[]   []   இலவச‌ மின்னிதழ் | இதழ் : 4 | இளவேனில் - 2017 |   ஆசிரியர் சி. சரவணகார்த்திகேயன்   அட்டை ஓவியம் ராஜேஷ்வர் நியாலபள்ளி   அட்டை வடிவமைப்பு மீனம்மா கயல்   ஆக்கம் - உதவி சௌம்யா   ஆலோசனை இரா. இராஜராஜன் ந. பார்வதி யமுனா   தொடர்புக்கு மின்னஞ்சல் – c.saravanakarthikeyan@gmail.com  வலைதளம் - http://tamizmagazine.blogspot.in/  அலைபேசி - +91 98803 71123   மின்நூலாக்கம் சேலம் மணிகண்டன் மின்னஞ்சல் – manikandansalem@outlook.com    மின்நூல் வெளியீடு FreeTamilEbooks.com   கதை, கவிதைகளில் வரும் பெயர்களும், நிகழ்வுகளும் கற்பனையே. கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் அதை எழுதுபவரின் சொந்தக் கருத்துக்களே. படைப்புகளின் உரிமை அந்தந்த ஆசிரியர்களையே சேரும்.   *   இளவேனில் - 2017 இதழ் சமர்ப்பணம்   தமிழின் தலைசிறந்த பெண் எழுத்தாளரான‌ அம்பை அவர்களுக்கு   *                 பொருளடக்கம் | இதழ் : 4 | இளவேனில் - 2017 |  காப்புரிமை தகவல்  மீட்சியின் துயரம்  சக்திபீடம்  கமல்ஹாசனின் தேவநேயம்  சிற்பி சூழுலகு  ஒடுக்கத்தின் முழக்கம்  நீடூழி வாழ்க  வயிற்றுத் தீ  “படைப்பு என்பது என் இயல்பாகி விட்டது!”  பொங்கப்பானை  காதலுக்குப் பிறகு  முகூர்த்த நாள்  அஞ்சலி  Free Tamil Ebooks  எங்களைப் பற்றி  உங்கள் படைப்புகளை வெளியிடலாமே    காப்புரிமை தகவல்:   நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது.  இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது.    Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. மீட்சியின் துயரம்   நீள்தூக்கத்திலிருந்து விழித்தது போல் கிட்டத்தட்ட ஈராண்டு இடைவெளிக்குப் பின் இதழ் வெளியாகிறது.   தமிழ் இதழை ஏன் தொடங்கினேன்? சிற்றிதழோ வெகுஜன இதழோ படைப்புகளை வெளியிட நிறையச் சிரமப்பட்டிருக்கிறேன். இப்போதும் அப்படியே. என் போலானவர்களுக்கான ஓர் ஆரம்பக் களமாக இது அமைய வேண்டும் என விரும்பினேன். நன்றாக‌ எழுதுபவன் ஏன் வாய்ப்புக்கு அலைய வேண்டும் என நினைத்தேன். கடந்த மூன்று இதழ்களில் அந்த எதிர்பார்ப்பு மிகச் சிறிய அளவிலேயே நிறைவேறியது. எழுத்து வன்மை கொண்டவர்களே இல்லையா அல்லது அவர்கள் என்னிடம் எழுத விரும்பவில்லையா தெரியவில்லை. இதழுக்குத் தானாய்ப் படைப்பு அனுப்பிய‌வர்கள் பெரும்பாலும் என் வட்டம் சேர்ந்தவர்கள். அல்லது நிராகரிக்கப்படும் தரத்திலான‌ எழுத்துக்கள். மற்றபடி, வெளியானவற்றில் கணிசம் தொங்கிப் பெற்றவை. அது இந்த இதழுக்கான நடைமுறைத் தேவை என்ன என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது.   வாசகப் பரப்பு குறைவு, அதிலும் நல்ல வாசகர்கள் குறைவு எனும் போது எழுதுபவர்கள் வரத்து குறையும். இலவச இதழ் என்பதால் படைப்புகளுக்குச் சன்மானம் அளிப்பதில்லை. இதுவும் ஒரு விலக்கப் புள்ளி. ஆர்வமுடன் எழுதுபவர்களுக்கு இன்று இணையத்திலேயே ஏராளமான‌ பிரபல வாயில்கள் உண்டு. ஆக, புதியவர்களுக்கான தளம் இவ்விதழ் என்று எண்ணியது பிழை என்பதை உணர்ந்தேன். எழுத்தாளர்களின் நேர்காணல் ஒன்று தான் தமிழ் வெளியாவதற்கான ஒரே தேவையாக இருக்கிறது என நினைக்கிறேன். ஜெயமோகனிடம் இதைப் பற்றி எழுதிய போது “சோர்வுற வேண்டாம். எந்த எழுத்தாளருக்கும் எழுத்தின் தொடக்க காலத்தில் ஓர் இதழ் நடத்துவது ஒரு நல்ல அனுபவம். நல்ல கல்வி அது.” என்று சொன்னார்.   கடந்த ஆண்டு மாதொருபாகன் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த‌ போது இரண்டாம் முறையாக பெருமாள்முருகன் அவர்களை நேர்காணலுக்கு அணுகினேன். அவரிடம் அப்போது சொன்னது ஒன்று தான் – “ஓராண்டாக இதழ் வெளியாகவில்லை. உங்கள் நேர்காணலைச் சாக்கிட்டுக் கொண்டு வருவேன்”. ஆனால் அவர் அப்போது பேட்டி தரும் மனநிலையில் இல்லை. பிறகு இந்த ஆண்டு எல்லாம் கைகூடி வர இதழ் மீண்டிருக்கிறது. இப்போது இதழ் வெளியாக அவரது நேர்காணல் மட்டுமே காரணம். அவருக்கு நன்றி. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஓராண்டுக் கொண்டாட்டமாகவும் இவ்விதழைப் பார்க்கலாம்.   தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் என் அன்பு.   * கடந்த மூன்றாண்டுகளாக நாக்கைக் குறி வைத்த ஃபாசிஸ ஆட்சி நம் தேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தனி மனிதன் என்ன மொழி பேச வேண்டும் என்றும், என்ன உணவு உண்ண வேண்டும் என்றும் சர்க்கார் தீர்மானிக்கிறது. இஸ்லாமியர்களும், தலித்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கப்படுகின்றனர். ஒரு நூற்றாண்டாய்த் தயங்கி ஒலித்த இந்துத்துவக் குரல்கள் இன்று எக்காளமிடுகின்றன. உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட தம் மதச்சார்பை, முட்டாள்தனத்தைப் பொதுவெளியில் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. ஆதரிப்பவன் தேச பக்தன், எதிர்ப்பவன் தேசத் துரோகி என்ற‌ இருமத்துள் அடைக்க முனைகிறார்கள்.   சிதறியுள்ள‌ மதச் சார்பற்ற மற்றும் முற்போக்கு அரசியல் சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.   []   உள்ளே...     நேர்காணல்   பெருமாள்முருகன் – 33     கட்டுரை   கமல்ஹாசனின் தேவநேயம் / புகழ் – 10    சிற்பி சூழுலகு / விக்னேஸ்வரி சுரேஷ் – 14   ஒடுக்கத்தின் முழக்கம் / லேகா இராமசுப்ரமணியன் - 17      புனைவு   சக்திபீடம் / சொரூபா – 5     நீடூழி வாழ்க‌ / மீனம்மா கயல் – 20   வயிற்றுத்தீ / சௌம்யா – 27   பொங்கப்பானை / நர்சிம் – 113   காதலுக்குப் பிறகு… / கொற்றவை - 121   முகூர்த்த நாள் / ஹரன் – 132        அஞ்சலி   அசோகமித்திரன் - 140 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி       : Editor’s Choice   சக்திபீடம் சொரூபா   தறிக்கூடத்தைத் திறந்து லைட் போட்டாள் நிர்மலா. ஆறுக்கு பத்து நிமிஷம் பாக்கி என்றது டைம்பீஸ். “பத்து நிமிஷம் லேட்டு” என்று முணுமுணுத்தபடி பெருக்கத்தொடங்கினாள். துடைப்பத்தில் குப்பையோடு சேர்ந்து அலைக்கழிந்த நூல் இழைகளை உருண்டையாக்கிச் சுருட்டித் தூரப் போட்டாள். துடைப்பம் தன் தந்தை போலவும் நூலிழை தானாகவும் சுருட்டித் தூர எறிந்த தான் தன் கணவனென்றும் பட்டது அவளுக்கு. தன்னைத் தன் கணவனாக எண்ணியதில் சிரிப்போடு கொஞ்சம் குமட்டிக்கொண்டும் வந்தது.                       குடிதண்ணீர்ப் போசியில் பாதியளவு தண்ணீர் இருந்தது. உற்றுப்பார்க்க தூசி விழுந்திருந்தது தெரிந்தது. அதைத் தூக்க முடியாமல் தூக்கி ஜலதாரையில் ஊற்றி விட்டு அலசி வைத்தாள். மூன்று குடம் தண்ணீர் பிடிக்கும் அது. நாள் முழுக்கத் தறி நெய்யும் நாப்பத்தேழு பேருக்கான குடிநீர். (ஐம்பதில் மூன்று ரிப்பேர்.)   வீதி பைப்பை எட்டிப் பார்த்தாள். சுற்றி ஈரமாகவும் காலியாகவும் கிடந்தது. குடத்தைக் கொண்டு வைத்து நட்டைக்கழற்ற, நீர் சன்னமாய் வந்தது. அது நிரம்பத்தொடங்க‌, கிட்ட இருந்த மளிகைக்கடைக்குப்போனாள்.   “அண்ணாச்சி பால்.”   “எப்பவும் போல ரெண்டு பாக்கெட் தான? எடுத்துக்கேன். ஆனாலும் அம்பது பேருக்கு ஒரு லிட்டர்ல டீ வைக்கிறியே, அந்த சாமர்த்தியத்துக்குத் தான் உனக்கு வாடகை இல்லாம வீடு தந்திருக்காரு உன் மாமா!”   நின்று விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தால் குடம் நிரம்பி துபாய்காரம்மா வீட்டு வாசலுக்கு தண்ணீர் போய், பதிலுக்கு அது தன் பரம்பரையையே திட்டும் என்பதால் புன்னகையை எறிந்து விட்டு ஓடினாள்.   நிரம்பின குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்தபடி பால் பாக்கெட்டோடு படியேற, தறி நெய்யும் அண்ணா, தம்பி, சித்தப்பா, மாமா என்று எல்லாருமாய் வரத் தொடங்கியிருந்தனர். போசியை நிரப்பி விட்டு கடைசிக் குடத்தை இறக்கி வைத்து இரண்டையும் தட்டு போட்டு மூடி வைத்தாள். அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்து டீத்தூள் போட்டு ஏலக்காய் இஞ்சி தட்டி வைத்தாள். மறுபக்கம் பால் காய்ந்ததும் எடுத்துக் கொட்டி கொதி வருகையில் சர்க்கரை போட்டு வடிகட்டினாள். 50 மில்லி பிடிக்கிற எவர்சில்வர் டம்ளர்களில் முக்கால்வாசி ஊற்றி பெரியதாம்பாளத்தில் அடுக்கினாள். புடவையை இறக்கிவிட்டு பக்கங்களில் இழுத்துச் சொருகிக் கொண்டு ஃபேக்ட்ரிக்குள் நுழைந்தாள். ஏழெட்டுத் தறிகளில் ஆள் வந்திருக்கவில்லை. சண்முகம் சித்தப்பாவில் தொடங்கி சங்கர் தம்பி வரை தந்து முடித்து விட்டு நிமிர்ந்த போது மணி ஏழென்றது.   டடக் கடக் டடக் கடக் டடக் கடக்… - காட்டன் தறிகள் ஓடத்தொடங்கியிருந்தன.   தறி நெய்யும் ஆண்களுக்கு நெய்கிற துணியின் மீட்டர் கணக்கில் கூலி. அதற்கான மேற்வேலை செய்து தரும் பெண்களுக்கு மணிக்கணக்குக் கூலி. சேர்ந்தாற் போல் இருக்கும் மற்றொரு ஹாலில் நெய்து வருகிற பீஸ்களை டேமேஜ் செக் செய்து பேக்கிங் பண்ண ஆணிலும் பெண்ணிலுமாய் ஏழு பேர்.   பால் கவர்களை குப்பையில் போட்டு விட்டுப் படியிறங்கி தறிக்கூடத்தின் இடப்பக்கம் ஒட்டினாற் போல் இருக்கும் சந்துக்குள் நுழைந்தாள் நிர்மலா. சந்து முடிந்து இடது திரும்பி பத்தடி நடந்தால் தறிக்கூடத்துப் பின் சுவற்றை ஒட்டிய பத்துக்கு பன்னிரண்டு ரூம். எட்டு வருடங்கள் முன் தூங்கிக் கொண்டிருந்தவளின் உயிர்நிலையில் கணவன் சூடு வைத்தபோது குழந்தைகளை அள்ளிக்கொண்டு அடைக்கலம் புகுந்த இடம்.   “வாடகைலாம் வேணாம். ஃபாக்ட்ரியை உன் வீடு போல பாத்துக்க. பீஸ் பாக்க கத்துக்கோ. எம் பொண்ணு போலத்தான் நீயும்.” - இதுதான் அம்மா கூடப் பிறந்த அண்ணன் - தாய்மாமன் - சொன்ன வார்த்தைகள்.   “அவர் பொண்ணு உன்னப் போலத்தான் கண்ட பார்வையைப் பொறுத்துக்கிட்டு டீ வெச்சு தருதாம்மா?”   ஒரு நாள் கோபத்தில் கத்தினான் மூத்தவன் மோகன். முதலாளி வர்க்கத்துக்குச் சம்பளம் அல்லாத சகாயம் செய்வது வீண் என்பான். அம்மாவின் சம்பாத்தியத்தில் சாப்பிடுகிறோம் என்பது உறுத்தத் தொடங்கிய நாளில் அவனுக்குப் படிப்பின் மேல் ஆர்வம் அற்றுப்போனது. ஏழாம் வகுப்போடு படிப்பை ஏறக்கட்டி விட்டு பீஸ் பார்க்க ஃபேக்ட்ரிக்குள் நுழைந்தவன் இன்று மொத்த ஃபேக்ட்ரியையும் பார்த்துக் கொள்கிறான். அப்பாவின் வயதில் இருக்கும் சக தொழிலாளர்களிடம் அவ்வளவு குரோதம் காட்டுவான்.   குணம் திரிந்து போனதற்கு பதில் அவன் தந்தை செத்துப் போயிருந்தால் இவன் இவ்வளவு இறுகிப் போயிருக்க மாட்டான் என்றிருக்கும் நிர்மலாவுக்கு. புதிதாய் வாங்கியிருக்கும் ஃபோனைப் பார்த்து தன்னால் சிரித்துக் கொள்கிற பயல் இவளைப் பார்த்தான் என்றால் சிரிப்பை உள்ளிழுத்துக் கொள்வான்.   தந்தை மேலிருக்கும் கோபத்தைத் தாயின் மேல் காட்டும் மகன்களின் உளவியல்!   ஊற வைத்திருந்த அரிசியைக் களைந்து அடுப்பில் வைத்து விட்டு ஒரு பக்கம் பருப்பு வேக வைத்தாள். சின்னவள் அஸ்வினி எழுந்து குளித்துவிட்டு படித்துக் கொண்டிருக்க, மோகன் தூங்கிக் கொண்டிருந்தான். சமையலை முடித்து பாத்திரங்களைப் பொறுக்கி அலசப் போட்டு விட்டு குளிக்கப் போனாள். துணிகளை அவிழ்த்து அஸ்வினி ஊற வைத்திருந்த பக்கெட்டிலேயே அமிழ்த்தி விட்டு பரபரவென குளித்து ஈரம் படாமல் பாத்ரூமிலேயே புடவையை கட்டி வெளியே வந்தால் அண்ணன் வெங்கடேசன் அமர்ந்திருந்தான்.   “வாண்ணா. அண்ணி வர்ல?”   என்ன சொல்வான் எனச் சொல்லுக்கு சொல் மனப்பாடமாகிப் போன பதிலுக்கான சம்பிரதாயக் கேள்வி!   “அவளுக்கு உடம்பு சரியில்ல, நிர்மலா. மூட்டு வலி ரொம்பப் படுத்துது. நாளைக்கு மாளய அமாவாசைக்கு அப்பா அம்மாவுக்கு கும்பிடணும்ல. வெள்ளன வந்துடுமா.”   “சரிண்ணா.”   எப்போதும் இத்தோடு கிளம்பி விடுபவன் நின்று, “நீ வந்துதான் எல்லாம் செய்யணும்.” என்றான்.   “நாலு வருஷமா அப்படித் தானேண்ணா? கண்டிப்பா சீக்கிரமா வந்திட்றேன்.”   வழக்கம் தாண்டிப் பேசிய நான்கு சொற்களுக்கு வருந்தியவனாய் அடிபட்ட முகத்தோடு கிளம்பினான்.   புருஷன் வீட்டிலிருந்து நடுஜாமம் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு ஓடி வந்த நாளை நினைத்தாள். முக்கால் மைல் ஓடி வந்ததில் தொடைகளுக்கு நடுவே தீப்புண் திகுதிகுவென எரிந்தது. வீடு நுழைந்ததும் தேங்காய் எண்ணெய் தேடியெடுத்து வைத்துக் கொண்ட‌ பிறகுதான் எதிர்காலம் என்னவென பயமே வந்தது.   அம்மா ஒரு பக்கம் அழ ஆரம்பிக்க, அப்பா ஃபேன் காற்றில் ஆடும் ஒட்டடையில் நிலைகுத்தியிருந்தார்.   மூன்று நாள் கழித்துக் கூடிய குடும்பப் பஞ்சாயத்தில் தாலி கட்டினவன் குடிபோதையில் தெரியாமல் செய்து விட்டதாய்ச் சத்தியம் பண்ணினான். மொத்தமாய்த் திட்டிக் கொண்டிருந்த பெரியவர்களில் பாதி பேர் அவனுக்கு இன்னொரு வாய்ப்பு தந்து பார்க்கலாமென்று பேச ஆரம்பிக்க,   “குடிபோதைல இருக்கும் போது சோத்துக்கு பதில் தட்டுல பீய வெச்சா திம்பியாடா?”   கத்தி விட்டு எல்லாரும் மலைக்க மலைக்க வீட்டுக்குள் போய்க் குமுறிக் குமுறி அழுதாள் நிர்மலா.   அடுத்த இரண்டே நாட்களில் வீட்டில் அரிசியும் பருப்பும் அநியாயத்துக்குத் தீர்வதாய் அண்ணியின் குரலெழுந்ததும் மறுபடி பிள்ளைகளை இழுத்துக்கொண்டு அதே தெருவின் கடைசியில் இருந்த அம்மாவின் அண்ணனின் காலில் விழுந்தாள். ஃபேக்ட்ரியில் வேலை பார்க்கிறவர்கள் உதவியோடு புருஷன் வீட்டிலிருந்த துணிமணி, பாத்திர பண்டங்களை இங்கு கொண்டு வந்தாள்.   சம்பளத்துக்கு மீறிய வேலைகள், அத்தையின் நொடித்தல்கள் என எவ்வளவோ இருந்தும் எவருக்கும் பாரமாய் இல்லாத நிலைக்குக் காரணமான மாமாவின் மீது தொண்டை வரை நன்றியுணர்வு இருந்தது.   அதனாலேயே அவர் மகன் ஒருமுறை புடவை பற்றியதையும் அந்தக் கை மேல் பீஸ் வெட்டும் கத்தரிக் கோலால் போட்டதையும் சொல்லாமலே இருந்து விட்டாள். அதன் பிறகு ஃபேக்ட்ரியில் பெரும்பாலானோர் அவள் கண்ணையோ அல்லது கால் சுண்டு விரலையோ மட்டுமே பார்த்துப் பேசப் பழகியிருந்தனர்.   மதியம் பள்ளி கொண்டு போக அகலத் தட்டில் சோற்றை ஆற வைத்து விட்டு தனக்கும் அம்மாவுக்கும் சாப்பிட எடுத்து வைத்து விட்டு மோகனை எழுப்பினாள் அஸ்வினி.   “அவன் இன்னும் கொஞ்சம் தூங்கட்டும். நாம சாப்பிடலாம் வா.”   “சரிம்மா.”          “நாளைக்கு தாத்தா பாட்டி வீட்டுக்கு சாமி கும்பிடப் போகணும். ஸ்கூல்ல லீவ் சொல்லிட்டு வந்துட்றியா?”   “நாளைக்கு சனிக்கிழமை லீவ் தானம்மா!”   “ஆமால்ல… நல்லதா போச்சு.”   இந்த உரையாடலுக்குப் புரண்டு படுத்தான் மோகன். இவள் போனபிறகு அஸ்வினியிடம் முறைப்பான். “போயே ஆகணுமா அதுக்கு” என. அதற்கு அந்தக் குட்டிப்பெண் அவனை அதட்டுவாள். இவன் உடனே அடங்குவான். ஆண்களுக்கு ஏதேனும் ரூபத்தில் தாய்மையின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது!   மோகன் எவ்வளவிற்கு மனிதர்கள் மேல் நம்பிக்கை அற்றிருக்கிறானோ, அவ்வளவை விட அஸ்வினிக்கு உறவுகளின் மேல் காதல். அப்பாவைப் பற்றிய எந்த ஞாபகங்களும் இல்லாத காரணம். ஒரு முறை பள்ளி விட்டு வரும் வழியில் இவளைப் பார்த்து “உன் அம்மாகிட்ட என்னை வீட்ல சேத்துக்கச் சொல்லுடா” என்று அப்பா அழுதாரென்று கண் கலங்கினவளை அப்போதைக்குச் சமாதானப்படுத்தித் தூங்க வைத்தாள்.   “உன் அம்மா ***ல சூடு வெச்சதுக்கு பதிலா மொத்தமா கொளுத்தியிருக்கணும்டி”   ஒரு வாரம் கழித்து அதே அப்பன் கத்தினதில் பயந்து வீட்டுக்குத் திரும்பி ஓடி வந்த குழந்தை ஒரு வாரம் காய்ச்சலில் கிடந்தாள். அன்றைக்குத் தன் நண்பர்கள் இருவரோடு சேர்ந்து போய் மோகன் டீக்கடையில் வைத்து அறைந்து விட்டு வந்த பிறகு அவன் அஸ்வினியைத் தொந்தரவு செய்வதில்லை.   நிர்மலாவிற்குச் சட்டென விழிப்புத் தட்டியது. முந்தைய‌ நாள் மாலை பொழுது போய் வீடு திரும்பியதில் ஊற வைத்த துணிகள் அப்படியே கிடந்தன. பேரலில் இருந்த தண்ணீரை ஊற்றித் துவைக்க ஆரம்பித்தாள். சத்தம் கேட்டு எழுந்து வந்த அஸ்வினி பல் துலக்கிவிட்டு துவைத்த துணிகளை அலசிப் போட்டாள்.   “நீ போய் டீ வைம்மா. நான் காய வெச்சிட்டு வரேன்.”   நிர்மலா உள்ளே வந்து டீ வைத்தாள். காலையில் வீட்டில் டீ வைப்பதென்பது லீவ் நாட்களில் மட்டும் தான். ஒரு டம்ளர் பாலும் ஒரு டம்ளர் நீரும் கைப்பிடி வைத்த சிறுபாத்திரத்தில் கொதிப்பதைப் பார்த்துச் சிரிப்பு வந்தது. வடிகட்டி வைத்து வெளியே எட்டிப் பார்க்க, குழந்தை அத்தனை துணிக்கும் தனித்தனியே க்ளிப் போட்டுவிட்டு உள்ளே வந்தாள். அவளுக்கு ஆற்றித் தந்து விட்டு நிர்மலா சாவகாசமாய் கால் நீட்டி அமர்ந்து ஊதி ஊதிக் குடித்தாள். அடுத்தடுத்து இருவரும் குளித்துக் கிளம்ப, மோகன் கண் விழித்தான்.   “நானும் அம்மாவும் மாமா வீட்டுக்குப்போறோம். ரெடியாகி சீக்கிரமா வாண்ணா.” என்றவளை முறைத்தான்.   “அம்மா போகட்டுமே, உனக்கென்ன அவசரம்? நீயும் இப்பருந்தே அடிமை வேலை பாக்கலாம்னா?”   அதற்கு ஏதாவது பதில் சொல்லலாமா என‌ நிர்மலா யோசித்துக் கொண்டிருக்க, அஸ்வினி,   “நான் போறது என் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ண.” என்று பழிப்பு காட்டினாள்.   அண்ணாச்சி கடையில் இரண்டு பாக்கெட் பிஸ்கட்டும் தேதி பார்த்து ப்ளம்கேக்கும் வாங்கிக் கொண்டு அஸ்வினியோடு நடந்தாள் நிர்மலா. அமாவாசைக்கென மொத்த தெருவும் செம்மண் கோலமிட்டிருந்தது. அதைப் பார்த்து இரசித்தபடி இரண்டு நிமிஷ நடை தூரத்திலிருக்கும் அண்ணன் வீடு வந்து சேர்ந்தாள்.   காய்கறிகள், அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய், ஏனைய மளிகைப் பொருட்கள் வீடு முழுக்க இறைந்து கிடந்தன. அண்ணனின் பிள்ளைகள் இருவரும் நடுஹாலில் தூங்கிக்கொண்டிருந்ததுகள். இவள் “அண்ணி” என்று அழைத்தபடி நுழைய, குரல் கேட்டு வெளியே வந்த ருக்மணி “வாங்க வாங்க” என வரவேற்றாள்.   அவள் கையில் வாங்கி வந்ததைத் தந்துவிட்டு, “அண்ணன் எங்க அண்ணி?” என்று கேட்டாள்.   “வாழையிலை அறுக்க போயிருக்கார் நிர்மலா. நீ உக்காரு. காஃபி கலக்கவா?”   “இல்ல, வேண்டாம். டீ குடிச்சதும் தான் கிளம்பி வந்தோம். உங்க மூட்டு வலி தேவலையா?”   “சேர்ந்தாப்ல அரைமணிகூட அடுப்பு கிட்ட நிக்க முடியல. காலைலகூட ஒரு மாத்திரை போட்டுக்கிட்டேன்.”   “நீங்க கொஞ்ச நேரம் உக்காந்திருங்க அண்ணி. நான் போய் வேலை பார்க்கிறேன்.”   சொல்லி விட்டு கிச்சன் வந்தாள். அரிசி ஒரு படி கழுவி ஊற வைத்து விட்டுப் புளியைத் தேடி எடுத்தாள். கூட்டுக்கும் இரசத்துக்கும் தனித்தனியாய் கழுவி சுடுநீர் காய்ச்சி ஊற்றி வைத்தாள். அதற்குள் வெளியே கிடந்த மளிகைப் பொருட்களை அஸ்வினி கிச்சனுக்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தாள். அதில் பருப்பைக் கண்டெடுத்து குக்கரில் போட்டு வைத்தாள். கூட்டுக்கு வெள்ளை பீன்ஸ், பொரியலுக்கு உருளைக்கிழங்கு என‌ இவள் ஒவ்வொன்றாய் வேக வைத்தபடி இருக்க, ருக்மணி அமர்ந்து காய்கறிகள் நறுக்கினாள்.   ஹாலில் தூங்கிக்கொண்டிருந்த தன் முறை மாமன்களை எழுப்பி விட்டு படையல் போட வேண்டிய இடத்தைப் பெருக்கி ஈரத்துணி கொண்டு சதுரமாய்த் துடைத்தாள் அஸ்வினி. அதே சதுரத்திற்கு நன்நான்கு வரிகளாய் கோலப்பொடியில் பார்டர் கட்டி நடுவில் கம்பிக்கோலம் போட்டாள். எவர்சில்வர் குடத்தைத் துலக்கி தண்ணீர் பிடித்து கோலத்தின் நடுவே வைத்தாள். குத்துவிளக்குகளுக்குப் பொட்டிட்டு குடத்தின் இரு பக்கமும் வைத்துத் திரி போட்டாள். குடத்தின் மேல் அடிப்பாகம் சமமான மற்றொரு பாத்திரத்தைக் கவிழ்த்து அதற்கும் பொட்டு வைத்தாள். ஃப்ரிஜிலிருந்து அரளி, மரிக்கொழுந்து சேர்த்துக்கட்டிய பூச்சரத்தை எடுத்து குத்துவிளக்குகளுக்கும் சாமி படங்களுக்கும் அணிவித்தாள். தாத்தா - பாட்டி சேர்ந்தமர்த்திருக்கும் போட்டோவை எடுத்துத் துடைத்துப் பொட்டு வைத்து அதைக் குடத்தோடு சாய்த்து வைத்துப் பூ போட்டாள்.   சமையல் வேலை பார்த்தபடியே இடையில் இதையும் இரசித்துக் கொண்டிருந்தாள் நிர்மலா. தன் பெண்ணின் அந்த நேர்த்தியிலும் ஒழுங்கிலும்தான் கடவுள் இருப்பதாய்த் தோன்றியது அவளுக்கு.   சாமி கும்பிட அழைத்திருந்தவர்கள் ஒவ்வொருவராய் வந்து சேர்ந்திருக்க, சாதம், பருப்பு, கூட்டு, இரசம், பொரியல், வடை, பாயாசம் எனச் சமையலும் முடிந்திருந்தது. குடத்தின் மேலிருந்த பாத்திரத்தின் மேல் புது வேட்டியும் சேலையும் வைத்து வெங்கடேசன் விளக்கேற்றிக் கற்பூரம் காட்ட, கும்பிட்டார்கள்.   பந்திக்கு நேரமிருந்தது. சொந்தங்கள் சேரில், சோஃபாவில், சுவரோடு சாய்ந்து என உக்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, மோகன் தன் மச்சான்களோடு அமர்ந்து போனை ஃபார்த்துக் கொண்டிருந்தான்.   ருக்மணியின் அப்பா வெங்கடேசனிடம், “போன வாரம் நிர்மலாவோட புருஷனைப் பார்த்தேன் உழவர் சந்தைல. காலங்கார்த்தால மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்து தகராறு பண்ணிட்ருந்தான், மாப்ள.” என்றார்.   “அவனெல்லாம் திருந்த மாட்டான் மாமா. நிர்மலா பதினொண்ணாவது படிக்கணும்னு ஆசைப்பட்டுச்சு. அப்பா தான் அவ பேச்சை கேக்காம இந்த குடிகாரனுக்குக் கட்டி வெச்சாரு.”   “ப்ச்… இப்படி கஷ்டப்படணும்னு தலையெழுத்து, பாவம்.” என்றவர் நிர்மலாவின் பக்கம் திரும்பி, “இன்னும் ரெண்டு வருஷம் போனதும் நல்ல இடமா பாத்து அஸ்வினிய கட்டிக் கொடுத்துடலாம், நிர்மலா.” என்றார்.   “என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க? எம் பசங்க எதுக்கு இருக்காங்க அப்புறம்? மூத்தவனுக்குப் பெண் அமைஞ்சு கல்யாணம் முடிஞ்சதும் இளையவனுக்கு அஸ்வினியைக் கட்டிடலாம். ஒரு பொட்டு நகை வேண்டியதில்ல. அவள என் பொண்ணாப் பார்த்துப்பேன்” என்றாள் ருக்மணி பெருந்தன்மையாக.   தொண்டையைக் கனைத்துக்கொண்ட நிர்மலா, “எப்ப கல்யாணம் பண்ணிக்கணும், யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கறது மட்டுமில்ல. வாழ்க்கைக்கு கல்யாணம் வேணுமா வேண்டாமாங்கற முடிவையும் எம் பொண்ணே எடுத்துப்பா. அதில நானோ என் பையனோ தலையிட மாட்டோம். அந்த முடிவை எடுக்கற அளவு படிப்பைத் தர்ற வேலை மட்டும்தான் எங்களுக்கு.” என்றாள்.   பந்தி போட எழுந்த தன் தாயைப் பார்த்துச் சிரித்தான் மோகன்.   *** கமல்ஹாசனின் தேவநேயம் புகழ்   சினிமா எனும் ஊடகம் நினைத்தால் பொது அடையாளம் ஒன்றைத் தனி அடையாளமாகவும், ஒரு தனி அடையாளத்தை அனைவருக்குமான அடையாளமாகவும் மாற்றிப் பொதுபுத்தியில் உறையவைக்க முடியும்.   எந்தப் படைப்பாளியின் படைப்பும், அவர் வாழ்வு மற்றும் வாழ்விடங்கள் சார்ந்த உளவியல், பால்ய நினைவுகள் ஆகியவற்றைப் பிரதிபலிப்பது இயல்பு. வெகுமக்கள் ஊடகமான சினிமாவும் அதற்கு விதி விலக்கல்ல. பாரதிராஜா படங்கள் கிராமத்தைப் பின்புலமாகக் கொண்டிருப்பதற்கும், ஷங்கர் படங்களின் நாயகர்கள் பெரும்பாலும் பிராமணர்களாக இருப்பதற்கும், பா.இரஞ்சித் முதலானோர் படங்களில் வரும் தலித் பின்புலமும், கரு.பழனியப்பன், அழ.விஜய் ஆகியோர் படங்களில் வரும் திருமணங்கள் நகரத்தார் பாணியில் காட்டப்படுவதற்கும், பாலா, சசிகுமார், முத்தையா உள்ளிட்ட தென்மாவட்ட இயக்குநர்களின் படங்களில் தெரியும் தேவரியச் சுவடுகளுக்கும் அவரவர்களின் வாழ்வியலே முதன்மைக் காரணம்.   []     மேற்கண்ட பட்டியல்களில் இருந்து சற்றே விலகி, தமிழகம், ஈழம், அமெரிக்கா, ஏன்… ஆஃப்கானிஸ்தான் என அனைத்துப் பின்னணியிலும், சமூக அடுக்குகளையும், அதுசார் நுட்பங்களையும் தொடர்ந்து பேசி வருபவர் திரைக்கதாசிரியரும், இயக்குநரும், நடிகருமான கமல் ஹாசன். முழுக்க நகைச்சுவையைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தெனாலி’ திரைப்படத்தில் ஈழ அரசியலைப் புகுத்திக் காட்டுவதாகட்டும், குடும்ப அமைப்புகளைப் பற்றி எடுக்கப்பட்ட பாபநாசத்திலும், பம்மல் K சம்பந்தத்திலும் அந்தந்த நிலம் சார்ந்த இனக்குழு வாழ்வியல், வட்டார வழக்கு எனப் பார்வையாளர் நம்பத்தகுந்த யதார்த்தத்திற்காக எடுத்துக் கொள்ளும் முனைப்பாகட்டும், இன்றளவும் உலகின் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து நிற்கும், மத அடிப்படைவாத அமைப்புகளை உள்ளிருந்தும் புறமிருந்தும் மிக நுட்பமாக அணுகும் பார்வையாகட்டும் கமல் ஹாசன் அளவிற்கு நயமாய்ச் செய்வதற்கு சர்வநிச்சயமாக, இங்கு வேறு ஆளில்லை.   நாயக ஆராதனை என்பதன் பெயரில், இவையெல்லாம் பெருமைப்படுவதற்கும், கொண்டாடுவதற்குமான காரணிகளாக ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கருத்தியல் ரீதியாக அணுகினால், அவரை ஒரு குழப்பவாதியாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது, அவருடைய ட்வீட்களைப் போன்றே!   “சாதிகளின் பெயரால் வன்முறை வேண்டாம், புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடா” என்று கூறிக் கொண்டே, மறுபுறம் ‘போற்றிப்பாடடி பொண்ணே’ எனப் பாட்டுக் கட்டுவார். “நாகரிக சமூகத்தில் யாருக்கும் மரண தண்டனை கூடாது” என விருமாண்டியில் நவீனமாக எடுத்துச் சொன்னால், அடுத்த படத்தில் 'கரப்பான்பூச்சிகளுக்கு’த் தன் துப்பாக்கித் தோட்டாக்களை ஒரு 'காமன் மேன்' ரௌத்திரத்தோடு பரிசளிப்பார். அன்பே சிவத்தில் மாய்ந்து மாய்ந்து பொதுவுடைமைக்குக் குரல் கொடுத்ததும், விஸ்வரூபத்தில் “அமெரிக்காக்காரன் பெண்கள், குழந்தைகளைக் கொல்ல மாட்டான்” என ஒரு ஜிஹாதியின் பார்வையிலிருந்தே வசனம் வைத்ததும் ஒரே கமல்தானா என்கிற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.   விஸ்வரூபத்தின் ஒரு காட்சியில், தன் உயிர்நிலையில் அடி வாங்கிக் கொண்டு எள்ளலாக, ‘அல்லாஹூ அக்பர்’ என உச்சஸ்தாயியில் அலறுவதை, அன்பே சிவம் நாசரின் ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்பதுடன்தான் பொருத்திப் பார்க்க முடிகிறது. இப்படி, தானே ஒரு கருத்தை முன்வைப்பதும் பின் தானே அதை மறுப்பதுமாகத் தான் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன கமல்ஹாசனின் திரைப்படங்கள்.    அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ மேற்சொன்ன படங்களின் கதை, திரைக்கதை வேலைகளில் கமலே பங்கு கொண்டிருக்கிறார். அப்படி இல்லையென்றாலும், கமல் பங்கு கொள்ளும் படங்களுக்குரிய பாராட்டுக்களை அவருக்கே தர பலரும் பெருவிருப்பம் கொண்டிருப்பதால், அவற்றின் உள்ளடக்கம் சார்ந்த‌ விமர்சனங்களும் அவரையே போய்ச் சேருவதில் தவறு ஒன்றுமில்லை.   தென் மாவட்டப் பின்னணியை வைத்து அவர் நடித்த‌ சாதி அரசியல் திரைப்படங்களான தேவர் மகன், விருமாண்டியை எடுத்துக் கொள்வோம். இரண்டிற்குமே அவரே திரைக்கதாசிரியர். விருமாண்டிக்கு இயக்குநரும் கூட! அப்பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்கிற முறையில், குறிப்பிட்ட இனக்குழுவின் தொழிற்படுதலை நன்கறிந்தவர் என்கிற வகையில், வேறெவரையும் விட அவருக்கு அதன் அரசியல் குறித்து அதிகம் தெரியும்தான். என்றாலும், அப்படங்கள் குட்ட வேண்டியவற்றைக் குட்டாமல், 'வெற்றுச் சாதியம்’ என்பதாகச் சுருங்கி விட்டது என்ற அவலத்தைத்தான் மீண்டும் மீண்டும் பேச வேண்டியுள்ளது.   தேவர் மகன், விருமாண்டி ஆகிய இரு திரைப்படங்களுமே தன்னளவில் முறையே நிலம், நீர் ஆகிய இயற்கை வளங்களைப் பற்றிப் பேசியவை. ஆனால் உண்மையில் நிகழ்ந்தது, குறிப்பிடப்பட்டவர்களுக்கு இன்னும் இரு கொள்கை விளக்கப் படங்களும், சில பெருமிதப் பாடல்களும் கிடைத்தன. அவ்வளவுதான்.   அவற்றின் உள்ளடக்கக் கருத்துகள் அவர்களுக்குச் சென்று சேராமல் போனதற்கு, அவற்றின் பெயர்களே முதற்காரணங்களாக அமைந்ததுதான் சோகம். தேவர் மகன், விருமாண்டி எனும் பெயர்களிலேயே ஒரு பெருமிதம் இருப்பதாகத்தான் உணர முடிகிறது. (விருமாண்டிக்கு முதலில் வைத்த பெயர் ‘சண்டியர்’ என்பதையும் நினைவுபடுத்திக் கொள்க!) பெரிய தேவர், சல்லிக்கட்டு, வேல்கம்பு, அரிவாள், முறுக்கு மீசை, கிருதா, விரு… விருமாண்டி… விருமாண்டி, எல்லாவற்றிற்கும் மகுடமாக ‘போற்றிப்பாடடி பொண்ணே’ பாடல் என தன் முனைப்புகள் அனைத்தையும் எடுத்துக் கொண்ட கருத்துகளுக்கு வலு சேர்ப்பதில் காட்டாமல், குறிப்பிட்ட ஒரு சாரரைத் திருப்திப்படுத்தவே பயன்படுத்தினார் கமல். படத்தின் உள்ளடக்கத்திற்காக, அவர் அதிகபட்சமாக எழுதிய வசனம் “போயி புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடா” என்பது மட்டும்தான்.   எப்படி என்றால், பழைய ஷகீலா, ரேஷ்மா நடித்த மலையாளத் திரைப்படங்களில், காட்டுவதை எல்லாம் காட்டி விட்டு, கடைசியில் ‘தயவு செய்து திருந்திவிடுங்கள்’ என வரும் அறிவுரை வசனத்தைப் போல!   விருமாண்டியிலும் கூட‌ காண்டாமணி ஓசைக்கும், கருமாத்தூர் வனப்பேச்சிக்குமே பெரும்பாலான ஒதுக்கீடுகளையும் அள்ளிக் கொடுத்து விட்டார். மீதம் இருந்தவையும், நல்லம்ம நாயக்கர் ஆகிய மற்றுமொரு ஆதிக்க சாதி உத்தமருக்குத்தான் சென்றது. இதிலும் ‘நீராதாரம்’ எனும் இயற்கையைக் காக்கும் உள்ளடக்கத்திற்காகக் கமல் செய்தது “நான் அஞ்சு சாமியைக் கும்புடுறவன்” என்கிற குறியீட்டு வசனம் தான். ஆனால், அது ஏதோ மூணு சாமி கும்பிடுவர்களுக்கும், ஐந்து சாமி கும்பிடுபவர்களுக்குமான உட்பிரிவுத் தகராறு என்கிற வகையில், சாதாரணமாகக் கடந்து செல்லப்பட்டு விட்டது.   தலைப்பு குறித்த பெருமித விஷயத்தில், கிட்டத்தட்ட தேவர் மகன், விருமாண்டியையே மாதிரியாகக் கொண்ட மதயானைக்கூட்டம் திரைப்படத்தை இணை வைத்துப் பேசலாம். இதன் பெயரிலேயே இருக்கும் துணுக்குற வைக்கும் விமர்சனத்தை அப்போதைய தேவர் மகனும் சரி, இப்போதைய விருமாண்டியும் சரி, அதனதன் படப் பெயர்களின் அளவில் கூடச் செய்யவில்லை. இப்போதும் வரையிலும் 'சண்டியர்' எனும் பெயரை வைக்க முடியாததை தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகத்தான் நினைக்கிறார் கமல்.   அப்படி, விருமாண்டியின் டைட்டில் டிசைனில் வந்த கைவிலங்கை விட சண்டியர் டிசைனில் வந்த அரிவாளின் மீது கமல் வைத்திருக்கும் பிரேமையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.   பின்னாளில் சண்டியர் என்ற‌ பெயரில் இன்னொரு படம் வெளிவந்து தோல்வியடைந்ததே, அப்போது எங்கே போனது அரிவாள் கலாசாரம்? எனும் நடுநிலையாளர்களின் கேள்விக்கு, ஒருவேளை கமல் நடித்திருந்தால், அப்படம் தோல்வி அடைந்திருக்குமா எனும் இன்னொரு கேள்விதான் பதில்.   மேற்படி படங்களுக்கு ஆதரவாக வைக்கப்படும் கருத்துகள் பெரும்பாலும், “உள்ளதை உள்ளபடி சொல்லி யிருக்கிறார் கமல்” என்பதாக ஆரம்பித்து, “காட்டுமிராண்டிகள் மீது கனிவை மட்டுமே காட்டித் திருத்துதல்” என்பதில் நிலை கொண்டு, “மக்களுக்குப் புரியவில்லை” எனும் ஆற்றாமையில் வந்து முடிபவை.   உண்மைதான், உள்ளதை உள்ளபடி சொல்வதுதான் ஒரு கலைஞனுக்குரிய ஆகப் பெரிய சவால். ஆனால், அதில் தன்னுடைய அரசியலாக எதைக் கலக்கிறோம் என்பதுதான் கேள்வி. எடுத்துக்காட்டிற்கு, இதே மதயானைக்கூட்டம் திரைப்படத்தில், தேவர் மகனில் காட்டப்பட்ட வெற்றுப் பெருமை, வன்முறை என அனைத்தும் உண்டு. ஆனால், அப்படிக் காட்டப்பட்ட அதே நேரத்தில், நாயகன் கதிர் கதாபாத்திரம் கலப்பு மணத்தின் வாரிசாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதுதான் திரைக்கதாசிரியர் விக்ரம் சுகுமாரனின் அரசியல்.    அதே போல, மதயானைக்கூட்டத்தின் இறுதிக் காட்சியான, சிவனம்மாவின் நிலை தரும் அதிர்வு, தேவர் மகனின் இறுதிக் காட்சியான அரிவாள் தாங்கிய சக்தியின் பிம்பம் தரும் அதிர்வை விட வீரியம் மிக்கது. பருத்திவீரனிலோ இன்னும் ஒரு படி மேலே சென்று, ஆதிக்க சாதி - தலித் கலப்பு மணத்தில் பிறந்தவரை நாயாகனாகக் கட்டமைத்திருப்பார் அமீர். (அதிலும் மேற்சொன்ன எல்லாக் கல்யாண குணங்களும் உண்டு.)   தேவர் மகனின் நாயகன் சக்தி வெளியே சென்று மேற்படிப்புப் படித்தும் கூட, ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக மாறிப் போகின்றான். அவனை அப்படி மாற்றியது அவ்வூர் என்பதுதான் கமல் முன்வைக்கும் அரசியல். இந்த விஷயத்தில், தேவர்மகனுக்கும், விருமாண்டிக்கும் இடையில் வேறுபாடுகள் அதிகம் இல்லை. முன்னதில் சின்னத் தேவர். பின்னதில் கொத்தாளம். அதில் பிரச்சனைக்குரிய நிலத்திற்குச் சொந்தக்காரர் 'கள்ளபார்ட்' நடராஜன் என்றால், இதில் கமல். ஒரே சாதியில் இருப்பதால், திருமணத்திற்குப் பெரிய பிரச்சனைகள் இராது என்கிற அளவில், பழைய பஞ்சவர்ணத்தைக் கொஞ்சம் தைரியசாலியான அன்னலட்சுமியாகப் பொருத்திப் பார்த்தால், தேவர் மகனின் பாகம் இரண்டான விருமாண்டி தயார்.   காதல் படத்தின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் இப்போதும் எழுப்பப்படுபவை. குறிப்பாக, சாய்ராத் (மராத்தி) திரைப்படம் வெளிவந்த பிறகு, பாலாஜி சக்திவேலை நோக்கி இன்னும் அழுத்தமாக எழுபவை! அதன் தொடர்ச்சியாக, பாலாஜியைப் போலன்றி வெளிப்படைத்தன்மையுடன் துணிச்சலாகச் செய்த, செய்கிற கமல்ஹாசன் மீது மட்டும் விமர்சனம் ஏன் என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது.   கமல் வெளிப்படைத்தன்மையைக் காட்டினார் என்பது ஏற்கக்கூடிய விஷயம்தான். ஆனால், அது காதல் அளவிற்கு சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியதா அல்லது அண்மையில் வந்த முத்துராமலிங்கம் போல் தொடர்புடையவர்களுக்குக் கொண்டாட்டத்தைக் கொடுத்ததா என்பதைத்தான் பார்க்க வேண்டும். இதையே, “மக்கள் புரிந்து கொள்ளவில்லை” எனும் விமர்சனத்திற்குப் பதிலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.   தவிர, ‘போற்றிப் பாடடி’ பாடல் வந்த புதிதில் அதன் வரிகளில் வரும் குறிப்பிட்ட சாதிக்குப் பதிலாகத் தங்கள் சார்ந்த சாதிப் பெயரைப் போட்டுப் பாடிப் புல்லரித்தவர்கள் அனேகம் பேர் உண்டு. ஆக, கலைஞர்கள் சொல்வதைத் திறந்த மனத்துடன் புரிந்து கொள்ள மக்கள் தயாராகவே இருக்கின்றனர். நாம் எதை அழுத்திச் சொல்கிறோம், எதை பட்டும் படாமல் சொல்லிச் செல்கிறோம் என்பதில் இருக்கிறது விஷயம். ஒருபுறம் ‘காட்டுமிராண்டிக் கூட்டம்’ எனச் சொல்லி விட்டு, மறுபுறம் தூபமும் போடக் கூடாது!   ஓநாயாக இருந்து பார்த்தலின் நியாயத்தைச் சொல்வதற்கு முன்னால், அது ஓநாய் என அழுத்தமாகச் சொல்லுதல் அவசியமானது. எடுத்துக்கொண்ட கலையின் வடிவமானது அதற்கு அனுமதிக்காத பட்சத்தில், குற்றம் எங்குள்ளது என்பதை, ஒரு சுய பரிசோதனையாகவேனும் கமல் ஆராய வேண்டியிருக்கிறது.   கமல்ஹாசன் திரையுலகில் தன்னை வணிகரீதியாகத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வரும் போதெல்லாம், குறிப்பிட்ட ஆதிக்கச் சாதியை மையப்படுத்திய ஒரு தென் மாவட்டப் பின்னணிப் படத்தை எடுப்பார் என்கிற புகாரும் உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாகவே, தேவர்மகனுக்கு முன்னதாக வந்த குணா, சிங்காரவேலன் இரண்டும் சரியாகப் போகவில்லை. விருமாண்டிக்கு முன்பாக, அன்பே சிவம்!   இன்னும் சொல்லப் போனால், தமிழ் சினிமாவை தேவர் மகனுக்கு முன்னும் பின்னுமென இரண்டாகப் பிரிக்கலாம். ஆமாம், அதற்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்து கொண்டிருந்த சாதியப் படங்களுக்கு, இது விற்கும் எனக் கோடு போட்டுக் காட்டியதும் தேவர் மகன் திரைப்படம் தான். இதற்குப் பிறகுதான் சீவலப்பேரி பாண்டி தொட்டு இப்போதைய கொம்பன், முத்துராமலிங்கம், (அந்தப் படத்திலும், ‘தெற்கத்திச் சிங்கமடா’ என்கிற பாடலுக்குப் பின்னணி பாடிய வகையில் கமலின் பங்களிப்பு உள்ளது.) சின்னக் கவுண்டர் முதலிய கொங்குப் பெருமை பேசும் பல படங்கள் என வரிசையாக வந்தன‌. கமலின் நிகர்நாயகன் ரஜினியே கூட, தேவர் மகனைப் பார்த்துக் கட்டிக் கொண்ட கரை வேட்டிதான் எஜமான்!    'கலை என்பது மக்களுக்கானது' என்பதன் அடிப்படையில், படைப்பாளி எனப்படுபவன் எப்போதும் மக்களுக்காக, மக்களின் பக்கம் நின்றுதான் பேச வேண்டும். அதாவது, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம்! அப்படிப் பேசாதவை அனைத்தும் வெறும் பிரதிகளாக மட்டுமே மாறி, பரணை அடைத்துக் கொள்ளும்.   மேலும், சினிமா உட்பட பெருகி வரும் தொழில்நுட்பங்கள் அனைத்துமே ஒரு நாகரிக சிவில் சமூகத்தை முன்னோக்கி நகர்த்த மட்டுமே பயன்பட வேண்டுமன்றி, இந்த டிஜிட்டல் யுகத்திலும் ஆண்ட பரம்பரை என வெட்டி வீராப்புப் பேசுவதற்கான கச்சாப் பொருட்களை உருவாக்கித் தருவதாக இருந்து விடக்கூடாது.   ஏனெனில் நாம் இப்போது முதுகுளத்தூர்களும், தர்மபுரி நத்தம் காலனிகளும் வேறொரு வடிவில் IIT, JNU போன்ற பெரும் கல்விக்கூடங்களில் நுழைந்து விட்ட அச்சமிகு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.   ***   சிற்பி சூழுலகு விக்னேஸ்வரி சுரேஷ்   “இந்த சிதம்பரத்துல அறுபது வயசுக்கு மேல இருக்கவங்கள்ல பாதிபேரு என்கிட்ட கொட்டு வாங்கினவங்க தான்” என்பார் என் அம்மா. அம்மா, அப்பா இருவருமே சிதம்பரத்துக்காரர்கள். பால்யம் முதலே வசிப்பதால் ஊரில் பெரும்பாலான வயதானவர்களுக்கு இருவரையும் அல்லது ஒருவரையேனும் தெரிந்திருக்கும். அம்மாவோடு வெளியே போகையில் யாராவது ஒரு பெரிசு நிறுத்தி வைத்துப் பேசிக்கொண்டிருக்கும். அம்மாவின் கண்கள் யதேச்சையாக அவர்கள் தலையைப் பார்த்து விட்டு மீளுவதைக் கண்டிருக்கிறேன். என் அம்மா வழி தாத்தா ட்யூஷன் வாத்தியார். ஆறடி உயரம், பாரதியார் போல கோட்டும், பஞ்சகச்சமும், டர்பனும் அணிந்து முகத்தில் மட்டும் சிரிப்பை அண்ட விடாதவர். ஃபோட்டோவில் பார்த்திருக்கிறேன், புகைப்படத்துக்காகக் கூடத் தன் கண்டிப்பைக் கைவிட்டதாக தெரியவில்லை. ஊரறிந்த அவர் தனிச்சிறப்பு என்னவென்றால், எப்பேர்ப்பட்ட மக்குப் பயலையும் பாஸாகச் செய்து விடுவாராம். அந்தத் தனிச் சிறப்பை ஊரில் உள்ள பலரும் தத்தம் பிள்ளைகளை அனுப்பி ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். என் தாத்தாவுக்கு இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது என்பதை அடுத்த பாராவில் தெரிந்துக் கொள்வீர்கள். மனப்பாடம் என்பது கெட்டவார்த்தை ஆகாத காலமாதலால், தாத்தா எல்லா வாய்பாட்டையும், நேராகவும், பின் தலைகீழ் பாடமாகவும் ஒப்பிக்க சொல்லிப் படுத்தி எடுத்திருக்கிறார். ஒப்பிக்காத மாணவர்களுக்குக் கொட்டு நிச்சயம். அதிலும் அவர் இருக்கையிலிருந்து எழ மாட்டார். இந்தப் பணியைச் செய்ய என் அம்மாவைப் பழக்கியிருந்தார். கொட்டும் சத்தம், ஐம்பது கஜ தொலைவில் அமர்ந்திருக்கும் அவர் காதில் விழ வேண்டும் என்பது பணியின் விதிமுறை மற்றும் கிளுகிளுப்பு. இந்தக் காலத்து மாணவர்கள் என்றால், கொட்டியதற்குப் பழிவாங்க வாத்தியார் வண்டியில் காற்றை இறக்கி விடுவார்கள். அந்தக்கால மாணவர்கள் வாய்பாடை நினைவிலும், கொட்டியதை மறந்தும் விட்டார்கள். அம்மாவுக்கு இப்போதும் ஊரில் மரியாதை! தற்போதும் ட்யூஷன்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. சிறிய வகுப்பு என்றால் பெண்கள். ஒன்பது, பத்தாம் வகுப்புக்கு மேல் என்றால் ஆண் வாத்தியார்கள். பெரும்பாலான ட்யூஷன் டீச்சர்கள், கமலா காமேஷ் போல முகத்தில் நிரந்தர சோகம் தேக்கியவர்களாக அமைந்து விடுகிறார்கள். அப்போது ட்யூஷனுக்குப் போவதென்பது சுவாரஸ்யப்படுவதில்லை. அம்மாக்களுக்கு முதுகில் நாலு சாத்து சாத்துவதற்குக் கூடுதல் காரணம் கிடைக்கிறது. கமலா காமேஷ்கள் ட்யூஷன் எடுக்கும் போதே கீரை ஆய்ந்து கொண்டோ, வெங்காயம் உரித்துக்கொண்டோ இருப்பது அந்த வயதில் எரிச்சலூட்டியிருக்கிறது.   ட்யூஷன் எடுப்பதென்றால் என்ன, நாங்களே புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு படிக்க வேண்டும் அல்லது அப்படிப் பாவ்லா பண்ண வேண்டும். ஒரு மணி நேரத் தண்டனை அது. ஏழை கமலாக்களுக்கு உதவ இந்த அம்மா, அப்பாக்களுக்கு வேறு வழியே தென்படாதா என்று கடவுளைக் கேட்டிருக்கிறேன்.   ஒரேயொருமுறை ‘கடலோரக் கவிதைகள்’ ரேகா போன்ற அக்காவிடம் ட்யூஷன் பயின்றிருக்கிறேன். கீரை ஆயாமல், அழுது வடியாமல், பாண்ட்ஸ் பவுடர் வாசனையோடு வந்தமரும் இது போன்ற அழகான அக்காக்களிடம் பயில்வதில் உள்ள நல்ல விஷயம், அவர் கன்னத்தில் தட்டி ‘குட் பாய்’ அல்லது ‘குட் கேர்ள்’ சொல்வதைக் கேட்பதற்காகவே விழுந்து விழுந்து படிப்போம்.   சனி, ஞாயிறு என்றால் காலை நேர ட்யூஷன். அக்கா ரேடியோவில் காதல் பாடல்களை ஒலிக்க விட்டு கூடவே பாடுவார். ஒரு மாதிரி கிறக்கமாக இருக்கும். அழகான பெண்ணுக்கு நன்றாகவும் பாட வருவதெல்லாம் கில்லர் காம்பினேஷன். அதில் மயங்க ஆண், பெண், குழந்தை வேறுபாடெல்லாம் கிடையாது. ட்யூஷன் அக்கா, ‘தாண்டுரா ராமா’ சொல்லியிருந்தால் குட்டிக்கரணம் கூட அடித்திருப்போம் எனும் போது, பானிபட் யுத்தத்தை யார் எப்போது நடத்தியது என்பதைப் படித்து வைப்பது கஷ்டமா என்ன!   பக்கத்து வீட்டு அண்ணா, தினமும் ட்யூஷனில் நடந்ததை ஒன்று விடாமல் கேட்டுக் கொள்வார். அது என் படிப்பின் மீதான அக்கறை என்றே நம்பினேன். ஒருநாள், அக்கா எங்கள் படிப்பையும், பக்கத்து வீட்டு அண்ணாவையும் பற்றிக் கவலை கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டு போய் விட்டார். கமலாக்கள் ஒருபோதும் இவ்வாறு பாதியில் விட்டுப் போவதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.   ஒன்பதாம் வகுப்பு வந்ததும் இயற்பியல், வேதியல், கணக்கு என தனித்தனி ஆசிரியர்களிடம் போக வேண்டியதாயிற்று. வகுப்பில் நன்றாகவே கணக்குச் சொல்லித் தந்த ஆசிரியரிடமே நாங்கள் ட்யூஷனுக்கு போனது பற்றி அவருக்குமே எந்த குழப்பமும் இருந்திருக்கவில்லை.   என் நண்பரின் அனுபவம் வேறு விதமானது. அவர் வகுப்பில் கணிசமானவர்கள் கணக்காசிரியரிடம் ட்யூஷனுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அது அரசுப் பள்ளியாதலால், நூற்றுச் சொச்சம் மாணவர்களில் வீட்டுக்கு வரும் பையன்கள் முகம் மட்டும் அவருக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தது. ஒவ்வொரு காலாண்டு, அரையாண்டுப் பரிட்சை முடிவிலும் உங்களில் யார் முதல் மதிப்பெண் என்று ட்யூஷன் பையன்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். அவர்களில் ஒருவர் தான் பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக வரமுடியும் என்பது தாண்டி அவர் யோசிக்கவேயில்லை.     பத்தாம் வகுப்பில் என் நண்பர் தான் மாநில அளவில் முதல் மாணவர். கணக்காசிரியருக்கு, பெயர் கேள்விப்படாத அந்த மாணவன் உள்ளூர் என்பதே அதிர்ச்சி. “எவனோ ரகுன்னு ஒருத்தன் ஃபர்ஸ்ட் வந்திருக்கான். உங்களுக்கு மார்க் வாங்கறத்துக்கு என்னடா கேடு?” என்று வகுப்பில் கேட்க, “எவனோ இல்ல சார், நம்ம கிளாஸ் ரகுவரன் தான்” என்று அடையாளமில்லாமல் இருந்த மூன்றாவது பெஞ்சு ரகுவை ஒருவன் போட்டுக் கொடுத்தான். வகுப்பாசிரியருக்கு அடுத்த அதிர்ச்சி. அவரிடம் ட்யூஷனுக்கு வராததால் பையனைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.   “சபாஷ்டா பையா!” முதுகில் ‘படீர்’ என்று ஒன்று வைத்தார். “ஆமா, யார்ட்ட ட்யூஷன் போற?” “யார்ட்டயும் இல்லசார். நீங்க கிளாஸ்ல சொல்லித்தர்றது தான்!” ஆசிரியருக்கு குஷியாகி, மீண்டும் ‘படீர்’. “அப்பா என்ன பண்றார்?” “நெசவு சார்”. மூன்றாவது ‘படீரில்’ நண்பருக்குப் பொறி கலங்கி விட்டது. மாவட்ட அளவோடு நின்று விட்டதற்காக அப்போது சந்தோஷப்பட்டிருக்கிறார். அடுத்தடுத்த வகுப்புகளுக்கு இலவசமாகவே அவரிடம் கணக்குக் கற்றுக் கொண்டாராம்.   எங்கள் ஊரில் வேதியல் ஆசிரியர் ‘சார்லஸ் சார்’ அழகான இளைஞர். திருமணமாகியிருக்கவில்லை. அவரிடம் ட்யூஷன் போக‌ எங்களுக்கு இனித்தும், எங்கள் பட்டிக்காட்டுப்பெற்றோருக்குக் கசந்தும் இருந்தது. எந்நேரமும் எங்களுக்குள் வேதியல் நிகழ்வு நடந்துவிடும் எனப் பயந்து, அதே தெருவிலிருந்த சிடுமூஞ்சி தாத்தாவிடம் - எவ்வளவு யோசித்தும் இப்போது பெயர் நினைவுக்கு வரவில்லை – சேர்த்து விட்டார்கள்.   சார்லஸ் சாரிடம் படிக்கும் பெண்களிடம் அவரைப் பற்றி அவ்வப்போது கேட்போம். அதைச் சொல்வதற்கு ரொம்ப பிகு பண்ணிக்கொள்வார்கள். அவர்களிடம் தாஜா செய்து வாங்கும் தகவல்கள் - சார்லஸ் சார் கையெழுத்து சுமார் தான், அவர் வீடு கலைந்து கிடக்கும் - மதிய உணவு இடைவேளை முழுவதும் பேசும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தன. பின்னாளில், அவர் தன் மாணவி ஒருவரையே திருமணம் செய்து கொண்டதாக அறிந்த போது எங்கள் பெற்றோர் ஒன்றும் பட்டிக்காடு இல்லை என்று தோன்றியது. ட்யூஷன் மாஸ்டர்கள் பதின்பருவ உளவியல் தெரிந்தவர்கள். பள்ளி வாத்தியார்கள் கூட அடிக்க முடியும், இவர்களால் அடிக்க முடியாது. ஆனால் அதைவிட அவமானப்படுத்தும் விதமாக, ஆண்கள் விடைத்தாளை பெண்களிடமும், பெண்கள் விடைத்தாளை ஆண்களிடமும் கொடுத்து மதிப்பெண்ணைக் கூட்டச் சொல்வர்.   சில ட்யூஷன்களில் மாணவ / மாணவியருக்கு தனித்தனி நேரம் ஒதுக்கி ட்யூஷன் சுவாரஸ்யத்தில் கை வைப்பார்கள். எனினும் முழுக்கவே பெண்கள் அல்லது ஆண்கள் பள்ளியில் படிப்பவர்களுக்கு, ட்யூஷனுக்கு வெளியே இருக்கும் சைக்கிள் நிறுத்தத்தில் தான் முதல் வெட்கம், முதல் காதல் எல்லாம் தோன்றுகிறது.     தற்போது ட்யூஷன்களின் முகமே மாறிவிட்டது. பெயரும். ‘கோச்சிங் கிளாஸ்’ என்று சொல்லிப்பார்த்தாலே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்குள் நுழையும் அதிர்வு கிடைக்கிறது. தொலைக்காட்சியில் பாடிப் புகழ்பெற்ற குழந்தைகள், சீசன் முடிந்ததும் கல்யாணக் கச்சேரிகளில் பாடுவது போல், எல்லாப் பேராசிரியர்களும் ஓய்வு பெற்றதும் டிஃபால்ட்டாக கோச்சிங் க்ளாஸ் ஆரம்பிக்கிறார்கள். பள்ளி ஆசிரியருக்காவது பாஸாக்கி விட்டால் போதும், ட்யூஷன் வாத்தியார்கள் பெற்றோர்களின் எஞ்னியரிங் அல்லது டாக்டர் கனவுகளையும் மெய்ப்பிக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு படிப்ப‌வர்களுக்கு பத்தாம் வகுப்பு பாடத்தையும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்தையும் எடுப்பதில் உள்ள சிரமம் தனித்துவமானது.   அடிப்படையை மட்டும் கற்றுத் தர வேண்டும், ஆனால் அதிலேயே நின்று விடக்கூடாது. இவை அனைத்தும் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக அல்லது இதர பேராசிரியர்களுக்கு அசால்ட்டாக வருகிறது.   தினமும் ஐந்து மணிக்கே துவங்கும் வகுப்புகள், நாளொன்றுக்கு ஆறு பாட்சுகள், வாரம் ஒரு பரிட்சை நடத்தி, அதை திருத்தித் தரும் இடைவிடாத பணியைக் கூடச் சாதாரணமாக எண்ணிவிடலாம். ஆனால், அத்தனை பாட்ச்களுக்கும் வாராவாரம் தனித்தனிக் கேள்வித்தாள்கள் தயாரிப்பதின் பின்னாலுள்ள உழைப்பு அசாதாரணமானது. “பதில் சொல்றது ஈஸி, கேள்வி கேட்டுப் பார்த்தால் தான் தெரியும்” என்று ஆசிரியர்கள் மாற்றிச் சொல்வார்களாக இருக்கும். ஆனால் அதுவும் உண்மை தான்.    விடையை விட இங்கே கேள்வி முக்கியம். கடைசிப் பரிட்சை ஒரு போர்முனை என்றால், எதிரி கொண்டு வரப்போகும் ஆயுதம் ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயமானதாய், கையாளத் தெரிந்திருந்ததாய் இருந்தால் வெற்றி உறுதி அல்லவா! வாரம் ஒரு பரிட்சை ட்யூஷனில் எழுதிய மாணவர்கள் தேர்வு நாளன்று, இன்றும் மற்றொரு நாளே என்ற பதட்டமில்லாத ஜென் மனநிலையும் அடைகிறார்கள். பொதுவாக இது போன்ற அனுபவ கட்டுரையில் “வாழ்க்கையில்…” என்று எங்காவது வர‌ வேண்டும் என்பது விதி. அது கட்டுரையின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. அதனால், அப்படியே முடித்துக் கொள்வோம்.   வாழ்க்கையில் நம்மோடு பயணித்த, நம்மைச் சீரமைத்த பலரையும் நினைத்துப் பார்க்க, நன்றி கூற விட்டுவிடுகிறோம். அதில் ட்யூஷன் மாஸ்டர்கள் நிச்சயம் உண்டு. சிற்பங்களால் ஆனது தான் கோவில் எனினும் கோவிலைக் கட்டிய அரசன் போன்று சிற்பிக்கு வரலாற்றில் இடம் இல்லை.   நானும் வருடா வருடம் பார்க்கிறேன், மாநிலத்தில் முதலாவதாக வரும் எந்த மாணவராவது என் வெற்றிக்கு காரணம், ட்யூஷன் மாஸ்டர் என்ற உண்மையை சொல்கிறாரா என்று. ம்கூம். “என் பேரண்ட்ஸ், என் பிரின்சிபல், என் டீச்சர்ஸ் தான் காரணம்” என்று செந்தமிழில் ஒரு பேருண்மையை மறைக்கிறார்கள்.   ***   ஒடுக்கத்தின் முழக்கம் லேகா இராமசுப்ரமணியன்   “இன்று வரை என் தனிப்பட்ட அனுபவங்களும், அக்கறைகளும் சாதிய அமைப்பைச் சார்ந்த பிரச்சனைகளுடன் தான் சம்பந்தப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிவரும் நாளில் நான் சாதியை மையப்படுத்தாத திரைப்படங்களை எடுப்பேன்.” - நாக்ராஜ் மஞ்சுளே    தமது ஆதிக்க சாதி எதிர்ப்பு நிலையை அல்லது தலித் ஆதரவு நிலையை பட்டவர்த்தனமாகப் பேசிய திரைப் படைப்பாளிகள் இங்கு மிகக் குறைவு. அப்படிப் பேச முற்பட்டவர்களும் கூட சாதிப் பெயர்களை மறைத்து, குறியீடுகள் கொண்டே தம் கருத்துக்களை நீண்ட தயக்கத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர்.   ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒலிக்கும் மராத்திய இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுளேவின் படைப்புகள் இதனாலேயே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத படங்களாக அவை மாறிப் போக அவற்றின் வெளிப்படைத்தன்மையே காரணமாய் இருக்கிறது. மஞ்சுளேவின் படங்கள் நேர்மையானவை. எவ்விதப் பாவனைகளும் இன்றி தினசரி வாழ்வின் நிதர்சனங்களைச் சுட்டிக்காட்டுபவை. சராசரி பார்வையாளன் இதுவரை கண்டிராத தலித் வாழ்வியலை பிரச்சார நெடியின்றி முன்னிறுத்துபவை.   []     தன் படைப்புகளுக்குத் தன் வாழ்வே ஆதாரம் எனக்கூறும் மஞ்சுளே இத்தாலியத் திரைப்படங்களான ‘Cinema Paradiso’ மற்றும் ‘Bicycle Thieves’ இரண்டும் எதார்த்த சினிமாவை அடையாளம் காட்டியதாகக் குறிப்பிடுகிறார்.   சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமே என்னும் வரையறையில் வெளியாகும் பாலிவுட் திரைப்படங்கள் மீதான இவரது கடுமையான விமர்சனங்கள் மறுக்க முடியாதவை. தன்னால் ஒரு போதும் அப்படியான போலித்தனம் மிக்க படங்களைத் தர இயலாது எனக் கூறும் மஞ்சுளே, சினிமா என்னும் ஊடகத்தை தன் போராட்ட ஆயுதமாக மாற்றியமைத்த ஒப்பற்ற கலைஞன்.   ஒடுக்கப்பட்ட‌ இனத்தின் தீராத் துயரத்தை உரத்துச் சொல்லிடும் மஞ்சுளேவின் திரைப்படங்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் இவரது முதல் படமான பிஸ்துல்யாவின் முடிவே இரண்டாவது திரைப்படமான ஃபான்ரியின் துவக்கமாக இருக்கிறது. போலவே ஃபான்ரியின் நிறைவேறாக் காதல் தான் சாய்ராத்தின் மையமாக அமைந்திருக்கிறது. இது எதேச்சையாக அமைந்திருக்கலாம் எனினும் தலித் வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்ட முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்ட இப்படங்கள் ஒரு புள்ளியில் இணைவது ஆராயப்பட வேண்டியது.   2009ம் ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்ற மஞ்சுளேவின் பிஸ்துல்யா கல்வி மறுக்கப்படும் ஏழைச் சிறுவனைப் பற்றிய குறும்படம். தந்தையை இழந்த பிஸ்துல்யா கூலி வேலைசெய்து பிழைக்கும் தாய்க்குத் துணையாக அவளுடன் பகல் பொழுதுகளைக்கழிக்கிறான். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததாலும் பள்ளிச் சீருடைகள் இல்லாததாலும் அவனுக்குப் பள்ளியில் அனுமதி மறுக்கப்படுகிறது. வலுக்கட்டாயமாகப் பள்ளியை விட்டு வெளியேற்றப்படும் பிஸ்துல்யா பிழைப்புக்காகத் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறான்.    பள்ளி செல்லும் ஆசையும் ஆர்வமும் கொடுங்கனவாக அவனைத் துரத்துகிறது. படிப்பின் மீதான அவனது அக்கறையைச் சில காட்சிகளின் வழியே அறிந்து கொள்ள முடிகிறது. ஆதரவளிக்க யாருமற்ற சூழலில் பரிதவிக்கும் பிஸ்துல்யா இறுதிக்காட்சியில் எடுக்கும் முயற்சியின் பலன் நம் கற்பனைக்கு விடப்படுகிறது.   அம்மெச்சூர் நடிகர்களைக் கொண்டு வெளியான இக்குறும்படம் இயக்கம், ஒளிப்பதிவு, இசை என எதிலும் குறிப்பிடும்படியான நேர்த்தி கொண்டதல்ல. மஞ்சுளேவின் கன்னி முயற்சியான பிஸ்துல்யா குறைகளைத் தாண்டி கவனம் பெற்றதற்குக் காரணம் அது நிஜத்தைப் பிரதிபலித்ததே. சாலையோரங்களில் வசிக்கும் எண்ணற்ற குழந்தைகளின் அடையாளமாய் பிஸ்துல்யா இருக்கிறான். சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட அவனைப் போன்ற சிறார்களே பின்னாளில் கொலை, கொள்ளைச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை அழுத்தமாகச் சொல்லும் படம் அரசு மற்றும் பள்ளிகளின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.   சமூகச் சீர்கேடு குறித்த விவாதங்கள் மட்டுமே பெருகிக் கிடைக்கும் இன்றைய சூழ்நிலையில் அதற்கான ஆதார விதையை அடையாளம் காட்டுகிற விதத்தில் பிஸ்துல்யா குறிப்பிடத் தகுந்த படைப்பு.   2013ல் வெளியான இவரது ஃபான்ரி (Fandry) கவிஞன், எழுத்தாளன் என பன்முகம் கொண்ட மஞ்சுளேவை தனிப்பெரும் ஆளுமையாக உயரச் செய்த படைப்பு. பன்றி மேய்ப்பதைக் குலத் தொழிலாக கொண்ட ஜாப்யா விடலைப் பருவத்திற்கே உரிய அத்தனை ஆசைகளும் கனவுகளும் கொண்டவன். குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளிக்குச் செல்வதோடு விடுமுறை நாட்களில் கூலி வேலை செய்து உழைப்பவன். பணக்கார வீட்டுப் பெண் ஷாலு மீது ஜாப்யாவுக்கு அளவிட முடியாக் காதல் அல்லது அதுபோல் மயக்கம்.   சராசரி இளைஞனின் எல்லா லட்சணங்களும் பொருந்தியிருப்பினும் ஜாப்யா தனித்து விடப்படுகிறான். ஆதிக்க சாதியின் கட்டுப்பாட்டிலிருக்கும் அவ்வூரில் அவனது ஒவ்வொரு பொழுதும் அவமானத்துடனேயே கழிகிறது.  குலத்தொழிலும், சாதிய அடையாளமும் அவனது கனவுகளுக்குத் தடையாக நிற்கின்றன.   அவனது தினசரிப் பொழுதுகளை விவரித்தபடி செல்லும் கதையில், அடித்தட்டு கிராமங்களில் தலித்துகளின் இன்றைய நிலையை நுணுக்கமாக விவரிக்கும் பல காட்சிகள் உள்ளன. தலைமுறையாய்த் தொடரும் அவலத்தைச் சகித்துக் கொள்ள முடியாத இளம் ஜாப்யா தனித்தலைவதில் ஆச்சர்யமில்லை. சக பள்ளி மாணவர்களிடம் தன் குடும்பத்தின் அடையாளத்தை மறைக்க முயன்று தோற்கும் அவனது சூழ்நிலை அவன் மீதான பரிதாபத்தைக் கூட்டுவது. திருவிழா சமயமொன்றில் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் ஜாப்யா, தன் நண்பனின் தோள் மீது அமர்ந்து தூரத்தில் நிற்கும் ஷாலுவைப் பெருமிதம் பொங்க பார்க்கும் காட்சியும் அதன் தொடர்ச்சியாய் நிகழ்பவை யாவும் சகித்துக் கொள்ளவியலா நிதர்சனங்கள்.   உன்னால் ஒரு நாளும் வேறு உயரத்திற்குச் செல்ல முடியாது என்பது அவனுக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. போலவே ஊரே வேடிக்கை பார்க்க, தன் குடும்பத்துடன் சேர்த்து ஜாப்யா பன்றிகளை விரட்டும் நீண்ட இறுதிக் காட்சி ஏற்படுத்தும் அதிர்வும், பெரும் குழப்பத்துடனும் ஆக்ரோஷத்துடனும் அவர்கள் விரட்டியடிக்க முயல்வது பன்றிகளை அல்ல, காலங்காலமாய் அவர்களை அடக்கி ஆளும் ஆதிக்க சாதியின் ஓடுக்குமுறைகளையே. வேட்டையாடிய பன்றியுடன் ஊர்வலமாய் அக்குடும்பம் நடந்து வரும் சாலையின் பின்னணியில் அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் படங்கள் இருப்பது அக்காட்சிக்கு அழுத்தம் சேர்ப்பது. அங்கு தன் குடும்பத்தைக் கேலி செய்யும் ஒருவனை முதல் முறையாக ஜாப்யா எதிர்க்க துணிவது, ஒர் யுக மாற்றத்திற்கான துவக்கமாகக் கருதப்பட வேண்டியது.   உலக சினிமா வரலாற்றில் குறிப்பிடும்படியான இறுதி காட்சிகளின் பட்டியலில் இதற்கு ஓர் இடமுண்டு.   விளிம்புநிலை வாழ்வின் துயரத்தைப் பேசுவதாக‌ இருப்பினும் ஃபான்ரி மிகுந்த கவித்துவ அழகுடனேயே படமாக்கப்பட்டுள்ளது. பிஸ்துல்யாவில் குறைகளென நினைத்தவை யாவும் இதில் சீர‌மைக்கப்பட்டிருந்தன. காட்சிகளுக்கு அர்த்தம் கூட்டும் இசையும், அக்கிராமத்தின் நிலப்பரப்புக் காட்சிகளும் ரசிக்கும்படியானவை. குறிப்பாக ஜாப்யாவும் அவன் நண்பனும் கருப்பு நிறச் சீட்டுக்குருவியைத் தேடியலையும் முதல் காட்சி.   ஜாப்யாவாக நடித்துள்ள சோம்நாத் தன் எதார்த்த நடிப்பால் படம் முழுவதையும் ஆக்ரமித்துக் கொள்கிறார். அவ்வாண்டு இந்திய அரசின் சிறந்த இயக்குநர், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதுகளை முறையே மஞ்சுளேவும் சோம்நாத்தும் பெற்றது குறிப்பிடத்தக்கது. சாதிய ஒடுக்குமுறை குறித்த தீவிரப் பார்வை கொண்ட ஃபான்ரி பல்வேறு விருதுகளை பெற்ற போதிலும் வசூல்ரீதியாகச் சாதிக்காதது பெரும் குறை. உண்மையில் இத்திரைப்படம் வெகுஜன சினிமா ரசிகர்களை அவ்வளவாய்ச் சென்றடையவில்லை.   []     ஃபான்ரியின் தோல்வி மஞ்சுளேவை அதிகம் பாதித்து இருப்பது அவரது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வெளிப்பட்டது. நீண்ட தயக்கத்துடனேயே தனது அடுத்த படமான சாய்ராத்தின் (Sairat) திரைக்கதையை எழுதத் துவங்கியதாய்ச் சொல்லுகிறார். சாதி எதிர்ப்புக் கொள்கையிலிருந்து விலகாத அதே வேளையில் மக்களின் ரசனைக்கு ஏற்றது போலவும் அமைந்த சாய்ராத்தின் வெற்றி சினிமா வரலாற்றினை மாற்றி அமைத்தது. இதுவரையிலான மராத்திய சினிமா வசூல் சாதனைகள் அத்தனையையும் முறியடித்தது.   சில மாவட்டங்களில் நள்ளிரவுக் காட்சிகள் ஏற்பாடாயின. மஞ்சுளேவின் நேர்காணல்கள் வெளிவராத வட இந்தியப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இல்லை எனலாம். சாய்ராத்தின் நாயகனும் நாயகியும் சென்ற இடங்களிலெல்லாம் பெற்ற வரவேற்பு நம்ப முடியாதது. மிகச் சாதாரணக் கதையை அசாதாரண அழகு கொண்டு படமாக்கிய மஞ்சுளேவின் ஒப்பற்ற ரசனைக்குக் கிடைத்த வெற்றியே இது.   இத்தனை கொண்டாட்டங்களுக்கும் காரணமான சாய்ராத்தின் கதை ஏழை நாயகன் பணக்கார நாயகியை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மணம் முடிக்கும் சராசரியானதே. இருப்பினும் முழுக்க முழுக்க காதல் மனநிலையில் படமாக்கப்பட்ட சாய்ராத்தின் காட்சிகள் நம்மைப் படத்துடன் ஒன்றிடச் செய்கின்றன.   இதிலும் புதுமுக நடிகர்களே பிரதான வேடம் ஏற்றுள்ளனர். நாயகி ஆர்ச்சியாக ரிங்கு ராஜ்குரு, நாயகன் பிரஷ்யாவாக ஆகாஷ். சாய்ராத்தில் நாயகனை விட நாயகிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் திட்டமிட்டே வடிவமைத்ததாக இயக்குநர் கூறுகிறார். பெண் அழகில் மட்டுமே பிரதானப்படுத்தப் படுவது மோசமானது எனக் கூறும் மஞ்சுளேவின் நாயகி ஆர்ச்சி எதற்கும் துணிந்தவளாக, ஆளுமை செலுத்துபவளாக, ஏன் புல்லட்டும் டிராக்டரும் ஓட்டத் தெரிந்தவளாகவும் கூட‌ இருக்கிறாள்.   ரிங்குவின் ஒவ்வொரு நொடி முக பாவனையும் அளவில்லா அழகு கொண்டு ஈர்ப்பது. பிரஷ்யாவை முதலில் வெறுப்பதாகட்டும், பிறகு விடாமல் அவனைத் துரத்திக் காதல் கொள்வதாகட்டும், அவனோடு பிணக்குக் கொண்டு உருகுவதாகட்டும் - ஆர்ச்சியின் மீதான நெருக்கம் படம் முடிந்த பிறகும் நீடிப்பது.   இசையமைப்பாளர்கள் அஜய் - அதுலின் மயக்குறு இசை சாய்ராத்தின் மிகப்பெரும் பலம். மான்டேஜ் காட்சிகளாக விரியும் பாடல்களில் இசையும் புத்துணர்வுமிக்க காதல் காட்சிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது ரசித்துணர வேண்டியது. மஞ்சுளேவின் சொந்த கிராமத்திலும், மஹாராஷ்ட்ராவின் இன்ன பிற இடங்களிலும் படமாக்கப்பட்ட‌ இப்பாடல்கள் அதன் காட்சி அழகியலுக்காய்க் கொண்டாடப்படுபவை.   சராசரியான காதல் திரைப்படம் ஒன்றைப் பார்க்கும் மனநிலையிலேயே இறுதி வரை பார்வையாளனை வைத்திருக்கும் மஞ்சுளே, கடைசி சில நிமிடங்களில் நான் சொல்ல வந்தது இதுவல்ல என அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார். தினசரி நாளிதழ்களிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் நாம் காண நேரிடும் ஆணவக் கொலைகள் குறித்தான செய்திகள் ஒரு நிமிட பச்சாதாபத்தோடு மறக்கப்படுகின்றன. சாய்ராத் படத்தின் மூலம் மஞ்சுளே சாதிக்க நினைத்தது அத்தகைய நிகழ்வுகளின் மீதான நம் அவதானிப்பை விரிவு படுத்துவதே. ஆதிக்க சாதிகளால் அரங்கேற்றப்படும் ஆணவக் கொலைகள் குறித்து விவாதிக்கத் தூண்டி, அது பற்றிய‌ மாற்றுப் பார்வையை பரப்புவதில் மஞ்சுளே வெற்றி பெற்றிருக்கிறார் என்பதே உண்மை.   சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு தீண்டாமை கொடுமைகளுக்கெதிரான தீவிரமான கருத்துக்களைத் தன் திரைப்படங்களின் வழி தொடர்ந்து முன்னிறுத்தும் மஞ்சுளே நம் காலத்தின் ஒப்பற்ற கலைஞன்!   ***   நீடூழி வாழ்க மீனம்மா கய‌ல்   பச்சை வாசம் கலந்த காற்று இயற்கையின் சுவாசம் போலத்தோன்றிற்று மதுவிற்கு. சுத்த அமைதியில் சலசலக்கும் நீரோசை கூட அமைதியோடு அமைதியாக இழைந்து போயிருந்தது, பொட்டுமேகம் இல்லாத வெட்டாரவெளி வானம். அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்ததில் வானமவளை உள்ளிழுத்துக்கொண்டது.   எங்கும் நீலம். நீலமாக வெளிவந்தாள். தனிமைச்சுதந்திரம் ஆடச்சொல்லியது. அசையும் நீலக்கடல்.   தலையை உலர்த்திக்கொண்டே ராஜி, “ஏய் சீக்கிரம் குளி. இருட்டக்குள்ள கீழ இறங்கனும்.”   “ஏன் பிள்ள இது உங்க இடம்தான! யார் என்ன சொல்வா?”   “ஆமா! அப்பாவும் அண்ணனும் வரலன்னு சொல்ட்டாங்க. சீக்கிரம் இறங்கச் சொன்னாங்க. தனியாலாம் நைட் தங்க முடியாது. கூடாது. அருவில செத்தவங்க ஆவி இங்க தான் சுத்துதாம்.”   சத்தமாகச் சிரித்தாள் மது.   “எது ஆவியா? நான் அந்த ஆவில இட்லி சுட்டுட்டுதான் வருவேன். நீ வேணா இறங்கு.”   “வெள்ளாடாத பிள்ள. போயி குளி. நீ குளிச்ச தண்ணிதான் அருவில விழப்போவுது.”   “அப்போ இதுக்கும் மேல யாரோ குளிச்ச தண்ணிலதானே நான் குளிப்பேன்? ச்சேய்…”   “ரொம்ப நாள் ஆசை ஒன்னு இருக்கு ராஜி. யாருமே தொடாத தண்ணிய குடிக்கணும் குளிக்கணும்.”   “நீ பேசிட்டே இரு. பிரியாணி வாங்கப்போன முருகேசன் இப்ப வந்திடுவான். சீன் பார்க்கப்போறான். அப்பறம் புலம்பு, உன்ன வச்சுக்கறேன்.”   “நிஜமாவே பார்ப்பானாடி?”   ஓரக்கண் சிமிட்டி டாப்ஸை ஜிம்மிசோடு சேர்த்துக் கழற்றி பாறை மேல் போட்டாள்.   “அடியேய் சனியனே, நீலாம் உருப்படவே மாட்ட, கேட்டியா.”   “ஆடைகள் சுமைதானே! அதை முழுதும் நீக்கி விட்டு குளிப்பேன். முருகேசன் எப்ப வருவான்? அவன் வரும் வரைக்கும் குளிப்பேன்.”   ச‌ட். பிரியாணி கிடைக்காது. புரோட்டாதான் முருகேசன் வாங்கிட்டு வருவான்.    என்னமோ நினைச்சனே?! மறந்திட்டு.   “முண்டக்கட்டையா நிக்குது பாரு, மூதேவி.”   அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.   கணுக்காலுக்குச் சற்று மேலே நீரோட்டம். படுத்தால் தலைக்கு மேலாக ஓரங்குலத்துக்கு நீர் போகும். மது காலை வைத்ததும் நீரின் சில்லிப்பு உச்சந்தலை வரை பரவிப் புல்லரித்தது. குளிர் பழக கையில் நீரள்ளி உடம்பில் தெளித்தாள். நீருக்குள் முட்டி போட, குளிர் தொடை தாக்கி வயிரதிர‌ச் சப்பென்று உட்கார்ந்தாள்.   ஆற்றில், ஓடையில் குளிப்பதில் இது பெரும்பாடு. இடைக்குக் கீழ் நனைதல் உச்சமாய் உடல் கூசும்.   அமர்ந்தாள், கிடந்தாள், நீரைக் கெடுத்தாள். தெளிந்த நீரில் வான்பிம்பம் விழுந்து அவள் மேனியில் மேல் ஓடியது. வான் அவளைக் கெடுத்தது. குப்புறக் கிடந்ததில் மார்பை மண் தழுவியது. கூழாங்கற்கள் தொட்டு உருண்டன. நிலமும் அவளும் பரஸ்பரம் கெட்டனர். நீருக்குள்ளிருந்தபடி வான் பார்த்தாள். வானோடை!   ச‌ட். ராஜி செத்துட்டா. பேய் அடிச்சுட்டு.    குபுக்கென்று நீரிலிருந்து எழுந்து “ஏய் சனியனே…”   “ஏன்டி கத்தற? ந்தா உன் டிரஸ்.”   ஏன் எனக்கு இப்படித் தோனுச்சு? என்ன தோனுச்சு? என்னமோ தப்பா தோனுச்சே! மறந்திட்டு.   எவ்வளவு நினைவுபடுத்தியும் வரவில்லை.   “முருகேசன் வந்தானா? பிரியாணி பார்சல்?”   “ஓ, வந்துட்டானா! எங்க காணோம்?”   “அடி வாங்கப் போறடி நீ.”   *   உயரமான இடங்களின் பருவநிலை நம்பிக்கைக்குரியது இல்லை. திடீரென்று மாறிவிடும். விட்டது!   “ஏத்தா இருங்க. இப்ப இறங்க வேண்டாம். மழ பிடிச்சிடும். ஐயாட்ட நான் போன் செஞ்சு சொல்லிக்கறேன்.”   “சரிய்யா. நான் பார்த்துக்கிடுதேன். _____ ல்ல கொஞ்சம் வலுவாத்தான் பேயுது. ____ புரோட்டா வாங்கி கொடுத்திருக்கேன். ______ சின்னத்தாயி ந்தாங்க, ஐயா பேசுதாக.”   “______ சரிப்பா.”   “என்னடி?”   “மழை விட்டா இறங்குங்க. இல்லாட்டி, காலைல வெள்ளன வர சொல்ட்டாக.”   “வெள்ள மேகம்லாம் பஞ்சுமிட்டாய் கணக்கா இருக்கும். இந்த மழ மேகத்த பாரு. கருப்பு ராட்சசன் மாதிரி இருக்குல்ல ராஜி!”   தூறல், சாரல், மழை, பெருமழை என்ற‌ வரிசைக்கெல்லாம் நேரம் தராது விழும்போதே ஆங்காரமாய் விழுந்தது. அருவியின் இரைச்சலோடு மழை. ராஜி ஒடுங்கி மதுவின் கைகளை இறுக்கப் பற்றிக்கொண்டு இருந்தாள். கோணிப்பையைத் தலையில் போர்த்திக் குடிசை வாசலில் நின்றிருந்தான் முருகேசன்.   கீழிறங்கும் நேரம் தப்பிப் பின் வெறித்தது மழை.   “காலைல இறங்குவோம்.”   “அவன உள்ள கூப்டு.”   ச‌ட். முருகேசன் உள்ளே வரும்போது வாசல்ல தலைல இடிச்சுக்குவான்.    மறந்திட்டு.   “உள்ள வாங்கண்ணா.”   கழுத்தில் ஓம் டாலர் இருக்கிறதா என்று ராஜி தொட்டுப்பார்த்துக்கொண்டாள்.   “ஆமா, அருவில செத்தவங்க எத்தன ஆவி சுத்துதுன்னு சொன்ன?”   “கொன்னுருவேன். சும்மா இர்றி.”   “ஆனா நீயெல்லாம் எம்பிஏ படிச்சன்னு வெளில சொல்லிட்டு திரியாத என்ன. சிரிச்சிடுவாங்க.”   “வேற ஏதாது பேசு மது.”   “ஆஆஆ!” - தலையைத் தடவியபடி முருகேசன் உள்ளே வந்தான். நெற்றியில் சின்னத் தீற்றல் ரத்தம். “ஒன்னுமில்ல லேசா இடிச்சுட்டு.”   *   குடிசை முழுக்க மூவரின் எண்ணங்களும் வகைவகையாய் ஓடின. ராஜியை முருகேசன் கற்பழிப்பதாய் மதுவிற்குக் கற்பனை. முருகேசனை மது கற்பழிப்பதாய் ராஜியின் கற்பனை. இவர்கள் இருவரையும் எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்துவிட்டுத் தூங்கி விட்டிருந்தான் முருகேசன்.   மதுவுக்கு மட்டுமே தெரிந்து, ஏதோ ஓர் அமானுஷ்யம் அங்கு நிகழ்வதாகத் தோன்றியது. நிகழாமல் இருப்பதாகவும் தோன்றியது. ஏதோ ஒன்று சரியில்லை. ஏதோ ஒன்று கைமீறி நடக்கின்றது.   இந்தச் சூழலை ஏற்கனவே அவள் பார்த்திருக்கிறாள். ஏற்கனவே இதில் வாழ்ந்திருப்பதாகப்பட்டது. எதுவும் புதிதாக இல்லை. பகுத்தறிவு தேடித்தேடி ஆராய்ந்தது. சரியாகப்புரிந்துகொள்ள எதுவும் தெளிவாக இல்லை.   “தூக்கமே வர மாட்டிக்கி. ஆவி கதை சொல்லேன் ராஜி.”   “சிலதுல விளையாடக்கூடாது மது. உனக்கு தெரியல, புரியல அல்லது நம்பல அப்படின்றதுக்காக ஒன்னு இல்லவே இல்லன்னு ஒதுக்கிட முடியாது, புரியாத விசயங்களைக் கிண்டல் செய்யறதும் தப்பு. அந்த விஷயம் உனக்குப் புரியும் போது அத யார்ட்டயுமே சொல்ல முடியாதபடிக்கு ஆகும்.”   “அப்போ நீ மட்டும் சொல்ற உனக்கும் ஒன்னும் ஆகல?”   “எனக்கும் இன்னும் முழுசாத் தெரியாது. ஆனாலும் நம்பறேன். எனக்கு முழுசாத் தெரியும் போது சொல்ல நான் இருக்க மாட்டேன். அவ்வளோதான்.”   “…”   “நம்ம சக்திக்கு மீறின விசயங்களைத் தெரிஞ்சுக்காம இருக்கறது நல்லதும் கூட. நான் கேள்விப்பட்டவரை சொல்றேன். நீ நல்லா யோசி. வயசாகிச் செத்தவங்க யாராவது ஆவியா வருவாங்களா? சாகும் போது மனசும் வயசாகிச் சாகும். அந்த மனசோட முதிர்ச்சி வேற நிலை. அனைவரையும் பிள்ளைகளாக பாக்கும். ஆனா இடைல இப்படி திடீர்ன்னு சாவறவங்க? அவங்க ஆன்மா சாந்தியடையாது. அவுங்க‌ வெச்சிருந்த ஆசைகள், லட்சியங்கள், கனவுகள், எல்லாமே சேர்ந்து மனதை உக்கிரமாக்கி வெச்சிருக்கும். தன் பயணம் திடீரென்று விடுபட்டதை ஆன்மா ஏத்துக்காது. அது பொறாமையாக மாறி தன்னைப் போலவே பிறரையும் இப்படிப் பாதியில் விடுபடவைக்க முயற்சி பண்ணும். அது தான் ஆவி அடிக்கறதுன்னு சொல்றாங்க‌.”   “…”   “ஆவிக எப்பயுமே முகத்துக்கு நேரா வராது. முதுகுக்கு பின்னாடி இருந்துதான் கூப்பிடும். கூப்பிடும்ன்னா உன்னைப் பிடிச்சு இழுக்கும். அங்கயே இருந்துக்கன்னு சொல்லும். அதோட பிடியில இருந்து தப்பனும்னா திரும்பிப் பார்க்கக்கூடாது. வேகமா முன்னாடியே பார்த்துப் போகணும். போக முயற்சிக்கணும். சோர்வானா தோத்துட்டனு அர்த்தம். பெரிய இருட்டு. அதுதான் கடைசி. மூச்சு முட்டும். அப்பறம் ஒன்னுமேயில்ல.”   தூங்கிப் போனாள்.   *   குடிசைக்குப் பின் இருந்த முள்செடியில் ராஜியின் சுடிதார் சிக்கிக் கிழிந்து அதோடே ஒட்டி இருந்தது. அங்கேயே முட்களோடு விழுந்து இறந்து கிடந்தாள். முருகேசனை போலீஸ் கைது செய்து போனது.   “பேயாவது பிசாசாவது. இவன்தான் அந்தப் புள்ளைய என்னமோ செஞ்சிருக்கான். போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வரட்டும். இவன வச்சுக்கறேன்.”   முருகேசன் தன் ஐயாவை ஏறிட்டான். அவன் கண்களில் உண்மை மட்டுமே இருந்தது. விசுவாசமும்.   ராஜியின் அப்பா “என்ன ஆச்சு சொல்லும்மா” என்றார் அழுதுகொண்டே.   “எனக்கு எதுவுமே தெர்லப்பா, என்ன நடந்துச்சுன்னு.”   மது அவள் அம்மாவை நெருக்கி நின்றிருந்தாள். அவளின் உதறல் அம்மாவையும் சேர்த்து நடுக்கியது.   யாரோ யாருக்கோ ஃபோன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.   “ராஜி செத்துட்டா. பேய் அடிச்சுட்டு”   சட். மின்னல் வெட்டி மது மயங்கிச் சரிந்தாள்.   *   Sudden unexpected death due to chronic heart failure. The acute coronary events triggered the sudden death (SD) is unclear.   மதுவிற்கு ராஜி எப்படி இறந்தாள் என்பதைக் கணிக்க முடிந்தது. தன்னை நொந்துகொண்டாள். காப்பாற்றி இருக்கலாமோ. எனக்கு ஏன் மறந்து போனது? சட்டெனத் தோன்றி மறைகிறது. தோன்றியவை நடந்த பின் மீண்டும் ஞாபகம் வருகிறது. இது சாபம் அல்லவா! ஏன் ஒரு நல்லது கூட‌ எனக்குத் தோன்றவே இல்லை?   *   நாள்… சட்.   “அம்மா இந்தக் குழந்தைங்க போற ஆட்டோ கிடங்குல கவுந்து விழப் போகுதுமா. காப்பாத்துமா.” அழுதாள்.   “உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? பேசாம இரு.”   “இல்லம்மா என்னை நம்புமா.” கதறினாள்.   “அந்தக் குழந்தைக எல்லாம் பாவம்மா. குட்டிக் குட்டிக் குழந்தைங்க.” சொல்லும்போதே உடைந்தாள். அம்மா அவள் கண்களைப் பார்த்தாள். நிலைகொள்ளாத கண்கள். அங்குமிங்கும் அலையும் கண்கள். பதற்றமும் துடிப்பும் நிறைந்த கண்கள். விருட்டெனப் பின்வாங்கினாள். பின் அவளை அணைத்தாள்.   “ஒண்ணுமில்லடி, ஒண்ணுமில்ல.”   “ம்மா. நான்தான்மா ராஜிய கொன்னுட்டேன்.”   ஆட்டோ எந்த விபத்திலும் சிக்கவில்லை.   *   நாட்கள்… சட்.   “மேடம் உங்க பொண்ணக் கண்டிச்சு வைங்க. எங்க வீட்டுக்கு வந்து, உங்க வீட்டு மேல இடி விழப் போகுது, எல்லாரும் கிளம்பி வெளில வாங்கன்னு கத்திக்கிட்டு இருக்கறா”.   “ஏன் மது இப்படி பண்ற? எனக்கு நீ மட்டும்தான்டி இருக்க. நான் என்னடி செய்வேன்.”   “…”   “ராஜி செத்தது அவ விதிடி.”   “இல்லம்மா கண்டிப்பா அவங்க வீட்ல இடி விழுந்திடும். எனக்குத் தெரியும் எல்லாரும் செத்திடுவாங்க.”   “அப்படிப் பார்க்காத மது. பயமாருக்குடி.” மகளின் தலையை மார்போடு சேர்த்தணைத்துக் கை கூப்பினாள்.   கூப்பிய திசையில் நாக்கை வெளித் தள்ளி சுவரில் தொங்கிக் கொண்டிருந்தாள் மாகாளி.   எந்த இடியும் அந்த வீட்டில் விழவே இல்லை.   *   வாரங்கள்…   “நீங்க ஏன் மது இப்படி எக்ஸ்ட்ரீமா பிஹேவ் பண்றிங்க? எதனால எல்லாரையும் பயமுறுத்துறிங்க?”   “நான் பயமுறுத்தல டாக்டர். உண்மையச் சொல்றேன். நான் சொல்லாம விட்டதால. ராஜி செத்துட்டா என்னால அதுல இருந்து மீள முடியல. I feel guilty.”   “மேல சொல்லுங்க.”   “நான் பைத்தியம் இல்ல டாக்டர். என்னை மாதிரி தெளிவா இங்க யாரும் இல்ல. ஏன் நீங்க கூட.”   “புரியல மது. விளக்கமாச் சொல்ல முடியுமா?”   “Precognition. நடக்கப் போறதை உணர்றேன்.”   “நடக்கனும்னு விரும்பறீங்களா, இல்ல தோனுதா?”   “இல்ல. அதுவாத் தான் வருது.”   “ஃபைன். எப்ப இருந்து உங்களுக்கு இந்த மாதிரி ப்ரெடிக்ட் பண்ணத் தோணுது?”   “அப்பப்போ தோணும். அதைப் பெருசா எடுத்துக்கறது கிடையாது. லெவன்த் படிக்கும் போது ஸ்கூட்டிய வீட்ட விட்டு எடுக்கும் போதே கீழ விழப்போறேன்னு நினைச்சேன், விழுந்தேன். அப்பறம் ஒரு நாள் சம்பந்தமே இல்லாம என்னோட மாமாவப் பற்றி யோசிச்சேன். இத்தனைக்கும் அவங்களோட தொடர்பு முறிஞ்சு போய் ரொம்ப வருஷம் ஆச்சு. ஆனா அன்னிக்கு எங்க வீட்டுக்குப் பத்திரிகை வைக்க வந்தாங்க. அப்பறம் வேணும்ன்னே ஒன்னு யோசிச்சேன். அது நடக்கவே இல்ல. இப்படிச் சின்னச் சின்னதா நிறைய.”   “இது நார்மலா எல்லாருக்கும் நடக்கறது தான். எனக்குக் கூட ஏதாவது பாடலை முணுமுணுத்தபடி டிவிய ஆன் செஞ்சா அதே பாட்டு ஓடிட்டு இருக்கும். வேற என்னலாம் தோணும் உங்களுக்கு? ஐ மீன் அடிக்கடி.”   “எனக்கு காய்ச்சல் வரும்போதெல்லாம் யாரோ அஞ்சு பேர் என்னோட வீட்ல நடமாடற மாதிரி இருக்கும். அவங்களுக்கு உருவம் கிடையாது வெறும் நிழல் மட்டும்தான். என்னோட சாப்பாட்ட அவங்க தான் திருடி சாப்பிடுவாங்க. அம்மாட்ட சொன்னேன். அவங்க நம்பல. நீங்களும் நம்ப மாட்டிங்க. எப்போ நான் காய்ச்சல்ல படுத்தாலும் இந்த ஒரே நிகழ்வு மட்டுமே மாறி மாறி வரும். அதுக்கு நானே ஒரு விளக்கம் கற்பிச்சுக்கிட்டேன். என்னோட உடலுக்குள் உள்ள சக்திகளை எல்லாம் கிருமிகள் சாப்பிடற மாதிரி அழிக்கிற மாதிரி. அது உண்மையும் கூட. தென் வேற எதுவும் ஸ்பெசிஃபிகா இல்ல டாக்டர். இதெல்லாம் நான் சொல்றதுக்குக் காரணம் என்னோட மனநலத்தில் எனக்கும் அக்கறை இருக்கு டாக்டர்.”   “ஓக்கே. ஸோ, உங்களுக்கு ராஜி இறக்கப் போறான்ற செய்தி முன்னமே தெரியும். இல்லையா?”   “நோ. முழுசாத் தெரியாது. ஆனா இப்போ நம்பறேன். எனக்குத் தெரியும்ன்னு.”   “What's the big deal? அதுக்கும் இப்ப நீங்க எல்லாரையும் எச்சரிக்கை பண்றதுக்கும், எச்சரிக்கைன்ற பேர்ல பயமுறுத்துவதற்கும் எந்த தொடர்புமே இல்லையே? இன்ஃபேக்ட் நீங்க சொன்னது எதுவுமே நடக்கலயே!”   “நடக்காது! எனக்குத் தெரியும்.”   “வாட்?”   “அதனாலதான் சொல்றேன். சொல்லிட்டா நடக்காது. அன்னிக்கி ‘ராஜி நீ சாகப்போற’ன்னு சொல்லி இருந்தேன்னா அவ செத்திருக்க மாட்டா. You don't, you won’t, you can't and you never understand. I know.”   மதுவின் விரித்த கண்கள் முழுக்க ஆழமான நம்பிக்கை. கண்டறியமுடியா உண்மை அதில் மிதந்தது.   *   மாதங்கள்… ச‌ட்.   கடவாயோரம் ரத்தம் ஒழுகும் அளவிற்கு கல்யாணப் பெண்ணின் அண்ணன் மதுவை அடித்திருந்தான்.   அவளின் ஒழுங்கற்ற ஆடைகளும் சிக்கிச் சடை விழுந்த முடிகளும் எந்த மனக்கேதமும் இன்றி அவளை அடிப்பதற்கு உதவின‌. மண்டபத்தில் எல்லோரும் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்து நின்றிருந்தனர்.   வழிந்த‌ ரத்தத்தைத் தோள்பட்டையில் துடைத்து, மீதத்தைத் தரையில் துப்பிவிட்டு மீண்டும் சொன்னாள் -   “உன் தங்கச்சி ரெண்டே நாள்ல தாலியறுத்துட்டுதான் நிப்பா.”   ***   வயிற்றுத் தீ சௌம்யா   “பள்ளியோடத்துக்கு நேரமாச்சு. இன்னும் இங்க என்னடா பண்ணற‌?” இசக்கியம்மாள் கத்தினாள். இம்மானுவேல் காலையில் காட்டுக்கு ஆய் இருக்க வந்தவன் ஓணான் ஒன்றைப் பார்த்து, அதைப் பிடிக்கும் முனைப்பில் நேரம் மறந்திருந்தான். அம்மாவைத் திரும்பிப் பார்த்தான். அவள் கையில் காட்டுக்குச்சி; கண்களில் கோபம். சிக்கினால் நையப் புடைப்பாள் என்பதை உணர்ந்தவ‌ன் பாய்ச்சலாய் எகிறித் தப்பினான். “டேய் குளிச்சுட்டு சூலுக்கு போடா, சூற‌” என்றபடி அவனைத் துரத்தினாள். அவள் வீடு வந்து சேருமுன் இம்மானுவேல் குடிசையின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்தான். அவசர கதியில் தண்ணீர் மொண்டு ஊற்றிக் கொள்ளும் மகனைப் பெருமிதப் புன்னகையுடன் பார்த்தாள். அருகே சென்று முதுகு தொட்டதும் பதைத்துத் திரும்பியவன் அவளது முகப்பரிவு கண்டு நிம்மதியானான். இசக்கி அவன் கையிலிருந்து நீர் மோளும் டப்பாவை வாங்கினாள். பெரிய காலி பெயிண்ட் டப்பாவில் நீர் நிரம்பி இருந்தது. அவனை மரப்பலகையில் அமர வைத்துச் சோப்புத் தேய்க்கத் துவங்கினாள்.   மணலில் விளையாடி அவன் கால்களில் சிரங்குப் புண்கள் பரவிக் கிடந்தன‌. அவற்றை அழுத்திச் சீழ் எடுத்தாள். வேப்பிலை பறித்து அருகிருந்த கற்களில் தேய்த்து புண்கள் மேல் தேய்த்தபடியே,   “வயசு தான் பத்தாச்சு. சுத்தமா கை, கால வச்சுக்க தெரியுதா?” என்று மிதமாய்த் தலையில் தட்டினாள். “குளிச்சு விட்டு, குண்டி கழுவி இன்னும் எத்தனை வருசம்டா உன்னத் தாங்கறது?”   சிரித்தான். “இதுக்கொன்னும் கொறச்ச மசிரில்ல” என்றபடி அவனுக்குத் தலை துவட்டினாள். இம்மானுவேல் சீருடை அணிந்து தயாரானதும் தாளித்த‌ சோற்றை வட்டலில் கொணர்ந்து வைத்தாள்.   “அய்யோ, அம்மா நேரமாச்சு. பெல் அடிச்சுருவாங்க”   பதறியபடி புத்தகங்களிருந்த மஞ்சப்பையை வாரிக்கொண்டு வெறுங்காலுடன் அவசரமாய் வெளியேறினான்.   “டேய், சாப்ட்டு போடா” என அவள் கத்தி முடிக்கும் போது அதைக் கேட்கும் தூரம் கடந்திருந்தான். மண்சுவரில் கூரை வேய்ந்த அந்த வீட்டின் தகரக் கதவில் சாய்ந்தபடி கண் மறையும் வரை மகனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இசக்கியம்மாள். ஒரு பெருமூச்சுடன் உள்ளே வந்து சுவரில் மாட்டி இருந்த கேலண்டரில் தேதி கிழித்தாள். 4.8.88. எழுதப்படிக்க அறியாத‌ இசக்கி தினம் தேதி கிழிக்கத்தவறுவதில்லை.   கதவைச் சாத்திக் கொண்டி இட்டாள். ஏற்கனவே நேரமாகி விட்டது. எம்ஜிஆர் நகரை விட்டு காலனிப் பகுதிக்குள் நுழைந்தாள். எம்ஜிஆர் நகர் என்று பெயர் வைக்கப்பட்டுச் சில ஆண்டுகள் ஆயிற்று என்றாலும் தபால்களில் முகவரி எழுதுவதைத் தவிர அப்பகுதியை அப்பெயரில் எவரும் குறிப்பதில்லை. சக்கிலிய வளவு என்றே அனைவருக்கும் சகஜமாய் வருகிறது. போலவே இசக்கியம்மாளின் பெயரும் அந்தக் காலனியில் எவ‌ராலும் உச்சரிக்கப்பட்டதில்லை. “கக்கூஸ்காரி வந்துருக்கா” என்ற காலனி வீட்டுப் பெண்களின் உரையாடலில் ஒரு நொடி வெளிப்படும் அடையாளப்படுத்தலோடு முடிந்து விடும். காலனியில் ஒவ்வொரு வீடாகக் கக்கூஸ், பாத்ரூம் கழுவி விட்டு, விரல் படாமல் ஜாக்கிரதையாய்க் கொடுக்கப்படும் சில்லறைகளைப் பவ்யமாய் வாங்கிச் சுருக்குப்பையில் சேமித்துக் கொள்வாள்.   காலனியில் பல வீடுகளில் இப்பொழுது செப்டிக் டேங்க் வைத்த‌ கக்கூஸ் கட்டி விட்டார்கள் என்றாலும் இன்னும் சில வீடுகளில் எடுப்புக் கக்கூஸ் தான். இரண்டு திண்டுகளுக்கு நடுவே பக்கெட் வைத்து மலம் கழிப்பார்கள். பக்கெட்டில் சேர்ந்திருக்கும் மலத்தை கொண்டு போய் காலனிக்கான மலக்குழியில் கொட்டி விட்டு பக்கெட்டை நன்றாய்க் கழுவித் திரும்பக் கொண்டு வைக்க வேண்டும். திண்டுகளைச் சுற்றிச் சுத்தப்படுத்த வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காலனியில் எல்லோர் வீடுகளிலும் இந்த முறை தான். இப்போது செப்டிக் டேங்க் முறை வந்த பிறகு வேலை சுலபமானது போல் தோன்றியது இசக்கிக்கு. அவளுக்கே தோன்றும் போது படியளக்கும் சாமிகளான‌ காலனிக்காரர்களுக்குத் தெரியாதா!   “அதான் இப்ப பக்கிட்டு கொண்டு போற வேலை இல்லையே!” என்று சொல்லி வழக்கமாய்க் கொடுத்து வந்த 2 ரூபாயில் எட்டணாவைப் பிடித்துக் கொண்டு 1.50 கொடுத்தனர். அதையும் கடன் சொல்வோருண்டு.   “சில்லற இல்ல. நாளைக்குச் சேத்து வாங்கிக்க‌.”   “ஆறு மணிக்கு மேல வந்தா எப்படிக் காசு கொடுக்கறது, லட்சுமி வீடு தங்க வேண்டாமா?”   “சரியாவே கழுவல. பீங்கான்ல கறை கறையா இருக்கு. ஒர்ரூவா தான் தருவேன்.” தினம் வேலை முடித்து வீடு திரும்ப மதியம் ஆகி விடும். சில வீடுகளில் பழைய சாதமோ, காய்ந்த இட்லியோ தருவதுண்டு. அன்று அதிர்ஷ்டம் இருந்தால் கொஞ்சம் குழம்போ ரசமோ வாய்க்கும். சில சமயம் லேசாய் எச்சில் கண்டு மீந்த பிரியாணி, கெட்டுப் போகத் துவங்கிய பாயாசம் கூடக் கிடைக்கும்.   அத்தனை நேரம் அருவெறுப்பின்றி செய்த வேலையின் மொத்த அசூயையும் அக்கணத்தில் வந்து போகும்.   ஆனால் மறுக்க மாட்டாள். ரோஷம் பார்க்க சுயமரியாதையை விட வசதி அவசியம். சில பொழுதுகளில் உண்ண இயலாமல் அதைப் பொட்டலமாக்கி வீடு வந்து சற்று நேரம் கழித்து பசி குடலைத் தின்னும் போது உண்பாள். பசி எந்த அவமானத்தையும் வெல்லக் கூடியதாய் ஆகி விட்டிருந்தது இசக்கிக்கு.   அவள் புருஷன் சொல்லி இருக்கிறான். ஒரு காலத்தில் பொதுக்கிணற்றில் நீர் எடுத்ததற்காக‌ வாயில் பீயைக் கரைத்து ஊற்றி இருக்கிறார்கள். அது இப்படித்தான் ருசித்திருக்கும் என நினைத்துக் கொள்வாள். சுரணை முதலிய உணர்வுகளெல்லாம் மரத்துப் போய் வருஷக் கணக்காகிறது. இன்று அவள் வாழ்வின் ஒரே மகிழ்ச்சி இம்மானுவேல். 24 மணி நேரச் சிந்தையும் சதா அவனைச் சுற்றியே அமைந்திருந்தது. “நல்லாப் படிக்கணும் சாமி” என அவனைக் கொஞ்சுவாள்.   மழையில் நிறம் போன அம்பேத்கர் படமொன்று உதிர்ந்து கொண்டிருந்த சுவரில் உறைந்திருக்கும். அவள் புருஷன் வைத்திருந்த படம் அது. இம்மானுவேல் படிக்க வேண்டுமென்று அவன் ஆசையாய் இருந்தான்.   “எங்கள‌ மாதிரி பீயள்ள வேண்டாம்னா நீ படிக்கனும்” என்பான்.   அச்சொற்கள் இப்போதும் அவளது காதுகளில் உயிர்ப்போடு ஒலிக்கின்றன‌. படிப்பு வாசனையே இல்லாத இசக்கியம்மாள் இம்மானுவேலை பாடம் ஒப்பிக்கச் சொல்லி புத்தகத்தை கையில் வைத்துக் கொள்வாள்.   வெறும் வளைவுகளான எழுத்துருவங்கள் வழியே மகன் பயணிக்கும் பாதை காணும் ஆர்வம் அது. ஒப்பிக்கையில் இடையே நிறுத்தி “சரியாம்மா” எனக் கேட்கும் மகனிடம் மெல்லப் புன்னகைத்து “மேல சொல்லு” என்பாள். அவன் சொல்வது சரியாய்த் தான் இருக்கும் என்ற அபார‌ நம்பிக்கை அவளுக்கு. இம்மானுவேலின் அப்பா சரியாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாதாளச் சாக்கடையில் இறங்கி அடைப்பைக் குத்திக் கொண்டிருந்த‌ சமயம் விஷ‌ வாயு தாக்கி இறந்து போனார். சாக்கடை மூடியைத் திறந்த உடனே உள்ளே போயிருக்கக்கூடாது, ஆக்சிஜன் அவ்வளவாய் இருக்காது, பதிலாய் உள்ளே காற்றில் விஷம் பர‌வி இருக்கும் என்று அதிகாரிகள் வந்து பார்த்து வியாக்கியானம் சொன்னார்கள். அதாவது போதுமான முன்னெச்சரிக்கை இல்லாமல் இறங்கியது அவன் தவறு என்பது அவர்கள் முடிவு.   அவளுக்கு அது ஒன்றும் புரியவில்லை. நீட்டின இடத்தில் கையெழுத்துப் போட்டு, அரசாங்கம் கொடுத்த நஷ்ட ஈட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டாள். சர்க்கார் குமாஸ்தாக்களுக்கு நன்றி செலுத்திய பிறகு மிஞ்சிய தொகையில் இந்தப் புறம்போக்கு இடத்தில் மண்சுவர் குடிசை ஒன்றை கட்டிக் குடியேறினர்.   இம்மானுவேல் வகுப்பறையில் அமர்ந்திருந்தான். பதினோரு மணிக்கெல்லாம் சத்துணவு சமைக்கும் வாசம் வரத் துவங்கியது. பள்ளியில் போடும் மதியச் சத்துணவுக்கு ஒரு பிரத்யேக வாசனை உண்டு. நிறம் மங்கிய, சற்றே வீங்கித் தெரியும் ரேஷ‌ன் அரிசியின் மணமும், பள்ளியின் பின்னால் பயிரிட்டிருக்கும் நீள்கத்தரிக்காயில் பருப்பிட்டுச் செய்த குழம்பின் மணமும் கலந்து ரசனையான‌ வீச்சம் மூக்கிலேறும்.   காலையில் உண்ணாமல் வந்திருக்கும் பிள்ளைகளுக்குச் சோறாக்கும் வாசம் வகுப்பறைக்குள் புகுந்து பரவி வயிற்றில் பசியைத் தூண்டி விடும். ஐந்தாம் வகுப்புக்குள் படிக்கும் பிஞ்சுகளுக்கு அந்த உணர்வை மறைக்கத் தெரியாது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வர். எச்சிலூறுவது கண்களில் மின்னும்.   தினப்படி சங்கதிதான் எனினும் பசி மெருகு கலையாத புதுச் சரக்குதான் ஒவ்வொரு முறையும். உச்சப் பசியில் சோற்றின் மீதான ஆவலை, காதலை, வெறியை எதிர்பாலினரால் கூடத் தூண்ட முடியாது. இம்மானுவேலின் வகுப்பில் பிரகாசனும், சாமிநாதனும் சத்துணவு உண்ண மாட்டார்கள். வீட்டுக்குச் சென்று உணவருந்தி வருவார்கள். பிரகாசனின் அப்பா வட்டிக்கடை வைத்திருக்கிறார். கணேசன் செட்டியார். சாமிநாதன் கோவில் குருக்களின் மகன். பட்டையும் கொட்டையுமாய் இருப்பான். மதியம் வீட்டுக்குப் போனாலும் தயிர் சாதம் தான் சாப்பிடுவான் என வகுப்பறையில் கேலி பேசுவார்கள்.   இம்மானுவேலுக்கு காரணங்கள் எல்லாம் புரியும் வயதாகி இருக்கவில்லை எனினும் அவர்கள் சத்துணவில் போடும் சாப்பாட்டைச் சாப்பிடும் நிலையில் இல்லை என்பது வரை அறிந்திருந்தான்.   “ஏன்மா அவுங்க ஸ்கூல்ல‌ சாப்பிடறதில்ல?” என அம்மாவிடம் ஒரு முறை கேட்டான்.   “அவுங்களுக்கு அதெல்லாம் ஒத்துக்காதுடா” என்றாள். இம்மானுவேலுக்கு பசி மெல்ல மேல் வயிற்றில் பரவியது. நேரம் கூடக்கூட நாவூறிக் காதடைக்கத் துவங்கியது. வயிறு மட்டுமே பசிக்கான இடம் என்பதெல்லாம் ஆரம்ப கட்டம்தான். உணவு மணமுறிஞ்சி மௌனமாய் நாசி தூண்டப்பட‌, நா உமிழ்நீரைச் சுரந்து உரக்கப் பசியை முணுமுணுக்கும். காது கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து எச்சரிக்க, கை, கால்கள் மெல்ல நடுங்கி பசியை உரக்க அறிவிக்கும். இப்போது அவனது கைகள் இரண்டும் மெல்லிய நடுக்கத்திற்குட்பட்டன‌. கால்களைக் கட்டுபடுத்திக் கொண்டான்.   சகல அவயங்களும் பசியைப் பறைசாற்றத் தொடங்கி இருந்தன. மனமும் எரிச்சல் படத் தொடங்கியது.   பாடம் நடத்தும் டீச்சரின் வார்த்தைகள் எதுவும் காதில் விழவில்லை. அதுவும் கணக்கு வகுப்பு. பசியில் இருக்கும் போது கணக்குப் பாடம் நடத்துவதை நரக‌த்தில் கூட தண்டனையாக வைத்திருக்க மாட்டார்கள். கண்கள் மட்டுமே கரும்பலகையைப் பார்த்தபடி இருந்தன. மனம் தட்டில் விழும் சோற்றுக் கவளத்துக்கும் அதன் மேலே ஊற்றப்பட்டு கத்திரிக்காயுடன் குழையும் பருப்புக் குழம்புக்கும் மயங்கி ஏங்கத் துவங்கியது.   தோட்ட விளைச்சலில் டீச்சர்களும் ஆயாக்களும் வீட்டுக்கு எடுத்தது போக, தட்டுக்கு ஒரு துண்டு வீத‌ம் தான் கத்திரிக்காய் போடுவார்கள். நான்காய் வகுபட்ட கத்திரியின் கரையத் துவங்கிய ஒற்றைத் துண்டு! இம்மானுவேல் நைச்சியமாய் அருகிலிருந்த முருகனிடம் திரும்பி “பசிக்குதுடா” என்றான். அவனும் ஆமோதிப்பாய் தலை ஆட்டினான். 12க்கு அடிக்கப் போகும் மதிய உணவு மணிக்குக் காத்திருந்தான்.   வயிற்றில் நெருப்பாய் பசியெரியத் துவங்கிய‌ வேளையில் தண்டவாளத் துண்டில் மணி அடித்தது. வரிசையில் திமுதிமுவென அலுமினிய தட்டுக்களைச் சேகரித்தபடி நின்றனர். உற்சாகமும் எரிச்சலும் கலந்து கட்டி ஒரு வரிசை. இம்மானுவேல் 15வதாகவோ 16வதாகவோ நின்றிருந்தான். அவன் சமர்த்து எப்போதும் அவ்வளவு தான். தனக்குப் பின்னால் நிற்பவர்களைப் பார்த்து சமாதானம் கொள்வான்.   மூன்று பேர் சோறும் சாறும் வாங்கிக் கொண்டு நகர, அடுத்ததாய் வந்து நின்ற மாணவியின் தட்டில் குழம்போடு வந்து விழுந்தது பல்லி ஒன்று. குழம்புச் சூட்டில் ஊறி வெந்து மேலும் வெளிறிய பல்லி. முதலில் நல்ல கத்தரித் துண்டு தான் விழுந்திருக்கிறதென அகமகிழ்ந்து நகரத் தொடங்கியவள், சற்று குழப்பத்துடன் உற்றுப் பார்த்து விட்டு “அய்யோ பல்லி” என்ற அலறலுடன் தட்டைக் கீழே போட்டாள்.   கொஞ்சம் நேரத்தில் அந்த இடம் களேபரமாக, தலைமையாசிரியருக்குத் தகவல் பறந்து விரைந்து வந்தார். சத்துணவு டீச்சரிடம் (ஆயா) விசாரணை செய்து முடித்த‌ தலைமை ஆசிரியர், மாணவர்களைக் குழுமி நிற்க வைத்து, “எதிர்பாராத விதமா இன்னிக்கு சாப்பாட்ல பல்லி விழுந்துடுச்சு. அதனால எல்லாரும் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் அவங்கவங்க வீட்டுக்குப் போய் சாப்டுட்டு வந்துடுங்க. ஒரு அஞ்சு பத்து நிமிசம் தாமதமானாலும் பரவால்ல. நாளைல இருந்து இந்த தப்பு நடக்காது.” என்று அறிவித்தார். மாணவர்கள் சிதற விட்ட மஞ்சாடிக் காய்களைப் போல் கலைந்தனர். பல்லி விழுந்த காதையைக் கதைத்தபடி வேகவேகமாக வீடு நோக்கி நடையும் ஓட்டமுமாய் உற்சாகத்துடன் கிளம்பினர். இம்மானுவேல் மிகச் சோர்ந்திருந்தான். அவன் வீட்டுக்குச் செல்ல குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் ஆகும். அது ஒரு விஷ‌யமில்லை அவனுக்கு. ஆனால் தற்போது பசி அவனை வெகுவாய்த் தளர்த்தி இருந்தது. காலையில் உண்ணாமல் வந்ததை எண்ணித் தன்னையே நொந்து கொண்டான்.   “அப்பவே அம்மா சொல்லிச்சு” என எண்ணியபடியே உச்சி வெயிலில் நடக்கத் துவங்கினான். “டேய் இம்மானுவேல்” என்ற குரல் கேட்டு திரும்பினான். சாமிநாதன் வந்து கொண்டிருந்தான்.   “என்னடா சாப்பாட்ல பல்லியாமே?”  “ஆமாண்டா, பசி வேற தாங்க முடியல. இனி வீட்டுக்கு அவ்ளோ தூரம் போணும்.” சலிப்பாய் எட்டு வைத்தான். சாமிநாதனின் வீடு பள்ளிக்கு அருகிலேயே இருந்தது. சிறுவர்களின் நடைக்கு ஐந்து நிமிடத் தொலைவு தான். பேசிக் கொண்டே அவனது வீடடைந்து விட்ட சாமிநாதன், “சரி பாத்துப் போடா” என்றான். “ம்” என்றபடி அடுத்த அடி வைக்க முயன்ற இம்மானுவேலின் கண்கள் இருண்டன‌. முதன்முறையாக இப்படி எல்லாம் நடப்பது கண்டு மிரண்டான். அப்படியே அருகிலிருந்த மரத்தைப் பற்றிக் கொண்டான். “டேய் என்னடா ஆச்சு?”   பதறியபடி சத்தம் போட்ட சாமிநாதனின் குரல் கேட்டு அவனது அம்மா வீட்டை விட்டு வெளியே வந்தாள். “என்னப்பா ஆச்சு?” என்றவளின் சொற்களில் பரிவு இருந்தது.   சாமிநாதன் பள்ளியில் நடந்தவற்றைச் சொன்னான்.   “பசி போலிருக்கும்மா. காலைலயும் சாப்பிடல அவன்” “அய்யய்யோ, அதான் இப்படி கண் எல்லாம் உள்ள போய் கிடக்கு” என்றாள் ஆதரவாய்.   “எதாவது சாப்பிடறியா?” எனக் கேட்டாள்.   இம்மானுவேலுக்கு பதில் சொல்லக் கூடத் தெம்பில்லை. தலையசைத்தான். “அப்படியே உக்காரு, இதோ வரேன்” என்றவள் உள்ளே சென்று ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தாள்.   இம்மானுவேல் முன் ஓர் இலைத் துணுக்கில் சூடான சாதம், மணக்கும் சாம்பார் மிதக்க வைக்கப்பட்டது. தெருவில் மரத்திற்கருகே அமர்ந்து இருந்தவனுக்கு உணவை பார்த்ததுமே கண்களில் ஒளி தெரிந்தது. சாமிநாதனைப் பார்த்து “கை கழுவணுமே” என்றபடி எழுந்தான்.   “இருடா” என்று உள்ளே சென்ற சாமிநாதன் ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தான்.   வாங்கப் போன இம்மானுவேலிடம் “இருப்பா, நீ கை காமி. நான் தண்ணி விட்டுத் தரேன்” என்றாள்.   ஓரமாக கையில் நீர் விட்டுத் தந்தாள். கழுவி விட்டு இலையைக் கைகளில் எடுத்துக் கொண்டு திண்ணையில் அமர வந்தான் இம்மானுவேல்.   “அங்கயே உக்காருப்பா. நிழலா இருக்கு பாரு” என்றாள்.   இம்மானுவேல் மண் தரையில் அமர்ந்தான். அவன் எதிரே சுடுசோறும் நெய் மணக்கும் சாம்பாரும், ஒரு ஓரத்தில் அரிசி வடகங்களும் இருந்தன. பசி அவனது நுனி முதல் அடி வரை அலறிக் கிடந்தது.   சோற்றில் கை வைக்கப் போன அவனருகே தொட்டாங்குச்சியில் நீர் கொண்டு வந்து வைக்கப்பட்டது.   “ஜீவகருண்யம்தான் முதல்ல. அப்பறம் தான் மத்ததெல்லாம்னு ராமலிங்க அடிகளே சொல்லி இருக்கார். நேக்கு மனசே கேக்கல. அதான்” - வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த‌ பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் சாமிநாதனின் அம்மா சமாதானம் சொன்னாள். அவளுக்கு ஆமோதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இம்மானுவேல் இலையைச் சுற்றிப் புழுதி. சற்றுத் தொலைவில் சாக்கடை. அதனருகே ஒரு சொறி நாய்.   சோற்றில் கை வைக்கப் போனவனை “சாமி” என்றழைத்த குரல் உசுப்பியது.   நிமிர்ந்து பார்த்தான். துருவேறிய இரும்பு பக்கெட்டும் கையுமாய் இசக்கி நின்றிருந்தாள். இம்மானுவேலுக்குக் கண்கள் நிறைந்தன. பதற்றத்துடன் மகனைச் சுற்றி ஒரு நோட்டம் விட்டாள் இசக்கி. வேடிக்கைப் பொருள் போல அவனைச் சூழ்ந்து சாமிநாதன், அவன் அம்மா, அக்கம் பக்கத்து மனிதர்கள். “எந்திரிடா” என்றாள்.   “அம்மா...” “எந்திரி சாமி.” இம்மானுவேல் சோர்வாக எழுந்து நின்றான். பத்து வயதேறிய‌ மகனைச் சிரமப்பட்டுத் தூக்கிக் கொண்டாள். புத்தகப்பையை மறுதோளில் மாட்டிக் கொண்டு நடக்க முற்பட்டவளை வெறித்தாள் சாமிநாதனின் அம்மா.   “பசிக்கற குழந்தைய சாப்ட விடாம தூக்கிட்டு போறயே” - சற்று ஏமாற்றம் கலந்த கோபத்தில் கேட்டாள். “இல்லம்மா. மன்னிச்சுருங்க. என்னைய மாதிரி இல்ல. அவனுக்குப் பச்சரிசிச் சோறெல்லாம் ஒத்துக்காது.”   சற்று நிதானித்து, “செரிக்காதும்மா” என்றபடி நடையில் வேகம் கூட்டினாள். பக்கெட் விழுந்து உருண்டது.   *** “படைப்பு என்பது என் இயல்பாகி விட்டது!” நேர்காணல் : பெருமாள்முருகன்   சமகாலத் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமை பெருமாள்முருகன். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாய் என் பிரியத்துக்குரிய படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு, பதிப்பு, தொகுப்பு, அகராதி என அவர் நவீன இலக்கியத்துக்கும், கொங்குக் கலாசாரத்துக்கும் ஆற்றியுள்ள பங்கு முதன்மையானது.   ஞாயிறு தகிக்கும் ஒரு கோடை ஞாயிறில் நாமக்கலில் ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த அவர் வீட்டு மொட்டை மாடியின் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி தமிழ் மின்னிதழுக்காக ஒரு முழுப்பகல் நேர்காணல் தந்தார். தனிப்பட்ட முறையில் எனக்கு அது ஓர் அற்புத அனுபவம். அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இவை.   []     வணக்கம். முதலில் ஒரு விஷயத்தை உங்களிடம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.   உங்களை நேர்காணல் செய்யத் தீர்மானித்தது மாதொருபாகன் பிரச்சனைக்குப் பின் உங்கள் படைப்புத் திறன் அல்லாத வேறு காரணங்களுக்காக நீங்கள் பிரபலமானதற்குப் பின் அல்ல. தமிழ் என்ற இந்த மின்னிதழுக்கான விதை 2014ம் ஆண்டின் பிற்பகுதியில் மனதில் விழுந்த போது - அது மாதொருபாகன் செய்தியளவில் ஒரு சர்ச்சையாகக் கூட உருப்பெற்றிறாத காலகட்டம் - கூடவே மேலும் இரண்டு விஷயங்களும் சேர்ந்தே எழுந்தன. ஒன்று எனக்குப் பிரியமான‌ சமகால எழுத்தாளர்களின் (உத்தேசமாய் 90களில் எழுத வந்தவர்கள்) விரிவான நேர்காணல்களை ஒவ்வொரு இதழிலும் இடம் பெறச் செய்வது. அப்படி எடுக்க வேண்டியவர்களில் முதல் மூவர் யார் என்பது மற்றது. அப்படித்தான் உங்களின் விரிந்த‌ நேர்காணல் அப்போதே தீர்மானமானது. ஆக, மாதொருபாகன் பிரச்சனை என்ற ஒன்று நிகழ்ந்திராவிடினும் இந்த நேர்காணல் நிகழ்ந்திருக்கும். இன்னும் சரியாய்ச் சொன்னால் முன்கூட்டியே நிகழ்ந்திருக்கும்.   முந்தைய நேர்காணல்களில் இத்தனை பீடிகை போட்ட நினைவில்லை. மாதொருபாகனுக்கு நன்றி!   1. Warm-up போல் ஒரு சம்பிரதாயக் கேள்வியில் துவங்குவோம். உங்கள் பூர்வீகம் பற்றிச் சொல்லுங்கள்.   எனக்குச் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு போகும் வழியில் அமைந்துள்ள கூட்டப்பள்ளி. ஆனால் என் பூர்வீக ஊர் அதுவல்ல. எங்கள் தாத்தாவின் தாத்தா காலத்தில் கூட்டப்பள்ளியில் வந்து குடியேறினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தி அல்லது பிற்பகுதியில் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். என்ன காரணத்துக்காக வந்தார்கள் எனத் தெரியவில்லை.   ஈரோட்டிலிருந்து சேலம் போகும் ரயில் பாதையில் ஆனங்கூர் என்ற ஊரைப் பார்க்க முடியும். அது தான் எங்கள் பூர்வீக ஊர். இப்போதும் எங்கள் குலதெய்வம் அங்கு தான் இருக்கிறது. அங்கிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதால் கூட்டப்பள்ளியில் எங்கள் வீட்டுக்கு ‘ஆனங்கூரான் வீடு’ என்ற பெயரே உண்டு. அப்போது அந்த ஊரிலிருந்து வந்த ஒரே குடும்பம் எங்களுடையது. இன்று ஐம்பது குடும்பங்கள் அப்படி இருந்தாலும் எங்கள் குடும்பத்துக்கு அப்படியான ஒரு தனித்த அடையாளம் இப்போதும் உண்டு.   கவுண்டர் இனத்தில் கூட்டங்கள் உண்டு. ஆனங்கூரிலிருந்து வந்தவர்கள் தனிக்கூட்டம் - காடை கூட்டம். எங்கள் குலதெய்வம் அங்கே இருப்பதால் வருடத்துக்கு சில முறை நாங்கள் அங்கே போய் வருவோம்.   எங்கள் தாத்தாவுக்கு மூன்று மகன்கள், ஒரு பெண். அத்தை மூத்தவர். அப்புறம் எங்கள் அப்பா, இரண்டு சித்தப்பா. என்னுடன் கூடப் பிறந்தவர்கள் ஓர் அண்ணன் மட்டும். இப்போது அவர் இல்லை.     2. உங்கள் பெயரிலேயே உங்கள் அப்பா இருக்கிறார். அத்தனை பிரியமா?   (சிரிக்கிறார்.) அத்தனை பிரியம் என்று சொல்ல முடியாது. என் அப்பாவுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது. நான் அம்மா பிள்ளை. என் அண்ணனைத் தான் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனெனில் அண்ணனின் நடவடிக்கைகள் வேகமாக, சுறுசுறுப்பாக இருக்கும். நான் அப்படி இல்லை. பயந்த சுபாவம். எப்போதும் தனிமையை விரும்பக்கூடியவன். என் அப்பா அப்படி இல்லை. அவரும் வேகமான ஓர் ஆள். அதனால் என்னை அவ்வளவு பிடிக்காது. என் அண்ணனும் அப்பாவும் சேர்ந்து கொண்டு என்னை ரொம்பக் கிண்டல் செய்வார்கள். என் அம்மா தான் அப்படியான சமயங்களில் எனக்கு ஒரே அடைக்கலமாக இருப்பார்கள்.   ஆனால் நான் வளர ஆரம்பித்த பிறகு அப்பா நான் படிப்பதைப் பார்த்து விட்டு என்னைப் படிக்க வைக்க வேண்டும் என்று மிக விரும்பினார். அண்ணன் ஒன்பதாம் வகுப்பு படித்து விட்டு அதோடு நின்று விட்டான். அப்பா படிக்கவில்லை; அம்மாவும் படிக்கவில்லை. அதனால் நான் படிப்பில் ஆர்வமாய் இருப்பதைப்பார்த்து விட்டு என்னைப் படிக்க வைக்க விரும்பினார். “எத்தனை கஷ்டம் வந்தாலும் படிப்பை விட்றாதடா” என்று சொல்வார். அப்படிப் பின்னால் என் மேல் அவருக்கு ஓர் ஈடுபாடு வந்தது. குடும்பம் இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போக இவன் சரியான ஆளாக இருப்பான் என்ற பார்வை அவருக்கு வந்தது. நான் கல்வி கற்க அவர் தூண்டுதலாக இருந்தார். அந்த அடிப்படையில் அப்பா பெயரை வைத்துக் கொண்டேன்.     3. கூட்டப்பள்ளியைப் பற்றி? அது தான் உங்கள் எழுத்துக்கான கச்சா அல்லவா?   ஆமாம். கூட்டப்பள்ளி மட்டுமல்ல; திருச்செங்கோடு வட்டம் சார்ந்த பெரும்பாலான ஊர்கள் எனக்குப் பரிச்சயமானவை. அதனால் அப்படியான நிறைய ஊர்களின் சாயல் என் கதைகளில் வருவதைப் பார்க்கலாம். வேறு வகையான வாழ்க்கையை எழுத எடுத்துக் கொண்டால் கூட எனக்கு நன்கு பரிச்சயமானதாக‌ இருப்பதால் இந்தக் களத்துக்கு அதைக் கொண்டு வந்து பொருத்திக் கொள்ள எனக்கு முடிகிறது. அதனால் எல்லாமே இந்தப் பகுதிகளை மையமாக வைத்து எழுதுவது போலத் தோன்றும்.   படைப்புகளில் களம் மிக முக்கியமானது. அது அறிமுகமான ஒன்றாக இருந்தால் சுதந்திரமாக‌ எழுத முடியும். ஒரே களமாக இருந்தால் கூட இன்னமும் அது எழுதித் தீராத ஒன்றாகவே இருக்கிறது.     4. எட்டு வயதில் எழுதிய ‘பூனை நல்ல பூனை’ பாடலை நினைவிலிருக்கும் உங்கள் முதல் எழுத்தாகச் சொல்லி இருக்கிறீரகள். இப்போது அந்தப் பாடல் ஞாபகமிருக்கிறதா? சொல்ல முடியுமா?   என்‌ நோட்டுகளில் தேடினால் கிடைக்கும். அப்போதே நோட்டுப் போட்டு எழுதி வைப்பேன். பாடத்துக்குப் பயன்படுத்தும் நோட்டுகளில் எழுதி வைத்திருப்பேன். அவற்றைச்சேகரித்து வைக்கும் பழக்கமும் இருந்தது.     5. உங்கள் பெற்றோரின் தலையீடு உங்கள் கல்வி பற்றிய முடிவுகளில் இல்லை என கூள மாதாரி முன்னுரையில் சொல்லி இருந்தீர்கள். அதனாலேயே தமிழ்த் துறையில் படிக்க முடிந்ததையும். அந்த ஆர்வம் எப்படி வந்தது? பதின்மங்களின் தனிமை எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வம் கொடுத்திருக்கலாம். எனக்கும் அப்படித் தான். ஆனால் அதற்காக தமிழ் படிக்க வேண்டும் என்றில்லையே?   சிறுவயதிலேயே எனக்கு அம்மாதிரியான ஆர்வம் வந்து விட்டது. ஏழாவது, எட்டாவது படிக்கும் போதே பள்ளியில் எல்லோரும் என்னை 'புலவா புலவா' என்று கூப்பிடுவார்கள். அந்த வயதிலேயே நான் நோட்ஸ் வாங்கிப் படிக்க மாட்டேன். தமிழைப் பொறுத்தவரை பாடத்தில் இருக்கும் செய்யுள்கள் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து விடுவேன். உரைநடையையும் நானே படித்து விடுவேன். தேர்வில் சொந்தமாகவே எழுதி விடுவேன். அந்தளவுக்கு அதில் ஆர்வம் இருந்தது. அப்போது நானாகவே சுயமாகவும் கவிதை, பாடல் எல்லாம் எழுதுவேன் என்பதாலும் அப்படியொரு அறிமுகம் பள்ளிக்கூடத்தில் வந்து விட்டது.   எட்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து ஏதாவது கவிதைப் போட்டி என்றால் பள்ளியின் சார்பாக என்னை அனுப்புவார்கள். அப்படி நிறையக் கவிதைப் போட்டிகளுக்குப் போக ஆரம்பித்ததில் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது. ஆனாலும் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூவில் மேத்ஸ், சயின்ஸ் க்ரூப் தான் படித்தேன். எது படித்தால் எப்படிப் போகலாம் என்ற அறிமுகமெல்லாம் அப்போது கிடையாது. ஆனால் டென்த்தில் வாங்கிய மார்க்குக்கு அந்த க்ரூப் கிடைத்தது. அதில் சேர்ந்து படித்தேன். ஆனால் அப்போதும் மேற்கொண்டு தமிழ் தான் படிப்பது என முடிவு செய்திருந்தேன். அந்த சமயத்தில் எனக்குக் கிடைத்த கண்ணதாசன், வைரமுத்து, மேத்தா, வானம்பாடிக் கவிஞர்கள் இப்படியானவர்களை வாசித்த காரணத்தால் ஒரு கவிஞனாக வேண்டும், அதற்குத் தமிழ் படித்தால் வசதியாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது.   ப்ளஸ் டூ முடித்த பின் எங்கு போய் தமிழ் சேர வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது. வெளியுலகம் அவ்வளவு பரிச்சயம் இல்லை. அப்போது என் மாமா - அத்தை மகன் - ஈரோட்டுக்கு ஏதோ வேலையாகச் சென்றவர், அங்கே இரண்டு, மூன்று கலைக் கல்லூரிகளிலிருந்து விண்ணப்பப் படிவங்கள் வாங்கி வந்தார். அதில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் மட்டும் தான் பிஏ தமிழ் இருந்தது. அந்தக் கல்லூரிக்கு விண்ணப்பம் போட்டேன். அங்கே கிடைத்தது. அப்படித்தான் போனேன். என் பள்ளி ஆசிரியர்களுக்கு இதில் விருப்பமே இல்லை. அப்போது நான் வாங்கிய மதிப்பெண்ணுக்கு இஞ்சினியரிங் கிடைக்கும். அன்று இஞ்சினியரிங் போவதென்பது இன்று போல் சாதாரணமான ஒன்றல்ல. கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தும் நான் விண்ணப்பிக்கவே இல்லை. அதனால் என் ஆசிரியர்களுக்கெல்லாம் என் மீது மனக்குறை. பார்த்தால் கண்டபடி திட்டுவார்கள். அதனாலேயே கொஞ்ச நாட்களுக்கு நான் அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.     6. “ராணி வார இதழும், திருச்சி வானொலியும் ஒரு கூச்சசுபாவிச் சிறுவனை எழுத்தாளன் ஆக்கின” என்பதை உங்கள் ஆரம்ப வாழ்வின் ஒன்லைனராகக் கொள்ளலாம். இன்றைய அச்சு, ஒலி, ஒளி, இணைய ஊடகங்களில் அப்படி எழுத்தாளர்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா?   எந்த‌ வழியாக‌, எதனுடைய தூண்டுதல் மூலமாக ஒருவர் எழுத்தாளர் ஆவார் என உறுதியாகச் சொல்ல முடியாது. எனக்கு இருந்த ஆர்வத்துக்கு அப்போது கிடைத்த வாயில்கள் அவை. அதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகரும் வாய்ப்புக் கிடைத்தது. இன்று எனக்கு இருந்ததை விடவும் கூடுதலான வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் சொல்வது போல் பலவித ஊடகங்கள் இருக்கின்றன. எழுதுவதற்கும், எழுத்தைக் கற்றுக் கொள்வதற்கும், எழுதியதை வெளியிடுவதற்குமான வாய்ப்புகள் இப்போது நிறைய இருக்கின்றன.   அதனால் ஊடகங்களில் அறிமுகம் என்பது சிரமமாய் இருந்த காலகட்டம் போல் இப்போதிருப்பவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஆர்வம் இருந்தால் முன்பை விட எளிதாக வாய்ப்புப் பெற முடியும்.     7. ஒரு வாசகனாக உங்களை மிகப் பாதித்த எழுத்தாளர் யார்? அவரிடமிருந்து உங்கள் எழுத்துக்கு நீங்கள் ஏதேனும் பெற்றிருக்கிறீர்களா? ஆம் எனில், அது என்ன?   எனக்கு அந்த மாதிரி குறிப்பிட்ட ஓர் எழுத்தாளரைச் சொல்ல முடியவில்லை.   சிறுவயதில் நானெழுதிய கவிதைகள் மரபை ஒட்டி இருந்தன. ப்ளஸ் டூ போகும் வரை அப்படித் தான். ஏனெனில் புதுக்கவிதை அப்போது எனக்கு அறிமுகமாகவில்லை. மரபுக் கவிதைகள் தாம் - அதுவும் பாடத் திட்டம் மூலமாக - அறிமுகம். பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கண்ணதாசன் - இப்படி 20ம் நூற்றாண்டுக் கவிஞர்கள் பலரது கவிதைகளை மாதிரியாக வைத்து நிறைய எழுதி இருக்கிறேன்.   பிறகு ப்ளஸ் டூ படிக்கும் போது புதுக்கவிதை அறிமுகமானது - வைரமுத்து, மேத்தா எல்லாம். நிறைய வானம்பாடிக் கவிஞர்களின் கவிதைகள் பாதித்தன. முருகுசுந்தரம் என்ற ஒருவர், திருச்செங்கோட்டுக்காரர், அப்போதிருந்த கவிஞர்களில் பிரபலமானவர். அவர் மர‌பு எழுதி சிற்பி பாலசுப்ரமணியன், அப்துல் ரகுமான் போன்ற குழுக்களுடன் ஏராளமான கவியரங்கங்களில் பங்கேற்றவர். பள்ளி ஆசிரியராக இருந்தார். நான் கல்லூரியில் படிக்கும் போது அறிமுகமானார். அவரும் ஒரு முக்கியத் தூண்டுதல். ஒவ்வொரு கால கட்டத்திலும் இம்மாதிரி பாதிப்புகள் இருக்கும், ஆனால் அவற்றைத் தாண்டி வந்து விடுவேன். அது மிக எளிதாக என்னால் கடக்க முடிந்தது. அதற்கு அப்போது வாசிக்கக் கிடைத்த‌ நூல்கள் வாய்ப்பாக இருந்தன.   ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ஓர் அற்புதமான‌ நூலகம் இருந்தது. நிறைய நவீன இலக்கியங்கள் இருந்தன. அங்கு தான் சிறுகதைகள், நாவல்கள் நிறையப் படிக்கத் தொடங்கினேன். தி.ஜானகிராமன், ஆர். சண்முகசுந்தரம், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் இவர்களுடைய நாவல்களை எல்லாம் படித்தேன். பிறகு புனைவிலக்கியம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. கதைகள் எழுத ஆரம்பித்தேன். எம்ஏ அந்த மாதிரி ஒரு துறையில் போனேன். இவர்கள் எல்லோருமே ஒவ்வொரு காலகட்டத்தில் பாதித்தவர்கள்.   குறிப்பாக ஒரு பாதிப்பைச் சொல்ல வேண்டுமெனில் ஆர். சண்முகசுந்தரத்தைச் சொல்லலாம்.     8. எழுத்தில் யாருடைய நீட்சி என உங்களைக் கருதுகிறீர்கள்? ஒரே வட்டாரம் என்ற அடிப்படையில் ஆர். சண்முகசுந்தரம் உங்களது முன்னோடியாக இருக்க வாய்ப்புண்டு.   எனக்கு அறிமுகமான ஒரு வாழ்க்கையின் முந்தைய காலகட்டத்தை எழுதியவர் என்ற அடிப்படையில் அவர் எனக்கு ஒரு பாதிப்பு. சொல்லப் போனால் அவரது எழுத்துக்களுடைய தொடர்ச்சியாக என்னுடைய எழுத்துக்களைப் பார்க்க முடியும். 1950களுக்கு முந்தைய வாழ்க்கையைத் தான் அவர் பெரும்பாலும் எழுதி இருக்கிறார். அவருடையதைப் படித்த போது அந்த வாழ்க்கை இன்று எவ்வளவோ மாற்றமடைந்து இருக்கிறது, அது பற்றிய எந்தப் பதிவுகளும் இல்லையே என்ற எண்ணம் இருந்தது. அவற்றைத் தான் நான் எழுதப் புகுந்தேன். அந்த அடிப்படையில் ஆர். சண்முகசுந்தரம் எனக்கு ஒரு முக்கியமான பாதிப்பு.     9. உங்கள் முனைவர் பட்ட ஆய்வு கூட‌ அவர் குறித்தது தானே?   ஆம். எனது முனைவர் பட்ட ஆய்வுக்காக அவரது படைப்புகளைத் தேடிய போது ஏராளமானவற்றைக் கண்டுபிடித்தேன். கொங்கு வட்டாரத்தை மையமாக வைத்து நிறையப் பேர் எழுதி இருக்கிறார்கள். கு. சின்னப்ப பாரதி, சூர்யகாந்தன், சிஆர். ரவீந்திரன், க. ரத்னம், இரா. வடிவேலன் இப்படி ஒரு பெரிய பட்டியல் உண்டு. ஆனாலும் கூட எல்லோரையும் விட ஆர். சண்முகசுந்தரத்தினுடைய படைப்புகள் என்னை மிகவும் ஈர்ப்ப‌தாக இருந்தன. அதற்குக் காரணம் அவரிடம் எந்த விதமான பம்மாத்தும் இருக்காது. அவர் காலகட்டத்தில் எழுத்துக்கான எல்லை என எது இருந்ததோ அதைத் தொடுமளவு எழுதி இருக்கிறார்.   அவர் எடுத்துக் கொண்ட கருவுக்கு என்ன தேவையோ அந்தளவுக்கான வர்ணனைகள், நிலக் காட்சிகள் மட்டும் தான் வைப்பார். அதைத் தாண்டி எதுவும் செய்ய மாட்டார். தனக்கு அது பற்றி நிறைய தகவல்கள் தெரியும் என்பதாலேயே அவற்றை எல்லாம் பதிவு செய்ய மாட்டார். அதனால் பல விஷயங்களை அவரது எழுத்தின் ஓட்டத்தினூடே சில வரிகளிலிருந்து பெற முடியுமே தவிர, எதையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று எழுதியவரல்ல‌ அவர். அவரை வாசிக்கும் போது இந்த விஷயம் ஆச்சரியமாகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் இருந்தது. அப்படித்தான் அவர் படைப்புகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டேன்.   முதலில் ஆய்வுக்கு ‘கொங்கு வட்டார நாவல்கள்’ என மொத்தமான தலைப்பு தான் கொடுத்தேன். பிறகு தொகுத்துப் படிக்கும் போது ஆர். சண்முகசுந்தரம் மட்டுமே ஒரு பெரிய ஆளுமையாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. இருபதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி இருக்கிறார். சிறுகதை, கவிதை, நாடகம் எழுதி இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை பொழிபெயர்த்திருக்கிறார். ஆக, மிகப்பெரும் ஆளுமையாக அவர் இருக்கிறார் என்ற அடிப்படையில் அவரை மட்டுமே என்னுடைய‌ ஆய்வுக்கு எடுத்துக் கொண்டேன்.     10. எல்லோரையும் போல் கவிதையில் தொடங்கி பிறகு புனைவு எழுதியுள்ளீர்கள். ஒரு படைப்பாளியாக இரண்டுக்குமான வித்தியாசம் என எதைச் சொல்வீர்கள்?   படைப்பைப் பொறுத்தவரை ஒரு வடிவத்துக்கும் இன்னொன்றுக்கும் உருவாவதில் என்ன வேறுபாடு என இதுவரை என்னால் அடையாளப்படுத்த முடிந்ததில்லை. ஒன்று சொல்லலாம். கவிதை என்பது தனிப்பட்ட உணர்விலிருந்து எழுவது. சிறுகதை அல்லது நாவலில் அறிவினுடைய செயல்பாடு அதிகமாக இருக்கும். கவிதையில் உணர்வின் செயல்பாடு தான் அதிகமாக இருக்கும்; அறிவினுடைய செயல்பாடு குறைச்சல்.     11. 80களின் இறுதி, 90களின் தொடக்கத்தில் மன ஓசை இதழில் குறைந்தது பத்து சிறுகதைகள். பிறகு ஏறுவெயில் நாவல். சிறுகதையிலிருந்து நாவலுக்கு மாறிய அந்த நகர்வு எப்படிப்பட்டதாய் இருந்தது?   சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவற்றில் ஒன்றுக்கொன்று ஒரு தொடர்பு இருப்பதாய் ஓர் உணர்வு எனக்கு வந்தது. அந்தக் கதைகளுக்கு நான் எடுத்துக் கொண்ட களம் சிறுகதைக்கானது அல்ல என்றும் சிறுகதைக‌ள் எழுதி அதைத் தீர்க்க முடியாது என்றும் தோன்றியது. அக்கதைகளை எழுதும் போது அவற்றின் முதல் விமர்சகராக இருந்தவர் சுரேஷ் என்ற தோழர். பொருளியல் துறைப் பேராசிரியராக இருந்த அவர் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதுபவர். மன ஓசை ஆசிரியர் குழுவில் இருந்தார். என் ஒவ்வொரு கதையைப் படிக்கும் போதும் அவர் என்னிடம் சொல்வார், “நீங்க நாவல் எழுதனும்” என.   அவருடைய தூண்டுதலும், எனக்கு சிறுகதை என்ற வடிவம் என்னுடைய விஷயங்களுக்குப் போதாது எனத் தோன்றிய உணர்வும் சேர்ந்து தான் நான் அடுத்த கட்டமாய் நாவல் எழுதக் காரணமானது.     12. “என் முதல் நாவலே நான் அதற்குமுன் எழுதியிருந்த சிறுகதைகளின் தொகுப்புதான்” என கோழையின் பாடல் வெளியீட்டு விழாவில் சொன்னீர்கள். அதன் பொருள் அந்த நாவல் சிறுகதைகளின் ரீமேக் என்பதா?   ஏறுவெயில் நாவல் எழுதாமல் இருந்திருந்தால் அதில் வரும் விஷயங்களைப் பல சிறுகதைகளாக நான் எழுத வேண்டி இருந்திருக்கும். அதற்கு முந்தைய கதைகளுக்கு இடையே ஒரு தொடர்பு இருந்ததாய் உணர்ந்ததைப் பற்றிச் சொன்னேன். அது ஒரு பெரிய வாழ்க்கையின் சின்னச் சின்னத் துண்டுகளாகத் தெரிந்தது. ஒரு பெரும் வாழ்க்கைப் பதிவாக வர வேண்டியது எனத் தோன்றியதால் அதை எழுதினேன்.     13. மன ஓசை இதழின் ஆசிரியர் குழுவில் பங்காற்றிய அனுபவங்கள் குறித்து?   மன ஓசை அனுபவங்களை மட்டும் தனி நூலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அது ஒரு தீவிர இடதுசாரி அமைப்பு நடத்திய‌ இதழ். அதன் ஆசிரியர் குழுவில் நான் இருந்த காலகட்டத்தில் அந்த இதழை எழுத்தாளர்கள் சிலர் சேர்ந்து நடத்தினார்கள். அந்த அமைப்பின் வேலைத்திட்டம் அரசியல் சார்ந்து வேறு ஒன்றாக மாறிவிட்டதால் அதிலிருந்த இலக்கிய ஆர்வமுள்ள‌ குழுவிடம் கொடுத்து - அவர்களுக்கு என்ன வேலை கொடுப்பதெனத் தெரியாமல் - ஓர் இலக்கியப் பத்திரிகையாக நடத்தச் சொல்லியிருந்தனர்.   நான் 1989லிருந்து 1991 வரை மூன்றாண்டுகள் அதன் ஆசிரியர் குழுவில் செயல்பட்ட போது அது கனமான‌ இலக்கியப் பத்திரிகையாக வந்தது. இடதுசாரி, மார்க்ஸியக் கருத்துக்களை முன்வைக்கும் படைப்புகள், கட்டுரைகளுடன் அது ஒரு தரமான இதழாக அந்தக் காலகட்டத்தில் இருந்தது. நான் அதில் செயல்பட்டது பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. மொழி சார்ந்து கற்றுக் கொள்வதற்கும், ஒரு பத்திரிகையை எப்படி நடத்துவது எனக் கற்றுக் கொள்வதற்கும் உதவியது.   என் படைப்புகளை இதழின் ஆசிரியர் குழு கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்துவார்கள், பல படைப்புகளை நிராகரிக்கவும் செய்திருக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் அது ஒரு களமாக இருந்தது. அப்படியாக என்னை உருவாக்கியதில் மன ஓசை காலகட்டத்துக்கு ஒரு மிகப் பெரிய பங்குண்டு.   அதில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பொறுப்பாசிரியராக இருந்தார். கரிசல் வட்டாரக் கதைகளில் முக்கிய ஆளுமை அவர். அரசு அதிகாரியாக இருந்த காரணத்தால் இதழில் சூரியதீபன் என்ற புனைப்பெயரில் இயங்கினார். அவருடைய பங்களிப்பும், வழிகாட்டுதலும் எனக்கு முக்கியத் தூண்டுதலாக அமைந்தன. அப்படி அக்குழுவில் இருந்த இன்னும் முகம் தெரியாத பலருக்கும் என்னை உருவாக்கியதில் பங்குண்டு.     14. கவிதைக்கு ஒரு பெயர், மற்ற எழுத்துக்களுக்கு வேறொரு பெயர் என்று வைத்துக் கொள்வது தமிழ் இலக்கியச் சூழலுக்குப் புதிதல்ல. சுந்தர ராமசாமி - பசுவய்யா, வண்ணதாசன் - கல்யாண்ஜி என முன்னுதாரணங்களுண்டு. பெருமாள்முருகன் - இளமுருகு என்ற பிரிவினைக்கு உந்துதல் என்ன? ஒரு கதை எழுதும் போதும் ஒரு கவிதை எழுதும் போதும் இருவேறு மனிதர்களாக உணர்வதன் குறியீடா?   (சிரிக்கிறார்.) இல்லை. நடைமுறைச் சிக்கலைத் தீர்ப்பதற்காகக் கையாண்ட ஒன்று தான் அது. மன ஓசை ஆசிரியர் குழுவில் இருக்கும் போது ஓர் இதழில் என்னுடைய பங்களிப்பு கணிசமாக இருக்கும். குறைந்தது ஐந்திலிருந்து பத்துப் பக்கங்கள் வரை நானே எழுத வேண்டி இருக்கும் - கட்டுரை, கவிதை, சிறுகதை என.   தீவிர இடதுசாரி இதழாக இருந்ததால் பல எழுத்தாளர்கள் அதில் பங்கேற்கத் தயங்கினார்கள். அது தாண்டியும் பலர் பங்கேற்றார்கள். உதாரணமாய் சுப்ரபாரதி மணியன், பாவண்ணன் இப்படி. சுயம்புலிங்கம் கூட அதில் நிறைய எழுதி இருக்கிறார். ஆனாலும் பொதுப்போக்கில் இருக்கும் பல எழுத்தாளர்கள் அதில் பங்கெடுக்கவில்லை. படிப்பார்கள், ஆனால் பங்கெடுப்பதில் தயக்கம் இருந்தது. அதனால் எழுத்தாளர்களின் தேவை அதற்கு அதிகமாக இருந்தது. இன்னொரு விஷயம் அதில் வெளியாகும் கட்டுரைகள் முதலானவை அந்த அமைப்பு முன்வைக்கும் மார்க்ஸியப் பார்வைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற வரையறை இருந்தது. அதனால் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்களே நிறைய எழுத வேண்டிய தேவை இருந்தது.   அதில் நான் செயல்பட்ட காலத்தில் மாணவனாக இருந்தேன். அதனால் எனக்கு நேரம் அதிகமாகக் கிடைத்தது என்பதால் எனக்கு எழுதுவதற்கான திட்டங்களை நிறையக் கொடுத்து விடுவார்கள். அந்த அடிப்படையில், ஒரே இதழில் என் கவிதை, சிறுகதை, கட்டுரை, சினிமா விமர்சனம் எல்லாம் வரும். எல்லாமும் ஒரே பெயரில் எழுதினால் வாசகர்களுக்கு அது வாசிப்பில் தடையை ஏற்படுத்தும் என்பதால் வெவ்வேறு பெயர்கள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. சிறுகதைக்கு பெருமாள்முருகன் எனப் பெயர் வைத்துக் கொண்டேன். அப்புறம் முருகு, செவ்வேல், மஞ்ஞையன், எழில் எனப் பல பெயர்களில் எழுதி இருக்கிறேன். அதில் கவிதைக்கு வைத்துக் கொண்ட பெயர் தான் இளமுருகு.     15. ஏன் இள‌முருகு? உங்கள் பிள்ளைகளின் பெயர் கூட இளம்பரிதி, இளம்பிறை அல்லவா! ‘இளம்’ என்ற பதத்தின் மீது அப்படி என்ன பிரேமை உங்களுக்கு?   முன்பு சொன்னது போல் முருகுசுந்தரம் கவிதைகள் என்னை அக்காலகட்டத்தில் நிறைய பாதித்தன‌‌. திருச்செங்கோட்டைச் சேர்ந்த அவர், தன் பெயரை முருகு எனப் போடுவார். ஏற்கனவே ஒரு முருகு இருப்பதால், நான் இளமுருகு என வைத்துக் கொண்டேன். அப்பெயருக்கு அவரும் ஒரு காரணம்.   இளமுருகு என்ற பெயர் எனக்கு மிகப் பிடித்திருந்தது. என் பள்ளிக்கூட வகுப்புத் தோழன் ஒருவன் இளமுருகன் என்று இருந்தான். அப்புறம் திரு.வி.க.வின் முருகன் அல்லது அழகு என்ற நூலை “முருகு என்பது என்னை?” என்று கேள்வியுடன் தான் தொடங்குவார். முருகு என்ற சொல்லுக்கு அவர் மூன்று பொருள்கள் சொல்வார். அழகு, இளமை, கடவுள்தன்மை என்று அர்த்தம் சொல்லி ஒவ்வொன்றாக விளக்குவார். அதனுடைய தாக்கமும் எனக்கு இருந்தது. முருகு என்ற சொல்லுக்கே இளமை என்று பொருள் இருந்ததால் இளமுருகு என்ற பெயர் எனக்கு மிகப் பிடித்த பெயராக இருந்தது.   அண்ணன் பிள்ளைகளுக்கே அப்பெயரைத் தான் வைத்தேன். அண்ணன் பெண் இளமதி, அண்ணன் பையன் இளங்கதிர். அதன் தொடர்ச்சியாக அது ஒரு குடும்பப் பெயர் போல் ஆகட்டும் என்ற அடிப்படையில் என் பிள்ளைகளுக்கும் அந்தப் பெயர்களை வைத்தேன்.     16. உங்கள் எழுத்தில் சிறுவர்கள் உலகம் பற்றி ஏராளம் சொல்லி இருக்கிறீர்கள் என்றாலும் அவை யாவும் பெரியவர்களுக்கான கதைகளே. சிறுவர் இலக்கியம் எனத் தனியே ஏதும் நீங்கள் எழுதியதில்லை என நினைக்கிறேன். பெரும் எழுத்தாளர்கள் சிறுவர் இலக்கியமும் எழுதுவது உங்கள் தலைமுறை எழுத்தாளர்களிடையே ஒரு மோஸ்தராக உள்ளது. ஜெயமோகன் பனிமனிதன் எழுதினார். எஸ்.ராமகிருஷ்ணன் ஏழுதலை நகரம் முதலான‌ பல நூல்கள். நீங்களும்‌ மந்திர மலை ரகசியம் பாணியிலான சிறுவர் நீள்கதைகளைச் சிறுவயதில் எழுதி இருப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். அவற்றை வெளியிடும் திட்டமுண்டா? புதிதாய்க் குழந்தைகளுக்கென நூல்கள் எழுதும் எண்ணமுண்டா?   அப்போது நான் எழுதியதெல்லாம் படித்துப் பார்த்தால் பயிற்சிக்காக எழுதிய சாதாரண எழுத்துக்கள் எனத் தெரிகிறது. வெளியிடுவது போல் அவை இல்லை. ஆனால் நான் சிறுவர்களுக்கு எழுதவில்லை எனச் சொல்ல முடியாது. புன்னகை உலகம் என்ற சிறுவர் பத்திரிகையை என் நண்பர் ஒருவர் பொறுப்பெடுத்து நடத்திக் கொண்டிருந்தார். அவர் கேட்ட போது அதற்கு நிறைய சிறுவர் பாடல்கள் எழுதி இருக்கிறேன்.   சிறுவர் பாடல்கள் எழுதும் பழக்கம் எப்படி வந்ததென்றால் என் பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த போது நானே சுயமாகப் பாட்டெழுதி அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பேன். பனை மரம், காக்கை என‌ப் பல பாடல்களை அவர்களுக்குக் சொல்லி இருக்கிறேன். அவற்றை அவர்கள் விரும்பிப் பாடி இருக்கிறார்கள். அந்தப் பாடல்கள் புன்னகை உலகம் இதழில் வந்தன. பதினைந்து, இருபது பாடல்கள் இருக்கும்.   தினமணி - சிறுவர் மணியில் கூட அப்படியான பாடல்களை எழுதி இருக்கிறேன். புன்னகை உலகத்தில் சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகளும் எழுதினேன். இப்போது கூட பூவுலகின் நண்பர்கள் நடத்தும் மின்மினி இதழுக்குக் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றிரண்டு எழுதிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.   அவற்றைத் தனி நூலாக்க உட்காருமளவு நேரம் வாய்க்கவில்லை. எனக்கு மிக ஆர்வமான ஒரு துறை தான் அது. சிறுவர்களுக்கான நாவலோ கதைகளோ எழுத வேண்டும் என்ற ஆசையுண்டு. பார்ப்போம்.     17. கவிதையே உங்களுக்கு நெருக்கமான வெளிப்பாட்டு வடிவம் எனச் சொல்லி இருக்கிறீர்கள். ஒரு பாத்திரத்தின் குரலாக அல்லாமல் உங்கள் சொந்தக் குரலாகவே ஒலிக்க முடிகிறது என்பதாலா?   அப்படி என்று மட்டும் சொல்ல முடியாது. என்னுடைய சொந்த விஷயங்கள் என்று மட்டும் கிடையாது, அரசியல், சமூகம் பற்றிய விஷயங்களைக் கவிதையில் எழுதி இருக்கிறேன். உத்வேகமான கவிதை, ‘இந்தியா ஒளிர்கிறது’ மாதிரியான அரசியல் கவிதை எல்லாம் கூட நான் எழுதி இருக்கிறேன்.   அந்தரங்கமான உணர்வுகளை வெளியிட எல்லாவற்றை விடவும் கவிதை ஏற்ற வடிவமாக இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதோடு மட்டும் அது நின்று விடுவது கிடையாது. அதைத் தாண்டியும் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி எழுதக்கூடிய வடிவம் தான் அது. அதிலொன்றும் சந்தேகமில்லை.     18. நிகழ் உறவு, கோமுகி நதிக்கரைக் கூழாங்கல், நீர் மிதக்கும் கண்கள் மற்றும் வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - உங்கள் முதல் நான்கு கவிதைத் தொகுதிகளைப் பற்றிப் பேசும் எவரும் தவறாமல் பயன்படுத்தும் சொற்றொடர்: எளிமையான, நேரடியான கவிதைகள். என் வாசிப்பில் 1993 முதல் 2012 வரையிலான அந்த 20 ஆண்டுகளில் உங்கள் மொழி அப்படியே தான் இருக்கிறது; பேசுபொருளும் கூட கிட்டத்தட்ட அதே. ஆனால் உள்ளடக்கத்தின் சிடுக்கு கூடியபடியே இருப்பதாக நினைக்கிறேன். (மறுபடி கோழையின் பாடல்களில் இளகி இருக்கிறது.) உங்கள் கவிதை மொழி மற்றும் உள்ளடக்கம் பற்றி?    என் கவிதையின் மொழி அப்படியே இருக்கிறதா எனத் தெரியவில்லை. நிறைய மாறி இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். 90களில் நான் எழுதிய கவிதைகளில் பயன்படுத்திய சொற்களுக்கும், போகப்போக எழுதிய சொற்களுக்கும் வித்தியாசம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது. வடிவங்களில் கூட வெவ்வேறு வகையானவற்றைக் கவிதைகளில் செய்திருப்பதாக நினைக்கிறேன். இடையில் ஒரு செறிவு வந்து, பிறகு நீங்கள் சொல்வது போல் மீண்டும் கோழையின் பாடல்களில் ஒரு நெகிழ்வு வந்திருப்பதைப் பார்க்கலாம். அந்தந்தக் காலகட்டத்தில் அந்தந்த மனநிலைக்கு ஏற்ற மாதிரியான வடிவங்கள் வந்திருக்கின்றன‌.   உள்ளடக்கமும் கூட அந்த மாதிரிதான் மாறியிருக்கிறது. 2000க்கு முன்பு எழுதியதில் ஒரு தயக்கமும், என் எல்லை மிகக் குறுகியதாகவும் இருந்தது. அப்போது இதை எல்லாம் எழுதலாமா என நிறைய விஷயங்கள் பற்றிச் சந்தேகம் இருந்தது. கூள மாதாரி எழுதின பிறகு அது பெரிய அளவுக்கு உடைபட்டது. அது எனக்கு ஒரு மிகப் பெரிய திறப்பாக அமைந்தது. சொல்லப்போனால் பல‌ விஷயங்கள் பற்றித் தாழ்வுணர்ச்சி கூட இருந்தது. அதற்குப் பிறகு அவை எல்லாமே மதிப்பு மிக்க விஷயங்கள், யாவுமே பதியப்பட வேண்டியவை என்ற புரிதல் வந்தது. அதனால் உள்ளடக்கத்தில் நீங்கள் நினைப்பது போல் மாற்றங்கள் வந்திருக்கலாம்.     19. கூள மாதாரி எப்படி அந்த மனத்தடையை உடைத்தது?   கூள மாதாரி எனக்கு மிகப் பெரிய தூண்டுதல். எப்படி என்றால் அதற்கு முன் என்னுடைய சுய அனுபவம் சார்ந்த, என்னைச் சுற்றியதான விஷயங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். அந்த நாவலுமே கூட அப்படியானது தான். ஆனால் அந்த நாவலை எழுதின போது என் மனதிலிருந்த ஒரு பெரும் பாரம் இறங்கி விட்டாற் போன்ற ஓர் உணர்வு வந்தது. அந்நாவலுக்கு எடுத்துக் கொண்ட களத்தை ஒரு பாத்திரம் போல எழுதி இருப்பேன். களத்தை உயிருள்ள ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு வந்து விட‌ வேண்டும் என முயற்சி செய்தேன். அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றேன் எனத் தெரியவில்லை. அந்தக் களத்தைப் பின்பற்றிப் போகையில் எனக்கு அது மனவிரிவை உண்டாக்கியது என்று தோன்றியது.   அதிலிருந்து பரவி வெளியே வந்தேன் என்று தான் இப்போது சொல்ல முடிகிறது.     20. புனைவுகளில் பரவாயில்லை, கவிதைகளில்கூட கொங்கு வட்டாரத்தை / வேளாண் பின்புலத்தைக் கொணர்ந்து விடுகிறீர்கள். “பூக்கட்டிய சோளக்கதிர் அல்குல்” எனும் போது இரண்டையுமறியாதவன் எதற்கு எதை உவமையாக்கிப் புரிந்து கொள்வான் என மலைக்கிறேன். அது கவிதையைத் துய்ப்பதில் தடை இல்லையா? புனைவில் இந்தச் சிக்கல் எழுவதில்லை என நினைக்கிறேன். உதாரணமாய் ‘பீவாங்கியின் ஓலம்’ என்ற உங்களது சிறுகதையில் நாயகன் தன் மனைவியின் உடம்பு வாசனையை பால் கம்மங்கதிரும், இளம்பயிரும் கலந்த மணம் என்கிறான். அதுவும் மேற்சொன்ன அதே மாதிரி உவமைதான் என்றாலும் ஒரு மாதிரி கடந்து விட முடிகிறது. மாறாய், கவிதை வரி கிடந்து உறுத்துகிறது.   இது கொங்கு வட்டாரம் சார்ந்த ஒன்று தானா எனச் சொல்ல முடியவில்லை எனக்கு. கவிதையில் அந்த மாதிரி இயல்பாக ஓர் உவமை தோன்றும் போது எழுதுகிறேன். வாசிப்பவர்களுக்கு அந்த அனுபவத்தைத் தர முடியுமா? அது சாத்தியமா? என்று யோசித்துக் கொண்டிருந்தால் நாம் ஒன்றையும் எழுத முடியாது. கிராமம் சார்ந்த, விவசாயம் சார்ந்தவர்களுக்கு அதைப் பொருத்திக் கொள்ளத் தெரியலாம். அந்த அனுபவம் இல்லாதவர்களுக்கு புதிய அனுபவத்தை, ஒரு தேடலைக் கொடுக்கும் ஒன்றாகத்தான் அது இருக்கும்.   நான் விவசாயம் சார்ந்த ஒரு வாழ்நிலையிலிருந்து வந்தவன். அதனால் என்னிடம் வேறு மாதிரியான உவமையை எதிர்பார்க்க முடியாது. ஞானக்கூத்தனோ, வைத்தீஸ்வரனோ, சுகுமாரனோ எழுதுகிற மாதிரியான உவமைகளை என்னால் கொடுக்க முடியாது. அவர்கள் எழுதும் விஷயங்கள் எனக்குப் பெரும் மலைப்பாகவும், அந்நியமாகவும் இருந்ததுண்டு. அப்புறம் நகர வாழ்க்கை தொடர்பான ஓர் அறிமுகம் கிடைத்த போது அவை பற்றிய ஒரு வியப்பு தோன்றியது. அது போல் உங்களுக்கு விவசாயம் சார்ந்த, கிராமம் சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்து விட்டதென்றால் இம்மாதிரி உவமைகள் எளிமையானதாகவும் வியப்பு தரும் விஷயமாகவும் மாறி விடும் என்று தான் தோன்றுகிறது.   ‘விதைப்பானை’ என்ற கவிதை எழுதி இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் எழுதியவற்றுள் ஒரு நல்ல கவிதை. விவசாயம் சார்ந்த பின்னணி உள்ளவர்களுக்குத் தான் அந்தக் கவிதை முழுவதுமாக அர்த்தமாகும். அப்படி இல்லாதவர்களுக்கு அந்தக் கவிதை ஒரு புது அனுபவமாகத்தான் இருக்கும்.   எல்லோருடைய கவிதைகளிலும் அது இருக்கிறது. அவர்களுடைய ஈடுபாடு மற்றும் வாழ்நிலை சார்ந்து இருப்பதைப் பார்க்கலாம். மேற்கத்திய இசை சம்ப‌ந்தமாக பிரம்மராஜனின் கவிதைகளில் குறிப்புகள் வருவதை நாம் பார்க்க முடியும். அந்த இசை தெரியாதவர்களுக்கு அது ஓர் அந்நியமாக இருக்கிறது.   அவற்றை எல்லாம் விட என் கவிதைகளில் வருவது பெரிய தடையாக இருக்கும் எனத் தோன்றவில்லை.     21. வட்டாரப் புனைவு போல் வட்டாரக் கவிதை என ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. வா.மு. கோமுவின் சொல்லக்கூசும் கவிதை தொகுப்பு கொங்கு வட்டார மொழியில் இருந்தாலும் அதை வட்டாரக் கவிதை என வகைப்படுத்தத்தோன்றவில்லை. உங்களுடையவை வட்டாரக் கவிதை என நினைக்கிறீர்களா?   சொல்லலாம். தொடக்கத்தில் அப்படிச் சிலவற்றை எழுதி இருக்கிறேன். நிகழ் உறவு தொகுப்பில் ‘கொறை ஒழவு’ என்ற தலைப்பில் ஒரு கவிதை இருக்கிறது. அப்போது கொங்கு வட்டாரச் சொல்லகராதி தயாரிக்கச் சொற்களைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். அச்சொற்கள் மீதிருந்த மோகமும் கூட ஒரு காரணம். அத்தொகுப்பில் அத்தகைய சொற்களைப் பயன்படுத்தி இருப்பேன். சிலவற்றுக்கு அடிக்குறிப்பு தந்து விளக்கம் கொடுத்திருப்பதையும் பார்க்க முடியும். ஆனால் பிற்பாடு அப்படி இல்லை. அதிலிருந்து மீண்டு வந்து விட்டேன். பிறகு இயல்பாகத் தோன்றும் ஓர் உவமையும் கருப்பொருளும் தான் இருக்கும்.     22. ஐந்து கவிதைத் தொகுதிக‌ள் எழுதியும் புனைவெழுத்தாளராகவும், கட்டுரையாசிரியராகவுமே பெரும்பாலும் அறியப்படுகிறீர்கள். (யுவன் சந்திரசேகரும் கூட அப்படித்தான்.) அதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்? உங்கள் கவிதையல்லாத எழுத்துக்கள் உங்கள் கவிதைகள் மீது விழ வேண்டிய வெளிச்சத்தை மட்டுப்படுத்துவதாக எண்ணுகிறீர்களா? அது பற்றிய‌ வருத்தம் இருக்கிறதா?   வருத்தம் என ஏதுமில்லை. ஒரு கவிஞன் கவிஞாக மட்டுமே இருந்தால் தான் அவனது கவிதையை அங்கீகரிப்பது என்ற‌ ஒரு போக்கு இங்கே நிலவுகிறது. அதை உடைத்தவர்களும் மாற்றியவர்களும் கூட உண்டு. சுந்தர ராமசாமி எல்லாவற்றிலும் இயங்கி இருக்கிறார். பசுவய்யா என்ற பெயரில் அவர் எழுதிய கவிதைகளும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துத் தான் பேசப்படுகின்றன. அது போல கு.ப.ராஜகோபலன், புதுமைப்பித்தன் கவிதை எழுதி இருக்கிறார்க‌ள். அவர்களைப் பேசும் போது அவர்களின் புனைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது அனேகமாக 80களுக்குப் பிறகு ஏற்பட்ட போக்கு என நினைக்கிறேன்.   ஆனால் எனக்கு அந்த எண்ணம் இருந்தது. என்னுடைய‌ கவிதைகள் சரியான அளவு கவனத்துக்குள்ளாக வில்லை என நினைத்திருக்கிறேன். ஆனால் கோழையின் பாடல்கள் வந்த பிறகு பெரும்பாலும் அது நீங்கி விட்டது. கோழையின் பாடல்களுக்கு ஒரு நல்ல கவனம் கிடைத்தது. கவிஞர்கள் மத்தியில் கூட அது பற்றிய உயர்வான அபிப்பிராயங்கள் வந்தன. அந்த அடிப்படையில் அந்த எண்ணம் நீங்கி விட்டது.     23. யதார்த்த‌ களச் சாத்திய அடிப்படையில் பேராசிரியர் என்பதை விட‌ எழுத்தாளன் என்ற அடையாளத்தை விரும்புவதாகச் சொல்கிறீர்கள். எழுத்தில் விரும்பும் அடையாளம் கவிஞர் என்பதா எழுத்தாளர் என்பதா?   பொதுவாக எழுத்தாளர் என்று சொல்லும் போதே அதற்குள் கவிஞர் என்பதும் அடங்கி விடும். எழுத்தாளர் பொதுச் சொல். சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர் என்று சொல்வது போல் கவிஞர் என்பதும் உட்பிரிவு.     24. இது ஒரு சிறிய‌ வாசகப் பிரச்சனை. உங்களிடம் ஒரு சமீபத்திய உதாரணம் உண்டு என்பதால் உங்களிடம் கேட்கிறேன். மற்றபடி இது பரவலாகப் பல எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் பதில் சொல்ல வேண்டிய கேள்வி தான். முன்பு வெளியான ஒரு நூலை புதிய படைப்புகளுடனோ பழையவற்றுடனோ சேர்த்துத் தொகுப்பாக நூல் வெளியிடுவது குறித்தான பிரச்சனை இது. உதாரணமாய் உங்களது நீர் மிதக்கும் கண்கள் மற்றும் வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் ஆகிய கவிதைத் தொகுதிகள் என்னிடம் ஏற்கனவே இருந்தன. அதற்கும் முன்பு வெளியான நிகழ் உறவு மற்றும் கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் தொகுப்புகள் அச்சில் இல்லாததால் கிட்டியபாடில்லை. என் போல் பலரும் இருப்பார்கள். இச்சூழலில் அத்தொகுதிகளை இரு தனி நூல்களாகவே மறுபதிப்பு செய்வது தான் வாசகர்களுக்கு வசதி அல்லவா? மாறாக நான்கு தொகுதிகளையும் ஒரே நூலாக மயானத்தில் நிற்கும் மரம் என்று கொண்டு வரும் போது நான் ஏற்கனவே வைத்திருக்கும் நூல்களையும் சேர்த்து வாங்குவது போலாகிறது. புத்தகத்திற்குக் காசு செலவழிப்பது குறித்த அசூயை கொண்ட ஒரு சமூகத்தில் இது போன்ற விஷயங்கள் மேலும் வாசகனுக்குச் சுமை அல்லவா! ஓர் எழுத்தாளருக்கு தன் மொத்தப் படைப்புகளையும் ஒரு தொகுதியாகக் காண்பதில் இருக்கும் மகிழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதன் பக்க விளைவாக ஒரு பொருளாதாரரீதி‌ வாசகச் சிக்கலும் நுழைந்து விடுகிறதே!   சரி தான். அதே சமயம் வாசகருக்கு அதில் நிறைய வசதிகளும் இருக்கிறதல்லவா! ஏற்கனவே இருக்கும் வாசகர்களை மட்டும் கணக்கில் வைத்துக் கொள்ளாமல் புதிய வாசகர்களையும் கணக்கில் கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது எல்லா நூல்களும் ஒரே தொகுப்பில் கிடைப்பது என்பது அவர்களுக்கான வசதியாக அமைகிறது. நீங்கள் சொல்வது மாதிரியான சிக்கல் ரொம்ப peculiar-ஆனது.     25. அதாவது மயானத்தில் நிற்கும் மரம் மாதிரி மொத்தத் தொகுதியும் வரட்டும். அதோடு தனித்தனி நூல்களும் கிடைத்தால் எனக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. என்னிடம் இல்லாத தனித்தனி நூல்களை நான் வாங்குவேன். எந்த நூல்களுமே இல்லாதவர் மொத்தத் தொகுதியை வாங்கக்கூடும். ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் மொத்தத் தொகுதியையும் வாங்கியாக வேண்டிய நிர்ப்பந்தம். நான் வாங்கவே செய்கிறேன். வாசிப்பு ஆர்வம் மிக்க நண்பர்களுக்கு முந்தைய‌ நூல்களைத் தந்து விட்டு, மொத்தத் தொகுதியை நான் வாங்குகிறேன். ஆனால் அந்தச் சுதந்திரம் எல்லோருக்கும் இராதல்லவா!   ஓர் எழுத்தாளரின் ஒட்டுமொத்த எழுத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும் ஆய்வுப் பார்வைக்கு அது தேவையாக இருக்கிறது. தனித்தனி நூல்கள் வரும் போது எத்தனை நூல்கள் வந்திருக்கின்றன என வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்வதே பெருங்கஷ்டமாக இருக்கிறது. வண்ணதாசனுக்கோ, வண்ணநிலவனுக்கோ, எஸ்.ராமகிருஷ்ணனுக்கோ எத்தனை சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது எனப் பார்த்தால் பத்து, பதினைந்து வந்திருக்கின்றன. அவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பது, ஒவ்வொன்றையும் தேடி வாங்குவது என்பதெல்லாம் பெரும் சிக்கலுக்குரியதாக இருக்கிறது. அதனால் ஒரே தொகுதியாகக் கிடைக்கிறது எனும் போது வாசகருக்கும் அது வசதியாக இருக்கிறது.   ஒரே தொகுப்பில் ஒன்றாக வாசிக்கும் போது எழுத்தாளரின் வளர்ச்சியை, மாற்றங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இன்னொரு விஷயம் இது ஓர் எழுத்தாளரின் பல ஆண்டு செயல்பாட்டுக்குப் பிறகு நிகழக்கூடிய ஒன்று தான். எடுத்த உடனே நடக்காது; இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பின் தான் அப்படி முழுத் தொகுப்பாக வரும். அதற்கான தேவை இருக்கிறது என்ற அடிப்படையிலேயே அது வருகிறது.   நீங்கள் வைத்திருப்பது போல் இரண்டு தொகுதி இருக்கிறது, இரண்டு தொகுதி இல்லை என்பது மாதிரியான சிக்கல் மிகக் குறைச்சலான பேருக்கே இருக்கும் என நினைக்கிறேன்.     26. ஏறுவெயில் உங்கள் கல்லூரி காலத்தில் எழுதிய நாவல். ஆட்டோஃபிக்ஷன் என்று அழைத்துக் கொள்ளாவிட்டாலும் அதில் சுயசரிதைக்கூறுகள் இருக்கின்றனவா? நாவலின் நாயகனான பொன்னையனின் பதின்மங்கள் தொடங்கி கல்லூரிக் காலம் வரை கதை போகிறது என்பதால் கேட்கிறேன்.   என்னுடைய படைப்புகள் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு விதத்தில் சுயசரிதைக்கூறு இருக்கத்தான் செய்யும். எல்லா எழுத்தாளர்களுடைய படைப்புகளிலும் அது இருக்கும் என்று தான் நினைக்கிறேன். வரலாற்று விஷயத்தை எடுத்து எழுதினால் கூட எங்காவது சுயசரிதைக்கூறு இருக்கத்தான் செய்யும். சிலவற்றில் அதிகமாக இருக்கும், சிலவற்றில் குறைவாக இருக்கும், சிலவற்றில் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருக்கும். உங்களுக்கு ஏறுவெயிலில் கொஞ்சம் கூடுதலாக என் சுயசரிதைத்தன்மை தெரியும் என நினைக்கிறேன். ஆனால் அதை விட அதிகமான சுயசரிததைத்தன்மை கொண்ட நாவல் கூள மாதாரி தான்.     27. இருபதாண்டுகளுக்கு முன்பே ஏறுவெயில் நாவல் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டு சமூகத்தின் பார்வையிலான‌ அவையல் கிளவிகள் அதில் இடம் பெற்றதால் சர்ச்சைக்கு உள்ளானதல்லவா?   அதைப் பற்றி ஒரு கட்டுரையே எழுதி இருக்கிறேன். ‘பல்கலைக்கழகத்தால் விளைந்த பெரும்பயன்’. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ…யில் இருக்கிறது. எப்போதும் என் படைப்பைப் பாடத் திட்டத்தில் வைக்கச் சொல்லி நான் யாரையும் அணுகியது இல்லை. அவர்களாக வைத்து, அவர்களாக நீக்கினார்கள்.   ஏறுவெயிலை ஒரே ஆண்டில் பாடத்திட்டத்திலிருந்து நீக்கி விட்டார்கள். சில பல்கலைக்கழகங்களில் அந்நாவலைப் படிக்காமல் பாடத்திட்டத்தில் வைத்து விட்டு, பிறகு யாரோ சொல்லி நீக்கிய‌தெல்லாம் நடந்திருக்கிறது. கல்வித்துறைக்குள் இப்படியான சிக்கல் வருவதற்குக் காரணம் சொற்கள் தாம். வசைச் சொற்கள், கெட்ட வார்த்தைகள் இல்லாத தூய்மையான ஒரு பிரதி வேண்டும் என நினைக்கிறார்கள். அவ்வரையறைக்குள் என் படைப்பு உட்படாத காரணத்தால் அந்தப் பிரச்சனை வருகிறது. கல்வித் துறையில் அந்த வரையறை இருக்கும் வரை நவீனப் படைப்புகள் பாடத்தில் நுழைவதென்பது சிரமம்.     28. உங்கள் படைப்புகள் குறித்த வாசகர்களின் விமர்சனங்களை வாசித்த வரை ஓர் ஒற்றுமையைக் காண முடிகிறது. அவர்களுக்கு உங்கள் கதை பிடிக்கிறது; நடை பிடிக்கிறது; வட்டார வழக்கைப் பயன்படுத்துவது பிடிக்கிறது. இப்படி எல்லாவற்றையும் சிலாகித்து விட்டு இறுதியில் தேவையில்லாமல் கெட்ட வார்த்தை வருவதைத் தவிர்த்திருக்கலாம் என்று சொல்லி முடிக்கிறார்கள். இவர்களில் சிலர் நெடுங்கால, தீவிர‌ இலக்கிய வாசகர்கள். நான் வாசித்த வரை ஒருபோதும் நீங்கள் கெட்ட வார்த்தைகளை வலிந்து திணித்து எழுதியது போல் ஓரிடம் கூட நினைவில் இல்லை. இன்னும் சொன்னால் அந்த இடத்தில் அது இருப்பதே நியாயம். அதுவே யதார்த்தம். அதுவே படைப்பை அழகாக்கவும் நிறைவாக்கவும் செய்கிறது. நம் ஊரில் மோசமான‌ ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளை தினசரி வாழ்வில் புழங்குவது குறித்துப் புகார் இல்லை. ஆனால் தமிழில் அப்படியான வார்த்தைகள் நிலைகுலையச் செய்கின்றன. ஆங்கில இலக்கியங்களில், திரைப்படங்களில் அவை இயல்பாக இடம்பெற்று அதை இயல்பாக எடுத்துக் கொள்ள வைத்து விட்டன என நினைக்கிறேன். நம் ஊரில் தான் இன்னமும் அச்சுக்குத் தீட்டான சொற்களின் பட்டியல் இருக்கிறது!    ஆங்கிலத்தில் வசைச் சொற்களுக்கே தனியான பேர‌கராதிகள் உண்டு. ஆனால் நம்மைப் பொறுத்தவரை இம்மாதிரி சொற்கள் வாழ்க்கைக்குத் தேவை; ஆனால் இலக்கியத்துக்கு தேவையில்லை. இலக்கியத்தில் எந்த இடத்தில் பயன்படுத்தினாலும் அது வலிந்து பயன்படுத்தியது, அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகப் பயன் படுத்தியது என்று தான் சொல்கிறார்கள். நீங்கள் சொன்னது போல் ஓரிடத்திலும் நான் அப்படிச் செய்ததில்லை. தேவையில்லாத எந்த இடத்திலும் இச்சொல்லைப் போடுவோம் என்று திணித்ததில்லை.   சில இடங்களில் ஒரு பாத்திரத்தின் தன்மையைக் கொண்டு வருவதற்காக அச்சொற்களைப் பயன்படுத்தி இருப்பேன். சில இடங்களில் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தி இருப்பேன். அது போல் தகுந்த காரணங்களோடு தான் வந்திருக்கும். நம் பொது மனதில் இம்மாதிரி சொற்களை அச்சில் பார்ப்பதற்கு ஒரு பெரும் தடை இருக்கிறது. அதுவே அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கான காரணம்.   மொழி பற்றிய பார்வையே நம் சமூகத்தில் அப்படித்தான் இருக்கிறது. மொழியில் எல்லாச் சொல்லும் அர்த்தம் கொண்டவை தாம். எச்சொல்லும் அர்த்தம் இல்லாமல் இராது. நாம் தான் அதில் நல்ல சொல், கெட்ட சொல் என்று பிரிக்கிறோம். அது சமூகத்தில் நிலவும் விழுமியங்கள் சார்ந்தது. பாலியல் விஷயங்களைப் பொதுத் தளத்தில் பேசக் கூடாது என்ற பார்வையிலிருந்து வருவது தான் இது.   படைப்புகளில் கூட பாலியல் விஷயங்களைப் பேசுவது இன்று வரை சிக்கலாகத் தான் இருக்கிறது. வெளிப்படையாகப் பேச முடியவில்லை. பேசினால் இதை எல்லாம் எப்படி எழுதலாம் என்று தான் கேட்கிறார்கள். அது ஒரு பேசுபொருள் என்ற புரிதலே நம்மிடம் இல்லை. அது மறைத்து வைக்க‌ வேண்டிய ஒன்று என நினைக்கிறார்கள். அதிலிருந்து வருவது தான் வார்த்தை பற்றிய கட்டுப்பாடும்.   இத்தனைக்கும் அந்தப் படைப்புகளில் நான் பயன்படுத்தி இருப்பது யதார்த்தத்தில் ஒரு சதவிகிதம் கூடக் கிடையாது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றிரண்டை ஒரு வகை மாதிரிக்காக நான் பயன்படுத்துகிறேன். அவ்வளவு தான். அப்படி எழுத்தில் அச்சொற்கள் இருப்பது அவர்களுக்குத் தொந்தரவு அளிக்கிறது. ஆனால் அதையே பன்மடங்காய் நடைமுறையில் எதிர்கொள்ளும் போது ஏன் இவர்களுக்கு எந்தச் சிக்கலும் இருப்பதில்லை என‌ எனக்குப் புரியவில்லை.     29. புயலிலே ஒரு தோணி, நாளை மற்றுமொரு நாளே, ஒரு புளிய மரத்தின் கதை போன்ற நாவல்களுடன் இணை வைத்து தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று ஏறுவெயில் என விக்ரமாதித்யன் சொல்லியுள்ளார்.   அந்த நாவல் வந்த போதே அவர் அதற்கு ஓர் அற்புதமான மதிப்புரை எழுதினார். அப்போது ஒரு புலனாய்வு இதழ் வந்து கொண்டிருந்தது - பெயர் நினைவில்லை - அதில் தான் அந்த மதிப்புரையை எழுதினார். நம் எழுத்து இலக்கியத் தரமாக உள்ளது, மேற்கொண்டு எழுதலாம் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதற்கு அப்போது வந்த விமர்சனங்கள் எனக்குப் பயன்பட்டன. அந்த அடிப்படையில் விக்ரமாதித்யனுடைய விமர்சனம் உண்மையிலேயே எழுத்து சார்ந்த ஓர் உத்வேகத்தைத் தந்தது.     30. சினிமா உலகம் பற்றிய புனைவுகள் தமிழில் உண்டு. அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, பாலகுமாரனின் கல்லூரிப் பூக்கள் ஆகியன உதாரணங்கள். ஆனால் தியேட்டர் அல்லது டூரிங் டாக்கீஸ் குறித்தான புதினங்கள் அனேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும் (வெயில் திரைப்படம் மட்டும் சுருக்கமாய் அதைப் பேசியது). அவ்வகையில் நிழல்முற்றம் அரிய பங்களிப்பு. அதற்கு உந்துதலான சோடாக் கடை அனுபவங்களைச் சொல்லுங்கள்.   சோடாக்கடை அனுபவங்கள் பற்றி அந்நாவலை விட பெரிய புத்தகம் ஒன்றே எழுதி இருக்கிறேன் - நிழல்முற்றத்து நினைவுகள். அதில் விரிவாகச் சொல்லி இருக்கிறேன்.   மேட்டுக்காட்டு விவசாயம் தான் எங்களுக்கு. பெரிய கிணறு இருந்தது. ஆனால் தண்ணீர் குறைவு தான். சும்மா ஆரியம், மிளகாய், பருத்தி கொஞ்சம் போடுவோம். அதற்குத் தான் தண்ணீர் வரும். சோளம், கடலை, கம்பு இதெல்லாமும் போடுவோம். அது எங்கள் குடும்பப் பொருளாதாரத்துக்குப் போதுமானதாய் இல்லை. அதனால் அப்பா கூடுதலாய் ஒரு வேலை செய்தார் – சோடாக் கடை நடத்தினார். நான் சிறுவனாக இருந்த போது கடைகளுக்குச் சோடா போடுவார், சந்தைகளுக்குக் கொண்டு போவார், திருவிழாக்களில் விற்பார். வீட்டிலேயே கடை வைத்திருப்பார், அங்கேயே சோடா தயாரிப்பார். அதனால் சிறுவயதிலிருந்த அது தொடர்பான‌ அனுபவம் எனக்கு இருந்தது. எனக்கு பிடித்த தொழிலும் கூட அது.   எங்கள் நிலத்தை வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கு எடுத்துக் கொண்ட போது இந்தத் தொழிலைத் தான் நம்பி இருக்க வேண்டியதாயிற்று. நிலத்துக்காக அரசாங்கம் கொடுத்த தொகையைப் புதிதாகத் தொடங்கிய ஒரு தியேட்டரில் முன்பணமாகக் கட்டி அங்கே அப்பா சோடாக் கடை தொடங்கினார். எட்டு வருடங்கள் அங்கே கடை நடத்தினோம். அந்த அனுபவங்கள் தான் அந்த நாவலுக்கு அடிப்படையாக இருந்தன‌.     31. நிழல்முற்றத்தில் வருவது போல் 80களில் தமிழக டென்ட் கொட்டாய்களில் போதை மருந்துப் புழக்கம் இருந்ததா? அல்லது அது புனையப்பட்ட விஷயமா?   ரொம்பவே இருந்ததே! கஞ்சாவுக்கு இங்கே ஒரு நீண்ட வரலாறு உண்டு. பாரதியார் கஞ்சா பிடித்ததாக எல்லாம் செய்தி இருக்கிறதே! அதை எல்லாம் விட இன்னும் அதிகமாய் இருந்தது. மாத்திரைப் பழக்கம் கூட இருந்தது. நாவலில் அதையும் எழுதி இருக்கிறேன். ஒரு பையனுக்கு மாத்திரை தான் பெயரே.     32. நிழல்முற்றம் என்ற புனைவின் அபுனைவுத் தொடர்ச்சி நிழல்முற்றத்து நினைவுகள். 20 ஆண்டுகள் கழித்து அப்படி ஒரு தொடர்ச்சியை எப்படி எழுதத் தீர்மானித்தீர்கள்? சொல்லாது விடுத்தவற்றின் இடைவெளியை நிரப்பும் எத்தனமா? எனில் ஏன் மற்றுமொரு நாவலாக அல்லாமல் கட்டுரைகளாக‌?   அதை மறுபடியும் ஒரு நாவலாக எழுத முடியும் எனத் தோன்றவில்லை. அந்நாவல் ராஜன்குறைக்கு பிடித்த ஒன்று. யதார்த்தவாதம் செத்து விட்டது என்ற குரல்கள் விமர்சனத் தளத்தில் வேகமாக ஒலித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது தான் நிழல்முற்றம் நாவலை எழுதினேன். ராஜன்குறை அப்போது பெருமாள்முருகன் எழுதுவது போன்ற யதார்த்த எழுத்துக்களுக்கு இன்னும் தேவை இருக்கிறது எனச் சொன்னார். அது போல் நிறைய எழுதுங்கள் என ஊக்கப்படுத்தினார். இருபதாண்டுகள் கழித்து அவரும் சுபகுணராஜனும் சேர்ந்து திரைப்படத்துக்காக காட்சிப்பிழை என்ற பத்திரிகையைத் தொடங்கிய போது ராஜன்குறை என்னை எழுதக் கேட்டார். தியேட்டர் அனுபவங்கள் பற்றி நாவலில் சொல்லாதவை, நாவல் எழுதிய அனுபவங்கள் என‌க் கட்டுரைகள் எழுதச்சொன்னார். இரண்டு, மூன்று அல்லது அதிகபட்சம் ஐந்து கட்டுரைகள் எழுதலாம் என்று தான் தொடங்கினேன். ஆனால் இருபது கட்டுரைகள் வரை வந்தன.   எனக்குள் அது பற்றி இவ்வளவு விஷயங்கள் இருந்தனவா என்ற ஆச்சரியத்தை அது உண்டாக்கியது!   நிழல்முற்றம் ஏற்கனவே ஆங்கிலத்தில் வந்து விட்டது. நிழல்முற்றத்து நினைவுகள் நூலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வர வேண்டும் என ராஜன்குறை மிக விருப்பப்பட்டார். இந்தளவுக்கு விரிவான பதிவுகள் ஏதும் கிடையாது என்பதால் தமிழ்த் திரையரங்கு சார்ந்த ஆய்வுகளுக்கு அது பயன்படும் என நினைத்தார்.     33. நிழல்முற்றம் சமகால இலக்கியவாதிகள் அங்கீகரித்த படைப்பு. ஜெயமோகன் ‘பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலை வெற்றி கைகூடாத படைப்புகள்’ என்று போட்ட ஐம்பது நாவல்களின் பட்டியலில் அது இருக்கிறது. எஸ். ராமகிருஷ்ணன் போட்ட சிறந்த நூறு நாவல்களின் பட்டியலிலும் அது உண்டு. மாதொருபாகன் தவிர்த்து உங்கள் படைப்புகளில் ஓரளவு பரவலான‌ கவனிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்றது நிழல்முற்றம் என நினைக்கிறேன்.   ஏறுவெயிலுக்கே நல்ல கவனம் கிடைத்தது அது நிறைய நாவல்கள் வராத காலகட்டம். நிழல்முற்றத்துக்கு நிதானமாகத் தான் கவனம் கிடைத்தது. அதன் வடிவமும் சரி, பொருளும் சரி வித்தியாசமான ஒன்று. அதனால் நுட்பமாக வாசிக்கும் இலக்கிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றது அந்நாவல். உதயச்சந்திரன் நான் எழுதியதிலேயே சிறந்த நாவல் நிழல்முற்றம் தான் எனச் சொல்வார். அவரைப் போல் அந்நாவலைச் சொல்பவர்கள் நிறையப் பேர் உண்டு. அதன் வடிவத்தை உள்வாங்கிக் கொள்ள முடியாதவ‌ர்களும் உண்டு. அதனால் தாமதமாகத்தான் எதிர்வினைகள் வந்தன. மாறாக, ஏறுவெயிலுக்கு கூடுதல் கவனம் கிடைத்தது.     34. திருச்செங்கோடு தொகுதியில் முற்பாதி முதலிரு நாவல்களுக்கு முன்பாகவும் மற்றவை அதற்குப் பின்னும் எழுதப்பட்டவை. அந்நாவல்கள் பிந்தைய‌ கதைகளில் ஏதேனும் ஆதிக்கம் செலுத்தியதா?   திருச்செங்கோட்டில் பெரும்பாலான கதைகள் ஏறுவெயிலுக்கு முன்பு எழுதியவை. இரண்டு, மூன்று கதைகள்தாம் தினமணி கதிருக்காகவும் வேறோர் இதழுக்காகவும் பின்னால் எழுதியவை. திருச்செங்கோடு கதை அதில் ஒன்று. தொகுப்பு 1994ல் வந்தது. ஆனால் கதைகள் எழுதப்பட்டது 1989 - 1991 காலகட்டத்தில்.     35. திருச்செங்கோடு தொகுப்பில் இருப்பவனவற்றைப் பயிற்சிக் கதைகளாகவே பார்ப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். சுந்தர ராமசாமி தான் எழுதியவற்றுள் சில கதைகளை பலவீனமானவை என்று கருதியதால் மொத்த சிறுகதைத் தொகுதி வரும் போது நீக்கி இருக்கிறார். உங்கள் சிறுகதைகளின் (இதுவரையிலான) முழுத் தொகுதி சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் திருச்செங்கோடு தொகுப்பின் கதை எதையேனும் சுராவின் பாணியில் நீக்கி இருக்கிறீர்களா?    திருச்செங்கோடு தொகுதியில் சேர்க்காத, அக்காலகட்டத்தில் எழுதிய நாலைந்து கதைகளை தொகுப்பில் சேர்த்திருக்கிறேன். திருச்செங்கோடு என்ற பெயருடைய‌ கதையை நீக்கி விட்டேன். (சிரிக்கிறார்.)   ஆனால் அதன் பிறகு நண்பர் ஒருவர் செக்கோஸ்லோவேக்கியாவிலிருந்து பேசினார். அந்நாட்டுக்காரர், தமிழ் படித்து அங்கே ஒரு பல்கலைக்கழகத்தில் இந்தியன் ஸ்டடீஸ் துறையில் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருக்கிறார். திருச்செங்கோடு சிறுகதையை செக் மொழியில் பெயர்த்து விட்டு அதை வெளியிட அனுமதி கேட்டார். அப்போது அவர் அதனுடைய அடுத்த கட்டமாகத்தானே மாதொருபாகன் எழுதினீர்கள் எனக் கேட்டார். (சிரிக்கிறார்.) அக்கதை அந்தளவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.   தலைப்புக்காக‌ மட்டும் அதை நீக்கியிருக்கக்கூடாது என அப்போது தோன்றியது. அடுத்த பதிப்பில் இத்தொகுப்பில் அக்கதையை மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சியைச் செய்வேன்.     36. 1994 முதல் 2000 வரையிலான சுமார் ஆறு ஆண்டுகள் உங்கள் நூல் ஏதுமே வெளியாகவில்லை. ஏன்? பேசப்பட்ட இரு நாவல்கள் மற்றும் ஒரு சிறுகதைத் தொகுதி எழுதிய ஓர் இளைஞர் அப்படி திடீரெனக் காணாமல் போவது ஆச்சரியம் தானே! அதுவும் ஆறு ஆண்டுகள் என்பது நெடிய இடைவெளி அல்லவா?   அந்த ஆறு ஆண்டுகளில் என் நூல்கள் ஏதும் வரவில்லை என்பதற்குக் காரணம் என் சொந்த விஷயங்கள் தாம். அந்தக் காலகட்டத்தில் எனக்குத் திருமணம் ஆயிற்று. குழந்தைகள், வேலை, குடும்பத்தைக் கவனிப்பது என்பது மாதிரி நெருக்கடிகளுக்குள் இருந்ததால் நூல்கள் வெளியிட முடியவில்லை. எழுதியதும் குறைந்து போனது. அப்போது சில ஆண்டுகள் எதுவுமே எழுதாமல் கூட இருந்தேன்.   அதற்கெல்லாம் சேர்த்து 2000ல் ஒரே சமயத்தில் 4 நூல்கள் வெளியாகின. கோமுகி நதிக்கரைக் கூழாங்கல், நீர் விளையாட்டு, கூளமாதாரி மற்றும் கொங்கு வட்டாரச் சொல்லகராதி. சிறுகதைகளில் சில‌ 1994க்கு முன்பே எழுதியவை. நாவல் 2000ல் தான் எழுதினேன். இடைவெளி இருந்ததற்குக் காரணம் இது தான்.     37. பெருமாள்முருகனுக்கு கிணறுகளும் அவற்றில் குளியல் கொள்வதும் சாலப் பிடித்தமானதோ! நீர் விளையாட்டில் குறைந்தது இரண்டு கதைகள் கிணற்றை ஒட்டியவை. உங்கள் நாவல்களிலும் கிணறுகள் வந்தபடியே இருக்கின்றன (உதா: மாதொருபாகன்). கிணறுகளின் மீதான உங்களின் பிரேமை பற்றி?   எனக்கு நன்கு அறிமுகமான ஒரு நீர்நிலை கிணறு தான். கிணறு தொடர்பாய் எனக்குப் பல அனுபவங்கள் உண்டு. மனிதன் நிலத்தடி நீரைக் கண்டுபிடித்ததற்கு, அதைப் பயன்படுத்தலாம் எனத் தீர்மானித்ததற்கு ஒரு பெரும் அடையாளம் கிணறு தான். ஆறு, குளம் ஏரி என‌ மற்றதெல்லாம் மழை நீரைத் தேக்கி வைப்பவை. இது நிலத்தடி நீர். நீர் பற்றியதான கண்டுபிடிப்புகளில் கிணறு முக்கியமான ஒன்று.   கிணறு என்பதை நீரைத் தரும் ஒன்றாக மட்டுமின்றி ஒரு பண்பாட்டுச் சின்னமாகத் தான் நினைக்கிறேன். கொங்குப் பகுதி போல் நீர் வசதி இல்லாத ஓரிடத்தில் நீரைக் கொடுத்ததும், மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்தது கிணறு. அவர்கள் வாழ்வின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அது முக்கிய இடத்தைப் பெறுகிறது. திருவிழாவில் முளைப்பாரியைக் கொண்டு போய்க் கிணற்றில் விடுவார்கள். சாமி கிணற்றில் இறங்கும்.   இப்படிக் கிணற்றுக்கு ஒரு பெரிய முக்கியத்துவம் உண்டு. ஆக, அது மாதிரியான பண்பாட்டு அடையாளம் கொண்ட வாழ்க்கையை எழுதுகையில் இயல்பாகவே கிணற்றுக்கு ஒரு முக்கியத்துவம் வந்து விடுகிறது.     38. கூள மாதாரியை தலித் நாவல் என எவரும் வரையறை செய்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் நாவல்களில் தலித் வாழ்வியலை அதிகம் பேசிய நாவல் அதுவே.   அதை தலித் நாவலென‌‌ வரையறை செய்ய வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. அது விமர்சகன் விஷயம். அது பற்றி எனக்குப் பிரச்சனை கிடையாது. அந்த நாவல் வந்த சமயத்தில் ஒரு சிக்கலே இருந்தது - என்னை தலித் எழுத்தாளர் என்று அங்கீகரிப்பதா என்கிற குழப்பம் நிலவியது. சிலர் தலித் எழுத்தாளர் என்றார்கள். தலித் அல்லாதவர்கள் தலித்கள் பற்றி எழுதுவது தலித் எழுத்து ஆகுமா என்ற விவாதங்கள் நடந்தன. சிலர் நான் தலித் எழுத்தாளராக அடையாளம் பெற விரும்புகிறேன் என்றார்கள். நான் ஒருபோதும் அப்படிப்பட்ட எந்த அடையாளத்தையும் விரும்பவில்லை. ஒரு பேட்டியில் “தலித் எழுத்தாளர் என்ற அடையாள அங்கீகாரத்தை நான் கோரவில்லை” என்றே சொல்லி இருக்கிறேன்.   ஆனால் எந்த எழுத்தாளராய் இருந்தாலும் அவருடைய சொந்தச் சாதியைப் பற்றி மட்டும் தான் எழுத வேண்டும் என்று எப்படிச் சொல்ல முடியும்? அப்படி எழுதுவது மிகக் குறுகிய பார்வை அல்லவா! நான் ஆர்.சண்முகசுந்தரம் மீது அப்படியான ஒரு விமர்சனத்தையும் வைத்திருக்கிறேன். அவரது நாவல்களில் கவுண்டர்களும் முதலியார்களும் தான் முக்கியப் பாத்திரங்களாக வருவார்கள். ஒரே ஒரு நாவல் மட்டும் பண்டார சாதியைச் சேர்ந்த பெண்ணை மையமாக வைத்து எழுதி இருக்கிறார். வேறு எதிலும் இருக்காது.   கொங்கு வட்டார வாழ்க்கையிலும் விவசாயத்திலும் தலித்களுக்கு ஒரு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஆனால் அவர் நாவல்களில் அந்தப் பாத்திரங்கள் எல்லாமே போகிற போக்கில் வருவதாகவே இருக்கும். அவர்களைப் பூதக்கண்ணாடி வைத்துத் தான் கண்டுபிடிக்க முடியும். 1980கள், 90களுக்குப் பிறகு அரசியல் மாற்றங்களும், பார்வை மாற்றங்களும், தலித்தியம், பெண்ணியம் போன்ற விஷயங்களும் வந்த பிறகும் ஒரு படைப்பாளி தன் சொந்த சாதி விஷயங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது எப்படி நியாயமாகும்?   ஒரு கிராமத்தை மையமாக வைத்து எழுதும் போது அங்கு எல்லா விதமான சாதிகளுக்கும் பங்கு உண்டு. ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் இடையேயான உறவு நிலை, அவர்களின் தொழில் பங்களிப்பு என இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் என் படைப்புகளில் தலித் பாத்திரங்களுக்கு உரிய முக்கியத்துவம் தொடர்ந்து வருகிறது. எந்த எழுத்தாளருமே கிராமத்தைப் பற்றி எழுதும் போது கிராமத்திலிருக்கும் எல்லாப் பாத்திரங்களுக்குமான இடத்தையும் பங்கையும் தர வேண்டும் என்பது தான் என் எண்ணம்.     39. தலித்களிடம் (கொங்கு வட்டாரத்தில் குறிப்பாய் அருந்ததியர்) இணக்கமாய் இருக்கும் கவுண்டர் என்ற பிம்பம் உங்கள் நாவல்களில் தொடர்ந்து வருகிறது உதாரணமாய் கூள மாதாரி செல்வன், ஆளண்டாப்பட்சி முத்து. உண்மையில் அப்படி மனிதர்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா? அல்லது உங்களது விருப்பமா?   ஒரு கட்டம் வரை கிராமங்களில் உடைமை சாதிகளும், சேவை சாதிகளும் இணங்கிப் போகும் உறவு தான் இருந்திருக்கிறது. என்னைச் சொல்கிறீர்கள். ‘பிறகு’ நாவலில் என்ன வருகிறது? அழகிரிக்கும் தேவர் சாதியைச் சேர்ந்தவருக்குமான உறவு கிட்டத்தட்ட ஒரு குடும்ப உறவு போலவே இருக்கிறது. எங்கேயும் ஒரு சிறு எதிர்ப்புணர்வு கூட இல்லை! என் நாவல்களிலாவது நான் அதை எல்லாம் பதிவு செய்திருப்பேன்.     40. இந்தக் கதாபாத்திரங்கள் யாவும் இளவயதினராகவே இருப்பதிலும் ஏதேனும் செய்தி உண்டா (வயதானால் சாதியம் வந்து கவ்விக் கொண்டு விடுகிறது என்பது போல்)?   அவ்வளவு நுட்பமாக யோசித்துச் செய்தேன் என்று தோன்றவில்லை. என்னுடைய இருபத்தைந்து வயது வரையிலான‌ வாழ்க்கை ஒரு பெரும் தாக்கத்தை எனக்குள் செலுத்தியது. அது நான் இளைஞனாக இருந்த காலம், என் இளம் வயது சம்ப‌ந்தப்பட்டது என்பதால் அம்மாதிரி பாத்திரங்கள் அதிகமாக இருக்கும்.     41. நாவலில் உட்பிரிவுகள் கொண்டெழுதுவது உங்கள் வழக்கமாக‌ இல்லை. கூள மாதாரியில் மட்டும் புழுதி, கொழிமண், வறள் எனப்பிரித்திருக்கிறீர்கள். நடக்கும் சம்பவங்களின் மனப்பாங்கை (mood) உணர்த்துவதாக அதை எடுக்கிறேன். மற்ற நாவல்களில் இந்த உத்தியை ஏன் பின்பற்றவில்லை? அதுவும் கொங்கு வட்டாரச் சொல்லாட்சித் திறன் மிக்க எழுத்தாளுமையான நீங்கள் நிலவியல் அல்லது தட்ப வெப்பம் தொடர்பான வழக்காறுகளைப் பயன்படுத்துவது இயல்பாகவே நடக்குமே!   அந்நாவலுக்கு அம்மாதிரி மூன்றாகப் பிரிக்க வேண்டிய தேவை இருந்தது. அப்படிப் பிரிக்காமல் இருந்தால் ஒரு தொடர்ச்சி விடுபட்டுப் போவது போன்று இருந்தது. அது ஓராண்டில் நடக்கும் விஷயங்கள் - ஒரு தையில் தொடங்கி அடுத்த தை வரையிலான சம்பவங்கள். அந்தக் கால வரையறையில் பருவ‌ங்கள் மாறுகின்றன, அதோடு அவர்களின் வாழ்நிலைகள் மாறுகின்றன, அவர்கள் பிரச்சனைகளும் அதற்கேற்ப இருக்கின்றன. இந்த விஷயத்தைக் கொண்டு வருவதற்காக அந்நாவலில் அப்படிப் பயன்படுத்தி இருந்தேன்.   அச்சுக்குப் போகும் போது திரும்ப வாசித்துப் பார்க்கையில் அந்த இடங்களில் எல்லாம் தொடர்ச்சியின்றி இருக்கின்றன‌ என்பதை நானும் தமிழினி வசந்தகுமாரும் பேசினோம். அப்போது முடிவானது தான் அதைத் தனித்தனிப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளலாம் என்பது. அப்படித்தான் மூன்றாகத் தலைப்புக் கொடுத்தேன்.   அது பெரிய சம்பவ வலுக் கொண்ட நாவல் கிடையாது. அது முழுக்க இருப்பது வாழ்தல் தான். அதற்கு அப்படிப் பிரிப்பது என்பது தேவையாக இருந்தது. மற்ற நாவல்களுக்கு அப்படித் தேவைப்படவில்லை.     42. அப்போது கல்லூரி மாணவன் நான். உங்கள் பெயர் கூட அறிமுகமில்லை. நூலில் பீக்கதைகள் என்ற தலைப்பைக் கண்டதும் ஆர்வமாகி வாங்கி வாசித்தேன். அதிலேயே உங்கள் மீது பெரும் பிடிப்பு வந்து விட்டது. அத்தலைப்பு இல்லை எனில் நான் அக்காலகட்டத்தில் உங்களை வாசித்திருந்திருக்க மாட்டேன், இன்று நாம் இப்படிப் பேசிக் கொண்டிருந்திருக்க மாட்டோம் எனத் தோன்றுகிறது. அப்பெயரை வைக்க வேண்டுமென பிடிவாதமாக இருந்த யூமா. வாசுகிக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும். தலைப்பின் தயக்கங்களும் அதைத் தாண்டியதையும் பற்றிச் சொல்லுங்கள். இப்போது என்ன நினைக்கிறீர்கள்?    அந்தத் தலைப்பு வைத்த போது நூலாக வெளியிடுவதில் நிறையச் சிக்கல்கள் இருந்தன. முதலில் அதைக் காலச்சுவடுக்குக் கொடுத்தேன். அங்கு தலைப்புப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை, தொகுப்பிலிருந்தவை அவ்வளவு வலுவான கதைகள் அல்ல என்று திருப்பிக் கொடுத்து விட்டார்கள். தமிழினியில் கேட்ட போது அவருக்குத் தலைப்பு சிக்கலாக இருந்தது. “தலைப்பு மட்டும் மாத்திக் கொடுங்க, வெளியிடறேன்” என்று சொன்னார். இப்படி மூன்று, நான்கு பதிப்பகங்களுக்குப் போய் அந்தத் தலைப்பின் காரணமாக அது திரும்ப வந்தது. ஆனால் அத்தலைப்பு கதைகளின் பொருளுக்குப் பொருத்தமாக இருந்தது. அதனால் தான் அந்தத் தலைப்பை வைத்தோம். நான் கூட ஒரு கட்டத்தில் சோர்ந்து போய், சரி ஏதோ ஒரு கதையின் தலைப்பை வைத்து புத்தகமாகக் கொண்டு வந்து விடுவோம் என்று இறங்கி வந்து விட்டேன். யூமா. வாசுகிக்கு அது உடன்பாடாக இல்லை. அவர் அத்தலைப்பு தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். “அப்படி யாரும் வெளியிடலைன்னா நான் என் சொந்தப் பணத்தைப் போட்டு வெளியிடறேன்” என்றார். அந்த மாதிரி ஒரு பொருளாதாரப் பின்னணி இல்லை என்றால் கூட அந்தளவு அதில் பிடிவாதமாக இருந்தார்.   அவருடைய பிடிவாதத்தால் தான் சில வருடங்கள் அதை அப்படியே வைத்திருந்து, பிறகு வெளியானது.   அந்தத் தலைப்பு வைத்ததிலும் அந்தக் கதைகள் எழுதியதிலும் எனக்கு மனநிறைவு தான். நீங்கள் அந்தத் தலைப்பின் காரணமாகவே அந்த நூலை வாங்கியதாகச் சொல்கிறீர்கள். அத்தலைப்பின் காரணமாகவே அந்த நூலை வாங்காதவர்கள், வாசிக்காதவர்கள் உண்டு. வாங்கி, மறைத்து வைத்தவர்கள் உண்டு.   இப்போதும் கூட ஏதாவது சந்தர்ப்பத்தில் மேடையில் என்னை அறிமுகம் செய்யும் போது பட்டியலில் அந்த நூல் மட்டும் விடுபட்டு விடும். அந்தத் தலைப்பை மட்டும் சொல்ல மாட்டார்கள். (சிரிக்கிறார்.)     43. தமிழில் ஒருபொருள் பற்றி எழுதப்பட்ட கவிதைத் தொகுதிகள் சில உண்டு, ஆனால் அப்படியான கதைத் தொகுப்பு நவீன இலக்கியத்தில் அரிது. பீக்கதைகள் அதிலொன்று. திட்டமிட்டே அக்காலகட்டத்தில் அந்தக் கதைகளைத் தொடர்ச்சியாக எழுதினீர்களா? அவற்றை எழுதிய மனநிலையைச் சொல்லுங்கள்.   அதைத் திட்டமிட்டு எழுதவில்லை. திருச்செங்கோடு தொகுப்பில் வேக்காடு என்ற கதை இருக்கும். நீர் விளயாட்டு தொகுப்பில் பீ, பீவாங்கியின் ஓலம் ஆகிய கதைகள் இருக்கும். அதற்குப் பிறகு அது மாதிரி சில கதைகள் எழுதியிருந்தேன். ஒரு கட்டத்தில் பார்க்கும் போது இந்த விஷயம் பற்றியே இவ்வளவு கதைகள் எழுதி விட்டேன் போலிருக்கிறதே என்ற எண்ணம் தோன்றியது. அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, இந்தக் கதைகளையே தொகுத்து ஒரு நூலாகக் கொண்டு வரலாம் என்று சொன்னார்கள்.   முன்பு பீ தொடர்பாய் பிற எழுத்தாளர்களின் கதைகளை எல்லாம் தொகுத்து நூலாகக் கொண்டு வரலாம் என்று ஒரு எண்ணம் எனக்கு இருந்தது. பூமணி ஒரு கதை எழுதி இருக்கிறார். இராசேந்திர சோழன் ஒரு கதை எழுதி இருக்கிறார். பீவாரி என்றே ஒரு கதை அன்பாதவனுடையது என நினைக்கிறேன். இன்னொரு எழுத்தாள‌ர் எழுதிய கதை மனஓசையில் வெளியானது. நந்தனார் தெரு விழி.பா. இதயவேந்தன் எழுதிய கதை. இன்னும் சில எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் கூட நினைவில் வந்தன. இக்க‌தைகள் எல்லாமே பீ என்பதைக் கருப்பொருளாகக் கொண்ட கதைகள். அவற்றைத் தொகுக்கலாம் என்று தோன்றியது. அப்போது என்னுடைய கதைகள் நிறையவும் மற்ற எழுத்தாளர்களுடையது ஒவ்வொரு கதை என்பதாகவும் தான் இருந்தது. அப்போது தான் இதில் இன்னும் சில கதைகள் எழுதினால் இதையே ஒரு தொகுப்பாகக் கொண்டு வரலாமே என்று தோன்றி அதற்குப் பிறகு சில கதைகள் அந்தத் தொகுப்புக்காக எழுதினேன்.     44. இந்த 2017ல் கூட கக்கூஸ் என்ற ஆவணப்படம் அரசு அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் இன்றைக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அப்படி ஒரு விஷயத்தை முழு நூலாகவே புனைவாக்கியது ‘பேசாப்பொருளைப் பேசத்துணிந்தேன்’ ரகம் தான். பீக்கதைகள் தொகுப்பு உங்களைக் 'கீழிறக்கி' விடுமோ என்று அஞ்சிப் பின் சமாதானம் அடைந்தார் உங்கள் மனைவி எனச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் அதுவே உங்களுக்கு பரவலான வாசக கவனத்தை அளித்திருக்கும் என நினைக்கிறேன் (நான் ஓர் உதாரணம்). அந்தப் புதிய‌ வெளிச்சம் பற்றிச் சொல்லுங்கள்.   நான் சொன்னது போல் அது இரண்டு விதமான விஷயங்களையும் கொடுத்தது. நீங்கள் சொன்னது போல் நிறைய இளைஞர்களிடம், மாற்றுப் பார்வை உள்ளவர்களிடம் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியது. அதன் மூலமாக ஓர் அடையாளம் கிடைத்தது. ஆனால் விரும்பிப் படித்தவர்கள் கூட அதைப் பேசாமல் தவிர்த்து விடுவார்கள். அப்படி இரண்டு விதமாகவும் நடந்தது. அந்நூல் விற்பனையில் குறைவு தான். அதற்கு வெளியிட்ட பதிப்பகமும் காரணமாக இருக்கலாம் - பரவலாக வெளியில் எடுத்துச் செல்லாதது.   அந்தக் கதைகள் எனக்குக் குறிப்பிட்ட அடையாளத்தைக் கொடுத்தது என்பதும் முக்கியமானது தான். நீங்கள் சொன்னது போல் ‘பேசாப் பொருளைப் பேசுதல்’ என்ற விஷயம் இருக்கிறதே, அந்த வகையான அடையாளத்தைக் கொடுத்தது. என் எழுத்துக்களில் தொடர்ந்து அந்த அம்சம் இருப்பதைப் பார்க்க முடியும். நிறைய இடங்களில் மற்றவர்கள் எடுத்துப் பேசத் தயங்கும் விஷயத்தை நான் எடுத்துப் பேசி இருக்கிறேன்.     45. பார்த்தீர்களா எனத் தெரியவில்லை, பீக்கதைகள் தொகுப்பிலிருக்கும் பிசாசுக்குப் போதுமான விஷயம் சிறுகதையின் அதே மையம் தான் ராஜுமுருகன் இயக்கி சிறந்த தமிழ்ப் படத்திற்கான‌ தேசிய விருது பெற்றிருக்கும்‌ ஜோக்கர் திரைப்படமும்.   அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. ராஜு முருகன் இங்கே கூட வந்து விட்டுப் போனார். கக்கூஸ் கட்டுவது தொடர்பானது அக்கதை. ராஜு முருகனுக்கு அது தாக்கமா எனத் தெரியவில்லை. தனுஷ் நடித்து ஒரு படம் வந்ததே, அண்ணன் இருவர் வயதாகித் திருமணமாகாமல் இருப்பார்கள், குத்துவிளக்கு விற்பர்களாக இருப்பார்கள், (‘நையாண்டி’ என நினைவுபடுத்துகிறேன்.) அந்தப் படம் கங்கணத்தின் தாக்கம் தான். சில காட்சிகள் அப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாய் அண்ணனுக்குப் பார்த்த ஒரு பெண் ஏதோ காரணத்தால் வேண்டாம் என்று சொல்லித் தட்டிப் போயிருக்கும். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் அப்பெண்ணின் புகைப்படம் ஒன்றைப் பார்த்து விட்டு, சரி இந்தப் பெண்ணையே கேட்டுக் கட்டிக் கொள்வோம் என நினைப்பான். படத்தின் பின் தொலைபேசி எண் இருக்கும். அழைப்பான், அந்தப் பெண்ணே எடுக்கும். “இப்ப எனக்குச் சம்மதம், கல்யாணம் பண்ணிக்கலாம், என்ன சொல்றீங்க?” எனக் கேட்பான். அந்தப் பெண் குழந்தையை வைத்துக் கொண்டு “எனக்குக் கல்யாணமாகி குழந்தை இருக்கு” என்று சொல்லும். இதே போன்றதொரு காட்சி கங்கணத்திலும் வரும். அவன் பெண் பார்த்தாலே கல்யாணம் ஆகி விடும் என்ற ராசியைச் சொல்வது போன்ற விஷயங்களிலும் ஒற்றுமை உண்டு.     46. கூள மாதாரிக்குப் பின் நாவல் எழுதுவதில் மீண்டும் ஒரு நெடிய இடைவெளி. 2000 முதல் 2007 வரை. சுமார் 8 ஆண்டுகள். பிறகு கங்கணம். ஓர் எழுத்தாளன் தொடர்ந்து இன்ன படைப்பு எழுத வேண்டும் என்ற விதி இல்லை தான். இன்னும் சொல்லப் போனால் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கூட இல்லை. ஜெயகாந்தன் தன் பிற்காலத்தில் அப்படி இருந்தவர் தானே! ஆனால் நீங்கள் சமீப‌மாய் ஆண்டுக்கு ஒரு நாவல் வீதம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் அந்த எட்டாண்டு நாவல் வனவாசம் கேள்வியைத் தூண்டும் விதமாய் வித்தியாசப்பட்டு நிற்கிறது. அந்த இடைவெளிக்குக் குறிப்பான காரணங்களுண்டா?   2010லிருந்து பார்த்தால் ஆண்டுக்கொரு நாவல் எழுதி இருக்கிறேன். ஓராண்டில் இரு நாவல் கூட எழுதி இருக்கிறேன். அர்த்தநாரி, ஆலவாயன். 2010ல் மாதொருபாகன், 2012ல் ஆளண்டாப்பட்சி, 2013ல் பூக்குழி, 2014ல் இவ்விரண்டும், 2016ல் பூனாச்சி. 2010லிருந்து 2016 வரை வரிசையாக ஆறு நாவல்கள். அதற்கு முன்பான இடைவெளிக்குக் காரணம் நேரம் தான். எனக்கு எழுதுவதற்கான பல விஷயங்கள் உண்டு. எனக்குள்ளே வடிவம் பெற்றே நிறைய நாவல்கள் இருக்கின்றன. அதை உட்கார்ந்து எழுதுவதற்கான அவகாசமும், சூழலும் வாய்த்தால் என்னால் எழுதி விட முடியும். வாய்க்காமல் போனது தான் காரணம்.   2000 முத‌ல் 2007 வரை குடும்ப விஷயங்களைக் கவனிக்க வேண்டி இருந்தது. அதே போல் ஒரு மாதம், இரண்டு மாதம் உட்கார்ந்து எழுதுவதற்கான அவகாசம் எனக்குக் கிடைக்கவில்லை அந்தக் காலகட்டத்தில். பிள்ளைகள் வளர்ந்தார்கள், அவர்களின் பிரச்சனைகள். அண்ணன் இறந்து விட்டார் அச்சமயத்தில். அவர் குடும்பத்தைப் பார்க்க வேண்டி இருந்தது. அதனால் தொடர்ச்சியான கால அவகாசம் அமையவில்லை.   என் எழுத்து முறை என்னவென்றால் நான் ஒரு நாவல் எழுத உட்கார்ந்தால் வேறு எந்த வேலையும் செய்ய மாட்டேன். அப்படி ஒரு மாதமோ, இரு மாதங்களோ இருக்க முடிந்தால் என்னால் ஒரு நாவலை எழுதி விட முடியும். என் மனதில் முழுவதுமாக ஒரு வடிவம் தந்து உருவாக்கி வைத்திருப்பேன். அது வெளிப்படுவதற்கான சந்தர்ப்பம் மட்டும் அமைய வேண்டும். அப்படி அமையாமல் போனது தான் காரணம்.   ஆனால் அக்காலகட்டத்தில் நிறைய‌ மதிப்புரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். கட்டுரை போகிற போக்கில் எழுதி விடலாம். ஒன்று அல்லது இரண்டு நாட்களில். ஆனால் நாவலுக்கு அப்படி இல்லை. அதற்கான தனியான ஒரு மனநிலை வாய்க்க வேண்டும்.     47. கங்கணம் மகத்தான நாவல். அதில் சொல்லப்படுவது போல் 90களில் பெண் சிசுக் கொலைகளினால் தான் கொங்குப் பகுதியில் திருமணத்துக்கு ஆள் கிடைப்பது சிரமம் என்றானதா? தென்தமிழகத்தில் தானே அவ்வழக்கம் மிகுதி! பெண்கள் படிக்கத் தொடங்கியதும், நகர்ப்புற வாழ்க்கையை விரும்பத் தொடங்கியதும், வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்ததும், கலப்பு மணங்கள் நடைபெறத் தொடங்கியதும் காரணங்கள் அல்லவா?   இங்கே சத்தமில்லாமல் பெண் சிசுக்கொலைகள் பெரிய அளவிற்கு நடந்திருக்கிறது. என்ன குழந்தை எனக் கண்டுபிடித்துக் கருக்கலைப்பு செய்தல் என்ற விஷயம் ஒரு பத்தாண்டுகளுக்கு இப்பகுதியில் நிறையவே நடந்திருக்கிறது. நான்கு மாத, ஐந்து மாதக் கருக்களைக் கூட பெண் குழந்தை எனக் கண்டறிந்து கலைத்தவர்கள் உண்டு. மூன்று, நான்கு குழந்தைகளை அப்படிக் கலைத்தவர்கள் இருக்கிறார்கள்.   தெளிவாகப் பாருங்கள். இந்தப் பகுதி வீடுகளில் குழந்தைகள் அதிகம் இருக்காது. இப்போது என்றில்லை, போன தலைமுறையில் கூட அப்படித்தான். காரணம் பெண் சிசுக் கொலை தான். குழந்தை பிறக்காமல் இல்லை. சாதாரணமாகச் சாகடித்து விடுவார்கள். அது அரவமில்லாமல் நடந்திருக்கிறது. வரட்சணைப் பிரச்சனையினாலோ வளர்க்க முடியாமலோ கொன்று விடுவர் என்பது சூத்திர வகைப்பட்ட முடிவு தான்.   நிலவுடைமையும் பொருளாதார ஆதிக்கமும் கொண்ட ஒரு சாதியில் அது சாதாரணமாக நடந்தது. நிலம் பிரிந்துபோய் விடக்கூடாது, அளவான குழந்தைகள் இருந்தால்போதும் என்ற சொத்துடைமை எண்ணத்தின் அடிப்படையில்தான் பெண் குழந்தைகளைக் கொன்றார்கள். அக்குழந்தையை வளர்க்க வேண்டும். நிலத்தை விற்று, பவுன் போட்டு அப்பெண்ணைக் கட்டிக்கொடுக்க வேண்டும். இதைத்தவிர்க்கவே அப்படிச் செய்தனர்.   பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வதெல்லாம் பாரதிராஜா படங்களில் பார்த்திருப்பீர்கள். அதெல்லாம் ஒரு நாடகம் போல் எனக்குத் தோன்றுகிறது. ரொம்பச் சாதாரணமாகக் கொன்று விடுவார்கள். குழந்தையைக் கவிழ்த்துப் போட்டால் முடிந்தது. ஒரு நெல்லைப் பாலில் போட்டுப் புகட்டினால் தீர்ந்தது.   பெண் சிசுக்கொலைகள் பிரச்சனை வந்த போது ராஜம் கிருஷ்ணன் மண்ணகத்துப் பூந்துளிகள் என்று ஒரு நாவல் எழுதினார். எனக்கு அப்போதே அந்தக் கேள்வி வந்தது. “இவுங்க என்ன‌ வறுமைல இருக்கறதால‌ குழந்தைகளைக் கொல்றதாச் சொல்றாங்க, இங்க இப்படி நடக்குதே!” எனத் தோன்றியது. அப்போதே எழுத வேண்டும் என நினைத்தேன். அது தள்ளிப் போய் கங்கணம் எழுதிய காலத்தில் அதன் தாக்கத்தால் என்ன விளைவுகள் நேர்ந்தன‌ எனப் பார்க்கும் கட்டம் வந்துவிட்டது. அதனால் அதை எழுத வேண்டியதாயிற்று.   அப்படி எழுதும் காலம் தள்ளிப் போனதால் தான் கங்கணம் இப்படியான ஒரு வடிவத்தில் வெளிவந்தது.     48. உங்கள் சமீபச் சிறுகதைத் தொகுதி வேப்பெண்ணெய்க் கலயம். 2000க்கு பிந்தைய சுமார் பத்தாண்டுகளில் நீங்கள் எழுதியவை. குழந்தைகளின் உலகம் அதில் நிரம்பப் பதிவாகி இருக்கிறது. இடையீடு, சிறிது நிழல், சின்னக் கருப்பசாமி, நல்ல கெதி, வளர்சிதை, வேப்பெண்ணெய்க் கலயம் எனக் குறைந்தது ஐந்தாறு கதைகளை உதாரணம் சொல்லலாம். ஒருவகையில் இது பெரியவர்கள் பற்றிய இன்னும் சொன்னால் குழந்தைகளை முன்வைத்த பெரியவர்களுக்கான கதைகள் என்பேன். இதே போல் நீர்விளையாட்டு தொகுதியிலும் மழைக்குருவி, சிறுத்த பூதம், பெரிதினும் பெரிது ஆகிய கதைகளைச் சொல்ல முடியும். தொடர்ந்து குழந்தைகள் பற்றிய சித்திரங்கள் உங்கள் கதைகளில் பதிவாகியபடியே இருக்கின்றன. அதற்கான காரணம் அல்லது உந்துதல் என்ன? குழந்தைப் பருவத்திற்குப் போகும் ஏக்கமா?   (சிரிக்கிறார்.) இவற்றை எழுதிய ஆண்டுகள் என் குழந்தைகள் வளர்ந்த காலம். அவர்களின் வளர்ச்சியையும் அந்தக் கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதைக் கண்டுபிடிக்க முடியும். ஆக, அந்தத் தாக்கம் தான்.   என்னுடைய குழந்தைகளோடு நான் நெருக்கமான ஒரு பிரியத்தோடு இருப்பேன். அவர்களின் ஒவ்வொரு செயலிலும் நான் பங்கெடுத்துக் கொள்வதும், அவர்களோடு சேர்ந்து விளையாடுவதும் என்று இருப்பேன். அதனால் அவர்களுடைய‌ உலகம், அவர்களின் உணர்வு ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு இருந்தது. அந்த அடிப்படையில் தான் அந்தக் கதைகள் எல்லாம் உருவாகின.     49. வேப்பெண்ணெய்க் கலயம் தொகுப்பில் இன்னொரு வித்தியாச அம்சம் அவற்றில் இடம்பெற்றுள்ள மனக்குறளிக் கதைகள். அந்தரக் கயிறு, ஆந்தைகள் அலறலை நிறுத்திய இரவு, தீச்சாலை, நிலவு ததும்பும் சாலைகள், நீர்ச்சங்கிலி, பெருவழி முதலிய இக்கதைகள் ஒரு மாதிரி அமானுஷ்யம் கலந்தவை; உங்கள் யதார்த்த எழுத்திலிருந்து மாறுபட்டவை. அவற்றை எழுதுவதற்கான உந்துதல் அல்லது தேவை என்ன?   எல்லா வகையான விஷயங்களையும் எழுத வேண்டும் என்பது தான். என்னுடைய நீர் விளையாட்டு தொகுப்பிலேயே வித்தியாசமான கதைகள் இருக்கும். திருச்செங்கோடு தொகுப்பிற்கும், அதற்கும் நிறைய வேறுபாடுகளைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களில் நிறையப் பேர் நீர் விளையாட்டு தான் சிறந்த தொகுப்பு என்பார்கள். இரண்டுக்குமே ஒரு சம்ப‌ந்தமும் இல்லாதது மாதிரியான கதைகள் இருக்கும்.   மனம் சார்ந்த பயணம் என்பது தொடர்ந்து நான் கவனித்து வரும் ஒரு விஷயம் தான். உளவியலிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரும் போது நிகழ்ச்சி சார்ந்து மட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சி அவர்களிடம் எற்படுத்தும் மனம் சார்ந்த பிரச்சனைகளையும் மையப்படுத்துவதில் எனக்கு ஆர்வமுண்டு. அந்த வகையில் நீங்கள் சொல்லும் இந்தக் கதைகளையும் பார்க்கலாம். நீர் விளையாட்டு தொகுப்பின் ‘கடைவீதியில் ஒருவன்’ போன்ற‌ கதைகளின் தொடர்ச்சியாக வேப்பெண்ணைக் கலயத்தில் இடம் பெற்ற இக்கதைகளைப் பார்க்கலாம். அது என்னவெனப் புரியவில்லை என்று சொன்னவர்கள் உண்டு.   அது மாதிரி எல்லாமும் எழுதி இருக்கிறேன். மனம் சார்ந்து எனக்கு ஈடுபாடு இருப்பது தான் காரணம்.     50. இது மாதிரி யதார்த்தம் தாண்டிய முயற்சிகள் ஏதும் உங்கள் நாவல்களில் அறவே இல்லை. ஏன் சிறுகதைகளில் மட்டும் அவற்றை முயற்சித்துப் பார்க்கிறீர்கள்?   நாவலிலும் அப்படிப் பண்ணலாம். நாவலில் அது மாதிரி செய்வதற்கு முன்முயற்சியாக இந்தச் சிறுகதைகளை எழுதி இருக்கிறேனா எனத் தெரியவில்லை. முந்தைய நாவல்களில் கூள மாதாரியில் முனியப்பசாமி வரும் இடம் எல்லாம் அப்படியான விஷயஙகள் தான். அது மாதிரி அமானுஷ்ய விஷயங்களை சில நாவல்களில் எழுதி இருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தனித்த படைப்பாக ஏதும் எழுதியதில்லை. பார்ப்போம். எதிர்காலத்தில் ஒருவேளை முயற்சி செய்யலாம்.     51. திருச்செங்கோடு தொகுதியில் கதைகள் காலவரிசைப்படி அமைத்ததாய்ச் சொல்லி இருந்தீர்கள். மற்ற தொகுதிகளிலும் இதைப் பின்பற்றினீர்களா? (மற்றவற்றில் கதைகளின் தேதி குறிப்பிடப்படவில்லை.)   முழுவதுமாக என்னால் அப்படிப் பின்பற்ற முடியவில்லை. கதைகள் வெளியான பத்திரிகைகளைச் சேகரித்து வைப்பதில் சிக்கல்கள் இருந்தன. பல‌ வீடுகள் மாறினோம் அக்காலகட்டத்தில். அதனால் சேர்த்து வைப்பதில் அல்லது சேர்த்து வைப்பதைக் கண்டுபிடிப்பதில் பிரச்சனைகள் இருந்தன. அதனால் அதைச் செய்ய முடியவில்லை. இப்போது மொத்தத் தொகுதி வரும் போது பெருமளவு அதைச் செய்தேன். ஒன்றிரண்டுக்குக் கண்டுபிடிக்கமுடியவில்லையே தவிர, மற்றவை காலவரிசையில் தான் அமைந்துள்ளன.     52. கவனித்த வரை எழுத்தாளர்கள் பெரும்பாலும் தொகுப்புகளில் கால வரிசையைப் பின்பற்றுவதில்லை. என்னுடைய‌ இறுதி இரவு நூலைத் தொகுத்த போது சிறுகதைகளை எந்த வரிசையில் அமைப்பது என்பதில் குழப்பங்கள் இருந்தன. சிறப்பாகத் தோன்றும் கதைகளை முதலில் வைப்பது, பாராட்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துவது, முக்கியமான விஷயங்களைப் பேசும் கதைகளை முதலில் வைப்பது எனப் பலவிதச் சாத்தியங்கள் இருந்தன. ஆனால் நான் காலவரிசைப்படி அமைக்கத் தீர்மானித்தேன். அதற்கு உங்கள் திருச்செங்கோடு தொகுதியும் ஒரு பிரதான உந்துதல். அதனால் தான் கேட்டேன்.   உண்மையில் காலவரிசையில் இருப்பது தான் சரியானது. 2000க்குப் பிறகு புதுமைப்பித்தனின் முழுத் தொகுதி காலவரிசைப்படுத்தப்பட்டு வெளியான போது அதற்கான ஒரு முக்கியத்துவம் வந்து விட்டது.   அப்படி வைப்பது ஓர் எழுத்தாளனின் எழுத்தில் ஏற்படும் மாற்றங்களை, வளர்ச்சியைக் கண்டடைவதற்கு வசதியானதாக இருக்கிறது. ஓர் ஆராய்ச்சியாளன் தான் வந்து அதை வரிசைப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை அது தவிர்த்து விடுகிறது. புதுமைப்பித்தன் போன்ற தொகுப்புகளுக்கு இப்படியான ஒரு முக்கியத்துவம் வந்து பிறகு எழுத்தாளர்கள் இதைப் பின்பற்ற வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.   என்னுடைய இந்த முழுத் தொகுப்பில் நான் கதைகளைக் கால அடிப்படையில் இறங்கு வரிசையில் அமைத்திருக்கிறேன். அதைச் செய்யும் போது மயானத்தில் நிற்கும் மரம் தொகுப்பிற்குக் கூட அப்படிச் செய்திருக்கலாம் எனத் தோன்றியது. இது வசதி. இப்போது இருக்கும் கதைகளிலிருந்து படித்துக் கொண்டு போகலாம். இருபதாண்டுகளுக்கு முன் எழுதிய கதையை வாசித்தால் ஒருவருக்குச் சலிப்புக் கூட வரலாம்.     53. கங்கணமும் மாதொருபாகனும் ஒரே வகைமை (genre / mood) - நிகழாமையின் வலி. எப்படி கங்கணம் திருமணமாகாத முதிர்காளை ஒருவனின் மன வலியைப் பதிவு செய்ததோ அதே போல் மாதொருபாகன் வாரிசு இல்லாததால் வறடன், மலடி எனப் புறம் பேசப்படும் தம்பதியின் அகச்சிக்கல்களைத் தொகுத்துக் கொள்கிறது. இப்படி ஒரு தர்க்கத் தொடர்ச்சி இருப்பது தாண்டி காலவரிசையிலும் இவை தொடர்ச்சியாய் எழுதப்பட்டவை. தொடர்புடைய‌ படைப்புகள் ஒரே காலகட்டத்தில் வந்து விழ ஏதேனும் காரணம் உண்டா?   நீங்கள் சொல்லும் போது தான் இந்த நிகழாமை என்ற விஷயம் எனக்குத் தெரிகிறது. இரண்டுக்கும் அப்படி ஓர் ஒற்றுமை இருக்கிறது என்பதை நான் இதுவரை உணரவில்லை. அதை எழுதி விட்டு இதை எழுதும் போது என்னை அறியாமல் கூட அது நேர்ந்திருக்கலாம். ஆனால் கான்ஷியஸாக அப்படிச் செய்யவில்லை.     54. மாதொருபாகன் இறுதி அத்தியாயத்தில் தூக்குப் போட்ட காளி இறந்திருந்தால் என்னவாகும் என்பது ஆலவாயன். பிழைத்திருந்தால் எப்படித் தொடர்ந்திருக்கும் என்பது அர்த்தநாரி. நானறிந்த வரை இப்படி Sliding Doors தனமான (பெயர்த்துச் சொன்னால் 12B, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்) ஒரு நாவல் தமிழில் இது மட்டுமே. இதற்கான முனைப்பை எங்கிருந்து பெற்றீர்கள்? கேள்வியின் காரணம் இது ஃபேன்ஸியான விஷயம். சீரியஸ் இலக்கியவாதிகள் பொதுவாய் செய்யத் தயங்கும் உற்சாக வித்தை.    நான் சிலவற்றை முடிவிலிருந்து யோசித்துப் பார்ப்பதுண்டு. ஆர். ச‌ண்முகசுந்தரத்தின் நாகம்மாள் நாவலின் முடிவிலிருந்து தொடங்கி நான் ஒரு நாவல் எழுத வேண்டும் என நினைத்ததுண்டு. நாகம்மாளுக்குப் புருஷன் இல்லை, ஒரே குழந்தை. கொழுந்தநார், அவர் மனைவி இவர்களோடு தான் சேர்ந்து வாழ்கிறாள். அவர்களுக்குக் குழந்தை கிடையாது. கொழுந்தநாரும் செத்துப் போய் விடுகிறான். அப்போது மூன்று பெண்கள் அந்தக் குடும்பத்தில் இருக்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை என்னவாய் இருக்கும் என ச‌ண்முகசுந்தரம் யோசித்தாரோ இல்லையோ, நான் செய்தேன். அந்தப் புள்ளியில் தொடங்கி அந்நாவலுக்கு அடுத்த பாகம் எழுத வேண்டும் என அதைப் படித்த காலத்திலிருந்து தோன்றியதுண்டு.   என்னுடைய நாவலுக்கு அப்படி எழுத வாய்ப்பு வந்தது. மாதொருபாகன் வந்ததிலிருந்து அதைப் படித்த வாசகர்கள் எல்லோரும் திரும்பத் திரும்பக் கேட்டது, “காளி என்ன ஆனான்?” என்பது. “காளி உயிரோடு இருக்கிறானா அல்லது செத்து விட்டானா?” என்று கேட்டவர்கள் உண்டு. காளி செத்து விட்டான் என முடிவு செய்து விட்டு, “நீங்கள் எப்படி காளியைச் சாகடிக்கலாம்? அவன் என்ன தவறு செய்தான்? நீங்கள் பொன்னாவை அல்லவா கொன்றிருக்க வேண்டும்?” என்று கேட்டவர்கள் உண்டு. இப்படியான கேள்விகள் தொடர்ந்து பல பேரிடமிருந்து வந்த போது தான் யோசித்தேன். காளி அதில் செத்து விட்டானா இல்லையா என்ற முடிவு எனக்கே தெரியாது தான். அவனுக்குத் தற்கொலை எண்ணம் வருவதாக நாவல் முடிகிறது. அவன் தற்கொலை செய்து கொண்டானா இல்லையா? என்பது எனக்கும் தீர்மானமாகத் தெரியவில்லை.   காளி செத்து விட்டான் எனப் பலர் நம்புகிறார்கள். சரி, அவன் செத்து விட்டால் பொன்னாவின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? சிலர் காளி உயிரோடு இருக்கிறான் என நினைக்கிறார்கள், அதை விரும்புகிறார்கள். சரி, அவன் உயிரோடு இருக்கட்டுமே! அப்படி அப்பாத்திரத்தை ஒரு வகையில் சாகடித்தும் ஒரு வகையில் வாழ வைத்தும் பார்த்தால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது. அப்படித் தான் அந்த இரண்டையும் எழுதினேன். ஆக, வாசகர்களிடமிருந்து வந்த தூண்டுதலால் தான் அவ்விரு நாவல்களும் எழுதப்பட்டன‌!     55. வாசிப்பின்பத்தின் அடிப்படையில் மாதொருபாகனுக்கு இணையானதல்ல பிந்தைய இரு நாவல்களும். படமோ எழுத்தோ எந்தவொரு தொடர்ச்சிக்கும் நேரக்கூடிய விபத்து தான் இது. முதலில் ஓர் உலகம் அறிமுகம் ஆகும் போது அது வசீகரிக்கும். அடுத்து அதே உலகத்தில் மேலும் தூரம் அழைத்துச் செல்லும் போது பழைய வசீகரம் இருப்பதில்லை. இதை உணர்கிறீர்களா? மூன்றில் உங்களுக்குத்திருப்தியானது எது?   மூன்றில் எது ஒன்று சிறப்பாக இருக்கிறது என எனக்குச் சொல்ல முடியவில்லை. அர்த்தநாரியையும், ஆலவாயனையும் நான் மிக ரசித்தும் ஈடுபாட்டுடனும் எழுதினேன். அவை இரண்டையும் எழுதும் போது உண்மையில் நான் மிகச் சுதந்திரமான மனநிலையில் இருந்தேன். மாதொருபாகன் எழுதிய போதான காலத்தோடு ஒப்பிடுகையில் நான் மிகச் சந்தோஷமான மனநிலையில் தான் அவற்றை எழுதினேன்.   ஆனால் அவற்றை எழுதி முடித்த போது தான் அந்த மனநிலை அப்படியே மாறிப் போயிற்று. (சிரிக்கிறார்.)     56. ஆலவாயனுக்கு ஒரு தொடர்ச்சி சாத்தியம். பொன்னாவும் ஆலவாயனும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு. அதாவது மாதொருபாகனின் நான்காம் பாகம். எழுதுவீர்களா?   (சிரிக்கிறார்.) அதற்கெல்லாம் ஒன்றும் வாய்ப்பில்லை.     57. நீங்கள் சொன்னீர்கள் அல்லவா நாகம்மாளுக்குத் தொடர்ச்சி எழுதிப் பார்க்க விரும்பினேன் என்று. அதைப் போல் நான் ஒன்றுக்குத் தொடர்ச்சி எழுத வேண்டும் என்றால் பொன்னாவும் ஆலவாயனும் மீண்டும் சந்திப்பதை எழுத விரும்புவேன். ஆனால் அதை எழுத என்னை விட, வேறு எவரையும் விட, நீங்களே அதிகம் உரிமையும் தகுதியும் உடையவர். அதனால் கேட்கிறேன்.   (சிரிக்கிறார்.) தோன்றினால் எழுதுங்கள், என்ன இருக்கிறது! இன்னொரு முறை அதற்குள் போவதற்கான மனம் வாய்க்குமெனச் சொல்ல முடியவில்லை. தவிர, மாதொருபாகன் முடிவிலிருந்து எழுந்த கேள்விகள் போல் இதற்குப் பெரிய அளவில் கேள்விகள் இல்லை. நீங்கள் சொல்வது போல் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பது தவிர, ஒரு படைப்பாளனைத் தூண்டுவது மாதிரியான காத்திரமான கேள்விகள் இதற்கு இல்லை.     58. குவிமையம் மாதொருபாகன் ஆகி விட்டதும் காரணம் என நினைக்கிறேன். தொடர்ச்சிகளுக்கு அதற்கு இணையான வாசிப்பு நடந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. சமீபத்தில் கூட என்னை ரமேஷ் என்ப‌வர் மாதொருபாகன் தொடர்பான கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்வதாய்த் தொடர்பு கொண்டார்,   ஆம். அவர் அந்நாவல் பற்றிய கட்டுரைகளை ஐந்நூறு, அறுநூறு பக்கங்களுக்குத் தொகுத்திருக்கிறார்.     59. எனக்குப் பிடித்த மூன்று தமிழ் புனைவுக் கதாபாத்திரங்களுள் ஒன்று பொன்னா. அவளது வசீகரத்தின் முக்கியக் காரணம் அவளது குணமுரண். பதினான்காம் நாள் இரவு அவள் காளி போன்ற முகத்தைத் தவிர்க்கிறாள். அவன் நினைவு வருவதை அஞ்சுகிறாள். அது அவளது குற்றவுணர்விலிருந்து எழுவது. ஆனால் அப்படிப்பட்டவள் ஒரு புதிய ஆடவனுடன் மிக இணக்கமாகவே கூடுகிறாள். இந்தக் கலவி மாதொருபாகன், ஆலவாயன், அர்த்தநாரி மூன்று நாவல்களிலும் (அவற்றின் தேவைக்கேற்ப) சற்று வெவ்வேறு சாயைகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் மூன்றிலும் இருக்கும் பொதுவான விஷயம் அவள் இஷ்டத்துடனே அதில் ஈடுபடுகிறாள். அவனிடம் வெட்கம் கொள்கிறாள், அவன் பேச்சில் கிறங்குகிறாள், அவன் ஆக்ரமிப்பை ரசிக்கிறாள், அதில் மூழ்கித் திளைக்கிறாள். குழந்தைப்பேறுக்காகச் செய்து கொள்ளும் ஒரு வைத்தியம் என்பதாக அதை அணுகாமல் இன்ப நிகழ்வாகவே அனுபவிக்கிறாள். அதைத் தனிப்பட்டு என்னால் ஏற்க முடியவில்லை. ஒருவேளை சற்று விலகி நின்று உணர்ச்சிகள் கடந்து தர்க்கப்பூர்வமாய்ச் சிந்தித்தால் எத்தனை பிரியம் நம் துணை மீது கொண்டிருந்தாலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் அதை எல்லாம் கடந்து எதிர்ப்பாலின ஈர்ப்பில் உடலின் வேட்கையே வெல்லும், அதில் மனமும் பூரணம் கொள்ளும் என்று சொல்ல வருகிறீர்களா? விளக்குவீர்களா?   அது அப்படித் தானே! ஒரு திறப்பு கிடைத்ததும் அது மாதிரியான ஒரு சுதந்திர மனநிலைக்கு ஆளாகி விடுகிறாள். திருவிழாவுக்குப் போகும் வரை இருக்கும் பொன்னா வேறு, போனதற்குப் பிறகு மாறி விடும் பொன்னா வேறு. அந்த இடத்தை எழுதும் போது எனக்கே ஒரு பெரிய தடை வந்து விட்டது. அதைக் கடப்பதற்குச் சில நாட்கள் பிடித்தன. அவள் எப்படி மாறுகிறாள் என்று கொண்டு போவது எனக்குப் பெரிய தடையாக இருந்தது. “பெருங்கூட்டத்துக்குள் தனியாக நின்றிருந்தாள் பொன்னா” என்று ஓர் அத்தியாயம் துவங்கும். அவ்வரி வந்ததும்தான் அடுத்தது எனக்குப் பிடிபட்டது. கூட்டத்தில் மனிதர்களுக்கு முகமில்லை; சுதந்திர ஜீவன்கள் ஆகி விடுகிறார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களாகவும் அறிமுகம் ஆனவர்களாகவும் இருக்கும் போது தான் உங்களுக்கு எத்தனையோ மனத் தடைகள் இருக்கும்.   அங்கே அவள் அதைக் கடக்கிறாள். அப்படி அதைக் கடந்த பின் அங்கே இருப்பது வேறு பொன்னா தானே!     60. பொன்னாவின் குணமுரணுக்கு இன்னோர் உதாரணம், அர்த்தநாரியில் காளி தன்னை ஒதுக்கி வைத்து, குழந்தை பிறந்தும் பார்க்க வரவில்லை என்பதால் திருவிழாவில் சந்தித்தவனைத் தேடிப் போய் சேர்ந்து கொள்ளலாமா என்ற எண்ணம் வருகிறது பொன்னாவுக்கு. காளி மீது அத்தனை பிரியத்தோடு பத்தாண்டு வாழ்ந்தவளுக்கு அவன் இருக்கையிலேயே இன்னொருவனிடம் போக எண்ணம் வருகிறது என்பதை ஏற்க முடியவில்லை. ஆலவாயனில் காளி இயற்கையாக / வேறு காரணத்துக்காக இறந்திருந்தால் பொன்னா இன்னொரு மணம் பற்றி சிந்திப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால் இறந்தது அவள் இன்னொருவனுடன் சேர்ந்ததால். அச்சூழலில் அவள் போவாளா என்ன! அர்த்தநாரியில் காளி அவளை ஒதுக்கி வைத்திருந்ததும் வேறு பிரச்சனைகளில் இல்லை; பொன்னா இன்னொருவனுடன் சேர்ந்ததால்தான். இப்படி முரண்படுகிறாள்.   எண்ணம் வருவதற்கெல்லாம் நாம் தடை போட முடியுமா என்ன! (சிரிக்கிறார்.)   ஒரு கோபத்தில் அப்படித் தோன்றுவது தானே! எத்தனையோ புருஷன் - பொண்டாட்டி சண்டைகளில் இவனை விட்டு விட்டுப் போயிடலாம் எனத் தோன்றுவது உண்டு தானே! அது அந்தக் கணத்துடைய எண்ணம். ஆனால் அவர்களுக்கு இடையேயான பிரச்சனைகள், முரண்பாடுகள் முற்றிக் கொண்டே போனதென்றால் அந்த எண்ணம் வலுவாகத் தோன்றுவதற்கான வாய்ப்புக் கூட வரத்தான் செய்யும்.     61. யோசித்துப் பார்த்தால் (கலந்தவனைத் தேடிப் போக எண்ணும் இறுதிப் பகுதி தவிர) ஆலவாயன் ஒரு பெண்ணியப் பிரதி. கணவனை இழந்த ஒரு கர்ப்பிணி, மகனை இழந்தவளின் ஆதரவுடன், தாழ்த்தப்பட்ட பெண்ணின் துணையுடன், அதனோடு வாழ்வு முடிந்தது என்றில்லாமல், தூற்றக் காத்திருக்கும் உறவினர், சுற்றத்தார், ஊரார் வாய்த்த சூழலில் தானே விவசாயம் செய்து வாழ்வில் சுயமாய்க் காலூன்றி நிற்கிறாள். இனி அவள் தன் மகனையும் வளர்த்து ஆளாக்குவாள். பொன்னா உயர்ந்து துலங்கும் நாவல் அது.   நான் இந்த மாதிரி கோட்பாடுகளை வைத்துக் கொண்டு எழுதுவதில்லை. அதில் வரும் கதாபாத்திரங்களின் செயல்பாடுகளை நான் எடுத்துக் காட்டும் போது அதைப் பெண்ணியப் பிரதி என நீங்கள் வாசித்தால் அது உங்கள் விருப்பம். அர்த்தநாரியிலும் அப்படி வாசிக்கும் வாய்ப்பிருக்கிறது. மாதொருபாகனிலும் இருக்கிறது.   கணவன் இருக்கிறான் என்பதால் அது பெண்ணியப் பிரதி இல்லை என்றாகி விடாது. அர்த்தநாரியில் காளி பாத யாத்திரை போகிறான். அப்போது வீட்டிலிருக்கும் பெண்கள் எப்படி தங்கள் வெளியைக் கட்டமைத்துக் கொள்கிறார்கள் என்பது அருமையாக நாவலில் வந்திருக்கிறதே! அதற்கு முன்வரை அவன்தான் அவற்றை எல்லாம் உருவாக்குபவனாக இருப்பான். அவனது விருப்பம் சார்ந்து தான் எல்லாம் நடக்கும். ஆனால் அவன் ஒரு மாதம் பாத யாத்திரை போகும் போது வீட்டிலிருந்து, வேலைகளிலிருந்து எல்லாவற்றையும் பெண்கள் எடுத்துச் செய்கிறார்கள். எல்லாம் முடங்கிப் போயிருக்கும் என‌ அவன் எண்ணியிருப்பான். ஆனால் இவர்கள் இங்கு தங்களுக்கேற்றபடி எல்லாவற்றையும் உருவாக்கி இருப்பார்கள். அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது. அவன் பாத யாத்திரை போய் விட்டு நல்ல மனநிலையில் திரும்பி வருவான். அவன் வந்து பொன்னாவோடு சேர்ந்து விடுவான் என்பது போல் இருக்கும். ஆனால் வந்து பார்த்தால் அவனது சிக்கலே இது தான். தான் இல்லாவிட்டாலும் எல்லாம் நடக்கும் என்பதை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அதையும் நீங்கள் அப்படியான ஒரு பிரதியாக வாசிக்க முடியும்.     62. அதே ஆலவாயனில் வரும் ஓர் ஆணாதிக்கச் சம்பவத்தைச் சொல்ல வேண்டும். பெண் கர்ப்பமான போது கணவன் மரித்திருந்தால் அப்பெண் ஊராரை அழைத்துத் தான் தன் கணவனோடு புணர்ந்து தான் கருவைச் சூல் கொண்டேன் எனக் கடவுள் மீது சத்தியம் செய்ய‌ வேண்டும் என்பது ஊர் வழக்கம். வேறு வழியின்றி பொன்னா அதைச் செய்கிறாள். ஒரு நாவலில் பிற்போக்குத்தனமான சம்பவமோ, கருத்தோ வருகையில் அதை எப்படிக் கையாள்கிறீர்கள்? அது உங்கள் நிலைப்பாடாகத் திரியும் ஆபத்து உண்டு என்பது ஒருபக்கம், வாசகன் பெறும் செய்தி அதுவே என்றும் புரிந்து கொள்ளப்பட வாய்ப்புண்டல்லவா!   அப்படிப் பார்த்தால் இங்கே எதையுமே எழுத முடியாது. முற்போக்குப் பார்வைக்குட்பட்ட‌ விஷயங்களைத் தான் எழுத வேண்டும் என்பது சாத்தியமில்லை. அவர்களுடைய வாழ்க்கைக்குள் இருந்தே தான் நாம் எழுதுகிறோம். ஒரு முற்போக்கு விஷயம் வருகிறதெனில் அதையும் அவர்கள் வாழ்க்கைக்குள் இருந்தே தான் கொண்டு வருகிறோம். அப்படி இல்லை எனில் துருத்திக் கொண்டிருப்பதாய் அது மாறி விடும்.   இப்படி ஒரு விஷயம் இருந்ததை ஆணாதிக்கம் நிலவியதற்கான சான்றாகத்தான் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் அப்படியான சடங்குகள் நிறைய இருந்திருக்கின்றன‌. தொ.பரமசிவன் ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார். ஒரு பகுதியில் கணவன் இறந்து போகையில் மனைவி கர்ப்பமுற்றிருந்தால் அது எத்தனை மாதக் கரு என்று காட்டுவதற்கு சடங்கு செய்கையில் வாசலில் சாணியில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதன் மேல் பூ குத்தி வைக்க வேண்டும். மூன்று பூ குத்தி வைத்தால் மூன்று மாதம் என்று அர்த்தம். அப்படி ஒரு குறியீடாக உணர்த்துவார்கள். இந்த மாதிரியான பல‌ சடங்குகள் நிலவி இருக்கின்றன.   அதனால் ஒரு காலகட்டத்தை நாம் எழுதும் போது அப்போது என்னென்ன இருந்தனவோ - அவை முற்போக்கோ பிற்போக்கோ – எல்லாவற்றையும் எழுதுவதே படைப்புக்கு நியாயம் செய்வதாகும்.     63. ஒரு கதையை வாசிக்கையில் அந்தப் பாத்திரமாக நம்மைப் பொருத்திக் கொண்டால் என்னவெல்லாம் செய்வோமோ, பேசுவோமோ, யோசிப்போமோ எல்லாவற்றையும் உங்கள் பாத்திரங்கள் செய்வதைக் கவனித்து வந்திருக்கிறேன். அதனால் நம் எல்லா தர்க்கக் கேள்விகளுக்கும் சரியான விளக்கமும் அதில் இருக்கும். வித்தியாசம் புகுத்தி வாசகன் எதிர்பாராததைச் சொல்கிறேன் என்றல்லாமல், இதைச் செய்வது தானே இயல்பு! நீங்களே உங்களை அப்பாத்திரத்தில் பொருத்திக் கொண்டு யோசிக்கிறீர்களா?   இல்லை. அப்படி ப்ரக்ஞைப்பூர்வமாகப் பாத்திரத்தில் என்னைப் பொருத்திக் கொண்டெல்லாம் யோசிப்பதில்லை. நீங்கள் இப்படிக் கேட்கும் போது தான் என் எழுத்தில் அப்படியான தர்க்கரீதியான பதில்கள் இருப்பதே எனக்குத் தெரிகிறது. ஒரு படைப்பில் தர்க்கம் இருக்க வேண்டும் தானே!     64. ஏறுவெயிலில் வளர்த்தவளிடமே போவது, கங்கணத்தில் தகாத உறவு குறித்த சிந்தனை, ஆளண்டாப் பட்சியில் தம்பி மனைவியிடம் தவறான அணுகல், மாதொருபாகனில் பதினான்காம் நாள் திருவிழா, இன்னும் சில இடங்களில் மாமனார் - மருமகள் உறவு என‌ பாலியல் அத்துமீறல்கள் உங்கள் நாவல்களில் சகஜமாக இடம்பெறுகின்றன. சமூகத்தில் நிகழாத அல்லது நிகழச் சாத்தியமில்லாத எதையும் நீங்கள் எழுதிவிடவில்லை என்றாலும் சமூக மதிப்பீடுகளுக்கு அஞ்சி பொதுவாய் பல படைப்பாளிகள் எழுதத் தயங்கி விடுப்பதை நீங்கள் தவிர்ப்பதில்லை. அந்த மனோபாவத்திற்கான (attitude) அடிப்படை என்ன?   ஏற்கனவே இருக்கும் நாவல்களைப் படித்து விட்டு நான் வைக்கும் விமர்சனம் எழுத்தாளர்கள் எதைத் தவிர்த்து விடுகிறார்கள் என்பது பற்றியது. அதை நான் செய்யக்கூடாது என்ற எண்ணம் எனக்குண்டு.   இன்னொரு விஷயம் நான் 1990க்குப் பிறகு எழுத வரும் ஆள். அது எழுத்தாளர்கள் இதுவரை எழுதாத, எழுதத் தயங்கிய பகுதிகளை எல்லாம் எழுதுவதற்கான‌ ஒரு கோட்பாட்டு பலத்தைக் கொடுக்கும் காலமாக இருந்தது. அதனால் இவ்விஷயங்களைச் சொல்வதற்கான தைரியமும், இதை எல்லாம் பேசலாம் என்ற எண்ணமும் எனக்கு வந்தது. நாம் சமூகத்திலிருக்கும் எந்த விஷயத்தையும் மறைக்கக்கூடாது என்று தோன்றியது. மறைந்திருப்பதை வெளிக்கொணர்ந்து காட்டுவதும், வெளிப்படையாகத் தெரியும் ஒன்றை மறைத்துச் சொல்வதும் இலக்கிய உத்திகள் தாம். அந்த அடிப்படையில் எல்லா விஷயத்தையும் பேசலாம் என்ற சுதந்திர மனநிலையுடன் பேசியது தான் அவை யாவும். ஆனால் அப்படிப் பேசுவதற்கான காலம் கனிந்து விட்டது என நான் தவறாக எடை போட்டு விட்டேனோ என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.     65. உங்கள் புனைவுகளில் நான் கவனித்த ஒரு அம்சம் கதையின் மைய இழைக்குத் தொடர்பற்ற, கதாபாத்திரங்களின் முன் வாழ்க்கைச் சம்பவங்களையோ, அவர்கள் சொல்லும் கதைகளையோ சேர்ப்பது. பொதுவாய் பின்நவீனத்துவப் பிரதிகளில் இப்படியான தொடர்பற்ற விஷயங்களை வைத்திருப்பார்கள். உங்கள் புனைவுகள் அப்படியான வகைமைக்குள் போகாது என்பதால் அப்படிச் சேர்த்துவதன் பின்னணி என்ன? உதாரணமாய் ஆளண்டாப்பட்சியில் முத்து பனையேறக் கற்கப் போன‌ கதை (அதற்குள்ளும் முத்துவின் அப்பாவுக்கு அவனை அனுப்பும் யோசனை எப்படி வந்தது என்பதற்கு இன்னொரு கிளைக் கதை), பெருமாயி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் இடத்தில் மட்டும் இரண்டு மூன்று கிளைகள், பொன்னாயாவின் பூட்டைப் பொறுக்கும் பூர்வ சரித்திரம் இவை எல்லாம் இல்லாமலேயே நாவலை எழுதி இருக்க முடியும் தானே? வாசிப்புச் சுவாரஸ்யத்துக்கு இக்கதைகள் எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் பிரதியின் கட்டுக்கோப்பு குலைபடுகிறதே?   அப்படி நான் நினைக்கவில்லை. நாவல் வடிவம் என்பது கடிவாளம் போட்ட குதிரை மாதிரி கிடையாது. சிறுகதைக்கு வேண்டுமானால் அப்படிச் சொல்லலாம். அதற்கு அந்த மாதிரி கட்டுக்கோப்பு அவசியம். அதில் நீங்கள் கொஞ்சம் அந்தப்புறம் இந்தப்புறம் போவது கடினம். ஆனால் நாவல் ஒரு காட்டாற்று வெள்ளம் போல். அது அப்படியே பொங்கிப் பெருகி வருவது. கரைகளை எல்லாம் கடந்து போகும், தன்னுடன் எதெதையோ சேர்த்துக் கொண்டு வந்து, பிறகு மறுபடி உள்ளடங்கிப் போகும். அதனால் தான் நாவல் வடிவில் நீங்கள் ரொம்பச் சுதந்திரமாக இயங்க முடியும். வாழ்க்கை என்பதே ஏராளமான கதைகள் கொண்டது தானே. அதனால் ஒவ்வொரு பாத்திரத்தின் பின்னாலும் போகும் போது சுவாரஸ்யமான பல கதைகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன‌. நாவல் வடிவம் அப்படிப்பட்டது என்ற புரிதல் எனக்கு இருப்பதால் தான் நான் அப்படிச் செய்கிறேன். நீங்கள் சொல்வது எல்லாமும் சேர்ந்தது தான் அந்த நாவல். அவற்றை எல்லாம் விலக்கி விட்டுப் பார்த்தால் பெரிய சுவாரஸ்யம் அதில் இருக்காது. போகிறான், நிலம் வாங்குகிறான், விவசாயம் செய்கிறான் என்று சொன்னால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது!   இவை எல்லாமும் சேர்ந்து தான் நாவலுக்கு ஒரு வடிவத்தையும் ஒரு சுவையையும் தருகிறது.     66. வாசகனுக்குச் சில சமயம் ‌இடையூறாகி விடுகிறது. கணவனின் அண்ணனிடம் சிக்கிக் கொண்ட பெருமாயிக்கு என்ன ஆகுமோ எனப் பதைபதைத்து வாசிக்கும் சமயம் சாவகாசமாய் ஃப்ளாஷ்பேக்!   வாசகர்களுக்கு பதைபதைப்பு இருக்கிறது. ஆனால் கதாபாத்திரங்களின் வாழ்வு அதெல்லாமும் சேர்ந்தது தானே! தவிர, இலக்கியம் வாசிப்பது என்பது ஒரு க்ரைம் நாவல் படிப்பது மாதிரியானது இல்லை தானே!     67. நீங்கள் எழுதிய ஒரே தொடர்கதை பூக்குழி. வெகுஜன சஞ்சிகையில் எழுதிய ஒரே கதையும் அது தான். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள். நூலாக்கம் பெறுகையில் கைக்கட்டு அவிழ்ந்தது போல் இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்தக் கட்டு என்ன? பக்க வரையறை ஒன்று. மேற்கொண்டு சொல்லுங்கள்.   நாவலின் முன்னுரையில் கூடச் சொல்லி இருக்கிறேன். வார்த்தை வரையறை ஒன்று. இவ்வளவு சொற்களுக்குள் இருக்க வேண்டும் என்பார்கள். சில இடங்களில் நிலம், பொழுது என்று வரும் போது அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்வது என் இயல்பு. அதில் எனக்கு விருப்பம் உண்டு. ஏனென்றால் நிலமும் பொழுதும் இல்லாமல் வாழ்க்கை கிடையாது. அவை அடிப்படையானவை. அதனால் தான் சங்க இலக்கியங்களில் திணைக் கோட்பாட்டில் முதற்பொருள் என அதை வைத்தார்கள். அது தான் பின்னணி. இடமோ, காலமோ இல்லாமல் ஒரு சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பில்லை. ஆக, அவ்விரண்டும் ரொம்ப முக்கியமானது. அதில் கவனமாக இருப்பேன். நிலக்காட்சிகளை உருவாக்கும் முயற்சியைச் செய்வேன்.   எந்த இடத்தில் எது தேவையோ அதில் மிக இயல்பாகப் பயணம் செய்வேன். இந்தத் தொடர்கதை எழுதும் போது அது ரொம்பச் சிக்கலாக இருந்தது. அப்படிப் போக முடியவில்லை. ஏனெனில் வார்த்தைகளுக்கு உட்பட்டு எழுதும் போது நடக்கும் சம்பவம் மட்டும் தான் முக்கியமானதாக இருக்கிறது. சம்பவங்களைச் சொன்னாலே அவர்கள் சொல்லும் அளவிலான வார்த்தைகள் வந்து விடுகின்றன. அதற்கு மேல் கொஞ்சம் விலகிப் போனாலும் அதை எடிட் செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது. அது தான் எனக்கு நேர்ந்த சிக்கல். மற்றபடி, வேறெந்தக் கட்டுப்பாட்டையும் அவர்கள் சொல்லவில்லை. பதினாறு வாரங்கள் எனச் சொல்லி இருந்தார்கள். அதற்கு உட்பட்டும், இந்த வார்த்தைகளுக்கு உட்பட்டும் எழுத வேண்டி இருந்தது.   பிறகு அதைப் புத்தகமாக ஆக்கும் போது எனக்கு எங்கெல்லாம் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தோன்றியதோ, எல்லாம் செய்தேன். சில சமயம் எழுதும் போதே எனக்குத் தோன்றியதை எல்லாம் செய்து விட்டு, பிறகு எடிட் செய்த வெர்ஷனை அவர்களுக்கு அனுப்பியதும் உண்டு. அதில் அவர்களைக் குறை சொல்ல முடியாது. வெகுஜனப் பத்திரிகை எனும் போது பல விஷயங்களுக்கும் அவர்கள் இடம் கொடுக்க வேண்டும். இதற்கு இவ்வளவு தான் என அவர்கள் வரையறை வைத்திருக்கிறார்கள். அந்த வரையறைக்கு உட்பட்டு எழுதும் போது அந்த விதிகளையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.     68. பூக்குழி நாவலில் சாதியைப் பூடகமாய் வைத்ததால் அந்தந்தப் பிரதேச மக்கள் அப்பிரச்சனையோடு தொடர்புடைய சாதியை வரித்துக் கொண்டது நல்லதாய்ப் போயிற்று எனச் சொல்லி இருக்கிறீர்கள். அனாவசியப் பிரச்சனைகளும் இல்லை. என் வாசிப்பில் குமரேசன் கவுண்டர் இனப் பையன், சரோஜா அருந்ததியர் இனப் பெண். அதற்கான குறிப்புகள் நாவலின் உள்ளேயும் காணப்படுவதாய் நினைக்கிறேன்.   சரோஜா அருந்ததியப் பெண் என எப்படிச் சொல்கிறீர்கள்?     69. அவளது அப்பாவும் அண்ணனும் தோல் தொழிற்சாலையில் வேலை பார்ப்பதாக வரும். அவர்களின் ஊர் கூட தோலூர் என்று வரும். ஒட்டுமொத்தமான உங்கள் எழுத்துக்களையும் கணக்கில் கொண்டு அதில் தொடர்ந்து அருந்ததியர் இனம் காட்டப்படுவதால் அப்படி எடுத்துக் கொண்டேன். நீங்கள் சொல்லுங்கள்.   சரோஜாவைத் தெலுங்கு பேசுபவளாக‌ச் சொல்லவில்லை. அவள் இன்னொரு வட்டாரத் தமிழ் பேசுவாள். அவளை அருந்ததியப் பெண்ணாக நினைத்து எழுதவில்லை. தலித் பெண் என்ற அடையாளம் மட்டும்தான்.     70. சாரு நிவேதிதா பூக்குழி பற்றிய தன் விமர்சனத்தில் சரோஜாவை உயர்சாதிப் பெண்ணாகப் பாவித்து தாழ்த்தப்பட்ட‌ சாதியினரான குமரேசனின் சாதியினர் அவளைக் கொலை செய்கின்றனர் என்று கதையைப் புரிந்து கொண்டு நீங்கள் தலித்களை அவதூறு செய்திருப்பதாகச் சொல்லி இருந்தார். அதற்கு மறுப்பு எழுதி இருந்தேன். குறிப்பாய் சரோஜா “புழங்குகிற சாதியா?” என்ற கேள்வியை குமரேசனின் ஊர் ஆட்கள் தொடர்ந்து எழுப்புவார்கள். அவர்கள் உயர்சாதியாய் இருக்கும் போது தான் அக்கேள்வியே எழும்.   தவிர, அவர்களின் மொழியில் சொன்னால் புழங்குகிற சாதியாய் இருந்திருந்தால் சரோஜாவின் சாதியை குமரேசன் ஊர் ஆட்களிடம் வெளிப்படையாய்ச் சொல்லியிருக்கும் வாய்ப்பும் உண்டு.     71. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் எனக் காதலை / திருமணத்தை ஒட்டிய‌ சாதி ஆணவப் படுகொலைகள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. இன்று இதற்கான யதார்த்தத் தீர்வு தான் என்ன?   சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்பது ஒன்று. சாதி ஆட்களுக்கு உளவியல் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது இன்னொன்று. சாதி என்கிற விஷயம் பருப்பொருள் கிடையாது. அது ஒன்றுமே இல்லாத வெற்றுக் கருத்து தான். அதற்கு ஒருவர் வாழ்க்கையில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்று எண்ணம் வருவதற்கான பயிற்சியும் கல்வியும் கொடுக்க வேண்டுமென நினைக்கிறேன்.   சாதி என்ன விதத்தில் நமக்கு உதவுகிறது? சோறு போடுகிறதா? சாதி உணர்வு எதைக் கொடுக்கிறது? என்ற எண்ணம் வர வேண்டும். வாழ்க்கையில் அது ஒன்றுமே இல்லை. அது ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு தேவைக்காக உருவாக்கி வைக்கப்பட்டது. அல்லது ஏதோ ஒரு விதமாக உருவானது. இன்றைக்கு அதற்கான முக்கியத்துவம் என ஏதுமில்லை. அந்த உணர்வு இல்லை என்றால் நம் சமூகம் இன்னும் எவ்வளவோ முன்னால் போக முடியும். பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தடுப்பது சாதி உணர்வு தான்.   தீண்டாமை கொண்ட சாதிகளுக்கு குறைந்தபட்ச அங்கீகாரம் கூட இல்லை. தீண்டாமை ஏன் அவ்வளவு பதிந்திருக்கிறது எனத் தெரியவில்லை. இன்று ஓர் உணவகத்தில் சாப்பிடுகிறோம். யார் சமைக்கிறார், யார் பரிமாறுகிறார், பணம் வாங்குபவர் யார் எதுவுமே தெரியாது. இந்த மாதிரியான வாழ்க்கைக்குப் பழகின பிறகும் தீண்டாமை எப்படி மனதில் இன்னும் இருக்கிறது? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்கிறோமே என்ற கேள்வி எனக்குத் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.   அதனால் அதைக் கடந்து வர வேண்டும். அதற்கான பயிற்சியையும் கல்வியையும் கொடுக்க வேண்டும்.     72. இதில் மோசமான விஷயம் என்னவெனில் - நான் முன்பு நினைத்திருக்கிறேன், இது போன தலைமுறை ஆட்களுக்கானது, எங்கள் தலைமுறையில் இதெல்லாம் இருக்காது அல்லது குறைந்து விடும் என. ஆனால் என்னுடன் படித்தவர்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள், தர்க்கப்பூர்வமாகச் சிந்திக்க முடிந்தவர்கள் - அவர்களுக்குள் சாதிய எண்ணம் இருக்கிறது என்பது, அதுவும் ஃபேஸ்புக் போன்ற பொதுத் தளங்களில் பேசுமளவுக்கு இருக்கிறது என்பதை இப்போது அறிகிறேன். அவர்களோடு பழகிய நாட்களில் அப்படியான எந்த அறிகுறிகளையும் அவர்களிடம் கண்ட நினைவில்லை. ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவர்களின் பெற்றோர்களிடமிருந்தோ சுற்றத்தாரிடமிருந்தோ அதைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் அனுமானம். அது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.    இளைஞர்கள் இப்படி ஆவது அடையாளச் சிக்கல் தான் என நினைக்கிறேன். இது போல் வேகமானவர்கள், ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் இருப்பவர்கள் அவர்களது அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடிய‌ வெளி என்ற ஒன்று நம் சமூகத்தில் இல்லை. ஒரு கட்டத்தில் ரசிகர் மன்றங்கள் அந்த அடையாளத்தைக் கொடுக்கக் கூடியவையாக‌ இருந்தன. இன்று அவை கூட இல்லை. அந்த இடத்தைச் சாதி பிடித்துக் கொண்டு விட்டது போல் தோன்றுகிறது. சாதி சார்ந்த சங்கத்திலோ, கட்சியிலோ சேரும் போது லோக்கலில் இருப்பவருக்குக் கூட ஒரு தலைமைத்தன்மை, பதவி, போஸ்டர்களில் முகத்தைப் போட்டுக் கொள்வது, முக்கியஸ்தராக வலம் வருவது போன்றவை கிடைக்கின்றன. அது சரியானதா தவறானதா என்று சிந்திக்க முடியாதவர்கள் எளிதில் அந்த அடையாளத்துக்குள் போய் விடுகிறார்கள்.     73. பொதுவாய்ச் சாதி மாறிய திருமணங்களில் ஆண் இப்படிக் கொலையுறுவதே வழக்கம். முந்தைய கேள்வியில் சொன்ன‌ உதாரணங்கள் அனைத்திலும் அப்படித்தான். காதல் போன்ற திரைப்படங்களும் அதைச் சொல்லி இருக்கின்றன. ஆனால் உங்கள் பூக்குழி நாவலில் நேர்மாறாய் அப்படி வரும் ஒரு பெண் பழிவாங்கப்படுகிறாள். அது வினோதமாகப்பட்டது. அப்படிப் பால் மாற்றி எழுதியதற்குக் காரணமுண்டா? அக்காலகட்டத்தே தருமபுரி இளவரசன் பிரச்சனை நடந்து கொண்டிருந்ததால் அதை நேரடியாய்க் குறிப்பதாய் ஆகிவிடக்கூடாது என்பதாலா? (பூக்குழி நாவலின் பிரதானப் பாத்திரங்களான‌ குமரேசன் - சரோஜா என்ற பெயர்களே இளவரசன் - திவ்யா என்று மனதில் ஒலிப்பதைத் தவிர்க்க முடியவில்லை!)   அப்படி இல்லை. காதல் மணம், கலப்புத் திருமணம் ஆகியவற்றில் பல கோணங்கள் உண்டு. நீங்கள் சொல்வது போல் ஆண்கள் இறந்து போவது என்பதில் ஆண் தலித்தாக இருப்பான். பெண் தலித்தாக இருந்தாலும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருவரில் ஒருவர் தலித், மற்றவர் வேறு சாதி என்றால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை வேறு. அதிலும் ஆண் எந்தச் சாதி, பெண் எது என்பதை ஒட்டி எதிர்கொள்ளும் பிரச்சனை வேறு. இருவருமே பிற்படுத்தப்பட்ட சாதி என்றால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை வேறு. இருவருமே தலித்களில் வெவ்வேறு சாதியினராக இருந்தால் அவர்களின் பிரச்சனை வேறு. இப்படிக் கலப்பு மணத்தில் பல கோணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்து எழுதினேன்.   இந்தக் கோணம் எனக்கு வசதியாக இருந்தது. ஏனெனில் நானும் என் மனைவியும் வெவ்வேறு சாதி. இப்படி எடுத்து எழுதுகையில் என் மனைவியின் கோணமும் நாவலில் வர வசதியாக இருக்கும் என அது மாதிரி செய்தேன். இந்த நாவலில் அவரது பங்களிப்பும் உண்டு. குமரேசனும் சரோஜாவும் வெவ்வேறு வட்டாரப் பேச்சு முறையைப் பயன்படுத்தி இருப்பார்கள். அதற்கு அவர் ரொம்ப உதவி பண்ணினார்.   நான் எழுதியது ஒரு கோணம். அது மாதிரி இத்திருமணங்களில் பல கோணங்களை எழுத வாய்ப்புண்டு!     74. 2013 ஜூலை 13ல் இளவரசன் அகால மரணம் அடைந்திருக்க, அதற்கு இரண்டு வாரம் கழித்து ஜூலை 28ல் பூக்குழி தொடர் முடிந்திருக்கிறது. இளவரசனின் மரணம் கதையின் முடிவை மாற்ற உந்துதலாய் இருந்ததா அல்லது முன்பே அப்படித்தான் தீர்மானித்திருந்தீர்களா? (மாதொருபாகன் நாவலிலும் இதே போன்ற முடிவு என்பதால் ஒரு பேட்டர்னாக பூக்குழிக்கும் அதே முடிவை தீர்மானித்திருக்கலாம் என ஊகிக்கிறேன். இடையே நிகழ்ந்த‌ இளவரசன் மரணம் என்பது எதேச்சையான ஒற்றுமை மட்டுமே.)   என் பிள்ளைகளே சொல்வார்கள், “எல்லாம் சோகமாகவே முடிப்பார்” என. என் நாவல்களில் விரும்பியோ விரும்பாமலோ அப்படி அமைந்து விட்டன‌. எதிலாவது நல்ல‌ முடிவு இருக்கிறதா என்றால் சந்தேகம்தான்.   (ஆலவாயன் நாவலை நினைவூட்டுகிறேன்.) அது மட்டும் தான். மற்றபடி எல்லாம் இப்படித்தான். அந்த அடிப்படையில் தான் பூக்குழிக்கும் அப்படி முடிவு அமைந்தது. அது ஏற்கனவே தீர்மானித்த ஒரு முடிவு தான். அதை இன்னும் அழுத்தமாக‌ச் செய்வதற்கு இளவரசன் மரணம் தூண்டுதலாக அமைந்தது. அந்தச் சமயத்தில் நான் தர்மபுரியில் வேறு இருந்தேன். அதனால் அது பெரும் மனப்பாதிப்பாக அமைந்தது.     75. பொதுப்புத்திக்கு மாற்றாய் ஒரு விஷயத்தை பூக்குழி நாவலில் முன்வைக்கிறீர்கள். தலித் என்றாலே கருப்பு என்று தான் நாம் இதுவரை கண்ட படைப்புகள் காட்டி வருகின்றன. குறிப்பாய் சினிமாக்களில். உதாரணமாய் பாரதி கண்ணம்மா பார்த்திபன், தசாவதாரம் பூவராகன் கமல் ஹாசன். ஆனால் நீங்கள் சரோஜாவைச் செந்தோல் கொண்டவள் என்பதாகச் சித்தரித்திருக்கிறீர்கள். மறுபடி மறுபடி வெவ்வேறு இடங்களில் அது கதையில் அழுத்திச் சொல்லப்படுகிறது. அந்த நிற அரசியல் பற்றிச் சொல்லுங்கள்.    குறிப்பிட்ட சாதியினர் இந்த நிறத்தில் இருப்பார்கள் என்று ஒரு எண்ணம் நமக்கு இருக்கிறது. அப்படி இல்லை. பிராமணர்கள் தவிர மற்ற எல்லோருமே கருப்பு நிறம் தான். நாம் வேண்டுமானால் மாநிறம் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அது கருப்பு தான். தமிழர்களின் நிறம் என்பது கருப்பு தான்.   ஆனால் விதிவிலக்காகச் சிலர் எல்லாச் சாதியிலுமே சிவப்பாக இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் பெண் குழந்தை சிவப்பாகப் பிறந்தால் ‘பாப்பாத்தி’ என்று பெயர் வைப்பார்கள். பாப்பாத்தி என்று பெயர் கொண்ட எல்லோரையும் பாருங்கள், அவர்களின் நிறம் சிவப்பாக இருக்கும். அது மாதிரி ஒவ்வொரு சாதியிலுமே சிவப்பு நிறத்துடன் இருப்பவர்கள் உண்டு. தலித்களில் அருந்ததியர்களில் பெரும்பான்மை சிவப்பு தான்.   நமக்குப் பொதுப் புத்தியில் கருப்பு நிறம் என்றால் தலித் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. என்னுடைய பார்வை அப்படி இல்லை. அந்த அடிப்படையில் தான் இந்தப் பெண் சிவப்பு என்று எடுத்தேன்.   இன்னொரு விஷயம் ஓர் இளைஞனுக்குச் சிவப்பு நிறப் பெண்ணின் மீது ஈர்ப்பு வருவதற்கான வாய்ப்பு கூடுதல். அதனால் அந்தக் காதலுக்கு அது ஒரு நியாயம் செய்வதாக இருக்கும் என அப்படி வைத்தேன்.     76. குமரேசனின் தாய் மாராயி தான் ஒட்டுமொத்த சதிக்கும் சூத்ரதாரி. சாதியம் ஆண்களை விடவும் பெண்களாலேயே பிடிவாதமாய் கடைபிடிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என்பது என் நம்பிக்கை. அதை உங்கள் நாவலும் உறுதி செய்வதாக உணர்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?   அது உண்மை தான். பெண்கள் பொதுவெளியில் இயங்குவதற்கு வாய்ப்பு குறைவு என்று சொன்னாலும் அவர்கள் தங்களுக்கான கௌரவம், மரியாதை என எதைக் கருதுகிறார்களோ அதில் ரொம்பப் பிடிவாதமாக இருப்பார்கள். சாதி விஷயத்திலும் அந்த மாதிரி தான். அதற்குக் காரணம் என்னவெனில் எப்போதும் குற்றம் சாட்டும் விரல் தன்னை நோக்கி வந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு அவர்களுக்கு உண்டு. அதனால் அவர்கள் ரொம்பத் தீவிரமாக இருப்பது போல் காட்டிக் கொள்வார்கள் அப்படி இருப்பதன் மூலம் தாம் சரியாக இருப்பதாய் நிரூபித்துக் கொள்கிறார்கள். அதனால் தான் பல பழைய விஷயங்களை இன்றைக்கும் கடைபிடிப்பவர்களாக, அவற்றைத் தீவிரமாக ஆதரிப்பவர்களாகப் பெண்களே இருக்கிறார்கள்.     77. “என் புனைவுகளில் நல்லவர்களும் கெட்டவர்களும் இல்லை” என்று சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு விதிவிலக்கு மாராயி எனக் கருதுகிறேன். சாதி வெறியில் தன் மருமகளை உயிரோடு கொளுத்துபவள்!   இல்லை. அதில் அவள் மட்டும் சம்ப‌ந்தப்படவில்லையே! அதில் வரும் ஆண்களும் இருக்கிறார்கள்.   மாராயியின் பின்னணியைப் பார்க்கும் போது அவளுக்கும் ஒரு நியாயம் இருப்பதை உணர முடியும். இந்தச் சமூகத்தில் தன் மகன் மூலமாக ஓர் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பது அவளது நோக்கமாக இருக்கிறது. கடுமையான உழைப்பாளி அவள். மகனைத் தனியே வளர்க்கிறாள். தன் இளம் வயதிலேயே கணவனை இழந்து விட்டாலும் தன்னுடைய வாழ்க்கையைத் தூய்மையானதாகக் காத்து எதற்கும் ஆட்படாமல் யாருடைய அபவாதமும் இல்லாமல் இருக்கிறாள். அதற்கெல்லாம் ஒரு பங்கம் இதனால் வருகிறது. தன் மகனை வைத்து இச்சமூகத்தில் ஓர் அந்தஸ்தைப் பெறலாம் என்ற கனவு உடைபடும் போது அதைத் தக்க வைத்துக் கொள்ள அப்பெண் எந்த நிலைக்கும் இறங்குகிறாள் என்ற நியாயம் அவள் பக்கமும் இருப்பதைப் பார்க்க முடியும். அந்த நியாயத்தில் அர்த்தமில்லை என்றாலும் அவளுக்கு அது நியாயமாக இருக்கிறது. அதனால் அவளையும் நான் முழுக்க முழுக்கக் கெட்டவளாகச் சித்தரிக்கவில்லை.     78. பூக்குழி, மாதொருபாகன் எனத் தொடர்ந்து உங்கள் நாவல்களில் கணவனை இழந்த பெண்ணால் வளர்க்கப்படும் நாயகர்கள் இடம் பெறுகிறார்கள். ச‌ற்று முன் கூட பூக்குழி பெருமாயியின் அந்த முகத்தைச் சிலாகித்துப் பேசினீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள்.   அம்மா பாத்திரத்துக்கான முக்கியத்துவம் வருவதற்கு அது உதவுகிறது. சில காலம் முன் நம் சமூகத்தில் கணவனை இழந்த ஒரு பெண் தனித்துக் குழந்தையை வளர்த்து ஆளாக்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் ஆண் துணையில்லாமல் விவசாயத்தைச் செய்வது, சமூகத்தின் பார்வையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வது இவை எல்லாமே பெரிய சவாலான விஷயங்கள் தாம். நாற்பது, ஐம்பது ஆண்டு காலத்திற்கு முன் பார்த்தால் விதவைப் பெண்களுக்கு அப்படியான பல கதைகள் இருக்கும். அவர்கள் எப்படி எல்லாம் பாடுபட்டு குடும்பத்தைக் காப்பாற்றினார்கள், பிள்ளைகளை மேலே கொண்டு வந்தார்கள் எனப் பேசும் கதைகள். அப்படித் தான் அந்தப் பாத்திரத்துக்கான முக்கியத்துவம் வருகிறது.     79. சாதியத்தை ஒழிக்க அந்தந்த ஆதிக்க‌ச் சாதியிலிருந்தே சுயவிமர்சனத்துடன் கூடிய‌ நேர்மையான குரல்கள் சாதிய அராஜகங்களைக் கண்டித்து வெளிப்பட வேண்டும் என நினைக்கிறேன். அத்தகையதொரு வலுவான குரல்தான் பூக்குழி நாவலில் உங்களுடையது என நினைக்கிறேன். “ஓர் எழுத்தாளன் ஒரு போதும் சாதியை ஆதரித்து எழுத முடியாது” என நிலஞ்சனா ராயுடனான உரையாடலில் குறிப்பிட்டீர்கள்.   நீங்கள் சொல்லும் கருத்துக்கள் பெரும்பாலும் எனக்கு உடன்பாடாகத்தான் இருக்கின்றன. (சிரிக்கிறார்.)   பெரும்பாலான எழுத்தாளர்கள் உணர்ச்சியைத் தூண்டும் சாதி மாதிரியான விஷயங்களை, அதிலிருக்கும் சிக்கல்களைப் பேசுவதைத் தவிர்த்து விடுவார்கள். அது தான் பொதுவான நடைமுறையாக இருக்கிறது. அது சார்ந்த‌ சிக்கல்கள் வருகையில் மௌனத்தைக் கடைபிடிப்பது என்றும் இருந்து விடுவார்கள்.   நான் மார்க்ஸியப் பின்புலத்திலும் பெரியார் மீதான ஈடுபாட்டிலும் வந்த காரணத்தால் படைப்பிலும் இந்த விஷயங்களைத் தாராளமாகக் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். ஓர் எழுத்தாளனுக்கு இந்த மாதிரியான ஒரு கடமை இருக்கிறது. சாதி என்பது நம் சமூகத்தில் முக்கியமான பிரச்சனை. அது செலுத்தும் தாக்கத்தைக் கட்டாயம் படைப்பு பேச வேண்டும் என்பதில் நான் தொடக்கத்திலிருந்தே மிகத் தீர்மானமாகவும் தெளிவோடும் இருக்கிறேன். ஆக, என் படைப்புகளில் இப்பிரச்சனைகள் தொடர்ந்து வருவதைப் பார்க்கலாம். பூக்குழியில் மட்டுமல்ல; மற்றவற்றிலும் உண்டு. அந்தத் தெளிவு வந்ததால், என்னுடைய துறை படைப்பு என்பதால் என்னுடைய சக்திக்கு உட்பட்டு அதை வெளிப்படுத்துகிறேன்.     80. உங்கள் நாவல்களில் ஒட்டுமொத்தமான‌ கதை நகர்ச்சி என்பது மிகக் குறைவாகவே இருக்கும், மாறாய் நாவல் எடுத்துக் கொண்ட சிக்கல் சார்ந்த சம்பவங்கள் மற்றும் உரையாடல்கள் வழி பாத்திரங்களின் மன ஓட்டமும், சிக்கலின் சூழ்நிலையும் சொல்லப்படும். கங்கணம், மாதொருபாகன், பூக்குழி, ஆளண்டாப்பட்சி, அர்த்தநாரி, ஆலவாயன், பூனாச்சி எல்லாமே இப்படித்தான். என்வாசிப்பில் இதை இத்தனை தொடர்ச்சியாய் ஒரு பாணி போல் செய்த இன்னொரு எழுத்தாளரைக் கண்டதில்லை. புனைவில் இதை உங்கள் வலுவான தனித்துவமாகப் பார்க்கிறேன். இது நீங்கள் திட்டமிட்டு பிரக்ஞைப்பூர்வமாகப் பின்பற்றும் உத்தியா?   நீங்கள் சொல்லும் போதுதான் இந்த மாதிரியான ஒரு பொதுத்தன்மை இருப்பதே தெரிகிறது. நான் அப்படித் திட்டமிட்டு எழுதுவதில்லை. திட்டமிடாமலேயே சில பாணிகள் அமைந்து விடும். அதுமாதிரி இருக்கலாம்.     81. உங்கள் நாவலின் கதை என்ன எனக் கேட்டால் சொல்ல முடியாது. அது சிறிய சம்பவமாக இருக்கும். அதற்கு முன்பும் பின்புமான சம்பவங்களும் அதையொட்டிய மனவோட்டங்களும்தான் நாவலாக விரிகிறது. மற்றவ‌ர்களுடையவை போல பெரிய கதை நகர்ச்சி ஏதும் இருப்பதில்லை. அதை வைத்துக் கேட்கிறேன்.   கதை சொல்லலுக்கும் நாவலுக்கும் உள்ள வேறுபாடு என்று அதை நான் கருதுகிறேன். நாவல் ஒரு வாழ்க்கையை முன்வைப்பது. அதனால் ப்ளாட் (Plot) என்று சொல்லும் மரபான கதை சொல்லும் விஷயம் நாவலில் இருக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. அதைத் தாண்டி வாழ்க்கையைப் முன்வைக்க வேண்டும். அந்தப் பார்வை உள்ளோடுவதால் நீங்கள் சொல்வது போல் அப்படி இருக்கலாம்.     82. மாதொருபாகன் சிக்கலின் மன அழுத்தத்திலிருந்து மீண்டு வர‌ கோழையின் பாடல்கள் உதவியது எனச் சொல்லி இருக்கிறீர்கள். எழுத்து எப்படி ஒரு மீட்சிக்கு வித்திடும்? அது ஃபேண்டசியாகத் தோன்றுகிறது!   நான் ஒவ்வொன்று எழுதும் போதும் ஏதாவது ஒரு விதத்தில் தெளிவும், என்னிடமிருக்கும் ஏதாவது சிக்கலிலிருந்து விடுபாடும் கிடைப்பது இயல்பு. எல்லாவற்றிலும் அப்படி உணர்ந்திருக்கிறேன். சில படைப்புகளில் மிகப்பெரும் விடுபாடு கிடைக்கும். சிலவற்றில் அது ரொம்பச் சிறியதாக இருக்கும்.   சில விஷயங்களைக் கடப்பதற்கு எழுதுவது உதவி இருக்கிறது. எழுதுவதன் மூலமாக கடப்பது என்பது ஒன்று; கடப்பதற்காகவே எழுதுவது என்பது இன்னொன்று. அப்படி இரண்டு விதமாகவும் நடக்கும்.   கோழையில் பாடல்கள் எழுதியது, நான் எழுதக்கூடாது என்று முடிவு செய்திருந்த சந்தர்ப்பம். அப்போது இரண்டு, மூன்று மாதங்கள் உண்மையிலேயே ஏதும் எழுதவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு தூண்டுதல் என்னை அறியாமல் வருகிறது. அதிலிலிருந்து தொடங்கித் தொடர்ந்து கவிதைகள் எழுதினேன். அவற்றைப் பிரசுரம் செய்வேன் என்றெல்லாம் இல்லை. இயல்பிலேயே கவிதை ஒரு பெரிய மருந்து போல இருந்தது.     83. ஆடுகளை உருவகம் செய்து எழுதுவது பூனாச்சிக்கு முன் கோழையின் பாடல்கள் தொகுப்பிலேயே தொடங்கி விட்டதல்லவா? அப்போதே அந்த மாதிரியான திட்ட‌ம் மனதில் உருவாகி விட்டதா?   இல்லை. அப்போது இப்படி ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. நான் சொன்னது போல் அந்தக் கவிதைகளைப் பிரசுரம் செய்வோம் என்ற எண்ணம் கூடக் கிடையாது. அது தோன்றத் தோன்ற எழுதியவை தாம். அதன் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பெல்லாம் வந்ததற்குப் பின் புத்தகங்களை மறுபதிப்புச் செய்யலாம் என்று சொன்ன போது ஏதாவது புதிய படைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். எழுதலாம் என முன்பு தீர்மானித்து வைத்திருந்தவைகளை ஒவ்வொன்றாக யோசித்துப் பார்த்த போது அவை எவற்றையும் எழுதும் மனநிலை அப்போது இல்லை. சரி, சாதாரணமாக ஓர் ஆட்டின் வாழ்க்கையை எழுதிப் பார்ப்போம், ஒரு குறுநாவல் போல் எழுதுவோம் என்று தோன்றியது.   எப்படி வரும் என்கிற முன்முடிவெல்லாம் இல்லாமல் தான் எழுதினேன். இது போல் முன்தீர்மானம் இல்லாமல் எழுதுவது என்பது அனேகமாக அதுதான் முதல் முறை. அப்படி எழுத ஆரம்பித்து என்னை அறியாமல் இவ்வளவு விஷயங்கள் வந்து இத்தனை பெரிய நாவலாக அது உருவாகி விட்டது!     84. 2015ல் கிட்டத்தட்ட மாதொருபாகன் பிரச்சனை நிகழ்ந்து முடிந்திருந்த சமயம் தமிழ் மின்னிதழுக்கு அளித்த நேர்காணலில் யுவன் சந்திரசேகர் தமிழகத்தில் எழுத்தாளர்கள் படைப்புகளுக்காக பிற்போக்கு சக்திகளால் மிரட்டலுக்குள்ளாகும் போக்கு அதிகரித்து வரும் சூழலை எதிர்கொள்ளும் வழிகள் குறித்துக் கேட்ட போது யதார்த்தவாத எழுத்து அம்மாதிரி இடர்களைக் கொண்டு வருகிறது என்றால் மேஜிகல் ரியலிசம் உள்ளிட்ட வேறு முறைகளை முயற்சித்துப் பார்க்கலாம் என்று சொல்லி ஈசாப் நீதிக்கதைகளை உதாரணம் காட்டினார். மனிதர்களின் இயல்புகளை மிருகங்கள் மீதேற்றி அவற்றை வாதம் செய்ய வைத்ததைச் சுட்டி அக்கதைகள் எழுதப்பட்ட சூழலைக் காரணமாய்ச் சொன்னார். அதை வாசித்தீர்களா எனத் தெரியவில்லை. ஆனால் அன்று யுவன் சொன்னதைத்தான் பூனாச்சி நாவலில் செய்திருக்கிறீர்கள்.   இருக்கலாம். அது மாதிரி வெவ்வேறு வடிவங்களுக்குப் போக வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டு விட்டது என்று தான் நினைக்கிறேன். நான் இனி எழுதுவதே கூட பழைய முறைப்படி இருக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. வேறு வடிவங்கள் அல்லது யதார்த்தவாதத்திலேயே கூட வேறு முயற்சிகள் செய்ய வேண்டும். ஆனால் பழைய முறைப்படி செய்ய முடியாது என்ற தெளிவு மட்டும் வந்து விட்டது.     85. கூளமாதாரியும் பூனாச்சியும் மைச்சரடில் ஒற்றுமைகள் கொண்டிருப்பதை உணர்கிறேன். ஒருவேளை மனிதர்களை வைத்து எழுதி இருந்தால் பூனாச்சியும் ஒரு தலித்தியப் பிரதியாக வந்திருக்கக்கூடும்.   ஒருவேளை நீங்கள் சொல்வது மாதிரி வந்திருக்குமா எனத் தெரியவில்லை. இதைக் குறியீடாக வைக்க வேண்டும் என்றோ உருவகமாக வைக்க வேண்டும் என்றோ எதுவுமே இல்லாமல் சாதாரணமாக‌ ஒரு வெள்ளாட்டின் வாழ்க்கையை எழுதுவது என்று தான் எழுதினேன். என்னையும் அறியாமல் சில இடங்கள் அப்படியான அர்த்தங்கள் தருவதற்கான வாய்ப்பாக மாறி விட்டது. அது ஒன்றும் செய்ய முடியாது.     86. கோழையின் பாடல்கள் பற்றிய பதிப்பகக் குறிப்பில் அக்கவிதைகளில் உங்கள் துயரமும், ஆற்றாமையும், கழிவிரக்கமும், கோபமும், ஏளனமும் மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது, குற்றம் சாட்டும் தொனி இல்லை, கவிதையின் தெய்வ மொழியில் சாபத்திற்குச் சொற்கள் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பூனாச்சியில் விலங்குகள் நோக்கி நகர்ந்த இலக்கிய வனவாசத்தை சமூகம் மீதான உங்களின் அடையாளக் கோபம் என்றே எண்ணுகிறேன் - ஒருவகையில் சாபம் என்று கூடச் சொல்லலாம். அதாவது மனிதர்களை எழுதினால் தானே எதிர்க்கிறீர்கள், ஓர் ஆட்டை வைத்து எழுதுகிறேன், என்ன செய்வீர்கள் பார்க்கலாம் என்ற தொனி மட்டுமல்லாது இப்படியான கீழ்மைநிறை மனிதர்களைக் கொண்டு நான் கதை சமைக்க முடியாது போ என்று சொல்வதாகவும் எண்ணுகிறேன்.   (சிரிக்கிறார். யோசிக்கிறார்.) ஒரு படைப்பாளன் தன் கோபத்தை, வருத்தத்தை, ஏன் மகிழ்ச்சியைக் கூடப் படைப்புரீதியாகத்தான் வெளிப்படுத்த முடியும் என நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு வெளிப்பாடு தான்.     87. பட்டியில் மற்ற ஆடுகளுடன் இரவில் கட்டி வைக்கப்படும் பூனாச்சியும் பூவனும் இணையும் காட்சி மாதொருபாகனில் பொன்னா திருவிழாவில் மலைக்குப் போய்க் கலக்கும் இடத்தோடு ஏனோ இணை வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. என் பிரமையா?   (பெரிதாய்ச் சிரிக்கிறார்.) உங்கள் பிரமை தான்.     88. பூனாச்சியில் மனிதர்கள் மனிதர்களோடு பேசுகிறார்கள். ஆடுகள் ஆடுகளோடு பேசுகின்றன. இதுவரை சரி. ஆனால் மனிதர்கள் பேசும் பாஷை ஆடுகளுக்குப் புரிவது போல் பிற்பகுதியில் சில இடங்கள் உண்டு. அது தர்க்கத்துக்குப் புறம்பு அல்லவா? (அசுரலோகத்தின் தர்க்கங்களுக்கு அவை பொருந்தியும் இருக்கலாம்!)    நீங்களே பதிலும் சொல்லி விட்டீர்கள். (சிரிக்கிறார்.)   வெள்ளாட்டை ஓர் உயிர்ப்புள்ள ஜீவனாகப் பார்த்து எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தது தான்.   அப்புறம் வெள்ளாடுகளுக்கு மனிதர்களின் பாஷை புரியவும் செய்யும். எனக்கு நிறைய ஆடுகளோடு பழக்கமுண்டு. வெள்ளாட்டின் குரலை வைத்து அது எதற்காகக் குரலெழுப்புகிறது என உணர்ந்து கொள்ள முடியும். அது ஒரே மாதிரி இருக்காது. தன் ஒவ்வொரு தேவைக்கும், ஒவ்வொரு உணர்த்தலுக்கும் ஒவ்வொரு மாதிரி குரல் கொடுக்கும். ஆடுகளோடு பழகியவர்களுக்கு அது புரியும். அவிழ்த்து விடச் சொல்லிக் கத்துகிறது, தண்ணீருக்குக் கத்துகிறது என்பது மாதிரியான வித்தியாசங்கள் தெளிவாகத் தெரியும். எப்படி அதை நாம் புரிந்து கொள்கிறோமோ - மனிதர்களோடு அது பழகுவதால் - மனிதர்கள் பேசும் பாஷை சந்தோஷத்தில் வருகிறதா, வருத்தத்தில் வருகிறதா என்பதை ஆடுகள் புரிந்து கொள்ளும்.   மேய்ச்சலுக்கு வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் ஓர் ஆட்டை நீங்கள் ஓர் அதட்டலின் மூலமாக நிறுத்த முடியும். எனில் அதற்கு மனிதர்களின் பாஷைகளையும் அதிலிருக்கும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியும் என்பதற்கான சாத்தியம் இருக்கத்தானே செய்கிறது!     89. என் பூனாச்சி விமர்சனக்கட்டுரையில் “பெ.முருகனின் மிருகங்கள் பேரழகே. ஆனால் அடுத்த முறை மறுபடி பெருமாள்முருகனின் மனிதர்களைச் சந்திக்க விரும்புகிறேன்” என்று சொன்னேன். நடக்குமா? அல்லது விலங்குகள் தாம் எமக்கு விதிக்கப்பட்டதா?   (சிரிக்கிறார்.) தொடர்ந்து விலங்குகளை வைத்துத் தான் எழுத வேண்டும் என்றெல்லாம் ஏதும் கங்கணம் கட்டிக் கொள்ளவில்லை. அடுத்து என்ன எழுதுவது என்பது பற்றி இன்னும் ஏதும் தீர்மானம் செய்ய வில்லை. என்ன எழுதத் தோன்றுகிறதோ அதை எழுதலாம் என்று தான் இருக்கிறேன்.   அது நீங்கள் நினைப்பது போல் மனிதர்களாக இருக்கலாம்.     90. தற்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?   இப்போது எதுவும் எழுதவில்லை. இப்போது படிப்பதற்கும் எழுதுவதற்குமான அவகாசம் எனக்கு இல்லாமல் இருக்கிறது. இது மாதிரி பொதுவெளியில் நான் பங்கேற்பது என்று வந்த பிறகு நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டி இருக்கிறது. நிறையக் கட்டுரைகள் எழுத வேண்டி இருக்கிறது. சில ஆங்கிலப் பத்திரிகைகளிலிருந்து கூட கட்டுரைகள் கேட்கிறார்கள். (“நீங்களே நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுகிறீர்களா?” எனக் கேட்கிறேன். “இல்லை, தமிழில் எழுதிக் கொடுத்து விடுவேன்” என்கிறார்.) நிகழ்ச்சிகளில் ஏதாவது பேச வேண்டி இருக்கிறது, அதற்காகத் தயார் செய்வது, அந்த மாதிரியான வேலைகள் செய்து கொண்டிருக்கிறேன். இதற்கெல்லாமே இப்போதைக்கு நேரம் சரியாக இருக்கிறது.   அதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் எத்தனையோ பேர் இந்தப் பிரச்சனை வந்த போது ஆதரவுக் குரல் எழுப்பியவர்கள், போராடியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி அழைக்கும் போது அதைத் தவிர்க்க முடியாமல் போகிறது.   அடுத்த படைப்பு என்னவெனத் தெரியவில்லை. சில சிறுகதைகள் எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதற்கான அவகாசம் கிடைக்கவில்லை. இன்னும் கொஞ்சம் நாளெடுத்துத்தான் செய்வேன்.     91. எதிர்காலத் திட்டங்கள் என்ன?   ஏற்கனவே அது மாதிரி நிறையத் திட்டங்கள் எல்லாம் வைத்திருந்தேன். அவை எல்லாவற்றையும் இனிச் செய்ய முடியும் என எனக்குத் தோன்றவில்லை. அவற்றைச் செய்வதற்கான தூண்டுதல் மறுபடி வருமா எனத் தெரியவில்லை. கொங்கு வட்டாரச் சொல்லகராதியை மறுபதிப்பு கொண்டு வருவதற்காக சுமார் பதினைந்து வருடங்களாகக் கூடுதல் சொற்கள் சேகரித்து சில வேலைகள் செய்து வைத்திருக்கிறேன். அதைக் கட்டாயம் முடித்துக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஒரு மிகப் பெரிய நாவல் எழுத வேண்டும் என்ற திட்டமும் உண்டு. அதையும் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறேன்.     92. இது காவியங்களின் காலம் போலிருக்கிறது. ஒரு பெருநாவலோ அல்லது காவியமோ புனையும் எண்ணமுண்டா? வட்டார வழக்கில் ஒரு காவியம்!   காவியம் என்றெல்லாம் எண்ணமில்லை. எனக்கு இந்த மாதிரி சிறுசிறு நாவல்கள் எழுதுவதில் தான் ஆர்வமுண்டு. அப்புறம் மிகப் பெரியதாக ஒன்றே ஒன்று எழுத வேண்டும் என்று எண்ணமிருக்கிறது. அது எப்போது சாத்தியமாகும் எனத் தெரியவில்லை. அதற்கான களமெல்லாம் கூட நான் ஏற்கனவே தீர்மானித்து வைத்தது தான். அதை எழுதுவதற்கான ஒரு சந்தர்ப்பம் அமைய வேண்டும்.     93. அண்ணன்மார் கதையை நாவலாக்கும் திட்டம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளதா? இதுவரை அவ்விஷயத்தில் நீங்கள் செய்துள்ள பங்களிப்புகளைச் சொல்லுங்கள்.   அதை எங்கே சொல்லி இருக்கிறேன்? எங்கே படித்தீர்கள் அதை? (பதாகை நேர்காணலில் சொல்லி இருந்ததாகச் சொல்கிறேன்.) இப்போது அண்ணன்மார் கதையை எழுதுவதாக இல்லை. அது தொடர்பாய் சில கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். மேலும் சில ஆய்வுக்கட்டுரைகள் எழுதி அண்ணன்மார் சாமி கதை தொடர்பான ஓர் ஆய்வு நூலைக் கொண்டு வர வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். அதில் ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக் கொண்டு நாவல் எழுதும் திட்டமிருந்தது. இப்போது அப்படி மனநிலை இல்லை.     94. “I have actually shelved some writing projects” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நேர்காணலில் சொல்லி இருக்கிறீர்கள். அவை என்ன என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?   இப்போது அண்ணன்மார் கதை சொன்னேனே!   நாவல்களுக்கு நிறையத் திட்டமிருந்தது. அதில் எது திரும்ப உயிர்ப்போடு வரும் எனத் தெரியவில்லை. அந்த மாதிரியான எல்லாவற்றிலும் ஒரு விருப்பமின்மை எனக்கு இருக்கிறது. என்னைப் புதிதாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அப்படி ஆக்கிக் கொள்ளும் போது பூனாச்சி மாதிரி ஏதாவது புது விஷயங்கள், இது வரை திட்டமிடாத ஒன்று என்னை இழுத்துப் போய் விடுவதற்கான வாய்ப்பு உண்டு. அப்படி இருக்கையில் ஏற்கனவே வைத்திருந்த விஷயங்கள் நடைமுறைக்கு வருமா எனத் தெரியவில்லை.     95. சென்னையில் கொஞ்ச காலம் வசித்தவர் நீங்கள். முனைவர் பட்ட காலம் ஒன்று. மாதொருபாகன் exile ஒன்று. நகர வாழ்வை மையமாக்கி அல்லது பின்புலமாக்கி நாவல் எழுதும் எண்ணமுண்டா?   வேறுவகையானது எழுத வேண்டும் என்று தான் தூண்டுதல் இருக்கிறது. அது எப்படி எழுதுவேன் எனத் தெரியவில்லை. அது நகரம் சார்ந்ததாகவும் அமையலாம்.     96. வட்டார‌ வழக்கு வாசகருக்குச் சிரமம் அளிக்கக்கூடியது. அதனாலேயே அதைத் தவிர்ப்போரும் உண்டு. எனக்கு இப்பகுதி சகஜம். உண்மையில் உங்கள் எழுத்துக்களில் என் ஆத்தா, தாத்தா போன்றோரின் குரலே எனக்குக் கேட்கும். மனதுக்கும் நெருக்கமாகும். ஆனால் ஜெயமோகனையோ, நாஞ்சில் நாடனையோ, கி.ரா.வையோ வாசிக்கும் போது எனக்குக் கூடுதல் சிரத்தை தேவைப்படுகிறது. அதனால் சில வாசகர்கள் விலகுவர். எதிர்காலத்தில் இதை உத்தேசித்து வட்டார மொழி தவிர்த்து எழுதும் எண்ண‌முண்டா?   வட்டார வழக்கைத் தவிர்த்து விட்டு என்னால் எழுத முடியும் எனத் தோன்றவில்லை. நான் பயன்படுத்தும் மொழி, எனக்குப் பழக்கமான மொழி என்னவோ அதைத்தான் எழுத முடியும். அதைத் தவிர்த்து விட்டு ஒரு பொது மொழியில் எழுத வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழில் எந்தப் பகுதியை வைத்து எழுதினாலும் அது வட்டார வழக்கில் தான் இருக்கும். அதனால் அம்மாதிரி எண்ணமில்லை.   ஆனால் வட்டார வழக்கு வாசகருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை. ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். இப்போது அதை எளிதாகக் கடக்க முடியும். தொடக்கத்தில் படிப்பவர்களுக்கு கி.ரா.வையோ, பொன்னீலனையோ ஜெயமோகனையோ அந்நியம் போலத் தோன்றலாம். தொடர்ந்து சில நாவல்களைப் படித்து விட்டார்கள் எனில் அம்மொழியும் நெருக்கமானதாகி விடும். அதில் பயன்படுத்தும் சில சொற்கள் பொருள் புரியாததாக இருக்கலாம். அவற்றுக்குப் பொருள் பார்க்க‌ வட்டார அகராதிகள் வந்து விட்டன‌. அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். பழைய இலக்கியங்களைப் பயில்வதற்கு அகராதி அவசியமாக இருக்கிறது. வட்டார வழக்குக்கும் சிரமமான இடங்களில் அந்த மாதிரி பயன்படுத்தலாம்.   இலக்கியத்தை ரொம்ப எளிதாக ஒரு கேப்ஸ்யூல் போல் விழுங்கி விட முடியாது. வாசகர்களும் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட முயற்சியின் மூலமாகச் சில புரிதல்கள் கிடைக்கும். ஒன்றைப் புரிந்து கொண்டோம் என்று சந்தோஷத்தைத் தருவ‌தாக இருக்கும். அந்தச் சந்தோஷத்தை அனுபவிக்கும் மனநிலை வாசகர்களுக்கு இருந்ததென்றால் வட்டார வழக்கு என்பது ஒரு பிரச்சனையே கிடையாது.     97. மாதொருபாகன் பிரச்சனைக்குப் பின்னாலிருக்கும் வெகுஜன உளவியல் என்ன என நினைக்கிறீர்கள்?   மாதொருபாகன் பிரச்சனையைப் பற்றி மட்டும் வேண்டாமே!     98. சரி, தொடர்புடைய சில கேள்விகள் இருக்கின்றன. அவற்றில் மாதொருபாகன் பிரச்சனை குறித்த‌ பிரச்சனையற்ற சில கேள்விகளை மட்டும் கேட்கிறேன். நீங்கள் விரும்பினால் பதில் அளிக்கலாம். இப்போது யோசித்துப்பார்க்கையில் மாதொருபாகனை எழுதியிருக்க வேண்டாம் என நினைக்கிறீர்களா?   எழுதியிருக்க வேண்டாம் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. முதலிலேயே ஊர்ப் பெயரும் சாதிப் பெயரும் இல்லாமல் எழுதி இருக்கலாமே என்று நினைக்கிறேன்.     99. மாதொருபாகன் பிரச்சனையினால் உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு விலையே இல்லை. ஆனால் அதே சமயம் இதன் பக்கவிளைவாய் உங்கள் பெயர் சர்வதேச அளவில் அறியப்பட்டுள்ளது என்பது உண்மையே. இனி உங்கள் படைப்புகள் வேகமாக ஆங்கிலத்தில் பெயர்க்கப்படக்கூடும். உலக அளவில் அங்கீகாரங்கள் கிட்டலாம். இதை blessing in discuise என்பது போல் நினைக்கிறீர்களா?   இப்படிப் பிரச்சனை சார்ந்து அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றில்லை. நல்ல விதமாக, என் படைப்பு மூலமாகவே அங்கீகாரம் கிடைத்திருந்தால் இன்னமும் சந்தோஷப்பட்டிருப்பேன். இந்தப் பிரச்சனையினால் தான் இந்த அங்கீகாரம் என்றும் எனக்குத் தோன்றவில்லை. பிரச்சனை உருவாகி, என் படைப்புகள் வலு குறைந்தவையாக‌ இருந்திருந்தால் இப்படியான அங்கீகாரம் உருவாகி இருக்கும் எனச் சொல்ல முடியாது.     100. பிரச்சனைக்குப் பிறகு, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு புதிதாய் வந்திருக்கும் மாதொருபாகன் பதிப்பில் என்ன மாற்றங்கள் செய்திருக்கிறீர்கள்? ஊர்ப் பெயர், சாதிக் குறிப்புகளை நீக்கி இருப்பதை அறிவேன். அது போக வேறு ஏதேனும்? ஓர் எழுத்தாளனாய் அந்த மாற்றங்கள் சங்கடம் அளித்ததா?   கதைப்போக்கில் மாற்றம் ஏதும் இல்லை. ஆனால் சில இடங்களை மாற்றி எழுதி இருக்கிறேன். அதுவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. முதலில் இந்த மாற்றங்கள் செய்யக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதற்குப் பிறகு அது ஒரு மாதிரி குஷியாகி விட்டது. பண்ணிப் பார்ப்போமே என்று ஜாலி ஆகி விட்டது.     101. தடைக்குப் பின் சென்னைக்கு மாறுதலில் சென்றீர்கள் அல்லவா?   ஆம். அங்கே ப்ரஸிடன்ஸி காலேஜில் ஒன்றரை வரும் பணிபுரிந்தேன். அப்புறம் தீர்ப்பு வந்த பிறகு மறுபடி இங்கே நாமக்கல்லுக்கே வந்து விட்டேன். தற்போது ஆத்தூரில் பணி.     102. ஏன் மீண்டும் நாமக்கல் திரும்பினீர்கள்?   படிக்கும் காலத்தில் சென்னையில் ஏழெட்டு வருடங்கள் இருந்தேன். அப்போதே சென்னை வாழ்க்கை ஒன்றும் பிடித்தமானதாக இல்லை. அந்த மாதிரி வீடு, அடைந்திருக்கும் இடம் இவை எல்லாம் எனக்குப் பிடிக்காது. திறந்த வெளியாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி வசிப்பதற்கான வாய்ப்பு அங்கே இல்லை.   அது என் மனநிலை சார்ந்த விஷயம். அப்படி வசிப்பவர்களை எல்லாம் நான் தவறாகச் சொல்லவில்லை. ஆனால் அந்த மாதிரியான வசிப்பு என்பது என்னுடைய மனநிலைக்குச் சுத்தமாக ஒத்து வரவில்லை. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் போய் வரும் அந்த அலைச்சலும் சுத்தமாக ஒத்து வரவில்லை. என் மனைவியும் பல வருடம் இங்கேயே இருந்து விட்டதால் அவருக்கும் அச்சூழல் பிடித்தமானதாக இல்லை.   இன்னொன்று நாங்கள் ஓய்வு பெற இன்னும் ஏழெட்டு வருடங்களே இருக்கின்றன. வேலை கிடைத்த புதிதிலேயே சென்னை மாறி இருந்தால் நகர வாழ்க்கைக்குப் பொருந்தி இருப்போமோ என்னவோ. இன்று இவ்வளவு வருடங்கள் இங்கே இருந்து விட்டு புதிதாய்ப் போய்ப் பொருந்துவது சாத்தியமானதாக இல்லை.   []     103. மாதொருபாகன் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் இறுதி வரிகள் வழமை மீறிய dramatic-ஆன ஒன்று - “Let the author be resurrected to what he is best at. Write.”. அது படைப்பாளிக்கான மரியாதை என எண்ணுகிறேன். அதை அறிந்த போது உங்கள் மனநிலை என்னவாய் இருந்தது?   அதைச் சொன்ன‌ போது உண்மையில் ஒரு பெரிய சந்தோஷம் இருந்தது எனக்கு. ஏதோ ஒரு விதத்தில் இதுவரைக்குமான கஷ்டங்கள் தீர்ந்து விட்ட மாதிரியான நம்பிக்கையும் வந்தது. என் மீது படிந்த ஒரு குற்றத்தின் சாயலிலிருந்து விடுபட்ட மாதிரியான மனநிலை வந்தது. அதற்கு அடுத்து எழுதுவேன், எழுத மாட்டேன் என்பது அடுத்த விஷயம், ஆனால் அந்த மாதிரியான ஒரு சந்தோஷம் இருந்தது அப்போது.     104. மாதொருபாகன் பிரச்சனையில் உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் பதிப்பகம் தாண்டி பல‌ படைப்பாளிகளும் அமைப்புகளும் உங்கள் பக்கம் நின்றார்கள். அது தொடர்பாய் நீங்கள் நன்றி தெரிவிக்க விரும்புபவர்களைப் பற்றி விரிவாய்ப் பேசலாம்.   பிரச்சனையின் போது பலதரப்பிலிருந்து ஆதரவு கொடுத்தார்கள். என் குடும்பம் முக்கியமான ஆதரவாக இருந்தது. காலச்சுவடு கண்ணன் பிரச்சனை வந்ததும் பதிப்பாளரான‌ த‌னக்கும் இதற்கும் சம்ப‌ந்தமில்லை என விலகவில்லை. வேறொரு பதிப்பாளராக இருந்திருந்தால் இந்தளவுக்கு உடன் நின்றிருப்பார்களா எனச் சொல்ல முடியாது. அவர் எனக்கு இருபதாண்டு நண்பராகவும் இருந்ததால் அவருக்கு என் முடிவுகளில் உடன்பாடு இல்லை என்றாலும் என் பக்கம் நின்றார். அப்படியான ஒரு பலம் ரொம்ப முக்கியமானது.   அடுத்து ஆ.இரா. வேங்கடாசலபதியும் எனக்குத் தொடர்ந்து ஆதரவாக இருந்தார். இவ்வளவு பரவலாக ஆங்கில ஊடகங்களில் இவ்விஷயம் சென்றடைய சலபதி அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. இந்தப் பிரச்சனையில் என்னை விடவும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர் தான் பாதிக்கப்பட்டார். நான் பேசாத சமயங்களில் ஊடகங்கள் கண்ணனையும் சலபதியையும் அணுகினார்கள். எல்லோருக்கும் பதில் சொன்னதும் என் தரப்பிலிருந்து பேசியதும் அவர்கள் தான். இருவ‌ரும் அவ்வளவு ஆதரவாக‌ இருந்தார்கள்.   அதற்குப் பிறகு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன். அவர் முழுக்க என் பக்கம் ஆதரவாக இருந்தார். இது தொடர்பாய் நூற்றுக்கணக்கான கூட்டங்களை அந்த எழுத்தாளர் சங்கம் சார்பாக நடத்தினார்கள். அவர் பல இடங்களுக்கும் போய் நாவலைப் பற்றி விளக்கிப் பேசினார். நான் எடுத்த முடிவை ஏராளமானோர் விமர்சனம் செய்த போது கூட அவர் சொன்னது - “உங்களுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்ங்க, நீங்க எது செஞ்சாலும் நான் உங்கள ஆதரிப்பேன்.”. அம்மாதிரி ஒரு நிபந்தனையற்ற ஆதரவு அவரிடமிருந்து வந்தது. தமிழ்ச்செல்வன் ஒரு மார்க்ஸியவாதி, முற்போக்கு எழுத்தாளர். அவரெல்லாம் கண் கலங்கியதை அந்தச் சமயத்தில் நான் பார்க்க முடிந்தது. அவ்வளவு நெகிழ்வான ஒரு மனிதராக அவரைக் க‌ண்டேன். சலபதி கூட அப்போது கண்கலங்கினார்.   இந்த மூவர் தவிர்த்து என்னுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த வழக்கறிஞர் சுவாமிநாதன். அவர் செய்ததும் முக்கியமான ஓர் உதவி. அவர் கொள்கைரீதியாக என்னோடு ஒத்துப் போகிறவர் கிடையாது. ஆனாலும் இந்த விஷயத்தில் அவர் என் பக்கம் நின்றார். எல்லாவிதமான உதவிகளையும் செய்தார். களத்தில் மட்டுமில்லாமல் நீதிமன்றத்திலும் தேவைப்படும் எல்லாவற்றையும் அவரே முன்னின்று செய்தார்.   அப்புறம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 99% எழுத்தாளர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இதற்கு முன்பு வேறு ஏதாவது ஒரு பொதுப் பிரச்சனைக்கு இவ்வளவு எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களா என்று எனக்குச் சொல்ல முடியவில்லை. லக்ஷ்மி மணிவண்ணன், கோணங்கி இவர்களின் ஏற்பாட்டில் சென்னையில் நடந்த ஒரு பெரிய போராட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்கெடுத்து அதை நடத்தி இருக்கிறார்கள். அதெல்லாம் எனக்கு ஒரு மிகப் பெரிய ஆதரவாக இருந்தது. மூத்த எழுத்தாளர்களிலிருந்து இளம் எழுத்தாளர்கள் வரை எல்லாத் தரப்பிலிருந்துமே எனக்கு ஆதரவு இருந்தது. இந்துத்துவக் கொள்கையை ஆதரித்து எழுதுபவராக அறியப்படும் அரவிந்தன் நீலகண்டன் கூட கருத்துரிமை சார்ந்து என்னை ஆதரித்தார். அப்படிப் பல தரப்பிலிருந்தும் எழுத்தாளர்கள் ஆதரித்தார்கள்.   என் மாணவர்கள் என் பக்கம் பலமாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள். அந்தச் சமயத்தில் மாணவர்களும் நண்பர்களும் இல்லை என்றால் நான் அந்தச்சூழலைக் கடந்து வந்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை.   இந்த விஷயத்தைப் பரவலாகக் கொண்டு போய்ச் சேர்த்ததிலும், பிரச்சனையின் பல கோணங்களை வெளிப்படுத்தியதிலும் ஊடகங்களுக்குப் பங்குண்டு. குறிப்பாய் The Hindu தொடர்ந்து இதைப் பற்றிய செய்திகளை, கட்டுரைகளை வெளியிட்டு இந்திய அளவில் ஒரு பெரும் ஆதரவை உருவாக்கியது. தமிழ் தி இந்துவுக்கும் இதில் பங்குண்டு. சமஸ் எழுதிய ‘தமிழ்நாட்டில் தான் இருக்கிறதா திருச்செங்கோடு?’ என்ற கட்டுரை அத்தனை பெரிய அளவுக்கு ரீச் ஆனது. அப்படி ஊடகங்களுக்கும் ஒரு பெரிய பங்குண்டு.   அரசியல் கட்சியினர் பலரும் ஆதரவு தெரிவித்தார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், இரா.நல்லகண்ணு உள்ளிட்டோர் தெரிவித்த ஆதரவும் அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களும் முக்கியமானவை. அ.மார்க்ஸ், வே.வசந்திதேவி, வீ.அரசு உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் நடத்திய ஊடகச் சந்திப்பும் குறிப்பிடத்தக்கது. சமூக‌ வலைதளங்களில் இயங்குவோரின் குரல்களும் ஆதரவாக எழுந்தன. கொங்குப் பகுதியில் வாழும் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி, ஆய்வறிஞர் பொ.வேல்சாமி உள்ளிட்டோரும் பெரும் அதிகாரிகள் பலரும் எனக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தும் செயலாற்றியும் உதவினர். கேரளத்திலும் பிற மாநிலங்களிலும் வெளிப்பட்ட ஆதரவுக் குரல்கள் கணக்கிலடங்காதவை. அப்போது சென்னையில் நடைபெற்ற தி இந்து இலக்கியத் திருவிழா, ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா ஆகியவற்றில் தனி அமர்வுகள் அமைத்து ஆதரவுக் குரல்களை எழுப்பினர்.   இப்படி நான் நன்றி சொல்ல வேண்டிய பட்டியல் முடிவில்லாதது. முகம் தெரியாத எத்தனையோ வாசகர்கள். காலத்திற்கும் நான் நன்றிக்கடன் பட்டவனாகத்தான் இருந்தாக வேண்டும்.     105. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அமைப்பை அது குறித்த விமர்சனங்களோடு எதிர்மறைப் பிம்பத்தில் கேள்விப்பட்டு வந்த எனக்கு, உங்கள் விஷயத்தில் அவர்கள் செய்த ஆக்கப்பூர்வப் பணியைக் கண்ட பின் ஒரு மரியாதை வந்திருக்கிறது.   தமிழ்நாட்டில் செயல்படும் இலக்கிய அமைப்புகளில் பெரியது அதுதான். தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா இவர்கள் எல்லாம் பொறுப்பெடுத்துக் கொண்ட பின் அதன் செயல்பாடுகள் பல விதங்களில் விரிவடைந்திருக்கிறது. எந்தத் தரப்பைச் சேர்ந்த இலக்கியவாதிகளாக இருந்தாலும் அவர்களின் படைப்பை வாசிப்பது என்ற கண்ணோட்டமே முக்கியமான மாற்றம் தான். முற்போக்கு எழுத்தை மட்டுமே வாசிக்க வேண்டும் என்பதெல்லாம் இப்போது இல்லை. அந்த அமைப்பு மிக‌ ஜனநாயகப்பூர்வமானதாகவும் எல்லாத் தரப்பு எழுத்தாளர்களுடனும் தொடர்பைப் பேணும் ஒன்றாகவும் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் மாறி இருக்கிறது. அது ரொம்ப ஆரோக்கியமான விஷயம்.     106. என் போல் உங்களைக் கொண்டாடும் வாசகர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் சக எழுத்தாளர்களின் அங்கீகாரம் உங்களுக்கிருப்பதாய் நினைக்கிறீர்களா? மாதொருபாகன் பிரச்சனையின் போது உங்களுக்கு ஆதரவளத்த பல‌ படைப்பாளுமைகள் நாவலின் இலக்கிய அந்தஸ்து (உங்களுடையது என்றும் கொள்ளலாம்) குறித்து மழுப்பலாய்க் கடந்து விட்டு (சிலர் வெளிப்படையாய் நிராகரித்தார்கள்) பொதுவாய் படைப்புச் சுதந்திரத்திற்கு மட்டும் ஆதரவுக்குரல் எழுப்பினார்கள். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?   படைப்பு சார்ந்து கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். என் நாவலை உயர்ந்த கலைப்படைப்பென்று எல்லாத் தரப்பினருமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குக் கிடையாது. எழுத்தாளர்களிடமும், விமர்சகர்களிடமும், வாசகர்களிடமும் இந்தப் பிரச்சனைக்கு முன்பும் போதுமான அங்கீகாரம் எனக்கு இருந்ததாகத் தான் நினைக்கிறேன். அது தொடர்பாய் மனநிறைவோடும் திருப்தியோடும் தான் இருந்தேன். அதைத் தாண்டி இன்னும் எங்கெங்கெல்லாமோ போக வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை.   எனக்கு என்ன தோன்றுகிறதோ அந்த விஷயங்களை எழுதுகிறேன். அதற்கு என்ன அங்கீகாரமோ அது கிடைத்தால் போதும் என்பது தான் என் எண்ணம். என் வாழ்க்கைப் பார்வையும் கூட அது தான். நான் ரொம்பப் பரபரப்பான ஆளாகவோ முக்கியஸ்தனாகவோ இருக்கும் தன்மையை விரும்பும் ஆள் இல்லை. இப்போது திடீரெனக் கிடைத்த பரபரப்பை எதிர்கொள்வதில் எனக்கு ஏராளமான சங்கடங்கள் இருக்கின்றன.   அதனால் படைப்பு சார்ந்து கிடைத்த அங்கீகாரங்கள் எனக்குப் போதுமானதாகத்தான் இருக்கிறது. என்னுடைய படைப்பை ஏற்றுக் கொள்ளலாம், நிராகரிக்கலாம். ஒரு முப்பதாண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவன் என்ற அடிப்படையில் இந்த மாதிரியான விஷயங்களைக் கடந்து ஒரு விஷயத்தை அணுக வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். எழுதத் தொடங்கிய ஏழெட்டு ஆண்டுகளிலேயே இதை வந்தடைந்து விட்டேன். அதனால் நிராகரிப்புகள் எனக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.     107. தமிழ் எழுத்தாளர்கள் போதுமான அளவு மாதொருபாகன் பிரச்சனையில் எதிர்வினை ஆற்றியதாக நம்புகிறீர்களா? ஜெயமோகன் சில நடவடிக்கைகளைச் சிபாரிசு செய்திருந்தார் - ஓர் அடையாளமாக ஒருநாள் புத்தகக் கண்காட்சியை மூடுவது, கருத்துரிமைக்கு எதிராகச் செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுத்தாளர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஒரு பெரிய மனுவை குடியரசுத் தலைவருக்கு அளிப்பது, திருச்செங்கோட்டில் கருத்துரிமைக்கு எதிராக நிகழ்ந்த மிரட்டலை அங்குள்ள அரசு அதிகாரிகள் அங்கீகரித்தத‌ற்கு எதிராக தேசிய அளவில் எழுத்தாளர்களை இணைத்துக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது. ஆனால் இவற்றில் ஏதுமே நடக்கவில்லை. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?   இந்த மாதிரியான சூழலை எதிர்கொள்வது எல்லோருக்குமே புதிது. ஏற்கனவே ஜோ டி க்ரூஸுக்குப் பிரச்சனை வந்தது. ஹெச்.ஜி.ரஸுலை ஊர்விலக்கம் செய்தார்கள். சல்மாவுக்குப் பிரச்சனைகள் வந்தன. இவை எல்லாமே பார்த்தால் அந்தந்த இடத்தில் அந்தந்த சூழலில் எதிர்கொள்வது மாதிரியானவை.   மாறாக என்னுடையது தான் அதைத் தாண்டிய ஒரு பெரிய பிரச்சனை. அதனால் இப்படியான ஒரு சிக்கலை எதிர்கொள்வது என்பது தமிழ்ச் சூழலுக்கே புதிது. எழுத்தாளர்களுக்கும் அப்படித்தான். அச்சூழலில் ஜெயமோகன் சில யோசனைகள் சொல்லி இருக்கிறார். அதே போல் பரீக்ஷா ஞாநி கூட எழுத்தாளர்கள் எல்லோரும் சேர்ந்து பஸ் எடுத்துக் கொண்டு அந்த ஊருக்குப் போய், இதற்கு ஆதரவாய் அந்த வீதிகளில் நடப்போம் என்று சொன்னார். இப்படிப் பல விதமான யோசனைகள், சிந்தனைகள் அந்தச் சமயத்தில் முன்வைக்கப்பட்டன. பல பேர் தங்களுக்குக் கிடைத்த இடத்தில் எழுதினார்கள், பேசினார்கள். இதெல்லாம் ரொம்ப முக்கியமானது. வீ. அரசு தலைமையில் புத்தகக் கண்காட்சியில் ஒரு நாள் போராட்டம் செய்தார்கள். போலீஸ் அதைக் கடுமையாக எதிர்த்த போதும் கூட அதை அவர்கள் எதிர்கொண்டார்கள்.   அது மாதிரி ஒவ்வொருவரும் அவரவருக்கு என்ன சாத்தியமோ அதைச் செய்தார்கள். அவரவர் ஊர்களில் அவர்களுக்கு முடிந்த வகையில் அரங்கக் கூட்டமோ பொதுக் கூட்டமோ ஏற்பாடு செய்தார்கள். கோஷம் போட்டார்கள். இப்படி என்னென்ன முடிந்ததோ அதை எல்லாம் செய்தார்கள். அந்த மாதிரி இணைந்தார்கள், செய்தார்கள் என்பது எனக்குத் திருப்தியான விஷயம் தான். அதற்கு மேல் என்ன செய்திருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. என்ன செய்வது என்ற குழப்பமும் நிறையப் பேருக்கு இருந்தது.     108. பெருமாள்முருகனுக்கு இப்பிரச்சனை ஏற்படாமல் வேறொரு எழுத்தாளருக்கு ஏற்பட்டு அவர் தன் மரணத்தை அறிவித்திருந்தால் பெருமாள்முருகன் அச்சம்பவத்துக்கு எப்படி எதிர்வினை ஆற்றி இருப்பார்?   ச. தமிழ்ச்செல்வன் எப்படி எதிர்வினையாற்றினாரோ அப்படித்தான் என் எதிர்வினையும் இருந்திருக்கும்.     109. ஊடகங்கள் நீதிமன்றத் தீர்ப்பைப் போதுமான அளவு கொண்டாடவில்லை என காலச்சுவடு கண்ணன் சில தினங்கள் முன் ஃபேஸ்புக்கில் ஆதங்கப்பட்டிருந்தார். தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் அதை தான் ஆமோதிக்கவே செய்வேன். ஏனெனில் அது கருத்துரிமை தொடர்பான ஒரு Landmark Judgement. அது வடக்கில் நடந்திருந்தாலே நாம் கொண்டாடி இருக்க வேண்டிய விஷயம். ஆனால் இது இங்கே தமிழ்நாட்டிலேயே நடந்து, இங்கேயே தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது எனும் போது பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட வெகுஜன ஊடகங்கள் பெரிதாகப் பேசியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஊடகங்கள் செய்யத் தவறிய விஷயம் இது. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?   ஆங்கிலத்தில் அத்தீர்ப்பு பற்றிய வரவேற்பும், விமர்சனங்களுமாய் நிறையக் கட்டுரைகள் வந்தன. நிறையப் விவாதித்தார்கள். தமிழில் அந்தளவுக்கு வரவில்லை. புதிய தலைமுறை இதழில் மணி என்பவர் எழுதிய ஒரு கட்டுரை வந்தது. எனக்குத் தெரிந்து தமிழில் அது தொடர்பாய் வந்த பொருட்படுத்தத்தக்க கட்டுரை அது தான். அப்புறம் காலச்சுவடில் எழுதினார்கள். அவ்வளவு தான். இது பெருமாள்முருகனுக்கென வந்த தீர்ப்பாக அல்லாமல் ஒட்டுமொத்த‌ கருத்துரிமை சார்ந்த தீர்ப்பு என்று பார்த்து இது இன்னும் பரவலாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை என்பது தான் என்னுடைய ஆதங்கமும்.     110. “கைவிட்ட கை எதுவும் பிடித்திருந்த கை அல்ல.” அப்படி அறிந்த கைகள் பற்றி?   (பெரிதாய்ச் சிரிக்கிறார்.) அந்தக் கைகளைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது!     111. “I may not agree with what you say, but will defend to the death, your right to say it” என வோல்டேரை எல்லாம் மேற்கோள் காட்டி “Art is often provocative and is meant not for everyone, nor does it compel the whole society to see it. The choice is left with the viewer.” என்று தெளிவுடன் அணுகி உங்கள் தரப்புக்கு ஆதாரவாய்த் தீர்ப்பு சொல்லி இருந்தார் (அப்போதைய) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல். அதையொட்டி நீங்கள் அது குறித்து மீண்டு விட்ட பொருளில் ஓர் அறிக்கை விட்டிருந்தீர்கள். ஆனால் அறம் போல் நீதி மாறிலி அல்ல. அது ஆள் பொறுத்து, ஆட்சி பொறுத்து, ஆதரவு பொறுத்து மாறக்கூடியது. ஒரு நீதிபதியின் சொல்லா ஓர் எழுத்தாளன் மீண்டும் எழுத வேண்டுமா இல்லையா எனத் தீர்மானிக்க வேண்டும்? அன்று கவுலின் இடத்தில் வேறு நீதிபதி இருந்து ஒருவேளை தீர்ப்பு எதிராக வந்திருந்தால்?     (சிரிக்கிறார்.) நீங்கள் அப்போதே இதைப் பற்றி எழுதியிருந்த ஞாபகம். அதுவும் சரி தான். எழுதுவது நீதிமன்றத்துடைய முடிவல்ல. ஆனால் இன்றைய சூழலில் நம் நாட்டில் வேறு வழியே இல்லாமல் நம்முடைய கடைசிபட்ச நம்பிக்கையாக நீதிமன்றங்களே இருக்கின்றன. வேறென்ன இருக்கிறது?     112. மாதொருபாகன் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் மூன்று மாதத்துக்குள் இம்மாதிரி பிரச்சனைகளைக் கையாள கருத்துரிமை தொடர்பான நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. தீர்ப்பின் ஒரு முக்கியப் பகுதியாக அதைப் பார்க்கிறேன். ஏனெனில் இலக்கிய ப்ரக்ஞையற்ற‌ அரசு அதிகாரிகளின் கட்டப்பஞ்சாயத்து காரணமாகவே அன்று நீங்கள் எழுதுவதை நிறுத்த வேண்டி இருந்தது. (முன்னாள் நீதிபதி சந்துரு அதைச் "சட்டத்திற்கு புறம்பான கூட்டம்" என்று சொல்லி இருந்தார்.) நிபுணர் குழு அமைப்பது இத்தகு பிரச்சனைகளை ஓரளவு சரியான முறையில் கையாள உதவும் என நினைக்கிறேன். ஆனால் அரசு இன்னமும் அதை அமைக்க‌ நடவடிக்கை எடுத்த‌ மாதிரி தெரியவில்லை. அது தொடர்பாக அரசுக்கு நினைவூட்டி ஏதும் நீங்கள் முயற்சி செய்தீர்களா? செய்வீர்களா?   நான் ஒன்றும் செய்யவில்லை. அரசுக்கே கூட அடுத்து வேறொரு பிரச்சனை வரும் போது தான் இந்தத் தீர்ப்பில் இந்த மாதிரியான ஒன்று இருந்தது என்ற நினைவு வரும்.     113. குறிப்பிட்ட சாராருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக ஓர் எழுத்தாளன் கலைக்கு உருக்கொடுக்காமல் இருக்க முடியுமா? அவன் பிறப்பெடுத்ததே எழுதத்தான் எனும் போது அந்தச் சமரசம் கலைக்குச் செய்யும் துரோகம் ஆகாதா? எல்லோரையும் திருப்திப்படுத்த அவன் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவள் இல்லை தானே?   (சிரிக்கிறார்.) இதற்கு என்ன பதில் சொல்வது!     114. அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் எனச் சுட்டி “இப்போது எனக்குள் ஒரு தணிக்கையாளன் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறான்” என்று ஆறேழு மாதங்கள் முன் சொல்லி இருந்தீர்கள். இன்னும் அந்தப் புறக்காரணங்களை முன்வைத்த சுயதணிக்கையை அறிவார் தொழிலாகக் கருதுகிறீர்களா?   அந்த சுயதணிக்கை அவ்வளவு சீக்கிரத்தில் என்னை விட்டுப் போகுமா என்று எனக்குத் தெரியவில்லை. அது எனக்கு மட்டுமல்ல; நம் சூழலிலேயே அது புகுந்து விட்டது. வேறொரு வடிவத்தை முயல வேண்டும் என யுவன் சந்திரசேகர் சொல்கிறார் இல்லையா, அதுவே கூட தணிக்கையின் பாற்பட்டது தானே!   நீங்கள் ஒரு விஷயத்தை நேரடியாகச் சமூகத்தில் சொல்ல முடியவில்லை என்பது ஓர் அவலம் தான்.     115. மாதொருபாகன் பிரச்சனைக்குப் பிறகு நீங்கள் எழுதிய முதல் நூல் கோழையின் பாடல்கள். அதன் வெளியீட்டை ஏன் தில்லியில் வைத்தீர்கள்? பிரச்சனையைத் தவிர்க்கும் பாதுகாப்பு முகாந்திரம் தவிர வேறு காரணமோ செய்தியோ உண்டா? சென்னை உயர்நீதிமன்றத்தின் முற்போக்குத் தீர்ப்பே உங்கள் புத்துயிர்ப்புக்கு முக்கியக் காரணம் என்பதால் சென்னையில் வெளியீட்டை நிகழ்த்தி இருக்கலாமே!   அந்த நூலை வெளியிட முதலில் முடிவு செய்யவில்லை. நான் இப்படிக் கவிதைகள் எழுதி இருக்கிறேன் என்ற தகவல் கூட மற்றவர்களுக்குத் தெரியாது. தீர்ப்பு வந்த போது மீண்டும் எழுதுகிறேன் என்று புரிந்து கொள்வது மாதிரியான‌ ஓர் அறிவிப்பைக் கொடுத்தேன். அப்படிக் கொடுத்தும் கூட உடனடியாக நான் ஏதும் செய்யவில்லை. அப்போது எல்லோரும் “இப்படி ஓர் அருமையான தீர்ப்பு வந்திருக்கிறது, ஒரு விரிவான பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, அறிவிப்பு கொடுத்து விட்டு எழுத வாருங்கள்” எனச் சொன்னார்கள்.   முதலில் சென்னையில் தான் அப்படியான ஒரு கூட்டம் நடத்தலாம் என்று நினைத்தோம். அப்போது என் ஆங்கில மொழிபெயர்ப்புகளை பென்குயின் பதிப்பகம் வெளியிட்டார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலான ஒரு பிரச்சனையாக இருந்த காரணத்தினாலும் ஆங்கில ஊடகங்கள் நிறைய ஆதரவு தெரிவித்ததாலும் “சென்னையில் நடத்துவதை விட தலைநகரான தில்லியில் அறிவிப்பை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும், நீங்கள் மீண்டும் எழுத வரும் செய்தி இந்திய அளவில் பரவுவதற்கு வாய்ப்பாக அமையும்” என்று நண்பர்கள் சொன்னார்கள். அந்த அடிப்படையில் தான் அது தில்லியில் நடத்தப்பட்டது.   அப்போது நான் சொன்னேன், “வெறுமனே மீண்டும் எழுத வருவதை அறிவிக்கும் ப்ரஸ் மீட்டாக மட்டும் இல்லாமல், நான் இந்தக் காலகட்டத்தில் எழுதிய கவிதைகள் இருக்கின்றன, அது நன்றாக இருந்தால் நூலாக்கி, அந்நிகழ்வை ஒரு நூல் வெளியீட்டு விழாவாகவும் வைக்கலாம். அது திரும்ப எழுத வருவதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும்”. அதை எல்லோருமே சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள்.   அப்படித்தான் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு நூல் வெளியீட்டு விழாவாகவும் மாறி தில்லியில் நடந்தது.     116. தமிழ் பிபிஸி முரளிதரன் தீர்ப்பையொட்டி உங்களைத் தொடர்பு கொள்ள முயன்ற போது முடிய வில்லை எனச் சமீபத்தில் பதிவு செய்திருந்தார். நீங்கள் மீண்டும் எழுதுவதாக அறிவித்ததும் ஏராளமான ஊடகங்கள் (தமிழ் மின்னிதழ் உட்பட) உங்களைப் பேட்டிக்காவும், படைப்புக்காகவும் தொடர்பு கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். அதனாலேயே “மௌனமாக இருக்க விடுங்கள்” என்று கோரிக்கை விடுத்தீர்கள். உங்கள் கவிதையில் வரும் “மண்ணை வெளித்தள்ளும் போதில் / காற்றும் வெளிச்சமும் படக் / கூசிச் சிலிர்த்துக் / கணத்தில் வளைக்குள் ஏகும்” வெள்ளெலியின் மனோபாவம் தானே அது?   மறுபடி ஒரு பரபரப்பு வட்டத்துக்குள் வர விரும்பவில்லை. அப்படியான பரபரப்பிலிருந்து எப்போதும் விலகி நிற்கும் மனோபாவம் தான் எனக்கு. எனக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்து கொண்டு ஓர் அமைதியான வாழ்க்கையை மேற்கொள்வது தான் என் விருப்பம். அதனால் மறுபடி இந்தத் தீர்ப்பைப் பற்றியும், பிரச்சனை பற்றியும் பேசிப் பரபரப்பு உருவாவதை நான் விரும்பவில்லை. அது தான் முக்கியக் காரணம். இப்போது கூட நான் அவற்றை எல்லாம் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பதற்கும் காரணம் அதுவே.     117. மாதொருபாகனிலிருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்வோம். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படும் நவீன இலக்கியப் பிரதிகளே அரிது. எழுத்தாளன் சொந்த முயற்சியில் செய்து கொண்டால் தான் உண்டு என அடிக்கடி சொல்லப்படுகிறது. உங்களுக்கு எப்படிச் சாத்தியமானது?   2004ல் கூளமாதாரியும், நிழல்முற்றமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. வ.கீதா மொழிபெயர்த்தார். ஒரு பதிப்பகம் தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வந்த போது, என் நாவல்களைப் படித்துப் பார்த்து, அவர்களுக்குப் பிடித்திருந்தது என இவற்றைத் தேர்ந்தெடுத்துச் செய்தனர்.   என் படைப்பின் மொழிபெயர்ப்புகள் எதுவும் நான் முயற்சி எடுத்து நடந்தவை கிடையாது; இயல்பாக நடந்தவை தாம். என்னுடைய பணி என்பது எழுதுவது, அதை முடிந்த அளவு தமிழில் பிரசுரம் செய்வது என்ற அளவில் முடிந்து விடுகிறது. அதற்கு மேல் அதைப் படிப்பவர்கள், மொழிபெயர்க்கும் வாய்ப்பு உள்ளவர்கள், வெளியிடும் ஆர்வமுள்ள‌வர்களின் முயற்சியால் தான் ஆங்கிலத்துக்குப் போயிருக்கிறது.   மாதொருபாகன் பிரச்சனைக்குப்பிறகு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான‌ One Part Womanக்கு அடையாளமும் அங்கீகாரமும் கிடைத்ததால் என் மற்ற நாவல்களும் ஆங்கிலத்தில் போவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.     118. மொத்தம் உங்களுடைய நான்கு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன: Seasons of the Palm, Current Show, One Part Woman மற்றும் Pyre. முறையே கூள மாதாரி, நிழல் முற்றம், மாதொருபாகன் மற்றும் பூக்குழி. மொத்த நூல்களில் இவற்றைத் தேர்ந்தெடுத்து எப்படி? மொழிபெயர்ப்பு அடிக்கடி நிகழும் எனச் சொல்ல முடியாது. வாசக எதிர்வினை மற்றும் வீச்சு பொறுத்து மாறும். அப்படி இருக்க அமையும் சமயத்தில் நம் சிறந்த நூல்களை மொழிபெயர்க்கவே ஓர் எழுத்தாளர் முனைவார். அப்படியான கங்கணம் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை; பீக்கதைகள் மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாய் உங்கள் எளிய படைப்பான பூக்குழி ஆகி இருக்கிறது. (ஒருவேளை சிறிய நூல் என்பதாலா?) அதனால் கேட்கிறேன்.   இப்போது என் எல்லா நாவல்களையுமே மொழிபெயர்ப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.   இந்தப் பிரச்சனை எல்லாம் வருவதற்கு முன்பே மாதொருபாகனுக்கு அடுத்து கங்கணத்தை மொழிபெயர்க்கும் முடிவு இருந்தது. அதற்கு அடுத்து பூக்குழியைச் செய்வதாக இருந்தது. அப்புறம் மொழிபெயர்ப்பாளர் பூக்குழி அளவு சிறியது என்பதால் அதை முதலில் எடுத்துக் கொண்டார்.     119. உங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிச் சொல்லுங்கள். வ.கீதா, அனிருத்தன் வாசுதேவன் இருவரும் தலா இரண்டு செய்திருக்கிறார்கள் இல்லையா?   ஆம். அடுத்து கோழையின் பாடல்களை அநிருத்தன் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். அப்புறம் பிற நாவல்களையும் அநிருத்தன் தான் மொழிபெயர்க்கப் போகிறார். கீதா வேறு பணிகளில் இருந்ததால் அநிருத்தன் One Part Woman-ஐச் செய்தார். மாதொருபாகன் தமிழில் வந்த போது வாசித்து விட்டு, இதை மொழிபெயர்க்கும் வாய்ப்பு வந்தால் நான் செய்கிறேன் என்று கேட்டார். அவருக்கும் அது தான் முதல் மொழிபெயர்ப்பு. அந்த மாதிரி அவர் அந்த நாவலில் ரொம்ப ஈடுபட்டுச் செய்தார். அப்புறம் தொடர்ந்து என்னுடைய மற்ற நாவல்களை மொழிபெயர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் அவரும் கையெழுத்திட்டிருக்கிறார்.   ஆங்கிலத்தில் எனக்குப் பெரிய அறிவு கிடையாது. ஆனால் இரண்டு பேருடைய மொழிபெயர்ப்புமே நல்ல மொழிபெயர்ப்புகள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதே போல் என் சிறுகதைகளை கல்யாணராமன் மொழிபெயர்த்திருக்கிறார். அசோகமித்திரன், தேவிபாரதியை எல்லாம் மொழிபெயர்த்தவர். இவ்வருடம் விளக்கு விருதை அவர் தான் பெற்றார். எனது ஐந்தாறு கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். இன்னும் பத்துக் கதைகளுக்கு மேல் மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் இருக்கிறார்.   இவர்கள் மூன்று பேருமே முக்கியமான மொழிபெயர்ப்பாளர்களாகக் கருதப்படுபவர்கள். மாதொருபாகன் மொழிபெயர்ப்புக்கு இந்தப் பிரச்சனை எல்லாம் வருவதற்கு முன்னமே கனடா இலக்கியத் தோட்ட விருது கிடைத்தது. சமீபத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான சாஹித்ய அகாதமியும் கிடைத்திருக்கிறது. இந்த மாதிரி மொழிபெயர்ப்பாளர்கள் அமைந்தது ரொம்ப முக்கியமான நல்ல விஷயம் என நினைக்கிறேன்.     120. வட்டார இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. அப்படியே மொழிபெயர்த்தால் அந்நிய மொழியில் நகைச்சுவையாக ஒலிக்கும்; மாற்றினால் மூலத்தின் உயிர்ப்பை இழக்கும். இதை எப்படிக் கையாள்கிறீர்கள்? மொழிபெயர்ப்பு திருப்தியாக இருக்கிறதா? எப்படி அவற்றைச் சரி பார்க்கிறீர்கள்?   ஆங்கிலத்தில் போகும் போது அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். தமிழில் இருப்பது போல் இல்லை. ஓர் எடிட்டிங் குழு இருக்கிறது. ஒரு மொழிபெயர்ப்பைக் கொடுத்தால் அந்தக் குழுவினர் படித்து அதில் பல சந்தேகங்களை எழுப்புவார்கள், மொழி அமைப்பு சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பார்கள். இப்படி ஒரு குழு வேலையாக அது நடக்கிறது. பிறகு அதை மொழிபெயர்ப்பாளருக்குத் தெரிவித்து அவரிடமிருந்து விளக்கம் பெற்று, அவரது திருத்தங்களை அனுமதித்து, அவ்வளவு ப்ராசஸ் அங்கு நடக்கிறது ஒரு மொழிபெயர்ப்பு நூல் வெளியாவதற்கு. அதே போல் மொழிபெயர்க்கும் போது மொழிபெயர்ப்பாளருக்குச் சொற்களில் வரும் சந்தேகங்கள் உள்ளிட்ட‌ பல விஷயங்களை எழுத்தாளரிடம் கேட்கிறார்கள். அப்படி விளக்கம் பெற்ற‌ பிறகு தான் மொழிபெயர்க்கிறார்கள். அநிருத்தன் இப்போது கோழையின் பாடல்களில் கூட நிறைய இடங்களில் சந்தேகங்கள் கேட்டார். இப்படி இருப்பதால் பெருமளவு நல்ல மொழிபெயர்ப்புகள் தான் வருகின்றன.   அது தாண்டியும் மூல மொழியில் இருக்கும் ஒரு விஷயம் இன்னொரு மொழிக்குப் போகையில் வரும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். உதாரணமாக கூளமாதாரியில் பாத்திரப் பெயர்கள் எல்லாம் பட்டப் பெயர்களாக இருக்கும், கூளையன், செவிடி, நெடும்பன் என. இந்தப் பெயர்களை அப்ப‌டியே ஆங்கிலத்தில் போட்டு அடிக்குறிப்பு சேர்ப்பதா அல்லது பெயரையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கலாமா என்ற கேள்வி வந்தது. அவர்கள் விவாதித்து எது சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தார்கள். அந்த மாதிரி ஒரு விவாதம், குழு நடவடிக்கை இருப்பதால் மொழிபெயர்ப்புகள் தரமாக வரும் வாய்ப்பு அதிகம்.     121. மொழிபெயர்ப்புகள் உங்களுக்கு பெற்றுத் தந்த (நேரடி ஆங்கில) வாசகர்கள் பற்றி?   ஆங்கிலத்தில் வாசித்து விட்டு நிறையப் பேசுகிறார்கள், மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். கிட்டத்தட்ட தமிழில் இருக்கும் வாசகர்களின் கருத்தோட்டத்தோடே தான் அவர்களும் இருக்கிறார்கள். ரொம்ப நுட்பமான வாசகர்களும் அதில் இருப்பதைக் காண முடிகிறது. ஒரு விரிந்த தளத்தில் படைப்புகள் போயிருப்பதை அந்த‌ வாசகர்கள் மூலமாக உணர்கிறேன். இன்னொன்று அந்த வாசகர்களுக்கு நான் எழுதும் உலகம் புதியதாக இருக்கிறது. அவர்களின் கருத்துக்களிலிருந்து அதை உணர முடிகிறது.     122. இந்த ஆங்கில வாசகர்கள் எல்லாம் யார்? ஆங்கிலம் தெரிந்த, ஆனால் தமிழ் தெரியாத அல்லது வாசிக்காத‌ தமிழர்களாக இருக்கலாம்; இந்திய ஆங்கில வாசகர்களாக இருக்கலாம்; அல்லது வெளிநாட்டு ஆங்கில வாசகர்களாக இருக்கலாம்.   நீங்கள் சொல்லும் பல தரப்புமே இருக்கிறது. கனடாவிலிருந்து ஓர் அம்மாள். 85 வயதோ 86 வயதோ. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். உத்திரமேரூரில் ஒரு விடுதி நடத்துகிறார். அங்கே நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள். அதை நிர்வகிப்பதற்கான நிதி உதவியை அங்கிருந்து அளிப்பது மட்டுமின்றி மூன்று மாதத்திற்கொரு முறை இங்கே வருகிறார். அவர் One Part Woman-ஐப் படித்திருக்கிறார். இங்கே வந்த போது அவர் என்னைச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டதால், நான் போய்ப் பார்த்தேன். அவர் சொன்ன பிறகு தான் இங்கே தமிழ்நாட்டில் அவர் சார்ந்த நிறுவனங்களில் இருப்பவர்கள் எல்லோருக்குமே என்னைத் தெரிந்திருக்கிறது. இது மாதிரி எதிர்பாராத‌ ஆட்கள் எல்லாம் படித்து விட்டுப் பேசுகிறார்கள்.   வேறு மாநிலங்களில் ஒன்றிரண்டு தலைமுறை முன்னால் போன தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ் வாசிக்கத் தெரியாமல் ஆங்கிலத்தில் என்னை வாசித்திருப்பார்கள். தமிழில் பேசுவார்கள், ஆனால் வாசிப்பு ஆங்கிலத்தில் மட்டுமானதாக இருக்கும். அப்படி இருப்பவர்களை வாசகர்களாகப் பெற முடிந்திருக்கிறது.   இந்திய மொழிகள் சிலவற்றிலும் போயிருக்கிறது. மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் மாதொருபாகன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அப்பகுதி வாசகர்களையும் பெற்றிருக்கிறேன். அது ஒரு பெரிய ரீச் தான்.     123. சாதியும் நானும் தலைப்பில் எழுத்தாளர்களைக் கொண்டு காலச்சுவடில் தொடர் வெளியிடுவதாகத் திட்டமிருந்து பின் உங்கள் மாணவர்களை வைத்து எழுத வைத்துள்ளீர்கள். அது மிக முக்கியமான பதிவு என நினைக்கிறேன். (இன்னும் நான் முழுக்க வாசிக்கவில்லை.) ஆனால் ஏன் எழுத்தாளர்களிடமே கேட்கவில்லை. வெளிப்படையாக எழுத ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்ற தயக்கமா?   இல்லை. அப்படியான ஒரு விவாதம் நடந்தது. ஆனால் அதை யார் எடுத்துச் செய்வது, ஒவ்வொரு எழுத்தாளரிடமும் கேட்டு வாங்குவது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்போது கூடு அமைப்பின் 49வது நிகழ்ச்சி முடிந்து 50வது நிகழ்ச்சி வரப் போகும் சமயம். அதனால் விமரிசையாக ஏதாவது செய்ய வேண்டும் என எல்லோரும் விரும்பினார்கள்.   விமரிசை என்பது நிகழ்ச்சி நடத்துவது, நிறையச் செலவு செய்வது என்பதாக அல்லாமல் கான்க்ரீட்டாக ஏதாவது ஒரு வேலை செய்வது என யோசித்து ஒரு புத்தகம் வெளியிடுவது என முடிவு செய்தோம். கூடு அமைப்பில் இருக்கும் எல்லோரும் பங்கேற்று எழுதுவது போல் ஏதேனும் செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். ஆய்வுக் கட்டுரை என்பது வழக்கமான ஒன்றாகப் போய்விடும் என்பதால் பலவிதமான தலைப்புகளை யோசித்தோம். அப்போது நான் முன்வைத்தது இந்தத் தலைப்பு. இது நான் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்த தலைப்பு என்பதால் ஏதாவது ஒரு வகையில் சாத்தியம் ஆகட்டும் என்றெண்ணி மாணவர் முன் இத்தலைப்பை வைத்த போது ஒப்புக் கொண்டார்கள். அப்படித்தான் இது மாணவர்களிடம் போனது.   காலச்சுவடில் எழுத்தாளர்களிடம் கேட்டு ஒரு முயற்சி எடுத்திருந்தால் செய்திருக்கலாம் தான். எத்தனை எழுத்தாளர்கள் எழுதி இருப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு முயற்சி எடுத்திருந்திருக்கலாம். எனக்கும் அப்போது பல‌ வேலைகள் இருந்ததால் அதில் ஈடுபட முடியாமல் போனது தான் காரணம்.     124. இந்த ‘கூடு’ இலக்கிய அமைப்பு பற்றிச் சொல்லுங்கள்.   நான் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து கூடு என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். மொட்டை மாடியில் ஷெட் போட்டிருந்தது அல்லவா, அங்கே தான் நடத்துவோம். மாதம் ஒரு கூட்டம். கூடு ஆய்வுச் சந்திப்பு என்று பெயர் வைத்து எம்ஃபில், பிஹெச்டி மாணவர்கள் சேர்ந்து நடத்தினோம். அது ஒரு ஐம்பத்தி இரண்டு கூட்டங்கள் நடந்து விட்டன. அதன் 50வது கூட்டத்தில் தான் சாதியும் நானும் நூல் வெளியிட்டோம்.   ஆர்வமுள்ள இளங்கலை, முதுகலை மாணவர்களும் கூட கலந்து கொள்வார்கள். கடைசியாக நடந்த கூட்டங்களில் 40 முதல் 50 பேர் வரை கலந்து கொண்டார்கள். நிறைய எழுத்தாளர்கள் வந்து இதில் பேசி இருக்கிறார்கள். பிரபஞ்சன், பா.செயப்பிரகாசம், ஜெயமோகன், வீ.அரசு, க.மோகனரங்கன் இப்படி நிறையப் பேர். ஏதாவது சந்தர்ப்பத்தில் இப்பக்கம் வருகையில் அந்த எழுத்தாளர்களைக் கூப்பிட்டுப் பேச வைப்போம்.   பெரிய அளவுக்குச் செலவு ஏதும் இல்லாமல் அந்நிகழ்ச்சிகள் நடந்தன. இப்பகுதியில் இருக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விஷயமாகவும், பரிமாறிக் கொள்ளும் இடமாகவும் அது இருந்தது.     125. இப்போதும் அது நடக்கிறதா?   இல்லை. இந்தப் பிரச்சனைக்குப் பிறகு அது நடக்கவில்லை. அது சார்பாக இப்போது ‘கூடு ஆய்விதழ்’ என்று ஓர் இதழ் நடத்தலாம் என முடிவு செய்திருக்கிறோம். அது இன்னும் ஓரிரு மாதங்களில் வெளி வரும். இப்போது மாணவர்கள் அதற்காகக் கட்டுரைகள் தயார் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.     126. விமர்சனம் மற்றும் ஆய்வு முதலியவற்றில் ஆர்வமே இல்லை என்றும் உங்கள் பெரும்பாலான கட்டுரைகள் கேட்கப்பட்டதால் எழுதப்பட்டவை என்றும் துயரமும் துயர நிமித்தமும் முன்னுரையில் சொல்லி இருக்கிறீர்கள். அது முதல் கட்டுரைத் தொகுதி. பிற்பாடு அதில் மாற்றம் ஏற்பட்டதா?   இப்போதும் கட்டுரைகள் எழுதுவதை நிர்ப்பந்தத்தால் தான் செய்கிறேன். எனக்கு அதில் பெரிய விருப்பம் இல்லை. கவிதை, நாவல், சிறுகதை இவற்றில் கிடைக்கும் நிறைவு கட்டுரையில் கிடைப்பதில்லை. அது ஏதேனும் தேவையை ஒட்டி அல்லது யாராவது கேட்கையில் எழுதுவதாகத்தான் இன்று வரை இருக்கிறது.     127. சுஜாதாவின் திருக்குறள் உரையின் கோணல்கள் மற்றும் ஆழமற்ற தன்மை குறித்து விமர்சித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தீர்கள். (அதை சமீபத்தில் தான் வாசித்தேன். இடையே நான் வேறு திருக்குறள் காமத்துப் பாலுக்கு ஒரு குறுங்கவிதை உரை எழுதி விட்டேன் என்பதால் சற்று குற்றவுணர்வுடன் தான் படித்தேன்.) திருக்குறளுக்கு ஒரு நல்லதொரு செறிவான உரை எழுதும் திட்டமுண்டா? இன்றைய தேதியில் மக்கள் பின்பற்ற வேண்டிய சரியான உரை என எதைச் சொல்வீர்கள்?   திருக்குறளுக்கு என்றில்லை. தமிழ் இலக்கணங்களுக்கும், சங்க இலக்கியங்களுக்கும் உரையெழுத வேண்டும் என ஒரு கட்டத்தில் எனக்குத் தோன்றியது உண்டு. பாடம் நடத்தும் போது எனக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை மனதில் வைத்துக் கொண்டு அது மாதிரி நினைத்திருந்தேன். பாடத்திட்டத்துக்காக ஒரு காலத்தில் எழுதப்பட்ட உரைகள் எல்லாம் இன்று பழையதாகி விட்டன. குறிப்பாய் அவற்றின் மொழிநடை.   அந்த அடிப்படையிலும், நான் எப்படிக் கற்பிக்க வேண்டும் என நினைக்கிறேனோ அதற்கேற்ற வகையிலும் உரையெழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் அது என்னுடைய வேலை இல்லை என்ற தெளிவு வந்தது. அதற்கு நிறைய நேரமும் உழைப்பும் வேண்டும். என்னுடையதை அதற்குச்செலவிட விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அவற்றை ஒரு படைப்பில் செலவிடுவது எனக்குத் திருப்திகரமானது.   திருக்குறளுக்குக் கூட உரையெழுதித் தரச் சொல்லி காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து வேங்கடாசலபதியும் கண்ணனும் பல முறை கேட்டு விட்டார்கள். அதற்காக திருக்குறளின் ஒட்டுமொத்த உரைத் தொகுப்பை எல்லாம் கூட எனக்கு வாங்கிக் கொடுத்தார்கள். உரையெழுதுவது என்னுடைய வேலை இல்லை என்ற தெளிவு வந்து விட்டதால் அதையும் கூட நான் செய்யவில்லை. உரையெழுதும் விஷயம் வேறொரு ஆள் செய்து விட முடியும், ஆனால் படைப்பாளியாக நான் எழுத நினைக்கும் ஒன்றை வேறு யாரும் செய்ய முடியாது. அதனால் எந்நூலுக்கும் உரையெழுதுவதாக எண்ணமில்லை. பழைய நூல்களைப் பதிப்பிக்கும் எண்ணமுண்டு. ஆனால் பதிப்பு வேலையில் கூட இனி எவ்வளவு ஈடுபட முடியும் எனத் தெரியவில்லை.   (பெருமாள்முருகன் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் செம்பதிப்புகளைக் கொண்டு வர மிகுந்த முயற்சி எடுத்தார் என்றும் காலச்சுவடு வெளியீடுகளாக வர இருந்தன என்றும் பிஏ கிருஷ்ணன் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். அதைப் பற்றிக் கேட்ட போது பெருமாள்முருகன், "என் திட்டங்களை எல்லாம் காலம் தன் கையில் எடுத்துக்கொண்டது. அதனிடமிருந்து சிலவற்றையேனும் மீட்க முயல்கிறேன். அதில் கீழ்க்கணக்கும் அடக்கம். பார்க்கலாம்." எனச் சொன்னதாகப் பதிவு செய்திருக்கிறார்.)   திருக்குறளுக்கு எளிமையான உரை என்றால் இன்று வரை மு.வ. எழுதியது தான். அதைத் தாண்டிச் செய்த‌ பலரும் அதைப் பின்பற்றித் தான் செய்திருக்கிறார்கள். பழைய உரையாசிரியர்களில் பரிப்பெருமாள் என்பவரின் உரை எனக்குப் பிடித்தது. செறிவாகவும் வேறுபட்ட ஒரு முறையிலும் அந்த உரை இருக்கும்.     128. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… உங்கள் வாழ்க்கைச் சம்பவங்களை முன்வைத்த சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுதி. அது போல் மேலும் எழுதும் எண்ணமுண்டா?   அது மாதிரி இன்னும் நிறையக் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன் மறுபடியும். அதெல்லாம் நூலாக வரவில்லை. அவற்றைத் தொகுக்க வேண்டும். என் அம்மாவைப் பற்றியே இரண்டு கட்டுரை எழுதி இருக்கிறேன். ஊர் பற்றிய கட்டுரைகள், படைப்பு பற்றிய கட்டுரைகள் இப்படி எழுதி இருக்கிறேன்.   மொத்தத்தில் நானெழுதிய கட்டுரைகள் இன்னும் தொகுக்கப்படாமல் இருக்கின்றன. தொகுத்தால் நாலைந்து புத்தகங்கள் வரும். பொருள்வாரியாகத் தொகுக்க வேண்டும்.     129. சுயசரிதை எழுதும் திட்டமிருக்கிறதா?   (சிரிக்கிறார்.) அப்படி எல்லாம் ஏதும் இல்லை. இந்தக் கட்டுரைகளிலேயே நிறைய என் சுயசரிதை தான். பேட்டிகளில் வந்து விட்டது. அதைத் தாண்டி சுயசரிதத்தில் என்ன எழுத முடியும் எனத் தெரியவில்லை.     130. பதிப்பாசிரியர் பணி உங்களுக்குப் பிடித்தமானது. காலச்சுவடு வெளியிட்ட கு.ப.ரா. கதைத் தொகுதிக்கு நீங்கள் பதிப்பாசிரியர் என்பது ஓரளவு தெரிந்த செய்தி. வேறு என்ன நூல்களைப் பதிப்பித்திருக்கிறீர்கள்?   அடையாளம் வெளியிட்ட கு.ப.ரா. சிறுகதைத் தொகுப்பில் சில பிரச்சனைகள் இருந்தன என்பதால் இதைத் தொகுத்தேன். தி.அ.முத்துசாமிக் கோனார் எழுதிய கொங்குநாடு என்ற நூலைப் பதிப்பித்திருக்கிறேன். அது கொங்கு நாட்டின் முதல் வரலாற்று நூல். 1930களில் அவர் நடத்திய பத்திரிகையில் தொடராக எழுதினார். அக்காலத்தில் பத்திரிகையில் தொடராக வருனவற்றை நூலாக்க பாரங்களை எடுத்து வைத்திருப்பார்கள். சிலரிடம் மட்டும் அதன் பிரதிகள் இருந்தன. அதைப் பதிப்பித்தேன். அது முக்கியமான வரலாற்று நூல்.   மா.கிருஷ்ணனின் பறவைகளும் வேடந்தாங்கலும் என்ற நூல். கலைக் களஞ்சியத்தில் அவர் எழுதிய பறவைகள் பற்றிய கட்டுரைகள் அவை. நான் பதிப்பித்ததில் மிக முக்கியமானது கு.ப.ரா. சிறுகதைகள்.     131. பதிப்பாசிரியர் பணி என்பது ப்ரூஃப் பார்ப்பது மட்டுமல்ல. அதன் கீழ் வரும் பணிகள் என்ன என்ன என்பதைச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?   பதிப்பு என்பது ஒரு நூலை வாசகருக்கு என்னென்ன விதத்தில் பயன்படச் செய்ய முடியுமோ அத்தகைய வசதிகளை உருவாக்கித் தருவது. அதனால் தான் பதிப்பில் நூல் அல்லாமல் அதற்கு முன்பும் பின்பும் இருக்கும் விஷயங்கள் முக்கியமானவை என்று சொல்கிறோம். உதாரணமாக கு.ப.ரா. சிறுகதைகளில் பின்னால் கதைகளுக்குத் ‘தலைப்பகராதி’ என்று ஒன்று சேர்த்திருக்கிறேன். இப்போது ஒரு வாசகருக்கு கு.ப.ரா.வின் ‘கனகாம்பரம்’ கதையை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் எனில் மற்ற பதிப்புகளில் கண்டுபிடிப்பது கஷ்டம். பொருளடக்கத்தில் தேட வேண்டும். சில பதிப்புகள் இரண்டு, மூன்று பாகங்கள் இருக்கும். எந்தப் பாகத்தில் இருக்கிறது என்று கூடத் தெரியாது. இந்தத் தலைப்பகராதியைப் பார்த்தால் உடனடியாக கனகாம்பரம் எத்தனையாவது பக்கம் என்று எளிதில் எடுத்து விடலாம். அப்ப‌டி இருக்கும்.   அடுத்து அவர் பயன்படுத்தி இருக்கும் சொற்களில் நிறைய இன்றைக்குப் புழக்கத்தில் இல்லாத சொற்கள். இன்றைய வாசகருக்கு அது புதிதாகவும் பொருள் தெரியாததாகவும் இருக்கும். சில இடங்களில் பொருள் தெரியவில்லை எனில் கடந்து போக முடியாது. அப்படிப்பட்ட சொற்களைத் தொகுத்து, அவற்றுக்குப் பொருள் கொடுத்து ஓர் அகராதியை நூலின் பின்னால் கொடுத்திருக்கிறேன். வாசகருக்கு ஏதேனும் சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை எனில் உடனடியாகப் பின்னால் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.   ஒருவர் நூலை ஆய்வுக்குப் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்குத் தேவையான தரவுகளை நூலில் வைத்திருக்க வேண்டும். அவற்றை அவரே திரட்டிக் கொள்ள வேண்டும் என்பதில்லை. சிலவற்றை அப்படித் திரட்டித்தான் ஆக வேண்டும். ஆனால் பொதுவான விஷயங்களை எல்லாம் பதிப்பாசிரியர் கொடுக்க வேண்டும். இதில் ஒவ்வொரு கதைக்கும் அப்படி விவரங்களைக் கொடுத்திருக்கிறேன்.   கதை எந்த ஆண்டு எழுதப்பட்டது, எந்த இதழில் வெளியானது, அப்போது என்ன தலைப்பு, அது மாற்றம் பெற்றிருக்கிறதா, இதழில் வந்த கதைக்கும், புத்தகத்தில் இருக்கும் கதைக்கும் ஏதேனும் பாட வேறுபாடுகள் இருக்கிறதா இந்த விவரங்கள் எல்லாம் அதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன‌. ஆராய்ச்சி செய்பவர்களுக்கும், வாசகர்களுக்கும் இவை பயனுள்ளவை. இது மாதிரி ஒரு நூலில் வாசகருக்கு என்னென்ன சிக்கல்கள் வருமோ, அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நூலுக்குள்ளேயே வைப்பது பதிப்பாசிரியரின் பணி.   இப்படிப் பல வேலைகள் செய்ய வேண்டும். அப்போது தான் அது உண்மையில் பதிப்பு என்ற அந்தஸ்தைப் பெறும். இருப்பதை அப்படியே ப்ரூஃப் பார்த்து, அச்சுக் கோர்த்து கொடுத்து விடுவது என்பது பதிப்பு ஆகாது.   அதனால் ஒரு பதிப்பாசிரியரின் பணி என்பது ரொம்ப முக்கியமானது.     132. உங்கள் நூல்களில் குறைவாக விற்றதும் அதிகமாக விற்றிருக்க வேண்டியதும் பதிப்புத் துறை சார்ந்து எழுதிய பதிப்புகள் மறுபதிப்புகள் நூல் எனச் சொல்லி இருக்கிறீர்கள். இது போல் நம் மண்ணுக்கே உரிய வினோதச் சங்கடங்களை ஓர் எழுத்தாளன் எப்படி எதிர்கொள்வது? இப்படி சொல்லிக்காட்டுவதைத் தாண்டி.   இந்த மாதிரியான சங்கடங்களை வெளிப்படுத்துவதன் மூலமாக ஏதேனும் அசைவை ஏற்படுத்த முடியுமா என்று பார்க்கலாம். முடிந்த அளவு எல்லா இடங்களிலும் அதைச் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன்.   ஒரு நூலை வாசகர்கள் வாங்கும் போது விலை குறைச்சலாக ஒன்று கிடைத்ததென்றால் அதை வாங்கி விடுவது என்பது தான் பெரும்பாலும் இருக்கிறது. அப்படி இல்லாமல் அது தரமான பதிப்பா? நமக்குத் தேவைப்படும் விஷயங்கள் உள்ள பதிப்பா? என்று கவனித்துப் பார்த்து வாங்க வேண்டும். அந்தப் பார்வை வாசகர்களிடம் வந்தது என்றால் பதிப்பகங்கள் அந்தத் தரத்தோடு வெளியிடுவதற்குத் தயாராவார்கள்.   நம் வாசகர்கள் பதிப்பகங்களிடம் தம் தேவையை முன்வைத்துக் கோருவதில்லை. நாம் கேட்டால் தான் அவர்கள் அதற்குத் தயாராவர்கள். இன்று நுகர்வோருக்கு என்ன தேவையோ அதைத் தரும் காலகட்டம்.   நாம் தேவைகளை நிறைவேற்றாத நூல்களைப் புறக்கணிப்பதில்லை. எது கைக்குக் கிடைப்பதோ அதை வாங்குவது என்ற பார்வை தான் இருக்கிறது. பதிப்பு பற்றியான விழிப்புணர்வு இல்லை. நீண்ட இலக்கியப் பாரம்பரியம் உடைய நம் மொழியில் தான் இந்த விழிப்புணர்வு அதிகமாக இருந்திருக்க வேண்டும். பதிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெகுஜனமயப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை. அது துரதிர்ஷ்டம் தான். வாசகர்களுக்கு அப்படினான விழிப்புணர்வைத் தர வேண்டும் என்பதற்காக வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இது சம்ப‌ந்தமான விஷயங்களைப் பேசிக் கொண்டே இருக்கிறேன். அதன் மூலம் என்னாலான ஒரு சிறுவிழிப்புணர்வையேனும் ஏற்படுத்த முடியுமா எனப் பரிசோதித்துப் பார்க்கிறேன்.     133. நேரெதிரான விஷயம். உங்கள் நூல்களில் மாதொருபாகனுக்கு அடுத்து அதிகம் விற்பனையானது எது?   மற்றதெல்லாமும் மூன்று அல்லது நான்கு பதிப்புகள் வந்து விட்டன. பூக்குழி நன்றாக விற்றது. நல்ல கவனமும் கிடைத்தது. கங்கணமும் இரண்டாம் பதிப்பு நன்றாக விற்றது.     134. தொகுப்பாசிரியராகவும் பல நூல்களுக்கு இருந்திருக்கிறீர்கள் அல்லவா? அந்தப் பங்களிப்புகள் பற்றியும் அவ்வேலையின் சவால்கள் குறித்தும் பேசுங்கள்.   கொங்குச் சிறுகதைகள் மற்றும் தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள் - இவற்றைத் தொகுத்திருக்கிறேன். அறிஞர் அண்ணாத்துரையின் நூற்றாண்டின் போது அவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை தீட்டுத்துணி என்ற பெயரில் பதிப்பித்திருக்கிறேன். பிரபஞ்சனுடைய இருபது சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து சித்தன் போக்கு என்ற பெயரில் காலச்சுவடில் வெளியிட்டிருக்கிறேன். சி.சு.செல்லப்பாவின் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து கூடுசாலை என்ற தொகுப்பு நூலைக் கொண்டு வந்திருக்கிறேன்.   இவை எல்லாமே தேர்ந்தெடுத்த கதைகள். அதில் சவால் என்னவென்றால் நிறையப் படித்து அதிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாய் அண்ணா நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் எழுதி இருக்கிறார். அவற்றிலிருந்து சிறந்ததெனப் பத்து, பதினைந்து கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சி.சு.செல்லப்பா கிட்டத்தட்ட 120 கதைகள் எழுதி இருக்கிறார். அதிலிருந்து சிறந்த‌ கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு அவ்வளவு கதைகளையும் படித்து, அவற்றில் என்னுடைய அளவுகோல்களுக்கு ஏற்ற மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன். அப்படி ஒன்பது கதைகளை மட்டும் தான் நான் தேர்ந்தெடுத்தேன்.   அவருடைய மற்ற கதைகள் தேவையில்லையா எனக் கேட்டால் அவை வேறொரு வகையில் தேவைப் படும். இன்றைய வாசகர்கள் சி.சு. செல்லப்பாவின் 120 கதைகளையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் எப்படியான எழுத்தாளர் என்றறிய இன்றைய வாசகர் விரும்பினால் தேர்ந்தெடுத்த கதைகளைத் தருகிறேன். அந்த அடிப்படையை வைத்துக் கொண்டு தொகுப்பது சிரமம். நம் அளவுகோல்கள் என்ன எனத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நல்ல கதைகள் விடுபட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுத் தளத்தில் ஒருவர் இந்த மாதிரி ஒரு நல்ல கதையை இவர் விட்டு விட்டார் என்ற சொல்லி விடக்கூடாது. இவற்றை எல்லாம் யோசித்துச் செய்ய வேண்டும். அது ஒரு பெரும் பொறுப்பு தான்.   ஆனால் இதைச் செய்து தான் ஆக வேண்டும். இப்படியான தொகுப்புகளுக்கு இன்று அவசியம் இருக்கிறது. சிறுகதை வரலாற்றில் மணிக்கொடி இதழாசிரியர் பி.எஸ்.ராமைய்யா முக்கியமான ஓர் இடம் பெறுகிறார். அவர் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி இருக்கிறார். ஆனந்த விகடனில் ஒரு வருடம் முழுக்க வாரம் ஒரு சிறுகதை எழுதியவர். இன்றைய வாசகர் அவரைப் படிக்க வேண்டும் எனில் எங்காவது தேடிப் பிடித்து எல்லாவற்றையும் வாங்க வேண்டும், அப்படியே வாங்கினாலும் இரண்டு கதைகள் படித்தால் பிடிக்காமல் போகலாம். அவரது ஐந்நூறு கதைகளில் பத்துக் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொடுக்க முடிந்தால் இன்றைய வாசகர்களுக்கு அது பெரிய உதவியாக இருக்கும். அது மட்டுமின்றி நம் இலக்கிய வரலாற்றுக்கும் அது மிகப் பெரிய ஒரு பங்களிப்பு. வரலாறு பல பேரைக் கடந்து போய் விடும். பெயரை மட்டும் பதிவு செய்து கொண்டு படைப்புகளை விட்டு விட்டுப் போய் விடும். குறிப்பிட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தரும் போது அக்கதைகளுக்கு நாம் ஒரு வாழ்வைத் தருகிறோம். அந்த எழுத்தாளருக்கும் ஒரு வாழ்வை அளிக்கிறோம். நவீன வாசகர்களுக்கு அவரை அக்கதைகளின் வழி அறிமுகம் செய்கிறோம்.   மணிக்கொடி கால எழுத்தாளர்களுக்கு இவற்றின் தேவை இருக்கிறது. என்னால் சி.சு.செல்லாப்பாவுக்குச் செய்ய முடிந்திருக்கிறது. பி.எஸ். ராமையாவுக்கு ஒன்று செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறேன்.     135. நான் திருக்குறளுக்கே அப்படியான ஒரு தேர்ந்தெடுத்த தொகுப்பு கொண்டு வர வேண்டும் என எண்ணினேன். நானே அனைத்துக் குறள்களையும் வாசித்தவன் அல்லன். என் தலைமுறையிலேயே அப்படி என்றால் அடுத்து வருபவர்கள் 1,330 என்ற எண்ணைப் பார்த்து மலைப்பார்கள். அவர்களுக்கு அறிமுகமாகும் சொற்பக் குறள்கள் சிரமமானதாகவோ, அவர்களைப் பொறுத்த வரை பொருளற்றதாகவோ இருந்தால் அதை வாசிக்காமலே விட்டு விடுவார்களோ என‌ அதிகாரத்துக்கு 2 அல்லது 3 குறள்கள் வீதம் சுமார் 300 முதல் 400 குறட்பாக்களை விளக்கவுரையுடன் தொகுக்க வேண்டும் என எண்ணி இருந்தேன்.   திருக்குறளில் அப்படித் தொகுப்பதென்பது கஷ்டம். ஓர் அதிகாரத்தில் ஒவ்வொரு குறளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு விஷயத்தைப் பேசும். அதனால் எந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு குறள் பயன்படும் எனச் சொல்ல முடியாது. அம்மாதிரியான கட்டமைப்பு கொண்டது திருக்குறள்.   நவீன இலக்கியத்தில் அப்படிச் செய்யலாம். ப‌ழைய இலக்கியங்களிலும் குறள் தவிர வேறு படைப்புகளில் செய்யலாம். கம்பராமாயணத்தில் டிகேசி 4,000 பாடல்களைத் தொகுத்திருக்கிறார். அது மாதிரி செய்யலாம்.     136. கொங்கு வட்டாரச்சொல்லகராதியை உருவாக்கியவர் நீங்கள். வட்டாரச் சொல்லகராதிகள் சுவாரஸ்யம் மிகுந்தவை. இதற்கெல்லாம் சொற்கள் கொண்டிருந்தனரா என பிரம்மிப்பை அளிப்பவை. வட்டாரம் சார்ந்து எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் உதவக்கூடும். இவற்றைத் தாண்டி அவற்றின் நேரடி லௌகீகப் பயன் என்ன? அச்சொற்களை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வரும் / பரவலாக்கும் என நம்புகிறீர்களா?   ஒரு வட்டார அகராதிக்குப் பலவிதப் பயன்பாடுகள் உண்டு. நம் சமூகத்தில் தேவைகளை உணராதிருப்பதன் காரணமாக பல வேலைகள் நடக்காமல் இருக்கின்றன. தேவைகள் இருக்கின்றன. ஆனால் சமூகம் இது தேவை என்ற உணர்வைப் பெறுவதில்லை. இது இருந்தால் இன்ன விதமான பயன்கள் கிடைக்கும் என்ற உணர்வும் கிடையாது. அப்படித் தான் வட்டார அகராதியின் பயன்களும் தெரியாமல் இருக்கின்றன.   நம் மொழியின் சொல் வளத்தைத் தெரிந்து கொள்வதற்கு இந்த அகராதிகள் பயன்படுகின்றன. ஒரு மொழியில் பயன்படும் எல்லாச் சொற்களும் ஓர் அகராதியில் பதிவாக வேண்டும். அப்படிப் பதிவாகாத சொற்கள் தமிழில் ஏராளம் உண்டு. பல சொற்கள் பதிவு இல்லாமல் மறைந்தே கூடப் போய் விட்டன.   ஆங்கிலத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியில் ஆண்டுதோறும் புதிதாக உருவான‌ சொற்கள் சேருகின்றன. உதாரணமாய் Selfie என்ற சொல் இரண்டு வருடங்கள் முன்பு தான் அகராதியில் ஏறியது. அது மாதிரி எதெல்லாம் புதியதாக வருகிறது என்று பார்த்து அகராதியில் கொண்டு வருகிறார்கள். நாம் இவ்வளவு பாரம்பரியம், வரலாறு கொண்ட மொழி என்கிறோம். ஆனால் நம் மொழியில் உள்ள சொற்களின் முழுத் தரவைத் தரும் ஓர் அகராதி கிடையாது. இதுவரை தொகுக்கப்படவில்லை. எப்போது முடியும்? சொல்வளம் முழுமையாகத் தெரிவதற்கு எல்லாப் பகுதிகளுக்குமான வட்டார அகராதிகள் தொகுக்கப்பட வேண்டும்.   நம் மொழியில் பல விஷயங்களுக்குச் சொற்கள் இல்லை என நினைக்கிறோம் அல்லவா? வட்டார அகராதிகளால் அக்குறையைப் போக்க‌ முடியும். வட்டாரத்தில் நிறைய விஷயங்களுக்குச் சொற்கள் உண்டு. அவை அகராதியில் பதிவாகும் போது பொதுவழக்குக்கு வரும் சாத்தியம் உண்டு. நம்மை அறியாமல் ஒன்றிரண்டு சொற்களாவது அப்படி வந்து விடும். உதாரணமாய் இன்று திரைப்படங்களில் பயன்படுத்துவதன் மூலமாகப் பல சொற்கள் வழக்குக்கு வருகின்றன. வட்டாரச் சொற்களும் கூட அதில் உண்டு. சந்தானம் “பில்லக்கா பசங்க” என்று ஒரு படத்தில் சொல்கிறார். அது வட்டார வழக்குச் சொல் - சென்னை, வட ஆற்காடு மாவட்டங்களில் வழங்கப்படுவது. இன்று அது வழக்கில் வந்து விட்டது. இப்படி வட்டாரச் சொற்களைப் பொருளோடு தொகுத்துத் தரும் போது அது பொதுவழக்குக்கு வரும் வாய்ப்புண்டு.   வட்டார எழுத்துக்களை நாம் வாசிக்கிறோம். அந்த வாசக‌ர்களுக்கு ஏதேனும் சொல்லுக்குப் பொருள் தெரிய வேண்டி இருந்தால் அவர்களுக்கு இந்த அகராதி உதவும். அந்த வகையான பயன்பாடும் இதில் உண்டு.   ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருக்கின்றன‌, வட்டார அகராதிகளின் வாயிலாக‌ அந்த அறிவையும் நாம் பெற முடியும். அது உண்மையில் ஒரு மொழியின் வளத்தைக் குறிப்பது. ஒரே பொருளுக்கு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு சொல் கையாளுவார்கள். அம்மாதிரி சொற்கள் அறிமுகமாகும்.   இப்படி வட்டார அகராதிகளுக்குப் பலவிதமான பயன்பாடுகள் உண்டு.     137. கெட்ட வார்த்தை பேசுவோம் தமிழில் தனித்துவமான முயற்சி. பீக்கதைகளை விடவும் திராணி தேவைப்படும் முன்னெடுப்பு. (பொது வெளியில் பேசச் சங்கடப்படும் விஷயங்களின் வரலாற்றை நான் குங்குமம் இதழில் தொடராக எழுத உங்கள் நூலும் ஓர் உந்துதல். அது நூலாக்கம் பெற்ற போது அமைந்த தலைப்பு எதேச்சையாக உங்கள் நூலின் தலைப்பையே ஒட்டி இருந்தது - வெட்கம் விட்டுப் பேசலாம்.) அந்த நூல் எப்படி உருவானது எனப் பதிவு செய்திருக்கிறீர்கள். அதற்குப் பெற்ற எதிர்வினைகள் பற்றிச் சொல்லுங்கள். அதுவே சுவாரஸ்யம்.   அதற்கு நல்ல எதிர்வினைகள் தான் வந்தன. நிறைய இளைஞர்கள் படித்தார்கள். தொ.ப. மாதிரியான அறிஞர்கள் கூட அதைப் படித்துச் சிலாகித்தார்கள் என்றறிந்தேன். அது மாதிரி முக்கியமான‌வர்களிடம் அந்நூல் போய்ச் சேர்ந்திருக்கிறது. அது பேசப்பட வேண்டிய முக்கியமான விஷயம் எனக் கருதி இருக்கிறார்கள். தலைப்பைப் பார்த்துப் புத்தகத்தை வாங்காமல் விட்டவர்கள், படிக்காமல் விட்டவர்களும் உண்டு. சிலர் “இவர் கெட்ட வார்த்தை பற்றி புத்தகம் எழுதினவர்” என்று ரகசியமாகப் பேசிக் கொள்வதைக் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன். உள்ளே போய் அந்தக் கட்டுரைகளைப் படித்தார்கள் என்றால் யாருமே அவற்றை விரும்புவார்கள். படிக்காமலே அது பற்றிய ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.   அதைத் தொடர்ந்து எழுதினால் இது மாதிரி இன்னொரு ஐந்து பாகம் எழுதலாம்.     138. இதுவே நூல் ஒன்று என்று தான் போட்டிருக்கிறீர்கள், இரண்டாம் பாகம் வரும் எனும் பொருளில். ஆனால் அதைத் தொடர்ந்து எழுதப் போவதில்லை என்று எங்கோ நீங்கள் சொல்லிய நினைவு.   அதற்கு இரண்டாம் பகுதி கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் தான் அந்நூலுக்கு முதல் பகுதி எனப் பெயரிட்டேன். இந்த நூலுக்குப் பிறகு மூன்று கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். எல்லாமே மணல் வீடு இதழில் தொடராக வெளியானவை. மாதொருபாகன் பிரச்சனைக்குப் பிறகு ஏதும் எழுதாததால் அத்தொடர் அப்படியே நின்று விட்டது. ஆனால் ஐந்து தொகுதிகள் எழுதுமளவு விஷயங்கள் இருக்கின்றன.     139. சுகுமாரனை நேர்காணல் செய்திருக்கிறீர்கள். அது ஒரு நல்ல நேர்காணல். இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. நீங்கள் எடுத்த ஒரே பேட்டி அது தானா?   புலவர் இராசுவை ஒரு நேர்காணல் செய்தேன். எடுத்து எழுத முடியாமல் அப்படியே நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. அதை எடுத்து ஏழெட்டு வருடங்கள் இருக்கும். கேஸட்டில் இருக்கிறது. அதை எடுத்து ஒரு மாணவரை வைத்து எழுதினேன். அந்தப் பிரதிகள் இப்போது எங்கே இருக்கிறதெனத் தெரியவில்லை.     140. உங்கள் ஒவ்வொரு கட்டுரைத் தொகுப்புமே ஒவ்வொரு விஷயத்தைப் பேசுகின்றன. வெறுமனே சில தொடர்பற்ற கட்டுரைகளின் தொகுப்பாக அவை இல்லை. சிறுகதைத் தொகுதியையே அப்படி எழுதுபவர் (பீக்கதைகள்) கட்டுரைகளில் அப்படிச் செய்வதை வியக்க ஒன்றுமில்லை. அவ்வகையில் தனிப்பாடல்கள் பற்றிய உங்கள் அனுபவக் குறிப்புகள் வான்குருவியின் கூடு. அவை எப்படி உங்களுக்கு அறிமுகமாயின? ஒரு வாசகனுக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளவற்றில் மிகக் கடைசியாகவே தனிப்பாடல்கள் இருக்கும். நான் உங்கள் நூல் தவிர வேறு தனிப்பாடல்களை வாசித்ததில்லை. சில நூல்களைப் பார்த்திருக்கிறேன். அப்படி இருக்க, அது குறித்த ஒரு நூல் எழுதுமளவு இறங்குவது பிரத்யேகமானது. அதனால் கேட்கிறேன்.   அது கூட பாதியில் நின்று போன ஒன்று தான். நிறையப் பாடல்களை எழுதும் திட்டம் இருந்தது.   உலகத்தமிழ்.காம் என்ற இணைய இதழ் 2000ல் கொஞ்சம் நாள் நடந்தது. அதன் ஆசிரியராக இருந்த அரவிந்தன் அதில் ஏதாவது எழுதச் சொல்லிக் கேட்டார். எனக்கு நெடுநாட்களாய் தனிப்பாடல்கள் குறித்து எழுத வேண்டும் என எண்ணம் இருந்ததால் அதை எழுதினேன். கவிதையாக இருக்கும் தனிப்பாடல்களை எடுத்துக் கொண்டு என்னுடைய அனுபவங்களோடு எப்படி இசைந்தது என்ற பொருளில் அதை எழுதினேன். இன்னும் 40, 50 தனிப்பாடல்களை அப்படி எழுதும் எண்ணம் இருந்தது. எழுத முடியாமல் போய் விட்டது.   தனிப்பாடல்கள் உண்மையில் தமிழில் இருக்கும் மிகப் பெரிய சொத்து என்று தான் நினைக்கிறேன். 17ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டு வரைக்கும் பல புலவர்கள் பல சந்தர்ப்பங்களில் பாடியதை எல்லாம் தொகுத்தது தான் அது. அதற்குப் பல விதத் திரட்டுக்கள் வந்திருக்கின்றன. இன்று வரை ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தொகுத்த ஒன்று என்று ஏதும் கிடையாது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமே நான்கு பாகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். கா.சுப்ரமணியப் பிள்ளை இரண்டு தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தில் நிறையத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.   தனிப்பாடல்களை நமது கல்வித்துறையில் அதிகம் அறிமுகம் செய்வதில்லை. பள்ளிப் பாடத் திட்டத்தில் தனிப்பாடல் திரட்டிலிருந்து ஒன்றிரண்டு பாடல்களை வைப்பார்கள் - காளமேகப் புலவர், ஔவையார் இப்படி. ஆனால் அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் தர மாட்டார்கள். காரணம் எதெல்லாம் பொதுப்போக்குக்கு உகந்தது இல்லை என்று நினைக்கிறார்களோ அம்மாதிரியான பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் இருக்கும். நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகளைச் சிதைப்பது மாதிரியான பாடல்கள் அதில் உண்டு. எல்லா விதமான சொற்களையும் அதில் புழங்கி இருப்பார்கள். அப்படியான ஒரு கட்டற்ற வெளியாக தனிப் பாடல்களின் உலகம் இருக்கிறது. அதனால் தான் கல்வியில் அறிமுகம் செய்யாமல் இருக்கிறார்கள்.   அம்மாதிரியான பாடல்களை எல்லாம் நீக்கி விட்டுப் பதிப்பிப்பது என்பதைக் கூடப் பார்க்க முடிகிறது. அது ஒரு மிகப் பெரிய சொத்து என்பதோடு ஆய்வுக்குரிய விஷயமாகவும் நினைக்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் மூன்று நூற்றாண்டு மனநிலையை ரொம்பத் தெளிவாக முன்வைக்கும் ஒரு மிகப் பெரிய தரவு அது.     141. பேராசிரியர் பணி உங்கள் மனதிற்கு மிக நெருக்கமான பணி என்பதை உணர முடிகிறது. தொழிலின் இருமுனைகளிலும் அது செம்மையாகப் பதிவாகியுள்ளது.  ஒன்று உங்கள் மாணவர்கள் உங்களைப் பற்றி எழுதி இருக்கும் 'எங்கள் ஐயா' நூல். மற்றது நீங்கள் உங்கள் மாணவர்கள் பற்றி தி இந்து நாளிதழில் எழுதும் 'மனதில் நிற்கும் மாணவர்கள்' தொடர். பேராசியர் பணி மற்றும் பங்களிப்பு பற்றி?   நான் விரும்பிச் செய்யும் தொழில் தான் இந்த‌ ஆசிரியர் பணி. ஆனால் நான் மனதில் கொண்டிருக்கும் கல்விக் கொள்கைகளுக்கும் நடைமுறைக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் நான் மனநிறைவோடு, திருப்தியோடு இந்தப் பணியைச் செய்கிறேன் என்று சொல்ல முடியாது. இன்று இருக்கும் இந்த கல்வி அமைப்புக்குள் என்ன சாத்தியமோ அதைத் தான் செய்ய முடிகிறது. கல்வி முறை சார்ந்தும், வகுப்பறை சார்ந்தும், பாடத்திட்டம் சார்ந்தும் என்னுடைய எண்ணங்கள் என்னவோ அவற்றில் ஒரு துளியைக் கூட அமல்படுத்துவதற்கான, நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் கிடையாது.   நான் செய்ய நினைத்ததில் ஒரு இருபத்தைந்து சதவிகிதம் தான் செய்ய முடிந்தது. ஓர் ஆசிரியராக அது ஒரு தோல்வி என்று தான் நினைக்கிறேன். அதற்கு நான் காரணமில்லை என்ற வகையில் தான் திருப்தி.     142. பொதுவாக தமிழக‌ உயர்க்கல்விப்புலம் பற்றிய எதிர்மறைச் செய்திகளே இங்கு அதிகம் இருக்கின்றன. பல்கலைக்கழகங்கங்களில் ஆர்வத்தினால் உந்தப்பட்டு ஆய்வு செய்பவர்களை விட முனைவர் பட்டம் கூடுதல் சம்பளத்தைப் பெற்றுத் தரும் என்பதற்காகச் செய்பவர்களே அதிகம். நான் நேரில் கண்டவர்களில் பெரும்பாலும் அப்படித்தான். சில இடங்களில் காசு வாங்கிக் கொண்டு முனைவர் பட்டம் கொடுக்கப் படுவதாகக் கூடச் சொல்கிறார்கள். காசுக்காக அல்லது காசு கொடுத்து பட்டம் பெற்றவர்களின் துறைசார் ஆர்வமும் முனைப்பும் என்ன லட்சணத்தில் இருக்க முடியும் என்ற அடிப்படையிலேயே தமிழகத்தின் கல்வியாளர்களை இலக்கியவாதிகள் மதிப்பதில்லை எனக் கருதுகிறேன். இங்குள்ள‌ பெரும்பாலான பேராசிரியர்களுக்கு மு.வ.வையும் அகிலனையும் தாண்டி இலக்கியம் தெரியுமா என்றே தெரியவில்லை. பிறகு அவர்கள் எப்படி நவீன இலக்கியத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய முடியும்? நீங்கள், டி.தருமராஜ், அ.ராமசாமி, ஸ்டாலின் ராஜாங்கம் என‌ சில விதிவிலக்குகள் உண்டு என்றாலும் பிரதான முகம் இதுவே. வெளி மாநிலங்களில் சூழல் இத்தனை மோசமானதாய் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இதைப் பற்றி அத்துறையில் புழங்கும் ஒருவராய் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதை மாற்ற முடியுமா?   எதையுமே மாற்ற முடியாது என்று கிடையாது. ஆனால் மாற்றுவதற்கான சூழல் இருக்கிறதா? மாற்றும் அதிகாரத்தில் உள்ள‌வர்களுக்கு அந்த எண்ணம் இருக்கிறதா? மாற்றம் வேண்டுமென்பதில் சந்தேகமில்லை.   குறிப்பாக இந்த இருபது, முப்பது ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்து முதல் தலைமுறையாகக் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நம் கல்வி - அதுவும் உயர்கல்வி - தரம் தாழ்ந்து போவதென்பது இந்த மக்கள் தரமான கல்வியைப் பெறக்கூடாது என ஏதோ ஒரு வகையில் தடுக்கும் நம் சமூகத்தின் அமைப்பு தான் காரணம் என எனக்குத் தோன்றுகிறது.   ஆங்கிலேயர்கள் காலத்திலும், சுதந்திரத்திற்குப் பிறகும் உயர்கல்வியில் நிலவிய மதிப்பீடுகளோடு ஒப்பிடும் போது இன்று அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. அதற்குக் காரணம் இப்படி இருக்குமோ எனத் தோன்றுகிறது. கல்வி ஜனநாயகமாகி விட்டது. பரவலாகப் பலரும் படிக்க‌ வந்து விட்டார்கள். இவர்களுக்கு இதற்கு மேல் என்ன தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற ஓர் அசட்டைப் பார்வை நம் சமூக மனநிலையில் இருக்கிறதோ என எனக்குச் சந்தேகம் இருக்கிறது.   இன்னொன்று பொதுவாக இப்போது நம் சமூகத்தில் எல்லாத் தளங்களிலுமே மதிப்பீடுகள் வீழ்ந்து போயிருக்கின்றன‌. முந்தைய காலத்தில் நாம் எதெல்லாம் அறம் என்றும் ஒழுக்கம் என்றும் சொல்லி வைத்திருந்தோமோ அவை எல்லாம் வீழ்ச்சி அடைந்து இப்போது புதுவித மதிப்பீடுகள் வந்திருக்கின்றன. லஞ்சமோ ஊழலோ இன்று சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம். அது கல்வியிலும் பிரதிபலிக்கிறது. அதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.   இன்று பல்கலைக்கழகங்கள் முழுக்கப் பணம் சார்ந்ததாகவே மாறிப் போனதைப் பார்க்க முடிகிறது. அங்கு அறிவுக்கு இரண்டாம்பட்ச அல்லது நான்காம் பட்ச இடம் தான். அங்கு கிடைக்கும் பதவி என்பதைப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒன்றாகவே பார்க்கிறார்கள். அது ஒரு பொறுப்பு, அதில் என்னென்ன நிறைவேற்ற வேண்டும், என்னென்ன சமூகக் கடமை இருக்கிறது என யோசிக்கும் ஆசிரியர்கள் இல்லை.   அதனால் கல்வித்துறையில் எல்லாத் தரப்பிலுமே பல மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. சமூகம், கல்வி பற்றிய பெரிய கனவுகளைக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் அமைந்தால் தான் அது நடக்கும்.     143. நிச்சயம் அரசுக்குப் பங்குண்டு. நீங்கள் சொல்வது top-down approach. கீழே இருந்து உங்களைப் போன்ற எண்ணம் கொண்ட‌ பேராசிரியர்களால் செய்ய முடிந்த‌ bottom-up approach விஷயங்கள் சாத்தியமில்லையா?   கீழே இருந்து மாற்றங்கள் கொண்டு வருவதற்கு நிறைய இடையூறுகள் இருக்கின்றன. அவற்றை எதிர்கொண்டு போராடி, அந்த மாற்றங்களைக் கொண்டு வர எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்? செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள் கூட இம்மாதிரி இடையூறுகளால் பின்வாங்குவர்.   நம் சமூகத்தில் பொதுவாய்ச் செய்வதற்கான‌ சாத்தியம் இருந்தால் செய்வார்கள், அவர்களாக முட்டிமோதிச் செய்வது என்பது பெரும்பாலும் இருக்காது. கல்வி பற்றி இன்றைய தேவையை ஒட்டிய முற்போக்கான கருத்துக்கள் கொண்டிருக்கும் பல‌ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் பேச்சளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படிச் சுருங்கிப் போகிறவர்களாகத்தான் ஆகி விடுகிறார்கள். அவர்களுக்கான‌ ஒரு நல்ல களம் இல்லை. அப்படி இருப்பது ஒரு குறைபாடு என்று தான் நினைக்கிறேன்.   அதனால் கீழ்மட்டத்திலிருந்து செய்ய நினைப்பவர்களுக்கு என்ன மாதிரியான இடையூறுகள் இருக்கின்றன என்று கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த மாதிரியான இடையூறுகளைத் தாண்டி “நான் வேலையே போனாலும் இதெல்லாம் செய்வேன்” என்று ஒருவர் முன்வருவதற்கான சூழலும் இங்கில்லை. ஏனெனில் இங்கு ஒரு வேலையில் போய் நம்மைப் பொருத்திக் கொண்டோம் எனில் வாழ்நாள் முழுக்க அந்த வேலையைத் தான் செய்து கொண்டிருக்க வேண்டி இருக்கிறது. அதை விட்டு வந்தால் இன்னொரு வேலை அது மாதிரி அமைவதற்கான வாய்ப்பு இங்கே கிடையாது. அதனால் பொருளாதாரரீதியாகவும் சம்பாத்யம் தேவை என்ற அடிப்படையில் நாம் அதோடு ஒட்டிக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.     144. இன்றைய‌ இளைஞர்கள் இணையம் மூலமே வாசிப்பைத் தொடங்குகிறார்கள். மாதொருபாகன் பிரச்சனைக்கு முன்பு வரை ஃபேஸ்புக்கில் இருந்தீர்கள். புகழ் பெற்ற ‘எழுத்தாளனின் சுயமரணப் பிரகடனம்’ வெளியானது அதில் தான். ஒரு வலைதளத்தையும் நடத்தி வந்தீர்கள். சகாயம் கட்டுரைகள் அதில் தான் வந்தன‌. இப்போது யாவும் மூடப்பட்டுள்ளது. மீண்டும் இணையம் வரும் எண்ணமுண்டா?   இப்போது முகநூலில் இருக்கிறேன். மாதொருபாகன் தீர்ப்பு வந்த சமயத்தில் அதையொட்டி ஓர் அறிவிப்பு வெளியிடலாம் என்று சொன்ன போது “முகநூலில் நீங்களே வெளியிட்ருங்க” என்று சொன்னார்கள். அப்போது ஒரு கணக்குத் துவங்கி வெளியிட்டேன். அதிலிருந்து தொடர்ந்து முகநூலில் இருக்கிறேன். ஆனால் பெரிய அளவில் ஆர்வத்தோடு அதில் செயல்படுவதில்லை. நானாக அதில் பதிவு போடுவது அரிதாகவே இருக்கிறது. மற்றவர்கள் போடும் பதிவுகளைப் பகிர்வது தான் பெரும்பாலும் செய்கிறேன்.   முதலில் அதில் நான் இருந்த போது கூட அங்கே அதிகம் நேரம் செலவிடுவதில் எனக்கு அவ்வளவு விருப்பமில்லை. வலைதளத்தில் கொஞ்சம் எழுதினேன். அதில் எழுதுவதற்கென சில விஷயங்கள் வைத்திருந்தேன். மொழி, இலக்கணம், சொற்கள் தொடர்பான‌ சில விஷயங்களை எழுதினேன். எனக்கு ஆர்வமான துறை என்றாலும் அவற்றைப் பத்திரிகைகளில் எழுதுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் அதில் எழுதுவோம் என்று எழுதினேன். அது போல் சகாயம் சம்ப‌ந்தமாகவும் எழுதினேன்.   மற்றபடி, அப்போதும் பெரிய அளவில் வேகமாக அதில் செயல்படவில்லை. அது நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளும் விஷயமாக இருக்கிறது. அதிகபட்சம் அரை மணி, ஒரு மணி நேரம் அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்பேனே தவிர, பெரிய அளவுக்குச் செயல்படும் திட்டம் இனிமேலும் கிடையாது.     145. சகாயம் செய்த சகாயம் நூல் உங்கள் மற்ற எல்லா கட்டுரை நூல்களிலிருந்தும் வேறுபட்டது. உங்கள் ஒரே நேரடி அரசியல் பங்களிப்பும் அதுவே. சகாயம் அதைப் பற்றி ஏதும் பேசி இருக்கிறாரா?   உண்மையைச் சொன்னால் சகாயத்துக்கு அந்தப் புத்தகம் வருவதில் அவ்வளவு விருப்பமில்லை.   புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் அதை எழுதவில்லை. அவரை நாமக்கல்லில் இருந்து மதுரை ஆட்சியராக மாற்றிய சந்தர்ப்பத்தில் என் வலைப்பக்கத்தில் அக்கட்டுரைகளை எழுதினேன். அவர் நாமக்கல்லில் செய்த செயல்கள், அவர் பற்றி மக்கள் மனதில் இருக்கும் பதிவுகள் இவற்றை மையமாகக் கொண்டு நாலைந்து கட்டுரைகள் எழுதினேன். அவர் மதுரைக்குப் போனது தேர்தல் சமயம். அங்கு அதிரடி நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஸ்டாலின் ராஜாங்கம், பாலசுப்ரமணியம், ஜெகநாதன் இவர்கள் மூவரும் இம்மாதிரி செயல்படும் சகாயத்துக்கு ஆதரவாக இலக்கியம் பக்கமிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி என் கட்டுரைகளைச் சிறிய வெளியீடாகக் கொண்டு வருகிறோம் என்று கேட்டார்கள். அதோடு மேலும் இரண்டு, மூன்று கட்டுரைகள் சேர்த்துக் கொடுத்தேன். அதை ஒரு சிறிய பிரசுரமாக வெளியிட்டார்கள். அப்படித்தான் அது முதலில் நூலாக வந்தது. மதுரையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும், பொதுமக்கள் மத்தியில் அவருக்கான நல்லெண்ணத்தை உருவாக்கவும் 2,000 பிரதிகள் குறைச்சலான விலையில் அவர்கள் வெளியிட்டார்கள்.   அதன் பிறகு அக்கட்டுரைகளைச் செம்மைப்படுத்தியும், இன்னும் கொஞ்சம் விஷயங்கள் சேர்த்தும், துண்டறிக்கைகள் போன்ற சில தரவுகளை இணைத்தும் அதை ஒரு நூலாக வெளியிடலாம் என முயற்சி செய்த போது சகாயத்துக்கு அவ்வளவு விருப்பம் இருக்கவில்லை. அதற்குச் சில காரணங்கள் இருந்தன.   முதல் காரணம் ஓர் இடத்துக்குப் பணி மாற்றத்தில் செல்லும் போது தன்னைப் பற்றி நூல் வெளியாவது தனக்குச் சில நெருக்கடிகளை உருவாக்கலாம் என அவர் நினைத்தார். அடுத்தது அந்நூலில் அவரைப் பற்றிய சில விமர்சனங்களை வைத்திருந்தேன் என்பது அவருக்கு நெருக்கமான சிலருக்குத் தயக்கத்தை அளித்தது. அப்புறம் அதில் சொல்லியிருக்கும் சில சம்பவங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இவை எல்லாமும் தான் இது வேண்டாமே என அவர் கருதக் காரணமாக இருந்தன.   அதனால் சில ஆண்டுகள் அந்நூல் வெளிவராமல் இருந்தது. காலச்சுவடில் கொண்டு வரலாம் என முயற்சி செய்த போது, “அவரைப் பற்றியான, அதுவும் அவருக்கு ஆதரவான‌ ஒரு நூல் வருவதை அவரே விரும்பவில்லை எனும் போது நாம் ஏன் அந்நூலை வலிந்து வெளியிடுவானேன், வேண்டாம் விட்டு விடுங்கள்” என கண்ணன் சொன்னார். அதன் பிறகு அந்நூல் மலைகள் பதிப்பகம் மூலமாக வந்தது. அதை நடத்திய சிபிச்செல்வன் என் நண்பர். அவர் புத்தக வெளியீட்டில் இறங்குவதாய்ச் சொல்லி ஏதாவது புத்தகம் தரச் சொல்லி என்னைக் கேட்டார். அவரது பதிப்பகத்துக்கு ஒரு நல்ல அறிமுகமாகவும் சகாயம் பற்றிய இந்த நூல் இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்குக் கொடுத்தேன். அவரும் பதிப்பித்தார்.   நூல் வந்த பிறகு சகாயத்துக்குப் பிரதிகள் அனுப்பி வைத்தேன். அதன் பிறகு அவர் அது பற்றி ஏதும் கருத்துச் சொல்லவில்லை. தடையும் சொல்லவில்லை.     146. சகாயம் பற்றி உண்மைக்குப் புறம்பாய் நீங்கள் எழுதியிருப்பதாய்ச் சொல்லப்பட்ட சம்பவங்கள் எவை?   சகாயம் பற்றி அதில் நான் சொல்லி இருக்கும் சில சம்பவங்கள் நடக்கவில்லை என்று அவர் சொல்கிறார்.   உதாரணமாக ஆட்சியராகப் பொறுப்பேற்க இங்கே வரும் போது சென்னையில் இருந்து ரயிலில் சேலம் வந்தார். அங்கிருந்து பேருந்தில் நாமக்கல் வந்து, இங்கிருந்து சிற்றுந்தில் ஆட்சியர் அலுவலகம் ‍போனார். அங்கே எல்லோரும் புதிய ஆட்சியரை வரவேற்க மாலையை வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள். இவர் அதைப் பொருட்படுத்தாமல் உள்ளே போய் விட்டார். இவரை யாருக்கும் தெரியவில்லை. உள்ளே போய் உட்கார்ந்து பின் ஆட்களை அழைத்தார். நூலில் இப்படி ஒரு சம்பவத்தை எழுதி இருக்கிறேன். அவர் நான் சிற்றுந்தில் எல்லாம் போகவில்லை, சேலத்திலிருந்து காரில் தான் வந்தேன் என்று சொல்கிறார்.   ஆனால் இப்படி ஒரு சம்பவம் மக்கள் வழக்கில் இருக்கிறது. இது நான் உருவாக்கி எழுதியதல்ல. மக்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களைப் பற்றித் தங்களுக்கு விருப்பமான வகையில் கதைகள் உருவாக்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு கதை தான் இது. உண்மையில் இப்படி ஒரு கதை உருவாகும் அளவுக்கு ஒரு நாயக பிம்பம் சகாயத்துக்கு இருக்கிறது என்பது ஓர் உயர்ந்த விஷயம். அவரை மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இப்படிப்பட்ட கதைகளே சாட்சி. இன்னும் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நடந்ததன் மேலே மக்கள் கூடுதலாக சில கற்பனைகளை ஏற்றி இருக்கிறார்கள். இது வாய்மொழி வழக்காறு சம்ப‌ந்தப்பட்டது. அது எப்போதும் கொஞ்சம் மிகையாகச் சொல்லும். ஆனால் அதில் அடிப்படை உண்மை இருக்கும். அந்த உண்மை என்ன என்று தான் நாம் அதில் பார்க்க வேண்டும்.   அவர் வாழுங்காலத்தில் இருப்பவர் என்பதால் அவருக்கு அது உண்மைக்கு மாறான சம்பவமாகத் தோன்றுகிறது. அப்படி அல்ல. அந்தக் கதைக்குள்ளே ஓர் உண்மை இருக்கிறது. அவர் எளிமையானவர், புகழை விரும்பாதவர், ஆடம்பரத்தை விரும்பாதவர் என்ற சித்திரம். அதைக் கொண்டு ஒரு சம்பவத்தை உருவாக்கிச் சொல்கிறார்கள். அந்தச் சம்பவம் உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது அவரது பண்பை வெளிப்படுத்தும் கதையாக மக்களிடம் இருக்கிறது. அப்புறம் மக்கள் ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள் என்ற விஷயமும் அதில் வெளிப்படுகிறது.   இது மாதிரி பல விஷயங்களை நான் அதில் பதிவு செய்திருக்கிறேன். அடுத்து அவர் மீதான என் விமர்சனங்கள். அவை அப்படி ஒன்றும் பெரிய விமர்சனங்கள் கிடையாது. ஆட்சியர் என்பவர் ஓர் அதிகாரி தான். அந்த அதிகாரிக்கு திட்டங்களைப் போடும் அதிகாரம் கிடையாது, திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் மட்டும் தான். அதன் காரணமாக அவர் செயல்பாட்டில் ஓர் எல்லை இருந்தது. அந்த எல்லை தாண்டி அவரால் செயல்பட முடியவில்லை. அது என்னுடைய முக்கியமான விமர்சனமாக அதில் இருந்தது. அந்த எல்லைக்குள் செயல்பட்டதே பெரிய விஷயம் என்பது தான் நான் சொல்ல வந்தது.   என்னால் எப்போதுமே ஒருவர் பற்றிய ஒரு மிகையான புகழ்ச்சியைச் செய்ய முடிந்ததில்லை. ஒருவரை அங்கீகரிக்கும் போதே அதில் எனக்கிருக்கும் விமர்சனங்களையும் முன்வைப்பது என் இயல்பு. அது எனக்கு பல சமயங்களில் சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனாலும் அப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதீத புகழ்ச்சி எதற்கு? நமக்கு ஒரு விமர்சனப் பார்வை இருக்கும் போது அதை முன்வைப்பதில் என்ன தவறு? ஆனால் நம் சமூகத்தில் அப்படிப்பட்ட விமர்சனத்தை அங்கீகரிப்பதோ ஏற்றுக் கொள்வதோ விவாதத்துக்கு உட்படுத்துவதோ இல்லை. இங்கே வெறும் புகழ்ச்சி தான் தேவை.   ஆனால் சகாயம் அதைச் சொன்னார். “நீங்கள் ஓர் எழுத்தாளர். உங்களுக்கு எழுதுவதற்கான எல்லா உரிமைகளும் இருக்கின்றன‌. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இப்போது இந்த நூல் வேண்டாம் என எனக்குத் தோன்றுகிறது” என்று சொன்னார். அதை மதித்து நான் சில ஆண்டுகள் வெளியிடவில்லை.   மாதொருபாகன் பிரச்சனைக்குப் பிறகு நான் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அவர் கிரானைட் சம்ப‌ந்தமான விசாரணை அதிகாரியாக இருந்தார். கல்லூரியில் என்னைப் பார்ப்பதற்கு நேரடியாக வந்தார். “தைரியமாக‌ இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும், மனசு விட்டு விடக்கூடாது” என்று ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அது எனக்கு மிக நெகிழ்ச்சியாக இருந்தது.       147. ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமை என்ன? எழுத்தோடு அது நின்று விடுகிறதா? அல்லது களப்பணி அவசியமா? எனில் அது எல்லோருக்கும் சாத்தியமா?   இல்லை. எழுத்து என்பதே களப்பணி என்று தான் நான் நினைக்கிறேன். அதைத் தாண்டி செயல்பாட்டுக்குப் போவது என்பது எல்லோருக்கும் சாத்தியமான விஷயம் இல்லை. ஏனெனில் எழுத்துக்கே நிறைய நேரம் தேவைப்படுகிறது, எழுத்துக்காகப் பல‌ வேலைகள் செய்ய வேண்டும். அப்படி இருக்கையில் அதைத் தாண்டி களப்பணியில் இறங்கி, அதைச் செய்து கொண்டு எழுதவும் வேண்டும் என்பது ரொம்பக் கஷ்டம்.   அதனால் தான் நிறைய எழுத்தாளர்கள் களத்துக்குச் சென்று செயல்படுபவர்களாக மாறும் போது எழுத்தில் தொலைந்து போய் இருப்பார்கள். எழுத்து என்பதே செயல்பாடு தான் என நான் நம்புகிறேன். அதனால் என்னுடைய செயல்பாடு என்பது எழுத்து சார்ந்தது என்கிற தெளிவு எனக்கு இருக்கிறது. நான் ஒரு மார்க்ஸிய அமைப்பில் இருந்த போது கூட அத்தெளிவு எனக்கு இருந்தது. அதனால் எழுத்தையே ஓர் எழுத்தாளனின் செயல்பாடாகவும் களப்பணியாகவும் நாம் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.     148. ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் இன்று சமூக வலைதளங்களில் எல்லோரும் எழுதுகிறார்கள் - எல்லாவற்றைப் பற்றியும். வாசிப்பவர்களை விட எழுதுபவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரச்சனை பற்றி எழுதுவதுடன் அதில் தன் சமூகக் கடமை முடிந்து விட்டதாய் எல்லோரும் எண்ணுகிறார்கள். இதில் எழுத்தாளனும் அதையே செய்யும் போது தான் இந்தக் குழப்பம் வருகிறது.   சமூக வலைதளங்களில் எழுதுபவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என நீங்கள் பார்க்க வேண்டும். ஒரு படைப்பு என்னவெல்லாம் செய்யும்? அதையும் சமூக வலைதளங்களில் வருவனவற்றையும் சமப்படுத்தக் கூடாது. ஒரு படைப்பு குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும், பேசப்படாத கோணத்தைப் பேசும், அதுவரை இல்லாத‌ பார்வையை முன்வைக்கும். அந்த மாதிரியான தரிசனங்களை எல்லாம் ஒரு படைப்பு தரும். அது தான் முக்கியம். படைப்பு என்பது எழுதிப் போட்டு விட்டுப் போய் விடுவது அல்ல. ஒரு பிரச்சனையில் வாழ்க்கைப் பார்வையைப் படைப்பு எப்படி முன்னிறுத்துகிறது என்பது முக்கியமானது. அந்தப்பார்வையைப் படிப்பவர்களுக்குக் கடத்தியது என்றாலே அது ஏதோ ஒருவிதத்தில் செயல்பட்டிருக்கிறது என்று பொருள்.   படைப்பு என்பது ஓர் அபிப்பிராயம் சொல்வதல்ல; ஒரு விஷயம் பற்றிக் கருத்தை முன்வைப்பதல்ல. அது ஒரு கோணத்தையும் வாழ்க்கைப் பார்வையையும் தருவது. வாசிப்பவர்களுக்கு ஒரு வெளிச்சத்தை அது கட்டாயம் தரும். இந்தப் பக்கத்தை நாம் கவனிக்காமல் விட்டு விட்டோம், இந்தக் கோணத்தை நாம் பார்க்காமல் விட்டு விட்டோம் என்ற பார்வையைத் தருவதாக இருக்கும். அதற்கு வாழ்க்கைரீதியான ஒரு ஜஸ்டிஃபிகேஷன் அதில் இருக்கும். அது தான் இவற்றுக்கிடையேயான‌ ஒரு முக்கியமான வித்தியாசம்.     149. திராவிடம், கம்யூனிஸம், தலித்தியம், இந்துத்துவம், காந்தியம் எனப் பல அரசியல் நிலைப்பாடுகள் இருக்கின்றன. சில இவற்றின் கலவையாகவும் இருக்கின்றன. உங்கள் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருந்தது? என்னவாக இருக்கிறது?   என் அரசியல் நிலைப்பாடு மார்க்ஸியம் தான். அடிப்படையில் நான் இடதுசாரிச் சிந்தனை உள்ளவன். இடது சாரிச் சிந்தனைகள் உள்ளவர்களுக்கு பெரியாரும் அம்பேத்கரும் ரொம்பவும் உவப்பானவர்கள். ஆகவே அந்தச் சிந்தனைகளையும் இதனோடு இணைத்துக் கொண்டவன். அது தான் என்னைத் தொடர்ந்து செயல்படுத்துகிறது. என் விமர்சனப் பார்வை, படைப்புப் பார்வை எல்லாமே இதிலிருந்து உருவாவது தான். அமைப்புகள், கட்சிகள் சார்ந்து எனக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கிறதே தவிர கொள்கை இது தான்.     150. படைப்பாளிகள் அரசியல் கட்சிகளில் சேர்ந்து செயல்படுவது ஆரோக்கியமானது என சமீபத்திய தடம் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தீர்கள். அது எழுத்தாளனின் சுதந்திரத்தையும் நடுநிலையையும் பாதிக்காதா?   அரசியல் கட்சியில் சேர்ந்து செயல்படுவதனால்தான் நடுநிலைமை பாதிக்கப்படுகிறது என்று சொல்ல முடியாது. அப்படி இல்லாமலும் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் சார்புடைய‌ கருத்துக்களைக் கொண்டவர்களாகவே இருக்கிறோம், அதற்குட்பட்டுத்தான் செயல்படுகிறோம். நம்மை அறியாமலேயே நாம் ஓர் எல்லைக்கும் ஒரு வரையறைக்கும் உட்பட்டுச் செயல்படுகிறவர்களாகத் தான் இருக்கிறோம். அதனால் அமைப்பு அல்லது கட்சி சார்ந்து செயல்படும் போது தான் சுந்ததிரம் பாதிக்கும் என்று சொல்ல முடியாது.   தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு காலகட்டத்தில் திராவிட இயக்கத்தில் நிறைய எழுத்தாளர்கள், கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அதன் தாக்கம் பெற்றவர்கள் பல பேர் இருந்திருக்கிறார்கள். ஏனோ எண்பதுகளுக்குப் பின் இந்த மாதிரியான ஒரு பார்வை வந்து விட்டது - இதிலெல்லாம் சேர்ந்து செயல்பட்டால் சரியான படைப்பாளியாக இருக்க முடியாது என. எனக்கு அப்படித் தோன்றவில்லை.   இமையம் ஒரு கட்சி சார்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மனுஷ்ய புத்திரன் இருக்கிறார், ர‌விக்குமார் இருக்கிறார், இப்படிப் பலர் கட்சிகளில் சேர்ந்து செயல்படுகிறார்கள். அவர்கள் படைப்புகளைப் பார்க்கும் போது அப்படி ஒன்றும் பின்வாங்கி அல்லது தாழ்ந்து போய் விட்டதாகத் தோன்றவில்லை. அவை என்ன தளத்தில், என்ன தரத்தில் இயங்க வேண்டுமோ அப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.   அரசியலை நாம் பிழை சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் அதற்குள் போகும் போது தான் நாம் நினைக்கும் சில விஷயங்களைச் சொல்வதற்கோ அதற்கான வெளியை உருவாக்குவதற்கோ முடியும். நாம் எப்போதும் விமர்சனம் வைப்பவர்களாகவும், ஒதுங்கிப் போகிறவர்களாகவும் மட்டுமே இருந்தால் ஆகாது என்ற அடிப்படையில் தான் அதில் பங்கெடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது எனப் பார்க்கிறேன்.     151. அரசியலில் இறங்கும் எண்ணம் இருக்கிறதா? எழுத்தாளனிடம் இப்படிக் கேட்பது ஜாலியான ஒரு விஷயமாகப் பார்க்கப்படலாம். ஆனால் உங்கள் விஷயத்தில் அப்படி இல்லை. நீங்கள் இந்த சமூகத்தின் ஓர் அழுக்கால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர். அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறவர். அதனால் அதைச் சீர் செய்யும் எண்ணம் இருக்கலாம். அதனால் அரசியலில் இறங்கும் எண்ணம் எழுந்திருக்கலாம்.   (சிரிக்கிறார்.) இப்போது அப்படி எல்லாம் எண்ணமில்லை. ஓர் ஆசிரியனாகவும் ஓர் எழுத்தாளனாகவும் இருப்பது தான் என் விருப்பம்.     152. நீங்கள் நாத்திகர் என்று சொல்லி இருக்கிறீர்கள். நான் வாசித்த வரை உங்களின் எந்தப் படைப்பிலும் அது வெளிப்பட்டதே இல்லை. அது ஆச்சரியமாய் இருக்கிறது. பொதுவாய் அது வெளிப்பட்டு விடும்.   சில கட்டுரைகளில் நான் நாத்திகன் என்பதை எழுதி இருக்கிறேன். அது கடவுள் சம்ப‌ந்தமான தீவிரமான தேடலில் ஏற்பட்ட ஒரு புரிதல் தான். என்னைப் பொறுத்தவரை கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை விட கடவுள் தேவைப்படுகிறாரா இல்லையா என்பது தான் முக்கியமான கேள்வி. முதல் கேள்விக்குத் தெளிவான பதிலைச் சொல்லி விட முடியும். இரண்டாவது கேள்வி தான் கஷ்டம்.   இந்தக் காலகட்டத்தில் கடவுள் தேவைப்படுகிறார் என்று தான் நான் நினைக்கிறேன். கடவுளின் தேவை எவ்வளவு காலத்திற்கு இருக்கிறதோ அது வரை கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையும் வாழும்.   எந்தக் கருத்தையுமே படைப்புகளில் நேரடியாகப் பிரச்சாரம் செய்வது என் நோக்கமில்லை. கொள்கைகள், கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு என் வாழ்க்கைப் பார்வைக்குப் பயன்படுத்திக் கொள்வேனே தவிர அவற்றை நேரடியாக வைப்பது எப்போதும் என் வழக்கமில்லை. அது தான் நூல்களிலேயே நேரடியாக இருக்கின்றனவே. நாம் திரும்பப் படைப்புகளில் கொண்டு வந்து வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.   மாறாக இக்கொள்கைகள் படைப்புகளில் நான் தேர்ந்தெடுக்கும் பொருளில் இருக்கும், கதாபாத்திரங்களில் இருக்கும். மார்க்ஸியப் பார்வை இல்லாத ஒருவரால் நிழல்முற்றம் நாவலை எழுதி இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். கூளமாதாரியில் கூளையன் தரப்பிலிருந்து பேச மார்க்ஸியப் பார்வை தேவை.   அப்படியான பார்வைகளை உருவாக்க கோட்பாடுகள் தேவை. நேரடியாகப் படைப்புகளில் கோட்பாடுகளைப் பெய்து வைக்கும் எண்ணம் இல்லை. அந்தத் தெளிவு எனக்குத் தொடக்கத்திலிருந்தே இருந்தது. அதனால் மக்களைப் பற்றி எழுதும் போது அவர்களுக்கு எந்தளவு கடவுள் நம்பிக்கை உண்டு என்பது முக்கியம்தான்.     153. புனைவுகளில் மத நம்பிக்கைகளையோ, சடங்குகளையோ எழுத நாத்திகனான எனக்கு மனத்தடை எழுகிறது. எழுத்து நுட்பத்துக்கும் கொள்கைக்கும் முரண் எழுகிறது. அது தொடர்பாய் உங்கள் மீதான பொறாமையில் எழுந்தது தான் இக்கேள்வி.   வறட்டுத்தனமாக ஒரு கொள்கையைக் கடைபிடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்தச் சடங்கோ நம்பிக்கையோ நமக்கில்லையே! அது பாத்திரத்துக்கு என்ன கொடுக்கிறது என்பது தானே! அத்தெளிவு இருந்தால் சரியாய்த்தான் வரும். அதனால் எனக்கு அது எப்போதுமே தடையாய் இருந்தது கிடையாது.   இன்னொரு விஷயம் நமக்கிருக்கும் கடவுள்கள் எல்லாம் - அவற்றை வழிபடுவது, அவற்றுக்கான சடங்குகள் இவற்றில் எனக்கு வேறுபாடுகள் இருந்தாலும் - மனிதர்கள் தானே! சிறுதெய்வங்கள் என்று சொல்லப்படும் நாட்டார் தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. அதில் அவர்கள் மனிதர்கள் தான். சாதாரண மனிதர்கள் செய்ய முடியாத ஒரு பெருஞ்செயலைச் செய்த மனிதர்கள். அவர்கள் கடவுள்களாக மாறி விட்டார்கள். அவ்வளவு தான். அவர்களை வழிபடுவதன் மூலமாக பருண்மையாக என்ன கிடைக்கிறதோ இல்லையோ மனரீதியான ஆசுவாசம் கிடைக்கிறது. அதை வேறெது கொடுக்கிறது? அதற்கு என்ன மாற்று வைக்கிறோம்? அதுவரை இதெல்லாம் இருக்கத்தான் செய்யும்.   இதைப் புரிந்து கொண்டால் சாதாரண மனிதர்களின் வாழ்வில் அதற்கு என்ன பங்கிருக்கிறது என்பதைத் தயக்கமின்றி எழுதுவீர்கள்.     154. நீங்கள் நாத்திகர் என்று அறிந்ததும் எனக்கு நினைவு வந்த கதை ‘உனக்கு என்ன வேணுமய்யா’ தான். அதன் முடிவு சுயநரபலி. அதையும் நீங்கள் நாத்திகர் என்பதையும் இணைத்துப் பார்க்கவே முடியவில்லை.   பலியிடுவதைத் தடுக்கும் ஒரு சட்டத்தைத் தமிழக அரசு போட்ட போது எழுதப்பட்ட கதை அது.   பலியிடுவது என்பதற்குள் எத்தனை பெரிய நம்பிக்கை நிலவுகிறது! தன்னையே பலியிடுவதற்குத் தயாராக இருக்கும் ஒரு சமூகம். அந்தக் கதைக்கு முதலில் நவகண்டம் என்று தான் தலைப்புக் கொடுத்திருந்தேன். பிறகு எல்லோருக்கும் புரியாது என மாற்றினேன். நவகண்டம் என்றால் தன்னைத் தானே பலியிட்டுக் கொள்வது. அப்படிப் பலியிட்டுக் கொண்ட வீரர்கள் ஏராளம் பேர். அவர்களின் நடுகற்கள் இருக்கின்றன. அவர்களுக்கான பாடல்கள் இருக்கின்றன. போருக்குப் போகும் போது ஜெயித்தால் த‌ன் தலையைப் பலி கொடுக்கிறேன் என வேண்டிக் கொள்வார்கள். அப்படியான ஓர் ஆழமான நம்பிக்கை நிலவும் சமூகம். அந்தளவு முக்கியமான பலியைத் தடை செய்த போது அதற்கு எதிர்வினையாக அதை எழுதினேன்.     155. கங்கணம் தான் இதுவரைக்குமான உங்கள் நாவல்களுள் எனக்குப் பிடித்தமானது. இன்றைய தேதியில் உங்களது மாஸ்டர்பீஸ். உங்களுக்குப் பிடித்த உங்கள் படைப்பு எது?   எனக்குப் பிடித்தது கூளமாதாரி தான். மனதிற்கு நெருக்கமான வகையிலும், அதிலிருக்கும் விஷயங்கள் சார்ந்தும் என‌ இந்த இரண்டு அடிப்படைகளிலுமே.     156. பெருமாள்முருகன் பற்றி ஒரு வாக்கியத்தில் சொல்லுங்கள்.   (வாய் விட்டுச் சிரிக்கிறார்.) பெருமாள்முருகன் பற்றி ஒரு வாக்கியத்தில் சொல்வதா! (சற்று நேரம் யோசித்து விட்டுச் சொல்கிறார்.) நல்ல மனிதனாக வாழ முயல்பவன்.     157. உங்கள் எழுத்துக்கள் தரும் சித்திரத்தில் ஏற்கனவே நீங்கள் அப்படித்தான் எனத் தெரிகிறது.   அப்படி எல்லாம் நூறு சதவிகிதம் சொல்லி விட முடியாதல்லவா! ஒரு முயற்சி தான்.     158. எழுத்தாளன் நல்ல காதலனாக இருப்பது சிரமம் என நினைக்கிறேன். அன்றைய காதலியும் இன்றைய மனைவியுமான எழிலரசி அவர்களால் உங்களுக்கு எழுதப்பட்ட, நீங்கள் படிக்க இயலாமல் போன‌ முதல் காதல் கடிதம் பற்றிய ஏக்கத்தை எழுதியிருக்கிறீர்கள். இந்தியச் சூழலில் காதல் திருமணம் செய்வது என்பதே ஒரு சவால் தான். அதிலும் கலப்பு மணம் இன்னமும் சிக்கல் மிகுந்தது. காதலர்கள் இருவருமே மன உறுதியோடு இருந்தாலன்றி கல்யாணம் சித்திப்பது சாத்தியமில்லை. ஆனால் கடிதத்தைத் தவற விட்டது போல் காதலியைத் தவற விடவில்லை நீங்கள். அதற்குப் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். பொதுவாய் உங்கள் எழுத்து மற்றும் பேச்சிலிருந்து உங்கள் மனைவி மீது மிகுந்த பிரியம் கொண்டவர் நீங்கள் என்பதை உணர முடிகிறது. உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்.   சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்த காலத்தில் இடதுசாரி இயக்க இதழான மன ஓசை ஆசிரியர் குழுவில் ஒருவனாகவும் செயல்பட்டேன் எனச் சொன்னேன். பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் மன ஓசை இதழின் ஐம்பது பிரதிகளை விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்துக் கொண்டிருந்தேன். அன்றைக்கு அவ்விதழின் விலை இரண்டு ரூபாய்.   அந்தச் சமயத்தில் தோழர் ஒருவரின் தங்கை பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். மாணவராகச் சேர்ந்துள்ளார் எனவும் அவரைச் சந்தித்துப் பேசும்படியும் எனக்கு அமைப்பு மூலமாகத் தகவல் வந்தது. அப்போது மன ஓசை இதழுக்கு இன்னொரு வாசகர் கிடைத்துவிட்டார் என்றே சந்தோஷ‌ப்பட்டேன். அந்த எண்ணத்தோடு தான் எழிலரசியாகிய அவரைச் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன்.   மன ஓசை இதழை அவருக்குக் கொடுப்பது, வாசிக்க நூல்கள் வழங்குவது, வாசித்தவற்றைப் பற்றிப் பேசுவது, சென்னையில் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் இடதுசாரி அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளுக்கும் அழைப்பு விடுப்பது என்று தான் அவருடனான நட்பு சென்று கொண்டிருந்தது.   அது பெரும்புரட்சியைச் சாதித்து விடும் வேகத்தோடு இடைவிடாது நான் இயங்கிக் கொண்டிருந்த காலம். புரட்சிக்குப் பிறகே காதல், கல்யாணம் என்று லட்சியம் கொண்டிருந்த பல தோழர்கள் இருந்தனர். காதல், கல்யாணம் பற்றி எனக்கும் குழப்பங்கள் இருந்தன. ஆனால் இரு விஷயங்களில் தெளிவோடு இருந்தேன்.   முதலாவது: என் அம்மா எங்கள் குடும்பத்தின் எதிர்காலம் என் கையில் இருப்பதாக எண்ணி நம்பிக்கை கொண்டிருந்ததால் அமைப்பில் முழுநேர ஊழியராகச் செயல்பட என்னால் ஒருபோதும் இயலாது.   இரண்டாவது: என் கடன் எழுதித் தீர்ப்பதுதான். அதாவது இடதுசாரி அரசியல் எனக்குப் பிடித்திருந்த போதும் எழுத்துத் தான் என் செயல்பாட்டு வடிவம்.   இவ்விரண்டிலும் எனக்குத் தெளிவு இருந்ததால் நிறைய வாசிப்பதிலும் எழுதுவதிலும் கல்வி சார்ந்து கவனம் கொள்வதிலும் என் நேரத்தைச் செலவிட்டேன். கல்வி சார்ந்து என் பேச்சு அமைந்த ஒருபொழுதில் தன் அண்ணன்கள் இருவரும் குடும்பத்தை விட்டு வெளியேறி முழு நேர ஊழியர்களாக இருப்பதையும் அதனால் தன் குடும்பம் அனுபவிக்கும் துயரத்தையும் என்னிடம் எழில் பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு எங்கள் பேச்சில் ஓர் அந்நியோன்யம் கூடியது. என் அன்றாட அலுவல்கள் அனைத்தும் அவரை நோக்கியே குவிந்தன. எனக்குள் காதலை உணர்ந்த பொழுதில் என் எதிர்காலம் எழிலோடுதான் என முடிவு செய்தேன்.   என் காதலைச் சொன்னபோது அவரும் ஏற்றார். என்னைப் பற்றியோ என் சாதி பற்றியோ என் ஊர் பற்றியோ என் குடும்பம் பற்றியோ அப்போது அவருக்கு எதுவும் தெரியாது. அவை தெரிந்திருந்தால் அச்சம் கூடியிருக்கும். காதல் கைகூடி இருக்குமா என்பது சந்தேகம்தான். என்னையும் என் செய்லபாடுகளையும் அறிந்திருந்தது காதலுக்குப் போதுமானதாக இருந்தது.   பின்னர் திருமணத்திற்கும் அதற்குப் பின்னான வாழ்க்கைக்கும் எத்தனையோ போராட்டங்கள். என்னை நம்பிக் காதலித்தவரை ஒருபோதும் கஷ்டப்பட விடக்கூடாது என்பது என் எண்ணம். காதலாலும் கல்யாணத்தாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது எழிலின் எண்ணம். இப்படியான பரஸ்பர அன்புதான் எங்கள் வாழ்வை மேலெடுத்துச் செலுத்தியது, செலுத்துகிறது.   காதல் மணம், கலப்பு மணம் என்றால் வாழ்க்கை முழுவதும் போராட்டம்தான். உறவினர், நண்பர்கள், சமூகம் என எல்லாத் தரப்பு அங்கீகாரத்தையும் ஒருசேரப் பெறுவது கடினம். சாதி, உறவு, சமூகம், வாழ்க்கை விழுமியங்கள் பற்றித் தொடர்ந்து சிந்திப்பதும் அவற்றைப் பற்றி விவாதிப்பதும் நாங்கள் இந்த அங்கீகாரப் பிரச்சினையிலிருந்து மீளக் காரணம்.     159. கணவனின் எழுத்துக்களை வாசிக்கும் மனைவி அமைவது என்பதே கொடுப்பனை. எழுதிக் கொண்டிருக்கும் போது 'வெட்டி வேலை' என்பது மாதிரியான ஏளனப் பார்வையை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பது ஒரு பக்கம், காட்டாறான‌ படைப்பாளிக்கு வேகத்தடை போட்டுச் சீர் செய்யும் அக்கறை மிகுந்த முதல் வாசகியாகச் செயல்பட முடியும் என்ற வசதி இன்னொரு பக்கம். இக்கோணத்தில் உங்கள் மனைவி பற்றிச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு எங்கனம் பக்கபலமாகத் திகழ்கிறார்?   என் மனைவி எனக்கு அறிமுகமான காலத்திலேயே நான் எழுத ஆரம்பித்து என்னுடைய இரண்டு மூன்று நூல்கள் வெளியாகி இருந்தன. அப்போதிருந்து தொடர்ந்து என் படைப்புகளை வாசித்து வருபவர். அவரும் தமிழ் இலக்கியம் படித்த மாணவி. ஆசிரியராகவும் இருக்கிறார். அந்த அடிப்படையில் அவரும் தொடர்ந்து வாசிப்பவர். எழுதுபவரும் கூட. ஒரு கவிதைத்தொகுப்பும் இரண்டு ஆய்வு நூல்களும் வெளியாகி உள்ளன.   அதனால் என் படைப்பு மனநிலை பற்றிய புரிதல் உள்ளவர். அது சார்ந்து எனக்கு என்னென்ன விதமான உதவிகள் செய்ய வேண்டும் என்ற புரிதலும் கொண்டவர். எழுதுவதில் எனக்கு உதவியாக இருப்பார். எழுதியது என்ன மாதிரி வந்திருக்கிறது என்ற முதல் கருத்தை அறிந்து கொள்ளும் சோதனைக்காக அவரைப் பயன்படுத்திக் கொள்வதுண்டு. அந்த அபிப்பிராயத்தைக் கொண்டு அதை முடிவு செய்வேன்.   எழுத்தின் மூலமாக பிரச்சனைகள் வருவது தொடர்பான ஓர் அச்சம் அவருக்கு உண்டு. ஆனாலும் அந்தப் பிரச்சனை வந்த போது ரொம்ப தைரியமாக நின்று சமாளித்தார். என்னைப் பாதுகாப்பதில் இன்று வரை தீவிரமாக இருப்பவர். அந்தப் பக்கபலம் இந்த விஷயங்களைக் கடந்து வருவதில் உதவியாக இருந்தது.     160. அவர் படைப்புகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்   அவர் கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவர். ‘மிதக்கும் மகரந்தம்’ என்ற ஒரு தொகுப்பு வந்திருக்கிறது. அதன் பிறகு இன்னொரு தொகுப்பு வருமளவு கவிதைகள் எழுதி இருக்கிறார். வெளியிடுவதற்கான ஆர்வமோ முனைப்போ இல்லையே தவிர அவ்வப்போது கவிதைகள் எழுதுவார். சமையல் தொடர்பாகவும் பெண்கள் தொடர்பாகவும் ஒரு நூல் எழுதும் திட்டத்துடன் சில வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்.     161. உங்கள் சமீப வெளியீடுகளில் காபிரைட் உரிமை மு.இளம்பிறை, மு.இளம்பரிதி எனச் சொல்லப் பட்டிருக்கிறது. இப்படிப் பிள்ளைகளுக்கு உரிமை தரும் மாற்றத்திற்குக் குறிப்பான காரணமுண்டா?   குறிப்பான காரணம் ஏதுமில்லை. அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் அந்த உரிமையைக் கொடுத்திருக்கிறேன்.     162. வாசிப்பு அத்தனை பெரிய சமூக நிகழ்வாகக் கொண்டாடப்பெறாத ஓரிடத்தில் ஓர் எழுத்தாளனுக்கும் பதிப்பாளருக்குமான‌ உறவு மிக முக்கியமானது எனக் கருதுகிறேன். உங்கள் பெரும்பாலான நூல்களை வெளியிட்டிருப்பது காலச்சுவடு பதிப்பகம். அதனுடனான உங்கள் உறவு பற்றிச் சொல்லுங்கள்.   இப்போது என் எல்லா நூல்களையுமே அவர்கள் தான் வெளியிடுகிறார்கள். பிற பதிப்பகங்களிடம் கொடுத்த நூல்களைக் கூட திரும்ப‌ வாங்கி விட்டேன். ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் காலச்சுவடு வழி வெளியிடும் எண்ணம் தான் இருக்கிறது. ஒரே பதிப்பகத்தில் எல்லா நூல்களும் வருவதென்பது எழுத்தாளனுக்கும் வசதி, வாசகர்களுக்கும் வசதி. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு பதிப்பகத்தில் வரும் போது எது எங்கே என வாசகர்கள் அறிந்து கொள்வதே கஷ்டம். பல பதிப்பாளர்களைக் கையாள்வது என்பது எழுத்தாளருக்கும் கஷ்டம். அதனால் ஒரே பதிப்பகத்தில் வருவதென்பது ரொம்ப நல்ல விஷயம்.   காலச்சுவடு இதழை கண்ணன் திரும்பித் தொடங்கிய ஓரிரு வருடங்களில் அவரோடு எனக்கு நட்பு ஏற்பட்டது. அதிலிருந்து கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக அந்த நட்பு தொடர்கிறது. அவர் பதிப்பாளர், நான் எழுத்தாளர் என்பதைத் தாண்டி நண்பர்கள் என்கிற அளவு அது நெருக்கமான உறவாக இருக்கிறது.   ஒரு பதிப்பாளராக ஓர் இதழாசிரியராக கண்ணனின் செயல்பாடுகள் எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது. ஒருவர் எந்தந்தத் திறன்கள் கொண்டவரோ அவற்றை மதிப்பவர். அத்திறன்களை வெளிப்படுத்துவது போல் அவர்களுக்குச் செயல்திட்டங்களை உருவாக்கித் தருபவர். காலச்சுவடு பதிப்பகம் பல எழுத்தாளர்களைக் கொண்டு வெற்றிகரமாக‌ இயங்கி வர முக்கியமான காரணம் அது தான். ஒருவருக்கு விருப்பமில்லாத எந்த ஒன்றையும் அவர் திணிக்க மாட்டார். இதழுக்கு இந்தக் கட்டுரை எழுத முடியுமா எனக் கேட்பார் அல்லது இந்த நூலைப் பதிப்பிக்க முடியுமா எனக் கேட்பார். என்னுடைய விருப்பமில்லாமல் நீங்கள் இதைச் செய்து கொடுக்க வேண்டும் என்று ஒருமுறையும் சொல்ல மாட்டார். ஏதாவது காரணத்தால் செய்ய முடியாது என்றால் ஒப்புக் கொண்டு வேறு வழியைப் பார்க்கப் போய் விடுவார். நிர்ப்பந்தம் எதுவும் தர மாட்டார்.   ஓர் எழுத்தாளனுக்கு என்ன உரிமைத் தொகையோ அதைக் கொடுப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதை மறைப்பதும் கிடையாது. எவ்வளவு நூல்கள் அச்சிடப்பட்டன, எவ்வளவு நூல்கள் விற்பனை ஆகின என எப்போது கேட்டாலும் அவற்றைச் சொல்வதற்கு அவர் தயாராக இருப்பார். உங்களுக்குரிய தொகையை நீங்க‌ள் ஏதும் முன்பணமாகக் கேட்டால் கொடுத்து உதவி செய்வார்.   அதை விட முக்கியமான விஷயம், எனக்கு என் புத்தகத்தில் ஒரு பத்துப் பிரதிகள் உடனடியாகத் தேவை என்று ஒரு ஃபோன் செய்தால் போதும், இன்றே அனுப்பி வைத்து விடுவார்கள், நாளை வந்து சேர்ந்து விடும், பல பதிப்பகங்களில் எழுத்தாளருடைய பிரதிகளைப் பெறுவது என்பதே கஷ்டம், இவரிடம் அப்படி இல்லை. அப்படி வாங்கிய பிரதிகளுக்கு நம்மிடம் காசு வாங்காமல் கணக்கு வைத்துக் கொண்டு நமக்குத் தர வேண்டிய உரிமைத் தொகையிலிருந்து கழித்துக் கொள்வார். 40% கழிவு விலையில் கொடுப்பார்.   ஒரு எழுத்தாளருக்கு மொழிபெயர்ப்பு அல்லது வேறெந்த வாய்ப்பு வந்தாலும் எந்த மனத்தடையும் இன்றி அவர்களுக்கு அதை ஏற்படுத்திக் கொடுப்பார். தகுதியானவர் என்று தோன்றினால் பரிந்துரை செய்வார்.   பிற மொழி இலக்கியத்தைத் தமிழுக்குக் கொண்டு வருவது மட்டுமில்லாமல் தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிக்குக் கொண்டு போவது, ஆங்கிலம் மட்டுமல்லாமல் உலக மொழிகளுக்கும் கொண்டு போவது என்ற பரந்த பார்வையும் உள்ளவர். உலக மொழிகள் பலவற்றில் இருக்கும் பதிப்பகங்களோடு அவருக்குத் தொடர்பு உண்டு. அங்கு ஏதாவது தமிழ் நூல்களைக் கொண்டு போக முடியுமா என்பதையும் பார்ப்பார்.   இப்படிப் பல வகைகளிலும் பதிப்பாளர் என்ற அடிப்படையில் எழுத்தாளருக்கு ரொம்பவும் உகந்தவராக கண்னன் செயல்படுகிறார். அப்படி ஒருவர் இருப்பது என்பது தமிழ்ச் சூழலில் ரொம்ப அரிய விஷயம்.     163. காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழு அனுபவங்கள் குறித்து?   இப்போது ஆசிரியர் குழுவில் இல்லை. 2014ல் மாதொருபாகன் பிரச்சனைக்குப் பிறகு விலகி விட்டேன்.   கிட்டத்தட்ட பத்தாண்டுகள் காலச்சுவடு ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தேன். ஆசிரியர் குழுவில் பெரிய வேலைகள் ஒன்றும் நான் செய்யவில்லை. படைப்புகளை வாசித்து அபிப்பிராயம் சொல்லக் கேட்பார்கள். ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பேன், என் கருத்துக்களைச் சொல்வேன். ஒரு சில சந்தர்ப்பங்களில் அதன் பொறுப்பாசிரியர் ஊரில் இல்லாத சூழலில் அந்த மாதங்களில் முழுப் பொறுப்பும் எடுத்து இதழைக் கவனித்திருக்கிறேன். அதன் மூலமாக நிறைய விஷயங்களை வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. பல கதைகள், கட்டுரைகள் பற்றி கருத்துக்களை உருவாக்கிக் கொள்ள‌ வசதியாக இருக்கிறது. வாசிப்பதும் அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்வதும் நமக்கு ஒரு மனப்பயிற்சிக்குப் பயன்படுகிறது.   ஓர் இதழோடு ஓர் எழுத்தாளன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சில சமயங்களில் அரசியல், சமூகம், பண்பாடு சம்பந்தமாக எழுத்தாளருக்கு ஒரு கருத்து உருவாகும். அதை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாயில் வேண்டும். அதற்கு காலச்சுவடு இடம் தந்துள்ளது. நான் சொன்ன‌ சில ஆலோசனைகளை நடைமுறைப்படுத்திப் பார்க்கவும் அவர்கள் உதவியிருக்கிறார்கள்.   அதன் ஆசிரியர் குழுவில் நான் செயல்பட்டது எனக்கு திருப்தி தரும் ஒரு விஷயம்.     164. அடையாளம் பதிப்பகத்தில் கூட‌ உங்களது சில நூல்கள் வெளியாகி இருக்கின்றன அல்லவா? உங்கள் முக்கியமான படைப்புகளான பீக்கதைகளும், கங்கணமும் முதலில் அவர்கள் வெளியிட்டது தான்.   அந்த இரண்டு நூல் மட்டும் தான் அடையாளம் பதிப்பகத்தில் வெளியாகின. பீக்கதைகள் நூலை வேறு பதிப்பகங்கள் வெளியிடத் தயங்கிய போது அடையாளம் சாதிக் அதை வெளியிடத் தயாராக இருந்தார். அவர் சொன்ன ஒரே நிபந்தனை “அடுத்து நீங்கள் எழுதும் நாவலை அடையாளத்துக்குத் தருவதாக இருந்தால் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வெளியிடுகிறேன்” என்பது. அதற்கு ஒப்புக் கொண்டேன்.   பீக்கதைகள் தொகுப்பை வெளியிட்டார். ஒப்புக் கொண்டது போல் அடுத்து எழுதிய கங்கணம் நாவலை அவருக்குக் கொடுத்தேன். அதன் முதலிரு பதிப்புகள் அடையாளம் மூலமாக வெளியாகின.     165. இலக்கிய உலகில் உங்கள் நண்பர்கள் குறித்துச் சொல்லுங்கள்.   இலக்கிய உலகில் எல்லா எழுத்தாளர்களும் என்னுடைய‌ நண்பர்கள் தான். எனக்கு எழுத்தாளர்களோடு கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருக்குமே தவிர, தனிப்பட்ட ரீதியில் எந்த எழுத்தாளருமே எனக்கு எதிரானவர்கள் கிடையாது. எல்லோரையும் நான் நண்பர்களாகத்தான் அணுகுகிறேன். ரொம்ப நெருக்கமான நட்பு வட்டம் என்று சொன்னால் காலச்சுவடு கண்ணன், ஆ.இரா. வேங்கடாசலபதி, சுகுமாரன், பழ. அதியமான், கல்யாணராமன், வ.கீதா, அம்பை, க.மோகனரங்கன், தக்கை பாபு, மணல்வீடு ஹரிகிருஷ்ணன்.   இலக்கியத் தளம் சார்ந்தும், கல்வித்துறை சார்ந்தும் பார்த்தால் மூன்று நண்பர்களைச் சொல்ல வேண்டும். திருச்சி ஈவேரா கல்லூரியில் பணியாற்றும் காசி மாரியப்பன், அவர் கொம்ப மாடசாமி என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர், நாவல் விமர்சனம் எல்லாம் எழுதி இருக்கிறார். (கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… தொகுப்புக்கு முன்னுரை எழுதியவரா? எனக் கேட்கிறேன். ஆமோதிக்கிறார். அது மிகச் செறிவான, ரசனையான மொழி நடை எனச் சிலாகிக்கிறேன்.) உடுமலைப்பேட்டை அரசு கல்லூரியில் கிருஷ்ணன் என்ற பேராசிரியரும் நெருக்கமான நண்பர். கிருஷ்ணகிரியில் மா. வெங்கடேச‌ன் என்ற நண்பர் இருக்கிறார்.     166. யூமா. வாசுகியுடனான உங்கள் நட்பு குறித்து. அவருக்கு நீங்கள் எழுதிய‌ ஒரு நாவலையே (கங்கணம் என நினைவு) சமர்ப்பித்திருக்கிறீர்கள் அல்லவா?   அவருடனான நட்பைப் பற்றித் தனியாகவே சொல்ல வேண்டும். சில ஆண்டுகள் அவரோடு நெருங்கிய நட்பு இருந்தது. நான் சென்னையில் இருந்த போது அவர் குதிரை வீரன் பயணம் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். அதன் மூலமாகத்தான் அவரோடு நட்பு உருவானது. அதன் முதல் இதழில் என் நிழல்முற்றம் நாவலிலிருந்து ஒரு பகுதியை எடுத்துப் போடுவதாகக் கேட்டு எனக்குக் கடிதம் எழுதினார். அதிலிருந்து அவரோடு எனக்கு நட்பு. குதிரைவீரன் பயணம் இதழின் ஆசிரியர் குழுவிலும் நான் பங்களிப்புச் செய்தேன். அதில் எழுதவும் செய்திருக்கிறேன். கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்டுகள் நாங்கள் அருகருகே குடியிருந்தோம். ரொம்ப நெருக்கமான ஒரு பழக்கம். அது மிக ஆத்மார்த்தமான ஒரு நட்பு.   என் மீது ரொம்பப் பிரியம் கொண்டவ‌ர். சக மனிதர்கள் மீது ஒருவர் அவ்வளவு பிரியம் காட்ட முடியுமா என ஆச்சரியமாக இருக்கும். ஒரு கலைஞன் என்றால் நம் மனதில் என்ன பிம்பம் வைத்திருப்போமோ அதற்கெல்லாம் உரியவர். இதழில் சேர்ந்து செயல்பட்ட காலத்திற்குப் பிறகும் தொடர்கிறது அந்த‌ நட்பு.     167. நஞ்சுண்டன் அவர்களுடனான உங்கள் உறவு பற்றி?   அவருக்கும் எனக்கும் தமிழ் சார்ந்த ஒரு நட்பு உருவானது. அவர் புள்ளியியல் துறைப் பேராசிரியர். ஆனால் தமிழ் இலக்கணத்திலும் செம்மையாக்கத்திலும் அவருக்கு ஈடுபாடு. அவர் முதன் முதலில் என்னுடைய நூல் ஒன்றைத் தான் எடிட் செய்தார் - துயரமும் துயர நிமித்தமும். அந்நூல் பற்றி அவர் எழுதிய எடிட்டர் குறிப்பு ஒரு கட்டுரை போல் அருமையாக வந்திருந்தது. அதை விரிவான கட்டுரையாக எழுதச் சொன்னேன். அவர் அந்நூலை எடிட் செய்ததை ஒட்டியே எடிட் செய்வதற்கு 'செம்மையாக்கம்' என்ற சொல்லை உருவாக்கினேன். எடிட்டருக்கு ‘செம்மையாக்குநர்’. அந்தச் சொல்லை அவர் தொடர்ந்து பயன்படுத்தினார். ‘செம்மை’ என்ற பெயரில் ஒரு சிற்றிதழ் கூட இரண்டு இதழ்கள் கொண்டு வந்தார்.   அவர் ஒரு மிகச் சிறந்த எடிட்டர். எனக்குத் தெரிந்து குறைந்தது இருபத்தைந்து நூல்களையாவது அவர் எடிட் செய்திருப்பார். எடிட்டருக்கான ஓர் இடத்தைத் தமிழில் அவர் உருவாக்க முடியும் என நம்பினேன். ஆனால் அது நடைபெறாமல் போய் விட்டது. அதற்குச் சூழலும் ஒரு காரணம். அவரும் ஒரு காரணம்.     168. கொங்கு வட்டாரத்தைச் சேர்ந்த பிற எழுத்தாளர்களான வா.மு.கோமு, சமீபத்தில் மறைந்த க.சீ. சிவக்குமார் போன்றோருடன் உங்களுக்குப் ப‌ழக்கமுண்டா?   ஆம். பழக்கமுண்டு. க.சீ.சிவக்குமார் ரொம்ப இயல்பான ஒரு மனிதர். அவர் எழுத்தாளராக அறிமுகமான காலம் முதலே அவருடன் எனக்குப் பழக்கமுண்டு. அது 1997 என நினைக்கிறேன். க.சீ.சிவக்குமாரின் கதை இந்தியா டுடேவில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது. இலக்கியம் சார்ந்து தமிழ் இந்தியா டுடேவின் பங்களிப்பு முக்கியமானதாகப் பேசப்பட்ட காலகட்டம். அக்காலத்தில் என் வாழ்வில் சில நெருக்கடிகளால் எதுவுமே வாசிக்காமல் இருந்தேன். அவர் கதை பரிசு பெற்றது எனக்குத் தெரியவில்லை. அப்போது அவராக என்னைத் தேடிக் கொண்டு என் கிராமத்துக்கு வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.   இலக்கியச் சூழலில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என‌ எனக்குச் சங்கடமாகப் போய் விட்டது. ஆனால் அவர் அதைப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. பேசிக் கொண்டிருந்து விட்டுப் போய் விட்டார். கைக்குழந்தையாக இருந்த‌ என் மகன் உடல் நலமின்றி இருந்தான். அவன் அவரோடு பேசுவதற்கே விடவில்லை. அப்படித்தான் அவரை முதலில் சந்தித்தேன்.   அதன் பிறகு இப்போது வரை அவர் எழுத்தை நான் வாசிப்பதும், என் எழுத்துக்களை அவர் வாசிப்பதும் தொடர்ந்தது. என் எழுத்துக்கள் எல்லாவற்றையும் வாசித்து விட்டு தன் அபிப்பிராயங்களைச் சொல்வார். அவர் தன் முதல் தொகுப்புக்கு கன்னிவாடி என்று பெயரிட்டது கூட என்னைப் பார்த்துத் தான். “ஊர்ப் பெயரை முதலில் நீங்கள் தான் வைத்திருக்கிறீர்கள், உங்களைப் பின்பற்றி நானும் ஊர்ப் பெயரைத் தொகுப்புக்கு வைக்கிறேன்” என வைத்தார். அதை கன்னிவாடியிலேயே வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவுக்கும் நான் போயிருந்தேன். அப்படித் தொடர்ந்து ஓர் உயர்வான நட்பாக அவருடையது இருந்தது.   வா.மு.கோமுவோடு எனக்கு நெருங்கிய நட்பு கிடையாது. முதலில் நடுகல் என்ற பத்திரிகை நடத்தினார். அதற்குப் பிறகு றெக்கை என்று ஒரு பத்திரிகை நடத்தினார். அந்தச் சமயத்தில் ஹரிகிருஷ்ணன் மூலமாக வா.மு.கோமு அறிமுகமானார். கெட்ட வார்த்தை பேசுவோம் தொடரின் சில பகுதிகள் றெக்கையில் வந்தது. அப்போதிருந்து அவருடன் பழக்கம். அவருடைய எழுத்தில் அவர் பயன்படுத்தும் வட்டார வழக்குச் சொற்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அகராதி தொகுப்பவன் என்ற முறையில் அவர் எழுத்துக்களிலிருந்து பல‌ சொற்களை அகராதிக்காக எடுத்திருக்கிறேன். அவை யாவும் நூலின் அடுத்த பதிப்பில் இடம் பெறும்.     169. நீங்கள் ச‌ண்முகசுந்தரத்தின் நீட்சி என்பதாகச் சொன்னீர்கள். உங்களுடைய நீட்சியாக யாரையாவது பார்க்கிறீர்களா?   அப்படி யாரும் தெரியவில்லை. எனக்குச் சமகாலத்தில் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் - என்.ஸ்ரீராம், வா.மு.கோமு, அப்புறம் எனக்குக் கொஞ்சம் முன்னால் எழுதத் தொடங்கின தேவிபாரதி. கௌதம சித்தார்த்தன், சூர்யகாந்தன், சி.ஆர்.ரவீர்ந்திரன் இப்படி இப்பகுதி வாழ்க்கையை எழுதும் பலர் உண்டு.   இதில் சமகாலத்தில் எழுதுபவர்களில் என்.ஸ்ரீராமுடைய எழுத்துக்கள் எனக்கு மிகப் பிடித்தமானவை.     170. ஆசிரியப் பணி, எழுத்து, குடும்பம் தவிர உங்கள் நேரத்தில் வேறு என்னென்ன‌ இருக்கின்றன? உதாரணமாய் நண்பர்கள், சினிமா, தொலைக்காட்சி…   நான் தொலைக்காட்சி அதிகமாகப் பார்க்க மாட்டேன். பார்த்தாலும் விவாதங்கள் பார்ப்பேன். அதுவும் எப்போதாவது எனக்குப் பிடித்த தலைப்புக்களாக இருந்தால் மட்டும். அதனால் என் பிள்ளைகள் என்னை கேலி செய்வார்கள், “எப்போதும் நாலு பேர் உட்கார்ந்துட்டு இருந்தாத் தான் இவர் பார்ப்பார்” என.   திரைப்படங்கள் பார்ப்பதில் எனக்கு ரொம்ப விருப்பமுண்டு. தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் சும்மா கொஞ்சம் நேரம் பார்ப்பேன். திரையங்குக்குச் சென்று படங்கள் பார்ப்பேன். சென்னையிலிருந்த போது நிறையப் படங்கள் பார்த்தேன். அதற்கு நேரம் இருந்தது. இப்போது இங்கே வந்த பிறகு அந்த மாதிரி நேரம் இல்லை. அதனால் நிறையப் படங்கள் பார்க்க வேண்டுமென நினைத்துப் பார்க்க முடியாமல் போயிற்று.   நான் ரொம்பப் பெருமையாகச் சொல்வேன் - தமிழில் குறைந்தது இரண்டாயிரம் படங்களாவது பார்த்திருப்பேன் என்று. ஏனெனில் தியேட்டரில் கடை வைத்திருந்ததால் அங்கு வரும் எல்லாப் படங்களையும் பார்த்து விடுவேன். அதன் தொடர்ச்சியாகத் தான் தியேட்டருக்குப் போய்ப் பார்ப்பதை நான் ரொம்ப விரும்புவேன். அப்படி இல்லாத பட்சத்தில் சில படங்களை இணையத்திலும் பார்ப்பது உண்டு.   இசை கேட்பதும் எனக்கு ரொம்ப விருப்பமான விஷயம். திரைப்பாடல்கள் நிறையக் கேட்பேன். கர்நாடக சங்கீதத்திலும் ஆர்வமுண்டு. மதுரை சோமு, ஜேசுதாஸ், உன்னிகிருஷ்ணன், சஞ்சய் சுப்ரமணியம், டிஎம் கிருஷ்ணா இவர்களின் பாடல்கள் பிடிக்கும். பழைய கர்நாடக சங்கீதப் பாடகர்களான எம்எஸ் சுப்புலட்சுமி, டிகே பட்டம்மாள் பாடல்களும் நான் நிறையக் கேட்டிருக்கிறேன். மஹாராஜபுரம் சந்தானமும் பிடிக்கும்.   அதோடு உள்ளூர்ப் பகுதியில் இருக்கும் கிராமங்களுக்குப் போவது என்பது எனக்கு விருப்பமான ஒரு விஷயம். மலைப் பகுதிகள், கிராமங்கள் இப்படி. என் மாணவர்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வரும் போது அவர்களின் வீடுகளுக்குப் போவது என்ற திட்டத்தை வைத்துக் கொண்டு பல இடங்களுக்குப் போவேன். அது என் பொழுதுபோக்குகளில் ஒன்று. நான் போவது என்பது என் மாணவர்களுக்கு சந்தோஷம் தரும் ஒரு விஷயமாக இருக்கும். ஓர் ஆசிரியர் தன் வீட்டைத் தேடி வருகிறார் என்பது ஓர் அங்கீகாரமாகவும் மேற்கொண்டு வளர்ந்து வர ஓர் உத்வேகம் தரும் விஷயமாகவும் இருக்கும்.   எனக்கு அந்தக் கிராமத்தைப் பார்ப்பது, அந்த வாழ்க்கையைக் கவனிப்பது, அந்த மனிதர்களோடு பேசுவது இதெல்லாம் சந்தோஷம் தரும் விஷயங்கள். அது ஒரு பெரும் அனுபவம். அதை நாடியும் போவேன்.     171. சமீப காலத்தில் டிஎம் கிருஷ்ணா தன் கச்சேரிகளில் உங்கள் விருத்தங்களைப் பாடுகிறார் - நான் ‘மாதொருபாகனே’ என்று முடியும் முடியாத துயரில், தப்பென்ன செய்தேன், தாயுமில்லை தந்தையில்லை ஆகிய மூன்றினைக் கேட்டிருக்கிறேன். அழகான முயற்சி. ஓர் இலக்கியவாதியும், ஓர் இசைக் கலைஞரும் இணைவது தமிழைப் பொறுத்த வரையிலும் அரிய நிகழ்வு. அதைப் பற்றிச் சொல்லுங்கள்.   தமிழ்த் திரையிசையைக் கேட்பதில் எனக்குச் சிறுவயதில் இருந்தே மிக ஈடுபாடு. பழைய பாடல்களைத் தேடிக் கேட்பதுண்டு. பதின்வயதைக் கடந்த பிறகு எனக்கு வாய்த்த இலக்கிய நண்பர்கள் பலர் கர்நாடக சங்கீதம் கேட்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். அப்படியே எனக்கும் அந்த ஈடுபாடு வந்தது.   மரபுக் கவிதை எழுதும் வழக்கமும் சிறுவயதிலேயே ஏற்பட்டதுதான். யாப்பை ஓரளவு கற்ற பிறகு நிறைய எழுதினேன். புதுக்கவிதைக்கு வந்த பிறகும் மண வாழ்த்து, விருந்துகளில் ஒருவரைப் போற்ற எழுதுவது என மரபுப்பயிற்சியைத் தொடர்ந்தேன். மரபில் இருக்கும் சந்தம் பற்றி எனக்குத் தொடர்ந்த கவனமுண்டு.   எனது நாவல் தொடர்பான பிரச்சினைக்குப் பிறகு அதிலிருந்து மீள்வதற்குப் பல முயற்சிகளை என் மனம் செய்தது. அதிலொன்று மாதொருபாகனாகிய சிவனை நோக்கி என் முறையீட்டை, புலம்பலை வைக்கும் விருத்தங்களை எழுதியது. 44 எண்சீர் விருத்தங்கள் எழுதினேன். அவை பெரும் ஆறுதலைக் கொடுத்தன.   கடந்த ஆண்டின் இறுதியில் இலக்கிய நிகழ்வு ஒன்றில் டிஎம் கிருஷ்ணா அவர்களைச் சந்திக்க வாய்த்தது. அப்போது நான் எழுதிய விருத்தங்களின் பிரதியை அவரிடம் நீட்டினேன். அவற்றில் ஒரு நான்கைந்தை எனது தனிப்பட்ட கேட்புக்காகப் பாடித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். சில விருத்தங்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. கச்சேரியிலேயே பாடுகிறேன் என்று சொன்னார். அதன்படியே இதுவரை 4 விருத்தங்களுக்கு மெட்டமைத்துத் கச்சேரிகளில் பாடி வருகிறார்.   அந்தச் சந்திப்பின்போது ‘பக்தி அல்லாமல் வேறு பொருள்களில் கீர்த்தனைகள் எழுதினால் பாடலாம்’ என்று சொன்னார். இறுக்கமான கட்டுடைய கலை ஒன்றில் புழங்கும் பிரபலம் ஒருவர் அதில் சில மீறல்களை உருவாக்க முயல்கிறார். அக்கலையின் எல்லையை விரிவுபடுத்த விரும்புகிறார். அவருடன் சென்று பார்ப்போமே என்று எனக்கு உந்துதல் தோன்றிற்று. ஆகவே முதலில் பஞ்சபூதங்களைப் பற்றி ஒவ்வொரு கீர்த்தனை எழுதினேன். அவற்றைப் பார்த்தபின் அவர் கொடுத்த உற்சாகத்தால் மேலும் சில எழுதினேன்.   கர்நாடக சங்கீதம் கேட்பேன். ஆனால் ராகம் தாளத்தில் எல்லாம் பெரிய ஞானம் கிடையாது. ஆனாலும் சில ராகங்களை உள்வாங்கிக் கொண்டு சில கீர்த்தனைகள் எழுதினேன். ராகம் பிடிபடாமல் என்னுடைய விருப்பப்படியும் சில கீர்த்தனைகள் எழுதினேன். என் கீர்த்தனைகள், விருத்தங்களை மட்டும் கொண்டு தனியாக ஒரு கச்சேரி செய்வதாகச் சொல்லி இருக்கிறார். மே மாதத்தில் நாமக்கல்லிலேயே நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம். (ஏப்ரலில் எடுக்கப்பட்ட நேர்காணல். கடந்த மே 13 அன்று இந்தக் கச்சேரி நடந்தேறியது. அதில் தான் தமிழ் - இளவேனில் 2017 இதழின் டீஸரை டிஎம் கிருஷ்ணா வெளியிட்டார்.)   இன்று தனியே ஒரு கச்சேரி செய்யும் அளவுக்கு இது வந்திருப்பதைப் பெரும்பேறு என்று நினைக்கிறேன்.   []     172. சினிமாவில் பெரிய ஆர்வம் உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள். இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது தமிழில். மலையாளம், வங்காளம், மராத்தி போன்றவற்றில் அப்படி இல்லை. இலக்கியத்திலிருந்து சினிமாவிற்கு என்பது மிக அரிதாகவே தமிழில் நடந்திருக்கிறது. அதுவும் சிதைக்கப்பட்ட நிலையில். மோகமுள், தலைகீழ் விகிதங்கள் என உதாரணங்கள் சொல்லலாம். ஏன்?   இலக்கியத்திலிருந்து சினிமா என்பதே இங்கே மிகவும் குறைச்சல். அவையும் வெற்றிகரமான படங்களாக அமையவில்லை. இங்குள்ள வெகுஜன மனோபாவம் அதற்கு முக்கியமானதொரு காரணம். எந்தவொரு சீரியஸான விஷயத்தையும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. முழுவதுமே பொழுதுபோக்காக, களிப்பூட்டும் விஷயமாக இருக்க வேண்டும் என்ற பார்வை தான் இருக்கிறது. அந்தப் பார்வையை சினிமா எந்தக் காலகட்டத்தில் நம் மக்களுக்கு வழங்கியது? அது அங்கிருந்து வந்ததா அல்லது மக்களின் இயல்பான மனோபாவமே அதுதானா? எனத் தெரியவில்லை.   இதனால் தான் இங்கே இலக்கியத்திலிருந்து படங்கள் எடுப்பது அல்லது சீரியஸான படங்கள் எடுப்பது என்பது இல்லாமல் போகிறது. மக்கள் அதைப் பார்த்தார்கள், வெற்றி பெறச் செய்தார்கள் எனில் நிறையப் பேர் அந்தத் துறைக்கு வருவார்கள், அப்படியான படங்கள் எடுப்பார்கள். அதற்கான சூழல் ஏனோ இங்கே இல்லாமல் இருக்கிறது. அதைத் தாண்டி சமீப காலங்களில் நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வளவாக ஓடவில்லை என்றாலும் கவனம் பெறும் படைப்புகளாக வந்து கொண்டிருக்கின்றன.   திரைப்படத் துறையிலிருக்கும் பலர் என்னுடன் நட்பில் இருக்கிறார்கள். அவர்களில் நல்ல வாசகர்கள் உண்டு. வெற்றிமாறன், சற்குணம், மிஷ்கின், சீனு ராமசாமி, வசந்தபாலன் இப்படி நிறையப் பேர் என்னுடைய நாவல்களை வாசித்ததாக அவர்களே நேரிலும் தொலைபேசியிலும் பேசினார்கள். உதவி இயக்குநர்களில் பலர் நவீன இலக்கிய வாசகர்களாக இருக்கிறார்கள். அதெல்லாமே தெரிகிறது. ஆனாலுமே நவீன இலக்கியத்தைத் திரைப்படமாக்குவது என்ற முயற்சி ரொம்பக் குறைவாகத்தான் இருக்கிறது. அப்படியே செய்தாலும் அதில் எழுத்தாளருக்குரிய பங்கு, மதிப்பு பெருமளவுக்கு இருப்பதில்லை.   ஆனால் அதையும் தாண்டி ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், அஜயன் பாலா, வேல. ராமமூர்த்தி போன்றவர்கள் எல்லாம் அந்தத் துறையில் இயங்குவது என்பது ஆரோக்கியமான‌ விஷயம்.     173. ஏறுவெயிலை பாலு மகேந்திரா படமாக்க விரும்பினார். அதற்குப் பின் அப்படியான Proposalகள் (வாய்ப்பு, அழைப்பு என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை) வந்தனவா?   நிறைய வந்தன. ஒவ்வொரு நாவலையும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள். இதை எடுக்கிறேன், அதை எடுக்கிறேன் எனப் பல பேர் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள். முடிவாக செயல்முறைக்கு வருவது மாதிரி எதுவும் இதுவரை அமையவில்லை.     174. சினிமா மொழியில் சீன் பிடிப்பது என்பார்கள். உங்களைப் போன்ற எழுத்தாளர்களை அதற்குக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் நாவல்களில் வரும் பல்வேறு கிளைக் கதைகளை அல்லது உங்கள் மனதிலிருந்தும் விஷயங்களைக் காட்சிகளாக மாற்றி படங்களில் சேர்த்துக் கொள்ள முடியும். அது மாதிரி எழுத்தாளர்களைப் பயன்படுத்துவது என்பது நடக்கவே இல்லை.   பாரதிராஜா எழுத்தாளர்களைப் பயன்படுத்தினார். அவர் திரைக்கதை, இயக்கம் மட்டும் செய்வார். கதை, வசனம் வேறு ஆட்கள் செய்வார்கள். அது மாதிரியான மரபு தொடரவில்லை. இயக்குநர் இயக்குவதை மட்டும் செய்தால் போதும் என்ற புரிதல் இல்லை. எல்லாவற்றையும் ஒருவரே செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படியே இன்னொருவர் பங்களிப்பு செய்தாலும் உரிய அங்கீகாரம் தரப்படுவதில்லை.     175. சினிமா இசை பிடிக்கும் என்று சொன்னீர்கள் எந்த இசையமைப்பாளரைப் பிடிக்கும்?   அப்படிக் குறிப்பாய் ஏதுமில்லை. நான் 1930களிலிருந்து வந்த பாடல்களிலிருந்து இன்று சந்தோஷ் நாராயணன் பாடல்கள் வரை கேட்பேன். முன்பு புதிதாய் வரும் பாடல்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லாமல் இருந்தது. பிறகு நானே என்னை அதற்குத் தகவமைத்துக் கொண்டேன். புதிதாய் வரும் பாடல்கள் இப்போது இருப்பவர்களுக்குப் பிடிக்கிறது, நமக்குப் பிடிக்கவில்லை என்றால் நாம் பழையதாகி விட்டோமோ என்ற எண்ணம் வந்தது. அதனால் இப்போது இருக்கும் ட்ரெண்ட் என்னவெனத் தெரிந்து கொண்டு அதோடு இணைந்து கொள்ள வேண்டும் என்று இறங்கினேன். இதிலும் நிறைய நல்ல இசையும் நல்ல பாடல்களும் வரத்தான் செய்கின்றன. 1930லிருந்து நம் பாடல்களைப் பார்த்தால் தமிழில் மிக வளமான ஒரு திரைப்பாடல் மரபு இருப்பதைப் பார்க்க முடிகிறது. இணையம் வந்த பிறகு அது நிறைய வசதியாக இருக்கிறது. அரிய அற்புதமான பாடல்களை எல்லாம் எளிதில் கண்டறிந்து கேட்க முடிகிறது.   நான் இளைஞனாக இருந்த காலகட்டத்தில் தான் இளையாராஜாவின் இசை வருகிறது. அவரது இசை என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. அதே போல் என்னுடைய கல்லூரிப் பருவத்தில் ஏஆர் ரஹ்மான் வருகிறார். இளையராஜாவின் இசை வந்த போது கிராமத்துக்காரனாக எப்படி ஒரு மகிழ்ச்சி இருந்ததோ ஏஆர் ரஹ்மான் வந்த போது தமிழ்ச் சூழலுக்கே மிகப் புதிய விஷயமாக‌ அது இருந்தது. இப்படி தமிழ்த் திரைப்பாடல்களுக்குள் போனால் அற்புதமான இசை இருக்கிறது.   அதே போல் நல்ல பாடலாசிரியர்களும் நிறையப் பேர் இருந்திருக்கிறார்கள். பாடல் வரிகளைக் கேட்கும் போது இவ்வளவு கவித்துவ வரிகளை திரைப்பாடல்களில் எழுதி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. மருதகாசி, உடுமலை நாராயண கவி போன்ற‌ அற்புதமான கவிஞர்கள் பாடல் எழுதி இருக்கிறார்கள்.   நான் அரிய பாடல்களைத் தேடிக் கேட்பேன். விஎன் சுந்தரம் என்ற பாடகர். அவர் இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். குறைச்சலான பாடல்கள் தான் பாடி இருக்கிறார். வீரபாண்டிய கட்டமொம்மன் படத்தில் போர் சமயத்தில் முருகனிடம் வேண்டும் பாடலின் - எஸ் வரலட்சுமி பாடியது - ஆரம்பத்தில் தொகையறா மட்டும் அவர் பாடுவார். அது சிவாஜி தொடங்குவதாக வரும் நான்கு வரிகள். அவர் தனியாகச் சில பாடல்களும் பாடி இருக்கிறார். அந்த மாதிரியான அரிய பாடகர்களை எல்லாம் நான் தேடிக் கேட்பேன்.     176. தற்போது உங்களின் வாசிப்பு எப்படியானதாய் இருக்கிறது? வாசிப்பில் எவற்றில் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் இன்று எழுதுவது அதிகமா வாசிப்பதா?   இப்போது வாசிப்பு ரொம்பக் குறைந்து தான் இருக்கிறது. எழுதுவதும் குறைந்து தான் இருக்கிறது. தீர்ப்புக்குப் பிறகு ஒரு பரபரப்பு வந்து விட்டது. எனக்கான கமிட்மெண்ட்ஸ் நிறைய இருப்பதாலும் தற்போது பணியாற்றும் இடத்தில் கூடுதல் வேலைப்பளு இருப்பதாலும் வாசிப்பு குறைவாகவே இருக்கிறது. ஏதேனும் ஒரு தேவையை முன்னிட்டு வாசிப்பது என்பது மட்டும் தான் இருக்கிறது. விருப்பத்திற்கேற்றது போல் வாசிப்பது என்பது இல்லை. புதிதாக வரும் கவிதைத் தொகுப்புகளை எப்போதும் வாசிக்கும் பழக்கம் உள்ளவன். அதை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறேன்.     177. அலுவலகப் பணிச்சுமை என்று சொன்னீர்கள். ஒரு பேச்சுக்கு உங்களுக்குப் பொருளாதார நிர்ப்பந்தம் இல்லை என வைத்துக் கொள்வோம். அச்சூழலில் முழு நேர எழுத்தாளராக‌ இருக்க விரும்புவீர்களா?   கட்டாயம் இருக்க விரும்புவேன். என் பிள்ளைகளிடம் கூடச் சொன்னேன். நீங்கள் சம்பாதிக்கத் துவங்கி உங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளத் துவங்கி விட்டால் நான் விருப்ப ஓய்வு பெற்று என் பாட்டுக்கு படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் என் விருப்பத்திற்கேற்ப இருப்பேன் என‌. ஓரிரு வருடங்களுக்குள் அந்த மாதிரியான வாய்ப்பும் அமையலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் கூட அப்படி நினைத்தேன். எனக்குப் பல வெளிநாட்டு அழைப்புகள் வருகின்றன, வெளி மாநிலங்களிலிருந்து கூப்பிடுகிறார்கள். நிறைய எழுதக் கேட்கிறார்கள். அல்லது இது போன்ற நேர்காணல்கள். இப்படி ஏதாவது இருந்து கொண்டே இருக்கிறது.   இதற்கிடையே கல்லூரிக்கு வேலைக்குப் போவது என்பது நெருக்கடியாகத்தான் இருக்கிறது. இப்போது கல்லூரி முதல்வருக்கு அடுத்த நிலையில் இருக்கிறேன். அதனால் கொஞ்சம் வேலைகள் அதிகம். என்னுடைய இயல்பு ஒரு பொறுப்பை நான் எடுத்துக் கொண்டால் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் எனக் கவனம் செலுத்துவேன். மேலோட்டமாகச் செய்வது என்பதோ பட்டும் படாமல் இருப்பது என்பதோ எனக்குப் பழக்கமில்லை. பெரும்பாலும் பொறுப்பு எடுத்துக் கொள்ள மாட்டேன். ஒருவேளை எடுத்துக் கொண்டால் அதைச் சரியாக நிறைவேற்ற‌ வேண்டும் என்று தான் முயற்சி செய்வேன். அதுவும் ஒரு பலவீனம் தான். அதனாலும் நேரம் கிடைப்பது சிரமமாக இருக்கிற‌து.   அதனால் தான் விருப்ப ஓய்வு வாங்கிக் கொள்ளலாமா என யோசித்தேன். ஆனால் நண்பர்கள், “பிள்ளைகள் செட்டிலாகட்டும், அவசரப்படாதீர்கள், குடும்பத்துக்கான பொருளாதாரத் தேவைகள் இருக்கும்” என்று சொன்னதால் அத்திட்டத்தைத் தள்ளிப் போட்டிருக்கிறேன். நான் நினைப்பது போல் பிள்ளைகளின் வாழ்க்கை அமைந்து விட்டால் விருப்ப ஓய்வு வாங்கிக் கொள்வேன். முழு நேரமாகப் படிக்க, எழுத இருப்பது, விருப்பமான இடங்களுக்குப் போவது என‌ நேரம் செலவழிக்க வேண்டும் என்பதே விருப்பம்.   வயதாகும் போது வேலைப்பளு குறைந்து விடும் என நினைக்கிறோம். அப்படி அல்ல. அது கூடுதலாகிறது. வயதாகும் போது தான் முக்கியப் பொறுப்புகள் வருகின்றன. குடும்பப் பொறுப்புக்களும் சரி, வேலைப் பொறுப்புக்களும் சரி. அது ரொம்பச் சங்கடமானதாகத்தான் இருக்கிறது.     178. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை இவை ஒவ்வொன்றிலும் சிறந்து விளங்குவதாய் நீங்கள் கருதும் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் ஓரிருவரைச் சொல்லுங்கள்.   கவிஞர்களில் இப்போது எழுதுபவர்களில் இசை அவர்களின் கவிதை எனக்கு ரொம்பப் பிடித்தமானதாக இருக்கிறது. சமீபத்தில் சபரிநாதனுடைய கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. அவரது கவிதைகளில் இன்னும் கொஞ்சம் எடிட்டிங் இருந்தால் நன்றாக இருக்கும் எனப் படுகிறது. மாலதி மைத்ரியின் கவிதைகளும் எனக்குப் பிடிக்கும். அவர்களுடையது பெரும்பாலானவை அரசியல் கவிதைகள்.   சிறுகதைகளில் என்.ஸ்ரீராமின் கதைகளும், பா.திருச்செந்தாழையின் கதைகளும் எனக்குப் பிடித்தமானதாக இருக்கின்றன. கணேசகுமாரன், கே.என்.செந்தில் இவர்களின் கதைகளையும் விரும்பிப் படிக்கிறேன்.   கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளியான நாவல்களில் நான் நிறையப் படிக்கவில்லை. அந்த மாதிரி மனநிலை இல்லை. படித்ததில் கீரனூர் ஜாகிர்ராஜா, தமிழ்மகன் ஆகியோரது நாவல்கள் எனக்குப் பிடித்தன. முருகவேள், நக்கீரன் இவர்களின் நாவல்கள் இன்னும் நான் படிக்கவில்லை. லக்ஷ்மி சரவணக்குமார் எழுதிய கானகன் கூட இன்னும் நான் வாசிக்கவில்லை.   இப்போது எழுதும் கட்டுரையாளர்களில் நான் முக்கியமானவர்களாக கருதுவது ஆ.இரா. வேங்கடாசலபதி மற்றும் பழ. அதியமான். அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தமிழுக்கு மிக முக்கியமான பங்களிப்பாக இருக்கின்றன. இப்போது ஆத்மாநாம் பற்றி நூல் எழுதிய கல்யாணராமனின் பார்வைகளும் ரொம்ப முக்கியமானதாகக் கருதுகிறேன். சலபதியும், அதியமானும் நவீன இலக்கியத்தைத் தொட்டுக் கொண்டாலும் மரபான பார்வை கொண்டவர்கள். ஆனால் கல்யாணராமன் நாவல், கவிதை சார்ந்து மிக‌ நவீனமான பார்வையை முன்வைப்பவராக இருக்கிறார்.     179. வட்டார இலக்கியத்தில் பெண்கள் அதிகமாகப் பங்களிக்கவில்லை என நினைக்கிறேன். குறிப்பாய் ஏதும் காரணம் இருக்கும் என நினைக்கிறீர்களா?   வட்டார இலக்கியத்தில் என்று மட்டுமில்லை, பொதுவாகவே கவிதைகளோடு ஒப்பிடுகையில் புனைவுகளில் பெண்களின் பங்களிப்பு குறைச்சலாகத்தான் இருக்கிறது. அதற்கான காரணங்கள் பற்றிப் பலவிதமாகப் பேசி இருக்கிறார்கள். அம்பை, உமா மகேஸ்வரி, பாமா, சிவகாமி இது மாதிரி சில‌ருடைய பங்களிப்பு இருக்கிறது. இதில் பாமா, சிவகாமி ஆயியோருடையது வட்டார வழக்கில் அமைந்தவை தாம்.     180. உங்கள் எழுத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று இலக்கணச் சுத்தமான மொழி. அரிதாய் எங்கேனும் தென்படும் ப்ரூஃப் ரீடர் விடுபடல்கள் தவிர்த்து பிழைகளே இல்லாத எழுத்து உங்களுடையது. ஒரு தமிழ்ப் பேராசிரியராக இது இயல்பு தான் என்றாலும் நம் சூழலில் அப்படியும் நம்பிச் சொல்லி விடுவதற்கில்லை. இன்று சந்திப் பிழைகள் இல்லாமல் எழுதுவதே பெருஞ்சாதனை என்றாகி விட்ட நிலையில் இப்படிச் சுத்தபத்தமாக இருப்பது வியத்தலுக்குரியது. அதைப் பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?   மொழி பற்றி ரொம்பக் கவனமெடுத்துக் கொள்ளும் ஒருவன் நான். படிக்கும் காலத்திலிருந்தே அதில் அக்கறை உண்டு. அதன் பிறகு தொடர்ந்து மன ஓசை, குதிரை வீரன் பயணம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியது அதற்கு உதவியது. குறிப்பாய் மன ஓசையில் பணியாற்றிய போது பா.செயப்பிரகாசம் அவர்கள் மூலம் மெய்ப்புப் பார்த்தலை நன்கு கற்றுக் கொண்டேன். அந்த அடிப்படையிலும் எனக்கு மொழியில் பிழைகள் வாரா. இப்போது எனக்கு நட்பாக இருக்கும் வட்டத்தில் வேங்கடாசலபதி, ராமன், பழ. அதியமான், காசி. மாரியப்பன் இவர்கள் மொழியில் கவனம் எடுத்துக் கொள்பவர்கள். நான் சார்ந்திருக்கும் காலச்சுவடும் மொழிப் பிழையில்லாமல் நூல்கள் கொண்டு வர வேண்டும் என்பதில் கவனம் எடுத்துக் கொள்ளும் ஒரு பதிப்பகம். இந்தக் காரணங்கள் எல்லாமும் சேர்ந்து என் மொழியைத் தீர்மானிக்கின்றன.   முதல் ட்ராஃப்ட் எப்படி வருகிறதோ அப்படி எழுதி விடுவேன். அதிலேயே பெருமளவுக்கு எனக்குப் பிழைக்கள் வராது. இன்னொரு முறை பார்க்கும் போது கைதவறி வந்தவை, தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகள் இவற்றை எல்லாமும் திருத்தி விடுவேன்.     181. எழுத்துப் பிழையுடன் இலக்கணப் பிழையுடன் எழுதுவதை குற்றமாக, குறையாக கருதாத ஒரு தலைமுறை உருவாகி விட்டது. சந்தி என்ற ஒன்றே அழிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சிலர் மொழியின் பரிணாம வளர்ச்சியாகக் கூட அதைச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். பொதுமக்கள் மட்டுமல்ல, ஊடகங்களே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இன்று எந்த வெகுஜன இதழின் எந்தப் பக்கத்தை எடுத்தாலும் அதில் பத்துப் பிழைகள் கண்டுபிடிக்க முடியும் என்பது தான் நிலை. முன்பு நீங்கள் வேலை பார்த்த ஓர் இதழில் சந்திப் பிழைகளைத் திருத்த வேண்டாம் என்று கூடச் சொன்னார்கள் என எழுதி இருக்கிறீர்கள். ஒரு தமிழ்ப் பேராசிரியராக இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?   இது ஆரோக்கியமானதல்ல. ஒருவர் தன் தாய்மொழியைத் தரமாகவும் சரியாகவும் பயன்படுத்துவதில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். அது தான் மொழியை மேலெடுத்துச் செல்லும். நீங்கள் சொல்வது போல் இன்று ஊடகங்கள், எழுத்தாளர்கள் பயன்படுத்தும் மொழியில் ஏராளமான பிழைகள் இருக்கின்றன.   போன தலைமுறையில் நீங்க‌ள் அப்படிப் பார்க்க முடியாது. எந்த எழுத்தாளருடையதை எடுத்தாலும் அவ்வளவு இலக்கணச் சுத்தமாக இருக்கும். அதில் அவர்கள் கவனமெடுத்துக் கொண்டார்கள். இன்று அப்படி இல்லை. இவ்வளவு பிழைகளோடு எழுதும் எழுத்தாளர்களை என்னால் வாசிக்க முடிவதில்லை. சில எழுத்தாளர்களை வாசிப்பதைத் தள்ளிப் போடுவதற்குக் கூட அது காரணமாய் இருக்கிறது. ஒரு பத்தி, இரு பத்தி படித்தால் இம்மாதிரி நெருடலான பிழைகள் வந்தால் அதற்கு மேல் என்னால் தாண்டிப் போக முடியவில்லை. எவ்வளவு தான் பிழைகளைக் கவனிக்காமல் எழுத்துக்குள் போக வேண்டும் என நினைத்தாலும் கூட அதன் உள்ளே போக முடிவதில்லை.   இன்று நல்ல மொழியைப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சென்ற தலைமுறையிலிருந்து இயங்கி வருபவர்கள். உதாரணமாய் நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், சுகுமாரன் போன்றவர்கள் பிழையில்லாமல் எழுதுவதைப் பார்க்க முடியும். இப்போது வந்தவர்களிலும் சிலர் அப்படி இருக்கிறார்கள். கல்யாணராமன், பா.சரவணன் போன்றவர்கள். நவீனக் கவிஞர்களில் கூட இசையிடம் நீங்கள் அப்படிப் பிழைகள் பார்க்க முடியாது. கவிஞர்கள் பலரிடம் ஒரு சொல்லை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கூட கவனம் இல்லை. இசை, ஸ்ரீநேசன் போன்ற மிகச் சிலரிடம் தான் அந்தக் கவனம் இருக்கிறது. இந்த‌ விஷயங்கள் வளர வேண்டும் என நினைக்கிறேன்.   மொழியில் மாற்றங்கள் ஏற்படும். அவை இயல்பானவையாக இருக்க வேண்டும். அப்படி அல்லாமல் நம்முடைய புலமைக் குறைபாட்டினால், அறிவுக் குறைபாட்டினால் ஏற்படும் மாற்றங்களாக அவை இருக்கக்கூடாது. ஆங்கிலத்தில் எழுதும் போது மொழிக்கு எவ்வளவு கவனம் எடுத்துக் கொள்கிறார்கள், ஒரு சிறுபிழை கூட வந்து விடக்கூடாது என. எழுத்துப் பிழை வந்து விடக்கூடாது, டென்ஸ் மாறி விடக்கூடாது என எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அது மாதிரியான ஒரு கவனம் நம்முடைய மொழியிலும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த மாதிரி கவனம் எடுத்துக் கொண்டால் நவீன இலக்கியம் இன்னும் பரவலான வாசகர்களைப் போய்ச் சேரும் என நினைக்கிறேன்.   இன்றைக்கு இருக்கும் கவிதை மொழி பல பேரிடம் ரொம்பத் திருகலாக இருப்பதற்குக் காரணம் இந்த மொழி பற்றிய அக்கறையின்மை தான். சொற்களை ரொம்ப அருமையாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தொடர்களை அமைக்கும் முறை, சொற்களை முன் பின் போடுவது இது மாதிரியான சின்னச் சின்னக் குறைபாடுகளால் அக்கவிதைகள் பரவலாய் வாசகர்களிடம் போய்ச் சேருவதில்லை. அவர்கள் ஒன்றும் புரியவில்லை என்றும் இருண்மையாக இருக்கிறது என்றும் சொல்லி கவிதை வாசிப்பையே புறக்கணிக்கும் சூழல் நிலவுகிறது. அதற்குக் காரணம் மொழி பற்றிய கவனமின்மை தான் என நினைக்கிறேன்.   மொழியில் இன்னும் கவனம் எடுத்துக் கொண்டால் நவீனக் கவிதையின் வாசகர்கள் கூடுவார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. அதனால் நாம் பிழையான மொழியை நியாயப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியதில்லை. மொழியை நல்லவிதமாகப் பயன்படுத்தினால் வாசகத்தன்மை கூடும் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு இதைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.     182. விளக்கு விருது, கதா விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது ஆகிய முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறீர்கள். போதுமான அங்கீகாரம் பெற்று விட்டதாய் நினைக்கிறீர்களா?  சாஹித்ய அகாதமியோ தமிழக அரசின் விருதுகளோ உங்களுக்கு அளிக்கப்படவில்லை என்பதைப் பிழையாகவே பார்க்கிறேன்.   இந்த விருதுகள் பற்றியான ஆர்வம் எனக்குக் கிடையாது. விருதுகளைப் பெற வேண்டும் என்றோ, அதைப் பெறுவதால் என் பிம்பம் கூடி விடும் என்றோ எண்ணம் கிடையாது. முக்கியமானதாக தமிழில் அங்கீகாரம் பெற்றிருக்கும் பல விருதுகளை எனக்கு அளித்திருக்கிறார்கள். இப்போது கிடைத்திருக்கும் அங்கீகாரத்தில் முழு மனநிறைவோடும் திருப்தியோடும் இருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால், என் தரத்திற்கு மேற்பட்டு எனக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாகக்கூட எனக்குத் தோன்றுவதுண்டு.     183. நீங்கள் உங்களை தமிழராகவோ இந்தியராகவோ உணர்கிறீர்களா? சமீபத்தில் தமிழக விவசாயிகளை இந்திய‌ அரசு ஒடுக்குவதான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. தில்லியில் விவசாயிகள் நடத்திய‌ நிர்வாணப் போராட்டம் அதன் உச்சம். விவசாயப் பின்புலம் கொண்டவரான உங்கள் கருத்து என்ன?   நான் முதலில் தமிழன் தான். அந்த உணர்வு தான் எனக்கு இருக்கிறது. அடுத்தது தான் இந்தியன். நான் இந்தியனாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை நான் தீர்மானிக்க முடியாது. அதை மற்றவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் தமிழனாக இருப்பதை நான் தீர்மானிக்க முடியும். அதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. விவசாயிகள் பிரச்சனை என்பதில் மாநில அரசும் பல பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டி இருக்கிறது, மத்திய அரசும் தீர்க்க வேண்டி இருக்கிறது.   உண்மையில் நாம் ஒரு விவசாய நாடாக இருந்தாலும் கூட விவசாயிகள் மேலும் விவசாயத்தின் மீதும் நம்முடைய அரசுகளுக்குப் பெரிய அக்கறையோ கவனமோ இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் துறைகள் இவற்றில் செலுத்தும் கவனத்தில் ஒரு குறைந்தபட்சப் பங்கைக் கூட விவசாயத்தின் மீது அரசுகள் செலுத்துவதில்லை. அதனால் தான் இன்று இவ்வளவு பெரிய சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.   விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்க வேண்டும். அதே சமயம் அது நம் மரபுக்கேற்ற விவசாயமாகவும் இருக்க வேண்டும். நம்முடைய மண்ணையும், நீர் வளங்களையும் காப்பாற்றும் விவசாயமாகவும் இருக்க வேண்டும். அந்த விவசாயிகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும்.   அதற்கான சூழல் இங்கே இல்லை. அதில் அக்கறை செலுத்தும் ஆட்சியாளர்கள் இல்லை. அப்படி அக்கறை செலுத்துவதற்கு நிர்ப்பந்தம் கொடுக்கும் அளவு விவசாயிகளும் ஒற்றுமையோடு இல்லை. அவர்களிடமும் கட்சி சார்ந்து, சாதி சார்ந்து பலவிதமான பிரிவினைகள் இருக்கின்றன. அது ஆட்சியாளர்களுக்கு ரொம்ப வசதியாக இருக்கிறது என நினைக்கிறேன்.     184. சமீபத்தில் காலச்சுவடு நடத்திய‌ சிறுகதைப் பயிலரங்கு ஒன்றில் பங்கு கொண்டீர்கள். அப்படியான விஷயங்கள் வளரும் எழுத்தாளனுக்குப் பயனளிக்குமா?   எழுத வருபவர்களுக்கு அந்த மாதிரி பயிலரங்குகள் ரொம்ப உதவியாக இருக்கும். நம் மரபில் ‘கருவிலே திரு’ என நினைத்து விடுகிறார்கள். எதையுமே கற்றுக் கொள்ள வேண்டியதில்லை, எல்லாமே தானாக வருவது என்று நினைக்கிறார்கள். அது ரொம்பத் தவறானது. ஓர் எழுத்தாளர் எழுதத் தொடங்கிய காலத்துக்கும், பத்து, பதினைந்து ஆண்டுகாலம் எழுதியதற்குப் பின்பும் எழுத்தில் இருக்கும் வேறுபாட்டை நாம் பார்க்க முடியும். கருவைத் தேர்ந்தெடுப்பது, மொழியைப் பயன்படுத்துவது எல்லாவற்றிலும் மாற்றங்கள் இருக்கும். முதல் நூலாக இருந்தாலும் அதற்கு முன்பாக அவர்கள் என்னவெல்லாம் எழுதினார்கள் என்பது முக்கியமானது. அதனால் இலக்கியப் படைப்பு என்பதற்கும் பயிற்சிகள் வேண்டும்.   அதிலும் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது என்பது தான் என் பார்வை. அந்த அடிப்படையில் பயிலரங்குகள் நிறையத் தேவை. வெளி நாடுகளில் Creative Writing-கிற்கு கோர்ஸ் வைத்திருக்கிறார்கள். கொரியாவுக்குப் போயிருந்தேன். அங்கே ரெசிடன்ஸியில் தங்கியிருக்கும் ஓர் எழுத்தாளர், 70 வயதுக்காரர் ஆறு மாதங்கள் கோர்ஸ் படித்தேன், பிறகு இப்போது ஒரு புத்தகம் எழுதலாம் என வந்திருக்கிறேன் என்றார். இதுவரை அவர் புத்தக‌ம் எழுதியதில்லை. அதெல்லாம் ரொம்ப அவசியம்.   அது மாதிரி எழுத்தாளர்களை உருவாக்க முடியும். எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள் தம் எழுத்தை வளர்த்துக் கொள்ளப் பயிலரங்குகள் பயன்படும். இங்கே அதெல்லாம் நடத்துவதற்கான சாத்தியம் இல்லை. நடத்தினாலும் இதில் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்ற அசட்டைப் பார்வை இருக்கிறது. அறிவுப் பூர்வமாக ஒன்றைக் கற்றுக் கொள்வது, பயிற்சி எடுப்பது என்பதே நம் சமூகத்தில் இல்லாத ஒரு விஷயமாக இருக்கிறது. அதனால் நிறைய நடக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.   நான் மொழிநடைப் பயிலரங்குகள், சிறுகதைப் பயிலரங்குகள் நடத்தி இருக்கிறேன். அவை எல்லாம் பயன்படுவதாக இருந்திருக்கின்றன. நிறையப் பேர் அதில் கற்றுக் கொண்டு வந்தவர்கள் இருக்கிறார்கள்.     185. சங்கம் ஹவுஸ் அமைப்பின் Writers’ Residency நிகழ்வில் கலந்து கொண்டு உங்கள் நாவலின் சில பகுதிகளை எழுதினீர்கள் அல்லவா? அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள். அது எந்தவகையில் உங்கள் எழுத்துக்கு உறுதுணையாக இருந்தது? அதாவது உங்கள் வீட்டுச் சூழலில் எழுதுவதற்கும் அதற்குமான வித்தியாசம் என்ன? ஒருவேளை நீங்கள் இள வயதில் வீடு என்பதையே திறந்த ஒரு வெளியாக அனுபவித்திருக்கும் மனநிலைக்குத் திரும்பும் சாத்தியத்தை அளித்ததா?   அந்த மாதிரி ரெசிடன்ஸியில் இருந்து எழுதுவது என்பது சுதந்திரமான மனநிலையைக் கொடுக்கிறது. அங்கே எழுதுவதும் எழுதாது இருப்பதும் உங்களுடைய விருப்பம். ஆனால் அங்கு நமக்கு வேறு வேலைகள் ஏதும் இல்லை. வீட்டில் இருந்தால் நாம் அன்றாட அலுவல்கள் என்று பார்க்கும் விஷயங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. முழுக்க முழுக்க நீங்கள் உருவாக்க நினைக்கும் படைப்பில் உங்கள் மனதைச் செலுத்த முடியும். அதற்காக யோசிக்க முடியும், எழுத முடியும். ஆக முழு நேரம் நீங்கள் ஒரு படைப்பு மனநிலையிலேயே இருப்பது என்பது அற்புதமான அனுபவம். நேரம் முழுக்க அதற்காகவே கொடுக்கும் காரணத்தால் எதிர்பார்த்ததை விட மேலானதாக ஒரு படைப்பை உருவாக்க முடியும். நிறையப் பக்கங்களை எழுத முடியும். அதற்கான வாய்ப்புக்களை அந்த ரெசிடன்ஸி அனுபவம் தருகிறது.   இன்னொன்று ரெசிடன்ஸியில் பல எழுத்தாளர்கள் வந்து தங்குகிறார்கள். சிலவற்றில் எழுத்தாளர்கள் சந்தித்துப் பழகுவதற்கான பொது நேரம் ஒதுக்குவார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் பணிகளில் தொந்தரவு செய்து கொள்ளக்கூடாது என்பதால். அவர்கள் எழுதும் முறை, கருவைத் தேர்ந்தெடுப்பது, அதற்குப் படும் சிரமங்கள் போன்ற அனுபவப் பகிர்வுகள் பயன்படுவ‌தாய் இருக்கும்.     186. சிறுகதைத் தொகுதிகளை விட நாவல்கள் அதிகம் எழுதியிருப்பதைப் பற்றிய ஒரு கேள்விக்கு “ஒரு சிறுகதை அல்லது கவிதையை ஒரு நாவலுக்கு இணையாகக் கருதுகிறேன்” என்று சொல்லியுள்ளீர்கள் சிந்தை, நேரம், உழைப்பு என்ற மூன்று அடிப்படையிலேனும் நாவல் சிறுகதை, கவிதையை விட சிரமமானது. 200 கவிதைகளை சில மாதங்களில் எழுதினீர்கள், அப்படி 200 நாவல் எழுத முடியாதே?   அது எழுத முடியாது தான். ஆனால் சிறுகதை எழுதுவது என்பதுமே ரொம்பக் கடினமான விஷயம் தான். சிறுகதைக்கு ரொம்பச் செறிவான ஒரு வடிவம், அதற்கு உட்பட்டு எழுதுவது என்பது சிக்கலானது.     187. தமிழ் மின்னிதழின் பெருமாள்முருகன் சிறப்பிதழ் ஒன்றரை ஆண்டுகள் முன் வெளியான போது எல்லோரையும் போல் நீங்கள் மீண்டும் எழுத வர வேண்டும் என்ற கோரிக்கையை நம் மின்னஞ்சல் உரையாடலில் முன்வைத்தேன். அதற்கு “இப்போது நிதானமாகப் பார்க்கும்போது நிறையவே எழுதி இருப்பது தெரிகிறது. ஆகவே எழுதியது போதும் என்றும் தோன்றுகிறது” என்று சொன்னீர்கள். இப்போதும் அப்படி நினைக்கிறீர்களா? (முன்பு பதாகை மின்னிதழுக்கு அளித்த பேட்டியில் “நிறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்றே நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.)   அப்போது போதும் என்று தோன்றியது உண்மை தான். மறுபடியும் கோழையின் பாடல்கள் இதெல்லாம் எழுதினேன். கார்ல் மார்க்ஸ் சொன்னது மாதிரி பட்டுப்பூச்சி கூடு கட்டுவது என்பது அதன் இயல்பு. அந்த இயல்பு எங்கிருந்து வந்தது என்று நாம் சொல்ல முடியாது. அது போலத் தான் படைப்பு என்பதும். அதனால் அது என் இயல்பாக மாறிப் போய் விட்டது என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது. எழுதுவதை அவ்வளவு சுலபத்தில் என்னால் விட்டு விட முடியாது என்று தான் நினைக்கிறேன்.     188. கருத்துச் சுதந்திரத்துக்குப் பிரச்சனை வரும் போது எழுத்தாளர்கள் தேசத்தை விட்டு வெளியேறுவ‌ர். சல்மான் ருஷ்டி, எம்எஃப் ஹுசைன், தஸ்லிமா நஸ்ரின் எனப் பல உதாரணங்கள் சொல்லலாம். கமல் ஹாசன் கூட விஸ்வரூவம் திரைப்பட‌ வெளியீட்டுப் பிரச்சனையில் “நாட்டை விட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டார். மாதொருபாகன் பிரச்சனையின் எத்தருணத்திலாவது நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறி விடலாம் எனத் தோன்றியிருக்கிறதா?   அப்படி எல்லாம் தோன்றவில்லை.     189. உங்கள் அடைப்பை உடைத்த படைப்பு ‘ஆயிரமாயிரம்’ கவிதை என்பதைப் பதிவு செய்திருக்கிறீர்கள். அந்தக் கவிதை எழுதிய மனநிலையிலிருந்து இன்று வெகுதூரம் வந்து விட்டீர்கள் என்பதைப் பார்க்கிறேன். உயர்நீதிமன்றத் தீர்ப்பு, கோழையின் பாடல்கள், பூனாச்சி நாவல், மற்ற நூல்கள் மறுபதிப்பு, தடம் நேர்காணல், இப்போது தமிழ் மின்னிதழ் நேர்காணல் என்று பழைய இயல்பை நோக்கிய பல நகர்வுகள். இன்று அக்கவிதையை எழுதினால் “ஆயிரமாயிரம் வழிகள் ஆயிரமாயிரம் அடைப்புகள்” என்ற வரிசையை மாற்றி “ஆயிரமாயிரம் அடைப்புகள் ஆயிரமாயிரம் வழிகள்” என்று எழுதுவீர்கள் என நம்புகிறேன்.    (சிரிக்கிறார்.) இருக்கலாம்.     190. Warm-up செய்து தொடங்கியது போல் cool-down செய்யும் கேள்வி ஒன்றுடனே முடித்துக் கொள்வோம். புதிதாய் எழுதுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?   எல்லோரும் சொல்வது மாதிரி தான். நிறைய வாசியுங்கள்; குறைவாக எழுதுங்கள்!     191. “பேசற வாயும் திங்கற வாயும் ஒன்னுதான். ஆனாலும் எல்லாத்தயும் பேசீர முடியுமா? இல்ல, எல்லாத்தையும் தின்னர முடியுமா?” என்பது போல் கொங்கு வட்டார மணம் கமழும் வசனங்கள் பூனாச்சி நாவலில் ஆங்காங்கே உண்டு. அப்பகுதி மக்கள் நினைப்பு என்னவோ ஆனால் உங்கள் மனதை அந்த‌ மண்ணிலிருந்து பிரிக்க முடியாது போல! நீங்கள் அசுரலோகம் நாடினாலும் உங்கள் மனம் கொங்கு மண்ணிலேயே தான் கிடந்து துடிக்கிறது! நீங்கள் சொல்லி விட்டீர்கள் “இனிமேல் பழைய பெருமாள்முருகன் இல்லை” என்று. ஆனால் வாசக எதிர்பார்ப்பு என்பது நீங்கள் பழைய சுதந்திரத்துடன், அதே படைப்பு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பது தான். அதற்கு வாழ்த்துகிறேன்!   (சிரிக்கிறார்.) ரொம்ப நன்றி. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.   ***   புகைப்படங்கள் நன்றி: சமீர் ஜனா (ஹிந்துஸ்தான் டைம்ஸ்), பிபிஸி, விஜய் (பத்திரிக்கையாளர்) பொங்கப்பானை நர்சிம்   "தன்னை இளைஞன் எனக் கடைசியாக நம்பியபொழுது இருந்த நாகரீகங்களையே தன் வாழ்நாளின் இறுதிவரை கடைபிடிக்கிறான் ஆண்.” என்ற முரளிக்கண்ணனின் ட்வீட் நினைவிற்கு வந்தது ராமகிட்டு சாரைப் பார்த்த மாத்திரத்தில். செதுக்கிச் செதுக்கி மெல்லிய கோடு போல் ஆக்கிய மீசை. கோட்டின் நுனிகளை மூக்கிற்குள் நுழைத்த சாதுர்யம் என லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆரின் பிரதியில் இருந்தார்.   மழை. அதை மழை என்று சொல்லிவிடமுடியாது. சிறு தூறல். ஓவியத் தீற்றல் போல், பட்டுவேட்டியில் இருந்து பிரிந்த வெள்ளிக்கம்பிகள் போல் தூறல். தெருவில் நடந்து கொண்டிருந்த ஓரிருவர் தடதடவென ஓட்டமும் நடையுமாய் கடந்தனர். எதிர்வீட்டு கற்பகம் மாடியில் இருந்து காய்ந்தும் காயாமல் கிடந்த துணிகளை அள்ளி நுகர்ந்து பார்த்துக் கொண்டே உள்ளே ஓடினாள்.   நானும் ராமகிட்டு சாரும் அமர்ந்திருந்த திண்ணையில் சாரல் பட்டு ஓதம் புகத் துவங்கியது. அவர் அமர்ந்த வாக்கில் லேசாகப் பின்வாங்கி வசதியாக சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். எனக்கு நனையப் பிடித்திருந்தது, அதனால் அப்படியே திண்ணையின் விளிம்பில் அமர்ந்திருந்தேன். ஒருமுறை தலையை நீட்டித் தெருவைப் பார்த்தேன். இருபக்கமும் படிகள், மேற்கூரை இறங்கிய ஸ்லாப்புகள், அதன் வழியே லேசாக வடியும் மழை நீர். ஆள் நடமாட்டம் இல்லை. மஞ்சள் பூத்த வீதி ரம்மியமாய் இருந்தது.   “மார்கழிப் பனி மச்சப் பொளக்குமாம், ஆனா ஒவ்வொரு வருசமும் யாராவது ஒரு மனுஷனப் பொளந்துருது, இல்லியா?” - ராமகிட்டு சார் எப்போதும் நிறுத்தி நிதானமாய்ப் பேசுவார்.   “ஆமா சார்.”   “ம். என்ன பண்ணப் போற அடுத்து? ஒங்க அப்பாவ பெரியார் பஸ்ஸ்டாண்டு பக்கம் பார்த்தேனே?”   “ஆமா சார். அவரு டெய்லி சாயந்தரம் மீனாட்சியம்மன் கோயில் ஆடி வீதில ஒக்காந்துட்டு வருவாரு. ரிட்டயர்ட் லைஃப், நிறைய ஃப்ரெண்ட்ஸ் அங்க அவருக்கு.”   “குட் குட். எப்பிடிக் கல்யாணம் பண்ணாமலே இருந்துரலாமோ, அதே மாதிரி வேலையே பார்க்காம இருந்துரலாம். ஆனா கல்யாணம் பண்ணி, அப்புறம் தனியா இருக்குறத விட கஷ்டம், வாழ்க்கைல முக்கால்வாசிய ஆபிஸ்ல தொலைச்சுட்டு, அதுக்கு அப்புறம் வேலைக்குப் போகாம காலம் தள்ளுறது.”   நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அப்பா உள்ளே இருந்து திண்ணைக்கு வந்தவர்,   “உள்ள வந்து ஒக்காந்து பேசுங்க ராமகிட்டு, மழைல… ஏன்டா உள்ள கூப்புட மாட்டியா? இதயெல்லாமா சொல்லித்தருவாங்க? ஏன் சார் நேத்து செண்ட்ரல் பஸ்ஸ்டாண்ட்ல பார்த்தேனே, பொங்கல் பர்ச்சேஸா?”   “இருக்கட்டும் சார். ஒடம்பு குளுந்து போகுது இங்க நின்னா. சும்மா ஒரு ரவுண்டு போய்ட்டு வந்தேன் டவுனுக்கு.”   அப்பா தலையை நன்றாக வெளியே நீட்டி, வானைப் பார்த்து, “நல்லா இருட்டிக்கிட்டு வருது. ஒரு அடி அடிச்சுட்டுத்தான் போகும் போல!”   மீண்டும் உள்ளே போய்விட்டார். ராமகிட்டு சார் இப்போது திண்ணையின் விளிம்பிற்கு வந்து என் அருகில் அமர்ந்து மழைச் சாரலை முழுவ‌துமாகத் தன்மேல் வாங்கும்விதம் அமர்ந்து கொண்டார்.   “பார்த்தியா, இப்பிடித்தான் கொஞ்சம் பேரு பெரியார் பஸ் ஸ்டாண்ட்னு சொல்ல மாட்டாங்க, அவங்களுக்கு அது செண்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்தான். அண்ணா பஸ் ஸ்டாண்டையும் கலெக்ட்டர் ஆபிஸ்னே ஓட்டிருவாங்க. மழைக்கி கூட அரசியல் பக்கம் ஒதுங்காதவங்க ஒடம்புல கூட இப்பிடித் தன்னையறியாம ஒரு அரசியல் ஊறிப்போய்க் கெடக்கும் ஒவ்வொருத்தருக்குள்ளயும். அதான் அரசியல்.”   ராமகிட்டு சார் கலெக்ட்டர் ஆபிஸில் வேலை பார்த்து சென்ற ஆண்டு ஓய்வு பெற்றவர். ஆனால் பார்க்க ஐம்பது வயது போல் சற்று திடகாத்திரமாய் இருப்பார். நான்கு ஃப்லிட்டுகள் வைத்த பேண்ட், வெள்ளை முழுக்கைச் சட்டை. அதை முழங்கை வரை சுருட்டி விட்டிருப்பார். ஆம், மடிப்பல்ல, சுருட்டல். ஒரு சாயலுக்கு ஜெமினி போலவும் தெரியும் உடல்வாகு.   திண்ணையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கரும்புக் கட்டைப் பார்த்து, “ஒன்னு அம்பது ரூவாயா?”   “நூறு”   “என்னடா சொல்ற? ஹும். அடுத்து நூறு ரூவா நோட்டும் செல்லாதுன்னு சொல்லிட்டா தீர்ந்தது கத. இம்புட்டு அரிசியக் குடுத்து ரெண்டு கரும்ப வாங்கறேன்னு பண்ட மாற்றுக்குப் போயிர வேண்டியதுதான்.”   நான் பதில் ஏதும் சொல்லாமல் வானம் இருட்டிக் கொண்டு வருவதை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன். திமுதிமுவென கருமேகங்கள் எங்கிருந்தோ நெடுஞ்சாணாக இறங்கிக் கொண்டிருந்தன.   “பொங்கல் தான்டா நம்ம மண்ணுக்கான பண்டிக. உழுத வயலுக்கு நன்றி, ஒழச்ச மாட்டுக்கு நன்றி, உசுரோட விட்டு வச்ச இயற்கைக்கு நன்றின்னு நன்றி சொல்ற பண்பாட்டுப் பண்டிகைடா இது. கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் விட்டுட்டோம். ஆமா இந்த வருசமாச்சும் ஜல்லிக்கட்டு இருக்காமா?”   “இருக்காது போல, கரெக்ட்டுதான சார்? பாவம் ஊரே மாட்டுமேல விழுந்து சாகடிக்கிறது விளையாட்டா?”   முகத்தை மேல் நோக்கிக் காட்டி, கன்னம் குறுக்கி, மழை நீரை முகத்தில் வாங்கினார், கண்கள் மூடி.   “அப்பிடி இல்லடா இவனே, ஒரு இனத்த அழிக்க அதோட மொழிய அழிச்சாப் போதும். அப்பிடித்தான் இதுவும். ஆயிரம் வருசமா இருக்குற விசயங்கள அழிக்கிறது பெருசா? இந்தா எவனோ வெய்யில்ல சுத்துற வியாவாரி செத்தவடம் ஒக்காந்துட்டுப் போவானேனு திண்ணையைக் கட்டச்சொல்லிக்குடுத்தானே, கேட்டீங்களா? இப்ப அரை அடி எக்ஸ்ட்ரா இருந்தாக் கூட மறிச்சுக் கட்டி வாடகைக்கு விட்டுர்றான்…”   மழை வலுக்கத் துவங்கி இருந்தது. இருவரும் எழுந்து சற்று உள்ளார நின்றுகொண்டோம். இப்போது தெருவோரங்களில் நீர் சுழித்து அடித்துக்கொண்டு ஓடத் துவங்கி இருந்தது. பைப் வழியே மேலே இருந்து விழும் நீர் பள்ளம் ஏற்படுத்திவிடும் என அங்கே ஒரு கல்லை வைத்திருந்தார் எதிர்வீட்டு ஆறுமுகம்.   “ஜல்லிக்கட்ட ஒழிச்சா மாடுக அழிஞ்சுருமான்னு கேட்குறான். அழிஞ்சுதான் போகும். ஒன்னோட முக்கியமான தேவையை இல்லாம ஆக்கிட்டா அது தானா அழிஞ்சுரும். மொதோ மாட்ட அழி, அப்புறம் அது சம்பந்தப்பட்ட தொழில அழி, அப்பிடியே அழிய வேண்டியதுதான். பொங்கல்னா தெரு இப்பிடியா இருக்கும். ரோட்ட அடச்சு, வரிசையா பொங்கல் வைப்பாங்க ஒரு ஆள் விடாம. அதெல்லாம் ஒரு காலம்.”   ராமகிட்டு சார் கையை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு மழையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.   *   லேசாகத் தூறத்துவங்கியதும், நனைந்து பிசுபிசுத்துப் போன மண்ட வெல்லக்கட்டிகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினாள் போதும்பொண்ணு.   ஜல் ஜல் என செவியோயாமல் சத்தம். அவள் வீட்டைத் தாண்டித்தான் ஊருணி. அங்குதான் மாட்டைக் குளிப்பாட்டி, கலர் பொடி தடவி சிங்காரிப்பார்கள். பொங்கல் வந்துவிட்டால் அதுவரை பிய்யூரிணி என முகஞ்சுழித்தவர்கள் கூட அந்த ஊருணிக்கரை மரத்தடியே கதி என்று கிடப்பார்கள். பசுமாடுகள் ஒரு பக்கம், எருதுகள் ஒருபக்கம் என்றால், ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கென்று சற்றுத் தள்ளி தனியாய் ஒரு இடம் ஒதுக்கிக் கொடுத்து விடுவார்கள். ஜல்லிக்கட்டுக் காளையை நீருக்குள் இறக்கி ஏற்றுவதே ஒரு திருவிழா போலிருக்கும். நீரைச் சிதறடித்து இறங்கும் காளைகள் நீருக்குள் ஒரு சுழற்று சுழற்றி கலவரப்படுத்துவது சிறுவர்களுக்கு வேடிக்கைப் பொருள். இளைஞர்கள் வாய் ஓயாமல் க்ரெக், ஓய், பப்ப்ப் போன்ற சப்தங்கள் எழுப்பிய வண்ணம் இருப்பர். ஒவ்வொரு சத்த்தமும் ஒரு கட்டளை. குழூஉக்குறி.   பிய்யூருணியைச் சுற்றிலும் திடீர்க் கடைகள் முளைத்துவிடும். கலர் பொடிகள். துண்டுகள். சிறு பெயிண்ட் டப்பாக்கள் (டூப்ளிகேட்), செளக்காரம், கற்றாழை நார், கலர் ரிப்பன்கள் எனச் சகலமும் சிறு ஸ்டூலில் வைத்து விற்றுக் கொண்டிருக்க, குளுகுளுவென குளித்து வரும் மாடுகளுக்குச் சுடச்சுட இந்த அலங்காரங்கள் நடைபெறும். நீரும், சேறும், வண்ணப் பொடிகளும் மாட்டுச் சாண‌மும் கலந்து கட்டிய வாசமும் வண்ணமும் பார்க்கப் பார்க்க, பொங்கல் வந்துவிடும் ஊருக்குள்.   போதும்பொண்ணு தன் மகனின் அழுகையை அடக்க மாட்டாமல் அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு வேடிக்கைக் காட்ட ஊருணிக்கு வந்தாள். இடுப்பில் இருந்த குழந்தை, மாடுகளைப் பார்த்த ஆவலில் சற்று உந்தி எழ, பின்னோக்கி வில்லாய் வளைந்த குழந்தையை பிடிக்கத் தடுமாறியதைப் பார்த்த ராமகிருஷ்ணன் ஓடிப் போய்ப் பிடித்தான்.   “ஏம்மா, பார்த்து தூக்குவியா, மாடு கண்டுக குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு இருக்குற எடத்துல...”   ”தேங்க்ஸ்ங்க.”   “பரவால்லங்க. ஊரு பிடிச்சுப் போச்சா? ஒங்க ஊரு மாதிரி கொஞ்சமாச்சும் இருக்கா?”   அவள் பதில் சொல்லத் தயங்கிச் சுற்றும் முற்றும் பார்க்க, திமிறும் மாட்டைப் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இவளையும் ராமகிருஷ்ணனையும் பார்துக்கொண்டே தங்கள் வேலைகளைப் பார்ப்பது புரிந்தது. பதில் சொல்லும் பாணியில் மெல்லத் தலையை ஆட்டிவிட்டு, குழந்தையை சரியாக இடுப்பில் அமர்த்திக் கொண்டு, அங்கிருந்து விடுபட்டு ஊருணியின் பக்கவாட்டிற்குப் போய்விட்டாள்.   ராமகிருஷ்ணன் ஜெர்ஸியை நடுமுதுகில் லேசாகக் குத்த, அது சிலிர்த்தபடி ஊருணிக்குள் இறங்கியது.   “ஏம்ப்பா ராமகிட்டு, நீதான் சர்க்கார் உத்தியோகத்துக்கு போயிட்டியே இன்னும் மாட்டயும் மசுத்தயும் பிடிச்சுக்கிட்டு திரியுற, ஒந்தம்பிதான் வருவானே, விட வேண்டியது தான!”   ராமகிருஷ்ணனின் பார்வை முழுதும் போதும்பொண்ணுவின் மேல் இருந்தது   “அதுசரி, சர்க்கார் வேலைக்குப் போய்ட்டா அம்புட்டும் மறந்துருமா என்ன?”   எங்கிருந்தோ வந்த டிராக்ட்டரின் பின்வண்டி முழுக்கக் கரும்புக் கட்டுகள். ஊருணியைத் தாண்டி நிறுத்தி விட்டு, கட்டை இறக்கினார்கள். கூட்டம் குமியத் துவங்கியது.   “தேன் கணக்கா இருக்கும் நம்ம தோட்டத்துச் சாறு, அள்ளிக்க… தோட்டத்து அயிட்டம்.”   கரும்பு விற்பவனின் உடலில் கரும்பு வாடை ஜிவ்வென்று அடித்தது. மாட்டை குத்துக்கல்லில் கட்டிய ராமகிருஷ்ணன், ஒரு பெரிய கட்டாக வாங்கினான்.   “என்னய்யா இம்புட்டு இம்புட்டா கனு கெடக்கு, நல்லா நீளக்கனுக் கரும்பா எடப்பா.”   “கடிச்சுப் பாருண்ணே, அப்புறம் சொல்லு.”   “நல்ல கரும்பா இருந்தாத்தான் ஒங்கூர்லயே வெல போயிருக்குமேய்யா.”   “அத ஏண்ணே கேட்குற, எம்சியாரு செத்து பத்து நாள்த்தான் ஆகுதுண்டு எங்கூர்ல எவனும் பொங்கலே கொண்டாட மாட்டாய்ங்களாம், என்னத்தச் சொல்ல? வெரசா எடு.”   கட்டுக் கரும்பை எடுத்தவன், சுற்றும் முற்றும் பார்த்து, அங்கே போதும்பொண்ணு நிற்க, நேராகச் சென்று அவளிடம் இரண்டு கரும்பைக் கொடுத்தான்.   “இந்தாங்க.”   அவள் உடனே பாம்பு கடித்தது போல் பதறிப் பின்வாங்கினாள்.   “அய்யோ வேணாங்க, நீங்க ஏன் எங்கிட்டயே வந்து வந்து பேசுறீங்க, ப்ளீஸ், போங்க.”   அவள் இடுப்பில் இருந்த குழந்தை கரும்பை நோக்கித் தாவ எத்தனிக்க, அவள் பட்டென அதன் கைகளைத் தட்டி நெட்டிமுறித்துத்திரும்பினாள். குழந்தை திரும்பித் திரும்பிக் கரும்பையே பார்த்துக்கொண்டு போனது.   *   சாணம் போட்டு மொழுகி இறுகிய வாசல்களில் வரிசையாய் மூன்று கரும்புகளை முக்கோணமாய் நிறுத்தி, கல் அடுப்புகளை வைத்து, வரிசையாய் பொங்கல் பானை வைத்திருந்தார்கள் தெருவில். பானையை மஞ்சள் கிழங்குத் தளைகளைக் கொண்டு கட்டியிருந்தது அடுப்பிற்கு ஒரு திருவிழா அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்திருந்தது. கலர்க் கோலங்கள். வளைந்த கரும்புக் கோலங்கள், பொங்கப்பானையில் இருந்து பொங்கல் வழியும் கோலங்கள் என வீட்டிற்கு வீடு கோலங்கள்.   அங்காளம்மன் கோயில் வரை தெருவின் இரண்டு பக்கமும் பொங்கல் பானை கொதிக்க, புகை சூழ்ந்த தெருவில் நடப்பதும், இளந்தாரிகள் தங்களுக்குப் பிடித்த பெண் வீட்டின் பானை முன்னர் மெதுவாய் நகர்வதும் ஓரக்கண் சிமிட்டல்களையும் பார்த்து, லேசான புன்சிரிப்போடு கடந்த ராமகிருஷ்ணன், நேராய் வீட்டிற்குள்ளிருந்து எல்லாவற்றையும் பொட்டலம் கட்டிக்கொண்டு, மீண்டும் ஊருணி நோக்கி விரைந்தான்.   நேராக போதும்பொண்ணு வீட்டிற்கு முன் போய் நின்றவன், தயங்கிவாறு, உள்ளே எட்டிப் பார்த்தான்.   அவள் மகன் தத்தித் தத்தி அவன் அருகே நடந்து வர பின்னால் இருந்து ஓடி வந்தவள், குழந்தையை அப்படியே அலாக்காத் தூக்கிக் கொண்டு, ராமகிருஷ்ணனை நிமிர்ந்து பார்க்க, “இந்தாங்க, இதப் பாருங்க, நான் கலக்டர் ஆபிஸ்லதான் வேல பார்க்குறேன். ஒங்க பிரச்சனை தெரியும். நீங்க இந்த ஊர் ஒலகத்தப் பத்தில்லாம் யோசிக்காம பேசுங்க. நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்னு சொல்லத்தான் வந்தேன்”   சற்றுத் தொலைவில் தெருமுழுக்க வைத்த பொங்கல் பொங்க, அங்கே எல்லோரும் “பொங்கலோ பொங்கல்" எனச் சத்தமாகக் கூவி குலவையிட்டது ஊருணி வரை கேட்டது.   விரக்தியாய்ச் சிரித்தவள், “உள்ள வாங்க.”   சின்னஞ் சிறிய வீடுதான். அது பூவலிங்கத்தின் வீடு, வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் இவளுக்கு.   “கல்யாணம் ஆகி நாலு வருசமாச்சு, நல்லாப்போகுதேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போதே அது எப்பிடிறீ நினைக்கலாம்னு பொடனில அடிச்சுப்புடுச்சு. ப்ச். அம்புட்டு ஆசையா கருவாயா கருவாயானு கூப்புடுவேன் அவர. கரண்ட்டு அடிச்சு, கரிக்கட்டையாப் போனாரு. கட்டைல போகும்போது. எரிஞ்சத எரிச்ச பாவி நான்”   ராமகிருஷ்ணன் அவள் அழக்கூடும் எனக் காத்திருக்க, அவள் அழவில்லை. தொடர்ந்தாள்.   “நான் வவுத்துல இருக்கும் போதே இருக்குற மூணு பொண்ணுக போதும் இன்னோரு கொழந்த என்னாத்துக்குன்னு கொல்லப் பார்த்தாகளாம், தப்பிச்சுப் பொழச்சு இப்பிடி ஆகிப்போச்சு பொழப்பு.”   குழந்தை ராமகிருஷ்ணனின் காலைக் கட்டிக்கொண்டு அண்ணாந்து பார்க்க, அவன் தூக்கிக் கொண்டான்.   இப்போது கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது அவளுக்கு.   “அவனே கோட்டாவுல சேர்ந்தான், இப்ப செத்து அடுத்து செத்த கோட்டாவான்னு லந்து பண்ணாங்க, அதனால வர்றப்ப வரட்டும்னு விட்டுட்டேன்.”   “அதுக்குத்தான் வந்தேன். அப்பிடி எல்லாம் எவனும் பேசுனா உள்ள வச்சு லாடம் கட்டிறலாம் தெரியுமா? சரி, விடுங்க. பேப்பர்லாம் குடுங்க. நான் பார்த்துக்குறேன். உங்கள வேலைல சேர்த்துவிடுறது எம்பொறுப்பு.”   குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு, சைக்கிள் கேரியரில் இருந்த கரும்புத் துண்டுகளை கொடுத்துவிட்டு கிளம்பியவன் அதன் பிறகு ஈபி ஆபிஸ், ஏஈ என அலையாய் அலைந்தான். தினமும் வேலை முடித்து நேராய் ஒரு எட்டு அவள் வீட்டு வாசலுக்குப் போய்த் தைரியம் சொல்லிவிட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குப் போவான். ராமகிருஷ்ணன் வீட்டில் முதலில் சாதாரணமாய் எடுத்துக் கொண்டவர்கள், மெல்ல மெல்ல ஊர் ஒரு மாதிரி பேசுகிறது எனப் புத்தி சொல்ல ஆரம்பித்து, திட்டத் துவங்கினார்கள்.   ராமகிருஷ்ணனின் அம்மா, அவன் அறையில் இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வீசியடித்து, “இதுகளைப் படிச்சுத் தான இப்பிடித் திரியுற” எனக் கத்தினார். அவன் யாரையும் சட்டை செய்யவில்லை.   போதும்பொண்ணுவின் நேர்த்தியான காட்டன் புடவைகள் மிகப்பிடித்திருப்பதாக ராமகிருஷ்ணன் சொன்ன ஒற்றை வாக்கியம் மட்டுமே, வேலை விஷயம் தவிர்த்து அவன் உதிர்த்த அதிகப்படியான வார்த்தை.   “இன்னிக்கு ஏன் லேட்டு, ரொம்ப வேலையா? நாங்கூட வரமாட்டீங்களோன்னு நினைச்சு பயந்துட்டேன்.”   அவள் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பான மனநிலைக்கு வருவதைப் புன்சிரிப்பும் சொற்களும் உணர்த்தின‌.   ”இந்த ஊருணித் தண்ணிய கவனிச்சீங்களா?”   ”கவனிக்கிறதா? ஒருகாலத்துல இங்கனயேதான் கெடப்பேன். மாட்டக் குளிப்பாட்டிவிட்டு, இந்த மரத்துல ஒக்காந்தா, தூக்கம் அப்பிடி வரும்.”   “அது இல்ல. யாருமே இல்லாதப்ப, இந்த மத்தியானத்துல ஊருணித் தண்ணிக் கலரப் பாருங்க. பச்சையும் இல்லாம, வெள்ளையும் இல்லாம, கொஞ்சம் கூட ஆடாம அசராம அப்பிடியே நிக்குற மாதிரி.”   ராமகிருஷ்ணன் தீர்க்கமாகக் குளத்தைப் பார்த்தான். அவள் தொடர்ந்தாள்.   “தண்ணி தாம்பாட்டுக்கு இருந்தா எம்புட்டு நிம்மதியா இருக்கு?”   “ஆனா அதுக்காக படைக்கப்பட்டது இல்லையே தண்ணி.”   “அப்பிடீன்னு யாரு சொன்னா? நீங்களா குளத்தப் பார்த்ததும் உள்ள இறங்குறீங்க, குளிக்கிறீங்க, கழுவுறீங்க, பத்தாதுன்னு மாடு, ஆடுன்னு… தண்ணிக்குன்னு ஒரு மனசு இருந்தா என்ன பாடு படுமோ, இந்தா இப்ப மத்தியான நேரத்துல எப்பிடி இருக்கு பாருங்க, எவெனும் வராதீங்கடா எங்கிட்டக்கன்னு சொல்ற மாதிரி.”   “ம்ம்.”   ராமகிருஷ்ணனின் உதடுகளில் இம்மின் மாத்திரை அளவு அதிகரித்து, ஒரு ரீங்காராம் போல் ஒலித்தது. அதில் அவன் தீவிரமாய் எதையோ யோசிப்பது தெறித்து வெளியேறியது.   “ஒங்கண்ணுக்கு இந்த ஊருணி சலனம் இல்லாம நிம்மதியாத் தெரியுது. எங்கண்ணுக்கு இது அப்பிடியே யாருமே இல்லாம இப்பிடித் தனியாக் கெடந்து ஆவியாகுறேனேடான்னு இல்ல தெரியுது.”   “ஆங், தெரியும் தெரியும்.”   அவன் தோள்ப்பட்டையில் அடிக்கும் பாவனையில் தன் உள்ளங்கையால் ஒற்றி எடுத்தாள். விளையாடிக் கொண்டிருந்த சந்தனமாரி சிரித்துக்கொண்டே கைகளை விரித்தான். தன்னியல்பாய்த் தூக்கிக்கொண்டாள்.   அவள் இடுப்பில் ஏறியவன் தாவி ராமகிருஷ்ணனின் முடியைப் பிடித்து இழுத்தான்.   பலத்த காற்றுக்கு அசைந்து கொடுத்த புளியமரம் பூம்பிஞ்சுகளை உதிர்த்தது. பூ விழுந்த அதிர்வில் ஊருணியில் சின்னஞ்சிறு சலனம் வட்ட வட்டமாய்ப் பெருகியது. அவன் சைக்கிளைச் சாய்த்து உருட்டிக் கொண்டே நடக்க, அவனுக்குப் பக்கவாட்டில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போதும்பொண்ணு நடந்தாள். அவள் தலையில் தொக்கி நின்ற ஒரு புளியம்பிஞ்சை எடுக்கச் சொல்லி ராமகிருஷ்ணன் சைகையில் உணர்த்தினான். புரியாமல் விழித்தவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, பிஞ்சை அவள் தலையில் இருந்து இழுத்தான். அவள் பின்னால் வில‌க, ஒரு நீளமான முடியோடு இவன் கைக்கு வந்தது பிஞ்சு.   விடுமுறையின் சலனமற்ற மதிய நேரங்களில் ஊருணிக்கரையின் மரநிழல் ராமகிருஷ்ணனுக்காகவும் போதும்பொண்ணிற்காகவும் காத்திருக்கத் துவங்கின.   அப்படியான ஒரு மதிய நேரத்தில்தான் இப்படிக் கேட்டாள் போதும்பொண்ணு.   ”நீங்க கடேசி வரைக்கும் இப்பிடியே இருப்பீங்கன்னு நம்புறேன்.”   “எப்பிடி?”   “இல்ல, வேல வந்ததும், சரி நம்ம கடமை முடிஞ்சதுன்னு இங்க வராமலே இருந்துட மாட்டீங்களே?”   “அட, வேல வரட்டும் மொதல்ல, எல்லாம் ஒருவழியா சரி ஆகிடுச்சு, அனேகமா இந்த டிசம்பருக்குள்ள வந்துரும். அடேயப்பா, ஒரு வருசம் லப்பரா இழுத்துட்டாய்ங்களே!”   ராமகிருஷ்ணன் பெருமூச்சோடு சொன்னான்.   “அப்புறம், கடேசி வரைக்கும் இதே மாதிரி ஒரு ஃப்ரெண்டா மட்டும் இருப்பீங்கதான, அது இதுன்னு எங்கிட்ட வேற எதுவும் எதிர்பார்த்திர மாட்டீங்களே?”   “அடச்சே, அதெல்லாம் இல்ல. ஆனா அப்பிடி எனக்கு ஏதாவது ஆசை வந்தா, இந்த குழந்தைய குடுக்குற சாக்குல கை படுறது மாதிரில்லாம் பண்ணமாட்டேன், நேரா கேட்பேன், கல்யாணம் பண்ணிக்கிறீங்களானு.”   சொல்லிவிட்டு சிரித்தான். அவள் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை.   ஊருணியின் பாசி படர்ந்த பச்சை வண்ணத்தின் மீது காற்று உரசியதில் நீர்ப்பரப்பு லேசாய் அசங்கியது. உதட்டோரத்தில் மெல்லிதாய் ஒரு மாற்றம் நிகழ்த்தினாள்.   அவன் அப்படிச் சொன்னது மிகப்பெரிய தவறு என்பதை ராமகிருஷ்ணன் உணர்ந்திருக்கவில்லை, மறுநாள் அவள் வீடு பூட்டி இருந்ததைப் பார்க்கும் வரை. அதன்பிறகு ஒரு வாரம் அவனுக்குத் தெரிந்த அவள் பற்றிய விவரங்களைக் கொண்டு தேடிய எவ்விடத்திலும் அவள் இல்லை.   போதும்பொண்ணுவை ராமகிருஷ்ணன் ஒருபோதும் காதலித்திருக்கவில்லை. அவள் மீது காமமும் இருந்ததாகப் படவில்லை அவனுக்கு. ஆனால் அந்த ஒருவாரம் எதையோ இழந்தது போலிருந்தான்.   பூட்டிய வீட்டைப் பார்த்துப் பார்த்துச் சலித்தான். அவள் வேலைக்கான உத்தரவும் வந்துவிட்டதாக ஈ.பி.யில் இஞ்சினியர் சொல்லி அலுத்து விட்டார்.   *   பொங்கல் நாள். சரியாய் ஒருவருடம் ஆகிவிட்டது. போன பொங்கலில் நடந்த விசயங்கள் நேற்று நடந்தது போல் இருந்தது ராமகிருஷ்ணனுக்கு. தெருவில் பொங்கல் வைக்க கற்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள்.   புகை சூழ, போதும்பொண்ணு தெருவழியே நடந்து வந்தாள். சந்தனமாரி உடன் வந்து கொண்டிருந்தான்.   கண்களைக் கசக்கிப் பார்த்த ராமகிருஷ்ணனுக்கு எல்லாமும் மலர்ந்தது. ஓடிப் போனான் அவள் அருகில். சிரித்துக் கொண்டே கையில் இருந்த ஸ்வீட் பாக்கெட்டைக் கொடுத்தாள். வீட்டிற்குள் வரச் சொல்லி அழைத்துப் போனான். பொங்கல் வைப்பதை மறந்த பெண்கள் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.   “நீங்க சொல்வீங்களே, பொங்கல் அப்டீங்குறது நன்றி சொல்ற பண்டிகைன்னு. என் வேலைக்காக நீங்க அலைஞ்சத என்னால மறக்க முடியல, அதான் வந்தேன், நன்றி சொல்லிட்டுப் போலாம்னு.”   தன்னியல்பாய்க் குழந்தையைத் தூக்கிக்கொண்டான் ராமகிருஷ்ணன்.   “எனக்கும் உங்களப் பிடிக்கும். ஆனா அப்புறம் என்ன மாதிரி இப்பிடி ஆதரவு இல்லாத ஆளுங்களுக்கு ஹெல்ப் பண்ண  நாள பின்ன யார் வீட்லயும் விடவே மாட்டாங்க, நாமளும் அந்தத் தப்ப பண்ண வேணாமேன்னு தோணுச்சு. அதான், நீங்க கல்யாணம் பண்ணி ரொம்ப வருசம் நல்லா இருக்கணும்.”   ராமகிருஷ்ணனின் அண்ணி, இலையில் சுடச் சுட சக்கரைப் பொங்கலைக் கொண்டு வந்து அவனிடம் கொடுக்க, அதை வாங்கி அவளிடம் நீட்டினான். சூடு பொறுக்க, ஊதி ஊதி அமிர்தம் போல் உண்டாள்.   *   மழை ஓய்ந்து, மீண்டும் தூறல் விழத் துவங்கி இருந்தது. தெருவெல்லாம் நீர் அடித்துக்கொண்டு ஓடியது.   “சரிப்பா, நான் கெளம்புறேன். பையன் சாப்புடாம வெயிட் பண்ணுவான்.”   சொன்ன ராமகிட்டு சார், கையை ஒருமுறை வெளியே நீட்டி, மழையின் அளவைப் பார்த்து, உதட்டைப் பிதுக்கி, “நிக்கிற மாதிரி தெரியலயே!" என்று சொல்லிக்கொண்டே நடக்கத் துவங்கினார்.   அப்பா சொல்வது போல் புரட்சி எல்லாம் பேருக்குத்தான் போல, பாவம் அப்பெண் என்று தோன்றியது.   “போய்ட்டாரா, அவரோட பேசி புரட்சி, பொங்கல்னு போய்றாதடா, நல்ல வேலைல இருந்தாரு, கல்யாணமா காட்சியா? யாரோ ஒரு பொம்பளயோட மகன எடுத்து வளர்க்குறேன்னு காலத்த ஓட்டிட்டாரு, பாவம்.”   ஒரு கணம்தான். சுரீரென்று ஏதோ உறைத்தது.   அப்பாவை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அவருக்குப் பின்னால் இருந்த குடையை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி ஓடினேன்.   ***   காதலுக்குப் பிறகு… கொற்றவை   I   லட்சு குளித்து முடித்து ஈரத்தலையுடன் வர, கொதிக்கும் சாம்பாரில் மல்லித் தழைகளைக் கிள்ளிப் போட்டு அமர்த்தியபடி ஸ்டூலை எடுத்துப் போட்டான் மதி.   “என்ன லட்சு குளிச்சுட்டியா? சரி, உக்காரு.”   மேடு தட்டிய தன் வயிற்றைப் பிடித்தபடி மெல்ல அமர்ந்தாள் லட்சு. ஹேர் டிரையரை எடுத்து அவள் உலராக்கூந்தலின் மேல் சுடுகாற்றை லாவகமாக‌க் காட்டினான் மதி.   “இன்னைக்கு என்ன டிஃபன் மதி?”   “இட்லி சாம்பார்பா.”   “போதும் மதி. சட்னி கிட்னியெல்லாம் வேண்டாம்”   “நல்ல புருஷன், நல்ல பொஞ்சாதி” என்றபடி வந்தாள் வசந்தி.   இருவரும் சிரித்துக் கொள்ள, “அம்மா” என்றபடி வசந்தியின் இடுப்பிலிருந்து இறங்கி ஓடினாள் காதல்.   “காது குட்டி, இட்லி சாப்பிட்டீங்களா?” எனத் தாடையை பிடித்து ஆட்டியபடி கேட்டாள் லட்சு.   “ம்ம் சாப்பிட்டேம்மா. பப்பு தொட்டுக் கொடுத்தாங்க அம்மூ.”   “செல்லம்” என முத்தமிட்டாள்.   “குட் கேர்ள். அப்ப அப்பா சொன்னபடியே இப்ப டிவி போடுறேன்” என ஆன் செய்தான் மதி.   “அப்பா ஹிமாமாரி ஹிமாமாரி.”   “சரி சரி.”   தொலைக்காட்சியை முடுக்கிவிட்டு மீண்டும் ஈர முடிகளை வெப்பக் காற்றில் ஆடவிட்டான் மதி.   “அப்புறம் என்னடி முடிவு பண்ணி இருக்க? மாசம் ஏழாச்சு.”   “பச்… அம்மா.”   “ஆமாண்டி, முதல் குழந்தைக்கும் இதே மாதிரிதான். எட்டா நடந்து, பாட்டாப் படிச்சு, உசுர வாங்காதீங்கடி.”   மதி தன் விரல்களை லட்சுவின் முடிகளுக்குள் ஓட்டினான்.   “ம்ம்ம். நல்லா உலர்ந்திருச்சு” எனத் தொங்கும் வயரைச் சுருட்டி அலமாரியில் வைத்தான்.   “அத்தை சாப்பிடலாம். பசிக்குது”   “எடுத்து வைக்குறேன். என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க?”   சிரித்தபடி தட்டுகளை எடுத்து மேஜையில் வைத்தான் மதி. பாட்டிலில் தண்ணீர் பிடித்து வைத்தாள் லட்சு.   “ஹிமாமாரி எத்தனை தடவை சொல்லி இருக்கேன் மண்ணுல விளையாடாதன்னு…”   “அம்மா அம்மா அம்மூ டீவில…”   ஹாட்பேக்கை எடுத்து மேஜையில் வைத்த வசந்தி “இந்த வீட்ல நண்டு சிண்டுக்குக் கூட நான் தொக்கு.”   மதி சாம்பாரைக் கிண்ணத்தில் ஊற்றி எடுத்து வந்தான்.   “அத்தை உக்காருங்க.”   “நீங்களும் உக்காருங்க, மாப்ள.”   மூவரும் அமர்ந்தார்கள். இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டார்கள்.   “அம்மா, அந்த சாம்பாரை இப்படித் தள்ளு.”   சாம்பாரை ஊற்றி ஒரு வாய் வைத்த லட்சு, “இன்னைக்கு சாம்பார் சூப்பர்! என் டிரெயினிங் வீண் போகல.”   “ம்ம். அப்படியா சொல்ற? எனக்கென்னமோ கொஞ்சம் புளி கூட ஊத்திட்ட மாதிரி இருக்கு.” என்றான்.   “இங்க நான் என்ன பேசிக்கிட்டிருக்கேன்? நீங்க உப்புப் புளி பிரச்சினைய…”   “ஐயோ, அம்மா வளைகாப்புத்தான? வச்சுக்குவோம். ஆனா ஆளுங்க, கூட்டம், சடங்கு, சம்பிரதாயம் இதெல்லாம் வேண்டாம். எத்தனை தடவை சொல்றது?”   “என்ன மாப்ள?”   “அத்தை, உங்களுக்கே தெரியும். எங்களுக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. போன தடவையே உங்க திருப்திக்காகத்தான் ஒத்துக்கிட்டோம்.”   “மாப்ள, நான் என்ன ஐயர கூப்பிட்டு ஹோமம் கீமமெல்லாம் பண்ணனும்னா சொல்றேன்? அக்கம் பக்கம், நம்ம சொந்தங்கள்ல சொல்லிவிட்டு கை நிறைய வளையல் போடச் சொல்லி நல்லா வாழுற பொம்பளைங்க கிட்ட ஆசி வாங்க நினைக்குறது ஒரு குத்தமா?”   லட்சு சாப்பிட்டு எழுந்து, தட்டை பேசினில் போட்டுக் கை கழுவினாள்.   “என்னடி, மறைமுகமா கைய கழுவிட்டேன்னு சொல்றியா?”   “கை காஞ்சிடும், பரவால்லையா? அப்புறம் அது தரித்திரம்னு புலம்ப மாட்டியே?”   “ம்க்கும்” என எழுந்தவள் தட்டை போட்டுக் கை கழுவினாள்.   “இப்ப, நீ எதுக்கு கை கழுவுன?”   மதியும் கை கழுவி வந்து ஆஃபீஸ் கிளம்பத் தேவையான ஃபைல்களை எடுத்து வைத்தான்.   “பிச்கூ… பச்சக்… ஹ ஹ ஹா… ஜெம்ஸ் சாக்லேட் பந்துடன் ஒரு பிச்கூ பொம்மை இலவசம்.”   “அம்மா அம்மா ஜெம்ஸ்… அப்பா.”   “சரி காதல் குட்டி, அப்பா ஆஃபீஸ்லருந்து வரும்போது வாங்கிட்டு வரேன்.”   உம்மா கொடுத்து சைக்கிளில் உட்கார்ந்து அறையை வட்டமிட்டாள் காதல்.   ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியின் ஒலியை குறைத்த வசந்தி.   “ஏண்டி புள்ளதாட்சி பொம்பளைக்கு நிறைமாசம் நெருங்கும்போது வளையல் போடுறது பழங்காலத்துல இருந்தே இருக்கு. அதுவுமா உங்க கொள்கைக்கு இடிக்குது?”   “அம்மா அது இடிக்கல. ஏன் வளையல் போட சொல்றாங்கன்னு எனக்கும் தெரியும். ஆனா ஆளுங்கள கூப்பிடுறதுதான் எனக்கு புடிக்கல. இங்க அங்கன்னு சந்தனம் பூசுறது குங்குமத்தை நெத்தில பெயிண்ட் அடிக்குறது. இதெல்லாம் என்னால சகிச்சுக்க முடியாது.”   “அதுவுமில்லாம நல்லா வாழ்ந்த பொம்பள, வாழாத பொம்பளைன்னு லிஸ்டு வேற போடுறீங்க. குழந்தை பிறக்காத பொம்பளைங்க இருந்தா மலடின்னு கூப்பிட மாட்டீங்க. இதெல்லாம் தேவையாத்த?”   “ம்ம்ம். அதான! எல்லாம் உங்களச் சொல்லனும் மாப்ள. ஆம்பிளை மாதிரியா நடந்துக்குறீங்க நீங்க?”   “ஏந்த்தை, ஆம்பிளைக்குன்னு தனி நடை இருக்கா என்ன‌?”   “ம்க்கும். என்னமோப்பா, எங்க‌ காலத்துல அப்படித்தான். பொம்பிளைங்க பைய புருஷன் பின்ன நடக்கனும் ஆம்பிளைன்னா வேகவேகமா முன்னால நடக்கனும். இங்க ரெண்டும் ஒரே மாதிரில்ல நடக்குது.”   சிரித்த மதி, “என்னை அன்பா பார்த்துக்க ஒருத்தரும், எந்த நடிப்பும் கூச்சமும் இல்லாம என்கிட்ட இருக்குற அன்பைக் காட்ட எனக்கு ஒருத்தரும் தேவைப்பட்டாங்க. அதேதான் உங்க பொண்ணுக்கும். அதுக்காகத்தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நடை பழக இல்லத்த.”   “ஆமாமா. அதான் தெரியுமே உங்க அன்பு, கிறுக்கு என்னான்னு. ஏன் மாப்ள, கூப்பிடுற மாதிரியா புள்ளைக்குப் பேரு வச்சிருக்கீங்க?”   “ஏந்த்தை? காதல் சுருக்கமாத்தான இருக்கு!”   “ஐயோ! அந்தப் பேரை புள்ள வெளிய விளையாடும்போது ‘காதல், ஏய் காதல்!’னு கூப்பிட்டா ஊரே ஒரு மாதிரி பார்க்குது, மாப்ள”   “ஏந்த்தை காதல்ங்குறது அப்படி ஒரு கெட்ட வார்த்தையா என்ன!”   லட்சு சிரித்தவளாக எழுந்தாள்.   “என்ன லட்சு?”   “ஒண்ணுமில்லப்பா, இளனி குடிக்கலாம்னு”   “ஏன் என்கிட்ட கேட்டா நான் எடுத்து தரமாட்டனா?”   சிரித்துத் தலையாட்டியபடி லட்சு உட்கார‌, மதி இளநீரின் கொண்டையைச் சீவினான்.   “அத்தை காதல்னா என்ன? அன்புதான! அன்புன்னு பேர் வச்சுக்குறதில்லையா! அதுமாதிரி இது காதல். அவ எங்க காதலுக்கு அடையாளமாப் பொறந்திருக்கா. எங்களோட காதல் சின்னம்!”   “நல்லா வியாக்கியானம் பண்றீங்க.”   “இதென்னமா கொடுமையா இருக்கு? உன் கேள்விக்குத்தான பதில் சொன்னாரு.”   “ஆத்தா உம் புருஷன நான் ஒண்ணும் சொல்லலத்தா. சரி, வளைகாப்புக் கதை என்ன?”   “ம்ம்ம். நம்ம குடும்பக் கதைதான்.”   “அடியேய்.”   “அம்மா என் புருஷனும் நீயும் அத்தையும் போட்டு விட்டாப் போதும். சும்மா அவங்கள இவங்களன்னு கூப்பிட்டு, வர்ரவங்களுக்காக தாலிய போடு, மெட்டிய போடும்ப. அப்புறம் பட்டுப் புடவை கட்டும்ப. எல்லாத்துக்கும் மேல நகை ஸ்டாண்டு மாதிரி வந்து நிக்கச் சொல்லுவ.”   “ஏண்டி, ஒரு நாள் போட்டா குறைஞ்சா போயிடுவ?”   “என் புருஷனோ, ஏன் என் மாமியாரோ கூட அதைப் பத்தி கவலைப்படல. நான் ஏன் மத்தவங்களுக்காக கண்டதையும் மாட்டிக்கனும்?”   “அப்ப, அவங்க ஒத்துக்கலன்னா இதையெல்லாம் மாட்டிக்குவல்ல? என் பேச்சை மட்டும்…”   “இல்ல, ஒத்துக்காம இருக்கறவர்னா அவரு எனக்கு புருஷனாவே ஆகியிருக்க முடியாது.”   ”ஐயோ ஐயோ… உன்னால அவரு கெட்டாரா, இல்ல அவரால நீ கெட்டியா, கடவுளே!”   “அவரால‌தான் நாங்க கெட்டோம் அத்தை.”   “இதுக்கு என்ன எடக்கு வச்சுருக்கீங்க, மாப்ள?”   “அவருதான எல்லாரையும் படைச்சாருன்னு சொல்றாங்க.”   “இல்ல சாமி, இல்ல... உங்க ரெண்டு பேரையும் சத்தியமா அவரு படைக்கல.”   “அப்ப அவரு படைக்காதவங்களும் இந்த பூமில பிறந்திருக்காங்கன்னு ஒத்துக்குறீங்க!”   “அந்த வெள்ளைத் தாடிக்காரர படிச்சுட்டு ஏன் மாப்ள இப்படி வம்பு பண்றீங்க?”   “ஒரு வெள்ளை தாடிக்காரன் இல்லத்த, மொத்தம் மூணு பேரு…”   “அம்மூ அம்மூ எனக்குப் பசிக்குது.”   “என்னடி வேணும் என் தங்கம்” எனக் காதலைத் தூக்கினாள் வசந்தி.   “எனக்கு… எனக்கு… க்ரீம் பிச்சி தர்றியா?”   “காதல் குட்டி க்ரீம் பிச்சி அதிகமா சாப்பிட்டா பல்லெல்லாம் சொத்தையாத்தான் வளரும்.”   “இல்லம்மா, ஒண்ணே ஒண்ணு.”   “சரி சாப்பிடு. உடனே வாய் கொப்பளிக்கனும்.”   “ம்ம்ம் சரிம்மா.”   அடுக்களை சென்று வசந்தி பிஸ்கட்டை எடுத்து கொடுத்தாள்.   “அம்மூ இன்னொண்ணு” எனக் கண்ணடித்து கிசுகிசுத்தாள் காதல்   “உங்கம்மா பார்த்தா… சரி இந்தா, வாங்கிட்டு அந்தப்பக்கமா ஓடிடு.”   பிஸ்கட்டை வாங்கிக் கொண்டு ஓடினாள் காதல்.   “கடைசியா என்னதான் சொல்றீங்க?”   “அத்தை நமக்குள்ள வச்சுக்குவோம். யாரையும் கூப்பிட வேண்டாம். நீங்க அம்மா அப்பா போதும்.”   “என்னமோ போங்க. அந்த கறுப்புச் சட்டைக்காரன் மட்டும் உயிரோட இருந்தான், இந்நேரம் நான் நேரா அவன் வீட்டுக்கே போயிருப்பேன்.”   பையை எடுத்துத் தயார் செய்து ஷூவுக்குப் பாலீஸ் போட்டான் மதி.   “ஏன்யா உனக்கு சாமி, சடங்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லன்னா நீ உன்னோட வச்சுக்க வேண்டியது தான? எதுக்குயா மேடை போட்டுப் பேசி, புஸ்தகமெல்லாம் போட்டு எங்க வூட்டுப் புள்ளைங்களயும் கெடுத்தனு கேட்டிருப்பேன்.”   “அப்போ, சாமி இருக்கு, இந்தப் பூஜை பண்ணுங்க, மண் சோறு சாப்பிடுங்க, அவனைத் தொடாதீங்க, இவள வீட்டுக்குள்ள விடாதீங்க, தீட்டுன்னு அவங்க ஏம்மா மேடை போட்டு பேசுனாங்க? புஸ்தகமெல்லாம் போட்டாங்கன்னு அவரு பதிலுக்கு கேட்டிருப்பாரு.”   “நீங்கல்லாம்… ச்சே… போடி.”   சிரித்த‌ மதி, “நான் ஆஃபீஸ் கிளம்புறேன். லட்சு, நீ ரெஸ்ட் எடு. மறக்காம ஜூஸ் குடி. நான் சாயந்திரம் வந்தப்புறம் வாக் போகலாம்” என்று சொல்லிக் கிளம்பினான்.   “சரிடா செல்லம்” என லட்சு இரு கைகளை விரிக்க, அவள் வயிறு அமுங்காதவாறு மென்மையாக அவளைக் கட்டிப் பிடித்து உதட்டில் முத்தம் வைத்தான் மதி.   லட்சு இடது கன்னத்தை திருப்ப. ஒரு செல்லக் கடி கடித்தான் மதிவாணன். “ஸ்… அம்மா.”   வசந்தி சிரித்துக் கொண்டாள்   காதலுக்கு முத்தம் கொடுத்து, “பைடா குட்டி.”   “பைப்பா. சாந்திரம் ஜெம்ஸ். பிச்சுக்கூ… மறந்துடாத.”   “பிச்சுக்கூ… ” என ஐந்து விரல்களைக் குவித்துத் திறந்து காட்டிவிட்டு சென்றான் மதி.   “சரிடி நான் குழந்தையத் தூங்க போட்டுட்டு மார்கெட் போயிட்டு வரேன்.”   “ம்ம்ம் சரிம்மா.” என தன் அறைக்கு சென்றாள் லட்சு.   இரண்டு தலையனைகளை முதுகிற்கு முட்டு கொடுத்து மெல்ல சாய்ந்து உட்கார்ந்தாள்.   ‘உன்னால அவரு கெட்டாரா, இல்ல அவரால நீ கெட்டியா…’   அம்மாவின் கேள்வி அவள் நினைவுகளைக் கிளறியது.   II   புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்க, கூட்டம் கூட்டமாக மக்கள் வேடிக்கைப் பார்த்துச்சென்றனர். ஒரு கடையில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ எனக்கேட்டுக் கையில் தடியோடு புன்னகைத்தபடி அமர்ந்திருந்தார் ராமசாமி.   டாவின்சியின் தூரிகைக்காக கணக்கான புன்னகையோடு அமர்ந்த மோனலிசா போல் அல்லாது ஆட்டம் காட்டி ஓய்ந்த குழந்தையின் சிரிப்பு அது. இரண்டு கைகள் அந்தப் புத்தகத்தை எடுத்தன.   “ஓ சாரி. நீங்களும் எடுக்குறீங்களா?” கேட்ட‌ குரலை நிமிர்ந்து பார்த்தாள் வரலட்சுமி.   வாரப்படாத தலை. குறவனுடையவை போன்ற லேசான பழுப்பு நிறக் கண்கள். அளவான மூக்கு, சிறிய, கரிய உதடுகள், பூப்போட்ட வெள்ளைச் சட்டை, கருப்பு ஜீன்ஸ், உட்லண்ட் ஷூவோடு நின்றிருந்தான்.   “பரவால்ல இருக்கட்டும். நான் வேற காபி வாங்கிக்குறேன்” என்றவள் கவுண்ட்டரை நோக்கி நடந்தாள்.   “பெண் ஏன் அடிமையானாள்? வேணும்.”   “அங்க இருக்குமே!”   “அதை இவரு எடுத்துக்கிட்டாரு.”   “அப்படியா! சரி இருங்க, வேற காபி இருக்கான்னு பார்க்குறேன்.”   தேடியவன், “அடடா! ஒரு காபிதான் இருந்திருக்கு.” என்றான்.   “என்னங்க இப்படி சொல்றீங்க?”   “சாரி மேடம். நாளைக்கு வந்துடும்.”   “பச்… நான் நைட்டு ஊருக்குப் போறேன். சரி விடுங்க, நான் பார்த்துக்குறேன்.”   கடையை விட்டு வெளியே வந்து நடந்தாள்.   பணத்தைக் கொடுத்து புத்தகத்தை வாங்கி வேகமாக அவளைப் பின் தொடர்ந்தான் மதிவாணன்.   “மேடம்.”   “ம்…” எனத் திரும்பினாள் வரலட்சுமி.   “இந்தாங்க…”   “நீங்க ஏன் எனக்குப் புத்தகம் கொடுக்குறீங்க?”   “இல்ல ஆசைப்பட்டீங்க. முக்கியமான புத்தகம் வேற. அதான் என்னோட பரிசா…”   “எதுக்கு பரிசு? நான் கேட்டனா?”   “ஐயோ, தப்பா நினைக்காதீங்க. ஊருக்குப் போறதா சொன்னீங்க. நான் இங்கதான் இருப்பேன். நாளைக்கு வந்து வாங்கிக்குவேன்.”   “நானும் ஊர்ல வாங்கிக்குறேன். ம்ம் தள்ளுங்க. ஆளைப் பாரு ஆளை…”   மதிவாணன் வருந்தி இடது பக்கம் திரும்பினான்.   “ஆசைப்பட்டாளேன்னு கொடுத்தா… ச்சே...” எனப் போகத் தொடங்கினான்.   “எக்ஸ்கியூஸ் மீ” எனக் குரல் கேட்க, மதிவாணன் திரும்பினான்.   “கொடுங்க.”   மதிவாணன் புரியாமல் பார்க்க “இல்ல, ஊர்லையும் கிடைக்காமத்தான் இங்க வாங்கிடனும்னு வந்தேன்.”   புன்முறுவலுடன் “இந்தாங்க…”   “கையெழுத்துப் போட்டுக் கொடுங்க, நான் அன்பளிப்பாவே வச்சுக்குறேன்…”   “எதுக்குங்க வம்பு? நீங்க காசு கொடுத்துடுங்க…”   சிரித்த வரலட்சுமி, “எவ்வளவு?”   “40 ரூபாய்.”   100 ரூபாயை எடுத்துக் கொடுத்தாள் வரலட்சுமி.   ”சாரிங்க, என்கிட்ட சில்லறை இல்ல.”   “ம்ம்ம்… சரி காண்டீன்ல மாத்திக்குவோம். காஃபி சாப்பிடலாம்ல?”   “ம்ம்… சாப்பிடலாம். காஃபிக்கான காசைக் கழிச்சுட்டு மிச்சத்தைக் கொடுத்தா போதும்.”   வரலட்சுமி சிரித்தபடி போனாள். பெண் ஏன் அடிமையானாள்? எனத் தெரிந்து கொள்ள அன்று வர‌லட்சுமி வாங்கிய புத்தகம் உண்மையில் அவளுக்கு ஒரு மகத்தான காதலனைப் பரிசளித்தது!   III   காதல் பிறந்தாள். மூன்று வருடம் கழித்து காதலுக்குப் பிறகு இப்போது லட்சு மீண்டும் கருவுற்றிருந்தாள்.   “ஏன் லட்சு, முதல் குழந்தைக்கு காதல்னு பேர் வச்சுட்டோம். அடுத்ததும் பொண் குழந்தையா இருந்தா அன்புன்னு பேர் வச்சுடலாமா? ஆணா இருந்தா நேசன். சரியா… உனக்கு ஒகேதான?”   “பையனா இருந்தா நேசன்னு வச்சுக்கலாம். ஆனா எனக்கு பையன் வேண்டாண்டா.”   அவளது கண்களைத் தன் கண்களால் முத்தமிடுவது போல் பார்த்த மதி, அவள் தாடையைப் பிடித்து சற்றே நிமிர்த்தி “லட்சு உனக்கு சின்ன வயசுல நடந்ததை நினைச்சுக் குழப்பிக்காத. நாம எல்லாத்தையும் வெளிப்படையாச் சொல்லி வளர்த்தா ஒரு தப்பும் நடக்காது.”   அவன் தோளில் சாய்ந்து, “சரி மதி.” என்றாள்.   அவள் கண்ணீரை துடைத்தான் மதி.   நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தவளுக்கு பழைய நினைவுகள் வந்து அச்சமூட்டியது.   அப்போது அவளுக்கு வயது எட்டு, தம்பிக்கு ஆறு. பொம்மைகளை வைத்து விளையாடியபடி இருக்க,   “அக்கா அக்கா… இங்க பாரேன் எனக்கு எப்படி இருக்கு… எங்க உனக்குக் காமி.”   “என்னக்கா இது உனக்கு வேற மாதிரி இருக்கு…”   “ஆமாம்டா உனக்கு மூணு இருக்கு. எனக்கு ஒண்ணுதான் இருக்குல்ல…”   “அக்கா, அப்ப நீ எது வழியா ஒண்ணுக்குப் போவ?”   “இது வழியாத்தாண்டா…”   “உனக்கு நீளமா இல்லையே… அப்ப ஒண்ணுக்கு கீழ வருமா…”   “ம்ம்ம் வருதே…”   “உனக்கு இப்படியே இருக்குமா சுருங்குமா?”   “ஏண்டா…”   “இல்ல, எனக்கு இப்ப… தொட்டுப் பாரேன் எப்படி சுருங்கி காஞ்சு போன மாதிரி இருக்குன்னு…”   “ஆமான்டா…”   “சில நேரத்துல இப்படி ஆகிடுதுக்கா….”   “சரி விடு… சரியாகிடும்… நான் வெளிய போய் விளயாடப் போறேன்”   பாவாடையைச் சரி செய்து கொண்டு ஓடினாள் வரலட்சுமி.   வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி தன் வயிற்றைத் தடவினாள் லட்சு. பனிக்குடத்தில் உப்புப் பரவியது.   “அக்கா வர்றியா? இன்னைக்கும் தொட்டு தொட்டு விளையாடலாம்…”   “போடா நீ அழுத்தித் தொடுற… வலிக்குது…. இனிமேல் நான் உன்கூட விளையாட மாட்டேன்… போடா…”   குலுங்கி அழுதாள் லட்சு.   “இப்ப எனக்குப் பையன் பிறந்தா அவனும்… என் பொண்ணை அப்படி…”   “நான் தெரியாமத்தான அவனுக்கு… தம்பியும் தெரியாமத்தான அப்படிக் கேட்டான்…”   “ஐயோ, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கனும்? இல்ல மத்தவங்க வீட்லையும்…”   “ஏன் அம்மா, அப்பா சின்ன வயசுலையே அதைச் சொல்லிக் கொடுக்கல?”   “ஆம்பிளை, பொம்பிளைக்கு உறுப்பு வேற வேற… ஏன் என்னன்னு அம்மா, அப்பா சொல்லி இருந்தா தம்பிக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்திருக்குமா?”   “இன்னைக்கு நான் குத்த உணர்ச்சில துடிக்குற மாதிரி… நாளைக்கு எம் பொண்ணு… ம்ஹூம்…”   “லட்சு இது ஒரு சாதாரண விஷயம். உடல் உறுப்புகளைப் பத்தித் தெரிஞ்சுக்குற ஆர்வத்துல உன் தம்பி அக்காங்குற முறைல உன்கிட்ட அப்படிக் கேட்டிருக்கான். நீயும் தம்பிதானன்னு சொல்லிக் கொடுத்திருக்க. விடு, இதுக்கெதுக்கு தினம் தினம் அழுதுகிட்டிருக்க?”   “நாம நம்ம பிள்ளைங்களுக்கு அந்த வயசு வரும்போது எல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்ப்போம். அழாத படு. எவ்வளவு புத்தகங்கள் படிக்குற இந்தச் சின்ன விஷயத்தை உன்னால தாண்ட முடியலையா, லட்சு?”   அவள் நெற்றியில் முத்தம் வைத்து அவளைப் படுக்க வைத்தான்.   IV   நேசன் ஓடி வந்தான்.   “அம்மா அம்மா… ஏம்மா நான் டவுசர் போடுறேன்? அக்கா மட்டும் ஸ்கர்ட் போடுறா…”   ஆஃபீசிலிருந்து வந்து காலணியை கழட்டிய லட்சுவிடம் கேட்டான் நேசன்.   லட்சு சற்று அதிர்ச்சியுடன் பார்த்தவள், “அக்காகிட்ட இதைப் பத்தி கேட்டியா நேசன்?”   “இல்லம்மா உன்கிட்டத்தான் கேக்குறேன். ஏம்மா அக்கா ஒண்னுக்கு போற மாதிரி ஈசியா டிரஸ் போடுது? நான் மட்டும் ஏம்மா… அவசரமா வரும்போது இந்த டவுசர் கஷ்டமா இருக்கும்மா. சில நேரத்துல ஜிப்புல மாட்டிக்குதும்மா…”   ஃபோனை எடுத்தாள் வரலட்சுமி.   புத்தகங்கள், போஸ்டர்களோடு வந்தான் மதி.   “நேசன் குட்டி… காதல் செல்லம்… இங்க வாங்க, அப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாருங்க.”   “என்னதுப்பா?”   “குட் டச் பேட் டச், என்ன புக்பா இது?”   நேசனை தூக்கி மடியில் வைத்தவனாக மதி,   “ம் இதுதான் உங்க உடம்பை பத்தி தெரிஞ்சுக்கத் தேவையான புத்தகம்.”   “ஹை!”   “அப்பா இது நான்… இது அக்காவா?”   “ஆமாம் நேசன்… காதல் பார்த்தியா? இது ஆம்பிளைங்க உடம்பு… அவங்க உடம்புல…”   “நேசன், இது பொம்பிளைங்க உடம்பு…”   வண்ண வண்ணப் படங்கள் போட்டிருந்த புத்தகத்தைத் தம் மேல் போட்டபடி உறங்கிப் போயிருந்தார்கள்.   “அம்மா ஜிப்புல மாட்டிக்குதும்மா… அக்காக்கு அந்தப் பிரச்சினை இல்லல்ல…” என நேசன் கேட்டது நினைவு வர, “ஒருவேளை தம்பிக்கும் அதனாலதான் எனக்கு எப்படி இருக்குன்னு…”, பதில் கிடைத்தவளாக லட்சு,   “மதி, நான் ஸ்கூல் பிள்ளைங்களுக்கு ‘நோ யுவர் பாடி’ன்னு வகுப்பெடுக்கலாம்னு இருக்கேன்.”   தனது கைகளை அவன் தோளின் மீது போட்டு அவன் முதுகில் தன் முகத்தை பதித்தாள் லட்சு.   “வேலைக்கும் போயிட்டு, எப்படி லட்சு?” அவளை நோக்கித் திரும்பினான் மதி.   “மாசத்துல ஒரு நாள் லீவு எடுக்கலாம். அந்த டைம்ல எடுக்குறேன்.”   “உன் உடம்பு ஒத்துழைக்கும்னா செய். கிடைக்குற ஒரு நாளையும் அலைய முடியுமான்னு பார்த்துக்கோ.”   “முடிஞ்ச அளவுக்குப் பண்றேன்.”   “ம்ம் சரி…”   அவளைத் தன் நெஞ்சின் மேல் இறுக்கிக் கொண்டான் மதி. அவனின் வெம்மையான மூச்சுக் காற்று அவளின் நெற்றியைச் சூடேற்றியது. தன் இடதுகாலை மதியின் தொப்பை மேல் போட்டபடி அவனுள் ஒடுங்கியவளாக அவன் கன்னத்தை ஈரமாக்கியவாறு அன்றிறவு நிம்மதியாக உறங்கினாள் லட்சு.   அருகில் காதலும் நேசனும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்.   *** முகூர்த்த நாள் ஹரன்   பயணங்கள் எதில் ஆரம்பிக்கின்றன?   ஆயிரம் மைல் பயணமும் ஓர் அடியில் தான் தொடங்கும் என்கிறது ஒரு வால்பேப்பேர் வாசகம். பயணம் ‘ப’வில் தொடங்கும் என்கிறது ஒரு மொக்கை ஜோக். ஆனால் எனக்கு அது playlist உடன் தான் தொடங்கும்.   இந்தப் பயணம் கூட அப்படித்தான் ஆரம்பித்தது. “பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று…” ஹெட்ஃபோன்களுக்குள் எஸ்பிபி பாட ஆரம்பிக்கும் போது, சில்லென்ற‌ ஜன்னலோரக் காற்றை முகத்தில் வாங்குவது எவ்வளவு சுகம்! முந்தைய‌ பயணங்களை அப்படித்தான் ரம்மியமாக்கிக் கொண்டிருக்கிறேன்.   ஆனால் இம்முறை எங்கே! நல்ல கூட்டம். நின்று கொண்டிருக்கிறேன். கும்பகோணம் தாண்டி பாபநாசம் வரை போக வேண்டும். பெருங்களத்தூரில் வந்த கடைசி கும்பகோணம் பேருந்தில் ஏறியிருக்கிறேன். அது ஒரு சுபமுகூர்த்த நாள். கோயம்பேட்டிலேயே நிரம்பியிருக்கிறது கூட்டம். பேருந்தின் எல்லா possible இடங்களிலும் ஒரு bagகும் backகும் park ஆகியிருந்தன. இந்தக் காட்சியைப் பார்த்தபோது தான் நடத்துநர் கோபத்தின் நியாயம் புரிந்தது – “ஜன்னல் சீட்டு ஃப்ரீயா இருக்கா?” என வண்டி ஏறுகையில் கேட்டேன்.    “ஏன்டா, எரும மாடு. ஐடில வேல பாக்குற. ஃப்ரெண்டு கல்யாணத்துக்கு வர்ற. ஒரு டிக்கட் புக் பண்ணனும் கூட அறிவில்லயா. இப்போ நின்னுகிட்டு வர்றேன்னு கல்யாணப்பொண்ணுக்கே ஃபோன் பண்ணிச் சொல்ற.” அறிமுகம் தேவையற்ற கேரக்டர் ஒன்று ஹெட்ஃபோன்களுக்குள்ளே எஸ்பிபியைப் பாதியில் கட் பண்ணி விட்டு டெலிசெருப்படிகள் தந்து கொண்டிருந்தது. முன்பதிவு செய்த‌ பேருந்து என்னை ஏற்றாமல் போய் விட்டது என்ற கொஞ்சம் மறுபுணரமைக்கப்பட்ட உண்மையைத் தெரிவித்தால், அவள் செல்பேசியில் துப்பும் எச்சில் என் காதில் தெறிக்கும் அபாயமுள்ளதால் தவிர்த்து விட்டேன். இத்தனை களேபரக் குழப்பங்களூடேயும் நான் நிற்க இடத்தைத் தேர்வு செய்ததில் ஒரு குதூகலம் இல்லாமல் இல்லை! கம்பி ஒன்று சாய்ந்து நிற்க வசதியாய் இருக்கிறது. மேலும் அக்கம்பி அவள் இருக்கைக்கு அருகில் இருக்கிறது. கண்ணாடி அணிந்திருந்தாள். ஃப்ரேம் அற்றது. நீல நிறத்தில் துப்பட்டாவோ துண்டோ எதோ ஒன்று கொண்டு மூக்கு வரை மூடியிருந்தாள். கையில் மொபைல். அதில் அசையும் எதோ வீடியோ. அவளுக்கு ஜன்னல் ஓரம் கிடைத்து கூந்தல் காற்றில் லேசாகப் பறந்திருந்தால் நான் அங்கேயே செத்துவிட்டிருப்பேன் என்பதால் கடவுள் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை அவளுக்கு வழங்கவில்லை. மூன்று வினாடிகளுக்கு மேல் வேறெங்கும் அலையவிடாமல் பார்வையைத் தன் மீதே பதிய வைக்கும் முகங்கள் மிகையின்றிப் பேரழகானவை. இன்னும் அவள் முகம் முழுதாகக் கூடப் பார்க்கவில்லை.   Black leggings மற்றும் dirty white tops சர்க்கரைப் பொங்கலுக்கு வடகறி போல சம்பந்தமே இன்றி நீல நிற ஸ்டோல். இவையெல்லாம் சேர்ந்து இவளை எப்படி இவ்வளவு அழகாக்கிக் கொண்டிருக்கின்றன!   எவ்வளவு யோசித்தும் ஒரு கவிதை கூட வரவில்லை. இதுவரை ஒருமுறை கூடப் பார்த்திராத ஊருக்குப் போகையில் வரும் பரவச உணர்வை மிகச் சாதாரணமாய்த் தோற்கடித்துக் கொண்டிருக்கிறாள். பேருந்து செங்கல்பட்டு முன்னிருக்கும் டோல் கேட் தாண்டியது. உட்புறமிருந்த விளக்குகள் அணைக்கப் பட்டன. அப்போது என் மொபைல் தன் ஆகச் சிறந்த shuffle orderரில் playlistடை இசைத்துக்கொண்டிருந்தது.   ஓமணப் பெண்ணே… நானும் இதற்கு மேல் நிற்க முடியாது என அவள் காலருகே எனது bagகை நகர்த்தி வைத்தேன். அப்படியே என்னை ஒடுக்கி, மடக்கி அங்கேயே கீழே உட்கார்ந்து விட்டேன். ஒரு பெண்ணைக் கீழிருந்து பார்ப்பது முன் பழக்கமற்ற கோணமாக இருந்தது. பிடிக்கவுமில்லை. அவளும் லேசாகக் கண்ணயர்ந்து விட்டாள். கால்களை முன் சீட்டின் முதுகில் முட்டுக் கொடுத்துத் தொங்க விட்டிருந்தாள். ஏதோ ஒரு ரம்மியமான மாளிகை ஒன்றின் நிலா இரவில், படுக்கையறையின் ஜன்னல் திரை காற்றில் அசைவது போல அவள் துப்பட்டா என் முகத்தில் மோதிக் கொண்டிருந்தது. ‘கைகளில் ஏந்தாமல் இருந்து விடு பார்க்கலாம்’ எனக் குழந்தையின் புஜூபுஜூ கன்னங்களுக்குக்கு இணையான மிருதுவுடன் அவள் பாதங்கள் சவாலிடுவது போலிருந்தது. அவள் எல்லைக்கோடுகளை நெய்து கொண்டிருந்த லெகிங்ஸ் தன் வாளிப்பால் என் வாலிபத்தை sledging செய்தது. எல்லாம் ‘ஓமணப் பெண்ணே’ பாடல் செய்த வேலையாக இருக்கலாம்.    வா வா என்றழைத்த‌ கால்களில் மனம் செலுத்தாமல் பாடல்களில் கவனம் திருப்பி, கால் நீட்டுகையில் முன் உட்கார்ந்திருப்பவனை உதைத்து, சீட்டில் இருப்பவர்களின் புஷ்பேக்கில் bag நசுங்கிடாமல் பாதுகாத்து என்னை engagingகாக வைத்துக்கொண்டேன் என்றாலும் அடிக்கடி அவள் பக்கம் பார்வை திரும்பாமலில்லை. ‘பூ அவிழும் பொழுதில் ஓராயிரம் கனா’ என சந்தோஷ் நாராயணன் ஆரம்பித்த போது போது, பஸ் ஒரு மோட்டலில் நிறுத்தபட்டது. கூட்டம் இனி இறங்கி ஏறும் என்பதால் நானும் எழுந்து நின்றுகொண்டேன்.  அப்போதும் அந்தத் தூங்குமூஞ்சி முகத்திரை விலகாமல் தூங்கியபடியே இருந்தது. பஸ் மீண்டும் கிளம்பியது. எனக்கும் உட்கார்வதை விட நிற்பதே சௌகரியமாக இருந்தது - எல்லாவற்றுக்கும். எதிர்வரும் வாகன விளக்கொளிகள் சோம்பேறி மின்னல்களாய் பேருந்தின் உட்புறம் ஊடுருவிச் செல்ல அவள் முகம் பிஞ்சுமஞ்சள் நிறத்தில் மின்னியது. அவளது மடிமேல் உறங்கிய மோட்டோ G3 அதிர்வுடன் விழித்து Appa Calling என்றது. அதன் விரைவுக்குச்சற்றும் சளைக்காதவொரு சடுதியில் அவளும் விழித்தாள்.   பாதி முகம் மறைந்திருந்த திரை விலக்கி அவள் அப்பாவின் அழைப்பை attend செய்தாள். அவள் குரல் ஒன்றும் மிகப் பிடித்தமாய் இல்லை. ஆனால் அது தான் கண்கள் பேசி விடுகின்றவே, அதுவே போதும்! “முத்துச் சிப்பி போலொரு கத்தினுள்ளில் வந்நொரு கிண்ணாரம்” பாடல் பாடுகையில் இவள் முகம் திறந்திருக்கலாம். இன்னும் கவிதையாக இருந்திருக்கும். இப்பொதென்று இல்லை. பெரும்பாலும் மனநிலையோடு பின்னணியில் ஒலிக்கும் பாடலோ இசையோ பொருந்துவதேயில்லை. என்ன செய்வது, கடவுள் என்ன இளையராஜாவா! இந்த அபொருத்தங்களை வருத்தம் இன்றி சகித்துத்தான் ஆக வேண்டும்.   அவள் ஜிமிக்கி, வாட்சின் டயல் மற்றும் செருப்பு எல்லாமே தாங்களும் நீல நிறம்தான் என்று என்னிடம் அறிமுகம் செய்துகொண்டன. ‘நல்ல ட்ரெஸ்ஸிங் சென்ஸ்’ என்று உள்ளூரப் புகழ்ந்து கொண்டேன்.   இந்தச் சிலாகிப்புகளுக்கிடையே “இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு கெளம்புங்க, சரியா இருக்கும். நான் சேத்தியாத்தோப்பு தாண்டியதும் கால் பண்றேன்” என்று அவள் சொன்னதை மட்டும் கவனிக்க முடிந்தது.   இத்தனை ரசித்திருக்கும் என்னை அவள் முகம் திருப்பி ஒருமுறையேனும் பார்த்திருப்பாளா? இங்கே ஒருவன் 278வது முறையாக இவள் மேல் காதல் வயப்பட்டுள்ளதை அறிவாளா? இப்போது நான் பார்க்கிறேன் என‌ அவளுக்குத் தெரிந்து விட்டது போலத் தோன்றியது. போனில் பேசப் பேச சிரிப்பு வலது உதட்டு முனையில் ஆரம்பித்தது. “யார்ரா இவன் இப்படி பாத்திட்ருக்கான்” என்பதாக இருக்கலாம்.   கண்டிப்பாக என்னைப் போன்றவர்களை அவள் சந்திக்காமல் இருந்திருக்க மாட்டாள். மூர்ச்சையாக்கும் பேரழகிக்கு என் பார்வை ஒன்றும் புதிதாக இராது. சற்றே என்னை நோக்கி ஏறிட்டது போல இருந்தது. இந்தப் பெண்களும் மோனலிஸா ஓவியம் போலத் தான் எங்கு பார்த்தாலும் நம்மையே காண்பது போலத் தோன்றும் என்று சமாதானம் செய்திருக்கையில், அவள் காற்றில் அலைவுற்ற துப்பட்டாவை பிடிக்கும் தோரணையில் ‘நான் உன்னைப் பார்த்துவிட்டேன்’ என acknowledge செய்யும்படி ஒரு பார்வை.. யப்பா! என் பக்கம் திரும்பப் போகிறாயா? / கொஞ்சம் பொறு. / நீ காதோரக் கேசம் கோதுகையில் / தொலைந்து போன என்னை / மீட்டெடுக்க வேண்டும் - / உன் பார்வை பட்டு / இன்னொருமுறை தொலைந்து போக! அன்றெப்போதோ எழுதிய கவிதைக்கான கணம் இப்போதுதான் நடக்கிறதா? ஏன் எனக்கு நடப்பவை எல்லாம் இப்படி subtitles sync ஆகாத Korean படம் போலவே நகர்கின்றன என்று தோன்றியது. இன்னும் ஒரு மணிநேரத்தில் அவள் இறங்கி விடுவாள். இந்த முகத்தை இனி பார்க்கவே போவதில்லை. ஒருவகையான‌ மென்சோகத்தையும், அடர்தைரியத்தையும் கொடுத்தது. ஆனது ஆகட்டும், பேசி விடுவோம்   இதயத் துடிப்புகள் பண்டிகைக் காலப் பேருந்துக் கட்டணம் போல திடீரென எகிறியது. தொண்டையில் ஒரு மாயத் தசையிறுக்கம். ஒரு பெண்ணோடு பேசுவது இத்தனை கடினமான விஷயமா! “ஏங்க…” சத்தம் வரவில்லை. குரல் ஏதோ அடி ஆழத்தில் சிக்குண்டுவிட்டது. அது விடுபட்டு ஏறி வர வேண்டிய உயரம் அதிகமாக இருப்பதாகப்பட்டது. இன்னொரு முறை, இன்னும் அதிக கலோரிகள் செலவிட்டு, “ஏம்பா..” குரல் வேறு மாதிரி இருந்தது. அங்கிருந்த மனிதக் குவியலில் எழுந்து தன் நிறுத்தத்தில் இறங்கத் தயாரானவர் என்னை நகரச் சொல்லிக் கொண்டிருந்தார். விளக்குகள் போட்டு, அவர் இறங்கிய பின் அணைக்கப்பட்டன. இவள் தூக்கம் முழுதும் கலைத்து விட்டு மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். டிஸ்ப்ளே வெளிச்சம் அவளை ஒரு வித போதையூட்டும் ஈர்ப்புடன் பேரழகி ஆக்கிக் கொண்டிருந்தது!    சாலையின் ஓரமிருந்த பெயர்ப்பலகை ஒன்று ‘சேத்தியாத்தோப்பு’ என்றது. அப்பாவுக்கு ஃபோன் செய்ய மொபைல் திரையைத் தடவினாள். இனியும் தாமதிப்பது ஆகும் வேலையில்லை. நேரம் காலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. தொண்டையைச் செருமி இன்னொரு முறை, “ஏங்க..!” “ஓ… கூப்ட்டிங்களா? சொல்லுங்க.” “பாபாநாசம் எப்போ வரும்?” “அது கும்பகோணம்ல இருந்து ஒரு 20 இல்ல 30 நிமிஷம் ஆகும்.” “ஹ்ம்ம்… கும்பகோணம் எப்போ போகும்?” “இன்னும் 40 நிமிஷம் மேல ஆகும்.” “ரொம்ப தேங்க்ஸ்ங்க. நீங்களும் கும்பகோணமா?” “இல்லங்க. நான் ஜெயங்கொண்டம். மீன் சுருட்டில இறங்கினா அப்பா வந்து அழைச்சிட்டு போயிடுவாரு.” பேசினால் பேசுவார்கள் போலத்தான் இருக்கிறது. நான்தான் இவ்வளவு வருஷங்களை வீணடித்துவிட்டேன்.   இனி கேசுவலாக நடிக்க வேண்டி வருமே, அதுதான் ஆகப்பெரும்பாடு. முன்பு போல பார்த்துக் கொண்டே இருக்கும் சுதந்திரம் பறிக்கப்பட்டுவிடும். பார்த்தாலும் வன்புன்னைகையால் கத்தரித்து நகர்ந்து விடக்கூடும். அப்பொழுதில் மீண்டும் மொபைலின் திரை தடவி அப்பாவை அழைத்துப் பேசினாள். இன்னும் 15 நிமிடத்தில் மீன்சுருட்டி வந்துவிடும் என்றாள். அவர் ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்து விட்டதாகவும் அவளின் ஒரு பெருமூச்சில் உணரமுடிந்தது. அம்மூச்சில், அவள் கூடவே இறங்கும் போதே இறங்கி விடலாம் அப்பா வரும் வரை நின்று ஏதாவது பேசிக்கொண்டிருக்கலாம் என்ற ஆசையும் சாந்தி ஆனது. “ஏங்க... நீங்க எப்போ ஏறங்குவீங்க?” “பத்து பதினைஞ்சு நிமிஷத்துல. ரொம்ப நேரமா நிக்கிறீங்களே! உட்காரறீங்களா? நான் இறங்கப்போறேனே!” சட்டென எழுந்து நின்றாள். “இருங்க கண்டக்டர்கிட்ட சொல்லணும்” என என்னைத் தாண்டிப் போனாள். அவளது பைகளை மேலிருந்து இறக்கிக் கீழே சீட்டில் வைத்தாள். அவள் இறங்கப்போவதை ஊர்ஜிதப் படுத்தும் ஒவ்வொரு செய்கையும் என்னை இன்னுமின்னும் குலைத்தன. அருகில் நின்றபடி கொன்று கொண்டிருக்கும் அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தேன். அவளை அவ்வளவு அருகில் நிற்க வைத்துக் கொண்டு இருப்பது எனக்கு ஒரு வகையான மகிழ்வைத் தந்தது. ஏதோ ஒரு மாய தைரியம் புகுந்து கொண்டு என்னை இயக்க ஆரம்பித்தது. அதை நீங்கள் காதல் என்று சொன்னால் நான் பொறுப்பில்லை. “நீங்க உட்காருங்க!” என்றாள் பைகளை எடுத்தபடியே. “ஏங்க... நான் ஒன்னு சொல்லட்டா? நீங்க தப்பா எடுத்துக்கலனா!” இப்படி ஆரம்பித்துச் சொல்லப்போகும் ஒன்றில் கண்டிப்பாகத் தப்பிருக்கும். ஆனாலும் இப்படிக் கேட்டால் யாரும் மறுக்க மாட்டார்கள். இது ஒரு வகையான தந்திரமான‌ அக்சஸ் ரிக்வஸ்ட்! “ம்ம்… சொல்லுங்க.” “நீங்க கொஞ்சம்... இல்லல்ல... ரொம்பவே…” “ரொம்பவே?” “ரொம்பவே அழகா இருக்கீங்க... எனக்கு உங்கள ரொம்பப் புடிச்சுருக்கு!”   புத்திக்குள் எங்கேயோ எறும்பு கடித்துபோல அதிர்ச்சிப் பார்வை பார்த்தாள். எங்கிருந்து இந்த தைரியம் வந்து ஒட்டிக்கொண்டது என்று தெரியவில்லை. சொல்லியே விட்டேன். அடுத்த நான்கைந்து விநாடிகளை நிசப்தம் ஆக்கிரமித்தது. ஒரு நூறு யானைகளின் கனம் அதற்கு. கண்களை என்னிலிருந்து அகற்றி, குவியத்தை சீட்டின் மேலிருந்த பேக்கிலும் ஜன்னல் வழி வெளியேயும் பார்த்துக் கொண்டிருந்த சில விநாடிகளுக்குப்பின் என் பக்கம் மீண்டும் பார்வையைத் திருப்பி மிக லேசாய் நான் மட்டுமே உணரும்படியான புன்னைகை உதட்டின் இடது முனையில் தொடங்கியது தெரிந்தது. ‘அழகா இருக்கேன்னு சொன்னேல்ல... அத விடவும் நான் அழகு’ என்பது போல இருந்தது அவள் பார்வை. “நீங்க என்ன பண்றீங்க? படிக்கிறீங்களா, இல்ல ஜாபா?” பதில் வந்தது. ஆனால் கவனிக்கவில்லை. அது வெறும் அவளை மீண்டும் இயல்பாக்க வேண்டும் என்பதற்காகக் கேட்கப்பட்ட கேள்வி என்பதால். ஏதோ சான்ப்ரா இன்போடெக் என்றாள். “ஐடியா?” “இல்ல அக்கௌண்ட்ஸ்.” “ஓ, சூப்பர்!”   அழகான பெண் என்றாலே ஐடியில் தான் வேலை செய்ய வேண்டுமா என்ன! பெரிதாகக் கோபித்துக் கொண்டது போல தெரியவில்லை எனினும் நன்றாகப் பேசினாள் என்றவுடன் வரம்பு மீறுகிறோமோ! இன்னும் 5 நிமிடங்களுக்குள் இறங்கி விடப்போகிறாள் என்பது அந்தச் சிந்தனையைத் தடுத்தது. மேலும் நிசப்தம் பரவுவதை நான் விரும்பவில்லை. அவள் நிற்கும் நெருக்கம் அதைத் தவறவிடாமல் காப்பதற்கான அனைத்து தைரியத்தையும் கொடுத்துகோண்டே இருக்கும் என நம்பிக்கை உண்டானது. “சாரிங்க!” மெல்லிய புன்னகையில் அந்தத் தருணத்தைத் தாண்டிவிட முற்படுவது போல இருந்தது. நான் மேலும், “எல்லாருமே இப்படித்தான் சொல்வாங்கன்னு நினைக்கிறேன். ஆனா நான் என் சத்தியமா… இல்ல உங்க சத்தியமா சொல்றேன்... உங்ககிட்ட மட்டும்தான் இப்படி ஆகுது எனக்கு…” என் பெருமூச்சின் வெப்பத்தில் காற்றின் ஈரப்பதம் நியூட்ரலைஸ் ஆகிக்கொண்டிருந்து.. மீண்டும் மெல்லிய பார்வை. இம்முறை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்குநேர் பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறோம். எங்களுக்குகிடையே கடந்து சென்ற காற்று ஜன்னலின் வெளியே சுழல் காற்று ஆகிவிட்டிருக்கும். அத்தனை பதட்டமும் குழப்பமும் புதைக்கப்பட்ட நிதானம் அசைவுகளில். பெண்ணின் அருகாமை ஏன் இவ்வளவு மாயஜலமாக இருக்கிறது! ஒரு வித மாய ஒளி அவள் கண்களில் இருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த நறுமண வெளிச்சம் தன்னுள் பிரபஞ்சம் விழுங்கும் ஆழம் கொண்டதாக எனக்குத் தோன்றியது. கண்கள் விட்டு அகலவே முடியாதவாறு கட்டப்பட்டன என கண்கள். ஏன் இந்த மனது பெண்ணின் அருகாமையை இவ்வளவு சுகிக்கிறது. அதை ஏந்தி நிற்கும் இந்நிமிடங்களை நீட்டிக்க ஆயுளையே தந்துவிட ஓர் ஓரத்தில் தயாராகிறது - ஹவுஸிங் லோன் ஞாபகம் வந்தும் கூட! பேருந்தின் அசைவுக்கேற்றபடி சுதியோடு முத்தமிடும் ஜிமிக்கி அணிந்த அந்தச் செல்லக் காதுகளோடு அவள் முகத்தை, ஒரு பெருந்தாகக்காரனின் தண்ணீர் போல் அத்தனை வாஞ்சையுடன் அள்ளியெடுத்து தலைமுடி கோதி, நெற்றியில் முத்தமிட்டு, காதலைச் சொல்வது போலவும், அவளை இடையோடு இழுத்தணைப்பது போலவும் அத்தனை காட்சிகளை ஓடவிட்டுப் பார்க்கிறது மனம். இதேதும் அறியாமல் அவள் இமை முடிகளின் அசைவுகளில் பிரபஞ்சங்களைத் தோன்றி மறையச் செய்து கொண்டிருந்தாள். “சாரிங்க...” அவள் குரலில் மெலிதாய் ஒரு “ம்” ஒலித்து அதுவரை கடிகார முட்களின் ஒலியில் அடர்வுற்றுக் கிடந்த நிசப்தத்தைக் கொன்றது. பெருமூச்சோடு கண்களைப் பலவாறாக சிமிட்டி எங்கெங்கோ அலைந்து கடைசியில் தன் bagகிலேயே பார்வையைப் பதித்தாள். ஏனோ அந்தத் தேவகணத்திலிருந்தது தன்னை விடுவித்துக் கொள்ள அச்செய்கைகள் அவளுக்குத் தேவைப்படுமாயிருக்கலாம்.    தாமரையின் பாடல் வரிகளில் வருமே கலாபம், ஏகாந்தம் அதெல்லாம் இந்த வினாடி தானா! இல்லை முந்தைய வினாடிகளில் அவற்றைக் கடந்துவிட்டேனா என்பது போல ஒவ்வொரு நொடியும் அமைந்தன. ஒரு நிமிடத்தின் மீச்சிறு பகுதியில் அப்பிணைப்பில் இருந்து விடுபட்டுவிட அவளால் முடியும் தான்.  ஆனால் அவளும் அதை முடிக்கவிரும்பாமல் விடுகிறாள். அதை உணர்வது அந்த நேரத்தை இன்னும் பாந்தமாக்கியது. என்ன தொடர்வது? எவ்வளவு பிடித்திருக்கிறது என்று சொல்லலாமா? இது வெறும் infatuation தானே. அதற்கு ஏன் வாய்ப்பளித்துப் பார்க்க இவ்வளவு பிரயாசை கொள்கிறேன்? காதலிக்கிறேன் என்று சொல்லிவிடலாமா என்று கூட ஒரு கணம் யோசித்து, இந்த நொடியின் தேவ சுவாரஸ்யத்தை இன்னும் ஒரு சிட்டிகை அதிகரிக்க ஆர்வம் கொண்டேன். மீண்டும் பெருந்தைரியத்துடன் அழைக்க எத்தனிக்கையில் உதரவிதானம் சட்டென குளிர்வுற்று உடலில் குலை என்ற பாகம் நான் இங்கிருக்கிறேன் என உள்ளிருந்து கத்தியது. அடிவயிற்றில் அண்டார்டிகாவை உணர முடிந்தது. இரும்புகள் உரசும் கீரீச்சொலி செவிப்பறை கிழிய வன்புணர்ந்தது. ஒரு சடன் பிரேக். பஸ்ஸில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் தலைகள் முன் சீட்டின் கைப்பிடியில் முட்டிக்கொண்டன. அப்போது வரை நிலவி வந்த அமைதி எங்கோ தப்பியோடியது. நின்று கொண்டியிருந்த நாங்களும் நிலை குலைந்து நியூட்டனின் மூன்றாம் விதியால் முன்னோக்கித் தள்ளப்பட்டோம். அவள் கீழே விழப் போக பேலன்ஸ்சுக்காக என் புஜங்களைப் பற்றினாள். நான் ஒரு கையில் பக்கவாட்டுக் கம்பியை இறுகப் பற்றி இன்னொரு கையில் அவளைத் தோளோடு தாங்கி, விழாமல் பற்றினேன். இந்தத் தொடுகைகள் எந்த முன்னறிவிப்புமின்றி, கல்மிஷங்களுக்கு இடமின்றி, மூன்றிலிருந்து ஐந்து வினாடிகள் நீடித்திருக்கும். நல்ல வேளையாக அசம்பாவிதங்கள் ஏதும் ஆகவில்லை. இத்தனை விளைவுகளைத் தாக்கங்களைக் கொஞ்சமும் உணராமல் திடீரென சாலையின் குறுக்கே ஓடிய அந்த எருமைக் கன்று பலருக்கும் எமனையோ ஏடியெம்கேவையோ ஞாபகப்படுத்தியிருக்கும். உயிருக்கு ஒன்றுமில்லை என்ற நிம்மதியும் அதிகாலையிலேயே ஏற்பட்ட அதிர்வு தந்த பதற்றமும் நீ நான் என ஏர் ஹாக்கி விளையாடியன. அதுவரை நிலவிய சாந்தி, சாந்தி அடைந்திருந்தாள். எருமை, கண்விழித்த எல்லார் வாயிலும் பயணிக்க ஆரம்பித்தது.   நிமிட ஆசுவாசத்துக்குப்பின் அவளும் தன் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டினாள். நான் மீண்டும் என் பார்வைத் தடம் பதிந்திருக்குமோ என்று சந்தேகிக்குமளவு அந்த பார்வைப் பிணைப்பிற்காகத் தொடர்ந்து முயற்சித்தேன். மீண்டும் நிகழாப் பேரற்புதப் பொழுதிலிருந்து போயும் போயும் ஒரு எருமையால் மீண்டு வர வேண்டியதாகிப்போனது. மீண்டும் ஆரம்பத்திலிருந்து என்றால், வாய்ப்பேயில்லை. இம்முறை அவளே, “தேங்க்ஸுங்க... நீங்க புடிக்கலனா விழுந்திருப்பேன்!” “ஹ்ம்... என்னங்க இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லிட்டு!” அவளுக்கும் என்னைப் பிடித்திருந்தது. அது மட்டுமே என்னை அடுத்தடுத்த நொடிகள் உயிர்வாழ அனுமதித்துக் கொண்டிருந்தது. “சாரிங்க… புடிச்சுருக்கு அது இதுன்னு சொல்லி உங்களை கொஞ்சம் uncomfortable ஆக்கிட்டேன். ஆனா எனக்கு இதுக்கு முன்னாடி இவ்வளவு தைரியம்லாம் வந்ததே இல்ல.”   பெருமூச்சோடு விரக்தி கலந்த சிரிப்பை எறிந்தேன். அதே சிரிப்பைக் கைப்பற்றி தன் முகத்தில் அப்பிக் கொண்டாள். வெளியே பார்க்க ஆரம்பித்தாள். “ஆனா எனக்கு…” “உங்களுக்கு?” “எனக்கு நாளைக்கு காலைல நிச்சயதார்த்தம். அதுக்குத்தான் ஊருக்கு வந்துட்டு இருக்கேன்.” சொல்லி விட்டு மீண்டும் வெளியில் பார்க்கத் தொடங்கினாள். திடீரென என் கால்களுக்கு அடியிலிருந்த உலகம் தன் திடத் தன்மையை இழந்தது போல இருந்தது. எதிர்பாராதவை நடக்கலாம். அதுதான் வாழ்க்கை. அதற்காக இப்படியா! இந்த பஸ் ஆக்சிடெண்டே ஆகி விட்டிருக்கலாம் என்று தோன்றியது. அப்போதை விட இப்போதுதான் நிலை குலைந்து போனேன். “என்ன சொல்றிங்க? பொய் சொல்லாதீங்க!” சிரித்தாள். இதை ஒரு பெரிய காதல் தோல்வி போல் சித்தரிப்பதை மனம் விரும்பவுமில்லை ஆனால் விட்டுவிடவும் முடியவில்லை. வலிந்து திணிக்கப்பட்ட புன்னைகை அந்த அவசர கால ஆசுவாசப் பெருமூச்சில் தள்ளாடியது. மீண்டும் அதே புன்னைகையைக் கைப்பற்றி வாய் ஒட்டி, “யா… ஐயம் 24 நவ்.”  மீண்டும் முகம் திருப்பிக் கொண்டாள்.   ஆமாம் இது முடிந்துதான் விட்டது. அவள் இறங்கக் கூட இன்னும் சில நிமிடங்கள் இருக்கலாம். ஆனால் இந்தக் காதல் போன நிமிடமே புதைக்கப்பட்டுவிட்டது. இது ஆரம்பிக்காமலே இருந்திருக்கலாம். அல்லது கற்பனைகள் வளரும் முன்னே முடித்திருக்கலாம். ஏன் இப்படி நடந்து தொலைக்க வேண்டும்? தொலைந்து போன சமநிலையைத் தேடியெடுக்கவியலாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த பார்வைப் பிணைப்பு தந்த தேவகணத்தில் இருவருக்குள்ளான இடைவெளியைக் காதல் நிரப்பியிருந்ததா என என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயதார்த்தம் என்று சொல்லும் முன் அவள் சொல்லி முகம் திருப்பிக்கொண்ட ‘ஆனா’வில் இருந்தது ஒரு மாதிரி காதல் தானே! இவ்வாறான எண்ணவோட்டங்கள் என்னை எங்கேயோ கூட்டிச்செல்ல, அந்த பேருந்து எங்களை மீன்சுருட்டிக்கு அருகில் கூட்டிச் சென்று கொண்டிருந்ததை சாலையோரம் இருக்கும் மைல்கல் ஒன்று சொன்னது. என் மனது அவள் கையைப் பற்றிக்கொண்டு ‘போகாதே’ எனக் கத்திக் கொண்டிருந்தது. “எப்போ கல்யாணம்?” “கல்யாணம் ஜூன்ல தான்.” இடவலமாகத் தலையாட்டிச் சிரித்தாள். “நான் இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு. நீங்க உக்காருங்க.” “அப்படியே போகாதீங்க. ஏதாவது சொல்லிட்டுப் போங்க!”   “அயாம் சுஜாதா. உங்க பேரு?” எனக் கையை நீட்டினாள். “ஹரி” “எனிவே, நைஸ் டு மீட் யூ ஹரி!” “யா... பட் எ பிட் லேட்.”   கையை இறுகப் பற்றியிருந்த கையை கொஞ்சம் தளர்த்தி விடுவித்தேன். மெலிதான புன்னைகையை என் மீது தெளித்து விட்டு, கையசைத்து, கண்ணசைத்து விடைபெற்றாள் அந்தத் தூரத்துப் பேரழகி. இறங்கி என் பக்கம் திரும்பிப் பார்ப்பாள் என நினைத்தேன். ஆனால் எதிர்பார்ப்பது போலவே எதிர்பார்ப்புகள் பொய்த்தன.   கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இரவு தீர்ந்து, வெளிச்சம் பரவிக்கொண்டிருந்தது. வேகமாய் உள்ளெங்கும் நிரம்பியிருந்தாள் சுஜாதா. ஏதோ ஒரு வகையில் சுஜாதாவின் தாக்கமே என்னை எழுத வைக்கிறது!   அந்த நாள், ஒரு சில மணி நேரங்களில் ஒரு காதலையும், தோல்வியையும் மிக லேசாக எனக்குத் தந்து விட்டது. முகூர்த்த நாட்கள் எவ்வளவு ஆபத்தானவை என்று அன்று பூரணமாக‌ உணர்ந்து கொண்டேன்!   *** அஞ்சலி []     Free Tamil Ebooks – எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.  ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள் :  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.  தமிழிலுள்ள மின்புத்தகங்கள் :  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.  சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.  எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.  சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.  அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.  எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.  தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது.  ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.  அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.  அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.  வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.  பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்  வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.  FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.  PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.  அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.  இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.  அவ்வளவுதான்!  மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:  1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்   2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல்   3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்  விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.    இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை.  இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.  மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.    இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/ பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை.  ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.  அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.  தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.  நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது.  பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.  1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.  <துவக்கம்>  உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].  தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.  இந்நிலையில் நாங்கள்  http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான  Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும்.  இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.  எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.  இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.  http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.  e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G +: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி.      உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம்.  1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/  தமிழில் காணொளி – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I  2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி -  http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101  https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses  உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம்.  http://creativecommons.org/choose/  3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.  1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)  இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.  ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.  மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? -  தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs  இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook  எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks  நன்றி !