[] [தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ்] தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் சி. சரவணகார்த்திகேயன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் பதிப்புரிமை © 2015 இவரால் / இதனால் சி. சரவணகார்த்திகேயன். This book was produced using Pressbooks.com. உள்ளடக்கம் - தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் - தமிழ் மின்னிதழ் - சமர்ப்பணம் - ரகசியச் சுதந்திரம் - உள்ளே... - 1. நிகழத் தவறிய‌ உரையாடல் - 2. நேர்காணல் - 3. பெருமாள்முருகன் கவிதைகள் : அந்தத் தெருநாய்க்கு நான் யாருமில்லை - 4. பூக்குழி : காதலை எரிக்கும் சாதியம் - 5. ஆளண்டாப் பட்சி : இடப்பெயர்வு எனும் வாதை - 6. கங்கணம் : மணம் எனும் கயிறு - 7. கூள மாதாரி : கட்டாயமும் மூர்க்கமும் - 8. நிழல்முற்றம் & நிழல்முற்றத்து நினைவுகள் : திரைக்கு முன்னால் - 9. மாதொருபாகன் TRILOGY : பிரியத்தின் துன்பியல் - 10. ஏறுவெயில் : வெயிற்காயும் கண்ணீர்த் துளிகள் - 11. நீர் விளையாட்டு : நவீனங்களை எதிர்கொள்ளல் - 12. திருச்செங்கோடு : கதாநாயகனின் கட்டியங்கூறல் - 13. பீக்கதைகள் : பேசாப்பொருளை பேசத் துணிந்தார் - 14. வேப்பெண்ணைக் கலயம் : க்ஷணப் பொழுதின் கதைகள் - 15. கெட்ட வார்த்தை பேசுவோம் : அல்குல் ஆராய்ச்சியாளன் - 16. வான்குருவியின் கூடு : அனுபவ ரசனைக்கான பாடல்கள் - 17. பெருமாள்முருகன் - பிற படைப்புகள் / பங்களிப்புகள் - 18. விலைமகள் - 19. ரஸ்கின் பாண்ட் - ஒரு சந்திப்பு - 20. காமத்தின் பரிணாமம் - 21. உயிர் தப்பிய கவிதை - 22. செல்வமடி நீயெனக்கு - 23. நாராயணன் - 24. ‘போல’ கவிதைகள் - 25. நிழலோவியம் - 26. கன்னி நிலம் - 27. குவியொளி - 28. எண்ணியாங்கு என்கொலல் - 29. ஜெர்மானிய இளைஞனின் கதை - 30. அஜ்னபி கவிதைகள் - 31. கனவுகளின் நாயகன் - 32. பொன்னாஞ்சலி – 1 - 33. பா.சரவணன் கவிதைகள் - 34. கடவுள் அமைத்து வைத்த மேடை - 35. பொன்னாஞ்சலி – 2 - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் []   1. நூலின் பெயர் – தமிழ் : சுதந்திரம் – 2015 இதழ்  – இலவச மின் காலாண்டிதழ் 2. நூல் ஆசிரியர்  – சி. சரவணகார்த்திகேயன் 3.  உரிமம் –  Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. (http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/) 4. மின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com 2 தமிழ் மின்னிதழ்   [] இலவச‌ மின் காலாண்டிதழ் | இதழ் : 3 | சுதந்திரம் – 2015 | ஆசிரியர் சி. சரவணகார்த்திகேயன் ஆலோசனைக்குழு ந. பார்வதி யமுனா இரா. இராஜராஜன் அட்டை மீனம்மா கயல் கௌரவ‌ ஆலோசனை சௌம்யா ஜெகன் தொடர்புக்கு மின்னஞ்சல் – c.saravanakarthikeyan@gmail.com வலைதளம் – http://tamizmagazine.blogspot.in/ அலைபேசி – +91 98803 71123 கதை, கவிதைகளில் வரும் பெயர்களும், நிகழ்வுகளும் கற்பனையே. கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் அதை எழுதுபவரின் சொந்தக் கருத்துக்களே. படைப்புகளின் உரிமை அந்தந்த ஆசிரியர்களையே சேரும். 3 சமர்ப்பணம் சுதந்திரம் – 2015 இதழ் சமர்ப்பணம் நவீனத் தமிழிலக்கியத்தின் பிதாமகன் அசோகமித்திரன் அவர்களுக்கு 4 ரகசியச் சுதந்திரம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மும்பை புறநகர் பகுதிகளில் உள்ள சில இரு நட்சத்திர ஹோட்டல் மற்றும் லாட்ஜ்களில் மால்வன் மாவட்டக் காவல்துறை ரெய்ட் நடத்தி பொதுமக்களுக்குத் தொந்தரவு எனக்கூறி அங்கு தங்கி இருந்த மணமாகாத ஜோடிகளைக் கைது செய்து அழைத்துப் போய் அவர்கள் பெற்றோருக்குத் தகவல் சொல்லி இருக்கிறார்கள். இது தனி நபர் உரிமைகளுக்கு எதிரான அராஜக நடவடிக்கை என ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு வலுக்க, விசாரணை ஒன்று முடுக்கி விடப்பட்டு முதல் கட்டமாய் போலீஸ் செய்தது பிழை தான் என விசாரணை அதிகாரி ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தியா என்ற சுதந்திர தேசத்தில் பரஸ்பரம் சம்மதம் கொண்ட எவரும் எவருடனும் உறவு கொள்ளலாம் என்று தான் அரசியல் சாசனம் கூறுகிறது. இடம், பொருள், ஏவல் முக்கியம் என்றாலும் இச்சம்பவத்தில் பூங்கா, கடற்கரை, திரையரங்கு போன்ற பொதுமக்கள் (குறிப்பாய் வயது வராதோர்) புழங்கும் இடங்களில் அவர்க‌ள் இதை நிகழ்த்தவில்லை. அதனால் இதற்கு public nuisance / indecent behaviour என்று பட்டமளிக்க எந்த‌ முகாந்திரமும் இல்லை. தமிழ் இதழ் இந்தத் தனி நபர் அத்துமீறலுக்கு எதிரான தன் கண்டனங்களை இங்கு அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது. ஆனால் இதில் அதிக கவனம் பெறாத மற்றுமொரு கோணமுண்டு. பிடிபட்ட ஜோடிகளில் ஒன்று தாங்கள் நிச்சயதார்த்தம் முடிந்தவர்கள் என்கிறது; தான் விலைமகள் அல்ல, ஏன் இந்த இழிவுக்கு ஆளாக வேண்டும் எனக் கேட்கிறாள் ஒரு பெண். இன்னொரு பையன் தன் தந்தைக்கு இதைச் சொன்னதால் அவர் முகத்திலேயே விழிக்க முடியவில்லை என்கிறான். இவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் விஷயம் ஒன்று தான்: நான் கலவி கொள்ள விரும்புகிறேன். ஆனால் அது யாருக்கும் தெரிய வரக்கூடாது, ஏனென்றால் இது சமூக விதிகளின்படி அத்துமீறல். எனக்கு இந்தச் சமூகத்தின் நல்ல பையன் / ஒழுக்கமான பெண் முத்திரையும் வேண்டும், உடல் தேவையையும் தீர்த்துக் கொள்ள வேண்டும். கலாசாரக் காவலர்கள் என்று போலீசாரை எதிர்க்கும் நேரத்தில் அதே கலாசாரத்தைக் கெட்டியாகப் பிடித்த படி தானே இருக்கிறோம்! அந்த ஜோடிகளில் ஒருவர் கூட “ஆம், நாங்கள் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டோம். அதில் மறைக்க ஏதுமில்லை. எங்கள் அந்தரங்கத்தில் தலையிட்டு இதைப் பொதுவெளியில் சொல்ல வைத்தவர்கள் தான் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.” என்று ஏன் சொல்லவில்லை? காரணம் நாம் ஒரு விஷயத்தின் இரு எதிர்முனைகளையும் கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு கலாசாரத்துக்குக் கட்டுப்பட்டவன் என்ற நற்சான்றும் வேண்டும், ரகசியமாய் அக்கலாசாரத்தை உடைத்து எறியவும் வேண்டும். உதாரணமாய் கைது செய்யப்பட்டவர்களில் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு கலவி செய்தர்கள் அல்லது கள்ளக்காதலர்களே பெரும்பான்மை என்பது என் அனுமானம். அவர்கள் நாளை இதை எல்லாம் மறைத்தபடி இன்னொருவரைப் புன்னகையுடன் மணம் செய்வர். இன்று இந்தக் கூடலும் வேண்டும், நாளை ஒழுக்கமான ஆள் என்ற சான்றிதழுடன் மண வாழ்க்கைக்கும் பாதுகாப்பும் வேண்டும். நம் எதிர்பார்ப்பு முரண்பட்டு இருக்கும் போது அடிப்படைவாதிகள் அத்துமீறத் தான் செய்வார்கள். அவர்கள் மட்டுமல்ல, நம் ரகசியம் அறிந்த சாதுவானவர்களும் சந்தர்ப்பம் வாய்த்தால் அயோக்கியத்தனம் செய்வர். வேண்டியது கலாசாரமா, வெளிப்படைத்தன்மையுடன்‌ விடுதலையா என நாம் முடிவு செய்ய வேண்டும். [] 5 உள்ளே... பெருமாள்முருகன் நிகழத் தவறிய உரையாடல் – 5 பெருமாள்முருகன் கவிதைகள் : அந்தத் தெருநாய்க்கு நான் யாருமில்லை / கவிதா முரளிதரன் – 7 பூக்குழி : காதலை எரிக்கும் சாதியம் / யமுனா – 14 ஆளண்டாப் பட்சி : இடப்பெயர்வு எனும் வாதை / சுரேஷ் கண்ணன் – 19 கங்கணம் : மணம் எனும் கயிறு / கார்த்திக் குமார் – 22 கூள மாதாரி : கட்டாயமும் மூர்க்கமும் / கிருஷ்ண பிரபு – 25 நிழல்முற்றம் & நிழல்முற்றத்து நினைவுகள் : திரைக்கு முன்னால் / லேகா இராமசுப்ரமணியன் – 29 மாதொருபாகன் TRILOGY : பிரியத்தின் துன்பியல் / சி . சரவணகார்த்திகேயன் – 33 ஏறுவெயில் : வெயிற்காயும் கண்ணீர்த் துளிகள் / கவின் மலர் – 44 நீர் விளையாட்டு : நவீனங்களை எதிர்கொள்ளல் / நா . ராஜூ – 47 திருச்செங்கோடு : கதாநாயகனின் கட்டியங்கூறல் / நர்சிம் – 50 பீக்கதைகள் : பேசாப்பொருளை பேசத் துணிந்தார் / யுவகிருஷ்ணா – 53 வேப்பெண்ணைக் கலயம் : க்ஷணப் பொழுதின் கதைகள் / சாந்தி – 56 கெட்ட வார்த்தை பேசுவோம் : அல்குல் ஆராய்ச்சியாளன் / அதிஷா – 59 வான்குருவியின் கூடு : அனுபவ ரசனைக்கான பாடல்கள் / நாக சுப்ரமணியன் – 62 பெருமாள்முருகன் – பிற படைப்புகள் / பங்களிப்புகள் – 64 கவிதை விலைமகள் / சௌம்யா – 65 உயிர் தப்பிய கவிதை / ஷக்தி – 72 ‘போல’ கவிதைகள் / தமிழ் – 83 அஜ்னபி கவிதைகள் – 102 பா . சரவணன் கவிதைகள் – 108 [] புனைவு செல்வமடி நீயெனக்கு / சொரூபா – 73 நாராயணன் / முரளிகண்ணன் – 78 கன்னி நிலம் / மீனம்மா கயல் – 85 எண்ணியாங்கு என்கொலல் / வெ . இராதாகிருஷ்ணன் – 93 ஜெர்மானிய இளைஞனின் கதை ( வாஷிங்டன் இர்விங் ) / நவீனன் அநார்க்கீயன் – 98 கட்டுரை ரஸ்கின் பாண்ட் – ஒரு சந்திப்பு / என் . சொக்கன் – 66 காமத்தின் பரிணாமம் / அப்பு – 70 கனவுகளின் நாயகன் / எஸ் . கே . பி . கருணா – 102 கடவுள் அமைத்து வைத்த மேடை / ஜிரா – 109 நுண்கலை நிழலோவியம் / பாலா – 84 குவியொளி / மகள் – 91 பொன்னாஞ்சலி – 1 / நாகராஜ் – 107 பொன்னாஞ்சலி – 2 / பரணிராஜன் – 112 [pressbooks.com] 1 நிகழத் தவறிய‌ உரையாடல் [] : Editor’s Choice நிகழத் தவறிய‌ உரையாடல் சமகாலத் தமிழ் எழுத்தாளர்களுள் முக்கியமானவர் பெருமாள்முருகன். 90களின் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கி இன்று வரையிலும் கோலோச்சி வரும் வெள்ளி விழாக்காரர்களையே நான் இங்கு சமகால எழுத்தாளர்கள் எனக் குறிப்பிடுகிறேன். வடமேற்குத் தமிழக‌த்தின் வட்டார வழக்கில் அப்பகுதி மக்களின் பல்வேறு காலகட்ட வாழ்வியலை, கலாசாரத்தை விவரித்தும் தான் வேறுபடும் இடங்களில் விமர்சித்தும் பெருமாள்முருகன் எழுதியுள்ள புதினங்கள் நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்க இயலாதவை. [] தமிழ் மின்னிதழ் பற்றி ஆரம்பச் சிந்தனை எழுந்த 2014 டிசம்பர் மாதத்திலேயே இதழின் முகமாய், பிரதான அடையாளமாய் இருக்கப் போவது சமகால எழுத்தாளர்களின் நேர்காணல்கள் என்பதை முடிவு செய்தேன். அதனோடு இணைந்தே முடிவானது முதல் மூன்று நேர்காணல்கள் எவருடையவை என்பதும். அதன்படியே முதலிரண்டும் நடந்தேறின. மூன்றாவதாய் பெருமாள்முருகன். இடையே மாதொருபாகன் சர்ச்சைகளும் அதையொட்டி எழுத்தாளர் பெருமாள்முருகன் இறந்து விட்டான் என அவரே அறிவித்ததும் நிகழ்ந்தன. சர்ச்சைகள் தவிர்த்துப் பேசுவோம் என அவரை நேர்காணல் செய்ய முயன்றதும் தோல்வியில் முடிந்தது. இம்முறை வேறு யாரையாவது நேர்காணல் செய்யலாம், அடுத்த முறை மீண்டும் பெருமாள்முருகனை முயலலாம் என்று இதழின் அலோசனைக் குழுவில் எழுப்பப்பட்ட நியாயமான சிபாரிசினை மறுத்தேன். என் மனதில் எழுப்பியிருந்த வரிசையைக் கலைக்க விருப்பமில்லை. ஒன்று அவர் நேர்காணலுடன் இதழ் வரும், அல்லது எவர் நேர்காணலும் இடம்பெறாமலே வெளிவரட்டும் எனப் பிடிவாதமாய் இருந்தேன். பிற்பாடு நேர்காணலுக்கு மாற்றுச் சமரசமாய் பெருமாள்முருகன் சிறப்பிதழாய் இதழைக் கொண்டு வரலாம் எனச் சமாதானம் கொண்டேன். நண்பர்கள், முக்கியஸ்தர்கள் எனக் கலந்து கட்டி அவரைப் பற்றி பல்வேறு தரப்பு பார்வைகளும் இதில் பதிவாகி இருப்பதாக உணர்கிறேன். அவ்வகையில் தொகுப்பு நிறைவளிக்கிறது. ஒரு முக்கிய முயற்சியில் என்னோடு தோள் கொடுத்து இதில் பங்களித்தவ‌ர்கள் அனைவருக்கும் நன்றி. சுதந்திர தினத்தை ஒட்டி வெளிவரும் இதழ் படைப்புச் சுதந்திரம் மறுக்கப்பட்ட ஓர் எழுத்தாளனுக்கு சிறப்பிதழாக அமைவது நகைமுரண் மட்டும் என்பதாகத் தேங்காமல் நிஜ சுதந்திரமாக விரும்புகிறேன். 2 நேர்காணல் (நேர்காணல் இடம் பெறாததன் மௌன‌ அடையாளமாய் இந்தப் பக்கத்தை வெறுமையால் நிரப்புகிறேன்.) 3 பெருமாள்முருகன் கவிதைகள் : அந்தத் தெருநாய்க்கு நான் யாருமில்லை பெருமாள்முருகன் கவிதைகள் : அந்தத் தெருநாய்க்கு நான் யாருமில்லை (நீர் மிதக்கும் கண்கள் & வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் தொகுதிகளை முன்வைத்து) கவிதா முரளிதரன் “நாவலாசிரியன் டைப்ரைட்டருடன் போராடிக்கொண்டிருக்கும் போது, கவிஞன் கண்ணாடி ஜன்னலின் மீதுள்ள ஈயை பார்த்துக்கொண்டிருப்பான்” – பில்லி காலின்ஸ், அமெரிக்க கவிஞர்   நாவலாசிரியராகவும் கவிஞராகவும் இருக்கும் ஒரு படைப்பாளி என்ன செய்வார்? டைப்ரைட்டருடன் போராடிக்கொண்டிருப்பாரா அல்லது பறத்தலை பார்த்துக் கொண்டிருப்பாரா? பறத்தலின் ஆயுளைப்பற்றி விசனப்பட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது விசனப்படுபவரை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கலாம். நாவலாசிரியராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் விமர்சகராகவும் அறியப்படும் பெருமாள்முருகனின் இன்னொரு முகம் கவிதை. தனது படைப்புகளின் ஆதி வடிவம் கவிதை என்று சொல்கிறார் அவர். ”கவிதையின் அடிப்படை வடிவம் மனதுக்குள் உருவாகிவிட்டபின் எழுதுவது எளிது. கையில் இருக்கும் புத்தகப் பக்கம் ஒன்றிலோ கிடைக்கும் துண்டுச்சீட்டிலோ சட்டெனப் பதிவாக்கலாம். கணத்தில் நேரும் நிகழ்வு கவிதை. அதை உருவாக்கப் பெரும் சிம்மாசனமோ யாருமற்ற அனாதிவெளி உலாவலோ எல்லாம் தவிர்த்த பெருநேரமோ அவசியமில்லை. போகிறபோக்கில் வந்துசேரும் அது. மர இலை உதிர்ந்து காற்று வெளியில் பயணித்து நிலம் சேர்வது மாதிரிதான் கவிப்பயணமும். எங்கே எவ்விதம் துளிர் உருவாகும், அது விங்கனமின்றி வளரும் விதம் எப்படி என்பதை அறிவது கடினம். அதேபோலத்தான் பழுத்தபின் மரத்திலிருந்து உதிரும் கணமும். எப்போதும் தயாராக இருக்கும் நிலம் போல் கவிஞன். இவ்விதம் இயல்பாக நிகழ்வதாலேயே கவிதைத்தஞ்சம் எனக்குத் தேவைப்படுகிறது” எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். [] கவிதை எழுதுவதும் புனைவு எழுதுவதும் இரு வேறு விஷயங்கள் என்றே எழுத்தாளர்கள் கருதுகிறார்கள். இரண்டும் முற்றிலும் வெவ்வேறான இசைக் கருவிகள் போல என்கிறார் காலின்ஸ். இரண்டு இசைக் கருவிகளிலும் தேர்ச்சி பெறுவது அசாதாரண விஷயம். அந்த அசாதாரணம் வெகு இலகுவாக பெருமாள் முருகனுக்குக் கைவந்திருக்கிறது. கணத்தில் நேரும் நிகழ்வு என்று கவிதையைச் சொல்லும் பெருமாள் முருகன் அந்தக் கணத்தில் உருவாக்கும் எண்ணற்ற உலகங்களின் மாயம்தான் கவிதை என்னும் ரசவாதம். ஒவ்வொரு கவிதையும் அதன் வரையிலும் ஓர் உலகம். ஒரு பறத்தலின் ஆயுளைப் போல. “விடேன் பறத்தலின் ஆயுள் அவ்வளவுதான்” என்று சமாதானம் சொல்கிறது பெருமாள் முருகனின் கவிதை ஒன்று. ஆனால் கவிதைக்கு அந்தச் சமாதானம் தேவையில்லை. சில வரிகளில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அதனளவில் அது முழுமையான, நிறைவான ஓர் உலகம். அது உருவாக்கியவரின் உலகம் மட்டுமல்ல. வாசிப்பவரின் உலகமாவதும்தான் படைப்பின் நோக்கமும். பெருமாள்முருகனின் கவிதைகளும் அப்படியே! பெருமாள்முருகனின் கவிதைகள் உருவாக்கும் ஒவ்வொரு உலகமும் எளிமையானது, வசீகரமானது, ஆழமானது. அகவுணர்வில் தூசு படிந்து கிடக்கும் ஏதோவொரு தருணத்தின் மீது நாம் முற்றிலும் எதிர்பாராத, புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவது. அதிலிருந்து ஏதோ ஒரு மறக்கப்பட்ட வலியையோ கடந்து வந்த புன்னகையையோ மீட்டெடுத்துக் கொடுப்பது. வலிகளால் அல்லது புன்னகைகளால் ஆன நாம் மறந்தே போன நமது சின்னஞ்சிறு உலகங்களை ஒரு செல்லப் பிராணியைப்போல நமது உள்ளங்கைக் கதகதப்பிற்குள் கொண்டு வந்து வைக்கிறது பெருமாள்முருகனின் கவிதைகள், ஒரு கணப்பொழுதேனும்.   சமயங்களில் வலியோ புன்னகையோ இல்லாமல் வெறும் சம்பவிப்புகளாகவே கடந்து வந்திருக்கும் எண்ணற்ற பொழுதுகளில் ஏதோ ஒன்றை அதன் தீவிரத்தோடும் அடர்த்தியோடும் நம் முன்பு நிறுத்தி திடுக்கிட செய்கிறது. தெருக்களில் நாய்களின் அலைவுறுதலோ அல்லது மரணமோ எப்போதும் ஏதாகவும் இருந்ததில்லை. கல்லெறிதலோ உணவிடுதலோ எதையும் செய்யாத நான் நாய்க்கு யாராகவும் இல்லை, இப்போதும் இனி எப்போதும். ஆனால் இந்த கவிதைக்கு பிறகு தெருநாய் எனக்கு தனித்த ஒரு உலகம்.   இழவு வீட்டின் சாயல் ஏதுமில்லாமல் என் வீட்டு முன் ஒரு சாவு நிகழ்ந்தது அரளிச் செடியடியில் குவிமணலில் எப்போதும் படுத்துறங்குவது போல் அந்த நாய் இறந்து போயிருந்தது விஷப்பூச்சி தீண்டியிருக்கலாம் ஆகாத உணவை யாரேனும் வைத்திருக்கலாம் சிலநாள் உடல்நிலை சரியில்லாமலும் இருந்திருக்கலாம் ஓரிடம் என்றில்லாமல் அலைந்து திரியும் தெருநாய்க்கு எதுவும் எப்போதும் நேரலாம் இருக்கும் வரை எங்கே போவதெனத் தீர்மானித்துக் கொள்ளாமலே போய்க் கொண்டிருந்தது எங்கே படுத்துறங்குவதென யாரும் அதற்கு விதித்திருக்கவில்லை யாருக்கும் பதில் சொல்ல அது கடமைப்பட்டிருக்கவில்லை அடுத்த வேளை உணவுக்கென எந்த ஏற்பாடும் செய்து பதற்றமடைந்ததில்லை கல்லெறிபவரைக் கண்டால் விலகி ஓடவும் உணவிடுபவரை ஒரு வாலாட்டலால் பெருமைப்படுத்தவும் செய்தது தவிர உறவேதுமில்லை அதற்கு உடல்மீது அரளி உதிர்த்த பூக்கள். ஒரு வாசிப்பில் வலியையும் வேறொரு வாசிப்பில் மௌனத்தையும் உருவாக்குவது இந்த கவிதை. கவிதை என்பதே மௌனம். மௌனத்தின் நீட்சி. ஆனால் தெருநாயின் பதற்றமின்மையும் அதன் மரணத்தின் அநாதமையும் இனி ஒரு போதும் அதே போலிருக்கப் போவதில்லை. வாய்க்கரிசியை க் காக்கைகளுக்கு வீசியதும் உயிர்த்தெழும் எளிய உலகங்கள் அவர் உருவாக்குபவை. அதே நேரம் வலிமையான அரசியல் கூற்றுகளாகவும் அவை சமயங்களில் உருக்கொள்கின்றன. “கவிதையைப் பிரசுரிக்கக் கொடுக்கும் மனநிலையிலிருந்து எப்போதோ விடுபட்டுவிட்டேன். அதனால் சில கவிதைகள் சூழல் சார்ந்து உடனடியாகப் பெற வேண்டிய கவனத்தை இழந்திருக்கின்றன” என்கிறார் பெருமாள்முருகன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வெளியான அவரது நீலப்படக் காட்சிகள் கவிதை இன்றைய அரசியல் சூழலோடு கொண்டிருக்கும் பொருத்தப்பாட்டை யதேச்சையானது என்று கடந்துவிட முடியாது. நீலப்பட வலைத்தளங்களை தடை செய்ததன் பின்னணியில் ஏற்பட்ட விவாதங்களில் மறுக்கவியலாதது, அதன் சுரண்டும் தன்மை பற்றியது. தடை எந்த அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டியதோ அதே அளவு அதில் உள்ள சுரண்டல் போக்கும் எதிர்க்கப்பட வேண்டியதும் விவாதிக்கப்பட வேண்டியதும். நான் பார்த்த நீலப்படங்களில் நினைவில் இருக்கும் காட்சிகள் சில: பருத்த முலைகள் கொண்ட இரு பெண்களைப் புணரும் (சிறுவனுமல்லாத இளைஞனுமல்லாத) சிறுபையன் சட்டை கழற்றுகையில் கக்கத்தில் கிழிசல்கள் தெரிந்தன வெள்ளைக்காரன் ஒருவன் உறை மாட்டிய பின் தன் குறியைக் கறுப்புப் பெண்ணொருத்திக்குச் சுவைக்கக் கொடுத்தான் வேறொன்றில் ஒருவன் இடைவிடாமல் அப்படி இப்படி எனப் பெண்ணுடலை ஏவிக் கொண்டேயிருந்தான் உடல் காட்டக் கூசிக் கவிழ்ந்து கொண்ட பெண்ணை வலுக்கட்டாயமாகத் திருப்பிப் புணர்ந்தான் ஒருவன் பரிதாபமாகத் தோன்றிய பையனின் குறிக்கு வாய் கொடுக்க மறுத்துத் தள்ளினாள் பெரும் பெண்ணொருத்தி நோயிக்கூறுள்ள மூளையைச் சுமந்து அலைந்துகொண்டிருக்கிறேன் நான். என்கிற கவிதை எக்காலத்துக்குமானது. தெருவில் வந்து ரத்தத்தைப் பாருங்கள் என்கிற நெருடாவின் குரல்தான் ஒட்டுமொத்த அரசியல் கவிதையின் குரலும். காலத்தை தாண்டி நிற்கும் ஆற்றல் அதற்கு உண்டு. கோழிப் பண்ணைகள் புகழ் சேர்க்கும் ஊர் எனது நீண்ட அடுக்குப் பண்ணை வீடுகளில் குறுங்கால் வெள்ளைக் கோழிகள் இரை தின்றபடி நிற்கும் குழுவாக அவையிடும் இரைச்சல் கட்டிடம் தாண்டி வெளியேறாது பக்கத்துக் கோழியின் அலகில் செல்லமாய்க் கொத்தி அவ்வப்போது ஒருவார்த்தை பேசிக்கொள்ளும் புஷ்டியாக வளரவென்று இடைவிடாத தீனித் திணிப்பு மருந்து புகட்டலும் ஊசி குத்தலும் அதற்கு மூளையும் உண்டு வழுவழுப்பான சுவை மூளை கோழிப் பண்ணைகள் புகழ் சேர்க்கும் ஊர் எனது எங்கள் கோழிகளைத் தமிழகம் எங்கும் அனுப்புகிறோம் இந்தியா முழுவதும் எங்களூர்க் கோழிகள்தாம் உலகுக்கே கோழி ஏற்றுமதியாளர்கள் நாங்கள் தோலுரித்துச் செக்கச் செவேலெனச் சதைப்பிண்டமாகத் தொங்கும் கோழிகள் எங்கள் ஊர்ப் பெருமை சாதாரணச் சில்லிக் கடையிலிருந்து ஐந்து நட்சத்திர உணவகங்கள் வரை நீங்கள் ருசியாகப் புசிக்கும் கோழிகள் எங்கள் தயாரிப்புகளேஒரு முறை கோழிப் பண்ணை ஒன்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது என் சின்னஞ்சிறு மகன் கேட்டான் “இது கோழிப் பள்ளிக்கூடமாப்பா?” சரிதான் என்று ஆமோதிக்க வேண்டியிருந்தது அதுமுதல் இப்படிச் சொல்லிக்கொள்கிறேன் கோழிப் பள்ளிக்கூடங்கள் புகழ் சேர்க்கும் ஊர் எனது.   என்கிற கவிதையில் வெளிப்படும் சமகால அரசியல் விமர்சனம் எவ்வளவு காத்திரமானதும் நுட்பமானதும்! “பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்றதனாலேயே உங்களுக்கு கல்வி கிடைத்துவிட்டதாக எண்ண முடியாது” என்றார் மால்கம் எக்ஸ். மதிப்பெண் உற்பத்தியை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும் இன்றைய கல்விமுறையின் மீதான கூர்மையான விமர்சனமாக விரிகிறது பெருமாள்முருகனின் கவிதை. கண் விரியப் பார்த்த என்னை அந்நகரத்துக்குள் அழைத்துச் சென்றான் கூரிய கட்டிடங்கள் மிதக்கும் சாலைகள் விளையாட்டுத் திடல்கள் எல்லாம் சுற்றி முடித்த நான் ‘எங்கே உன் பள்ளிக்கூடம்?’ என்றேன் வினோதமாக என்னைப் பார்த்த அவன் முகம் சுருங்கச் சொன்னான் ‘இது பள்ளியில்லா நகரம்.’ என்று இன்னொரு கவிதையில் சொல்கிறார். பள்ளியில்லா நகரத்தைத்தான் குழந்தைகள் எவ்வளவு விரும்புகின்றனர்? அந்தப் பெருவிருப்பம் கல்வி முறையின் மீது அழிக்க இயலாத கறையாக உருப்பெறுகிறது. எல்லாவற்றையும் மறந்து விடலாம் என்று ஈழத்துயரைக் கவிதையாக வார்த்தெடுத்தார் சேரன். எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என்று இந்திய அரசியல் நகைமுரணைக் கவிதையாகத் தருகிறார் பெருமாள்முருகன். இந்தியா ஒளிர்கிறது எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும். மறதி நமக்கு விதிக்கப்பட்டது என்று பகடி செய்கிறது அவரது கவிதை. [] அரசியல் கவிதைகள் போலவே பெருமாள் முருகனின் அகவுணர்வு சார்ந்த கவிதைகளும் தனி மனித வாழ்வின் நம்ப முடியாத பதற்றங்களையும் மிக எளிய சுவாரஸ்யங்களையும் பிரதிபலிக்கின்றன. பொம்மைகள் அப்படி பேசினால் அடிப்பேன் உதைப்பேன் என்றேன். பொம்மைகளும் திருப்பி அடிக்கும் உதைக்கும் என்றான். அப்போதிருந்துதான் எல்லா பொம்மைகளின் கண்களும் என்னையே உற்றுப் பார்க்கத்தொடங்கின என்று முடியும் கவிதை குழந்தைகளுக்கும் வளர்ந்தவர்களுக்குமான புரிதலின் அடிப்படை பிரச்னைகளை சிக்கலற்ற மொழியில் சொல்கிறது. உற்றுப் பார்க்கும் போது மகனுக்கு அது பொம்மை. ஆனால் அப்பாவுக்கு அது வேறேதோ ஒன்று. ஆனால் அப்பாவின் குழப்பமான இந்தக் குரல் வேறொரு இடத்தில் பெருமிதத்துடனும் கம்பீரத்துடனும் வெளிப்படுகிறது. பொழுது கிளம்பி மேலேறும் எந்தக் கணத்திலும் அவன் என்னைத் தூக்கி வீசிவிடக் கூடும் அப்போது மரக்கிளையில் மாட்டிச் சதை கிழியத் தொங்கமாட்டேன் பாறையில் மோதித் தலை உடைந்து கிடக்கமாட்டேன் என்கிறது அது. உன் முதல் முத்தம் போல் போய்க்கொண்டேயிருக்கட்டும் இந்தச் சாலை. என்று விருப்பத்தை தெரிவிக்கும் போதும் அவசர சிகிச்சைப் பிரிவின்முன் காத்துக் கிடப்பவனின் பதற்றத்தோடு என் நாட்கள். என்று பதறும் போதும் ஆனால் என் தவறுகள் எல்லோருக்கும் தேவைப்படுகின்றன. என்று அயருறும் போதும் பெருமாள்முருகன் தனது கவிதைகளில் உருவாக்குவதும் திறப்பதும் நம் எல்லோருக்குமான உலகங்களை. நாவலாசிரியனைப் போல அல்ல கவிஞன். இரண்டும் வெவ்வேறு வடிவங்கள். வெவ்வேறு படைப்பு மனநிலைகளை கோரும் வடிவங்கள். வாசகருக்கும் அப்படியே. ஒரு நாவலாசிரியனுக்கு நமது வாழ்க்கையில் சில நாட்கள் தேவைப்படும். வாசக மனதுடன் அது தினமும் உண்ணவும் உறங்கவும் பேசவும் சிரிக்கவும் அழவும் கூடும். சில நாட்கள் என்பது சில வாரங்களும் ஆகலாம். ஆனால் கவிஞனுக்கு வாசகனின் வாழ்க்கையிலிருந்து ஒரு துளி போதும். அது ஒரு கணத்து நிகழ்வு. வாசகருக்கும். ஆனால் அந்தக் கண நிகழ்வின் வித்தையை மிகச் சரியாக கைக்கொள்ளும் கவிஞன் அந்தக் கணத்தின் அடர்த்தியான சாயலை வாசகரின் வாழ்க்கை முழுவதும் கண்ணுக்குத் தெரியாத ஒரு நிழலாகப் படர விடுகிறான். ஒரு நாவலாசிரியன் எப்புள்ளியில் கவிஞன் ஆகிறான்? அல்லது ஒரு கவிஞன் எந்தக் கணத்தின் நீட்சியை விரும்பி நாவலை தேர்ந்தெடுக்கிறான் என்பது சுவாரஸ்யமான ஆனால் அசாதாரணமான கேள்வி. ஆனால் இரண்டு இசைக் கருவிகளை மாறி மாறி வாசிக்கும் போதும் ஒரு கலைஞன் அதில் ஏதோ ஒன்றின் தனித்துவத்துக்கும் பங்கம் ஏற்படுத்தாது இருப்பது என்பது ஆகப்பெரிய சவால். அந்த சவாலை மிக அழகாகக் கையாண்டிருக்கிறார் பெருமாள் முருகன். அவரது படைப்பூக்கத்தின் அடிநாதமாக இருக்கும் சில விஷயங்களை இரண்டு வடிவங்களிலும் பார்க்கலாம். ஆனால் ஒரு கவிஞராகவோ நாவலாசிரியராகவோ சிறுகதையாளராகவோ அவர் ஒவ்வொரு படைப்பு வடிவத்திற்கும் அதனதற்குரிய நேர்மையோடு செயல்பட்டிருக்கிறார். டைப்ரைட்டருடன் போராடிக்கொண்டே பறவையின் ஆயுளைப் பார்த்து விசனப்படும், வெறுங்கையோடு மழை வருவதில்லை என்று நம்பிக்கைக்கொள்ளும் ஒரு படைப்பாளி அவர். அவர் சொல்வது போல மழை எப்போதும் வெறுங்கையோடு வருவதில்லை. ஆனால் இனி வராமலே போகுமோ? [] | நீர் மிதக்கும் கண்கள் | கவிதைகள் | பெருமாள்முருகன் | காலச்சுவடு | டிசம்பர் 2011 | ரூ.75 | | வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் | கவிதைகள் | பெருமாள்முருகன் | காலச்சுவடு | டிசம்பர் 2012 | ரூ.75 | *** 4 பூக்குழி : காதலை எரிக்கும் சாதியம் பூக்குழி : காதலை எரிக்கும் சாதியம் யமுனா சாத்தான் மட்டுமே வேதம் ஓதும் கூரையில் வைக்கப்பட்ட தீ திகுதிகுவெனப் பரவி எரித்துக்கொண்டிருக்கிறது என்வீட்டை தசை கருகும் நெடியில் வெளி திணறுகிறது தணலில் வெந்து கொண்டிருப்பது படுக்கையாய்க் கிடந்த என்தாயாகவோ நிறைசூலியான எனது மனைவியாகவோ இருக்கலாம் நாங்கள் சேமித்துவைத்திருந்த விதைதானியஙகள் வெடித்துத் தெறிக்கின்றன சோளப்பொரியைப்போல என் அண்டைவீட்டார் நீரையிறைத்துக் கொண்டிருக்கின்றனர் முன்ஜாக்கிரதையோடு தத்தமது கூரைமீது எவர்மீதும் சேதாரத்தை விசிறாமல் தனக்குத்தானே குமைந்திறங்குகிறது சாம்பலாய் என்வீடு யார்மனதும் தொந்தரவுக்காளாகாத வண்ணம் இதுகுறித்த புகாரினை வெளிப்படுத்துவது எங்ஙனமென ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்கிறான் கூரைக்கு தீ மூட்டியவன். – ஆதவன் தீட்சண்யா * இந்திய‌ அரசால் பிற்படுத்தப்பட்ட சாதி என்று வகைப்படுத்தப்பட்ட – ஆனால் மண்டல அளவில் பண பலத்திலும், அரசியல் செல்வாக்கிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் – குறிப்பிட்ட‌ இன‌ மக்களின் வாழ்க்கை குறித்து தான் பெருமாள்முருகன் பிரதானமாய் எழுதுவார் என்றாலும் அதன் ஒரு பகுதியாக தலித்களின் மீது அந்த மேல் சாதியினர் செலுத்தும் அடக்குமுறையை அவ்வப்போது பதிவு செய்திடத் தவறியதில்லை. ஏற்கனவே அவரது கூளமாதாரி நாவலில் தலித் சிறுவர்களின் அடிமைப்பட்ட வாழ்வியலைச் சொல்லி இருக்கிறார். அவரது எறுவெயில், கங்கணம், ஆளண்டாப்பட்சி நாவல்களிலும் தலித் பாத்திரங்கள் முக்கிய‌ இடம் பெறுகின்றன‌. சமீபத்தில் வெளியான ஆலவாயன் நாவலிலும் அப்படியே. தவிர‌, பொதுவாகவே அவரது புனைவுகளில் தலித்கள் பற்றிய பதிவுகள் இடம் பெற்று வருகின்றன. பூக்குழி அவ்வரிசையில் முக்கிய இடம் பிடிக்கிறது. இந்நாவல் பேசும் மைய விஷயமே சாதியமும் அதன் விஷமும் தான். ஒருவேளை காமம் சார்ந்து கூட வரக்கூடும், ஆனால் நல்ல காதல் சாதி பார்த்து வருவதில்லை. அப்படிப்பட்ட காதலில் கலப்பு மணம் என்பது தவிர்க்க முடியாதது. உண்மையில் சாதியை ஒழிக்க இரண்டு மார்க்கங்கள் தாம் உண்டு. ஒன்று இட ஒதுக்கீடு; இன்னொன்று கலப்பு மணம். அதனால் தான் அது எப்போதும் மேல் சாதியினருக்குப் பிடிப்பதில்லை. அவர்களுக்கு எப்போதும் தங்களுக்குக் கீழ் நிலையில் சில மனிதர்கள் தேவை. அதுவே கௌரவம் என நம்புகிறார்கள். கலப்பு மணம் அதை உடைக்கிறது. [] பூக்குழி நாவல் கலப்பு மணத்தில் விளையும் நடைமுறைச் சிக்கல்களைத் தான் பேசுகிறது. பெருமாள் முருகன் எழுதியிருக்கும் ஒரே தொடர்கதை இது தான். கல்கி இதழில் 2013ன் முற்பகுதியில் வெளியானது. நீங்கள் கவனித்தால் இதே காலகட்டத்தில் இன்னொரு முக்கியச் சம்பவம் நிகழ்ந்திருப்பது புலப்படும். அது தர்மபுரி இளவரசன் – திவ்யா காதல் விவகாரம். கிட்டத்தட்ட அவர்கள் நீதிமன்ற மற்றும் காவல்துறை படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்ததும் இதே காலகட்டத்தில் தான். ஜூலை 13 இளவரசன் அகால மரணம் அடைந்திருக்க, ஜூலை 28 தொடர் முடிந்திருக்கிறது! இந்த நாவல் கிட்டத்தட்ட அதே கதை தான். ஆனால் இதில் பெண் தலித். ஆண் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவன். அவன் அவளை வேலைக்கு வெளியூருக்குப் போன இடத்தில் சினேகித்து மணம் முடித்து ஊருக்கு அழைத்து வருகிறான். அவள் சாதி தெரிந்ததும் ஊர்க்காரர்கள் எதிர்க்கிறார்கள். இறுதியில் அவளைக் கொல்கிறார்கள். 90களின் துவக்கத்தில் கதை நடக்கிறது. முருகனின் வழக்கமான கதைக்களத்தில். குமரேசன் – சரோஜா ஓடிப் போய் காதல் மணம் செய்தவர்கள் (இளவரசன் – திவ்யா என்று ஒலிப்பதைத் தவிர்க்க முடியவில்லை அல்லவா!). கல்யாணமான பின் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறான். அவன் ஊரில் தன் அம்மா உட்பட எவரிடமும் அவள் என்ன சாதி என்பதை மறைத்து விடுகிறான். ஆனால் காதல் திருமணம் செய்து வந்ததற்கே ஊரில் அவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். பிற்பாடு அவளது சாதி தெரிய வர ஊரே சேர்ந்து திட்டமிட்டு – அதற்கு குமரேசன் தாயும் உடந்தை – அவளைப் புதருக்குள் வைத்து எரிக்கிறார்கள். (எரியத் தொடங்கும் வேளை குமரேசனின் சைக்கிள் சப்தம் கேட்பதாக முடித்து இருப்பதால் அவள் பிழைத்துக் கொள்வதாகவும் எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு தான்.) சிறுநகர்ப்புறங்களின் காதல்கள் பெரும்பாலும் வேலை பார்க்குமிடத்தில் தான் முகிழ்க்கின்றன. இக்கதையில் சரோஜாவின் வீடு குமரேசன் வேலை செய்யும் சோடாக் கடையின் அருகில் இருப்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்படுகிறது. 90களில் பால்யத்தைக் கழித்தவர்களுக்கு நகர்ப்புறங்களில் இருந்த கோலி சோடா தயாரிக்கும் சிறுகடைகள் பரிச்சயமாகி இருக்கும். அது போன்ற ஒரு கடையில் தான் குமரேசன் பணிபுரிகிறான். அதைப் பற்றிய பின்புல விஷயங்கள் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவர்கள் ஓடிப் போவதால் குமரேசனுக்கு வேலை போகிறது. அதுவரை கொண்ட அனுபவத்தை வைத்து ஒரு சோடா தயாரிக்கும் கடை போடலாம் என்பதே அவனது எதிர்கால வாழ்க்கைத் திட்டமாக இருக்கிறது. இன்று தமிழகத்தின் இண்டு இடுக்கு வரையிலும் லெக்கிங்ஸ், ஜீன்ஸ் எல்லாம் பரவி நிற்கிறது. பெருநகரங்களில் பிரபலமான ஒரு ஃபேஷன் சில மாதங்களில் கடைக்கோடி கிராமத்தில் வந்து நிற்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் முன் கொசுவம் / பின் கொசுவம் என்ற விஷயத்தில் கூட கிராமம் – நகரம் மத்தியில் வித்தியாசம் இருந்ததை நாவல் பேசுகிறது. சரோஜா முன் கொசுவம் வைத்துப் புடவை கட்டுவதை குமரேசனின் கிராமத்துப் பெண்கள் அதிசயமாகப் (தவறாகவும்) பார்க்கிறார்கள். பொதுப்புத்திக்கு மாற்றாய் ஒரு விஷயத்தை இந்நாவலில் முன்வைக்கிறார் பெருமாள்முருகன். தலித் என்றாலே – அதுவும் குறிப்பாய் தமிழ்நாட்டில் – கருப்பு நிறத் தோல் கொண்டவர்கள் என்று தான் நாம் இதுவரை கண்ட படைப்புகள் நமக்குக் காட்டி வருகின்றன. குறிப்பாய் நமது சினிமாக்களில். உதாரணமாய் பாரதி கண்ணம்மா பார்த்திபன், தசாவதாரம் பூவராகன் கமல் ஹாசன். சமீபத்திய பா. ரஞ்சித் படங்கள் மட்டும் தான் விதிவிலக்கு. ஆனால் அதிலுமே பெண்களை மாநிறம் கொண்டவர்களாகவே சித்தரிக்கிறார். பூக்குழி நாவலில் வரும் தலித் பெண்ணான சரோஜா செந்நிறம் கொண்டவள். மேல் சாதியினரான குமரேசன் ஊர்க்காரர்களுக்கே அவளது தோலின் நிறம் ஆச்சரியம் தருவதாக இருக்கிறது. திரும்பத் திரும்ப அந்த விஷயம் பலராலும் பேசப்படுகிறது. அதுவே அவள் அந்நியள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டியபடியே இருக்கிறது. அது அவர்களைத் தொந்தரவு செய்கிறது. அதனாலேயே அவள் நிறத்தைக் காண்பித்துத் தான் அப்பாவியான குமரேசனை மயக்கி விட்டாள் என்பதாகப் பேசுகிறார்கள். அவ்வூரின் பல ஆண்களுக்கு அவளது நிறம் கண்களை உறுத்துகிறது. அவர்கள் அவளைக் கேவலமாய்ப் பேசினாலும் அதைத் திறந்து பார்க்கும் ஆசை உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்கிறது. இறுதியில் அவளை எரிக்க முனைகையில் கூட “அந்த செந்தோலத் தொட்டுப் பாத்திரலாமின்னு நெனச்சன்” என்கிறான் அதில் ஒருவன். எல்லாவற்றிலும் உச்சமாக குமரேசனின் உறவுக்காரப் பெண் ஒருத்தி “இவளுக்கு மட்டும் தங்கத்துல செஞ்சு வெச்சிருக்குதோ என்னமோ. ஒரச்சு வித்து பாற மேல பங்களா கட்டுவான்” என சாரோஜாவைப் பற்றிப் பொறாமையில் சொல்கிறாள். இவ்வளவு சிவந்து நிற்பவளின் யோனி என்ன நிறமாய் இருக்கும் என்ற கற்பனை அவர்கள் அத்தனை பேருக்கும் இருந்திருக்கிறது. இன்றும் திருமணத்தில் நிறம் என்பது முக்கிய விஷயமாகப் பார்க்கிறார்கள். அதுவும் முக்கியமாய்ப் பெண்களுக்கு. கருப்புத் தோல் பெண் என்றால் பணக்காரியாகவோ, நல்ல வேலையில் இருந்தாலோ மட்டும் தான் நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். கருப்பு நிறத் தோல் கொண்ட ஆண்கள் கூட அவர்களைத் மணம் செய்யத் தயக்கம் காட்டுவதும் நிகழ்கிறது. அவர்களே சம்மதித்தாலும் சுற்றி இருப்போர் அவர் ஏதோ பெரும் இழப்பைச் சந்தித்து விட்டது போல் இரக்கத்துடன் துக்கம் விசாரிக்கின்றனர். அன்றைய‌ தமிழக‌ கிராமங்களில் காதல் என்பது எத்தனை மோசமான விஷயமாகப் பாவிக்கப் பட்டிருக்கிறது என்பதை இந்த நாவல் எடுத்தியம்புகிறது. இத்தனைக்கும் சரோஜா தாழ்த்தப்பட்ட சாதி என்று தெரிய வராத சந்தர்ப்பத்திலுமே கூட காதல் திருமணம், ஊருக்கு வெளியே வேறு சாதியில் கல்யாணம் செய்து கொண்டு வந்து விட்டதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். இந்த 25 ஆண்டுகளில் உலகமயமாக்கலின் பக்கவிளைவாய் காதல் கல்யாணம் என்பது இயல்பாகி விட்டாலும் சாதி மாறிக் கல்யாணம் செய்வது, அதுவும் குறிப்பாய் தாழ்த்தப்பட்ட சாதியில் பெண்ணோ மாப்பிள்ளையோ எடுப்பது இன்றும் கேவலமாகவே கருதப்படுகிறது. முதலில் மறுக்கிறார்கள். மீறி செய்தால் இன்ன சாதி என மறைக்கிறார்கள். குமரேசனே கூட நாவலில் அதைத் தான் செய்கிறான். இதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் மாமியார் மருமகள் உறவும் குறிப்பிடத்தக்கது (குறிப்பிடத்தக்கது என்ற சொற்பிரயோகத்தைக் கேலி செய்பவர்கள் இவ்விடத்தில் வேறு சொல் ஏதேனும் போட்டுக் கொள்ளவும்). சாதாரணமாகவே மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற ரீதியிலேயே இருக்கும் விஷயம் அது. இதில் காதல் திருமணம், அதுவும் வீட்டுக்குச் சொல்லாமல், அதுவும் சாதி மாறி எனும் போது கேட்கவா வேண்டும். சொற்களால் மிகவும் கொடுமை செய்கிறார் குமரேசனின் தாயான மாராயி. இறுதி வரை அவர் மாறவே இல்லை. ஊர் தேடிப் போய்த் துப்பறிந்து சரோஜாவின் சாதியை கண்டுபிடிப்பது, அவள் உயிருக்கே உலை வைப்பது என்பது வரை போகிறார். இங்கே அவர் கணவனை இழந்து தனியாய் மகனை வளர்த்தவர் என்பதைக் கவனிக்க வேண்டும். ஊர் ஒரு சொல் தன்னைத் தவறாய்ப் பேசி விடலாகா என்பது தான் அவர் வாழ்வின் ஒரே நோக்காக இருக்கிறது. அதனால் சாதி மாறி திருமணம் செய்த மகனால் ஊர் வாயில் விழுவதை அவர் விரும்பவில்லை. அது வரை தன் சொல் மீறாத ஊமையாக இருந்து வந்த மகனை இன்று எவளோ ஒருத்தி முந்தானையில் முடிந்து கொண்டது பிடிக்கவில்லை. இவை சரோஜா மீதான தீராத பெருவன்மமாய் உருக்கொள்கிறது. இன்றும் ஊர்ப்பக்கம் இதே உளவியல் கொண்ட பெண்களைக் காண முடியும். சாதி தொடர்பான நேரடி வன்முறைகளில் இறங்குவது ஆண்கள் தான் என்றாலும் சாதியுணர்வை சிறுவயதிலிருந்தே ஊட்டி வளர்ப்பதும், வீட்டுக்குள் அனுமதித்தல் முதல் திருமணம் செய்வது வரை ஒவ்வொரு விஷயத்திலும் அதைப் பேணுவதும் பெண்கள் தான் என்பது என் அவதானிப்பு. பூக்குழி அதைப் பதிவு செய்திருக்கிறது. வெறும் பெயர்கள் மட்டுமல்லாது பல ஒற்றுமைகள் தர்மபுரி கதையுடன் பூக்குழிக்கு உண்டு. உதாரணமாய் தாயே அந்தக் காதலை எதிர்த்துப் பிரிக்கும் சூத்ரதாரியாக இருப்பது. அரசியல் கட்சித் தலையீடு நாவலில் சொல்லப்படவில்லை என்றாலும் ஊர்க்காரர்கள் ஒதுக்கி வைப்பது என்பதெல்லாம் கட்டப்பஞ்சாயத்து தான். சில ஆண்டுகளுக்கு முன் சாதி காரணமாய் பிரிக்கப்பட்ட ஒரு காதலை நேரடியாய் அறிவேன். சில்லாண்டுக் காதல். அவன் கல்லூரி முடித்ததும் தன் லட்சியத்துறையில் நுழைய‌ முயற்சித்துக் கொண்டிருந்தான். பெண் வீட்டில் அவனுக்கு வேலை இல்லை என்று சொல்ல, அவன் தன் லட்சியத்தை ஒதுக்கி வைத்து அவளைக் கைபிடிக்கும் நோக்கில் வட நாட்டில் கிடைத்த வேலைக்குப் போனான். ஆனால் அதன் பிறகு சாதி மாறிக் கல்யாணம் செய்தால் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டி அவளுக்கு வேறு கல்யாணம் செய்து வைத்து விட்டனர். பெற்றோரும் சொந்தக்காரர்களும் வேற்று சாதியில் மணம் முடித்தால் எல்லாம் கெடும் என்று உதாரணங்கள் சொல்லி பேசிப் பேசி மூளைச்சலவை செய்து அவளை மனம் மாற்றி விட்டனர். லட்சியத்தையும் இழந்து காதலையும் இழந்து நிற்கிறான். இன்று கல்லூரிகளில், அலுவலகங்களில் சாதி பார்த்துக் காதலிக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். கலப்புத் திருமணங்களை எதிர்ப்பவர்களிடம் நெருங்கிப் பேசினால் பெரும்பாலும் அந்த எதிர்ப்புக்குச் சொல்லப்படும் காரணத்தைக் கேட்டால் ஒன்று தான்: “இப்படி சாதி மாறிக் கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டாளே எனக் கேட்கும் சொந்தக்காரனிடம் தலை நிமிர்ந்து பதில் சொல்ல முடியாதே!” அதாவது மகளின் விருப்பம் தாண்டி அரை வாழ்க்கைக்கு மேல் வாழ்ந்து முடிந்த தன் ஈகோ துருத்தி நிற்கிறது. “கண்ட நாயும் கேள்வி கேட்கும்னு அவளுக்கு எங்கே புரியுது!” என சொந்தக்காரரிடம் பதில் சொல்ல ஏன் அவருக்குத் தைரியம் வருவதில்லை? “உன்னை விட என் மகள் தான் முக்கியம், வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்ற தெனாவட்டு ஏன் வர மறுக்கிறது? அது தான் இங்கே இருப்பவர்களின் மனவியல். அவர்கள் வாழ்வதே ஊரார் நல்ல சொல்லுக்காகத் என்பதற்காகத் தான். அது போக வேறு லட்சியம் ஏதுமில்லை. பணம் சம்பாதிப்பது கூட பிற்பாடு தான். சொந்த திருப்தியும், சந்தோஷமும் ரெண்டாம் பட்சம். நியாயமும் தர்க்கமும் அவ்வரிசையில் கடைசி. கலாசாரம் என்ற பெயரில் இந்தியர்களின் மன அமைப்பே அப்படியிருக்கிறது. அதைப் பேண சிறுவயதிலிருந்தே சாதியையும் மதத்தையும் ஊட்டி வளர்க்கிறார்கள். கிராமங்கள் மாறி நகரங்கள் பெருகும் போது தான் இதெல்லாம் குறையும். இன்று தான் பிறந்த கிராமத்திலிருந்து நகர்ந்து போய் சென்னையிலோ பெங்களூரிலோ ஹைதராபாத்திலோ பணி நிமித்தம் நிரந்தமாய்க் குடியேறுபவன் மெல்ல மெல்ல இந்த சொந்தக்காரனுக்குப் பதிலளிக்கும் சிறையிலிருந்து வெளியேறுவான். அப்படித் தான் மாற்றம் நிகழும். ஆனால் நம் சாதியக் கட்சிகள், மதவாதக் கட்சிகள் அப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்து கொண்டிருக்கின்றன. 2012 தர்மபுரி கலவரம் அதற்கு ஓர் உதாரணம். உயர்சாதியினரைக் காதல் செய்தால் தலித்களின் குடிசைகளைத் தீக்கிரையாக்குவோம் என்பதே அவர்கள் அன்று அதன் மூலம் அறிவித்தது. பிற்பாடு இளவரசன் மரணம், கோகுல்ராஜ் மரணம் எல்லாமே சாதியைத் தொட்டு விட்டான் என்பதாலேயே சிதைக்கப்பட்ட காதல்கள். “ஒருத்தி போனா பிடிச்சு வைக்கலாம், எல்லாருமே தாழ்த்தப்பட்டவனத் தேடி ஓடறாளுகளே!” என்றும் “அப்படி எங்க கிட்ட இல்லாதது தாழ்த்தப்பட்டவனுக கிட்ட என்னடி இருக்கு?” என்றும் “வேற சாதி நாயைக் கல்யாணம் பண்ணிட்டுப் போனா ரெண்டு பேரையும் சேர்த்து வெட்டுவோம்!” என்றும் பொதுவெளியில் தயக்கமின்றிப் பதிவிட இத்தகைய சாதி வீரர்கள் தவறுவதில்லை. இவற்றை எல்லாம் வாசித்தால் இரக்கம் தான் வருகிறது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் சாதி வெறியுடன் பதிவிட்ட ஒரு கல்லூரி மாணவன் அதற்கு எழுந்த பலத்த எதிர்ப்புகளால் அதை அழித்து வெளியேறினான். சாதி / மத அரசியலால் தடம் புரண்டு கெட்டுப் போகும் இளைஞர்களுக்கு அவன் ஒரு சோறு பதம். அந்தந்தச் சாதியிலிருந்தே நேர்மையான குரல்கள் இவற்றைக் கண்டித்து வெளிப்பட வேண்டும். அவர்களை ஒதுக்க வேண்டும். பண்பாட்டுக்கூறுகள் தாண்டி உயர்வு தாழ்வு பாராட்ட சாதி அடிப்படையில் ஏதுமில்லை என்பதை தம் மக்கள் மத்தியில் – குறிப்பாய் தம் குழந்தைகளிடம் – சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அது தான் மாற்றத்துக்கான வழி. பூக்குழி அத்தகைய ஒரு வலுவான நேர்மையான‌ குரல். | பூக்குழி | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிச‌ம்பர் 2013 | ரூ.130 | *** 5 ஆளண்டாப் பட்சி : இடப்பெயர்வு எனும் வாதை ஆளண்டாப் பட்சி : இடப்பெயர்வு எனும் வாதை சுரேஷ் கண்ணன் பெருமாள் முருகனின் ஆறாவது புதினம் ஆளண்டாப் பட்சி. 2012ம் ஆண்டில் வெளியானது. தமது புதினங்களின் தலைப்பைத் திட்டமிட்டு வைக்காமல் புனைவில் வெளிப்படும் ஏதாவது ஒரு வரியையொட்டி அமைப்பதே வழக்கம் என முன்னுரையில் குறிப்பிடும் பெருமாள்முருகன், இந்தப் புதினத்தின் தலைப்பையும் அவ்வாறே சூட்டியுள்ளார். ஆளண்டாப் பட்சி என்பது புராதனக் கதைகளில் குறிப்பிடப்படும் ஒரு பறவை. மனிதர்களைத் தம்மருகே அண்ட விடாது என்றும் தீயவர்களைக் கொன்று விடும் என்றும் ஆனால் நல்ல மனிதர்களுக்கு உதவி செய்யும் என்ற விநோதமான மனோபாவமுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் வருபவ‌ர்கள் இம்மனோபாவத்தில் இயங்குவதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இடப்பெயர்வு என்பது மனிதகுலத்தின் தவிர்க்க முடியாத ஆனால் காலங்காலமாய் தொடர்ந்து கொண்டே இருக்கும் துக்ககரமான விஷயங்களுள் ஒன்று. போர்களாலும் கலவரங்களாலும் வாழ்வாதாரங்களைத் தேடியும் பொருளீட்டுவதற்காகவும் உறவுகளிடையேயான பகைகளிலிருந்து விலகி நிற்கவும் எனப் பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது உயிர் பயத்துடனும், உறவுகளைப் பிரியும் வலியுடனும் தங்களின் உடமைகளைக் கைவிட்டு மக்கள் இடம் பெயர்ந்தது தான் உலக வரலாற்றிலேயே நடந்த மிகப் பெரிய இடப்பெயர்வு நிகழ்வாகச் சொல்கிறார்கள். அச்சமயத்தில் சுமார் ஒன்றரைக் கோடி நபர்கள் இடம் பெயர்ந்தார்கள். சுமார் 10 லட்சம் பேர் மத வன்முறை காரணமாகக் கொல்லப்பட்டார்கள். பெருமாள்முருகனின் இந்த‌ப் புதினம் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிணக்குகளினால் எழும் வலியினால் துண்டித்துக் கொண்டு செல்லும் சிறுகுடும்பத்தின் இடப்பெயர்வை மைக்ரோ தளத்தில் அணுகிச் செல்கிறது. இந்தப் புதினத்தின் பிரதான பாத்திரமான முத்து, ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன். தனது மூத்த சகோதரர்களின் நிழலில் உலகம் அறியாமல் பத்திரமாக வளர்ந்தவன். ஒரு நிலையில் அந்தக் கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படுகிறது. அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தில் மூத்த சகோதரருக்கு அதிகமான பங்கு ஒதுக்கப்படுகிறது. அந்தக் குடும்பத்திற்கு அவர் அதிக காலம் உழைத்திருப்பதால் தர்க்க ரீதியாக அது பொருந்திப் போகிறது. அடுத்த சகோதரருக்கு அதை விட குறைவான பங்கு. மிச்சமிருப்பதில் ஒரு ஏக்கர் நிலம் மாத்திரம் முத்துவின் பங்காக வந்து சேருகிறது. அவன் வஞ்சிக்கப்படுகிறான். காலங்காலமாக நீடிக்கும் மரபுசார்ந்த சில வழக்கங்களின் செல்வாக்கின் மூலம் தன்னிச்சையாக எடுக்கப்படும் முடிவுகளில் பலவற்றில் சமகாலத்திற்குப் பொருந்தாத கண்மூடித்தனமான மூடத்தனங்கள் இருந்தாலும் சிலவற்றில் பொதிந்துள்ள நுணுக்கமான விஷயங்கள் பிரமிப்பேற்றுகின்றன. அது வரை தன்னுடைய பெற்றோர்களின், சகோதரர்களின் பேச்சை மீறாமல் அவர்களின் அரவணைப்பின் நிழலிலேயே வாழ்ந்து பழகிய முத்துவிற்கு உள்ளூற சில எண்ணங்கள் ஓடினாலும் இது பற்றி எதையும் கேட்கத் தோன்றவில்லை. பேசாமல் தன்னுடைய பங்கை வாங்கிக் கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலம் கடைசியில் இருப்பதால் நீர்வரத்து குறைவாக இருக்கிறது. தாம் ஏமாற்றப்பட்டிருப்பதாக அவனுடைய மனைவி பெருமா தொடர்ந்து புலம்பிக் கொண்டேயிருக்கிறாள். இதன் மூலம் ஏற்படும் சச்சரவுகளினால் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்து மனிதர்களுக்கிடையே ஏற்படும் மாற்றத்தை வேதனையோடு உணர்கிறான் முத்து. அதுவரை தம்மிடம் அன்போடு பழகிய சகோதர உறவுகளிடம் ஏற்பட்டிருக்கும், விலகல் மனப்பான்மையை அவனால் துல்லியமாக உணர முடிகிறது. உறவுகளினால் ஏற்பட்ட கசப்பை சகித்துக் கொள்ள இயலாமல் தாம் பிறந்த வளர்ந்த ஊரிலிருந்து வேறு எங்காவது போய் விடலாம் என்று முத்து எடுக்கும் முடிவிற்குக் காரணமாக அமையும் ஒரு கீழ்மையான சம்பவம் நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. முத்துவின் மூத்த சகோதரர், அவன் வீட்டில் இல்லாத சமயத்தில் அவனுடைய மனைவியை மானபங்கப்படுத்தி விடுகிறார். பிரிவினைக்கு முன்பு வரை முத்துவிடம், அவன் மனைவியிடம் கண்ணியமாகப் பழகியவர் ஏன் இம்மாதிரியான கீழ்மையில் திடீரென்று ஈடுபட வேண்டும்? தம்முடைய நீண்ட நாள் ஏக்கத்தைப் பிரிவினையின் பின்னால் ஏற்பட்ட விலகலையொட்டி தீர்த்துக் கொண்டாரா என்று மேலோட்டமாக தோன்றினாலும் அதையும் விட நுட்பமான காரணம் ஒன்றிருப்பதாகத் தோன்றுகிறது. அது முத்துவின் நிலத்தையும் தனதுரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற திட்டத்தின் பகுதியா! நிலவுடமை மனோபாவம் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தின் ஒரு கண்ணியாகத்தான் இந்தக் கீழ்மைச் செயலை புரிந்து கொள்ள முடியும். இந்த அபாண்டமான செயலை முத்துவின் தாயாரும் சாதாரணமாகக் கடந்து போவது அவனுக்கு ஆச்சரியத்தையும் சினத்தையும் உண்டாக்குகிறது. மருமகளின் மீதான கோபத்தையும் வன்மத்தையும் அவள் இப்படி தீர்த்துக் கொள்கிறாளா? ஆனால் தனது பங்கு நிலத்தை விற்று விட்டு உறவுகள் அல்லாத வேறு இடத்தில் புதிய நிலம் வாங்குவதற்காக முத்து முயலும் போது கணிசமான தொகையைத் தந்து உதவுபவளும் அவனது தாயாரே. ஆளண்டாப் பட்சியின் இன்னொரு முகம் அது. [] புதிய வாழ்விடத்தைத் தேடி திட்டமிடாத பயணத்தின் பகுதியாக கால் போன போக்கிலே விளைநிலத்தை வாங்குவதற்காகத் தேடிச் செல்லும் முத்துவின் பயணத்தின் புள்ளியில்தான் இந்தப் புதினம் துவங்குகிறது. இந்தப் பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் அவனது கடந்த கால அனுபவங்களையும் முன்னும் பின்னுமாக இழுத்துச் சென்றிருப்பதின் வடிவத்தில் அமைந்திருக்கிறது. பொதுவாக பெருமாள்முருகன் தனது புதினங்களை கட்டமைக்கும் சுவாரசியத்திற்கு இந்த நூலும் விதிவிலக்கல்ல. நாவல் இயங்கும் காலக்கட்டத்தை பூடகமாகத்தான் புரிந்து கொள்ள முடியும். புதினத்தில் சித்தரிக்கப்படும் நிலவெளி விவரணைகள், மனிதர்கள், சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம் குத்து மதிப்பாகத்தான் நாவல் இயங்கும் காலத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக முத்துவின் பயணத்தின் போது கூடவே பயணிக்கும் குப்பண்ணா, பெரியாரின் நாத்திக பிரச்சாரம் தொடர்பான சம்பவத்தை நினைவுகூறும் போது இதன் காலக்கட்டத்தை சற்று நெருங்கி அணுக முடிகிறது. முத்துவிற்கும் குப்பனிற்குமான உறவு இந்தப் புதினத்தில் மிகச் சிறப்பாகவும் இயல்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முத்து கவுண்டர் சமூகத்தைச் சார்ந்தவன். அவரை விட வயதில் மூத்தவரான குப்பன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். முத்துவின் மாமனார் வீட்டில் பண்ணையாளாக பல வருடங்கள் பணிபுரிபவர். முத்து தனக்கான விவசாய நிலத்தை வாங்குவதற்கான பயணத்தில் அவனுக்கு துணையாகச் செல்பவர். இந்தப் புதினத்தின் பிரதான பாத்திரமாக இருப்பதற்காக முத்து செயற்கையாக கட்டமைக்கப்பட்ட நாயகத்தன்மையோடு சித்தரிக்கப்படவில்லை. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அதைத் தாண்டிய மனிதநேயத்தோடு அவரை ‘குப்பண்ணா’ என்று அன்போடு அழைக்கிறான். அதே சமயத்தில் தன்னுடைய சமூக நிலை குறித்த பிரக்ஞை சார்ந்த உயர்வு மனப்பான்மையும் அவனுக்கு இருக்கிறது. இரண்டிற்குமான நிலையில் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கிறான். அதைப் போலவே குப்பனுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கேயுள்ள பழக்கப்பட்ட அடிமை மனோபாவமும் தாழ்வுணர்வும் உள்ளது. உயர்சாதியைச் சார்ந்தவராக இருந்தாலும் முத்தண்ணா தம்மிடம் சரிசமமாகப் பழகுகிறாரே என்று உள்ளூறப் பெருமையாக இருக்கிறது. அதற்காக அவர் அதிக உரிமையும் எடுத்துக் கொள்வதில்லை. ‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்’ என்கிற குறளைப் போலவே முத்துவுடன் பழகுகிறார். இருவரும் தனிமையில் இருக்கும் சமயங்களில் உள்ளார்ந்து படிந்து கிடக்கும் சாதியுணர்வைத் தாண்டிய மனிதநேயத்துடனும் பொதுவிடத்தில் தனது கவுண்டர் சமூகத்துப் பெருமையை விட்டுத்தராத நிலையிலும் பழகுகிறான் முத்து. பயணத்தின் போது நிகழும் சம்பவங்கள், தயாரித்துண்ணும் உணவு வகைகள் அவற்றின் நுண்மையான தகவல்களோடும் விவரணைகளுடனும் பதிவாகியிருக்கின்றன. இந்தப் புதினத்தின் மூலம் கொங்கு மண்ணின் வாசனை, அதன் கலாசாரம், மக்களின் சொலவடைகள், பழக்கங்கள், குணாதிசயங்கள் போன்றவற்றை அறிய முடிகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு உழைப்பின் மீது ருசி என்பது அபாரமானது. அர்ப்பணிப்புடன் பணிபுரியும் நல்ல வேலைக்காரர்களுக்கு வேலை செய்வதென்பது நாக்கில் நீர் ஊற ருசியுள்ள உண்வை சாப்பிடுவதற்கு இணையானது. வாங்கிய காட்டை விளைநிலமாகத் திருத்த வேண்டிய பணி என்பது முதலில் முத்துவிற்கு மலைப்பைத் தந்தாலும் அதைப் பகுதி பகுதியாக செய்து முடிப்பதின் மூலம் இன்னமும் ஆர்வம் ஊற்றெடுக்கிறது. சம்சாரிகளுக்கேயுரிய குணாதிசயம் இது. ஒரு கூட்டுக்குடும்பத்தின் பகுதியாக இருந்தவன், தன்னுடைய பிரத்யேக உழைப்பின் மூலமாக ஒரு விளைநிலத்தையும் வருங்கால சந்தததிகளுக்கான அமைவிடத்தையும் உருவாக்கும் அவனுடைய பெருமிதம், காட்டைச் சொந்தமாக்குவதிலிருந்தே துவங்கி விடுகிறது. காடு வாங்கும் விஷயம் நல்ல படியாக நடந்து முடிய வேண்டுமே என்கிற அவனுடைய வேண்டுதலும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமே என்கிற அவனுடைய பதட்டமும் பிரச்சினை ஏதுமல்லாத நல்ல நிலமாக கிடைக்க வேண்டுமே என்கிற தேடுதலும் கலந்த அவனுடைய உணர்வுகள் புதினம் நெடுகிலும் சிறப்பாகப் பதிவாகியிருக்கின்றன. இது போன்ற கவலைகள் ஏதுமல்லாது உல்லாசமாக கூட வரும் குப்பண்ணாவைப் பற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவரை தன் சகோதரர்களிடன் நிழலிலேயே வளர்ந்தவனாக இருந்தாலும் சுயமான முடிவை நோக்கிப் பயணிக்கையில் இயல்பாகக் கிளர்ந்தெழும் சாதுர்யம் மிக்கவனாக முத்து உருமாறும் அதிசயமும் நிகழ்கிறது. முத்து தான் வளர்ந்த குடும்பத்திலிருந்து துண்டித்துக் கொண்டு வேறு இடம் தேடி நகர்வதற்கு அவனுடைய மூத்த சகோதரர் நிகழ்த்தும் அபாண்டமான செயல் ஓர் உச்சமான காரணமாக அமைந்தாலும் அதற்கான மறைமுக உந்துசக்தியாக இருப்பவள் அவனுடைய மனைவி பெருமா தான். இன்றைக்கும் கூட கூட்டுக் குடும்பத்திலிருந்து வெளியேறி தனக்கான நிலத்தையோ, வீட்டையோ தேடிக் கொள்ள பெரும் காரணமாயிருப்பவர்கள் அவர்களின் மனைவிகளாகத்தான் இருப்பார்கள். இது குறித்த தொடர்ந்த தூண்டுதல்களையும் நினைவூட்டல்களையும் மனநெருக்கடிகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருப்பார்கள். இதிலும் முத்துவின் மனைவி பெருமா நேரடியாகப் பங்கு கொள்ளும் பகுதி குறைவாக இருந்தாலும் முத்துவின் பயணத்தை தொடர்ந்து நடத்திச் செல்லும் மறைமுக காரணியாக அவளே இருப்பதை முத்துவின் மனப்பதிவுகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. பெரியாரின் நாத்திக பிரச்சாரம் தந்த உத்வேகத்தில் குடுகுடுப்பைக்காரனை இரவில் பயமுறுத்தி அவனுடைய சாவிற்கு காரணமானதால் எழும் குற்றவுணர்வை காலங்கடந்தும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் குப்பண்ணா நினைவுகூரும் சம்பவம் ஒருவகையான சுவையென்றால் பனையேறும் தொழிலாளர்கள் கேட்கும் அதிகக் கூலி காரணமாக, தன் மகனின் சாதியையும் அடையாளத்தையும் மறைத்து தாழ்த்தப்பட்ட சிறுவனான அறிமுகத்துடன் அந்தத் தொழிலை கற்றுத்தர அனுப்பும் முத்துவின் தந்தையின் விநோதமான பிடிவாதம் இன்னொரு சுவையான கதையாக இதில் பதிவாகியிருக்கிறது. காட்டைத் திருத்துவதில் பெருமாவின் பாட்டி காண்பிக்கும் ஈடுபாடும் உழைப்பும் நெகிழ்ச்சி தருகிறது. மனிதன் கூடிவாழும் சமூக விலங்குதான் என்றாலும் தன்னளவில் ஒவ்வொரு மனிதனும் ஒரு தீவாகத்தான் இருக்கிறான். தன்னுடைய சுய அடையாளத்தை தேடி அடைவதே அவனுக்கு முன் நிகழும் சவாலாக இருக்கிறது. நிலவுடமைச் சமுதாயம் ஏற்பட்டதின் தவிர்க்க முடியாத ஊற்றுக் கண்ணிற்கு பின்னிருக்கும் பிரதான உணர்வு இது. பெருங்குடும்பங்கள் மெல்லச் சிதறி விலகி உதிரிக் குடும்பங்களாக ஆகிக் கொண்டேயிருப்பது ஒருவகை பரிணாம வளர்ச்சி. காலந்தோறும் இந்தப் பயணம் இடையறாது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். பெருமாள் முருகனின் ‘ஆளண்டாப் பட்சி’ இந்த ஆதார உண்மையை நுட்பமாகவும் ஒரு சமூகத்தின் பிரத்யேக கலாசாரம் சார்ந்தும் நிறுவுவதில் வெற்றி பெற்றிருக்கிறது. | ஆளண்டாப் பட்சி | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிச‌ம்பர் 2012 | ரூ.195 | *** 6 கங்கணம் : மணம் எனும் கயிறு கங்கணம் : மணம் எனும் கயிறு கார்த்திக் குமார் நம் சமூகத்தில் காமம் என்னும் அடிப்படையைத் தேவையைத் தீர்க்க சுமூகமான வழி திருமணம் தான். பெருமாள்முருகனின் கங்கணம் நாவல் சமூகக் கட்டமைப்பு, சாதியப் பற்று, பொருளதாரத் தேடல், அந்தஸ்து, ஆடம்பரத் தேவைகள் மற்றும் சொந்த உறவுகளால் அலைகழிக்கப்படும் ஒரு முதிர்ந்த ஆண் எவ்வகையில் தன் காம அவஸ்தையைத் தணிக்க கல்யாணத்தை நாடிப் போராடுகிறான், அதில் அவன் வெற்றி பெறுகிறானா என்று எளிய நடையும் கூரிய பார்வையும் கொண்டு எழுதப்பட்டது. கங்கணம் என்பது வைராக்கியம்! ஒரு காரியத்தை எடுத்து முடிக்கும் வரை அதிலிருந்து சிந்தை மாறாது இருத்தல் என்று பொருள்படும். பொதுவாய் திருமணத்துக்கு முன் மாப்பிள்ளைக்குக் கங்கணம் கட்டுவது கொங்குப் புறத்து வழக்கம். பெண்ணுக்குத் தாலி கட்டி சாந்தி முகூர்த்தம் முடிந்த பின்னரே அவிழ்ப்பர். ஒரு காரியத்தை முடிக்கக் குறியாய் இருப்பவரை கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறான் என்று சொல்வது வழக்கம். திருமணத்துக்காக இதில் நாயகன் போராடுகிறான் என்பதால் இருபொருள் படும். இச்சமூகம் முதிர்கன்னிகளுக்கு எத்தனை கவலைப்படுகிறதோ அதில் கொஞ்சம் அக்கறை கூட முதிர் காளைகளுக்கு அளிப்பதில்லை. அப்படியான் ஓர் ஆணின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுகிறார். முதல் சில பக்கங்களிலே குப்பன் எனும் வேலைக்காரன் மூலம் மாரிமுத்து பற்றிய ஒரு பிம்பத்தையும் அவரின் குடும்பத்தைப் பற்றிய பிம்பமும் காட்டபடுகின்றன என்றாலும் அது அச்சமூகத்தைக் காட்டும் விதமாகவே இருக்கிறது. பொருளியல் பற்று தான் முதலாகவும் அதுவே இறுதியாகவும் வரையறுத்துச் செயல்படும் ஒரு சாதிய அடையாளத்தை எடுத்து முன் வைக்கிறார் மறுக்கமுடியாதபடி. அது ஒன்றாகத் தோற்றம் கொண்டாலும் பலவாகவும் விரிந்து சமகால சமூகத்துப் பழக்க வழக்கங்களில் உள்ளோடி ஒரு பரப்பில் தமிழகம் முழுதும் இணைத்துச் செல்லும் தன்மையுடன் இருப்பது சிறப்பு. இந்நாவலில் எடுத்தாளப்படும் கிராமம், கிராமம் எனும் பிம்பத்தை மெல்லச் சீட்டுக்கட்டாய்க் கலைக்கிறது. வெள்ளந்தியான மனிதர்கள் இருக்கும் இடம், பச்சையும் இயற்கையும் எழிலாடும் இடம், முன்னேற்றம் இல்லாத இடம் என பொதுவில் நம்பப்படும் ஒன்றை அதன் பின்னணியில் உழைப்புச் சுரண்டலும், ஆதிக்கப்படுத்துதலும் இருக்கின்றன என உண்மையின் அடியாழத்தைத் தோண்டி எடுத்துக் கொடுக்கிறார். இப்படியான ஒரு திகைப்பில் அதில் ஒருவனான மாரிமுத்து எவ்வாறெல்லாம் துணை வேண்டும் என்ற‌ ஏக்கத்தில், தன் கல்யாணத்திற்கு அல்லலுறுகிறான் எனத் தடதடத்துச் செல்கிறது நாவல். இச்சமூகத்தில் நிகழும் பல்வேறு எதிர்மறைகளையும் எவ்வித மேல்பூச்சின்றி எடுத்து காட்டுகிறார் பெருமாள்முருகன். [] பொருளதார அந்தஸ்து, புறவயமான தேடல்கள் மட்டும் முக்கியம் எனக் கொள்ளும் அடையாளத்துடன் வாழ விரும்பும் ஒரு சமூகம். அச்சமூகத்தின் அங்கமாகிய ஒருவன் அடையும் மனச்சிக்கல்கள், அதைச் சமாளிக்கத் தன்னை மாற்றியபடி இருக்க வேண்டி இருக்கிறது, இப்படி இருந்தும் இதற்காகவெல்லாமா ஒருவனின் கல்யாணம் நின்று போகும் என்பது மாதிரியான விஷயங்களைச் சுட்டி காட்டுகிறார். மாரிமுத்துவின் பாட்டி அவனுடைய இளம்பருவத்தில் அவனுக்குப் பார்க்கும் ஒர் பெண்ணை அவனது அத்தை பெண் தட்டி கழிப்பதில் ஆரம்பம் ஆகிறது கல்யாணத் தேடல். காமம் தீர்க்க கல்யாணமே ஒரே வழி, ஒரே முடிவான வழி என நம்பும் சாதாரண பள்ளிகூடம் தாண்டாத கிராமத்து இளைஞன் மாரிமுத்து அச்சாதியைச் சேர்ந்த பெண்ணை மட்டுமே கட்டுவேன் எனக் கங்கணம் கட்டிக் கொள்கிறான். யாரையும் எந்த பெண்ணையும் அவன் நிராகரிப்பதில்லை. ஆனால் இன்றைய வாழ்வியல் முறைகளை அறிந்திராத, அவற்றின் தேவைகளை உணராத ய‌தார்த்த விஷயங்கள் மட்டும் உள்ளது அவனிடம். அதை விரும்பக்கூடிய பெண் யாரும் இல்லை. படித்த, ‘டீசன்ட்டான’ தேவைகளே மேலோங்கி இருக்கும் காலச் சூழலில் இம்மாதிரியான படிக்காத, வயலில் உழலும் ஒருவனை யாரும் ஏற்க மறுக்கிறார்கள். இத்தகைய சூழலைச் சரியாய் பயன்படுத்தும் தரகுகள் தனக்குப் பெண் பார்த்து தருவார்கள் என்று நம்பி அவர்கள் கூறும் ஒவ்வொரு புறவயக் காரணங்களுக்காகத் தன்னை மாற்றுகிறான். ஏமாற்றங்களே மிச்சம். மாரிமுத்துவின் இளமையில் காட்டுக்குள் கொடுத்த ஒரு முத்தம் மட்டுமே அவன் காமத்திற்கான ‘தீர்வாய்’ இருக்கிறது. தணலாய்த் தகிக்கும் காமத்திற்கு வடிகால் இன்றித் தவிக்கிறான். ஆண் – பெண் உறவில் ஏற்பட வேண்டிய சாதாரண நிகழ்வை பல்வேறு காரணங்கள் கொண்டு சமூகம் தடுத்து வைத்திருக்கிறது. யார் யாரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதைக் கழுத்தில் முடிச்சிட்டு இறுக்கி மூச்சடைக்க வைக்கிறது. இருந்தும் விலக மனமின்றி அதன் பின் செல்லும் பலரைப் போலவே தான் மாரிமுத்துவும். காற்றில் கரைந்து போகும் கற்பூரமாய் அவன் இளமை கரைகிறது. மெல்லக் கழிவிரக்கம் கவிழ்கிறது. ஊர் பெரியவரும் அக்காலத்திலே பலருக்குக் கல்யாண ஏற்பாடுகள் செய்த தானாவதி தாத்தா அவனுக்குப் பெண் பார்க்க முயலுகிறார். தாயாதிச் சண்டையில் பிரிந்த நிலம் ‘ஆளாது’ கிடப்பதால் தான் கல்யாணம் தள்ளிப் போகிறது எனக் காரணங்களை கண்டு அதை முடுக்க நினைக்கிறார்கள் தானாவதி தாத்தாவும் மாரிமுத்தும். மண்ணும் மண் மீதான பிடிப்பும் எப்போதும் அச்சமூக மக்களிடையே உள்ளது ஆகும். அதை அங்கனமே கொண்டு வந்துள்ளது நாவல். ‘வெட்டி’ப் பிரிந்தவர்கள் இணைவதும் அதில் ஒட்டாமல் இருப்பதும் மக்கள் மனதில் ஏற்படும் இயல்பு. தீட்டம் திட்டுவதும் அதைப் பெருக்குவதும் காட்டுவது அச்சு அசலான கிராமப் பிடிப்புள்ள சிந்தை. இக்கதையின் பிண்ணனியில் மண் தனிச் சரடாய் வருகிறது. அதில் அவன் உழைப்பும் பங்களிப்பும் எப்போதும் போல் பெருமாள்முருகனின் கதைகளில் உள்ளோடும் மண்ணின் மீதான பிடிப்பை இதிலும் காணலாம். மண்ணையும் மனங்களையும் அகழ்ந்து, கூர்ந்து நோக்கி இருக்கிறார். முன்பு தண்ணீர் பொங்கி தரை தட்டிய கிணறு இன்று துர்ந்து கிடப்பதாக காட்டுவது ஒர் குறியீடாகும். அதை சீர் செய்யத் தொடங்கவும் சகலமும் சரியாய்ப் பொருந்தி வருகிறது. உறவுச் சிக்கலையும் உரிமைச் சிக்கலையும் அதன் சரியான பக்கங்களில் விவரித்துச் செல்வது சிறப்பானதாய் இருக்கிறது. முன்பு வேறு சாதியில் பெண் கட்டலாம் என உள்ளாசையை நிறுத்தி கங்கணம் கட்டி அலைந்தும் இன்று சகல காரியங்களும் முடித்து பொருளதார முன்னிலை பெற்றும் யாரும் தன்னைக் கட்ட முன் வராததும் வந்தவளை பல்வேறு காரணங்களை முன் வைத்து சொந்தங்களே தட்டிக் கழிப்பதுமான நிலையை எண்ணிக் கழிவிரக்கம் சூழ்ந்து தன்னை மாய்த்து கொள்ள முயல்கிறான். அதன் பின்னான மாற்றங்களில் அடுத்தடுத்து எடுத்து கொள்ளும் விஷயங்கள் மிக இயல்பாய்ப் பொருந்திப் போகின்றன‌ சுயநலத்துக்காகத் தாழ்த்தப்பட்டவரைப் பயன்படுத்திக் கொள்வதும் காரியமானதும் கழற்றி விடுவதுமான உள்ளியல்புகளைச் சுட்டுவதும் நம்முடைய சமகால நடப்பு இன்னும் மாறுதலுக்கு உள்ளாகாதது இயல்பாய் வெளிப்படுகிறது. பேச்சுவழக்கில் புழங்கும் ‘குறி’ப் பெயர்களை தேவையான இடங்களில் சொல்லுகிறார்கள். இத்தனை இருந்தும் மாரிமுத்துவின் காமத்தை, அதன் ஏக்கத்தைக் குறித்த அகவியல் பார்வைகளை, உள்ளார்ந்த வேட்கைகளை இன்னுமே அழுத்தமாய் சொல்லி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. சமகாலத் தமிழ் நாவல் புலத்தில் ஆணுக்கும் தேவைகளும் உண்டு என அழுத்தமாய்ச் சுட்டி காட்டும் இந்நாவல் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. | கங்கணம் | நாவல் | பெருமாள்முருகன் | அடையாளம் பதிப்பகம் | 2007 | ரூ.235 | *** 7 கூள மாதாரி : கட்டாயமும் மூர்க்கமும் கூள மாதாரி : கட்டாயமும் மூர்க்கமும் கிருஷ்ண பிரபு கொங்கு மக்களின் வாழ்வையும், வாழ்வியல் உள்மடிப்புகளையும் எழுத்தாக்கியதில் பெருமாள்முருகனின் பங்கு கணிசமானது. கவிதை, சிறுகதை எனப் புனைவு சார்ந்து பெருமாள்முருகன் ஏராளமாகப் பங்களிப்பு செய்திருந்தாலும் அவரது நாவல்கள் தாம் பரவலான கவனத்தை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளன. ‘ஏறுவெயில்’, ‘நிழல்முற்றம்’, ‘கூள மாதாரி’ என ஆரம்பகால நாவல்களைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் பொழுது பதின்ம வயதுச் சிறுவர்களின் உலகத்தையே பெருமாள்முருகன் மீண்டும் மீண்டும் நுட்பமாக எழுத்தில் வடித்தெடுத்திருக்கிறார். அதிலும் ‘நிழல்முற்றம்’ மற்றும் ‘கூள மாதாரி’ ஆகிய இரண்டு நாவல்களிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுவர்களின் யதார்த்த வாழ்வியல் சிக்கல்களும், உடல் சார்ந்த பிரச்சனைகளும் அழுத்தமாகவே சொல்லப்பட்டிருக்கின்றன‌. முழுக்க முழுக்கப் பரந்த வெளியாகிய மேட்டுக் காட்டுக்குள்ளேயே சுழலும் நாவல் ‘கூள மாதாரி’. பண்ணயத்தில் விடப்படும் சிறுவர்களின் வரையறைக்கு உட்பட்ட வாழ்க்கையின் அவலம், கால்நடை வளர்ப்பு, விவசாயம் என உழைப்பின் மூலம் சமூக நிலையை மேம்படுத்திக்கொள்ள வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கும் கொங்கு நாட்டு மக்களின் உழைப்பு, இவற்றுக்கிடையே சமூக வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஊடுபாவும் ஜாதிய அடுக்குமானத்தின் தாக்கம் என இந்நாவல் கொங்கு நாட்டின் யதார்த்த வாழ்வை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது. கிராமத்தை விட்டு விலகியிருக்கும் மேட்டுக்காட்டின் நிலப்பகுதியில் ஆடு மேய்க்கும் சக்கிலிச் சிறுவர்கள் கொத்தடிமைகளாக சகித்துக்கொள்ளும் துயரங்களே ஆவணப் புனைவின் தன்மையில் இந்நாவலில் பதிவாகியுள்ளன. ‘புழுதி, ‘கொழிமண்’, ‘வறள்’ என்ற மூன்று பகுதிகளாக இந்நாவல் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பகுதிகள் முறையே பகல் – இரவுகளாக முழுக்க முழுக்கச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பகலின் கோடையில் மேட்டுக்காட்டில் சிறுவர்கள் தொழில்முறையாக ஆடு மேய்க்கும் நுட்பத்தைக் காட்சிப்படுத்தி இருக்கிறார். அதன் வழியே கொங்கு மண்ணின் நிலவியல் நீட்சியும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பகலின் தகிக்கும் வெப்பம் தணிந்து இரவானது பரப்பும் குளிர்ச்சியை இரண்டாம் பகுதி முழுமையும் நகர்த்திச் செல்கிறது. இரவு நேரத்தில் கால்நடைகளைப் பாதுகாக்கும் விதங்களை இதில் சொல்கிறார். இதன் தொடர்ச்சியாக பருவ காலச் சூழலின் மாற்றத்தின் ஊடே சிறுவர்களின் வாழ்வு நகர்ந்து யதார்த்தக் கண்ணிகளில் அவர்கள் சிக்குண்டு ஆட்படுவதை மூன்றாம் பகுதி பதிவு செய்திருக்கிறது. திருச்செங்கோடு மலையேறி சூரியன் வெப்பத்தைப் பரப்பும் முன்பாகவே கூளையன் காட்டுக்குள் சென்று விடுகிறான். சக ஆடு மேய்க்கும் சிறுவர்களான வவுறி, நெடும்பன், செவுடி, மொண்டி ஆகியோரை எதிர்பார்த்து அவர்களுக்காகத் தனியே காத்திருக்கிறான். ஒவ்வொருவராக வந்து சேரவும் அவர்களின் உலகம் நம்முன் விரிகிறது. இச்சிறுவர்களின் வாழ்வு கட்டாயத் திருப்பத்தினால் நகர்வது. கவுண்டர்களிடம் வேலைக்குச் செல்லும் கட்டாயத் திருப்பதிற்கான சூழலை குடும்பப் பொருளாதாரச் சூழல் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தாலும், கொத்தடிமை வாழ்விலிருந்து வெளிவர முடியாத இறுக்கத்தின் கடுமையை நீட்டித்துக் கொள்ளும் தன்மையும் அவர்களுக்கு இயல்பாகவே அமைந்து விடுகிறது. நீண்ட பகல் பொழுதுக்கு நீராகாரம் மட்டுமே உணவாக இருந்தாலும் பறவையின் முட்டையைப் பொரித்துத் தின்பது, நுங்குகளை வெட்டித் தின்பது, இயற்கையில் கிடைக்கும் கனி காய்களை பறித்துப் பங்கு போட்டுத் தின்பது, பரந்த வெளியில் ஓடிப் பிடித்து விளையாடுவது, கிணற்றில் குதித்து நீந்தி விளையாடுவது என பண்ணையாட்களாகக் கட்டுண்டு கிடக்கிறோம் என்பதையே மறந்து சிறுவர்களுக்குரிய திமிர்ப்புடன் சுதந்திரமாக அவர்கள் மேட்டுக்காட்டைச் சுற்றித் திரிகிறார்கள். பதின்மச் சிறுவர்களின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் விளையாட்டை மீறிய மனக் கிளச்சிக்கு அவர்களைத் தள்ளுகிறது. கூளையனுக்கு வவுறியின் மீது இருக்கும் நேசமும், நெடும்பனுக்கு செவுடியின் மீது இருக்கும் கிளர்ச்சியும் அப்படிப்பட்டது தான். கூளையன் வவுறியை சதா நேரமும் சண்டை பிடிக்கிறான். ஓடிப்பிடித்து அவளுடன் நட்பாக விளையாடுகிறான். மாறாக நெடும்பன் செவுடியுடன் உடலளவில் நெருங்கவே பிரியப்படுகிறான். உடல் இச்சை தான் செவுடியின் மீதான ஈர்ப்பை அவனுக்குக் கூட்டுகிறது. அதனைப் புரிந்துகொள்ளும் செவுடி இயல்பாகவே நெடும்பனை விட்டு விலகிச் செல்கிறாள். [] இறுக்கத்தின் கடுமையில் வாழ்ந்தாலுமே ‘உயிர்களின் வாழ்க்கை பாலியல் கிளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது’ என்கிறார் ஃபிராய்ட். நெடும்பனின் கிளர்ச்சியும் அவ்வகையில் சேர்ந்ததுதான். கவுண்டர் வீட்டுப் பிள்ளைகளான செல்வனும் மணியும் கூட பள்ளிக்கூடம் முடிந்ததும், சக்கிலிச் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழ்கிறார்கள். இங்கும் செவிடியைச் சேரும் ஆசை இயல்பாகவே மணிக்குப் பிறக்கிறது. மொண்டியும் செவுடியும் தனிமையில் பேசுவதை நெடும்பனும் கூளையனும் பலவாறாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள். இரவு நேரத்தில் பட்டியில் கட்டிவைத்த ஆட்டின் பின்புறத்தில் மொண்டி ஏறி முறையற்ற உறவு கொண்ட போது கவுண்டனிடம் வசமாக மாட்டிக் கொண்டான் என்று பேசி இருவரும் சிரிக்கிறார்கள். கொச்சையான வார்த்தைகளில் இருவரும் உடலுறவு சார்ந்த ரகசியங்கள் பலதையும் பேசிப் பகிர்ந்து கொள்கிறார்கள். கிணற்றில் குதித்து விளையாடிய போது ஈரத்துணி ஒட்டிக் கொண்ட செவுடியின் உடலையும், மொட்டாக அரும்பத் தொடங்கிய முலையையும் பார்த்து அவளுடன் மேலும் நெருங்க ஆசைப்படுகிறார்கள். நெடும்பன் விளையாட்டுப் போக்கில் மூர்க்கமாகவே செவுடியிடம் நடந்துகொள்கிறான். “உள்ளுணர்ச்சிகள் அனைத்திற்கும் மூர்க்கமே பொதுவாக இருப்பதால், மூர்க்கத்தோடு தொடர்புடைய கட்டாயத்தன்மை (Compulsion) உள்ளுணர்ச்சிகளின் பொதுப் பண்பாக அமைந்துவிடுகிறது” என்கிறார் ஃபிராய்ட். கிணற்றில் நீச்சலடித்து விளையாடும் பொழுது, செவுடி கிணற்றில் குதித்தவுடன் அவள் பின்னாலேயே குதித்து நெடும்பன் அவளை உரசிச் சிலிர்க்கிறான். செவுடிக்கு அவனது செயல் பிடிக்கவில்லை. முகம் சுளித்து நெடும்பனைத் தவிர்த்துச் செல்கிறாள். “மொண்டி கூடன்னாக் குதிப்பியா. எங்கூடக் குதிக்க மாட்டயா.” என்று நெடும்பன் கேட்பதும் ஒரு மூர்க்க எண்ணத்தால் தான். இனக் கவர்ச்சியினால் ஏற்படும் கிளர்ச்சியை மீறி அவர்களுக்கிடையில் நட்பு இயல்பானதாகவே வளர்கிறது. ஆடுகள் தொலைந்து போகும் பொழுதும், செவுடியிடம் வளரும் பால்குடி மறக்காத கவுண்டச்சியின் கைக்குழந்தை வீரிட்டு அழும் பொழுதும் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் உதவியுடன் இருக்கிறார்கள். மொண்டியே எல்லோரின் மீதும் அதிகாரம் செலுத்தும் இயல்பானவனாய் இருக்கிறான். வெயிலைப் பொழுது நேரடியாக அனுப்பும் நிலப்பகுதியில் ஆடுகள் அதுபாட்டுக்கு மேய்ந்து கொண்டிருக்க, மேற்பார்வை பார்த்துக்கொண்டே சிறுவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டி விளையாடுகிறார்கள். ஒவ்வொருநாளும் இப்படித்தான் சிறுவர்களின் பகல் நேரப்பொழுது கழிகிறது. கவுண்டர் வீட்டுப் பையன் செல்வனும், கூளையனும் தனித்திருக்கும் இரவு நேரப் பொழுதுகள் கொங்கு மண்ணின் இன்னொரு பரிமாணத்தை முன்வைக்கிறது. ஆடுகளைத் திருடர்களிடமிருந்தும், விஷ ஜந்துக்களிடமிருந்தும் காப்பது கூளையனின் இரவுப் பணி. அவனுக்குத் துணையாக செல்வமும் பட்டிக் குடுசில் தங்குகிறான். காற்றடித்துத் தூறல் போடும் காலமானதால் இயற்கையில் எழும் சப்தங்களைக் கண்டு செல்வம் அச்சப்படுகிறான். கூளையனுக்கு இதெல்லாம் பழக்கம் தான். எனினும் பேய், முனி போன்றவற்றை கூளையனும் நம்பக் கூடியவனாகத்தான் இருக்கிறான். இயற்கையில் ஏழும் மெல்லிய சப்தங்களைக் கூட இரவுக் குறியாகப் பயன்படுத்தி நாவலை நகர்த்திச் செல்கிறார் பெருமாள்முருகன். பருவத்திற்கு ஏற்றார் போல – நடுநிசி நேரத்தில் பனைமரம் ஏறி பனங்கள் திருடிக் குடிப்பது, பனம்பழம் சேகரித்து அவற்றைக் கிழங்காக்க விவசாய நிலத்தின் மூலையில் பயிரிடுவது என நிலவொளி வீசும் மெல்லிய இருள் கவிழ்ந்த மேட்டுக்காட்டை இருவரும் சுற்றித் திரிகிறார்கள். தலைத்துண்டை அவிழ்த்துக் கால் கயிறாகக் கட்டிக்கொண்டு கூளையன் பனையேற, அது அறுந்து விட கோமணத்துண்டைக் கால்கயிறாகக் கட்டிக்கொண்டு நிர்வாணமாகப் பனையேறும் படிச் சொல்கிறான் செல்வன். பனையேறி தூக்குப்போசியில் சேகரித்து வந்திருந்த கள்ளினைத் துள்ளலுடன் பருக வருகையில் “அது நான் வாய் வெச்சுக் குடிக்க தூக்குப்போசிய்யா” என்று செல்வனிடம் கூறுகிறான் கூளையன். “மூடுடா” என்று சொல்லிவிட்டுப் போசியில் இருந்த கள்ளினைக் குடிக்கிறான் செல்வன். காரியம் ஆகவேண்டும் என்றால் மட்டும் நட்பு பாராட்டும் செல்வன் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது “கண்டாரொலி, தாயோளி, சக்கிலி நாயே” போன்ற கூளையனைத் திட்டுகிறான். அவனுடைய சுபாவம் தெரிந்தே கூளையனும் சூழலுக்கு ஏற்றார் போல ஒத்துப் போகிறான். முள் காட்டில் பனம்பழம் பொறுக்கச் செல்கையில் செல்வன் தன் செருப்பைக் கூளையனுக்குக் கொடுத்து, “இந்தச் செருப்பத் தொட்டுக்குட்டுப் போடா…” என்று சொல்கிறான். செருப்பைத் தொட்டுக் கொள்ள ஆசையிருந்தும் மறுக்கிறான் கூளையன். “இந்தாடா…” என்று செல்வன் அழுத்தமாகச் சொல்லவும் செருப்பை அவன் போட்டுக் கொண்டு நடக்கிறான். அந்த நேரத்தில் கூளையன் அடையும் ஆனந்தம் – உச்சிப் பனை மரத்தின் குறுத்தைப் பிடித்துக்கொண்டு நின்ற நிர்வாணத்திற்கு ஈடானது. செல்வனுடன் கழிக்கும் இரவு நேரத் தனிமையில் இது போன்று சந்தோஷங்களும் கூளையனுக்குக் கிடைக்கிறது. பெருங்காற்று அடிக்கும் பொழுதும், குளிரானது வாட்டும் பொழுதும் செல்வனுக்கு மனித அருகாமை தேவைப்படுகிறது. அந்நேரங்களில் கூளையனை மிக நெருக்கமாக அவன் வைத்துக் கொள்கிறான். குளிர் வாட்டும் இரவில் பட்டிக்குடுசின் சிறிய கட்டிலில் இருவரும் இடைவெளியற்று ஒன்றாகப் படுத்து உறங்குகிறார்கள். குடுசைப் பெருங்காற்று தூக்கிக் கொண்டு செல்வது போல விசையுடன் வீச, பயத்தில் கூளையனின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்கிறான் செல்வன். பயத்திலும் குளிரிலும் நடுங்கும் அவனை மேலும் இறுக அணைத்துக் கொள்கிறான் கூளையன். கூளையனும் செல்வனும் ஒருபால் உறவில் திளைத்திருக்கக் கூடுமோ என்பதை அழுத்தமாகச் சொல்லாமல் யூகத்தின் அடிப்படையில் வாசக தளத்திற்கே விட்டு விடுகிறார். அப்படி இல்லாமல் சகஜமாகவே எடுத்துக்கொள்ளும் தன்மையிலும் அப்பகுதிகள் அமைந்திருக்கின்றன‌. “நுட்பமாகப் பார்த்தால் இன்பக் கொள்கைக்கும் (Pleasure principle), இருப்புக் கொள்கைக்கும் (Relality principle) இடையில் தான் மனித உணர்வுகள் ஊசலாடுகிறது” என்ற ஃபிராய்டின் உளவியல் கருத்துப்படி இன்பக் கொள்கைக்கு செல்வனும், இருப்புக் கொள்கைக்கு கூளையனும் கச்சிதமாக பொருந்தி வருகிறார்கள். இரண்டு கொள்கைகளுக்கும் இடையிலான உணர்வுகளைத் தான் இரண்டாம் பகுதி சித்தரிக்கிறது. பட்டியிலுள்ள ஆடுகளைத் தனியே விட்டு விட்டு இரவு நேர எம்.ஜி.ஆர் சினிமாவுக்குக் கூளையனை வற்புறுத்தி அழைத்துச் செல்கிறான் செல்வன். அதுவே கூளையனுக்குப் பாதகமாக அமைகிறது. பட்டியிலிருந்து ஒரு வெள்ளாடு காணாமல் போகிறது. சினிமாவுக்குச் சென்றதும், குட்டி ஆடு களவு போனதும் கவுண்டனுக்குத் தெரிந்தால் தன் நிலை என்னாகுமோ என்று கூளையன் உறைந்து போவதுடன் இரண்டாம் பகுதி முடிகிறது. இன்பக் கொள்கையும், இருப்புக் கொள்கையும் உயிர்களின் உளப் பண்புகளில் ஆதிக்கம் செலுத்தினாலும் – இவற்றின் தாய் வேராகச் செயல்படுவது “கட்டாயமும் மூர்க்கமும்” என்னும் பிராய்ட் ‘கட்டாயத் திருப்பத்தை’ இன்பியலுக்கும் (Hedonisam) மேலான உளப்பண்பாகப் பார்க்கிறார். நாவலாசிரியர் மூன்றாம் பகுதியில் ஆடு மேய்க்கும் சிறுவர்களின் யதார்த்த நெருக்கடிகளைப் பதிவு செய்கிறார். கவனக் குறைவால் விஷச் செடிகளைச் சாப்பிட்டு நெடும்பன் கண்காணிப்பில் இருந்த சில ஆடுகள் இறந்து விடுகின்றன. கூளையன் சினிமாவுக்குச் சென்று ஒரு வெள்ளாட்டைக் களவுக்குக் கொடுக்கிறான். நெடும்பன் திருச்செங்கோடு மலையடிவாரக் கோவிலுக்கு ஓடி விடுகிறான். கூளையன் பெற்றோரிடம் ஓடி விடுகிறான். நெடும்பனைக் கண்டுபிடித்துச் சாட்டையால் அடித்து மீண்டும் கூலியாக வேலைக்குச் சேர்க்கிறார்கள். தொலைந்த ஆட்டிற்கும் சேர்த்து கூளையனே கடனை அடைப்பான் என்று அவனுடைய பெற்றோரே கவுண்டனிடம் சமாதானம் பேசிப் பட்டிக்காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். சிறுவர்களின் வாழ்வு மீண்டும் மேட்டுக்காட்டை நோக்கியே திசை திரும்புகிறது. இடைப்பட்ட காலத்தில் செவுடி பூப்பெய்த, பட்டிக்காவலிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். செவுடிக்குப் பதிலாக பத்து வயதைத் தொடாத அவளது தங்கை ஆட்டு மந்தையை ஓட்டிக்கொண்டு மேட்டுக்காட்டிற்கு வருகிறாள். ஒருவர் செல்ல இன்னொருவர் அந்த இடத்தை நிரப்புகிறார்கள். நாவலின் இறுதிப் பகுதியாகச் சிறுவர்கள் கிணற்றில் குதித்து மகிழும் இடம் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆடுகளாகக் கிணற்றில் தூக்கிப் போட்டு கூளையனும் நெடும்பனும் ஆடுகளைக் குளிப்பாட்டச் செய்கிறார்கள். செல்வன் மூர்க்கத்துடன் இடையில் புகுந்து அவர்களைத் தொந்தரவு செய்து விளையாடுகிறான். ஆடுகள், வவுறி, கூளையன் என எல்லோரையும் நீரில் அமிழ்த்தி மூச்சு முட்டச் செய்து குதூகளிக்கிறான் செல்வன். பொறுக்கமாட்டாத கூளையன் தண்ணீரில் தாவி – இரண்டு கால்களையும் செல்வனின் தோள்களின் மீது பொருத்தி பலம் கொண்ட மட்டும் அழுத்தி – சிறுது நேரம் மூச்சு முட்டித் தவித்து மேலே வரட்டும் என அடியாழத்துக்குத் தள்ளுகிறான். நேரம் கடந்தும் கிணற்றின் உள்ளே சென்ற செல்வன் மேலே வராமல் போகவும் செய்வதறியாமல் அவனைத் தேடிக்கொண்டு கூளையன் தண்ணீரின் ஆழத்திற்குச் செல்கிறான். அடர் கருமை நிறைந்த முடிவற்ற ஆழத்திற்கு செல்வனைத் தேடி கூளையன் செல்கிறான் என்பதாக நாவல் முற்றுப் பெறுகிறது. ஆதிக்க மனப்பான்மையின் குறியீடாக, ஆதிக்க சாதியின் குறியீடாகவே இந்தக் கிணற்றினை இங்கு வைத்துக் கொள்ளலாம். காலந்தோறும் மனிதர்களை முழுங்கி இக்கிணறுகள் ஏப்பம் விடுகின்றன. நீந்தத் தத்தளிக்கும் மனிதர்களை மூர்க்கம் கொண்டு இரும்புக் கரங்கள் தாக்குகின்றன. ஒரு சட்டகத்துக்குள் வாழ நிர்பந்திக்கப்பட்டோரின் இருப்பு இப்படித்தான் ஆகின்றன. பலமற்றவர்களின் தற்காப்பும் கூட பலனற்றுப் போகின்றன. ஒருவேளை கூளையனுக்குப் போக்குக் காட்டிவிட்டு செல்வன் மேலேறி இருக்கலாம். ஆனால் ‘கூள மாதாரி’ போன்ற கொத்தடிமைச் சிறுவர்கள்? அடர் கருமை நிறைந்த முடிவற்ற ஆழத்தின் இருண்மையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களின் கதைக்கு ஒரு முடிவே இல்லை. அது இன்னுமொரு ‘புழுதி, ‘கொழிமண்’, ‘வறள்’ என்று நீளும். அந்த வகையில் முடிவில்லாத கதையைத்தான் பெருமாள்முருகன் இந்நாவலில் ஆவணப்படுத்தியிருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டில் முதற்பதிப்பு கண்ட இந்நாவல் வெளிவந்த சமயத்தில் போதுமான கவனிப்பை பெற்றிருந்ததாகத் தெரியவில்லை. 2004-ஆம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய விருதை இந்நாவல் பெற்றுள்ளது ஆறுதலான விஷயம். ஆய்வாளர் வ. கீதாவால் ஆங்கிலத்தில் “Seasons of the palm” என்று மொழியாக்கம் செய்யப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றுள்ளதும் நினைவு கூறத்தக்கது. இந்நாவலின் ஆங்கில மொழியாக்கம் – பசிபிக் கடலோர நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகள் ஆகியவற்றில் வாழும் மக்களுக்கிடையே பரஸ்பர புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் ‘கிரியாமா’ விருதுப் போட்டியில் 2004-ல் பங்கேற்ற ஏறத்தாழ 200 நாவல்களிலிருந்து இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகிய 5 நாவல்களில் ஒன்று. | கூள மாதாரி | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிச‌ம்பர் 2007 | ரூ.200 | *** 8 நிழல்முற்றம் & நிழல்முற்றத்து நினைவுகள் : திரைக்கு முன்னால் நிழல்முற்றம் & நிழல்முற்றத்து நினைவுகள் : திரைக்கு முன்னால் லேகா இராமசுப்ரமணியன் இரண்டு தமிழர்கள் கூடிப் பேசினால் பெரும்பாலும் அந்த உரையாடல் சினிமாவைத் தொட்டுச் செல்லாமல் முடிவுறாது என்பதே நிதர்சனம். நம் வாழ்வோடு ஒன்றாகி விட்ட சினிமா குறித்து தமிழில் வெளியான அனுபவக் கட்டுரைகள் வெகு குறைவு. அதிலும் பரவலான கவனம் பெற்றவை சொற்பமே. கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ அவ்வரிசையில் அற்புதமானதொரு தொகுப்பு. திரைப்படம் என்பது இன்றைய நாட்களைப் போல நினைத்த நேரத்தில் வீட்டிலோ, கைப்பேசியிலோ பார்த்துவிடக் கூடிய காரியமில்லை சென்ற தலைமுறையினருக்கு. படம் வெளியாகும் நாளுக்காய்க் காத்திருந்து, தொலைதூரம் பயணப்பட்டு திருவிழாக் கொண்டாட்டம் போல சினிமா கண்டு கழித்தவர்களின் ஞாபகக் குறிப்புகள், பொக்கிஷங்கள். அப்படியான தன் திரையரங்கத்து நினைவுகளை மீட்டெடுத்து, சுவாரஸ்யம் குறையாமல் பதிவு செய்துள்ள பெருமாள் முருகனின் படைப்புகள் ‘நிழல் முற்றம்’ (1993) மற்றும் ‘நிழல்முற்றத்து நினைவுகள்’ (2012). இவ்விரு புத்தகங்களும் 70-80களின் சிறுநகரத் திரையரங்க மனிதர்கள், குறிப்பாக சிறுவர்கள் மற்றும் அவர்கள் சார்த்த நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ளன. முதலில் நிழல்முற்றம் நாவலாகவும், பின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நிழல்முற்றத்து நினைவுகள் கட்டுரைத் தொகுப்பாகவும் வெளிவந்திருப்பினும் இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை. ஒரு புத்தகத்தின் மனிதர்களை மற்றொரு புத்தகத்தில் அடையாளம் கண்டு கொண்டு தொடர்வது வாசகனுக்குப் புதுமையான‌ அனுபவம். நிழல்முற்றம் 70களின் மத்தியில் சேலத்து சிறுநகரம் ஒன்றின் திரையரங்குப் பணியாளர்களை மையப் படுத்திய நாவல். சக்திவேல், நடேசன், பெரிய சாமி, விசுவன், பூதன் என வாலிப வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் தான் கதையின் பிரதானப் பாத்திரங்கள். தட்டம் கடை (தட்டுகளில் பலகாரங்கள் ஏந்திச் சென்று விற்பனை செய்வது), சைக்கிள் ஸ்டாண்டு, சோடாக் கடை என சினிமா கொட்டகையின் ஒவ்வொரு அசைவிலும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். குடும்பம் என சொல்லிக்கொள்ளும்படி ஏதுமற்ற இவர்களின் பொழுதுகள் துல்லியமாக நமக்கு விவரிக்கப்படுகின்றன. பீடி, கஞ்சா, கெட்ட வார்த்தை என வயதுக்கு மீறிய விஷயங்களனைத்தும் அவர்களின் அடையாளங்கள். நிகழ்காலம் குறித்த கவலைகளோ, எதிர்காலம் குறித்த கனவுகளோ சுமந்து அலையாத சுதந்திரப் பட்சிகள். தட்டம் விற்பது, சைக்கிள் கடையில் இரவு காவல், டிக்கெட் கொடுப்பது, சோடாக் கடையில் பாட்டில் கழுவி சோடா நிரப்புவது என ஓயாத வேலைகளுக்கிடையே திருட்டும் அடிதடியும் உண்டு. சிறுவர்களின் அன்றாடங்களுக்கிடையே சினிமா கொட்டகையின் காரியங்கள் மெல்லத் திரை விலகி அறிமுகமாகின்றன. [] தரையில் மணல் குவித்தும், சேர்களில் ஒழுங்கற்றும், சோபா சீட்களில் பெருமிதத்தோடும் அமர்ந்திருக்கும் மக்கள், அவர்களுக்கிடையே நடமாடி வியாபாரம் செய்யும் தட்டம் விற்கும் பையன்கள், ஆபரேட்டர் அறையில் இருந்து வரும் ஒளிக் கீற்று எனக் காட்சிகள் நம் கண்முன் விரியும்படி யதார்த்த விவரிப்புகள். தட்டம் விற்கும் பையன்களில் சக்திவேல் குறித்து அதிகம் பகிரப்படுகின்றது. பெருவியாதிக்காரனான தன் தகப்பனை சக்திவேல் துரத்தி அடிக்கும் காட்சி, அச்சிறுவனின் மனப்போராட்டங்களைத் தெளிவாக முன்வைப்பது. தந்தையின் மீது அவனுக்குப் பிரியங்கள் இல்லாமலில்லை. ஆனால் தானிருக்கும் இடத்தில் தகப்பனால் கேலி கிண்டல்களைக் கேட்க நேரிடும் என்கிற பய உணர்வே அச்சிறுவனின் கோபத்திற்குக் காரணம். போலவே பாசத்தோடு தன்னைக் காண வரும் பாட்டியிடம் கொடும் வார்த்தைகளை உமிழும் நடேசனும். ஏழ்மை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தது வெறுப்பு மட்டுமே. அங்குள்ள சிறுவர்கள் எல்லோருக்கும் சக்தியைப் போலவே மோசமானதொரு பின்னணி இருக்கலாம் என்பதை இவனொருவனின் கதை கொண்டு அதை நமக்கு உணர்த்தியிருகிறார் ஆசிரியர். விளிம்புநிலை வாழ்வைப் பாசாங்கின்றி எடுத்துரைக்கும் பெருமாள்முருகனின் நேர்த்தி நிழல்முற்றதிலும் பிரதிபலிக்கிறது. தியேட்டரில் கடை வைத்திருக்கும் சிறுவியாபாரிகளின் வியாபார நுணுக்கங்கள் நம்மை ஆச்சர்யப் படுத்துபவை. தட்டம் விற்கும் பையன்களோடும் தியேட்டர் மேலாளருடனும் முட்டி மோதிக் கொண்டு அவர்களின் உதவி கொண்டே தொழில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அவர்களின் கதைகள், சுவாரஸ்யங்கள். ஆயிரம் வேற்றுமைகள் இருப்பினும் பணக்கஷ்டத்திலும், சிக்கலான சூழ்நிலைகளிலும் அவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் தோள் கொடுப்பவர்களாக உள்ளனர். முக்கியமாக தட்டம் விற்கும் பையன்களுக்கு மத்தியில் நிலவும் ஒற்றுமை. திரையரங்கத்தின் பின்னணியில் நிகழும் கதையாகினும் நிழல்முற்றம் பெரிய திரைக்கு மத்தியில் உலவும் மனிதர்களின் கதையையே உணர்வுபூர்வமாகப் பேசுகிறது. * ‘நிழல்முற்றது நினைவுகள்’ – தந்தையின் தொழில் காரணமாக திரையரங்கமொன்றில் தான் கழித்த நாட்கள், வருடங்கள் பல கடந்தும் விடாமல் துரத்தும் அதன் நினைவுகள் என பெருமாள் முருகன் தன் கடந்த காலத்தின் ஒரு பகுதியை அதே உயிர்ப்போடு நமக்குக் கட்டுரைகளாகப் பகிர்ந்தளித்துள்ளார். தந்தை சிறு முதலீட்டில் திருச்செங்கோட்டில் ஒரு திரையரங்கில் துவங்கும் சோடாக் கடையினால் தனக்கு சாத்தியமான அனுபவங்கள், அதன் பொருட்டு அறிமுகமான மனிதர்களென அவர் விவரிக்க விவரிக்க ஆண்டுகள் பின்னோக்கி, 70களில் நாமும் பயணிப்பதான தோற்றம். [] திரையரங்கின் காரியங்களை பேசுவதற்கு முன், பெருமாள்முருகன் தன் தந்தையைச் சுற்றி கட்டமைத்திருக்கும் இத்தொகுப்பு முகம் அறியாத அப்பெரியவரின் மீது நம் பிரியத்தைக் கூட்டுகிறது. குடும்பத்தின் நலனுக்காக ஓயாது உழைக்கும் எத்தனையோ தகப்பன்களின் பிரதி. “அப்பன்” என முருகன் நாவல் முழுக்க அவரை வாஞ்சையோடு குறிப்பிடுவது நெகிழ்வூட்டுவது. கடை வாடகை, சோடாத் தயாரிப்பு பொருட்கள், கடை சாமான்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டுத் துவங்கும் அச்சிறுவியாபாரியின் நெருக்கடிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல பெரும் முதலாளியான சாமியப்பன் அத்திரையரங்கை நிறுவப் படும் கஷ்டங்கள். போட்டியாளர்களைச் சமாளித்து, மக்களை வசீகரிக்க உள்கட்டமைப்பு, ஒலித் தரம், இருக்கைகள், கழிப்பறைகள் என யாவற்றிலும் நவீன வசதிகளைப் பொருத்திப் புது பொலிவுடன் அத்திரையரங்கம் முதல் நாள் காட்சியளித்ததை நம்மால் எளிதாகக் கற்பனை செய்ய முடிகிறது. துவங்கிய நாள் முதற்கொண்டு அதன் இயக்கத்தை நெருங்கிப் பார்ப்பதான உணர்வைத் தரும் இத்தொகுப்பில் பெருமாள் முருகன் நமக்கு அறிமுகம் செய்யும் மனிதர்கள், சிறிது காலம் நம் நினைவை விட்டு அகலாமல் இருப்பவர்கள். காண்போரை எல்லாம் கெட்ட வார்த்தைகளில் திட்டியபடியே இருக்கும் தியேட்டர் முதலாளி சாமியப்பன், ஒரு திரைப்படத்தையும் பார்த்தவரில்லை என்பது ஆச்சர்யம் எனில் அவரைக் குறித்து உலவும் வதந்திகள் சுவாரஸ்யம். தியேட்டர் ஆபரேட்டர் ராஜேந்திரன், குள்ள உருவத்தினால் மிகுந்த தாழ்வுமனப்பான்மையில் இருக்கும் இவர் தட்டம் விற்கும் பையன்களுக்குக் கேலி பேச ஏதுவான ஆள். உண்மையில் வாசிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட ராஜேந்திரனை வாசிக்க‌த் தனக்கு வழிகாட்டிய ஆசான் என்கிறார் முருகன். தன் தந்தையின் கடையில் தட்டம் விற்கும் பையனாக இருந்த பர்மாகாரன் முருகனின் விவரிப்புகள், ஒரு நேர்த்திமிகு சிறுகதையின் அழகைக் கொண்டது. சினிமா மீது தீராமோகம் கொண்டு பார்த்த படங்களையே மீண்டும் மீண்டும் பார்த்து சினிமா செய்திகளை விரல் நுனியில் வைத்திருக்கும் அவன் போன்றவர்கள் அபூர்வமாய் காணக் கிடைப்பவர்கள். தியேட்டர் பையன்களோடு சேர்ந்து ஊர் ஊராக போஸ்டர் ஓட்டச் சென்ற நாளொன்றில், ஒரு கிராமத்து மந்தையில் மாட்டிக் கொண்ட ஆசிரியரின் அனுபவம், கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் எம்ஜிஆர் என்னும் ஆளுமை மீது கொண்டிருந்த பிரியத்தையும் சொல்லுவது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் என கதாநாயகர்களுக்கு ஏற்றவாறு வரும் மக்கள் கூட்டமும், சந்தை நாளை கணக்கில் கொண்டு மாறுபடும் காட்சி நேரங்கள், பகலில் வீட்டு / வயல் வேலைகளை முடித்துக் கொண்டு இரவுக் காட்சிக்கு கும்பலாய் வரும் பெண்கள் என யாவும் 70களில் சினிமா மட்டுமே உழைக்கும் மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்ததை நிருபிப்பது. குடும்பங்களாக மக்கள் வந்து கொண்டிருந்த திரையரங்கம் காலப்போக்கில் தன் கம்பீரத்தைத் தொலைத்து மூன்றாம் தரத் திரைப்படங்களை வெளியிடும் அவல நிலைக்குச் சென்றது வாழ்ந்தொழிந்த மனிதனின் கதையொன்றை வாசித்து முடித்த உணர்வு. இன்றைய மல்டிப்ளெக்ஸ் சினிமா தியேட்டர்களில் பழைய சினிமா கொட்டகைகளில் காணப்பட்ட அந்யோனியம் இல்லை என பெருமாள்முருகன் வருந்துவதில் மாற்றுக் கருத்துகள் ஏதுமில்லை. கார்பரேட் கைகளுக்கு மாறிய திரையரங்குகள் பணம் ஒன்றை மட்டுமே குறிகோளாகக் கொண்டு இயங்குகின்றன. எளிவர்கள் நினைத்துப் பார்க்க முடியா விலையில் டிக்கெட், தின்பண்டங்கள் என யாவும் குறிப்பிட்ட ஒரு தட்டு மக்களுக்காக மட்டுமே என்பதே நிதர்சனம். தட்டம் விற்கும் பையன்களின் சப்தங்களுக்கு மத்தியில், ஆப்பரேட்டர் அறையில் அமர்ந்து ராஜேந்திரன் இயக்க, இருளும் வெளிச்சமுமாய் ஒளிக்கீற்றுகள் திரையில் பாய்ந்து உழைத்துக் களைத்த மக்களை மகிழ்வித்த அந்நாட்களின் இனிமை இனி ஒரு நாளும் திரும்பி கிடைக்காது என்னும் துயரம் பெருமாள் முருகனின் வார்த்தைகளில் தொனிப்பது இயல்பே. அவர் கூட்டிச் செல்லும் உலகம் இன்றைய தலை முறைக்கு முற்றிலும் புதிதான ஒன்று. ஞாபகப் பெட்டகத்தில் இருந்து எடுத்துரைக்க பல‌ விஷயங்களை சேகரித்து வைத்திருக்கும் தலைமுறை மீது பொறாமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. திரையரங்கைக் களமாகக் கொண்டு தமிழில் வேறு நாவல் / அனுபவக் கட்டுரைகள் வெளிவந்துள்ளதா எனத் தெரியவில்லை. பெருமாள் முருகனின் நிழல்முற்றம் நூல்கள் அவ்விதம் தனித்த சிறப்புடையவை. திரையரங்கம் களமாக இருப்பினும் அதன் காரியங்கள் தாண்டி வாசகனுக்கு இப்புத்தகங்கள் கடத்திடும் விஷயங்கள் ஏராளம். வாழ்நாள் முழுக்க உழைத்துத் தீர்த்தாலும் வறுமைக் கோட்டை தாண்டி வர இயலாத விளிம்பு நிலை வாழ்க்கை குறித்த புரிதல் அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. “வாழ்வில் பெரும் எதிர்பார்ப்பும் திட்டமும் இல்லாமல் அதன் போக்கில் நகர்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்ற வரிகள் நமக்கு தட்டம் விற்கும் பையன்களின் சிரித்த முகங்களை நினைவூட்டுவது தாக்கத்தின் ஒரு துளி. | நிழல் முற்றம் | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | ஜூலை 2005 | ரூ.70 | | நிழல் முற்றத்து நினைவுகள் | கட்டுரைகள் | பெருமாள்முருகன் | கயல்கவின் | டிச‌ம்பர் 2012 | ரூ.130 | *** 9 மாதொருபாகன் TRILOGY : பிரியத்தின் துன்பியல் மாதொருபாகன் TRILOGY : பிரியத்தின் துன்பியல் (மாதொருபாகன், ஆலவாயன் & அர்த்தநாரி நாவல்களை முன்வைத்து) சி.சரவணகார்த்திகேயன் கற்பில் ஒழுகியதைவிட‌ களவில் ஒழுகியதில் கண்ணீர் ஒழுகியது. - மகுடேசுவரன் (காமக்கடும்புனல் தொகுப்பிலிருந்து) வாசித்தவரையில் பெருமாள்முருகனின் நாவல்களுள் எனக்குப் பிடித்தமானது கங்கணம் தான். ஆனால் இன்று அவர் உலகப் புகழ் (?!) பெறக் காரணமான‌து மாதொருபாகன் என்பதாலும், எழுத்தாளர் பெருமாள் முருகன் மரித்து விட்டான் என அவரே அறிவிப்பதற்கு சற்று முன் மாதொருபாகனின் தொடர்ச்சியாய் அவரெழுதியவை அர்த்தநாரி, ஆலவாயன் என்பதாலும் அவற்றைப் பற்றிய கருத்துப் பதியத் தேர்ந்தேன். டிசம்பர் 2010ல் மாதொருபாகன் வெளியான உடனேயே அதை வாசித்திருந்தேன். அப்போது அவரது கங்கணம் நாவலும் பீக்கதைகள் சிறுகதைத் தொகுப்பும் காலச்சுவடு இதழ்களில் வெளியான சில‌ படைப்புகளையும் கடந்து வந்திருந்தேன். சமகாலத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு மிக உவப்பான மூன்று படைப்பாளிகளுள் ஒருவராக ஆகிப் போயிருந்தார் (இப்போதும் அப்படியே!). பணி நிமித்தமும், எழுத்து வேலைகள் நிமித்தமும் என் வாசிப்பு அருகியிருந்தது என்றாலும் உடனடி வாசிப்புக்கு அதுவே காரணம். கங்கணம் பெருமாள்முருகனின் மாஸ்டர்பீஸ் என நான் கருதுவதால் (யோசித்துப் பார்த்தால் மயிரு என்ற என் சிறுகதையில் கங்கணம் நாவலின் வலுவான பாதிப்பு இருப்பதை மிகத் தாமதமாக இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கையில் உணர்கிறேன்.) அதனோடு மாதொருபாகனை ஒப்பிட முடியாது என்றாலும் மாதொருபாகன் நாவலும் எனக்குப் பிடித்தமானதே. பிற்பாடு ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் மெல்லினம் இதழில் (விகடன் பாணியில்) சினிமா, இலக்கியம், தொலைக்காட்சி என பல்துறைகளில் விருதுகள் தேர்ந்தெடுக்கக் கேட்ட போது சிறந்த நாவல் என மாதொருபாகனை அறிவித்திருந்தேன். * பெருமாள்முருகனின் நாவல்கள் சம்பவங்களாலும் உரையாடல்களாலும் ஆனவை. அதாவது நாவலில் ஒட்டுமொத்தமாய் கதையின் நகர்ச்சி என்பது மிகக் குறைவாகவே இருக்கும், மாறாய் நாவல் எடுத்துக் கொண்ட‌ சிக்கல் சார்ந்த சம்பவங்கள் மற்றும் உரையாடல்கள் வழி பாத்திரங்களின் மனவோட்டம் சொல்லப்படும். அது அவரது வலுவான தனித்துவம். அதனால் பெருமாள்முருகனின் ஏதேனும் ஒரு நாவலை எடுத்துக் கொண்டு அதன் கதை என்ன என யாரேனும் கேட்டால் பதிலளிப்பது சிரமமே. போலவே நாவலின் போக்கு நேர்க்கோட்டிலும் அமையாது. ஒரு சம்பவத்தில் தொடங்கி முன் பின்னாய் பிற சம்பவங்களைச் சொல்லிச் செல்வதன் மூலம் கதை குறித்த சித்திரத்தை மெல்ல நமக்கு அளிப்பார். நாவலில் கதை நடக்கும் காலகட்டத்தையும் ஓரிரு வரி வசனங்களின் வழி பூடகமாகவே குறிப்பிட்டுக் கடந்து விடுவார். ஆனால் நடைபெறும் இடம், பாத்திரங்களின் சாதி மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி. (அது தான் மாதொருபாகன் பிரச்சனைக்கு முழுமுதற் காரணம். அதனாலேயே மாதொருபாகன் ஒரு சர்ச்சையாக மட்டும் உருவம் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான‌ அர்த்தநாரி, ஆலவாயன் நாவல்களின் முன்னுரையில் “அய்யா, சாமிகளே, தங்கள் சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம். இந்த நாவல் என்றல்ல; என் படைப்புகள், எழுத்துக்கள் எல்லாவற்றின் களமும் தமிழகத்தில் உள்ள ஊர்கள கிடையாது. ஏன் இந்த உலகத்தைப் பற்றியே நான் எழுதவில்லை. நான் எழுதுவது எல்லாம் அசுர லோகத்தைப் பற்றித்தான். என் எழுத்தில் வரும் மாந்தர்கள் எல்லாரும் அசுரர்கள். அவர்கள் எல்லாரும் அசுர சாதிப் பிரிவினர். அவர்கள் பேசுவது அசுர மொழி. இந்த லோகத்தில் வசிக்கும் யாரையாவது குறிப்பதாகவோ எந்தச் சாதியையாவது இடத்தையாவது சுட்டுவதாகவோ தோன்றினால் அது மாயை. ஆகவே தயவு செய்து மாயையிலிருந்து மீண்டு விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என விரக்தியுடன் சொல்கிறார்.) மாதொருபாகன், ஆலவாயன், அர்த்தநாரி நாவல்களின் கதை இக்கட்டுரையில் வெளிப்படக்கூடும். இவை சினிமா அல்ல; த்ரில்லர் நாவல் அல்ல. சீரியஸ் இலக்கியத்தில் நாவல் என்பது அதன் கதை மட்டுமல்ல என நான் திடமாக நம்புகிறேன். (குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலை எழுதி முடித்த போது சுந்தர ராமசாமியிடம் அதன் கதை என்ன என்று ஒரு நண்பர் கேட்கிறார். அதற்கு சுரா “இது நாவல் அல்லவா!” எனப் பதில் சொல்கிறார்.) அதனால் இதை spoiler ஆகக் கொள்ள முடியாது என நினைக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் பெருமாள்முருகனே ஓரளவு தன் முன்னுரைகளில் கதையைச் சொல்லி விடுகிறார். அதனால் நான் பேசும் விஷயங்களுக்கு அவசியம் என்கிற அளவில் கதையைச் சொல்லி இருக்கிறேன். [] திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாத காளி – பொன்னா என்ற‌ தம்பதியரின் கதை தான் மாதொருபாகன். கதை 1940களில் நடைபெறுகிறது. விவசாயத்தைப் பிரதானத் தொழிலாகக் கொண்டு நாவலின் பாத்திரங்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். குழந்தைப் பேறின்மை என்ற விஷயம் அந்தத் தம்பதியருக்கு எத்தகைய எதிர்மறை அனுபவங்களை உறவினர், சுற்றத்தார் மற்றும் ஊரார் மத்தியில் அளிக்கிறது என்பது தான் நாவலின் சாரம். எப்படி கங்கணம் திருமணமாகாத முதிர்காளை ஒருவனின் மனவியலைப் பதிவு செய்ததோ அதே போல் இந்நாவல் வாரிசு இல்லாததால் வறடன், மலடி எனப் புறம் பேசப்படும் எளிய‌ கணவன் – மனைவியின் அகச்சிக்கல்களை விரிவாய்த் தொகுத்துக் கொள்கிறது. காளியும் பொன்னாவும் மிக அன்னியோன்யமான தம்பதி. எப்போதும் இழைந்தபடியே இருப்பவர்கள். திருமணமாகிப் பல்லாண்டுகளுக்குப் பிறகும் இருவருமே பரஸ்பரம் மிக‌ மயங்கிக் கிடக்கிறார்கள். குழந்தையின்மையே அவர்கள் இப்படி பின்னிப் பிணைந்து கிடக்கக் காரணம் என காளியின் தாயே கண் போடுமளவு அவர்களின் நெருக்கமும், பிரியமும் இருக்கிறது. ஒரே குறை பிள்ளையின்மை தான். அவ்வூரின் தேர்த் திருவிழாவின் பதினான்காம் நாள் கலாசாரத் தளைகள் உடைந்து ஆணும் பெண்ணும் மலையில், காடுகளில் கூடிக் கிடக்கும் இரவு. முப்பது வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்களும், மீசை முளைத்திடும் இளம் பருவ‌ ஆண்களும் இதில் பெரும்பாலும் ஈடுபடுகிறார்கள். குறிப்பாய் குழந்தைப் பேறில்லாத பெண்கள் பிள்ளை வரம் வேண்டி இதில் கலந்து கொள்கிறார்கள். அதன் பலனாய் பிறக்கும் குழந்தை ‘சாமி புள்ள’ என்றறியப்படுகிறது. நீண்ட நாளாய் மகவில்லை என்பதால் பொன்னாவை இதற்கு அனுப்பித் தாய்மையடைய வைக்கும் யோசனை இரு பக்கத்து குடும்பத்தாராலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் காளி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. காளி சம்மதித்து விட்டான் என‌ இரு குடும்பமும் பொய் சொல்லி அவளை பதினான்காம் நாள் இரவில் திருவிழாவுக்கு அனுப்பி வைத்து விடுகிறது. இதை அறிய வரும் காளி தூக்கு மாட்டிக் கொள்கிறான் என்பது போல் மாதொருபாகன் நாவல் முடிகிறது. “நீ தவிச்சுக் கெடக்கோனும்டி, ஏமாத்திட்டியேடி தேவ்டியா முண்ட…” என்பதே இதில் அவனது கடைசி நினைவு. தூக்குப் போட்டதில் காளி இறந்திருந்தால் என்னவாகும் என்பது ஆலவாயன். பிழைத்திருந்தால் எப்படித் தொடர்ந்திருக்கும் என்பது அர்த்தநாரி. நானறிந்த வரை இப்படி Sliding Doors (அல்லது பெயர்த்துச் சொன்னால் 12B, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்) தனமான ஒரு நாவல் தமிழில் இது மட்டுமே. தமிழில் வெகுஜன நாவல்களில் தொடர்ச்சி எழுதுவதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. பாகுபலி திரைப்படம் போல் போல் பெரிய கதைகளை உடைத்து பகுதியாகச் சொன்ன கல்கி, சாண்டில்யன், மேலும் சில‌ சரித்திரக் கதாசிரியர்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் ஸ்ரீவேணுகோபாலன் நீ – நான் – நிலா நாவலுக்குத் தொடர்ச்சி எழுதினார். சுஜாதா பிரிவோம் சந்திப்போம் நாவலுக்குத் தொடர்ச்சி எழுதினார்; என் இனிய இயந்திரா நாவலுக்குத் தொடர்ச்சியாய் மீண்டும் ஜீனோ எழுதினார்; காந்தளூர் வசந்தகுமாரன் கதைக்குத் தொடர்ச்சி எழுத விரும்பினார். இலக்கியங்களிலும் தொடர்ச்சிகள் எழுதப்பட்டிருக்கின்றன‌. ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்குத் தொடர்ச்சியாய் கங்கை எங்கே போகிறாள்? எழுதினார். கி.ரா. கோபல்ல கிராமம் நாவலின் தொடர்ச்சியை கோபல்லபுரத்து மக்கள் எழுதினார். ஆனால் இப்படி Conditional தொடர்ச்சி வகைமையை இதுவரை எவரும் முயற்சித்ததில்லை என நினைக்கிறேன். ஆசிரியரே குறிப்பிட்டிருப்பது போல் அர்த்தநாரி, ஆலவாயன் நாவல்களை வாசிக்க மாதொருபாகனை வாசித்திருக்க வேண்டியதில்லை தான். மூன்றையுமே தனித்தனி நாவல்களாக வாசிப்பது போல் தான் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப சில பகுதிகள் மூன்று நாவல்களிலுமே திரும்பவும் வருகின்றன. மூன்றையுமே ஒரு சமயத்தில் வாசிக்கப்புகும் ஒருவருக்கு அது repetition என்ற‌ பிம்பத்தை அளிக்கும். புத்தக விற்பனை – அதுவும் இலக்கியப் புத்தகங்கள் – என்பது பூனைகள் விற்பனை போல் அரிதானது என்பதால் ஒன்றைப் படிக்காமல் இன்னொன்று புரியாது என்ற தயக்கத்தில் எவரும் வாங்காமல் போய் விடலாகா என்ற வியாபாரரீதி முடிவாய் இருக்கலாம் என்பதால் இதை விடுத்துக் கடக்க‌த் தயக்கமில்லை. * மாதொருபாகன் நாவல் ஒரு பூவரச மரத்தில் தொடங்கி இன்னொரு பூவரச மரத்தில் முடிவது யதேச்சை யானதல்ல என்றே நினைக்கிறேன். அதிலும் முதலாவது மரம் இரண்டாவதன் கிளையை வெட்டி வந்து நட்டு வைக்கப்பட்டதே! வழக்கமான பெருமாள்முருகன் நாவல்களை விடவும் இதன் கதை மிகச் சிறியதே. ஒரே நாளில் முடிகிறது. தேர்த் திருவிழாவுக்கு மாமனார் வீட்டுக்குச் செல்லும் காளி – பொன்னாவின் ஒரு நாள் தான் அது. அதற்கு முந்தைய சம்பவங்கள் அவர்களின் நினைவிலிருந்து மீட்டெடுத்து பிரச்சனையை விரித்துரைக்கிறார். குழந்தையின்மை என்பது ஒரு கொடுங்கனவாய் அக்குடும்பத்தையே துரத்துகிறது. பிரச்சனை வரும் போது தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்வதே நெருப்புக் கோழிகளுக்கும் ஆண்களுக்கும் வழக்கம். வாரிசு இல்லை என்பது பற்றிய கேள்விகள் துளைக்கின்றன என்பதால் காளி தான் உருவாக்கிய தொண்டுபட்டியை விட்டு வெளியே வருவதில்லை. மாறாய் பொன்னா கேலியாய் அவளை நோக்கி எறியப்படும் கேள்விகளை எல்லாம் துடுக்கான பதில்களால் எதிர்கொள்கிறாள். இக்குறையைக் காரணம் காட்டி தான் தான் இதற்குக் காரணம் என்று பாவித்து காளிக்கு வேறு மணம் செய்து வைத்து விடுவார்களோ என அஞ்சுகிறாள் பொன்னா. ஆனால் காளி அதற்கு இடம் தருவதில்லை. போலவே காளியிடம் தான் குறை என்ற அடிப்படையில் ஊர் ஆண்கள் சிலர் பொன்னாவுக்கு வலை விரிக்கிறார்கள். அவளும் அவர்களை அண்ட விடுவதில்லை. பரஸ்பரம் அத்தனை காதல் அவர்களுக்கு. சில ஆண்டுகளுக்கு முன்பே காளியின் தாயும் மாமியாரும் பொன்னாவை 14ம் நாள் திருவிழாவுக்கு அனுப்ப யோசனை சொன்ன போது பொன்னாவும் உனக்கு விருப்பம் எனில் போகிறேன் என்று சொன்னது அவனது மனதை அறுக்கிறது. தான் செத்தால் தான் குழந்தை பிறக்கும் எனச் சொன்னால் அதையும் செய்வாளோ என நினைத்துக் கொள்கிறான் (கடைசியில் அது தான் நடக்கிறது!). அவன் குழந்தை பெறுபவதற்காக அவளை ஒரு கணம் கூட இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என அழுந்தச் சொல்லப்படுகிறது. அதனால் நாவலின் முடிவில் அவள் திருவிழாவுக்குப் போய் விட்டாள் எனத் தெரிந்ததும் அவனுக்குத் தற்கொலை எண்ணம் உதிப்பதை இயல்பாகவே விளங்கிக் கொள்ள முடிகிறது. முன்னோர் வெள்ளைக்காரனிடம் ஏமாற்றிப் பத்து ரூபாய் சம்பாதித்து வாங்கிய சொத்தில் வாழும் பாவ வாழ்க்கை என்பது தொடங்கி குழந்தை பிறக்காததுக்கு பல காரணங்களை காளியும் பொன்னாவும் சுற்றத்தாரும் யோசிக்கிறார்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அவர்களின் குழந்தையின்மை அவர்களுக்கு யாராவது ஒருவரால் நினைவூட்டப்படுகிறது. அப்படி எதுவுமே நிகழவில்லை என்றாலும் அவர்களுக்குள்ளேயே அதைப் பேச வேண்டியதாகி விடுகிறது. அதைச் சரி செய்ய பல வேடிக்கைக்குரிய இரக்கத்துக்குரிய வழிகளை முயல்கிறார்கள். மலைக்கோவிலின் அத்தனை ரகசியக் கடவுள்களிடமும் முறையிடுகிறார்கள். எந்தச் சாமியும் செவி சாய்க்கவில்லை என்றதும் தான் ஆசாமி கை கொடுக்கிறான். பதினான்காம் திருவிழாவில் வரும் கூத்து பற்றிய வர்ணனைகளில் பொன்னாவின் மனதை மெல்லக் கலவிக்குத் தயார்படுத்தும் எத்தனங்கள் இருக்கின்றன. சொந்தத் தாயே அவளை பூ வைத்து அலங்காரம் செய்து அனுப்புகிறாள். எல்லா வகையிலும் தான் செய்வது பிழை அல்ல என நம்ப வைக்கும் சூழல் வலுத்திருக்கிறது. அதனாலேயே அவள் இச்செய்கைக்கான உறுத்தல்கள் தாண்டி இதில் இறங்குகிறாள். இந்து புராணங்களில் நியோகம் என்ற விஷயம் சொல்லப்படுகிறது. திருமணமாகிக் குழந்தை இல்லாத பெண்ணை இன்னோர் ஆடவன் கூடிக் கருவுறச் செய்தல். இந்த‌க் கலவிக்கென‌ சில விதிமுறைகள் உண்டு: 1) அந்தப் பெண் பாலியல் இன்பத்துக்காக அன்றி குழந்தை பெறும் நோக்கிலேயே ஈடுபட வேண்டும். 2) அந்த ஆணும் உடல் சுகத்துக்காக அல்லாமல் தர்மத்திற்காகவே ஈடுபட வேண்டும். 3) பிறக்கும் குழந்தை அவள் கணவனின் குழந்தையாகவே கருதப்படும், கூடும் ஆணுடையது அல்ல. 4) அவன் அக்குழந்தையின் மீது எந்த உரிமையோ பிரியமோ கோரலாகா. 5) ஓர் ஆண் மூன்று முறை மட்டுமே இது போல் உதவ முடியும். 6) கலவியில் முன்விளையாட்டு, வாய்ப் புண‌ர்ச்சி, ஆசனப் புணர்ச்சி போன்ற விஷயங்கள் இடம் பெறலாகா. 7) காமச் சிந்தனைகள் தவிர்க்க கலவியின் போது பெண்ணின் மேற்புறம் துணியால் மூடப்பட வேண்டும். 8) இன்பம் உணர்வதைத் தவிர்க்க கலவியின் போது உடல்களில் நெய் பூசப்பட வேண்டும். மகாபாரதத்தில் குந்தி பாண்டவர்களைக் கருவுறுவது இப்படித் தான். குந்தியின் மாமியார்களான அம்பிகா, அம்பாலிகா இருவரும் முறையே திருதிராஷ்டிரரையும் பாண்டுவையும் பெறுவதும் இவ்வழியில் தான். மனுஸ்மிருதியில் நியோகம் பற்றிய விளக்கம் வருகிறது. (ஆனால் அதில் தடை செய்யப்பட்ட விஷயம்.) ஆக, மாதொருபாகன் ஏற்கனவே இந்து மதம் பேசிய, புழக்கத்தில் இருப்பதாய்ச் சொன்ன விஷயத்தையே மீட்டுருவாக்கம் செய்கிறது. ஆனால் நியோகம் என்பதற்கான விதிமுறைகளாக புராணங்கள் குறிப்பிடுகிற விஷயங்களில் ஒன்றைக்கூட பின்பற்றாமல் அதைப் பகடி செய்கிறது. அதாவது அப்படி இயந்திரம் போல் தர்மத்தின் பெயரை அல்லது கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு குழந்தைக்காகக் கலவி செய்தல் மானிடர்க்கு சாத்தியமில்லை என்ற யதார்த்தமான நேர்மையான விமர்சனமாகவே அதைப் பார்க்கிறேன். பெருமாள்முருகன் நாவல்களில் வழக்கமாய் பயின்று வரும் விவசாயம் பற்றிய நுண்ணிய தகவல்கள் தாண்டி, வேளாண்மையைப் பின்புலமாகக் கொண்ட இரு இளைஞர்களின் நட்பு இதில் அழகாக விவரிக்கப் படுகிறது. தங்கை பொன்னாவைக் கட்டிக் கொடுத்து மைத்துனன் உறவு ஆக்கிக் கொள்ளும‌ளவு காளி மற்றும் முத்துவின் நட்பு இருக்கிறது. அவர்கள் ஒன்றாய்க் குடிப்பதும், கிணற்றின் ரகசிய இடங்களில் பொழுதைக் கழிப்பதும் என அவர்கள் சினேகம் விவரிக்கப்படுகிறது. இளவயதில் இருவருமே சேர்ந்து பதினான்காம் திருவிழாவுக்குப் போயிருக்கிறார்கள். அவ்வளவு நெருக்கம் கொண்ட முத்துவே கூட காளியின் தன்னுடைமையுணர்வை விளங்கிக் கொள்ளாமல் தன் தங்கையை இரவில் அனுப்பும் திட்டத்தில் பங்கேற்கிறான். அவர்களின் கூட்டுக் குடியே கடைசியில் குடியைக் கெடுக்கிறது. காளியின் தாயும், பொன்னாவின் பெற்றோரும் கூட அதைப் புரிந்து கொள்ளவில்லை. மானுட உணர்வுகளை விட ஊர் கேள்வி கேட்கிறதே என்பதே அவர்கள் மனதைப் போட்டு அரிக்கிறது. [] வாசிப்பின்பத்தின் அடிப்படையில் மாதொருபாகனுக்கு இணையானதல்ல அதன் தொடர்ச்சியான‌ பிந்தைய இரு நாவல்களும். படமோ எழுத்தோ எந்தவொரு தொடர்ச்சிக்கும் நேரக்கூடிய விபத்து தான் இது. முதன் முதலில் ஓர் உலகம் அறிமுகம் ஆகும் போது அது வசீகரிக்கும். அடுத்து அதே உலகத்தில் மேலும் தூரம் அழைத்துச் செல்லும் போது பழைய வசீகரம் இருப்பதில்லை. அதே தான் அர்த்தநாரி, ஆலவாயனிலும். ஆலவாயனில் காளி இறந்து விடுகிறான். பொன்னா சூல் கொள்கிறாள். தன் மாமியார் மாராயியுடன் வந்து விவசாயத்தைக் கவனித்துக் கொண்டு மகவை ஈன்றெடுக்கிறாள். பேறுகாலத்தில் அவள் தாயும் வந்து உடனிருக்கிறாள். ஊராருக்கு காளிக்கு உண்டான கரு தான் அது என்பதாகவே சொல்கிறார்கள். மாராயியும் பொன்னாவும் சேர்ந்து விவசாயத்தையும் எடுத்து நடத்துகிறார்கள். குழந்தையின் முகம் பதினான்காம் நாள் திருவிழாவில் பொன்னாவோடு சேர்ந்தவனின் முகத்தை நினைவூட்டுவதோடு நாவல் முடிகிறது. அர்த்தநாரியில் காளி தூக்குப் போடுகையில் இடையே அவனது தாய் மாராயி வந்து காப்பாற்றி விடுகிறாள். தன்னை ஏமாற்றி விட்டதாக பிறந்த வீட்டுடன் தொலைவு போட்டு (தொலைவு போடுதல் என்றால் ஒரு மனிதருடன் / குடும்பத்துடம்ன் எந்த ஒட்டு உறவும் பேச்சு வார்த்தையும் இல்லை என்று சாமியின் மீது சத்தியம் செய்து பிரிந்து வருதல்) கணவன் வீடு வந்து இருந்து மாமியாய் கவனிப்பில் குழந்தை பெறுகிறாள். அவள் கர்ப்ப காலம் முழுக்க காளி அவளுடன் பேசுவதே இல்லை. பேசிய ஒரே வார்த்தை “அவுசாரி”. பொன்னா விவசாயத்தை கவனிக்கிறாள். மகவீன்ற பின்னும் காளி வராததால் பொன்னா தற்கொலை செய்ய முயலுகையில் காளி அவள் கைபிடிப்பதோடு கதை முடிகிறது. காளியின் உளவியல் இயல்பான ஓர் இந்திய ஆணின் உளவியல் தான். அவன் தன் மனைவியின் மீது மிகுந்த பிரியத்தில் இருக்கிறான். தன்னுடமை உணர்வு – தன் மனைவியின் மீது தன் வாசனை தவிர வேறந்தெ வாசமும் ஏறக்கூடாது என்ற பிடிவாதம். அவன் மற்ற ஆண்களிடமிருந்து வித்தியாசப்படும் இடம் மனைவி பற்றிய தன் எதிர்பார்ப்புக்கேற்றாற் போல் அவனும் ஏகபத்தினி விரதனாகவே இருக்கிறான். சிறுவயதில் இதே பதினான்காம் தான் திருவிழாவுக்கு அவன் போயிருக்கிறான் என்றாலும் பொன்னாவை மணம் புரிந்த பின் வேறொருத்தியிடம் மனம் போனதில்லை. அதனாலேயே குழந்தை இல்லை என்பதால் மறுமணம் செய்து கொள்ளச் சொல்லி வரும் பேச்சை ஒதுக்குகிறான். பொன்னா இன்னொருவனிடம் கலந்து விட்டாள் என்பது அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன்னைப் மீறிப் போய் விட்ட கோபம். அவனால் திரும்பச் சரி செய்ய முடியாத பிழை நிகழ்ந்து விட்டதாக நினைக்கிறான். இயலாமை தரும் கழிவிரக்கம். அவளுக்கு ஆயுள் முழுக்கக் குற்றவுணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றே உடனடியாய் அவனுக்குத் தோன்றுகிறது. அதனாலேயே தற்கொலை செய்கிறான் / முயல்கிறான். அர்த்தநாரியில் அவன் பிழைத்துக் கொண்ட போதும் கிட்டத்தட்ட ஒரு வருடம் தான் அத்தனை பிரியம் கொண்ட மனைவியிடம் ஒரு சொல் கூடப் பேசவில்லை. அவளை ஒதுக்கியே வைத்திருக்கிறான். அவளது செயல் அவனால் ஜீரணிக்கச் சிரமமானதாய், ஏற்றுக் கொள்ள இயலாததாய், மன்னிக்க முடியாததாய் இருக்கிறது. அவன் தனக்குள் போராடுகிறான். அவளை மனதின் அடியாழத்திலிருந்து தீவிரமாய் வெறுக்கிறான். ஒரு கட்டத்தில் முடிவிலிருந்து மாறி தன் வெறுப்பு குறைந்து மனம் மாறி விடுமோ என்று கூட‌ அஞ்சுகிறான். உண்மையில் அவனுக்கு வாழப் பிடிக்கவே இல்லை. அதுவும் அவளுடன். அதற்கு முந்தைய பத்தாண்டுகள் அவள் மீது காண்பித்த அத்தனை பிரியமும் அதற்கு நேர்மாறாய் மாறிப் போகிறது. உண்மையில் அந்த வெறுப்பே அந்த பிரியத்திலிருந்து கிளைத்தது தானே! அவன் கொண்டிருந்தது சாதாரணப் பிரியம் என்றால் ஏமாற்றமும் சாதரணமாய் அமைந்து, வெறுப்பும் சாதரணமாகவே இருந்திருக்கும். மாறாய் அவன் எத்தனை ஆழமாய் விரும்பினானோ ஒற்றை இரவு அத்தனை ஆழமாய் அவளை வெறுக்கத் தூண்டி விட்டது. அர்த்தநாரியின் இறுதியில் அவன் மனம் மாறி ஏற்பது கூட அவரவர் புரிதலுக்கு விடப்பட்டிருக்கிறதே ஒழிய தெளிவான விளக்கம் இல்லை. நல்லுப்பையன் சித்தப்பா, பழநி யாத்திரையில் சந்திக்கும் மனிதர், பன்றிக்கறி விற்பவள் கணவன் என காளி சந்திக்கும் / கேள்விப்படும் விஷயங்கள் அவனுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பது தான் பெருமாள்முருகன் தரப்பு எனக் கொள்கிறேன். தவிர, பொன்னா தான் சம்மதித்ததாய் குடும்பத்தாரால் நம்ப வைக்கப்பட்டே ப‌தினான்காம் நாள் திருவிழாவுக்குப் போனாள் என்பதையும், அந்த துரோகத்துக்காகத் தன் வீட்டோடு தொலைவு போட்டு வந்து விட்டாள் என்பதையும், அதன் பிறகு அந்த ஒரு வருடமாய் குற்றவுணர்வைச் சுமந்து கொண்டு அவனுடன் பேசிடத் தவித்திருக்கிறாள் என்பதையும் காளி அறிந்தே இருக்கிறான். அதையும் அவன் மனம் மாறி அவளை ஏற்பதற்குக் காரணமாகக் கொள்ளலாம். * இரண்டு நாவல்களிலுமே எனக்கு முக்கியமாய்ப்படுவதும் நிறைய யோசிக்கச் செய்வதும் பொன்னாவின் உளவியல் தான். அவள் இளவயதில் இயல்பான இனக் கவர்ச்சிக்கு ஆட்பட்டிருந்தாலும் காளியைத் திருமணம் செய்த பின் அவனுடன் மிகப் பிரியமாய் இருக்கிறாள். குழந்தை இல்லை என்பது அவன் மீதான‌ அன்பில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அவள் இவ்வுலகில் மிக விரும்பி இருந்தது காளியைத் தான். குழந்தைப்பேறில்லாமையை சாதகமாக்கி பல ஆண்கள் அவளுக்கு வலை விரித்தும் எல்லோரையும் மறுதலித்துக் கடந்து வந்தவள் பொன்னா. அவளது அந்த ஓரிரவு மாற்றம் முரண். அந்தப் பேரன்போடு ஒப்பிடும் போது பிற்பாடு அவளது சில செயல்கள் துருத்திக் கொண்டிருக்கின்றன. அவள் தாய்மை அடைய பதினான்காம் திருவிழாவுக்குச் செல்ல கணவன் ஒப்புக் கொண்டான் என்பதை அவள் ஏற்றுக் கொள்கிறாள் என்பது முதல் உறுத்தல். முந்தைய ஆண்டுகளில் அவன் இதன் பொருட்டு சண்டையிட்டிருக்கிறான். அந்த முறை மட்டும் எப்படிச் சம்மதித்தான் என்கிற தர்க்கக்கேள்வி அவளுக்கு எழவில்லை. இத்தனைக்கும் அவளை மிகச் சாமர்த்தியசாலியாகவே சித்தரிக்கிறார் பெருமாள்முருகன். காளியே பிற்பாடு அர்த்தநாரி நாவலில் நினைத்துப் பார்ப்பது போல் “நானே போகச் சொல்லி இருந்தாலும் நீ வேண்டாம்னு தானே சொல்லி இருக்கனும்?” என்ற கேள்வி இயல்பாகவே எனக்கும் எழுகிறது. நீண்ட சண்டை / விவாதத்தின் பின் அவள் சம்மதித்திருந்தால் அது இயல்பாக இருக்கும். மாறாக ஒரு சொல் கூடப் பேசாமல் அவன் கண்ணசைவையே சம்மதமாகக் கொள்கிறாள் என்பது ஏற்க முடியவில்லை. அடுத்து பதினான்காம் நாள் இரவு நடக்கும் விஷயங்கள். அவள் காளி போன்ற முகத்தைத் தவிர்க்கிறாள். அவன் நினைவு வருவதை அஞ்சுகிறாள். அது அவளது குற்றவுணர்விலிருந்து எழுவது. ஆனால் அப்படிப் பட்டவள் ஒரு புதிய ஆடவனுடன் மிக இணக்கமாகவே கூடுகிறாள். இந்தக் கலவி மாதொருபாகன், ஆலவாயன், அர்த்தநாரி மூன்று நாவல்களிலும் (அவற்றின் தேவைக்கேற்ப) சற்று வெவ்வேறு சாயைகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் மூன்றிலும் இருக்கும் பொதுவான விஷயம் அவள் மிக இஷ்டத்துடனே அதில் ஈடுபடுகிறாள். அவனிடம் வெட்கம் கொள்கிறாள், அவன் பேச்சில் கிறங்குகிறாள், அவன் ஆக்ரமிப்பை ரசிக்கிறாள், அதில் மூழ்கித் திளைக்கிறாள் என்பது. அவள் குழந்தைப்பேறுக்காகச் செய்து கொள்ளும் ஒரு வைத்தியம் என்பதாக அதை அணுகாமல் இன்ப நிகழ்வாகவே அனுபவிக்கிறாள். அதைத் தனிப்பட்டு என்னால் ஏற்க முடியவில்லை. ஆனால் சற்று விலகி நின்று உணர்ச்சிகள் கடந்து தர்க்கப் பூர்வமாய்ச் சிந்தித்தால் எத்தனை பிரியம் நம் துணை மீது கொண்டிருந்தாலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் அதை எல்லாம் கடந்து எதிர்ப்பாலின ஈர்ப்பில் உடலின் வேட்கையே வெல்லும், அதில் மனமும் பூரணம் கொள்ளும். அது கீழ்மை அல்ல. மனித இயல்பு அது. அதை ஏற்பதே நேர்மை. இங்கே பெருமாள்முருகன் மீதான மரியாதை கூடுகிறது. அவர் போலியாய் பொன்னா மனதளவில் தூய்மை என்றெல்லாம் சொல்ல முனையவில்லை. நிஜத்தை அப்படியே பதிகிறார். அதே நேரம் அதன் பொருட்டு ஓரிடத்தில் கூட அவளைத் தூற்றவில்லை. அவள் மானுட இனத்தின் பிரதிநிதியாகிறாள். மூன்றாவது ஆலவாயன், அர்த்தநாரி நாவலின் இறுதிப் பகுதிகள். இரண்டிலுமே குழந்தையின் முகச்சாயல் பதினான்காம் திருவிழாவில் சந்தித்தவனின் முகத்தை பொன்னாவுக்கு நினைவூட்டுகிறது. மறுபடி அந்த இரவை அசை போடுகிறாள். அன்று அவன் அவளை மிகப் பிடித்திருப்பதாகவும் அவனோடு வந்து விடுமாறும் அழைக்கிறான். அடுத்த வருட திருவிழாவுக்குக் குழந்தையை எடுத்து வரச் சொல்கிறான். அவன் நினைவாகவே த‌ன் குழந்தைக்கு ஆலவாயன் / அர்த்தநாரி எனப் பெயர் சூட்டுகிறாள். ஆலவாயன் நாவலில் அவன் இருக்கும் ஊர் பற்றியும் சிந்திக்கிறாள். அவன் மீதான பிரியம் சுரப்பதுடன் அவனை மீண்டும் சந்திக்க விரும்பும் தொனியுடன் நாவல் முடிகிறது. அர்த்தநாரி நாவலில் காளி இருந்தும் ஓராண்டாய் தன்னை ஒதுக்கி வைத்திருப்பதும், குழந்தை பிறந்தும் பார்க்க வரவில்லை என்பதாலும் அவனைத் தேடிப் போய் அவனோடு சேர்ந்து கொள்ளலாமா என்ற எண்ணமும் வருகிறது. ஒருபடி மேலே போய் காளிக்கு வக்கற்றுப் போனதால் தானே அவனிடம் போய்ப் பிள்ளை பெற்றேன் என்று பொருமுகிறாள். மூன்று நாவல்களிலும் அவள் காளியை மலடன் எனக் குறிப்பிட்டுத் தூற்றும் இடம் இது ஒன்று தான். காளி மீது அத்தனை பிரியம் கொண்டவளாய் பத்தாண்டுகள் வாழ்ந்தவளுக்கு அவன் இருக்கையிலேயே இன்னொருவனிடம் போகும் எண்ணம் வருகிறது என்பதையும் ஏற்க முடியவில்லை. இதையும் மனித சுயநலங்களில் ஒன்றாகவே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆலவாயனில் காளி இயல்பாய் அல்லது வேறு காரணத்துக்காக‌ இறந்திருந்தால் பொன்னா இன்னொரு மணம் பற்றி சிந்திப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இறந்தது அவள் இன்னொருவனுடன் சேர்ந்ததால். அச்சூழலில் அவள் போவாளா என்ன! அர்த்தநாரியில் காளி அவளை ஒதுக்கி வைத்திருந்ததும் வேறு பிரச்சனைகளில் இல்லை; பொன்னா இன்னொருவனுடன் சேர்ந்ததால் தான். அப்படி இருக்க காளியின் மீதான பிரியம் தாண்டி அந்த இன்னொருவனோடே போய் விட யோசிப்பாளா என்ன! இரு சூழல்களிலுமே பொன்னாவின் குணநலன்களையும், அவளுக்கு காளி மீதான பெரும்பிரியத்தையும் கொண்டு பார்க்கையில் குற்றவுணர்ச்சியால் பீடிக்கப்படுவதே இயல்பு எனத் தோன்றுகிறது. அவள் தற்கொலை செய்ய வேண்டுமென்றோ, விரக்தியாய் மோட்டுவளை பார்த்து அமர்ந்தபடி மிச்ச காலத்தை ஓட்டி விட வேண்டும் என்றோ சொல்லவில்லை. அவள் விவசாயத்தை எடுத்துச் செய்வதும், நம்பிக்கையுடன் குழந்தை பெற்றுக் கொள்வதும் இயல்பே. ஆனால் தன்னைக் கலந்தவனோடு மீண்டும் போக யோசிப்பது தான் துருத்தலாக இருக்கிறது. தளபதி ரஜினி – பானுப்ரியா நினைவு வருகிறது. ஆனால் இவை யாவும் உறுத்தலாய்த் தோன்ற‌ ஆழ்மனதில் நான் குடும்ப அமைப்புள் கட்டுண்டு கிடப்பதும், கணவன் – மனைவி பரஸ்பரம் நேர்மையாய் இருக்க வேண்டும் என விரும்புவதும் காரணமாய் இருக்கலாம். இன்னொரு முக்கியக் காரணம் மூன்று நாவல்களிலுமே கண்டதன்படி காளி – பொன்னா ஓர் ஆதர்ச தம்பதியாகவே எனக்குப் படுகின்றனர். புனைவுகளில் எனக்குப் பிடித்த ஜோடி என இவர்களையே சொல்லத் தோன்றுகிறது. அதைச் சிதைக்கும் வகையிலான‌ சம்பவங்களை நான் விரும்பாதிருக்கலாம். அர்த்தநாரி நாவலில் பொன்னா கர்ப்பம் தாங்கி இருந்த‌ ஒரு வருடத்தில் காளி அவளிடம் பேசிய ஒரே சொல் ‘அவுசாரி’. அதுவும் முனகலாக அவன் உதடுகள் முணுமுணுக்க, அவனை, அவன் அசைவுகளை நன்கறிந்த பொன்னா அதைக் கண்டுகொள்கிறாள். அது அவளைச் சுக்கலாக உடைத்துப் போடுகிறது. அவன் மனதில் தான் உடல் சுகம் தேடி ஒருவனுக்கு முந்தானை விரித்து விட்டதான பிம்பம் விழுந்து விட்டதை எண்ணித் துடிக்கிறாள். அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பே கிடையாதா எனக் குமைகிறாள். ஆனால் இறுதியில் அந்தப் பெயருக்குக் காரணமானவனையே மனம் தேடுவது மகத்தான‌ முரண் அல்லவா! ஆலவாயன், அர்த்தநாரி இரண்டு நாவல்களிலும் பொன்னா வாயிலெடுத்து கர்ப்பம் என்று அறிய வரும் நாளைக்கு முந்தின நாள் இரவு உறக்கத்தில் காளி வந்து தன்னைக் கூடுவதாய் நினைத்துக் கொள்கிறாள் (ஆலவாயனில் அது காளியின் இறப்புக்குப் பிந்தைய சூட்சம ரூபம் என்பதான தொனியும் இருக்கிறது). அதன் பலனாகவே தான் சூல் கொள்வதாக நம்புகிறாள். அதனால் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் தந்தை காளி தான் என்பதாகவே அவள் நம்புகிறாள். அதையே ஊராருக்கும் சொல்கிறாள். காளியை நினைத்தே இன்னொருவனைக் கலந்ததாகவும் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள். இப்படி அவள் நம்புவதும், அந்த இரவில் இன்னொருவனை இணக்கமாகத் தழுவுவதும், பிற்பாடு அவனோடே செல்ல நினைப்பதுவும் பொருந்தி வரவில்லை. இந்த வெவ்வேறு சம்பவங்களை ஒரு நேர்க்கோட்டு தர்க்கத்தில் இணைக்க முடியவில்லை. அல்லது யதார்த்தம் என்பது அப்படி முரண்பட்டுத் தான் நிற்குமோ! [] இரு நாவல்களிலுமே துலக்கம் பெறும் இன்னொரு பாத்திரம் காளியின் தாயான‌ மாராயி. கங்கணம், பூக்குழி என பெருமாள்முருகன் நாவல்களில் கணவனை இழந்த பெண்ணால் வளர்க்கப்படும் நாயகர்கள் இடம் பெறுகிறார்கள். இந்த நாவல்களிலும் அப்படித்தான். ஊரார் முன் தலைகுனியக்கூடாது என்பதில் தொடங்கி தன் மகன், மருமகள் மீதான பிரியம் / முரண் வரையிலும் வெவ்வேறு நிறங்களில் வெளிப்படுகிறாள். மகனின் தற்கொலை முயற்சியை ஒட்டி “இப்படியுமா ஒருத்தன் மனைவி தனக்கு மட்டும் அவுக்கனும்னு இருப்பான்” என அங்கலாய்க்கிறாள். கணவனும் மனைவியும் அந்த உறவு தாண்டி மற்றவருடன் இணைவது (சமயங்களில் வீட்டு ஆண்களுடனே) சகஜமாக இருந்த காலகட்டம் அது என்ற பின்னணியில் அவளுக்கு காளியின் தன்னுடைமையுணர்வு மிகுந்த‌ ஆச்சரியம் தருகிறது. பொன்னாவின் அம்மாவும், அண்ணனும் நன்கு பதிவாகி இருக்கிறார்கள். சிறுபாத்திரங்களாய் வரும் பொன்னாவின் அண்ணியும், வெங்காயியும் கூட வாசகனின் மனதில் இடம்பெறத் தவறுவதில்லை. மாதொருபாகனில் ஓர் அத்தியாயம் மட்டும் வந்து போகும் நல்லுப்பையன் சித்தப்பா பாத்திரம் ஆலவாயன், அர்த்தநாரியில் வரும் பகுதிகள் அனாவசிய நீளத்துடன் அமைந்திருக்கின்றன (அதுவும் ஆலவாயனில் மிக அதிகம்). இரு நாவல்களிலுமே தன் வாழ்க்கைச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதன் வழி பிரதானப் பாத்திரங்களின் மனமாற்றத்துக்கு ஒரு க்ரியாஊக்கியாக இருக்கிறார் என்பது நிஜம் தான் என்றாலும் மையக் கதையிலிருந்து வெகுதூரம் விலகி வந்தது போன்ற உணர்வினைத் தவிர்க்க இயலவில்லை. * பெருமாள்முருகனின் நாவல்களில் பொதுவாய் விவசாய நுட்பங்களும், குறிப்பிட்ட இனக்குழுவின் பழக்க வழக்கங்களும், குறிப்பிட்ட நிலப்பகுதியின் பேச்சு வழக்கும் மிகத் தீவிரமாகப் பதிவாகும். இந்த மூன்று நாவல்களிலும் அப்படித்தான். குறிப்பாய் ஆலவாயன் நாவலில் குறிப்பாய் பொன்னா மாராயி என்ற இரு பெண்கள் தனியாய் விவசாயத்தை எடுத்து நடத்தும் பகுதிகள் அழகாகப் பதிவாகி இருக்கின்றன. பெருமாள்முருகனின் கதைளில் இடம்பெறும் சொலவடைகளும், வட்டாரச் சொற்களும் இயல்பானவை. நானும் அப்பகுதியிலிருந்து வந்தவன் என்ற முறையில் புனைவாக்கும் போது மிக இயல்பாக அந்த மொழி வழக்கைக் கையாண்டிருப்பதைக் காண்கிறேன். அனாவசியத் திணிப்பு இல்லை, அதே சமயம் அவரது எழுத்து முழுக்கவே அப்பயன்பாடு இருக்கிறது. உரையாடல்கள் தவிர எங்கே வட்டார வழக்கு இடம்பெற வேண்டும், எங்கே தூய தமிழ் பயின்று வர வேண்டும் என்பதில் மிகக் கவனத்துடன் இருக்கிறார். பெருமாள்முருகன் புனைவுகளில் பொதுவாகவே காமம் பற்றிய சம்பவங்களும் பேச்சுகளும் முக்கிய இடம் வகிக்கும் (நல்ல எழுத்தாளர்கள் எல்லோருக்குமே அது தவிர்க்கவியலாது என நம்புகிறேன்). முழுக்க துன்பியல் கதைகளாக‌ இருந்தாலும் ஆலவாயன், அர்த்தநாரியும் கூட இதற்கு விதிவிலக்கில்லை. ஊர்க்கிழவிகள் உரையாடலிலும், நல்லுப்பையன் வாயிலாகவும், மாராயி பொன்னாவின் அம்மாவுடன் பேசுகையிலும் காமம் புன்னகைத்தபடி சம்மணமிட்டு அமர்ந்து கொள்கிறது. பெண்கள் காமத்தைப் பேசிப் பேசித் தீர்க்கிறார்கள். கேலியும் கிண்டலுமாய் இருந்தாலும் சிந்தனையைத் தூண்டுகின்றன. யோசித்துப் பார்த்தால் (கலந்தவனைத் தேடிப் போக எண்ணும் இறுதிப் பகுதி தவிர) ஆலவாயன் நாவல் ஒரு பெண்ணியப் பிரதி. கணவனை இழந்த ஒரு கர்ப்பிணிப் பெண், மகனை இழந்த பெண்ணின் ஆதரவுடன், ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் துணையுடன், அதனோடு வாழ்வு முடிந்தது என்றில்லாமல், தூற்றக் காத்திருக்கும் உறவினர், சுற்றத்தார், ஊரார் வாய்த்த சூழலில் தானே விவசாய வேலைகள் செய்து வாழ்வில் சுயமாய்க் காலூன்றி நிற்கிறாள். இனி அவள் தன் மகனையும் வளர்த்து ஆளாக்குவாள். ஆனால் அதே ஆலவாயன் நாவலில் வரும் ஓர் ஆணாதிக்கச் சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன். பெண் கர்ப்பமான போது கணவன் மரித்திருந்தால் அந்தப் பெண் ஊராரை அழைத்துத் தான் தன் கணவனோடு புணர்ந்து தான் அந்த கருவைச் சூல் கொண்டேன் என கடவுள் மீது சத்தியம் செய்து அறிவிக்க வேண்டும். அது ஊர் வழக்கம். வேறு வழியின்றி பொன்னா அதை ஒப்புக் கொண்டு செய்கிறாள். ஒரு கதையை வாசிக்கையில் அந்தப் பாத்திரமாக நம்மைப் பொருத்திக் கொண்டால் என்னவெல்லாம் செய்வோமோ, பேசுவோமோ, யோசிப்போமோ எல்லாவற்றையும் பெருமாள்முருகன் பாத்திரங்கள் செய்வதைக் கவனித்து வந்திருக்கிறேன். வித்தியாசம் புகுத்தி வாசகனுக்கு அதிர்ச்சி அளிக்கிறேன் என்பதாக இல்லாமல், இதைச் செய்வது தானே இயல்பு என்று convincing-ஆக இருக்கும். அதனால் நம் எல்லா தர்க்கக் கேள்விகளுக்கும் சரியான விளக்கமும் அதில் இருக்கும். ஒவ்வொன்றிலும் அவரே தன்னை அந்தப் பாத்திரத்தில் பொருத்திக் கொண்டு யோசிக்கிறார் என்று தான் தோன்றுகிறது. உதாரணமாய் அர்த்தநாரி நாவலில் காளி பொன்னாவுடன் பேசுவது நின்று போக, அது அக்கம் பக்கத்தில் தெரிந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை என்பது தெரிந்து போகும் எனப் புரிந்து பொன்னா காளி வசிக்கும் தொண்டுப்பட்டிக்குள் குடி அமர்கிறாள். யோசித்துப் பார்த்தால் அச்சூழலைச் சந்திக்கும் ஓர் எளிய தர்க்க மனம் இதைத் தான் செய்யும். இதைச் சேர்க்காமலும் பெருமாள்முருகன் கதையை நகர்த்தியிருக்க முடியும். ஆனால் அந்தப் பாத்திரமாய் யோசிக்கும் போது ஊரார் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருப்பது புரிந்து அதைச் சேர்க்கிறார். இவை எல்லாமே அவரைப் பெரும் கதைசொல்லி ஆக்குகிறது. பாலா மாதிரி ஒரு நல்ல இயக்குநர் இந்த மூன்று நாவல்களையும் இணைத்து (சாதி மற்றும் நிலவியல் பற்றிய எந்தக் குறிப்புமின்றி) ஒரு திரைப்படமாக எடுக்கலாம். ஒற்றை இரவில் நடந்த ஒரு வரம்புமீறல் தான் இந்த மூன்று நாவல்களும். என் சிபாரிசு மூன்று நாவல்களையும் – முதலில் மாதொருபாகன், பிறகு ஆலவாயன், கடைசியாய் அர்த்தநாரி என்ற வரிசையில் – ஒருவர் வாசிக்க வேண்டும் என்பதே. பெருமாள்முருகன் எழுதிய வரிசை வேறு. மாதொருபாகன் எழுதிய போது மற்ற இரு நாவல்களையும் எழுதும் உத்தேசம் அவருக்கு இல்லை. ஆனால் அந்நாவலுக்கு வந்த எதிர்வினைகளே அவரை கதையை நீட்டித்து எழுத வைத்திருக்கின்றன. அதை முக்கியக்கூறாகப் பார்க்கிறேன். பெரும்பாலானோர் சொன்னது போல் பொன்னாவைக் கொலையோ தற்கொலையோ செய்திருக்க வேண்டும் என்பதை பெருமாள்முருகன் நிறைவேற்றவில்லை. அதுவே பிற்போக்குத்தனத்துக்கு எதிரான அவரது சிறப்பான பதில். ஆனால் அவள் செயலைக் கேள்விக்குட்படுத்த வேண்டும், அந்த உளவியலைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தான் இதில் செய்திருக்கிறார். நாமும் அந்த மறுவிசாரணையை மேற்கொள்ள வேண்டும். இன்று தனது கணவன் / மனைவியின் மீதான பிரியத்துக்குக் குறைவில்லை, ஆனாலும் பிற பெண்கள் / ஆடவருடன் மிக அந்தரங்க விஷயங்கள் பேசுவது, காட்டுவது, செய்வது பிழையில்லை என்ற மனப்பாங்கு அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சியினூடே குடும்பங்களில் ஆண் – பெண் உறவுச் சிக்கல்கள் / முரண்கள் மேலும் வலுப்பெற்று வரும் வேளையில் இது பற்றிய உரையாடல்களைத் திறக்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். அதன் ஒரு பகுதி தான் இம்மூன்று நாவல்களும் என்பேன் மூன்று நாவல்களையும் வாசித்து முடித்த பின் எனக்கு பொன்னா நிறையக் கேள்விகளை விட்டுச் சென்றிருந்தாள். அவை அறம் சார்ந்த கேள்விகள் அல்ல; அன்பு என்பதற்கு எல்லை உண்டோ என்பது பற்றி குழப்பங்கள். பெருமாள்முருகனே சொல்லி இருப்பது போல் ஆலவாயனின் தொடர்ச்சியாய் அவள் தன்னோடு கலந்தவனைத் தேடிச் சந்திக்கும் சந்தர்ப்பம் அமைத்து இன்னொரு நாவல் எழுதும் சாத்தியம் இருக்கிறது. அதில் அக்கேள்விகளை அவளிடம் எழுப்பும் ஆசை உண்டு. பொன்னா அதில் இன்னும் ஜ்வலிக்க வேண்டும். பெருமாள்முருகன் ஒருவேளை செய்யாவிட்டால் நான் செய்ய விரும்புகிறேன். புனைவை நிஜ வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி மகிழ்வதும் இகழ்வதும் இந்தியப் பாமர‌ மனநிலை. ஒரு நல்ல எழுத்தாளன் காலத்தின் கண்ணாடி என்பது உண்மை தான் எனினும் வரலாற்றைப் பதிவு செய்வது தான் அவன் வேலையே அன்றி அதைப் பீடத்தில் ஏற்றுவதோ போட்டு மிதிப்பதோ அவன் செய்வதில்லை. நாவல் என்பது வரலாற்று ஆவணம் அல்ல. எப்படி அது முழுப்பொய் இல்லையோ அப்படியே அதில் முழு உண்மையும் இல்லை. அதில் கற்பனை எத்தனை என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகவே இருந்து விட வேண்டும். படைப்பின் வசீகரம் அதுவே. படைப்பாளியின் சுதந்திரமும் அதுவே. ஒருவேளை புனைவில் தகவற்பிழையோ திரித்தலோ இருந்தால் அதை ஆதாரத்துடன் மறுத்து விரிவாகப் பதிவு செய்வதே கம்பீரம். அல்லது நீதிமன்றம் போகலாம். (இலக்கியப் பரிச்சயம் கொண்ட நீதிபதிகள் கிடைப்பார்களா என்பது வேறு பிரச்சனை.) மாறாய் எழுதியவனை ஊமை ஆக்குதல் என்ன நியாயம்? விஷயம் நடந்ததா என்பது முக்கியமில்லை, ஆனால் அதை எவனும் பேசக்கூடாது என்ற முரட்டுத்தனமே அதில் இருக்கிறது. அறிவுசார் செயல்பாடுகளில் தொடர்புள்ள எவரும் அதைச் செய்ய மாட்டர். தமிழில் வேறவரையும் விட குறிப்பிட்ட நிலப்பகுதியையும், இனக்குழுவையும் அதிகமாகவும் அழகாகவும் எழுதி இருப்பவர் பெருமாள்முருகன் தான். உண்மையில் ஒரு சமூகம் இது போன்ற கலைஞனைக் கொண்டாடித் துதிக்க வேண்டும். நாமோ அடித்து விரட்டுகிறோம். அதற்காய் ஒரு தமிழனாய் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கோருகிறேன். அவர் மீண்டு வந்து எழுத்துக் களமாட வேன்டும் என்பதே நல்ல வாசகராய்த் தம்மைப் பாவிக்கும் ஒவ்வொருவரின் விருப்பமாகவும் இருக்க முடியும். வருக! | மாதொருபாகன் | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிசம்பர் 2010 | ரூ.140 | | ஆலவாயன் | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிசம்பர் 2014 | ரூ.175 | | அர்த்தநாரி | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிசம்பர் 2014 | ரூ.175 | *** 10 ஏறுவெயில் : வெயிற்காயும் கண்ணீர்த் துளிகள் ஏறுவெயில் : வெயிற்காயும் கண்ணீர்த் துளிகள் கவின் மலர் வீடு என்றாலே துயரங்களைக் கோருவது. குடும்பம் என்பதே காவு கேட்பதுதான். ஒரு மனிதருக்கான துயரங்கள் எங்கிருந்து துவங்குகின்றன, அதன் ஆதாரம் எது என்று ஆழமாகச் சென்று வேர்களைத் தேடிப் பார்த்தால் அது குடும்பம் அல்லது குடும்பம் சார்ந்த மனிதர்கள் குறித்ததாகவே பெரும்பாலும் இருக்கும். பெருமாள்முருகனின் ‘ஏறுவெயில்’ நாயகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் துவங்குவது கல்லூரியில் பயில்கையில் முடிகிறது. இடைப்பட்ட சில ஆண்டுகளில் நிகழும் சம்பவங்களின் தொகுப்பே ’ஏறுவெயில்’ வளரிளம் பருவத்திலிருக்கும், சிறுவனுமல்லாத வளர்ந்தவனுமல்லாத ஒரு முதுசிறுவனின் பார்வையில் நாவல் துவங்குகிறது. கொங்குப் பகுதியின் சுமாரான வசதியுள்ள கவுண்டர் குடும்பம் ஒன்றை அச்சு அசலாகக் கண் முன் நிறுத்துகிறார். அந்த சாதிக் குழுவுக்கே உரித்தான சொல்லாடல்களால் நிரம்பி யிருக்கும் இந்நாவலுக்குள் உள்ளே நுழைவது வட்டாரம் சார்ந்த, சாதி சார்ந்த சொற்கள் பலவற்றின் பயன்பாட்டால் முதலில் சற்று சிரமமாகவே இருக்கிறது. அந்த மொழிக்கும் அந்த உரையாடலுக்கும் வாசிப்பவர் தன்னைப் பழக்க வேண்டி இருக்கிறது. முதல் சில பக்கங்களில்தான் இந்தச் சிரமம். ‘இவன்’ என்று பெரும்பாலும் கதைசொல்லியால் விளிக்கப்படும் பொன்னையாவின் தாத்தாவும் பாட்டியும் ஏரியில் வெள்ளம் வந்து மகன் வீட்டிற்குக் குளிரில் வெடவெடத்து இரவு நேரத்தில் உயிர் தப்பி வரும் இடத்தில் நாவல் என்னை உள்ளிழுத்துக் கொண்டது. அதன்பின் எந்த இடத்திலும் தொய்வு இல்லை. பெருமாள்முருகனின் புனைவு பிரதிக்குள் நம்மை கைபிடித்து அழைத்துச் சென்று பொன்னையாவோடு சேர்த்து உலவ வைக்கிறது. இவன் தாத்தாவோடு வெள்ளத்தில் மிஞ்சியவற்றைத் தேடிச் செல்கையில் நாமும் கூடவே செல்கிறோம். இவன் கல்லூரிக்குச் செல்கையில் நாமும் இவன் தங்கியிருக்கும் கல்லூரி விடுதியில் ஒரு நபராக வசிக்கிறோம். இவன் நாடகம் போட்டால் நாமும் அதில் கதாபாத்திரமாகிறோம். இவனுக்குக் கண்ணீர் வந்தால் நமக்குக் கனக்கிறது. இவனுக்குச் சந்தோஷம் வந்தால் அது நம்மையும் தொற்றுகிறது. இவன் குற்றவுணர்வு கொண்டால் அத்தவறை நாமே செய்ததுபோல துடித்துப் போகிறோம். இந்த நாவலின் முக்கியமான இடம் ஒன்று உண்டு. தன்னைத் தூக்கி வளர்த்த ராமாயியிடம் இவன் தன் உடல் தேவையை தணித்துக் கொள்ளச் செல்லுமிடம். பெருமாள்முருகன் இந்த இடத்தில் நம்மை மனதை வாள் கொண்டு அறுக்கிறார். அதிலிருந்து தெறிக்கும் ரத்தத்தின் வாடை நம்மைத் தூங்கவிடவில்லை. இருளில் தட்டுத் தடுமாறி நடந்து தண்ணீரைக் கை வலிக்கும் மட்டும் அடித்து, எது செய்தும் குற்றவுணர்வு போகாமல் உழலும் இவன் உள்ளத்தின் குமைச்சலும் உளைச்சலும் வெகுகாலம் மனதைவிட்டு அகலாது. எல்லாம் சாதியாகிப் போன இந்தச் சமூகத்தில் ஊரில் வாழும் பறையர்கள், சக்கிலியர்கள் (என்று அழைக்கப்படும் அருந்ததியர்கள்), கவுண்டர்கள், முதலியார்கள் என்று பல சாதிக்காரர்கள் இப்பிரதிக்குள் பாத்திரங்களாகிறார்கள். நாம் உண்ணும் உணவில், பேசும் பேச்சில், பார்க்கும் பார்வையில், தொடுகையில், தொடாமையில் என எல்லாவற்றிலும் சாதி இருக்கிறது. இப்பிரதியில் நுட்பமாகச் சில விஷயங்களைச் சொல்கிறார் பெருமாள் முருகன். சொந்த சாதியின் பீற்றல்களையும் அவர்தம் பிரஸ்தாபங்களையும் சொல்லும் பிரதியாக இல்லாமல் தவறுக‌ளுக்கு எதிரான‌ பதிவாகவே இப்பிரதி இருப்பது ஆறுதலானது. சில இடங்களில் கவுண்டர்களின் சாதி வெறியை வாசகர்கள் உணர்ந்துவிட முடிவது நாவலின் பெரிய பலம். கதைமாந்தர்களான கவுண்டர்களின் வழியாக அவ்வபோது சக்கிலியர்கள், பறையர்கள் என்று வசைச்சொற்கள் வரும்பொழுது மனம் துணுக்குறவே செய்கிறதுதான். எனினும் அதுவே யதார்த்தமாக இருக்கையில், அவை கவுண்டர்களின் சாதி வெறியை தோலுரித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது. விரும்பியவனோடு சென்ற அக்காவைத் துரத்தி இரவோடிரவாகக் கொண்டுவந்து, தற்கொலைக்கு வாய்ப்பு அளிக்காமல் இரண்டாம் தாரமாக மணம் செய்துகொடுக்கும் குடும்பம் பொன்னையாவினுடையது. புதிதாக வந்த காலனியில் பறையர் ஒருவரின் பிணத்தை ஊர் சுடுகாட்டிற்குக் கொண்டு வரக்கூடாது என்று பிணத்தை எட்டி உதைக்கும் பொன்னையாவின் தாத்தாவுக்குள் இருக்கும் சாதி வெறியும், அண்ணனுக்கு இருக்கும் சாதி வெறியும் இன்னும் பல பாத்திரங்களுக்கு இருப்பதை உணரமுடிகிறது. இந்த சாதி வெறி நீறுபூத்த நெருப்பாக இருக்கையில் அதை ஒரு பக்கமாக வைத்துவிட்டு ஊர் பையன்கள் நாடகம் போடுகையில் ஒரு கலை வடிவத்தில் மட்டுமே ஓரளவேனும் சாதி ஆதிக்கங்களைத் தகர்க்க முடிகிறது என்று நாம் சந்தோஷப்படுகையில் கதைசொல்லி நம் மகிழ்ச்சியை நீடிக்க விடுவதில்லை. நாடகத்தில் கூட சக்கிலியன் எப்படி ‘டா’ போட்டு கவுண்டனைப் பேசலாம் எனத் தகராறு வருகிறது. [] பெற்றோருக்கு இடையேயான வாய்ச்சண்டைகள் வன்முறையில் முடியும் நொடிகளில் பிள்ளைகளின் பதற்றத்தை வார்த்தைகளில் ஒருபோதும் விவரிக்க இயலாது. அது அனுபவித்த குழந்தைகள் மட்டுமே அறிந்த ஒன்று. ஒரு கொலையோ தற்கொலையோ நிகழக்கூடிய சாத்தியத்துடனான சம்பவங்கள் கண் முன் நடந்தவாறிருக்க, இவற்றுக்கு நடுவில் பள்ளிக்கூடப் பாடங்களைப் படிக்கவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கும் எத்தனையோ மகன்களும் மகள்களும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் பால்யத்தை இத்தகைய பெற்றோர் இல்லாமல் ஆக்குகிறார்கள். கசப்புகள், பதட்டங்கள், கவலைகள் எல்லாம் கலந்த கலவையாகத்தான் இத்தகைய பிள்ளைகளுக்கு பால்யமும், வீடு என்கிற இடமும் அமைந்து விடுகின்றன. இத்தகு பிள்ளைதான் பொன்னையா. இவன் தாய் வாயைத் திறந்தால் எதிராளியை வார்த்தைகளால் துண்டாக்குபவள். இவ்வார்த்தைகளால் கோபமுறும் அப்பனுக்கு உடனடியாகத் தெரிந்தது அவளை அடித்துத் துவைப்பதுதான். இத்தகு கருத்தியல் வன்முறையும், உடல்ரீதியான வன்முறையும் கொண்ட குடும்பத்தின் பிள்ளைகள் வளர்ந்து பின்னாளில் மனச்சிக்கலுக்கு ஆளாகும் அபாயமுண்டு. இந்த அபாயத்துடனே வாழும் பொன்னையாவுக்கு ஒரு கட்டத்தில் வீடு பிடிக்காமல் போகிறது. வீட்டை விட்டு வெளியேறுவது லட்சியமாகிறது. அதற்கான நாளைப் பார்த்து இருக்கையில் கல்லூரியின் விடுதியில் இடம் கிடைக்க சந்தோஷமாகச் செல்லும் இவனை பாலியல்ரீதியாக துன்புறுத்தும் மூத்த மாணவர்களால் வெறுப்புற்று வீடே மேல் என மீண்டும் வீட்டிற்கே வருகிறான். மீண்டும் வீடு குறித்த கவலை, பெற்றோர் குறித்த கவலை, தாத்தா – பாட்டி குறித்த கவலை என சின்ன வயதில் பொன்னையாவுக்கு நிகழும் அனுபவங்களும், துயரங்களும் மிக அதிகம். எண்பதுகளின் துவக்கத்தில் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எல்லா ஊர்களிலும் முளைத்துப் புற்றீசல் போல பரவின. என் பால்யத்தில் இக்கம்பெனிகள் குறித்துப் பல கதைகளைக் கேட்டதுண்டு. இப்பிரதியில் இந்த நிறுவனங்கள் இயங்கும் முறை, பணம் போட்டவர்களின் நிலைமை என விவரமாகப் பதிவாகியிருக்கிறது. அக்காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த சமூக நாடகங்கள் குறித்த பதிவும் இப்பிரதியில் உண்டு. அதை வாசிக்கையில் ஒரத்தநாடு வீதிகளில் நாடகக் குழு நடத்திக் கொண்டிருந்த சிலரை, மீண்டும் என் பால்யத்திற்குச் சென்று பார்த்த உணர்வு ஏற்பட்டது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். இந்த சமூக நாடகங்கள் என்பன இப்போது முழுக்கவே வழக்கொழிந்து போய்விட்டன. சபா நாடகங்கள், நவீன நாடகங்கள் போன்றவை மட்டுமே இப்போது நமக்கு காணக் கிடைக்கும் நாடகங்கள். சமூக நாடகங்களுக்கு அன்றைய சமூகத்தில் பெரும் வரவேற்பு இருந்தது. ஊர்கூடித் திருவிழா போல இந்நாடகத்தைக் காண கூட்டங்கள் வந்ததுண்டு. அப்போது பிரபலமாக இருக்கும் சினிமா பாடல்களின் மெட்டில் புதிதாக பாடல்களை இயற்றிப் பாடி இரண்டரை மணி நேர சினிமாவைப் போலவே அவை உருவாக்கப்படும். இந்த நாடகங்களில் திரைப்படம் போலவே இடைவேளை உண்டு. இவை பெரும்பாலும் திரைப்படத்திற்கான தங்கள் ஏக்கத்தைத் தணித்துக் கொள்வதற்கான முயற்சியாகவே இருக்கும் என்பதை சக்திவேல் பாத்திரம் மூலம் நமக்குக் கச்சிதமாக உணர்த்திவிடுகிறார் பெருமாள்முருகன். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் காலை இழந்த ராமு என்கிற பாத்திரமும் சுப்பிரமணி என்கிற ஓர் அடாவடி பாத்திரமும் ஒரு வகையில் இந்நாவலின் முக்கிய மாந்தர்கள். தமிழுக்காக உயிரைக் கொடுக்கத் துணிந்த எத்தனையோ மாணவர்களில் ஒருவனாக லட்சிய வேகத்தில் இருந்த ராமு, ஒவ்வொரு முறை குன்றூர் போகும்போது அண்ணா சிலையின் அடியில் உறைந்து கிடக்கும் ரத்தத் துளிகளைத் தேடி அலையும் கண்கள் கொண்ட ராமு, பின்னாளில் ஊர்க்காரர்களிடம் காரியம் செய்து தருகிறேன் என்று சொல்லி பணம் பார்ப்பவனாக மாறுகிறான். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்றெல்லாம் நாவல் சொல்லவில்லை எனினும் இந்த மாற்றத்தைப் பதிவு செய்வதன் மூலமாக கதைசொல்லி ஒரு முக்கியமான விமர்சனத்தை வைக்கிறார். அது போலவே சுப்பிரமணி என்கிற ஒரு பாத்திரம் படிப்படியாக பிறரை ஏமாற்றி, அதிலும் சொந்தச் சாதி மக்களை ஏமாற்றி நாட்டாமை செய்யும் அளவுக்கு பலம் வாய்ந்ததாக மாறுவதை நாவலின் போக்கில் மெதுமெதுவாகச் சொல்கிறார் பெருமாள்முருகன். நாயகன் பொன்னையாவுக்கு இளகிய மனது. அத்தோடு கூடவே வலிமையும் வாய்த்திருக்கிறது. அம்மனது காமம் தேடவும் செய்யும். நாடிச்சென்றவள் தன்னை வளர்த்தவள் என்று அறியும்போது பின்வாங்கி வந்து தன் உடல் குறித்தும் காம்ம் குறித்தும் அசூயையும் கொள்ளும். தான் தூக்கி வளர்த்த மணி என்கிற நாய் இறந்து இரண்டு நாட்களானபின்னும் புழுபுழுத்து நாறியபின்னும் அதைச் சுமந்து சென்று புதைக்கும் மனது. ஆனால் பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவரின் இறப்புக்காக சுடுகாடு தராமல் பிணத்தை எட்டி உதைத்த தன் தாத்தாவுக்காகவும் கண்ணீர் விடும் மனது. இப்படித்தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். பொன்னையா முற்றிலும் தன் சாதிக்கு துரோகம் செய்தவனல்ல. ஏன் இப்படி இருக்கிறார்கள் என்கிற கேள்விகள் இருந்தாலும் முற்றிலுமாக குடும்பத்தின் மீதான பிடிப்பை விட்டுவிட முடியாத அன்பின்வழி பின்னப்பட்டவனாதலால் அவனால் சாதிப்பெருமை பேசும் அம்மா, அப்பா, அண்ணன், தாத்தா, பாட்டி என எல்லோரிடமும் அன்பு காட்டி அடங்கிப் போக முடிகிறதென்பதுதான் யதார்த்த நிலைமை. திருநர் என்று நாம் அழைக்கும் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்டோரை இன்றைய சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை அறிவோம். 1991ல் வெளிவந்திருக்கும் இந்நாவலில் திருநங்கையை ‘ஒம்போது’ என்றும் ‘அலி’ என்றும் ஒரு பாத்திரம் அழைக்கிறது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முந்தைய நாவல் இது என்கிற புரிதலுடன் வாசிக்கும்போதும், சற்று நெருடவே செய்கிறது. எல்லாவற்றையும் தாண்டியும், துயரங்களை மட்டுமே அதிகமாகச் சொல்லும் இந்த நாவல் தரும் வாசிப்பு இன்பம் அலாதியானது. ஒரு சிறந்த நாவலுக்கான இலக்கணம் எது? அது தனிப்பட்டவர்களின் மன ஓட்டத்தைச் சார்ந்தது என்றே முடிவுக்கு வரலாம். வாசித்து நெடுங்காலம் ஆன பின்னும் நினைவை விட்டு அகலாத பாத்திரப் படைப்புகள், நேற்று தான் வாசித்தது போல அப்படியே புத்தம் புதியதாய் நினைவாக தங்கி விடும் சம்பவங்கள், பெருமாள்முருகன் சம்பவங்களை விவரிக்கையில் ஒரு திரைப்படம்போல நம் கண் முன் காட்சிகள் விரிவது என்று பலவிதங்களில் ‘ஏறுவெயில்’ நம்மைக் கவர்ந்து விடுகிறது. பொதுவாக, நம் நிலப்பரப்பிற்கு ஏதுவானதில்லை ஏறுவெயில். அது நம்மை எரிச்சல்படுத்துகிறது. வெக்கையையும் புழுக்கத்தையும் தருகிறது. ஒருபோதும் அதை நம்மால் ரசிக்க முடியாது. பெருமாள்முருகனின் இந்த ஏறுவெயிலும் கதைமாந்தர்களின் வெக்கை மனதையும் மனப் புழுக்கத்தையும் நம்மிடம் கடத்துகிறது. அதனாலேயே இந்த ஏறுவெயில் நமக்குப் பிடித்துவிடுகிறது. | ஏறுவெயில் | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | நவம்பர் 2008 | ரூ.160 | *** 11 நீர் விளையாட்டு : நவீனங்களை எதிர்கொள்ளல் நீர் விளையாட்டு : நவீனங்களை எதிர்கொள்ளல் நா . ராஜூ பெருமாள்முருகன் எனும் பெயர், மலத்தைப் பேசுபொருளாகக் கொண்ட ’பீக்கதைகள்’ என்கிற அவருடைய சிறுகதைத் தொகுப்பு வெளியான போதுதான் எனக்கு அறிமுகமாகியது. அப்போதுதான் பெருமாள்முருகனை வாசிக்கும் ஓர் ஆயத்த முயற்சியாக, அத்தொகுப்பிற்கு முந்தைய அவருடைய சிறுகதைகளின் தொகுப்பான ’நீர் விளையாட்டு’ நூலை வாசிக்க முற்பட்டேன். உண்மையில், பீக்கதைகள் எனும் தலைப்பின் மீது எழுந்த அதிர்ச்சி மதிப்பீட்டைத் தகர்ப்பதுதான் நோக்கமாக இருந்தது. பொதுவாகவே, ஓர் ஆரம்பநிலை எழுத்தாளன் தன் முதல் கதைத்தொகுப்பில், தான் சந்தித்த மனிதர்கள், கண்ட, கேட்ட நிகழ்வுகள், தன் ஊர் பற்றிய நினைவுகள் முதலியவற்றையே முன்னிறுத்தி கதை புனைய விரும்புவான். அதன் மீதான பிரேமை மங்கிய பின்பு, அதாவது தனக்கான அடையாளத்தை வெளியுலகில் ஓரளவு பெற்ற பின்பு, குறிப்பிட்ட செய்தியொன்றைக் கருக்கொண்டு அதை எடுத்தாள ஒரு நிகழ்வைக் கட்டமைக்கும் வகையிலான கதைகள் அவனுக்கு அமைவதே ஆரோக்கியமான அடுத்த கட்டம். அவ்வகையான செயலே அவனின் படைப்பாளுமையை உச்சத்திற்குக் கொண்டு வரும். ’நீர் விளையாட்டு’ சிறுகதைத் தொகுப்பும் கூட அப்படித்தான் தன் படைப்பாளுமையை மிகுவித்ததாக முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான திருச்செங்கோட்டிற்கும் [1994] நீர் விளையாட்டிற்கும் [2000] இடையிலான வித்தியாசம் ஆறு ஆண்டுகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ’நீர் விளையாட்டு’ நூலில் அமைந்திருக்கும் 21 சிறுகதைகளுள் பெரும்பாலான கதைகள் தற்கால நாகரிகத் தேவைகளுடனான மனித மனத்தின் தொடர்பைத்தான் பேசுகின்றன. அது பற்பொடி ஆகட்டும், வெஸ்டர்ன் டாய்லட் எனப்படும் பீவாங்கியாகட்டும், செப்டிக் டேங்க் கிளினிங் ஆகட்டும், ஊர்ப்புறங்களில் இரவிக்கை என்றழைக்கப்படும் பெண்களின் ஜாக்கெட் ஆகட்டும், நாற்காலியாகட்டும், ஆணுறையாகட்டும், ஏன் ‘வேட்கை’ கதையில் வரும் சைக்கிளே என்றாலும் கூட அனைத்தும் ஒரு வகையில் மனித வாழ்வின் நவீனங்களே! அந்நவீனங்களின் மீது கொண்டுள்ள ஒவ்வாமை, சகிப்புத்தன்மை, கைகொண்ட மகிழ்ச்சி, கர்வம் என மனித மனம் கொண்டுள்ள பல வடிவங்கள் இக்கதைகளில் காணக் கிடைக்கின்றன. இதையே, ஒருவகையில் ஆடம்பரங்களை நம்முடைய அத்தியாவசியங்களாக நாமே நீட்டித்து வைத்துக் கொள்ளும் சூழலின் ஆரம்பப்புள்ளியாகவும் வைத்துப் பேசலாம். மேலும், பெருமாள் முருகனின் கதை மாந்தர் அனைவருமே சிறுகாரணங்களுக்கும் கூட அதீத மன உளைச்சலுக்கும், அல்லது அதே அளவு மனவெழுச்சிக்கும் ஆளானவர்களாக இருக்கின்றனர். அது சரி, நாம் சிறுகாரணமென எடுத்துக் கொள்ளும் ஒரு செயல் மற்றவர்களுக்கும் அப்படியேவா தோன்றும்! [] காரைப் பற்கள் கொண்டவள் எனும் கிண்டலில் உளைச்சலாகித் தன் வாழ்நாள் முழுவதையும் பல் விளக்கி மட்டுமே தீர்க்கிற நீலாக்காவும் சரி, ஒரு மாதிரியான குரு துரோகத்தை எதிர் கொள்ளும் ‘குரல்கள்’ கதைப்பாத்திரமான வேலுவும் சரி, இன்னும் இசை நாற்காலி, சுவர்களும் கதவுகளும், பீவாங்கியின் ஓலம் உள்ளிட்ட கதைப் பாத்திரங்களும் கூட அப்படியானவர்களாகத்தான் இருக்கிறார்கள். ’வேட்கை’ கதையின் சைக்கிள் ஓட்டி கொள்ளும் உற்சாகத்தையும் கூட மன உளைச்சலுக்கு நிகரான இன்னொரு தளத்தில்தான் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது. இம்மாதிரியான சாதாரணமான மனிதர்களின் மனங்களைக் கண்ணாடி போலப் பிரதிபலித்துச் சொல்லிச் செல்லும் கதைகளுக்கு இடையில் வரும் மாய யதார்த்த வகையிலான கதைகள் தரும் அனுபவம் அலாதியாக இருக்கின்றது. ‘கடைவீதியில் ஒருவன்’ எனும் சிறுகதையைச் சொல்லலாம். அக்கதை முழுக்கவே, ஒரு கடையின் ஜாடிக்குள்ளிருந்து யானையை எடுப்பது, அடையா நெடுங்கதவு போன்ற மிகுகற்பனை நிகழ்வுகளே நிரம்பியிருக்கின்றன. ஒரு Fantasy வகைமைத் திரைப்படம் பார்ப்பதற்கு நிகரான அனுபவத்தைத் தருகின்றது. மறுபுறம், ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்கிற மொழியை முன்வைத்து நடத்தும் தத்துவ விசாரமாகவும் அக்கதையைப் பார்க்க முடிகின்றது. இக்கதை மட்டுமன்றி, தொகுப்பின் அனைத்துக் கதைகளிலும் ’மேஜிக்கல் ரியலிசம்’ என்றழைக்கப்படும் மாய யதார்த்தவாதத்தின் கூறுகள் உள்ளன. ஒரு வீதி முழுக்க எச்சில் வெள்ளம் என்பதில் ஆரம்பித்து, சுடுகாட்டின் செடிகளுக்கு பேயக்ள் நீரிறைத்து ஊற்றுவது [எருக்கஞ்செடிகள்] வரை அவை நீள்கின்றன. தொகுப்பிலுள்ள, இந்த மிகுகற்பனைக் கதைகளுள் உச்சம் பெறும் கதையாக ‘கடைவீதியில் ஒருவனை’ச் சொல்லலாம். பெருமாள்முருகன், கிணற்றுக் குளியலை மிகவும் நேசித்து அனுபவித்தவராக இருக்க வேண்டும் என்பது என் யூகம். வேறு எவற்றைப் பற்றி எழுதுவதை விடவும், கிணறுகளைப் பற்றிய அவரின் எழுத்துகளில் அந்த நேசத்தை உணர முடிகின்றது. அந்த நேசம்தான், ‘கிணற்றுச் சுகம்’ என்றும் கிணற்றின் பிரம்மாண்டம் மற்றும் அது கொண்டுள்ள நீரின் அமானுஷ்யம் பற்றியும் எழுதத் தூண்டுகிறது போலும். இந்தத் தொகுப்பிற்கு ’நீர் விளையாட்டு’ எனப் பெயர் வைத்ததும் கூட அதனால்தானோ என்ற எண்ணமும் கூட ஏற்படுகிறது. வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்து சலித்து, தோற்றுப் போகும் ஒருவன் ஒரு கிணற்றைத் தன் புகலிடமாகக் கொண்டு உடல் வழியாகவும், மன வழியாகவும் குழந்தையாக மாறுவதைச் சொல்லும் கதையான ’புகலிடம்’, கிட்டத்தட்ட அதே வகையில் அமைந்த ’நீர் விளையாட்டு’ ஆகிய சிறுகதைகளை வாசிக்கையில், அனேகமாக உங்களுக்கும் அந்த எண்ணம் வரக் கூடும். மேலும் இத்தொகுப்பில், மழைக்குருவி, சிறுத்தபூதம், பெரிதினும் பெரிது ஆகிய கதைகள் சிறுவர் / குழந்தை வாழ்வியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இவற்றில், குழந்தைகளுக்கேயுரிய விளையாட்டுத்தனங்களும், அடம் பிடித்தலும் எழுத்தின் வழியே அப்படியே அச்சு அசலாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பெருமாள்முருகனின் பலமாக ‘பேசாப்பொருளைப் பேசுதல்’ என்பதைத் தான் சொல்ல வேண்டும். தற்போதைய நவீனக் கழிப்பிடங்களில் திரும்பிக் கூடப் பார்க்காமல் flush செய்து விட்டு வரக்கூடிய மலம், விந்து போன்ற மனித அழுக்குகளைப் பற்றிப் பேச விழையும் அந்தத் துணிகரம். புதியதாக நகரத்திற்கு மணமுடித்து வரும் பெண்ணின் தனிமையை, அவளுடைய ’வெஸ்டர்ன் டாய்லட்’ அனுபவத்தின் ஊடாக, ‘பீ வாங்கியின் ஓலம்’ கதையில் கொண்டு வருகிறார். மீதமான உணவுகளைச் சேகரிக்கும் கிராமங்களின் களநீர்ப் பானையின் வேலையை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் நிறைந்த நகரங்களில் பீவாங்கிதான் செய்கிறது என்பதே அப்பெண்ணை கடும் உளைச்சல் கொள்ளச் செய்கிறது. யோசித்துப் பார்த்தால், உணவு என்ற ஒன்று இருப்பதால்தான், மனித உடலில் மலம் எனும் குப்பை உருவாகிறது. முன்னதை புனிதமாக உயர்த்தி மரியாதையோடும், பின்னதைத் தாழ்த்தி அழுக்காகவும் பார்ப்பதற்குள்ள முரண்தான், இங்கு விவாதத்திற்குரிய பொருளாக நிற்கிறது. போலவே, ’பீ’ கதையில், மலத்தின் மூலமாக ஒரு கண்ணாடிக் குவளையின் வழியே மனித வர்க்க வேறுபாடுகளைக் காட்சிப்படுத்தும் நுட்பம் அனாயசமாக இவரின் எழுத்துகளில் விரிந்திருக்கிறது. ’கோடித்துணி’ கதையில், மகனைத் தொடர்ந்து சலனப்படுத்தும் அம்மாவின் உடையணியாத முலைகளைப் பற்றி எழுதுகிறார். வீட்டில் நடக்குமொரு சுபநிகழ்வின் முன்னேற்பாடாக, எப்போதும் இரவிக்கை அணியாத தன் அம்மாவிற்கு, அதை எப்படியாவது அணிவித்து விடலாமென மேற்கொள்ளும் மகனின் முயற்சியைப் பேசுகிறது கோடித்துணி. மேலோட்டமாக, இது நவீன ஆடை நாகரிகம் பற்றிப் பேசுவதாக எடுத்துக் கொண்டாலும், ஒருவகையில் இது மகனைச் சலனப்படுத்தும் அம்மாவின் உடல் என்கிற வழியில், ’ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்’யும்தான் [Oedipus complex] தொட்டுச் செல்கிறது. அடுத்ததாக, ‘உள் நுழைந்த மூஞ்சுறு’ கதையில் அவர் புனையும் நிகழ்விற்கு எடுபொருளாக வருபவை மனித விந்துவும், ஆணுறையும். இரவில் புணர்ச்சியில் ஈடுபடும் கணவன், புணர்ச்சி முடிந்த பின் தான் பயன்படுத்திய ஆணுறையை ஓரிடத்தில் வைக்கிறான். காலையில் எழுந்து அதை அப்புறப்படுத்தும் நோக்கில் தேடினால், அது கிடைப்பதேயில்லை. பின்னொரு நாள், அதை அவ்வீட்டிலிருக்கும் மூஞ்சுறு ஒன்று எடுத்துச் செல்கிறது என்பதை அறிகிறான். அதன் பின் நடக்கும் நிகழ்வுகளே கதை. நிச்சயமாக, இச் சிறுகதையின் நிகழ்வுகளை, ஜோடிப்பதற்கே ஓர் எழுத்தாளனுக்கு அசாத்தியமான புனைதிறன் வேண்டும். அது பெருமாள்முருகனுக்கு, இதில் மிகச் சிறப்பாக வாய்த்திருக்கிறது! நீர் விளையாட்டு சிறுகதைத் தொகுப்பின் பலமாக, எதைச் சொல்கிறோமோ அதுவே சில இடங்களில் பலவீனமாக உள்ளது. அதாவது, ஆரம்பத்தில் ஆச்சரியமூட்டுவதாகவும், ஓர் அனுபவத் திறப்பாகவும் அமையும் நூலாசிரியரின் மிகு கற்பனை, பின் அதுவே அலுப்படைய வைப்பதாகவும் இருக்கிறது. ஆமாம், தொடக்கத்தில் ஆச்சரியமூட்டும் அக்கற்பனைகள் [மேஜிக்கல் ரியலிசம்] மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த கதைகளில், வெவ்வேறு வடிவங்களில் வருவதால் அலுப்படையவும் வைக்கின்றன. ஆரம்பத்தில் ’ஒரு ஊரின் வீதி முழுக்க எச்சில் வெள்ளம்’ என்கிற மாய யதார்த்தத்தில் லயிக்கும் வாசகன், தொடர்ச்சியாக அது போன்றே வரும் நிகழ்வுகளை, முன்பிருந்த அதே அளவு கனமான ஆச்சரியத்துடன் எதிர்கொள்வானா என்பது ஐயம்தான். இதற்கு முக்கியக் காரணமாக, பெருமாள் முருகனின் எழுத்து நடையைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. எல்லாக் கதைகளையும், சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்தது ஒரே வகையிலான எழுத்து மொழி. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், இக்கதைகளின் தலைப்புகள் உட்பட ஒரு கட்டுக் கோப்பான, கறாரான உரைநடையையே தேர்ந்தெடுத்திருக்கிறார். தவிர, பெரும்பாலான கதைகள், கதை சொல்லியான எழுத்தாளனின் குரலிலேயே செல்கின்றன. கதாபாத்திரங்களே தங்களின் கதையைச் சொல்லிச் சொல்லும் மொழியானது இந்த 21 கதைகளிலும் மிகச் சில கதைகளில்தான் காணக் கிடைக்கிறது. போலவே, வட்டார வழக்கு. பெருமாள் முருகன், தமிழகத்தின் வட்டார வழக்குக் களஞ்சியத்தில் பெரும்பங்கு வகிக்கும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவராக இருக்கின்ற போதும் கூட, அவரது இந்தத் தொகுப்பின் சிறுகதைகளில் அம்மக்களின் மொழி குறிப்பிட்டுச் சொல்லும் படி அவ்வளவாக இடம்பெறவில்லை. இத்தனைக்கும், பெரும்பாலான கதைகளின் நிகழ்விடங்களும், கதாப்பாத்திரங்களும் சிறுநகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்தவைகளாகத்தான் உள்ளன. தன் சொந்த மண் சார்ந்த சொல்லாடல்களும், இனப் பண்பாடு / முரண்பாடுகளும் ஓர் ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு உரியவை என அவர் நினைத்திருக்கக் கூடும். ஏனெனில், ’திருச்செங்கோடு’ கதைத் தொகுப்பில், ’ஓரம்பரை’ ‘மொக்கபட்டம்’ முதலான வட்டார வழக்குகளைத் தலைப்பிலேயே கொண்டிருந்த சிறுகதைகள் உண்டு. அல்லது ’ஒரு வேளை, ’நீர் விளையாட்டு’ வெளியான காலமான 90களின் இறுதியில் சிறுகதைகளுக்கான பொது உத்தி மேற்சொன்னவற்றின் அடிப்படையில் அமைந்திருக்குமோ’ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இறுதியாக, பெருமாள் முருகனை எப்போதும் பிடிப்பதற்குக் காரணம், அவர் எப்போதும் பேசாப் பொருளைப் பேசும் துணிகரம் மட்டுமல்ல! ’பீக்கதைகள்’ ’மாதொருபாகன்’ ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ ’சாதியும் நானும்’ என்பன போன்ற தொடர் செயல்பாடுகளால் நம்மை ஓர் பொருள் சார்ந்த விவாதத்தை நோக்கி நகர்த்துவதாலும்தான். மேலும், சமகால தமிழிலக்கிய வரைபடத்தில், கொங்கு மண்டலத்தின் பரவலையும் வீச்சையும் வாசகர்களுக்கு தொடர்ச்சியாக உணர்த்திக் கொண்டிருப்பவரும் அவர்தான். அவரைப் போன்ற ஒரு படைப்பாளியை மொத்தமாக முடக்கிப் போடும் நோக்கில் நடக்கும் எந்தவொரு நிகழ்வும் நம் சமூகத்திற்கு எவ்விதத்திலும் நன்மை பயக்காது. | நீர் விளையாட்டு | சிறுகதைகள் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிசம்பர் 2009 | ரூ.125 | *** 12 திருச்செங்கோடு : கதாநாயகனின் கட்டியங்கூறல் திருச்செங்கோடு : கதாநாயகனின் கட்டியங்கூறல் நர்சிம்   சிறுகதைகளை இன்னது என்று வகைப் பிரித்துப் பகுத்தாய்வது தேவையற்ற ஒன்று. எல்லாக் கதைகளும் ஏதேனும் ஓர் அனுபவத்தைப் புனைந்து நிற்கத்தான் செய்கின்றன‌. நல்ல கதை, நல்ல கதையாக ஆக்கப்பட்டிருக்க வேண்டிய கதை என வேண்டுமானால் புனைவுகளைப் பிரிக்கலாம். இதில் சற்று அதிகம் கவனம் ஈர்க்கவல்லவை ’வட்டார வழக்குக் கதைகள்’ எனலாம். கத்தி மேல் நடக்கும் வித்தையது. முதல் மூன்று வரிகளில் வரும் சொல்லாடல்களை வாசகன் தனக்கு அந்நியமாக உணர்ந்தால், அவ்வளவுதான். அதிகமானால் சலித்துப் போகும் அபாயமும் நுட்பமாக அல்லது துல்லியமாக இல்லாமல் போனால் பிசுபிசுத்துப் போகும் தன்மையும் வட்டாரவழக்குக் கதைகள் எதிர்கொள்ளும் சவால்கள். ‘நெடுஞ்சாலை’ நாவல் வட்டார வழக்கை மிக அற்புதமாகப் பயன்படுத்தி கதை சொல்லப்பட்டதாகச் சொல்வோம் எனில், அதை எழுதிய கண்மணி குணசேகரன் “பெருமாள்முருகனின் திருச்செங்கோடு தொகுப்பைப் படித்த பின்னரே எழுதத் தொடங்கினேன்” என்று சொன்னதையே திருச்செங்கோடு தொகுப்பின் பெருமையாகவும் சொல்லலாம். முன்னுரையில், இத்தொகுப்பில் இடம் பெற்ற கதைகளைக் குறித்து பயிற்சிக் கதைகள் என்ற ரீதியில் பார்த்ததாகவே பெருமாள்முருகன் குறிப்பிடுகிறார். ஆனால் பெரும்பாலான கதைகள் புதிதாய் எழுதுபவர்களுக்குப் பயிற்சிக்களமாக அமையக்கூடிய தரத்திலானவை. [] இருபது கதைகளைக் கொண்ட, பெருமாள்முருகனின் முதல் தொகுப்பு திருச்செங்கோடு. முதல் வாசிப்பில் புரிபடாத சில கதைகள் மீள் வாசிப்பில் பிடிபடலாம், அல்லாமலும் போகலாம். ஆனால், ‘விட்ட குதிரை விசைப்பின் அன்ன, விசும்பு தோய் பசுங் கழைக் குன்றன்’ என்ற குறுந்தொகை வரிகளில் குறிப்பிடப்படும், குதிரைப் பாய்ச்சலையும், வளைந்த மூங்கில் நிமிரும் வேகத்தையும் கொடுக்கும் வாசிப்பை இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதைகளிலும் அனுபவிக்கலாம். கொறங்காடு என்ற கதையில் அந்தக் கிராமத்தில் முதன்முதலில் பட்டம் வாங்கிய இளைஞன், எப்போதோ இருபது வருடங்களுக்கு முன்னர் தன் அத்தையை விட்டுப் பிரிந்த புருஷன் இறந்து போனதும் அத்தைக்கு செய்யப்பட வேண்டிய சடங்குகளை / சாங்கியங்களை எதிர்க்கும் புரட்சிக்காரன். சேர்ந்து வாழவே துப்பில்லாத ஒருவன் இருந்தால் என்ன இறந்தால் என்ன என வாதம் வைத்து கிட்டத்தட்ட தன் அப்பனையும் அதை உணரச் செய்து விடுகிறான். கதையை அப்படியே முடித்திருக்கலாம்தான். ஆனால் தாம் பின்னாளில் அறியப்படக்கூடிய எழுத்தாளர் ஆகப் போகிறோம் என்ற கையெழுத்தை இக்கதையின் முடிவில் இடுகிறார் பெருமாள்முருகன். ஆம். ஊரில் இருக்கும் குள்ளநரித்தனங்கள் வெளிப்படும் இடங்கள் ஒன்று திருமணம் அல்லது எழவு வீடு. ஊர் நாட்டாமை, தருமகர்த்தாக்கள் இவ்வாறான‌ புரட்சிகளை வளர விட்டால் தங்கள் நிலைமை என்னாவது என்பதை உணர்ந்து, சாமர்த்தியமாய் இளைஞனுடைய அப்பனின் பலவீனத்தில் அடிக்கிறார்கள். அத்தை மூலையில் அமர்ந்து அழுகிறாள். புருஷனின் சாவுக்காக மட்டும் அல்ல என கதை முடிகிறது. அந்த கடைசி வரிகளுக்குள் பொதிக்கப்பட்ட பொருட்களுக்காக, நாம் மீண்டும் கதையைப் படிக்கத் துவங்குகிறோம். தடம் மாறும் வண்டிகள் கதை, ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல் மற்ற கதைகளுடன் ஒப்பிடும் போது சற்றுக் குறைவான தரம்தான் என்றாலும், வண்டி மாடுகள் கிணற்றில் விழுந்தவுடன் பரிதாபமும் குடியை விடாத முத்துப்பையனின் மீது ஆத்திரமும் நமக்கு ஏற்படுகிறது. காரணம் கதையின் வட்டார வழக்கு. அவ்வளவு அணுக்கமாய் சொல்லப்படும்பொழுது உணர்வு தொற்றிக்கொள்கிறது. ‘பலன்’ அன்றாட அக்கப்போர்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மலைக்குப் போவதற்கு சாமிக்கு மாலை போட்டுக் கொள்ளும் ஒருவனைப் பற்றிய கதை. ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு, அந்த முதலாளியின் சுடுசொல் பிடிக்காமல் தானே தனியாய் ஒரு டெய்லராய் வலம்வரும் நாயகன், மலைக்குப் போக வேறு வழியின்றி அந்தத் தையல் மிஷினையே விற்றுத் தொலைக்க வேண்டிய நிர்பந்தம். மலைக்குப் போனால் இதுதானா பலன் என போய்வந்த பிறகு வெம்பும் அவன் இலக்கில்லாமல் நடக்கிறான். அவன் இறுதியாக நின்று நிமிரும் இடம் அவன் ஏற்கனவே வேலை செய்துகொண்டிருந்த நிறுவனம். அதன் பெயரை ‘ரெயின்போ’ என்று வைத்திருப்பது நகைமுரண். இக்கதையில் மலைக்குப் போவதனால் ஏற்படும் பலன் எது என்பதை இரண்டாவது முறைப் படித்தால் புரிந்துகொண்டு விடலாம். தொகுப்பின் அற்புதமான கதைகளுள் ஒன்றாக ‘உண்ணிகள்’ கதையைக் குறிப்பிடலாம். முதல்நாள் தன்னை வேலைக்குப் போகவேண்டாம் என மகிழ்ச்சியாய் சொன்ன தாய், பொழுது விடிந்ததும் திட்டி எழுப்பி வேலைக்கு அனுப்பும் நிகழ்விலேயே கதையின் சூழல். கொஞ்சம் பணம் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் தன் குடும்பத்தோடு இருந்துவிடுவாள் அந்த மனுஷி என்ற எண்ணம் நமக்குக் கதை முழுக்கத் தோன்றிக்கொண்டே இருக்கும்படியான அவளின் உணர்வுகள் கடத்தப்படுகின்றன. வாயில்லாச்சீவனுக்காக ஒரு நாள் பொங்கல் வைத்துக் கொண்டாடலாம் என ஆசையாய் தாயும் மகளும் மகனும் மனப்பால் குடிக்க, பால் ஊற்றப்படும் இடத்தின் செக்கிங் இன்ஸ்பெக்டர் உருவில் விதி அல்லாட வைக்கிறது. அவன் லஞ்சப் பணம் கேட்பானே எனும்போது சுரீர் என நெஞ்சு வலிப்பதாகவும், அது புருஷனை இழந்த அன்று ஏற்பட்ட வலி போன்று இருப்பதாகவும் வரும் வரிகளில் வாசகனுக்கு கடத்த வேண்டிய வலியை அனாயசமாகச் செய்கின்றன. தன் மகன் ஆசையாசையாய் எருமைக்குக் கயிறு வாங்குவது குறித்தும் அதன் கொம்பிற்கு காவிக்கல்லு தடவுவது குறித்தும் கேட்டுக் கொண்டே இருக்க, அந்த எருமையை விற்க வேண்டிய நிர்பந்தம் சொல்லி, அவள் ஓங்கிக்குரலெடுத்துக் கதறுவதில் கதை வேண்டுமானால் முடிவுறலாம். ஆனால் வெகுநேரத்திற்கு இக்கதை கொடுக்கும் பாதிப்பு நீள்கிறது. ’ஒரம்பரை’ என்ற கதை, இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை. எக்காலத்திற்கும் பொருந்தும் புனைவேயல்லாத புனைவு. அவ்வளவு அன்பாகவும் அணுக்கமாகவும் உறவுக்காரனாக நுழைபவனை வரவேற்று மோர் கொடுத்து, கட்டிலில் அமரவைத்து குளுமையாகப் பேசிக்கொண்டிருக்கும் கதை ஒரே நொடியில் சட்டெனத் தடம் மாற்றி மனதை அதிரச் செய்துவிடுகிறது. இக்கதை கொடுக்கும் உணர்வதிர்வுகள் பல அடுக்குகளில் பயணப்படும் தன்மை பெற்றவை. பணத்திற்காக நிகழ்ந்த அத்தனை நிகழ்வும் கண்முன் வந்து போகச் செய்யும் சொல்லாடல்களே இக்கதையின் வேர். “வா கண்ணு” என்ற வார்த்தையில் கதையைத் துவங்கும் பாத்திரம் கதையை “அடப் போடா நாயே” என முடிக்கிறது.   சிதைவு, கொடுப்பினை, திருச்செங்கோடு என தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் பெருமாள்முருகனின் கதை மாந்தர்கள் நம் முன் நடமாடுகிறார்கள், எதிரே கட்டிலில் அமர்கிறார்கள், தோள் மீது கைப் போட்டு உடன் வருகிறார்கள், மனைவியை அடிக்கும் போது நம்மை துடிக்கச் செய்கிறார்கள். கதைகளைப் படித்து முடித்த பிறகு, அவ்வட்டாரத்தைத் சேர்ந்தவராக நாம் இல்லாது போனாலும், அவ்வார்த்தைகளைப் பேசிப் பார்க்கத் தோன்றுவதும் அம்மனிதர்களின் வெயிலும் புழுதியும் படிந்த வாழ்க்கை சில நாட்கள் கண்முன் நடமாடுவதும் இத்தொகுப்பின் வெற்றி. பெருமாள்முருகன் என்ற அற்புதமான கதைசொல்லியின் வெற்றி. | திருச்செங்கோடு | சிறுகதைகள் | பெருமாள்முருகன் | நற்றிணை பதிப்பகம் | டிசம்பர் 2013 | ரூ.125 | *** 13 பீக்கதைகள் : பேசாப்பொருளை பேசத் துணிந்தார் பீக்கதைகள் : பேசாப்பொருளை பேசத் துணிந்தார் யுவகிருஷ்ணா ‘கடன் பட்டாற் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்கிற சொற்றொடரை வாசிக்கவோ, கேட்கவோ நேர்ந்தால் ‘காலைக்கடன்’ என்கிற சொல்லும் மூளையில் அனிச்சையாக தோன்றுகிறது. சிறுவயதில் சொற்பொழிவு ஒன்றில் கேட்ட கதை ஒன்று அதற்குக் காரணமாக இருக்கலாம். இராவணன் இமயத்தில் கடினமாக தவமிருக்கிறான். தவத்தில் மெச்சிய சிவன், “வேண்டும் வரம் கேள்” என்கிறார். சிவன் தன் சக்தி மொத்தத்தையும் திரட்டி உருவாக்கி, தன் கழுத்தில் அணிந்திருக்கும் ஆத்மலிங்கத்தை வரமாக கோருகிறான் இராவணன். கேட்டதைக் கொடுக்கும் வழக்கம் கொண்ட இறைவனும் கொடுத்து விடுகிறார், ஒரே ஒரு நிபந்தனையோடு: “இலங்கைக்குச் சென்று பிரதிஷ்டை செய்யும்வரை லிங்கத்தை தரையில் எங்குமே வைக்கக்கூடாது. வைத்துவிட்டால் அதைத் திரும்பவும் எடுக்க யாராலும் இயலாது” இராவணனும் லிங்கத்தை ஏந்தியவாறே இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான். விஷயம் கேள்விப் பட்ட தேவாதி தேவர்கள் கொதித்துப் போனார்கள். ஏனெனில் ஆத்மலிங்கத்தைத் தொடர்ந்து பூசித்து வருபவர்கள், சிவனுக்கு நிகரான சக்தியைப் பெற்றுவிடுவர். அசுரனான இராவணன் அத்தகைய சக்தி பெற்றுவிட்டால், மூவுலகையும் அவனே ஆட்சி செய்வான். அவனை வீழ்த்துவது அசாத்தியமாகி விடும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வரம் கொடுத்த சிவனின் மகனான விநாயகனை அணுகுகிறார்கள் தேவர்கள். உடனே விநாயகன் சிறுவன் வேடம் பூண்டு இராவணன் வரும் வழியில் காத்திருக்கிறான். அதிகாலையில் அந்த இடத்துக்கு வந்து சேரும் இராவணனுக்கு லேசாக வயிறு கலக்குகிறது. லிங்கத்தை கையில் வைத்துக்கொண்டே காலைக்கடனை கழிப்பது சரிவராது. என்ன செய்வது என்று யோசிப்பவனின் கண்ணில் சிறுவன் வேடம் பூண்ட விநாயகன் தென்படுகிறான். “தம்பி, இந்த லிங்கத்தைக் கொஞ்ச நேரம் எனக்காக சுமப்பாயா? பத்து நிமிடம் அப்படி ஓரமாக ஒதுங்கி விட்டு வருகிறேன்” என்று கேட்கிறான். இதற்காகவே காத்திருந்த விநாயகன் அதற்குச் சம்மதிக்கிறான். “தரையில் மட்டும் வைக்கக் கூடாது” என்று மீண்டும் மீண்டும் எச்சரித்துவிட்டே ஆற்றங்கரைக்குப் போகிறான் இராவணன். அவன் திரும்பி வந்து பார்க்கும் போது, லிங்கம் தரையில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிறுவனைக் காணோம். லிங்கத்தை இராவணனால் எடுக்கவே முடியவில்லை. மூவுலகமும் காக்கப்படுகிறது என்பதாகப் போகிறது கதை. கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘கோகர்ணம்’ என்கிற ஊரின் தல புராணத்துக்கு இதே கதை வேறு வேறு வடிவங்களில் உண்டு. ஆனாலும், அசுரப் பேரரசனாக இருந்தாலும் அவனுக்கும் காலைக்கடன் உண்டு என்கிற யதார்த்தத்தை எடுத்துக் காட்டிய இந்தக் கதை மனதில் அப்படியே தேங்கி விட்டது. காலை மாலை என்று ஒவ்வொரு நாளும் இரு வேளைக‌ள் நாம் அவசியம் அடைக்க வேண்டிய கடன். ஆனால், பொதுவில் அதைப்பற்றி பேசுவது நாகரிகமற்றதாகவும், அருவருப்பானதாகவும் கருதப்படுகிறது. எனவேதான் கதைகளிலோ, திரைப்படங்களிலோ காலைக்கடன் கழிக்கும் காட்சியைத் தவிர்க்கிறார்கள். ‘சுரேஷ், காலைக்கடன் கழித்துக் கொண்டிருந்தான்’ என்று எந்த கதையிலாவது படித்த நினைவு உங்களுக்கு இருக்கிறதா? நம் திரைப்படங்களில் எந்தப் பாத்திரமாவது காலைக்கடன் கழித்துக் கொண்டிருப்பதான காட்சி ஏதாவது நினைவுக்கு வருகிறதா? யோசித்துப் பார்த்தால் அரிதாக ஓரிரண்டு நினைவுக்கு வரலாம். பெருமாள்முருகன், ‘பீக்கதைகள்’ தொகுப்பில் மலம் கழிப்பதை முதன்மையான கருவாகக் கொண்டு பதினான்கு கதைகள் எழுதியிருக்கிறார். மலம் என்று சொல்லும் போது கூட அதன் பொருள் அல்லது அதன் வீச்சு மட்டுப்படுத்தப்பட்டு நம்மால் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதாலோ என்னவோ, நேரடியாகவே பீயினையே புத்தகத்தின் தலைப்புக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார் – பீக்கதைகள்! மலம் கழிக்கப்படும் இடத்தினை நடந்தோ, பேருந்திலோ, ரயிலிலோ கடக்கும்போது அனிச்சையாக மூக்கைப் பிடித்துக் கொள்கிறோமே, அப்படி வாசிக்க வேண்டியதில்லை இந்தப் புத்தகத்தை. ஓர் எழுத்தாளர் எழுதுவதற்கு வேறு கருப்பொருளே இல்லையா? மலம் கழிப்பது ஒரு தேசியப் பிரச்சினையா என்று கேட்டீர்களேயானால், ஆமாம். சர்வதேசப் பிரச்சினையும் கூட. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருந்த ஓர் ஆய்வுக் குறிப்பில் இந்தியாவில் மட்டுமே சுமார் அறுபத்தைந்து கோடி பேர் இன்னமும் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கிறார்கள் என்கிற தகவலை வெளிப்பட்டிருந்தது. இந்த நான்கைந்து ஆண்டுகளில் இந்த விஷயத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு, நம் நாடு வல்லரசு ஆகிவிட்டதாகவெல்லாம் தோன்றவில்லை. [] புள்ளிவிவரமாக வாசிப்பதால் இந்தச் செய்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வந்த அக்கா ஒருவர், முதல் நாளே பிறந்தகத்துக்குச் சென்றுவிட்டார். காரணம் என்னவென்றால், மணமகன் வீட்டில் கழிவறை இல்லை. திறந்தவெளியில் என்னால் கழிக்க முடியவில்லை என்று சொன்னார். கிட்டத்தட்ட இதே கதையை ‘பீக்கதைகள்’ தொகுப்பில் ‘பிசாசுக்கு பிடித்த விஷயம்’ என்கிற கதையாக வாசிக்கும் போது, நாடு முழுக்க அது போல் எத்தனை அக்காக்கள் காலைக்கடனுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என உணரமுடிகிறது. ஒப்பீட்டளவில் இப்பிரச்சினை பிரதானமாக பெண்களையே அதிகம் பாதிக்கிறது. விடிவதற்கு முன்னால் போய்விட்டு வந்துவிட வேண்டும். அல்லது இருட்டிய பிறகே போயாக வேண்டும். இடையில் வயிறு சரியில்லை என்றாலும் அடக்கிக் கொள்ள‌ வேண்டும். முதல்வர், அமைச்சர் மாதிரி முக்கியஸ்தர்கள் வருகைக்காக பாதுகாப்புப் பணியில் பல மணி நேரம் கால் கடுக்க நின்றுக் கொண்டிருக்கும் பெண் போலிஸாரைப் பற்றி யோசித்துப் பாருங்கள். வயிறு ‘கடமுடா’ செய்தால் என்னதான் செய்ய முடியும்? தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ‘கடைசி இருக்கை’ கதையில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது சிறுவன் ஒருவனுக்கு மலம் கழிக்க வேண்டிய உந்துதல் வந்துவிடுகிறது. நடத்துனரோ பாதியில் நிறுத்த முடியாது என்று அடம்பிடிக்கிறார். அவனுக்காகக் காத்திருக்க மற்ற பயணிகளும் அனுமதிக்க மாட்டார்கள். அனைவரின் முகத்தில் அறையும் முடிவினை எடுக்கிறான் சிறுவன். அங்கேயே கழிந்து விடுகிறான். இந்த சிறுவனின் அவஸ்தையைப் பேருந்தில் அடிக்கடி பயணிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள், உடனடியாக தங்கள் அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். முதுமை காரணமாக படுத்த படுக்கையில் விழும் கிழவி ஒருத்தி, அவள் அறியாமலேயே படுக்கையில் மலம் கழித்து விடுகிறாள். அதுகுறித்து அவளது மகள் முகம் சுழித்துக் கோபமடைய, வைராக்கியக் கிழவி உண்பதால்தானே மலம் வருகிறது என்று உண்ணாநோன்பிருந்து உயிரை விடுவதாக ‘மஞ்சள் படிவு’ கதை. ‘வெங்கடேசனும் ஒரு நிமிடம் பன்றி ஆகிப் போனான்’ என்கிற அதிர்ச்சி முடிவோடு முடியும் ‘வராக அவதாரம்’ தொகுப்பின் குறிப்பிடத்தக்க கதைகளுள் ஒன்று. நகரத்தில் முதன்முறையாக காலெடுத்து வைக்கும் ஒருவன், இங்கிருக்கும் காலைக்கடன் நடைமுறைகளை கண்டு அதிர்ச்சி அடைகிறான். ஒரு கட்டத்தில் அவனும் அவர்களுடன் இந்த ஜோதியில் ஐக்கியமாக வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மலம் தொடர்பான கதைகள் என்பதால் கதைகள் அனைத்துமே மாற்று சினிமா வண்ணத்தில் டல்லாகவே இருக்க வேண்டும் என்கிற அவசியத்தை உடைத்து, வாய்விட்டு சிரிக்க வைக்கும் அரசியல் பகடிக் கதை ஒன்றினையும் இத்தொகுப்பில் இணைத்திருக்கிறார் பெருமாள்முருகன். கிராமத்துக்குப் பயிற்சி தொடர்பாக வரும் கம்யூனிஸ்ட் தோழர் ஒருவருக்கு தேநீர் அருந்தாமல், காலைக்கடன் கழிக்க இயலாது. தோழர் பி.எம்.முக்கு இது பூர்ஷ்வா மனநிலையாகப் படுகிறது. அவ‌ர் கண்ணில் தேநீரைக் காட்டாமலேயே ஒரு முழுநாளை ஓட்ட முயற்சிக்கிறார் தோழர் பி.எம். இறுதியில் அதில் ஓரளவு வெற்றியும் கிடைக்கிறது. தொகுப்பின் முதற்கதையாக‌ இடம்பெற்றிருக்கும் ‘பீவாங்கியின் ஓலம்’ சிறுகதை, நகருக்கு வாழ்க்கைப் படும் கிராமத்துப் பெண்ணின் மனதுக்குள் ஆழமாக ஊடுருவி அவளது அச்சங்களையும் எண்ணங்களையும் அசாதாரணமாக வெளிப்படுத்துகிறது. ‘கருதாம்பாளை’ கதையில் வீட்டுக்குள்ளேயே கழிவறை என்கிற நவீன மாற்றத்தை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ள இயலாத கிராமத்துக் கிழவி, பிற்பாடு அதன் சாதக பாதகங்களை உணர்ந்து பிற்பாடு தன்னுடைய கிராமத்து இல்லத்திலும் அப்படியொரு கட்டமைப்பை ஏற்படுத்துகிறாள் என்பதாகப் போகிறது. இம்மாதிரி கதைகளில் திறந்தவெளி (எதிர்) நான்குபுறமும் மூடிய கழிவறை என்றெல்லாம் நிலைப்பாடு எடுக்காமல், அதை அதைப் பயன்படுத்துபவர்களின் மனப்போக்கினை பதிவு செய்வதிலேயே தன்னுடைய முழுமையான‌ முனைப்பினை எழுத்தாளர் செலுத்தியிருக்கிறார். தொகுப்பினிலேயே உலுக்கக்கூடிய கதையாக ‘சந்தன சோப்பு’ அமைந்திருக்கிறது. வறுமை காரணமாக ஒரு சிறுவன், உணவகம் ஒன்றின் கழிப்பறையில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் வேலையை செய்கிறான். உள்ளே நெடுநேரம் கழித்துக் கொண்டிருப்பவர்களை கதவைத் தட்டி அவசரப்படுத்துவதும் அவனுடைய கூடுதல் வேலை. மலவாடை காரணமாக எப்படியாவது ஊருக்கு திரும்பப்போய்விட வேண்டும் என்று விரும்புகிறான். ஊர்க்காரர் ஒருவர் அவனுக்கு தற்காலிக நிவாரணமாக ‘சந்தன சோப்பு’ வாங்கித் தருகிறார். சில காலத்தில் அவனே அவ்வேலைக்கு பொருந்திப் போகிறான் என்பதாகப் போகிறது. ‘புகை உருவங்கள்’ என்கிற கதை ஏன் இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. மலத்தைக் கருப்பொருளாக்கி தமிழில் ஓர் எழுத்தாளர், ஒரு முழு சிறுகதைத் தொகுப்பே எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மற்றவர் பேசத் துணியாத விஷயத்தை பேசுவதே ஒரு படைப்பாளியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்கிற இலக்கணத்தோடு கச்சிதமாகப் பொருந்துகிறார் பெருமாள்முருகன். ஏன் குறிப்பாக இதைப் பேசத் துணிய வேண்டும்? உலக அழகியாக இருந்தாலும், அவளும் தினமும் ஒரு முறையாவது கக்கூஸுக்கு போய்த்தான் ஆகவேண்டும் இல்லையா? அந்த‌ விஷயத்தை எப்படி பேசாமல் இருக்க முடியும்? – இப்படி எடுத்துக் கொள்ளலாம். அல்லது, தலித் என்றால் வாயில் பீயைத் திணித்து இழிவுபடுத்துகிறார்களே, எப்படி இதைப் பேசாமல் இருக்கமுடியும்? – இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை நாடுபவர்களுக்கு ‘பீக்கதைகள்’ முற்றிலும் புதிய தரிசனங்கள் தருகிறது. | பீக்கதைகள் | சிறுகதைகள் | பெருமாள்முருகன் | அடையாளம் | டிசம்பர் 2004 | ரூ.60 | *** 14 வேப்பெண்ணைக் கலயம் : க்ஷணப் பொழுதின் கதைகள் வேப்பெண்ணைக் கலயம் : க்ஷணப் பொழுதின் கதைகள் சாந்தி வேப்பெண்ணைக் கலயம் பெருமாள்முருகனின் நான்காவது சிறுகதை தொகுப்பு. பல்வேறு இதழ்களில் வெளியான 23 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தனிப்பட்ட முறையில் எனக்கு சிறுகதை வாசிப்பு வார / மாத இதழ்கள் தாண்டி அதிகம் இல்லாததால் தொடக்கத்தில் கதையோட்டம் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கவில்லை. ஆனால் ஒரு கதை படித்து முடிந்ததும் அந்த எண்ணம் காணாமலே போனது. மிக நிதானமான நுண்ணிய விவரிப்புகள், நான் கண்டிராத கிராமத்தை, பொறுமையாக என் கற்பனையில் கொண்டு வர உதவுவதாகவே இருந்தன, உரையாடல்கள் வழி மெல்லிய உணர்வுகளும் புலப்படுவது சுவாரஸ்யம். விவரிப்புகளின் வழி கதையில் வரும் மனிதர்கள், அவர்கள் சூழ்நிலைகள், உணர்ச்சிகள் என எல்லாமே கற்பனையில் காட்சிகளாய் விரியும் வகையில் சுவாரசியமான அழகிய எழுத்து நடை. வர்ணனைகள், அவற்றிற்கான ஆசிரியர் உணர்த்தும் (அல்லது உணர்த்துவதாக சொல்லப்படும்) குறியீடுகள் போன்ற குழப்பங்களின்றி நிதானமான தெளிவான உரைநடை. பெருமாள்முருகனின் கிராமியக் கதைக்களம் புதிதாகவே இருந்தாலும் விவரிப்புகளின் எளிமையில் சிக்கலின்றி நாம் கதைக்குள் பயணிக்க முடிகிறது. கதை இயல்பாய் தொடங்குவதிலிருந்து கனமான / உணர்ச்சிகரமான முடிவுவரை நாமும் கதைக்குள் இருப்பது போன்ற உணர்வே சுவாரஸ்யமாகிவிடுகிறது. ஒரு கணத்தில் நிகழும் எதிர்வினையால் அதற்கு முந்தைய கணம் வரை இருந்த இயல்புநிலை மீட்டெடுக்க முடியா நிலைக்குப் போவது தெளிவாக இந்த கதைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அதன் தாக்கமும் நம் மனதில் பதிகிறது. பெருமாள்முருகனின் கதைகள் பெரும்பாலும் கிராம வாழ்க்கையையே தம் கதைப்பொருளாகக் கொண்டது. கிராமப்புற எளிமை பற்றி அதிகம் அறியாதவர்கள் வெகு சாதாரணமாக “யாருக்குத்தான் துன்பங்கள் இல்லை?” என்று கடந்து செல்வதுண்டு, ஆனால் இக்கதைகளில் எளியவர்களின் அன்றாட போராட்டங்கள், அவர்கள் கடந்த காலங்கள், அவர்களின் எதிர்காலச் சவால்கள் என ஒட்டுமொத்தமாய் அந்த மனிதர்களின் வாழ்வின் உள்நோக்கை அப்படியே நமக்கு காட்டி அவர்களின் நிலைமீது பெரும் புரிதல் தருகிறது. இத்தொகுப்பின் கதைகள் பெரும்பாலும் கணநேர உணர்ச்சி வெளிப்பாட்டினை மையமாகக் கொண்டதாகவே இருக்கின்றன. சிறுசிறு வார்த்தைகள், செயல்கள் எப்படிப் படிப்படியாக ஒரு பெரும் விளைவினை உண்டாக்குகின்றன என்பதை விவரிக்கும் கதைகள். கண நேரத்தில் பெரும் கோபம், சோகம், விரக்தி போன்றவற்றை ஒரேயொரு நிகழ்வு கொடுத்து விடுவதில்லை. நம் மனநிலை, படிப்படியாக உருவாகும் உணர்ச்சிகள், அதன் போக்கைத் தீர்மானிக்கும் மற்றவரது செயல்கள் என நம் கட்டுப்பாடுகளை தாண்டி நம் செயல்கள், எதிர்வினைகள் வெளிப்படும் தருணங்களை இக்கதைகள் பதிவு செய்கின்றன‌. வன்மம், காமம், பொறாமை போன்ற ஆழ்மனதில் இருந்து ஆட்கொள்ளும் எதிர்மறை உணர்வுகளையும் பேசுகின்றன‌. திடீர் எதிர்வினையாய் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு ஆத்திரம், ஆற்றாமை, போன்ற உணர்சிகளைக் காட்டுபவர்களை, அவர்கள் பக்கத்து நியாங்களுடனும் புரிதலுடனும் காட்டுகின்றன இந்தக் கதைகள். புரிந்துகொள்ளும் தன்மை உடைய மக்களும் கூட இத்தகைய எளியவர்களின் உணர்ச்சிச் சலனங்களின் போது அதற்குக் காரணமாய் அவர்களின் அறியாமை, நிதானனமின்மை போன்றவற்றையே சுட்டிக் காட்டுகிறார்கள். பெருமாள் முருகனின் கதைகளில் பயணித்து அவர்களின் வாழ்வை காணும்போது எளிய மனிதர்களின் போலிப் பசப்பற்ற உணர்வுகளை புரிந்துகொள்ளலாம். தங்களது செய்கையில் சரி, தவறு, பாதிப்பு, இழப்பு, நன்மை என எதுவரினும் அந்தந்தச் சூழ்நிலைகளை நேர்மையாய் எதிர்கொள்கிறார்கள். அச்சூழலில் கதைமாந்தர்களுடன் நம்மை ஒப்பிட்டு அவர்களின் மீது வாஞ்சை கொள்ளச் செய்கிறது. ‘இருள்திசை’ எனும் கதை அவ்வப்போது வேலை பளு காரணமாகக் குடித்துவிட்டு வரும் கணவன், அவன் வீட்டிற்கு வராதபோது இருளில் சென்று அவனைத் தேடும் ஒரு பெண் மற்றும் அவளது இரு பிள்ளைகள் பற்றியது. இதில் அந்தப் பெண்ணும் அவள் மூத்த மகனும் சின்ன மகனை வீட்டில் விட்டு கணவனைத் தேடிச் செல்கிறார்கள். இது வாடிக்கையான ஒன்று, பெரிய மகனும் இதற்குப் பழக்கப் பட்டவனாகவே இருக்கிறான். அவர்கள் தேடிச் செல்லச் செல்ல விவரிப்புகளில் அவள் கணவனின் நிலை குறித்தும் இருளில் தேடும் அவர்களின் நிலை குறித்தும், அவர்கள் எதையும் எதிர்பார்த்துச் செல்வதையும் பதைபதைப்புடன் கதை பதிவு செய்கிறது. அவர்கள் ஒருவாறு, கீழே விழுந்து கிடக்கும் கணவனை தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். ஆசுவாசமான அந்தக் கணத்தில் வீட்டிலிருந்த சிறிய மகன் இருளில் தாயைத் தேடி அழுது அழுது மயங்கியிருப்பதாய், எதிர்பாரா ஒரு துன்ப அதிர்வோடு கதை முடிகிறது. இக்கதையில் தொடக்கம் முதலே இருக்கும் பதைபதைப்பு ஒரு கட்டத்தில் முடிந்ததாய் ஆசுவாசம் அடையும்போது, அடுத்த சோகம் காத்திருக்கிருந்து, அந்தப் பெண்ணுக்காக இரங்க வைக்கிறது. [] ‘கோம்பைச் சுவர்’ கதை முத்துப்பாட்டார் எனும் கவலையில்லா வயது முதிர்ந்த ஒருவரை ஆட்கொள்ளும் பொறாமைத் தீ பற்றியது. எந்தக் கவலையுமின்றி படுத்ததும் உறங்கும் வரம் பெற்றவர் அவர். அதைப் பற்றி கேட்கும் அனைவரிடத்தும் கவலையில்லாமல் இருப்பதும் கடும் உழைப்புமே தனக்கு இவ்வரத்தைத் தருவதாக பெருமையாக கூறிக்கொள்வார். அந்த ஊரில் அவருக்குச் சிநேகமான ஓர் இளைஞன் வயல் வேலைகளையும் பார்த்துக்கொண்டு, நூல் மில் வேலைக்கும் சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக அவரது ஓலை கொட்டாயின் அருகே ஒரு வீடு கட்டுகிறான். அவரிடமும் அடிக்கடி யோசனை கேட்பான், முத்துப்பாட்டாரும் அவனுக்கு யோசனைகள் சொல்கிறார். தன் காலத்தில் இதுபோல வீடு கட்டமுடியாது என்று நினைத்தவாறே தன் மகன்களிடம் வீடு கட்டச் சொல்கிறார், அவர்கள் வசதி இல்லை என்று சொல்லி மறுத்து விடுகின்றனர். முத்துப்பாட்டார் அந்த இளைஞனுடன் சகஜமாக பேசினாலும், கண் முன்னே வளரும் அந்த வீட்டின் கட்டுமானப் பணி அவருக்குள் படிப்படியாகப் பொறாமையை உண்டாக்குகிறது. சமீபமாய் நோய் போல் வந்திருக்கும் தூக்கமின்மையும் அவரைப் படுத்துகிறது. ஓர் இரவு அந்த வீட்டிற்குச் சென்று உயர்ந்து வந்து கொண்டிருக்கும் சுவற்றை இடித்துவிட்டு வந்த பின்னர் அவர் தூங்குவதாகக் கதை முடிகிறது. மேற்பரப்பில் எல்லாம் சரியாக இருந்தாலும் அடி ஆழத்தில் படரும் பொறாமைத்தீ, அதனால் ஒருவரின் குணமே மாறிப்போகும் வெளிப்பாடு ஆகியவை தெரிகிறது. ‘நல்ல கெதி’ எனும் கதை ஒரு தாய் மற்றும் இரண்டு மகன்கள் பற்றியது. தினக்கூலியான தாய் வேலையில்லாத ஒரு நாளில் காலை எழுந்தது முதல் மகன்களை அக்கறையாய்க் கவனிக்கிறாள். அவர்களும் எப்போதோ கிடைக்கும் இது போன்ற சந்தர்ப்பங்களை இன்பமாய் அனுபவிக்கிறார்கள். கம்பு மாவு இடிப்பது, பழையதை தாய் கையால் கரைத்துச் சாப்பிடுவதென அன்றைய நாள் நகர்கிறது. பக்கத்து வீட்டுப் பாட்டி, ‘உனக்கு சிங்கக்குட்டிகளாய் மகன்கள்,’ எனும்போது பூரித்துப் போகிறாள். ஒரு துக்க நிகழ்விற்கு பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கிளம்பும்போது அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் சோற்றைப் பார்த்துக் கொண்டு, எங்கேயும் போகாமல் வீட்டிலேயே விளையாடுமாறு மகன்களிடம் கூறி விட்டுச் செல்கிறாள். அவள் சென்றதும் சோற்றைக் காவல் காத்துக் கொண்டிருந்த மகன்கள் மெல்ல விளையாட்டால் ஈர்க்கப்பட்டு ஒவ்வொருவராய்ச் சென்றுச் விடுகிறார்கள். அவள் திரும்பும் போது சோற்றைப் பானையுடன் நாய்கள் எடுத்துச் சென்று தின்று விட்டதைப் பார்த்ததும் ஆவேசம் கொள்கிறாள். இரண்டு நாட்களுக்கான சோறு, பழகிய பானை என எதிர்பாரா இழப்புகளினால் ஆவேசம் கொண்டு மகன்களை அடிக்கிறாள். ஆத்திரம் தீர அடித்துவிட்டு, ஒரு பெண் குழந்தை இருந்தால் வீட்டு வேலையில் உதவியிருக்கும், எனக்கு நல்ல கெதி கிடைத்திருக்கும் என அழுவதாய்க் கதை முடிகிறது. அந்தத் தாயின் கோபம் நியாயமானதாய் இருந்தாலும் கோபத்தால் அவளுக்குக் கூடுதல் வருத்தமே மிஞ்சுகிறது. பெரும்பாபாலும் நாம் பின்விளைவுகளை எண்ணிப் பல்வேறு சூழ்நிலைகளுக்கும் மனதைத் தயாராகவே வைத்திருக்கிறோம். பிறரின் எதிர்வினையை யூகிப்பது, திட்டமிடுவது, ஏன் உணர்சிகளைக் கூட ஒத்திகை பார்த்து வைத்துக் கொள்வது வரை செய்கிறோம். அதனால் பாசாங்கற்ற எதிர்வினை சில நேரம் முதிர்ச்சியற்றதாய்த் தெரிகிறது. ஆவேசம், சோகம், சரி செய்ய முடியாத இழப்பு போன்ற சம்பவங்கள் நிகழும் இவ்வாறான கதைகளில் மேலோட்டமாகப் பார்த்து அவர்களின் அறியாமை / நிதானமின்மையை சுட்டிக் காட்டி மாற்று வழிகளை, கருத்துகளைக் கூறிவிட முடியும். ஆனால் இந்தக் கதைமாந்தர்களை ஆரம்பப் புள்ளியிலிருந்து அதற்கான மடை திறப்பு வரை உள்ள விவரிப்புகளைப் படித்து, அவர்களது நிலை உணர்ந்து அந்தச் சம்பவங்களைக் காணும் போது அதற்கான நியாங்கள் புரிகின்றன.‌ எதிர்பார்ப்புகளுக்கோ, திட்டமிடுதலுக்கோ அவகாசம் இன்றி தினசரி வாழ்வை அதன் போக்கிலேயே சென்று கையாள்கிறார்கள். ‘வேப்பெண்ணெய்க் கலயம்’ கதை ஒரு பாட்டிக்கும் கொள்ளுப் பேரனுக்கும் இடையிலான பாசத்தைப் பற்றியது. வேலைச் சூழ்நிலை காரணமாக வெளியூர் செல்லும் பேத்தி தனியே வசிக்கும் பாட்டியிடம் தன் ஆறு வயது மகனை வேறு வழியின்றி விடுமுறைக்கு விட்டுச் செல்கிறாள். பாட்டியும் இந்த வயதில் தன்னால் இப்படியொரு உபயோகமென மகிழ்ந்து ஒப்புக் கொள்கிறாள். பேரனுக்கு சுதந்திரமான கிராமம், பாட்டியின் பக்குவமான சமையல், விளையாட்டு எல்லாம் பிடித்துப் போகிறது. எல்லாம் சரியாய் இருந்தும் பாட்டியால் பேரன் விளையாடும் போது பார்த்துக் கொள்ள முடியாமல் போகிறது. மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து மரம் ஏறுதல் போன்ற அபாயகரமான விளையாட்டுகளின் போது கவலை கொள்கிறாள். எல்லாப் பிள்ளைகளும் கிணற்றில் விளையாட ஆரம்பித்ததும் பாட்டியால் பேரனைத் தடுக்கவும் முடியவில்லை, விடவும் முடியவில்லை. தன்னால் அவனைக் கவனித்துக் கொள்ள முடியாது என்று நினைத்து பக்கத்து ஊரிலிருக்கும் மற்றொரு பேத்தி வீட்டில் சிறுவனை விட்டுவிட கூட்டிச் செல்கிறாள். உற்சாகமாய் வந்த அவன் உண்மை தெரிந்ததும் கோப‌ப்பட்டு மறுக்கிறான். வேறு வழி ஓடி பாட்டியைப் பிடிக்கச் சொல்லிச் சிரிக்கிறான். பாட்டியும் அவனைப் பின்னே துரத்திச் செல்வதாகக் கதை முடிகிறது. வேப்பெண்ணெய்க் கலயம் எப்போதாவது உதவுவது போல் மிகவும் வயது முதிர்ந்த பாட்டி உபயோகப்படுவதும் அதனால் பாட்டிக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எளிய மனிதர்களின் இன்பங்கள் நெகிழச் செய்பவை. எதிர்மறைச் சூழ்நிலைகளை எப்படி அவர்கள் திட்டமிடாமல் கையாள்கிறார்களோ அதேபோல் அவர்களுக்கு முற்றிலும் தகுதியான இன்பங்களைக்கூட அவர்கள் திட்டமிடுவதோ, எதிர்பார்ப்பதோ இல்லை. அதனால் அவை மேலும் மதிப்புடையவையாகி நெகிழச் செய்கின்றன‌ கோபம், சோகம், காமம், குற்ற உணர்வு, பொறாமை, மகிழ்ச்சி என உணர்வுகளை அதன் கன‌ம் குறையாமல் பதிவு செய்கின்றன பெருமாள்முருகனின் கதைகள். கதையோடே பயணிப்பதால் முடிவிற்குப் பின் அதன் தாக்கம் நமக்குள் எதிரொலிக்கிறது. அந்த ஒரு கணத்தின் மாறுதல்களை, பாதிப்பைப் பற்றி யோசிக்க வைக்கின்றன. நம் குணத்திலிருந்து நல்லபடியாகவோ கெட்டபடியாகவோ மாறுபட வைக்கும் அந்தக் கணம் எப்போதும் வரலாம். இந்தக் கதைகளை படிக்கையில் நம் மெல்லிய உணர்வுகளின் சிறுசிறு மாற்றங்களை கவனித்துச் சுதாரித்துக் கொள்ள மனதைப் பழக்கப்படுத்திக் கொள்ளத் தோன்றுகிறது. | வேப்பெண்ணெய்க் கலயம் | சிறுகதைகள் | பெருமாள்முருகன் | காலச்சுவடு | ஜூலை 2012 | ரூ.190 | *** 15 கெட்ட வார்த்தை பேசுவோம் : அல்குல் ஆராய்ச்சியாளன் ன்பது பாடல்களிலிருந்து அல்குல் என்கிற வார்த்தையைத் தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஆகம், மறுங்குல், ஆடை மாதிரி வார்த்தைகளைப் போட்டு அச்சடித்திருக்கிறார்! அவர் மட்டுமல்ல இடக்கரடக்கல் என்கிற பெயரில் கிவாஜ, உவேசா என பாடல்களை சென்சார் பண்ணிய அறிஞர் பட்டியல் நூல்முழுக்கவே உண்டு.சங்கப் பாடல்கள் மட்டுமல்லாது நாட்டார் பாடல்களிலும் கூட சென்சார் பண்ணிய கொடூரக் கதைகளும் இருக்கிறது. இந்த ஆராய்ச்சியாளர்களால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவராக பெருமாள்முருகன் முன்வைப்பது காளமேகப் புலவரை. சிலேடைப் பாடல்களில் வல்லவரான அவர் எழுதிய இரட்டை அர்த்தப் பாடல்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு தவறான அர்த்தங்களோடும் அல்லது சொற்கள் சென்சார் செய்யப்பட்டும் வெளியாகியிருப்பதை வெட்டவெளிச்சமாக்குகிறார் பெருமாள்முருகன். சிவ பெருமானையும் சுன்னியையும் ஒப்பிடுகிற ஒரு பாடலும் அதன் விளக்கமும் இந்துத்துவர்கள் கண்ணில் சிக்கினால் கால இயந்திரத்தில் ஏறிப் போய் காளமேகப் புலவரையே பந்தாடிவிடுவார்கள் என்கிற ரகம்! கூதியில் தொடங்கி சுன்னியில் முடியும் படியெல்லாம் அவர் பாடல் எழுதியிருக்கிறார்! இதுதான் அந்தப் பாட்டு: சிரித்து புரமெறித்தான் சிந்துரத்தை பற்றி உரித்துதிரம் பாய உடுத்தான் – வருத்தமுடன் வாடும் அடியாருடன் வானவரும் தானவரும் ஓடும்பயம் தீர்த்த நஞ் சுணி இதற்கான உரையை நூலில் காண்க. “படிப்பறிவைக் கடவுளோடு தொடர்புபடுத்தி புனிதமாக்கி வைத்திருக்கிறோம். புனிதம் என்றால் அதைக் கீழ்ப்பட்ட சாதிகள் தொடலாமா? இந்தப் புனிதம் பல்வேறு நிலைகளில் செயல்படுகின்றன. அவற்றை எழுத்தில் கொண்டு வந்து விடக்கூடாது என்பதும் அப்படிப்பட்டதுதான். நடைமுறையில் இருக்கலாம் ஆனால் எழுத்தில் கூடாது! எழுத்து புனிதமானது. புனிதமான விஷயங்களை மட்டுமே எழுத்தில் கொண்டு வரவேண்டும். இந்த வரையறை எழுதப்படாத விதியாக நம் சமூகத்தில் தொடர்ந்து வருகிறது. அதனால் தான் கெட்டவார்த்தையைத் தேடியாக வேண்டியுள்ளது.” என்கிறார் பெருமாள்முருகன். இந்நூலின் ஒட்டுமொத்த நோக்கமும் இது மட்டும்தான்! | கெட்ட வார்த்தை பேசுவோம் | கட்டுரைகள் | பெருமாள்முருகன் | கலப்பை | 2011 | ரூ.100 | 16 வான்குருவியின் கூடு : அனுபவ ரசனைக்கான பாடல்கள் வான்குருவியின் கூடு : அனுபவ ரசனைக்கான பாடல்கள் நாக சுப்ரமணியன் தமிழர் என்ற முறையில் நாம் பெருமை கொள்ளக்கூடிய காவியங்கள் பல உண்டு. சங்க இலக்கியத்தை சிலர் வியப்பார்கள், சிலர் சிலப்பதிகாரத்தை மெச்சுவார்கள், சிலர் தொல்காப்பியத்தின் முழுமையைப் பாராட்டுவார்கள், சிலருக்கு ஆழ்வார்கள், தேவாரம், திருவாசகம், பலருக்குக் கம்பன், அதன் பிறகு பாரதி, பெரும்பாலானோரின் பழந்தமிழ் இலக்கிய வியப்பு இத்துடன் நிறைவடைந்துவிடுகிறது. மீதமுள்ள சிறு காப்பியங்கள், புதுக்கவிதைகள், திரைப்படப் பாடல்கள் சகலமும் ‘இன்னபிற’ என்று நிறுத்தப்படுகின்றன. இந்த வரிசையில் விடுபட்டுள்ள ஒரு வியப்புக்குரிய அம்சம், தனிப் பாடல்கள். இவற்றைத் ‘தனிப் பாடல்கள்’ என்று வகை பிரிப்பதே பெருங்காவியங்களோடு ஒப்பிட்டுதான். அப்படிப் பார்த்தால் சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் தனிப் பாடல்கள்தான், திருக்குறளில்கூட ஒவ்வொன்றும் தனிப்பாடல்தான், நாலடியாரில் ஒவ்வொன்றும் தனிப்பாடல்கள்தான், அவை முன்பே தொகுக்கப்பட்டன, நாம் ‘தனிப் பாடல்கள்’ என்று வகைபிரிப்பவை பின்னர் தொகுக்கப்பட்டன, அவ்வளவுதான் வித்தியாசம். [] ‘தனிப்பாடற்றிரட்டு’ என்றும் ஒரு குறிப்பிட்ட புலவர் பெயர் சொல்லி அவருடைய தனிப் பாடல்கள் என்றும் பிரசுரிக்கப்படும் இந்தப் பாடல்களுக்குள் ஒரு தனித்துவமான ரசம் இருக்கிறது. அதற்குக் காரணம், அந்தப் பாடல்களுக்குப் பின்னால் உள்ள கதைகளும், அவற்றை எழுதிய புலவர்கள் மொழியைத் தங்கள் இஷ்டம் போல் வளைத்திருக்கும் தன்மையும், அதைக் கொண்டு சொல்லத் தேர்ந்திருக்கும் விஷயங்களும்தான். ஆனால், இந்தத் தனிப்பாடல்கள் ஆங்காங்கே சில கட்டுரைகளில், சொற்பொழிவுகளில் வியக்கப் பட்டிருக்கின்றனவே தவிர, அவற்றுக்குத் தமிழ் வாசிப்புப் பரப்பில் பெரிய முக்கியத்துவம் கிடையாது. ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற மிகப் புகழ் பெற்ற வரிகள்கூட தனிப்பாடலில் இருந்து வருபவைதான் என்பதே இங்கே பலருக்குத் தெரியாது. பெருமாள் முருகனின் ‘வான்குருவியின் கூடு’ நூல் தனிப்பாடல்களைக் கொண்டாடுகிறது. வெறும் சொற்களால் அல்ல, அந்தப் பாடல்கள் அவருடைய வாழ்க்கையின் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படுத்திய தாக்கங்களை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். தனிப்பாடல்களை எழுதியவர்கள் நம்மைப் போன்றவர்கள்தாம். நாம் சந்தித்த அதே மாதிரியான பிரச்னைகளை அவர்களும் சந்தித்து இருக்கிறார்கள், ஆகவே, அவர்கள் எழுதியவற்றை நம் வாழ்வுடன் பொருத்திப்பார்ப்பது மிக இயல்பானது. உதாரணமாக, ‘எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது’ என்கிற ஔவை வரிகள் தரும் தன்னம்பிக்கையைப் பெருமாள் முருகன் சிலாகித்துச் சொல்கிறார், “சுயமுன்னேற்ற நூல்கள் தரும் புஸ்வாணத் தன்னம்பிக்கை அல்ல இது. எதையும் சாதித்துவிட முடியும் எனப் பொய்யுற்சாகம் தருபவை அந்நூல்கள். உனக்குள் ஒரு திறமை இருக்கிறது. அது உனக்கு எளிதாகக் கைவருவது என்று சொல்லி, இருப்பதைக் கண்டுணர்த்தும் பாடல் ஔவையாருடையது.” இப்படி வாசிக்க எளிதான தனிப்பாடல் நூல்களுக்குள் ஒருவர் நுழைவது எளிது, அதன்பிறகு அந்த உலகத்தைப் புரிந்துகொண்டு மேலும் வாசிப்பதும், காவியங்களுக்குள் செல்வதும் சாத்தியம். அதற்கு ஓர் எளிய நுழைவாயிலை இந்தப் பாடல்கள் திறந்துவைக்கின்றன. கொஞ்சம் மரபுப் பயிற்சி உள்ள எவரும் இந்தப் பாடல்களை எளிதில் எழுதிவிடலாம். உண்மையில் தனிப் பாடல்களின் சிறப்பே இதுதான். எவ்விதத்திலும் வாசிப்பவருக்கு அந்நியப்படாமல் அவர்களோடு உரையாடுவதால், மற்ற எந்த இலக்கியத்தைவிட இவற்றில் வாசிப்பைத் தொடங்குவது எளிது என்கிறார் பெருமாள்முருகன். அங்கிருந்து பிற இலக்கியங்களுக்குச் செல்லவேண்டிய தேவையை அவர் மறுக்கவில்லை, இவை மேலும் கொண்டாடப்படவேண்டும் என்கிறார். அதேசமயம், மற்ற பல பாடல் சிலாகிப்பு நூல்களைப்போல் இக்கட்டுரைகள் பாடலின் பொருளை மட்டும் விரித்துரைப்பவையாக இல்லாமல், அதை மையமாக வைத்துக்கொண்டு பல திசைகளில் சென்றுவிடாமல், ஒவ்வொரு கட்டுரையும் ஒரு விஷயத்தை மிக நேர்த்தியாகச் சொல்லி, அதன் பின்னணியில் பாடலை விளக்குவதாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு. உதாரணமாக, ஒரு கட்டுரை சென்னை நகர்வாழ்க்கையை நுணுக்கமாக விவரிக்கிறது, இன்னொரு கட்டுரை குயில்கள் பற்றிய நேர்த்தியான சித்திரத்தைத் தருகிறது, ஒவ்வொரு கட்டுரையையும் தனித்தனியே வாசிக்கலாம், தனிப் பாடல்களை இணைத்தும் வாசிக்கலாம். என்னுடைய தனிப்பட்ட கருத்து, தனிப்பாடல் திரட்டுகள் சற்றே அலட்சியத்துடன்தான் பதிப்பிக்கப் படுகின்றன. இந்த அளவு இல்லாவிட்டாலும், ஓரளவேனும் அதற்கு உண்மையாக உரை எழுதி, அதன்மீது ஆர்வம் உண்டாக்குபவர்கள் குறைவு. கதைகளில் கவனம் இருக்கவேண்டும், அதேசமயம் அதனை மையமாக வைத்து இவற்றை வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும். ஆனால், இத்தனையையும் செய்தபிறகும், தனிப்பாடல்கள் பலருக்குச் ‘சாதாரண’மாகவே தோன்றும். அதில் தவறில்லை. அவற்றைப் புறக்கணிக்காது வாசிக்க வேண்டும் என்பதே முக்கியம். மிகச் சாதாரணமான தனிப்பாடலும் வாழ்வின் ஒரு தருணத்தில் நமக்கு மிக நெருக்கமாகி ஈர்ப்பை உண்டாக்கும் என்பதே இந்நூலின் மையக்கருத்து. அது அனுபவத்தால் மட்டுமே சாத்தியமாகும். | வான்குருவியின் கூடு | கட்டுரை | பெருமாள்முருகன் | நற்றிணை பதிப்பகம் | ஜூலை 2012 | ரூ.80 | 17 பெருமாள்முருகன் - பிற படைப்புகள் / பங்களிப்புகள் கவிதை: - நிகழ் உறவு - கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் அகராதி: - கொங்கு வட்டாரச் சொல்லகராதி கட்டுரை: - ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை - துயரமும் துயர நிமித்தமும் - கரித்தாள் தெரியவில்லையா தம்பி - பதிப்புகள் மறுபதிப்புகள் - சகாயம் செய்த சகாயம் மொழிபெயர்ப்பு: - SEASONS OF THE PALM (கூளமாதாரி – மொழிபெயர்ப்பு: வ.கீதா) - CURRENT SHOW (நிழல்முற்றம் – மொழிபெயர்ப்பு: வ.கீதா) - ONE PART WOMAN (மாதொருபாகன் – மொழிபெயர்ப்பு: அனிருத்தன் வாசுதேவன்) பதிப்பு: - கொங்குநாடு (தி.அ.முத்துசாமிக் கோனார்) - பறவைகளும் வேடந்தாங்கலும் (மா.கிருஷ்ணன்) - சாதியும் நானும் (அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு) - கு.ப.ரா. சிறுகதைகள் (முழுத் தொகுப்பு) தொகுப்பு: - பிரம்மாண்டமும் ஒச்சமும் - உடைந்த மனோரதங்கள் - சித்தன் போக்கு (பிரபஞ்சன்) - கொங்குச் சிறுகதைகள் - தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள் - உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம் - தீட்டுத்துணி (அறிஞர் அண்ணா) *** 18 விலைமகள் விலைமகள் சௌம்யா விலைமகள் என்பதே முரணாக இல்லையா! விலையிட்டு மகளை நற்சமூகம் விற்குமா?   காமம் சலிக்காதிருக்க காதல் போதும் – காதல் இல்லாக்காமம் கொள்ள‌ காத்திர மனம் தேவை   ஆதித்தொழில் என்கிறார்கள் தொழிலாய்த் திரியும் முன் மானுடத்தை உய்வித்திருந்த‌ ஆதிக்காதலும் இதுதானோ!   எல்லோர் பாவங்களையும் சுமக்கப் படைக்கப்பட்டாளோ! சிலுவையாய் அவதரித்து சில தேகங்கள் சுமக்கிறாள்   துளியும் காதலில்லை கள்ளக்காதலுமில்லை ஒளிவென்ற பெயரில் துரோகங்கள் இல்லை   குற்றவுணர்ச்சி என்பது கொஞ்சமும் கிடையாது ஒன்றிற்கு மேற்பட்டால் எல்லாம் பன்மைதான்   வெறுப்பவர் முகஞ்சுளிப்பவர் அனேகர் – உடையவர் தவிர்த்து எவர் உடலையும் காமுற்று ரசித்திருந்தால் நீயும் இச்சாதி   வறுமையோ விரக்தியோ விரும்பியோ வருபவளிடம் காரணம் கேட்காதிருங்கள் தழும்பாய் மாறி இருக்கும்   தாபமொரு பசியெனில் தன்னையே அமுதாக்கித் திகட்டப் புகட்டுபவளை திட்டுக்களால் தீட்டாதீர்     பத்தினிகளைப் பத்திரமாய் பத்தினிகளாகவே காத்திட‌ சதை விற்கும் தேவதையை இழிபிறவியெனத் தூற்றாதீர்   கண்ணகிகள் தேசத்தில் மாதவிகள் விற்பனைக்கு; மணிமேகலைகள் நிலை அது அந்தோ பரிதாபம்   மரத்திட்ட‌ செல்களை மலர்வித்த எவனுக்கோ பிரசவித்த‌ மகளையேனும் தாலிக்கு அனுமதியுங்கள்! 19 ரஸ்கின் பாண்ட் - ஒரு சந்திப்பு ரஸ்கின் பாண்ட் – ஒரு சந்திப்பு என். சொக்கன் கை குலுக்கியபோது கவனித்தேன், எத்துணை மென்மையான கை! குரலும் மிக மென்மையானதுதான். தன்னுடைய எழுத்தைப்போலவே எளிய அலங்காரங்கள் நிறைந்த பேச்சு, ஆனால் துளி அலட்டல் இல்லை. விநாடிக்கு நான்கு கதைகளை நினைவுக்குக் கொண்டுவருவதும் அதில் அவர் கொள்ளும் பெருமகிழ்ச்சியும். அவர் சொல்வதில் எவையெல்லாம் உண்மை எவையெல்லாம் கற்பனை என்று நமக்குச் சிந்திக்கக்கூட நேரம் தராமல் அடுத்த கதைக்குச் சென்று விடுகிறார். எண்பதைக் கடந்த எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் இந்தியாவின் மிக முக்கியமான கதைசொல்லிகளில் ஒருவர். சிறுவர்களுக்குதான் அதிகம் எழுதியிருக்கிறார் என்றாலும், எல்லாராலும் வாசிக்கப்படுகிறவர். குறிப்பாக மலைசார்ந்த பிரதேசங்கள், அங்கு வாழும் மனிதர்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதியுள்ள கதைகள் பல ஆண்டுகளாகியும் ஆயிரக்கணக்கானோரால் தினமும் வாங்கப்படுகின்றன, ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய வாசகர்கள் அவருக்குள்ளார்கள். அவரது அலமாரியில் பிரதானமாக நிற்கும் ‘சாகித்ய அகாதெமி’ விருது தொடங்கி, சுவர்முழுக்க நிறைந்திருக்கும் குழந்தைகளின் வாழ்த்து மடல்கள்வரை அதற்குச் சாட்சி. ‘நான் எழுதிய முதல் கதையே என்னைச் சிக்கலில் மாட்டிவைத்துவிட்டது’ என்றுதான் பேச்சைத் தொடங்கினார் ரஸ்கின் பாண்ட். ‘எனக்குக் கணக்கு வராது, நூற்றுக்கு இருபத்தைந்து எடுத்தால் அதிக மார்க். ஆகவே, கணக்கு வாத்தியாரை ரொம்ப வெறுத்தேன். அவரை வைத்து ஒரு கதை எழுதினேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால், எனக்கு அவர்கள் பள்ளியிலிருந்து நன்னடத்தைச் சான்றிதழ் அனுப்ப மறுத்துவிட்டார்கள். இன்றுவரை அது எனக்குக் கிடைக்கவில்லை. இனிமேல் ஞாபகப்படுத்தினால் அனுப்பிவைப்பார்களோ என்னவோ!’ [] கணக்குதான் இப்படி. ரஸ்கின் பாண்டுக்கு நல்ல ஆங்கில ஆசிரியர் கிடைத்திருக்கிறார். பாடப் புத்தகங்களுக்கு வெளியிலும் நிறைய வாசிக்கச் சொல்லித்தந்திருக்கிறார். அதனால், நாமெல்லாம் வகுப்பைக் கட் அடித்துவிட்டு சினிமா செல்வதுபோல, ரஸ்கின் பாண்ட் வகுப்பிலிருந்து நழுவிப் பள்ளி நூலகத்துக்கு ஓடியிருக்கிறார். அவர் எந்நேரமும் அங்கேயே கிடப்பதைத் தடுக்க இயலாமல் கடுப்பாகி, ‘நீயே இந்த நூலகத்தைப் பார்த்துக்கொள்’ என்று அவரை நூலகப் பொறுப்பாளியாக்கிவிட்டார்களாம். டீனேஜிலேயே நிறைய படித்து எழுத்தின்மீது ஆர்வம் பிறந்திருக்கிறது. ஆனால் அவருடைய தாய் அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம், ‘ஒழுங்காகப் படிக்காதவர்களுக்கு ராணுவம்தானே கதி? நீ அங்கே போய்ச் சேர்ந்துகொள், எழுத்தாளனாவதெல்லாம் சரிப்படாது’ என்று சொல்லியிருக்கிறார். ‘நல்லவேளை, நான் ராணுவத்தில் சேரவில்லை, சேர்ந்திருந்தால் பீட்டில் பெய்லிபோல (ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம்) காமெடி ஆர்மிமேனாக இருந்திருப்பேன்’ என்று குலுங்கக் குலுங்கச் சிரிக்கிறார் ரஸ்கின் பாண்ட், ‘ஆனால் நான் சின்ன வயதில் ஹாக்கி விளையாடியிருக்கிறேன், ட்ரெக்கிங் போயிருக்கிறேன், இப்போதைய என் தொப்பையைப் பாத்துச் சந்தேகப்படாமல் நீங்கள் இதை நம்பவேண்டும்!’ ‘யார் என்ன சொன்னாலும் சரி, நான் எழுத மட்டுமே விரும்பினேன். அதையே வாழ்க்கையாக அமைத்துக்கொண்டேன்.’ ‘எழுத்துக்கு அடுத்து, எனக்குப் பிடித்த விஷயம், ஊர் சுற்றுதல். பெருநகரங்களில் தொடங்கி இந்த மலைப் பிரதேசங்கள் வரை எங்கும் நடந்தே சுற்றியிருக்கிறேன். அதுதான் பல விஷயங்களைக் கற்றுத் தந்தது.’ ‘உங்களை எழுதத் தூண்டிய எழுத்தாளர் யார்?’ வந்திருந்த ஒரு சிறுவன் கேட்டான். ‘ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இப்போதும் தினம் ஒரு புத்தகம் படிக்கிறேன். அவற்றில் ஒருவரைமட்டும் ஃபேவரிட் என்று எப்படிச் சொல்வது?’ என்றார் ரஸ்கின் பாண்ட். ‘பல எழுத்தாளர்களைப் பிடிக்கும். ஆனால், அவர்களுடைய எல்லா எழுத்தும் பிடிக்காது.’ ’அதற்கு என்ன காரணம்?’ ‘எனக்கு மனிதர்களைப்பற்றிப் பேசும் புத்தகங்கள் பிடிக்கும். ஆனால், சில எழுத்தாளர்கள் செய்தித்தாள் படித்த கையோடு அதைப்பற்றி ஒரு கருத்து சொல்லவேண்டும் என்று எழுத உட்கார்ந்துவிடுகிறார்கள். அவை இப்போது வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கும், ஐம்பது வருடம் கழித்து அவற்றுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. ரொம்ப அந்நியமாக இருக்கும்.’ ‘அதற்காக எழுத்தாளர்கள் சமூகப் பிரச்னைகளை எழுதக்கூடாது என்பதல்ல. சார்லஸ் டிக்கென்ஸின் கதைகளைப் பாருங்கள், அவற்றை வாசிக்கும்போது நமக்குச் சம்பந்தமே இல்லாத அன்றைய நாளின் பிரச்னைகளைத் தெளிவாக உணர இயலும். அதனால், என்னுடைய கட்சி, மனிதர்களை எழுதுங்கள் என்பதுதான். அவைதான் என்றைக்கும் வாசிக்கக்கூடியவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.’ அவர் சொல்லும்போதே சுற்றிப் பார்க்கிறேன். அவரது அலமாரியில் இருக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் நாவல்கள், கதைகள்தான். ஆங்காங்கே சுயசரிதைகள், வாழ்க்கை வரலாறுகள், காமிக்ஸ். சிறிது நேரம் கழித்து அவரே நான் கணித்ததை உறுதி செய்கிறார், ‘நான் நிறைய துப்பறியும் கதைகள் படிப்பேன், அப்புறம் பழைய க்ளாசிக்ஸ், அவ்வப்போது புதிய புத்தகங்கள், வாழ்க்கை வரலாறுகள். எதையாவது படித்துக்கொண்டே இருப்பேன், இப்போதும் தினம் ஒரு புத்தகம் படிக்கிறேன். அது தரும் மகிழ்ச்சிக்கு இணையே கிடையாது!’ ‘குழந்தைகள் யாரை வாசிக்கவேண்டும்?’ ‘ஆலிஸ் இன் தி வொண்டர்லாண்டுக்கு இணையான சிறுவர் கதை கிடையாது. அதை வாசிக்கச் சிரமமாக இருந்தால், வேறு யாரையாவது வாசிக்கச் சொல்லலாம்.’ ‘அப்புறம், டாம் சாயர். அதைச் சொன்னதும், ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது சில நாள் முன்பு ஒரு பெண் என்னைச் சந்திக்க வந்தார், தன் மகன் பள்ளியில் என்னுடைய கதையைப் படிப்பதாகச் சொன்னார். நான் மகிழ்ச்சியுடன் எந்தக் கதை என்று கேட்டேன், அவன் டாம் சாயர் என்றான். நான் திகைத்தேன். அவர்களிடம் அந்தக் கதையை எழுதியவர் மார்க் ட்வைன் என்று உண்மையைச் சொல்ல மனம் இல்லை. ஆகவே, ஆட்டோகிராஃபில் மார்க் ட்வைன் என்று எழுதிக் கொடுத்துவிட்டேன்.’ ’இதுபோல் பல நிகழ்ச்சிகள். அடுத்த மோக்லி கதையை எப்போது எழுதுவீர்கள் என்று கேட்கிறவர்கள் உண்டு. அதை நான் பொருட்படுத்துவதில்லை. யார் எழுதினால் என்ன? கதை படித்தால் எனக்கு மகிழ்ச்சி!’ ‘சிறுவர் கதைகள், பெரியவர் கதைகள். குழந்தைகள் விடாமல் வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும், அப்போதுதான் எழுத வரும்.’ ‘உங்களுக்கு எழுத்துத் தடை ஏற்பட்டதுண்டா?’ ‘உண்டு. ஆனால் அது அதிக நாள் இராது. எழுத உட்கார்ந்தபின் எழுத்துகள் விழுந்தால் போதும், விஷயம் ஏற்கெனவே மனத்துக்குள் ஓடியிருக்கும். ஒரு திரைப்படம்போல அது எனக்குத் தெளிவாக இருக்கும். எழுதினால் போதும்.’ ‘கையெழுத்து ரொம்ப முக்கியம். இப்போதெல்லாம் சிறுவர்கள் நேரடியாக லாப்டாப்புக்குச் சென்றுவிடுகிறார்கள். நான் இப்போதும் கைப்படதான் எழுதுகிறேன். அதுதான் சரி என்பதல்ல, அதுதான் பிடித்திருக்கிறது.’ ‘எழுத்து மேஜை அருகே ஒரு குப்பைத்தொட்டி இருக்கவேண்டும். பிடிக்காதவற்றை அதில் கிழித்து எறிவதை வெறுப்பாக அல்ல, விளையாட்டாகவே செய்யவேண்டும். நிறைய படித்து, நிறைய எழுதினால், நல்ல எழுத்து தானாக வரும்!’ அவருடைய இல்லம் சிறியது. பக்கத்தில் அவரது எழுத்து அறையைக் காட்டுகிறார். இதைவிடச் சிறியது. ஓரத்தில் ஒரு படுக்கை, நல்ல வெளிச்சம் வரும் ஜன்னல், எழுத்து மேஜைமீது எண்ணற்ற காகிதங்கள். ஜன்னலைக் காட்டி, ‘இந்த வழியே குரங்குகள் அடிக்கடி வரும், என் சாப்பாட்டை, உடைகளையெல்லாம் எடுத்துச் சென்றுவிடும்’ என்கிறார், ‘இதற்குமுன் வசித்த வீட்டில் இங்கே ஒரு மரம் இருந்து எனக்கு வெளிச்சம் வராமல் தடுத்துக்கொண்டிருந்தது. அதன் ஒரு கிளையை வெட்டித் தருமாறு ஒரு நண்பரைக் கேட்டேன். அவர் கோடரி தேடியிருக்கிறார். கிடைக்கவில்லை. சரி என்று ஒரு போர் வாளை எடுத்து மரக்கிளையோடு சண்டை போட்டிருக்கிறார், வாள் உடைந்துவிட்டது!’ மீண்டும் முன் அறைக்கு வருகிறோம். அலமாரிகளில் எங்கும் பிதுங்கி வழியும் பல அளவுப் புத்தகங்கள். வீட்டில் எங்கே கை நீட்டினாலும் காது குடையும் குச்சி அகப்படுவதுதான் சுகம் என்பதுபோல் ஒரு கி.ரா. கதையில் வரும், அதுபோல முசௌரியின் மிகச் செங்குத்தானதொரு மலைப்பாதையில் வசிக்கும் ரஸ்கின் பாண்டின் சின்னஞ்சிறிய வீட்டில் எங்கே கை நீட்டினாலும் ஒரு புத்தகம் அகப்படுகிறது! ‘தினமும் எழுதுவீர்களா?’ ‘அப்படிதான் ஆசை. ஆனால் நான் பெரிய சோம்பேறி, எழுதத் தொடங்குவதற்கே சில நாளாகும். எழுத ஆரம்பித்தபின் கடகடவென்று எழுதிவிடுவேன்’ என்கிறார், ‘உங்கள் குழந்தைகள் அடிக்கடி எழுதவில்லை என்றால் கட்டாயப்படுத்தாதீர்கள், என்னைப்போல் அவர்கள் எழுத்தை ரசிக்கும் நாள் வந்தால் போதும், அதன்பிறகு தாங்களே நிறைய எழுதுவார்கள்.’ ஒரு சிறுவன் பூனாவில் செய்த தின்பண்டம் ஒன்றை அவருக்குப் பரிசளிக்கிறான். ‘இதைச் சாப்பிட்டால் நான் ஃபிட் ஆகிவிடுவேனா?’ என்கிறார். இன்னொரு சிறுவன் அவர் சொன்ன சிறந்த பொன்மொழிகளை எழுதி புக்மார்க்ஸ் தயாரித்து எடுத்துவந்திருக்கிறான். ‘நான் இவ்வளவு புத்திசாலித்தனமாக எழுதிய நினைவில்லையே!’ என்கிறார். என் மகள் அவரை ஓவியமாக வரைந்து தருகிறாள், ‘என் கண்ணாடிமேல் இதை மாட்டிவிடப்போகிறேன், இது அதைவிட நன்றாக இருக்கிறது’ என்கிறார். ரஸ்கின் பாண்டிடம் சொற்கள் கொட்டுகின்றன. சும்மா பேசுவது கிடையாது. அவர் எதைச் சொன்னாலும் ரசமாகதான் இருக்கிறது. வரிக்கு ஒரு கதை இருக்கிறது. அதைக் கேட்பதில் நாமடைந்த சிறுபிள்ளை மகிழ்ச்சியை மீட்டுத்தரும் மந்திரவாதி அவர். *** 20 காமத்தின் பரிணாமம் காமத்தின் பரிணாமம் அப்பு குஷ்வந்த் சிங். இந்தப் பெயரை முதன் முதலாய் குமுதம் அரசு பதில்களில் தான் படித்தேன். அப்பொழுது அவர் எழுதிய Company of Women பற்றி ஒரு பாராவுக்கு எழுதி இருந்தார்கள். சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் அதுவரை படித்தது எல்லாம் பிசாத்து எனத் தோன்றியது. அக்கணம், ஆங்கிலப் புத்தகங்கள் படித்து ஆங்கில அறிவை (!) அகலமாக்கிக் கொள்ளும் ஆர்வம் மனதில் மிகக் கனமாகக் குடியேறியது. நான் புத்தகப் புழுவாய் மேய்ந்து கொண்டிருந்த நூலகத்தில் எல்லாம் தமிழ் புத்தகங்கள் தான். ஆங்கிலப் புத்தகங்கள் எல்லாம் படிப்பு சம்பந்தப்பட்டவை. அதையும் அலமாரியில் பூட்டி வைத்திருப்பார்கள்! இண்டு இடுக்குகளில் எல்லாம் இணையம் இழையாத இருண்ட காலம். ஆன்லைனாவது அமேசானாவது! காசு கொடுத்தாலும் எங்கள் ஊரின் எந்தப் புத்தகக் கடையிலும் கிடைக்காத காரணத்தால் ஆங்கிலப் புத்தகம் படிக்கும் ஆர்வம் அப்பொழுதே அகால மரணமடைந்தது. காலம் வரும் வரை குஷ்வந்த் சிங் காத்திருக்கட்டும் என்று கண் துடைத்துக் கொண்டேன். கல்லூரி நுழையும் முன்னர் ஆர்ச்சர் அறிமுகமாகி இருந்தார். கல்லூரி காலங்களில் சிட்னி ஷெல்டன், மைக்கேல் க்ரிக்டன், ஸ்டீபன் கிங், ராபின் குக் என பலரும் அறிமுகமானார்கள். தொன்மையானது என்றாலும் டொங்காகி விட்டது என தமிழுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருக்கையில் கண்டேன், கிண்டி பிளாட்பார புத்தக் கடையில் Company of Woman! அண்ணா, “அந்த புக் வேண்டும்” என்றேன். எது எனக் கேட்ட போது பேரை சொல்லாமல் அது அது எனக் குழந்தை போல் கை காட்டினேன். பேரம் பேசாமல் கேட்ட காசைக் கொடுத்து நடையைக் கட்டினேன். படித்துப் பார்த்த பின் புஸ்வாணமாய் இருக்கிறதே என்று தான் தோன்றியது! காரணமாக குஷ்வந்தைக் குற்றம் கூற முடியாது! குறை வைக்காமல் தான் எழுதி இருந்தார். கதையும், கலந்திருந்த காமமும் என்னைக் கவரவில்லை! அவ்வளவு தான்! எல்லாம் ஹரால்ட் ராபின்ஸால் வந்த வினை! வினையை விவரமாகப் பார்ப்பதற்கு வரலாற்றில் சற்றே பின்னோக்கிப் பயணப் பட வேண்டும். ஆங்கில அறிவை வளர்க்க அணை போடப்பட்ட காலத்தில், தத்தெடுத்த தாய்மொழியாம் தமிழ் மொழியாம் தங்கமாம் என்று நூலகத்தில் நாட்களைத் தமிழ் எழுத்தாளர்களுடன் கழித்துக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு நாளில் ஜ.ரா.சுந்தரேசன் எழுதிய மனஸ் நாவலைப் படித்து Nymphomaniac என்ற வார்த்தையும், Harold Robbins என்று ஒரு நாவலாசிரியர் நன்றாக எழுதுவார் என்று ஞானம் கிடைத்தது. எங்கள் ஊரிலும் லெண்டிங் லைப்ரரி இருக்கிறது. அங்கு அலமாரி என்ற அணை தடுக்காமல் ஆங்கில புத்தகங்கள் இருக்கும். என் நண்பன் ஒருவனின் வீட்டில் அங்கு புத்தகம் எடுப்பார்கள் என்று மேலும் ஞானம் கிடைத்தது. அவர்கள் வீட்டுக்கு போய், ஹரால்ட் ராபின்ஸ் புத்தகம் கிடைக்குமா என்று கேட்டதற்கு, Robin Williams படம் பார்க்க வேண்டிய வயதில் Harold Robbins புத்தகம் கேட்கிறதா என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்கள். அதோடு இப்படி கேள்வி கேட்டும் அவர்கள் அடிக்காமல் விட்ட பாவம் கழிய என்னை ஹர ஹர மஹாதவா என்று ஜபம் வேறு செய்ய சொன்னார்கள். (இப்பொழுது என்றால் மஹாதேவ்கியா என்று கேட்டு கடுப்பாக்கி இருக்கலாம்). கன்றுக்குட்டி காளையாய் மாறிய போது, கல்லூரி நூலகத்தில் ஒரு வழியாய் ஹரால்ட் ராபின்ஸுக்கு ஹலோ சொன்னேன். யாரந்த ஹரால்ட் ராபின்ஸ்? 25 best sellerகள், 32 மொழிகள் என அவரின் புத்தகங்கள் சுமாராய் 750 மில்லியன் காப்பிகள் விற்றிருக்கலாம் என்று சொல்கிறார்கள். இறந்த பின்னும் அவர் பெயரில் ghost writerகள் எழுதி தள்ளிக் கொண்டிருக்கும் அளவு பிராண்ட் இன்னும் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது! விற்பனை எல்லாம் சரி. அவரும், அவரின் சரக்கும் எப்படி? “ஹெமிங்வே சூப்பராக சிறுகதை எழுதுவார். அவ்வளவு தான். நாவல் என்றால் அது நான் தான். ஜான் பால் சார்த்தரின் (Jean-Paul Sartre) சிறப்பம்சம் என்றால் அது அவரின் மனைவி மட்டும் தான். என் கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் கெட்ட ஆட்டங்கள் அத்தனையும் நான் ஆடியிருக்கிறேன் அனுபவித்து எழுதி இருக்கிறேன்.” என்று அசராமல் பேட்டி அளிப்பார். அவரின் கதாநாயகர்கள், வாத்சாயனருக்கு வாத்தியார்களாய் இருக்குமளவு தகுதி படைத்தவர்கள்! அவரின் கதாநாயகர்களுக்கும் அவருக்கும் ஆறு வித்தியாசம் இருந்திருந்தால் ஆச்சரியம் தான். அவர் எழுதிய கதைகளை விட அவர் எழுதாத அவரின் வாழ்க்கைக் கதை வசீகரமானது என்றும் பேச்சு உண்டு! “அவருடைய CarpetBaggers நாவல் வெளிவந்த போது எனக்கு 8 வயது. புத்தகத்தை வாங்கிய பாட்டியும் மற்ற பெரியவர்களும் போர்வைக்கு அடியில் மறைத்து மறைத்து வைத்து படித்தார்கள். படித்து முடித்த பின் வயது வந்த பிள்ளைகள் கைகளுக்கு கிடைக்க கூடாது என்று குப்பையுடன் சேர்த்து எரித்து விட்டார்கள்” என ஹரால்ட் ராபின்ஸின் மனைவி ஒரு பேட்டியில் சொன்னார். அந்த மனைவியை மணந்த போது ஹரால்ட் ராபின்ஸுக்கு வயது 76! புத்தகத்தை எரிக்குமளவுக்கா என்றால் அந்தப் புத்தகம் தரும் பாதிப்பு அப்படி! ஒரு முறை அலுவலகத்தில் ஒரு நண்பருக்கு இதே புத்தகத்தை படிக்க கொடுத்தேன். அடுத்த நாள் திருப்பி தந்து விட்டார். சரியாக சொல்ல வேண்டுமென்றால் முகத்தில் தூக்கியெறிந்து விட்டார். என்ன அவ்வளவு சீக்கிரமாக ஒரே இரவில் படித்தாயிற்றா? நீங்கள் மெதுவாக அல்லவா படிப்பீர்கள் என்றேன். புத்தகமா இது. முடியவில்லை. பக்கத்தை திருப்பினால் பகீரென்று இருக்கிறது. சில பல ஆங்கில புத்தகங்களில் அப்படி இப்படி எழுதி இருப்பார்கள். இதில் அப்படி மட்டும் தான் இருக்கும் போலிருக்கிறது. அதுவும் இல்லாமல் எழுதப் பட்ட விதம், படு பயங்கரம். மனைவி வேறு ஊரில் இல்லை. வேறு வினையே வேண்டாம் என்று ஒடி விட்டார்! ஹரால்ட் ராபின்ஸ் ஒரு நல்ல கதை சொல்லி. புத்தகத்தை படிக்க படிக்க பக்கங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும். அவ்வளவு சுவாரஸ்யம். காதல் காமம் எல்லாம் கதையோடு கலந்து தான் வரும். ஏனெனில் அவரின் கதை மாந்தர்கள் அப்படிபட்டவர்கள்! காதல் காமம் கழித்தாலும் கதை கனஜோராகத் தான் இருக்கும் என்பது எல்லாம் என் சொந்த அபிப்ராயம். அது ஒரு புறம் இருக்கட்டும். குஷ்வந்தின் Company of Women-க்கு மீண்டும் வருவோம். குமுதத்தில் அதற்கு ஏன் அவ்வளவு பில்டப்? அப்படி என்ன கதை? கதாநாயகன் அமெரிக்க கறுப்பழகியிடம் கற்பை இழப்பதில் ஆரம்பித்து பாகிஸ்தானியப் பெண், தமிழ்ப் பெண், வேலைக்காரப் பெண், பல்கலைக்கழக ஆசிரியர் என நிறம், இனம், மொழி, தேசம், அந்தஸ்து என அனைத்தையும் கடக்கும் அவனின் காதல் களியாட்டங்களை கண் முன் நிறுத்தும். அவ்வளவு தான். அதை எழுத ஆரம்பித்த போது அவருக்கு வயது 83. எழுதி முடித்த போது 85! அதே குஷ்வந்த், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை பின்புலமாக வைத்து. மனோ மஜ்ரா என்ற ஒரு கற்பனை கிராமத்தில் நடப்பதாக Train to Pakistan என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறார். மனிதர்களின் மெல்லிய உணர்வுகளை வைத்து விளையாடியிருப்பார். கல்மனம் கொண்டவர்களுக்கும் கடைசி பக்கத்தின் கடைசி வரியில் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும்! அப்படி ஒரு Cult Classic! அதை எழுதிய போது அவருக்கு வயது 41! முதலில் Train to Pakistan படித்து விட்டு Company of Women படித்தாலும் சரி, Company of Women படித்து விட்டு Train to Pakistan படித்தாலும் சரி. இந்த கை தான் அதையும் எழுதியதா? இது வேற கை, அது வேற கை என்று தான் நிச்சயம் தோன்றும்! கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருந்த ஹரால்ட் ராபின்ஸ் கசமுசா என்று கலந்து கட்டி எழுதியதில் ஆச்சரியமில்லை. க்ளாசிக் எழுதிய குஷ்வந்த், காலம் போன வயதில் ஏன் கன்னாபின்னா என்று எழுதினார். அதற்கும் குஷ்வந்த்தே பதில் சொல்லி இருக்கிறார். “As a man gets older, his sex instincts travel from his middle to his head!” பி.கு: மனஸ் எழுதிய ஜ.ரா சுந்தரேசன் தான் அப்புசாமி, சீதாப்பாட்டி கதாபாத்திரத்தை உருவாக்கியவர். *** 21 உயிர் தப்பிய கவிதை உயிர் தப்பிய கவிதை ஷக்தி அருகம்புல் கோலேச்சும் நிலம் போலானதல்ல இக்கவிதை பூக்களையோ பனிதுளிகளையோ விரும்பியதில்லை இக்கவிதை கடவுளர்கள் கோலேச்சும் நரகத்திலிருந்தோ சாந்தரூப கடவுளின் நந்தவனத்திலிருந்தோ அது வந்திருக்கலாம் காற்றின் வேகத்தில் கண்கள் காறியுமிழும் கண்ணீருக்கும் குரூரம் ஊறிய ஆதிக்க உமிழ்வுக்கும் பேதமறியவில்லையது ஊமையின் சொல்ல முடியாத வார்த்தையாய் எந்தப் பயனுமற்று வந்திருக்கலாம் அது தர்மம் தொலைய சூது கவ்விய சமூகத்தின் அபயக் குரலில் மொழிப்பயின்று அக்கினி மழையில் நனைந்து உருக்குலைந்து மீண்டும் காணாதிருக்க விழி பிடுங்கியெறிந்த போர்க்களத்தில் குற்றுயிராய் உயிர் தப்பிய கவிதையிது சவத்திற்கும் மயானத்துக்கும் இடையே சிக்கிய நாளைக்கான வார்த்தைக்கு பதுங்குகிறது மயானத்தின் தாழ்வாரத்தில் எரிகிறது அது சவமாய் அதன் அதிகபட்ச தேடலென்பது ஓர் அரவணைப்பும் ஓர் ஆறுதல் வார்த்தையும் செல்லவோ சொல்லவோ ஏதுமில்லை உங்களில் யாராவது அரவணைக்க இயலுமா? என் கவிதைகளை. *** 22 செல்வமடி நீயெனக்கு செல்வமடி நீயெனக்கு சொரூபா “கல்யாண நாளாச்சே! என்னடி ஸ்பெஷல் இன்னிக்கு?” “ஸ்பெஷலா? துக்கம் அனுஷ்டிக்கறேன்டா. சாப்பாடே ஆக்கலை” “உனக்கிருக்கற திமிர் இருக்கே. நான் ரவுண்ட்ஸ் போகணும். வைடி போன.” சிரித்தபடி மொபைலை அணைத்தேன். அவளும் சத்தமாய் சிரித்திருப்பாள். நான் நிர்மல். அவள் மனோ. மனோன்மணி. மூன்றாம் வகுப்பிலிருந்து இருவரும் ஒன்றாய் படித்தோம். முப்பது வருஷ நட்பு. தொடக்கத்தில் ஓலைக் கொட்டகைகள் நான்கைந்து இருந்ததாய் நினைவு. நாங்கள் பத்தாம் வகுப்பு முடித்து வெளியேறும்போது தலா மூன்று தளங்களும் தளத்திற்கு ஐந்து வகுப்பறைகளும் கொண்ட ஆறு பிளாக்களாய் வளர்ந்திருந்தது. ஹிந்து டான்பாஸ்கோ மெட்ரிகுலேஷன் ஸ்கூல் என்பதை HDBM SCHOOL என்று லேபிளில் எழுதினால் போதும் என்பதுதான் மனோவிடம் நான் முதன்முதலில் பேசியது. ஒன்றிரண்டு வார்த்தைகளில் ஆரம்பித்து சளசளவென்று பேசத்தொடங்கியபோது ஆறாம் வகுப்பிலிருந்தோம். இருபாலர் பள்ளியில் பால்யம் வரம். ‘வகுப்பு’ அரசியல், தனிநபர் விரோதம், பிள்ளைக்காதல் எல்லாம் தாண்டி மெல்லிய மின்சாரமொன்று சுழன்றபடி இருக்கும். பால் ஈர்ப்பு கொள்ளுமுன் அன்யோன்யம் பிறந்திருக்கும். அப்படிப் பிறந்த அன்யோன்யம் யாரையும் உறுத்துவதில்லை. அதனாலேயே உலக்கைக்கு அந்தப் பக்கமாய் மனோ உக்கார்ந்திருக்கையில் நான் இந்தப்பக்கம் அமர்ந்து ரம்மி விளையாடியதை அவள் பெற்றோர் அனுமதித்திருக்கக்கூடும். தன் பதினைந்தாவது பிறந்தநாளில் ஆகாய வண்ணத் தாவணியும் கருநீல பட்டுப்பாவாடையும் தலை நிறைய மல்லிகையுமாய் அவள் வந்த போது சின்னதாய் வாய் பிளந்து பார்த்த ஞாபகம். உடை கொண்டு அவளை இரசித்தது அப்போதுதான் முதலும் கடைசியும். அதன் பின் பிளஸ்டூவில் மார்க் குறைந்து மெடிக்கல் கட் ஆப் வராதது, காலேஜ் ராகிங்கில் எரிச்சலுற்றது, உணவுக் குழாயில் கட்டி வந்து ஆபரேஷன் செய்தது, பிஜியில் நுழைய இரு வருஷங்கள் போராடியது, லாவண்யா போன்ற துன்பங்களில் அதட்டி அடக்கி, இம்ப்ரூவ்மெண்ட் எழுதி மெடிக்கல் ஷீட் கிட்டியது, விஜயின் ‘என்னவளே’ பாட்டுக்கு நடனமாடி அப்ளாஸ் வாங்கியது, பிஜியில் விரும்பிய துறையான ஆப்தல் கிடைத்தது, கபில் ஆகிய இன்பங்களில் சிரித்து மகிழ்ந்து… என் கூடவே பயணித்த மனோ அண்டப்பேரழகி. சுயஉணர்வு வந்தபோது இருபதாவது பெட் பேஷண்டின் கண்களில் டார்ச் அடித்துக்கொண்டிருந்தேன். நேற்று செய்த கண்புரை அறுவை சிகிச்சைகள். இன்னும் பதிமூன்று கேசுகள் பாக்கி இருந்தன. முடித்துக்கொண்டு போனால் ஓபி ஐம்பது டோக்கன் இருக்கும். “கண்ணு உறுத்துது டாக்டர்” என்றது அந்த பெட். “ம்” “நைட்டெல்லாம் ஒரே எரிச்சல்” “ம்” அடுத்த கேள்வி புறப்படுமுன் அடுத்த பெட்டுக்கு நகர்ந்தேன். இந்த ஏழு வருடங்களில் நோயாளிகள் மீதான அக்கறையும் மரியாதையும் படிப்படியாய்க் குறைந்து இப்போதெல்லாம் ‘பெட்’, ‘டோக்கன்’தான். இதுவரை மூன்று மருத்துவமனைகள் மாறியாயிற்று. மரியாதைக்குறைவென்று ஒன்று, சம்பளம் போதவில்லையென (எண்பதாயிரம்) லாவண்யா நொடித்தபடி இருந்ததால் அடுத்தது, மற்றொன்றில் அவர்களே வேண்டாம் என்று விட்டார்கள். லாவண்யா தரங்கெட்டுப் பேசியது அப்போதுதான். என் ஆண்மையை, என் பெற்றோரை, என் அக்காவை, என் அக்கா மகளை (மதுமிதா என்று மனோ தான் பேர் வைத்தாள் – “மது ன்னு கூப்பிட நல்லாருக்கும் நிர்மல்”) தன்மானம் சகட்டுமேனிக்கு தாக்கப்பட்டு மணவிலக்கைப் பற்றி பேசியவனை, “கபிலை விட்டு இருப்பியா நிர்மல்? முடியாதில்ல? சிக்கலாக்கிக்காத. விடுடா” என்று மிரட்டி அடக்கினாள் மனோ. ரவுண்ட்ஸ் முடித்து கீழிறங்கி என் கன்சல்டிங் அறைக்கு நடந்தேன். அமர்ந்திருந்தவர்களிடையே ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது. மருத்துவ மரியாதை. இருபது பேர் இருப்பார்கள். இன்னும் கூடும். பிளட்பிரஷர், பவர்விஷன், இண்ட்ரா ஆக்யூலர் பிரஷர் இம்மூன்றும் நர்ஸ்களால் பார்த்து முடிக்கப் பட்டவர்கள் ஒவ்வொருத்தராய் உள்ளே வர ஆரம்பித்தார்கள். அடுத்தகட்ட பரிசோதனைகளான ஸ்லிட் லேம்ப் எக்ஷாமினெஷன், ரெடினா செக்கப் பார்த்து ப்ரிஸ்க்ரைப் செய்யத் துவங்கினேன். இரண்டாவதாய் வந்த நடுத்தர வயது நபரை எங்கோ பார்த்தது போல் இருந்தது. அவரும் என்னை உற்றுப் பார்த்தார். வழக்கமான பரிசோதனைகள் மேற்கொண்டதில் புரை முற்றி கண் ஆபரேஷனுக்கான சகல தகுதிகளுடன் இருந்தது. “கேட்டராக்ட் முத்தியிருக்கு. உடனே ஆபரேஷன் செஞ்சுக்கறது நல்லது” “டாக்டர் உங்கள எங்கயோ பாத்திருக்கேன்” “மே பி. ட்ராப்ஸ் எழுதியிருக்கேன்” என்றுவிட்டு பெல்லடித்தேன். “நீ மனோ பிரண்டு தானே தம்பி. நான் அவ ஒண்ணுவிட்ட சித்தப்பா. மனோ கல்யாணத்தில பாத்தது. பதனஞ்சு வருஷம் இருக்கும்.” “இருபது வருஷம் ஆச்சு அங்கிள்” என்று சிரித்தேன். எனக்கும் ஞாபகம் வந்திருந்தது. “இருக்கும் இருக்கும். நல்லா படிப்பு வந்திச்சி அந்த பொண்ணுக்கு. கடமைக்குன்னே கட்டிக்குடுத்துட்டாரு எங்கண்ணன்.” “ம்ம். கேம்ப்ல வந்துட்டீங்கன்னா ஆபரேஷன் ஃப்ரியாவே செஞ்சிக்கலாம் அங்கிள். எல்லாருக்கும் ஒரே கவனிப்பு தான். உங்க நம்பர தாங்க. எப்ப வரணும்னு சொல்றேன்” என்று வாங்கிக்கொண்டு அவர் சந்தேகங்களைத் தீர்த்து அனுப்பி வைத்தேன். ப்ளஸ்டூ முடித்த மறு வருஷமே மனோவிற்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது. மெடிக்கல் என்ட்ரன்ஸ் எக்ஸாம் க்காக மெட்ராசில் உறவினர் வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தவனுக்கு இன்லெண்ட் லெட்டரில் தகவல் சொன்னாள் மனோ. அதற்குள்ளா என்று அதிர்ச்சியாக இருந்தது. எனக்கும் பத்து மாதம் சிறியவள். சேலம் திரும்பியதும் முதலில் அவள் வீட்டுக்குத்தான் ஓடினேன். சொந்தம். நல்ல இடம் என்று ஏதேதோ காரணங்கள் சொன்னார் அவள் அப்பா. “படிக்கணும்னு ஆர்வமிருந்தா கல்யாணத்துக்கு அப்புறம் கூட படிக்கலாமே கண்ணு”, அவள் அம்மா. பள்ளி நண்பர்கள் எல்லாருமே விடிய விடிய மண்டபத்தில் தங்கியிருந்து வேலைகளை இழுத்துப் போட்டு செய்தோம். முஹூர்த்தம் முடிந்ததும் ஆளுக்கு ஐம்பது நூறு போட்டு அரைபவுனில் வாங்கிய மோதிரத்தைப் பெண்ணுக்கு பரிசளித்து போட்டோ எடுத்துக்கொண்டோம் இதுவரை எல்லாம் அழகாகவே நடந்தது. இரண்டு நாட்கள் கழித்து மறுவீட்டு விருந்துக்கு மனோவின் அப்பா அழைத்திருந்தாரென்று போன அன்றுதான் என் குடிமுழுகிப்போனது. நான் போனபோது பெண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பரஸ்பர நல விசாரிப்புகள் முடிந்து கேலியும் கிண்டலுமாய் பேச்சு போய்க்கொண்டிருக்க மனோவின் அம்மா முத்துதிர்த்தார். “மோதிரம் அவ விரலுக்கு ரொம்ப லூசா இருக்கு கண்ணு” “இதை அவன்கிட்ட சொல்லியே ஆகணுமாம்மா? நூல் சுத்தி போட்டுக்கறேனே” என்றாள் புதுப்பெண். சேரில் அமர்ந்திருந்தவன் எழுந்து போய் அவள் இடதுகை பற்றி மோதிரத்தை கழற்றிப்பார்த்து “ஆமா. ரொம்பவே லூசா இருக்கே” என்றபடி மீண்டும் அவள் விரலில் மாட்டி விட்டேன். “ப்ச். மாத்திடலாம்மா” என்று சொல்லிவிட்டு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்து வீடு திரும்பினேன். அன்றிரவு மனோவிற்கும் அவள் கணவனுக்கும் விடிய விடிய சண்டை நடந்து மறுநாள் பெற்றோர் வீடு வந்தவள் மூன்று மாதங்கள் இருந்தாள். அன்பென்ற பெயரில் அசட்டுத்தனம் செய்து விட்டது புரிந்தது. ஆனால் மனோவோ அவள் பெற்றோரோ என்னைக் கோபிக்கவே இல்லை. மாப்பிள்ளை வீட்டார்க்கு எங்கள் நட்பைப் புரிய வைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிய இனி எங்கள் சந்திப்பு (தெரிந்து) நடக்காது என்று வாக்கு தந்து அவளை புருஷன் வீட்டில் கொண்டுபோய் விட்டு வந்தார்கள். கணவனைப் பார்த்ததும் ஓவென்று அழுததாகவும் அவர் நெகிழ்ந்து போனாரென்றும் அது கையாலாகததால் வந்த அழுகையென்றும் பின்னொரு நாள் சொல்லிச் சிரித்தாள் மனோ. “பொண்ணுங்களோட சிரிப்புக்கும் அழுகைக்கும் காரணம் நீ நினைக்கறதாதான் இருக்கும்ன்னு இல்ல நிர்மல்” என்பாள். அவளின் மூத்த மகன் இந்த வருஷம் இஞ்சினியரிங் முதலாண்டு. சின்னவன் பத்தாவது. என் மகன் கபில் நான்காம் வகுப்பு படிக்கிறான். பசித்தது. 44 டோக்கன் பார்த்து முடித்திருந்தேன். “இன்னும் எத்தனை பேர் இருக்காங்க சிஸ்டர்?” “எட்டு பேர் இருக்காங்க சார். சாப்டு வந்துடறீங்களா?” “ம்ம்” என்றபடி எழுந்தபோது மொபைல் ஒளிர்ந்தது. அம்மா. “சொல்லுமா” என்றேன். “அப்பா வீட்டு படி ஏறும்போது வேஷ்டி தடுக்கி விழுந்துட்டாருடா. மேல் பாதம் வீங்கினாப்ல இருக்கு” என்றதும் பகீரென்றது. “வேஷ்டிய கொஞ்சம் தூக்கி கட்டினா என்ன? நான் வர்ற வரை உன் கை வைத்தியம் எதுவும் செய்ய வேண்டாம். காலை அசைக்காம வெச்சிருக்கச் சொல்லு.” பவர்விஷன் பிரச்சனை இருந்தோரை மட்டும் வரச்சொல்லி ஸ்பெக்ஸ்க்கு எழுதித் தந்து விட்டு மற்றவர்களை முதல் டோக்கனாய் மறுநாள் காலையில் வரச் சொல்லி வெளியே வந்து காரை எடுத்தேன். திருச்செங்கோட்டிலிருந்து நாற்பது நிமிஷம் பிடித்தது சேலம் டவுனுக்குள் நுழைய. இடையில் அப்பா ஒருமுறை கால் செய்து “ரொம்ப வலிக்குதுப்பா, கிளம்பிட்டியா?” என்று கேட்டார். வீடு வந்ததும் காரை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினேன். மேல்பாதம் பொசுபொசுவென்று வீங்கியிருந்தது. அப்பாவின் கண்கள் கலங்கியிருந்ததைப் பார்க்க என்னவோபோல் இருந்தது. காரின் கதவைத் திறந்து வைத்துவிட்டு நானும் அம்மாவும் ஆளுக்கொரு கை பிடித்து மெல்ல அழைத்துவந்து காரில் ஏற்றினோம். காரில் போகும் போது என் ஆர்த்தோ நண்பன் சதீஷ்க்கு அலைபேசினேன். வீட்டில் இருப்பதாகவும் உடனே கிளம்பி வருவதாகவும் சொன்னான். அவன் கிளினிக் போனதும் வீல்சேர் கொண்டு வரச் சொல்லி அப்பாவை அமர வைத்து அவன் அறைக்கு கூட்டிச் சென்றேன். ஊதுபத்தி மணம் இன்னும் மிச்சமிருக்க சுத்தமாக இருந்தது அறை. கன்சல்ட்டிங் ரூம், சிறிய வெயிட்டிங் ஹால், எக்ஸ்ரே ரூம், பிஸியோ தெரபிக்கென ஒரு அறை. அவ்வளவே. சர்ஜரி செய்ய வேண்டி வந்தால் வேறொரு ஹாஸ்பிடலில் வைத்துக்கொள்கிறான். ஒவ்வொரு சண்டையின் போதும் இவனை இழுக்காமல் லாவண்யா இருந்ததில்லை. (உங்க கூட படிச்சவர் தானே. அவர் சாமர்த்தியம் ஏன் உங்களுக்கு இல்ல?) அவள் பிடுங்கல் தாளாமல் மாலை நேரங்களில் பார்க்கவென ஓர் அறை வாடகைக்கு எடுத்து, தேவையான மெஷினரீஸ் வாங்கி, வாரத்திற்கு ஒருவர் இருவரென பேஷன்ட்டுகள் வர, இரண்டு மாதங்கள் சும்மா போய் வந்து அதை இழுத்து மூடியாயிற்று. நான்கு இலட்சம் மதிப்பிலான பொருட்கள் அப்பாவின் வீட்டு மேல் தளத்தில் தூசு அண்டக் கிடக்கின்றன. சதீஷ் வந்ததும் எக்ஸ்ரே பார்த்தான். நான் நினைத்தபடியே மயிரிழை முறிவு. “பிளாஸ்டர் பேண்டேஜே போட்றலாம்டா. எலாஸ்டிக்னா அப்பா கம்முன்னு இருக்க மாட்டாரு” என்றுவிட்டு எங்கள் அனுமதிக்கு காத்திருக்காமல் உதவியாளனை அழைத்தான். கட்டு போட்டு முடித்து அப்பாவை வீட்டில் படுக்க வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்ததும் கொடூரமாய் பசித்தது. மணி நாலாகி விட்டிருந்தது. இன்னும் பத்து நிமிஷங்களில் கபிலின் ஸ்கூல்பஸ் வந்துவிடும். லாவண்யாவைப் போய் அழைத்துவா என்றால் ஆயிரம் கேள்வி கேட்பாள். வேலைகளிலேயே சிரமமானது பதில் சொல்வது என்பதால் அம்மாவிடம் மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு வெளியே வந்தேன். ஏதாவது சொல்வேனென்று முகத்தை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அவள் நான் எழுந்ததும் நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றினாள். பஸ் ஸ்டாப்பில் குழந்தை இறங்கி நின்றிருந்தான். நல்ல வளர்த்தி. நான்காவது படிக்கிறான் என்றால் யாரும் நம்புவதில்லை. என்னைப் பார்த்ததும் முகம் பிரகாசமாகி கண்கள் சிரிக்க முதுகிலிருந்த ஸ்கூல் பேக்கை கழற்றித் தந்துவிட்டு காருக்கு ஓடினான். என்றும் போல் இன்றும் கபில் விழிவிரிய சொன்ன கிளாஸ்ரூம் கதைகளைக் கேட்டுக் கொண்டே வீடடைந்தேன். கபில் இறங்கி கேட்டைத் திறந்துவிட்டு மேலே ஓடினான். ஹவுஸ்ஓனர் எட்டிப்பார்த்து சிரித்தார். காரை நிறுத்திவிட்டு பதிலுக்கு புன்னகைத்து மேலேறினேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கபில் கழற்றி வீசியிருந்த ஷூக்களை ஸ்டாண்டில் வைத்துவிட்டு உள்ளே போனபோது லாவண்யா மொபைலில் கொரியன் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தை உடைமாற்றிக்கொண்டிருந்தான். நானும் பெட்ரூம் நுழைந்து லுங்கிக்கு மாறி சோபாவில் அமர்ந்தேன். கபில் குதித்துக்கொண்டு வந்து லாவண்யாவிடம் இருந்து ரிமோட்டை பிடுங்கினான். “சனியனே, கேட்டால் தரமாட்டேன்?” என்றபடி எழுந்து கிச்சனுக்குள் போய் ஸ்நாக்ஸ் பாக்சைக் கொண்டு வந்து டீபாய் மேல் வைத்துவிட்டு மீண்டும் உள்ளே போனாள். டீ கொதிக்கும் வாசம் வயிற்றில் விழுந்தது. உருளைக்கிழங்கு சிப்ஸைக் கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு பாக்கெட்டோடு கபில் கையில் தந்தேன். கபிலுக்கு பாலும் எங்களுக்கு டீயுமாய் வந்தவள் என்னருகில் அமர்ந்தாள். என்னமோ கேட்கத் துடிக்கிறாள் என்று தெரிந்தது. அந்த நிமிஷம் அந்த மௌனம் வழிதவறி வீடு நுழைந்து விட்டத்தின் மூலையில் தலைகீழாய்த் தொங்கும் கருகரு வவ்வால் போல் அசிங்கமாக இருந்தது. “இன்னிக்கு சர்ஜரி இருந்ததா?” என்று அம்மௌனம் கலைத்தாள் லாவண்யா. “இல்ல. கேம்ப் கேஸ்லாம் நேத்தோட முடிஞ்சுது. இனி மண்டே தான்.” என்றேன். கொஞ்ச நேர அமைதிக்குப்பின் “இந்த வாரம் சண்டே கேம்ப் எங்க?” என்றாள். “ஜலகண்டாபுரம்” என்றுவிட்டு எழப்போனேன். “இருங்க. அப்பா போன் பண்ணிருந்தாரு.” “அதுக்கென்ன” என்றுவிட்டு அவள் முகத்தையே பார்த்தேன். “இராசிபுரத்துல அப்பா வீட்டுக்குப் பக்கத்தில ரெண்டு செண்ட்ல ஒரு வீடு விலைக்கு வருதாம். மெயினான இடமாம். இப்ப வாங்கிப்போட்டா நாம சொந்தமா இங்க கிளினிக் தொடங்கும் போது அதை வித்துக்கலாம். மூணு மடங்கு விலை ஏறிடும்” என்றுவிட்டு என் முகபாவனையை கவனித்தாள். எனக்கு ஆயாசமாக இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து இலாபம் வரும்தான். ஆனால் இப்போது பணத்திற்கு என்ன செய்ய என்ற அறிவு கூடவா இல்லை இவளுக்கு? “ஓட்டு வீடுன்னாலும் ரெண்டு செண்ட் இருபது இலட்சம் ஆகுமேம்மா. அவ்ளோ பணம் எப்படி புரட்ட?” “சேவிங்க்ஸ்ல நாலு இலட்சம் இருக்குமே. மிச்சம் கொஞ்சம் கடன் வாங்குங்க. எங்கப்பா கிட்டயும் ஹெல்ப் கேக்கலாம்.” “சேவிங்க்ஸ்ல இருக்கற பணம் உனக்கு தேர்ட் செமஸ்டர் (DGO) பீஸ் கட்ட வெச்சிருக்கேன் லாவண்யா” என்றேன் பரிதாபமாக. “இலட்ச இலட்சியமா செலவு பண்ணி படிக்க வெக்கறேன்னு சொல்லிக் காட்றீங்களா?” மூக்கு உறிஞ்சிய லாவண்யா ஓர் ஆர்ப்பாட்ட அழுகைக்கு ஆயத்தமாக இயர் போனை காதில் சொருகிக்கொண்டு பெட்ரூமிற்கு நடந்தேன். மனோ சொல்வது போல் மரபணுவில் மிச்சமிருக்கும் குழந்தைகளுக்கான சகிப்புத்தன்மை, பெற்றோர் மனநிம்மதி, ஊர் ஏச்சுகள் எல்லாம் தாண்டி கடந்துவிட்ட இந்த ஒன்பது வருட மண வாழ்க்கையை இன்னொருத்தியோடு மீண்டும் முதலிலிருந்து வாழ எனக்குச் சோம்பலாய் இருந்தது. நாளை இதைச் சொன்னால் அட்டகாசமாய்ச் சிரிப்பாள் மனோ. *** 23 நாராயணன் திடீரென ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, நாராயணன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. ஊரில் இருந்த தம்பிக்கு போன் செய்து, “விபரத்தைச் சொல்லி டேய், கோவில்ல இருந்து ஒரு சிவப்பு வேட்டி எடுத்துட்டு வாடா, எவன் கேட்டாலும் நான் பேசிக்கிறேன்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன். ஹாஸ்டலை நெருங்க நெருங்க ஏராளமான கூட்டம் இருந்தது. அலங்காரத் தேர், தாரை தப்பட்டை என பலமான ஏற்பாடுகள். படுக்க வைக்கப்பட்டிருந்த நாராயணன் மீது சிவப்பு வேட்டியை போர்த்திவிட்டு, அப்போதைய காண்ட்ராக்டரை அணுகினேன். எனக்கு ஆறு மாசமாத்தாங்க பழக்கம். இவர் இறந்த உடனே பசங்க வாட்ஸப்பில் மெசேஜ் போட்டு விட்டிருக்காங்க. 20 வருசமா இந்த ஹாஸ்டல்ல இருந்த பையங்கள்ளாம் முடிஞ்ச அளவுக்கு வந்துட்டாங்க. வெளிநாட்டு பசங்கள்ளாம் அவங்க சொந்தம், பிரண்ட்ஸ் மூலமா வேட்டி, மாலை, காசுன்னு கொடுத்து விட்டிருக்காங்க. சர்வரா இருந்த பழைய ஆளுங்க, ஸ்வீப்பர்ஸ்னு எல்லாம் கேள்விப்பட்டு வந்துட்டாங்க. பழைய லெக்சரர்கள் கூட நிறைய வந்துட்டாங்கப்பா. காலையில காலேஜ் சேர்மன் மகன் வந்து மரியாதை செஞ்சுட்டு நல்லபடியா எடுக்கச் சொல்லிட்டுப் போயிட்டாருங்க. யார் மனசும் கோணாம நல்லது செஞ்சிருக்கார்ப்பா, தங்கமான மனுஷன் என்றார். அடக்கம் முடிந்து ஹாஸ்டல் திரும்பினோம். ஏராளமான வேஷ்டிகள், மாலைகளுக்கு இடையே சிவப்பு வேட்டி ஒரு குப்பையைப் போல் கிடந்தது. *** 24 ‘போல’ கவிதைகள் ‘போல’ கவிதைகள் தமிழ் 1 அலை தழுவிய பாதம் போல குளிர்கிறது நெடுநாள் கழித்து வீடு திரும்பிய என் மனம். 2 உறக்கமில்லாத இரவுகளில் செவியை நிறைக்கும் இசை போலவே நினைவு அடுக்குகளில் இருந்து மீட்டெடுத்த உன் நினைவுகளும் மனதை நிறைக்கின்றன. 3 மூடிய சன்னலின் ஏதோ ஒரு இடைவெளி வழியே நுழைந்து குளிரேற்றும் சில்காற்றைப் போல பேசாது கழித்த நாட்களுக்கெல்லாம் சேர்த்து வைத்து நியாயம் செய்கிறது அந்த அலைபேசிக் குரல். 4 விரல் பட்டதும் எழும்பும் இசை போல உன் குரல் என்னை அழைக்கையில் அனிச்சையாக எழுந்து நடக்கின்றன என் கால்கள். 5 மழைத் தூறலின் நடுவே நின்று பருகிய தேநீர் போல துளித்துளியாக உற்சாகம் சேர்க்கின்றன‌ உன் வார்த்தைகள். 6 எங்கேயோ கேட்டு மறக்க முடியாத சந்தப்பாடலைப் போல உதடுகள் நினைத்த போதெல்லாம் முணுமுணுக்கிறது உன் பெயரை. 7 முருங்கை இலை சேர்த்து உருக்கிய நெய் வாசம் போல நினைக்கையில் எல்லாம் நெஞ்சோடு கலந்துவிடுகிறது நெடுநாள் கழித்து சந்தித்த நண்பனின் நினைவுகள். *** 25 நிழலோவியம் நிழலோவியம் பாலா [] *** 26 கன்னி நிலம் கன்னி நிலம் மீனம்மா கயல் “27 வயசு ஆகுது, இன்னும் எட்டு மணி வரைக்கும் தூங்கிட்டு இருந்தா வீடு எப்படி உருப்படும்? கொஞ்சமாச்சும் பொறுப்பு வேணும், பெரியவங்கள மதிக்கறது கிடையாது, கடவுள பழிச்சு பேசறது, விளக்கு பொருத்தச் சொன்னா அதுல ஆயிரம் நொரனாட்டியம், போற இடத்துல இவளையா சொல்வாங்க. என்ன பிள்ள வளத்துருக்கா பாருன்னு என்னைய தான் சொல்வாங்க.” காலையிலேயே அம்மா அர்ச்சனையை ஆரம்பித்துவிட்டாள், விடுமுறை நாட்களின் அவஸ்தைகள் இது. “ஏன்தான் லீவெல்லாம் விடறாங்களோ, வீட்ல இருந்தாலே எதுனா பிரச்சினை வந்துட்டே இருக்குது” என்று புலம்பிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள் மதுவந்தி. இந்தப் புகார்கள் அனைத்தும் அப்பாவிடம் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. எதை பற்றியும் கண்டு கொள்ளாமல் போர்வைகளை மடித்து வைத்தாள். “இந்த ரெண்டு நாள் தான லீவ் அவளை எதுக்கு கரிச்சு கொட்டற?” “காலேஜ்க்கு போயிட்டா மட்டும் பெரிய பொறுப்பு வந்திடுமாக்கும் உங்க மகளுக்கு? சம்பாதிக்கிறேன்ற திமிர். போற வீட்ல இப்படி இருந்தா நல்லா மெச்சுவாங்க.” பெட்ரூமிலிருந்து மது கத்தினாள். “சம்பாதித்து என்ன நானா வச்சு செலவழிக்கறேன்? உங்க கைலதான கொடுக்கறேன். எல்லாத்துக்கும் போற வீடு போற வீடுன்னு சொன்னா என்ன அர்த்தம்? ச்சை” என்று அங்கலாய்த்து பெட் மீதே அமர்ந்து கொண்டு, “எல்லாத்துக்கும் காரணம் நீதான்” என‌ அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தங்கை மீது கரடி பொம்மையை விசிறியடிக்கவும் அம்மா உள்ளே வரவும் சரியாக இருந்தது. “அவ கூட ஏன்டி சண்டைக்கு போற? உனக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு ஆனாதானே அவளுக்கு காலகாலத்துல நல்லது நடக்கும்.” இளையவளுக்கும் 23 வயது நெருங்குவது அம்மாவுக்கு இன்னுமொரு அச்சத்தை கொடுத்திருந்தது. மதுவுக்கு கல்யாணம் முடித்த கையோடு இளையவளுக்கும் ஆறு மாதத்தில் வரன் பார்க்க வேண்டும், மதுவை போல இவளுக்கு திருமணம் தள்ளி செல்ல வாய்ப்பே இல்லை. யாராக இருந்தாலும் நீங்க பார்த்து செஞ்சா போதும் என்று சொல்லிவிட்டாள். அம்மாவுக்கு அதிலொரு நிம்மதி. “உங்கூட பிறந்தவ தான இவளும், நீ மட்டும் ஏன்டி இப்படி திமிர் பிடிச்சு திரியற?” “ஆமா உங்களுக்கு நான் என்ன செஞ்சாலும் தப்பு. நான் வேணா ஹாஸ்டல்ல போயி தங்கிக்கறேன். உங்களுக்கு ஒரு பொண்ணு தான்னு சொல்லி அவளுக்கு முதல்ல கல்யாணத்த செய்ங்க. என்னமோ எல்லா தப்பும் என் மேலதான்ற மாதிரியே பேசறிங்க? வாறவன் பூரா நகைக்கு தான் ஆசைப்படறான். எவன் பொண்ணு நல்லா இருக்கா இல்லியான்னு பார்க்கறான்? மனசு பார்த்து இங்க ஒரு கல்யாணமும் நடக்கறது இல்ல. எனக்கு இப்படி பண்ற கல்யாணம் வேண்டாம். என்னைய விட்ருங்க.” இதற்கு மேல் அம்மாவோடு விவாதம் செய்ய அவள் தயாராக இல்லை. ஹெட்செட் போட்டுக்கொண்டு பாடல் கேட்கலானாள். இப்படி தான் தன் அதிகபட்ச எதிர்ப்பைக் காட்டுவாள். நீ என்னமும் பேசிக் கொள், அதை நான் கேட்பதாக இல்லை என்றவாறு. “ஏங்க, இதெல்லாம் நீங்க என்னன்னு கேட்க மாட்டிங்களா?” அப்பாவுக்கு அதற்கு மேல் அங்கிருந்து இவர்கள் இருவருக்கும் பஞ்சாயத்து செய்ய முடியாது என தன் வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டார். பாத்திரக்கடை வைத்திருக்கிறார். வீட்டில் ஓரளவு வசதி தான். மிடில் கிளாசில் இருந்து சற்றே உயர்ந்த குடும்பம் அது. ஆரம்பத்தில் அம்மாவின் கோபங்கள் எல்லாமே நியாமாகவும் தன் மீது அக்கறையாகவும் உணர்ந்த மதுமதிக்கு தற்போதெல்லாம் அப்படியல்லாமல் தான் ஒரு சுமையாக இந்த வீட்டில் இருக்கிறோமோ என உணரத் தொடங்கி விட்டிருந்தாள். அவளின் படிப்பிலும் குறைவில்லை M.Sc Physics. அது தொடர்பாக லெக்சரர் வேலை. சம்பளமும் மாதம் 24,000 வருகிறது. 23 வயதில் மாப்பிள்ளை பார்க்கத் துவங்கி இன்னும் சரியான வரன் எதுவுமே அமையாத விரக்தி அவள் பெற்றோருக்கு. ஒரு வேளை அவள் ஆரம்பத்தில் வைத்த டிமாண்ட்கள் காரணமாக இருக்குமோ என யோசித்தால் அப்படி ஒன்றும் அவை பிரமாதமானவை அல்ல. “என்னை விட மூன்று வயது மூத்திருக்கணும், கலர் பிரச்சினை அல்ல, பார்க்க கெத்தா இருக்கணும். அவ்வளோதான்.” 40 ஜாதகம் வந்து, அதில் 8 பொருந்தி, 5 நகை பிரச்சினைகளில் கழன்று கொள்ள, மற்ற மூவரை இவள் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டாள். இந்த மூவரும் மதுவுக்கு 23 வயது இருக்கும் போது வந்த வரன்கள். இதுதான் அம்மாவின் கோபத்திற்கு முதல் காரணம். மதுவுக்கோ அம்மாவின் மீது வெறுப்பு வரத்துவங்கியது இந்த நகை பிரச்சினைகளில் தான். அவளின் டிமான்ட்களுக்கு ஏற்பில்லாதவன் என்றால் கூட சரி என்று சம்மதித்தாள். சரி எப்படியும் எவனையாவது கட்டிக்கத் தானே செய்ய வேண்டும். இனி நமக்கு பிடித்தவன் எங்கே வரப்போகிறான். கொஞ்சமாவது matured-ஆக நடந்து கொள்வோம், வாழ்க்கையை எதிர்கொள்வோம் என்ற முடிவில் தான் சம்மதித்தாள். ரொம்ப நல்ல குடும்பம். பையனும் பார்க்கக் லட்சணமா இருக்கான். இத்யாதி இத்யாதி என்று பையன் வீட்டு பெருமைகளை பற்றி பேசி, நகை பிரச்சினையில் தட்டிக் கழியும் போது அந்த குடும்பத்தின் குறைகளை சொல்ல ஆரம்பிப்பாள் அம்மா. இப்போது தான் மதுவிற்கு கோபம் வரும். “அப்போ அந்த குடும்பம்ல இவ்வளோ குறை இருக்குது. ஆனா என்னை அது ஒரு நல்ல குடும்பம்ன்னு ஏமாற்றித் தள்ளி விடத்தானே பாக்க‌றீங்க‌?” மதுவிற்கு தெரிந்தே இருக்கிறது யாரும் 100% perfect இல்லை என்று இருந்தாலும் அந்த இடத்தில் இப்படிக் கத்துவது ஒரு சமாதானமாக இருந்தது. மது எப்போதும் தோழிகளோடு சொல்லிக்கொண்டே இருப்பாள். ”ஒருத்தன் வருவான். எந்த காரண காரியமும் இன்றி அவனை எனக்கு பிடிக்கும். உயிரில் நிறைவான். அப்படி ஒருவனை கல்யாணம் செய்யணும்.” ஒரு வேளை அப்படி ஒருவனை இவள் இன்னும் பார்க்கவில்லையோ? வெளியில் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் உடைந்துதான் போயிருந்தாள். எனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று கவலையாக இருக்கிறதென எந்தப் பெண் தான் வெளிப்படையாகச் சொல்வாள்? கூடப்படித்த பெண்கள் அனைவரையும் குழந்தை சகிதம் பார்க்க நேர்கையில் அவர்களை சந்திப்பதைத் தவிர்ப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை. உறவுக்காரர்களின் அறிவுரைகளுக்குப் பதில் சொல்லி மாளவில்லை. அந்தக் கோவிலுக்கு போ, விளக்கு போடு, பிரதோஷ விரதம் இரு என தனக்கு ஒத்து வராதவைகளைக் கேட்டு கேட்டுச் சலித்து போயிருந்தாள். அம்மாவுக்கோ இவள் கடவுள் மேல் பெரிய நாட்டம் இல்லாதது தான் திருமணத் தடை என்று தீவிரமாக நம்புகிறாள். அவள் நம்புவதற்கு ஏதேனும் ஒரு சாக்கு வேண்டும். கூடவே அடுத்து இருக்கும் தங்கையின் வாழ்கையும் துணை சேர அர்ச்சனைக்குக் குறைவே இல்லை. மதுவை பொறுத்தவரை தான் எடுத்த முடிவுகள் தவறோ? என்ற மனநிலையில் எந்த சரியான முடிவும் தன்னால் எடுக்க முடியாதென்று நம்ப தொடங்கி இருந்தாள். எனக்கான என் வாழ்க்கை துணையை நான் தீர்மானிப்பதில் தவறென்ன இருக்கிறது? வரதட்சணை நகை நட்டு சமாச்சாரங்களில் துளி அளவும் விருப்பமில்லை. இருந்தும் அதற்குச் சம்மதித்தேன். என் ஆசைப்படி ஒருவன் வரப்போவதே இல்லை எவனையோ கட்டிக் கொள்ளலாம் என்ற முடிவும் இப்போது எடுத்தாயிற்று. ஒன்று அம்மாஞ்சியாக வருகிறான், இல்லையென்றால் முரடனாக வருகிறான். அம்மா எப்போதும் சம்பளத்தையும் குடும்ப பின்னணியும் தான் பார்க்கிறாள். எனக்கு ஏற்றவனா என்று பார்ப்பதே இல்லை, எல்லாம் கூடி வருமென ஒரு குடும்பத்தைப் புகழ்கிறாள் இல்லையென்று ஆனதும் இகழ்கிறாள். உண்மையில் அவள் எனக்காகத் தான் இதெல்லாம் செய்கிறாள். நான் காயப்பட்டு விடக்கூடாதே என்றுதான் செய்கிறாள். ச்சே, இப்படி ஒரு நல்ல குடும்பத்தில் நம்ம பொண்ணுக்கு வாழ கொடுத்து வைக்கவில்லையே என்று சொன்னால் நான் வருத்தப்படத்தானே செய்வேன். இது புரிகிறது ஆனால் இது எனக்கு புரியாமல் இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி? எனக்கு வரும் கணவன் முதலிரவில் என்னை தூங்க வைத்து அழகு பார்க்க வேண்டுமென ஆசைப் படுகிறேன். ச்சீ, அதெப்படி முதல் நாளே செக்ஸ் வைத்துக்கொள்ள முடியும்? அதுவெல்லாம் ஒரு மழை நாளில் தானாய் நிகழ வேண்டும். கல்யாண ஆசை என்றால் செக்ஸ் வைத்துக்கொள்வது தானே! ஆனால் அப்படி எந்த ஆசையும் எனக்கு வரவில்லையே! உண்மையில் எனக்கு கல்யாண ஆசை இல்லையா? அல்லது அந்த வயதை தாண்டிவிட்டேனா? கூட படித்த பெண்கள் எல்லாம் அவனவன் கூட ஊர் சுத்தி அங்க தொட்டான் இங்கு தொட்டான் என்ற கதைகள் கேட்டிருக்கிறேன். சிலர் படுக்கை பகிர்ந்த செய்தி வரை சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல மாப்பிள்ளையாக அமைகிறார்கள். எனக்கு மட்டும் ஏன்? இவ்வளவு ஓழுக்கமாக இருந்தது யாருக்காக? ஒரு வேளை நானும் அவர்கள் போல நிறைய ஆண்களோடு சுற்றி இருந்தால் எனக்கு கல்யாணம் என்பது பெரிய விசயமாகவே இருந்திருக்காது தானே? இப்போது யாரையாவது காதலித்தால் என்ன? 27 வயசுல எப்படி காதல் வரும்? கேள்விகள் கேள்விகள் கேள்விகள். எதற்கும் பதிலில்லை அவளிடம். கல்லூரிக் காலத்தில் வந்த ப்ரப்போசல்கள், தன் பின்னால் சுற்றிய ஆண்கள். தோழன் ஒருவன் விரும்புகிறான் என்று தெரிந்தும் அவனுக்கு அதைச் சொல்ல வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது. எல்லாம் நினைவில் ஆடியது, தன அழகிற்குக் கிடைத்த அங்கீகாரமாகவே நினைத்துக் கொண்டாள். பழைய நண்பர்களோடு தற்போது வாட்சப்பில் பேசினால் எல்லாரும் தவறாமல் சொல்லும் வாக்கியமாக ”நான் கூட உன்னை விரும்பினேன்” என்பது இருக்கிறது. எனக்கு மட்டும் கல்யாணம் ஆகியிருந்தால் இவர்கள் இப்படிச் சொல்வார்களா? ஆழம்தானே பார்க்கிறார்கள்? சரி, பழைய நண்பர்கள் தானே என்ற உரிமையில் சாட் செய்து கொண்டிருந்தாள். தோழிகளோடு அதிகம் பேசுவதில்லை. அவர்கள் அக்கறை என்ற பெயரில் ஆறுதல் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள் பழைய நண்பர்கள் பழைய நண்பர்களே. அவர்களால் தற்போது பழையபடி இருக்க முடியாது என்று தெரிந்தே வைத்திருந்தாள். எனில் ஆண் நண்பர்களோடு மட்டும் ஏன்? அவன் தான் அடிக்கடி ”நீ அழகு” என்று சொல்கிறானே! கெத்தான பெண் என்கிறான், தேவதை போல் இருக்கிறாய் என்கிறான். உடலை வர்ணிக்கிறான், வரம்பு மீறினாலும் நாம் என்ன பதின்பருவ பெண்ணா இதற்கெல்லாம் கோபப்பட என்று திடீரென mature ஆகிறாள், இதெல்லாம் கேட்பதற்குச் சந்தோசமாக இருக்கிறதே! சுயநலம் தான். ஆனால் இவள் ஏதோ தான்தான் பெருந்தன்மையாக அவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தாள். “சமையலுக்கு கூட ஒத்தாசை செய்யாமல் செல்போனையே கட்டிக்கிட்டு அழு” என்ற அர்ச்சனையோடு குழம்பு தாளிக்கும் வாசனை. மதியம் சாப்பிட வந்த அப்பா ஒரு கவரை இவளிடம் நீட்டி, “பையன் பெயர் ஆகாஷ் பெங்களூரில் வேலை. மாதம் 60,000 சம்பளம். வயசு 29. உன் போட்டோ எல்லாம் பார்த்து ஒக்கே சொல்ட்டாங்க, நகை பேசியாச்சு, ஜாதகம் ஏக பொருத்தம் இருக்குது. நீ பாரு. உனக்கு சரின்னா அவனை வரச் சொல்வோம். இனி உன் பேச்சு கேட்காமல் எந்த வரனும் நம் வீட்டிற்கு வர மாட்டாங்கடா.” அப்பாவின் பேச்சு அவளுக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது. கவலைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்ததால் இவளுக்கெல்லாம் என்ன கவலை இருந்துவிட போகிறது எதற்கும் அசரமாட்டாள் என்று தன்னை பற்றிய ஒரு பிம்பம் படிந்துவிட்டதோ என யோசித்தாள். நல்லவேளை அப்படியாகவில்லை. பார்வையிலிருந்து அப்பா மறைந்ததும் கவரைப் பிரித்து பார்த்தாள். முழுக்கை சட்டையை மடித்து விட்டுக்கொண்டே தலை தாழ்த்தி, பார்வை உயர்த்தி, லேசாக சிரித்தபடி போஸ். ப்ளைன் ஒயிட் சர்ட், தொப்பை இல்லை, முடியும் அடர்த்தியாக இருந்தது, கலர் மாநிறம் தான். பெரிய அழகெல்லாம் இல்லை. ஆனால் ஆண்மை நிரம்பி இருந்தது அவனிடம். பார்த்த மாத்திரத்தில் அந்த கெத்து பிடித்துப்போனது. ஏக மனதாக முடிவெடுத்துச் சொன்னாள், “சரி வர சொல்லுங்கப்பா”. அப்பா சிரித்துக்கொண்டே “சரி நாளைக்கு சாயந்திரம் வெள்ளனவே வீட்டுக்கு வந்திடு. அவங்க வர்றாங்க.” ஜாதகம், நகை எல்லாமும் சாதகமாகவே இருக்கிறது. புகைப்படம் பார்த்து என்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டான். இவனை நாளை வரச் சொல்வது கூட ஒரு சம்பிரதாயம் தான். இவனையே கட்டிக் கொள்ளலாம். என் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டது. உனக்காகதானடா இத்தனை நாள் காத்திருந்தேன். நாளைக்கே பூவைத்து உறுதி செய்தால் நன்றாக இருக்கும். இவன் கெத்துதான். ஆனால் நான் கிடைப்பதற்கு இவன் கொடுத்துவைத்திருக்க வேண்டும். அது சரி, அப்பாவுக்கு எப்படித் தெரியும் இவனை எனக்கு பிடிக்குமென? ஏற்கனவே வரச் சொல்லிவிட்டுத் தான் என்னிடம் அனுமதி கேட்டாரா? இந்தக் கேள்விகள் எல்லாம் இப்போது அனாவசியமாகத் தோன்றியது. உடனே FB ஒப்பன் செஞ்சு அவன் பெயர் வேலை செய்யும் கம்பெனி படித்த கல்லூரி என ஒவ்வொன்றாக டைப் செய்து அவன் அக்கவுன்ட் தேடி எடுத்துவிட்டாள். அதில் அவன் ஒரு சுற்றுலாப் பிரியன், ராஜா ரசிகன் என்பதும் அடிக்கடி FB உபயோகிக்க மாட்டான் என்பதும் தெரிந்தது. அவனின் போட்டோக்களில் ஏதேனும் பெண் பெயரில் கமென்ட் இருக்கிறதா எனத் தேடினாள் ஒரே ஒருத்தி மட்டும். அதுவும் ”கலக்கல் அண்ணா” என்ற கமென்ட். அதனால்தான் அவளை மன்னித்தாள். அம்மாவின் திட்டு இல்லாமல் எந்த மனக்குழப்பங்களும் இல்லாமல் ஒரு நல்ல இரவு அவளுக்கு. கல்யாணம் பற்றிய அத்தனை கேள்விகளுக்கும் அவனைப் பதிலாக்கிவிட்டு நிம்மதியாக தூங்கினாள். மறுநாள் காலை அவனுக்காகவே குளிப்பது போல உணர்ந்தாள். இந்த உடலை அவன் தான் ஆளப் போகிறானா? ச்சே என்ன இது ஒரு பெண் பார்க்கும் படலத்திற்கே இப்படி எல்லாம் தோன்றுகிறதே. இல்லை இல்லை, இது பெண் பார்க்கும் படலம் இல்லை. கல்யாணம் முன் பெண்ணும் மாப்பிளையும் சந்தித்து பேச ஒரு வாய்ப்பு. அப்படிதான் நான் நம்புகிறேன். அப்பா தான் சொல்லிவிட்டாரே, எல்லாமும் ஒக்கே என்று. சும்மாவா நல்ல நேரம் பார்த்து பெண் பார்க்கவே வரச் சொல்லுவார்கள்! ஏதோ இருக்கிறது! எனக்கு கூட உள்ளுணர்வு சொல்கிறது, அவன் தான் கணவன் என. யுகம் யுகங்களாய் எனக்காகவே காத்திருந்த ஒருவன். அப்பறம் என்ன. யோசிக்கலாம் தப்பில்லை. எப்படி அவன் முன் முழு நிர்வாணமாய் நிற்பேன்? பீரியட்ஸ் டைமில் நாமே போய்த்தான் நாப்கின் வாங்க வேண்டும். குளித்து முடிப்பதற்குள் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டிருந்தாள். கழுத்தோர பல் தடம், உதட்டில் காயம். எல்லாம் அவனால்தான். அதை எப்படி மறைப்பதென்று சேலை கட்டும் போது யோசித்து முந்தானையைக் கழுத்தை சுற்றிப் போட்டு பார்த்தாள். ஹ்ம்ம், இப்ப ஒக்கே யாருக்கும் காயம் தெரியாது. இடுப்புக் கொசுவத்தை தொப்புளுக்கு மேலே ஏற்றிவிட்டாள், ஜாக்கெட்டோடு சேர்த்துச் சேலையைப் பின் செய்து கொண்டாள். இனி அவனுக்கு மட்டும்தான் எல்லாமே.., அவன் மட்டும்தான் பார்க்கணும். கல்லூரியில் எல்லா கண்களும் தன் அழகை ரசிப்பதாகவே எண்ணிக்கொண்டாள். எல்லா ஆண்களையும் பொறுக்கி போல பார்த்துக் கொண்டு. உங்களுக்கு இந்த அழகு கிடைக்காது. அதற்கு ஒருவன் வரப் போகிறான். ஒரு சந்தோஷக் குதூகலம் அதில் மறைந்திருந்தது. ஒரு விடுதலை உணர்வு இருந்தது. மாலை 3 மணிக்கெல்லாம் காலேஜில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டாள். அம்மா ஆச்சரியமாகப் பார்த்து, “ஏன்டி, உன்னைய எங்கயும் திரியாம 5 மணிக்குத் தான வரச்சொன்னேன்?” “அட, போம்மா இன்னிக்கு எக்ஸாம் டியூட்டி இருந்துச்சி. அதான் சீக்கிரம் முடிஞ்சுட்டு.” என வாயில் வந்த பொய்யைச் சொல்லி மீண்டுமொருமுறை குளித்து, அவனுக்காகவே பிரத்யேகமாகத் தயாரானாள். பீரோ முழுக்க சேலை இருந்தாலும், பெண்களுக்கு, பிடித்த சேலை என்று ஒன்றிரண்டு தான் இருக்கும். அப்படியான ஒன்று – அதுவும் மயில் கழுத்து வண்ணப்பட்டு – எடுத்து உடுத்திக்கொண்டாள், ஒரே ஒரு டிசைனர் நெக்லஸ். புதுக்கண்ணாடி வளையல். ஐம்பொன் கொலுசென ஆர்வமாய்த் தயாராகிக் கொண்டிருந்தவளை அம்மா பார்த்துச் சிரித்துவிட்டுக் கடந்தாள். ஆறு மணிக்கு வந்தார்கள். வாசலில் அப்பாவின் ”வாங்க எல்லாரும் வாங்க” சொல் கேட்டதுமே அடி வயிற்றில் ராட்டினம் சுற்ற ஆரம்பித்துவிட்டது. இதயம் படபடத்தது, எழுந்து நின்று கொண்டு வரவேற்கத் தயாரானாள். முதலில் அவன் பெற்றோர், பின் ஒரு பெண் – அனேகமாக சித்தியாக இருக்கலாம். மரியாதை நிமித்தமாய்ப் புன்னகைத்தாள். இவர்களை எல்லாம் இப்போது யார் கேட்டது? எங்கே ஆகாஷ்? எங்கே என் ஆகாஷ்? அவனுக்கு வணக்கம் சொல்லவென பயிற்சி எடுத்து இருந்தாள். கைகள் அரூபமாய் அடிக்கடி வணக்கம் சொல்லிப்பார்த்தது. மின்னலென வந்தான். ஜீன்ஸ் பேன்ட், வெள்ளைக்கலர் கார்கோ சட்டை, முகம் முழுக்கப் புன்னகை. ஷேவ் செய்யாமல் ட்ரிம் செய்து இருந்தான். கார் பார்க் செஞ்சுட்டு வந்தேன் என்ற காரணத்தை அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் கண் பார்த்து மார்புக்கூடெங்கும் பட்டாம்பூச்சி. வணக்கம் சொல்ல மறந்தவளாய் தலையசைத்துப் பார்வையால் வரவேற்றாள். இப்படி ஏன் என்னைத் தலைகுனிந்து உட்கார வைத்து இருக்கிறார்கள். இதற்கு முன் இப்படிப்பட்ட அனுபவம் உண்டு என்றாலும் அவர்கள் எல்லாரும் அம்மாஞ்சி மாப்பிள்ளை. இல்லன்னா முரட்டு ஆசாமி. அதனால் தான் எதுவுமே தோன்றியதில்லை. ஆனால் இவன் அப்படி அல்லவே. கணவனாகப் போகிறவன் அல்லவா! அதனால்தான். இப்போது இவனை எப்படிப் பார்ப்பது? அவன் கவனத்தைத் தன் பக்கம் எப்படி ஈர்ப்பது என்ற யோசனையில் இரண்டு முறை இருமினாள். கண்ணாடி வளையல் சலக் சப்தம், பட்டுப் புடவைச் சரிகை என ஒவ்வொன்றாய் அவனை இவள் பக்கம் திருப்பின. அவன் பெற்றோர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதாய்த் தான் அவனை ஏறெடுக்க வேண்டி இருந்தது. எதேச்சையான பார்வை தான் கண்களில் நிலைகொண்டது, பார்வையாலே வருடினான். நீ ரொம்ப அழகு என்று கொஞ்சினான். பதட்டப்படாதே என ஆற்றுப்படுதினான். என்ன இது எனப் பட்டென கண்களை விலக்கி, இனி அவன் பார்க்காத போதுதான் பார்க்க வேண்டும் என முடிவு செய்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேறெங்கோ பார்த்தபடி நடித்துக்கொண்டிருந்தனர். கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் அவனை அணுஅணுவாய் ரசித்தாள். அவன் செய்கை, உட்காரும் விதம், யாருக்கும் தெரியாமல் புருவம் உயர்த்தி பிடிச்சிருக்கா என கேட்டது, ஒவ்வொன்றாய் அவனை உள்வாங்கி விட்டாள். இவளுக்கு அந்த இடத்தில் இருப்புக் கொள்ளவில்லை. ஐயோ, என்ன இவன், என்னை இப்படிப் பார்கிறான். தின்று விடுவான் போல. அவ்வளவு பிடித்திருக்கிறதாடா என்னை? இத்தனை வருடப் பெண்மை உனக்காகத்தான். அப்படி பார்க்காதே, என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. கால்களை உள்ளிழுத்து சேலையால் மறைத்துக்கொண்டாள். கைகளும், கழுத்தும், முகமும், நிர்வாணமாக இருப்பது போல உணர்ந்தாள். உன் முன் ஐந்து ஆடை தரித்தாலும் எல்லாம் வீண்தான் போல. சிரிக்க வேண்டும் போல இருந்தது. அடக்கிய சிரிப்பு கன்னத்தில் வெட்கமாக வெளிப்பட்டதை அவளே உணர்ந்தாள். ஓ இப்படிதான் வெட்கம் இருக்குமா! நன்றாகத் தான் இருக்கிறது. நோக்காக்கால் தனை நோக்கி மெல்ல நகும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஒரு மணி நேரம் லயித்திருந்தாள். கிளம்பும் போது வாசல் வரை வழியனுப்ப வந்து, அவன் பட்டெனத் திரும்பி மூச்சு சுடும் நெருக்கத்தில் போய்ட்டு வருகிறேன் என்று சொல்லும் போது, ஒரு கணம் அதிர்ந்து பார்வையால் விடை கொடுத்தாள். செருப்பு போடுவதில் துவங்கி கார் அருகில் செல்லும் வரை திரும்பி திரும்பி பார்த்தான். கண்களால் ஏதோ சொன்னான். சீக்கிரம் வருகிறேன் என்பதாக மதுவுக்குப்பட்டது. இவன்தான் இவன்தான் நான் எதிர்பார்த்தவன் இவன்தான். இவனோடுதான் என் மிச்சகாலம். என் எல்லா அறிவையும் மழுங்கடித்து விட்டான். வேறெதுவும் யோசிக்கவிடாமல் செய்துவிட்டான். தங்கை வேறு காதை கடித்தாள். ”ஏய் எரும, அவன் உன்னை எப்படிப் பார்த்தான் தெரியுமா?” “ஆமாம் போ.” தனக்கு இது ஒரு பெரிய விசயமில்லை என்பதாகக் காட்டிக்கொண்டாள். மறுநாள் காலையில் அப்பா போனில் பேசிக்கொண்டு இருந்தார். அவர் சம்மந்தி சம்மந்தி என்று பேசுவதை கேட்பதற்கே அவளுக்கு ஆனந்தமாக இருந்தது. “இல்ல சம்மந்தி. அது இப்ப எடுத்த போட்டோ தான்.” “கோவிலுக்கு கூப்டு வந்தப்ப நீங்க பார்த்திங்கல்ல, அப்பறம் என்ன?” “பொண்ணோட வயசு ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்தது தானே?” “மாப்ள என்ன சொல்றார்?” “வீடு பார்க்க வந்தப்பவே நீங்க சொல்லி இருக்கலாம்” “சரிங்க, பரவால்ல ஜாதகத்த ப்ரோக்கர்ட்ட கொடுத்து விட்ருங்க.” அப்பாவின் குரல் தள்ளாடியது. அம்மாவிடம் தன் ஆற்றாமையை காட்டிக்கொண்டிருந்தார். “இவன் போனா போறான். பெரிய மாப்ள. அவனும் அவன் மொகரையும் பொறுக்கி மாதிரி இருக்கான். பொண்ணு போட்டோல ஒருமாதிரி இருக்காம் நேர்ல ஒரு மாதிரி இருக்காம். அவன் அப்பன்தான் கோவில்ல வச்சு பார்த்தான்ல. அப்ப தெரியலயாமா? என் பொண்ணு ராசகுமாரிடி.” மதுவிற்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என யூகிக்க முடிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை. இதற்கும் காரணம் நான்தான் என்று திட்டினால் நான் அழுதுவிடுவேன். இல்லை, நான் அழ மாட்டேன். தைரியமாக இருக்க வேண்டும். அவனுக்கு என்னை எப்படி பிடிக்காமல் போகும் கண்ணால் பேசினானே? இல்லையெனில் அது ஒப்பீடா? அப்பா சொல்வது போல பொறுக்கியாக இருப்பானோ? இருந்தால் தான் என்ன? கண்ணாடியைப் பார்த்தாள். நான் அழகாகத்தானே இருக்கிறேன்? இப்போது யாராவது என்னை அழகென்று வர்ணித்தால் நன்றாக இருக்கும். பைத்தியம் பிடித்து விடும் போல இருக்கிறது. அறையைப் பூட்டிக்கொண்டு அழலாம். இல்லை, எவனோ ஒருவன் பெண் பார்க்கும் சாக்கில் சைட் அடிச்சுட்டுத் தான போயிருக்கான் இதற்கெல்லாம் எதற்கு அழனும்? நான் அழக்கூடாது. எதற்கும் கவலை இல்லாதவள் என்ற பிம்பம் தான் இந்தக் குடும்பத்தை கொஞ்சமேனும் நிம்மதியாக வைக்கும். நான் ஒரு லெக்சரர். எனக்கு maturity அதிகம். இதற்கெல்லாம் அழுவதற்கு நான் என்ன சின்ன பிள்ளையா? என்று தன்னை தானே சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கும்போது, அப்பா உள்ளே வந்து சொன்னார். “மது…” “என்னப்பா?” “அழாதம்மா.” வெடித்து அழத் தொடங்கினாள். *** 27 குவியொளி குவியொளி மகள் (@iAgarshana) - எனக்கு கதை சொல்லிக்கொண்டே, அப்பா தூங்கி போகிறார்! - அப்பாவின் விரல் பிடித்து நடக்கிறேன். சிறுவாளியால் கடலை அள்ளிவிட முடியாதா என்ன! - அப்பாவின் சிறுமுத்தம் ஆற்றுப்படுத்துகிறது, அழக்கூடாது எனும் நினைப்பை! - என் உடைகளும் என்னுடன் சேர்ந்து வளர்ந்தால் நன்றாக இருக்கும். பிடித்த உடைகள் இழக்கிறேன். - இப்போதெல்லாம் எனக்கு ஊசிப்போட டாக்டர் அங்கிள்தான் பயப்படுகிறார்! - பள்ளியே செல்லாத எனக்கும் ஞாயிறென்றால் மகிழ்ச்சிதான், அப்பா முழுதும் வீட்டில் இருப்பார்! - பூச்சாண்டிக் கதைகளையும் நான் பயப்படாதபடி சொல்ல அப்பாவால் மட்டுமே முடியும்! - பேஸ்ட் இனிப்பாக இருக்கயில் விழுங்காமல் பல் துலக்க எப்படி முடியும்! - எங்க மிஸ்ஸோட பொண்ணு பாவம். அவளுக்கு வீட்டுலயும் மிஸ் இருப்பாங்க. - அப்பாவுடன் தங்க மீன்கள் சென்றேன். எனக்குப் பிடிக்கவில்லை, அப்பாவையே அழ வைத்துவிட்டது! - சுவாரஸ்யமாக கதை சொல்வதில் அப்பா மிகவும் கெட்டிக்காரர், அதனாலேயே என்னைத் தூங்க வைக்கமுடியாமல் தோற்றுவிடுகிறார். - அம்மா பாரபட்சமாக நடக்கிறாள். நான் மட்டும் அதிகமாகவும், அப்பா அளவாகவும் சாப்பிட வேண்டுமாம். மாற்றிக்கொண்டால்தான் என்ன! - பாட்டியின் கண்ணாடியணிந்தால் நான் மிஸ் போல் இருக்கிறேனாம். எங்கள் மிஸ்கூட கண்ணாடி அணிந்தால் பாட்டி போலதான் இருக்கிறார். - வளையல், தோடு, பாசி, கொலுசு என எத்தனையிருந்தும் அப்பாவின் தொளதொள வாட்சைக் கையில் தொங்கவிடும் போதுதான் மகிழ்ச்சி! - அம்மா என்னிடம் “சிலேட் பென்சில் தின்பதற்கில்லை, எழுத மட்டுமே” எனச் சொல்கிறாள். இதை சிலேட்டிடம் அல்லவா சொல்லவேண்டும்! - பெரியவர்களாய் இருந்து என்ன பயன், என்னைப் போல் வாயெல்லாம் கிரீம் அப்பிக்கொண்டு கேக் சாப்பிடத் தெரியாமலிருக்கிறார்கள்! - சுவர் முழுவதுமே எனக்கு ஸ்லேட்டாகத் தெரியும்போது கையடக்க ஸ்லேட்டுக்குள் முடங்கச் சொல்கிறது ப்ரீகேஜி! - அம்மாவைப் போல் அப்பாவுக்கு சரியாக ஊட்டிவிடத் தெரியாது. பாவம், அதனாலேயே அவரிடம் அடம் பிடிக்காமல் சாப்பிட்டு விடுகிறேன். - அப்பாவுடன் பைக்கில் முன்னமர்ந்து செல்லும்போது பிறர் அப்பாவிற்கு வைக்கும் வணக்கத்தில் எனக்குதான் எவ்வளவு பெருமிதம்! - பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட்டு அது கிளம்பும்வரை டாட்டா காட்டிக்கொண்டே நிற்கும் அப்பாவைவிட பள்ளி என்ன கற்றுத்தரும்! - நிலவில் பாட்டி வடை சுடுகிறாள். காகம் வடையை திருடுகிறது. நரிக்கு எட்டவில்லை. இவை மூன்றும் வெவ்வேறு கதைகளின் வரிகளாம்! - எருமை மாடொன்று முதுகில் சிட்டுக்குருவி சுமந்து வாலை மிதமாக ஆட்டிக்கொண்டே புல் மேய்கிறது, ஹோம்வொர்க் கவலையில்லாமல். - அப்பாவின் நண்பரான போலிஸ் அங்கிளின் துப்பாக்கியில் ரோல் கேப் வைத்து சுடமுடியாதாம். ரிப்பேர் ஆனதையா இவ்வளவு பாதுகாக்கிறார்! *** 28 எண்ணியாங்கு என்கொலல் எண்ணியாங்கு என்கொலல் வெ. இராதாகிருஷ்ணன் புதிய ஊர் ஒன்றில் புதிய வேலை முடிவாகி இருந்தது. தற்போது செய்து கொண்டு இருக்கும் வேலையை விடவும் சிறப்பானதாக, பிடித்தமானதாக இருந்தது உடனே வேலை மாற்றலுக்கு ஒப்புக் கொள்ள ஒரு காரணமாகி இருந்தது. இந்த வேலையில் சேர்ந்து சில மாதங்கள் பின்னர் மணமுடிப்பது என முடிவு பண்ணப்பட்டு இருந்தது. புதிய ஊர் எப்படி இருக்கிறது எனப் பார்க்க முதல் முறையாக புதிய ஊருக்குச் சென்ற போது வழியில் ஒரு தனி மரத்தின் காட்சி மனதில் ஒரு பிரியத்தை உண்டு பண்ணியது. சாலையில் இருந்து வண்டிப் பாதை ஒன்று அந்த மரம் இருந்த நிலம் ஒட்டி செல்கிறது. எதற்கு இந்த மரம் இங்கு இருக்கிறது, எவர் நட்டு வைத்தது என்கிற வரலாறு எவரும் எழுதவில்லை. அந்த மரத்திற்கு சற்று தொலைவில் தெற்கு திசையில் ஒரு வீடு தெரிந்தது. அவ்வீட்டில் இருந்துதான் ஊரே ஆரம்பிக்கிறது. அந்த ஊரைத் தாண்டிச் சென்றால் தான் மாற்றலாகிச் செல்லும் ஊர் ஐந்து கிமீ தொலைவில் வரும். நிலம் குறித்து ஊரில் சென்று விசாரித்ததில் குப்புசாமி நிலம் என்றும் அந்த மரத்தைச் சுற்றி அரை கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் அவரது நிலப்பரப்பினை எவரும் பராமரித்து வருவதில்லை என்றும் சொன்னார்கள். யார் அந்த குப்புசாமி என்று கேட்டால் ஒரு வீடற்ற வீடு ஒன்றைக் காட்டி, பட்டணத்திற்குச் சென்று இருப்பதாக சொன்னார்களேயன்றி எந்த ஊர் என்று சொல்லவில்லை. இதற்கு முன்னர் எப்போது ஊருக்குள் வந்தார் என்று கேட்டபோது மூன்று வருடங்கள் இருக்கும் என்றே தோராயமாகச் சொன்னவர்கள், எவரிடமும் அவர் பேசவில்லை என்று சொன்னார்கள். எப்போது ஊரைவிட்டுப் போனார் என்றபோது பத்து வருடங்கள் இருக்கும் என கணக்கிட்டார்கள். குப்புசாமியின் உறவினர்கள், பிள்ளைகள், மனைவி எவரேனும் உள்ளனரா என ஊரில் விசாரிக்கையில் யாரும் இல்லை என கைவிரித்தார்கள். வீடற்ற வீடு. சுவர்கள் இடிந்து விழுந்து கிடந்தன, அங்கிருந்த கற்களை எவரேனும் எடுத்துச் சென்று இருக்கலாம். வீடற்ற வீட்டின் நான்கு திசைகளிலும் மூன்று அடிகள் இடம் விடப்பட்டு இருந்தது. வீடற்ற வீட்டினைச் சுற்றிச் சுற்றி வரத் தோன்றியது. சூரியனின் ஒளி நேரடியாக எல்லா பரப்பிலும் அந்த வீடற்ற வீட்டில் விழுந்து கொண்டு இருந்தது. 400 சதுர அடியில் சதுர வடிவமாக அவ்வீடு அமைந்திருக்கலாம். அங்கே முட்செடிகள் வளர்ந்து இருந்தன. ஆடுகள் சில அதைத் தமது இருப்பிடமாகக் கொண்டிருந்தன‌. மீண்டும் அதே தனி மரம். மரத்தின் இலைகள் கீழே விழுந்து கொண்டு இருந்தன. அந்த இலைகளுக்கு மரத்தின் கிளைகள் மீது பிடிமானமோ அல்லது மரத்தின் கிளைகளுக்கு இலைகள் மீது பிடிமானமோ இல்லாது இருக்கலாம். அன்றைய தினத்தில் மிகவும் கடுமையான வெயில் அடித்துக் கொண்டிருந்தது. மரத்தின் நிழல் தாண்டி கீழே விழுந்த இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கனவே இருந்த சருகுகளுடன் சருகுகளாக மாறிக் கொண்டிருந்தன‌. காற்று வீசுகிறதா இல்லையா என்று மரத்தின் இலைகள் பார்த்தோ சருகுகள் பார்த்தோ சொல்ல இயலவில்லை. அத்தனை நிசப்தமாக எல்லாம் நடந்து கொண்டிருந்தன. புதிய ஊர் சென்று பார்த்து விட்டு அதே வழியில் திரும்புகையில் சற்று மெதுவாக காற்று வெப்பத்தைத் தூக்கிக் கொண்டு வீச ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக காற்றின் வீச்சு அதிகரிக்கவே சருகுகள் காற்றில் எந்த திசையில் பறக்கிறோம் என்கிற எண்ணம் ஏதும் இன்றிப் பறக்கத் தொடங்கின. இனி அந்தச் சருகுகளுக்கும் மரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இலைகள் உதிர்த்துவிட்ட மரமோ எவ்விதப் பிரக்ஞையும் இன்றி பல வருடங்களாக இப்படியே நின்று கொண்டு இருப்பதாகவும், எவரும் இதனுடைய பூக்கள், காய்கள், கனிகள் பறித்ததே இல்லை எனவும் வருடம் தோறும் தவறாமல் மூன்று முறை இலைகள் உதிர்த்தும், பூக்கள் உதிர்த்தும் கனிகள் உதிர்த்தும் தனது காலத்தைத் தள்ளிக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்கள். உதிர்ந்த கனிகளை எவரும் எடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை எனவும், இந்த மரத்தில் எந்த ஒரு பறவையும் வந்து உட்கார்ந்து சென்றதாக எவரும் சொல்லவில்லை. பெரும்பாலான கனிகள் அங்கேயே அழுகி மட்கிப் போனது உண்டு எனச் சொன்னார்கள். மரமற்ற மரம். குப்புசாமி குறித்து பல்வேறு இடங்களில் விசாரிக்கத் தொடங்கியாகிற்று. சில வாரங்களின் தேடலுக்குப் பின்னர் முதியோர் இல்லம் நடத்தி வரும் கோவிந்தன் மூலம் குப்புசாமி இருந்த இடம் கண்டுபிடித்தாகி விட்டது. தளர்ச்சி அடைந்த உடல். கண்ணாடி அணியாத கண்கள். தலையில் அடர்த்தி தளர்ந்தாலும் சடை வளர்த்த முடி. முகச்சவரம் செய்யாமல் நீண்ட தாடி வளர்த்து இருந்தார். பற்கள் சற்று உறுதியாகத்தான் இருந்தன. பார்ப்பதற்கு எப்படியும் எழுபது வயது இருக்கும் என கணிக்க முடிந்தது. அவரிடம் சென்று வீடற்ற வீடு, மரமற்ற மரம் குறித்து விசாரித்த போது நினைவுகள் இருக்கத்தான் செய்தது. வீடும் நிலமும் வேணுமா என்றபோது பதில் சொல்ல முடியவில்லை. குரல் தளர்ந்து இருந்தது. உள்ளே சென்று பத்திரப்படுத்தப்பட்ட பத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து காட்டி இந்த பத்திரம்தானே வேணும், என்னையவா எடுத்துக் கொள்ளப் போகிறாய் என்பது போல பார்வை. சற்று மனம் கனத்தது. கண்களில் ஈரம் நிறைந்து கொண்டது. ஒரு நிமிடம் என்று சொல்லியபடி அந்த முதியோர் இல்லத்தைச் சுற்றி வந்து கால்கள் அவரிடமே நின்றன‌‌‌. கோவிந்தனின் அனுமதி பெற்று குப்புசாமியை உடன் அழைத்துச் சென்று வீடற்ற வீடும், மரமற்ற மரம் கொண்ட நிலமும் கணிசமான தொகை கொடுத்து பெயர் மாற்றம் செய்தாகிவிட்டது. முதியோர் இல்லம்தனில் மீண்டும் சென்று சேர்ந்து கொண்டவர் அத்தனை பணத்தையும் கோவிந்தனிடம் கொடுத்தார். குப்புசாமி தான் இறப்பதற்கு முன்னர் இதைச் செய்ய வேண்டும் என்றே பேசிக் கொண்டு இருந்ததாகச் சொன்னார் கோவிந்தன். மரமற்ற மரம். நிலத்தினை அளந்து முடித்தாகிவிட்டது. ஒரு சில தினங்களில் சுற்றி கற்கள் நட்டு வேலி ஒன்று போடப்பட்டது. அந்த நிலத்தினை ஒட்டிச் செல்லும் வண்டிப் பாதையில் இருந்து நிலத்திற்குச் செல்லும் பாதை ஒன்று அமைத்தாகி விட்டது. மரத்தில் இருந்த காய் ஒன்றை பறித்துக் கடித்த போது கசப்பாக இருந்தது. நெல்லிக்காய் போல கடித்து விட்டு தண்ணீர் குடித்தால் இனிக்கும் என்ற எண்ணத்தில் தண்ணீர் குடித்தாலும் கசப்பு போகவில்லை. மற்றொரு கிளையில் கனி இருந்தது. பறித்து கடித்த போது அதை விடக் கசப்பாக இருந்தது. ஊரில் சென்று கேட்டபோது சுற்று வட்டாரத்தில் இப்படி ஒரு மரம் இல்லை எனவும் இம்மரத்தை கசப்பு மரம் என அழைப்பதாகவும் சொன்னார்கள். பட்டுப் போன நிலத்தை வாங்கினால் வாழ்க்கைப் பட்டுப் போகும் – குப்புசாமி போல என ஊர் முழுக்க பேசத் தொடங்கினார்கள். வீடற்ற வீடு. முட்செடிகளை வெட்டியாகி விட்டது. ஆடுகள் ஓடி மறைந்தன. ஒரு சமையல் அறை, சின்ன வரவேற்பறை, சின்னப் பூஜை அறை, சின்ன கழிப்பறை எனக் கீழேயும், மாடியில் கழிப்பறைகள் கூடிய இரண்டு படுக்கை அறைகள். மேலே ஓடு மேய்ந்து கட்ட எத்தனை நாட்கள் ஆகும் என விசாரித்தபோது மூன்றே மாதங்களில் கட்டித் தருவதாக ஒரு கொத்தனார் சொன்னார். இது நடக்கக்கூடியக் காரியமாகத் தென்படவில்லை என அங்கிருந்தவர்கள் பேசினார்கள். கொத்தனாரிடம் உறுதி கொடுத்தாகி விட்டது. கசப்பு மரம். இந்த மரத்தின் காய், கனி ஏன் இத்தனை கசக்கிறது என இலைகள் மென்று பார்த்தபோது வாயில் வைக்க இயலவில்லை, அனிச்சைச் செயலாக அப்படியே துப்பிவிட வேண்டும் போலிருந்தது. இந்த மரத்தினைச் சோதித்துவிட வேண்டும் என எண்ணம் கொண்டு இலைகள், காய், கனி என பறித்து ஆராய்ச்சி செய்து பார்த்த போது பைட்டோஸ்டீரால் (Phytosterol) எனும் வகை சார்ந்த β-சைட்டோஸ்டீரால் (β-Sitosterol) மற்றும் கேம்பஸ்டீரால் (Campesterol) பெருமளவில் இந்த இலைகள், கனி, காய்களில் இருப்பதாக ஆய்வின் முடிவு வந்தது. 100 கிராம் எடுத்துக்கொண்டால் தவிட்டு அரிசியில் 1 கிராம், கருதுதனில் 900 மில்லிகிராம், கோதுமையில் 500 மில்லிகிராம், கடலைப்பருப்பில் 200 மில்லிகிராம், பெரும்பாலான காய்கறிகளில், பழங்களில் அதிகபட்சம் 25 மில்லிகிராம் இவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கசப்பு மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் என எடுத்துக் கொண்டால் 100 கிராமிற்கு இலையில் 1 கிராம், கனியில் 5 கிராம், காய்தனில் 5 கிராம் என இருந்தது. இது மிக அதிகம். [] [] β-சைட்டோஸ்டீரால் கொலஸ்டீரால் இந்த பைட்டோஸ்டீராலுக்கும் நமது உடலில் உள்ள கொலஸ்டீராலுக்கும் (Cholesterol) மூலக்கூறின் வடிவமைப்பில் ஒற்றுமை இருக்கிறது. இதன் காரணமாக இந்த பைட்டோஸ்டீரால் நமது உடல் செல்கள் கொலஸ்டீராலை உறிஞ்சுவதைத் தடுத்து, இரத்தத்தில் உள்ள கொலஸ்டீரால் அளவுதனை குறைக்கும் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு கிராம் இந்த பைட்டோஸ்டீரால் உட்கொண்டால் நமக்கு இருத நோய் வராமல் பாதுகாக்கும் எனவும் எல்டிஎல் (LDL – Low Density Lipoprotein) எனப்படும் புரதக் கொழுப்பின் அளவு குறையும் எனக் கண்டறியப்பட்டது. நமது உடலில் கொலஸ்டீரால் நமது செல்களின் உறைக்கு மிகவும் முக்கியமாகும். மேலும் ரத்தநாளங்களின் உறை, பாலின ஹார்மோன்களின் உற்பத்தி ஆகிவற்றுக்கும் அவசியமானதாகும். எப்படி இந்தக் கொலஸ்டீரால் நமது உடலுக்குப் பயன்படுகிறதோ அதைப்போல தாவரங்களின் செல்களின் உறை உருவாக்கத்திற்கு இந்த பைட்டோஸ்டீரால் உதவுகிறது. இந்த கொலஸ்டீரால் கல்லீரலில் உற்பத்தி செய்யப்பட்டு தானாக இந்த ரத்த நாளங்கள் செல்ல இயலாத காரணத்தினால் எல்டிஎல் (LDL) போன்ற புரதக் கொழுப்பு எடுத்துச் செல்கிறது. அங்கே அளவுக்கு அதிகமான கொலஸ்டீரால் இருந்தால் அதை எச்டிஎல் (HDL – High Density Lipoprotein) எனும் புரதகொழுப்பு மீண்டும் கல்லீரலுக்குக் கொண்டுவந்து கொலஸ்டீராலை சிதைவுமாற்றம் செய்கிறது. [] LDL (Orlova EL et.al., 1998 PNAS vol 96 no 15 p8420-8425) மிக அதிகப்படியான கொலஸ்டீரால் மற்றும் டிரைகிளிசிரைடு இருந்தால் அவை ரத்தநாளத்தில் படிந்து, நாளத்தினை மூடி இருதய வலி ஏற்படுத்தி மரணம் உண்டு பண்ணும் அளவு சென்று விடும். எனவே தான் நமது உடலில் கொலஸ்டீராலின் டிரைகிளிசிரைடு அளவு எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகமான எல்டிஎல் கெட்டது எனவும் அதிகமான எச்டிஎல் நல்லது எனச் சொன்னாலும் இரண்டும் போதிய அளவு தேவை, அதே வேளையில் கொலஸ்டீரால் உற்பத்தி அளவோடு இருக்க வேண்டும். கொலஸ்டீரால் அளவுதனைக் குறைக்க ஸ்டாடின் எனும் மருந்து உபயோகத்தில் உள்ளது. இவை கொலஸ்டீரால் உற்பத்திக்கு உதவும் வினையூக்கிகளை தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்டது. [] சிம்வசாடின் பைட்டோஸ்டீரால் இந்த ஸ்டாடின் போலச் செயல்படுவதில்லை. டிரைகிளிசிரைடு (Triglyceride <1.7mmmol/L) எனப்படுவது நமது உடலில் சேரும் கொழுப்பு. இது நமது உடலுக்கு சக்தியை வழங்கக்கூடியது. இது அளவுக்கு அதிகமாக அதிகமாக இருதய சம்பந்தமான பிரச்சினைகள் உண்டு பண்ணக் கூடியவை ஆகும். அதிக கொலஸ்டீரால் மற்றும் அதிக டிரைகிளிசிரைடு உடலில் இருந்தால் அதிக பாதிப்பு உண்டாகும். [] டிரைகிளிசிரைடு இத்தகைய தன்மை கொண்ட இந்த மரத்தின் விதைகளை எங்குமே பரப்பி இருக்கவில்லை எனத் தெரிகிறது. அதே நிலத்தில் வேறு மரங்கள் உருவாகவும் இல்லை என்ற போது சற்று ஆச்சரியமாக இருந்தது. இந்த நிலத்தில் எங்கேனும் தண்ணீர் இருக்கிறதா என ஆராய்ந்தபோது நீர் ஓட்டம் எங்கும் இல்லை என சொன்னார்கள். இப்படி மரமற்ற மரத்தின் நிலத்தில் எல்லாவித ஆய்வும் நடந்து கொண்டு இருக்கையில் ஊரில் நிலைமட்டம் வரை வீடு கட்டப்பட்டுவிட்டது. மூன்று மாதத்தில் எப்படி வீடு கட்டுவார்கள் என சவால் விட்டவர்கள் கொத்தனாரிடம் வீடு மழைக்கு, காத்துக்கு விழப்போகுது என கேலி பேசிச் சென்றார்கள். வீடு பலமில்லாமல் கட்டப்படவில்லை என கொத்தனார் உறுதி கொடுத்துக்கொண்டு இருந்தார். புதிய தொழில்நுட்ப முறையில் கம்பிகள் கொண்டு கட்டப்படுவதால் பல ஆண்டுகள் வீடு உறுதியாக நிற்கும் என அவர் சொன்னபோது அந்த வழியாகச் சென்ற ஒருவர் “அந்த கசப்பு மரத்தை வெட்டிப் போடு, வெங்காயம்” என சொல்லிச் சென்றார். அதற்கு கொத்தனார் எக்காரணத்தைக் கொண்டும் அந்த மரத்தை வெட்டிப்போட வேணாம் என அச்சத்தில் சொன்னார். மரம் உறுதியாக வெட்டப்படமாட்டாது எனக் கொத்தனாரிடம் உறுதி அளிக்கப்பட்டது. இப்படி நடந்து கொண்டிருந்த சமயத்தில் தனிமரத்தினைப் பார்த்த 55வது நாளில் புதிய வேலைக்கு சேர்ந்தாகிவிட்டது. அவ்விடந்திலிருந்து வேலை செல்ல மூன்று மணி நேரம் கணக்கானது, ஆதலினால் ஓரளவுக்கு முழுமையாக கட்டப்பட்ட வீட்டில் பால் காய்ச்சி தேவையான பொருட்களுடன் தங்கியாகிவிட்டது. பூச்சு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இன்னும் பத்து பதினைந்து நாட்களில் வண்ணம் தீட்டிவிடலாம் என கொத்தனார் தன்னிடம் ஆள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு இருந்தார். கசப்பு மரத்திற்கு வேறு ஒரு பெயர் தேடி பைட்டோ மரம் என ஊரில் பரப்பிவிடப்பட்டது. சிறுவர்களிடம் சொல்ல அதை அவர்கள் பைட்டோ பைட்டோ என எப்போதும் சொல்ல ஆரம்பித்து இருந்தார்கள். உடல் கொழுப்புதனை குறைக்கும் வல்லமை கொண்ட மரம் இது என மெதுவாக பரப்பிவிடப்பட்டது. இந்த பைட்டோஸ்டீரால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என முழு விபரம் தெரியாத காரணத்தினால் பழங்களை அளவோடு உட்கொள்வது நல்லது என சொன்னாலும் கசப்பு என்பதால் எவரும் எடுத்துக் கொள்ள முன் வரவில்லை. ஊரில் ஒருவர் கொழுப்புச் சத்து தனக்கு அதிகம் இருப்பதாகவும் எந்த மருந்தும் கட்டுப்படுத்தவில்லை எனவும் சொன்னதால் பழத்தினை பொடிப் பொடியாக்கி கொஞ்சம் தர கண்களை மூடி உட்கொண்டவர் தினம் கொஞ்சம் கொஞ்சம் தரவேண்டிக் கேட்டுக்கொண்டார். இப்படியாக ஊரில் இருந்த சிலர் பைட்டோமரத்தின் கனிகள் உட்கொள்ள ஆரம்பித்தார்கள். வீடு சரியாக எண்பதாம் நாளில் முடிவுக்கு வந்து பிரமாதமாக காட்சி அளித்தது. பாறைகளில் இருந்துதான் இந்தக் கனிமங்கள் சிதறி அவை நிலத்தில் மூழ்கி பின்னர் தாவரங்கள் உருவாக காரணமாக இருந்தது என ஒரு தரிசு நிலம் பண்பட்ட நிலம் ஆன வரலாறு குறிப்பிடுகிறது. அதுபோலவே பண்பட்ட நிலம் சரிவரப் பராமரிக்கப்படாமல் போனால் அது தரிசு நிலம் ஆகும் தன்மை கொண்டது என இந்த பைட்டோமரத்தின் நிலம் வரலாறு எழுதிக்கொண்டு இருந்தது. எந்த நிலத்தில் நீர் ஓட்டம் இல்லை என சொன்னார்களோ அதே நிலத்தில் ஈரப்பதம் அற்ற நிலம் எனில் இந்த மரம் எப்படி இத்தனை நாட்கள் நிற்கும் என வேறு ஒருவர் சொல்லிக்கொண்டே நீர் ஓட்டம் இருப்பதாக காட்டப்பட்ட இடத்தில் தோண்டப்பட ஐம்பது அடிகளில் தண்ணீர் வரத்து உண்டானது. கல்லுதரை எனச் சொல்லி இத்தனை வருடங்கள் மறுக்கப்பட்ட நிலமானது சிலர் மூலம் உழுது போட முடிந்தது. அந்நிலத்தில் பைட்டோமரத்தின் விதைகளை வரிசைப்படி எல்லாம் நட்டு வைத்தாகிவிட்டது. இனி இந்த விதைகள் வளரும் என்றோ வளராது என்றோ ஆருடம் சொல்ல இயலாது. போதிய கனிமங்கள் இருக்கும் எனில் பைட்டோமரம் அங்கே ஒரு தோப்பாகும். பட்ட நிலம் இனி பைட்டோ நிலம் ஆகும். ஊரில் இருந்தவர்கள் நெருங்கி வந்து பேசத் தொடங்கினார்கள். “ராசி இல்லாத வீடு, ராசி இல்லாத நிலம்னு பேசிட்டுத் திரிஞ்சோம்” என அங்கலாய்த்தார்கள். பைட்டோ கனிகள் உட்கொண்ட சிலர் கொழுப்புச் சத்து கணிசமான அளவு குறைந்துவிட்டதாக சொன்னார்கள். இருப்பினும் இந்த பைட்டோஸ்டீரால் குறித்த முழு ஆய்வு வெளியாகும்வரை கவனமாக உடற்பயிற்சி, உணவு எடுத்துக்கொள்ளும் அளவு போன்றவைகளில் கவனம் செலுத்துவது நல்லது எனச் சொல்லப்பட்டது. பூமி ஒரு காலகட்டத்தில் ஏதுமற்ற நிலப்பரப்பாக இருந்ததுதான். கரியமிலவாயுவை உட்கொள்ளும் முன்னர் வைரஸ் எனும் புரத அமைப்பு கொண்ட நுண்ணுயிர் தோன்றி அதற்குப் பின்னர் பாக்டீரியாக்கள் தோன்றி இந்த கனிமங்கள் தாவரங்கள் உருவாக்கி தாவரங்கள் விலங்குகள் உருவாக்கி மனிதர்கள் உருவாக்கி மனிதர்கள் தொழில்நுட்ப அறிவு வளர்த்து எத்தனயோ சாதனைகள் என இந்தப் பூமியில் நிகழ்த்தி இந்த பிரபஞ்சத்தின் ரகசியம் கண்டறிந்து கொண்டதாய் அறிவியல் எழுதிக்கொண்டு இருக்கிறது. எவரின் எண்ணப்படி இவை எல்லாம் நடந்து கொண்டு இருந்தது, இருக்கிறது! அந்தக் கசப்பு மரம் பைட்டோமரம் ஆனது, வீடற்ற வீடு ஒரு பிரமாதமான வீடாக அதுவும் குறிப்பிட்ட தினங்களில் உருவானது எவரது எண்ணப்படி? ஒரு மனிதர் தனது வாழ்நாளில் அற்புதமான எண்ணங்கள் கொண்டு அந்த எண்ணப்படி வாழ்ந்திட எவருக்கு நன்றியுடன் இருத்தல் அவசியம்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து கொண்டு இருந்தது. சில வாரங்களில் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனது. விதைகள் ஒன்றுகூட சோடை போகாமல் முளைவிடத் தொடங்கின. கசப்புத்தன்மை கொண்டிருப்பதால் எந்த ஒரு விலங்கோ, பறவையோ பைட்டோமரத்தின் அருகில் செல்லாமல் இருந்துதுள்ளன‌. ஆனாலும் நோய் தீர்க்கும் அபூர்வ குணம் கொண்டு இருந்தது பைட்டோமரம். இந்த மரத்திற்கு இந்த எண்ணம் எவர் கொடுத்தது எனத் தெரியாது, எவருக்கு இந்த மரம் நன்றி நவில வேண்டும் என மரத்திற்கும் புரியாது. *** 29 ஜெர்மானிய இளைஞனின் கதை ஜெர்மானிய இளைஞனின் கதை (Adventure of the German Student) மூலம்: வாஷிங்டன் இர்விங் | தமிழில்: நவீனன் அநார்க்கீயன் பிரஞ்சுப் புரட்சியின் காலம். புயல் வீசிக் கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் ஜெர்மானிய இளைஞன் ஒருவன் பாரிஸ் நகரத்தின் பழைய பகுதியைக் கடந்து தனது வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான். மின்னலொளி வீசியது; பேரிடியின் ஓசை தெருக்களை அதிர வைத்தது. உங்களிடம் இந்த ஜெர்மானிய இளைஞனைப் பற்றி முதலில் சொல்ல வேண்டும். காட்ஃபிரிட் வுல்ஃப்காங் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். கட்டிங்கனில் சில காலம் படித்தான். தொலைநோக்கும், சுறுசுறுப்பும் கொண்டவனாதலால் ஜெர்மானிய மாணவர்களைக் குழப்பத்திலாழ்த்தும் சில தத்துவக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டான். அவனது தனியான வாழ்க்கை, ஆழமான சிந்தனை, எப்பொழுதும் படிப்பென்றே இருப்பது போன்ற விஷயங்கள் அவனது மனதையும் உடலையும் பாதித்தன. உடல்நலம் கெட்டுப் போக, மனநலமும் குன்றியது. ஆன்மீக சாரத்தைப் பற்றிய கற்பனாவாதத்தில் தன் மனத்தினைச் செலுத்தி ஸ்வீடென்போர்கைப் போல தனக்கென ஒரு நிறைவான உலகத்தைத் தன்னைச் சுற்றி உருவாக்கியிருந்தான். தீய சக்தியொன்று தன்னை வலையிலகப்படுத்தி நரகத்துக்கு நேராகக் கொண்டு செல்லும் நோக்குடன் எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருப்பதாக நினைத்தான். இந்த நினைப்பு அவனுக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. உடல் மெலிந்து மனம் நலிவுற்றது. அவனது நண்பர்கள் இந்த மனப்போக்கை அறிந்து இடம் மாறுதலே இதற்கான மருந்து எனக் கருதி மகிழ்ச்சியின் நகராகிய பாரிசுக்கு அனுப்பி வைத்தார்கள். புரட்சியின் தொடக்கத்தில் வுல்ஃப்காங் பாரிசுக்கு வந்தான். ஆரம்பத்தில் அவனுக்குப் புரட்சியில் ஈடுபாடு ஏற்பட்டது. அக்காலத்தில் உலவிய அரசியல், தத்துவக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டவனானான். ஆனால் புரட்சியைத் தொடர்ந்த இரத்தப்பெருக்கு தொட்டாற்சிணுங்கி குணங்கொண்ட அவனை அதிர்ச்சி அடையச் செய்தது; சமூகத்தையும் உலகத்தையும் அருவருப்போடு நோக்க வைத்தது. மேலும் தனித்தவன் ஆகி பேஸ் லத்தீனில் இருக்கும் மாணவர் குடியிருப்பிலுள்ள தனது அறைக்குள்ளே நாட்களைக் கழித்தான். ஸோர்போன் மடாலயத்திலிருந்து அதிக தூரமில்லாத இருள் நிறைந்த தெருவில் தனக்குப் பிடித்தமான தத்துவ ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தான். பாரிஸின் பெருநூலகங்களில் பல மணிநேரங்களைக் கழித்து, இறந்துபோன ஆசிரியர்களின் தூசிபடிந்து கண்டுகொள்ளப்படாமலிருக்கும் நூற்களின் மூலமாகத் தனது பசியைத் தீர்த்துக் கொண்டிருந்தான். இவ்வகையில் ஒரு இலக்கியப் பிணந்தின்னியாகவே இருந்தான். தனியனாக இருந்தாலும் வுல்ஃப்காங் உணர்ச்சிகளால் நிறைந்தவன்; ஆனால் அவன் கற்பனைகளுக்குள்ளே இயங்கினான். அறியாமையாலும், வெட்கத்தாலும் அவன் பெண்களை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்க வில்லை. ஆனால் அவன் பெண்ணழகின் ரசிகன். தனது தனியறையில் அன்று கண்ட பெண்களின் உடலுருவையும், முகவடிவையும் எண்ணி உருகுவான். கற்பனை இயல்பில் காணாத அழகின் பிம்பங்களை அவனுக்காக உருவாக்கியது. அவன் மனம் இப்படி ஒரு நிலையில் இருக்கும் போது ஒரு கனவு அசாதாரணமான விளைவினை ஏற்படுத்தியது. அக்கனவில் அவன் மனித அழகைக் கடந்த ஓர் அழகிய பெண்ணின் முகத்தைக் கண்டான். அக்கனவை அவன் மீண்டும் மீண்டும் கண்டான். பகலில் அவனுடைய சிந்தனைகளையும், இரவில் அவனுடைய கனவுகளையும் அம்முகமே ஆக்கிரமித்துக் கொண்டது; அக்கனவின் மீது இனம் புரியாத ஒரு பேரீர்ப்புக் கொண்டான். இது வெகுகாலம் நீடித்து, சோகம் நிறைந்த மனிதர்களை ஆக்கிரமித்திருக்கும் ஒரு சிந்தனை போன்றும், பைத்தியக்காரத்தனம் போன்றும் மாறியது. இது தான் காட்ஃபிரிட் வுல்ஃப்காங். இது தான் அவன் வாழ்க்கை. புயல் வீசும் இரவில் அவன் வெகு தாமதமாக பழைய பாரிஸின் பகுதியான மராயின் தெருக்களில் நடந்து போய்க் கொண்டிருந்தான். இடிமுழக்கம் அக்குறுகிய தெருவிலிருந்த பெரிய வீடுகளை அதிரச் செய்தது. அவன் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சதுக்கமான பிளேஸ் டி கிரீவுக்கு வந்து சேர்ந்தான். ஹோட்டல் டி வில்லின் உச்சிக்கூம்பில் பட்டு நடுங்கிய மின்னலின் விரல்கள் அவன் முன்னிருந்த வெட்ட வெளியில் விழுந்தன. கில்லட்டினுக்கு அருகே வந்த அவன் பயந்து நடுங்கினான். பயத்தின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது. கில்லட்டின் எப்போதும் தயாராக நின்று கொண்டிருந்தது. நல்லவர்கள், தைரிய சாலிகளின் இரத்தம் அதிலிருந்து நாள்தோறும் ஓடிக்கொண்டிருந்தது. அன்றைக்கும் தனது அழிவுப்பணியை முடித்து விட்டு தூங்கும் நகரத்தின் நடுவே தனது அடுத்த பலியாடுகளுக்காக அக்கருவி காத்து நின்றது. வுல்ஃப்காங்கின் இதயம் அவனுக்குள்ளே மிகத் தளர்ந்தது. நடுங்கிக் கொண்டே அக்கருவியை விட்டு தன் முகத்தைத் திருப்பினான். தண்டனை மேடைக்குச் செல்லும் படிகளில் உட்கார்ந்திருந்த நிழலுருவம் அவன் கண்ணில் பட்டது. தொடர்ச்சியாக வந்த மின்னல்கள் அவ்வுருவத்தின் குணாதிசயங்களைப் புலப்படுத்தின. அவள் கறுப்புடை அணிந்த பெண். கொலை மேடையின் கீழ் படிகளில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளது முகம் மடியில் மறைந்திருந்தது; கலைந்த கூந்தலில் மழைநீர் விழுந்து வழிந்து கொண்டிருந்தது. வுல்ஃப்காங் அப்படியே நின்றான். அவள் மேற்குடிப் பெண்ணைப் போலிருந்தாள். இறகுத் தலையணையின் மீது தலை வைத்துப் படுத்திருந்த பல தலைகள் இந்தக் கேடு காலத்தில் தலை சாய்க்க இடமில்லாமல் அலைவதை அவன் அறிவான். இவள் அக்கொலைக் கருவியால் துயரத்துக்குள்ளாக்கப்பட்டு இதயம் உடைந்துபோயிருக்கும் ஒரு பெண் என்று நினைத்தான். அவளை நெருங்கி இரக்கம் ததும்பும் குரலில் அவளிடம் பேசத் தொடங்கினான். அவள் தலை நிமிர்ந்து அவனைக் கோபத்துடன் நோக்கினாள். மின்னலின் பிரகாசமான ஒளியில் அவன் அம்முகத்தைக் கண்டான். அவன் கனவுகளில் வந்த அதே முகம். வெளிறிப்போய் சோகத்துடன், ஆனால் அழகாக இருந்தது. முரண்படும் உணர்ச்சிகளுடன் நடுங்கியவனாய் வுல்ஃப்காங் மீண்டும் அவளிடம் பேசத் தொடங்கினான். நள்ளிரவு நேரத்தில், கடும்புயலின் நடுவே அவளிருப்பதைச் சொல்லி, தான் அவளுடைய நண்பர்களிடம் அவளைக் கொண்டு சேர்ப்பதாகச் சொன்னான். அவள் கில்லட்டினைச் சுட்டிக் காட்டினாள். “எனக்கு இப்பூமியில் நண்பர்களே இல்லை”, என்றாள். “ஆனால் உனக்கு ஒரு வீடு இருக்கிறது” என்றான் வுல்ஃப்காங். “ஆம், கல்லறையில்”. இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்மாணவன் மனமுருகினான். “என்னை அந்நியன் என்று தவறாக நினையாதிருந்தால் எனது எளிய இருப்பிடத்தைத் தங்குமிடமாகவும், என்னையே நண்பனாகவும் ஏற்றுக்கொள். எனக்குப் பாரிஸில் நண்பர்கள் இல்லை. நான் இங்கே அந்நியன் தான். எனது உயிரால் ஏதேனும் பயனுண்டானால் அதுவும் உன்னுடைய உத்தரவுக்குக் காத்திருக்கிறது. உனக்குத் தீங்கோ அவமானமோ ஏற்படாமல் என்னுயிர் கொடுத்துக் காப்பேன்” என்றான். அவனுடைய நடத்தையிலிருந்த நேர்மை, அந்நிய உச்சரிப்பு, பேச்சுத் திறன் எல்லாமே அந்தப் பெண்ணிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. அவள் அவனுடைய பாதுகாப்பில் தன்னை ஒப்படைத்தாள். தள்ளாடி நடந்த அவளை அவன் போன்ட் நியுஃப் பாலத்தில் தாங்கி நடந்தான். நான்காம் ஹென்றியின் சிலை ஜனத்திரளால் பிடுங்கியெறியப்பட்ட இடத்தைக் கடந்தான். புயல் மெதுவாக அடங்கியது. இடி தூரத்தில் முழங்கிக் கொண்டிருந்தது. பாரிஸ் முழுக்க அமைதியாக இருந்தது. மனித உணர்ச்சிகளின் எரிமலை அடுத்த நாளின் பெருவெடிப்புக்காகத் தெம்பேற்றிக் கொள்வதற்காய் தூங்கிக் கொண்டிருந்தது. பேஸ் லத்தீனின் பழந்தெருக்களையும், மங்கலான ஸோர்போனின் சுவர்களையும் கடந்து தானிருந்த பெரிய, பாழடைந்த தோற்றங்கொண்ட குடியிருப்புக்கு வந்தான். அவர்களை அக்குடியிருப்பின் உள்ளே அனுமதித்த வேலைக்காரப் பெண் சோக ஜீவியான வுல்ஃப்காங் ஒரு பெண்ணுடன் வந்திருப்பதை ஆச்சரியத்துடன் நோக்கினாள். தனது அறைக்குள் நுழையும் போது அதன் போதாமையையும், சுத்தமின்மையையும் எண்ணி அவன் முதல் முறையாக வெட்கப்பட்டான். அவனுக்கு பழைய பாணியில் அமைந்திருந்த ஒரே அறை தான் இருந்தது. முற்காலத்தில் அக்குடியிருப்பு மேற்குடியினருக்குச் சொந்தமாக இருந்த அவ்வறை இப்போது புத்தகங்களாலும், தாள்களாலும் மாணவனுக்குத் தேவையான பிற விஷயங்களாலும் நிறைந்திருந்தது. அவனது கட்டில் அறையின் மூலையில் கிடந்தது. விளக்கொளி வந்த போது அவளைத் தெளிவாக நோக்குவதற்கான வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அவளுடைய அழகெனும் மதுவில் அவன் மயங்கினான். அவளது முகம் வெளிறியிருந்தது. ஆனாலும் ஒளிமிக்க வெண்மை அவளிலிருந்து வீசி, அவளுடைய கருங்கூந்தலிலிருந்து முரண்பட்டு அழகாகக் காட்சியளித்தது. கண் பெரிதாகவும், பிரகாசமாகவும் உணர்ச்சி கொண்டதாகவும் இருந்தது. கறுப்புடை காண அனுமதித்த வரையில் அவளுடல் கட்டுக்கோப்பானதாக இருந்தது. சாதாரண உடையே அவள் உடுத்தியிருந்தாலும் அவ்வுடை பேரழகாய்த் தெரிந்தது. அவள் அணிந்திருந்த ஒரே அணி அவளது கழுத்தைச் சுற்றியிருந்த கறுப்புப் பட்டை தான். அவ்வணி வைரங்களால் கழுத்தில் நிலைபெற்றிருந்தது. அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. தன்னுடைய அறையை அவளிடம் ஒப்படைத்துவிட்டு வேறெங்காவது புகலிடம் தேடிக் கொள்ளலாம் என்று நினைத்தாலும் அவளுடைய அழகால் மயக்கப்பட்டிருந்ததால் அவளை விட்டு நீங்க மனதற்றவனாய் நின்றான். அவளது நிலையும் புதுமையானதாக இருந்தது. அவள் இப்போது கில்லட்டினைப் பற்றிப் பேசவில்லை. அம்மாணவனின் நடத்தை முதலில் அவள் நம்பிக்கையையும், பின்பு அவளுடைய இதயத்தையும் வென்றிருக்க வேண்டும். ஆசையும் ஈர்ப்பும் மிகுந்த அக்கணத்தில் வுல்ஃப்காங் அவளிடம் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினான். தனக்கு வந்த மாயக்கனவைப் பற்றியும், தான் அவளை நேரில் காணுமுன்னே அவள் தன் இதயத்தைக் கொள்ளை கொண்டதைப் பற்றியும் அவன் கூறினான். அவள் அவனுடைய சொற்களால் பாதிக்கப்பட்டு, அவன் மீது தானும் காரணமற்று விருப்பம் கொண்டதாகச் சொன்னாள். பழைய நம்பிக்கைகள் தகர்ந்து போன இடத்தில் “அறிவின் தேவதை” வந்து அமர்ந்திருந்த காலம். திருமணச் சடங்குகள் ஆடம்பரமாகக் கருதப்பட்டன. சமூக ஒப்பந்தங்கள் பிரபலமாயின. வுல்ஃப்காங்கும் இப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தான். “நாம் ஏன் தனியாக இருக்க வேண்டும்? நமது இதயம் ஒன்றாக இருக்கிறது. அறிவின் அடிப்படையிலும், மாண்பின் அடிப்படையிலும் நாம் ஒன்றாகவே இருக்கிறோம். இதைக் காட்டிலும் நமது உயரிய ஆன்மாக்களைப் பிணைப்பதற்கு வேறு சடங்குகள் எதற்கு?” என்றான். அவள் உணர்ச்சியுடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் ஞானம்பெற்ற அதே பள்ளியில் தான் அவளும் பயின்றிருக்க வேண்டும். “உனக்கு வீடுமில்லை, குடும்பமுமில்லை”, எனத் தொடர்ந்தான், “உனக்கு நான் எல்லாமாக இருக்கிறேன். வேண்டாம், நாமிருவருமே நமக்கு எல்லாமாக இருப்போம். சடங்கு தேவையென்றால் அதையும் செய்கிறேன். இதோ என் கரம். என்றைக்குமே உனக்காக, உன்னுடன் இருப்பதாக வாக்களிக்கிறேன்” “என்றைக்குமா?” அவள் அமைதியாகக் கேட்டாள். “என்றைக்கும்” மறுபடியும் சொன்னான் அவன். அவள் அவனது நீட்டிய கரத்தினைப் பற்றிக் கொண்டாள். “இனி நான் என்றும் உன்னுடையவள்” என்று சொல்லி அவன் மார்பில் முகம்புதைத்தாள். அடுத்த நாள் காலையில் அவள் உறங்கிக் கொண்டிருக்கும் போது புதுச்சூழலுக்கு ஏற்ப புது வீடொன்றைக் கண்டுபிடிக்க அவன் வெளியேறினான். அவன் மீண்டு வரும்போது அந்தப் பெண்ணின் தலை கட்டிலுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. அதன் மேல் அவளுடைய கையும் இருந்தது. அவன் அவளைக் கூப்பிட்டான். பதிலேதும் இல்லை. அவளை எழுப்ப அவளது கரத்தைத் தொட்டான். அது சில்லிட்டிருந்தது. அவளது முகம் வெளிறிப் போய் கொடூரமாக இருந்தது. ஒரே வார்த்தையில் – பிணம். பயந்து போனவனாய் அந்தக் குடியிருப்பில் இருந்தவர்களை அழைத்தான். குழப்பம் நிலவியது. காவலர்கள் அழைக்கப்பட்டனர். ஒரு காவலர் உள்ளே வந்து பிணத்தைப் பார்த்துப் பதறினார், “கடவுளே, இந்தப் பெண் எப்படி இங்கே வந்தாள்?” “இவளைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?” என்று அந்தக் காவலரிடம் கேட்டான் வுல்ஃப்காங். “தெரியுமாவா? இவள் நேற்றைக்குக் கில்லட்டினால் சிரச்சேதம் செய்யப்பட்டவள்”. காவலர் முன்னகர்ந்து கழுத்தைச் சுற்றியிருந்த கறுப்புப் பட்டையைக் கழற்றினார். தலை தனியே கழன்று தரையில் உருண்டது. அம்மாணவன் பயத்தில் அலறினான். “பிசாசு என்னைப் பீடித்துக் கொண்டது. நான் என்னையே இழந்தேன்”. அவர்கள் அவனை அமைதிப்படுத்த முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. அப்பிணத்தை உபயோகப் படுத்தி ஒரு தீயசக்தி தன்னை ஆக்கிரமித்துக் கொண்டதாக நம்பினான். மனநலம் பிறழ்ந்த நிலையில் ஒரு பைத்தியக்கார விடுதியில் மரணமடைந்தான். இங்கே அந்தக் கிழவர் கதையை முடித்தார். “இது உண்மையிலேயே நடந்ததா?” என்று கிழவரிடம் கேட்டார் அம்மனிதர். “எந்த சந்தேகமுமில்லை. அந்த மாணவனே என்னிடம் சொன்னவை இவை. நான் அவனை பாரிஸில் ஒரு பைத்தியக்கார விடுதியில் சந்தித்தேன்”. குறிப்புகள்: கில்லட்டின் – பிரெஞ்சுப்புரட்சியின் போது பயன்படுத்தப்பட்ட கொலைக்கருவி. ஸ்வீடென்போர்க் – இறைவன் தன்னிடம் கிறிஸ்தவத்தைச் சீர்திருத்தச் சொன்னதாக நம்பிய தத்துவஞானி [] *** 30 அஜ்னபி கவிதைகள் அஜ்னபி கவிதைகள் பேராண்மை தூரதேசத் தோழமையின் நேர வலயம் அனுசரித்து பகலிரவு அனுமானத்தில் வாழ்த்துகள் தொடுத்தும் துயிற்பொழுதின் மணித்துளிகள் கரைந்தொழுகும் ஏகாந்த நிசியில் திறன்பேசித் தொடுதிரையின் ஒத்திசைந்த ஒற்றல்களில் முறுவற்குறி இழைத்தும் மெய்ந்நிகர்வெளி வழி நெய்கிற வசீகரக் கனாக்களின் உட்சரடு பெருந்திணையென்றுணர்தலே பேராண்மை என்பது அவதார் மாற்றிய அறிவோர் துணிபு. * பசி ஆறேழு நிறுத்தங்களாய் முனைப்புடன் சப்பிக் கொண்டிருந்த அழுக்குச்சீலை சுவை தீர்ந்து பசித்தழும் குழந்தை கையில் திணிக்கப்பட்ட தின்பண்டத்துடன் கரைந்தொழுகிப் பிசிறடிக்கிறது தொடருந்துப் பாடகியின் தேசாபிமானப் பாடல். *** 31 கனவுகளின் நாயகன் கனவுகளின் நாயகன் எஸ்.கே.பி. கருணா அன்று மதியம் வகுப்பு இருக்கிறது அவருக்கு. அண்ணா பல்கலைக்கழகத்தின் விருந்தினர் அறை ஒன்றினில் அமர்ந்து அதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்துல் கலாம். புதிதாகப் பொறுப்பேற்ற சில காலமாக அந்த ஒற்றை அறைதான் அவரது தங்குமிடம். அப்போது துணைவேந்தர் அவரை அழைப்பதாக அலுவலகப் பணியாள் வந்து கூறுகிறார். துணைவேந்தரின் அறைக்குள் ‘மே ஐ கம் இன்’ எனக் கேட்டபடி கலாம் நுழைய, துணைவேந்தர் அவரை வரவேற்று தன் முன் அமரச் செய்கிறார். ‘புரொஃப்ஸர்! பி.எம். ஆஃபீஸில் இருந்த உங்களைக் கேட்டாங்க. உங்களிடம் பேசணுமாம்! இன்னும் கொஞ்சம் நேரத்தில் இங்கே கூப்பிடுறதாச் சொன்னாங்க’ ‘அப்படியா? எனக்கு இப்போது வகுப்பு இருக்கிறதே சார்’ ‘இருக்கட்டும். கொஞ்சம் லேட்டாப் போகலாமே!’ ‘நோ! நோ! ஸ்டூடண்ட்ஸ் தாமதமா வரலாம். டீச்சர்ஸ் தாமதமா போகவே கூடாது’ ‘நான் உங்கள் வகுப்புக்கு மாற்று ஆசிரியரை அனுப்பி வைக்கிறேன். பி.எம் ஆஃபீஸிலிருந்து மறுபடியும் கூப்பிடும்போது, நீங்கள் இல்லைன்னா நான் என்ன சொல்றது? ப்ளீஸ் வெயிட்’ இருவரும் டீ அருந்தும் வேளையில், துணைவேந்தர் கலாமிடம் கேட்கிறார். ‘அப்புறம் ப்ரஃபஸர்! எப்படி இருக்கிறது உங்க டீச்சிங் ஜாப்?’ ‘புதுசா இருக்கு! நிறைய கத்துக்குறேன்! பெங்களூர் ஐஐஎஸ்சியில் இருந்து கூட கூப்பிடுறாங்க. யோசிச்சுட்டு இருக்கேன்’ ‘நோ! நோ! நீங்க எங்கேயும் போகக்கூடாது. எங்களோட மதிப்புமிக்க ஆசிரியர் நீங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள். நாங்கள் இங்கேயே ஏற்பாடு செய்து தருகிறோம்’ அந்த நேரத்தில் தொலைபேசி மணி அடிக்கிறது. துணைவேந்தர் எடுத்துப்பேசி விட்டு, கலாமிடம் தருகிறார். கலாம் அதை வாங்கி, எதிர் முனையில் இருப்பவரிடம் சில நிமிடங்கள் பேசுகிறார். இறுதியில், ‘சரி சார்! எனது நண்பர்களிடம் கலந்து பேசி எனது முடிவைக் கூறுகிறேன்’ என்று சொல்லியபடி வைக்கிறார். துணைவேந்தர் அப்துல் கலாம் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, கலாம் எதிரில் இருந்த டீ கோப்பையை எடுத்து, மீதமுள்ள டீயை அருந்திக் கொண்டே சொல்கிறார். ‘பிரதமர் வாஜ்பாய் பேசினார். இந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரா என்னை நிறுத்த நினைக்கிறாராம். அதுக்கு என்னோட சம்மதத்தைக் கேட்கிறார். நான் என்னோட நண்பர்களைக் கேட்டு சொல்கிறேன்னு சொன்னேன். நான் என்ன சார் பதில் சொல்லட்டும்?’ அதுவரையில் வெகு இயல்பாக அமர்ந்திருந்த துணை வேந்தர் மெல்ல எழுந்து நிற்கிறார். பல்வேறு அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டு, இறுதியாக ஒரு பல்கலைகழகத்தில் கவுரவப் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்த கலாம், இந்தியாவின் முப்படைகளுக்கும் கமாண்டர் இன் சீஃப் ஆக, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முதல் குடிமகனாக மாறிய அந்தக் கணம் தற்செயல் என்றால், கடவுள் நிச்சம் கலாமைத் தற்செயலாகத்தான் கண்டறிந்தார். தனி மெஜாரிட்டி இல்லாமல், கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த பாஜகவுக்கு அந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு சோதனைக் கட்டம். ஆளும் கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் தோற்றுப் போனால், ஆட்சியே போக வேண்டி வரும். எனவே, பாஜகவிற்குத் தேவை அனைவரும் ஏற்கும் ஒரு பொது வேட்பாளர். பிரதமர் வாஜ்பாய் அப்துல் கலாம் பெயரை அறிவித்தார். அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு பொது மனிதரை அறிவித்த திருப்தி பாஜகவுக்கு. பாஜக ஆட்சியில் ஒரு இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கும் சூழலுக்கு அவர்களைத் தள்ளிய திருப்தி காங்கிரஸூக்கு. எந்தக் கட்சியையும் சாராத ஒரு விஞ்ஞானியை ஆதரிக்கிறோம் என்ற திருப்தி பிற கட்சிகளுக்கு. ஆக, இந்தியாவின் ஏவுகணை மனிதர், நேர்மையாளர், இஸ்லாமியர் ஜனாதிபதியாகிறார் என்று அரசியல் கட்சிகளும், இந்திய மக்களும் எண்ணிக் கொண்டிருக்க, ஒரு பேராசிரியர் ஜனாதிபதியாகிறார் என்ற நிஜத்தை அப்துல் கலாமின் மனம் மட்டுமே அறிந்திருந்தது. நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவைப் பெற்றிருந்தாலும், இந்தியாவை ஏவுகணைத் தொழில் நுட்பத்தில் மிக உயரத்தில் ஏற்றி வைத்திருந்தாலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு ஆதார உந்து சக்தியாக இருந்து எத்தனையோ சாதனைகளைப் படைத்திருந்தாலும், மொத்த இந்திய மக்களின் ஆதர்ச நாயகனாக அவர் மாறத் தொடங்கிய அந்தப் புள்ளி ஜனாதிபதி மாளிகையில் இருந்துதான் துவங்கியது. ராஷ்டிரபதி பவன் இவருக்கு முன்னர் பத்து ஜனாதிபதிகளையும், பற்பல வைஸ்ராய்களையும் கண்டிருந்தது. குடும்ப உறுப்பினர்களுடன் ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழையும் வழக்கமான காட்சிகளில் இருந்து வேறுபட்டு, இரண்டு பெட்டிகளை மட்டும் எடுத்துக் கொண்டு தன்னந்தனியாக இந்த மனிதர் வந்ததை ராஷ்டிரபதி பவன் நிச்சயம் அதன் சரித்திரத்தில் பதித்து வைத்திருக்கும். முந்நூற்று நாற்பது அறைகள் கொண்ட அந்த மாபெரும் மாளிகையின் நாயகன் ஒரு தன்னந்தனியான பிரம்மச்சாரி. அதிலிருந்து அவர் குறித்து நமது நாடு கேள்விப்பட்ட ஒவ்வொரு செய்திகளும், அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தின! அரசியல்வாதிகளை குற்ற உணர்வுக்குள்ளாக்கின! மக்களைப் பிரமிப்படையச் செய்தன! நாட்டின் முதல் குடிமகன், தனது மாளிகையின் பிரம்மாண்டமான உணவு அறைக்குச் செல்ல மறுத்து, தனது அறையிலேயே எளிமையான உணவை வரவழைத்து உண்டார். அங்கிருந்த நூலகத்தை விரிவு செய்தார். ராஷ்டிரபதி பவனத்தின் முக்கியப் பெருமையான மொகல் கார்டன் ரோஜாத் தோட்டத்துக்கு அருகில் இந்தியப் பாரம்பரிய மூலிகைகளைக் கொண்ட மூலிகை வனத்தை உருவாக்கினார். தனது வரவேற்பறையை ஒலி, ஒளி வசதிகள் கொண்ட கான்ஃப்ரன்ஸ் ஹாலாக மாற்றிக் கொண்டார். அங்கு வரும் விருந்தினர்களுக்கு, மது விருந்துகளுக்கு முன்னதாக இந்திய நாட்டின் முன்னேற்றம் குறித்த அவரது எதிரகாலத் திட்டங்களை பிரசெண்டேஷனாக விளக்கிச் சொன்னார். அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷாகவே இருந்தாலும் இதே நடைமுறைதான் அங்கு! வெளிநாட்டுத் தலைவர்கள் அவரைச் சந்திப்பதற்கு முன் அதிபர்களாக, பிரதமர்களாக, அமைச்சர்களாக வந்து சந்திப்பு முடிந்தப் பின் அத்தனைப் பேரும் பேராசிரியர் அப்துல் கலாமின் மாணவர்களாகத் திரும்பிச் சென்ற அதிசயம் அங்கே நடந்தது. நம் நாட்டுத் தலைவர்கள் குறித்து வெளிநாட்டினருக்குப் பெரிய மதிப்பையும், மரியாதையும் வரவழைக்க வேண்டி பல நூறு கோடி ரூபாய்களை பப்ளிக் ரிலேஷனுக்கு அதுவரையில் செலவிட்டு வந்த அரசாங்கம், முதன் முறையாக, ஒற்றை ரூபாய் செலவின்றி மொத்த இந்திய அரசின் மதிப்பையும், மரியாதையையும் உலக அரங்கில் தனது ஜனாதிபதியின் தனிப்பட்ட கரிஸ்மா மூலம் உயர்த்திக் கொண்டது. பாலைவனத்தில் மழை போல, இந்திய ஜனாதிபதி எப்போதோ ஒரு முறையே வெளியே வரும் வழக்கம் இருந்தது. அதுவும் பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணத்துக்காகவே இருக்கும். ஆனால், கலாம் வெளியே வந்தது நாட்டின் இளம் தலைமுறையினரைச் சந்திக்க! அவர் சென்றது கல்விக் கூடங்களுக்கு! அவரளவிற்கு உலகில் வேறு எந்தத் தலைவரும் தனது பதவிக்காலத்தில் இத்தனை தூரம் சுற்றுப் பயணம் செய்திருக்க மாட்டார்கள். இத்தனை லட்சம் மாணவர்களைச் சந்தித்து இருக்க மாட்டார்கள். கலாமின் ‘மாணவர் சந்திப்பு’ என்பது வெறுமனே சம்பிரதாயப் பேச்சுடன் முடிவதல்ல. அவர் ஒவ்வொரு சந்திப்புக்கும் தனித்தனியாக பிரசெண்டேஷன் தயாரித்துக் கொண்டு சென்றார். விளக்கமாகவும், பொறுமையாகவும் தனது எதிர்காலத்திட்டத்தை மாணவர்களுக்கு விளக்கிச் சொன்னார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒவ்வொரு சந்திப்பிலும், மாணவர்களுடன் கேள்வி – பதில் நிகழ்ச்சியினை அமைத்துக் கொண்டார். மாணவர்கள் கேட்டக் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் உலகப் பிரசித்திப் பெற்றன‌. அவரது ஒவ்வொரு மாணவர்கள் சந்திப்பும், இளம் தலைமுறையினருக்கு கனவுகளை விதைத்த அற்புத சுவிசேஷக் கூட்டங்களாகின. அந்த மாணவர்கள் மூலமாகவே அப்துல் கலாம் அவர்களது பெற்றோர்களைச் சென்றடைந்தார். ஒவ்வொரு மாணவருக்கும் அந்த கூட்டங்கள் முடிந்த பிறகு வீடுகளுக்குத் திரும்பிய பின் பெற்றோர்களிடம் அப்துல் கலாம் குறித்துக் கண்கள் விரியச் சொல்ல ஏகப்பட்டக் கதைகள் இருந்தன. அதுவரையில் நடிகர், நடிகை படங்களும், கிரக்கெட் வீரர்களின் படங்களுமே தங்களின் பிள்ளைகளின் அறையை நிரப்பியிருந்த காட்சி மாறி, பெரிய சைஸ் அப்துல் கலாம் படம் இடம் பெற்றதை பெற்றோர்கள் பெருமிதத்துடன் கண்டனர். தங்களைப் போலவே தமது குழந்தைகள் பேரில் அன்பு, அக்கறை கொண்டு அவர்களின் கண்களில் எதிர்காலக் கனவை விதைத்த அப்துல் கலாம் அவர்களின் கடவுளாகிப் போனார். நாட்டில் இதுவரையிலான அரசியல் தலைவர்கள் எவரும் மக்களின் மனதிலே தொட முடியாத ஒரு இடத்தை அப்துல் கலாம் தொட்டார். அந்த இடம் மகாத்மா காந்திக்கானது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கும் போது, இந்த முறையேனும் ஒரு தன்னலமற்ற தலைவர் இந்தத் தேசத்துக்கு கிடைக்க மாட்டாரா என ஏங்கி, ஏமாந்துப் புண்பட்டிருந்த இடம் அது. எளிமையை வாழ்வியல் முறையாகவே கொண்டிருந்த அந்த மேதையின் கரங்கள் பட்ட மாத்திரத்தில் இந்திய மக்கள் அவர் மீது மயக்கமுறத் தொடங்கினர். சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக அரசியல் பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவர் அனைவருக்கும் பொதுவான மனிதராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். தனக்கு கீழேப் பணிபுரியும் செயலர்கள், பணியாட்கள், பாதுகாவலர்களை அவர் நடத்திய விதம் உயர்பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு பெஞ்ச் மார்க்காக அமைந்தது. உண்மையான உள்ளத்து அன்போடு அவர்களிடம் பழகியதால், அவர்களும் கலாமின் வேகத்துக்கு முழு ஒத்துழைப்பு தந்து பணியாற்றினர். ஒருமுறை தனது சொந்தங்களை ராமேஸ்வரத்தில் இருந்து தில்லிக்கு வரச் செய்து ஜனாதிபதி மாளிகை முதல் தாஜ்மகால் வரையில் சுற்றிப் பார்க்கச் செய்து அவர்களை திருப்திப்படுத்தி அனுப்பி வைத்தார். அவர்கள் புறப்பட்ட அடுத்தக் கணம், தனது செயலரை அழைத்து அவர்களின் வருகைக்கான அத்தனை செலவையும் தனது சொந்தக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு காசோலையைக் கொடுத்து உத்தரவிட்ட செயல் நாடு அதுவரையில் காணாதது. நடிகர்களின் படங்களும், சாதிக் கட்சித் தலைவர்களின் படங்களும் வைக்கப்பட்டு, தங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருந்த ஆட்டோ ஸ்டாண்டுகளில் அப்துல் கலாமின் படம் வைக்கப்பட்டது. அவரது முகம், அந்த இடத்துக்கு ஒரு நம்பிக்கையைத் தந்தது. அவரது முகம், அங்கிருக்கும் ஓட்டுநர்கள் நல்ல மனசுக் காரர்கள் என்ற தோற்றத்தைத் தந்தது. மெல்ல அவரது முகம் புகைப்படங்களாக, பதாகைகளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் முதல் ரெயில்வே ஊழியர்கள் நலச் சங்கம் வரையிலும் இடம் பெறத் தொடங்கியது. கலாம் பெயரும், படமும் உள்ளது என்றால் அங்குப் பொறுப்பும், நம்பிக்கையும் இருக்கும் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது உலகில் எந்தக் கடவுள்களுக்கும்கூடக் கிடைக்காதப் பேறு. இதை அவர் திட்டமிட்டுச் செய்யவில்லை. அவரது இயல்பால் அது தன்னாலே நடந்தேறியது. அவரது பண்பு, எளிமை, கனவு எல்லாம் நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் சென்று சேர்ந்ததற்கு அவர் ஜனாதிபதியானது முக்கியமான காரணம். அப்பதவிக்கான அதிகாரங்களை நாட்டு மக்களின் நம்பிக்கையை வளர்த்தெடுக்க, இளைஞர் சமுதாயத்துக்கு வழிகாட்ட, அறிவியல் கண்டுப்பிடிப்புகள் பொது மக்களை, மாற்றுத் திறனாளிகளைச் சென்றடைய பயன்படுத்திக் கொண்டார். இரண்டாம் முறையும் அவர் ஜனாதிபதியாகும் சூழலை நாட்டில் என்றுமில்லாத வழக்குமாக பொது மக்களே முன்னின்று உருவாக்கித் தந்தனர். அப்போது ஆளுங்கட்சியாக மாற்றம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கும் வேறு வழியின்றி கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்க ஆலோசிக்க வேண்டி வந்தது. ஆனால் வலுக்கட்டாயமாக யாருடைய ஆதரவையும் பெற்று அதன் மூலம் ஜனாதிபதி பதவியை அரசியலுக்கு உள்ளாக்க மாட்டேன் என்று பெருந்தன்மையாக அவராகவே போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அரசியல் கட்சிகளின் ஜனாதிபதியாக உள்ளே வந்தவர், மக்களின் ஜனாதிபதியாக வெளியேறினார். கலாமின் மரணம் மக்கள் எதிர்பாராதது அல்ல! சில காலமாகவே அவரது உடல் நிலைக் குறித்துப் பல்வேறு செய்திகள் வந்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால், அவரது இயல்புக்கு மாறாக ஒரு மருத்துவமனைப் படுக்கையில் அவரது உயிர் பிரியாமல், அவருக்குப் பிடித்தமான மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது இறந்தது நாட்டு மக்களை மிகவும் நெகிழச் செய்தது. இந்திய தேசம் இதற்கு முன் எப்போதும் காணாத ஒரு சோகத்தைக் கண்டது. வேறெந்த இந்தியத் தலைவருக்கும் இதற்கு முன்னர் கிடைத்திராத அளவுக்கு மக்களின் கண்ணீர் அனைத்து ஊடகங்களையும் நிரப்பிக் கொண்டு ஓடியது. யாரும் அழைக்காமலேயே கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் ஆதர்ச நாயகனை இழந்த அதிர்ச்சியில் கதறி அழுதனர். மூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் பேதங்களைக் கடந்து மீண்டும் ஒன்றிணைத்தது அவரது மரணம். மறைந்த அப்துல் கலாம் மீது சில அறிவு ஜீவிகள் பரப்பி வரும் அவதூறுகள் குறித்து எழுதுவதை இங்கு கவனமாகத் தவிர்த்திருக்கிறேன். அவர் ஏன் இதைச் செய்யவில்லை? அவர் ஏன் அதைப் பேசவில்லை? என்ற கேள்விகள் எல்லாம் வெகு விரைவில் காற்றில் கரைந்து போகும். மக்கள் அவரிடம் எதிர்பார்த்தது இந்த தேசத்தின் எதிர்காலம் குறித்த கேள்விக்கான பதிலை! த‌ம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையைக் குறித்த நம்பிக்கையை! அதை அவர் தம் வாழ்நாளெல்லாம் விதைத்துக் கொண்டே சென்றார். அந்த நம்பிக்கை ஒவ்வொரு இந்திய இளைஞனின் வெற்றிகளின் மூலமாகவும் துளிர் விட்டு விருட்சமாகி நிழல் பரப்பும் என்பது நிதர்சனம். அந்த விருட்சத்தின் கனிகள் ஒவ்வொன்றிலும் கலாம் இனிப்பார்! *** 32 பொன்னாஞ்சலி – 1 பொன்னாஞ்சலி – 1 நாகராஜ் []   33 பா.சரவணன் கவிதைகள் பா . சரவணன் கவிதைகள் முரண் தொகை நீ ஒரு போலி இலக்கியவாதி என்கிறாள் செல்லம்மா நீ யாரடி அவரைச் சொல்ல என்கிறாள் கண்ணம்மா என் வேட்டியை இறுகப் பற்றிக்கொள்கிறேன் நான்   காற்சிலம்பைக் கொடுத்தவள் கண்ணகி கானல் வரியில் கரைந்தவள் மாதவி கோவலன் எப்படிக் குற்றமற்றவன்   பெற்றவள் சரஸ்வதி ஒருதலைக்காதல் லட்சுமியின் மேல் வீதியில் அலையும் கவியைக் காப்பவளோ பராசக்தி. * பசலையுற்றவன் தலை கலைந்திருந்தது ஆடைகள் கசங்கி உள்ளங்கைகள் அழுக்கேறி கண்ணிப்போயிருந்தன போதையிலேயே பழகிய கண்கள் சொருகியிருந்தன பல்லின் கறைகளுக்குப் பல மூலங்கள் நெஞ்சுக்குள் கபம் வயிறும் ஒடுங்கிக் கிடந்தது குறிபற்றி சொல்ல குறிப்பாய் ஒன்றும் இல்லை கரிகாலன் இல்லை எனினும் கறுத்திருந்தன கால்கள் பாதங்களை மட்டும் சுத்தமாய் வைத்திருந்தான் என கட்டைவிரல்களைக் கட்டும்போதுதான் தெரிந்தது. * வெக்கை பட்டாம்பூச்சிகளுக்கும் பூக்களுக்கும் பிரச்சனை ஒன்றுமில்லை இந்த வெயில்தான் அறம் அறமென்று வாட்டுகிறது * மோகமுள்ளின் முனை இதற்குத்தானா எல்லாம் என்றாள் அவனை அழுத்திக்கொண்டிருந்த பாரம் விலகி இலகுவானான் கோவில் கோபுரத்திலிருந்த புறாக்கள் சடசடத்துப் பறந்தன. * அற்பாயுளின் தாகம் மொட்டைமாடியில் நீர்த்தொட்டியின் கீழுள்ள விரிசலில் வளரும் சிறு செடி தகிக்கும் வானம் பார்த்துத் தளிர்க்கரம் நீட்டி தவம் செய்கிறது மழை வேண்டி. *** 34 கடவுள் அமைத்து வைத்த மேடை கடவுள் அமைத்து வைத்த மேடை ஜிரா காற்றைக் காந்தமாக்கி நம் உணர்வுகளை ஈர்த்த மெல்லிசை மன்னர் இனிமேல் இசை வடிவில் மட்டும் நம்மோடு என்றென்றும் இருக்கப் போகிறார். மனிதர்கள் அமைத்து வைத்த மேடையில் இசை பாடிக் கொண்டிருந்தவர் கடவுள் அமைத்து வைத்த மேடையில் பாடச் சென்றுவிட்டார். தமிழ்த் திரையிசையில் வேராக இருந்து பல கிளைகளையும் மலர்களையும் உருவாக்கிய பெருமை அவருடையது. ஒரு மூத்த பிதாமகனாக அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதை மற்ற இசை வல்லுனர்கள் அவரைப் போற்றுவதிலேயே புரிந்து கொள்ளலாம். இவரைப் பற்றி என்னதான் நான் பெருமையாகச் சொல்வது? கரை கண்டிருந்தால் கொஞ்சம் தெளிவாகப் பேசலாம். கடற்கரையில் மணல் எண்ணும் நண்டைப் போல் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். கருப்பு வெள்ளைக் கட்டைகளிலிருந்து காவியப் பாடல்களைக் கண்டெடுத்த கலைஞர் மெல்லிசை மன்னர். ஒருநாள் தவறுதலாக வீட்டுக்கு ஆட்டோவில் அனுப்பப்பட்ட அவரது ஆர்மோனியம் தொலைந்து விட, பொம்மையைத் தொலைத்த குழந்தை போல் விடாமல் அழுதாராம். அவரைச் சமாதானப்படுத்த அந்த ஆர்மோனியமே வந்தால் தான் முடியும் என்பதால், உடனிருந்தவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வானொலியில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆர்மோனியம் திரும்பக் கிடைத்திருக்கிறது. மீண்டும் அழுகை. ஆனந்தக் கண்ணீர் மட்டுமல்ல, “உயிருக்குயிரான உன்னைத் தொலைத்துவிட்டேனே” என்று மன்னிப்புக் கேட்கும் கண்ணீரும் அதிலுண்டு. தமிழ் மொழிக்குக் கொஞ்சமும் வலிக்காமல் இசையமைத்த ஒரு இசையமைப்பாளர் இவர். இந்த வகையில் இவரைப் போல் இன்னொருவர் இல்லை. ஒரேயொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். அடுத்து நீங்கள் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் உன்னித்துக் கேளுங்கள். நான் சொல்வது புரியும். குறில், நெடில் என்றால் என்னவென்று உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். குறிலெழுத்துகள் குறுகி ஒலிக்கும். நெடிலெழுத்துகள் நீண்டு ஒலிக்கும். மெல்லிசை மன்னரின் பாடல்களில் குறில் தவறிக் கூட நீண்டொலிக்காது. அதே போல் நெடில் மட்டுமே சந்தங்களில் கூட நீண்டொலிக்கும். சரி. இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். “எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடி வா” என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இந்தப் பாடலை அடுத்த முறை கேட்கும் போது அடைப்புக்குறிக்குள் இருக்கும் நெடிலெழுத்துகளை உற்றுக் கேளுங்கள். அப்போது நான் சொல்வது புரியும். எங்[கே] அவள் என்[றே] மனம் [தே]டு[தே] [ஆ]வ[லா]ல் [ஓ]டி [வா]! இது போல மெல்லிசை மன்னரின் மற்ற பாடல்களையும் கேட்டுப் பாருங்கள். நாம் இதுவரை கொஞ்சமும் உணர்ந்திராத மாபெரும் தமிழ்ப் பணி நமக்குப் புரியும். மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களிலும் இதைத் தொடர்ந்து கவனியுங்கள். நான் சொல்வது இன்னும் தெளிவாகப் புரியும். தமிழ் தெரியாதவர்கள் தமிழ்ப் படங்களில் பாடத் தேவையில்லை என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தவர். அத்தான் என் அத்தான் பாடலைக் கேட்டு லதா மங்கேஷ்கர் தமிழில் இப்படியான பாடல்களைப் பாட விரும்புவதாகச் சொன்ன போது, “அவங்களுக்குத் தமிழ் தெரியாது. வேண்டாம்” என்று ஒரே அடியாக மறுத்து விட்டார். “உலமே மாயம் வாழ்வே மாயம்னு எழுதியிருக்கேன். பாடுறவன் உல்கே மாயம் வால்வே மாயம்னு பாடுறானே” என்று உடுமலை நாராயண கவி மெல்லிசை மன்னரிடம் ஆத்திரப்பட்ட போது தமிழ்த் திரையிசையில் கண்டசாலா காணாமற் போனார். இன்று மாபெரும் பாடகராக இருக்கும் பாடும் நிலா பாலு அவர்கள் வாய்ப்புக் கேட்ட போதும் தமிழ் படித்து விட்டு வரச்சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். அவர் தமிழ் படித்து வந்த போது சொன்ன சொல் மாறாமல் “இயற்கை என்னும் இளைய கன்னி” பாட வைத்தவரும் மெல்லிசை மன்னரே. திரைப்படங்கள் வசனங்களால் நிரம்பிய காலகட்டமது. அந்தச் சூழ்நிலையிலும் எங்கெங்கு வாய்ப்பிருக்கிறதோ அங்கங்கு பின்னணி இசை இப்படியெல்லாம் இருக்கலாம் என்று விதை போட்டவர் எம்.எஸ்.விசுவநாதன். அவர் இசையமைப்பதைப் பார்ப்பதற்காக சலீல்தா என்று அழைக்கப்படும் சலீல் சௌத்திரி நேரில் வந்து ஒரு நாள் முழுவதும் இருந்து பார்த்துத் தெரிந்து பாராட்டியிருக்கிறார். இசை ஞானி இளையராஜா திரைப்படங்களில் இசையமைக்கத் தொடங்கி பிரபலமாகியிருந்த நேரம். அவரைப் பற்றி மெல்லிசை மன்னரிடம் கோள் சொல்லலாம் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கோள் சொல்லிகள் அத்தோடு மெல்லிசை மன்னருக்கு வேண்டாதவர்களாகிப் போனார்கள். “அந்தப் பையனப் பத்தி எனக்குத் தெரியும். நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்” எனக்கடிந்து அனுப்பியிருக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரனின் தொலைக்காட்சித் தொடர்களுக்கு டைட்டில் இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர். அந்தத் தொடர்களில் ஒன்றிலும் நடித்திருக்கிறார் அவர். அதில் பெண் வேடக் காட்சி வேறு. பெண் வேடம் புனைந்ததும் அழத் தொடங்கியிருக்கிறார். ஏனென்றால் அந்த வேடத்தில் அவரது அன்னையை அவர் கண்டது தான். தாய்ப்பாசம் மிகுந்தவர். நான்கு வயதில் தந்தையை இழந்ததாலோ என்னவோ தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்று வாழ்ந்திருக்கிறார். தாயின் கட்டளைக்கு இணங்க தேவரின் படங்களுக்குக் கடைசி வரையில் இசையமைக்கவில்லை. இத்தனைக்கும் சாண்டோ சின்னப்பா தேவர் மெல்லிசை மன்னரின் நண்பர். தன்னுடைய இரண்டாவது படத்தில் மெல்லிசை மன்னரை இசையமைக்க வைக்க விரும்பிச் சென்ற போது எம்.எஸ்.வி மறுத்திருக்கிறார். ஏனென்றால் அவர் தாயார் சொல்லிக் கொடுத்த நன்றி. மெல்லிசை மன்னர் எடுபிடி வேலைகளைச் செய்த காலத்தில் அதே ஆடியோ கம்பெனியில் மாதச் சம்பளத்திலிருந்த கே.வி.மகாதேவன் பண்டிகைக்கு வேட்டியும் இரண்டு ரூபாய் பணமும் கொடுத்திருக்கிறார். அந்த கே.வி.மகாதேவன் தான் தேவரின் முதல் படத்துக்கு இசை. தேவர் வழங்கிய வாய்ப்பை ஏற்றுக் கொண்டால் கே.வி.மகாதேவனுக்கு நன்றி கொன்றதாக ஆகிவிடும் என்பதால் மெல்லிசை மன்னர் மறுத்திருக்கிறார். இவருடைய இசையில் கவிஞர் தேசிய விருது வாங்கியிருக்கிறார். பாடகர்கள் தேசிய விருது வாங்கியிருக்கிறார். நடிகர் தேசிய விருது வாங்கியிருக்கிறார். அவர் இசையமைத்த திரைப்படங்கள் விருது வாங்கியிருக்கின்றன. ஆனால் அவர் வாங்கவில்லை. அந்த அரசியல் நமக்குத் தேவையில்லை. விருதுகளைக் கடந்த சிறந்த கலைஞர் அவர். முதன் முதலில் தமிழில் ஸ்டிரியோ ஆல்பம் வெளியிட்ட பெருமை அவருக்கே உண்டு. திரில்லிங் திமேட்டிக் டியூன்ஸ் (Thrilling Thematic Tunes) என்ற அந்த இன்ஸ்டிருமெண்டல் ஆல்பம் ஒரு அரிய முன்னோடி. இந்த ஆல்பம் சமீபத்தில் சரிகமா நிறுவனத்தால் மறுவெளியீடு செய்யப்பட்டது. பத்து விதமான தீம்களுக்கு இசையமைத்த அற்புதம். கேட்க வேண்டிய இசையமுதம். தென்னிந்திய அளவில் இதுதான் முதல் ஸ்டிரியோ முயற்சி என்றும் முதல் இன்ஸ்டிருமெண்டல் ஆல்பம் என்றும் அறிகிறேன். கர்நாடக இசையும் மெல்லிசையும் கைகோர்த்தால் எப்படியிருக்கும்? சுத்தமான கர்நாடக சங்கதிகளோடு மகாராஜபுரம் சந்தானம் பாடுவார். அதற்கு மெல்லிசைக் கருவிகளிலிருந்து பின்னணி இசையமைக்க வேண்டியது மெல்லிசை மன்னர். இது மேடையில் நேரடிக் கச்சேரியாகவே நடந்தது. பாடிக் கொண்டிருக்கும் போதே மகாராஜபுரம் சந்தானம் உணர்ச்சிவசப்பட்டு “சபாஷ் எம்.எஸ்.வி சார்” என்று பாராட்டியதை இன்றும் ஆடியோவில் கேட்கலாம். இப்படியொரு கூட்டணி இன்றும் புதுமையான முயற்சி. இன்னும் நிறைய புதுமைகள் செய்ய மகாராஜபுரம் சந்தானமும் எம்.எஸ்.விசுவநாதனும் திட்டமிட்டிருந்தார்கள். காலம் கணிக்கும் காலன் ஒரு விபத்தில் மகாராஜபுரம் சந்தானத்தைக் கொண்டு போன பிறகு இந்த முயற்சி முடங்கிப் போனது. தமிழ்த் தாய் வாழ்த்துக்கு இசையமைத்த பெருமையும் மெல்லிசை மன்னருக்கே உரியது. தமிழர்களால் அது பாடப்படும் வரையில் மெல்லிசை மன்னரின் புகழ் வாழும். அதே போல இலங்கைக் கவிஞர் எழுதிய உலகத் தமிழர்களுக்கான தேசியப் பண்ணுக்கும் இசையமைத்த பெருமை மெல்லிசை மன்னருக்கு உண்டு. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? அது நமது எம்.எஸ்.வி என்று உறுதிபடக் கூறி பெருமைப்பட்டுக் கொள்கிறேன். *** 35 பொன்னாஞ்சலி – 2 பொன்னாஞ்சலி – 2 பரணிராஜன் [] 1 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !