்னா? “ “ ஆமா! ஆனா இப்போ வென்னீரை வெளியிலேயே போட்டுக்கறா. உள்ளே போட்டா சுத்தமா புகை அப்பிண்டு கண்ணெல்லாம் எரியறது.. செவரெல்லாம் கருப்பா ஆயிடறது.. அதான்.. “ நாராயணனுக்கு குழப்பமாக இருந்தது. காற்றே இல்லாத அறையில் எப்படி? அவன் மனதைப் படித்தவர்போல கிருஷ்ணன் சொன்னார்: “ வேற நல்ல எடம் கெடைக்கற வரையிலும் இங்கே இருந்துக்கோ.. மழை இல்லைன்னா இந்த வேப்ப மரத்துக்கடியிலே ரம்மியமா காத்து வரும். வாசக் கதவத் தொறந்து வச்சிண்டா வெளிச்சம் பளீர்னு அடிக்கும். வாடகைன்னு ஒண்ணும் கொடுக்க வேண்டாம்.. “ இப்போது அந்த அறை சொர்க்கம் பொலத் தோன்றியது நாராயணனுக்கு! ஒரு மாதத்தில் வேறு நல்ல இடம் கிடைத்தாலும் நாராயணன் போவதாக இல்லை என்கிற அளவிற்கு மாறிப்போனான். அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று காலை காபி, இரவு உணவு என்று விசாலம் மாமி அவன் மீது அன்பைப் பொழிவது. இன்னொன்று அவன் அபிராமியைப் பார்த்தது. சன்னதி தெருவில் சாவு விழுந்து விட்டது. வெத்தலை ரெட்டியார் போய் விட்டார். போனது நல்லதுக்குத்தான் என்று ஊரார் பேசிக் கொண்டார்கள். அவர் தன் சம்சாரத்தைப் படுத்திய பாட்டிற்கு அவள் தான் முதலில் மண்டையைப் போடுவாள் என்று எல்லோரும் எதிபார்த்தார்கள். பாவம் பிழைத்தாள். ரெட்டியார் முந்திக் கொண்டார். சாவு விழுந்த தெருவில் கோயில் இருந்தால், அன்று சவம் எடுக்கும் வரையிலும், கோயிலை சாற்றியே வைத்திருப்பார்கள். பிறகு ‘சுத்தி’ பண்ணிய பிறகுதான் கோயிலையே திறப்பார்கள். காலையிலேயே சாவு விழுந்து விட்டது. அதனால் வேலைக்கு போன நாராயணனை உள்ளேயே விட வில்லை. நாராயணனுக்கு கோயில் சாத்தியதால் ஒரே சங்கடம்தான் ஏற்பட்டது. அவனுக்கு மதிய உணவு அம்பேல். “ இன்னிக்கு கோயில்ல எதுவும் கிடையாது அம்பி.. அடுப்பு மூட்ட முடியாது.. சாமிக்கு பிரசாதம் கிடையாது.. அதானால நீ ஏதாவது வெளியில பாத்துக்கோ.. “ தீட்சிதர் சொன்ன பிறகு அப்பீல் ஏது? நாராயணன் கீழண்டை தெரு வழியாக தன் புழக்கடை அறைக்கு வந்து சேர்ந்தான். மேலண்டை தெருவில் இருக்கும் வீட்டிற்கு அவன் கீழ்ண்டை தெரு வழியாகத்தான் வர வேண்டும். அப்படி ஒரு கண்டிசன் போட்டிருந்தார் கிருஷ்ணன். “ ஊர் வாய் பொல்லாது அம்பி.. வயசு பொண்ண வச்சிண்டிருக்கேன்.. ஒன்னை வாச வழியா நுழைய விட்டா, எல்லாருக்கும் அவலாயிடும்.. அதனால் நீ பின் பக்கமா வந்துக்கோ.. என்ன? “ கோயில் மூடியது அறியாத அபிராமி கொல்லையில் பூ பறித்துக் கொண்டிருந்தாள். படல் கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினாள். நாராயணனைப் பார்த்துப் பதறினாள். சிலையாக நின்றே விட்டாள். நாராயணனுக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான். ஒரு கையில் பூக்கூடையும், மறு கையால் பொத்திய வாயும் அவளை ஒரு ஆனந்தவிகடன் ஓவியம் போலவே அவனுக்குக் காட்டியது. அபிராமி நொடியில் சுதாரித்துக் கொண்டாள். மின்னலென உள்ளே ஓடிப் போனாள். “ அம்மா! யாரோ கொல்லையிலே நிக்கறா.. “ விசாலம் மாமி எட்டிப் பார்த்தாள். “ போடி பைத்தியம்.. நம்ம நாணாதாண்டி.. வா அம்பி, சுருக்க வந்துட்ட? “ விவரம் சொன்னவுடன் சுடச்சுட இட்லியும் கொத்சும் வந்ததும், மதியம் பருப்புத் துவையலும் வத்த குழம்பும் எனப் பிரமாதப்படுத்தியதும் மாமியின் பெயரைப் போலவே மனசும் விசாலம் என்பதைத் தவிர, உள்நோக்கம் ஏதும் இல்லை. “எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கோயிலைக் கட்டிண்டு அழுவே! உபயதாரர் இருக்கற வரைக்கும் ஓடும்.. அப்புறம்? பேசாம ஒழிஞ்ச நேரத்துல எங்கிட்டே கொஞ்சம் ஜோஸ்யம் கத்துக்கோ! இது இல்லேன்னாலும் அது கைக் கொடுக்கும் “ களவும் கற்று மறம்பாளே! கட்டம் தானே? கத்துண்டு ஒத்து வரலைன்னா மறந்துட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டே மதிய வேளைகளில் கிருஷ்ணனிடம் ஜாதகம், பரிகாரம் என எல்லாவற்றையும் கற்றுக் கொண்டான் நாராயணன். மறக்க நினைத்தவனுக்கு அது பதிந்து போனது தான் விசேஷம். டவுனுக்குப் போய் பழைய புத்தகக் கடையில் கீரோஸ் கைரேகை சாஸ்திரம் ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி அதையும் படித்து நெட்டுரு போட்டுக் கொண்டான். அதில் ஆரம்பித்த்து தான் வினை! சீட்டு வாங்க கை நீட்டுபவர்களின் ரேகைகளை எல்லாம் அவன் கண்கள் ஆராய ஆரம்பித்தன. மூளை அதன் பலா பலன்களை புட்டு புட்டு வைத்தது. ஆனாலும் அல்லவைகளைச் சொல்லாமல் அவன் மௌனம் காத்தான். எல்லாம் அபிராமியின் ரேகைகளைப் பார்க்கும் வரை தான். விசாலம் அபிராமிக்கு மருதாணி இட்டுக் கொண்டிருந்தாள். வலது கையைக் காட்டிக் கொண்டு இடது கை மணிக்கட்டை எதிரே இருக்கும் சின்னப் பெஞ்சில் முட்டுக் கொடுத்து இருந்தாள்  அபிராமி. பெருமாள் ரட்சிப்பது போல அவள் கை விரல்கள் பிரிந்து மேல் நோக்கி இருந்தது. பின் கட்டு வழியாக தன்  அறைக்குப் போக யத்தனித்தவன் கண்களில் மத்தியான வெயிலில் ஒளிர்ந்த அந்தக் கை படுவானேன்? நாராயணனின் கண்கள் தன்னிச்சையாக அபிராமியின் ரேகைகளை மேய்ந்தன. என்ன இது? புத்தி ரேகையின் குறுக்காக ஒரு கோடு ஓடுகிறதே! இது அனர்த்தம் இல்லையோ! கூடா நட்பு என்று சொல்வார்களே! இந்தப் பெண்  அப்படி ஏதாவது பண்ணிக் கொண்டு விடுமா? தந்தச் சிலையை எந்த அம்மி கொத்துபவன் சீரழிக்கப் போகிறானோ? அந்த  நிமிஷத்தில் அவனுக்கு அபிராமியின் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. எப்படி கேட்பது. ஏன்? எதற்கு? என்று ஆயிரம் கேள்வி வரும். விசாலம் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அபிராமி சுதாரித்துக் கொண்டு சட்டென்று தாவணியை எடுத்து போர்த்திக் கொண்டாள். தலையைக் குனிந்து கொண்டாள். “ வா அம்பி. என்ன கோயில் உச்சி வேளைக்கு நடையை  சாத்திட்டாளோ? சாப்டயோ? இங்க சாப்டறயா? இன்னிக்கு ஒண்ணும் பெருசா இல்லே! மனசே சரியில்லை.. பருப்பு தொகையலும், மிளகு ரசமும் தான் வெச்சிருக்கேன். பரவால்லியோ?” “ வேணாம் மாமி! பகவான் எனக்கு படியளக்கறாரே! இன்னிக்கு வெண் பொங்கலும் தயிர் சாதமும் கெடைச்சுது.. மாமா இல்லியா?” “ அவர் பக்கத்து டவுன் வரைக்கும் போயிருக்கார்.. ஏதோ ஜாதகப் பொருத்தம் பாக்கணுமாம்.. ஊருக்கெல்லாம் அவர் சொன்னா நடக்கறது.. பெத்த பொண்ணுக்கு  நடக்க மாட்டேங்கறது “ நாராயணனுக்கு சட்டென்று பிடி கிடைத்தது. மாமா இல்லை. மாமியிடம் அபிராமி ஜாதகத்தைக் கேட்டால் என்ன? “ எல்லாத்துக்கும் பரிகாரம் இருக்கு மாமி.. வேணும்னா அபியோட ஜாதகத்தை என்னாண்ட காட்டுங்களேன்.. மாமாவுக்கு தெரியாத ஏதோ ஒண்ணு என் கண்ணுக்குப் படலாம்” விசாலம் கண்ணில் ஒரு ஆசையும் ஏக்கமும் மின்னலென மறைந்து போனது. உடனே ஒரு வித பயமும் வந்து குடியேறிவிட்டது. “ வேணாம் அம்பி! அவருக்கு தெரிஞ்சா கொன்னுடுவார்.. இவளோட ஜாதகத்தை நானே நாலஞ்சு வாட்டிதான் பாத்துருக்கேன்.. யாருக்கும் காட்டக் கூடாதுன்னு சொல்லியிருக்கார் “ “ ஜாதகத்தைக் காட்டாம எப்படி மாமி மாப்பிள்ளை தேடறது?” “ காட்டற ஜாதகம் இவள்து இல்லே “ சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டாள் விசாலம் மாமி. உளறி விட்டோமோ? சட்டென்று வேர்த்த்து. படபடவென்று ஆனது. லேசாக தலையை தூணில் சாய்த்துக் கொண்டாள். உள்ளே ஓடிய அபிராமி, கையில் தண்ணீர் சொம்புடன் வந்தாள். கொஞ்சம் குடித்தவுடன் விசாலம் நிதானத்திற்கு வந்தாள். உள்ளே போய் படுத்துக் கொண்டாள். நாராயணன் விழித்தபடி நின்றிருந்தான். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அபிராமியும் அங்கேயே நின்று கொண்டிருப்பது அவனுக்கு தெரிந்தது. அம்மாவுக்கு முன்னாலேயே உள்ளே ஓடி விடும் பெண் ஆயிற்றே! ஏன் நிற்கிறாள்? அபிராமியின் கையில் பழுப்பேறிய நாலாய் மடிக்கப்பட்ட ஒரு காகிதம் இருந்தது. ஓரத்தில் மஞ்சள் தடவி மங்கி இருந்தது. அதை பெஞ்சு மேல் வைத்து விட்டு, அவனை நோக்கி ஒரு அர்த்தப் பார்வையோடு அபிராமி உள்ளே போய் விட்டாள். இது அபிராமியின் உண்மையான ஜாதகம். இதில் என்ன இருக்கிறது என்று பார்க்க நாராயணனுக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது. விசாலம் மாமி லேசாக குறட்டை விடுவது அவனுக்குக் கேட்டது. ஒருக்களித்த கதவின் இடைவெளியில் ஒரு ஒற்றைப் பின்னல் தெரிந்தது. அபிராமியின் ஜாதகத்தில் எல்லா கோளூம் கந்தர கோளமாக இருந்தது. ஆயுசுக்கும் பரிகாரம் செய்தாலும் விடியாது என்று தெரிந்து கொண்டான் நாராயணன். உடனே ஒரு வெள்ளைத் தாளில் கட்டங்களை அப்படியே பிரதி எடுத்து வைத்துக் கொண்டு, மீண்டும் பழையபடியே அந்த பழுபேறிய காகிதத்தை பெஞ்சில் மீது வைத்து விட்டு வந்து விட்டான். சில நிமிடங்களில் அது அங்கிருந்து காணாமல் போயிற்று! துல்லியமாக ஆராய்ந்ததில், அபிராமியின் ஜாதகத்தில் வேற்று சாதி சேர்க்கை உண்டு என்று அறிந்து கொண்டான். இதை எப்படி மாமாவிடமும் மாமியிடமும் சொல்வது? இதற்கு பரிகாரம் உண்டோ? அவளைக் காப்பாற்ற, தானே அவளைக் கல்யாணம் செய்து கொண்டால் என்ன? அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. மாமா வடமா? அதிலேயே பிள்ளை தேடுகிறார் என்று அவனுக்குத் தெரியும். அவனுக்கு பிரஹசரணம். ஒப்புவார்களோ? இதற்கு தன் பெற்றோர் என்ன  சொல்வர்? சொந்த வீடு., நிலபுலன் இவற்றோடு வரும் பெண்ணை ஏற்க கசக்குமா அவர்களுக்கு? ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பிள்ளைக்கு இதைவிட ஒசத்தியான இடம் கிடைக்குமோ? இதை எப்படி நிறைவேற்றுவது? “ வடமால்லே பிள்ளையே இல்லை.. எல்லாம் வடக்கே போயிட்டாங்க போலிருக்கு.. பேசாம பிரஹச்சரணத்துல பாக்கணும்.. ஆனா சாம வேதம் கூடாது.. இழுத்துண்டே இருப்பான்கள் “ மாமியிடம் சொல்லிக்  கொண்டிருந்தார் மாமா. பின் பக்கம் நிழலாடியது. நாராயணன் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டிருந்தான். “ ஏன்னா? “ என்று கிசுகிசுத்தாள் விசாலம். “ நாராயணன் கூட பிரஹச்சரணமோ என்னமோதான் சொன்னான். பேசாமா அவனுக்கே குடுத்துடலாமே! நாணாவுக்கு நம்ம அபியைக் கொடுத்தா என்ன? ஸ்திதி நம்ம விட சிதிலம் தான் அவாளுக்கு.. நிச்சயமா ஒத்துப்பா!” ஷர்மாவுக்கு அது சரியெனப் பட்டது. “மொதல்ல அம்பியிடம் பேசிப் பாரு “ என்று மஞ்சள் விளக்கைக் காட்டினார்! அதற்கு நிதானம் என்று பொருள். நாராயணன் உடனே செயல்பட்டான். மாமியிடம் ஊருக்கு போவதாகச் சொல்லி திருக்குறுங்குடி வந்தான். அம்மா, அப்பாவிடம் விஷயத்தை சொன்னபோது, அவர்களுக்கும் சம்மதம்தான். “ பெரிய வீடும்மா! கல்யாணம் ஆனவுடனே மாமா, மாமிகிட்டே பேசி உங்களை அங்கேயே அழைச்சிண்டுடறேன்.. நான் இப்ப இருக்கற ரூம் காலியாத்தானே இருக்கும் “ என்று ஏகத்துக்கு ஜெய்ட்லி திட்டம் போட்டான். அவர் அந்தக் கோயிலுக்குள் நுழைந்தபோது ‘பளீர்’ என்றது. கூசம் தாங்கமுடியாமல் கண் உயர்த்தினான் நாராயணன். ஆறடி இருந்தார். பட்டு வேட்டியும், பச்சைக் கலர் பட்டு ஜிப்பாவும் அணிந்திருந்தார். கழுத்தையும் காதையும் மூடிய தங்க, வைரங்கள், ஆதவன் ஒளியில் ஏழு வர்ணங்களைக் காட்டின. “ என் பேர் சந்தானகோபாலன். ஊரு இதுதான்.. நாந்தான் இப்ப இங்கே இல்லே! ஒரு தலைமுறைக்கு முன்னாலயே பினாங்கு போயிட்டேன் “ தீட்சிதர் மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஓடி வந்தார். இடுப்பில் சொருகி இருந்த கோயில் சாவி, தட்டு சில்லரையாக குலுங்கியது. “ வரணும்.. இளங்கோவன், ஈ.ஓ. வந்து சொன்னார். நீங்க வரப்போறேள்னு.. காத்துண்டிருக்கேன்.. சிவனோட நானும்..” புருவங்களை உயர்த்தி அவரை ஏறிட்டான் நாராயணன். தீட்சிதர் அவன் பார்வையைப் புரிந்து கொண்டார். “ அம்பி நீ புதுசோல்லியோ! உனக்கு தெரியாது. சார் சந்தான கோபால  ஷர்மா. நம்மளவா தான்.. தூர தேசம் போயிட்டார்.. சின்ன வயசுல கோயில் வராத நாளே கிடையாது.. அதான் ஈஸ்வரன் அவரை பினாங்கு பணக்காரரா ஆக்கிட்டார்” “ வருஷா வருஷம் கோயில் நன்கொடைன்னு ஒரு தொகை அனுப்புவேன்.. இந்த வருஷம் நானே நேர்ல வர்றதுனால அனுப்பலை” என்று சொல்லிக் கொண்டே அவர்  உள்ளே போனார். தீட்சிதர் பின்னர் சாவகாசமாக சொன்ன தகவல்கள் இவை. சந்தானகோபாலன் ஆசார குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் மூட நம்பிக்கைகளில் பேர் போனவர்கள். பினாங்கு கப்பல் கம்பெனியில் வேலை கிடைத்தவுடன் அலமு பாட்டியும் அவனது அப்பா சுந்தரராம  சாஸ்திரிகளும் ஆன வரைக்கும் தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் சந்தானம் உறுதியாக இருந்தான். அவனுக்கு படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்ய ஆசை. இன்னும் மேலே  படிக்கவும் ஆசை. அதற்கெல்லாம் பெரிய கோட்டைக் கதவையே திறந்து விட்டது போல இருந்தது பினாங்கு வாய்ப்பு. எல்லோரையும் உதறி தள்ளி விட்டு பினாங்கு போய் விட்டான். சாஸ்திரி எள்ளை இறைத்து விட்டு தலையில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றிக் கொண்டார். ஊரும் அவனை ஜாதிப் பிரஷ்டம் செய்து விட்டது. இதெல்லாம் நாற்பது வருடங்களுக்கு முன்பு.. இப்போது சந்தானகோபாலன் ஒரு லட்சாதிபதி. அமெரிக்காவில் இருப்பதாகத் தகவல். உபரியாக கிருஷ்ணனும் சில தகவல்களைச் சொன்னார். “ அந்தூர்ல அவர் எஸ்.கே.ஷர்மாவாம்.. இங்கே அவரை சேத்துக்க மாட்டேன்னு பிரஷ்டம் பண்ணிட்டாளோன்னோ! ஆனா அவர் பிராம்மணியத்தை இஷ்டமா சுவீகரிச்சுண்டு அதே போல வெளிநாட்டுல இருக்கற ஒரு அந்தணக் குடும்பத்துல தான் பொண்ணை கல்யாணம் பண்ணிண்டிருக்கார். ஒரே பையன்.. அவனுக்கு ஒரு பெண்ணைத் தேடித்தான் இங்கே வந்திருக்கார். ஒரு மாசம் இருப்பாராம். நம்மாத்துக்குக் கூட வரேன்னிருக்கார் “ விசாலத்தின் ஏறிய புருவம் இறங்கவேயில்லை! நாராயணனின் கல்யாண  ஏற்பாடுகள் ஜரூராக  நடந்து கொண்டிருந்தன. கூறைப் புடவை வாங்கப் போன இடத்தில் விசாலமும் கிருஷ்ணன் ஷர்மாவும் சந்தானத்தை சந்திக்கும்வரை எல்லாம் திட்டப்படியே தான் நடந்தது; சந்தானத்திற்கு ஒரு பிள்ளை இருப்பதும், அவன் பெரிய படிப்பு படித்து நல்ல வேலையில் தில்லியில் இருப்பதும் தெரிய வரும் வரை! சம்பாஷணை சம்பந்தத்தில் முடியும் என்று நாராயணன் கண்டானா? நொடியில் காட்சிகள் மாறி, சந்தானம் பிள்ளை சந்திரசேகரன் மாப்பிள்ளையாகவும் நாராயணன் மாப்பிள்ளைத் தோழனாகவும் மாறிப் போனார்கள். ஜாதகம் பொய்யா? வேறு சாதியில் மணம் என்று அபிராமி ஜாதகம் சொன்னது எப்படி தப்பாகப் போகும்.\ “ விசாலம்! நம்ம சாதியில அபிக்கு கல்யாணம் நடக்காதோன்னு பயந்துண்டிருந்தேன்.. இப்போ பணக்கார மாப்பிள்ளை கெடைச்சுட்டான்.. செலவு எல்லாத்தையும் சந்தானம் சாரே ஏத்துக்கறேன்  சொல்லிட்டார். ஒரு வாரத்துல முடிக்கணுமாம்.. ஆனா ஜாதகம் பொய்யில்லைடி.. இவாளுக்கு ஜாதியே இல்லை.. அதுவும் வேற ஜாதிதானே?” கிருஷ்ணன் மாமியிடம் பேசிக் கொண்டிருந்த்தைக் கேட்டு அவனுக்கு நெஞ்சை அடைத்தது. “ அப்போ நாராயணன் கல்யாணமே பண்ணிக்கலையா?” “ ஏன் பண்ணிக்கலை.. மாத்தல் வாங்கிண்டு மெட்ராஸ் வந்தான். ஒறவுல ஒரு பெண்ணைக் கட்டி வச்சா! அவ வந்த நேரம் அவனுக்கு டி.வி.எஸ். கம்பெனிலே வேலை கெடைச்சுது. மாமனார் அங்கே யூனியன் லீடரா இருந்தார். ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு ரெண்டு பொறந்துது..” “ அப்புறம் என்ன? ஜாதகத்தையும் சோசியத்தையும் ஏன் திட்டணும் “ “ ஏன் திட்டமாட்டான்.. பையன் நல்லா படிச்சான்.. சாஃப்ட் வேர்ல சேர்ந்து அமெரிக்கா போனான். நல்லா சம்பாதிச்சான்! ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்துல சேர்ந்து மொட்டை அடிச்சிண்டு கல்யாணமே வேண்டாமுனுட்டான்.” ரவியின் வர்ணனை ஒரு திரில்லர் கதையாக இருந்தது.  ராகவன் இமை கொட்டாமல் கேட்டான். “ பொண்ணு நல்ல படியா.. “ “ அங்கேதான் டிவிஸ்ட்! அவன் பொண்ணு கமலா, அண்ணனைப் பார்க்க அமெரிக்கா போனா..” “ அடப்பாவமே அவளும் ஹரே கிருஷ்ணாவா?” “ அப்படி இருந்தாத்தான் பரவாயில்லையே! ஹாரி க்ரஷ்னு ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிண்டு அங்கேயே செட்டில் ஆயிட்டா” “ நாணா தான் ஜாதகப் புலியாச்சே! முன்னாடியே இது அவனுக்கு தெரிஞ்சிருக்காதோ?” “ கமலா ஜாதகம் பளிங்கு சுத்தம். எல்லாமே  உச்சம். தப்பா போக வாய்ப்பில்லைன்னு நாராயணன் நம்பினான். ஆனா, விதி வேற மாதிரி இருந்துடுத்து” “ டேய் நீ ரவிதானே? “ என்றபடி நாராயணன் அருகே வந்தான். “ எப்படி இருக்கே? சிதம்பரத்துல பார்த்தது.. இப்ப நீயும் மெட்ராஸ் தானா? “ என்றபடியே கையை  நீட்டினான். அவன் கையில் பத்து விரல்களிலும் பத்து நிறக் கல் மோதிரங்கள் இருந்தன!                   11.நேரம்    பரமேஸ்வரன் மத்யமரின் அடையாளம். அவனுக்கு எல்லாமே விட்ட குறை தொட்ட குறைதான். எதிலும் திருப்தி இல்லை. எந்த செயலும் முழுமை அடைந்ததாக அவன் சரித்திரத்தில் இல்லை. படிக்கிற காலத்தில் அவன் கணக்கில் புலி. ஆனால் பள்ளி இறுதி வகுப்பில், அவன் முழுப் பரிட்சை எழுதும்போது, பாழாய் போன டைபாய்டு ஜுரம் வந்து, தேர்வையே கோட்டை விட்டான். அதனால் ஒரு ஆறு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது. நடுவில் சும்மா இருப்பானேன் என்று தட்டச்சு கற்றுக் கொண்டான். ஒரே மாதத்தில் வாக்கியங்களை அடிக்கக் கற்றுக் கொண்ட அவனுக்கு பாராட்டு கிடைக்கவில்லை. திட்டு தான் கிடைத்தது. இவனைப் பார்த்து மற்றவர்களும் ஒரு மாதத்தில் பயின்று விட்டால் ஐந்து மாத பயிற்சி பணம் கோவிந்தா ஆகிவிடும் என்பதால், தட்டச்சு நிறுவனரே இவனை வெளியே அனுப்பி விட்டார். ஒரு வழியாக பள்ளித் தேர்வை முடித்து, குடும்ப சூழலால் வேலைக்கு போன போது அங்கேயும் எதிர்பாராத தோல்விகள். வேலையை இழுத்து நாட்களை கடத்தும் சக ஊழியர்கள் மத்தியில் மனக் கணக்காகவே இவன் போட்ட கூட்டல் கழித்தல்கள் பாராட்டுகளைப் பெற்று தரவில்லை. உடன் வேலை பார்த்த சகாக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்தது. போதாததற்கு அவனுடைய யதார்த்த பேச்சு எதிர்வினையை உண்டாக்கியது. தன் மேலாளரிடமே, எல்லோரும் கேட்கும்படி ஒரு நாள் உண்மையைச் சொன்னது தான் ஆபத்தை அருகில் அழைத்தது. “ ஆறை ஜீரோ மாதிரி போடறீங்க சார்.. எப்படி கூட்டினாலும் டேலி ஆவாது! கொம்பை நீட்டணும் சார்.. இப்படி! “ கொல்லென்று சிரித்தது அலுவலகம். அடுத்த நாள் மாற்றல் வந்தது.. செங்கல்பட்டிற்கு! இங்கேயும் அங்கேயும் பந்தாடப்பட்டு பரமு, இப்போது சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கிறான். ஆனாலும் அவனது ஸ்திதி ஏறவில்லை. வாணியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு, அவளது அடங்காத ஆசைகளைப் பூர்த்தி செய்ய அவனது சொற்ப சம்பளம் போதவில்லை. தன் பங்கிற்கு ஏதும் செலவு வந்துவிடக் கூடாது என்று அப்பாவின் சைக்கிளை பழுது பார்த்து அதில் தான் அவன் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறான். சைக்கிள் பழசு. ஆனால் தினம் தினம் உலகம் புதுசு புதுசாக மாறிக் கொண்டிருக்கிறது! சாலைகள் அகலமாக்கப்பட்டு, புதிய ரக வாகன்ங்கள் அதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அவனுடைய பழைய சைக்கிளை மதிப்பார் இல்லை. வழி விட மறுப்போரே உண்டு. அவனுக்கும் அவனது சைக்கிளுக்கும் தினம் தினம் சோதனை ஓட்டமே! வெறெந்த நோக்கமுமின்றி அவன் விரைந்து கொண்டிருந்தான். அவனுடைய ஒரே நோக்கம் குறித்த நேரத்தில் அலுவலகம் போய் சேருவதுதான். நேற்றே அவனுடைய கிளை மேலாளர் சொன்ன வார்த்தைகளின் உஷ்ணம் அவனை இரவெல்லாம் தூங்க விடவில்லை. மொட்டை மாடியில் சிறிது நேரம் உலாத்தியதும், வெறும் உடம்பில் சில்லென்ற கட்டாந்தரையில் படுத்ததும் கூட அதைத் தணிக்கவில்லை. “ பரமேஷ்வரன் ( அவர் அப்படித்தான் ஸ்ஸையெல்லாம் ஷ் என்பார்.) ஒங்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கு கம்பெனியோ நிர்வாகமோ பொறுப்பில்லை காரணமுமில்லை. இங்க வேலை நேரம் ஒண்ணு குறிக்கப்பட்டிருக்கு. அதை எல்லோரும் ஒழுங்கா கடைபிடிக்கறாங்களான்னு கண்காணிக்கிற வேலை எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கு. மூணு நாள் லேட்டா வந்தா அரை நாள் கேஷ¤வல் லீவ் கட் பண்ணச் சொல்லி நிர்வாகம் போட்ட விதிமுறை இருக்கு. அப்படி கட் பண்ண ஆரம்பிச்சா ஒங்களுக்கு மாசத்துல ஏழு எட்டு நாள் கட் பண்ண வேண்டியிருக்கும். நாளையிலேர்ந்து லேட்டா வந்தா உள்ளே வராதீங்க. அப்படியே திரும்பிப் போயிடுங்க. “ இதற்கா இவ்வளவு வருத்தப்படுகிறான் இவன் என்று தானே நினைக்கிறீர்கள். அதைத் தாண்டி அவன் மேலாளர் அறைக் கதவை திறந்து வெளியே போகும்போது அவர் சன்னமாக முணுமுணுத்தது கேட்டால் நீங்கள் இப்படிச் சொல்ல மாட்டீர்கள். ‘ அம்பது வயசு கெழத்தையெல்லாம் என் தலையில கட்டி கழுத்தறுக்கறாங்க. சீட்டைக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதானே! ஷாவ் கிராக்கி ’ அவினாஷ் என்ற மேலாளருக்கு முப்பது வயதுதான் இருக்கும். புனே கல்லூரியில் மேனேஜ்மெண்ட் படிப்பு படித்தவர். ஏற்கனவே மூன்று கம்பெனிகளில் திறமையாக வேலை பார்த்தவர். நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த கம்பெனியை மீட்டு இலாபத்திற்கு கொண்டு வந்தவர். கூடுதலாக வட இந்தியர். கம்பெனியில் தலைமை அலுவலகம் மும்பையில் இருக்கிறது. சுபாவமாகவே தென்னிந்தியாவைப் பற்றிய காழ்ப்புணர்ச்சி கொஞ்சம் கூடுதலாகவே அங்கு இருக்கும் ஆட்களுக்கு உண்டு என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். சிவதாஸ் அவனுடைய நெருங்கிய நண்பன். மிலிட்டரியிலிருந்து ஓய்வு பெற்று இந்தக் கம்பெனியில் பாதுகாப்பு அதிகாரியாக பதவி ஏற்றவன். போன வருடம் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு தினம் ஒரு திசையாக பறந்து கொண்டிருப்பவன். பரமு அவனிடம்தான் தன் ஆதங்கத்தையெல்லாம் கொட்டுவான். மனைவியின் நச்சரிப்பு, பிள்ளைகளின் பிடுங்கல், கடன் தொல்லையால் ஏற்படும் மன அழுத்தம் என்று எல்லாவற்றிற்கும் அவன் உபாயம் சொல்வான். “ ஹே! பரமு ! ஒண்ணு புரிஞ்சுக்கோ. வயசாளி ஆயிட்டா ஒரு வருஷம் கூடினா பத்து வருஷம் கூடினாப்பல மனசு எண்ணும். அப்படியே மனசு இளமையா நெனச்சுக்கிட்டாலும் ஒடம்பு அதுக்கு ஒத்துழைக்காது. சம்ஜே “ அது என்னவோ வாஸ்தவம்தான். அப்பா வாங்கிக் கொடுத்த சைக்கிளில் பள்ளிக்கூடம் போனபோதெல்லாம் இருந்த தெம்பும் வலிமையும் இப்போது காணாமல் போய் விட்டது. சைக்கிள் என்னவோ அதே சைக்கிள்தான். தினமும் துடைத்து எண்ணை போட்டு நன்றாகத்தான் வைத்திருக்கிறான். அவன் பிள்ளைகள் ஓட்டும்போது அதுவும் வேகமாகத்தான் போகிறது. அவன் ஓட்டும்போது மட்டும் எவ்வளவு அழுத்தி மிதித்தாலும் நகர மாட்டேன் என்கிறது. சமயத்தில் சாலை போக்குவரத்து சங்கடங்களில் மாட்டிக் கொண்டு அலுவலகம் போய் சேருவது பெரும்பாடாய் இருக்கிறது. அனிச்சையாக கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்பதடிக்க பத்து நிமிடம் இருக்கிறது. இன்னும் நந்தனம் தாண்டவில்லை. இன்றும் பாட்டு கேட்க வேண்டுமா? பக்கத்து சீட் சித்ரா தாம்பரத்திலிருந்து வருகிறாள். எட்டு நாற்பதுக்கெல்லாம் உள்ளே நுழைந்து விடுகிறாள். இத்தனைக்கும் அகல ரயில் பாதை போட்டு தாம்பரம் வரையில் நீட்டித்த பின் ரெயில்கள் பிதுங்கி வழிகின்றன என்று அந்தப் பக்கத்து ஆட்கள் எல்லாம் சொல்கிறார்கள். பள்ளி செல்லும் இரண்டு பெண் குழந்தைகள், வேலைக்கு செல்லும் கணவன், இத்தனை பேரையும் கவனித்து விட்டு அவளால் எப்படி நேரத்துக்கு முன்பே அலுவலகம் வர முடிகிறது? கேட்டே விட்டான். “ ரொம்ப சிம்பிள். எங்க வீட்ல எந்த கடிகாரமும் சரியான நேரத்தைக் காட்டாது. எல்லாமே பதினைந்து நிமிஷம் கூடுதலாகக் காட்டும். அதுதான் சரியான நேரம்னு மனசளவில ஒரு தீர்மானம் வச்சிருக்கோம் நாங்க எல்லோரும். ஒரு இரண்டு நாள் சங்கடமா இருக்கும். அப்புறம் பழகிடும். “ அப்படிச் செய்து பார்த்ததில் அனாவசியமாக சண்டை வந்துவிட்டது. கல்லூரிக்கு செல்லும் மகள், பதினைந்து நிமிடம் முன்னால் கிளம்பிப் போனதில், கட் ஸர்வீஸ் பஸ் ஏறி பாதி வழியில் இறக்கி விடப்பட்டு நடந்தே கல்லூரிக்கு போனதில், ஒரு பூகம்பமே வெடித்தது வீட்டில். இன்று எப்படியும் நேரத்துக்கு போய்விடவேண்டும். சிக்னல் விழுந்தவுடன் விழுந்தடித்துக் கொண்டு கிடைத்த சொற்ப இடைவெளியில் புகுந்து புயலெனக் புறப்பட்டான் பரமு. “ கஸ்மாலம். வூட்ல சொல்லிக்கினு வரலியா “ என்ற ஆட்டோக்காரனின் வசவு அவன் காதுகளில் ஏறவில்லை. அவன் கண் முன் பிரமாண்டமான அளவில் ஆபிஸ் சுவர் கடிகாரம் ஆடிக்கொண்டிருந்தது. அதில் சுற்றி வரும் விநாடி முள்ளில் கெத்தாக உடகார்ந்து கொண்டு அவினாஷ் ஏளனமாகச் சிரித்துக் கொண்டிருந்தான். “ வயசாச்சு சாளேஸ்வரம் வேற! ஆனா ஜம்பம் மட்டும் போகலை. கண்ணாடி போட்டுகிட்டா கெழவனாட்டம் தெரியுமாம். போடலைன்னா மட்டும் என்ன குமரனா? இருபது ரூபாய்க்கு குடுக்கறான்னு பிளாட்பாரம் வாட்சை வாங்கி கட்டிகிட்டு, குருட்டுக் கண்ணால பாத்தா நேரமா தெரியும். அப்புறம் எப்படி நேரத்துக்கு வேலைக்கு போக முடியும். உங்க கண்ணு இருக்கற லட்சணத்துக்கு, செண்ட்ரல் ஸ்டேசன் கடிகாரத்தை கழுத்துல மாட்டிக்கிட்டாத்தான் பளிச்சுன்னு தெரியும்.” வாணி அவன் மனைவி. ஆனால் வாயைத் திறந்தால் சாணிதான். கரும்புள்ளியும் கழுதையும்தான் பாக்கி. மற்றபடி எல்லா அவமானத்தையும் அரங்கேற்றி விடுவாள். அவளுடைய ஒரு நாள் உரையின் ஒரு பகுதிதான் மேற்சொன்னது. அலுவலகம் மாம்பலம் மகாலட்சுமி தெருவில் இருந்தது. இந்தப் பக்கம் உஸ்மான் சாலை ஒரு வழிப் பாதை. பின்பக்கமாகத்தான் வரவேண்டும். அதற்கு ஒரு இரண்டு நிமிடம் கூடுதலாக ஆகும். அவனுடைய அதிர்ஷ்டம் இன்று வழிவிட்டே வாகனங்கள் செல்கின்றன. இதோ இன்னும் ஒரு நிமிடம் இருக்கிறது. அவன் மகாலெட்சுமி தெருவில் நுழைந்து விட்டான். அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைந்து சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு பூட்டும்போது செக்யூரிட்டி நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். “ என்னா சார் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் “ இவனுக்குக்கூட நம்மைப் பார்த்தால் கிண்டல் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதே என்று தன் விதியை நொந்து கொண்டே உள்ளே பார்வையை ஓடவிட்டான். அட அதிசயமாக இருக்கிறதே. தாம்பரம் சித்ரா இன்னும் வரவில்லை. ஒருநாளாவது அவளுக்கு முன்னால் வந்து விட்டதில் உண்மையிலேயே அவன் மனம் குதியாட்டம் போட்டது. இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்த்ததில் அவினாஷ¤ம் வரவில்லை என்று தெரிந்தது. அடக் கஷ்டமே! நாம் சீக்கிரம் வரும்போது இந்தக் கிராதகன் வரவில்லையே. அவனுக்கு முன்னால் வளையாமல் நெளியாமல் ஒருநாளாவது தன் இருக்கைக்கு செல்லலாம் என்று பார்த்தால் அதில் மண் விழுந்து விடும் போலிருக்கிறதே. சரி அதனாலென்ன.. செக்யூரிட்டி பார்த்திருக்கிறான். அவன் சொல்ல மாட்டானா? சைக்கிள் ஹேண்டில் பாரிலிருந்து சாப்பாட்டுப் பையை எடுத்துக் கொண்டு, தலையை நிமிர்த்தியபடியே அவன் வாசல் கதவை நோக்கி நடந்தான். ஒரு பத்து படி ஏறித்தான் அலுவலக வாசல் கதவை அடைய வேண்டும். படிகளை கிரானைட் கற்களால் அமைத்திருந்தார்கள். தினமும் கடைநிலை ஊழியன் கோபால் சோப்பு போட்டு கழுவி துடைத்து பளபள வென்று வைத்திருக்கிறான். குனிந்து பார்த்தால் நடப்பவர் பிம்பம் தெரியும். கொஞ்சம் கவனம் பிசகினால் வழுக்கிக் கூட விட்டு விடும். தினமும் ஏறி வரும் படிகள் தான். ஆனால் நேரம் தவறி வருவதால் இதையெல்லாம் கவனிக்கும் மன நிலையில் பரமு எப்போதும் இருந்ததில்லை. இன்றுதான் அந்தப் படிகளை முதன் முறையாக ரசித்துப் பார்த்தான். ஏறக்குறைய ஒரு சிம்மாசனத்தின் படிகளைப் போல .. திடீரென்று அவனுக்கே ஒரு ராஜ கம்பீரம் வந்து விட்டது போல இருந்தது. சாப்பாட்டு பையை லேசாக சுழட்டியபடி ஒரு ராஜபார்ட் நடிகனைப் போல அவன் அந்தப் படிகளில் ஏறினான். முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்ட கதவு. சூரிய வெளிச்சம் உள்ளே வராதபடி கறுப்பு •பிலிம் ஒட்டியிருந்தார்கள். நடுநாயகமாக அதன் மேல் கணிப்பொறியில் அச்சடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. ஊழியர்கள் கவனத்திற்கு: இன்று முதல் அலுவலக நேரம் காலை 9.30முதல் மாலை 5.30 வரை. இப்படிக்கு: முதன்மை மேலாளர். பரமு கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இருபது ரூபாய் கடிகாரம் 9.01 என்றது.                                                                 12. விதைபோடும் மரங்கள்    அந்த ஊரில் இருந்த ஒரே பள்ளிக்கூடம் அதுதான். அதுவும் இப்போதோ அப்போதோ விழுந்து விடும் நிலையில்தான் இருந்தது. மழை பொய்த்துவிட்ட காலமாகிப்போனதால் இன்னும் ஓரிரண்டு வருடங்களுக்குத் தாங்கும் என்று ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள். பெண்கள் பேச்சு வேறாக இருந்தது. அவர்கள் அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் ஒருவித அச்சத்துடனே அந்தப் பள்ளிக்கூடத்தைப் பார்த்துக் கொண்டு போனார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மாந்தோப்பில் இப்போது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துகொண்டிருப்பவர்கள், பள்ளிக்கூடம் இடிந்து போனால் அந்த இடத்தை தங்கள் விற்பனைக்குத் தோதான இடமாக தேர்ந்தெடுத்திருப்பதை அறிந்ததிலிருந்து அவர்களது பீதி இன்னும் அதிகமாகியிருந்தது. கடைசி மூச்சை விடக் காத்திருக்கும் பெரியவர்களின் அருகில் அமர்ந்து சொந்த பந்தங்கள் பிரார்த்தனை செய்வதுபோல் மனதுக்குள் அந்த ஓட்டுக் கட்டிடம் விழுந்து விடாமலிருக்க வேண்டிக் கொண்டேதான் அப்பெண்கள் அதைக் கடந்து போனார்கள். அந்தப் பள்ளிக்கூடம் எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைக் கூட அனுப்ப அச்சப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் குறைய குறைய சாராய வியாபாரிக்கு குஷி அதிகமாகிக் கொண்டிருந்தது. சண்முக வாத்தியார் தினமும் அங்கு வந்து மாலை வரை உட்கார்ந்து போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதுவே சாராய வியாபாரிக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது. அவனது ஆட்கள் அடிக்கடி பள்ளிக்கு அருகாமையில் வந்து நோட்டம் விட்டுச் செல்வார்கள் சண்முகம் வாத்தியாரைப் பற்றி ஊரில் பெருமிதமாகப் பேசுவார்கள். ஆனாலும் அவர்களுக்குள் ஒரு கவலை இருந்தது! சண்முகம் வாத்தியார் இந்த ஊர்க்கார்ர் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இங்கே தள்ளி விடப்பட்டவர். ஆட்சி மாறியதும் அவருக்கு மாற்றல் உத்தரவு வரலாம் என்று பேசிக் கொண்டார்கள். தேர்தலும் அருகாமையில் வந்து விட்டது. முந்தைய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிச்சயம் புதிய அரசு மறு பரிசீலனை செய்யும். அப்போது  சண்முகம் வாத்தியாருக்கு விடிவு காலம் பிறக்கும். சண்முகம் செய்த தவறு என்ன? அவர் ஆசிரியராக இருந்த பள்ளிப்பட்டு கிராமத்தில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஒரு கட்சி அபிமானி. அதுவும் பிரதான எதிர் கட்சி. அதனால் அவருக்கு வகுப்பெடுக்கும் வேலையெல்லாம் கிடையாது. அதோடு கட்சி வேலையாக அவரை பல இடங்களுக்கு கூட்டிப் போய்விடுவார்கள் கட்சி ஆட்கள். மீதம் இருக்கும் இரண்டே  ஆசிரியர்கள் தலையில் மொத்த பள்ளிச் சுமையும் விடியும். முக்கியமான பிரச்சினைகள் ஏதும் வந்தால், அதைத் தீர்க்க தலைமை ஆசிரியர் இருக்க மாட்டார். அவருக்கு அடுத்ததாக சண்முகம் வாத்தியார் தான் அவைகளைத் தீர்க்க வேண்டும். சில சமயம் அவர் எடுக்கும் முடிவுகள், கட்சி ஆட்களுக்கு எதிராக இருக்கும். மாலை வேளைகளில் உடற்பயிற்சியும் விளையாட்டும் முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருந்த சண்முகம் வாத்தியார் மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்: “ நீங்க எல்லாம் மாலையில் பள்ளியில் விளையாடுகிறீர்கள் தானே?” வகுப்பில் நிசப்தம்! “ யார் யார் என்ன விளையாட்டு விளையாடுகிறீர்கள் என்று ஒவ்வொருவராக இங்கு வந்து சொல்லுங்கள்” ஒருவரும் எழுந்திருக்கவில்லை! அப்போதே சண்முகம் வாத்தியாருக்கு துணுக்கென்றது. வகுப்பை கலையச் சொல்லி விட்டார்! மாலையில் பள்ளி விட்டபின் தனக்கு மிகவும் நெருக்கமான, நன்றாகப் படிக்கும் பழனியப்பனை தன் அருகே அழைத்து விவரம் கேட்டார்! கிடைத்த செய்தி அதிரச் செய்தது! மாலையில் பள்ளி கேட்டுகள் மூடப்பட்டே இருக்கும். அதைப் பூட்டி, சாவிகளை தலைமையாசிரியர் வீட்டுக்கு சென்று கொடுத்து விட்டு கடைநிலை ஊழியரான வேலுச்சாமி வீட்டிற்கு போய் விடுவான். பள்ளியின் மொத்த விளக்குகளும் அணைக்கப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கு அங்கே வர பயம். அதனால் யாரும் விளையாட வருவதில்லை. சென்ற வருடம் மாணவர்களின் கல்வித் தரத்தை சோதிக்க வந்த அதிகாரி மிகவும் மகிழ்ந்து போய் “ எக்ஸலென்ட்! இது ஒரு மாதிரி பள்ளி. இதற்கு ஏதாவது அரசிடம் சொல்லி செய்யச் சொல்கிறேன் “ என்றார். உடனே தலைமை ஆசிரியர், தனக்கு தனியாக ஒரு அறையும் அதில் குளிர்சாதன வசதியும்  இருந்தால் இன்னமும் பள்ளி மேம்படும் என்றார். அதை சட்டை செய்யாத அதிகாரி, சண்முகம் வாத்தியாரை நோக்கித் திரும்பினார். “ மிஸ்டர் சண்முகம்! நீங்க கேட்டா  சரியாக் கேப்பீங்க.. என்ன வேணும் கேளுங்க” “ படிப்பு முக்கியம் தான் சார்! ஆனால் அதோடு உடற்பயிற்சியும் இருந்தால் தான் மனமும் உடலும் தெம்பாகும்.. பள்ளிக்கூட மைதானத்திற்கு இரண்டு பிரகாச விளக்குகள் தந்தால் பயனாக இருக்கும் சார் “ “ வெரி குட்! மாணவர்கள் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கற ஆசிரியர்களே நல்லாசில்ரியர்கள். மற்றவர்கள் எல்லாம் செல்லா சிறியர்கள்” என்று சிலேடையாக சொல்லிவிட்டு தலைமை ஆசிரியரை ஒரு பார்வை பார்த்தார். அன்றிலிருந்து ஆரம்பித்தது சண்முகம் வாத்தியாருக்கு தலைவலி. எதை சொன்னாலும் ஏறுக்கு மாறாக சொல்ல ஆரம்பித்தார் தலைமை ஆசிரியர். கூடவே “ நான் மாற்றல் வாங்கிக்கறேன்.. இவனோட என்னால வேலை செய்ய முடியாது “ என்று பகிரங்கமாக கட்சி ஆட்களிடம் சொல்ல ஆரம்பித்தார். நாட்கள் கடந்தன. அதிகாரி நியாயவான். பல தடைகளைத் தகர்த்து அவர் அந்தப் பள்ளிக்கு பிரகாச விளக்குகளை வழங்கிவிட்டார். ஆனால் அதை பொருத்துவதற்கு தலைமை ஆசிரியர் பல தடைகள் விதித்தார். அதிக மின்சாரம் செலவாகும் என்றார். அரசில் கேள்வி கேட்பார்கள் என்றார். கட்டிடம் தாங்காது என்றார். மின்கசிவால் பள்ளியே எரிந்து மாணவர்கள் கருகிப் போவார்கள் என்று பயமுறுத்தினார். மைதானத்தின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த இரண்டு வேங்கை மரங்கள் இருந்தன. உள்ளூர் மின்சார ஊழியர் ஒருவர் பள்ளிக் கட்டிடத்திலிருந்து வேங்கை மரங்கள் வரை மின் கம்பி கொண்டு வர உதவினார். ஜெகஜ்ஜோதியாக இரண்டு விளக்குகளும் வேங்கை மரத்தில் பொருத்தப்பட்டன. கோடை காலத்தில் மின்விசிறிகள் இயக்கப்படும் வகுப்பறைகள், குளிர்காலத்தில் நிறுத்தப்பட்டன. பல சமயங்களில் மாணவர்களே விசிறி வேண்டாம் என தவிர்த்து விட்டனர். மீதமான மின்சாரம் அவர்களுக்கு மாலை பயன்பட்டது. பழனிச்சாமி, மோட்டார் போடாமல் தண்ணீர் நிரப்பும் யோசனையைச் சொன்னான். அதன்படி கேணியிலிருந்து ராட்டினம் வழியாக மேல்நிலைத் தொட்டிக்கு நீர் கொண்டு செல்லப்பட்டது. அதை முறை வைத்துக் கொண்டு மாணவர்களே இயக்கினார்கள். மாலை விளையாட்டால் அவர்களது உடல் பலம் கூடியிருந்தது. அதனால் இந்த காரியம் சாத்தியமாயிற்று. பழனிச்சாமி சொன்ன விவரத்தைக் கேட்ட சண்முகம் வாத்தியார், தானே அதை நேரில் ஆராய முடிவு செய்தார். மாலையில் பள்ளிக் கேட்டுகள் பூட்டியபின் வேலுச்சாமி அதை தலைமை ஆசிரியரிடம் கொடுக்க கிளம்பினான். அவனை வழிமறித்தார் சண்முகம் வாத்தியார். “ என்ன வேலுச்சாமி! எங்கே கிளம்பிட்டே? “ “ ஹெச் எம் வீட்டுக்கு  சார்! சாவியைக் கொடுக்கணும்.” “ வழக்கமா நீ அதை உன் வீட்டுக்கு கொண்டு போயிடுவே இல்லே.. இப்ப ஏன் ஹெச் எம்? “ “ நாலைஞ்சு மாசமா இப்படித்தான் நடக்குது சார். சரியா அஞ்சு மணிக்கு கேட்டை பூட்டி சாவியை தன்னாண்ட கொடுக்கணும்னு அய்யா உத்தரவு போட்டுட்டாரு.. உங்களுக்கும் தெரியும்னாரே அய்யா? தெரியாதா?” ஏதோ சதி நடக்கிறது என்பது மட்டும் சண்முகம் வாத்தியாருக்கு புரிந்தது. ஆனால் அதில் வேலுச்சாமியை இழுக்க அவருக்கு விருப்பமில்லை. “ ஆங்! மறந்துட்டேன்! ஆமாம் ஆமாம்! தெரியும்.. இப்ப நானே ஹெச் எம் வீட்டுக்குத்தான் போறேன்.. நானே கொடுத்திடறேன்” என்று சாவியை வாங்கிக் கொண்டார். வேலுச்சாமி மறைவது வரை காத்திருந்த சண்முகம், தன் கைக்குட்டையை எடுத்து சிக்னல் செய்தார். நாலைந்து மாணவர்கள் பழனிச்சாமி தலைமையில் ஓடி வந்தார்கள். “ டேய் பசங்களா! இன்னிலேர்ந்து மைதானம் திறக்கப் போகுது. ஒவ்வொருத்தரும் எத்தினி பேருக்கு சொல்ல முடியுமோ சொல்லி கூட்டி வாருங்கள்” பிரபல நாளேட்டின் நிருபராக இருந்த தன் பள்ளித் தோழன் சுரேஷை வரச் சொல்லி மாணவர்கள் விளையாடுவதை படம் பிடிக்கச் செய்து, தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரி பெயர்களூடன் மறுநாள் அதை பத்திரிக்கை செய்தியாக ஆக்கிவிட்டார் சண்முகம். தலைமை ஆசிரியருக்கு கல்வி அதிகாரியிடமிருந்து பாராட்டும் வாழ்த்தும் வந்தது. அவரால் மீண்டும் மைதானத்தை மூட முடியவில்லை. ஆனாலும் நீறு பூத்த நெருப்பாக காழ்ப்பு உறங்கிக் கிடந்தது அவரது மனதில். அந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் வந்து அவருடைய அபிமானக் கட்சி பதவிக்கு வந்தது. சண்முகத்திற்கு மாற்றல் உத்தரவு வந்தது. மைதானம் மீண்டும் மூடப்பட்டது. இங்கே..சண்முகத்திற்கு வேறு பிரச்சினை. சமூக விரோதிகளிடமிருந்து எதிர்ப்பு. ஆனாலும் அஞ்சாமல் அவர் பள்ளிக்கூடத்திற்கு வந்து கொண்டிருந்தார். சாராய வியாபாரி சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான். “ வாத்தி உத்தரத்துக்கு கீழேதான் ஒக்காந்துகினுகீறான். உத்திரம் வுழுந்தா பொட்டுனு போயிடுவான். “ எப்போ உத்திரம் விழுவது, எப்போ இடத்தை ஆக்ரமிப்பது என்ற கவலையில் இருந்த அவனுக்கு உபாயம் ஒன்று சொன்னான் ரவுடி ரங்கன் . “ வாத்தி தலையில ஒரே போடா போட்டுருவம். அப்புறம் உத்தரத்தை தள்ளி விட்டாப் போச்சு. “ துட்டு பார்க்கும் ஆசையில் கொலைக்கும் தயாரானான் சாராய வியாபாரி. சனிக்கிழமை நாள் குறிக்கப்பட்டது. யோசனை சொன்ன ரங்கனே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவனுக்கு அதிக சாராயம் கொடுத்து உற்சாகப்படுத்தினான் வியாபாரி. மாலை ஐந்து மணியாகிவிட்டதை உணர்ந்த சண்முகம் வாத்தியார் தன் புத்தகங்களை எடுத்து பைக்குள் வைத்தார். இன்று இரண்டு பிள்ளைகள்தான் வந்திருந்தார்கள். அவர்களும் ஏதோ வேலையென்று முன்னதாகவே போய்விட்டிருந்தனர். எழ முயன்ற சண்முகம் வாத்தியாரை கொல்ல பின்னால் தயாராக நின்றிருந்தான் வேலுச்சாமி. அவன் கையில் பெரிய இரும்புத்தடி இருந்தது. கொஞ்சம் நீளமாக இருந்தது அது. கனமும் கூட. சட்டென்று தூக்க முடியாமல், கொஞ்சம் மூச்சிழுத்து மேலே தூக்கினான். எதிலோ பட்டு அது தெறித்தது! ஏதோ முறிந்தாற்போல் சத்தம் கேட்டு திரும்பினார் சண்முகம் வாத்தியார். உத்திரம் விழுந்திருந்தது. அதனடியில் இரும்புத்தடியோடு அசைவற்று இருந்தான் வேலுச்சாமி.   மார்ச் 2015ல் திண்ணையில் வெளிவந்த கதைகள் கீழே!                           13. தொலைக்கானல்    அப்பாவுக்கு நில சர்வேயர் வேலை. படித்தது என்னமோ டிப்ளமோ தான்! ஆனால் ஊரில் எல்லோரும் அவரை இஞ்சியர் என்றுதான் கூப்பிடுவார்கள். “எடே! அது இஞ்சியரும் இல்ல.. மாஞ்சியரும் இல்ல.. இன்ஜினியர்!” “இந்த பொகை வண்டிய ஓட்டுவாகளே? அவுக மாதிரியா?” “அடே மாக்கான்! அது இன்ஜின் டைவரு! இவரு இஞ்சியரு “ திருத்தம் சொல்லி அலுத்துப் போய்விட்டார் அப்பா! அப்பாவுக்கு இவனும் அண்ணனுமாக இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் கோபால் அடிக்கடி மாறும் அப்பாவின் வேலை நிரந்தரமின்மையால் சரியாக படிப்பு ஏறாமல் பள்ளி இறுதியோடு நின்று போனான். இவன் வளர்ந்து பள்ளிக்கு போகும் காலத்தில் ஆத்தா ஒரு வைராக்கியத்தோடு கூறி விட்டாள். “ எந்த ஊரு சீமைக்கு வேணா வேலைக்கு போங்க.. ஆனா புள்ளைங்களும் நானும் வரமாட்டோம். ஊர் ஊராப் போயி மூத்தவன் படிப்பு கெட்டது போதும். சின்னவனாவது படிக்கட்டும்” அப்பாவுக்கு எதிர் பேச்சு பேச திராணியில்லை! அவரது வருமானம் குடும்பத்துக்கு போதவில்லை. ஆத்தா ஒயர் கூடை பின்னி விற்பது கொஞ்சம் வருமானத்தைக் கூட்டிற்று. நாலாப்பு என்றாலும் ஆத்தா தன் திறமையால் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டாள். படிக்கும் ஆர்வமும் படிக்க முடியாத ஏக்கமும் அவள் மனதில் வடுவாக இருந்தன. அதனால் எதைக் கண்டாலும் எழுத்துக் கூட்டி படிப்பாள். கொஞ்சம் படித்த, படிக்கத் தெரிந்த பெண்களே அவளுக்கு சிநேகிதிகள். அப்படி அவள் கற்றுக் கொண்ட்து தான் ஒயர் கூடைகள் பின்னும் முறை. ஒரு நாள் ஏதோ ஒரு துண்டு காகிதத்தை வைத்துக் கொண்டு கையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள். இவன் என்று சொல்லப்படுகிற ஜனாவுக்கு ஏதும் விளங்கவில்லை. மறுநாள் சந்தையில் இருந்து சின்ன மூங்கில் கூடை ஒன்றை வாங்கி வந்தாள் ஆத்தா! “ சின்னவனே! வாத்யார் வீட்டுக்குப் போயி பழைய நூஸ் பேப்பர் நாலஞ்சு வாங்கிட்டு வாடே” வாத்தியார் வீட்டில் ஆங்கில செய்தித்தாள் தான் வாங்குகிறார்கள். அதுவும் அரக்கோணம் டவுன் பள்ளிக்கூட ஆசிரியர் என்பதால் அவருக்கு அவை கிடைக்கின்றன. இவனது கிராமத்தில் அது கிடைக்காது. ஆத்தாவுக்கு ஆங்கிலம் தெரியாதே! இல்லை, யாரிடமாவது அதையும் கற்றுக் கொண்டு விட்டாளா? மறுநாள் பள்ளி முடிந்து அவன் வீடு வந்தபோது வெயிலில் காயவைத்திருந்த அழகு வண்ணக் கூடை அவனை வரவேற்றது. “ பாத்தியாடே! மொளவா மடிச்சு கொடுத்த தாள்ல போட்டிருந்தாக.. செஞ்சு பாத்தேன்.. நல்லாத்தான் இருக்குது.. காயக்காய கெட்டிப்படுமாம். நாளைக்கு பெயிண்ட் வாங்கியாந்து தீட்டணும்” மறுநாள் சின்ன சின்ன டப்பாக்களில் வர்ணங்கள் வாங்கி தீட்டினாள் ஆத்தா. கூடை புது அவதாரம் எடுத்திருந்தது. வெயிலில் காய வைத்த போது ஊரே கூடி நின்று பார்த்தது. “ இஞ்சியர் சம்சாரம்னா சும்மாவா? “ என்று மூக்கின் மேல் விரல் வைத்தது ஊர். ஆத்தாவை ஆச்சரியமாகப் பார்த்தான் ஜனா! இவள் மட்டும் இன்னும் கொஞ்சம் படித்திருந்தால்! வேறு வழியில்லாமல் தான் ஒரு கட்டத்தில் ஆத்தா அந்த கிராம மண்ணை விட்டு வரச் சம்மதித்தாள். அப்பாவுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்திருந்தது. மேசை வேலை இல்லை. அந்த பிரம்மாண்ட வெள்ளைக் கட்டிடத்தின் முன்புற வராந்தாவில் உட்காரும் பெஞ்சு வேலை. புதிதாக வீடு கட்ட வரைபடம் போட்டுக் கொண்டு வருபவர்கள் இவரிடம் கையெழுத்து வாங்கினால் உள்ளே செல்லுபடியாகும். அதோடு ஜனாவின் படிப்பும் கோபாலின் வேலையும் ஆத்தாவை சென்னையை நோக்கி இழுத்தது. யார் யாரோ குத்தகைக்கு நிலத்தை எடுக்க வந்தபோது ஆத்தாதான் கறாராக பேசி மொந்தக்குடி ராமனுக்கு அந்தக் குத்தகையை கொடுத்தாள். “ என் உசுருடே இந்த மண்ணு.. கண்ணைப் போல பாக்கோணும்.. வெளங்கிச்சா?’ மொந்தக்குடி பேருக்கேற்றபடி தலையோடு உடலையும் ஆட்டினான். ஆனால் வருடா வருடம் ஆத்தா போய் பார்க்கும்போது ராமனின் வேலை திருப்தி தருவதாகவே இருந்தது. சில வருடங்களாக பயண சோர்வு காரணமாக ஆத்தா ஊர் போவதை நிறுத்தி விட்டாள். அவளுக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. சில வருடங்களாக கோபால் போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து அண்ணி அவனை தன் பிடிக்குள் இறுக்கி அதற்கு தடை போட்டு விட்டாள். இப்போது அது ஜனாவின் தலையில் விழுந்திருக்கிறது! ஜனா கொஞ்சம் சோர்ந்து போயிருந்தான். இது இரண்டாவது முறைதான் என்றாலும் பேருந்திலிருந்து இறங்கியதிலிருந்தே சோர்வு அவனுக்குள் வந்து ஒட்டிக் கொண்டது. எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது தான். அவனுக்கு அந்த நாள் நன்றாக நினைவிலிருந்தது. “ முப்பாட்டன் சொத்து என்று அலட்சியமா இருக்காதிங்கடே. பொன்னு வெளையற பூமின்னு தாத்தன் அடிக்கடி சொல்லும். ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திருங்க “ ஆத்தா கத்தினது இன்னமும் பசுமையாக அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு மூத்தவன் கோபால். சின்ன வயதிலிலேயே வேலைக்கு போய் குடும்பத்தைத் தாங்கிக் கொண்டிருந்தான். அவன்தான் ஜனாவை படிக்க வைத்தது. கல்லூரி படிப்பு என்றான போன ஆத்தா சொன்னது: “ வெவசாயம் படிங்கடே.. அதான் நமக்கு சோறு போடும். டஸ் புஸ்ஸுனு தொரையாட்டம் படிச்சிட்டு வெளிநாட்டுக்கு போலாம்னு எண்ணமிருந்தா சொல்லு. அத முறிச்சி அடுப்புல போடுதேன். “ கோபால் மணமுடித்த கையோடு தனி வீடு பார்த்துக் கொண்டான். அதற்குள் ஜனா கல்லூரி படிப்பு முடித்திருந்தான். விவசாயக் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக வேலையும் கிடைத்திருந்தது. கோபாலின் மனைவி கொஞ்சம் டவுன்காரி. அப்படி இப்படி இருக்க வேண்டும் என்பதில் அவளுக்கு ஆர்வம் அதிகம். அதனால் கிராம நிலம் எப்போதும் போல மொந்தக்குடி ராமனுக்கே குத்தகைக்கு போனது. “ சாகுபடிக்கும் செலவுக்கும் சரியாவுது. பெரியவர் நினைப்புக்காக ஒரு மூட்டை அரிசி மிச்சம் புடிச்சு தாரேன்.. தப்பா நெனைச்சுக்காதீங்க “ என்று சொல்லியபடியே வருடத்துக்கு இரண்டு முறை ஊருக்கு வந்து போவான் மொந்தக்குடி ராமன். ஜனாவுக்கு ஊர் அடையாளம் தெரியவில்லை. அரக்கோணத்திலிருந்து டவுன் பேருந்தில் போகவேண்டும். பதினாலாவது கிலோமீட்டரில் சாலை சந்திப்பில் இறங்கி நடக்க வேண்டும். நாலரை கிலோமீட்டர். வழியெங்கும் தறிகள் இயங்கும் வீடுகள் இருக்கும். வாசலில் சாயம் போட்ட துணிகள் காய வைக்கப்பட்டிருக்கும். பெருமாள்ராசப்பட்டி, குருவராசபட்டி, சோலைராசபட்டி என ஊர்கள்.. சிற்றூர்கள். போனமுறை வந்தபோது தார் சாலை இல்லை. வெறும் செம்மண் பாதைதான். போய் வந்தவுடன் செருப்பை மாற்ற வேண்டியிருந்தது. இம்முறை பரவாயில்லை. செருப்பு காப்பாற்றப்பட்டுவிடும். “ நம்ம பூமி இருக்குதா? இல்ல அதையும் அந்த சாயப்பட்டறைக்காரன் அடிச்சிக்கிட்டு போயிட்டானான்னு ஒரு எட்டு பார்த்துட்டு வா “ என்று ஆத்தா சொல்லி அனுப்பியது. போன வருடம் பம்பாய்க்காரன் சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்து ஏராளமான நிலங்களைக் கையகப்படுத்தியதாக செய்தித்தாள்கள் பேசின. தாராளமயமாக்கலில் அரக்கோணம் பகுதி தொழில் மேம்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. “ நெசவாளர் குடும்பங்கள் அதிகமாக வசிக்கும் இடமென்பதால், அரசு அங்கே ஆடைகள் தயாரிக்கும் தொழிலுக்கே முன்னுரிமை அளிக்கும் “ என்று அமைச்சர் பேசிவிட்டு வானம் பார்த்த பூமிகளை தாரை வார்த்து விட்டு போனார். அந்த வருடம் அரிசி மூட்டை வரவில்லை. என்ன ஏது என்று பார்ப்பதற்குத்தான் ஜனா போகிறான். “ வாங்க தம்பி “ என்று வரவேற்றான் மொந்தகுடி ராமன். வாசலில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான். “ நெலத்த பாத்துட்டு வரச் சொல்லிச்சு ஆத்தா “ “ நம்ம நெலத்த சுத்தி இருக்கற மத்த நெலத்த எல்லாம் வாங்கிபுட்டான் பம்பாய்க்காரன். சுத்தி வேலி போட்டுட்டான். உள்ளாறயே நொழைய முடியல.. நல்ல வெல வந்தா குடுத்துரலாமா? “ ராமன் சொன்னதுபோல அப்படித்தான் ஆகியிருந்தது. சுற்றிலும் கம்பி வேலி. இரவில் மின்சாரம் பாய்ச்சுகிறார்கள் என்றான் ராமன். பராமரிப்பு இல்லாமல் காய்ந்து கிடந்தது பூமி. இவன் நிற்பதை பார்த்துவிட்டு கோட்டு சூட்டு ஆசாமிகள் இரண்டு பேர் காரில் வந்து இறங்கினார்கள். நேரடியாக விசயத்துக்கு வந்தார்கள். இங்கு தொழிற்சாலை வராதாம். பயணியர் விடுதியும் பூங்காவும் அமைக்கப் போகிறார்களாம். சுற்றிலும் தென்னை மரங்களும் மாமரங்களும் நீச்சல் குளமும் வரப்போகிறதாம். சுற்றுச்சூழலுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கு சரிகட்ட அரசு விதித்த நிபந்தனையாம். நூறு வருடங்களுக்கு அவனுக்கும் அவன் சந்ததியருக்கும் இலவசமாக தங்க அனுமதி உண்டாம். விலையும் கொஞ்சம் அதிகம் கிடைக்குமாம்.   ஆத்தாவை ஆஸ்பத்தியில் சேர்த்திருந்தார்கள். இதய நோய். மூன்று அடைப்புகள். நீக்க ஒன்றரை லட்சம் செலவாகியிருந்தது. டாக்டர் சொன்னார். கொஞ்சம் காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டுமாம். தினமும் நடை பயிற்சி அவசியம். குளுகுளுவென்ற தென்னை மா மரங்களுக்கு நடுவில் ஆத்தா தினமும் நடந்து கொண்டிருக்கிறாள். அடிக்கடி குனிந்து ஒரு கை மண்ணை எடுத்து வைத்துக் கொண்டு “ எம் முப்பாட்டன் சொத்து.. பொன்னு வெளையற பூமி “ என்று புலம்புகிறாள். ஜனா புதிய ஹோண்டா சிட்டியைத் துடைத்துக் கொண்டிருக்கிறான்.                             14. உயரங்களும் சிகரங்களும்    ராமு என்கிற ராமநாதனுக்கு வயது முப்பத்தி இரண்டு. ஆனால் அவனது உயரம் முப்பதுதான்.. என்ன குழப்புகிறேனா? முப்பது அங்குலமே அவனது உயரம். அவனைப் போன்றோர் ஒன்று சர்க்கஸில் இருக்க வேண்டும் அல்லது சினிமாவிலோ நாடகம் மற்றும் கூத்து போன்ற அமைப்பிலோ இருக்க வேண்டும் எனபது விதி. ஆனால் இதிலும் ராமுவின் வாழ்க்கையில் வித்தியாசம் உண்டு. ராமு எல்லோரையும் போல பள்ளிக்கூடம் போனான். ஆனால் ஆறாம் வகுப்பு தாண்டும் போதே அவனுக்கும் அவனைச் சுற்றி இருந்தோர்க்கும் தெரிந்து விட்டது அவன் வளர மாட்டான் என்று. ஆனாலும் ஏழ்மையிலிருந்த அவனது பெற்றோர் அவனை அரசு மருத்துவமனையில் இருக்கும் உடல் கூறு ஆய்வு நிபுணர்களிடம் தவறாமல் கொண்டு போய் காட்டினர். அவர்களும் சளைக்காமல் அவனுக்கு மருந்து மாத்திரை களை இலவசமாகக் கொடுத்தனர். இதனால் அவனது உடல் வலிமை பெற்றதே தவிர உடல் உயரமாகவில்லை. ஆரம்பத்தில் ராமுவுக்கு இது கொஞ்சம் மன வருத்தத்தைக் கொடுத்தது.. ஆனால் போகப் போக இதுவே தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டான். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அவனது ஆறாம் வகுப்பு ஆசிரியர் ஆனந்தராசன் அய்யா அவர்கள். “ ராமு! உயரம் குறைவு என்பது ஊனமே இல்லை. ஆப்பிரிக்க கண்டத்தில் பிக்மி என்னும் இனத்தவர், இன்னும் குள்ள மனிதர்களாகவே தான் இருக்கின்றனர். ஆனால் விஷ அம்புகளைக் கொண்டு, குறி தவறாமல் எய்து வேட்டையாடுவதில் இன்னமும் அவர்களை மிஞ்ச எந்த வெள்ளைக்காரனாலும் முடியாது. அவர்கள் இனம் இன்னமும் உலகில் வாழ்வதற்கு, அந்த இனத்தின் தன்னம்பிக்கை கூட ஒரு காரணம். உடலால் உன்னால் எட்ட முடியாத உயரத்தை வேறு ஒன்றால் உன்னால் எட்ட முடியும்! “ ராமு அவரை வியப்புடன் பார்த்தான். எட்டுவது என்றாலே அது உடலும் உயரமும் சம்பந்தப்பட்ட விசயம்தானே. பின் வேறு எதால் உயரத்தை எட்டுவது? “ ராமு கல்வி என்பது, பல சிகரங்களை எட்ட, உனக்கு அறிவு பலத்தைக் கொடுக்கும். உடல் ஊனமுற்ற எத்தனையோ பேர் சிறந்த அறிவாளிகளாக இருந்திருக்கின்றனர் இந்த உலகில். அதனால் உன் உடல் உயரக் குறைவை ஒரு பொருட்டாக எண்ணாதே. படி நன்றாகப் படி. அதுவே உன் வாழ்க்கையை மாற்றிக் காட்டும் “ ராமு ஏழாம் வகுப்பு போனபோது, பள்ளியே அவனது திறமையைப் பார்த்து, அவனுக்குத் தேவையான புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் கொடுத்து உதவியது. அதற்குப் பின்னால் ஆசிரியர் ஆனந்தராசன் இருந்தார் என்பதை அவன் பின்னாளில் அறிய நேர்ந்தது. சரியாகப் படிக்காத மாணவர்கள் முன்னிருக்கையில் அமரச் செய்து இன்னும் கூடுதலாக அவர்கள் பால் கவனம் செலுத்தி ஆசிரியர்கள் அவர்களையும் நல்ல மதிப்பெண்கள் வாங்க வைக்கும் முறை ஒன்று அந்தப் பள்ளியில் இருந்தது. அதன் படி பார்த்தால் ராமு முன் வரிசையில் அமரவே முடியாது. அவன்தான் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து விடும் திறமையான மாணவனாயிற்றே. ஆனால் அவனது உயரம் குறைவான காரணத்தால் பின் வரிசையிலிருந்து அவனால் கரும்பலகையில் எழுதப்படும் பாடங்களைச் சரியாக பார்க்க இயலாது. அதனால் ஆனந்தராசன் அய்யா அவர்கள் அவனுக்காக ஒரு மேசை நாற்காலியை ஆசிரியர் இருக்கைக்கு அருகில் போட்டு, அவன் அதில் அமருமாறு செய்தார். அதுவும் அவன் பள்ளிக் கல்வியில் வெற்றி பெறுவதற்கு உதவி செய்தது. பள்ளி இறுதி வகுப்பில் அவன் படிக்கும்போது ஆனந்தராசன் அய்யா ஓய்வு பெற்று விட்டார். அவரது சொந்த கிராமம் பள்ளி இருந்த ஊரிலிருந்து ஐம்பது மைல் தொலைவில் இருந்தது. கொஞ்சம் போல சுவாச பாதிப்பு நோய் அவருக்கு இருந்தது. அதனால் வெகு தொலைவு நடக்கவோ, பிரயாணம் செய்யவோ அவரால் இயலாது போயிற்று. பிரிவு உபசார விழாவில் ராமுவை அவர் அருகில் அழைத்து வைத்துக் கொண்டார். காதோரம் அவர் கிசுகிசுப்பான குரலில் அவனுடன் பேசிக் கொண்டிருந்தார். “ ராமு கவனத்தை எதிலும் சிதற விட்டுராதே. இது கவனத்தை சிதைக்கிற வயசு. எத்தனையோ வெளி மாயைகள் உன்னை தன் பால் ஈர்க்க முயற்சி பண்ணும். அதற்கெல்லாம் மயங்கி விடாதே . உன்னுடைய ஒரே குறிக்கோள் கல்வி ஒன்று தான். நான் இன்றிலிருந்து உன் அருகில் இருக்க மாட்டேன். ஆனால் இந்த பேனாவை வைத்துக் கொள். நான் அருகில் இருப்பதாக நினைத்துக் கொள். எப்போதாவது உன்னால் வர முடியுமென்றால் என் கிராமத்துக்கு வா. என் வீட்டில் தங்கு. உனக்கான சந்தேகங்களை தீர்த்துக் கொள். என்ன சரியா? ராமு அந்தப் பேனாவை பயன்படுத்தவே இல்லை. தினமும் குளித்து புதிய உடை அணிந்து அந்தப் பேனாவை அதன் புது மெருகு கலையாத பெட்டியிலிருந்து எடுத்து பூசை அறையில் சாமி படங்களுக்கு அருகில் வைத்துக் கும்பிடுவான். அதற்கு பூ போடுவான். பிறகு பக்தியுடன் அதை மீண்டும் அதன் பெட்டியில் வைத்துப் பூட்டி விடுவான். அவனைப் பொறுத்த வரை அதுவே குரு பூசை! ராமு நன்றாகப் படித்தான் என்று  சொல்ல வேண்டியதில்லை. பள்ளியில் முதல் மாணாக்கனாக வந்தான் என்பது வரலாறு. வாரம் தவறாமல் ஞாயிறன்று தன்னுடைய இலவச அரசு சைக்கிளில் அவன் ஆனந்தராசன் அய்யா இருக்கும் கிராமத்துக்கு போய் விடுவான். அவனது சைக்கிளின் முன் கூடையில் அய்யாவுக்கு தன் வீட்டு தோட்டத்தில் விளைந்த காய், கனிகள் இருக்கும். தன் நண்பர்களின் பெற்றோர் வீட்டில் வேண்டாம் என்று ஒதுக்கப்படும் புத்தகங்கள் இருக்கும். அய்யா கண்ணாடி போடாமல் இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு புத்தகங்களே வகுப்பறை. சில சமயம் கையில் புத்தகமும் பிரம்புமாக அவர் படித்த ஏதோ ஒரு விசயத்தை விளக்கிக் கொண்டிருப்பார். ஆசிரியப்பணி அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று. “ அய்யா! இன்னிக்கு சங்க காலப் பாடல்கள் பற்றி ஏதாவது சொல்லுங்களேன் “ என்பான் ராமு. அதுவரை தோய்ந்து உட்கார்ந்திருந்த அய்யாவின் உடலில் முறுக்கேறும். சாளரம் இல்லாத சுவரை பார்த்துக் கொண்டே  அவர் வகுப்பெடுப்பார். அய்யாவுக்கு இப்போது பற்கள் உதிர்ந்து கொண்டே வருகின்றன. மொழியில் கொஞ்சம் தெளிவு குறைவாக இருக்கிறது. ஆனாலும் ராமுவின் காதுகளில் அவரது பழைய கணீர் குரல்தான் கேட்கும். அய்யாவுக்கு மனைவி இறந்து போய், கோகிலா என்று ஒரே மகள் இருக்கிறாள். அவளே அய்யாவைப் பார்த்துக் கொள்கிறாள். அய்யாவுக்கு சொந்த வீடு இருந்தாலும் நிலபுலன்கள் கிடையாது. ஓய்வூதியம் என்று சொற்ப தொகை வருகிறது. அதிலும் கொஞ்சம் தபால்கார்ர் எடுத்துக் கொள்வார். மீதத்தில் ஓடுகிறது வாழ்க்கை. கோகிலா பெரிய  பெண் ஆனவுடன் ஊர் வழக்கப்படி அவளை பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டார்கள். அய்யாவுக்கு அதில் உடன்பாடு இல்லைதான். ஆனாலும் மென்மையான அய்யாவால் ஊரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. ராமு தன்னுடைய பழைய புத்தகங்களை கோகிலாவுக்கு கொடுப்பான். அவனே அவளுக்கு ஆசிரியராகவும் இருந்தான். அதனால் கோகிலாவுக்கு அவன் மேல் மரியாதை உண்டு. கையில் சான்றிதழ் இல்லாவிட்டாலும் கோகிலாவும் மெத்தப் படித்தவள் தான். கோகிலாவிடம் வேறு திறமைகள் இருந்தன. பெண்களெல்லாம் பூக்களை சரமாகக் கட்டத் தெரிந்தவர்கள். கோகிலா ஒரு படி மேலே போய் மாலைகளாக்க் கட்டுவாள். பிச்சி, செவ்வரளி, காட்டு மல்லி, சம்பங்கி என்று அவள் கட்டும் மாலைகள், ஆதவனின் கீற்றை வண்ணங்களாக தோன்றச் செய்யும் வானவில்லாக மாறும். ராமு அந்த மாலைகளை மாலை பக்கத்திலிருக்கும் சிவன் கோயிலுக்கு எடுத்துப் போவான். அழகும் வாசமும் மாலைகளை காசாக்கி விடும். அய்யாவின் குடும்பம் கொஞ்சம் நிமிர்ந்ததற்கு இந்த வருமானமும் ஒரு காரணம். ஒரு நாள் அய்யாவின் மரணம் நிகழ்ந்தது. கோகிலா திக்கற்று நின்றாள். ராமு தன் ஊரை விட்டு அய்யாவின் வீட்டிற்கு குடி பெயர்ந்தான். அவன் அருகில் நின்ற கோகிலாவின் கழுத்தில் புது மெருகோடு ராமு கட்டிய மஞ்சள் தாலி இருந்தது. பத்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ராமு பள்ளி இறுதி ஆண்டை முடித்து கல்லூரியில் தேர்ச்சி பெற்று, சென்னை மாநகரத்தில் மிகப் பெரிய அயல்நாட்டு நிறுவனம் ஒன்றில் கணக்காளாராக இருக்கிறான். ஐந்து இலக்க ஊதியம். சொந்தமாக வீடு, வாகனம் என்று ஏக வசதி. அவனுடைய வீட்டுக் கூடத்தில், கோகிலாவின் கைகளால் கட்டப்பட்ட மாலையைப் போட்டுக் கொண்டு ஆனந்தராசன் அய்யா சிரித்துக் கொண்டிருக்கிறார் படத்தில். இப்போதெல்லாம் கோகிலாவுக்கு பல வேலைகள். கணிப்பொறி நுட்பத்தை அவள் சுலபமாக்க் கற்றுக் கொண்டு விட்டாள். வீட்டிலிருந்தே அவள் வேலை செய்கிறாள். அவளுக்கும் நல்ல ஊதியம். அயல்நாட்டவருடன் அவள் பேசுவதை கேட்டால், அவள் பாரத தேசத்தில் பிறந்தவளில்லை என்று சிலுவையிட்டு சத்தியம் செய்வார்கள். கோகிலாவுக்கும் ராமுவுக்கும் இரண்டு பிள்ளைகள். மூத்தவன் ஆனந்தன். இளையவன் ராசய்யா! ஆனால் கோகிலாவும் ராமுவும் அவர்களை பெயர் சொல்லிக் கூப்பிடமாட்டார்கள். “ பெரிய அய்யா எங்கப்பா? சின்ன அய்யா எங்கே காணும்?” என்றே விளிப்பார்கள். ஆனந்தராசன் அய்யாவுக்கு அவர்கள் மனதில் தனி இடம். அதனால் பெயர்கள் உச்சரிக்கப்படாது. மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் ராமு பல நாட்கள் வாசலிலேயே காத்திருப்பான். உள்ளே கோகிலா பிள்ளைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருப்பான். அதை கேட்டு ரசித்தபடியே இருப்பான் ராமு. மீண்டும் அய்யா பாடம் எடுப்பது போலவே இருக்கும் கோகிவாவின் அணுகுமுறை. காதல் உணர்வு மேலோங்கும் இரவுகளில் ராமு கோகிலாவிடம் ஏதாவது வகுப்பு எடுக்கும்படி கெஞ்சுவான். அவள் வெட்கத்துடன் மறுப்பாள். கடைசியில் அவனது வேண்டுகோளை பூர்த்தி செய்வாள். அதைக் கேட்டபடியே கிறக்கத்தில் தூங்கிப் போவான் ராமு. அவன் கனவில் அய்யா அந்தப் பாடத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பார். “ கோகிலா அந்த உயர மேசையை எடுத்து வா.. அய்யா படத்துக்கு மாலை போடணும்.. நேத்து போட்ட மாலை வாடிச் சருகாப் போச்சே  “ கோகிலா மெல்ல ஒரு காலை சாய்த்தபடியே வருகிறாள். அவள் பிறவியிலேயே இளம்பிள்ளை வாதம் வந்து கால் சூம்பிப் போனவள். “அம்மா இரு! நாங்க எடுத்தாறோம்” என்றபடியே ஆனந்தனும் ராசய்யாவும் மேசையை தூக்கி வருவார்கள். பள்ளிச் சீருடையில் அவர்களை பார்க்கும்போது ராமுவுக்கு பழைய ஞாபகங்கள் கரை புரண்டோடும். பல முறை பிள்ளைகள் ராமுவை தடுத்து தாங்களே அந்த மாலையை சூட்ட முயன்றிருக்கிறார்கள். ஆனால் ராமு என்றும் அதற்கு சம்மதிக்க மாட்டான். அவனே அய்யாவின் படத்திற்கு மாலை போட வேண்டும். அது ஒரு நித்திய பூசை. ஒரு ஏணியைப் போல படிகள் கொண்ட அந்த பெரிய மேசையை கோகிலாவும் பிள்ளைகளும் மெல்ல இழுத்து வருகிறார்கள். ராமு அதன் மீது ஒரு தேர்ந்த சர்க்கஸ் வீரனைப் போல தாவி ஏறி கோகிலா கொடுக்கும் வண்ணப்பூக்கள் கொண்ட மாலையை அய்யா படத்துக்கு அணிவிக்கிறான். காய்ந்த மாலையை கோகிலா வாங்கிக் கொள்கிறாள். மேல் துண்டால் படத்தைத் துடைத்தவாறே கீழே நிற்கும் கோகிலாவைப் பார்க்கிறான். கோகிலா அவனைப் பார்த்து பரிவோடு சிரிக்கிறாள். அவனுக்கு அய்யா சிரிப்பது போலவே இருக்கிறது. ‘ அது சரி! அய்யா மகள் அய்யாவைப் போலத்தானே சிரிப்பாள்! “ என்று நினைத்துக் கொள்கிறான் ராமு என்கிற முப்பது அங்குல ராமநாதன்.                               15. செத்தும் கொடுத்தான்    மெயின் ரோட்டில் இறக்கி விட்டிருந்தார்கள். மோகன் கொஞ்சம் களைப்பாக இருந்தான். இது இந்த மாதத்தில் நான்காவது முறை. இதே ஊர் ;இதே பேருந்து; இதே இடம்.. இங்கிருந்து இரு கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும். மோகனுக்கு இருபத்தி எட்டு வயது. நல்ல களையான முகம். நறுக்கு மீசை.. கொஞ்சம் வெட்டிய உதடுகள் மட்டுமே அவனது அழகைக் கெடுத்தன. அதனால் என்ன பரவாயில்லை. அவன் என்ன சொற்பொழிவா நிகழ்த்தப் போகிறான். வட்டிக்கு பணம் வாங்கியவர்களை தேடி அலையும் வேலை. ஒரு நிதி நிறுவனத்தின் கலெக்ஷன் பிரிவில் அவன் ஒரு உறுப்பு. ஒரு உருப்படாத உறுப்பு என்று கூடச் சொல்லலாம். பின்னே என்ன.. வட்டி மற்றும் தவணை வசூல் செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி அவர்கள் தயவு தாட்சண்ணியம், அறவே அறியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அதுதான் மோகனிடம் நிறையவே இருந்தது. “ இந்தரு மோகனு.. இது எல்லாம் யாவாரத்துக்கு ஒத்து வராது! என்னா மண்டையில ஏறிச்சா “ என்று நிதி நிறுவன அதிபர் சந்திரசூடன் சொல்லிக் கொண்டே இருப்பார். பேருக்கேத்தவாறு கோபம் வந்து விட்டால் செம சூடாகிவிடும் சூடன். அப்போது மட்டும் அவர் சூரியசூடன் என்று சொல்வாள் மல்லிகா. மல்லிகா பக்கத்து சீட்டுக்காரி. அலுவலகத்தில் இருக்கும் ஒரே பெண் பிள்ளை அவள்தான். சொன்னால்தான் பெண்.. இல்லையென்றால் பிள்ளைதான்.. அப்படி ஒரு தேகம்! தேஜஸ்! பொன்னேரி தாண்டி தச்சூர் கூட்டு ரோடுக்கு மேற்குப் பக்கம் இருந்தது அந்தக் குக்கிராமம். கீழப் பனையூர் என்று பேர். மேலப்பனையூர் என்று ஒன்று இருக்கும்போல.. மேற்குப் பக்கம் இருக்கலாம். அல்லது கொஞ்சம் மேடான பகுதியில் இருக்கலாம். பிரதான சாலையிலிருந்து கொஞ்சம் சரிவாக இறங்கிப் போனது பாதை. அதனால்தான் கீழப் பனையூர் என்று பேர் வந்ததோ என்னவோ. வழியெங்கும் பனைமரங்கள்.. எண்ணைக் காணாத பரதேசிக் கிழவர்களின் தலைகளைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓலைகள்.. அதுவும் தென்னையைப் போல நீள் சடையெல்லாம் கிடையாது.. எல்லாம் சம்மர் கிராப்தான். “ வட்டிக்காரன் வந்துட்டாண்டோய்.. அரைக்கண்ணனுக்கு வேட்டு வைக்க வட்டிக்காரன் வந்துட்டான் டோய்.. “ மாடு மேய்க்கும் சிறுவர்கள் கும்மாளத்துடன் கூக்குரலிட்டார்கள். இவர்களில் ஒருவன் ஓடிப் போய் சொல்லியும் வைப்பான். மோகன் போய் சேருவதற்குள் அவனைத் திருப்பி அனுப்பத் தகுந்த காரணங் களை அரைக் கண்ணன்.. சே எனக்கும் அதே பேர் வருகிறது.. நமச்சிவாயம்.. என்ன பேர் பொருத்தம்! சிவனுக்கு மூன்று கண்கள்.. இவனுக்கு ஒன்றரை.. இவன் பாதி சிவன்.. சுடலை பக்கத்தில்தான் வீடு. இரண்டு மனைவிகள் இரண்டு பிள்ளைகள்.. அதிலும் ஒன்று யானைக்குட்டி.. அதற்கு வைத்தியம் பார்க்க வாங்கிய கடன்தான், இன்னும் வட்டியாக குட்டி போட்டுக் கொண்டிருக்கிறது அசல் அசராமல் அப்படியே இருக்கிறது. “ வாங்க தம்பி!” என்று வரவேற்றார் நமசு.. மோகனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இழுத்துப் போர்த்திக் கொண்டு இருமிக் கொண்டு படுத்துக் கிடக்கும் இவரா? அதுவும் எழுந்து நின்று வரவேற்பது? நமசு ஒரு வித்தியாசமான ஆள்.. ஒவ்வொரு முறை வட்டி கேட்கவும், தவணைப் பணம் கேட்கவும் மோகன் போகும்போது, பணம் தரவில்லை என்றாலும், அவன் வந்து போகும் பேருந்துச் செலவை., ஆறும் ஆறும் பனிரெண்டு ரூபாய் , எண்ணிக் கையில் தந்து விடுவார். அவரால் அவன் நஷ்டமடையக் கூடாது என்பது அவரது எண்ணம். ஆனால், அதைச் சேர்த்து கைக்காசு கொஞ்சம் போட்டு, அவன் ஏதோ கொஞ்சம் பணம் அவர் கணக்கில் கட்டி வருகிறான் என்பது அவருக்குத் தெரியாது. “ ஆபிசுக்கு போன் போட்டு விசாரிச்சேன்.. வட்டி அசல் எல்லாம் சேர்த்து ஐயாயிரம் ஆயிட்டுதாம்.. இரண்டாயிரம்னு வாங்கின கடன் சரியாக் கட்டாததால இம்புட்டு ஏறிப்போச்சு.. ஆனால் நல்ல காலம் பொறந்திருச்சி தம்பி! ஒரே தவணையில தீர்த்துடப் போறன்.. இப்படி ஒக்காருங்க பணம் எடுத்தாரேன். “ மோகனுக்கு வியப்பு அதிகமாகியது எப்படி? ஏது இவ்வளவு பணம் ? நேர்மையாக வந்த பணம்தானா? அதெல்லாம் நமக்கெதுக்கு? வசூல் செய்தமா, போனமா என்று இருக்க வேண்டும்? “ இந்தாங்க தம்பி ஐயாயிரம்.. ரசீது கடன் பத்திரம் எல்லாம் நாளைக்கு நானே டவுனுக்கு வந்து வாங்கிக்கறேன்.. மோர் சாப்பிடறீங்களா.. கொஞ்சம் பொறுத்தீங்கன்னா படையல் வச்சிட்டு, சாப்பாடே சாப்பிடலாம் “ சாமி கும்பிடுகிறார்கள் போலிருக்கிறது. கணேசன் உள்ளே இருக்கலாம்! எல்லாம் ஐநூறு ரூபாய் தாள்கள். பத்து தாள்கள். மனசு குறுகுறுத்தது. எப்படி இவ்வளவு பணம்? “ ஐயா புள்ளைங்க யாரையும் காணம்? சின்னவனாவது விளையாடப் போயிருப்பான். பெரியவன் கணேசன் வீட்டிலேயே கெடப்பானே? “ “ அதெல்லாம் எதுக்கு தம்பி.. பணம் சரியா இருக்குதா.. இந்தாங்க மோரைக் குடிங்க, நடையைக் கட்டுங்க “ குரலில் ஒரு கடுமை தெரிந்தது. அதையும் மீறி குரல் கம்மியிருந்தது. மோகனுக்கு கணேசனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. எப்போது வந்தாலும் கணேசன் அவனருகே உட்காருவான். வாயில் எச்சில் ஒழுக, ஒரு அரை டிராயரைப் போட்டுக் கொண்டு, விரல் சூப்பிக் கொண்டிருப்பான். பேச்சு தெளிவாக இராது. ஆனாலும் என்னவோ பேசிக் கொண்டிருப்பான். “ பொறந்தப்பவே மூளை வளர்ச்சி அடையாதுன்னு சொல்லிட்டாங்க தம்பி. அவன் அம்மா வயித்துல இருக்கும்போது பிராண வாயு சரியா போய் சேரலைன்னு சொல்றாங்க. பார்வதிக்கு, அதான் என் சம்சாரத்துக்கு சின்ன வயதிலேர்ந்தே கொஞ்சம் இழுப்பு வியாதி. அதும் பத்தாதுன்னு இவன் மார்கழி மாசத்துல பொறந்துட்டான். சித்திரையா இருந்தா சமாளிச்சிருப்பான்!” மோகன் படித்தவன். இந்தக் குறைபாட்டை நீக்க, நவீன மருத்துவம் வந்து விட்டது என்று அவனுக்குத் தெரியும். ஆனால் இந்தக் குக்கிராமத்தில் அதற்கு எல்லாம் வசதி இருந்திருக்காது. பிள்ளை எப்படி இருந்தாலும் நமசுவும் பார்வதியும் அவனைப் பார்த்துக் கொண்ட விதம் அவனுக்கு ஆச்சர்யம். எப்போதும் நெற்றியில் பளிச்சென்று திருநீற்றுப் பட்டையுடன் காட்சி அளிப்பான் கணேசன். தினமும் சுடு தண்ணீரில் குளிப்பாட்டி, ஏதோ மூலிகை எண்ணையை அவன் உடலில் தடவி விட்டிருப்பார்கள். அதன் மணம் பலரை அவனை நெருங்க விடாது. அதனாலேயே அவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. மோகன் அவனிடம் ஏதோ ஒரு வித நேசத்தோடு நடந்து கொள்வான். வட்டித் தவணை வாங்க வரும் ஈட்டிக்காரனின் பிரதிநிதி, கையில் காராச்சேவு, தித்திப்பு வாங்கி வரும் அதிசயத்தை இங்கே தான் காண முடியும். முதல் தடவை அதை கணேசன் கையிலேயே கொடுத்து விட்டான் மோகன். அதை அவன் சாப்பிடத் தெரியாமல் பேர்பாதி கீழே சிந்தியது அவனுக்கு வலித்தது. அடுத்த முறையிலிருந்து அவனே பொட்டலத்தைப் பிரித்து, சிறிது சிறிதாக அவனுக்குக் கொடுத்தான். கணேசனும் அவனோடு ஒட்டிக் கொண்டான். சென்ற முறை மோகன் வந்தபோது பக்கத்து டவுன் ஆஸ்பத்திரியின் ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது. கணேசனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது. காலை எட்டிப் போட யத்தனித்த சமயத்தில் உள்ளே இருந்து இரண்டு வெள்ளைக் கோட்டு ஆசாமிகள் வெளியே வந்தார்கள். அவர்கள் கையில் ஒரு ஃபைல் இருந்தது. பின்னால் தத்தி தடுமாறியபடி கணேசன் நடந்து வந்து கொண்டிருந்தான். ‘அப்பா! கணேசனுக்கு ஒன்றுமில்லை’ ஆஸ்பத்திரி வாகனம் பற்றி கேட்க நினைத்தான். சட்டென்று மாற்றிக் கொண்டான். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். இதில் மூக்கை நுழைப்பது சரியாகாது. வழக்கம்போல வண்டி சத்தமும், வினோத சாக்குகளுடனும் அவனை வழி அனுப்பி வைத்தார் நமசிவாயம். கடைசியாகப் பார்த்த கணேசனின் பிம்பமே அவனுள் நிலைத்திருந்தது. இன்று மோகன் கணேசனைப் பார்க்கவில்லை! மோகன் வித்தியாசமானவன். கிடைக்கும் ஒரே நாள் விடுப்பிலும் அவன் பெரும்பாலும் ஊனமுற்றோர், முதியோர் இல்லங்களுக்குச் சென்று விடுவான். அங்கிருக்கும் நபர்களை தன் உறவாக நினைப்பான். அவர்களுக்கு வேண்டியதைச் செய்வான். மாலை திரும்பும்போது ஒரு வார இதயச் சுமை விலகி லேசாக ஆகியிருக்கும். அவனது பெற்றோர் காலம் கடந்து திருமணம் செய்து கொண்டவர்கள். அதிலும் அவனது தந்தை குள்ளம். கால்களும், பிரசவத்தில் எசகுபிசகாக சிக்கிக் கொண்ட போது, செவிலியர்களால் ஏறுமாறாக இழுக்கப்பட்டு வளைந்து போனவை. அவருக்கு பிராக்கெட் என்று பெயர். பெயர் என்னவோ நடராசன் தான். ஆனால் அதை மீறி அவரது கால்கள் அவருக்குக் கொடுத்த பெயர் தான் நிலைத்தது. மோகனுக்கும் பல வருடங்கள் பிராக்கெட் பையன் என்றே பெயர். இத்தனைக்கும் அவனது தாய் உயரமாக இருந்த்தால் அவனும் உயரமாகவே வளர்ந்தான். நெடுநெடுவென்று வளர்ந்த அவன் தன் நீண்ட கால்களை வீசி நடக்கும்போது அப்பா பெருமையுடன் பார்ப்பார். ஊனமுற்ற எல்லோரும் அவனுக்கு அப்பா ஜாடையாகவே தெரிந்தார்கள். ஊரில் அவரை பித்துக்குளி என்பார்கள். நாள் முழுதும் வெயிலில் வேலை செய்து விட்டு, ஓரணா இரண்டணா கொண்டு வருவதையே அவர் பெருமையாகச் சொல்வார். அவரையொத்த வயதுடையவர்கள் ஐந்தும் பத்தும் சம்பாதித்த காலம் அது. கடைசி காலத்தில் அப்பா பாரிச வாயு தாக்கி நடமாட முடியாமல் போனார். பேச்சும் குழற ஆரம்பித்தது. கணேசனைப் பார்க்கும் போதெல்லாம் மோகனுக்கு அப்பாவின் கடைசி காலம் நினைவு வரும். கூடவே தன் வெட்டுப்பட்ட உதடுகளும்! சில சமயம் கணேசன் அவன் பின்னாலேயே ஓடி வருவான். பேருந்து வரும் வரையில் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பான். அவனுக்கு தேன் மிட்டாயும் முறுக்கும் வாங்கித் தருவான் மோகன். அப்பாவுக்கு தேன் மிட்டாய் என்றால் ரொம்ப இஷ்டம். இப்போதும் கணேசன் எங்காவது வருகிறானா என்று பார்த்துக் கொண்டே இருந்தான் மோகன். அவன் வரவேயில்லை! பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது ஊர்க்காரர்கள் இருவர் பேசிக் கொண்டது கேட்டது. “ நமசு பையன் கணேசன் போய் பதினாறு நாள் ஆயிட்டுது.. இன்னிக்கு விசேசம் செய்யறாங்க.. இருந்தவரையிலும் சீக்காளியா இருந்த பய.. போனது நமசுக்கு நல்லதுதான் ஆனாலும் வருத்தம் இருக்குமில்ல .. பெத்த பிள்ளையாச்சே.. பிள்ளை வைத்தியத்துக்கு வாங்கின கடனை அடைக்க முடியாம, கூட கொஞ்சம் கஷ்டம்.. ஆனால் கணேசன் செத்தும் கடனைத் தீத்துட்டுத்தான் போயிருக்கான். “ “ எப்படி சொல்ற ? “ “ நமசு, பையன் ஒடம்பை, மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்கறதா எழுதிக் கொடுத்துட்டாரு இல்ல.. அவங்க கூட, பத்தாயிரம் பணம் கொடுத்தாங்களாமே “ மோகனுக்கு பையில் இருந்த பத்து நோட்டுக்களும் கனக்க ஆரம்பித்தன.                               16. உளவும் தொழிலும்   பெரட்டா  எனப்படும் சிறிய கைத்துப்பாக்கி அது. கறுப்பு சைத்தான். எளிதில் எங்கும் மறைத்து எடுத்துச் செல்லலாம். உளவாளிகளுக்கும், கட்டணக் கொலைகாரர்களுக்குமென பிரத்யேகமாக வெளிநாட்டவனால் தயாரிக்கப்பட்டது. ஆசீம் என்கிற அழகம்பெருமாள் பஞ்சக்கச்சம் கட்டியிருந்தான். இயல்பான சிகப்பு தோல்காரன். நெற்றியை அடைத்த திருமண் அவனை ஒரு வைணவ குருகுலவாசனாகவே காட்டியது. மதுரையில் தமிழகத்தின் ஜனத்தொகையில் பத்து விழுக்காடாவது குவிந்திருக்கும் என்பது போன்ற கூட்டம். அன்று அழகர் ஆற்றில் இறங்கும் நாள். மதுரை மண்ணில் உதித்தவர்களும் மிதித்தவர்களும், வந்தவர்களும் வாழ்ந்தவர்களும் தவற விட எண்ணாத ஒரு பிரத்யேக நாள். லெபனானில் மையம் கொண்டிருந்த சர்வதேச தீவிரவாத அமைப்பு ஒன்றின் அம்பாக இருப்பவன் ஆசீம். அவனுக்கு அனைத்து பயிற்சிகளும் பாகிஸ்தானின் மலைப்பகுதிகளில் தரப் பட்டிருந்தது. சிறு வயதிலிருந்தே மூளைச் சலவை செய்யப்பட்டிருந்த அவன், இந்துக்களின் குறிப்பாக இந்தியர்களின் விரோதியாகவே வளர்க்கப்பட்டவன். தன்னை ஒரு நாத்தீகவாதியாக அடையாளம் காட்டிக் கொள்ள பெரும்பாடு பட்டுவரும் முதலமைச்சர் தன் முதிய காலத்தில் ஆறாவது முறையாக பதவி ஏற்ற பிறகு மதுரைக்கு வருகிறார். தமுக்கம் மைதானத்தில் பொதுக்கூட்டம் என்றாலும், காலையிலேயே விமானம் மூலம் மதுரை வந்தடைவார் என்று அதிகாரப் பூர்வமான செய்திகள் சொல்கின்றன. கள்ளழகர் ஆற்றில் இறங்கும்முன் கரையோரம் நடைபெறும் பூசைக் காலத்தில் அவரது மகிழுந்து அப்பகுதியைக் கடக்கும் என்றும், அப்போது சற்றே கண்ணாடியை இறக்கி தரிசனம் செய்வார் என்றும், நாத்தீகம் என்கிற மேல் பூச்சு மறைந்து அப்போது ஆத்தீகம் எட்டிப் பார்க்கும் என்றும் விசயமறிந்த விஷமிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர் கார் கண்ணாடியை இறக்கும்போது, அவர் இறக்க  வேண்டும் என்பதே ஆசிமுக்கு அவன் அமைப்பு இட்ட கட்டளை. வயதானவர். தானாகவே இன்னும் கொஞ்ச நாட்களில் இறக்கக்கூடும் என்கிற போது இப்போதே தீர்த்துக் கட்ட வேண்டிய கட்டாயம் என்ன என்று கூட ஆசீம் யோசித்தான். இதில் பெரும் அரசியல் இருக்கிறது என்பதை அவன் அறிய மாட்டான். முதலமைச்சரின் இறப்பை இலங்கைப் போராளிகளுடன் தொடர்புபடுத்தி பிரதான எதிர்கட்சி பேசும். மைய அரசு அதை நம்பும் பட்சத்தில் இறந்த இளம் தலைவரின் ஆன்மா  சாந்தியடைய வேண்டி இவர் கட்சியுடனான உறவைத் துண்டித்துக் கொள்ளும். நாட்டில் குழப்பம் மேலோங்கும். மைதிலி புதிதாக வாங்கிய சுங்கிடிப் புடவையை மடிசாராகக் கட்டியிருந்தாள். அவள் கையில் பூசைக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்தன. தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு என அடுக்கப்பட்டிருந்த வெள்ளித் தட்டு சூரிய ஒளி பட்டு மின்னியது. மைதிலி திருவல்லிபுத்தூரைத் சேர்ந்தவள். வழக்கமாக அவள் வயதை ஒத்த பெண்கள் ஒட்டு பொட்டு வைத்து வலய வரும்போது அவள் நேர்க்கோடாக சிகப்பு சாந்து வைத்திருப்பாள். ஆண்டாள் அம்சம் அவளிடம் பொருந்தி இருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். ‘மாதவா ! கேசவா ஶ்ரீதரா ! ரிஷிகேசா ! பத்மநாபா ! தாமோதரா !’ மூடிய கண்கள். உச்சரிக்கும் ஸ்லோகம். நிமிர்ந்த நடை. திருத்தமில்லா அழகு. அப்பழுக்கற்ற உடை. அழகரை விட்டு விட்டு ஆண்டாளை ரசிக்கும் கூட்டம் பெருகிவிட்டது மைதிலி பிரவேசத்தால். “ என்னடி மைது சந்தடி சாக்குல என் பேரைச் சொல்லிட்ட “ “ எப்போன்னா “ “ இப்போதான். பத்மநாபான்னியே “ “ அய்யே அது பகவான் பேரு. பெருமாள் பேரு. ஆண்டவனை நெனைக்கற நேரத்தில யாராவது ஆம்படையான நெனைப்பாளோ. அபிஷ்டு அபிஷ்டு. “ பத்து சுற்றுமுற்றும் பார்த்தான். யாராவது கவனிக்கிறார்களா. நல்ல வேளை யாரும் கவனிக்கவில்லை. பத்து மைதிலியின் பர்த்தா. போன வருடம் தான் கல்யாணம் ஆகியிருந்தது. பத்து ராணுவ அதிகாரி. வருடத்திற்கொருமுறை விடுப்பு கிடைக்கும். அப்போதுதான் தமிழக எல்லையை மிதிக்க முடியும். இம்முறை வந்த போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்  யதேச்சையாக அமைந்தது அவனுக்கு திருப்தியைக் கொடுத்தது. இம்முறை மைதிலியைக் கூட்டிக் கொண்டு ஜப்பல்பூர் போகப்போகிறான். இனிமேல்தான் தாம்பத்தியமே! மயில் பீலியுடனும் பித்தளைக் கிண்ணத்துடனும் தோளில் தொங்கிய சாம்பிராணிப் பையுடனும் அலைந்து கொண்டிருந்தார் மஸ்தான் பாய். லேசான தாடி, முன் வழுக்கை, முழங்கை வரை நீண்டிருக்கும் தொள தொளா சட்டை, அழுக்கேறிய கைலி, முன் வழுக்கை என்று ஏகப்பட்ட அடையாளங்களுடன் அதே சமயம் அடையாளங்கற்றும் அவர் இருந்தார். பாரதத் திருநாட்டில் அனேக இஸ்லாமியக் கிழவர்கள் இதே தோற்றத்துடன்தான் காட்சியளிக்கிறார்கள். திருக்குரானில் போதிக்கப்படும் எளிமை அவர்களை வந்தடைய இந்த வயசாகி விடுகிறது. மஸ்தான் பாய் வழக்கமாக வரும் பகுதிதான் இது. வார நாட்களில் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பகுதி என்று பிரித்து வைத்திருக்கிறார். அதன் படி இன்று இந்த வைகை ஆற்றுக்கரையிலிருக்கும் கடைகள் தான் அவரது வாடிக்கை. ஆனால் அவர் கொஞ்சம் பிந்தி வந்ததால் கரை கொள்ளாக் கூட்டம் அலை மோதியது. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்பதைக் கவனத்தில் கொள்ளாதது தனது தவறே என்று தலையில் லேசாக அடித்துக் கொண்டார். கடைக்காரர்கள் எல்லாம் வியாபார மும்முரத்தில் இருப்பார்கள். தன்னை யாரும் சட்டை செய்வார்களா என்பது சந்தேகமே! பேசாமல் தணலை நீர் ஊற்றி அணைத்து விடலாமா என்று யோசித்தார். கரிக் காசாவது மிஞ்சும். “ பாய் இங்கிட்டு வாங்க “ என்ற குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார் மஸ்தான் பாய். நாட்டு மருந்துக் கடை கோவிந்தப்ப நாயக்கர்தான் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். சாம்பிராணி வாங்குவது அவர் கடையில் தான் எப்போதும். ஆனால் இன்றுதான் சாம்பிராணிக்கே வேலை இருக்காது போலிருக்கிறதே! ஜென்னி என்கிற ஜெனிஃபர் பரபரத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இன்று எல்லாமே தடம் புரண்டிருந்தது. அவள் காதலித்துக் கொண்டிருந்த அழகம்பெருமாள் வீர வைஷ்ணவன். பதினாறு திருமண் இட்டுக் கொண்டு பிரபந்தம் பாடிக் கொண்டிருப்பவன். அவனைக் காதலிப்பது ஒரு சங்கடமான விசயம்தான். ஆனாலும் காதல் இதையெல்லாம் பார்த்துக் கொண்டா வருகிறது! ஒரு மழையிருட்டு நேரத்தில் மாதாகோயிலுக்கு மெழுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யப் போய்க் கொண்டிருந்த இவளது ஒரு அடி உயரக் குதிகால் செருப்பு, வாரியப் பள்ளத்தால் சிதைக்கப்பட்ட தார்ச்சாலையில் வழுக்க, கட்டுக்குடுமி அவிழ சாம்சன் என்னும் மாவீரனைப் போல இவளைத் தாங்கிக் கொண்ட சுந்தர புருசன் அவன். நிலைகுலைந்த இவளது குட்டைப்பாவாடை மேலெழும்ப ஒரு கையால் அதை நீவி விட்டபடியே முகத்தைத் திருப்பிக் கொண்ட அவனது நாகரீகத்தை அவள் ரசித்தாள். மனதைப் பறிகொடுத்தாள். வெற்றுடம்பில் மேல் துண்டுடன் இருந்த அவனது புஜங்களின் வலிமை அவளுள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. கண்களை இறுக்க மூடிக்கொண்டு “ பிதாவே “ என்று அவன் மார்பில் சிலுவையிட்டாள் ஜென்னி. ஜெபக்கூட்டத்திற்கு போகுமுன்பாக அவனைச் சந்திக்கும்  நிகழ்வு ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. ஆனால் கிளம்பும் நேரம் பார்த்து சித்தி கான்ஸ்டன்ஸ் “ என்னையும் இட்டுக்கினு போயேன் ‘ என்று ஆரம்பித்தாள். சித்தி புருசன் ஜெஃப்ரி அண்டக் குடிகாரன். அதனால் அவள் அடிக்கடி இங்கே ஓடி வந்து விடுகிறாள். வந்தமா சாப்டமா என்றில்லாமல் ஜென்னிக்கு அறிவுரைகள் வழங்க ஆரம்பித்து விடுவாள். “ டி வி, சினிமால்லாம் சைத்தானுங்க. அதையெல்லாம் பாத்து மனசை கெடுத்துக்காத. சாமுவேல் ஜெபதுரை என்னா சொல்றாரு தெரியுமா. இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டுல சைத்தான் கொம்பு வச்சுகிட்டு, பல்லை துருத்திகிட்டு கோரமா கண்ணுக்குத் தெரியாதாம். கண்ணுக்கு தெரியாம வேற ரூபத்தில வரும்.  டிவி,  சினிமான்னு நம்ம கெடுக்கும். என்னா புரிஞ்சுதா “ சித்தி வந்தால் காரியம் கெட்டுப் போகும். ஜெபக்கூட்டத்திலும் சும்மா இருக்க மாட்டாள். இவள் பிரசங்கத்தை ஆரம்பித்து விடுவாள். அழகனை இவள் பார்த்துவிட்டாலோ அவ்வளவுதான். ஜென்னிக்கு சிலுவைதான். சினேகிதி ஒருத்தி வீட்டிற்கு போய்விட்டு, அப்புறம் செல்வதாக போக்கு காட்டிவிட்டு தப்பித்தாள் ஜென்னி. வெளியில் அவளது ஸ்கூட்டி கிளம்பமாட்டேன் என்று அடம் பிடித்தது. அடிக்கடி அவளைப் பார்த்து ஜொள்ளு விடும் ஆட்டோக்காரன், ஒருத்தன் உதை உதை என்று உதைத்து, ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்தான். வழக்கமாக சந்திக்கும் இடத்தில் அழகன் இல்லை. கடிகாரத்தைப் பார்த்தாள். அவள் சொன்ன நேரம் கடந்து அரை மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. அவளுக்கு அழுகையாக வந்தது. இவன் எப்பவுமே இப்படித்தான். வினாடி முள் நகரக்கூடாது. இவன் நகர்ந்து விடுவான். அப்படி என்ன தலை போகிற வேலையோ? கூட்டம் ஏகத்துக்கு பெருகி இருந்தது. சாலையில் சவுக்கு கம்புகளால் தடுப்பு போட்டிருந்தார்கள். முதலமைச்சர் தமுக்கம் மைதானத்தில் பேச வரப்போவதாக பேசிக்கொண்டார்கள். கூட்டத்தை தன் பூனைக் கண்களால் துழாவினாள் ஜென்னி. ஆறரை அடி அழகன் நிச்சயம் இந்தக் கூட்டத்தில் தன் கண்ணில் படுவான்.. படவேண்டும்.. “ஏசப்பா எனக்கு வழி காட்டு” என்று வேண்டிக்கொண்டாள். சவுக்கு தடுப்பு ஓரமாக சாலையை ஒட்டியபடி நகரும் கூட்டத்தின் நடுவே கையில் பெரிய பூக்கூடையுடன் அழகன் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது அவள் கண்களில் பட்டது. உடனே தன் செல்பேசியைக் கொண்டு அவனுடன் தொடர்பு கொள்ள எண்ணினாள். ஆனால் அவன் ஒருமுறை அவளைக் கடிந்து கொண்டது நினைவுக்கு வந்து அவள் கைகளைக் கட்டிப் போட்டது. “ பெருமாளுக்கு முன்னால வெட்டி அரட்டையெல்லாம் கூடாது. செல்லில பேசற நேரத்துல ரெண்டு ஸ்லோகம் சொல்லு; போற வழிக்கு புண்ணியம் கெடைக்கும். அது பிரபந்தமா இருக்கணும்னு அவசியமில்ல. ஒங்க பைபிளாக்கூட இருக்கலாம். புரியறதோ! “ அழகர் ஆற்றில் இறங்கும் அந்த வினாடிகளில் கூட்டம் பரபரத்து அரற்றியது. மைதிலி தன்னை மறந்து கண்களை மூடிக்கொண்டு வைணவ ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள். கால்கள் தன்னிச்சையாக முன் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு தருணத்தில் பத்மநாபன் அவளிடமிருந்து பிரிக்கப்பட்டான். கட்டுக் குடுமியுடன் நெற்றி நிறைய திருமண்ணுடன், ஆசிம் அவள் பின்னால் நடந்து கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு பெரிய பூக்கூடையில் சாமந்திப் பூக்கள் மாலையாக சுருண்டு கிடந்தன. அதனடியில் ஒரு கருவண்டைப் போல் பெரட்டா பதுங்கிக் கிடந்தது. அதன் உடல் முழுவதும் சாமந்திப்பூக்களால் சுற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, அதன் முனை மட்டும் வெளியே தெரியும்படியாக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. போலீஸ் சைரனுடன் ஜீப்புகளும் கார்களும் தலைகளில் சிகப்பு விளக்குகளெரிய வேகமாக அந்தப் பகுதியைக் கடந்தன. அரசு முத்திரை முகப்பில் பதித்த வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஆற்றங்கரைக்கு அருகே வரும்போது கொஞ்சம் வேகத்தைக் குறைத்தது மாதிரி இருந்தது. லேசாக சாளரத்தின் கறுப்பு கண்ணாடி இறக்கப்பட்டு ஒரு ஜோடிக் கண்கள் எட்டிப் பார்த்தன. எண்ணி பத்து வினாடிகளே அவனுக்கு கொடுக்கப்பட்ட நேரம். அதற்குள் அவன் பூப்பந்தை எடுத்து, துப்பாக்கியை பிடித்து, குறி பார்த்து சுட வேண்டும். நகரும் காரின் வேகத்தையும், சீறிப்பாயும் தோட்டாவின் வேகத்தையும், கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். அசையும் இலக்கினைச் சுடும் பயிற்சியில் அவன் தேர்ந்தவன். அதனால் அதெல்லாம் அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. ஆசிம் செயல்பட்டான். கண்கள் நகரும் வாகனத்தைக் குறி வைக்க, கைகள் தன்னிச்சையாக பெரட்டாவை பற்றின. ஆள்காட்டி விரல் இயக்கும் விசையை சுற்றிச் சுருண்டது. துப்பாக்கி முனை மெல்ல உயர்ந்து சாலையில் நகரும் வாகனத்தின் சாளரத்தைக் குறி வைத்தது. மஸ்தான் பாய் தடுப்போரம் நின்று கொண்டிருந்தார். அவர் கை இடையில் இருக்கும் துணிப்பையிலிருந்து ஒரு கொத்து சாம்பிராணித் தூளை எடுத்து சிவந்து எரிந்து கொண்டிருக்கும் தணலின் மேல் போட்டது. குபு குபுவென்று புகை கிளம்பி சூழ்ந்து கொண்டது. கோவிந்தப்ப நாயக்கரின் நாட்டு மருந்துக் கடையில் சீருடையில் தொலைநோக்கி பொருத்திய ஸ்நைப்பர் துப்பாக்கிகளுடன் இரண்டு கமேண்டோக்கள் தயார் நிலையில் ஆசிமைக் குறி பார்த்தபடி ஓளிந்திருந்தனர். அவன் துப்பாக்கியை எடுத்த இரண்டாவது வினாடி மைதிலி தலை சுற்றி அவன் மேல் சாய்ந்தாள். காலையில் வெறும் வயிற்றோடு வெய்யிலில் நடந்ததும், கூட்டத்தின் இறுக்கமும் அவளை அந்த நிலைக்குத் தள்ளி விட்டிருந்தது. ஆசிம் நிலைகுலைந்தான். சாமாளித்து நிமிருவதற்குள் காரின் கண்ணாடி ஏற்றப்பட்டு அவனிடமிருந்து விலகிக் கொண்டிருந்தது. தன் மேல் விழுந்த பெண்ணை திரும்பவும் ஏறிட்டான். அவள் அவன் கைகளில் மயங்கிக் கிடந்தாள். இது அவன் எதிர்பார்க்காத திருப்பம். தப்பிக்கும் வழி தேடி அவன் கண்கள் அலைந்த போது அவனருகில் பத்மநாபன் நின்று கொண்டிருந்தான். “ ரொம்ப நன்றிங்க “ என்று சொல்லியபடியே அவன் கைகளைப் பிடித்து குலுக்கி அப்படியே பின்னால் இழுத்து இறுக்கினான் பத்மநாபன். அந்தப்பக்கத்திலிருந்து இன்னொரு கரம் அவனது இன்னொரு கையைப் பிடித்து முறுக்கி பின்னால் இழுத்தது. மயில் பீலியின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட கைவிலங்கோடு மஸ்தான் பாய் நின்றிருந்தார். நிலைகுலைந்து போனாள் ஜென்னி. அகிலமே இருண்டு விட்டதுபோல் உணர்ந்தாள். எளிதில் உணர்ச்சி வசப்படும் அவளது உள்ளம் பரபரத்தது. அவளுடைய எல்லா எதிர்பார்ப்புகளும் நொறுங்கிப் போனதை உணர்ந்த அவளுக்கு, வாழ்வின் மேல் திடீரென வெறுப்பு வந்தது. வாழ்வதற்கான அர்த்தம் அனர்த்தமாகிப் போனதை நொடியில் உணர்ந்த அவளது மனம் தவறான முடிவொன்றை எடுத்தது. கையிலிருந்த வேதாகம நூலில் ஏதோ ஒரு பக்கத்தில் இருந்த புதிய சவர ப்ளேடை அவள் கைகள் தன்னிச்சையாக எடுத்தன. அதை அப்புத்தகத்தில் வைத்த நாளின் நிகழ்வினை நோக்கி அவள் மனம் போனது. “ மிஸ்டர் அழகன்! நான் ஏதோ விளையாட்டுக்குச் சொல்றேன்னிட்டு நெனைக்காதீங்க. இது ஆழமான காதல். இனக்கவர்ச்சியினால வர்ற மேலோட்டமான ஈர்ப்பு இல்ல. அதப் புரிஞ்சுக்கோங்க. நீங்க இல்லைன்னா நான் உசிரை மாய்ச்சுக்குவேன். அதுக்குத் தயாரா எப்பவும் இந்த புனித பைபிள்ல ஒரு புது ப்ளேடு இருக்கும். எந்த நொடியிலேயும் அதுக்கு வேல கொடுக்க நான் தயாரா இருக்கேன். “ புது ப்ளேடைக் கையில் எடுத்து மணிக்கட்டு நரம்பினை அறுத்துக் கொள்ளப் போனபோது ஜென்னியின் காதுகளில் கான்ஸ்டன்ஸ் சித்தியின் வார்த்தைகள் ஒலித்தன. “ இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டுல சைத்தான் கொம்பு வச்சுகிட்டு, பல்லை துருத்திகிட்டு கோரமா கண்ணுக்குத் தெரியாதாம். கண்ணுக்கு தெரியாம வேற ரூபத்தில வரும்.” ‘ உண்மைதான்! வேறு ரூபத்தில்தான் சைத்தான் வந்திருக்கிறது. தலையில் கொம்புக்கு பதிலாகக் குடுமி! கோரைப் பற்களுக்கு பதிலாக பட்டை நாமம். தேவனே இந்தச் சைத்தானிடமிருந்து என்னைக் காப்பாற்றினீர். உமக்கு தோத்திரம் ‘ என்று மனதில் ஜெபித்தபடியே தன் பரந்த மார்பில் சிலுவையிட்டுக் கொண்டாள். அவள் கையிலிருந்த புது ப்ளேடு கீழே நழுவி விழுந்தது. நெஞ்சில் ஏதோ பாரம் குறைந்து விட்டதை போல் உணர்ந்தான் ஆசீம். விலாவில் ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டிருந்தது. நிமிர்ந்த அவன் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தன. மைதிலி தெளிவான விழிகளுடனும், மிடுக்குடனும் நின்று கொண்டிருந்தாள். அவள் கைகளில் அவனுடைய பெரட்டா இருந்தது. அது அவனது விலாவினை அழுத்திக் கொண்டிருந்தது. மாலைச் செய்தித்தாள்கள் அலறின. முதலமைச்சருக்கு சுகவீனம்! தமுக்கம் மைதானக் கூட்டம் ரத்து!                         17. கோழி போடணும்   சபாபதிக்கு கிட்டத்தட்ட எழுபது வயது இருக்கும். மெலிதான சந்தன நிற ஜிப்பாவும், தங்க பிரேம் கண்ணாடியும், வெள்ளை வெளேரென்ற வேட்டியும் அவரது அடையாளங்கள். ஒரு கோடிஸ்வரனுக்கு உண்டான தகுதியும் அவருக்கு இருந்தது. அவரது முயற்சியில் பல நிறுவனங்கள் தழைத்தன. அதனால் பல உயிர்கள் பிழைத்தன. அவரது ஆளுமையில் பல ஆலைகளும் சில சேலைகளும் அடக்கம். புதிய டொயட்டோ காரில் அவர் இப்போதெல்லாம் வலம் வருகிறார். கிழக்குக் கடற்கரைச்சாலைதான் அவருக்கு பிடித்தமான ரோந்து போகும் இடம். குளிரூட்டப்பட்ட கார். சூரிய வெளிச்சம் உள்புகாத கலர் கண்ணாடிக் கதவுகள். அந்தக் கண்ணாடிகள் விசேசமானவை. வெளியிலிருந்து பார்த்தால் உள் நடப்பது ஒன்றும் தெரியாது. ஆனால் உள்ளிருந்து பார்த்தால் வெளியில் நடப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும். சபாபதி தனியாகத்தான் இந்த ரோந்துக்குப் போவார். சாலையோரம் நடக்கும் காட்சிகளை உள்வாங்கிக்கொண்டே அவரது படகு கார் மெல்ல மிதந்து போகும். கடற்கரையோரம் மாலை நேரங்களில் மறைவிடங்களில் எசகு பிசகாக இருக்கும் இளம் ஜோடிகள் தான் அவர் விரும்புவது. தன்னால் இந்த வயதில் முடியாததை, இன்னும் தன் எண்ண அடுக்குகளில் நீங்காமல் நிலைத்திருப்பதை பார்ப்பதிலே அவருக்கு ஆனந்தம். அவரது வசதிக்கு தனியாக திரையரங்கு அமைத்து இம்மாதிரி திரைப்படங்களை போட்டு ஆனந்தப்படலாம்தான். ஆனால் அதிலெல்லாம் அவருக்கு ஈடுபாடு இல்லை. எதையுமே ரத்தமும் சதையுமாக பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம். ஆனால் இப்படியெல்லாம் சொல்வதனால் அவர் ஏதோ குரூரமானவர் என்று எண்ணிவிடவேண்டாம். அவர் மிக மென்மையானவர். அவரால் அனுபவிக்கப்பட்ட பல பெண்கள் அவரிடம் அபரிமிதமான அன்பு கொண்டே அவரிடமிருந்து விலகியிருக்கிறார்கள். இவ்வளவு அன்பு அவர்களது புருஷன்மார்களுக்குக்கூட கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. பெண்ணை பூவைப்போல கையாளும் வித்தை தெரிந்தவர் அவர். கிள்ளாமலே செடியை விட்டு விலகி அவர் மடியில் விழுந்த மலர்கள்தாம் அதிகம். அவர் சூடியபிறகும் அவை வாடாமல் இருப்பதுதான் விசேசம். சபாபதிக்கு இன்று ஒரு புதுவிதமான கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. அதைஎன்னவென்று இனம் கண்டுகொள்ளமுடியவில்லை அவரால். இதற்கான வடிகால் என்ன என்பதைக் கண்டுபிடிக்கும்வரை தன் மனம் ஓயாது என்பதை மட்டும் அவரால் உணரமுடிந்தது. குளிரூட்டப்பட்ட கார் சூடாகியதுபோல் இருந்தது அவருக்கு. குளிர்சாதனம் உச்சக்கட்டத்தில் இருந்தது. இதற்குமேல் அதை அதிகப்படுத்த வாய்ப்பில்லை. கிழக்குக் கடற்கரை சாலையில் மெதுவாக வழுக்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது அவரது கார். இன்று கிழக்குக் கடற்கரை சாலை வெறுமையாக இருந்தது. கடற்கரையும் அப்படித்தான். ஒரு ஜோடியைக்கூட காணோம். குப்பை அள்ளும் மெஷின் போல காதலர்களை அள்ளும் மெஷின் ஏதாவது அவர்களை அப்புறப்படுத்திவிட்டதா என்று யோசித்தார். சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் இடம் வந்தபோது தான் அவருக்கு அந்தக் காட்சி கண்ணில் பட்டது. அதீதமாக வளர்ந்திருந்தான் அவன். சராசரிக்கும் அதிகமான உயரம். சராசரிக்கும் அதிகமான உடல். ஒரு வளர்ந்த பனைமரத்தைப்போல அவன் இருந்தான். நிறமும் மரத்தை ஒத்திருந்தது. பனை ஓலைகளைப்போலவே அவனது கேசமும் கலைந்து ஆங்காங்கே தூக்கிக்கொண்டிருந்தது. சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் இடத்துக்கருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் அவன் நின்றிருந்தான். காப்பிக்கலர் கை வைத்த சட்டையும் ஒரு அழுக்கு கைலியும் அணிந்திருந்தான். அவனது சட்டையில் ஒரு கை மடிக்கப்பட்டும் ஒரு கை மடிக்கப்படாமலும் இருந்தது. யாரோடோ பேசுவது போல் இருந்தது அவனது பாவனை. ஆனால் சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லை. சபாபதி அவனை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அவன் உதட்டசைவிலிருந்து அவன் என்ன சொல்கிறான் என்று அவரால் உணரமுடியவில்லை. கொஞ்சமாக கதவுக்கண்ணாடியை இறக்கிவிட்டு அதன் விளிம்பில் காதை வைத்து உற்றுக்கேட்டார். கோழி போடணும்.. கோழி போடணும் .. கோழி போடணும் .. திரும்பத்திரும்ப இதையே அவன் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் எதைப்பற்றி பேசுகிறான் என்பது அவரால் சுலபமாக அனுமானிக்கமுடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவன் பால் திரும்பிய கண்களைத் திருப்ப முடியவில்லை. அவன் கண்களில் ஒரு வித ஒளி இருந்தது. பார்ப்பவரை சுண்டியிழுக்கும் கண்கள். அவனை பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் மனம் அவரை விட்டு விலகி வேறு காட்சிகளை உருவகப்படுத்த ஆரம்பித்தது. அவன் இப்போது சுத்தமாக குளித்துவிட்டு நல்ல ஆடைகளை அணிந்திருந்தான். மழுமழுவென்று சவரம் செய்யப்பட்டதாக இருந்தது அவன் முகம். மீசை தாடியெல்லாம் களைந்தபிறகு அவன் இன்னும் ஈர்ப்புடையவனாக மாறி இருந்தான். அவரது அருகில் அவரது காரில் அவன் உட்கார்ந்திருந்தான். ஆனாலும் அவன் வாய் திரும்பத்திரும்ப, முன்பு சொன்னைதையே உச்சரித்துக்கொண்டிருந்தது. ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலின் உணவு விடுதிக்குள் அந்தக் கார் நுழைந்தது. அசைவ உணவு வகைகள் பரிமாறப்படும் உணவகம் அது. அங்கு குறிப்பிட்ட தொகை கட்டிவிட்டால்ம், மேசைகளின் மேல் வித விதமாக வைக்கப்படும் உணவுப் பொருட்களை இஷ்டம்போல் வெட்டலாம். பஃவே என்று அழைக்கப்படும் உணவு பரிமாறும் முறை. குளிரூட்டப்பட்டிருந்த உணவக சாப்பாட்டு அறையில் வரிசையாக மேசைகள். அதன் மேல் வெள்ளைத் துணி. மெலிதாக எரிந்து கொண்டிருக்கும் சுடருக்கு மேல் முகம் தெரியும் பளபளப்பான அகலவாய்ப் பாத்திரங்களில் அசைவ பதார்த்தங்கள் காத்திருந்தன. ஆண்களும் பெண்களும் ஆங்காங்கே குழுமி எலும்பைக் கடித்துக்கொண்டு, சதையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் வெகு வேகமாக செயல்பட்டான். ஒரு தட்டில் கொள்ளாத அளவுக்கு அவன் உணவை அடுக்கிக்கொண்டான். சபாபதி அவனை ஒரு நிலைப்பாட்டில் கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட்டார். கொஞ்சம் பசி அடங்கியவுடன் அவன் கொஞ்சம் நிதானப்பட்டான். மெதுவாக அவன் சுற்றியிருக்கும் உணவு வகைகளை நோட்டம் விட்டு ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தான். சபாபதி தனக்கு ஏற்ற வகையில் பழரசம், காய்கறித் துண்டுகள், கொஞ்சம் சிக்கன் சூப் என்று மெல்ல ஆரம்பித்தார். இதற்கு மேல் வயிற்றில் இடமில்லை என்ற நிலை வந்தவுடன் அவன் அவரைப்பார்த்தான். அவருக்கு புரிந்தாற்போல் இருந்தது. அவனை மெதுவாக காருக்கு கொண்டுவந்தார்.வரும்வழியெங்கும் அவன் சொல்லிக்கொண்டே வந்தான் ‘கோழி போடணும்’ அப்போதுதான் அவரது ‘செல்’லம் சிணுங்கியது. சாலாட்சி பேசினாள். சாலாட்சி சமிபத்திய கண்டுபிடிப்பு. இதே உணவகத்தில் அவரை அவள் சந்தித்திருக்கிறாள். அவள் அந்த நட்சத்திர ஓட்டலில் வேலை செய்பவள். உணவகத்தின் நிர்வாகிகளில் ஒருவர். வாடிக்கையாளர் சேவை நன்றாக நடப்பதிலும், அவர்களது இச்சைகள் பூர்த்தியாவதலும் நிர்வாகத்திற்கு நல்ல பெயர் கிடைக்க அயராது உழைப்பவள். அவளது அகராதியில் இல்லை என்பதே இல்லை. சாலாட்சி என்பது ஒரு கர்னாடகமான பெயராக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா! அவளும் கர்னாடகக்காரிதான். வெள்ளைத்தோலும், கொஞ்சம் பெரிய பற்களும் அவருக்கு சொந்த மண் தந்த சொத்து. சிரிக்கும்போது பற்கள் பளிச்சென்று பார்ப்பவரை சுண்டியிழுக்கும். அன்று அவள் சபாபதியை உணவகத்தில் பார்த்திருக்கிறாள். உணவருந்தும் ஒருவர் அவளை மறித்து ஏதோ உணவு தீர்ந்துவிட்டதாக சொல்லிய அந்த அசந்தர்ப்ப நேரத்தில் அவளது கடைக்கண் ஓரம் சபாபதி அவனுடன் வெளியேறுவது ஒரு மின்னலைப்போல் தோன்றி மறைந்தது. உணவு ஏற்பாடு செய்யும் நேரத்தில்தான் அவள் அவரை செல்லில் கூப்பிட்டாள். சாலாட்சியின் அழைப்பு சபாபதியின் ஏற்பாடுகளை திசை திருப்பியது. பக்கவாட்டில் திரும்பி அவனை பார்த்தார். அவன் மெலிதாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். சாலாவிடம் மெல்லிய குரலில் பேசினார். அவனைப்பற்றி சொன்னார். அவளும் அவனைப் பார்த்த நொடிப்பொழுதில் ஈர்க்கப்பட்டிருந்தாள். அவனை தெரிந்துகொள்வதில் அவளுக்கு ஆர்வம் இருந்தது. முன்பொரு சமயம் அந்தப் பருவத்திற்கேற்ற காதலன் ஒருவனுடன் அவள் சல்லாபம் செய்வதை சபாபதி இமை கொட்டாமல் பார்த்திருக்கிறார். ஒரு லட்ச ரூபாய் செலவில் அரங்கேறிய தனிக் காட்சி அது. அதன் நினைவலைகள் அவருக்குள் வந்து போயின.சாலாவுடன் அவனைப் பொருத்திக் கற்பனை செய்தபோதே அவரது உடல் சூடாகிப்போனது. சாலாட்சி பத்து மணியளவில் அவரது பிரத்தியேக விருந்தினர் மாளிகைக்கு வந்தாள். செயற்கை நீரூற்றுகளும் வண்ண விளக்குகளுமாக ஒரு கனவுலோக மாளிகையாக காட்சியளித்தது அது.அவள் லேசாக மது அருந்தியிருந்தாள். இம்மாதிரியான அனுபவங்களுக்கு மது, மாதுக்களுக்கு அவசியமாகி போய்விட்ட ஒன்று. ஆனாலும் இது வரை மதுவைப் பொறுத்தவரை சாலா எல்லை மீறியதில்லை. எந்த நிலையிலும் தன்னை யாரும் படம் பிடித்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையே அதற்குக் காரணம். சமூக அந்தஸ்து பாதிக்கப்படும் வகையில் எந்த கேளிக்கைகளிலும் அவள் ஈடுபடுவது கிடையாது. அவளது சல்லாபங்களுக்கு அவளே இடம் தேர்ந்தெடுப்பாள். அவள் ஆளுமையிலேயே அவளது ஆண்கள் இருப்பார்கள். முன்னறையிலேயே அவர்கள் பிறந்த மேனியாக்கப்படுவார்கள். அதனால் எதையும் மறைத்துக் கொண்டுவரும் சாத்தியம் முறியடிக்கப்படும். மீறி ஏதாவது எடுத்து வரவும் அவர்களிடம் பதுங்கு குழிகளும் கிடையாது. சபாபதி மிகவும் உற்சாகமாக இருந்தார். சாலாவை வாசற்படியிலேயே நின்று வரவேற்றார். அவளுக்கும் அவர் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. தன் சமூக அந்தஸ்தை விட அவரது உயர்ந்தது என்று அவள் உணர்ந்திருந்தாள். அதனால் எந்தவித தயக்கமுமின்றி புன்னகையோடு அந்த மாளிகைக்குள் நுழைந்தாள்.குட்டி லிப்ட் வழியாக படுக்கை அறைக்குச் சென்றாள். அவன் வட்ட வடிவமான படுக்கை மேல் தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கத்திலும் அவன் வாய் முணுமுணுத்தது ‘ கோழி போடணும் ‘. சாலாட்சி சிரித்துக்கொண்டே உடைகளைக் களைந்தாள். சபாபதி படுக்கை அறையை ஒட்டிய கண்ணாடித்தடுப்பின் பின்னால் உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்தால் அழுந்தும் உயர்ரக சோபா அது. ஆனாலும் அவரால் சாய்ந்து உட்கார முடியவில்லை. சோபா நுனியில் ஒரு எதிர்பார்ப்புடன் கன்னத்தில் இருகைகளையும் வைத்தபடி, பார்வையை எந்தப்பக்கமும் திருப்பாமல், வைத்த கண் வாங்காமல் படுக்கையையே பார்த்துக்கொண்டிருந்தார். சாலா மெல்ல அவன் தோளைத் தொட்டு அசைத்தாள். அவன் மெதுவாக அவளைப்பார்த்தான். கண்கள் லேசாக விரிந்தன. இதழோரம் ஒரு எதிர்பார்ப்பு புன்னகை சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டது. மெல்ல எழுந்து சோம்பல் முறித்தான். அவளைப்பார்த்து சொன்னான்:கோழி போடணும் ‘ சாலா இணக்கத்துடன் தலையசைத்து அவன் உடைகளைக் கழற்றினாள். அவனைப் படுக்கையில் தள்ளி அவன் மேல் படர்ந்தாள். சபாபதி கார் கண்ணாடியை இன்னும் இறக்கினார். அவன் இவரைப் பார்ப்பதாகவே இல்லை. அவனை எப்படி அழைப்பது? அவரருகில் இருக்கும் தண்ணீர் குடுவையைப் பார்த்தபோது ஒரு எண்ணம் தோன்றியது. சிவப்பு நிறக்குடுவை அது. வெளிநாட்டில் வாங்கியது. மெல்ல அதை எடுத்து வெளிப்புறமாக கைகளை நீட்டி தண்ணீர் குடிக்க ஆரம்பித்தார். இயல்பாக நழுவுவது போல் அதை கீழே போட்டார். அவனது கண்களில் அந்தச் சிவப்பு பட்டிருக்கவேண்டும். அவன் அவரைப் பார்த்தான். அதற்காகவே காத்திருந்ததுபோல் அவர் அவனைப்பார்த்து சைகை செய்தார். அவன் மெல்ல அவர் பக்கமாக திரும்பினான். அவரை நோக்கி வர ஆரம்பித்தான். அருகில் வந்ததும் குனிந்து குடுவையை எடுத்தான். சிறிது நேரம் அதையே உற்று பார்த்தான். சிறிதளவு தண்ணீர் அதில் மிச்சம் இருந்தது. அதை முழுவதுமாக அவன் தன் தொண்டையில் சரித்துக்கொண்டான். குடுவையை அவரிடம் நீட்டியபடியே சொன்னான்: கோழி போடணும் ‘ அவர் அவனைப் பார்த்து சினேகமாகச் சிரித்தார். கதவைத் திறந்துவிட்டார். அவன் அவரை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு தலையை ஒருமாதிரி சாய்த்துக்கொண்டு காருக்குள் நுழைந்தான். சுவாதீனமாக காலை நீட்டிக்கொண்டு சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். கதவு திறந்தே கிடந்தது. சபாபதி அவனைத் தாண்டி கையை நீட்டி கதவைச் சாத்தினார். அதற்கப்புறம் நடந்ததெல்லாம் அவர் கற்பனை செய்தபடியே நடந்தது. நட்சத்திர ஓட்டலின் உணவகத்தில் அவன் விரும்பியவற்றை சாப்பிட்டான். அவனை வெளியே அழைத்து வரும்போது கவனித்தார். அவன் கோழி இறைச்சி மட்டும் சாப்பிடவில்லை. அவருக்கு ஏதோ புரிந்தாற்போல் இருந்தது. சாலாட்சிக்கு செல்லில் செய்தி அனுப்பியிருந்தார். பதிலுக்கு அவளும் பத்து மணிக்குமேல் வருவதாக சேதி சொல்லியிருந்தாள். என்ன இது கற்பனைக்கும் நிஜத்திற்கும் ஒரு வித்தியாசம் கூட இருக்காது போலிருக்கிறதே என்று நினைத்து சிரித்துக் கொண்டார் சபாபதி. அவன் ஏகாந்தமாக குளித்தான். அந்த மாளிகையின் எந்த அறையையும் பார்ப்பதற்கு ரகசிய கண்ணாடி அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவனது உடற்பாகங்கள் அவனது உருவத்திற்கேற்றபடியே அமைந்திருந்தன. பளிங்குக் குளியல் தொட்டியில் அவன் அசைந்தபோது அலை எழும்பி தரையில் வழிந்தது. ஏற்கனவே நிரப்பட்டிருந்த வெதுவெதுப்பான நறுமண நீர் அவனை இன்னும் உற்சாகப்படுத்தியது. கால்களுக்கிடையில் வெகுநேரம் கைகளால் தேய்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கான வெல்வெட் உடை சலவை செய்யப்பட்டு குளியலறை ஓரம் தொங்கிக்கொண்டிருந்தது. அவனது பார்வை அதன் பால் சென்றது. நடுவில் நாடாக்கயிறுகள் கொண்ட உடை அது. வினாடி நேரத்தில் அவிழ்க்கக் கூடியது. படுக்கை அறைக்கு ஏற்றது. அவன் ஜட்டி அணியும் பழக்கம் இல்லாதவனாக இருந்தான். அதனால் அவனுடை பழைய அரை டிரவுசரையே திரும்பவும் அணிந்துகொண்டான். அதன் மேல் அந்த வெல்வெட் உடையை அணிந்தான். நாடாக் கயிறு கட்டும் வேலையை அவன் செய்யவில்லை. நேரம் மிச்சம் என்று நினைத்துக்கொண்டார் சபாபதி. குளியலறையிலிருந்து வந்து படுக்கையில் படுத்து தூங்கிப்போனான். சாலா சரியாக பத்து மணிக்கு வந்தாள். சபாபதியின் வரவேற்பை ஏற்றாள். படுக்கை அறைக்குப் போனாள். உடை களைந்தாள். சபாபதி புதைமணல் சோபாவில் பக்கத்து கண்ணாடி அறையில் இருக்கை நுனியில் இருந்தார். சாலா தோள்களைத் தொட்டு அவனை எழுப்பினாள். அவன் படாரென்று கண்களைத் திறந்தான். கோழி என்றான். மெல்ல எழுந்தான். இருகையால் அவனை லேசாக மறுபடியும் படுக்கையில் தள்ள எத்தனித்தாள் சாலா. அவன் மிகுந்த வேகத்துடன் அவள் கைகளைப் பற்றி இழுத்து படுக்கையில் தள்ளினான். சபாபதி கால் மேல் கால் போட்டுக்கொண்டு இன்னும் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தார். அவன் அவளை ஒரு மூட்டையை புரட்டுவது போல் புரட்டிப்போட்டான். உடையுடன் அவள் மேல் பாய்ந்தான். சபாபதி புது விளையாட்டைப் பார்க்கும் ஆர்வம் மேலிட எழுந்து நின்று கொண்டார். அவன் அவள் மேல் முழுவதுமாக படர்ந்திருந்தான். ஒரு கையால் அவளது கூந்தலை இறுக்கமாகப் பற்றியிருந்தான். அரை டிரவுசர் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய கத்தியை எடுத்து மெதுவாக அவள் கழுத்தை அறுக்க ஆரம்பித்தான்.                                               18. மிதவை மனிதர்கள்   கன்னையா இன்று ஓய்வு பெறுகிறார். அறுபது வயது தெரியாத தோற்றமும், சுறுசுறுப்பும், அவரது அடையாளங்கள். எந்நேரமும் ஏதாவது செய்து கொண்டே இருப்பது, அவரது வழக்கம். கன்னையாவுக்கு கொஞ்சம் போலச் சங்கீதம் தெரியும். சிறுவயதில் மிருதங்கம் கூட வாசிக்கக் கற்றுக் கொண்டார். ஓய்வுக்குப் பிறகு முறையாக பயிற்சி எடுத்தபின், மெல்லிசைக் குழுக்களிலோ அல்லது கர்நாடகச் சங்கீதக் கச்சேரிகளுக்கோ வாசிக்கலாம் என்று ஒரு எண்ணம் அவருக்கிருந்தது. கன்னையா ஒரு அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராக சேர்ந்து, இன்று ஒரு அதிகாரியாக ஓய்வு பெறுகிறார். அவருடைய மேலதிகாரிகளுக்கு அவர் ஓய்வு பெறுவது அவ்வளவு இனிப்பான செய்தியாக இல்லை. கன்னையா எதையும் தன் வேலை என்று வரையறுத்துக் கொள்ளாதவர். காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை அவர் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டை உடையவர். அதற்குத்தானே தனக்கு ஊதியம் கொடுக்கிறார்கள் என்ற அடிப்படையான வாதம் அவரது மனதில் ஆழமாகப் பதிந்து கிடந்தது. “ வாரத்துல அஞ்சு நாள்தான் வேலையே.. இரண்டு நாள் விடுப்பு. அதிலும் வருசத்துக்கு கூடுதலா 15 நாள் பண்டிகை விடுப்பு வேற.. அதுவுமில்லாம 12 நாள் கேசுவல் விடுப்பு, 30 நாள் பிஎல், நோய் கண்டா விடுப்புன்னு ஏகப்பட்ட விடுப்பு.. மிஞ்சிய நாள்ல வேலை செய்ய இன்னா கடுப்பு? எல்லாம் அரசாங்க வேலதானே? “ அவரது முகத்தில் இருக்கும் சிரிப்பு, அவர் மற்றவர் மீது வைக்கும் கடுமையான விமர்சனங்களைக் கூட எளிதாக எடுத்துக் கொள்ள வைக்கும். “ சொல்றபடி சொன்னா கல்லுளிமங்கன் கூட கரைஞ்சுதானே ஆவணும் “ அலுவலகத்தில், ஏதேனும் காரணத்திற்காக, மல்லுக்கட்டு நடக்கும். சிலசமயம், அது ஜல்லிக் கட்டு போல, ரத்த விளாறியாகக் கூட ஆகும். ஆனால் கன்னையா எதிலும் பட்டுக் கொள்ள மாட்டார். நியாயம் கேட்க வருபவர்களைக் கூட, கூசிக் குனிய வைக்கும் அவரது பேச்சு. “ என்னா பிரச்சினை..மணி ? ஒன் கோப்பை அவன்.. அதான் அந்த சந்தானம் பாக்க மாட்டேனுட்டான். நியாயந்தானே? என்னிக்காவது அவன் கோப்பை நீ பாத்துருக்கியா.. இல்லல்லே.. நீ பாத்திருந்தா, அவன் இன்னேரம் உன் வேலையை முடிச்சிட்டு, உனக்கு தேனீரும் வாங்கித் தந்திருப்பான்ல.. “ “ பாத்தா பாக்கறான்.. பாக்காட்டி போறான்.. ‘எந்த நாயும் என் வேலையை பாக்க தேவையில்லை! ஆனா கண்ட நாய் வேலையை எல்லாம் நான் பாக்கணுமான்னு’ அவன் அதிகாரிகிட்ட சொல்லிருக்கான்.. அவன் என்னை அப்படி எப்படி சொல்லப் போச்சு?” “ தப்புதான்.. அப்படி சொலியிருக்கக் கூடாதுதான்.. ஆனால் அதுக்காக அலுவலகத்தில உர்ருன்னு உறுமிக்கிட்டு, காலைத் தரையில தேச்சுக்கிட்டு, நீங்க ரெண்டு பேரும் கடிச்சுக்கிடணுமா “ சந்தடி சாக்கில் கன்னையா அவர்கள் இரண்டு பேர்களையுமே நாய்களாக்கியது அவர்களுக்கே தெரியாத வண்ணம், அவர் பேச்சு குழைந்திருந்தது. “ரெண்டு பேர் கோப்பையும் கொண்டுட்டு வாங்க! நானே பாத்திடறேன்” பிரிவு உபசார விழாவில் அரங்குநிரம்பியிருந்தது. அலுவலக ஊழியர்கள் எல்லாம் பணம் போட்டு, கன்னையாவுக்கு ஒரு புதிய மிருதங்கம் வழங்குவது என்று முடிவாகியிருந்தது. சண்டை போட்டுக் கொண்ட மணியும், சந்தானமும் முன் நின்று, விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். வரவேற்பு மணி என்றும், நன்றி நவிலல் சந்தானம் என்றும் கூட முடிவாகியிருந்தது. விழாவுக்கு கன்னையாவின் மனைவி லலிதாமணி வரவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டு அதுவும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது. லலிதாமணி கொஞ்சம் தாட்டியான சரீரம் உடையவள். அவளுக்கும் கன்னையாவுக்கும் ஆறு வயது வித்தியாசம். லலிதாமணி கேரள நாட்டைச் சேர்ந்தவள். ஆனாலும் அவள் தமிழச்சி தான். அவளது குடும்பம் சில தலைமுறைகளாக அங்கேயே இருந்ததன் அடையாளம், அவளது நெற்றிச் சந்தனக் கீற்றிலும், தேங்காய் எண்ணைக் மணக்கும் கூந்தல் பின்னலிலும் தெரியும். லலிதாமணிக்கு ஏக ஆச்சர்யம். இதுவரை சொந்த நாட்டிற்கு போவது தவிர, வேறு எந்த பொது நிகழ்வுக்கும் கன்னையா அவளை அழைத்துச் சென்றதேயில்லை. திருமண நிகழ்வுகளுக்குக் கூட அவள் குடும்பம் சார்ந்தது என்றால் அவள் தனியாகவும், அவர் குடும்பம் சார்ந்தது என்றால் அவர் தனியாகவும் செல்வார்கள். அலுவலகத்தில் விடுப்பு எடுக்காமல் அவர் பணி புரிவதும் அதற்குக் காரணம். லலிதாமணிக்கு குழந்தைகள் இல்லை. இருந்திருந்தால், ஒருவேளை அவர்களுக்காக கன்னையா விடுப்பு எடுத்திருக்கக் கூடும். அவர்கள் கட்டளைக்கேற்ப அவர் வளைந்திருக்கக் கூடும். அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கன்னையா காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். புறநகரில் சிறியதாக ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு, மின்சார ரயிலில் அலுவலகம் போய் வருகிறார் அவர். சந்தடி இல்லாத புறநகர் அவருக்கு ஏகாந்தமாக இருக்கிறது. வீட்டின் பின்னால் துணி தோய்க்கும் பாறாங்கல்லும், உறை இறக்கிய கிணறும் உள்ளது. ராட்டினமும் தாம்பக் கயிறும் பழமையின் அடையாளமாக காடசி அளித்தன. கன்னையா எப்போதும் கதர் வேட்டி தான் கட்டுவார். உள்ளே வெள்ளை நிற அண்ட்ராயர் இருக்கும். காலைக் கடன்களை முடித்து விட்டு, கிணற்றங்கரையில் அவர் வாளி தண்ணீரை இழுத்து கொட்டிக் கொண்டு, தனக்குப் பிடித்த ஸ்வரங்களையோ, பாடல்களையோ பாடிக் கொண்டிருப்பார். லலிதாமணி விழிப்பு வந்தாலும் படுக்கையிலேயே படுத்துக் கொண்டு அவரது கானத்தை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பாள். ஒரு முறை கூட லலிதாமணிக்கு சங்கீதம் பிடிக்குமா என்று கன்னையா கேட்டதில்லை. அவளும் சொன்னதில்லை. குளித்து, தன் துணிகளைத் தானே தோய்த்து, காயப்போட்டு விட்டு தான் கன்னையா கிணற்றடியிலிருந்து வருவார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும் அதற்கு. கட்டிய ஈரத்துண்டுடன், பூசை அறையை எட்டிப் பார்த்து விட்டு, தன் அறைக்குப் போய் விடுவார் அவர். அலுவலகம் கிளம்பும்வரை அவர் வெளியே வரமாட்டார். சங்கீதத்தைத் தவிர எதிலும் ரசனை இல்லாதவர் கன்னையா. லலிதாமணியின் கேரள சமையலைப் பற்றி புகாரோ, பாராட்டோ அவரிடமிருந்து வந்ததில்லை. போட்டதைச் சாப்பிடுவார். கட்டிக் கொடுப்பதை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார். “ வரேன்” என்றோ “ ஏதாவது வேணுமா?” என்று அவர் ஒரு நாள் கூடக் கேட்டதில்லை. லலிதாமணி இதற்கெல்லாம் பழகிக் கொண்டாள். அவளே எல்லாவிதமான நிர்வாகத் திறன்களையும் கற்றுக் கொண்டாள். மாதச் சம்பளம் வந்த உடன் பூசை அறையில் வைக்கப்பட்டிருக்கும் பணக்கட்டு, அவளது குடும்பத் தேவைகளுக்கு என்று கன்னையாவும் சொன்னதில்லை. அவளும் கேட்டதில்லை. மாதக் கடைசியில் அது கட்டு குலைந்து இளைத்திருக்கும். ஆனால் முதல் தேதியன்று புது கட்டு வரும்போது மீதமான பணம் காணாமல் போயிருக்கும். மாலை கன்னையா வீடு வரும்போது புதிய திரைச்சீலைகளோ, நாற்காலிகளோ வீட்டில் இருக்கும். அதைப் பற்றியும் கன்னையா கேட்க மாட்டார். அவருக்கென்று இருக்கும் தனி மேசையில் அவர் போய் உட்கார்ந்து கொண்டு, அலுவலகத்திலிருந்து கொண்டு வந்த கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். உணவு மேசையிலிருந்து, வாசனை அவர் நாசியை எட்டும்போது தான், அவருக்கு ஸ்மரணையே வரும். லலிதாமணிக்கு சங்கீதம் தெரியும். முறையாக அவள் அதைக் கற்றுக் கொண்டிருக்கிறாள். கன்னையா தன்னைப் பெண் பார்க்க வந்தபோது அவள் திருவாங்கூர் வித்வான் சுவாதி திருநாள் இயற்றிய கீர்த்தனங்களில் ஒன்றைப் பாடத்  தேர்வு செய்திருந்தாள். ஆனால் கன்னையா அவளைப் பாடவே விடவில்லை. அவர் ஒரு மணி நேரம் தாமதமாக அலுவலகம் வர, சலுகை வாங்கிக் கொண்டு வந்திருந்தார். பெண் பார்க்கும் வைபவத்தை, தான் தங்கியிருக்கும் ஆண்கள் விடுதிக்குப் பக்கத்திலேயே வைக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவரது ஒரே நிபந்தனை. முடித்து விட்டு அவர் அலுவலகம் போக வேண்டும். சரிகை வைத்த வெள்ளைப் பட்டுப்புடவை, நெற்றியில் சந்தனக் கீற்று, தலை நிறைய மல்லிகைப் பூவுடன் அழகுச் சிலையாக வந்து நின்ற லலிதாமணியை அவர் ஏறெடுத்துப் பார்க்கவேயில்லை. தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். “ என்ன பிடிச்சிருக்கா?” என்றார் தூரத்து சொந்தமான ஒரு மாமா. “ இப்போ கெளம்பினா 9 மணி லோக்கலை பிடிச்சிரலாம் “ கூட்டமே சிரித்தது. “ நான் கேட்டது லோக்கல் இல்லே! கேரளா.. பொண்ணு பிடிச்சிருக்கான்னு கேட்டேன்” “ ம்!ம்! “ எழுந்திருக்க யத்தனித்தார் கன்னையா. மாமா தோளை அழுத்தி உட்கார வைத்தார். “ பலகாரம் கொடுப்பாங்க.. இரு “ “ மாமா அதுக்கெல்லாம் நேரமில்லே! பலகாரத்தை இந்த டிபன் டப்பாவுல போட்டுரச் சொல்லுங்க.. சாவகாசமா மதியம் சாப்பிட்டுக்கறேன்!” அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர் கிளம்பி விட்டிருந்தார். லலிதாமணி சிலையாக நின்று கொண்டிருந்தாள். லலிதாமணி ஒன்றும் தெரியாதவள் அல்ல. அவருடைய லயிப்பு வேலையிலும் சங்கீதத்திலும் இருப்பதை அவள் பூடகமாக உணர்ந்து கொண்டாள். ஒலி நாடாப் பெட்டிகளில் கிடைக்கும் அவருக்குப் பிடித்த சங்கீதத்தை வாங்கி வந்து, அவர் மேசையில் வைப்பாள். அதைப் போட்டுக் கேட்கும் பெட்டி அவள் சீதனமாகக் கொண்டு வந்தது. ஆனால், அவைகளை புதுக் கருக்கு கலையாமல் மேசை மேலேயே வைத்திருப்பார் கன்னையா. மனைவியின் பொருள் என்று நினைத்து தொடாமல் இருந்தாரோ என்னவோ! மனைவியே ஒரு பொருள் என்று நினைத்து தொடாமல் இருப்பவருக்கு, ஒலி நாடாவும், நாடாப் பொருள் தான். ஒரு கட்டத்தில் கன்னையாவை ஈர்க்கும் முயற்சியில் லலிதாமணி சலித்துப் போனாள். வீட்டில் தனியாக இருக்கும் நேரங்களில், மெலிதான குரலில், தனக்குப் பிடித்த பாடல்களை பாடுவதை ஒரு வழக்கமாக ஆக்கிக் கொண்டாள். அவளுக்கு அதில் ஒரு ஆனந்தம் கிடைத்தது! மாலை ஆறுமணிக்கு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். பெரிய ரோஜாப் பூ மாலை ஒன்று சுவற்றின் ஆணியில் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. லலிதாமணி மாலையைக் கன்னையாவுக்கு போடுவதாக ஏற்பாடு. தும்பைப்பூ நிறத்தில் சட்டை அணிந்து, இன்னமும் இளமையுடன் அமர்ந்திருந்தார் கன்னையா. அவருக்கருகில் ஒரு நாற்காலி போடப்பட்டு, காலியாக இருந்தது. அது லலிதாமணிக்கான நாற்காலி. அதிகாரிகள் முன் வரிசையில் அமர்ந்து ஆவலோடு காத்திருந்தனர். இதுவரை கன்னையாவின் மனைவியை யாருமே பார்த்ததில்லை. அவர் எப்படியிருப்பார். கன்னையா போன்ற நல்ல மனிதரின் மனைவி நல்லவளாகத்தானே இருக்க முடியும்? மணியும் சந்தானமும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர்.. இன்னமும் லலிதாமணி வந்த பாடில்லை.. “ ஐயா அம்மா வர நேரமாகுது.. நாம விழாவ ஆரம்பிச்சுடலாமா., நடுவில வந்தா அப்ப மாலையை போடச் சொல்லிடலாம் “ மேலதிகாரிக்கும் வேறு வழி தெரியவில்லை. சரி என்று தலையாட்டினார். அலுவலகத்தின் பக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருந்தது. அதன் மொட்டை மாடியில், பல பெண்மணிகள் பேசிக் கொண்டே, இந்த அலுவலகத்தில் நடைபெறும் விழாவைப் பார்த்த வண்ணம் இருந்தனர். ஒலிபெருக்கி மூலமாக கன்னையாவின் புகழ் பாடப்பட்டபோது, அவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.விழா முடிவில் கன்னையாவுக்கு மிருதங்கம் பரிசளிக்கப் பட்டது. மேலதிகாரியே மாலையையும் போட்டார். கடைசி வரை லலிதாமணி வரவேயில்லை. அவள்தான் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாளே! வாசலில் ஆட்டோ ரிக்‌ஷா ஏற்பாடு செய்து, கன்னையாவை வழியனுப்ப வந்தனர் அலுவலக ஊழியர் அனைவரும். கன்னையா ஏறியவுடன் மணி மிருதங்கத்தை எடுத்து அவருக்குக் கொடுக்க யத்தனித்தான். சட்டென்று அவர் பக்கத்தில் ஏறி அமர்ந்த லலிதாமணி, மிருதங்கத்தை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். கன்னையா கழுத்தில் இருந்த ரோஜாமாலை உதிர்ந்து, பூவிதழ்கள் அவள் மடியில் விழுந்தன. மிருதங்கம் இருவருக்குமான குழந்தையாய் அவள் மடியில் கிடந்தது. சில்லென்று வீசிய காற்றில், மெய்மறந்து கண்களை மூடி இருந்தாள் லலிதாமணி. கன்னையாவின் கை, அவள் தோள் மீது படர்ந்திருந்தது!     19. கூட்டல் கழித்தல்   ஊர்மிளாவிற்கு என்னமோ போலிருந்தது. இத்தனைக்கும் பார்த்து பழகியவன் தான் தினேஷ். ஏன் அப்படி சொல்லிவிட்டான்? ‘ நமக்குள்ளே ஒத்து வராது ஊர்மி.. ஸேம் வேவ் லென்த்..’ ‘எனக்குப் பிடித்ததெல்லாம் அவனுக்குப் பிடிக்கும். ஜெயகாந்தன், ரியலிஸ திரைப்படங்கள், டிராட்ஸ்கி மருது, மதன் ஜோக்ஸ்..’ அவனும் அவளும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். ஒரே ப்ராஜெக்ட்.. அவன் டீம் லீடர், அவள் டெவலெப்பர்.. முதல் வருடம் பேசவேயில்லை.. அது சரி.. ஆண் என்பதால் அல்ல.. அவள் பெண்களுடனேயே பேசவில்லை. கோபிச்செட்டிப்பாளையத்தில் வாசம். ஏதோ டிப்ளமோ இன் ஸாப்ட்வேர் டெஸ்டிங் படித்து விட்டு சென்னைக் கம்பெனியில் வேலை என்றவுடன் தந்தையுடன் கிளம்பி வந்து விட்டாள். இருபது வயதுப் பெண்ணை தனியாக அனுப்ப அப்பாவுக்கு பயம். அம்மா இல்லை. கோபியில் பதிவாளராக இருந்து ஓய்வுக்கு ஒரு மாதம் முன் இறந்து போனாள். அம்மாவுக்கு இடுப்புக்குக் கீழே எதுவும் சொரணையில்லை. முப்பத்தி ஐந்து வயது வரை கலியாணமே பண்ணிக்கொள்ளவில்லை. பெருமாள் கோவிலில் யாரோ குப்புசாமியைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு நாற்பத்தி ஐந்து வயது. கலியாணம் ஆகவில்லை. அவருக்கு ஏதும் குறையில்லை. என்ன படிப்பில்லை. கோயிலில் எடுபிடி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு இஷ்டமில்லைதான்.. தொண்ணூறு வயது தாத்தா பிடிவாதமாக இருந்தார். ஆள் விட்டு குப்புவை வரச்சொல்லி பேசியே விட்டார். சக்கர நாற்காலியில் தான் அம்மாவையே பார்த்தாராம் அப்பா. ‘ என் கிட்ட சைக்கிள் இருக்கு.. அதிலேயே கொண்டு விட்டுடுவேன்.. சரியா? ‘ அம்மாவுக்கு அந்தக் கணம் அப்பாவை பிடித்துப் போயிற்று. முதல் வார்த்தை முதல் சத்தியம் என்பது போல் கடைசி வரையில் அம்மாவை நடக்கவே விடவில்லை அப்பா. இத்தனைக்கும் யாராவது பிடித்துக் கொண்டால் நாலு தப்படி நடப்பாளாம் அம்மா. கொஞ்சம் வசதி வந்தவுடன் மூன்று சக்கர டிவியெஸ் 50 வாங்கிக் கொடுத்தாராம் அம்மா. அம்மா போனவுடன் அதையும் விற்று விட்டார் அப்பா. அம்மா கால்களை மடித்துக் கொண்டு இரண்டு கைகளால் உந்தியபடி நகர்ந்து வருவாராம். நிலை வாசல் படிமேல் உட்கார்ந்திருக்கும் அம்மாவை அக்குளில் இரண்டு கைகளை நுழைத்து அலாக்காக தூக்கிவிடுவாராம் அப்பா. அம்மா நல்ல ஆகிருதி. அப்படிப் பலரை ஊர்மிளா பார்த்திருக்கிறாள். கால்கள் சூம்பிப் போனதால் உடலின் மேல் பகுதி அபரிமிதமாக வளர்ந்திருக்கும். முன்வாசல் ஒட்டிய திண்ணை. அதன் மேல் அம்மாவை உட்கார வைத்து விடுவாராம் அப்பா. சைக்கிள் கேரியரை அம்மாவுக்காகவே பலசரக்குக் கடை சைக்கிள் கேரியர் போல அகலமாக மாற்றியிருந்தார் அப்பா. அதில் அம்மா உட்கார அடியில் நாடா தைத்த ஸாட்டின் தலையணை. தலையணையை இறுக்கமாக கேரியரில் கட்டியிருப்பாராம் அப்பா. தெருவை ஒட்டிய வீடு. நடைபாதையிலேயே திண்ணை. சைக்கிளை ஓரமாக நிறுத்தி பிடித்துக் கொண்டு நிற்பாராம் அப்பா. அம்மா திண்ணையிலிருந்து கேரியருக்கு நகர்ந்து கொள்வார். வசதியாக அம்மா உட்கார்ந்த பிறகுதான் அப்பா சைக்கிளையே நகர்த்துவார். ஒரு தடவை அப்பா சொல்லியிருக்கிறார்: ‘ அம்மாவைத் தூக்கற போது மட்டும் ராமாயண வாலி மாதிரி ஆயிருவேன். அவ பலம் எனக்கு வந்துரும். அவ பஞ்சு மாதிரி லேசா ஆயிருவா ‘ அந்த நேசத்தில் பிறந்தவள் தான் ஊர்மிளா. சென்னை வந்த கொஞ்ச நாட்களிலேயே தாத்தாவும் சென்னை வந்து விட்டார். அவருக்கு மட்டும் என்ன இருக்கிறது கோபியில். முதலெல்லாம், ராத்திரி பத்து மணிக்கு ஊர்மிளா வரும்போதெல்லாம், தெருமுனையில், டார்ச் லைட்டுடன் அப்பா காத்திருப்பார். இப்போதெல்லாம் அவர் அப்படிக் காத்திருப்பதில்லை. ஒரு வருடமாக தினேஷ் கொண்டு விடுகிறான் பைக்கில். அப்பாவுக்கும் அவனை பிடித்து விட்டது. வசதியான குடும்பமில்லை தினேஷ்.. அவனும் வாடகை வீடுதான். அம்மா அப்பா இல்லை. ஒரு அண்ணன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டான். கண்டு கொள்வது கூட இல்லை. எவ்வளவு சொல்லியிருக்கிறான்! ‘ ஏன் இன்னும் வீடு வாங்கல தினேஷ்? ‘ ‘வாங்கினா மூணு பெட்ரூம் வாங்கணும்.. அதுக்கு ரெண்டு சம்பளம் வேணும். ‘ ‘ ஓ கல்யாணத்துக்கு அப்புறமா? அதுக்குக் கூட எதுக்கு மூணு பெட்ரூம்? ‘ ‘ ஒண்ணு அப்பாவுக்கு, ஒண்ணு தாத்தாவுக்கு, ஒண்ணு.. நமக்கு ‘ அடுத்த வாரமே அமெரிக்காவில் இருக்கும் அண்ணனுடன் கணினி உரையாடல். ‘ யுவர் லைப்! யுவர் சாய்ஸ்! ‘ என்று முடித்துக் கொண்டான் அண்ணன். அண்ணன் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை என்பதும் கொஞ்சம் நெருடலாக இருந்தது. அம்மா இருக்கும்போது வருடத்திற்கு ஒரு முறை இந்தியா வருவான். அப்போதெல்லாம் அம்மா தவறாமல் கேட்கும் கேள்வி “ ஏண்டா! எப்படா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கே? “ தினேஷுக்கு சட்டென்று சர்வர் சுந்தரம் நாகேஷ் ஞாபகம் வந்து, சிரிக்க ஆரம்பித்து விடுவான். அம்மா அவனை முறைப்பாள். ஆனால் அதுவரை இறுக்கமாக இருந்த அண்ணனின் முகம் லேசாக உடைபடும். சிரிப்பு எட்டிப் பார்க்கும். அவனும் நாகேஷ் ரசிகன். ஆனால் அவன் நாகேஷ் போல “ இப்ப என்னம்மா அவசரம்? அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்ல மாட்டான். சொன்னாலும் திரைப்பட அம்மா போல “ சரி விடு” என்று சொல்லுகிற அம்மா இல்லை அவர்களது அம்மா! “ அம்மா! நான் சம்பாதிக்கற ரெண்டு லட்சத்துல வாடகையே ஒரு லட்சம் தரேன். வரி நாற்பதாயிரம். என் செலவு போக கையிலே ஏதும் மிஞ்சரதில்லே! இதுல கூட ஒருத்தியை சேர்த்துக்கிட்டு, அவளுக்கு செலவு பண்ண  பணத்துக்கு நான் எங்கே போவேன்?” அம்மா விடமாட்டாள். தொடர்ந்து தொணப்பாள். “ வேலைக்கு போற பொண்ணா கட்டிக்க.. இங்கே கூட வேணாம். அந்த ஊர்லயே பாரு. நம்ம சாதி கூட வேணாம். நம்ம நாட்டு பொண்ணா, படிச்ச, வேலைக்கு போற பொண்ணா பாரு.” கடைசி தடவை வந்தபோது அண்ணன் முடிவாக சொல்லி விட்டான். “ அம்மா! இனிமே கல்யாணப் பேச்சை எடுக்காதே! நம்ம நாட்டுல தான் இருபத்தி அஞ்சு வயசு ஆன உடனே, ஒரு பதினெட்டு வயசு பள்ளிக்கூட பிள்ளையை கட்டி வைக்கிறாங்க. அங்கெல்லாம் அப்படி இல்லே. பொண்ணுங்களே முப்பத்தி அஞ்சு வயசுக்கப்புறம் தான் கல்யாணம் பத்தியே யோசிக்க ஆரம்பிக்கறாங்க. என்னை மாதிரி பசங்களுக்கு வாழ்க்கையே நாப்பதுக்கப்புறம்தான் ஆரம்பிக்குது. அந்த வயசு வரட்டும். நானே பார்த்து பண்ணிக்கிறேன்” வம்ச விருத்தி இல்லாத கவலையோடே அம்மா போய் சேர்ந்து விட்டாள். ஊர்மிளாவிற்கு யோசனையாக இருந்தது. வெண்ணை திரண்டு வரும்போது இப்படி சொல்லிவிட்டான். இதில் ஏதாவது ஜாதகம், சோசியம் என்று ஏதாவது இருக்குமோ? ஆனால் அதிலெல்லாம் அவனுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருக்கிறானே? அப்பாவுக்குத்தான் ஏமாற்றமாக இருக்கும். பேச்சோடு பேச்சாக ராசி, நட்சத்திரம் என்று சாமர்த்தியமாக விசாரித்து பொருத்தம் கூட பார்த்து விட்டார். எதனால் இப்படி மாறிப்போனான்? அடுத்த வாரமே வேலையை ராஜினாமா செய்து விட்டு பெல்ஜியம் போய்விட்டான் தினேஷ். பெல்ஜியத்தில் அவனது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி எல்லாமே மாறிப் போயிருந்தது. அவனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. மொத்தமாக தொடர்பையும், அவள் உறவையும் அறுத்துக் கொண்டு போயிருந்தான்! ஒரு மாதம் முன்பு, அந்த ரத்தவங்கிக்க்காரர்கள் ரத்த தானத்திற்காக இவள் அலுவலகம் வந்திருந்தார்கள். தினேஷுக்கு இதிலெல்லாம் ஆர்வம் அதிகம். ஓடி ஓடி அவர்களுக்கு வேண்டியதைச் செய்தான். வேலை கெட்டுப்போகாமல் அட்டவணை போட்டு ஒவ்வொருவராக அனுப்பி வைத்தான். ‘ ரத்தம் கொடுத்தா பதினைஞ்சு நாள்ல திரும்பவும் உற்பத்தியாயிடும். நஷ்டமில்லை. ஆனா நாம கொடுக்கற ரத்தம் ஏதோ ஒரு உயிரை காப்பாத்திரும். ரத்த அழுத்தக்காரனும் சர்க்கரை வியாதிக்காரனும் கொடுக்க முடியாது. நாம அப்படி இல்லையே..அப்புறம் கர்ப்பிணி பெண்கள் கொடுக்க முடியாது! இங்க அப்படி யாரும் இல்லையே ‘ என்று கண் சிமிட்டினான். ‘ சீ போடா! ‘ ஒரு வாரத்தில் ரத்தம் கொடுத்தவர்களுக்கெல்லாம் அவனே வங்கியிலிருந்து குறிப்புகள் அடங்கிய அட்டை வாங்கி வந்து கொடுத்தான். பெயர், ரத்தப்பிரிவு என்று சகலமும் இருந்தது அதில். ஒவ்வொருவரிடம் கொடுக்கும்போதும் ஏதோ நகைச்சுவையாக சொல்லி, கொடுத்துக் கொண்டே வந்தான். ஊர்மிளாவிடம் கொடுக்கும்போது மட்டும் எதுவும் பேசவில்லை. கொடுத்து விட்டு போயே விட்டான். ஒரு நாள் தினேஷ் வேலை செய்து கொண்டிருந்த கணினியைத் தட்டி, அவன் சமீபத்தில் எந்த வலைப்பூவைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்று ஆராய்ந்தாள் ஊர்மிளா. அதில் ஏதாவது காரணம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு. ரத்தக் கூறுகள் என்கிற வலைப்பக்கத்தை அவன் அடிக்கடி பார்த்திருப்பது தெரிந்தது. அவளும் கூகுளில் அதைத் தேடிப் படித்தாள். ‘ ஆர் ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவு கொண்ட பெண்களுக்கு, அதே வகை ஆண்களுடன் திருமணம் நடந்தால், பிறக்கும் குழந்தை ஊனமின்றி பிறக்கும். இல்லையெனில் ஊனக் குழந்தை பிறக்க எழுபது விழுக்காடு வாய்ப்புண்டு என்று ஆய்வு சொல்கிறது.’ ஊர்மிளாவிற்கு மனம் பரபரத்தது. எப்படி தினேஷ் ரத்தப் பிரிவை சோதிப்பது? ரத்த வங்கியின் வலைத் தளம் இருக்கிறதா என்று பார்த்தாள். இருந்தது. தேடு குறியீடை அழுத்தி “ தினேஷ் கருணாகரன் “ என்று போட்டு தேடினாள். 108 இருந்தது. இது என்ன வேண்டுதலா? வேண்டுதல் தான். அவன் தனக்கு கிடைக்க வேண்டும் என்கிற வேண்டுதல். வடிக்கட்டியதில் ஆறு தேறியது ஆறுதலாக இருந்தது. இன்னும் சில தகவல்களை சேர்த்தால் அவனைப் பிடித்து விடலாம். சொந்த ஊர், படித்த கல்லூரி, வயது, பிறந்த நாள் என்று மெனக்கெட்டதில் அவன் சிக்கி விட்டான். அவனைப் பற்றிய விவரங்கள் இருந்தன. ஆனால் அவள் தேடியது ஒன்றே ஒன்று தான். அவனது ரத்தப் பிரிவு. இதோ அதுவும் பதிவாகி இருக்கிறது. தினேஷ் கருணாகரன் – ஆர் எச் பாசிட்டிவ்! அவளது அந்த ரத்த வங்கி அட்டை அவள் முகத்தில் அறையாத குறையாகச் சொன்னது: ஆர் ஹெச் நெகட்டிவ்.                               20.கண்காணிப்பு அவனுக்கு கொடுக்கப்பட்ட பணி கேட்கும்போது எளிதாகத்தான் இருந்தது. பள்ளி நாட்களில் இருந்தே மர்ம நாவல்களையும், சங்கர்லால் துப்பறியும் தமிழ்வாணன் கதைகளையும் படித்ததின் பாதிப்பு, அவன் மனதில் ஆழமாக ஊறிக் கிடந்தது. பொருட்காட்சிக்குப் போனால், மற்ற பிள்ளைகளைப் போல அவன் திண்பண்டங்கள் கேட்டதேயில்லை. எப்போதும் கறுப்பு கண்ணாடி தான் வேண்டும். கூடவே ஒரு தொப்பி. அது அட்டையில் இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகு அவன் சின்னதாக ஒரு மூங்கில் கம்பை வைத்துக் கொண்டு கூடத் திரிந்தான். யார் வீட்டிலாவது களவு போனால், அவனும் கூட்டத்தோடு கூட்டமாக அங்கே இருப்பான். சின்ன பூதக் கண்ணாடி யுடன், தரையை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பான். தடயம் தேடுகிறானாம். இன்னும் கொஞ்ச நாளில் அவனுக்கு கைரேகை கண்டுபிடிக்கும் ஆசை வந்தது. அதனால் வீட்டில் இருந்த பவுடர் டப்பாவெல்லாம் காலி ஆயிற்று. பள்ளி இறுதி வகுப்பின் போது ஒரு தெருநாயை வளர்த்து, அதன் கழுத்தின் அவனது பழைய பெல்டைக் கட்டி இழுத்துக் கொண்டு, மோப்ப வேட்டைக்கெல்லாம் போயிருக்கிறான். “ டே போலீஸ் பாண்டி வராண்டா “ என்று பகடி பேசுவார்கள் அவனது நண்பர்கள். “ எப்படியாவது போலீஸ்ல சேர்ந்து சிஐடி ஆபிசர் ஆவணும்டா .. “ என்று அவன் நண்பர்களோடு கதைத்தபோது, அவர்கள் சிரித்தார்கள். “ மொதல்ல பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ற வழியப் பாரு.. அப்பால போலிஸ் ஆவலாம்” என்று அவன் தந்தையும் முட்டுக்கட்டை போட்டார். பள்ளி படிப்பு முடிக்கும் முன்னரே தந்தை இறந்து போனதும், தாய் ஊரோடு போய் சேர்ந்ததும், அவன் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. மனதில் அடித்தளத்தில் நீறு பூத்த நெருப்பாய் இருந்த அவனது கனவைக் கிளறிக் கனலாக்கியவன் பிச்சை. அவனோடு ஒன்றாகப் படித்தவன் பிச்சை. அவன் தந்தை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இருந்தார். அதனால் அவன் பள்ளிப் படிப்போடு, அந்தப் பத்திரிக்கையில் சேர்ந்து விட்டான். பிச்சை பெரிய படைப்பாளி இல்லை. கொஞ்சம் சுத்தமாகத் தமிழ் பேசத் தெரிந்தவன். ஆனால் அந்தப் பத்திரிக்கையில் அவன் எழுத்து வேலை எதுவும் செய்யவில்லை. வெறும் பிழை திருத்தல் வேலைதான். “ பெரிய  எழுத்தாளருங்கராங்கறாங்க! ‘ல’ வுக்கெல்லாம் ‘ள’ போட்டுத் தொலைக்கிறான். பலப்பல பெண்களுடன் எழுத வேண்டியதை, பளப்பள பெண்களுடன்னு எழுதினா எப்படி அர்த்தம் மாறுது பாரு! சொல்ல முடியாது. அகாடமி விருது வாங்கிய ஆளாம். மண் வாசனையோட எழுதறானாம். அவனைப் பொதைச்சு, மண் வாசனையை காட்டினாத்தான் நிறுத்துவான்.” பிச்சைக்கு தமிழின் மேல் வெறி. அதை யாரேனும் குலைத்தால் வரும் கொலை வெறி! “ இப்பல்லாம் துப்பறியும் வேலையை பத்திரிக்கைங்களே செய்யுதுங்க.. புலனாய்வுப் பத்திரிக்கைன்னு கேள்விப்பட்டிருப்பியே.. நக்கீரன், போலீஸ் செய்தி, ஜூ வி இதமாதிரி.. எங்க பத்திரிக்கையிலும் ஒரு துணைப் பத்திரிக்கையா புலனாய்வுப் பத்திரிக்கை ஆரம்பிக்கப் போறாங்க. சேர்றியா..? “ கையெழுத்து அழகாக, குண்டு குண்டாக இருப்பதால், ஒரு சினிமா கதாசிரியரிடம் உதவியாளனாக இருந்து கொண்டிருக்கிறான் அவன். மூணு வேளை சாப்பாடு, பேட்டா, தங்குமிடம் என்று ஏகத்துக்கு வசதிகள். கிடைக்கும் சொற்ப ஊதியத்தை, ஊருக்கு அம்மா பெயருக்கு அனுப்பி விடுகிறான். அதைத் தொலைத்து விட்டு, இந்த வேலையில் நுழையலாமா? இது நமக்கு ஒத்து வருமா? முடிவில் ஒரு மாதம் முயன்று பார்ப்பது என்று தீர்மானித்தான். கதாசிரியரிடம் ஊருக்குப் போவதாகவும், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், பொய் சொல்லிவிட்டு பிச்சையைத் தேடிப், பத்திரிக்கை ஆபிஸுக்குப் போனான். பிச்சை கண்ணாடி மேசையின் மீது அச்சடித்த காகிதங்களை வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தான்.     “ வா அன்பு “ என்று முகமலர்ச்சியுடன் வரவேற்றான். அவன் என்று இதுவரை அழைக்கப்பட்ட அன்பு என்கிற அன்பரசன் உட்கார்ந்தான். “ இன்னா தீர்மானிச்சுட்டியா.. சேர்ந்துக்கறயா? “ என்றான் பிச்சை. அன்பு லேசாக தலையை ஆட்டினான். “ இரு! எடிட்டர் இருக்கறாரான்னு பாக்கறேன்.. “ என்று வெளியேறினான். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தான். “ இருக்காரு! வெவரம் சொன்னேன். கூப்பிடறேன்னாரு என்னா சாப்டற காபியா டீயா ?” தேனீர் குடித்து அரை மணிநேரம் ஆகிவிட்டிருந்தது. இன்னும் எடிட்டர் கூப்பிட்டபாடில்லை. இன்னேரம் சினிமாக் கம்பெனியாக இருந்தால் ஐந்து பக்கம் வசனம் எழுதியிருக்கலாம். “ அன்பு! சார் கூப்பிடறாரு “ என்ற பிச்சையின் குரல் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. “ ரைட்  சைட்ல மூணாவது கேபின்.. தட்டிட்டு உள்ளே போ ? “ அன்பு குழப்பமாக அவனைப் பார்த்தான். ‘ நான் என்ன ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோவா உட்கார்ந்திருந்தேன்.. தட்டிட்டு உள்ளே போ என்கிறானே? ‘ மூணாவது கதவு தேக்குமர ப்ளைவுட்டால் ஆனது. சராசரி உயரத்தில் ஒரு சதுரக் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது. அவனையறியாமல் அன்பின் கண்கள் அந்தக் கண்ணாடி சதுரத்தின் வழியாக நோக்கின. உள்ளே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். பேசும்போது அவர் செய்யும் சேஷ்டைகளிலிருந்து, அவர் தன் காதலியுடனோ அல்லது மனைவியுடனோ பேசிக் கொண்டிருக்கவேண்டும். அவர் தொலைபேசியை வைக்கும்வரை காத்திருந்தான். “ என்னா இங்கேயே நிந்துக்கிட்டிருக்கே.. அவர் அப்படித்தான் போனை எடுத்தா வெக்க மாட்டாரு.. நீ தட்டுன்னேன் இல்ல “ என்று பிச்சை பின்னாலிருந்து குரல் கொடுத்தான். அவனே எட்டி கதவை இரண்டு முறை தட்டினான். பேசிக்கொண்டிருந்த நபர் நிமிர்ந்து பார்த்தார். ‘ வா ‘ என்பதுபோல் சைகை காட்டினார். பிச்சையைத் திரும்பிப் பார்த்தான் அன்பு. ‘ போ போ என்று வேகமாக தலையாட்டினான் பிச்சை. அன்பு, கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள குடியிருப்புகளின் முன்னால் காத்திருந்தான். அவனுக்கு ஐம்பது ரூபாயும் பணிக்கான விவரங்களும் கொடுக்கப் பட்டிருந்தன. பணி கேட்பதற்கு எளிமையாகத்தான் இருந்தது. அந்தப் பத்திரிக்கையின் எடிட்டர் அவினாஷின் காதலி அனிதா இருக்கும் வீடு எதிரில் இருந்தது. பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. அனிதா தனியாகத்தான் இருக்கிறாள். அனிதாவுக்கு இருபத்தி இரண்டு வயது. எடிட்டரின் வயதில் சரிபாதி.. அவினாஷுக்கு அவள் மேல் சந்தேகம். தான் இல்லாத வேளைகளில், அவளுக்கு வேறு ஒரு ஆடவனோடு உறவு இருப்பதாக. அன்புக்கு கொடுக்கப்பட்ட பணி, ஒரு வாரம் அவளைக் கண்காணிப்பதுதான். தினமும் மாலை ஏழு மணிக்கு அவன் வேலையை முடித்துக் கொண்டு பத்திரிக்கை ஆபிசுக்கு வந்து, அவினாஷின் செல்பேசிக்கு விவரங்களைத் தரவேண்டும். மறுநாள் செலவுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு வாரம் அவன் தரும் ரிப்போர்ட்டைப் பார்த்து, அவனுக்கு வேலை உறுதி செய்யப்படும். முதல் நாள் கொஞ்சம் பொழுது போவது கடினமாக இருந்தது. சினிமா கம்பெனியில் பேச ஆட்களுக்குப் பஞ்சமில்லை. இங்கே வெயிலில், டீக்கடையோரமோ அல்லது மரத்தடியிலோ, நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, ஒரே வீட்டை வெறித்துப் பார்ப்பது, கடினமாக இருந்தது. ஏழு நாட்களும் ஒரே மாதிரியான நிகழ்வுதான். மாற்றம் அனிதாவின் உடைகளில் மட்டுமே இருந்தது. அனிதா அழகாக இருந்தாள். ஒரு நாள் புடவையிலும், ஒரு நாள் சுடிதாரிலும், ஒரு நாள் ஜீன்ஸ் பேண்ட் சட்டையிலும் அசத்தினாள். அதே போல மாற்றமில்லாமல் நிகழ்ந்தது கட்டம்போட்ட சட்டையும், கார்டுராய் பேண்டும் தலையில் தொப்பியும், தாடியுமாக ஒருவன் வீட்டினுள் போவதும், பின் மாலை ஆறுமணிக்கு வெளியே வருவதும்தான். ரிப்போர்ட்டைப் படித்த அவினாஷ் சிரித்துக் கொண்டான். தன்னுடைய மாறுவேடம் தத்ரூபமாக இருப்பதும், அன்பு அதைக் கண்டுபிடிக்காததும், அவனுக்குத் திருப்தியை அளித்தது. அனிதாவை சந்திக்க செல்லும்போதெல்லாம்  மாறுவேடத்தில்தான் அவன் சென்று கொண்டிருந்தான். பிரபல பத்திரிக்கையின் எடிட்டர், ஏற்கனவே திருமணமானவர், அனிதா என்றொரு இளம்பெண்ணை, அதுவும் தன்னுடைய வயதில் பாதி வயது இருக்கும் ஒருத்தியை காதலியாக வைத்திருப்பது, போட்டி பத்திரிக்கைகளுக்கு அவலாகிவிடும் என்ற உண்மை அவருக்குத் தெரிந்தே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக இப்படியே கழிந்து கொண்டிருந்தது. இது வெற்றியடைந்திருப்பது அவினாஷுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அடுத்த வாரத்தில் அன்பு அந்தப் பத்திரிக்கையின் நிருபராக பணியில் அமர்த்தப்பட்டான். சினிமா கம்பெனியை விட கூடுதல் சம்பளம். அவன் கனவு கண்டிருந்த வேலை. அவன் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். “ ஆமா யாரோ ஒருத்தியோட வீட்டை கண்காணிச்சேன்னு சொன்னியே யார் வீடுடா அது? “ பிச்சை கேட்டான். “ அனிதான்னு ஒரு பொண்ணு.. நம்ம அவினாஷ் சாருக்கு சொந்தமாம்.. தனியா இருக்குது. வூட்டுக்கு யார் வராங்க போறாங்கன்னு பாக்க சொன்னாரு. ஏழு நாளும் ஒரே ஒரு தாடிக்காரன் மட்டும்தான் வந்தான். போனான். வேற யாரும் வரல. “ “ தாடிக்காரனா யார்ரா அது? “ “ நம்ம அவினாஷ் சார்தான் அது.. எத்தினி சினிமா பாத்திருக்கேன். ஒருத்தரு நடையும் உடல் மொழியும் வச்சிக்கிட்டே அவரு யாருன்னு சொல்லிட மாட்டேன். ஆனா சொந்தக் கார பொண்ணு வூட்டுக்கு, அவரு ஏன் மாறு வேசத்துல வந்தாருன்னு புரியல.. அப்புறம் இன்னொண்ணு! ஆறுமணிக்கு வெளியே போயிட்டு, ஆறே காலுக்கு திரும்பவும் லுங்கி கட்டிக்கிட்டு வந்துட்டாரு. எனக்கு தெரியக்கூடாதுன்னு காலை சாய்ச்சு சாய்ச்சு வேற நடந்தாரு.. அதான் என்னான்னே புரியல! “                                                        21.நொடிக்கொரு திருப்பம்   காலையில் செட்டியார் வரச்சொல்லியிருந்தார். இரவு வேலை முடித்துவிட்டு வீடு சேர பதினொரு மணியாகிவிட்டது. சரசு நிரம்பவும் கவலைப்பட்டதாகச் சொன்னாள். ஆனால் அவளது தூக்கக் கண்களும், கலைந்த தலையும் அதைப் பொய் என்று பறை சாற்றியது. “ பாசு “ சரசா அவனை எப்பவும் அவனை அப்படித்தான் கூப்பிடுவாள். சினமாக இருந்தாலும் சந்தோசமாக இருந்தாலும் இது மாறுவதே இல்லை. என்ன உணர்ச்சிக்கு ஏற்றவாறு குரல் கூடும் குறையும். அவ்வளவுதான். “ பாசு.. ஒன்னத்தான் “ குரல் கொஞ்சம் உயர்ந்தது. அவள் கோபம் தலைக்கேற ஆரம்பித்திருக்கிறது என்று அர்த்தம். “ அதென்ன பாசு.. எத்தினி தடவ சொல்லியிருக்கேன். பார்த்தசாரதின்னு பேரு.. அழகா பார்த்தின்னு கூப்பிடு.. எங்கம்மா அப்படித்தான் கூப்பிடுவாங்க.. இல்லே சாரதின்னு கூப்பிடு. என் சிநேகிதக்காரங்க அப்படி கூப்பிடுவாங்க.. அதென்ன அதுவுமில்லாம இதுவுமில்லாம ரெண்டாங்கெட்டத்தனமா பாசு.. “ “ எதுனா சொன்னா இப்பிடி சுள்ளுன்னு கோவம் வருதுல்ல.. அதான் பாசு.. நா சொல்றதக் கேளு.. இப்பத்தான் வேலை முடிஞ்சி வந்து படுத்திருக்கே.. நாலு அவுர்கூட ஆவல.. சரியா தூக்கம் இல்ல.. அசதிலேயும் பெரண்டு மேல படுக்கற.. அது அடங்கி, இன்னா தூங்கியிருக்கப் போற.. அதான் இன்னிக்கு வேலைக்கு போவாத.. ரெஷ்டு எடுன்னு சொல்றேன்.. “ “ ரெஷ்டு எடுத்தா எவன் துட்டு தருவான்.. கோதை நாச்சியாருக்கு அடுத்த வாரம் பள்ளிக்கூடத்தில பணம் கட்டணும்.. தெரியுமில்ல “ “ ஒரு நா வேலைக்கு போவலன்னா ஓட்டாண்டியா ஆயிருவே “ “ ஆவ மாட்டேன் தான். ஆனா தெம்பு இருக்கறதுக்குள்ள சம்பாரிக்க தாவல “ “ நூத்துக் கெழவன் மாதிரி பேசற.. ஒனக்கு இன்னா வயசாவுது முப்பத்தி எட்டு.. இன்னும் எவ்வளவோ காலம் இருக்குது. கோதை ஒம்பதாங்கிளாஸ் படிக்குது. அது இன்னும் ஆறு வருசமாவது படிக்கும். அப்புறம் தான் கல்யாணம். அதுக்குள்ள சேத்துற மாட்டேன் “ சரசாவின் சிரிப்பு அவனைக் கட்டிப்போட்டது. “ இரு செட்டியாரண்ட ஒடம்பு சொகமில்லன்னு சொல்லிட்டு வரேன் “ “ ஆங்! ஒடம்பு, சொகம் கேக்குதுன்னு சொல்லிட்டு வா “ என்று சொல்லி மறுபடியும் சிரித்தாள் சரசா. பாசு என்றழைக்கப்பட்ட பார்த்தசாரதிக்கு பேருக்கேத்தவாறு சாரதி வேலை. வாடகை மகிழுந்துகளை ஓட்டுவதுதான் அவனுக்கு வேலை. பெரிய நிறுவனத்தில் அவனும் வேலையில் இருந்தவன்தான். அப்பொழுதெல்லாம் அவன் ஒரு சினிமா நட்சத்திரம் போலவே இருப்பான். மடிப்பு கலையாத உடைகள் அவனது உடலை அலங்கரிக்கும். அது நிறுவனம் கொடுக்கும் சீருடை என்றாலும் அதை சாயம் போகமல் துவைத்து, இஸ்திரி செய்து போட்டுக் கொள்வதில், அவன் மிகவும் கவனம் எடுத்துக் கொள்வான். பதினைந்து வயதில் ஆரம்பித்து இருபது சொச்ச வருடங்கள் உழைப்பு அவனுக்கு நிறுவனத்தில் ஒரு மேலாளர் அதிகாரத்தைக் கொடுத்திருந்தது. உரிமையாளரின் பத்துக்கும் மேற்பட்ட வண்டிகளுக்கு, அவனே பொறுப்பு. அலுவலக வண்டிகளை நிற்காமல் ஓடச்செய்ய வேண்டிய பொறுப்பும் அவனுடையதாக இருந்தது. அவனிடம் வேலை செய்த ஓட்டுனர்களிலேயே வயதானவரும், நிதானமானவரும் கந்தசாமிதான். அறுபது வயதான முதியவர். அவன் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவனுக்கு எல்லாமுமாக இருந்து எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர் அவர். முதலாளி பிள்ளைகளுக்கு மதிய உணவு எடுத்துச் செல்லும்போது அவர்கள் படிக்கும் கான்வெண்ட் பள்ளிக்கு எதிரில் இருந்த மாநகராட்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவரது பேத்தி சரசாவிற்கு மதிய உணவை, இவனைக் கொடுத்து வரச் சொல்வார் கந்தசாமி. சரசா, கந்தசாமியின் பெண் வயிற்று பேத்தி. காந்திமதி அவருக்கு ஒரே பெண். வட மாநிலத்தில் வேலைக்கு போன அவள் புருசன்,  தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். தனித்து விடப்பட்ட அவள், தகப்பனே கதியென்று சரசாவுடன் வந்து சேர்ந்து விட்டாள். இருபத்தி எட்டு வயதில் கணவனை இழந்து, ஆறு வயது மகளுடன் எத்தனை நாட்கள் வாழ முடியும் ஒரு பெண்ணால்.அதுவும் வசதியில்லாத சூழலில்! மனதைக் குழப்பும் மாயங்கள் நிறைந்த பூமி இது. சுப்பிரமணியன், அந்த நிறுவனத்தில் ஒரு தேர்ந்த ஓட்டுனர். பத்து வருட உழைப்பு அவனுக்கு வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கையைக் கொடுத்திருந்தது. சொந்தமாக வண்டி ஒன்று வாங்கி, வாடகைக்கு ஓட்டலாம் என்று முடிவு செய்தான். திருச்சி, மதுரை என்று போனால் சீக்கிரம் முன்னுக்கு வந்து விடலாம் என்று அவன் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தான். ஒரே வருடத்தில், ஒரு வண்டியை மூன்று வண்டிகளாக்கி விட்டிருந்தான் அவன். சென்னைக்கு வந்த குடும்பம் ஒன்றினை, உறவினர் வீட்டில் இறக்கி விட்டு விட்டு, அனுமதி வாங்கிக் கொண்டு, அவர்களைப் பார்க்க வந்திருந்தான். கந்தசாமி வீட்டில் இல்லை. அவரது பெண் காந்திமதி அவனை அடையாளம் தெரியாமல் முழித்தாள். “ சுப்பிரமணிங்க.. அய்யா இல்லீங்களா.. நீங்க அவரு பொண்ணு காந்திமதிதானே? நார்த்லே இருந்தீங்களே?“ அவள் கதையைச் சுருக்கமாக அப்புறம் அவனுக்கு கந்தசாமி சொன்னார். அவன் மனது பிசைந்து வலித்தது. ‘ நல்லவர்களுக்கே சோதனை வருகிறதே?’ அதற்கப்புறம் சென்னை வரும்போதெல்லாம் காந்திமதியைச் சந்திக்கத் தவறுவதே இல்லை சுப்பிரமணி. “ சின்னதா ஒரு மனை வாங்கி, ஒரு ஓட்டு வீடு கட்டியிருக்கேன். எனக்கு சொந்த உபயோகத்துக்கு ஒரு பழைய வண்டி.. நா மொத மொதல்ல வாங்கினனே அதே வண்டி, அத வச்சிருக்கன். இப்ப வேலைக்குத்  தனியா ஆளுங்க போட்டுட்டேன். நான் வண்டி ஓட்டறதில்ல. மதுரை மீனாட்சி கோயில்லுக்கு பக்கத்துல, ஆறுக்கு ஆறுன்னு ஒரு கடைய வளைச்சு போட்டு, ஆபீஸ் போட்டுட்டேன். எந்நேரமும் அங்கதான் இருப்பேன். எனக்கு பொண்டாட்டியா புள்ளையா “ “ ஏன் கட்டிக்கறதுதானே.. ஆரு வாணாங்கறாங்க.. “ கந்தசாமி மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார். காந்திமதியிடம் இப்போது பழைய சிரிப்பு மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டிருந்தது. இந்த முடிச்சு புதுசாகவும் இருக்கிறது.  நன்றாகவும் இருக்கிறது. “ அய்யா ஊன்னு சொல்லட்டும். ஒன்னையே கட்டிக்கத் தயார். “ சுப்பிரமணி போட்டு உடைத்தான். வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த சரசா நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் கலவரமா? சந்தோசமா? ‘ நீ என்ன சொல்ற? ‘ என்பதுபோல் காந்திமதி சரசாவைப் பார்த்தாள். கந்தசாமியும் கோடி ரூபாய் கேள்விக்கான பதிலை எதிர்பார்ப்பது போல அவளைப் பார்த்தார். “ நீ மாமாவை கட்டிக்கிட்டு மதுரை போ.. நா தாத்தாவோட இங்கேயே இருக்கேன் “ அது குழந்தையின் பிடிவாதமா? தெளிவான தீர்வா? சுப்பிரமணி சரசாவை அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டான். காந்திமதி கல்யாணம் முடிந்து ஆறுவருடம் ஆகிவிட்டது. சரசா பட்டப்படிப்பு முடித்து வேலைக்கு போகப்போகிறாள். கந்தசாமியும் ஓய்வு பெறும் நிலைக்கு வந்து விட்டார். காந்திமதி மதுரையே கதி என்று கிடக்கிறாள். அவளுக்கு இன்னும் இரண்டு பிள்ளைகளாகி விட்டது. நிறுவன உரிமையாளர் மகன், சரசாவிற்கு வேலை போட்டு தருவதாக அழைத்து, அவளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், அதைத் தட்டிக் கேட்கப்போன பார்த்தசாரதி மீது வீண் பழி சுமத்தப்பட்டு, வேலை நீக்கம் செய்யப்பட்டது, எதிர்பாராத திருப்பம். படிக்காதவன் என்றாலும் பலசாலி, பண்பாளன் என்பதால், அவனை மணம் செய்து கொள்ள சரசா முடிவு செய்தது கந்தசாமிக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. ‘ பின்னால கொழப்பம் வராதுல்ல ‘ என்று பலமுறை கேட்டுக்கொண்டே, அவர் திருமணத்திற்கு சம்மதித்தார். சாரதிக்கு கொஞ்சம்போல உறுத்தல் இருந்தது. இப்போது நிரந்தர வேலை இல்லை. எப்படி? “ மதுரைக்கு வந்துடுங்க தம்பி.. எங்க வீட்டிலேயே தங்கிக்கிடுங்க. இப்ப எங்கிட்ட இருபது வண்டி இருக்குது. எதையாவது ஓட்டுங்க.. சம்பளம் கொடுத்துடறேன் “ சுப்பிரமணி ஆசையாக கூப்பிட்டான். ஒருவகையில் மாமனார் வீட்டு வேலை. ஒத்து வருமா? சரசா கண்டிப்பாக சொல்லிவிட்டாள். “ வேலைக்கு போங்க.. ஆனா தங்கறதெல்லாம் வேணாம். தாய் பிள்ளைன்னாலும் வாழ்க்கை வேறதான்.. “ இப்படி பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன. சரசா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். கோதை நாச்சியார் ஒரே மகள். இன்னமும் அவர்களிடையே காதல் குறையவில்லை. “ அய்யா! பார்த்தசாரதி! என்னா யோசனை? “ “ எவன் அவன் பார்த்தசாரதி? எம்பேரு பாசு “ என்று சிரித்தான் சாரதி.   22.வௌவால் வீடு   பாஸ்கர் அன்று வீடு திரும்ப மிகவும் நேரமாகிவிட்டது. சனசந்தடி மிகுந்த தியாகராயநகர் பிரதான சாலையில் உள்ள வங்கியில், அவன் காசாளன். உஸ்மான் சாலை, சனங்களின் நெரிசலில் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் பண்டிகைக் காலம் அது. சேலைகள் சுடிதார்களோடும், மிடிகள் டாப்ஸோடும் ஊர்ந்து கொண்டிருக்கும் பகுதியில், ஒரு நகைக்கடை முதல் தளத்தில் அமைந்திருந்தது அந்த வங்கிக் கிளை.  நகைக்கடைக்கு அதில்தான் கணக்கு. லட்சக் கணக்கில் கொண்டு வந்து கொட்டுவார்கள். எண்ணி முடிப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி விடும். ஆலையிலிட்ட கரும்பு கதைதான். அவன் அந்தக் கிளைக்கு மாற்றல் கேட்ட போது, பலரும் அவனை எச்சரித்தார்கள். அங்கு வேலை பார்த்த சுந்தரம் சொன்னான்: “ வாஷிங்மிஷின் பாத்திருக்கியா? துணியெல்லாம் துவைத்து, அலசி, ஒட்டப் பிழிந்து, வெளியே தள்ளுமே! அந்தக் கதைதான். அம்பது வயசுக்கு இது உனக்குத் தேவையா? “ கடை நிலை ஊழியன் கணேசன் அருகில் வந்து தோளைத் தட்டிக் கொடுத்தான். “ தலைவா! உன்ன மாதிரி ஆள்தான் தேவை. ரொம்ப ஜெருப்பு காட்டறானுங்கோ. மேனேஜர் மிரட்றாராம். ஆபிசருங்க அடிமை மாதிரி நடத்துறாங்களாம். நீ போய்தான் ஒரு வழி பண்ணனும். “ கொம்பு சீவி விடவும், பின் வாங்க வைக்கவும் எதிரெதிர் தாக்குதல்கள். பாஸ்கர் கொஞ்சம் குழம்பிப் போனான். சங்க பொதுச் செயலாளர் பேசினார். “ ஒங்க இஷ்டம். வேணான்னா வேற கிளைக்கு மாத்திடறேன். ஆனா ராகவன் சமாளிச்சிருக்கான். ஒங்களால முடியாதா ? “ சண்டைக்கோழிக்கு, காலில் கத்தி கட்டி விட்டு, ‘ரத்தம் வரும், பரவாயில்லையா?’ என்பது மாதிரியான ஜீவகாருண்ய பேச்சு அது. அவன் போவதா? வேண்டாமா? என்று ஆங்காங்கே பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்தார்கள் பல கிளைத் தோழர்கள். விருப்ப ஓய்வு திட்டம் வந்தால், கூடுதலாக கொஞ்சம் பணம் கிடைக்கும். மாதா மாதம் கொஞ்சம் ஊதியம் உயரும். அதுவரை, அலவன்ஸ், அவுட் ஆஃப் பாக்கெட் என்று சில்லறை வருமானம் சில நூறு தேறும். விடுப்புக் கணக்கில் வரவு அதிகம். தேவைப்பட்டால் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். தப்பிக்க உபாயமா இல்லை!கொஞ்சம் தைரியம் பிறந்தது. கிளையில் மொத்தம் இருபத்தி ஐந்து ஊழியர்கள். அனைவரும் ஓடி வந்து கை கொடுத்தார்கள். வரவேற்பு வார்த்தைகள் சொன்னார்கள். ஏறக்குறைய நேர்ந்த ஆடு நிலை போல உணர்ந்தான் பாஸ்கர். ஒன்பது மணியிலிருந்து நாலு மணி வரை கிளை. ஆனாலும் ஐந்து மணியாகிவிடும் என்றார்கள். முதல் நாள் நாலு மணிக்கே வேலையை முடித்து, பையை எடுத்துக் கொண்டு கிளம்பிய போது, ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். அடுத்த நாள் வேலை முடிந்தும், அரை மணி நேரம் கூடுதலாக இருந்து விட்டு கிளம்பினான். மூன்று மாதங்களில், கை கொடுத்தவர்களில் பலர், தனக்கு எதிராக, மறைமுகமாக வேலை செய்வதை உணர்ந்து கொண்டான். அவன் வருவதற்கு முன்பே, அவனைப் பற்றிய தகவல் அறிக்கை, மேலாளரிடம் வாசிக்கப்பட்டதை, ஒருவன் போட்டுக் கொடுத்தான். வேலை சுமையை மெதுவாக ஏற்றும் தந்திரம் கையாளப்பட்டது. ஆனாலும் பாஸ்கர், நான்கு மணிக்கே வேலையை முடிக்கும் கலையைத் தெரிந்தவன் என்பது அவர்களுக்கு எரிச்சலாக இருந்தது. வங்கியின் வாடிக்கையாளர்கள் இவனை அணுகும் முறை கூட, வித்தியாசமாக இருந்தது. இவனுடைய வேகம் அவர்களுக்கு புரியாதவாறும், பிடித்தமாயும் இருந்தன என்பது, அவர்கள் பேசும் வார்த்தைகளில் வெளிப்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து மேலாளர் வரையில் போயிற்று. மேலாளர் ஒரு நாள் அவனை தன் அறைக்கு கூப்பிட்டனுப்பினார். “ ஒங்களப் பத்தி நான் கேள்விப்பட்டது வேற. பாக்கறது வேற. நீங்கள், நான் எதிர்பார்த்ததை விடவும், நன்றாக உங்கள் பணியைச் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். “ ஆனாலும், அதிக வேலைப் பளு காரணமாக அவனால் முன்பு போல் புத்தகம் படிக்க முடிவதில்லை. குடும்பத்தாருடன் வெளியே செல்ல முடிவதில்லை. பேச்சு கூட குறைந்து விட்டது. ‘ என்னாச்சு ஒம்புருஷனுக்கு. ஒடம்பு சரியில்லையா. டாக்டர்கிட்ட காட்டலாமில்ல ‘ என்ற விசாரிப்புகள் இந்திராவை துளைத்தெடுத்தன. இந்திரா அவன் மனைவி. அதுவும் சராசரி இந்திய மனைவி. அவளால், அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஒரு நாள் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. சன்னலெல்லாம் சாத்தி கொக்கி போடப்பட்டிருந்தது. எல்லா அறை விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. அலுவலகத்திலிருந்து பேருந்து பிடித்து வீடு வந்து சேருவதற்குள் இருட்டிவிடும். தூரத்திலிருந்தே, தன் வீட்டில் அனைத்து விளக்குகளும் எரிவதைக் கண்டு, சஞ்சலம் அவன் மனதை ஆட்டியது. ‘என்ன ஆகியிருக்கும். இந்துக்கு? உடம்பு சரியில்லையா? அல்லது வெளியே போயிருக்கிறாளா? புறநகர் பகுதி என்பதால் வீட்டில் ஆள் இருப்பது போல், விளக்குகள் போட்டு விட்டு போவது வழக்கம் தான். ஆனாலும் பகலிலேயே எல்லா வேலைக்களையும் முடித்து விட்டு, அவனுக்காக காத்திருப்பவளாயிற்றே அவள். இன்று என்ன ஆயிற்று ?’ ஆயிரம் கேள்விகள். வீட்டு அழைப்பு மணியை அழுத்தியவுடன், சிறிதாக சன்னல் கதவு திறந்து, இந்திராவின் முகம் எட்டிப் பார்த்தது. சட்டென்று கதவு சாத்தப்பட்டது. வாயிற்கதவு படாரென்று திறக்கப் பட்டு, அவன் உள்ளிழுக்கப் பட்டான். கதவு சட்டென்று சாற்றப்பட்டது. கதவின் மேல் சாய்ந்து கொண்டு இந்திரா மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். பக்கத்திலேயே பக்கத்து வீட்டு பாட்டி. “சௌக்கியமா பாட்டி” என்ற ஒற்றை விசாரிப்புடன் அவன் உள்புகுந்தான். கைலிக்கு மாறிக்கொண்டு, அவன் வெளியே வந்த போது, அவர்கள் அதே இடத்தில் நின்றிருந்தார்கள். சன்னல் கதவை அவன் திறக்க முற்பட்டபோது இந்திரா கத்தினாள்” “ தொறக்காதீங்க “ அவன் ஆச்சர்யமாக அவளைப் பார்த்தான். கடுங்குளிர் காலங்களில் கூட வெளிக்காற்று வேண்டும் அவளுக்கு. அவளா இப்படி..? முகமே கேள்விக்குறியாக, அவன் அவர்களைப் பார்த்தபோது, பாட்டிதான் சொன்னாள்: “ வீட்டுக்குள்ள வௌவால் வந்திருச்சுங்க. அதான் இந்து பயப்புடுது. “ “ வௌவாலா? அதுங்க கோயில்ல தான இருக்கும். இங்க எப்படி ? “ இந்திரா சொன்னாள்: “ மூணு மாசமா ஒரு பேச்சு இல்ல. சிரிப்பு இல்ல. சத்தம் இல்ல. அதான் இதுவும் கோயில் போலிருக்குன்னு வௌவால் வந்திருச்சி போலிருக்கு பாட்டி “ மூன்று மாதத்திற்கு பிறகு, சத்தம் போட்டு சிரித்தான் பாஸ்கர்.                             23. ஏதோ ஒரு யுகத்தில்   பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மணியும் அவனது தோழர்கள் ஐந்து பேரும் ஒரு மலைப் பிரதேசத்திற்கு செல்வதாக திட்டம் போட்டனர். காலை சூரிய உதயம் முதல் மாலை மங்கி இரவு அடங்கும் வரை, கணினியும் மென்பொருளும் இல்லாத ஒரு இடமாக அது இருக்க வேண்டும் என்பது, அவர்களது திட்டத்தின் முக்கிய ஷரத்துகளில் ஒன்று. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் ஒன்று இருக்கிறது. அது தான் அவர்களது வேலைபளுவின் காரணமாக ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம். இறுக்கமான அறையின் சன்னல்களைத் திறந்து விட்டால், எப்படி ஒரு குளிர் காற்று உள்புகுந்து, அறையை நிரப்புமோ, அப்படி இயற்கையும், பணி காரணிகள் கொடுக்கும் மூளைக் கசக்கலும் இல்லாத ஒரு இடத்தை, அவர்கள் தேர்வு செய்ய விரும்பினார்கள். இந்த இடத்தில் கதையின் ஆறு நபர்களைப் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. மணி என்கிற மணிமாறன் நாமக்கல்லை அடுத்த பரமத்தி வேலூரைச் சேர்ந்தவன். சைவ வேளாளன். குலத் தொழிலை விட்டுவிட்டு, மென்பொருள் படித்து, ஆறு இலக்க  ஊதியத்தில் பன்னிரண்டு அங்குல சதுரத்தையே பார்த்து, உலகை வலம் வருபவன். விர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் மேல் படிப்பு படிக்க இருந்தவன். போயிருந்தால் ஒருவேளை உயிரை விட்டிருப்பானோ என்னவோ. அவன் நல்ல நேரம், இந்த வேலை கிடைத்து, இங்கேயே தங்கிவிட்டான். பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு அலங்கார வளைவுக்குள் நுழைந்தால், அவன் அலுவலகம் கிடைக்கும். ஆனால் அவன் கிடைப்பானா என்பது சந்தேகம். அலுவலக வளாகம் பெரியது. கிட்டத்தட்ட பரமத்தி வேலூரை ஒத்த அளவில் இருக்கும் என்று ஒருமுறை அவன் எண்ணியிருக்கிறான். அது ஒரு குட்டி ஐரோப்பா அல்லது அமெரிக்கா. அங்கு நுனி நாக்கு ஆங்கிலமும், பர்கரும் பீட்ஸாவும் புழங்கும். பால் புகட்டிகளை காட்டியபடி சாஃப்ட்வேர் பனியன்களுடன் அலைவார்கள் சிற்றிடைப் பெண்கள். அதைக் கூட காண நேரமின்றி, கண்களில் விண்டோஸ் தெரிய பரபரப்பார்கள் இளைஞர்கள். எப்போதாவது முதுகுக்கு ஒத்தடம் வேண்டும்போது, பெருந்தனக்காரி ஒருத்தியை பில்லியனில் ஏற்றிக் கொண்டு, ஹோண்டாக்களில் சீறிப் பாய்வார்கள் ஸ்பீட் பிரேக்கர்கள் நிறைந்த சாலைகளில். இறங்கும்போது “ நன்றி பெண்ணே “ என்பான் இளைஞன். “ அது எனக்கும் சுகம் “ என்பாள் யுவதி! மணியுடன் படித்தவர்கள் மென்பொருள்காரர்கள் இல்லை! பெரும்பொருள்காரர்கள். அவர்களில் ஐந்து பேர் அவனுடன் எப்போதும் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள். மணி இனிக்க பேசுவான். ரசிக்கப் பேசுவான். சிரிக்கப் பேசுவான். அவனுடன் இருக்கும் காலங்கள், ஐவருக்கும் கவலைகள் மறந்த காலங்கள். ரமேஷ் பாபு ஆந்திர மாநிலம் குண்டக்கல் ஜில்லாவில் இருந்து வந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியர். சொந்தமாக தொழிற்சாலை வைத்திருக்கிறான். வருட லாபம் கோடியை எட்டும். அரசியல் செல்வாக்கு உள்ள குடும்பம். பணத்திற்கு கவலையில்லை. அவனுடைய தெலுங்கு கலந்த தமிழை கிண்டல் பண்ணி சிரிப்பார்கள் ஐவரும். அவன் அதைப் பொருட்படுத்துவதில்லை. ரமேஷ் தான் சொன்னான்: “ விஜயவாடா பக்கத்துல ஒரு மலையும் காடும் இருக்குதாம். அங்க ஒரு பழைய நரசிம்மசாமி கோயிலு இருக்குதாம். இப்ப கூட ராத்திரி நேரங்கள்ல, சாமி ஆவேசமா அங்க நடமாடிக்கிட்டு இருக்குமாம். அதனால ஆதிவாசிங்க கூட மாலை ஆறு மணிக்கு மேல காட்டுக்குள்ள வரமாட்டாங்களாம். மலை மேல் ஒரு பங்களா இருக்குதாம். அதுல வேணா தங்கிக்கலாமாம். ஆனா காட்டுல ஏதோ ஒரு அதிர்வு இருக்கறதால, செல்பேசிகள் வேலை செய்யாதாம். அங்க போலாமா? “ ஜம்பு என்கிற ஜம்புநாதன் கடவுளை மறுப்பவன். அவன் குடும்பமே அப்படி. சட்டென்று எகிறி எழுந்தான் ஜம்பு. “ என்னாடா காது குத்தற.. நரசிம்மசாமியாம்.. நடமாடுதாம்.. அதிர்வாம் .. இது இருப்பத்தி ஓராம் நூற்றாண்டு.. நீ எங்கள கற்காலத்துக்கு கொண்டுட்டு போயிடுவே போலிருக்கே” மணி அவனை அடக்கினான். “ டேய் இது ஒரு நம்பிக்கை. காட்டுல விலங்குங்க இருக்கும். பாம்புங்க இருக்கும். அதனால மனுசங்க நடமாட வேண்டாம்ற நல்லெண்ணத்தில இப்படிச் சொல்லிருக்கலாம். நம்பறவனுக்கு கடவுள்!  நம்பாதவனுக்கு கல்லு. அதுலயும் கொஞ்சம் அழகுணர்ச்சி இருக்கறவன், அதை சிற்பம்னு ரசிச்சிட்டு போயிடுவான். “ பிரகாசும் அம்பலவாணனும் மணி பேசுவதையே ரசித்து கேட்டனர். பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஜம்பு மணி சொல்வதை ஆமோதிப்பது போல் உட்கார்ந்து கொண்டான். அறுவரில் மணியே தலைவன் என்பது நிருபணமாயிற்று. ஜம்பு சொந்தமாக துணிக்கடை வைத்திருக்கிறான். ஈரோட்டுக்காரன். அதனால் இயல்பாகவே கடவுள் மறுப்பு இயக்கத்தில் ஊறியிருந்தது அவனது குடும்பம். மீதி ஐவரோடு கோயில்லுக்கூட வருவான். திருநீறை எடுத்து நெற்றியில் போட்டுக் கொள்வான். வெளியே வந்ததும் நிதானமாக முகம் கழுவிக் கொள்வான். “ என்னடா கடவுள் இல்லைன்ற! திருநீறை போட்டுக்கற” “ இது சாம்பல்.. இத நெற்றியில போட்டுக்கிட்டா அது காயக்காய தலையில இருக்கற கெட்ட நீரை வெளியே உறிஞ்சிடும். பையா! இது கந்த கவசம் இல்ல கெமிஸ்ட்ரி கவசம். “ பிரகாசும் அம்பலவாணனும் நகைக்கடை அதிபர்கள். அப்பா வழி தொழில். படிப்பு ஒரு அந்தஸ்த்துக்குதான். அது எந்த வகையிலும் அவர்களுக்கு உதவவில்லை. வெளிநாட்டுக் காரர்கள் கடைக்கு வரும்போது கொஞ்சம் சரளமாக ஆங்கிலம் பேசப்  பயன்படும் அவ்வளவுதான். அதற்கே அவர்களின் அம்மைக்கும் அப்பனுக்கும் பெருமை பிடிபடாது. இவர்களின் குழுவில் எந்த ஒற்றுமையும் இல்லாது ஆனாலும் ஒன்றிப்போய் இருப்பவன் தான் கவிவாணன். சந்திரசேகரன் என்பது இயற்பெயர். ஆனாலும் இலக்கியம், கவிதை என்று பித்து பிடித்து அலைந்து, பெயரை கவிவாணன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறான். “தனிமை தேடி / காட்டிற்கு போனதில் / தொலைந்தது தனிமை / காட்டிற்கு” இரண்டு முறை உரத்த குரலில் கவிதை சொன்னான் கவிவாணன். மணி அவனைக் கட்டிக் கொண்டான். “நல்லாருக்குடா “ என்று மனம் திறந்து பாராட்டினான். மே மாதம் முதல் வாரத்தில் அறுவரும் விடுப்பு எடுத்துக் கொண்டு, காட்டிற்கு புறப்பட்டார்கள். ஐந்து நாட்கள் தங்குவதாக ஏற்பாடு. ரமேஷின் கார் விஜயவாடா ரயில் நிலையத்தில் காத்திருந்தது. அது அவர்களை காட்டின் எல்லைக்கு முன்னால் இறக்கி விட்டுவிட்டு காத்திருக்கும். அவர்களது உடைமைகள், செல்போன்கள், லாப்டாப் கணிப்பொறிகள், கடன் அட்டைகள், தானியங்கி இயந்திர அட்டைகள், அடையாள அட்டைகள் என்று சகலமும் காரிலேயே வைத்துவிட்டு அவர்கள் பயணப்பட்டார்கள். காட்டின் உள்ளே நுழைந்ததும், ஒரு வித மூலிகை வாசனை, அவர்களைத் தாக்கியது. மெதுவாக உள்ளிழுத்து வெளியே விட்டபோது,  நுரையீரல்கள் புத்துயிர் பெற்றன. விடிகாலை ஆறு மணி.இருள் பிரிந்து, ஆதவன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும் மரக்கிளைகளின் அடர்த்தி, அவனை வழி மறித்து, ஓரளவிற்கு வெற்றி கண்டு கொண்டிருந்தது. “ பச்சை என்பது நிறமல்ல ஒரு உணர்வு, ஒரு அனுபவம் “ என்றான் கவிவாணன். ரமேஷ¤ம் ஜம்புவும் புரியாமல் விழித்தார்கள். மணி சொன்னான். “இந்தக் காடும் அதன் பச்சையும் மனசை நிறைக்குது. வெறும் நிறம்னா கண்ணுல பட்டு காணாம போயிரும். இது கண்ணு வழியா உள்ளிறங்கி, மனசை அலைக்கழிக்குது.. என்னா கவி  சரியா? “ கவி பலமாக அவனது தோளில் தட்டினான். “ சபாஷ் தோழா “ என்றான். நரசிம்மசாமி கோயில் என்று சொல்லப்பட்ட ஒரு சிதிலமான புராதனக் கோயிலை, அவர்கள் கடந்தார்கள். உள்ளே கருங்கல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அது எதைப் போலவும் இல்லை. முக்கியமாக நரசிம்மசாமி போல இல்லவே இல்லை. இருந்தாலும் ரமேஷ் கன்னத்தில் போட்டுக் கொண்டான். பிரகாசும் அம்பலவாணனும் உதடு தொட்டு நெஞ்சில் கை வைத்து கண்களை மூடினார்கள். மணியும் கவியும் எதிலும் சாராமல் நின்றார்கள். ஜம்பு “ வௌவால் தலை கீழாத் தொங்குது பார்” என்று ஒரு கல்லை விட்டெறிந்தான். வௌவால் பட படவென்று இறக்கையை அடித்துக் கொண்டு பறந்தது.  மலை பங்களா சமீபத்தில் ஆதிவாசிகளின் குடியிருப்பு இருந்தது. பங்களா யாருடையது என்று தெரியவில்லை. ஆனாலும் தினமும் சுத்தப்படுத்தப்பட்டு, வசிப்பதற்கு ஏற்ப காணப்பட்டது. ஆதிவாசிகளிடம் தெலுங்கில் கேட்டான் ரமேஷ். “ பங்களாவுல தங்கணும். வாடகை எவ்வளவு “ “ அதெல்லாம் ஒண்ணுமில்ல சாமி. யாரும் வரதில்ல. ஆனாலும் பெருக்கி கூட்டி சுத்தப் படுத்தி வச்சிருக்கிறோம். அதனால நீங்க பிரியப்பட்டு குடுக்கறதுதான். வருசத்துக்கு ஒரு குடும்பம் பாத்துக்கும். வருமானமும் அந்தக் குடும்பத்துக்குத்தான். இப்ப பொம்மி குடும்பம் பாத்துக்குது.. ஏ! பொம்மி! இங்க வா “ பொம்மி என்பவள் எழுபது வயதுக்காரியாக இருந்தாள். கூடவே இருபது வயது மதிக்கத் தக்க ஒரு பெண்ணும் கூடவே வந்தாள். “ பங்களா வேணுமாம். பேசிக்க “ “ தங்க மட்டுமா, இல்ல சுடுதண்ணி போட்டுத் தரணுமா? சாப்பாடு செய்யணுமா? சாராயம் வேணுமா? ராத்திரி ஒத்தாசைக்கு ஆளும் வேணுமா “ அதிர்ந்து போனார்கள் அறுவரும். ராத்திரி ஒத்தாசைக்கு ஆளா? கவி சிலாகித்து ரசித்து மீண்டும் மீண்டும் பல முறை சொல்லிக் கொண்டான். “ ஒத்தாசை.. ஒத்த ஆசை.. ஒத்துக் கொள்ள ஆசை “ மணி வேகவேகமாக மறுத்தான். “சாப்பாடும் சுடுதண்ணியும் போதும்” “ இவதான் வருவா.. பேரு மல்லி .. ஆறு மணிக்குள்ளார அனுப்பிச்சுரணும்.. நேரமாச்சுன்னா உங்க கூட தங்கிட்டு காலைல தான் வருவா! சம்மதமா? “ முதல் மூன்று நாட்கள் எந்த தொந்தரவும் இல்லை. காலையில் கறுப்பு காபி.. ராகி அடை.. மதியம் அசைவ உணவு.. ஒரு நாள் மான்; ஒருநாள் முயல்; ஒரு நாள் கௌதாரி என விதவிதமான, நகரங்களில் கிடைக்காத உணவும் சுவையும். மல்லியிடமிருந்து  ஒருவித மூலிகை வாசனை வந்து கொண்டேயிருந்தது. ஆனால் அவள் சமைக்கும்  பதார்த்தங்களில் இருந்த சுவையும் மணமும், அவளது வாசனையை மறக்கச் செய்தன. நான்காவது நாள் காட்டிற்குள் உலாவச் சென்ற ஆறு பேரும் திரும்ப நேரமாகிவிட்டது. புதிய பாதை ஒன்றில் சென்றதில், வந்த வழி மறந்து போய், பங்களாவை அடையும்போது ஆறு மணிக்கு மேலாகி விட்டது. மல்லி வாசற்படியிலேயே காத்திருந்தாள். மேற்கே மறையும் சூரியனைப் பார்த்தபடி இருந்தன அவள் கண்கள். இவர்களைப் பார்த்தவுடன் அவள் எழுந்து கொண்டாள். அவர்கள் உள்ளே சென்றதும் அவள் மறுபடி வாசற்படியிலேயே உட்கார்ந்து கொண்டாள். உள்ளே அவர்களுக்கான உணவு வழக்கம்போல தயாராக இருந்தது. ஜம்பு கொஞ்சம் பதைபதைப்புடன் ஆரம்பித்தான். “ டேய் ஆறு மணிக்கு மேலாகிவிட்டது. அதனால் அந்தக் கிழவி சொன்னாப்புல மல்லி இங்கதான் தங்குவா போலிருக்கு. இப்ப என்னாடா பண்றது?” “ தங்கட்டும். தேவைப்பட்டா என்னோட படுக்கையைக் கூட தரேன். நான் வெளியில படுத்துக்கறேன். இருட்டுல அந்தப் பொண்ண எப்படி தனியா அனுப்பறது? _ மணி சொன்னான். பிரகாசும் அம்பலவாணனும் மறுத்தார்கள். “ எப்படிடா நீ மட்டும் தனியா படுக்கறது? நாங்க எல்லோருமே வெளியே படுக்கறம். அந்தப் பொண்ண ஒரு அறைக்குள்ள போயி தாள் போட்டுக்கச் சொல்லு “ “ ஆமா அதான் சரி “ என்று மற்றவர்களும் ஆமோதித்தனர். வாசலில் வந்து பார்த்தபோது மல்லியைக் காணவில்லை. பங்களாவின் மொட்டை மாடியிலிருந்து ஒரு கனமான கயிறு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. “ புத்திசாலிப் பொண்ணு! நமக்கு இடைஞ்சல் கொடுக்க வேண்டாம்னு மேலே போயிட்டா “ என்று சொன்ன ஜம்பு நிமிர்ந்து பார்த்தபோது, கயிறு மெல்ல மேலிழுக்கப்பட்டது. “ புத்திசாலி மட்டுமில்ல ஜாக்கிரதையான பொண்ணும் கூட “ என்றான் மணி. அவனது மனக் கணினியில் புதிதாக ஒரு ஃபைல் திறந்து கொண்டது. அதில் மல்லி நுழைந்து கொண்டிருந்தாள். கடைசியாக அவன் உறக்கம் வந்து கண்களை மூடிய போது, சோளக்காட்டில் பரண் மேல் நின்று கொண்டு கவண் கல் கொண்டு குருவிகளை விரட்டிக் கொண்டிருந்தாள் மல்லி. தூரத்தில் ஒரு யானை வந்து கொண்டிருந்தது.                 24. பிரியாணி   முருகன் கோயிலுக்கு அருகில் இருக்கும் காய்கறிக்கடையில் வழக்கமாக நான் காய் வாங்குவது உண்டு. அன்றும் அப்படித்தான். ஆனால் இந்த முறை காலையில் ஒரு விசேசத்திற்குப் போய்விட்டதில், மாலைதான் போக முடிந்தது. ஓய்வுக்குப் பிறகு இந்தப் புறநகர் வாழ்க்கை அப்படியொன்றும் சுவாரஸ்யமில்லாமல் இல்லை. கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே ஓடியதில், பல சுவையான விசயங்களைத் தொலைத்து விட்டது இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது. அலுவலகம் போன காலங்களில், ஆறு மணிக்கு மேல் தூங்க விடமாட்டாள் என் மனைவி. அவள் என்னை எழுப்புவதே கர்ண கடூரமாக இருக்கும். “ என்னா? இன்னிக்கு ஆபீஸ் லீவா? போகலியா? இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கறீங்க? “ பாதி தூக்கம் கலைந்த நிலையில் எழுந்து, பல் விளக்கி, காலைக்கடன்களை முடித்து, அதே அசுர கதியில் குளித்து, கும்பிடு போட்டு, குழாய் மாட்டுவதற்குள், காலைச் சிற்றுண்டியும், மதிய மோர்சாதமும் சாப்பாட்டு மேசையில் டப்பாக்களில் இருக்கும். அள்ளி எடுத்துக் கொண்டு ஓட வேண்டியது தான். புறநகரிலிருந்து வெளியேற பதினைந்து நிமிட நடை. பிறகு ஷேர் ஆட்டோ. அதற்குப்பிறகு பேருந்து என ஒன்றரை மணிநேரம் வாழ்வில் அவுட். இப்போது அதெல்லாம் இல்லை. இப்போது கடிகாரம் என்ன, நாட்காட்டியே பார்ப்பதில்லை. என்னுடைய ஓய்வு வாழ்க்கையின் காலைகள் சுவையானவை. எட்டுமணிக்கு எழுச்சி. ஒன்பது மணிக்கு காலாற நடத்தல். பால், காய்கறி இன்னும் ஏதேதோ வீட்டு விண்ணப்ப நுகர்பொருட்கள் என்று ஒருமணிநேரம் போகும். வழியில் பல்லவனில் இருந்து ஓய்வு பெற்ற கபாலி, ஹிந்துவில் இருந்து விலகிய விசு, கனரா வங்கியின் சேது என அறுபது வயதுக்காரர்கள் யாராவது எதிர்படுவர். நாட்டு நடப்பு, சினிமா, ஊர் பேச்சு என பொழுது ரகளையாகப் போகும். வீடு திரும்பும் வழியில் தான் அந்தத் திருநெல்வேலிக்காரரின் கடை இருக்கிறது. பெயரே இல்லாத டிபன் கடை. அவரே வாசலில் நின்று பூரி பொரித்துக் கொண்டிருப்பார். உள்ளே இரண்டு மேசைகள், நான்கு நாற்காலிகளூடன் சாப்பிடும் இடம். நெருக்கமான இடம். ஒருவர் எழுந்தால் தான் அடுத்தவர் உள்ளே நுழைய முடியும். சுவர் பக்க இருக்கையாக இருந்தால் சாப்பிட்ட உடன் சட்டென்று எழுந்திருக்க முடியாது. அடுத்தவர் அப்போதுதான் வந்து அமர்ந்திருப்பார். அவரை எழுந்திருக்கச் சொல்லி, வெளியே வர வேண்டும். ஆனாலும் கிடைக்கும் இட்லியும் வடையும் பூரியும் கிழங்கும் அப்படி ஒரு சுவையாக இருக்கும். விலையும் மிக மலிவு. உள்ளே சிற்றுண்டி எடுத்துக்கொடுக்கும் பெண் ஐம்பது வயதைக் கடந்தவர். கொஞ்சம் வெள்ளையாக, பல் எடுப்பாக இருந்தார். பேச்சும் போக்கும் கொஞ்சம் வெள்ளந்தியாக இருந்தது. ஆனால் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது கவனித்து, “ என்ன கொடுக்கட்டும் “ என்று கேட்டு கொடுப்பார். கடை முதலாளி அடிக்கடி அவரைப் பார்த்து கத்திக் கொண்டே இருப்பார். “ தட்டை எடு! தண்ணி வை! நாலு இட்லி கட்டு. வடைகறியா? சாம்பாரா? கேளு!” நான் போன அத்தனை நாட்களிலும் இப்படியேதான் நடக்கும். ஒரு முறையாவது அந்தப் பெண்மணியே சொல்லாமல் எதையும் செய்யமாட்டார். இடுப்பில் கை வைத்துக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பார். முருகன் கோயிலுக்கு பக்கத்து சந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். பையில் காய்கறிகள் இருந்தன. அது கொஞ்சம் இருட்டான சந்து. வழியெல்லாம் முத்திர வாசம் அடிக்கும். அந்தத் தெரு முனையில் பட்டாபி இருந்தான். என் பால்ய சிநேகிதன். பையன் வீடு கட்டியதால், வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டிலேயே கழித்து விட மனமில்லாமல், அவன் இங்கு வந்திருந்தான். மாலைநேரங்களில் வெளியில் ஈசிசேரில் உட்கார்ந்திருப்பான். பிலிப்ஸ் ரேடியோவில், பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பான். எட்டு மணிக்குத்தான் அவனுக்கு உள்ளே அனுமதி. பேரப்பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருப்பார்கள். “ என்னங்க.. சார்! “ குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். அந்த டிபன் கடை பெண்மணி பின்னால் வந்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் ஒரு தயக்கம் இருந்தது. “ என்னம்மா?” “ காஞ்சிபுரம் பக்கத்துல சொந்தக்காரவுக வீட்ல சாவு . போகலாம்னா அவுரு காசு கொடுக்கமாட்டேங்கறாரு” நானே பார்த்திருக்கிறேன். காசு போட, அந்தக் கடையில் கல்லாப்பெட்டியெல்லாம் இல்லை. எல்லாக் காசையும், முதலாளியே வாங்கிச், சட்டைப்பையில் போட்டுக் கொள்வார். இந்தம்மா காசு வாங்கி நான் பார்த்ததேயில்லை. “ நீங்க திருநெல்வேலி இல்லையா? “ “ இல்லீங்கய்யா.. நான் காஞ்சிபுரம் பக்கம். மக்க மனுஷா யாருமில்லைன்னு, வேலை கேட்டுக்கிட்டு இவராண்ட வந்தேன். அதுவரைக்கும் கடையிலேதான் தூங்கிக்கிட்டு இருந்தாரு. நான் வந்தப்புறம்தான் வீடு எடுத்தாரு. “ “ நான் என்னம்மா செய்யணும்? “ “ ஒரு இருபது ரூபா கொடுத்தீங்கன்னா ஊர் போய் வந்திருவேன். “ பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரு இருபது ரூபாய் தாளை எடுத்து நீட்டிவிட்டு அந்தப் பெண்மணியும் என்னோடுதான் வரவேண்டும் என எண்ணிக் கொண்டு நடக்கலானேன். காஞ்சிபுரம் பேருந்து பிரதான சாலையில் தான் வரும். நானும் அந்தப் பக்கம்தான் போய்க்கொண்டிருக்கிறேன். சிறிது தூரம் போனவுடன் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண்மணி எதிர் திசையில் வேகமாக நடந்து கொண்டிருந்தார். மறுநாள் வழக்கம்போல அந்த டிபன் கடைக்கு “ நாஷ்டா “ சாப்பிடப் போனபோது, அந்தப் பெண்மணி அங்கே இருந்தார். அதற்குள் காஞ்சிபுரம் போய் வந்திருக்க வேண்டும். “ சாருக்கு என்னான்னு கேளு.. மச மசன்னு ஏன் நிக்கற.. தண்ணி வையி.. “ நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அந்தம்மா குடம் எடுத்துக் கொண்டு தெருக் குழாயில் தண்ணீர் எடுக்கப் போனது. முதலாளி தனியாக இருந்தார். “ ஏங்க! சம்சாரத்துக்கு கைக்காசு எதுவும் கொடுக்கறதில்லையாமே நீங்க? எதுனா வாங்கணும்னா கூட கைக்காசு இல்லாம எப்படிங்க? “ முதலாளி கொஞ்சம் கற்பூரப் பேர்வழி. சட்டென்று புரிந்து கொன்டார். “ எவ்வளவு வாங்கிச்சு ஒங்ககிட்ட? “ “ இருபது ரூபா “ “ இந்தமுறை என்னா? புள்ளைக்கு ஒடம்பு சரியில்லையா? இல்ல எனக்கு ஏதாவது ஆகிப்போச்சா?” “ சொந்தக்காரவுக சாவு .. “ “ கெட்டது குடி.. நாதியில்லாமதான் இங்கிட்டு வந்துச்சு. இல்லாத சொந்தக்காரவுக எப்படி சாவாங்க? “ எனக்கு ஆர்வம் மேலிட்டது. இங்கே ஒரு கதை இருப்பதாகப் பட்டது. ஏதும் பேசாமல் அவரையே ஏறிட்டேன். “ சார், நான் அசைவம் சாப்பிடமாட்டேன். இது எங்கிருந்து வந்துச்சுன்னு தெரியல.. இருபது வருசம் முன்னாடி, வேலை கேட்டு நாதியில்லேன்னு வந்துச்சு.. சரி பொட்டைப் புள்ளையை கடையில படுக்க வைக்கமுடியாதுன்னு வீடு எடுத்தேன். ஆனா அம்மணிக்கு அசைவம்னா உசுரு. வாரத்துக்கு ஒருக்கா சாப்பிட்டே தீரணும். எனக்கு அந்த வாடையே பிடிக்காது. அதான் கையில காசு கொடுத்தா, எங்காவது பிரியாணி வாங்கித் தின்னுப்பிட்டு, ஏப்பம் விட்டு, வீட்டையே நாறடிச்சிடும்னு, காசு கொடுக்கறதில்லே. அப்படியும் எங்கியாவது கடன் கேட்டு வாங்கித் தின்னுடுது . என்னா பண்றது? பழகின தோஷம், பொறுத்துகிட்டு போறேன். “ குடத்துடன் அந்த அம்மா வந்து, எதுவும் நடக்காததுபோல், வேலை செய்ய ஆரம்பித்தது. அவரும் அந்த அம்மாவை எதுவும் சொல்லவில்லை. சுவாரஸ்யம் குறைய நான் கை கழுவிக்கொண்டு வெளியே வந்தேன். சாப்பிட்டதற்கு காசை நீட்டினேன். “ இருக்கட்டும் சார் “ என்று மறுத்து விலகினார் முதலாளி. சில அடி தூரம் சென்று கவனித்தேன். முதலாளியின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. “ பத்து மணியாவுது.. நாலு இட்லியை எடுத்து வச்சி சாப்பிடு! வயிறு காயுதில்லே “ உறவுகள் விசித்திரமானவை!     25. திரிபுறம்     ரங்காவிற்கு காலையில் இருந்தே மனசு சரியில்லை. ஒரு வாரமாக அவள் வீடு கலைத்துப் போட்ட குருவிக்கூடு மாதிரி இருக்கிறது. இன்று எப்படியும் திரிபுரம் மாமியைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். ரங்கா என்கிற ரங்கநாயகிக்கு முப்பது வயது. அவள் கணவன் கோபாலகிருஷ்ணன் மெஷின் மேன். காலையில் ஆறு மணிக்கெல்லாம் சைக்கிளில் போய்விடுவான். வீடு திரும்ப எப்படியும் ஏழு எட்டு மணியாகிவிடும். ஊருக்கு வெளியே தொழிற்சாலை. சமையல் வேலையெல்லாம் அவளுக்கு இல்லை. எல்லாவற்றையும் தொழிற்சாலை நிர்வாகமே கவனித்துக்கொண்டுவிடுகிறது. ஆனால் கொடுக்கிற காசுக்கும் சோற்றுக்கும் சக்கையாக பிழிந்துதான், ஆளை வெளியே விடும். கல்யாண புதிதில் ஓரிரு முறை கணவனுடன் வெளியே செல்வதற்காக அவள் அந்த தொழிற்சாலையின் பெரிய கதவருகில் நின்றிருக்கிறாள். சங்கு ஊதியவுடன் சாரி சாரியாக தொழிலாளிகள் வெளியே வருவார்கள் ஆலையின் புகை போக்கியின் வழியே வழியும் புகைபோல. காலையில் திடப்பொருளாக போகும் இவர்கள் புகையாகத்தான் வெளியே வருகிறார்கள் என்று ரங்காவிற்குத் தோன்றும். கோபியும் அப்படித்தான் வருவான். ஆனாலும் நீரில் போட்ட பஞ்சு போல அவன் முகமும் உடலும் ரங்காவைக் கண்டவுடன் புத்துணர்ச்சியால் ஊறும். ரங்கா தன் வீட்டுக்கூடத்தை ஒரு முறை நோட்டம் விட்டாள். எப்படி இருந்த வீடு! எப்படியாகிவிட்டது? சனி, ஒரு வாரம் முன்பு தான் தன் சூம்பிய காலை அவள் வீட்டிற்குள் எடுத்து வைத்தது. பக்கத்து வீட்டு லச்சுமி சன்னல் வழியாகக் குரல் கொடுத்தாள். “லதாம்மா ஒங்களுக்கு •போன்” ரங்காவிற்கு அது அதிசயமான விசயம். அவளுக்கு யாரும் தொலைபேசியில் அழைப்பதில்லை. உறவு என்றிருந்த பெற்றோர்கள் போய் சேர்ந்து வெகு நாளாகிவிட்டிருந்தன. ஒரே ஒரு அண்ணன் கோவையில் இருக்கிறான். இருக்கிறானா என்று நினைக்கத் தோன்றும்படி இருக்கும் அவன் நடவடிக்கை. வீடு கட்டியிருக்கிறானாம். கார் வாங்கியிருக்கிறானாம். எல்லாம் அண்ணி வந்த ராசி. எல்லாம் வாங்கியவன் உறவுகளை அறுத்துக்கொண்டு, தனிமையையும் வாங்கிவிட்டான் போலிருக்கிறது. முதல் இடி அவள் மேல் இறங்கியது அந்த தொலைபேசி வழியாகத்தான். யாரோ சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது. “எட்டு நம்பர் ஆக்கிட்டாங்களாம். இனி எல்லாருக்கும் அஷ்டமத்திலே சனி. எங்கே நல்ல செய்தி வரப்போகுது?” அவள் சந்தோஷத்தைத் தொலைத்த தொலைபேசிச் செய்தி இதுதான். வேலைக்கு நடுவில் கோபிக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது. வலது கையில் அடி. ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். நிர்வாகமே வீட்டிற்கு கொண்டுவந்து சேர்க்கும். வீட்டிற்கு வந்து கதவைத் திறப்பதற்குள், கோபியைக் கொண்டுவந்துவிட்டார்கள். வலது கை பாதிக்கு மேல் மாவு கட்டு போட்டிருந்தார்கள். ஈ.எஸ்.ஐ. பணம் வரும் என்றார்கள். ஒரு காகிதப் பையில் மருந்துகளும் அதனடியில் மருத்துவர் சீட்டும் வைத்துவிட்டு, கைகளை கட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றுவிட்டு, வந்தவர்கள் போய்விட்டார்கள். படுக்கையில் இருந்த கோபி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். கழுத்து வரை போர்த்திவிட்டிருந்தார்கள். அடிபட்ட வலி தூக்கத்திலும் அவன் முகத்தில் தெரிந்தது. அடுத்த நான்கு நாட்களுக்குள், பி.டி. வகுப்பில் ஒட்டப்பந்தயத்தில் தடுக்கி விழுந்த லதா மண்டையை பெயர்த்துக்கொண்டு கட்டுடன் வந்தாள். அஞ்சறை பெட்டியில் ஆறு மாதமாகச் சேர்த்து வைத்திருந்த ஐநூறு ரூபாயும் காணாமல் போனது. பக்கத்து வீட்டு லச்சுமிதான் ஒருமுறை திரிபுரம் மாமியைப் பற்றிச் சொன்னாள். மாமி ஜாதகம் பார்த்து பிட்டு பிட்டு வைக்கிறாளாம். பரிகாரமும் சொல்கிறாளாம். வந்த பிணியும் பீடையும் பிடறியில் பின்னங்கால் பட ஓடிவிடுகின்றனவாம். ஒரு நாள் துணைக்கு லச்சுமியுடன் போனபோது, ரங்காவும் மாமியைப் பார்த்திருக்கிறாள். கொஞ்சம் தாட்டியான உருவம். இரண்டு ரூபாய் அகலத்திற்கு குங்குமப்பொட்டு. முகமெல்லாம் மஞ்சள் தடவி சற்றே தடித்துவிட்ட முகம். வண்டி மையைத் தடவினாற் போல் அடர்த்தியான புருவங்கள். லேசாக மீசை கூட இருந்தது. மாமியை நோட்டம் விட்டதில், லச்சுமி கேட்டதும், மாமி சொன்ன பரிகாரமும் கோட்டை விட்டாயிற்று. அதில் வருத்தமுமில்லை அவளுக்கு. அப்போது எல்லாம் நல்லபடியாகத்தானே இருந்தது. இந்த ஒரு வாரத்தில்தான் மாமியை நோக்கி நினைவைத் திருப்பிவிட்டிருக்கிறது மனசு. கூட்டம் இருக்கும் என்று எண்ணி காலை ஏழு மணிக்கே கிளம்பிவிட்டிருந்தார்கள் லச்சுமியும் ரங்காவும். ” தெருவை அடைச்சாப்பல கூட்டம் நிக்குமே. என்னா சனத்தையே காணம் ” லச்சுமி ஆச்சரியப்பட்டாள். தெரு காலியாக இருந்தது. சின்னத் தெரு. ஒரு வாகனம் வந்தால் இன்னொரு வாகனம் ஒதுங்க வேண்டியிருக்கும். மூன்றடி சந்தில் மூன்றாவதாக இருந்தது மாமியின் வீடு. அதற்கப்புறம் அடிபம்பு, குளியலறை, கழிப்பறைகள்… யாரோ இரண்டு பேர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். இவர்களைப் பார்த்தவுடன் நின்றார்கள். “மாமி இல்லையே! நேத்து காலையில அவங்க மருமகன் விபத்தில காலமாயிட்டாரு. அங்கே போயிருக்காங்க” அவர்கள் கடந்து போனபோது சொல்லிக்கொண்டே போனது ரங்காவின் காதுகளில் விழுந்தது. ” பத்துப் பொருத்தம் பாத்து பண்ணிவச்ச கல்யாணம். மருமகன் இப்படி போவாருன்னு யாருமே நெனைக்கல” கணவனுக்குக் காலை சிற்றுண்டியும், லதாவுக்கு கொடுக்கவேண்டிய மருந்தும், ஞாபகத்தில் வர, ரங்கா வீடு நோக்கி விரைந்தாள்.                                                  26.சரியான கட்டணம்   அந்த ஆட்டோ பின்னால் எழுதியிருந்த வாசகம் மனோவைக் கவர்ந்தது. சாதாரணமாக என்ன எழுதியிருக்கும். பிரசவத்திற்கு இலவசம்.. ( ஒரு பாசக்கார ஆளாக இருக்க வேண்டும் ) சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே! ( காதல் தோல்வி? ) இது வித்தியாசமாக இருந்தது. சரியான கட்டணம் நிறைவான பயணம். அட புதுசாக இருக்கிறதே.. வரிசையில் நான்காவதாக இருந்தது அந்த ஆட்டோ.. மூன்று ஆட்டோக்களுக்கு ஆட்கள் வரும்வரை காத்திருந்து விட்டு அந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டான் மனோ. ஓட்டுனனுக்கு இருபது வயது தான் இருக்கும். முன்னிருக்கும் கண்ணாடியில் ஒரு முதியவரின் புகைப்படம் இருந்தது., வேறு கடவுளர் படங்கள் ஏதும் இல்லை. மெல்ல பேச்சுக் கொடுத்தான் மனோ. “ என்ன தம்பி படிக்கலியா? “ “ முடிச்சுட்டேங்க.. இளங்கலை அறிவியல்.. முதல் வகுப்பில் தேர்வாகியிருக்கேன்” “ அரசு வேலை அல்லது தனியார் வேலை கெடைக்கலியா? “ “ கெடச்சுதுங்க ஆனா போகல “ ஆச்சர்யப்பட்டான் மனோ.. சில பேர் இப்படி இருக்கிறார்கள். ஒருவரிடம் அடிமையாக வேலை செய்ய மாட்டேன். சுய தொழில் தான் செய்வேன் என்கிற வைராக்கியம். அதுவாக இருக்குமோ காரணம். “ ஏன் தம்பி ஒருத்தர் கிட்ட வேலை பார்க்கிறது பிடிக்க்கலியா கேவலமா.. ஆட்டோ கூட ஒரு முதலாளிக்கு சொந்தம்தானே.. அப்ப ? “ “ ஆமாங்க இது கூட ஒரு முதலாளிக்கு சொந்தம் தான் ஆனா அந்த மொதலாளி நான் தான் “ வியப்பு கூடியது மனோவுக்கு. இருபது வயதில் சொந்த ஆட்டோ.. வசதி இருக்கும் போல. அவன் எண்ணத்தை படித்தது போல சொன்னான் அந்த இளைஞன். “ வசதியெல்லாம் இல்லீங்க.. சாதாரணக்குடும்பம் தான். ஆனால் கை தூக்கி விட என் மாமா இருந்தாரு. இதோ இந்த புகைப்படத்துல இருக்கறவருதான் அவரு” சரவணன் பிறந்தபோதே அவனது தந்தை இறந்து போயிருந்தார். கோஷ்டி சண்டை கட்சி பாகுபாடு என்று எத்தனையோ காரணங்கள் அதற்குச் சொல்லப்பட்டன. ஆதரவற்ற சரவணனையும் அவன் தாயையும் எடுத்து காப்பாற்றியவர் செல்லமுத்து. செல்லமுத்து அந்த பகுதியில் ஒரு முதலாளி. ஆறு ஆட்டோ ரெண்டு டெம்போ என்று வசதியாக வாழ்பவர். “ பட்டறையிலே ஆளில்லைன்னு தங்கைச்சி புள்ளையை எடுத்து வளக்குறாரு. அவரு புள்ளைங்கள்ளாம் கான்வெண்டில படிக்கும். இவனுக்கு ஸ்பேனர்தான் “ ஊரே பேசியது. பொய்யாகினார் செல்லமுத்து. கவர்மெண்ட் பள்ளிதான் ஆனால் நல்ல பள்ளி. வாரத்துக்கு ஒரு முறை தானே சென்று பள்ளி முதல்வரையும் ஆசிரியரையும் சந்தித்து சரவணனின் வளர்ச்சி பற்றி விசாரிக்க தவற மாட்டார் செல்லமுத்து. அவர் பிள்ளைகள் நடந்தே பள்ளிக்கு போகும். சரவணனுக்கு ஆட்டோதான். ஆனால் சரியாக மதிப்பெண்கள் வாங்கவில்லை என்றால் அவர் பிள்ளைகள் வசவோடு தப்பித்துவிடும். ஆனால் சரவணனுக்கு உடம்பு காய்த்துப் போகும். இரவு அவரே உட்கார்ந்து எண்ணெய் தடவுவார் அவன் முதுக்கு. கொஞ்சம் பெரியவனான உடன் அவனிடம் சொன்னார் செல்லமுத்து. “ எப்படி இது எல்லாம் வந்தது தெரியுமா? நியாயமான வழியில இல்லை. மீட்டருக்கு சூடு வக்கிறது. ஊர் தெரியாத ஆட்கள் வந்தா சுத்திகினு போயி காசை ஏத்தறது.. கொஞ்ச நாள் கூலிப்படைக்கு கூட ஆட்டோ ஓட்டியிருக்கேன்.. ஆனா என்னா பிரயோசனம் இத அனுபவிக்கறதுக்கு எனக்கு ஆரோக்கியம் இல்லையே” சரவணன் மனதில் இது ஆழமாக பதிந்து போனது. என்ன படித்தாலும் நானும் ஆட்டோதான் ஓட்டப்போகிறேன். ஆனால் நேர்வழியில் நியாயமான வழியில். பட்டப்படிப்பு படித்து முடித்தவுடன் மந்திரி சிபாரிசில் அவனுக்கு அரசு வேலை காத்திருந்தது. நிராகரித்தான். ஆட்டோ என்றது செல்லமுத்து அவனை கோபத்துடன் பார்த்தார். அவன் முறைப்பைக் கண்டு அடங்கிப்போனார். முதல் ஆட்டோ அவருடையது. “ சந்தையில இதன் மதிப்பு எவ்வளவு? “ “ அது எதுக்கு உனக்கு? “ “ சொல்லேன்” “ நாப்பதாயிரம் ரூபா” இரவு பகலாக ஓட்டி ஒரே வருடத்தில் அடைத்தான் அந்த பணத்தை. இப்போது ஆட்டோ அவனுக்கு ஒரு பந்தம். நேர்மை எப்போதும் சொந்தம். மனோ இறங்கிப் போகும்போது மீட்டரில் நாற்பத்தைந்து ரூபாய் ஆகியிருந்தது. சரவணன் சில்லறை தேடிக்கொண்டிருக்கும்போது இறங்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான். சர்ரென்று ஆட்டோ அவனருகில் வந்து நின்றது. ஐந்து ரூபாய் தாளை நீட்டியபடி சிரித்தான் சரவணன்.                                                         27.அபிநயங்கள்   நீலக்கடலின் அலைகள் நித்தமும் தாலாட்டும் கரையோரம் அமைந்திருந்தது அந்தக் கட்டிடம். முற்றிலும் கண்ணாடிகளால் மறைக்கப்பட்டு ஒரு நீல அரக்கனைப்போல எழும்பி நின்றது அது. நான்கு கோபுரங்கள், எட்டு மின் தூக்கிகள், சிறிய பூங்கா. நடை பயில தனியாக சிமெண்ட் பூசப்பட்ட பாதை. உடற்பயிற்சி கூடம். நூலகம். கோயில். கூடி அளவளாகவும் சிறிய கூடம். அனைத்து இடங்களும் பளிங்குக் கற்களால் நிரப்பப் பட்டிருந்தது. மேட்டுக் குடியினர் வாழும் குடியிருப்பு அது. கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட அடுக்கு மாடி வீடுகள் இருக்கும். இருபத்தி நான்கு மணி நேர காவல், அந்நியர் வருகைக்குத் தடை, விசாரணை, கவனிப்பு எல்லாம் உண்டு அங்கே. தனுஜா ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறாள். வருடத்திற்கு பத்து லட்ச ரூபாய் சம்பளம். சொந்தமாக கார், செல் போன், ஏழெட்டு கடன் அட்டைகள் என்று வசதியாக வாழ்பவள். அவளுடைய கணவனுடன் பிணக்கு ஏற்பட்டு அவர்களது உறவு ரத்து ஆகி, நான்கு வருடங்கள் ஆகிறது. அவளுடைய கணவனை ஞாபகப்படுத்தும் ஒரே உறவு, அவளது மகள் பிரயத்தனா.. வயது பத்து.. ஐந்தாவது படிக்கிறாள். இங்கே தனுஜாவைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். தனுஜா அமெரிக்க ஆங்கிலம் பேசும் இந்தக் காலப் பெண்மணி. தலை முடியை ஆண்பிள்ளை போல் வெட்டிக் கொண்டு, கால்சராய், குட்டைச் சட்டை போட்டுக் கொண்டு, தொப்புள் தெரிய காரில் போகும், அம்பது கிலோ உடம்புக்காரி. அவளுக்கு அனாவசியங்கள் பிடிக்காது. வெட்டு ஒன்று, துண்டு ரெண்டுதான். மார்கழி மாதக் கச்சேரிகள், மற்றும் நாட்டிய நிகழ்வுகளுக்கு, தனுஜா ஒரு கௌரவ விருந்தாளி. கூடவே பிரயத்தனாவும் வருவாள். அங்குதான் அவள் அழகிரியை சந்தித்தாள். கனடா நாட்டிலிருந்து வந்த ஜோத்ஸனா ராமகிருஷ்ணனின் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு, தனுஜா போயிருந்தாள். அந்த நிகழ்வுக்கு அழகிரிதான் நட்டுவாங்கம். ஒரு பெண்ணின் நாட்டிய அரங்கேற்றத்திற்கு, ஒரு ஆண் நட்டுவாங்கம் செய்வதே, அவளுக்கு ஆச்சர்யமாகவும், கொஞ்சம் அசிங்கமாகவும் கூடப் பட்டது. ‘ இதென்ன பொட்டைத் தனமா இருக்கு .. இவனுக்கு வேற வேலை கெடைக்கலியா .. ‘ என்று அவள் மனம் நினைத்தது. அழகிரி அழகான பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்தான். ஆறடி உயரமும், எலுமிச்சைப்பழ நிறமும் கொண்டவனாகவும் இருந்தான். பழைய காலத்து பாகவதர் கிராப் வைத்திருந்தான். அதை நடு வகிடு எடுத்து, படிய வாரியிருந்தான். நெற்றியில் ஒரு ரூபாய் அளவு, பெரிய சாந்து பொட்டு வைத்திருந்தான். “ சரியான அம்பி “ என்று முணுமுணுத்தாள் தனுஜா. கனடா பெண் நிகழ்வு முடிந்தது முக்கியமானவர்களை மேடைக்கு அழைத்து, கவுரவம் செய்தது. போனவர்களில் தனுஜாவும் ஒருத்தி. “ ப்ளீஸ் மேம்! அழகிரி சாருக்கு நீங்கதான் சால்வை போர்த்தணும் “ “ வித் ப்ளெஷர் “ என்று சால்வையை வாங்கிக் கொண்டே திரும்பினாள் தனுஜா. நெளிந்தபடியே நின்று கொண்டிருந்தான் அழகிரி.. ‘ நெளியாதே ஆம்பளையாட்டம் நில்லு ‘ என்று மனதிற்குள் கருவினாள் தனுஜா. மேலுக்கு சிரித்தபடியே சால்வையை அவன் தோளின் மேல் போர்த்தினாள். “ ரொம்ப நன்றிங்க ‘ அவள் கையை மென்மையாகக் குலுக்கினான் அழகிரி. அவன் கை சில்லென்றிருந்தது. கூட கொஞ்சம் ஈரம் வேறு. யாரும் பார்க்காத போது, மெல்ல கைக்குட்டையால் கையை அழுந்தத் துடைத்துக் கொண்டாள் தனுஜா. ** அடுத்த வாரமே, அழகிரியை காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தனுஜாவிற்கு. பிரயத்தனாவின் பள்ளியில் ஆண்டு விழா. அதற்கு அவள், கண்டிப்பாக ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென்று, பள்ளி நிர்வாகி சொல்லிவிட்டார். “ கண்ணனைப் பத்தின பாட்டு. பிரயத்தனாவோட அழகுக்கு, அவள் ஆண்டாள் வேஷம் போட்டா, புரோக்கிராம் பிச்சுண்டு போகும். அதனால அவள தயார் பண்ணிடுங்கோ” பிரயத்தனாவுக்கும் நாட்டிய ஜுரம் வந்து, ஜன்னி கண்டது போல் அரற்ற ஆரம்பித்து விட்டாள். “ மம்மி இன்னும் மூணு நாள்தான் இருக்கு. எப்படிம்மா நான் ஆடுவேன். நீதான் ஏற்பாடு பண்ணனும். ஒனக்குதான் பெரிய பெரிய மனுஷாள்லாம் தெரியுமே. அன்னிக்குக்கூட ஒருத்தர், தாம் தீம்னு கட்டையை தட்டிண்டு பாடினாரே அவரக்கூட தெரியுமே. சொல்லிக் கொடுக்கச்சொல்லும்மா..” ‘ தாம் தீம்.. கட்டை ‘ தனுஜா யோசித்தாள். யாரைச் சொல்கிறாள்? “ யாருடி” என்றாள். உடம்பை லேசாக நெளித்துக் காட்டினாள் பிரயத்தனா. புரிந்து விட்டது. இதையே அவள் செய்து காட்டி பிரயத்தனாவை சிரிக்க வைத்திருக்கிறாள். அழகிரி ..!பொட்டை ..! அதிவேகமாக செயல்பட்டாள். லையன்ஸ் கிளம் ராமசுப்புவுக்கு தொலைபேசினாள். “ ஓ தனுஜா! ஹௌ ஸ்வீட் மை டியர் “ என்று வழிந்தது அறுபது வயது கிழம். ‘ குப்பையை ஒதுக்கு மேன் ‘ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டாள். தன் தேவையை அவரிடம் சொன்னாள். இரண்டு மணிநேரத்தில் அழகிரி, அவளது வீட்டின் அழைப்பு மணியை அடித்துக் கொண்டிருந்தான். விவரம் சொல்லி, தொகை பேசி, ஏற்பாடு செய்து விட்டு, அவள் நட்சத்திர ஓட்டல் விருந்துக்கு போனாள். வீடு திரும்பிய போது இருட்டியிருந்தது. லேசான போதையில் அழைப்பு மணியை அழுத்திய போது, கதவு லேசாக திறந்திருப்பது தெரிந்தது. சட்டென்று போதையின் கிறக்கம் விலகியது. ‘மை காட்! என்ன நடந்திருக்கும்? கதவு திறந்திருக்கிறதே! பிரயத்தனா ?’ மனம் வாயு வேகத்தில் சிந்தித்தாலும், உடல் ஒத்துழைக்க மறுத்தது. கால்கள் பின்னின. ராஜஸ்தான் கம்பளம் கால்களை இடறியது. தடுமாறி விழுந்த அவளது கைகளில் தனுஜாவின் பிஞ்சு விரல்கள் அகப்பட்டன. கண்களை இறுக்க மூடிக்கொண்டு, மெல்ல விரல்களை வருடினாள். மேல்நோக்கி கை ஊர்ந்தது. விரல்களைத் தாண்டி முழுக்கையும் அதற்கடுத்தாற்போல் முகமும்.. திடுக்கிட்டு கண்களைத் திறந்தாள். சோபாவின் மேல் தனுஜா தூங்கிக் கொண்டிருந்தாள். அயர்ச்சியின் சாயல் அவள் முகத்தில் தெரிந்தது. ‘செக்யூரிட்டி எங்கே? ஆயா எங்கே? மை காட் எல்லோரும் பிரயத்தனாவைத் தனியாகவா விட்டு விட்டு போய்விட்டார்கள்?’ எல்லா விளக்குகளையும் போட்டாள். சுற்றிலும் பார்த்தாள். திவான் கட்டிலில், ஒருக்களித்து படுத்தபடியே, அழகிரி இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “ நீ இன்னும் போகலை? “ “ வீட்டில யாரும் இல்ல. கொழந்த தனியா இருந்தது. அதான்.. “ என்று இழுத்தான். அப்புறம் இது ஒங்களோடது..” என்று அவளுடைய பணப்பையை கொடுத்தான். “ இது எப்படி ஒங்கிட்ட? “ யூ சீட்! நான் வராம இருந்திருந்தா இதை எடுத்துண்டு ஓடிருப்ப அப்படித்தான “ “ இல்ல மம்மி எடுத்துண்டு போகாம இருக்கறதுக்குத்தான், அங்கிள் இங்கியே இருக்காரு“ என்றாள் தூக்கத்திலிருந்து எழுந்த பிரயத்தனா. “ வாட் நான்சென்ஸ்! ஆயிரம் ரூபாய் மெய்டெனன்ஸ் தரேன். என்ன செக்யூரிட்டி இருக்கு இந்த காலனில.. அசோசியேஷன் மீட்டிங்ல கிழிக்கிறேன் பாரு.. ஆமா அந்த தடிச்சி ஆயா எங்க.. அடுத்த வாரம் அவளுக்கு சீட்டு கிழிக்கிறேன் பாரு.” அதுக்கெல்லாம் அவசியமில்ல மேடம். அவ இனிமே வரமாட்டா, ஆமாம் மேடம்! கொழந்த நகை, பணமெல்லாம் அவதான் எடுத்திண்டு போறதா இருந்தா. நான் பாத்துட்டேன். அதான் இதப் போட்டுட்டு ஓடிப்போயிட்டா “ என்றான் அழகிரி.. ‘ மை காட் அவளா! நாலு பேரைக் கேட்டு அலசி ஆராய்ந்து, அப்புறம்தானே அவளை வேலைக்கு வச்சேன். இந்த மாசத்தோட அவ வந்து பத்து மாசமாச்சு. ஒரு சின்னத் தப்பு பண்ணலயே அவ.. மே பி பெரிய தப்பு பண்றதுக்காக என் நம்பிக்கையை வளர்த்திருக்கா.. ‘ “ அப்ப நான் கெளம்பறேன் மேடம் “ என்று நெளிந்தபடி சொன்னான் அழகிரி. அதில் ஒரு ஆண்மை இருப்பதாகப் பட்டது தனுஜாவுக்கு. எங்கோ அவள் மனதில் மூலையில் சின்னதாக ஒரு பூ பூக்கத் தொடங்கியது!         28. துவக்கு கோமதி அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தாள் அவனுக்கு அது புதிதான விஷயமில்லை. எல்லா விடுமுறை நாட்களிலும் அவள் இப்படித்தான் இருப்பாள். வீக் எண்ட் ஜாய் என்று அதற்கு பெயரும் சொல்வாள். ‘ எல்லா விடுமுறை நாட்களும் நம்ம பேட்டரியை ரீ சார்ஜ் செய்துக்கற நாளுங்க. அத எல்லாரும் செஞ்சு கிட்டா சோர்வே வராது ‘ இது கிட்டத்தட்ட மேற்கத்திய மனோபாவம் என்று நினைத்துக் கொள்வான் அவன். ஆனால் வெளியில் சொல்வதில்லை. அவள் சந்தோஷத்தைக் கெடுப்பானேன். தவிரவும் மீதமுள்ள ஐந்து நாட்களும் என்ன ஓட்டமாக ஓடுகிறாள். அதற்கு இந்த ரீ சார்ஜ் அவசியம் தான் என்று நினைத்துக் கொள்வான். சனி ஞாயிறு சோம்பல் கோமதிக்கு இல்லை. எல்லா நாளும் போலத்தான். இவன் எழுந்திருப்பதற்குள் அவள் குளித்து முடித்து ‘குப்’பென்று மலர்ந்திருப்பாள். எங்கிருந்து வருகிறது இவளுக்கு இந்த எனர்ஜி ? சில அபூர்வ நாட்களில் பனிமலர்களைப் போல் அவள் முகத்திலும் ஈரத்திவலைகள் இருக்கும் . அது அவன் சில நாட்களில் சீக்கிரம் எழுந்துவிட்டதனால் கிடைத்த தரிசனம். அதற்காகவே ஒவ்வொரு இரவும், காலை சீக்கிரம் எழுந்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொள்வான். ஆனால் அவனால் முடிவதில்லை. அது சரி தினமும் கிடைத்துவிட்டால் அது ரசிக்கக் கூடியதாக இல்லாமல் போய் சராசரியாக, சாதாரணமாக ஆகிவிடுமோ என்ற அச்சமும் அவனுக்கு உண்டு. பிரபா இன்னும் எழுந்திருக்கவில்லை. பிரபாவிற்கு மூன்று வயது. ப்ளே ஸ்கூல் போகிறான். ரொம்ப துரு துரு. கோமதி அலுவலகம் செல்லும்போது, அவனைக் கொண்டு விட்டு, சாயந்தரம் அழைத்துக்கொண்டு வருவாள். வரும் போதே, ஏதாவது பேசிக்கொண்டே வருவான் பிரபா. அவன் பாஷை கோமதிக்கு மட்டும்தான் புரியும். அவனுக்கு புரிந்ததேயில்லை. கோமதி இன்று பிரபாவுடன், எங்கோ வெளியே செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. வேலைகள் ஜெட் வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. கோமதி எப்பவும் வேகம்தான். இன்று கொஞ்சம் கூடுதல் வேகம். ‘ என்னங்க… காபி வச்சிருக்கேன்.. எடுத்துக்கங்க. டிபன் காஸரோல்ல இருக்கு. மதிய சாப்பாடு “அவன்” ல வச்சிட்டுப் போறேன். சூடு பண்ணிக்குங்க.. என்ன சரியா? ‘ எங்கே போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம்தான். ஆனாலும் கேட்கவில்லை. போகும்போது எப்படியும் தகவல் வரும். எங்கு போகிறார்கள்? எப்போது வருவார்கள் ? என்று. பிரபாவிற்கு இன்று விடுமுறை நாள் என்று எப்படித் தெரிகிறதோ ? எழுந்தவுடன் பாத்ரூம் வாசலில் போய்தான் நிற்கிறான். கோமதி, ஐந்து நிமிடத்தில் அவனுக்கு பல் தேய்த்து, குளிப்பாட்டி, பாலிஷ் செய்யப்பட்ட பட்டாக, அவனைக் துவாலைப் பல்லக்கில் தூக்கி வருகிறாள். ஒரு அழுகை இல்லை; சிணுங்கல் இல்லை; இதுவும் அவனுக்கு தினசரி ஆச்சரியம். கோமதிக்கு எல்லோரும் எப்படி வசப்படுக்கிறார்கள்? பவுடர் அடித்து, புதுத் துணி போட்டு, பிரபாவும், மடிப்பு கலையாத காட்டன் சேலையில் கோமதியும், ரெடியாகி விட்டனர். கழுத்தில் நாப்கினோடு பிரபா, ஸ்ட்ரா டம்ளரில், பால் குடித்துக்கொண்டிருக்கிறான். இட்லியைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டே, பருப்பு சாதம் கலந்து கொண்டிருக்கிறாள் கோமதி. ஏற்கனவே நிரைக்கப்பட்ட கூல் கெக் அருகில். அட்டவணை போட்டது போல் எல்லாம் நடக்கிறது. கோமதி ஆணாக பிறந்திருந்தால் ஒரு ராணுவ அதிகாரியாக ஆகியிருக்கக் கூடும். பெண்ணாக இருந்தால்மட்டும் என்ன. கோமதிக்கு அந்த தகுதிகள் நிறையவே இருக்கிறது. ‘ பீரோவிலேர்ந்து ஐநூறு ரூபா எடுத்திருக்கேன். சின்னவரை வெளியே கூட்டிட்டு போறேன். வர்ர சாயங்காலமாயிரும் நேரத்துக்கு சாப்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ‘ ‘கோமதி உனக்கு ரெஸ்டே வேண்டாமா?’ என்று கேட்க வேண்டும் போலிருந்தது. கேட்கவில்லை. சில மனிதர்கள் ஓடுவதில்தான் உற்சாகமே அடைகிறார்கள். அவர்களுக்கு ரெஸ்ட் என்பது ரெஸ்ட் இன் பீஸ்தான். கோமதி அந்த ரகம். கோமதியும் பிரபாவும் கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். ஷோபா சக்தி எழுதிய ” கொரில்லா ” நாவலை, புத்தகக் கண்காட்சியில் கோமதி வாங்கித் தந்தது, அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஈழப் போராளிகளைப் பற்றிய நாவல். அதை கையில் எடுத்துக்கொண்டான். படிக்க படிக்க, காஸரோல் இட்லியும் கோப்பைக் காபியும் அவனுக்கு மறந்து போனது. ஒரே மூச்சில் முடித்துவிட்ட போது மணி பார்த்தால் இரண்டு. கோமதி மனது சங்கடப்படுமேயென்று இட்லியையும், உணவையும், ” அவனில்” சூடு பண்ணிக் கொண்டு சேர்த்து சாப்பிட்டான். திரும்பவும் நாற்காலியில் சாய்ந்தபோது, தூக்கம் வருவதற்கு பதிலாக துக்கம் வந்தது. படித்த பக்கங்கள் அவனை புரட்டி எடுத்தன. என்னமாய் எழுதி இருக்கிறார் ஷோபா சக்தி! “ அது ஒரு நீள் சதுர அறை! அளவு? ஒரு 22 சவப்பெட்டிகளை நீள வாட்டில் அடுக்கும் அளவிற்கு இருந்தது!” போரும் மரணமும் வேறு எந்த நினைப்பையோ கற்பனையையோ தராது போலிருக்கிறது. வாய் விட்டு சிரித்த ஒரு நிகழ்வைப் பற்றி சிலாகித்தான் அவன். “ அது ஒரு பேருந்து. ஒரு பெரியவர் நின்று கொண்டிருக்கிறார். அவனருகில் நெருக்கமாக ஒரு இளைஞன். பெரியவர் அவனைப் பார்த்து கேட்கிறார்: “ நீ ராணுவ வீரனா?” “ இல்லை “ “ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவனா?” “ இல்லை அய்யா” “ ஆளுங்கட்சிக்காரனா?’” “ இல்லை பெரியவரே” “ தனித் தமிழ் கட்சியா?” “ இல்லை இல்லை இல்லை” “ இல்லை தானே! அப்புறம் ஏன் என் காலை மிதித்துக் கொண்டிருக்கிறாய். காலை எடுடா நாய் பெற்ற மகனே!” கண்களை மூடிய போது புத்தகக் காட்சிகள் ஒரு திரைப்படம் போல் அவனுள் விரிந்தன. உடல் தூக்கிவாரிப்போட்டது காட்சிகளின் வன்முறையால். கதவு மெல்லத் திறக்கப்படும் ஓசை கேட்கிறது. ” உஷ் ” என்று ஒரு சத்தம். கோமதியாக இருக்கவேண்டும். கூடவே கீச்சுக்குரலில் ‘ ஜோ ஜோவா? பூனை நடை நடந்து அவனைக் கடந்து போகிறார்கள். கொண்டுவந்த பொருட்களையெல்லாம் மேசையின் மேல் வைக்கிறார்கள். கோமதி படுக்கை அறைக் கதவைத் திறந்து உள்ளே போகும் சத்தம் தெளிவாக கேட்கிறது. மெல்ல கண்களைத் திறக்கிறான் அவன். ‘ அத்தாக் ‘ பிரபா ஒரு கையில் ஏ கே 47 பொம்மைத் துப்பாக்கியும், இன்னொரு கையில் ராணுவ பீரங்கி வண்டி பொம்மையும் வைத்துக்கொண்டு நிற்கிறான். ‘ கோமதி இந்த சனியன்களை மொதல்ல வெளியே தூக்கி எறி ‘ அதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாத அவன் கத்துகிறான்.  அவன் .. சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும், கண்ணிவெடியில் கால்களை இழந்த இந்திய அமைதிப்படை வீரன் மருதநாயகம். பி.கு. தமிழ் ஈழத்தில் ” துவக்கு ” துப்பாக்கியைக் குறிக்கும் சொல்.             29. பிதாமகன்   “ ஊதாரிப்பய “ என்று ஓங்கிய குரலில் திட்டிக் கொண்டிருந்தார் ராமசாமி. அவர் குறிப்பிட்ட ஊதாரிப்பய அவர் மகன் கணேசன். பத்தாவது படிக்கிறான். படிப்பில் எந்த சோடையுமில்லை. ஆனால் கையில் தான் காசு நிற்காது. அனாவசியமாக எதுவும் செலவு செய்பவனுமில்லை அவன். கொஞ்சம் சினிமா, அதிகமாக புத்தகங்கள் அவ்வளவுதான். இன்று ராமசாமியின் கோபத்திற்கு காரணம் இருக்கிறது. பாட புத்தகம் வாங்கக் கொடுத்த நூறு ரூபாயை மிச்சம் இல்லாமல் செலவு செய்துவிட்டு வந்து நிற்கிறான் கணேசன். சாந்தலட்சுமி பெயருக்கேற்றவாறு சாந்தமானவள். எதற்கும் அதிர்வதில்லை அவள். சமையற்கட்டின் வாசற்படியோரம் அவளது ஒரு பாதி முகம்தான் தெரிகிறது. ஓரக்கண் அடுப்பில் இருக்கும் வெண்டைக்காய் தீய்ந்து போகாமல் கண்காணிக்கிறது. “ஏ ஜடம் கொஞ்சமாவது உணர்ச்சியைக் காட்டு. ஒன் புள்ள இப்படியே போனான் இருக்கறதுக்கு எடம் கூட இல்லாம கஷ்டப்படுவான். தத்தாரி..” ‘என்னடா ஆச்சு’ என்று கண்ணாலேயே கேட்கிறாள் அம்மாக்காரி. கை நிறைய புதுப்புத்தகங்களை எடுத்துக் காட்டுகிறான் கணேசன். கண் இமைகளை லேசாக மூடித் திறக்கிறாள். அட இவ்வளவுதானா என்று அதற்குப் பொருள். ராமசாமி, பிள்ளைகளை அடித்து வளர்ப்பதில், நம்பிக்கை இல்லாதவர். ரெண்டொரு சுடு சொற்கள் திருத்த முடியாவிட்டால், அடி மட்டும் திருத்திவிடுமா என்ற கேள்வி அவர் மனதுக்குள் உண்டு. அவருடைய சிறு பிராய அனுபவங்களும் அதற்குக் காரணம். அவருடைய தந்தையாரும் அவரை அடித்ததில்லை. ஏன் இப்போது அவர் திட்டுவது போல், திட்டியது கூட இல்லை. ஆனாலும் அவர் ஒன்றும் வாழ்க்கையில் சோடை போகவில்லை. படித்தார். நல்ல அரசாங்க வேலைக்கான தேர்வில் முதலாவதாக வந்தார். இன்று கை நிறைய சம்பாதிக்கிறார். ஆனால் அவரொத்த பையன்கள் கண்டிப்பின் காரணமாக கையில் பணம் சேர்ந்ததும் கெட்டொழிந்தது அவருக்கு கூடுதல் ஞானத்தைக் கொடுத்திருந்தது. விளையாட்டும் கேளிக்கைகளும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதை அவர் உணர்ந்தேயிருந்தார். தன் பிள்ளைகளுக்கு உணர்த்தியிருந்தார். ஆனால் அவை அளவு மீறிப் போகும்போதுதான் அவர் கோபப்படுகிறார். கணேசன் சரியான புத்தகப் பைத்தியம். புதிதாக ஏதாவது கடையில் தென்பட்டால் வாங்க அவன் கை அரிக்கும். ஆனால் அவன் ஒன்றும் மர்ம நாவல்களையும், பாக்கெட் நாவல்களையும், வாங்குவதில்லை. அவன் வாங்குவதெல்லாம் ஒன்று இலக்கியம் அல்லது பொது அறிவு. ராமசாமி பல நெறிகளைக் கொண்டவரானாலும் புத்தகம் படிக்கும் பழக்கம் அவரிடம் அறவே இல்லை. அதனால் புத்தகங்களுக்காக செலவழிக்கும் காசு வீண் என்பது அவர் எண்ணம். படிக்கும் எண்ணமிருந்தால் நூலகம் இருக்கவே இருக்கிறது என்பது அவர் கட்சி. ராமசாமி கோபம் தணிந்து கொல்லைப்பக்கம் போய்விட்டார். கணேசன் டிரங்கு பெட்டிக்குள் புதிதாக வாங்கிய புத்தகங்களை அட்டை போட்டு அடுக்கிக் கொண்டிருக்கிறான். வாசலில் தபால்காரரின் சைக்கிள் மணியோசை கேட்கிறது. “ சார் மணியார்டர் “ காசித்துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டே, ராமசாமி கொல்லைப் புறத்திலிருந்து வருகிறார். “ கொடுப்பா.. எங்கிருந்து? “ நாள் கிழமையென்றால் சாந்தலட்சுமியின் அண்ணன் அவளுக்கு பணம் அனுப்புவதுண்டு. அதுவாகத்தான் இருக்கும் என்பது அவர் நினைப்பு. “ தம்பி பெயருக்கு வந்திருக்குங்க. டெல்லியிலிருந்து..” “ யாருக்கு கணேசனுக்கா..” அவர் குரலில் ஆச்சர்யம். “ ஆமாங்க.. தம்பி ஏதோ போட்டியிலே கலந்துகிட்டது போலிருக்கு. அதான் பரிசு அனுப்பியிருக்காங்க..” வாசலில் நடைபெற்ற உரையாடலை கேட்டு கணேசனே வந்துவிட்டான். இப்போது சாந்தலட்சுமி வாசல் நிலைப்படியில் பாதி முகம் காட்டி நிற்கிறாள். “ ஓ ஸயின்ஸ் டேலண்ட் எக்ஸாமா? “ என்றபடியே மணியார்டர் ·பாரத்தை வாங்குகிறான் கணேசன். கையொப்பமிட்டபின் பணத்தை தருகிறார் தபால்காரர். ராமசாமியால் நம்பவே முடியவில்லை. ஐநூறு ரூபாய் நோட்டுகள். மொத்தம் பத்து. ஐயாயிரம் ரூபாய். புத்தகங்கள் மூலம் மகன் வைத்த வைப்புத்தொகைக்கான வட்டி. இப்போதெல்லாம் ராமசாமி நிறைய புத்தகங்கள் படிக்கிறார். டிரங்கு பெட்டியிலிருந்து கணேசனும் சளைக்காமல் எடுத்துத் தருகிறான்.                                                             30. கிளிஞ்சல் பொம்மைகள்   கிளிஞ்சல்கள், சின்ன வயது முதலே, அவனை ஈர்த்திருக்கின்றன. அப்பா அம்மாவுடன், கடற்கரைக்கு, சின்னப் பையனாக போன காலத்திலிருந்தே, அவன் கிளிஞ்சல்களை சேகரித்து ரகம் பிரித்து வைப்பான். மனிதர்களின் ரேகைகள் போல், கிளிஞ்சல்களின் மேல் பலவிதமான கோடுகள் இருப்பதைப் பார்த்து, அவன் வியந்திருக்கிறான். ஒரு கிளிஞ்சலைப் போல் மற்றொன்று இருந்ததாக அவனுக்கு நினைவில்லை. அவன் வகுப்புத் தோழர்களெல்லாம், அவனைப் போல் இனம் பிரித்துக் காண தெரியாதவர்கள். அவன், இரண்டு கிளிஞ்சல்களை கையில் வைத்துக்கொண்டு, அவற்றிற்குள் இருக்கும் வேற்றுமைகளை விவரிக்கும் போது, அவர்கள் அவனை வினோதமாகப் பார்ப்பார்கள். வளர்ந்தபின் கடற்கரைக்குப் போகும் போதெல்லாம், அவன் கிளிஞ்சல் பொம்மைகளால் கவரப்பட்டிருக்கிறான். இன்று கூட அப்படித்தான். ரேகாவையும், குழந்தைகளையும், வார விடுமுறை நாளானதால், கடற்கரைக்குக் கூட்டி வந்திருந்தான். அவர்கள் முன்னே சென்று விட்டிருந்தார்கள். அவன் கால்கள், அவனை அறியாமல், கிளிஞ்சல் பொம்மைக் கடையைத் தாண்டும்போது, தானாக நின்றுவிட்டன. அழகான கிளிஞ்சல் பொம்மைகள். ஆண் பொம்மை, பெண் பொம்மை. ஆனை பொம்மை. தற்கால சிறுவர் சிறுமியர் ஆசைப்படும் டைனோசர் பொம்மை கூட இருந்தது. பெரிய கிளிஞ்சலில் முகம். சிறு கிளிஞ்சல்களினால் ஆன உடல். குழல் போன்ற கிளிஞ்சல்களினால் கோர்க்கப் பட்ட கைகள், கால்கள். ஏதோ ஒரு அட்டையிலோ அல்லது காகிதக் கூழிலோ அதை ஒட்டி வடிவமைத்திருந்தார்கள். காஸ் லைட் வெளிச்சத்தில் அவை பளபளவென்று மின்னின. “ என்னங்க! கிளிஞ்சல் பார்க்க நின்னுட்டீங்களா? அப்படி என்னதான் இருக்குதோ அதிலே! ரேகாவின் குரல் பின்னாலிருந்து கேட்டது. ரேகாவைக் காதலித்த போதெல்லாம், அவனும்,அவளும் இந்தக் கடற்கரைக்குத்தான் வருவார்கள். அப்போதும் அவன் கிளிஞ்சல் கடையைக் கவனிக்காமல் போனதில்லை. அப்போதும் ரேகாவிடம் இருந்து இதே கேள்விதான் எழும். ஆனால் அப்போதெல்லாம் அந்தக் கேள்வி ஒரு கொஞ்சல் தொனியில் இருக்கும். இப்போது, கல்யாணம் ஆகி, பதினாறு வருடங்களுக்குப் பிறகு, கேள்வி மட்டும் மாறவில்லை. ஆனால் தொனியில் கொஞ்சல் போய் அதட்டல் வந்திருக்கிறது. அலுப்பு வந்திருக்கிறது. “ இந்தக் கிளிஞ்சல்களுக்குப் பின்னால் உழைப்பு இருக்கிறது ரேகா” அவனுடைய பதிலும் மாறவில்லை. பதினாறு வருடங்களுக்கு முன்னால் சொன்ன அதே பதில். கிளிஞ்சல்களை அணு அணுவாக ரசித்தவனுக்குத்தான், அவைகளின் அருமை தெரியும். அதை பொம்மையாக்க தேவைப்படும் உழைப்பு புரியும். கிளிஞ்சல் பொம்மை செய்ய மேல் எது கீழ் எது என்று தெரியவேண்டும். மேல் கீழ் மாறிப் போனால் பொம்மையின் வடிவமே மாறிப்போகும். கிளிஞ்சல் பொம்மை செய்ய பொறுமை வேண்டும். சிறியது பெரியதாக பிரித்தெடுக்கும் பக்குவம் தெரிய வேண்டும். எது தலைக்கான கிளிஞ்சல், எது உடலுக்கான கிளிஞ்சல், எது கை எது கால் என்று புரிய வேண்டும். ஒட்டும்போது கையெல்லாம் பசை அப்பிக்கொள்ளும். கவனம் குறைந்தால் கிளிஞ்சல்கள் கையுடன் ஒட்டிக் கொள்ளும். “ என்னங்க கொழந்தைங்க எங்ங்கியோ போயிட்டாங்க. வாங்க “ ரேகாவின் குரலில் பதட்டம் இருந்தது. ‘ ங் ‘ கின் அழுத்தம் அவனை தரைக்கு இழுத்து வந்தது. அவனுக்கு இரண்டு குழந்தைகள். விஜா எட்டாம் கிளாஸ் படிக்கிறாள். மிதுன் பத்தாவது. சிறு வயதில் அவர்களுக்குக் கிளிஞ்சல்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். வளர்ந்த பின் ரேகா அவனிடம் அவர்களை அதிகம் விடுவதில்லை. “ உங்கப்பா மாதிரி நீங்களும் கிளிஞ்சல் பைத்தியம் ஆயிடாதீங்க “ அவன் ரேகாவை நோக்கி நடந்தான். விஜாவும் மிதுனும் தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கடலைப் பற்றியும், அதன் ஆபத்துகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறான். அவர்கள் இயல்பாக ஜாக்கிரதை உணர்வு கொண்டவர்கள். கடலுக்கு அருகில் போகமாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும். அவன் ரேகாவை நெருங்கிய போது, மிதுனும் விஜாவும் அருகே வந்திருந்தார்கள். விஜா ஓடி வந்து கழுத்தைக் கட்டிக்கொண்டாள். மிதுன் கைகளைக் கட்டிக்கொண்டு தனியே நின்றான். இவன் கை அசைத்தவுடன் அருகில் வந்து இடுப்பில் கை போட்டான். குழந்தைகளின் மனது ஈர சிமெண்டைப் போல.. எதை சொல்கிறோமோ அல்லது செய்கிறோமோ அது அழுத்தமாக அவர்கள் மனதில் படிந்து விடும். நல்ல விசயங்களை பதிய வைத்தல் அவசியம். கிளிஞ்சல் பொம்மைகளின் விலை மலிவை, அதைச் செய்யும் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மட்டும் பார்த்து ஒரு கணிப்புக்கு வருகிறாள் ரேகா. அவளைச் சொல்லிக் குற்றமில்லை. அவள் வளர்ந்த விதம் அப்படி. ஆயிரம் ரூபாய்க்கு பஞ்சு பொம்மைகளை வாங்கிக் குவித்திருந்தார் அவளுடைய அப்பா. அதுவும் விஜா கைக்குழந்தையாக இருக்கும்போதே.. பேட்டரியில் இயங்கும் ரோபோ, சிறிய மோட்டார் சைக்கிள் என்று வாங்கிக் கொடுத்து அசத்துகிறார் மிதுனை.. ஆனாலும் கிளிஞ்சல் பொம்மைகளில் இருக்கும் உயிரோசை அவைகளில் இல்லைதான். அதைச் சொன்னால் ரேகாவுக்கு புரியாது. விஜாவையும் மிதுனையும் பார்த்தான். ‘ இவர்களும் கிளிஞ்சல் பொம்மைகள் தான். எத்தனை ரகமான கிளிஞ்சல்கள் இவர்கள் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ‘ பிறந்தவுடன் போலியோ டிராப்ஸ், வளர்ந்தவுடன் ஜெர்மன் மீஸில்ஸ் தடுப்பூசி, எல் கே ஜி யில் இருந்து இதுவரை எத்தனையோ…. பேனா,பென்சில், புத்தகம், யூனி·பார்ம், ஷ¥, மருந்து போஷாக்கு என்று.. இதில் மேல் எது கீழ் எது என்று பார்த்து பார்த்து ஒட்டிய பெருமை ரேகாவிற்கு உண்டு. ஆனால் அவளுக்குத் தெரியாது அவள் ஒட்டிய கிளிஞ்சல்களால்தான் இன்று குழந்தைகள் ஆளுயரம், தோளுயரம் என்று வளர்ந்து நிற்கிறார்கள் என்று.                                     31. மிருக நீதி சர்வதேச விமான தளத்தை ஒத்திருந்தது அந்த விமான தளம். இலங்கையை ஒட்டிய ஒரு சிறிய நாட்டின்  பிரதான விமான தளம் அது. உள்நாட்டுப் போர் எவ்வளவு மோசமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வகையிலும், வெளிநாட்டு வர்த்தகம் செழித்து வளரவும் சிகப்புக் கம்பளம் விரித்திருந்தது அந்த நாட்டு அரசாங்கம். பல வகைகளிலும் செழிப்பு நிறைந்த நாடுதான் அது என்றாலும், தொடர்ந்த பிரச்சினைகளால், முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நாடுகளில், அதுவும் ஒன்று. உதவிக் கரம் என்ற பெயரில் அன்னிய வியாபாரக் கழுகுகள், அதன் உடல் மேல் அமர்ந்து, ரத்தம் உறிஞ்ச ஆரம்பித்து, பல ஆண்டுகள் ஆகிப் போய்விட்ட நிலையில், சமகால தலைமுறை இளைஞர்கள் எல்லோரும் வெளிநாட்டில் கிடைத்த கல்வி அறிவாலும், வேலை வாய்ப்பாலும், கற்று தெளிந்து, ரகசியமாக ஒரு இயக்கம் ஆரம்பித்திருந்தார்கள். அவர்களது இலட்சியமே தாய்நாட்டை அன்னிய முதலைகளிடமிருந்து காப்பாற்றுவது தான். அதற்கான செல்வமும் வசதியும் இந்த தலைமுறையில் அவர்களுக்கு வாய்த்திருந்தது. அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டியது தங்களது கடமைகளில் ஒன்றாகவே அவர்கள் எண்ணினார்கள். டபுள்யூ ஜெ என்ற அமைப்பு ஒன்று தயாரானது. வைல்ட் ஜஸ்டிஸ் என்ற கோட்பாட்டின் சுருக்கமே அது. பேச்சு வார்த்தைகளால் பயனில்லை. அதனால் விரயப்படும் காலமும் நேரமும், கிடைக்கப்படும் தீர்வை, நீர்த்துப் போக வைத்துவிடும். உடனடித் தீர்வு என்பது தீவிர செயல்பாடுகளால்தான் ஏற்படும் என்று திடமாக நம்பும் இளைஞர்கள் அதில் உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்கள் யாரும் படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு, தீவிர வாத இயக்கத்தில் சேர்ந்தவர்கள் அல்ல. உண்ண உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் இல்லாத ஏழைகளும் அல்ல. சிலர் கணிப்பொறு வல்லுநர்கள். சிலர் வியாபார நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள சிலர் தாங்கள் குடிபெயர்ந்த நாடுகளில் ராணுவம், விமானப் படை போன்றவற்றில் உயர் பதவிகளில் இருப்பவர்கள். உலக வரைபடத்தில் இன்னும் அறியப்படாத ஒரு இடமாக அந்தத் தீவு இருந்தது. அங்கிருக்கும் பழங்குடியினர் இதுவரை எந்த ஆராய்ச்சியாளனின் கண்ணிலும் படவில்லை. நல்லவேளை. பட்டிருந்தால் இந்நேரம் அவர்களை டிஸ்கவரி, அனிமல் ப்ளேனட், பி.பி.சி. என்று சகட்டு மேனிக்கு பிறந்த மேனியாய் காட்டியிருப்பார்கள். பிறந்த மேனியாய் காட்டுவது இவர்களுக்கெல்லாம் ஒரு மேனியா போலும். சில சமயம் ஊடக வியாபாரங்களில் சோகம் கூட, கூடுதல் விலை விற்கிறது. எங்காவது எரிமலை வெடித்தாலோ, நில அதிர்வு ஏற்பட்டாலோ, சுனாமி தாக்கினாலோ அதை வித வித கோணங்களில் படமெடுத்து, உலக மக்களின் ராத்திரி தூக்கத்தை பிளவு படுத்தும் வணிக வக்கிரம் மலிந்துதான் போய்விட்டது. குரூரம், அதிக அளவில் ரசிக்கப்பட, இயந்திரத்தனமும், எதையும் சரீர உழைப்பின்றி செய்யும் தன்மையுமே காரணம் என்று தேர்ந்த மனவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்களில் ஒருவன் பிராய்டுசன் என்று பெயர் போட்டுக் கொண்டு, சென்ற வாரம் நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சியபடியே, தற்கொலை செய்து கொண்டான். அந்தத் தீவின் பழங்குடியினர் மொத்தம் அறுபத்து எட்டு பேர். ஆயிரக் கணக்கில் இருந்தவர்கள் தாம். இன்று நாகரீகம் இன்னும் சென்றடையாத நிலையில், தங்கள் பழங்குடி மருத்துவத்தையே பூரணமாக நம்புவதாலும், அதை மீறி புதிய நோய்கள், சூழல் மாசு காரணமாக, அவர்களைத் தாக்குவதாலும், அவர்களது சனத்தொகை அருகிவிட்டது. அவர்களின் கூட்டத்தில் வயதானவன் அரசன். அவன் மனைவி அரசி. சில தலமுறை மலட்டு ஆண்களாலும் பெண்களாலும், அவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது என்பதும் அவர்களே அறியாத உண்மை. நான்கு பிரதான சாலைகள் சந்திக்கும் இடத்தில் அவன் நின்றிருந்தான். பிரதான சாலைகள் என்றால் ஒவ்வொன்றும் இரு நூறடி அகலம் உள்ள சாலைகள். அதில் பறந்து கொண்டிருக்கும் கார்கள் எல்லாம், வெண்ணையில் செய்யப்பட்ட சாலையில், செல்வது போல், வழுக்கிக் கொண்டு சென்றிருந்தன. மணிக்கு நூறு மைல் வேகத்திற்கு குறைந்து வாகனங்கள் செல்லத், தடை செய்யப்பட்ட சாலை அது. அவன் செல்ல வேண்டிய அலுவலகம் எதிர்புறத்தில் இருந்தது. அதை அடைவதற்கு அவன் சிறிது காத்திருக்க வேண்டியிருந்தது. மான் தோலின் நிறத்தை ஒத்த கோட் ஒன்றை அவன் அணிந்திருந்தான். அவன் சார்ந்த தேசத்தில், கோட் அணிவது திருமணத்தின் போதுதான் என்பதை நினைக்கும் போது, அவனுக்குச் சிரிப்பு வந்தது. இங்கே எல்லாவற்றிற்கும் கோட்தான். அணியாவிட்டாலும் மடித்து கை மேல் போட்டுக் கொள்ள வேண்டும். கருநில வண்ணத்தில் அவன் சட்டை அணிந்திருந்தான். அதை இன்சர்ட் பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். கழுத்தில் மஞ்சள் கலரில் பெயிண்டட் டை. நீலம், மஞ்சள், மான் தோல் நிறம். தன் ஊரில் இவ்வாறு அணிந்தால் ஒரு கூத்துக்காரனைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள் என்று எண்ணிக் கொண்டான். வாகனப் போக்குவரத்து சிறிது தடைபட்டு, பாதசாரிகளுக்கான சமிக்ஞை வெளிப்பட்டபோது, அவன் இயல்பு நிலைக்குத் திரும்ப நிரம்ப பிரயாசைப்பட வேண்டியிருந்தது. அவசரமாக அவன் சாலையைக் கடந்தான். எதிர்திசை நடைபாதையில் கால் வைத்து ஏறும் முன் ஒரு கார் அவனை உரசியபடி கடந்தது. “ பக் அப் மேன்” என்று திட்டியபடியே கடந்து போனான் ஒரு கறுப்பன். இந்த ஊரில் இது      “ வூட்ல சொல்லிகினு வந்தியா ”  ரகம்.   அவர்கள் நால்வர் ஒரு குழுவாக நின்றிருந்தார்கள். சரியான விகிதத்தில் அமைந்த குழு. இரண்டு ஆண் இரண்டு பெண். சராசரி வயது இருபத்தி ஐந்துக்குள் இருக்கும். அதிலும் ஒருவள் மிகவும் துறுதுறுப்பாக இருந்தாள். அவள் போட்டிருந்த வலை பனியனில் திணறிக் கொண்டிருந்தது அவளது மார்புப் பிரதேசம். அதை சர்வ பிரக்ஞையோடு உணர்ந்தவளாக, அவள் நெஞ்சை முன்னிறுத்தி பேசிக்கொண்டிருந்தாள். ஜமைக்காவின் பிரதான விமான தளம் அது. சர்வதேச விமானங்கள் வந்து போகும் இடம். சுற்றுலா என்பதே, மிகப் பெரிய அன்னிய செலாவணி ஈட்டித் தரும் நாட்டின் விமான தளம். எதைக் கொண்டு வருவதற்கும், எதைக் கொண்டு போவதற்கும், அங்கு தடையில்லை. நால்வரில் ஒருவன் தூக்கக் கண்களுடன் இருந்தான். வலை பனியன்காரி அவனை சீண்டிக் கொண்டிருந்தாள். “ தூங்குவதாக இருந்தால் என்னோடு வராதே. இங்கேயே தங்கிக் கொள். வேறு நல்ல ஆணாக நான் தேடிக் கொள்கிறேன். “ இதை அவள் சற்று உரத்த குரலில் சொன்னாள். பல தலைகள் அவளைத் திரும்பிப் பார்த்தன. அதைத் தெரிந்தே அவள் சொன்னாள். மனைவியிடமிருந்து சொற்ப விடுதலை பெற்ற ஒரு வழுக்கை மண்டைக்காரன் சற்று அவளை நோக்கி நகர்ந்தான். அவன் கையில் அந்த ஊரில் விளையும் தேங்காயைப் போன்ற ஒரு பழம் இருந்தது. அவள் அவனைப் பார்த்துக் கேட்டாள். “ உன் கையிலிருக்கும் பழம் ஆணா? பெண்ணா ? அவனுக்கு அவள் கேள்வியின் அர்த்தம் புரியவில்லை. அவன் கவனம் கையிலிருக்கும் பழத்தின் மீது இல்லை. அவன் பதில் சொல்லாமல் விழிப்பது அவளுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். தன் சகாக்களைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தாள். “ இதைச் சாப்பிட்டு பார்த்திருக்கிறாயா? இதை முழுவதுமாகச் சாப்பிடமுடியாது. ஏனென்றால் இது ஆண் பழம். பழத்தின் நடுவில் நீளமாக ஒரு தண்டு இருக்கும். “ சுற்றி இருந்தவர்கள் சத்தம் போட்டுச் சிரித்தார்கள். அவன் சிரிப்பதாக வேண்டாமா என்ற யோசனையில் தடுமாறியிருக்கும்போது, அவன் மனைவி வந்து, அவனைக் காப்பாற்றி கவர்ந்து போனாள். நாகரீக வளர்ச்சி அவ்வளவாக எட்டிப் பார்த்திராத பகுதியாக அது இருந்தது. கொஞ்சம் மலைப்பாங்கான பிரதேசம். சாலைகளும் கொஞ்சம் கரடு முரடாகத்தான் இருந்தன. இரு மருங்கிலும் தைல மரங்கள் நிறைந்த பூமி. காற்றின் வாசனையே புது விதமாக வினோதமாகக் கூட இருந்தது. அடர்ந்தக் காட்டுப்பகுதியாக தென்பட்டாலும் மருந்துக்குக் கூட வனவிலங்குகள் நடமாட்டம் ஏதுமில்லாதது,  கொஞ்சம் அதிசயமாகவும் ஏன் அதிர்ச்சியாகவும் கூட இருந்தது. அந்த சாலை கொஞ்சம் செங்குத்தாக ஏறி இரண்டாகப் பிரியும் இடத்தில் இரும்பு வேலி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. திருப்பத்தை தவற விடும் எவரும் அந்த வேலியில் தான் முட்டிக் கொள்ள வேண்டும். வேலி இரண்டு ஆள் உயரம் இருந்தது.  ஏன் அவ்வளவு உயரம் என்று பார்ப்பவர் எவரும் கேட்கக் கூடும். ஆனால் எவரும் அப்பகுதிக்கு வந்து பார்ப்பார்களா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு மனித நடமாட்டம் அற்ற பகுதியாக அது இருந்தது. வேலியின் நடுவே இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட கதவு ஒன்று இருந்தது. அதுவும் இரும்பாலானதுதான். ஈட்டிகளைச் செருகி வைத்தாற்போல் அமைக்கப்பட்டிருந்த கதவு அது. அதை ஒட்டினாற்போல் உள்பக்கம் ஒரு மரக் கூண்டு இருந்தது. அதன் கதவு சாற்றி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணுக்கு சுமார் அறுபது வயதிருக்கலாம். அவள் உடை, அவள் உடலை முழுவதும் மறைப்பதாக இருந்தது. முன்பக்கம் நாடா வைத்து மூன்று இடங்களில் இறுக்கிக் கட்டப் பட்டிருந்தது. அதன் மேல் கரும் பச்சை நிறத்தில், மருத்துவ மனையில் பயன்படுத்தப்படும் மேலாடை ஒன்றை அவள் அணிந்திருந்தாள். மேலாடை கட்டப்படவில்லை. அது காற்றில் அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்தது. அவள் ஓடிக் கொண்டிருந்தாள். பின் பக்கம் திரும்பிப் பார்த்தபடியே  ஓடிக்கொண்டிருந்தாள். திடீரென்று மேகங்கள் கருக்க ஆரம்பித்தன. இடியுடன் கூடிய மழை பெய்தது. அவள் ஓட்டத்தை நிறுத்திவிட்டு, பின்பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவள் தாண்டி ஓடிவந்த பகுதியில், வெயில் சுளீரென்று காய்ந்து கொண்டிருந்தது. அவள் முகத்தில் இனம் புரியாத பீதி குடிகொள்ள ஆரம்பித்தது. அவள் மீண்டும் வேலிக் கதவை நோக்கி ஓட ஆரம்பித்தாள். அப்போதுதான் அது நிகழ்ந்தது. அவள் காலடியில் இருந்த பூமி பிளவு பட ஆரம்பித்தது. அவளை மேல்ல அது விழுங்க ஆரம்பித்தது. முழுவதுமாக அவள் பூமிக்குள் போன பிறகு, பூமி மீண்டும் மூடிக்கொள்ள ஆரம்பித்தது. அது பழைய நிலையை அடைய சரியாக மூன்று நிமிடங்களே ஆனது. இயற்கையின் மாற்றங்களும் சீற்றங்களும் என்ற தலைப்பில், ஒரு மாநாடு பிரான்ஸில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாரிஸின் மிகப் பெரிய ஓட்டலின் பிரதான கருத்தரங்க மண்டபத்தில், அது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து நாடுகளின் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டிருந்த கருத்தரங்கம் அது. பேராசிரியர் யூனுஸ் முகமது என்ன சொல்லப் போகிறார் என்பதுதான், கலந்து கொண்ட அனைத்து விஞ்ஞானிகளின் கவனமாக இருந்தது. யூனுஸ் முகமது இயற்கை குறித்தான ஆராய்ச்சிகளின் பிதாமகன். அவரது ஆராய்ச்சிகளின் பலனாக, பல நாட்டு இயற்கை சீற்றங்கள், முன்கூட்டியே அறியப் பட்டு, சேதங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. இதுவரை இயற்கையின் சீற்றங்களை முன்கூட்டியே அறிவது தொடர்பான ஆராய்ச்சிகள் மட்டுமே நடைபெற்று வந்திருக்கிற காலகட்டத்தில், யூனுஸ் இயற்கையின் சீற்றங்களை முறியடிப்பதற்கும், அதனை ஆக்கப் பூர்வமாக பயன் படுத்துவதற்கும், ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். அதில் அவர் வெற்றி கண்டுவிட்டதாக விஞ்ஞான உலக சஞ்சிகைகள், கிசு கிசுக்களும் வெளியிட்டு விட்டன. இந்த மாநாட்டில், அவர் அது தொடர்பான தீஸீஸ் ஒன்றை வாசிக்கப் போவதாக உலகமே நம்பியது. யூனுஸ் முகமது அந்தக் கருத்தரங்கத்திற்கு நிறைவு நாளன்றுதான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரையிலான  அவருடைய கண்டுபிடிப்புகள் மூலம், அவர் உலக நாடுகளிடமிருந்து பெறும் ராயல்டி தொகையே, அவரை உலகக் கோடிஸ்வரர்களில் ஒருவராக ஆக்கிவிட்டிருந்தது. அவருடைய சமீபத்திய ஆராய்ச்சிக்கு, அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்ஸும் நிதியுதவி செய்திருந்தன. ஆராய்ச்சியின் பலன்களை, பிற நாடுகளுக்கு விற்கும் உரிமை, இந்நாடுகளுக்கு மட்டுமே இருந்தது. ஆசிய நாடுகள், ஐநா சபையில் இதற்கு, ஏற்கனவே பெரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இயற்கையின் சீற்றங்களைக் கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் கூடுமென்றால், அதுவே பணக்கார நாடுகளின் ஆயுதமாக மாறக்கூடிய அபாயம் இருப்பதாக, அவை அச்சப்பட்டன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், சுனாமி போன்ற பேரலைகள் உருவாவதை தடுக்கவும், திசை திருப்பவும் சாத்தியம் என்றால், அதை செய்யாமல் இருந்தே இந்தியா போன்ற நாடுகளை அச்சுறுத்தலாம் என்று அவை நம்பின. அவனை கறுப்பு வசியக்காரன் என்று அழைத்தனர். அவன் உடைகள் வினோதமாக இருந்தன. இந்தியக் கழைக் கூத்தாடி போல், ஒட்டுத் துணிகளால் ஆன உடைகளை, அவன் அணிந்திருந்தான். சிகப்பும் கறுப்பும் பிரதானமாக இருந்தன. தென் ஆப்பிரிக்க  பின் தங்கிய கிராமம் ஒன்றில் அவன் வசித்து வந்தான். அவன் சமயங்களில் ஒரு புத்தி பிறழ்ந்தவனைப் போல் ஓலமிட்டு, தெருவெங்கும் ஓடுவான். அவன் வாயிலிருந்து நுரை கக்கிக் கொண்டிருக்கும். வாய் ஓயாமல், உலகின் பல மொழிகளில், ஓலமிட்டுக் கொண்டிருக்கும். கூடவே அவனது தாய் மொழியான, லிபியேதுமில்லாத ஆப்பிரிக்க பழங்குடியின் மொழியும் வெளிப்படும். அது அவன் தாய மொழியாக இருப்பதே அதன் காரணம். கொஞ்ச நாட்களாக அவனைக் காணவில்லை என்று அந்த கிராம மக்கள் பேசிக்கொண்டார்கள். அவன் மலைப் பாங்கான இடம் ஒன்றில் குகை ஒன்றில் வசிப்பதாகவும், உணவும் நீரும் இல்லாமல், அவனால் பல நாட்கள் உயிரோடு இருக்க முடியும் என்றும், அதற்குக் காரணம் அவன் கற்று வைத்திருக்கும் கறுப்பு வசியமே என்றும் மக்கள் நம்பினார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனது நடமாட்டம் ஊருக்குள் தெரிய ஆரம்பித்தது. தெரு முனைகளில் நின்று, மக்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான் அவன். அவ்வூர் மக்கள் சாவு ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் ஒரு வித மரக் குழலை, அவன் ஊதிவிட்டு அங்கிருந்து அகன்று விடுவான். ஆறு நாட்களுக்குப் பிறகு அவனைக் காணவில்லை. அவன் மீண்டும் மலைமேல் சென்று விட்டதாக மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். பூமியின் நிலப்பரப்பு தட்டையான தட்டுகளால் ஆனது. ஒரு சம அளவுள்ள பீங்கான் தட்டுகளை அடுக்கி ஒரு மேசையின் மீது வைத்துவிட்டு, மேசையை லேசாக நகர்த்திப் பாருங்கள். பல திசைகளில் பீங்கான் தட்டுகள் நகரும். இதுபோன்றே பூமியின் சுழற்சியில் ஒரு நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமித் தட்டுகள் நகர்கின்றன. இந்தத் தட்டுகளின் மேல் வைக்கப்பட்ட பிரம்மாண்ட கோப்பை நீராக இருக்கிறது கடல். தட்டுகள் நகரும்போது கோப்பை நீர் தளும்புகிறது. அது பேரலையாகி, சுனாமி போன்ற பேரழிவை ஏற்படுத்துகிறது. சரியாக பதினொரு மணி நாற்பத்தொன்பது நிமிடங்களுக்கு, உலகின் பல பாகங்களில், பல நிகழ்வுகள் நடந்தேறின. அதற்கு முன்னோடியான விஷயங்கள்தாம் மேற்குறிப்பிட்ட பாராக்கள். டபுள்யூ ஜே அமைப்பினர், அவர்களது ரகசிய இடத்தில் கூடியிருந்தார்கள். அது ஒரு விசாலமான அறையாக இருந்தது. அவர்கள் மொத்தம் இருபது பேர். எல்லோருமே கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் பல பணக்காரநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் இருந்த அறையில் ஒரு மிகப்பெரிய கம்ப்யூட்டர் திரை. கிட்டத்தட்ட அந்த அறையின் ஒரு பக்க சுவராக அது இருந்தது. அவர்களில் ஒருவன் அமெரிக்க ராணுவத் தலைமையகத்தில் வேலை பார்ப்பவன். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. அவனுடைய நடமாட்டத்தை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருக்கும். இப்போதுகூட அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அவன் வந்திருக்கிறான். அதிவேக ஜெட் விமானத்தில், இன்னும் ஒரு மணிநேரத்தில் அவன் அலுவலகம் செல்ல வேண்டும். அவனுடைய செல்போனில் அவனை ராணுவ அலுவலகத்திலிருந்து அழைத்தார்கள். அந்த அறையில் ஒரு நவீன கணிப்பொறி நிறுவப்பட்டிருந்தது. அது சில மைக்ரோ செகண்டுகளில் அழைப்பு வந்த திசையையும், இடத்தையும் துல்லியமாக கணக்கிட்டது. அவன் மெல்ல சுவரோரம் போய் நின்று கொண்டான். அவன் பின்னே இருக்கும் கம்ப்யூட்டர் திரை அவனது அடுக்குமாடி வீட்டின் வரவேற்பரையைக் காட்டியது. அவன் வீடு இருக்கும் பகுதியில்  கேட்கும் இயல்பான சத்தங்கள், கேட்க ஆரம்பித்தன. அவன் வளர்க்கும் செல்ல நாய் புரூனி அவ்வப்போது குரைக்கும் சத்தமும். அவன் இயல்பாக பேச ஆரம்பித்தான். கேமரா பொருத்திய அவனது செல்போனை  தன் முகத்துக்கு மிக அருகில் வைத்து அவன் பேசினான். அதிலிருக்கும் கேமரா அவன் முகத்தைத் தாண்டி பின்புலமாக இருக்கும் அவனது அறையின் பிம்பத்தையும் உள்வாங்கிக் கொண்டது. செல்போன் தொடர்பை துண்டித்துவிட்டு அவன் தன் சகாக்களை நோக்கி கட்டை விரலை உயர்த்தினான். அமெரிக்காவின் மிகப் பெரிய வணிக மையத்தைத் தகர்க்கும் திட்டத்தின் கடைசி செப்பனிடுதல்களில் அவர்கள் மூழ்கிப் போனார்கள். இரண்டு பேர் அமரும் இருக்கைகளில் அவர்கள் ஜோடியாக அமர்ந்திருந்தார்கள். ஒரு ஆண் ஒரு பெண் என்ற சரியான விகிதத்தில் அமர்ந்த அவர்கள், ஆளுக்கு ஒரு முதுகுப் பை மட்டுமே கொண்டு வந்திருந்தார்கள். கூடவே ஜமைக்காவின் பழம் ஒன்றும் அவர்கள் கையில் இருந்தது. இடுப்பில் இருக்கும் செல்போன் பவுச்சிலிருந்து சிறிய கத்தியை எடுத்து அவர்கள் நால்வரும் ஒரே சமயத்தில் அந்தப் பழத்தை அறுக்க ஆரம்பித்தார்கள். அதனுள்ளிருக்கும் ஒரு சிறிய வஸ்துவைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் நால்வரும் இருக்கை களை விட்டு எழுந்தார்கள். வலை பனியன்காரி காக்பிட்டை நோக்கி நடந்தாள். அவளுக்கு பாதுகாப்பாக தூங்கி வழிந்து கொண்டிருந்த தடியன் போனான். ·பிளைட் டெக்கிற்கு நுழையும் வாயிலில் அவர்களைத் தடுக்க முயன்ற விமானப் பணிப்பெண் முரட்டுத்தனமாக ஓரம் தள்ளப்பட்டாள். அவள் விழும் காட்சியைக்கூட பார்க்கா மல் அவர்கள் பைலட் இருக்கும் பகுதிக்கு போனார்கள். மற்ற இருவரும் மேல் சட்டையைக் கழட்டி விட்டு, உள்ளே அணிந்திருந்த சிவப்பு பனியன் தெரிய, கையில் இருக்கும் வஸ்துவுடன், இருக்கைகளின் இடையில் இருக்கும் எய்ஸலில், நின்று கொண்டார்கள். இது அத்தனையும் அரங்கேற சரியாக பதினொரு செகண்டுகள் ஆனது. அமெரிக்காவின் பென்டகனுக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. ஜமைக்காவில் ஒரு விமானம் கடத்தப் பட்டிருக்கிறது. கடத்தியவர்கள் நான்கு பேர். இரண்டு ஆண் இரண்டு பெண். அவர்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் இரண்டு. ஒன்று சர்வதேசக் குற்றவாளிகள் எனக் கருதி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இருபத்தி ஆறு தீவிரவாதிகளை உடனே விடுதலை செய்யவேண்டும். அவர்களுக்கு போதிய எரிபொருள் நிரப்பிய அதிவேக விமானம் ஒன்றும், ஆயிரம் கிலோ தங்கமும் தரப்பட்டு, அவர்கள் போக விரும்பும் இடத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் பத்திரமாக போய் சேர்ந்த தகவல் வந்தவுடன் கடத்தப்பட்ட விமானம், பயணிகளுடன் விடுவிக்கப்படும். கெடு நான்கு மணி நேரம். அதற்கப்புறம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், நான்கு பயணிகள் கொல்லப்படுவார்கள். எல்லோரும் மான் தோல் நிறக் கோட்டுக்காரனைப் பார்த்தார்கள். அவன் சொன்னான்: “ இவர்கள் அந்த தீவிர வாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான். இப்போது இவர்கள் கேட்பதை ஒப்புக்கொண்டால், இனி வாரத்திற்கு ஒரு விமானம் கடத்தப்படும். அதிரடியாக விமானத்திற்குள் நுழைய அனுமதி வேண்டும்.விமானம் இப்போது எங்கே இருக்கிறது?” “ தென் ஆப்பிரிக்காவில் ஒரு சிறிய விமான தளத்தில் இறக்கியிருக்கிறார்கள். எமெர்ஜென்ஸி லேண்டிங். அவர்களுக்கு போதிய உணவு அனுப்பப் பட்டு விட்டது.” “ உணவு எடுத்துப் போன வண்டியில் அதிரடிப்படை வீரர்கள் சென்று விமானத்திற்குள் நுழைந்திருக்கலாமே?” “ கலாம்.. ஆனால் உணவுபொட்டலங்கள், கிரேன் மூலமாக வலைகளில் கட்டப்பட்டு, விமானத்திற்கு அருகே கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து விமானத்திற்கு உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டது. மனிதர்கள் யாரும் அருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை.” “அவர்கள் கொடுத்த கெடு முடிந்து விட்டதா?” “ இன்னும் ஒரு மணிநேரம் நாற்பது நிமிடம் இருக்கிறது.” “அதற்குள் நாம் ஒரு தனிப்படையை தேர்வு செய்து அதிரடியாக விமானத்தை தாக்க முடியுமா?” “கொஞ்சம் கடினம். இங்கிருந்து அந்த இடத்திற்கு அதிவேக ஜெட் விமானத்தில் போவதற்கே இரண்டு மணி நேரம் ஆகும்.” “ பின் என்ன செய்வது?” “தங்கத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்.” “தீவிரவாதிகள் விடுதலை?” “அது கொஞ்சம் சிக்கல். இதில் ஐரோப்பாவும், மத்திய கிழக்கு நாடுகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.” ஒரு வித சுழற்சியில் பூமி லேசாக அசைந்து கொடுத்தது. பூமியின் தட்டுகள் உராய்ந்ததில், கடல் நீர் இடம் பெயர்ந்தது. ஐந்நூறு கிலோ மீட்டர் வேகத்தில் கடல் அலைகள் கொந்தளித்து கரையைத் தாண்டி புகுந்தன. இதுவரை இந்தக் கதையில் வந்த அனைத்து கதாபாத்திரங்களும், இடங்களும் உருத்தெரியாமல் அழிந்து போயின. கரையோரம் ஒதுங்கிய சடலம் ஒன்றில் வைல்ட் ஜஸ்டிஸ் என்று எழுதப்பட்ட பனியன் காணப்பட்டது. இயற்கையின் நீதியும் சிலசமயம் வைல்ட் ஜஸ்டிஸ்தானோ என்று இயற்கை விஞ்ஞானிகள் வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.     32. ஒவ்வாமை   சின்ன வயதில் படிப்பு எல்லாம் கிராமத்தில் தான். பச்சை பசேலென்று வயல்களும், இடையில் ஓடும் வாய்க்கால்களும் தான் அவரது மனதில் கலையான நினைவுகளாக இருந்தன. அவர் பெயர் சங்கமேஸ்வரன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். வேலைக் காரணமாக இந்தியாவின் பல மூலைகளுக்கு அவரது காலடிகள் பட்டிருக்கின்றன. அங்கிருந்தெல்லாம் அவர் ஆசையாக கொண்டு வருவது தன் மனைவி கோமளவல்லிக்கான பரிசுப் பொருட்கள் இல்லை. எப்போதும் விதவிதமான வண்ண மலர்களை கொண்ட தொட்டிச் செடிகளை வாங்கி வருவார். ஒவ்வொன்றிற்கும் அதன் வேரடி மண்ணை தனியாக ஒரு பொட்டலமாக கட்டி வருவார். செடிகளுக்கும் உணர்வு உண்டு. வேரடி மண்ணைப் பிரிந்த நொடியில் சில செடிகள் வாடிப் போவதுண்டு. இன்னொரு பழக்கமும் சங்கமேஸ்வரனுக்கு உண்டு. அதுதான் செடிகளோடு பேசுவது. கோமளவல்லி கூட குறைப்பட்டுக் கொள்வாள். “ மனுசரு என் கூட இவ்வளவு பேசியிருப்பாரா? எப்பவும் செடிகளோட தான்” சங்கமேஸ்வரனுக்கு பச்சை என்றால் பிடிக்கும். கோமளாவுக்கு அது பிடிக்கவே பிடிக்காது. “ என்ன இது? பைராகி மாதிரி.. எப்பவும் பச்சை “ “ உனக்குத் தெரியாது கோம்ஸ்! பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி. நீலம் அமைதி. சிவப்பு எப்போதும் எதிர்ப்பு உணர்வைத் தூண்டும்.” “ அதுக்காக எப்பவும் பச்சையா? நீங்க பச்சை சட்டை, பச்சை பேண்ட். நான் பச்சை புடவை, பச்சை ரவிக்கை.. முதியோர் பள்ளி சீருடை மாதிரி இருக்குதுங்க!” ஆனாலும் சங்கமேஸ்வரன் மாறியதே இல்லை. யாரோ வெள்ளையில் பூப்போட்ட புடவையைப் பரிசாக அளித்த போது மெனக்கெட்டு அதை சாயமிட்டு, பச்சையாக மாற்ற வைத்தபின் தான் ஓய்ந்தார். இப்போது சங்கமேஸ்வரன் ஓய்வு பெற்று விட்டார். ஊரில் இருந்த பூர்வீக வீடு சிதிலமாகிப் போனதில் அதை விற்க வேண்டிய கட்டாயம் வந்தது. தவிரவும் கோமளாவுக்கு மூச்சு திணறல் நோய் வந்து படுத்தியது. நகரின் மையத்தில், மருத்துவ மனைக்கு அருகில் ஒரு குடியிருப்பில் தங்க வேண்டிய கட்டாயமும் வந்தது. தோட்டம் வைக்க எல்லாம் அந்த குடியிருப்பு வீட்டில் இடமில்லை. ஆனால் சங்கமேஸ்வரன் மனம் தளரவில்லை! அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் இருந்தது அந்தக் குடியிருப்பு. சங்கமேஸ்வரன் குடியிருக்கும் வீடு அது. சங்கமேஸ்வரன் அரசு உத்யோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். வயது அறுபத்தி நான்கு. வேளாண்மைத் துறையில் இருந்து ஓய்வு பெற்று ஆறு வருடங்கள் ஆயிற்று. சங்கமேஸ்வரனுக்கு ஒரு மனைவியும் இரண்டு மகள்களும் உண்டு. மகள்களுக்கு திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். அவர் இன்னமும் அங்கு போகவில்லை. ஆனால் அவரது மனைவி கோமளவல்லி இரண்டு முறை அங்கு போய் விட்டு வந்திருக்கிறார். அவர் சொன்ன விசயங்கள் அவரது ஆவலை மேலும் தூண்டின. ‘ பதிமூணாவது மாடிங்க.. எதிரே பூங்கா.. என்ன விதமான செடிகள், மலர்கள்.. இன்பா கிட்ட கூட சொன்னேன்.. அப்பா வந்திருந்தா திரும்பியிருக்கவே மாட்டாருன்னு..’ வானை நோக்கி கட்டிடங்களைக் கட்டிவிட்டு, பூங்காக்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். அடுக்குமாடி கட்டிடம் கட்டும்போதே தீர்மானமாக சொல்லிவிட்டார், தனக்கு ஒரு படுக்கை அறை போதும் என்றும், மீதமுள்ள இடத்தில் மாடித் தோட்டமாவது அமைக்க வேண்டும் என்று. ‘ ரெண்டு மகளுங்கன்னு சொல்றீங்க.. அவங்க வந்தா தங்க இடம் இருக்காதே? ‘ கட்டிடக்காரன் அதீதமாகக் கவலைப்பட்ட்டான். ‘ தேவைன்னா ஹால்ல படுத்துக்கறேன்.. அதுவும் வேணுமின்னா இருக்கவே இருக்குது என் பூங்கா.. மாடிப்பூங்கா. ‘ அவரது பிடிவாதத்திற்கு முன்னால் கோமளவல்லியின் வாதம் எடுபடவில்லை. பூங்கா அமைத்தே விட்டார். நூலகத்திற்கு சென்று, தோட்டக்கலை நூல்களை வாங்கி, பிரதி எடுத்து, தினமும் ஒரு செடி என்று சேர்த்து இன்று அவரிடம் இருபத்தி ஐந்து செடிகள் இருக்கின்றன. சில அழகுக்கு, பல மருத்துவத்திற்கு. இரண்டாவது மகள் இன்பா என்கிற இன்பவல்லி நாளை வருகிறாள். அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறாள். குடும்பத்தின் முதல் ஆண் வாரிசு. முதல் பெண்ணுக்கு இன்னமும் கருத்தரிக்கவில்லை. காலையிலிருந்தே ஒரே களேபரம். கோமளவல்லி ஏக உற்சாகத்தில் இருந்தாள். பேரனை பார்க்கப்போகும் சந்தோஷம். காலை ஆறுமணிக்கு விமானம் தரையிறங்குமாம். ஏழரை மணிக்கு வந்து விடுவார்களாம். இன்பாவுக்கு பிடித்த பிடிக்கொழுக்கட்டை, சின்ன வெங்காய சாம்பார் என்று காலை நாலு மணிக்கே எழுந்து செய்ய ஆரம்பித்து விட்டாள். சங்கமேஸ்வரன் ஐந்து மணிக்கு எழுந்து வாக்கிங் போய் விட்டு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு, கொஞ்ச நேரம் அவைகளை வருடி கொடுத்து விட்டு, குளிக்கப் போனார். ஆறு மணிக்கு மகிழுந்து வந்து விடும். அவர்தான் விமான நிலையம் போகப் போகிறார். மகிழுந்துவில் இருந்தபோது, இன்பா எப்படி தன் தோட்டத்தைக் கண்டவுடன் குதிக்கப் போகிறாள் என்று கற்பனை செய்து பார்த்தார். சிறு வயதிலிருந்தே அவள் இயற்கை பிரியை. தினமும் சைக்கிளில் பூங்கா போக வேண்டும் என்று அடம் பிடிப்பாள். அவள் ரசனைக்கேற்றாற்போல் வெளிநாட்டில் அவள் வீட்டருகிலேயே பூங்கா அமைந்தது அதிர்ஷ்டம் தான் என்று எண்ணினார். அவள் மகனுக்கு பூங்கா பிடிக்குமா? பேரனைக் கைப்பிடித்து, ஒவ்வொரு தொட்டியாக அழைத்துச் சென்று, செடிகளையும் அதன் வாசத்தையும் குணங்களையும் விளக்க வேண்டும். சிறு மூளை. ஒரே நாளில் அத்தனையும் திணிக்கக் கூடாது. ஒரு நாள், ஒரு தாவரம். விமானம் தரையிரங்கி அரை மணி நேரத்தில் அவர்கள் வந்து விட்டார்கள். இன்பா கொஞ்சம் சதை போட்டிருந்தாள். அவள் பின்னால் டிராலியைப் பிடித்துக் கொண்டு ஒரு வெள்ளைக்காரக் குழந்தை.. அட அது வெள்ளைககாரக் குழந்தை இல்லை. அவர் பேரன் தான். சாமான்களை பின்னால் ஏற்றிய பிறகு சங்கமேஸ்வரன் சொன்னார்: ‘ போரூர்.. கெளம்பினோமே அங்கதான்.. ‘ ‘ அப்பா.. இப்ப வீட்டுக்கு வேணாம்பா.. நான் நட்சத்திர ஓட்டல்ல அறை போட்டிருக்கேன். சட்டுனு கிளைமேட் மாறினா இவனுக்கு ஒத்துக்காது.. அதுவுமில்லாம வீட்டுல தோட்டம் போட்டிருக்கீங்களாமே? அம்மா சொன்னாங்க.. பூ வாசம், டஸ்ட் அலர்ஜி, ஏதாவது ஒத்துக்கலைன்னா, இவங்க அப்பா என்னை கொன்னுடுவாரு..’ இப்போதெல்லாம் சங்கமேஸ்வரன் தெருவிலிருக்கும் பூங்காவுக்கு போய் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறார். அவரது மாடி தோட்டம் அறையாகிவிட்டது. பேரன் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் கோமளவல்லி, இரண்டு வருடங்களாக.                   33. பலவேசம்   இந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான சமாச்சாரம் ஒன்று, காலக்கண்ணாடியின் முன் நின்றோ அல்லது, கொஞ்சம் நாகரீக உலகைச் சேர்ந்தவராக இருந்தால் டைம் மெஷினின் உள்ளே சென்றோ, ஒரு ஐம்பது அல்லது அறுபது வருடங் கள் பின்னோக்கி செல்லவேண்டும். உடனே ஏதோ இது மாயாஜாலக் கதையென்றோ, அல்லது நவீனச் சிறுகதை என்றோ கற்பனை பண்ணி விடாதீர்கள். இது சராசரி சமுகக் கதை. ஆனால் இதில் உள்ள பாத்திரங்களை, நீங்கள் பார்த்திருந்தாலும், மறந்திருக்க வாய்ப்புண்டு என்பதாலே இந்த முஸ்தீபு. சின்னப்பிள்ளையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் அவரிடம் கேள்வி மட்டுமல்ல, அடிபட்டும் உதைபட்டும் இருக்கிறேன் என்பதால் எனக்குக் கூடுதல் தகுதி உண்டு, இந்தக் கதையை எழுதுவதற்கு. சின்னப்பிள்ளை என்ற பேரைப் பார்த்தவுடன் அது ஏதோ சின்னப்பிள்ளை என்று எண்ணிவிடாதீர்கள். அவர் ஒரு வளர்ந்த ஆள். மதுரைப் பக்கத்தில், செங்கனாம்பட்டி என்ற கிராமத்தில், கூத்து கட்டும் குடும்பத்தில் பிறந்த சின்னப்பிள்ளை, பின்னாளில் ஒரு பெரிய நாடகக் கம்பெனிக்கே உரிமையாளராக ஆனதுதான், இந்தக் கதையின் அச்சாணி. சின்னப்பிள்ளை, படிப்பு சரியாக வராமல், விவசாயமும் ஒட்டாமல் இருந்த பத்து வயது பிராயத்தில், அந்த ஊர் மாரியம்மன் திருவிழாவுக்கு வந்து சேர்ந்தது ஒரு கூத்து கோஷ்டி. ஆந்திராவும் தமிழ்நாடும் இணைந்த காலம் அது என்பதால், கொஞ்சம் சுந்தரத் தெலுங்கில் பேசிக்கொண்டனர் அந்தக் கோஷ்டி உறுப்பினர்கள். கூத்து நடத்துகிற கூட்டத்தின் தலைவனாக மதுசூதனராவும், அவன் இணையாக அவன் மனைவி பத்மாவதியும் இருந்தார்கள். ஆயிரம் மனைவி கட்டி, அடுக்கடுக்காக பிள்ளை பெற்ற தசரதன் கதையாக இருந்தாலும், ஒரே பிள்ளை பெற்று, அதையும் பலி கொடுத்த அரிச்சந்திரன் புராணமாக இருந்தாலும், மதுசூதன ராவ் வேசம் கட்டி பாட ஆரம்பித்தால், கூட்டம் கட்டிப் போட்டாற் போல் அசையாது நிற்கும். சின்னப்பிள்ளையின் தாய் மருக்கொழுந்து, ஏற்கனவே கணவனை இழந்தவள். சின்னப்பிள்ளையும் அவனது தங்கை பரிமளமும் அவளது குழந்தைகள். சின்னப்பிள்ளைக்கு பத்து வயது. பரிமளத்திற்கு நாலு வயது. கைக்கும் வாய்க்குமான போராட்டமாக இருந்தது அவர்களது வாழ்க்கை. மருக்கொழுந்துக்கு முப்பது வயது கடந்திருந்தது. அவள் இன்னமும் அழகாகத்தான் இருந்தாள். கணவனை இழந்த அவளுக்கு மறுவாழ்வு கொடுக்க பலர் அந்த ஊரில் தயாராக இருந்தார்கள். ஆனால், அவளைப் பெண்ணாக ஏற்றுக்கொள்ள அவர்கள் தயார். இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாராக அல்ல. “ சின்னதுகூட பரவாயில்ல நாலு வயசு தான் ஆவுது. வெவரம் தெரியாது. நாளைக்கு நாந்தான் ஒங்கப்பன்னு சொன்னா, அது பிஞ்சு மனசுல பதிஞ்சுடும். சின்னப்பிள்ளை பெரியவன். அவன் மனசை மாத்த முடியாது..அதான்.. “ அவள் தன் கணவனை இழந்த கதை கொடுமையானது. மருக்கொழுந்துவின் கணவன் தானப்பன் தோல்பட்டறையில் வேலை பார்த்து வந்தான். கொஞ்சம்போலக் குடிப்பழக்கமும் அவனுக்கு இருந்தது. நட்டத்தில் ஓடிய தோல்பட்டறையை இழுத்து மூட முடிவு செய்த போது, அதன் முதலாளிக்கு பட்டறையின் மேல் வாங்கிய வங்கிக் கடனை எப்படி அடைப்பது என்று தெரிய வில்லை. முதலாளி ராசரத்தினத்தின் மச்சான் பினாங்கில் வேலை பார்த்து வந்தவன். விசயத்தைக் கேள்விப் பட்டு அவன் இப்படிச் சொன்னான்: “ இன்ஸ¥ரன்ஸ¤ பண்ணியிருக்கீங்களா மாமா.. பெனாங்கில அது பண்ணலேன்னா யாவாரம் பண்ண முடியாது.. தெரியுமில்ல “ ராசரத்தினம் யோசித்தான். உடனே அம்பதாயிரம் ரூபாய்க்கு காப்பீடு செய்தான். ஒரு வருடம் சிரமப்பட்டு நடத்தினான் பட்டறையை. இரண்டாவது வருடம் ஆரம்பத்தில் வேலை முடிந்து எல்லோரும் வீட்டுக்கு போக ஆரம்பித்த சமயத்தில், சொற்ப சரக்கே இருந்த கோடௌனை தீவைத்துக் கொளுத்தினான். புகையில் எல்லா ஊழியர்களும் வெளியேற ஆரம்பித்தனர். பட்டறை முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது. ஆனால் முதலாளி எதிர்பார்க்காத ஒன்று அன்று நடந்து விட்டது. தானப்பன் வேலை முடித்து, தான் மறைத்து வைத்திருந்த சாராயத்தைச் சாப்பிட மறைவிட மாக தேர்ந்தெடுத்தது அந்த கோடௌன் தான். மப்பில் எரியும் நெருப்பு பரவுவதை அறியாமல் அவனும் எரிந்து சாம்பலானான். மருக்கொழுந்துக்கு அரசு ஐந்தாயிரம் ரூபாய் தந்தது. அது ஏற்கனவே தானப்பன் வாங்கியிருந்த கடனை அடைக்கத்தான் உதவியது. அந்த நேரத்தில் மாரியம்மன் திருவிழாவும் வந்தது. அரிச்சந்திர புராணம். லோகிதாசன் பாத்திரத்தை ஏற்கவேண்டிய பையன் உடல் நலம் கெட்டு படுத்து விட்டான். ஊரில் அவன் வயதொத்த பையன் யாராவது தென்படுவார்களா என்று மதுசூதன ராவ் தேடும்போது அவர் கண்ணில் பட்டான் சின்னப்பிள்ளை. “ படிப்பு கெட்டுப்போகுங்க.. நாடவம் கூத்துன்னு பிள்ள மனசு தெச மாறும்.. வேணாங்க சாமி “ மருக்கொழுந்தை சரிக்கட்ட ஒரு பத்து ரூபாய் தாள் கை மாறியது. “ ரெண்டு நாள் திருவிழா கூத்தை முடிச்சிட்டு ஊர் போயிருவோம். அதுக்குள்ள எங்க பையனே சொஸ்தமாயிருவான்.. அனுப்புங்க! பையனுக்கு ஒண்ணும் ஆவாது “ சின்னப்பிள்ளையின் மனதை கூத்து ஆக்ரமித்தது. அந்தப் பாட்டுச் சத்தமும், விளக்கொளியும், ஜிகினா உடைகளூம், அவன் மனதில் ஒரு கனவு உலகத்தை சிருஷ்டி செய்ய ஆரம்பித்தன. கூத்து கோஷ்டி ஊர் செல்ல ஆயத்தப்படும்போது, சின்னப்பிள்ளையுடன் மருக்கொழுந்து ஊர் எல்லையில் நின்றிருந்தாள். “ இவனையும் கூட்டிக்கிட்டு போங்க.. நாடவம் கூத்துன்னு ஒரே மொரண்டு பிடிக்கிறான். பகல்ல எதுனா ரெண்டெழுத்து படிக்க வைங்க “ மதுசூதன ராவுக்கு சந்தோஷம். சின்னப்பிள்ளையிடம் கலை நீரோட்டமாக ஒளிந்திருப்பது அவருக்கு தெரிந்திருந்தது. எதையும் சட்டென்று பற்றிக்கொள்ளும் சுபாவமும், சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டு, உடனே அதை செயல் வடிவில் நடிப்பாக வெளிக்கொணரும் திறமையும் அவரை வியக்க வைத்தன. நாட்கள் உருண்டோடின. சின்னப்பிள்ளை இப்போது வாலிபன். மதுசூதனராவும் பத்மாவதிக்கும் பிள்ளைப்பேறு இல்லை என்பதால், அந்தக் குழுவில் அவன் அவர்களது செல்லப் பிள்ளையாகவே வளர்ந்திருந்தான். இப்போதெல்லாம் வள்ளி திருமணத்தில் அவன் தான் முருகன். ராமாயணத்தில் ராமன். பாரதத்தில் அருச்சுனன். அவனுக்கு சேலத்தில் கொடிகட்டிப் பறந்த குமரன் நாடக மன்றத்தின் தலைவர் குமரேசனின் மகளான சாந்தகுமாரியை திருமணம் செய்து வைத்தனர் அவனது வளர்ப்புப் பெற்றோர். சாந்தகுமாரி நாடகக்குழுவின் தலைவர் மகளாக இருந்தபோதிலும் அவளுக்கு கலையின் மீது எந்த நாட்டமும் இல்லை. திருமணமான புதிதில் சும்மாயிருந்த அவள், நாளாக நாளாக சின்னப்பிள்ளை கூத்திலோ நாடகத்திலோ பங்கேற்கக் கூடாது என்று நிபந்தனை போட ஆரம்பித்தாள். “ மாசமாயிருக்குறா.. அவ ஆசையை நெறவேத்தணும்டா சின்னப்பயலே “ ராவ் புத்திமதி சொன்னார். “ எப்படி நைனா.. சின்னப்பிள்ளைலேயிருந்து கத்துக்கிட்டது.. நமக்கு சோறு போடறது அதுதானே! திடுதிப்புன்னு வுட்டுறணும்னா எப்பிடி.. செப்பு நைனா செப்பு “ “ அவ என்னா சொல்லிட்டா நீ மேடையேறக்கூடாது அவ்ளவுதானே.. ஆனால் நாடவம் போடக்கூடா துன்னு இல்லையே.. நாடவம் தயார் பண்ணு! வேற ஆள வச்சு போடு.. ஒன்ன யாரு தொழில வுட்டுரச் சொன்னாங்க “ சாந்தகுமாரிக்கு சந்தோஷமாக இருந்தது. எப்படியோ தன் கணவன் தன் சொல்லை கேட்டு விட்டான். அந்த சந்தோஷத்திலேயே அவள் ரெட்டைப் பிள்ளை பெத்துப் போட்டாள். ரெண்டும் ஆண் பிள்ளைகள். “ அஞ்சு வருஷம் கழிச்சு லவ குசா நாடவம் போடலாம்.. இப்பவே ஆக்டரு ரெடி “ சின்னப்பிள்ளை துள்ளினான். “ தோ பாரு கூத்த ஒன்னோடவே வச்சிக்க.. எம் பிள்ளைங்களுக்கு கொண்டு வராதே ஆமா “ ராம் லட்சுமண் என்று பெயர் வைத்து வளர்த்த பையன்களுக்கு, நல்ல படிப்பு சொல்லிக் கொடுத்தாள் சாந்த குமாரி. அவர்கள் வளர்ந்து பெரியவர்களான இந்த இருபது வருடத்தில், தொலைக்காட்சி வந்து கூத்தும் நாடகமும் ஒழிந்து போனது. மதுசூதனராவும் பத்மாவதியும் இறந்து போயிருந்தார்கள். அவர் களது பூர்வீக சொத்து காக்கிநாடாவில் இருந்தது. அதுவும் சின்னப்பிள்ளைக்கும் அவனது மகன் களுக்கும் வந்து சேர்ந்தது. அடுத்த ஐந்து வருடங்களில் சின்னப்பிள்ளையின் மகன்கள் நன்றாகப் படித்து பெரிய வேலையில் அமர்ந்தார்கள். கல்யாணமும் செய்து கொண்டார்கள். சென்னை மாநகரில் பெரிய அடுக்குமாடி குடி யிருப்பில் இரண்டு தனித்தனி வீடுகள் வாங்கிக் கொண்டார்கள். ஆசைக்கும் ஆஸ்திக்குமாக ஒரு பையனும் ஒரு பெண்ணும் இருவருக்கும் உண்டு. சின்னப்பிள்ளையின் மகன்களும் மருமகள்களும் வேலைக்கு போகிறவர்கள். அவர்கள் உலகம் இயந்திர உலகம். வேலை நெருக்கடி அவர்களை வெகுவாக மாற்றியிருந்தது. அவர்களுடைய உணர்வுகளுக்குத் தகுந்தபடி வீட்டில் உள்ள பெரியவர்களும் குழந்தைகளும் நடக்க வேண்டியிருந்தது. வாசலில் வாகனச் சத்தம் கேட்டவுடன் வரவேற்பறையில் இருக்கும் மின்விசிறியை சுழலவிட்டு, வரும் மகனுக்கோ மருமகளுக்கோ பிடித்த பானத்தை தயார் செய்து வைத்திருப்பார்கள் சின்னப் பிள்ளையும் சாந்தகுமாரியும். அதைப் பார்த்த அவர்கள் முகம் மலரும். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு மகனும் மருமகளும் ஓய்வாக இருக்கும்போது, பேரன்களையோ பேத்திகளையோ விளையாட்டுகாட்டி வேறு அறைக்கு அழைத்துச் சென்று விடுவதும் அவர்கள் வேலைதான். “ ஏங்க பேசாம நாம ஊரோட போயிரலாமா.. இந்தப் பட்டண வாழ்க்கை ஒத்துக்கலைங்க “ “ என்னா பேச்சு பேசற.. சின்னஞ்சிறுசுங்க கொழந்தைங்கள வச்சிக்கிட்டு கஷ்டப்படுதுங்க.. இப்ப வுட்டுட்டு போறதா.. வேற பேச்சு பேசு “ மகனுக்கு அனுசரணையான தந்தையாக, மருமகளுக்கு இங்கிதம் தெரிந்த மாமனாராக, பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லும் நடிகனாக பலவேசம் போடும் இந்த வாழ்வு சின்னப்பிள்ளைக்கு பிடித்து தான் இருந்தது. அடுத்தடுத்த வீடுகளின் பால்கனியில் இப்போதும் சின்னப்பிள்ளையை நீங்கள் பார்க்கலாம். அவர் தன் பேரனையோ பேத்தியையோ கொஞ்சிக்கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தபடியே “ காயாத கானகத்தே நின்றுலாவும் “ என்ற வள்ளி திருமணப் பாடலை பாடிக் கொண்டிருப்பார். சாந்தகுமாரி வரும் அரவம் கேட்டால் அது “ காக்க காக்க கனகவேல் காக்க “ என்று மாறும்.                                               34. அப்பா 2100   அவன் அந்தக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, எல்லாமே நீல நிறமாக இருந்தது. ஓ! இன்னிக்கு ப்ளூ டேயா? மனதில் எண்ணம் ஓடியது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் நூறு வருடங்களைக் கடந்ததில், பூமி வெகுவாக மாற்றங்களைப் பெற்றிருந்தது. அதில் ஒன்று தான் நிறம்மாறும் நாட்கள். பூமியின் அதிபர், பல விஞ்ஞானிகளை, சாஸ்த்திர வல்லுநர்களைக் கொண்டு வரையறுத்த நிறக் கோட்பாடுதான், இன்று பூமி முழுவதும் நிலவுகிறது. கணினியின் உதவிகொண்டு, பல நிறச்சேர்க்கைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அடிப்படை ஏழு வர்ணங்கள் அபூர்வமாக எப்போதாவதுதான் கண்ணில் படும். அதில் ஒன்றுதான் இன்று கண்ணில் பட்டிருக்கிறது. அவன் வெளியே வந்தவுடன் அந்தப் பெரும்கதவு சாற்றிக்கொண்டது. அவனுக்கு இன்று விடுமுறை. அதனால் அவன் ஏதோ அலுவலகம் போகிறவன் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். அலுவலகங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டன. இப்போதெல்லாம் இருக்கும் இடம் அலுவலகம் எல்லாம் ஒன்றே. விடுமுறை என்றால் அவனுக்கு இன்று வேலை எதுவம் கொடுக்கமாட்டார்கள் என்று பொருள். அவன் நீலநிற உடை அணிந்திருந்தான். நாட்களின் நிறத்திற்கேற்ப உடைகளின் நிறங்களும் தாமாகவே மாறிக்கொள்ளும். ஓஸோன் தடுப்புச் சுவர் பலமிழந்த காலம் இது. அதீத சூரிய வெப்பத்தைத் தாங்க முடியாத பூமி, முழுவதுமாக ஒரு மழைக்கோட்டை அணிந்து கொண்டிருந்தது. சூரிய ஒளியிலிருந்தே சக்தியைச் சேமித்து தட்ப வெப்ப சூழலை உருவாக்கியிருந்தார்கள். நீல நிறத்தைப் பார்த்ததும் அவனுக்கு நீச்சலடிக்க வேண்டும் போலிருந்தது. பத்தடி தூரத்தில் ஒரு குளம் திடீரென்று தோன்றியது. இப்போது பூமியில் எல்லாமே வெர்ச்சுவல் பிம்பங்கள் தான்! எண்ணங்களுக்கு ஏற்ப தட்ப வெட்ப சூழல்கள் மாறிக்கொள்ளூம். வனம் வேண்டுமா? உடனே வரும். வேட்டையாட மிருகங்கள் வேண்டுமா? கிடைக்கும். கணிப்பொறி விளையாட்டுகளில் அலுப்பு ஏற்பட்டு மனிதன் அடுத்த கட்ட்த்துக்குப் போய்விட்டான். அவனுக்கு எல்லாமே நிச உருவத்தில் வேண்டியதாக இருந்தது. பாதி பேர் நிலவில் வசிக்கப் போய் விட்டார்கள். அவர்கள் பூமிக்கு வரும் சொற்ப நேரங்களில் என்ன கனம்? உடலை தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லையே என்று அங்கலாய்த்தார்கள். நிலவின் எடை குறைவு. ஆனால் அங்கிருக்கும் மனிதர்களுக்கு தலை கனம் அதிகம். நீலக்குளம். நிலத்தண்ணீர். துள்ளிய மீன்களும் நீலம். உடைகளை அவிழ்க்க அவன் யோசித்தான். தன் உடலும் நீல நிறமாக மாறியிருக்குமோ என்று ஒரு அச்சம் அவன் மனதில் தோன்றியது. சே!சே! அப்படியெல்லாம் ஆகாது என்று மனதிற்குள் ஒரு சமாதானம் செய்து கொண்டான். உடையை அவிழ்த்து குளக்கரை ஓரம் வைத்தான். உடலோடு ஒட்டியிருந்த ஐ டி கார்டை பிய்த்து அருகில் வைத்தான். ஐ டி கார்ட் மிக முக்கியமான ஒன்று இன்றைய பூமியில். அதுவே அவன் அடையாளம். ஜாதகம். இன்ன பிற. நீரில் பாயப்போனவனை ஒரு குரல் தடுத்தது. அப்பா! கேன் ஐ ஸ்விம்? மூன்று வயது மழலையின் குரல். அவனது பக்கத்து வீட்டுக்காரன். அவனுடைய ஒரே மகன். இப்போது பூமியில் எல்லோருக்கும் ஒரே மகன் அல்லது மகள்தான். வந்தவன் இவனுடைய ஐ டி கார்டைக் குனிந்து பார்த்துவிட்டு சிரித்தான். கை குலுக்கினான். தன் உடைகளையும் மகனது உடைகளையும் கழற்றி வைத்தான். கூடவே இரு ஐடி கார்டுகளையும் பிய்த்து பக்கத்தில் வைத்தான். ஐ டி கார்டுகள் ஒன்று போலவே இருந்தன. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அரசாங்க விதி முறைகள் தெளிவாக இருக்கின்றன. அவன் தனது ஐ டி கார்டை எடுத்து நீலக் கோட்டின் உள்பகுதியில் வைத்தான். அவர்கள் வரும்வரை காத்திருந்தான். அவர்கள் ஆனந்தமாகக் குளித்துக்கொண்டிருந்தார்கள். வெகுநேரம் அவர்கள் குளத்தில் இருந்தார்கள். ஒரு வழியாக அவர்கள் குளித்து வெளியே வந்தார்கள். இவன் குளத்தில் இறங்கினான். சரியாக பத்து நிமிடங்கள் குளித்துவிட்டு கரையேறினான். நீலக்கோட்டை எடுத்து அணிந்து கொண்டான். உள்பகுதியில் துழாவினான். ஐ டி கார்டு காணவில்லை. பதற்றம் அவனைத் தொற்றிக்கொண்டது. எங்கே போயிற்று? சற்று தள்ளி ஐ டி கார்டு விழுந்திருந்தது. கோட்டை எடுக்கும்போது விழுந்திருக்கவேண்டும். அவசரமாக அதை எடுத்துக்கொண்டு அவன் குடியிருப்பை நோக்கி நடந்தான். பக்கத்து குடியிருப்புக்காரனையும் அவன் மகனையும் காணவில்லை. வேறு எங்காவது போயிருப்பார்கள். ஆயிரம் குடியிருப்புகள் கொண்ட அந்தக் காம்பவுண்டில் எல்லாமே ஐ டி கார்டுமூலமாகத்தான் நடைபெறும். அந்த கார்டுகள் வித்தியாசமானவை! சட்டென்று பார்த்தால் அட்டை முழுவதும் புள்ளிகளாகத்தான் இருக்கும். நடுவில் சில கோடுகளும். எலெக்ட்ரானிக் சிப் பதிக்கப்பட்ட அட்டை. அவனது விவரங்கள் அதனுள்ளே இருக்கும். அதை அவன் கூட பார்க்க முடியாது. ஏதாவது வில்லங்கத் தகவல் இருக்கிறதா என்று அவனுக்குத் தெரியாது. காவல் துறை ஊழியர்கள் என்றாவது வந்து அவன் கதவைத் தட்டும்போதுதான் அவனுக்கே அந்த விவரம் புரியும். நேற்றுதான் பக்கத்து வீட்டுக்காரனை இழுத்துப் போனார்கள். காரணம் பிறகு வீட்டு சுவற்றில் ஒளிபரப்பாகியது. இங்கே எல்லாமே தெள்ளத் தெளிவு. மறைவு என்பதே கிடையாது. ரகசியமே இல்லை. பரசியம் தான். ப.வி. ஒரு ஹுயூமனாய்ட் பெண்ணை காதலித்திருக்கிறான். அப்படியெல்லாம் சட்டென்று பூமியின் மனிதன் காதலித்து விட முடியாது. யாரை காதலிக்க வேண்டும் என்று அரசு சொல்லும். நகர்ந்து வரும் வரிசையில் யாருக்கு நேராக யார் வருகிறார்களோ அவர்களே இணை. ஆணுக்கும் பெண்ணுக்குமான தனி வரிசை. சூப்பர் கணிப்பொறியில் அது நகர்ந்து கொண்டே இருக்கும். திருமண ஒப்புதல் கொடுக்கும் ஆணும் பெண்ணும் வரிசையில் பெயர்களாக நிற்பார்கள். ப.வி. இவனாகவே வேலையில் சந்தித்த ஒரு பெண்ணை பார்த்து மையலாகி காதலைச் சொல்லியிருக்கீறான். அதற்கு இவன் நோக்கம் புரியவில்லை. காதல் அதற்கு கற்றுத் தரப்படவில்லை. அதனால் அது அரசுக்குப் போட்டு கொடுத்து விட்டது. குழந்தைகள் கூட அரசின் தீர்மானம் தான். சட்டென்று பெற்றுக் கொள்ள முடியாது. பிறந்தாலும் அது அவர்களிடையே வளராது. அதற்கும் வரிசை உண்டு. எந்த அப்பா, அம்மா என்று அரசே தீர்மானிக்கும். முதலில் அந்த குழந்தையின் மரபணு, ஆற்றல், சக்தி, சிந்திக்கும் திறன் எல்லாம் ஒரு 30 வருடங்களுக்கு முன்கூட்டியே தீர்மானிக்கப்படும். பிறகு அதற்கு தோதான அம்மா, அப்பாக்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு உயிரையும் செதுக்குவதில் அரசுக்கு பெரும் பங்கு உண்டு. குளத்தில் குளிக்க வந்த சிறுவன் கூட அந்த ஆளின் மகனில்லை. அவனுக்கு அதில் பெரிய சுவாரஸ்யம் இல்லை. தேவை ஒரு மகன். கிடைத்ததை பேணி வளர்க்கிறான். உள் நுழைவதற்கும், லிப்டிற்கும், வீட்டின் கதவைத் திறப்பதற்கும், கணினியைத் திறப்பதற்கும் ஒரே ஐ டி கார்டுதான். கேட்டின் இடுக்கில் ஐ டி கார்டுக்கான இடம் இருந்தது. அவன் ஐ டி கார்டை அதில் நுழைத்தபோது அடி வயிற்றில் ஒரு பந்து உருண்டது. கேட்டிலிருக்கும் ஸ்கேனர் அவனை அலசிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான். கேட்டின் முகப்பில் ஒரு திரை தோன்றியது. அதில் அவன் முகமல்லாத முகம். அந்தப் பக்கத்துக் குடியிருப்புக்காரனின் முகம். நீ போலி என்ற வாசகம் பளிச்சிட்டது. அவன் சுதாரித்துக்கொள்ளும்முன், அவன் காலடியில் ஒரு சுரங்கக்கதவு திறக்கப்பட்டு அவன் அதில் விழுந்தான். நினைவு தப்புவதற்குள் அந்த பக்கத்து குடியிருப்புக்காரனும் சுரங்கத்தில் விழுவதுபோல் ஒரு காட்சி தெரிந்தது.                 35. உதவும் கரங்கள்   பாஸ்கருக்குப் போனமாதம்தான் கல்யாணம் ஆகியிருந்தது. ஒருமாதம் விடுமுறையில் சீரங்கம் போனபோது தீடீரென்று ஒரு வரன் குதிர்ந்திருப்பதாக அம்மா சொன்னாள். பார்த்தவுடன் பிடித்துப் போயிற்று கௌசல்யாவை. முகூர்த்த நாள் பார்த்து, சத்திரம் பார்த்து கல்யாணம் முடிவதற்குள் அவனுடைய ஒரு மாத விடுமுறை ஏறக்குறைய காணாமல் போயிருந்தது. ஐந்து நாட்கள் மட்டுமே அவன் கௌஸல்யாவுடன் இருக்க முடிந்தது. அதிலும் பாதி உறவினர் விருந்து உபசாரத்தில் கழிந்து விட்டிருந்தது. ஆசை அறுபது நாள் என்பது மைக்ரோ சிப்பில் போட்ட மாதிரி அறுபது மணி நேரத்தில் முடிக்க வேண்டி இருந்தது. அதற்கப்புறம் ஆடி வந்து சதி பண்ணியதில் இன்னும் ஒரு மாதம் தள்ளிப் போயிற்று. இன்று கௌஸல்யா அவன் வேலை பார்க்க்கும் ஊருக்கு வரப்போகிறாள். பாஸ்கருக்கு வங்கியில் வேலை. தெரியாத்தனமாக பதவி உயர்வுத் தேர்வை எழுதித் தொலைத்து, அதிகாரியாக ஆகியிருந்தான். கொல்கத்தாவிலிருந்து கயா செல்லும் வழியில் ஒரு கிராமத்துக் கிளையில் போஸ்டிங். ஊர் சரியான கிராமம். பாஸ்ஞ்சர் ரயில்கள் மட்டும்தான் இங்கே நிற்கும். அதுவும் ஒரு நாளைக்கு ஒன்றோ இரண்டோ. இப்போதுகூட கௌஸல்யா வரப்போகும் பாஸஞ்சர், கொல்கத்தாவிலிருந்து மாலை ஆறு மணிக்குக் கிளம்பி, ஆடி அசைந்து, இரவு பதினொன்றரைக்குத்தான் வந்து சேரும். அதுவும் அவ்வளவு நிச்சயமில்லை. பாஸ்கர் மனதை மேலும் சில விசயங்கள் குழப்பிக் கொண்டிருக்கின்றன. கௌஸல்யாவுடன் மாமனாரோ மாமியோரோ வரமாட்டார்கள். சென்னை வரை வந்து, ரயில் ஏற்றி விட்டு அவனுக்கு தந்தி அடித்திருந்தார்கள். கொல்கத்தாவில் கௌஸல்யா அவளுடைய அத்தை பையன் வீட்டில், மாலை வரை தங்கிவிட்டு, ரயில் ஏறியிருப்பாள். அத்தை பையனாவது கூட வந்திருக்கலாம். அவனாலும் முடியவில்லை. அவனுக்கு தனியார் நிறுவனத்தில் உத்யோகம். லீவு கிடைக்காது லேசில். அவன் மனைவியும் நிறைமாத கர்ப்பிணி. அந்த ஸ்டேசனில் அந்த இரவு நேரம் அவ்வளவாக நடமாட்டம் இல்லை. பாஸ்கர் வங்கி மேலாளரிடம் கேட்டு, வங்கியின் மோட்டார் சைக்கிளை எடுத்து வந்திருந்தான். லக்கேஜ் அதிகமாக இருந்தால், ஸ்டேசன் மாஸ்டர் அறையில் வைத்துவிட்டு, காலையில் வண்டி ஏற்பாடு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தான். பதினொன்றரைக்கு வர வேண்டிய ரயில் வரும் சுவடே தெரியவில்லை. ஸ்டேசன் மாஸ்டர் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பாஸ்கர் மெல்ல ஸ்டேசன் மாஸ்டர் அறையை நோக்கி நடந்தான். அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். மெல்ல அவரை தட்டி எழுப்பி, தனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில், ரயில் பற்றி விசாரித்தான். வழியில் ஏதோ ஆக்ஸிடெண்டாம். ரயில் இரண்டு மணி நேரம் தாமதம் என்று சொல்லிவிட்டு, மறுபடியும் தூங்கப் போய்விட்டார். ஆன்ஸிடெண்ட் என்றால் எந்த ரயில்? கௌசல்யா வரப்போகும் ரயிலா? அல்லது அதற்கு முந்தைய ரயிலா? ஆக்ஸிடெண்ட் என்றால் உயிர் சேதம் உண்டா? பெயர் விபரம் ஏதேனும் கிடைக்குமா? பாஸ்கரின் மனதை ஆயிரம் கேள்விகள் குடைந்தன. இரண்டு மணி நேரம் கழித்து, அவன் எதிர்பார்த்த ரயில், ஆடி அசைந்து வந்தது. அது ஒன்றும் ஆக்ஸிடெண்ட் ஆனமாதிரி தெரியவில்லை. பாஸ்கருக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. கடைசி ஆள் இறங்கி வரும்வரை பாஸ்கர் காத்திருந்தான். ஆனால் கௌஸல்யா வரவில்லை. கௌஸல்யா என்ன ஆனாள்? அவளுக்கு ஏதேனும் ஆகியிருக்குமா? ஒரு வேளை அவளுக்கு ஏதேனும் ஆகியிருந்தால், உலகம் தன்னை எப்படிப் பார்க்கும். புது மனைவியை முழுசாகக் கூடப் பார்க்காமல் தொலைத்த கணவனுக்கு சமூகத்தில் என்ன இடம்? அவன் துரதிருஷ்டம்தான் அவளை அடித்துப் போட்டு விட்டது என்று பேசுவார்களா? ரயில் மெல்ல அவனைக் கடந்து போனது. வினாடி நேரத்தில் அதன் முன் பாய்ந்து விடலாமா என்று கூட ஒரு யோசனை வந்தது. கௌஸல்யாவின் முகம் ஒரு வினாடி அவன் கண் முன் வந்து போனது. கல்யாண •போட்டோக்களை, அலுவலக நண்பர்களிடம், அந்த ஊரில் தெரிந்தவர்களிடம் எல்லாம் இந்த ஒரு மாதத்தில் காட்டி பெருமைப்பட்டுக்கொண்டது தப்போ என்று தோன்றியது. இப்படியே இன்னும் ஒரு மணி நேரம் ஸ்டேசனிலேயே உட்கார்ந்திருந்தான். பெருத்த பிரயாசைக்குப் பிறகு மோட்டார் சைக்கிளில் வீடு வந்து சேர்ந்த போது, உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிள் சத்தத்தைக் கேட்டு, வாசல் கதவு திறந்தது. வாசற்படியில் கௌஸல்யா நின்று கொண்டிருந்தாள். பின்னாலிருந்து பைஜாமா ஜிப்பாவோடு ஒரு பஞ்சாபி இளைஞன் எட்டிப் பார்த்தான். பாஸ்கரைப் பார்த்தவுடன் கௌஸல்யா உடைந்து அழுதாள். ‘ இவர்தான் என்னை பத்திரமா இங்கே கொண்டு வந்து சேர்த்தார் ‘ என்று திரும்பி அவன் மார்பில் முகம் புதைத்தாள். “ இவர் பெயர் அர்விந்த் கோஸ்வாமி” என்றாள் கௌசல்யா. அந்த இளைஞன். களையாக இருந்தது அவன் முகம். அவன் டர்பனெல்லாம் கட்டியிருக்கவில்லை. டர்பன் கட்டும் பஞ்சாபி இல்லையோ? அவன் பஞ்சாபியே இல்லை! உத்திராகண்ட் மாநிலமாம். பிழைப்பு தேடி இங்கே வந்த குடும்பமாம். முதலில் கொஞ்சம் சந்தேகமும், பொறாமையும், கோபமும் கூட வந்தது பாஸ்கருக்கு. பொழுது போகாமல் பார்த்த, புரியாத, மிஸ்டர் அன்ட் மிஸ்ஸ் ஐயர் படம் ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது. கணவனைப் பார்க்கும் ஏக்கத்துடன் வரும் மனைவி, தனியிடத்தில், மழையில், அழகான இளைஞனுடன் இருக்க நேர்ந்தால், என்ன ஆகியிருக்கும்? என்கிற விபரீத கற்பனைகள் பாஸ்கரின் மனதில் ஓடின. சரி! விபத்து என்கிறார்களே? இவள் எப்படி தப்பித்தாள்? இவன் காப்பாற்றினானா? என்ன விபத்து? கேள்விகள் குடைந்து கொண்டிருந்தன பாஸ்கரின் மனதில். மெல்ல உள் நகர்ந்து, ஒரு நாற்காலியில், துவைத்த துணி போல உட்கார்ந்தான் பாஸ்கர். சட்டென்று இன்னொரு விசயம் மூளையைத் தாக்கியது. எப்படி உள்ளே வந்தார்கள்? எத்தனை காலம் ஆயிற்று. சகஜமாக இருக்கிறார்களே? இடத்தையும் தனிமையையும் பயன்படுத்திக் கொண்டு விட்டார்களா? எதிரே கோஸ்வாமி ஒரு மௌன ஸ்வாமியாக உட்கார்ந்திருந்தான். நாகரீகம் காரணமாக அவனை நோக்கி புன்னகைத்தான். எப்படிக் கேட்பது? இவன் இரவு இங்கேயே இருக்கப் போகிறானா? இன்று மட்டும் தானா? இல்லை இரவுகளா? “ டீ போட்டேங்க! சப்பாத்தியும் டாலும் செஞ்சிருக்கேன்! அர்விக்கு அரிசி ஒத்துக்காதாம்!” “ அர்வி!! “ என்ன செல்லம் கொஞ்சுகிறாள். திட்டமிட்ட சந்திப்பா இது? ஏற்கனவே தெரிந்தவனா? “ சார் யாருன்னு..?’ “ ஓ! மறந்தே போய்ட்டேன்! இவரு இந்த ஊராம்.. பக்கத்து கிராமம். நல்லா படிச்சிருக்காரு.. ஆனா வேலைதான் கெடைக்கலை. அதனால ரயில்லே தினமும் ஏதாவது பொருளை விக்கற வேலையை செஞ்சுகிட்டு இருக்காரு! இந்த மணிகள் கோர்த்த பணப்பை கூட இவருக்கிட்டே வாங்கினது தான். அவங்க அக்கா தான் செய்வாங்களாம்! அவங்க ஒரு விதவை.. பால்ய விவாகத்தால முளைச்ச விதவை.. இங்கே மறுமணம்லாம் ஊர் பஞ்சாயத்து ஏத்துக்காதாம். அதனால் இவரு அக்காவுக்கு ஒத்தாசையா இருக்காராம்” ‘ இப்ப உனக்கு ஒத்தாசையா வந்துட்டானாக்கும்!’ என்று நினைத்துக் கொண்டான் பாஸ்கர். “ அப்புறம், இவர் டிஃபரண்ட்லி ஏபிள்ட்! மூளை சரியா வளரலை. எதையும் மெதுவாத்தான் செய்வாரு.. ஆனா அதுதான் என்னை காப்பாத்திச்சு” பாஸ்கர் நிமிர்ந்து உட்கார்ந்தான். சுவாரஸ்யம் அவனைத் தொற்றிக் கொண்டது. என்ன? என்பது போல புருவங்களை உயர்த்தினான். “ இங்கெல்லாம் ரொம்ப மோசங்க! ரயில் ஏதோ விபத்துன்னு தாமதமாச்சு. அப்ப நான் தூங்கிட்டிருந்தேன். அதனால எனக்குத் தெரியலை. இதுக்கு முன்னால ஏதோ ஒரு ஸ்டேசன்ல, நான் இந்த ரயில் இங்கே வரவேண்டிய நேரத்துக்கு இறங்கிட்டேன். பாத்தா உங்களைக் காணோம்? பயமா போயிடிச்சு.. அப்பத்தான் இவரு இந்த மணி பைகளை எல்லாம் மாட்டிக்கிட்டு வந்தாரு. இவருக்கு ஸ்டேசன் மாஸ்டருங்க எல்லாம் சிநேகிதம் போல. அதனால உடனே மாஸ்டரை எழுப்பி பாதி ஸ்டேசன் தாண்டியிருந்த ரயிலை நிக்க வச்சுட்டாரு. கூடவே என் பைகளைத் தூக்கிட்டு ஓடிப் போய், ரயில் ஏறினோம். அந்த அவசரத்துல இவர் விக்கறதுக்கு வச்சிருந்த பைகள் எல்லாம் எங்கியோ விழுந்துடுச்சி. “ ஆச்சர்யமாக அவனைப் பார்த்தான் பாஸ்கர். அரவிந்த் புரிந்தது போல புன்னகைத்துக் கொண்டிருந்தான். “ வந்து கொஞ்ச நேரம் தாங்க ஆச்சு. உங்க முகவரியை காட்டினேன். அதுக்கு ஒரு குறுக்கு வழி இருக்கறதா சொல்லி, ஸ்டேசனுக்கு அந்தப் பக்கம் இறக்கி விட்டு, என்னை இங்கே அழைச்சிக்கிட்டு வந்துட்டாரு.. வாசல் விளக்கு ஆணியிலே ஒரு சாவி மறைவா மாட்டி வச்சிருப்பேன்னு நீங்க கடிதம் எழுதினது ஞாபகம் வந்துச்சு. தேடி எடுத்து உள்ளே வந்துட்டோம்.” இனிமே தான் க்ளைமேக்ஸ் என்று நினைத்துக் கொண்டான் பாஸ்கர். “ என்னை உள்ளே அனுப்பிட்டு கதவை பூட்டி சாவியை என்கிட்டே கொடுத்துட்டாரு இவரு. இதுவரைக்கும் வெளியேதான் இருந்தாரு. உங்க பைக் சத்தம் கேட்டவுடனே தான், நான் இவரை உள்ளே கூப்பிட்டேன். மூளை வளரலேன்னாலும், என்ன கண்ணியம் பாருங்க “ வாசலில் நிழலாடியது. வடக்கத்தி புடவையில் ஒரு பெண்மணி நின்றிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அரவிந்த் துள்ளி எழுந்தான். “ மேரா பெஹன் ‘ என்று குழறினான். அவள் அப்படியே கௌசல்யாவை உரித்து வைத்திருந்தாள். கொஞ்சம் வயது கூட அவ்வளவுதான். அக்காவும் தம்பியும் கும்பிட்டு விடை பெற்றார்கள். அரவிந்த் கைகளில் ஐநூறு ரூபாய் நோட்டை வைத்து அழுத்தினான் பாஸ்கர். மணிப்பை நஷ்டத்திற்கு அல்ல.. மணியான மனிதத்திற்காக!                                           36. காஷ்மீர் மிளகாய்   கண்ணன் ஸாரைப்பற்றி கோபிதான் சொன்னான். நேற்று ஒரு இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்த போது தோளில் ஒரு கை தட்டியது. கோபி. என் பால்ய சிநே கிதன். பொன்னேரிக்காரன். நானும்தான். ஒன்றாய் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தோம். அதற்கப்புறம் அவன் சினிமா ஆசையில் சென்னை போனவன் தான். இப்போதுதான் சந்திக்கிறேன். ‘ கோபி ‘ ‘ கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே ‘ ‘ எப்படிடா ஐம் ஸாரி எப்படி இருக்கீங்க கோபி ‘ ‘டேய் நான் ஒண்ணும் ஸ¥ப்பர் ஸ்டார் ஆயிடலை. என்னை எப்பவும் போல கூப்பிடு ‘ ‘ அப்ப சரிடா தக்ளி.’ கோபி கடகடவென்று சிரித்தான். ‘ தக்ளி பரவாயில்லையே இன்னும் ஞாபகம் வச்சிருக்கியே. யாரு என்னை அப்படிக் கூப்பிடுவாருன்னு சொல்லு ‘ ‘வேறே யாரு? நம்ம கண்ணன் ஸார்தான்’ ‘ கரெக்ட் நம்ம கண்ணன் ஸார்தான். கிராப்ட் பிரியட்ல தக்ளிலெ நூல் திரிக்கச் சொன்னாரு. பஞ்சு பிஞ்சதே தவிர நூல் வரலை. அப்புறம் எங்க பாத்தாலும் ” தக்ளி” ன்னுதான் கூப்பிடுவாரு’ ‘ உனக்கு தக்ளிலெ நூல் நூக்க மட்டுமா வரலை. அவர் சொல்லிக்கொடுத்த தமிழும் வரலை. அதுக்குக் கூட அவர் கவிதையா ஒரு வரி சொன்னது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கு’ ‘ நான் சொல்றேன். நூலறியா உனக்கு தமிழ் எப்படி வரும்? கரெக்டா? ஆனா வராத தமிழ்தான் என்னை இப்போ வாழவைக்குது. சினிமாவுக்கு பாட்டெழுதறேன். வண்டி ஓடுது’ ‘ தமிழ் வராத நீ பாட்டெழுதறே… தமிழ்ல முதல் மார்க் வாங்கிய நான் பாங்கில கணக்கெழுதறேன். கண்ணன் ஸாருக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாரு’ ‘ தெரியப்படுத்திடுவோம்… கண்ணன்ஸார் இப்ப சென்னைலதான் இருக்காரு. புரசைவாக்கம் முத்துச்செட்டித் தெருவில. போன வாரம் பாத்தேன். ரிட்டயர்டாயிட்டாராம். ஒரு பொண்ணு. கட்டிக் கொடுத்திட்டாரு. அவளும் புரசைவாக்கத்திலதான் இருக்காளாம். அதான் இங்கேயே வந்திட்டேன்னாரு’ கண்ணன் ஸார் சென்னையிலா! பழைய பள்ளி ஞாபகங்களெல்லாம் மனதில் வந்து அலை மோத ஒரு தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவரது முகவரியைக் குறித்துக்கொண்டேன். அந்தப் பக்கம் போகும்போது கண்ணன் ஸாரை அவசியம் பார்க்கவேண்டும். இரண்டு வாரங்கள் டிரெயினிங்கிற்காக ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டியதால் கண்ணன் ஸார் பற்றி மறந்தே போனது. கோபிதான் ஒரு நாள் வங்கிக்கு •போன் செய்து விசாரித்தான். கண்ணன் ஸாரை மறுபடியும் ஞாபகப்படுத்திய அவனுக்கு நன்றி சொன்னேன். ஞாயிற்றுக்கிழமை காலையில் அஞ்சலா ஆச்சரியப்பட்டாள். நான் சீக்கிரமே எழுந்துவிட்டதும், காலைக் கடன்களை முடித்துவிட்டு உடனே குளித்ததும், டிரஸ் மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பியதும் அவள் ஆச்சர்யத்திற்கு காரணம். ‘ என்னங்க காலையில கெளம்பிட்டீங்க. கடன் வசூலுக்கு எல்லோரும் போகணும்னு பாங்கில சொல்றாங்கன்னு சொன்னீங்களே? அது வந்திருச்சா?’ இதுவும் ஒரு மாதிரி கடன் வசூல்தான். ஆனால் கடன் வாங்கியவனே கடன் கொடுத்தவரிடம் நேரில் சென்று கொடுப்பது. கல்விக்கடனில் விதிமுறைகள் தலை கீழ். எங்கள் வங்கிக்கிளையைத் தொடர்பு கொண்டு ஏற்கனவே கண்ணன் ஸார் இருக்கும் தெரு எங்கிருக்கிறது என்று சரியாக குறித்து வைத்திருந்தேன். அதனால் என்னால் சுலபமாக தெருவையும் வீட்டையும் கண்டுபிடிக்க முடிந்தது. இருபதடி சந்து அந்தத் தெரு. வீட்டின் முன் கதவு பழையகாலப் பாணியில் ரூல்ட் நோட்டு போல் கம்பிகள் நிறைந்திருந்தது. அழைப்பு மணி சிறுவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. அழுத்தினேன். நாக்குடைந்த மணி போல் ஒரு சத்தம் உள்ளே கேட்டது. உள்ளே கொஞ்சம் இருட்டாக இருந்தது. ஒண்டிக்குடித்தன சந்து வீடுகளில் இருட்டு ஒரு இலவச இணைப்பு. அறைகளில் கூட சூரிய வெளிச்சம் கூறையின் சதுரக் கண்ணாடி வழியாகத்தான் வரும். சில சமயம் அந்த வெளிச்சம் படும்படியாக ஒரு பக்கெட்டில் நீர் வைக்கப்பட்டிருந்தால் அந்த நீரில் வெளிச்சம் பட்டுத் தெறித்து சுவர்களில் கோலம் போடும். அது ஒரு சுகமான ஓவியம். அதை நான் பல முறை நான் குடியிருந்த பல வீடுகளில் ரசித்திருக்கிறேன். தாழ்ப்பாள் அகற்றும் ஓசையும் கதவு முனகிக்கொண்டே திறக்கும் ஓசையும் ஒரு சேரக் கேட்டது. ஒரு மெலிய உருவம் வாசலை விட்டு இறங்கி தெருவில் கால் வைத்தது. கண்ணன் ஸார்!! கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப் பார்த்தார் கண்ணன் ஸார். இருட்டிலிருந்து சட்டென்று வெளிச்சத்திற்கு வந்தால் சில வினாடிகளுக்கு கண்கள் கூசும். வயதானதில் பார்வை மங்கியிருக்கவும் கூடும். ‘ வணக்கம் கண்ணன் ஸார்’ ‘ யாரு? சங்கரனா?’ ‘ ஆமாம் ஸார்’ ‘ செய்யுள் சங்கரன்’ அவர் உதடுகள் என் பெயரை பெருமையுடன் முணுமுணுத்தன. எனக்கு அவர் வைத்த பெயர் செய்யுள் சங்கரன். எந்தச் செய்யுளையும் மனனம் செய்து ஒப்பிப்பதில் நான் கெட்டிக்காரன். அதிலும் அதை கண்ணன் ஸார் சொல்லிக்கொடுத்தவாறே ஒப்பிப்பேன். சபாஷ் என்பார் அவர். தோள் மேல் கை போட்டு அணைத்தவாறே என்னை உள்ளே அழைத்துப்போனார். ஒரு சாய்வு நாற்காலியும் அதற்கு முன்னால் ஒரு ஸ்டூலும் அதன் மேல் ஒரு டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. காலை உணவுக்கு அவர் தயாராகும்போது என் அழைப்பு மணி அவரை வாசலுக்கு அழைத்திருக்கிறது. எதிரே இருந்த ஒரு பெஞ்சில் என்னை உட்காரச் சொல்லிவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார். ‘ எப்படி கண்டுபிடிச்சே?’ ‘ கொஞ்ச நாளுக்கு முன்னால ” தக்ளி” யைப் பார்த்தேன். அவன் தான் சொன்னான் ஸார்’ ‘ தக்ளி ? ஓ கோபியா? இன்னும் அந்தப் பேரை நினைவு வச்சிருக்கியா?’ கண்ணன் ஸார் சிரித்தார். ‘ அவனும் மறக்கல ஸார். ‘ ‘ எப்படி மறக்கமுடியும்? அந்தப் பேரில தானே அவன் சினிமா பாட்டு எழுதறான்’ எனக்கு ஆச்சரியாமாகவிருந்தது. பல படங்களுக்கு கோபி அந்தப் பெயரையா வைத்துக்கொண்டு பாட்டெழுதுகிறான்? கண்ணன் ஸார் நிறைய பேசினார். ஜெயித்த மாணவனை பார்த்த ஒரு உண்மையான ஆசிரியரின் சந்தோஷம் அவரிடம் தெரிந்தது. அறை ஓரத்தில் நிழலாடியது. கண்ணன் ஸார் நிமிர்ந்து பார்த்தார். ‘ ஆங் பார்வதி இது என்னோட மாணவன். செய்யுள் சங்கரன். என்னாமா செய்யுள் ஒப்பிப்பான் தெரியுமா? இவன் என்னை மாதிரியே ஒரு தமிழாசிரியரா வருவான்னு நெனைச்சேன். பாங்கில வேலை செய்யறானாம்’ கண்ணன் ஸார் மனைவி அவருக்கு நேரெதில் தோற்றத்தில். கொஞ்சம் குண்டாக குள்ளமாக கறுப்பாக… அதிலும் அந்த முகம்… நதிகள் வரைந்த இந்தியா வரைபடம் போல. ‘ வணக்கம் தம்பி ‘ முகத்தைப் போலவே குரலும் கொஞ்சம் தடிப்பானதாக இருந்தது. ஆண் வாடை அதிகம் அந்தக் குரலில். கண்ணன் ஸார் ஏதோதோ பேசிக்கொண்டிருந்தார். என்னால் அதில் முழுக் கவனமும் செலுத்த முடியவில்லை. அவரது மனைவியின் முகம் என்னை இன்னும் பயமுறுத்திக்கொண்டிருந்தது. எப்படி இவ்வளவு ரசனையுள்ள கண்ணன் ஸாருக்கு இப்படி ஒரு முகத்தோடு ஒரு மனைவி? கண்ணன் ஸார் அதிரப் பேசமாட்டார். ஆனால் அந்த அம்மாவின் குரல்… ‘ தம்பி சாப்பிடுங்க’ மீண்டும் அதே குரல். எனக்கு திடுக்கிட்டது போல் ஒரு உணர்வு. என் எதிரே வேறொரு ஸ்டூல் வைக்கப்பட்டு ஒரு தட்டில் நான்கு இட்லிகளும் மிளகாய் பொடியும் எண்ணை குழைத்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரு டம்ளரில் தண்ணீர். கண்ணன் ஸார் சாப்பிட ஆரம்பித்திருந்தார். நான் தட்டைப் பார்த்தேன். மிளகாய்ப்பொடி கருஞ்சிவப்பில் இருந்தது. தேவையில்லாமல் அந்த முகமும் குரலும் எனக்கு ஞாபகம் வந்தது. சாப்பிடு என்பது போல் கண்ணன் ஸார் தலையை அசைத்தார். ஒரு துண்டு இட்லியைப் பிய்த்து பட்டும் படாமலும் மிளகாய்ப் போடியில் தொட்டு வாய்க்குள் போட்டுக்கொண்டேன். ஒரு அசாத்தியக் காரம் வந்து என்னைத் தாக்கப் போகிறது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தன்னிச்சையாக ஒரு கை டம்ளர் தண்ணிரை நோக்கி நகர்ந்தது. ‘ காரம் இருக்காது தம்பி. நெறம்தான் அப்படி.. கொஞ்சம் தூக்கலா இருக்கும். காரம்தான் உங்க ஸாருக்குப் பிடிக்காதே?’ அதான் காஷ்மீர் மிளகா போட்டு செஞ்சிருக்கேன்.’ மீண்டும் அதே குரல்.. ஆனால் இப்போது என்னமோ அந்தக் குரலில் பாசமும் பரிவும் இருப்பதாக எனக்குப் பட்டது. எனக்குப் புரிந்துவிட்டது. காஷ்மீர் மிளகாய் நிறம்தான் கொஞ்சம் முரடு. காரம் கொஞ்சம்கூட இல்லை.                                                         37. ஆம்பளை வாசனை   என்னுடைய மனைவிக்கு அவர்கள் தூரத்துச் சொந்தம். அத்தை முறை என்று சொல்வாள். சிறு வயதில் எப்போதாவது அவளுடைய அம்மா அங்கே கூட்டிப் போவதுண்டாம். அப்போதெல்லாம் அந்த அத்தைகள் பெரிய படிப்பு படித்து பெரிய பதவியில் இருந்தார்கள். இவர்கள் இருக்கும் ஒரு மணி நேரத்திலே ரொம்பவும் நாசுக்காக ரெண்டொரு வார்த்தைதான் பேசுவார்களாம். ஆங்கிலக் கலப்பில்லாமல் அவர்களுக்குப் பேசத்தெரியாது. இன்னும் கூட நினைவிருக்கிறது என்பாள் என் மனைவி. குழந்தையாக இருக்கும்போது இவளைத் துடைக்க பயன்படுத்திய துண்டை அவர்கள் தனியே எடுத்து வைத்து சலவைக்குப் போட்டார்களாம். சுத்தம் பற்றி ஒரு உரையே நிகழ்த்துவார்களாம். இருவரும் திருமணம் செய்து கொள்ளாததற்கு அதுவும் ஒரு காரணம் என்பாள் என் மனைவி. ஆண் என்பவனே அசுத்தம் என்பது மாதிரியான ஒரு எண்ணம் அவர்கள் மனதில் இருந்தது அது அவர்கள் பேச்சில் அடிக்கடி வெளிப்படுமாம். எனக்கு இப்போது ஐம்பதைக் கடந்த வயது. பிள்ளைகள் பெரியவர்களாகிவிட்டார்கள். அதனால் கிடைக்கும் நேரத்தில் நானும் என் மனைவியும் அட்டவணை போட்டுக்கொண்டு எங்காவது கோயில் குளம் என்று சுற்றத் தொடங்கிவிடுவோம். திருவான்மியூரில் ஒரு கோயிலுக்குப் போகலாம் என்று அன்று கிளம்பினோம். பழைய கோயில். பெரிய குளம். ஆனால் தண்ணீர்தான் இல்லை. ” என்னங்க இப்படி இருக்கு ” ” பேப்பர் படிக்கலியா. குளத்தைச் சுற்றி இருக்கிற கோயில் நிலங்கள ஆக்கிரமிப்பு செஞ்சுட்டாங்களாம். குளத்துக்கு தண்ணி வர வழியெல்லாம் அடைஞ்சு போச்சு. அதான் இப்படி கிடக்கு. ” பெரிய கோயில். சிவன் கோயில். மேற்கு பார்த்த லிங்கம். பல கோயில்களில் பார்த்திருக்கிறேன். லிங்கம் மேற்கு பார்த்துத் தான் இருக்கிறது. ஏன் அப்படி என்று அவளிடம் கேட்டேன். அவள்தான் பல ஆன்மீக பத்திரிக்கைகளை விடாமல் படிப்பவள். ஏதாவது ஆகம சாஸ்திர விதியாயிருக்கும் என்றாள். மேற்கு பார்த்த சன்னதிக்கு தெற்கு வாசல். கூட்டம் அதிகமில்லை. திரை போட்டிருந்தார்கள். நைவேத்தியம் என்றாள் மனைவி. எங்களுக்கு முன்னே ஒரு குடும்பம் காத்திருந்தது. அர்ச்சனைத்தட்டோடு நின்றிருந்தார்கள். அர்ச்சகர் வந்து, திரை விலக்கப்பட்டு, தரிசனம் முடிந்த பின் வெளியே வந்தோம். மணி ஆறுகூட ஆகியிருக்கவில்லை. ” என்னங்க இங்கேதான் எங்க அத்தைங்க வீடு. போயிட்டுப் போலாமா ” ” யாரு லாண்டிரிக்காரவுங்களா ? ” ” இந்தக் கிண்டல்தானே வேணாங்கறது. புரொபஸருங்க. அவங்களைப் போயி லாண்டிரி அதுஇதுன்னு கிட்டு. ” ” சரி சரி நா வெளியவே நிக்கறேன். நீ போயிட்டு வா. அவங்களுக்குத்தான் ஆம்பள வாசனையே பிடிக்காதே? ” ” அதெல்லாம் அப்பங்க. இப்ப அவங்களுக்கு எழுவது வயசாவது ஆயிருக்கும். இன்னுமா அதெல்லாம் பாக்கப்போறாங்க ” ” பாக்கத்தானே போறே ” ” இந்த குத்தல் பேச்சுதானே வேணாங்கறது ” என்று என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு தெருவிற்குள் நுழைந்தாள். கீழே கடைகள். பக்கவாட்டில் குறுகலான படிகள். மேலே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ” இருக்காங்க போலிருக்குது. வாங்க போலாம். ” தயக்கத்துடன் படிகள் ஏறினேன். படிகளில் ஒரு ஜீரோ வாட் பல்பு எரிந்து கொண்டிருந்தது. அழைப்பு மணி இருக்கிற இடம் தெரியவில்லை. பக்கத்தில் உள்ள சுவரில் கையால் தடவிய போது ஏதோ ஸ்விட்ச் போன்று ஒன்று தட்டுப்பட்டது. மெல்ல அழுத்திவிட்டு அவள் பின்னால் நகர்ந்து கொண்டேன். ” யாரு ” என்ற குரலுடன் ஒரு மூதாட்டி கதவருகே வந்தாள். உள்ளே ஏதோ விசையை அழுத்தியிருக்க வேண்டும். வாசல் கதவுக்கு மேலிருந்து ஒளிவெள்ளம் எங்கள் முகங்களின் மேல் பாய்ந்தது. ” யாரு “. ” நாந்தேன் அத்தை காமாட்சி ” ” காமாட்சியா ? எந்த … ? ” ” சுலோசனா பொண்ணு காமாட்சி ” ” அட காமாட்சியா? அடையாளமே தெரியலை ” பார்வை என் பக்கம் திரும்பியது. கேள்விக்குறியே முகமாக மாறியது. ” எங்க வூட்டுக்காரரு ” ” வணக்கம் ” கதவு திறக்கப்பட்டு நாங்கள் உள்ளே செல்வோமா என்றாகிவிட்டது. விசாரணைகள் வாசல்படியிலேயே முடிந்து வெளியேற்றப்படுவோம் என்பது போன்ற ஒரு எண்ணம் என் மனதில் துளிர்விட ஆரம்பித்த போதுதான் இடுப்பிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து கதவைத் திறந்தார்கள் அந்த ‘ அத்தை ‘ எழுபது வயதிருக்கும் அவர்களுக்கு. உள்ளேயிருந்து இன்னொரு மூதாட்டி வந்தார்கள். ஏறக்குறைய இரண்டு பேரும் ஒரே அச்சில் வார்த்தது போலிருந்தார்கள். ” காமாட்சி வந்திருக்கா ” ” காமாட்சியா ? ” ” அதான் சுலோசனா பொண்ணு ” ” சுலோசனாவா ” ” ரங்கம் பாட்டியோட பொண்ணு ” ‘ ரங்கம் பாட்டியா ‘ என்று கேட்கப்போகிறார்கள் என்று நான் நினைப்பதற்குள் அத்தை முந்திக்கொண்டார்கள். ” மேலப்பாளையம். ரங்கம் போய் சேந்துட்டா இல்லை? ” ” இல்லை அத்தை, தம்பி கூட இருக்காங்க ” ” சுலோசனா ? ” ” என்கூட இருக்காங்க ” ” நீ ” ” என் கூட இருக்காங்க ” என்றேன் நான். காமாட்சி முறைத்தாள். ” என் வூட்டுக்காரரு. தமாஷா பேசுவாரு ” இதெல்லாம் இந்தக் கதைக்கு முக்கியமான விசயங்களில்லை. இரவு உணவு முடித்துவிட்டுத்தான் போக போகவேண்டும் என்று இரண்டு அத்தைமார்களும் அடம் பிடித்ததும், ஒரு ரசம் ஒரு பொரியல் என்று சாப்பாடு சுடச்சுட வாழை இலையில் பறிமாறியதும் என்னை திகைக்க வைத்த விசயங்கள். எல்லாம் முடிந்த பின் வெற்றிலை பாக்குத்தட்டில் ரவிக்கைத் துண்டு நூறு ரூபாய் நோட்டு என்று ஏக தடபுடல். படியிறங்கும்போது பார்த்தேன். சலவைத்துணிகளுக்கான மூங்கில் கூடையில் நான் கை துடைத்துக்கொண்ட துண்டு. எதுவும் மாறவில்லை.                     38. சண்டை   சண்டைகளில் பல வகைகள் உண்டு. ஆனால் குடும்ப சண்டைகள் ஒன்றும் பெறாத விசயங்களுக்காக நடக்கும். பரவலாக பொழுது போகாத வெட்டிக் கூட்டம் ஒன்று எல்லா ஊர்களிலும் உண்டு. அவை இந்த சண்டைகளுக்கான ஆடியன்ஸ். வீட்டுக்குள் நடக்கும் சண்டைகளை வானொலி ஒலிச்சித்திரமாக சன்னலருகில் நின்று கேட்கும் அந்த கூட்டம். சண்டை முற்றி தெருவுக்கு வரும்போது அது தொலைக்காட்சி தொடராகி விடும். பெரியசாமி, சின்னச்சாமி சண்டை ஒரு மெகா சீரியல். இதற்கு இரட்டை இயக்குனர்களாக செயல்படுவார்கள் அவர்களின் மனைவிமார்கள். தெரு கூட்ட சுவாரஸ்யம் கெட்டுப் போகதபடி டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறும்படி அவர்கள் இரு சாமிகளுக்கும் காரணம் அமைத்துக் கொடுப்பார்கள். பெரியசாமியும் சின்னசாமியும் சண்டை போட்டுக் கொள்வது மாதத்தில் இரு முறையாவது நடக்கும். மப்பேடு கிராமத்து மக்கள் அப்படி ஒரு சண்டை நடந்தால், ஊரிலுள்ள அத்தனை வீடுகளிலிருந்தும், ஊர் மக்கள் போட்டது போட்டபடி வெளியே வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி என்ன விசேசம் அவர்கள் சண்டையில்.. ஊர் விசயங்களிலிருந்து உலக விசயங்கள் வரை மாட்டி கொண்டு சீரழியும் அவர்களது சண்டையில்.. ஒபாமாவும் கிளீண்டனும் சிக்கி சீரழிவார்கள். பின் லேடன் புழக்கடைக்கு ஓடுவார். சதாம் உசேன் சர்ச்சுக்குள் பதுங்குவார். “ ஏலே நான் பெரியவண்டா சொல்லிப் போடறத மருவாதயாக் கேளு.. “ “ கொஞ்சம் போல சுருட்டை முடியும் முன் வழுக்கையும் இருந்தா நீ என்னா அமெரிக்காவோட ஓபாமாவா.. நீ சொன்னா கேட்டுக்கறதுக்கு “ “ நீ என்னா சதாம் உசேனா யார் சொன்னாலும் கேக்க மாட்டேங்கறதுக்கு “ “ ஒன் பேச்சை உன் பொண்டாட்டியே கேக்க மாட்டேங்குறா இதில நான் கேக்கணுமா.. “ “ ஏய் பேச்சு என் வரையிலும் இருக்கட்டும்.. என் வீட்டை இழுக்காதே “ “ என் மதனியைப் பத்தி நான் பேசாம எவன் பேசுவான் “ கடைசியில் விசயம் அற்பம் பெறாததாக இருக்கும். கோழிக் குழம்பு வைத்தது.. தனக்குத் தரவில்லை என்று சண்டை.. ரெண்டாம் ஆட்டம் சினிமா போன போது தன் மனைவிக்கு மட்டும் கலர் வாங்கிக் கொடுத்தது என்று சண்டை.. மறுநாள் பலசரக்கு கடையில் கல்லாவில் பெரியசாமி உட்கார்ந்திருக்க சின்ன சாமி பவ்யமாக அருகில் நிற்பார். “ அண்ணே பெருமத்தூர் சந்தையில் மொளகா மலிவா விக்காம்.. ரெண்டு மூடை வாங்கிப் போட்டா, வெலை ஏறிச்சுன்னா நாலு காசு பாக்கலாம் “ “ அப்படியா சொல்ற.. சரி ஆட்டோவ எடுத்துக்கிட்டு மூப்பனை சேர்த்துகிட்டு போய் வந்துரு.. இங்கித்து வெல தெரியுமுல்ல “ மளிகை வாங்க வரும் கூட்டம் வாயைப் பொளந்து பார்க்கும். நேற்று சண்டையில் இன்று பாகம் பிரித்து இரண்டு கடையாக ஆகியிருக்கும் என்கிற அவர்களது கனவு பிய்ந்து போகும். பொன்னாத்தா மதியம் சாப்பாடு எடுத்து வரும்போது ஆதரவாக இரண்டு பேரும் இரண்டு பக்கமும் உட்கார்ந்து கொள்வார்கள். பித்தளை தூக்கில் கையை விட்டு பிசைந்து உருண்டைகளாய் எடுத்து கொடுக்கும் போது அண்ணன் சாப்பிடட்டும் என்று தம்பியும், தம்பி சாப்பிடட்டும் என்று அண்ணனும் வாயை “ பொம் “ என்று வைத்துக் கொண்டு கையில் இருக்கும் உருண்டையையே பார்த்துக் கொண்டு இருப்பார்கள். “ எலே போதும்டா நடிப்பு .. நேத்து உருண்டதெல்லாம் மறந்து போச்சா.. இப்ப இந்த உருண்டையிலதான் பாசத்தக் காமிக்கறானுவோ “ ராசப்ப நாடார் வகையில் எப்போதுமே இரட்டைதான். அதுவும் பொட்டையே கிடையாது. எல்லாம் ஆம்பள புள்ளைங்கதான். ராசப்ப நாடார் தன் தம்பி கன்னியப்பனோடு கடை நடத்தியபோது ஏற்பட்ட அனுபவங்களே அவரை தன் மகன்களான பெரியசாமியையும் சின்னச் சாமியையும் அறிவுறுத்த வைத்தது. “ ஒனக்கு தெரியுமாலே.. ஊர் பயலுங்க எமகாதகங்க.. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடற சனங்க.. அதனால் எதயாவது சொல்லி ஆதாயம் தேடணும்னு அலஞ்சிக்கிட்டு இருப்பாங்க.. சாக்கிரத சாக்கிரத.. “ பெரியசாமி வெவரம் தெரியாம முழிப்பான். நாடார் விளக்குவார். “ நானும் உங்க சித்தப்பனும் நகமும் சதையுமாத்தான் இருந்தோம். ஆனால் ஊர்க்காரங்க அதையே காரணம் காட்டி எங்களை நல்லா ஏய்ச்சுபிட்டாங்க” “ அய்யா என்னா சொல்றீங்க? ‘ “ ஆமாலே.. ஊர்லயே பெரிய பலசரக்குக் கடை எங்களது தான்.. எதக் கேட்டாலும் அடுத்த நாளே டவுன்லேர்ந்து வாங்கியாந்து கொடுத்திருவோம்.. ஆனால் கடன்ற பேச்சுக்கே எடம் கெடையாது “ “ அது நல்லதுக்குத்தானே அய்யா “ “ அதுவே வெனையாப் போச்சு.. நான் டவுனுக்கு போயிருக்கும்போது எவனாவது வந்து அண்ணன் சொல்லிச்சு அப்படின்னு சொல்லி நூறு ரூபாய்க்கு சரக்கு வாங்கிட்டு போயிருவான்.. தம்பி இல்லாதபோது எங்கிட்ட வந்து ‘தம்பி அவசரமா நூறு ரூபா வாங்கியாரச் சொல்லிச்சுன்னு ‘ வாங்கிட்டு போயிருவான். இதக் கேட்டா ஏதாவது எங்களுக்குள்ள சண்டை வந்துருமோன்னு நான் வுட்டுருவேன். சரக்கு வாங்கிட்டு போனவன் அண்ணனுக்கு தெரிஞ்சவன் தானேன்னு உங்க சித்தப்பனும் விட்டுருவான். இப்படியே பணம் வாங்கினவன் தம்பி கடையில இருக்கும்போது சரக்கு வாங்கிடறதும், சரக்கு வாங்கினவன் நான் கடையில இருக்கும்போது பணம் வாங்கிடறதும் நடந்துக் கிட்டே இருந்தது. ஒரு சமயம் கணக்கு பார்த்தா ஆயிரக்கணக்கில பாக்கி.. கடை நஷ்டத்தில போய்க்கிட்டு இருந்தது.” “ அப்பறம் எப்படி சமாளிச்சீங்க ஐயா? “ “ இந்தக் கிராமத்துல வார விடுமுறையை கொண்டுட்டு வந்தது எங்க கடையிலதான். வியாழக்கிழமை விடுமுறை.. அன்னிக்குதான் சந்தைக்கு போறது.. சரக்கு வாங்கறது.. கடன் பாக்கிய வசூல் பண்றது இதெல்லாம்.. ஓரளவு தேறி வந்தவுடனே விடுமுறையை ரத்து பண்ணிட்டோம். அதுக்கு முன்னால எங்களுக்குள்ளே ஒரு நாடகம் நடத்திக் கிட்டோம். “ “ நாடகமா ? “ “ ஆமாம் நாடகந்தேன் .. சண்டை போடற நாடகம்.. ஒரு நா அப்பன் ஆத்தா கிட்ட கூட சொல்லாம விடியக் காலைலே இரண்டு பேரும் தெருவில கட்டி புரண்டு சண்டை போட்டுக்கிட்டோம். ஊர் சனம் வேடிக்கை பாத்தது. அதுக்கப்புறம் என் கிட்ட உன் சித்தப்பனைப் பத்தியும் உன் சித்தப்பன் கிட்ட என்னை பத்தியும் யாரும் பேசறதில்லை. ஏய்க்கறதும் கொறைஞ்சு போச்சு.. “ ராசப்ப நாடார் மகன் பெரியசாமிக்கும் கன்னியப்ப நாடார் மகன் சின்னசாமிக்கும் இன்றளவும் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவர்கள் நடத்தும் கடையில் ஏய்ப்பு இல்லை.. கடன் தொந்தரவு இல்லை.                       39. நேர்த்திக் கடன்   நேற்று இரவு மீதமான சோற்றை ‘சில்வர்’ தட்டில் கொட்டினாள் நாகம்மா. தண்ணி சோறு. ஒரு கல் உப்பும் சிறிது மோரும் சேர்த்தாள். பாலு என்கிற பாலகிருஷ்ணனுக்கு காலை ஆகாரம் ரெடி. பாலகிருஷ்ணன் முப்பது வயது இளைஞன். பூர்வீகம் ஆந்திராவில் உள்ள நெல்லூர். சென்னை மாகாணமாக இருந்த போது ஆந்திரா தமிழகத்துடந்தான் இணைந்திருந்தது. பின்னர் பிரிக்கப்பட்ட போது பிரிய மனமில்லாமல் சென்னையிலேயே தங்கி விட்ட குடும்பம் அவனுடையது. அந்தக் காலத்தில் சென்னை மாநகராட்சியில் துப்புரவு வேலைகளுக்கு தெலுங்குக்காரர்கள்தான் என்று ஒரு எழுதப்படாத சட்டம் இருந்தது இவர்களுக்கு சாதகமாகப் போய்விட்டது. நைனாவும் அம்மாவும் கழிவறையே கதி என்று காலம் தள்ளி ஓய்வு பெற்று விட்டார்கள். பாலகிருஷ்ணன் பத்தாவது பெயில். ஆனால் அதுவே அந்தக் காலத்தில் பெரிய படிப்பு. பாலகிருஷ்ணனுக்கு கழிவறை உத்தியோகத்தில் நாட்டமில்லை. படிப்பு வேறு அதிகம். நைனா யார் யாரையோ பார்த்து அவனுக்கு அரசு வேலை ஒன்று வாங்கிக் கொடுத்தார். ‘அபட்டாயர்’ எனும் அரசு அங்கீகாரம் பெற்ற ஆடு வெட்டும் இடம். ஆரோக்கிய ஆடுகளை இனம் பிரிக்கும் அரசு அதிகாரிக்கு உதவியாளன். ஆரோக்கிய ஆடுகள் என இவன் சொல்பவைகளை அதிகாரி அரசு முத்திரையுடன் ‘பட்டை’ கட்டி அனுப்புவார். அப்புறம் ஆடு கதி அதோ கதி. பாலகிருஷ்ணன் நைனா மாநகராட்சி உத்தியோகத்தில் கிடைத்த வருமானத்திலும் தன்னுடைய ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணத்திலும் கூடுவாஞ்சேரியில் ஒரு நிலம் வாங்கி சிறிய வீடு கட்டி இருந்தார். பாலகிருஷ்ணனுக்கு பதினெட்டு வயசிலேயே வேலை வாங்கிக் கொடுத்த கையோடு உறவிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணமும் செய்து வைத்தார். நாகம்மா நெல்லூரிலிருந்து செண்டரல் ரயில் நிலையத்திற்கு வந்த போது சென்னையைப் பார்த்ததுதான். புருஷன் காலையில் ஏழு மணிக்கு கிளம்ப வேண்டும் என்றும் இரவு எட்டு மணிக்குத்தான் திரும்பி வருவான் என்பதும் இத்தனை வருடங்களாக அவளுக்கு அத்துப்படியான அட்டவணை. பாலகிருஷ்ணன் தலையைத் துவட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தான். பழைய சோறு தட்டைக் கையில் எடுத்து நின்றபடியே நாலு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டான். அவன் உணவுப் பிரியன் அல்ல. எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவான். ஆனால் சுத்த சைவம். அவர்கள் குடும்பம் அசைவம் சாப்பிடுகிற குடும்பம் தான். பாலுவுக்கு ஐந்து வயது இருக்கும்போது ஆட்டு ரத்தத்தை வறுத்துக் கொண்டு வந்தாள் அவன் உறவுக்கார அத்தம்மா. அதைச் சாப்பிட்டு அவனுக்கு ஒத்துக் கொள்ளாமல் போனதும் அதற்கப்புறம் அவனைத் பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போய் வெளி வராண்டாவிலேயே வைத்தியம் பார்த்ததும் அவனுக்கு நிழலாக இன்னும் நினைவில் இருக்கிறது. அன்றிலிருந்து ஆடும் அதன் கறியும் அவனுக்கு அந்நியமாயிற்று. பின்னாளில் மற்ற அசைவ வகைகளும் தவிர்க்கப்பட்டு முழு சைவமாக அவன் மாற்றப்பட்டான். அவனுக்கு மூலக்கொத்தளத்தில் உள்ள ஆடு வெட்டும் இடத்தில் வேலை. பாலகிருஷ்ணன் பிடித்தம் போக தன்க்கு கிடைத்த சொற்ப சம்பளத்தில் சுக ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தான். சின்ன வயசில் உடம்பு சரியில்லாமல் போய் ஊரிலுள்ள நரசிம்ம சாமிக்கு வேண்டிக்கொண்டதும் பின்னாளில் பல சாமிகளுக்கு நேர்ந்து கொண்டதுமாய் சேர்ந்து அவனை ஒரு சாமியாராகவே ஆக்கிவிட்டிருந்தது. பல சமயங்களில் அவன் பாஷை புரியாதது போல் இருக்கும். அப்படித்தான் ஒரு நாள் கயிற்றுக் கட்டிலில் வேப்பமரத்தடியில் ஒரு ஞாயிற்றுக் கிழமை படுத்திருந்தபோது ‘அதோ பார் அந்த காக்காவை. அதுங்கழுத்திலே சூலம் தெரியுது’ என்றான். நாகம்மாவும் உற்று உற்று பார்த்தாள். அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. இருந்தாலும் புருஷன் கோபித்துக்கொள்ளப் போகிறானே என்று ஆமாம் என்று சொல்லி வைத்தாள். ராத்திரி அவன் தூங்கிய பின் நரசிம்ம சாமிக்கு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் முடிந்து வைத்தாள். அவளுக்கு தெரிந்தது அவ்வளவுதான். கூடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷனில் ஏழு இருபது வண்டியைப் பிடிக்க அவன் ஏழு மணிக்கு வீட்டை விடவேண்டும். சைக்கிளில் ஸ்டேஷன் போய் சேர பத்து நிமிடம் ஆகும். சைக்கிளை ஸ்டேண்டில் விட்டுவிட்டு பிளாட்பாரம் போனால் சரியாக வண்டி வந்து நிற்கும். பீச் ஸ்டேஷன் போய் அங்கிருந்து பஸ்ஸில் மூலகொத்தளம் போய் சேர அவனுக்கு பத்து மணியாகும். நடுவில் சைக்கிள் பஞ்சரானாலோ அல்லது யூனிட் தாமதமானாலோ அவனும் லேட்டு தான். அன்று எல்லாம் சரியாகவே நடந்தது. ‘சில்வர்’ தட்டில் பழைய சாதமும் அம்மா போட்ட ஆவக்கா ஊறுகாயும் உள்ளே போக நாகம்மா கொடுத்த ‘சில்வர்’ டிபன் பாக்ஸில் புளிக்குழம்பு சாதம் இருக்க பாலு வேலைக்கு ஆஜரானான். கன்னியப்பன் சார்தான் அவனுக்கு மேலதிகாரி. மந்திரிக்கு உறவாம். பேசிக்கொண்டார்கள். அதனால் தான் இந்த ‘போஸ்டிங்’ கிடைத்தாம். ஆட்டுக்கு பத்து ரூபாய் என்று மேல் வருமானம் வரும் இடம். குறைந்தது ஐநூறு ருபாயாவது கிடைக்கும் தினம். இரண்டு மணியோடு ஆட்டம் க்ளோஸ். ஆடுகளும் க்ளோஸ். அதன் பிறகு ஆபிஸர் வீட்டுக்கு போய்விடுவார். போகும்போது பாலுவுக்கு ஒரு ஐம்பது தருவார். அதற்கப்புறம் பாலு பட்டை, சீல், லெட்ஜர் புக்கெல்லாம் எடுத்து வைத்துவிட்டு சாப்பிடப் போவான். அவன் வேலை செய்யும் இடத்துகருகில் ஒரு முருகன் கோயில் இருக்கிறது. அதன் மண்டபத்தில்தான் அவன் ஏறக்குறைய தினமும் சாப்பிடப் போவான். ஆடு வாசனையில் சாப்பிட அவனுக்கு பிடிக்காததால் இந்த ஏற்பாடு. தினமும் முருகன் கோயிலில் சாப்பிடுவதால் மற்ற சாமிகளுடன் அவனுக்கு முருக சாமியும் பிடித்துப் போயிற்று. இன்று சரியான நேரத்திற்கு வந்ததினால் பாலகிருஷ்ணன் கொஞ்சநேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தான். கன்னியப்பன் சார் இன்னும் வரவில்லை. எந்நேரமும் வரலாம். வாசலில் கன்னியப்பன் சார் பைக் சத்தம் கேட்டது. ‘ சார் வந்துட்டாரு’ என்று காத்திருந்த சனங்களுக்கும் தனக்குமாய் சொல்லிக்கொண்டு வாசலுக்கு ஓடினான்.சார் கொடுத்த கூடையை வாங்கிக் கொண்டான். பையில் பெரிய பாட்டிலில் மோர் இருக்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை அதை கிளாஸில் ஊற்றி பாலுதான் கொடுப்பான். அவருக்கு அல்சராம், அதனால் டாக்டர் அப்படி சாப்பிடச் சொல்லியிருக்கிறாராம். சாயங்காலம் தண்ணியடிச்சிட்டு வெறும் வயத்திலே படுத்திருப்பாரு. அதான் அல்சர் வந்துட்டுது என்று பிச்சையும் கோபாலும் பேசிக்கொண்டது அவன் காதில் விழுந்தது. அந்த நேரத்திலேயே அது மறந்தும் போனது. பகல் பதினொரு மணி இருக்கும். அந்த வெள்ளாடு கட்டிப் போட்ட இடத்திலிருந்து துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்க்க அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அதன் துள்ளல் அடங்கிவிடும் என்று நினைக்கும் போது அவனுக்கு வருத்தமாக இருந்தது. ஆடு ஆரோக்கியமாக இருப்பது அதன் துள்ளலிலேயே தெரிகிறது. எப்படியாவது இதைக் காப்பாற்றி விட்டால் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருக்குமே என்று நினைத்துக் கொண்டான். ஏய் துள்ளாதே என்று பார்வையாலேயே அதட்டினான். ஆடு அவன் பார்வைக்கு மசியவில்லை. அதன் துள்ளல் நிற்கவில்லை. ஆட்டின் சொந்தக்காரன் ஆட்டை இழுத்துவந்தான். ஆட்டை ஏக்கமாக பார்த்தான் பாலு. “சீக்கிரம். இன்னும் எவ்வளவு பேர் நிக்கறாங்க பார்” என்று கன்னியப்பன் சார் அதட்டினார். அல்சர் வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. பாட்டில் மோரை ட்ம்ளரில் வார்த்து அவரிடம் நீட்டினான். அதை வாங்கி குடிக்க ஆரம்பிக்கும் போதுதான் ஆட்டை அவன் கவனித்தான். ஆடு அவனைப் பார்த்து ‘மே’ என்றது. மேலுலகம் என்று உனக்கு சொல்லத் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டான், ஆடு அவனை நிமிர்ந்து பார்த்தது. அப்போதுதான் ஆட்டின் நெற்றியை பாலு கவனித்தான். வெள்ளை நெற்றியில் பழுப்பாக ஒரு அடையாளம். உற்றுப் பார்த்தபோது அது அவனுக்கு முருகனுடைய வேல் போல் தோன்றியது. ‘முருகா’ என்று மனசுக்குள் ஒரு முறை கூறிக்கொண்டான். இதை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்று தீர்மானித்தான். கன்னியப்பன் சார் மோர் குடித்த திருப்தியில் லேசாக சாய்ந்து உட்கார்ந்திருந்தார். தன் உடம்பால் ஆட்டை லேசாக மறைத்துக் கொண்டான் பாலு. பட்டைக்கு நூல் கட்டுவதற்காக வைத்திருந்த கோணி ஊசியை எடுத்து ஆட்டின் காதுக்கு உட்புறமாக குத்தினான். ரத்தம் காதிலிருந்து ஒழுக ஆரம்பித்தது.வலியில் ஆடு அலறியது. செத்துப் போறதுக்கு இந்த வலி பரவாயில்ல . பொறுத்துக்கோ என்று மனதார வேண்டினான். ‘சார்! ஆட்டு காதுல ரத்தம் வடியுது சார். சீக்கோ என்னமோ?’ அப்ப வேணாம் . விட்டிடு’ கன்னியப்பன் சார் கையசைத்தார். ஆட்டின் சொந்தக்காரன் ஏமாற்றத்துடன் நகர்ந்தான். ஆடு துள்ளல் நின்று போய் வலியுடன் வெளியேறிக்கொண்டிருந்தது. பாலகிருஷ்ணன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆட்டின் சொந்தக்காரன் அவன் மனைவியிடம் சொல்வது அவன் காதுகளில் விழுந்தது. ” ஆடு சீக்காம். ஆபிசரு சொல்லிட்டாரு. வேறென்ன பண்றது. நீ சொன்னாப்பல முருகன் கோயிலுக்கு நேர்ந்து விட்டுட வேண்டியதுதான்”                                                         40. மறுப்பிரவேசம்   நானும் ‘தண்ணி வண்டி’ தங்கராசும் ஒண்ணா படிச்சவங்க. ஒரு நாள் ஓல்டு பாய்ஸ் மீட்டிங்லே தங்கராசுதான் இதைப் பத்தி பேசுனான். ‘அவனுக்கு செம கிக்கு’ மணிவண்ணன் சொன்னான். நமக்கு மட்டும் இல்லையான்னு நெனைச்சுகிட்டேன். பொறியியற்கல்லூரிலே படிச்சுட்டு தனியார் கம்பெனிகள்லெ வேலை பார்க்கிற எங்களுக்கு கிடைக்காத ‘கிக்’கா. அதனால ஏற்படுற மன வருத்தத்திலே நாங்க போடாத ‘பெக்’கா. ‘இல்ல மாம்ஸ் நமக்குன்னு ஒரு எடம் வேணும்.ஜாலியா பேச , தண்ணியடிக்க’ எல்லோரும் அவனைப் போல நித்திய கிளாஸ் பூரண குவாட்டர்னு இல்லாட்டாலும் ஒரு தனி எடம் வேணுங்கறதிலே வேற அபிப்பிராயம் இல்லாததனால ஒட்டு மொத்தமா ஒத்துகிட்டோம். தன்னோட ஐடியா ஒர்க் அவுட் ஆனதில சந்தோஷப்பட்டுகிட்டே தங்கராசு தள்ளாடியபடியே வெளி நடப்பு செஞ்சான். அடையார் ஆத்து ஓரமா ஒதுக்குப் புறமா ஒரு பெரிய எடத்தை இருவது வருஷ லீசுக்கு ஏற்பாடு செஞ்சாச்சு. ஆளுக்கு அஞ்சாயிரம் போட்டு ‘லைப்’ மெம்பர் ஆயிட்டோம். நாங்க நாலஞ்சு பேர் பேசின விசயம் ஊர் பூரா பரவி எங்களோட படிச்சவன், முன்னால படிச்சவன், பின்னால் படிச்சவன், வெளிநாடு போனவன் , வேலையே பாக்காதவன்னு பத்து நூறு பேரு சேந்துட்டாங்க . கிளப் கொடிகட்டிப் பறக்குது. பொண்டாட்டி புள்ளைங்களை கூட்டிகிட்டு வர செலவில்லாத ஒரு எடங்கற வகையிலெ ‘கிளப்’ எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. அமர்களமா ‘பார்’ போட்டு பாட்டில்களை கம்பெனிலேர்ந்தே வரவழைச்சு விலையையும் சல்லிசாக்கின வுடனே குடிக்காதவங்களுக்கும் பிடிச்சுப் போச்சு. ‘பார்’லெ இருக்கற அப்பாங்களை தொந்தரவு பண்ணாம இருக்கறதுக்கு புள்ளைங்களுக்கு ஊஞ்சல், சறுக்கு மரம், கிளி கூண்டுன்னு ‘செட் அப்’ பண்ணியாச்சு. பாப் கார்னும் கோன் ஐசும் கொடிகட்டி பறக்குது. கூடவே ‘சிட்டிசனுங்களுக்கு’ மொளகா பஜ்ஜி. மாசம் ஒரு நா விசிடி பொரஜக்டர் கொணாந்து படம் போடுவாங்க. அப்படித்தான் அன்னிக்கு ‘அழகி’ படம் போட்டாங்க. சனிக்கிழமையா இருக்கறதாலெ ரெண்டு பெக் போட்டு படம் பாத்திட்டிருந்தேன் நானு. படத்திலெ அந்த சம்முகமும் தனலட்சுமியும் காட்டசொல்ல கொஞ்சம் குறுகுறுன்னு இருந்தது. அப்புறம்தான் கொஞ்சம் சுதாரிச்சுகினு படத்தை உன்னிப்பா பாக்க ஆரம்பிச்சேன். இந்த தங்கர் பச்சான் நம்ப ஊர் ஆளா. கதை நம்ப கதை மாதிரியே இருக்குதேன்னு யோசிச்சேன். மனசு பிளாஷ் பேக்கிலே பள்ளிப்பாளயம் போயிட்டுது. நான் பத்தாவது வரைக்கும் பள்ளிப்பாளையம் காகித ஆலை பள்ளிக்கூடத்திலேதான் படிச்சேன். என் கூட படிச்சவன் எவனும் பட்டணம் வரலை. ஆலையில வேலை செஞ்சுகிட்டிருந்தாரு எங்க அப்பா. ஆலை நிர்வாகமே பள்ளிக்கூடத்தை நடத்திச்சு. நோட்டு புத்தகமெல்லாம் நிர்வாகமே தரும். ஏழாங்கிளாஸ் படிச்சிட்டுருக்கும்போதுதான் மாணிக்கங்கறவரு அங்கே வேலைக்கு சேந்தாரு. அவரு ஐடிஐ டிப்ளமோ படிச்சுட்டு சூப்பர்வைஸரா சேந்ததா சொன்னாங்க. அந்தக் காலத்திலேயே அவரு பைக்கிலே வருவாரு. அவரு போண்ணுதான் நந்தினி. அதுவும் ஏழாங்கிளாஸ். ஸ்கூலுக்கு சைக்கிள்லே வரும். பாக்க கொஞ்சம் சுமாரா இருக்கும். பட்டணத்திலேர்ந்து வந்ததினாலே பவுடர், பொட்டுன்னு கூட கொஞ்சம் மெருகேத்தினதாலே பசங்க பெல் அடிச்சாலும் அது வர வரைக்கும் வாச கேட்டை விட்டு நவுர மாட்டாங்க. எனக்கும் பாக்க ஆசைதான்னாலும் அப்பனும் ஆத்தாளும் சின்னவயசிலேர்ந்து 2 கரைச்சுஊத்தின ‘இன்ஜினியராவணுங்கற போதனை’ மனசை உலுக்கி கிளாஸ் ரூமை நோக்கி காலைத்தள்ளும். பசங்க பக்கம் ஓர பெஞ்சுல நானும் அந்தப் பக்கம் நந்தினியும் உக்காந்தது மத்த பசங்களுக்கு பொறாமையா இருந்ததென்னவோ உண்மைதான். நானா போய் பேசாட்டாலும் நான் கொஞ்சம் படிக்கிற பையங்கறதனாலே நந்தினியே எங்கிட்டே சந்தேகம் கேக்க வரும். பத்தாவது படிச்சு முடிக்கிறதுக்குள்ளே எங்களுக்குள்ளே ஒரு இது வந்து ஒட்டிக்கிச்சு. அத காதல்னு சொல்றதா வேற என்னான்னு சொல்றதுன்னு இன்னிக்கும் எனக்கு தெரியல. பதிணொண்ணாம் கிளாஸ் பரிட்சை முடிஞ்ச உடனே டவுனுக்கு அனுப்பணுங்கறதனாலே நந்தினியை அவங்கப்பன் டைப் கிளாஸ¤க்கு அனுப்பிட்டாரு. பட்டணத்திலே படிச்சா உடனே இன்ஜினியராவலாம்னு எங்கப்பா என்னை மாமா வூட்டுக்கு அனுப்பிட்டாரு. அப்புறம் நான் அஞ்சு வருஷம் படிச்சதும் யூனிவர்சிட்டி ரேங்க் வாங்கினதும் இந்தக் கதையில ஒட்டாத விசயம். அப்ப ஒட்டிக்கின விசயம் என்னான்னு கேக்கறீங்களா. அதான் இந்தக் கதையே. நான் இன்ஜினியரிங் கல்லுரிலே படிக்கும் போதே கிருஸ்டினாங்கற கிருஸ்த்துவப் பொண்ணு எங்கூட படிச்சது. அதுக்கு என் கிராமத்து லுக் பிடிச்சுப் போச்சு போலிருக்கு.சந்தேகமே வராத விஷயங்களுக்கெல்லாம் சந்தேகம் கேக்க ஆரம்பிச்சுது. அப்ப தான் எனக்கு சந்தேகமே வந்துது. இந்தப் பொண்ணு ஒரு மாதிரியோன்னு. ஆனா அடுத்த வாரமே அந்த சந்தேகம் தீர்ந்து போச்சு. சிவாஜி கிருஷ்ணண் ‘ ஆகா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’னு பாடின உடனே ‘பளார்’ னு ஒரு அறை வுட்டுச்சு. இது நல்ல பொண்ணுதான். நம்ப கிட்டே தான் ஒரு ‘இது’ ன்னு புரிஞ்சுது. அஞ்சு வருஷம் முடியறதுக்குள்ளே ஸ்டரக்சரல் ஆர்கிடெக்சர் மாதிரி எங்க நெருக்கம் வளர்ந்துடுச்சி. இத்தனைக்கும் நடுவில நான் படிப்பை விட்டுக் கொடுக்கல. அப்பன் ஆத்தா கேட்டுகிட்டா மாதிரி யூனிவர்ஸிட்டி கோல்ட் மெடல் வாங்கித்தான் ஓஞ்சேன். கிருஸ்டினா அப்பன் பெரிய பணக்காரன். நாலஞ்சு கம்பெனி வச்சிருந்தான் அந்தக் காலத்திலேயே. இது ஒரு நா போய் அப்பன் கிட்டே என்னைத் தான் கட்டிக்குவேன்னு சொல்லியிருக்கு. அவனும் அந்தஸ்து பாத்து முடியாதுன்னு சொல்லியிருக்கான். இது உடனே பாத்ரூம் உள்ளார போய் மணிக்கட்டு நரம்பை வெட்டிக்கிச்சு. அப்பன் அலறிட்டான். பொண்ணை ஆஸ்பத்திரியிலே சேத்துட்டு என் ரூமைத் தேடி ஓடியாந்தான். ‘பேசும் படம்’ சினிமால வரா மாதிரி சிந்தாதிரிப்பேட்டையில ஒரு சின்ன சந்துல ஒரு ரூம்ல அப்ப நான் இருந்தேன். ரெண்டு சைக்கிள் ஒண்ணா வந்தா ரோட்ல ஆளுங்களுக்கு எடமிருக்காது. ‘செவர்லே’ காருல வந்த அப்பன் குப்பன் சுப்பனாட்டம் நடந்து என் ரூமுக்கு வந்தான்.படிக்கட்டு ஒன்றரை அடி கூட இருக்காது. ஆளு அகலத்தில் ரெண்டடி இருப்பான் போலிருக்கு. எப்படி நுழையறதுன்னு யோசனை பண்ணிகிட்டே மேலே பாத்தான். பாதி பல்லு தேச்சுகிட்டிருந்த நான் எப்படித் துப்பரதுன்னு தெரியாம நொறைய வாய் ஒரத்தில் அடக்கிக்குனு ‘யாழ் சாழ் வேணும் ‘ னு கேட்டேன். என் பேரைச் சொல்லி அவரா அவனான்னு சொல்லத் தெரியாம தயங்கினான். அப்பவே புரிஞ்சுகிட்டேன் இவன் கிருஸ்டினா அப்பன்னு. ‘ ஒன் மினிட்’ னு சொல்லிட்டு சட்டையை மாட்டிகினு கீழே ஓடியாந்தேன். விவரம் சொன்னான். ஆஸ்பத்திரிக்கு ஓடி அவளைப் பாத்து எனக்கெதிர அவ அப்பன்கிட்டே சத்தியம் வாங்கிக்கினு என்னைக் கல்யாணம் செஞ்சதெல்லாம் ஒரு பிளாஷ் மாதிரி நடந்து போச்சு. இதுல எங்கப்பன் ஆத்தாவுக்கு கொஞ்சம் வருத்தம். அதுக்கப்புறம் அவங்க ரொம்ப நாள் பட்டணம் பக்கமே வரலை. கிருஸ்டினா எம்பேர்ல இருந்த கிக்குல நான் மதம் மாறட்டான்னு கேட்டா. நான் வாணான்னுட்டேன். ஒன் சாமியை நீ கும்பிடு என் சாமியை நான் கும்பிடறேன்னு சொல்லிட்டேன். இருந்தாலும் ஒன் பொண்டாட்டியா ஆன பொறவு இந்தப் பேரு எனக்கு வாணாம் வேறே பேர் வைய்யின்னு அவதான் என்னை கேட்டுக்கிட்டா. அப்பத்தான் ‘அழகி’ சமாச்சாரம் நம்ப லைப்பிலே வந்து வெளையாண்டுது. பேருதானே நந்தினின்னு வெக்கட்டுமான்னு கேட்டேன். நந்தினி பேரு நல்லாயிருக்கேன்னு குஷியாயிட்டா. கொஞ்ச நாள்லே அவளுக்கு கிருஸ்டினான்ற அவளோட அப்பன் வெச்ச பேரே மறந்து போச்சு. இது நடுலே நான் வேல விசயமா வெளியூர் போனதும் அவ அந்த சமயத்தில அப்பன் வூட்டுக்குப் போனதும் சாதாரணமா எல்லா வூடுங்கள்ளேயும் நடக்கிற விசயந்தான்.ஈரோட்டுக்குப் பக்கங்கறதால அப்படியே ஊர் பக்கம் போனதும் எங்கயும் நடக்கிறதுதான். பம்பு செட்ல குளிக்கறதுக்காக நான் வயக்காட்டுக்குப் போனதும் என் கூடப் படிச்ச ‘கோலி குண்டு’ நந்தினி சமாச்சாரத்தை எடுத்து வுட்டதும்தான் இந்தக் கதையோட திருப்பம். நந்தினி புருஷனும் குடிகாரனாம். சின்ன வயசிலேயே அவளோட அப்பன் கடனைக் கழிக்கறாப்பல அவளை ஒரு கெவுருமெண்டு வேலைக்காரனுக்கு கட்டி வச்சிட்டாராம். குடியும் குடுத்தனமுமா அவ ஈரோட்லதான் இருக்காளாம். ‘கோலிகுண்டு’ பாத்தானாம். அவனுக்கு ‘கோலிகுண்டு’ ன்னு பேரு வந்ததே அவங்கண்ணை வச்சுத்தான். பின்னே பாக்காம இருப்பானா. நந்தினி பத்தி சொன்னவுடனே ஒரு சிலிப்பு வந்துச்சு. எங்கடான்னு கேட்டேன். ஏன் பாக்க ஆசையா இருக்கான்னு அவன் திருப்பி கேட்டான். ஆமான்னுதான் வச்சிக்கயேன். சொல்லுன்னு கேட்டேன். நந்தினி இப்ப வேலை பாக்குதாம். கெவுர்மெண்டு வேலை. அவ புருஷன் குடிச்சு கொடல் வெந்து செத்துட்டானாம். அந்த மாசம் ஈரோட்டுக்கு போவ முடியல. அதுக்கடுத்த மாசமும் முடியல. இதுக்குள்ளே அப்பன் வூட்டுக்கு போன என் நந்தினி மறுபடியும் கிருஸ்டினாவா திரும்பிருந்தா. அவ அப்பன் என்னா மாயம் பண்ணான்னு தெரியல. என்னை பேர் சொல்லி கூப்பிட ஆரம்பிச்சா. கொஞ்சம் கோவம் கொறைஞ்சு எங்கூட பட்டணத்துக்கு வந்த என் அப்பனும் ஆத்தாவும் இதைப் பாத்து அடுத்த வண்டிக்கே ஊருக்கு கெளம்பிட்டாங்க. நந்தினி எங்கிட்டே ஒரு நா பாஸ்போர்ட் காமிச்சா. சரி பெரிய எடத்துப் போண்ணு. அவங்கப்பன் கூட வெளிநாடு போவும். நமக்குத்தான் அதுக்கெல்லாம் வக்கில்லையேன்னு கம்முனு இருந்துட்டேன். ஒரு நா காலங்காலையில எழுந்து அப்பன் கார்ல போனா. சாயங்காலம் வந்து சொல்றா அமெரிக்காவுக்கு படிக்கப் போறேன்னு. திரும்பி வர்றதுக்கு கொறஞ்சது நாலு வருசம் ஆவுமாம். கூடவே வந்த அவ அப்பன் வராமயும் போலாங்கறான். எனக்கு கோவம் வந்திருச்சு. திரும்பி வராததுக்கு எதுக்கு புருஷன்னு கேட்டுட்டேன். அவங்கப்பன் நமுட்டா சிரிக்கிறான். நந்தினி கம்முனு என்னைப் பாத்துகினே நிக்கறா. அதுக்குதான் மாப்பிளேன்னு அவங்கப்பன் என்னாண்டே பேசறான். என்னாடா இது அதிசயமா இருக்குது. எந்நாளும் இல்லாத திருநாளா இந்தாளு என்னை மாப்பிளேன்றானேன்னு அப்பவே எனக்கு ஒரு சந்தேகம். அது போய் மனசுக்குள்ளாற வேலை செய்யறதுக்குள்ளே அடுத்த குண்டைப் போட்டுட்டான். பிசினஸ¤ டல்லு எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு நானும் அங்கேயே போய் செட்டில் ஆயிடலாம்னு பாக்கறேன்றான். போறவ மொத்தமா முடிச்சுகினு போய்த் தொலை. நானும் தல முழுவிடறேன்னு நானும் கத்திட்டேன். எப்பவும் கொண்டார்ர பொட்டியை மடியில வச்சுகினு நம்பரைத் திருப்பி பொட்டியை தொறந்து ஏதோ பேப்பரை எடுக்கிறான். விடுதல பத்திரமாம். கையெழுத்து போடணுமாம். பதிலுக்கு எதுனா வேணுமாங்கற மாதிரி மோவாயை தூக்கறான். பதிலே பேசாம கையெழுத்து போட்டுட்டு கைய வாசப்பக்கம் காமிச்சேன். ‘என்னாங்க ஆபிசுக்கு கெளம்பலயா’ ன்னு நந்தினி கொரலு கேக்குது உள்ளாறேந்து. ‘தோ கெளம்பறேன்’னு சொல்லிட்டு எழுந்துக்கறேன். இன்னா கொழப்பமா இருக்குதா. என் சம்சாரம் நந்தினிதான். அமெரிக்கா இல்ல பள்ளிப்பாளயம்.                                     41. மனக்கணக்கு   ஜெகதீசனுக்கு நிரம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மல்லிகாவிற்கு கல்யாணம். அதுவும் சாதாரண மல்லிகா இல்லை. பட்டதாரி. அதுவும் சாதாரண பட்டதாரி இல்லை. முதுகலை பட்டதாரி. அரசு கல்லூரியில் விரிவுரையாளர் வேலை. கை நிறைய சம்பளம். நேற்றுதான் அப்பா ஊரிலிருந்து கடிதம் போட்டிருந்தார். ஆவணி மாதம் 10ந்தேதி திருமணம் விழுப்புரத்தில் நடத்தப் போகிறார்கள். மாப்பிள்ளைக்கு அரகண்ட நல்லூர். திருக்கோயிலூர் பெருமாள்தான் இந்த வரனை இவர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அப்பா அப்படித்தான் எழுதி இருந்தார். திருக்கோயிலூரில் இருந்து பத்தாவது கல்லில் இருக்கிறது நாச்சியார்மடம். மிகவும் பின் தங்கிய கிராமம் அது. அந்த கிராமத்தில் ஆண் பிள்ளைகள் பத்தாவது தாண்டினாலே அது உலக அதிசயம். பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வரைதான் வெளியே போக முடியும். அதனால் எட்டு கிளாஸ் கூட தாண்டாத பிள்ளைகள்தான் அங்கு அதிகம். மல்லிகா பூப்பெய்துவது கொஞ்சம் தாமதானது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். பத்தாவது முடித்த பின் தான் அவளுக்கு அந்த சடங்கு நடந்தது. நன்றாகப் படிக்கக் கூடிய பெண். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவள் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று தேர்வாகியிருந்தாள். தினத்தந்தி பரிசு கொடுத்து படமும் போட்டது. முதலமைச்சர் கோட்டைக்கு வரவழைத்து பரிசு கொடுத்து கல்லூரி வரையிலும் இலவச படிப்புக்கு உத்தரவாதம் தந்தார். எதிர்கட்சி அம்மா ஜெயித்த தொகுதி அது என்பதால் அவர் பங்குக்கு கணிப்பொறியும் சைக்கிளும் தந்தார். “ சமைஞ்ச பிள்ளையை எப்படி படிக்க வெளிய அனுப்ப முடியும். அது நம்ம சாதி பழக்கமில்லீங்க “ உயர்நிலைப் பள்ளி நிர்வாகியிடம் மல்லிகாவின் பாட்டி சின்னாத்தா திட்டவட்டமாக சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பழமையிலேயே ஊறிப்போனவர். மல்லிகா பின் கட்டில் தூணோரம் மறைந்து நின்றுகொண்டு கண்களில் வழியும் நீரை துடைத்துக் கொண்டிருந்தாள். அடுத்த இரண்டு நாட்களில் அந்த ஊர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிக்கொண்டான் ஒரு படையுடன் வந்தார். “ பாட்டிம்மா நீங்க இன்னமும் பழைய காலத்திலேயே இருக்கீங்க.. பொம்பள பிள்ளைங்க ராக்கெட்ல போறாங்க.. விமானம் ஓட்டறாங்க.. நீங்க என்னடான்னா வீட்டை விட்டு வெளியவே அனுப்ப யோசிக்கிறீங்க “ “ பறக்கறவள படிக்க வையி.. என் பேத்திக்கிட்ட ஏன் வர்ற.. “ நாளொரு செய்தியும் பொழுதொரு புரளியுமாக மல்லிகா படிப்பு நிறுத்தப்பட்ட விசயம் பத்திரிக்கை களில் வெளியாக தொடங்கியது. கருத்துக் கணிப்பு நடத்தி மல்லிகா படிக்கலாமா கூடாதா என்று பட்டிமன்றம் நடத்தினார்கள். தடாலடியாக ஒரு நாள் பதினைந்து வெள்ளைக் கார்கள் மல்லிகாவின் வீட்டின் முன் நின்றன. மூன்றாவது காரில் இருந்து பூனைப்படைகள் புடைசூழ எதிர் கட்சி தலைவி அம்மா இறங்கி வந்தார்கள். “ பாட்டி எப்பவுமே என் மவராசன், அவன் நல்லா இருக்கணும்னு சொல்லுவியே அந்த மவராசன் கட்சியிலேருந்து அவரு அனுப்பிச்ச அம்மா வந்திருக்காங்க.. உன் பேத்திய படிக்க சொல்லி கேட்கறாங்க.. என்னா சொல்ற “ “ அவரா? என் மவராசனா அனுப்பினாரு.. அவரு கேட்டு எதையாவது மறுக்க முடியுமா.. படி புள்ள நல்லா படி “ அம்மா, மல்லிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் எல்லா செய்தித்தாள்களிலும் மறுநாள் வந்தது. ஒரு போராட்டமாக உருக்கொண்ட மல்லிகாவின் படிப்பு முடிந்து இப்போது அவளுக்கு கல்யாணம்! மல்லிகா நன்றாகப் படித்தாள். மேற்படிப்புக்கு சென்னை போனாள். கூடவே சின்னாத்தாவும் துணைக்குப் போனாள். அதோடு கல்லூரி வரையிலும் கூடவே போய் விட்டு விட்டு, வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து கொள்வாள். காலையில் கஞ்சித் தண்ணி தான் குடித்திருப்பாள். பகல் முழுவதும் அவள் பசியையும் தூக்கத்தையும் போக்க காரப் புகையிலைதான் கூட்டு. இன்றைய பாரத சுத்த திட்டமெல்லாம் வருவதற்கு முன்பே சின்னாத்தா சுத்தத்தைப் பற்றி ஒரு ஆய்வு கட்டுரையே எழுதும் அளவிற்கு சுத்தமாக இருந்தாள். இரண்டாவது நனைத்தலிலேயே வெளிறிப் போன பருத்திச் சேலையை வினோத சுற்று சுற்றி, அதன் கணிக்க முடியாத மடிப்புகளில் ஒரு பொக்கிஷமே வைத்திருப்பாள் சின்னாத்தா! விரற்கடை நீளத்திற்கும் அதே பருமனுடன் அவள் வைத்திருக்கும் புகையிலை துண்டுகள் எடுத்தவுடனே அந்தப் பகுதியை வாசமாக்கும். மாதம் ஒரு முறை நாச்சியார் மடம் போவாள் சின்னாத்தா! உறவு முறைகளைப் பார்க்க மல்லிகா வர, புகையிலைக்காகவே போவாள் சின்னாத்தா! ராவுத்தர் கடையில் தான் அவளுக்கான காரம் கிடைக்கும். “ அத்தா! பன்னீர் பொகையிலேன்னு இப்பல்லாம் வந்திருக்குதே! அதே தான் எல்லோரும் வாங்கிக்கினு இருக்காங்க? நீ என்ன்ன்னா இன்னமும் பழைய காலத்துலேயே இருக்கியே! உன் ஒருத்திக்காகத்தான் இதை வாங்கி வைக்கிறேன். நீ மவுத் ஆயிட்டே.. நான் நிறுத்திப்புடுவேன். “ பொக்கை வாயால் சிரிப்பாள் சின்னாத்தா! “ இன்னும் கொறை காலம் வாங்கணும் ராவுத்தரே! எம் பேத்தி பெரிய படிப்பு படிக்குது. அது முடிச்சி, அதுக்கு கல்யாணம் பண்ணி, அதும் புள்ளைங்களை நா எடுத்து கொஞ்சற வரையிலும் இருப்பேன்” தூக்கு சட்டி இல்லாமல் சின்னாத்தா வெளியே கிளம்புவதில்லை. அதில் ஏதும் திண்பண்டம் இருக்காது. காலி. புகையிலைச் சாற்றை உமிழ அது பயன்படும். கல்லூரி முடிந்து கிளம்பும் நேரம் வரும் போது அதைக் காலி செய்வாள் சின்னாத்தா! தெருவோரமாக ஓடும் மாநகராட்சியின் பாதாள சாக்கடையில் கவனமாகக் கொட்டுவாள். பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து அதை சுத்தமாக அலம்பிக் கொள்வாள். மல்லிகாவுடன் வீடு வரும் வரையில் புகையிலை போட மாட்டாள். பேத்தியுடன் ஏதாவது பேசிக் கொண்டே வருவாள். “ என்னா கரி! என்னா புகை! பஸ்ஸுங்க விடற மூச்சு வெள்ளைக்காரனைக் கூட கருப்பா ஆக்கிரும் போலிருக்கே மல்லி!” “ ஊரெல்லாம் சுத்தம் பண்றவன் பீடி பிடிக்கிறான். தகரத்தை சொரண்டறா மாதிரி இருமறான். ஊர் சுத்தம் பார்க்கறவன் அவன் சுத்தம் பாக்க மாட்டேங்கறான்.” “ ஏன் பாட்டி? நீ கூடத்தான் புகையிலை போடற? அது மட்டும் சுத்தத்துல சேர்த்தியா?” “ நா என்னா சோறு துன்றா மாதிரியா உள்ளாற தள்றேன்? மென்னு துப்பிடறேன். அதுவுமில்லாம நாச்சியார் மடத்து ராவுத்தர் புகையிலை மூலிகைடி? ஒண்ணியும் பண்ணாது!” மல்லிகா பட்டப்படிப்பு முடித்து முதுகலைக்கு படிக்கப் போகும்போது சின்னாத்தா திட்டவட்டமாக கூறி விட்டாள். “ என்னால வரமுடியாதும்மா! நான் இங்கனயே இருக்கேன். ஒன் ஆத்தாவை கூட்டிக்கிட்டு போ! எம் மவனுக்கு இருக்கற புள்ளைங்க போதும்!” “கன்சைன்மெண்ட் இந்த வாரத்துல போகணும்.. இப்ப போய் லீவு வேணும்னு கேக்கறியே.. எப்படி ஜெகதீஸ்? “ “ இல்ல சார் நான் அவசியம் போகணும்.. முக்கியமான கல்யாணம்.. போயாகணும்.. “ “ யாருக்கு கல்யாணம்.. உன் தங்கச்சிக்கா? “ “ இல்ல சார் எங்க ஊர்ல இருந்து, தமிழ்நாட்டிற்கே பெருமை தேடித்தந்த ஒரு பெண்ணுக்கு கல்யாணம் சார். நான் அவசியம் போயே ஆகணும் “ “ ஊர்ல யாருக்கோ கல்யாணம்.. அதுக்கு நீ போகணுமா? “ “ ஆமா சார் போயாகணும்.. இது தெய்வத்துக்கு நடத்தற திருவிழா மாதிரி.. எல்லோரும் வருவாங்க.. அதை அவங்க பெருமையா நெனைப்பாங்க! நான் போகலைன்னா என்னைத் தப்பா நெனைப்பாங்க“ மல்லிகாவின் கல்யாணம் ஜாம் ஜாமென்று நடந்தது. ஜெகதீசன் ஓடியாடி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான். ஊருக்கு கிளம்பும்போது மல்லிகா சொன்னாள்: “ இனிமே நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க.. நான் வந்து எல்லா ஏற்பாட்டையும் பாத்துக்கறேன். என்னங்க இவருதான் ஜெகதீசன்.. துபாய்ல இருக்காரு.. அஞ்சு வருசத்துக்கு முன்னால இவரத்தான் எனக்கு கட்டி வைக்கிறதா இருந்தாங்க.. இவருதான் மல்லிகா படிக்கணும்.. கல்யாணத்த அப்புறம் வச்சிக்கலாம்னு ஒரே போடா போட்டு என்னைய படிக்க வச்சாரு.. பெரிய மனசுங்க இவருக்கு “ மல்லிகாவின் புருசன் கையெடுத்து கும்பிட்டான். அவன் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது. “ ஒங்களுக்கும் மல்லிகா மாதிரியே மனைவி அமையணுங்க.. சீக்கிரம் ஏற்பாடு பண்ணி பத்திரிக்கை அனுப்புங்க “மல்லிகா அவனை நேராக பார்த்தபடி புன்னைகைத்தாள். ஜெகதீசன் ஏதேதோ கனவுகளில் இருந்தான். ஆனால் அவன் ஊக்குவித்த மல்லிகா கல்வியில் எட்டிய சிகரங்களே அவனுக்கு எதிரியாக வந்தது. கூடவே அவனது வசதியும், வயதும்! காலம் மாறியிருந்தது. இளங்காளையாகவும் இருக்க வேண்டும். முதுகலையாகவும் இருக்க வேண்டும் என்று மல்லிகாவின் அப்பா தீர்மானித்தார். ஜெகதீசன் முதுகளையாக இருந்தான். இளங்கலையாகவும் இருந்தான். மல்லிகாவின் அப்பா அவன் கையைப் பிடித்துக் கொண்டார். “ நீங்க மட்டும் உறுதியா சொல்லலைன்னா, நான் கூட தடம் மாறியிருப்பேன் ஜெகதீசு! மல்லிகா படிச்சிருக்க மாட்டா! இப்படி ஒசத்தியான மாப்பிள்ளை கெடைச்சிருக்க மாட்டாரு! “ மல்லிகா கல்யாணக் கோலத்தில் நிற்க அவன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை துபாய் அறையில் தன் மேசை மீது வைத்திருக்கிறான் ஜெகதீசன். ஜெகதீசன் பள்ளிப்படிப்பு முடிந்த மல்லிகாவை நினைவு கூர்ந்தபடியே பெருமூச்சு விட்டான். அவன் கணக்கு தவறிவிட்டது அவனுக்கு தாள முடியாததாக இருந்தது. அந்த வேதனையை மென்று முழுங்கியபடியே, அந்த குளிர்சாதன அறையில் சாய்ந்தான். மனதில், கல்யாண சீர் வரிசைகளுடன், மல்லிகாவும் அவள் புருஷனும் சென்று கொண்டிருந்த மகிழுந்தின் பிம்பம் தெரிந்தது. அனிச்சையாக அவன் கைகள் அசைந்தன. மல்லிகாவின் கல்யாணம் முடிந்த ஒரு வருடத்தில், சின்னாத்தா தொண்டைப்புற்று நோய் வந்து செத்துப் போனாள்.                                                   42. சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) காரிய சித்திக்காக சுந்தர காண்டம் படிக்கும் மக்கள் மத்தியில் ஒரு சாரார் சற்று திசை மாற, வளைந்த கொம்போடு வாழ்க்கையைப் படிக்கப் போகிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்றுத்தருவதற்கென்றே கூரை வேயாத பள்ளிக்கூடங்கள் பல உள்ளன. விடலைப் பருவங்களில், விடலையென்றால், ஏதோ தாம்பத்திய வாழ்வில் தவற நேரிடும் என்ற குழப்பமான செக்ஸ் பாதிப்பால் அரைகுறையாய் டிகிரி வாங்கும் பல்கலைப் பட்டதாரிகள் பலரை என் வாழ்வில் நான் சந்தித்ததுண்டு. அப்போதெல்லாம் அம்மாதிரி ஆட்கள் ஒரு மாதிரி கனவு நிலையிலேயே இருப்பார்கள்! இவர்கள் நிதர்சனத்தை சந்திக்கும்போது என்ன அதிர்ச்சிக்கு ஆளாவார்கள் என்று நான் எண்ணியதுண்டு. ஆரம்ப நாட்களில் மாம்பலம் கண்ணம்மாப் பேட்டை ஒண்டுக் குடித்தன வீடுகளில் நிறைய சுவாரஸ்யம். அங்கு நான் கண்ட பல சுந்தரிகளின் வாழ்க்கை சித்திரத் தொகுப்பே இது. இவர்களில் யாரும் கெட்டவர்கள் இல்லை. ஆனால் அடுத்தவர்களின் வாய்ச்சொல்லில் இவர்கள் ‘ஒரு மாதிரி ‘ என ஆக்கப்பட்டவர்கள். அவர்களின் உண்மை கதை அவர்களைப் பற்றிய வதந்திகளை விட வெகு சுவாரஸ்யம்! இது செக்ஸ் கதையல்ல. நிச வாழ்வு செக்ஸ் கதைகளை விட சூடும் சுவையும் நிறைந்தது என்பதை உணர்த்தும் வாழ்க்கைச் சித்திரம்.   1.சிவகாம சுந்தரி கீழே எட்டும் மேலே எட்டுமாக குடித்தனங்கள் நிறைந்த குடியிருப்பு அது. ரெட்டியார் வீடு என்று பரவலாக அதைச் சொல்வார்கள். முன் வீடு பால்கார். பின் வீடு செட்டியார். காலை வேளைகளில் முன்பக்கம் சந்தடி ஏதும் இருக்காது. ஆனால் பின்பக்கம் ஏகத்துக்கு சப்தம் சதிராடும். நான்கு வீடுகளுக்கு ஒரு அடிபம்பு என்று போட்டிருந்தார் ரெட்டியார். அங்கு எல்லாமே சிங்கிள் பெட்ரூம் போர்ஷன்கள். அதனாலெல்லாம் சனத்தொகை ஒன்றும் குறைந்து விடவில்லை. ஸ்பேனர் செட் மாதிரி வயசுக்கும் சைசுக்குமாக ஏகப்பட்ட நட்டுகள் போல்டுகள் அங்கு உண்டு. பின் பக்கம் கிணற்றை ஒட்டி இருக்கும் போர்ஷனில் மேல் தளம் காலி. மொட்டை மாடி என்று இருக்கும் ஒரே பகுதி அந்தக் குடியிரூப்புக்கு அதுதான். தேர்வு சமயங்களில் மூலைக்கொன்றாக பல குழுக்கள் அங்கே படித்துக் கொண்டிருக்கும். தாவணிகளும், மேடிட்ட மேல் சட்டைகளும் தனித் தனிக்குழுக்களாக.. பையன்கள் பெரும்பாலும் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் வாசல் கேட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் குட்டிச் சுவர் மீது அமர்ந்து படிக்க வேண்டியதுதான். ரெட்டியார் கொஞ்சம் வயசாளி. ரெண்டாம் தாரமாக ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று வருடமாகியும் அவருக்கு குழந்தை இல்லை. கட்டிட காண்டிராக்டு எடுத்து வேலை செய்பவர். நல்ல கைராசிக்காரர். அதனால் வருமானம் அதிகம். ரெட்டியார் பொண்டாட்டி மதர்த்துக் காணப்படுவாள். அகன்ற தோள்களும் பெரிய விழிகளும் சிவப்புத்தோலுமாக ஆறடி உயரம் இருப்பாள். நெஞ்சை நிமிர்த்தி அவள் நடந்து வரும்போது வந்த காமமும் காணாமல் போகும். கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பது அவளது திராவிடக் குரலில் அரண்டு ஓடும். ரெட்டி மனைவியின் பெயரினை இதுவரை யாரும் அறிந்ததில்லை. ரெட்டியார் சம்சாரம் என்றே அவள் அழைக்கப்படுவாள். ஒரு குழந்தை இருந்தாலாவது மீனா அம்மா, ராதா அம்மா என்று கூப்பிடலாம். அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. ரெட்டியார் மிகவும் நாணயஸ்தர். அதிகம் ஆசைப்படுபவர் அல்லர். வாடகை அதிகம் கேட்க மாட்டார். உயர்த்துவதும் எப்போதாவது தான். ரெட்டியார் சம்சாரம்தான் குடக்கூலி வசூலிப்பது எல்லாம். அந்தக் காலத்தில் செக்கெல்லாம் கிடையாது. கேஷ்தான். அதை எண்ணி ஐந்தாம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். ரெட்டியார் சம்சாரம் அதைக் கையால் எல்லாம் வாங்க மாட்டாள். பூசை அறையில் பெரிய பித்தளைத் தட்டு இருக்கும். அதில் வைத்து விடவேண்டும். பெரிய குங்குமப் பொட்டுடன் பின்னால் கையைக் கட்டியபடி அவள் பார்த்துக் கொண்டிருப்பாள். சின்னச் சின்ன சச்சரவுகள் அவ்வப்போது தலை தூக்கும். அப்போது முன்கட்டு அலறும். கட்சி சேர்ந்து பதினாறு குடித்தனமும் போர் புரியும். பால்கனி டிக்கெட் வாங்கியவர்கள் போல மேல் போர்ஷன்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அவ்வப்போது வார்த்தைகளை வீசி எறிவார்கள். அது எசகு பிசகான இடத்தில் பட்டு பற்றி எரியும். இத்தனை களேபரத்திலும் ரெட்டியாரோ அவரது சம்சாரமோ ஏன் எதற்கு என்று கேட்க மாட்டார்கள். பேசிக் களைத்து ஓய்ந்து போகும் இரண்டு அணிகளும். அதன் பிறகு யாராவது ரெட்டியார் சம்சாரத்தை பார்க்க நேர்ந்தால் முந்திக்கொண்டு விசய தானம் செய்ய முற்படுவர். ரெட்டிச்சி சொல்வாள்: “”அது ஒங்க பிரச்சினை. இதுல நான் எந்துக்கு.. “” ஒரு கால கட்டத்தில் ஆந்திரா குண்டூர் மாவட்டத்திலிருந்து கறுப்பாக களையாக ஒரு இளைஞன் ரெட்டியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வந்த போது பார்த்ததுதான். அதற்குப் பிறகு அவனை யாரும் வெளியில் பார்க்கவே இல்லை. வாடகை கொடுக்க போகும்போது கண்ணில் படுகிறானா என்று விளக்கெண்ணை போட்டு தேடியும் தட்டுப்படாமல் ஏமாந்து திரும்பிய குடித்தனக்காரர்கள் கிசு கிசு பாணியில் பேச ஆரம்பித்தார்கள். ரெட்டியாரால் எதுவும் முடியல. ஆனா ரெட்டிச்சி இன்னும் இளமையாத்தானே இருக்கா. அவளுக்கு தேவைன்னா பதினாறு குடித்தனத்து ஆம்பளைங்களுக்கு பந்தி போட்டுறப்போறாளேன்னு ஊரிலேர்ந்து குண்டூர் காளையை ஓட்டிக்கிட்டு வந்திருக்காரு. எதுக்கு வந்தானோ அதச் சுத்தமாச் செய்யறான்னு. அவன் எதுக்கு வெளிய வரணும்னு பேசிக்கிட்டாங்க. நல்ல சித்திரை வெயிலில் சூரியன் உச்சத்திற்கு வரும் முன்னரே வத்தல் போடும் முனைப்பில் இருந்த இரு மாமிகள் மொட்டை மாடியில் குளித்து முடித்த தலை ஈரம் காய உலர்த்தியபடியே வத்தல் பிழிந்த ஒரு அதிகாலை வேளையில் அவனைக் கண்டார்கள். ரெட்டியார் வீட்டின் மொட்டை மாடி கொஞ்சம் உசரம். குடித்தனக்காரர்களின் மொட்டை மாடி கொஞ்சம் தாழ.. பிழிந்த வத்தல் காய காய தலை ஈரம் காய கூந்தலைப் பிரித்து _ அது ஒன்றும் அறுபதடி கூந்தல் இல்லை.. ஜிட்டு மசுரு ஆறு அங்குலத்திற்கு இருந்தால் அதிகம்_ பிரித்துக் காயப்போட்டு தலையை சூரியன் திசைப் பக்கம் சாய்த்து நாற்பத்தி ஐந்து டிகிர் கோணத்தில் நிமிர்ந்தபோது அவன் அவர்கள் கண்களில் பட்டான். செம்பட்டை நிறத்தில் மெலிசான வேட்டியைக் கீழ்பாய்ச்சிக் கட்டியிருந்தான். கனமான கர்லாக் கட்டையை சுழற்றியபடியே வேர்க்க விறுவிறுக்க இருந்தான். நல்ல கடப்பா கல்லைப் போல் மினுமினுத்தது அவன் தேகம். வர்ணாஸ்ரம தர்மங்களை விலக்கி வைத்துவிட்டு லஜ்ஜையில்லாமல் அவனை விழி மூடாமல் பார்த்தார்கள் இரு மாமிகளும். பயிற்சி முடிந்து விட்டாற்போலிருந்தது. சட்டென்று கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து உடலைத் துவட்டிக் கொண்டான். அவனது இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியைப் பற்றிய கற்பனையிலேயே மாமிகள் வியர்த்துப் போனார்கள். வத்தலோடு வத்தலாக மாமிகள் காய்ந்தது அந்த சித்திரை முழுவதும் தொடர்ந்தது. சில வேளைகளில் குண்டூரான் ஆறு முட்டைகளை உடைத்து அப்படியே விழுங்குவான். அவன் முட்டை எடுத்து வரும் கூடை மெல்லிய கம்பிகளில் முடையப்பட்டது. அந்தக் காலத்தில் பிளாஸ்டிக் முட்டை கூடைகள் கிடையாது. எல்லாம் இரும்புக் கம்பிக் கூடைகள் தாம். முட்டை வியாபாரி வழக்கமாக வாங்கும் வீடுகளுக்கு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ வருவார். சைக்கிளில் மூங்கில் கூடையில் வைக்கோல் பரப்பி முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வீட்டு இரும்புக் கூடைகளை வாங்கி பழைய வைக்கோலை அகற்றி புதிய வைக்கோல் வைத்து முட்டைகளைத் தேவைக்கு ஏற்ப அடுக்குவார். பழைய வைக்கோல் துண்டுகள் வட்ட வடிவில் கூடையின் அளவிற்கேற்ப ஆங்காங்கே விழுந்து கிடக்கும். பால் வற்றிப் போன மாடுகளும் அவைகளின் நோஞ்சான் கன்றுகளும் அவைகளை சாப்பிட்டு பசியாறும். பின்கட்டு குழாயடிச் சண்டைகளும், முன்கட்டு ரேழிச் சர்ச்சைகளும் இல்லாத ஒரு திருநாளில் ரெட்டியார் வீட்டிலிருந்து சப்தம் அதிகமாகக் கேட்டது. ரெட்டியார் குரலும் அதற்கும் மேலாக ரெட்டிச்சி குரலும் கேட்டது. கொஞ்ச நேரத்தில் ரெட்டியார் குரல் அடங்கிப் போனது. அடுத்த அரைமணி நேரத்தில் மஞ்சள் மண்டை டாக்ஸி வந்து ரெட்டியார் ராஜி நர்ஸிங் ஹோமிற்கு கொண்டு போகப்பட்டார். ஒரு வாரம் கழித்து அவர் குணமாகி விட்டதாகவும் மாலை திரும்பி வரப் போவதாகவும் தகவல் கசிந்தது. அன்று மதியம் ஒரு பெரிய பையுடன் குண்டூரான் அந்த வீட்டை விட்டு வெளியேறினான். அவன் தெரு முனை திரும்பும் வரை ரெட்டியார் சம்சாரம் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ரெட்டியார் திரும்பி வந்த கொஞ்ச நாட்களிலேயே அவரைப் பார்க்கப் போன குடித்தனக் காரர்கள் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டார்கள். “என்னாச்சும்மா” என்று ரெட்டிச்சியைக் கேட்டபோது “ நாக்கு கட்டுப்படுத்தணும். லேக போத்தே ஆஸ்பத்திரிதான் “ என்றாள். ரெட்டிச்சி சுத்த சைவம் என்பதும், இதுகாறும் அவள் அசைவம் சமைத்தாலும் சாப்பிட்டதில்லை என்பதும், சில மாதங்களாக அவள் அசைவம் சமைக்க மறுத்ததால் குண்டூர்காரனை சமையலுக்கு ரெட்டியார் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. அதிக காரமும் எண்ணையும் அசைவமும் சேர்ந்து இதய நோய்க்கு அவரை ஆளாக்கி இருந்தது. குடித்தனக்காரர்களின் கற்பனை உடைந்த அதே நேரத்தில் ரெட்டியார் சம்சாரத்தைப் பற்றிய தப்பான பிம்பமும் உடைபட்டது.   2. திரிலோக சுந்தரி   வீணை வாசிக்கும் யானைக் கை அம்மாள் ஒருத்தி ஒண்டுக் குடித்தன வீட்டில் இருந்தாள். கொஞ்சம் முரட்டுத்தனமான முகம். அம்மை வார்த்தது போல் மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படும். அவளுக்கு இரண்டு பெண்கள். அவர்கள் இருவரும் ஒல்லியாக குச்சிபோல் இருந்தது ஆச்சர்யம். யானைக் கை அம்மாள் கொஞ்சம் தாட்டியானவள். முதல் மாடியில் குடியிருந்த அவர்கள் குடும்பம் எதற்கும் அதிகமாக இறங்கி வராது. சாயங்கால வேளைகளில் வீணை கற்றுக்கொள்ள பெண்டுகள் அங்கு குழுமும். வீணை சப்தம் மெலிதாகக் கேட்கும். கடைக்குப் போவதற்கும் வேறு எதற்காக இருந்தாலும் அந்த இரண்டு பெண் பிள்ளைகள் தான் இறங்கி ஓடும். அந்த வீட்டில் ஆம்பிளை வாசனை அடித்ததே இல்லை. அம்மாளின் புருசன் யார் என்று யாருக்கும் தெரியாது. தேடிவரும் சொந்தங்களும் மிக சொற்பம். அதிலும் ஆண்கள் மிக மிகக் குறைவு. இரு பெண்பிள்ளைகள் என்று சொன்னேனல்லவா! அதில் மூத்தவள் பத்மா என்கிற பத்மப்ரியா. ஒடிசலாக ஆறடிக்கு கொஞ்சம் குறையாக இருப்பாள். யார் வீட்டில் எந்தப் பரணையில் எதை எடுக்க வேண்டுமென்றாலும் அவளைத்தான் கூப்பிடுவார்கள். ஏணியில்லாமல் எடுக்கக் கூடியவள் அவள் ஒருவள்தான். ஒனக்கு மாப்பிளை கெடைக்கறது கஷ்டம்டி. இந்தூர் மாப்பிள்ளையெல்லாம் அஞ்சரை அடிதான். அயல்நாட்டு மாப்பிள்ளைதான் ஒன் ஒசரத்துக்கு தோது. என்று அவளைக் கோட்டா பண்ணுவார்கள் அடுத்த போர்ஷன் மாமிகள். மாட்டுக்கறி துண்றவன். அவன் நெம்பலை யார் தாங்கறது. நமக்கு உள்ளூர் அரையடி ஸ்கேலே போதும். அளவோட வாழலாம் என்று மனசுக்குள் நினைத்துக் கொள்வாள் பத்மா. சுடிதார், மேக்ஸி எல்லாம் வராத காலம் அது. திருமணம் வரையிலும் பாவாடை தாவணிதான். அதுவும் கீழ் நடுத்தர வர்க்கத்துக்கு இரண்டொன்று தான் இருக்கும் உடைகள். இரு பெண்கள் இருக்கும் வீடுகளில் மாற்றிக் கொள்ள கொஞ்சம் கூடுதல் சாய்ஸ் கிடைக்கலாம். பத்மா கொஞ்சம் கலை ரசனை மிக்கவள். இருக்கும் உடைகளில் கிடைக்கும் வசதிகளை வைத்துக் கொண்டு நேர்த்தியாக உடை அணிவது ஒரு கலை. அதில் கொஞ்சம் கற்பனையையும் கலந்து விட்டால், புதுப் பரிமாணங்களில் தோற்றம் மாறும் என்பது அவள் அனுபவப்பூர்வமாக அறிந்த ஒன்று. மஞ்சள் கலர் பாவாடையும், கையில் பச்சை நூலால் எம்ப்ராய்டரி செய்த வெளிர் மஞ்சள் ஜாக்கெட்டும், சிகப்புத் தாவணியும் அவள் வாரத்தில் மூன்று நாட்கள் அணிய வேண்டிய கட்டாயம். மீதி நாட்களில் பச்சைப் பாவாடையும் வெள்ளை தாவணியும். ஆனாலும் அவளது நிறத்திற்கு மஞ்சளும் சிகப்பும்தான் எடுப்பாக இருக்கும். அதிலும் தாவணியை முன்பக்கம் இழுத்து இடுப்போடு சொருகியிருப்பாள். பின்பக்கம் இடுப்பில் மையப் பிரதேசத்தில் தொடங்கி V வடிவில் சிகப்பு தாவணியின் ஒரு முனை இறங்கியிருக்கும். அதுவும் புட்டத்தின் பாதிப் பகுதியோடு நின்று விடும். அழகிப் போட்டிகளில் இடது காலை வலது பக்கமும், வலது காலை இடது பக்கமும் மாற்றி மாற்றி நடப்பார்களே அதுபோல் நடப்பாள் அவள். தொலைக்காட்சியோ வேறு சினிமாக்களோ கற்று தராத சூழலில் அவளுக்கு அது இயல்பாக வந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இப்படியான பூனை நடையின் காரணமாக அவளது பின்பகுதி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைந்து ஆடும். அதன் ஆட்டத்திற்கு கட்டியம் கூறுவது போல் சிகப்பு தாவணியின் வீ விரிந்தாடும். வீணை _ யானை அம்மாளின் குடும்ப நிதி நிலைமை அப்படியொன்றும் ஓஹோ ரகம் இல்லை. மாதக் கடைசியில் கடன் கேட்கும் நிலைதான். ஆனாலும் எந்தக் கடன்காரனும் அவள் வீட்டு முன் வந்து நின்றதில்லை. ஒரு முறை சீட்டு போட்டு வட்டிக்கு விடும் சாரதாதான் சத்தம் போட்டாள். அதற்கப்புறம் அவளிடம் சீட்டும் போடுவதில்லை, கடனும் வாங்குவதில்லை என்றாகிப் போனது. அன்று பத்மா எடுத்த முடிவே அதற்குக் காரணம். இனி பெண்களிடம் கடன் வாங்குவதில்லை என்ற முடிவே அது. மாதக் கடைசியில் பத்மா மளிகைக் கடையில் பொருள் வாங்குவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. காலை டிபனுக்கு பாம்பே ரவையும், மதிய உணவுக்கு அரிசியும், கூடவே கொஞ்சம் வெங்காயம், பச்சை மிளகாய் என்று ஒரு லிஸ்ட் தயாராகும். கையிருப்போ அரை ரூபாய் என்ற அளவில் இருக்கும். லேசாக பவுடர் பூசிக் கொள்வாள் பத்மா. சிறிய ஓலைப் பர்சில் எட்டணா நாணயத்தை போட்டுக் கொள்வாள். அதுவும் முழு நாணயமாக இருக்காது. பத்து பைசா, அஞ்சு பைசா என்று ஏகத்துக்கு கனக்கும். ரப்பர் செருப்பை மாட்டிக்கொண்டு, ஓலைப் பர்ஸை ஜாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டு கிளம்புவாள். அவளது குறி இன்று தெரு முனை நாட்டார் கடை. நாட்டார் கடையில் ஏகத்துக்கு கூட்டம் இருக்கும். பத்மா பொறுமையாக காத்திருப்பாள். கடன் சொல்பவர்களையெல்லாம் கடிந்து கொண்டே சாமான் கட்டிக்கொண்டிருப்பார் நாட்டார். எல்லாம் பத்து பைசா நாலணா வியாபாரம். அதிலேயே கடையோடு சேர்ந்த வீட்டைக் கட்டியிருந்தார் நாட்டார். கூட்டம் கொஞ்சம் மட்டுப்பட்டு இவள் பக்கம் திரும்பும்போது பத்மா ஏதோ யோசித்தவளாய் படியிறங்க முற்படுவாள். ஓரக்கண் நாட்டாரை நோட்டம் விடும். தொங்கிக் கொண்டிருக்கும் தராசு மறைவில் லேசாக கை மாராப்பை விலக்கிக் கொள்ளும். நாட்டார் கண்கள் விரியும். வாய் அவசரம் காட்டும். “ தே நில்லு .. வந்திட்டு எங்கிட்டு எதுவும் வாங்காம போற .. வேணுங்கறத வாங்கிட்டு போ . அதுக்குத்தானே தொறந்துக்கிட்டு ஒக்காந்துருக்கம் கடைய “ மேல் துண்டால் கடைவாய் எச்சிலை துடைத்த படியே அசட்டுச் சிரிப்பு சிரிப்பார் நாட்டார். “ பரவால்ல நாட்டார். நாலஞ்சு ஐட்டம் வாங்கணும். பணம் இருக்குதான்னு தெரியல “ என்றபடியே ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு பர்ஸை எடுப்பாள் பத்மா. இன்னும் கொஞ்சம் தாவணி விலகும். “ கடன் சொன்னா கொறைஞ்சி போயிடுவியளாக்கும். இல்ல கடன் கொடுத்தாத்தேன் என் சொத்து பத்தெல்லாம் கரைஞ்சி போயிடுமாக்கும், வேணுங்கறத வாங்கிட்டு போ அம்மணி “ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக கெஞ்சுவார் நாட்டார். நாட்டாருக்கு நாஸ்தா வரும் ஒயர் கூடை கொள்ளாமல் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவாள் பத்மா. அவளது ஓலை பர்ஸில் அரை ரூபாய் அப்படியே இருக்கும். பத்மா எந்நேரமும் எதையாவது படித்துக் கொண்டிருப்பாள். ஆண்களைப் பற்றிய அவளது உளவியல் ரீதியான அறிவிற்கு அவளே பல புத்தகங்கள் போடலாம். பள்ளி இறுதி வகுப்போடே தன் கல்விப் பயணத்தை நிறுத்தி விட்டவள் அவள். ஆனாலும் அவளது அறிவுத் தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒருநாள் வெள்ளை சராய் சட்டை அணிந்து கொண்டு அவள் வெளியே போகும்போதுதான் எல்லோர்க்கும் தெரிந்தது அவள் கராத்தேயில் ப்ளாக் பெல்ட் வாங்கியவள் என்று. அதற்கப்புறம் அவளை நெருங்கலாம் என்ற நப்பாசை கொண்ட ஆண்கள் கூட கொஞ்சம் விலகியே இருக்க ஆரம்பித்தார்கள். திருமண வயதைத் தாண்டி பல ஆண்டுகள் கழித்து ஆறடி உயர மிலிட்டரிக்காரன் ஒருவனோடு அவளுக்கு திருமணம் ஆயிற்று. ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து வட இந்தியாவெல்லாம் சுற்றி விட்டு அவள் அம்மா வீட்டிற்கு வந்த போது கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். ஒண்டுக் குடித்தன பொம்பளைகள் கேட்டார்கள்: “என்னடி பத்மா ஏதாவது விசேசமா?” பதமா சொன்னாள்: “ஒண்ணென்ன நூறு இருக்கு நான் தங்கியிருந்த இடத்துல.. என் நெலத்துல தான் இன்னும் வேரு ஊனல..” “தப்பா நெனச்சுக்காதடி கொஞ்சம் பூசினாப்பல இருக்கயே அதான் ..” “அதுக்கென்ன கொறச்சல்.. வெண்ணையும் ரொட்டியும் தெனக்கிம் உள்ளார போனா பூசாத என்னா செய்யும்? நெருப்பு பட்டாத்தேனே உருகும்? “ அவள் தலை மறைந்தவுடன் ஆண்கள் போட்ட குழுத் தீர்மானம் இப்படிச் சொன்னது: சின்ன வயசுல எத்தினி பேரு திடத்தைக் கரைச்சிருப்பா.. அதான் ஆண்டவன் அவ வயத்துல தங்க விடாம கரைச்சிருக்கிறான்.    3. வித்யா ரூபிணி சரஸ்வதி   வீணை அம்மாளின் இன்னொரு பெண் வித்யா. பத்மாவின் நடவடிக்கைகள் பிடிக்காததாலோ என்னமோ, அந்த அம்மாள் அவளை கொஞ்சம் கட்டுப்பெட்டியாக வளர்த்தாள். பள்ளிக்கூட நாட்கள் முதலே அவள் படிப்பு படிப்பு என்றே இருந்தாள். அதிக படிப்பினால் பள்ளி இறுதியாண்டிலேயே அவள் புட்டி அதாவது கண்ணாடி போட ஆரம்பித்து விட்டாள். சாட்டை போல முடி இருக்கும் அவளுக்கு. அதுவும் அடர்த்தியாக. ஆனால் அதை அவிழ்த்து விட்டு யாரும் பார்த்ததில்லை. எப்போதும் சுருட்டி கொண்டையாக முடிந்து வைத்திருப்பாள் அவளது அம்மா. என்றைக்காவது அவிழ்த்து விட்டால்கூட பழக்க தோஷத்தில் அவை கீழ் நோக்கி நீளாது என்று அங்கிருந்தவர்களது கருத்து. கல்லூரி போகும் காலத்திலேயே அவளை கலெக்டர் படிப்புக்கும் தயார் நிலையில் வைத்திருந்தாள் அவளது அம்மா. பட்டம் வாங்கிய கையோடு கலெக்டர் பரிட்சை எழுதி தேர்வாகும் திறமை அவளுக்கு இருந்தது. அவள் உடையணியும் விதமும் பத்மாவுக்கு நேர்மாறாக இருக்கும். கூந்தலைப் பற்றிதான் ஏற்கனவே சொல்லியாகிவிட்டதே. உடை எப்போதும் மங்கலான நிறங்களிலேயே இருக்கும். பல நாட்களில் நாகப்பழக் கலரும் யானைக் கலரும்தான். பாதம் தெரியாத அளவிற்கு பாவாடை நிலத்தில் புரளும். குனிந்த தலை நிமிராது. போர்த்திய தாவணியோ சேலைத் தலைப்போ எங்கும் விலகாதிருக்க சேப்டி பின் ஒன்றுக்கு இரண்டாக குத்தப்பட்டிருக்கும். காடாத் துணி வாங்கி அவளுக்கு பாடி தைத்திருப்பாள் அவளது அம்மா. அதுவும் சமீபத்தில் தைத்தவை அல்ல. அதனால் அதை மூச்சு பிடித்துதான் போடவேண்டும். உள்ளடங்கிய மார்புக்கூடு அப்புறம் விரியவே விரியாது. அதனாலேயே ஒரு வித கூன் முதுகு போட்டு அவள் நடப்பாள். அன்றும் அப்படித்தான் அவள் கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தாள். சைதாப்பேட்டையிலிருந்து மாம்பலத்திற்கு பஸ் கிடைக்காததால் அவள் நடந்தே வரவேண்டியிருந்தது. மூணாவது தெரு நாயக்கர் மாந்தோப்பில் காய் பறித்துக் கொண்டிருந்தார்கள். நாயக்கர் மகன் கோபாலு மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏற்கனவே பத்மா மீது ஒரு கண் இருந்தது. ஆனாலும் அவன் வித்யாவை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அவள் நடந்து வருவதைக் கண்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான் அவன். தொரட்டி கொம்பால் மாங்காய்களை வளைத்து இழுத்துக்கொண்டிருந்த போது கை நழுவி தொரட்டிக்கோல் செங்குத்தாக கீழே இறங்கியது. தொரட்டிக் கோலின் ஒரு முனையில் வளைந்த கத்தி ஒன்று இருக்கும். அது நேராக இறங்கி நடந்து வந்து கொண்டிருந்த வித்யாவின் பின் பக்க ரவிக்கையின் உள்புகுந்து இழுத்தது. லேசாக ரவிக்கை கிழிய ஆரம்பித்தது. கோபாலு ரத்தக்காயம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வேகமாக இழுக்க முழுதாக ரவிக்கை கிழிபட்டது. கத்தி காடா பாடியையும் கிழித்து போட்டது. அடக்கி வைக்கப்பட்டிருந்த தனங்கள் திமிறிக் கொண்டு புறப்பட்டன. சேலைத் தலைப்பைத் தாண்டி அவை முன்னேற ஆரம்பித்தன. கோபாலு சுதாரித்துக் கொண்டான். சட்டென்று தலைப்பை இழுத்து விட்டு “ சொருகு “ என்றான். வித்யா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாள். சில வினாடிகள் காத்திருந்த கோபாலு அவள் பதிலுக்கு காத்திராமல் அவனே அவளது இடுப்பில் அழுத்தமாக சேலைத் தலைப்பை செருகிவிட்டான். அவனது முரட்டு கை பட்ட இடம் அவளுக்கு ஏதேதோ உணர்ச்சிகளை தூண்டி விட்டது. “ சீக்கிரம் வீட்டுக்கு போ. ஏழு மணிக்கு ராமர் கோயிலுக்கு வந்திரு “ முடியாது என்பது போல் தலையசைத்தாள் வித்யா. தொரட்டிக்கோலைக் காட்டியபடியே எச்சரித்தான் கோபாலு. “ எனக்கு தெரிஞ்சது எல்லாருக்கும் தெரியணுமா “ என்று சன்னக் குரலில் கேட்டான். சரி என்பதுபோல் தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் வித்யா. பாண்டிபஜாரில் புத்தகம் வாங்கிவருவதாக அவள் ஆறரை மணிக்கே கிளம்பியதும். ராமர் கோயில் பின்புறம் கோபாலுவை சந்தித்ததும் இந்தக் கதைக்கு அவ்வளவு முக்கியமில்லாத விசயங்கள். வித்யாவின் சிந்தனைகள் ஒரு காட்டற்றைப் போல திசை மாறி ஓடிக் கொண்டிருந்தன. என்ன ஆகப்போகிறதோ என்கிற பயமும், அப்படி ஏதாவது ஆனால் அது எப்படியிருக்கும் என்கிற நப்பாசையும் கலந்த ஒரு சிந்தனை ஓட்டம் அது. துவர்ப்பு நெல்லிக்காயை தின்று விட்டு பானைத் தண்ணீர் குடிப்பதைப் போல என்று நினைத்துக் கொண்டாள். யார் நெல்லிக்காய்? யார் பானைத்தண்ணீர். முரட்டு கோபாலுவின் கட்டுமஸ்தான தேகமும் புஜங்களும் இழுத்துக் கட்டிய அவனது லுங்கியத் தாண்டித் தெரிந்த அரை நிக்கருடன் கூடிய தொடைகளும் அவளை அநாவசியத்திற்கு நடுக்கத்தைக் கொடுத்தன. ராமர் கோயில் பழைய மாம்பலத்தில் இருந்தது. பெரியகோயில். சுற்றிலும் ஏகத்துக்கு வெற்றிடங்கள். கோயிலே கவனிப்பாரற்று சிதிலமாகத்தான் இருந்தது. ஒரே ஒரு அரச மரம் நடுவில் இருக்கும். பெருமாள் கோயிலில் அரச மரம் இருக்கலாமோ என்கிற சிந்தனையும் ஓடியது. கோயிலுக்கு எதிர் வீடு கம்பி வைத்த வராண்டா கொண்ட ஓட்டு வீடு. அவளது ஏதோ ஒரு வழி தாத்தா வீடு என்று அம்மா ஒரு தடவை சொல்லி யிருக்கிறாள். அங்கு யாராவது இருப்பார்களா? அவர்களுக்குத் தன்னை இன்னார் பெண் என்று தெரிந்திருக்குமா? தாவணியை எடுத்து தலையோடு போர்த்திக்கொண்டாள் வித்யா. வாயைத் துடைப்பது போல் முகத்தை முக்கால் வாசி மூடிக் கொண்டாள். கம்பி வீட்டை நோக்கி முகம் திருப்பாமலே கோயிலுக்குள் நுழைந்தாள். “ ஏய் இந்தா.. இந்த லெட்டரை பத்மாகிட்ட குடுத்துடு.. எதுனா பதில் இருந்தா மாந்தோப்பில என்னியக் கண்டா கொடுத்துரணும். நல்லா படி இன்னா? “ என்றவாறே கையில் ஒரு நோட்டு புத்தகக் காகிதத்தைத் திணித்தான். விறு விறுவென்று நடந்து வெளியேறினான். முக்கியமான விசயம். வாழ்க்கையில் பல ரசங்களை கோபாலு அவளுக்கு கற்றுக் கொடுத்தான். ஆனாலும் அவளது படிப்பின் மேல் அவன் அளவு கடந்த மரியாதை வைத்திருந்தான். அதனால் அவன் எல்லை மீறவே இல்லை. உரிய வயதில் நாயக்கர் பெண் ஒருவளை திருமணம் செய்துகொண்டு அவன் வேறு ஊருக்கு போய்வ்¢ட்டான். பருவ வயதில் ஏற்பட்ட ஏக்கங்களுக்கு வடிகாலாய் கோபாலு இருந்ததால் வித்யாவால் அனாவசிய கற்பனைகளில் மூழ்கி வாழ்க்கையைத் தொலைக்கும் சந்தர்ப்பங்கள் ஏதும் வாய்க்கவில்லை. அவளது அம்மாவின் கனவை நனவாக்குவது போல அவள் கலெக்டர் படிப்பு படித்து தலைமை செயலகத்தில் பெரிய பதவி வகித்தாள். கடைசி வரை அவள் திருமணம் செய்து கொள்ளவேயில்லை. 4. ஜதி தாள சுந்தரி பதினாறு குடித்தனங்களில் பக்க வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வீடு ஒன்று உண்டென்றால் அது கமலா டீச்சர் வீடுதான். கமலா டீச்சர் ஒல்லியாக இருப்பாள். சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். ஒல்லி உடம்பு அதை இன்னும் கூடுதல் உயரமாகக் காட்டியது. கமலா டீச்சர் கல்யாணம் ஆகாத முதிர்க் கன்னி. கிட்டத்தட்ட நாற்பது வயதைக் கடந்து கொண்டிருப்பவர். சாமுத்திரிகா லட்சணங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லும் எதையும் அவளிடம் பார்க்க முடியாது. கொஞ்சம் களையான முகத்தைக் கூட வெளிர் ப்ரேம் போட்ட பெரிய கண்ணாடி போட்டு மறைத்திருப்பாள். சாதாரணமாகச் சொல்வார்கள்: கண்ணாடி போட்டால் கொஞ்சம் அறிவுக் களை வரும் என்று. ஆனால் கமலாவிடம் அப்படியெல்லாம் ஏதும் களை வந்து விடவில்லை. ஏற்கனவே திருமணம் செய்யாத வெறுப்பு மொத்தமும் முகத்தில் குடியேறி இருந்தது. பெரிய ப்ரேம் மூக்குக் கண்ணாடி அதை இன்னும் பெரிதாக்கிக் காட்டியது. கமலாவிடம் எல்லோருமே ஒப்புக் கொண்ட விசயம் அவள் மிகச் சிறந்த ஒழுக்கங்களை உள்ளவள் என்பதுதான். எந்த வளைவுகளும் மேடுகளும் இல்லாத ஒல்லிக் குச்சி உடம்பைக் கூட அங்குலம் வெளியே தெரியாமல் போர்த்திக் கொண்டுதான் அவள் வெளியே கிளம்புவாள். ராமகிருஷ்ண மடம் நடத்திய சாரதா பள்ளியில் அவள் பாட்டு மற்றும் நாட்டிய ஆசிரியை. முதல் முறையாக அவளைப் பார்ப்பவர்கள் கடவுளின் சிருஷ்டி மேல் நம்பிக்கை கொண்டு விடுவார்கள். சிறுவர்கள் எடுத்துப் போகும் குடை போல் மடித்து கூடைக்குள் வைக்கும் அளவில் இருக்கும் கமலா டீச்சரின் குரலில் ஆண்டவன் அற்புதத்தை அள்ளி வைத்திருந்தான். அவள் ஜதி சொல்லுவதும், நட்டுவாங்கம் செய்வதும், நாட்டியப் பாடல்களை குரலெடுத்துப் பாடுவதும் ஒரு நாள் பூராவும் கேட்டுக் கொண்டிருக்கலாம். கமலா டீச்சர் ஆண்களை வெறுப்பவளாக இருப்பாள் என்று அந்தக் காலனி பூராவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதனாலேயே அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் பேசிக் கொண்டார்கள். அவள் வீட்டிலேயே நடத்தும் பாட்டு மற்றும் நடன வகுப்புகளில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. அவள் அந்தக் குடித்தனத்தில் ஒரு போர்ஷனின் தனியாகத்தான் இருந்தாள். காலை எட்டாவது மணிக்கு அவள் சாப்பிட்டுவிட்டு, ஒரு  கையில் குடையும், மறு கையில் கறுப்புத் தோலால் செய்த ஹேண்ட் பேக்கும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் என்றால் மாலை ஆறு மணிக்குத்தான் உள்ளே நுழைவாள். அவள் உடைகள் பளிச்சென்று இருக்கும். பெரும்பாலும் ஆரஞ்சு வண்ண உடைகளை ஏறக்குறைய காவி நிறத்தில் தான் அவள் அணிவாள். கிளாஸ்கோ மல்லில் செய்த ரவிக்கைதான் எப்போதும். நாயுடு ஹால் சமாச்சாரமெல்லாம் வந்துவிட்ட காலத்தில் கூட அவள் இன்னமும் ரவிக்கைக்கு ஒரு அங்குலம் குறைந்த  இடைவெளியில் உள்பாடி அணிந்து கொள்வாள். இஸ்திரி போடுபவர்கள் தெருவுக்கு தெரு இப்போது இருப்பதுபோல் எல்லாம் அப்போது கிடையாது. சலவை செய்பவர்களே கரியால் சூடாகும் இஸ்திரிப் பெட்டிகளை வைத்திருப்பார்கள். ஒரு பேட்டைக்கு ஒன்று அல்லது இரண்டு கடைகள்தான் இருக்கும். அங்கேதான் துணிகளை இஸ்திர்க்கு கொடுக்க வேண்டும். பெரிய வீடுகள் என்றால் டோபி வீட்டுக்கே வருவார். “ அம்மா டோபி வந்திருக்கேன் “ என்று குரல் கொடுத்தவுடன் நல்ல தேக்குமரத்தில் செய்யப்பட்ட கூண்டு போன்ற பெட்டியிலிருந்து, துணிகளை எடுத்துப் போடுவர். சலவைக் கணக்கிற்கு என்று தனியாக டைரியோ நோட்டுப் புத்தகமோ வைத்திருக்கும் வீடுகள் அனேகம்.     AK, MC என்று முதல் எழுத்துக்களைப் போட்டு வண்ணான் மார்க் மையில் எழுதுவர். துணிகள் தொலைந்து போகாமல் இருக்கவும் வேறு வீடுகளுக்கு மாறிப் போகாமல் இருக்கவுமே இந்த ஏற்பாடு. அதுவும் தவிர அனைத்து சலவைத் தொழிலாளர்களும் பொதி மூட்டைகளைக் கழுதைகள் மேல் ஏற்றிக் கொண்டு சைதாப்பேட்டை ஆற்றுக்குப் போய் வெளுத்து காயப்போட்டு மடித்து எடுத்து வருவர். சைதாப்பேட்டை பாலத்தில் மேல் பேருந்தில் மதிய நேரத்தில் சென்றால், ஒரு பிரம்மாண்ட திரைப்படக் காட்சிபோல் கலர் கலரான துணிகள் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும். கமலா டீச்சர் சலவைக்குத் துணிகளைப் போட்டு யாரும் பார்த்ததில்லை. ஆனாலும் அவள் உடுத்தும் உடைகள் பளிச்சென்று சுருக்கம் இல்லாமல் இருக்கும். ஒரு குறும்புக்கார சிறுமி அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் தயங்கி தயங்கி ஒரு நாள் கமலா டீச்சர் வீட்டுக்குள் போனாள். டீச்சர்.. அவசரமா வெளியே போகணும். என் பாவாடை எல்லாம் கசங்கி இருக்கு. கொஞ்சம் இஸ்திரி பெட்டி தாரீங்களா! ” கமலா டீச்சர் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள். “ எங்கிட்ட இஸ்திரிப் பெட்டி இருக்குதுன்னு யாரு சொன்னா ? “ “ இல்ல ஒங்க உடையெல்லாம் நீவி விட்டாமாதிரி நறுக்குன்னு இருக்கு.. அதான்.. “ கேட்ட சிறுமிக்கு தன் கையைக் கிள்ளிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. காரணம் கமலா டீச்சர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். “ இஸ்திரிப் பொட்டியா கேக்கறே. . இதோ இதான் என்னோட இஸ்திரிப் பெட்டி.. “ அகலமான ஒரு பித்தளை செம்பை எடுத்துக் காண்பித்தாள் கமலா டீச்சர். அதன் அடிபாகத்தின் வெளிப்புறம் தட்டையாக இருந்தது. மேல் பாகம் ஒரு கூஜாவைப்போல் திருகு மூடி கொண்டதாக இருந்தது. அந்த மூடிக்கு ஒரு கைப்பிடியும் இருந்தது. “ இந்தா இதுதான் என் இஸ்திரி பொட்டி வேணுமா “ என்று கேட்டு மீண்டும் சிரித்தாள் கமலா டீச்சர். “ இதுவா இதுல எப்படி டீச்சர் ? “ “ உள்ளாற சுடுதண்ணிய ஊத்தினா சொம்பு சூடாவும் இல்ல. அப்ப இத வச்சு துணிய இஸ்திரி பண்ணிக்க வேண்டியதுதான் “ கமலா டீச்சர் தன் துணிகளை தானே இஸ்திரி பண்ணிக் கொள்வதும் அவளது ஆண் எதிர்ப்பு உணர்வு காரணமாகத்தான் என்று எல்லோரும் நம்பினார்கள். கமலா டீச்சரைத் தேடி யாரும் வருவதில்லை. வழக்கமாக சனி ஞாயிறு அன்று மட்டும் பாட்டு நாட்டியம் கற்றுக் கொள்ள மாணவிகள் வருவர். அப்போதுகூட அடுத்தவர்களுக்கு தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக கமலா டீச்சர் தன் வீட்டு கதவுகளை அடைத்து வைத்திருப்பாள். மாதம் முதல் தேதி அன்று கமலா டீச்சர் காலையில் ஒரு ஐந்து நிமிடம் முன்னதாகவே கிளம்பி விடுவாள். ரெட்டியார் சம்சாரத்தைப் பார்த்து வாடகைப் பணத்தைக் கொடுத்து விட்டு அவள் பள்ளி சென்று விடுவாள். ரெட்டியார் சம்சாரம் ஆச்சர்யமாக சொல்வாள். “ எந்துக்கு கங்காரு .. ரெண்டு தேதி ஆனாத்தான் ஏமி “ பதிலுக்கு ஒரு புன்னகையை சிந்திவிட்டு கமலா எக்ஸ்பிரஸ் கிளம்பிவிடும். அனாவசிய உரையாடல்களுக்கு அவள் வாழ்வில் இடமில்லை. கமலா டீச்சர் யாரோடும் ஒட்டி உறவாடி யாரும் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவள் தன்னுடன் பணிபுரியும் வேறொரு டீச்சரின் கை பிடித்துக் கொண்டு நடந்து போனதைப் பார்த்த பலர் ஆச்சர்யப் பட்டுப் போனார்கள். சிலர் இன்னும் கொஞ்சம் துப்பு துலக்கி அந்த டீச்சர் பெயர் தர்மாம்பாள் என்றும், அவள் விதவை என்றும், அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும் கண்டுபிடித்தார்கள். கமலா டீச்சருக்கு அவர்களுக்கும் கிட்டத்தட்ட இருபது வயது வித்தியாசம் இருக்கும். தாயில்லாத கமலா டீச்சர் தர்மாம்பாளிடம் ஒரு தாய்ப் பாசத்தை எதிர்பார்த்து பழகி இருக்கலாம் என்று கணக்குப் போட்டார்கள். இவ்வளவு நெருக்கமான தோழிகள் ஏன் தனித்தனியாக வாழவேண்டும்? ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கலாமே என்றும் யோசனை செய்தார்கள். ஆனாலும் அதை கமலா டீச்சரிடம் சொல்ல யாருக்கும் தைரியம் வரவில்லை. ஒரு நாள் கமலா வீட்டிலிருந்து கேவல் சத்தம் பெரிதாகக் கேட்டது. டீச்சர் பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்தாள். அவளருகில் ஒரு இருபது வயது இளைஞன் உட்கார்ந்திருந்தான். “ அம்மா அழாதீங்க .. இனிமே ஒங்களை பிடிச்ச சனியன் விலகிட்டுதுன்னு நெனச்சுக்குங்க “ “ டேய் பாலு அப்படி சொல்லாதே .. தர்மாம்பா ஒன்னை வளத்தவங்க.. அவங்க இருக்கற வரைக்கும் வாயத் தொறக்காத நீயி இப்ப அவங்க இறந்துட்டாங்கன்ன உடனே வாய்க்கு வந்த படி பேசறதா? “ ஏம்மா பேசக்கூடாது.. தாயையும் பிள்ளையும் பிரித்த கிராதகி அவ. வெறும் சோறும் துணியும் வாங்கிக் கொடுத்தா ஆச்சா.. “ “ அது அவங்க தப்பு இல்லடா.. நான் செய்து கொடுத்த சத்தியம். அதுக்கு அவங்க என்னா பண்ணுவாங்க “ இங்கொன்றும் அங்கொன்றுமாக குழுமி இருந்த கூட்டத்திற்கு எதுவும் புரியவில்லை. ஆனால் தர்மாம்பாள் டீச்சர் இறந்து போய்விட்டார் என்று மட்டும் அனுமானிக்க முடிந்தது. அவள் வளர்த்த பிள்ளை பாலு என்பதும் புரிந்தது. ஆனால் அவன் கமலா டீச்சரை அம்மா என்று கூப்பிடுகிறான்? தர்மாம்பாள் சாவுக்கு வந்த சாதி சனம் கொஞ்சம் கமலா டீச்சர் வீட்டில் தங்கியது. கொஞ்சம் வாய் ஓட்டையான கிழம் ஒன்று கமலா சரித்திரத்தைப் புட்டு புட்டு வைத்தது. கமலா பூப்படையும் முன்பே திருமணம் செய்விக்கப் பட்டவள். கொஞ்சம் கட்டுப் பெட்டியான வளர்ப்பு. நெஞ்சில் நிறையப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம். ஆனால் போய் சேர்ந்த இடம் கொஞ்சம் வக்கிரமான இடம். தன்னை மறந்து கமலா பாடும்போதெல்லாம் கடிந்து கொள்வார்கள் மாமியார் வீட்டில்.. “ இதென்ன தாசி வீடா நாள் முச்சூடும் பாட்டும் கூத்துமா இருக்கறதுக்கு? ” கமலா பூப்படைந்த நாள் அவள் வாழ்க்கையிலே ஒரு திகிலான நாள். கொல்லைப் புறக் கதவிற்கு அருகில் ஒரு பழைய சாமான்கள் வைக்கும் அறையில், சன்னலில்லாத இருட்டு அறையில் மூன்று நாட்கள் அவளை வைத்து பூட்டிவிட்டார்கள். வெளிச்சம் துளிக்கூட இல்லாத அறை. சாப்பாடு தையல் இலையில் வைத்து தரப்படும். கூடவே மண் குவளையில் தண்ணீர். நான்காம் நாள் எண்ணை தேய்த்து குளிப்பாட்டினாள் அந்தக் கிராமத்து மருத்துவச்சி கிழவி. இரவு அவள் வலியைக்கூட உணராமல் அவள் மேல் மூர்க்கமாகப் பாய்ந்தான் அவளை விட பத்து வயது மூத்த அவளது  புருசன். அவன் அபார சத்து கொண்டவனாக இருந்தான். அவனது முதல் தாக்குதலே அவளை சூலுற வைத்தது. ஏற்கனவே ஒல்லிக்குச்சி உடம்பு, கூடவே கர்ப்பத்தினால் ஏற்படும் ரத்த சோகை சேர்ந்து அவள் முகமும் உடலும் வெளிறிப் போனது. அதனாலேயே அவளது புருசனுக்கு அவளைப் பிடிக்காமல் போனது. அவள் மீது சந்தேகக் கணைகளைத் தொடுத்து அவள் பிறந்த வீட்டிற்கே அனுப்பி விட்டார்கள் அவளது மாமியார் வீட்டுக்காரர்கள். அதன் பின் ஓரிரு மாதங்களில் அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டே ஓடிப் போனார்கள். கமலா டீச்சருக்கு பிறந்தவன்தான் பாலு. அவன் பிறந்த பின் அவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பினாள். ஆனால் அவள் பிறந்த வீட்டுக்காரர்கள் அவளுக்கு தைரியம் கொடுத்தார்கள். அவள் குழந்தை அவளுக்கு ஒரு தடையாக இருக்கக் கூடாதே என்று தூரத்து சொந்தமான தர்மாம்பாளிடம் பாலுவைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார்கள். தர்மாம்பாள் அப்போதே கணவனை இழந்திருந்தாள். பள்ளி ஆசிரியையாக இருந்தாள். அவளுக்கும் ஒரு பிடிப்பு தேவைப்பட்டது. ஒரு நிபந்தனையுடன் அவள் பாலுவை ஏற்றுக் கொண்டாள். அவள் மூச்சு அடங்கும் வரை பாலுவைப் பார்க்க கமலா முயலக் கூடாது. கமலாவிற்கு வேறு வழி தெரியவில்லை. ஒப்புக்கொண்டாள். தர்மாம்பாள் இறக்கும் தருவாயில்தான் பாலுவிடம் கமாலாவைப் பற்றிய உண்மையை சொல்லியிருக்கிறாள். இப்போது கமலாவும் பாலுவும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். பாலு பெரிய படிப்பு படித்து வேலைக்குப் போகிறான். ஆனாலும் வழக்கம்போல கமலா டீச்சர் எட்டு மணிக்கு வேலைக்குச் செல்ல தவறுவதில்லை. சனி ஞாயிறு கிழமைகளில் பாட்டும் ஜதியும் கேட்பது நிற்கவேயில்லை. பாலு தன் அப்பாவைத் தேடும் முயற்சிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவன் உயிரோடு இருக்கிறானா என்பதே கண்டறியவேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் கமலா டீச்சர் தலை நிறைய மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு, வட்ட சிவப்பு சாந்துப் பொட்டு வைத்துக் கொண்டு காட்சி தருகிறாள். இப்போதெல்லாம் அவள் முகத்தில் சிரிப்பு  சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கிறது. அவளும் கொஞ்சம் பூசினாற்போல்தான் ஆகியிருக்கிறாள்   5. அபிராமி அற்புத சுந்தரி   ரெட்டியாரின் ஒண்டுக்குடித்தன வீடுகளுக்கு முன்வீடு யாதவர்கள் வீடு. பசு மாடுகளும் எருமை மாடுகளும் வைத்து அமோகமாகப் பால் வியாபாரம் நடந்த காலம் அது. அப்போது அரசு பால் பண்ணையிலிருந்து கண்ணாடி பாட்டில்களில் பால் வரும். நீல/சிகப்பு கோடு போட்ட தகடு மூடி வைத்து பால் நிரப்பப் பட்டிருக்கும். தகர மூடிகளை எடைக்கு வாங்கிக் கொள்ள பழைய தகர வியாபாரி காத்திருப்பார். ஆனாலும் கறந்த மாட்டுப்பாலின் மவுசு போகாத காலம் அது. யாதவர்கள் வீட்டில் நான்கே அடி உயரம் இருந்த நந்தன் கடைக்குட்டி. அவனுக்கு முன்னால் இரண்டு ஆண் பிள்ளைகளும், மூன்று பெண் பிள்ளைகளும் பால்காருக்கு உண்டு. பால்கார் வயசாளி போல தோற்றம் தருவார். ஆனாலும் அவர் பனிரெண்டு எருமைகளையும் அதற்கு ஈடான பசுக்களையும் ஒற்றை ஆளாக தீவனம் வைத்து, பால் கறந்து, மேய்ப்பது பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். பால்காரின் மனைவி வெள்ளையம்மா பேருக்கு ஏற்றார்போல் வெள்ளையாக இருந்திருக்க வேண்டும். இப்போது அவள் அவ்வளவு வெள்ளையாக காட்சி தரவில்லை. வயதின் சுருக்கங்கள் அவள் முகத்தை மேலும் இருட்டாக்கி இருந்தன. அவளுக்கு எப்படியும் அறுபது வயதிருக்கும். பெரிய தோடு அணிந்திருப்பாள் காதுகளில். அவள் முழங்கைகளில் ஏதோ பச்சை குத்தியிருக்கும். அவளுக்கு நந்தன் என்றால் கொள்ளை பிரியம். பால்கார் வீட்டில் இரண்டு குடித்தனம் இருந்தது. அதில் ஒன்றில் சினிமா துணை நடிகை இருந்தாள். இன்னொன்றில் அருள் வாக்கு சொல்லும் ஒரு பெண்மணி குடியிருந்தாள். அவளது அருள் வாக்கு அந்தப் பகுதியில் மிகப் பிரபலம். அபிராமி உபாசனை செய்து வந்ததால் அவள் இயற்பெயரை யாரும் அறிந்திருக்கவில்லை. அருள் வாக்கு அபிராமி என்றே அவள் அழைக்கப் பட்டாள். நந்தன் பிறந்த முன்று ஆண்டுகள் வரை அவன் ஏதும் பேசவில்லை. அவன் நான்காவது வயதை அடைந்த போதுதான் அபிராமி அந்த வீட்டிற்கு குடிவந்தாள். அவளது பக்தர்கள் கூட்டத்தைக் கண்ட பால்காரி தன் மகனின் பேசாத் தன்மையை அவளுக்கு தெரிவித்தாள். அபிராமி அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள். “ ஏய் சொல்றன் கேட்டுக்க .. போன சென்மத்துல உன் மவன் ஒரு பொட்டப் பொண்ணை நாசம் பண்ணிட்டு, அவளை சாவடிச்சு பாழுங்கிணத்துல தூக்கிப் போட்டுட்டான். அதன் வெனைதான் அவனை இப்படி ஆட்டுது. ஊமைப் பொண்ணையோ இல்ல பேச்சு சரியா வராத ஒரு பெண்ணையோ அவனுக்கு கட்டி வைக்கிறேன்னு வாக்கு குடு. ஆறு மாசத்துல தானா சரியாயி பேச ஆரம்பிச்சுடுவான்” நான்கு வயசு நந்தனுக்கு பேச்சு வரவேண்டுமென்ற ஆசையில் பால்காரி வேகமாக தலையசைத்தாள். ஐந்தாவது வயதில் நந்தன் பேச ஆரம்பித்தான். ஆனாலும் அவனது பேச்சு ஒரு வித மழலையாகத்தான் இருந்தது. அதற்கும் காரணம் சொன்னாள் அபிராமி. “ ஒரு பொண்ணை நாசம் பண்ணானில்ல உம் பையன். அப்ப அவளோட அவ வயத்துல கொழந்தையும் இருந்தது இல்ல.. அதான் உன் பையன் தெளிவில்லாம பேசறான் “ பால்காரி அதையும் நம்பினாள். நாசம் பண்ணவுடனே எப்படிடி கொழந்தை வரும்னு அப்பவே கேட்டிருந்தாள்னா விசயம் வேரு பிடிச்சிருக்காது. நந்தன் பதினாறு வயது நெருங்கும்போதுதான் அபிராமி அம்மாளுக்கு ஒரு குடும்பம் இருப்பது தெரிய வந்தது. நெல்லைச்சீமையிலிருந்து அவர்கள் ஒருநாள் விடியலில் வந்திறங்கினார்கள். அபிராமி அம்மாளின் புருசன் குடுகுடுப்பைக்காரனைப் போல் கலர் கலராக உடை அணிந்து கொண்டிருந்தான். அவன் கையைப் பிடித்தபடி பதினான்கு வயதில் துடிப்பாகவும் களையாகவும் ஒரு இளம் பெண் இருந்தாள். தாமிரபரணி தண்ணீரின் ஊட்டம் அவள் உடம்பில் செழுமை கூட்டியிருந்தது. திரட்சியான மார்பகங்களுடன் அவள் “திண்” என்று இருந்தாள். இன்னும் தாவணி போட ஆரம்பிக்கவில்லை என்பதால் அவளது பாவாடை சட்டை அவளது அழகை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. அவள் அணிந்திருந்த உடை கொஞ்சம் வினோதமாக இருந்தது. ஆண்களைப் போல் காலர் வைத்த சட்டை அணிந்திருந்தாள். ஆனாலும் ஆண்களைப் போல் முழுதாக கீழ் வரையிலும் பித்தான்கள் அதில் இல்லை. மேலே இரண்டோ மூன்றோ பித்தான்கள்தான். அவள் கழுத்து வரையிலும் பித்தான்களை அணிந்திருந்தாள். அவளது வயிறு லேசாக புடைத்துக் காணப்பட்டது. அதனாலேயே அவளது பாவாடை அவளது திரண்ட கால்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு தவித்தது. அவளது ஆரோக்கியத்தை பறை சாற்றும் விதமாக அவளது புட்டம் அகன்று காணப்பட்டது. பதினான்கு வயதில் அவள் ஒரு சிற்றானைக் குட்டி போலக் காட்சியளித்தாள். “ அன்னலட்சுமி “என்று அவளை வாஞ்சையோடு அழைத்தாள் அபிராமி அம்மாள். அன்னம் என்பது அவளது சுருக்கப்பட்ட செல்லப் பெயர். அவளது உருவத்திற்கு அவளுக்கு ஆனை லட்சுமி என்றே பெயர் வைத்திருக்கலாம் என்று அங்குள்ளோர் பேசிக் கொண்டனர். அவள் அரைப்படி சோற்றை உள்ளே தள்ளுவதைப் பார்த்தவர்கள் பெயர் பொருத்தம் பற்றி சிலாகித்தனர். நந்தன் வெளியூரில் இருக்கும் அத்தை வீட்டிற்கு சென்ற நேரத்தில்தான் அன்னலட்சுமி சென்னையில் தரை தட்டினாள். அவள் காலை உணவாக பத்து இட்லிகளை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் ஒரு காலைப் பொழுதில் நந்தன் வீடு திரும்பினான். நந்தனைப் பார்த்த அன்னம் அன்னத்தையே மறந்தாள். வாயில் முழுங்காத முழு இட்லியுடன் “ அவ்வா அது ஆரு ‘ என்று வினவினாள். அவளது இட்லி அடைத்த குரலைக் கேட்ட நந்தன் வெண்தேவதைகள் புடைசூழ கனவு டூயட்டிற்கு தயாரானான். அருள் வாக்கின்படி பேச்சு சரியா வராத பெண்ணையே தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டளை அவன் மூளையில் மாறாத பதிவாக இருந்ததால் இவளே தனது மனைவி என்று முடிவு செய்து கொண்டான். ஊரில் அத்தைப் பெண் கோகிலவாணி அவனைக் கவர செய்த பிரயத்தனங்களையும், அதில் அவனுக்கு ஏற்பட்ட ருசியும் அவனை ஒரு புது மனிதனாகவே ஆக்கிவிட்டிருந்தது. கோகிலவாணி கொஞ்சம் கறுப்பு. நந்தன் அம்மா போல் வெளுப்பு. அதனாலேயே கோகிக்கு அவனைப் பிடித்து போய்விட்டது. அதோடு கூட அத்தையும் “ இவதாண்டா நீ கட்டிக்கப் போறவ “ என்று அடிக்கடி சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்தாள். “ அதெல்லாம் ஆவாது. அருள்வாக்கு என்னா சொல்லிருக்கு தெரியுமா.. ஊமை இல்லன்னா பேச்சு சரியா வராத பொண்ணுதான் நான் கட்டற பொண்ணாம் “ அத்தைக்காரி சென்னையில் சொந்த இடம், மாடு என இருக்கும் மருமவனை வளைத்துப் போட மகளின் நாக்கை வெட்டி ஊமையாக்கக் கூட தயாராக இருந்தாள். கோகிலா பதினைந்து வயதுக்காரி. சமைந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தது. கிராமத்து வயல் வேலை, நெல் குத்துதல், மாவு அரைத்தல் என அவளது உடம்பு கோயில் தூண் போல் இருந்தது. அவளைச் சிற்பமாகச் செதுக்க நல்ல உளி தேடி அலைந்தாள். கிராமக் கட்டுப்பாடு காரணமாக அவள் யாரோடும் நெருங்கி பழக முடியாத அந்த நேரத்தில்தான் அத்தைக்காரிக்கு பிறந்த வீட்டு பரிசாக சேங்கன்னு ஒன்றை ஓட்டிக்கொண்டு நந்தன் வந்தான். சேங்கன்னு புது இடத்தில் பழகற வரையிலும் பத்து பதினைந்து நாள் அவன் தங்குவதாக ஏற்பாடு. நான்கடி உயரம் இருந்த நந்தன் உயரக்குறையை ஈடு கட்ட கரணையான புஜங்களும் தொடைகளும் கொண்டு ஒரு மல்லன் போல் இருந்தான். வேட்டியை கீழ்ப்பாய்ச்சி கட்டிக் கொண்டு அவன் மாட்டுக் கொட்டடியில் வேலை செய்வதை விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கோகிலா. சாணி அள்ளுகிறேன் பேர்வழி என்று கொட்டடிக்கு கூடையுடன் வந்த கோகி கால் வழுக்கி பால் கறந்து கொண்டிருந்த நந்தன் மேல் விழுந்தாள். நிலை தடுமாறிய நந்தன் குவளையோடு மல்லாக்க விழுந்தான். உருண்டோடும் குவளையை பிடிக்க எழுந்த நந்தனும், விழுந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல், எழுந்திருக்க அனிச்சையாக ஒரு பிடிமானத்தை தேடி நந்தனின் வேட்டியைப் பிடித்த கோகியும் மறுபடியும் கீழே விழுந்தார்கள். செருகிய வேட்டி அவிழ்ந்ததும், கோகியின் குட்டைப் பாவாடை மேலேறியதும் இந்தக் கதையின் விவரிக்க வேண்டாத காட்சிகள். அதன்பிறகு கோகிலாவும் நந்தனும் அடிக்கடி கொட்டடியில் சந்தித்துக் கொண்டார்கள். ஒரு மருத்துவ ஆராய்ச்சி மாணவரைப் போல் உடற்கூறு ரகசியத்தை இருவரும் அறிந்து கொண்டார்கள். அருள் வாக்கு தெய்வக்குத்தம் என்று நந்தன் தன் அச்சத்தைச் சொல்ல, அடுத்த நாளிலிருந்து கோகி குழறி குழறி பேச ஆரம்பித்தாள். “ புள்ள ஏதோ பாத்து பயந்துருச்சி “ என்று ஆத்தாகாரி வேப்பிலை அடிக்க, நந்தன் சென்னை போகும் நாளும் வந்தது. அப்பனிடம் பேசி கோகிலாவைக் கூட்டி வரவேண்டும் என்ற முடிவிலிருந்த நந்தன் அன்னலட்சுமியின் குரலால் ஆடிப்போனான். அன்னமா கோகியா என்ற மனக் குழப்பத்தில் இருந்த அவனுக்கு ஆறுதலாக வந்தது செய்தியொன்று.. கோகிக்கு தூரத்து மாமன் உறவில் பையன் பேசி முடித்தாகிவிட்டது. தைமாசம் திருமணம். இனி தனக்கு அன்னம் மட்டும்தான் என்று நந்தன் முடிவு செய்த நேரத்தில் அபிராமி அம்மாள் தன் குடுகுடுப்பை புருசனை வீட்டை விட்டு விரட்டி அடித்தாள். துக்காராம் தெருவில் தோட்டிச்சி ஒருவளுடன் அவன் ரகசிய குடும்பம் நடத்துவது அவளுக்கு தெரிய வந்ததுதான் காரணம். பால்காரி தன் மகனின் விருப்பத்தை அபிராமி அம்மாளிடம் தெரிவிக்க, தெய்வக்குத்தம் அது இது என்று கொஞ்சம் பிகு செய்துவிட்டு அவள் குடியிருந்த போர்ஷனை மகள் பெயருக்கு கிரயம் பண்ணிக் கொடுத்தால் பரிகாரம் செய்து கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்தாள். ஒரு சுப முகூர்த்தத்தில் மூன்றாவது பாளையத்தம்மன் கோயிலில் தாலி கட்டி கல்யாணம் நடந்தது. முதல் இரவில் நந்தன் ஆசையோடு உள்ளே நுழைந்தபோது முழு அதிரசத்தை வாயில் அடைத்தபடி “ வாழ்ங்க “ என்றாள் அன்னலட்சுமி.   6. சர்வலங்கார பூஷணி சுந்தரி   மேடலி முதல் தெருவில் பல ஒண்டுக் குடித்தன வீடுகள் உண்டு. அவைகளில் ஒன்றின் பின் கட்டில் மாட்டுத் தொழுவத்தினை ஒத்த ஒரு குடியிருப்பில் குடியிருந்தது ஒரு கன்னடக் குடும்பம். வீட்டு எசமானன் பெயர் வெங்கோபராவ். அவரது மனைவி பெயர் பூரணி. வெங்கோபராவ் கோபம் வந்து யாரும் பார்த்ததில்லை. அவ்வளவு சாந்த சொரூபி. ஆனால் பூரணி நேர் எதிர். எதிலும் பட படவென்று வெடிக்கும் எண்ணையிலிட்ட கடுகு அவள். அவள் ஒரு Mrs. Perfection. அதனாலேயே அவர்கள் வீட்டில் அடிக்கடி சச்சரவு நடக்கும். பல நேரங்களில் ராவ்தான் மாட்டிக் கொள்வார். ராவின் குரல் கொஞ்சம் சன்னமாக இருக்கும். ஏறக்குறைய பெண்மை சாயல் கொண்ட குரல். அதற்கு அவரது அம்மா _ அவரை குழந்தைகள் அஜ்ஜி என்று கூப்பிடுவார்கள் _ ஒரு காரணம் சொல்வார்கள். சின்ன வயதில் தேங்காய் பத்தையைத் திருடி அவசரமாக விழுங்கியபோது அது தொண்டையில் மாட்டிக் கொண்டதாம். அதிலிருந்து குரல் கம்மிப் போய்விட்டதாம். ஏற்கனவே சன்னமான குரல், பூரணியின் தாக்குதலால் சின்னா பின்னமாகி சிதிலமடையும். உள் நுழைந்து பார்த்தால் உப்பு பெறாத விசயமாக இருக்கும். எண்ணை புட்டியோ, பவுடர் டப்பாவோ, கழற்றப்பட்ட சட்டையோ அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அது அது அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் பூரணி அதிக அக்கறை கொண்டிருந்தாள். பூரணிக்கு இரண்டு குழந்தைகள். இரண்டும் ஆண் பிள்ளைகள். இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். ஆளுமை உள்ள பெண் நடத்தும் தாம்பத்தியத்தில் ஆண் பிள்ளைகளே பிறக்கும் என்பதும், பூரணிக்கு அவ்வாறே நிகழ்ந்திருக்கிறது என்றும் பரவலாக பேசப்பட்டது. பூரணி எல்லாக் காரியங்களிலும் நேர்த்தியைக் கடைபிடிப்பவள். இத்தனைக்கும் அவள் அதிகம் படித்தவளல்ல. அவளுக்கு வாழ்க்கை பற்றிய பல நுணுக்கமான புரிதல்கள் இருந்தன. அவள் ஒன்றும் பேரழகியல்ல என்பதை அவள் அறிந்தே இருந்தாள். அவளுடைய கணவனும் ஆணழகன் அல்ல என்றாலும், ஒரு கௌரவமான வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் புருச லட்சணம் மிக்கவன். அவனை தன் ஆளுமையில் வைத்திருப்பதும், அவன் உடல் மனம் சார்ந்த எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்றுவதும் தன் தலையாயக் கடமைகளில் ஒன்று என்று அவள் உணர்ந்தே இருந்தாள். பூரணியின் புருசன் ராவ் வீடு திரும்ப ஆறு மணியாகிவிடும். சென்னப்பட்டணம் என்று அப்போது வழங்கப்பட்டது பாரிமுனையும் அது சார்ந்த பகுதிகளும்தான். மின்சார ரயில் பயணித்து அவன் அலுவலகம் போவதும், ஆலையிலிட்ட கரும்பாய் அவன் பிழிந்து வீடு திரும்புவதும் அன்றாட அவலங்களில் ஒன்று. அவன் வரும்போது பூரணி வாசற்படியில் காத்திருப்பாள். அவள் முகம் பளிச்சென்று இருக்கும். கண்களில் மை தீட்டப்பட்டிருக்கும். காதருகில் இரு முடிக்கற்றைகள் பிறைச் சந்திரனைப் போல் சுழித்து விடப்பட்டிருக்கும். தினமும் துவைத்து, காயவைத்து, மடித்து வைக்கப்பட்டிருக்கும் சாதாரண மதுரைச் சுங்கிடிப் புடவை_ அதிலும் இரண்டு மூன்று நிறங்கள் தான், கறுப்பு, சிகப்பு, பச்சை என _ அவள் உடம்பில் சிக்கென்று பொருந்தி இருக்கும். இடுப்புக்கு கீழ்வரை உள்ள கூந்தலை பின்னலிட்டு வாழைநார் கொண்டு கட்டியிருப்பாள். லேசான பவுடர் பூச்சும், உதட்டுச் சாயம் இல்லாமலே சிவந்த உதடுகளும் அவள் அழகை மேலும் மெருகூட்டும். கட்டுப்பெட்டியான சாத்திரங்களும், பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும் ஊறிப்போன இனத்தில் பிறந்தவள் பூரணி. அதனால் கணவன் தவிர பிறர் பார்க்கக் கூடாது என தன் அழகைப் பூட்டி வைத்திருப்பாள். ஒன்பது முழச் சேலை அவள் உடம்பைச் சுற்றியிருக்கும். அதை முழுவதுமாக கழுத்துவரை போற்றி மூடியிருப்பாள். அவர்கள் வீட்டில் வேலைக்காரி கிடையாது. மொத்த வேலையையும் அவளே செய்வாள். கல்லுரலில் இடுப்பில் சொருகிய சேலையோடு அவள் மாவாட்டும்போது, அவளது வெண்மை நிறத் தொடைகளின் மேல் கிறங்கி மயங்கியிருப்பார் ராவ். ஒரு பாஸ்ஞ்சர் வண்டியின் தாள கதியோடு அவள் தொடைகள் மாவாட்டுவதற்கு ஏற்ப அசையும்போது கண்கள் சொக்கும். மிதமான உறக்கத்தில் தலை நழுவி தொடைகளுக்கிடையில் விழும். மாமியார் கிழவி தூங்குவதை உறுதி செய்து கொண்டபின் லேசாக கணவன் தலையை திருப்பி தொடைகளால் நசுக்குவாள் பூரணி. அடுத்த ஐந்தாவது நிமிடம் கௌபீனத்தை மாற்ற எழுந்து ஓடுவார் ராவ். பூரணி இதையெல்லாம் யாரிடமிருந்து கற்றாள் என்பது தெரியாது. கணவனுக்கான காமம் அவளுக்கு இயல்பாக வந்தது. ஆனாலும் லஜ்ஜையற்ற காமம் அல்ல அது. நாட்கணக்கில் ஊடல் காரணமாக அவள் ஒதுங்கியே இருந்ததுண்டு. ராவ் வாடி துடித்துப் போகும் வரை அவள் சமாதானமாக மாட்டாள். சரணாகதி அடைந்த பின் கிடைக்கும் பேரின்பம் ராவை அடிக்கடி ஊடல் ஏற்படுத்தத் தூண்டும். அவளது பிள்ளைகள் இருவரும் கல்லூரிக்கு சென்று படிக்கும் பிராயத்தில் ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு போலிஸ் வந்தது. பூரணியை கைது செய்து அழைத்துப்போனது. அவள் செய்த குற்றம் தன் கையாலேயே தன் கணவனைக் கொலை செய்ததுதான். ராவின் பிரேத பரிசோதனையில் ஒரு உண்மை வெளிப்பட்டது. அவன் பால்வினை நோயினால் தாக்கப்பட்டிருந்தான். தன்னை மீறிய பெண்கள் தொடர்பு தன் கணவனுக்கு இருந்ததும், அவன் பால் வினை நோயால் தாக்கப்பட்டதும் பூரணிக்கு ஆத்திரமூட்டியிருக்க வேண்டும். நேர்த்தியும் ஒழுக்கமும் கொள்கைகளாகக் கொண்டு வாழ்ந்த பூரணிக்கு தன் கணவனின் ஒழுக்கக் கேடு தாங்க முடியாத ஆத்திரத்தைத் தந்திருக்கலாம். அது கொலை வெறியாக மாறி அவனைக் கொல்லும் அளவிற்கு போனது என்று செய்தித்தாளில் போட்டார்கள். திட்டமிட்ட கொலை அல்ல.. அது ஒரு உணர்வு ரீதியான செயல் என்பதால் பூரணிக்கு பத்து வருடம் கடுங்காவல் தண்டனை விதித்தது கோர்ட். ராவின் அரசாங்க ஓய்வூதிய தொகையும், வைப்பு நிதியும் அஜ்ஜியை தன் பேரன்கள் இருவரையும் படிக்க வைக்க உதவிற்று. பூரணி நல்லொழுக்கம் காரணமாக தண்டனை குறைக்கப்பட்டு ஏழு வருடங்களில் விடுதலையானாள். வீட்டிற்கு வந்த இரவு அவள் இறந்து போனாள்.  7 . ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி   மேடலி தெரு வாசிகள் ஒரு வினோதக் கலவையானவர்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கம். கொஞ்சம் மேட்டுக்குடி, கொஞ்சம் வறுமைக்கோட்டுக்கு வெகு கீழே. அதனால் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையில் ஒன்றிரண்டு சேட்டுக் கடைகள் இருந்தன. முன்னாலால் சேட் பன்னாலால் சேட் என்று பெயர் பலகைகள் சொல்லும். “ அரைச் சவரத்த வாங்கிக்கினு அம்பது ரூபா நீட்டறான் சேட்டு “ “ யாரு முன்னாலா பன்னாலாலா? “ “ எல்லாம் அந்த பன்னாடை லால்தான் “ வறுமை எக்காலத்திலும் ஏழைகளின் நகைச்சுவை உணர்வைப் போக்குவதில்லை என்ப்தற்கு இது ஒரு உதாரணம். முன்னாலாலின் மகன் கமல் அப்போதே பதினெட்டு வயது இளைஞனாக இருந்தான். அவனுக்குத் தொழிலில் ஆர்வம் வரவேண்டும் என்று பெரிய சேட் வீட்டிற்குச் சென்று விடுவார். வீடு கடைக்குப் பின்புறமே இருக்கும். சேட்டு மதிய உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டார் என்பதற்கு அடையாளமாக பித்தளை டிபன் பாக்ஸ்கள் கழுவி பள பளவென்று துடைக்கப்பட்டு கடை வாசலில் படியோரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். செந்தாமரை மேடலி முதல் தெருவில் இருந்த மல்லிகாவின் மகள். மல்லிகாவின் புருசன் கை ரிக்ஷா ஓட்டுபவன். இரண்டு ரூபாய்க்கு மாம்பலம் பேருந்து நிலையத்திலிருந்து பனகல் பார்க் தாண்டி இழுக்க வேண்டி இருக்கும். கொஞ்சம் குண்டான பயணிகளை அவன் மூச்சிழுத்து இழுக்கும்போது நெஞ்சுக்கூடு வெளியே துருத்திக் கொள்ளும். இரவு கைக்காசை மல்லிகாவிடம் கொடுத்து விட்டு – எல்லாமே ச்¢ல்லறைக் காசாகத்தான் இருக்கும் – அவளிடம் இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு மூன்றாவது தெருவுக்கு சாராயம் குடிக்கப் போவான். மல்லிகாவின் அங்கீகாரத்தோடுதான் அவனது குடிப்பழக்கம் தொடர்ந்தது. அவனால் ஒரு பிரச்சனையுமில்லை. அவனுக்கான சோறு அலுமினியத் தட்டில் வைக்கப்பட்டு, வாழை இலையால் மூடப்பட்டு, அது பறந்து விடாமலிருக்க ஒரு கல்லும் மேலே வைக்கப்பட்டு, குடிசையின் விளக்குப் பிறையில் வைக்க்ப்பட்டிருக்கும். காசு தீர்ந்தவுடன் அவன் கமுக்கமாக வந்து சோற்றைத் தின்று விட்டு, அடிபம்பில் தண்ணீர் அடித்துக் குடித்துவிட்டு படுத்து விடுவான். படுத்த உடன் தூங்கியும் போவான். வாடிக்கைக் காரர்க்ளின் பிரசவ அவசரத்திற்கோ, ஆஸ்பத்திரி அவசரத்திற்கோ அவன் எழுப்பப்பட்டால், உடனே முழிப்பு வந்துவிடும் அவனுக்கு. கமல் கடையிலிருந்த ஒரு அசந்தர்ப்பமான நேரத்தில் செந்தாமரை கால் சவரன் மூக்குத்தியை அடகு வைக்க அங்கு வந்தாள். வெள்ளிக்கிழமை மதிய நேரம். தலைக்குக் குளித்து, மஞ்சள் பூசி, பெரிய பொட்டு இட்டு, மஞ்சள் ரவிக்கையும் சிகப்பு தாவணியும் அணிந்து அவள் பிரச்சன்னமானபோது அம்மன் வந்தது போல் ஆகிவிட்டது கமலுக்கு. அருள் வாக்கு சொல்லும் அளவிற்கு ஆடிப் போய்விட்டான். சிறு வயதிலிருந்தே அந்தப் பகுதியில் அவன் வளர்ந்தான் என்றாலும், அப்பகுதி சிறுவர், சிறுமிகளுடன் சேர விட்டதில்லை அவன் தந்தை. குதிரை வண்டியைப் போல பொட்டி வைத்திருக்கும் நீலக்கலர் சைக்கிள் ரிக்ஷாவில் அவன் பள்ளிக்குப் போவான். மாலை அதே வண்டியில் வீடு. வீட்டுக்கு உள்ளேயே விளையாட்டு, பாடம், படிப்பு எல்லாம். வருடம் ஒரு முறை ஜகன்னாத் யாத்திரை போகும்போது வடநாட்டுக் கிராமத்திற்குப் போய் வருவார்கள். வெளியுலகம் என்பது அவனுக்கு அப்போதுதான் தெரியவரும். வெண்ணையையும் வெண்மை நிறப்பெண்களையும் பார்த்துப் பார்த்துச் சலித்த அவன் கண்களுக்கு கறுப்பும் மாநிறமும் மயக்கத்தையே தந்தன. அவன் பார்த்த ஆண்களும் (கறுப்பாக) கட்டுமஸ்தாக இருந்தார்கள். ஆக ‘வலிமையின் நிறம் கறுப்பு’ எனும் புதுமொழியே அவன் மனதில் கல்வெட்டு எழுத்துக்களாய் பொறிக்கப்பட்டது. செந்தாமரை எப்பவும் அவன் கண்களில் படுபவள்தான். ஆனால் இன்று போல அவள் எப்போதும் இருந்ததில்லை என்று நினனத்தான் கமல். இயற்கையாக கொஞ்சம் கூச்ச சுபாவம் என்பதால் அவள் கடையை நெருங்க நெருங்க அவனால் அவளைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. மெல்ல கண்களைத் தாழ்த்த்¢க் கொண்டு கணக்குப் புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தான். செந்தாமரைக்கு அவன் கவனத்தை எப்படித் திருப்புவது என்று தெர்¢யவில்லை. எப்படிப்பட்ட ஆம்பளையாக இருந்தாலும் ஒற்றைச் சொல்லில் “ தே தள்ளு “ என்று கூறும் இயல்பினள் அவள். ஆனால் இன்று அவளுக்குக் குரல் கண்டத்தோடு ஒட்டிக் கொண்டதுபோல் வெளியே வர மறுத்தது. லேசாக செருமினாள் தாமரை. மெல்ல தலையைத் தூக்கினான் கமல். என்ன வேணும் ? எனக் கேட்க நினைத்தான். குரல் பிரிய மறுத்தது. அவனும் லேசாகச் செருமிக் கொண்டான். பாட்டுக் கச்சேரியில் மிருதங்கமும் கடமும் ஒன்றையடுத்து ஒன்று வாசிப்பது போல் இரு செருமல்களும் தொடர்ந்ததில் இருவருக்கும் சிரிப்பு வந்தது. முதலில் பொத்திகிட்டு வந்தது ச்¢ரிப்புதான். அப்புறந்தான் எல்லாமே பத்திகிச்சு.  மூக்குத்தியை எடை போடாமல் முப்பது ரூபாய் கொடுத்துவ்¢ட்டு, மூக்குத்தியைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான் கமல். “ சீட்டு “ என்றாள் தாமரை. “ நீயே எழுதிக்க “ என்பது போல் ரசீது புத்தகத்தைத் தள்ளினான் கமல். ‘ கால் சவரன் மூக்குத்தி ‘ என்று எழுதி ‘ தாமரை ‘ என்று கையெழுத்திட்ட ரசீதைக் கிழித்து அவளிடம் தந்துவிட்டு நகலை எடுத்து பையில் வைத்துக் கொண்டான். மறுமாதம் முதல் வாரத்தில் அவள் முப்பது ரூபாய் தந்ததும், அவன் மூக்குத்தியைத் திருப்பித் தந்ததும் பெரிய சேட்டுக்குத் தெரியாமலே   நடந்தது. பின்வந்த நாட்களில் மூக்குத்தி இல்லாமலே முப்பது ரூபாய் பணமாக மாறும் வித்தை புரியாமல் விழித்தாள் மல்லிகா. “ மூக்குத்தி இல்லாம ஒன் மொகம் நல்லால்லியாம், கமல் சொல்லிச்சு அதான் அதே பணம் தருது “ மூக்குத்தியை வைத்து தனக்கு காது குத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மல்லிகா அறியவில்லை. மல்லிகாவின் தம்பி சின்னதுரை எண்ணூர் பக்கம் லாரி ஓட்டுபவன். யதேச்சையாக மாம்பலம் வந்தவன், தாமரையைப் பார்த்து அசந்து போனான். அடுத்த நாள் அரை சவரன் தாலியும் அரக்குப் புடவையும், தட்டு நிறையப் பூவும் லட்டுமாக அவன் பரிசம் போட வந்த போது, தாமரை கலங்கிப் போனாள். கமல் தன் காதலைத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பெர்¢ய சேட்டிடம் சொன்னான். “ பேட்டா தாமரை லடுக்கி ரோட்டி செய்யுமா? சப்ஜி செய்யுமா? ஜகன்னாத் யாத்ரா போனா பஜன் செய்யுமா? ஷாதி பண்ணிக்கிட்டா தகராறுதான் செய்யும். பாகல் மாதிர்¢ பேசாதே. சுப்ரஹோ! “ ஒரே அதட்டலில் அடங்கிப் போனான் கமல். சின்னதுரை பரிசம் போட்ட ஒரே வாரத்தில் தாமரையைக் கல்யாணம் செய்து கொண்டு எண்ணூருக்குப் போனான். திருமணமான முன்றாவது மாதத்தில் லாரி விபத்தொன்றில் சின்னதுரை காலமானான். அப்போது தாமரை முழுகாமல் இருந்தாள். மல்லிகா தன் மகளை மறுபடியும் தன் வீட்டிற்கே கூட்டி வந்து விட்டாள். தாமரைக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. செக்க செவேலென்ற நிறத்தில் அது இருந்தது. ஆனால் அதற்குச் சின்னதுரை சாடை சிறிதுமில்லை. பெரிய சேட்டின் மனைவி தாமரையின் குழந்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். அவளுக்குத் தெரிந்த சாடையில் அது இருந்தது. அது கமலின் குழந்தைப் பருவ சாடை!   8. மென்பொருள் சுந்தரி பத்மலோசனி   ஒரு அறுபது வருடங்களுக்கு முன்னர் மாம்பலம் என்றழைக்கப்பட்டதெல்லாம் இப்போது பழைய மாம்பலம் என்று அழைக்கப்படும் மேற்கு மாம்பலம்தான். இன்று ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் செய்யும் உஸ்மான் சாலை அப்போது நாய் நரிகள் ஓடும் புதர் காடாக இருந்ததாக ஏரியா பெருசுகள் சொல்லக் கேள்வி. ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன் ஓரளவு முன்னேற்றம் வந்து விட்டது தி. நகருக்கு. புதிதாக பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின் சந்தடிகள் கூட ஆரம்பித்தன. மேடலி சாலையில் இருந்து பிரியும் கில்ட் சாலையில் இடது பக்கமாக ஒரு முட்டு சந்து பிரியும். அங்கு வறுமைக்கோட்டுக்கு வெகு கீழே உள்ள குடும்பங்கள் சில உண்டு. அங்கு இருந்த குடும்பங்களில் பிராம்மண குடும்பங்களும் உண்டு. அப்படிப்பட்ட குடும்பம் ஒன்றில் பிறந்தவள் தான் பத்மலோசனி. பின்னாளில் லோசனை எடுத்துவிட்டு பத்மினி என்றே அவள் போட்டுக்கொண்டாள். பத்மா கொஞ்சம் கவர்ச்சியான முகம் கொண்டவள். கூரிய மூக்கும் குவிந்த உதடுகளும் அவள் முகத்தை இன்னும் எடுப்பாக்கியது. இதெல்லாம் அவள் வாயைத் திறக்கும் வரைதான். அவள் பல் வரிசை அவ்வளவு வரிசையில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக பற்கள் ஏறுமாறாக இருக்கும். அதை அவள் அறிந்தே இருந்தாள். அதனால் வாய் விட்டு சிரிப்பதேயில்லை. எல்லோர்க்கும் புன்னகைதான். அது அந்தக் காலத்தில் ஒரு மோனோலிசா புன்னகையைப் போல் பார்ப்பவரை எல்லாம் மயக்கியது. பத்மாவிடம் எத்தனை தாவணிகள் இருந்தது என்று யாருக்கும் தெரியாது. அவள் எப்போதும் ஒரு வெங்காயக் கலர் சருகு தாவணியே அணிந்திருப்பாள். அதுதான் லேசான காற்றில் கூட படபடத்து அவளது முன்னழகைக் காட்டும். அவள் ஒன்றும் பெருந்தனக்காரியில்லை. ஆனாலும் அவளது சிறிய முலைகள் ஷார்ப்பாக இருக்கும். இருக்கும்படி அவள் வைத்திருப்பாள். வாசனைத்தூள் டப்பியில் வைக்கப்பட்டிருக்கும் கூரான குப்பியை அவள் ஜாக்கெட்டில் வைத்து தைத்திருப்பதாகவும், அவளுக்கு இயற்கையிலேயே கூர் கிடையாது என்றும் ஒரு பட்டி மன்றமே நடந்தது அந்நாளில். பத்மா எப்போதும் பனிரெண்டு மணி உச்சி வெயிலில் சிரமம் பாராது வெளியில் சுற்றுவாள். அதனாலெல்லாம் அவள் மேனி கறுத்து விடப் போவதில்லை என்பதை அவள் அறிவாள். ஏனென்றால் அவள் ஏற்கனவே நல்ல கறுப்பு. இன்னும் கறுக்க என்ன இருக்கு? பத்மா அஞ்சா நெஞ்சினள். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் அவளது ஷ்பெஷாலிட்டி. அவள் பார்வையைத் தாங்க முடியாமல் பல பையன்கள் கண்களைத் தாழ்த்திக் கொண்டதுதான் அநேகமாக நடக்கும். சில கௌரவர்கள் பார்வையைத் தாழ்த்தாமல் வானத்தை நோக்கி திருப்பி விட்டு சூரியன் ஒளி தாங்காமல் குனிவதாகப் பாவ்லா காட்டுவார்கள். இந்திப் படம் ஒன்றில் ஷர்மிளா டாகுர் என்ற நடிகை விமானத்தில் போகும் காட்சியில் கழுத்தில் இருக்கும் மெல்லிய தங்கச் செயினைக் கடிப்பது போன்ற காட்சி பெரும் வரவேற்பைப் பெற்ற கால கட்டம் அது. அதற்காகவே பல முறை படம் பார்த்த இளைஞர்கள் அக்காலத்தில் உண்டு. பத்மாவும் மெல்லிய செயின் ஒன்று கழுத்தில் அணிந்திருப்பாள். அது கவரிங் என்பது விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். அதை எடுத்து லேசாக பல்லில் கடித்தபடியே உச்சி வெயிலில் அவள் அசைந்து வருவதைப் பார்ப்பதற்காகவே பலர் சந்து முனையில் தவமிருப்பார்கள். கவரிங் செயினைக் கடிப்பதே கவ்ரிங்குக்குத் தான் என்பதை அவர்கள் அறிந்தவர்களில்லை. பத்மாவின் குடும்பம் என்னவோ கவுரவமான குடும்பம்தான். ஆனால் அவளது தந்தையார் சிவா விஷ்ணு கோயில் வாசலில் தர்ப்பை விற்று கொண்டு வரும் சொற்ப வருமானம் பத்மாவின் கற்பனைகளுக்கு ஒத்து வரவில்லை. மாவு மிஷின் போகவும், நாலணா எட்டணாவிற்கு மளிகை சாமான்கள் வாங்கவும் பத்மா கடைக்கு வரும்போது பையன் கூடவே வருவார்கள். வாசற்படி தாண்டும்வரை இழுத்து போர்த்திக் கொண்டு வரும் அவள் தெருமுனை வரும் முன் தாவணியை இறுக்கி இடுப்பைச் சுற்றி செருகிக் கொள்வாள். அவளது ஜாக்கெட்டின் உள்புறம் ஒரு கசங்கிய பத்து ரூபாய் நோட்டு இருக்கும். அதை இரண்டு விரலால் எடுக்க அவள் வெகு பிரயத்தனப்படுவாள். அப்போது விலகும் தாவணியைக் குறிவைத்து பல ஜோடிக் கண்கள் காத்திருக்கும். சிரமப்பட்டு எடுக்கும் பத்து ரூபாய் தாளை ஒரு சிகரெட்டைப் போல் சுருட்டி கையில் வைத்துக் கொண்டு அவள் கடைக்குப் போவாள். வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிய பின் நோட்டை நீட்டுவாள். வழக்கம்போல கடைக்காரர் சில்லறை இல்லை என்று மறுக்கும்போது அவள் பரிதாபமாக சுற்றும் முற்றும் பார்த்து விழிப்பாள். பையன்களின் கைகள் தங்கள் பாக்கெட்டுகளில் சில்லறைகளைத் தேடும். முந்திக் கொண்டவன் டப்பென்று சில்லறையை கடைக்காரர் கல்லா மேல் வைத்துவிட்டு பத்மாவைப் பார்த்து பெருமிதமாகச் சிரிப்பாள். பத்மாவும் தன் மோனோலிசா புன்னகையைத் தவழ விட்டு நகர்வாள். வீடு சேர்வதற்குள் பத்து ரூபாய் தாள் பழைய இடத்திற்குப் போயிருக்கும். அம்மா கொடுத்த சில்லறை சுருக்குப் பையில் சேர்ந்து இடுப்பில் செருகப்பட்டிருக்கும். இப்படி கொஞ்ச கொஞ்சமாகச் சேர்த்த பணத்தில்தான் அவள் லிப்ஸ்டிக் வாங்குகிறாள். ஸ்னோ வாங்குகிறாள். பவுடர் வாங்குகிறாள். கொஞ்சம் வளர்ந்தவுடன் பத்மா அம்மா துணையுடன் மகாலட்சுமி தெருவில் ஐயங்கார் மெஸ் ஆரம்பித்தாள். இன்றைய திராவிடக் கட்சியின் இரண்டாம் நிலை முன்னிலை தலைவர்களில் ஒருவர் தினமும் அங்கே ஆஜர். பின்னாளில் நடிகர் மோகன் நடித்த வெற்றிப் படம் ஒன்றில் கதாநாயகிக்கு இணையான தோழி பாத்திரத்தில் அவள் நடிக்க காரணம் அவர்தான். எல்லாம் பழைய மோர்க்குழம்பு விஸ்வாசம். பத்மாவின் வாழ்வில் திருப்பம் வேறொரு ரூபத்தில் வந்தது. பிரபல இயக்குனராக இருந்து பல வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்து பின்னாளில் நகைச்சுவை நடிகராக மாறிப்போய்விட்ட ஒருவர் அவளைத் திருமணம் செய்து கொண்டார். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதனால் ஊரறிய அவரது மனைவி என்று அவளால் சொல்லிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவள் ஆசைப்பட்ட வசதிகள் எல்லாம் அவர் அவளுக்குச் செய்து கொடுத்தார். கொடியிடையுடன் இருந்த அவள் காலப்போக்கில் பக்கவாட்டில் பெருத்து போனாள். அதனாலேயே இயக்குனருக்கு அவளிடம் இருந்த மயக்கம் குறைந்து போனது. ஆனாலும் பத்மா உஷார் பேர்வழி. உடம்பு பெருக்கும் முன்பே தன் நிதி ஆதாரங்களைப் பெருக்கிக் கொண்டாள். மூன்று நான்கு குடித்தனங்களைக் கொண்ட ஒரு வீட்டை தன் பெயருக்கு வாங்கிக் கொண்டாள். இன்றும் அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அம்மாவும் அப்பாவும் இறந்து போய் அவளுக்கும் வாரிசு இல்லாமல் தனிமரமாக அவள் இருக்கிறாள். இப்போதெல்லாம் அவள் லிப்ஸ்டிக்கோ, ஸ்நோவோ, பவுடரோ போடுவதில்லை. வசதி பெருகியதாலும் ஏசி அறையிலும் காரிலும் வாசம் செய்வதாலும் அவள் இப்போது மாநிறமாக இருக்கிறாள். அவள் வீட்டு வரவேற்பறையில் விலை உயர்ந்த கலைப் பொருட்களுக்கு மத்தியில் நல்ல வெள்ளி ப்ரேம் போட்ட சட்டத்துக்குள்ளே கசங்கிய பத்து ரூபாய் நோட்டு ஒன்று சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது.                                       43. கரடி   []     Bears have been used as performing pets due to their tameable nature. கொஞ்சம் கரடிக்கு முஸ்தீபு  தண்டலம் வழியாக நரசிங்கபுரம் போகும் வழியில், இடது பக்கம் திரும்பினால், ஒரு பழங்கால சிவன் கோயில் இருக்கிறது. சிவன் தன் பக்தனுக்காக ரதம் ஓட்டியதாகவும், அது ஒரு கட்டத்தில் மண்ணில் புதைந்தபோது, சிவனே இறங்கி அதன் சக்கரத்தைத் தூக்கி நிறுத்த முயற்சித்தாகவும், அப்போது கடையாணி சிவன் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் ஐதீகம். உள்ளிருக்கும் சிவலிங்கத்தில் அந்த காயத்தின் வடு இன்னமும் தெரிகிறது.  இந்தக் கதையில் சிவன் இல்லை. ஆனால் சிவபூஜையில் புகுந்த கரடி இருக்கிறது. திரும்பி வரும் வழியில் நான் கண்ட காட்சிதான் கதையாகி இருக்கிறது. கதையில் வரும் கரடி நிஜம். கரடிக்காரன் நிஜம். அவன் உருவ வர்ணனை எல்லாம் நிஜம். அவனது நிலையை ஒரு கதையாக யோசித்தபோது, பல வண்ணங்களை அது தானாக பூசிக் கொண்டது. அந்த வகையில் இது ஒரு வண்ணக் கரடி! குஞ்சரமணி நெற்றி நிறைய திருநீறு அப்பிக்கொண்டு சிவப்பழமாக்க் காட்சியளித்தான். அருகில் அவன் மனைவி லீலாவதி, எண்ணை தடவிய விரல்களால் ஒரு பெரிய பலாப்பழத்தை உரித்துக் கொண்டிருந்தாள். குஞ்சு பாலக்காட்டைச் சேர்ந்தவன். ஒரு தலைமுறைக்கு முன்பே அவனது குடும்பம் தமிழ்நாட்டிற்கு பெயர்ந்தாயிற்று. ஆனாலும் இன்னமும் ‘ கேட்டியோ’ மட்டும் அவனது வாயில் மாட்டிக் கொண்டு விடமாட்டேன் என்கிறது. “ லீலை! கத்தி வேண்டா.. கேட்டியோ? சொளையெல்லாம் கட் ஆயிரும்.. என்ன?” என்றான் குஞ்சு! லீலாவதியும் கேரளம் தான்! ஒத்தப்பாலம். இருவருமாக சேர்ந்து செய்த சாதனைகள் இரண்டு. ஒன்று ஏழாம் பிராயத்தில் அவள் தொடைகளை பதம் பார்த்துக் கொண்டிருக்கும் மணிகண்டன். இன்னொன்று நான்கு வயதில் மூக்கு ஒழுகிக் கொண்டிருக்கும் பிரேமிக்குட்டி! குஞ்சுவுக்கு வங்கியில் வேலை. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அவனுக்கு தன் சொந்த ஊருக்கு செல்ல காசு கொடுக்கும் வங்கி. ஆனால் அவன் பாலக்காட்டுக்கு போனதே இல்லை. கல்யாணமான புதிதில் ஒத்தப்பாலம் போயிருக்கிறான். நான்கு நாட்கள் இருந்ததில் அவனுக்கு மண்டை காய்ந்து போயிற்று! லீலையின் அச்சன் சிவதாச சேட்டன் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீர்ர். காலையில் ஐந்து மணிக்கே எழுந்து, கட்டைக் குரலில் தன் பார்யாவை விளிப்பார். சுத்துப்பட்டு வீடுகள் அலறும். சென்னைக் காபிக்கு அடிமையாகிவிட்ட குஞ்சுவுக்கு கட்டன் சாய் என்று கருப்பாய் ஒரு திரவத்தை கையில் திணித்து, தன்னோடு வாக்கிங் கூட்டிப் போய் விடுவார் தாஸ் சேட்டன். வாக்கிங் அரை மைல் கூட இராது. இரண்டு தப்படிக்கு ஒரு முறை, இவரைப் போலவே தூக்கம் வராத சேட்டைகள் வழி மறித்து “; எந்தா வர்த்தமானம்?” என்று பிறாண்டும். வர்த்தகம் வணிகம் எல்லாம் பேசியாகும்போது குஞ்சுவுக்கு மானம் காயும்! அப்படியே ஒரு ரவுண்டு எல்லைக் கணபதி கோயிலுக்கு போய் விட்டு, வாசலில் இருந்தே ஒரு “எண்டே குருவாயிரப்பா” சொல்லிவிட்டு திரும்புவார் சேட்டன். சென்னை காபிக்கு ஒரு தலைமுறையாக அடிமையாகிவிட்ட குஞ்சின் கையில் ஒரு லொட்டா கருப்பாக ஒரு திரவம் திணிக்கப்படும். “ கட்டங்சாய் கேட்டோ! வளர சுகமாயிட்டுண்டு” என்பார் மா மன்னார்! கஷாயத்தை போல அதை உள்ளே தள்ளுவான் குஞ்சு. உடனே பின்கட்டில் கதவில்லாத கக்கூசில் ‘ஜலபாதி’ பெரிய கிணற்றில் குளியல். ஈரிழைத் துண்டில் ஏகமாய் நடுங்கிக் கொண்டு வரும் குஞ்சுவை, பூசை அறையில் நிறுத்தி மலையாள சுலோகங்கள் சொல்ல ஆரம்பித்து விடுவார் சேட்டன். குளிரில் உடம்பைக் குறுக்கிக் கொண்டிருக்கும் குஞ்சுவின் பக்தியைக் கண்டு நெக்குறுவாள் லீலை! இதெல்லாம் ஒரு எட்டு மணி வரையிலும் தான். குளித்து, நெற்றி நிறைய சந்தனம் பூசிக் கொண்டு, ஜீன்ஸ் பேன்ட், நேர்க் கோடு போட்ட பனியன் சகிதம் கிளம்பி விடுவார் தாஸ் செட்டன். ஏதோ ஒரு தென்னை மரத்தடியில், இவரைப் போலவே நான்கைந்து சேட்டைகள் காத்திருக்கும். “ எந்தா விசேஷம்” என்று உப்பு பெறாத விசயங்களைப் பற்றி பேசுவார்கள். காலை சிற்றுண்டி அமர்க்களப்படும். விதவிதமான பதார்த்தங்களால் அல்ல. அவை பற்றிய விவரிப்பால். ஒன்று புட்டு, கடலைக்கறி. இல்லை என்றால் ஆப்பம், தேங்காய் பால். “ எண்டே அம்மே “ என்று ஆரம்பித்து திரேதா யுகத்து கதைகளை எல்லாம் சொல்லுவார் சேட்டன். குஞ்சுவின் மனது இட்லி வடைக்கு ஏங்கும். சாயரட்சையில் சேட்டன் மிலிட்டரி சரக்கை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார். “ குஞ்சு கழிக்கண்டா.. கெம்பனி கொடுக்கணும்.., கேட்டோ “ என்று வற்புறுத்தி அவனையும் உட்கார வைத்து விடுவார் தாஸேட்டன். வெறும் நேந்திரம் சிப்ஸை நொறுக்கிக் கொண்டு அவன் உட்கார்ந்திருப்பான். “குஞ்சு மெட்ராஸ் இல்லே! அப்ப ஞான் பஜ்ஜி வாங்கிட்டு வரான்” என்று ஒரு பொட்டலத்தில் எண்ணை வடியும் பஜ்ஜிகளை கொண்டு வந்து முன்னால் வைப்பார். குஞ்சுவும் ஆசையுடன் ஒன்றை எடுத்துக் கடிப்பான். காரம் துளிக்கூட இல்லாமல் தித்தித்து வழியும். “ பழம் பொறி.. நேந்திரம் பழ பஜ்ஜி..வல்லிய இஷ்டம் எனிக்கு “ என்று ஒரு முழு பஜ்ஜியை உள்ளே தள்ளுவார். சுண்டு விரலை உயர்த்திபடி குஞ்சு கொல்லைக்கு ஓடி பழம்பொறியை காறி உமிழ்வான். நான்கு நாட்களில் ஒத்தப்பாலமும் கேரளமும் அலுத்து விட்டது குஞ்சுவுக்கு. அதனால் பாலக்காடு போய் அப்படியே அடுத்த ரயிலில் கோவைக்கோ, மதுரைக்கோ திரும்பி விடுவான். நிற்கும் கொஞ்ச நேரத்தில் ரயில்வே ஸ்டேசன்களில் “ பழம்பொறி’ விற்று வெறுப்பேற்றுவார்கள் சேட்டன்கள். எல்லோரும் தாஸேட்டன் சாயலில் இருப்பது கண்டு அவன் மிரண்டு போவான். வங்கிக்கு எழுதி, தன் பூர்வீக தேசத்தை கோவை என்று மாற்றிக் கொண்டபிறகு தான் அவனுக்கு பழம்பொறி கிலி அகன்றது. குஞ்சுவும் லீலையும் காரில் பழனிக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். குஞ்சு வசதியானவன். வங்கி உத்யோகத்தில் இருபது சொச்ச வருடங்களைக் கழித்திருந்தான். காலங்கடந்த திருமணம். லீலைக்கு சுவாதி நட்சத்திரம். 27 வயதில் தான் அவளுக்கு குஞ்சு வாய்த்தான். பாலக்காட்டுக்கார்ர்களுக்கு இஷ்ட தெய்வம் பழனி முருகன் என்பது ஊர் அறிந்த உண்மை. அது எப்படி அப்படி ஆயிற்று என்பது எந்த நாட்டானுக்கும் தெரியவில்லை. கார் ஓட்டி கொஞ்சம் இளவயதுக்காரன். இடது, வலது என்று முந்தைய வாகனங்களை முந்தியதில், மணி உற்சாகத்தில் எகிறி குதித்து, லீலையின் தொடைகளைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் அதைச் சகித்தவளாய் “ பார்த்து போய்க்கோ” என்று நொடிக்கொரு தரம் சொல்லிக் கொண்டிருந்தாள். பழனி மலையின் திருப்பத்தில் பிரேமிக்குட்டி ஆவேசத்துடன் கத்தினாள். “ டாடி அங்கே பாருங்கோ.. கரண்டி!” குஞ்சு பக்கவாட்டு சாளரத்தில், பாத்திரக் கடையைத் தேடினான். அவன் கண்களில் எதுவும் படவில்லை. குஞ்சு அதிகம் பேசாதவன். முதலிரவில் தன் காலில் விழுந்த லீலையை, பக்கவாட்டில் தலையைச் சாய்த்து, எழுந்திருக்கும்படி சைகை காட்டியவன் அவன். பாவம்! குனிந்த லீலைக்கு அவன் சைகை தெரியாததால், பாதி இரவு பாம்பு டான்ஸ் போஸில் இருந்து, அப்படியே தூங்கிப் போனாள். அதற்கடுத்த இரவுகளில் அவள் காலில் விழாததால், அவர்கள் தாம்பத்தியம், பேர் சொல்லும்படி பிள்ளைகளோடு பெருகிற்று! “ கறுப்பா.. அங்கே பெருசா.. கரண்டி” அவள் கைகாட்டிய திசையில் பார்த்த அவனுக்கு, நின்ற கோலத்தில் ஒரு பிரம்மாண்ட மிருகம் தென்பட்டது. கரடி! அதன் கழுத்தில் ஒரு பெல்ட்டைக் கட்டிவிட்டு, அதன் அளவில் பாதி இருந்த ஒருவன் நின்றிருந்தான். கரடியைச் சுற்றி பெரும் சிறுவர் கூட்டம். கரடி யாசகம் கேட்டுக் கொண்டிருந்தது. காரோட்டியின் தோளில் தட்டி, சைகையால் ‘ நிறுத்து’ என்றான் குஞ்சு. கதவைத் திறந்து கொண்டு இறங்கி நின்றான். பிரேமிக்குட்டி அச்சத்துடன் இறங்கி அவன் கால்களுக்குப் பின்னால் நின்று கொண்டு கரடியை எட்டிப் பார்த்தாள். கார் நின்றவுடன் கரடிக்காரன் பெரிய தொகை கிடைக்குமென்று, காரை நோக்கி வர ஆரம்பித்தான். கரடி வருவதற்கு முன்னால் அதன் வாசம் அவர்களின் மூக்கைத் துளைத்தது. மணிகண்டன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஒரு வீரனைப் போல் நின்றது, லீலைக்கு சிரிப்பை வரவழைத்தது. “ தொடண்டா.. கேட்டோ” என்று குழந்தைகளை அதட்டினாள் லீலை. சமகாலத்தாய் அவள். எதைத் தொட்டாலும் இன்ஃபெக்‌ஷன். எல்லா சஞ்சிகைகளும் தொலைக்காட்சி மருத்துவர்களும் மொழிந்த்தை அவள் சிரமேற்கொண்டு கடைபிடிப்பவள். குஞ்சரமணி கரடியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எப்போதுமே சிங்கமும், அதற்கடுத்து குதிரையும் தான் பிடிக்கும். அதில் இருக்கும் கம்பீரம் வேறெதிலும் இல்லை என்று அவன் நம்பினான். இதென்ன? அழுக்காக, ரோமத்துடன்.. சே! “ டாடி! அங்கே பார்! கரண்டிக்கு ரத்தம் வருது!” குஞ்சு கைகாட்டிய இடத்தில் பார்த்தான். ஆமாம். கழுத்தில் லேசாக ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தோல் பெல்ட்டை இறுக்கிக் கட்டியதில் தோல் வழண்டு ரணமாகி இருந்தது. சுற்றி கூட்டம் கூடிவிட்டது. “ டேய்! இதை எந்த சர்க்கஸ்லேர்ந்து திருடிட்டு வந்தே? உன் வருமானத்துக்காக அதை டார்ச்சர் பண்றியா? மிருகவதை தடுப்பு சட்டம் தெரியுமா? திரிஷா கிட்டே சொன்னா பிடிச்சு உள்ளே போட்டுருவாங்க!” எல்லாவற்றிலும் சினிமா நுழைந்து விட்டது! ஆளாளுக்குக் கத்திக் கொண்டிருந்தார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கரடிக்காரன் கையேந்திக் கொண்டிருந்தான். “ கரடி மயிர் வேணுமா சார். பத்து ரூபா தான் சார். கொளந்தைங்களுக்கு தோஷம் படாது சார். வாங்கிக்குங்க” அப்போதுதான் குஞ்சு கவனித்தான். பத்து ரூபாய் காசுக்காக கொத்து கொத்தாக கரடியில் உடலில் ரோமங்கள் பிடுங்கப்பட்டிருந்தன. அங்கேயும் ரணமாகி காய்ந்திருந்தது. பார்க்க சகிக்காமல் வண்டியை எடுக்க சைகை காட்டிவிட்டு, உள்ளே சென்று அமர்ந்தான் குஞ்சு. குழந்தைகள் கரடியை விட மனமில்லாமல் ஏறின.   கோயில் பிரகாரத்தில் இருக்கும் போதெல்லாம், குஞ்சுவுக்கு கரடி நினைப்பாகவே இருந்தது. நாசித்துவாரத்தில் ஒரு இரும்பு வளையத்தை மாட்டி வைத்திருந்தான் கரடிக்காரன். கரடியின் தலையை திருப்ப அவன் அதைப் பற்றி இழுத்தது, இப்போது நினைவுக்கு வந்தது! முருகனை தரிசிக்க ஏகத்துக்கு கூட்டம்! ஒரு வழியாக சந்நிதானத்திற்கு போய் மூலவரைப் பார்த்த போது, குஞ்சுவுக்கு முருகன் தெரியவில்லை. அங்கே கோவணாண்டியாக கரடி நின்றிருந்தது. அருகில் கரடிக்காரன் முருகனது வேலோடு நின்றிருந்தான். கண்களை கசக்கி விட்டு பார்த்த போது, முருகன் தெரிந்தான். அர்ச்சகர் வேலைக் கையில் எடுத்து துடைத்துக் கொண்டிருந்தார். முருகனை தரிசித்து விட்டு, அங்கே கொடுக்கப்பட்ட பொங்கல் பிரசாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கரடி ஒன்று கை நீட்டியது. அதிர்ச்சியில் பாதி பொங்கலை அப்படியே அதன் கையில் போட்டு விட்டு கைகளை உதறிக் கொண்டான் குஞ்சு. நிமிர்ந்து பார்த்தபோது தூரத்தில் கருப்பு போர்வை போர்த்திய தாடிப் பிச்சைக்காரன் ஒருவன் போய்க் கொண்டிருந்தான். கீழிறங்கி திரும்பும் வழியில், கரடியைப் பார்த்த இடத்தில் ஏகத்துக்குக் கூட்டம். கரடி ஒரு மரத்தில் கட்டப் பட்டிருந்தது. அதன் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தான் கரடிக்காரன். நோஞ்சானாய் ஒரு போலீஸ்காரன் காவலுக்கு நின்றிருந்தான். அவன் அடிக்கடி கலவரத்துடன் கரடியைப் பார்த்துக் கொண்டிருந்தான். “ வண்டியை நிறுத்து.. ஏதோ பிரஷ்ணம்.. என்ன ஏதுன்னு கேப்போம்” என்றாள் லீலை. ‘ இப்போ இது தேவையா ?’ என்பது போல் குஞ்சு அவளைப் பார்த்தான். அந்த பார்வையை சம்மதமாக எடுத்துக் கொண்டு லீலை காரை விட்டு இறங்கினாள். “ ப்ளூ கிராஸ் வேன் வருதாம். கரடியை அவங்க கொண்டுட்டு போய், குணப்படுத்தி, ஜூவுக்கு அனுப்பிடுவாங்க” “ இவனை என்ன பண்ணுவாங்க?” “ இவனை என்ன பண்றது? அரெஸ்ட் பண்ணி ஜெயில்லே போட்டாலும், ரெண்டு மாசம் கழிச்சு வெளியே வந்து, வேற ஏதாவது மிருகத்தை பிடிச்சு வச்சு பிச்சை எடுப்பான். இதை மாதிரி ஆளுங்களை எச்சரிக்கை பண்ணி அனுப்பிடுவாரு ஜட்ஜ்!” நோஞ்சான் போலீஸ்காரர் தனக்கு தெரிந்த தகவலை சொன்னார்! தலையில் நீல நிற சுழல் விளக்குடன் ஒரு மாருதி வேன் வந்து நின்றது. வெள்ளை உடை சேவகர்களும் ஒரு டாக்டரும் இறங்கினர். மயக்க ஊசி துப்பாக்கியால் சுட்டு, கரடியை நினைவிழக்கச் செய்து, அதன் புண்களுக்கு மருந்து போட்டு, நான்கைந்து பேர் கைத்தாங்கலாக தூக்கி, வேனின் பின்புறம் கரடியை படுக்க வைத்தார்கள். கரடி, பெரிய கரடி. அதனால் மாருதி வேன் போதவில்லை. காலை மடக்கிப் பிடித்துக் கொண்டான் ஒருவன். வேன் கிளம்பிப் போயிற்று. கரடிக்காரன் தலையைக் குனிந்து கொண்டு அழுது கொண்டிருந்தான். “ ஓடுறா! இனிமே இந்தப் பக்கம் உன்னைப் பாத்தேன்.. முட்டி பேத்துடுவேன் “ என்று மிரட்டி விட்டு, நோஞ்சான் போலீஸ் திரும்பி பார்க்காமல் போனது.   வீடு திரும்பி வெகுநேரம் வரையிலும் குஞ்சுவுக்கு கரடியைப் பற்றிய எண்ணம் போகவேயில்லை. கரடியும் கரடிக்காரனும் சேர்ந்து அவனை அலைக்கழித்தார்கள். கரடிக்காரன் அழுதது இன்னமும் ஒரு மாறாத பிம்பமாக அவன் மனதில் ரீவைண்ட் ஆகிக் கொண்டிருந்தது. கரடி அழவேயில்லை. ஒரு வேளை அது மயக்கத்தில் இல்லாமல் இருந்தால்? சுய நினைவுடன் இருந்தால்? கரடிக்காரனைப் பிரிந்த சோகத்தில் அதுவும் அழுதிருக்கும்! கரடிகள் நாய்களைப் போலத்தான். தன் எசமானன் மேல் அதீத பாசமும் அன்பும் கொண்டவை. தினமும் தனக்கு உணவு கொடுத்து, உறைவிடம் கொடுத்து பராமரிக்கும் அவனை அது நிச்சயம் நேசித்திருக்கும். நினைவு திரும்பிய கரடி என்ன நினைக்கும்? அது கரடிக்காரனைத் தேடுமா? கரடியில்லாத கரடிக்காரன் என்ன பண்ணுவான்? அவன் ஏன் அழுதான்? அவன் இன்னமும் அழுது கொண்டிருப்பானா? ஏன் அழுவான்? கரடி மேல் உள்ள பாசத்தினாலா? இல்லை வருமானம் போய் விட்டதே! இனி பிழைப்புக்கு என்ன செய்வேன் என்கிற சுய பரிதாபத்தாலா? அவனுக்கு குடும்பம் உண்டா? பிள்ளை குட்டிகள் உண்டா? அவை கரடியை பிரிந்த சோகத்தில் அழுமா? சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்குமா? வருமானமில்லாத கரடிக்காரனை விட்டு அவன் மனைவி போய் விடுவாளா?ட்5 கண்களை மூடினால் கரடி.. சங்கிலி பிணைத்த கரடி.. கழுத்துப்பட்டை தரித்த கரடி.. உடலெங்கும் புண்ணான கரடி.. தத்தித் தத்தி கைகளை நீட்டியபடி வந்து பிச்சை கேட்கும் பிம்பக் கரடி.. சட்டென்று காட்சி மாறியது. கரடி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தது. கரடிக்காரன் கழுத்தில் பெல்ட் மாட்டியிருந்தது. வறுமை எனும் பெல்ட்! குஞ்சு அவனை அறியாமல் கரடியைப் போல உறுமிக் கொண்டிருந்தான். திடீரென்று கழுத்தில் ஏதோ இருகுவது போல உணர்ந்தான். மெல்ல தடவிப் பார்த்த போது அவன் கழுத்தை சுற்றி பெல்ட் இருந்தது. சட்டென்று கண்களைத் திறந்தான் குஞ்சு. பிரேமிக்குட்டி அவனுடைய பெல்ட்டால், அவன் கழுத்தை சுற்றி இழுத்துக் கொண்டிருந்தாள். “ அம்மே! ப்ளூ கிராஸுக்கு போன் போடு.. கரண்டிக்கு ரத்தம் வருது “