[] []   []   இலவச‌ மின்னிதழ் | இதழ் : 5 | மழை - 2018 |   ஆசிரியர் சி. சரவணகார்த்திகேயன்   அட்டை வடிவமைப்பு மீனம்மா கயல்   ஆக்கம் - உதவி சௌம்யா நான்ஸி பொன். ப்ரதீபா தேகா கஸ்தூரி கே. விஜய்குமார் விஷ்வக்சேனன்   ஆலோசனை இரா. இராஜராஜன் ந. பார்வதி யமுனா   தொடர்புக்கு மின்னஞ்சல் – c.saravanakarthikeyan@gmail.com  வலைதளம் - https://tamizmagazine.blogspot.com  அலைபேசி - +91 98803 71123   கதை, கவிதைகளில் வரும் பெயர்களும், நிகழ்வுகளும் கற்பனையே. கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் அதை எழுதுபவரின் சொந்தக் கருத்துக்களே. படைப்புகளின் உரிமை அந்தந்த ஆசிரியர்களையே சேரும்.   *   மழை - 2018 இதழ் சமர்ப்பணம்   தமிழ் வட்டார வழக்கு இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன் அவர்களுக்கு    * தமிழ்ச் சூரியன்   கலைஞர் மறைந்து இரண்டு மாதங்கள் ஆகப் போகின்றன. தமிழ் சஞ்சிகைகள் முதல் ஆங்கில இதழ்கள் வரை அவருக்கான சிறப்பிதழ்களை வெளியிட்டு விட்டன (அவற்றில் உயிர்மை மற்றும் Frontline இதழ்கள் வெளியிட்டவை எனக்குப் பிடித்திருந்தன.) அப்படியான சிறப்பு மலர்கள் பேசத் தயங்கிய அல்லது லேசாய் மட்டுமே தொட்டுக் கடந்த விஷயம் கலைஞரின் எழுத்தாளுமை பற்றியது. அதிகபட்சம் அவர்கள் பேசியது கலைஞரின் திரைப்படப்பங்களிப்புகள் குறித்து மட்டும் (அதுவும் எம்ஜிஆர் - சிவாஜி காலத்தோடு முடித்துக் கொள்வார்கள்). அதனால் அவரது எழுத்துக்களை மட்டுமே முன்வைத்து ஒரு சிறப்பிதழ் கொணரவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது. அவர் அரசியல்வாதியாகவோ முதலமைச்சராகவோ ஆகவில்லை என்றாலும் எழுத்து முகத்துக்காக மட்டுமே இத்தகைய சிறப்பிதழ்கள் வெளியிடப்பட வேண்டிய தகுதி வாய்ந்தவர் என்பதையே இம்முயற்சியின் மூலம் உணர்த்த விரும்புகிறேன். ஆக, இது அசலான ‘கலைஞர்’ சிறப்பிதழ்!   கலைஞர் பத்து லட்சம் பக்கங்களுக்கு மேல் எழுதி இருக்கிறார் என்கிறார்கள். அவரது முக்கிய இலக்கியப் பங்களிப்புகளாக 5 விஷயங்களைப் பார்க்கிறேன்: 1) திருக்குறள், பிற சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் நூல்களுக்கு அவர் எழுதிய உரை நூல்கள் 2) சங்க இலக்கியங்களின் பாணியில் அவர் எழுதிய அழகான‌ வசன கவிதைகள் (உதா: மீசை முளைத்த வயதில்) 3) வாய்மொழிக் கதைப்பாடல்களாக மட்டுமே எஞ்சியிருந்த உள்ளூர் வீரர்களை பிரம்மாண்ட நாயகர்களாக‌ மீண்டெழுச் செய்த வரலாற்று நாவல்கள் 4) தமிழக வரலாற்றையே குறுக்குவெட்டாகக் காண்பித்த அவரது விரிவான சுயசரிதைகள் 5) எண்பதுகள் வரையிலான அவரது திரைப்படப் பங்களிப்புகள், குறிப்பாய் நெருப்பாய்ப் பொழிந்த‌ வசனங்கள்.   கவனித்தால் தெரியும், இதில் நான் எங்கும் அவரை அரசியல் படைப்பாளி என்றோ, திராவிட எழுத்தாளர் என்றோ சுருக்கி விடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவ்வடையாளத்தைக் கூட அளிக்கவில்லை. அதாவது உள்ளடக்கத்தின் அரசியல் சாய்வு அல்லது சாயை எது என்பதைத் தாண்டி பொதுவாகவே ஒரு படைப்பாளுமையாக உயர்ந்து நிற்கிறார் கலைஞர். இச்சிறப்பிதழ் அதைத் தான் தரவுகளுடன் பேசுகிறது.   நான் திட்டமிட்டதில் ஒரு பகுதியை மட்டுமே செய்ய முடிந்திருக்கிறது என்றாலும் சில தனித்துவமான கட்டுரைகள் இவ்விதழை அலங்கரித்திருக்கின்றன. (திரைப்படங்கள் தாண்டியும்) கலைஞர் முக்கியமான எழுத்தாளர் என்ற உண்மையைக் கணிசமானோருக்கு உணர்த்தி விட்டால் இதழ் ஜெயித்ததாக அர்த்தம்.   ‘தமிழ்’ மின்னிதழ் இதுகாறும் எழுத்தாளர்களையே முன்வைத்து வந்திருக்கிறது, அரசியல்வாதிகளையோ, ஆட்சியாளர்களையோ அல்ல என்பதும் கலைஞரின் எழுத்துவன்மை என்கிற‌ முகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பேசியிருப்பதற்கு ஒரு காரணம். அரசியல் கட்டுரைகள் இடம் பெற்றாலும் பிரதானமாய் கலை - இலக்கிய இதழாகவே ‘தமிழ்’ தொடரும். தமிழ் பற்றி கலைஞர் எழுதி இருக்கும் ஒரு பத்தி இங்கே:   தமிழே! உன்னை - உள்ளங்கவர் ஓவியமே! உற்சாகக் காவியமே! ஓடை நறுமலரே! ஒளியுமிழ்ப் புது நிலவே! அன்பே! அழகே! அமுதே! உயிரே! இன்பமே! இனிய தென்றலே! பனியே! கனியே! பசுந்தோகை மயிலே! பழரசச் சுவையே! மரகத மணியே! மாணிக்கச் சுடரே! மன்பதை விளக்கே! - என்றெல்லாம் அழைத்திடத் தோன்றுகிறது. ஆனாலும் தமிழே! உன்னைத் “தமிழே” என்று அழைப்பதிலே உள்ள இன்பம் வேறு எந்தச் சொல்லிலும் இல்லை என்பேன். (‘மீசை முளைத்த வயதில்’ தொகுப்பிலிருந்து, 1953)    []        பொருளடக்கம் தமிழ்ச் சூரியன் 3  சளி பிடித்த புத்தன் 8  ஓடுகாலி 11  நூற்றாண்டுத் திரைப்படம் 16  தமிழ் வாத்தியார் வடிவேலு 18  பெருங்காமம் 21  குவியொளி 29  சிவபானம் 32  கருப்புக் கண்ணாடி 36  கலைஞர் சிறப்பிதழ் 39  திரைப்பாடல்கள்: சினிமாப் பாட்டில் மரபிலக்கியக் குரல் 40  மீசை முளைத்த வயதில்: கலைஞரெனும் சங்கக்கவி 45  வரலாற்றுப் படங்கள்: திரையை ஆண்டவர் 50  பொன்னர் – சங்கர்: காட்சியை ஜெயித்த‌ எழுத்து 58  ஒரே ரத்தம்: சாதியத்தை எரிக்கும் தீ 63  குறளோவியம்: உரையாசிரிய முகம் 67  கையில் அள்ளிய கடல்: ஒரு நிர்வாகியின் நினைவுகள் 73  தென்பாண்டிச் சிங்கம்: சகோதர யுத்தம் 76  சங்கத் தமிழ்: கடற்கோள் வென்ற‌ கலைஞர் 80  நாடகங்கள்: மூன்றாம் தமிழ் 86  80களின் படங்கள்: இரண்டாம் இன்னிங்ஸ் 92  பத்திரிக்கையாளர்: கலைஞர் விரும்பிய அடையாளம் 95  பாயும்புலி பண்டாரக வன்னியன்: வீரமும் துரோகமும் 99  செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்: மொழியின் தவம் 104  தொல்காப்பியப் பூங்கா: உழைப்பின் இலக்கணம் 108  சிறுகதைகள்: பிரபஞ்சப் பாலம் 111  தமிழிசை: இரண்டாம் தமிழ் 114  இனியவை இருபது: ஐரோப்பிய திக்விஜயம் 119  எழுத்துலகின் இடா ஸ்கட்டர் 123  மொழிப் போரில் ஒரு களம்: பொதுநலமான சுயநலம் 128  சிறுகதைகள்: தாளிலிருந்து திரைக்கு 134  சமூகப் படங்கள்: இந்திய அரசியலின் வசனம் 139  கலைஞர் – ‘சுபமங்களா’ நேர்காணல் 145  பொன்னாஞ்சலி 185  உள்ளே...   கலைஞர் சிறப்பிதழ்     கவிதை / பாடல் திரைப் பாடல்கள்: சினிமாப் பாட்டில் மரபிலக்கியக் குரல் / ரமேஷ் வைத்யா - 35 மீசை முளைத்த வயதில்: கலைஞரெனும் சங்கக்கவி / பார்வதி – 39   பழந்தமிழ் உரை குறளோவியம்: உரையாசிரிய முகம் / முனைவர். கண்ணபிரான் ரவிசங்கர் - 60 சங்கத் தமிழ்: கடற்கோள் வென்ற கலைஞர் / ஸ்டாலின் சரவணன் - 71 தொல்காப்பியப் பூங்கா: உழைப்பின் இலக்கணம் / பரிசல் கிருஷ்ணா - 99   சரித்திரப்புனைவு பொன்னர் – சங்கர்: காட்சியை ஜெயித்த‌ எழுத்து / விக்னேஸ்வரி சுரேஷ் - 52 தென்பாண்டிச் சிங்கம்: சகோதர யுத்தம் / கோபாலகிருஷ்ணன் - 67 பாயும்புலி பண்டாரக வன்னியன்: வீரமும் துரோகமும் / யமுனா - 90   நாவல் / சிறுகதை ஒரே ரத்தம்: சாதியத்தை எரிக்கும் தீ / புலியூர் முருகேசன் - 56 சிறுகதைகள்: பிரபஞ்சப் பாலம் / யுவகிருஷ்ணா - 102 சிறுகதைகள்: தாளிலிருந்து திரைக்கு / எஸ். ராஜகுமாரன் - 124   திரைப்படம்   வரலாற்றுப் படங்கள்: திரையை ஆண்டவர் / ஆத்மார்த்தி - 44 80களின் படங்கள்: இரண்டாம் இன்னிங்ஸ் / முரளிக்கண்ணன் - 83 சமூகப் படங்கள்: இந்திய அரசியலின் வசனம் / ராஜசங்கீதன் - 129   நாடகம் / இசை நாடகங்கள்: மூன்றாம் தமிழ் / ந. முருகேசபாண்டியன் - 77 தமிழிசை: இரண்டாம் தமிழ் / விஜய் எஸ்ஏ (@tekvijay) - 105   அனுபவம் / பயணம் கையில் அள்ளிய கடல்: ஒரு நிர்வாகியின் நினைவுகள் / என். சொக்கன் - 65 இனியவை இருபது: ஐரோப்பிய திக்விஜயம் / ராஜூ. நா - 109   கடிதம் / கட்டுரை செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்: மொழியின் தவம் / கவிதா சொர்ணவல்லி – 95 மொழிப் போரில் ஒரு களம்: பொதுநலமான சுயநலம் / சௌம்யா - 118   இன்ன பிற‌ பத்திரிக்கையாளர்: கலைஞர் விரும்பிய அடையாளம் / ஜெ. ராம்கி - 85 எழுத்துலகின் இடா ஸ்கட்டர் / பூவண்ணன் கணபதி - 113   ஒருசோறு கலைஞர் – ‘சுபமங்களா’ நேர்காணல் - 135 கலைஞரின் ‘முரசொலி’ கடிதம் - 146 பொன்னர் - சங்கர்: முன்னுரை / முடிவுரை – 160   []     பிற படைப்புகள்   புனைவு ஓடுகாலி / ஆர்த்தி தன்ராஜ் - 9 பெருங்காமம் / சாதனா - 18 சிவபானம் / வெங்கடேஷ். உ - 29   கவிதை நூற்றாண்டுத் திரைப்படம் / சுசித்ரா மாரன் - 14 கருப்புக் கண்ணாடி / ந.ஆஷிகா - 32   மொழிபெயர்ப்பு   சளி பிடித்த புத்தன் / மசாஓகா ஷிகி (தமிழில்: நந்தாகுமாரன்) - 6    கவின்கலை தமிழ் வாத்தியார் வடிவேலு / மனோ - 16 குவியொளி / கீர்த்திவாசன் (KRTY) - 26   ஓவியம் பொன்னாஞ்சலி / பரணிராஜன் – 174     : Editor’s Choice     சளி பிடித்த புத்தன் மசாஓகா ஷிகி (தமிழில்: நந்தாகுமாரன்)   1 செந்தும்பி மட்டும் சுகுபாவின்* வானில் மேகம் இல்லை.   2 மேலே பார்க்கையில் எவ்வளவு உயரமான பகோடா* இலையுதிர்கால வானில்.   3 சீமைப் பனிச்சையின்* சுவை என் ஒவ்வொரு கடியும் அவ்வளவு கூர்மை ஹோர்யு-ஜி* கோயிலின் மணியோசை போன்றே.   4 கெண்டை மீன் மேலே துள்ளுகிறது இலையுதிர்கால நிலவொளியில் சுருக்கங்கள் விழுகின்றன.   5 இருந்த ஒரு சிலந்தியையும் கொன்றபின் இந்தக் குளிர் இரவில் என் தனிமையை உணர்கிறேன்.   6 அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையே ஓர் ஈயைக் கொன்று ஓர் எறும்பிற்குத் தின்னக் கொடுக்கிறேன்.   7 நான் உனக்காகக் காத்திருக்கும் மற்றுமோர் இரவு குளிர்க்காற்று மழையாக உருமாறுகிறது.   8 வசந்தகால மழை குடையின் கீழே உலாவியபடி காமிக்ஸ் புத்தகக் கடையில் நான்.     9 பவளமல்லி விழுகிறது நள்ளிரவின் பேரோசையின் மேல்.   10 புடலங்காயும் புத்தனாகும் கவனமாக இரு.   11 பாழடைந்த குளிர்காலத் தனிமை ஒரு குக்கிராமத்தைக் கடக்கையில் நாயின் குரைப்பொலி.   12 இளஞ்சூடான மழை வருடுகிறது வெற்று முள்ளை.   13 உருகி நெகிழ்ந்த குளத்தில் ஓர் இறால் நகர்கிறது பழைய பாசியின் இடையே.   14 அந்தி வெளிச்சத்தில் நிலா ஒரு கொத்துப் பூவிதழ்கள் விழுகின்றன சேலாப்பழ* மரத்திலிருந்து.   15 பழைய குளம் தலைகீழாக மிதக்கிறது சில்வண்டின் ஓட்டின் மீது.   16 நான் போகிறேன் நீ இருக்கிறாய் நம்மிடையே இரண்டு இலையுதிர் காலங்கள்.   17 என் மீது ஒரு பனித்துளி கிடந்ததைப் போல் உணர்ந்தேன் படுக்கையில் கிடந்தபடி. 18 கறிகாய்ப் பூக்கள் மலர்ந்து கிடக்கின்றன ஆனால் இங்கே பாருங்கள் சளி பிடித்த ஒரு புத்தன் சாகக் கிடக்கிறான்.   * சுகுபா (Tsukuba) - ஒரு ஜப்பானிய நகரம் * பகோடா (Pagoda) - பல அடுக்குகள் கொண்ட புனித கோபுரம் * சீமைப் பனிச்சை - பெர்சிமான் (Persimmon) - உண்ணக் கூடிய ஒரு வகைப் பழம் * ஹோர்யு-ஜி* (Hōryū-ji) - ஒரு புத்தர் கோயில்  * சேலாப்பழம் - செர்ரி (Cherry) - உண்ணக் கூடிய ஒரு வகைச் சிவந்த பழம்   []     குறிப்புகள்: 1. மசாஓகா ஷிகி 34 வயதில் காச நோயால் இறந்த 4ம் தலைமுறை ஜப்பானிய ஹைக்கூ கவிஞர். 2. ஷிகி என்றால் ஜப்பானிய மொழியில் குயில் என்று அர்த்தம். ஷிகி காச நோயால் ரத்தம் கக்க இருமுவார். குயில் பாடும் பொழுது ரத்தம் கக்கும் என ஒரு நம்பிக்கை ஜப்பானில் இருந்தது. 3. ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் பாஷோவை விமர்சனம் செய்து பூசானை பூசித்தவர் ஷிகி.   ***   ஓடுகாலி ஆர்த்தி தன்ராஜ்   2014. பெங்களூர்.   “…”                                                                             “அடேய்…”   “…”   “ஸாரிடா…”   “…”   “இப்ப எதுக்கு மூஞ்சியத் தூக்கி வெச்சிட்டு இருக்க?”   “…”   “எனக்கு எப்பவுமே ஆசைதான். நேத்து ஓசி ட்ரீட்டுனு சபலப்பட்டு ஷாட்ஸ் வேற ஓவரா போச்சு. இல்லனா பேசாமத் தூங்கிருப்பேன். ஸாரிடா…”   “…”   நீயும்தானே… டேய்… ஹாப்பியா இருந்தியா?”   “…”   “எல்லாம் உல்ட்டாவா இருக்கு. நான் சந்தோஷமா இருக்கேன். நீ பிளுக்கிட்டு இருக்க. டேய்… தென்ன… டே… அழுதிருவேன்டா… ஏதோ உன்னை ரேப் பண்ணின ஃபீல் ஆகுது… ச்சை, ஓட்ட வண்டி…”   “…”   “சொகமா இருக்கனும்னா இங்க இரு. சோகமா இருக்கனும்னா உன் ரூமுக்கே ஓடிரு. நானாச்சும் நெனச்சு நெனச்சு சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா இருப்பேன். எனக்குக் கோவம் வந்திரும் தென்ன…”   “சரண், உன் வீட்டுல சொல்லிறியா?”   “என் வீட்டிலயா? டேய், எதுக்குடா மூடைக் கெடுத்து குட்டிச் செவுராக்குற?”   “…”   “இங்க வாயேன். என் குட்டிப்பையன் என்ன பண்றான்? எட்டிப் பாக்குறான். ஹிஹி.”   “ப்ச். வெளையாடாதடி. இத்தனை நாள் வேற. நேத்திக்கு அப்புறம்… ஒரு ப்ரோட்டெக்க்ஷனும் இல்ல. நீ இருக்கியே… ப்ளீஸ், ஊருக்கு நானும் வரேன். வீட்ல சொல்லி ஒரு தாலியைக்கட்டி கூட்டிட்டு வந்துறேன்…”   “மிஸ்டர் தென்னவன், நீங்க என்னிக்கு என் ஊரை, குடும்பத்தைப் புரிஞ்சுக்க போறீங்களோ! அங்கலாம் நீங்க எப்பவும் என்ட்ரி குடுக்கவே முடியாது.”   “…”   “போன வாரம் கூட பெரிம்மா பணமொடைல வேற ஆளுங்களுக்கு ஏதோ நெலம் வித்துட்டாங்கன்னு பெரிய பஞ்சாயத்து. ஊருக்குள்ள இருக்கற நெலத்தையெல்லாம் வேற ஆளுங்க யாருக்கும் விக்க கூடாது. மீறி குடுத்துட்டாங்கன்னு விடிய விடிய பஞ்சாயத்துப் பேசி, ‘புருஷனும் இல்ல நீயா காப்பாத்துற’ன்னு பெரிம்மாவைப் புடிச்சுக் கத்தி, மெப்பா ஆளுக்குக் கொஞ்சம் காசுபோட்டு ஊரு பொதுவுல வாங்கிட்டாங்க.”   “…”   “அதென்ன அவன் ****னாமாம், இன்னிக்கு நெலத்தை வாங்குவான், நாளைக்கு ஊருக்குள்ள வருவான், அவன்கிட்ட கோவில் வரி வாங்கணும் தூனு எங்கம்மா கூட பேசிட்டு இருந்திச்சு…”   “…”   “உன்னையேதான் நெனச்சிட்டு இருந்தேன். இன்னிக்குக் கூட இதெல்லாம் நடக்குதுன்னு உனக்கெல்லாம் தெரியாது. ப்ளீஸ்… எனக்கு என் வீடு, எங்கப்பா எல்லாம் பயம்டா. இப்படியே இருந்துக்கலாம்டா.”   “…”   “டேய்…”   “எனக்குன்னு சில ஒழுக்க மதிப்பீடுகள் இருக்கு சரண். நேத்து ஆடிட்டு நீ நல்லா கும்பகர்ணி மாதிரி தூங்கிட்ட. என்னால பொட்டு கண்ணு மூட முடில. நாலு வருஷம் ஆச்சு. இப்படி மேயறதுக்கு மொத்தமா முடிச்சிர்ரானு எத்தனை தடவ கிண்டல் அடிச்சிருக்க… இப்ப அது தான் நடந்திருக்கு.”   “…”   “எங்கப்பாலாம் பிரச்சனையே இல்ல. உன் குடும்பத்துக்கு பயந்திட்டு எத்தனை நாள் வாழ்க்கைய ஆரம்பிக்காமயே இருக்க? எனக்கு என்னமோ கல்யாணம் ரொம்ப முக்கியம்தான். இந்த லிவின்ஸ்லாம் எனக்கு ஆழ்மனசுல நிம்மதியாவே இல்ல. அப்டியே வளந்திட்டேன். ப்ளீஸ்… எனக்காக… ப்ளீஸ்…”   “…”   “சரண்… மயிலு… ப்ளீஸ்டா… வா. நாந்தான் கூட வரேன்னு சொல்றேன்ல. எத்தனை நாள் பயந்திட்டே இருப்ப? ஒன்ஸ் ஃபார் ஆல் முடிச்சிட்டு தங்கமாட்ட வாழலாம். ப்ளீஸ்டா ராஜாத்தி.”   “கண்டிப்பா பேசனுமா, தென்ன?”   “ஆமா. எனக்கு ரொம்ப முக்கியம்.”   “…”   “…”   “சரிடா, நான் மட்டும் போயிட்டு வரேன்… பேசறேன். நீ வர வேணாம்.”   “இல்ல…”   “எதுவும் பேசாத. நெஸ்ட் வீக்கெண்ட் போறேன். அது வரைக்கும் என் குட்டி பையனை என்கிட்டயே இருக்கட்டும். நீ போர். அவனத் தான் எனக்குப் புடிச்சிருக்கு. உன்னைப் புடிக்கல. ஹிஹி”   *   2015. இந்திய தேசத்தில் ஒரு கிராமம்.   “ஹலோ”   “…”   “ஹலோ”   “…”   “தென்ன…”   “…”   “நீதான? உன் மூச்சுக்காத்து தெரியாதா…”   “…”   “அழுக வெக்காதடா… டேய்… தென்ன…”   “இவன் வேற அழுவுறான்…”   “டேய்… திரும்ப கால் பண்ணுவியா? இப்படியே மூச்சு மட்டும் விடுடா… ப்ளீஸ்…”   “…”   “சரண்யா… வந்து கொழந்தைய எடு. அழுவுறான் பாரு. பசிக்குது போல.”   “பைடா.”   *   2014. அதே கிராமம். ஒரு நடுப்பகல்.   “ஒத்தப் பொண்ண வெச்சுக் காசு சம்பாரிச்சு பொழைக்கணுமா? அப்டி ஒண்ணும் காசு வேணாம்னு அடியா அடிச்சுகிட்டேன். பெங்களூர்ல போய் ஆம்பளை தேடிட்டு வந்திருக்கா. அந்தக் காலத்துல அப்பனாத்தா பத்து வயசு, பன்னெண்டு வயசுல கட்டி வெச்சாங்கன்னா அதுக்கு மேல ஆலா பறக்குதுங்கன்னு தெரிஞ்சுதான். வந்தானுங்க புடுங்கிகளாட்டம், பொண்ண படிக்க வெய்யி, படுக்க வெய்யினு. எல்லாம் போச்சு. பொங்கப் பானையைத் தெருவுல வெச்சா நாயி நக்கதான் செய்யும். நெகுநெகுன்னு வளத்தி வெச்சா சாதி கெட்ட நாயெல்லாம் நக்குது. இந்தா பாரு மணிமேகல… கழுதையக் காலைத் தருக்கி வீட்டுல கட்டு.”   *   2014. அதே கிராமம். அன்றைய இரவு.   “இந்தா கணேசு… மறைக்க ஒண்ணுமில்ல. உங்கொக்கா புள்ள வளத்தின லச்சண‌த்துக்கு அவளையும் அவ பெத்தததையும் ஒண்ணா வெட்டிப் போட்டிருப்பேன். ஒரு ஆம்பளைப் பையன் மொளவாய ஆட்டிட்டு பொறந்திருந்தா இந்தப் பொட்டைங்கள தொரத்திப்போட்டு ராஜா கணக்கா உக்காந்திருப்பேன். அதுக்கு இல்லாமப் போச்சு. எப்படியும் இத்தனை சொத்தை வெளியாளுக்கு ஏத்தி விட முடியாது. பொண்ணையும் பொருளையும் நீயே கட்டி மேச்சுக்கோ. சின்ன வயசுலருந்து இருக்கற‌ பேச்சுதான. ஒன்ற மாசத்துல ஆவணி பொறந்த உடனே கல்யாணத்தை வெச்சுப்போடலாம். நீ என்ன சொல்ற‌?”   *   2014. அதே கிராமம். சில தினங்களுக்குப் பின்.   வெறும் நியூஸ் பேப்பரை பொட்டலமாகச் சுற்றி எடுத்து வந்து அம்மா கண்பட எரிந்து கொண்டிருந்த தண்ணி அடுப்பில் போட்டாள் சரண்யா.   “என்னடி?”   “தலைக்கு ஊத்திக்கிட்டேன்மா. அதான். என்னமோ இந்தத் தடவை சீக்கிரமே வந்திருச்சு.”   “பரவால்ல. கல்யாணத்தன்னிக்கு ஊடுபாவாம இருந்திச்சே. இல்லனா காணியாச்சி கோயிலு, சாந்தி முகூர்த்தம் எல்லாத்துக்கும் இன்னொரு சமயம் பாக்கணும். வேலை இழுக்கும். இதுனா மண்டபக்காரனே வந்து கட்டிலுக்கும் ரெண்டு பூ இழுத்துட்டுட்டுப் போயிருவான்.”   “…”   “என்னடி?”   “ஒண்ணுமில்லமா.”   *   2014. அதே கிராமம். முதலிரவுக்கு மறுநாள்.   விரிப்பில் இருந்த ரத்தக்கரையைக் கண்டு கிசுகிசுத்து சிரித்தனர் அம்மாளும் அத்தையும். கிசுகிசு கேட்ட அப்பாரும் மாமனாரும் மெருமிதமும் நிம்மதியும் கலந்த பெருமூச்சு விட்டுக்கொண்டனர்.   *   2014. அதே கிராமம். முதலிரவின் பின்னிரவு.   சுத்த பிளேடால் காலில் மெல்லிசாகக் காயம் செய்து, சிறிது ரத்தத்தை விரிப்பில் தேய்த்தாள் சரண்யா.   *   2015. அதே கிராமம். ஓர் இரவு.   “உன் ஊரு பேரு கூட சரியாத் தெரியாது. எங்க போனா என்ன பண்ணினானு அலைஞ்சேன். எப்படியோ ஆபீஸ் பிரண்ட்ஸ புடிச்சு…, இங்க பாரு… நீ யாருன்னு இவங்களுக்கு தெரியுமா? உனக்கே தெரியுமா? எப்படி இங்க இருக்க? யாருக்காக? எப்டி இவ்ளோ நடக்க விட்ட? எத்தனை பேருக்கு கவுன்சிலிங் குடுப்ப? நீயே உன் கைய புடிச்சு ஒடச்சுகிட்ட மாதிரி இப்படி குறுகி போய்ட்டியேடி… இப்படி வாழனும்னு அவசியமில்ல.”   “…”   “ஏதோ நெனப்புக்குள்ள போயி சிக்கிட்டு வாழ்க்கைய அழிச்சுக்காத. வந்திரு. கொழந்தைய எடுத்திட்டு வா. இங்கயே நிக்கறேன். பெங்களூர் இருக்குடி நமக்கு. சர்ட்டிஃபிகேட்ஸ் மட்டும் எடுத்திட்டு வா. அதான் நீ.”   முட்டக் குடித்த பண்ணயத்தாள் எவனுக்கோ சிறுநீர் முட்ட, நடுராத்திரியில் ஒதுங்கியவன் இவர்களைப் பார்த்துவிட்டு அந்தப் போதையிலும் அவசரமாய் மிகுந்த விசுவாசத்துடன் பெரிய வீட்டுக்கு ஓடினான்.   *   2015. அதே கிராமம். மறுநாள் இரவு.   “சரண்யா…”   “ஏங் மாமா?”   “உங்கொம்மாக்கு திடீர்னு பிரசர் ஜாஸ்தி ஆயிருச்சாம். பாத்ரூம்ல மயங்கி உழுந்திருச்சாம். ஓடியா.”   அலையக்குலைய குழந்தையை தூக்கப் போனாள்.   “அவனை எதுக்கு எழுப்பற? தொட்டிலேயே விட்டுட்டு வா. ஆயாகிட்ட சொல்லிட்டேன். பாத்துக்கும். நாம ஜோலி தொந்தரவுன்னு எங்க திரியப் போறோமோ… நீ ஓடியா.”   ஓட்டமும் நடையுமாய் வரப்பு வழியாக குறுக்குத் தடத்தில் புகுந்த இருவரையும் நோக்கிக் கல் ஒன்று சீறி வர, மாமன் கணேசன் ஒதுங்கிக் கொண்டான். கல் சினத்துடன் சரண்யாவின் நெற்றியைப் பெயர்த்தது.   அது முதல் கல் தான் எனப் புரிய சரண்யாவுக்குக் கொஞ்சம் நேரம் பிடித்தது. இரண்டாவது… மூன்றாவது… சரமாரியாகக் கற்கள் வீசப்பட்ட பதினைந்தாவது நிமிடத்தில் ரத்த சகிதமாய் சரண்யா காணாப்பிணமானாள்.   “ஓடுகாலி முண்ட. எத்தினி தடவ ஓடுவாளாம்? பூனையாட்டம் இருந்தா. ஏதோ கிறுக்கு, கட்டிவெச்சுப் போட்டா பொட்டாட்ட கெடப்பான்னு நெனச்சு உன் வாழ்க்கையையும் அழிச்சுப்போட்டேன். நீ போயி நிம்மதியா வாழு. என் சொத்துக்கும் பரம்பரைக்கும் வாரிசு அந்தச் சின்னவன்தான். இவ ஒருத்தி நடுவுல பொறக்கலினு நெனச்சுக்கறேன். தூங்கிட்டு இருக்கற மகராசன்தான் எனக்குப் பொறக்க வேண்டியவன். ஏதோ இந்த சனியன் மூலமாத்தான் வரணும்னு இருந்திருக்கு. அவன் பேரன் இல்ல. என் பையன். மாப்ள, அவனை நானே வளத்திக்கறேன். நான் பெத்த ஓடுகாலி நாயால நீ பட்டது போதும். போயிருய்யா.”   “மாமா…”   “என்ன கணேசு?”   “யாராச்சும் கேட்டா?”   “ஆயாக்காரி கேட்டா ஓடி போய்ட்டான்னே சொல்லு. எல்லாருக்கும். தடந்தெரியாமப் புதச்சிடலாம்.”   ரத்தமும் மண்ணு ஒட்டியிருந்த கையை கைகளைத் தண்ணீர் ஊற்றி நிதானமாய்க் கழுவி விட்டு, பரம‌நிம்மதியாய்த் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் போய் ஆதூரத்துடன் தூக்கினார்.   “கர்ணா… தாத்தா வந்திருக்கேன்… எழுந்திரிய்யா…”   ***   நூற்றாண்டுத் திரைப்படம் சுசித்ரா மாரன்   பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் கருமம் என்று மதிப்பீட்டுக் குறிப்பளித்த பெருநாவலர் விதிப்படி வாழ்ந்த அஞ்சுகச் செல்வன் மு.க.   காவித்தலைவன் கரங்களில் தமிழ் வெல்லுமென   கல்வெட்டுப் பொறித்தளித்த இருதூண் கையொப்பம் மு.க.   காதல்மொழி வெல்வெட்டு, கடுஞ்சாடல்மொழி வாள்வீச்சென‌ வசனத்தெறிப்பில் கைத்தட்டள்ளிய காவிய எழுத்துகள் மு.க.   இறைவாழ்த்துப் பாடும் இவ்வையக வழக்கம் மாற்றி மொழிவாழ்த்துப் பொழிய வைத்த முத்தமிழ் மேகம் மு.க.   கண்ணகி சிலம்பினின்று சிதறிய மாணிக்கப் பரல்களை தமிழ்ப் பரல்களாய் பூம்புகாரில் தெறிக்கச்செய்த மு.க.   ஆரிய மாயை எரியச் செய்ய எழுதுகோல் முனைவழி வீரிய தமிழ்த் தழல் மூட்டிய எரிபொருள் மு.க   அதிகாலை ஆதவனும் அன்றாடச் செய்தித்தாள்களும் ஆவலுடன் தேடும் திருவாரூர் திரு மு.க.   மனுநீதி சோழன் மண்ணிலுதித்து மனுதர்மமெதிர்த்த எழுஞாயிறு மு.க.   தன்பெயருக்கு முரணாக கனத்த மௌனத்துடன் கதிரொளி தீண்டக் காத்திருக்கிறது முரசொலி   வாசித்தே பழகிய மூக்குக்கண்ணாடி தமிழருந்த யாசிக்கிறது கலைஞரின் விழிகளை   கொண்டாட்ட‌ இறப்பென்றே நிகழும் வரை நினைக்க வைத்து, எதையும் தாங்கிய‌ இதயங்களையும் எதிரணி தொண்டர்களையும் நொறுக்கிப்போட்ட நூற்றாண்டு வெற்றித் திரைப்படம் மு.க.   ***   தமிழ் வாத்தியார் வடிவேலு மனோ   []       []       []       []     *** பெருங்காமம் சாதனா   1   அதிகாலையில் விழிப்பு வந்து எழுந்துகொண்டார் திருவேங்கடம். தேகம் வியர்த்திருந்தது. அருகிலிருந்த பித்தளைச் செம்பினை எடுத்து இரண்டு தடவை குடித்தவர், செம்பினை மறுபடியும் இருந்த இடத்திலேயே வைத்தார். தளர்ந்திருந்த சாரத்தினை இறுக்கிக் கட்டிக்கொண்டார். அவர் எப்பொழுதுமே இப்படித்தான். அதிகாலையில் தேகம் வியர்த்துப்போய், யாரோ தன்னை, தன் உடலை அவசரகதியில் உலுப்பி எழுப்பியது போல் குபீரென்று எழுந்துகொள்வார். அதே வேகத்தோடு இடதுபக்கமும் வலதுபக்கமும் பார்த்து அமானுஷ்யமோ மனிதரோ எதுவுமேயில்லையென உணர்ந்து அதன் பின்னரே தன்னினைவுக்கு வருவார்.   திருவேங்கடத்திற்கு இன்னொரு பிரச்சனையிருந்தது. நிச்சயமாக அது சாவைப் பற்றியதாகயில்லை. முப்பது வயதில் திருமணம் முடித்து மூன்றே ஆண்டுகளில் மனைவி போய்விட தனிமையில், ரொம்ப ரொம்பத் தனிமையில் மறுமணமே வேண்டாமென்று திண்ணமாகவுமிருந்து நாற்பத்திநான்கு வயதுவரை சொல்லிக்கொள்ளும்படியான கௌரவமான வாழ்க்கை வாழ்ந்தாலும் காமம் விடாப்பிடியாய்ப் படுத்தியது.   மூன்றெழுத்துக்கள். மூன்றே மூன்று எழுத்துக்கள்தான். கா - ம - ம். மறுபடியும் ஒரு முறை எழுத்துக் கூட்டிப் பாருங்கள். நிச்சயமாக மூன்றெழுத்து தான். ஆனால் அது படுத்தும் பாடிருக்கின்றதே! அப்பப்பா!   திருவேங்கடத்திற்கு மறுபடியும் காமம் பற்றிய நினைவு வந்தது. திருவிவிலியத்தில் எழுதியிருக்கும்படிக்கு ஆதாமும், ஏவாளுமே பிள்ளைகளைப் பெற்றார்களெனில் அதைச் சாத்தியமாக்குதலுக்கு ஆண், பெண் குறிகளே அவசியமென்பதை அவர்கள் எப்படியறிந்து கொண்டார்கள் என்பதை நினைக்கும் போது வியப்பாகவும், சிலவேளைகளில் சிரிப்பாகவுமிருக்கும். திருவேங்கடம் இம்முறை சிரித்துக்கொண்டார்.   பதின்மூன்று வயதாகயிருக்கும்போது திருவேங்கடம் ஒருதடவை கஜுராகோ கோவிலுக்குச் சென்றிருந்தார். நீண்டு பெருத்த விஸ்தாரமான கோவில். யோகவர்மனின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அப்போதுதான் கோவில் தூண்களிலும், சுவர்களிலும் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைப் பார்த்தார். முழு அம்மணமாய் இருந்த பெண்ணொருத்தி தொங்கும் மார்புகளோடு குனிந்து நிற்க அவளுடைய காதலன், அவளுடன் பிருஷ்டப்புணர்ச்சியில் ஈடுபடுகின்றான். பக்கத்தில் பெண்ணொருத்தி நிலத்தில் குந்தியிருந்து தன்னுடைய காதலனின் குறியினைச் சுவைத்துக் கொண்டிருக்கின்றாள். திருவேங்கடத்திற்கு தேகம் உதறி நடுங்கத் தொடங்கிற்று. தன்னுடைய உடலிலிருந்து வெப்பமாக ஏதோவொன்று வெளியேறுவதுபோல் அவருக்குப் பட்டது. சுற்றும் முற்றும் பார்த்தவர், யாருமில்லையென்பதையறிந்து ஏதோவொரு தைரியம் அல்லது அந்த வயதில் எல்லோருக்குமிருக்கும் காமம் பற்றியதான இச்சை அவரையும் உந்தித் தள்ள மற்றைய சுவர்களையும் ஒரு விறுவிறுப்புடன் பார்த்தார். காதலியின் யோனியைச் சுவைக்கும் காதலன், விறைத்திருக்கும் ஆண்குறியை உருவிவிடும் காதலி, அறுபத்தியொன்பது வடிவத்தில் கலவி கொள்ளும் காதலர்கள். காதலியை இடுப்பில் தூக்கிவைத்து உறவு கொள்ளும் காதலன்… இப்படி எண்ணற்ற சிற்பங்கள்.   கோவிலைவிட்டு வெளியே வந்தவருக்கு, ஆன்மிகத்திற்கும், காமத்திற்கும் என்ன சம்பந்தம்? என்றவாறாகப் பட்டது. அதற்கு மேல், அந்த வயதில் அதைப்பற்றி சிந்திக்க முடியவில்லை. கஜீராகோ கோவிலில் கண்ட சிற்பங்கள் அவரைப் படுத்தியது. சதாசர்வகாலமும் அவர் அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார். தானே சிற்பங்களில் ஒன்றாக மாறி காதலியின் குறியினை சுவைப்பதுபோல் நினைத்துப் பார்த்தார்.   குளிக்கும்போது Vagina is complicated nest என்று திருவேங்கடத்துக்குத் தோன்றியது. அவரைப்பொறுத்தவரை அது உண்மையும்கூட. அதனால்தான் அவர்களால் அவ்வளவு இலகுவில் ஆண்களை அடக்க முடிகிறது. கமலாதாஸிடம் கூட “உன்னுடைய அல்குலிலேயே என்னுயிர் மய்யம் கொண்டுள்ளது; உன் யோனி ஒரு சவக்கிடங்காய் மாறி என்னை மூடிக் கொண்டுள்ளது” என்று எத்தனை தடவைகள் புலம்பியிருப்பார்.   பெண்ணின் சரீரம்தான் எத்தனை விந்தையானது! கடவுள்களினால் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒரு புதிர் அது. வெட்பமான நீரானது திருவேங்கடத்தின் உடலை நனைத்து ஓடியது. கண்களை மூடிக்கொண்டார்.   இயலாதவனின் காமம் தீயைக் காட்டிலும் உக்கிரமானதென்றுதான் அவருக்குப் பட்டது. அப்படியாயின் இயன்றவனுக்கு காமம் ஒரு பொருட்டேயில்லையா? குளித்துவிட்டு தலையைத் துவட்டிக்கொள்ளும்போது அவருக்கு அந்தச் சந்தேகம் வந்தது. அதைப்பற்றி யோசிப்பதற்கு முதல் காமமென்றால் என்னவென்பதை தீர்க்கமாக விளங்கிக்கொள்ளவேண்டுமென அவர் நினைத்தார். அத்தோடு காமமென்பதின் முழுமையை, அதன் சிக்கல்களை தத்துவார்த்தமாகவோ குறைந்தபட்சம் கோட்பாட்டு ரீதியாகவோ விளங்கிக் கொண்டவர்கள் யாராவது இருப்பார்களா என்கிற கிளைக் கேள்வியும் அவருள் எழுந்தது.   உடை மாற்றிக் கொள்ளும் போது சோப்பினின் கவிதைப் புத்தகத்தை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டார். இப்போதெல்லாம் தான் அசட்டையாகயிருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. எல்லாவற்றுக்கும் தன்னுடைய அதீதமான காமம் தான் காரணமா என்றும் தோன்றியது. நேற்றுக்கூட அவர் தலைவலி மாத்திரையையும், தண்ணீர் பாட்டிலையும் மறந்திருந்தார். அதனால் தேகம் நடுங்கி உடல் வியர்த்து ரொம்பவும் சிரமமாகிவிட்டது. முதலில் தன்னுடைய பிரச்சனைக்கு நல்ல மருத்துவரொருவரை சந்திக்க வேண்டுமெனவும் அப்போது அவர் நினைத்துக் கொண்டார்.   2   வழியில் தேநீர்க்கடையில் காஃபி ஒன்றுக்குச் சொல்லிவிட்டு அது வரும்வரை தன்னைச் சுற்றியிருந்த உலகத்தை வேடிக்கை பார்த்தார். தூரத்தில் பனைமரங்கள் அமைதியாக - அது ஏதோ தவம்போல் – நின்று கொண்டிருந்தன. திருவேங்கடத்திற்கு அந்தப் பனைமரங்கள் இருபது வருடப் பரிச்சயம். இருபத்திமூன்று வயதில், பம்பாயிலிருந்து சென்னைக்கு மாற்றலாகிப் பெற்றோர்களுடன் குடியேறியபோது முதல்முதலாக அப்பனைமரங்கள்தாம் அவரை வரவேற்றன. அதற்கு ஏழு வருடங்கள் கழித்து கமலாதாஸினை திருமணம் செய்துகொண்டபோதும் அந்தப் பனைமரங்கள் அவருடனே பிறந்தவைபோல் அவர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவொன்றாக மாறிவிட்டன. இப்போதும் பெரிய வித்தியாசமில்லை. ஓரிரண்டு குறைந்ததோடு சரி.   இவையனைத்தையும் நினைத்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு இன்னொரு விஷயமும் நினைவுக்கு வந்தது. நடுராத்திரியில், பன்னிரண்டோ, ஒன்றோ மறுபடியும் விழிப்பு வந்து மனைவியை எழுப்பி அவள் பிடிவாதமாக மறுத்தும் விடாமல், வியர்வைத்தெப்பலாக புணர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஜன்னலின் வழியே, அசையும் திரையினூடே அவருக்கு இந்தப் பனைமரங்களே தெரிந்தன.   காஃபி வந்ததும் அதை வாங்கி உறிஞ்சினார். அதிகாலையில் இந்தக் கடைக்காரனிடம் கிடைக்கும் காஃபி திருவேங்கடத்தைப் பொறுத்தவரை ஓர் அதிசயம்; ஆச்சர்யம்; எல்லாம் கலந்த கலவை. எத்தனையோ தடவை சொல்லியும் கமலாதாஸுக்கு அந்தப் பக்குவம் கைகூடவில்லை. ஆனால், இவனால் மாத்திரம் எப்படி? அதுவும் இருபது வருடங்களாக! Even after 20 years, how can the taste continue to be so delicious!   நாக்கினை நீட்டி, காஃபிக் குவளையை அதன்மேல் இரண்டு தடவை தட்டினார். கடைசிச் சொட்டையும் காலி செய்தார். கடைக்காரனிடம் சில்லறைகளைக் கொடுத்தபோது அதிகாலை விடியற்காலையாயிற்று.   பேருந்தில் போகும்போது நெரிசலாக உணர்ந்தார். உட்காருவதற்கோர் இடம் கிடைத்தால் தேவலாமென்று தோன்றிற்று. சிறிது நேரம் பேருந்தைக் கண்களால் அளந்தவர், முப்பதைத் தாண்டிய இரண்டு பெண்கள் சிரித்துச், சிரித்து எதையோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்களுக்குப் பக்கத்தில் குண்டாக, தலையில் முடியில்லாமல் ஒருவன் நின்று கொண்டிருந்தான். இவர் அவனைப் பார்த்தபோது அவனும் இவரைப் பார்த்தான். பார்வையைத் திருப்பிக் கொண்டவர் கும்பலாகயிருந்த பெண்களைக் கண்டார்.   எல்லோருமே பதின்மவயதுப் பெண்கள். தொடைதெரிய குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு எதிரிலிருந்த ஆண்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் தெத்துப்பல் பெண்ணொருத்தி “How was last night?” என்றாள். பதிலுக்கு எதிரிலிருந்தவன், “She didn’t come last night and then it was masturbation” என்றான். அதைக் கேட்டுப் பெண்களெல்லோரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்.   திருவேங்கடத்திற்கு வயிற்றில் ஏதோ எரிவது போல் தோன்றியது. இந்தக் காலத்து இளைஞர்கள்தாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்களென்றும் தானும் அவர்களில் ஒருவனாகயிருந்தால் நன்றாகயிருக்குமே என்றும் நினைத்தார். பிற்பாடு அப்படி நினைத்ததன் அபத்தம் குறித்துச் சிரித்தார். இருந்தாலும் திருவேங்கடத்திற்கு அந்த இளைஞர்களைப் பார்க்கும் போதெல்லாம் பொறாமையாகவும், அதே நேரம், அவர்களுக்கும் வயது போகுமென்று பட்ட போது சற்றே ஆசுவாசமாகவும் இருந்தது.   பேருந்தை விட்டு இறங்கியதும் சினிமா தியேட்டர் பக்கம் திரும்பி, மஞ்சள் வருவதற்காய் சற்றுத் தாமதித்து, வந்ததும் அவசரமாய் ஓடுவது போல் கடந்து, அப்படிக் கடக்கும் போது அனிச்சையாக அங்கிருந்த‌ கிளி ஜோசியக்காரனைப் பார்த்து, ‘சென்னை மத்திய கலைக் கல்லூரி’ என்று ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தார்.     ஆசிரியர் அறைக்குள் பரமேஸ்வரனும். தில்லைநாதனும் இருந்தார்கள். அவர்களிருவருக்கும் முகமன் கூறிவிட்டு திருவேங்கடம் தான் கொண்டு வந்திருந்த கருப்பு நிறத்திலான பையைத் தன்னுடைய பெயர் பொறிக்கப்பட்டிருந்த அலமாரிக்குள் வைத்துக்கொண்டார். கையில் சோப்பினின் புத்தகமிருந்தது. கோப்பி இயந்திரத்தில் ஒரு குவளையளவிலான கோப்பியை நிரப்பிக் கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தார்.   மாணவர்களுக்கு முகமன் கூறியவர், சோப்பினின் கவிதைப் புத்தகத்தில் எண்பத்தி நான்காம் பக்கத்தினைத் திறந்து கொண்டார். கடந்த பதினெட்டு வருடங்களாக இந்தக்கல்லூரியில்தான் திருவேங்கடம் கலைப்பிரிவு ஆசிரியராக இருக்கிறார். இருந்தாலும் மாணவர்களின் போக்கினையும் சிந்தனையையும் கண்டுபிடிப்பது அவருக்கு இன்று வரை சிரமமான காரியமாகவே இருந்து வருகிறது. சோப்பினின் கவிதையில் வரும் புதிர் நிரம்பிய மனிதர்களைப் போலவே அவர் தன்னுடைய மாணவர்களையும் எண்ணினார்.   எண்பத்தி நான்காம் பக்கக் கவிதையை உரக்க வாசித்த அவர், அதன் பொருளினை விளங்கப் படுத்தினார். பின்னர் குறிப்பிட்ட சிலரிடம் அந்தக் கவிதையையும், அதற்கான பொருளினையும் கூறச் சொன்னார்.   இரண்டாம் நேரப் பாடவேளை முடிந்து மூன்றாம் நேரப் பாடவேளையில் ஜெர்சியைச் சந்தித்தார். திருவேங்கடம் ஜெர்சியை தன் வகுப்பறையில் பல தடவை சந்தித்திருந்தாலும் ஒரு தடவை கூட அவளிடம் கவிதையொன்றினைச் சொல்லுமாறோ அல்லது கவிதைக்கான பொருளினைக் கூறுமாறோ அவர் கேட்டதில்லை. பலசமயங்களில் அவர் அவளைத் தவிர்த்தே வந்திருக்கின்றார். ஏனெனில் அவளை முதல்முதலாகச் சந்தித்தபோது ஜெர்சியின் சீரான உடல்வாகும், நேர்த்தியான நாசியும் திருவேங்கடத்தைப் படுத்தியது. சர்ந்தப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர் ஜெர்சியைப் பார்ப்பார். அவளின் அழகை ரசிப்பார். வீட்டுக்குத் திரும்பியதும் ஜெர்சியை நினைத்து ஓரிரு தடவைகள் கரமைதுனம் செய்ததுமுண்டு.   அதன் பிறகான நாட்களில் திருவேங்கடம் ஜெர்சியைப் பார்ப்பதை முற்றாக தவிர்த்தே வந்தார். ஆனால் இன்று ஜெர்சியானவள் திருவேங்கடத்திற்கு மிக அருகிலிருந்தாள். அவருள் குடிகொண்டிருந்த காமம் மறுபடியுமாகக் கிளர்ந்தெழுந்தது. யாருக்கும் தெரியாமல் அவளின் கூந்தல் மணத்தை மெல்லிதாக நுகர்ந்தார். ஏதோ செய்தது. அப்படியே குனிந்து - யார் என்ன சொன்னால் என்ன, சொல்லிவிட்டுப் போகட்டும் - அவளின் அல்குலை நுகர்ந்தால் என்னவென்று தோன்றிற்று. தான் அவ்வாறு செய்வதாகவும் நினைத்துப் பார்த்தார். அன்றைய தினம் கீழ்வருமாறு இரண்டு சம்பவங்கள் நடைபெறலாயிற்று.   முதலாவது சம்பவம்: திருவேங்கடமானவர் கல்லூரி வளாகத்தில் உசாத்திக் கொண்டிருந்த போது ஜெர்சியைக் கண்டார். அவளின் உதட்டில் தெரிந்த சிரிப்பினைக் கண்ட போது திருவேங்கடத்திற்கு கேட்கலாமென்று தோன்றியது. யாரிடமாவது சொல்லிவிட்டால்? சொல்லமாட்டாள். என்ன நிச்சயம்? ஏதோவொரு நிச்சயம். திருவேங்கடத்திற்கு தன் தேகம் காலியானதைப் போல் பட்டது. கூடவே தன் அறிவும் தொலைந்து போனது போல் தோன்றிய போது அதைக் கேட்டே விட்டார்.   பார்வையைத் தாழ்த்தி, >> May I have sex with you? << என்றார்.   ஜெர்சி தன் உடலைக் குறுக்கி, கையை உதறி கொல்லென்று சிரித்தாள். திருவேங்கடம் பார்த்த போது சிரிப்பதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தாள். ஆனால் அப்போதும் அவளுதடுகளில் சிறிய புன்னகை மீந்திருப்பதைக் கண்டு திருவேங்கடம் மறுபடியும் தலையைத் தாழ்த்தி தரையைப் பார்த்துக்கொண்டார்.   >> What’s your age திருவேங்கடம்? Forty, forty five… whatever… எப்படியுமிருக்கட்டும். ஆனால் எனக்கு இப்போது தான் பதினெட்டு. எப்படிப் பார்த்தாலும் நீங்கள் என்னைவிட இருபத்தியேழு வயது மூத்தவர். <<   திருவேங்கடத்திற்கு அதனாலென்னவென்று தோன்றியது. கேட்கலாமா என்று நினைத்தவர் அவள் பேசி முடிக்கட்டும் என்றவாறாக நின்றார். >> So, how can I have sex with you? << என்றாள்.   ஜெர்சி அப்படிக் கேட்டது திருவேங்கடத்திற்குப் பெருத்த ஏமாற்றமாகயிருந்தது. உண்மையில் அவளின் காலில் விழுந்து கெஞ்சக்கூட அவர் தயாராகயிருந்தார். ஏனெனில் காமம் அவரை அவ்வளவு படுத்தியது. இப்போது அவருக்கு எதைப் பற்றியும் கவலையிருக்கவில்லை. இவளுடன் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் யாரிடமும் சொல்ல மாட்டாள் என்று நிச்சயமாக நம்பினார். என் தேகமே உன் அல்குலின் நினைவில் தான் மிதக்கிறது என்று சொல்வோமாயென்று நினைத்தவர் பின்பு இப்படிச் சொன்னார்.   >> என்னைப் புரிந்து கொள், ஜெர்சி. எப்போதும் உன் நினைவாகவேயிருக்கின்றேன் காமம் என்னை அப்படிப் படுத்துகிறது. ஒரேயொரு தடவை இதற்குச் சம்மதித்து விடு. <<   கைகளைக் கட்டிக்கொண்டு சிறிது நேரம் திருவேங்கடத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், >> Am I looking like a whore? << என்றாள். அவள் அப்படிக் கேட்பாளென்பதை திருவேங்கடம் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஜெர்சி மாதிரி ஓர் அழகான பெண்ணிடமிருந்து தேவடியாள் என்கின்ற வார்த்தையை அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் தடுமாறியவர் பின் கீழ்கண்டவாறாகச் சொன்னார்.    >> அப்படியெல்லாம் நினைக்கவில்லை. ஆனால், என்னுடைய இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு பெண் தேவைப்படுகின்றாள். காலம் அந்தப் பெண்ணாக உன்னையே எனக்கு உணர்த்துகிறது. இதற்காக என் வீட்டுக்கு வர வேண்டிய சம்பிரதாயமெல்லாம் தேவையில்லை உனக்கு விருப்பமென்றால் அதோ அந்த மரத்துக்குப் பின்னால் யாருமே பார்க்காமல் பத்து நிமிடம். அதுவும் வேண்டாம், ஒரு ஏழு நிமிடம்… <<   திருவேங்கடம் இப்போது ஜெர்சியை எந்தத் தயக்கமுமில்லாமல் நேராகப் பார்த்தார். ஜெர்சி அப்போதும் சிரித்துக் கொண்டுதானிருந்தாள். எதற்காகச் சிரிக்கின்றாள். இப்படி அலைகிறானே என்றா? அலைவோம். என்ன குறைகிறது? பெண்களுக்கு அலைவது பிடிக்குமென்று யாரோ சொன்னார்களே! ஆனால் காமத்துக்காக அலைவது பிடிக்குமா? அதைப் பற்றி பிறகு யோசிக்க வேண்டுமென்று நினைத்தார்.   >> இதோ பாருங்கள் மிஸ்டர் திருவேங்கடம். ஒரு பெண்ணால் ஓர் ஆணைப் பற்றிப் பார்வையிலேயே அறிந்துகொள்ள முடியும். நீங்கள் என்னைப் பார்ப்பதிலிருந்தே உங்கள் எண்ணங்களை அறிந்துகொண்டேன். அது குறித்து நான் கோபம் கொள்ளவில்லை. ஏனெனில் முப்பது வயதிலேயே உங்கள் மனைவியை நீங்கள் இழந்து விட்டீர்களென எனக்குத் தெரியும். ஆனால் அதற்காக I can’t share my vagina with you. <<   அல்குல் என்றவுடன் திருவேங்கடத்திற்கு அவருடைய சிசுனத்திலிருந்து திரவத்துளியொன்று வெளியேறி அவரின் உள்ளாடையை நனைப்பது போற்பட்டது. திருவேங்கடம் அப்போதிருந்த மனநிலையில் ஜெர்சி ஒரு எலும்புத்துண்டினை அப்பாற் தூக்கிப்போட்டு “முதலில் அதை ஒரு நாயினைப்போல் கவ்வி எடுத்து வா, மற்றதை பிறகு யோசிக்கலாம்” என்று சொன்னாலும் அதைச் செய்வதற்கு தயாராகவேயிருந்தார். கூடவே ஜெர்சியின் அலட்டிக்கொள்ளாத பேச்சு அவருக்கு இன்னும் தைரியத்தைக் கொடுத்தது. எப்படியும் இன்று மாலைக்குள் சம்மதித்துவிடுவாளென்றே அவர் நம்பினார். அல்லது சம்மதிக்க வைத்து விடலாம்.     >> எனக்குப் புணர்ச்சியில் கஷ்டமில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற புளித்துப் போன சாம்பாரும் ஒத்து வராது. பச்சையாக ஒன்று சொல்லி விடுகின்றேன். I am not a virgin. ஆனால் பாருங்கள், நான் யாருடன் படுக்க வேண்டுமென்பதை நான் தான் தீர்மானிக்கவேண்டும். ஏனெனில் இது என்னுடைய தேகம். <<   என்றவாறாக ஜெர்சி திருவேங்கடத்தை விட்டு அப்பால் நகர்ந்தாள். இப்போது திருவேங்கடத்திற்கு பயங்கரமாக சுழன்று கொண்டிருந்த இயந்திரமொன்று தன்னுடைய சுழற்றலை திடீரென்று நிறுத்தியது போலிருந்தது. ஒரு கணம் தன்னையே மறந்து திக்கென்று நின்றவர் மறுபடியும் ஜெர்சியைப் பார்த்தார். பின்னாலே சென்று மறுபடியுமொரு முறை கேட்கலாமாயென்று பட்டது. அவள் இவரைப் பார்த்துச் சிரித்து, தன்னுடைய ஆட்காட்டி விரலினால் வாவென்று அழைத்தாள். அவள் அப்படி அழைத்ததே திருவேங்கடத்திற்கு கிறக்கமாகயிருந்தது. நாடி, நரம்பெல்லாம் சூடேறுவது போல் தோன்றியது.     இவள் விளையாடுகிறாள். என் தேகத்தைச் சூடேற்றி விட்டு விளையாடுகிறாள். என் நிலைமையைத் தெரிந்து கொண்டு விளையாடுகிறாள். திருவேங்கடத்தை ஓர் இனம் புரியாத பதற்றம் தொற்றிக்கொண்டது.   இரண்டாம் சம்பவம்: போகும்போது ஜெர்சியின் கும்பலைக் கண்டார். திருவேங்கடத்தைப் பார்த்ததும் அந்தக் கும்பல் பெரிதாகச் சிரித்து, “Look Mr. Thiruvenkadam is coming” என்றது. அவர்களிலொருவன் “What happened?” என்றான். அப்போது ஜெர்சி “Mr.Thiruvenkadam wants to eat my pussy” என்றதும் கும்பல் மறுபடியுமொருமுறை - ஆனால் இம்முறை பலமாக – சிரித்துக் கொண்டது. திருவேங்கடத்திற்கு என்னவோ போல் ஆயிற்று. முடியுமானவரை கும்பலை விலக்கிக் கொண்டு செல்ல அவர் முயன்றார். அப்போது அவரை இடைமறித்து, “If you want Thiruvenkadam, you can taste it. It’s very delicious” என்று ஜெர்சியின் தோழியொருத்தி கூறவும், ஜெர்சி அவளது தோளில் குத்தி, பின் திருவேங்கடத்தைப் பார்த்துச் சிரித்தாள்.   ஆசிரியர்கள் அறைக்குள் நுழைந்தபோது திருவேங்கடத்தின் உடல் வியர்க்கத் தொடங்கிற்று. அவசரமாகத் தலை வலி மாத்திரையை விழுங்கிக் கொண்டவர், நிரம்பத் தண்ணீர் குடித்துக் கொண்டார். தன் தேகம் இன்னமும் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து யாராவது ஏதாவது கேட்டுவிடுவார்களோயென்று பயந்தார்.   3   மாலைபோல் சற்றுக் குளிர்ந்தது. தேக நடுக்கம் தீருவதற்காக ஆற்றுப் பக்கம் போனார். அவர் பாட்டுக்கு உலாவினார். சிலர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள். தானும் குளிப்போமாயென்று நினைத்தவர், பின்னர் பார்க்கலாமென்று அந்த யோசனையைக் கைவிட்டார். திடீரென்று ஆடைகளைக் களைந்துவிட்டு அரை நிர்வாணமாக ஆற்றில் குதித்தார். நீருக்கு மேலாக தலையை விட்டு கைகளைச் சவட்டினார். பின்பு அப்படியே பிற‌ண்டு நீரில் மூழ்கி ஆற்றின் ஆழத்திற்குச் சென்று மணலைத் தொட்டு, கொஞ்ச நேரத்தில் ஆற்றின் இன்னொரு பகுதியில் எழும்பினார். முகத்தினை வழித்துத் துடைத்தவருக்கு கண்கள் எரிந்தன‌.   வீட்டுக்குத் திரும்பிய போது கூட திருவேங்கடத்தின் தேக நடுக்கம் நின்றபாடில்லை. இரண்டு தலைவலி மாத்திரைகளை விழுங்கியும் நடுக்கம் குறைவதாகயில்லை. என்றைக்குமில்லாது தன்னுடைய உடல் அதிகப்படியாக வியர்ப்பது போல் அவருக்குப் பட்டது. ஆத்திரமும், கவலையும் அவரைச் சூழலாயின.   4   கதவைத் திறந்தபோது ஜெர்சியும், அவள் தோழியும் நின்றுகொண்டிருந்தார்கள்.   நிரம்பி வழியும் புன்னகையோடு திருவேங்கடத்தைத் தள்ளி விட்ட அவர்கள் கைப்பைகளோடு சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டார்கள். பச்சை நிறத்திலான சாயமடிக்கப்பட்ட விரல்களினால் திருவேங்கடத்தை அவர்கள் அழைத்த போது திருவேங்கடத்திற்கு நடப்பது கனவா அல்லது நிஜமா எனப் புரியாமற் போயிற்று. சத்தமில்லாமல் அவர்களுக்கு எதிரே சென்று அமர்ந்து கொண்டார். இருவருமே புடவை அணிந்திருந்தார்கள். உதட்டுக்கு அடர்த்தியான கருமை நிறத்தில் சாயமடித்திருந்தார்கள். இப்போதும் ஜெர்சி தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பது திருவேங்கடத்திற்கு என்னவோ போலிருந்தது.   >> அப்படியானால் நீ நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் <<   தன்னை அவர்கள் ஒருமையில் அழைத்தது திருவேங்கடத்துக்கு பிடிக்கவில்லையென்றாலும் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில், ஜெர்சிக்காகவும் முக்கியமாக அவளின் தூய்மையான அல்குலுக்காகவும் எந்த நிலைக்குச் செல்லவும் திருவேங்கடம் தயாராகவேயிருந்தார். ஏதும் பேசாமல் மவுனமாக இருந்த அவர், இன்னமும் கைகளைப் பிசைந்து கொண்டு தரையைப் பார்த்தவாறே இருந்தார்.   இரண்டு பெண்களும் எழுந்து கொண்டார்கள். திருவேங்கடத்தை அணைத்துக் கொண்டு அமர்ந்தவர்கள், தங்களின் மினுங்கும் தொடைகளை திருவேங்கடத்தின் கால்களில் போட்டுக் கொண்டார்கள். திருவேங்கடத்திற்கு திக்கென்றானது. ஆனாலும் அது அவருக்கு வேண்டும் போல் தோன்றியது.   தேகம் பஞ்சாட்டம் ஆனதைப் போலுணர்ந்த அவர், அப்படியே அந்த இரண்டு பெண்களையும் மாறி மாறிப் புணர்வோமா என்று யோசித்தார். அவர்களின் தொடுகையும், வாசனையும் திருவேங்கடத்தை ஏதோ புதிதாகப் படுத்தியது. சாகும் வரை “அது” அவருக்குத் தேவைப்பட்டது. அத்தோடு அவர்களின் தடவலில் தன்னுடைய சிசுனமானது லேசாக விறைத்து ஸ்கலிதமடைந்ததைப் போலவும் அவருக்குப் பட்டது.   திருவேங்கடத்தின் சட்டைப் பொத்தானைத் திறந்து அவரின் தளர்ந்த மார்பினை ஜெர்சி தடவிய போது ஜெர்சியின் தோழி அவரின் தொடைகளை ஸ்பரிசித்துக் கொண்டாள். >> யூ வாண்ட் அவர் டேஸ்ட்டி புஸ்ஸி? << என்று காதில் கிசுகிசுத்தாள். திருவேங்கடத்திற்கு உடல் வியர்க்கத் தொடங்கிற்று. ஜெர்சியின் தொடைகளைத் தடவியவர், அப்படியே சோஃபாவில் தலையைச் சரித்துக்கொண்டார். கண்களை மூடியவாறே ஜெர்சியின் தோழியின் தொடையையும் சேர்த்துத் தடவ ஆரம்பித்தார்.   இரு பெண்களும் ஒருவரையொருவர் பார்த்து கிளுக்கென்று சிரித்துக் கொண்டார்கள். திருவேங்கடத்திற்கு காமம் தலை வரை ஏறியது. ஒரு பாம்புபோல் அவரின் தேகம் முழுவதையும் காமம் ஆட்கொண்டபோது பாதியாக திறக்கப்பட்ட கண்களினால் ஜெர்சியைப் பார்த்து, >> Please put your little clit in my mouth << என்றார்.   தன் தோழியைப் பார்த்து மறுபடியும் சிரித்துக் கொண்ட ஜெர்சி, திருவேங்கடத்தைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினாள். >> பொறுங்கள் மிஸ்டர் திருவேங்கடம். நீங்கள் ஆசைப்பட்டதெல்லாம் நான் தருகிறேன். ஆனால் அதற்கு முதலில் நாங்கள் சொல்வதை நீங்கள் செய்ய வேண்டும். <<.   அரை மயக்கத்திலிருந்த திருவேங்கடம் ஓர் ஆசிரியனான நான் கேவலம் காமத்துக்காக இப்படியெல்லாம் கீழிறங்கி விட்டேனேயென ஒரு கணம் யோசித்தார். ஒரே ஒரு கணம்தான். பிறகு அவரால் மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை. காமம் காமம் காமம். இதோ என் ஆசைக்குரிய இளம் பெண். அதுவும் இரண்டு பெண்கள். அவர்கள் சொல்வதையெல்லாம்… என்ன சொல்வார்கள்? எதுவென்றாலும் சரி, செய்கின்றேன்.   எனக்கு வேண்டியது ஜெர்சியின் தேகம். அவளின் வாசனை நிரம்பிய தேகத்தில் என்னுடைய உடலானது நெளிந்து நெளிந்து ஊர வேண்டும். அவளின் நெற்றி, உதடு, கழுத்து, மார்பு, தொப்புள், இடை, அல்குல் என அவளின் அத்தனை உறுப்புகளிலும் நான் முத்தமிட வேண்டும். இத்தனையாண்டுகளாக என்னுள் ஒரு பூதத்தினைப்போல் குடிகொண்டிருக்கும் காமத்தினை ஜெர்சியின் மார்புக்கிடையில் புதைத்துவிடவேண்டும்.   ஜெர்சியைப் பார்த்து என்ன செய்ய வேண்டுமென கண்களால் கேட்டார். அவர் அப்படிக் கேட்டதும் ஜெர்சியின் தோழி திருவேங்கடத்தின் சிசுனத்தை வெளியில் எடுத்தாள். கொஞ்சமாக விறைத்திருந்த அவரின் சிசுனமானது தன்னைத் தானே ஒருதரம் சுற்றிக்கொண்டு பின்னர் அப்படியே ஒரு பக்கமாகச் சரிந்து விழுந்தது. இரண்டு பெண்களும் திருவேங்கடத்தின் சிசுனத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.   திருவேங்கடத்திற்கு மின்சாரம் ஏறியதைப் போலிருந்தது. முழுத் தேகமும் பரவசமடைந்ததைப் போலுணர்ந்த அவர், முழுமையான போதைக்குள் இறங்கினார். ஏதோவொரு இனம் புரியாத இன்பம் அவரைத் தொற்றிக்கொண்டது. அவரின் கைகள் அனிச்சையாக ஜெர்சியின் மார்புகளைப் பிசையத் தொடங்கிற்று. முதலில் அவரின் கைகளை தட்டிவிட்ட ஜெர்சி, இரண்டாவது தடவையும் திருவேங்கடத்தின் கைகள் தன்னுடைய மார்புகளை பிசைய ஆரம்பித்த போது ஒரு கணம் தன் தோழியைப் பார்த்து புன்னகைத்து விட்டு பின்னர் ஏதும் சொல்லாமல் அதற்கு அனுமதித்தாள்.   ஜெர்சியின் தோழியானவள், அவரின் காதில் “சிக்கி, சிக்கி, சிக்கி” எனக் கிசுகிசுத்தாள். திருவேங்கடம் தன்னுடைய உடல் உஷ்ணமடைந்து வெட்பமாக ஏதோ வெளியேறுவது போலுணர்ந்தார். இன்பம், இன்பம், இன்பம்! இத்தனையாண்டுகளாக இதற்குத்தானே காத்துக்கொண்டிருந்தேன். எத்தனை ஏக்கம் எத்தனை தேடல் எத்தனை அலைச்சல்! இதோ எல்லாவற்றையும் இந்த இரண்டு பெண்களும் தீர்த்துவிடப் போகின்றார்கள். விடைத்த மாம்பழம் போலிருக்கும் தங்களின் அல்குலை எனக்குத் தரப் போகிறார்கள். நான் அவர்களின் வாசனை நிரம்பிய யோனியை ஆழமாக நுகரப் போகிறேன். அவர்களின் லாபியாவை பற்களால் கடித்து விளையாடப் போகிறேன். அதன் பிறகு என்ன செய்யலாம்? புணரலாம். அதன் பிறகு…?   அதன் பிறகு அப்படியே இறந்து விடலாம். ஆமாம்… இறந்து விடலாம்!   கண்களை மூடி சரிந்து கிடந்தவரின் தலையில், தோழி சடாரென்று அறைந்தாள். காமத்தில் அவருக்கு எதுவுமே விளங்கவில்லை. கோபம் கொள்வதற்குப் பதில் தோழியைப் பார்த்து கிறக்கமாகச் சிரித்தார்.   அவள் மறுபடியும் திருவேங்கடத்தின் பிடரியைப் பொத்தி அடித்தாள். ஜெர்சி அப்போதும் சிரித்துக் கொண்டுதானிருந்தாள். திருவேங்கடம் அவளை விடவும் அதிகமாகச் சிரித்தார். இப்போது ஜெர்சியும் திருவேங்கடத்தை அடிக்க ஆரம்பித்தாள். முதலில் செல்லமாகத் தட்டியவர்கள், நேரம் போகப் போக பலமாக அடித்தார்கள். திருவேங்கடம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார். அவர்கள் அடிக்க, அடிக்க இவர் அவர்களின் தொடைகளைத் தடவி அல்குலுக்குள் கை நுழைக்கவே முயன்றார்.   இப்போது திருவேங்கடம் இரண்டு பெண்களினதும் கால்களுக்குக் கீழே கிடந்தார். ஒரு நாயினைப் போல் அவர் தன்னுடைய கால்களையும், கைகளையும் மடித்து தரையில் கிடக்க, அவரின் நாக்கானது அவரின் வாயிலிருந்து வெளியில் தொங்கிக்கொண்டிருந்தது. திறக்கப்பட்ட அவரின் கால்சராய் ஜிப் பின் வழியே அவரின் விடைத்த சிசுனம் இளம் சிவப்பு மொட்டுடன் ஒரு குட்டிப் பாம்பு போல் தெரியலாயிற்று.   >> எழும்பு. எழுந்து ஒரு நாயினைப் போல் இந்த அறையினைச் சுற்றி வா. << தோழி கட்டளையிட்டாள்.   திருவேங்கடம் எழுந்து கொண்டார். தன்னுடைய நிலையை நினைத்து அவருக்கே சிரிப்பு வந்தது. அழுக்குப் படியாத ஆடையுடனும், நேர்த்தியான சிகையுடனும் தான் பாடம் படித்துக் கொடுக்கும் உருவம் அவரின் கண் முன்னே மின்னல் வெட்டியதைப் போல் வெட்டிச் சென்றது. தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு எல்லாவற்றையும் உதறிவிட்டு இரு பெண்களையும் தலையில் பிடித்து வெளியே தள்ளி செய்யலாம் தான். ஆனால் மனம் ஒப்பவில்லை. காமம் அவரை ஒரு சைத்தானைப் போல் அடக்கி வைத்திருந்தது.   இப்போது திருவேங்கடம் இரண்டாவது தடவையாக அறையைச் சுற்ற ஆரம்பித்தார். திருவேங்கடம் ஜெர்சியைப் பார்க்கும் போதெல்லாம் ஜெர்சி இவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். உதட்டில் சிரிப்பு. அவருக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை. முழங்கால்களினால் நடந்து ஜெர்சியை நெருங்கினார்.   தளர்ந்திருந்த தன் இரண்டு கைகளினாலும் ஜெர்சியின் இடுப்பினைப் பிடித்துக்கொண்டவர் நேராக அவளது இடுப்பின் கீழ் முகம் புதைத்தார். ஜெர்சி அவரின் முகத்தினை அப்பாற் பிடித்துத் தள்ளினாள். ஆனால் திருவேங்கடம் விடுவதாகயில்லை. ஜெர்சியைத் தன் பக்கமாக இறுக்கியவர் ஒற்றைக் கையினால் அவளின் புடவையைத் தொடை வரை தூக்கினார். ஒரு நாயினைப் போல் அவளின் தொடைகளில் தன் முகத்தினை பதித்து வெறி கொண்டவர் போல் முத்தமிட ஆரம்பித்தார். அப்போது தோழி, அவரின் பிடரியில் பொத்தி அடித்து அவரைப் பின்னாலிருந்து இழுத்தாள். நிதானமிழந்து தரையில் விழுந்தவரை தன் இரண்டு கைகளினாலும் பலமாகப் பிடித்துக் கொண்டு பிற்பாடு வெடிச் சிரிப்புச் சிரித்தாள். அப்போது ஜெர்சி திருவேங்கடத்தின் மார்பின் மேல் அமர்ந்து கொண்டாள். >> Pity you, Thiruvenkadam. << என்றாள்.   >> You want to lick Jersy’s pussy, Mr.Thiruvenkadam? << என்று தோழி கேட்கவும் “ஆமாம்டி வேசைகளே, எனக்கு ஜெர்சியின் கூதி தான் வேண்டும்” என்று பலமாகக் கத்தினார். அவ்வாறு அவர் பெரும் குரலெடுத்துக் கத்தியது அறைச் சுவர்களில் பட்டுத் தெறித்தது. இரு பெண்களும் பைத்தியம் பிடித்ததுபோல் சிரித்தார்கள்.   ஜெர்சி புடவையை இடுப்பு வரை தூக்கிக் கொண்டு திருவேங்கடத்தின் முகத்திற்கு நேராக நின்றாள். திருவேங்கடம் கௌவ வரும் போதெல்லாம் சடாரென்று தன் இடுப்பினைத் விலக்கிக் கொண்டு >> Don’t stop Thiruvenkadam. Don’t stop. Absorb my little pink clit till my death. It’s feeling amazing. << என்று நடித்தாள். அதை ஒரு விளையாட்டாக அவரிடம் மீண்டும் மீண்டும் செய்து கொண்டியிருந்தாள்.   திருவேங்கடம் களைத்துப் போயிருந்தார். ஆனால் அவருடைய காமம் களைத்துப் போவதாகயில்லை. கண்கள் சொருகித் தரையில் படுத்துக் கிடந்தார். இப்போது திருவேங்கடத்திற்கு ஜெர்சியின் மீது சற்றுக் கோபமும் வந்தது. இப்படி ஈவு இரக்கமற்றவளாக இருக்கின்றாளே, ஒரே ஒரு தடவை அவளுடைய வசீகர ரகசியத்தை என்னுடைய வாயில் திணித்தால் என்ன குறைந்து விடப் போகிறது? திருவேங்கடம் தன்னை மறுபடியும் ஆசிரியனாக நினைத்துக் கொண்டார். சோப்பினின் கவிதையை மாணவனை வாசிக்கச் சொல்லி அதன் பொருளினை இருநூறு சொற்களுக்குக் குறையாமல் கூறச் சொன்னார். மாணவன் அதை அய்ம்பது சொற்களில் கூறி முடித்தபோது மாணவனை பொதுவெளியில் அவமானப்படுத்த விரும்பாமல் தானே சொற்களை எடுத்துக்கொடுத்து கவிதையின் பொருளினை இருநூறு சொற்களில் பூர்த்தியாக்கினார்.   திடீரென்று தன்னினைவு வந்து “ஜெர்சி ஜெர்சி” என்றார். திருவேங்கடத்தின் மார்பிலிருந்து எழுந்து கொண்டவளான ஜெர்சி, தன்னுடைய நீண்ட குதியினைக் கொண்ட சாண்டில்ஸ் காலினால் அவரை உதைத்தாள். காறி எச்சில் உமிழ்ந்தாள். திருவேங்கடம் அவை எவற்றையுமே சட்டை செய்தாரில்லை. “யோனி, யோனி”யென்று முனகினார். பெண்களிருவரும் பெரும் கூச்சலிட்டு திருவேங்கடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். உதடுகளைக் குவித்து அதன் வழியே நாக்கினை நீட்டி “உவ்வே” என்றார்கள்.   கைப்பைகளைத் தூக்கிக் கொண்டு சிரித்தபடி வெளியேறினார்கள். அப்படி வெளியேறும்போது மறுபடியும் திருவேங்கடத்தை பார்த்துக்கொண்ட அவர்கள் உடலைக் குறுக்கி கிளுக்கென்று சிரித்துக் கொண்டார்கள்.   திருவேங்கடம் ஜிப்பின் வழியே நீண்டிருந்த சிசுனத்தோடு கழிப்பறையை நோக்கி நடக்கலானார்.   ***   குவியொளி கீர்த்திவாசன் (KRTY)   - இறைவா, எனக்கும் கோடி கோடியாய்ப் பணம் கொடு, எளிமையாக இருந்து காட்டுகிறேன்.   - கோவம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும். என்ன குணம் சார்? சொன்னேனே, கோவம்தான்!   - சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தார்களாம். எனக்கு க்ரீன் டீ கொடுங்கள் போதும்.   - அரசியல் பிழைத்தோர்க்கு அறம் ஜோக்காகும்.   - பத்துக்கூட்டு, எட்டுத்தொகையல், ஐம்பெருங்காப்பி.   - துன்பம் நேர்கையில்… அப்பவாவது அந்த யாழை மீட்டாமல் இரேன்.   - வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு பேனா பரிசளிப்பது, so 1990s. கீபோர்டு வாங்கிக் கொடுங்கள். மிகவும் வளர்ந்து விட்ட எழுத்தாளருக்கு mouse போதும்.   - ஓராயிரம் யானைகளைக் கொன்றால் பரணி. அறுபதாயிரம் யானைகள்? பொரணி!   - செயல் தலைவரைப் பாராட்டுவது தான் 'மு.க.ஸ்'துதி.   - யாராவது மலையாளி வீட்டுக்கு வந்தா, அவங்க மொழி பேசறதா நினைச்சுட்டு “வெள்ளம் வேணுமோ?”ன்னு கேட்டு வைக்காதீங்க.   - எந்த ஜாதி, மதமானாலும் தற்போதைய இளைஞர்களின் ஆசை பிராமணக் கல்யாணம், கிறிஸ்தவ ரிசெப்ஷன்.   - எதுக்குடா மீசை வளக்கறே..? Betட்டுல தோத்துட்டேன். மீசை எடுக்கனும். அதான் வளர்க்கறேன்.   - Sati, unhappy about what Shiva did to Dakshan, left him saying “I need space”. And there was Cosmos.   - Between Jeyam Ravi, Nizhalgal Ravi and Shobana Ravi, the odd man out is a woman.   - அடுத்த வாட்டி பேங்க் போகும் போது, பெர்ஸனல் லோன் வேண்டாம், வாராக் கடன்ல ஒரு ரெண்டு கோடி கிடைக்குமா என்று கேட்க வேண்டும்.   - It’s a coincidence that coincidence got that name. It was supposed to be something else.   - ஷேவிங்கில் கீறல் விழுந்தால் காயம். ரிவர்ஸ் ஷேவிங்கில் விழுந்தால் - வீரத்தழும்பு விழுப்புண்.   - முப்பத்தைந்து வயதில் கிருஷ்ணர் வேஷம் போட்டால், கம்சன் மாதிரிதான் இருக்கும்.   - சர்வபள்ளியிலும் வாழும் தெய்வங்கள். (ஆசிரியர் தினத்தன்று எழுதியது)    - இந்தப் போராட்டம் நிறைந்த உலகத்தில் ஒரு நாள் அணுவைப் பிளந்து அமைதி வெடிக்கப் போகிறது.   - கடவுளிடம் trick-ஆகக் கேட்பதாக நினைத்துக் கொண்டு "நான் கட்டும் சொத்து வரி அதிகமாக வேண்டும்" என்று யாரோ ஒரு புண்ணியவான் கேட்டு விட்டார். கடவுள் விஷமக்காரன்.   - Comedy is serious business. Okay. That makes tragedy a funny one?   - மூக்கு சளி தான் மருவி mucus என்று ஆகியிருக்க வேண்டும். தமிழ் தொன்மையான மொழி தான்.   - தூங்கும் போது விரயமாகும் நேரத்தில் ஏதாவது தானாக உடம்பு எக்ஸர்சைஸ் செய்து கொள்ளும் கருவி கண்டுபிடித்தால் தேவலை.   - கடிகார ரிப்பேர் கடைகளில் முள்ளை முள்ளால் எடுப்பதில்லை.   - ஒரு மணி நேரம் ட்ரெட்மில்லில் நடந்து வந்து விட்டு அடிவயித்தைத் தொட்டுப் பாத்தானாம்.   - எத்தனை புண்ணியம் செய்திருக்கிறேன் என்று கடவுளின் வெப்சைட்டில் லாகின் செய்து பார்த்தேன். முதலில் ஆதார் லின்க் செய்யவும் என்றது.   - நல்ல பராக்கிரமமான மீசை வைத்திருக்கும் போது ஜலதோஷம் வந்தால், அது அந்த கம்பீரத்தைக் கெடுத்து விடுகிறது.   - ஃபுட்பால் ஒரு கையாலாகாத விளையாட்டு.   - குழந்தை பிறந்ததும் அதன் இரண்டு கைகளிலும் ஒரு நூறு ரூபாய்த் தாளைத் திணித்தார் ஒரு உறவினர். Cash on delivery.   - வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும். மாசக் கடைசியில் அது கூட இருக்காது.   - ஆசையைத் துறந்த புத்தர் இப்போதெல்லாம் பெண்கள் சுடிதாரில்!   - சென்னையில் செய்த பருப்புப் பாயசத்தை, ஜி.டி. ரயிலேற்றி டில்லிக்கு அனுப்பினால் – வடபாயசம்.   - கடந்த காலம். பசி, பட்டினி மட்டுமே பெருங்கொடுமைகளாய் இருந்த வசந்த காலம்.   - உங்கள் வீட்டு தலைகாணியில் என்ன இருக்கிறது? இலவம் பஞ்சா? ஃபோமா? எங்கள் வீட்டுத் தலையணையில் ரெண்டு hot wheels கார், பெப்பா பிக் பொம்மை, பில்டிங் செட் சொப்பு, நாலு க்ரேயான் பென்சில் – இவை போன சூன்ய இடத்தைக் கொஞ்சம் குஷன் ஆக்கிரமித்துள்ளது.   - நாம ஒருத்தர் கிட்ட KT வாங்குவோம். KT கொடுத்துட்டு அவர் போய்டுவார். அப்புறம் தான் issues வரும். TheDayAfterIndependence.   - Early bird gets the Worm. This proverb doesnt apply to the early worm.   - பல்லிடுக்கில் மாட்டிய சிறு தேங்காய்த் துரும்பை நாக்கு நெரடி நெரடி, புண்ணுற்று, டூத் ப்ரஷ்ஷும் தோற்று, கொப்பளித்தும் நிவாரணமில்லா நிலை. அதுவே கையறு நிலை.   - என் கல்லறையில் என்ன எழுதவேண்டும் என்று யோசித்தேன். ச்சே, நம்மளத்தான் எரிச்சுடுவாளே.   - மெரினாவும், சர்தார் படேல் ரோடும் பேசிக் கொண்டன. “என்னடா இது, நம்மள சுடுகாடா மாத்திட்டாங்க.” என்று அலுத்துக் கொண்டன. அங்கே வந்த ராஜாஜி ஹால், கனைத்தது.   - பல நாள் திருடன் ஒரு நாள் தான் அகப்படுவான். But, ஒரு நாள் திருடன் பல நாள் அகப்படுவான்.   - வெள்ளிக்கிழமை வாசம் மூக்கைத் துளைக்கிறது. #கொண்டாடக்கண்டுபிடித்துக்கொண்டாவொருதீவு   - சாய்ந்தாடும் நாற்காலிகூட நான் எழுந்தபின் பத்து செகண்ட் ஆடி தனக்காக வாழ்ந்துகொள்கிறது.   - பில்கேட்ஸ் அப்பா அவர் வீட்டுக்கு வந்தாராம். “என்னப்பா, பண வசதியெல்லாம் நல்லா இருக்கா?” “இருக்குப்பா, சௌக்கியமா இருக்கேன்.” “எத்தனை தேறும்?” “என்னப்பா கேள்வி! இப்பத்திக்கு தொண்ணூறு பில்லியன் டாலர் சேர்ந்திருக்கு.” “ம்க்கும்" என்றார் அப்பா. “ஏம்பா?” “Jeff Bezos பாத்தியா? நூத்தி இருபத்தோரு பில்லியன். போ, போய்…”   *** சிவபானம் வெங்கடேஷ். உ   ஞாயிற்றுக்கிழமை. பத்தரை மணிக்கு முழிப்பு வந்தது.   நேற்றிரவு ஜாயிண்ட் அடித்து விட்டு சாப்பிட ஒரு மணிக்கு ஆர்டர் செய்து விட்டு, அது வருவதற்குள் தூங்கி விட்டதால் டெலிவரி செய்ய வந்தவனின் மிஸ்டு கால் 23 இருந்தது ஃபோனில்.   எழுந்து முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு, ரோலிங் பேப்பர் எடுத்து, வேகமாக மினி ஜாயிண்ட் ரோல் செய்து, அடித்து விட்டு, போதையில் பல் தேய்க்க மறந்து, பர்ஸை எடுத்துக் கொண்டு, பக்கத்திலிருக்கும் இட்லி கடைக்குச் சென்று, சாப்பிட்டு விட்டுத் திரும்பி ரூம் வரும் பொழுது ஒரு ஆக்ஸிடெண்ட்.   பைக்ல வேகமா வந்தவன் ஸ்பீட் பிரேக்கரை கவனிக்காம விட்டு, அவசரமா பிரேக் அடிச்சு, ஸ்கிட் ஆகி, கார்ல மோதி, ஆளு ஸ்பாட்லயே காலி. எல்லோரும் சுத்தி நின்னு பார்த்துட்டு இருந்தாங்க. எனக்கு இரத்தத்தைப் பார்த்தா நெஞ்சு படபடக்க ஆரம்பிச்சிடும். அதனால நான் கண்டுக்காம அப்படியே நடக்க ஆரம்பிச்சுட்டேன். செத்தவனுக்கு வயசு இருபது கிட்டதான் இருக்கும்னு யாரோ பேசுனது கேட்டுச்சு.   ரூம் வந்து கதவ திறக்கும் போது நியாபகம் வந்தது. ச்சே, இந்த சாவப் பார்த்துட்டு வந்ததுல தம் வாங்க மறந்துட்டேன். இப்ப மறுபடியும் நாலு மாடி இறங்கனும். எரிச்சலோடு இறங்கி, விலை கூட வைத்து விற்பதால் பக்கத்தில் இருந்தும் அந்தக் கடையில் எப்போதும் வாங்குவதில்லை, ஆனால் இன்று அங்கேயே ஒரு பாக்கெட் கிங்ஸ் வாங்கி, ஒன்றை அங்கேயே பற்ற வைத்து அடித்தபடியே ரூம் வந்தேன்.   புகை தீர்ந்து கொண்டிருக்கும் போதே பல் தேய்க்கலாமா வேணாமா என யோசித்தபடியே கக்கூஸ் போனேன். சரி, இன்று பல் தேய்க்க வேண்டாமென முடிவெடுத்து குளிக்கத் தொடங்கினேன்.   என் பெயர்… பெயரில் என்ன இருக்கிறது. சாஃப்ட்வேர் இஞ்சினியர். கஷ்டப்பட்ட குடும்பத்துல இருந்து வந்தவன்தான். ஆனா இப்ப பிரச்சினை இல்ல. கஷ்டம் கஷ்டம்னு ஒண்ணும் அனுபவிக்காம வளர்ந்தவன், இப்ப அனுபவிக்க காசு வந்ததும், தனியா ஃப்ளாட் எடுத்து இஷ்டத்துக்கு வாழ்ந்துட்டு இருக்கேன். ஊர்ல அப்பா, அம்மா கல்யாணம் பண்ணச் சொல்லிக் கேட்டுட்டே இருக்க, இன்னும் ரெண்டு மூனு வருசம் அந்த பேச்ச எடுக்காதிங்கனு சொல்லிட்டேன். காலேஜ் படிக்கும்போது முத ரெண்டு வருசம் ஒழுங்கா படிச்சவன், பீர் மட்டும்னு ஆரம்பிச்சு அது கஞ்சால வந்து நிக்குது இப்போ. ஆனா படிப்ப விடல காலேஜ்ல வேலை வாங்கிட்டு தான் வெளில வந்தேன். கஞ்சாத் தண்ணிலாம் தப்பா என்ன? எவன் தான் உடம்ப கெடுத்துக்கல சொல்லுங்க. கேடுனு தெரிஞ்சே தான பெப்சி, கோக், பீட்சா, பர்கர், லேஸ், Maggiனு தின்னே அழியறான்.   இப்ப நான் ஒரு நைட் ரெஸ்டாரண்ட் மெனு கார்ட் வாசிக்கிறேன் கேளுங்க…   Gilma Briyani Chicken Dynamite Dragon Prawn Kung pro Vegetables / Chicken / Lamb Kerchief Parotta   இதெல்லாம் நடுராத்திரில சாப்பிட்டா சீக்கிரம் செத்துடுவோம்னு தெரியாமலா சாப்பிட‌றாங்க? எவனுக்கும் உடம்ப பத்திக் கவலை கிடையாது. ஊரு தப்பா பேசும்னு பயந்து போய் கஞ்சா அடிக்காதவன் தான் எல்லோரும். ஒருத்தனும் இங்க நல்லவன் இல்ல. பயந்தாங்கொள்ளிப் பயலுக. இந்த ஆண்மை இல்லாத அரசைப் பொட்டைனு சொல்லிடுவோம்னு பயந்து சரக்குன்ற பேருல இவனுங்க மூளைய காலி பண்ற டாஸ்மாக் விஷத்தை விட்ருக்காங்க‌. ஆனா மூளைய ஷார்ப் ஆக்குற கஞ்சாவை சரினு சொல்லிட்டா எல்லாப் பயலும் கேள்வி கேக்க ஆரம்பிச்சிடுவானுங்கனு பயந்து போய் சட்டத்துல தப்புனு சொல்லிட்டு ரகசியமா எல்லா ஊர்லயும் வித்துக்கிட்டிருக்கு. கஞ்சா ஊரெல்லாம் புகையுதுனு போலீஸ்க்கு தெரியாதுனு நினைக்கிறீங்க, நான் ஸ்கோர் பண்றவன் இருக்கற‌து, சப்ளை பண்றது எல்லாம் ஒரு ட்ராஃபிக் போலிஸோட‌ அபார்ட்மெண்ட்ல‌ தான். இத்தனைக்கும் அந்த போலீஸ் ஒரு பொம்பளை. இப்படி இருந்தா தானே யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க. தெரிஞ்சும் தெரியாத மாதிரி கஞ்சா அடிச்சுட்டு அமைதியா இருந்துப்பாங்க. நீங்க கஞ்சா அடிச்சிருக்கீங்களா? அடிச்சுப் பழகிட்டீங்க சரக்கத் தொடமாட்டீங்க. சரக்கு உங்களை மந்தமாக்கும். யோசிக்க விடாது. ஆனா ஜாயிண்ட் உங்க மூளைய ஆக்டிவ் ஆக்கும். நீங்க எல்லாத்தையும் கவனிக்க ஆரம்பிச்சிடுவீங்க. உங்க மூளை எதையாச்சும் யோசிக்க ஆரம்பிச்சிடும்.   குளிச்சு முடிச்சிட்டேன். இருங்க தலை துவட்டி ட்ரெஸ் மாத்திட்டு திரும்பச் சொல்ல ஆரம்பிக்கிறேன்.   ஸாரி, ட்ரெஸ் மாத்திட்டு அப்படியே ஒரு ஜாயிண்ட் ரோல் பண்ணிட்டு வந்தேன், அதான் லேட் ஆயிடுச்சு.   எங்க விட்டேன்? ஹ்ம்ம்… யோசனை. ஜாயிண்ட் அடிச்சா உங்க மனசை யோசனை கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சிடும். வேகமா ஓட வைக்கும். இலக்கில்லாம அங்க இங்கனு ஓட வைக்கும். திடீர்னு தனியா விட்டுட்டுப்போயிடும். நீங்க எவ்வளவு யோசிச்சாலும் இவ்வளவு நேரம் எதநெனச்சி என்ன யோசிச்சிங்கனு கண்டுபிடிக்க முடியாது. முதல் சரடப் பிடிச்சுத் தேடிப் போனா சில நேரம் கண்டுபிடிக்கலாம். கிடைக்குதோ இல்லையோ அந்தத் தேடல் செமயா இருக்கும். வழி தெரியாத காட்டுக்கு போயி அலைஞ்சிருக்கிங்களா? அந்த மாதிரி. எல்லாரும் அதுக்குத் தான அலையறோம்! இல்லனா தீம் பார்க்ல‌ இவ்ளோ கூட்டம் வருமா? எத்தனை விதமா உங்களை நீங்க சாகசத்துக்கு உட்படுத்துறீங்க! RollerCoaster, Columbus, Ghost Ride - அந்த மாதிரி ஒரு அனுபவம் அந்தத் தேடல்ல. ஒரு OCB முடிஞ்சுது. என் மனசு கூட நீங்களும் ஓட ஆரம்பிங்க.   பன்னிரண்டு மணிக்கு பதனி விக்குறான் ரோட்டுல. அதையும் நீங்க வாங்கி குடிக்கிறீங்க. ஏன் தெரியாதா காலைல இறக்குன பதனி எட்டரை, ஒம்பதுக்கு மேல சலிச்சிடும்னு. உணவு கலப்படத் தடுப்பு பிரிவுனு துறை ஒண்ணு தான் கேடு. எனக்கு ஒரு டவுட். Semiotics, Structalism, Saussure பத்தி யூட்யூப்ல‌ இருக்கற‌ எல்லா வீடியோலயும் Signifier - Signified விளக்க Tree தான் example-ஆ இருக்கு, ஏன்? ஊருல எல்லாரும் Incest Sex-னு சொன்னா அது பாவம், கலாச்சார சீர்கேடு, அது இது. ஆனா tamilkamakathaigal.comல இருக்க Categories:   அண்ணன் தங்கை கதைகள் அத்தை கதைகள் சித்தி கதைகள் அண்ணி கதைகள் குடும்பக் கதைகள்   இதையெல்லாம் அப்ப யார் தான் வாசிக்குறாங்க? அப்ப‌, கலாச்சார காப்பாளர்கள் பூரா காவாளிக தானா?   சரி, ஆம்பள ஆம்பளைய ஓத்தா உனக்கென்ன? அவனுக்குப் புடிச்சிருக்கு பண்றான். நாட்டுல ஜனத்தொகை கம்மியாகவா போவுது? லெஸ்பியன விட்டுட்ட, அப்ப நீ ஆணாதிக்கவாதியானு கேக்குறீங்க. இவ்வளவு நேரம் நான் ஆணா பெண்ணானு சொல்லவே இல்லயே! கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, கஞ்சா அடிக்கிறவங்க ஆம்பிளயா தான் இருக்கும்னு முடிவு பண்ற நீங்கதான் உண்மையில் ஆணாதிக்கவாதி.   ஆமா, இங்க புத்தகம் வாசிக்கறதே ஆயிரத்தி சொச்சம். நீங்க ஏன் சாருடா. ஜெமோடானு கத்துறீங்க. உனக்கு புடிச்சாப் படி இல்லயா விடு. படம் பார்த்து ரசிகர் மன்றம் வச்சி தலடா வாலுடானு கத்துறவங்க மாதிரி நீயும் கத்துனா அப்ப என்ன மயிருக்கு படிக்கிறனு தெரியாமத் தான் படிக்கிறியா?   நீ நிதம்பத்தை சுவைத்திருக்கிறாயா? அல்லது உனக்குப் பிடித்த நடிகை, காதலி, தோழி, தேவதையின் நிதம்பத்தைச் சுவைப்பதாக கற்பனை செய்து சுயமைதுனம் செய்திருக்கிறாயா? ஒருத்தி சொல்றா: என் புருஷன் வாரத்துல மூனு நாள் ஓத்தாலும் அதிசயமா ஏதாச்சு ஒருநாள் தான் எனக்கு ஆர்கஸம் ஆகும். அந்த மனுஷனுக்கு அப்படினா என்னனு தெரியுமா தெரியல. ஒருநாள் அவனது எடுத்து வாயில வைச்சா உடனே உருவிட்டு, இதெல்லாம் எனக்குப் புடிக்காதுனு சொல்றான். இன்னொரு நாள் அவன்கிட்ட என் நிதம்பத்தை - என்ன மயிரு, நிதம்பம்! - கூதிய நக்குறீங்களானு மரியாதையா கேட்டா, அவுசாரி முண்ட அரிப்பெடுத்துப் போய் அலையுறனு அடிஅடினு அடிச்சுட்டு படுத்துட்டான். இப்ப நான் என்ன செய்ய? புருஷன் ஒழுங்கா செய்ய மாட்டேங்கறான்னு கேஸ் போட்டு டிவோர்ஸ் வாங்கவா முடியும்? அப்படியே வாங்குனாலும் ரெண்டாந்தாரமா எவன் கட்டுவான், அப்படி கட்றவன் நக்குவான்னு என்ன உறுதி? கடைசி வரைக்கும் வெறும் ஓட்டையா வாழ்ந்து சாக வேண்டிதான். இதுல நக்குனியானு கேள்வி வேற!   என்ன, ஆர்கஸம் பத்தி கூடவா தெரியாது? அதெல்லாம் அங்கிள்ஸ் மேல உள்ள complaints. இப்போலாம் பசங்க 6thலயே பிட்டு படம் பார்க்க ஆரம்பிச்சுடுறானுங்க. Categories, positions-னு பாடமே எடுப்பானுங்க. ஆனா எல்லோருக்கும் இருக்கறது ஒரே பயந்தான். மாஸ்டர்பேட் பண்ணா ஆண்மை போயிடுமானு தான். ஃபாரின்ல படிச்ச செக்ஸாலஜிஸ்ட் ஒரு பேட்டில அதெல்லாம் எந்த தப்பும் இல்லனு சொல்றாரு. டிவில பார்த்தா தினமும் ஒருகிழவன் பேரப்புள்ளைங்களா, கைவேலை பார்த்துப்பார்த்து நாசமா போவாதிங்கடானு லேகியம் விக்குறான். எது உண்மையோ தெரியல, ஆனா இந்த நாட்டுல ஒரு பயலையும் இவங்க சும்மா இருக்க விட மாட்டானுவ. சீரியல் நடிகை எதுக்கு தொப்புள் ற‌ மாதிரி சேலை கட்டுறா? ரியாலிட்டி ஷோன்னு தான் பேரு. டிஷர்ட் போட்டு தண்ணி ஊத்துறது, பந்தை வாயால தூக்கிட்டு போய் கூடைல போடுறது, பலூன் நெஞ்சுல அமுக்கி உடைக்கிறதுனு கேம்ஸ். எப்பவாவது ஐட்டம் சாங் இருக்கற படம் வரும், இப்ப ஐட்டம் சாங் இல்லாத படமே இல்ல. பள்ளிக்கூடத்துல அரைகுறையா படம் பார்த்து எப்படியோ படிச்சு மார்க் எடுத்து ஊர விட்டு சென்னை கோயம்பத்தூர்னு காலேஜ் வந்தா, டிவில பார்த்தது போதாதுனு நேர்ல வேற. துப்பட்டாவ கழுத்துல போட்டா என்ன போடாட்டி என்ன? டீச்சர் ஜாக்கெட்ல ஒரு நாளைக்கு ஒரு டிசைன். பார்க், பீச், தியேட்டர்னு எங்க பார்த்தாலும் ஜோடி ஜோடியா இருக்காங்க. பொது இடத்துல அசிங்கம் பண்றாங்கனு அங்கிள்ஸ் எல்லாம் பேச்சு வேற. அங்க மட்டும் என்ன பண்ண விடறிங்க? ஒரு முத்தம் நிம்மதியா குடுக்க எடம் கிடையாது இங்க தமிழ்நாட்ல‌. பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுதியில்லாத நாடாயிடுச்சுனு ஆம்பிளைய குறை சொல்றது. ஆகாம என்ன பண்ணும்?   செக்ஸ் பத்தி பேசுனா தப்பு, ரோட்டுல முத்தம் கொடுத்தா தப்புனு சொல்லிட்டு, டிவில, போன்ல, பேப்பர்ல எங்க பார்த்தாலும் ஆபாசம். ஆனா செக்ஸ் மட்டும் 27 வயசுக்கு மேல எப்போ கல்யாணம் ஆகுதோ அப்பதான் கிடைக்கும். செக்ஸ் ஒரு உடற்பசி. ஊருக்கு பயந்து பசிய தாங்கிட்டு, கல்யாணம் பண்ணிக்க குடுத்து வச்சவன் எப்படியோ தன் கையே தனக்குதவினு சமாளிச்சிடறான். சில பேர் பசி தாங்க முடியாம மிருகம் ஆகி கற்பழிக்கிறான் பாரு. அவன மிருகம் ஆக்குனது இந்த சமூகமும் அவன் வாழ்ந்த சூழலும். பசி கொடுமையானது. வயித்துப் பசிக்காக சம்பாதிச்சு சாப்பிடலாம். பிச்சை எடுத்தாச்சு சாப்பிடலாம். ஆனா உடம்பு பசிக்கு என்ன பண்றது? எங்க திரும்பினாலும் ஏதோ ஒரு பெண்ணோட தொப்புள், ஏதோ ஒரு விளம்பரப் பலகையில காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் நாட்டுல உடம்பு பசிக்கு தீர்வுதான் என்ன?   உங்க தியரில ஏன் ஒரு பெண் கூட மிருகம் ஆகல? ஆண் கற்பழிக்கப்பட்டதே இல்லையா? நல்ல கேள்வி தான். ஆனா மயிராண்டி, நீங்கதான் பெண் அடிமையாவே வளர்க்கிறீங்களேடா. பெண் நிமிரக் கூடாது, சிரிக்க கூடாது, கால் மேல கால் போடக் கூடாது. இப்ப தான் அதுக்கெல்லாம் போராடிட்டு இருக்காங்க. ஆம்பிளைக்கு கற்புனு ஒன்னு இருக்கா? கற்பு கான்சப்ட் நீ பொம்பளைய அடிமையாக்க உருவாக்குனது தான! அப்புறம் ஆம்பளைக்கு இல்லாத கற்பை எங்குட்டு அழிக்கிறது? ஆமா யார் சொன்னா பொண்ணுக்கு செக்ஸ்ல பிரச்சினையே இல்லைனு? இதே ஊருல தான் அர்ச்சகர்கள் மேற்சட்டை அணியாமல் இருப்பது எங்கள் காம உணர்வை தூண்டுது, எனவே சட்டை போடனும்னு கடிதம் வந்திருக்கு. சிக்ஸ்பேக்ஸ் வச்சு ஹீரோ ஆடுறது யாருக்குனு நினைக்கிற நீ? உண்மையில இந்த Sex Starvation-ஐ காசாக்குறது தான் இப்ப பிஸுனஸ். சினிமாக்காரங்க தான் செமயா சம்பாதிக்கிறாங்க. டிவிகாரனுக்கும் புரிஞ்சுப் போச்சு இப்போ.   தமிழ் சீரியல் எல்லாத்துலயும் ஒரே கதை தான். கள்ளக்காதல். அதுவும் வில்லி தான், கல்யாணமான ஹீரோவ அடைய நான் கொலை செய்யக்கூடத் தயங்க மாட்டேன்னு வசனம் பேசுறா. மதிப்பிற்குரிய மகளிர் சங்கம், நீங்க ஏன் அடுத்தவன் புருசனை அடைய நினைக்குற பெண்கள் பற்றி மட்டுமே எடுக்கப்படும் சீரியலுக்கு எதிரா போராட்டமே பண்ண மாட்றீங்க? உங்க பெண்டாட்டியும் பொண்ணும் Stayfree, Whisper, இல்ல வேற எந்த ப்ராண்ட் சானிடரி நேப்கின் பயன்படுத்துறாங்கனு தெரியுமா?   ஒருத்தனுக்கும் சாவு பயமே கிடையாது, இல்லனா இப்படி ஒழுக்கமே இல்லாம வாழ்வானா? அய்யோ, சாவுனு சொன்னதும் தான், காலைல நடந்த ஆக்ஸிடெண்ட் ஞாபகம் வருது. மனுசனுக்கு எப்படியெல்லாம் சாவு வருது! பொண்டாட்டியோட கள்ளக்காதலன் கையால சாவு. சாக்கடை அள்ளும் போது விஷ வாயு தாக்கி சாவு. ப்ளாட்ஃபார்ம்ல‌ படுத்திருந்து கார் ஏறி சாவு. ஜல்லிக்கட்டு வேடிக்கை பார்க்கப் போனவனுக்கு மாடு முட்டி சாவு. தூங்கிட்டு இருக்கும்போது செத்தவன் ஏன் செத்தான்னு டாக்டருக்கே தெரியல. எய்ட்ஸ் உள்ள விபச்சாரி மூலம் எய்ட்ஸ் பரவி சாவு. பாத்ரூம்ல வழுக்கி விழுந்து சாவு. நிலத்துக்குக் கொலை. நகைக்கு கொலை. கீழ்சாதிக்காரன் மேல்சாதிப் பொண்ணக் காதலிச்சா கொலை. சாவப் பார்த்து பார்த்து பயமே இல்லாம போய், சாவு வரும் போது வரட்டும் அது வரைக்கும் என்ன வேணாலும் பண்ணலாம், எப்படி வேணாலும் வாழலாம். என் வாழ்க்கை, என் பொண்டாட்டி, என் புள்ளை. நீங்க யாரு? பக்கத்து வீடா? ஓக்கே. தண்ணிக் குடிக்காமல் இரவு முழுக்க கஞ்சா அடித்த வாலிபர் dehydrate ஆகி உயிரிழப்பு.   எனக்கு சாவைப் பார்த்து பயமெல்லாம் கிடையாது. எதுக்கும், நான் போய் தண்ணிக் குடிச்சிட்டு வரேன்.   (ஜாயிண்ட் - கஞ்சா - டோப்பு – சிவபானம் | OCB - ரோலிங் பேப்பர்)       கருப்புக் கண்ணாடி ந.ஆஷிகா   உனக்கென்ன வேண்டும்? – கேட்பவனிடம் என்ன கேட்க? வரமா? சாபமா?   சாபம் தர விரும்பியதில்லை வரம் தர‌ அவன் கடவுளில்லை கடவுளே இல்லை என்கிறவன்.   உரிமையைக் கேள் என்று கற்றுக் கொடுத்தவனிடம் என்ன கேட்பது?   பேனா? நானின்றி அதற்கேது மதிப்பு? நியாயம் தான்!   ஆயுளைக் கொடு என்றால் நிறைவடைந்துவிட்டதே என்று கையைப் பிசைகிறான்.   உழைப்பைக் கேட்டால் ஓய்வில் இருக்கிறேன் இப்போது என்கிறான்.   இதயம்? நானே இரவலாய்ப் பெற்றது இப்போது அதுவும் என்னிடமில்லை.   சிந்தனையைத் தருகிறாயா? தந்தேன் என்றான்.   நிச்சயம் தருவேன் உனக்கு என்ன வேண்டும்? - மீண்டும் கேட்கிறான்.   தலைவனாய் நெருப்பாய்  சூரியனாய்  ஒளியாய்    நீயே வேண்டும்.     யார் நீ? கருப்புக் கண்ணாடியில் கரகரத்தது குரல்.   தடுமாறிச் சொன்னேன் - உன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பு.   வரலாறு வழிகாட்டும், அதில் நானுமிருப்பேன் - கண்களை இறுக மூடினான்.   ***   கலைஞர் சிறப்பிதழ்       அரசியல்வாதிகள் இடையில் மறைந்துவிடலாம். ஆனால் எழுத்தாளராக, மனிதத் தன்மை உள்ளவராக இருக்கும் கருணாநிதி என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார்.   - கே. கே. ஷா (அன்றைய தமிழக ஆளுந‌ர், ஜூலை 31, 1971)   திரைப்பாடல்கள்: சினிமாப் பாட்டில் மரபிலக்கியக் குரல் ரமேஷ் வைத்யா   பூ வரிகள் புயல் வரிகள் கலைஞர் தந்த புகழ் வரிகள் திரைப்பாடல் வரிகள் காதில் தூவிவிட்ட சங்கீத விதைகள் நெஞ்சைத் தொடுகின்ற ஒவ்வொன்றும் இனமானத்தை ஈவு வைத்துக் கொண்டிருக்கும் சொற்களுக்கு இசை வந்து குடை பிடிக்கும் உச்சரித்த நாவெல்லாம் களிநயத்தில் தோயும் கேட்போர்  நரம்பெல்லாம் பகுத்தறிவு வெள்ளம் பாயும்!  - சிலம்பொலி செல்லப்பன்   பூம்புகார் படத்தின் பாட்டுகள் வெளியான போது, அவற்றில் ஒன்று வேர்ல்டு மொத்தமும் அரள விட்ட பிஸ்த்து. செம ஹிட்டு. “வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்…” - படத்தில் கவுந்தி அடிகள் பாடுவதாக அமைப்பு. கவுந்தியின் வரிகள் தெரியாத ரசிகருக்கு, கவுந்தியாக நடித்த கேபி சுந்தராம்பாள் என்றால் ஔவைதான். இந்தப் பாடலின் தொனி, ஒரு காலகட்ட ஔவையின் தொனியாகவே இருக்கும். “கேடுகெட்ட மானிடரே, கேளுங்கள்” என்பது மாதிரியான சொற்கள் அதில் பயில்வதைப் பாருங்கள்.   மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம் வாலிபம் என்பது கலைகின்ற வேடம் - அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன் வருமுன் காப்பவன்தான் அறிவாளி - அது வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி துடுப்புகள் இல்லாப் படகு அலைகள் அழைக்கின்ற திசையெலாம் போகும் தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும் அந்தப் படகின் நிலை போல ஆகும்…   உவமைகளும் உருவகங்களும் ஔவையால் எழுதப்பட்டது போலவே இருக்கிறது, அல்லவா? “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானுமதுவாகப் பாவித்து” என்றெழுதிய ஔவையின் எழுத்து.   காக்கையைக் கலைஞர் பாடியது திட்டத்தோடுதான் என்று ருசிப்பிக்க இன்னொரு பாட்டையும் சொல்லலாம். அதில் எருமையைப் பாடுகிறார். “கோமாதா எங்கள் குலமாதா” காலத்தில் “எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி”. அப்பாடலின் எடுப்பே நெருப்பாக இருக்கும்.   ஊருக்கு உழைப்பவன்டி ஒரு குற்றம் அறியானடி உதைபட்டுச் சாவானடி எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி நல்லதுக்குக் காலமில்லை நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு சொல்லப்போனால் வெக்கக்கேடு ஏச்சிப் பொழைக்கிறவன் ஏழடுக்கு மாளிகையில் எகத்தாளம் போடுறானே அவன் பேச்சை மறக்கிறவன் பிச்சை எடுக்கிறானே நாட்டுக்குத் தலைவனென்று நம்பும்படி பேசிவிட்டு வேண செல்வம் வாரியே போவானடீ நாடு செழிக்க எண்ணி நாளெல்லாம் வேலை செய்யும் ஏழைக்குக் காலமில்லே எவனெவனோ வாழுகிறான்…   []     ஏதாவது சொல்லலங்காரம் வைத்தால், சொல்ல வந்தது மறைவுக்குப் போய்விடுமோ என்று யோசித்து மிக மிக நேரடியாக எழுதப்பட்டிருக்கிறது. அலங்காரம் என்பதைப் புரிந்துகொள்ள அந்த நேரத்தில் வந்த பிற பாடல்களைப் பார்க்கலாம். “குடில குந்தலம் குவலய தள நீலம் கோடி மதன லாவண்யம்…” ஓர் உதாரணம்.   இதுவும் பெரும் ஹிட்டுதான். ஆனால், பொருள் புரிந்து ரசிக்க அறிஞர்களின் உதவி வேண்டியிருக்கும். ஒரு கருத்தைப் பிரசாரம் செய்ய அழகியல் தேவை இல்லை என்பதல்ல; அழகியல் இருக்கக்கூடாது என்கிற தீர்மானம் இப்போது யோசிக்கையில் ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கான தெள்ளத் தெளிவான எடுத்துக்காட்டாக, கலர்ப் படக் கால ‘ஒரே ரத்தம்’ படப் பாட்டு வரிகளைச் சொன்னால் போதுமானது.   ஏசு புத்தர் நபிகள் காந்தி காட்டும் வழியிலே பேசும் புயல் பெரியார், அண்ணா, அம்பேத்கார் மொழியிலே குன்றம் போல முழங்கி நடந்த குலவிளக்கு நீயடா – உன் கொடி நிழலில் என்றும் நாங்கள் கூடுவோமடா   சுத்திவளைக்கிற சோலியே இல்லை என்பதைக் கவனிக்கலாம். இதில் வருகிற ‘குலவிளக்கு’ பாத்திரத்தில் தோன்றியவர் எதிர்கால முதல்வர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கதா, இல்லையா எனத்தெரியவில்லை.   ரெண்டு மேற்கோள்களைப் பார்த்து விட்டு, ‘தலைவர் புரட்சிப் பாட்டு, தத்துவப் பாட்டு எழுதுவதில் தான் கெட்டி போலிருக்கிறது’ என்ற எண்ணத்துக்கு வந்துவிடக்கூடாது. எழுதிய பாடல்களில் பாதி அளவுக்காவது காதல், காம, பாசப் பாடல்களும் வரும். ஆரம்ப காலத்தில் இருந்தே ஒன்றைக் குறிப்பிடலாம்.   பராசக்தியில் மற்றொரு வெற்றிப் பாடல்,   இல்வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் என் இதயராணி ரூபம் இந்த தீபத்திலே சுடராய் திகழ்வதென் தீபனின் ரூபம் இள மாமயில் ரூபம் இக வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் நம் காதல் தீபம் கனியே கன்னல் தமிழே அமுதே பனி தூங்கும் மலரே நிலவே கனிவான மொழியால் எனையே கவர்ந்தீரே காந்தக் கிளியே   துள்ளலான மெட்டில் அமைந்த பாட்டு. ஹார்மோனியத்தோடு இரண்டில்லாமல் கலந்து ஒலிக்கும் பழங்குரல்கள். அதில், கறுப்பு வெளுப்புக் கட்டைகளுக்கு இடறல் இல்லாமல் உட்கார்ந்திருக்கும் வரிகள். படித்துப் பார்க்கும்போது, வாய்ப்பாடு போல கூட்டலும் பெருக்கலும் சமமாக இருக்கும் மரபார்ந்த சொற்கள். இதற்கு இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற நிர்ணயிக்கப்பட்ட சூத்திரம் பின்பற்றப்பட்டிருக்கும்.   இதே படத்தில் ஒரு ஹிந்தி மெட்டைப் பயன்படுத்த விரும்பினாராம் தயாரிப்பாளர். அப்போது நம்பர் ஒன், டூ-வாக இருந்த இரு பாடலாசிரியர்களால் திருப்திகரமாக எழுத முடியாத நிலையில் ‘சும்மா’ எழுதிப் பார்த்தாராம் நம்மாள். ஒன் டேக் ஓகே. சோகப்பாட்டு. “ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ” கான்செப்ட்.   பூமாலை நீயே புழுதி மண்மேலே வீணே வந்தேன் தவழ்ந்தாய்   என்கிற அந்தப் பாட்டைக் கேட்டால், நம் யூகத்தைத் தாண்டிய மெட்டமைப்பைக் கவனிக்கலாம். அதற்கு எழுதுவதற்குத்தான் முதல் நம்பர்கள் சிரமப்பட்டிருப்பார்கள். அந்தச் சிரமத்தைச் சமாளித்தது கலைஞரின் திறமை. குறில் நெடிலாகவும் நெடில் குறிலாகவுமாகச் சமாளித்த பிற்பாடும், உயிர் வந்ததால் உக்குறள் மெய் விட்டோடியிருப்பதை ‘வந்தேன்’ என்கிற சொல்லாட்சியில் காணலாம். பொதுவாகச் சினிமாக்காரர்கள் இப்படிப்பட்ட மயக்கங்களை அனுமதிக்க மாட்டார்கள். அது பெரும் வசனக் கலைஞருக்கான வீட்டோ!   இப்படியான எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தாமல், மெட்டமைதியில் வியக்கவைத்த வரிகள், “காகித ஓடம் கடலலை மீது” பாட்டில் உட்கார்ந்திருக்கும். அநாதரவான மூன்று குழந்தைகள் போக்கிடம் இல்லாத நிலையில் தவிக்கும் சூழல். அறச் சொற்கள் அங்கே நிற்க வேண்டும். காட்சியோ சோகத்தைப் பிழிந்து பார்வையாளர்களை உலர்த்திவிடும் வகையினதாக அமையும். அதற்கேற்ப எழுதவேண்டும். அத்தோடு தன் கொள்கையையும் (சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம்) அதற்குள் வைத்துவிட வேண்டும்.   இவ்வளவு சவால்களையும் எதிர்கொண்டிருக்கும் அந்தப் பாடல். ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்  அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம் கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான் காலமும் பார்த்து நேரமும் பார்த்து வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான் தாயின் மடியும் நிலைத்திடவில்லை தந்தையின் நிழலும் காத்திடவில்லை ஆறிலும் சாவு நூறிலும் சாவு அம்மா எங்களை அழைத்திடு தாயே அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை ஆறுதல் வழங்க யாருமே இல்லை ஏழைகள் வாழ இடமே இல்லை ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை   இந்த முத்தாய்ப்பை அவர் வைத்திருப்பது, புராண சினிமாக் காலத்தில்!   இப்படி ஒன்றுக்குள் ஒன்றைப் பொதிந்து வைப்பதைத் தன் பாணியாகவே கடைப்பிடித்தார். ஏகப்பட்ட ரெஃபரென்ஸுகள் வரிகளுக்குள் புதைந்திருக்கும். படம் அறுவை என்றோ நடிகர்கள் மொக்கை என்றோ பரிகாசம் செய்திருப்போம். ‘பெண் சிங்கம்’ படம் என்றால் பாட்டு வரிகள் நமக்குள் புகுந்தனவா?   இசையிலும் நவீனத்துவம் புகுந்துவிட்ட நிலையில் மெட்டுக்கு எழுதினார்:   வீணையில் எழுவது வேணுகானமா திருவாடுதுறை தோடிராகமா திருவெண் காட்டு மகுடி நாதமா இசைகளாலே இணையும் ஈருயிர்கள் இணைந்த பின்பு இரண்டும் ஓருயிர்தானே காலை அரும்பி மாலையில் மலரும் காதல் நோயால் நானும் உருகினேன் கோகிலவாணி நீயே கொடுமுடி கோகிலம் தானே கொள்ளை கொண்டாய் நெஞ்சத்தினை கொடுத்துவிடு எடுத்தபடியே தேனும் பாலும் தொலைந்த பின்னும் தனியே சுவையைப் பிரிக்கலாமா இனிக்கும் தேனாய் நீயும் துடிக்கும் ஆண்பாலாய் நானும் திருமணம் ஆன பின்னால் தேனும் பாலுமாய் ஆகலாம் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சாய் நாம் கலந்தோமே…   மெட்டோடு மறைந்துவிடக்கூடிய வரிகள். வீணை என்பது கம்பீரம். செவிப்பறைக்கு அதிர்ச்சி தரும் டங்கார ஒலி. வேணுகானம்? அது காது மடலில் உரசிப் போகும் பூவின் இதழ். கம்பீரமும் மென்மையும் கலந்த கனவு நாயகி எப்படி இருப்பாள்? வீணையை மீட்டும்போது அதிலிருந்து புல்லாங்குழல் இசை வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பாள். திருவாடு துறையின் தோடி ராகமா? நாதஸ்வர இசைச் சக்ரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. விடிய விடிய, வீட்டுக்குப் போகாமல் ஜனங்களைக் கச்சேரி கேட்க வைத்த அந்த மேதை, ‘தோடிக்கொரு ராஜரத்தினம்’ என்று பெயர் பெற்றவர். அவசரத் தேவைக்கு அவர் தோடி ராகத்தை அடகுவைத்துப் பணம் பெற்றார் என்றுகூட ஒரு கதை உண்டு. திருவெண்காட்டார் சமகால வித்துவான். மக்கள் திக்பிரமை பிடித்து மயங்கிக்கிடப்பார்களாம் அவர் நாகஸ்வரத்தில் மகுடி வாசிக்கும்போது. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் என்று காமத்தைக் கவிதையாக்கினார் வள்ளுவர். இன்னொரு பக்கம் கேபி சுந்தராம்பாள் ஒரு தொகையறா எடுத்தால் கேட்கச் செவி கோடி வேண்டும் என்று ஏங்கும் காலம் இருந்தது. அந்த அம்பாளுக்கு கொடுமுடி கோகிலம் என்று பெயர். ஊரின் பெயர் கொடுமுடி என்பதா? சங்கீதத்தின் கொடுமுடி என்று உள்ளர்த்தம். இதில் லைட்டாக சங்கத்தை உள்ளே விட்டால், செம்மண்ணில் பெய்த மழை… இவ்வளவும் ஒரு சாதாரண டூயட் பாட்டுக்குள் அமிழ்ந்திருக்கிறது பாருங்கள். இவற்றை எல்லாம் யாரேனும் கவனிப்பார்கள் என்று கருதியிருப்பாரா?   கலைஞர் எழுதிய அனைத்துமே, ‘தனக்காகவே’ என்று தோன்றுகிறது.   ***   மீசை முளைத்த வயதில்: கலைஞரெனும் சங்கக்கவி பார்வதி   நேரடியாகவே சொல்லி விடுகிறேன். கலைஞர் தீட்டிய படைப்பிலக்கியங்களில் நான் வாசித்த வரை எனக்கு மிகப் பிடித்தமானது அவரது ‘மீசை முளைத்த வயதில்’ என்ற நூல் தான். வசன கவிதைகளின் தொகுப்பு நூல் என இதை வரிசைப்படுத்தலாம். 1953ல் கல்லக்குடி போராட்டத்தில் சிறையேகிய போது எழுதிய ‘வைரமணிகள்’ தொகுப்பும் சிறை மீண்ட பின் கே. மாதவனின் ஓவியங்களை ஒட்டி எழுதிய‌ ‘தேனலைகள்’ தொகுப்பும் சேர்ந்ததே இந்நூல். அப்போது இருபதுகளின் பிற்பகுதியில் இருந்திருக்கிறார்.                                                                                                                               வைரமுத்துவின் முயற்சியில் இச்சிறுநூல்களைச் சேர்த்து தமிழ்க்கனி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘மீசை முளைத்த வயதில்’ எனப் பெயரிட்டவரும் அவர் தான். ஆறு மாதத்துக்குப் பின் திருச்சி சிறையிலிருந்து மீசையுடன் வெளிவந்ததாக கலைஞரே முன்னுரையில் குறிப்பிடுகிறார் என்பதால் பொருத்தமான பெயரே.   மிக அழகான புத்தக ஆக்கம். 2002ல் வெளிவந்த இந்நூலை சென்னையில் அப்போது கல்லூரி வாசித்துக் கொண்டிருந்த நான் லேண்ட்மார்க் அல்லது வேறேதோ கடையில் முதலில் பார்த்த போது எடுத்துத் தடவி வியந்தது நினைவிருக்கிறது. அப்போது அதன் முதல் பக்கத்தில் எண்பதுகளின் புகைப்பட ஆல்பங்களில் ஒவ்வொரு பக்கத்திலும் வைக்கப்படும் Glassine தாளை வைத்திருந்தார்கள். அடுத்த பக்கத்திலிருக்கும் அழகான‌ கலைஞரின் இளவயதுப் புகைப்படமும் நூற்தலைப்பும் அதன் வழியே semi-transparent ஆகப் புலப்பட்டு vintage உணர்வை அளிக்கும். (ஏனோ அடுத்த பதிப்பில் அந்தத் தாளை நீக்கி விட்டார்கள்!)   நூலிற்கு வைரமுத்து எழுதியுள்ள முன்னுரையும் முக்கியமானது. முன்னுரையைக் கடந்து விட்டு நூலைப் படித்த‌ பிறகே அதனிடம் திரும்ப வந்தேன். நூலைப் படித்த போது எனக்குத் தோன்றிய ஒரு விஷயத்தை முன்னுரையின் முதல் வரியாகவே எழுதி இருக்கிறார் வைரமுத்து என்பது ஆச்சரியம். இது கிட்டத்தட்ட கலைஞரின் முதல் நூல் போலத்தான். அதனால் ‘விளையும் பயிர்’ என்ற உவமை இயல்பாகவே நமக்கு மனதில் உதித்து விடும். ஆனால் இந்த முதற்படைப்பே எனக்கு அவரது எழுத்துக்களுள் சிறப்பானதாகத் தோன்றுவது தான் பேராச்சரியம். இது நான் யோசித்தது. “விளையும் பயிர் முளையிலே என்பார்கள். முளைத்த போதே கதிர்களாக விளைந்தவை கலைஞரின் இளமைக்கால எழுத்துக்கள்” - இது வைரமுத்து!   “தன்னா சிரியன் தன்னொடு கற்றோன் / தன்மா னாக்கன் தகுமுறை காரனென்று / இன்னோர் பாயிரம் இயம்புதல்கடனே.” என்ற நன்னூல் விதியைக் குறிப்பிட்டு ஆசான் மாணவனுக்கும் பாயிரம் பாடலாம், மாணவன் ஆசிரியனுக்கும் பாயிரம் எழுதலாம் என்பதைக் குறிப்பிட்டு தானும் கலைஞரும் பரஸ்பரம் தத்தம் நூல்களுக்கு முன்னுரைகள் எழுதிக் கொண்டதைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறார் வைரமுத்து.   *   ‘வைரமணி’ தொகுப்பின் கவிதைகள் முழுக்க இயற்கையை வர்ணித்தும், அதை அப்போதைய அரசியல் சூழலோடு இணைத்தும், தன் சிறைத் தனிமையை ஒப்பிட்டும் எழுதிச் செல்கிறார். பிறை, ஆடிக்காற்று, இரவு வானம், கடல், ஆறு, விடியல், மலை, குழந்தை, கிளி என இயற்கை அம்சங்கள் ஒவ்வொன்றையும் அவர் அணுகியிருக்கும் விதம் அலாதியானது. (இவற்றில் ‘புகழ்’ என்ற கவிதை மட்டும் பலவீனமானது.)   தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தமானது ‘தனிமை’ என்ற தலைப்பிலான உணர்ச்சிகரப் படைப்பு. பெரும்பாலான கவிதைகளில் சிறையில் தான் வாடுவதை எழுதி இருக்கிறார் என்றாலும் தனிமையின் பெருஞ்சிக்கல் மனதில் முண்டியடிக்கும் நினைவுகள்தாம் என்பதை இதில் அழுத்தமாகச் சொல்கிறார்.   கடலைப் பற்றி எழுதுகிறார்: ஜகப் பெண்ணாளின் சந்தன மேனியில் சலசலவெனப் பறந்தாடும் சல்லாத்துணி நீ! பச்சைச் சிசுவின் பவள உதட்டிலே வழிந்து நிற்கும் பால்; கரையில் நீ உமிழும் நுரை!   வைகறையிடம் சொல்கிறார்: ஏழையை நீ எழுப்பாத நாள் - அவன் இறந்து போன நாள் தானே! பிணத்தை நீ எழுப்புவதில்லை! மாளிகையின் நடைப்பிணத்தையும் நீ எழுப்புவதில்லை.   அகப்பை பேசும் தத்துவம்: குளிர்நிழலிலிருந்து கோடைக்கு வா! குற்றாலத்திலிருந்து கொடைக்கானலுக்குப் போகாதே! கோடைக்கனலை கொஞ்சம் ரசித்துப் பார்!   மலையைப் பற்றிச் சொல்கிறார்: மனிதனின் மதவாதப்படி – ‘கடவுள் மலையைப் படைத்தார்’! அந்த மலையின் துளியால்தானே கடவுளைப் படைக்கிறான் மனிதன்!    குழந்தையைப் பார்த்துப் பேசுகிறார்: உதைத்த காலுக்கு முத்தமும், உமிழ்ந்த வாய்க்கு சர்க்கரையும் உன்னைத் தவிர வேறு யாரால் பெற முடியும்? ... குழலையும் யாழையும் வெல்லுவாய் என்ற குறளையும் வெல்லும் உனது மழலை மொழி.   புகழைப் பற்றி உரைக்கிறார்: நீ ஒரு கணிகை. கால் கடுக்க உன்னைத் தேடி அலைபவர்களிடம் காசு பெற்று காதல் வழங்குகிறாய்.   []     ஒரு பெண்ணுடனான‌ உரையாடல்: “நேற்று இரவெல்லாம் என்னை ஆரத்தழுவியபடியே கிடந்தீரே…” “அதற்கென்ன இப்போது - நான் அழைத்தால் வா - போ!” “தேவைப்பட்டால் வர வேண்டிய தேவமாதுவா நான்!” “தேவாமிர்தமாயிரேன் - இப்போது தேவையில்லை.” “அந்த அமிர்தத்தையும் தோற்கடிக்கும் என்றீர் என் அதரபானம்!”   உரையாடல் இன்னும் தூரம் போகிறது. “கனியே வருகிறது - சுவைத்திட மறுக்கிறீர். மலரே வருகிறது - முகர்ந்திடேன் என்கிறீர். இன்பமே வருகிறது - எட்டி நில் என்கிறீர்.”   இதில் வரும் பெண் யாரென அறிய நூலைப் படியுங்கள்.   *   இரண்டாம் பகுதியான ‘தேனலைகள்’ தான் நூலின் சிறப்பான பகுதிகளைத் தாங்கியிருக்கிறது. எல்லாமே கவிநடையிலான‌ குறுங்கதைகள் எனலாம். இவற்றில் பெரும்பாலானவை சுவாரஸ்யமாக அமைந்துள்ளன.   பத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இதிலிருக்கின்றன. வணிகத்தின் பொருட்டு தலைவியைப் பிரிந்து ரோம் செல்லும் ஒருவன் அழகிய பெண்ணொருத்தியை அங்கே சந்திக்கும் கதை ‘தேனலைகள்’. சகோதரனின் காதலுக்காகத் தோழியின் மனதைக் கரைக்க முயலும் பெண் வருகிறாள் ‘தோழி’யில். போர் மீண்டு திரும்பும் காதலனைத் தழுவ முடியாமல் மருதாணி அணிந்து நிற்கும் பெண் பற்றி ‘மருதாணி’ பேசுகிறது. நீராடி எழும் காதலியை ஓவியமாய் வரைந்தவன் செய்த பிழையின் விளைவைச் சொல்லும் ‘அருவி’. புலிக்கஞ்சா மறத்தமிழச்சி பூனைக்கஞ்சும் மூடத்தனம் சாடும் கதை ‘முறம்’. முடவன் மனைவியிடம் மயங்கி அவளை அடைய முனையும் இளவரசன் வரும் ‘யாழ்’. தூரத்துச் சிற்பத்தை அசல் ஆணென எண்ணி உடைக்கும் இளவரசி வரும் ‘சிற்பி’. சேவற்சண்டையில் வல்லான் ஒருவனை வெல்ல நினைக்கும் தம்பதிகள் வரும் ‘சேவல் சண்டை’. சிலப்பதிகாரக் கோவலனாய்த் தன் காதலனை வரித்துக் கடிதமெழுதும் பெண் பற்றிய ‘மடல்’. புலி வேட்டைக்குப் போகும் புருஷனைப் பயந்து தடுக்கும் பெண் பற்றின ‘ஆண்டு விழா’. சமண - சைவப் போரில் சமணர் பக்கம் தெருவிலிறங்கிப் போராடும் காதலன் பற்றிய ‘மயிலிறகு’.   இக்கதைகள் ஒவ்வொன்றுமே கலைஞர் அகம், புறமென இருபுறத்துச் சங்க இலக்கியங்களில் எவ்வளவு தூரம் பாண்டித்யம் பெற்றுத் திகழ்ந்தார் என ஐயந்திரிபற நிரூபிக்கிறது. அக்குறிப்புகள் மட்டுமின்றி அவரது கற்பனைப் பரியும் பரபரத்துப் பறக்கிறது. படிக்க படிக்க வாசிப்பின்பம் நம்மை அள்ளிக் கொள்கிறது. இதில் வெளிப்படும் அவரது மொழிச்செழுமை ஆச்சரியப்படுத்துகிறது. பிற்பாடு அரச கதை சார்ந்த படங்களுக்குக் கலைஞர் கதை - வசனம் எழுத இது முக்கியமான முன்னனுபவமாய் இருந்திருக்கும் எனப்படுகிறது.   உதாரணத்திக்கோர் உரையாடல். தலைப்புக் கதையான ‘தேனலைகள்’ என்பதிலிருந்து – “மயில், மிளகு, முத்து தரும் தமிழகம். எனக்கு மையல் தீர்க்கும் அழகனையும் அளித்தது.” “அவன் யார்?” “நீர் தான்.” “கடல்நீர் கரிக்குமம்மா!” “பருகுதற்குத் தேவையில்லை; என் இதயப்படகு மிதப்பதற்குத் தேவை!” “பாய் கட்டிய படகு நீ! காற்றடித்த பக்கமெல்லாம் செல்லாதே… கற்புச் சுக்கானை ஒழுங்காய்ப் பிடி.” “காற்றும் நீர்… படகும் நீர்… பாய் மரமும் நீர்… சுந்தரத் திருப்பந்தரும் சுக்கானும் நீர்… இந்த ஓடம் ஊர்கின்ற கடலும் நீர்…” “கடலும் நீர் தான்.” “என் கண்களிலும் அது தான்.” “கவனித்தேன்… விழிநீரில் என்னை மிதக்கவிடாதே - விடுவித்து விடு.”   ஆண்டு விழா என்ற கதையிலிருந்து இன்னுமோர் உரையாடல் எடுத்துக்காட்டு:   “கன்னல்நிகர் செந்தமிழைக் கரத்தில் ஏந்தி, எண்ணமெல்லாம் இனிப்பேற்றும் உந்தன் முன்னே இதழ் முழுதும் சிரிப்பு விளக்கேற்றி நின்றிடுவேன் அதைவிட புலி கொன்று பெறப்போகும் பெரும்பரிசு சிறப்பா?”   “கண்ணழகு காட்டுகின்ற என்னருமைத் தங்கம்! கட்டழகும், நாம் பெற்ற மொட்டழகும் இன்பம் எனினும் காட்டினிலே ஒளிந்திருந்து நாட்டழகைக் கெடுக்கின்ற புலிகொல்லல் பேரின்பமன்றோ!”   “பல்வரிசை முத்தாரம் எனப் புகழ்வாயே; அதை விடப் படை வரிசை பெரிதாகி விட்டதோ உனக்கு?”   “முத்தாரம் வேண்டாமெனச் சொல்லவில்லை; உன் முத்த ஆரத்தை வெறுக்கின்ற துறவியுமல்ல; உனை அடையாமல் இருந்தால் நான் எடுத்தது பிறவியுமல்ல. எதற்கும் நேரம் வேண்டும், நிலை உணரவேண்டும்.”   கற்பனை வளமும் காட்சிரூபமாய்ச் சிறகடிக்கிறது. ‘மருதாணி’யில் இவ்வரிகள்: “பாய்ந்து வந்து தழுவிடுவாய்; படைமுகத்துச் சேதியொன்றும் சொல்லுதற்கு வழியின்றி வாய்மூடி இதழ் பதிப்பாய் என நினைத்து ஓடி வந்தேன்; ஏன் முல்லை தயக்கம்” என்று கேட்பவனுக்குக் காதலியின் பதில் -    “காலையிலே வருவீர் என்று மருதாணி பூசிக் கொண்டேன். ஓலையிலே விபரம் இல்லை… ஓடி வந்து தழுவிக் கொண்டால் மருதாணி கலைந்து விடும் ஊர்முழுதும் தோழிகள் நாளைக் காலை முதல் நம்மைப் பற்றித்தம்பட்டம் போட்டிடுவார் அதனால்தான் தயங்குகின்றேன். தழுவாமல் இதழ் குவிப்போம் இப்போதே.”   காதலியை ஓவியமாய்த் தீட்டும் காதலனைக் காட்சிப்படுத்துகிறார் ‘அருவி’யில்: “விழியழகை விதவிதக் கதை பேசும் விதமாகச் சித்தரித்தான்! இதழ்ப் பொலிவைத் தீட்டும் போது தூரிகைக்கு முத்தம் தந்தான்! நீராடி அமர்ந்திருக்கும் படமன்றோ; மேலாடை மட்டும் தான் உண்டு;”   ‘மடல்’ என்ற கதையில் காதலன் போருக்குச் சென்றதை எண்ணும் காதலி: “எதிரிகளை அழித்து விட்டுத் தழும்புகளில் உந்தன் இதழ் மூலிகையால் ஒத்தடம் கொடுத்துக் கொள்வேன்!” எனக் கழன்று சென்றீர். “வேலெடுத்து வீசும் போது உந்தன் விழிதான் நினைவில் நிற்கும்! வாளெடுத்துச் சுழற்றும் போது உந்தன் ஒளி வீச்சு! கிளிப் பேச்சு!” - விடை பெற்றுப் போவதற்கு வாரி இறைத்தீர் பொய்மைகளை என்ற உண்மை இன்றன்றோ தெரிகிறது. இரவு நேரம் பாசறையில் எப்படித்தான் பொழுது போமோ என ஏங்கி நின்றீர்; வீங்கிய புயத்தினிலே நான் சாய்ந்து நின்றேன்!   இவற்றில் மொழிப் புலமை மட்டுமின்றி அவரது சமூகக் கருத்துக்களையும் தூவி வைத்திருக்கிறார். ஆடல் தொழில் செய்யும் குலத்தில் பிறந்ததாலேயே ஒருத்தி ஒழுக்கங்கெட்டவளாக இருக்க வேண்டியதில்லை என்பதை வெவ்வேறு இடங்களில் அழுத்துகிறார். மற்ற சாதியினரின் கடும் உழைப்பை உறிஞ்சி வாழும் பார்ப்பனரை ஓரிடத்தில் காட்சிப்படுத்துகிறார். பகுத்தறிவுக்குப் புறம்பான மூட நம்பிக்கைகளைச் சாடுகிறார். மனங்கள் இணைந்தால் போதும், காதலுக்குச் சமூக ஏற்றத்தாழ்வு பொருட்டல்ல என்று நிறுவுகிறார். தன் படைப்பில் குற்றமிருந்தது அறிந்ததும் உயிர்விடும் கலைஞன் போன்ற புதுமைப் பாத்திரங்களும் உண்டு.   திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கேகே சாமி திருமணத்துக்குச் சில தினம் முன் கொலையுண்டதையொட்டி “சோலையிலே தென்றலே இன்பம்…” என்று தொடங்கும் காவியக்கதை ஒன்றைத் தான் இயற்றியதை ‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர் (பாகம் 1, அத்தியாயம் 35). அது ஏன் இத்தொகுப்பில் இடம் பெறவில்லை எனத் தெரியவில்லை. அருமையான அந்தக் காவியத்திலிருந்து சில வரிகள்:   “விடுதலைக்குத் தாவுகின்ற என்னை உன்றன் காதலுக்குக்காவு கொடுக்க எண்ணாதே!”   “இருவருமே போர்க்களத்தில் இணைந்து நிற்போம். அணைந்து விட்டாலும் ஆகட்டும்.”   “களம் புகுந்து வருகின்ற பகையைச்சாடுகின்ற நேரம் உளம் புகுந்த நேரிழையாளுக்கு எது நேர்ந்ததோ என ஒரு கணம் தயங்கும். அதற்குள் என் படை மயங்கும்.”   “மணத்திற்குத்தான் இசைய மறுக்கின்றீர். மங்கையென்னை உண்பதற்குப் போட்டு வைத்த இலை போலப் பூப்படுக்கை உண்டே, அங்கு வாரீர்!”   “பால்சோறு பானையிலே இருக்கட்டும்; பசியுண்டு என்றாலும் பாழாக்க மாட்டேன்!”   “கத்துக்கடல் விளைகின்ற முத்தெடுத்து மாலை தொடுத்துவைக்கிறேன்! நீர் திரும்பும் வரை இங்கே நிற்கின்றேன். இல்லையேல் இக்கடற்கரையே எனக்குக் கல்லறையாம்!”   விநாயகர் பெற்றோரைச் சுற்றி வந்து ஞானக்கனி பெற்றதைப் போல் கலைஞரின் எழுத்து வன்மையை அறிய 144 பக்கங்கள் கொண்ட இச்சிறு நூல் குறுக்கு வழி. இது எழுதப்பட்டு சுமார் அறுபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. நான் வாசித்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. இப்போது மீண்டும் இதைப் படிக்கையிலும் இதன் மொழி இனிக்கிறது. பழங்கவிதை ரசிகர்களுக்கு இதைச் சிபாரிசு செய்கிறேன்.    *** வரலாற்றுப் படங்கள்: திரையை ஆண்டவர் ஆத்மார்த்தி   1. சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கலைஞர் மு. கருணாநிதியின் மரணம் மாபெரிய வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. 2. கலைஞர் ஒரு பன்முக ஆளுமை என்பதைக் கருத்தியல் ரீதியாக அவரை எதிர்க்க நேர்ந்தவர்கள் கூட ஒப்புக் கொள்ளுவார்கள்.  3. ஓர் இதழாளர், திரை வசனகர்த்தா, அரசியல்வாதி, எம்எல்ஏ, மந்திரி, திமுக தலைவர், முதல்வர் ஆகியன ஒரு நேர்க்கோட்டு நகர்தற் சித்திரம் என்றால், நாடகம், பாடல்கள், பிற எழுத்துக்கள் என உபகிளைகளுக்கும் சொந்தக்காரர் கருணாநிதி. 4. தான் ஆரம்பித்த எதையும் எதற்காகவும் நிறுத்தி விடுவதில் உடன்பாடற்ற பிடிவாதக்காரர் கலைஞர். துண்டுப் பிரசுரங்களை வினியோகிப்பது அவருக்குப் பிடித்தமான ஒரு அரசியல் பாணி என்றால், அதை அவர் எப்போது ஆரம்பித்தாரோ கடைசி வரை பின்பற்றினார். தம்பிக்கு எழுதிய கடிதங்கள் ஓர் உதாரணம். 5. எதையும் எதற்காகவும் எனத் தன் அத்துணை செயல்பாடுகளையும் ஒன்றிணைத்துத் தான் நின்று கொண்டிருக்கும் புள்ளியிலிருந்து முன்செல்ல வேண்டிய நகர்தல் நோக்கியே, சென்றடைய வேண்டிய இலக்கு குறித்தே தனக்கு முன்னால் கிடைத்த அத்துணை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டவர்.    இந்த இடத்திலிருந்து இந்தக் கட்டுரையைத் தொடங்குவதுதான் அதற்கான சின்னதொரு நியாயம் எனத் தோன்றுகிறது. கலைஞர் என்கிற மாஉரு மண்ணகம் நீங்கி ஐம்பது தினங்களுக்குள் அவரது திரைப் பயணத்தின் குறிப்பிட்டதொரு நகர்தல் குறித்துக் கட்டுரை ஒன்றை வடித்துத் தரச் சொல்லிக் கேட்டபோது திகைப்பாக இருந்தது. கடல் ஒன்றைப் புரிந்து கொள்ளுவதற்குக் குவளை நீரைத் தந்து இதைப் பருகுக என்றால் அது நியாயம். அதே குவளை நீரைத் தந்து கடலின் ஆழம் அறிவதற்காக இதனுள் புகுந்து அலைந்து திரிந்து திரும்புக என்றால் எப்படித் தகும்? உண்மையில், கலைஞர் என்கிற மகா ஆளுமையின் ஒரு பரிமாணமான திரைத் துறையில் கலைஞர் என்பதிலிருந்து அதன் கிளையுருவான திரைக்கதை -வசனகர்த்தா கலைஞர் எனும் உபநிலையம் முன் நின்று, அதிலும் வரலாற்றுத் தொன்மப் புதினங்கள் குறித்துக் கட்டுரை வடிக்கச் சொன்னபோது அரிதான நிம்மதியும் அயர்தலும் ஒருங்கே ஏற்பட்டது. அவரது திரைத் தமிழில் வரலாற்றுப் புனைவுகள் கொண்ட படங்களை மாத்திரம் தனியே அகழ்ந்து அவற்றில் கலைஞரது தீற்றல் குறித்த அலசல் ஒன்றைப் பகிரலாம் என்று விழைந்ததன் விளைவே இக்கட்டுரை.     அனேகமாகத் தமிழ்சினிமாவின் முதல் நூறு கதை - வசனகர்த்தாக்களுக்குள் கலைஞரின் பெயர் கட்டாயம் இருக்கும் எனத் தெரிகிறது. மௌன சினிமா, சலன சினிமாவாகி, பாடல்களின் சினிமா மந்திர, தந்திர, எந்திர, புராண சினிமாக்களாகி, எத்தைத் தின்றால் பித்துத் தெளியும் என்று அத்தை வந்து சொல்லட்டும் எனக் காத்திருந்த போது, வித்தை தெரிந்த நான் சொல்லுகிறேன் எனக் களம் கண்டவர் கலைஞர்.     இந்த இடத்தில் தமிழ் சினிமாவின் முதல் இருபது தீர்மான (Trend Setting) சினிமாக்களுக்குள் கலைஞரின் பராசக்தி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே எம்ஜிஆர் என்கிற ஒருவர் உதித்த பிற்பாடு, சின்னப்ப - கிட்டப்ப பாகவதர்கள் எல்லாரும் மெல்ல விடைபெறத் தொடங்கிய பிற்பாடு, சிவாஜி என்கிற கணேசன் எனும் பெரும்பசி மிருகம் தோன்றிய காலத்தே தமிழ் சினிமாவின் பிரஸ்தாப சினிமாக்கள் கதைகளைத் தாண்டி இந்த இரண்டு நாயகர்களையும் மனங்களில் விதைத்து, மானசீகங்களில் அறுவடை செய்து தரும் உழவாரப் பணிகளைத் துல்லியமாக நிகழ்த்தித் தந்தவை பெரும்பாலும் கலைஞரின் படங்கள். எம்ஜிஆரும், சிவாஜியும், எம்ஜிஆராகவும் சிவாஜியாகவும் உருவெடுத்த திரைப்படங்களை உற்று நோக்கினால், அவற்றின் பின்னே பெரும்பணி ஆற்றித் தந்த கலைஞரின் பேனா இருப்பது புலனாகும்.     ஒரு பெரிய போரைத் திட்டமிட்டுத் தொடங்குகிறவன் யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் கிடைக்கக் கூடாது என்பதிலெல்லாம் கவனம் செலுத்த மாட்டான். தன்னோடு யார் வருவார்கள், எப்படியெல்லாம் தான் போரிட வேண்டும், தனது படை எப்படி வென்றெடுக்க வேண்டும், இவை மட்டும்தான் கவனம்.     சித்தாந்தத்துக்கும் பிரசாரத்துக்குமான இடைவெளியைத் தன் திரைப்பட வசனங்களைக் கொண்டு நிரப்பலானார் கருணாநிதி. முன் சொன்ன எதையும் எதுவாகவும் என்கிற கூற்றின்படி, தான் எதிர்க்க வேண்டிய கருத்துக்களை முரண்பட்ட கதாபாத்திரங்களைக் கொண்டு பேசச் செய்தார். தனக்கு ஒப்புமையுள்ள, தேவையான கருத்துக்களைத் தன் நாயகர்களை வைத்துப் பேச வைத்தார்.     கரகர குரலும், கறுப்புக் கண்ணாடியும், சுருள் கிராப்பும், குட்டையான உருவமும், தோளின் இருபுறமும் வழிந்து நீளும் துண்டும், பெரும்பாலும் வெண்ணிற ஆடைகளும் கொண்ட கருணாநிதி நேரடியாகத் தான் சார்ந்த திராவிட இயக்கத்தின் கருத்துக்களை எப்போதும் தகிப்புக் குறையாத தணலைப் பராமரிக்கிறாற் போல் தன் பாத்திரங்களைக் கொண்டு பேசச் செய்தார். புராண இதிகாச மந்திர தந்திர, ஏற்கனவே மதத்தின் செல்வாக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அதன் ஆளுமை, இவற்றின் கீழ் வரக்கூடிய அத்தனை கதைகளையும் நிராகரித்தவர் கருணாநிதி. உண்மையில், அவருடைய மொத்த வாழ்விலும் மகா சிரமமான பகுதி இதுதான். சமூகக் கதைகள் மாத்திரம் எழுதுகிறேன் என்று குன்றியிருக்க வேண்டிய ஒரு மனிதர், இருக்கின்ற எதுவும் தொடமாட்டேன், இந்தா உருவாக்குகிறேன் புதிய வரலாறுகளை எனக் கிளம்பினார்.    இசையொடு பாட்டின் காலம் சற்றே முடிவடைந்து, உரையாடல் ஒரு கலையாகச் சகல திசைகளையும் விஸ்தரித்துக் கொண்டு, அப்போதுதான் வளரத் தொடங்கியிருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னால், மொழி, இனம் ஆகியவை குறித்த புரிதல்களை ஏற்படுத்தி, மாற்றியமைத்து, அவற்றை வலுவடையச் செய்யும் அரசியல் முன்னெடுப்புகள் அப்போதுதான் உருப்பெற்றிருந்தன‌. ஏகாதிபத்திய, சர்வாதிகார அமைப்புகள் அனைத்தும் கேள்விக்கு உட்படலாயின. தன் தாய் அமைப்பான திராவிடர் கழகத்தோடு பகையில்லை, முரண் என்கிற முன்வைப்போடு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியிருந்தார் அண்ணா.     இவற்றுக்கெல்லாம் அப்பால், தேர்தல் அரசியலை நோக்கிய விரைதல்களுக்கு அரசியல் சஞ்சாரம் பழகிக் கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் எழுதித் தருவதைப் பேசுகிற முகங்கள் அடைய வாய்ப்புள்ள செல்வாக்குகள் குறித்தெல்லாம் தனித்தறியத் தயாராக இல்லை கருணாநிதி. அண்ணா, தான் சார்ந்த இயக்கம், தனக்கு மேலிருந்த முன்னோடிகள், இவர்களின் பின்னொற்றி, அரசியலில் நகர்ந்து கொண்டே, தனக்கு எழுதக் கிடைத்த சமூகப் படங்களாகட்டும், அல்லது வரலாற்றுப் படங்களாகட்டும், ஆரிய எதிர்ப்பு, பகுத்தறிவு, சாதி மத எதிர்ப்பு, மூட நம்பிக்கைகள் அவற்றைப் பின்பற்றுவோரைக் கைவிட வைப்பது, அவற்றை எற்கனவே கைவிட்டோரைப் பெருமிதம் கொள்ளச் செய்வது, நடப்பு அரசியலை எப்போதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது, இவற்றைத் தெளிவாகச்செய்தார்.     கடுமையான விவாதங்களுக்குப் பின்னால் அவரது எதிரிகள் தோற்றார்கள். அவரது நாயகர்கள், நேசர்கள், அணுக்கர்கள், சகலகலா வல்லமை உடையவர்களாகச் சொல்லாலும், வில்லாலும் வெல்ல முடியாதவர்களாக முன்னிறுத்தப்பட்டார்கள். கருணாநிதியின் கொள்கையே, அவர் விதைக்க விரும்பிய சித்தாந்தமே, அவர்களது கொள்கையாகவும் சித்தாந்தமாகவும் முன்வைக்கப்பட்டது. எல்லோரும், எல்லோருடையதாகவும் அவற்றைக் கையாண்டார்கள். அவரது தைரியமும் வீரியமும் அளப்பரியது.     “கோவில் கூடாது எனக் கூறவில்லை, கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்றுதான் கூறுகிறேன்” என்பது தொடங்கி, பராசக்தி தமிழ்சினிமாவின் ஆரம்பகாலத்தில் எடுக்கப்பட்ட ஆணித்தரமான புரட்சித் திரைப்படம். அத்திரைப்படத்தின் தைரியமாகத் தனித்தறியத் தேவையற்ற ஒரு பெயர் கருணாநிதி.     மனோகரா உண்மையில் ஒரு திரைப்படமல்ல; எழுத்தின் வழி காவியம். இலக்கியச்சாறு என்றும் குன்றாத தமிழ் அமுதம். காலம் கடந்து தன்னை நீட்டித்துக் கொள்ளத் தெரிந்த சமர்த்துச் சிற்பம். அற்புதம்.   அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?   மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள்! அழைத்து வரவில்லை என்னை. இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்.   அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.   மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே! வீர வழி வந்தவனே’ என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?   அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!   மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம். இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள், இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும். என்ன குற்றம் செய்தேன்?   சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.   அரசர்: இது உங்களுக்குச் சம்பந்தம் இல்லாதது.   மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்? குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!   அரசர்: போதும் நிறுத்து. வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்த சேனையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.   மனோகரன்: அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்!   அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?   மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானதுதான்.   அரசர்: மனோகரா நீ சாவுக்குத் துணிந்துவிட்டாய்   மனோகரன் ஆமாம். நீங்கள் வீரராக இருக்கும் போது பிறந்தவனல்லவா நான். சாவு எனக்குச் சாதாரணம்.   அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.   மனோகரன்: அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! சிறைச்சாலைக்குச்செல்ல வேண்டும் தாய்என்று கேள்விப்பட்ட பிறகும் அடங்கிக்கிடப்பவன் ஆமை!   அரசர்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?   மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!   அரசர்: கடைசிக் கேள்வி. என் கட்டளைக்கு வணங்கப் போகிறாயா இல்லையா?   மனோகரன்: மன்னிப்புக் கேட்க வேண்டும் மனோகரன். அதுவும் அரை நொடியில் அரை நொடியென்ன? அதற்குள்ளாகவே. ஆனால் யாரிடம் கேட்கவேண்டும் தெரியுமா? கோமளவல்லி, கோமேதகச்சிலை, கூவும் குயில், குதிக்கும் மான் என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை, கொடிய நாக்கை என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு அதை எதிர்த்தால் உம்மையும் உமக்குப் பக்கத்துணையாக வந்தால் அந்தப் பட்டாளத்தையும் பிணமாக்கி விட்டு சூன்யக்காரிக்கு ஆலவட்டம் சுற்றியவர்களை சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டேன் என்று சுழலும் வாளுடன் சூழும் புகழுடன் என் அன்னையிடம் ஓடி மன்னிப்புக் கேட்கவேண்டும். நிறைவேற்றட்டுமா அந்த உத்தரவை? தயார் தானா?    []     கலைஞர் பேசச் சொல்லிப் பேசிய அனைத்தும் கலைஞர் பேசச் சொல்லிப் பேசியதாகவே கருதப்பட்டது அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அவருடைய வசனங்களைப் பார்த்தவர்கள் மூன்றாகப் பிரிந்தார்கள். ஒன்று, கலைஞரின் அவர் சார்ந்த இயக்கத்தின், அவருடைய இணக்கமான நடிகர்களின் அபிமானிகள்; இரண்டு, கலையாக சினிமாவாக அவரது கைவண்ணத்தை ரசித்துக் கொண்டே அரசியல் ரீதியாக அவரை எதிர்த்தவர்கள்; மூன்று, அப்படிப் பிரித்தறியத் தெரியாத நடுப்பொதுக் கூட்டத்தார்.     அபிமானிகள் பொதுவிலிருப்பவர்களை வசனங்களின் குறியீடுகள், உணர்த்தும் அவற்றின் உள்ளர்த்தங்கள் பற்றி வினவிக் கொண்டே இருந்தார்கள். தமிழ்த்திரையுலகில் திராவிட இயக்கத்தை ஆதரித்த கலைஞர்கள் போலவே, பிற சித்தாந்தங்களை, இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இல்லாமல் இல்லை. என்ற போதும், கருணாநிதி என்கிற ஒரு மனிதரின் எழுத்துக்கள் உற்பத்தியாகிற இடம் அவரது குறுவாள் என்று நம்புகிற அளவுக்கு அவர் பின்னின்று இயக்கினார். அவரது வசனங்கள் கேட்கும் போது உச்சரித்தவர்களின் குரலாகவும், கேட்ட பிற்பாடு கலைஞரின் கையெழுத்தாகவும் அபிமானிகளின் மனங்களில் படர்ந்தன.   ராஜகுமாரியில் சிப்பாய் எம்ஜி.ஆரை நோக்கி கேட்பதும் அவர் பதில் சொல்வதுமாக,   “ஏனய்யா கையில் பலமான காயமோ?”   “மகாராணி அடித்ததாயிற்றே! மனமோகனமாய் இருக்கிறது.”   மன்னருக்கும் ஆலகாலருக்கும் இடையே நிகழும் உரையாடல் ரத்தினச் சுருக்கமாய் சொற்சிக்கனத்தோடு இருப்பதைக் கண்ணுறலாம். வரலாற்றுப் புதினப் படங்கள் என்றாலே நீள, நெடுக, பக்கம் பக்கமாய்ப் பேசுவது என்று இருந்த ஒற்றைத் தன்மையை கலைஞர் தன்னால் ஆன மட்டும் மாற்றி அமைத்தார். அவரது ஆரம்ப முயல்வுகளிலேயே இதனைச் சாத்தியம் செய்தார்.   “வைரக்கத்தியாகவே இருக்கலாம். அதற்காக வயிற்றில் குத்திக் கொள்ள மாட்டேன்.”   இது மல்லிகா. இளவரசி. ஆலகாலனை நிராகரிப்பதற்கு இப்படி ஒரு வசனம். அது வரைக்குமான காதல் மொழிகள் வீணாகின்றன. அதிலொன்றை இப்படித் தொடங்குகிறான் ஆலகாலன்:   “ஆலகாலன் நினைத்தால் கனவும் நிஜமாகும். மல்லிகா, கேள். இன்று நேற்றல்ல அறிவறிந்த பருவம் முதல் உன்னை ஆராதித்து வருகிறேன். சொர்ணமயமான உன் அழகில் சொக்கிச் சாகிறேன். உன்னை பட்டமகிஷி ஆகப் பக்கத்தில் வைத்துப் பார்க்க ஆசைப்படுகிறேன்.”   சுகுமாரை அவன் தாய் இப்படி எச்சரிக்கிறாள்:   அரண்மனையில் உள்ளவங்க சாதாரண மனுஷங்க இல்லைப்பா. பயங்கர ஜந்துக்கள். அரச வர்க்கமே அகங்கார வர்க்கம். அவங்களோட பழகுறது அளவோட முறையோட பழகணுமப்பா.    எரிந்துகொண்டிருக்கும் விளக்கைத் துப்பி அணைப்பாள் அழகி.    அழகி: இளமை ததும்பும் பருவப்பெண் என்னைப் பார்த்துத் தாயென்றீரே இது தர்மமா?   சுகுமார்:  சரியான தர்மம். பிற பெண்களைத் தாயாகவும் தங்கையாகவும் கருதுவது தான் எங்கள் இந்திய நாட்டு தர்மம்.    அழகி: இது வாழ்வை ருசிக்கத் தெரியாத பைத்தியக்கார தர்மம்.   சுகுமார்: பைத்தியக்காரர் கண்களுக்கு உலகமே பைத்தியமாகத் தான் தோன்றும்.   அழகி: பேச்சை மாற்ற வேண்டாம். என் ஆட்டம் எப்படி? அதைச் சொல்லுங்கள்.   சுகுமார்: கட்டுக்கடங்காதது கருத்தைக் கலக்குவது அம்மா. கலைவாணி இங்கு தலை கூட நீட்ட மாட்டாள்.   அழகி: ஓ, சரியான வார்த்தை. நாட்டியம் என்றால் சாமானியமா! நளினமான அசைவு, மின்னல் நடை, கண்ணில் காந்தம் - இவ்வளவும் வேண்டும், சுகுமார். என்னிடம் எல்லாம் இருக்கிறதல்லவா?   சுகுமார்: எல்லாம் இருக்கிறது. முக்கியமான ஒன்று – நாணம். அது மட்டும் இல்லை.   என்று சொன்னதும் தன் ஆசைக்கு இணங்க மறுக்கும் சுகுமாரை அவப்பழி சுமத்தி கொல்லுமாறு ஆணையிடுகிறாள் அந்த வெளிநாட்டு ராணி.   நீதித்துறையில் ஒரு சொல்லாடல் உண்டு. “குற்றவாளியைச் சாகும்வரை தூக்கிலிடுங்கள்” என நீதிபதி உத்தரவிடுவார். இறந்தது உறுதி செய்யப்பட்ட பிற்பாடுதான் பிரேதம் கீழிறக்கப்படும். அதே உறுதியை, நெஞ்சுரத்தைக் கொண்டவராகக் கருணாநிதி இருந்தார். எதிரிகளைக் கையாளும் போது கருணையற்ற நீதிபதியாக இருக்கத் தலைப்பட்டார். பெற்ற தந்தையை “உன் கழுத்தை அறுத்து விடுகிறேன்” என்றும் “உன் ஆசை நாயகியின் கண்களைப் பறித்துக் குழிபறிப்பேன்” என்றும், “உன்னையும் உன்னைச் சார்ந்தவர்கள் அனைவரையும் ஓட ஓட விரட்டுவேன்” என்றும் “தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்” என்றும் குமுறுகிறான் மனோகரா. அதற்குச் சற்று முன்புதான் தந்தையானவர் பரசுராமனை நினைவுபடுத்துகிறார். அதற்குப் பதிலாக மனோகரா “அது வெறும் புராணம்” என்கிறான்.     மனோகரா படத்தில் இன்னொரு இடத்தில் “வசந்தசேனை கொடியவள், கணவனைக் கொன்ற பத்ர காளியைப் போன்றவள்” என்றொரு வசனம் வருகிறது. யாரோடு போர் புரிகிறோமோ அவர்களோடு உரையாடக் கிடைத்த வாய்ப்பும் போருக்கான ஒரு தந்திரம்தான் என்பதை மெய்ப்பிக்கிறாற் போல், இந்துச் சனாதன ஆழ்ப் பிடிமானங்களை ஏன்? எதற்கு? எப்படி? என்று பகுத்தறியும் வினவுதலை முற்றிலுமாகத் தடை செய்து வைத்திருக்கும் ஆரியப் பார்ப்பன யதேச்சாதிகாரத் தந்திரங்களை ஆங்காங்கே விடையற்ற விசாரிப்புகளாக நிகழ்த்திச் செல்லுவதன் மூலமாகத் திரைப்படத்தின் காட்சி அனுபவத்தைத் தாண்டிய பகுத்தறிவிற்கான வாசலாகத் தன் வசனங்களைப் பயன்படுத்தினார் கருணாநிதி.     அவரது நாயகர்கள் எதுவுமற்ற எளியவர்களாக இருந்தார்கள், அல்லது இருந்தவற்றை சூழ்ச்சிகளுக்கு இரையாக்கி இழந்தார்கள். அவர் எழுதிக் காட்டிய நாயகிகள் முட்டாள்களாக இல்லாது, அறிவுள்ளவர்களாக இருந்தது மாபெரும் ஆறுதல். அவர் ஏற்படுத்திய எதிரிப் பாத்திரங்கள் கருணையற்ற புனிதர்கள், கடைசி வரை களமாடி, தோற்கும் கணம் வரை வெல்வதற்கான சூழ்ச்சிகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தார்கள். மந்திரிகுமாரி படத்தில் அவர் எழுதிய ஒரு பெண் தன் கணவனை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று கீழே தள்ளிக் கொன்றாள். அவருடைய ஆடவர்கள் அவதாரங்கள் இல்லை, மனிதநேயம் மிக்கவர்கள்.   மருத நாட்டு இளவரசியில்…   “ஆம்பளை மாத்திரம் வாழ்ந்தா?” “ஆம்பளை மட்டும் வாழ்ந்தா அதும்பேர் ஆசிரமம். பொம்பளை தான் குடும்ப விளக்கு.” “பொம்பளை விளக்கு. ஆம்பிளை விட்டில் பூச்சி.” “பொம்பளை புஷ்பம். ஆம்பளை வண்டு”. “பொம்பளை பாம்பு. ஆம்பளை மகுடி. ஹஹஹா.”   மற்றொன்று –   மிருக ஜாதியில புலி மானைக் கொல்லுது. மனித ஜாதியில மான் புலியைக் கொல்லுது.   விளையாட்டுக்கு வெளியே இருந்து விளையாட்டோடு யார் யாரெல்லாம் சம்மந்தப்படுகிறார்கள் என்று சற்று சிந்திக்கலாம். ஏற்பாட்டாளர்கள், ஊக்குவிப்பாளர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோரை விட்டுவிடலாம். பழைய‌ ஆட்டக்காரர்கள், நடுவர்கள், வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள், விமர்சகர்கள், விளையாட்டை அவதானித்துத் தொடர்ந்து எழுதிவருபவர்கள். உடலால் விலகி மனதால் அதே ஆட்டத்தை இவர்களும் ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான். உடல், மனம் இரண்டாலும் ஆடும் நிஜ ஆட்டக்காரர்களைவிட, மனதால் ஆடும் இரண்டாம் வகைமையினர் நூறு சதம் ஆட்டத்தை ஆட முடிகிறது. யூகங்களும் அனுமானங்களும் தீர்மானங்களும் வியூகங்களாகி உத்திகளாகி பரீட்சித்துப் பார்ப்பதில் விளைய வாய்ப்பிருக்கிற வெற்றி தோல்விகளைப் பொறுத்து ஒரு ஆட்டம் அதன் கூடுதல் ஆட்டமாய் விரிவடைவது நேர்கிறது. ஆக, தன் முகத்தை மறைத்துக் கொண்டு ஒருவர் வேறாரையும்விட உக்கிரமாக ஆட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடிகிறது. அப்படித்தான் அரசியல் எனும் ஆட்டத்தின் கூடுதலாய் சினிமாவை நிகழ்த்தினார் கருணாநிதி.     காஞ்சித் தலைவனில்…   ஆம்பிளைங்க மனசை ஊசி போட்டுத் தைக்கிறதாலத் தான் பொம்பளைங்க பேச்சை தையல்மொழின்னு சொல்லுறாங்க   இன்னொன்று –   “பூங்குழலி...” “என்ன காற்று திடீரென்று இந்தப் பக்கம் அடிக்கிறது?” “அடிக்கிற காற்று தென்றலா புயலா என்றாவது தெரிகிறதா?” “இரண்டுமில்லை. என்னை உயிர் வாழச் செய்கிற இன்னொன்று.” “பூங்குழலி, புயலாகத் தான் இங்கு புகுந்தேன். உன்னைக் கண்டதும் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாத மென்காற்றாய் மெலிந்து விட்டேன்.”   மிருகத்துக்கு அண்ணன் பலியாகி விட்டதாகக் கதை புனைந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளும் சிற்றப்பனிடமிருந்து எப்படி ஜீவகன் தன் உரிமையை மீட்டெடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறான் என்பதான ‘புதுமைப்பித்தன்’ கலைஞரின் இன்னொரு திறம் செப்பும் தமிழ்த் தெப்பம்.   “யார் அந்த நாடகக்காரர்கள்?”   “யாரோ இன்பவல்லியாம் அவளும் அவளது ஆட்களும் என்னா அழகு! என்னா அழகு! அந்தம்மா அழகை வர்ணிக்கிறதுக்கு ஆயிரம் நாக்குப் படைச்ச ஆதிசேஷன் கூட கம்பர் கிட்டே ஒரு நாக்குக் கடன் வாங்கணும். அவ்ளோ அழகுங்க.”   எம்.ஜி.ராமச்சந்திரனும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும், கண்ணதாசனும், சிவாஜி கணேசனும், தமிழ் சினிமாவில் கோலோச்சியபடி அரசியலில் வென்ற இருவர் மற்றும் தோற்ற இருவர் ஆனார்கள். எம்.ஜி.ஆருக்கு இருந்த பிம்பச் செல்வாக்கைச் சற்றும் சிதைக்காமல் அந்த ஒற்றையின் பரிமாண சாத்தியங்கள் அத்தனையையும் பரீட்சார்த்தம் செய்து பார்க்க அவர் எப்போதும் விரும்பினார். கருணாநிதியின் வசனங்கள் அவற்றின் விளைதல்கள், திரைக்கதை - வசனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆரின் மனதில் ஆழப் பதிப்பித்திருக்கக் கூடும். பொதுவிலேயே தனக்காக எழுதப்படுகிற ஒவ்வொரு சொல்லையும் சரிபார்த்த பின்பே அனுமதிக்கிற தணிக்கையை எம்.ஜி.ஆர் தன் அதிகாரங்களில் ஒன்றாகக் கையில் வைத்திருந்தார். கதை-வசனம் என்று மட்டுமில்லை, பாடலின் ஒவ்வொரு வரிகளும் கூடப் பார்த்துப்பார்த்துப் பண்ணப்பட்ட ஒரு நடிகர் எம்.ஜி.ஆர். முக அழகு, குரல், வாள்வீச்சு, சண்டைக் காட்சிகளில் வேகம், என்கிற எம்.ஜி.ஆர் மெனு கார்டில் வசன வாதங்களில் வெற்றி பெறுதல் எப்போதும் இருப்பதாகப் பார்த்துக் கொள்ளப்பட்டது.     மந்திரிகுமாரியில்…   ஆம். பதியைக் கொன்றேன். பெண் இனத்தை மண்ணில் நெளியும் புழுக்கூட்டமாய் எண்ணிய ஒரு பாவியைத் தான் கொன்றேன். என்னையே கொல்ல வந்த ஒரு விஷப்பூச்சியைத் தான் கொன்றேன். ஒரு பெண்ணுக்கு அன்பிருக்கும் அளவுக்கு வீரப் பண்பிருக்கும் என்பதை மறந்த ஒரு மனோன்மத்தனைத் தான் கொன்றேன். ஏன்? என் மேல் பழியா? நானொரு கொலைகாரியா? நான் அவரைக் கொல்லாவிட்டால் அவர் என்னைக் கொன்றிருப்பார். நீரே சொல்லும். அவர் இப்படிக் கொல்லப்படா விட்டால் உலகத்தில் இன்னும் எத்தனை கோடிக் கொடுமைகளைச் செய்திருப்பார்?   வேறொரு காலம் என்பதை வழக்கமாக மந்திர, தந்திர, மூடப் புரட்டுக்களை மெய்மை போலாக்குவதும் அலங்காரத்துக்காக எதையாவது எழுதுவதுமாக ஒருபுற முயல்வுகள் இருந்து கொண்டிருந்தன என்றால் அடுத்த பக்கத்தில் செல்வாக்கான புராண இதிகாசங்களைத் தூக்கிப் பிடிப்பதன் மூலமாக மாவுருக்களான மதம், சாதி உள்ளிட்ட பழைய நிறுவனங்களுக்குக் கொடி பிடிக்கிற வசனகர்த்தாக்களும் இருந்தார்கள்.   சினிமாவின் ஆரம்ப காலத்தில் எதனைப் படம் பிடித்துக் காட்டினாலும் ரசித்த முன்பனிக் கால முடிவில் அடுத்த மாற்றமாகவே கருணாநிதியின் பேனாமுனை சிந்தித்தது. அதீதங்களையோ மூடத்தனங்களையோ கைகொள்ளாமல், பழைய நிறுவனங்களையும் எதிராடி, முற்றிலும் புதிய சிந்தனையில் சொல்லப்படாத காதல், சொல்லில் அழகாகத் தோன்றிவிடுகிற சமரசம், அன்பு, சக உயிர் மீதான பெருங்கருணை, திராவிடச் சிந்தனை, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றைத் தன் எழுத்தில் முன்வைத்தார். சாமான்ய வரையறைகளுக்கு உட்படாத அநீதியை உத்தரவாதம் செய்கிற எல்லாவற்றையும் எதிர்த்து முற்றிலும் முன்பில்லாத வழியில் அவர் வசனங்கள் மிளிர்ந்தன. நடிகர்களுக்கு அவர்களுடைய தொடர்பிம்ப வரலாற்றில் முக்கியமான கல்லடைவுகளாக அப்படங்கள் உதவின என்பதும் மறுக்கவியலாப் பேருண்மை.   எம்.ஜி.ஆருடனான கலைஞரின் படங்கள் ஒன்று கூட சோடை போனதில்லை. பொதுவாக, ஆட்சிக்கு வந்து பலமுறை ஆட்சி அமைத்து, எதிர்ப்பதற்கு ஏதுமற்ற வெறுமையை முன்னிறுத்தியபடி கலைஞரின் இரண்டாவது இன்னிங்ஸ் வரலாற்றுத் திரைப்படங்கள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை.   90களுக்குப் பிறகு தமிழில் வெற்றிபெற்ற வரலாற்றுத் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அவற்றில் முக்கியமானது சிம்புதேவனின் இம்சை அரசன் 23ம் புலிகேசி, இன்னொன்று தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட பாகுபலி. குட்டி வரலாற்று போர்ஷன்களை எடுப்பதாகப் பாசாங்கு காட்டிய பல படங்கள் தோல்வி பெற்றன.  கலைஞரின் கண்ணம்மா, உளியின் ஓசை, பொன்னர் சங்கர், ஆகிய படைப்புகள் முகாந்திரமற்று பயமற்ற கொண்டாட்டமாக மாறிப்போகும் போர் ஒத்திகை போலத் தளர்ந்தன. புலிகேசி தன்னளவில் பேசிய அடுத்த கால அரசியலையோ, பாகுபலியின் பிரும்மாண்டத்தையோ ஒப்பிடுகிறாற் போன்ற எப்படைப்பிலும் வசனகர்த்தா கலைஞர் பங்குபெறவில்லை. ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தை அடைந்த பின் நெடுங்காலம் நடிகராக எம்.ஜி.ஆர் நீடிக்கவில்லை. அதுதான் நிகழ்த்தியாயிற்றே என்கிற அளவில் ரசிகர்களும் பொதுமக்களும் தன்னளவில் அவரும் அமைதியானார்கள்.     எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்த 80களின் சிலபல திரைப்படங்கள் கலைஞரின் எழுத்துத் தேவையைக் கோரிய படியே நேர்ந்தன. ஆனால், சமூகமாற்றத்தின் சித்தாந்தங்களைப் பெருமக்கட்பரப்பை நோக்கிக் கதையும் காட்சி அமைப்பும் வசனங்களும் அவற்றை உச்சரிப்போர் நடிப்பும் முகபாவங்களுமாய், மொத்தத்தில் வரலாற்றின் புனைவை முன்னிறுத்தி, அதன் மூலமாய்த் தனக்குத் தேவையான சித்தாந்த மாற்றங்களை மெல்லப் பதியனிட்டு அறுவடை செய்ய முடிந்த கருணாநிதிக்கு, அரசியலில் அவரது இடைத்தோல்விக் காலங்களில் வரலாற்றுப் படங்களின் உருவாக்கங்கள் கைகொடுக்கவில்லை. அந்த அளவில் காங்கிரஸ் மற்றும் எம்.ஜி.ஆரை எதிர்த்த 1987 வரைக்குமான காலத்தில் இத்தகைய திரைப்படங்கள் நிகழ்த்திய விளைதல்களோடு ஒப்பிடுகையில் 1991 முதல் 2016 வரை தனக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான காலத்தில் திரை எழுத்தாளராக கருணாநிதி எண்ணியதும் மின்னியதும் மிகவும் குறைவே.     எடுக்கையில் காற்றில் கத்தி வீசி, பின்னணிச் சத்தம் சேர்க்கையில் கத்திகள் உரசும் சத்தத்தைச் சேர்த்துக் கொள்ளுவதற்குத் தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கிறது. என்றபோதும் எப்போதாவது மைக்ரோ வினாடி பிசகி, படப்பதிவுக்கும் சத்தத்துக்கும் பொருத்த முரண் (Non-Sync) ஏற்பட்டு விடுவதும் உண்டு. மேதமை சார்ந்த குற்றமல்ல, எளிதில் நேர்ந்துவிடக் கூடிய யதார்த்தம். அந்த அளவில், மனோகரா, மந்திரி குமாரி, உள்ளிட்ட படங்கள் மலையை மிதித்து முதற் பாதையைச் சமைத்த ஆதி நடைவாசிகளின் பண்பாட்டுச் சமைத்தல் போல் செல்லுலாய்டு மலையின் குடவறைச் சிற்பங்கள். மீவுரு செய்ய முடியாத அற்புதங்கள்.    இந்த உலகில் எந்த அதிசயத்துக்கும் மீவருகை இல்லை என்பதே அதிசயத்துக்கான இலக்கணம். அதனைத் தன் இரண்டாம் பகுதி வரலாற்றுத் திரைப்படங்களின் மூலமாகவும் இன்னொரு முறை மெய்ப்பித்துக் காட்டிய, வசனவழி ஒரு காலகட்டத்தின் அனைத்து மனங்களையும் சமைத்துத் தான் நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொண்ட மகாமேதை, தன் பேனாவை சித்துபொருளெனச் சுழற்றி, அது அரியணையை நெருங்கும் போது தானும் அதிலேறி அமர்ந்த மேதை கலைஞர், திரையை ஆண்டவர்.   இந்திய சினிமா இதுவரை சந்தித்தவர்களில் மிக அபாயகரமானதொரு எழுத்துக்காரர்!   *** பொன்னர் – சங்கர்: காட்சியை ஜெயித்த‌ எழுத்து விக்னேஸ்வரி சுரேஷ்   குங்குமம் இதழில் 62 வாரத் தொடராக வந்த சரித்திர நாவல் பொன்னர் - சங்கர். திரு. முரசொலி மாற‌ன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இதை எழுதத் தொடங்கியதாக கலைஞர் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.   கலைஞருக்கு எங்கிருந்து இவ்வளவிற்கும் நேரம் இருந்தது என்று எப்போதையும் போல், பொன்னர் - சங்கர் படிக்கையிலும் நினைத்துக்கொண்டேன். இந்நாவல் கொங்கு நாட்டில் கும்மியடிப்பாடல்களாகவும், வீரக்கதைகளாகவும் இன்றளவும் புகழ் பெற்றிருக்கும் அண்ணன்மார் சாமி கதையை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டிருக்கிறது. புகழ்மிக்க இக்கதைப் பாடல் ‘அண்ணன்மார் கதை’ என்ற பெயரில் மட்டுமில்லாமல், 'பொன்னர் - சங்கர் கதை', ‘குன்னடையான் கதை’ என்ற பேர்களிலும் அறியப்படுகிறது.                                                                                                                                   கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள். இவர்களின் வரலாறு, கொங்கு மண்டல வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது. காட்டை, நாடாக்கி, குளம் வெட்டி, வளம் பெருக்கி, கோயில் எடுத்துப் பல இடங்களில் குடியேறிப் பல்கிப் பரந்து பெருகி வாழும் சமுதாயம் இது என்பதாகப் பாடல்களின் மூலம் அறிகிறோம். இவர்கள் தங்கள் மண்ணின் சாமியாகக் கும்பிடும் அண்ணன்மார் என்கிற பெரிய அண்ணன் பொன்னர், சின்ன அண்ணன் சங்கர் என்ற அண்ணன் தம்பியின் சரித்திரத்தைச் சொல்லும் வீரப்பாடல்கள் பலவுண்டு. பொன்னர் - சங்கர் கதை இவர்களின் தங்கையின் பார்வையிலிருந்தே நகர்ந்ததால், மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்றும் அடையாளப்படுத்துகின்றனர். பொன்னர் - சங்கர் சகோதரர்கள் எவ்வாறு தங்கள் நெல்லி வளநாட்டை அமைத்தார்கள், வேட்டுவ கவுண்டர்கள் தலைவனின் சூழ்ச்சிக்கு எதிராக எவ்வாறு தாக்கு பிடித்தார்கள், தங்கள் நாட்டை காக்க எப்படியெல்லாம் போராடினர்கள் என்பதாக அண்ணன்மார் சாமி கதை விரிகிறது.   கலைஞரின் பொன்னர் - சங்கர் நாவலும் மையக்கதையிலிருந்து விலகாமல், புதிய துணைப்பாத்திரங்களை உருவாக்கி, கதைக்களத்தை இலக்கிய வளத்தோடு விரிவாக்கி, பண்டைத்தமிழர்களின் வீர உணர்வு, மானங்காக்கும் மாண்பு, தொன்மைப் பெருமைகளை பேசுகிறது. இத்தனை இருந்தும் நம்மிடையே சங்ககாலம் தொட்டே இருந்த ஒற்றுமையின்மை குறித்தும் அவரது மனத்தாங்கல் அவ்வப்போது கதாப்பாத்திரங்கள் வழி வெளிப்படுகிறது. உண்மையில், பொன்னர் - சங்கரில் கலைஞர் தொட்டுச் செல்லாத மானுட உணர்ச்சிகளே இல்லை எனலாம். பண்பாடு, பாச உணர்வு, மன உறுதி, வீரம், காதல், விவேகம், தனி மனிதனின் காழ்ப்புணர்வு, அதன் பின்விளைவாக ஏற்படும் பெருஞ்சேதம் என்பதாக நம்மிடையே புழங்கும் மனிதர்கள் அல்லது நாமும் சேர்ந்து தான் நாவலில் உலாவுகிறோம்.   குன்றுடையான் (பேச்சு வழக்கில் குன்னுடையான்), தாமரை (குன்றுடையான் மனைவி), பொன்னர் (பெரியண்ணன் - குன்றுடையான் மகன்), சங்கர் (சின்னண்ணன் - குன்றுடையான் மகன்), அருக்காணித் தங்கம் (அ) தங்காயி (குன்றுடையான் மகள்), செல்லாத்தாக் கவுண்டர் (குன்றுடையான் பங்காளி), தலையூர் காளி (வேட்டுவர் குலத் தலைவன்), மாயவன், சாம்புவன் மற்றும் எண்ணற்ற துணைப் பாத்திரங்களைக் கொண்டு பொன்னர் - சங்கர் என்ற இந்த பிரம்மாண்ட‌ நாவல் புனையப்பட்டிருக்கிறது.   முன்னுரையே அழகாக 'முகவாயில்' என்று தலைப்பிட்டு தொடங்குகிறார். பெரிய மலைக்கொழுந்து என்றவரின் புதல்வி தாமரை தன் மாமன் மகனான நெல்லையன்கோடன் என்பவரைக் காதலிக்கிறார். இடையில், செல்லாத்தாக்கவுண்டர் மகன் மாந்தியப்பனை தாமரையுடன் திருமணம் செய்து வைக்க முயன்று, அதற்கு தாமரை மறுக்கிறார். நெல்லையன்கோடனை திருமணம் செய்த தாமரையை பெரிய மலைக்கொழுந்தும் அவரின் புதல்வரான சின்ன மலைக்கொழுந்தும் (தந்தையும், அண்ணனும்), செல்லாத்தாக்கவுண்டரின் நண்பராக மன்னன் தலையூர் காளியின் கோபத்திற்கு அஞ்சி வீட்டில் சேர்க்க மறுக்கின்றனர். தாமரை வீட்டைவிட்டு வெளியேறும் போது தன் தமையனான சின்ன மலைக்கொழுந்திடம் நீ நாளை என் ஆண் பிள்ளைகளை உன் பெண்பிள்ளைகளுக்கு மணம் முடிப்பதற்காக என் மாளிகை வீட்டின் வாசல் நாடி வருவாய் என்று சவால் விட்டுச் செல்கிறார். ஒன்றுமில்லாதவர்களாக துரத்தி அடிக்கப்பட்ட நெல்லையங்கோடனும், மனைவி தாமரையும் கடுமையான உழைப்பால், தங்களுக்கென்று ஒரு பூமியை (வளநாடு) உருவாக்கி பெரிய செல்வந்தர்களாகிறார்கள். பல குன்றுகளுக்கு அதிபதியானதால் நெல்லையங்கோடன், குன்றுடையான் என்று அழைக்கப்படுகிறான். அவர்களுக்கு அருக்காணித் தங்கம் என்ற புதல்வியும், பொன்னர் - சங்கர் (அண்ணன்மார்) என்ற இரு புதல்வர்களும் பிறக்கிறார்கள். வீரர்களாக வளர்க்கப்படும் அவர்கள் பல இன்னல்களைத்தாண்டி, தாயின் சபதப்படி, மாமன் சின்ன மலைக்கொழுந்தின் மகள்களான முத்தாயி மற்றும் பவளாயியை திருமணம் செய்கின்றனர். அண்ணன்மார் புகழ் பரவபரவ, வேட்டுவகுல மன்னனாகிய தலையூர் காளி அவர்கள் மீது பொறாமை கொண்டு பல இன்னல் தருகிறான். முன்பகை காரணமாக பங்காளிகளான செல்லாத்தாக் கவுண்டரும், மாந்தியப்பனும் தலையூர் காளியின் மனதில் நஞ்சை விதைத்து, வஞ்சகமாக வளநாடு மீது போர் தொடுக்கின்றனர். கணவர்கள் இல்லாத போது சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், முத்தாயியும், பவளாயியும் தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரண்மனைக்கு தீ வைத்து, உயிர் துறக்கிறார்கள். இறுதியில் காளி மன்னன் வீழ்த்தப்பட்டாலும், கலைஞரின் பொன்னர் - சங்கர் நாவல் முடிவில் நமக்கு சின்ன திடுக்கிடல் காத்திருக்கிறது.    []     வீரம் மிக்க இக்கதையில் கலைஞரின் வர்ணனைகள் போர்க்களத்தில் பூத்த பூ போல, தனித்துத் தெரிகிறது. உதாரணமாக, துவக்கத்தில் வரும் தாமரை நாச்சியின் திருமணச் சடங்கை இவ்வாறு விவரிக்கிறார்:   “குறித்த நேரத்தில் மணவிழா நிகழ்ச்சிகள் கலைக்கட்ட துவங்கின. இரு வீட்டைச் சேர்ந்த உறவினர்களும் பந்தலில் கூடியவுடன், முதல் சீர் எனப்படும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. மஞ்சளில் நனைக்கப்பட்ட துணியில் நவதானியங்களையும் முடிந்து, அரச மரக்கிளையால் அமைந்த முகூர்த்தக்காலில் கட்டி, அருமைக்காரர் பால் வார்த்து அதற்குரிய பூசைகளை நிறைவேற்றி வைத்தார். மணமகன் நெல்லியங்கோடனை மணவறையில் அமர்த்தி, பிரமச்சரிய விரதம் கழிக்கப்பட்டது. வெற்றிலைக் கட்டுதல் என்னும் முறைப்படி வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம், கண்ணாடி, சீப்பு, விரலி மஞ்சள், எலுமிச்சம்பழம், பூ, சந்தனம், கூரைச்சேலை, ரவிக்கைத்துணி முதலியவற்றை ஒரு வேட்டியில் மூட்டையாகக் கட்டி, அதற்கு அருமைக்காரர் பூசை செய்து வைக்கிறார். அதனை மேளத்தாளத்தோடு பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து கொண்டு வந்து மணவறையில் வைத்து அதற்கு நீர் சுற்றி அவிழ்த்து மணமகள் தாமரை நாச்சிக்கு கொடுக்கச் செய்து அவளும் முறைப்படி அந்த வெற்றிலை கூரைச்சேலையை அணிந்து பெரியவர்கள் மூவரை வணங்கி எழுந்தாள். நெல்லியங்கோடனை ஒரு முக்காலியின் மீது உட்கார வைத்து செஞ்சோற்றை சுற்றிப் போட்டு, தண்ணீர் வார்த்து திருஷ்டிப் பரிகாரம் செய்யப்பட்டது. கணுவேயில்லாத விரலிமஞ்சளை, மஞ்சள் தடவப் பெற்ற நூலில் கட்டி, அதற்கு தூபம் காட்டி, அருமை பெரியோர் எனப்படும் அருமைக்காரர் மணமக்கள் இருவரின் வலது கரங்களிலும் கட்டிவிட்டார். சுற்றத்தார் சூழ்ந்து வர மணமகன் குதிரையில் அமர்ந்து, பிள்ளையார் கோவில் சென்று தேங்காய் உடைத்து வணங்கி வந்தான். பெண் வீட்டார், 'நாட்டார் சபை' எனப்படும் கொங்குப் பெருமக்கள் கூடியிருக்கும் இடத்துக்கு வந்து, “வாருங்கள் எல்லோரும்” என முறைப்படி அழைத்திடும் சடங்கும் இனிது நிறைவேறியது. மணமக்களுக்கு மாமன் முறையுள்ளோர் அனைவரையும் அழைத்து, புதுவேட்டி வழங்கி, சந்தனம் பூசி, பால் பழம் அருந்துமாறு செய்யப்பட்டது. நிறைநாளி சுற்றப்பட்டு ஐந்து செஞ்சோற்று அடைகளையும் அகற்றி மணமக்களுக்கும் அருமைக்காரப் பெண்மணி திருஷ்டி கழித்து முடித்தாள்.    மணவறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாழை குமுகு மரங்கள் கட்டப்பட்ட மணவறையின் நடுவில் இரண்டு கரகங்கள் வைக்கப்பட்டு, அவற்றில் ஒன்றில் நிறைய நெல்லும், மற்றொன்றில் நிறைய நீரும் நிரப்பப்பட்டன. கரகங்களுக்கு முன்னால் மஞ்சளில் பிள்ளையாரும், ஆயிரப்பெருந்திரியும், பூதக்கலச் சாதமும், வெற்றிலை பாக்கு மற்றும் அச்சுவெல்லக் குவியலும் காட்சி தந்தன.  குதிரை மீது அமர்த்தி அழைத்து வரப்பெற்ற மணமகன் நெல்லியங்கோடன் மணவரைக்கு வந்து சேர்ந்ததும் மங்கல நாண்சூட்டும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. குடிமகன் எனப்படுவோன் ‘கம்பர் மங்கல விழா வாழ்த்து’ என்னும் பாடலை அழுத்தமான குரலில் சொற் சுத்தம் கெடாமல் பாடியபோது அந்தப் பந்தலே உணர்ச்சிமயமாக இருந்தது.”     மேற்கண்ட விவர்ணைகளைப் படிக்கும் போதே, கொங்கு மண்டல திருமணத்துக்கு போய்வந்தது போல் இருக்கிறது. இது ஒரு சோறு பதம் தான். ஒவ்வொரு நிகழ்வுக்கும் கலைஞர் மெனக்கெட்டிருப்பதை பார்த்தால், எத்தனை ஆராய்ச்சி இதன் பின் இருக்க வேண்டும் என்றே மலைப்பாக இருக்கிறது. சரித்திர நாவல் எழுதுவது, எழுத்தைத்தாண்டியும் வேலை பளு மிக்கதாகக் கருதுகிறேன். அன்னப்பட்சியைப் போல், கிடைத்த தகவல்களிலிருந்து நம்பகத்தன்மை கொண்டவற்றை, சுவாரஸ்யத்துக்காக சேர்க்கப்பட்டவையில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும். பின்னர் கதையின் மையக்கரு சிதையாமல் பாத்திரங்களை உருவாக்க வேண்டும். மனிதர்கள் பேசுமொழி, வாழ்விடம், உடை, இயற்கை காட்சிகள் என எல்லாவற்றிலும் கற்பனை மிகைப்படாமல் காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு இருத்தலும் வேண்டும். இவ்வளவிற்கும் ஒரு கலைஞனுக்கு நுண்ணுணர்வு மட்டுமே வழிகாட்டி! இந்நாவலைப் பொறுத்தவரை, கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடை மொழி அமைந்தது குறித்து யாதொரு கேள்வியும் எழாதபடி அரண் நிற்கிறார்கள் பொன்னரும், சங்கரும்!   கதை முழுக்கவே சாதிப் பெயர்கள் வருகின்றன. கொங்கு பூமி வேட்டுவ - வேளாள குல பகைமையே இந்த நாவலின் கதைக்களம் என்பதோடு, கதையின் நாயகர்களை, பிற பாத்திரங்களைப் பாராட்டுகையில், அவர்தம் குலத்தையும் அதன் பெருமைகளையும் உரைக்க வேண்டியது அவசியமாகிறது. சாதிப் பெருமை பேசுவதாக அமைந்த கதைக்களம், ஓர் எழுத்தாளருக்கே அபாயகரமானது என்னும் போது, மிகப் பெரிய அரசியல் கட்சியின் தலைவர் எழுதினால்? அவர் தொடரை எழுதிக் கொண்டிருக்கையிலும் அம்மாதிரி பல பிரச்சனைகள் அவரை விமர்சித்து வந்ததை அறிய முடிகிறது. ஆனால் கலைஞர் ஒரு மதியூகி. இவற்றை எதிர்பார்த்தோ என்னவோ, முன்னுரை வெளியான முதல் வார இதழிலேயே பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி, தான் விரும்புவது ஒரே சாதி, அது ‘தமிழர் சாதி’ என்பதை அறிவித்து விடுகிறார்.     கதையின் போக்கில் ஓர் இடம் வருகிறது, மாயவரைப் பார்த்து ஒரு பெருமாட்டி சொல்கிறார்: “உங்கள் வேட்டுவர் குலத்தில் யாவரும் தும்பைப் பூ மாதிரி வெள்ளை மனதுக்கு சொந்தக்காரர்களாயிற்றே!”. இதற்கு, மாயவரின் பதிலாக வருமிடத்தில் கலைஞர் என்னும் சமூகநீதிக் காவலர் வெளிப்படுகிறார். “அம்மா, நீ சொல்லும் போது தான் நான் வேட்டுவ குலத்தில் பிறந்தவன் என்பதே எனக்கு நினைவுக்கு வருகிறது. ஏதோ அவரவர்கள் வாழ்கிற இடம், செய்கிற தொழில் கடைப்பிடிக்கிற பண்பாடு இவைகளில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் மனிதரில் பல பிரிவுகள் உருவாயின. காலப்போக்கில் அந்தப் பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் உருவாயின என்ற தவறான கருத்து ஏற்பட்டுவிட்டது. அதனால் என்னை வேட்டுவ குலம் என்றும் உங்களை வேளாள குலம் என்றும் அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் எல்லாரும் ஓர் குலம் தான்!”    வேட்டுவ குல மன்னன் தலையூர் காளியை முழுக்க‌ வில்லனாக்கி விடாமல் அவன் வீரத்தையும் கதையோட்டத்தோடு சொல்லிக் கொண்டே வருகிறார். வேளாள குலத்தைச் சேர்ந்த பங்காளிகளே மன்னன் மனதில் பகை வளர்க்கும் விதமாக கதை இருப்பதால், இது சாதிச் சண்டை எனக் கருதவும் முடியாதவாறு செய்துவிட்டார். ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்த தோழன் தோட்டி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, அவர் வழித்தோன்றலான வீரமலை எப்படி கடைசி வரை பொன்னர் - சங்கருக்கு உறுதுணை நின்று வீரமரணம் எய்துகிறார் என்பதை கலைஞர் காரணமில்லாமல் சேர்த்திருப்பார் என்று தோன்றவில்லை.   திராவிடச் சித்தாந்தங்களை பொன்னர் - சங்கர் மூலம் புகுத்தினார் என்றொரு விமர்சனம் இன்றளவும் வைக்கப்படுவதுண்டு. ஆனால், கலைஞர் திராவிடச் சித்தாந்தங்களை விட்டுக் கொடுக்காமல் எழுதினார் என்று சொல்வதே தகும். உதாரணமாக, கதையில் இரு இடங்களில் திருமண நிகழ்வுகள் வருகின்றன. அவை இப்போது இருப்பது போல், வைதீக அந்தணர்களால் நடத்தப்பட்டிருக்கும் என்பதை கலைஞர் நம்பவில்லை. “அருமை பெரியவர்” எனப்படும் அருமைக்காரர் இறை வழிபாடு செய்து மணவிழாவைத் தொடங்குவதாக குறிப்பிடுகிறார். அடுத்ததாக, கும்மியடி பாடல்களில், இதற்கு முன் எழுதப்பட்ட நூல்களில் இருப்பதை போல முடிவில் அருக்காணித்தங்கம் வேண்டிக் கொண்டபடி பெரியகாண்டி அம்மன், போர்க் களத்தில் இறந்துவிட்ட பொன்னர் - சங்கரை ஐந்து நிமிடங்கள் உயிர்பித்துத்தந்த பகுதியும் நாவலில் இடம் பெறவில்லை. ஆனால், கடைசி அத்தியாயத்தை மூலநூலான வேட்டாம்பாடி அ.பழனிச்சாமி குறிப்புகளுக்கு ஒதுக்கி, அவர் எழுதியுள்ளதையும் அப்படியே தருகிறார். தன் சித்தாந்தங்களையும் விட்டுக்கொடுக்காமல், காலங்காலமாக இருக்கும் நம்பிக்கையையும் சிதைக்காமல் இதைக் கையாண்டிருப்பதை யோசித்தால், கலைஞர் மீது மரியாதை கூடுகிறது. நம்மிடையே வாழ்ந்த சாணக்கியர் அவர் என்றால் மிகையாகாது.   கலைஞரின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களோடு பொன்னர் - சங்கர், பிரபலங்கள் பலரும் நடித்த திரைப்படமாகவும் வந்தது. ஆனால் வெற்றி பெறவில்லை. முதன்மை காரணம் மக்கள். கலைஞரின் எழுத்தாலும், கோபுலுவின் கோட்டோவியத்தாலும் மனதில் பதிந்து விட்ட கதாபாத்திரங்களோடு, திரையில்  இருப்பவர்களை ஒப்பிட்டுப் பார்த்து ஏமாற்றமடைந்தார்கள். முக்கியக் கதாபாத்திரங்களே வசனங்களை எழுத்தின் வீரியத்தோடு பேச முடியாமல் திணறின. கடைசியாக, நாயகிகளின் முகச்சாடை, உடைகள் மற்றும் ஆபரணங்கள் அன்னியத்தன்மையோடு இருந்தன. அதனால் தான் தோல்வியைத் தழுவியது.   காட்சி மொழி எழுத்தை விடவும் சக்தி வாய்ந்தது தான். ஆனால், எழுத்தை அங்கீகரித்த மக்கள் காட்சியை நிராகரித்தால், அங்கே எழுத்து ஜெயித்ததாக‌த் தான் கொள்ளவேண்டும். கலைஞர் ஜெயித்திருக்கிறார்!   ***   ஒரே ரத்தம்: சாதியத்தை எரிக்கும் தீ புலியூர் முருகேசன்   மானுட இயக்க விதியின் முதன்மையான காதலின் பொருட்டு படுகொலைகள் நிகழ்த்தப்படுவது மனிதன் நாகரிகம் அடைந்து விட்டான் என்பதைப் பின்னுக்கிழுக்கும் செயலாகும். சாதியின் பேரால் மேல், கீழ் பார்ப்பதும் காதல் மணம் புரிந்தோரைக் கொன்றொழிப்பதும் காட்டுமிராண்டித்தனமன்றி வேறில்லை. இத்தகைய சாதி ஆணவப் படுகொலைகள் தமிழகத்தில் நித்தமும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன என்பது முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ்க்குடிக்குக் கேவலமான ஒன்றுதான்.   சமூக நீதிப் போராளியாம் கலைஞர் எழுதியிருக்கும் நாவலான ‘ஒரே ரத்தம்’ சாதீய வேற்றுமைகளுக்கு எதிராகவும், சாதி கடந்த காதலுக்கு ஆதரவாகவும் பேசுகிறது. “சாதிப் புயலால் தாக்குண்டு சாய்ந்த உடன்பிறப்புகளின் கல்லறைகளுக்கு நான் வைக்கும் மலர் வளையம் இந்த ‘ஒரே ரத்தம்’” என நாவலைச் சமர்ப்பித்திருக்கிறார் கலைஞர். இதுவே நாவலின் சாராம்சத்தைச் சொல்லி விடுகிறது.    மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கிராமமொன்றில் பரமேஸ்வரன் என்ற பண்ணையார் இருக்கிறார். எல்லாப் பண்ணையார்களையும் போலவே அனைத்துவித ஏற்றத்தாழ்வுகளையும் கடைபிடிக்கிறார். ஆச்சார அனுஷ்டானங்களைத் தவற விடாதவராக இருக்கிறார். அவருக்கு மகேஸ்வரன் என்ற மகனும், காமாட்சி என்ற மகளும் உள்ளனர். மகேஸ்வரன் படித்தவனாகவும் முற்போக்குச் சிந்தனையுடையவனாகவும் இருக்கிறான். காமாட்சிக்கு திருமண வயது வந்தும் வரதட்சணை அதிகம் கொடுக்க விரும்பாத பண்ணையார் காலம் கடத்துகிறார். ஆனால், மகன் மகேஸ்வரனுக்கு நிறைய வரதட்சணை கொடுக்கும் இடமாகத் தேடுகிறார். பண்ணையாரின் வயல், தோட்ட வேலைகளைப் பார்த்துக் கொள்ள மாரி என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் இருக்கிறார். அவருக்கு பொன்னன், நந்தகுமார் என இரு மகன்களும், செங்கமலம் எனும் ஒரு மகளும் இருக்கின்றனர். படித்த முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞனான மகேஸ்வரன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செங்கமலத்தை காதலித்துப் பல தடைகளைத் தாண்டி சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்கிறான். காமாட்சியும், மாரியின் மகனும் செங்கமலத்தின் அண்ணனுமான பொன்னனும் ஒரு சமயத்தில் காமவயப்பட்டு விடுகின்றனர். விளைவாகப் பிறக்கும் குழந்தையை ஓரிடத்தில் போட்டு விட்டு வருகிறாள் காமாட்சி. ஆனால், அக்குழந்தை பண்ணையாரின் கைக்குக் கிடைக்க, அது யார் குழந்தை என்று தெரியாமலே அதை வீட்டிற்குக் கொண்டு வந்து வளர்க்கிறார். இறுதியில் பொன்னனுக்கும், காமாட்சிக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஆனால், தான் கட்டிக் காத்து வந்த சாதி தகர்ந்து போனது கண்ட பண்ணையாரால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாரடைப்பு வந்து இறந்து விடுகிறார். ‘ஒரே ரத்தம்’ நாவலின் கதை இதுதான்.    நாவல் முழுக்க பண்ணை ஆதிக்கத்தின் கீழ் நசுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தினரின் நிலைமையையும், சாதி ஆதிக்கத்தினால் அன்றாடம் மிதிபடும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் துயரத்தையும் தன் காத்திரமான வார்த்தைகளால் எழுதிக் காட்டியிருக்கிறார் கலைஞர். விழுப்புரத்தில் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றியும், அவர்தம் சொத்துகள் எரிக்கப்பட்டது பற்றியும் கவலை தோய்ந்து எழுதியிருக்கிறார் கலைஞர். எருமை மாடு குளித்துப் புரளும் குளத்து நீரைக் கூட தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டக் கூடாது. அப்படித் தீண்டினால் அது தீட்டு; ஏனெனில் அது பழைய காலத்து ஐதீகக் குளம் என சொல்லப்படுவதையும் நாவலில் சுட்டிக் காட்டி கிராமத்துச் சாதிக் கொடுமையை எடுத்துரைக்கிறார்.   “உப்பரிகையின் உச்சி மாடியிலே அமர்ந்து கிச்சிலிச்சம்பா அரிசியில் செய்யப்பட்ட சர்க்கரைப்பொங்கலைத் தன் பிரியத்துக்குரியவள் இதழ்களிலே விரல்படும் அளவுக்கு ஊட்டி விட, அந்தச் சுவையையும் அவளின் அதரச் சுவையையும் ஒப்பிட்டுக் கவிதை மொழியில் பேசுகிறானே, சீமான் வீட்டுப் பிள்ளை- அவனுக்குத் தெரியாது, அந்தப் பொங்கல் அரிசியை விளைவித்துத் தர வியர்வை சிந்திய பட்டாளம் ஒன்று நடு வீதியில் படுத்துறங்குகிற காட்சி!” என உழைத்துக் களைத்தவரின் நிலையைப் படம் பிடித்துக்காட்டுகிறார்.     புராணக் கதையான நந்தனாரின் கதையையும் கலைஞர் விட்டு வைக்கவில்லை. தில்லை நடராசனைக் கேள்விக்குள்ளாக்குகிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து விட்ட நந்தன் நடராசனைத் தொழ வரும் போது குறுக்கே நந்தி இருப்பதைப் பார்த்து “சற்றே விலகியிரும் பிள்ளாய்; சந்நிதானம் மறைக்குது” எனப் பாடுகிறார். உடனே நடராசன் நந்தியை விலகச் சொல்லி நந்தனுக்குக் காட்சி தருகிறார்.    “நந்தியை எதற்காக விலகச் சொல்ல வேண்டும்? நந்தா! உள்ளே வா! என்று ஆண்டவன் அவரை அழைத்திருக்கத் தானே வேண்டும்? அதுதானே முறை. தெருவில் நின்றவாறே தன்னை வணங்கட்டும் என்றால் கடவுளே கூட சாதியெனும் கொடுமைக்குக் கட்டுப்பட்டுத்தானே இருந்திருக்கிறார்! இல்லா விட்டால் உலகில் எல்லோரும் தண்ணீரில் இறங்கிக் குளித்து விட்டு தன்னை அருகில் வழிபடலாம் என்று இணங்கிய எம்பெருமான்; நந்தனார் மட்டும் நெருப்பில் குளித்து விட்டு நீசத்தன்மையை அகற்றிய பிறகே தன்னை நெருங்கலாம் என்று உத்தரவு பிறப்பிப்பாரா?” என கடவுளிடமும் சாட்டையைச் சொடுக்குகிறார்!    []     புராணக் கதைகளை மட்டுமல்ல; காப்பியங்களையும் வம்புக்கிழுத்துக் கேள்விக்குட்படுத்துவதில் அவரது எழுத்து தெறிக்க விடுகிறது. பண்ணையாரின் மகள் காமாட்சி திருட்டுத்தனமாக ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துப் புதரில் வீசி விடுகிறாள். அந்தக் குழந்தையைப் பண்ணையில் வேலை செய்யும் மாரியும், அவரது மனைவியும் கண்டெடுக்கின்றனர். அப்போது அதன் பிறப்பு குறித்துப் பேசுகின்றனர்:   “கதையில்தான் கேட்டிருக்கோம், வள்ளி திருமணத்திலே! வள்ளிக்கிழங்குத் தோட்டத்திலே நம்பிராஜன் வள்ளியை குழந்தையா கண்டெடுத்தான்னு!”   “ஏன், ஜனகமகாராஜன் சீதையைக்கூட குழந்தையா வயல்லதானே கண்டெடுத்தாரு- முந்தாநாள் சம்பூர்ண ராமாயணம் தெருக்கூத்தில ஆடினாங்களே; பாக்கலியா?”   “ஆழ்வார் ஒருத்தரு ஆண்டாளம்மனைகூட இப்படித்தான் புதருக்கிட்டே கண்டெடுத்தாருன்னு நம்ம ஊர் கோயில்ல பாகவதர் ஒருத்தர் கதை சொன்னதைப் போன மாசம் லவுட் ஸ்பீக்கரிலே வெளியிலே தொலைவா இருந்து கேட்டோமே; மறந்து போச்சா?”   தெருக்கூத்தை சேரிமக்கள் நேரில் கண்டு களிக்கலாம். ஆனால், பாகவதர் கோயிலில் கதை சொல்லும் போது உள்ளே போய்க் கதை கேட்க முடியாது. அதனால் வெளியில் லவுட் ஸ்பீக்கரில்தான் கேட்க வேண்டும் என்கிற நுட்பமான தீண்டாமைக் கொடுமையையும் சொல்லிச் செல்கிறார் கலைஞர்.   பிள்ளைப் பாசமென்பது பணக்காரக் குடும்பங்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் மட்டும் உரியதல்ல; ஏழை வர்க்கத்தினரிடமும் அது அபரிமிதமாகக் காணப்படுகிறது என்னும் செய்தியையும் உள்ளார்ந்து எடுத்துரைத்திருக்கிறார். பணக்காரர்கள் வீட்டில் பிள்ளைகள் இறந்து விட்டால் நினைத்து நினைத்து அழுது கொண்டிருக்காமல் அடுத்த கட்டமாக தங்களது தொழில், அலுவல்கள், பயணம் என நகர்ந்து விடுவர்.   அதேபோல, ஏழை வர்க்கத்தினர் வெள்ளத்தில் தம் பிள்ளைகளைப் பறி கொடுக்க நேரும் போதில், கதறி அழுகின்றனர். ஆனாலும், வேறு வழியில்லாமல் அடுத்த வேளைச் சோற்றுக்காக, துயர் துடைப்புக்காகக் கையேந்திக் கூட்டத்துடன் கூட்டமாக நிற்க வேண்டியதிருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் தான் துக்க நிகழ்விலிருந்து வெளியேற இயலாமல் வெந்து நைந்து போகின்றனர் என வெவ்வேறு சமூக மனிதர்களின் மன இயல்புகளைத் துல்லியமாக அளவிடுகிறார் கலைஞர்.   சாதியத்தை, சாதி வெறியைக் கட்டிக் காப்பது எது என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார் கலைஞர். மாரியின் மகன் நந்தகுமாரை ஆதிக்க சாதிக்காரன் ஒருவன் அடித்து விடுகிறான். அவனைத் திருப்பியடிக்க ஆட்கள் கிளம்புகின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தும் நந்தகுமார் பேசுகிறான்: “சுக்கு நூறா ஆக்க வேண்டியது ஆளையல்ல மாமா! இந்த மாதிரி ஜாதிவெறியை. நம்ம நாட்டிலே ரொம்ப காலத்துக்கு முன்னாடியே விஷ ஊசி மாதிரி போட்டு நம்ப தமிழ்ச் சமுதாயத்தையே கெடுத்த சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் தான் சுக்குநூறா ஆக்கனும்!”.    தாழ்த்தப்பட்டவர்கள் படித்து முன்னேறியதும், தன்னுடைய சுயசாதியைச் சார்ந்தவர்கள் படிப்பதற்கு ஏதுவாகக் கை கொடுத்து உதவுவதில்லை என அண்ணல் அம்பேத்கர் ஆதங்கப்பட்டதைப் போலவே கலைஞரும் கவலைப்படுகிறார். “தாழ்த்தப்பட்டவுங்க, பிற்படுத்தப்பட்டவுங்க முன்னேற்றம் என்றாலே அந்த ஜாதிகளிலே யாரோ நாலு பேரு படிச்சுப்பட்டம் பெறுவது! அவன் இரண்டுபேரு பெரிய உத்தியோகத்துக்குப் போறது! அதோட நம்ம முன்னேற்றம் முடிஞ்சு போகுது! அப்படிப் படிச்சவன், பதவிக்குப் போனவன்; தான் பிறந்து வளர்ந்த சமூகங்களைத் திரும்பிப் பார்க்கிறானான்னா, சத்தியமா கிடையாது! அவன் பட்டணத்தில் வேலை பாத்துகிட்டு, ஏதாச்சும் ஒரு பதவியில இருந்துக்கிட்டு, தன்னையும் உயர்ந்த ஜாதிக்காரன் மாதிரி பாவலா பண்ணிக்கிறானே தவிர அவனால சமூகத்துக்கு ஒரு செல்லாக்காசு பயன்கூடக் கிடையாது. அதனாலதான் சொல்றேன். யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் படிச்சா போதும்னு இல்லாம நம்ப எல்லா வீட்டுப் பிள்ளைகளும் படிக்கணும்” என நந்தகுமார் வழியே கலைஞர் பேசுகிறார்.    சீரிய பகுத்தறிவாளரான நாத்திகரான கலைஞர் ‘ஒரே ரத்தம்’ நாவலில் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை நிறையச் சொல்கிறார். அதை வெறும் தகவலாக மட்டும் சொல்லி விட்டுக் கடந்து விடாமல், அவைகளைக் கேள்விக்குள்ளாக்குவது தான் கலைஞரின் தனிச்சிறப்பு. கூத்தனூரில்தான் சரஸ்வதிக்குக் கோயில் இருக்கிறது; தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லை எனச் சொல்லி விட்டு, கோயிலைக் கட்டி விட்டு நூற்றுக்கு நூறு தற்குறியாகத்தானே இருக்கிறோம் எனப் பகடி செய்கிறார்.   கலைஞரின் கவிதை நடையை பல்வேறு நூல்களில் வாசித்திருக்கிறோம். நாவல் என வரும்போது அதை அப்படியே பயன்படுத்தாமல் நாவலுக்கான மொழியைத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார். அதனால்தான் நாவல் சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்குகிறது. நாவலில் சில ஒப்பீடுகள் ஆச்சரியப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு ஒன்று. தன்னுடைய தங்கையின் வாழ்வில் நடந்த மர்மங்களை அறிந்து கொள்ள நேரும் போது மகேஸ்வரன் எப்படி உணர்கிறான் என்பதை கலைஞர் புது மாதிரியாகச் சொல்லியிருக்கிறார். “பொதுக்கூட்டத்தில் ஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருக்கும்போது விளக்கு வெளிச்சத்திற்காக வட்டமிடும் பூச்சியொன்று முதுகுப் பக்கம் புகுந்து கடிக்கும்பொது, வலிப்பதையும் தடவ முடியாமல், ஊர்ந்து செல்லும் பூச்சியை கையை உள்ளே விட்டும் எடுக்கவும் இயலாமல் வேதனையுடன் பேச்சைத் தொடர்வதைப் போன்ற நிலையில்” அவன் இருந்ததாகச் சொல்கிறார் கலைஞர்.    எளிய மனிதர்களின் வாழ்வு மட்டுமல்ல சாவும் உன்னதுமானதுதான் என நாவலில் கலைஞர் குறிப்பிடும் பகுதி, நாவலுக்கு காவியத் தன்மையை வழங்கி விடுகிறது. மாரியின் மனைவி அஞ்சலை இறந்து விடுகிறாள். பழைய பட்டுப் பாயின் மேல் அவள் கிடத்தப்படுகிறாள். அந்நிகழ்வைப் பற்றிய கலைஞரின் வரிகள் தாம் எவ்வளவு மகோன்னதமானவை!   “மாரியின் விழிகளில் நீர் வழிந்து கொண்டிருந்தது. இருவரும் வாழ்ந்த கடந்த காலம் அவரது அகக்கண்ணில் உருண்டு கொண்டிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது முதல் இரவுக்கு அஞ்சலையின் வீட்டார் வாங்கிக் கொடுத்த அந்தப் பட்டுப் பாயின் மீதுதான் அஞ்சலையின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பாய், பல இடங்களில் கிழிந்தும் நைந்தும் பளபளப்பு இழந்தும் இருந்ததைப் போலவேதான், அன்று பருவ மங்கையாக அந்த வீட்டில் அடியெடுத்து வைத்த அஞ்சலையும் உழைத்து அலுத்துக் களைத்துப் போய் அந்தப் பட்டுப் பாயாகத் தோற்றமளித்தாள் மாரியின் கண்களுக்கு!”   திருநாள்கொண்டசேரி எனும் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் பிணத்தைச் சுமந்து பொது வீதியில் வரக்கூடாது என சமீப நாட்களில் நடந்த கொடூரத்தை நினைவுபடுத்தும் விதமாக நாவலில் ஒரு சம்பவம் வருகிறது. அஞ்சலையின் உடலை பொதுவீதியில் சுமந்து செல்லும் போது ஆதிக்க சாதியினர் தகராறு செய்கின்றனர். இவ்விடத்தில் கலைஞர் சாதி ஆதிக்கத்தையும், ஆன்மீகப் புளுகையும் கேள்வி கேட்கிறார்.   “இடுகாடுகளில் இந்த பேதம் என்றால், இறந்தவர் சென்றடைவதாகச்சொல்லுகின்ற சொர்க்கம் - நரகத்திலும் உயர்ந்தோருக்கு ஒரு சொர்க்கம்; தாழ்ந்தோருக்கு ஒரு நரகம் என்ற பேதம் வகுத்துக் கூறும் வேதம் ஏதாவது இருக்கிறதா?” என கலைஞர் எழுப்பிய கேள்விக்கு இதுவரை எவரும் பதில் சொல்லவில்லை.    சாதி ஆணவப் படுகொலைகளை எதிர்க்கும் எல்லோருக்கும் ‘ஒரே ரத்தம்’தான் என்கிறார் கலைஞர்!   *** குறளோவியம்: உரையாசிரிய முகம் முனைவர். கண்ணபிரான் ரவிசங்கர்   "வாழ்க வாழ்க வாழ்கவே! டாக்டர் கலைஞர் வாழ்கவே!" என்ற முழக்கம், நாம் அனைவரும் காவேரி மருத்துவமனை வளாகத்திலேயே கேட்டது தான். உயிர்நாடியான தொண்டர்கள், அந்த முழக்கம் ஒன்றினாலேயே, அவர் உயிரைப் பத்து நாட்கள் பிடித்துவைத்து வந்தார்கள்! நாடி நரம்பெல்லாம் தொண்டர்கள் உணர்விலேயே கலந்திருக்கும் தலைவனொருவன், நாட்டின் தலைமையமைச்சரைக் (பிரதமரை) கூட அடையாளம் காண முடியாமல் தளர்ந்துவிட்ட முதுமையிலும், தன் வீட்டின் முன் முழக்கமிடும் தொண்டர்களை மட்டும் அடையாளம் கண்டு கையசைக்கிறான் என்றால்? ஈரத்தமிழ் முழக்கத்தின் பேரே ‘மந்திரம்’ என்று தெரிகிறதா? ஆனால் ‘மந்திரம்’ என்றாலே சம்ஸ்கிருதம் தானே?   அல்ல! ‘மந்திரம்’ தமிழ்ச் சொல்லே! சம்ஸ்கிருதம் அல்ல! பார்க்க ஒன்றே போல் தோற்றம் காட்டினாலும், சம்ஸ்கிருத மந்த்ரம் / मन्त्र வேறு; மந் + த்ர = நினைத்ததை + சொல்வது என்று பொருள். தமிழ் மந்திரமோ வேறு! மந்து + இரம் = கூட்டமாக இருந்து ஈரமொழியால் வாழ்த்துவது! கோயிலில் ஒருவர் மட்டும் தானே, யாருக்கும் புரியாமல், குழு ஆதிக்கத்தால் சம்ஸ்கிருத மந்த்ரம் சொல்கிறார்? ஆனால் தமிழ் மந்திரம் அப்படியல்ல! யார் வேண்டுமானாலும், ஈர உணர்ச்சியால் சொல்லலாம்; எல்லோரும் கூடியிருந்து, புரியும்படி வாழ்த்தலாம்! அந்த வாழ்த்தே, ஆணையிடுவது போலத்தான் இருக்கும் – "எழுந்திரு தலைவா! மீண்டு வா! வாழ்க வாழ்க வாழ்கவே!" என்ற நிறைமொழி, அதுவே தமிழ் மறைமொழி!    “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளைத்த, மறைமொழி தானே மந்திரம் என்ப” என்பது தொல்காப்பியம்! பின்னாளில் ஆழ்வாரும், இறைவனிடம் தான் ஆசீர்வாதம் பெறாமல், இறைவனுக்கே ஆசீர்வாதம், ஆணை சொல்கிறார், "பல்லாண்டு பல்லாண்டு, செவ்வித்திருக்காப்பு!" இதையே ஐயன் வள்ளுவனும் வகுக்கின்றான் – “நிறைமொழி மாந்தர் பெருமை – நிலத்து, மறைமொழி காட்டி விடும்”! இக்குறளுக்கு, தொல்காப்பியத்தை மீறி, ஆண்டாண்டு காலமாகப் பொய்யுரையே எழுதி வந்தார்கள்! ‘மறை’ என்பதற்கு ‘வேதம்’ என்று வேண்டுமென்றே பொருள் கொண்டு, சம்ஸ்கிருத 4 வேதங்கள் மட்டுமே நமக்குச் "சான்றோர்கள் யார்?” என்பதைக் காட்டித் தரும் என்று பொய்யாக உரை எழுதி வந்தார்கள், பண்டிதாள்! ஆனால் அந்தக் குறளோ, கலைஞர் கருணாநிதியின் பேனாவுக்காகப் பலகாலம், பல்லாண்டு பல்லாண்டு காத்துக் கொண்டிருந்தது...    இதோ! எப்படி உரை எழுதுகிறார் பாருங்கள், கலைஞர்! –   "சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிற்கும், அவர்கள் எழுதிய அறவழி நூல்களே எடுத்துக் காட்டிவிடும்; இந்நிலத்தில், ஈர மொழிகளால் சொல்லப்படும் அம்மக்களின் ஆணையும் நடக்கும்!" - தெரிகிறதா, உரையாசிரியர் கருணாநிதி, தமிழ் இலக்கியத்துக்குச் செய்த பங்களிப்பு என்னெவென்று? உரையால், உரைகல்லில் தேய்த்துத் தேய்த்து, மறைப்பு விலக்கினார்! தமிழ் மறைப்பு விலக்கினார்!   கலைஞர் பழந்தமிழ் இலக்கியத்துக்குத் தந்த பரிசில்கள் நான்கு: 1) குறளோவியம், திருக்குறள் உரை & வான்புகழ் கொண்ட வள்ளுவம் 2) பூம்புகார் (சிலப்பதிகாரம்) 3) சங்கத் தமிழ் 4) தொல்காப்பியப் பூங்கா.   இவற்றுள், குறளோவியமே ஓங்கி உலகளந்து நிற்கிறது! துவக்கத்தில், தனக்கு மிகப் பிடித்தமான 365 குறள்களுக்கு மட்டுமே குறளோவியம் தீட்டிய‌ கலைஞர், பின்பு தமிழ்ப் பேராசை உந்தித் தள்ள, 1330 குறள்களுக்கும் தனியாக உரை எழுதினார் முரசொலியில்; ஒரு நாளுக்கு ஒன்று என்ற கணக்கில்!   அதுவே, இன்று உரை உலகில் ஓங்கி உலகளந்து நிற்கின்றது! "அதான் குறளுக்கு, 10ம் நூற்றாண்டு தருமர் / மணக்குடவர் தொடங்கி இன்று வரை, மொத்தம் ~300 உரைகள் எழுதப்பட்டு விட்டனவே? கலைஞர் உரையில் மட்டும், பெருசா அப்படி என்னய்யா இருக்கு?” என்று கேட்கத் தோன்றுகிறதா? பார்ப்போம்!   ‘கடவுள் வாழ்த்து’ என்பது தானே முதல் அதிகாரம்? அல்ல! ஐயன் வள்ளுவன், ‘கடவுள்’ என்ற சொல்லையே எங்குமே பயன்படுத்தவில்லை, அறிவீர்களா? அப்புறம் எப்படிக் கடவுள் வாழ்த்து?   ஐயன், தன் திருக்குறள் நூலை, அதிகார வாரியாகப் பத்து - பத்துக் கொத்தாக, குறுந்தலைப்புப் பொருளில் வைத்து எழுதினாலும், பல அதிகாரங்களின் பெயர்கள் மட்டும், பின்னாள் உரையாசிரியர்களின் கைவண்ணத்தில் மாற்றப்பட்டன; அவ்வளவு ஏன்? ஒரே அதிகாரத்தில், குறட்பா வரிசையைக் கூட, தங்கள் இஷ்டம் போல் மாற்றி அடுக்கினார்கள், புண்ணியவான்கள்! இன்று நாம் காணும் அடுக்குமுறை, பரிமேலழகரின் அடக்குமுறை! ஆனால் ஆதி மணக்குடவரில், குறள் வரிசையே மாறி இருக்கும்! (இதன் தரவுகளை, எனது ‘அறியப்படாத தமிழ்மொழி’ நூலில், 2-ஆம் படலத்தில் கண்டு தெளிக!)   []     வள்ளுவனின் சொற்கள் – ‘இறைவன்’ & ‘தெய்வம்’ என்ற இரண்டு மட்டுமே! ‘கடவுள்’ என்ற சொல்லையே, ஐயன் பயன்படுத்தவில்லை! அப்படியிருக்க, ‘கடவுள் வாழ்த்து’ என்ற தலைப்பை யார் வைத்தது?   ‘இறைவன்’ என்ற தமிழ்ச்சொல்லே, இறை (வரி) விதிக்கும் அரசன் / தலைவனைத் தான் ஆதியில் குறித்தது! பின்பு மதம் பெருகப்பெருக, அச்சொல் கடவுளின் மேல் ஏற்றப்பட்டு, ஆண்பால் கடவுள் என்றாகிப் போனது! இறைவன் என்பது பால் அறி கிளவி; தெய்வம் என்பது பால் அறியாக் கிளவி!   இறை’கடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் ‘வேந்தன்’ உறைகடுகி ஒல்லைக் கெடும்! (564, வெருவந்த செய்யாமை – பொருட்பால்)   துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை ‘இறை’இறவா நின்ற வளை! (1157, பிரிவு ஆற்றாமை – காமத்துப்பால்)   மேற்காணும் குறளிலெல்லாம், இறைவன் என்பது தலைவன் தானே! இறுக்குவதால், இறை! தன் மக்கள் யாவரையும் தன் ஆளுமைக்குள் இறுக்கி, இறை (வரி) விதிக்கின்றான் இறைவன்; தலைவன்! அவனை, எந்த உரையாசிரியரும் உண்மையாகக் காட்டவே இல்லை; கலைஞர் கருணாநிதியே காட்டினார், இதோ!   பிறவிப் பெருங் கடல் நீந்துவர் - நீந்தார் இறைவன் அடி சேராதார்   பரிமேலழகர்: “முற்பிறப்பின் வினையால் அடுத்த பிறப்பு, அப்பிறப்பின் வினையால் மறுபிறப்பு என்று கரைகாண முடியாத கடலை, கடவுள் திருவடிகளைப் பற்றிக் கொண்டோர் மட்டுமே நீந்திக் கடக்கலாம்; பற்றாதோர் கடக்க முடியாது!" என்று சுயமதம் (கர்மா) கொப்பளிக்க உரை எழுத,   கலைஞர்: “வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக (தலைவனாக) இருப்பவனின் பாதையில் செல்லாவிடில், நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்!" என்று மாற்றி உரை எழுதி, இறைவன் என்பது தலைவன் என்ற ஆதி தமிழ்ச் சொல்லுக்கு நீதி செய்கிறார்!    இருள்சேர் இருவினையும் சேரா - இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு   பரிதி: “சிவபெருமானின் சிவ கீர்த்தி பாராட்டுவார்களை, மும்மல வித்து ஆகிய பாவமானது அண்டாது!" என்று கிஞ்சித்தும் வெட்கமேயில்லாமல், ‘சிவன்’ என்று பொய்கலந்து உரை எழுத,   கலைஞர்: “இறைவன் (தலைவன்) என்ற பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெறுவோர், உலக நன்மை தீமைகளை, ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்!" என‌ மாற்று உரை நீதி செய்கிறார்!    என்னடா இது, கலைஞர் உரை இப்படி ‘அடாவடி’யாக இருக்கிறதே? என்று முதலில் தோன்றலாம்; ஆனால் எது அடாவடி? சிவன் என்று எழுதியதா? தலைவன் என்று எழுதியதா? என்று மனச்சாட்சியைக் கேட்டுப் பாருங்கள்! ‘சிவன்’ என்று எழுதியவன் மேல் பாய மாட்டார்கள், இலக்கியவாதிகள் / பண்டிதாள்! ஆனால் ‘தலைவன்’ என்று எழுதிய கலைஞர் மேல் மட்டும் பாய, ஓடோடி வருவார்கள்!   ‘இறைவன்’ (இறை இறுக்குபவன்) என்ற ஆதி தமிழ்ச் சொல்லின் பொருள், இன்று நமக்குத் தெரியாததால், ஸ்வாமி / பகவான் என்றே எழுதியெழுதிப்பழகி விட்டதால், உண்மை உரை அடாவடிபோல் தோன்றுகிறது; பொய் உரை பழகி விட்டது! இதைப் புரிந்து கொண்டால், ‘கலைஞர் உரை’ (அல்லது) மதம் கடந்த தமிழின் மெய்ம்மை, நமக்கு நன்கு புரியும்! வள்ளுவர், எந்த மதத்தையும் பேசாமல், வாழ்வியல் சூழல் நெறிகளை மட்டுமே பேசினாலும், அவர் ஆங்காங்கு பயன்படுத்தும் சில சொற்கள் / கருத்துக்களை, ‘ஊகித்து உணரல்’ என்ற வழிமுறையில், வள்ளுவர் தமிழ்ச்சமணராக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்பது பெரும்பான்மைத் தமிழறிஞர்களின் முடிபு!  நேரடித் தரவு இல்லை, கணிப்பு! அவர் அப்படிச் சமணராக இருப்பினும், அந்த நெறியிலும் நேரடிக் கடவுள் இல்லை; ஆன்ம விடுதலை பெறும் சான்றோர் / தலைவன் நெறியே சமணம்! அப்படிப் பொருத்திப் பார்த்தாலும், இறைவன் என்பதற்கு (வழி நடத்தும்) தலைவன் என்ற பொருளே, மிஞ்சி நிற்கும்! கலைஞர் கருணாநிதியும், அவ்வழியில் சென்றே, உரை செய்கிறார்! இஃது உரை உலகப் புரட்சி!   ‘கடவுள் வாழ்த்து’ என்ற அதிகாரப் பெயரையே, ‘வழிபாடு’ என்று மாற்றம் செய்திருக்கிறார் கலைஞர். 19 / 20ஆம் நூற்றாண்டில், எவனுமே செய்யாத ஒன்று! செய்ய அச்சப்படும் ஒன்று! ஆனால், கலைஞர் செய்தார்; துணிந்து செய்தார்! ‘கடவுள்’ என்ற சொல்லையே பயன்படுத்தாத ஆசிரியன் வள்ளுவரை மீறி, ‘கடவுள் வாழ்த்து’ என்று நீங்கள் பொய்யாகப் பெயர் வைக்கலாம்; அது, மதத்தால் செல்லுபடி ஆகும்! ஆனால், ‘வழிபாடு’ என்று மாற்றிப் பேர் வைத்தால் மட்டும், அறிவால் செல்லுபடி ஆகாதோ? வழிபாடு = வழி + படு; வழியில் படுதல்! அதாவது தலைவன் (அறச் சான்றோன்) வழி நடத்தல்! அதானே உண்மையான பொருள்! இன்று, வழிபாடு என்பதற்கு பூஜை / சடங்கு என்று பொருளே மாறிப் போனதால், நமக்கு ஆதியான தமிழ்ச்சொல் புரியவே இல்லை; உரையாசிரியர் கலைஞருக்குப் புரிந்தது! துணிந்தார்!   இன்னும் என்னவெல்லாம், திருக்குறள் உரையில், புதுப் பாதை (உண்மைப் பாதை) கண்டார் இந்தக் கலைஞர் கருணாநிதி? பார்ப்போமா? இன்றைய பகுத்தறிவுவாதிகளே, சரியாகப் பகுத்தறியாமல், வள்ளுவர் ஆணாதிக்கம் பிடித்தவரோ? என்று குழம்புவதைக் காண்கிறோம்! ஆனால், உண்மை என்ன? வேறு எவரின் திருக்குறள் உரையும் தெளிவிக்காத ஒன்றை, ‘கலைஞர் உரை’ பளிச் என்று தெளிவித்து விடும்!   திருக்குறளில், ‘பெண்வழிச் சேறல்’ எனும் அதிகாரத்தை மேலோட்டமாகப் படித்தால், இன்றைய பெண்ணியவாதிகள் ஐயன் வள்ளுவனையே வெறுக்கத் தலைப்படுவார்கள். ஆனால், அது பெண்களை அடக்க வந்த குறள் அல்ல! ஆணோ / பெண்ணோ, அரசியலில் நேரடியாகப் புகாமல், திரைமறைவில் நடத்தும் கிச்சன் கேபினட் அதிகாரத்தைக் கண்டிக்க வந்த குறளே! குடும்பத்தில் உள்ள பெண்கள், மன்னன் (தலைவன்) மூலமாக, அரசாங்கத்தில் புகுந்து ஏவல் செய்வதை மட்டுமே கண்டிக்கிறார், வள்ளுவர்! அதான், அதை அறத்துப்பால் - இல்லறவியலில் வைக்காது, பொருட்பால் - அரசியலில் வைத்தார் ஐயன்!   திருக்குறளை, அதிகாரம் அறிந்து படிக்க வேண்டும்; இல்லாவிட்டால் குழப்படியே! எல்லாக் குறளும் எல்லாருக்குமானது அல்ல! புலால் மறுத்தல் - துறவறவியல்; புதல்வரைப் பெறுதல் - இல்லறவியல்! கார்ப்பரேட் போலிச் சாமியார் ஒருவன், “திருக்குறளில் புதல்வரைப் பெறுதல் வருகிறதே? அதன்படியே நான் நடிகையோடு கூடிக் குழந்தை பெற்றுக் கொண்டேன்; குறள் வழி நடந்தேன்!" என்று சொன்னால், சும்மா விடுவீர்களா? அறிக: எல்லாக் குறளும், எல்லாருக்குமானது அல்ல! அவரவர் சூழல் நெறி, அதிகாரப் பகுப்பு! அதிகாரம் அறிந்து குறளை வாசிக்க வேண்டும்! (உரையாசிரியர்கள், அதிகாரப் பேர்களை மாற்றினாலும், அதன் பகுப்புப் பொருள் ஐயன் வள்ளுவனே செய்தது தான், பத்துப் பத்துக் கொத்தாக.)   குறளதிகாரம் சொல்லும் பெண்வழிச் சேறல் பெண் இழிவு அல்ல! கிச்சன் கேபினட் இழிவு! அதைத் தெளிவாக்கி, குறளின் மேல் பிழையாகப் படர்ந்து விட்ட தூசியைக் கூட, கலைஞரே துடைக்கின்றார்!   பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் - நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து!   பரிமேலழகர்: “மனைவி ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்கள், பிறரால் மதிக்கப்படார்; அவர்களைக் காட்டிலும் நாணமுடைய பெண்மையே நன்கு உடைத்தாம்."    கலைஞர்: “(அரசு-இயலில், தன் குடும்பத்திலுள்ள) ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், (அரசு-இயல் பின்வழியே கோலோச்ச வெட்கப்படும்) மான உணர்வுள்ள, ஒரு பெண்ணின் பெண்மையே பெருமைக்குரியதாகும்!"    அரசியலில் கிச்சன் கேபினட் பெண்ணேவல் செய்யும் ஆண்களை விட, பெண்களே பெருமைக்குரியவர்கள், என்று பெண்மாண்பு பேசும் ஐயன் வள்ளுவனா, ஆணாதிக்கவாதி? அல்லவே அல்ல! அதைக் ‘கலைஞர் உரை’ தான், வேறெந்த உரையை விடவும் தெளிவிக்கிறது!   அட! கலைஞர் கருணாநிதி ஒரு பழுத்த ஆன்மீகவாதி என்பதையும் அறிவீர்களா? பொய்யான்மீகம் அல்ல; மெய் ஆன்ம+ஈகம்! தமிழ் மெய்யியல் கோட்பாடு! ஆன்மா, விதி, கர்மா, குருமா என்றெல்லாம் கற்பனைக் குழப்படியில் இறங்கி, தத்துவம் என்ற பேரில் பித்துவச் சண்டை போடும் ஆன்மீகவாதிகளைக் காட்டிலும், உரையாசிரியர் கருணாநிதியின் ஆழ்ந்த ஆன்மீக அறிவைக் கண்டு வியந்து போவீர்கள், திருக்குறள் உரையில்! ஊழ் என்பது விதியா? அல்ல! ‘இயற்கைநிலை’ என்கிறார், உரையாசிரியர் கலைஞர்! இயற்கை, மனிதர்களை விட, மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒன்று! அதை, மனிதன் நேரடியாக எதிர்க்க முடியாது! இயற்கையுடன் நட்பு பழகியே, அறிவு பழகியே, வெற்றிகள் வென்றெடுக்க வேண்டும்; இயல்+கை = இயல்பான ஒழுகல்! அது ஊழ்த்துவதே, ஊழ் என்ற கலைஞரின் உரை விளக்கம்!   நுண்ணிய நூல்பல கற்பினும் – மற்றும் தன் உண்மை அறிவே மிகும்!   கலைஞர்: “கூரிய அறிவு வழங்கக்கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும், அவரது ‘இயற்கை அறிவே’ மேலோங்கி நிற்கும்.”    ‘இயற்கைநிலை’யை மாற்றி, செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கைநிலையே முதன்மையாக வந்து ஊழ்த்துவதால், ஊழை விட வலிமையான வேறு எவை உள்ளன? – இப்போது பொருத்திப் பாருங்கள்! ஊழ் என்பது ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்து, பகவான் பேக்கேஜ் செய்வதா? அல்லது இயற்கையாகவே ஊழ்த்துவதா? புரிகிறதா, திருக்குறள் - கலைஞர் உரை ஏன் இன்றைய அறிவியல் காலத்துக்குத் தேவை என்று? இன்றைய காலச் சிறப்பான குறள் உரைகள் மூன்று!   1. பொது மக்களின் எளிய உரை - மு.வ / கலைஞர் 2. மதம் கலவாது, தமிழ் சார்ந்த உண்மைகளின், நுட்ப உரை - மு. தேவநேயப் பாவாணர் 3. தமிழ்ப் பகைவரின் பொய்களை முறியடிக்கும், வீரப் பேருரை - பெருஞ்சித்திரனார்   மூல நூலுக்கு, உரை நூல் எழுதினாலும், அதிலும் ஓர் அழகியலோடு எழுதுவார் பரிமேலழகர் என்று பண்டிதாள் சிலாகிப்பார்கள்; உண்மையே! ‘வாள் அது உணர்வார் பெறின்’ போன்ற குறட்பாக்களுக்கு, பரிமேலழகர் உரை ஓர் அழகியலே! ஆனால், அவர் மட்டும் தான் அழகியலா? இன்னும் பலரின் உரை அழகியலை மறைப்பது ஏன்? உரையில் கூட உவமை அணி அழகியல் செய்கிறாரே, கலைஞர்? அதைப் பேச மட்டும், ஏன் மனம் வருவதில்லை இலக்கியவாதிப் பண்டிதாளுக்கு?   நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் - தடிந்து எழிலி தான்நல்காது ஆகி விடின்   கலைஞர்: “ஆவியான கடல்நீர் மேகமாகி, கடலில் மழையாகப் பெய்தால் தான், கடல் கூட வற்றாமல் இருக்கும். (போலவே) மனிதச் சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும், அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால் தான், அந்தச் சமுதாயம் வாழும்!"    இது தானே பிறிதுமொழிதல் உவமை அணி? வான் சிறப்பிலும், மண் சிறப்பு காட்டும் கலைஞரின் உரை அழகியல், வேறு யாரும் செய்யவில்லையே? புத்தேள் உலகு = சொர்க்க லோகம் என்றே எழுதி வந்த உரைகளின் மத்தியில், புத் + ஏள் = புதுமை உலகம் என்று, ‘மாத்தி யோசி’ உரையைக் கலைஞர் தானே செய்தார்? இவையெல்லாம் பேசப்பட வேண்டும்; மறைக்கப்படக் கூடாது! இலக்கியப் பீடம் என்ற ஒன்றில் ஏறி, தாங்கள் செய்வது மட்டுமே இலக்கியம்; பிறவெல்லாம் இலக்கியம் அல்ல என்ற மேதாவித்தனம் விடுத்து, அற நெஞ்சோடு அணுகுவதே, தமிழிலக்கியத்துக்குச் செய்யும் நெஞ்சுக்கு நீதி!   ஒருவேளை, கலைஞர் கருணாநிதி அரசியல்வாதியாக இல்லாது போயிருப்பின், அவரின் இலக்கியப் பங்களிப்புகள் இன்று உச்சிமுகரப் பட்டிருக்கும்! ஆனால், ஒருவரின் தொழில் பார்த்து வருவதல்லவே இலக்கியம்? படைப்பு பார்த்தன்றோ பயிலல்! தமிழில், தற்பிடித்தம் கடப்போம்!   கருணாநிதி எனும் பன்முகத்தில் ஒரு முகம், பெருமுகம் - ‘உரையாசிரியர்’ எனும் திருமுகம்! தமிழுக்கு, புதிய பாதை திறந்த புது முகம்! அந்த ‘உரையாசிரியன்’ கலைஞருக்குப் புகழ் வணக்கம்!   சொல்லால் மட்டுமே உரை செய்தானில்லை; கல்லாலும் உரை செய்தான்! கோட்டமும் சிலையும் செதுக்கினான்; செலுத்தினான்! கலையின் மூலம் கடைக்கோடி மக்களின் மனத்திலும் குறளைச் செலுத்திய குறள் தொண்டன் இவன்! தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! வாழ்க, வாழ்க, வாழ்கவே!   கலைஞர் இன்று நம்மிடையே இல்லை! நெருநல் உளன் ஒருவன், இன்று இல்லை! இனியாவது, அவரின் நெஞ்சுக்கு நீதி செய்வோம்! ஸ்கூல் ட்ராப்பவுட் ஒருவன், இவ்வளவு செய்தானா தமிழுக்கு? என எண்ணிப் பார்ப்போம்! எண்ணிக்கை பற்றாது, எண்ணிக் கைப்பற்றுவோம்! கலைஞரின் இலக்கியப் பங்களிப்புகளைப் போற்றலும் இன்றி, தூற்றலும் இன்றி, உள்ளது உள்ளபடி அணுகும் உள்ளம் பெறுவோம்!   ***   கையில் அள்ளிய கடல்: ஒரு நிர்வாகியின் நினைவுகள் என். சொக்கன்   ஆங்கிலத்தில், பெருநிறுவனங்களின் தலைவர்கள் புத்தகமெழுதுகிற கலாசாரம் இருக்கிறது. பெரிதாகச் சாதித்து ஓய்வு பெற்றவர்கள், இன்னும் சாதித்துக் கொண்டிருக்கிறவர்கள், இனிமேல்தான் சாதிக்கப் போகிறவர்கள் என்று எல்லாரும் புத்தகம் எழுதுகிறார்கள், அதனை விற்பதற்காக ஊர் ஊராகச் செல்கிறார்கள், மேடை போட்டுப் பேசுகிறார்கள், புத்தகம் வாங்குவோருக்குக் கை வலிக்க ஆட்டோகிராஃப் போடுகிறார்கள், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள், இத்தனை மில்லியன் பிரதிகள் விற்றன என்று புள்ளி விவரங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு நன்றி சொல்கிறார்கள்.   இவையெல்லாம் புத்தகம் விற்பதற்காக என்று நினைத்தால், நாம் தான் முட்டாள். அவர்கள் புத்தகத்தை விற்கவில்லை, தங்களுடைய Brand-ஐ விற்கிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு, அவர்கள் சார்ந்துள்ள நிறுவனத்துக்கு, அமைப்புகளுக்குப் பல நன்மைகள் உள்ளன. மறுபுறம், இந்நூல்களை வாங்குபவர்களுக்கும் பல தனித்துவமான நன்மைகள் உள்ளன. முக்கியமாக, ஒரு நிர்வாகியின், ஒரு தலைவரின் மனம் எப்படிச் சிந்திக்கும் என்பதைத்தெரிந்து கொள்ளலாம். அதை எந்தப் பாடப்புத்தகத்திலோ கல்லூரிப் பட்டப்படிப்பிலோ பெற இயலாது. அந்த நுணுக்கமான அனுபவ விவரங்களுக்காகதான் அவர்கள் நிறுவனத்தலைவர்களுடைய நூல்களை விரும்பிப் படிக்கிறார்கள். அதற்காக நேரம் ஒதுக்கிய அத்தலைவர்களுக்கு நன்றிசொல்கிறார்கள்.   சில ஆயிரம் பேர் பணியாற்றுகிற ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கிறவருக்கே இப்படிப்பட்ட தனித்துவமான அனுபவங்கள் இருக்கின்றன என்றால், லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியை, கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களுக்கு எப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கும்! அந்த மனத்துக்குள் நுழைந்துபார்த்து அவற்றைத்தெரிந்துகொள்வது எப்பேர்ப்பட்ட அரியவிஷயம்!   இந்தியாவில் இதைத் தொடர்ச்சியாகச் செய்த தலைவர் என்று பார்த்தால், காந்திதான். இன்று அவரைப் பற்றி ஆராய விரும்புகிற எல்லாருக்கும் அவரே பல்லாயிரம் பக்கங்கள் நேரடிச் சான்றுகளை எழுதி வைத்திருக்கிறார். அதன்பிறகுதான் அவரைப்பற்றிப் பிறர் எழுதியவை வருகின்றன. காந்தியைப் போல் நேருவும் சில நூல்கள் எழுதியிருக்கிறார், இன்னும் பல தலைவர்கள், ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் அவ்வப்போது தங்களுடைய அனுபவங்களை எழுதுவதுண்டு. அவர்களுடைய வரலாற்றிடத்தை அறிந்து கொள்வதற்காக வாசகர்கள் அவற்றை வாங்கிப் படிப்பதுமுண்டு.   இவர்கள் அனைவரிடமிருந்தும் கலைஞர் மு. கருணாநிதி வேறுபடுகிறார். ஏனெனில், அவர் ஒருவர்தான் ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சியில் இருந்தபோதும் கணிசமாக எழுதிக் குவித்திருக்கிறார்; மிக விரிவான பேட்டிகளை வழங்கியிருக்கிறார்; அவை அனைத்திலும் அவருடைய நிர்வாக மனம் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவருடைய அணுகுமுறை சரியா, தவறா என்பதுபற்றி ஆயிரம் கேள்விகள் இருக்கலாம், ஆனால், இன்றைக்கு ஓர் இந்திய ஆட்சியாளர் எப்படிச் சிந்தித்துவந்தார், எப்படிப்பட்ட கேள்விகளைச் சந்தித்தார், அவற்றை எப்படி எதிர்கொண்டார் என்பதை நீங்கள் வேறெங்கும் படித்துத் தெரிந்துகொள்ளவே இயலாது. ஆங்கிலத்தில் 'From the Horse's mouth' என்று சொல்லப்படுவதுபோல் ஆட்சியாளரே தன் மனத்தைத் திறந்துவைத்த அதிசயம் அவருடைய எழுத்தில்தான் நிகழ்ந்திருக்கிறது.   இன்னொருபக்கம், இதற்குச் சிறிதும் சம்பந்தப்படாத புனைவிலக்கியங்களையும் அவர் எழுதியிருக்கிறார், திரைப்படங்களுக்கு வசனம், பாடல்களை எழுதியிருக்கிறார், அவற்றில் பிரசாரம் கலந்திருக்கிறது என்றொரு விமர்சனம் சொல்லப்படுவதுண்டு; அதுவும் அவருடைய நிர்வாக மனத்தைத்தான் காட்டுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. பொழுதுபோக்குக்காக எழுதினாலும் அதில் தன்னுடைய சிந்தனைகளைச் சேர்த்துச் சொல்வதை அவர் ஓர் உத்தியாகக் கையாண்டிருக்கிறார்.   'கையில் அள்ளிய கடல்', கருணாநிதியின் கேள்வி, பதில்களுடைய தொகுப்பு. சில நேரங்களில் வாசகர்கள் அவரைக் கேள்வி கேட்டிருக்கிறார்கள், சில நேரங்களில் தமிழ் / ஆங்கிலப் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள், அனைத்துக்கும் மிகுந்த சிரத்தையோடும் தெளிவோடும் பதில் சொல்லியிருக்கிறார், ஓர் இடத்தில்கூடப் பூசி, மெழுகுதல் கிடையாது, அலட்சியமான பதில்கள் கிடையாது, கேள்வி கேட்போரை அவர் எந்த அளவு மதித்திருக்கிறார் என்பது புரிகிறது.   []     இந்நூலில் நான் மிகவும் விரும்பி ரசித்த விஷயம், அவர் ஆட்சியில் இல்லாத போது கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமும், ஆட்சியில் உள்ள போது கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமும் முற்றிலுமாக மாறியிருக்கிறது. சில பக்கங்களுக்கு முன்னால் பார்த்த அதே தலைவர் தானா இவர் என்று நினைக்கும்படி அதிசயிக்கத்தக்க மாற்றங்கள்: மிகுதியான புள்ளி விவரங்கள், பிரமாதமான நினைவாற்றலின் உதவியுடன் பழைய நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டிப் பேசுதல், ஆங்காங்கே நகைச்சுவை, பொதுமக்கள் (அல்லது பத்திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பதுபோல் எதையும் தடாலடியாகச் செய்யாமல் சிந்தித்துச் செயல்பட வேண்டிய அவசியம் / பொறுப்பு தனக்கு (அதாவது, தன் அரசுக்கு) இருப்பதைத் திரும்பத்திரும்பப் பொறுமையாக நினைவுபடுத்தல், எதிர்மறை விஷயங்கள் சுட்டிக் காட்டப்படும்போது அவற்றைச் சட்டென்று மதிப்பிட்டுப் பொறுப்போடு பதில் சொல்லுதல்...   கருணாநிதி அளவுக்குப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தலைவர் கிடையாது என்பார்கள், அவர் அளவுக்குப் பத்திரிகைப் பேட்டிகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டவரும் கிடையாது என்று இந்நூலை வாசித்த பின் தோன்றுகிறது. இத்தனைக்கும் அவர் பிரமாதமான பேச்சாளர், எழுத்தாளர், விரும்பினால் எந்தச் சங்கடமான பதிலையும் மொழியின் துணையோடு மறைத்திருக்கலாம். ஆனால் இத்தனைப் பேட்டிகளில் ஓரிடத்தில்கூட அவர் அந்த நழுவல் உத்தியைப் பயன்படுத்திக் கொள்ள‌வில்லை. எரிச்சலூட்டும் கேள்விகளுக்குக்கூட மிக உண்மையுடன் பதில்களைச் சொல்கிறார். Emotional Intelligence, Accountability என்று தலைவர்களுக்கு மிக அவசியமாகச் சொல்லப்படும் பல குணங்களை இந்தப் பேட்டிகளில் மிக மென்மையாக உணர்த்தி விடுகிறார்.   நூலில் ஆங்காங்கே வரும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்தால், கருணாநிதியின் வாழ்க்கைச் சித்திரமும் புரிந்து விடும். தான் வளர்ந்த சூழல், தன்னைப் பாதித்த கொள்கைகள், தலைவர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள், துணை நின்றவர்கள், எதிரிகள், துரோகிகள், உதவியவர்கள் அனைவரைப் பற்றியும் சிறு காட்சிப் படிம‌ங்களை வழங்கிச் செல்கிறார். ஓர் ஆட்சியாளராக அவருடைய அமைச்சர்கள், அதிகாரிகள், மத்திய அரசோடு அவருக்கிருந்த உறவு, தோழமைக் கட்சித் தலைவர்களை அவர் எப்படி நடத்திவந்தார் என்று அனைத்தையும் சொல்ல வேண்டிய அளவில் சொல்கிறார். அந்த வியப்பான, அரிய சமநிலை அவருக்கு அனுபவத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும், தான் சிரமப்பட்டுக் கற்றுக் கொண்ட விஷயங்களை இந்த நூலில் (இது போன்ற பிற பல நூல்களில்) தங்கத் தட்டில் வைத்து நமக்குக் கொடுத்து விடுகிறார்.                                                                                            ஏனோ, தலைவர்களை வியக்கிற, பின்பற்றுகிற பழக்கம் மட்டுமே இந்தியாவில் இருக்கிறது. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன என நாம் பொதுவாக நினைப்பதில்லை. அந்த நிலை மாறும்போது, ஒரு நிர்வாகியாகக் கலைஞர் போன்றோர் ஆராயப்படுவார்கள், அதற்கான அனைத்து முதல்நிலைத் தரவுகளையும் அவரே எழுதிவைத்திருக்கிறார்.   ***   தென்பாண்டிச் சிங்கம்: சகோதர யுத்தம் கோபாலகிருஷ்ணன்   நான் சிறுவயதிலிருந்தே கலைஞர் மு.கருணாநிதியின் ரசிகன். அவரது மேம்பட்ட எழுத்துத் திறன், ஒப்பற்ற தமிழ்ப் புலமை ஆகியவை பற்றி அவரை ஒரு அரசியல்வாதியாக மதிப்பிடும் வயதை அடையும் முன்பே எனக்குப் புரிய வைக்கப்பட்டது. கலைஞரின் அரசியலை ஏற்காத என் குடும்பத்தாரின் பங்கும் அதிலிருந்தது என்பதே கலைஞரின் எழுத்தாளுமைக்குத் தக்க சான்று. ஆரம்பப் பள்ளிப் பருவத்திலிருந்து மற்ற பாடங்களைவிட தமிழ் மொழிப் பாடத்தை அதிகமாக விரும்பிப் படித்தவன் என்பதால் இயல்பாகவே எனக்குக் கலைஞர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால் அவரது மொழித் திறனை நான் அறிந்து கொண்டது. அவரது மேடைப் பேச்சு, பேட்டிகள். அறிக்கைகள், கட்டுரைகள் வழியாகத்தான். அவருக்குள் இருந்த புனைவெழுத்தாளனை அவரது திரைப்பட வசனங்கள் வாயிலாக மட்டுமே அறிந்தவன். அவரது வசனங்களில் நிரம்பியிருந்த அடுக்குமொழியின் அழகும் சுவாரஸ்யமான வார்த்தை விளையாட்டும் தமிழ்ப் பாரம்பரியப் பெருமையும் எல்லாவற்றுக்கும் மேலாக சமூக அக்கறையும்தான் என்னை அவர் மீது அதிக நாட்டம்கொள்ளச் செய்தன. ஆனால் நான் அவர் எழுதிய புனைகதைகள் எதையும் படித்ததில்லை. இந்தச் சிறப்பிதழுக்காக ‘தென்பாண்டிச் சிங்கம்’ நாவலைப் படித்தது தான் அவ்வகையில் முதலாவது.    ‘தென்பாண்டிச் சிங்கம்’ ஒரு வரலாற்றுப் புனைவு. எழுதப்பட்ட வரலாறு மட்டுமல்லாமல் வாய்வழி வரலாற்றையும் சேர்த்து அவற்றின் அடிப்படையில் இந்த நாவலை எழுதியிருப்பதாகக் கலைஞரே முன்னுரையில் சொல்கிறார். “நாட்டாரய்யா என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் காணப்பட்ட சில குறிப்புகளின் துணையோடு காதுவழி கேட்டறிந்த பழங்காலச் செய்திகளைத் தொகுத்து ராமநாதபுரம் பகுதியில் சிவகெங்கை, திருப்பத்தூர் வட்டாரத்தில் பாகனேரி நாடும் பட்டமங்கலம் நாடும் எப்படி மோதிக் கொண்டு பகை பாராட்டி இரத்தம் சிந்தின என்பதைச் சித்தரிக்கும் அந்தச் சிறுகதையை தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றுப் பின்னணியோடு, வீரமும், காதலும், பாசமும் பெருக்கெடுக்கும் கற்பனைப் பெட்டகமாக உருவாக்க விரும்பினேன். அந்த விருப்பத்தின் விளைவு குங்குமத்தில் தொடர்கதையாகத் ‘தென்பாண்டிச் சிங்கம்’ வெளிவந்தது” என்று ‘கதை பிறந்த கதை’யைச் சொல்லிவிட்டுத் தொடங்குகிறார் கலைஞர்.     []     19ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் நடக்கிறது கதை. கள்ளர் நாடுகள் என்று அறியப்பட்ட பாகனேரியும், பட்டமங்கலமும் தான் கதைக் களங்கள். இவற்றின் அம்பலக்காரர்களான வாளுக்குவேலி, வல்லத்தரையன் மற்றும் அவர்களது உடன்பிறப்புகள்தாம் முக்கியக் கதாபாத்திரங்கள். குறிப்பாக வாளுக்குவேலி என்ற பாகனேரியின் அரசனை ஒத்த அம்பலக்காரரின் வீரமும் மான உணர்வும் மக்கள் மீதான அக்கறையும், தமிழ் மண்ணை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுப்பதற்கான ஏக்கமும் அனைத்துக்கும் மேலாக தங்கை கல்யாணி நாச்சியார் மீதான பாசமும் கதையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ‘தென்பாண்டிச் சிங்கம்’ என்ற தலைப்பும் வாளுக்குவேலியைத்தான் சுட்டுகிறது. கத்தப்பட்டு என்ற இடத்தில் இன்றைக்கும் இவனது சிலை இருக்கிறது என்று நாவலின் இறுதியில் குறிப்பிடப்படுவதை வைத்து இவன் உண்மையாக வாழ்ந்தவன் என்று புரிந்துகொள்ள முடிகிறது.   சேர, சோழ, பாண்டிய வம்சங்களுக்குப் பிந்தைய தமிழகத்தின் வரலாற்று பதிவுகள் மிகக் குறைவு. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களில் உறங்காப்புலி என்ற துரோகியின் கதாபாத்திரம் பற்றி மட்டுமே ஒரே ஒரு வரலாற்றுக் குறிப்பு ஆங்கிலத்தில் இருப்பதாக நாவலுக்கு விமர்சனம் எழுதியுள்ள ‘திருக்குறள்மணி’ திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார். எனவே 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்களை மட்டும் அறிந்த நமக்கு வாளுக்கு வேலி, வல்லத்தரையன் போன்ற அம்பலக்காரர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை பற்றி எல்லாம் தெரிய வைக்கும் கலைஞர் அதன் வழியே தமிழர்கள் பாசத்துக்கு பணிந்தவர்களாகவும் மானத்துக்கு உயிரினும் மேலான முக்கியத்துவத்தை அளித்தவர்களாகவும் இருந்தார்கள் என்பதையும் நிறுவுகிறார்.   அதென்ன கள்ளர் நாடு என்ற கேள்வி இந்த நூற்றாண்டு வாசகர்களுக்கு எழும் என்பதை உணர்ந்துகொண்டு கள்ளர் நாடு என்பதற்கான விளக்கத்துடன் கதைக் களம் மற்றும் கதாபாத்திரங்களின் பின்னணியை அறிமுகப்படுத்துகிறார். இரண்டாம் அத்தியாயத்தில் பட்டமங்கலத்து அம்பலக்காரர் வல்லத்தரையனின் வீரத்தையும் தம்பி வைரமுத்தன், தங்கை வீரம்மாள் மீதான அவனது பாசத்தையும் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் பகைத் தீயை மூட்டி குளிர்காயப் போகும் வல்லத்தரையனின் மைத்துனன் உறங்காப்புலியையும் அறிமுகப்படுத்துகிறார். அடுத்த அத்தியாயத்தில் தான் வாளுக்குவேலி, அவனது தம்பி கறுத்த ஆதப்பன், தங்கை கல்யாணி ஆகியோரை அறிமுகப்படுத்துகிறார். வாளுக்குவேலி நாயகன் என்றாலும் வல்லத்தரையனும் அவனது தம்பி வைரமுத்தனும் எதிர்நாயகர்கள் இல்லை. வல்லத்தரையன் மானத்துக்காக உயிர் நீப்பது ஒரு காவிய முடிவாக இருக்கிறது.   இவர்கள் அனைவருமே சூழ்நிலைகளால் சில தவறுகளைத் தெரிந்தும் தெரியாமலும் செய்பவர்கள். அந்நிய எதிரிகளும் துரோகிகளும் ஊற்றும் எண்ணெய்யில் இவர்களின் பகைத் தீ வளர்கிறது. இதனால் அருகருகே இருக்கும் இரண்டு நாடுகளுக்கும் போர் மூண்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தமிழர்கள் சாதி, மதம் உள்ளிட்ட புறக் காரணிகள், மற்றும் தனிப்பட்ட பகை, வன்மம் போன்ற அகக் காரணிகள் ஆகியவற்றால் சகோதர யுத்தம் செய்தால் அதனால் பயனடைவது எதிரிகளும் துரோகிகளுமே என வலியுறுத்துவதற்கே இந்த நாவலை எழுதத் தேர்ந்தெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. 1983-ல் இதன் முதல் பதிப்பு வெளியாகியிருக்கிறது. அப்போது இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலை நிகழ்ந்தது. தீவிரமான ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார் கலைஞர். இனப்படுகொலையை எதிர்த்து பதவியை ராஜிநாமா செய்கிறார். 1983க்குப் பிறகு தமிழகத்தில் புலிகள் உள்ளிட்ட ஈழப் போராளிக் குழுக்கள் வலுப்பெறுகின்றன. அவற்றுக்குள் நிகழும் சகோதர யுத்தத்தைக் கண்டு மனம் கசக்கிறார் கலைஞர். சகோதர யுத்தம் வேண்டாம் என்று அவர்களிடம் மன்றாடுகிறார். ‘தென்பாண்டிச் சிங்கம்’ நாவலில் அவர் எதை எதிர்த்து எழுதினாரோ அதையே நிஜ வாழ்விலும் எதிர்கொள்ள நேரிட்டது.   கலைஞரின் பல்வேறு ஆளுமைச் சிறப்புகள் இந்த நாவலில் வெளிப்படுகின்றன. வெள்ளை அய்யர் என்ற கதாபாத்திரத்தை தீயவராக சித்தரிக்காமல் வெள்ளையர்களுடன் சமரசம் செய்துகொண்டாலும் உள்ளூர் அம்பலக்காரர்களுக்கும் நல்லது நினைப்பவராக சித்தரித்திருப்பதன் மூலம் அவர் பார்ப்பனர்களை வெறுத்தவரல்ல என்பதை உணரலாம். அந்தக் கால மக்களின் கடவுள் நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகளை சிறுமைபடுத்தாமல் சித்தரித்திருக்கும் விதத்திலும் தன் சொந்தக் கொள்கைகள் தாண்டி அனைவரையும் அரவணைக்கும் அவரது பண்பைக் காண முடிகிறது. அதே நேரம் கடவுள் மறுப்புக்கொள்கையையும் புத்திசாலித்தனமாக சில இடங்களில் புகுத்தியிருக்கிறார். மூன்றாம் அத்தியாயத்தில் பாகனேரித் திருவிழாவில் கோவில் தேர் நகர்வதில் இருக்கும் மனித உழைப்பையும் அறிவாற்றலையும் பற்றிய சுட்டிக்காட்டல் இதற்கு ஓர் உதாரணம். அதே இடத்தில் உழைத்துச் சாதிப்பது ஒருவராகவும் அதற்கான பாராட்டைப் பெறுவது வேறொருவராகவும் இருக்கும் நாட்டு நடப்பையும் சுட்டிக்காட்டுகிறார். தன் அரசியல் வாழ்வின் கடைசிக் காலத்தில் அவர் எதிர்கொண்ட மற்றொரு அநியாயம் பற்றியும் அவர் முன்கூட்டியே இதில் சொல்லியிருக்கிறார். அல்லது அப்போதும் அவர் அதை அனுபவித்துக்கொண்டிருந்தாரோ என்னவோ!   நாவலில் பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு ஒன்றும் அவ்வளவு முற்போக்கானது என்று சொல்லிவிட முடியாது. கணவனே கண்கண்ட தெய்வம் என்ற தமிழ்ப் பாண்பாட்டை அடியொற்றிய வலியுறுத்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும் வல்லத்தரையனின் தங்கை வீரம்மாளும் வாளுக்குவேலியின் தங்கை கல்யாணி நாச்சியாரும் அவனது காதலியும் நடனக்காரியுமான சுந்தராம்பாள் என அனைவருமே அன்பும், அற உணர்வும், துணிச்சலும் மிக்க பெண்கள், ஆண்களின் தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்தும் பெண் கதாபாத்திரங்களையும் நாவலில் காண முடிகிறது. பாலியல் சுகம் உட்பட வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் துய்க்க விரும்பும் நடனக்காரியான வடிவாம்பாள் கதாபாத்திரமும் அந்தக் கால சினிமாக்களைப் போல் தீயவளாகச் சித்தரிக்கப்படவில்லை. அவள் எந்தத் தவறும் செய்யாமல் அவளது ஆசைகள் எதுவும் நிறைவேறாமல் மாண்டுபோகும்போது அக்கதாபாத்திரத்தின் மீது பரிதாபம் ஏற்படுகிறது.   மருது பாண்டியர்கள் நாவலின் நேரடிக் கதாபாத்திரங்க‌ள் இல்லை என்றாலும் அவர்களது போராட்டமும் அதற்கு ஆதரவாக இருந்தவர்கள் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தந்திரமும் உணர்த்தப்படுகின்றன. சிவகெங்கைச் சீமையைச் சுற்றியமைந்த நாடுகளின் அரசர்களைப் போன்ற அம்பலக்கார்கள் ஆங்கிலேயரைப் நேரடியாக பகைத்துக்கொள்ளாமல் அவர்களை எதிர்த்துப் போராடிய மருது பாண்டியர்களுக்கு படைகளை அனுப்பி மறைமுகமாக உதவிய வரலாற்று நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக் காளை தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும் அந்தக் காளைகளை அரச குடும்பத்தினர் பெற்ற பிள்ளை போல் வளர்த்ததும் பதிவு செய்யப்பட்டுள்ளன.   பல இடங்களில் கலைஞரின் மொழிப்புலமையை, வார்த்தை ஜாலங்களை கதைகூறலில் புதுமையைப் புகுத்தும் முயற்சிகளையும் ரசிக்க முடிகிறது. இவற்றால் 453 பக்கங்களுக்கு நீளும் நாவலை முழுமையாக ரசிக்க முடிகிறது. தேர்ந்த திரைக்கதை ஆசிரியரான கலைஞர் திரைப்படங்களில் கையாளப்படும் ஃப்ளாஷ்பேக் உத்தியையும் சில இடங்களில் அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த நாவலை 2000க்குப் பிறகு எழுதியிருந்தால் இந்தக் காலத் திரை ரசனைக்கு ஏற்ப மேலும் சில திடீர் திருப்பங்களை (ட்விஸ்ட்) வைத்து இந்தக் கதையை எழுதியிருப்பார் என்று சொல்லலாம். தன் கடைசி ஆண்டுகளில் ஃபேஸ்புக்கிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு காலமாற்றத்துக்கு தன்னைத் தகவமைத்துக்கொண்டவர் ஆயிற்றே!   எல்லாவற்றுக்கும் மேலாக நாவலில் எழுத்துப் பிழைகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை. ஒவ்வொரு எழுத்தையும், காற்புள்ளியையும் அரைப்புள்ளியையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறார் கலைஞர் என்று தோன்றுகிறது. கலைஞரின் இலக்கிய மதிப்பைக் கேலிபேசும் இன்றைய இலக்கியவாதிகளும் பதிப்பாளர்களும் முதலில் இதையாவது அவரிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும்.    நாவலில் குறைகளும் இல்லாமல் இல்லை. வாளுக்கு வேலி, சுந்தராம்பாளைத் தவிர மற்ற அனைவருமே எதிரே இருப்பவர் சொல்வதைக் கேட்கும் பொறுமை இல்லாதவர்களாகவும், ஊகங்களின் அடிப்படையில் முடிவெடுப்பவர்களாகவும் அவற்றை உடனடியாக செயல்படுத்தி தங்கள் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். நாவலின் கடைசி அத்தியாயங்களில் இந்தக் குறையைப் பெரிதும் உணர முடிகிறது. உறங்காப்புலியை வல்லத்தரையனும் அவனது தம்பி வைரமுத்தனும் கடைசிவரை நம்புவதும் ஏற்க முடியவில்லை. இந்தக் குறைகளை எல்லாம் தாண்டி கலைஞரின் தமிழ்ப் புலமையை, கதைபுனையும் திறனை, அதன் வழியே வரலாற்றைப் புரியவைக்கும் ஆற்றலை, தமிழுணர்வை, சமூக அக்கறையைப் புரிந்து கொள்ள ‘தென்பாண்டிச் சிங்கம்’ ஒரு முக்கியமான ஆவணம்.   *** சங்கத் தமிழ்: கடற்கோள் வென்ற‌ கலைஞர் ஸ்டாலின் சரவணன்   கலைஞரின் அரசியல் வாழ்வை மதிப்பிட திராவிட இயக்க வரலாற்றிலிருந்து துவங்குதல் நலமெனில் கலைஞரின் தமிழ்த் திறனை மதிப்பிட சங்க இலக்கியத்திலிருந்து நம் பார்வையைத் துவக்குதல் நலம்.   இந்திய வரைபடத்தில் அடிப்பகுதி ஏறக்குறைய தொட்டிலின் வடிவத்தில்தான் இருக்கும். தமிழ்நாடுதான் உயர்நாகரிகத்தின் தொட்டிலாகவும் இயங்கி வந்துள்ளது. ‘தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளுவது’ என்பது ஊர்பக்கச் சொலவடைகளில் ஒன்று. கலைஞர் அந்த வேலையைச் செய்தவர்தான். தமிழர்களின் தொடைகளில் சொரணைக்கென கிள்ளுவதும் மத்திய அரசை தொட்டிலென ஆட்டியே பல காரியங்களை மொழி வகையில் சாதித்து வந்தவரும்கூட.     ‘சங்க காலம் தமிழர் நாகரிகத்தின் தோற்றக் காலம். அதற்கு முந்தைய காலம் இனக்குழு சமத்துவக் காலம்’ என்பார் பேராசிரியர் நா.வானமாமலை. உயர்ந்த நாகரீகமும் மிளிர்ந்த சிந்தனையும் சங்க இலக்கியத்தின் பக்கங்களில் உண்டு. பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் சங்க இலக்கியங்கள். கிரேக்க, ரோம நாகரிகங்களுக்கு இணையாகப் பேசப்படும் நாகரிகத்தை சங்க இலக்கியத்தில் கண்டடையலாம்.     கிமு 1000ல் ஆண்டதாகக் கருதப்படும் சாலமன் மன்னன், தமிழ்நாட்டிலிருந்து பொன்னும் வெள்ளியும் யானைத் தந்தமும், மனிதக் குரங்குகளும், மயில் தோகையும் இறக்குமதி செய்ததாக ஹீப்ரு மொழி விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளதாக ஆர். பார்த்தசாரதி குறுந்தொகை பதிப்புரையில் குறிப்பிடுகிறார். மேலும், “கிரேக்கரும் ரோமானியரும் யவனர் எனச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களுடைய குடியிருப்புகள் கீழைக் கடற்கரை ஓரங்களில் அமைந்திருந்தன. யவன வீரர் பாண்டியர் அரண்மனைகளில் காவலாளிகளாக இருந்தனர் எனவும் இலக்கியங்கள் சான்று தருகின்றன” என்கிறார்.    உலக இலக்கியங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு, சங்க இலக்கியங்களுக்கு உண்டு. ஏனெனில் அவை சமயம் சாராதவை. மன்னர் பாரி தனது அரசவையில் பாடிய புலவர்களுக்குப் பரிசாக 300 ஊர்களைத் தந்திருப்பதாக புறநானூறு கூறுகிறது. புலவரே மன்னரென வருவதைக் கற்பனையில் வைத்தால் கலைஞர் மனக் கண்ணில் வந்து போவார். இங்கு கலைஞரை மன்னர் எனக் குறிப்பிடுவது ஓர் உவமைக்காகவே!    ஏனெனில் அரசன் என்பதும் அரசு என்பதும் அத்தனை பெருமைக்குரியதல்ல என்றே கருதுகிறேன். “மக்கள் நலன்களுக்காக என்றுச்சொல்லித் தனியுடைமையைப்பாதுகாப்பதும் அதற்காக எல்லாநடவடிக்கைகளையும் எடுப்பதும் அரசு” என்ற பிரடெரிக் ஏங்கெல்சின் வார்த்தைகள் சத்தியமிகுந்து இன்றும் பொருந்தி வருகிறது. மேலும் அரசர்கள் என்பவர்களே ஊதாரித்தனமான உல்லாச வாழ்க்கையை, சுகபோகத்தை பலநூறு ஆண்டுகள் முன்பு அனுபவித்ததாக பதிவுகள் சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் உள்ளன.    சமூக நீதியை தன் அரசியல் வாழ்வின் வழுவாத பகுதியாகக் கொண்டவர் கலைஞர் என்பதை திராவிட இயக்க வரலாறு முன்மொழிகிறது. சாதாரணமாக அடுத்தவருக்கு அன்பின் நிமித்தம் கையெழுத்திடும்போது கூட ‘தமிழ் வெல்லும்’ என்றே எழுதுவார். வள்ளுவரை தமிழின் அருஞ்சக்தியாகக் கருதிய கலைஞர், கணபதி ஸ்த‌பதியை அழைத்து “கன்னியாகுமரிக் கடலில் வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்கனும். இந்திய நாடு இங்கே முடியுதுங்கிறாங்கள்ல! இல்லை; இங்கே தமிழ்நாட்டிலிருந்துதான் தொடங்குதுங்கிறதைச் சொல்ற மாதிரிஅமையனும். குமரியிலிருந்து வள்ளுவர் நேரா இமயத்தைப்பார்க்கிறார்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவரின் தமிழ் நிலப்பற்று, தமிழ் மொழிப்பற்று ஆகியவற்றை ஆழஅகலமாக அறியமுடிகிறது.   சமூக நீதி, தமிழ், தமிழர் நலன் என்பதையே தன் காலத்தின் அறைகூவலென வைத்திருந்தார். தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டவர்களுக்கு பணி நியமனங்கள் 20% அளிக்கும் சட்டம், தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம், செம்மொழித் தமிழ் ஆய்வுக்காக சென்னையில் மத்திய நிறுவனம், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற மொழிசார் பணிகளை தனது ஆட்சிக் காலத்தில் செய்தவர். இதெல்லாம் இருக்கட்டும்.   விளையாட்டாக நாம் பேசிக் கொள்வதுண்டு. “தமிழில்தானே சொல்கிறேன். ஏன் புரியவில்லை?”. “திண்டோர் நள்ளி கானத் தண்டர் / பல்லா பயந்த நெய்யிற் றொண்டி” என்று தமிழில் சொன்னால் புரிந்து விடுமா? சங்கச் செய்யுள்கள் புரிவதற்கு எளிதானவை அல்ல. கலைஞர் இதையே கவிநடையில் எளிதினும் எளிதாக எழுதுகிறார். “வள்ளல் நள்ளியின் வளநாட்டு ஆயர்/ அள்ளி வழங்கும் நெய்யுடன்/ தொண்டி மூதூர் நெல்லரிசிச் சோறு பிசைந்து/ குண்டுப் பாத்திரம் ஏழில் நிறைத்துத் தரினும்” என்றால் புரிகிறதுதானே!    இத்தகைய பெரும்பணியை அத்தனை அழகியலோடு கலைஞர் ‘சங்கத் தமிழ்’ நூலில் தந்துள்ளார். காவிய அந்தஸ்தை நெருங்கியும் நெருங்காமலும் நிற்கும் இந்நூல் குறித்த பார்வையை ஒரு கட்டுரையில் வைப்பது கடினம். எனவே இந்த‌ நூலில் இடம் பெற்றுள்ள குறுந்தொகைப் பாடல்களுக்கான கவிதை வரிகளில் கலைஞரின் உவமையும் உரையும் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை முன் வைத்திருக்கிறேன்.   []     ஆண்டாண்டு காலமாக சங்க இலக்கியங்களுக்கு உரைகள், புத்துரைகள் எழுதப்பட்டு வருகின்றன. சங்கத் தமிழுக்கு கவிநய உரை தந்ததன் வழி காலத்தின் பெரும்பணியில் கலைஞர் தன்னையும் ஒரு புள்ளியென இணைத்துக் கொண்டுள்ளார். ஆரம்ப காலங்களின் சங்கச் செய்யுள்கள் அப்படியேதான் வாசிக்கப்பட்டு வந்துள்ளன. பிறகு பொருள், பொழிப்புரை, விளக்கவுரை என உரையாசிரியர்களின் பணி தேவைக்குரியதாகி விட்டது. சங்கத்தமிழில் கலைஞர் தந்துள்ள கவித்துவ உரையில் ஒவ்வொரு பாடலுக்கும் பொருள்சொல்லி வைத்து விலகி விடவிலை. மாறாக முன்பின் கதைகளைச் செருகி எழுதியுள்ள விதம் ரசனைக்குரியது.    “திண்டோர் நள்ளி கானத் தண்டர்” எனத் துவங்கும் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் எழுதிய குறுந்தொகை 210-வது பாடலொன்றுக்கு ‘காக்கைக்கு நன்றி காட்ட’ என்ற தலைப்பில் உரை எழுதியுள்ளார். “போரின் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவனின் வருகைக்காக காத்திருக்கிறாள் தலைவி.  அவன் வருகைக்காக காத்திருக்கும்பொழுது விருந்தினர் வருவதற்கான காக்கை கரைகிறது. காக்கை கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவர் என்பது தமிழரின் நம்பிக்கையாக கருதப்படுவது. தலைவன் வந்ததும் காக்கைக்கு பலி என்று சொல்லக்கூடிய இரையை தலைவனும் தலைவியும் தருவதாக" பாடலின் பொருள்.    இதற்கு கலைஞர் எழுதியுள்ள உரையில் காதல் இன்பம் ததும்பும். தமிழர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த போக்கு, உயிர்கள் எழுப்பும் சமிக்கைஞகளை வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் தமிழர் நம்பிக்கை, பிரிந்தவர் சேரும்போது கிடைக்கும் அளவில்லா இன்பம் ஆகியவற்றையெல்லாம் தன் உரையில் கலைஞர் கொண்டு வந்திருக்கிறார். ‘காகம் கரைதல்’ குறித்து பேராசிரியர் தொ.பரமசிவனின் ஒரு பத்தி நினைவுக்கு வருகிறது.  “கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் செல்பவர் திரும்பி வரும்போது திசை தவறிவிடாமல் திரும்பிட காக்கையையும் அழைத்துச் செல்வர். திசையில் குழப்பம் வரும்போது காக்கையைப் பறக்க விட்டால் அது செல்வதை வைத்து படகைச் செலுத்தி கரை திரும்புவர். கடலில் இருந்து பறக்கத் தொடங்கும் காகம் தலைவனின் வீட்டை அடைந்து அதன் கூரை மீதமர்ந்து கரைகையில் தலைவனின் வருகை நெருங்கி விட்டதை தலைவி அறிந்து கொள்வாள்”. இதுவே காக்கை கரைதலைத் தொடர்ந்து விருந்தினர் வருகை என்னும் நம்பிக்கையாக பின்னாளில் மருவுகிறது.    போகிற போக்கில் தலைவியை வருணிப்பதைப் போல் தோழியையும் கலைஞர் உவமையோடு எடுத்துரைப்பார். ‘நெடும்புருவத் தோழிப் பெண்’ என்றொரு பதத்தைப் பயன்படுத்தி இருப்பார். ‘வேரில் பழுத்த பலா போன்ற பாவை’ என்ற தலைவிக்கான உவமை வாசிப்பின்பத்தைப் பெருக்குகிறது.   பலா என்பதே சுவைமிகுந்தது. வேரில் பழுத்த பலா செழுமை கூடியது. வேரின் அருகில் வளரும் பலா சத்துக்களை அதிகம் பெற்று கொழுத்திருக்கும். பாவை அவளும் செழுமையான அழகுடையவளாக இருப்பதையே கலைஞரின் உவமை வழி அறிய முடிகிறது.    “வயலருகே இருக்கக் கூடிய மாமரத்தில் உள்ள மாம்பழம் பழுத்து வயலில் வீழ்கிறது. அதனை வயலில் இருக்கக் கூடிய மீன் சாப்பிடக் கூடிய ஊரின் தலைவன். மனைவியின் சொல் பேச்சு கேட்கிறவன் தலைவன். கண்ணாடி முன் நின்று நாம் சொல்வதை அப்படியே பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடி போன்றவன் என்று அவனை ஆசைநாயகியான காமக் கிழத்தி தனது தோழியிடம் குறிப்பிடுவாள்” என்பது ஆலங்குடி வங்கனார் எழுதிய 'கழனி மாஅத்து 'எனத் துவங்கும் பாடலின் பொருள்.    “வாவியின் நீரில் வளைந்து துள்ளும்/ வாளை மீன் வாய்வீழ் வளநாடிதுவே” என்று உரையில் வரும் இரண்டு வரிகளில் நாட்டின் வளமை காட்சிப்படுத்தப்படுகிறது.  பாடலில் வருவதை எளிமை உடுத்தி “வலுவில் விழுந்த மாங்கனிதன்னை/ வாளைமீன் விழுங்கி மகிழ்தல் இயல்பே!” என்றபடி மாங்கனியை பெண்ணுக்கும் வாளைமீனை ஆணுக்கும் தெளிவுற பொருத்தியிருக்கிறார்.    “உண்ணத் தெவிட்டா ஒட்டுமாங்கனிகள் வண்ண மாதர்கள் பெருந்தனம் போல” என்னும் கலைஞரின் உவமை கிறங்கடிக்கிறது. மாங்கனிகள் என்பதோடு நிறுத்தாமல் 'உண்ணத் தெவிட்டா' என்பதைச் சேர்த்துச் சொல்லும்போது உவமை மனதை கலைத்துப் போடுகிறது. 'போதும் என்ற மனம் பொன் செய்தாலும்' ஆண் இந்த இடத்தில் பொன்னை மறுத்து மாங்கனிக்கே மண்டியிட்டுப் பெருமையுறுவான்.    'ஒரு பொதுமகளின் புலம்பல்’ என்று இந்த உரைக்குத் தலைப்பிட்டிருப்பார்.  ‘பொதுமகள் என்னும் இருள் விரட்டும் ஒளிப்பிழம்பு’ என்ற வரிகளை வாசிக்கையில் சொற்களுக்கு ஒளியேற்றும் வித்தை கலைஞருக்கு சாதாரணம் என்று புரிகிறது. அவன் மனைவியைக் குறித்து பொதுமகள் புலம்புமிடத்தில் 'அவரவர்க்கு ஒரு நியாயம் உண்டு' என்ற உணர்வை உரையாசிரியர் மதித்து எழுதும் பண்பை அறிய முடிகிறது.    பெண்களின் அக உணர்வை நுட்பமாக உரையில் கையாண்டிருக்கிறார். தன் தலைவனின் புதல்வனை 'தன் புதல்வன்' என பரத்தை எண்ணியிருப்பது குறிப்பிடத்தக்கது. பெண் ஆண்டாண்டு காலமாக உன்னதங்களை தன் நெஞ்சில் தாங்கிய, எளிதில் எவரும் புரிந்திட இயலா சூத்திரக்காரியாகவே இருக்கிறாள் என்பதை சங்கத்தில் வரும் சிறுசிறு வார்த்தைகள் வழி அறிய முடிகிறது. கலைஞர் இதையெல்லாம் தெள்ளத் தெளிவாக அதே நேரம் கவிநயம் குன்றாமல் உரையில் எடுத்துச் செல்கிறார்.   அவன் மனைவியை 'தேவியாம் திருமகள்' என்பவள் சட்டென தன் காதலன் வரவைத் தடுத்து நிறுத்தும் அவளின் போக்கை நினைவுக்கு கொண்டு வந்து, “கல் நெஞ்சக்காரி - அவன் துணைவி/ கண்ணீரையே கயிறாய்த் திரித்து அவனைக் கட்டிப் போடுகின்றாள்” என்று அடுத்தொரு பத்தியில் கூறுவாள். பொதுமகள் என்னும் நிலையிலிருந்து அவன் தன்னை நிலை மாற்றம் செய்வான் என்ற அவளின் நம்பிக்கை பொய்த்ததை புலம்பலாக உரையில் துல்லியமாக கூறியிருப்பார். அதே நேரம் பொதுமகள் முழுமுற்றாய் வாழ்வின் நம்பிக்கையை கைவிடாதவள் என்பதை “மதுவுண்டு செல்வதற்கு புதுவண்டு வராமலா இருந்துவிடும்!” என்பதன் மூலம் தெளிவுறுத்துகிறார்.    குறுந்தொகையின் 32வது பாடல் “காலையும், பகலும் கையறு மாலையும்” என்று தொடங்கும். “குக்கூ என்றது கோழி” என்ற 157வது அள்ளூர் நன்முல்லையார் எழுதிய பாடல் என இரண்டையும் அருகருகே பொருத்தி ஒரு கதை சொல்லல் உத்தியில் கலைஞர் எழுதியிருக்கும் உரை மிகவும் சிறப்பான ஒன்று.   தலைமக்களின் கற்பு வாழ்க்கை, களவு வாழ்க்கை இரண்டையும் பேசுகிறது அகப்பாடல். களவு வாழ்க்கையினின்று கற்பு வாழ்க்கைக்கு தலைவி இடம் பெயர்ந்த பின்பு மனவேறுபாட்டைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றது. “தும்பை மலர் மாரியெனப் பொழிவது போல்! தூய வெண்தாடி தரையளவு நீண்டது போல்!” என அருவியை உவமையால் குளிர்விக்கிறார் உரையாசிரியர் கலைஞர். “மலர்ந்த தாமரைப் பூக்கள் இரண்டு/ மார்பினின் தலைகீழாய்க் கவிழ்ந்தனவோ?/ தண்டுகள் அடிவரை வெட்டுண்டு/ வண்டுகள் போலக் குந்தியதோ?/ கருங் காம்பிரண்டு கொண்டுருண்ட கனி குலுங்க” எனப் போகும் கலைஞரின் உவமையை வாழ்த்தும் மனம் நமக்கெல்லாம் வாய்க்காமலா போகும்!   காதல் வேறு, அறிவு வேறு, காதலில் பொழுதுகள் குறித்துத் தலைவி மயங்குவது காதலுக்குச் சிறப்பு என்பதை உரையாசிரியர் உணர்த்துகிறார். கற்பு வாழ்க்கையில் இராப் பொழுதை தலைவியிடம் தோழி கேள்வியென வைப்பாள். “கடந்து போன இரவு; கனிச்சாறா? தேன் பாகா? கன்னத்தில், கழுத்தில் பற்குறியும் - நகச் சின்னத்தை அதற்குக் கூடும் மறைப்பதற்கு” என்று கலைஞர் காட்சிப் படுத்துகிறார். வெட்கத்தால் முகம் சிவக்கும் தலைவி, நமக்கும் தோழிக்கும் மேலும் சொல்ல என்ன இருக்கிறது!?   “யாயும் ஞாயும் யாரா கியரோ?/ எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்?/ செம்புலப் பெயல்நீர் போல / அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!” - இந்த சங்கப்பாடல் பிரசித்தி பெற்ற பாடல். ஆனால் இப்பாடலை எழுதியவரின் பெயர் கிடைக்காததால் தமிழ்ச் சமூகம் அப்பாடலின் பெயராலேயே அவரையும் விளிக்கிறது செம்புலப் பெயனீரார் என்று. இது குறுந்தொகையின் 40வது பாடல். “நமக்கு இதற்கு முன்னர் எந்த அறிமுகமும் இல்லை. பெற்றோரும் உறவினர் இல்லை. ஆனால் நமது மனது மழையும் செம்மண்ணும் போல ஒன்றுக்கொன்று பிரிக்க இயலாமல் கரைந்து போனது” என்பது அதன் பொருள. ‘அவள் நிலமானாள்; அவன் மழையானான்’ என்பது கலைஞர் வைத்திருக்கும் உரைத் தலைப்பு. எளிய வாசிப்பாளனும் புரிந்து சுவைக்கும் வரிகள்தான் அவர்தம் நடை.   கருங்கூந்தலை அமாவாசையெனச் சொல்கிறார். “பழம் புராணப் பாம்பு விழுங்கும் கதை பொய் எனினும், பழம்போல எனை விழுங்கி விழுங்கி விடுவிக்கும் இந்தப் பள்ளியறைக் கதை மெய்தானே!” என்று எழுதியிருப்பது அவர்தம் பகுத்தறிவையும் தமிழையும் சமரசம் இன்றிக் கையாளும் திறனைக் காட்டுகிறது.   ‘நெடும் பல்லியத்தை’ எனும் பெண்பாற் புலவர் “அயிரை பரந்த அம்தண் பழனத்து” எனத் தொடங்கும் பாடல் சங்கத்தமிழில் வரும். “அயிரை மீன்கள் சூழ்ந்த குளத்தில் ஆம்பல் மலர் பறிக்க இறங்கிடுவோர் அவசரம் காட்டுவது போல் ஏன் தலைவியுடன் இருக்க இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்? அவள் உங்களுக்கே உடையவள்” எனத் தோழி தலைவனிடம் குறிப்பிடுகிறாள். காதல் நோய்க்கு நேரம் காலம் இல்லை என்பது தலைவனின் நியாயம் என்பது பாடலின் பொருள்.   “இசையாமல் ஊடல் கொண்டாள் தலைவி; எனினும் பின்னர் இசையாமல் என்ன செய்வாள்? இசையாகி விட்டாள்” என்று கலைஞர் எழுதியிருப்பார். திரு கீ.இராமலிங்கம் அவர்கள் கலைஞரின் இவ்வரிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது “தமிழ் ஓசை அளிக்கும் செவி இன்பம்” என்று சொல்வது சாலப் பொருத்தம்.   வணங்காமுடி என்ற பெருவீரன் அவனது நண்பன் தூயனிடம் தொகுத்துரைப்பது போல “இடிக்கும் கேளிர்” எனத் தொடங்கும் வெள்ளி வீதியாரின் பாடலுக்கு உரை எழுதியிருப்பார். இடித்துரைக்கும் சுற்றத்தாரிடம் “இதில் என்னுடைய தவறேதும் இல்லை. எல்லாம் உங்கள் குறைதாம். குறை கூறுவதை நிறுத்துங்கள். பாறைமேல் வைக்கப்பட்டிருக்கும் வெண்ணைய்க் கட்டி வெயிலின் வெப்பத்தால் உருகி வழிந்தோடும் போது, காவலுக்கு இருக்கும் கைகள் இல்லாமலும், வாய் பேச இயலாமலும் ஊனமான ஒருவனின் நிலைதான் காமம் உடையவரின் நிலை. ஆகவே இடித்துரைக்க வேண்டாம்” என்னும் பொருளை உடைய பாடலுக்கு கலைஞரின் உரை ஆண்களின் மனதை காட்சிப்படுத்துவதில் பிழையற்று அமைந்திருக்கும்.   “ஊர் உண் கேணி” என்னும் பரணர் எழுதிய பாடலுக்கு உரையை எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என இசைப் பாடலாகவே எழுதியிருப்பார் கலைஞர். பசலையின் வேலையை எடுத்துச் சொல்லும் பாடலுக்கு உரையெழுதுகையில் பலவித நடைகளையும் சோதித்துப் பார்த்து எழுதும் ஆர்வம் கலைஞருக்கு இருந்துள்ளதை அறிய முடிகிறது. “பழ மழைக் களித்த புதுப் புன வரகின்” என்னும் ஒக்கூர் மாசாத்தியாரின் (பெண்பாற் புலவர்) பாடலுக்கான உரையில் அத்தனை உவமை நயம் இருக்கும். இதையும் ஆதி தாளம், சண்முகப்ரியா ராகம் என இசைப்பாடலாகவே எழுதியிருக்கிறார்.   “பலநாட்களாகப் பெய்த மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்ட வரகு மழையால் தழைதழைத்துக் கிடக்கிறது. ஆண் மான் அதனை மேய்ந்து கொண்டிருக்கிறது. அந்த வரகுத் தழைகளுக்கு இடையே முல்லைப் பூவும், காட்டுப் பூனை சிரிப்பது போன்ற காட்சி தரும் அரும்புகளும், பிற மணம் தரும் மலர்களும் பூத்திருக்கின்றன. அதனை வண்டுகள் சுற்றி வருகின்றன. அத்தகைய நிலத்திற்குப் பொருள் தேடச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை” என்பது பாடலின் பொருள். இதில் வலம் வரும் மலர்கள் பெண் என்றால் வண்டு என்பது ஆண். “இருள் மூடிப் போகாமல் வாழ்வில் இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ தோழி?” என்று கலைஞர் உரையை முடித்திருக்கிறார்.   இன்னும் பொருள் வயிற் பிரிவு நிலமெங்கும் நிகழ்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. உலகமயமாக்கலுக்குப் பின் பொருளின் தேடல் வாழ்க்கையைக் கொடூரமாக குலைத்துக் கொண்டே வருகிறது.எண்ணெய்க் கிணறுகளில், பாலை நிலங்களில், அயல்நிலத்துச் சாலைகளில் சேர்ந்து கருகுவது எத்தனை பெண்களின் இரவுகள்! “பசலை நிறம் படர்ந்து விடும் என் உடல் முழுதும் எனச் சொல்லி/ பசுஞ்சோலைப் பூ மெத்தை மீது அவர் கரம் பிடித்து நான் அழுதும் பலனில்லை” என்று அழும் ஒரு பெண்ணின் கண்ணீர்த் துளி காலம் தாண்டி இன்னும் காயவேயில்லை.     கிரிக்கெட் விளையாடுபவருக்கு அரிதென கிடைக்கும் ஃப்ரீஹிட்டில் அடித்து ஆட முயல்வார். கலைஞரும் கிடைக்கும் இடங்களிலெல்லாம் தன் அரசியல், பகுத்தறிவை நுழைத்து எழுதுகிறார். சந்து கேப்பில் லாரி ஓட்டும் கலை அவருக்கு புதிதல்ல. “உள்ளார் கொல்லோ” எனும் குறுந்தொகை பாடலுக்கு எழுதும் உரையில் “பல்லியின் சொல்லுக்கு நிச்சயம் பலனுண்டு - இதைப் பகுத்தறிவாளர் மறுப்பார் எனினும் பல்லியின் சொல்லுக்கு நிச்சயம் பலனுண்டு” என்பார்.அதாவது பாடலில் உள்ளதைச் சொல்ல வேண்டி சொன்ன போதும் தன் மறுப்பையும் வாகாக நுழைக்கிறார்.   “பணைத்தோட் குறுமகள்” எனத் துவங்கும் பாடலில் தலைவியை அடைதல் வேண்டிப் பனை மடலினால் ஆன குதிரையில் தலைவன் ஏறி வருவான். அதற்கான உரையை இசைப்பாடலென எழுதியிருப்பார். தன் காதலின் உறுதியை அறிவிக்கும் தலைவன், “உளத்தினிலே இருப்பவளை இழப்பதற்குத் துணியேன்! செங்கோன்மை நியாயத்தைக்கூறட்டும் - அந்தச் செந்தமிழாள் எனக்கென்றே ஆகட்டும்!" என்று கூறுவதைப் போல எழுதியிருக்கிறார். செங்கோன்மை நியாயத்தின் பாற்தான் நடக்க வேண்டும் என அரசியல் அறத்தை லாவகமாக உரைக்கும் தன்மையெல்லாம் கலைஞரின் தனித்தன்மையை உணரச் செய்கிறது.   தோழி என்பவள் காலந்தோறும் இருக்கிறாள். சங்கப்பாடல்களின்வழி அவளே தலைவியின் மனசாட்சியாக இருக்கக் கூடும் என்பதை அறிய முடிகிறது. கலைஞரின் உரையில் தோழியின் பன்முகத்தன்மையை அறிந்து கொள்ள முடிகிறது. “குக்கூ என்றது கோழி" என்ற அள்ளூர் நன்முல்லையார் பாடலுக்கான உரையில் “அந்த அழகு ரோஜா, தோழியெனும் முள் ஒன்றைப் பாதுகாப்புக்கு அழைத்து வந்திருந்தாள்!" என்கிறார். கோழி கூவுவதற்கு முன் தலைவியின் தலைவி வீடு செல்லும் தலைவனை “எதற்காக வந்தீர்?” என்று கேட்பாள் தோழி. “யாரும் பறிக்காத மலராம் உன் தலைவிதனை மறுக்காமல் அவள் பெற்றோர் எனக்களிக்க உன் துணையை வேண்டி வந்தேன்” என்று பதிலளிப்பான் தலைவன். “தாய்தந்தை விருப்பம் பின்னர் - முதலில் தளிர்க்கொடியாம் என் தலைவி விரும்பவில்லை உம்மை!” என்ற தோழியின் கூற்று காதலில், மணத்தில் பெண் விருப்பம் எத்தனை முக்கியமானது என்பதனை காலத்துக்கும் உணர்த்துகிறது.   ஒவ்வொரு பாடலும் காலத்தோடு ஒட்ட ஒழுகி இன்றும் சுவை குறையாது அமையுமாறு உரையை அமைத்துள்ளார். சங்க இலக்கியப் பாடல்கள் நினைக்கும் தோறும், பேசும் தோறும், எழுதும் தோறும் இன்பத்தை அள்ளி வழங்கக் கூடியது. அதற்குக் கலைஞரின் உரை மேலும் வலு சேர்ப்பதாய் உள்ளது.   நிறைந்த அழகியல், தலைவன் தலைவி ஊடல், காமம், காதல் பதிவுகளை நாடகமாய் நிகழ்த்துகிறது கலைஞரின் சங்கத் தமிழ். யாப்பு, சொல், தொடர், பொருள் என எல்லாவற்றிலும் கலைஞர் புதுமையைக் கையாண்டுள்ளார். சூரிய நமஸ்காரத்தில் கூட “ஓம்” என்று சொல்ல மறுத்தவர் கலைஞர். தமிழ் இலக்கிய மரபில் இறை வணக்கம் என்பது எல்லோரும் கடைபிடிப்பது. ஆனால், சங்க இலக்கியம் தந்த பெரியோருக்கு வணக்கம் செலுத்தும் பொருட்டு மலர் மாரி பொழிவதை மட்டுமே கலைஞர் செய்துள்ளார்.   வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, பரிபாடல் என்ற பலவகைப் பாவகையால் ஆன சங்கப் பாடல்களை புதுக்கவிதை நடையில் எவரொருவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது கலைஞரின் உரை. ஒவ்வொரு பாடலையும் எடுத்துக் கொண்டு கதை சொல்லல் முறையில் எளிய கவிதை விளக்கமாகத் தந்துள்ளார். எளியவற்றோடு மரபையும் சேர்த்து எழுத்துப் பயணம் செய்வதென்பது மிகக் கடினம். பெரும் உழைப்பைக் கோரும் இந்தப் பணியை கலைஞர் செய்திருப்பது ஆச்சரியத்துக்குரியது அல்ல.  உழைப்பென்பது அவருக்குக் கரும்புச்சாறு அருந்துவது போலல்லவா!    யாப்பு, இலக்கணம் இவற்றை விட சொல்லும், பொருளும், உணர்ச்சியும் முதன்மையானது என்பதை உணர்ந்து கலைஞர் தந்துள்ள இந்த உரை காலத்தால் அழியாத் தமிழ்ப்பணி. காலத்தால் நிலைத்தவரின் வார்த்தை கலையை கடற்கோளும் கொண்டு செல்ல இயலுமா!   பார்வை நூல்கள்: 1. சங்கத் தமிழ் - முத்தமிழ் அறிஞர் கலைஞர்  2. கலைஞர் மு.கருணாநிதியின் படைப்பிலக்கியங்கள் – தொகுதி 1 3. சங்க இலக்கியம் – குறுந்தொகை: புத்தகம் 1 (ஆர். பார்த்தசாரதி பதிப்புரை)   4. தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டு விழா மலர்   ***   நாடகங்கள்: மூன்றாம் தமிழ் ந. முருகேசபாண்டியன்   இருபதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியத்தில் தனித்த இலக்கிய வடிவமாக உருவெடுத்த நாடகமானது, இன்று பல்வேறு வளர்ச்சி நிலைகளைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் நாடக வளர்ச்சிக்குப் படைப்புகள் மூலம் செழுமையாற்றியவர்களில் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், எஸ்.டி. சுந்தரம், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, சோ, இந்திரா பார்த்தசாரதி, கோமல் சுவாமிநாதன், ந. முத்துசாமி, ஜெயந்தன், அஸ்வகோஷ், ஞாநி. பிரளயன் முக்கியமானவர்கள்.  இத்தகையோரின் படைப்பு முயற்சிகளால் தமிழ் நாடகம் புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளது. தமிழ் நாடக உலகில் கலைஞர் எனப்படுகிற மு.கருணாநிதியின் பங்களிப்பு பன்முகத்தன்மையுடையது; நிகழ்கலை வடிவில் அழுத்தமான சமூகப்பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.   இந்திய நாடு விடுதலையடைந்த பின்னர் நாடெங்கும் தேசிய உணர்வு பொங்கி வழிந்தது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தேனும் பாலும் ஓடும், நாட்டில் ஏற்றத்தாழ்வற்ற சமூகநிலை உருவாகும் என்று மக்கள் நம்பினார். ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் நாட்டில் நிலவிய சமுதாய வேறுபாடுகள், சாதிரீதியில் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றைக் களையப் பெரிதும் அக்கறை காட்டவில்லை, ஒரே இந்தியா என்ற பெயரில் நாடெங்கும் பணக்காரர்கள், நிலக்கிழார்களின் உதவியுடன் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய ஐந்தாண்டு திட்டங்கள் போடப்பட்டாலும், உணவு உற்பத்தியில் கூட தன்னிறைவு ஏற்படவில்லை. நடுவண் அரசு, மாநில மொழிகளின் வளர்ச்சி குறித்து அக்கறையின்றி இந்தியைத் திணித்திட முயன்றது. வைதிக சநாதன இந்து மதத்தின் மேலாதிக்கம் காரணமாகச் சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றி இருந்த தீண்டாமையை ஒழிப்பதில்கூட காங்கிரசார் கவனம் செலுத்தவில்லை. காங்கிரசாரின் ஆட்சியின் மீது பரந்துபட்ட மக்கள் வெறுப்படையத் தொடங்கினர்.   இந்நிலையைச் சாதகமாக்கிக்கொண்ட திமுகவினர் தமிழகத்தில் காங்கிரஸ் பற்றி உருவாக்கப்பட்டிருந்த பிம்பம், மாயைகளை அன்றைய‌ ஊடகங்களை முழுமையாகப் பயன்படுத்தி - மேடைப்பேச்சு, புனைகதை, நாடகம், திரைப்படம் - தகர்த்தெறிந்தனர். அன்று தமிழகத்தில் பொங்கிய தேசிய உணர்வைத் தமிழ் இன உணர்வாக மாற்றுவதில் திராவிட இயக்கத்தினர் வெற்றியடைந்தனர். திராவிடர் இனக் கொள்கை, தமிழின் சிறப்பு, சமத்துவம், பார்ப்பனிய எதிர்ப்பு, பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற திராவிட இயக்கத்தாரின் கொள்கைகள் மக்களிடம் வீச்சாகப் பரவின.   இருபதாம் நூற்றாண்டில் முற்பகுதியில் தமிழ் நாடக முன்னோடிகளின் நாடகங்கள் பெரும்பாலும் புராண, இதிகாசக் கதைகளைக் கருவாகக் கொண்டிருந்தன. மிகச்சிறிய அளவில்தான் சமுதாய நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. நாட்டில் ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் பரவியபோது சமுதாய நாடகங்கள் மூலம் விடுதலைப் போராட்டக் கருத்துகள் பரப்பப்பட்டன. அப்பொழுது தனிப்பட்ட நாடகக் குழுக்கள், நாடக நடிகர்கள், பாடகர்கள் மூலம் விடுதலைக்கு ஆதரவாக நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் பெரிய அளவில் நாடக இயக்கம் நடைபெற்றதாகத் தெரியவில்லை.   திராவிடர் கழகத்திலிருந்த போது அண்ணா, கலைஞர், பாரதிதாசன், எம்.ஆர்.ராதா போன்றோர் கருத்தியல் பிரச்சாரத்திற்காக நாடகத்தைப் பயன்படுத்தினர். அண்ணாவும், கலைஞரும் தாங்கள் எழுதிய நாடகங்களில் நடிக்கவும் தொடங்கினர். அறிஞர் அண்ணா சந்திரமோகன் நாடகம் மூலம் நாடக உலகில் அடியெடுத்து வைத்தார். பின்னர் ஓர் இரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம் போன்ற நாடகங்களை எழுதினாலும், தொடர்ந்த அரசியல் பணி காரணமாக அண்ணாவினால் நாடக முயற்சியில் ஈடுபட இயலவில்லை.   இந்நிலையில் 1943ஆம் ஆண்டு நச்சுக்கோப்பை நாடகத்தின் மூலம் தமிழ் உலகுக்கு அறிமுகமான கலைஞரின் முதல் நாடகமே காங்கிரசாரிடம் எதிர்ப்பை உண்டாக்கியது. நாகப்பட்டினம் திராவிட நடிகர் கழகத்தினால் தமிழ்நாடெங்கும் நச்சுக்கோப்பை நாடகம் தொடர்ந்து நடத்தப்பட்டது. நச்சுக்கோப்பை நாடகத்தில் இடம் பெற்றிருந்த சீர்திருத்தக் கருத்துகள், விதவை மறுமண முடிவு போன்றன அன்றைய சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தின. நாடகத்தில் சீர்திருத்தக்காரனாக வரும் சிவகுரு வேடத்தில் நடித்த கலைஞரைப் புதுச்சேரியில் காங்கிராஸார் அடித்துத் தாக்கினார். இது ஒருவகையில் கலைஞரின் நாடகத்தினை அன்றைய சமூகமும் அரசியல் இயக்கமும் எதிர்கொண்ட எதிர்மறையான விளைவு.   []     கலைஞர் 1949ஆம் ஆண்டு எம்.ஆர். ராதாவிற்காக தூக்குமேடை நாடகம் எழுதித் தந்தார். அது திராவிட இயக்கக் கொள்கைகளை வலுவாகப் பிரச்சாரம் செய்தது. அதனைத் தொடர்ந்து அவர் 50களில் ஐந்து நாடகங்களும், 60களில் 3 நாடகங்களும், 70களில் இரு நாடகங்களும் எழுதியுள்ளார். அவ்வப்போது சில ஓரங்க நாடகங்கள் அவ‌ரால் எழுதப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. அவை தற்சமயம் கிடைக்கவில்லை.   தமிழகத்தில் எழுபதுகளின் நடுவில் தொலைக்காட்சி அறிமுகமாகும் வரை நாடகமே மக்களிடையே முதன்மையான பொழுதுபோக்கும் நிகழ்கலையாக விளங்கியது. எண்பதுகளின் முற்பகுதியிலும் தமிழகத்தில் மேடை நாடகம் பெரும் வரவேற்புப் பெற்றிருந்தது. இத்தகைய காலகட்டத்தில் கலைஞர் நாடக ஆக்கத்தில் பெரிதும் கவனம் செலுத்தியுள்ளார். நாடகம் மூலம் மக்களிடையே அரசியல் கருத்தைக்கொண்டு செல்வது எளிது என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. எனவேதான், “நாடக இலக்கியம் போல விரைந்து மனமாற்றம் உண்டாக்கக்கூடிய ஆற்றல் வேறு எதற்கும் அவ்வளவாக இல்லை” என்று மணி மகுடம் நாடகம் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டுள்ளார்.   சமுதாயத்தில் நாடகத்தின் செல்வாக்கைப் பற்றிய கலைஞரின் கருத்தானது உதயசூரியன் நாடகத்தில் வெளிப்பட்டுள்ளது.  அந்நாடகத்தில் வரும் மூக்கையா “தி.மு.கழகம் சினிமா, நாடகம் இவைகளையெல்லாம் தன்னுடைய கொள்கைகளை ஓரளவுக்குப் பிரச்சாரம் செய்கின்ற சாதனங்களாய் வச்சிருக்கு” என்கிறார். இது ஒருவகையில் நாடகத்தில் பிரச்சாரம் குறித்த கலைஞரின் வாக்குமூலம்.   நச்சுக்கோப்பை, தூக்குமேடை, பரப்பிரம்மம், உதயசூரியன், திருவாளர் தேசீயம் பிள்ளை, காகிதப்பூ ஆகிய நாடகங்களின் உள்ளடக்கத்தினை ஆராயும்போது, தமிழ் நாடகத்தை அரசியல் கருத்தியல் பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்களில் முதன்மை இடம் பெறுகின்றார் கலைஞர். கலைஞரின் படைப்பாக்கத் திறனில் நாடகமும் திரைப்படமும் ஒப்பீட்டளவில் சாதனைகள் படைத்துள்ளன.   நாள்தோறும் அரசியல் பணி காரணமாகத் தமிழகமெங்கும் அலைந்துதிரிந்த போதிலும், நாடகம் எழுதியதோடு, அதில் நடித்ததும் அவருடைய நாடக ஆர்வத்தினை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே மேடைப் பேச்சு, இதழ்கள் மூலம் தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கினாலும், கலைஞர் நடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டியது தற்செயலானது அல்ல. நாடக ஆக்கமும் நடிப்பும் என்பது கலையுள்ளம் மிக்கவர்களுக்கே சாத்தியமானது. நாடகமாடுதல் என்பது இழிவாகக் கருதப்பட்ட சூழல் நிலவிய வேளையில், நாடகத்தில் நடிப்பதை விருப்பமாகக்கொண்ட கலைஞர் அடிப்படையில் கலை மனம் மிக்கவர். கலையின் வழியே வாழ்க்கைப்பரப்பின் மேன்மைகளையும் இழிவுகளையும் விசாரித்திடும் கலைஞரின் கலை ஆளுமை, பன்முகத் தன்மையுடையது.   “கலைஞரின் எழுத்துக்கள் காலத்தை வென்று காட்டக்கூடியவை, திராவிட சமுதாயத்தின் தேவையான படைக்கலன்களில் ஒன்றாகவே அவர் நாடகங்களைப் படைத்தார். தமிழினத் தலைவர் என்ற ஒட்டுமொத்தமான அவரது தோற்றப்பொலிவிற்கு நாடகாசிரியர் என்ற முகம் ஒளி சேர்க்கிறது” என்ற நாடகாசிரியர் கோமல் சுவாமிநாதனின் கலைஞர் பற்றிய மதிப்பீடு ஏற்புடையதே. கலைஞரின் படைப்பாக்கத்தில் நாடகம் என்ற கலை வடிவம் சிறப்பிடம் வகிக்கிறது.   கலைஞரின் நாடகப் பிரதிகள் முன்னிறுத்தும் சமுதாய மதிப்பீடுகள் முக்கியமானவை. நாடகப் பிரதி என்ற நிலையில் அவை வெளியான காலகட்டத்தினுக்கும் இன்றைய சமூகச் சூழலுக்குமிடையில் முரண்களை எதிர்கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட அரசியல் தேவை அல்லது சமூக நெருக்கடி காரணமாக எழுதப்பட்ட நாடகப் படைப்பானது, காலப்போக்கில் பெறுமிடத்தை மதிப்பிட வேண்டியுள்ளது. மாறிவரும் சமூக, அரசியல் நிலைமைகள் அதற்கேற்ற வகையில் புதிய வகைப்பட்ட நாடகப் படைப்புகளைக் கோருகின்றன.  இத்தகு சூழலில் கலைஞரின் நாடகங்கள், பிரதி என்ற நிலையில் நவீன வாசகரால் எவ்வாறு உள்வாங்கிக் கொள்ளப்படுகின்றன என்பது முக்கியமானது. மறுவாசிப்பில் நாடகப் பிரதியானது, இன்றைய சூழலுக்குப் பொருத்தமானதா என்பது ஆய்விற்குரியது. ஒரு காலகட்டத்தில் மக்களின் பொதுப்புத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய கலைஞரின் நாடகங்களின் சமகாலத் தன்மையைக் கண்டறிய வேண்டியுள்ளது.   ஏனெனில் முன்னர் சமூகத்தடையாக விதிக்கப்பட்டிருந்த வைதிக சமய நெறிகள் இன்று வலுவிழந்து விட்டன. மூட நம்பிக்கை எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு போன்ற கருத்தியல்கள் இன்று மக்களிடம் பரவியுள்ளதால், அவை குறித்த எதிர்ப்புப் பிரச்சாரங்களை முதன்மைப்படுத்தும் நாடகப் பிரதிகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டி எழுதப்பட்ட சமூகச் சீர்திருத்த நாடகப் படைப்புகள், அந்த நோக்கம் நிறைவேறியவுடன் தானாகச் செல்வாக்கினை இழந்து விடுகின்றன. இதனால் அந்த நாடகப் படைப்புகளை மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று கருத வேண்டியதில்லை. சமூகத் தேவையை நிறைவேற்றும் வகையில் படைக்கப்பட்ட நாடகங்கள், பின்னர் சமூகப் பதிவுகளாக மாறிவிடுகின்றன.   கலைஞரின் நாடகங்களைப் பொருத்தவரையில் இன்றைய தமிழக அரசியல் சூழலுக்குச் சில நாடகங்கள் தேவைப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக மத அடிப்படைவாத அமைப்புகள் வேரூன்ற முயன்று வருகின்றன. சிறுபான்மை மதவாத அடிப்படை இயக்கங்கள், பெரும்பான்மையினர் மீதான பயத்தின் காரணமாக அடங்கியொடுங்கியும், அதேவேளையில் தீவிரவாதத்தைப் பயன்படுத்தவும் முயலுகின்றன. பெரும்பான்மையினரை ஒருங்கிணைத்து அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயலும் இந்து மத அடிப்படைவாதிகள், இன்று தமிழக் மக்களுக்கு அச்சுறுத்தும் சவாலாக விளங்குகின்றனர். பொதுவாக மக்கள் மத வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் மதவெறி ஊட்டி, வன்முறையைப் பரப்பிட முயலும் மத அடிப்படைவாத அமைப்புகளினால் தமிழகத்தின் அமைதிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இத்தகைய மதவெறி பிடித்த பாசிச அமைப்புகளை இனங்கண்டு ஒதுக்கிடும் மனநிலையை மக்களிடையே பரப்பிட நாடகம் உள்ளிட்ட நிகழ்கலைகள் தேவைப்படுகின்றன.  கலைஞரின் நாடகங்களை முன்மாதிரியாகக் கொண்டு, மதவெறி, அதிகாரம், வன்முறைக்கு எதிராகப் புதிய வகைப்பட்ட நாடகங்களைப் படைத்துத் தமிழகமெங்கும் நிகழ்த்த வேண்டும். அவ்வகையில் நாடக ஆக்கத்தில் கலைஞர் உருவாக்கிய தீவிரத்தன்மையை நவீன நாடக ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியுள்ளது.   1960களில் கலைஞர் எழுதிய காங்கிரஸ் எதிர்ப்பு நாடகங்கள், இன்றைய சமூக மாற்றத்தினால் மதிப்பிழக்க வாய்ப்புண்டு. ஏனெனில் அவை குறிப்பிட்ட சமூகச் சூழலில் அன்றைய சமூகத்தில் எதிர்வினையாற்ற வேண்டுமென்ற நோக்கில் எழுதப்பட்டவையாகும். அவ்வகையில் தூக்குமேடை, உதய சூரியன் போன்ற நாடகங்கள் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தின. இதனால் கோபமடைந்த காங்கிரஸ் அரசாங்கம் அந்த நாடகங்கள் நடத்துவதற்குத் தடை விதித்தது. இன்றையச் சூழலில் அவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமுக ஆவணங்களாக விளங்குகின்றன. கலைஞர் எழுதிய மணிமகுடம், ஒரே முத்தம், சிலப்பதிகாரம், பரதாயணம், அனார்கலி, சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் ஆகிய நாடகங்கள் இன்றும் தமிழில் முக்கியமானவை. இன்றைய தலைமுறையினரின் மறுவாசிப்பிலும் அவை புதிய பொருளைத் தருவதன் மூலம் தமது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.   சாதி, சமயரீதியில் ஏற்றத்தாழ்வாக இருந்த தமிழ்ச் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் கலைஞரின் நாடகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. “சமுதாய பெருமரத்தையே புரையோடி அரித்துக் கெடுத்திடும் புல்லுருவிகளைப் - போலித்தனங்களை, ஏற்றத்தாழ்வுகளை எதேச்சதிகாரங்களைத் தோலுரித்துக் காட்டும் நோக்குடனே தூக்குமேடை நாடகத்தை தீட்டியிருந்தேன்… அது எதிரொலித்த பகுத்தறிவுப் பிரச்சாரத்தை - சீர்திருத்தக் கருத்துக்களை ஆளும் காங்கிரசால் செரித்துக்கொள்ள முடியவில்லை… தூக்கு மேடைக்கே தூக்குக் கயிறு வீசப்பட்டது” என்று கலைஞர் தனது வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்நாடகம் 1949-ல் முதன்முதலாகத் தஞ்சையில் அரங்கேற்றப்பட்டது. அப்பொழுது கலைஞரின் வயது இருபத்தைந்து. வாலிபப் பருவத்திலேயே கலைஞரின் அரசியல், சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் அவருக்குள் வடிவெடுத்து விட்டதன் வெளிப்பாடுதான் தூக்குமேடை நாடகம்.  ஆளும் வர்க்கத்தினரால் அது தடைசெய்யப்பட்டதெனில், கருத்தியல்ரீதியில் அந்நாடகம் வலுவாக விளங்கியது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட நாடகங்கள் சமுதாய விமர்சனங்களாக அமைந்தன. மகான் பெற்ற மகன், மணிமகுடம் போன்ற புனையப்பட்ட வரலாற்று நாடகங்களிலும் அரசியல், சமுதாய விமர்சனத்தை முன்னிலைப்படுத்திப் படைப்பது கலைஞரின் தனித்துவமான போக்காகும். ஏற்கனவே தமிழில் நடைபெற்று வந்த சமுதாய நாடகங்களில், சமுதாயச் சீர்திருத்த நாடகம் என்ற புதிய வகையை அழுத்தமாகப் படைத்தவர் கலைஞர் என்று உறுதியாகச் சொல்ல முடியும். சமுதாயச் சீர்திருத்த நாடகத்தைச் செயலூக்கமானதாக மாற்றியமைத்துப் பார்வையாளரிடம் கொதிப்பையேற்படுத்தி, அதன்மூலம் நிலவும் சமூக அமைப்புக் குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்பி விவாதிக்கத் தூண்டுவது கலைஞர் நாடகங்களின் சிறப்பியல்புகள்.   சமுதாயச் சீர்திருத்த நாடக ஆக்கத்தில் வெற்றி கண்ட கலைஞர், 1953-ஆம் ஆண்டு எழுதிய பரப்பிரம்மம் மூலம் அரசியலுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கினார். பின்னர் எழுதிய உதயசூரியன் (1956), காகிதப்பூ (1967), திருவாளர் தேசீயம்பிள்ளை (1967), நானே அறிவாளி (1971), புனித ராஜ்யம் (1979) ஆகியன முழுமையும் அரசியல் கருத்தியல் பிரச்சார நாடகங்களே. “நேர்மையோடு சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்கும் ஓர் எழுத்தாளனால் அரசியல் சித்தாந்தங்களைப் புறக்கணிக்க முடியாது” என்ற க. கைலாசபதியின் கருத்து அடிப்படையில் நோக்கும்போது, கலைஞரின் அரசியல் நாடகம் பற்றிய நோக்கத்தினைப் புரிந்து கொள்ளவியலும். நாட்டு விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் ஆட்சியேறிய இருபது ஆண்டுகளில், தி.மு.கழகத்தினரால் கீழே இறக்கப்பட்டது. இன்னும் கூறினால் 1957-ஆம் ஆண்டு தேர்தலில் பங்கேற்க தி.மு.கழகம் பத்தாண்டுகளில் 1967-ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது. இத்தகைய சாதனை புரிந்திட, மக்களைத் தம் பக்கம் ஈர்த்திட தி.மு.கழகத்தினருக்கு நாடகமும், திரைப்படமும் முக்கியக் கருவியாக விளங்கின. உதயசூரியன், காகிதப்பூ, திருவாளர் தேசீயம்பிள்ளை ஆகிய மூன்று நாடகங்களும் தி.மு.கழகத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யவும், காங்கிரசின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்திடவும் பெரிய அளவில் உதவின. தி.மு.கழகம் ஆட்சியைக் கைப்பற்றிடக் கலைஞரின் நாடகங்கள் முக்கியக் காரணியாக விளங்கியுள்ளன.   காகிதப்பூ நாடகத்தைப் பற்றி 07.02.67 நாளிட்ட டைம்ஸ் ஆங்கில ஏட்டில் 'விழாக்கோலத்தின் சென்னை" என்ற கட்டுரையில் வெளிவந்த பகுதிகள் பின்வருமாறு: “தமிழக ஆட்சியின் எதிர்ப்புச் சக்திகளில் முன்னணியில் நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம். அது தேர்தல் பிரசாரம் செய்யும் முறையே வேறானது. மிகப்பெரிய திடல் ஒன்றின் மூலையில் திரளான மக்கள் அமர்ந்து திறந்த வெளி அரங்கில் நடைபெறும் ஒரு நாடகத்தைப் பார்க்கிறார்கள். அதனைப் பார்த்துவிட்டுச் சிரிக்கிறார்கள்... இந்த நாடகம் 'காகிதப்பூ" திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஒருவரால் எழுதப்பட்டுத் தமிழகம் முழுவதும் நடிக்கப்படுவதாகும். கதராடை உடுத்தி, உழைப்பின் சிறப்புப் பற்றிய போலிப் பேச்சுக்களால் மக்களை மயக்கி வாக்குகள் பெற முயலும் காங்கிரஸ்காரர்களாக இந்த நாடகத்தின் வில்லன், நகைச்சுவைப் பாத்திரங்கள் காட்டப்படுகின்றன.” கலைஞரின் அரசியல் நாடகத்தினுக்கு அன்று மக்களிடையே இருந்த செல்வாக்கினை பத்திரிகை விமர்சனம் சரியாகக் கணித்துள்ளது. தமிழக மக்களின் மனதில் அரசியல் மாற்றத்தை உருவாக்கியதில் கலைஞரின் நாடகங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன.   கலைஞரின் நாடகங்கள், எம்.ஆர்.ராதா நாடகக் குழுவினர், திருவாரூர் முரசொலி நாடகமன்றம், தேவி நாடக சபை, எஸ்.எஸ்.ஆர். நாடகக்குழு போன்ற பல்வேறு நாடகக் குழுவினரால் நடிக்கப்பட்டுள்ளன.  அவை பொது அரங்குகள், திறந்தவெளி மேடைகள். கட்சி மாநாடுகளில் பெரிதும் நிகழ்த்தப்பட்டன.  அவற்றுள் கட்சி மாநாடுகளில் இரவிலும் முப்பெரும் விழாக்களின் இறுதியிலும் சில நாடகங்கள் நடத்தப்பட்டன. சில நாடகங்கள் கட்சி மாநாடுகளில் அரங்கேற்றப்பட்டன. சில நாடகங்கள் கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்டன. 1967க்கு முன்னர் பல இடங்களில் தேர்தல் பிரச்சார நிதிக்காகவும், கட்சியினருக்கான‌ வழக்கு நிதிக்காகவும் கலைஞரின் நாடகங்கள் பயன்பட்டுள்ளன. கட்சியின் பொருளில் மேம்பாட்டிற்காகவும் கலைஞரின் நாடகங்கள் உதவியுள்ளன என்பது கவனத்திற்குரியது.   கலைஞருடைய படைப்புகளுள், கொள்கை பரப்புதலில் மிகத் தீவிரமாக கருவியாக விளங்கியவை நாடகங்களே என்ற மதிப்பீடு தி.மு.கழக வளர்ச்சியில் கருத்தியல்ரீதியில் கலைஞரின் நாடகங்களுக்கான பங்கினை நுணுக்கமாக வரையறுக்கிறது. கலைஞரின் படைப்பாக்க ஆளுமையில் நாடகங்கள் வீர்யத்துடன் விளங்கியுள்ளன. உயிரோட்டமான உரையாடல்கள் மூலம் கலைஞரின் நாடகங்கள், பார்வையாளர்களிடம் உணர்ச்சிப்பூர்வமான பாதிப்புகளை ஏற்படுத்தின. கலைஞரின் தமிழ் மொழி ஆளுமை அழுத்தமானது; பன்முகத்தன்மையுடையது. பண்டையத் தமிழ் இலக்கியத்தில் தோய்ந்த புலமையுடையவராதலால், கற்பனை ஆற்றலை விரிந்த அளவில் பயன்படுத்தியுள்ளார்; அடுக்குமொழி வசனங்கள் மூலம் பார்வையாளர்களைத் வசப்படுத்தும் சூட்சமத்தைக் கையாண்டுள்ளார். அனார்க்கலி, சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் போன்ற ஓரங்க நாடகங்களில் வெளிப்படும் அவரது மொழி மீதான ஆளுமை வலிமையானது. அதிலும் சாக்ரடீஸ் பற்றிய ஆளுமை அழுத்தமான பாதிப்புகளைப் பொதுப்புத்தியில் ஏற்படுத்தக்கூடியது. மறுவாசிப்பிலும் சாக்ரடீஸ் நாடக உரையாடல்கள் நுட்பமான கேள்விகளை எழுப்புகின்றன.   சிலப்பதிகாரத்தை நாடகமாக்கியுள்ள கலைஞரின் முயற்சி, தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியமானது.  பண்டைய இலக்கியக் கதையை எடுத்துக்கொண்டு தற்காலச் சூழலுக்கும் பொருந்துவதாக மாற்றியமைத்து, விவாத நோக்கில் கலைஞர் எழுதியுள்ளது தமிழுக்கு வளம் சேர்ப்பதாகும். சங்க இலக்கியம், பாரதிதாசன் படைப்புகள் கலைஞருக்குள் ஏற்படுத்திய தாக்கமானது, அவருடைய நாடக ஆக்கத்தில் வெளிப்பட்டுள்ளது.  இது அறுபதுகளில் தமிழ் இலக்கியம் மக்களிடையே பரவிடப் பெரிது உதவியது.   கலைஞரின் நடையானது தீவிரமான கருத்தினைக் கூர்மையான சொற்கள் மூலம் வெளிப்படுத்துகிறது.  எனவே அவர், சொற்களின் பயன்பாடு மூலம் கேட்பவரின் மனதைச் சிந்திக்கத் தூண்டுகின்றனவாக உரையாடலை அமைப்பதில் அக்கறை கொண்டிருந்தார். உரையாடல்களில் எண்ணற்ற உவமைகளைப் பயன்படுத்துதல், போகிற போக்கில் புராண, இதிகாசக் கதைகளைக் கேலி செய்தல், மூடநம்பிக்கைகளைக் கிண்டல் செய்தல், கதைப்போக்கில் நகைச்சுவையைச் சாதாரணமாக இடம் பெறச் செய்தல், சமூகப் பகடிகள் போன்றன கலைஞர் நாடக ஆக்கத்தில் சிறப்பு அம்சங்கள். விழிகளுக்கு மை தீட்டுவது போல கலைஞரின் வசனத்தில் வடமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. சில நாடகங்களில் கொச்சை மொழி பயன்படுத்தியுள்ளார். புராண, இதிகாச அலங்கார நடை, குடும்பக்கதைகளின் வறண்ட நடை இவற்றில் இருந்து கலைஞரின் நடை முற்றிலும் மாறுபட்டது. தமிழ் நாடக ஆக்கத்திலிருந்த மந்த நிலையை மாற்றியமைத்துச், செயலூக்கம் மிக்கதாக மொழியை மாற்றியமைத்த பெருமை கலைஞரையே சாரும்.   நாடகத்தைப் போர்க்கருவியாகவும், எதிர்த்தரப்பினரின் அரசியல் கருத்துகளிலிருந்து தப்பும் கேடயமாகவும், கருத்தினைப் பரப்பும் ஊதுகுழலாகவும் பயன்படுத்திய கலைஞர் எழுதிய நாடகங்களின் தனித்துவம் பின்வருமாறு: 1) தமிழில் அரசியல் பிரசார நாடகங்களைப் பெரிய அளவில் கையாண்டு அதில் வெற்றியடைந்தவர். 2) நாடகத்தின் பயன் முழுக்க மக்களுக்கானது என்ற கொள்கையுடைய கலைஞர், தமிழ் நாடகக் கதை சொல்லல், உரையாடலில் புதிய பாணியை வகுத்தவர். 3) சமுதாயச் சீர்திருத்த நாடகங்களில் சாதனை படைத்தவர். 4) தமிழில் மூடநம்பிக்கையை ஒழித்துப் பகுத்தறிவு கருத்தினைப் பரப்பிட நாடகங்களை பயன்படுத்தியவருள் முதன்மையானவர். 5) தமிழ், தமிழர் பண்பாடு எனத் தமிழை முன்னிறுத்திப் பெருமை பேசுகிற தமிழ் மீட்பு வாதத்தை நாடகங்களில் முன்னிலைப்படுத்தியவர். 6) அரசியல் பிரச்சாரத்திற்கு நாடகத்தைப் பயன்படுத்திய தமிழ் நாடக ஆசிரியர்களில் முதன்மையானவர். 7) அரசியல் கருத்தியல் வெளிப்பாட்டிற்குத் தமிழ் மொழியின் நடையினை வீரியத்துடன் கையாண்டுள்ளார்.   *** 80களின் படங்கள்: இரண்டாம் இன்னிங்ஸ் முரளிக்கண்ணன்   1980களின் ஆரம்பத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்த எங்கள் ஊரான வத்தலகுண்டில் ஆண்களுக்கான கல்லூரியே கிடையாது. திண்டுக்கல், உத்தம பாளையம் பகுதிகளில் கல்லூரி இருந்தாலும் பெரும்பாலானவர்கள் மதுரைக்கு சென்றுதான் படிப்பார்கள். பெரும்பாலும் எல்லாத் திரைப்படங்களையும் மதுரையிலேயே பார்த்து விடுவார்கள். 1982 வாக்கில் நான் சிறுவனாக இருந்த போது, அவர்களின் வழியாகவே சினிமாக் கதைகளை கேட்டுக் கொள்வேன். அப்போது தான் ஒரு நாள் அண்ணா தியேட்டரில் தூக்கு மேடை போட்டிருக்காங்க, போறோம் வர்றியா என்றார்கள். அது ஒரு டூரிங் தியேட்டர். ஊரை விட்டு ஒதுக்குப்புறத்தில் இருந்தது. மாலைக் காட்சி முடிந்து வரும்போதே இருட்டி விடும் என்பதால் பலர் செல்ல மாட்டார்கள். என் வீட்டில் அந்த அன்ணன்கள் அனுமதி வாங்கி என்னை அழைத்துப் போனார்கள்.   அதுவரை நான் கண்டிருந்த திரையரங்க சூழலுக்கும் தூக்கு மேடை திரையிடப்பட்டிருந்த திரையரங்க சூழலுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. பெண்கள் மிகக் குறைவாகவே இருந்தார்கள். இள வயது ஆண்களின் நடமாட்டமும், திமுக கட்சிக்கறை வேட்டி கட்டியவர்களின் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. தலைவர் வசனத்துக்காக வந்தோம் என்கிற பேச்சே பரவலாக கேட்க முடிந்தது. படத்தின் நாயகன் சந்திரசேகர். அப்போது சிவப்பு மல்லி போன்ற படங்களின் மூலம் மக்களிடையே அறிமுகமாகி இருந்தார். தூக்கு மேடை படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் கட்சிக்காரர்கள் இடையே சந்திரசேகருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத்தந்தது. தூக்கு மேடை படம் அதே பெயரிலான‌ கலைஞரின் நாடகத்தை அடிப்படையாக வைத்து படமாக்கப்பட்டிருந்தது. அரசு, அமைப்புகளுக்கு எதிராக போராடும் ஒருவன் என்ன பாடு படுவான், இருந்தும் எப்படி அவன் பணிந்து போகாமல் இருக்கிறான் என எப்படி ஒருவ‌ர் கொள்கைக்காக வாழ வேண்டும் எனக் காட்சிப்படுத்திய படம்.   பராசக்தி, மனோகரா படங்களின் வசனத்தால் எல்லோரையும் கவனிக்க வைத்த கருணாநிதி மீண்டும் தன் வசனத்தால் பலரையும் திரையரங்கிற்கு கூட்டி வந்தார். தமிழ் சினிமா விளம்பரம் என்பது கதாநாயகனை முன்னிறுத்தியே இருக்கும். அடுத்து இசை அமைப்பாளர், இயக்குநர், நாயகி, நகைச்சுவை நடிகர்கள் என்று இருக்கும். வசனகர்த்தாவை முன்னிறுத்தி மட்டும் திரைப்பட விளம்பரம் செய்ததெல்லாம் நடந்தது கருணாநிதிக்கு மட்டும் தான். சமீபத்தில் வருத்தப்படா வாலிபர் சங்கம் பட விளம்பரத்தில் இயக்குநர் ராஜேஷின் வசனத்தில் என விளம்பரங்களில் சேர்த்து இருந்தார்கள். ஆனால் கலைஞர் வசனம் எழுதும் படங்களுக்கு அவர் மட்டுமே திரை விளம்பரங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தார்.   தூக்கு மேடை படத்தை அடுத்து கலைஞர் வசனத்தில் வந்து அனைவரையும் கவனிக்க வைத்த படம் பாலைவன ரோஜாக்கள். அந்தப் படம் வெளியான‌ 1986ல் தான் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று, எதிரில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி இருந்தும் திமுக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருந்தது. வர்தா என மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்றிருந்த அரசியல் படத்தை சத்யராஜ், பிரபு, லட்சுமி, ஜனகராஜ் ஆகியோரை வைத்து மணிவண்ணன் இயக்கினார், 1986 தீபாவளிக்கு கமல்ஹாசனின் புன்னகை மன்னன், ரஜினிகாந்தின் மாவீரனோடு திரைக்கு வந்த பாலைவன ரோஜாக்கள் நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படமானது. சமகால அரசியலை வைத்து எடுக்கப்பட்ட படம். அரசியல்வாதிக்கு எதிராக ஒரு பத்திரிக்கை ஆசிரியர் (சத்யராஜ்), ஓர் ஐஏஎஸ் அதிகாரி (லட்சுமி) ஆகியோர் போராடும் கதை.   கலைஞரின் ஆரம்பகால படங்களில் இருக்கும் அடுக்கு மொழி, தூய தமிழ் வசனங்களில் இருந்து பாலைவன ரோஜாக்களின் வசனம் வேறுபட்டிருந்தது. அப்போதைய பேச்சு மொழி வழக்கிலேயே வசனம் இருந்தது. தூக்கு மேடை படத்திலும் அப்படித்தான் என்றாலும் அதில் நீளமான வசனங்கள் அதிகம் இருந்தது. ஆனால் பாலைவன ரோஜாக்களில் அந்தக் களத்திற்கு ஏற்றார் போல வசனம் இருந்தது. பாலைவன ரோஜாக்களின் வெற்றி அடுத்தடுத்து பல படங்கள் கலைஞர் வசனத்தில் வெளிவர உத்வேகமாக இருந்தது. பாசப் பறவைகள், பாடாத தேனிக்கள், நியாயத் தராசு, நீதிக்கு தண்டனை, காவலுக்கு கெட்டிகாரன் என. இதில் பெரும்பாலானவை மலையாள ரீமேக்குகள் தாம்.   []     1969ல் கலைஞர் ஆட்சிப்பொறுப்புக்கு வரும் முன்னர் சீரான இடைவெளியில் அவர் வசனம் எழுதிய படங்கள் வந்து கொண்டு இருந்தன. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் அவர் வசனம் எழுதிய படம், அவர் மகன் முக முத்து நடித்த பிள்ளையோ பிள்ளை. அதன் பின் அவர் பல ஆண்டுகள் இடைவெளி விட்டிருந்தார். பின்னர் தூக்கு மேடை நாடகத்தை படமாக்கினார். ஆட்சியில் இல்லாத போது புதிதாக வாக்களிக்க வயதுக்கு வருபவர்களை கவர்ந்து இழுப்பதில் சுணக்கம் இருக்கக் கூடாது என்பதற்காகவே அவர் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத போது தொடர்ச்சியாய்த் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி அடுத்த தலைமுறையிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது போலவே எனக்குத் தோன்றும்.   1972ல் திமுகவில் இருந்து எம்ஜியார் பிரிந்து சென்று அதிமுகவை ஆரம்பித்த பின்னர் மூன்றே கட்சிகள் தான் வாக்கு சதவிகிதம் வலுவாக இருந்த கட்சிகள். திமுக, அதிமுக, காங்கிரஸ். இதில் காங்கிரஸ் கட்சி இளைஞர்களை இழுப்பதில் பின் தங்கி இருந்தது. திமுக தொடங்கப்பட்டதில் இருந்தே காங்கிரஸுக்கு தேய்பிறை தான். ஆனால் அதிமுகவிற்கு இளைஞர்கள் சேர்ந்து கொண்டே இருந்தனர். அதற்கு எம்ஜியாரின் கவர்ந்திழுக்கும் தன்மையும், பின்னர் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததும் காரணமாக இருந்தது. ஆனால் திமுகவிற்கு அதன் கொள்கைகளே புது வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் சக்தியாக இருந்தது. அதன் கொள்கைகளை தொடர்ச்சியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு இருந்தது. எம்ஜியார் தனக்கு வந்த கூட்டம் குறையத் தொடங்கியதைப் பார்த்து ஜெயலிதாவை கட்சிக்கு அழைத்து வந்தார். கலைஞரோ அடுத்த தலைமுறை ஆட்களை வசீகரிக்க தன் எழுத்துக்களையே நம்பினார். 80களில் கலைஞர் எழுதிய படங்களை அப்படித்தான் பார்க்க முடிகிறது.   பாசப் பறவைகள், பாடாத தேனீக்கள் ஆகிய படங்கள் அரசியல் சார்பு இல்லாத குடும்ப கதையம்சம் உள்ள படங்கள். இரண்டிற்கும் பெண்கள் கூட்டம் அதிகமாக வந்தது. படத்தின் துவக்கத்தில் படத்தைப் பற்றிய கலைஞரின் சிறுஉரை ஒளிபரப்பாகும். அம்மாக்களோடு வரும் சிறுவர், சிறுமியர் யார் இவர்? என்று கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். நியாயத் தராசு, நீதிக்கு தண்டனை இரண்டு படங்களும் போராட்ட அரசியல் சார்புள்ள திரைப்படங்கள். கலைஞர் மூன்றாம் முறையாக 1989ல் ஆட்சிப்பொறுப்பு ஏற்றபின்னர் வசனம் எழுதிய படம் காவலுக்கு கெட்டிக்காரன். பிரபு – நிரோஷா இணை. இந்தப் படத்திலும் சமகால பேச்சுமொழியில் வசன்ங்கள் இருந்தாலும், ஒரு சரித்திர நாடகத்தை கலைஞர் இதில் எழுதியிருப்பார்.   1985க்குப் பின், சிவாஜி கணேசன் முழு நேர ஹீரோவாக நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார். அப்போது அவருக்கு நல்ல குணசித்திர வேடங்கள் கொடுக்க பல இயக்குநர்கள் தயங்கினார்கள். இவரை எப்படி வேலை வாங்குவது என. அதேபோல் 2000க்குப் பின்னர் வந்த இயக்குநர்களுக்கு இளையராஜாவிடம் வேலை வாங்குவதில் தயக்கம் இருந்தது. கலைஞர் 20 வயதிலேயே வசனகர்த்தாவாக ஆளுமையாக இருந்தவர். அதன் பின் முதல் அமைச்சர் வரை சென்றவர். அவரிடம் எப்படி அணுகுவது என அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கு ஒரு இயல்பான தயக்கம் இருந்து கொண்டேயிருந்தது. மேலும் எம்ஜியார் ஆட்சியில் இருந்த காலத்தில் கலையுலகினரில் சிலரே கலைஞரை அணுகினர். அந்த அளவுக்கு எம்ஜியாரின் சர்வாதிகாரத்தன்மை மீது திரைத்துறையினருக்கு பயம். இது போன்ற காரணங்களால் கலைஞர் வசனம் எழுதுவதில் ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருந்தது.   மேலும் கலைஞரின் வசனத்துக்கான தேவையும் அந்த திரைக்கதையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் எழுதியவருக்குப் பெருமை. அது போன்ற வலுவான கதை, திரைக்கதைகள் கலைஞரிடம் வந்து சேரவில்லை. கலைஞர் எழுதும் வசனங்களை தவறில்லாமல் உச்சரிக்கக் கூடிய நடிகர்களும் 80களில் குறைவே. நிரோஷாவிற்கு அவரது அக்கா ராதிகா தான் காவலுக்கு கெட்டிக்காரனில் குரல் கொடுத்தார். சிவாஜி கணேசன், எஸ்எஸ் ராஜேந்திரன் போல கலைஞரின் வசனத்தை வலுவாக பேசக்கூடிய வசீகரமான கதாநாயகர்கள் குறைந்து கொண்டே வந்தார்கள் தமிழ் திரையுலகில்.   இப்படித் தான் அமைந்தது திரைப்படங்களில் கலைஞரின் இரண்டாம் இன்னிங்ஸ். அத்தனை பணிகளுக்கு இடையிலும், சூழல்கள் மாறியும் தொடர்ந்து பங்களித்துக்கொண்டிருந்ததே சாதனை தான். ஆனால் கலைஞரின் ஆற்றலை பயன்படுத்தக்கூடிய இயக்குநர்கள் குறைவாகவே அவரை அணுகினர். இல்லா விட்டால் பிற்காலத்திலும் கலைஞரின் வசனம் ஒரு பெஞ்ச்மார்க்காக மற்றவர்களுக்கு இருந்திருக்கும்.   ***   பத்திரிக்கையாளர்: கலைஞர் விரும்பிய அடையாளம் ஜெ. ராம்கி   “வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி. நடு வகிடு எடுத்து சீவி இருப்பார். பத்து அணாதான் சந்தா. கையால் எழுதிய பத்திரிகையை நேர்லேயே கொண்டு வந்து கொடுப்பார். அந்தப் பத்திரிகைக்கு எங்க அப்பாவும் சந்தாதாராக இருந்தார்” என்று நினைவு கூர்ந்தார் அந்தப் பெரியவர். திருத்துறைப்பூண்டியை அடுத்த களப்பால் என்னும் கிராமத்தை சேர்ந்தவர். கச்சனம், நீர்முளை, செருகளத்தூர், பெருகவாழ்ந்தான், நெம்மேலி, இருள்நீக்கி என எந்த ஊருக்கும் கருணாநிதி நடந்துதான் சந்தா சேர்த்திருக்கிறார். திருக்குவளையை சுற்றியுள்ளவை, காவிரியின் கடைமடை பகுதியைச் சேர்ந்த கிராமங்கள். பின் தங்கிய பகுதிகள். பெரும்பாலன இடங்களில் இன்றும் சாலை வசதி இல்லை. 70 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்துகொள்ளலாம்.    மாணவ நேசன், கருணாநிதி என்னும் 13 வயது இளைஞனின் முதல் குழந்தை. கையெழுத்துப் பத்திரிக்கைகள் நடத்துவது என்பது, தபால் தலை சேகரிப்பது போன்ற பரவலான பொழுதுபோக்காக இருந்த காலகட்டம் என்றாலும், திருக்குவளை போன்ற பின் தங்கிய பகுதிகளிலிருந்து ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞனால் இது சாத்தியப்படுத்தப்பட்டது. விவசாயம், வறுமை தவிர வேறு எதுவும் தெரியாத கடைமடை விவசாயிகள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்க முடியும், அரசியல் விழிப்புணர்வு ஏற்படுதத முடியும் என்று அந்த இளைஞன் நம்பியது மட்டுமல்லாமல், பல ஆண்டுகள் அதை நோக்கி, தீவிரமாக உழைத்ததும் நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயம்.   ஏன் மாணவ நேசன்? கருணாநிதி அதை திட்டமிட்டு உருவாக்கியதாக சொல்லிவிடமுடியாது. கருணநிதியின் போர்க்குணமும், பிடிவாத குணமும்தான் அவரது எழுத்துப்பணிக்கு பிள்ளையார் சுழி இட்டவை. தன்னுடைய எதிர்ப்பை, அழுத்தந்திருந்தமாக பதிவு செய்யவேண்டும் என்கிற உந்ததுதலே அதற்கு காரணமாக இருந்திருக்கும். அதுதான் திருவாரூர் கோயிலுக்கு ஆன்மீகச் சொற்பொழிவுக்கு வந்திருந்த கிருபானந்த வாரியரை எதிர்க்க வைத்தது. அவரது பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே புகுந்து, கடவுள் மறுப்பை வலியுறுத்தி துண்டு பிரசுரத்தை விநியோகிக்க வைத்தது. தன்னுடைய எதிர்ப்பை மாணவ நேசன் மூலம் வலுவாக பதிவு செய்வதுதான் அவரது நோக்கமாக இருந்திருக்கவேண்டும்.   வடபாதி மங்கல பள்ளிப்படிப்புக்கு பின்னர் திருவாரூர் வந்தபோதும், அவரே நேரடியாக பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பித்தார். போர்க்குணமும், யாரையும் சார்ந்திராத தன்மையும்தான் அவரை இயக்கியிருக்கிறது. தலைமை ஆசிரியர், கஸ்தூரி ஐயங்கார் மறுத்தபோது, பள்ளியில் இடம் தராவிட்டால் கமலாலயக் குளத்தில் விழுந்துவிடுவேன் என்று மிரட்டித்தான் இடத்தை பெற்றார். எத்தனையோ பள்ளிகள் இருக்கும் போது, இந்தப்பள்ளியில்தான் இப்படித்தான் படிப்பேன் என்று வாழ்க்கையை அவரே தேர்ந்தெடுத்தார்.   அத்தகைய பிடிவாத குணம்தான், பள்ளியில் படிக்கும்போதே அவருக்கு அரசியல் ஆர்வத்தை தூண்டி விட்டது. இந்தி வகுப்புகளை புறக்கணித்து, இந்திக்கு எதிராக வீதிகளில் கொடி பிடித்து ஊர்வலம் செல்வதும், இந்தி வகுப்புகள் வேண்டாம் தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை மனு அளிப்பதும் அன்றைய அரசியல் சூழலால் விளைந்தவைதான். இளைமைப்பலியாக அவர் செய்தவைதான். ஆனால், அவருக்குள் இருந்த எழுத்தாளன் என்னும் முகம்தான் அவரை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டியது.     அன்றாட அரசியல் குறித்து அவர் எழுதிய துண்டு பிரசுரங்களே, அவரை மாணவ சம்மேளனத்தில் சேர்த்தன. தீவிர அரசியலில் ஆர்வமுள்ள மாணவர்களின் கூட்டமைப்பு அது. ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஒன்றாக அணி திரண்டதால் கருணாநிதியும் உற்சாகமாக செயல்பட்டார். மாணவ சம்மேளனத்தின் நிகழ்ச்சி நிரல், தீர்மானங்களை அவர்தான் எழுத்து வடிவில் கொணர்ந்தார். காங்கிரஸ் தலைமையிலான இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எதிர்நிலையில் இருந்த மாணவ சம்மேளன நடவடிக்கைகள், மெல்ல மெல்ல தேசியவாதம், கம்யூனிஸத்தை நோக்கி சென்றபோது அதிலிருந்து விலகி, தமிழ்நாடு மாணவர் மன்றம் என்னும் அமைப்பையும் கருணாநிதியே முன்நின்று ஆரம்பித்தார். தனித்த குரல், உரத்த குரல்!   திராவிடர், தமிழர் கோஷமெல்லாம் அப்போது சிறுபான்மை குரலாக ஒலித்த காலம். தேசிய அமைப்புகள் சார்பாக ஏராளமான சிறுபத்திரிக்கைக‌ள், நாளேடுகள் வந்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு போட்டியாக மாணவ நேசன் என்னும் கையெழுத்துப் பிரதியை ஆரம்பித்தார். மாணவ நேசன் என்னும் பெயரை தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யமில்லை. தமிழர் நேசன் எனும் மாதப்பத்திரிக்கை வெளியாகிக் கொண்டிருந்தது. நேசன் என்னும் சொல், தமிழ்நாட்டைக் கடந்து தமிழர்கள் வாழும் தெற்காசிய பகுதிகளிலும் பிரபலமானது தான். 1924 முதல் தமிழ் நேசன் எனும் செய்தித்தாள் மலேசியாவிலும் பிரபலமாக இருந்தது. அந்த‌செய்தித் தாளில் அரசியல், சினிமா, விளையாட்டு என சகலமும் உண்டு. அது போன்றதொரு செய்தித்தாளாக உருவெடுக்க வேண்டும என்கிற விருப்பத்தில் அப்படியொரு பெயரை தேர்வு செய்திருக்கலாம்.   []     மாணவ நேசன், தமிழ்நாடு மாணவர் மன்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்டாலும், அது கலைஞரின் ஒன்மேன் ஷோ. ஒவ்வொரு வரியையும் அவரே தேர்ந்தெடுத்து எழுதினார். அவரே கேலிச் சித்திரங்கள் வரைந்தார்.   சேலத்திலிருந்து அப்போது வெளியாகிக்கொண்டிருந்த பெரியாரின் குடியரசு பத்திரிக்கையில் காஞ்சிபுரத்திலிருந்து அண்ணாதுரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். குடியரசுவில் தானும் எழுத, கருணாநிதி ஆசைப்பப்ட்டார். அதற்கான முயற்சிகளை எடுத்தபோது, அண்ணாதுரை தடுத்து, படிப்புதான் முக்கியம் என்று அறிவுரை செய்ததால் பின்வாங்க வேண்டியிருந்தது. குடியரசுவில் எழுதுவது என்னும் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக மாணவ நேசனில் எழுதி, பயிற்சி எடுததுக்கொண்டிருக்கலாம்.   40 ரூபாய் சம்பளம் தருகிறேன், சேலத்திற்கு வந்து தங்கி, குடியரசு பத்திரிக்கை சம்பந்தமான வேலைகளை பார்த்துக்கொள் என்று பெரியார் அழைத்ததும, எதையும் யோசிக்காமல் சேலத்திற்கு கிளம்பியதற்கு காரணம், குடியரசு என்னும் பத்திரிக்கையின் மீது அவருககு இருந்த கவர்ச்சிதான். சம்பளம் தருவதாக பெரியார் சொல்வார், ஆனால் தரவே மாட்டார் என்று எல்லோரும் சொன்னார்கள். அதுதான் நடந்தது. உணவு, தங்குமிடம் செலவு என்றெல்லாம் 20 ரூபாயை பிடித்துக்கொண்டு எஞ்சிய 20 ரூபாயை மட்டும் தருவதாக பெரியார் ஒப்புக்கொண்டார். அந்த 20 ரூபாயை பெறுவதற்கும் ஏகப்பட்ட அலைச்சல். எழுத்துப் பணியே வேண்டாம் என்று முடிவு செய்யுமளவுக்கு ஏகப்பட்ட அலைக்கழிப்புகள், மன வருததங்கள்.   இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், எழுத்துப் பணியைத் தேர்ந்தெடுத்ததே ஆச்சர்யமான விஷயம். கருணாநிதியின் குடும்ப பின்னணி, அவரை ஒரு இசைக்கலைஞராகவே உருவாக்கியிருககும். அதையும் மீறி எழுதுவது என்று அவர் முடிவெடுத்ததே மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கம். ஏராளமான நாதஸ்வர, தவில் வித்வான்களை உலகிற்கு தந்தது தஞ்சை மண். கருணாநிதியின் குடும்பமும, இசையோடு பின்னிப் பிணைந்த குடும்பம்தான். நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளை, இசை வேளாளர்களுக்கு தனியொரு கௌரவத்தை பெற்றுத் தந்தவர். இவருக்கு இசையில் ஏராளமான குருக்கள் உண்டு. திருவாடுதுறை மார்க்கேண்ட பிள்ளை, கீரனூர் முத்துப்பிள்ளை என பட்டியலில் திருக்குவளை முத்துவேலரும் உண்டு. முத்துவேலர், கருணாநிதியின் தந்தையார்!   கருணாநிதிக்கும் ஏராளமான குருக்கள் உண்டு. குடியரசு பத்திரிக்கையில் அண்ணாதுரை எழுதிய எழுத்துக்கள் அவரை கவர்ந்தன என்றாலும் அவரது முதல் ஆதர்ச நாயகன் அண்ணாதுரை அல்ல. பட்டுக்கோட்டை அழகிரிசாமிதான். தஞ்சை வட்டாரத்தில் நடத்தப்பட்ட சுயமரியாதைக் கூட்டங்களில் பட்டுக்கோட்டை அழகிரிதான் முன்னிலைப்படுததப்பட்டார். எதுகை மோனைகளை கதம்பமாக கட்டி, அடுக்குமொழியில் உணர்ச்சிகரமாக பேசிய அழகிரிசாமியின் பேச்சு, கருணாநிதியை கவர்ந்ததது. நெடுஞசெழியன், அன்பழகன் என தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து திராவிட இயக்க தலைவர்களையும் தன்னுடைய மேடைப்பேச்சால் வசப்படுத்தியவர் பட்டுக்கோட்டை அழகிரி. அந்த வகையில் கருணாநிதி முதலில் பேச்சாளராகத்தான் ஆகியிருக்கவேண்டும்.     பேச்சாளராவதற்கு முதற்படி எழுத்தாளராவது என்பதை கருணாநிதி புரிந்து வைத்திருந்தார். அடுக்குமொழி நடைக்கு அடிப்படையான விஷயம், எழுத்துதான். எழுதி பழகிவிட்டால், அதை மேடையில் பேச்சாக நிகழ்த்திக் காட்டுவது சுலபம். சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; பலரைப் பல காலம் ஏமாற்ற முடியாது - இதை எழுதி வைத்துவிட்டு பேசுவது சுலபம். அதுதான் அன்றைய காலகட்டத்தின் தேவையாக இருந்தது. எதையும் முதலில் எழுதுவது என்று முடிவெடுதது முன் நகர்ந்தார் கருணாநிதி. அது பேச்சாக இருநதாலும், நாடகமாக இருநதாலும சரி. முதலில் உட்கார்ந்து எழுதி வைத்துவிடுவது.     கருணாநிதியின் ஜீவாதார தேவையை நிறைவேற்றியது அவரது எழுத்துதான். குடியரசு பத்திரிகை மூலமாக வருமானம் வராத நேரத்தில், வேறு வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார். சேலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட பட நிறுவனங்களின் படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது. கோவை சிங்காநல்லூரில் பத்து ரூபாய் வாடகைக்கு ஒரு வீடு பிடித்து, ஊரிலிருந்து மனைவியையும் அழைத்து வந்து, சினிமா வாழ்க்கையை நம்பிக்கையோடு ஆரம்பித்தார். அபிமன்யூ எனும் புராணப் படம் என்றாலும் புதுமையான வசனங்களை எழுதும் வாய்ப்பு. ஆனால், பட டைட்டிலில் அவர் பெயர் இடம்பெறவில்லை.   அடுக்குமொழி பேச்சுக்கு எழுத்து முக்கியம் என்பதை புரிந்து கொண்டதைப்போல, திரைப்பட வசனத்திற்கு திரைக்கதை முக்கியம் என்பதையும் புரிந்துகொண்டார். வசனம் எழுதுவதை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, திரைக்கதையில் கவனம் செலுத்தினார். ‘கோ’வெனக் கதறும் சந்திரமதி, துடித்துத் துவளும் துயிலுரியப்படும் திரௌபதி என அவரது வார்த்தை ஜாலங்களே காட்சிகளாக விரிந்தன. திரைக்கதை மற்றும் வசனகர்த்தா என்னும் அடையாளம் அவருக்கு பெரிதும் கைகொடுத்தது.     மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர் சுந்தரமே விரும்பி, முன்வந்து கருணாநிதியின் மந்திரி குமாரி நாடகத்தை திரைப்படமாக்க முன்வந்தார். திருவாரூரில் இருந்த கருணாநிதியை முறைப்படி அழைதது பேசினார்.  திரைக்கதை வசனம் அனைத்தும் கருணாநிதியே அமைத்துக்கொடுத்தார். இயக்கியது எல்லிஸ் ஆர் டங்கன். நடிகர், நடிகை, இயக்குநருக்கு இணையாக திரைக்கதை வசனகர்த்தா என்னும் தொழில்நுட்பப் பணியை பலரும் திரும்பிப் பார்க்க வைத்தார். வசனகர்த்தாவாக தோற்ற கருணாநிதி, மீண்டும் முயன்று திரைக்கதை வசனகர்த்தாவாக ஜெயித்துக் காட்டினார். வசன நடையில் கருணாநிதி கொண்டு வந்த மாற்றங்களே, இன்று பன்ச் டயலாக் என்று பிரபலமடைந்திருக்கின்றன.   “நான் எட்டாத பழம்” “நான் வெட்டும் கத்தி”    “வைரக்கத்தியாக‌ இருக்கலாம் வயிற்றில் குத்திக்கொள்ள முடியாது”    “நன்றி கெட்ட நரிக்குட்டி நீச்சல் தெரியாத மீன்குட்டி”    வளவளவென்று வார்த்தைகளில் வர்ணிக்காமல், சொல்ல வந்ததை, கூராக சொல்லிய விதத்தில் வித்தியாசம். வார்த்தை ஜாலமென்றாலும் அதில் ஒரு உட்பொருள். அதுவே காட்சியை நகர்த்தியது. தமிழ் சினிமா காட்சியமைப்பில் ஒரு பெரும் மாற்றத்தை, தனியொரு ஆளாகக் கொண்டு வந்தவர் கருணாநிதி.   கதை, வசவு கருணாநிதி என்று கிண்டலடிக்கப்பட்டார். கருணாநிதியின் வசனம், அரசியல் மட்டுமே பேசியது என்னும் புரிதல் பரவலாக இருககிறது. ஆனால், அரசியலைத் தாண்டியும் எழுதியிருக்கிறார். கருணாநிதியின் ஒரே முத்தம், ஒரு காதல் நாடகம். ஆனால், அதிலும் அரசியல் உண்டு. புராணமும் உண்டு. விபிஷீணன் பாத்திரம்தான் வில்லன். அரசியல் வசனங்களும் உண்டு. கண்டதும் காதல் ஒழிக என்னும் தலைப்பில் கருணாநிதி எழுதியது காதல் நாடகம் அல்ல; நகைச்சுவை நாடகம். அதிலும் அரசியல் உண்டு. சீதாவை திரௌபதியாக்கி, புராணங்களை கிண்டல் அடித்திருக்கிறார். ராமாயணத்தை கிண்டலடித்து, 30 ஆண்டுகளில் ஏராள நாடகங்கள் ஆக்கியவர் கலைஞர் ஒருவராகத்தான் இருப்பார். 1978ல் கூட பரதாயணம் என்ற‌ பெயரில் ராமாயணத்தை கேலி செய்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.     தமிழகத்தின் வரலாற்று நாயகர்களை பாமரர்களுக்கு கொண்டு சேர்த்தவர் கலைஞர் என்னும் ரஜினியின் கருத்து முக்கியமானது. தமிழ் சினிமாவிலும், ஊடகத்துறையிலும் புராணங்களும், புராண நாயகர்களுமே அன்றும், என்றும் முன்னிலைப்படுததப்பட்டார்கள். பாயும் புலி பண்டாரக வன்னியன் என்றெல்லாம் தலைப்பிட்டு, பாளையக்காரர்களின் வாழ்க்கையை பதிவு செய்தவர் கருணாநிதி. அவரது அரசியலுககு அது தேவையாக இருந்தது என்று சொல்லப்பட்டாலும், வேறு யாரும் செய்யாத சூழலில் முக்கியமானதாகிறது. தன்னுடைய குடும்பத்திலிருந்து வெளிவரும் குங்குமம் இதழில் தொடர்ந்து எழுதினார்.     தினமும் இப்படி மொழியைக் கையாண்ட தமிழ்ப் படைப்பாளி தமிழக அரசியலில் வேறு யாரும் இல்லை என்பார் அசோகமித்திரன். தினமும் எழுதுவது என்பது சாமானியர்களுக்கு சாத்தியப்படாத விஷயம். அதுவும் ஒரு பெரும் அரசியல் இய்ககத்தின் தலைவராக 50 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர். தன்னுடைய தள்ளாத வயதிலும் தினமும் தன்னுடைய தலைப்பிள்ளையான முரசொலிக்காக எழுதினார். எழுத்தையும், பேச்சையும் ஒருங்கே அமைத்துக்கொண்ட வெற்றிகரமான அரசியல்வாதி எவருமில்லை.   கருணாநிதி ஏன் எழுத்தை தேர்ந்தடுத்தார் என்பதுதான் எனக்குள் நீண்டகாலமாக இருந்த கேள்வி. இசை வேளாளர்கள் குடும்பத்தோடு பழகிய பின்னர்தான் காரணம் மெல்ல பிடிபட ஆரம்பித்தது. தன்னுடைய குடுமபத்தின் இசைப் பின்னணி, வாழ்க்கைச் சூழலிலிருந்து முற்றிலும் விலகியிருந்து, தன்னை வித்தியாசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்புதான் அவரை எழுத்தாளராக்கியிருக்கவேண்டும்.   குடியரசு பத்திரிகை அலுவலகப் பணி, கதை வசனகர்த்தா பணிகளின் மூலமாக போதுமான வருமானம் இல்லாவிட்டாலும், முரசொலி பத்திரிக்கையை தொடர்ந்து நடத்தியதற்கு தன்னுடைய எழுத்தாளர் அடையாளம் தொலைந்துவிடக்கூடாது என்கிற எண்ணம்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும. ஐந்து முறை முதல்வராக இருந்து, ஐம்பது ஆண்டுகள் ஒரு பெரும் இயக்கத்தின் தலைவராக இருந்தாலும், கருணாநிதி என்னும் எழுத்தாளர் கடைசிவரை உயிர்ப்போடு இருந்தார். எத்தனையோ பட்டங்களும், பதவிகளும், புகழும் தேடி வந்தாலும், கடைசிவரை அவர் எழுத்தாளர்தான். கல்லறையில் அவரோடு புதைக்கப்பட்ட பேனாவும், முரசொலியும் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.   *** பாயும்புலி பண்டாரக வன்னியன்: வீரமும் துரோகமும் யமுனா   பாயும்புலி பண்டாரக வன்னியன் என்று நாவலின் பெயர் இருந்ததும் நான் முதலில் இது வட தமிழக மாவட்டத்தின் பிரதான, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிக்க சாதியின் முற்கால வீரன் ஒருவனின் வரலாற்றை ஒட்டி எழுதப்பட்ட நாவல் என்றே எண்ணி இருந்தேன். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கலைஞரின் பிற வரலாற்றுப் புதினங்களான பொன்னர் - சங்கர் மற்றும் தென்பாண்டிச் சங்கம் ஆகியன வட மேற்குத் தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் வீரர்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டவை. அதனால் இயல்பாகவே அப்படியொரு புரிதல் வந்து விட்டது. அதனாலேயே இதை வாசிக்கும் ஆர்வம் வராமல் இருந்தது. இப்போதும் என் போலவே எண்ணிக் கொண்டிருக்கும் ஏராளம் வாசகர்கள் இங்கே இருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.   ஆனால் உண்மையில் தமிழ் ஈழ மண்ணை அடிப்படையாகக் கொண்ட நாவல். இலங்கையில் வன்னி என்ற பிரதேசம் உண்டு (இன்றைய மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய வட இலங்கைப் பகுதி). அவ்விடத்தைச் சேர்ந்தவர்களை வன்னியன் என்று அழைக்கிறார்கள். அங்கே முல்லைத்தீவு என்ற குறுநிலத்தை ஆண்டவன் தான் பண்டாரக வன்னியன். அவனது இயற்பெயர் குலசேகரம் வைரமுத்து. 18ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கே கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துக் கொண்ட அதே காலகட்டத்தில் அங்கே பண்டாரக வன்னியன் வெள்ளையரை எதிர்க்கிறான். அந்தக் காலகட்டத்தை ஒட்டித்தான் இந்த அபாரமான வரலாற்று நவீனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.   கலைஞர் மொத்தம் 4 வரலாற்று நாவல்களை எழுதி இருக்கிறார்: ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் மற்றும் பாயும்புலி பண்டாரக வன்னியன். எல்லாமே பிரம்மாண்டமானவை. அனைத்துமே எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்டவை. பாயும்புலி பண்டாரக வன்னியன் நூல் 1991ல் வெளியாகி இருக்கிறது. அதுவே அவரது கடைசி வரலாற்று நாவல் (கடைசி நாவலாகவும் இருக்கலாம்).   “விண்டாலும் சொல்லைமிஞ்சும் / வீரத்தான் தமிழீழத்தான் / துண்டாடிப்போட்ட வெள்ளைத் / துரைமார்கள் தலையும் உண்டே!” என முடியும் எழுச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதையுடன் நாவல் தொடங்குகிறது!   நூலுக்கு பேராசிரியர் க. அன்பழகன் எழுதிய அணிந்துரையிலிருந்து தென்பாண்டிச் சிங்கம் நாவலுக்கு தஞ்சைப் பல்கலைக்கழகம் வழங்கும் இராசராசன் விருது வழங்கப்பட்ட விழாவில் குடியரசுத் தலைவர் சங்கர் தாயாள் சர்மா தான் கலைஞரை ‘முத்தமிழ் அறிஞர்’ என முதலில் அழைத்ததாக ஒரு சுவாரஸ்ய‌க் குறிப்பு தென்படுகிறது. ஒரு பேராசிரியர் ஒரு பள்ளி தாண்டா மாணவனின் படைப்பை, அதன் உள்ளடக்கத்தை, மொழிநயத்தைச்சிலாகித்திருப்பது சாதாரண விஷயமில்லை (அதே கட்சிக்காரர் எனினும்).   ஒரு வரலாற்றுப் புரட்டை உடைக்கும் முயற்சியாக‌வே கலைஞர் இந்த‌ நாவலை எழுதி இருக்கிறார். ஒன்டிரிபர்க் என்ற ஆங்கிலத் தளபதி பண்டாரக வன்னியனைத் தோற்கடித்ததன் நினைவாக கற்சிலைமடு என்ற இடத்தில் 1803ல் ஒரு நினைவுக்கல் அமைத்தான். ஆனால் உண்மையில் பண்டாரக வன்னியன் கதை அதோடு முடிந்ததா, மீண்டெழுந்து வெள்ளையரை எதிர்த்தானா என்பதைத் தான் நாவல் பேசுகிறது.   நாவல் எழுதப்பட்டது 1990 வாக்கில் என்பதால் என்பதால் தமிழ் ஈழத்தில் அப்போது நடந்து வந்த போரை ஒட்டி, தனது ஈழ ஆதரவு நிலைப்பாட்டை அழுத்த, தமிழ் தேசியர்களின், தமிழீழ ஆதரவாளர்களின் மனச் சாய்வைப் பெறும் அரசியல் முன்னெடுப்பாகவும் கலைஞர் இந்நாவலை எழுதி இருக்கலாம் எனப்படுகிறது.   முல்லைத் தீவு மன்னன் பண்டாரக வன்னியன், அவனது காதலி குருவிநாச்சி, அவனது அன்புத்தங்கைகள் நல்லநாச்சி - ஊமச்சிநாச்சி, கண்டி மன்னன் கண்ணுசாமி என்ற விக்ரம ராஜ சிங்கன், கரிசக்கட்டு மூலை ஆண்ட மற்றொரு குறுநில மன்னன் காக்கை வன்னியன், ஆங்கிலத் தளபதிகள் ஒன்டிரிபர்க் மற்றும் எட்வர்ட்மேட்ஜ் ஆகிய நிஜ வரலாற்றுப் பாத்திரங்களின் அடிப்படையில் கதை நகர்கிறது. இவர்கள் போக, கட்டபொம்மனிடம் தளபதியாக இருந்த, தலித் சமூகத்தைச் சேர்ந்த‌ சுந்தரலிங்க குடும்பனாரும் வருகிறார்.   ஆனால் புனைவின் சுவாரஸ்யத்திற்காகப் பல கற்பனைப் பாத்திரங்களையும் எழுதி இருக்கிறார். கண்டி மன்னனின் மந்திரியாக இருந்து மாமனார் ஆகும் பிளிமதளாவை, அவரது மகள் பியசீலி, அவளது தோழி மர்த்தினி (இவர்கள் மூவரும் சிங்கள இனத்தவர்), பண்டாரகனின் தளபதி தணிகைமலை ஆகியோர் அப்படி வருகின்றனர். இதில் பியசீலி பாத்திரத்தை பொன்னியின் செல்வன் நந்தினி பாத்திரம் போல் பார்க்கலாம்.   []     கலைஞருக்கு முன் வெகுஜன வரலாற்று நாவல்கள் எழுதியோரில் முக்கியமானவர்களாக‌ கல்கி மற்றும் சாண்டில்யனைக் குறிப்பிடலாம். அவர்களிலிருந்து கலைஞர் வேறுபடுவது இரு விஷயங்களில்: ஒன்று கலைஞர் அசலான வரலாற்று ஆளுமைகளின், சம்பவங்களின் அடியொற்றியே நாவலைக்கட்டமைக்கிறார். அதனால் அவரது நாவல்கள் தரையில் நிற்கின்றன. அசாத்தியமான பாகுபலித்தனங்கள் அவர் நாவல்களில் இருப்பதில்லை. கலைஞரின் வரலாற்றுப் புதினங்களை சீரியஸ் இலக்கியம் என்ற வரைமுறைக்குள் கொணர முடியாவிட்டாலும் வெகுஜன இலக்கியம் என்று அலட்சியத்துடன் கடக்கவும் முடியவில்லை. இன்னொன்று கலைஞர் இயல்பிலேயே அனுபவம் மிக்க திரைக்கதையாளர் என்பதால் இந்நாவலே ஒரு திரைக்கதையாகத்தான் வாசகனுக்கு விரிகிறது. பெரும்பாலும் காட்சிகளின் தொகுப்பாகவே அத்தியாயங்கள் அமைகின்றன‌. அது நாவலுக்கு முன்னுதாரணமற்ற‌ புதுவித‌ வாசிப்பின்பப் பரிமாணத்தை நல்குகிறது.   எழுதியது அதற்குச் சுமார் 20 ஆண்டுகள் முன் என்றாலும் இந்நாவல் இலங்கை இறுதி யுத்தத்தை நினைவூட்டியது. காக்கை வன்னியன் கருணாவையும் பண்டாக வன்னியன் பிரபாகரனையும் போல் நாவலில் அமைந்த‌ பாத்திரங்கள் (அவர்களின் பெயர்களிலமைந்த மோனையையும் கவனியுங்கள்!)   இதில் வரும் பியசீலியின் பாத்திரம் போல் தமிழ் இலக்கியங்களில் இதற்கு முன்போ பின்போ எழுதப் பட்டிருக்கின்றனவா என யோசிக்கிறேன். அவள் காமப்பித்தேறியவள். தான் நினைத்த காரியங்களைச் சாதிக்கத் தன் இளமையையும் செழுமையையும் பயன்படுத்திய புனைவுப் பெண்டிர் உண்டு. ஆனால் இவளோ அதைத் தாண்டி கலவியை அதன் இன்பத்தின் பொருட்டும் பல ஆண்களிடத்தில் நாடுகிறாள்.   அவளது தந்தை பிளிமதளாவை தன் அரசியல் லாபங்களுக்காகத் தன் சொந்த‌ப் புத்திரியின் உடலையே மூலதனமாக்கும் கெட்டிக்காரர். அவளது தோழியாக வரும் மர்த்தினியும் தன் உடலைப் பகடைக்காயாகப் பயன்படுத்தும் கைகாரி. இன்றே இம்மாதிரி பாத்திரங்கள் ஆச்சரியம் அளிக்கும் போது 30 ஆண்டுகள் முன் இப்படியான பாத்திரங்களை உருவாக்கி உலா விட்டிருக்கும் திராணியை வியக்க வேண்டி இருக்கிறது! (இந்த‌ எதிர்மறைப் பாத்திரங்கள் அனைவருமே சிங்களவர்கள் என்பது மட்டும் உறுத்தலாய் இருக்கிறது.)   நிலப்பரப்பை, குடியிருப்பைத் துல்லியமாகக் கண் முன் நிறுத்துகிறார் கலைஞர். உதாரணமாய் முல்லைத் தீவைத் தீட்டும் அவர் மொழி: “நீண்ட சதுரமான நிலப்பரப்பில் சாய்வான கூரைகளுடைய வீடுகளும் கூம்பக வடிவமைந்த கூரை வீடுகளும் குவிந்த வடிவமைந்த கூரை வீடுகளும் அந்த ஊர்களில் கலந்து கலந்து காணப்பட்டன. அந்தக் கூரைகள், தென்னஓலைகளாலும் பனை ஓலைகளாலும் வைக்கோலாலும் வேயப்பட்டிருந்தன. சுவர்களோ பெரும்பாலும் களி மண்ணால் கட்டப்பட்டிருந்த‌ன. சில வீடுகளுக்குத் திண்ணைகளும் இருந்தன. சற்று பெரிய வீடுகளின் முன்புறத்தில் பந்தல்கள் போடப்பட்டிருந்தன. உறுதி வாய்ந்த வைரம் பாய்ந்த மரங்கள் எனக் கூறப்படும் காயாமரம் முதிரை மரம், வெடுக்குநாறி மரம் போன்ற மரங்களையே பந்தல் கால்களாகப் பயன்படுத்தியிருந்தார்கள். வீடுகளுக்கு முன்னால் பத்திரி மரம், தோடை மரம், தேசிக்காய் மரம், மாதுளை மரம், மற்றும் முருங்கை, மா, பலா முதலிய‌ மரங்களும் நெருக்கமாக வளர்ந்திருந்தன. வீட்டுக்கு முன்பு கொஞ்ச தூரத்தில் கொம்பறை எனப்படும் நெல்லுப் பட்டறைகள் இருந்தன. வீடுகளுக்கு அருகாமையில் பசுக்களும் எருமைகளும் மேய்ந்து கொண்டிருந்தன.”    பண்டாரகனின் முத்து மாளிகையை அவர் வர்ணிக்கும் விதமும் அழகு. கலைஞருக்குள் எப்போதும் ஒரு கட்டிடக் கலைஞர் ஒளிந்திருப்பதை இது காட்டுகிறது. வள்ளுவர் கோட்டம், குமரிமுனை வள்ளுவர் சிலை, செம்மொழிப் பூங்கா, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என அவர் மூளையில் உதித்த கட்டிடங்கள் ஏராளம் என்பதையும் இங்கே இணைத்துப் பார்க்கலாம். “ஆடம்பர அலங்காரங்கள் எதுவுமின்றி அடக்கத்துடன் ஆனால் அரிமாவின் கம்பீரத்துடன் உயர்ந்து நின்ற அந்த அரண்மனை பெரும் நிலப்பரப்பைக் கொண்டதல்ல எனினும் காக்கை வன்னியனின் அரண்மனையை விட நாலு மடங்கு பெரியது! எழில் மாடங்கள் கூடங்கள் இல்லையெனினும் எழுச்சிக்கோலம் கொண்டு விளங்கியது! அரண்மனை மதில்களுக்குள் ஒரு புதுமையான மாளிகை! பார்ப்பதற்குப் புதுமையே தவிர பளபளப்போ பகட்டோ இல்லாமல் காட்சி தந்தது! அந்த மாளிகையை அமைத்தவனின் கற்பனை வியக்கத்தக்கது! திறந்திருக்கும் சிப்பியைப் போல மாளிகையின் புற அமைப்பு! அந்தச் சிப்பிக்குள் இருக்கும் முத்தைப் போல உள் அமைப்பு! முத்தில் பொதிந்திருக்கும் கதவைத் திறந்தால் உள்ளே விசாலமான இடம்! அங்கே உறங்கும் அறை ஓய்வெடுக்கும் அறை உரையாடும் அறை உணவருந்தும் அறை உணவு தயாரிக்கும் அறை அத்தனையும் உண்டு! அந்தப்புதுமையான முத்துமாளிகை, எளிமையாகவே உருவாக்கப்பட்டிருந்தது.”    கலைஞர் தன் வரலாற்றுப் புதினங்களைத் தரையில் கால் பதித்து எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தேன். அவர் பாத்திரங்களை வடிவமைத்த விதத்திலிருந்தே அதை உணரலாம். உதாரணமாய் பண்டாரக வன்னிய‌ன் தன் வீரர்களிடம் தொலைந்து போன ஒரு மடலைத் தேடச் சொல்லி உத்தரவிடுகிறான். அவன் அந்நில அரசன். அவர்கள் அவனிடம் மண்டியிட்டு ஊழியம் செய்பவர்கள். பொதுவாக, மற்ற சரித்திர நாவலாசிரியர்களின் எழுத்தில் இவ்விடம் “யாரங்கே?” என்று தொடங்கி கம்பீரக் கட்டளையாக அமையும். ஆனால் பண்டாரகன் அப்படிச் சொல்வதில்லை: "யானையை இவர் வெட்டி வீழ்த்திய இடத்திற்கு விரைந்து செல்லுங்கள்! அங்கே நமது முகவரியிட்டும் பாஞ்சாலங்குறிச்சி முத்திரை பதித்ததுமான மடல் ஒன்று கிடக்கும். போய்ப் பார்த்தவுடன் ஒருவேளை எளிதில் கிடைக்காமல் இருக்கலாம். புதர்களிலோ, குழிகளிலோ எங்கேனும் வீழ்ந்து மறைந்து கிடக்கவும் கூடும். களைப்பைப் பார்க்காமல் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வாருங்கள்!"    குடிகளின் பொருட்டு வாழும் பண்டாரகனின் ந‌ற்குணத்தை வலியுறுத்தவும் கலைஞர் இந்த உத்தியைப் பயன்படுத்தி இருக்கலாம். “தன்னுடனான‌ சண்டையில் வீழ்ந்து விட்ட‌ வெள்ளை வீரனின் சவத்தை எடுத்து முறைப்படி அடக்கம் செய்யுமாறு தனது வீரர்களிடம் பணிப்பவனாக” பண்டாரக வன்னிய‌ன் இருக்கிறான்   ஆங்கிலேயனை விரட்டியடித்த பிறகே தன் காதலி குருவிநாச்சியைக் கைப்பிடிப்பேன் எனப் பிடிவாதமாய் இருக்கிறான் பண்டாரகன். குடிகளுக்கும் அது தெரியும். அதில் அவர்களுக்கு ஏதும் சந்தேகம் எழக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறான். தலைவனின் தனி வாழ்க்கை ஒழுக்கம் அவன் தலைமைப் பண்புடன் தொடர்புடையதல்ல என்றாலும் இன்றைய சிசிடிவி யுகத்தில் அமெரிக்கா (பில் க்ளிண்டன் - மோனிகா லெவின்ஸ்கி) முதலிய முன்னேறிய முற்போக்கான‌ நாடுகளில் கூட மக்கள் அதை எதிர்பார்க்கிறார்கள் எனும் போது இதைத் தமிழ்ப் பண்பாட்டின் அங்கமாக முன்வைக்கிறார் கலைஞர். (களவியலும் சங்க இலக்கியந்தொட்டு ந‌ம் தமிழர் கலாசாரமே என்பது தனிக்கதை) “அந்த மாளிகைக்குள் பண்டாரகனும் குருவிச்சியும் நுழைந்தனர். பண்டாரகன் மட்டும் தனியாக அந்த முத்து மாளிகைக்குள் செல்லும் போது தான் வாசல் கதவை அவன் தாளிட்டுக் கொள்வது வழக்கம். அவனுடன் குருவிச்சியும் வரும் பொழுது வாசல் கதவை மூடுவது வழக்கமில்லை! அவளும் அவனும் இருதயத்தால் ஒன்றியிருக்கிறார்களே தவிர இருவரிடையே காதல் தழைத்ததன் காரணமாக உடலுறவு என்ற கட்டத்துக்குச் சென்றவர்களல்ல! அப்படியொரு ஐயப்பாடு குடிமக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே மாளிகைக்குள் தனித்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை வெளிப்படுத்துவது கூடத் தவறு என அவர்கள் கருதினார்கள்!”    பெண்களைப் பற்றிய கலைஞரின் சொற்கள் இந்நாவலில் இரு துருவங்களிலிருந்து வெளிப்படுகிறது. ஒரு பக்கம் பியசீலி, மர்த்தினி எனக் காமப்பிசாசுகளாகவும் உடலைத் தூண்டிலாகப் பயன்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கிறார். மறுபக்கம் குருவிநாச்சி, நல்லநாச்சி, ஊமச்சிநாச்சி என மிக அழுத்தமாகப் பெண்சக்தியை முன்வைத்துப் பெண்ணியம் பேசுகிறார். குருவிநாச்சியின் சொல்லாக வரும் இந்த இடம் ஓர் உதாரணம்: “பெண்குலம் என்பது ஆண் குலத்துடன் ஒட்டியிருந்து குடும்பம் நடத்த மட்டும் தானா? ஆண் குலம் ஏற்றுக் கொள்ளும் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பு அதற்குக் கிடையாதா? நான் அவரைக் காதலிப்பது என்பது அவருட‌ன் இணைந்து அன்னியரை விரட்டி அவர்களது ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காகவே!”    இன்னோரிடத்தில் மனைவி கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷனென கண்மூடித்தனமாக அடிமையாக இருக்க வேண்டியள் அல்ல என்பதை நல்லநாச்சியின் சொற்களில் வெளிப்படுத்துகிறார். “கைப்பிடித்த கணவனைப் பார்த்துக் கயவனென்றும் துரோகியென்றும் கண்டபடி தூற்றுவது தமிழ்ப் பண்பாடா?” எனக் கேட்கும் காக்கை வன்னியனிடம் “இப்படியொரு பண்பாடு பேசித்தான் பெண்குலத்தையே திண்டாட விடுகிறீர்கள். கணவன் தன்னைத் தானே கெடுத்துக் கொள்ளும் தீய ஒழுக்கங்களில் தோய்ந்து கிடப்பவனாக இருந்தால் அவனைத் திருத்திடக் கடமைப்பட்டவள் மனைவி!” என்கிறாள் நல்லநாச்சி.    தன் அடையாளமான பகுத்தறிவுக் கொள்கைகளையும் ஆங்காங்கே தூவ மறக்கவில்லை. “குறி சொல்லும் போதும் ஆரூடம் சொல்லும் போதும் யார் குறி கேட்கிறார்களோ அவர்களை ஒரேயடியாகப் புகழ்ந்து உயரத்தில் தூக்கி வைத்து விட்டு நீதான் இந்த உலகத்தையே ஆளப் போகிறாய் என்று சொல்ல வேண்டிய முறையில் சொல்லி விட்டால் போதும்! குறி ஜோஸ்யம் இவைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை எண்ணி எச்சிலை வழிய விடுவார்கள்!”    புன்னகையை நெளிய விடுதல் என்ற பிரயோகம் இன்று பரவலாய் இருப்பது. கலைஞர் அதை அப்போதே பயன்படுத்தியிருக்கிறார். (உதா: “தனது செக்கச் சிவந்த உதடுகளில் புன்னகையை நெளிய விட்டாள்.”)    உவமைகளின் அரசன் கலைஞர். இந்த நாவலிலும் ஆங்காங்கே அந்த‌ முத்திரை தெரிகிறது. பாந்தமான‌ பார்டர் வைத்த பட்டுப் புடவை போல் சொல்ல வந்த விஷயத்துக்குப் பொருத்தமாகவும் அழகாகவும் அந்த உவமைகள் உட்கார்ந்து கொள்கின்றன. (பாருங்கள், அவரைப் படித்து எனக்குமே ஏதோ ஒட்டிக் கொண்டது!)   “சோற்றுப் பருக்கைகளை இலையில் வாரியிறைத்தாற் போல் வானத்தில் நட்சத்திரங்கள் ஒளி விட்டுக் கொண்டிருக்கின்றன.”   “தந்தையின் தோளில் நழுவி, தாயின் மடியில் குதிக்கும் குழந்தைகளைப் போல அலைகளின் மேலே எறிக் கீழே விழுந்து, மீண்டும் எழுந்து அந்தத் தோணி, தனது பயணத்தை நடத்திக் கொண்டிருந்தது.”   “இடி விழுந்து ஒடியப் போகிற மரக்கிளையில் தாவிப் படருகிறேன் என்று கொடியொன்று தவிக்கும் போது அந்தக் கொடியின் முயற்சியைத் தடுப்பது எப்படித் தவறாக முடியும்?”   “அழகான பறவை அவள்! ஆனால் புழுக்களைத் தின்னுகிறாள்.”   “தீயைத் தெளிந்த நீர்த்தடாகம் எனத் தெரியாமல் கால் வைத்து விட்ட ஒரு அவசரக்காரியின் சரித்திரம்!” “தங்கு தடையினறி, மேட்டிலிருந்து பள்ளம் நோக்கிச் செல்லும் வெள்ளம் போல வெள்ளையர் படை கண்டி நகருக்குள் கம்பீர நடை போட்டுச் சென்றது.”   “ஏரிகளையும் குளங்களையும் கண்களுக்குப் பின்னால் அமைத்துக் கொண்டு தேவைப்படுகிற நேரமெல்லாம் திற‌ந்து வாய்க்கால்களாக வழியவிடுகிற உன் போன்ற போலிப்பத்தினிகள் பலபேரின் கதைகளைக் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது உன் விழிகளிலிருந்து வழிவது கண்ணீர் அல்ல! நச்சுப் பொய்கையின் ஊற்று!”   அடுக்குமொழி வசனங்களையும் பல இடங்களில் காண முடிகிறது:   “அருவியோரத்தில் ஆல மர‌த்து நிழலில், பளிங்கு நீரோடையில், பாறைகளின் உச்சியில் நீயும் நானும் பேசி மகிழ்ந்த காதல் கதைகளை மறந்து விட்டாயா? ஒருவருக்கொருவர் உரைத்திட்ட உறுதிமொழிகளை நினைக்கத் தவறிவிட்டாயா? கரம் பிடித்துச் சத்தியம் செய்து கொண்ட அந்த இன்பமான நிகழ்ச்சிகள் கனவுகளா? கற்பனைகளா?”   “நட்புடன் இருப்பதற்கும் நத்திக்கிடப்பதற்கும் இடையே உள்ள முரண்பாடு மிகப்பெரியது என்பது தெரியுமா!”   “நாதனை நாயகி கொன்றால் அவளுக்கு நரகம் தான் சம்பவிக்கும்.”   ராக்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம் அழகான முறையில் நூலைப் பதிப்பித்திருக்கிறது. 1991ல் அவர்கள் வெளியிட்ட நூல் தான் இன்னமும் அச்சில் இருக்கிறது. ஓவியர் ஜெயராஜ் தொடருக்கு வரைந்த வண்ண ஓவியங்கள் சிலவும் இதில் இடம் பெற்றுள்ளனன. இதன் பின்னட்டையில் ஒரு வசீகர கலைஞர் புகைப்படம். (அதை எடுத்தவர் ராஜீவ் கொலை வழக்கில் சாட்சியமான சுபா சுந்தரம்!)   2009ல் முரசொலியில் மீண்டும் இந்நாவல் தொடராக வெளியானது. இறுதியில் இப்படி எழுதி இருந்தார்: “காட்டுப் பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை! பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட - அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே அது வாழும் வரலாறு!”    இந்நாவலின் மூலம் த‌மிழ் வரலாற்று நாயகனின் வாழ்வின் வழியே நமக்கு வழிகாட்டுகிறார் கலைஞர்.   ***   செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்: மொழியின் தவம் கவிதா சொர்ணவல்லி   மொழியோ, மொழிகள் குறித்த பெரும் ஆச்சரியங்களோ, அதிதீவிர பற்றோ, அதீதமென்ன‌ சாதாரணப் பற்று கூட எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. மொழிகள் குறித்து விதந்தோதுவது கூட ஒருவித மேட்டிமைத் தனம் என்றும், அதற்கொரு சொகுசான வாழ்வு தேவை என்றுமே கருதி இருக்கிறேன். அதற்கு எதன் மீதும் அபிமானம் கொள்ளாதே என்ற பெரியாரின் தத்துவ‌த்தையும், "ஒடுக்கப்பட்ட ஒருவனை ஆங்கிலமே மேலேற்றும்" என்ற அண்ணலின் கூற்றையும் நான் மேலோட்டமாகப் புரிந்து கொண்டது கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இதைச் சொல்வதற்கே எனக்கு என் தாய்மொழிதான் காரணமாக இருக்கிறது என்பதே ஆழ்மனதில் மறந்து போயிருக்கிறது. நமக்கு வாரி வழங்கும் எவற்றையும், மிக எளிதாக எடுத்துக்கொள்வது நான் உள்ளிட்ட மனிதகுலத்தின் ஆதிகுணம் என்று தோன்றுகிறது.   ஏனென்றால் நான் மொழியில் புழங்குபவள். நவீன இலக்கியத்தில் கதைகளின் வாயிலாக கவிதைகளின் வாயிலாக உலா வருபவள். இப்போதும் கூட ஒரு நல்ல வார்த்தையோ அல்லது ஒரு நல்ல வரியோ எழுதி முடிக்கும்போது, அதன் பொருளைக் கடந்து அந்த வார்த்தைகள் என்னை களிப்புறச் செய்கின்றன. இதன் பொருள் என்ன? நாம் மொழியுடன் ஆழமாக பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதானே!   முதல் தலைமுறை அரசாங்க அதிகாரியான அப்பா, கலைஞரின் விசுவாசி. அவரின் வளர்ப்பான என்னிடம் எப்படி கலைஞர் பற்றிய பெருமிதங்கள் இல்லாமல் போகும்! அதனால் கலைஞர் பற்றி கட்டுரை கேட்ட போது உடனே சம்மதித்தேன். ஆனால் அரசியல் ரீதியாக சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, பாலியல் சமத்துவமின்மைகள் குறித்து, நவீன வாழ்வு இன்றைய இளைய தலைமுறைகள் மீது கொள்ளும் ஆதிக்கம் குறித்து, பெண் உள்ளிட்ட ஒடுக்கப்படும் தரப்புகள் அதன் அரசியல் புரிதல்களைக் கைவிட்டு ஒடுக்கும் தரப்பாக மாற முயலும் சமூக அழுத்தம் குறித்தெல்லாம் சிறிதும் பெரிதுமாக எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு கலைஞரின் தமிழ்ப்பற்று பற்றி எழுத வேண்டிய தருணம் உருவானது அதிர்ச்சி தான். பொறுப்பின் சுமை குறித்த அச்சமது. அமைப்புரீதியாக பெரியார் கட்டமைத்தவைகளை, அரசியல்ரீதியாக உறுதியாக்கம் சமூகநீதிக் காப்பாளராக கலைஞர் பற்றி எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதலாம். அப்படியிருக்க, எனக்குத் தொடர்பற்ற‌ அவரது மொழியாளுமை பற்றி எப்படி எழுதுவதென‌ச் சங்கடத்தில் தயங்கினேன்.   அப்படிதான் 'செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்' நூலைப் படிக்க நேர்ந்தது. கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை ஒட்டி, உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ், செம்மொழி அந்தஸ்தை பெறுவதற்காக, கடந்த நூறாண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கைகள், நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்றி, உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் இது.   முதல் கடிதத்தை இப்படி ஆரம்பிக்கிறார் (அப்போது கலைஞர் சிறுஓய்வில் இருந்தது தெரியவருகிறது): "உலகத்தமிழ்மொழி மாநாட்டிற்கு, கடிதங்களைக் கொண்டு ஒரு தோரணவாயில் அமைகின்ற ஆர்வத்தோடு தான் இந்த ஓய்வை பயன்படுத்திக்கொள்கிறேன். தோரண வாயில் அமைக்க நான் கொட்டிவைக்கும் கற்களின் குவியல் இது". தோரண வாயிலுக்குப் பூக்களை எடுக்காமல், கற்களைக் கொட்டி வைக்கிற ஒரு வலிய மனது கொண்டிருக்கிறார் இல்லையா அவர்! வாடிவிடும் பூக்களைக் காட்டிலும், காலங்களை கடந்து எழுந்து நிற்கப்போகிற வரலாற்றுத் தோரணங்களையே தமிழுக்காகக் கட்ட விரும்புகிறார்.   இந்தக் கடிதத்திலயே ஓரிடத்தில் அவர் தமிழை வர்ணிக்கிறார்: "முன்னைப் பழைமைக்கும் பழைமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய், என்று பிறந்ததென்ற இயல்பறியாததாய், சீரிளமைத்திறம் கொண்டதாய் வளர்ந்து செழித்திருக்கும் செந்தமிழ்". நூற்றாண்டுக் காதல் கொண்டவர்கள்கூட இப்படிக் கடிதம் எழுதியிருக்க வாய்ப்பில்லை. என்னவொரு காதலும், புத்துணர்வும் இந்த வர்ணிப்பில்!    தமிழ்ப்பற்று என்பதே பிறமொழிஎதிர்ப்பு என்பதாகப்பல சமயங்களில் புரிந்துகொள்ளப்படுகிறது. மொழியில் என்ன இருக்கிறது? என்பதாகப் பல சமயங்களில், கேள்விகள் எழுகின்றன. ஏன், நானே அப்படியொரு நிலைப்பாட்டில் இருந்தவ‌ள் தானே. மொழி என்பது சுயம்; மொழி என்பது ஆயுதம்; ஒரே அமைப்பாய் திரள்வதற்கான மைதானம் மொழியே என்பதை இந்நூல் வழி உணரும் தன்மைக்கு வந்திருக்கிறேன்.    []     பார்ப்பனீயத்தை எதிர்த்து, சுயமரியாதைக்கொள்கையுடன் பீடுநடை போடுவதை தன்னுடைய முக்கியக் கொள்கையாக வைத்திருந்த கலைஞர், தமிழ் என்று வருமிடத்தில், அதை முன்வைக்காது, யாவரிடமும் வெளிக்காட்டிய வாஞ்சை என்பது, பண்டைத் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் பற்றி அவர் எழுதுகிற கடிதம் முழுவதிலும் விரவிக்கிடக்கிறது. ஆரியகுலத்தில் பிறந்தாலும் தமிழராய் தமிழுக்காய் வாழ்ந்து மடிந்த பரிதிமாற் கலைஞரே தமிழை உயர்மொழி என்றும், செம்மொழி என்றும் அறுதியிட்டு இறுதியிட்டுப் பெருமையுடன் நிலைநாட்டியதை அவரின் ஆராய்ச்சி குறிப்புகளை சுட்டிக்காட்டி குறிப்பிடுவதுடன், "தமிழுக்குச் செம்மொழித்தகுதி கோரி குரல்கொடுத்த முதல் தமிழன்” என்று தான் அவரைப் பெருமைப் படுத்தியதையும் நினைவுகூர்கிறார். பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் வாழும், தன் சொந்தமொழி கூட மறந்து, உணர்வால், உயிரால் தமிழராகவே மாறி இருக்கும், பிற மாநிலத்தவர்களை 'வந்தேறி' என்றழைக்கும் தமிழ்த்தேசிய வெறிசூழ்ந்த இக்காலத்தில், தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த ஆரியரே ஆனாலும், தமிழுக்காகப் போராடி, தமிழர்க்காக வாழ்ந்த பரிதிமாற் கலைஞரை “முதல் தமிழன்” என்று கலைஞர் விளிப்பது, தமிழின்பால் அவர் கொண்ட பற்றேயின்றி வேறென்னவாக இருந்துவிட முடியும்!   மொழியின் / தவத்தை நீ நான் யாரும் / மேற்கொள்ளவில்லை –   குமரகுருபரனின் இக்கவிதை வரிகளை கலைஞரின் தமிழ் மீதான தீராக்காதலின் வழி புரிந்துகொள்கிறேன்.    தமிழ் செம்மொழிதான் என்று முதலில் சொன்ன அறிஞர் ராபர்ட் கால்டுவெல்க்கு, அன்பின் நன்றிக்கடனாக மெரீனா கடற்கரையில் அறிஞர் அண்ணா சிலை அமைத்ததைக் குறிப்பிடுகிறார். அதே போல பரிதிமாற் கலைஞர் நூல்களனைத்தையும் அரசுடைமையாக்கி, ரூ. 15 லட்சம் அளித்தது, கரந்தை தமிழ்ச்சங்கத்தின் வாழ்நாள் தலைவராக இருந்த "தமிழைச் செம்மொழியாக அறிவிக்க‌ வேண்டும்" என்று 1917-ம் ஆண்டு முதலே குரல் கொடுத்த தமிழவேள் உமா மகேஷ்வரன் பிள்ளை அவர்களுக்கு நினைவுத்தபால் தலை வெளியிட்டது, 1974-ல் தேவநேயப் பாவாணர் அவர்களை, செந்தமிழ்ச் சொற்ப்பிறப்பியல் அகமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குனராக நியமித்தது, அவரது படைப்புகளை அரசுடைமையாக்கி 20 லட்சம் ரூபாய் அளித்தது என்று தமிழறிஞர்களுக்கு கழக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மரியாதைகள் குறித்து “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” நூலில் கலைஞர் அடுக்கிக்கொண்டே போகிறார்.   ஓரளவிற்கு அரசியல் புரிதல் வந்த காலங்களில், என்னதான் திமுக குடும்பமாக இருந்தாலும், கலைஞர் மீது அன்புடன் இருந்தாலும், தமிழறிஞர்களின் குடும்பங்களுக்கு திமுக அரசு சார்பில் அளிக்கப்படும் விருதுகளையோ, பண முடிப்பையோ, அவர்களின் புத்தகங்களை அரசுடமையாக்குவதையோ வெறும் வெற்று விளம்பரமாக கருதியே கடந்திருக்கிறேன். இதன் மூலம், தன்னை ஒரு பரோபகாரியாக காட்டிக்கொள்ளவே கலைஞர் முயற்சி செய்கிறார் என்றே ஒவ்வாமையுற்று இருக்கிறேன். ஆனால், இந்நூலை வாசிக்கும்போதுதான், மொழியின் மீதுள்ள காதலால், பற்றால், அன்பால், மரியாதையால், விசுவாத்தால் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த தமிழ் அறிஞர்களுக்கு, அவர்களைக் கவுரவப்படுத்துவதை விடவும், ஒரு சுயமரியாதை அரசு வேறு என்னதான் செய்துவிட முடியும் என்கிற கருத்தின் அடிப்படையிலேயே கலைஞர் இதையெல்லாம் செய்திருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.   அப்போதைய எனது புரிதலின்மை குறித்து இப்போது நாணம் மேலிடுகிறது. தவறில்லை. நம் கலைஞர் தானே! வெறுக்கவும், முரண்படவும், ஒன்றுபடவும் அவரைக்காட்டிலும் சிறந்ததொரு ஆளுமை நமக்கு வேறு யாருண்டு இங்கு என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்கிறேன்.   1850-களில் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தொடங்கி, பரிதிமாற்கலைஞர், தமிழ்வேள் உமா மகேஷ்வரன் பிள்ளை, 1950-ல் டெல்லியில் நடைபெற்ற சாஹித்ய அகாடமி தொடக்க விழாவில் தமிழ் செம்மொழியென பேசிய, இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத், 1966ல் உலகின் உயர்தனிச் செம்மொழி என்று நுண்ணிய ஆராய்ச்சிகளுக்குப் பின், ஆங்கிலத்தில் நூல் எழுதி வெளியிட்ட தேவநேயப் பாவாணர் என்று நீண்டு நெடுந்துயர்ந்த, தமிழின் செம்மொழிப் பயணம் அதிமுக ஆட்சியின் போதெல்லாம் தளர்வடைவதையும், ஏன் நின்றே போனதையும் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் கலைஞர்.   கலைமாமணி மணவை முஸ்தபா அவர்களின் நூலை மேற்கோளிட்டு கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளதில், 1984-ம் ஆண்டு நடைபெற்ற எம்ஜிஆர் ஆட்சியில் எப்படி தமிழை செம்மொழியாக்கும் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது என்பதைக் கூறியுள்ளதை படிக்கையில் அதிர்ச்சியாக இருக்கிறது. ஏன் எம்ஜிஆருக்கு தமிழ் மேல் பற்றில்லாமல் போனது என்றும் ஆச்சர்யமாக இருக்கிறது. "தமிழைச் செம்மொழியாக்கினால் செத்த மொழிகளின் பட்டியலில் சேர்த்தது போலாகிவிடும்" என்று அன்றைய அரசுச்செயலாளர் குறிப்பெழுதியதை மணவை முஸ்தபா 'செம்மொழி: அகமும் புறமும்' நூலில் எழுதியுள்ளதை கலைஞர் மேற்கோளிட்டுள்ளார். (அரசுச்செயலருக்குத்தான் என்ன ஒரு கரிசனம்! இந்த அடிப்படை வாஞ்சை கூட இல்லாமல்தான் தமிழை செம்மொழியாக்குங்கள் என்று கலைஞர் உட்பட பல தமிழறிஞர்கள் போராடிக்கொண்டே இருந்தார்களா!)   திமுக ஆட்சியில், தமிழுக்குச்செம்மொழி அந்தஸ்து பெறத்தொடர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தவறாமல் குறிப்பிடும் கலைஞர் 1996-ல் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகம் உருவாக்கி, அதற்கு தமிழ்க்குடிமகனை அமைச்சராக்கியதைப்பெருமிதத்துடன் கூறுகிறார். இந்தக் காலகட்டத்தில், அதிகாரமற்ற பதவி கொடுத்து தமிழ்க்குடிமகன் திமுகவில் ஒதுக்கப்படுவதாக பத்திரிக்கைகள் எழுதியதை, அப்பா வாசித்துக்காட்டியது ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால், கலைஞரோ, தன் வாழ்நாள் கனவு ஒன்றை நனவாக்குவதற்காக அல்லவா அந்தத்துறையையே உருவாக்கியிருக்கிறார்.     "நீராருங் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக்கியது போலவே, தமிழைச் செம்மொழியாக்க வேண்டுமென்று தக்க சான்றுகளுடன் கூடிய அறிக்கையும், திமுக ஆட்சியிலேயே மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டதாகவும் கலைஞர் தன் உடன்பிறப்புகளுக்கு நினைவூட்டுகிறார். ஒரு நாட்டுக்கான சுதந்திரப் போராட்டத்தைப் போலவே தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைக்கவும் நூறாண்டு காலப் போராட்டம் நடந்திருக்கிறது என்பதைப் படிக்கையில், அதற்குழைத்த‌ தமிழ்ப் பற்றாளர்களின் மீது பேரன்பு கூடுகிறது.    'செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்' நூலின் முடிவுரையில் கலைஞர் இவ்வாறு எழுதுகிறார்: "நான் ஒரு கருவி. இந்தக் கருவியை தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். சிற்பிகள் பலர். பல்லாயிரவர். அந்த சிற்பிகளுக்கெல்லாம் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்".   செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்ற காலகட்டத்தில், திமுக ஆட்சியின் மீது பொதுவாகவே ஒரு அதிருப்தி நிலவியது. கலைஞரைச் சுற்றியிருந்தவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகம் விவாதத்துக்கு உள்ளாகியிருந்தது.. திமுக விசுவாசிகளே சற்று முகம் சுளித்த காலம் அது. அந்த அலையில் நாமும் அடித்துச் செல்வது இயல்புதானே? அப்போது என்னுடன் பணிபுரிந்த பார்ப்பனப்பெண் செம்மொழி மாநாடு பற்றி மிக இழிவாக எழுத, அதை நான் விதந்தோத, மிகப்பெரும் களேபரத்திற்கு உள்ளான காலம். மறக்க நினைக்கும் தவறுகளில் அதுவும் ஒன்று. சிறு வயது, அரசியல் புரிதலின்மை என்று கடக்கிறேன்.     இக்கட்டுரை எழுதி முடிக்கையில், நூறாண்டு காலம், தமிழோடு, தமிழறிஞர்களோடு கால இயந்திரத்தில் பயணித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இத்தனை தமிழ் அறிஞர்கள் ஏன் தங்களது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அளித்து தமிழுக்காக போராடினார்கள் என்று கலைஞரின் இந்த நூல் புரிய வைக்கிறது.    கலையே மனித மனங்களை கனிய வைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. கலைப் பண்பாட்டு அறிமுகம் அல்லாதவர்கள், எதனையும் உள்வாங்காத வறண்ட நிலம் போலதான் இருப்பார்கள் என்பதைத் தீவிரமாக வழிமொழிகிறேன். மொழி என்பது அந்தக் கலையை ஏந்தி நிற்கும் கலன். அதைக் கைவிடாது நேசித்ததால்தான், எந்தவொரு வறட்டு அரசியலையும் முன்னெடுக்காது, கனிந்த மனதுடன், மக்களுக்கான அரசியலைக் கலைஞர் முன்னெடுத்தார். கொள்கைகளில் நிறைய சமரசங்கள் செய்துகொண்டு, எல்லோரையும் உள்ளடக்கியதொரு ஆட்சியை நடத்தியதில், கலைஞர் நேசித்த மொழிக்கும் அதன் வழியாக அவர் கைகொண்ட கலைக்கும் பெரும் பங்குண்டு என்ற புரிதலுக்கே நான் வந்தடைகிறேன்.     அரசியல் புரிதலுள்ள ஒரு கலைஞன் மொழியின் மீதும் தீராத பற்றுகொண்டவனாக இருக்கும்போது, அவன் கலையைக் கையாள்வதன் வழியாக நம்மிடம் எந்த அளவுக்கு ஊடுருவுகிறான் என்றும் அதன் வழியாக ஒரு தீராத அரசியல் உரையாடலைத் தோற்றுவிக்கிறான் என்றும் யோசிக்கையில் தான் 'கலைஞர்; என்ற அந்தச் சொல் கொண்டிருக்கும் அர்த்தமும் வசீகரமும் நமக்குப் புரிகிறது!    ***    தொல்காப்பியப் பூங்கா: உழைப்பின் இலக்கணம் பரிசல் கிருஷ்ணா   பதினைந்து வருடங்களுக்கு முன் தொல்காப்பியப் பூங்கா வெளிவந்தபோது, அதன் விற்பனை படுஜோராக நடந்தது. நான் திருப்பூரில் இருந்தேன். புத்தக வாசிப்பு குறித்து எந்தக் கருத்துமில்லாத, தி.மு.கவைச் சேர்ந்த அண்ணன் ஒருவரது வீட்டில் ‘தொல்காப்பியப் பூங்கா’வின் ஐந்து பிரதிகளைக் கண்டேன்.   “என்னண்ணா இது?” என்று கேட்டேன். சென்னையில் நடந்த அவரது கட்சிக் கூட்டத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும், யார் அதிகம் வாங்குகிறார்கள் என்று உடன்பிறப்புகளுக்கிடையே போட்டியென்றும் சொன்னார். “இப்படியெல்லாமா புக் விக்கணும்?” என்று தோன்றியது. “நீ வேணா ஒண்ணு எடுத்துக்கோ” என்று சொல்லி ஒரு பிரதியைக் கொடுத்தார். என்னிடமுள்ள தொல்காப்பியப்பூங்கா அப்படி வந்ததுதான்.     பிறகு சில மாதங்கள் கழித்து, நான் பணிபுரிந்த அலுவலகத்தில் உணவு மேசையில் திராவிடக் கட்சிகள் குறித்த உரையாடல் ஓடியது. அப்போது   நான் என்னமோ விமர்சிப்பதான எள்ளலோடு தொல்காப்பியப் பூங்கா புத்தக விற்பனை குறித்துச் சொல்லி “அவரு படிக்கவே மாட்டாரு. பவுசுக்கு அஞ்சு புக் வாங்கிட்டு வந்து வெச்சிருக்காரு. இப்டிலாம் வித்து என்ன பிரயோசனம்?” என்றேன். என்னினும் வயது மூத்த, நான் மதிக்கிற, எப்போதும் முகத்தில் அமைதியை அணிந்திருக்கும் பாலு அண்ணன் என்னை நிமிர்ந்து பார்த்தார்.  “நீ நிறைய புக் படிப்பில்ல கிருஷ்ணா?” “ஆமாண்ணே.” “அந்த புக்கை வாங்கிட்டு வந்து பலமாசமாச்சுன்னியே, படிச்சியா?”    சுருக்கென்றது.  கைகழுவி விட்டு, “வா தம்மடிக்கணும்” என்று என்னை வெளியே அழைத்தார். டீக்கடையில் நின்று கொண்டு கலைஞரின் இலக்கிய முகம் குறித்து உரையாடினார். கலைஞர் மாதிரி ஒருவர் தொல்காப்பியம் மாதிரியான ஒரு பொக்கிஷத்தை இப்படி மொழிபெயர்ப்பது எத்தனை முக்கியம் என்றார். ஒருவகையில் இன்னும் அதிகமாக கலைஞர் எனக்கு நெருக்கமானது அன்றுதான்.     பேச்சில், எழுத்தில் தமிழை வளர்த்த விதத்தை திராவிடக் கட்சிகள் போல் செய்த இயக்கங்கள் வேறொன்றில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் என்று பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் கொண்டு விளங்கிய ஆளுமைகளால் தமிழும், தமிழ் குறித்த அறிவும் எல்லா தரப்பு மக்களிடையேயும் வளர்ந்தது. கலைஞரின் இலக்கிய முகம் பெரும்பான்மையோரால் பேசப்படாதது.      எல்லோரும் பராசக்தி. மனோகரா என்று குறிப்பிடுவார்கள். நான் என் பதின்ம வயதில் பார்த்த, வசன ஒலிநாடாவில் திரும்பத் திரும்பக் கேட்ட ‘பாலைவன ரோஜாக்கள்’ கலைஞரின் வசனங்களில் எனக்குப் பிடித்தது. படத்தின் பெயரைப் பற்றிச் சொல்லி, “தமிழ்நாட்டில் பாலைவனம் என்று தனியாக ஒன்றில்லை. முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை கொளுத்தும் பாலையாகும். அதே போல கொள்கையும் நேர்மையும் திரிந்து நாடே பாலைவனமாகிவிடுகிறது, அதனை எதிர்த்து நின்று அஞ்சாமல் போராடும் புரட்சி ரோஜாக்களும் உண்டு” என்று எதையும் அரசியலோடு, பகுத்தறிவுக் கருத்தோடு பொருத்துவார்.  தொல்காப்பியப் பூங்காவில் அப்படித்தான் பல பகுதிகளிலும், அரசியலையும் தமிழையும் கலந்தள்ளித் தெளித்திருப்பார் கலைஞர். முதலில் ‘தொல்காப்பியப் பூங்கா’ என்ற நூலின் தலைப்பிலேயே கவர்ந்து விடுகிறார். தொல்காப்பியம் என்பது இலக்கண நூல் என்று கசந்து ஒதுங்காமல், பூங்காவாய் இளைஞர்கள் இளைப்பாறட்டும் என்று அந்தத் தலைப்பைக் கலைஞர் வைத்திருக்கக்கூடும். எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களிலுமாக நூறு பாக்களை எடுத்துக் கொண்டு நூறு மலர்களாக அவற்றை எளிய நடையில் கொடுத்திருப்பார். அங்கங்கே அவருக்கே உரிய ‘நறுக் சுருக்’கும் உண்டு. ஒவ்வொரு செய்யுள் சொல்லும் பொருளை நினைவில் கொள்ள துணுக்கு, கதை என்று எதாவது சொல்லி அதற்கான ஓவியத்தோடும் இருக்கிறது இப்புத்தகம். ம.செ, ஜெ, ஷ்யாம் மூவரின் ஓவியங்களும்... பட்டாசு!  இதற்கு ஓவியம் வரைவதற்கு மூவரும் சென்றிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றுண்டு. மூவருக்குமான செய்யுள்கள் பிரித்துக் கொடுக்க்கப்பட்டது. ம.செ-வுக்கு ‘களவியல்’, ’மெய்ப்பாட்டியல்’ என்று கொஞ்சம் கவர்ச்சியான படங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஷ்யாமும், ஜெ-வும் அப்படி வரைவதில் விற்பன்னர்கள். ம.செ அவர்களிடம் “கலைஞர்ட்ட சொல்லி மாத்திக்கலாமா” என்று   மெதுவாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். கலைஞர் என்னவெனக்கேட்டு, இது சொல்லப்பட்டதும், “அதெல்லாம் யோசிக்காமயா கொடுத்திருப்பேன்? அந்த விஷயமெல்லாம் கடந்துதானே நீங்களும் வந்திருப்பீங்க... எல்லாம் சிறப்பா வரும். போங்க” என்றாராம். 447ம் பக்கத்தின் ம.செ ஓவியம் பார்த்தபோது இந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்தது!     []     உரைகளை ஒவ்வொன்றையும் படித்து விவரிப்பது சற்றே அல்ல, ரொம்பவே கடினம். எனக்கு மிகவும் பிடித்தது பல அந்தக் காலத்திய பழக்கங்களை, அடிமைத்தனத்தைச் சொல்லும் செய்யுள்களைப் பற்றிச் சொல்லும்போது, ‘இது பொருள்தான். இதைக் கட்டிக்கிட்டு அழாதீங்க’ என்று நைஸாகச் சொல்லிவிடுகிறார்! உதாரணமாக, பொருளதிகாரம் - பொருளியல்- நூற்பா 15 பற்றிய உரையைச் சொல்லலாம். செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் / அறிவும் அருமையும் பெண்பாலான “பொம்பளைங்கன்னா இப்படித்தான் இருக்கணும்” என்று அர்த்தம் தரும்தான். ஆனால் கலைஞர் இதை வேறு மாதிரி கையாள்கிறார். “அக்கால நிலையைச்சுட்டிக்காட்டும் இலக்கியங்களை நாம் வழிகாட்டிகளாகக் கொள்ளவேண்டுமென்பதில்லை” என்கிறார். அதே சமயம், இந்தச் செய்யுளில் இருக்கும் அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையை வற்புறுத்தும் சொல்வன்மை, நல்லறிவு, பிறரிடம் காண இயலாத ஆளுமை இவை போற்றத்தக்க பண்புகள்தான். ஆனால் பெண்ணுக்கிடப்படும் அறிவுரை, ஆணைகள் என்று கொள்ளவேண்டாம் எனக் குறிப்பிடுகிறார். இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். வாகைத்திணை பற்றிய கலைஞரின் உரை!                                                                                                                                             வட சொற்கிளவி வடவெழுத் தொரீஇ / எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே     “வடமொழி ஒலி நீக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களுடன் அமைந்த சொற்கள் வடசொல்லாகும்” என்ற சொல் அதிகாரத்தின் செய்யுளைக் குறிப்பிடுகிறார். 7ம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன்பே வடமொழி மோப்பம் பார்த்து முடித்து, ஆரியர்கள் நுழைவுக்கு தமிழ்நிலத்தில் வழி அமைத்துக் கொடுக்கப் பட்டுவிட்டது. அதை எப்படியோ அறியாமல் இருந்துவிட்டனர் தமிழ் மக்கள் என்று சங்கட‌ப்படுகிறார்! “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என்று தொடங்குகிறது வாகைத் திணையின் செய்யுள். பார்ப்பனரின் கடமையாக வேட்டல், வேட்பித்தல், ஓதல், ஓதுவித்தல், ஈதல், ஏற்றல் என்று 6 விஷயங்களைக் ‘என்மனார் புலவர்’ கூறுவார்கள் என்கிறார் தொல்காப்பியர்.  (உரை முடிவில், “வடநூலார் கூறும் வருண வாகைக் குறிப்பு அகத்திணை, புறத்திணை இயல்களில் இல்லை” என நாவலர் சோமசுந்தர பாரதியார், பெரும்புலவர் வெள்ளைவாரணனார் ஆய்வுகளில் சொல்லியிருப்பதையும் குறிப்பிடத் தவறவில்லை கலைஞர்.)  இவற்றில், வேட்டல் - வேள்வித்தீ வளர்த்தல், வேட்பித்தல் - வேள்வி செய்ய வைத்தல் இவ்விரண்டுக்கும் பொங்கியிருக்கிறார் கலைஞர். நற்செயல்களை விடுத்து எதற்காக இந்த வீணான வேள்வியும் யாகமும் என்று கொதிக்கிறார். வீரமும், காதலுமாய் வாழ்ந்தவர்களை “ஓம குண்டங்களுக்கு முன்னால் வணங்கிக் கூன்போட்டுக்கொண்டு ‘கோமயம்’ பருகவேண்டுமா?” என்று கேட்கிறார். இன்றைக்கும் பொருந்தும் கோபம்!     ஆண் ஆடுகளைக் குறிப்பிடும் ‘அப்பர்’ என்ற சொல் வழக்கில் இருந்ததை; கலை, களிறு என்பதற்கு வேறு பொருட்கள் இருந்ததை என்று பலவற்றையும் நகைச்சுவையான கதைகள் வாயிலாகச் சொல்கிறார். மெய் எழுத்துகள் எத்தனை என நினைவில் வைத்துக்கொள்ள செங்குட்டுவன் நடத்திய போரைக் குறிப்பிடுகிறார்.   இவற்றில் என்ன சிறப்பென்றால், அப்படிச் சுவாரஸ்யக் கதையாய்ப் படித்தால் எளிதில் புரிகிறது, நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என்பதுதான். தமிழைப் பற்றிக் குறிப்பிடுகையில் அங்கங்கே தமிழர் பெருமையை வரலாற்று ஆதாரங்களோடு சொல்லி, கருத்தைப் புரியவைப்பதோடு வரலாற்றையும் விளக்குகிறார். அவற்றை எல்லாம் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.   எனக்கு புத்தகத்தைத் தாண்டி ஒருவிஷயம் பிரமிப்பைத் தந்தது. அது புத்தகம் எழுத எடுத்துக் கொண்ட கால இடைவெளி. 1.09.2002ல் எழுத ஆரம்பித்து, 3.10.2002ல் எழுதிமுடிக்கிறார் கலைஞர்! 33 நாட்களில் ஒரு பொக்கிஷம். வெறுமனே எழுதுவது மட்டுமல்ல, இதற்கு முன் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியவர்களின் நூற்களை துணைக்கு வைத்துக்கொண்டு அவற்றை அலசி, ஆராய்ந்துதான் இதை எழுதி முடித்திருக்கிறார்.    எண்பது வயதில் என்ன ஓர் உழைப்பு! அந்த உழைப்புதான் கலைஞரை உயிர்ப்போடே வைத்திருந்தது!     *** சிறுகதைகள்: பிரபஞ்சப் பாலம் யுவகிருஷ்ணா   “அரசியல்தான் நான் விரும்பித் தேர்ந்தெடுத்து பணிபுரியும் துறை” என்று அடிக்கடி சொல்லும் கலைஞர் “அரசியல் / ஆட்சி அழுத்தங்களில் இருந்து விடுவித்துக் கொள்ளவே கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களிலும் அவருடைய ஆர்வமான செயல்பாடு இருந்திருக்கிறது. தன்னை முதன்மையாகப் பத்திரிகையாளர் என்று அவர் பெருமையாக அடையாளப்படுத்திக் கொண்டாலும், இதழியல் மட்டுமின்றி சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், திரைப்படம், தன்வரலாறு, பேச்சு என்று கிளைவிரித்துத் தமிழ் பரப்பியிருக்கிறார்.   கலைஞரின் தமிழ்ப் பணிகளில் அதிகம் பேசப்படாதவையாக அவரது சிறுகதைகள் அமைந்திருக்கின்றன. மிகச்சரியாக கலைஞர் பிறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்தான் தமிழில் சிறுகதை என்கிற வடிவமே உருவாகிறது. கலைஞர் தன் 14வது வயதிலிருந்து வாசிப்பு, எழுத்து என்று தீவிரமாக செயல்படுகிறார். அப்படியிருக்க தமிழில் முதல் 25 ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளைதான் அவரால் தொடக்கத்தில் வாசித்திருக்க முடியும். ஒட்டுமொத்தமாக அப்போது 200 - 300 சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலே அதிகம்.   தமிழ் சிறுகதை நவீன வடிவத்தை எட்டாத சோதனைககுழாய்க் காலக்கட்டத்தில் இயங்கியவர்களில் கலைஞரும் ஒருவர். எனவே, இன்றைய காலக்கட்டத்தில் சிறுகதைகளில் இலக்கிய வாசகர்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய அழகியல், கச்சிதமான வடிவம் மற்றும் சிறுகதைகளுக்கான கறாரான இலக்கணம் போன்றவற்றை கலைஞரின் அந்தக் காலக்கட்டத்துப் படைப்புகளில் தேட முற்படுவது அபத்தம்.   மேலும், திராவிட இலக்கியம் என்றாலே தீட்டு என்கிற தமிழ் நவீன இலக்கியப் பண்பும் கலைஞரின் சிறுகதைகள் அதிகம் பேசப்படாததற்கு கூடுதல் காரணம். திராவிட இயக்கச் சிந்தனைகளின் பரப்பியல் உத்திகள் குறித்த ஆய்வுகள், தமிழ் இலக்கியத்தில் மிகவும் அரிது என்பதிலிருந்தே இதைப் புரிந்துக் கொள்ளலாம். திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களை எழுத்தாளர்களாக ஏற்றுக் கொள்பவர்களையே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் நாட்டாமைத்தனமான ஃபாசிஸம் இன்றும் தொடர்கிறது. இத்தகைய சூழலில் கலைஞரின் சிறுகதைகள் குறித்த துல்லியமான விமர்சனங்களை எதிர்ப்பார்ப்பதே வீண்தான்.   அண்ணா, கலைஞர், இரா.அரங்கண்ணல், ஏவிபி ஆசைத்தம்பி, இளமைப்பித்தன், தில்லை மறைமுதல்வன், இரா. இளஞ்சேரன், கேஜி. இராதாமணாளன், எஸ்எஸ். தென்னரசு, டி.கே. சீனிவாசன், முரசொலி மாறன், ப. புகழேந்தி, திருச்சி செல்வேந்திரன் ஆகியோரின் நூற்றுக்கும் மேலான தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, ‘திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ என்று சீதை பதிப்பகம் கடந்த 2012ல் திராவிட இயக்க நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் வெளியிட்டிருக்கிறது. இன்றைய நவீன தமிழ் எழுத்தாளர்களோ விமர்சகர்களோ இப்படியொரு பெருந்தொகுப்பு வந்திருப்பதையாவது அறிந்திருந்தால் அது அதிசயம். “திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு இலக்கியம் வராது” என்று மட்டையடி அடிக்கும் பார்ப்பன எழுத்தாளர்களோ அல்லது அவர்களை அடிவருடும் சூத்திர எழுத்தாளர்களோ இவற்றில் சில கதைகளையேனும் வாசித்திருந்தால் குறைந்தபட்சம் தங்கள் அறியாமையாவது உணர்ந்திருப்பார்கள்.   இன்றைய நவீன இலக்கியவாதிகளில் கலைஞரை அதிகம் வாசித்த மிக சிலரில் பிரபஞ்சனும் ஒருவர். வாசித்திருப்பதால் மட்டுமே அவரால் கலைஞரின் சிறுகதைகளுக்கு அடிநாதமாக இருக்கக்கூடிய சமுதாய உணர்வை கண்டுகொண்டு பாராட்ட முடிகிறது. “ஒரு கருத்து, சிந்தனை அல்லது அனுபவத்தைச் சமூகம் சார்ந்து வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாகவே கலைஞர் தன்னுடைய சிறுகதைகளைப் பயன்படுத்தி இருக்கிறார். கருத்து இல்லாத, சமூக உணர்வு சற்றுமில்லாத ஒரே ஒரு கலைஞரின் சிறுகதையை கூட நான் வாசித்ததில்லை” என்கிறார் பிரபஞ்சன். 80 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடா தமிழ்ப்பணி புரிந்த கலைஞர், காலமாகி இருக்கும் இச்சூழலிலாவது அவரது எழுத்துகள் மீள்வாசிப்பு செய்யப்படுவதும், அவை குறித்த ஆய்வுகள் நடத்தப்படுவதுமே நேர்மையான செயல்பாடாக இருக்க முடியும். காலம் கடந்தாவது இந்தச் செயலை நவீனத் தமிழ் இலக்கியவாதிகள் முன்னெடுத்துச் செய்வார்கள் என்று நம்புவோம்.     கலைஞரின் சிறுகதைகளுக்கு வருவோம். கலைஞர் தன் 21 வயதில் ‘கிழவன் கனவு’ என்கிற சிறுகதைத் தொகுப்பை 1945ல் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள், எந்தெந்த இதழ்களில் வெளிவந்தன என்பது குறித்த தகவல்கள் சரியாக தெரியவில்லை. அடுத்து எட்டு ஆண்டுகள் கழித்து 1953ல் ‘நாடும் நாகமும்’, 1956ல் ‘தாய்மை’ ஆகிய தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். பின்னர் ‘கண்ணடக்கம்’, ‘அரும்பு’, ‘வாழமுடியாதவர்கள்’, ‘சங்கிலிச்சாமி’, ‘தப்பிவிட்டார்கள்’ உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. 1971ல் பெரும் தொகுப்பாக முக்கியமான கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்’ என்று வெளியிடப்பட்டது.   []     1940ல் தொடங்கி 1970களின் இறுதி வரை - கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் - கலைஞர் சிறுகதை எழுதுவதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். பிறகு நாவல், ஆய்வுநூல்கள் என்று அவரது ஆர்வம் திசைமாறிய நிலையில் சிறுகதை அரிதாகி இருக்கிறது. இயக்கம் சார்ந்த இதழ்களிலேயே அவரது பெரும்பான்மைச் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன‌. அவை தவிர்த்து கொஞ்சம் அரிதாக வெகுஜன இதழ்களிலும் எழுதியிருக்கிறார்.   அவர் எத்தனை சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்பதற்குத் துல்லியமான கணக்கு இல்லை. தோராயமாக இருநூறு கதைகள் எழுதியிருக்கலாம் என்று தெரிகிறது. சினிமா, நாடகம், பேச்சு என்று தன்னுடைய மற்ற ஆற்றல்களை எல்லாம் எப்படி தான் ஏற்றுக் கொண்ட கொள்கை அரசியலுக்கு பயன்படத்தக்க வகையில் மாற்றிக் கொண்டாரோ, சிறுகதைகளையும் அப்படியேதான் உபயோகித்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் கருத்துக் கூறுகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாகதான் அவர் சிறுகதைகளையும் பார்த்திருக்கிறார்.   “இராமர் என்ன என்ஜினியரா?” என்று ராமர் பாலம் விவகாரத்தில் கலைஞர் செய்த கேலி, நாடு முழுக்கவே கடுமையான அதிர்வலைகளை எழுப்பியது. இந்துத்துவ ஆதரவாளர்கள் கலைஞரின் மறைவுக்குப் பிறகும் இதற்காக அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. ஆனால் உண்மையில் 70 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய ‘விஷம் இனிது’ கதையிலேயே இராமர் எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தி இருக்கிறார். “இராம பிரானை விட இந்த விஷம் இனிது” என்கிற கூரிய விமர்சனத்தோடு கூடிய வசனம் அந்தச் சிறுகதையில் வெளிப்படுகிறது. கடவுள் மறுப்பு என்கிற கலைஞரின் பண்பு, அவரது சிறுகதைகள் பலவற்றிலும் சம்பவங்களின் ஊடாகவும், வசனங்களின் வெளிப்பாடாகவும் பளிச்சென்றே அமைந்திருக்கிறது.   ‘கண்ணடக்கம்’ என்கிற கதையில் பிளேக் நோய் பரவி, ஊரெல்லாம் பிணம். காளிபக்தன் மனசுடைந்து போய் காளிதேவியிடம் நியாயம் கேட்பான்: “கருணைக்கடலா நீ? பேய்க்கும் உனக்கும் என்ன வேறுபாடு?” இதை வாசிக்கும்போதே உணரலாம், கலைஞரின் பெரும்பாலான கதைகளின் நாயகர்கள் ‘பராசக்தி’ குணசேகரன்களே! ‘நடுத்தெரு நாராயணி’ கதையில் ‘பராசக்தி’ கல்யாணியைகூட கண்டுக்கொள்ளலாம்.   கலைஞரின் சிறுகதைகளில் தனித்துவமானதாக அவரது வாசகர்களால் நினைவுகூறப்படுவது ‘குப்பைத் தொட்டி’ என்கிற கதை. சர்ரியலிஸம், இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம், மாந்திரீக யதார்த்தவாதம் போன்ற மேற்கத்திய கோட்பாட்டு முறைகள் தமிழ் நிலத்தில் பேசப்படுவதற்கு வெகுகாலம் முன்பே, ஒரு குப்பைத்தொட்டி மூலமாக சமகாலச் சமூகத்தை பிரதிபலிக்கும் சிறப்பான வடிவ உத்தியை அச்சிறுகதையில் கலைஞர் பயன்படுத்தி இருக்கிறார்.   இடதுசாரி இலக்கிய இதழான ‘செம்மலர்’, இச்சிறுகதையை ‘சிகரம் தொட்ட சிறுகதை’ என்கிற வரிசையில் மறுபிரசுரம் செய்து கொண்டாடியது. கலைஞரின் இலக்கியத்தரம் குறித்து நவீன இலக்கியவாதி ஒருவர் கேள்வி எழுப்பியபோது, கலைஞர் இக்கதையைதான் தன் இலக்கியத் திறனுக்குச் சான்றாக முன்வைத்தார்.   இச்சிறுகதையைப் பற்றிக் கேள்விப்பட்டு குஷ்வந்த்சிங் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ இதழில் வெளியிட்டார். கதையில் வெளிப்பட்டிருந்த புராண எதிர்ப்புக்கருத்துகளுக்காகப் பத்திரிக்கை அலுவலகத்தை இந்துமத வெறியர்கள் முற்றுகையிட்டு பிரச்சனை செய்தார்கள். அப்போது அக்கதையைப் பாராட்டி மூட்டை மூட்டையாக வந்திருந்த கடிதங்களை அவர்களுக்கு முன்பாகக் கொட்டி, “இக்கதையை ஏற்றுக் கொண்டவர்களும் இந்துக்கள்தான்” என்று மூக்குடைத்தார் குஷ்வந்த்சிங். பின்னர் ‘குப்பைத்தொட்டி’,   ஐரோப்பிய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டது. “குப்பைத்தொட்டி இங்கே குப்பையாக ஒதுக்கப் பட்டாலும் பிற மொழிகளில் கொண்டாடப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர்.   சிறுகதையின் வடிவங்களில் பரிசோதனை செய்துப் பார்ப்பது கலைஞருக்கு மிகவும் பிடித்தமானது. ‘நரியூர் நந்தியப்பன்’ என்ற சிறுகதையைக் கடிதவடிவில் எழுதியிருப்பார். அவருடைய கதைகளில் சாமியார்களைத் தோலுரிக்கும் சம்பவங்கள் ஏகத்துக்கும் அமைந்திருக்கும். ‘நளாயினி’, புராண எதிர்ப்புப் பேசும். ‘சந்தனக் கிண்ணம்’ இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரின் நியாயத்தை எடுத்துச் சொல்லும். ‘எழுத்தாளர் ஏகலைவன்’ என்ற சிறுகதையில், “சிறுகதை என்றால் வெறும் பொழுதுபோக்குக்காகப் படிப்பதற்காகவா எழுதப்படுவது? அதில் ஏதாவது ஒரு கருத்து, சமுதாயத்துக்குத் தேவையானதாக அமைக்கப்பட வேண்டாமா?” என்று தான் ஏன் சிறுகதை எழுதுகிறார் என்பதற்கான நியாயத்தை கதையின் போக்கிலேயே சொல்லியிருப்பார்.     சிறுகதை என்றால் என்னவென்று இந்த பின்நவீனத்துவக் காலக்கட்டத்திலும் ஏதோ ஒரு வாசகனால் கேட்கப்படுகிறது. ஏதோ ஓர் எழுத்தாளர், தான் அறிந்ததை விளக்கிக் கொண்டிருக்கிறார். சிறுகதைக்கான கலைஞரின் இலக்கணம் மிகவும் எளிமையானது. “ஒரு காட்சி அல்லது நிகழ்வைப் பற்றி, மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லும்போது, அவரவர் நிலைக்கேற்பவும், அறிவு வளர்ச்சிக்கேற்பவும் விளக்குபவருக்கும் விளக்கத்தைக் கேட்பவருக்குமிடையே ஒரு பாலமாகப் பாவிக்கப்படுவதுதான் சிறுகதை.”   ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கம்தான் இல்லையா!   ****   தமிழிசை: இரண்டாம் தமிழ் விஜய் எஸ்ஏ (@tekvijay)    தமிழ்நாட்டின் 20ஆம் நூற்றாண்டு அரசியல் சமூக வரலாற்றைப் பார்த்தோமானால் அதில் இசை சார்ந்த ‘இசை அரசியல்’ என்பது அங்கு இங்கென பல்வேறு இடங்களில் பரந்துபட்டு நிறைந்திருக்கிறது. இன்றைய தேதியில், தமிழிசை தான் கர்நாடக இசை என்கின்ற அடிப்படை உண்மையை யாரும் மறுக்கமுடியாதபடி பலரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.   போன நூற்றாண்டில் பெரும் பிரச்சனையாக எழுந்து அடங்கிய “தமிழ்நாட்டில் வேற்றுமொழியில் பாடுவது” என்கிற பிரச்சனை, இன்று ஓரளவேனும் குறைந்துவிட்டது, சஞ்சய் சுப்ரமணியம் போன்ற புகழ்பெற்ற செவ்வியல் இசைக்கலைஞர்கள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் சீசனில் தமிழிசை மன்றத்தில் முழுக்க தமிழில் பாடுகிறார்கள். ஆனால் இன்னமும் ஆரிய பார்ப்பனர்கள் ஆதிக்கம் அதில் வேறு விதங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், செவ்வியல் இசையை அல்லது பொதுவாக மண் சார்ந்த இசையை, தமிழிசை கோட்பாடுகள் கொண்டு அணுகாமல் இன்னும் கர்நாடக சங்கீதம் வகுத்த கோட்பாடுகள் தான் கோலோச்சுகின்றன.   இன்னமும் தமிழர்களாகிய நாம், இதில் முழுதாக இறங்கிச் சீர்திருத்தம் செய்யாமலிருக்கிறோம் என்பது ஒரு முக்கிய காரணம். தமிழக அரசு இசைக்கல்லூரிக்கு முதல்வராக ஒரு தமிழர் புஷ்பவனம் குப்புசாமி ஆகமுடிவதில்லை, ஆனால் (சுதா ரகுநாதன்) சிபாரிசில் அவர்களுக்கு தோதான ஒருவர் முதல்வர் ஆக முடிகிறது. ஆனால் அதையும் தாண்டி இன்று செவ்வியல் இசைத்துறை கர்நாடக இசை என்ற பெயரிலும், மக்களிசையும் ஆங்காங்கு அதன் வடிவிலும், நவீன தொழில்நுட்பவளர்ச்சியால் விளைந்த சினிமா திரைப்பட இசை என்றும் பரந்துவிரிந்து தமிழிசை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச் சூழலில், தமிழ் மண்ணை, மக்களை, இதன் வரலாற்றை, பண்பாட்டை, தொடர்ந்து மாறிக்கொண்டு வரும் பகுத்தறிவை, இறுதி மூச்சு உள்ள வரை கட்டிக்காத்தவரும் நேசித்தவருமான கலைஞர் கருணாநிதி, தமிழ் இசைக்கு செய்த சேவைகள் குறித்து தனியே பதிவு செய்யவேண்டி இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.   கலைஞர் தமிழிசையின் பால் செய்த முதல் பதிவு என்று வரலாற்றை முடிந்தளவு பின்னோக்கிச்சென்றால் நமக்கு கிடைப்பது, அவர் 1946இல் குடிய‌ரசு இதழில் எழுத்துப்பணி செய்தபோது எழுதிய ‘தீட்டாயிடுத்து!’ என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரை! அந்த ஆண்டு, திருவையாறு தியாகராஜர் உற்சவ இசை விழாவில், தண்டபாணி தேசிகர் “விநாயகனே வினை தீர்ப்பவனே” என்று தமிழில் பாடியதால், “நீச பாஷை தமிழில் பாடிட்டார், தீட்டாயிடுத்து” என்று சொல்லி அங்கிருந்த பார்ப்பனர்கள், தண்டபாணி தேசிகர் பாடிய இடத்தை நீரால் கழுவினர் என்பது அங்கு நடந்த சம்பவம். அதை குடிய‌ரசு இதழில் சிறுகட்டுரையாகக் கலைஞர் எழுத, பெரியார் பாராட்டினாராம்! (கட்டுரையிலிருந்து: அகத்திலும், அக்கிரகாரத்திலும் இருந்து வந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்சவத்திலும் புகுந்து விட்டது. தமிழ்நாட்டிலே - தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே - தமிழர்களுடைய மொழிக்குத் தடையுத்தரவு ஆங்கில அரசாங்கமல்ல - ஆரிய அரசாங்கத்தின் ஆணை! தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகி விட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக - அனுமார்களாக வாழ்வதுதான், தமிழர் இனம் சூத்திர இனமாகவும், தமிழர் மொழி தீட்டுப்பட்ட மொழியாகவும் போய்விட்டது. தியாகராஜர் திருநாளுக்கு நன்கொடை வழங்கும் முட்டாள் தமிழர்களும், தொண்டர்க்குத் தொண்டராம் சிஷ்யகோடிகளின் வரிசையிலுள்ள அழகப்ப செட்டியார் போன்ற விபீஷணர்களும் உள்ளவரை ஆரியக்குடி வர்க்கம் அகம்பாவத்தோடு தான் வாழும்.)    இதற்கடுத்து, அவர் அரசியலில் நுழைந்து வளர்ந்து வென்று முதல்வரான பின், ஆரம்ப காலகட்டங்களில் அவரின் பங்களிப்பு குறித்து அதிகம் தகவல்கள் இல்லை. ஆனால் 2009இல் அவர் முதல்வராக இருந்த போது செய்த முக்கிய சம்பவம், ஆபிரகாம் பண்டிதர் எழுதிய ’கருணாமிர்த சாகரம்’ என்கிற அதிமுக்கியம் வாய்ந்த தமிழிசை நூலை நாட்டுமையாக்குகிறார். அதுமட்டுமின்றி, பண்டிதர் வம்சாவளியில் வந்த அமுதா பாண்டியன் எழுதிய ‘கருணாமிர்த சாகரம் – சுருக்கத்திறனாய்வு உரை’ (Karunamirdha Sagaram – A Brief Critical Review) என்கிற நூலை வெளியிட ஆராய்ச்சித்தொகையை அரசு மூலம் வழங்குகிறார். இதற்கு முன்பு, 1997இல், பிடிஆர் பழனிவேல்ராஜனின் இளைய சகோதரர் பிடிஆர் கமலைத் தியாகராஜன் எழுதிய தமிழிசை வரலாறு/கோட்பாடுகள் பற்றிய நூலான ‘இசைத்தமிழின் உண்மை வரலாறு’ என்கிற நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார் கலைஞர். அது உங்கள் பார்வைக்கு கீழே:   []       []     கலைஞர், தமிழிசை ஆய்வு நூலுக்கு அணிந்துரை அல்லது முன்னுரை எழுதும் அளவுக்குத் தான் இசை அறிஞர் அல்லன் என்கிறார், ஆனால், அவரறிவுக்குட்பட்டு இந்த நூலை நன்கு வாசித்திருக்கிறார் என்பது அவர் எழுதிய அற்புதமான உரையே நமக்குச் சொல்கிறது. தமிழகத்தில் இசையின் பொற்காலம் என்று கர்நாடக இசை மூவர் (தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்) வாழ்ந்த காலத்தை நூலாசிரியர் சொல்வதைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு முன்னரே வாழ்ந்த‌ அருணாசலக்கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய தமிழிசை மூவரைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழ் இசை வரலாற்றில் ஆரிய பார்ப்பனர்களால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட எண்ணற்ற தகவல்களுள் இம்மூவரும் அடக்கம்.   கலைஞர் இந்த தமிழிசை மூவர்களுக்காக, அவர்கள் நினைவை போற்றும் விதமாக 2010ஆம் ஆண்டு, இவர்களுக்கு ஒரு மணிமண்டபம் எழுப்பப்படும் என்று அறிவித்து நாகை மாவட்டம் சீர்காழியில் இதற்காக இடம் ஒதுக்கினார். பின்னர் அது கட்டப்பட்டு அடுத்த வந்த‌ அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டது.   []     தமிழிசை குறித்த நூல்கள், பஞ்ச மரபு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற சங்ககால நூல்களில் துவங்கி, நா.மம்மது உருவாக்கிய தமிழிசைப் பேரகராதி வரை, கிட்டத்தட்ட 100 நூல்களுக்குள் தான் இருக்கும். ஆனால் இன்றைய தேதியில், தமிழிசையில் ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நூல்கள் கூட கிடைப்பது பேரரிது என்கிற நிலை தான். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் நூலகங்கள் அனைவரும் எளிதில் பயன்படுத்த முடியாத நிலையில், வாங்க நினைத்தாலும் பல நூல்கள் இன்று அச்சில் இல்லாத நிலையில், கலைஞர் அமைத்த அண்ணா நூலகம் இன்று ஒரு ஞானப்புதையலே தான்! அதன் தமிழிசைப்பிரிவில் பலப்பல முக்கிய நூல்கள் இடம்பெற்றிருப்பது கலைஞர் அளித்த கொடை!   சர்ச்சைகளும் இல்லாமலில்லை. 2007இல் பத்மா சுப்ரமணியம் “பரதமுனி ட்ரஸ்ட்” என்ற பெயரில் ஒரு நடன ட்ரஸ்ட் தொடர்பான விழாவிற்காக கலைஞரிடம் அனுமதி கேட்க, அவர் கொதிப்படைந்திருக்கிறார். பின்னர் அந்த இடத்தை பர்த-இளங்கோ ட்ரஸ்ட் என பத்மா பெயர்மாற்றி இருக்கிறார். அனேகமாக, இதற்கு பதிலடியாகத்தான் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் திறக்கும் திட்டத்தை கலைஞர் செயல்படுத்தி இருக்க வேண்டும். ஏனெனில், பரதர் இயற்றிய நாட்டிய சாஸ்திரம் தான் ஒட்டுமொத்த இந்திய இசை மற்றும் நடனத்திற்கு அடிப்படை என ஆரியர்க‌ள் பலகாலமாய்த் திரிபுவாதம் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் 4ஆம் நூற்றாண்டு நாட்டிய சாஸ்திரத்திற்கு முன்பே, கிமு 2ஆம் நூற்றாண்டின் சிலப்பதிகாரமே தமிழர்களின் இசைக்கோட்பாடு மற்றும் நடனத்திற்கான கருவூலமாகத் தமிழர்களால் கருதப்படுகிறது. சிலம்புக்கு முந்தைய பஞ்சமரபு (ஐந்து தொகை) உள்ளிட்ட நூல்களும் இசைக்கோட்பாடுகளுக்கு அடிப்படை தானெனினும் சிலம்பு பல்வேறு காரணங்களுக்காக ஒரு மிகமுக்கிய மய்யமான நூலாக விளங்குகின்றது.   2008இல் கலைஞர் எழுதிய உளியின் ஓசை என்கிற திரைப்படத்தில், இசைஞானி இளையராஜா இசையில் ‘அகந்தையில் ஆடுவதா…’ என்கிற பாடலில், தமிழிசையின் தொன்மம், அதன் நூல்கள், இசைக்கருவிகள் பற்றிய குறிப்புக்களை பாடல் வரிகளாக வடித்திருப்பார்! திருவாசகம், ஸ்வப்னம் போன்ற இசை ஆல்பங்கள், உளியின் ஓசை பாடல் உள்பட, திரைப்பாடல்களில் தமிழிசை பற்றிய குறிப்புக்களை இளையராஜா வைத்திருப்பார். குறிப்பாக, கோவில் புறா என்ற படத்தில், ‘அமுதே தமிழே…’ என்ற பாடலில், “தேனூறும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம் தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே” என்று புலமைப்பித்தன் எழுதியிருப்பார். இவை மட்டுமின்றி, இளையராஜா, தன் திரைப்படங்களில் தமிழிசையின் முக்கிய இசைக்கருவிகளான பறை, நாகசுரம் உள்பட, நீண்டகாலமாக இந்த மண்ணின் பல்வேறு வகையான தாள/மேளக்கருவிகளை பயன்படுத்துவது அனைவரும் அறிந்தது. இளையராஜாவின் நாட்டுப்புற இசை, மக்களிசைக்கான பங்களிப்பு சாதனைகள் என்பது சொல்லிதெரியவேண்டியதே அல்ல. அவ்வகையில், தமிழிசைக்கு தொண்டாற்றும் இளையராஜாவை பெருமைப்படுத்த இளையராஜாவுக்கு இசைஞானி பட்டத்தை கலைஞர் வழங்கியது கூட, தமிழிசைத் துறைக்கு கலைஞர் செய்த சேவை தான்.   (மேற்சொன்ன ’அமுதே தமிழே’ பாடல் வரிகளின்படி தேவாரம் - 7ஆம் நூற்றாண்டு - தான் இசைப்பாட்டின் ஆதாரம் என்று சொன்னால், அதை மறுத்து அதற்கு முந்தைய இசைநூல்கள், இசைப்பாடல்கள், 5ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்ட பக்தி இலக்கியம் சார்ந்த பாடல்களை சிலர் குறிப்பிடலாம். ஆனால் அன்றைய தமிழகத்தில் 247க்கும் மேற்பட்ட சிவ தலங்களில் பாடல்பெற்றது தேவாரம் தான் என்பதால் அந்த வரி நியாயமாகிறது. அதேபோல், தமிழிசை தான் தரணியிலேயே முதன்முதலாக தோன்றிய இசை என்பதும் கேள்விக்குள்ளாக்கப்படலாம். அது மிகநீண்ட விவாதம். ஆனால் உலக வரலாற்றில், கிரேக்க இசைக்குகூட துவக்கம் உண்டு ஆனால் தமிழிசை துவக்கமே தெரியாத அளவு பழையது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பஞ்சமரபு ஆகிய நூல்களின் காலத்திலேயே தமிழிசை மிகவும் பண்பட்ட, கோட்பாடுகள் நன்கு வளர்ந்த செழிப்பான கலையாக திகழ்ந்தது என்கிறவிதத்தில், தமிழிசை தரணியில் முதலிசை தான்.)   இவை அனைத்தும் நமக்கு சொல்வது ஒன்றே! தமிழக அரசியல் தலைவர்களில், இன்றும் ஒரு சவலைப் பிள்ளையாக இருக்கும் தமிழ் இசையின்மீது அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்த, தமிழ் இசைக்கு தொண்டாற்றிய ஒரே முதல்வர் கலைஞர் மட்டுமே! த‌ன் வாழ்நாளில் இன்னும் அதிக முறை ஆட்சியில் இருந்திருந்தால், இன்னும் கூட செய்திருப்பார். மேற்சொன்ன ‘இசைத்தமிழின் உண்மை வரலாறு’ நூலில் “அக்காலத்தமிழன் இசையில் உயர்ந்திருந்ததை இக்காலத்தமிழன் உணரவில்லை” என்று கலைஞர் சுட்டிக் காட்டிய கருத்தை மனதில் கொண்டு, வருங்காலத்தில், தமிழ்ப்பண்பாட்டை முழுமையாக ஆரிய ஆதிக்க சக்திகளிடமிருந்து மீட்பதுபோல் தமிழ் இசையையும் மீட்டெடுப்போம் எனத் தமிழர்கள் உறுதி பூணுவோம்.   ***                                                                           இனியவை இருபது: ஐரோப்பிய திக்விஜயம் ராஜூ. நா   இனியவை இருபது என்கிற இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும், பேச்சாளர் ஐ.லியோனி, கலைஞருக்கான தன் அஞ்சலிக் குறிப்பில் எழுதியதுதான் ஞாபகம் வந்தது: “கோயம்புத்தூர்ல தி.மு.க-வின் முப்பெரும் விழாவையொட்டி பட்டிமன்றம். ‘மக்களுக்குப் பெரிதும் வழிகாட்டியது இன்னா நாற்பதா? இனியவை நாற்பதா?’ - என்பது தலைப்பு. அது அவர் கொடுத்ததுதான். இன்னா நாற்பது, இனியவை நாற்பது செய்யுள்களைப் புரட்டித் தயார் பண்ணிட்டு போனோம். ஆனா, எம்.பி தேர்தல்ல தி.மு.க ஜெயிச்ச தொகுதிகளை வச்சு உருவாக்கின தலைப்பு அதுன்னு எங்களுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது.”   நல்லவேளையாக, அம்மாதிரியான பொடியெல்லாம் இல்லை. தான் 20 நாட்கள் சுற்றுலா சென்று வந்ததன் அடிப்படையிலான 20 பயணக்கட்டுரைகள் என நேரடியாகவே தலைப்பிற்கு வந்துவிடுகிறார் கலைஞர்.   இந்த இடத்தில் வெளிநாடு இன்பச் சுற்றுலா என்றதும், அவரின் மூத்த மகள் செல்வி ஒரு நேர்காணலில் சொன்னது அடுத்ததாக நினைவிற்கு வந்தது: “அப்பாவுக்கு, நாங்க வெளிநாடு போறதே பிடிக்காது, வெளிநாடு போறோம்ன்னு சொன்னாலே முறைப்பார்.” அப்படியானால், இவர் மட்டும் வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா போகலாமா என்று உள்ளுக்குள் ஒரு விமர்சனம் எழுந்தது. ஆனால், அதற்கும் அப்போதே இந்நூலில் பதில் எழுதியிருக்கிறார் கலைஞர். ஆம், இது பாதி அரசு முறையிலான பயணம், மீதிதான் இன்பச் சுற்றுலா! மனைவி தயாளு அம்மாளைத் தவிர, அரசுப் பயணத்திற்குரிய ஆட்களாக தமிழக அரசின் அன்றைய நிதிச் செயலாளர் உள்ளிட்ட ஒரு குழுவையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். தவிர, இந்தப் பயணங்கள் யாவும் அந்தந்த நாட்டின் அரசுகளே அவரை விரும்பி அழைத்தவை! இதில், இங்கிலாந்து பயணத்திற்காகும் செலவை அந்நாடே ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், அரசின் கொள்கை இடம் கொடுக்காத காரணத்தால், தமிழக அரசே செலவை ஏற்றிருக்கிறது. (ரோம் நகரின் ஒரு கடையில், கண்ணாடிப் பொருளொன்றை இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் விலை சொன்னதும், விலை அதிகம் எனக் கருதி, அதை வாங்காமல் வந்துவிட்டதாக, ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.)   அதன் நன்றிக் கடனாக, அரசியல் மேடைகளில் எங்கும் இப்பயணம் குறித்துப் பேசாமல், இந்நூலின் கட்டுரைகளில் அரசிதழிலேயே எழுதியிருக்கிறார். செய்திகள் வாசிக்க ஆரம்பித்த காலம் தொட்டு, 'கலைஞர் வெளிநாடு பயணம்' என்பது போன்ற செய்தியை வாசித்த ஞாபகமில்லை. அவ்வளவு ஏன், சிகிச்சைக்காகக் கூட அவர் வெளிநாடு சென்றவரில்லை. அப்படிச் சென்றிருந்தால், அப்பயணங்களும் புத்தகங்களாக வந்திருக்குமே! (ஒருவேளை நெஞ்சுக்கு நீதி பாகங்களில் குறிப்பு இருக்கலாம்) எது எப்படியோ, கலைஞர் எழுதிய ஒரே பயணக் கட்டுரை நூல் இந்த 'இனியவை இருபது' மட்டும்தான்.   பயணத்திற்குத் தேவையான பொருட்களைப் பெட்டியில் எடுத்து வைக்கும் திட்டத்தில் ஆரம்பித்து, வீட்டிலிருந்து கிளம்பி சென்னை - பம்பாய் வழியாகச் செல்வதிலிருந்து பம்பாய் விமான நிலையத்தில், கோட் சூட் மாட்டிக்கொண்டிருக்கும் கோலத்தைக் காண, அவர் தோழர்கள் கூடியது வரை ஒன்று விடாமல் அனைத்தையும் எழுதியிருக்கிறார். வழி நெடுக, தன்னை அனுப்பி வைப்பதற்காகக் கூடிய கூட்டமும், அதனாலேயே குறித்த நேரத்திற்கு முன்பாகக் கிளம்பியும், விமானம் தன்னால் தாமதமானதற்காக, சக பயணிகளிடம் அதற்காக மன்னிப்புக் கோரியும் கூட எழுதியிருக்கிறார்.   பம்பாயில் வசிக்கும் நெல்லைத் தமிழர்கள், அவரிடம் அப்போதும் மனு கொடுக்க வந்திருக்கிறார்கள். காலா'காலாத்திற்கும், எங்கு சென்றாலும் அவருக்கு இது தொடர்ந்திருக்கிறது. வெளிநாடுகளிலும் கூட, பொதுமக்கள் அவரைச் சந்தித்து அவரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.   இவையன்றி, பொதுவாகவே தன்னுடைய வாழ்வின் பல நாட்களை, மக்கள் பெருங்கூட்டத்தின் நடுவிலேயே கழித்திருக்கிறார் கலைஞர். வேறு எவரையும் போல, தன்னால் சாலையில் சுதந்திரமாக உலாவ முடியவில்லையே என்பது, ஒரு பெருங்குறையாக 1970'களிலேயே அவருக்கு இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும், சிறு பெருமிதத்துடன் அதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் அவர். அதைத் தீர்க்கும் விதமாக, வெளிநாட்டுச் சாலைகளில் ஒரு விடுதலை உணர்வுடன் நடந்திருக்கிறார். அப்படி ஒரு முறை சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கையில், அங்கும் கலைஞரைச் சிலர் பின் தொடர்ந்திருக்கின்றனர். அவர் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்க, அவர்கள் தயாளு அம்மாளைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.   இந்த இடத்தில் இன்னொன்றைச் சொல்ல வேண்டும், வாடிகனில் போப்பாண்டவரைச் சந்தித்த போது, தயாளு அம்மாள் அவரிடம் ஜெபமாலை வாங்கியதாக எழுதுகிறார் கலைஞர். இங்கே, சென்னை வீட்டில் கேமராக்களின் ப்ளாஷ் வெளிச்சம் மின்ன, புட்டபர்த்தி சாய்பாபாவிடம், ஆசி வாங்கிய தயாளு அம்மாளின் காட்சி நிழலாடியது. அவ்வகையில், அங்கிருந்த ஒரே 'ப்ளாஷ் வெளிச்சம்' கலைஞரின் பேனா மட்டுமே!   போப்'பைச் சந்திக்கச் செல்கையில், கலைஞர் - தயாளு என இருவருக்கு மட்டுமே அனுமதி என்றவர்களிடம் பேசி, தன் குழுவில் வந்த அலெக்சாண்டர் எனும் கிறித்துவருக்கு முதலில் அனுமதி வாங்கிக் கொடுத்திருக்கிறார். பின்பு உள்ளே சென்றதும், போப்'பிடமே பேசி, குழுவிலிருந்த அனைவருக்குமே அவரைச் சந்திக்க அனுமதி வாங்கிக் கொடுத்திருக்கிறார் கலைஞர்.   அடிப்படையில் கலைஞர் ஒரு திரைக்கதாசிரியர் என்பதாலோ என்னவோ, அவர் பயணம் மேற்கொள்ளும் அந்தந்த நகரங்களின் வரலாறும், அதன் நாயகர்களின் வரலாறும், அவர் அங்கிருக்கையில் Flashback'களில் சென்று வருகின்றன. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்லும் இரயில், கார் பயணங்களை இதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார். இணைய விக்கிப்பீடியா முதலான எதன் வரலாற்றையும் எளிதில் அறியும் வசதிகள் பெருகிவிட்ட காரணத்தால், இப்போது அவற்றை வாசிக்கையில், 'எல்லாம் தெரிந்த கதைகள்தானே' என்கின்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படுகிறது. என்றாலும், கலைஞரின் எழுத்து நடை அதில் சுவாரசியம் தரத் தவறவில்லை என்பேன். உரோம், உரேமுலசு, பாரீசு, இட்லர், ஆலந்து என எழுதும் தனித்தமிழையும், அங்கங்கு தொனிக்கும் வசனக் கவிதை நடையையும் சொல்லலாம்.   []     கடிகாரத்தை மணிப்பொறி என்கிறார், இலக்ரீசியா'வை பொற்புடைப் பூவை என வர்ணிக்கிறார். ஆக்டேவியாவை, மங்கை நல்லாள் என்கிறார், அக்ரிப்பானவை, ஆபாசக் களஞ்சியம் என்கிறார், எல்லோர் எழுத்திலும் பிடில் வாசிக்கும் நீரோ, கலைஞரின் எழுத்தில் யாழ் வாசிக்கிறான், மாக்கியவல்லியைப் பற்றி எழுதுகையில், 'அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்' எனும் சிலப்பதிகாரத்தின் மூன்று வாக்குகளில் முதலாவதை நினைவு கூர்கிறார், முசோலினி பற்றி எழுதுகையில், ஒரு சனநாயகவாதிக்கே உரிய ஒரு சிறுகோபம் அவருடைய எழுத்தில் வெளிப்படுகிறது. அவர் எழுத்து யாரைப் பற்றி எங்கு சுற்றினாலும் இறுதியில், திருக்குறள் அல்லது சிலப்பதிகாரத்தில் வந்துதான் நிற்கிறது. நெதர்லாந்து நாட்டின் இயற்கை அமைப்பு தாழ்வான பகுதி என்றதும், அதை கடல் கொண்ட பூம்புகாருடன் ஒப்பிடுகிறார் கலைஞர்.   சுவிட்சர்லாந்து பயணத்தின் போது, பேரறிஞர் அண்ணா அடிக்கடி தன் எழுத்துகளில் மேற்கோள் காட்டிய நாடாக, அதை நினைவுபடுத்திக் கொள்கிறார் கலைஞர். அதனாலேயே அந்நாட்டின் மீதான வாஞ்சை அவரது எழுத்துகளில் வெளிப்படுகிறது. ஆல்ப்ஸ் மலையின் காற்றை, தென்பொதிகை மலைக் காற்றுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இது தவிர, அண்ணா இந்நூலில் இன்னும் இரு இடங்களில் வருகிறார். மன்னன் நீரோ காலத்தில், ரோமில் எரிந்த நெருப்பின் காரணம் தெரியாததைப் போலவே 1967'ல் அண்ணா ஆட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், யாரோ நெருப்பு மூட்டியதாகக் குறிப்பிட்டு, அவர்களைச் சாடுகிறார். இன்னொரு இடம், போப் ஆண்டவருடனான சந்திப்பு. போப்பிடம், உங்களை அன்று சந்தித்த அண்ணாவின் தம்பி என்பது போன்று, அவரை நினைவூட்டிப் பேசுகிறார் கலைஞர்.   அண்ணாவிற்கு அடுத்து, 'கேள்வி - பதில் இல்லாமலும் கலைஞர் இல்லை. இந்நூலிலும், வெளிநாட்டு நிருபர்கள் கலைஞரைப் பேட்டி கண்டவை அனைத்தும், கேள்வி - பதில் பாணியில் வருகின்றன. அது, திமுக கட்சி தன் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு, ஆட்சியைப் பிடித்து, 'மாநில சுயாட்சி'க்காக வலுவாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டம் என்பதால் (1970), பெரும்பாலான கேள்விகள் மாநிலத்திற்கு அதிக அதிகாரம் கேட்பதை ஒட்டியே அமைந்திருக்கின்றன. அது ஜெர்மனியில் எடுக்கப்பட்ட வானொலி, அச்சு ஊடகப் பேட்டிகள் என்றாலும் சரி, பாரீசில் பிபிசி எடுத்த பேட்டியிலும் சரி.   ஜெர்மனி பேட்டிகளின் போது கேட்கப்பட்ட கேள்விகள்:   கே: நீங்கள் இங்கு பார்த்த இடங்கள், தொழிற்சாலைகள், இன்னும் மற்றவற்றில் இருந்து எது உங்கள் மாநிலத்துக்குப் பயன்படுவதாக இருக்கு என்று கருதுகிறீர்கள்..? ப: எத்தனையோ இருப்பினும், வீட்டு வசதித் துறையில் செர்மனி அடைந்துள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. அத்துறையில் இங்கு கடைப்பிடிக்கப்படும் முறை ஆராயப்பட்டு, எங்கள் மாநிலத்திலும் கடைப்பிடிக்கப்படுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்வேன்.   கே: இலங்கையிலிருந்து, தமிழ் நாட்டிற்குத் தமிழர்கள் குடியேறத் துவங்கி விட்டார்களா..? ப: ஏற்கனவே கையெழுத்தான, சாஸ்திரி - பண்டாரநாயகா ஒப்பந்தப்படி, தமிழர்கள் குடிபெயர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.   இலண்டன் பிபிசி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி: கே: மற்ற மாநில முதல்வர்கள், உங்களைப் போல மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்கிறார்களா? ப: அவர்களுக்கும் அந்த விருப்பமிருக்கிறது. ஆனால், வெளிப்படையாகத் தெரிவிக்க அவர்கள் முன்வரவில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சி, ஆட்சியில் இருப்பது ஒரு சிலரை சுதந்திரமாகப் பேச இயலாமல் கட்டுப்படுத்துகிறது.   இறுதியாக, சுற்றுலா ஒரு முடிவுக்கு வந்து பாரீசில் நடந்த மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டில் நிறைவேறுகிறது. மூன்று இலட்சம் சொற்கள் கொண்ட ஆங்கிலம் - தமிழ் அகராதி போதாது, ஆறு இலட்சம் சொற்களேனும் தமிழில் இருக்கும். அவை அனைத்தையும் அகராதியில் கொண்டு வரவேண்டுமென அப்போதே அம்மேடையில் பேசியிருக்கிறார் கலைஞர். பின், மாநாட்டிலிருந்து எகிப்து வழியாக பம்பாய். அங்கிருந்து அடுத்து தமிழகமென வீடு திரும்பல் அமைகிறது.   இப்பயணத்தில், கலைஞர் கண்ட எல்லா நாடுகளும் - குறிப்பாக சுவிஸ் - சுற்றுலா மூலம் பொருளீட்டி அரசின் வருவாயைப் பெருக்குவது ஓர் ஆட்சியாளராக, அவர் கண்களை உறுத்திக் கொண்டேயிருந்ததை, புத்தகம் நெடுகவும் வரும் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. இந்த இருபது நாள் பயணத்தின் விளைவாகவே, தமிழகத்தில் 'சுற்றுலாத் துறை' என்று தனியாக ஓர் அமைச்சகத்தையும், அதற்கான அலுவலகத்தையும் உருவாக்கியிருக்கிறார். ஆக, இப்பயணத்தின் மூலம், தமிழகம் அடைந்த இரு பெரும் பலன்களாக வீட்டு வசதித் துறை வளர்ச்சியையும், சுற்றுலாத் துறையின் தோற்றத்தையும் சொல்லலாம்.   இந்த இனியவை இருபது நூலை, கலைஞரின் வெளிநாட்டு பயணத்தின் அடிப்படையிலான நூல் என்பதுடன் சேர்த்து, அவருடைய ஒரு திறந்த டைரி போலவே பார்க்கலாம். ரோம், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாட்டின் பண்டைய, அன்றைய வரலாறுகள் வரும் அளவிற்கு, பயணத்தின் போது தான் ஆசையாக கேமராவால் எடுத்த சில சிற்ப / ஓவியப் படங்கள் அழிந்து போனது மாதிரியான நிகழ்வுகளும் வந்து செல்கின்றன. ஆம், இந்த விமான நிலையத்தில் இந்த விமானம் தாமதமாக வந்தது என்பது முதற்கொண்டு, பயணம் முடிந்து நேராக, அண்ணா சதுக்கம் சென்றது வரை அனைத்தையும் - சிறிது, பெரிது பாராட்டிப் புறந்தள்ளாது - ஒவ்வொரு நிகழ்வையும் குறிப்பிட்டு எழுதி வைத்திருக்கிறார்.   கலைஞர் மீது விமர்சனங்கள் எழுவதற்கும் சரி, பின்பொருநாள் அவ்விமர்சனங்களுக்கு எங்கேனும் பதில் கிடைப்பதற்கும் சரி, அவருடைய இந்தத் தன்னுணர்வுதான் காரணம். வேறு எந்தத் துறையில் இருப்பவர்களையும் விட, பொதுவாழ்விலும் அரசியலிலும் இருப்பவர்களுக்கு இந்தத் தன்னுணர்வு மிக முக்கியம். கலைஞருக்கு அது அதிகமாகவே இருந்தது என்பதற்கு இந்நூல் இன்னுமோர் எடுத்துக்காட்டு.   ***   எழுத்துலகின் இடா ஸ்கட்டர் பூவண்ணன் கணபதி   கலைஞர் தன் பொதுவாழ்வை எழுத்தாளராகத் துவக்கினார். பல்வேறு துறைகளில் பல்வேறு பொறுப்புகள் சுமந்தாலும் எழுத்தாளராகவே வாழ்ந்தார். இறக்கும் வரை கலைஞர் எழுத்தாளர் தான். தன்னைத் தவிர வேறு யாருக்கும் ஒன்றும் தெரியாது, தன்னை போல சாதித்தவன் வேறு எவரும் கிடையாது என்ற எண்ணம் கொண்டவர்கள் மிகுந்து காணப்படும் துறைகளில் முதலிடம் எழுத்தாளர்களுக்கு என்ற கூற்றை கண்ணை மூடிக் கொண்டு ஏற்று கொள்ளலாம் என்றாலும் கூட கலைஞரின் எழுத்து சார்ந்து வரும் விமர்சனங்கள் இதனையும் கடந்த வன்மத்தின் உச்சத்தைத் தொட்டவை என்றால் மிகை கிடையாது.    18 வயது இளைஞனான கருணாநிதி துவக்கிய கையெழுத்துப் பத்திரிக்கை முரசொலியில் தான் அவரின் எழுத்து பணி துவங்கியது. தன் கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் முரசொலி பத்திரிக்கையை தொடர்ந்து நடத்தி வந்ததை, அதில் எழுதுவதை முதல்கடமையாக கருதியதை விட எழுத்தின் மீதான அவரின் ஈர்ப்புக்கு வேறு சான்றுகளும் வேண்டுமோ! திருவாரூரில் இருந்து தஞ்சைக்கும் அங்கிருந்து சென்னைக்கும் முரசொலியில் பதிப்பகம் மாறியது. 1960-ம் ஆண்டில் பெரியாரின் பிறந்த நாளில் இருந்து நாளிதழாக மாற்றம் பெற்றது. முரசொலி பத்திரிக்கைகளில் வந்தவற்றை தொடர்ச்சியாய்ப் படித்து வந்த வாசகர்களுக்கு இணையாக, அவற்றைப் பைண்ட் செய்து பொக்கிஷமாக சேர்த்து வைத்த முரசொலியில் முரட்டு பக்தர்களின் வளர்ச்சியும் திராவிட இயக்கத்தின் வளர்ச்சியோடு ஒன்றிணைந்து நடந்த ஒன்று.    கலைஞர் நினைவு நீயா நானா நிகழ்வில் (விஜய் டிவி) துரைமுருகன் தன்னை எழுத வைக்க கலைஞர் எடுத்த முயற்சிகளை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார். இன்று தமிழகத்தில் பல ஆயிரம் பேர் எழுத்தாளர்களாக உருவாக முயற்சிக்கும் சூழலுக்கு வித்திட்டவர்களில் ஒருவர் கலைஞர். இணையத்திலும் மற்ற மொழிகளை விட தமிழில் எழுதுவோர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில், சதவீத அளவில் அதிகமாக இருக்க எழுத்து துறையில் கலைஞர் உடைத்த பல மனத்தடைகள் முக்கிய காரணம்.    கதை எழுதுபவனே எழுத்தாளர், அதிலும் புரிந்து கொள்ளக்கடினமான முறையில் எழுதுபவன் தரமானவன், அன்றாட விஷயங்களில் கவனத்தை செலுத்துவது தரமற்ற நிலைக்கு தள்ளும் என்ற எழுத்துலக நாட்டாமைத் தீர்ப்புகளை பொருட்டாக மதிக்காமல் எழுத்தை கொண்டு சமூக அவலங்களை மக்கள் முன் துகிலுரித்திக் காட்டிய கலைஞரின் எழுத்தைக் குறை சொல்பவர்களைக் கண்டு வியப்பு மேலிடுகிறது.    பள்ளிக் கல்வி குறைவாக பெற்ற ஒருவன் தன் விடாமுயற்சியால் திருக்குறளுக்கு உரையும் தொல்காப்பிய பூங்காவும் எழுதி சாதித்தான் என்பது தரும் பிரமிப்பை அவரின் எழுத்துலகச் சாதனையான முரசொலி எளிதில் தாண்டி விடுகிறது. அவர் எழுதிய புத்தகங்களுக்கு குறைவு கிடையாது. மணிப்பிரவாள நடையில் எழுதுவதே உயர்வென‌ எண்ணியிருந்த பெருங்கூட்டத்தின் முன் வடமொழிச் சொற்கள் தவிர்த்து தமிழ் எழுத துவங்கிய ஒரு ஜனத்திரளை உருவாக்கியதில் எழுத்தாளர் கலைஞரின் பங்கு அளப்பரியது.    கலைஞரின் எழுத்துக்கள் பளிச்சிட்ட மற்றுமொரு துறையான திரைக்கதைப் பணியில் அவரடைந்த புகழும் பொருளும் தமிழ்த்திரைப்பட‌ வரலாற்றில் ஓர் அரிய சாதனை என்றால் மிகையாகாது. மாணவனாக திராவிட இயக்கம் பற்றிய எந்த புரிதலும் இலலாத நிலையிலேயே என் பள்ளி நாட்களில் பராசக்தி பட‌ வசனம் பிரபலம் தான். என் வேதியியல் ஆசிரியர் பள்ளி நிகழ்வுகளில் பராசக்தி வசனத்தை அப்படியே பேசிக் காட்டுவார். பள்ளி மாணவர்கள் நாடகங்களை நடத்த பெருமுயற்சி எடுத்த அந்த‌ ஆசிரியரின் நாடகம், வசனம் மீதான காதலுக்கு யார் காரணம் என்பதை புரிந்து கொள்வது கடினமான என்ன!     திரைக்கதையில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி, தமிழ் வசனங்கள் மீது காதல் கொண்ட, அதற்காக படங்களை தேடி சென்று மீண்டும் மீண்டும் பார்க்கும் நிலையை உருவாக்கியவர் கலைஞர். அவர் எழுத்து, திரைக்கதை வழியாக கிடைத்த வருவாயை எப்படி செலவு செய்தார் என்பதை விளக்கி அவரே வெளியிட்ட குறிப்பு இது (கட்சி உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்):   []     என்னைப் பற்றியும், என் குடும்ப வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கைப் பற்றியும் நேரம் வரும் போதெல்லாம் பல முறை உனக்கும், உன் வாயிலாக ஊராருக்கும் சொல்லி இருக்கிறேன். இப்பொழுது சொல்லப்போவது அதைப்போன்ற ‘சுய புராணம்’ அல்ல. சுயபுராணத்தைத்தான் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் ஐந்து பாகங்கள் எழுதி முடித்திருக்கிறேனே. இப்பொழுது நான் எழுதப்போவதை அடுத்த பாகத்தின் முன்னுரை என்று கருதிக்கொண்டாலும் சரி, அதற்கிடையே எழுந்துள்ள ‘மன ஓலம்’ என்று எண்ணிக் கொண்டாலும் சரி, இந்தச் சூழலில் இவற்றை நான் ஞாபகப்படுத்தியே தீர வேண்டும். நான் உயிரினும் மேலாக கருதும் நமது கழகம், பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் கால கட்டம் இது. அந்த இழப்புக்கு எது காரணம்? இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக்கொண்ட தொகுதிகளின் கணக்கா?   தமிழ்நாட்டிற்கென்றே தனியான ‘ஜபர்தஸ்து’களை, ஜனநாயக விரோதச்செயல்களை, சாட்டைகளாக கொண்டு, சர்வாதிகார ‘பாட்டை’ வகுத்துக்கொண்ட தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை. ஆனால் இந்தியாவிலேயே அல்லது தமிழ் நாட்டிலேயே அதிகார செல்வாக்கைப் பெருக்கி – “ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, லட்சம் கோடி சம்பாதித்து மூட்டைகளாகக் கட்டி வைத்திருக்கிற குடும்பம், கருணாநிதியின் குடும்பம்” என்று தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தவர்கள், மழை விட்டும் தூறல் விடவில்லை என்பதைப் போல, இப்போதும்கூட அந்த பிரச்சாரத்தை ஏடுகள் வாயிலாக, ஏனைய ஊடகங்களின் வாயிலாக கூறிக்கொண்டிருக்கிறார்களே, அவற்றை பொய்யுரை என்றும், புனைந்துரை என்றும், புளுகு மாயப்புழுதி மாயம் என்றும், என் தமிழ் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலவற்றைத் தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன்.   நான் செல்வச் செழிப்பான பெரும் தனவந்தர் குடும்பத்தில் பிறந்தவன் அல்லன். தஞ்சை மாவட்டத்தில் (தற்போது நாகை மாவட்டத்தில்) திருவும் வளமும் கொண்ட திருக்குவளை கிராமத்தில் சுற்றிலும் சூழ்ந்திருந்த வயல்களில் கிடைத்த பயிரையும், நெல்லையும், அரிசியையும் பயன்படுத்தி கொண்டு, ஒரு ஓட்டுவில்லை வீட்டில் விவசாயியாகவும் இசைமேதைகளில் ஒருவராகவும் இருந்த - முத்துவேல நாதசுரக்காரருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தவன் நான். நான் உருண்டும் புரண்டும் தவழ்ந்தும் தள்ளாடி நடந்தும் பின்னர் திருவாரூர் பள்ளியில் பயின்றும், அங்கு பெற்ற அறிவால் அந்த இளமையிலேயே அண்ணாவையும், பெரியாரையும் முறையே அரசியல் இயக்கத்திற்கும், அறிவு இயக்கத்திற்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டும், சூடு தணியாத சுயமரியாதை உணர்வோடு பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான். பதினான்கு வயதிலேயே ‘பனகல் அரசரை’ படித்து “படிக்க முடியாது கட்டாய இந்தியை” என்று மொழிப்போரில் புகுந்து, அதற்கு அடுத்தடுத்த தொடர் களங்கள் பலவற்றைச் சந்தித்து ஐந்து முறை முதல்-அமைச்சராகவும், 12 முறை தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினராகவும் வெற்றி பெற்று - பொன்விழாக்கள், பவளவிழாக்கள் கொண்டாடியும்கூட, இலக்கிய வேந்தர், கலை வேந்தர் என வேந்தர் பட்டங்களை பெற்றாலும்கூட, வேண நிலங்களுக்கு சொந்தக்காரன் என்றோ, வான்தொடும் மாளிகைகளுக்கு உரிமையாளன் என்றோ, அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக்கொள்ள நினைத்ததும் இல்லை; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை. அவற்றைத் தேடிக்கொள்ள திருட்டு வழியை தேடிக் கொண்டவனுமல்ல அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டு காலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டு காலம் ஆட்சிக்கு முதல்வராக இருந்த காலகட்டங்களில் எதுவுமே சம்பாதிக்கவில்லையா என்ற கேள்விக்கு நான் தரும் பதில் ஆம்; சம்பாதித்தேன், ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன்’, ‘தமிழ் வாழ தலையும் கொடுக்கத்துணிவோன்’ என்ற பட்டப்பெயர்களை, புகழுரைகளை நிரம்பச் சம்பாதித்தேன். என் எளிய வாழ்க்கையை நான் நடத்திட பொருளீட்டியதே இல்லையென்று புளுகிடும் துணிவு எனக்கில்லை, பொருளீட்டியது உண்டு. அந்தப்பொருளில் பெரும் பகுதியை வாழ்வின் இருளில் இருந்தோர்க்கு வழங்கியது உண்டு. நான் முதலில் எழுதி, நானும் நடித்த ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ எனும் நாடகத்தை - 1940-களில் நூறு ரூபாய்க்கு விற்று, அந்தப்பணத்தை என் குடும்பச் செலவிற்கு மட்டுமல்லாமல், அடுத்த நாடகத்திற்கான முன் செலவுகளுக்கும் ஆரூர் நடிகர் கழக அமைப்புக்கும் அளித்தேன். அதைத்தொடர்ந்து, கோவை ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘ராஜகுமாரி’ படத்திற்கும், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மந்திரி குமாரி’, ‘தேவகி’ போன்ற படங்களுக்கும் நான் வாங்கிய பணம் மாதச்சம்பளமாக இருந்ததால் அந்த ஊதியத்தை, வருமானவரி போக மிச்சப் பணத்தைத் தான் தந்தார்கள். பின்னர் ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘மலைக்கள்ளன்’, ‘இருவர் உள்ளம்’, ‘மருத நாட்டு இளவரசி, ‘திரும்பிப் பார்’, ‘பணம்’, ‘நீதிக்குத் தண்டனை’, ‘இளைஞன்’ என்றெல்லாம் தொடர்ந்து தற்போது ‘பொன்னர்-சங்கர்’ வரையில் 76 படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். சில படங்களுக்கு பாடல்களும் எழுதியிருக்கிறேன். பிரசாத் இயக்கத்தில் உருவான ‘தாயில்லா பிள்ளை’ மற்றும் ‘இருவர் உள்ளம்’ படங்கள் நூறு நாள் ஓடினால் மேலும் பத்தாயிரம் ரூபாய் தருவதாக பிரசாத் வாக்களித்து, அவ்வாறே நூறுநாள் அந்தப் படம் ஓடியதற்காக அவர் தந்த பத்தாயிரம் ரூபாயை கொண்டு என்னை பெற்றெடுத்த திருக்குவளையில் – ‘முத்துவேலர், அஞ்சுகம் தாய் சேய் நல விடுதி’ கட்டி அந்நாள் முதல்-அமைச்சர் பக்தவத்சலத்தைக் கொண்டு திறப்புவிழா நடத்தினேன். அப்பொழுது நான் எழுத்தாளர் மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினரும் கூட (எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் இருந்தவன்). இதே போல நான் எழுதிய படங்கள் அனைத்திலும் பெற்ற ஊதியத்தில் திருவாருக்கு அடுத்த காட்டூரில் சிறிதளவு நஞ்செய் நிலம் வாங்கவும் பயன்படுத்திக் கொண்டது போக மிச்சத்தை நலிந்தோருக்கே வழங்கினேன். காட்டூரில் ஆரம்பப் பள்ளிக்கூட கட்டிடத்திற்கு அப்போதே நிதியளித்து அந்தக் கிராமப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்தேன். கட்சிக்குப் பொருளாளராக இருந்தபோது அண்ணாவின் ஆணைப்படி, தமிழகத்தில் ஊர்தோறும், நகர்தோறும், பட்டி தொட்டி, குக்கிராமம் என செல்லாத இடமில்லை என்ற அளவிற்குச் சென்று - கழகக் கொடியேற்ற, கழகத்தினர் இல்லத்தில் உணவருந்த என்பதற்கெல்லாம் கட்டணம் விதித்து - சென்னை விருகம்பாக்கம் கழக மாநாட்டில் அண்ணாவிடத்தில், மூதறிஞர் ராஜாஜி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பொதுவுடைமை வீரர் பி.ராமமூர்த்தி, பார்வர்ட் பிளாக் இயக்கத்தைச் சேர்ந்த பி.கே.மூக்கையா தேவர் ஆகியோர் முன்னிலையில் 11 லட்சத்தை தேர்தல் நிதியாக அளித்தேன். வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி, கைத்தறியாளர் கண்ணீர் துடைக்க நெசவாளர் நல்வாழ்வுக்காக நிதி, இப்படி எத்தனையோ நிதிகள் வழங்கியும்-வசூலித்து தந்தும் தொண்டாற்றியவன்தான் நான். 2004-2005-ம் ஆண்டில் ‘மண்ணின் மைந்தன்’ திரைப்படத்திற்காக 11 லட்சம் ரூபாயும், ‘கண்ணம்மா’ திரைப்படத்திற்காக 10 லட்சம் ரூபாயும் கிடைத்ததை சுனாமி நிவாரண தொகையாக - அப்போதிருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் மூலமாக நேரடியாக கொடுக்க செய்தேன். 9-7-2008-ல் ‘உளியின் ஓசை’ திரைப்படத்திற்காக எனக்கு தரப்பட்ட 25 லட்சம் ரூபாயில் ஏழு லட்சம் ரூபாய் வருமான வரி போக மீதத்தொகை 18 லட்ச ரூபாயை அன்று கலையுலகை சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு உதவிநிதியாக - கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நேரடியாக வழங்கினேன். 17-9-2009இல் ‘பெண் சிங்கம்’ திரைப்படத்திற்காக எனக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்தத்தொகையினை அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குவேன் என்று அறிவித்ததையொட்டி, அப்படி வழங்கப்பட வேண்டிய தொகை 61 லட்சம் ரூபாய் என்று கூறிய போது என்னுடைய சொந்த கையிருப்பு நிதி 11 லட்சம் ரூபாயையும் சேர்த்து உதவி நிதியாக 29-10-2009 அன்று வழங்கினேன். 27-4-2010 அன்று ‘இளைஞன்’ திரைப்படத்துக்காக வருமானவரி போக 45 லட்சம் ரூபாய் எனக்கு வழங்கப்பட்டது. அந்த தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து பிறகு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுக்காக அந்த தொகை உதவி நிதியாக வழங்கப்பட்டது. ‘பொன்னர் –சங்கர்’ திரைப்படத்திற்காக 8-9-2009-ல் 10 லட்சம் ரூபாயும், 6-6-2010-ல் 12 1/2 லட்சம் ரூபாயும் எனக்கு வழங்கப்பட்டது. இந்த படத்திற்காக தரப்பட வேண்டிய 25 லட்சம் ரூபாயில் வரியாக 2 1/2 லட்சம் ரூபாய் போக எஞ்சியத்தொகை 22 1/2 லட்சம் ரூபாயாகும். இந்த தொகையிலிருந்து காவல் துறையிலே விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற வீரர்களுக்கு வழங்கச் செய்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தொல். திருமாவளவன் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் நிதியினை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்த்துள்ளேன். கழகத்தை தோற்றுவித்த தலைவர்கள், தோன்றா துணைவர்களாக இருந்த தலைவர்கள், உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் தொண்டர்கள் ஆகியோருக்கு குடும்ப நிதியாக, நல வாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். அவை இன்றைக்கும் என்னுடைய பெயரால் அமைந்துள்ள அறக் கட்டளைகளின் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாள் நிகழ்ச்சிகளிலும், மாலைக்கு பதிலாகவும், பொன்னாடைகளுக்கு பதிலாகவும் வழங்கப்பட்ட நிதியினையும் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியிலே சேர்த்திருக்கிறேன். ஈழத்தமிழர் நிவாரணத்திற்காக தமிழக அரசின் சார்பில் நிதி திரட்டப்பட்ட போது என்னுடைய சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருக்கிறேன். ‘சன்’ தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த என் மனைவி தயாளு அம்மையார் அதிலிருந்து பிரிந்து வந்த வகையில் கிடைக்கப்பெற்ற 100 கோடி ரூபாயில் எனக்கு கிடைத்த 10 கோடி ரூபாயில் ஐந்து கோடி ரூபாயினை பங்கீட்டுத் தொகையாக செலுத்தி, தி.மு.கழகத்தின் சார்பில் ‘கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை’ ஒன்றினை கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக தொடங்கப்பட்டது. 11-1-2007 அன்று நடைபெற்ற 30-வது புத்தக கண்காட்சி விழாவில் நான் பேசும்போது -இந்த 5 கோடி ரூபாயிலிருந்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்து, அவ்வாறே அந்த சங்கத்துக்கு அந்த தொகை வழங்கப்பட்டது. அந்த தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கொண்டு-அந்த சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் நல்ல புத்தகங்களை, சமுதாய சீர்திருத்த கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள், வெளியிடும் பதிப்பாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து, தலா ஒரு லட்சம் பொற்கிழி வழங்கிட கூறியுள்ளேன். இந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக்கொண்டு ‘கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டு இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. தி.மு.கழக சார்புடைய ‘கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை’க்கு நான் கொடுத்ததில் எஞ்சிய நான்கு கோடி ரூபாய்க்கு மாதந்தோறும் கிடைக்கின்ற வட்டித்தொகையிலிருந்து-கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2005 நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மேமாதம் வரை 2337 பேருக்கு மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவித்தொகை தற்போதும் ஒவ்வொரு மாதமும் தரப்பட்டு வருகிறது. ‘சன்’ தொலைக்காட்சியிலிருந்து எனக்கென்று கிடைத்த 10 கோடி ரூபாயில்-‘கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை’க்கு அளித்த 5 கோடி ரூபாய் போக எஞ்சிய 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வைப்புநிதிக்கு கிடைத்த வட்டித்தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக தமிழ்ச்செம்மொழி நிறுவனத்திற்கு 26-7-2008 அன்று வழங்கி அந்த தொகையிலிருந்து கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருது வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். கோவையில் நடைபெற்ற உலக தமிழ்மாநாட்டின்போது முதன் முறையாக இந்த விருது பின்லாந்து நாட்டு தமிழ்அறிஞர் அஸ்கோ பர்போலாவுக்கு பத்து லட்ச ரூபாய் பொற்கிழியாக நன்கொடையுடன் வழங்கப்பட்டது. இதற்கெல்லாம் மேலாக சென்னை கோபாலபுரத்தில் நான் தற்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டைக்கூட ஏழை-எளியவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனையாக மாற்றி அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான முறையான பத்திரப்பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன. ‘சன்’ தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி - 18-10-2005 அன்று ’சன்’ தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் - 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத்தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன். கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகிவிடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை. டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு-செலவு, கொடுக்கல்-வாங்கல், இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்று விதிமுறை இல்லை என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டிய பிறகும் கூட, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தின் நிர்வாகி தம்பி சரத் குமாரையும், என் மகள் கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர்கூடி, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள போதிலும்கூட, அத்துடன் நிம்மதி அடையாது, நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி - புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று அதுவும் ‘தர்ப்பைப் புல்’ முளைத்த இடமாகப் போக வேண்டுமென்று குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரையிலே உள்ளவர்கள் தவம் கிடக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.    உடன்பிறப்பே, உனக்கும் இந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான், உன் தமையன் நான் ‘சுயபுராணம்’ இது என்றாலும் சுயமரியாதைப் புதினமாக இதைக் கருதி இந்தக் கடிதத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரையில் ஒவ்வொரு வரியாக நீ படித்து, சிந்தித்து, புரிந்துகொண்டு, செயல்படுத்துவாயானால் தன்மானக் கழகமாம் தமிழர்நலம் தேடும் இந்தப் பாசறை அறப்போர்க் கணைகளை ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் வடிவில், தம்பி தங்கைகள் உருவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது திண்ணம்.   அண்ணாவிற்கு கருணாநிதியை அறிமுகப்படுத்தியதே அவரின் எழுத்து தான். எழுத்தின் மற்றொரு பரிணாம வளர்ச்சியான திரைக்கதையில் அவர் புரிந்த சாதனைகளுக்கும் குறைவு கிடையாது. அவருக்குள் இருந்த எழுத்தாளனே அவரின் பல்வேறு சமூக சீர்திருத்த முடிவுகளுக்கு காரணம் என்பது புரிந்தால் கலைஞருக்கான இடம் காலத்துக்கும் எழுத்து துறையில் நிலைத்து நிற்கும்.    பெண் மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவம் பார்க்கும் உரிமை மறுக்கப்பட்டு உயிரிழந்த பெண்களின் நிலையைக் கண்டு வருந்தி மருத்துவம் படித்து அவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் பணியோடு மேலும் பல பெண் மருத்துவர்களை உருவாக்கிய, பெண்கள் மருத்துவ கல்லூரியாக கிருத்துவ மருத்துவ கல்லூரியினை துவக்கி நடத்தி வந்த அதன் நிறுவனர் இடா ஸ்கட்டர் அவர்களின் போற்றுதலுக்குரிய செயல் தான் கலைஞரின் இப்பணிக்கு இணையாய் நினைவுக்கு வருகிறது.                                                                      மொழிப் போரில் ஒரு களம்: பொதுநலமான சுயநலம் சௌம்யா   கலைஞரின் அரசியல் பற்றிக் கொஞ்சம் தெரியும். நேர்மையாகச் சொன்னால் இணையப் பரிச்சயத்துக்கு பிறகே ஓரளவு அறிந்து கொண்டேன். தீவிர எம்.ஜி.ஆர். அபிமானம் கொண்ட குடும்பச் சூழலில் இருந்து வந்த என்னால் “நம் வீட்டில் அதிமுகவுக்கு ஏன் ஓட்டு போடுகிறார்கள்?” என்பதற்கான‌ நியாயமான காரணங்களை - அப்படி ஏதேனும் இருந்திருந்தால் - இதுவரை தெரிந்து கொள்ள முடிந்ததில்லை.   எம்.ஜி.ஆர். நல்லவர், நம்பியார் கெட்டவர் என்னும் சினிமா பாணியில்தான் கருணாநிதிக்கு ஒரு வில்லன் பிம்பம் எங்கள் வீட்டில் இருந்தது. உண்மையில் அதற்குப் பின்னே 'எம்.ஜி.ஆர். மலையாளி' எனும் மொழிப் பாசம் தவிர வேறு காரணம் எதுவும் இருந்திருக்க முடியாது. அதன் நீட்சியாக‌ அவரால் உருவாக்கப்பட்ட கட்சி தோல்வி அடையக் கூடாது என்னும் விசுவாசத்தின் அடிப்படையில் அவரது மறைவுக்குப் பின்பும் என் வீட்டில் ஜெயலலிதாவுக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள். வேறு கொள்கைரீதியான காரணங்கள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அல்லது அதை விளக்க வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை.   யோசித்துப் பார்த்தால் எம்.ஜி.ஆர். செத்ததை நம்பாமல் இரட்டை இலைக்கே வாக்களித்துக் கொண்டிருந்த பட்டிக்காட்டுக் கிழவிகளின் முறைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை தான்!   புதிதாக ஓட்டுப் போட வரும் ஆர்வக்கோளாறான பருவத்தில்தான் 2011ல் கலைஞரை - அப்பொழுது நடந்த சில பல விஷயங்களை மட்டுமே அறிந்து / புரிந்து - அதிகம் விமர்சித்து வந்தேன். அதை ரசிக்க நான்கு பேர் இருக்கிறார்கள் என்ற இணையச் சூழலின் குஷியில் இன்னும் கீழிறங்கி “கட்டுமரம்” என்றெல்லாம் பேசி, ஏசிக் கொண்டு இருந்திருக்கிறேன். அந்தத் தேர்தலின் அதிமுக வெற்றியும், அதைத் தொடர்ந்த ஆட்சிக்காலமும் சற்றே… அல்ல நிறையவே யோசிக்க வைத்ததன் பலன்தான் திமுக பற்றி - குறிப்பாக கலைஞர் பற்றி - அறிந்து கொள்ளத் தலைப்பட்டதின் காரணம். அதற்கு ஜெயலலிதாவுக்கு நன்றி!   இணையத்தின் உதவியால் கலைஞர் பற்றி சிறிது சிறிதாக அறிய நேர்ந்தது. இன்னும் முழுக்கத் தெரியாது என்றாலும் அறிந்தவரை கடந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களின் ஒப்பீட்டில் தற்பொழுதுள்ள எந்தக் கட்சியையும் விட அதிக தகுதியும், செயல்பாடுகளும், தமிழகத்தின் வளர்ச்சியில் மற்ற கட்சிகளை விட திமுகவின் பங்குமே சிறப்பானது என்பதையும் ஓரளவு உணர்ந்தேன். (இப்பொழுதும் நான் உடன்பிறப்பு அல்ல. ஆனால் ஒப்பீடுகளின் அடிப்படையில் திமுக சார்பு நிலை எடுத்துள்ள ஒரு வாக்காளர் மட்டுமே.)   *   கலைஞரைப் பற்றி அறிந்து கொள்ள இருந்த‌ ஆர்வத்துக்கு அவரது அரசியல் தாண்டி அவர் எழுத்துக்களும் முக்கிய உந்துதல். அந்த வகையில்தான் கலைஞர் எழுதிய‌ 'மொழிப்போரில் ஒரு களம்!' நூலை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. மிகச்சிறிய, எளிய நடையிலான‌ புத்தகம்தான். ஆனால் அதில் பொதிந்துள்ள‌ விஷயம் அத்தனை சிறியதல்ல. சொல்லப்போனால் இதைப்புத்தகமாகவும் அவர் எழுதவில்லை. பாளையங்கோட்டை சிறையில் இருந்த பொழுது உடன்பிறப்புகளுக்கு எழுதிய ஒரு நீண்ட‌ மடல் தான் இது. பிற்பாடு 2002ல் இதன் உள்ளடக்கத்தின் சமகால முக்கியத்துவம் கருதி தனியே புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.   முன்பெல்லாம் நினைப்பேன் “இந்தியை ஏன் இவ்வளவு வெறுக்கிறார்கள் அவசியமில்லாமல்? அதுவும் ஒர் மொழிதானே. வடமொழிச் சொற்கள் கலந்தால் என்ன? குடியா முழுகி விடும்? அதனால் எல்லாம் தமிழ் அழியவா போகிறது? மிகையாகத்தான் உணர்ச்சி வசப்படுகிறார்கள்” என்ற எண்ணம் உள்ளுக்குள் இருக்கும். “இந்தியை மற்ற மாநிலங்கள் போல நாமும் பள்ளிகளில் கட்டாயமாக்கி இருந்தால் வேலை வாய்ப்பு பிரகாசமா இருக்கும்” என்ற வாசகத்தை படிக்கற காலம் தொட்டு யாராவது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். தவறாமல் அதையொட்டி திமுகவையும் கலைஞரையும் பின்னொட்டாய் திட்டுவார்கள். அதெல்லாம் நியாயம்தானே என்றுதான் அப்போது தோன்றி இருக்கிறது!   அப்படியான எல்லாக் கேள்விகளுக்கும் இந்த சின்னஞ்சிறிய புத்தகம் பதில் சொல்கிறது. இந்தியை ஆட்சி மொழியாக்குவதன் மூலம் ஆங்கிலத்தை தவிர்க்கவும் முயற்சி நடந்ததுள்ளது என்பதும் இதில் தெரிகிறது.   []     அரசியல் தலைவர்கள் சுயசரிதை அல்லது தம் வாழ்க்கைச் சம்பவங்கள் குறித்து எழுதுவதில் ஒரு நல்ல பக்கவிளைவு உண்டு. தேசத்தின் வரலாறும் சேர்ந்து அதில் பதிவாகி விடும். காந்தியின் சத்திய சோதனை எப்படி இந்தியாவின் ஒரு காலகட்ட வரலாற்றைச் சொல்லியதோ, அதே போல் இந்நூல் தமிழகத்தின் சில ஆண்டுகளின் வரலாற்றைப் பகர்கிறது. சுயநலத்திலிருந்து எழும் பொதுநலம் என்பது இது தான் போல‌!   1965ல் மொழிப்போர் காரணமாக தேசியப்பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் இம்மடலை எழுதுகிறார். (இப்புத்தகம் எழுதுகையில் 4வது முறையாக இதே போராட்டத்திற்காக சிறை சென்றிருக்கிறார். இம்முறை போட்டிருப்பது தேசியப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதான வழக்கு. இதற்கு முன்பெல்லாம் 10, 15 நாள் சிறைதான்.) ஆரம்பமே பாளையங்கோட்டை சிறையில் கைதியாக இருக்கிற சூழலையும், அதன் மூலம் கிடைத்த ஓய்வைப்பயன்படுத்தி மொழிப்போரைப்பதிவு செய்வதையும் குறிப்பிடுகிறார். என்ன பெரிய சிறை? இது ஒரு விஷயமா' என எவருக்கேனும் கேள்வி எழலாம். அதற்கும் கலைஞர் பதிலளித்து விடுகிறார். மக்கள் தம் பற்றி என்ன கேள்வியை எழுப்புவார்கள் என்பதை யூகித்து அக்கேள்வியை தனக்குத் தானே கேட்டு, பதிலளித்து விடுவதில் கலைஞர் ஒரு மகத்தான‌ மனசாட்சி!   “அந்தந்த சூழலுக்கேற்ப எத்தகைய தியாகத்திற்கும் தம்மை தயார்படுத்திக் கொள்கிறவர்களால்தான் ஒரு கழகத்தை கட்சியை கொள்கை தவறாமல் வழி நடத்திச் செல்ல இயலும்'' - சிறை செல்வது மட்டுமல்ல எச்சூழலிலும் கழகத்திற்காக, கொள்கைக்காகத் தியாகத்திற்கு தயாராக இருப்பதை உறுதிப்படுத்துகிறார்.    இதைக் கொண்டு பார்த்தால் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தன் சுயசரிதையைக் கூட தன் மனசாட்சியுடனான உரையாடலாகவே, முரண்பாடுகளுடனான‌ சொற்போராகவே நிகழ்த்துப் பார்த்திருப்பார் போலிருக்கிறது!   நூலின் முதல் நான்கு பக்கங்கள் கலைஞரின் கையெழுத்தில் அப்படியே தரப்பட்டுள்ள‌து. நமக்கும் கடிதம் எழுதப்பட்ட தின‌த்துக்குமான அரை நூற்றாண்டு இடைவெளி காணாமல் போய் இந்தி எதிர்ப்புக் காலத்துள் நாம் ஐக்கியமாக இந்த உத்தி உதவுகிறது. மொத்தம் ஏழு அத்தியாயங்களாக நூல் பிரிக்கப்பட்டிருக்கிறது.   புத்தகத்தை விமர்சிக்கும், மதிப்புரை செய்வதை விட‌ அவையடக்கத்துடன் புத்தகம் பேசும் கருத்துக்களை அதாவது இந்தித் திணிப்புக்கு எதிரான கலைஞரின் போராட்டத்தை சற்றே சுருக்கமாக கூற நினைக்கிறேன்.   *   1937 முதலே தமிழகத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குரல்கள் துவங்கி விட்டன. பெரியார் தான் விதை. ஆனால் 1950களின் போதுதான் இந்தி ஆதிக்கத்தின் விளைவுகளை அழுத்தமாக எடுத்துரைத்து பலமான எதிர்ப்பைப் பரவலாய்க் கையில் எடுத்துள்ளனர். 14 மாநில மொழிகளும் சம உரிமையுள்ள நாட்டில் ஒரு மொழி மட்டும் ஆட்சி மொழி என்பது பிற மொழிகளை பின்னுக்கு தள்ளி அம்மொழி சார்ந்த மக்களின் தொழில், சமூக முன்னேற்றங்களை பின்னுக்குத் தள்ளும் செயல் என்பதையும், 14 மொழிகளையுமே ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றும் அதுவரை அகில உலகையும் எளிதாய்த் தொடர்பு கொள்ள உதவிய‌ ஆங்கிலத்தைத் தொடர்புமொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.   சம்பத்துக்கு நேரு அளித்த கடித உத்தரவாதத்தை ஒட்டி போராட்டங்கள் அடங்கியிருக்கின்றன. அதற்கு மாறாக‌ப் பின்னர் பாராளுமன்றத்தில் ஆட்சி மொழிச்சட்டம் நிறைவேற்றும் தீர்மானம் வந்த போது கலைஞர், ராஜாஜி, சம்பத் ஆகியோர் இந்தி ஆட்சி மொழியாவதற்கு எதிராக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்கள். சம்பத் தனியாக சிறுபோராட்டம் ஒன்றை நடத்துகிறார். ஆட்சியமைப்புச் சட்டத்தின் 17ம் பக்கத்தை கொளுத்த முயன்றதைத் தொடர்ந்து சம்பத் கைது செய்யப்பட்டு மறுநாள் விடுதலை ஆகிறார். அடுத்த சில மாதங்களில் காங்கிரசில் இணைந்து விடுகிறார் சம்பத். “அவரது போராட்டம் அந்த அளவில் முடிந்து விடுகிறது” என அவர் கட்சி மாறியதைக் கேலியாகக் குறிப்பிடுகிறார் கலைஞர். சிறையில் வாடும் போதும் தன்னுடைய‌ எழுத்தில் அந்த வாட்டமெல்லாம் கொஞ்சமும் தென்படாமல் பார்த்துக் கொள்கிறார்.   பின் சென்னைக் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் போன்றவர்கள் மக்களுக்கு “ஏன் இந்தி மொழி ஆட்சி மொழியாவதை எதிர்க்கிறோம்?” என விளக்கமாக எடுத்துக் கூறுகின்றனர். அக்கூட்டத்தில் அண்ணா விரக்தியுடன் பேசியதாக குறிப்பிடுகிறார். தொடர்ந்து கலைஞரை இந்தித் திணிப்பு போராட்டங்களுக்குத் தலைவராகக் கழகம் தீர்மானிக்கிறது. மாதந்தோறும் கழக அன்பர்கள் ஒவ்வொரு பகுதியைத் தேர்வு செய்து போராட்டம் நடத்துகின்றனர்.   இந்நிலையில் ஜனவரி 26, 1965ல் இந்தி ஆட்சி மொழியாக பட்டம் சூட்டிக் கொள்ளப் போவதாக அரசாங்க அறிவிப்பும் வந்து விட்டது. இதற்கு மேலும் எங்கனம் பொறுத்து போவது? ஜனவரி 26ம் நாளை துக்க நாளாக அறிவிக்க போராட்டத் தலைவராக கலைஞர் ஆலோசனை கூறுகிறார். கழகத்திற்குள்ளேயே கூட எதிர்ப்புகள் வருகின்றன. கலைஞர் விளக்கமளிக்கிறார்: “ஒரு குழந்தையின் தலையில் கனியை வைத்து அப்பிள்ளையின் தகப்பனிடமே அம்பைக் கொடுத்து கனியை வீழ்த்தச் சொல்கையில் எத்துனை கவனமாக பிள்ளையின் மீது படாமல் கனியை வீழ்த்த முனைவானோ அது போல் இருக்கும் இந்த போராட்டம்.”    பிள்ளை – தேசம்; தலை - குடியரசு தினம்; கனி - இந்தி ஆட்சி மொழி உத்தரவு; தந்தைஅம்பு எறிதல் - போராட்டம். உதாரணம் என்பது ஒரு விஷயத்தை விளக்கும் வழிகளில் ஒன்றல்ல; ஒரே வழி அது தான் என யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது. எவ்வளவு அழகாகத் தன் கற்பனை வளத்தாலும் மொழித் திறத்தாலும் எளிய மக்களுக்கும் புரிவது போல் போராட்டத்தின் நோக்கத்தையும் போராட வேண்டிய அற வழியையும் தெளிவுபடுத்தி விட்டார் கலைஞர்! எழுதத் தெரிந்த தலைவன் இரண்டு மடங்கு பலம் கொண்டவனாகி விடுகிறான். எழுதவும் பேசவும் தெரிந்தவன் மூன்று மடங்கு பலம் பெறுகிறான். அந்த வகையில் கலைஞர் என்ற ஒற்றை மனிதர் மூன்று தலைவர்களுக்குச் சமம். திமுக ஏன் ஐம்பது ஆண்டுகளாய் அவரைத் தலைவராய் வைத்திருந்தது என்பதற்கு இதை விடச் சான்று தேவையில்லை.   ஆனால் அவரது இந்த அற்புதமான விளக்கத்தையும் மீறி இது பற்றிப் பல சலசலப்புகள் எழுகின்றன. பெரியாரே கூட ஆவேசமாக இதனை எதிர்க்கிறார். முன்பு 1947ல் சுதந்திர தினத்தையே துக்க நாளாக அறிவிக்கும்படி கூறிய பெரியார் கூட இதனை எதிர்த்தார் என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் கலைஞர்.   இந்த முடிவினை பிழையாகுமா என தனக்குத்தானே கேள்வியாகவும் கேட்டுக் கொள்கிறார்: “1965 ஜனவரி 26ம் நாள் ஆட்சி மொழியாக இந்தியை அறிவிப்பதாக தீர்மானிக்கப் படுகிறது. இங்குதான் என் பிழை ஆரம்பமானது. அது எப்படி பிழையாகும்? இந்தியை எதிர்ப்பது நமது கடமையல்லவா? இந்தியை எதிர்ப்பது என்பது மொழியை எதிர்ப்பதல்ல; அதன் ஆதிக்கத்தை எதிர்ப்பது என்பதை புரிந்து கொள்ள இயலாதா?”.     சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் பக்தவத்சலம் “ஜனவரி 26 போராடுபவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடையாது. துக்க நாளாக கருப்புக் கொடி ஏற்றுபவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என பகிரங்க மிரட்டல் தொனியில் பேச, காங்கிரஸ் கட்சியினர் பல கூட்டங்களில் ஏசி கலைஞரை எச்சரிக்கிறார்கள். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் திமுகவினரிலேயே சிலரின் எதிர்ப்பையும் மீறி குடியரசு நாளை துக்க நாளாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேறுகிறது. அறவழியில் கருப்புக்கொடியேற்றும் போராட்டமாகவே கழகம் திட்டமிட்டிருந்தது. பொறாமைக்காரர் போலீஸை தூண்டி விட, போலீஸும் மிரட்ட, எதிர்ப்பாளர்கள் கருப்புக் கொடி காட்டினால் கை துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்க‌, அரசும் “அவரவர் இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றிக் கொள்ளுங்கள். அதுவும் காவல் துறை வந்து அந்தக் கொடியை இறக்கி விட்டால் அமைதி காக்க வேண்டும்” என உத்தரவிட்டது. அந்நிலையிலும் கூட கலைஞர் பின்வாங்கவில்லை.   அண்ணாவும் தம்பிக்கு ஆதரவு. சிலர் ‘முரசொலி’ கட்டுரைகளைக்காட்டி வன்முறையைத் தூண்டுவதாக குற்றம் சாட்ட, போலீஸ் அது பற்றிக் தலைமையிடம் கேள்வி எழுப்ப, அப்படி எதுவும் எழுதவில்லையே என்ற பதிலையும் தாண்டி, அண்ணாவின் மனதையே சிலர் சஞ்சலப்படுத்தியதாக‌ வருந்துகிறார் கலைஞர். அவ்வேளையில் முரசொலியையே நிறுத்தி விடலாம் என்றெல்லாம் தோன்றியிருக்கிறது கலைஞருக்கு.   தொண்டன், தலைவனை பற்றி எத்தகைய எண்ணம் கொண்டிருப்பான். அவனது எண்ணத்திற்கு தக்கபடி நாம் நடக்க வேண்டும் என்பதுப் பற்றி தொடர்ந்து அவர் கூறும் வரையறை / வர்ணனை அற்புதமானது: “தேர்தல், ஆட்சி, பதவி போதும் சுகமான அரசியலுக்கு என எண்ணுபவர்கள் எல்லாக் கட்சியிலும் உண்டு. நிலையான, ஜனநாயகம் அமைய தியாக உணர்வும் மிக மிகத் தேவை என்ற கொள்கையிலிருந்து எள் முனையளவும் பின்வாங்காதவன் நான் என்ற கர்வம் எனக்குண்டு. இந்த தியாகத்திற்காக பிறர் பாராட்டை எதிர்பார்க்காதவன். என் மனசாட்சி தரும் நற்சான்றை விட பெரிய பாராட்டு எது? என்னைப்போல் எண்ணம் கொண்டோர், என்னை ஒரு மூலையில் தள்ளுமளவு தியாகச் செம்மல்கள் இக்கழகத்தில் ஏராளமானோர் உண்டு. உயிர் மாண்டோர் பலர். சிறை சென்றோர், மனைவி மயானத்திலும், மணாளன் சிறையிலுமாக துன்புற்றோர் என ஏராளம். அவர்கள் கழகத்தலைவர்களை தொழுதேத்தும் கடவுள்களாகவே கருதிக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் நல்வாழ்வுக்காகவும், மொழிக்காகவும், நல்லாட்சி மலரவும் எத்தகைய தியாகத்தையும் செய்யக் கூடிய கர்மவீரர்களாகவே தலைவர்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அத்தகு உத்தம தொண்டர்களின் ரத்தமே கழகம், உழைப்பே கட்சி, அவர்கள் வியர்வைத் துளிகளே அறிவகம், அன்பகம். அவர்களே கழகத்தின் நாடிநரம்பு, முதுகெலும்பு. எத்தகைய தியாகத்தையும் ஏற்று தங்களை அடக்குமுறையை பலியாக்கி அறவழியில் போராடும் அவர்களை நம்பியே ஜனவரி 26 துக்க நாள் போராட்டத்தை அறிவித்தது கழகம்.” தொண்டன் எந்த அளவில் தலைவன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதை மட்டுமல்ல தலைவன் என்பவன் அந்த நம்பிக்கையை எப்படிக் காக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறார் கலைஞர். அப்படித்தான் அவர் வாழ்ந்தும் காட்டியுள்ளார்.    தமிழகமெங்கும் மாணவர்கள் கல்லூரிகளை புறக்கணித்து ஜனவரி 25 அன்று பேரணி மேற்கொள்கின்றனர். சென்னையில் முதலில் ஆரம்பித்த பேரணியைத் தொடர்ந்து, மதுரையில் மாணவர்கள் நடத்திய அமைதிப் பேரணியில் பொதுமக்கள் போர்வையில் வந்த கலவரக்காரர்கள் அரிவாள் வீச்சில் ஈடுபட்டு மாணவர்களை ரத்தக் காயமடையச் செய்கிறார்கள். வெகுண்ட மாணவர்கள் ஆளுங்கட்சியின் பேனர்கள், பந்தல்களைத் தீ வைத்துக் கொளுத்துகின்றனர். யாராலும் அடக்க முடியாப் பெரும்சக்தியாக மாணவர்படை திரள்கிறது.   சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக‌ மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு மாணவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். ஜனவரி 25 இரவு விடிந்தால் இந்தி ஆட்சி மொழியாகி விடும் என்ற நிலையில் மனம் வெறுத்து தீக்குளிக்கிறார் சென்னையில் ஒருவர். போராட்டத்தை அடக்க‌ கல்லூரிகளை மூடுகிறது அரசு. மாணவர்களைத் தூண்டிய‌தாகக் கழகத்தினர் மீதும், கலைஞர் மீதும் மிகுந்த விமர்சனங்களும் வன்மமும் எழுந்த‌து. ஆனால் மாணவர்களே தம் மொழிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்படும் பேராபத்தை உணர்ந்து போராடத் தலைபட்டனரே அன்றி இதில் கழகத்தின் பங்கு இல்லை என்கிறார் கலைஞர். இதற்கு நேர் மாறாய் பிரியாணிக்கு ஆசைப்பட்டுப் போராட வந்தவர்கள் என்று மாணவர் போராட்டத்தை கொச்சைப் படுத்தியது அரசு. தலைவர்களுக்கும் சில்லறைகளுக்குமான இடைவெளி இதுவே. தலைவன் தொண்டனை கம்பீரமாக உணரச் செய்வான். தலைமைப் பண்பற்றவர்களோ மக்களைத் தூற்ற மட்டுமே செய்வார்கள்.   வன்முறையில் சில போலீஸார் உயிரிழக்கின்றனர். துப்பாக்கிச்சூட்டில் 60, 70 மாணவர்கள் இறக்கின்றனர். இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீக்குளிப்போர் எண்ணிக்கையும் பெருகுகிறது. தமிழகமே பற்றி எரிகிறது. மாநிலத்தின் நிலையை கையாள இயலாமல் முதல்வர் ராணுவத்தை வரவழைக்கிறார். பிரதமர் சென்னை வானொலியில் மாணவர்களுடன் சமரசம் செய்ய உரையாற்றுகிறார். அதில் திருப்திஎழாமல் தமிழகத்தைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளா மாணவர்களும் கிளர்ச்சியைத் துவங்குகின்றனர். பிரதமர் உரையில் சுணங்கிய உணவு அமைச்சர் சி. சுப்ரமணியம் பதவி விலகுகிறார். அழகேசனும் பதவியை துறக்கிறார். தொடர்ந்து மாணவர் போராட்டம் சற்றே அமைதிப்படுகிறது. வேறுவழியின்றி முதல்வர் பக்தவத்சலம் ஆங்கிலமே தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க மத்தியில் வலியுறுத்துவேன் என்று சூளுரைக்கிறார்.     வன்முறைகள் கட்டுக்குள் வந்து விட்ட போதும் அடக்குமுறைகள் நிற்கவில்லை. பொய் வழக்குகளும் தடை உத்தரவுகளும் நீடித்திருக்கிறது. வன்முறைகளை எதிர்த்து எழுதியது போலவே அடக்குமுறை பற்றியும் கலைஞர் முரசொலியில் சாடி எழுதுகிறார். கேள்விகளுக்கு பதிலளிக்கவியலா அரசு கலைஞர் எழுதுவதை முடக்கத் தீர்மானிக்கிறது. பிப்ரவரி 16 இரவு கலைஞர் வீட்டுக்கு வந்த காவலர்கள் நாளை வரவுள்ள தலையங்கத்தைப் பார்க்க வேண்டும் எனக் கேட்கிறார்கள். “முறைப்படி எழுதிக் கேளுங்கள், காண்பிக்கிறேன்” என்கிறார் கலைஞர். கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அழைக்கிறார்கள். என்ன சட்டத்தில், என்ன குற்றத்திற்காக அழைத்துச் செல்கிறார்கள் என எதுவும் அறிவிக்கவில்லை. படுக்கையுடன் கிளம்பி சென்று விடிய விடிய போலீஸ் பாதுகாப்பில் உறங்குகிறார்.   மறுநாள் காலை போலீஸ் லாரியில் அழைத்துச் செல்கிறார்கள். ஏற்கனவே இருந்த நெஞ்சு வலி நீண்ட பயணத்தில் அதிகமாகிறது. மதுரை மத்தியச் சிறையில் வைத்து சிகிச்சை தருகிறார்கள். சிகிச்சைக்கு டாக்டர்கள் போடும் ஊசியைவிட மோசமாக அங்கு கூட்டம் கூட்டமாக வரும் மூட்டைப்பூச்சிகள் ஊசி போடுவதாக நெஞ்சு வலியினிடையேயும் தன் நகைச்சுவை உணர்வை இழக்காமல் எண்ணியிருக்கிறார்.   மீண்டும் லாரிப்பயணம். நெல்லையில் மாஜிஸ்டிரேட் முன்பு விசாரணை நடக்கையில்தான் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதை அறிகிறார். பாளையங்கோட்டை தனிச்சிறையில் நெடுநாட்களாகத் திறக்காத தனிச்சிறை பிரிவு கலைஞருக்காகத் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. 30 அறை கொண்ட அப்பிரிவில் எந்த அறையிலும் கைதிகள் இல்லை. அச்சிறை வளாகம் முழுக்கவே கலைஞர் மட்டுமே. தனிமை. பேச்சுத் துணைக்கு மட்டுமல்ல, எங்கோ மனிதர்கள் பேசுவதைக்கூடக் கேட்க முடியாத தனிமை. அச்சூழலில் வலியோடு கழகத் தொண்டர்களுக்கு அவர் எழுதும் மடல்தான் ‘மொழிப்போரில் ஓர் களம்!’   வன்முறையை சிறப்பாக அடக்கியதாக முதல்வர் பக்தவச்சலம் காங்கிரசாராலும் மத்திய அரசாலும் பாராட்டப்படுகிறார். ஆனால் கழகத்தினர் பலர் மீதும் பாய்ந்த பாதுகாப்பு சட்டம் குறித்து கண்டிப்பவர் யாருமில்லை. எதிர்க்கட்சித் தலைவராக நாவலர் கூட கண்டன அறிக்கை ஏதும் வெளியிடவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார் கலைஞர். (“கண்டன அறிக்கை என்ன விடுதலை பெற்றுத் தந்து விடுமா? இல்லைதான். ஆனால் சிறையில் என் போல் வாடும் பலருக்கும் அது ஓர் ஆறுதல்.”)    பலரும் இது பற்றி மூச்சு விடாத நிலையில் அண்ணா நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தில் “பாதுகாப்பு சட்டம் என்பது நாட்டின் பாதுக்காப்புக்கான சட்டமா அல்லது காங்கிரசின் பாதுகாப்புக்கான சட்டமா?” என வினவி கலைஞருக்கு ஆதரவாக நீண்ட உரை ஆற்றுகிறார். சில நாட்கள் கழித்து அண்ணா கலைஞரை சந்திக்க பாளையங்கோட்டை சிறைக்கு வருகிறார். அன்று மாலை பொதுக்கூட்டத்தில் “எல்லாரும் கூறுவது போல் முதல்வர் கருணாநிதியை தனிச்சிறையில் அடைத்து தனிமைப்படுத்துமளவு கொடுமைக்காரர் இல்லை. பல பாம்புகளும் பல்லிகளும் துணைக்கு இருக்கின்றன” என பகடியாக கூறுகிறார் அண்ணா. மேலும் சில நாட்களுக்கு பின் கலைஞர் சிறையிலிருந்து விடுதலை ஆகிறார்!   *   வடிவில் கடிதம் என்றாலும் இஃது ஒரு வரலாறு. (முரசொலியின் உபதலைப்பே “இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்றிருப்பதை இங்கு ஒப்பு நோக்கலாம்.) எண்ணற்ற உயிர்த் தியாகங்களுக்கு பின் நடந்தவற்றை அறிவ‌து நம் கடமை. இன்றைய நாட்களைப் போலல்லாமல் அன்றைய அரசியல் தியாகம், போராட்டம் எனக் கடுமையான பாதையை கடந்திருக்கிறது. மாணவர்கள் சமூக வலைதளக் கூவல்களுடன் நில்லாமல் களமிறங்கிப் போராடி இருக்கிறார்கள். தலைவர்களும் இன்று போல் சிறை தண்டனை என்றதும் நெஞ்சுவலி கண்டு மருத்துவமனையில் சகல வசதிகளுடன் படுத்துக் கொள்ள வாய்ப்பில்லை.   கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இன்று போல் அன்று சிறை என்பது சொகுசும் இல்லை. 62 நாட்கள் சிறைவாசம். அதுவும் தனி கொட்டடி என்பது சாதாரண விஷயமல்ல. கலைஞர் சிறை சென்றது மட்டுமல்ல, பலரும் உயிர்த்தியாகம் செய்தே இப்போர் நடந்துள்ளது. இதை இந்தி எதிர்ப்பாகவோ ஆதிக்க எதிர்ப்பாகவோ மட்டுமின்றி சிந்தித்தால் தமிழ் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதும் புரியும்.   இப்படியான‌ வரலாறுகள் அறியப்பட மட்டுமல்ல; அடிக்கடி நினைவு கொள்ளப்படவும் வேண்டும். அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படவும் வேண்டும். கலைஞர் இந்நூலின் வழி அதைத்தான் செய்திருக்கிறார்!   *** சிறுகதைகள்: தாளிலிருந்து திரைக்கு எஸ். ராஜகுமாரன்   திராவிட இயக்க இலக்கியங்கள் குறித்து பொதுவாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. வறட்சியான பிரச்சாரப் பிரதிகள் அவை; அவற்றில் கலைத்தன்மையோ இலக்கிய நுட்பமோ இல்லை என்பதே அது. இதை முற்றிலும் மறுக்கவோ முற்றிலும் ஆதரிக்கவோ நான் விரும்பவில்லை.   1930களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழில் சில புதிய சிந்தனைகளை விதை தெளித்தது. பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். பெரியார் இயக்க ஏடுகளில் அப்போதுதான் பெண்ணியம் குறித்து எழுதப்பட்டன.   அறிஞர் அண்ணா திராவிட இயக்கத்தின் சுயமரியாதைச் சிந்தனைகளை உணர்ச்சிப் போக்குக்கு அவர் மடைமாற்றினார். அவருடைய நாடகங்கள் உணர்ச்சிமயமானவை. ஆனால் திரைப்பட வசனத்தில் கலைஞர் அண்ணாவை மிஞ்சுகிறார் என்பதே என் பார்வை. சிறுகதைகளிலும் அண்ணாவை கலைஞர் பல இடங்களில் விஞ்சுகிறார் என்றே நினைக்கிறேன். ஆனால் அண்ணாவின் சிறுகதைகள் அளவுக்கு கூட கலைஞரின் சிறுகதைகள் ஏன் கவனிக்கப்படவில்லை என்பது முக்கியமான கேள்வி. இக்கேள்விக்கான பதிலாக பெரிய கட்டுரையே எழுதலாம். ஏனெனில் திராவிட இயக்கத் தலைவர்களில் கலைஞருக்கு முன்னும், பின்னும் தமிழ்மேல் தீராக் காதல் கொண்டு எழுதிக் குவித்த தலைவர் வேறொருவர் இல்லை!   தோராயமாக அவருடைய எழுத்தாக்கங்களை எண்ணிக்கையாக்கிப் பார்க்கலாம். 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 20 நாடகங்கள், 15 நாவல்கள், 200க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். 7000க்கும் மேற்பட்ட கடிதங்கள், கேள்வி - பதில்கள், பத்திரிக்கைத் தலையங்கள். இவை தவிர கணக்கில் வராத படைப்புகளின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை!   70 ஆண்டுகள் அரசியல் வாழ்வில் இறுதிவரை புகழுடனே இருந்த கலைஞர் கலை – இலக்கியம் - இதழியல் துறையிலும் கடைசிவரை தொடர்ச்சியாக இருந்திருக்கிறார். அவர் வாழ்வின் கணிசமான பகுதிகள் தமிழ்ப் பேச்சால் ஆனது; தமிழ் எழுத்துக்களால் ஆனது. இந்த அளவற்ற புகழுக்குள் அவருடைய சிறுகதை முகம் கவனிக்கப் படாமல் போயிற்று என்பதே எனது கணிப்பு! ஏனெனில் இத்துணை துறைகளில், இத்தணை ஆண்டுகள் தொடர்ச்சியாக செயலாற்றிய சாதனை புரிந்த ஒரு அரசியல் தலைவர் இந்திய அளவில் மட்டும் அல்ல் - உலக அளவிலேயே இல்லை என்பதே உண்மை!   கலைஞரின் சிறுகதைகள் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் இப்படிக் குறிப்பிடுகிறார்: “ஒரு கருத்து, சிந்தனை, அனுபவத்தைச் சமூகம் சார்ந்து வெளிப்படுத்தவே சிறுகதை வடிவத்தை எடுக்கிறார், அல்லாமல் கருத்தற்ற சமூக உணர்வற்ற ஒரு சிறுகதையைக் கூட அவர் எழுதியதில்லை.” இது ஓர் எழுத்தாளனுக்குப் பெருமை.   கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே எனும் இருவகைப்படைப்புகளில் கலைஞரின் சிறுகதைகள் இரண்டாம் வகையைச் சார்ந்தவை. திராவிட இயக்கம் என்பது சமூக, பொருளாதார, அரசியல் விடுதலை இயக்கம். அதன் கருத்துகளை வெளிப்படுத்த கலைஞர் தேர்ந்தெடுத்த வடிவங்களில் ஒன்றுதாம் சிறுகதை. கலைஞரின் எழுத்துபாணி என்பது எதுகை மோனை அழகுமிக்க உரைவீச்சு. அது அவரின் எல்லா எழுத்துவகையிலும் வெளிப்படுவதை நாம் பார்க்க முடியும். அவருடைய கதை மொழியை, சிறுவர்க்குக் கதைகூறல் போன்ற தட்டையான கதையாடல் மொழி என நவீன விமர்சகர்கள் சிலர் விமர்சிக்கின்றனர்.   மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ புதினத்தைத் தழுவி கவிதை நடையில் கலைஞர் எழுதிய ‘தாய் காவியம்’ பற்றி ஜெயமோகன் இப்படி ஒரு விமர்சனத்தை முன் வைத்தார்: “இது தான் வாழ்க்கை உண்மை என்று நம்பவைக்கும் பிரமிப்பைத் தந்தது மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல். ஆனால் கருணாநிதியின் எழுத்தில் உண்மை உணர்வுகள் கூட பொய்யாகி விடுகின்றன!”   ஆனால் அவருடைய பல சிறுகதைகளில் உள்ளீடாக உள்ள விளிம்பு நிலை மக்களின் வாழ்வுப் பாடுகள் சாதாரண மனிதர்களின் துயரங்கள் போன்ற பின்நவீனத்துவக் கூறுகளை எந்த விமர்சகரும் பேசுவதில்லை. ‘குப்பைத் தொட்டி’ என்ற ஒரு சிறுகதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.   ஒரு குப்பைத் தொட்டி தன் கதையைக் கூறுவது போன்ற கதை வடிவம். அதன் குரலிலேயே கதை பேசும். குப்பைத் தொட்டியைச் சுற்றிச் சுழலும் சாதாரண மனிதர்களும், அவலங்களுமே கதை. இறுதியாக ஒரு பெண் ஒரு குழந்தையைத்தூக்கிக் கொண்டு வந்து யாருமறியாமல் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வேகமாக வெளியேறுவாள். “நீங்கள் இழைக்கும் குற்றங்களுக்கு என்னைக் குற்றவாளி ஆக்கலாமா மனிதர்களே?” என இறுதியாக குப்பைத்தொட்டி பெருமூச்சுடன் ஆதங்கப்படும். இக்கதை வெளிவந்த காலக்கட்டத்தில் 'இல்லஸ்ட்ரேட்டட்' ஆங்கில இதழில் அதற்கு ஒரு சிறப்பான விமர்சனம் வெளியானது.   []     வ.வே.சு. அய்யரின் ‘குளத்தாங்கரை அரசமரம்’, சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ போன்ற அஃறிணையின் குரலாக விரியும் குப்பைத் தொட்டி, பல அவலங்களைப் பற்றிப் பேசுகிறது. இறுதியாக ’குப்பைத்தொட்டிக் குழந்தை’ எனும் துயர் மிகுந்த ஒரு சமூக அவலத்தில் முடிகிறது.   எனக்குப் பிடித்த கலைஞரின் சிறுகதைகளில் முக்கியமானது, ‘அணில் குஞ்சு’. 1992-ஆம் ஆண்டில் உலகைக் குலுக்கிய இந்தியாவின் மிகப்பெரும் மதவெறிச் செயலான பாபர் மசூதி இடிப்பு எனும் துன்பியல் நிகழ்வை முன்னிறுத்தி அவர் எழுதிய சிறுகதை. ஒரு இஸ்லாமிய சிறுவன், ஒரு அணில்குஞ்சு என்னும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் வழியே ‘மதங்கள் மனிதமனங்களைப் புண்படுத்தலாமா’ என்னும் பெருமூச்சின் கேள்வியை உணர்ச்சி வசப்படாமல் வாசிப்போரின் மனங்களில் எழுப்பியிருப்பார்.   ஒரு ‘அணில்குஞ்சு’ அதன் கூட்டிலிருந்து தவறிவிழுகிறது. அதை ஒரு இஸ்லாமிய சிறுவன் வீட்டிற்கு எடுத்து வருகிறான். ராமருடன் தொடர்புடைய அணில் தன் வீட்டுக்குள் வளர்ந்தால் அது மதப் பிரச்சனையாக உருவெடுக்கும் என அஞ்சும் சிறுவனின் தந்தை, சோகமாகச் செல்லும் சிறுவனை ஆராவமுத அய்யங்கார் எனும் பிராமணர் சந்திக்கிறார். அவன் கையில் உள்ள அணில்குஞ்சைக் கண்டு பதட்டத்தை உருவாக்குகிறார். அங்கு வரும் சிறுவனின் தந்தைக்கும் அவருக்கும் ஏற்படும் வாக்குவாதம் இஸ்லாமிய - இந்துமத உரசலாக மாறுகிறது. சிறுவன் இறுதியாக அணில்குஞ்சை, கூடு இருக்கும் மரத்தடியில் விடுகிறான். ஒரு கழுகு வந்து அணில் குஞ்சைக் கொத்திக் கொண்டு போவதுடன் கதை முடிகிறது. இதில் அணில் குஞ்சு ‘மனிதர்கள்’, கழுகு ‘மதவெறி’ என்னும் உருவகத்தை வெளிப்படுத்தி இருப்பார். ஒரு நிஜ அணிலைத் தேடி, இக்கதையைப் படமாக்க நான் அலைந்தது சுவாரசியமான கதை.   ’சங்கிலிச்சாமியார்’ என்னும் கதை போலிச் சாமியார்களிடம் அப்பாவி மக்கள் எப்படி காலம்தோறும் ஏமாறுகிறார்கள் என்பதைப் பற்றியது. கதை தேடி கடற்கரையில் நடக்கும் எழுத்தாளர் ஏகலைவனுக்கு கிடைக்கும் ஒரு துயரமான கதை குறித்த சிறுகதை ‘எழுத்தாளர் ஏகலைவன்’. இன்னும் சில கதைகளைச் சுருக்கமாக: ’கண்ணடக்கம்’ சிறுகதை கடவுள் மறுப்பு கருத்துருவைக் கொண்டது. ‘நதியூர் நந்தியப்பன்’ கடிதவடிவ சிறுகதை. புராணத்துக்கு எதிராகப் பேசுவது ‘நளாயினி’. இந்தி எதிர்ப்புக் களம் கொண்டது ‘சந்தனக் கிண்ணம்’. இந்துத்துவம் காந்தியடிகளை பலிவாங்கிய பின்னனியில் உருவானது காந்தி தேசம்.   1945-ல் வெளிவந்த ‘கிழவன் கனவு’ கலைஞரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அடுத்து 1953-ல் நாடும் நாகமும் 1956-ல் தூய்மை, கலைஞர் ‘கருணாநிதியின் சிறுகதைகள்’ என்னும் தொகுப்பு 1971-ம் ஆண்டில் வெளிவந்தது. அதன்பிறகு சிறுகதை பூங்கா என்ற ஒரு தொகுப்பு வந்தது. கலைஞரின் சிறுகதைகள் இது வரை செம்மையான நூல்வடிவம் அடையவில்லை. அவருடைய முழு சிறுகதைகளையும் செம்பதிப்பாக கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை கலைஞர் எழுதியிருப்பதாக பிரபஞ்சன் போன்றோர் தரும் தகவல்களிலிருந்து அறிய முடிகிறது. (அவரின் சிறுகதைகளை குறும்படத் தொடராக எடுத்த போது முப்பது கதைகள் வரை படித்து அதில் 24 கதைகளை தேர்ந்தெடுத்திருந்தேன்.)    கலைஞரின் சிறுகதைகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. ஆனால் அவற்றை முன்னிறுத்தி, தன் சிறுகதைகளை அவர் எழுதவில்லை. தன் எல்லா கலை இலக்கிய வடிவங்களிலும் ஒரே மாதிரியான கொள்கைகளைத்தான் இயல்பாகவே கொண்டிருந்தார். ஓர் எழுத்தாளரும் அவருடைய‌ எழுத்துக்களும் எப்படி இருக்கவேண்டும் என தான் சார்ந்த திராவிட இயக்கக் கொள்கைகளோடு தனது படைப்புகளையும் சேர்த்து ஒரு கூட்டுக் கொள்கையை கொண்டிருந்தார். அதுதான் அவருடைய சிறுகதை படைப்புகளின் உருவமும் உள்ளடக்கமும். இதை அவரின் எழுத்துக்களிலேயே சொல்வது பொருத்தமாக இருக்கும்.   ‘எழுத்தாளர் ஏகலைவன்’ என்ற கலைஞரின் சிறுகதையில் கடைசிப் பகுதியே அது. “சிறுகதை என்றால் வெறும் பொழுதுபோக்குப் படிப்பதற்காகவா எழுதுவது? அதில் சமுதாயத்திற்குத் தேவைப்படுவதாக ஒரு கருத்து அமைக்கப் படவேண்டாமா?” ஒட்டுமொத்த திராவிட இயக்கப் படைப்புகளின் கொள்கைச் சாரமும் இதுவே என்பதை நாம் அறிய முடியும். கலை – இலக்கியம் என்பது மக்களுக்காக, சமுதாயத்துக்காக! கலைஞரின் சிறுகதைகளும் அத்தகை கொள்கைப் போக்கையே கொண்டிருந்தன என்பது கண்கூடு!    *   ஜோசியக்கிளி சீட்டுக்கட்டிலிருந்து ஒரு சீட்டை எடுப்பதுபோல், என் நூலகத்தில், எப்போதேனும் நான் நூல் அடுக்குகளிலிருந்து எதோ ஒன்றை எடுப்பதுண்டு. அப்படி ஒருமுறை – ஒரு நள்ளிரவில் என் கைகளில் சிக்கிய நூல் ‘கலைஞரின் சிறுகதைகள்‘. அதற்கு முன் நான் கலைஞரின் சிறுகதைகளை வாசித்ததில்லை. ஒன்றிரண்டு சிறுகதைகளை வாசித்தேன். அப்போது எனக்குள் பொறி தட்டியது. கலைஞரின் கதைகளைக் குறும்படத்தொடராக உருவாக்கினால் என்ன? ‘கலைஞரின் கதைநேரம்’ என அப்போதே தலைப்பும்உதித்தது.   உடனே களத்தில் இறங்கினேன். கலைஞரின் ‘எழுத்தாளன் ஏகலைவன்’ என்ற சிறுகதைக்கு திரைக்கதை வடிவம் அமைத்தேன். அதில் உள்ள உரையாடல்களையே சிறுசிறு மாற்றங்களுடன் வசனமாக்கினேன். மறுநாளே கலைஞரைச் சந்தித்தேன். இங்கு ஒரு சிறு ‘Cut to’ செல்வது பொருத்தமாக இருக்கும்.   என் தந்தை கவிஞர் வயலூர் சண்முகமும் கலைஞரும் திருவாரூர் பள்ளியில் வகுப்பு தோழர்கள். அவ்வைகையில் அவருடன் அவ்வப்போது பழக்கமுண்டு. அவரது பரிந்துரையால் சிலகாலம் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளேன். 2000-ல் அப்பாவின் நூல்களை, தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமை திட்டத்தின் கீழ் அவர் நாட்டுடமை செய்வதற்கு வழி வகுத்தார்.   அதற்கு பின் இந்த சந்திப்பு. கலைஞரின் கதைநேரம் தொடர் திட்டம் பற்றி அவரிடம் விளக்கினேன். உடனேயே, நான் கொண்டு சென்ற திரைக்கதைப் பிரதியை வாங்கிப் பொறுமையுடன் வாசித்தார். அவருக்கு அவரின் சிறுகதைகள் குறும்படத் தொடராக உருவாக்கும் கருத்துரு பிடித்துப் போயிற்று.     “எனக்கு வசனம் எழுத நேரம் இல்லாமல் போனால் என்ன செய்வது?”     “நீங்கள் ஏற்கனவே சிறுகதைகளில் எழுதியுள்ள உரையாடல் போதும், புதிதாக எழுத வேண்டாம்!”   “நடிகர்கள் யார்?”   “சினிமா நடிகர்கள், சீரியல் நடிகர்கள் இல்லை, எல்லோரும் புதுமுகங்கள். உங்கள் கதைகளின் கதாப்பாத்திரங்கள் உயிர்ப்புடன் வருவார்கள் அது மட்டும் உறுதி!”   மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.     மறுநாளே கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு. அப்போதைய நிர்வாக இயக்குனர் திரு.ரமேஷ் பிரபாவுடன் தொடர் பற்றிய ஒப்பந்த பேச்சு வார்த்தைகள் இனிதே முடிந்தன.   24 கதைகளை முதல்கட்டம் தொடராக எடுப்பது எனக் கையெழுத்தாகி நான்கு கதைகளை தேர்ந்தெடுத்து ஸ்கிரிப்ட், ஷெட்யூல், நடிகர்கள் தேர்வு, தலைப்பு பாடல் ஒலிப்பதிவு என பரபரப்பாக பணிகள் தொடர்ந்தன.   'எழுத்தாளர் ஏகலைவன்' என்ற சிறுகதையை பைலட் எபிசோடாக எடுத்தேன். அது ஒரு எழுத்தாளரைப் பற்றிய கதை. அச்சு அசலில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் தோற்றத்தைக் கொண்ட என் நண்பர் எழுத்தாளர் தஞ்சாவூர் கவிராயரை அதில் நடிக்க வைத்தேன். மெரீனா கடற்கரையில் நடந்த படப்பிடிப்பில், அவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் என்று நினைத்து ஆட்டோகிராப் வாங்க வந்தது சுவாரஸ்யமான சம்பவம்.     முதல் எபிசோட்டை கலைஞர் பார்த்தார். “நன்றாக இருக்கிறது. பணிகளைத் தொடர்!” எனப் பணித்தார்.   அடுத்த கதை ‘குப்பைத் தொட்டி’. இங்கே முக்கியமான ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நான் இந்த தொடர் எண்ணத்தை செயலாக்கும்போதே எனக்குள் ஒரு முடிவு எடுத்துக் கொண்டேன். இது வழமையாக தொலைக்காட்சிகளில் வரும் தொடர் நாடகமல்ல!  ஒவ்வொரு சிறுகதையையும் அதன் கலைத்தன்மை குறையாத ஒரு குறும்படமாக உருவாக்க வேண்டும் என்று எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டேன்.     'குப்பைத் தொட்டி'யை ஒரு உருவகக்கதையாய் கலைஞர் எழுதி இருந்தார். அதன் குரலில் கதை விரியும். நானும் அதைப் பின்பற்றியே திரைக்கதை அமைத்தேன். குப்பைத் தொட்டி பேசத் தொடங்கும். சம்பவங்கள் ஒவ்வொன்றாக விரியும். நான் அக்கதையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் கதாப்பாத்திரத்தை உருவாக்கினேன். க்ளைமாக்ஸில் ஒரு ஆணும் - பெண்ணும் செய்யும் முறையற்ற பாலியல் தவறால் ஒரு குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு அநாதையாக்கும் காட்சிக்குப் பின் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் அந்தக் குழந்தையை, குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து நான் உன்னை வளர்க்கப் போறேன், படிக்க வைக்கப் போறேன், பெரிய ஆளாக்கப்போறேன் என தோளில் சாய்த்துக் கொண்டு நடப்பதோடு அந்த வார குறும்படத்தை முடித்திருப்பேன். அந்த மாற்றத்தையும் பாராட்டி மகிந்தார் கலைஞர்.   உற்சாகத்தோடு அடுத்த கதைக்குப் பயணித்தேன்.   மூன்றாவது கதையாக நான் படமாக்க முற்பட்ட 'அணில் குஞ்சு' சிறுகதை எனக்கு பெரும் சவாலாக அமைந்தது. நாய், பூனை, ஆடு, மாடு போன்றவைகளை சினிமாவில் நடிக்க வைத்து விடலாம். அவற்றை சினிமாவுக்கென வளர்த்து பழக்கி வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு அணிலை வீட்டில் வளர்ப்பதே கடினம்.     C.G. அணிலை உருவாக்கி எபிசோடை எடுக்க சேனலின் பட்ஜெட் அனுமதி மறுத்தது. எப்படியோ எபிசோட் பட்ஜெட்டுக்குள் அக்கதையை எடுத்துக் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று சொல்லிவிட்டது சேனல் நிர்வாகம். மீண்டும் மீண்டும் கதையை வாசித்து, மீண்டும் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தேன்.   ஒரு முடிவுக்கு வந்தேன் இறுதியாக! “தேடு கிடைக்கும்!” என உள்மனதில் ஒரு அசரீரி ஒலித்தது. யார் வீட்டிலாவது அணில் வளர்க்கிறார்களா எனத் தேடி அலைந்தேன். என் மனைவி ஒருபக்கம், மகள் ஒரு பக்கம், உதவி இயக்குநர்கள் ஒருபக்கம் 'அணில் குஞ்சு' கதைக்கான அணில் நடிகரைத் தேடிய‌லைந்தோம்.    நீண்ட தேடலுக்குப் பின் சட்டென ஒரு சிறு வெளிச்சம் தென்பட்டது. என் மகள் நேசிகாவின் பரதநாட்டிய வகுப்புத் தோழி அம்ருதா வீட்டுக்கு எதிர் வீட்டில் ஓர் அணில் வளர்ப்பதாக அறிந்து ஓடினேன். அவர்கள் வீட்டில் ஜன்னல் வழியே வந்து எல்லோரின் கைகளிலும் தோள்களிலும் விளையாடி, உணவு உண்டு ஜாலியாக அவர்கள் வீட்டுக்குள் சுற்றித் திரிந்தது அந்த‌ அணில்! அவர்களிடம் எங்களின் நிலை விளக்கி, அணிலுக்கு ஒரு கூண்டு வாங்கிக் கொடுத்து, அந்த வீட்டுப் பையனின் பாதுகாப்புப் பணியுடன் மறுநாள் திருப்போரூரில் 'அணில் குஞ்சு' குறும்படப் படப்பிடிப்பு ஏற்பாடுகளை இறுதி செய்தேன். அணில் வளர்ப்பு வீட்டுப் பையனின் கைகளுக்கும், படத்தில் நடித்த என் நண்பர் காந்தியின் மகன் ரிஷிகரன் கைகளுக்கும், அந்த அணிலை மிகக் கவனமாக மாற்றி மாற்றி, மிகுந்த எச்சரிக்கையுடன் படமாக்கி முடித்தேன்.    படத்தொகுப்புக்குப் பின் பார்த்தபோது 'அணில் குஞ்சு' கதை மிக இயல்பாக வந்திருந்தது. அணில் தேடி அலைந்த அலைச்சலின் களைப்பு அதைப் பார்க்கும்போது உற்சாகமாக மாறியது! அந்த எபிசோடைப் பார்த்த கலைஞர் அதே உற்சாகத்தோடும், ஆச்சர்யத்தோடும் என்னைப் பாராட்டினார். 4வதாக 'சங்கிலிச் சாமியார்' கதையும் படமாக்கப்பட்டது. கலைஞர் 'ஒளிபரப்பைத் தொடங்கலாம்!' என அனுமதி அளித்தார்.   அதன் பிறகு நடந்த எதிர்பாராத சம்பவங்களை விவரித்தால் அது ஒரு மெகாசீரியல் திரைக்கதை போல விரியும். கலைஞரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டேன். பலமுறை முயன்றும் கலைஞர் டிவியிலிருந்து சரியான பதிலில்லை. பல முயற்சிகள் செய்தேன். கலைஞர் இருக்கும்வரை அவர் விரும்பி, ஒத்துழைப்பு நல்கிய இந்தத் தொடரின் ஒளிபரப்பு கைகூடவில்லை. காரணம் அவரில்லை என்ற காரணம் மட்டும் நானறிவேன். வேறு காரணங்கள் அறியேன்! ‘ராஜகுமாரி'யில் தொடங்கிய 'கதை-வசனம்' என்னும் கலைஞரின் திரைப்பயணம் 'கலைஞரின் கதைநேரம்; தொடரில் தான் நிறைவடைந்தது.    மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை காலமே மீண்டும் என்றாவது வெளிக் கொணரும்! இந்த கலைப் படைப்பின் வெளிப்பாட்டையும் நான் அப்படியே எதிர்நோக்கி இருக்கிறேன். நான் நம்பும் கடவுளோ, கலைஞர் நம்பிய காலமோ இதை ஒளிபரப்பும் அந்த வெளிச்ச நாளுக்காகக் காத்திருக்கிறேன்!    ***   சமூகப் படங்கள்: இந்திய அரசியலின் வசனம் ராஜசங்கீதன்   மொத்தம் மூன்று படங்கள் - பராசக்தி, பணம், ஒரே ரத்தம். மூன்றுமே கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதியவை. பராசக்தி 1952ல் வெளியானது. பணம், 1952ம் ஆண்டு டிசம்பரில். ஒரே ரத்தம் 1987ல்.   கருணாநிதி எழுதிய திரைப்பட வசனங்களில் சமூகம் பற்றிய தெறிப்பு அதிகம் என்ற சிலாகிப்பைக் கேள்விப்பட்டிருப்போம். நாடக பாணி, பிரச்சார பாணி என்று பலர் அதை விமர்சிப்பதுண்டு. அப்படிப்பட்ட திரைக்கதை மற்றும் வசனங்களின் வழி தனக்கும், தன் இயக்கத்துக்கும் ஓர் அடையாளத்தை உருவாக்கி, பின் இந்திய அரசியலிலேயே முக்கியமானதொரு ஆளுமையாய் மாறி, இப்போது அவர் மறைந்துவிட்ட இந்தத் தருணத்தில் அவர் படங்களை மீண்டும் பார்க்கிறேன். ஆம், கருணாநிதி கலைஞர்தான்!   சமூகத்தின் இயங்குவிசை கலை. எல்லாக் கலைகளும் ஏதோ ஒரு வகையில் மக்களைப் பிரதிபலித்தே உருவம் கொள்கின்றன. மக்களைப் பிரதிபலிக்கையில் மட்டும்தான் கலை என்ற உருவத்தையே கலை பெறுகிறது. குகையில் வரைந்த ஓவியம்தான் முதல் மனித வரலாறு. அந்த ஓவியத்தில் மிகை இருக்கும். மறைபொருள் இருக்கும். நடுக்கம் இருக்கும். பகுதிகள் அழிந்தும் இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி அங்கு வாழ்ந்த மனிதனின் அகம் ஓவியத்துக்குள் ஒளிந்திருக்கும்.   ஒரு காலத்தைய சமூகத்தின் அகத்தை பிரதிபலிப்பவன் நிச்சயமாக ஏதோவொரு நோக்கத்துக்காக மட்டும்தான் செய்கிறான். அந்த நோக்கம் அடுத்த தலைமுறைக்கு சேதி கடத்துவதாக இருக்கலாம். மக்களுக்கான அறிவுறுத்தலாக இருக்கலாம். எதிர்காலத்துக்கான புதுச் சிந்தனையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அந்த நோக்கம், படைப்பவனை மிகப்பெரும் காலச்சக்கரத்தின் முக்கிய கண்ணியாக இருத்தி வைக்கிறது. காலத்தை முன் யூகிப்பதாலும் மக்களுக்கான தீர்க்கதரிசனத்தை தருவதாலும் எல்லா காலத்துச் சமூகங்களிலும், படைப்பவன் நீங்கா இடம் பெற்று விடுகிறான். அச்சமூகங்களோடு ஏதோ ஒரு காலத்தில் உட்கார்ந்து கொண்டு அவன் உரையாடுகிறான். கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறான்.   இந்தியச்சமூகத்தை பொறுத்தவரை சமூகங்களுக்கும் தலைமைகளுக்கும் எந்தக் காலத்திலும் பற்றாக்குறை இருந்ததே இல்லை. மக்களைக் கையாளும் தலைமைகள், பல்வகை உத்திகளையும் பயன்படுத்தியே வந்திருக்கின்றன. தலைமைக்குத் தேவையான ஓர்மையை உத்திகள் உருவாக்கினவோ இல்லையோ அதிகபட்ச பிரிவினைகளையும் நெருங்கிட முடியாத ஏற்றத்தாழ்வுகளையும் ஆதிக்கத்தையும் சுரண்டலையும் புறரீதியாக மட்டுமின்றி அகரீதியாகவுமே உருவாக்கி வைத்திருக்கின்றன.   கொந்தளிப்பு நிறைந்த கடலில் பயணிப்பவனுக்கு கலங்கரை விளக்கமே துணை. விளக்கத்தின் உயரத்தைக் குறை கூற முடியாது. கடலுக்கு நடுவே அலைகளால் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பவனுக்கு மட்டும்தான், விளக்கம் கொண்டுள்ள உயரத்தின் அருமை தெரியும். கரையில் நிற்பவனுக்கு அல்ல. சமூக ரீதியாக, சாதிகளாக, வழிபாடு ரீதியாக, வர்க்க ரீதியாக, பாலின ரீதியாக பிளவுகளோடு இன்னுமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்தியச்சமூகத்தில் கருணாநிதி உயர்த்திய திரைக்கதை - வசனம் என்னும் கலங்கரை விளக்கம் மிகவும் அவசியமானது; அழித்திட முடியாததும் கூட.   கருணாநிதி மறைந்த அன்று, நான் சொல்லி, தோழி ஒருவர் ‘பராசக்தி’ படத்தை பார்த்தார். அவர் 90களின் பிற்பகுதியில் பிறந்தவர். படம் பேசும் பர்மாவை பற்றியோ இரண்டாம் உலகப்போர் பற்றியோ எள்ளளவும் தெரிந்திராதவர். படம் பார்த்து முடித்த பிறகு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். “Evlo guts venum apove apdi padam eduka!”. தமிழை ஆங்கிலத்தில் உள்ளிட்டு தகவல் அனுப்பும் தலைமுறையைச் சேர்ந்த பெண்! படம் வெளியான காலத்தில் அவர் அப்பா கூட பிறந்திருக்க மாட்டார். ஆனால் அவரிடமும் கருணாநிதி பேசுகிறார். ஏனெனில், இன்று அவர் பார்க்கும், கேட்கும் எல்லாமும் படத்தில் இருக்கிறது.   ‘பராசக்தி’ படம் என்றதும் நமக்கு சிவாஜிதான் ஞாபகம் வருவார். நீதிமன்றக் காட்சி ஞாபகம்வரும். சிவாஜி என்ற மகத்தான நடிகனை கண்டெடுத்தது ‘பராசக்தி’ படம்தான் என்றாலும், அதன் கதை சிவாஜியைப் பற்றியது அல்ல. ‘கல்யாணி’ என்ற பெண் கதாபாத்திரத்தை பற்றியது. ஆணாதிக்கமும் அதற்கு துணை போகும் புரோகிதமும் எப்படி கல்யாணி என்ற பெண்ணை துன்புறுத்தி விரட்டுகிறது என்பதுதான் கதை.   []     தங்கை கல்யாணியின் திருமணத்துக்கு பர்மாவிலிருந்து அண்ணன் குணசேகரன் கப்பலில் கிளம்புகிறான். போரால் பயணம் தடைபடுகிறது. சில மாதங்களுக்குப் பின் மீண்டும் பயணம் தொடங்கி, தமிழ்நாட்டுக்கு அண்ணன் வருவ‌தற்குள், கல்யாணிக்குக் குழந்தை பிறந்துவிடுகிறது. கணவன் விபத்தில் மரிக்கிறான். அப்பாவும் இறக்கிறார். கல்யாணி நடுத்தெருவில் நிற்கிறாள். வந்த இடத்தில் அண்ணனின் பணமெல்லாம் திருடு போகிறது. தங்கையைத் தேடி அலைகிறான். வாழ்வாதாரத்துக்காகத் திருடுகிறான். கிறுக்கனாக நடிக்கிறான். தங்கையைக் கண்ட பிறகும் தான் தான் அண்ணன் என சொல்ல முடியாத சூழல். அவனிடம் ஈர்க்கப்படும் விமலா அவன் கதை விசாரிக்கிறாள். நடந்தவற்றைச் சொல்கிறான். அவள் காதலிக்கத் தொடங்குகையில், தங்கையைத் தேடிச் சென்றுவிடுகிறான். வாழ வழியின்றி கல்யாணி குழந்தையைக் கொன்று விடுகிறாள். போலீஸ் பிடிக்கிறது. குடும்பம் சேர்ந்ததா இல்லையா என்பது மிச்சக்கதை.   இந்தக் கதைக்குள் எங்கேனும் புரட்சி பேசிட முடியுமா? அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட குடும்பக்கதை! இன்றைய ஹரியிடம் சிக்கியிருந்தால், இந்த கதை என்னவாகி இருக்குமென யோசித்து பாருங்கள். படம் வெளியாகி சில மாதங்களிலே மறந்து போயிருப்போம். கிட்டத்தட்ட 66 வருடங்கள் ஆகியும் ‘பராசக்தி’யை பேசிக் கொண்டிருக்கிறோம். காரணம், படத்துக்குள் பேசப்பட்டிருக்கும் சமூகநீதி அரசியல்!   ‘பராசக்தி’ படம் வெளியான ஒரு மாத காலத்திலேயே ‘பணம்’ படம் வெளியாகிறது. சிவாஜி, பத்மினி, என்.எஸ்.கிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள். பத்மினியை சிவாஜி மணக்கிறார். கேட்ட வரதட்சணையைப் பெண் வீட்டில் கொடுக்காததால், சிவாஜியிடம் இருந்து பத்மினியைப் பிரித்து வெளியேற்றுகிறார் சிவாஜியின் தகப்பன். மனமுடையும் பெண்ணின் தகப்பன், பணத்துக்காக அல்லாடுகிறார். கணவனைப் பிரிந்த சோகத்தில் பத்மினி வாடுகிறார். அவரின் வாட்டம் புரிந்து பெண் பித்தனான காவல்துறை அதிகாரி பணம் கொடுக்க முன்வருகிறான். சிவாஜியின் தகப்பனோ பத்மினியின் நடத்தையில் களங்கம் கற்பித்து, வேறு இடத்தில் சிவாஜிக்கு மணம் முடித்து வைக்கிறார். இரண்டாவது பெண் தனக்கொரு காதல் இருப்பதாக சொல்ல, சிவாஜி வெளியேறி விடுகிறார். பத்மினியை பிரிந்த வாடுகிறார். மகளை கடத்தி வைத்திருக்கும் இன்ஸ்பெக்டரின் சதி புரிந்து, பத்மினியின் தகப்பன் சண்டை போடுகிறார். இன்ஸ்பெக்டர் அவரைக் கொன்று விடுகிறார். பழி சிவாஜி மீது விழுகிறது. தம்பதிகள் சேர்ந்தார்களா என்பது மீதிக்கதை.   மீண்டும் ஒரு குடும்பக்கதை தான். இதில் தன்னுடைய கம்யூனிசச் சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கும் கலைஞர், திராவிட அரசியலையும் கிட்டத்தட்ட வெளிப்படையாக பேசி இருக்கிறார். மனிதனின் வாழ்வில், உணர்வுகளுக்கும் கூட விலங்குகளை பூட்டிடும் வல்லமை பணத்துக்கு உள்ளது. எல்லாருடைய வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு பணம் அடிப்படையாக பார்க்கப்படுவதன் பின்னணியில் ஓர் அரசியல் இருக்கிறது. கருணாநிதி அதைத்தான் இப்படத்தில் அழுத்தமாகப் பேசி இருக்கிறார்.   வேதங்களை எல்லாம் தாண்டிய அறம் பேசும் புத்தகம் இருக்கிறதென சொல்லி என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு புத்தகம் காண்பிப்பார். திருக்குறள்! ஒரு காட்சியில், உரையாடல் நடந்துகொண்டிருக்கும். பின்னால் அவ்விடத்துக்கான பெயர்ப் பலகை இருக்கும். திருக்குறள் முன்னணி கழகம். திமுக!   ’ஒரே ரத்தம்’ படத்தை இதிலிருந்து 35 வருடங்களுக்கு பிறகு கலைஞர் எழுதி இருக்கிறார். காலம் நிறைய மாறியிருக்கிறது. நிறையப் புது பிரச்சினைகள்! கலைஞரும் காலத்துக்கேற்ப படத்தில் சமூகநீதி பேசுகிறார். ‘ஒரே ரத்தம்’ படத்தை கிட்டத்தட்ட அந்தக் காலத்து ‘காலா’ என சொல்லலாம். பா.ரஞ்சித் ஒரு நிகழ்வில் கலைஞரை பற்றி பேசுகையில் இப்படத்தை சிலாகித்திருந்தார். ஆம், படத்தில் சாதிதான் பிரச்சினை.   அசைவம் சாப்பிடாத ஓர் ஊர்ப் பெரியவரின் மகன் நாயகன் கார்த்திக். முற்போக்கு பேசுபவர். அவருக்கு ஒரு தங்கை. சீதா! வரதட்சணை கொடுப்பதில்லை என்ற கொள்கை கொண்டிருக்கும் அப்பா, மகளுக்கு வரும் வரன்களை எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறார். ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த பண்ணையாளின் மகன் பாண்டியன். அவருக்கு ஒரு தங்கை, தம்பி. தம்பியாக நகரத்தில் இருந்து வருபவர் மு.க.ஸ்டாலின்! கார்த்திக்கும் ஸ்டாலினும் இணைந்து ஊருக்குள் இருக்கும் சாதிய பிரச்சினைக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். கார்த்திக் கறுப்பு சட்டை, ஸ்டாலின் நீலச்சட்டை!   ஊருக்குள் இருக்கும் டீக்கடைக்காரர் ராதாரவி பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். அவருடனான வாக்குவாதத்தில் ’பட்டியலின பெண்ணைத்தான் மணப்பேன்’ என கார்த்திக் வாக்கு கொடுக்கிறார். ஸ்டாலினின் தங்கையும் கார்த்திக்கும் காதலிக்கிறார்கள். விஷயம் தெரிந்து கார்த்திக்கின் அப்பா அவரை வெளியேற்றுகிறார். பட்டியலின சாதி மக்கள் தங்கியிருக்கும் இடத்தில் கார்த்திக்கும் வந்து தங்குகிறார். ஸ்டாலினின் தங்கையை கார்த்திக் மணம் முடிக்கிறார். ராதாரவியின் சாதீயத்துக்கு எதிராக குரல் கொடுத்ததில் ஸ்டாலின் கொல்லப்படுகிறார். இவற்றுக்கிடையில், திருமண ஏக்கத்தில் யாருக்கும் தெரியாமல், பாண்டியனோடு சீதா உறவு கொள்கிறார். கர்ப்பம் ஆகிறார். தாய் மனோரமாவுக்கு உண்மை தெரிய வருகிறது. ஜோதிடருடன் சேர்ந்து திட்டமிட்டு, ஊர் பெரியவருக்கு ’தெய்வக்குழந்தை ஒன்று வாய்க்கும்’ என ஆரூடம் சொல்ல வைத்து, அந்த தெய்வ குழந்தையாக மகளின் குழந்தையையே வீட்டுக்குள் வரச் செய்து விடுகிறார். இது ஏதும் தெரியாமல் மகளுக்கு கல்யாணம் பேசி ஊர்ப்பெரியவர் முடிக்கிறார். விஷயம் தெரிகையில் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.   ஆட்சியிலும் இருந்துவிட்டு, பின் இத்தகைய கதையை எடுப்பதற்கு உண்மையிலேயே அசாத்திய துணிச்சலும் சமூகநீதியின்பால் கொண்ட தணியாப் பற்றும் இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் “இதற்கு முன், ஆட்சியில் நீங்கள்தானே இருந்தீர்கள். ஏன் இவற்றைச் சரி செய்யவில்லை?” என கேள்வி எழும் வாய்ப்புகள் நிறையவே கொண்ட சூழல் அது. ‘ஒரே ரத்தம்’ படத்தில், மாறியிருக்கும் சமூகத்தின் பிரதிபலிப்பை அதிகம் காணலாம். ஆனால், அந்த மாற்றம் சரியாக சென்றடையவில்லை என்ற ஆத்மார்த்தமான விமர்சனத்தையும் கலைஞர் வெளிப்படுத்தி இருப்பார்.   மூன்று படங்களிலும் அடிச்சரடாக ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கிறது. பெண்கள்!   “இப்போதும் உன்னை குற்றம் சாட்டுகிறேன். நீ ஒரு சுயநலவாதி! உன் சொந்த தங்கைக்காக, அவள் சோக வாழ்வுக்காக சுருண்டு போனாயே தவிர, நாட்டிலே எத்தனை தங்கைகள் நலிந்து கிடக்கிறார்கள் என நினைத்தாவது பார்த்தாயா? அதற்காக உன் நாவு அசைந்தது உண்டா, உன் நெஞ்சு துடித்ததுண்டா?”   “எனக்கேன் துடிக்க வேண்டும்? இந்த கேடு கெட்ட சமுதாயத்துக்கு, நன்றி கெட்ட நாட்டுக்கு, ஏழைகளை மிதித்து வாழும் எத்தர்களுக்கு துடிக்க வேண்டும் நெஞ்சு, உயிர், உடல் எல்லாம்… எனக்கேன் துடிக்க வேண்டும்?”   “அந்த சமுதாயத்தில் நீயும் ஒரு அங்கம்!”   “ஆனால் நான் ஏழை…”   “அப்படி ஆக்கப்பட்டாய்!”   ‘பராசக்தி’ படம்தான். இந்த உரையாடல் நடப்பது குணசேகரனுக்கும் அவன் காதலி விமலாவுக்கும் வாழ்க்கையையும் சமூகத்தையும் குறை கூறியே வாழ்ந்து வரும் குணசேகரனிடம் அவனது தவறை எடுத்து சொல்லி, சமூகத்துக்காக அவன் சிந்திக்க வேண்டும் என்ற அறிவை வழங்குவது ஒரு பெண்ணே.   பிரபலமான‌ நீதிமன்ற வசனம் எனக்கும் பிடிக்குமெனினும் அதையும் தாண்டி கலைஞர் என்னை ஈர்த்தது இந்த வசனத்தால்தான்; அதுவும் வசனத்தை ஒரு பெண் கதாபாத்திரம் பேசுவதாக வைத்ததால்தான்.   இம்மாதிரி மூன்று படங்களிலுமே பெண்கள் மிக முக்கியமான பங்கு வகிப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் மூன்றிலுமே கதையுமே பெண்களை சுற்றித்தான் சுழலும். ‘கல்யாணி’ பாத்திரமும் ‘விமலா’ பாத்திரமும் ‘பராசக்தி’ படத்தில் என்றால், ‘பணம்’ படத்தில் பத்மினி பாத்திரமும் T.A.மதுரம் பாத்திரமும். ’ஒரே ரத்தம்’ படத்தில் சீதா கதாபாத்திரமும் அவரது அம்மா மனோரமா கதாபாத்திரமும்.   ‘பணம்’ படத்தில் என்.எஸ்.கே., மதுரத்துடன் பேசும் காட்சி ஒன்று உண்டு. அவரைக் கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து பேசும் என்.எஸ்.கே., ஆண்களுக்கே உரிய சாதுர்யத்துடன் உண்மைகளை எல்லாம் சொல்வதாகக் காண்பித்துக் கொண்டு, ஒரே ஒரு தடவை ஒரு பெண்ணுடன் உறவு கொண்டு விட்டதா’க சொல்வார். உடனே மதுரம் ‘பிரச்சினை இல்லை’ என சொல்லிவிட்டு, தானும் ஒரு ஆணுடன் ஒரே ஒரு முறை உறவு கொண்ட அர்த்தம் தொனிக்க பேசுவார். உடனே என்.எஸ்.கே. முகம் சுளித்து விலகுவார். தொடர்ந்து ‘ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி, ஆகுமோ சொல்லய்யா’ என பாடல் வரும். Male Privilege என்கிறோமே, அதை அக்காலத்திலேயே இடித்துரைத்திருக்கிறார் கலைஞர்.   ‘ஒரே ரத்தம்’ படத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று, திருமணம் மறுக்கப்படும் பெண்ணுக்கு ஏற்படும் கலவி விருப்பத்தை சீதாவின் கதாபாத்திரத்தை வைத்துப் பேச வைத்திருப்பார். மணமாகாது சீதாவுக்குப் பிறக்கும் குழந்தையை சாதிவெறி பிடித்த தகப்பனிடம் மறைக்க மனோரமா எனும் பெண்தான் உதவுவார்.   சரியாகவே சொல்வதெனில், ‘பராசக்தி’ படக் கதையை ஆண்களின் உலகத்துக்குள் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண்ணை பற்றிய கதை என்றே சொல்லலாம். ஆண்கள் உலகம் என்பது, கல்யாணியின் அண்ணனான கோழை குணசேகரனில் தொடங்கி, கல்யாணியை படுக்கைக்கு அழைக்கும் ஆண்களையும் சேர்த்து, கடைசியில் கல்யாணியையே குற்றவாளியாக நிறுத்தும் நீதிபரிபாலனம் வரையிலான மொத்தமுமே.   “தாழ்த்தப்பட்டவங்க, பிற்படுத்தப்பட்டவங்க நாலு பேர் படிக்குறது, ரெண்டு பேர் உத்தியோகத்துக்கு போறது, அதோட எங்க சமுதாய முன்னேற்றம் முடிஞ்சு போயிடுது. அப்படிப் படிச்சவன், பட்டணத்துக்குப் போய் உட்கார்ந்துக்கிட்டு, எதாச்சும் பதவி பவிசுகளை தேடிக்கிட்டு தன்னையும் ஒரு உயர்ந்த ஜாதிக்காரன் மாதிரி பாவ்லா பண்ணிக்கிறானே தவிர, அவனால சமுதாயத்துக்கு ஒரு செல்லாக்காசு பயன் கூட கிடையாது”   ’ஒரே ரத்தம்’ படத்தில் இப்படியொரு வசனம் எழுதி இருக்கிறார் கலைஞர். எத்தனை உண்மை! தொடர்ந்து விவசாயிகள் ஊரில் இருந்து விவசாயம் பார்க்க வேண்டும் என ஒரு கதாபாத்திரம் பேச, பதிலுக்கு, “உயிருள்ளவங்க, உடம்புல வலுவுள்ளவங்க எல்லாருமே உழைக்கணும். உழைக்க ஒரு வர்க்கம், உண்டு களிக்க ஒரு வர்க்கம்… இந்த சமூக அமைப்பை மாத்த ஒரு பெரிய புரட்சியே பண்ணனும்” என வசனம் வைத்திருப்பார். இந்த வசனம் எந்த அரசியல் சித்தாந்தத்தை குறிக்கிறது என விளக்க தேவையில்லாத அளவுக்கு பட்டவர்த்தனமாக இருக்கிறது. திராவிடம் பேசுகிற அதே நேரம் கம்யூனிசம் பேசுவதை நிறுத்தாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல், அதை அடையாளப்படுத்தவும் தவறாமல் இருந்திருக்கிறார். போகிற போக்கில், விவசாயத்தின் மீதான‌ பரவலான‌ வழிபாட்டுத்தன்மையையும் உடைக்கிறார்.    படத்தில் ஸ்டாலினும் கார்த்திக்கும் போடும் சட்டைகளின் நிறங்கள் கறுப்பு, நீலம், சிவப்பு ஆகியவையே!   கலைஞரின் திரைக்கதை பாணியும் அலாதியான பாணிதான். Charles Dickens, Shakespeare போன்றோர் பயன்படுத்திய உத்தியை தமிழில் அறிமுகப்படுத்தியது கலைஞரே என சொல்லலாம். ஆரம்பத்திலேயே திரைக்கதைகளில் கதாபாத்திரங்களை நிறுவி விடுவார். கதையில் ஏற்படும் முதல் திருப்பத்தில் மொத்த கதாபாத்திரங்களையும் சிதறடிப்பார். கதையின் எல்லா மூலைகளுக்கும் கதாபாத்திரங்கள் சென்று விழும். மீண்டும் அவை ஒன்று சேருமா இல்லையா என்பதே திரைக்கதையின் முடிவாக இருக்கும். ஒன்று சேர முயன்று அதிலேற்படும் சிக்கல்கள் புதிய‌ பிரச்சினை ஏற்படுத்துவதே இரண்டாம் திருப்பமாக இருக்கும்.    நிறையப் கதாபாத்திரங்கள் என்பதால் எளிதாக முடிச்சுகளும் கதையின் போக்கில் நிறைய விழும். சுவாரஸ்யம் கிடைத்துவிடும். அதனாலேயே இயல்பாக காவியத்தன்மை படத்துக்கு உருவாகிவிடும். ராமாயண, மகாபாரதம் மற்றும் கிரேக்கத்தின் இலியட் போல். சிறுவயதில் பார்த்த Oliver Twist படம்தான் எனக்கு ‘பராசக்தி’யை முதல் தடவை பார்த்தபோது நினைவுக்கு வந்தது. வெறும் வசனங்களில் மட்டுமென இல்லாமல் திரைக்கதை அமைப்பிலுமே கருணாநிதி வித்தகர்தான். புராண, இதிகாச படங்கள் வெளிவந்த காலத்தில், சமூகப்படங்களில் எழுதுவதென்பது கிட்டத்தட்ட முதல் முயற்சி. அது சரியாக வர‌ வேண்டும் என்பதில் கலைஞரின் பிரயத்தனமும் தேர்ச்சியும் அவரெழுதிய படங்களில் தெளிவாகக் காணலாம்.   “கலைஞர் கருணாநிதி எதை பேசுவார் என்பதுதான் தெரியுமே, படங்களின் வசனங்களில் அவர் பேசிய அதே விஷயங்களை திரும்ப எடுத்துக் காட்ட வேண்டுமா?” என கேட்கலாம். ஆம், நிச்சயமாக எடுத்துக் காட்ட வேண்டும். கலைஞர் எவற்றைப் பேசுவார், எந்தச் சித்தாந்தங்களின்பால் ஈர்ப்பு கொண்டிருந்தார் என்பவையெல்லாம் தெரிந்துமே இன்று நம் கண் முன்னால் அவை திரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகவே நிச்சயமாகத் திரும்ப பேச வேண்டும். அவரும் அதைத்தானே செய்திருக்கிறார். திரும்ப திரும்ப பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர், அண்ணா என்றுதான் பேசி இருக்கிறார். அதனால்தானே அவர்களை நம் சமூக அமைப்புக்குள் ஓரளவுக்கேனும் நடைமுறைப்படுத்தவும் அவரால் முடிந்திருக்கிறது.    இந்தியச்சமூகம் அதன் இயல்பிலேயே ஆதிக்கத்தையும் சுரண்டலையும் சாதி மதங்களின் வழியாக மக்களின் அகநிலையில் விதைக்கவல்லது. அதற்கான அடித்தளம் மிக வலுவாக இந்திய பார்ப்பன, பனியா கும்பலால் பல நூறாண்டுகளாக போடப்பட்டிருக்கிறது. அது சாதி, மதம் தாண்டிய ஒற்றுமையைக் குலைக்கும். பேதங்களை வலுப்படுத்தும். தமிழை பலவீனப்படுத்தும். பெண்களை மேலும் மேலும் ஆணாதிக்க சட்டகத்துக்குள் நேராகவோ மறைமுகமாகவோ உட்படுத்திக் கொண்டே இருக்கும். ஏழைகளை அதிகமாக்கிக் கொண்டே இருக்கும். தொழிலாளிகளை சுரண்டிக் கொண்டே இருக்கும்.   வன்புணர்வின் தலைநகர் தில்லி! ஒடுக்கப்பட்டோரின் குரல் இன்னுமே ஏறாத அம்பலம். மனித உரிமை போராளிகளின் உயிர் பறிப்பு. வேகமாக பார்ப்பனமயமாக்கப்படும் தமிழ்நாடு! ஆம், இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவேதான் தோழியால் ‘பராசக்தி’ படத்துடன் தொடர்புகொள்ள முடிந்தது. ஆதலால்தான் கலைஞரின் மறைவுக்கு அத்தனை கோடி இளையோர் பட்டாளம் கூடி கண்ணீர் சொரிந்தது. பெரியாரும், அம்பேத்கரும், அண்ணாவும், கலைஞரும் எதை எதிர்த்து போராடினார்களே அது வந்தே விட்டது. நாம் என்னவெல்லாம் ஆகக்கூடாது என விரும்பினார்களோ அதுவாகவெல்லாம் மாறிக்கொண்டு இருக்கிறோம். நம் கரங்களாலேயே கொல்லப்பட வேண்டுமென சமூகநீதியின் கழுத்து நம் கைகளில் திணிக்கப்படுகிறது. இச்சமூகம் பேசும் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக வசனம் எழுதியவர் கலைஞர். அதனாலேயே அவர் காலத்துக்கும் நிற்கிறார். அவரது வசனங்கள் பார்ப்பனீயத்தின் ஆணி வேரை அசைத்து பார்ப்பவை. சுருங்கக்கூறின், இந்தியச் சமூக நீதிக்கான வசனத்தை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. ஆதிக்கத்துக்கு எதிரான இந்திய அரசியலின் வசனமே கருணாநிதி!   “பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்!”    ஆம், காலத்தால் நிலைத்திட்ட கலைஞர்தான் கருணாநிதி!   ***   [“பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்ற முதுமொழிக்கேற்ப‌ போல் எனக்குப் பிடித்த கலைஞரின் சில எழுத்துக்களை அவை உண்மையில் வெளியான அதே அச்சு வடிவில் அடுத்த சில பக்கங்களில் தந்திருக்கிறேன். கலைஞரை இதுகாறும் வாசித்திராதவர்கள் இவற்றிலிருந்து தொடங்கலாம். - ஆசிரியர்]          கலைஞர் – ‘சுபமங்களா’ நேர்காணல்   முழுமையாக எழுத்து தொடர்பாக மட்டுமே கலைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரே நேர்காணல் நவம்பர் 1992 ‘சுபமங்களா’வில் வெளியானதுதான் என நினைக்கிறேன். (நன்றி: ‘சுபமங்களா’ - http://www.subamangala.in/)     []   [] [] [] [] [] [] [] [] [] []     கலைஞரின் ‘முரசொலி’ கடிதம்   1976ல் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட போது முரசொலியில் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம். மொழியின் மீதான அவரது பற்றையும் ஆட்சி பலத்தை அதற்குப் பயன்படுத்திக் கொண்டதையும் அதைத் தன் எழுத்துவ‌ன்மை மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்துவதையும் இந்த‌க் கடிதம் காட்டுகிறது.   []   [] [] [] [] [] [] [] [] [] [] [] [] []     பொன்னர் - சங்கர்: முன்னுரை / முடிவுரை   பொன்னர் - சங்கர் நாவலுக்கு கலைஞர் எழுதிய முன்னுரையும் முடிவுரையும். நாட்டுப் பாடல்கள் மற்றும் வரலாற்று நூல்களிலிலிருந்து குறிப்பிட்ட‌ பிரதேசம் மற்றும் அதன் மக்கள் சார்ந்ததொரு சரித்திர‌ நாவலை உண்டாக்கும் அவரது வேட்கைக்கும் வித்தைக்கும் இது உதாரணம். (நன்றி: https://tamilcomicsulagam.blogspot.com/)    []   [] [] [] [] [] [] [] [] [] [] [] [] []     பொன்னாஞ்சலி பரணிராஜன்   []