[] []                                                           தாடிக்காரனா, ஐயோ! (மர்ம நாவல்)                                                                      நிர்மலா ராகவன்  ஆசிரியர் : நிர்மலா ராகவன்   மின்னஞ்சல் : nirurag@gmail.com     மின்னூலாக்கம் : த . தனசேகர்   மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com     வெளியிடு : FreeTamilEbooks.com      உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.    பொருளடக்கம் முன்னுரை 5  1. தீபாவளி ஷாப்பிங் 6  2. தங்கை எங்கே? 11  3. கெட்டவன் ஜாலி, மாட்டியவள்? 16  4. சேற்றுப்பாதையிலே 18  5. வன்முறை செய்பவர்கள் 22  6. சுட்டுத்தள்ளு, சமூகப் புல்லுருவிகளை 27  7. மீண்டும் தாடிக்காரன் 30  8. என்னைத் தொடாதே! 33  9. டிடிவாங்க்ஸா பூங்காவில் 36  10. கத்தி வாங்கினேன் 40  11. எங்களாலும் வதைக்க முடியும் 42  12. விமானதளத்தில் 45  13. உணர்ச்சிப் போராட்டம் 47  14. நான் தருகிறேன் தண்டனை 50  15. யாரவன்? 52  16. எல்லாம் சுயநலம்! 56  17. அமெரிக்காவைக் காபியடித்து 59  18. தனிப் படுக்கை 60  19. கொலை! 62  20. துக்கத்தில் ஐக்கியம் 64  நிர்மலா ராகவனைப்பற்றி... 66      முன்னுரை      மலேசிய சூரியன் பத்திரிகை நடத்திய கருத்தரங்கு ஒன்றில் நான் உரையாற்றியபோது, `கற்பழிப்பு’ என்ற பொருளை அலசியிருந்தேன். ஒரு பெண்ணின் மனம் படும் பாட்டையும், ஒருவன் எதனாலெல்லாம் காமுகன் ஆகிறான் என்பதையும் நான் விளக்க, எனது உரை முடிந்ததும், ஒரு முதியவர் எழுந்து கைதட்ட ஆரம்பிக்க, அரங்கமே எழுந்து நின்றது மறக்க முடியாத நிகழ்ச்சி.            `என்னங்க, அப்படிப் பேசிட்டீங்க! தொண்டை அடைச்சுப்போச்சு எனக்கு!’ என்று ஒரு இளைஞர் உரிமையாக கோபித்துக்கொண்டார். பேச்சின் நடுவில், நானே ஒரு சமயம் மேலே பேச இயலாமல், கண்ணீருடன் திணறினேன். பல நொடிகள் மௌனம் -- நாங்கள் எல்லாருமே பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் எங்களைப் பொருத்துக்கொண்டு.   அதன்பின், பத்திரிகை ஆசிரியர் அந்தப் பொருளில் ஒரு தொடர்கதை எழுதும்படி கேட்க, நான் முதலில் மறுத்தேன். அவர் வற்புறுத்தியபின், `நான் பெண்களின் உரிமைக்காக வாதாடுபவள், எழுதுபவள்!’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு,  `எழுதுகிறேன், ஆனால்,  தமிழ்ப்படங்களில் வருவதுபோல, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நானும் எழுதினால் கேவலம். அப்படி எழுதமாட்டேன்!’ என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டேன். இந்த நாவல் அப்பத்திரிகையில் தொடராக வெளியானது. வதைக்கு ஆளாகும் பெண்களுக்காக அரசாங்க சார்பற்ற பலர் அடைக்கலம் அளிக்கிறார்கள். கணவன்மார்களிடம் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், வீட்டைவிட்டு ஓடிவந்த பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகள் இவர்களுக்கான இல்லங்களுக்குப் போய், பலதரப்பட்ட பெண்களுடன் கலந்து பேசியிருக்கிறேன். `அதேபோல், நம் கதாநாயகியை ஒத்த பெண்களுக்கு?’ என்று யோசிக்க, கதை பிறந்தது. எதிர்நீச்சல் போடுவதாலேயே பலம் பெற்ற பெண்களும் இருக்கிறார்கள். பொதுவாக, பெண்களுக்கு ஆதரவாக இருக்க ஆண்களால்தான் முடியும். தந்தை, அண்ணன், கணவன், சில சமயம், தைரியமான மகள் -- இவர்களுடைய பக்கபலம் இருந்தால் என்ன இடர் வந்தாலும், ஒரு பெண் துணிச்சலுடன் வாழ்ந்துகாட்ட முடியும்.     அன்புடன், நிர்மலா ராகவன் 1. தீபாவளி ஷாப்பிங்      “தீபாவளிக்குத் தைக்கக் குடுத்ததை வாங்கிட்டு வரணும்!” கொதிக்கிற எண்ணையில் முறுக்கு பிழிந்தபடியே கூறினாள் அகிலா.  “ரெண்டு பேருமா அப்படியே ஜாலியா எல்லாக் கடையையும் சுத்திட்டு வரலாம் அண்ணி. பிளாஸ்டிக் பூ வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே!” புதிதாக எதுவும் வாங்குகிறார்களோ, இல்லையோ, கடைவீதியில் கும்பலில் நெரித்துக்கொண்டாவது போய், வேடிக்கை பார்த்துவிட்டு வருவது அனேகப் பெண்களுக்கு மிகவும் பிடித்த சமாசாரம். அதிலும் பண்டிகை சமயம் வேறு! நம் பண்டிகையை ஒட்டி, மலேசியாவிலிருக்கும் மலாய், சீனப்பெண்களும் இந்தச் சமயத்தில்தான் நவீன ரகங்கள் மலிவாகக் கிடைக்கின்றன என்று திரண்டு வருவது அவ்விரு பெண்களுக்கும் அலாதி பெருமையை அளித்தது. `அவர்களே வருகிறார்கள்! நாம் போகாவிட்டால் எப்படி!’ என்று சமாதானம் செய்துகொள்வார்கள். “முறுக்கு ஆறினதும்தான் டின்னை மூடணும், வினு. இல்லாட்டி நமுத்துடும்,” என்று கூறியபடியே, முகம் கழுவிக்கொள்ள விரைந்தாள் அகிலா. வினுதா தொலைபேசியை எடுத்தாள். “அண்ணா! நானும் அண்ணியும் கடைக்குப் போறோம்...! என்னது? ஆமா. எங்களுக்குப் பைத்தியம்தான்!” சிரித்தபடி நடந்தவளை எதிர்கொண்டாள் அகிலா. “ஒங்கண்ணா என்ன சொன்னார்? `சரியான பைத்தியம் நீங்க ரெண்டு பேரும்!’ அப்படின்னாரா?” இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். “நீ கல்யாணமாகிப் போயிட்டா, நான் என்ன செய்யப்போறேனோ! ஒங்கண்ணாவுக்கு சத்தமோ, கும்பலோ அடியோட பிடிக்காது. அப்புறம் நானும், கோயில், குளம்னு சுத்த வேண்டியதுதான்! இல்லே, நாள் பூராவும் டி.வி முன்னால ஒக்காரணும்!” “பாவம் அண்ணி, நீங்க! அது எப்படி, கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாத அண்ணாவுக்கு ஒங்களைக் கட்டிவெச்சாங்க?” அவளுடைய குறும்பை ரசித்தபடி, “அதுவா? எங்க ரெண்டு பேரோட ஜாதகமும் நல்லாப் பொருந்தி இருந்திச்சாம். அதோட, பெரிய அறுவைச்சிகிச்சை நிபுணர்! பெத்தவங்களுக்கு அது போதாதா! நான் மாட்டிக்கிட்டேன்!” என்று சிரிக்காது பதில் சொன்னாள் அகிலா. கணவன்-மனைவி என்றால், ஒரேமாதிரி இருக்க வேண்டியதில்லை என்ற பரந்த மனப்பான்மை கொண்டவர் அருண். மனைவிக்குப் பிடித்ததைச் செய்ய சுதந்தரம் அளித்திருந்தார். மனைவியின் சொந்த உபயோகத்திற்கென்று கார் வாங்கியிருந்தார். அன்று அதுவே பாரமாகப்பட்டது அகிலாவுக்கு. “டவுனிலே இன்னிக்கு காரே போக முடியாது. ஒரே நெருக்கடியா இருக்கும்!” “டாக்ஸிக்காரனும்தான் பிழைக்க வேண்டாமா?” என்று அந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டினாள் வினுதா. வீட்டைப் பூட்டியபடி, “பண்டிகை வந்தாலே சந்தோஷமா இருக்கு. இல்லே அண்ணி?” “ஏன், அடுத்த வருஷம் தலைதீபாவளி வரும்னு ஒன் யோசனை போகுதா?” வினுதா வெட்கப்பட்டாள். “ஏப்ரல் மாசம், படிப்பு முடிஞ்சு, மோகன் திரும்பி வந்துடுவார். அப்புறம் நான் யார்கூட, வாயை மூடாம பேசிக்கிட்டு, ஊர் சுத்தறது?” “அப்பவும் நாம்பபாட்டிலே போகலாம். அண்ணாவும், மோகனும் அரசியல் பேசிக்கிட்டு வீட்டிலேயே இருக்கட்டும்!” இருவரும் கலகலவென சிரித்தார்கள். “இன்னிக்கு டாக்ஸி கிடைச்ச மாதிரிதான்!” வீட்டு வாசலிலேயே அரைமணிக்குமேல் கால்கடுக்க நின்ற அலுப்பில் வார்த்தைகள் வந்தன. “நான் மெயின் ரோடுக்குப் போய், பிடிச்சிட்டு வரேனே! எதுக்கு ரெண்டு பேரும் இந்த வெயில்லே நடக்கணும்?” என்ற வினுதா, பதிலுக்குக் காத்திராமல் நடந்தாள்.    `இங்கேயும் ஒண்ணையும் காணுமே! அண்ணி வேற தனியா காத்துக்கிட்டு இருப்பாங்க!’ கவலை பிறந்தது. அருகில் சிலவித பானங்களை விற்றுக்கொண்டிருந்த பையனிடம், “ஒரு எலுமிச்சை ஜூஸ் குடுப்பா!” என்றவளாய், ஐந்து ரிங்கிட் நோட்டை நீட்டினாள். ஒரு வாய் குடுத்திருப்பாள், அந்த டாக்ஸி கண்ணில் பட, கிளாசை அப்படியே வைத்துவிட்டு ஓடினாள். கையைக் காட்டியதும் அது நின்றது. “ஓ! ஏற்கெனவே ஆளிருக்கிறதைக் கவனிக்கலே! ஸாரி!” என்றவளிடம், காரோட்டியின் பக்கத்திலிருந்தவன் கூறினான், “நான் இதோ இறங்கப்போறேன், ஸிஸ்டர். நீங்க வாங்க!”   `இனிமே எப்போ கடைக்குப் போய், எப்போ வீடு திரும்பறது!’ சலிப்புடன் நாத்தனாரைத் தேடி வந்தாள் அகிலா. `இங்கதானே டாக்ஸி பிடிக்க வந்தாள்? காணுமே!’ அடுப்படியில் நெடுநேரம் வேலை செய்த களைப்பு, மத்தியான வெயில், இவற்றுடன் இனம்புரியாத கலக்கமும் சேர்ந்துகொண்டது. பயத்தில் நா வரண்டு போயிற்று. “ஐஸ் நிறையப் போட்டு, எலுமிச்சை ஜூஸ், ப்ளீஸ்!” என்றாள். இவனைக் கேட்டுப்பார்க்கலாம் என்று தோன்றியது. உடனே புரிந்துகொண்டு, உற்சாகமாகப் பதிலளித்தான்” “சிவப்புப் புடவை கட்டிட்டு, அனுஷ்காமாதிரி ஒசரமா, அழகா இருந்தாங்களே! அவங்களைத்தானே கேக்கறீங்க?” எல்லாப் படங்களையும் விடாமல் பார்ப்பவர்களுக்கு -- அதிலும் இளவட்டங்களுக்கு -- எதிர்ப்படும் பெண்களெல்லாம் நடிகைகளாகத்தான் தோன்றுவார்களோ என்ற எரிச்சல் பிறந்தது அகிலாவுக்கு. தலையாட்டி வைத்தாள். “அந்த அக்கா சித்தே முந்தி டாக்ஸியிலே போனாங்களே! எங்கிட்ட அஞ்சு வெள்ளி குடுத்துட்டு, நான் சில்லறை குடுக்கறத்துக்குள்ளே அவசரமாப் போய் ஏறிக்கிட்டாங்க, தண்ணியைக்கூட முழுசாக் குடிக்கலே!” அகிலா நிம்மதியுடன் பெருமூச்சுவிட்டாள். உடல் தளர்ந்திருந்தால்தான் மனம் என்ன பாடுபடுத்துகிறது! “அவங்களைத் தேடிட்டு நான் இங்கே வந்தேன். அவங்க வீட்டுப்பக்கம் போய் என்னைத் தேடப்போறாங்க!” என்று லேசாய் சிரிக்க முயன்றாள். “அம்மா வீடு அந்தப் பக்கங்களா?” வாடிக்கையாளர்கள் தமிழ் பேசினால் அவனுக்குக் குஷி. “இல்லப்பா. இந்தத் தெரு..,” சொல்லும்போதே ஏதோ இடறியது. “டாக்ஸி நேரா இல்ல போச்சு?” என்று தன்னைதானே கேட்டுக்கொண்டவனுக்கு ஞாபகம் வந்தது. “முன்னால ஒத்தர் இருந்தாரு”. “என்னது?” “ஆமா, ஆன்ட்டி. அக்காகிட்ட ஏதோ பேசினாரு!” ஐந்து வெள்ளி கொடுத்த நினைவில்லாது அவள்தான் ஓடினாள் என்றால், தானாவது கூப்பிட்டுக் கொடுக்காமல் போனோமே என்ற குற்ற உணர்வு அவனை அவ்வளவு விவரங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவியிருந்தது. “அப்புறம்?” அகிலா படபடத்தாள். “காடி விர்ருனு, சும்மா அஜித் ஓட்டற ஸ்டண்ட் கார் மாதிரி..!” அவள் மனம் படும் பாட்டை உணராது, அவன்பாட்டில் பேசிக்கொண்டே போனான்.   டாக்ஸி சிறிது தூரம் சென்றதும் நின்றது. முன்கதவைத் திறந்துகொண்டு இறங்கினான் அந்த தாடிக்காரன். “கொஞ்சம் தள்ளிக்கிறீங்களா? ஒங்க சீட்டுக்கு அடியிலேதான் என் பெட்டியை வெச்சேன்!” குனிந்து பார்த்துவிட்டு, “இங்க எதுவும் இல்லியே!” என்ற வினுதா தள்ளி அமர்ந்தாள், சொந்தக்காரனே தேடிப் பார்க்க வசதியாக. அவன் சட்டென்று காரினுள் நுழைந்து, அவள் பக்கத்தில் உட்கார, டாக்ஸி பறந்தது. பதறிப்போய், மற்றொரு பக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு இறங்க முயற்சித்தாள். அங்கிருந்த தாழ்ப்பாள் உடைந்திருந்தது. அல்லது, உடைக்கப்பட்டிருந்தது. பயம் விளைவித்த ஆத்திரத்துடன் கத்தினாள், “நிறுத்துங்க. நான் இறங்கிடறேன்!” அவன் தாடியைப் பிடித்து இழுத்தாள், என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே. விகாரமாகச் சிரித்தபடி, “சும்மா அப்படியே ஒக்காரும்மா. எறக்கி விடவா ஒன்னை வண்டியிலே ஏத்தினோம்?” என்றவனது கட்டைக்குரல் பாமரத்தனமாக இருந்தது. இடுப்புப் பகுதியில் ஏதோ சுரீரென்றது. ஒரு கத்தியின் முனை! அவள் கை ஓய்ந்து விழுந்தது. தன்னை யாரோ கடத்திப் போகிறார்கள்! பிறகு என்ன செய்வார்கள்? உறைந்துபோய் உட்கார்ந்தாள் வினுதா. இடுப்பிலிருந்து ரத்தம் வடிவதுகூட அவளுக்கு உறைக்கவில்லை.   வீட்டுக்குள் மறுபடியும் நுழைந்து, மின்விசிறியின்கீழ் உட்கார்ந்தும்கூட அகிலாவின் படபடப்பு குறையவில்லை. அவன் யாராக இருக்கும்? தெரிந்தவன் என்றால், சொல்லிவைத்தாற்போல் அந்த நேரத்தில் டாக்ஸியுடன் வருவானா? ஏதாவது காதல் விவகாரமாக இருக்கவும் வாய்ப்பில்லையே! முன்பின் தெரியாதவன்! யாரோ, எவனோ! இந்தப் பைத்தியக்காரப் பெண்ணுக்கு எத்தனை தடவை படித்துப் படித்துச் சொல்லி இருக்கிறேன், `இரண்டாவது ஆள் இருக்கும் டாக்ஸியில் ஏறாதே!’ என்று! ஒருத்தன் வாயைப் பொத்துவான், இன்னொருத்தன் கையைக் கட்டுவான்! இரண்டு தடியன்களை எதிர்த்து ஒரு சின்னப்பெண்ணால் என்ன செய்ய முடியும்? வருத்தம் கோபமாக மாறியது. அப்படி இன்றைக்கே கடைக்குப் போகாவிட்டால் என்ன? அந்த பிளாஸ்டிக் பூ இல்லாமல்தான் அழுகிறதா! கணவரை நினைத்தால் இன்னும் கலக்கமாக இருந்தது. தனக்குப் பிறக்காத மகளாகவே தங்கையைப் பாவித்து அருமையாக நடத்துபவர்! அவளுக்கு ஒரு தலைவலி, காய்ச்சல் என்றால்கூட, `அபியும் நானும்’ பிரகாஷ் ராஜ்போல் துடிதுடித்துப்போகிறவர்! இனி அவளைக் காண முடியுமோ, முடியாதோ என்ற நிலையில் அவர் எப்படி நடந்துகொள்வார்? அதற்கு மேலும் தாங்க முடியாது, வாய்விட்டு அழ ஆரம்பித்தாள் அகிலா.   வினுதா கண்ணைத் திறந்தாள். இருட்டில் சரியாகத் தெரியவில்லை எதுவும். ஏதோ மரத்தினடியில், சேறும், புல்லுமாக இருக்குமிடத்திற்கு எப்படி வந்தோம்? ஏன் வந்தோம்? எழுந்திருக்க முயன்றாள். யாரோ அடித்துப்போட்டதுபோல உடலெல்லாம் வலித்தது. சட்டென ஒரு பொறி: `நான் மட்டும் போய் டாக்ஸி பிடிச்சிட்டு வரேன், அண்ணி!’ அவள் குரல்தான். யாரோ தாடிக்காரன் அவள் பக்கத்தில் உட்காருகிறான். இப்போதும் இடுப்பில் கத்தி குத்துவதுபோல் இருந்தது. அதற்குப்பின் என்ன ஆயிற்று? பாறாங்கல்லாக கனத்த தலையை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். டாக்ஸி ஏதோ ஒரு சந்தில் -- மரியாதைப்பட்டவர்கள் வரவே கூசும் ஓர் இடத்தில் -- நுழைகிறது. எதிர்ப்பு தெரிவித்து, கத்தினோமே! அதற்குப் பிறகு தலையில் இடி விழுந்தமாதிரி ஒரு வலி. வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. காதைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். அவள் நினைத்தது சரிதான். கை, காது, கழுத்து எதிலும் ஒன்றுமில்லை. தொலையட்டும்! கேவலம், தங்க ஆபரணங்கள்! சட்டென மூச்சு நின்றதுபோல் இருந்தது. தொலைந்தது அவை மட்டும்தானா? ஏதோ வேகத்துடன் எழுந்திருக்க முயன்றவளின் வயிற்றிலும், தொடையிலும் சொல்லவொணா வலி ஏற்பட, ஆடைகள் நிலைகுலைந்து போயிருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். வயிற்றின் குறுக்கே கையைப் போட்டு அமுக்கி, அப்படியே குப்புறப் படுத்து விசும்ப ஆரம்பித்தாள் வினுதா. 2. தங்கை எங்கே?      “மூளை இருக்கிறவங்க யாராவது இன்னிக்கு வெளியே போவாங்களா?” மூர்க்கத்தனமாகக் கத்திய கணவரின் மறுபுறம் அகிலாவுக்கு அச்சத்தை ஊட்டியது.  “வாயை மூடிக்கிட்டிருந்தா, என்ன அர்த்தம்?” இன்னும் உறுமினார். அதிர்ந்தே பேசாதவர்தான் எப்படி மாறிவிட்டார்! இப்போது எது பேசினாலும் தப்பாகிவிடும் என்று புரிந்தவளாய், மௌனத்தைக் கடைப்பிடித்தாள். `இந்தக் கழுதை எவனோடேயாவது ஓடிப்போயிடுச்சா?’ சற்று தாழ்ந்த குரலில் தன்னைத்தானே கேட்டுக்கொண்டவர், உடனே தன் சந்தேக புத்தியை நொந்துகொண்டு, நெற்றியில் அறைந்துகொண்டார். தான் வளர்த்த குழந்தை! எங்கானும் கெட்டுப்போவாளா? `அண்ணா! இவரைக் காதலிக்கிறேன்!’ என்று மோகனைக் கொண்டு நிறுத்தியவுடனேயே, தான் உடன்படவில்லை? மனிதன் பயந்துவிட்டால்தான் குணம் எப்படி மாறிவிடுகிறது! என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருந்தது. `ஆனால், `வேண்டாம்’ என்றால் மட்டும் நினைவுகள் எழாமல் இருந்துவிடுமா, என்ன! காலம் இருக்கிற இருப்பிலே, எழுபது, எண்பது வயதுக்கிழவிகளைக்கூட பலாத்காரம் பண்ணும் அளவுக்கு இந்த உலகம் சீரழந்து போயிருக்கிறது. வினுதாவைப் போன்ற அழகான, இளம்பெண் ஒருத்தி கையில் சிக்கினால் விட்டுவைக்குமா? தான் எவ்வளவுதான் யோசித்தாலும், நடக்கப்போவது எதுவுமில்லை என்றவரை அவர் அறிவுக்கு எட்டியது, அந்த குழப்பமான நிலையிலும். தொலைபேசியைக் கையில் எடுத்தவரைத் தடுத்தாள் அகிலா. அவருடைய முறைப்பைப் பொருட்படுத்தாமல் கெஞ்சினாள்: “கல்யாணம் நிச்சயமாயிருக்கிற இந்த சமயத்திலே நாலு பேருக்கு விஷயம் தெரிஞ்சா நல்லாயிருக்காதுங்க!” “ஒரேயடியா தலைமுழுகிடலாம்கிறியா?” அடித்தொண்டையிலிருந்து வந்த ஆக்ரோஷமான குரல் அவளைக் கட்டுப்படுத்தியது. அயர்ந்துபோய் அமர்ந்தாள். “போலீஸ்?” அகிலா வாயைப் பொத்திக்கொண்டாள். பேசிவிட்டு ஃபோனை வைத்தவர், ஆத்திரத்துடன் ஏதோ முணுமுணுத்தார். “என்ன சொல்றாங்க?” அச்சத்தையும் மீறி, ஆவல் கிளர்ந்தது. ஏதாவது பேசிக்கொண்டிருப்பது வேண்டாத யோசனைகள் எழாமலிருக்கவும் வசதியாக இருந்தது. “`கேசே இல்லியே! பட்டப்பகலிலே தானே டாக்ஸி ஏறிப் போயிருக்காங்க! இதிலே பயப்பட என்ன இருக்கு?’ அப்படிங்கறான் எவனோ மடையன்!” என்று வைதார்.  அப்படியும் ஆத்திரம் தீராது, “ஒடம்பிலே பொட்டுத் துணியுமில்லாம, எங்கேயாவது ஏரியில கிடக்கற பொணத்தை எடுத்து, `இது யாரோட ஒடம்பு, எப்போ இது நடந்திச்சு?’ன்னு பழங்கணக்கைப் பாக்கத்தான் இவனெல்லாம் லாயக்கு! அப்பத்தானே பேப்பரிலே பெரிசா தன்னோட போட்டோவைப் போட்டுக்கலாம்!” என்று பொரிந்து தள்ளினார். “ஐயோ! என்னவெல்லாமோ சொல்றீங்களே!” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள் அகிலா. இவ்வளவு பெரிய கோலாலம்பூர் நகரத்தில் நம் வீட்டுப் பெண்ணை எங்கே போய் தேடுவது என்று மலைத்துப்போய், பேச வேறு எதுவும் இல்லாது, உட்கார்ந்த நிலையிலேயே அன்றிரவைக் கழித்தனர் அத்தம்பதிகள். பசி, தூக்கம் போன்ற அத்தியாவசியமான தேவைகள்கூட மறந்துபோயின. மனம் மட்டும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தான் தினசரிகளில் படிக்கும் செய்திகளில் ஒன்று தன் குடும்பத்திலேயே நடந்துவிட்டதோ என்று அருணுடைய யோசனை போயிற்று. வினுதாவைக் கெடுத்துவிட்டு, `இவளை விட்டுவைத்திருந்தால் நமக்குத்தான் ஆபத்து,’ என்று ஒரேயடியாகத் தீர்த்துக்கட்டி விட்டார்களோ? ஆற்றில் உருத்தெரியாத பெண்ணின் உடல் ஒன்று மிதந்து வருவதுபோன்ற பிரமை ஏற்பட்டது. ஏன், அப்படியே கொன்றிருந்தாலும்கூட, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, குப்பைத் தொட்டியில் போடலாமே! அவள் உயிரோடு இருந்தால்? வெறியர்களின் வன்செயலுக்கு ஆளாகி, பல ஆண்களுக்குச் சில மணி நேரம் சுகமளிக்கும் பாவையாக, தப்பிக்கவே இயலாதவகையில் பலத்த காவலில் இருப்பாளோ? அல்லது, போதைப்பொருள் தாராளமாக வழங்கப்பட்டதில், தன் செய்கையின் கேவலம் புரியாமல், அடுத்த வேளை போதை கிடைப்பதிலேயே கவனம் பூராவும் நிலைக்க, அவளைப் பிடித்துக்கொண்டு போனவர்களின் கைப்பாவையாய், அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்துகொடுத்து, தனது கீழ்த்தரமான வாழ்க்கையால் எத்தகைய வருத்தமோ, அவமானமோ கொள்ளாது, நடைப்பிணமாக ஆகி..! நேற்றுவரை குழந்தைபோல சிரிப்பும், கும்மாளமுமாக இருந்த அருமைத் தங்கையை இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. மூச்சு பெருமூச்சாக, ஒழுங்கற்ற நிலையில் வெளிவந்தது. `இப்படியெல்லாம் இருக்கக்கூடாதே!’ என்ற பதைப்புடன், `அவளை விடுவித்தால் எத்தனை லட்சம் தருவீர்கள்?’ என்று யாராவது அழைத்தால்கூடத் தேவலாம் என்ற முடிவுக்கு வந்தார் அருண். பெண் மனமோ, `மனிதர்களால் இப்போது எந்த ஆதரவுமில்லை!’ என்ற விரக்தியுடன், ஏதானும் ஒரு பிடிப்பை வேண்டி, தெய்வத்தை நாடியது. `வினுதா முழுசாகத் திரும்பி வந்தால், உனக்கு நூறு தேங்காய் உடைக்கிறேன், பிள்ளையாரப்பா!’ என்று பேரம் பேசியது. ஆனாலும், நாத்தனார் மாயமாக மறைந்த அதிர்ச்சியைவிட, கணவரிடம் தோன்றிய மாறுதல்கள்தாம் பொறுக்க முடியாததாக இருந்தது அகிலாவுக்கு. “நீதானே அவளை வெளியில் அழைத்துப்போனாய்?’ என்று பழியை அவள்மேலேயே திருப்புவாரோ? நமக்கு வேண்டிய ஒருவர் ஆஸ்பத்திரியில் இறந்துபோனால், டாக்டருடன் பகைமை பாராட்டுவது போல்தானே இதுவும்? மறுநாள் பொழுது விடிந்தது. வெறித்த பார்வையுடன் உட்கார்ந்திருந்தார் அருண். சமையலறையிலிருந்து வெளிப்பட்ட அகிலா, “நீங்க கிளினிக் போக வேண்டாமா?” ஒரு மனைவிக்கே உரிய கடமையுடன் நினைவுபடுத்தினாள். நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, பழையபடியே தொய்ந்துபோய் உட்கார்ந்தார் அந்த டாக்டர். பைத்தியம்! நான் இருக்கும் நிலையில், கத்தியைக் கையில் எடுத்து, ஆபரேஷன் பண்ண முடியுமா, என்ன? என் உடம்பு பூராவும் படபடக்கிறதே! ஒவ்வொரு மூச்சும், `வினுக்கண்ணு, வினுக்கண்ணு,’ என்று அழுவது உனக்குப் புரியுமா? யோசிக்கும் சக்தி அறவே போய்விட்டது போலிருந்தது. அப்பெயர் மட்டும் திரும்பத் திரும்ப நினைவில் எழுந்தது. திடீரென எண்ணம் மாறியது. வினுக்குட்டி பார்க்க எப்படி இருந்தாள்? எழுந்துபோய், போட்டோ ஆல்பத்தை எடுத்தார்  அருண். அண்ணனும், அண்ணியும் மணக்கோலத்தில் இருக்க, இருவருக்கும் நடுவில் நின்று, அவர்கள் தோள்மேல் கைபோட்டு,  சிரித்தபடி நின்றிருந்தாள் வினுதா. பரிவுடன் அச்சிறுமியின் கன்னத்தைத் தடவினார். `இனிமே ஒன்னைப் பார்ப்பேனாம்மா?’ பொங்கிய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் முகமே இறுகியிருந்தது. “ஐயோ! வேணாம்! இப்ப அதை ஏன் எடுக்கறீங்க?” என்று வேதனை தாங்காது அகிலா அலறியபோது, வாசலில் கார் வந்து நின்ற சப்தம். அதிலிருந்து இறங்கினாள் வினுதா -- உடல் பூராவும் திட்டுத்திட்டாய் சேறும், ரத்தக்கறையுமாக. “அண்ணா!” அழுகையாக வந்த அக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தார் அருண். தங்கையின் அலங்கோலத்தையும் மீறி, அவளை உயிருடன் கண்டுவிட்டதில் ஒரு நிறைவு தோன்றியது. “வினுக்கண்ணு!” எப்போதுமே நிதானத்தைத் தவறவிடாதவர், கடந்த சில மணி நேரங்களில் பட்டபாட்டில் வேறு மனிதாராக மாறியிருந்தார். படபடப்பை மறைத்துக்கொள்ள முயலாது, அவளருகே ஓடி வந்தார். தாவணி போட்டுக்கொள்ள ஆரம்பித்த நாளிலிருந்து தொட்டே இராத தங்கையை ஆரத் தழுவினார். மற்றொருவரின் ஸ்பரிசம் பட்டாலே உடல் பற்றி எரிவதுபோல் இருந்தது வினுதாவிற்கு. முரட்டுத்தனமாகத் தன்னை விடுவித்துக்கொண்டாள். அதிர்ச்சியில் வாய்பிளந்து நின்ற அகிலாவைப் பார்த்ததும், அவள் கண்களில் நீர் பெருகியது. இன்னொரு பெண்ணுக்கு மட்டுமே புரியக்கூடிய அவலம் என்பதால், உதடுகளோடு குரலும்  விம்மியது. “நான் குளிச்சுட்டு வரேண்ணி!” என்று உள்ளே விரைந்தாள். “எங்கே போறா?” “குளிக்கத்தான்!” அவசரமாக அவளைப் பின்தொடர்ந்து, குளியலறைக் கதவைப் பலமாகத் தட்டியபடி அருண் கத்தினார்: “வெளியே வா, மொதல்லே!” “என்னண்ணா?” குரல் பலவீனமாக ஒலித்தது. “தடயம் எல்லாம் ஒன்மேலதானே இருக்கு? அதைக் கழுவிட்டா, அப்புறம் அந்த ராஸ்கலை எப்படிப் பிடிக்கிறது?” அந்த அசிங்கம் பொறுக்காமல்தானே அவசரமாகக் குளிக்கப்போனோம்! “நீ குளிச்சுட்டு வாம்மா!” நாத்தனாருக்கு வக்காலத்து வாங்கினாள் அகிலா. பின்னர், கணவரிடம் விவாதம் புரியத் தொடங்கினாள். “நடந்தது நடந்திடுச்சு. ஒரு முழுக்குப் போட்டு, அதோட இந்த விஷயத்தை மறக்கறதை விட்டுட்டு, போலீசு, கேசுன்னு அலையணுமா? நாலு பேருக்குத் தெரிஞ்சா, நம்ப பொண்ணைத்தான் கண்டபடி பேசுவாங்க! ஆம்பளைங்க என்ன செஞ்சாலும், சரிதான்னு ஏத்துக்கற சமூகம் இது!” வழக்கத்துக்கு விரோதமாக மனைவி அதிகாரமாகத் தன்னிடம் பேசியது அருணைச் சிந்திக்க வைத்தது. “நீ சொல்றதும் சரிதான். நாளைக்கே கல்யாணமாகி, புருஷன் வீட்டுக்குப் போகவேண்டிய பொண்ணு! எவன் பண்ணிப்பான்?” கணவன், மனைவி இருவரும் சற்றும் எதிர்பாராவண்ணம், குளியலறைக் கதவு திறந்தது. பழைய கோலத்திலேயே வெளியே வந்தாள் வினுதா. “வாங்கண்ணா, போகலாம்,” என்றாள் உறுதியான குரலில். “தப்பு செஞ்சவங்களைச் சும்மா விடறது நாம்ப அவங்களுக்குப் பயந்தமாதிரிதானே ஆகுது?” “வேண்டாம், வினு. நான் ஏதோ ஆத்திரத்திலே பேசிட்டேன். அண்ணி சொல்றதுதான் சரி”. “ஒன்னை இப்படிப் பாக்கவே முடியல. கண்ராவியா இருக்கு! போய், நல்லாக் குளி போ!” அகிலாவும் கணவருடன் சேர்ந்துகொண்டாள். “போலீஸ் குத்தவாளியைப் பிடிச்சுக் கிழிச்சாங்க!” “இப்ப நீங்க வர்றீங்களா, இல்லே நானே காரை எடுத்துக்கிட்டுப் போய், ரிபோர்ட் குடுத்திட்டு வரட்டுமா?” என்று மிரட்டப்பார்த்தவள், கம்மிய குரலில் சொன்னாள்: “நானே போகலாம்தான். ஆனா, கால் ரெண்டும் கொடையுது!” அதிர்ச்சி தாங்காது அகிலா மூச்சை இழுத்துக்கொள்ள, தான் அனுபவிக்கும் வேதனை கண்ணீராய் மாறிவிடாதிருக்க அரும்பாடுபட்டார் அருண். முகத்தைத் திருப்பிக்கொண்டு, “வா!” என்ற ஒரே வார்த்தையால் அவளுக்குப் பக்கபலமானார். 3. கெட்டவன் ஜாலி, மாட்டியவள்?        வீடு திரும்பிய கணவரையும், அவரது தங்கையையும் பார்த்துத் திடுக்கிட்டாள் அகிலா. போலீஸில் அப்படி என்னதான் கேட்டிருப்பார்கள்? வினுதா நிறைய அழுதிருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. அருண் மட்டுமென்ன! பலமுறை அடி வாங்கியவர்போல் துவண்டிருந்தார். எதுவும் பேசாது, இரு கோப்பைகளில் சுடச்சுட காப்பி கொண்டு வைத்தாள் அகிலா. அதைப் பார்த்தும் பாராதவர்கள்போல் எங்கோ வெறித்தபடி எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டிருந்த அவ்விருவரின் மனமும் கடந்த சில மணி நேரங்களிலேயே உழன்று கொண்டிருந்தன. சே! மத்தவங்க கஷ்டப்பட்டா சந்தோஷப்படற ஒலகம் இது! -- அருண் கொதித்தார். விசாரித்தவர்கள் ஆண்களாக இருந்ததால், அவர்களுக்கு ஒரு பெண்ணின் அவலத்தை உணரும் திறன் அறவே இருக்கவில்லை. கேள்வி மேல கேள்வியா கேக்கறப்போ, இந்தப் போலீஸ்காரனுங்களுக்குதான் என்ன சுவாரசியம்! படமா காட்டறாங்க? துருவித் துருவிக் கேக்கறதிலதான் எவ்வளவு கேலி, ஏளனம் -- `பொண்ணாப் பொறந்துட்டேல்ல! எல்லாத்தையும் அனுபவிச்சுத்தான் ஆகணும்,’ என்கிறதைப்போல! நமக்கு ஏதாவது கெடுதல் நடந்தா, நமக்குத்தான் அதோட பாதிப்பு. மத்தவங்களுக்கு என்ன? துளிக்கூட ஈவு, இரக்கம் இல்லாம, இந்தப் பச்சைப்பிள்ளையை என்னவெல்லாம் கேட்டுட்டான் -- என்னமோ, இவளே வலியப்போய் அவங்ககிட்ட படுத்துட்டமாதிரி! ரெண்டு பேரில்ல மாத்தி மாத்தி இவளை வதைச்சாங்களாம், பாவிப்பசங்க! சொல்ல முடியாம, எல்லாத்தையும் வினுதா சொன்னது இருக்கே! இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா, கூட்டிட்டே போயிருக்க மாட்டேன். இந்தக் கண்ராவியை ஒரேயடியா மறந்து தொலைச்சிருக்கணும். இதோட நிக்கப்போகுதா! குத்தவாளியை அடையாளம் காட்ட வேற போயாகணும். எத்தனை போக்கிரிப்பசங்க இருக்காங்க இந்த ஊரில! அவ்வளவு சுலபமா அவனுங்க மாட்டுவாங்களா? அட, அப்படியே பிடிச்சாங்கன்னு வெச்சுக்கிட்டாலும், கோர்ட்டிலே கேசு எத்தனை வருஷம் இழுத்தடிக்கப்போகுதோ! இவனுங்களுக்கென்ன! ரெண்டு, மூணு வருஷம் உள்ளே இருந்திட்டு, ஜாலியா திரும்பி வந்துடுவானுங்க. மறுபடியும் அதே ஆட்டம்தான். இவங்க குரங்குப்பிடியில மாட்டிக்கிட்ட அப்பாவிப் பொண்ணுங்களுக்கும், அவங்க சொந்தக்காரங்களுக்கும் மட்டும் ஆயுசுக்கும் நிம்மதி கிடைக்காது. இது என்ன நியாயம்! இப்ப ரெண்டு போலீஸ்காரங்கதான். கோர்ட்டில பேப்பர்காரங்க, சும்மா, வேலையத்துப்போய்  வேடிக்கை பாக்க வந்தவங்கன்னு ஆயிரம் பேர் கூடிட மாட்டாங்களா! `இதோ, இவங்க வீட்டுப் பெண்தான்..!’ தெருவில் போவோர் வருவோர் எல்லாம் தன்னைக் கைகாட்டி, ரகசியக் குரலில் பேசுவது அப்போதே கேட்பது போலிருந்தது அருணுக்கு. என்னதான் யோசித்தாலும், நடந்தது நடந்ததுதான் என்ற உண்மை அவரது கையாலாகாத்தனத்தைச் சுட்டிக் காட்டியது. அதனால் எழுந்த கோபத்துடன், “எதுக்கு இங்கேயே முழிச்சுக்கிட்டு நிக்கறே? எங்கேயாவது தொலையேன்!” என்று மனைவியைப் பார்த்துக் கத்தினார். 4. சேற்றுப்பாதையிலே         அந்த பஸ்ஸில் இருந்தவர்கள் எல்லாரும் இளம்பெண்கள். ஸ்வெட்டர் அணிந்துகொண்டு, பரட்டைத் தலையும், சிவந்த கண்களுமாய் அவர்கள் உட்கார்ந்திருந்தது நோயாளிகளை நினைப்பூட்டியது. “பேசாம, முந்திமாதிரி ஒத்தர் வீட்டிலே தங்கி, பிள்ளை பாக்கிற வேலையைச் செய்துக்கிட்டு இருக்கலாம். இப்படி நடுராத்திரியிலே..!” என்ற பொன்னம்மாவை இடைமறித்தாள் தேவி. “அதைச் சொல்லு! ஃபாக்டரி வேலைன்னா கௌரவம்னு நினைச்சு..! சே! ராத்திரி ஷிஃப்ட் செஞ்சா, ஓயாத தலைவலிதான் வருது! மத்தியானம் வேலை செஞ்சா, வீடு திரும்ப இப்படி -- நடுராத்திரியாகிடுது!” பஸ் நின்றது. தோழிகள் இருவரும் இறங்கினார்கள். “என்னடி, தேவி? தெரு இப்படி ஒரே இருட்டா இருக்கு!” “புறம்போக்குதானே! அதுவும் மழைக்காலம் வேற! எப்பவும் அழுது வடியற இந்த ரெண்டு தெருவிளக்கை ரிப்பேர் செய்யக்கூட யாரும் வரமாட்டாங்க!” தனது பயத்தை எரிச்சலாக மாற்றிக்கொண்டுவிட்டு,  பொன்னம்மாவின் மணிக்கட்டை இறுகப் பற்றிக்கொண்டாள் தேவி. குறைந்தது பத்துப் பதினைந்து நிமிடங்களாவது இந்த சேற்றுப் பாதையில் நடந்தாக வேண்டுமே என்று நினைக்கும்போதே வயிற்றைக் கலக்கியது. “அப்பா என்னை படிக்கப்போட்டாங்கதான். நான்தான் ஸ்கூலுக்குப் போகாம, மத்தவங்க தோட்டத்திலே ரம்புத்தான் திருடப்போனேன்! எங்க பெரியம்மா பொண்ணு சொல்லிக்குடுத்திச்சு!” இதைப்போன்ற சில சந்தர்ப்பங்களில், நிறையப் படித்திருந்தால், பெரிய உத்தியோகம் எதிலாவது அமர்ந்திருக்கலாமே என்ற ஆதங்கமும் எழாமல் இல்லை தேவிக்கு. பொன்னம்மா பதிலுக்கு, “ஏசறதுக்குன்னே டீச்சருங்க ஸ்கூலுக்கு வர்றாங்கபோல! அதான் எனக்கும் படிக்கப் பிடிக்கலே!” பரீட்சையில் தேர்ச்சி பெறுகிறார்களோ, இல்லையோ, ஒவ்வொரு வருடமும் அடுத்த வகுப்புக்குப் போய்விடும் கல்வி திட்டத்தின்கீழ், அவ்விருவரும் ஆறு வகுப்பை முடித்திருந்தார்கள். ஆங்காங்கே இருந்த ஓரிரு குடிசை போன்ற வீடுகளிலும் இருள் சூழ்ந்திருந்தது. “என்னமோ சத்தம் கேக்கலே? யாரோ நம்ப பின்னால வர்றமாதிரி..!” “சும்மா இருக்கியா?” என்று தோழியை அடக்கினாள் தேவி. “நானே பயந்துக்கிட்டு இருக்கேன்!” சிரிக்க முயன்று, அந்த முயற்சியைக் கைவிட்டாள். அவளது கை இறுகியது. காதைத் தீட்டிக்கொண்டாள். காலடிச் சத்தம் கேட்டது உண்மைதான். “தெரு நம்பளுக்கு மட்டும்தானா போட்டிருக்கு?” என்று அலட்சியமாகச் சொல்லப்பார்த்தவள், பயந்து, “ஓடலாமா?” என்று கிசுகிசுத்தாள். அவள் சொல்லி முடிப்பதற்குள்ளேயே பொன்னம்மா ஓட ஆரம்பிக்க, அதை எதிர்பார்க்காததாலோ, அல்லது நாளெல்லாம் வேலை செய்த களைப்பும், உறக்கமும் சேர்ந்துகொண்டதாலேயோ, தேவி சேற்றில் வழுக்கி விழுந்தாள். எழுந்திருக்க முயன்றபோது, யாரோ அவள் கையைப் பிடித்து, பாதையோரமாக இருந்த புதரைநோக்கி இழுப்பது புலனாக, “பொன்னீ..!”என்று தன் சக்தியையெல்லாம் கூட்டிக் கத்தினாள். தான் படுத்த நிலையிலேயே இருக்க, தன் கால்களின்மேல் அழுந்த அமர்ந்துவிட்ட முரடனை எப்படி எதிர்ப்பது! பொன்னம்மா தன்னை நோக்கி ஓடிவருவது லேசான வெளிச்சத்தில் தெரிய, தேவிக்கு இனம்புரியாத நிம்மதி எழுந்தது. சிறுவயதிலிருந்து அனுபவித்த ஏழ்மையால் உடலும், மனமும் வலுவிழந்து போயிருக்கும் தன்னையொத்த இன்னொரு பதினெட்டு வயதுப் பெண்ணால் என்ன செய்துவிட முடியும் என்றெல்லாம் அப்பேதை யோசிக்கவில்லை. ஆற்றில் தத்தளிப்பவன் சிறு துரும்பைக்கூட ஆதாரமாக எண்ணிப் பிடித்துக்கொள்வதுபோல்தான்! அடுத்து நடந்தது அவ்விரு பெண்களுமே எதிர்பார்க்காதது. எங்கிருந்தோ முளைத்த இன்னொருவன் பொன்னம்மாவை வெறியுடன்  கட்டிப்பிடித்தான். பல நிமிடங்கள் கேட்கக்கூடாத ஒலிகள் அவ்விடத்தில். இரு ஜோடி காலடிச் சத்தம் ஓட்டமாக மறைவது கேட்டபோதும், அப்பெண்கள் எழ முயற்சிக்கவில்லை. அவ்வளவு தூரம் உறைந்து போயிருந்தார்கள். ஒருவருடன் ஒருவர் பேசவும் துணிவு இருக்கவில்லை. ஏதோ தகாத காரியம் செய்துவிட்டு, கையும், களவுமாகப் பிடிபட்டதுபோன்ற அவமானமே மேலோங்கியிருந்தது. அவர்களுள் ஒருத்தி வலியால் முனக, இன்னொருத்தி மௌனமாக இருந்தாள். இனி எப்படி நாலுபேர் முகத்தில் விழிப்பது? `மானங்கெட்டவள்!’ என்று தூற்றமாட்டார்கள்? இப்போது வேளைகெட்ட வேளையில் வீடு திரும்புவதற்கே ஆயிரம் பேசுகிறார்கள். இன்றிரவு நடந்ததை உள்ளபடியே சொன்னாலும், நம்பவா போகிறாரகள்? `இந்த தேவிதான் முதலில் பார்த்துப் பார்த்துச் சிரித்திருப்பாள்! கண்ணைச் சிமிட்டி இருப்பாள்! இல்லாவிட்டால், இந்த கறுப்பி இருக்கிற லட்சணத்துக்கு எவன் இவளைக் கவனித்திருக்கப் போகிறான்!’ என்று இவள்மேலேயே பழியைத் திருப்புவார்கள். இனி என்னதான் கதறினாலும், கற்பூரத்தையே அணைத்துச் சத்தியம் செய்தாலும், `தூய்மையானவள்’ என்று அவளை யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. வாழ்நாள் முழுவதும் கூனிக் குறுகி நடக்க வேண்டும்! தனக்கு என்றாவது விடியும், படத்தில் பார்த்த ஸிண்டரெல்லாவுக்கு அமைந்ததுபோல், எவனாவது ராஜகுமாரன் தன்னைக் கண்டு மயங்கி, படாடோபமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான்  என்று நம்பியிருந்தவள், தான் கண்ட கனவெல்லாம் கனவாகவே போய்விட்டதை உணர்ந்தாள். ஏதோ, இதுநாள்வரை வாழ்க்கை அப்படியொன்றும் மோசமாக இருக்கவில்லை. ஓயாமல் பார்த்த தமிழ்ப்படங்களில் வரும் கதாநாயகியைப்போல விதவிதமான ஆடையணிகளும், ஓடிப் பிடித்தபடி ஆடிப் பாட காதலனும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அன்பான அப்பா இருந்தார். மற்ற அப்பாக்களைப்போல் சாராயக்கடையே கதி என்றில்லாமல், கூலி வேலை முடிந்து, வீட்டிலேயே இருந்தார். மகளிடம் அருமையாகப் பேசினார். ஓடுகாலியாக இருந்த மனைவியைப்போல் இல்லாமல், மகளாவது பொறுப்பாக வேலை பார்த்து, தம்பி, தங்கைகளைப் பார்த்துக்கொள்கிறாள், அவர்களைப் படிக்க வைக்கிறாள் என்று அவளிடம் அபார பாசம், கொள்ளைப் பெருமை அவருக்கு. அந்த அப்பாவை இப்போது எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்? வீட்டுக்குத் தெரிந்தே அம்மா பல ஆண்களுடன் போனாள். அதையும் பெரிதுபடுத்தாத ஒரு பெருந்தன்மை அப்பாவுக்கு. `அந்த அம்மாவுக்குப் பிறந்தவள்தானே!’ என்று, தெரிந்தவர் யாரேனும்தான் தன்னைக் கண்காணித்து வந்து, சமயம் வாய்த்தபோது தாக்கினாரோ? `இவளுக்கு மட்டும் என்ன ஒழுக்கம் வேண்டிக்கிடக்கிறது!’ என்ற அலட்சியமோ! அவர்களைச் சுற்றிலும் இருந்த இருள் லேசாக விலக ஆரம்பித்தது. ஓரிருவர் உரக்கப் பேசிக்கொண்டு, புதிதாக விடிந்த அந்த நாளுக்குரிய வேலைகளைக் கவனிக்கச் சென்றுகொண்டிருந்தனர். உடல் வேதனையிலும், களைப்பிலும் தன்னையும் அறியாது உறங்கிவிட்ட தேவி கண்விழித்தாள். `வீல்’ என்ற அலறல் அவளிடமிருந்து வெளிப்பட்டது. நிர்வாணமாகக் கிடந்தாள் பொன்னம்மா. அவள் கழுத்தை இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது அவளுடைய உள்பாவாடை. அடுத்த சில நிமிடங்களில் நடந்தது எல்லா ஆண்களுமே கொடியவர்கள் அல்லர் என்பதை உறுதிப்படுத்துவதுபோல் இருந்தது. உயிரற்ற உடல்தானே என்று அலட்சியம் காட்டாது, விரைந்து தனது டி-சட்டையைக் கழற்றி  அவள்மேல் போர்த்தினார் ஒரு பங்களாதேஷி. “எந்திரிம்மா, தங்கச்சி!” என்று மற்றும் ஒருவர் தேவியைத் தொட்டுத் தூக்க முயல, அவள் இன்னும் பலக்க அலற ஆரம்பித்தாள்.   அன்றைய தினசரியைப் பிரித்தாள் வினுதா. இந்தமாதிரியான செய்தி ஒன்றை முதல் பக்கத்திலேயேவா போடுவார்கள்! ஆத்திரத்துடன் படத்தைப் பார்த்தாள். மண்டிக் கிடந்த புதர், அலங்கோலமான நிலையில் இரு பெண்கள். மறைக்க வேண்டிய அவயவங்களில் கறுப்பு மை பூசப்பட்டிருந்தது. இறந்துவிட்டவளைவிட, உயிருடன் இருக்கும் தேவி என்கிற பெண்மீது அதிக இரக்கம் சுரந்தது வினுதாவுக்கு. `உனக்கு நான் இருக்கிறேன்! நீ படும் வேதனை எனக்குப் புரிகிறது!’ என்று ஆதரவாக அவள் கரத்தைப் பற்ற  வேண்டும். ஐந்து மைல் தொலைவிலிருந்த சிறிய தோட்டப்பகுதிதான். விசாரித்தால் தெரிந்துவிடும். உறுதியுடன் புறப்பட்டாள் வினுதா. 5. வன்முறை செய்பவர்கள்   பெயரில்லாத சங்கம் அது. வினுதா, தேவி, இவர்களுடன் பல்வேறு வயதுப் பெண்களும் அந்தச் சிறிய மாடி அறையில் குழுமியிருந்தார்கள். தலைவி, அங்கத்தினர்கள் என்றெல்லாம் கிடையாது. ஆனால், அவர்கள் ஒன்றுசேர காரணமாயிருந்தவள் என்ற காரணத்தினால் வினுதாவுக்கு ஒரு தனி மதிப்பு வழங்கப்பட்டிருந்தது.   தமக்கு விளைவிக்கப்பட்ட அவலத்தைப் புரிந்துகொள்பவர் எவருமே கிடையாதா என்ற ஆதங்கம் குறைவதற்காக, தம்மை ஒத்த பிறருடன் அக்குழுவில் இணைந்திருந்தார்கள். அந்த முயற்சியால், கண்களில் தங்கியிருந்த சோகமும், பயமும் சிறிது சிறிதாக மாற, அவையிருந்த இடத்தில் கூர்மையான ஒளி புகுந்திருந்தது. இப்போது அவர்களால் பிறரை நிமிர்ந்து பார்க்க முடிந்தது. கூனிக் குறுகிய உடல்கள் மீண்டும் நிமிர்ந்தன. புதிது புதிதாகப் பெண்கள் வந்து சேர, முதலில் வந்தவர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறி, அழுவதற்குத் தம் தோளையும் அளித்து, அதனால் தாமும் தைரியம் பெற்றார்கள். ஆரம்பத்தில், அதிர்ச்சியால் வாயடைத்துப்போயிருந்த தேவி, அதன்பின், `எனக்காக பொன்னம்மா உசிரை விட்டுட்டா!’ என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள். சில மாதங்கள் கழிந்ததும்தான், அழுகையும், விம்மலுமாய், தனக்கும் தன் தோழிக்கும் நேர்ந்த கதியைச் சொல்ல முடித்தது அவளால். அவள் நினைத்து பயந்ததுபோல், அங்கிருந்த எவரும் அவளைத் துருவித் துருவி எதுவும் கேட்கவில்லை. பரிகசிக்கவில்லை. பரிதாபத்தையும் காட்டவில்லை. வெறுமனே கேட்டுக்கொண்டார்கள். அவள் சொல்லி முடித்ததும், அக்கொடுமையின் பயங்கரம் புரிந்ததால், இன்னொரு பெண்ணுக்கு விளைந்த துயரச் சம்பவம் தமக்கே நிகழ்ந்ததுபோல  அனுபவித்து அழுதார்கள். இரக்கமற்ற உறவினர்களையும், பிற வம்பர்களையும் ஒதுக்கிவிட்டு, இப்புதிய தோழமையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, இயன்றபோதெல்லாம் சந்தித்தனர் அப்பெண்கள்.   அன்றுதான் வந்திருந்தாள் அப்பெண். ஜீன்ஸ், டீஷர்ட் அணிந்து, குட்டையாக வெட்டப்பட்ட தலைமயிரும், ஆங்கில உச்சரிப்புடன் கூடிய தமிழும் அவளைப்பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள உதவின. “என் பேரு தீபா,” என்ற அறிமுகத்துடன் துவங்கினாள். “யுனிவர்சிடியிலே படிக்கிறேன்!” என்றவள் மேலே பேச முடியாது திணறினாள். வினுதா கனிவுடன் அவளைப் பார்த்தாள். சமூக இயலில் வாங்கியிருந்த முதுகலைப்பட்டம் விதி தன்னை இந்த சூழ்நிலைக்குத் தன்னைத் தயார்படுத்தத்தானோ என்று எண்ணக்கூடத் துவங்கியிருந்தாள். “இங்க நாம்ப எல்லாரும், ஆங்கிலத்திலே சொல்றமாதிரி, ஒரே படகிலே இருக்கிறவங்க. ஒன்னோட அனுபவம்தான் இங்க எல்லாருக்கும். அதனால, நீ எதை வேணுமானாலும் கூச்சப்படாம சொல்லலாம்!” என்று, மெல்லிய, ஆனால் அழுத்தமான குரலில் அவளை ஊக்குவித்தாள். எல்லாருக்கும் கேட்கும்படியாகவே ஒரு பெரிய மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி, அவ்விதம் வரவழைத்துக்கொண்ட சொற்ப தைரியத்துடன்  தீபா தொடர்ந்தாள். “நான் டிஸ்கோ போயிட்டு, என் காரிலே வந்துக்கிட்டு இருந்தேன்..”. “அப்போ மணி என்ன இருக்கும்?” ராஜம் குறுக்கிட்டாள், ஒரு இளக்காரச் சிரிப்புடன்.  வளர்ந்துவிட்ட தன் பிள்ளைகள் இரவு ஏழு மணிக்குள் வீடு திரும்பிவிட வேண்டும் என்று சட்டம் விதித்திருந்த அந்த தாய்க்கு, தனியாக ஒரு இளம்பெண் கண்ட நேரத்தில் சுற்றுவதையும் சுற்றிவிட்டு, இப்போது காலங்கடந்து முட்டிக்கொள்வது என்ன நியாயம் என்று தோன்றியது. அவளுடைய முகத்திலும், குரலிலும் இருந்த  ஏளனம் தீபாவை இன்னும் குறுகச் செய்துவிடப் போகிறதே என்ற பதைப்புடன், “டிஸ்கோ ராத்திரிதான் இருக்கும்!”  என்று அழுத்தந்திருத்தமாக அவளுக்குப் பதிலளித்தாள் வினுதா. தனக்கு ஆதரவு காட்டியவளை நன்றியுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தீபா தொடர்ந்தாள். “கார் வழியில ஸ்டாப் ஆயிடுச்சு. என்ன செய்யறதுன்னு புரியல. அப்போதான் அந்த வால்வோ கார்! டீசண்டா ஒருத்தர் -- அன்னிக்கு அவரை டிஸ்கோவில பாத்த ஞாபகம். இறங்கி, `என்ன பிராப்ளம்?’னு விசாரிச்சார். எனக்குச் சொல்லத் தெரியல. `மெகானிக்கை கூட்டி வரலாம், வாங்க! ன்னு அந்த ராஸ்கல்தான் எங்கேயோ பொட்டைக்காட்டுக்கு..!” பெரிதாக அழ ஆரம்பித்தாள். “அடடா! வீட்டுக்கு ஒரு கால் போட்டிருக்கக் கூடாதோ!”  யாரோ அங்கலாய்த்தார்கள். “எங்கப்பா, அம்மா வெளிநாட்டிலே இருக்காங்க. நான் இன்னொரு பொண்ணுகூட ஒரு ரூமில தங்கியிருக்கேன்!” இப்போது ராஜம் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டாள். ஏற்கெனவே அங்கிருந்த சிலருக்கு அவளுடைய கதை தெரியும் என்றாலும், அதை திரும்பத் திரும்ப சொல்லி, பிறரிடம் பகிர்ந்துகொண்டாலே மனப்பளு குறையும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்துதான் இருந்தது. “ஆளைப் பாத்து யாரையும் நம்பிட முடியாது. நான் ஒரு நாள் சாயங்காலம், நாலு மணி இருக்கும், தோட்ட வேலை செஞ்சுக்கிட்டு இருந்தேன். வாசல்ல ரொம்ப நேரம் ஒரு காடி நின்னுக்கிட்டு இருந்திச்சு. ஏதோ ரிப்பேர்போல! இவங்க சொல்றமாதிரிதான் -- கோட்டும், டையுமா சின்னவயசா ஒருத்தன். கேட்டுக்கு வெளியே நின்னுக்கிட்டு, `ஆன்ட்டி! ஒங்க ஃபோனைக் கொஞ்சம் பாவிச்சுக்கலாமா?’ன்னு கேட்டான் -- ரொம்ப மரியாதையா! நான் ஒரு புத்திகெட்டவ! எங்க வீட்டிலே ஃபோன் கிடையாதுன்னு சொல்லத் தோணல அப்போ!” வாழ்வில் சறுக்கிய பிறகே ஞானோதயம் பிறக்கிறது பலருக்கும். “ஆனா, மொதல்லே கொஞ்சம் யோசிச்சேன், வீட்டிலே யாரும் இல்லியேன்னு!” யாராவது தன்னைத் தப்பாக நினைத்துவிடப் போகிறார்களே, `நீயாக, உன்னையும் அறியாமல், எதற்கோ ஆசைப்பட்டுதான் அவனை உள்ளே விட்டிருக்கிறாய்!’ என்று பழி வந்துவிடுமோ, என்ற பதைப்பு அவ்வார்த்தைகளில் புலப்பட்டது.   “அந்த தடியனும் என்னை நம்ப வைக்கிறமாதிரி பேசினான். `ஒங்கமேல நான் குத்தம் சொல்லமாட்டேன், ஆன்ட்டி. காலம் அப்படி கெட்டிருக்கு!’ அப்படின்னு அவன் அனுசரணையா பேசினதில ஏமாந்துட்டேன். பூட்டைத் திறந்துவிட்டேன். ஃபோன் எங்கே இருக்குன்னு காட்ட நானும் உள்ளே நுழைஞ்சேனா! ஒடனே கதவைத் தாப்பாள் போட்டு..!” இவ்வளவு தூரம் பேசியதாலோ, அல்லது முன்பு ஒரு நாள் நடந்ததை அப்போதுதான் நடந்த விபத்துபோல மீண்டும் நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்ததாலோ, ராஜத்துக்கு மூச்சு வாங்கியது. அவளை அவள் போக்கிலேயே விட்டுவிட்டு, அனுசரணையாக காத்திருந்தார்கள் தோழியர். சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மீண்டும் தொடர்ந்தாள். “நான் என்ன, சின்னப்பொண்ணா? அப்படி ஒண்ணும் பாதி ஒடம்பு தெரியறமாதிரி டிரஸ் பண்ணிக்கிறதுமில்ல. இருந்தாலும்..!” ஆத்திரத்துடன் குறுக்கிட்டாள் தீபா. “அப்போ, சின்ன வயசா, கவர்ச்சியா இருக்கிற பொண்ணுங்ககிட்ட தப்பா நடக்கலாம்கிறீங்க! அப்படித்தானே?” சற்று திணறிப்போனாள் ராஜம். அப்படித்தானே அவள் இத்தனை காலமும் நம்ப வைத்திருக்கிறார்கள் வீட்டுப் பெரியவர்கள்? எந்தப் பெண், குடும்பத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், உடனே, `இவள் என்ன செய்தாளோ!’ என்று அவளுக்கு எதிராக வாதாடுவதுதானே சாதாரணமாக எல்லாப் பெண்களும் செய்வது?  அவளும்கூட அதைத்தானே செய்து வந்திருக்கிறாள்? அநியாயம்! நிலைமை மோசமாவதை உணர்ந்து, வினுதா சமரசத்தை நிலைநாட்ட முயன்றாள். அவளே இப்போது நிறைய புரிந்துகொண்டிருந்தாள். `கல்யாணமானால் தானே தெரிந்துவிட்டுப் போகிறது!’ என்று அசட்டையாக விட்டிருந்த பாலியல் சம்பந்தமான விஷயங்கள் இப்போது அலசப்பட்டன. கனியாத காய்கூட, அவசியம் நேரிடும்போது, செயற்கையான வழிகளில் பழுக்க வைக்கப்படுவதில்லையா? அது போல்தான். “ரேப் என்கிறது,” என்று ஆரம்பித்த வினுதா, அதிகப் படிப்பறிவு இல்லாத சில பெண்களுக்கு அந்த வார்த்தை புரியுமோ என்னவோ என்று, “ரேப்னா கற்பழிப்பு. அதுக்கும் உடல் கவர்ச்சிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லே!” என்று விளக்க ஆரம்பித்தாள். இரு மனங்கள் ஒன்றுபட்டோ, அல்லது பரஸ்பர ஒப்புதலாலோ உடலுறவு கொள்வது உடல் இச்சையால். ஆனால், ஒரு பெண்ணை பலாத்காரம் செய்பவன் பிறர்மேல் தன் ஆதிக்கத்தைச் செலுத்துவதில்தான் குறியாக இருக்கிறான். பெண்களை இழிவு படுத்துவதுதான் அவன் நோக்கமே தவிர, அவர்கள்மேல் அன்பெல்லாம் கிடையாது. குறைந்த பட்சம், உடலுறவில் ஆசை என்பதுகூட கிடையாது. அவனுக்குள்ளே இயற்கையா இருக்கிற பாலுணர்வை வெளிக்காட்ட பலாத்காரம்தான் அவன் அறிந்த ஒரே வழி. தான் எப்போதோ படித்திருந்தது வினுதாவுக்கே அப்போதுதான் அர்த்தமாகியது. “சில பேருக்கு எந்தக் காரணத்தினாலோ பெண்கள்மேல் ஆத்திரம், வெறுப்பு. அதனால, அவங்கமேல மிருக பலத்தைக் காட்டினா, அதிலே ஒரு குரூரமான திருப்தி, மகிழ்ச்சி!” சற்று கலகலப்பு அடைந்தவளாய், தீபாவும் சேர்ந்துகொண்டாள்: “நான் ஒரு புக் படிச்சேன். ஒரு ஜெயில்லே இருந்தவங்களை -- அதிலே ரேபிஸ்ட்டை மட்டும் -- ஒரு மனோத்ததுவ நிபுணர் நிறைய தடவை சந்திச்சு, ஏன் அவங்க குத்தவாளிகளா ஆகிட்டாங்கன்னு எழுதியிருக்காரு. நிஜமா நடந்தது!” இடையில் புகுந்து, “ரேப் பண்ணறவங்க ரேபிஸ்ட்,” என்று வினுதா விளக்கினாள், முணுமுணுப்பாக. “ஒருத்தன் -- சின்னப் பையனா இருந்தப்போ, சோனியா, பயந்தவனா இருந்தானாம். அவனோட அப்பா தினமும் அம்மாவைக் கண்டபடி திட்டி, அடித்து, உதைப்பார். ரத்தம் வழிய நிக்கற அம்மாவைக் காப்பாத்தணும்னு பையனுக்கு அடிச்சுக்குது. ஆனா, அப்பாவை எதிர்க்கிற தைரியமோ, பலமோ அவனுக்கு இல்லே. ஒவ்வொரு நாள் அம்மா சித்திரவதைப்படறபோதும், தன்மேலேயே வெறுப்பு வளர்ந்திருக்கு -- `இதைக்கூட என்னால செய்ய முடியலியே!’ன்னு. அந்தக் குத்த உணர்ச்சி அம்மாமேலேயும், பொதுவா எல்லாப் பொண்ணுங்கமேலேயும் வெறுப்பா மாறிடுச்சு”. “எங்க வீட்டுக்காரர்கூட எப்பவும் சொல்வாரு, `பொம்பளைங்களால எப்பவும் கஷ்டம்தான்!’ அப்படின்னு”. இன்னொரு இடைச்செருகல். எல்லார் முகத்திலும் லேசான சிரிப்பு. “அப்புறம் அந்தப் பையன் என்ன ஆனான்?” “பதினெட்டு வயசானதும், கூட வேலை செய்யற பொண்ணு ஒண்ணு அவனைப் பாத்து யாதார்த்தமா சிரிச்சிருக்கு. `கொஞ்சம் இப்படி வா’ன்னு கட்டடத்துக்குப் பின்னால கூட்டிட்டுப்போய் கெடுத்துட்டான். பிடிபட்ட அப்புறம், `அவதான் என்னைப் பாத்து சிரிச்சா!’ன்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தானாம்!” “இதுவும் ஒருமாதிரி பைத்தியம்தான், இல்லே?” அதிசயித்தவள் ராஜம். தாம் ஏன் தவறு செய்கிறோம் என்று தமக்கே புரியாது, சில சமயம், செய்வது தகாத காரியம் என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாதிருந்த சமூகக் குற்றவாளிகளின்மேல் பரிதாபம்கூட ஏற்பட்டது அவளுக்கு. “மொதல்லே குத்தம் செஞ்சது அவனோட அப்பா. அதை எதிர்க்க வழி தெரியாம ஏத்துக்கிட்டது அவங்கம்மா செஞ்ச தப்பு. கடைசியிலே குத்தவாளியா மாட்டிக்கிட்டது அவங்க பெத்த மகன்! சே! என்ன ஒலகம்!” தம்மைப்பற்றியே சுழன்றுகொண்டிருந்த அப்பெண்களின் எண்ண அலைகள் பொது அறிவால் விரிவடைய ஆரம்பித்திருந்தது. “எல்லா ரேபிஸ்டுமே இந்தமாதிரி வளர்ந்தவங்க இல்லே. எனக்கு சின்ன வயசில ஒரு பையனோட நல்ல பழக்கம். எப்பவும் ஒண்ணா விளையாடுவோம். அப்பல்லாம் அவங்கப்பா அவனை பெல்டால அடிப்பாருன்னு வந்து சொல்வான்”. “எதுக்கு அடிக்கிறது? சின்னப்பையன்தானே!” “எந்த வயசானாலும், பையன்களும், பொண்ணுங்களும் சேர்ந்து பழகக்கூடாது, அதுதான் ஒழுக்கம் போதிக்கிற வழின்னு சிலபேர் நினைக்கிறாங்களே!”   “கூடாது, கூடாதுன்னு சொல்லியே, `அப்படி இந்தப் பொண்ணுங்ககிட்ட என்னதான் இருக்கு?’ன்னு, ஒரு விதமான, வேண்டாத ஆர்வத்தை உண்டாக்கிடறாங்க. அவன் பல பெண்களை பலாத்காரம் பண்ணி, கடைசியிலே பிடிபட்டு, இப்போ ஜெயில்ல இருக்கான்னு கேள்விபட்டப்போ, என்னால நம்பவே முடியல. பாவம்! சாது!” “நம்பளை அப்பாகிட்ட அப்படி அடிவாங்க வெச்சது இவங்கதானேன்னு ஆத்திரமா இருந்திருக்குமில்ல!” அதிசயமாக, தேவி தன் கணிப்பைக் கூறினாள். “சாப்பிட்டுட்டு வந்து பேசலாமே!” என்று ராஜம் யோசனை தெரிவிக்க, எல்லாரும் முழுமனதாக அதை ஏற்று, எழுந்தார்கள். 6. சுட்டுத்தள்ளு, சமூகப் புல்லுருவிகளை       அன்று ஞாயிற்றுக்கிழமை. சாவதானமாக எழுந்திருந்து, இட்லியையும், வெங்காய-புதினா சட்னியையும் சுவைத்துக் கொண்டிருந்தார் அருண். நடந்ததை மாற்றவோ, மறக்கவோ முடியாது என்ற நிலையில், ஒருவித விரக்தி வந்திருந்தது. சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் மீண்டும் சற்று பிடிப்பு வந்திருந்தது. அவர் அப்படி நிச்சிந்தையாக இருப்பதைக்கூடப் பொறுக்க முடியாதவள்போல், அகிலா கேட்டாள், “போலீசுக்குப் போனீங்களே, என்னமோ பெரிசா! என்னத்தைச் செஞ்சு கிழிச்சுட்டாங்க?” “சாப்பிடறப்போ எதுக்கு இந்தப் பேச்சு?” என்று அருண் முகத்தைச் சுளித்தார். இருந்தாலும், அவருக்குள்ளும் அதே எண்ணம் அடிக்கடி எழாமலில்லை. குற்றவாளியை இனி எங்கே பிடிக்க முடியும் என்று ஏற்பட்ட அயற்சியில், எந்த மாதிரியான மனிதன் இப்படி ஒரு காரியம் செய்யத் துணிகிறான் என்று அவர் யோசனை போயிற்று. மனச்சாட்சிக்குப் பயந்தவன்தான் தவறு செய்யத் தயங்குகிறான். அவனையும் மீறி தப்பு செய்துவிட்டாலும், அது விளைவிக்கும் குற்ற உணர்ச்சியாலும், பயத்தாலுமே எளிதாகப் பிடிபடுகிறான். ஆனால், மனச்சாட்சி என்ற ஒன்றே இல்லாது, தன் மனம்போனபடி எல்லாம் நடக்கலாம், பிறர் அதனால் எவ்வளவு துன்பப்பட்டாலும் நமக்கென்ன வந்தது என்பதுபோல் நடப்பவன் எதில் சேர்த்தி? சாதாரண மாந்தருக்கென தோற்றுவிக்கப்பட்ட சட்டமும், காவல்துறையும் அவனை எதிர்த்து ஒன்றும் பண்ணமுடியாதோ? பிடிபட்டால்கூட, சில காலம் சொகுசாக சிறையில் இருந்துவிட்டு, துளியும் மாறாமலேயே வெளியில் வருகிறான்கள், அயோக்கியப் பயல்கள்! வந்து, மீண்டும் அதே கொடிய செயலைத்தான் புரியப்போகிறார்கள்! இந்தமாதிரியான சமூகப் புல்லுருவிகளைச் சுட்டுத்தள்ள வேண்டும். கோலாலம்பூரில், ஓர் அடுக்குமாடிப் பகுதியில் இருந்த காவல்காரன் அங்கு வசித்த ஒரு ஐந்து வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்து, கொன்றுவிடவில்லை? பாவம், குழந்தை, தனியாக கீழே இருந்த கடைக்கு மிட்டாய் வாங்கப் போயிருக்கிறது! தெரிந்தவன்தானே என்று அவன் அழைத்ததும் நம்பி, கூடப் போயிருக்கிறது! இதே குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு வந்தவன் என்பதை காரியம் மிஞ்சியபிறகு கண்டுபிடித்து, பத்தி பத்தியாக எழுதுகிறார்கள்! இம்மாதிரியானவர்களை எதற்காக உயிரோடு விட்டுவைப்பது? சில  தீயவர்கள்தாம் எத்தனை பெண்களை ஆயுளுக்கும் காயப்படுத்தி விடுகிறார்கள்! அப்பெண்கள் மட்டுமா! சிட்டுக்குருவிபோல் இருந்த அன்புத் தங்கை இப்படி தனது உணர்ச்சிகளிலேயே மூழ்கிப்போய், தன் உடலழகிலும், தன்னைச் சுற்றி நடப்பதிலும் எந்தவித அக்கறையும் காட்டாது இருப்பதைப் பார்த்து அவர் உள்ளமும்தான் அழுகிறது. அவளுக்குச் சமாதானம் கூறத் தெரியாது, அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களைப்பற்றியே அருணுடைய எண்ணங்கள் சுழன்றன. `அந்த அயோக்கியன் மட்டும் என் கையில் கிடைத்தால்..!’ மிருகமாக மாறி இருந்த மனிதனை, கேவலம், பண்பட்ட பேச்சும், நடத்தையும் கொண்ட தன்னால் என்ன செய்துவிட முடியும்! படிக்கும் நாட்களில் தற்காப்பு கலை எதையாவது தானும் கற்று, தங்கைக்கும் பழக்கி வைத்திருக்கலாம் என்று காலங்கடந்து, யோசனை போயிற்று. எதிரிகளை ஒரே அடியில் மண்ணைக் கவ்வ வைத்திருக்கலாம்! உருப்படியாக எதையும் யோசிக்கவோ, செய்யவோ முடியாததில், அருணுக்குத் தன்மீதே வெறுப்பு உண்டாயிற்று. சுயநம்பிக்கையே அற்றுவிட்டதுபோல் இருந்தது. சாப்பிட்டு முடிந்த பிரக்ஞைகூட இல்லாது, குனிந்த தலையுடன் தட்டையே வெறித்துக்கொண்டிருந்தார். கணவரை அவருடைய குருட்டு யோசனைகளுடன் தனித்திருக்க விட்டுவிட்டு, பங்களா வாசலில் இருந்த பெரிய தோட்டத்துக்கு வந்தாள் அகிலா. மரத்திலிருந்து உதிர்ந்திருந்த பவழமல்லியைப் பொறுக்கிக்கொண்டிருந்த வினுதா, “நான் அப்புறமா பசியாற வரேன், அண்ணி!” என்று, மெல்ல அவளைத் திரும்பிப் பார்த்துச் சொன்னாள். அதன்பின் இருவருமே ஒன்றும் பேசவில்லை. பேச என்ன இருந்தது! அகிலாவுக்குத் துக்கம் பொங்கியது. எப்படி இருந்த குடும்பம்! இன்று நிரந்தரமான இழவு வீடுபோல ஆகிவிட்டதே! தனக்காகப் பரிதாபப்படுவதா, அண்ணன், அண்ணியின் மகிழ்ச்சியையும் பறித்துவிட்டோமே என்று வருத்தப்படுவதா என்று வினுதாவுக்கும் புரியவில்லை. எல்லாவற்றுக்கும் தான்தான் காரணம்! நான் ஏன் அன்று புத்திகெட்டதனமாக அந்த டாக்ஸியில் ஏறினேன்! ஏற்கெனவே வேறு ஒருவன் அதற்குள் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தாவது சற்று யோசித்திருக்க வேண்டாமா? எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்துவிட வேண்டும் என்ற படபடப்பு! அப்படியாவது ஊர்சுற்றப் போகாவிட்டால் என்ன? இந்த ஆறு, ஏழு மாதங்களில் எவ்வளவோ தடவை இப்படியெல்லாம் யோசித்தாயிற்று! பெருமூச்சுடன் எழுந்தாள். “சாப்பிட்டுட்டு, எங்க சங்கத்துக்குப் போறேன்,” என்று பொதுவாகத் தெரிவித்தாள். வீட்டில், அன்பான உறவினர்களுடன் இருக்கையில், அவர்களுடைய பரிவும், கண்ணில் தெரியும் வேதனையும் அவளை நலிவுறச் செய்தன என்றால், தனக்கு நேர்ந்த அதே கொடுமையை அனுபவித்த பிற பெண்களுடன் கலந்து பேசும்போது, அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் முயற்சியில் வினுதாவுக்கு ஒரு புதிய தைரியம் பிறந்தது. சாப்பிட்டுவிட்டு புறப்படத் தயாரானபோது, அகிலா மெள்ளக் கூறினாள்: “மோகன் இன்னும் ரெண்டு நாளிலே திரும்பி வர்றாரே!” ஒரு கணம் விழித்தாள் வினுதா. மோகன்? ஓ, அவரா? ஏதோ வேறு ஜன்மத்தில் நடந்ததுபோல் இருந்தது, மோகனும், அவளும் காதலர்களாக, எப்போதும் உல்லாசமாக இருந்தது. மோகனுடைய மேற்படிப்பு அதற்குள் முடிந்துவிட்டதா! சற்று அதிர்ச்சியாக இருந்தது. `படிப்பு முடிந்ததும், நம் கல்யாணம்தான்,’ என்று கண்ணடித்தபடி, மோகன் விமானதளத்தில் விடைபெற்றுக்கொண்டபோது அடைந்த வெட்கமும், ஆனந்தமும் இப்போது அருவருப்பை உண்டுபண்ணியது. இப்போது மனம் இருக்கும் நிலையில், குழப்பத்திற்கு ஒரு நிவர்த்தி காணாது, ஒரு புதிய வாழ்க்கையை ஏற்க முடியுமா? அவளுடைய முகபாவத்திலிருந்தே மனப்போராட்டத்தை அறிந்தவளாய், “ஒன்னை `மறந்துடு’ன்னு சொல்லல. இது மறக்கற விஷயம் இல்லதான். ஆனா, அதுக்காக இது ஒண்ணையே நினைச்சுக்கிட்டு, இனி எப்பவுமே இப்படியே இருந்துட முடியுமா, வினு?” என்று நாசூக்காக எடுத்துக்கூறினாள் அகிலா. அதற்கு என்ன பதில் கூறுவது என்று புரியாதவளாய், கலங்கிய கண்களுடன் அவளை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, வாசலை நோக்கி நடந்தாள் வினுதா. 7. மீண்டும் தாடிக்காரன்        வழியில், சினிமா தியேட்டர் அருகே ஒரே கும்பலாக இருந்ததைக் கண்டதும், வினுதாவின் உதடுகள் அலட்சியத்துடன் நெளிந்தன. எப்போதோ அண்ணா சொல்லியிருந்தது நினைவில் எழுந்தது. தணிக்கையே செய்யாது, உடலிச்சையையும், அரைகுறை நிர்வாணத்தையும் பிரதானமாகக் கொண்ட ஆங்கிலப்படங்கள் கோலாலம்பூரில் காட்டப்பட்டபோது, டிக்கட் வாங்க மூன்று மைல் நீளத்திற்கு வரிசை பிடித்து நின்றார்களாம்! அந்தச் சமயத்தில் கற்பழிப்புச் சம்பவங்கள் அதிகரித்ததால், அரசாங்கம் அவற்றிற்குத் தடைபோட, கணவன்-மனைவி உறவுக்கு இம்மாதிரியான படங்கள் தேவை என்று மனோத்தத்துவ நிபுணர்கள் தினசரிகளில் பத்தி பத்தியாக எழுதினார்களாம். நல்லவேளை, அவர்கள் தோற்றார்கள்! கெட்டுப்போகத்தான் மனிதன் எப்படியெல்லாம் குறுக்கு வழிகளை நாடுகிறான்! வினுதாவுக்கு தான் தொலைகாட்சியில் பார்த்த `குற்றவாளி’ (THE ACCUSED) என்ற படம் நினைவுக்கு வந்தது. அரைகுறையாக உடையணிந்து, ஆண்களுடன் சிரித்துப் பேசும் தொழில் புரியும் ஒருத்தி பகிரங்கமாக `பாரில்’ கற்பழிக்கப்படுகிறாள். குடித்துக்கொண்டிருந்தவர்கள் பலரும் பார்த்து ரசித்து, கூச்சல் போடுகிறார்கள். எவரும் அவளுக்கு உதவ முன்வருவதில்லை.`ஒழுக்கம் கெட்டவள்தானே!’ என்ற அலட்சியம்! வன்முறைக்கு ஆளாக்கப்பட்டால், அதனால் விளையும் பயம், அதிர்ச்சி, துக்கம், கோபம் எல்லாவற்றிற்கும் இம்மாதிரியான பெண்கள் மட்டும் விதிவிலக்கா? தொழிலோ, பொழுதுபோக்கோ செக்ஸ் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், அவர்களும் மனிதப்பிறவிதானே! வினுதாவுக்கு நாட்டில் நடந்த இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. `உடல் வியாபாரம் செய்கிறாள்!’ என்று குற்றம் சாட்டி, அயல்நாட்டுப் பெண் ஒருத்தியை பிடித்து வைத்திருந்தபோது,  வேலியாக இருக்கவேண்டிய காவல்துறையினரே பயிரை மேய்ந்த செய்தி வெளியாகி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கைது செய்யப்பட்டபோது, பெண்கள் இயக்கங்கள் எல்லாம் எப்படி கொதித்து எழுந்தன! பொதுவாக ஆண், பெண் எல்லாருமே இந்தமாதிரி விஷயங்களில் பெண்களையே குற்றம் சாட்டி, மட்டமாக எடைபோட்டாலும், நியாயத்தையும், தர்மத்தையும் பெரிதாக மதித்துப் போராடுபவர்களும் இல்லாமல் போய்விடவில்லை நாட்டில்! ஏதேதோ யோசித்தபடி காரை ஓட்டிய வினுதா, நான்கு தெருக்கள் கூடும் அந்த இடத்தில் விளக்கின் நிறம் சிவப்பாக மாற, நிறுத்தினாள். யதேச்சையாகத் திரும்பியவள் திடுக்கிட்டாள். அவளுடைய காருக்குப் பக்கத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு ப்ரோட்டான் ஸாகா (PROTON SAGA) டாக்ஸி நின்றிருந்தது. அதன் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தவன் ஏன் தன்னையே பார்க்கிறான்? அவளது படபடப்பு அதிகரித்தது. அவன்தானா இது? பெரிய உருவம், தாடி! முன்பின் தெரியாதவனாக இருநதால், இப்படி அநாகரிகமாக முறைத்துப் பார்க்கமாட்டானே! தான் எப்போதோ NEW STRAITS TIMES  தினசரியில் படித்தது நினைவில் எழுந்து அவளை மேலும் அதிர வைத்தது. பதின்மூன்று வயது தமிழ்ச்  சிறுவன் ஒருவனை ஒரு கும்பல் பிடித்துப்போய், பிணைப்பணம் கிடைத்ததும், பையனை விடுவித்து விட்டது. அதன்பின், பையன் கும்பல் தலைவனை அடையாளம் காட்ட, அவன் தண்டிக்கப்பட்டான். கதை அத்துடன் முடிந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், வீட்டு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அக்கும்பலைச் சேர்ந்த வேறு ஒருவன் சுட்டுக் கொன்றுவிட்டான். இந்த தாடிக்காரனும், `என்ன தைரியத்தில் போலீசுக்குப் போனாய்?’ என்று தன்னை மீண்டும் பிடித்துப்போய், கொன்றே விடுவானோ? வினுதாவின் பயம் அதிகரித்தது. இம்முறை மாட்டிக்கொண்டால், தப்பிப்பது ஏது! ஐயோ! போலீஸிடம் இவன் சிக்குவான் என்று நம்பி, அறியாத்தனமாக புகார் கொடுத்தோமே! இப்போது வசமாக மாட்டிக்கொண்டோம்! பல்வேறு ஹார்ன் ஒலிகள் வினுதாவை சுயநினைவு அடையச் செய்தன. அவளது வலப்புறத்தில் கார்கள் வேகமாக அவளைக் கடந்து கொண்டிருந்தன. இப்போது அந்த டாக்ஸியைக் காணவில்லை. தாடிக்காரனிடமிருந்த இப்போதைக்குத் தப்பினோமே என்ற நிம்மதியுடன், காலை வேகமாக அழுத்தினாள். கார் பறந்தது. அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் அப்பெண்கள் சங்கத்தை அடைந்தாள். காரை நிறுத்திய பின்பும்,மனம் என்னவோ சமாதானப்படவில்லை. இறங்கத் துணிவின்றி, அப்படியே உறைந்துபோய் உட்கார்ந்திருந்தாள். சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தாள். பகல் வேளை. மக்கள் நடமாட்டத்துக்கும் குறைவில்லை.   அவசரமாகக் காரிலிருந்து இறங்கி, ஓட்டமும் நடையுமாக அருகிலிருந்த கட்டிடத்தை நோக்கி ஓடினாள். “ஏன் வினுதா இப்படி ஓடி வர்றே? இங்க யார் துரத்தறாங்க?’ வாசலிலேயே அவளை எதிர்கொண்ட ராஜம் கேலியும், அதிசயமுமாகக் கேட்டாள். “நான் அவனைப் பாத்தேன்!” இரைக்க இரைக்க பதிலளித்தாள். “யாரை? புரியும்படி சொல்லு!” எரிச்சலுடன், “வேறு யாரை? அந்த தாடிக்காரனைத்தான்!” என்று பதிலளித்தாள் வினுதா. `மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்கிற கதைதான்! ராஜத்திற்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டாள். ஒரு வேளை, அவனாகவே இருந்துவிட்டால்? நிதானம் தவறாது, எதையும் பகுத்தறியும் அறிவு பெற்ற வினுதாவே பயந்துவிட்டாளென்றால்! இப்போது ராஜத்துக்கும் பயம் வந்தது. வினுதாவின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, உள்ளே விரைந்தாள். 8. என்னைத் தொடாதே!        “எங்க அத்தை முப்பது வயசிலேயே செத்துட்டாங்க. அப்ப அவங்க குழந்தைக்கு ரெண்டு வயசுதான். இப்ப, இருபது வயசிலே, எங்க அத்தை பொண்ணு `அம்மா எனக்குச் சடை பின்னும்போது நான் அசக்கினா குட்டுவாங்க!’ அப்படின்னு ஏக்கத்தோட சொல்லுவா. இந்தமாதிரி குருட்டு நம்பிக்கையிலே ஒரு திருப்தி!” எதற்காக இப்போது இந்தக் கதை என்பதுபோல் எல்லாரும் அனுசூயாவையே பார்த்தார்கள். “ஒண்ணு தெரியுமா, வினு? சின்னப்பிள்ளைங்க எதையாவது பாத்து பயந்துட்டா, `கறுப்பா, பெரிசா, பூதம் வந்திச்சு!’ன்னு அலறுவாங்க. இப்ப நாம்பளும் அந்த நிலைமையிலதான் இருக்கோம். நடந்த பயங்கரத்தை நம்பளால சரியா நெனச்சுப் பாக்கவும் சக்தியில்ல, அந்த எழவை மறக்கவும் முடியல. கெடுத்தவன் முகம்கூட சரியா ஞாபகம் இல்ல. ஆனா, அவன் ராட்சசன்மாதிரி இருந்தான்னு மட்டும் நம்பத் தோணுது!” அவள் கூறியது உண்மைதான் என்று தோன்ற, அவமானத்துடன் தலையைக் குனிந்துகொண்டனர். அவர்களுடைய அச்சத்துக்கும், வெறுப்புக்கும் வடிகாலாக இப்போது ஒரு ஆண் தேவை. அவரவர் நினைவுக்குத் தகுந்தபடி, அவனைக் கற்பனையில் கண்டுகொண்டிருக்கிறார்கள்! அவர்களிடமிருந்து மாறுபட்டிருந்ததால், அனுசூயாவுக்கு அவர்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் தொடர்ந்தாள்: “இந்தமாதிரி கேசில அனேகம் பேர் பெண்களுக்குத் தெரிஞ்சவங்கதானாம். எனக்கே காலங்கடந்துதான் தெரிஞ்சிச்சு. ஃப்ரெண்டுன்னு நினைச்சு, நான் வித்தியாசம் இல்லாம பழகினேன். அவனோ, பெண்களோட பேசறதே பாவம், அதிலேயும் அவங்களைப் பிடிச்சுப்போயிட்டா அது பெரிய தப்பு, அதுக்காக அவங்களைத் தண்டிக்கணும் என்கிறமாதிரி நினைக்கிற ஒரு `பர்வர்ட்’ (PERVERT). `இதுக்காகத்தானே நீ என்னோடவும், மத்த ஆம்பளைங்களோடயும் பழகறே?’ன்னு..,” என்று அழ ஆரம்பித்தாள். “தான் செஞ்ச தப்புக்கு என்மேலேயே பழி போட்டான், பாவி! நடந்ததை அப்பா, அம்மாகிட்ட சொன்னா, வெளியே விடவே பயப்படுவாங்க. சரி, யார்கிட்டேயும் சொல்லாம இருந்தா, தானே மறந்துடும்னு நினைச்சேன். கோபமே காட்டத் தெரியாத சாதுவான ஒருத்தரைக் கல்யாணமும் செய்துக்கிட்டேன்!” சரளமான கதை தடைப்பட்டது. குலுங்கிக் குலுங்கி அழுதாள் அனுசூயா. அவளை அப்படியே அழ விட்டுவிட்டு, அசையாது அமர்ந்திருந்தார்கள் பிற பெண்கள். இனி, அழுதழுதுதான் அவள் தன் மனப்பாரத்தைக் குறைத்துக்கொள்ள முடியும் என்று புரிந்து, வாளாவிருந்தனர். எப்போதும் பேசுபவர்களெல்லாம் மௌனம் சாதிக்க, அதிசயமாக தேவி வாயைத் திறந்தாள்: “நான் முந்தியெல்லாம் ஓயாம படம் பாப்பேன். பழைய வீடியோ ரெண்டு வெள்ளிக்குக் கிடைக்குமில்ல! வில்லனும், கதாநாயகியும் வந்து, பயங்கரமா ஏதேதோ நடக்கிறப்போ, அதிர்ச்சியா இருக்கும். ஆனா, அப்புறம் ஹீரோ வர்றப்போ எல்லாம் மறந்துபோயிடும்”. சற்று வெட்கப்பட்டுவிட்டுத் தொடர்ந்தாள்: “நமக்கும் கல்யாணமாகி, இப்படி நம்பமேல ஆசையா இருக்க ஒருத்தர் வரமாட்டாரான்னு நானும், பொன்னம்மாவும் பேசிக்குவோம். அவர் கையைப் பிடிச்சு இழுப்பாரு, கன்னதைக் கிள்ளுவாருன்னு சொல்லிச் சொல்லிச் சிரிப்போம். இப்பவோ..! அது எப்படி கதாநாயகி மட்டும்..?” பேச்சு போகும் திசையை உணர்ந்து, திடுக்கிட்டவளாய் நிறுத்தினாள். ராஜம் புரிந்துகொண்டு தலையாட்டினாள். “அதுக்கப்புறம்.., இந்த ஆறு மாசமா என் வீட்டுக்காரர் கை மேல பட்டாக்கூட..,” என்று ஆரம்பித்தவள், இந்த விஷயத்தையெல்லாம் வெளிப்படையாகப் பேசுவதாவது என்று தனக்குத்தானே தடை விதித்துக்கொண்டாள். அவள் சொல்லவந்தது அங்கிருந்த எல்லாப் பெண்களுக்கும் தெளிவாகவே புரிந்தது. இந்தப் பாழும் உடலால்தானே இவ்வளவு துன்பமும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்றோ, அல்லது பொதுவாக எல்லா ஆண்களின்மேலும் ஆத்திரமும், வஞ்சமும் ஏற்பட்டதாலோ, பிறரது கரம் தற்செயலாகத் தங்கள்மீது படுவதைக்கூடத் தாங்கமுடியாது போயிருந்ததை எப்படி வெளியில் சொல்ல முடியும்? சொன்னாலும்கூட, யாருக்காவது புரியுமா? உடலின்மீதிருந்த அக்கறை போயிற்று. சில காலம் உடலைக் கவனிக்காது அலட்சியம் செய்ததில், மனமும் சேர்ந்து வாட, துயரம் அதிகரித்துப்போயிற்று. “அவரு பாவம், நான் அவரை வெறுத்து ஒதுக்கறதா நினைக்கிறாரு. `நீ இப்படியே இருந்தா, நடக்கக்கூடாதது ஏதாவது நடந்துடும். அப்புறம் என்னைத் தப்பு சொல்லக்கூடாது!’ அப்படின்னு அடிக்கடி சொல்றாரு!” கண்களைத் துடைத்துக்கொண்டு அனுசூயா பேசினாள். “நீங்களாவது இருபது வருஷம் ஒண்ணா இருந்திருக்கீங்க, புருஷனும், மனைவியுமா. எங்க வீட்டுக்காரருக்கு மொதல்லேயே தெரிஞ்சு போச்சு, எங்கிட்ட ஏதோ கோளாறுன்னு. பின்னே, கிட்ட வரும்போதே அலறினா? எவ்வளவோ கேட்டுப் பாத்தார்”. “நல்லவருங்கிறீங்க. சொல்லி இருக்கலாமே!” “நடந்ததை எப்படிச் சொல்றது? என்மேலதானே பழி வரும்! சொல்லாட்டிப்போனாலும், ரெண்டு பேருக்கும் மனக்கஷ்டம். வேற வழி தெரியாம, பிரிஞ்சு வந்துட்டேன், அவரோட வாழப் பிடிக்கலேன்னு சொல்லிட்டு!” வீரமாகப் பேசுவதுபோல் பாவனை செய்தாலும், தான் இழந்த வாழ்வை எண்ணி அவளுக்கு வருத்தம் மிகுந்தது. எவ்வளவு அன்பானவர்! அவருடன் வாழக் கொடுத்து வைக்கவில்லையே! “எங்களைமாதிரி ஏழைங்க, படிக்காதவங்கதான் இப்படி ஏமாந்து போவாங்கன்னுதான் நான் நினைச்சுட்டு இருந்தேன்!” தன் அறியாமையை மெல்ல ஒத்துக்கொண்டாள் தேவி. நள்ளிரவில், இருண்ட தெருவில் நடக்க நேரிட்டதால்தான் அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து, பொன்னம்மாவும் அதற்குப் பலியானாள் என்று குமுறிக் கொண்டிருந்தோமே! அனுசூயா, வினுதா போன்ற படித்த, பணக்காரப் பெண்களுக்கும் கஷ்டம் வருகிறது. இந்த ராஜம் அம்மாவை வீட்டுக்குள்ளேயே வந்து கெடுத்திருக்கிறான் ஒரு அயோக்கியன்! தவறு செய்வதில் எல்லா மனிதர்களும் ஒன்றுதான், இனம், செல்வநிலை, உருவம், படிப்பு எல்லாவற்றையும் கடந்தது மனித மனத்தின் வக்கிரங்கள் என்று புரிந்துபோனதில் தேவி புது தெம்பை அடைந்திருந்தாள். எவ்வளவு விவாதித்தாலும் இந்த சமாசாரத்திற்கு முடிவு என்னவோ காணப்போவதில்லை என்ற அலுப்பு பிறக்க, “போகலாம்,” என்றபடி எழுந்தாள் வினுதா. 9. டிடிவாங்க்ஸா பூங்காவில்        வீட்டுக்குள் நுழையும்போதே டெலிபோன் மணி அடித்தது. “எடுங்களேன் ,அண்ணி!” என்று அழைத்தாள், கெஞ்சலாக. “ஒனக்குத்தான், வினு. இதோட மூணு தடவை கூப்பிட்டுட்டாரு,” பூரிப்புடன் கூறினாள் அகிலா. ‘யாரு?’ இதைப்போய் கேட்பானேன், எடுத்துப் பேசினால் தெரிந்துவிட்டுப் போகிறது என்று எண்ணியவளாய், அசுவாரசியமாய் கையில் எடுத்தாள். மோகன்! பரீட்சை மும்முரம் என்று சில மாதங்களாகக் கூப்பிடவில்லை. அதுவே அப்போது நிம்மதியாகவும் இருந்தது அவளுக்கு. இன்று அவன் குரலைக் கேட்டதும், எப்போதும் தோன்றும் உற்சாகம் அறவே வடிந்திருந்தது அவளுக்கே தெரிந்திருந்தது. “நாளன்னிக்கு ஒன்கூட இருப்பேன். ஆனா, அதுக்குள்ளே ஒன் குரலைக் கேக்கணும்னு ஒரே ஆசை! அடக்க முடியலே!” என்று அவன் சிரித்தபோது, அழுகைதான் வந்தது. ஏதோ குற்றம் செய்து பிடிபட்டது போலிருந்தது. `உங்கள் ஆர்வத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லையே, மோகன்! அந்த ஒரே நாளில் என் இனிமையான கனவுகள் எல்லாமே பொசுங்கிப்போய்விட்டதே!’   உடனே தன்மேலேயே கோபமும் எழுந்தது. சே! இவ்வளவு தூரம் இந்த விஷயத்தைப் பிற பெண்களுடன் அலசிவிட்டு, இப்போது ஒன்றும் தெரியாத பேதைப்பெண்ணைப்போல் அழுதுகொண்டு உட்கார்ந்திருப்பதா! “இப்பத்தான் வெளியே சுத்திட்டு வந்தேன், மோகன்! களைப்பா இருக்கு. நேரிலேயே பேசுவோமே!” என்று பேச்சைக் கத்தரித்தாள். அவளையே உற்றுப் பார்த்தபடி எதிரில் நின்றிருந்தாள் அகிலா. இந்தப் பெண் ஏன் பிடிகொடுத்துப் பேசாமல் துண்டித்துவிட்டாள் என்ற குழப்பம். “என்னண்ணி?” “அவருக்கு இருக்கிற அவசரத்தைப் பாரேன்! இந்த மாசமே கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு சொல்வாருன்னு தோணுது!” இந்த வீட்டில் மீண்டும் மகிழ்ச்சி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் அகிலாவின் முகம் விகசித்திருந்தது. வினுதாவுக்கோ பகீரென்றது. ஏதோ கண்காணாத தூரத்திலிருந்து அவ்வப்போது கூப்பிட்டுப் பேசியபோது, அது அவளைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. போனால் போகட்டும், வெறும் பேச்சுத்தானே என்று விட்டிருந்தாள். இப்போது, கல்யாணம், அது, இது என்றால்? கல்யாணம் செய்துகொண்டவர்கள் எல்லாம் -- ராஜம், அனுசூயாபோல் -- கொண்டவருடன் வாழ முடியாது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில், தெரிந்தே, தானும் போய் மாட்டிக்கொள்வதா? அது மோகனுக்குச் செய்யும் துரோகமாகாது? இரண்டு நாட்கள் குழப்பத்தில் கழிந்தன. ஆயிற்று, நாளைக் காலையில் மோகன் வந்துவிடுவார். அவரை எப்படி சமாளிக்கப்போகிறோம்? படபடப்பைத் தாங்கமுடியாது அவள் தவிப்பதைக் கண்ட அகிலா, “எங்கேயாவது காலாற நடந்துவிட்டு வாயேன், வினு!” என்றாள் நாசூக்காக. “இங்க தெருவெல்லாம் ஒரே புகைமூட்டம்.  இந்தோனீசியாவில செம்பனைத் தோட்டம் போடறதுக்காக காட்டிலே இருக்கிற பச்சை மரங்களை எரிக்கிறாங்க, வருஷாவருஷம்! அண்டைஅயல் நாடுங்க எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு நினைச்சுப் பாக்கவேண்டாம்?” என்று பொரிந்தவள், அண்ணி எதற்காக அந்தப் பேச்சை எடுத்தாள் என்று சற்று யோசித்தாள். “வாங்களேன், டிடிவாங்க்ஸா (TITIWANGSA) பார்க் போகலாம்,” என்று அழைத்தாள். “ஏரியும், மரமுமா குளுகுளுன்னு இருக்கும்!” இந்த மனநிலையில், தனியாக இருப்பதுதான் இவளுக்கு நல்லது என்று எண்ணியவளாய், “நீ போயிட்டு, ரெண்டு ரவுண்டு ஜாகிங் பண்ணிட்டு வா. என்னால அதெல்லாம் முடியாது. ஒங்கண்ணாவுக்கு டிபன் பண்ணணும்!” என்று ஏதோ சாக்கு சொன்னாள் அகிலா. அநியாயமாக உடலைப்போட்டு வருத்திக்கொள்ளாதே என்று அண்ணி சொல்வதும் நியாயம்தானே! இனி என்றுமே துக்கப்பட்டுக்கொண்டு முடங்கிக் கிடப்பதால் என்ன பயன்? அப்படி வாழ்க்கையைக் கழிப்பதும், சாகாமல் சாவதும் ஒன்றுதான். வாழ்வு என்றால் கசப்பு மட்டும்தானா? தெளிவுடன், முழுநீளக் கால்சட்டை, காலுறை, சப்பாத்து எல்லாம் அணிந்து, உடற்பயிற்சிக்குத் தயாரானாள் வினுதா. “வர்றேன், அண்ணி! அண்ணா கேட்டா, இருட்டறதுக்கு முந்தி வந்துடறேன்னு சொல்லுங்க!” என்று புறப்பட்டபோது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, தான் சொல்வதுபோல் நடக்காது என்று.   கோலாலம்பூரில் ஆகாயத்தை முட்டும் கட்டிடங்களின் நடுவே, என்றோ ஈயக்குட்டையாக இருந்த ஒரு பெரிய ஏரியைச் சுற்றி பாதை அமைக்கப்பட்டிருந்தது. பெரிய மகிழ மரங்களும், குழந்தைகள் விளையாட பல சாதனங்களும் கொண்டது டிடிவாங்க்ஸா பூங்கா. அங்கு பலதரப்பட்ட மனிதர்கள் வந்திருந்தனர். தாங்கள் மட்டுமே தனித்து இருப்பதாக எண்ணிக்கொண்டு, எதிரெதிரே உட்கார்ந்து கண்ணாலேயே ஒருவரை ஒருவர் விழுங்கியபடி இருந்த இளங்காதலர்கள், வீட்டில் குழந்தைகளின் தொல்லை பொறுக்கமுடியாதுபோக, அவர்களை இங்கே அழைத்து வந்து, அவர்கள் விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டு சந்தோஷக் கூச்சலிட, மனைவியுடன் கடந்தகால இனிமைகளை அசைபோடும் கணவன்மார்கள், தேக ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளித்து, விளையாட்டுக்குழு ஒன்றுடன் சேர்ந்து வந்திருக்கும் இளைய தலைமுறையினர், மருத்துவரின் ஆலோசனைப்படி காற்றோட்டமான இடத்தில் நடைபழக வந்திருக்கும் வயோதிக வியாதியஸ்தர்கள் -- இப்படி இருந்தவர்களுள் இரைக்க இரைக்க ஓடிக்கொண்டிருந்த வினுதாவும் வித்தியாசம் இல்லாது ஒன்றிப்போனாள். விட்ட ஒவ்வொரு பெருமூச்சுடனும், வெளியான வியர்வைத்துளி ஒவ்வொன்றின் மூலமும் மனத்தின் கனமும் சிறிது சிறிதாக நழுவிவிட்டதுபோல், உல்லாசமாக உணர்ந்தாள். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, `அண்ணிக்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும்! என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, சற்றுத் தூக்கக்கலக்கத்துடன் தனது காரை நிறுத்தி வைத்திருந்த இடத்திற்குப்போனாள். “மேடம்!” யாரோ அவளை அழைத்தார்கள். திரும்பியவளுக்கு மூச்சு நின்றுவிடும்போல இருந்தது. அவளுக்குப் பின்னால், மிக மிக அருகே நின்றிருந்தது -- அதே தாடிக்காரன்! காருக்குள் தற்காப்புக்காக இப்போதெல்லாம் எடுத்துப்போகும் `பெப்பர் ஸ்ப்ரே’ அவள் நினைவுக்கு வந்தது. `ஓயாமல், தனியாக ஊர்சுற்றுகிறாயே!’ என்று அண்ணி கடிந்தகொண்டபின் வாங்கிய சிறிய பாட்டில். அதை அமுக்கினால் பீய்ச்சியடிக்கும் திராவகம் எதிராளியின் முகத்திலும், கண்ணிலும் எரிச்சலை உண்டாக்கி, அவனைத் தாற்காலிகமாக செயலிழக்க வைத்துவிடும்;. மேல்நாட்டில் எல்லாப் பெண்களுமே கைப்பையிலோ, பாக்கெட்டிலோ இதை வைத்திருப்பார்கள் என்று எப்போதோ மோகன் தெரிவித்திருந்தது அண்ணியைச் சமாதானப்படுத்த சௌகரியமாகப் போயிற்று. கூடவே ஒரு விசில் வேறு. அதை ஊதி, தொலைதூரத்தில் இருப்பவர்களையெல்லாம் துணைக்கு அழைக்க வழிவகுப்பது. ஏதோ அவசரத்தில், முக்கியமான இந்த இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொள்ளத் தோன்றாமல் போய்விட்டதே! என்ன முட்டாள்தனம்! அளவுக்கு மீறிய பயத்தால் இருதயம் கனவேகமாக அடித்துக்கொண்டது. ஏற்கெனவே வழக்கத்துக்கு விரோதமாக அதிகப்படியான உடற்பயிற்சி செய்து களைத்திருந்த உடல், இப்போது இந்த அதிர்ச்சியையும் தாங்கமுடியாதுபோக, தன்னிலை இழந்தது. நின்ற இடத்திலேயே சரிந்து விழுந்த வினுதாவை அலக்காகத் தூக்கினான் அந்த தாடிக்காரன். 10. கத்தி வாங்கினேன்       வினுதாவுக்கு விழிப்பு வந்தது. ஆனால், உடனே கண்ணைத் திறக்க பயமாக இருந்தது. முன்பு ஒருமுறை, இதேமாதிரி, எங்கே இருக்கிறோம் என்றே புரியாது, சேற்றில் அலங்கோலமாக விழுந்து கிடந்தது அவ்வளவு சுலபமாக மறந்துவிடுமா? இப்போது தான் தனியாக இல்லை என்று தோன்றியது. சுற்றிலும் பேச்சுக்குரல் கேட்கிறதே! `நடக்கிறது நடந்துவிட்டுப் போகட்டும்!’ என்று கண்ணைத் திறந்தாள் ஒருவழியாக. அவளைச் சுற்றிலும் ஒரு கும்பலே இருந்தது. டிடிவாங்க்ஸா பார்க்கில் மரத்தடியிலிருந்த ஒரு சிமெண்டுப் பெஞ்சில் படுத்திருக்கிறோம்! எழுந்து உட்கார்ந்தாள். யாரோ ஒருவர்  போத்தலில் இருந்த குடிநீரை அவளிடம் நீட்டினார். தனது நன்றியை முணுமுணுத்துவிட்டு, அதைக் கைநீட்டிப் பெற்றுக்கொண்டாள். ஒரு வாய் குடித்ததும், சற்று தெம்பு வந்தாற்போல் இருந்தது. உலகில் நல்லவர்களும் இல்லாமல் போய்விடவில்லை! இவ்வளவு பேர் தன்னுடன் இருக்கும் தைரியத்தில், தலையைத் திருப்பி, கண்ணையும் சுழலவிட்டாள். மறுபடியும் நா வரண்டு போயிற்று. அவன்தான்! மீண்டும் மயங்கிவிடாது இருக்க, இன்னொரு மடக்குக் குடித்தாள். படுபாவி, இவளை உயிரோடு விட்டு வைத்திருந்தால் நமக்குத்தான் ஆபத்து என்று, தன்னைத் தீர்த்துக்கட்டும் நோக்கத்துடன்தான் சுற்றிச் சுற்றி வருகிறான்! சந்தேகமே இல்லை! அவளுடைய பார்வையில் அவனுக்கு என்ன புரிந்ததோ, சரேலென அங்கிருந்து விலகிப் போனான். ஆசுவாசப்படுத்திக்கொண்டு, சற்றே வெட்கத்துடன் அங்கிருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வினுதா காரை நோக்கிப்போனாள். ஏறுமுன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டாள். யாரும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டு, காருக்குள் ஏறியவுடன் கதவைத் தாழிட்டுப் பூட்டினாள். உள்ளே, தற்காப்புக்காக வைத்திருந்த விசிலும், ஸ்ப்ரேயும் இருக்கிறதா என்று ஒருமுறை பரிசீலனை செய்துகொண்டாள். `எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது!’ என்று எண்ணும்போதே கோபமும், வருத்தமும் சேர்ந்து வந்தன. `எல்லாரையும் நம்பி, எதிலும் உற்சாகமாகப் பங்குகொண்ட நான்! ஒரு காமுகனது பொறுப்பற்ற செயலால், இனி எவரையும் நம்பவே கூடாது! என்று இன்னொரு துருவத்துக்குப் போய்விட்டேனே!’ என்னை இப்படி பற்றிழந்து வாழவைக்க அந்தப் பாவிக்கு என்ன உரிமை?   அவனைப் போன்றவர்களை எல்லாம் விட்டு வைக்கவே கூடாது. சமூகத்துரோகிகள்! தன்னையும் அறியாது, வினுதாவின் பிடி இறுகியது. `என் கையில் மட்டும் அவன் கிடைத்தால், அப்படியே சீவி விடுவேன்!’ எண்ணத்தின் கொடூரம் முகத்திலும் பரவியது.   அவள் வீடு திரும்பியபோது, கிட்டத்தட்ட ஒன்பது மணியாகியிருந்தது. அருணும், அகிலாவும் கவலையே உருவாக வாசலிலேயே காத்திருந்தனர். அவர்களை அந்த நிலையில் கண்டதும் வினுதாவுக்குக் கோபம் வந்தது. “நான் என்ன சின்னப் பாப்பாவா? வெளியில போனா, தானே வீடு வந்துசேரத் தெரியாதா?” என்று எரிந்து விழுந்தாள். அவர்கள் எதுவும் பதிலளிக்காதது அவளை என்னமோ செய்தது. குரலைத் தாழ்த்தியபடி, “பார்க்கிலே அந்த தாடிக்காரனைப் பாத்தேன், அண்ணா!” என்பதற்குள், “ஐயையோ!” என்ற அலறினாள் அகிலா. “நானும் இப்படித்தான் பயந்துட்டேன்,” என்று அசட்டுச் சிரிப்புடன் ஒத்துக்கொண்டாள். மயங்கி விழுந்த கதையையெல்லாம் சொல்லி, இந்த நல்ல உள்ளங்களை மேலும் கலக்க வேண்டாம் என்று நிச்சயித்தவளாக, “மூட் மாற, அப்படியே யாவ் ஹான் ஹைபர் மார்கெட்டுக்குப் போய், நல்ல கூரா ஒரு கத்தியும், சில டிரெஸ்ஸும் வாங்கிட்டு வந்தேன்!” என்று ஒப்பிப்பதுபோல் கூறினாள். தலை குனிந்திருந்தது. “டிரெஸ், சரி. கத்தி எதுக்கும்மா?” “சும்மா ஒரு தைரியத்துக்குத்தான் அண்ணா. ஏற்கெனவே விசில், பெப்பர் ஸ்ப்ரே எல்லாம் வாங்கிட்டேனே!” சிரிக்க முயன்று தோற்றாள். ஒரு பெருமூச்சுடன் அகிலா கணவரைப் பார்த்தாள். அப்பார்வையில் எத்தனையோ அர்த்தங்கள் இருந்தன. 11. எங்களாலும் வதைக்க முடியும்        மறுநாள் தினசரியில் வந்த செய்தி அவ்வீட்டையே கலக்கியது. சமீபத்தில் கற்பழிப்பு கேஸ் ஒன்றில் சம்பந்தப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்த ஒருவனது உடல் ரத்தம் தோய்ந்த பாண்டேஜுடன் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு சந்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அவனுடைய ஆண் உறுப்பு வெட்டப்பட்டிருந்தது! இதே கோலாலம்பூரில்! நம் குடும்பத்தில் ஒருவர்தான் இக்குற்றத்தைச் செய்திருக்க வேண்டும் என்பதில் மூவருக்கும் சந்தேகமே இருக்கவில்லை. பாப்பிட் (BOBBIT) என்பவன் `ஊர் மேய்வதைப்’ பொறுக்க முடியாது, அவன் மனைவியே இப்படிச் செய்திருந்தாளே, அமெரிக்காவில்! அதன்பின், பல நாடுகளிலும், `ஓ! கெட்டவர்களைத் தண்டிக்க இப்படியும் ஒரு வழி இருக்கிறதா!’ என்று நினைத்தவர்கள்போல், இதேமாதிரிச் சம்பவங்கள் நிகழ ஆரம்பித்து இருந்ததை மூவரும் நினைத்துப் பார்த்தார்கள். சென்னையில்கூட ஒரு படிக்காதவள் இப்படிச் செய்யவில்லை? இப்போது, இங்கும்! ஏன் இப்படி? எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக ஆண்களுக்கு அடிமையாக, அவர்கள் ஆட்டுவித்தபடியெல்லாம் ஆடி, அதனால் தம்மைத்தாமே வதைத்துக்கொண்ட பெண்கள் பொறுக்க முடியாதுபோய், `எங்களாலும் உங்களைப் பணிய வைக்க முடியும்!’என்பதைக் காட்டிக்கொள்ள இப்படிச் செய்யத் துணிந்துவிட்டார்களா? என்னமோ கத்தி வாங்கி வைத்துக்கொண்டதாகக் கூறினாளே, இந்த அசட்டுப்பெண்! தவறு செய்திருந்தால் யாரும் அதை மறைக்கத்தான் பார்ப்பார்கள். தானே அதைப்பற்றிப் பேசுவார்களா என்று அகிலா யோசித்தாள். ஆனால், வினுதா இப்போதெல்லாம் நடந்துகொள்வதைப் பார்த்தால், புத்தி சுவாதீனம் உள்ளவள் செய்வதைப்போலவா இருக்கிறது! கொடுமைக்காரனான எந்த ஆணையும் எது வேண்டுமானாலும் செய்யலாம், சட்டம் ஒன்றும் செய்யாது என்று நினைத்திருக்கலாம். அமெரிக்காவில் அந்த பாப்பிட்டின் மனைவி, `குற்றம் புரிந்தபோது, மனோநிலை சரியில்லை,’ என்று விடுவிக்கப்பட்டிருந்தாளே! அதனால் இவளுக்கும் தைரியம் வந்துவிட்டதோ? தங்கைதான் இப்படி என்றால், அண்ணன் இவளுக்குமேல். எந்நேரமும் ஏதோ யோசனை! பேசுவது அறவே நின்றுவிட்டது. மனைவியின் அருகே  வருவதுகூட தகாத செயல் என்று நினைப்பவர்போல, அப்படி ஒரு விட்டேற்றியான போக்கு. `ஆராய்ச்சி செய்கிறேன்,’ என்ற நொண்டிச் சாக்கில், வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் தனது ஆராய்ச்சிக்கூடத்திலேயே கழிக்கிறார். படுக்கையும் அங்கேயே. இன்னும் எத்தனை காலம் இப்படியே தள்ள வேண்டுமோ என்று அகிலாவுக்கு மலைப்பு ஏற்பட்டது. ஏதாவது பேசி, மௌனத்தைக் கலைக்க வேண்டும்போல இருந்தது. “மோகனோட ப்ளேன் எத்தனை மணிக்கு வருதாம், வினு?” “எங்கிட்ட சொன்னதே நீங்கதானே, அண்ணி?” சிரித்தபடி வந்தாள் வினுதா. “இதோ ஏர்போர்ட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கேன்!” அவளுடைய அலங்காரத்தைப் பார்த்துத் திகைத்தே போனாள் அகிலா. வீட்டுக்கு வெளியே கால்வைத்தாலே புடவைதானே அணிவாள்? ஏதோ, உடற்பயிற்சி செய்யும்போது மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் இன்று -- இது என்ன கோலம்! அவளுடைய பார்வை போன இடத்தை உணர்ந்து, வினுதா தானே கூறினாள்:  “மினி ஸ்கர்ட்! காலிலே முக்கால்வாசி அழகாத் தெரியுதில்ல!” கால் மட்டுமா தெரிந்தது! வயிற்றிற்கு மேலேயே நின்றுவிட்ட, கையில்லாத டீ ஷர்ட்! முன்கழுத்து வேறு அபாயகரமாக கீழே இறங்கியிருந்தது. உடலின் வளைவுகளைக் கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இருக்கவில்லை. உதட்டுச்சாயமும் உதடுகளுக்கு மேலே பூசப்பட்டு, பிறர் அவளைத் தவறாக எடைபோட வழிவகுத்துக் கொண்டிருந்தது. “நேத்து இதைத்தான் வாங்கினியா?” ஏதோ கேட்டு, சமாளிக்கப்பார்த்தாள். இந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? என்றுமில்லாமல், இப்போது எதற்காக இப்படி அழகான உடலை ஒளிவுமறைவில்லாது காட்டி, ஆண்களைக் கிறங்கச் செய்யவேண்டும்? ஒரு முறை வதைக்கு ஆளானவர்கள், தம்மையும் அறியாது, வதைப்பவர்களின் உறவையே மீண்டும், மீண்டும் நாடுவார்களாமே! கடவுளே! இன்னொரு முறை அப்படி நடந்தால், இவள் தாங்குவாளா? இது என்ன விஷப்பரீட்சை! `இப்படியேவா போகப்போறே?’ என்று கேட்கவந்ததை அடக்கிக்கொண்டாள். தலைக்குமேல் வளர்ந்துவிட்ட பெண்! தட்டிக்கேட்க தான் யார்? தான் அண்ணியின் மனத்தில் கிளப்பிவிட்ட சூறாவளியைப் புரிந்துகொள்ளாமல், தன்பாட்டில் விடைபெற்றுக்கொண்டு, குதிகால் மிகமிக உயர்ந்திருந்த காலணிகள் சப்திக்க, வெளியே போனாள் வினுதா. அகிலாவுக்கு அலுப்புதான் ஏற்பட்டது. நல்லவேளை, மோகன் வந்துவிட்டார். இனி, அவர்பாடு, பெண்டாட்டிபாடு! அப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, வினுதாவின் விபரீதமான போக்கு மோகனையும் அச்சுறுத்திவிடும் என்று. 12. விமானதளத்தில்      “ஹலோ! இப்போ எப்படி இருக்கீங்க?” விமானதளத்தில் காரை நிறுத்திவிட்டு, பிற கார்களைக் கடந்து தனியே நடந்துகொண்டிருந்த வினுதா யோசிக்கவேயில்லை. ஒரு நொடியில் கைப்பையைத் திறந்து, அதிலிருந்த சிறு குப்பியை பக்கத்தில் வந்துகொண்டிருந்தவனுடைய கண்ணை நோக்கிப் பீய்ச்சினாள். எரிச்சல் தாங்காது அதே தாடிக்காரன் அலற ஆரம்பிக்க, ஓட்டமும், நடையுமாக அவள் விலகிப்போனாள். முகமெல்லாம் சிரிப்பாக, சுங்க அதிகாரிகளிடமிருந்து மீண்டு, மோகன் அவளை நோக்கி வரவும், அளவற்ற நிம்மதி எழுந்தது. “வந்துட்டீங்களா!” என்று ஓடிப்போய், இரண்டு கைகளையும் அவனுக்கு மாலையாக்கினாள். மோகன் திகைப்பிலிருந்த விடுபடுவதற்குள், அவளுடைய சிவந்த அதரங்கள் அவனது கன்னத்தில் பதிந்தன. மோகன் குழம்பினான். அதே வினுதாதானா இவள்? முன்பெல்லாம் தானே இவள் கையைப் பிடித்தால்கூட, முறைத்து, `இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்!’ என்று செல்லமாக மிரட்டியவளா இவள்? அதோடு, இந்நாட்டில், பொது இடங்களில் இப்படியெல்லாம் நடந்துகொள்ளக்கூடாதே! தனது பிரிவு இவளை இவ்வளவுதூரம் மாற்றி இருக்கிறது என்பது நம்பக்கூடியதாக இல்லையே! என்னென்னமோ யோசித்து, `இந்தச் சின்ன சமாசாரத்துக்காக எதற்காக இவ்வளவு தூரம் அலட்டிக்கொள்ள வேண்டும்!’ என்று எதுவும் பேசாமல் நடந்தான். சுமார் ஆறடி உயரத்துடன், நவநாகரீகத் தோற்றம் கொண்ட மோகனுடன் சேர்ந்து நடப்பதே வினுதாவுக்கு அலாதி தெம்பை அளித்தது. அவன் மேலே விழாத குறையாகச் சாய்ந்தபடி, ஒரு கரத்தால் அவனுடைய இடுப்பை வளைத்துப் பிடித்தாள். இப்போது அவளுடைய அலங்காரமும், போக்கும் ஏதோ சந்தேகத்தைக் கிளப்பிவிட்டன மோகனுக்குள். தான் இங்கு இல்லாதபோது, கண்ட ஆண்களுடன் வரையின்றிப் பழகி, அதுதான் சுதந்தரமான பெண்களின் போக்கு என்று தோன்றிப்போய்விட்டதோ? “கார் கொண்டு வந்திருக்கேன்!” என்று கொஞ்சலாகச் சொல்லியபடி நடந்த வினுதா சிலையானாள். தூரத்திலிருந்த அவளுடைய காரின் அருகே தாடிக்காரன்! சிவந்த விழிகளுடன்! என்ன ஆச்சு? ஏன் அப்படியே நின்னுட்டே?” மோகன் கேட்டதும்தான் வினுதாவுக்குச் சுயநினைவு திரும்பியது. அருகில்தான் வாட்டசாட்டமான ஆண்பிள்ளை இருக்கிறாரே! பின் எதற்குப் பயம்? நிமிர்ந்த தலையுடன் அவனை உரசியபடி நடந்தாள். வரிசை வரிசையாக கார்கள். பலரும் தத்தம் பெட்டிகளை அவைகளுக்குள் ஏற்றிக்கொண்டு இருந்தார்கள்.   இவ்வளவுபேர் இருக்குமிடத்தில்கூட எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைத் துரத்தி வந்திருப்பான், ராஸ்கல்! ஓயாத எண்ணங்களுடன் போராடியபடி காரை அடைந்தபோது, அவன் அங்கில்லை! நிதானம் தவறியவளாக வினுதா காரைத் தன் வீடு நோக்கி ஓட்டிப்போனபோது, மோகன் எதுவும் பேசாது வந்ததைக் கவனிக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. தலைக்குமேல் இருந்த கண்ணாடியில் யாராவது தன்னைப் பின்தொடர்கிறார்களா என்று பார்ப்பதிலேயே கவனம் போயிற்று. வீட்டில் அருண் இருந்தார், வேலைக்குப் போகாது. வேறு ஒரு டாக்டரையும் தனக்குத் துணையாக நியமித்திருப்பதாக அவர் கூற, மோகன் அதிசயப்பட்டான். “நாட்டிலே நோயாளிங்க பெருகிப்போயிட்டாங்களா!” அகிலா முகபாவத்தில் வித்தியாசம் காட்டாது இருக்க பெரும்பாடுபட்டாள். தன்னிடம்கூட ஏன் இந்த முக்கியமான சமாசாரத்தைத் தெரிவிக்கவில்லை? மோகன் கேட்டதற்கு நேரிடையாகப் பதில் எதுவும் கூறாது, “அப்புறம்?” என்று கேட்டார். இம்முறை விடுமுறைக்கு வரும்போது கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிச் சென்றிருந்தானே! அதை அவன் வாயாலேயே வரவழைக்கலாம் என்று எண்ணினார். “என்னோட ஆராய்ச்சி முடியல. நீண்டுக்கிட்டே போகுது!” என்று முணுமுணுத்தவன், சூட்சுமம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்ற எரிச்சலுடன், “இப்போதைக்கு கல்யாணத்தைப்பத்தி யோசிக்கக்கூட முடியாது, டாக்டர். ஒங்க தங்கைக்கு வேற எடம் பாத்துக்குங்க,” என்றான் முடிவாக. மனத்துக்குள், `முதல் வேலையா ஈப்போ போய் அம்மாவைப் பாத்து, `குடும்பப்பாங்கா ஒங்க ஒறவிலேயே ஒரு பொண்ணைப்பாத்து கட்டிவைங்கம்மா’ன்னு சொல்லிடணும். இந்தமாதிரி பணக்கார வீட்டுப்பெண்களை நம்பவே முடியாது!’ என்று சொல்லிக்கொண்டான். 13. உணர்ச்சிப் போராட்டம்      வினுதா புறப்பட்டுப்போனதும், அவ்வீட்டில் இருந்த மூவரும் வெவ்வேறு விதமான எண்ணங்களுடன் போராடினர். `மோகன் பிடிகொடுத்தே பேசவில்லையே! படிக்கப்போன இடத்திலேயே எவளையாவது பிடித்துப்போட்டிருப்பாரோ?’ என்று கலங்கினாள் அகிலா. அவர் வந்தாலாவது நாத்தனார் அந்த வீட்டிலிருந்து தொலைந்துவிடுவாள்; ஓயாமல் அவளைப் பார்த்துக்கொண்டிருந்து, அவளைப்பற்றியே கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதினால்தானே தங்கள் வாழ்க்கையும் பாழாகிறது என்று அவள் புருஷன் வீட்டுக்குப்போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் ஆயிற்றே! இந்தப் பெண்ணும் பிடிவாதமாக, நடந்ததை மறக்க மாட்டேன் என்று பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது. ஏதோ, கொஞ்சநாள் அவள் போக்கிற்கே விட்டுப்பிடித்தாயிற்று. அதற்காக, எப்போதுமே பிறரிடம் அனுதாபத்தை எதிர்பார்த்தால்? அவரவருக்கு கஷ்டங்கள், வாழ்க்கைப் போராட்டம் கிடையாதா, என்ன! அருணுக்கும், அதிசயமாக, தங்கைமேல் ஆத்திரம் மூண்டது. இவள் மோகனிடம் ஏதோ நாடகமாடி இருக்கிறாள். அசட்டுப்பெண், வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்ததுபோல் சமயத்தில் காரியத்தைக் கெடுத்துவிட்டாளே! அவள் சொல்லி எதைக் கேட்கவில்லை? போலீஸ் என்றாள். அழைத்துப் போயாற்று. அவர்களுக்குக் குற்றவாளிகளைப் பிடிக்க துப்பில்லை. அதற்கு நாமா பொறுப்பு? அவளைப்போன்ற மற்ற பெண்களையும் சேர்த்துக்கொண்டு, என்னமோ சங்கமாம் சங்கம், அதை ஆரம்பித்தாள். அப்படியாவது மனம் ஆறுவாளா என்று பார்த்தால், அதுவுமில்லை. நிலைமை இப்போது இன்னும் மோசமாகி அல்லவா ஆகியிருக்கிறது! கோபத்தினூடே அருணுக்கு உண்மை புரிந்தது. அவருடைய  கோபம் திடீரென கழிவிரக்கமாக மாறியது. தன்னையுமறியாது, பார்ப்பவர் வெறித்துப் பார்க்கும்படியான, அல்லது, அதிர்ச்சியுடன் முகத்தைத் திருப்பிக்கொள்ளும்படியான ஆடைகளை வினுதா தேடிப்பிடித்து வாங்கியிருக்கிறாள், முதல்நாள். அவள் எதிர்பார்த்ததுபோலவே, மோகன் அதிர்ந்துபோய் விலகிவிட்டார்! மேலே விழுந்து பழகும் பெண்களைக் கண்டால் ஆண்களுக்கு எப்போதுமே பயம்தான். ஆதிகாலத்தில் வேடுவனாக இருந்தவன் அல்லவா? ஒதுங்கி ஓடும் பெண் மிருகங்களைத் துரத்தித் துரத்திப் பிடிப்பதில்தான் அவனுக்கு நிறைவு, ஓர் அல்ப சந்தோஷம். பொதுவாகவே, காமம் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு இலக்காகும் பெண்கள் மீண்டும் ஒரு முறை அப்படி நிகழாதிருக்க ஏதேதோ வழிகளைக் கையாளுவார்கள் என்று அவர் படித்திருக்கிறார். முக்கியமாக, உடல்மேலுள்ள ஆத்திரத்தில், அதைக் கவனமாக மூடி மறைக்கமாட்டார்கள். ஆனால், பிறர் -- ஆணோ, பெண்ணோ -- இம்மாதிரிப் பெண்களை நடத்தை கெட்டவர்கள் என்று சந்தேகிக்க அவர்களே இடம் கொடுத்துவிடுவதுதான் பரிதாபம். உண்மை நிலவரம் புரிந்துபோனதில், அருணுக்கு துக்கம்தான் மிஞ்சியது. அருமைத் தங்கையை இவ்வளவு தூரம் ஆட்டுவித்துக்கொண்டிருந்த முகம் தெரியாத அந்த தாடிக்காரன்மேல் வெறியே மூண்டது. கண்களில் வேதனையும், கனிவுமாகத் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த அண்ணனின் பார்வையைத் தாங்கமுடியவில்லை வினுதாவால். அழுகைதான் வந்தது. இந்த வீட்டில் இருந்தாலே இப்படித்தான். அழுகை, இல்லாவிட்டால் கோபம்! ஆனால், ஒரு சிறு நிம்மதி. இப்போதைக்கு கல்யாணத்தைப்பற்றிய கவலை இல்லை. மோகன் பயந்து ஓடிவிட்டார். நிம்மதியையும் மீறி, வருத்தமும் கிளர்ந்தது. தனக்கே இப்படி இருந்தால், கல்யாணம் ஆகி, அதன்பின் கணவரிடமிருந்து பிரிந்துவிட்ட அனுசூயா போன்றோர் கதி எப்படி இருக்கும்! பரிதாபம் மேலோங்க, உடனே அனுசூயாவைப் பார்க்கவேண்டும்போல இருந்தது வினுதாவுக்கு.                மற்றவர்களெல்லாம் `எதிர்பாராத விபத்து’ என்று ஒருக்கால் தம்மைத்தாமே சமாதானம் செய்துகொள்ள முயலாம். அனுசூயாவால், பாவம், அதுவும் முடியாது. நண்பன் என்று நம்பி, நெருங்கிப் பழகியவனே நம்பிக்கைத் துரோகம் செய்தது கொடுமையிலும் கொடுமை. வினுதா வெளியே போகத் தயாராக இருந்தது கண்டு, “நேத்துமாதிரி பண்ணிடாதேம்மா,” என்றார் அருண் கெஞ்சலாக. “இல்லேண்ணா. அனுசூயாவைப் பாத்துட்டு வந்துடறேன்,” என்றபடி புறப்பட்டாள். அவள் தலைமறைந்ததும், தனது அதிருப்தியை முணுமுணுப்பாக வெளிப்படுத்தினாள் அகிலா. “அது என்ன சிநேகிதமோ! ஒரு சினிமா, டான்ஸ் -- இப்படி எங்கேயாவது போனாலாவது மனசுக்குக் கொஞ்சம் இதமா இருக்கும். எப்பப் பாத்தாலும், மத்த கெட்டுப்போன பொண்ணுங்களோட சேர்ந்து ஒக்காந்து அழுதுக்கிட்டிருந்தா, உருப்பட்டமாதிரிதான்!” “அகிலா!” அலறினார் அருண். என் தங்கையைப் பார்த்து, `கெட்டுப்போனவள்’ என்று எவ்வளவு திமிராகச் சொல்கிறாள்! இவளுக்கும் அப்படி ஒரு நிலைமை வர எத்தனை நேரமாகும்? சே! புத்தி என்ன இப்படிப் போகிறது! வினுதாவுக்கு நடந்த கதி வேறு எந்தப் பெண்ணுக்கும் வேண்டாம். ஏதோ சில மணி நேரம் அனுபவித்த கொடுமை என்று விட்டுவிட முடிகிறதா! பாதிக்கப்பட்டவள் மட்டுமின்றி, அவளைச் சேர்ந்தவர்கள் எல்லாருமே அல்லவா அளவற்ற துன்பத்துக்கு ஆளாகிறார்கள்! அகிலாவைக் குறைசொல்லி என்ன பயன்! எதுவும் பேசப் பிடிக்காது, எழுந்து வெளியே போனார். சிறிது பொறுத்து, கார் புறப்படும் சத்தம் கேட்டது. `என்ன இருந்தாலும், நான் வெளியிலிருந்து வந்தவள்தானே! இவரையோ, அந்த தங்கையையோ நான் ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாது. இத்தனைக்கும், எனக்குப் பிறந்த மகளாத்தான் நினைச்சு வளர்த்திருக்கேன் அவளை. எத்தனை வருஷம் ஆனாதான் என்ன! நான் இந்த வீட்டு மனுஷி ஆகிட முடியுமா?’ தன்பாட்டில் புலம்பிக்கொண்டிருந்தாள் அகிலா. 14. நான் தருகிறேன் தண்டனை      டாக்டர் அருணுடைய வீட்டு வாசலிலிருந்து அந்தக் கார் புறப்பட்டது. அதை ஓட்டிய உருவம் ஒரு சிறு பெட்டியைத் திறந்தது. சில காசெட்டுகள், ஒரு பவுடர் டப்பா, ஏதோ திராவகப் போத்தல் -- இவற்றுக்கடியில் பளபளப்பாக மின்னியது அக்கத்தி. திருப்தியுடன் மீண்டும் பெட்டியை மூடியது. சிறிது நேரம் இலக்கின்றி எங்கெங்கோ சுற்றிவிட்டு, இருட்டும் சமயத்தில் `லேக் கார்டன்ஸை’ அடைந்தது அக்கார். கத்தியை மட்டும் எடுத்துக் கால்சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இறங்கியது அந்த உருவம். காருக்குள் கூர்மையான ஆயுதம் வைத்திருப்பது சட்ட விரோதம் ஆனாலும், நவநாகரீகமான நபர்களை போலீஸ் சந்தேகித்துச் சோதனை போடுவது அபூர்வம். அதோடு, அந்த சந்தியா காலத்தில் நெருக்கமான உறவை -- அது அனேகமாக தகாததாகத்தான் இருக்கும் -- பறைசாற்றுவதுபோல உட்கார்ந்துகொண்டோ, அல்லது பெரிய குடை மறைவில் படுத்துக்கொண்டோ இருக்கும் இளங்காதலர்களைப் பிடிப்பதில்தான் அவர்கள் கவனமும், நேரமும் செலவழியும். அதற்குத் தண்டனை உண்டு. நிமிர்ந்த தலையுடன், சர்வ அலட்சியமாக நடைபயின்றது அவ்வுருவம். தனது கத்திக்குப் பலியாகத் தகுதியுள்ள ஒருவனை அதன் கண்கள் தேடின. அரைமணி கழிந்தது. அலுப்புக்குப் பதிலாக ஆத்திரம்தான் அதிகமாகியது. பரபரப்புடன், போவோர், வருவோர் எல்லாரையும் கூரிய பார்வையுடன் அளந்தது. இதோ, இங்கே இருக்கிறானே! பக்கத்து பெஞ்சிலேயே இருக்கிறான், தான் எப்படி கவனிக்காது போனோம்! அவன் அப்படி ஒன்றும் பெரிய ஆகிருதி உடையவனாக இருக்கவில்லை. சிவந்த நிறமும், சுருட்டை மயிரும் கொண்டவனாய், சற்று பெண்பிள்ளைச் சாயலுடன் இருந்தான். ஆனால், வெறிபிடித்த அந்தக் கண்கள்! கண்ணாலேயே துகிலுரித்துப் பார்க்கும் நெறிகெட்டவன்! சே! எவ்வளவு மனவிகாரம் இருந்தால், இப்படி எதிரில் வரும் பெண்களையெல்லாம் -- அவர்கள் எந்த வயதுக்காரர்களாக இருந்தாலும் -- இங்கிதமின்றி முறைத்து முறைத்துப் பார்ப்பான்! இவனையெல்லாம் இப்படியே விட்டுவைத்தால் அவ்வளவுதான். ஊரிலே, நாட்டிலே, ஒரு பெண்ணும் பயமின்றி நடமாட முடியாது. உருவம் தனது கையை பாக்கெட்டுக்குள் விட்டது. அதனுள்ளிருந்த கத்தியைத் தொட்டதும், அமானுஷ்யமான சக்தி உடலெல்லாம் பரவியது போலிருந்தது. `என்ன அவசரம்? பொறு!’ தனக்குத்தானே உபதேசித்துக்கொண்டது. கூட்டம் இன்னும் முழுமையாகக் கலையவில்லை. கைகளை மாற்றி மாற்றி பக்கவாட்டில் சுழற்றி, உடற்பயிற்சி செய்வதுபோல் பாவனை காட்டியபடி நின்றிருந்தது. `காற்று வாங்கினது போதும்,’ என்ற திருப்தியுடன், அனேகமாக எல்லாருமே வீடு திரும்பிப்போக ஆரம்பித்தார்கள். பார்த்து வெறிப்பதற்குப் பெண்கள் இல்லை, அப்படியே இருந்தாலும், அவர்களை முழுமையாகப் பார்த்து ரசிப்பது என்பது இந்த இருட்டில் முடியாத காரியம் என்று எண்ணமிட்டவன்போல, அந்த பெண்பிள்ளைச் சாயலும், `துச்சாதனின் வம்சத்தில் வந்தவனும்’ ஆகிய மனிதன் தானும் புறப்பட ஆயத்தமாக எழுந்தான். உருவம் உஷாராகியது. சத்தமில்லாது அவன் பின்னால் போய், “எக்ஸ்க்யூஸ்மி?” என்று குரல் கொடுத்தது. “யா?” அவன் திரும்பினான். உடனே மூக்கில் தன் கைக்குட்டையை வைத்து அழுத்தியது உருவம். மயங்கியவனைத் தாங்கியபடி, ஒரு புதருக்குப் பின்னால், புல்லின்மேல் கிடத்தியது. இனி வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். கை சற்று நடுங்கியது. நான் என்ன  தப்பா செய்கிறேன்? இல்லையே! ஒரு குற்றவாளியைத் தண்டிக்க சட்டத்தால் இயலாவிட்டால், தனி நபர் அந்த பொறுப்பை ஏற்பதில் என்ன தவறு? `என்கௌண்டர்’ என்ற பெயரில் போலீஸே அப்படிச் செய்கிறதாமே! அந்த எண்ணத்தால் துணிவு ஏற்பட, மயங்கிக் கிடந்தவனுடைய பாண்ட்டை சற்றே கீழே இறக்கியது. தொலையட்டும், பாவி! ஒருவேளை, பிழைத்தாலும்கூட, இவனால் இனி எந்தப் பெண்ணையும் ஒன்றும் பண்ண முடியாது. வெட்டிய பாகத்தையும், ரத்தம் தோய்ந்த கத்தியையும் ஏரியில் விசிறி எறிந்துவிட்டு, எதையோ சாதித்துவிட்ட நிறைவுடன் தன் காரை நோக்கிப் போயிற்று அந்த உருவம். 15. யாரவன்?      அனுசூயாவின் வீட்டிற்கு முன்னால் காரை நிறுத்தினாள் வினுதா. உள்ளே பேச்சுக்குரலும், கூடவே சிரிப்பும் கேட்டது. ஆண்கள் நட்பே வேண்டாம் என்று விட்டுவிட்டதாகச் சொல்லிக்கொண்டாளே! வினுதாவுக்கு எரிச்சல் பிறந்தது. மனிதர்கள் வேஷம் போட்டுத்தான் இந்த உலகம் என்னும் நாடகமேடையில் நடமாடுகிறார்கள்! சரி, இவ்வளவு தூரம் வந்தது வந்தோம், அவளைப் பார்த்துவிட்டே போகலாம். எல்லாப் பெண்களுமே ஆண்களைக் கண்டு அஞ்சி ஓடவேண்டும் என்று சொல்ல நாம் யார்? பின் எப்படித்தான் இந்த உலகம் மக்கட்தொகையில் பெருகுவதாம்! வினுதாவுக்குச் சிரிப்பு வந்தது தன் எண்ண ஓட்டம் போன திக்கைப் பார்த்து. தேவலாமே, கடந்த சில மாதங்களில் நிறையத்தான் மாறியிருக்கிறோம்! கதவைத் தட்ட கையெடுத்தபோது, அது தானே திறந்தது. பின்னால் அனுசூயா. “வா, வினு. கார் சத்தம் கேட்டதே, யாருன்னு பாத்தேன்”. `இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பார்கள்! யாரென்று பாராமலேயே கதவைத் திறந்துவிட்டாளே!’ அனுபவப்பட்டிருந்த வினுதாவின் மனம் பதைத்தது. அது என்னவோ, சில பெண்களுக்கு எவ்வளவு பட்டாலும், புத்தி வரமாட்டேன் என்கிறது! “ஏன் மலைச்சுப்போய் நின்னுட்டே? உள்ளே வாயேன்!” “அதில்லே.., இப்படி அவசரமா கதவைத் திறக்கறியேன்னு கொஞ்சம் யோசனையாப்போச்சு!” அனுசூயா சிரித்தாள். அவள் சிரித்தே தான் பார்த்ததில்லை என்று வினுதாவின் நினைவு போயிற்று. “எல்லாம், உள்ளே ஆம்பளைத்துணை இருக்கிற தைரியம்தான்!” என்று உல்லாசமாக அனுசூயா சொன்னபிறகுதான் வினுதா உள்ளே எட்டிப் பார்த்தாள். கை தன்னையும் அறியாது, ஹாண்ட்பேகைத் திறந்தது. அடுத்து அவள் தோழி கூறியதோ! “என் ஹஸ்பண்ட்!” என்று அந்த தாடிக்காரனை அறிமுகம் செய்தாள். “ஹலோ! நான் இதுக்கு முந்தி ஒங்களைப் பல இடங்களிலே பாத்தமாதிரி இருக்கு,” என்று குறும்பாகச் சிரித்தபடி அவன் கையை நீட்டினான். வினுதா குழம்பினாள். இவனுடைய குரலும், பண்பும் படித்தவன்போல் அல்லவா இருக்கிறது! தான் அறிந்தவனுடைய குரல் பாமரத்தனமாக, முரட்டுத்தனமாக இருக்கவில்லை? “களைப்பா இருக்கு. கொஞ்சம் தண்ணி குடு, அனு!” என்றவாறு, நீண்டிருந்த அவனுடைய கையைக் குலுக்க விரும்பாது, அருகிலிருந்த சோபாவில் உட்கார்ந்துகொண்டாள், அயர்ந்துபோனவளாக. அனுசூயா உள்ளே போனாள். “நீங்க என்னைத் தப்பா நினைச்சுட்டீங்க. அனுசூயா திடீருன்னு என்னை விட்டுப் போயிட்டா. நீங்க ரெண்டுபேரும் அடிக்கடி சந்திச்சுப் பேசறதைப் பாத்தேனா! ஒங்களைக் கேட்டா, விவரம் தெரியும்னு நினைச்சேன்”. முதன்முறையாக, அவனை ஒரு சிக்னல் அருகே பார்த்தது வினுதாவுக்கு நினைவில் எழுந்தது. “அப்புறம், தற்செயலா பார்க்கிலே பாத்தேன். நீங்க களைப்பா இருந்தபோது, அப்படி பின்னால வந்து கூப்பிட்டது என் தப்புதான்!” அவன் குரலில் உண்மையான வருத்தம் தொனித்தது. அன்று யாரோ சொன்னமாதிரி, முகமே சரியாக நினைவில்லாமல், தாடி வைத்தவர்கள் எல்லாம் நம்மைத் தாக்கியவன்தான் என்று நினைத்தது எவ்வளவு தப்பு! அவன் கண்களைப் பார்க்க சக்தியின்றி, வினுதா தலையைத் தாழ்த்திக்கொண்டாள். அவமானம் பிடுங்கித்தின்றது. அனுவின் கணவனோ பேசிக்கொண்டே போனான்: “ஏர்போர்ட்டிலே என் ஃப்ரெண்டை வழியனுப்ப வந்தப்போ, ஒங்க காரைப் பாத்தேன். எப்படியும் அன்னிக்கு ஒங்களோட பேசிடணும்னு அதுகிட்டேயே நின்னேன். நீங்க என்னைப் பாத்து பயப்படறீங்கன்னு எனக்கு அதுக்கு முந்தி புரியவே இல்ல. எப்படியாவது அனுவைப்பத்தி ஒங்ககிட்டேயிருந்து தெரிஞ்சுக்கணும்னு வெறி எனக்கு. அவதான் எங்கிட்ட பேசவே மாட்டேன்னு போயிட்டாளே!” ஆரஞ்சுப்பழ சாறுடன், சிரித்தபடி வந்தாள் அனுசூயா. “எங்கிட்ட போனில ஒரேயடியா கத்தினார். `நல்ல சிநேகிதி பிடிச்சு வெச்சிருக்கே, நீ! ஒன்னைப்பத்திக் கேக்க நான் கிட்ட போனா, எரியற எதையோ கண்ணிலே போட்டுட்டாங்க. என் கண்ணு குருடாப்போனா, நீயா கூடவே இருந்து கவனிச்சுக்கப்போறே?’ அப்படின்னு ஒரே கத்தல், போ!” “நான் ஒண்ணும் அப்படி அசிங்கமா கத்தலே!” “சும்மா இருங்க!” உரிமையுடன் அடக்கினாள். “என்ன, ஏதுன்னு விசாரிச்சேன். நீயாத்தான் இருக்கணும்னு புரிஞ்சது”. வினுதா மேலும் கூசிப்போனாள். “ஒனக்கு ஏன் ஆம்பளைங்கன்னாலே அப்படி ஒரு வெறி, நாம்ப ரெண்டு பேரும் மொதமொதலா எப்படி சந்திச்சோம் -- எல்லாத்தையும் இவர்கிட்ட சொல்றதுக்காகப் போனேனா!” சுவாரசியமாகக் கதை சொல்ல ஆரம்பித்த அனுசூயாவை இடைமறித்தான் கணவன். “ஒங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும், மிஸ். வினுதா. இல்லாட்டி, `ஒங்க முகத்தையே பாக்கப் பிடிக்கலே,’ன்னு சொல்லிட்டுப்போன அனு தானாகவே என்கூட பேச வந்திருப்பாளா?” “நான் எங்கே அப்படிச் சொன்னேன்? சும்மா அளக்காதீங்க, மிஸ்டர்!” இன்னிசைக் கச்சேரியில் பாடகரும், வயலின் வாசிப்பவரும் மாறி மாறி ஸ்வரம் போடுவதுபோல, ஒருவரையடுத்து ஒருவர் பேசினார்கள், சொல்லி வைத்ததுபோல. “நடந்ததை எல்லாம் நான் சொல்லச் சொல்ல, `இதெல்லாம் மறைக்கிற விஷயமா? ஒனக்கு ஒரு கஷ்டம் வந்தா, அதில எனக்கு மட்டும் பங்கில்லையா? என்னை அவ்வளவு அந்நியமாவா நினைச்சுட்டே?’ அப்படி, இப்படின்னு ஒரு கத்து கத்தினார் பாரு, நான் அவரைப் பாக்கப் போன ரெஸ்டராண்டிலயே! இந்தப் பொண்ணுக்கு என்னமோ, ஏதோன்னு அங்க இருந்த எல்லாரும் எங்க மேசைகிட்ட ஓடி வந்து, இவரைப் பாத்து முறைச்சாங்க!” கலகலவெனச் சிரித்தாள் அனுசூயா. வினுதா அங்கிருப்பதையே மறந்தவர்களாய், தம்பதியர் இருவரும் உளங்கனிந்த அன்புடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள், இமைக்கவும் மறந்தவர்களாய். அந்த இன்பமான சூழ்நிலையை கலைப்பதற்கென்று அப்போது வினுதாவின் கைப்பையிலிருந்த ஃபோன் அடித்தது. “வினு! ஒன் சங்கத்திலே இருந்தாங்களே, அவங்க..,” அடுத்த முனையிலிருந்து பேசிய அகிலாவின் குரலில் ஒலித்த பதட்டம் வினுதாவைக் கலவரப்படுத்தியது. குழப்பதினூடே, `இருந்தாங்களே!’ என்று கடந்த காலத்தில் அகிலா குறிப்பிட்டது சட்டென உறுத்த, “யாரைச் சொல்றீங்கண்ணி?” என்று இடைமறித்தாள். “அந்த வயசான அம்மா -- ராஜமா அவங்க பேரு! பாவம், விஷத்தைச் சாப்பிட்டுட்டாங்களாம்!” “இப்போ எங்கே இருக்காங்க?” அடைத்துப்போன குரலைக் கனைத்துச் சரிசெய்ய முயன்றபடி கேட்டாள். ”G. H-தான்!” என்று பெரிய ஆஸ்பத்திரியைக் குறிப்பிட்டாள். தன் முகத்தையே கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம், “ராஜம்மா -- விஷம் -- G.H!”  என்றாள், ஏதோ தலைப்புச் செய்திகளை வாசிப்பவள்போல.      மேலே எதுவும் பேசாது, மூவரும் வாசலை நோக்கி ஓடினர். பெரிய ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது, ராஜத்தின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று தெரிந்தது.   “அவங்க வீடு எங்கே இருக்குங்க?” என்று வினுதாவைக் கேட்டுவிட்டு, கடமையுணர்ச்சியுடன் அவளையும், தன் மனைவியையும் அவர்களது உற்ற சிநேகிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த அழைத்துப்போக ஆயத்தமானான் `தாடி வைத்தவன்’. தனக்கிருந்த மனநிலையில், தனியே காரை ஓட்டிப்போக முடியுமா என்ற வினுதாவின் தாற்காலிக குழப்பம் மறைந்தது. அவன்மேல் நன்றி சுரந்தது. 16. எல்லாம் சுயநலம்!      முன்னறையிலேயே ஒரு வெள்ளைத்துணிமேல் கிடத்தப்பட்டிருந்தது ராஜத்தின் உயிரற்ற உடல். புதிய புடவை அணிவிக்கப்பட்டிருந்தாள். சுமங்கலியாகச் செத்துவிட்ட அதிர்ஷ்டத்தைப் பறைசாற்றுவதுபோல், நெற்றியில் மிக அகலமான குங்குமப்பொட்டு. அவ்வளவு அலங்காரத்தையும் மீறி, ஏதோ ஆழ்ந்த சோகம் உள்ளேயே தேங்கிவிட்டதைப்போல நெற்றியின் நடுப்பாகத்தில் நரம்பு தெறித்தபடி இருந்தது, உயிரற்ற அந்த முகத்திலும். “வினுதாங்கிறவங்க..,” கேட்டபடி வந்தார் நடுத்தர வயதுக்காரர் ஒருவர். முன்மண்டை வழுக்கையாக இருந்தது. வருத்தத்திலோ, களைப்பிலோ உடல் மிகவும் கூனியிருந்தது. தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள் வினுதா. “ஒங்களைப்பத்திதான் எப்பவும் பேசுவா. அதான்..,” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவர், தலை குனிந்து நெற்றியைக் கையால் அறைந்தபடி அழ ஆரம்பித்தார். “நானே அவளுக்கு யமனாகிட்டேன். அவ மனசை நினைச்சுப்பாக்காம, என்னைப்பத்தியே நினைச்சிட்டு இருந்திட்டேன்!” அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே அவர்களுக்குப் புரியவில்லை. தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள். அவரிடமிருந்து மெதுவாக தப்பித்துப்போய், ராஜத்தினருகே அமர்ந்தார்கள் பெண்கள் இருவரும். அவளுடைய தலைமாட்டில் இறுகிய முகத்துடன், ஆனால் கலங்கிய கண்களுடன் நின்றிருந்த இளைஞர்கள் இருவரும் மறைந்தவளுடைய பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்று தோன்றியது வினுதாவுக்கு. தங்களுடைய துக்கத்தில் பங்கேற்க வந்திருப்பவள், தாய்க்கு அவளுடைய இறுதிக்காலத்தில் எவ்வளவோ ஆறுதலாக இருந்திருப்பவள் என்ற எண்ணமே ஏதோ நெருக்கத்தை உண்டுபண்ண, ராஜத்தின்  மகள் வினுதாவை ஆழ்ந்து தோக்கினாள், வேதனை கொப்புளித்த கண்களுடன். லேசான தலையசைப்புடன், தனது பார்வையாலேயே அவளுக்குப் பலம் அளித்தாள் வினுதா. அந்தப் பெண்ணைவிட நாலைந்து வயதே முதிர்ந்தவளாக இருப்பாள். ஆனால், அவளுடைய அனுபவங்கள் வயதுக்கு மீறிய முதிர்ச்சியை அவளுக்கு அளித்திருந்தது. அதனால் அவளுடைய நெருக்கமே நொந்த பிறருக்குத் தைரியம் ஊட்டுவதாக இருந்தது. வினுதாவின் காதுடன் வாய்வைத்து, அந்தரங்கமாகக் கூறினாள் அப்பெண்: “அப்பா வேற ஒரு பெண்ணைக் கோயில்ல வெச்சு ரகசியக் கல்யாணம் கட்டியிருக்கிறது அம்மாவுக்கு இன்னிக்குத்தான் தெரிஞ்சிச்சு!” அதிர்ச்சியும், குழப்பமும் ஒருசேரத் தாக்கின வினுதாவை. ராஜமா இப்படிச் செய்தாள்! முன்பின் தெரியாத எவனோ ஒருத்தன் அவளிடம் நடந்துகொண்ட விதத்தைக்கூட சமாளித்துக்கொண்டவள் தனக்கே சொந்தமான கணவர் அவரது வாழ்வுடன் பங்கு போட்டுக்கொள்ள இன்னொரு பெண்ணை அழைத்து வந்தபோது, இப்படியா மனோதிடத்தை இழப்பாள்! ஒரு வேளை, சிறுகச்சிறுக நைந்துகொண்டிருக்கும் பழைய துணியானது கால் தடுக்கினாலே சட்டெனக் கிழிந்து விடுவதைப்போல, எத்தகைய துன்பம் வந்தாலும், கணவர் பக்கத்திலிருக்கும் தைரியத்தில் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டவள், அவரையே இழந்துவிட்டதைப் பொறுக்க முடியாதுதான், வாழ்வில் பற்றிழந்து, கோழைத்தனமாக தன் முடிவைத் தானே தேடிக்கொண்டாளோ? சே! என்ன ஆண்கள்! எவ்வளவோ பெரிய ஆபத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்திருக்கிறாளே மனைவி, அவள் நொந்துபோயிருக்கும் சமயத்தில் ஆறுதலாக இருப்போம் என்ற மனிதத்தன்மைகூடவா கிடையாது? கேவலம், உடலிச்சைக்காக ஒரு பெண்ணை உயிருடன் கொல்லாது கொல்பவனும், அவளுடைய நுண்ணிய உணர்ச்சிகளை நினைத்தும் பார்க்காதவனும் மனிதர்களில் சேர்த்தியே இல்லை. தன் இன்பம், தன் மகிழ்ச்சி என்ற சுயநலம் இல்லாதவர்களே கிடையாதா? அவர்களருகே வந்தான் அனுசூயாவின் கணவன். உயரமான உடலை வளைத்துக் குனிந்தபடி, “அவர் பாவம், ஆடிப்போயிருக்காரு. நான் வெளியே போய், ஆகவேண்டிய காரியங்களைப் பாக்கறேன்,” என்றான் தாழ்ந்த குரலில். அனுசூயாவின் கண்களில் ஒரு ஒளி தோன்றி மறைந்ததைக் கவனித்தாள் வினுதா. சிறியதொரு திருப்தி பிறந்தது. இருபது வருடங்களுக்குமேல் சேர்ந்து வாழ்ந்த மனைவியின் உள்ளத்தையும், உணர்ச்சிகளையும் மதிக்காத சுயநலம் பிடித்தவரும் இருக்கிறார், தான் பழகியே அறியாத மனைவிக்காக, அவளிடம் நட்புகொண்டவர்களுக்காக இவ்வளவு பாடுபடும் ஆண்களும் உண்டு. மனிதர்களின் விசித்திர இயல்பை அவள் மனம் அலச ஆரம்பித்தது. வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் இணைந்தேதான் வரும். ஆனால், தன் துன்பத்தையே பெரிதாக நினையாமல், அதையும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, பிறருக்கும் வழிகாட்டியாக ஆகிறவன்தான் மனிதன். தன்னைப்போலவே பிறரரும் துன்பப்பட வேண்டும் என்று நிச்சயித்துவிட்டதைப்போல் நடந்துகொள்பவன் அசுரன். தனது மிருகக்குணத்திலிருந்து பூரணமாக விடுபடாதவன். `பரவாயில்லையே! தனக்குத் தத்துவம் எல்லாம் வருகிறதே!’ என்ற எண்ணம் எழுந்தபோது, அதில் கிஞ்சித்தும் பெருமை இருக்கவில்லை. 17. அமெரிக்காவைக் காபியடித்து         வினுதா வீடு திரும்பியதும், டி.வியில் அந்த செய்தி வந்தது. “லேக் கார்டன்ஸில் ஆண் ஒருவனுடைய ஆண்மை கொடூரமாகப் பறிக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களில் இதேமாதிரி நடப்பது இது இரண்டாவது தடவையாகும்! மக்கள் பெரும்பீதிக்கு ஆளாகியிருக்கின்றனர். இரவு வேளைகளில்..,” மேலே கேட்க முடியவில்லை அவளால். ஓர் அலாதி திருப்தி ஏற்பட்டது. ஆணுக்கு ஒரு காலம் வந்தால், பெண்ணுக்கு மட்டும் வராதா? `பயம்’ என்றால் எப்படி இருக்கும் என்று ஆண்களுக்கும்தான் தெரிய வேண்டாமா? “கலிகாலத்திலேதான் இந்தமாதிரி கண்ராவி எல்லாம் நடக்கும். இல்லே, வினு? இப்படியெல்லாம் கேள்விப்பட்டதுண்டா இதுக்கு முந்தி?” அகிலாதான் அரற்றினாள். “அமெரிக்காவில மொதல்ல நடந்திச்சாம். உடனே ஒலகம் பூராவும் எல்லா விஷயத்திலேயும் அவங்களைக் காப்பி அடிக்குது!” பேச என்ன இருக்கிறது! அவள் சொன்னதைக் காதில் வாங்காமல், அர்த்த ராத்திரி ஆனாலும், வினுதா குளிக்கப் போனாள் -- இழவு வீட்டுக்குச் சென்றுவந்த தீட்டு விலக. 18. தனிப் படுக்கை      காலையில் எழுந்ததும் குளித்துவிட்டுப் பூஜையறையில் அரைமணியாவது சுலோகம் சொல்லும் வழக்கமுடையவள் அகிலா. ஆனால் அன்றோ குழப்பமே உருவாக வாசலைப் பார்த்தபடி நின்றிருந்தாள். ஆறரை மணி ஆகியிருந்தாலும், இன்னும் இருள் பிரியவில்லை. பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் செல்கிறவர்கள் வெளிச்சத்திற்காகக் காத்திருக்கமுடியுமா, என்ன! பக்கத்து வீட்டுப் பாப்பா நாள்பூராவும் வேலைக்குப் போய்விடும் தாயைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்ற ஏக்கத்தில் கதறுவதும், அதைச் சமாதானப்படுத்த, `சாயந்திரம் சாக்லேட் வாங்கிட்டு வரேன், என்ன!’ என்று சிறுவயதிலேயே லஞ்சப் பழக்கத்தைத் தோற்றுவிக்கும் தாயின் குரலும் கேட்டு வழக்கம்போல் அவளுக்குச் சிரிப்பு வரவில்லை. ஸ்கூல் பஸ்கள் விரைந்துகொண்டிருந்தன. அவைகளுக்குள் தலையை ஒருபுறம் சாய்த்தபடி கண்ணுறங்கும் மாணவர்கள். பலவிதமான ஸ்கூட்டர்களின் ஒலி -- ஆங்கில, மலாய், சீன, தமிழ் தினசரிகளை வினியோகிப்பவர்கள் நிறுத்தி நிறுத்திப் போவது, விடியற்காலை நான்கு மணிக்கே கறந்த பாலை வாடிக்கையாளர்களின் வீடுதோறும் கொடுத்துப்போவது, இப்படி எல்லாவித சத்தங்களும் காதில் விழுந்தும், எதுவும் மனதில் படியாது, பிரமையாக நின்றிருந்தாள் அகிலா. தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த வினுதா அவள் தோளைப்பற்றி லேசாய் குலுக்கினாள். “என்னண்ணி?” அகிலாவுக்கு எங்கிருந்தோ ஆத்திரம் வந்தது. அவள் கையை முரட்டுத்தனமாகப் பிடித்துத் தள்ளினாள். “எல்லாம் ஒன்னாலதாண்டி! எவ்வளவு அமைதியா இருந்த மனுஷர்! இப்படி, ராத்திரி பூராவும் வீட்டுக்கு வரப் பிடிக்காதமாதிரி செஞ்சுட்டியே!” துணுக்குற்றாலும், இளையவள் சமாளித்துக்கொண்டாள். தாயைப்போல் பாசத்தைக்கொட்டி தன்னை வளர்த்தவள்! இப்போது தன் மனக்கொந்தளிப்பை வேறு யாரிடம் காட்டுவாள், பாவம்! `ராத்திரி வீட்டுக்கே வரலியா!’ என்று மெல்லிய குரலில் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். ஒரு சிலரைப்போல, `வீடு’ என்று ஒன்று இருப்பதையே மறந்தவராக, பார்ட்டி என்றோ, நண்பர்கள் வீடு என்றோ போய், தன்னை மறந்து இரவெல்லாம் கழிக்கும் பழக்கம் கிடையாது அருணுக்கு. “அண்ணா க்ளினிக் போயிருப்பார். நான் விசாரிக்கிறேன். நீங்க போய் பூஜையைக் கவனியுங்க,” என்றாள் ஆதரவாக. அகிலா பிடிவாதமாக அங்கேயே நின்றிருந்தாள், `நீ சொல்லி நான் என்ன கேட்பது?’ என்பதுபோல். அதோடு, தன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் அவர் வீட்டைவிட்டு வெளியே காலெடுத்து வைத்ததுகூடக் கிடையாதே! ஃபோனில் பேசிவிட்டு, தளர்ச்சியுடன் வினுதா வந்ததே பல கதைகளைச் சொல்லிற்று. எதையும் வெளிப்படையாகக் கேட்க பயந்து, அவளையே சிறிது நேரம் பார்த்தாள் அகிலா. இறுதியில், பொறுக்க முடியாது கேட்டாள்: “என்னவாம்?” உண்மையைச் சொல்வதா, வேண்டாமா என்று சற்றுக் குழம்பினாள் வினுதா. ஏற்கெனவே கலங்கிப்போயிருக்கிறாளே! தானும் சேர்ந்து குழப்ப வேண்டுமா? ஆனால், இதெல்லாம் சொல்லாமல் மறைக்கும் விஷயமா! எத்தனை நாளைக்கு ரகசியமாகவே வைக்கமுடியும்? `நடக்கிறது நடந்துவிட்டுப் போகட்டும்,’ என்று ஒரு பெருமூச்சுடன் கூறினாள்: “அண்ணா ஒரு வாரமா க்ளினிக் பக்கமே வரலியாம்!” அதிர்ச்சி தாங்காது படபடக்கும் நெஞ்சை ஆசுவாசப்படுத்துவதுபோல், அதன்மேல் கையை வைத்துக்கொண்டாள் அகிலா. தினமும் வேளாவேளைக்கு அப்படி எங்குதான் போகிறார்? “அண்ணா இப்பல்லாம் மாடி ரூமிலேகூடப் படுக்கிறது கிடையாது!” சம்பந்தமில்லாமல் என்னவோ சொன்னாள், பரிதாபமாக. யாரோ அந்நியருடன் குடித்தனம் நடத்துவதுபோல பயங்கரமாக இருந்தது. இப்போது வெட்கத்தைவிட்டு அண்ணி தன் வாயாலேயே கூறியபோதுதான் விஷயம் முற்றியிருக்கிறது என்று உறைத்தது வினுதாவுக்கு. மனமோ இந்தப் புதிய சங்கதியை அலச ஆரம்பித்தது. தங்கை மனமுடைந்து போயிருக்கையில், தான் மட்டும் மனைவியுடன் சுகித்திருப்பதா என்றா தனிப்படுக்கை? ஒரு வேளை, கேவலம் இந்த உடலிச்சைதானே மனிதனை இவ்வளவு தூரம் ஆட்டிப் படைக்கிறது என்ற விரக்தியோ? அவள் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டவளாக, “கண்ட பொண்ணுங்களைப் பாத்து, அவங்கமேல கையைப் போடறதுதான் தப்பு. புருஷன்-மனைவி ஒண்ணா, ஒத்துமையா இருக்கிறதுதான் இல்லற தர்மம்னு சாத்திரங்களே சொல்லுதே!” என்றாள் வீம்புடன். “இப்பல்லாம் அண்ணா எங்கே..?” 19. கொலை!      அவளையும் அறியாது, அகிலாவின் கண்கள் வீட்டுக்குப் பின்னால் போயிற்று. அங்குதான் அவரது ஆராய்ச்சிக்கூடம்!   மேலே எதுவும் பேசாது, இரு பெண்களும் அங்கு விரைந்தனர். கதவு உள்பக்கத்திலிருந்து தாழிடப்பட்டிருந்தது. உள்ளே யாரோ நடக்கும் சத்தம் கேட்டது. செய்வதறியாது, திகைத்து நின்றார்கள் சில நிமிடங்கள். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது, கண்களில் பீதி! அண்ணாகூட வீட்டில் இல்லையே! எந்த தைரியத்தில் எவனையோ எதிர்கொள்ள இப்படி இருவருமாக உள்ளே நுழைவது! கதவைத் தட்டக் கையெடுத்தாள் அகிலா. அவளைச் சாடையாலேயே தடுத்துவிட்டு, அவளது மணிக்கட்டைப்பற்றி, பின்கதவை நோக்கி அழைத்துப்போனாள் வினுதா. அபய முத்திர முத்திரைபோல் கைகாட்டி, `பொறுத்திரு’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு, வீட்டுமுன் இருந்த தனது காரைத் திறந்து, அந்த போத்தலை எடுத்துக்கொண்டாள். முன்பு ஒருமுறை அனுசூயாவின் கணவனை யாரோ என்றெண்ணி, அவர் கண்ணில் பாய்ச்சியது அது. உடனுக்குடன் எதிராளியை செயலிழக்கச் செய்துவிடும். இம்முறை உண்மையாகவே ஒரு அயோக்கியனைப் பிடிக்கப் பயன்படப்போகிறது! அவ்வளவு கலக்கத்திலும், சினிமா கதாநாயகியைப்போல, சரித்திரப் பெண்மணிபோல, வீரமும் அதனால் ஒரு பெருமிதமும் ஏற்பட்டன வினுதாவுக்கு. “இது என்னது?” அகிலா மெதுவாகக் கேட்டபோது, உதட்டைப் பிதுக்கினாள். அண்ணா அந்த அறையில் என்னென்ன வைத்திருக்கிறாரோ, யார் கண்டது! எவனோ விஷயம் தெரிந்து வந்திருக்கிறான், களவாணிப்பயல்! அகிலா பின்கதவின்மேல் கைவைத்தாள். தாழிடப்படாத அக்கதவு திறந்தமாதிரியே அவளுடைய வாயும் பிளந்தது. அதிர்ச்சியில் மேலே ஓரடிகூட எடுத்துவைக்க முடியாதவளாய் உறைந்துபோனாள். வினுதாவும் எட்டிப் பார்த்தாள், அண்ணியின் போக்குக்கு என்ன காரணம் என்றறியும் ஆவலுடன். அங்கு அவள் கண்டது! அறுவைச் சிகிச்சை நிபுணர் அருண் ஒரு கட்டிலின் அருகே நின்றிருந்தார். கையில் பளபளக்கும் கத்தி! கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தவன் தூக்கத்தினாலோ, என்னவோ, தன்னிலை மறந்து இருந்தான். இல்லாவிட்டால், இடுப்புக்குக்கீழ் பிறந்தமேனியாக இருப்பானா! அவனுடைய முகம் சவரம் கண்டு மாதக்கணக்கில் ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றியது வினுதாவுக்கு. தாடிக்காரன்! நடக்க இருந்ததை ஊகிக்க அவளுக்கு வெகுநேரமாகவில்லை. மீண்டும் அண்ணாவைப் பார்த்தாள். ஏதோ மோனநிலையில் இருந்தவரைப்போல் தோன்றினார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு நரபலி கொடுக்கப்போகும் மந்திரவாதியைப்போல் பயங்கரமாக இருந்தது. “அண்ணா!” என்று அலறினாள். எங்கிருந்தோ ஓர் எதிர்ப்புச்சக்தி அவளை ஆட்கொள்ள, வழியில் நின்றிருந்த அகிலாவைப் பக்கவாட்டில் பிடித்துத் தள்ளிவிட்டு உள்ளே பாய்ந்தாள். சற்றே தடுமாறினார் அருண். தான் செய்யமுனைந்த `வேள்வி’யை யரோ தடுக்க வந்திருக்கிறார்கள்! வெறிபிடித்தவர்களுக்கே உரித்தான அதீத பலத்துடன், ஒரே பாய்ச்சலில் அருகிலிருந்த மேசைமேலிருந்து துப்பாக்கியை எடுத்தார். தன் உயிருக்குயிரான தங்கைதான் எதிரே நிற்கிறாள் என்ற பிரக்ஞையே இல்லாதவராய், அவளைநோக்கிக் குறி வைத்தார். “ஐயோ!” சமயத்தில் அகிலா கூச்சலிட, அவருடைய கவனம் கலைந்தது. அதற்குமேலும் யோசித்துக் கொண்டிருக்கவில்லை வினுதா. கடந்த சில மாதங்களாக கற்க ஆரம்பித்திருந்த ஜூடோ தற்காப்புக்கலையின் முதல் பாடத்திலேயே, தன்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சிக்கும் ஆணிடமிருந்து ஒரு பெண் தன்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று கற்றிருந்தது அப்போது உதவியது. ஒரு காலைத் தூக்கி வளைத்து, அதன் முட்டியால் ஓங்கிக் குத்தினாள். வலி தாங்காது அலறியபடி, கீழே விழுந்தார் அருண். துப்பாக்கி எங்கேயோ விழ, அவரையும் அறியாது, பிராணவலி ஏற்படுத்திய மர்மப் பகுதிக்கு கை போயிற்று. “அவரைக் கொன்னுட்டியேடி, பாவி!” அகிலா சபித்தாள். 20. துக்கத்தில் ஐக்கியம்      அண்ணியின் குற்றச்சாட்டை அலட்சியப்படுத்திவிட்டு, ஆகவேண்டிய காரியங்களைப்பற்றி யோசித்தாள் வினுதா. வலுக்கட்டாயமாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அங்கு கிடத்தப்பட்டிருந்தவனின் நிர்வாணம் இப்போது கண்ணை உறுத்தியது. ஆதரவில்லா ஒரு சிசுவுக்கு உடையணிவிப்பதுபோல, எவ்வித கிலேசமுமின்றி, கீழே கிடந்த அவனுடைய கால்சட்டையை எடுத்து மாட்டிவிட்டாள். அவன் சுயநினைவு திரும்புவதற்குள் எங்காவது கொண்டு விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால், அண்ணா மாட்டிக்கொள்வார். தரையில் அலங்கோலமாகக் கிடந்த அண்ணாவின்மேல் அவள் பார்வை பதிந்தது. `நம் துயரத்தில் எவ்வளவு தூரம் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தால், அவருடைய இயல்புக்கு விரோதமாக இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்திருப்பார்!’ என்ற உணர்வு எழுந்தபோது, அப்படியே அவரைக் கட்டிக்கொண்டு அழவேண்டும்போல இருந்தது. ஆனால், முக்கியமான பல வேலைகள் காத்திருந்தன. `இந்த இடம் கத்தியும், துப்பாக்கியுமாக இருக்கிறதே! இருவரையும் வெளியேற்றிவிட்டு, எல்லாவற்றையும் அகற்றிவிட வேண்டும்,’ என்று நிச்சயித்துக்கொண்டாள். சில மணி நேரம் கழிந்தது. வலியுடன் முனகியபடி கண்ணைத் திறந்தார் அருண். கவலையே உருவாக மனைவியும், தங்கையும் நிற்பது தெரிந்தது. “என்ன ஆச்சு எனக்கு?” ஈனஸ்வரத்தில் அவர் கேட்டபோது, நிம்மதி பெருகியது வினுதாவுக்கு. தான் நினைத்தது சரிதான். அளவுக்கு மீறிய உணர்ச்சிக் கொந்தளிப்பில், முன்பு செய்த காரியங்களோ, அவைகளால் உண்டான விபரீதமோ அவருக்கு நினைவில்லை! நரம்பத்தளர்ச்சி உடையவன் சாமியாடுவதுபோல்தான். பிறகு எதுவும் நினைவில் தங்குவதில்லை. வேலைக்குப் போவதாக பராக்கு காட்டிவிட்டு, எங்கே போய், எவ்வளவு நிரபராதிகளைத் தண்டித்தாரோ! இங்கு அவர் கொண்டுவந்திருந்தது இவன் ஒருவன்தானென்று என்ன நிச்சயம்? இதுவரை செய்திருந்த குற்றங்களுக்காகப் பிடிபட்டால்கூட, `தாற்காலிகமான மூளைக்கோளாறு’ என்றுதான் சட்டம் முடிவெடுக்குமே தவிர, பயங்கரமான குற்றவாளியென தண்டிக்கப்பட மாட்டார். இதே ரீதியிலான குற்றங்களை இன்னமும் செய்யாமல் தடுக்க ஒரே வழிதான் உண்டு. வியாதி என்றால் மருத்துவரைத்தானே தேடிப் போகவேண்டும்! `பைத்தியக்காரர்’ என்று உலகம் பட்டம் கட்டிவிடும் சூழ்நிலை ஏற்படலாம். இனி மருத்துவராக அவர் தொழில் செய்யவே முடியாது. அவரை நம்பி யார் வருவார்கள்? `ஐயோ, அண்ணா! எனக்காக எவ்வளவு கொடுமையைச் செஞ்சுட்டீங்க!’ அவளது உள்ளம் அழுதது. பிரதி உபகாரமாக, வாழ்நாளெல்லாம் அவருக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு சேவை செய்தாலும் தகும் என்று பட்டது. “ஒண்ணுமில்லே. ஒரு சின்ன விபத்து, அண்ணா. தூங்குங்க!” அவளது பரிவான குரல் தோற்றுவித்த நிம்மதியுடன், அருண் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டார். கால தாமதமின்றி, நாட்டிலேயே சிறந்த மனோதத்துவ நிபுணரிடம் அண்ணாவை அழைத்துப்போக வேண்டும். நடந்ததை விவரமாகச் சொல்லாது, `அண்ணாவால் தன் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை, எப்போதும் ஏதோ குழப்பமாக இருக்கிறார்,’ என்ற அளவில் தெரிவிக்கலாம். தனக்கு நேர்ந்ததைப்பற்றிச் சொல்லலாம். அதில் தான் குற்றவாளி இல்லையே! அவமானப்பட என்ன இருக்கிறது? நல்லவேளை, அவர் இதுவரை செய்த கொலைகளுக்குச் சாட்சியங்கள் இல்லை. அண்ணாதான் அவைகளைச் செய்திருப்பார் என்பதில் வினுதாவுக்குச் சந்தேகமே இருக்கவில்லை. அந்த எண்ணம் வேறு எந்த உணர்வையும்விட பரிதாபத்தையே எழுப்பியது. எதுவும் செய்யத் தோன்றாமல், இரு கைவிரல்களையும் இறுகக் கோர்த்தபடி நின்றிருந்த அகிலாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள். “ஸாரி, அண்ணி! நான் அன்னிக்கு அந்த டாக்ஸியிலே ஏறியே இருக்கக்கூடாது,” என்ற குரல் உடைய, அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, பெரிதாக அழ ஆரம்பித்தாள் வினுதா. முற்றும் நிர்மலா ராகவனைப்பற்றி...      பெங்களூரில் படித்துப் பட்டம் பெற்று, திருமணமானபின் மலேசியா வந்தவர். 1966-லிருந்து கோலாலம்பூரில் வசித்து வருகிறார். மூத்த பௌதிக ஆசிரியையாக மலேசிய அரசாங்கப் பள்ளிகளில் பணிபுரிந்தவர். தமிழ், ஆங்கில இருமொழி எழுத்தாளர். தமிழில் சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, வானொலி நாடகம், கலை விமரிசனம் ஆகியவைகளை 1967-லிருந்து எழுதிவருகிறார். பல சிறுகதை, நாடக, நாவல் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். இவரது “ஏணி” என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாட்டுக் கல்லூரி ஒன்றில், இளநிலை பட்டப் படிப்புக்குப் பாட புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது. சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006), சிறுகதைச் செம்மல்” விருது, 1991, சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது (சூரியன் மாதப் பத்திரிகை வாசகர்களால் 1993-ல் தேர்ந்தெடுக்கப்பட்டது)). சிறுகதை, நாடகத்திற்கான பட்டறை நடத்தியுள்ளார். போட்டி நீதிபதியாகவும் இருந்திருக்கிறார். பல மேடைகளிலும், கருத்தருங்குகளிலும் பேசியுள்ளார். 2015-ல், சாஹித்ய அகாடமி, இந்திய தூதரகம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் முதலியவை இணைந்து, கோலாலம்பூரில் நடத்திய இலக்கியக் கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்தில் கல்வி, சமூக இயல், மனோதத்துவம், இந்திய பாரம்பரியக் கலை விமரிசனம், மருத்துவம் முதலான பொருட்களில் தினசரிகளில் பதின்மூன்று வெவ்வேறு பகுதிகளில் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் ஒலிபரப்பாகி உள்ளன.  தனது இரு கதைகளை ஆங்கிலத்தில் இவர் மொழிபெயர்க்க, அவை அகில உலக இஸ்லாமிய பல்கலைக்கழக சஞ்சிகையில் வெளியாகி உள்ளன. ஆங்கிலத்தில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள் ஸ்வீடன் மற்றும் மலேசியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன.