[] [cover image] தமிழியல் ஆய்வுகள் தமிழ்நேயத்தின் பார்வை இர.ஜோதிமீனா FreeTamilEbooks.com CC-BY-SA தமிழியல் ஆய்வுகள் தமிழ்நேயத்தின் பார்வை 1. தமிழியல் ஆய்வுகள் தமிழ்நேயத்தின் பார்வை 1. தமிழியல் ஆய்வுகள் தமிழ்நேயத்தின் பார்வை 2. அணிந்துரை 3. என்னுரை 2. தமிழ்நேயம் - அறிமுகம் 3. தமிழின் ஆக்கம் தடையும் தீர்வும் 4. தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் 5. தமிழ்மெய்யியல் ஆய்வுகள் 6. சங்க இலக்கிய ஆய்வுகள் 7. சங்க இலக்கிய ஆய்வுகள் 8. தமிழறிஞர் வாழ்வும் பணியும் 1. நிறைவுரை 2. பின்னுரை – ஞானி 3. தமிழ்நேயம் - ஒரு பருந்து பார்வை 4. இதழாசிரியர் ஞானியுடன் நேர்காணல் தமிழியல் ஆய்வுகள் தமிழ்நேயத்தின் பார்வை தமிழியல் ஆய்வுகள் தமிழ்நேயத்தின் பார்வை   இர.ஜோதிமீனா   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - G.சுமதி - sumathig000@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/tamizhiyal_aaivugal_tamizhneyathin_paarvai} தமிழியல் ஆய்வுகள் தமிழ்நேயத்தின் பார்வை உரிமை : CC BY-SA 4.0 author correspondence & acquisition of creations gnuanwar மின் அஞ்சல் : gnuanwar@gmail.com அணிந்துரை *முனைவர்.நா.நளினிதேவி பேராசிரியர் (பணிநிறைவு),மதுரை.** பொதுவாக நூல்கள்/ஆய்வுகளுக்கான மதிப்பீடுகளிலும், அணிந்துரைகளிலும் அவற்றின் நிறைகளைப் போலவே குறைகளும் சுட்டிக்காட்டப்படாத மரபு எதனாலோ தொடங்கித் தொடர்கின்றது. வளர்ந்து கொண்டிருக்கும் ஒன்றில் குறைகள் இல்லாமல் இருத்தல் இயலாது. இவற்றைச் சுட்டிக்காட்டுவதால் ஆய்வாளர், ஆய்வேடு, நூலாசிரியர் குறைகள் அவை எனக் கொள்வதற்கில்லை. மாறாகச் செம்மைப்படுத்திக் கொள்ள வழிவகுக்கும். முனைவர் தகுதிக்கான ஆய்வு என்பது, புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்தலே ஆகும். அறிவியல் ஆய்வுகள் இவ்வாறே அமைகின்றன. ஆனாலும் இப்போதைய பெரும்பாலான தமிழ் ஆய்வுகளில் இத்தகைய புதிய கண்டுபிடிப்பு எதுவுமின்றித் தாம் எடுத்துக் கொண்ட பொருள் பற்றிய பல நூல்களின் தொகுப்பாகவே உள்ளன என்பது வருந்தத்தக்கது. ஆய்வாளர், ஆய்வுநெறியாளர், மதிப்பீட்டாளர் மூவருக்கும் அறிந்தோ, அறியாமலோ இதில் சமபங்கு உண்டு. ஆய்வுகளின் முடிபுகளையும் அவை கண்டறியபட்ட வழிகறையும், கண்டறிந்திருக்க வேண்டிய ஆய்வுக் கூறுகளையும் அணிந்துரைகள் சுட்டவேண்டும். இம்முடிபுகளால் தமிழுக்கும், தமிழாய்வுலகிற்கும் எத்தகைய ஆக்கம் என்பதை அணிந்துரைகள்/ கருத்துரைகள்/ மதிப்புரைகள் பரிந்து உரைத்தல் வேண்டும். இதுவே அணிந்துரைகளின் சரியான இலக்கணமாகும் என்பது என் கருத்து. மொழிப் பிழைகளும் அச்சுப்பிழைகளும் தவிர்க்கும் வழி இன்றி ஆய்வுகளிலும் நூல்களிலும் இடம்பெறுவது மிகவும் கவலைக்குரியதாகும். தமிழின் வளர்ச்சிக்கும் செம்மைக்கும் இலக்கியச் சிற்றிதழ்களின் பங்களிப்பு முதன்மையானது. இவற்றுள் ‘புதியதலைமுறை’, ‘பரிமாணம்’, ‘வானம்பாடி’, ‘நிகழ்’ முதலான சிறந்த இதழ்களைத் தொடர்ந்து கோவை ஞானி வெளியிட்ட ‘தமிழ்நேயம்’ 1998 முதல் 2012 வரை வெளிவந்த வரலாறும், அது தொடர்பான நிகழ்வுகளுமாய் முதல் இயல் அறிமுகப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழ்நேயத்தின் நோக்கம் ஆற்றிய பணிகள், பயன்கள் என அறிந்து கொள்ள முடிகின்றது. சிற்றிதழ்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இதில் அடங்;கும். தமிழன் ஈடு இணையற்ற தொன்மைச் சிறப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். பழைமைக்கும் பழைமையான தமிழைப் புதுமைக்கும் புதுமையாகக் கொண்டு செல்வதே இதற்கான வழி. இவ்வாறான ஆய்வுகளுக்கான தடைகளும், தீர்வுகளும் பற்றிய கட்டுரையாளர்களின் கருத்துகள் முரண்பட்டு நிற்பது போன்று தோன்றினும், முடிபுகள் சிந்தனை ஒருமையைக் காட்டுகின்றன. ஒரே நோக்கம் கொண்டவர்களின் சிந்தனை ஒரே மாதிரியாக இருப்பதில் வியப்பில்லை. தமிழ்நாகரிகம் என்பது இலக்கியம் மட்டுமன்று. நம்மை முடக்கும் அக,புறச் சூழல்களிலிருந்து விடுபடும் முயற்சி முதல் கல்வியியல், அரசியல், பொருளியல், சூழலியல், சமுதாயியல், வாழ்வியல், கலையியலில் கலந்து கிடக்கும் தமிழ்நாகரிகத்தின் சிறப்புக் கூறுகளைத் தத்தம் அளவில் போற்றிக் காப்பதே அதை மீட்டு வளர்க்கும் செயலாகும் என்ற வகையில் அமைந்துள்ள பல கட்டுரைகளின் கருத்துரைகளின் பிழிவாக இயல்.3. அமைந்துள்ளது. தலித்தியம், பெண்ணியம் பற்றிய நாகரிகக் கூறுகள் நுட்பமாக ஆராயப் பெற்றுள்ளன. தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம்பற்றிய நம்பிக்கை ஒளியும், அச்ச இருளும் கருவானில் மின்னலாய்த் தோன்றி மறைகின்றன. தமிழ்மொழிக்கே உரிய இயற்கை மெய்யியல் பேராசிரியர் க.நெடுஞ்செழியனின் தமிழ்ச்சிந்தனையாகிய உலகாய்தக் கோட்பாட்டை முன் வைத்துத் தொல்காப்பியத்தின் அய்ந்திணைக் கோட்பாடு முதல் தொல்காப்பிய உரையாசிரியர்களின் மாற்றுக் கருத்துகள், திரிபுகள், உலகாய்த மறுப்பாளர் கருத்துகள், தவம், யோகம் என்பன உலகாய்தக் கருத்துகளே. இதற்கான சிந்து சமவெளி நாகரிகச் சான்று முதலியவற்றைக் கட்டுரையாளரின் கருத்துகளிலிருந்து அறிகின்றோம். உலகாய்தக் கோட்பாட்டுக்கும், பகுத்தறிவுக் கோட்பாட்டுக்கும், பொருள் முதலியல் கோட்பாட்டுக்கும் உள்ள தொடர்பும், தொடர்ச்சியும் விளக்கப்பட்டுள்ளன. சமயக் கருத்துகள் இருப்பினும், வள்ளுவர், சித்தர்கள், இராமலிங்கர் முதலியோர் மனித நலம் சார்ந்தவரே எனும் கருத்து அரண் செய்யப்பட்டுள்ளது. சித்தர்கள் நோய்கள் போக்குவதற்குக் கடவுளை நம்பாமல், மருந்துகள் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது இதற்குத் தக்க சான்றாக்கப்பட்டுள்ளது. பதி,பசு,பாசம் மும்மலங்கள் என்று கூறப்படுவன கடவுள் சார்ந்தவை அல்ல. இவற்றைத் தவம், யோகம் அகவயப்படுத்தி ஆராய வேண்டும் என்ற தேவை உணர்த்தபட்டுள்ளது. சைவ சித்தாந்தம் தமிழுக்கே உரியது எனப் பல ஆய்வாளர்கள் கூறுவது இங்குக் குறிக்கத் தக்கது. சுருக்கமாகக் கூறின், மெய்யியல் சார்ந்த உலகாய்தம் இன்றைய ‘மெட்டீரியலிசமே’ என்பதை ஆய்வு குறிப்பாக உணர்த்துகின்றது. இவ்வகையில் இவ்வியல் மெய்யியல் குறித்த ஆழ்ந்த தேடலுக்கு வழி வகுத்துள்ளது எனலாம். சமயம் சார்ந்த மெய்யியலால் மனிதனுக்கு மீட்சி இல்லை என்பதைத் தமிழ் மெய்யியல் உறுதி செய்கின்றது. மனித நலக் கோட்பாடு எனும் தமிழ் மெய்யியலின் ஆழ்ந்த சிந்தனைக் கூறுகள் ஆய்வு நூலில் அழுத்தமாகவும் ஒருமையுடனும் கூற இயலவில்லை. மெய்யியல் பற்றிய ஆர்வமும், தேடலும் கொண்ட பார்வையில் இச் சிறந்த கருத்துக்கள் தாமாகவே கடையும் தயிரில் வெண்ணெயாய்த் திரண்டு நிற்கின்றன. ஆராயிரமாண்டுகளாய்ப் பல வலுவான தடைகளையும் உடைத்தெறிந்து தொடரும் அரியதமிழும் தமிழினமும் நீட்சி பெற வலிமையுடன் உருவாகிச் செயலாற்ற வேண்டும். இன்று பெயரளவுக்கு உள்ள கூட்டாட்சியைத் தவிர்த்துத் தமிழ்த் தேசியத்தின் தனிப் பெரும் தன்னுரிமைகளை நடுவணரசு ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்திய அரசியல் அமைப்பு திருத்தப்படவேண்டும் என்பது தமிழர் ஒவ்வொருவரும் உணர்ந்து போராடவேண்டிய கட்டாயமாகும் இது இயலுமா என்பது ஆகப் பெரும் வினா! இன்றைய தமிழ்ச்சமுதாயம் தம் மொழி, நாகரிகம், பண்பாட்டைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு நுகர்வியல், வணிகமயம், தனிஉடைமை சார்ந்த ஒருலகம் என்ற வெற்று முழக்கத்தை நோக்கி விரைந்து கொண்டுள்ளது. மொழி, இன அடையாளம் தேவையில்லை என்ற கருத்துரு பரவி வருகின்றது. வரலாற்றில் கொன்றொழிக்கப்பட்ட யூதர்களும் யூதமொழியும் போல், உயிருடன் உயிரற்றவராக விழும் தமிழரும், அவர்களாலேயே அழிக்கப்படும் தமிழும் மீளுமா?. தமிழகம் போலவே தொன்மையான நாகரிகம் கொண்ட எகிப்தில், அந்நாட்டு மக்கள்,தம் தாய் மொழியான ‘கோபது’(கோட்டிக்) எனும் தொல் மொழியை மறந்து, தம் நாட்டின்மீது படையெடுத்து வெற்றி பெற்று ஆண்ட கிரேக்கர்களின் மொழியையும், பின்னர் அரபு மொழியையும் போற்றினர் என்பதைப் பேராசிரியர் மருதமுத்து தன் நூலான ‘திருக்குறள் தமிழ்த் தேசிய அரசியல்’ நூலில் குறிப்பிடுகின்றார். இது போலவே தமிழர், தம்மை அடக்கி ஆண்ட வடவரின் மொழியையும், பின்னர் பிரித்தானியரின் ஆங்கிலத்தையும் போற்றி இப்போது தமிழ், வடமொழி, ஆங்கிலம் கலந்த ஒரு புதிய கலவை மொழியையும் கலவை நாகரிகத்தையும் உருவாக்கிப் போற்றிக் காத்து வருகின்றனர். நாளைய தமிழரின் தமிழும், நாகரிகமும் இவைதாமோ என்ற அச்சம், தன்னிச்சையாக உருவாகி உள்ளம் பதைக்கின்றது. இத்தகு உணர்ச்சியை இயல் மூன்று உருவாக்குகின்றது. உயர்கல்வி பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் கெட்டிதட்டிப்போன தமிழ் விளையும் மண்ணைக் கொத்திக் பண்படுத்த வேண்டிய அடிப்படைப் பணி முதல், ஆலமரமாய் விரிந்தும், பெருவிளைச்சல் கண்டும் நிற்கும் ஆழ்ந்து அகன்ற பணி வரையிலான கட்டுரையாளர்களின் பங்களிப்பை இயல் இரண்டில் காண்கிறோம். தத்தம் அளவில் இவர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணியும் அதற்கான முயற்சியும், உழைப்பும் தேடலும் படிப்பவர்கட்குத் தத்தம் சூழலில், தாமும் எதையேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும் சிறு பணி முதல், பெரும் பணிகள் வரை ஆவணமாக்கப்படின் அது நாளைய சமுதாயத்துக்குப் பெருந்துணை செய்யும். தமிழின் பன்முகச் சிறப்பைப் பல்வேறு பார்வைகளிலும் கோணங்களிலும், நுட்பமாகவும் ஆழமாகவும் கூறும் போதே, தமிழுக்கான நாளைய பணிகள் எவை என்பதையும் சிந்திக்க வைக்கின்றது ஆய்வுநூல். தமிழ்ப்பணி ஆற்றிய தமிழ்நேயம், தமிழாய்வுகளுக்கான சிக்கல்கள், தீர்வுகள், தமிழ்நாகரிக மீட்சி, உலகாய்த மெய்யியல், மனித நலம், பகுத்தறிவு, இன்றைய மெட்டீரியலிசம், சைவசித்தாந்தம் சார்ந்த தவம், யோகம், மும்மலம் பற்றிய விரிவான ஆய்வின் தேவை, தமிழ்நேயத்தின் இன்றியமையாமை, தமிழ்ப்பணி பங்களிப்பாளர்கள் என ஆய்வ அமைந்து, தமிழியல் ஆய்வுகளுக்கான அடுத்த வளர்ச்சி நிலைக்கான ஆக்கப் பணிகள் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. என்னுரை கடந்த ஒரு நூற்றாண்டளவில் ஆய்வுலகில் அறிமுகமான சொற்களில் ஒன்று தமிழியல் என்பதாகும். தமிழ்க்கல்வியில் ஏற்பட்ட புதிய பரிமாணங்களையும் நோக்கு நிலைகளையும் தொகுத்துக் காட்டும் வகையில் இச்சொல் அமைந்தது. ஈராயிரமாண்டுத் தொன்மையும் மேன்மையும் உடைய தமிழ்மொழியின் இலக்கணம், இலக்கியம், வரலாறு எனப் பல கூறுகளை உள்ளடக்கி தமிழறிஞர் பலர் ஆய்வுகளை மேற்கொண்டனர். இவை மட்டுமன்றி தொல்லியல், மானிடவியல், சமூகவியல், மொழியியல், நாட்டார்வழக்கியல், உளவியல், மெய்யியல், கல்வெட்டாராய்ச்சியல், அரசியல், சமூக, சமய வரலாற்றியல், ஒப்பியல்எனப் பல தளங்களில் தமிழியல் ஆய்வின் எல்லை விரிவுபெற்றது. பரந்த நோக்கும் பல்துறைப் பயிற்சியும், ஆராய்ச்சி நெறிமுறையும் தமிழ்நூற்புலமையும் பெற்ற தமிழறிஞர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுத் தமிழியல் செழித்தோங்கியது. இவை பற்றிய ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டு, இதனையே தம் வாழ்நாள் பணியாக மேற்கொண்டிருந்த அறிஞர் பலராவர். இருபதாம் நூற்றாண்டில் தமிழிலக்கிய ஆய்வை மேற்கொண்டவர்கள் கூடியவரை தம்சமகால நோக்கில் ஆராய்ந்தனர் என்று கூறமுடியும். மனித இனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப சமூக மாற்றங்களும், சிந்தனை மாற்றங்களும் ஏற்படுவது இயல்பு. இத்தகைய மாற்றங்கள் அந்தந்த காலகட்ட இலக்கியங்களிலும் எதிரொலித்தன. இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பணி குறிப்பிடத்தக்கது. தமிழாய்வு நிறுவனங்களாலும் தனிநபர்களின் பெரும் முயற்சியாலும் நடத்தப்பட்ட சிற்றிதழ்கள், தமிழறிஞர் செய்த ஆய்வுகளைச் சீரியமுறையில் வெளிக்கொணர்ந்தன. பாண்டித்துரைத் தேவரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரைத் தமிழ்ச்சங்கத்திலிருந்து வெளியான ‘செந்தமிழ்’ (1902), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் சென்னையிலிருந்து வெளிவந்த ‘செந்தமிழ்ச்செல்வி’ (1923), உமாமகேசுவரன் பிள்ளையால் தோற்றுவிக்கப்பட்ட கரந்தை தமிழ்ச்சங்கத்தால் வெளியான ‘தமிழ்ப்பொழில்’ (1925) ஆகியவை குறிப்பிடத்தக்கன. ‘மணிக்கொடி’ முதலாக தமிழில் தோன்றிய சிற்றிதழ் இயக்கங்களும் ஓரளவுக்குத் தமிழியல் ஆய்வைப் பொருட்படுத்தியது. தற்காலத்தில் பொற்கோவால் நடத்தப்படும் ‘புலமை’ இதழும், சீனிவாசனால் நடத்தப்படும் ‘பனுவல்’ இதழும் தமிழன்பனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘அரிமாநோக்கும்’ இரவிக்குமாரின் ‘மணற்கேணி’ போன்ற இதழ்களும் குறிப்பிடத்தக்கன. 1998இல் ஞானியின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட ‘தமிழ்நேயம்’ இதழ் தமிழியல் ஆய்வை முதன்மைப் பொருளாகக் கொண்டு சில பணிகளைச் செய்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலம் தமிழின் மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லத்தகும் சிறப்புடையது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தைப் பொருத்தவரைத் தமிழ் கடுமையான சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்தது. தொடக்கத்தில் தமிழறிஞர்களாலும் தமிழ்மக்களாலும் செழுமைப்படுத்தப்பட்ட தமிழ், தற்காலத்தில் தமிழ்மக்களால் மரியாதைக்குரியதாக மதிக்கப்படவில்லை. தமிழின் நிலை தாழ்ந்தும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடர்ந்து மேலோங்கியும் வருகிறது. தமிழ், பொழுது போக்கு மொழியாக மட்டுமே இருக்கிறது. உலகமயமாதல் என்பது சமூகவாழ்வின் அனைத்துக் களங்களையும் பாதித்தது போலவே தமிழையும் கடுமையாகப் பாதித்தது. மேற்கத்திய நாகரிகமே சிறந்த நாகரிகம் என்ற கருத்து மக்கள் மத்தியில் ஆளுகைப் பெறத் தொடங்கியது. போராட்டமிக்கச் சூழலில் தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் கேள்விக்குள்ளானது குறித்த கருத்துகளும் எழுந்தன. முன்னைய நூற்றாண்டுகளில் சமயப்பார்வை பெரிதாக மதிக்கப்பட்டது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் பகுத்தறிவுப்பார்வை மேலோங்கியது. இத்தகைய சூழலில் சமயத்தின் உள்ஆழங்களில் செயல்படும் மெய்யியல் பார்வை முன்னுக்கு வந்தது. இவையன்றியும் தமிழுக்குச் செம்மொழித்தகுதி கிடைத்ததன் விளைவாக தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவை முற்றிலும் புதிய நோக்கில் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இவ்வகை நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டும், தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையைத் தூண்டும் முறையிலும் ‘தமிழ்நேயம்’ இதழாசிரியர் சிலகூர்மையான கேள்விகளை எழுப்பி, அதற்கான தீர்வுகள் குறித்து அறிஞர் பலரிடம் கட்டுரைகளைக் கேட்டுப் பெற்று இதழில் வெளியிட்டார். இவ்வாறு வெளிவந்த கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகள் அடங்கிய கட்டுரைகள் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தமிழின் ஆக்கத்திற்கானத் தடைகள் என்ன? தடைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்பதை விளக்குவதாக முதல் கட்டுரை அமைகிறது. ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக வேற்றரசர்களின் ஆட்சிக்கும், இறுதியாக ஆங்கிலேயரின் ஆளுகைக்கும் தமிழன் உட்பட்ட நிலையில் தன்மானம் இழந்தான். ஆங்கிலம் மற்றும் இந்தியின் ஆதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகப் போராட்டங்கள் நடத்தினான். இந்தியைத் தடுத்தவன், ஆங்கில ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டான். இத்தகைய அடிமைநிலையிலிருந்து தமிழை மீட்டுக்கொள்ளும் போரில் தமிழன் தன்னை இழந்தேனும் தமிழைக் காப்பாற்றினால் தமிழும் தமிழனும் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கமுடியும். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய சிறந்த இலக்கியங்களிலும், தஞ்சைப் பெரிய கோவில், மாமல்லபுரச் சிற்பங்கள் போன்ற மாபெரும் கட்டிடக்கலை, தமிழிசை, தமிழ் மருத்துவம், கணிதம், வானியல் ஆகியவற்றையும் தோற்றுவித்த தமிழ்நாகரிகம் இந்த நூற்றாண்டில் கேள்விக்குரியதாக மாறியுள்ளது. மேற்கத்திய நாகரிகத்தின் புதுமையை தமிழ்நாகரிகம் ஏற்றுக்கொண்டாலும்தன் பழமையை மறக்காமல் காப்பாற்றும் என்பதை இயல் இரண்டில் கூறப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் தொடங்கி தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலிய பழந்தமிழ் இலக்கியத்தினுள்ளும் பின்னர் சைவத்தினுள்ளும் தமிழ்வாழ்வினுள்ளும் தமிழ் மெய்யியல் காணக்கிடைக்கிறது. தமிழ் மெய்யியலினுள் பூதவியல், உலகாய்தம், சமயம்கடந்த பகுத்தறிவியல், பகுத்தறிவுசார்ந்த ஆன்மீகம் என்று இனங்காணத்தக்க மெய்யியல் கூறுகள் - தமிழ்மெய்யியல் கட்டுரையில் விளக்கப்படுகிறது. தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தைத் தொடர்ந்து சங்க இலக்கியக் கல்வியின் தேவை அறியப்பட்டது. சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி சங்ககாலம் என்பதும், உலகச் செம்மொழிகளில் ஒன்றான தமிழின் தனித்தன்மை குறித்தும், தொல்காப்பியரின் வளமான திணைக்கோட்பாடு குறித்தும், மருதநிலச் சமூகத்தில் முரண்பட்ட சூழலில் சமயம் தோன்றுவது, பெண்ணடிமைத்தனம் நிலவுவது குறித்தும்,அகத்திணை இயலை ப்ராய்டியக் கோட்பாட்டுக்குட்படுத்தல் மற்றும் இயற்கையைத் தன் ஆளுகைக்குட்படுத்திய மனிதன் பின்னர் இயற்கையிலிருந்து விலகியதோடு தன்னிலிருந்தும், (நிலம்,மற்றும் சொந்த உறவு) பிறவற்றிலிருந்தும் அந்நியமாகிறான். தற்காலத் தமிழறிஞர்கள் பழைய இலக்கியங்களைப் புதிய கண்ணோட்டத்தில் ஆய்வதும், புதிய இலக்கியங்களைப் படைப்பதும், தமிழின் ஆய்வு எல்லைகளை விரிவுப்படுத்துவதும் பிறமொழிகளிலிருந்து தமிழுக்குத் தேவையான நூல்களை மொழிபெயர்ப்பதும், தமிழின் தகுதி சான்ற படைப்புகளைப் பிறமொழிகளில் பெயர்த்தலும், தற்காலச் சூழலில் தமிழுக்காகப் போராடுவதும் எனத் தமிழறிஞர்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்தியுள்ளனர். தமிழிலக்கியங்களும் தமிழர் வாழ்வும் உலகப் பொதுமையான மனித நேயத்தை உயிரோட்டமாகக் கொண்டு இலங்கின/இலங்குகின்றன. இவ்வுலக உயிர்கள் அனைத்தும் ஐம்புலன்களின் சேர்க்கையால் மட்டுமே இயங்குகின்றன. ஐம்பூதங்களைத் தோற்றுவித்தவரும் இல்லை. தோற்றுவிப்பாரும் இல்லை என்ற உயரிய உலகாய்த சிந்தனையை பழந்தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதே இவ் ஆய்வில் பெறப்பட்ட உண்மை. என் ஆய்விற்கு உறுதுணையாக இருந்த கோவை ஞானி அவர்களுக்கு என் நன்றியை என்றும் உரித்தாக்குகிறேன். வாழ்த்துரை வழங்கிய அறிஞர் பெ.சு.மணி அய்யாவிற்கும் எனது அன்பும் வணக்கமும். இந்நூலிற்கு அணிந்துரை நல்கிய முனைவர் நா.நளினிதேவி அவர்களுக்கும், அவரது அன்பிற்கினிய தந்தையார் என்றும் எங்கள் நினைவில் வாழும் அன்னாருக்கும் எனது அன்பான நன்றிகள். எங்கள் அன்பிற்கினிய தாய் இர.சரோஜினிஅம்மா அவர்களுக்கும், என் தமக்கையார் இர.மகாலெட்சுமிக்கும், என் அண்ணன் இர.தனசேகரன் மற்றும் எங்கள் நினைவில் வாழும் இளையதேவதை இர.விசயலெட்சுமிக்கும்மனமார்ந்த நன்றிகள். நான் படிப்பதற்கு உறுதுணையாக இருந்த எனது கணவர் செ.ஞானப்பிரகாசத்திற்கும், குழந்தைச் செல்வங்கள் ஞா.அருள், ஞா.விசுணு, வி.முத்துச் சரவணனுக்கும் எனது அன்பு. எனது நூலை உரிய முறையில் வெளியிட்டு உதவிய பதிப்பகத்தாருக்கு நன்றியும் வாழ்த்தும் ‘தமிழ்நேயம்’ - அறிமுகம் தற்காலத்தில் மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு சில துறைகளுள் அறிவியல் தன்மையும், கலைத்தன்மையும் கலந்த இதழியல் துறையும் ஒன்றாகும். இத்துறை தோன்றி இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சமூகத்தின் நான்காவது தூண் எனக்கருதப்படும் இத்துறையின் செயல்பாடுகள் மக்களுக்கு இன்றியமையாத தேவைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றன. உலக நிகழ்வுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், தன் சுற்றுப்புறத்தையும் சுற்றியிருப்பவர்களையும் அறியவேண்டுமென்ற ஆர்வம், தானறிந்தவற்றைப் பிறருக்குச் சொல்ல வேண்டுமென்ற தவிப்பு ஆகியவை இதழியல் தோற்றத்திற்குக் காரணங்களாகும். இதழ்கள் செய்திகளைத் தருவதோடு, மக்களுக்கு அறிவைப் புகட்டி, அரசியல் விழிப்பை ஏற்படுத்தி, சமுதாயத்தைச் சீர்திருத்தி, மக்களின் உரிமையைப் பாதுகாத்து நாகரிகத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றன. இதழும் வகைளும்: இதழ்கள் காலத்தின் அடிப்படையில் நாள், வாரம், மாதமிருமுறை, மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ‘தமிழ் இதழியலின் வளர்ச்சியானது தமிழ் மொழியில் செய்திகளைத் தருவது என்பதில் தொடங்கிற்று. நாளிதழ்கள், பருவ இதழ்கள் என வளர்ந்து, துறை சார்ந்த இதழ்களாக விரிந்தன. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு ஆகியவற்றை முதன்மைப்படுத்தி இலக்கிய இதழ்களும் ஆய்விதழ்களும் வெளிவரத் தொடங்கின’ (இரா.காமராசு, தமிழில் மாற்று ஆய்விதழ்கள், ப.17). இதழ்கள் வாசகர்களின் எண்ணிக்கை, இதழ்களின் விற்பனை, பொருளாதாரப்பின்னணி இவற்றைக் கொண்டு பேரிதழ்கள், சிற்றிதழ்கள் என்று இதழ்களை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். பெரும் மூலதனத்தைக் கொண்டு, விரிவான வாசகர் எண்ணிக்கையும், பரவலான அனைத்துத் தரப்பினருக்குமான செய்திகளையும், வணிக வெற்றியும் பெற்று நீண்ட பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் வரலாறு பெற்றவை பேரிதழ்கள் எனலாம். இச்சிறப்புகள் எவையும் இன்றித் தனிமனிதரோ, சிறுகுழுவோ ஆர்வத்தை முதலீடாகக் கொண்டு தொடங்கி இயன்ற காலம் வரை சில குறிக்கோள்களுக்காக நடத்திவரும் இதழ்களைச் சிற்றிதழ்கள் எனலாம். இலக்கிய இதழ்களும் பின்னணியும்: சிற்றிதழ்களில் இலக்கிய இதழ்களின் பங்களிப்பு முதன்மையான ஒன்றாகும். இலக்கியச் சிற்றிதழ்கள் என்பவை உருவத்தில் மிகச் சிறியதெனினும் உள்ளடக்கத்தில் மேம்பட்டதாக அமைகின்றன. சிந்தனையை வளர்ப்பதிலும் செறிவான கருத்துகளைத் தருவதிலும் இவை உதவுகின்றன. தமிழ்ச்சூழலில் மிகக் குறைவான வாசகர்களைக் கொண்டதாகவும் இலக்கிய இதழ்கள் செயல்படுகின்றன. இலக்கியச் சிற்றிதழ்கள் மொழிக்கு விதைநெல்லைப் போன்றவை. நாளைய இலக்கிய முயற்சிகளைப் பயிர் செய்யபவை என்கிறார் நா. பார்த்தசாரதி. தமிழ் இலக்கியச் சிற்றிதழ்கள் வரலாற்றின் தொடக்கம் மணிக்கொடிக் காலமாகும். ‘மணிக்கொடிப் பரம்பரை’ என்று சொல்லும் அளவுக்கு இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1933இல் வார இதழாக, நண்பர்களின் கூட்டு முயற்சியால் மணிக்கொடி தொடங்கப்பட்டது. மணிக்கொடி பத்திரிகை வெளிவரும் முன்பும் எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் புதிய ஆக்கங்களுக்கு இடம் கொடுத்து - உற்சாகம் ஊட்டும் பத்திரிகைகள் அதற்கு முன்போ பின்போ கிடையாது என்ற புதுமைப்பித்தன் கருத்தும் இங்கு நோக்கத்தக்கது. (சிற்பியின் கட்டுரைகள், ப.467) இதனைத் தொடர்ந்து, சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ (1959-70), க.நா.சு வின் ‘இலக்கிய வட்டம்’ (1964), சி.மணியின் ‘நடை’ (1968) இளம் படைப்பாளிகள் தொடங்கிய ‘கசடதபற’ (1970), ஜி. இரவீந்திரனின் ‘பிரக்ஞை’ (1974) முதலிய இதழ்களின் மூலமாக சிற்றிதழ் இயக்கம், ஒரு தனி இயக்கமாக வேர்ப்பிடித்து கிளைபரப்பியது. புற்றீசல்கள் போலத்தோற்றம் பெற்ற நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள் காலவோட்டத்தில் சில மலர்ந்தும்,பல மறைந்தும் வந்துள்ளன. தமிழ்நேயமும் பின்னணியும்: தமிழியல் ஆய்வில் ஈடுபட்ட இதழ்களுள் 1990க்குப் பிறகு தோன்றிய ‘தமிழ்நேயம்’ குறிப்பிடத்தக்கது. 1998ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘தமிழ்நேயம்’ இதழ் தொடங்கப்பட்டது. கோவையிலிருந்து வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் ஞானி.கி.பழனிச்சாமி ஆவார். சிறந்த இதழாசிரியராகவும், மார்க்சிய அறிஞராகவும் விளங்கிய இவர் 1960 முதற்கொண்டே ‘எழுத்து’ ‘வானம்பாடி’ எனத் தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். இதன்காரணமாகப் ‘புதியதலைமுறை’, ‘பரிமாணம்’, ‘நிகழ்’ முதலான இதழ்களைத் தானே முன்னின்று தோற்றுவித்தும் நடத்தியும் வந்தார். அவை பற்றி விவரங்கள் கீழ்வருமாறு: ‘புதியதலைமுறை’ (1968-70) 1968-70களில் கோவையிலிருந்து ‘புதியதலைமுறை’ இதழ் வெளிவந்தது. இவ்விதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். இவ்விதழ் மார்க்சியம், இலக்கியம், தத்துவம் என்ற பொருண்மையில் வெளிவந்தது. பல திறனாய்வுக் கட்டுரைகளை இந்த இதழுக்காக ஞானி எழுதினார். ‘வானம்பாடி’(1970-72) ‘வானம்பாடி’ கவிதை இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டார். புதுக்கவிதை எழுவதில் ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்த ஞானி ‘கல்லிகை’ என்ற நீண்ட கவிதையைப் படைத்தார். அகலிகை பற்றி நவீனநோக்கில் எழுதப்பட்ட இப்புதுக்கவிதை வானம்பாடி இதழில் வெளிவந்தது. ‘பரிமாணம்’ (1979-83) மார்க்சியம் பல்வேறு நாடுகளிலும் தனித்தன்மையோடு வளர்ச்சி பெற்று வந்தது. இரசியாவிலும், சீனாவிலும் வளர்ச்சி பெற்ற மார்க்சியம் போலவே மேற்குலகிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் தனித்தன்மையோடு விளங்கியது. மார்க்சியத்தின் பல்வேறு பரிமாணங்களைத் தமிழுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நண்பர்கள் ஒத்துழைப்போடு ‘பரிமாணம்’ இதழை நடத்தினார். ‘நிகழ்’ (1988-96) 1980இன் இறுதியில் சோவியத் இரசியாவில் முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட சோசலிச கட்டுமானம் தகர்ந்தது. இதனால் மார்க்சியத்திற்குப் புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்ற வகையில் ‘நிகழ்’ இதழின் பொறுப்பை ஏற்றார். தமிழ்நாட்டினுள்ளும் பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் ஆகிய புதிய போக்குகளும் தோன்றின. இவற்றை உள்வாங்கிக் கொண்டு மார்க்சியம் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முறையில் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். வரலாறு, இயற்கை வேளாண்மை, சிறுகதை, கவிதை, மதிப்புரை ஆகிய படைப்புகளையும் ‘நிகழ்’ இதழில் விரிவாக வெளியிட்டடார். இவ்விதழ் குறித்து வல்லிக்கண்ணனின் மதிப்பீடு குறிப்பிடத்தக்கது: “சூடாகவும் விறுவிறுப்பாகவும் புதிய நூல்கள் பற்றிய திறனாய்வை நிகழ் பிரசுரிக்கிறது. ஞானி புத்தகத் திறனாய்வு செய்வதுடன், சிந்திக்கத் தூண்டுகிற கனமான கட்டுரைகளையும் இதில் எழுதுகிறார். ‘டி.எசு.இலியட்டின் இலக்கியக்கொள்கை’ என்ற தலைப்பில் அவர் எழுதிய நீண்ட கட்டுரை முக்கியமானது. இலக்கிய உலகம், எழுத்தாளர்கள் பற்றிய செய்திகளையும், குறிப்புகளையும் அவ்வப்போது தருகிறது. முதல் இதழில் ‘தற்காலத் தமிழிலக்கியத்தில் தேக்கம்’ எனும் பொருள் குறித்து ஞானி, சுகுமாரன், நிமலவிசுவநாதன், அறிவன், அரசு, அமரநாதன் ஆகியோர் சர்ச்சை செய்து வெளியிட்ட உரையாடல் உபயோகமான எண்ணங்களைக் கொண்டுள்ளது.” (தமிழில் சிறுபத்திரிகைகள், ப.264) தமிழ்ச்சிற்றிதழ் வரலாற்றில் நிகழுக்குச் சிறப்பான இடம் உண்டு. இத்தகைய அனுபவங்களோடு ஞானி ‘தமிழ்நேயம்’ தொடங்கினார். ‘தமிழ்நேயம்’ (1998-2012) தொடக்கத்தில் நண்ப-ர்களின் ஒத்துழைப்போடு இவ்விதழைத் தொடங்கினார் ஞானி. இது குறித்து கோ.ஆறுமுகம் கூறுவதாவது, ‘நிகழ்’ இதழ் நின்று விட்ட பிறகு தமிழ்நேயம் என்ற சிற்றிதழை 1998ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் தொடங்கி ஞானியே நடத்தி வருகின்றார். தமிழ்க்கல்வி, தமிழ்த்தேசியம், தமிழர்களுக்கான மெய்யியல், வாழ்வியல் என அனைத்துக் களங்களிலும் அக்கறையோடு தொண்டாற்றி வருகிறது. இச்சிற்றிதழ்" (கோவை ஞானியின் படைப்புகளும் திறனாய்வுகளும், ஆய்வேடு, ப.18) என்கிறார். தமிழ்நேயமும் நிகழ்வெளியீடும்: 1998 ஆகசுட்டில் தொடங்கப்பட்ட தமிழ்நேயம் சிற்றிதழ் 32 பக்க அளவில் நிகழ் வெளியீடாக வெளிவந்தது. 1999 சூன் முடிய பன்னிரண்டு இதழ்களோடு இவ்விதழ் நின்றுவிட்டது. சில மாதங்களுக்கு பிறகு 2000ஆம் ஆண்டு சனவரி முதற்கொண்டு இரண்டு மாதத்திற்கு ஒரு வெளியீடு என்ற முறையில் 2000 டிசம்பர் வரை தமிழ்நேயம் ஆறு சிறு வெளியீடுகளைக் கொண்டுவந்தது. அவை வருமாறு: 1. மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் (சனவரி) 2. வாழ்வியல் வழி வள்ளுவர் (மார்ச்) 3. புதிய தமிழ் இலக்கியம் 1999 (மே) 4. தண்ணீரும் கண்ணீரும் (சூன்) 5. எங்கள் வாழ்வும் எங்கள் தமிழும் (ஆகஸ்டு) 6. யார் அந்த அட்லாண்டிசு மனிதனும் மற்றும் சிலரும் (டிசம்பர்) மீண்டும் தமிழ்நேயம்: தமிழ்நேயம் சிற்றிதழ் என்ற முறையில் 2001 மார்ச்இல் தொடங்கப்பட்டது. முதல் இதழில் ‘மீண்டும் தமிழ்நேயம்’ என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இவ்விதழ் ‘அதிர்வுகள் அசைவுகள் நெஞ்சிலும் நிலத்திலும்’ என்ற தலைப்பில் 88 பக்க அளவில் வெளிவந்தது. இதழ் எண் பதிவு முன் அட்டையில் இடம்பெறவில்லை. தமிழ்நேயத்தின் பணிகளாக, தமிழ்மொழி, தமிழ் வரலாறு, தமிழ்இலக்கியம், தமிழ்க்கலைகள், தமிழ் வேளாண்மை, தமிழ்க்கல்வி, தமிழ் மருத்துவம் என்று எத்தனையோ களங்களில் தமிழர் செயல்பட வேண்டி உள்ளது. வரலாற்றில் தமிழன் தன்னைத் திரட்டிக் கொண்டு உறுதியோடு முன் செல்ல வேண்டும். இதற்காக ஆயிரம், பத்தாயிரம் என்ற கணக்கில் திரண்டு போராடவேண்டும். இத்தகைய திரட்சிக்குத் தமிழ்நேயம் அக்கறையோடு பணிபுரியும்(த.நே.1, ப.2) என்கிறார் ஆசிரியர் ஞானி. தமிழ்நேயத்தின் குறிக்கோள்: தமிழ்நேயத்திற்கென்று தனிநோக்கங்கள் உண்டு. எதைச்சொன்னாலும் அல்லது சிந்தித்தாலும் அதில் சமுதாய நோக்கு இருக்க வேண்டும் என்பதற்கிணங்க இவ்விதழின் செயல்பாடு அமைகிறது. 1990க்குப் பிறகு தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் உலகமயமாதல் சூழலில் கடுமையான தாக்குதல்கள் நேர்ந்தன. கல்வி நிலையங்களில் தமிழ்மொழி பெரும் மாற்றங்களைச் சந்தித்தது. ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பதின்ம பள்ளிகளும் சுயநிதிக் கல்லூரிகளும் ஆண்டுக்காண்டு அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பெற்றன. ஆங்கிலத்தில்தான் அறிவியல் மட்டுமில்லாமல் வேறு பல கலைத்துறைகளையும் கற்கமுடியும் என்ற போக்கின் காரணமாக ஆங்கிலமே அறிவுமொழி என்றும் தமிழைக் கற்பதால் பயன் இல்லை என்றும் நம்பிக்கைகள் நிலவின. ஆட்சிநிர்வாகத்திலும், நீதிமன்றத்திலும் தமிழுக்கு மரியாதை இல்லை இதன்காரணமாக மக்கள் மத்தியில் தமிழ் மெல்ல மறையத்தொடங்கியது. உலகமயமாதல் சூழலில் இவ்வகைப் போக்குகள் தீவிரப்பட்டன. இப்போக்கைக் களைவதை முதன்மை குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நேயத்தின் செயல்பாடு அமைந்தது. தமிழ்நேயத்தின் பங்களிப்பை தமிழாகரன் (சுதாகர்) பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நம்மால் தொடர்ந்து பாடுபட முடியும் என்ற நம்பிக்கையைத் தமிழ்நேயம் இடையறாது வலியுறுத்தி வருகிறது. இது கடலில் கரைக்கப்படும் பெருங்காயம் அன்று. தமிழ் உடலுக்குத் தேவையான சரியான மருந்து. தமிழ் மக்களின் விடுதலையை மனதெங்கும் நிறைத்துக்கொண்டு, வெளிவந்த ‘தமிழ்நேயம்’ தமிழ் மக்களின் ஆன்மாவாகவும், மனக்குரலாகவும் தொடர்ந்து ஒலித்து வருகின்றது” (த.நே.3, ப.82) உள்ளடக்கம்: தமிழ்நேயத்தின் உள்ளடக்கமாகப் பலவகையான கட்டுரைகள், கவிதைகள், மதிப்புரைகள், மடல்கள், அறிக்கைகள் வெளிவந்தன. அகமும் புறமும் என்பது ஒரு தனிப்பகுதி. இத்தகைய பொருளடக்கத்தோடு தமிழ்நேயம் - 23ஆவது இதழ்கள் வரை அமைந்தது. இதன் பிறகு உள்ளுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு பொருள் குறித்து அல்லது ஒருவர் குறித்து ஒவ்வொரு இதழும் தனி இதழ்களாக வெளிவந்துள்ளன. இதழாசிரியர் ஞானி, ஆசிரியர் உரை, முன்னுரை, இதழின் இறுதியில் இடம்பெற்ற பின்னுரை போன்ற பகுதிகளை எழுதியுள்ளார். இப்பகுதியில் ஆசிரியர் தன் கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார் இதழின் அளவு 1/8 டெம்மி. அட்டைகள் மெல்லிய தாள்களாகவும் முன்னட்டையில் சிற்பங்கள், ஓவியங்கள் இவற்றோடு பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், சாலை இளந்திரையன், ம.இலெ.தங்கப்பா, தமிழன்பன், காசியானந்தன்,இரணியன் முதலானவர்களின் கவிதைகளும் இடம்பெற்றன. பின்னட்டையில் பின்குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நேயம் இதழின் விலை ரூ.20 முதல் ரூ.40 வரை சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டுச் சொல்லும்படி அதிகம் இல்லை. நண்பர்களிடம் நன்கொடைகள் பெறப்பட்டன மற்றபடி ஆசிரியர் பொறுப்பில் இதழ்கள் வெளிவந்தன. கால வரையறை: தொடக்கத்தில் ஒருமாத இடைவெளியில் வெளியான இவ்விதழ், சில சமயங்களில் இரண்டு மாதத்திற்கு ஒன்று என்ற முறையிலும் சில இதழ்கள் மூன்று மாத இடைவெளியிலும் வெளிவந்தது. ஓரிதழுக்கும் மற்றொரு இதழுக்குமான கால வேறுபாடு திட்டவட்டமாக அமையவில்லை. பக்கவரையறை: தமிழ்நேயத்தைப் பொருத்தவரை பக்கவரையறை இல்லை. மிக குறைந்த அளவு 40 பக்கங்களைக் கொண்டதாக தமிழ்நேயம் 36ஆம் இதழும், அதிக அளவிலான 124 பக்கங்களைக் கொண்டதாக தமிழ்நேயம் 37ஆம் இதழும் இடம்பெற்றுள்ளன. பெரும்பான்மையான இதழ்களின் பக்கங்கள் எண்பது வரை அடங்கியுள்ளன. முகவரி மாற்றம்: தமிழ்நேயம் முதல் இதழ் தொடர்ந்து 19ஆம் இதழ் வரை 123, காளீசுவரர் நகர், கோயமுத்தூர் - 641009 என்ற முகவரியிலும், 19ஆவது இதழில் முகவரி மாற்றம் சூன்15க்கு பிறகு என்று இடம் பெற்றது. 20ஆவது இதழிலிருந்து இறுதி இதழ்வரை 24, வி.ஆர்.வி. நகர், ஞானாம்பிகை ஆலை (அஞ்சல்) கோயம்புத்தூர் - 641 029 என்ற புதிய முகவரியிலிருந்து வெளிவந்தது. அகமும் புறமும்: தமிழ்நேயத்தில் இடம்பெறும் ‘அகமும் புறமும்’ என்ற இப்பகுதி ஆசிரியரால் எழுதப்பட்டது. இப்பகுதியில் உலகளவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழல், இந்திய, தமிழக அரசியல் சார்ந்த திறனாய்வும், கோவை மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய மதிப்பீடு என ஞானி தொடர்ந்து எழுதியுள்ளார். தமிழ்நேயம் - 17ஆவது இதழில் அகமும் புறமும் பகுதி இடம்பெறவில்லை இது குறித்து ஞானி விளக்குகிறார். “அமெரிக்காவின் ஆதிக்கம் தொடங்கி உள்ளுரில் நிலவுகிற அக்கிரமங்கள், அநியாயங்கள் குறித்து தொடர்ந்து எழுதுவதில் எனக்குச் சலிப்பு ஏற்பட்டதன் காரணமாக எழுதவில்லை (த.நே.17, ப.4) என்கிறார். தமிழ்நேயம் - 18ஆவது இதழில் இப்பகுதியை சுதாகர் எழுதியுள்ளார். பின்னர் தமிழ்நேயம் - 24ஆவது இதழ் வரை ஞானி தொடர்கிறார். அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்ட இப்பகுதியை திரு. இளங்குமரன் கீழ்வருமாறு கூறுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.”தமிழ்நேயம், தமிழர்நேயம், தமிழினநேயம் என்று அதன் அகமும் புறமும் பார்த்த அளவிலே புலப்படுகிறது" (த.நே.11, பின் அட்டை) தமிழ்நேயத்தின்கட்டுரையாளர்கள்: தமிழ்நேயம் இதழுக்குத் தொடர்ந்து கட்டுரைகள் தந்தவர் என்ற முறையில் பிலிப்சுதாகர், பூ.அர.குப்புசாமி, து.மூர்த்தி, ஆதி, ம.இலெ.தங்கப்பா, க.ப.அறவாணன், செ.நாராயணசாமி, அ.பாண்டுரங்கன், க.பஞ்சாங்கம், தமிழன்பன், மு.தனராசு, மருத்துவர்.கோவி, சோ.க.அறிவுடைநம்பி, இரணியன், வே.சுகுமாரன், நா.நளினிதேவி, ப.மருதநாயகம், க.பூரணச்சந்திரன், மருத்துவர்.ஜீவா, அறிவன் முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழியல் ஆய்வுக்கட்டுரைகள்: தமிழுக்கு நெருக்கடி என்ற முறையில் தமிழியல் ஆய்வுகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில்தான் தமிழியல் ஆய்வு குறித்த அக்கறையோடு தமிழ்க் கட்டுரைகளை வெளியிட்டது. 1.தமிழின் ஆக்கம் - தடையும் விடையும் என்பது குறித்த கட்டுரைகள் ஒரு வகை.(த.நே.வெளியீடு.1, த.நே.வெளியீடு.2, த.நே.வெளியீடு.3) 2. தமிழ்நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் இருக்க முடியும் என்ற கேள்வியோடு பல கட்டுரைகள். (த.நே.26,27) இவை தவிர மெய்யியல் பார்வையில் இயல்பாகவே ஆர்வங்கொண்டவர் ஞானி. 3. தமிழ்ச் சூழலில் மெய்யியல் என்பதை சமயம் என்பதாகப் புரிந்து கொண்டவர் பலர். இதன்காரணமாக மெய்யியல் ஆய்வு என்பது புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் மெய்யியல் நோக்கில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. (த..நே.28,29) 4. தமிழைச் செம்மொழி என அரசு ஏற்றுக்கொண்டதன் காரணமாக தமிழறிஞர்களின் பொறுப்புகள் மிகுதியாயின. செம்மொழி என்ற நோக்கில் சங்க இலக்கிய ஆய்வுகள் புதியதாக நடைபெறவேண்டும் என்ற நோக்கில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. (த.நே.30,32) 5. இவற்றோடு இன்று வளரும் பல தமிழறிஞர்களிடம், அவர்கள்தம் வாழ்வும் பணியும் தொகுத்து தருமாறு கட்டுரைகள் பெறப்பட்டு ‘நானும் என் தமிழும்’ என்ற தலைப்பில் 41ஆவது இதழ் முதல் 51ஆவது இதழ் முடிய பதினொரு இதழ்களை வெளியிட்டது. தமிழ்நேயம் வெளியிட்ட ஐம்பத்தொரு இதழ்களில் தமிழியல் ஆய்வு என்ற முறையில் வெளிவந்த இதழ்கள் பதினேழு. இவற்றில் வெளிவந்த கட்டுரைகளின் எண்ணிக்கை நூற்றி ஐம்பத்தாறு ஆகும். மேலும் இவை தவிர, கோவை மாவட்டத் தமிழறிஞர்களை அறிமுகப்படுத்தும் முறையில் வெளிவந்த இதழ் (த.நே.42) க.ப.அறவாணன் எழுதிய ‘தமிழன் அடிமையானது ஏன்?’ என்ற நூல் பற்றிய விரிவான திறனாய்வுக் கட்டுரைகள் (த.நே.16), ‘நானும் என் தமிழும்’ என்ற தலைப்பில் புலவர்.ஆதி, பாவலர்.இரணியன் (த.நே.5), க.சி.அகமுடைநம்பி, வ.நா.தன்மானன், சோ.க.அறிவுடைநம்பி (த.நே.47), மெய்யறிவின்பன் (த.நே.48), கி.நாச்சிமுத்து (த.நே.50), சங்கமித்ரா (த.நே.51) முதலியவர்கள் தொகுத்து வழங்கிய தனி இதழ்களும், வீ.பா.கா.சுந்தரம் (த.நே.13), சாலை இளந்திரையன் ஆகிய இருவர் பற்றிய தனிக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தமிழர்களின் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்: தமிழை மட்டுமில்லாமல் இன்று தமிழர்களின் நிலம், நீர், இயற்கை முதலியவற்றில் அந்நியர்களின் ஊடுருவலைத் தடுத்து அவற்றைஉயிர்ப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் அக்கறையோடு தமிழ்நேயத்தில் பல்வேறு கட்டுரைகள் வெளிவந்தன. கூடங்குளம் அணுமின் நிலையம் தேவை இல்லை. (த.நே.6) இயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (த.நே.9), பசுமைப் புரட்சி பேராபத்து (த.நே.5), மான்சாண்டோ மலட்டு விதைகள் கொடுமையானவை (த.நே.8). காவிரி ஆற்று நீரில் தமிழகத்தின் பங்களிப்பு கிடைத்தாக வேண்டும். அதைப் போல முல்லைப் பெரியாறு (த.நே.21) சாதி, சமய மடமைகட்குள் மூழ்கிக் கிடந்த தமிழன்பால் பெரியார் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பெரியார் இன்றும் நமக்குத் தேவை (த.நே.5) இப்பொருள் பற்றிய தனிக் கட்டுரைகள் தமிழ் நேயத்தில் இடம்பெற்றன. இவைதவிர தேசிய இனச்சிக்கல் (த.நே.9) குறித்தும் உலகமயமாதலின் தீமைகள் (த.நே.2,3,13) குறித்தும் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் இடம்பெற்றன. சிறப்பிதழ்கள்: ‘சமற்கிருதம் ஒரு மொழியல்ல’ என்ற சாத்தூர் சேகரனின் கட்டுரை ஒரு தனி இதழாக (த.நே.29) வெளிவந்தது. தமிழகத்தில் கலை, இலக்கியம் முதலிய பல துறைகளிலும் அந்தணர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது என்ற முறையில் சங்கர மடத்தின் ஆதரவோடு கே.சி. இலட்சுமி நாராயணன் பிராமண சங்கத்தினருக்காக எழுதிய ‘தமிழகத்தில் அந்தணர் வரலாறு’ என்ற நூல் பற்றிய விரிவான திறனாய்வுக் கட்டுரைகள் (த.நே.24) தமிழ்நேயத்தில் வெளிவந்தன. லியானர்டோ டாவின்சியின் புகழ்பெற்ற ஓவியம் இயேசுநாதர் தன் சீடர்களோடு அமர்ந்து நடைபெற்ற கடைசி விருந்து என்ற ஓவியம். இந்த ஓவியத்தில் இடம்பெற்ற பல்வேறு குறியீடுகளை விளக்கும் முறையில் எழுதப்பட்ட ‘தாவின்சிகோடு’ நாவல் கற்பனையா? வரலாறா?’ (த.நே.25) என்னும் தலைப்பில் அமைந்த பல கட்டுரைகள் கொண்ட ஒரு தனி இதழ். இவ்விதழ் இன்றும் பெரும்பான்மையானவர்களால் இக்கட்டுரை விரும்பிப் படிக்கப்படுகிறது. ஜெயமோகனின் ‘கொற்றவை’ நாவல் குறித்தக் கட்டுரைகள் இரண்டு இதழ்களில் (த.நே.31,32) வெளிவந்தன. இதுபோல எஸ்.பொ. பன்முகப் பார்வை குறித்தும், அவரது படைப்பான ‘மாயினி’ நாவல் குறித்தும் என இரண்டு இதழ்கள் (த.நே.33,44) வெளிவந்தன. இவ்வகையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா சமயத்தில் (த.நே.34) ஓர் இதழும், ஈழத்தில் நடைபெற்ற போர் குறித்து ஒரு தனி இதழும் (த.நே.38) வெளிவந்தன. தோழர் எஸ்.என். நாகராசன் வினாவிடை என்ற முறையில் ஒரு தனி இதழும் (த.நே.36) வெளிவந்தது. இவ்வாறு தமிழ்நேயத்தில் வெளிவந்த கட்டுரைகள் தம்சமகால மக்களுக்குப் பயன்படும் முறையிலும் தமிழர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழ் மக்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில் இவை அமைந்துள்ளன என்பதில் அய்யமில்லை. தமிழ்நேயமும் பெண் எழுத்தாளர்களும்: பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முறையில் சிறுகதைப் போட்டியை தமிழ்நேயம் நடத்தியது. பெண்கள் தங்கள் வாழ்வில்எதிர்கொண்ட சிக்கல்களை, தம் அனுபவங்களை, சமூகத்தின் நடவடிக்கைகளை மிகச் சிறந்த முறையில்படைப்புகளாக்கியுள்ளனர். இச்சிறுகதைப் போட்டிக்கு வழிகாட்டியாக இருந்து செயல்பட்டவர் இலண்டன்வாழ் இலங்கைப்பெண் எழுத்தாளர் இராசேசுவரி பாலசுப்பிரமணியம். இவரது விருப்பப்படியும், ஞானியின் முயற்சியாலும் தமிழ்ப்பெண்கள் எழுதிய சிறந்த சிறுகதைகளைத் தெரிவு செய்து பரிசளித்ததோடு அக்கதைகள் தனிநூலாகவும் வெளியிடப்பட்டன. “திருமதி.இராசேசுவரி பாலசுப்பிரமணியம் இலண்டனில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருபவர். அவர், பெண் எழுத்தாளர்களின் உணர்வுகளையும், படைப்புத்திறனையும் மேம்படுத்தும் நோக்கில் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளுக்கானப் பரிசுத்திட்டம் ஒன்றை அறிவித்தார். தமிழ்நேயம் கோவை ஞானி இந்தத் திட்டத்தை 1998இல் தொடங்கி 2008 வரை செயல்படுத்தினர்.” (பெண்எழுத்தாளர் சிறுகதைகளில் பெண்களின் வாழ்வியல்,ப.2). ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் அக்டோபர் மாதம் சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்படும். நவம்பர் இறுதிவரை கதைகள் வந்து சேரும். டிசம்பர் மாதத்தில் நடுவர்களால் சிறந்த சிறுகதைகள் தெரிவு செய்யப்படும். நடுவரில் இருவர் பெண்கள். ஒருவர் ஆண். கதைகளைத் தெரிவு செய்யும் போது முதல் தகுதிக்குரிய கதைகள் ‘ஏ’ தகுதி அதாவது 60 மதிப்பெண்களுக்கு மேற்பட்டவை. இரண்டாவது ‘பி’ தகுதி மதிப்பெண் 50 முதல் 60 வரை. இவர்கள் அனைவருக்கும் ரூபாய் ஐந்தாயிரம் பரிசுத்தொகை பகுத்துத்தரப்படும். ஆண்டுதோறும் இத்தொகையை வழங்கியவர் இராசேசுவரி பாலசுப்பிரமணியம் அவர்கள். முதல் தகுதி ரூபாய் ஐநூறு. இரண்டாம் தகுதி ரூபாய் இருநூற்றி ஐம்பது. தொகை சிறியது என்று ஒருவரும் கருதவில்லை, கவலைப்படவில்லை. பரிசு பெறுவது என்பது எழுத்தாளர்களுக்கு உவப்பும் உற்சாகமும் தரும் செய்தி. இவ்வகையில்பதினொரு ஆண்டுகள் தொடர்ச்சியாக பதினொரு சிறுகதை தொகுப்புகளைத் தமிழ்நேயம் வெளியிட்டது. அன்றியும் எண்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இவ்வகைப் படைப்பாக்கத்தில் பங்குபெற்ற தன் மூலம் பல புதிய அனுபவங்கள் பெற்றதோடு படைப்புத்துறையில் பெரும் பங்காற்றி வருகின்றனர். இவ்வகையில் ஜெயந்தி சங்கர், மும்பை புதியமாதவி, எம்.ஏ.சுசிலா, நா.நளினிதேவி, சந்திராகிருட்டிணன், இரா.செல்வி, சாந்தாதத் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பெண் படைப்பாளர்கள் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியதன் மூலம் ஒரு சிலருக்கு நல்ல எழுத்துப் பயிற்சியும் கலைநயமும் வாய்த்தன. சிலர் அயல்நாடுகளிலிருந்தும் எழுதினர். தமிழ்நேயத்தின் தமிழ் உணர்வும் எழுத்தாளர் மத்தியில் பரவியது. இதன்காரணமாக ஞானி தனக்குப் பெண்ணிய நோக்கு விரிவுபட்டது என்கிறார். தொகுத்துச் சொன்னால் தமிழ்நேயத்தின் பல்வேறு சாதனைகளில் தமிழ்ப்பெண்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தமிழ்நேயம் செய்த பணி முதன்மையானது என்பதில் அய்யமில்லை. (காற்றாய்ப் புயலாய், அணிந்துரை ப.ஒஎii) போட்டியில் பங்குபெற்ற பெண் எழுத்தாளர்கள் தமிழகம் மட்டுமன்றி தமிழகத்திற்கு வெளியிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் வாழும் பெண் எழுத்தாளர்களான ஜெயந்திசங்கர், மாதங்கி, இலண்டன் வாழ் இராசேசுவரி பாலசுப்பிரமணியம் போன்றவர்கள். பெண்எழுத்தாளர் சிறுகதை குறித்து, அன்பாதவனின் மதிப்பீடு இங்குச்சுட்டுவது தகும்: “தமிழகத்திலும் பிற நாடுகளிலும் வாழும் பெண்கள், குடும்பம் மற்றும் சமூகச்சூழல் தாம் எதிர் கொள்ளும் சிக்கல்கள் குறித்து தம் சிந்தனை வளத்தையும், படைப்புத்திறனையும் மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப்போட்டியை நடத்தும் புலம்பெயர்ந்த எழுத்தாளர் இராசேசுவரி பாலசுப்பிரமணியமும், தமிழ்நேயமும், ஞானியும் பாராட்டுக்குரியவர்கள்! ஆண்டுதோறும் புதிய புதையல்களைக் கண்டெடுப்பவர்கள்!” (த.நே.23,ப.47) பெண் எழுத்தாளர் சிறுகதை தொகுப்பு: பெண் எழுத்தாளர்களின் பதினொரு சிறுகதை தொகுப்புகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வும், ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப் பெற்றன. இப்பதினொரு சிறுகதை நூல்களில் இடம்பெற்ற கதைகளின் எண்ணிக்கை 184. இவற்றிலிருந்து 100 கதைகள் தெரிவு செய்யப்பட்டு காவ்யா வெளியீடாக ‘காற்றாய்ப் புயலாய்’ என்ற தொகுப்பு 2015இல் வெளியாயிற்று. கதைகளைத் தெரிவுசெய்து அணிந்துரை வழங்கியவர் மஞ்சுளாதேவி. இத்தொகுப்பு குறித்து க.பஞ்சாங்கத்தின் திறனாய்வுப் பார்வை கீழ்வருமாறு: “இந்தக் கதைகள், சமூகத்தின் பல்வேறு தளங்களில் வாழ்பவர்களின் பல்வேறு அனுபவங்களின், பார்வைகளின், மொழிகளின், சிந்தனைகளின் களஞ்சியமாக விளங்குகின்றன. இந்த வகையில் பதினொரு தொகுப்புகளை விதையாய்த் தூவி இருப்பது ஞானி சொல்லியிருப்பதுபோல மகத்தான பணிதான்.” (புதுப்புனல் ஜனவரி 2016, ப.71) பெண்எழுத்தாளர் வாழ்வும் பணியும் தொகுப்பு: ‘பெண் எழுத்தாளர்களின் வாழ்வும் பணியும்’ என்று தொகுக்கும் முறையில் பல புதிய பெண்படைப்பாளர்களிடம் கட்டுரை கேட்டுப் பெற்று அவற்றின் தொகுப்பை தமிழ்நேயம் 13,14ஆவது இதழ்களை இணைத்து ‘பெண்களின் வாழ்வியல் படைப்பும் பார்வையும்’ என்ற தனி நூலாக வெளியிட்டது. இவ்வகை முயற்சியின் விளைவாகப் பல புதிய பெண் எழுத்தாளர்கள் தமிழுக்குக்கு அறிமுகமாயுள்ளனர். தமிழ்நேயம் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளாக செயல்பட்டு 67 இதழ்களையும், பதினொரு பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்பையும்வெளியிட்டு தன் பணியைச் செவ்வனே செய்துள்ளது. இதழாசிரியரின் முதுமை காரணமாகவும் பொருளாதார சிக்கல் போன்ற காரணமாகவும் இதழைத் தொடர்ந்து நடத்துவதில் தடை ஏற்பட்டதன் காரணமாக 2012 மார்ச் வரை மட்டுமே இவ்விதழ் செயல்பட்டது. இதழாசிரியர் தன் உடற்குறைபாட்டையும் கருதாது தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பது அவர் நடத்திய தரமான இதழ்களே சான்றாக அமைகின்றன. தமிழ்க்கல்வி, தமிழ்நாகரிகம், தமிழ்மெய்யியல், தமிழ்வேளாண்மை, தமிழ்ச்சமயம் எனப் பல தளங்களில் பயணித்த இவ்விதழின் கட்டுரைகள் மிகுந்த பயனுள்ளதாகவே அமைந்துள்ளன. இவ்வகையில் மேற்கண்ட பொருண்மையின் அடிப்படையில் வேறு எந்தத் தமிழ் இதழும் வெளிவந்ததில்லை. இவ்விதழ் மற்ற இதழ்களில் இருந்து மாறுபடுவதை அறியமுடிகிறது. நா.நளினிதேவியின் பார்வையில் தமிழ்நேயம் குறித்து, “மஞ்சளும் சிவப்புமாகிவிட்ட இதழியலின் வணிகப்பண்பாட்டுச் சீரழிவின் தாக்கத்திலிருந்து மனிதனின் பசுமையைக் காத்து நிற்பவை சிற்றிதழ்களே. அவற்றுள்ளும் கட்சி, இனம், கடவுள் சார்புக்கு அப்பாற்பட்டு இலக்கியம், மொழி என மணம் பரப்பும் இதழ்களில் கோவை ஞானியை ஆசிரியராகக் கொண்ட தமிழ்நேயமும் ஒன்று” (த.நே.32,ப.55) என்று தன் கருத்தைப் பதிவு செய்கிறார். இலக்கியம் குறித்தும், கலை, இலக்கியச் சமூகச்சித்திரிப்புகள் குறித்தும் பல சிற்றிதழ்கள் வெளிவந்திருந்த நிலையில், ‘தமிழ்நேயம்’ வெளிப்படுத்திய கட்டுரைகள் தமிழ்மொழி, தமிழினம் என்ற அடையாளங்களை மீட்டெடுக்கும் வகையில் அமைந்துள்ளன. ‘பரிமாணம்’, ‘நிகழ்’ இதழ்களைத் தொடர்ந்து தமிழ்நேயமும் தமிழ்க்கல்வி, தமிழ்த்தேசியம், தமிழ்மெய்யியல் முதலான களங்களில் தம் அக்கறையைச் செலுத்தியது கண்கூடு. தமிழ்நேயம் இதழ் தற்காலச்சூழலில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நேர்ந்துள்ள நெருக்கடிகளை மக்களின் பார்வைக்கு எடுத்துச் சென்று கேள்விகளை எழுப்பி, சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. புதிய பெண் படைப்பாளர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி இருப்பதும் இவ்விதழின் மற்றுமொரு தனித்தன்மையாகும். தமிழ்நேயத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில் இதழாசிரியரின் அரும்பணி குறிப்பிடத்தக்கது. தமிழின் ஆக்கம் தடையும் தீர்வும் தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தனக்கென மிகச்சிறந்த இலக்கியங்களையும் இலக்கண அமைதியையும் பெற்றுத் திகழ்கிறது. பண்டைத் தமிழ்ச்சான்றோர் சங்கம் வைத்து மொழியை வளர்த்தனர். காலத்தால் அழியாது நிலைத்து வாழும் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும்திருக்குறள் முதலிய அறநூல்களையும் படைத்தனர். காப்பியங்கள் இயற்றித் தமிழ்மொழியின் இலக்கிய வளத்தைப் பெருக்கினர். மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அறநூல்களையும் ஆன்மிகத்திற்கு வழிகோலும் பக்திப்பாக்களையும் புனைந்தனர். தமிழ்மொழி வரலாற்றில் இடைக்காலம் குறிப்பிடத்தகுந்தது. இக்காலத்தில் இலக்கியஇ இலக்கண வளர்ச்சியைப் பொருத்தவரை தமிழில் மிகுதியாக எழுதப்பட்டன. சிறுகாப்பியங்களும், சிற்றிலக்கியங்களும், தழுவல் இலக்கியங்களும், அகராதிகளும், நிகண்டுகளும் இயற்றப்பட்டன. இலக்கண இலக்கியங்களுக்கு உரைகளும் எழுதப்பட்டன. ஐரோப்பியர் வருகையின் காரணமாகத் தமிழ்மொழி தனித்தன்மைகள் சிலவற்றைப் பெற்றது. அச்சுக்கலை அறிமுகப்படுத்தப்பட்டது. ஐரோப்பியப் பாதிரிமார்கள் தமிழ்நூல்களைக் கசடறக் கற்று, தமிழிலக்கியங்களைத் தங்களது மொழியில் மொழிப்பெயர்ப்புசெய்து, தமிழின் தனிச்சிறப்பை எடுத்துரைத்துள்ளனர். செய்யுள் நடையை மாற்றி உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்டவர்களும் இவர்களே. வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டு அளப்பரியது. பிரான்சிசு ஒயிட் எல்லிசு என்ற ஆங்கிலேயரின் முயற்சியால் 1812இல் திருக்குறள் முதன்முதலாக அச்சாக்கம் பெற்றது. தமிழறிஞர்களான சி.வை.தமோதரம்பிள்ளை (1836-1901), உ.வே.சாமிநாதய்யர் (1885-1942) போன்றோரின் முயற்சியில் மறைந்து போன தமிழ் நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. “முத்துச்சாமிப்பிள்ளை, ஆறுமுகநாவலர் (1823-1879) முதலானவர்களால் தமிழ்மொழி மேலும் மெருகு பெற்றது. கனகசபைப்பிள்ளை (1855-1906) வழியாகப் பண்டைத்தமிழர் நாகரிகச்சிறப்பும், சுந்தரம்பிள்ளை (1855-1899) வழி பண்டை இலக்கிய நயமும் வெளிவந்தபோது மொழியின் மரபுவழிச் சிந்தனை வலுவடைந்தது” (நீலபத்மநாபன் - புதிய தமிழ் இலக்கிய வரலாறு-ப.28) நவீனகாலத்தில் தமிழ்மொழிக்கு இனிமையும் எளிமையும் சேர்த்து அழகுபடுத்தியவர்கள் சுப்பிரமணிய பாரதியார் (1882-1921), திரு.வி.க. (1883-1953), கவிமணி (1876-1954), பாரதிதாசன் (1891-1964) போன்றோர். இவ்வாறாக தமிழ்இலக்கியமும், தமிழ்மொழியும் பல்வேறு வகைகளில் செழுமைப்படுத்தப்பட்டு முன்னேற்றமும் கண்டிருக்கிறது. தமிழ்மொழி இன்று உலகம் முழுவதும் அமெரிக்கா, ஆசுதிரேலியா, ஐரோப்பா, கனடா போன்ற இடங்களில் வாழும் தமிழர்களால் பேசப்படுகிறது. “தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் தென்ஆசிய நாடுகளிலும், கிழக்காசிய நாடுகளான பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜித்தீவு போன்ற நாடுகளிலும் இன்றும் பிரிட்டிசுஇ கயானா, மடகாஸ்கர்இ திரினிடால் போன்ற நாடுகளிலும் பேசப்படுகின்ற பெருமையுடையது” (ச.அகத்தியலிங்கம் - திராவிட மொழிகள், ப.15); உலகம் முழுவதும் எட்டுக்கோடி (1997 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு) மக்களால் பேசப்பட்ட தமிழ்மொழி இன்று பன்னிரண்டு கோடி மக்களால் பேசப்படுகின்றது. உலக மொழிகளின் வரிசையில் தமிழ்மொழி பதினைந்தாவது இடத்தில் உள்ளது. மொழியில் ஆக்கம் என்பது ‘முன்னேற்றம்’ ‘வளர்ச்சி’ என்று க்ரியா அகராதி பொருள் தருகிறது. இத்தகைய ஆக்கம் வெறும் புகழ்ச்சியால் வருவது மட்டுமன்று. முன்னோர் வகுத்த நூல்களை அழியாமல் காப்பதும் வளர்ந்துவரும் சிந்தனைகளுக்கு ஏற்பப் புதுமையான நூல்களை உருவாக்குவதும் இலக்கண மரபுகள் நசிந்து விடாமல் கட்டிக்காப்பதும், அந்த மொழியின் இலக்கணங்களை ஆராய்வதும் உலக அரங்கில் கொண்டு சேர்ப்பதும் ஆகிய பல்வேறுபட்ட பணிகளால்தான் மொழியை வளாச்சிப்பாதைக்கு இட்டுச்செல்ல இயலும். மொழியின் ஏற்றமும் வீழ்ச்சியும்: மொழி என்பது எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. பல்வேறு காலப்பகுதிகளில் மொழி மாற்றங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது இதனை, அ.மு.பரந்தாமனார் கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம். “மொழி மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டி, வழிவகுத்து வாழவைக்கும் ஒன்று: இம்மொழி தத்தம் தோற்ற வளர்ச்சி அடிப்படையில் சிறந்தும் சிதைந்தும் வளர்ந்தும் வாடியும் உயர்ந்தும் தாழ்ந்தும் இன்று உலகில் உலவுகின்றது” (19ஆம்நூற்றாண்டு தமிழ் உரை நடைவளர்ச்சி- ப.12). தமிழ்மொழி பிறமொழியினர் ஆதிக்கத்தின் காரணமாக வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டு தான் வந்திருக்கிறது. தொல்காப்பியர் காலத்திலேயே பல அந்நிய மொழிச் சொற்கள் தமிழில் இடம் பெறலாயின. அவற்றுள் வடசொற்கள் முக்கியமானவை. தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடை தமிழுக்கு அறிமுகமானது. வடமொழிக் கலப்பிலிருந்து தமிழைக் காக்கத் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. தனித்தமிழ் இயக்கங்களின் வழியே மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் பரிதிமாற்கலைஞர் (1870-1903), மறைமலைஅடிகள் (1876-1950) போன்றோர். இவர்கள் எடுத்த முயற்சியின் விளைவாகவும், இவர்களின் வழித்தோன்றலான பாவாணர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் மூலம் இவ்வியக்கம் பல்வேறு நிலைகளில் தனித்தமிழைச் செழுமைப்படுத்தியது. மேலும் தனித்தமிழ் இதழ்களின் பணிகளும் குறிப்பிடத்தக்கவை. தமிழகத்தில் 1935இல் இந்திமொழித் திணிப்பு காரணமாகத் தமிழுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ் இளைஞர்களின் உயிர்த் தியாகமும் தமிழறிஞர்களின் போராட்டமும் இந்திமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டன. ஆங்கில மொழியின் ஆதிக்கம் பெருகிவரும் தற்காலச்சூழலில் தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், தமிழ் இதழாளர்கள் பல்வேறு வகையான போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டு தமிழைக்காப்பாற்றும் பணியைச் செய்து வருகின்றனர். “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்” (448) என்பது போலத் தமிழுக்கு நேர்ந்துள்ள இழுக்கினைத் தடுக்கும் முயற்சிகள் அமைந்துள்ளன. இத்தகைய சூழலில் தமிழ்நேயம் இதழ், தமிழ்மொழி பெற்ற ஆக்கங்களையும், இன்று தமிழ்மொழி சந்தித்து வருகின்ற சிக்கல்களையும், அதனைத் தீர்க்கும் வழிமுறைகளையும் தீவிர விவாதத்திற்கு உட்படுத்தி,தமிழறிஞர், தமிழ்ஆர்வலர் எனப் பலரிடம் கட்டுரைகளைக் கேட்டுப் பெற்று ‘தமிழின் ஆக்கம் தடையும் விடையும்’ என்ற தலைப்பில் நான்கு சிறு வெளியீடுகளை வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் நாற்பத்து ஐந்து கட்டுரையாளர்கள் எழுதிய ஐம்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் பொருண்மை அடிப்படையில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. 1.தமிழ் ஆக்கத்திற்கான தடைகள் 2.போராட்டங்கள் 3.தீர்வுகள். தமிழ் ஆக்கத்திற்கான தடைகள் 1.மொழிச்சிக்கல் 1.1.பயிற்றுமொழி 1.2.ஆட்சி மொழி 1.3.நீதிமன்றமொழி 1.4. கோவில் வழிபாட்டு மொழி 1.5 ஊடக மொழி 2.சமூகச் சிக்கல் 2.1.தமிழனின் தாழ்நிலை 2.1.1உளவியல் சிக்கல் 2.1.2.தமிழாசிரியர்களின்தாழ்நிலை 2.1.3.எழுத்துச்சிக்கல் 2.1.4. வரலாற்று வழியில் உளவியல் சிக்கல் இனி இவற்றைப்பற்றி விளக்கமாகக் காணலாம். மொழிச் சிக்கல் பயிற்று மொழி: தமிழ்மொழி இன்று எதிர்கொள்ளும் சிக்கல்களில் முதன்மையானது தமிழ் பயிற்றுமொழியாக இல்லை என்பது. தொடக்கக்கல்வி முதல் உயர்மட்டக்கல்வி வரை தாய்மொழிவழிக் கல்வி அனைத்துமட்டங்களிலும் இடம்பெறுவதில்லை என்ற கருத்தைக் கட்டுரையாளர் பலரும் முன்வைக்கின்றனர். முதலாவதாகக் குழந்தைகளின் தொடக்கக் கல்வியிலே தாய்மொழி மறுக்கப்படுகிறது. மழலையர் பள்ளி முதல் ஆங்கிலத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தற்பொழுது புற்றீசல் போல ஆங்கில மழலையர் பள்ளிகள் பெருகியுள்ளன. இப்பள்ளிகளில் ஆங்கிலமே பயிற்றுமொழி. தமிழ் ஒரு பாடமொழி மட்டுமே. இப்போக்கின் விளைவாக மாணவர்களும் ஆசிரியர்களும் ஆங்கிலத்திற்கே முதன்மைத்தரும் நிலையில் தமிழும் தாய்மொழிக் கல்வியும் புறக்கணிக்கப்படுகின்றன. “தமிழ்நாட்டில் தமிழைப் புறக்கணிக்கப்படுகிற நிலை நீடிப்பது நமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழ்படுத்திவிடும். உலகம் பூராவும் சிறிய நாடுகளாக இருந்தாலும் அந்தந்த நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்தியாவிலும் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மற்றும் வங்கம், மராட்டியம், குஜராத் போன்ற பல மாநிலங்களில் பள்ளிப்படிப்பு என்பது தாய்மொழியில் தான் நடைபெறுகிறது. ஆங்கிலத்தை ஒரு பாடமொழியாகக் கொண்டு பயிலுகிறார்களே தவிர ஆங்கிலத்தையே பாடமொழியாகக் கொண்டு பிற பாடங்களைக் கற்பதில்லை. அறிவியலிலும், பொருளாதாரத்திலும் மிக முன்னேறிய நாடுகளான சீனாவும் ஜப்பானும் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை ஒரு பாடமாக கற்றுக்கொடுக்கின்றனர். ஆனால் ஆங்கிலவழிக் கல்வி அந்நாடுகளில் கிடையாது” (பழநெடுமாறன்- தினமணி கட்டுரை- வேண்டாம் விபரீதம் 23-05-2013) தாய்மொழியில் பேசுவதால் - சிந்திப்பதால் மட்டுமே குழந்தைகளின் மூளைவளர்ச்சி விரிவடையக்கூடும் (சந்திராகிருட்டிணன்- த.நே.வெ.1- ப.8). தாய்மொழியில் கற்கும்போது அது குழந்தைகளிடத்தில் மிகுந்த படைப்புத்திறனை உருவாக்கும். அதன் அடிப்படையிலேயே மொழியையும் அறிவையும் புரிந்துகொள்ள முடியும். “தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைக்கு ஆங்கிலவழியில் கற்பிப்பதால் சிந்தனைத்திறன் மழுங்கடிக்கப்படுகிறது. தாய்மொழி சிந்தனையின் வழி தோன்றும்; படைப்புத்திறன் ஆற்றல் மிக்கதாகவும் உயிர்த் துடிப்புடனும் இயங்கச்செய்யும்.” (ஹெச்.ஜி.ரசூல்-உங்கள் நூலகம்- செப்.2015இ ப.23) தமிழகத்தில் தமிழை ஒருபாடமாகப் படிக்காமலேயே முனைவர் பட்டம் வரை ஒருவர் கல்வியைத் தொடர்கிற அவலநிலையைப் பார்க்கமுடிகிறது. பிற அண்டை மாநிலங்களில் தாய்மொழிக்கல்வி மழலையர் பள்ளி முதல் 5ஆம் வகுப்பு வரை கற்றே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதையும் அறிகிறோம்.(த.நே.வெ.1-ப.27) கல்வியின் நான்கு படிநிலைகளான 1.தொடக்கக்கல்வி, 2.உயர்நிலைப் பள்ளிக்கல்வி, 3.பட்டக்கல்வி, 4. உயர்மட்டக்கல்வி வரையிலும் தாய்மொழியில் பயிற்றுவிப்பதையே சிறந்ததென, இதுவரை வெளியான ஆராய்ச்சி முடிவுகள் திண்ணமாக வெளிப்படுத்துகின்றன பயிற்றுமொழி தாய்மொழியில் இருக்கவேண்டும் என்பதைப் பல்வேறு ஆய்வுக்குப்பின்னர் (UNESCO) அனைத்து நாட்டு கல்வி குமுகாயம் பன்னாட்டுக் கழகம், அனைத்து நாடுகளும் சீர்மையாக நடைமுறைப்படுத்துமளவில், தனது பயிற்றுமொழிக் கருத்துகளை, 1935 ஆண்டில் வெளியிட்டது. உளவியல், குமுகாயவில்நிலை, மற்றும் கல்விநிலை ஆகியமட்டங்களில் உயர்நிலை எய்த, ஒருவன் தாய்மொழியே, பயிற்றுமொழியாக அமைவது மெத்தச் சிறப்பானதாகும். (கு.ச.ஆனந்தன்- செம்மொழித்தமிழும் செல்ல வேண்டிய திசையும்- ப.10). இத்தகைய சிறப்பான தாய்மொழிவழிக்கல்வி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. தொடக்க நிலையில் பள்ளிகளில் ஒரு பாடம் ஆங்கில வகுப்பு என்று ஆரம்பித்தப் போக்குப் பின்னர்அனைத்துப் பாடங்களும் ஆங்கிலம் பயிற்றுமொழி என்பதற்கே தனி நிர்வாகம் ஏற்பட்டது. அதிக அளவிலான தனியார் பதின்ம (மெட்ரிக்) பள்ளிகள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதேவேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும் நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயப்பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. 2009-2010ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி “தமிழகத்தில் 5343 மேல்நிலைப்பள்ளிகளும்இ 4996 உயர்நிலைப்பள்ளிகளும், 9996 நடுநிலைப்பள்ளிகளும், 31173 தொடக்கப் பள்ளிகளும் மற்றும் 53631 பொதுக்கல்வி நிறுவன பள்ளிகளும் செயல்படுகின்றன” (http://tawikipedia.org/wiki தமிழ்நாட்டில்கல்வி). இன்றைய நிலையில் தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளிலும் அரசு நிர்வாகப்பள்ளிகளிலும் தமிழ் பயிற்றுமொழி வகுப்புகள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. இப்பள்ளிகளிலிருந்து பொதுத்தேர்வுக்குச் செல்லும் மாணவர்களின் தொகை குறைவுதான். இதன் காரணமாக பதின்ம பள்ளிக்கே பெற்றோர்களின் விருப்பம் பெருவாரியாக உள்ள நிலையில் தமிழகத்தில் 2000 அரசுப்பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளதாக அண்மைச்செய்திக் குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது பெரும் அவலமாகும்.(தினமலர் 21-9-2015). “1978ஆம் ஆண்டு வரை (மெட்ரிக்) பதின்ம பள்ளிகள் மொத்தம் 34 மட்டுமே இருந்தன. தற்போது உயர்நிலைப்பள்ளிகளில் பதின்ம பள்ளிகள் எண்ணிக்கை 2053 ஆகும். மேல்நிலைப் பள்ளிகளில் இவற்றின் எண்ணிக்கை 1,421 ஆகும். ஆக மொத்தம் 3,474 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளின் எண்ணிக்கை நூறு மடங்குக்குமேல் பெருகிவிட்டது” (பழநெடுமாறன், மேலது) இப்பதின்ம பள்ளிகளில் கல்விக்கட்டணம் என்பது பெரிதாக இருந்தபோதிலும் அரசு நிர்வாகத்தைக் காட்டிலும் தனியார் பதின்ம பள்ளிகளின் நிர்வாகம் சிறப்பாக இருக்கிறதென்றும், பெற்றோர்கள் எண்ணி அப்பள்ளிகளையே விரும்புகின்றனர் என்ற பொதுவான கருத்தும் நிலவுகிறது. அன்றியும் இதைவிட முக்கியமான காரணம் ஆங்கிலத்தில் படிப்பதால் மட்டுமே அறிவு வளரும். ஆங்கிலத்தில் படித்தால் வேலைவாய்ப்பு கிட்டும் என்பதும் பெற்றோர்களின் அதீத நம்பிக்கை. இதனையே “ஆங்கிலம் கற்பதாலோ, ஆங்கில வழிக்கற்பதாலோ வேலைவாய்ப்பு கிடைத்துவிடும் என்பதற்கு - ‘என்ன உறுதி இருக்கின்றது?’ என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி அயல்மொழிக் கல்வி பெற்றும் வேலையில்லாதவர்கள் பட்டியல் தானே இப்போது நம் கைவசம் இருப்பது” என்ற கருத்தும் எழுகிறது (தமிழன்பன்-த.நே.வெ.1. ப.25). தமிழ்நாட்டில் இத்தகைய போக்கின் விளைவுகள் மிகக்கடுமையாக இருக்கின்றன. பெற்றோர்களின் விருப்பத்தை ஒட்டி அரசும் ஆங்கில பயிற்று மொழிக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது முக்கியம் என்பது இவர்கள் கருத்து. தமிழ் தொடர்ந்து மறுக்கப்படுவதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், தமிழக கல்வித்திட்டத்தில் மேற்படிப்புக்குச் செல்லும் போது மொழிப்பாடங்களின் மதிப்பெண் கணக்கிலெடுத்துக் கொள்ளாததும் பெருந்தடையாகும். இதன் காரணமாக “மேல்நிலைப் பள்ளிகளிலேயே மொழிப்பாடங்களைப் புறக்கணிக்கின்ற மனநிலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வந்துவிடுகிறது” (விஜயலெட்சுமி- த.நே.வெ.3இ ப.59). இத்தகைய போக்கு தமிழ்நாட்டில் எப்படி ஏற்பட்டது என்ற முறையில் வரலாற்றைத் திரும்பிப்பார்க்க வேண்டியிருக்கிறது. சி.சுப்பிரமணியம் 1952ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்லூரி மட்ட அளவில் கணிதம்இ அறிவியல் பாடம் உட்பட அனைத்தையும் தமிழிலேயே கற்பிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பலதுறை கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன. அனைத்துப் பாடங்களையும் தமிழில் கற்பதற்கு ஏற்றவாறு பாடநூல்கள் இயற்றப்பட்டன. “ஆங்கிலத்திலிருந்து பாடநூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. 1967ஆம் ஆண்டுக்குள் எல்லாக் கல்லூரிகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது” என்று கூறும் பாண்டுரங்கன் மேலும் இப்போக்கு மாறியது குறித்து விளக்குகிறார். “தமிழ்மொழியின் பெயரைச்சொல்லிக் கொண்டு அரியணை ஏறியவர்கள் சி.சுப்பிரமணியத்தின் ஆணையை புதைக்குழிக்குள் தள்ளினர். ஆங்கில மோகம் சிறிது சிறிதாக வளர்ந்தது” (த.நே.வெ.3- ப.17). கலைஞர் செயல்படுத்திய தாய்மொழிக் கல்வித்திட்டத்தைத் தேர்தலில் தோல்வியுற்ற காமராசர் விரும்பவில்லை. உடனடியாக மாணவர்களைக் காமராசர் கிளப்பிவிட்டார். ஆங்கிலம் பயிற்றுமொழிக்குச் சார்பாக இருந்த கல்வி நிறுவனங்களும் இப்போக்கை ஆதரித்தன. போராட்டம் தீவிரப்பட்டு வரும் நிலையில் முதல்வர் தன் முடிவிலிருந்து பின்வாங்கி இந்தக்கல்வித் திட்டத்தைக் கைவிட்டார். அதுவரையில் தமிழைப் பயிற்றுமொழி ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் தடைப்பட்டுவிட்டன. அன்றியும் தமிழ் பயிற்றுமொழி என்பதைக் குறித்து எதிரிடையான கருத்துக்களே ஆக்கம் பெற்றன. (தமிழேந்தி- த.நே.வெ.ப.37) இந்தச் சமயத்தில் இன்னொரு வரலாற்று நிகழ்ச்சியையும் நினைவு கூர்தல் தேவை. தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் முதற்கொண்டு உயர்நிலைக்கல்வி வரை ஆங்கிலமே முதன்மையான பயிற்றுமொழி என்று வலுப்பட்டுவரும் நிலையில் தமிழ்மொழியின் எதிர்காலம், தாய்மொழிக்கல்வி மறுக்கப்படுவதையும் எண்ணி தமிழ்பற்றாளர்கள் தமிழ் உணர்வாளர்கள் வருத்தம் கொண்டனர். “தாய்மொழிவழிக்கல்வி நசிந்து வருவதைக்கண்டு மனம் பொறாத 101 தமிழறிஞர்கள், மூத்த தமிழறிஞர்கள் தமிழண்ணல் தலைமையிலான சான்றோர் பேரவையின் சார்பில் 25.04.1998ஆம் நாள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். குறைந்தபட்சமாக முதல் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை தாய்மொழியிலேயே கல்வி கற்கப்படவேண்டும் என்பதுதான் அவர்கள் முன்வைத்த ஒரே கோரிக்கையாகும்” (பழநெடுமாறன்- மேலது). உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுறும் சமயத்தில் கல்வி அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் தமிழ்ப்போராளிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழ்ச்சான்றோர்களின் விருப்பத்தை அரசு ஏற்று ஆணை வெளியாகும் என்று அறிவித்தார். அதன் விளைவாக இக்கோரிக்கையை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்வதற்காக நீதிபதி மோகன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் முதலமைச்சர் கருணாநிதி. 1999இல் நீதிபதி மோகன் குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கருணாநிதி அரசு 19.11.99 அன்று ஒர் அரசாணை பிறப்பித்தது. அதன்படி “முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை தமிழ் அல்லது தாய்மொழி கட்டாய மொழிப்பாடமாகவும் பயிற்றுமொழியாகவும் இருக்கும். 2000-2001 கல்வியாண்டிலிருந்து அந்த அரசாணை நடப்புக்கு வரும் ஒரு நிலை இருந்தது” (த.நே.வெ.3. ப.37). அந்த அரசாணை நடைமுறைக்கு வரும் முன்னரே ஆங்கிலப்பள்ளி நிர்வாகிகள் அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அரசாணை செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அரசாணைக்குப் பதிலாக சட்டசபையில் ஒரு வரைவு சட்டத்தை முன்னிறுத்தி விவாதம் நடத்தி அதை நிறைவேற்றி இருக்கவேண்டும். ஒர் அரசாணை என்பதைக் காட்டிலும் சட்டம் வலுவானது. நீதிபதி மோகன் குழு அளித்த பரிந்துரையின்படி கருணாநிதி அரசு கொண்டு வந்திருந்தால் அது நிலைத்திருக்கும். உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அங்குப் பல ஆண்டுகளாக இந்த அரசாணை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. “தமிழ்மொழிக்காக, தமிழக அரசியல் கட்சிகள் இவ்வழக்கில் அரும்பாடுபட்டு வழக்கிட்டு, மற்ற மாநில அரசுகள் போல் வெல்ல முடியாதா?” (த.நே.வெ.1-ப.27) இதே போன்றதொரு சிக்கல் கர்நாடகத்தில் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்று தமக்குச் சார்பான தீர்ப்பைக் கர்நாடக கல்வியாளர்கள் பெற்றனர் என்பதையும் இங்கு நினைவு கூரலாம். ஆங்கிலப்பள்ளி நடத்தும் நிர்வாகிகளுக்கோ ஆங்கிலத்தின் மீதோ அல்லது கல்வியின் மீதோ இவர்கள் பற்றுக்கொண்டவர்கள் என்றும் கூற இயலாது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வியை வணிகமாகச் செய்பவர்கள். உச்ச அளவில் கல்விக்கட்டணத்தை உயர்த்திக் கொண்டே செல்வார்கள். இத்தகைய பள்ளிகளில் கட்டணம் எந்த அளவுக்கு வசூலிக்கவேண்டும் என்று அரசு நியமனம் செய்த நீதிபதியின் கட்டண வரையறையை இவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. தொடர்ந்து இவர்கள் தம் விருப்பத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை வசூலிப்பதிலேயே கவனம் செலுத்துபவர்கள். இவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தொடர்ந்து எச்சரிக்கையை விடுத்தபோதிலும் தனியார் நிர்வாகிகள் இதைக் காதில் போட்டுக் கொள்வதில்லை. அரசும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இருதரப்பினரும் மக்கள் நலத்திற்கு எதிராக கைகோத்துக் கொள்கின்றனர். ஆங்கிலக் கல்வியின் அவலத்தைப் பாரதி சுட்டி இருப்பதையும் இங்கு நினைவுகூரலாம். “அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை . .. . . . . . . . . . . . - அன்ன யாவும் அறிந்திலர் பாரதத் தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர் . . . . . . . . . . . . . . செலவு தந்தைக்கோ ராயிஞ் சென்றது தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன" என்கிறார். “தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தமிழ் வழிக்கல்வி தாழ்நிலைக்கு கடந்த நாற்பத்தாறு ஆண்டுகளாகத் தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட இயக்க ஆட்சிப் பொறுப்பாளர்கள் தாம் பொறுப்பேற்கவேண்டும்” (த.சுந்தரராசன்- தமிழ்தேசியம்- ப.140) உண்மையில் கல்வி என்பது இலவசமாக அரசு மக்களுக்குத் தரக் கடமைபட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இதுவே நடைமுறை. “ஆங்கிலக்கல்வி வணிகர்களால் தான் இன்று தமிழுக்கு மிகப்பெரும் கேடு ஏற்பட்டுள்ளது. இவர்களால் இரண்டு பெரிய கேடுகள் நடைபெறுகின்றன. ஒன்று உயிர் போன்ற மொழிக்கு கேடு, இரண்டாவது ஏழை எளிய மக்களையெல்லாம் ஏமாற்றி அவர்களின் பொருளைக் கொள்ளையடிக்கின்றனர். இவர்கள்தான் இன்றும் மொழிக்கு மிகப்பெரும் பகைவர்களாக உள்ளனர்”(சோ.க. அறிவுடைநம்பி-த.நே.வெ2-ப.29). தற்போது கல்வி வணிகமயத்தின் வர்த்தக சரக்காக மாறிவரும் அபாயகரமான சூழ்நிலை குறித்து பேராசிரியர் பிரபாத் பட்நாயக் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “சேவை வர்த்தகம் குறித்த பொது ஒப்பந்தத்தின் (GATS -காட்ஸ்) அடிப்படையில், இந்தியாவில் உயர்கல்வி, சர்வதேச வர்த்தகச் சரக்காக மாறும் அபாயம் உருவாகியிருக்கிறது. இந்த சர்வதேசக் கல்விமுறை சமூகத்தில் உள்ள சகமனிதர்கள் குறித்து எதுவும் கண்டுகொள்ளாமல், தன்னைச்சுற்றியே சிந்தித்து, தனக்குள்ளேயே அடங்கிவிடும் சுயநலமிகளை உருவாக்குவதில் அதிக அக்கறை காட்டுவதாகும். கல்வியைச் சரக்காக மாற்றும் இக்கல்விமுறை, கற்பவர்களையும் சரக்காக மாற்றிவிடுகிறது.” (தீக்கதிர்- தடையங்கள் 16.12.15). இத்தகைய வணிகமய கல்வி முறை சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துமே தவிர சமச்சீரானஇ அனைவருக்குமான சமுதாயம் உருவாக வழிவகுக்காது. தாய்மொழியில் பயின்றால் மட்டுமே குழந்தைகளின் அறிவுத்திறன், கலைத்திறன், அவரவர் பண்பாட்டு விழுமியங்கள், சுயசிந்தனை போன்றவற்றைப் பெறமுடியும். தாய்மொழியில் பயிலும் போது குழந்தைகளுக்குக் கிடைக்கும் தாய்மொழிப்பற்றும், தமிழ்நாட்டுப்பற்றும், அயல்மொழியில் பயில்வதால் இத்தகையச் சிந்தனை ஏற்படாது. ஆட்சி மொழி: ஆட்சிமொழி என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழி. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் குறிப்பிட்ட மக்களால் பேசப்படும் மொழியே அரசால் ஆட்சி செய்யப்படுகிறது. “அரசால் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழி ஆட்சிமொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. அவ்வாறு தமிழ் பயன்படும் பொழுது அதை ஆட்சித்தமிழ் எனலாம்” (http://ta.wikipedia.org/wiki/ Ml;rpj;jkpழ்) ‘மக்களால் மக்களுக்காகவே நடத்தப்படுவதே மக்களாட்சி’ என்றார் ஆபிரகாம் லிங்கன். இந்த அடிப்படையில் மக்களாட்சி நடைபெறும் மாநிலத்தில் அறிவிப்பு பலகைகள், பெயர்கள், மடல்கள், ஆணைகள் இன்னபிற அனைத்தும் அவர்களுக்குத் தெரிந்த, மொழியிலேயே இருக்கவேண்டும் என்பது நடைமுறை. மக்களுக்காகத்தான் நாடு, அரசு, கல்வி எனவே அம்மக்கள் மொழி தான் எல்லா இடங்களிலும் முதன்மையாக இருக்க வேண்டும். இன்றைய மக்களாட்சியில், தமிழ்நாட்டில் அலுவலக மொழியாக தமிழ்தானே நூற்றுக்கு நூறு இடம்பெற்றிருத்தல் வேண்டும்! இன்று பெயரளவுக்கு மட்டுமே தமிழ்! மற்றைய எல்லா மட்டங்களிலும் ஆங்கிலம் தான் ஆட்சி செய்வதைக் காண முடிகிறது. (தங்கப்பா- த.நே.வெ.3- ப.30). தமிழ் நாட்டில் தமிழும், தமிழரும் மட்டுமே ஆட்சி செய்யவேண்டும்,ஆனால் தமிழ் மக்களை ஆட்சி செய்வதற்கு தமிழ் நாட்டிற்கு வெளியில் இருந்து இந்திய அரசுப்பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நமக்குத் தேவையான ஆட்சியரை நாமே உருவாக்கிக் கொள்ள இயலும் உரிமையைபெறவேண்டும். 1956இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமையுள்ள சில பகுதிகள் மலையாள மற்றும் கன்னட மொழியாளர்களுக்குப் போய்ச்சேர்ந்தன. அதே ஆண்டில் தமிழ்மொழி ஆட்சி சட்டம் நிறைவேறியது. ஆனால் தமிழும் ஆங்கிலமும் என இருமொழிக்கொள்கை அதில் இடம்பெற்றது. ஆட்சிமொழியாகத் தமிழ் அல்லது வட்டாரமொழி இருக்கும் என்றும் துணை ஆட்சிமொழியாக ஆங்கிலம் இருக்கும் என்றும் இந்த அரசாணை கூறியது. இந்த ஆணையால் வட்டாரமொழி என்னுஞ் சொல் பயன்பாடு கடுமையான சிக்கலைத் தோற்றுவித்தது. தமிழ்நாட்டிற்குள் எல்லைப்பகுதிகளில் கன்னடியரும், மலையாளிகளும், தெலுங்கரும் குடியிருக்கின்றனர். இவர்கள் மொழி வட்டாரமொழி. அந்த வட்டார மொழிகளிலும் ஆட்சி ஆணை செயல்படும் என்பது இதன் கருத்து. இவ்வாறு ஏன் அரசாணை வடிவமைக்கப்பட்டது என்பது ஒரு புரியாத புதிர். “மாநில அரசின் ஆட்சிமொழி தமிழாயிருக்க, ஆங்கிலத்தில் அரசாணை வெளியிடுவது ஆட்சிமொழித் திட்டத்திற்கு முரணானதாகும். தற்போது அரசு அலுவலக நடவடிக்கைகள் முற்றிலும் தமிழிலேயே நடைபெற்று வருவதாகக் கூறமுடியாது. 1956இல் ஆட்சிமொழிச் சட்டம் கொண்டு வந்த பிறகும் கூட, இத்திட்டம் முழுமையாகச் செயல்படவில்லை. அனைத்துக் கடிதப் போக்குவரத்தும் தமிழிலேயே இருக்கவேண்டியதைக் கட்டாயமாக்க வேண்டும். தேவைப்படுமிடங்களில் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தலாம்” (த.நே.வெ.1.ப.21) என்று தமிழ்ப் பெரியசாமி ஆட்சிமொழித் தமிழ் குறித்து வலியுறுத்துகிறார். “மைய அரசின் அலுவலகங்களாக மாநிலத்தில் அமைந்துள்ள எல்லா அலுவலகங்களிலும் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே இப்போது இருந்து வருகின்றன. இந்திக்குப் பதிலாக நாம் நம் தாய்மொழியாக தமிழை நிலைநிறுத்தவேண்டிய இடங்களில் எல்லாம் ஆங்கிலத்தை நிலைநிறுத்த முற்பட்டதன் விளைவு - தமிழ் ஆட்சிமொழித் தளத்தில் வாய்ப்பையும் வளர்ச்சியையும் இழந்தது” (மேலது- ப.26) என்று தமிழ்மொழி கோலோச்ச வேண்டிய இடத்தில் எல்லாம் ஆங்கிலமே இடம் பெறுகிறது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகள் நடைபெறுவதையும் காணமுடிகிறது. சான்றாக “தமிழ்மொழியை ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்ததமிழ்வளர்ச்சித்துறை என்ற அமைப்பு 1971இல் ஏற்படுத்தப்பட்டது. இத்துறையின் மூலம் ஆண்டுதோறும் தமிழ்க் கருத்தரங்குகள் பயிலரங்குகள் நடத்தி சட்டநுண் கலைச்சொற்கள், மடல்கள், கோப்புகள், ஆணைகள், தமிழில் கையெழுத்து இடுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்ப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள் எழுதி வைக்கவேண்டும். 1958இல் தமிழில் தட்டச்சு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அலுவலக நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் மட்டுமே தட்டச்சு செய்யப்படவேண்டும். 1969இல் ஒரு துறை மற்றொரு துறைக்கு தமிழில் மட்டுமே மடல் மற்றும் அறிக்கைகள் அனுப்பவேண்டும்” என்பது அரசாணை. (2015-2016 அக். தமிழ்வளர்ச்சித்துறை பயிலரங்கத்தில் கேட்ட உரை). இன்றைய நிலையில் தலைநகரின் தலைமைச்செயலகத்தில் தமிழ் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் சில காரணங்கள் உண்டு. தமிழ்நாட்டு அரசில் ஆட்சிப்பணியாற்றும் ஊழியர்களின் ஒரு பகுதியினர் தமிழ் அல்லாத பிறமொழியினர் இந்திய ஆட்சிப்பணியிலும், இந்திய காவல்பணியிலும், தகுதி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழை இவர்கள் குறைந்த அளவுக்கே கற்றவர்கள். சரளமாக இவர்களால் தமிழில் உரையாட இயலாது. இவர்களின் தேவைக்காகவும் ஆங்கிலம் தலைமைச்செயலகத்தில் கொலுவீற்றிருக்கிறது. இதற்கு மேலும் ஒரு காரணம் மத்திய அரசோடு தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலம் தேவை. தமிழ்ப் பற்றுடையவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இரண்டு திராவிட கழகங்களைச் சார்ந்தவர்கள் ஆட்சியிலிலிருந்தும் நிலைமை இவ்வாறுதான் இருக்கிறது. தமிழ் இவர்களை அரியணையில் அமர்த்தியது. இவர்கள் அந்த அரியணையில் தமிழை அமர்த்தவில்லை. “தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராய் வருதல் வேண்டும் தமிழ்ப்பகைவன் முதலமைச்சானாய் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும்" என்ற பாவேந்தரின் எண்ணத்தின் அடிப்படையில் தமிழ் ஆட்சி மொழியானால் தான் தமிழ் தொடர்பு மொழியாகும். அதற்குத் தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி அமையவேண்டும். நீதிமன்ற வழக்காடு மொழி: நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் இல்லை. வட்டார, மாவட்ட உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக்குவது தேவை என்பது பலரும் ஒப்புக்கொள்ளும் ஒரு கருத்து. 1956ஆம் ஆண்டுச் சட்டபடி தமிழ்நாட்டின் அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடலாம். தீர்ப்புகள் வரையலாம் என்பதற்குச் சட்டம் இடம் தந்திருக்கிறது. ஆனால் இதன்படி வழக்குகள் நடைபெறுகிறதா? என்பது ஒரு கேள்வி. வழக்கறிஞர்கள் மத்தியிலும் தமிழ்ப் பற்றுடையவர்களும் ஆங்கிலப் பற்றுடையவர்களும் சமஅளவில் உள்ளனர். (த.நே.வெ.4- ப.7) தமிழில் வழக்கு நடத்த உரிமை வேண்டி தமிழ் வழக்கறிஞர்கள் மாவட்டம் தோறும் போராடி வருவதையும் காணமுடிகிறது. 2006இல் சட்டபேரவையில், உயர்நீதிமன்றத்தில்தமிழில் வழக்காட தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிட்டவில்லை. இந்நிலையில் “09.06.2010இல் மதுரை வழக்கறிஞர் சங்கத்தினர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இது நமக்கான போராட்டம்! நமது தமிழருக்கான போராட்டம்! அன்னைத் தமிழை அரியணை ஏற்றப் போராடுவோம்! என்ற முழக்கத்துடன் உறுதியாகப் போராடினர். இந்த நிலையில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் இருப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பாக பரிந்துரை செய்யப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது”(http;//www.tamil.webdunia.com/article/regional-tamil-news/ உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழி) இன்றுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. “இராமநாதபுரம் மாவட்ட முன்சீப் (நீதிபதி) ஒரு வழக்கில் தீர்ப்பை தமிழில் வழங்கினார். எதிர்தரப்புவாதிகள் அத்தீர்ப்பைச் செல்லாது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 1969ல் சென்னை உயர்நீதிமன்றம் முன்சீப்புக்கு தமிழில் தீர்ப்பு வழங்க அதிகாரம் இல்லை. இந்தத் தீர்ப்பு தீர்ப்பே இல்லை என்று கூறி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. அமர்வு நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தமிழில் வழங்கவேண்டும் என்று 18.1.1982இல் அரசாணை வெளிவந்தது. இதன் பிறகு தான் கீழமை நீதிமன்றங்களில் தமிழுக்கு முழு அங்கீகாரம் கிடைத்தது. ஆனாலும்கூட தமிழ் தெரிந்த நீதிபதிகளே ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்குவது நடைமுறையில் உள்ளது.” உண்மையில் எந்த ஒரு மாநிலத்திலும் தாய்மொழியை நீதிமன்ற மொழியாக பயன்படுத்த இந்திய அரசியல் சட்டம் வகை செய்கிறது. ஒரு மாநில உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழி பொதுவாக ஆங்கிலம் என்பது தற்கால நடைமுறை. தமிழை உயர்நீதிமன்றத்தில் வழக்குமொழியாக்க வேண்டுமென்றால் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றிஆளுநர் ஒப்புதலோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு தமிழ் உயர்நீதிமன்ற வழக்குமொழியாகும் தகுதியைப்பெறும். பல்லாண்டுகளாக இந்தத் தீர்மானம் குறித்த போக்குகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் வேற்று மாநிலத்தவராக இருப்பதன் காரணமாக இந்த ஒருவரின் தேவைக்காக தீர்ப்புரைகள் ஆங்கிலத்தில் அமையவேண்டும் என்பது தேவையில்லை. தேவைப்படும் என்றால் தீர்ப்புரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். உத்திரப்பிரேதேசம், பீகார், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலமொழி தான் நீதிமன்ற மொழியாக இருக்கிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட இன்றும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து, ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் நீதிமன்றங்களில் வழக்குகள் தமிழில் நடைபெற்றால் பல வழக்குகள் கட்சிக்காரர்களுக்குப் புரிந்துவிட்டால் வாய்தாவும் நடக்காது வழக்கும் நீடிக்காது என்று கூறும் தனராசு. (த.நே.வெ.4 - ப.14)வழக்கறிஞர்களின் வருமானத்திற்காகவே நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகின்றன. தமிழில் வழக்குகள் ஒருசில இடங்களில் நடைபெற்றாலும் அவை தடைசெய்யப்படுவதையும் காணமுடிகின்றது. 02.01.2013இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் முன்பு, தமிழில் வாதாட ஒரு வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. (மேலது-இணையம்) தமிழ்நாட்டில் இந்தப்போக்கு நீடித்துக்கொண்டிருக்கிறது என்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்ட தலைகுனிவாகும். கோவில் வழிபாட்டு மொழி: தமிழன் கட்டிய கோவில்களில் முன்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழில் வழிபாடு நடைபெற்றதும் பின்னர் கருவறைக்குள் நுழைந்த பார்ப்பனர்களால் தமிழ் வெளியேற்றப்படுவது என்பது தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட தன்மானக் குறைவாகும். இந்த இழிவைப் போக்கும் முறையில் ஒரு கட்டமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் 1971இல் தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்டது. எனினும் நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக வழக்குரைஞர்கள் எடுத்துரைத்த வாதம் வெற்றி பெறவில்லை. (த.நே.வெ.4- ப.22). கோவில் வழிபாட்டில் தமிழ்முதன்மை பெறாத நிலைக்கு தமிழர்களிடம் விழிப்புணர்வு இல்லை. இதன் காரணமாக சமற்கிருதமே ஆதிக்கம் செலுத்துகிறது “தமிழில் ஒதினால் - இறைவன் அருள் பெறமுடியாது. மந்திர சக்தியெல்லாம் சமற்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்று நம்ப வைத்த வடவர் சூழ்ச்சியை எவ்வளவோ எடுத்துரைத்தாலும் நமதுமக்கள் விழிப்படையவில்லை.” (த.நே.வெ.1இப.26) ஆன்மிகத்திற்குள்ளும் தமிழ்மொழிக்கு சக்தி/ஆற்றல் இல்லை சமற்கிருதமொழிக்கே உண்டு என்பது மக்களை ஏமாற்றும் ஒரு நிலையே. “கோயில்களில் சமற்கிருத அர்ச்சனைக்குப் பிறகே தமிழ் ஒதுவார்கள் தேவாரம் பாடலாம் எனும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்ப் பதிகங்கள் பாடுவது ஒதுக்கப்பட்டதால் தமிழும் தமிழரும் இழிவு நிலைக்குள்ளாக நேர்ந்தது” (த.நே.வெ.3இப.51). தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெறுவது என்பது தொடர்ந்து பெரும் சிக்கலாக இருக்கிறது. கருவறைக்குள் பார்ப்பனர் மட்டுமே நுழையலாம். சமற்கிருதத்தில் அர்ச்சனை செய்யலாம். அங்கு நுழைய மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. தமிழில் வழிபாடு தேவை என்றால் வெளியில் நிற்கும் ஒதுவார்களிடம் கூறி செய்து கொள்ள முடியும். இந்த ஏற்பாடு தமிழ் உணர்வாளர்களுக்கு அவமதிப்பு தருவதாக உள்ளது. “1982இல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். நீதியரசர் மகராஜன் தலைமையில் கோயில் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வுசெய்ய குழு ஒன்றினை அமைத்தார். மகராஜன் குழு கோயில்களை ஆராய்ந்ததோடு ஆகம விதிகள் தொடர்பான அறிஞர்களின் கருத்துகளையும் ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அளித்தது. அந்த அறிக்கையில் பிறப்பால் பார்ப்பனர் அல்லாதவர்கள் கோயில் கருவறைக்குள் நுழைந்து பூசையில் ஈடுபடுவது ஆகம விதிகளுக்கு முரணானது அல்ல என்றும் கருவறைக்குள் தமிழில் வழிபாடு நடத்துவதும்இ தேவாரம்இ திருவாசகம் போன்ற தமிழ்ப்பதிகங்கள் பாடுவதும் எவ்வகையிலும் ஆகமவிதிகளுக்கு எதிரானது அல்ல. (பூங்குழலி keetru.com. தமிழ்வழிபாட்டு உரிமை நிலைநாட்டப்பட்டு விட்டதா?) இதன்படி அர்ச்சகர் ஆகும் தகுதி பெற்ற 206 பேர்களுடைய உரிமையை கடைசியாக நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்கு இரண்டுங்கெட்டான் நிலையில் விட்டுள்ளது. இதில் தெளிவு எப்போது ஏற்படும் என்பது தெரியவில்லை. வழிபாட்டில் தமிழ் என்பது இன்னமும் நிறைவேறாத கனவாகவே உள்ளது. இது இவ்வாறு இருக்க தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான குடும்பங்களில் திருமணம், புதுமனைபுகுதல், மணிவிழா போன்ற சடங்கு நிகழ்ச்சிகளில் சமற்கிருதத்தில் ஒதுவதையே தமிழர்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். கோவில்களில் குடமுழுக்கு விழாவைக் பொருத்தவரை சமற்கிருதத்தில்தான் நடைபெறுகிறது. இடைக்காலத்தில் குன்றக்குடி அடிகளார், தவத்திரு இராமசாமி அடிகளார் செய்த முயற்சியின்படி தமிழில் குடமுழுக்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளும் தடுக்கப்பட்டன. இங்கெல்லாம் தமிழனுக்கு இரண்டாவது இடமே கிடைத்திருக்கிறது. இதுவும் மக்களாட்சிக்கு நேர்ந்த ஒரு குறைபாடாகும். ஊடக மொழி: திரைப்படம், தொலைகாட்சி, வானொலி, செய்தித்தாள் போன்ற ஊடகங்கள் தமிழை எந்த அளவிற்கு முடமாக்க முடியுமோ அந்த அளவிற்கு அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் “எழுத்தாளர்கள் என்போர் வரைமுறையின்றி ஆங்கிலத்தைத் தமிழுடன் கலந்து எழுதுகின்றனர். ஜுனியர் விகடன், தமிழன் எக்ஸ்பிரஸ் என்கிற பெயர்களில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கூட இதழ்கள் வந்ததில்லை. வானொலி போன்ற ஊடகங்களிலும் தமிழ் அழிவுப்போக்கு நிலைகொண்டுவிட்டது”(த.நே.வெ.3- ப.39). செய்தி ஊடகங்களில் காணப்படும் தமிழ், உயிர்ப்பு நிலையற்றே காணப்படுகிறது. “செய்தி ஊடகங்கள் தமிழைக் குத்திக்கொலை செய்து கொண்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் பஞ்சையாய்ப் பராரியாய் தமிழ் விழித்துக்கொண்டுள்ளது. செய்தித்தாள்கள் தமிழைச் சிதைத்துச் சீரழித்துக் கொண்டுள்ளன” (த.நே.வெ.1-ப.32).இதனை, பெருஞ்சித்திரனார் கூறுவதையும் இங்கு ஈண்டு நோக்கலாம்: “வானொலியில் திரைப்படத்தில் தமிழ்ப்பே ணாத வரலாறு,கதை,பாடல் வருதல் கண்டால் கூனொலியைக் கேட்காமல், படம்பார்க் காமல் கொள்கைக்குப்போரிடுக! தமிழைக் காக்க!“-(கனிச்சாறு- ப.19) ஊடகங்களின் மூலம் தமிழும் ஆங்கிலமும் கலந்த தமிங்கிலமே இன்று வழக்கு மொழியாகிவிட்டது. தனக்குத் தமிழில் பேசவராது என்பதையே ஒரு பெருமை தகுதிபோலச் சொல்லிக் கொள்கிறார்கள். பலர் தமிழ் கலந்த அரைகுறை ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றனர். எழுத்தும் கூட அவ்வாறு மாறிவருகின்றது. இது தமிழின் ஆக்கம் அல்ல. ஊடகங்களும் இக்கலவைத் தமிழை நோக்கிச் செல்கின்றன. தமிழ் உணர்வற்றமேற்குடிமக்களாலும் உயர்பதவிவகிக்கும் ஆட்சியாளர்களாலும் பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்களாலும் இன்று தமிங்கிலமே பேசப்படுகின்றன. தமிழின் ஆக்கத்திற்கு இவை பெருந்தடைகளாகும். (த.நே.வெ.1- ப.18). தமிழ்த்திரைப்படம் முதலிய ஊடகங்களில் பணியாற்றுபவர்களில் பலர் தமிழர்களைக் காட்டிலும் பிறமொழியினரே முதல் வரிசையில் இருக்கின்றனர். தமிழ்மக்கள் நலன் சார்ந்த சிக்கலில் இவர்களுக்கு ஈடுபாடில்லை. தமிழகத்தில் செயல்படும் திரைப்படச் சங்கத்திற்குத், ‘தமிழ்த் திரைப்படச்சங்கம்’ என்று பெயர் சூட்ட இயலவில்லை. தமிழிலே திரைப்படம் எடுத்துவிட்டு அதற்கு எதற்காக ஆங்கிலத்தில் பெயர் சூட்டுகிறீர்கள்? உலகத்தில் வேறெங்கும் இல்லாத புதுமை தமிழகத்தில் மட்டுமே காணப்படுகிறது. (த.நே.வெ.3- ப.30). தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை உண்டு என்று சொல்லி தமிழில் பெயர் வைக்க ஊக்குவிக்க வேண்டியிருக்கிறது. திரைப்படங்களும் தொலைக்காட்சியும் தமிழ்ப்பண்பாட்டை வளர்ப்பனவாகவும் இல்லை. இன்றைய சூழலில் ஊடகத்துறையில் தமிழை அழிக்கும் சக்திகள் பெருகி வருகின்றன. மேற்கண்ட அனைத்துத் துறைகளினுள்ளும் தமிழ்மொழி பெரும் பின்னடைவை சந்தித்து வந்திருக்கிறது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் தமிழர்களும் பிறமொழி ஆதிக்கத்தினருமே, இவர்களிடமிருந்து தமிழைக் காப்பது தமிழ்மொழி பேசும் அனைவரின் கடமையுமாகும். சமூகச் சிக்கல்: தமிழ், பயிற்று மொழியாக இல்லை, ஆட்சிமொழியாக இல்லை என்பன போன்ற குறைபாடுகளைக் கட்டுரையாளர் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். என்ற போதிலும் மொழிச்சிக்கல் என்பது பலகுறைகளுடன் சமூகச் சிக்கலாகி இருப்பதற்கான காரணங்களைக் கட்டுரையாளர்களின் கருத்துகளின் வழிக் காணலாம். தமிழனின் தாழ்நிலை: இன்று தமிழன் தன் சொந்த பண்பாட்டின் மீதும், தன் மொழியின்மீதும் நம்பிக்கையிழந்து விட்டான். தனக்குள் அடிமையானான். தமிழ்ப் பேசினால் அவமானம். தமிழ்ப் படித்தால் என்ன எதிர்காலம்? வாழ்க்கைக்குப் பயன்படுமா? என்ற கேள்விகள் தமிழனுக்குள் பெரும் சிக்கலை மாயையைத் தோற்றுவிக்கிறது. தமிழனுக்குள் இருக்கின்ற தாழ்நிலையை மாற்றவேண்டும். இன்று தமிழர் எதிர் நோக்கியிருக்கும் சிக்கல் நடைமுறைச்சிக்கல் அன்று: மனவியல் சிக்கலே: குறை தமிழின் குறை அன்று: தமிழனின் குறையே. உளவியல் சிக்கல்: 1.இரணியன்: தமிழின் தமிழ் மக்களின் உளவியல் சிக்கல் குறித்து மிக நயமான முறையில் கீழக்கண்டவாறு கூறுகிறார்: “தமிழகக் கல்வி நிலையங்களிலிருந்து தமிழ் தமிழனால் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள மைய அரசு அலுவலகங்களில் தமிழ் எட்டிப்பார்க்கவும் இயலவில்லை. மாநில அரசு அலுவலகங்களுக்குள் தமிழ் கழுத்தை நீட்டிவிட்டு பின்வாங்கிக் கொண்டது. நீதித்துறையில் தமிழ் நுழைய முடியவில்லை. தமிழ்நாட்டு மக்களின் கோவில்களில் வெளிச்சுவரில்தான் தமிழ் ஊடாடிக் கொண்டுள்ளது. சப்பரத்திலே சாமியோடு சமற்கிருதம் அமர்ந்து வர, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சப்பரத்தைத் தூக்கிக்கொண்டு சண்டிச் சண்டி நொண்டி நடைபோடுகிறது தமிழ்” (த.நே.வெ.1- ப.32). இவ்வாறு கூறிய பிறகு தமிழன் மாட்டிக்கொண்டுள்ள கூர்மையான உளவியல் சிக்கல்களை முன்வைக்கிறார். “தமிழருடைய பொதுவான ஒரு பண்பு – போலிகளை நம்பிக்கிடத்தல். செப்பமானதும், தெளிவானதும், உண்மையானதும் எப்போதும் தமிழனுக்குக் கவர்ச்சியற்றதாகத் தெரியும். தமிழனுக்கு எப்போதும் ஒரு களிப்பு வேண்டும். ஆரவாரமும் கூத்தடிப்பும் அல்லாமல், அடிப்படையில் பணி எதிலும் தமிழனுக்கு நாட்டம் இருந்ததில்லை. உலகின் முன் கோமாளியாகவும் கூத்தாடியாகவும் மட்டுமே தமிழன் காட்சியளிப்பவனாய் உள்ளான். பகைவனும் தன்னைப் பாராட்டவேண்டும். தன் உடைமைகள் உரிமைகளைப் பேணிக் கொள்வதில் தமிழனுக்கு எப்போதும் விழிப்புணர்வு இருந்ததில்லை. சாதிசமய அக்கறை தமிழனிடம் உண்டே தவிர, சமூக அக்கறை தான் இல்லை. தாழ்வு மனப்பான்மையும் பிறரைவிடத் தாழ்ந்தவன் என்றும் உறுதியாக நம்புகிறான்” (மேலது- பக்.30-31). இவ்வாறாக தமிழினம் ‘உட்பகை உற்றகுடி இற்றுப்போகும்’ (குறள்.888) என்று வள்ளுவர் கூறுவதுபோல தன்னையும் அழித்து சிதைவுக்குள்ளாகிவிடும் என்பதை இரணியன் மிகச் சரியாகவே கூறியுள்ளார். தமிழன் தனக்குள்ளும் புறத்தாலும் தாழ்வுக்குள்ளாகி இருக்கிறான். அவனுக்கு அவனது மொழியின் இனிமையும் பெருமையும் தெரியவில்லை. இதனை, “ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கிறோம் ஒருசொற் கேளீர்! சேமமுறை வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!”- (பாரதியார் பாடல்கள்- ப.37) என்று பாரதி கூறுவதில் தமிழன் வாய் இருந்தும் ஊமையாய், காது இருந்தும் செவிடராய், கண் இருந்தும் குருடர்களாய் ஒற்றுமையின்றி வாழ்கிறான். தனக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு தமிழராய் இணைந்து தமிழ் முழக்கம் செய்யும் நாளே நன்னாளாகும் என்கிறான். 2.தே. ஞானசேகரன்: தேசிய இனங்களில் ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகளுக்கு தலித்துகள் ‘அரிசன்’ என்ற பெயர் சூட்டப்பட்டு, மண்ணோடும் மக்களோடும் அவர்களுக்குள்ள உறவை அழிப்பதன் காரணமாக தமிழனுக்கான அடையாளத்தை அழிக்கின்றனர். இந்த அடையாளக்கேடு ஆபத்தானது.தமிழனுக்கு எதிராகவே இந்த அடையாளங்களைச் சுமத்தியவர் வருந்த நேரிடும் (த.நே.வெ.2- ப.52). தமிழர்களின் மனிதநேயம், உலகமயமாதல் என்ற போக்கினால் உள்ளிழுக்கப்பட்டுத் தமிழனை மனிதநேயம் அற்றவனாகச் செய்வதோடு தமிழனின் ஆற்றல்களைச் சிதைக்கிறது. இயற்கைக்குத் திரும்புதல் என்ற போக்கும் இதனால் தடைப்படுகிறது. தமிழின் ஆக்கத்திற்கான தடை என்பதன் வித்தியாசமானப் பரிமாணங்கள் இவை: “விதியே! விதியே தமிழ்ச்சாதியை என்செயக் கருதியிருக்கின்றாயடா?” (மேலது-ப.43) என்று கேட்கும் பாரதியாரின் சிந்தனை தமிழர்களின் சாதித் தடை நீங்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. தமிழ் மண்ணின் மக்களாகிய தலித்துக்கள் மேன்மையடையும்நாளே தமிழர் வாழ்வின் பொன்னாளாகும் என்று கூறுகிறார் ஞானசேகரன். 3.தமிழ்வாணன்: தமிழன் தன் பழம்பெருமையை காப்பாற்ற தவறிவிட்டான். முன்னைய தமிழகம் உலகிலுள்ள இயற்கை வளங்களையெல்லாம் தன்னகத்தே கொண்டு சீரும் சிறப்புமாக விளங்கியது. தமிழனும் மிக உயர்ந்த குணநலன்களுடன் ‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு’ என்று சொல்வதற்கிணங்க வாழ்ந்தான். தற்போது இன்றைய தமிழகமும் தமிழனும் தாழ்நிலைக்கு உள்ளானதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். “காட்டு வளம் குன்றி, மழை வளம் குறைந்து, கடல்வளம் அழிந்து, மரம் வளம் பாழடைந்து சொல்ல வாய்கூசும் அளவிற்குத் துன்பத்தை அடைந்து கொண்டிருக்கின்றது. அள்ள அள்ள குறையாத சொற்சுரங்கம். வாராது வந்த மாமணி. ‘உலக’ மொழிக்கெல்லாம் தாய் ஆகிய செந்தமிழ் படும்பாட்டை என்னவென்பது. செம்மாந்திருந்த தமிழினம் உலகத்துப் பண்பாட்டையும், நாகரிகத்தையும், வாழ்வியல் நெறிகளையும் கற்றுக்கொடுத்த இனம் இன்று சின்னாபின்னமாக்கப்பட்டு அயல்மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் அடிமைகளாய், கூலிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது”. (த.நே.வெ.1- ப.36) தமிழன் மோகத்திலும் போகத்திலும் மூழ்கித் திளைப்பதால் வரும் கேடுகள் சூழும்: “தமிழனின் இரக்க குணம், தன்மொழியை விடவும் தன் நிறத்தை விடவும், பண்பாட்டை விடவும் அயலவர் மொழி, நிறம், பண்பாடு உயர்ந்தது என்று நினைக்கும் தாழ்வு மனப்பான்மையும் அடிமைத்தனமும், தன்னலப்போக்கும், உழைப்பின்மையும், பரிசுச்சீட்டு, சூதாட்டம், போன்ற குறுக்குவழியில் பணம் தேடும் குணமும், போலித்துறவிகளை நம்பிக்கிடத்தலும், மது, போதை, போன்ற பொருட்களுக்கு அடிமையாகிக்கிடத்தலும்” (மேலது ப.37) தமிழனின் தாழ்நிலைக்கு முக்கிய காரணங்கள் எனக் குறிப்பிடுகிறார். தமிழ்வாணனும் இரணியனும் தாழ்நிலைக்கு முன்வைக்கும் காரணங்கள் பெரும்பாலும் ஒத்துச்செல்வதையும் காணமுடிகிறது. “தமிழனைப் பிறர் யாரும் தாழ்த்த வில்லை –அவன் தம்பியே தாழ்த்துகிறான்! - இந்தத் தமிழனைப் பிறர் யாரும் வீழ்த்த வில்லை – அவன் தமையனே வீழ்த்துகின்றான்.”(பெருஞ்சித்திரனார் பாடல்கள் - ப.119) என்று பெருஞ்சித்திரனாரும் தமிழ் தமிழனாலே தாழ்ந்து கிடப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். 4.முருக ரத்தினம்: தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலான மேற்குடிமக்களும் இன்றைய இளைய சமுதாயமும் ஆங்கிலமும் தமிழும் கலந்த தமிங்கிலத்தில் பேசுவது தமிழுக்கு நேர்ந்த பெரும் இழுக்கு என்கிறார். மேலும்மேட்டுக்குடிகளைப் போலவே கீழ்த்தட்டு மக்களும் தமிழும் ஆங்கிலமும் கலந்த தமிங்கில நடையைப் பின்பற்றுகின்றனர். இதனை மேல்நிலையாக்கம் எனச் சொல்வது தகும். தமிழர்களின் சமூகநிலை இவ்வாறு தாழ்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும் அறிவியல், கணிதம், கணினி போன்ற அனைத்துக் கல்வித்துறைகளையும் தமிழில் கற்பிக்கமுடியும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு இல்லை. காரணம் அறிவுத்துறைகள் அனைத்தையும் மேற்கிலிருந்து ஆங்கில மொழிமூலமாக பெற்றோம். அதன் காரணமாகவும் தமிழர்களுக்குள் தாழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்கிறார். (த.நே.வெ.1- ப.18). தாய்மொழியாகிய தமிழ்மொழி ஆதிக்கம் பெறாமைக்கான காரணத்தை நாவலர்.சோமசுந்தர பாரதியார் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்; “புத்துயிர் பெறாதபுதுக்கலை வகையிலும் விஞ்ஞான நூல்களின் வித்தகத்துறையிலும் அரசியலாளர் தம் ஆங்கில மொழி ஒன்றிலே கல்வியை நமக்குத் தந்ததன் பயன், தமிழைப்போன்ற தாய்மொழியிலும் நாம் உயர்தரக்கல்வி பயில இயலாது. இந்த இழி நிலை வந்த காரணம் இரண்டு: ஒன்று, நம்மொழியில் புதுக்கலைச் சொற்களைப் போதுமளவு இடம்பெற விடாத ஆங்கில சொற்களை அப்படியே எடுத்தாள துணியின், அம்மொழியறிவே வளருவதன்றி, தாய்மொழி வளமும் வளர்ச்சியும் குன்றும். வேணவா உடைய மாணவர்க்கெல்லாம் அயல்மொழி பயிலும் துயர் ஒழியாது. இரண்டாம் குறை: நம் தாய் மொழியிலேயே அவ்வக் கலைக்குச் செவ்விய நூல்கள் செய்யப்பெறாமை” (நற்றமிழ்-ப.41) கலைதோறும் பயில்பவர்க்கு ஏற்ற நூல்கள்இல்லை. மொழி வளமில்லாமல் தரமான நூல்கள் எழுத இயலாது. நூல்கள் வளமின்றி மொழிகளில் கல்வி உயராது. இந்தக் குறைகளைநீக்கினாலன்றி உயர்தரக் கல்வியை வளர்க்க இயலாது என்கிறார். மேலும்இ “ஆங்கிலமொழி, இந்திமொழி வழிவரும் பண்பாட்டு பழக்கவழக்கங்கள் தமிழரிடையே உச்சம் பெற்று வருகின்றன. தம் பண்பாட்டை, மொழியை இழக்காமல் வளர்ந்த ஐரோப்பிய அமெரிக்கர்களுக்கே அறைகூவி விட்டுவரும் சப்பானியரைப் போல் தமிழர்களும் வளர்ந்து இருக்கவேண்டும். ஆனால் அது போன்ற வளர்ச்சி நம்மனோர் இடத்தில் நிகழாமை அவலத்திற்கு உரியதே” (க.ப.அறவாணன்- தமிழர் இலக்கியப் பண்பாடு- அரசியல்- கல்வி- ப.89). . 5.க.பஞ்சாங்கம்: தமிழன் எந்த ஒரு கோரிக்கையை முன்வைத்தாலும் அதை நிறைவேறும் வரையில் போராடுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். தேசிய இனப்போராட்டங்களுக்குத் தமிழ் பூர்சுவாவின்(முதலாளிகளின்) ஆதரவில்லை என்றும், சந்தைப் பொருளாதாரம் எல்லாக் கதவுகளையும் திறந்துவிட்ட பிறகு முதலாளிகளுக்கு என்ன குறை இருக்கிறது. தமிழ்த்தேசிய இனக்கொள்கையில் உடன்பாடு இல்லாத ஆதிக்கவாதிகள் தமிழ்மக்கள் நடத்தும் போராட்டங்களைக் கண்டுகொள்ளவே இல்லை என்கிறார். போராட்டம் கைவிடப்படவேண்டும் அல்லது அரசால் ஒடுக்கப்படவேண்டும். இப்படிச் செய்தால் தங்களுக்குப் பாதுகாப்பு என்பது அவர்கள் நினைப்பு என்கிறார். மேலும் அவர், திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கலைக் கண்டுகொள்வதே இல்லை. எந்த மத நிறுவனங்களும் தமிழர் நலன் பாராட்டுவதாக இல்லை என்றும், பெரியார் தன்காலத்தில் கணக்கு ஒன்று எடுத்தார். சமூகத்தில் மூன்று விழுக்காடு இருந்த பார்ப்பனர், அரசு பதவிகளில் 97 விழுக்காட்டைக் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். பெரியாருக்குப் பின்னர் நம்சமகாலத்தில் இந்த வகையான கணக்கெடுப்பை யாரும் நடத்தவில்லை. அப்படியே கணக்கெடுத்தாலும் உயர்பதவியை கைப்பற்றிக் கொண்டவர்கள் தம் வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படாமல் அமைதியாக இருந்து விடுவார்களேயன்றி போராட்டத்திற்கு வரமாட்டார்கள் என்கிறார் (த.நே.வெ.1- ப.9-10). 6.தமிழன்பன்: தமிழின் ஆக்கத்திற்கான தடை குறித்த சிக்கலை மிக விரிந்த பொருளில் அணுகுகிறார். ஆங்கிலம் பயில்வதால் இந்தியாவினுள்ளும் - வெளி உலகிலும் வேலை கிடைக்கும் என்பது உண்மையல்ல. எல்லா இடங்களிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து தான் இருக்கின்றன. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்பது கூட அதிக வேலைவாய்ப்புக்கான கூலிதான் என்கிறார். கூலிக்காரனுக்கு ஏது மரியாதை என்றும், இச்சிக்கலை வேறு ஒரு கோணத்திலும் அணுகுகிறார். அதிக சம்பாத்தியம் என்பது தான் வாழ்வின் இலக்காக இருக்கமுடியுமா? பண்பாடு முதலியவற்றை ஒதுக்கிக்கொள்ள முடியுமா? என்றும் கேட்கிறார். தன்னளவில் வாழ்க்கை நிறைவுடையதாக இருக்கவேண்டும். சொந்த மண்ணில் நிறைந்த பல வளங்கள் இருக்க ஏன் அயல்நாட்டிற்குச் சென்று அடிமை கூலிகளாக வாழவேண்டும்.(த.நே.வெ.1- ப.25) “நமது நாட்டில் ஆங்கிலம் மூலம் கல்வி பெற்று, தங்கள் துறையின் மேல்அறிவுக்காகச் செர்மனிக்கும் பிரான்சுக்கும், இரசியாவுக்கும் செல்கிறவர்கள் அந்தந்த நாட்டுமொழிகளைக் கற்றுக்கொண்ட பிறகே அவர்கள் நாடிச்செல்லும் துறையறிவை அந்த மொழியின் மூலம் படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அந்தநாட்டு அறிவுச் செல்வம் முழுவதும் அந்தந்த நாட்டின் தாய்மொழிலேயே வரைந்து வைக்கப்பட்டிருப்பதால், நாம் ஆங்கிலத்தைப் படித்துக்கொண்டு அங்கே மேலறிவுக்கல்வி பெறமுடியாது” (தமிழ் தமிழன் தமிழ்நாடு- ப.28) என்ற சாலய் இளந்திரையன் கூறுவதும் இங்குக் குறிப்பிடத்தகும். தமிழ் நாட்டில் தமிழை இழந்தபிறகு தமிழனுக்கு வாழ்வு எப்படி இருக்கமுடியும். தமிழனை எங்கே சென்று தேடுவது! தமிழனுக்கு அடையாளம் என்று எதைக் குறிப்பிடமுடியும். 7.ம.இலெ.தங்கப்பா: தமிழர்களின் சமூகநிலைச் சிக்கல் குறித்து மிக விரிவாக விளக்குகிறார். கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையிலும் நடத்தப்படும் ஆங்கிலப்பள்ளிகளும் கல்லூரிகளும் தமிழ்ச்சமூகத்தின் மீது சிறிதளவும் அக்கறை இல்லாத சுரண்டல்காரர்களாலும் சூழ்ச்சிக்காரர்களாலும் நடத்தப்படுவது தமிழுக்கு மிகப்பெரிய இழிநிலை என்கிறார். பிறமொழியாளர்களிடம் தமிழன் ஏமாறும் நிலைமையையும் தமிழ் கட்டாயம் படித்தே தீரவேண்டும் என்ற சட்டம் செய்யாமையையும் சுட்டிக்காட்டுகிறார். தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப்பணியில் அமர்த்தப்படும் உயர்அதிகாரிகள் பெரும்பாலானோர் பிற மொழியினர் என்பதால் அவர்களுக்குத் தமிழின் மீது சிறிதளவும் பற்று இல்லை என்கிறார். இன்றுவரை தமிழகத்தை ஆட்சிசெய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் தமிழ்நாட்டில் தமிழ் தனக்கானத் தனி இடத்தைப் பெறுவதில் அக்கறையற்றவர்களாகவும் இருக்கின்றனர். மிகப் பெரும்பான்மையானவரிடத்தும் படித்தவர்களிடத்தும் மொழியுணர்வோ, இனவுணர்வோ, சரியான வாழ்வியல், கல்வி பற்றிய தெளிவோ இல்லாததைக் கண்டு மனம் குமுறுகிறார். மேலும் தமிழுணர்வு உடையவர்கள் நடத்தும் போராட்டங்களில் பெரும்பான்மையான மக்கள் ஒன்று கூடிப் போராடுவதில்லை. எனவே அவை வெறும் அடையாளப் போராட்டங்களாகவும் அரைகுறைப் போராட்டங்களாகவும் நின்று விடுகின்றன. இதன் காரணமாக தமிழனுக்கு போதிய வலிமை இல்லை என்கிறார் தங்கப்பா. “நமை வளர்ப்பான் நற்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ் அல்லால் நம் முன்னேற்றம் அமையாது சிறிதும் இதில் ஐயமில்லை, ஐயமில்லை அறிந்து கொண்டோம்” என்ற பாவேந்தரின் விருப்பத்தை தங்கப்பாவும் வழிமொழிகிறார். தமிழாசிரியரின் தாழ்நிலை: மஞ்சுளாதேவி: தமிழ்ச்சமூகத்தில் தமிழின் - தமிழாசிரியர்களின் இழிநிலை குறித்து தன் கருத்தினை முன்வைக்கிறார். கல்லூரிகளில் தமிழ் இலக்கியப் படிப்பு என்பது மாணவர்களைப் பொறுத்தவரை ஒரு பொழுதுபோக்காகவே பார்க்கப்படுகிறது. தமிழாசிரியர்கள் பத்தாம்பசலிகள் போலக் கருதப்படுகிறார்கள். மருத்துவப்படிப்பு, பொறியியல் படிப்பு ஆகியவற்றுக்கான தேர்வில் தமிழ் மதிப்பெண் சேர்க்கப்படுவதில்லை. இதன் காரணமாகத்தான் கல்லூரிகளில் தமிழுக்கோ தமிழாசிரியர்களுக்கோ மரியாதையில்லை. (த.நே.4- பக்.15-17) இந்த நிலை மாறவேண்டும் என்கிறார். தமிழின் பாடத்திட்டம் தற்காலச் சார்புடையதாக இருக்கவேண்டும். பழமைக்கே முதலிடம் என்பது மாற்றப்படவேண்டும் என்பது இவர் கருத்து. ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான்ஐயோவென்று போவான்’ என்ற பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டும் மஞ்சுளா உலகமயமாதல் சூழலை எதிர்கொள்ள மக்கள் சக்தியைத் திரட்டவேண்டும் என்கிறார். பாரதிதாசன் வழியில் உணர்ச்சிகரமான முழக்கங்களைக் காட்டிலும் பாரதியாரின் அறிவுநெறியிலான போராட்டங்கள் தேவை என்கிறார். வரலாற்று வழியில் உளவியல் சிக்கல்: சோ.க.அறிவுடைநம்பி: தமிழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடிமையாகிவிட்டான். இதன் காரணமாகவே அவனுக்குள் தாழ்வுணர்ச்சியும் தன்னலப்பற்றும் சமூகத்தின்மீது அக்கறையின்மையும் கோழைத்தனமும் மிகுந்துள்ளன. இப்போக்கைத் தக்க காரணம் கூறி விளக்குகிறார் சோ.க.அறிவுடைநம்பி. ஆயிரம் ஆண்டுகளாக தமிழன் மீது எத்தனையோ படையெடுப்புகள் நடந்தன. தமிழன் கொள்ளையடிக்கப்பட்டான். தமிழ்நிலம் வேற்றவர்க்கு அடிமையாகியது. எழுச்சி என்பது சாத்தியமில்லை என்பதுபோல தமிழன் அடிமைப்பட்டுக் கிடந்தான். இப்போக்கிலும் ஒரு அவலம் என்னவென்றால் “அந்நியருக்கு சேவகம் செய்யும் எட்டப்பன்களுக்கு இடங்கொடுக்க வேண்டிய நிலையும் தமிழர்களுக்கு ஏற்பட்டது. இந்த நீண்ட வரலாற்றின் விளைவை தமிழன் இன்றும் அனுபவிக்கிறானே ஒழிய அகற்றிக்கொள்ள முயற்சி எதுவும் செய்யவில்லை” என்கிறார். விடுதலை அடைந்து விட்டதாகச் கூறிக்கொண்டாலும் இந்திய அரசியலுக்குள் தமிழன் முடங்கி வாழவேண்டிய நிலை ஏற்பட்டது பற்றியும் அறிவுடைநம்பி வருந்துகிறார். இத்தகைய வரலாறு மற்றும் சமுதாயக் காரணங்கள் ஆழமான ஆய்வுக்குரியவை. தமிழனே தமிழ்மொழியை மதிக்காத போக்கிற்கும் இந்த வரலாற்றுக் காரணத்தை முன்வைக்க முடியும். தமிழன் தமிழை ஒதுக்கும் அதேசமயம் ஆங்கிலத்தைத் தழுவிக் கொள்கிறான். தமிழ் என்பது பாமரர்களின் மொழி என்பது போன்ற தோற்றத்தையும் தருகிறது. “நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்திருக்கிறதேயொழிய ஆங்கில மொழியினின்று விடுதலை அடைந்தபாடில்லை. ஆங்கிலம் பயில்வோரும் தாய்மொழியில் பேசுவதையும் இழிவெனக் கருதுகிறார்கள். இத்தகு நிலையில் தமிழ்நாட்டில் தமிழ் ஏற்றம் பெறுதல் முயற்கொம்பே. ‘சிலர் தமிழில் என்ன இருக்கிறது தமிழ் பயன்படாது. பிறமொழிக் கலப்பில்லையெனில் தமிழ் வளராது’ என்றெல்லாம் தமிழரே தமிழ் கற்றறிந்தவரே கூறும் இழிநிலை தலைவிரித்தாடுவதைப் பார்த்தால் தமிழர் நிலை பின்னாளில் மிகவும் இழிந்துபோகும்” (செந்தமிழ் ஞாயிறு திரு.வி.க.-ப.41இ42). தமிழின் இன்றைய தாழ்நிலைக்குத் தமிழாசிரியரையும் காரணமாகக் குறிப்பிடுகிறார் அறிவுடைநம்பி. “இளநிலையாசிரியர்கள், கலையாசிரியர்கள் போன்றவர்கள் மூலநூல்களையே அறியாமல் தேர்வு எழுதி வெறும் குறிப்பேடுகளை மட்டும் வைத்துத் தேறி அட்டைப்பெற்றுத் தமிழாசிரியர்களாக வந்து விடுகின்றனர். இவர்களின் மொழியறிவு தேர்வுக்குரிய அளவுதான் எனவே இவர்களுக்கே தமிழில் சரியான முறையில் பேசவும் எழுதவும் தெரியாது. இவர்கள் மாணாக்கர்களுக்கு எப்படி முழுமையான உணர்வூட்டமுடியும்?” (த.நே.வெ.2- ப.31) என்கிறார். “தமிழ்ப் பற்றை ஊட்டாத தமிழ்க்கல்வி தமிழர்க்குத் தீங்கு செய்யும்! தமிழ்ப்பற்றை வளர்க்காத மாணவரால் தமிழ்நாட்டைக் கேடு சூழும்!” - (மேற்படி- முதல் தொகுதி- ப.28) என்ற பெருஞ்சித்திரனாரின் பாடல்களிலிருந்தும் தமிழ்மொழிக் கல்வியின் தேவையை புரிந்து கொள்ளமுடியும். எழுத்துரு சிக்கல்:- தமிழின் ஆக்கத்திற்கு தடை என்ற முறையில் தமிழில் உள்ள எழுத்துக்கள் சிலவற்றையும் தமிழ் இலக்கணம் குறித்தும் சிலர் குறிப்பிடுகின்றனர். ல,ள,ழ – ர,ற – ன,ண,ந இவ்வகை எழுத்துக்கள் தொடக்கநிலை மாணவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இதைப்போலவே தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி இலக்கணம், சந்தி இலக்கணம் போன்றவை தமிழ் மாணவர்களுக்குச் சிக்கலாகவே அமைகின்றது. எனவே, “மரபின் வேர்களிலிருந்து கிளைத்துப் பெரிதும் சிறிதுமாய் பல்வேறு கிளைகளாய் விரிந்து, விழுதுகளும் வேர்களாகி வளர்ந்து நிற்கும் இக்காலத்தமிழுக்குப் புதிய இலக்கணம் தேவைப்படுகிறது.” (தமிழியல்: புதிய தடங்கள்-ப.350) என்கிறார் து.மூர்த்தி. தகுதி வாய்ந்த ஒரு தமிழாசிரியர் பொறுப்பில் முதல் இரண்டாண்டுகள் மட்டுமே விடப்படும் மாணவர்கள் திருத்தமாக எழுத்துக்கள் மற்றும் இலக்கணத்தைக் கற்க முடியும். உண்மையில் இவ்வகைச் சிக்கல் தற்பொழுது ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாக கொண்ட மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக மட்டும் கற்பதால் தான் ஏற்படுகின்றது. உண்மையில் இவை தமிழ்மொழியின் குறைபாடுகள் அல்ல. வளமான தமிழுக்கு இவை தேவையானவை. ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ ‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே’ என்றார் பாரதி. “இனிமை தமிழ்மொழி எமது – எமக் கின்பந்த தரும்படி வாய்ந்த நல் அமுது! கனியைப் பிழிந்திட்ட சாறு – எங்கள் கதியில் உயர்ந்திட்ட யாம் பெற்ற பேறு!” (பாரதிதாசன் கவிதைகள்- ப.97) என்று தமிழ்மொழியைக் கற்க கற்க அதன் சுவை பெருகும். இனிமை பயக்கும் என்றார் பாரதிதாசன். இவ்வாறாக தமிழ்மொழி கற்பதற்கும் பேசுவதற்கும் மிகவும் இனிமையான மொழி என்பது மட்டுமன்று பிறமொழிகளிலும் உயர்வானது என்பதே தமிழுக்குக் கிடைத்த பெரும் பேறு. தமிழாசிரியர்கள் தமிழ்மொழி பற்றிய தெளிவோடும், உணர்வோடும் கற்றுத்தருவதன் மூலமே தமிழின்ஆழஅகலத்தை மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். போராட்டம்: “போராட்டமின்றி பொருவில் தமிழுக்குத் தேரோட்டமில்லை தெளிவு”- (மாணிக்கக்குறள் - 163) என்கிறார் வ.சுப.மாணிக்கம். தமிழின் ஆக்கத்திற்கான போராட்டங்களைத் தமிழர்கள் நடத்துவதன் மூலமே தமிழ்வாழ்வையும் வரலாற்றையும் காத்துக்கொள்ள முடியும். சங்ககாலத்தில் தமிழ்ப் பெருமிதத்தோடு விளங்கியது. இக்காலத்திலேயே தமிழ்நாட்டிற்குள் வைதீகம் நுழைந்தது என்ற போதிலும் தமிழ்வாழ்வை அது குலைக்கவில்லை. களப்பிரர் காலத்தில் தமிழகத்திற்கு வந்து சேர்ந்த பௌத்தமும் சமணமும் தமிழ்நாட்டின் அறவியலை மேம்படுத்தின. அடுத்து வந்த பக்தி இலக்கிய காலத்தில் பௌத்தத்தையும் சமணத்தையும் தமிழர் வாழ்விலிருந்து அகற்றிய சைவமும் வைணவமும் தமிழைக் காத்தன என்பதில் அய்யமில்லை. இக்காலத்தில்தான் வைதீகம் அரசர்களின் ஆதரவோடு தமிழ்ச்சமூகத்தில் நிலை பெற்றது. இவ்வாறு முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழ்த் தன்னைக் காத்துக்கொண்டது. மூவேந்தர்களின் ஒற்றுமை: மௌரியர் தமிழகத்தின் மீது படையெடுத்த அந்த முதல் காலத்தில் தமிழ் மூவேந்தர்களும் ஒன்றுகூடி மௌரியர் படையெடுப்பைத் தடுத்தனர். “கி.மு.298இல் நடைபெற்ற இந்தப் போரை கலிங்கப்பேரரசன் காரவேலன் கி.மு.185இல் தன் அதிகும்பா கல்வெட்டில் 113 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக்கூட்டிணைவு இருந்ததைக் குறிப்பிடுகிறான்” (தமிழேந்தி-நே.வெ.3-பக்.41-42). மாமூலனாரது அகநானூற்று (31) பாடலும் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறது. மூவேந்தரின் ஒற்றுமை குறித்த செய்திகள் புறநானூற்றுப் பாடலிலும் காணப்படுகின்றன. சேர, சோழ, பாண்டிய மூவேந்தரும் ஒருங்கிருந்த காட்சியைக் கண்டு மகிழ்ந்த ஒளவையார் (புறம்.367) வாழ்த்திப் பாடுகிறார். சோழன்குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம் பதித்துத் துஞ்சிய பெருவழுதியும் நட்புடன் ஒருங்கிணைந்ததைக் கண்டு காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணையர் ‘இன்றே போல் நும்புணர்ச்சி’ (புறம்.58) என்று வாழ்த்துகிறார். மூவேந்தர் ஒற்றுமை என்பது இதற்கு பிறகு தமிழ் வரலாற்றில் என்றுமே நிகழவில்லை என்பது தமிழ் வரலாற்றில் நேர்ந்த அவலம். மொழிக்கலப்பு: தமிழ் வாழ்வுக்குள் மொழியின் பெயராலும் மதத்தின் அடிப்படையிலும் பண்பாட்டுப் படையெடுப்புகள் பேரளவில் நிகழ்ந்தன. வருணாசிரமமும் ஏற்றதாழ்வும் இச்சமூகத்திற்குள் நுழைந்துவிட்டன. தமிழ்க்கடவுள் பெயர்களும், ஊர்ப்பெயர்களும் சமற்கிருதமயப்படுத்தப்பட்டன. “சிவன், முருகன், கொற்றவை, முதலிய தெய்வங்கள் உருத்திரன், ஸ்கந்தன், துர்க்கை என்றும் மதுரை, மறைக்காடு, மயிலாடுதுறை, என்பன மதுரா, வேதாரண்யம், மாயூரம் ஆயிற்று” (மேலது- தமிழேந்தி- ப.44இ45). இவ்வாறாக தமிழ்ச் சமூகத்திற்குள் மொழிக்கலப்பு தாராளமாகபுகுந்துவிட்டதைக் காணமுடிகிறது. மொழிப்போராட்டம்: இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ச்சூழலில்மாற்றம் ஏற்படத் தொடங்கியது. தமிழன் தன் தாழ்நிலையை உணரத்தொடங்கினான். உ.வே.சா. முதலியவர்கள் பதிப்பித்த சங்க இலக்கியங்கள் முதலியவை தமிழனுக்குத் தன் தொன்மைக்கால மேன்மையை உணர்த்தலாயிற்று. தமிழன் மீண்டும் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்று நம்பத்தொடங்கினான். பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு எதிராக நீதிக்கட்சியும், திராவிட இயக்கமும் செயல்பட்டன. ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலையை மக்கள் விரும்பியதைப் போலவே சாதி, மத பார்ப்பானிய ஆதிக்கத்திலிருந்து தமிழையும் தமிழ்மக்களையும் விடுவிக்கும் போராட்டம் தொடங்கியது. மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், பாவாணர், பெருஞ்சித்திரனார் வழியாக தமிழைக் காக்கும் பேரியக்கமாகச் செயல்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1938இல் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த இராஜகோபாலாச்சாரியார் தமிழ்ப் பள்ளிகளில் இந்தியைத் திணித்தார். மறைமலை அடிகள், அண்ணா, பெரியார் முதலியவர் தலைமையில் தமிழுக்கானப் போராட்டம் எழுச்சிப் பெற்றது. பலர் சிறை சென்றனர். “பெரியார் சிறைப்பட்ட காலத்தில் இந்தி எதிர்ப்புப்போராட்டம் வேகமாகத் தமிழ்நாட்டில் பரவியது. ஏராளமான பெண்கள் இந்தி எதிர்ப்புப் போரில் கலந்துகொள்ள முன்வந்தனர். 1939இல் தருமாம்பாள் தலைமையில் இந்தி எதிர்ப்புப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் காரணமாக மக்களிடம் இந்தி எதிர்ப்பு வலுப்பெற்றது.” (த.சுந்தரராசன், இந்தி எதிர்ப்புவரலாற்றுச் சுவடுகள்- ப.87) இறுதியில் இராஜகோபாலாச்சாரியார் பின்வாங்கினார். முதல் மொழிப்போர் ஆங்கிலேயரை எதிர்த்து விடுதலைப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலமாதலால் பெயரளவில் மொழிவழி மாநில உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டது. (மதிவாணன்- த.நே.வெ.3- ப.7). இதைப்போலவே 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போர் தமிழ் வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டபடி அரசியல் சட்டம் தொடங்கிய பதினைந்தாவது ஆண்டில் மைய அரசின் நிர்வாக மொழியாக இருந்த ஆங்கிலம் அகற்றப்பட்டு இந்தி மட்டுமே இருக்கவேண்டும். இந்திமொழியின் ஆதிக்கத்திற்கு எதிராக தமிழ்மக்கள் திரண்டனர். நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இதனை, “இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70பேர் என்று அரசு அறிக்கை கூறுகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை 500 பேர்களுக்கு அதிகமாக இருக்கும். துப்பாக்கிச் சூட்டிலும் காவல் துறையின்தடியடியிலும் காயமுற்றவர்கள் 5000க்கும் அதிகமாக இருக்கும் என்று இந்தி எதிர்ப்புவரலாறு குறித்து வரலாற்றுநூல்களை எழுதிய ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.” (மேற்படி,ப.183). தமிழ்நாட்டில் எழுச்சிப் பெற்ற போராட்டத்தை அடக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. போராட்டம் ஓய்ந்தபாடில்லை. மைய அரசின் அமைச்சரவையிலிருந்து சி.சுப்பிரமணியனும் அழகேசனும் விலகினர். ஆகவே வேறு வழியின்றி 1959இல் நேரு தந்த உறுதிமொழி மேலும் தொடரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. தென் நாட்டு மக்கள் விரும்பும் வரை இந்தியோடு ஆங்கிலமும் மைய அரசின் நிர்வாக மொழியாக நீடிக்கும் என்ற உறுதிமொழியை பிரதமர் இந்திராகாந்தி அளித்தார். இரண்டாவது மொழிப்போர்: தமிழ்மக்கள் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்தனரே ஒழிய ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. இந்தி எதிர்ப்புப்போர் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியில் அமர வழிகோலியது. இதனை “இரண்டாவது மொழிப்போர் காலகட்டத்தில் திராவிட இயக்கம் தலைமை தாங்கி நடத்தினாலும் இறுதியில் இந்தி ஆதிக்கம் பின்தள்ளப்பட்டு ஆங்கில மோகம் முன்னுக்கு வந்து தேர்தல் அரசியலில் அரியணை ஏற இரண்டாவது மொழிப்போர் பயன்பட்டது” (மேலது ப.7) என்கிறார் மதிவாணன். தமிழகத்தின் முதல்வராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார் 23.1.1968 அன்று, அண்ணா தமிழகச் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். அத்தீர்மானமானது: “இனி தமிழ் நாட்டு மக்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி என்ற மூன்றுமொழிகள் பயிலத்தேவை இல்லை. இரண்டுமொழிகள் மட்டும் பயின்றால்போதும். ஓன்று தாய்மொழியாம் தமிழ். மற்றொன்று அனைத்துலகத் தொடர்பு மொழியாகப் பயன்படும் ஆங்கிலம்.” (த.சுந்தரராசன்­, இந்தி எதிர்ப்பு வரலாற்றுச் சுவடுகள்- ப.136) என்றார் அடுத்து வந்த ஆண்டுகளில் ஆங்கிலம் பள்ளிகளில் பயிற்று மொழியாயிற்று. “காங்கிரசு அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், 1967ஆம் ஆண்டுக்குள் கல்லூரிக் கல்வியில் தமிழைப் பயிற்றுமொழியாக்க ஏற்பட்ட முயற்சிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. ஆங்கில மோகம் சிறிது சிறிதாக வளர்ந்தது” (மேலது ப.17) என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பாண்டுரங்கன். நாளடைவில் பதின்ம பள்ளிகளின் போக்குக் காரணமாக அரசு பள்ளிகளிலும் ஆங்கிலம் பயிற்றுமொழியாயிற்று. இத்தகைய போக்கிற்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மூன்றாம் மொழிப்போர்: 2004இல் தமிழ் இனத்தலைவர்கள் மூன்றாம் மொழிப்போரைத் திட்டமிட்டு நடத்தினர். பழநெடுமாறன், திருமாவளவன், மருத்துவர் சேதுராமன், மருத்துவர் இராமதாசு ஆகியோர் தலைமையில் மூன்றாவது மொழிப்போர் தொடங்கியது. இவர்கள் அமைத்த ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில்’ பத்துக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1. வணிகநிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைத்தல். 2. கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக்குதல். 3. திருமணங்களைத் தமிழ் முறைப்படி நடத்தல். 4. தமிழைப்பயிற்று மொழியென அறிவித்தல். 5. தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக மாற்றல். 6. தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை செயற்படுத்தல். 7. ஊடகங்களில் தமிழ்க்கொலைகளைத் தடுத்தல். 8. தொலைக்காட்சிகளில் தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான போக்கினைத் தடுத்தல். 9. திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தல். 10. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதைச் செயல்படுத்தல். (த.நே.வெ.2- ப.6). மேற்கண்ட கோரிக்கைகள் செயல்படுத்துவதற்கு அரியவை என்று சொல்ல முடியாது. குறைந்த அளவிற்கு தமிழை வாழவைப்பதற்கான கோரிக்கைகள் இவை. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு இயக்கத்தினர் பரப்புரை செய்து, இறுதியாக 2004 மார்ச் 26ஆம் நாள் திருச்சியில் இலட்சக்கணக்கில் கூடினர். மொழிப்போரைத் தொடர்ந்து நடத்துவதென முடிவுசெய்தனர். ஆனால் இவர்கள் அறிவித்தபடி மொழிப்போர் தொடரவில்லை. இவ்வகையில் இது ஓர் அடையாளப் போராட்டமாகவே முடிவுற்றது. “தமிழின் மொழி ஆக்க எதிர்ப்பு போர்களத்திலே நின்றால் மட்டும் போதாது - தமிழகத்திலே தமிழ் உரிமைக்கும் தமிழின் பல துறை வளர்ச்சிக்கும் அவன் திட்டமிட்டு உழைக்க வேண்டும்” (தமிழுக்காக - ப.4) என்ற சாலையாரின் கூற்று இங்கு நோக்கத்தக்கது. இந்நிலையில் தீர்வுக்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றிச் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. மக்கள் போராட்டமும், மக்கள் எழுச்சியும் மட்டுமே தீர்வாக இருக்க தமிழ் வாழ்வை முழுமையாக சீர்திருத்தம் செய்தாக வேண்டும். தீர்வுகள்: தமிழர்கள் தமக்குள் மொழிப் பெருமை பாராட்டிக்கொள்ளாமல் தமிழை உலக அரங்கில் கொண்டு சேர்ப்பதன் மூலமே தமிழுக்குச் செய்யும் பெருமையாகும்.தமிழ் இலக்கிய மொழி சங்க இலக்கியம் தொடங்கத் தற்காலம் வரை வளமான மொழி என்று தமிழைப் புகழ்வதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது. தமிழ் ஒரு இலக்கிய மொழிதான். நம் காலத்திற்கான நவீன மொழியாக இல்லை என்ற எண்ணத்தை இத்தகைய கூற்று ஏற்படுத்தும். “எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம் குறை களைந்தோமில்லை.”(பாரதிதாசன் கவிதைகள்- ப.98) என்ற பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப தமிழை இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு நவீனப்படுத்தவேண்டும் என்கிற கருத்தும் பெறப்படுகிறது. தமிழ் என்பது தமிழகத்திற்கே உரியமொழி என்பதை மாற்றி, உலக அளவில் தமிழ்மொழியைக் கொண்டு செல்லவேண்டும் என்பதில் ‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்று பாரதி விரும்பியதை நினைவு கூறுகிறார். நவீனச் சிந்தனை முதலியவற்றைத் தமிழ் தனதாக்கிக் கொள்ளவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் ஏனைய மொழியாளர்களும் தமிழ் வளர்ச்சியில் பங்குகொள்ள வாய்ப்பு நேரும் என்கிறார் (த.நே.வெ.1, ப.28-29) தமிழன்பன். “தமிழன் உயர்ந்திருந்தால் அவனது மொழி, கலை, நாகரிகம், சமயம், அரசாட்சி ஆகிய யாவற்றையும் மற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து கற்பார்கள்” என்று சாலையார் கருதுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. (மேற்படி ப.104). “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல்வேண்டும.” ( ப.37) என்ற பாரதியாரின் கவிதை வரிகள் இங்கு நினைவு கூரத்தகும். தமிழின் ஆக்கம் பன்முகப்பொருளில் அடங்கியிருக்கிறது. மொழியின் ஆக்கத்தோடு மட்டும் முடிந்து விடுவதில்லை, அதனோடு தொடர்புடைய பல்வேறு துறைகளையும் சார்ந்து இயங்கவேண்டும். “தமிழ்ப்பற்று என்பது தமிழ்நிலத்தின் மீது, தமிழ்மக்கள் மீது, தமிழ் வரலாற்றின் மீது, தமிழ்க்கல்வியின் மீது, தமிழ் மருத்துவத்தின் மீது, தமிழ் மரபின் மீது உண்மையான பற்றாக இருக்கமுடியும்” (ஞானி, த.நே.வெ.1- ப.23). தமிழ்க்கல்வியை தமிழுணர்வுடன் மாணவர்களுக்கு எளிதில் புரியவைப்பது ஆசிரியர்களின் கடமை என்று கூறும் ஞானி, திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் கற்பிப்பதால் உண்மையான மொழியுணர்வையும் அறவுணர்வையும் மாணவர்கள் நெஞ்சில் பதிய வைக்கமுடியும் என்கிறார். தமிழ்மரபின் முக்கியக் கூறுகளான சமத்துவத்தையும் சமதர்மத்தையும் கல்லூரியிலேயே மாணவர்களுக்கு ஊட்டுவதன் மூலம் இளைஞர் சமூகம் எழுச்சி கொள்ளும். தமிழின் மேன்மை, விடுதலை என்பனவற்றை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பதன் வழியாக தமிழ்ச்சமூகம் உன்னத நிலையை அடையமுடியும் என்பது இவர் கருத்து. தமிழன் தன்னளவில் சுருங்கிவிடாமல் உலகளவிலான மனிதச் சமூகத்தோடு ஒன்றியிருந்து அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளமுடியும். மெக்காலே கல்வித்திட்டத்தை உதறிவிட்டுத் தமிழ்த்தேசிய கல்வித்திட்டத்தை உருவாக்கவேண்டும் என்கிறார் கோவி. “தாய்மொழியின் தனித்தன்மையை வேரறுப்பதற்கு மெக்காலே கல்விக்கொள்கை முன்வைக்கப்பட்டது. இன்று ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத நிலை ஏற்பட்டுள்ளது.” (த.சுந்தரராசன்- தமிழ்த்தேசியம்இப.110) அந்நியகல்வி முறையை கைவிட்டு தாய்த்தமிழ்க் கல்வியை வலியுறுத்துகிறார் மருத்துவர் கோவி. தாய்த்தமிழ்ப் பள்ளிகளைச் சிறந்தமுறையில் வளர்த்தெடுத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியிருந்தால் மட்டும் தமிழ் ஏற்றம் பெற்றிருக்கும். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி செழித்து வளர்ந்த தாய்த் தமிழ்ப்பள்ளிகளை அரசு உரியமுறையில் வளர்க்கவில்லை. தமிழ் இயக்கங்களேனும் ஆதரித்திருக்கவேண்டும். இதன்காரணமாக இப்பள்ளிகள் முழுமையான வளர்ச்சியை /போதிய கட்டமைப்பு வசதிகளைப் பெறமுடியாமல் போனது. ஒரு சில தமிழ்ப்பற்றாளர்கள் / தமிழ் உணர்வாளர்களின் ஆதரவோடுஇப்பள்ளிகள் தன்னளவில் சுருங்கி அழிந்து விடாமல் உயிர்த்துடிப்போடு இன்றும் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் பயின்றவர் இறுதிவரை தமிழுணர்வோடு விளங்குவர். (த.நே.வெ.2- ப.36). தாய்த்தமிழ்க்கல்வி என்பது ஒரு குழந்தைக்குத் தாயின் மீது என்ன உணர்ச்சியோ, அதே உணர்ச்சியைத் தமிழின் மீதும், பள்ளியின் மீதும் ஏற்படுத்தும் நோக்கோடுதான் தாய்த்தமிழ்ப்பள்ளி செயல்படுகிறது திறனாய்வுணர்வை தமிழாசிரியர்கள் வளர்க்க வேண்டும். மாணவர்களிடம் ஆசிரியர் கேள்வி கேட்பதைப் போலவே மாணவர்களும் ஆசிரியரிடம் கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும். புராணக் கதைகள் இம்முறையில் கேள்விக்குரியவையாக அமையும் என்கிறார். கேள்வி கேட்கும் உணர்வை பெற்ற மாணவர்கள் தம் அறிவை வளர்த்துக் கொள்வார்கள். (குணவதி- த.நே.வெ.3- பக்.64-65) திறனாய்வுணர்வில்லாமல் தமிழ் ஆக்கம் பெறவே முடியாது என்பதும் உண்மை. வகுப்பறையில் கேள்வி கேட்கும் பண்புதான் மாணவர்களைக் கல்வியில் ஈடுபாடுடையவர்களாக மாற்றும். மேலும் நுட்பமான வாசிக்கும்ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமையும். மேலும் மாணவர்களை ஆய்வு மனநிலைக்கு இட்டுச்செல்லும். இதிலிருந்து தான் ஒரு சிந்தனையாளர், ஓர் எழுத்தாளர், ஒரு பேச்சாளர் ஒரு விஞ்ஞானி உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அப்படி ஒரு சுதந்திரம் மாணவர்களுக்கு வாய்க்காத போது இயந்திரத்தனமான நிலைக்குத் தள்ளப்படுகிறனர். கல்விச் சுதந்திரம் தேவை என்பது வற்புறுத்தப்படுகிறது. தாய்மொழிக் கல்வியால் மட்டுமே மாணவர்களின் சுயசிந்தனை வளர்க்கப்படும். மாணவர்கள் எந்த ஒன்றையும் புரிந்துகொள்ள முடியும். படித்தவற்றையும் கேட்டவற்றையும் நினைவில் நிறுத்திக்கொள்ள முடியும். உலகில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெறுவதற்கு தாய்மொழிக்கல்வி தான் சிறந்த கல்வியாக இருக்கமுடியும் (கி.செல்வரங்கன்- மேலது, ப.67) “தாய்மொழியே பாடமொழி’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தத் தொடங்கிவிட்டால் ஆங்கில மோகக் கசிவு குறைந்து சிறிது காலத்தில் நின்றே போகும். இன்று ஆங்கிலத்துக்குப் பல்லாண்டு பாடுகின்றவர்களே ‘தாய்மொழி வாழ்க!’ என்று முழங்கத் தொடங்கிவிடுவார்கள்” (தமிழுக்காக -ப.90) என்று சாலையார் கூறுவதில் நமக்குள்ளும் நம்பிக்கை துளிர்க்கிறது. மு.செல்லப்பன்: கேரளாவிலும் மகாராட்டிரத்திலும் பசுமை இயக்கம், கூட்டுறவு இயக்கம், நாட்டார் வழக்காற்றியல் ஆகியவை போல இளைஞர்களை உள்ளடக்கி தமிழ்நாட்டிலும் இயக்கங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிறார். தமிழ் இளைஞர்களின் சமூக உணர்வை வளர்ப்பதற்கு இந்த இயக்கங்கள் பயன்படும். சமூக உணர்வு வளர்ந்த நிலையில் தமிழுணர்வு தானே வளரும் என்பது செல்லப்பன் கருத்து. அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான இயக்கமும் தேவையான இயக்கம். இளைஞர்களை ஒன்றுகூட்டி சிற்றிதழ்களைத் தொடங்கவேண்டும். விரிவான கருத்துரைகள் இதழில் இடம்பெற வேண்டும். தமிழன் தன்னுணர்வை பெற இவை தேவை. அறிவிப்பு பணியோடு ஓய்ந்துவிடவும் முடியாது. அரசின் நிதி உதவியை ஏற்று தமிழ் இளைஞர்கள் தொழில் முனைவோர்களாகத் தம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும். அந்நிச் சார்பின்றி உள்நாட்டு மூலவளங்களையே அவர்கள் பயன்படுத்தவேண்டும். அதனால் அவர்களுக்குத் தன்னம்பிக்கையோடு தமிழுணர்வும் வளரும். இவ்வாறு சில தீர்க்கமான முடிவுகளை முன்வைக்கிறார் (த.நே.வெ.2 ப.47) செல்லப்பன். இது காலத்தின் தேவை. தனராசு சுட்டிக்காட்டும் தீர்வு மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் அரசு ஆவணங்கள், பள்ளிச்சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களில் தேசிய இனம் ‘தமிழர்’ என்று பதிந்து கொள்ளும் உரிமையைப் பெறுவதன் மூலமே தமிழின் ஆக்கத்திற்கான தடை நீங்கும் என்கிறார். தமிழர் மத்தியில் ஒற்றுமை இருந்தால் மட்டுமே தமிழ்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, தமிழ் அமைப்புகளும், தனித்தமிழியக்கங்களும் தமக்கிடையில் உள்ள புலமைக் காய்ச்சலை மறந்து தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவதன் மூலம் மழுங்கடிக்கப்பட்ட தமிழுணர்வு கூர்மைப்படுத்தப்படும் என்கிறார். ஆசிரியர் சங்கங்கள், வழக்கறிஞர் சங்க அமைப்புகள் தொழிற்சங்க அமைப்புகள் போன்ற அனைத்துச் சங்கங்களும் தமிழ்மொழி உணர்வோடு இணைந்து செயல்படும் போது தான் மொழி உணர்வு மேம்படும் (த.நே.வெ.4- பக்.13-14) என்கிறார் தனராசு. “தமிழ்ப்புலவர் ஒன்றுபடும் நன்னாளே தமிழர்க்குப் பொன்னாளாகும்! தமிழ்ப்பெருநூல் ஒன்றேனும் ஒற்றுமையைத் தடைசெய்யக் கண்டதுண்டோ?” என்றார் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் ஈண்டு எண்ணத்தகும். இன்றைய தமிழ்ச்சூழலில் கிறித்தவர்கள் தமிழுணர்வைப் பெறுவதில் உள்ள சிக்கலைப்பற்றி விவரிக்கிறார் சுதாகர். “உண்மையில் ஐரோப்பாவிலிருந்து தமிழகத்திற்கு சமயப்பணி செய்வதற்காக வந்த துறவிமார்கள் தமிழால் ஈர்க்கப்பட்டுத் தமிழ்த் துறவிகளைப்போல் ஆடை அணிந்து வாழ்ந்தனர். 1.இராபர்ட்டிநோபிலி 2. வீரமாமுனிவர், 3.சீகன்பால்கு 4.ஜி.யு. போப் 5.கால்டுவெல் ஆகியவர்கள் தமிழை வளர்ப்பதிலும் தமிழுக்குத் தொண்டுகள் புரிவதிலும் பெரும்பங்காற்றினர். தமிழ்நாட்டிலும் வேதநாயகர், பாவாணர் போன்றவர்களும் உண்மையான தமிழர்களாக இருந்து தமிழை வளர்த்தனர். இன்றைய கிறித்துவப் பெருமக்களைப் பொறுத்தவரை சமயச்சார்பு அவர்களின் தமிழுணர்வைத் தடுக்கிறது” (த.நே.வெ.3-ப.33) என்று குறிப்பிடுகிறார் சுதாகர். அதே சமயம் தமிழுணர்வு மிக்க கிறித்துவர்களையும் மறக்கக்கூடாது. தமிழின் ஆக்கத்திற்கு சமய உணர்வும் தீர்வு என்பதற்கு நல்லசான்று “1605இல் இந்தியா வந்து சேர்ந்த இராபர்ட்டி நோபிலி மொட்டையடித்து மேலே காவியும் காலில் மரக்கட்டை மிதியடியும் அணிந்து நெற்றியில் சந்தனப்பொட்டுடன் ஓலைக்குடிசையில் தங்கித் தத்துவப்போதகர் எனும் பெயருடன் தமிழ்வழியே மதம் பரப்பினார்”(க.ப.அறவாணன்-தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?- ப.6). தமிழை ஒரளவே பேசத் தெரிந்தவராயினும் தமிழுணர்வு கொண்டிருப்பாராயினும் அவர்களையும் தமிழராகவே ஏற்றுக்கொள்வதில் இழுக்கில்லை ஜி.யு.போப் பெருமகனார் தம் கல்லறையில் ‘தமிழ்மாணவன்’ என்று எழுதிவைக்குமாறு கூறினார் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது. இந்தியாவில் பிராமணர்களைப் போல சாதி உணர்வில் வளர்ந்தவர்கள் ஜப்பானிலும் தாமிலோ என்ற இனம் இருந்தது. கிபி.1869இல் மார்ச் 5ஆம் நாள் இவர்கள் ஓர் இனம் என்ற முறையில் தங்களுக்குத் தனி உரிமை தேவை இல்லை என்று ஜப்பானிய மன்னர்க்கு அறிவித்தார்கள். அவர்களைப் போலவே இங்குள்ள பிராமணர்களும் தம் தனி உரிமையையும் தனித்தன்மையையும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். பிராமணர்களுக்கு எதிரான போராட்டத்தைக் காட்டிலும் பிராமணர்கள் தம்மை மாற்றிக்கொள்வதன் தேவை பற்றிய கருத்தை முன்வைக்கிறார் (த.நே.வெ.4- ப.22) தி.அன்பழகன். மேலும், அவர் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தனிநாடாக இருக்கும் தகுதியுடையவை என்று 1946இல் வந்த இந்தியத் தூதுக்குழுவிடம் பொதுவுடைமை கட்சி முன்வைத்த கோரிக்கை பற்றிக் குறிப்பிடுகிறார். தில்லி மாநிலங்களின் அவையில் 1926 மார்ச்15இல் பேசிய கேரளாவைச் சேர்ந்த சங்கரநாயர் தமிழ்நாடு தொன்மைக்காலம் முதலே தனிநாடாக இருந்துள்ளது என்கிறார். தனிநாட்டுக் கோரிக்கை என்பதற்கு இத்தகைய கூற்றுகள் ஆதாரம். இந்தியாவை ஒரு நாடாக அல்லது ஒரு தேசியமாக உருவாக்குவதில் உள்ள தீராத சிக்கல் குறித்தும் இக்கருத்துகளின் வழியே உணர முடியும். இவ்வாறாக ஓர் அரசியல் தீர்வை முன்வைக்கிறார்.(த.நே.வெ.3- ப.53). கடவூர் மணிமாறன் தமிழத்தேசிய தன்னுரிமை இயக்கம் ஏற்படுத்துவதன் வழியே தமிழுக்குத் தீர்வு கிட்டும் என்பதைக் குறிப்பிடுகிறார். தமிழ்ப்பண்பாடு, தமிழ்மெய்யியல், தமிழ்வாழ்வியல் ஆகியவை பற்றிய உணர்வை தமிழ் மக்களுக்கு ஊட்டுவதோடு தமிழ்த்தேசிய தன்னுணர்வையும் இளைஞர்களுக்கு மூத்தவர்கள் ஏற்படுத்தவேண்டும். மொழி சார்ந்த இயக்கம் அரசியலையும் தழுவிக் கொள்வதில் தவறில்லை. தமிழன் தற்பெருமை காரணமாகத் தனக்குள்ளேயே சுருங்கி தான் இருப்பதே உலகம் என்று கருதிக் கொண்டிருக்காமல் உலக அரங்கில் தமிழன் தலைமிர்ந்து நிற்வேண்டும். தமிழ்ச் சூழலை உலகின் அறிவுச் சூழலுக்கு ஏற்ப வளர்த்தெடுக்கவேண்டும். தமிழர்களின் மெய்ப்பொருள் கருத்துகளை உலகளவில் பரப்ப வேண்டும். தமிழ் உலகமொழியாக வளர்வதற்கு தமிழ் வணிகர்கள் உலகமெங்கும் வணிகர்களாக வளர வேண்டும். தமிழால் அறிவைத் தரமுடியும் என்று உறுதியாகக் கூறும் சோதிப்பிரகாசம், பல துறையாளர்களுக்கும் தமிழ் வளர்ச்சியில் பங்கு என்பதைப் பதிவு செய்கிறார் (ப.12). “அழியாமல் இருப்பது மட்டுமே ஒரு மொழிக்குப் பெருமையாகிவிடாது. எல்லாத் துறைகளிலும் வளர்ந்து செழிப்பதுதான் மொழிக்குப் பெருமை” என்ற சாலய் இளந்திரையனின் கூற்று இவர் கருத்தோடு எண்ணத்தகுந்தது. (தமிழுக்காக- ப.32). புலவர் சுவாமிநாதன் மும்மொழிக் கொள்கையின் தேவையை உணர்த்துகிறார். ஆங்கிலத்தோடு இந்தி மொழியையும் கற்கமுடியும் என்றால் தில்லியில் இந்திய நிருவாகத்திற்கு இந்தியைப் போலவே மாநில மொழிகளையும் ஏற்குமாறு வற்புறுத்தமுடியும் என்கிறார். இதற்கான முறையில் இந்திய அரசியல் சட்டத்தில் கூட்டாட்சி முறையை நோக்கிய பல மாற்றங்களைச் செய்யவேண்டும். ‘மலையைக் கவ்வி எலியைப் பிடிப்பது போல அத்திட்டம் தோன்றினாலும் இதன் சாத்தியம் குறித்தும் சிந்திப்பது தேவைதான்’ (த.நே.வெ.2- ப.41) என்கிறார். பூ.அர.குப்புசாமி தம் நிலைப்பாட்டை கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு நிலவும் காலம் வரையிலும் சாதியும், மதமும் அழியாது. தமிழனுக்கு வாழ்வு கிட்டாது. இத்தகைய சூழலில் தமிழ் இளைஞர்கள் கொஞ்சம் பேராவது தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்கிறார் (த.நே.வெ.3- ப.38). ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ என்றும் குப்புசாமி வேண்டுகிறார். தீர்வுக்கு ஓயாத தடைகள் இருப்பதன் காரணமாக இப்படி ஒரு தீர்வை முன்வைக்கிறார். இவை எந்த அளவுக்கு சாத்தியம் என்பது பற்றியும் சிந்தனை தேவை. இதனை, ‘சேதாரம் இல்லாது நகை செய்யமுடியாது. சிலரேனும் மடியாமல் பகை வெல்லமுடியாது.’ என்ற சாலை இளந்திரையன் கூற்றும் அரண் சேர்ப்பனவாக அமைகிறது. ‘தமிழனுக்கு வீழ்ச்சியில்லை, தமிழன் கீர்த்தி தாழ்வதில்லை!’ ‘தமிழ் எங்கள் உயிர் என்பதாலே வெல்லுந் தரமுண்டு தமிழுக்குப் புவிமேலே’ என்ற பாரதிதாசனின் முழக்கம் தமிழுக்கும் தமிழனுக்கும் விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கை எழுகிறது. “எப்படியேனும் இத்தமிழகத்தை முப்படி உயர்த்திடல் வேண்டும் - என் மூச்சதற் குதவிடல் வேண்டும்! ………… தமிழ்ப்படி யேறின் தமிழகம் ஏறும்! தாழ்நிலை இழிவுகள் மாறும்!”-(பெருஞ்சித்திரனார் பாடல்கள்-ப.16) தமிழை மூச்சாகக் கொண்டு பெருஞ்சித்திரனார் வாழ்ந்துகாட்டினார். தமிழனாய் இருப்பது என்றால் உலகத்தார் அனைவரையும் தமிழராய் மாற்றவேண்டும் என்பதல்ல. குறள் காட்டும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உலகமெங்கும் பரவச் செய்யவேண்டும் என்பதும் அல்ல. தமிழினத்தின் தனித்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதல்ல. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ்க்கொள்கையைநனவாக்க வேண்டும். கடவுள் உண்டா இல்லையா, எந்த மதம் - எந்தச் சாதி சிறந்தது என்று கேள்வி கேட்பதல்ல தமிழனது பிரச்சனை, ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஓரு பரிணாம உந்துதலால் ஏற்பட்ட நிகழ்வு அல்ல, அவனுக்கு என்று ஒரு வரலாறும் நிகழ்காலமும் எதிர்காலமும்உண்டு. தமிழினஅடிப்படையில் தமிழனாய் இருப்பது சுமையல்ல சுகமே. (அழகப்பா ராம்மோகன்- தமிழ்மறை திருக்குறள்- ப.1668) தமிழ்ச்சான்றோர், கல்வியாளர்கள், போராசிரியர்கள், பள்ளிஆசிரியர்கள் இவர்கள் மட்டுமல்ல. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் தமிழுணர்வோடு போராடினால் தமிழ்மொழி எழுச்சி பெறும்என்பது உறுதி. தமிழர்கள், தன் அடிமை உணர்விலிருந்தும், தாழ்நிலையிருந்தும் விடுபட்டு ‘தமிழன்’ என்று உலக அரங்கில் பதிவு செய்வதன் வழியே தமிழ்ச்சமூகத்தில் மாற்றம் ஏற்படும். தமிழர்தம் அடையாளத்தைக் காப்பாற்றிக் கொண்டால் உலகில் தலை நிமிர்ந்து நிற்கமுடியும். தொகுப்புரை - தமிழ்வளர்ச்சிக்கான தடைகளும் தமிழ்வளர்ச்சிக்குத் தமிழர் நடத்திய போராட்டங்களும் தமிழின் ஆக்கம் குறித்த தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. கல்வித்துறையின் அனைத்து மட்டங்களிலும் தமிழைக் கட்டாயம் படித்தே தீரவேண்டும் என்று சட்டம் இயற்றப்படவேண்டும். - ஆட்சிமொழியைப் பொருத்தவரை குறிப்பாக மாவட்ட அளவிலும் உயர் மட்டத்திலும் தமிழ் இல்லை. கீழமை மற்றும் அமர்வு நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடலாம். தீர்ப்பு எழுத இயலாது. உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு அறவே இடமில்லை. தமிழர்க் கோவில்களில் வழிபாட்டு மொழியாகத் தமிழ் ஏற்கப்படவில்லை. ஊடகங்களிலோ தமிழின் நிலைமிகவும் தாழ்ந்துள்ளது. - ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பிறமொழியினரின் ஆளுகைக்கும் ஆதிக்கத்திற்கும் உட்பட்ட தமிழன் தாழ்வுணர்ச்சி காரணமாக தன்மானமற்ற அடிமையானான். அதன் காரணமாகவே அந்நியர் மொழியாகிய ஆங்கிலத்தை விரும்பிக் கற்றான். ஆங்கில மோகத்தினாலும்இ வெளிநாடுகளில் வேலை என்ற வேட்கை காரணமாகவும் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி பிற நாடுகள் பலவற்றில் கூலி அடிமையானான் தமிழன். - மேற்கிலிருந்து அறிவியல் தொழில்நுட்பங்கள் முதலியவற்றை ஆங்கிலத்தின் வழியாக கற்றதன் விளைவாக சொந்தமாக படைக்கும் திறன் அற்று தாழ்வுணர்வுக்கு ஆளாகினான். தமிழுக்கு இவற்றைச் சொல்லும் திறன் இல்லை என்று நம்பினான். - தமிழ்த்தேசிய உணர்வற்ற தமிழ்முதலாளிளும் வணிகர்களும் உலகமயமாதலை வரவேற்கின்றனர். தமிழ்த்தேசிய உணர்வு இயக்கங்கள் அடக்கப்படுவதை உள்ளுர இவர்கள் விரும்புகின்றனர். - வெளிநாட்டில் உயரளவில் கூலி பெறுவதைக் காட்டிலும் தன் சொந்த நாட்டில் இயற்கையோடும் பிறமக்களோடும் ஒன்றி வாழ்கின்ற அர்த்தமுள்ள வாழ்க்கையை தமிழன் இழக்கிறான். தமிழையும் இவன் இழந்து தவிக்கிறான். - தமிழாசிரியர்கள் நவீன அறிவுலகம் பற்றி அறியாதவர்களாக இருப்பதன் காரணமாக இவர்களை மாணவர்கள் மதிப்பதில்லை. இடைநிலை ஆசிரியராக இருந்து அதிகம் ஊதியம் பெறமுடியும் என்பதன் காரணமாகத் தமிழை அரைகுறையாகக் கற்றுத் தமிழாசிரியர் பட்டம் பெற்றவர்கள் தமிழ்இலக்கிய அறிவோ போதிய இலக்கண அறிவோ போதுமான அளவில் இல்லாததால் மாணவர்களுக்கு இவர்கள் நல்ல தமிழைக் கற்றுத் தர முடிவதில்லை. - ஆங்கிலத்தில் தான் அறிவுண்டு என்பதைப்போல மாணவர்களிடத்தும் பெற்றோர்களிடத்தும் நம்பிக்கை ஏற்படுத்திய கல்வி வணிகர்கள் தமிழ்ப்பற்று இல்லாதவர்களாக இருப்பதில் வியப்பில்லை. இவர்களோடு அரசும் ஒத்துழைப்பதால் தமிழ் பெரும் தாழ்நிலைக்குள்ளாகிறது. - தமிழின் ஆக்கம் என்பதில் தமிழாசிரியர்களுக்கு மட்டும் தான் பொறுப்புண்டு என்பதில் உண்மையில்லை. பிற துறையாசிரியர்களுக்கும் பொறுப்புண்டு . - தமிழ்மொழிக்குள் பிறமொழி ஆதிக்கம் செலுத்தியதன் காரணமாக ஏற்பட்ட பின்னடைவை மாற்றும் பொருட்டு இருபதாம் நூற்றாண்டில் மூன்று மொழிப்போர்கள் நடைபெற்றன. மிக நீண்ட போராட்டமாக 1965இல் தமிழகத்தில் பரவலாக எழுந்த ஆற்றல் மிக்க இந்தி எதிர்ப்புப்போர் வெற்றி பெற்றது. ஆங்கில மோகத்திலிருந்து தமிழர்களைக் காக்க, 2003இல் ஏற்பட்ட மூன்றாவது மொழிப்போர் எத்தகைய தீர்வையும் தமிழ் மக்களுக்குத் தராமல் ஒர் அடையாளப் போராகவே முடிவுற்றது. - தமிழின் ஆக்கம் என்பது மொழியின் ஆக்கம் மட்டுமல்ல. தமிழ்ச்சமூகத்தின் தமிழ் மக்களின் ஆக்கமும் சேர்ந்துதான். திருக்குறள் கற்பதென்பது அறநெறியைக் கற்பதாகும். சிலம்பைக் கற்பதென்பது நீதி உணர்வை புரட்சிகர உணர்வைக் கற்பதாகும். இவ்வாறு தமிழுக்கு/தமிழனுக்குப் பன்முகப் பார்வை தேவை. - மாணவர்களுக்குத் திறனாய்வு உணர்வை வளர்ப்பதன் மூலம் தமிழ் ஆக்கம் பெறும். தமிழ்த்தேசியக் கல்வி என்ற ஒரு திட்டத்தை வகுத்துச் செயல்படவேண்டும். - தாய்த்தமிழ்ப்பள்ளி வழியே கற்கும் கல்வி, மாணவர்களின் நெஞ்சில் தமிழ் உணர்வை விதைக்கும். தமிழ் இயக்கங்கள் இத்தகைய பள்ளிகளை அரவணைக்கவேண்டும். தாய்மொழி மூலம் கல்வி கற்பதே இயற்கைநெறி. இத்தகையவருக்கே சுயசிந்தனை பெருகும். இவர்களுக்கே நாட்டுப்பற்றோடு மொழிப்பற்றும் சிறக்கும். - ஐரோப்பாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த கிறித்துவத் துறவிகள் தமிழுணர்வு பெற்று தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியது போல, இங்குள்ள கிறித்துவர்களும் தமிழுணர்வு பெறவேண்டும் - மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதலிய ஆவணங்களில் ‘தமிழன்’ என்று தன் தேசிய இனத்தைப் பதிவு செய்வதன் மூலமே தன் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். - தமிழகத்தில் கல்வித்துறையில் மும்மொழிக் கல்விக்கொள்கை இருந்தால் மட்டுமே எல்லா மாநிலங்களின் மொழிகளும் மத்திய அரசில் அலுவல் மொழியாக இருக்கவேண்டும் என்பதை வற்புறுத்த முடியும். இந்திமொழி பேசுபவர்களும் இந்தியாவின் பன்முகத் தன்மையைப் புரிந்து கொள்ளமுடியும். - வரலாற்றில் தமிழன் தனக்கெனச் சொந்தநாடு பெற்றிருந்ததை இந்தியர்கள் உணரவேண்டும். ஒரு கூட்டாட்சியில்தான் தமிழர் தன் உரிமையோடு வாழ்வதற்கு வழி செய்ய முடியும். தாங்கள் நெடுங்காலமாக அனுபவித்து வந்த தனி உரிமைகள் இவ்வாறு இல்லாத நிலையிலும் அரைகுறைப் போராட்டங்கள் வெற்றி பெறாத நிலையிலும்இ தமிழ்த்தேசிய தன்னுரிமை தேவை. - மூவேந்தர்கள் தங்களுக்குள் ஒன்றிணைந்து மௌரியர் ஆட்சியை எதிர்த்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட இந்தக் கூட்டிணைவு இன்று வலுப்பெற்றால் தமிழின் ஆக்கம் வலுப்படும். - தமிழ் இளைஞர்கள் ஒன்று கூடி போராடி தம் வாழ்வையும் உயிரையும் தியாகம் செய்வதன் மூலமே தமிழனுக்கு வாழ்வும் வளர்ச்சியும் சாத்தியம். - தமிழ் என்பது தமிழனுக்கு இன்றியமையாத ஓர் அடையாளம் மட்டுமல்ல. பாரதிதாசன் கூறியதுபோல உயிராக இருக்கவேண்டும் ஆகவே தமிழைக் காப்பதில் தமிழன் தன்மானத்தோடு தமிழ் காக்கும் போரில் ஈடுபடுவது தவிர்க்க இயலாதது. தமிழனுக்குத் தொன்மையில் மட்டும்தான் மேன்மை உண்டு என்பதை மாற்றி நவீன உலகிலும் வாழ்வதற்குத் தகுதியுண்டு என்பதை நிலை நிறுத்தவேண்டும். - தமிழன் மேன்மை பெற எண்ணிய கனவுகளை எல்லாம் நனவுகளாக்க மிகு உழைப்பை மேற்கொள்ளவேண்டும். தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் என்னும் பொருளில்அமைந்த ஞானியின் நோக்கு நிலை கட்டுரையில் தொன்மைக்காலத்தில் தமிழ்நாகரிகம் மேன்மையைப் பெற்றிருந்த போதிலும் இடைக்காலத்தில் வடக்கிலிருந்து வந்த ஆரிய நாகரிகம் பெற்ற செல்வாக்கின், காரணமாக தமிழ்நாகரிகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வேற்று மொழியினரின் ஆளுகைக்கு உட்பட்ட தமிழர்நாகரிகம் பல மாற்றங்களை எதிர்கொண்டே வந்திருக்கிறது. தற்காலத்தில் தாரளமயம் போன்ற இன்ன பிற நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காகத் தமிழர்கள் கடுமையாகப் போராடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாக அமைகிறது. இன்றைய உலகச்சூழலில் தமிழ்நாகரிகத்தைத் தமிழர்கள் காப்பாற்றித் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற பொருண்மை குறித்து ஞானி தமிழ்உணர்வாளர்கள் மற்றும் தமிழ்ஆர்வலர்களுக்கு மடல் எழுதிஅவர்களின் எதிர்வினைக் கட்டுரைகளைப் பெற்றுத், தமிழ்நேயம் இரண்டு சிறப்பிதழ்களில் (இதழ்-26ஆக.2006, இதழ்-27,அக்.2006) வெளியிட்டுள்ளார். இதில் ஞானியின் நோக்கு நிலை கட்டுரையோடு, இவ் இரண்டு இதழ்களிலும் இடம்பெற்ற முப்பத்து ஏழு கட்டுரைகள் பொருண்மை அடிப்படையில் ஏழு பிரிவுகளாகப் பகுத்து ஆய்வு செய்யப்படுகின்றது. 1. நாகரிகம் /பண்பாடு பற்றிய விளக்கங்கள். 2. தொன்மைக்காலமும் தமிழ்நாகரிகத்தின் விழுமியங்களும் 3. இடைக்காலம் - தமிழ்நாகரிகமும் ஆரிய நாகரிகக் கலப்பும். 4. தற்காலம் - நெருக்கடிகளும் எதிர்வினைகளும். 5. தமிழ்நாகரிகமும் எதிர்காலமும். 6. தமிழ்நாகரிகத்திற்கு வாழ்வு உண்டு. 7. தமிழ்நாகரிகமும் மாற்றமும் என்பது பற்றி இவ்வியலில் ஆராயப்படுகின்றன. நாகரிகம்/ பண்பாடு பற்றிய விளக்கங்கள்: நாகரிகம் என்ற சொல் நாகரிகத்தை மட்டுமல்லாமல் நாகரிகத்தின் அகத்துறுப்பான பண்பாட்டையும் பொதுவாகச் சுட்டி வருகிறது. ஒரு மனிதனின் / ஓர் இனத்தின் அகவெளியோடு தொடர்புடைய அதாவது உள்ளம் சார்ந்த ஒழுகலாறுகள் பண்பாடு ஆகும். புறவெளியோடு தொடர்புடைய உடல்சார்ந்த ஒழுகலாறுகள் நாகரிகம் என்பதாகும். தற்காலத்தில் நாகரிகம் என்னும் சொல்லையும் பண்பாடு என்று பொருள்படுத்துவது வழக்காயுள்ளது. தொல்காப்பியர் கருப்பொருள் என்பதனுள் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றை உள்ளடக்கியிருக்கிறார். “தெய்வம், உணாவே, மா, மரம்,புள், பறை, செய்தி யாழின் பகுதியொடு தொகை, அவ்வகை பிறவும் கருவென மொழிப“(தொ.அக.964) என்ற சூத்திரத்தினுள் தெய்வம், இசை முதலிய பண்பாட்டுக் கூறுகள் இடம்பெறுகின்றன. நற்றிணையில் நாகரிகம் என்பதற்குச் சிறந்த விளக்கம் தரப்படுகிறது. “முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர்நனிநாகரிகர்.”( 355) என்கிறது. வள்ளுவரின் கருத்தின்படி நாகரிகம் என்பதே பண்பாடு எனப் பொருள்படுகிறது. “பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.”(580) இக் குறளில் நாகரிகம் என்ற சொல் பண்பாட்டைக் குறிப்பிடுவதைக் காணமுடியும். பண்பாடு என்பது “ஒரு குறிப்பிட்ட நாடு, இடம் போன்றவற்றைச் சேர்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனை வெளிப்பாடு, வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருக்கும் பொருள்கள் போன்றவற்றின் மொத்தம் / கலாச்சாரம்” என்று பொருள்படுத்துகிறது க்ரியா அகராதி. (ப.887) பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம், நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. முன்னது அகக்கூறு பின்னது புறக்கூறு என்கிறார் பாவாணர். “நாகரிகம் என்பது விரிந்த பொருளுடையது எனினும் பண்பாடு என்பதனுள் நாகரிகம் அடங்கிவிடும்.நாகரிகமும்பண்பாடும் பிரித்துக் கூறுவது எளிதாக இராது” என்பார் தனிநாயகம் அடிகள். (தமிழர் பண்பாடுஅதன் சிறப்புகளும், ப.20) பண்பாடு என்பது ஒரு புதிய சொல். முன்னர் ‘சால்பு’ என்னும் சொல் இக்கருத்தை ஒரளவு விளக்கக்கூடியதாக அமைந்தது. தமிழ் மக்களுக்குரிய மிக உயர்ந்த பண்பாடுகள் சிறப்பானவை. தமிழ்மொழியிலேயும் தமிழ் இலக்கியங்களிலேயும் இத்தனிப்பட்ட திருந்திய மனப்பான்மை தெளிவாகவும், சிறப்பாகவும் இடம்பெற்றுள்ளன (தமிழர் பண்பாடு, ப.17) என்று வையாபுரியார் விளக்குவதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். எந்த ஓர் இனத்தின் நாகரிகமும் பண்பாடும் என்றைக்கும் ஒரேதன்மையில் இருப்பதில்லை. காலத்தின் சூழலுக்கு ஏற்ப இவை மாற்றம் கண்டே வந்திருக்கின்றது. இவ்வாறாக நாகரிகமும் பண்பாடும் ஒரளவு வேறுபட்டிருப்பினும் தமக்குள் பெருமளவில் ஒத்துச் செல்வதாகவே புலப்படுகிறது. தொன்மைக்காலமும் தமிழ் நாகரிகத்தின் விழுமியங்களும்: ஞானி: உயர்தரமான நாகரிகத்தில் தான்இலக்கியத் தரமும் தகுதியும் வாய்ந்த இலக்கியங்கள் தோன்றியிருக்க முடியும். அந்த வகையில் தமிழ்நாகரிகத்தின் உச்சமெனத் திகழும் சங்க இலக்கியத்தின் வாயிலாக பழந்தமிழரின் வாழ்க்கைச் சிறப்புகளை அறிந்து கொள்ளமுடியும். •இந்திய நாகரிகத்தின் மேலடுக்கு ஆரியநாகரிகம் என்றபோதிலும் அதன் அடித்தளம் முழுவதும் தமிழ் நாகரிகம் என்று குறிப்பிடுகிறார். •இந்திய நாகரித்தில் காணப்படும் வேளாண்மை, தொழில், நீர்ப்பாசனம்,கட்டிடம், சிற்பம், மருத்துவம், இசை, கணிதம், அறிவியல், அளவையில் மொழியியல் முதலிய அனைத்தும் தமிழ் நாகரிகத்தின் கூறுகள். சாங்கியம், நியாயம், ஆசீவகம், உலகாய்தம் முதலிய இந்திய தரிசனங்கள் பலவற்றையும் தோற்றுவித்தவர் தொன்மைக்காலத் தமிழர். •‘இந்திய பண்பாட்டில் எழுபத்தைந்து விழுக்காடு திராவிடப் பண்பாடு’ என்று சுனித்குமார் சட்டர்ஜி குறிப்பிட்டுள்ளதையும் இங்கு நினைவு கூரலாம். (இந்திய மொழிகளின் மூலம், ப.20) •கடல் வாணிகத்திலும் தமிழர் சிறப்புற்றிருந்தனர். கிழக்கே சீனம், மேற்கே கிரேக்கம் வரை தமிழர்களின் வணிகக்கப்பல்கள் சென்று வந்தன. இதன் காரணமாக தமிழ் வணிகர் வழியாகத் தமிழர் நாகரிகம் உலகளவில் பரவியது. இவற்றோடு தமிழரின் கடல் வணிகமும் தொன்மைக் காலத்திலேயே சிறப்புற அமைந்தது என்ற ஞானியின் கருத்திற்கு வலுச்சேர்க்கும் முறையில் மு.வரதராசனாரின் கருத்து அமைவதைக் காணலாம்: “தமிழ் மக்கள் மிகப் பழங்காலத்திலேயே கடல் வாணிகத்திலும் உள்நாட்டு வாணிகத்திலும் சிறப்படைந்திருந்தார்கள் என்பதற்குத் தமிழிலக்கியச் சான்றுகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டாரின் குறிப்புகளிலும் சான்றுகள் உள்ளன. கி.மு.பத்தாம் நூற்றாண்டில் இசுரயேல் நாட்டின் அரசனாகிய சாலமனுக்கு தமிழ்நாட்டு கப்பல்கள் மயில் தோகையும் யானைத் தந்தமும் வாசனைப் பொருட்களும் கொண்டு சென்றன.” (தமிழ் இலக்கிய வரலாறு,ப.4) என்கிறார்மு.வ. •தமிழ்மொழி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மையும் மேன்மையும் உடையது என்பதில் அய்யமில்லை. கிரேக்கம், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம் முதலிய செவ்வியல் மொழிகளோடு ஒத்த தொன்மையும் மேன்மையுடையது தமிழ். •தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு உலகளவில் எந்த ஒரு மொழி இலக்கியத்தையும் விளக்கவல்லது. •தமிழர்களின் ஆதி இலக்கியமான சங்க இலக்கியம். இயற்கையோடு மனிதவாழ்வு இணைந்திருந்த இலக்கியம். •திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தொன்மை இலக்கியங்கள் தமிழர்களின் வாழ்வியல் மேன்மையையும், அறவுணர்வுவையும் வெளிப்படுத்திய இலக்கியங்கள். வள்ளுவர் போற்றிய ஒப்புரவு என்ற அறம். தற்காலத்தில் சமத்துவம் என்றும் சமதர்மம் என்றும் பொருள்படுத்தக் கூடியது. • களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று கூற இயலாது. களப்பிரர்சமணம், பௌத்தம் ஆகியவற்றை ஆதரித்தனர். பார்ப்பனியத்தை எதிர்த்தனர்.இவர்கள் காலத்தில் தான் திருக்குறள் முதலிய அற இலக்கியங்களும், சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களும் படைக்கப்பட்டன. இதனை, •“களப்பிரர் வருகையால் தமிழர்தம் பண்பாடு அழிக்கப்பட்டதாக வரலாற்றில் எழுதப்படுகிறது. இது பெரும் வழுவாகும். களப்பிரர் காலத்தில்தான் புலால் வேண்டா என்ற போதனா இயக்கம் தோன்றியது. மது வேண்டா எனும் கருத்து உரத்துப்பாடப் பெற்றது. பரத்தமை வேண்டா என்ற அறிவுரை பரப்பப்பட்டது. கொல்லாமை வேண்டா எனும் நெறி எடுத்துரைக்கப் பெற்றது. இவை தமிழ்ப்பண்பாட்டு மறுமலர்ச்சி” (தமிழ்மக்கள் வரலாறு, ப.71) என்று களப்பிரர் காலத்தில் தமிழ்ப்பண்பாடு அடைந்த மேன்மையைக.ப.அறவாணன் குறிப்பிடுகிறார். •சைவம், வைணவம் ஆகியவை தமிழர் சமயங்கள். இவ்வகைச் சமயங்களில் கூறப்படும் தெய்வங்கள் உயர்;வகையான மனிதத்தன்மை படைத்தவை. சமயங்களைப் படைத்தவன் மனிதன் என்ற உண்மையை வெளிப்படுத்துபவை. •தமிழர் நாகரிகம் மனித வாழ்வுக்கு உலகியலுக்கு முதன்மை தந்தது. ஆரிய நாகரிகம் மேலுலகம், தெய்வம், யாகங்கள், வருணாசிரமம் ஆகியவற்றிற்கு முதன்மை தந்தது (த.நே.26,பக்.5,6) என்கிறார் ஞானி. இவ்வாறாக பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக, பண்பாட்டு நிலையினைப் பெரும்பாலும்இலக்கியச் சான்று, பாறை ஓவியங்கள் மற்றும் வெளிநாட்டார்க் குறிப்புகளின் வழியே அறியமுடிகிறது. மா.நடராசன்: ஞானியின் இக்கருத்தை ஒட்டியே இவருடைய கருத்துகளும் உள்ளன. தமிழ் நாகரிகம் பல்வேறு நாகரிகங்களின் பொதுத்தன்மைகளை உள்ளடக்கிய மனித நாகரிகம். மனித நாகரிகத்தின் முக்கியமான அகக்கூறுகள் அன்பு, அறம், வாய்மை, தூய்மை, ஒப்புரவு முதலியவை. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுதல்’ என்கிறது கலித்தொகை. மனிதன் தான் அல்லாத பிறருக்காக, பிற உயிர்களுக்காக அன்பொழுக வாழ்கிறான்; என்ற பொதுத் தன்மையை இலக்கியம் பதிவு செய்துள்ளது. இதுவே தமிழர் நாகரிகம் (த.நே.27,ப.67) என்கிறார். மேலும் அவர் - சிந்துசமவெளியிலிருந்து தோன்றிய நாகரிகம், அதன் தொடர்ச்சியாக அப்படியே வளர்ந்திருந்தால் இன்று தமிழர் நாகரிகம் உலகில் உயர்ந்த நாகரிகமாக மேன்மை பெற்றிருக்கும் (மேலது ப.68). இதற்கு இடையூறாக அமைந்தது ஆரிய நாகரிகம். வருணமுறையைத் திணித்துத் தமிழ் நாகரிகத்தில் பிரிவையும் பிளவையும் ஏற்படுத்தியது ஆரிய நாகரிகம் என்கிறார். - தொல்காப்பியர் காலத்திலும், திருவள்ளுவர் காலத்திலும் சாதிப்பாகுபாடுகள் இல்லை. ‘பிறப்பு ஒக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று திருவள்ளுவர் கூறுகிறார். தொல்காப்பியருக்குச் சாதி தெரியாது. ஆகையால் அவர் திணை என்பதற்கு ஒழுக்கம் என்றே பொருள் கொண்டார். - சங்ககாலம் என்பது இனக்குழுச் சமூகத்திலிருந்து விலகி உடைமைச் சமூகம் நிலைபெற்ற காலம். சங்ககாலத்தில் பெருந்தெய்வங்கள் இல்லை. தமிழ் மக்கள் இயற்கையைப் போற்றினர். ஐந்திணைகளிலும் இருந்தவை நிலத்தெய்வங்கள் அல்லது குலமுறைத் தெய்வங்கள். நிலத் தெய்வங்களைப் போற்றும் முறையில் வெறியாட்டு, குரவைகூத்து முதலிய கலைகள் நிலவின. - சங்ககாலத்தில் பெண் இழிவுபடுத்தப்படவில்லை என்பதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. “சங்க காலத்தில் பெண்கள்சமூக விழாக்களிலே பங்கு பற்றிச் சுதந்திரமான வாழ்க்கை நடத்தினர். அவர் கணவருடன் கள்ளருந்தினர் (பட்டின.106-108). கள்ளருந்துவதனால் அவர் கண்கள் குளிர்மையுள்ளனவாய் இருந்தன (பெரும்.பாண்.386-387). அவர் கல்லா மாந்தரோடு கைகோத்து விளையாடுவர் (மது.காஞ்.419-420). இன்னும் அலைகள் கரையோடு பொருதும் கடலில் யாவரும் காணக்கூடியதாக நீந்தி விளையாடுவர் (சிறுபாண்.117-118). கரைகளினாற் சூழப்பட்ட குளங்களிலே பெண்கள் பாய்ந்து நீராடுவரெனப் பொருநராற்றுப்படையிலிருந்து அறியலாம் (பொரு.240-241)” (தமிழர் சால்பு, ப.260,261)இவ்வாறாக சங்க காலப்பெண்கள் சமூகத்தில் எவ்விதக் கட்டுப்பாடின்றிச் சுதந்திரமாக இருந்ததை வித்யானந்தன் சுட்டிக்காட்டுகிறார். - பழந்தமிழ்ச் சமூகத்தில் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்’ என்ற அறம் போற்றப்பட்டது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறம் 192) ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ (புறம் 189)என்ற முறையில் சமத்துவ நோக்கு நிலவியது. ‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ (1062) என்ற முறையில் தெய்வங்களைக் கேள்விக்குட்படுத்தும் அறவுணர்வுடையது தமிழர் நாகரிகம். - ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற நீதியை முன்வைத்தது சிலப்பதிகாரம். கண்ணகி சிலம்பைக் கையிலேந்தி மதுரை நகரத் தெருக்களில் அலைந்த பொழுது அவள் எழுப்பிய குரல் தெய்வமும் உண்டுகொல், சான்றோரும் உண்டுகொல் கற்புடைப்பெண்டிரும் உண்டுகொல்’ (சிலம்பு.19-55) என்பதாகும். மதுராபுரித் தெய்வம் கண்ணகியை எதிர்கொள்ள தயங்கி கண்ணகியின் பின்னால் சென்று வேண்டியது. அக்னி தேவனை அழைத்து மதுரையை எரியூட்டச் சொன்னவள் கண்ணகி. இவ்வாறு தெய்வத்தை ஏவல் கொள்ளும் தன்மையுடையது தமிழர் நாகரிகம் என்கிறார் மா நடராசன். - ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது மணிமேகலை. இவை தமிழ் நாகரிகத்தை விளக்கும் சில அகக்கூறுகளாகும். இவற்றின் விளைச்சலாகத் தோன்றியவர்கள் தான் சித்தர்கள், வள்ளலார், பாரதியார் போன்றவர்கள். - பெரியபுராணம் சமுதாய வாழ்வின் மேன்மையை, பொதுநிலையை எடுத்துச் சொல்லுகிறது. சைவமும் வைணவமும் இயற்கை நிலையைப்போற்றிப் பாதுகாத்து இருக்குமானால் இறைநிலை என்ற ஒரு மகத்தான பேற்றை அடைந்திருக்கும். - ‘வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்’ என்று வேளாண்மையையும், தாளாண்மையையும் போற்றியது தமிழர் நாகரிகம். பொங்கல் விழா தமிழர்களின் விழா. உழவையும் இயற்கையையும் பசுவையும் கொண்டாடியது தமிழர்பண்பாடு. பொதுமையறம் நிலவிய பழம்பெரும் தமிழச் சமூகத்தில் உன்னதமான விழுமியங்கள் போற்றப்பட்டதைக் காணமுடிகிறது. இத்தகைய தமிழ்ச் சமூகத்தில் அரசதிகாரம் போன்ற ஆதிக்கச்சக்திகள் தோன்றி செல்வாக்குச் செலுத்தியதன் விளைவாகத் தமிழ் நாகரிகம் பல சீர்கேடுகளைச் சந்தித்தது. “தமிழ் நாகரிகத்திற்கு, தமிழ் அறத்திற்கு ஒவ்வாத விசக்கடிகளைக் களையத்தான் புத்தமும் சமணமும் புகுந்து வளர்ந்தன” (த.நே.27.ப.68). மருத்துவர்.கோவி: புத்தம், சமணம் முதலியவற்றைத் தோற்றுவித்தவர்கள் மதத்தை உருவாக்கவில்லை. பின்னர் வந்த சீடர்கள் தான் மதத்தை உருவாக்கினர் என்று கூறும் இவர், ‘சிவன், திருமால், பிரம்மன், புத்தன், மகாவீரர் முதலியவர்களும் மனித அறங்களை வகுத்த சான்றோர்’ (மேலது, ப.43) பின் வந்தவர்கள் இவர்களைத் தெய்வங்கள் ஆக்கினர் என்பது இவரது கருத்தாகும். இவை ஆய்வுக்குரியவை. சாத்தூர் சேகரன்: சிந்துவெளி நாகரிகம், சங்க இலக்கியம், திருக்குறள், பக்தி இலக்கியம், சித்தர் இலக்கியம் இவை அனைத்தும் தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள் என்று குறிப்பிடுகிறார்.இட்சிங் என்ற சீனப்பயணியின் கூற்றுப்படி சீனாவில் 2ம் நூற்றாண்டில் 5000 தமிழ்க் குடியிருப்புக்கள் இருந்ததை அறியமுடிகிறது என்கிறார். “தமிழன் ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப்பொருளுக்கும் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரிவரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும், தத்துவத்தையும் பரப்பியவன் வாளெடுக்காமலும் வேள் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன் தமிழன்” என்கிறார். (த.நே.27, ப.9) நடனகாசிநாதன் கருத்தை இங்குச் சுட்டுவது தகும்: “பழைய கற்காலந்தொட்டு வாழ்ந்த மனிதன் தன்னுடைய தொழில்திறன், சிந்தனைத்திறன், பேச்சுத்திறன் ஆகியவற்றில் படிப்படியாக முன்னேறி கி.மு.900 அளவில் மிகச்சிறந்த நாகரிக நிலையை எட்டியிருக்கிறான். அவன் அவ்வாறு எட்டிய நாகரிக நிலையின் உச்சக்கட்ட வளர்ச்சியின் எச்சங்களே இன்று நமக்குக் கிடைத்திருக்கிற சங்க இலக்கியங்கள்” (தமிழர் நாகரிகம், ப.94) ஆகும் என்கிறார். பழந்தமிழ்நாகரிகத்தின் பெருமையை மட்டும் பேசுவதில் பயன் ஒன்றும் ஏற்பட்டுவிடாது, கடந்த காலத்தில் என்னென்ன தடைகளைப் பள்ளம் / மேடுகளைக் கடந்து உச்சநிலை அடைந்தோம் என்று வரலாற்றுச் சுவடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும். மேன்மையானது என்று கூறப்பட்ட தமிழ் நாகரிகத்தைத் திறனாய்வுக்குட்படுத்த வேண்டியதன் தேவை முன்வைக்கப்படுகிறது. பிலிப் சுதாகர்: தமிழ்நாகரிகம் ஒன்றல்ல பல என்று கூறும் இவர், “பண்டைத் தமிழர் பெருமிதங்களை இன்று மீட்பது நம் நோக்கமாயிருக்க முடியாது. கடந்த காலத்தில் நாம் எப்படியிருந்தோம் என்பதிலிருந்து தொடங்கவேண்டும். நிகழ்காலச் சூழலில் அர்த்தங்கள் உருவாக்கப்பட வேண்டும். நிகழ்காலம் தான் எதிர்காலமாக முடியுமே தவிர கடந்த காலம் வருங்காலத்தை ஈன்றெடுக்க முடியாது” என்கிறார். (த.நே.26.ப.62) இவர் கூற்று ஆய்வுக்குரியது. இவ்வாறு சில குறைகள் இருந்தபோதிலும் தமிழ் நாகரிகம் தன் மேன்மை காரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளையும் கடந்து இன்றும் தமிழ் மக்கள் நெஞ்சில் பதிந்துள்ளது. இடைக்காலம் - தமிழ்நாகரிகமும் ஆரியநாகரிகக் கலப்பும்: சிந்துவெளி நாகரிகம், தமிழர் நாகரிகம் என்பது ஆய்வில் கண்ட உண்மை. சிந்துவெளி நாகரிக அழிவு என்பது தொன்மைக்காலத்தில் தமிழ்நாகரித்திற்கு நேர்ந்த ஒரு பெரும் இழப்பு. இத்தகைய இழப்பில் ஆரியருக்கும் பங்குண்டு என்கிறார் ஞானி. ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடை’ என்று தமிழ் எல்லை குன்றியது. தொல்காப்பியர் காலத் தமிழகத்திலே ஆரியர் நுழைந்ததற்கான சான்றுகளைக் காண்கிறோம். வடமொழிச் சொற்கள் தமிழில் வரும் பொழுது தமிழ் ஒலிப்புக்கு ஏற்றவாறு எழுதப்பட வேண்டும் என்பதற்குத் தொல்காப்பியர் விதி வகுத்தார். ‘வடசொற்கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே’ (தொல்.எச்சவியல்.884) தொல்காப்பியர் கருத்தைச் சோமசுந்தர பாரதியார் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்: புதிய கருத்துகளும் பொருள்களும் சுட்டத் தமிழில் பிறமொழிச் சொற்களை எடுத்தாள்வது தவறாகாது. ஆனால் அச்சொற்களைத் தமிழ் இயல்புக்கு இயையச் செப்பனிட்டு சேர்த்தல் வேண்டும். ஆன்ற பழந்தமிழ்ச்சான்றோர் இவ்வுண்மை அறிந்தே வடசொல், திசைச்சொற்களை விலக்காமல் தமிழில்; கொண்டு, வழங்கத் தக்க இயல் முறைகளைத் தம் மொழி நூலில் வகுத்து விளக்கியுள்ளனர்" (நற்றமிழ், ப.15) என்கிறார். ஆரியரின் வருணாசிரம முறை தொல்காப்பியத்தில் இடம்பெறுகிறது. (இதைச் சிலர் இடைச்செருகல் என்கின்றனர்). வருணாசிரமம் என்பது எந்தவகையிலும் தமிழர் நெறியாகாது. இதற்கு எல்லாக் காலத்திலும் தமிழர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். வள்ளுவர் பார்ப்பனரைச் சாடினார். அந்தணர் என்பவர் அறவோராகத்தான் (குறள் 30) இருக்கவேண்டும் என்றார். பார்ப்பான் ஒழுக்கம் குன்றினால் அவனது பிறப்பு கெடும் (குறள் 134) என்றும் கூறினார். இளங்கோவும் சாத்தனாரும் பார்ப்பனரைச் சாடினர் என்பதை அவரது நூல்கள் வெளிப்படுத்துகின்றன. கண்ணகியின் தோழி, தேவந்தி சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற இரண்டு பொய்கைகளில் மூழ்கி எழுந்து, மன்மதக் கடவுளைத் தொழுது சடங்கைச் செய்வதன் மூலம் கோவலன் மீண்டு வருவான் என்று கூறியபோது, கண்ணகி ‘பீடன்று’. (சிலம்பு 9.60) என்று ஒரே வரியில் மறுத்து விடுகிறாள். யாகத்திற்கு என இருந்த பசுமாடுகளை ஆபுத்திரன் அவிழ்த்து விட்டதைக் கண்ட பார்ப்பனர் அவனைச் சாடியதைச் சாத்தனார் (மணிமேகலை 13:40) குறிப்பிடுகிறார். அரசு உருவாக்கத்தின் தேவைக்காகவும் உழைக்கும் மக்கள் மீது அரசதிகாரத்தைச் செலுத்தும் முறையிலும் தமிழ் மன்னர்கள் வடக்கிலிருந்து வந்த ஆரியர்களை ஆதரித்து வளமான நிலங்கள், ஊர்கள் முதலியவற்றையும் வழங்கினர். கோவில் வழிபாட்டிலும் அவர்களை ஈடுபடுத்தினர். இதனால் ஆரியர்கள் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றனர். பௌத்தமும் சமணமும் வருணாசிரம முறை முதலியவற்றைத் தமிழகச் சூழலில் கடுமையாக எதிர்த்தன. அந்நியர் படையெடுப்புகள் தமிழ்ச் சமூகத்தில் உள்நுழைந்த போதிலும் காடுகளிலும் வயல் நிலங்களிலும் உழைக்கும் மக்களிடையே தோற்றம் பெற்ற நிலத்தெய்வ வழிபாடு நிலவின. சைவமும் வைணவமும் தமிழர் சமயங்களாக எழுச்சி பெற்றன. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மேற்கத்தியர் தமிழகத்திற்குள் நுழைவதற்கு முன்பு வரை தமிழ்ச் சூழலில் மாற்றங்கள் பல நேர்ந்தன (த.நே.27, பக்.6,7) என்கிறார் ஞானி. இடைக்காலத்தில் ஆரிய கலப்பின் காரணமாக வருணமுறை வலுப்பெற்றது. தமிழில் வடசொற்கள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ்க் காப்பியங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தன. வேதங்கள், மந்திரங்கள், யாகம், புராணங்கள், பெருந்தெய்வ வழிபாடு போன்றவை முன்னுக்கு வந்தன. தற்காலம் - நெருக்கடிகளும் எதிர்வினைகளும்: இருபதாம் நூற்றாண்டுச் சூழலுக்குள் தமிழ் நாகரித்தின் மீட்சி பற்றித் தமிழர்கள் சிந்திக்கத் தொடங்கினர். மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, முதலாளியம், மன்னராட்சி ஒழிப்பு, சாதி, மத ஆதிக்கத்தகர்வு, அறிவியல், சுதந்திரம், சமதர்மம், பகுத்தறிவு ஆகிய கருத்தியல்கள் தமிழகத்திற்கும் வந்து சேர்ந்தன. ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டோம். சிந்துவெளி நாகரிகம் வெளிச்சத்திற்கு வந்தது. சங்க இலக்கியங்கள் கண்டறியப்பட்டுத், தமிழரின் பெருமை உணரப்பட்டது. தமிழின் தனித்து இயங்கும் தன்மை குறித்து கால்டுவெல் விளக்கினார். தமிழின், தமிழரின் நெடுங்கால வரலாறு, தொன்மை, மேன்மை தமிழருக்குள் புத்துணர்வை ஏற்படுத்தின. தமிழர்கள் நாடாண்டவர்கள், கடல் கடந்து வணிகம் செய்து, தம் நாகரித்தை உலகெங்கும் பரப்பியவர்கள். தமக்கென மெய்யியல், அறிவியல், வானியல், கணிதம், மருத்துவம் உண்டு என்று அறிந்தனர். இத்தகைய புத்துணர்வோடுதான் பகுத்தறிவு இயக்கம், தனித்தமிழியக்கம் ஆகியவை தோன்றின. மார்க்சியத்தோடும் உறவு ஏற்பட்டது. இவற்றை உள்ளடக்கித் தோன்றியதுதான் தமிழில் மறுமலர்ச்சி இயக்கம். இதனை, வையாபுரியார் விளக்குவதிலிருந்து புரிந்து கொள்ளமுடியும். “வெகுகாலமாக வெளியிற் புலப்படாதேயிருந்து அமைதியாய்ப் பரவிச், சமுதாயத்தை உள்ளுர இயக்கிவரும் பல சக்திகள், சிற்சில காரணங்களால் திடீரென்று வேகங் கொண்டு எழுந்து முழுவன்மையோடு சிலர் வாயிலாக வெளிப்பட்டுச், சமுதாயம் முழுவதும் அதிர்ந்து எதிரொலிக்கச் செய்து, மேற்கதியில் விரைந்து பாயும் நிலைமையே மறுமலர்ச்சி” (தமிழின் மறுமலர்ச்சி,தொகுதி2, ப.எ.முகவுரை) இவை ஒருபுறம் இருக்க, சுந்தரனார், மறைமலைஅடிகள், பாரதி, சோமசுந்தர பாரதியார், திரு.வி.க, பெரியார், பாவாணர், பாரதிதாசன் போன்றோர் தமிழ் நாகரிகத்தை மீண்டும் உயிர்ப்பித்தாக வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினர். இவற்றுள் முக்கியமான நெருக்கடியாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார் ஞானி. 1947 விடுதலைக்குப்பிறகு, குறிப்பாக அரசியல் அமைப்புச் சட்டம் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் காங்கிரசு வாக்களித்தவாறு, தமிழினம் முதலிய தேசிய இனங்களுக்கு விடுதலை கிட்டவில்லை. மாநிலங்கள் தனித்து வாழ்வதற்குத் தனிநாடாக வாழ்வதற்கு உரிமை கிடைக்கவில்லை. இது தமிழினத்திற்கு ஒரு பெரிய ஏமாற்றம். அதாவது “சுதந்திரம் பெற்றபிறகு தமிழ்நாட்டில் எத்தகைய மாறுதலும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்கிறார் கி.ஆ.பெ.விசுவநாதன். ஏதேனும் இருக்குமானால், அது அதிக வரி செலுத்துவதாகவே இருக்கும். சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ் மக்களுக்கு உரிமை எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை. ஏதேனும் இருந்தால் எதுவும் பேசாது வாய்மூடியிருப்பதாகவே இருக்கவேண்டும். சுதந்திரம் பெறும் முன் தமிழன் வயிறார உண்டான். பெற்றபின் பட்டினி கிடக்கிறான். சுதந்திரம் பெறுமுன் நிறை ஆடை உடுத்தினான் சுதந்திரம் பெற்றபின் அரை ஆடை உடுத்துகிறான்” (மேலது, ப.19) சற்று மிகை பட கூறுகிறார். இந்தியாவில் உருப்படியான முறையில் கூட்டாட்சி அமையவில்லை. ஒரு மாநிலம் என்ற வகையில் தமிழர் மத்திய அரசாங்கத்திற்குக் கட்டுப்பட நேர்ந்தது. அதாவது பல அதிகாரங்களை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுக்க நேர்ந்தது. மொழிவாரி மாநிலப் பிரிவினை நேர்ந்த பின்னரும் இதே நிலை தொடர்ந்தது. மைய அரசில் இந்தியோடு ஆங்கிலம் அலுவல் மொழியாயிற்றே ஒழிய தமிழ் முதலிய மாநில மொழிகளுக்கு நடுவணரசின் அலுவலக மொழியாகும் வாய்ப்பு கிட்டவில்லை. விடுதலை பெற்ற இந்தியாவில் பிரதமர் நேரு சமதர்மம் பற்றி ஆழ்ந்த ஈடுபாட்டோடு பேசினார். பொதுத்துறை நிறுவனங்களை ஏற்;படுத்தினார். நாளடைவில் பெயரளவுக்குச் சமதர்மம் என்ற சொல் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்ததே ஓழிய சமதர்ம சமூகத்திற்கு மாறான நிலைகள் ஆதிக்கம் பெற்றன. முதலாளியத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. அன்றியும்1980க்குப் பிறகு ‘காட்’ ஒப்பந்தப்படிசர்வதேச வணிக தனியார்மயம் என்ற நிலைமைகளை இந்திய அரசு ஏற்க வேண்டிய கட்டாய நிலைக்கு உட்பட்டது. இந்நிலையில், முதலாளிய ஆதிக்கம் வலுப்பெற்றது. தமிழ் நிலமும் இத்தகைய நிலைகளுக்கு ஆட்பட்டது. தமிழ்நாட்டை ஆண்ட அரசியல்வாதிகளும் மத்திய அரசுக்குத் தம்மை விட்டுக் கொடுத்தனர். தம் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் தமக்கான வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கும் இவ்வாறு செய்தனர். இதன் காரணமாகத் தமிழர்தம் தன்மானத்தை இந்தியச் சூழலில் இழந்தனர். மொழிவாரி பிரிவினையின் போதும் தமிழக எல்லைப் பகுதிகளில் தமிழர்க்கு உரிமையாகச் சேரவேண்டிய சில பகுதிகளை அரசியல்வாதிகளின் மெத்தனம் காரணமாக தமிழர் இழக்க நேர்ந்தது. (த.நே.27.பக்.8,9) அந்நியரிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு தமிழன் இழந்தவை பல. மையஅரசு, முதலாளி, அரசியல்வாதி, அண்டை மாநிலங்களின் ஆக்கிரமிப்பு எனப் பல ஆதிக்கசக்திகளுக்கு இரையானான். வரலாற்றுக் காலம் முழுவதும் அந்நியர் ஆளுகைக்கு முற்பட்டதன் விளைவாக தமிழன் தன்னிலிருந்தும் பிறவற்றிலிருந்தும் அடிமையானான். இதன் காரணமாக அவன் அடைந்த இழப்புகளும் அவமதிப்பும் ஏராளம். இவைகுறித்துக் கட்டுரையாளர்களின் கருத்துகள் வருமாறு: தமிழர் அடிமையானது ஏன்? தனராசு: சிந்துவெளி நாகரிகத்திலிருந்து தமிழர் எவ்வாறுவிலகி வந்தனர் என்று வினா எழுப்புவதோடு விலகிவராமலும் இருக்க முடியாது என்கிறார். மேலும் ‘இப்போது நாம் இருக்கின்ற தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியவில்லை. எல்லைகளை இழந்துவிட்டோம். நீர்த்தடங்களை இழந்துவிட்டோம். கடல் எல்லையும் இல்லை என்றாகிவிட்டது. வெளிநாட்டார்களின் ஊடுருவலைத் தடுக்க முடியவில்லை’ (த.நே.27.ப.34) தனராசு எழுப்பும் கேள்வி ஆழ்ந்த சிந்தனைக்குரியது. வே.சுகுமாரன்: தமிழ்ச்சமூகத்தின் தொடக்கக்காலம் முதல் பெண்ணடிமைத்தனம் நிலவியது என்பதைக் குறிப்பிடுகிறார். கணவன் இறந்த நிலையில் மனைவியும் உடன்கட்டை ஏறும் வழக்கம் தமிழ்ச்சமூகத்தில் இருந்தது என்பதற்கு பூதப்பாண்டியன் தேவி உடன்கட்டை ஏறியது சான்றாகும். “1810ஆம் ஆண்டு கிழவன் சேதுபதி இறந்த போது அவனுடைய 45 மனைவிமார்களும் உடன்கட்டை ஏறினார்கள் என்பதைத் தமிழக வரலாறு பதிவு செய்துள்ளது.” (மேலது.ப.27) என்ற வரலாற்று நிகழ்வின் அவலத்தைச் சுட்டிக்காட்டுகிறார். நாயக்கர் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் உச்சக்கட்டத்தில் இருந்தது. திருமலை நாயக்கர் இறந்தபோது அவனது 169மனைவியர்களும் சேர்த்து எரிக்கப்பட்டனர் என்று வரலாறு தெரிவிக்கிறது. இடைக்காலத்தில் எத்தனை நூறு ஆயிரம் பெண்கள் உடன்கட்டையில் ஏற்றப்பட்டனர் என்பது வருத்தம் தருகிறது. இச்செய்தி பெண்ணடிமை நிலையைப் புலப்படுத்துகிறது. பெண்ணடிமைத்தனம் என்பது இவ்வளவு கேவலமாகவா இருக்கவேண்டும் பெண்கள் இந்த அடிமைத்தனத்தை எதிர்க்கவே இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது. பூதப்பாண்டியன் தேவி கேட்டுக் கொள்கிறாள். ‘உடன்கட்டை ஏற என்னை விடுங்கள்’ என்கிறார். “பெண் பிறவியை இழிபிறவி என்று கொண்ட கோட்பாடு காலப்போக்கில் தன் நச்சுக்கிளைகளை மேலும் விழுது விரித்;தது. பெண் மறுப்புக் கோட்பாடாகவும், பெண் வெறுப்புக் கோட்பாடாகவும் இது விரிந்ததைத் தமிழக இந்திய வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. இதன் கொடும் விளைவாகப் பெண்குழந்தையை வெறுக்கும் போக்கு வளர்ந்து, பெண் குழந்தை என்றாலே பிறக்கும் போதே கொன்றுவிடும் போக்கும் தமிழகத்திலும் இந்தியாவிலும் வேர் ஊன்றியது” (க.ப.அறவாணன், தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?, ப.186, 187) க.பூரணச்சந்திரன்: வரலாற்றில் தமிழர் எவ்வாறு தாழ்ந்தனர் என்பது பற்றி ஒரு விளக்கத்தை முன்வைக்கிறார். பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகு மொகலாயரும், மராத்தியரும், தெலுங்கரும் தம் ஆதிக்கத்தைத் தமிழர் மீது சுமத்திய நிலையில் அவர்களின் அதிகாரக் கொடுமைகளுக்கும் கொள்ளைகளுக்கும் உட்பட்ட தமிழர் தன்மானத்தை இழந்தனர். இந்நிலையில் தமிழருக்கு இன உணர்வு எப்படி இருக்கும்? என்று கேட்கிறார். அடிமைப்பட்ட நிலையில் தாம் வாழ்ந்தால் போதும் என்ற நிலவரமே தமிழ்ச் சூழலில் தமிழர் சிதறுண்டு போனதற்கான காரணம் என்கிறார். தமிழர்க்கு இன உணர்வு இல்லை என்பது பலரும் சுட்டிக்காட்டும் ஓர் உண்மை. “கேரளம், கர்நாடகம் ஆகியவற்றில் வாழும் மலையாளிகளும் கன்னடரும் இன்று வரை இன உணர்வோடு வாழ்கின்றனர்” இதற்கான காரணத்தைப் பூரணச்சந்திரன் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் தான் ஆங்கிலேயருடைய முற்றதிகாரம் செயல்பட்டது. கர்நடகத்திலும் கேரளாவிலும் இத்துணை அளவிற்கு ஆங்கில அதிகாரம் நேரிடையாக இருக்கவில்லை (மேலது, ப.75) என்கிறார். ஆங்கிலேய அரசுக்கும் மக்களுக்கும் இடையில் மன்னர்கள் இருந்தனர். மன்னர்களின் படையெடுப்புகளின் காரணமாகத் தமிழ்நிலம் பல அந்நியர்கள் வசமாயிற்று, நகரங்கள், கிராமங்கள் நாசமாகின. தமிழர் தம் நிலத்தில் வாழ முடியவில்லை. குடிபெயர்ந்து அங்கும் இங்கும் அலைந்தனர். இதன் பின்னர் மேற்கத்தியரின் நுழைவு. மன்னர்கள் காணாமல் போயினர். நிலவுடைமையில் பெருத்த மாற்றங்கள் ஐரோப்பாவில் தொழில் வளர்ச்சி முதலிய தேவைகளுக்காகத் தமிழ் மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். தொழில் வளங்கள் சூறையாடப்பட்டன. தமிழன் தன் முகம் இழந்து போனான். நாகரிகங்களுக்கிடையில் கடுமையான மோதல். முன்னைய நாகரிகம் பெருமளவில் நாசமாயிற்று. அயல்நாகரிகம் இங்குத் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. மு.வ.பரணன்: வரலாற்றில் தமிழினம் தாழ்ந்தது குறித்துக் கவலைப்படுகிறார் மு.வ.பரணன். பெரியாரும், பாவாணரும் தமிழரின் இனமானம் பற்றி ஓயாமல் வற்புறுத்திய போதிலும் இன்றைய நிலையிலும் இன ஒற்றுமை அற்றவர்களாகவே தமிழர்கள் இருக்கின்றனர். இவர்களைக் கடைத்தேற்றுவது கடினம் என்கிறார் (த.நே.ப.15). தந்தை பெரியாரின் வரவாலும் அயரா உழைப்பாலும் பரப்பட்ட பகுத்தறிவுக் கொள்கை தொடர்ந்து வெற்றி பெறாமல் போனது அவலமான நிலையாகும். “பெரியார் உண்டாக்கிய விழிப்பு நிலைக்குப் பின் திராவிட இயக்கங்களிடையிலும், தமிழ் மறுமலர்ச்சி எண்ணமுடைய பல்வேறு அரசியல் குமுகவியல் இலக்கிய அமைப்புகளிடையிலும், அறிவாளர்களிடையிலும் தமிழரின் தாழ்நிலைப் பற்றிய கவனம் ஏற்பட்டிருப்பது உண்மையே. ஆயினும் என்ன பயனை அடைந்தோம்?” (தங்கப்பா,மொழிமானம், ப.82,83) மருத்துவர் கோவி: ஆங்கிலேயரின் அதிகாரத்தின் கீழ்தான் தமிழரின் தாழ்நிலை உறுதிப்பட்டது என்று சொல்லும் மருத்துவர் கோவி, திராவிட அரசியல் தமிழருக்குப் பாடை கட்டியது என்கிறார். முதல்வராக கருணாநிதி இருந்த நிலையில் தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் தந்து இவர்களைத் தம்பக்கம் வைத்துக் கொண்டார். மேலும் “தமிழகத்தின் வளர்ச்சிக்கும் கல்வி அறிவிற்கும் ஆங்கிலேயரின் வருகையே அடித்தளமிட்டது எனினும் திராவிட இயக்கம் ஆங்கிலத்திற்கே முதன்மை என்ற முடிவுக்கு வந்தது. அந்த முடிவே தமிழுக்கும் தமிழ்ச்சமுதாயத்துக்கும் இழைத்த கேடுகளுக்கெல்லாம் வித்தாயிற்று” (த.நே.26, ப.42) என்கிறார் மருத்துவர் கோவி. ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்குத் தமிழர் உட்பட நேர்ந்தது பற்றிக் குறிப்பிடும் சாத்தூர்சேகரன், இதற்கான காரணம் “ஆங்கிலேயர் போர் முறையில் துப்பாக்கியும் பீரங்கியும் பயன்படுத்தியது” (த.நே.27,ப.11) தமிழர்களின் வீரத்தின் தரத்தைத் தாழ்த்தியது என்கிறார். தமிழர் எவ்வகையில் எல்லாம் அடிமைப்பட்டுக்கிடந்தோம் என்பதை அப்பாத்துரையார் கூறுவதும் நோக்கத்தக்கது: “நெடுநாள் பிறர் வயப்பட்டு – அரசியலில் மட்டுமன்றி, சமயம், வாழ்வியல், அறிவியல், கலை, பொருளாதார வகையிலும் அடிமைப்பட்டுக்கிடந்தோம் தமிழ் மொழியும், இலக்கியமும், சமயம், வாழ்வியல் பகுதிகளும் சீரழியலாயின” (தமிழ் முழக்கம்,ப.32); இவ்வாறாகத் தமிழன் வரலாற்றுக் காலம் முழுவதும் தனக்குள் தாழ்ந்தும் பிறருக்கு அடிமைபட்டும் வந்ததன் காரணமாக தமிழர் நிலம் மட்டுமன்றி வாழ்வாதாரங்கள் அனைத்தையும் விட்டுக்கொடுக்க நேர்ந்திருக்கிறான்.இத்தகைய அவல நிலை இன்றும் தொடர்கிறது. தற்கால நெருக்கடிகள்: காலனிய ஆதிக்கம் விலகியதைப் போலத் தோன்றினாலும் இன்று உலகமயமாதல் பெயரில் அந்நியர் ஆதிக்கம் இந்தியாவில் அரசு ஆதரவுடன் பெருகி வருகிறது. அரசியல்வாதிகள், பெரும் பணமுதலாளிகள் இந்த ஆதிக்கத்தோடு ஒத்துழைக்கின்றனர். மதுபானங்கள் மற்றும் போதைப் பொருள்களால் மக்கள் வாழ்வு அழிவது பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்காகத் தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை அழித்து சுற்றுச்சூழல் நாசமாவது பற்றியும் இவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையும் அறியமுடிகிறது. மு.குமரவேல்: இன்று கல்வி என்பது வேளாண்மையையும் உடல் உழைப்பையும் கேவலமாக எண்ணக்கூடிய ஓரு பண்பாட்டைமாணவர்கள் மத்தியில் விதைக்கின்றது என்று வேதனைப்படும் குமரவேல், கல்விக் கொள்ளைக்காக விளைநிலங்களும் கிராமங்களும் சூறையாடப்படுகின்றன. விவசாயமும் கல்வியும் அழிவைச் சந்திக்கின்றன. (த.நே.27,ப.5) “எந்த ஒரு நாடு தன்வளர்ச்சிக்கான ஆதாரங்கள் அனைத்தையும் வளர்ந்த நாடுகளிடம் ஒப்படைத்து விடுகிறதோ அந்த நாட்டில் சுயமான விஞ்ஞான வளர்ச்சியோ, கோட்பாட்டு (theory) வளர்ச்சியோ, கண்டுபிடிப்புகளோ இருக்காது. மற்ற மற்ற நாட்டின் கோட்பாடுகளுக்கு இரையாகும் அல்லது அவற்றைச் செயல்படுத்தும் வணிகக் கானியாகத்தான் இருக்க முடியும்” (து.மூர்த்தி, தமிழியல் புதிய தடங்கள்,ப.305) மருத்துவர் ஜீவா: முதலாளிகளும் அரசியல்வாதிகளும் நடத்தும் சீமைச் சாராய சந்தையினால் பல்லாயிரக்கணக்கானப் பெண்களின் வாழ்வு அவலத்திற்குள்ளாவது குறித்தும் கவனம் செலுத்துவதில்லை. இதனை, ‘சிறிய கட் பெறினே எமக்கீயு மன்னே’ (புறம்.235) என்ற “ஒளவை மாந்திய கள்ளைவிட்டு சீமைச்சாராயம் எனப் பெயரிட்டு மல்லையா சரக்கைத், தரகுக்கு விற்கும் அரசுகள் எப்படித் தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும்” (த.நே.26,ப.33) என்று மருத்துவர் ஜீவா வருந்திக் கேட்கிறார். தமிழர்களின் பாரம்பரிய விளைச்சல் பானமான பனையிலிருந்து எடுக்கும் கள்ளையே பழந்தமிழர்களாகிய ஆண்களும் பெண்களும் உண்டு மகிழ்ந்தனர். சங்க இலக்கியத்தில் 13 வகையான கள் இடம்பெறுகிறது என்பதை தமிழ்நாடன் சுட்டுகிறார். (தமிழ்நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்,.ப.81) நவீன நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய நாகரிகம் தமிழகத்தில் நிலை பெற்று வருகிறது. திரைப்படங்களும் தொலைக்காட்சியும் தமிழர் மொழியை மட்டுமல்லாமல் தமிழ்ப்பண்பாட்டையும் தொலைத்து வருகின்றன. ‘மேலை நாட்டு நாகரிக மோகம் அழிவை ஏற்படுத்தும்’ (விவேகவாணி- இதழியல் பார்வை, ஆய்வேடு, ப.மகேஸ்வரி.ப.55) என்றார் விவேகானந்தர். கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் தம் மனம் போனபோக்கில் திரைப்படங்களை எடுத்து வெளியிடுவதற்கும், நடிகர், நடிகைகளைத் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும், தொலைக்காட்சியில் காட்டுவதற்கும், பத்திரிகையில் பிரசுரிப்பதற்கும் நல்ல அரசுகள் நேர்மையான கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும். இல்லையென்றால் சமூகம் தனக்குள்ளே முடங்கிசீரழிந்துவிடக்கூடும் கி.இளங்கோ: பழந்தமிழர் உணவானது உணவாக மட்டுமன்றி மருந்தாகவும் பயன்பட்டது. தமிழர்களின் சிறுதானியங்களான கம்பு, தினை, கேழ்வரகு, சோளம் போன்றவை இன்று கேலிக்குரியதாகியுள்ளன. தற்காலத்தில் மிளகின் பயன்பாடு குறைந்து மிளகாய் பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி மறைந்து வெள்ளைச் சர்க்கரை மோகம், எங்கும் சப்பாத்தி, புரோட்டா, பர்க்கர், பீட்சா, என்று ‘அதிவிரைவு’ உணவு உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவே தமிழரின் உணவாக மாறிவருகிறது. இன்று அரசு மற்றும் பதின்ம பள்ளிகளின் மாணவியர் உடை தமிழர் உடையன்று. கல்லூரிகளிலும் தமிழர்களின் உடை இல்லை. (த.நே.27,ப.20) என்கிறார். இதனை, “அரிசி உணவு தமிழர் பண்பாடு. இறைச்சி, தேங்காய், பால், கீரை இவை இல்லை என்றால் மறத் தமிழன் அன்று நோஞ்சான் தமிழனே. கால ஓட்டத்தில் மிளகின் இடத்தில் மிளகாய், கத்தரிக்குக் கூட்டாகத் தக்காளி, மொச்சைக்குப் பதிலாக பீன்ஸ், அரிசிக்குப் பதிலாகக் கோதுமை, பழநீருக்கு பதிலாக தேநீர். இப்படித் தான் உணவு வழக்கத்தில் நூற்றுக்கும் மேலாக புதியன.” (தமிழ்நாடன்,மேற்படி,ப.81) தமிழர்களின் உணவு மட்டுமன்றித் தமிழ் நாகரிகத்தின் அனைத்துக்களங்களும் பாதிக்கப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. தமிழர்களிடையே தமிழ்ப்பண்பாடு மறைந்து வருவதைக் காண்கிறோம். பண்பாடு அளவில் கடந்த 100 ஆண்டுகளில் பல வீழ்ச்சிகள், நிகழ்ந்துள்ளன. நம் உணவு முறை, உடைமுறை, வாழும் முறை ஆகியன எளிய நிலையில் இருந்து விலகி, புதிய நாகரிக நிலைக்கு வந்துள்ளன. என்றாலும், தமிழர் என அடையாளம் காட்டும் சிறந்த உணவு முறைகள் தாழ்வானவை எனுங்கருத்தில் விலக்கப்பட்டுள்ளன / கைவிடப்பட்டு வருகின்றன. நம்மை ஆளும் ஆங்கில மொழியோடு இந்திமொழியும் இப்பொழுது இணைந்து தமிழ் மக்களின் உணவு, உடை முதலிய அனைத்தையும் அழித்து வருகிறது. மேலும் தமிழர்களுக்குச் சொந்தமான உரிமைகளைப் பெறுவதிலும் சிக்கல்கள் நீடித்து வருவது குறித்த சிந்தனைகள் ஓங்கி ஓலிக்கின்றன. ம.இலெ.தங்கப்பா: காவிரி நீரில் நமக்குரிய உரிமையைக்கூட நம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நம் சொந்த நெய்வேலி நிலக்கரியும் அதினின்று பெறும் அனல் மின்சாரத்தையும் பிற மாநிலத்தவருக்குப் பங்கிட்டுக் கொடுக்கிறோம். ஆனால் தமிழகத்திற்குப் பிற மாநிலத்தார் செய்யும் துரோகத்தையும், தமிழர்களின் இரக்க மனத்தையும் எண்ணி வேதனைப்படுகிறார் (த.நே.26.ப.24). கு.முத்துராமலிங்கம். தமிழ்நாட்டு மன்னர்கள் நாடு முழுவதும் வேளாண்மையின் தேவை கருதி திட்டமிட்டு ஏராளமான ஏரிகள், குளங்களை வெட்டி வந்தனர். 1947க்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் ஏராளமான குளங்களைத் தூர்த்து கட்டிடங்களை எழுப்பினர். (த.நே.27,ப.45) என்கிறார். இது வேளாண்மைக்கு நேர்ந்த பெருங்கேடாகும். மேலும் தமிழ்நாட்டுக் கோவில்கள் வணிக நிறுவனங்களாகி வருகின்றன. காலங்காலமாகத் தொடர்ந்து வந்த உறவுமுறைகள் இன்று கேள்விக்குள்ளாகியுள்ளன. ஆங்கில நாகரிகத்திற்கு பழக்கப்பட்ட மாணவர்கள் தொன்று தொட்டு வரும்; உறவுமுறைகளை அறிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. ‘அங்கிள்’, ‘ஆண்டி’ என்பது, இவர்களுக்குப் பொதுச்சொல். தமிழகத்தில் பாரம்பரிய தொழில்கள் முற்றாக அழிந்து வருகின்றன. உலகமயமாதலின் விளைவாக ‘கார்ப்பரேட்’ எனப்படும் பெருந்தொழில் நிறுவனங்கள் இங்குத் தங்கி அரசின் அனைத்துச் சலுகைகளையும் பெற்று வருகின்றன. சிறு வணிகர்களைத் திட்டமிட்டு அழிக்கும் முறையில் பெரும்வணிக நிறுவனங்கள் வந்து சேர்ந்துள்ளன. வேளாண் நிலங்களில் அந்நியர் ஊடுருவல் காரணமாக வேளாண்மை பெரும் பாதிப்புக்குள்ளாகியது. பசுமைப்புரட்சியின் விளைவாக உழவர்கள் பெரும் கடனாளியாகி, ஆயிரக்கணக்கில் தற்கொலைகள் நிகழ்கின்றன. மான்சாண்டோ மலட்டு விதையாலும் உழவர் வாழ்க்கை நாசமாகிறது. உண்ணும் உணவும் நஞ்சாகிறது. இதன் காரணமாகப் புதிய நோய்கள் பல மக்கள் வாழ்வைச் சீரழக்கின்றன. பேராபத்தை விளைவிக்கும் அணுமின் நிலையம் கூடங்குளத்தில் நிறுவப்படுகிறது. முனைவர்.ஜீவா: அந்நியத் தொழில் நிறுவனங்களோடு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பேரளவில் பரவலாகி, அங்குப் பணியாற்றுவோரில் உடல்நலமும் உளநலமும் நாசமாகின்றன. ஆங்கிலம் பயிற்றுமொழியாகி மாணவர்களிடமிருந்த குறைந்த அளவு தமிழ் உணர்வும் அழிகிறது. டிஜிட்டல் நாகரிகத்தின் விளைவாக மாணவர்களும் இளைஞர்களும் அலைபேசிகளுக்கு ஆட்பட்டுள்ளனர். பாராம்பரிய விளையாட்டுகளுக்கு (கபடி, காளைவிரட்டு) மரியாதை குறைந்து மட்டைப்பந்து மோகம் இளைஞர்களையும் மக்களையும் சிறைப்படுத்தியிருக்கிறது. இலட்சக்கணக்கான வாகனப்பெருக்கம்; காரணமாக வெளியாகும் புகையால் காற்று மாசடைகிறது. மக்கள் சுவாசக் கோளாறினால் திணறுகின்றனர். அமெரிக்க மோகம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. நெருக்கடி மிக்க நிலையில் மனநோய்கள், விபத்துக்கள் அதிகரிக்கின்றன. பலர்தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய நெருக்கடிகளுக்கிடையில் தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் இருக்கமுடியும்? (மேலது, ப.36) என்ற கேள்விகள் எழுகின்றன. தமிழ் நாகரிகமும் எதிர்காலமும்: தமிழ்நாகரிகம் தன்னைத்தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் சில முன்நிபந்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும். தமிழுக்குச் செம்மொழித்தகுதி கிடைத்துள்ள சூழலில் தமிழாய்வு நிறுவனங்கள் மூலம் செம்மொழித் தகுதியை மெய்ப்பிக்கும் முறையிலான ஆய்வுகள் நிகழவேண்டும். தமிழகத்திலுள்ள தமிழாய்வு நிறுவனங்கள் பழந்தமிழிலக்கியங்களைத் தக்க முறையில் ஆய்ந்து திருத்தமான பதிப்புகளைக் கொண்டுவரவேண்டும். இயலுமானால் இவற்றை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்யவேண்டும்.“தமிழ் இலக்கியச் செல்வத்தை விட வளமான இலக்கியம் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை. எனவே தமிழ் இலக்கியச்சிறப்பை உலகம் அறிந்து கொள்ள மொழிபெயர்ப்புப்பணி தேவை” என்று மேலை அறிஞர்; ஆர்.ஈ.ஆசர். குறிப்பிடுவதையும் நினைவு கூரலாம். (பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும், ப.80) நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு, தமிழ்க்கலைகள், மற்றும் தமிழ்மருத்துவம் பற்றிய ஆய்வு, தொல்லியல் ஆய்வு, தமிழ் கல்வெட்டுகள் தொகுப்பு, தமிழின் கணிதவியல், அறிவியல் - இவை உரிய முறையில் தொகுக்கப்பட்டு வெளிவரவேண்டும். தமிழ்நாகரிகம் இந்திய நாகரிகத்திற்கு மட்டுமல்ல உலகநாகரிகத்திற்கும் பங்களிப்பைத் தந்துள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும். பழந்தமிழிலக்கியங்களை இன்றைய நோக்கில் மறுவாசிப்பு செய்து அந்த இலக்கியங்களை நிகழ்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கவேண்டும். மேற்கண்ட பொருண்மையில் ஆய்வுகள் அங்கங்கே நடைபெறுகின்றன என்றாலும் கவனத்துடன் திட்டவட்டமான நோக்கத்துடன் இவற்றைச் செய்யவேண்டும். இவற்றோடு தமிழ்நாகரிகத்திற்கான அடித்தளங்கள் பல ஏற்கெனவே தமிழ்ச்சூழலில் அழிந்துவருகின்றன. தமிழகத்தில் பெருந்தெய்வங்களுக்கான கோவில்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவை போலவே ஊர்ப்புறங்களில் மக்கள் கொண்டாடுவதற்கான சிறு தெய்வங்கள் எனப்படும் குலதெய்வங்களும் கோவில்களும் ஆயிரக்கணக்கில் உள்ளன. தமிழ்க் கோவிலில் உள்ள அற்புதமான சிற்பங்கள் தமிழ்மக்களின் கலை உணர்வை அவர்களின் நெஞ்சிலும் நனவிலும் நிலை நிறுத்தக் கூடியவையாய் உள்ளன. தேவாரம், திருவாசகம், நாலயிர திவ்யபிரபந்தம், திருப்புகழ் முதலிய பக்திப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் தமிழில் உள்ளன. (த.நே.27.ப.9) தமிழ்நாடு நெடுகிலும் நாட்டார் வழக்காற்றியல் என்ற முறையில் பலவகை கூத்துகளும், இசைப்பாடல் கதைகளும் நடைபெறுகின்றன. தமிழர்களின் விழாக்கள் பொங்கல் விழா – தமிழர் திருநாள் முதலிய கலை விழாக்களும் ஏறுதழுவுதல், சேவல்கட்டு போன்ற வீர விளையாட்டுகளும் தமிழ்நாகரிகத்தின் அடையாளங்களாகும். சித்திரைத்திருவிழா – தமிழர் புத்தாண்டு தினம், தமிழர் வானியல் அறிவு சார்ந்தது. ஆடிப்பெருக்கு – தமிழ் நிலம் நீர்வளம் பெறும் நற்காலம். பொங்கல் - அறுவடை நாள் - புதியன ஏற்று மகிழ்தல் சூரிய தேவனுக்கு நோன்பு. கால்நடைத் தோழர்க்கு நன்றி - இவை பொங்கல். அனைத்துத் தமிழரும் தமிழ்நாட்டவர் அனைவரும் மகிழத்தக்கவிழா இது. இவ்விழாக்கள் தமிழர் பண்பாட்டின்; அடையாளம். இன்றைய உலகமயம், தனியார்மயம், முதலாளியம் ஆகியவை தனியுடைமை சார்பானவை. இவற்றின் ஆதிக்கத்திற்குத் தமிழன் இரையாகாமல் முதலாளியத்தைக் கடந்து செல்லவேண்டும். நுகர்வியம், தாராளமயம் முதலியவற்றை ஏற்க முடியாது. அறவுணர்வை இழக்கக்கூடாது. தமிழ்நாட்டில் தமிழ்மக்கள் நெஞ்சிலும் வாழ்விலும் பதிவு பெற்றுள்ள, இக்கருத்து ஏற்கனவே கிராமிய மணத்தோடு கூடிய நாகரிக பதிவுகள். இவை, தமிழ்நாகரிகத்தை நெடுங்காலத்திற்கு நிலை நிறுத்தும் என்பதில் அய்யமில்லை. தமிழ்த்தேசியம்: தமிழர் தனித்து இயங்குவதற்கும் தமிழகத்திற்கான உரிமையைப் பெறுவதற்கும் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தும் அரசியல் கருத்துகளும் கூறப்படுகின்றன. தமிழ் உணர்வாளர்கள் என்ற முறையில் சில ஆயிரம் பேர்களாவது இருக்கக்கூடும் இவர்கள் தமிழ்த்தேசியம் என்ற அரசியலை வற்புறுத்துகின்றனர். தமிழ்த்தேசியம் வேறு எந்த மாநிலத்தவருக்கும் இந்தியாவுக்கும் உலகத்திற்கும் எதிரானதன்று, உலகமக்களோடு தமிழன் தன் தேசிய உணர்வோடு கூடிக் கலந்து வாழமுடியும். தமிழர்க்கென ஒரு நாடும் தமிழ் மக்கள் தங்கள் பொருளாதாரத்தைத் தீர்மானித்துக் கொள்கிற உரிமையும் வேண்டும். பயிற்றுமொழி அனைத்து மட்டங்களிலும் தமிழாகத்தான் இருக்கவேண்டும். தமிழிசை, தமிழ்மருத்துவம் மரபு சார்ந்த தொழில்கள் சிறப்பிடம் பெறவேண்டும். காவிரி முதலிய ஆறுகளின் நீரில் தமிழர்க்கு உரிய பங்கினைப் பெறுவதில் உறுதி செய்யப்படவேண்டும். ஊடகங்களில் தமிழுக்கு இழிவு நேரும் கூறுகள் நீக்கப்படவேண்டும். தமிழின் வரலாறு காக்கப்படவேண்டும். தாய்த்தமிழ்ப்பள்ளிகளை ஊக்குவித்து அரசின் நிதி உதவியோடு செயல்படுத்த வேண்டும் இவற்றையெல்லாம் உள்ளடக்கியது தமிழ்த்தேசியம். “இந்தியாவில் இன்று நடைபெறுவது அரைகுறையான கூட்டாட்சி. இதை ஒன்றியம் என்று சொல்வது பொருந்தும். இது ஒற்றையாட்சி. அதாவது இந்தியாவில் இருப்பது ஒர் அரசு – நடுவண் அரசு. மாநிலங்கள் என்பவை நடுவணரசின் உறுப்புகள். இத்தகைய ஆட்சியில் நடுவணரசுக்கு கீழ்ப்பட்டவையாக உள்ளவை மாநில அரசுகள். இந்த நடைமுறை தமிழ்த்தேசியம் என்னும் கருத்துக்கு உடன்பாடன்று. இதற்கு மாறாக, அனைத்துத் தேசிய இயக்கங்களும் சுயவிருப்புடன் இணைந்ததாக கூட்டாட்சி அமையவேண்டும். இத்தகைய கூட்டாட்சியின் கீழ்தான் தமிழ்த்தேசியம் சிறக்கும்” (ஞானி, த.நே.26, ப.20). இவ்வாறு தமிழ்ச்சமூகம் தன் நாகரிகத்தின் மூலம் தன்னைப்புதுப்பித்துக் கொள்ளும் என ஞானி நம்பிக்கையுடன் கூறும்பொழுது சில எதிர்வினாக்களும் எழுகின்றன. உலக நாகரிகமா? தமிழ் நாகரிகமா? இன்றைய சூழலில் உலக நாகரிகமே கேள்விக்குள்ளாகிய நிலையில் தமிழ்நாகரிகம் பற்றிப் பேசுவதில் பொருள் என்ன என்றும் கட்டுரையாளர்கள் சுதாகர், பூரணச்சந்திரன் ஆகியோர் கேள்வி எழுப்புகின்றனர். பிலிப்சுதாகர்: ஸ்டீபன்காக்கின்சின் கருத்தை முன்வைக்கிறார். உலகளவில் ஐன்ஸ்டீனுக்கு அடுத்தபடியாக இன்றுள்ள மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன்காக்கின்சு ஆவார். இவர் “இனி உலகைக் காப்பாற்ற முடியாது. இப்புவியைக்காப்பது நடக்காத ஒன்று. இனி மனித குலம் தன்னைத்தக்க வைத்துக்கொள்ள வேறிடம் பார்க்கும் பணியைத் தொடரவேண்டும்”(மேலது,ப.60) என்கிறார். மனிதர்கள் வேற்றுக் கிரகத்தில் வாழ்வதற்கான சாத்தியம் பற்றி முயற்சி எடுக்கவேண்டும் என்று கூறும் ஹாக்கின்ஸ் கருத்தின்படி திடீரென்று நிகழக்கூடிய அணு ஆயுதப்போர்கள் பற்றிய கவலையாகவும் இருந்திருக்கலாம். உலகிற்கு என்ன கதியோ அதுவே தமிழருக்கும் என்கிறார் பிலிப்சுதாகர். உலகநாகரிகமே அழிவுக்கு உள்ளாகிறது என்று சொல்லித் தமிழ்நாகரிகம் போன்ற எண்ணற்ற நாகரிகங்கள் வெறுமனே இருந்துவிட முடியாது. இவ்வாறு செய்வதினால் உலக நாகரிக அழிவை கூடியவரை தள்ளிப்போடலாம். பூரணச்சந்திரன்: இன்று உலக நாகரிகத்திற்கு நேர்ந்த மிகப்பெரிய அழிவு, இயற்கைச்சுற்றுச்சூழல் சீர்கேடு என்கிறார். பெருந்தொழில் நிறுவனங்களினால் ஏற்படும் மாசு, ஓசோன் அழிவு, வாகனப்பெருக்கம் முதலிய பல காரணங்களால் இயற்கைப்பேரழிவு பெருமளவில் நடைபெறுகிறது. “இவற்றால் இன்னும் ஐம்பது வருடங்களுக்கேனும் உலகமே பிழைத்திருக்குமா? அல்லது அழிந்து விடுமா? என்று கேள்விகள் எழுந்துள்ளன. முதலில் உலகைக் காப்பாற்றுங்கள் பிறகு தமிழ்நாகரிகத்தைப் பற்றிக் கவலைப்படலாம்” (மேலது, ப.78) என்கிறார். உலக நாகரிகத்தைக் காப்பாற்றினால் தமிழ்நாகரிகம் காக்கப்படும் என்று உணர்த்துகிறார். நம் கையில் இருப்பது தமிழர் நாகரிகம் இதைக் காப்பாற்றுவதுதான் தமிழர்களின் பொறுப்பாக இருக்கமுடியும். இதன் வழியே உலகநாகரிகமும் பாதுகாக்கப்படும். மற்றபடி ஐம்பது ஆண்டுகளில் அழிந்துவிடும் நூறாண்டுகளில் அழிந்துவிடும் என்று எச்சரிக்கைகளைக் கண்டு சோர்ந்து இருந்துவிட முடியாது. இருவகைப் பகைகள்: தமிழ்நாகரிகத்தில் இன்று புரையோடிருக்கும் பகைகள் இரண்டு. ஒன்று அகப்பகை, மற்றது: புறப்பகை. இவற்றைக் களைவதன் மூலம் தமிழ் நாகரிகத்திற்கு எதிர்காலம் இருக்கும் என்பதை உறுதியாக நம்புகின்றனர். ந.வை.சொக்கலிங்கம்: புறப்பகையாகிய பார்பனியமும் உட்பகையாக உள்ளுர் அரசியல்வாதிகளும் உள்ளனர் என்கிறார். பெரும்பாலும் தமிழர் வரலாறு நெடுகிலும் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் தமிழ்நாகரிகத்திற்கும் எதிரானவர்கள் பார்பனர்கள். “இரண்டாயிரம் ஆண்டுக் காலமாகவே ஆரியர்களின் ஊடுருவலால் பார்ப்பனியத்தின் கலாச்சாரத் திணிப்பால், திராவிட தமிழ்நாகரிகம் சீரழிக்கப்பட்டு சிதறுண்டது. பெரும்பான்னையினராக இருந்து இன்று மொழிச் சிறுபான்மையினராகத் தமிழர் மாற்றப்பட்டுவிட்டனர்.” “தேர்தல் அரசியல் என்ற சூதாட்டத்தின் பெயரால் தமிழின் விடுதலைக்குத் தடையாய் இருப்பவர்கள் உள்ளுர் அரசியல்வாதிகளே, இவர்கள் தமிழைவைத்து அரசியலும் வணிகமும் செய்பவர்கள் வானளவில் தமிழின் பெருமைபேசி உண்மையில் தமிழை அழிப்பவர்கள்” (த.நே.27, ப.44). இவர்களை இனங்கண்டு ‘களை’ எடுக்க தமிழுணர்வாளர்கள் இணைந்து போராடவேண்டும் என்று கருதுகிறார். இடையில் அரசியல் பேச நேர்கிறது. அரசியல் இல்லாமல் குறிப்பாகத் தமிழ்த்தேசியம் என்ற அரசியல் இல்லாமல் இனி, தமிழர்களுக்கு வாழ்வு இல்லை. ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே’ (ப.102) என்னும்பாவேந்தரின் பாடல் வரிகள் உயிர் பெற்றெழுந்து தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் எதிரான பகைக்கூட்டத்தை – ஊடறுத்துத் தமிழின மறுமலர்ச்சிக்கு வழிகாட்டும் என்பது தெளிவாகிறது. இ.ஜே.சுந்தர்: தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் புறப்பகையாக முன்பு இருந்தவர்கள் பார்ப்பனர்கள். இன்று இவர்களைக் காட்டிலும் உட்பகையே பெரிதெனத் தோன்றுகிறது என்கிறார். பார்ப்பனர்களைப் பகைத்துப் பயனில்லை. ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் தமிழின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்கள். உ.வே.சா. முதலியவர்களை இங்கு நினைவு கூரலாம். இந்தப் பார்ப்பனர்களைத் தமிழ்மயப்படுத்த வேண்டுமே ஒழிய எதிர்த்துப்பயனில்லை (ப.69). மேலும் தமிழ்ப் படித்த ‘தமிழ்ப்பேராசிரியர்கள் தமிழில் கையெழுத்திட கூசுகிறார்கள். தமிழ்ப் பெயர்களைக் கேவலமாக நினைத்து வடமொழியிலும் ஆங்கிலத்திலும் பெயர் வைக்கிறான் பச்சைத் தமிழன்’ (ப.70) இவர்களே தமிழினத்தின் உட்பகையாக விளங்குகின்றனர் என்கிறார் சுந்தர். தமிழை இழிவாகக் கருதும் போக்கினைத் தளர்த்தித் தமிழில் பேசுவதும் தமிழில் கற்பதும், தமிழ் இதழ்கள், நூல்கள் ஆகியவற்றைப் படிப்பதும் தமிழில் வையெழுத்திடுவதும் உயர் நாகரிகமாக கருதப்படவேண்டும். தமிழுக்குப் பகைவர்கள் வெளியில் இல்லை, தமிழர்களே உட்பகையாக இருக்கின்றனர். இன்று உலக நாகரிகமே கேள்விக்குள்ளான போது தமிழ்நாகரிகம் என்று பேசிப் பயனில்லை என்பதுடன் தமிழ்நாகரிகத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் தமிழர்களே என்ற கருத்தும் பெறப்பட்டது. தமிழ்நாகரிகத்திற்கு வாழ்வு உண்டு: உண்மையில் தமிழர் நாகரிகத்திற்குப் பேரழிவுச் சக்தியாக தற்காலத்தில் திகழ்வது உலகமயம், தனியார்மயம், தாராளமயம், சந்தைப்பொருளாதாரம் இன்னும் பல பெயர்களில் வந்துள்ள ‘உலக நாகரிகம்’. இதன் முகமாகத் திகழ்வது அமெரிக்க நாகரிகம். சுருக்கமாகச் சொன்னால் ‘உலக முதலாளியம்’ இதை எதிர்த்து நிற்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டா? என்பதும் கேள்வி. தனராசு, முதலாளியம் என்பது ஓர் அழிவு சக்திதான் அய்யமில்லை. ஆனால் மார்க்சின் கூற்றுப்படி முதலாளியம் தன் புதைகுழியைத் தானே தோண்டிக்கொள்ளும். அமெரிக்க முதலாளியத்திற்கு எதிரான சக்திகள் உலகளவில் குறிப்பாக, தென் அமெரிக்காவில் பரவலாக உள்ளன. தமிழ்நாகரிகமும் முதலாளிய எதிர்ப்பை முன்வைக்க வேண்டும். இதன் வாயிலாகத் தமிழ்நாகரிகத்திற்குச் சிறப்பான எதிர்காலம் உண்டு என்பதும் தனராசுவின் கருத்து. மறுபடியும் ஒரு கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் இவ்வாறு முதலாளியத்தை எதிர்க்கப் புறப்படுபவர்கள் தொகை சில ஆயிரங்களில் அடங்கிவிடும். மருத்துவர் ஜீவானந்தம், கருத்தின்படி உலகமயமாதலை இன்று கடுமையாகச் சாடுபவர்கள் கம்யூனிசுட்டுகள். இவர்களைத் தமிழன் கண்டு கொள்ளவேண்டும். கண்டு கொள்வதோடு, இவர்களோடு சேர்ந்து உலகமயமாதலுக்கு எதிராகப் போராடவேண்டும் போராடினால் தமிழுக்கும் தமிழ்நாகரிகத்திற்கும் வாழ்வு உண்டு என்கிறார் அதாவது, “தமிழ் நாகரிகம் தனது சுவடுகளைப் பாதுகாத்துக் கொண்டு புதிய தேவைக்கான புதிய வடிவத்தை மிகுந்த சுய மாரியாதையுடன் மாற்றி அமைத்துக்கொள்ள முன் வரவேண்டும்” என்கிறார் (த.நே.26, ப.30). ஒரு வகையில் தாயைக் காப்பது போன்ற கடமை உணர்ச்சியுடன் நம்மவர்கள் சில ஆண்டுகளுக்காக வேணும் கட்டிக்காக்கவேண்டும் தமிழ் நாகரிகமும் தலித்தியமும்:- முனைவர் ஜீவா எழுப்பும் ஒரு கேள்வி தமிழ் நாகரிகத்தில், தமிழ் தேசியத்தில் தலித்துக்கு என்ன இடம்? என்று கேட்கிறார். இவரது கருத்துப்படித் தமிழ் நாகரிகம் என்பது ஒரு கட்டமைப்பு. இதில் தலித்துக்கு இடமில்லை என்பது மட்டுமல்ல, தலித்தின் மீது ஆதிக்கம் செய்யும் கட்டமைப்பு. இந்த ஆதிக்கவாதிகளின் தமிழ்நாகரிகம், இன்று உலகளவில் பரவிவரும் டிஜிட்டல் நாகரிகத்தின் முன் நிற்க முடியாது என்கிறார். “தலித்துக்களின் எதிர்ப்புணர்வு ஆரியத்திற்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ் நாகரிகத்திற்கும் எதிரானதுதான். இந்த எதிர்ப்புணர்வு மட்டும்தான் தலித்துக்களின் நாகரிகமாக இருக்கும். தமிழ், தலித் இரண்டையும் ஒரு அர்த்தத்தில் பார்த்தால்தான் தமிழ் நாகரிகம் தலித் நாகரிகமாகக் கருதப்படும். அப்படிக் கருதப்படுமானால், தமிழ் நாகரிகத்திற்கான எதிர்காலம் சரியான புரிதல்களோடு பகிர்ந்து கொள்ளப்படும், உணர்ந்து கொள்ளப்படும்” என்கிறார் (த.நே.27, ப.37) ஜீவா கருதுவது போலத் தமிழும், தலித்தும் ஒன்றினைய முடியும் இவை பிரிந்து இருக்க முடியாது. தமிழ் நாகரிகமும் பெண்ணியமும்: பெண்ணியம் பற்றிப் பேசும் முனைவர் கமலி முன்வைக்கும் கருத்தும் இத்தகையது. தமிழ் நாகரிகத்தில் பெண்ணுக்கு என்ன இடம்? தமிழ்ச் சமூகத்தில் ஆணுக்கு நிகராகப் பெண் மதிக்கப்படவில்லை. ஆணுக்குப் பெண் அடிமை, போகப் பொருள். தற்காலத்தில் பெண் இதை ஏற்கமுடியாது. ஆணுக்கு எதிராகவும் போராடியாக வேண்டும். கமலி பாரதி பாடலை மேற்கோள் காட்டுகிறார். “தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும்” என்பது எக்காலத்திற்கும் பொருந்துவது. தமிழ் நாகரிகத்திற்கு எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும் (த.நே.27, ப.39) என்கிறார். பெண் எதிர்காலத்தில் தருமத்தை நிலைநாட்டுவாள் என்பதையும் உணர்த்துகிறார். இதைத் தலை நிமிர்ந்து வரவேற்க முடியும். பெண்மையைப் போற்றிய பாரதியை இங்கு நினைவுகூர்வது தகும். தமிழ் உலகமொழி: தமிழ் நாகரிகமும் தமிழ் இலக்கியமும் இன்று எல்லை கடந்து விரிந்து சென்றுள்ளதைக் குறிப்பிடும் கமலி. தமிழின் ஆக்கம் என்பது தமிழாசிரியர்களுக்கு மட்டும் உரியதாக இருக்க முடியாது. தமிழாசிரியர்கள் தவிர இன்று சமுதாயத்தில் பரவலாகப் பலரும் தமிழ்ப்படைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் பரவியுள்ள தமிழர் பலரும் தமிழின் ஆக்கத்தில், தமிழ்ப் படைப்பில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் மூலம்தான் தமிழ் உலக மொழியாகிறது. (மேலது ப.39) என்பதைக் கமலி சுட்டிக்காட்டுகிறார். இவரது நம்பிக்கைக் குரல் வரவேற்கதக்கது. தமிழனுக்கு உள்முகப்பார்வை தேவை: தமிழன் உள்முகமாகத் தேடித் தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும் என்கிறார் மோகனராசு. ஆதிப்பொதுமைச் சமூகத்தில் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தவன் தமிழன். இவன் தமிழோடு பிறந்தவன். இடைக்காலத்தில் இவன் தனியுடைமை, அரசதிகாரம், வணிகம் முதலியவற்றுக்கு இரையானான். இவனும் ஒரு சரக்கானான். இவனுக்கு இன்றாவது உள்முகப் பார்வை வேண்டும். நான் யார்? என்றும் வரலாற்றில் நான் என்ன ஆனேன் என்றும் சிந்திக்க வேண்டும். தன்னைக் கண்டுகொள்ளவேண்டும். இவன் தனக்குள் உள்ள தமிழ்க்கனலை மூட்டிக் கொள்ளவேண்டும். இவன் வழியே தமிழ்க்கனல் பெரும் நெருப்பாக வேண்டும். இந்த நெருப்பின் மூலம் தமிழன் தனக்குள் உள்ள கறைகளைக் களையவேண்டும். இத்தகைய தமிழன் தன் நாகரிகத்தைக் காப்பாற்றுவான் (த.நே.27, ப.42) என்கிறார் மோகனராசு. இன்றைய உலகமயச் சூழலில் சிக்குண்ட மனிதன், இயந்திர வாழ்க்கையிலிருந்து விலகி, மனத்தில் அன்பும் அறனும் கொண்டு, இயற்கைக்குத் திரும்பினால் மட்டுமே வாழ்வு நிச்சயம். தகவல் தொடர்பும் தமிழும்: இன்றைய சூழலில் தமிழர் வாழ்வுக்கும் பண்பாட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் தற்காலிக நிலையே என்கிறார். இணையம் மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் கிடைத்திருப்பதால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழும் நாகரிகமும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் என்று மிகுந்த நம்பிக்கை தெரிவிக்கிறார். இன்று இணையத்தில் தமிழின் இடம் குறித்து இவர் கூறுவதாவது: “திருக்குறளின் அத்துணை உரைகளும், திருவாசகம் உள்ளிட்ட தமிழ்இலக்கியங்கள், தமிழின் பழைய எழுத்தாளர்கள் தொடங்கிப் புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் என்று தமிழ் சார்ந்த தொகுப்பு என்பது அளவிடமுடியாத வகையில் நிறைந்துள்ளது. மற்றமொழிகளுக்கு இல்லாத வேகம் இணையத்தில் தமிழுக்கு உள்ளது. இவை அத்தனையும் செய்தவர்கள் இன்றைய தமிழ் இளைஞர்கள் இவர்களின் இணைய விவாதமும் புள்ளி விபரங்களும் வாதிடும் நுட்பமும் நம்மை வியக்கவைக்கும் இத்தணையும் செய்தது தமிழ் என்ற உணர்வு. தமிழன் என்கிற பெருமை” (செந்திலரசு, த.நே.26, ப.48). இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களில், தமிழ்மக்கள் பத்துகோடி என்றால் இவர்களிலும் ஒருசிலருக்கு, கணினி, இணையம் ஆகியவை கிடைத்துவிடாது. அன்றியும் திருக்குறளையும் சங்க இலக்கியத்தையும் பொதுமக்கள் படிப்பர் என்பது எதிர்பார்க்கக் கூடியதன்று. கணினியின் வருகையில் தமிழுக்கு அழிவில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அன்றியும் இதனைப் பெரும்பான்மையாக ஏற்றுச் செய்பவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் ஈழத்து இளைஞர்கள். கூட்டாட்சி கொள்கை:- இந்தியாவில் கூட்டாட்சி முறை ஏற்படுமானால் தமிழன் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்கிறார் ம.இலெ.தங்கப்பா. “இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுடனும் இணைந்து கருத்துப் பரப்பல் செய்வதன் வாயிலாகவும் அவர்களின் துணையுடனும் கூட்டாட்சிக் கொள்கை அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்பை மாற்றி அமைக்க வழிபிறக்குமானால் யாருடனும் முரண்படாமல், யார் உரிமையிலும் குறுக்கிடாமல் தமிழராகிய நம் வாழ்வு முழுவளர்ச்சி பெறும் வகையில் அரசியல், பொருளியல், பண்பாட்டு உரிமைகளை நாம் பெற்றுக் கொள்ள முடியும்” (த.நே.26, ப.27) என்கிறார். இது நிறைவேறுமானால் நடுவணரசில் அலுவல் மொழியாகத் தமிழும் இடம் பெறும். தமிழ்ப்பயிற்று மொழியாகும், அரசு மொழியாகும், நீதிமன்ற மொழியாகும் என்பதும் உறுதி. தமிழ்நாகரிகமும் மாற்றமும்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்ப்பட்ட தொன்மை கொண்ட தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு அடையாளங்கள் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளன. அதேசமயம் தமிழர் விழுமியங்களைத் தக்கவைத்துக் கொள்வதிலும் அக்கறையோடு செயல்படவேண்டும். நாகரிகச் செறிவு மிக்க தமிழைக் கிராமப்புற மக்களும் சாமானிய மக்களும் இழக்கமாட்டார்கள். இரா. திருமுருகன்: தமிழ் மருத்துவம் தமிழர்களின் பாரம்பரியக் கைத்தொழில், ஆடை அணிகலன், உணவுப் பழக்கவழக்கங்கள், இலக்கியப் போக்குகள் இவற்றில் மாறுதல்கள் ஏற்பட்டாலும் சில அகக்கூறுகள் மாறவே மாறா என்றும் கூறலாம். இதனை, “உணவு, உடை, உறையுள், நுகர்பொருள் என்று புறநாகரிகத்தில் மாறுதல்கள் சில புகுந்துவிட்டாலும் அறநெறி, ஒழுக்கம், சமன்மை கலைகள், மனப்பான்மை முதலிய அகநாகரிகக் கூறுகள் அழியாமல்தான் உள்ளன” (மேலது ப.35) என்று உறுதியாகக் கூறுகிறார் இரா. திருமுருகன். தமிழர் பண்பாடு கால அளவில் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளான நிலையிலும் தன்னளவில் அத்துணை மாற்றங்களைச் சந்திக்கவில்லை என்று தனிநாயகம் அடிகள் கூறியது இங்கு ஈண்டு எண்ணத்தகும். “வடஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்த காலத்திலும் சமணர், ஐரோப்பியர் ஆகிய பிற நாட்டார் செல்வாக்கடைந்த காலத்திலும் தமிழர் பண்பாடு அடிப்படைக் கொள்கைகளில் அவ்வளவு மாற்றம் அடையவில்லை. பிற சமயங்களைப் போதித்த பார்ப்பனரும், சமணரும், புத்தரும், ஐரோப்பிய கிறித்தவரும் முகமதியரும் தமிழ்ப்பண்பாட்டைத் தழுவ முயன்றனர். இந்து சமயத்தின் வழிபாட்டு முறையும் இலக்கியங்களும் தென்னாட்டுத் தத்துவங்களால் வளம் பெற்றன” (தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும், 1980, ப.21) என்று தன் நூலில் குறிப்பிடுகிறார். இவ்வாறாகத் தமிழர் நாகரிகம் சில மாற்றங்களுக்கும், பல்வேறு சீர்கேடுகளுக்கும் உட்பட்டு வந்தாலும், தன் சுவடுகளை முற்றிலும் அழியாமல் தன்னைக் காத்து நிற்கும் என்பது உறுதியாகின்றது. அதாவது, தமிழகத்தில் பல ஆயிரம் கோவில்கள், சிற்பங்கள் இன்னும் நிலவும். தமிழிசையை புதுப்பிக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழர்களின் சித்த மருத்துவம் இன்று சிறப்பாக மதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை யார் எடுத்துக் கொண்டு போய்விடமுடியும். அந்நியர் இவற்றில் சில அழிவுகளைச் செய்யலாம். நகரத்து ஆண்களும், பெண்களும் நவீன நாகரிகத்தைத் தழுவிக் கொண்டாலும் தமிழ்க்கிராம மக்கள் கைவிடமாட்டார்கள். குலதெய்வக் கோவில்கள் இல்லாமலா போய்விடும். தமிழ்ச்சிற்பங்களின் பெருமையை குறைத்துப் பேசமுடியாது. காவிரியும் வைகையும் தமிழர்களுடைய நனவிலியோடு தொடர்புடையவை. இவற்றை அழிக்க முடியாது. இக்காரணத்தினாலேயே தமிழர் வாழ்வில் இன்று உலகெங்கணும் காணமுடியாத தனிப்பட்ட ஒரு பண்பைக் காண்கிறோம் சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கள் மொழியையோ, நாகரிகத்தையோ கிட்டத்தட்ட மாறா நிலையில் வைத்துக் காத்துள்ள உலகின் ஒரே இனம் தமிழினமே. ஆயினும் சமுதாயத் துறையிலும் அரசியல் துறையிலும் அக்காலத் தமிழருக்கும் இக்காலத் தமிழருக்கும் உள்ள உயர்வு தாழ்வின் அளவு மனச்சோர்வளிக்கும் அளவேயாகும் (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், ப.434) என்றார் வி.கனகசபை. தமிழர்களின் மனச்சோர்வு நிலையானதன்று. தமிழர்கள் விழப்புணர்வு பெற்று மீண்டெழுவர் என்பது உறுதி. “மொழி, தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண்மை, இசை என எல்லாத் துறைகளிலும் அறம் சார்ந்த இயல்நெறி வாழ்க்கை தமிழர்களிடம் இருப்பது உண்மையானால் தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகாது, உள்ளது போகாது, இல்லது வாராது” (தமிழ்நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்?, அணிந்துரை) என்ற அரணமுறுவலின் கூற்று நமக்கு நம்பிக்கையளிக்கிறது. ஒரு நாட்டின் நாகரிகமும், பண்பாடும், ஒரு காலத்தில் தோன்றி அழிந்து விடுவனவல்ல. அவை மக்களின் வாழ்க்கையோடு இயைந்துவருவன. அவ்வப்போது சிறுசிறு மாற்றங்கள் ஏற்றுவருவதுண்டு. எனினும் மக்களின் வாழ்வில் ஊடுருவிச்செல்லும் அவற்றின் பண்டைய மரபும் இயல்பும் எக்காலத்தும் அதன் பசுமைமாறாமல் இருக்கும். தொகுப்புரை: - சங்ககாலம் முதற்கொண்டு நிலவிய தமிழ் நாகரிகத்தில் சாதி, மதம் ஆதிக்கம் பெறவில்லை என்றாலும் அடுத்து வந்த இடைக்காலத்தில் நுழைந்து ஆதிக்கம் பெற்றன. இதனால் தமிழர் வாழ்வினுள் சீரழிவும் பிளவும் நேர்ந்தன. இன்றுவரை இப்போக்கு தொடர்கிறது. தற்காலத்தில் பகுத்தறிவு இயக்கமும் தமிழியக்கமும் தோன்றித் தமிழர் வாழ்வில் புதுமலர்ச்சியை ஏற்படுத்திய போதிலும் பார்ப்பனியச் செல்வாக்குத் தொடர்ந்து தமிழர் வாழ்வில் உட்பகையாக நிலைகொண்டது. - விடுதலைக்குப்பிறகு இந்திய அரசியல் அமைப்பினுள் கூட்டாட்சிக்கு வாய்ப்பு இல்லை என்பதாலும் இந்திய அரசின் ஒன்றியத்தினுள் தனி ஒரு மாநிலமாகவோ தமிழர் இருக்க நேர்ந்தது என்பதனாலும் தமிழர் தனக்கான அரசியலையும் பொருளியலையும் தீர்மானித்துக் கொள்ள இயலவில்லை. - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமதர்மம் பேசப்பட்டாலும் நாளடைவில் முதலாளியமே ஆதிக்கம் பெற்றது. உலகமயமாதலும் தனியார்மயமும் வந்த நிலையில் தமிழ்ச்சமூகம் மேலும் கடுமையான இடையூறுகளைச் சந்தித்தது. - வரலாற்றில் தமிழர் தன்மானத்தை ஏன், எப்படி இழந்தனர். தமிழ் நாகரிகம் நிலைபெற தமிழாய்வு நிறுவனங்களின் பணிகள் குறித்தும் தமிழ்க்கலைகள் முதலியவற்றைத் திரட்டி, தமிழிலக்கியங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். - தொன்மைக்காலம் முதல் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய கோவில் சிற்பங்கள், பக்தி இலக்கியங்கள், கிராமப்புறக் கூறுகள், திருவிழாக்கள் முதலியவற்றின் ஆதாரத்தில் தமிழ்நாகரிகம் அழியாது நிலைபெறும்;. - உலக நாகரிகமே இன்று கேள்விக்குள்ளான இன்றைய நிலையில் தமிழ் நாகரிகம் பற்றிப் பேச வேண்டிய தன் அவசியம் தேவையான ஒன்றாகும். - தமிழ் நாகரிகத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகிய புறப்பகை, அகப்பகையை இனங்கண்டு நீக்கவேண்டும். - உலகமயமாதல் சூழலில் தோன்றிய முதலாளியத்தைத் தமிழர் எதிர்த்துப் போராடவேண்டும். போராடினால் வாழ்வு உண்டு. - தமிழ் நாகரிகத்திற்கு எதிர்நிலைகள் போலத் தலித்தியமும் பெண்ணியமும் தோன்றினாலும் தமிழர் நாகரிகம் இவற்றைத் தனக்குள் வரித்துக் கொள்ளவேண்டும். - தமிழன் தனித்து வாழ முடியாது. உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதன் மூலமே தன்னையும் தன் நாகரிகத்தையும் காத்துக்கொள்ள முடியும். உண்மையில் தமிழ் நாகரிகத்தின் முக்கிய கூறாகிய ஒப்புரவு என்பதை இன்றைய நோக்கில் சமத்துவம், சமதர்மம் எனக் கண்டு கொள்ளவேண்டும். - தமிழர் தமக்கென அரசியலையும் பொருளியலையும் பண்பாட்டியல், கல்வியியல், வாழ்வியல் ஆகியவற்றைத் தக்கவைத்துக் கொள்ளும் முறையிலான, செயலில் ஈடுபடுவதன் மூலமே தற்கால உலகில் தமிழன் தன் நாகரிகத்தைக் காத்துக்கொள்ள முடியும். இதற்கெனக் கூட்டாட்சி என்னும் அமைப்பினுள் ஒரு தேசிய இனம் என்ற முறையில் தமிழன் இடம்பெற வேண்டும். இத்தகைய கருத்தியலாகிய தமிழ்த்தேசியத்தைத் தமிழன் செயல்படுத்த வேண்டும். - தமிழ்நாகரிகம் தனக்குள் பல்வேறு மாறுதல்களைச் சந்தித்த போதிலும் தமிழ்க்கூறுகள் அழியாமல் தன்னைக் காத்துக் கொள்ளும் - ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினனானே’ என்பதற்கிணங்க தமிழ்ச்சமூகத்தின் புறக்கூறுகளில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு, என்றாலும் தமிழர் நாகரிகத்தின் அகக்கூறுகளாகிய அன்பும் அறமும் அழியாது. தமிழ்மெய்யியல் ஆய்வுகள் மனிதன் தன் வாழ்க்கையைப் பற்றிய புரிதலுடன் தன்னைச் சூழ்ந்துள்ள உலகு பற்றிய எண்ணங்களின் ஆழ்ந்த அறிவுத்தேடலாக மெய்யியல் அமைகிறது. வாழ்வின் அடிப்படைகளாகிய அன்பையும் அறத்தையும் கைவிட்டு பொருளே பெரிதென்று அலையும் உலகினர்க்கு மெய்யியல் சிந்தனை தேவைப்படுகிறது. நான் யார்? வாழ்வின் அடிப்படைகள் எவை? வாழ்வுக்கு என்ன பொருள்? இவ்வுலகம் எவ்வாறு இயங்குகிறது? உலகத்தோற்றத்திற்கான காரணம் என்ன? என்பன போன்ற கேள்விகளிலிருந்து தொடங்குகிறது. இத்தகைய கேள்விகள் எல்லாக்காலங்களிலும் மனிதருக்குள் எழுவதாகவே இருக்கின்றன. மெய்யியல் என்றால் சமயம் என்று புரிந்துகொள்ளும் போக்கு பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது. சமயமும் மெய்யியலும் வேறுபட்டவை என்றாலும் சமயத்தின் உள்ளீடு மெய்யியலே. இலக்கியம் குறித்த ஆய்வுகள் பெரும்பான்மையாக நடைபெற்ற போதிலும் மெய்யியல் கண்ணோட்டத்தில் இலக்கிய ஆய்வு அரிதாகவே நடைபெறுகிறது.இன்றைய சூழலில் மெய்யியல் ஆய்வுகள் பெரிதாகத் தேவைப்படுகின்றன. மெய்யியல் - விளக்கம் தமிழில் மெய்ப்பொருளியல் என்பதன் சுருக்கம் மெய்யியல் என்பதாகும். மெய்யியல் என்பது தத்துவம் என்று வடமொழியில் சொல்லப்படும். ஆங்கிலத்தில் Philosophy என்று கூறப்படும். இந்தச் சொல் கிரேக்கச் சொல்லாகிய Philo-sophiaஎன்பதில் இருந்து பெறப்பட்டது. இதன் பொருள் ‘அறிவின்பால் காதல்’ / அறிவின்பால் ஈர்க்கப்படும் துறை என்பதாகும். ‘எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்,’ (355) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்’(423) அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவர் கூற்றுகளும் இங்கு நோக்கத்தக்கவை. அறிவுத்துறையானது “எது உண்மை, எது சரி, எதுகலை, எது அறம், எது அழகு, கடவுள் என்று ஏதும் உண்டா? என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைக் குறித்து ஆழ ஆராயும் துறையாகும்” என்று கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா விளக்கமளிக்கிறது. “பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு, மனிதவாழ்வின் பொருள், குறிக்கோள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தனைரீதியாக ஆராயும் துறை” என்கிறது க்ரியா தமிழ் அகராதி(ப.670). இவ்வுலக பொருள்களின் மெய்ம்மையை அறிந்து, வாழ்க்கைக்கும் மனித உறவுக்குமான தொடர்பு குறித்த அடிப்படையான உண்மைகளைப் பகுத்து ஆராய்வதாக மெய்யியல் அமைகிறது. மெய்யியலின் உட்கூறுகள்: மெய்யியல் என்பதை நான்கு கூறுகளாகப் பகுக்கலாம் என்கிறார் க.நாராயணன். அவை: “1.நுண்பொருள் இயல் (Meta Physics), 2.அளவையியல்(Logic) 3.அறவியல் (Ethics), 4.அழகியல் (Aesthetic)" நுண்பொருளியல்: இது புலனனுபவத்திற்கு அப்பாற்பட்டவற்றையே கருப்பொருளாகக் கொண்டது. புலனனுபவத்திற்குள் வராத பிரச்சினைகளும் உண்டு.பிரச்சினைகட்குத் தீர்வு காணவேண்டும் என்ற மனித மனத்தின் ஆர்வம் புலன் எல்லை கடந்தும் சிந்திக்கின்றது. இச்சிந்தனையின் விளைவே நுண்பொருளியல். இவ்வியலின் கருப்பொருளாக உயிர், உயிரின் தொடக்கம் - முடிவு, மறு உலகம், மறுபிறவி, கடவுள், வீடுபேறு, விதி போன்ற கருத்துக்கள் திகழ்கின்றன. அளவையியல்: ஐம்புலக் காட்சிகளால் செய்திகளைத் திரட்டியும் பகுத்தும், தொகுத்தும், சிந்தித்தும் ஏற்புடைய சிந்தனை முறைகளை எடுத்துச் சொல்வது அளவையியல். மனிதனின் சிந்தனை வெளிப்பாடுகளில் நிகழக் கூடிய குறைகளைச் சுட்டிக் காட்டி நீக்குவதுமாகும்.இதனை தருக்கவியல் என்றும் அறிவுத் தோற்றவியல் (epistemology) என்றும் கூறுவர். அறவியல்: மனிதனின் செயல்களை ‘நன்று - தீது’, ‘சரி - தவறு’ என்று மதிப்பீடு செய்வது அறவியல். மனிதனின் பெரும்பாலான செயல்கள் அறவியலின் கருப்பொருளாக இருப்பதால் தத்துவத்தின் பெரும்பகுதி அறவியலே ஆகும். அழகியல்: உண்மையான இலட்சிய அழகு, மாறாத அழகு எதுவென ஆராய்வது அழகியல். அழகியல் கருத்துக்களின் அடிப்படையில் எழுவதே இலக்கியம், ஓவியம் போன்ற நுண்கலைகள்.உள்ளத்து உணர்வுகளை மதிப்பீடு செய்வதும் உலகைப் புதிய கோணங்களில் காணவும் புரிந்து கொள்ளவும் அழகியல் துணைபுரிகிறது. (க.நாராயணன், மேலைநாட்டு மெய்ப்பொருள், ப.21). மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளாக இக்கூறுகள் அமையும் என்பதில் அய்யமில்லை. இத்தகைய மெய்யியற் கூறுகள், பழந்தமிழிலக்கியத்தினுள்ளும் தமிழர்களின் செம்மைப்பட்ட வாழ்வினுள்ளும்இழையோடிருந்தன என்பதை இங்குக் காண்பது பொருத்தமானதாகும். தமிழ் மெய்யியல்: தமிழர்களுக்குத் தொன்மைக் காலமுதற்கொண்டே மெய்யியல் சிந்தனை இருந்து வருகிறது என்றாலும் தமிழர்களுக்கெனத் தனித் தத்துவ /மெய்யியல் நூல் இல்லை என்ற கருத்தும் உள்ளது. தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியங்களின் அகப் புறப் பாடல்களிலும், இவற்றைத் தொடர்ந்து எழுந்த அறநூல்களினுள்ளும், பக்தி இலக்கியங்களிலும், சித்தரிலக்கியங்களிலும் இன்னபிற படைப்புகளிலும் அந்தந்தக் காலகட்டப்பகுதிகளில் நிலவிய மெய்யியற் சிந்தனைகள் வெளிப்படுவதைக் காணமுடியும். இதனை, க.நாராயணன் கூற்றிலிருந்து மேலும் புரிந்து கொள்ளமுடியும். “தத்துவ அறிவின் இயல்பையும் பயனையும் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் மிகச்சிறப்பாக விளக்குகின்றார். தத்துவ அறிவைத் திரட்டுவதிலும் தெளிவுபட எடுத்துச்சொல்வதிலும் தமிழர்கள் தலைசிறந்திருந்தனர். புறப்பொருள் பற்றிய சங்க கால இலக்கியங்களிலும் பின்னரெழுந்தஅறநூல்களிலும் தமிழர்தம் தத்துவ அறிவின் ஆழ அகலத்தைக் காணலாம் அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் கூட தத்துவ அறிவு பளிச்சிடும் உவமைகளும் சொற்றொடர்களும் காணக்கிடைக்கின்றன.” (தமிழர் அறிவுக்கோட்பாடு, ப.71) தமிழ் மெய்யியல் என்பது தமிழ்ச் சூழலில், தமிழ் மொழியில் முதன்மையாக உருவான மெய்யியல் தமிழ் மெய்யியல் ஆகும். இந்த மெய்யியல் சிந்தனை தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்கினர்ஃவிளங்கிக்கொண்டனர் என்று அறிய உதவுகிறது. யாரும் எக்காலத்திலும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும் பொழுதும் அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழ் மெய்யியலும் மருவி வந்திருக்கிறது. (http://ta.wikipedia.org/ jkpo; மெய்யியல்) இயற்கையோடு இயைந்த பழந்தமிழருக்குத் தனிமெய்யியல் நூல் இல்லையென்றாலும் தொல்காப்பியரும், சங்கச் சான்றோரும், வள்ளுவரும், சித்தர்களும் தமிழறத்தின் ஊற்றாகத் திகழ்ந்தவர்கள். இவர்கள் அன்றியும் ஏனைய பிற நூலாசிரியர்களும் மெய்யில் சிந்தனை மீதூரப் பெற்றவர்களே என்றால் மிகையில்லை. தற்காலத்தில் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. உலகமயச் சூழலில்தமிழன் தன்னைத் தன் வாழ்வை, வரலாற்றை, அரசியலை, பொருளியலை, உழவை இழந்ததோடு, பழந்தமிழர் வகுத்த அறநெறியை முன்னெடுத்துச் செல்வதிலும் அக்கறை கொள்ளவில்லை. இந்நிலையிலிருந்து தமிழர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக இதழாசியரின் செயல்பாடு அமைந்தது. தமிழ் மெய்யியல் என்பது நம்மைப் பொருத்தவரை நம் காலத்திற்குத் தேவையான ஒரு கட்டமைப்பு(த.நே.28, ப.3) என்பதை உணர்த்தும் முறையில் தமிழ்நேயத்தில் தமிழ் மெய்யியல் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து இரண்டு சிறப்பிதழ்களில் (இதழ்-28, சன.2007, இதழ்-30,ஆக.2007) வெளியிட்டுள்ளார். இவ்இரண்டு இதழ்களில் பிலிப் சுதாகர், ம.இல.தங்கப்பா, க.நெடுஞ்செழியன், ஞானி, தென்னன், நா.நளினிதேவி, இராச திருமாவளவன், செ. நாராயணசாமி ஆகியோர் கட்டுரைகளும் தமிழன்பன் கவிதையும் இடம்பெற்றுள்ளன. இவை தவிர தமிழ் மெய்யியல் ஆய்வுக்கு வலுசேர்க்கும் முறையில், கு.ச.ஆனந்தன், குணா, அருணன், கி. சுப்பிரமணியன், ஜெயமோகன், திரு.வி.க. ஆகியவர்களின் நூல்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் இருபத்து இரண்டு கட்டுரைகள் கீழ்க்கண்ட பொருண்மைகளில் பகுத்து ஆராயப்படுகின்றன. 1. பழந்தமிழ் மெய்யியல் என்ற பகுதியில் முதலில் சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் மெய்யியல், தொல்காப்பியத்தில் காணப்படும் மெய்யியல், சங்க இலக்கிய மெய்யியலில், அகப்பாடலில் காணப்படும் மெய்யியல், புறப்பாடலில் காணப்படும் மெய்யியல் என இவற்றோடு, வள்ளுவ மெய்யியல் ஆகியவை. 2. சித்தர் மெய்யியல் ஆய்வில் திருமூலர், சிவவாக்கியர், வள்ளலார் நூல்களில் காணப்படும் மெய்யியல். 3. சைவ சமய மெய்யியல், மற்றும் சைவ சித்தாந்தம் பற்றிய ஆய்வு. 4. தமிழ்ப் பண்பாட்டு மெய்யியல் / தமிழ்ப்பெண்ணிய மெய்யியல் 5. பிறகட்டுரைகள் என்னும் தலைப்பில் ஜெயமோகன், நளினிதேவி ஆகியோர் கட்டுரைகள் உள்ளன. தமிழன்பன் கவிதையில் காணப்படும் தமிழர்களுக்குத் தேவையான மெய்யியல் குறிப்பு: தமிழ்ச்சமூகத்தில் சிலம்பு, மணிமேகலை முதலிய தமிழிலக்கியங்களில் வெளிப்படும் சமண மெய்யியல், புத்த மெய்யியல் ஆகியவை பற்றிக் கட்டுரைகள் இல்லை ஆகவே இவை விடப்பட்டுள்ளன. பழந்தமிழ் மெய்யியல்: சிந்துவெளி மெய்யியல் : பழந்தமிழ் மெய்யியல் ஆய்வைச் சிந்துவெளியிலிருந்து தொடங்குவது சாலச் சிறந்ததாகும். சிந்துவெளி நாகரிகம் உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்று. கி.மு.3000க்கும் கி.மு.1500க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்சநிலையிலிருந்த நாகரிகம்.இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடிப்படைகளுக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.( http://ta.wikipedia.org/ சிந்து சமவெளி). மெய்யியல் வரலாறு பற்றிய ஆய்வில் தமிழ் மெய்யியலின் தொன்மையை இராச திருமாவளவன் குறிப்பிடுகிறார். மெய்யியல் ஆய்வை கிரேக்க மெய்யியலிருந்து மேற்கத்தியர் தொடங்குவதை மறுக்கும் மௌலானா அபுல்கலாம் ஆசாத், கிரேக்க மெய்யியலைக் காட்டிலும் இந்திய மெய்யியலின் வரலாறு மிகுந்த தொன்மையுடையது என்பதாகக் கருதுகிறார். அபுல் கலாம் ஆசாத் குறிப்பிடும் வேதநாகரிகத்தைக் காட்டிலும் தொன்மையுடையது சிந்துவெளியில் இருந்த தமிழர் நாகரிகம் என்கிறார் இராச திருமாவளவன். (த.நே.இ.30, ப.6) கி.மு.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் புத்தரும் மகாவீரரும். இவர்கள் காலத்திற்கு முன்னரே தோன்றியது தமிழர் மெய்யியல்.இந்திய மெய்ப்பொருளியல், வணிகர்கள் மூலமாக ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே பெர்சியா வழியாகக் கிரேக்கத்தை அடைந்திருக்க வேண்டும். கிரேக்க நுண் பொருளியல் கருத்துக்களும் இந்தியரின் நுண்பொருளியல் கருத்துக்களும் ஓத்ததன்மையுடையவை. கிரேக்க மெய்யியலினுள்ளும், கிரேக்க மெய்யியல் என்று அறியப்படாததும் அதற்கு அந்நியபட்டதுமானதுமான கருத்துக்கள் காணப்படுகின்றன. இவை இந்தியாவிலிருந்து பெறப்பட்டவை. வீடுபேறு (அ) மோட்சம் என்பது இந்தியரின் கருத்து என்று கருதுகிறார் மௌலானா அபுல்கலாம் ஆசாத் (ப.7,8). வீடுபேறு அல்லது மோட்சம் என்பது ஆரியத்திற்கு முற்பட்ட தொன்மைத்தமிழரின் கருத்து. கிரேக்க நுண்பொருளியலில் இந்திய கருத்துக்களும், இந்தியரின் சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சில சித்திரங்கள், முத்திரைகள், களிமண் படிவங்களின் ஆய்வுக் குறித்தும் தொல்லியல் அறிஞர்.சர்ஜான்மார்சல் கூறுவதாவது: “யோகிகளுக்கெல்லாம் தலையாய யோகி சிவன். அதனாலேயே அவனுக்கு மஹாதபவர், மஹாயோகி என்னும் பெயர்கள் அமைந்தன. சைவத்தைப்போலவே யோகமும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே தோன்றியதாகும். சிவன் தலையாய யோகி மட்டுமல்லர். விலங்குகளுக்கெல்லாம் தலைவர் (பசுபதி). சிவனின் இந்தப் பண்பினையே சிவனைச்சுற்றி நான்கு மிருகங்கள் நிற்பது காட்டுகின்றது. யானை, புலி, காண்டாமிருகம், எருது சிவனைச்சுற்றி நிற்கின்றன. சிந்துவெளிக் கடவுளின் தலையில் அமைந்துள்ள கொம்புகள் பிற்காலத்தில் சிவனின் விசேட முகூர்த்தமொன்றைக் குறிக்கும் திரிசூலமாக மாறியது. இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது பிற்காலத்திலே சிவனுக்கமைந்த பல அம்சங்கள் தோற்ற நிலையிலேயே சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன”. (மேலது, ப.9) தமிழ்ச் சைவ சமயத்தின் தொன்மை இன்றைய சைவசமயத்திலே காணப்படும் இலிங்க வழிபாடு, சக்தி வழிபாடு, சிவ(பசுபதி) வழிபாடு முதலியன சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியமான சமயப்பண்புகளாக விளங்கின என்பது பல அறிஞரின் துணிவாகும். (கைலாசபதி,பழந்தமிழர் வாழ்வும் வழிபாடும், ப.11) சிந்துவெளி நாகரிகத்திலே முதலிடம் பெற்று விளங்கியது பெண் தெய்வ (அன்னை) வழிபாடு. அம்மக்கள் வழிபட்ட தெய்வங்களை முக்கியத்துவத்தின்படி முறைப்படுத்திய மார்சல், முதலில் அன்னைத் தெய்வத்தையும், அதற்கடுத்தபடியாக மும்முகமுடைய கடவுளையும் மூன்றாவதாக இலிங்க வடிவத்தையும் வணங்கினர்.சிந்துவெளி மக்கள் பெண்தெய்வ வழிபாட்டை முதன்மையாகக் கொண்டதில் வியப்பில்லை. சிந்துவெளி நாகரிகத்திற்குச் சமகால நாகரிகமாகிய சிரிய, சின்னாசிய, எகிப்திய நாகரிகங்களிலும் பெண்தெய்வங்கள் முக்கிய இடம்பெற்றிருந்தன என்பதையும் அறியமுடிகிறது. (கைலாசபதி, மேலது, ப.12) சிந்துவெளிப் பண்பாட்டின் மெய்யியல் கூறுகளைச் சிவவழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடு முதலியவற்றின் மூலத்தை அந்நகர நாகரிகத்தில் இனம் காணமுடிகிறது. சைவம் ஒரு சமயமாக உருப்பெற்றது, கி.பி.ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு அல்லது பன்னிரெண்டாம் நூற்றாண்டில் என்று கொள்ளமுடியும். ஆனால் சிந்துவெளியில் சைவ சமயத்திற்கான சில தடயங்கள் இருப்பது வியப்பைத் தருகிறது. தவிரவும் தாய்த்தெய்வத்iதைப் போலவே சிவவழிபாடும் தொன்மையானது என்று தோன்றுகிறது. இவைப்பற்றி மேலும் ஆய்வு தேவை. சிந்துவெளி ஆய்வில் அண்மைக் காலத்தில் ஈடுபட்ட பின்லாந்து அறிஞர் அஸ்கோபார்ப்லோ கூறும் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது. சிந்துவெளியில் போர் மற்றும்காதலில் சிறந்து விளங்கிய ‘இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுள் வட இந்தியர்கள் வணங்கிய போர்க்கடவுளான ஸ்கந்தாவோடு ஒத்துக் காணப்படுகிறது. அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள் பட முருகு அல்லது முருகன்என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன என்கிறார். (தினமலர்; 4.9.2016) சிந்துவெளி நாகரிகத்தில் புலனனுபவத்திற்கு அப்பாற்பட்ட மெய்யியற்சிந்தனைகளே மேலோங்கிக் காணப்படுகின்றன என்ற போதிலும் பழங்காலத்திலேயே தவமும் யோகமும் தொல் தமிழர்களின் நெறிகள் என்பதும், கடவுள், தலைவனாய் வருவதற்கும், யோகப் பயிற்சி தேவை என்பதைஉணர்ந்திருந்தனர். தொல்காப்பியர் மெய்யியல்: இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியர். அவர் எழுதிய தமிழின் முதல் பெரும் இலக்கணநூலாகிய தொல்காப்பியத்தினுள் தமிழ் மெய்யியலின் ஆற்றல்மிக்க சில கூறுகளைக் காணமுடியும். தொல்காப்பிய மெய்யியல் குறித்து கட்டுரையாளர்கள் பலரின் கருத்து பின்வருமாறு: உயிர் வாழ்வுக்கு ஐம்பூதங்களின் செயல்பாடு இன்றியமையாதது. உலகமும், இயற்கை ஆற்றலும், உலக உயிர்கள் அனைத்தும் பொருள்களின் சேர்க்கையாலும் மாறுபாடுகளாலும் நிலைபேறுகொண்டு இயங்குகின்றன. உலக வாழ்க்கையின் அடிப்படை பொருளே என்ற சிந்தனையே உலகாய்தமாகும் இதனை, “நிலம், நீர், தீ, வளி விசும்போடைந்தும்; கலந்த மயக்கம் இவ்வுலகம்” என்கிறார் தொல்காப்பியர். இறப்பு, பிறப்பு, இன்பம், துன்பம் இவை யாவும் ஐம்பூதங்களின் சேர்க்கையாலும்பிரிவாலும்ஏற்படுகின்றன. பொருள்;களின் தோற்றமும், வளர்ச்சியும், இவ்வுலக இயக்கமும் மற்றும் பிற செயல்கள் அனைத்தும் இவ் ஐந்து பூதங்களின் சேர்க்கை என்பதால் இதனை பூதவியல் கோட்பாடு என்கின்றனர். “அணுக்களின் திரட்சியாகிய பூதங்களை – ஐம்பூதங்களைப் பற்றிப் பேசுவதால் இதனைப் பூதவியல் என்றும் கூறுவர்” என்கிறார் நெடுஞ்செழியன். (த.நே.இ.28, ப.28). மேலும் அவர் ஐம்பூதக்கோட்பாடு தமிழருக்குரியது. ‘மண்திணிந்த நிலனும்’ என்னும் புறநானூற்றுப் பாடலில் பூதங்களின் இயற்கை போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. “மண்திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை போல, (2) ‘இயற்கைப் பொருளை இற்றனெக்கிளத்தல்’ என்ற தொல்காப்பிய நூற்பாவில் இயற்கைப்பொருளை அவற்றின் இயல்புகளோடு சொல்லவேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.நிலம் வலிது: நீர் தண்ணிது என்ற அதன் இயற்கைப் பண்புகளை குறிப்பிடுவது இயல்புக் கோட்பாடு என்று கூறுவார் நெடுஞ்செழியன் (மேலது, ப.29). நீரின் இயல்பு தண்மை, நிலத்தின் இயல்பு வன்மை, தீயின் இயல்பு வெப்பம் இவ்வாறு அதன் இயல்பினைக் குறிக்கிறது என்பார். அதாவது, நிலம் எக்காலத்திலும் வலிதாக இருக்கிறது. நீர் எல்லாக் காலங்களிலும் தண்மையதாக இருக்கிறது. நிலமும் நீரும் எல்லாக் காலங்களிலும் இருந்தன/இருக்கின்றன. இவற்றிற்;குத் தோற்றம் என்பது இல்லை. தோற்றுவித்தவரும் இல்லை. இத்தகைய கொள்கை பூதவியல் அன்றியும் இதுவே இயல்புக்கோட்பாடு. ‘முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு’ (தொ.பொ.அ.950) எனத் தொடங்கும் இந்நூற்பாவில் நிலம், பொழுது ஆகிய இரண்டையும் முதற்பொருள் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இவை இரண்டும் முதற்பொருள் இயல்பானவை. இவற்றைப் பாகுப்படுத்துவதன் மூலம் தொல்காப்பியரின் ஆழ்ந்த அறிவுநுட்பத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. இக்கருத்தினையே பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மேற்கத்தியரான இமானுவேல் காண்ட் (Time & Space) காலம், வெளி எனக் குறிப்பிடுகிறார். ஆனால் தொல்காப்பியரிடம் இவ்வறிவுத் தோற்றவியல் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்பட்டுள்ளது என்ற கருத்தை இராச. திருமாவளவன் குறிப்பிடுகிறார் (இ.30 ப.11). “தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை” (தொல்.பொ.அ.964) எனத் தொடங்கும் நூற்;பாவில் கருப்பொருளைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். நிலம், பொழுது ஆகியவற்றின் ஆதாரத்தில் தோன்றும் கருப்பொருள்களுள் ஒன்றாகத் தெய்வத்தைக் (கடவுள்) குறிப்பிடுகிறார். நிலம், பொழுது ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் வல்லமை கடவுளுக்கு உண்டு என்று சமயவாதிகள் கூறுவர். இக்கருத்து தொல்காப்பியருக்கு உடன்பாடில்லை. அதாவது ‘கடவுள்’ என்னும் முழுமுதற் பொருளைத் தொல்காப்பியர் ஏற்காதவர். ஐம்புலன்களையும் அவற்றினால் அறிகின்ற உயிரின வளர்ச்சியின் அடிப்படைக்கூறுகளையும் தொல்காப்பியர் பாகுபடுத்தி, “ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடுநாவே மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே!”(தொ.பொ.மர.1526) என்று விளக்கிக்கூறுவது படிமுறை வளர்ச்சிக்கோட்பாடு. அதாவது பரிணாமக் கோட்பாடு என்பதை நெடுஞ்செழியன் பின்வருமாறு விளக்குகிறார். “உயிர் வேதிய மரபியலின் அடிப்படையில் உயிரினங்களுக்கிடையே அமைந்துள்ள ஒற்றுமைப் பண்புகளைத் தொல்காப்பியர் புலனறிவின் அடிப்படையில் அமைந்த ஒற்றுமையாக விளக்குகின்றார்”. (ப.31). தொல்காப்பியம் மட்டுமே அறிவின் அடிப்படையில் உயிரின வளர்ச்சியை பாகுபடுத்தி விரிவாகப் பேசுகிறது என்கிறார். தொல்காப்பியம் குறிப்பிடும் அறிவுசார் துறைகளில் இதுவும் ஒன்றாகும் என்பது புலப்படுகிறது. “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொ.பொ.1162) என்பதில் எல்லா உயிர்க்கும் இன்பமே ஆதாரமானதாகும் என்கிறார் தொல்காப்பியர். இங்கு இன்பம் என்பது உலகாய்தர் கோட்பாடுஅதாவது “உலகாய்தர்கள் கூறிய இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரொடு மணந்து உண்டு உடுத்து வாழ்வதே துறக்க இன்பம்” எனும் இன்பியல் கோட்பாட்டிற்கு இணையான நூற்பா என்கிறார் நெடுஞ்செழியன்(ப.41). தொல்காப்பியரைப் பொருத்தவரை அன்பின் ஐந்திணையியலில் இன்பத்தையே உரிப்பொருளாகக் கொள்கிறார். இது தொல்காப்பியரின் இன்பியல் கோட்பாடு. இக்கருத்துக்கள் அனைத்தும் உலகாய்தர் கோட்பாடு என்பார் நெடுஞ்செழியன். இவ்வின்பம் தன் விருப்பத்தோடு இயைந்து வரும் ஒத்த நிகழ்வாகும். இவ்வியல்பு அனைத்து உயிர்க்கும் பொதுவாகும் என்பதையும் உணரமுடிகிறது. ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ (தொ.பா.26) என்று தொல்காப்பியரைப் பாயிர உரையில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். ஐந்திரம் என்பதை நெடுஞ்செழியன் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். “தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவர். ஐந்திரம் பேச்சுக்கலை உள்ளிட்ட அறிவியல் துறைகளைக் கொண்டிருந்த ஒரு சிந்தனைப் பள்ளி” (தமிழர் இயங்கியல், ஆசிரியர் உரை). தமிழின் ஐந்திரமும் வடமொழியில் கூறப்படும் ஆன்வீக்சிகியும் ஒன்றே ஆகும். “ஆன்வீக்சிகி என்பது வேதங்களைவிட மேலான கல்வியாகும்.என்று கௌடில்யர் குறிப்பிடுகிறார்.இவ் ஆன்வீக்சிகி, பெண்ணியம், யோகம், உலகாய்தம் ஆகிய மூன்று கோட்பாடுகளின் பொதுப்பெயராகவும் கொண்டிருக்கிறது என்கிறார். கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் சாரிபுத்தன் தென்னாட்டிற்கு வந்து தர்க்க அறிவுடன் கூடிய ஐந்திரம் என்னும் பேச்சுக் கலையை கற்றான் என்று பாலிமொழியில் அமைந்த அவதான சாதகம் கூறுகிறது. சொல்லின் செல்வனாகிய அனுமன் ஐந்திரக் கல்வியால் தேர்ந்தவன் எனக் கம்பரும் சுட்டிக் காட்டுகிறார் என்பதை நெடுஞ்செழியன் குறிப்பிடுகிறார் (ப.39). ‘காமஞ்சான்ற கடைக்கோட்காலை’ ஏமஞ் சான்ற மக்களொடுதோன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.“- (தொ.பொ.1138) இந்நூற்பாவில் குறிப்பிடப்படும் தவமும், யோகமும் தொல்தமிழர் நெறி என்கிறார் இராச. திருமாவளவன். தலைவனும் தலைவியும் இல்லற வாழ்வில் நன்கு ஈடுபட்டுத் தம் கடமைகளை ஆற்றி வயதும், அறிவும் கூடிய நிலையில் துறவு வாழ்க்கை மேற்கொள்கின்றனர். இத்தவம் என்பது தமிழர்களின் யோக நெறியை பெறுவதற்கான வழியாகவும் அமைந்தது என்கிறார். (மேலது, ப.16) காமத்தை நிறைவாக அனுபவித்த இறுதிக்காலத்தில் தமக்குப் பாதுகாப்புத் தரும் மக்களொடு கலந்து தம்மைப்போலவே அறத்தை விரும்புகிற உறவுகளோடு கூடி, கிழவனும், கிழத்தியும் சிறந்ததாகிய தவத்தைப் பயில்வது போற்றப்படும். இங்குத் தவமும் யோகமும் தொல் தமிழர் நெறி என்பது புலப்படுகிறது. தலைவனும், தலைவியும் இறுதிக்காலத்தில் தவம் பயில்வதுஉலகாய்தருக்கு ஒத்தகருத்து. இளமையில் தவம் வேண்டாம். முதுமையில் தவம் தேவை என்பது இதன் விளக்கம். கிழவனும் கிழவியும் சேர்ந்தே தவம் புரிய வேண்டும். ஆணுக்கு மட்டும் தவம் என்பது இங்குச் சொல்லப்படவில்லை. இல்லறத்தில் இருந்து பிரிவு படாதது துறவு என்பதும் தொல்காப்பியர் கருத்து.தலைவனும் தலைவியும் இணைந்தே துறவு மேற்கொள்கின்றனர். இன்பக் கோட்பாட்டை உலகாய்தர் வற்புறுத்தினர் எனினும் துறவும், தவமும் உலகாய்தக் கோட்பாட்டில் அடங்கும். “ஒன்றே வேறே என்றிரு பால்வயின்” (தொ.பொ.க.1039) என்னும் நூற்பா விளக்குவது பால்வரை தெய்வம். ஒத்த தன்மையுடைய தலைவனும் தலைவியும் சந்திப்பது என்பது இருவரையும் கூட்டுவிக்கும், பால்வரை தெய்வத்தினது ஆணையால் என்கிறார் தொல்காப்பியர். பால்வரை தெய்வம் இருவரையும் சேர்க்கும் அல்லது பிரிக்கும். ‘ஊழ் என்பது தெய்வம்’ எனப் பொருள்படும். இங்கு ஊழ் என்பது கருத்து முதலியல். தொல்காப்பியருக்கு இவை உடன்பாடாக இல்லாது இருந்திருக்கலாம். “தொல்காப்பியம் அகம், புறம் பற்றிக் கூறுவது என மேலோட்டமாக இருவகைப்படுத்தினாலும் அது கூறும் உலகாய்தங்களும், வாழ்க்கை கூறுகளும், எண்ணங்களும் பலப்பல. புறம் என்ற ஏனைவட்டத்தில் சுருங்கிய அளவில் உலகமே எதிரொலிக்கின்றது”. (தொல்காப்பியகடல், ப.10) என்ற வ.சுப.மாணிக்கத்தின் கூற்று மேலும் அரண்சேர்ப்பதாக அமைகிறது. இதில் ஐம்பூதங்களை ஐம்புலக் காட்சிகளால் கண்டு அவற்றைப் பகுத்து, தொகுத்து சிந்தனையைத்தூண்டும் அறிவுத்தோற்றவியலையே இம்மெய்யியல் கொண்டுள்ளது. சங்க இலக்கிய மெய்யியல்: சங்க இலக்கியங்கள் அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்முறைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாகும். பண்டைத் தமிழரது அகவாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் ஆழ ஆராய்கிறது. இவ்விரண்டிலும் மெய்யியற் கருத்துக்கள் விரிவாகக் காணப்படுகின்றன.சங்க இலக்கிய ஆய்வைப் பொருத்தவரை அகத்திணைப் பாடல்களில் குறுந்தொகையும், புறத்திணைப் பாடல்களில் புறநானூற்றையும் குறிப்பாக எடுத்துக் கொள்கின்றனர் கட்டுரையாளர்கள். குறுந்தொகைப் பாடல்களில் உலகாய்தக் கொள்கை முதன்மையாக இடம்பெறுகின்றது. புறத்திணைப் பாடல்களில் மெய்யியல் என்ற முறையில் அறம் இடம்பெறுகின்றது. குறுந்தொகைப் பாடலில் மட்டுமல்லாமல் நற்றிணைமுதலிய பிற அகத்திணைப்பாடல்களுக்கும் இதுபொருந்தும். அகத்திணைப் பாடல்: நெடுஞ்செழியன் கருத்தின்படி அகத்திணைப் பாடல்கள் வாழ்வில் இன்பவியல் கருத்தை முதன்மையாகக் கொண்டவை. அதாவது இன்பம் என்பது உலகாய்தர் கருத்து.அதாவது நக்கீரர் பாடிய (குறுந்.280) பாடல் “ஒரு நாள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே” என்கிறான் தலைவன். தன் காதலியிடம் கொண்ட பேரன்பை பெரும் வேட்கையைத் தலைவன் கூறுவதாக அமைந்தது. உலகாய்தர் கடவுள் இருப்பை மறுக்கக் கூடியவர்கள். கடவுள் மறுப்பாக அமைந்த குறுந்தொகை (262) வேப்பற்றூர்க் கண்ணன் கூத்தன் பாடலைச் சான்று காட்டுகிறார். ‘முருகயர்ந்து வந்த முதுவாய் வேல’ என்று தொடங்கும் அப்பாடலில் வேலனே! சிறிய மறியை அறுத்து அதன் குருதியைத் தலைவியின் நெற்றியில் தடவி நீ செய்யும் இந்தப் பலியைத் தலைவனின் ஆகம் (நெஞ்சு) ஏற்குமோ?பதில் கூறுவாயாக என்கிறாள் தோழி. வேலன் முருகனுக்குப் பலியிடுகிறான். தலைவியின் உடல் நலிவுக்கு முருகன் காரணமல்லன். தலைவன் தான் காரணம். எனவே இப்பலியானது தலைவனுக்குப் போய்ச் சேருமோ? என்று வேலனையும், முருகனையும் தோழி கேலி செய்கிறாள். முருகனிடம் தோழிக்கு அச்சமில்லை. பலியிடுவதிலும் உண்மை இல்லை என்ற கருத்தே இப்பாடலில் உள்ளது. இதனால் இப்பாடலில் இடம்பெறுவது உலகாய்தர் கருத்தாகும் என்கிறார் நெடுஞ்செழியன். (த.நே.இ.30, ப.42) இல்லற இன்பத்தைத் தலைவன் தலைவியோடு இணைந்து பெறுவதே இம்மை இன்பம் என்பது உலகாய்தர் கருத்து. இக்கருத்தின்படி பருஉரூமாவாய்ப்பதுமனின் குறுந்தொகைப் (101) பாடலும், வள்ளுவரின் (1103) திருக்குறளும் ஒப்புநோக்கத் தக்கது என்கிறார் நெடுஞ்செழியன்.தலைவன் தன் பிரிவால் தலைவிக்குத் துன்பம் தருகிறான். இத்துன்பம் கூட இனியது. இதற்கு ஈடான இன்பம் தேவருலகில் இல்லை. (தேவருலகத்தைக் காட்டிலும் இந்த உலகமே இனியது). தேவர் உலகம் என்பது வைதீகர் கருத்தாக இருக்கலாம். அந்த உலகை தலைவி மறுக்கிறாள்.மேலும் இல்லற இன்பத்தின் உயர்வு போற்றப்படும், அதேவேளையில் மறுமை இன்பம் மறுக்கப்படுவது ஆழ்ந்து எண்ணத்தக்கது என்கிறார். (ப.44). அருகிப் பெறக்கூடிய புத்தேள் நாட்டையும் இவ்வுலகையும் சீர்தூக்கிப் பார்த்தால் புத்தேள் நாடும் இவ்வுலக இன்பத்திற்கு ஈடாகாது. மண்ணுலகில் தலைவியிடம் பெறும் இன்பம் அத்தகையது என்கிறான் தலைவன். வள்ளுவரின் “தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு” (1103). என்பதினுள்ளும், (1323) குறளிலும் மேல் உலக இன்பம் மறுக்கப்படுவதை வள்ளுவர் குறிப்பிடுகிறார். இவ்வுலகில் கிடைக்காத பேரின்பம் இன்னோர் உலகில் கிடைக்கும் என்ற கருத்து வள்ளுவருக்கும் உடன்பாடில்லை என்பதை அறியமுடிகிறது. மனிதன் இவ்வுலகத்து இயற்கையோடும் தன்னை ஒத்த மாந்தரோடும் பிற உயிர்களோடும் கொள்ளும் உறவினைப் பற்றிக் கூறுவதாக மெய்யியல் அமைகிறது.அனைத்து உயிர்கட்கும் உறவுகளுக்கும் அடிப்படையாகவும் உயிர்நிலையாகவும் விளங்கக் கூடியதாக அமைவது அன்பு என்கிறார் தங்கப்பா. “பண்டைத்தமிழ்ப் புலவர்கள் அத்தகைய மெய்யியலாளராக இருந்தமையாலேயே அன்பை உயிர்நிலையாகக் கொண்ட அகவாழ்க்கையை இலக்கியமாகப் படைத்தளித்தனர்” என்கிறார்(த.நே..28.ப.22) அகப்பொருள் பாடல்களின் உயிர்நிலை, அன்பு ஒன்றுதான். அன்பு இன்னதென்று விளக்க முடியாத ஓர் உணர்வு. புலவர்கள் அன்பின் இயல்பையும் அதன் வெளிப்பாடுகளையும் வெகுநுட்பமாகவும் விரிவாகவும் பாடுவதால் அதன் பசுமை மாறாமல் இன்றும் தொடர்கின்றது. (நா. நளினிதேவி,படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, ப.57) இவ்வகை அன்பின் திறத்தை விளக்க தலைவன், தலைவியின் கூற்றில் அமைந்த குறுந்தொகைப் பாடல் இரண்டினைச் சான்று காட்டுகிறார். தலைவியின் கூற்றில் அமைந்த அன்பின் மெய்யியலை விளக்கும் பாடல்: “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று” (குறுந்.3) தேவகுலத்தார் பாடியது.இன்பம் எத்துணைப் பெரியது என்பதை இப்பாடல் விளக்குகின்றது. “யாயும் ஞாயும் யாராகியரே” (குறுந்.40) செம்புலப் பெய்ந்நீரார் பாடிய பாடல் தலைவனின் அன்பின் மெய்யியலைக் காட்டுகிறது என்கிறார். தலைவனும் தலைவியும் காதல் வாழ்க்கையை முழுமையான அன்பு வாழ்க்கையாக நுகர்ந்தனர் என்பதைத் தங்கப்பா எடுத்துரைக்கிறார் (ப.23). தங்கப்பாவும் நெடுஞ்செழியனும் ஒரே கருத்தைக் கூறுகின்றனர். அன்புதான் தலைவியர்கிடையிலான இன்பத்திற்கு ஆதாரம். இங்கு அன்பு என்பது மெய்யியல். புறத்திணைப் பாடல்: புறவாழ்க்கைக்கு அடிப்படையானதாக ‘அறம்’ உலகப் பொதுமையாக விளங்குகிறது. பொதுவாக அறக்கருத்து ஒரே மாதிரியானவையாகத் தோன்றினும் பல்வேறு பார்வைகளில் விரிவடைகிறது. “ஓர் இல் நெய்தல் கறங்க ஓரீல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர் பைதலுண்கண் பணிவார்பு புறைப்பப் படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன் இன்னாதம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே” - (புறம் 194) என்ற பக்குடுக்கை நன்கணியாரின் பாடல் கட்டுரையாளர் பலரின் நெஞ்சைக் கவர்ந்த பாடல். இப்பாடலில் அமைந்திருக்கும் பொதுமைக் கருத்து பல தளங்களில் விரிவு பெறுகிறது. நெடுஞ்செழியன்: இப்பாடலுக்கு தரும் விளக்கம்: “படைத்தவன் மன்ற அப்பண்பிலாலன்” என்பதில்படைத்தவனைக் ‘கடவுள்’ எனப் பொருள் கொண்டு, இந்தக் கடவுள் உலகைப் படைப்பதற்கு ஏதாவது ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அடையவேண்டிய அனைத்தையும் அடைந்தவன் கடவுள் என்பது உண்மையானால், இவன் இன்னொரு வகையில் ஒரு பயனை எதிர்பார்த்து உலகைப் படைத்தவனாகவும் இருக்கமுடியாது. துன்பம் நிறைந்த உலகைக் கடவுள் படைத்தான் என்றால் அவன் கருணை மிக்கவன் என்பதும் உண்மையாகாது. இவ்வகையில் கடவுளை மறுப்பது உலகாயதர் / பகுத்தறிவாளர் கருத்து என்கிறார் நெடுஞ்செழியன். (மேலது,ப.32). உலகம் துன்பமயமானது. இத்துன்பத்தினூடே இன்பம் காண்பது தேவை என்றும் துன்பத்தையும் இன்பமாகக் கொள்வது தேவை என்பதும்உலகாய்தர் கருத்து. இதுவேஅவர் தரும் விளக்கம். தங்கப்பா: ஒருவர்க்கு இன்பம் அதுவே மற்றவருக்கு துன்பம் என்ற முறையில் வாழ்க்கை முரண்பாடுடையதாகத்தான் இருக்கும். எனவே துன்பம் வரும்போது படைத்தவனைப் பண்பற்றவன் என்று குறை சொல்வதில் பயனில்லை. கடவுள் இக்கருத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். கடவுள் இவ்வுலகை எப்படிப் படைத்திருந்தாலும் கடவுளின் உதவியின்றி வாழ்வது இயல்பு. வாழ்க்கை முரண்பாடுடையதுதான் எனவே துன்பத்தையும் இன்பமாகக் கொள்ள முடியும். ’இன்னாதம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே" என்பதில் வாழ்வின் இயல்பைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை சரிசெய்து கொள்வதே மெய்யியல் பார்வை என்கிறார் தங்கப்பா. பிலிப் சுதாகர்: தரும் இப்பாடலுக்கான விளக்கம் வருமாறு: ஒரு வீட்டில் சாப்பறை முழக்கம். மற்றொரு வீட்டில் மணப் பறை முழக்கம். அதாவது ஒருவரின் வாழ்வு இன்னொருவரின் சாவோடு இணைக்கப்பட்டுள்ளது. இப்படிப் படைக்கப்பட்டது இந்த உலகம்.இதை ஒப்புக்கொள்ள முடியாது. மாற்றியமைக்க வேண்டும் என்கிறார். வசதி மிக்கவன் வாழ்வை அனுபவிக்கிறான்.வசதி குறைந்தவனுக்கு வாழ்க்கை துன்பமாய் அமைகிறது. மாற்றியமைப்பது நம் கடமை. துன்பத்தையே இன்பமாகக் கொள்வது இயலாது.ஒருவருக்கு இன்பம் மற்றவருக்குத் துன்பம் என்பதான இவ்வுலகம் வேண்டாம் என்கிறார். (த.நே.இ.28, ப.15).ஏற்றத்தாழ்வில்லாத சமன்மையான உலகைக் காண்கிறார் இது பிலிப் சுதாகரின் சமகாலப் பார்வை. ஞானி: உலகம் இரண்டுபட்ட நிலையில்தான் இருக்கிறது.அதாவது ஓர் ஊரில் ஒரு தெருவில் ஒரு வீட்டில் மணப்பறை. இன்னொரு வீட்டில் சாப்பறை. இருப்பினும் முன்னைய இனக்குழுச் சமூகத்தில் இவ்வாறு இருக்கவில்லை.ஒரு வீட்டில் திருமணம் என்றால் ஊரே அதைக் கொண்டாடும்.ஒரு வீட்டில் சாவு என்றால் ஊரில் உள்ள அனைவரும் துன்புறுவர்.இப்படி ஒரு உலகம் இனி இல்லை.இரண்டு பட்ட உலகில்தான் இன்பமும் துன்பமும் ஏற்படுகின்றன.இப்படி உலகைப் படைத்தவன் பண்பற்றவன்.இந்தச் சூழலில் இன்பம் காண்பது அனைவரின் கடமை.இவ்வாறாக ஞானி விளக்கம் தருகிறார்.இது அவரது மார்க்சிய பார்வை. “சமூகத்தில் ஏற்பட்ட இந்தப் பிளவு அன்று மிகக் கடுமையானதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.உடைமையின் ஆதிக்கம் சமூகத்தை இப்படிக் கடுமையாகத் தாக்கி பிளக்கிறது” (த.நே.இ.30, ப.49)" என்கிறார் ஞானி.இரு வேறு உலகம் - ஒன்று இனக்குழுச் சமூகம் மற்றது, உடைமைச் சமூகம். இனக்குழுச் சமூகத்தின் மனிதர் மத்தியில் பிளவு இல்லை. உடைமைச் சமூகத்தில் பிளவு இல்லாமல் இல்லை.சங்க காலத்திற்கும் இன்றைய நம் காலத்திற்கும் இடையில் ஓர் ஒற்றுமை தெரிகிறது.இனக்குழச் சமூகம் உன்னதமானது. அனைவருக்குமான வாழ்வில் மேன்மையைத் தருவது. உடைமைச் சமூகம் மனித வாழ்வை, மனிதனைக் கூறு போடுகிறது.மனிதனைச் சிதைக்கிறது.இந்தச் சமூகம் நமக்கு வேண்டாம்“(தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும், ப.71).என்கிறார் ஞானி. பண்பற்றவன்தான் இப்படி உலகை முரண்பட படைத்திருக்க முடியும். இத்தகைய படைப்புச் செயல் அநீதியானது.இக்கருத்து நெடுஞ்செழியன் தங்கப்பா சுதாகர் ஞானி ஆகியோரிடம் ஒத்தாகவே இருக்கிறது. இப்படிக் கடவுளைப் பற்றிய கருத்து,உலகாய்தர் கருத்தாகத்தான் இருக்கமுடியும். உலகத்தின் இயல்பை நன்றாக உணர்ந்த பழந்தமிழர் நல்ல செயல்களையே செய்தனர். துன்பத்தையும் இன்பத்தையும் வாழ்க்கையின் இரு துருவங்களாகவே கண்டனர். பகிர்தலின் மெய்யியல்: இனிப், புறத்திணையில் அமைந்த பிற பாடல்களில் மெய்யியல்கூறுகளைக் காணலாம்.இவ்வுலகத்தார் சிறப்பென்று கருதுகிற மேன்மையான செம்மையான செயல்கள் காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும். இந்த மெய்ம்மையை உணர்ந்த சங்கச் சான்றோர் தம் வாழ்க்கையில் அறங்களைக் கடைப்பிடித்ததோடு அதனை மன்னர்களுக்கும் மக்களுக்கும் வலியுறுத்தியும் வந்தனர் என்பதைப் பின்வருமாறு காணலாம். தங்கப்பா புறப்பாடலில் பகிர்தலின் மெய்யியலைக் காண்கிறார். “பாரி முல்லைக்குத் தேர் நல்கியதும், பேகன் மயிலுக்குப் போர்வை வழங்கியதும் அதியன், குமணன், ஓரி, காரி, நள்ளி போன்ற வள்ளல்கள் புலவர்களைப் புரந்ததும், பெருஞ்சித்திரனார் போன்ற பரிசில் பெற்றே வாழும் புலவர் பெருமக்கள் பரிசாகப் பெற்ற பொருளைக் கொண்டு தாம் மட்டும் வாழாது பிறர்க்குப் பகிர்ந்தளித்தலும் இவையனைத்தும் வாழ்வின் மெய்யியல் உணர்வு” (த.நே.28, ப.22)என்கிறார். ‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ (புறம் 182) என்று தொடங்கும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடலின் இறுதியில் “தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கு என முயலுநர் உண்மையானே?” என்ற வரிகள் பகிர்தலின் / கொடுத்தலின் மெய்யியலை உணர்த்துகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தமக்கெனவே வாழ்ந்தால் அந்த உலகம் அழிவது உறுதி.அவ்வாறில்லாமல் ஒரு சிலராவது தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவராக இருப்பதால் தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என்கிறார் புலவர்.பகிர்தல் அன்பின் செயல். பகிர்;தலே வாழ்வை உலகை வசப்;படுத்தும் என்கிறார் தங்கப்பா. (மேலது). ‘தென்கடல் வளாகம் பொதுமையின்றி’ (புறம் 89) நக்கீரனார் பாடலில் உள்ள கருத்தை தங்கப்பா விளக்குகிறார். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதே உயிர் வாழ்வுக்குப் போதும். நுகர்வு இன்பத்தில் திளைக்கக்கூடாது. ஒரு பேரரசனுக்கும் வேடனுக்கும் தேவைகள் பொதுவானவை. ஆகவே பகிர்ந்து கொள்ளவேண்டும். உடையவன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் உலக வாழ்க்கை கலக்கமுறும். ஆகவே இருப்பதைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனினும் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று (புறம்.204) (கலைதின் யானையார் பாடல்) என்பதும் மெய்யியல் வாழ்க்கையை உணர்த்துவதாகும். (மேலது.ப.23) வாழ்வுக்கு அர்த்தம் தேடுவதும் நிலைநிறுத்திக் கொள்வதும் வாழ்வின் மெய்யியலில் முக்கியமான கூறுஇவை புறநானூற்றுச் சங்கச் சான்றோரிடம் காணப்படுவதைப் பிலிப்சுதாகர் எடுத்துக்காட்டுகிறார். சங்கப் புலவர்கள் சமுதாய ஏற்றத்தாழ்வைக் கடுமையாக மறுத்தனர். வெண் கொற்றக்குடையினனாகிய பேரரசர்களைக் கண்டு வியத்தலும் இல்லை. சிற்றரசர் பெருமைகளைப் போற்றினர். பெரும் துன்பம் / வறுமை நேர்ந்த போதிலும் சிறிதும் அறிவில்லாதவர் தரும் செல்வத்தை மதிப்பதில்லை. பேரவல வாழ்விலும் பாடறிந்து ஒழுகும் பண்பினைப் போற்றத் தவறியதில்லை. இத்தகைய சிறப்பினைப் பெற்ற சான்றோர் வாழ்க்கை வறிய நிலையில் காணப்பட்டாலும் அவர்களிடம் செம்மையான வாழ்வும் அன்பும் வெளிப்படுவதைக் காணலாம். (புறம். 197) “ஒல்குவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும்ஆள்வினை மறுங்கிற் கேண்மைப்பாலே” (புறம் 196) என்ற ஆவூர் மூலங்கிழார் பாடலில் சங்கப்புலவர்களிடம் காணப்படும் மெய்யியல் கல்வியையும் அன்பின் வாழ்க்கையையும் எடுத்துக்காட்டுகிறார். தம்மால் கொடுக்க இயலும் பொருளை இயலும் என்று சொல்லிக் கொடுத்தலும் தம்மால் இயலாத பொருளை இல்லை என மறுத்தலும் ஆள்வினையுடையவர் செயல். தனக்குக் கொடுக்க இயலாததைக் கொடுக்க முடியும் என்பதும் இயலும் பொருளை இல்லை என மறுத்தலும் வறியவரைத் துன்புறுத்தும் செயல். நீ கொடுக்காவிட்டாலும் நான் வருந்தமாட்டேன். உன் புதல்வர் நோயில்லாமல் வாழ்க என்று வாழ்த்தும் பேருள்ளம் பெற்றிருந்தனர். மேலும் ‘முற்றிய திருவின்மூவர் ஆயினும், பெட்பின்று ஈதல் யாம் வேண்டிலமே’ (புறம்.206) என்றும் ‘புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மை, உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே சீல்குடிச்சீறூர்’ (புறம்.329) எனச் சங்கச்சான்றோர் பாராட்டப்படுவதையும் காணமுடிகிறது. அன்புதான் இவ்வுலகின் மையம். பேரரசனாகினும் அவனுக்குள்ளும் நிலவிட வேண்டியது மாந்தநேயமாகிய அன்பு ஒன்றே, என்பதை மூலங்கிழார் கற்ற மெய்யியல் கல்வி பேரரசனிடம் கேள்வி கேட்பதற்கு உதவியது என்கிறார் சுதாகர். (த.நே.30,ப.44) பெரும்பாலான சங்கச் சான்றோரிடம் இத்தகைய போக்கைக் காணமுடியும். நரிவெரூவுத்தலையார் ‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஒம்புமின்’ என்கிறார். (புறம்.194) போலியான மனிதர்களைச் சாடுகிறார். ’பலவும் கற்ற சான்றோர் நீங்கள் ஆனால் நல்லது கற்கவில்லை. நல்லது செய்யாவிட்டாலும் தீயன செய்யாமல் இருங்கள். இதுதான் வாழ்வில் எல்லோரும் விரும்புவது. இதுதான் நல்வழியுமாகும். வாழ்க்கை நிலையாமை: கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறம். 192) என்ற பாடல் வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றித் தெளிவாகப்பேசுகிறது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஒடும்போது அதில் சிக்கிய ஒரு புணை சிலசமயம் மேட்டிலும், மற்றொரு சமயம் பள்ளத்திலும் தங்கும். புணை இயல்பாக அடித்துச் செல்வதைப் பார்க்கும்போது, சமூகத்தில் சிலசமயம் சிலர் பெரியவராகின்றனர். சிலர் தாழ்ந்தவராகின்றனர். மனித வாழ்க்கையும் மேடு பள்ளம் நிறைந்தது. இதன் காரணமாகப் பெரியோர்களைப் போற்றுதலும் தேவையில்லை. சிறியவர் என இகழ்தலும் தேவையில்லை. இதனையே ‘கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று, நீர் வழிப்படூஉம் புணைபோல்’ என்றார் புலவர். இத்தகைய மனத்திட்பம் புலவருக்குள் மெய்யியல் உணர்வினால் வரக்கூடியது. இத்தகைய பார்வை வளமான பார்வை என்பதை ஞானி எடுத்துக்காட்டுகிறார். வாழ்க்கை மேடுபள்ளம், நிறை, குறை, இன்பம், துன்பம் நிறைந்தது. எனவே சீர்தூக்கிப்பார்த்து அறிவின் துணைகொண்டு வாழ்க்கையை சரிசெய்து கொள்ளவேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. மோசிகீரனாரின் பாடல் (புறம்.186) ‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே’ மலர்தலை உலகத்திற்கு மன்னன்தான் உயிர், தன் நாட்டில் வாழும் மக்களுக்கு உயிராக இருப்பவன் மன்னன். இதை வேற்படையுடைய மன்னன் புரிந்து கொள்ளவேண்டும். மக்களுக்கு உயிர் நெல்லும் அன்று நீரும் அன்று. மன்னன் தான் உயிர் என்கிறார் புலவர். இத்தகைய உணர்வு மன்னரிடம் மேம்பட்டு இருக்குமானால் மக்களை மன்னன் துன்புறுத்தமாட்டான். தன் உயிரைப் போல மக்களையும் காப்பான் என்பது புலவர் கருத்து. இது மன்னனுக்குத் தேவையான மெய்யியல் என்கிறார் ஞானி. (த.நே.இ.28,ப.51). மக்களிடம் வரி வாங்கும் மன்னர் மக்கள் நிலையறிந்து வசூலிக்க வேண்டும் மக்கள் நிலைபற்றிக் கவலைப்படாமல் தன் படை வீரர்களைக் கொண்டு / அதிகாரிகளைக் கொண்டு,மக்களைத் துன்புறுத்தி வரியைப் பெறும் மன்னன் நாடு ‘யானை புக்க புலம் போல நாடும் கெடும், தானும் கெடுவான்’ என்கிறார் பாண்டியன் அறிவுடைநம்பி (புறம்.184). இவ்வாறாக வாழ்க்கைக்கும் / சமூகத்திற்கும் தேவையான மெய்யியல்களைச் சங்கச் சான்றோர் கூறியுள்ளனர். சங்கப் பாடலில் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான அன்பும் பொதுமையறனும் சார்ந்த மெய்யியல் விளக்கம் தருகிறது. சங்கச்சான்றோரிடம் இயல்பாக அமைந்த மெய்யியலையும் மன்னருக்குத் தேவையான மெய்யியலையும் பாடல்கள் மூலம் அறியமுடிகிறது. வள்ளுவ மெய்யியல்: வள்ளுவம்இனம், மொழி, சாதி, சமயம் அனைத்தையும் கடந்துமனிதகுலம் முழுவதற்கும் பொதுமையான அறநெறியை வகுத்துரைத்துள்ளது. இதில் இறையாண்மை, பகுத்தறிவு, மெய்ம்மை, பற்றற்ற நிலை, சமூக அறம், இல்லறத்தின் விழுமியங்கள், நுண்பொருள் சிந்தனைகள் எனப் பல்வேறு கருத்துகள் பொதிந்து கிடக்கின்றன. இவை குறித்து கட்டுரையாளர்கள் பார்வையைப் பின்வருமாறு காணலாம். செ.நாராயணசாமி: வள்ளுவர் மனித விழுமியங்கள் பலவற்றை அறத்துப்பாலில் கூறுகிறார். இத்தகைய அறங்களைக் கடைப்பிடித்து வாழ்தலே வள்ளுவரின் மெய்யியல் என்று நாராயணசாமி கருதுகிறார். உயிரினங்களின் வாழ்வில் அறம், அன்பு, ஒழுக்கம், அருள், தவநோன்பு, கொல்லாமை, இன்னாசெய்யாமை, வாய்மை, ஒப்புரவு (சமுதாய நோக்கு) இவற்றைப் போற்றல், களவு, சினம் தவிர்த்தல், நில்லாதவை அறிதல், மெய்யறிவு பெறல், இயற்கையான முறைமையை காத்தல் போல்வன மெய்யியல் பாற்படும்" என்கிறார் (த.நே.30, ப.73). வள்ளுவரின் அறக்கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்துக் கொள்கிறார். இவருக்கு அறமே சிறந்த மெய்யியலாக இருக்கமுடியும் என்பதால், அறம் என்பது மெய்யியலின் ஒரு கூறு மட்டும் அல்ல. முழுமையாக அறமே மெய்யியல் என்பதாகும். மெய்யுணர்வைப் பெறுதல். மெய்யறிதல் என வள்ளுவர் மெய்யறிதலைப் பற்றிப் பல குறள்களில் சொல்கிறார். இக்கருத்தை நாராயணசாமி மேலும் விளக்குகிறார். மெய்யுணர்வு என்பது பொருட்களின் இயல்புகள். பொருட்களின் தன்மைகள், குணங்கள், பண்புகள், சிறப்புகளை உணர்தல். உலகியல் நடைமுறைகளையும் அவற்றின் விளைவுகளையும் பட்டறிவின் துணைகொண்டு புரிதல் (மேலது, ப.75) என்கிறார். நாராயணசாமி கூறுவதைப் பகுத்தறிவின் மெய்யியல் என்று கூறுவோமானால் இப்பகுத்தறிவின் மெய்யியலுக்குள் ஒருவகையில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட துறவு முதலியனவும் உள்ளடங்குகிறது. அதாவது, “இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.” (352) “கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார் மற்றீங்கு வாரா நெறி” (350) “பிறப்பு என்னும் பேதைமை நீங்கிச் சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு” (358) இவ்வாறு கருத்து முதலியலை நெருங்கிச் செல்கிறது இவரது பகுத்தறிவு மெய்யியல். இல்லறத்தை மட்டுமல்லாமல் துறவறத்தையும் உள்ளடக்கியுள்ளது இவரது மெய்யியல். கு.ச.ஆனந்தன்: வள்ளுவர் கூறும் மெய்யியல் சிலசமயங்களில் சமய மெய்யியல் போல காட்சி தருவதை மறுத்துரைக்கிறார் கு.ச.ஆனந்தன். வள்ளுவரின் தனிமெய்யியலை வள்ளுவர்க்குப் பின் வந்த உரையாசிரியர்கள் சமய மெய்யியலாகக் காண்கின்றனர். சமய மெய்யியல் என்பது கடவுள் என்னும் கோட்பாட்டில் தொடங்கி இறுதியில் வீடுபேறு என்பதாக முடிவடைகிறது. இடையில் வினைக்கோட்பாடு பல பிறப்பு, மேலுலகம், நரகம், ஆன்மா, ஊழ் முதலிய பலவகை கருத்துக்கள் வந்துவிடுகின்றன. இவற்றுக்கான சமயப் பொருண்மையை கு.ச.ஆனந்தன் மறுத்துரைக்கிறார். (த.நே.28, ப.49). வள்ளுவர் காலத்திலேயே வைதிக கருத்துகள் தமிழ்ச் சமூகத்திற்குள் வந்துவிட்டன. இவற்றோடு சமணம், பவுத்தம் ஆகியனவும் வந்து சேர்ந்தன. இவற்றை முழுமையாக வள்ளுவர் ஏற்கவில்லை. இவ்வகை கருத்துகளின் வழியே பகுத்தறிவுக் கண்ணோட்டத்தை வள்ளுவர் முன்வைத்தார் என்கிறார் கு.ச.ஆனந்தன். நாராயணசாமியும் இவரும் ஒத்தக் கருத்தினர் என்பதாகத் தோன்றுகிறது. பகுத்தறிவு மெய்யியலின் துணைகொண்டு, வாழ்வின் இறுதி இலக்கு பேரா இயற்கை என்று கூறும், ஆனந்தன் வாழ்க்கையின் இந்த இலட்சியத்தை அடைய பின்வரும் நான்கு படிநிலைகளைக் குறிப்பிடுகிறார். 1.நில்லாதன அறிதல், 2.துறவுள்ளம் பெறுதல், 3.மெய்யுணர்வை அடைதல், 4.ஆசையை நீக்குதல் இவற்றின் வழியே பேரா இயற்கையை பெறுவது பற்றி வள்ளுவர் கூற்றை எடுத்துரைக்கிறார் (ப.49). “ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.” (370) தீராத ஆசைகள் என்னும் வேட்கையிலிருந்து விடுபட்ட நிலையில் பேரா இயற்கை அதாவது பெயராத நிலைத்த இயல்பைப் பெறுதல் என்று கூறுகிறார். இதனை, பெருஞ்சித்திரனாரும் “மாந்தன் இயங்குவது தான் இல்லறம், அரசியல், பொருளியல், வாழ்வியல்! அவன் நின்று நிலைவிடுவது தான் துறவறம், பேராஇயற்கை!” (திருக்குறள் மெய்ப்பொருளுரை, முன்னுரை) என்கிறார். ஆசைகள் அழிவில்லாதவை எந்த நிலையிலும் மனிதனைப் பற்றிக் கொள்பவை இவற்றிலிருந்து முற்றாக விடுபடவேண்டும். இது விருப்பு வெறுப்பற்ற மனநிலை. இதற்காகவே முன்னர்க் கூறப்பட்ட படிநிலைகள். வாழ்க்கை நிலையில்லை என்பதை அறிந்து கொள்ளுதலும், விருப்பு வெறுப்பற்ற மனநிலையை பெறுதலும் மெய்யறிவைப் பெறுதல். (பொருள்கள் வாழ்வின் உண்மை இயல்பை அறிதல்) இவ்வகை முயற்சிகள் வழியே ஆசைகளை ஒழித்தல். இதன் பயனாகத் தடுமாற்றம் இல்லாத நிலைத்த இயல்பைப் பெறமுடியும் என்பதாக கு.ச.ஆனந்தன் விளக்குகிறார். அறிவியல் ஆய்வில் ஈடுபடும் ஒருவரைப்போலப் பற்றற்ற மனநிலையோடு செயல்பட முடியும். இதன்மூலமே ஆசைகளை வெல்ல முடியும். ஞானியாக முடியும் இதுவே பேரா இயற்கை என்பதாக ஆனந்தன் கருத்தைப் புரிந்து கொள்ளாலாம். “மனித வாழ்வின் இறுதி இலட்சியம் வீடுபேறு (49), வீடுபேறு என்பது ஆன்மிக விடுதலை” (293) (திருக்குறள் நீதி இலக்கியம், ப.49,293)அதாவது, வீடுபேறு என்பது உடலைத் துறந்தபின் வாய்க்கும் நிலையன்று. மாறாக, உடலோடு கூடிவாழும் பொழுதே துய்ப்பதாகும். “உயிர், உலகு, இயற்கை ஆகியவற்றின் தொடர்பினைப் பற்றி எழுந்த ஆராய்ச்சியே தத்துவம். இறை என்ற ஒன்றையும் கூட்டி அதற்கும், மாந்தனுக்கும் மற்றவற்றிற்கும் உள்ள பிணைப்பை எடுத்தோதுவது சமயத்தத்துவம் இவ்விரண்டையும் கடந்து மாந்தனின் இறுதியான அகவளர்ச்சி நிலையை – அதாவது ‘பேராஇயற்கையை’ (பெயராத இயற்கை) அடையத்தக்க படிநிலைகளை விளக்குவது, திருவள்ளுவருடைய தனிமெய்யியல் அதில் உடல் - உயிர் தொடர்புபேசப்படுகிறது. ஆன்மிகம் சுட்டப்படவில்லை.” (குறளியச் சிந்தனைகள், ப.18) என்று கு.ச.ஆனந்தன் கூறுவதிலிருந்து வள்ளுவரின் தன்p மெய்யியலைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு பகுத்தறிவின் மூலம் சமயத்தைக் கடந்து செல்லும் வழி வள்ளுவர் நூலில் இடம்பெறுகிறது என்றும் தெளிவுபெற முடியும். “சமயக்கணக்கர் தம் மதி வழிகூறாது உலகியல் கூறிப் பொருள் இது என்ற வள்ளுவன்” (க.அ.இராமசாமிப் புலவர், உரையாசிரியர்கள் முதல்தொகுதி, ப.12) என்ற கல்லாடனார் கூற்று இக்கருத்தை அரண்செய்கிறது. திரு.வி.க: அனந்தநாத நயினார் 1931-இல் ‘திருக்குறள் ஆராய்ச்சியும் சைன சமய சித்தாந்;த விளக்கமும்’ என்ற நூலை வெளியிட்டார். இவர் சமணர். வள்ளுவரையும் சமணர் என்றே மதித்தார். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் திரு.வி.க. அனந்தநாத நயினாருடைய கருத்தைத் திரு.வி.கவும் ஏற்கிறார். இம்முறையில் வள்ளுவ மெய்யியலை விளக்குகிறார். சமணசமயத்தைத் தோற்றுவித்தவராக கருதப்படுபவர் விருசப தேவர். இவர் கொல்லாமை முதலிய பேரறங்களைப் போற்றியவர். இவர் காலத்திற்கு பிறகு தோன்றியவர் வள்ளுவர். வள்ளுவர் தன் முதல் குறளில் கூறிய ஆதிபகவன் என்பது ஆதிநாதனாகிய விருசப தேவரையே குறிக்கும். இவர் தான் சமணசமயத்தில் கூறப்படும் அறுபத்து மூன்று தீர்த்தங்கரர்களில் முதலாமவர். அருகன் என்றும் இவர் கூறப்படுகிறார். வள்ளுவரும் கொல்லாமையை முற்றாக மறுத்தார். அத்துடன் அந்தணர் என்போர் அறவோராகத்தான் இருக்கமுடியும். ஏனைய உயிர்கட்கெல்லாம் செந்தண்மை பூண்டொழுகும் தன்மை பெற்றவர் (30) என்பதின் பொதுமையறத்தையும் திரு.வி.க சுட்டிக்காட்டுகிறார் (த.நே.30. ப.77). அருள் (தயை), அறம் என்னும் செந்தண்மையை மேற்கொள்பவர் அறவோர். இவர்களே அந்தணர் என்ற பெருமைக்குரியவர். ஒப்பற்ற சான்றோராய் உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்து உலகிற்கு வழிகாட்டுபவர்கள் இவர்கள். திரு.வி.கவைப் பொருத்தவரை சைவசமயச் சார்புடையவர் என்றாலும் சமணர்களின் அருளறத்தை முதன்மையாகப் போற்றுகிறார். எவ்வகை சமயத்தினுள்ளும் அகமாக இருப்பது அருளறமே. இம்முறையிலும் வள்ளுவ மெய்யியலில் சைவத்திற்கும் சமணத்திற்கும் பெருத்த வேறுபாடு இல்லை என்கிறார். குணா: ‘வள்ளுவத்தின் வீழ்ச்சி’ என்ற நூலில் ஆசிரியர் குணா தொன்மைக் காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த வள்ளுவர்கள் வானியல், சோதிடம், அறிவியல், மருத்துவம், இசை, அணுவியல் முதலிய பல துறைகளிலும் வளமான அறிவு பெற்றிருந்தனர். பின்னர் ஒரு காலத்தில் சாதி இழிவுக்குள்ளாகி தம் ஆற்றலை இழந்தவர்கள் ஆனார்கள். இவ்வாறு இவர்களைச் செய்தவர்கள் சைனர்களும் பார்ப்பனர்களும். இந்த வரலாறு குறித்துத் தன் ஆய்வு நூலில் எடுத்துரைக்கிறார் குணா. அந்நூலின் முன்னுரையிலிருந்து கீழ்க்கண்ட கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. சைன மெய்யிலின் அணுக் கொள்கையும் ஐயுறவியமும் (சியாத வாதமும்) சைன சமயக் குரவர்கள் ஆக்கிய மூலமுதல் கொள்கைகள் ஆசீவகர் எனப் பெயரிடப்பட்டும் நகையிடப்பட்டும் வந்த முந்தைய வள்ளுவ கணியர்களின் அறிவியல் படைப்புகளே அவையாகும். வள்ளுவர்களின் அணு அறிவியலைச் சைனர்கள்தம் வயமாக்கிக் கொண்டனர் என்று கூறும் குணா மேலும் விளக்குகிறார். “வள்ளுவர்களே அறிவர்கள் வள்ளுவர்களே கணியர்கள் வள்ளுவமே வடக்கே போய்த் திரிந்து, சைனம் என்னும் சமய வடிவில் மீண்டும் தெற்கு நோக்கி வந்தது” வள்ளுவத்தின் ஆளுமையில் ஒரு பாதி இவ்வாறு சைனத்தில் மறைந்தது. மறுபாதியைப் பார்ப்பனியம் மடி பறித்துக் கொண்டது என்கிறார். வள்ளுவர்கள் ஆக்கித் தந்த கணியம், வானியல், அறிவியல் துறைகளும், மருத்துவம், இசை முதலானவெல்லாம் அப்பார்ப்பனியம் தமதாக்கிக் கொண்டது. இதனை “பார்ப்பனர் பாட்டுத் தொழிலை மேற்கொண்டதால் பாணர் பிழைப்பும் கணியத் தொழிலை மேற்கொண்டதால் வள்ளுவர் பிழைப்பும் கெட்டன” என்ற பாவாணரின் கூற்றைச் சான்று காட்டுகிறார். (த.நே.28, ப.57).. வள்ளுவமென இந்நூற்றாண்டில் சொல்லப்பட்டு வருவது அணுக்கொள்கையோ, கணக்கியலோ, மருத்துவம் முதலான அறிவியல்களோ மெய்யியல்களோ அல்ல. திருக்குறள் கற்பித்த நன்னெறிகள் மட்டுமே, இன்று வள்ளுவமென நம்மிடையே கற்பிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய திருக்குறளில் காணப்படுவது இந்த அறவியல் கொள்கையே. இன்றைய நிலையில் வள்ளுவத்தை மீட்டெடுப்பது தமிழர் கடமைஎன்கிறார் குணா. வள்ளுவருக்குள் நாராயணசாமியும் கு.ச.ஆனந்தனும் பகுத்தறிவு மெய்யியலைக் கண்டனர், பெரும்பாலும் ஒத்த கொள்கையராய் விளங்குகின்றனர். இவர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்டவர் குணா. திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு தென்னிந்தியாவில் பரவி இருந்த வள்ளுவ கணியர்களின் ஆய்வுகள் முதலானவற்றைக் குணா தொகுத்து, அந்த வள்ளுவக் கணியர்களின் ஆய்வுகள் எவ்வாறு சிதைவுக்குள்ளாகின என்பதை விளக்கிய பின்னர் திருவள்ளுவரின் அறநூல் பற்றிப் பேசுகிறார். வள்ளுவர் என்ற பெயர்த் தொடர்பு காரணமாக இதை இங்குப் பேச வேண்டியிருக்கிறது. திருவள்ளுவர் பற்றித் திரு.வி.கவின் மதிப்பீடும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. திருக்குறளில் காணப்படும் கருத்துகளில் பெரும்பாலானவை மெய்யறிவுத் துறையைச் சார்ந்தவை. எனவே அவை காலங்கடந்து நிற்பவை. இவர்கள் புலன்கடந்த மெய்யியலை ஏற்கவில்லை. இல்லற வாழ்வையும் மறுக்கவில்லை. துறவறம் பகுத்தறிவின் நீட்சியாகக் கொள்ளமுடியும். இவர்கள் அனைவரினுள்ளும் தமிழறத்தைக் காணலாம். இதுவரைப் பார்த்த அனைவரையும் ஒருசேர எடுத்துக்கொண்டால் எல்லோருள்ளும் உலகாய்தர்களின் தொடர்ச்சி அல்லது நீட்சி தென்படுவதைக் காணலாம். சித்தர் மெய்யியல்: பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழகத்தில் பெரும் மரியாதையோடு வாழ்ந்தவர்கள் சித்தர்கள். இந்தத் தமிழ்ச் சித்தர்களின் அணுகுமுறை கடவுள் என்ற ஒரு கருத்தைத் தவிர பெருமளவு பகுத்தறிவுவாத மெய்யியலைக் கொண்டதாக இருந்திருக்கிறது. இவர்களை நோக்க வள்ளுவர், கணியன் பூங்குன்றனார் முதலியவர்களையும் சித்தர் என்று கூட மதிப்பீடு செய்யலாம். சித்தர்கள் மரபைத் தோற்றுவித்தவர் என்று திருமூலரைச் சொல்ல முடியும். சித்தர் மரபு தமிழ்ச்சூழலில் ஏதோ ஒருவகையில் இன்று வரைத் தொடர்கிறது. பதினெண் சித்தர்களில் முதன்மையானவர் சிவவாக்கியர். சித்தர் மரபில் சில புத்தாக்கம் செய்தவர் வள்ளலார். திருமூலர் மெய்யியல்: திருமூலர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிற்காலத்தில் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர்த் தோன்றிய சித்தர்களுக்கு மூலவராகவும் முதல்வராகவும்இருந்தவர். இவர் இயற்றிய நூலான திருமந்திரம்திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூலுக்குத் ‘தமிழ் மூவாயிரம்’ என்றே பெயரிட்டுள்ளார். வேதங்களை இவர் ஏற்கவில்லை. வேதியர்களையும் ஏற்கவில்லை. உள்ளத்தில் உள் இருக்கும் இறைவனை நினைப்பது போதும். வழிபாட்டிற்கு ஒரு பச்சிலை போதும் என்கிறார். நடமாடும் கோவிலாகிய மனிதர்களுக்கு ஒன்றைத் தருவதும் இறைவனை வழிபடுவதும் ஒன்றுதான். இவ்வாறு வித்தியாசமான முறையில் தெளிவான கருத்தை முன்வைத்தவர் திருமூலர். திருமந்திர மெய்யியலாக நாராயணசாமி முன்வைக்கும் திருமந்திர கருத்துக்கள். (த.நே.30, ப.69) கீழேத் தரப்படுகின்றன. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” (2104) “உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்” (823) “பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று” (95) “அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே” (270) “நடமாடும் கோவில் நம்பர்க்கு ஒன்று ஈயில்” “படமாடும் கோவில் பரமர்க்கு அஃது ஆகும்.” (1857) “யாவர்க்கும் ஆகும் இறைவற்கு ஒரு பச்சிலை” (253) “துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும் மதிஇலர்” (33) “வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்”(52) “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” (724) “ஈசனோடாயின் ஆசை அறுமின்” (2615) “மனையுள் இருந்தார் மாதவர் ஒப்பார்” (4) பெரும்பாலான சமயவாதிகளின் நிலைப்பாட்டிலிருந்து திருமூலர் பெரிதும் வேறுபட்டவர் என்பதற்குச் சான்றுகளாக இக் கூற்றுகள் அமைகின்றன. திருமூலரும் சமயவாதிதான். ஒரு சித்தர் என்ற முறையில் சமயவாதத்திலிருந்து இவர் வேறுபடுகிறார். சமயவாதிகள் உடம்பை ஆசைகளின் இருப்பிடம் என்று இகழ்வார்கள். திருமூலர் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று கூறுவார். ’உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் என்றார். பலவாக முரண்பட்ட சாதிகளை இவர் ஒப்புக்கொள்ள வில்லை. அதேபோல ஒவ்வொரு சமயமும் கூறும் தனித்தனிக் கடவுளை இவர் மறுக்கிறார். இதனையே, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார். சமயங்கள் பெரும்பாலும் துறவைப் போற்றுகின்றன. இல்லறம் வேறு: துறவறம் வேறு எனப் பிரித்துப் பேசுகின்றன. இல்லறத்தில் இருந்து கொண்டே ஒருவர் மக்களுக்குப் பணிபுரிய முடியும். இவரே துறவிகளைக் காட்டிலும் உயர்ந்தவர். ‘மனையுள் இருந்தார் மாதவர் ஒப்பார்’ என்கிறார். தன்னை அறிதலே மேலான அறிவு என்பதும் இவர் கருத்து. தனக்குள் இருக்கும் இறைவனை அறிந்துகொள்ள வேண்டும். இப்படி அறிந்து கொண்டால் தன்னையே அர்ச்சிக்கவும் முடியும் இப்படியும் ஒரு வழிபாடா? என்று திருமூலர் வியக்க வைக்கிறார். அன்பருக்கு பணி செய்வதை வேண்டுகிறார். என்னை நன்றாக இறைவன் படைத்தனன். தன்னை நன்றாகத் தமிழ்;ச் செய்யுமாறே என்று கூறுகிறார். இவ்வாறாக திருமூலரின் மெய்யியலைப் புரிந்துகொள்ள முடியும். என் உடம்புக்குள் என்னை நான் கண்டு கொண்டேன், எனக்குள்ளும் இறைவன் இருக்கிறார் என்று அறிந்தேன். ஆகவே உடம்பைப் பேணுகின்றேன் என்கிறார். திருமூலரின் கருத்துக்கள் ஒருவகையில் பகுத்தறிவுமெய்யியலைச் சார்ந்ததாகும். திருமூலரின் இக்கருத்துகள் மாயாவாதத்திற்கு நேர் முரணான மெய்ம்மை வாதத்தை அடிநிலையாகக் கொண்டவை என்ற கைலாசபதியின் கருத்தும் இங்கு நினைவுகூரத்தக்கது. (ஒப்பியல் இலக்கியம். ப.188) சிவவாக்கியர் மெய்யியல்: சிவவாக்கியர் கி.பி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார். சிவவாக்கியர் பாடிய பாடல்கள் பெரிய அளவில் (526) சித்தர் ஞானக் கோவையில் காணக் கிடக்கின்றன. பதினெண் சித்தர்களின் பாடல்களை ஞானகோவை என்ற பெயரில் தொகுத்தவர் வா.சரவண முத்துப்பிள்ளை. சித்தர்கள் தொகை பதினெட்டில் அடங்குவதாக இல்லை என்றாலும் சித்தர்களின் முதன்மையாளராக கருதப்படுபவர் சிவவாக்கியர். அழுத்தம் திருத்தமாகச் சித்தரியல் கருத்துக்களை இவர் தன் எளிய, இனிய பாடல்கள் மூலம் தருகிறார். இத்தொகுப்பினுள் சிவவாக்கியரிடம் காணப்படும் பகுத்தறிவு மெய்யியலை அருணன் ‘தமிழரின் தத்துவ மரபு’ என்ற தன் நூலில் விளக்கியுள்ளார்;இது குறித்து இங்கு ஆராயப்படுகிறது. தத்துவ நோக்கில் பார்க்கின் சிவவாக்கியர் பாடலே மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வேறு எந்தச் சித்தரின் பாடலை விடவும் இவரே பல தத்துவக் கருத்துகளை ஆராய்ந்தவர் என்று கூறும் அருணன் சிவவாக்கியரிடம் காணப்பட்ட மெய்யியல் கூறுகளை விளக்குகிறார். (த.நே.28.ப.78) ஆதியுண்டு அந்தமில்லை என்கிறார் சிவவாக்கியர். ஆதிகாலத்தில் அதாவது தொடக்க காலத்தில் நான்கு வேதங்களும் இல்லை. பிரம்மா, சிவன், விட்ணு ஆகிய மூன்று கடவுளும் கூட இல்லை என்கிறார். அப்படியானால் வேதங்கள் இடைக்காலத்தில் வந்தவை. ‘ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும் ஆதியன்று’ மூன்று கடவுளும் மனிதரால் படைக்கப்பட்டவை. அக்கடவுள் தான் உலகைப் படைத்துக் காக்கிறார்கள் என்பது உண்மையில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உயிர்களின் பிறப்பு குறித்தும் உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு குறித்தும் கேள்வி எழுப்புகிறார். ‘கருத்தரிக்கும் முன்னெல்லாம் காயம் நின்றது எவ்விடம், உருத்தரிக்கும் முன்னெல்லாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்?’ என்று கேட்கிறார். அதுபோலவே உடம்போடு கூடிய உயிர்கள் உருத்தரிக்கும் முன்பு எங்கிருந்தன? என்று சிக்கலான கேள்வியை எழுப்பி விடையும் தருகிறார். கருத்தரிக்கும் முன்பு உடம்பு நின்றது தீயில். உயிர்நின்றது நீரில். ஆசை நின்றது வாயுவில். இவ்வாறு கரு தோன்றுவதற்கு முன்னரே உடம்பும் உயிரும் ஆசைகளும் இயற்கையோடு ஐம்பூதங்களாக அவை இருந்தன என்கிறார். இக்கேள்விகளுக்கான விடைகள் சித்தருக்கும் புரியாத கேள்விகள். ஒருவகையில் இவையனைத்தும் கருத்துமுதல்வாதக் கேள்விகள். உடம்பும் உயிரும் பிரிவுபடாதவை என்ற அடிப்படையிலிருந்து இவற்றைப் பார்க்க முடியும். சிவவாக்கியருக்கு மறுபிறப்பில் நம்பிக்கை இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். “கறந்த பால் முலைப்புகா, கடைந்த வெண்ணை மோர்புகா, உடைந்து போன சங்கின் ஒசை உயிர்களும் உடல்புகா” என்பதில் பல பிறப்புகள் உண்டு என்று சமயவாதிகள் கூறும் கருத்தை இவர் திட்டவட்டமாக மறுக்கிறார். தன்னைஅறிதலே இறுதி உண்மை. என் அகத்துள் என்னைத் தேடி அலைந்தேன். “என்னகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லை” என்கிறார். தன்னைத்தானே நன்கு உணர்கின்ற மெய்யுணர்வினால் மட்டுமே இறைவனைக் காணமுடியும் என்கிறார். இதன் காரணமாக கோவில் வழிபாடு, பூசை, உருவ வழிபாடு முதலியவற்றைக் கடுமையாக எதிர்க்கிறார். (ப.80). “நட்டகல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து முணமுணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா. நட்டக்கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டிசட்டுவம் கறிக்சுவை அறியுமோ.” கல்லைக் கடவுள் என்று நட்டு வைத்துத் துதிப்பதை மூடத்தனம். அகத்தினுள் இருக்கும் இறைவனை வெளியில் (புறத்தில்) வழிபடுவது தேவையில்லை என்றும்;. நான்கு வேதங்களையும், ஆகமங்களையும் சாத்திரங்களையும் சடங்கு போன்ற அனைத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறார். ‘நாலு வேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர் பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள்அறிகிலீர்’ என்றும், “இட்ட குண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா சுட்ட மட்கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா” என்கிறார். பார்ப்பனர்கள் இறைவனுக்குச் செய்யும் வேள்வி, ஓமம் என்று அனைத்துச் சடங்குகளையும் எதிர்க்கிறார். “பிறந்த போது கோவணம் இலங்குநூல் குடுமியும் பிறந்ததுடன் பிறந்ததோ…..” என்று கேட்கும் அவர், “பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கம் இட்டிருக்குதோ” என்கிறார். பணத்தி என்பது பிராமணப்பெண். பிரம்மன் படைக்கும் போதே பறைச்சி, பணத்தி என தோலிலும் எலும்பிலும் இலக்கமிட்டு அனுப்பினானோ. சாதிகள் உண்மையில்லை. எல்லாமே நீங்கள் வகுத்துக் கொண்டவை. உங்கள் தேவைக்காக என்கிறார். மேலும் மதபேதங்கள், வர்ணாசிரம எதிர்ப்பு, சாதிசமய எதிர்ப்பு போன்றவை சிவவாக்கியர் பாடலில் காணப்படுகின்றன. சமயத்துறையில் புரட்சிக் குரலை எழுப்பியது போலவே சமூக சீர்த்திருத்தத்திலும் தளராத சமத்துவவாதியாக திகழ்ந்திருக்கிறார். மாதர் தோள் சேராத தேவர்கள் எவருமில்லை. மாதரிடம் இழிவும் இல்லை. மாதரோடு சேர்வதால் தான் மனிதவாழ்வு சிறக்கும். மாதரை இழிவு செய்வது தவறு என்றும் கூறுகிறார். திருமூலருக்கும் இக்கருத்து உடன்பாடான ஒன்றாகும். போலி ஞானிகளைச் சாடுவதோடு மக்களைச் சிந்திக்க வைக்கும்முறையில் கேள்விகளை எழுப்புகிறார்.காய்கள் இல்லாத சோலையில் கனிகள் உண்டதாகவும், தேனீக்கள் இல்லாத சோலையில் தேன் உண்டதாகவும் பாயில்லாத கப்பலில் ஏறிப் பயணப்பட்டதாகவும் கூறுகிறீர். இவையெல்லாம் உண்மையான ஞானமா? என்று கேட்கிறார் சிவவாக்கியர். (ப.85.) “தமிழகத் தத்துவ உலகம் ஈன்றெடுத்த உண்மை ஞானிகளில் ஒருவர் சிவவாக்கியர்” என்று அருணன் கூறுகிறார். இவ்வாறு சமயவாதிகளின் நம்பிக்கைகளை அறவே மறுக்கிறார் சிவவாக்கியர். இவர் எழுப்பும் கேள்விகள் சிக்கலானவை. இவரைப் பொருத்தவரைச் சில கேள்விகள் இவரது அய்யங்களாகவே இருக்கின்றன. இவற்றுக்கு இவரிடம் விடை இல்லை. சாதி, மதம், சடங்கு, வருணாசிரமம் முதலியவற்றை ஆணித்தரமாக இவர் மறுக்கிறார். இவரது பார்வை பகுத்தறிவு மெய்யியல் பார்வை. வள்ளலார் மெய்யியல்: தமிழ்நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர். (அக். 5, 1823 - சன. 30, 1873) சைவ மடங்களால் புறக்கணிக்கப்பட்டவர். வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவியவர். இவரது நெறி தனிநெறி.வள்ளலார் மனிதநேயத்தைப் போற்றியவர். சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்று பாரதி இவரைக் குறிப்பிடுகிறார். இவர் சித்தர்களுள் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். சித்தர் பேசாத சிலவற்றையும் இவர் பேசுகிறார். ‘வள்ளலார் ஒரு சித்தர்’ என்று கி.சுப்பிரமணியன் தன் கட்டுரையில் விளக்குகிறார். (த.நே.28.ப.86) வள்ளலாரின் கொள்கை அன்பை அடிப்படையாகக் கொண்ட உயிரிரக்கக் கோட்பாடு. ‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே’ என்று இறைவனை வள்ளலார் பாடுகிறார். இவரது அன்புநெறியே துன்புறும் மக்களின் துயர் துடைத்தது. மனிதர்களின் பசியைப் போக்கவேண்டும் என்பதற்காக வடலூரில் சத்திய தருமசாலையை நிறுவினார். இதுவே இவர் செய்த மாபெரும் புரட்சி. சமயத்தின் பெயரால் அறிவுக்கு ஒவ்வாத சாதிசமய சடங்குகள், மூடப்பழக்க வழக்கங்கள் முதலியவற்றைக் கடுமையாகச் சாடினார். “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக” (3768) என்றார். வேத நெறியில் நின்ற வைதீகர்களுடைய போலிச் சடங்குகளும் விதிகளும் இவருக்கு உடன்பாடில்லை. சைவ சிந்தாந்திகள் இன்றுவரை வள்ளலாரையோ அருட்பாவையோ ஏற்க முன்வருவதில்லை. இதற்குக் காரணம் வள்ளலார் தம்மை ஒரு சித்தர் என்று கூறிக்கொண்டதாகும் என்ற கைலாசபதி கருத்தையும் சுப்பிரமணியன் சுட்டிக்காட்டுகிறார். (ப.88). வள்ளலார் தாம் உணர்ந்த அருட்பெருஞ் சோதியாகிய இறைவனோடு இரண்டறக் கலந்தவர். சித்தர்களின் சமயநெறியே வள்ளலாரின் சமயநெறியுமாகும். அனைத்து மதங்களுக்கிடையில் சமரசம் கண்டவர். இவரது நெறி சமரச சுத்த சன்மார்க்க நெறியாகும். வள்ளலார் சித்தர்களில் ஒருவர் என்ற போதிலும் சித்தர்களிடமிருந்து வேறுபட்ட முறையில் மக்கள் பசியைப் போக்க வழிகண்டார். வள்ளலார் எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணியவர். ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர்களின் நெறி பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலார்க்குள்ளும் வெளிப்படுவது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. சைவசமய மெய்யியல்: ‘மூவர் தேவாரத்தில் வேதமரபு’ என்ற தனது கட்டுரையில் அருணன் மூவர் தேவாரத்திலிருந்து சைவ சித்தாந்தம் என்ற கோட்பாட்டைத் தொகுக்க முடியாது என்கிறார். சைவ சித்தாந்தத்தை முழுவடிவில் உருவாக்கியவர் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டதேவர். மூவர் தேவாரத்தில் நான்மறைகள் போற்றப்படுகின்றன. வேள்வி செய்வதற்கு இறைவனே சம்பந்தருக்கு வேள்விக்குப் பொருள் வழங்கினான். வருணாசிரமம் சைவர்களால் போற்றப்பட்டது என்கிறார். சம்பந்தர் அந்தணர். திருநாவுக்கரசர் வேளாளர். சம்பந்தரை திருநாவுக்கரசர் வணங்கினார். அவர் சிவிகையைத் தூக்கினார். திருப்பாணாழ்வாரும் அவர் மனைவியாரும் கோவிலுக்கு வெளியில் நின்று யாழ் வாசித்தனர். நான்மறை அருளியவன் சிவன் என்றும் சொல்லப்படுகிறது. பெரியபுராணம் சாதிகளுக்கிடையில் சமரசம் செய்வதாகக் கூறுவது உண்மையில்லை. சமண பௌத்தரின் செல்வாக்கிலிருந்து பிறசாதியாரை ஈர்ப்பதற்கும் இவ்வாறு செய்யப்பட்டது. பெரியபுராணத்தில் சேக்கிழார் சாதியைக் குறிப்பிடுவதன் நோக்கம் எந்தச் சாதியினரேயாயினும் ஈசனடியார் என்றான நிலையில் அவர்கள் சாதிச்சழக்கு நீங்கிச் சமயச் சிறப்பு மேலோங்கி அனைவரும் சமமாகவே கருதப்பட்டனர்; (சாமி.தியாகராசன். பெரியபுராணத்தில் வாழ்வியல், ப.204); பசுக் கொலை சம்பந்தர் காலத்தில் நிகழவில்லை. சமணர்களிடமிருந்து சைவத்தை மீட்பதற்காகச் செய்த தந்திரம். அடியார்க்குத் தரிசனம் தரும்போது சிவபெருமான் அந்தணர் வடிவில் மட்டும் தோன்றினார். “ஆவுரித்துத் தின்று உழளும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே” என்பது ஒரு தந்திரம். மூவர் தேவாரம் பற்றி இவ்வாறு ஆய்வு செய்கிறார் அருணன். “சைவ சித்தாந்தமானது வேதமரபை எதிர்த்துப் பிற்காலத்தில் எழுந்த ஒரு தனித்துவ மரபாகும். மூவர் தேவாரத்திலும் திருவாசகத்திலும் தத்துவக் கருத்துகள் என்பவை உண்மையாய் அருகியே காணப்படுகின்றன. பிரபஞ்சத்தின் தோற்றம் சடப்பொருளுக்கும் உணர்வுக்கும் உள்ள உறவு,தர்க்கவியல் போன்றவற்றை அனேகமாகக் காணமுடியவில்லை.” இதுவே அருணன் கருத்து (த.நே.28.ப.72) சைவசித்தாந்தம் தமிழர்களின் கருத்தாகும். பெரிய புராணத்தில் சம்பந்தர் வேதத்தை ஏற்றுக்கொண்டாலும் ஆகமங்கள் கூறும் விக்ரக வழிபாடு, அபிடேகம், அர்ச்சனை ஆகியவற்றைச் செய்தார். திருநாவுக்கரசர் வேளாளர் எனினும் அந்தணராகிய அப்பூதியடிகள் நாவுக்கரசரைப் போற்றினார். சுந்தரர் பரவை நாச்சியார் திருமணத்தைச் செய்வித்தவர்கள் அந்தணர். பெரும்பாணரை வரவேற்கும் நிலையில் சம்பந்தர் ஐயரே என்று அழைத்தார். இவ்வாறு சில சான்றுகளை அ.ச.ஞான சம்பந்தன் ‘பெரியபுராணம் ஓர் ஆய்வு’ என்ற தமது நூலில் குறிப்பிடுகிறார். அருணன் கருத்துகளை அ.ச.ஞா. ஒரளவு மறுக்கும் முறையில் இந்தச் சான்றுகள் அமைகின்றன. சைவசித்தாந்த மெய்யியல்: தென்னிந்தியாவில் பெரும்பான்மையான தமிழ்மக்களால் பின்பற்றும் பக்தி இயக்கமாகச் சைவம் விளங்குகிறது. இச்சைவசமயத்திற்கு ஒரு தத்துவமுறை வகுக்கப்பட்டது. இத்தத்துவமுறை, சைவசித்தாந்தக் கொள்கையென வழங்கப்படுகிறது. சிவனை முதல் கடவுளாக வணங்கும் வழிமுறையின், தத்துவம். புலன்களால் அறியப்படும் உலகப் பொருட்கள் அழியக்கூடியன.உயிர் அழியாதது. உயிர் உலகத்தை இயக்குவதில்லை. இரண்டையும் கடந்த ஒரு மேலான பொருள் உலகத்தையும், உலகப் பொருட்களையும் இயக்குகிறது. அதுவே பரம்பொருள். இந்தப் பரம்பொருள் அனைத்தையும் தமக்குள் ஒடுக்கி மீண்டும் தோற்றுவிக்கிறது. இந்தப் பரம்பொருளே ‘சிவன்’. தமிழ்ச்சமயம் என்று ஏற்பதற்கான தகுதியுள்ளது சைவசித்தாந்தம். சித்தாந்தம் என்பதன் பொருள் அறிவின் முடிந்தநிலை என்பதாகும். சைவ சித்தாந்தம் தென்னிந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழர்களுக்கு உரியது. சைவசித்தாந்தம் திராவிட அறிவின் சிறந்த வெளிப்பாடு. தென்னிந்தியாவிலேயே வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழம்பெருஞ் சமயமாகிய சைவம், ஆரியர் வருகைக்கு முற்பட்டது. இச்சமயம் தமிழ்மக்கள் நெஞ்சத்தில் நிறைந்து விளங்குகிறது என்ற ஜி.யூ.போப்பையரின் (பழந்தமிழர் வாழ்வும் பண்பாடும், ப.11) கருத்தை இங்குச் சுட்டுவது தகும். சைவம் பதி, பசு, பாசம் ஆகிய மூன்று உண்மைகளை உரைக்கிறது. பாசங்களிலிருந்து விலகிய உயிர் இறைவனைச் சேரும் என்பது சித்தாந்தம் என்று தென்னன் ‘தமிழர் தந்த மெய்யியல்’ கட்டுரையில் விளக்குகிறார். சைவத்தின் தொன்மை பற்றியும் தனித்தன்மை பற்றியும் தமிழர்களுக்கே உரிமையுடையது என்பது குறித்தும் பல்வேறு சான்றுகளை முன்வைக்கிறார். “வினைக் கொள்கையும் உயிர்கள் அச்சுமாறி பிறத்தல் கொள்கையும் யோக நெறியும், சிவன், உமை, திருமால் பற்றிய சமய தத்துவக் கொள்கைளும் வேதங்கள் விதிக்கும் ஒமங்களுக்கு மாறாக நகரும் பூசை முறைகளும் திராவிடர்க்கே உரியவை” என்று தெரிவிக்கிறார் அனித்குமார் சட்டர்ஜி (த.நே.28, ப.74). மேலும், இராதாகிருட்டிணன் கூறும் சில கருத்துகள். “சிவன், திருமால், காளி வழிபாடுகள் தொடக்க நிலையில் தமிழர்க்கே உரியவை. தமிழர்களின் செல்வாக்கினால் வேதநாகரிகம் இதிகாசங்களில் இந்து நாகரிகமாக உருமாற்றம் அடைந்துள்ளது என்றும், தமிழர்க்கே உரிய உருவவழிபாட்டினை ஆரியர்கள் ஏற்றனர் என்றும் தமிழர்க்குரிய ஆகம மரபுகள் வேதமரபுகளில் ஆதிக்கம் செய்தன”என்றும் தெளிவுப்படுத்துகிறார். (ப.74) சைவ சித்தாந்தம் பற்றித் தென்னன் தரும் விளக்கங்கள் வருமாறு: சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசம் (இறை, உயிர், தளை) என்ற முப்பொருளுண்மைகளைக் கூறுகிறது. இறையுண்மை பற்றிச் சித்தாந்தம் கூறும் கருத்து: பஞ்சு தானாக நூலாகி ஆடை ஆவது இல்லை. களிமண் தானாக குடம் ஆவது இல்லை. எந்த ஒரு வினைக்கும் கருத்தா தேவை. இம்முறையில் இறையுண்மை பற்றிக் கூறுகிறது. அடுத்து உயிர் பற்றிச் சித்தாந்தம் கூறுவது. ஆன்மா (பசு) இறைவனைப் போலவே ஆதியந்தம் இல்லாதது. ஆன்மா, ‘யான்’ ‘எனது’ என்ற இருவகை பற்றுகளுடனும் மூவகை மலங்களுடனும் (ஆணவம், கன்மம், மாயை) கட்டுண்டு கிடக்கிறது. இவற்றிலிருந்து விடுபடும் ஆன்மா இறைவனைச் சேருகிறது. பாசம் / தளை பற்றிச் சித்தாந்தம் கூறுவதாவது:இது ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களாகும். ஆணவம் என்பது மூலமலம். செம்பில் களிம்பு போல அனைத்து உயிர்களிடத்தும் ஆணவம் கலந்துள்ளது. ஆணவம், ஆன்மாக்களிடம் உள்ள அறிவை அழித்துவிடும். இது தீமையின் குறியீடு. கன்மம் நல்வினை, தீவினை என இரு வகைப்படும். வினைக்கு ஈடாக ஆன்மா உடம்பு எடுக்கும். அடுத்து, மாயை என்பது “உலகத் தோற்றத்திற்கு முதல் காரணமாக உள்ளது. ஆன்மாவுக்கு அறிவு, இச்சை செயல்களை வெளிப்படுத்தவும் வினைகளை நுகரவும் தேவையான உடல், கருவி, உலகு முதலியவைகளை விடுப்பது” (மேலது, ப.76) இம்மலங்களாகும். பதி, பசு, பாசம் என்ற முப்பொருளும் ஆதி அந்தம் இல்லாத நிலைபேறுடையவை. மூவகை தளைகளிலிருந்து ஆன்மா விடுபட்டு இறைவனைச் சேரவேண்டும் என்று சித்தாந்தம் கூறுகிறது என்று தென்னன் விளக்குகிறார். இத்தகைய சைவசித்தாந்தம் தமிழரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் மெய்யியல் என்பதும் இவரது கருத்தாகும். இதுவரை கூறப்பட்ட தமிழ்ச் சிந்தனையின் வரலாற்றை இங்குக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.தொல்காப்பியருக்குத் தெய்வம் என்ற கருத்தில் உடன்பாடில்லை. அவர் வாழ்வின் இறுதி நிலை பற்றிக் குறிப்பிடுகிறார். தலைவனும் தலைவியும் வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தில் தவத்தை மேற்கொண்டு, நல்அறங்களைச் செய்யவேண்டும் என்கிறார். அடுத்துவரும் வள்ளுவருக்குள்ளும் கடவுள் என்ற நிலைப்பாடு இல்லை. மேலும் இவர் பற்றற்ற நிலை பற்றிப் பேசுகிறார். ‘இருள்நீங்கி இன்பம் பயக்கும்’ என்றும், ‘காமம், வெகுளி, மயக்கம்;’ இவற்றையெல்லாம் தவிர்த்துப் பற்றற்ற நிலையில் பேராஇயற்கை அடைவது வாழ்வின் செம்பொருள் என்கிறார். தொல்காப்பியர் கருத்தின் நீட்சி என வள்ளுவர் கருத்தைக் கூறமுடியும். சித்தர்களுக்குக் கடவுள் கருத்து உண்டு என்றாலும் காமம் முதலிய நோய்களிலிருந்து விடுபடுதல் சித்தர் நிலை. அடுத்து வரும் சைவசித்தாந்தம் பசுவாகிய உயிர் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு இறைநிலை அடைதல் பற்றிப் பேசுகிறது. இதிலிருந்து பெறப்படும் கருத்தாவது: மனிதன் தான் சார்ந்துள்ள பலவகையான பற்றுகளிலிருந்து விடுபட்டு இறைமை நிலை அடையவேண்டும் / பேராநிலை பெறவேண்டும் என்பதாகும். இவ்வாறு தமிழ்ச்சிந்தனை தனக்குள் முரண்பாடின்றித் தொடர்வதைக் காணமுடிகிறது. தமிழ்ப்பண்பாட்டு மெய்யியல்: தமிழர் பண்பாடு தமிழர் மரபுகள், தமிழர் வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும். சமூக பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவக் கூறுகளாகும். “எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் செயலிலும் சிந்தனையிலும் வாழ்க்கையை வெளிப்படுத்துதலிலும் அதன் மெய்யியல் பார்வை தொடர்ந்து வெளிப்பட்;டு கொண்டுதானிருக்கும்” (த.நே.28,ப.8) என்று கூறும் பிலிப் சுதாகர். தமிழ்ப் பண்பாட்டிற்குள் காணப்படும் தற்கால / மாறுபட்ட மெய்யியலைப் புரிந்து கொள்ளமுடியும்;. தமிழ்ப் பெண்கள் தம் வீட்டு வாயிலில் வரையும் கோலத்தைக் கொண்டே தமிழ் மெய்யியலைப் புரிந்து கொள்ள முடியும். கோலம் சாதி சமயம் கடந்தது. அருவமும் உருவமும் இணைந்தது. பல புள்ளிகள் சிலகோடுகள் அனைத்தும் மனிதர்களை ஒருங்கிணைக்கும் பன்முகப் பார்வையைக் குறிப்பிடுகிறது. அரிசி மாவினால் போடும் மாக்கோலம் சிற்றுயிர்களுக்கு உணவாக அமைகிறது. மனிதன் மட்டுமே வாழ்வது என்ற தன்னலமின்றி அனைத்து உயிர்களையும் மனிதன் வாழ்விக்க வேண்டும் என்ற பொதுமையறமே தமிழர்களின் நோக்கமாக இருந்தது. கோவில்களில் காணப்படும் யாளியின் வடிவம் உலக உயிரியக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை சுதாகர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “யாளி விலங்குமல்ல, மனிதனுமல்ல, பறவையுமல்ல, விண்ணிலும் அல்ல, மண்ணிலும் அல்ல, நீரிலும் அல்ல நிலத்திலும் அல்ல. மாறாக விலங்குகள், பறவைகள், மனிதர்கள், வானம், புவி, நீர், நிலம் என யாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் பார்வையின் வெளிப்பாடு யாளி. உலக உயிரியக்கத்தை யாளியைவிட வேறு எந்தக் கலைச்சின்னமும் வெளிப்படுத்தியதில்லை” என்கிறார் (ப.9). யாளி ஒரு வகையில் அருவம். இன்னொரு வகையில் உருவம் யாளி தன் வடிவில் கலையை வெளிப்படுத்துகிறது. அருவமும் உருவமுமாக அமைவது கலை. கலை என்பது ஒரு பொருள் சார்ந்தது அல்ல. பல பொருள் சார்ந்தது. பார்ப்பவர் தன்மைக்கு ஏற்றவாறு பார்வைகளை வெளிப்படுத்துவது. கோலமும், யாளியும் பின்நவீனத்துவ வடிவங்கள். மேலும் தமிழர்களின் கோவில்களும், சிற்பங்களும், கட்டிடங்களும், இசையும், ஒவியமும் வெளிப்படுத்துவது இத்தகைய பண்பாட்டு மெய்யியல் என்கிறார் சுதாகர். தமிழ் மெய்யியல் உலகப்பார்வையுடன் கூடிய பொதுமைத்தன்மையும் பரந்த நோக்கும் கொண்டுள்ளதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. தமிழ்ப்பெண்ணிய மெய்யியல்: பெண்ணியம் என்பது காலங்காலமாகப் பெண்ணினத்தை அடிமைப்படுத்தி, அதிகாரம் செலுத்தி வந்த ஆண் அடக்குமுறைக்கும் எதிராகக் குரல் எழுப்பும் தீவிரப் போக்குடையது. தற்காலத்தில் பெண்ணியத்தை இன, சமூக, கலாச்சார, மத எல்லைகளைக் கடக்கும் அடிப்படை இயக்கமாகப் பார்க்கப்படுகிறது. இவ்வகையில் சுதாகரின்’தமிழ்ப் பெண்ணிய மெய்யியல்’என்ற கட்டுரை சமயங் கடந்த பெண் சக்தியைக் காட்சிப்படுத்துகிறது. (த.நே.30,ப.53). தமிழ்மக்கள் ஊர்ப்புறங்களில் வாழ்பவராக இருந்தாலும் நகரத் தெருக்களில் வாழ்பவராக இருந்தாலும் தவறாமல் கொண்டாடும் தாய்த்தெய்வ வழிபாடு கொற்றவை - காளி - துர்க்கை - அம்மன் வடிவில் அமையும். கொற்றவையின் எளிய வடிவம் மாரியம்மன். காளி ஒரு பண்பாட்டுப் படைப்பின் உச்சம். தமிழில் காளி, ஐயை என்றும் அழைக்கப்படுகிறாள்;. “பழந்தமிழரது தலையாய தெய்வம் பெண்தெய்வம் என்பதில் ஐயமில்லை. சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் கொற்றவை வழிபாட்டுமுறை கூறப்படுகிறது. கொற்றவையை வெறியாட்டு முறையினால் பழந்தமிழர் வழிபட்டனர். சிந்துவெளி நாகரிகப் பெண்தெய்வம் பிற்காலத்தில் இந்து சமயத்தில் ‘சக்தி’ யாக மிளிர்ந்தது. பழந்தமிழரின் கொற்றவை சிவனுடைய சக்தியாக உருமாறியது” என்கிறார் கைலாசபதி. (பழந்தமிழர் வாழ்வும் வழிபாடும், ப.20). இடைக்காலத்தில் ஆணாதிக்கத்திற்கு இடம் தந்தது எனினும் ஆதியில் ஆற்றல்மிக்க பெண்ணியமாகஉற்பத்தி சக்தியாக உச்சம் பெற்றிருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. தாய்வழிச் சமூகம், இலக்கிய காலத்திற்கு முந்தியது. சரித்திர காலத்திற்கு முந்தியது. மிகவும் பழமையானது என்பதை நா.வானமாமலை கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்: “ஆதிக்கச் சமுதாயம் தோன்றி வளரும் சரித்திர முற்காலத்தில் பெண்தெய்வங்கள் தோன்றின. பயிர்த்தொழில் செழிப்பைக் கொடுத்தது. ஆகவே செழிப்பைக் குறிக்கும் தெய்வங்கள் பல நாடுகளிலும் பெண்தெய்வங்களாகவே இருக்கின்றன. சீதேவி, கிரேக்க தெய்வங்களான சைபீல், டெடோனா, டெல்பி முதலியவை பெண்தெய்வங்களே” என்கிறார் (தமிழர் வரலாறும் பண்பாடும், ப.72,74). ஆணிய அதிகாரத்திற்கு எதிரான பெண்ணியக் குரலாகக் காளி காட்சி தருகிறாள். பெண்மையின் வரலாற்று எழுச்சி, போராட்டகுணம், சமூக எதிர்ப்பாற்றல் போன்றவற்றை நினைவூட்டுவது. எதிர்த்துப் போராடுவதும், கொண்டாடி மகிழ்வதும் தமிழ்ப் பெண்ணிய பண்பாட்டு வெளிப்பாடுகள். தொன்மம், நாட்டுபுற இசை, படைப்பியம், கற்பனை, தீமைக்கு எதிரான போர்க்குரல் போன்ற ஒருங்கிணைந்த பார்வையாக காளி விளங்குகிறாள். காளிக்கு குறிப்பி;ட்ட அடையாளச் சிறப்பும் உண்டு. தமிழ்ப்பெண்களின் உளவியல் நெருக்கடிகளுர்குக்கான தீர்வு காளி. காளியை எதிர் கொள்வோர் பதில் வினையாற்றாமல் இருக்கமுடியாது. காளி உற்பத்தி சக்தியாகவும், கட்டமைப்பாகவும், கட்டுடைத்துச் செல்பவளாகவும் இருக்கிறாள். வாழ்வின் பொருளையும் வாழ்வியல் நிலைகளையும் புதிய புதிய தளங்களில் இயங்கச் செய்யும் ஆற்றல் படைத்தவள் காளி. மானுடத்தையும் பெண்மையை தக்கவைத்துக் கொள்வதற்கான இடைவிடாமல் போராடும் குறியீடு காளி. (ப.64) காளியின் ஆளுமையைப்பற்றிப் பிலிப்சுதாகர் பிறிதோர் இடத்தில் தரும் விளக்கம் வருமாறு: “நமது பாடல்களின் அன்னை. நமது விதைகளின் அன்னை. உலகின் தொடக்கத்தில் நம் அனைவரையும் கருத்தாங்கியவள்.அவள் எல்லா வகையான மனிதர்களின் தாய். அனைத்திற்கும் அன்னை. அனைத்துலகின் தாய். அவளுக்கு சடங்குகள் இல்லை. மந்திரங்கள் கிடையாது. ஆனால் வயல்களில் விதைகள் தூவப்படும் போது அவள் பாடப்படுகிறாள். அவள் வளர்ச்சிதை மாற்றங்களின் தாய். அவள் நமக்காக இரங்குபவள். நாம் யாருக்குச் சொந்தம்? நாம் எவரின் விதைகள். நமது அன்னைக்கு மட்டுமே நாம் சொந்தமானவர்கள்” இவ்வாறு சொல்பவர் பவுல்ராடின். (தொன்மை மக்களின் ஒற்றைக்கடவுள், ப.15, கே.டி அச்சகம் நியுயார்க், 2001); இக்கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார் சுதாகர் (கொற்றவை நூல் திறனாய்வு). மகாகவி பாரதி காளியை போற்றிப்பாடுவதையும் இங்கு நினைவுகூரலாம். “யாதுமாகி நின்றாய் - காளி! எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை யெல்லாம் - காளி! தெய்வலீலை அன்றோ? பூதமைந்தும் ஆனாய் - காளி! பொறிகளைந்தும் ஆனாய்; போதமாகி நின்றாய் - காளி! பொறியை விஞ்சி நின்றாய்.” (ப.149) காளி தெய்வமாக மட்டுமல்ல பெண்சமூகம் ஒடுக்கப்பட்டதன் எழுச்சியின் வீரிய வெளிப்பாடாகவும், தமிழ்வாழ்வியலின் சக்தியாகவும் காணப்படுகிறாள். இதன் காரணமாகவே காளியை தமிழர்கள் மதித்துப் போற்றுகின்றனர். பாரதிக்குள்ளும் பிலிப் சுதாகருக்குள்ளும் காளி ஓர் ஆற்றல்படைத்த அன்னையாக தென்படுகிறாள். இவர்களுக்குள் இயங்கும் பெண்மையை புரிந்து கொள்ளமுடிகிறது. பிலிப்சுதாகர் ஒரு கிறித்துவ மதப்போதகர் என்ற போதிலும் அவருக்குள், தமிழ்ப்பண்பாட்டில் பெண்ணிய மெய்யியலின் பார்வை விரிந்து செல்கிறது. மெய்யியல் கட்டுரைகளுள் இரண்டு மாறுப்பட்ட கட்டுரைகள் இங்குத் தரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனிக் கருத்துகளை முன்வைக்கின்றன. அடிப்படையில் இவையும் தமிழ் மெய்யியலைச் சொல்லும் கட்டுரைகள். இந்து ஞான மரபும் இந்தியஞானமரபும்: ‘இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்’ என்ற நூலின் முன்னுரையில் ஜெயமோகன் கூறும் கருத்துகள் குறிப்பிடத்தக்கவை. வேதங்களிலேயே எல்லாம் உள்ளது என்னும் கருத்தை மறுக்கிறார். ஆறு தரிசனங்கள் தென்னாட்டில் தோன்றியவை என்பதும் இவர் கருத்து. “இந்து ஞானமரபு பன்முகத்தன்மையுடையது. எண்ணற்ற மாற்று வழிகளை அது திறந்து வைத்திருக்கிறது. ஆன்மிகம் பௌத்தவாதம், இறைவாதம், இறை மறுப்புவாதம், சாராம்சவாதம், சாராம்ச மறுப்புவாதம் இதில் உள்ளன.” (த.நே.28, ப.90) என்கிறார். இந்து ஞானமரபும், இந்திய ஞானமரபும் ஒன்றல்ல. இந்திய ஞானமரபில் பௌத்தமும் சமணமும் அடங்கும். (இந்து ஞானமரபில் இவை அடங்குவதில்லை). இந்து ஞானமரபின் அடிப்படை ஆறு தரிசனங்கள். “சாங்கியம் யோகம், வைசேடிகம், நியாயம், மீமாம்சம், வேதாந்தம் ஆகியவை. குறிப்பாக உலகாய்தம், ஆசீவகம் ஆகிய சிந்தனைக் கோணங்கள், பொதுவாக தென்னகத்திற்கு - தமிழுக்கு உரியவை” (ப.91) என்கிறார் ஜெயமோகன். சாம, அதர்வண வேதத்திலும் தென்னகப் பண்பாட்டுக் கூறுகள் கலந்துள்ளது. சாம வேதத்தின் இசைத்தன்மை, சைவ சமயச்சார்பு ஆகியவை தென்னாட்டின் பங்களிப்பு. பெரிய புராணம் சைவத்தைப் பெருமிதமாக எடுத்துக்காட்டுவது பலநூறு தரிசனங்களை ஒரு பெருந்தரிசனமாகத் தொகுக்கிறது. பெரியபுராணத்தின் வழியே சென்றால் பழந்தமிழகத்தின் பல்வேறு வகையான சிறுவழிபாட்டு முறைகளுக்கும் குலம் சார்ந்த மதங்களுக்கும் சென்று சேரமுடியும் என்று குறிப்பிடுகிறார். ஆகவே தமிழ் சைவ சித்தாந்தத்தின் உள்ளுறை பழந்தமிழ் தரிசனமரபுகள். ‘தரிசனம் என்பது வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம் குறித்த ஒட்டுமொத்தமான பார்வை’ (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், ப.40) என்கிறார். தமிழ் மெய்யியல் / தமிழர் மெய்யியல் என்று பேசுவதற்கான கருத்துக்கள் பல ஜெயமோகனின் கருத்தில் அடங்கியிருப்பது வியப்பிற்குரியது. இந்திய மெய்யியலில் ஆற்றல் மிக்க மெய்யியல், தமிழ் மெய்யியல் என்பதற்கான ஆதாரங்கள் என இவற்றைக் கொள்ளமுடியும். இந்து ஞானமரபு என்பதில் தமிழரின் ஞானமரபுஇரண்டறக் கலந்துள்ளது என்பதை ஜெயமோகன் விளக்குகிறார். மெய்யியலும் முரணும்: மனிதன் படைத்துக்கொண்ட மெய்யியல்வரையறைகள் இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளன. மாந்த வாழ்விற்குள் அன்பும் அறனும் நிலை பெற்று விட்டால் இவ்வுலகில் போரும், பகையும் இல்லை. இருவேறுபட்ட உலகை எவர் படைத்திருப்பினும்அன்பு, அறம் என்னும் பலவழிகளில் செம்மைப்படுத்தி சீர் செய்தவை மெய்யியல் என்று கூறும் நளினிதேவி தற்காலச் சூழலில் மெய்யியலுக்குள் புதைந்து கிடக்கும் சில முரண்களைப் பற்றிப் பேசுகிறார். (த.நே.30, ப.2) •இயற்கையுடன் இணைந்து வாழ்வதே வாழ்க்கை. இயற்கையுடன் முரண்படின் மனிதனுக்கு வீழ்ச்சி. •அறம் வெல்லும் என்ற கூற்று தற்போது உலகுக்கு ஒத்துவருவதில்லை. •இயற்கையும் இறைவனும் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. •இன்னாத இவ்வுலகத்தில் மனிதன் இனிது கண்டு வாழ்தல் எவ்வாறு?. •தவறு செய்பவரைத் தண்டித்து ஒடுக்கவேண்டிய சட்டம் தவறு செய்பவர்களைக் காப்பாற்றுகிறதே?. •ஊருணி நீர்போல் அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக இன்று இருப்பதில்வையே?. •கடவுள் தத்துவங்கள் வைரத்தை மூடிய மண்ணாய் மறைந்துள்ளன. தீமை செய்வோர் வாழ்வாங்கு வாழ்கின்றனர். •கழிவிரக்கம் கூடாது, என்றும் நேர்மையாகவும் அறத்தொடு, வாழும் வாழ்வுமே புகழைக் கொடுக்கும் என்றும் ஒருவுதல் வேண்டும். •நன்மை செய்யாவிடினும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும். •அன்பே உலகத்தின் உயிர்நிலை. அன்புள்ளம் அமைந்து விட்டால் யாவரும் கேளிர்! யாதும் ஊரே இதுவே சிறந்த மெய்யியல்,இது தமிழனுக்கு அன்று இருந்தது இந்த மெய்யியல் தத்துவத்தைத் தந்தவர் தமிழர். •தீயன செய்து வாழலாம் என்றால், பிற உயிர்களைக் கொன்று வாழும் விலங்குகட்கும் மற்;ற உயிர்களை வதைத்து வாழும் மனிதருக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும். •தமிழர் மெய்யியல் புறநானுற்றிலும், திருக்குறளிலும் பொதிந்து உள்ளது. •சமதர்மம் என்னும் சமன்மையே தமிழர் மெய்யியல் அகத்தில் அன்பும் இனிமையும் எளிமையும் ஏற்றமும் கொண்டு உலக இயல்பு உணர்ந்து வாழ வேண்டும். •நீர் வழிப்படுஉம் புணைபோல்’ துன்பங்கண்டு துவளாமல் இன்பங்கண்டு மயங்காமல் நிலைதிரியாது வாழ்வதே சிறந்த வாழ்வாகும். அதற்கான வழியைக் கூறுவதே சிறந்த மெய்யியல் - தமிழர் மெய்யியல் (மேலது.ப.4) என்கிறார் நளினிதேவி. “எளிய வாழ்க்கை, பகிர்ந்து உண்ணல், போரின்மை, ஓப்புரவு, நாணம் கண்ணோட்டம் நல்லது செய்ய இயலாவிடினும் அல்லது செய்யாமை, செய்ந்நன்றி, செல்வத்துப் பயன் ஈகை எனக் கொள்ளல். நன்மையும் தீமையும் நோதலும் சாதலும் பிறரால் வருவதில்லை என்ற தெளிவு. இன்னா உலகத்தில் இனிய தேடல் முதலிய இன்னோரன்ன பண்புகள் என்றும் மனிதவளம் காப்பவை. மனிதநலம் என்பது மெய்யியல் கோட்பாடு” (தமிழ் இலக்கிய வரலாறு, ப.101)நளினிதேவி தனது நூலில் கூறியுள்ளதையும் இங்கு நினைவு கூறலாம். இவ்வாறு மனித வாழ்வுக்கு அடிப்படையான மெய்யியல் தமிழிலக்கியத்தில் காணப்படுவதைச் சுட்டிக்காட்டி, அதன் நெறியில் வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். தற்காலத்தில் மெய்யியல் பல்வேறு முரண்பாடுகளுக்குள் உள்ளாகி வருகிறது என்றபோதிலும் பழந்தமிழர் வகுத்த மெய்யியல் நெறியிலிருந்து பிறழ்வதுஎக்காலத்திலும் தமிழர் நெறியாகாது என்பது இவரது கருத்தாகும். தமிழனுக்குள் இயங்குவது மெய்யியலறம்: தமிழன் இறந்த காலத்தின் எச்சமாக இல்லை. காலத்தொடர்ச்சிக்கு அர்த்தம் கற்பிப்பவன். எனவே இன்றைய தமிழனின் குருதிக்குள் இயங்குவது சங்கச்சான்றோர்களின் ஆற்றல்மிக்கக் கூறுகள். தமிழனால் பழமையை மறந்து வாழமுடியாது என்று தமிழன்பன் கூறுகிறார். “வேர்களை நோக்கிய உன்பயணத்தைத் தொல்காப்பியத்தை விட்டுவிட்டு வேறு எங்கிருந்து தொடங்க முடியும்?”(த.நே.28, ப.4) என்று கேட்கிறார். காலங்காலமாக தமிழனுக்குள் வேர்களாய் இருப்பவர்கள் தொல்காப்பியர், கபிலர், பரணர், வள்ளுவர், இளங்கோ, வள்ளலார் போன்றோர். இவர்களைத் தவிர தமிழை மூச்சாகவும் உயிராகவும் கொண்டு வாழ்ந்த பாரதி, பாரதிதாசன் பாடல்களிலும் உள்ள அழகியலையும், உலகியலையும் கலந்து அளித்த இவர்கள் தமிழை ஒருபோதும் இழக்கமுடியாது. தமிழனே உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் முன்னோடியாவான். தமிழர்களுக்குள் இவர்கள் காலங்கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவ்வாறாகத் தமிழிலக்கியத்தினுள்ளும் தமிழர் வாழ்வினுள்ளும் நுண்பொருளியலும், தர்க்கவியலும், அறவியலும், அழகியலுமாகிய மெய்யியல் கூறுகள்இழையோடிருப்பதைக் காணமுடிகிறது. தொடக்கம் முதல் இறுதிவரை வைதீகத்திற்கு எதிரான அதேசமயம் வாழ்வை மறுக்காத ஒரு மெய்யியலை தமிழர் மெய்யியல் எனக் கருதமுடியும். தவம், இறைமை என்றெல்லாம் இங்குப் பேசப்பட்டாலும் இவ்வுலக வாழ்வை மறுக்கும் தத்துவமாக அதை எடுத்துக்கொள்ள வேண்டிதில்லை. இவ்வாறு இயங்குவது தமிழ் மெய்யியல். தொகுப்புரை: - தமிழ் மெய்யியல் குறித்த வரையறைகளின் அடிப்படையில், தமிழ் மெய்யியல் என்பதும் தமிழர் மெய்யியல் என்பதும் வேறுபட்டவையல்ல. தமிழ் இலக்கியங்களில் தமிழ்வரலாற்றில் தமிழர் வாழ்வில் இடம் பெற்றது தமிழ் மெய்யியல். இத்தகைய மெய்யியல் காலமாற்றத்திற்கு ஏற்ப மாறுபடும் தன்மையைப் பெற்றிருக்கிறது. - பழந்தமிழர் மெய்யியல் என்றமுறையில் சிந்துசமவெளி நாகரிகத்தில் சைவசமயக்கூறுகளாக பசுபதி, தவயோகி முதலிய சின்னங்களும் பெண்தெய்வ வழிபாடுகளும்; தோற்றம் பெற்றுள்ளன. - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியத்தில் ஐம்பூதவியல் என்னும் மெய்யியல் கருத்து காணப்படுகிறது. அன்றியும் தெய்வம் என்பது முதற்பொருள் அல்ல. முதற்பொருளாகிய நிலம்,பொழுது ஆகியவற்றின் ஆதாரத்தில் தோன்றிய கருப்பொருளில் ஒன்று தெய்வம் என்பதும் பழந்தமிழர் கருத்து. இவை இரண்டும் உலகாய்தர் கோட்பாடு.தொல்காப்பியரையும்உலகாய்தர் என்றே சொல்வது தகும். - சங்க இலக்கியத்தில் அகத்திணை இயலில் தலைவன் தலைவிக்கு இடையில் இடம்பெறும் இன்பவியல் கருத்தும் உலகாய்த மெய்யியலைச்சாரும். - ‘ஒர் இல் நெய்தல் கறங்க’ என்னும் பக்குடுக்கை நன்கணியாரின் புறநானூற்றுப்பாடலில் கடவுள் மறுப்புக் கோட்பாடும் இப்பாடல்களில் இடம் பெற்றமெய்யியல், அறம் சார்ந்த மெய்யியற் சிந்தனைகள். - வள்ளுவர் மெய்யியல் பகுத்தறிவின் மூலம் சமயத்தைக் கடந்து செல்லும் நெறி. வள்ளுவம் குறிப்பிடும்கொல்லாமை, எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் பொதுமை அறம். - சித்தர் மெய்யியலில் திருமூலரின் அன்பே சிவமும், தன்னையறிதலும், சிவவாக்கியரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும், வள்ளலாரின் உயிரிரக்கக்;கோட்பாடும், சமரச சன்மார்க்க கொள்கையும் இம்மூன்றும் மெய்யியற் பாற்படும். வள்ளலாரின் பசித்தோர்க்கு உணவிடல் முக்கியத்துவம் பெறுகிறது. தன்னைத்தானே நன்கு உணர்கின்ற மெய்யுணர்வினால் மட்டுமே இறைவனைக் காணமுடியும் - சைவசமய இலக்கியங்களில் ஒரு பகுதியாகிய மூவர் தேவாரம் நான்மறை கருத்துக்களையும் வருணாசிரம முறையையும் உள்வாங்கிக் கொண்டது. - சைவசித்தாந்தக் கருத்து வேதத்திலேயே இடம்பெற்றது என்பதுமறுக்கப்படுவதோடு வேதத்திற்கு முற்பட்டது. என்பதும், சைவசித்தாந்தத்தின்முப்பொருளுண்மை (பதி, பசு, பாசம்) பசுவாகிய உயிர் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக்கடந்து செம்பொருன் என்னும் சிவனை / இறைவனை/ இயற்கையைச் சேர்கிறது. - தமிழ்ப்பண்பாட்டில் கோலங்கள் தமிழ்ச்சிற்பங்களில் ஒன்றான யாளி ஆகியவை உலகப் பார்வையயுடன் இயங்குவதையும், தமிழர்களின் தாய்த் தெய்வமான காளி (கொற்றவை) பன்முகப் பரிமாணங்களில் தமிழ் வரலாற்றோடு இணைந்து செயல்படுவதையும் காணமுடிகிறது. - சாங்கியம், யோகம், ஆசீவகம் ஆகிய தரிசன மரபுகள் தமிழ்சார்ந்தவை என்பது புலனாகிறது. தமிழ்மெய்யியல் கருத்துக்கள் தமக்குள் முரண்பட்டவை எனினும் இவற்றுக்குள் ஒத்தத்தன்மை உள்ளன. - தமிழரின்வேர் தமிழ் வரலாறு மட்டுமல்ல உலகெங்கிலும்பதிந்திருக்கிறது.சங்கச் சான்றோர்களான தொல்காப்பியர், கபிலர், பரணர், ஒளவை மற்றும் இளங்கோ, சாத்தனார் ஆகியோர்கள் இன்றும் தமிழருக்குள் உயிர்த்துடிப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கின்றனர். - தொகுத்துப் பார்க்கும் போது, தொல்காப்பியரிடம் காணப்படும் தமிழ்மெய்யியல் என்பதை உலகாய்தம் என்றே கூறுவது பொருந்தும் தொல்காப்பியருக்குத் தெய்வம் என்பது கருப்பொருளில் ஒன்று.இல்லறத்தின் இறுதி நிலை துறவு. இல்லறத்தின் உள்ளே அடங்குவது துறவு. தவமும் யோகமும் துறவில் அடங்கும். வள்ளுவரிடமும் சமயச்சார்பு இடம்பெற்றாலும் அதைக் கடந்து இயங்குவது பகுத்தறிவுப் பார்வை. திருமூலர், சிவவாக்கியர் ஆகிய சித்தரிடமும் இறைச் சிந்தனையைக் காட்டிலும் உலகாய்தமே மேலோங்கித் தெரிகிறது. சைவ சித்தாந்தத்தைப் பொருத்தவரை மனிதன் மலங்களிலிருந்து விடுபட்டு செம்பொருள் காண்பது என்பது தமிழ் மெய்யியல் சிந்தனையுள் அடங்கும். அன்பும், அறனும் தமிழரின் மெய்யியல் என்று கூறலாம். உலகாய்தம் என்பதனுள் உலகியல் முக்கியம். மனித வாழ்வு முக்கியம். உலகியல் கலந்த அப்பாலைச் சிந்தனை தமிழ் வாழ்வினுள் அடங்காது. சங்க இலக்கிய ஆய்வுகள் காலந்தோறும் தமிழியல் ஆய்வுகள் வெவ்வேறு அடிப்படைகளில் பல்வேறு கூறுகளை முன்னிறுத்தி ஆய்வு செய்யப்பட்டன. முதல் ஆய்வைச் செய்தவர்கள் உரையாசிரியர்கள். அவர்களைத் தொடர்ந்து புதிய இலக்கணம் வகுத்தவர்களும் இலக்கியப் படைப்பை உருவாக்கியவர்களும் தமிழியல் ஆய்வை முன்னெடுத்துச் சென்றவர்கள் என்றும் கூறமுடியும். இடைக்காலத்தில் சங்க இலக்கியம் மக்கள் கவனத்திலிருந்தும் அறிஞர் தம் பார்வையிலிருந்தும் மங்கி மறைந்தபோதிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் சங்க இலக்கியம் முதலிய இலக்கியங்கள் தமிழ்மக்களின் பார்வைக்கு வந்து, தமிழ்மக்களின் உள்ளத்தைப் பெருமளவு ஈர்த்தன. தமிழறிஞர் பலர் சங்கத்தமிழ் நூல்களின் சிறப்பையும் இதன் ஆழத்தையும் கண்டு வியந்தனர். அவற்றைத் தேடிப் பதிப்பித்தனர். இத்தகைய பணிகள் மேலும் விரிவடைந்தன. தமிழ் இயக்கங்களும், தமிழை அடிப்படையாகக் கொண்டு எழுந்த அரசியல் இயக்கங்களும், இலக்கிய ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்றன. இவ்வாறு தோன்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து தற்காலத்தில் பல்வேறு அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்ட இலக்கிய, இலக்கண ஆய்வுகளும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு மேலும் வளம் சேர்த்தன. தற்காலத்தில் தமிழுக்குச் செம்மொழித்தகுதி கிடைத்த நிலையில் ‘சங்க இலக்கிய ஆய்வுகளைச்’ செழுமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு தமிழறிஞர்களின் புதிய பரிமாணங்கள் அடங்கிய நுட்பமான கட்டுரைகளைச் செம்மொழி ஆய்வுச் சிறப்பிதழாகத் தமிழ்நேயம் வெளியிட்டது. - இதழ்-37 (ஏப்ரல்2009), இதழ்-40 (சனவரி.2010) ஆகிய இரு இதழ்களில் முப்பது கட்டுரையாளர்கள் எழுதிய முப்பத்து இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றன. இக்கட்டுரைகள் கீழ்க்கண்ட பொருண்மைகளில் இங்கு ஆராயப்படுகின்றன. 1.தமிழின் தொன்மையும் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்ததன் பின்னணியும்,முதல் பகுதியில் ஆராயப்படுகின்றது. 2.தமிழுக்கு நெருக்கடிகள் நேர்ந்துள்ள இன்றைய உலகச் சூழலில் ‘சங்கஇலக்கியக் கல்வியின் தேவை’ என்ற பொருண்மை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 3.சங்க இலக்கிய ஆய்வுகள் புதிய சில பொருண்மைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இவை பற்றி இங்கு ஆய்வு செய்யப்படுகின்றது. 1.தமிழின் தொன்மையும் தமிழுக்குச் செம்மொழித்தகுதி கிடைத்ததன் பின்னணியும்: செம்மொழி - செவ்வியல் விளக்கம்: செம்மொழி என்பது மிகத் தொன்மையும், நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியும், உயர்ந்த கலைப் படைப்புகளையும் கொண்ட மொழியாகும். இதனைப் “பழமையானதும் இலக்கிய இலக்கண வளம் உள்ளதும் தொடர்ச்சியான மரபை உடையதுமான மொழி.” (ப.626) என்கிறது க்ரியா தமிழ் அகராதி. Classical என்ற சொல் செவ்வியல் தன்மை என்று பொருள்படும். இச்சொல் ‘Classicus’ என்ற இலத்தீன் சொல்லிலிருந்து உருவானது. “எந்த ஒருமொழி சீரும் சிறப்பும் கொண்ட செவ்வியல் இலக்கியங்களைப் பெற்றெடுத்து நிற்கின்றதோ அந்த மொழி செவ்வியல் மொழியாகும்”. (ச.அகத்தியலிங்கம், சங்கஇலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே, ப.30) செம்மொழி என்று பொதுவாகச் சொல்லப்பட்ட போதிலும் செவ்வியல் மொழி என்பதே பொருத்தமான பெயர் என அறிஞர் வா.செ.குழந்தைசாமி குறிப்பிடுகின்றார் (த.நே.37, ப.4). செம்மொழிக்கு நீண்டமரபும் இலக்கிய வளமும் முதன்மை என்பது மட்டுமன்றிப் பிற எந்த மொழியின் சார்பின்றி இயங்கக் கூடியதாகவும், தன்னிலிருந்து வேறு சில மொழிகள் தோன்றுவதற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய மொழியாகவும் இருத்தல் வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழின் தொன்மைக்குச் சான்றாக அதன் இலக்கிய, இலக்கண வளம் தொடர்ச்சியாகப் பெருகி வந்தது முதற்காரணமாகும். இலக்கணங்களை எடுத்துக்கொண்டால் தொல்காப்பியத்தையடுத்து வீரசோழியம், நேமிநாதம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம் முதலிய இலக்கணங்கள் தமிழில் அதுதோன்றிய காலத்தின் இலக்கணக்கூறுகளை உள்வாங்கியதாக அமைகின்றன. அதேபோல சங்க இலக்கியத்தைத் தொடர்ந்து அற இலக்கியம், காப்பியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் என்ற முறையில் காலந்தோறும் பற்பல புதிய கூறுகளை உள்வாங்கியதாய், இலக்கியம் வளம் பெறுகிறது. இத்தகைய வளமான தமிழ்மொழியைத் தமிழ்மக்கள் செந்தமிழ், முத்தமிழ், வண்டமிழ், நற்றமிழ், தென்தமிழ் போன்ற வகையில் சிறப்பித்தனர். இத்தகைய சிறப்புகளில் முதன்மையானது செம்மொழித்தமிழ். செம்மொழிக்கான தகுதிகள்: செம்மொழிக்கான தகுதிகள் குறித்துச் சில வரையறைகள் முன்வைக்கப்படுகின்றன. அவை “தொன்மை (Antiquity), ஒத்திசைவு (Harmony), தெளிவு (Clarity), தன்னடக்கம் (Restraint), கண்ணியம் (Serenity),இலட்சியம் (Idealism), பொதுமை (Universality), பகுத்தறிவு (Reason), ஒழுங்கு (Order), கண்ணோட்டம் (Humanism)” போன்ற கூறுபாடுகளின் தொகுப்பாகக் கருதப்படுகிறது (த.நே.37,ப.102) என்பதை வா.செ.குழந்தைசாமி சுட்டிக்காட்டுகிறார். ஐராவதம் மகாதேவன், செம்மொழித் தகுதிகள் குறித்து விளக்கும்போது, இரண்டு பண்புகள் மட்டுமே கட்டாயமாக இருக்கவேண்டும் என்கிறார். 1.இலக்கியவளம் 2.மொழியின் தொன்மை (உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுமலர், ப.47) என்று குறிப்பிடும் அவர் இரண்டு தகுதிகளையும் சான்றுடன் விளக்குகிறார். 1. “இந்தியாவில் வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் பேசிவரும் முண்டா மொழிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. ஆயினும் இந்த மொழிகளுக்கு இலக்கியவளம் கிடையாது ஆகையால் முண்டா மொழிகள் செம்மொழி என்ற தகுதியைப் பெறவில்லை” என்கிறார். 2. “ஆங்கிலமொழி நிரம்ப இலக்கிய வளம் பெற்ற மொழியாகத் திகழ்கின்றது. ஆயினும் இம்மொழியின் தொன்மை ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேல் இல்லை. ஆகவேதான் ஆங்கிலேயரும் தம் மொழியைச் செம்மொழி எனக் கூறிக்கொள்வதில்லை” (மேற்படி) என்று விளக்குகிறார். இந்தியச் செம்மொழிக்கான தகுதிகள் என்று சில பண்புகள் மைய அரசால் முன்வைக்கப்படுகின்றன. 1. “ஒரு மொழியானது 1500 முதல் 2000 ஆண்டுகள் வரையிலான வரலாறும் மற்றும் பழமையான இலக்கியங்கள் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். அல்லது அம்மொழியின் தொடக்கக் கால இலக்கியங்கள் உயர்தரத்தில் இருத்தல் வேண்டும். 2. அந்த மொழியின் இலக்கிய மரபு தொடக்கத்திலிருந்தே அம்மொழிக்கு உரிமையானதாக இருக்க வேண்டும். 3. மற்ற மொழிகளின் இலக்கிய மரபிலிருந்து பெறப்பட்டதாக இருக்கக்கூடாது“. இந்த அடிப்படையிலேயே ஒருமொழிக்கு செம்மொழித்தகுதியை இந்திய அரசுவழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. (http://tawikipedia.org/S/imi.) சிறந்த இலக்கிய வளம், செம்மாந்த இலக்கண அரண், மரபுகள், மாண்பு, பாரம்பரியம், சாகாவரம் பெற்று நிற்கும் சாசுவதப் பண்பு, இளமைத்திறம் போன்ற இன்னோரன்ன பண்புகளைக் கொண்டு கால வெள்ளத்தாலும் பிறமொழித் தாக்கங்களாலும் அழியாத, அழிக்கமுடியாத துடிதுடிப்பு இவற்றையெல்லாம் தன்னகத்தே கொண்டு வாழ்வது தமிழ்மொழி. (ச.அகத்தியலிங்கம், மேற்படி,ப.299) மேற்கண்ட செவ்வியல் பண்புகள் அனைத்தையும் தன்னகத்தே பெற்றுள்ள ஒரே மொழி தமிழ் என்பதற்கு இக் கூற்று சான்றாக அமைகின்றது இவ்வாறாகப் பல்வேறு தகுதிப்பாடுகளை ஒருசேரப் பெற்ற மொழியாக தமிழ்மொழி விளங்குகிறது என்பதைத் தமிழியல் ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்கள் மட்டுமன்றித் தமிழ் அறிந்த பலரும் ஒப்புக்கொள்வர் என்பதும் தெளிவாகிறது. தமிழ் செம்மொழி - அறிஞர்களின் கருத்து: ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட அளவில் தமிழின் சிறப்பை அறிந்த மேலைமொழியியல் அறிஞர்களும், தமிழறிஞர் மற்றும் தமிழ் ஆர்வலர் பலரும் தமிழ் செம்மொழி, செவ்வியல் தன்மையுடையது என்பது குறித்து குரல் எழுப்பி வந்தனர். இவ்வகையில் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் அதன் இலக்கியச் செழுமை குறித்து ஆராய்ந்து முதன் முதலில் குரல் கொடுத்தவரான மேலைநாட்டு கல்வியியல் அறிஞரான பிரான்சிசு வைட் எல்லிசு என்பார் 1816இல் ‘தமிழ் தொன்மையான மொழி’ என்பதை உணர்த்தினார். (தொன்மைச் செம்மொழித் தமிழ், ப.1) 1851இல் இந்திய மொழிகளின் தொகுதி, திராவிட மற்றும் முண்டாமொழி நூல் தொகுப்பாளர்களான மேலை மொழியியல் அறிஞர்கள், சர்ஜார்ஜ் ஆபிரகாம் மற்றும் ஸ்டென்கோனோவ் இருவரும் திராவிட மொழிகளில் தமிழ்மொழி செம்மொழி என்பதும், சொல்வளம் மிகுந்ததும், இம்;மொழி பண்டைக்காலம் முதல் பயின்று வருவதும், வகையும் தொகையுமாய்ப் பல்வகை இலக்கியங்கள் செந்தமிழ் நடையில் ஆனவை என்றும் குறிப்பிடுகின்றனர். (தமிழ்நாடன் கட்டுரைகள், ப.112) 1856இல் கிறித்துவ பாதிரியாரான கால்டுவெல் ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற தன் நூலில், “திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிக மிகத் தொன்மை வாய்ந்ததும் பெருவளம் பொருந்தியதும் மிகவும் சீர்திருத்தமானதுமான உயர்தனிச் செம்மொழி” (மேற்படி) என்கின்றார். 1887இல் பரிதிமாற்கலைஞர், திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூயமொழி புகல் செம்மொழியாம். இம்மொழி நூலிலக்கணம் தமிழ்மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம்… அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழியேயாம் (தமிழ் மொழியின் வரலாறு, பக்.95,96) என்று குறிப்பிடுகிறார். இவர்களை அன்றியும்பாவாணர் தன் தமிழ்மொழி பற்றிய மிக விரிவான ஆய்வில் ‘தமிழ் மொழி செம்மொழியே’ என்பதை நிறுவியுள்ளார். மேலும் உலக அறிஞர்கள் ஏற்றுப் போற்றும் வகையில் சான்றுகளுடன் ‘The primary classical language of the world’ என்ற நூலில் விளக்கியுள்ளார். (உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுமலர், ப.26). பழந்தமிழ் இலக்கியம் செவ்விலக்கியம் என்பதையும் உலக அறிஞர் பலரும் தமிழறிஞர்களும் அறுதியிட்டு கூறியுள்ளனர்.இந்திய அளவில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைக்க தமிழ்ப் பல்கலைக்கழகங்களும் தமிழறிஞர்களும் கடந்த ஒருநூற்றாண்டளவில் கோரிக்கைகளையும் தீர்மானங்களையும் தொடர்ந்து முன்வைத்தனர். பழந்தமிழிலக்கியத்தின் செவ்வியல் தன்மை குறித்து தமிழறிஞர் மட்டுமன்றி, தமிழை விரும்பி கற்ற உலக அறிஞர்களும் ஒப்புக்கொண்ட போதிலும் தமிழுக்குச் செம்மொழித் தகுதி என்;பது காலந்தாழ்த்தியே கிடைத்திருக்கிறது. சமற்கிருதம், பிராகிருதம், பாலி போன்ற தொன்மை மொழிகளில் தேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கிய மைய அரசு, தமிழ் என வரும்போது இவ்விருதுகள் மறுக்கப்பட்டன. இதனை, “திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் இந்தியாவின் மிகத்தொன்மையான முதல்மொழி. தமிழ் செம்மொழி, இலக்கிய சிறப்புகளை உடையது என்ற உரிமை நிலைநாட்ட இதுபோல் உரை எழுத வேண்டும் என்பது விந்தையாகத் தோன்றுகிறது. செம்மொழித் தகுதியை ஏற்க மறுப்பது இந்திய நாகரிகத்தின் பெருமைக்குக் கருவான மையப்பகுதியைக் காண மறுப்பதாகும்” (த.நே.11,ப.34) என்பதை, உலக செவ்வியல் இலக்கியங்களில் ஆழ்ந்த தேர்ச்சியும் இந்திய மொழியின் சிறப்பை அறிந்தவருமான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ், சமற்கிருத துறைகளின் பேராசிரியருமான ஜார்ஜ் எல்.ஹார்ட் கூறியுள்ளார். இவரது கூற்றிற்கு வலுசேர்க்கும் முறையில் மறைமலை இலக்குவனார் கூற்று அமைகிறது, “மலைகளில் மாணப்பெரியது இமயமலை என்பது போன்றும் இந்து சமயம் இந்தியாவின் மிகப்பெரும் சமயம் என்பது போன்றும் ஷதமிழ்செம்மொழி’ என்பது வெளிப்படையாக உண்மை” (இலக்குவம், ப.62) என்கிறார். அன்றியும் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் 26360 வரிகளும் உலகின் மிகப்பெரிய செவ்வியல் மொழிகளுள் தமிழும் ஒன்று என்பதை நிலைநாட்டுவதற்குப் போதுமான சான்றாகும் எனச் செக்நாட்டுத் தமிழறிஞரான கமில் சுவலபில் கருத்துரைக்கின்றார். மேலும் செனேகல் நாட்டின் தாக்கர் (Taker university) பல்கலைக்கழகம். தமிழ், அரபி, பார்சி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைச் செவ்வியல் மொழிகளாகவே ஏற்றுக்கொண்டு கற்றுத் தருகின்றன. (தமிழ்மறை திருக்குறள், பக்.924,925) கடந்த பல ஆண்டுகளாக உலகெங்கிலும் தமிழாய்வு வளர்ச்சி பெற்றதன் விளைவாகத் தமிழ் பற்றி ஆய்வு செய்யும் சர்வதேச அறிஞர்கள் பலரும் தமிழைச் செவ்வியல் மொழியாகவே ஏற்றுப் போற்றியுள்ளனர். செம்மொழிஇலக்கியமும் நடுவண் அரசு ஏற்பும்: 2004 அக்டோபர் 12ஆம் நாள் தமிழுக்குச் செம்மொழித் தகுதியை மைய அரசு வழங்கியது. தொன்மை என வரும்போது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையுடையதாக இருக்கவேண்டும் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் தமிழைப் பொருத்தவரை இந்திய அரசு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் காலத்தால் முற்பட்டது என மதிப்பிட்டது. (த.நே.37,ப.7) இக்கால எல்லைக்குள் அடங்கும் இலக்கிய / இலக்கணங்களை நாற்பத்தொன்று எனச் செம்மொழி ஆய்வு நிறுவனம் வரையறை செய்தது. மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்ற வகைப்படுத்தப்பட்ட சங்க இலக்கியத் தொகை முப்பத்து ஆறு. இவற்றோடு தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் உரை ஆகியவற்றையும் சேர்த்து நாற்பத்தொரு இலக்கிய / இலக்கணங்களாகும். இவை தமிழின் தனித்துவச்செல்வங்கள். செம்மொழித் தமிழ் என்பது தமிழுக்கு மேலும் ஒரு தனித்துவம் என்ற போதிலும் தமிழ் செம்மொழியின் சிறப்பு, அதைப்போற்றிப் புகழ்வதில் இல்லை. அந்த மொழி இன்றைய தமிழ்மொழிக்கும் தமிழரின் சிந்தனைக்கும் பயன்படும் விதத்திலும் தரத்திலும் இருக்க வேண்டும். (இ.அண்ணாமலை, மணற்கேணி, ஜனவரி 2012, ப.34). 2.சங்க இலக்கியக் கல்வியின் இன்றைய தேவை: இன்று ஏன் சங்க இலக்கியக் கல்வி பயிலவேண்டும் என்று ஆராயும்போது சங்க இலக்கியம் மனித உணர்வுகளோடு தொடர்புடைய மக்களின் அறிவு வளர்ச்சியையும் அழகுணர்வையும் வெளிப்படுத்தும் வரலாற்று ஆவணம். சங்க இலக்கியம் மனித வாழ்வின் மேன்மையைச் சொல்கிறது. அன்பும் அறமும் இயைந்த வாழ்க்கைதான் உன்னதமான வாழ்க்கை என்பதை எடுத்துக்காட்டுகிறது. தற்காலத்தில்தான் சங்க இலக்கியத்தை இலக்கியமாகப் பயிலும் நிலை நேர்ந்துள்ளது. இடைக்காலத்தில் சங்க இலக்கியம் தொடர்ச்சியாகப் பயிலப்பட்டதாகத் தெரியவில்லை. சமய உணர்வு மேலோங்கிய காலத்தில் சங்க இலக்கியத்தைப் பயில்வதற்கான தேவை இருக்கவில்லை. தற்கால சூழலில் சாதி, மதம் ஆகியவற்றின் மனநிலையிலிருந்து விடுபட்டு இலக்கியத்தை இலக்கியமாகப் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சங்க இலக்கியத்தில் சாதி, மத ஆதிக்கத்திற்கு இடமில்லை. இதன் காரணமாகத்தான் இன்று சங்க இலக்கியத்தைப் பெரு விருப்புடன் கற்கிறோம். சங்க இலக்கியம் கவித்துவ ஆற்றலிலும், சிந்தனைச் செறிவிலும் கற்பனைப் பொலிவிலும் உயர்ந்து, தமிழுக்கு அழியாப் பெருமையை அளிக்கக்கூடிய நிலைமையில் போதிய அளவு இருக்கிறது. அதில் சுவை பொருந்திய சிறந்த கவிதை பொதிந்து, தமிழ் இலக்கியத்தின் ஆணிவேர்கள் போல் படர்ந்திருக்கின்றது. பத்துப்பாட்டு மூவாயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட அடிகளை உடையது. எட்டுத் தொகையிலுள்ள சுமார் இரண்டாயிரத்து நானூறு பாடல்கள் கிட்டத்தட்ட நானூற்று எழுபத்தைந்து புலவரால் எழுதப்பெற்று ஏறக்குறைய முப்பதினாயிரத்திற்கு மேலுள்ள வரிகளை உடையன. (சுப்பிரமணிய அய்யர்.ஏ.வி, தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, ப.19). இன்று ஏன் சங்க இலக்கியக் கல்வி தேவை என்பதற்கு இதுவும் ஒரு காரணம். இன்றைய உலகமயமாதல் சூழலில் மனித வாழ்க்கை, நகர நாகரிகம் எல்லாமே வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வறட்சி தென்படுவதைக் காணமுடிகிறது. நுகர்வுக் கலாச்சாரம் மனிதனை அடிமைப்படுத்துகிறது. எல்லாமே விலைப்பொருட்களாகி, பணம் மட்டுமேமக்கள் வாழ்வின் குறிக்கோளாகி விட்டது. இயற்கையை அழித்து செயற்கைக்குள் இன்பம் காண்கிறோம். இந்நிலையில் இயற்கையை இழந்தால் மனித வாழ்க்கை கேள்விக்குறியாகும். இன்று நீராதாரங்கள் உலக முதலாளிகளின் கொள்ளைப் பொருளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இயற்கையை வாழ்வித்தால் மட்டுமே மனித வாழ்வுக்குள் பசுமைக்கு இடம் உண்டு. இயற்கைச் சூழலை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளைச் சங்க இலக்கியக் கல்வியால் மட்டுமே தரமுடியும் என்ற புரிதலோடு செந்தில்குமார், பிலிப்சுதாகர், செந்தமிழ்த்தேனீ, மோகனராசு, பூரணச்சந்திரன் ஆகியோர் கட்டுரைகள் ஆராயப்படுகின்றன. செந்தில்குமார்: சங்க இலக்கியக் கல்வியினால் மனிதவாழ்வுக்குள் ஏற்படும் செழுமையை அறிந்து கொள்ள முடியும் என்பதற்கான விளக்கங்களை முன்வைக்கிறார். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என மாறிவரும் தற்காலச் சூழலில் இலக்கியங்களில் காணப்பட்ட ஐந்திணை நிலங்கள் இன்று எந்தந்த வகையில் சிதைவுகளுக்கு உட்பட்டிருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். ஐந்திணை நிலங்களும் இன்றைய நிலைமையும்: இன்று குறிஞ்சியும் முல்லையும் மருதமும் தன் நிலையிழந்தும், பிறழ்ந்தும் காட்சியளிக்கின்றன. குறிஞ்சி தன் மடியில் வைத்து காத்த முல்லை நிலம் வறட்சி மிகுந்து வாழ்வுக்கான தகுதியை இழந்திருக்கிறது. குறிஞ்சியில் தொடங்கி முல்லை வழியாகச் சென்ற காட்டாறுகள் இன்று வறண்டு போயின. மருதநிலத்தில் பாரம்பரியமான வேளாண்மை கைவிடப்படுகிறது. எங்கும் பணப்பயிர்களே காணப்படுகின்றன. நகரவாழ்க்கையை மையப்படுத்தி இயந்திர தொழில் நாகரிகம் விரைவில் மனிதவாழ்க்கையை தன் ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்த நிலையில் அறம் கைவிடப்படுகிறது. பணம் இன்று முதன்மையாகிவிட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களின் மாசுகளை நெய்தல் நிலம் தனக்குள் தாங்கித் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறது. கடலும் (நெய்தல்) தன் வளங்குன்றியே காணப்படுகிறது. “எல்லா நிலத்திலும் திணை மயக்கம் வேர்கொண்டுவிட்டது. ‘பிரிவு’ என்ற சொல் உரத்து ஒலிக்கின்றது. களவு, கற்பு ஆகிய இருநிலைகளிலும் பிரிவின் அலைகள் பரவிக்கிடக்கின்றன. சங்கக் கவிதைகளில் சிறிதளவே ஒட்டிக்கொண்டிருந்த கைக்கிளையும் பெருந்திணையும் இன்று மேலாதிக்கம் செலுத்துகின்றன. மக்கள் வாழ்க்கையில் நிச்சயமற்றதன்மை நிரந்தரமாகக் குடியேறி விட்டது” என்கிறார் செந்தில்குமார். (த.நே.37,ப.78) மேற்கத்திய வாழ்க்கையின் தாக்கம் இங்கு மனிதவாழ்வை ஊடறுத்து வாழ்வின் மேன்மையை தகர்த்து விட்டது. வெறுமை, அச்சம், நோய்கள், விபத்து, மனப்பிறழ்வு, கவலை, அதிர்ச்சி, தனிமை என்று மனிதனுக்குள் நிலைபெறத் தொடங்கிவிட்டன. மனநோய் மருத்துவ நிலையங்களும் முதியோர் இல்லங்களும் தேவையாகிவிட்டன. வணிக உலகம் பெருகி நுகர்வு வெறியைத் தூண்டுகிறது. வாழ்க்கையில் விரக்தியும் வெறுமையும் இயல்பாகி விட்டன. மனிதன் தன்னைத்தானே இழந்த நிலையில் வாழ்க்கை என்ற பெரும் துயரத்திற்கு உள்ளாகி விட்டான். வாழ்க்கை ஏன் இப்படி அர்த்தமற்றதாகி விட்டது என்பதை உணர்கிறான். வரலாற்றில் தான் கடந்து வந்த பாதை சரிதானா? என்று கேட்டுக் கொள்கிறான். இயற்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்லமுடியுமா? என்று எண்ணுகிறான். திரும்பிச் செல்வதைத் தவிர தனக்கு வேறு எதுவும் சாத்தியமில்லை. இன்றைய நிலையில் இலக்கியம் இவனுக்குத் தேவைப்படுகிறது. இந்நிலையில் சங்கஇலக்கியக் கல்வி மனிதனுக்கு நிறைவைத் தரும் என்பதை, “உள்ளும் புறமும் அழிந்து கிடக்கும் மனிதன் நிறைவான வாழ்வை இயற்கையோடு இணைந்து கலந்துதான் பெறமுடியும்” (ப.81) என்று விளக்குகிறார் செந்தில்குமார். “இலக்கியங்கள் எப்பொழுதுமே மனிதர்களின் (தனிப்பட்ட (அ) சமூகமயப்பட்ட) வாழ்க்கைப் போராட்டப் பின்னணியிலிருந்தே தமக்கான தோற்றத்தையும் இருப்பையும் தக்கவைத்துக் கொள்கின்றன. சங்க இலக்கியத்தை மாபெரும் இயற்கைக்கும் மனிதர்களுக்குமான போராட்டத்தின் விளைச்சல்” (புதிய தமிழ் இலக்கிய வரலாறு, தொகுதி.2. ப.97) என்ற பஞ்சாங்கத்தின் கூற்று மனித வாழ்க்கைக்கு சங்க இலக்கியக் கல்வியும் இயற்கையும் இன்றியமையாதவை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இலக்கியம் காலத்துக்கேற்றவாறு பொருள் தரும் இயல்புடையது என்ற வகையில் சங்க இலக்கியக் கவிதைகளில் இயற்கையோடு இயைந்த மக்கள் வாழ்க்கையைப்புரிந்து கொள்ளமுடியும். இன்றைய சூழலில் சங்க இலக்கியக் கல்வி தற்கால வாழ்க்கைக்கு மட்டுமல்ல, எதிர்கால வாழ்க்கைக்கும் விடை அளிக்கும் திறவுகோலாகும் என்பது புலப்படுகின்றது. பிலிப்சுதாகர்: சங்க இலக்கியம் மக்கள் இலக்கியம்: சங்க இலக்கியத்தைக் கற்பதன் மூலம் வாசகனுக்குள் எத்தகைய மாற்றத்தைப் பெறமுடியும் என்பதை விவரிக்கிறார். சங்க இலக்கியம் அறிவுறுத்தும் கவிதைகளும் கதைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. சங்ககாலச் சமூகம் எவ்வகை ஆதிக்கத்தையும் ஏற்கவில்லை. ஆதிக்கத்தில் இருப்பவரையும் அணைத்துக் கொள்ளவில்லை. மனித விடுதலையை உள்ளார்ந்த பண்பாகக் கொண்டவை சங்க இலக்கியங்கள். சங்கச் சான்றோர் உடைமையாளர்க்கு வெண்சாமரம் வீசவில்லை. சமூகத்தின் ஆணிவேறாக விளங்கிய உழவர்களைப் போற்றியது. அன்பைப் பண்பைக் கொண்டாடியது. கீழை இலக்கியப் பண்பாட்டிற்கு ஆதரவாக இருந்தது. மேற்கத்தியர் அறிவைக் கொண்டாடி ஆதிக்கம் செய்தது போலச் சங்ககாலச் சமூகம் செய்யவில்லை. சங்க இலக்கியம் இயற்கையை, உழவை மையப்படுத்தி மக்கள் இலக்கியம் ஆயிற்று. (த.நே.37, ப.64). “தமிழ்ச் சங்க இலக்கியத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அஃது ஒன்றே உலகின் உயர் இலக்கியங்களுள் ஒரு மக்கள் இலக்கியம் உலகின் மக்கள் இலக்கியங்களுள் ஓர் உயிர் இலக்கியம்!” (தென்மொழி.ப.46) என்ற கா. அப்பாதுரையாரின் கருத்தும் இங்குச்சுட்டுவதுதகும். இன்றைய நவீன நாகரிகம் உழவை மதிக்கவில்லை. உலகமயம், சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு இடம் கொடுத்து உழவை கைவிட வேண்டிய நிலைக்கு ஆளாக்கியுள்ளது. காடுகள், மலைகள், வயல்கள்என்று நம்முன்னோர்கள் வாழ்ந்த நிலங்கள்இன்று இல்லை. தொழில் நாகரிகத்தை இன்று முதன்மைப்படுத்தி, பொருளியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது. உலகமயத்தின் கையில் சிக்குண்டு கிடக்கும் இன்றைய வாழ்வை சுதாகர், “உலகம் உங்கள் கையில் என்று கூறி உலகமயம் நம்மிடம் திணித்துள்ளது, நமது உலகம் அல்ல ஆதிக்க உலகம். அடக்குமுறை உலகம். அடியோடு நம்மை ஒழித்துக் கட்டும் போர்வெறி உலகம். ஆள்வோருக்கு நம்மை நாமே அடிமைப்படுத்திக் கொள்ள முடியாது. உலகமயத்திற்காக நாம் அறிவுக்கண்களைக் குருடாக்கிக் கொள்ள முடியாது” (மேலது) என்பதை வலியுறுத்துகிறார். சங்க காலச் சமூகநிலை: சங்க காலச் சமூகத்தில் சிறியோரை இகழ்தலும் இல்லை. பெரியோர் என்பதற்காகப் போற்றுதலும் இல்லை. புலவர்களும், பாணர், விறலியர், பொருநர் போன்றோரும், மன்னர்களுடன் இயல்பான இணக்கம் கொண்டிருந்தனர். இதனை, கா.மீனாட்சி சுந்தரம் சங்ககால பாணர் நிலை குறித்து கூறுவது ஈண்டு எண்ணத்தக்கது. “உயர் குடியோடு பாணர் குடியும் ஒரு குடியாக வைத்து பார்க்கப்பட்டது. அக்குடியினர் எத்தகைய குறையுமில்லாமல் சமுதாயத்தில் வளர்ந்து வந்திருக்கின்றனர். இசைப்புலமை இவர்களின் அறிவுத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிற்று. மன்னரும் வேளிரும் இவர்களது இசைப்புலமையைப் பேணிப்போற்றினர்.” (தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும், ப.22) பாணர்களுக்கு மன்னர்கள் கள் விருந்து அளித்தது பற்றிப் புறம் 361 ஆவது பாடல் கூறுகிறது. பின்னர் வந்த சமூகம் பாணர்களை இழிவுக்குள்ளாக்கியது. பாணர்கள், சங்கப்பாடல்களில் சமூகத்தில் போதிய ஆதரவின்றி பசியோடு போராடுபவர்களாகவே காணப்படுகின்றார்கள். பாண் உவப்பப் பசி தீர்த்தனன் (புறம்.299), பாண் பசிப்பகைஞன் (புறம்.180) ஆகிய தொடர்களும், பாணர்களை ஆதரிப்பவன் ‘பசிப்பிணி மருத்துவர்’ (புறம்.173) எனப்பாராட்டுவதும், பாணனேஉனக்குச்சுட்ட முயலையாவது தருவோம் (புறம்.319) என்னுஞ் செய்திகளும், இறந்தார் கடன் கழிக்கும் போது பாணன் சாப்பண் (சாறப்பண்) (புறம்.260,283,284,311) பாடுவது பாண் நாகரிகத்தின் வீழ்ச்சியைக் காட்டும் பாடல்களாகும் (தொ.பரமசிவன், வழித்தடங்கள், ப.12) அதியன் இறந்த போது ஒளவை, இனி பாடுநரும் இல்லை. பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை’ என்று பாடுகிறார். தமிழ்ப்பாணர்கள், அரசர்களால் போற்றி மதிக்கப்படும் உயர்ந்த நிலையிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.எனவே பாணர், பாடினி, கூத்தர், பொருநர், விறலியர் மரபின் வழியாக வந்த தமிழ்க்கலை வீழ்ச்சி பெற்றது என்பதையும் அறியமுடிகிறது. சங்க இலக்கியங்கள் மாந்தர் வாழ்வை அதன் சிறப்புகளைக் காட்சிப் படுத்துவதிலும், கவித்துவப்படுத்துவதிலும் வெற்றி பெற்றது. இன்றைய உடனடித் தேவையாகிய பல்லுயிர் காப்பதும், இயற்கையை காப்பதும், மாசுகளுக்கு எதிரான போராட்டமும், இயற்கை வேளாண்மை எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டாலொழிய சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்கிறார் சுதாகர் (ப.75). ‘சோசலிசம் அது இல்லாவிட்டால் காட்டுமிராண்டித்தனம் தான்’ என்ற ரோசாலக்சம்பர்க்கின் கூற்று சுதாகரின் கூற்றிற்குப் பொருந்தி வருகிறது. செந்தமிழ்த்தேனீ: சங்க இலக்கியங்கள் இயற்கைக் காட்சிகளை மானுட இயல்யோடு இயைபுப்படுத்திப் பாடுவதில் தனித்தன்மையுடையன. இயற்கையைப் பாடும் இலக்கியங்களில் அகநானூறு முதன்மைபெறுகிறது. இதில் பல உயிரினங்களின் இயல்புகள் பேசப்படுகின்றன. பாலைக்கலி, குறுந்தொகை போன்ற இலக்கியங்களும் விலங்குகளைப்பற்றி வெகுவாக எடுத்துரைக்கின்றன. யானை, (களிறு, பிடி) மான், குரங்கு, புலி, குதிரை போன்ற விலங்குகளின் உணர்வினை சங்கப்பாடல்கள்கள் வெகு நுட்பமாக உணர்த்துகின்றன. சங்க இலக்கியம் அன்பின் இயல்பையும் அதன் வெளிப்பாடுகளையும் வெகுநுட்பமாகவும் விரிவாகவும் பேசுவதால் அதன் பசுமை மாறாமல் இன்றும் தொடர்கிறது. சங்க இலக்கியத்தில் இயற்கைக்காட்சி, மானிட உணர்வுகளை கூர்ந்து கணித்து இயற்கைப் பொருட்களின் தன்மைகளுள் பொருத்திக் காட்டி, அறிவுறுத்துவதாகப் பாடல்கள் அமைகின்றன, இப்பாடல்கள் வாசகர் நெஞ்சில் அன்பை வெளிப்படுத்துவதோடு மனிதவாழ்வை மேம்படுத்தும் என்கிறார்.(த.நே.37, ப.92). விலங்குகள் வாழ்வில் அன்பு: பிடியின் தாகம் தீர்ப்பதற்காகக் களிறு தன் பசியினை மறந்து ‘யா’ மரத்தின் பட்டைகளை உரிக்கும் என்பது ஒரு குறுந்தொகை (37) பாட்டு. அதேபோல பாலை நிலத்தில் கடுமையான வெப்பம் - பெண்மானின் (மடப்பிணை) துயர் தீர்க்க, ஆண் மான் (கலைமான்) தன் நிழலைக் கொடுத்துக் காக்கும் என்ற பாலைக்கலி (11) பாடலை மேற்கோள் காட்டுகிறார். குரங்குகளுக்கிடையில் உள்ள பேரன்பை மாசு அற்ற தூய அன்பைக் காட்டும் குறுந்தொகை (69) பாடலானது ஆண்குரங்கு இறந்து விட்டது. அதன் துயரைப் பொறுக்காத பெண் குரங்கு மலை உச்சிக்கு சென்று கீழே இருந்த பள்ளத்தில் விழுந்து உயிர் நீத்தது என்கிறது. இத்தகைய உணர்வுமிக்க பாடல்களைப் படிக்கின்றபோது படிப்பவர் நெஞ்சில் அன்பு சுரக்கும் என்கிறார். சங்கத் தமிழர் வாழ்வியலில் இயற்கையும் விலங்குகளும் இரண்டறக் கலந்திருந்தன என்பதையும், இயற்கையோடு மக்களை இணங்கவைக்க முடியும் என்ற நம்பிக்கையும் துளிர்க்கிறது. மோகனராசு: தொன்மைக்காலத்தில் இயற்கையின் கருவாக தோன்றியது தொன்மைத்தமிழ். அந்தத் தமிழ் வாழ்வு தொல்காப்பியம் மூலம் தமிழ் இலக்கணமாகப் பதிந்தது. இடைக்காலத்தில் எத்தனையோ அனுபவங்கள். இவற்றோடு தமிழன் எழுச்சியும் தாழ்ச்சியுமாக தமிழோடு வாழ்ந்தான் என்று தொடங்கி கவிநயத்துடன் மோகனராசு தமிழ் வரலாற்றை எடுத்துரைக்கிறார். தமிழை இழக்க முடியாது: இயற்கையோடு மனிதன் நெருக்கமாக இருந்தபோது தோன்றிய மொழி தமிழ். சங்கச் சான்றோரின் உளநலத்தால் அழகுபடுத்தப்பட்டது தமிழ். நகர நாகரிகம் தோன்றிய போது இத்தகைய மொழிக்கு நெருக்கடி ஏற்பட்டது. சங்கச் சான்றோருக்குப் பிறகு சங்கத் தமிழின் சாரத்தை வள்ளுவர் தன்நூலில் தொகுத்தளித்தார். இடையில் சமயங்கள் வந்து தமிழைச் சூழ்ந்து கொண்டன என்றாலும் தமிழ் மீண்டும் சித்தர்கள் மூலம் உதித்தது என்கிறார். (த.நே.37 ப.92). உலகியல் நாகரிகங்களுக்கும், நவீன வாழ்க்கைக்கும் மனிதன் இரையாகி வருகிறான். இதன் காரணமாக இவனிடம் தமிழ் கேள்விக்குள்ளானது. தமிழ் இல்லாவிட்டாலும் இவன் வாழ்ந்துவிட முடியும் எனத் தமிழன் கருதுகிறான். பழந்தமிழின் அருமை இவனுக்குத் தெரியவில்லை. தமிழனுக்கென்று நாடும்,முகமும் இல்லை என்று கூறும் மோகனராசு, மேலும் கூறுகிறார். “தமிழரின் மொழி ஒலிக்கும் பரப்பெல்லைகளும் பண்பாட்டு எல்லைகளும் மிகவும் சுருங்கிவிட்டன. அவனது ஆலயங்களும் கடவுள்களும் அவனைப் போலவே, அவனது மொழியை விரும்புவதாயில்லை. அவனது இன்றைய தலைமுறையும், சமூகமும், கல்வியும் அவனுக்கானதாகவுமில்லை” (ப.96) என்கிறார். இத்தகைய சூழலில் தமிழனுக்கென்றொரு நாடு, அரசதிகாரம், ஆட்சி முறைமை இருந்தாலொழிய தமிழனை வரும் நூற்றாண்டு நினைவில் நிறுத்தாது. செம்மொழியானத் தமிழைக் கற்பதன் மூலமே தமிழின் வேர்களை அதன் தொன்மையைக் காப்பாற்ற முடியும். க. பூரணச்சந்திரன்: மனித ஆளுமை வளர்ச்சிக்குத் தேவை சங்கஇலக்கியம்: சங்க இலக்கியத்தை ஏன் பயிலவேண்டும் என்பதற்கு பூரணச்சந்திரன் வேறு ஒரு வகையில் விளக்கம் தருகிறார். பொதுவாக இலக்கியத்தை ஏன் பயில வேண்டும் என்பதற்கு என்ன காரணங்கள் உண்டோ அவையே சங்க இலக்கிய வாசிப்பிற்கும் பொருந்தும் என்கிறார். இலக்கியத்தை எந்த அளவுக்கு சிரத்தை எடுத்துப் படிக்கிறோமோ அந்த அளவுக்கு வாசகனின் வாழ்வில் இலக்கியம் தங்கிவிடுகின்றது. வாசகனின் ஆளுமையின் ஒரு பகுதியாகி விடுகிறது என்றும் கூறுகிறார். (த.நே.37,ப.38) சங்க இலக்கியத்தின் மொழி வளம், மொழியின் நுட்பங்கள் முதலியவை பற்றி விவரிக்க வேண்டியதில்லை. இதுபற்றிப் பூரணச்சந்திரன் குறிப்பிடுவதாவது: “மொழி வளத்தை நாம் மேம்படுத்திக் கொள்ளவும் இலக்கியம் படிக்கலாம். சம்மட்டிகள் கற்களை உடைக்கலாம். ஆனால் வார்த்தைகள் தான் தேசங்களைக் கட்டுகின்றன, அழிக்கின்றன. இலக்கியப் படிப்பு நமது மொழித்திறனை வளர்க்கிறது” (ப.39) என்கிறார். மேலும் இவர், மொழித்திறனை வளர்த்துக் கொள்ளும் போதே மூளையின் திறனும் வளர்கிறது. ‘உடலுக்கு பயிற்சிப் போல மூளைக்கும் பயிற்சி தேவை’ இத்தகைய திறனை வளர்த்துக் கொள்ளும்போதே அறிவுத்திறனும் கலைத்திறனும் மேம்படுகின்றன. இதன் மூலம் வாழ்க்கை வளமாகும் என்பதும் தெளிவாகிறது. ‘வாளைவிடக் கூர்மையானது பேனா முனை’ என்பர். ஒரு நாட்டின் சர்வாதிகாரி எழுத்தாளர்களையும் தத்துவவாதிகளையும் ஏன் சிறையிலிடுகிறான் என்பதற்கு இதுதான் காரணம் என்று குறிப்பிடும் போது சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் (குறுந்.292 பரணர் பாடல்) பெண் கொலை புரிந்த நன்னனை நினைவு கூரலாம். அவன் வழியில் வந்த எவரையும் புலவர்கள் பாடுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டனர். தன்னைக் காண வந்த புலவன் பாடாமைக்கு அரசன் வருந்துகிறான். (புறம்.151). அன்றியும் மாங்குடிமருதன் போன்ற புலவர்கள் தன்னைப் பாடுவதால் தனக்கு ஏற்படும் தகுதி குறித்து தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பெருமைப்படுகிறான் (புறம்.72). கபிலருக்கும் பரணருக்கும் சங்ககாலத்தில் ஏற்பட்ட பெருமைக்கும் இதுவே காரணமாகும். எந்த இலக்கியமும் தன்னை மட்டும் காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய தளத்தையும் தனதான உலகத்தையும் சேர்த்தே காட்டும் (தி.சு.நடராசன், மேற்படி, ப.33) இவ்வகையில் கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தொடங்கும் பாடல் அவரது பேராளுமையை வெளிப்படுத்துவதோடு வாசகரின் ஆளுமையைக் கேள்விக்குட்படுத்தும். கோப்பெருஞ்சோழன், குமணன், பாரி, ஓரி என்றெல்லாம் படிக்கிறபொழுது சங்கச் சான்றோரின் அரிய பல ஆளுமைகளை அறிகிறோம். சங்க இலக்கியத்தின் தரம், அழகு, மொழிநடை, வாழ்க்கையோடு சேர்ந்திருக்கிற போக்கு இவை வேறு எந்த இலக்கியத்திலும் இல்லை. அது தமிழ்மொழியில் மட்டுமே உள்ளது. இதனை, வாழ்வில் கிடைக்கக்கூடிய மகிழ்வுகள் அனைத்திலும் நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு மகிழ்வு இலக்கியம் தரும் மகிழ்வு இதுவே உயர்ந்த மகிழ்வாகும். ஏனெனில் உயர்தரச் செயலில் அமைந்த மகிழ்வாகும். அதாவது தேடாது கிடைத்த சிந்தனைச்செல்வம் இலக்கியத்தின் பயன் அதாவது அதன் முக்கியத்துவம் அறிவூட்டும் நிலையும் மகிழ்வூட்டும் நிலையில் அமையும் (இலக்கியக் கொள்கை, ப.2930) என்;ற ரெனிவெல்லாக் மற்றும் ஆஸ்டின் வாரன் கூற்று இலக்கியம் பயிலுவதனால் மட்டுமே வாழ்க்கை செம்மையாகும்ஃ உயர்நிலைபெறும் என்பதாக அமைகிறது. 3.சங்கஇலக்கிய ஆய்வுக்கு இன்று முன்வைக்கப்படும் புதிய அணுகுமுறைகள்:- சங்க இலக்கியங்கள் அனைத்தும் பதிப்பில் வந்த பிறகு இவை பற்றிய ஆய்வுகள் தொடர்ந்தன. பெரும்பாலான ஆய்வுகள் சங்க இலக்கியத்தின் உள்ளீடுகள் பற்றிய ஆய்வுகளாகவே அமைந்தன. ‘சங்க இலக்கியத்தில் காதல்’, ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’, ‘சங்க இலக்கியத்தில் கூற்று’, ‘சங்க இலக்கியத்தில் கபிலர்’, ‘சங்க இலக்கியத்தில் பரணர்’, ‘புறநானூற்றில் அறம்’, ‘பாணர்கள் வாழ்வு’, ‘இசை’ போன்ற மரபான ஆய்வுகள் தொடர்ந்து வந்தன. மரபுமுறையில் சங்க இலக்கிய ஆய்வை மேற்கொள்ளும் பொழுதே இன்றைய வாழ்வுக்குச் சங்க இலக்கியக் கல்வி ஏன் தேவை என்பதையும் புரிந்து கொள்ளமுடியும். இன்றைய நவீன உலகச் சூழலில் சங்க இலக்கியத்தை புதிய அணுகுமுறைகளில் கற்கும் தேவையும் ஆராயும் போக்கும் ஏற்பட்டது. ஒப்பீட்டு அடிப்படையிலும், திணைக்கோட்பாடு, கலைக் கோட்பாடு மற்றும் உளவியல் நோக்கிலும் சமூகவியல் மற்றும் பண்பாட்டு அடிப்படையிலும் ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. மருதநாயகம்: உலக செம்மொழியும் சங்க இலக்கியமும்: உலக செவ்விலக்கியங்களான கிரேக்கம், இலத்தீன், சீனம், எபிரேயம், அரேபியம், வடமொழி ஆகியவற்றோடு சங்க இலக்கியத்தை ஒப்பிட்டுப் பேசுகிறார் மருதநாயகம். இம்மொழிகளுள் தமிழின் தனித்தன்மையை எடுத்துக்காட்டி, உலகச்செம்மொழிகளில் தமிழ், கவிதையின் மொழியாக இருப்பதை விளக்குகிறார். சமசுகிருதமொழி பற்றிய ஆய்வினைக் கடந்த இருநூற்றாண்டுகளில் மேலைநாட்டு அறிஞர்களும் கீழைநாட்டு அறிஞர்களும் சிறப்பாக மேற்கொண்டனர். இந்தக் காலகட்டத்தில் தமிழ்மொழி பற்றிய ஆய்வில் உலக அறிஞர்கள் அக்கறை காட்டவில்லை ஒரளவு புறக்கணித்தே வந்திருக்கின்றனர். தற்காலத்தில் மருதநாயகம் மட்டுமே முதலில் உலகசெவ்வியல் மொழிகளோடு தமிழை ஒப்பிட்டு தமிழின் தனிச்சிறப்பை உலக அரங்கிற்கு எடுத்துச்சென்றுள்ளார். கிரேக்க மொழி: மேற்குலகில் செம்மொழியென முதன் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது கிரேக்க மொழி. ஹோமரின், இலியட், ஒடிசி ஆகிய இரண்டு காப்பியங்களுக்காகவும், அஸ்கிலஸ், யூரிபைட்ஸ், சாஃபக்ளிஸ் ஆகிய மூவரின் துன்பியல் நாடகங்களுக்காகவும் செம்மொழித் தகுதியைப் பெற்றது. கிரேக்க இலக்கியத்தில் இத்தகைய காவியங்களும் துன்பியல் நாடகமும் இருப்பது போல தமிழில் இத்தகையவை இல்லை என்பதை மறுக்காத அவர், கிரேக்க இலக்கியங்களில் தன்ணுணர்ச்சிப்பா பற்றிப் பேசுவதற்கோ, கவிதை என்பதை வரையறுத்துச் சொல்வதற்கோ வாய்ப்பில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். சங்க இலக்கியம் முழுவதும் கூற்று என்ற முறையில் அமைகிறது. கூற்று ஒருவகையில் தன்ணுணர்ச்சிப் பாடல்கள் என்பதை ஒப்புக்கொள்ள இயலும். கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ (கி.மு.428-348) கவிஞர்களை மதிக்கவில்லை. கவிதையினால் சமுதாயத்திற்கு எந்த நன்மையுமில்லை. கவிதை என்பது வாழ்க்கையின் குறையுடைய நகல். மேலுலகில் உள்ள பொருள்களே உண்மையானவை. குறையற்றவை. அவற்றின் நகலாகிய உலகியற் பொருளின் இன்னொரு நகல் கவிதை. ஆகவே ‘கவிஞர்களுக்குத் தன் இலட்சிய உலகில் இடமில்லை’ என்று கூறியதை மருதநாயகம் குறிப்பிடுகிறார். பிளேட்டோவின் கருத்தை மறுக்கும் இவர் “தொல்காப்பியத்தை ஒத்த ஓர் அறிவுசார்ந்த இலக்கியத்தை மேலை அறிஞர்கள் படைக்கவில்லை. இதுவே வரலாற்று உண்மை” (த.நே.37,ப.14.) என்கிறார். கிரேக்கச் சிந்தனையாளரான அரிஸ்டாட்டில் (கி.மு.384-கி.மு.322)கவிதையியலில் துன்பியல் நாடகவியலைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். காப்பியங்களை விட துன்பியல் நாடகங்களின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறார். இவற்றை மறுக்காத மருதநாயகம், தொல்காப்பியர் குறிப்பிடும் விரிவான தமிழ்க்கவிதை இயலையும் தமிழின் தனிச்சிறப்பான தன்ணுணர்ச்சிபாவையும் அரிஸ்டாட்டில் அறிந்திருக்கவில்லை என்றும் கூறுகிறார். இலத்தீன் மொழி: செம்மொழி என்ற தகுதிக்கு ஒரு மொழியில் பேரிலக்கியங்கள் இருக்கவேண்டும். இத்தகைய பேரிலக்கியங்கள் இலத்தீனில் இல்லை. அன்றியும் கிரேக்க மொழியின் நகலாகவே இலத்தீன் இருக்கிறது என்று அறிஞர் குறிப்பிடுகின்றனர். “கிரேக்கத்தோடு ஒப்பிடும் அளவுக்கு இலத்தீன் மொழியின் இலக்கிய வளம் உயர்ந்ததன்று என்று வரலாற்றுத் திறனாய்வாளர்களின் உண்மையான கணிப்பு” என்பதை ஜி.ஜான் சாமுவேல் பதிவு செய்துள்ளார். (உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுமலர்,ப.66). சீனமொழி: பழஞ்சீனக் கவிதையில் மாந்தர் வாழ்வை இயற்கையோடு இணைத்து கவிதைகள் பாடப்பட்டன. மேற்கத்திய கவிதைகள், இயற்கையை இயற்கைக்காகவே பாடுவதாக அமைந்துள்ளன என்று குறிப்பிடும் மருதநாயகம். தமிழ்கவிதைகள் “மாந்தர் வாழ்வையும் இயற்கையையும் இறுகப் பிணைந்த ஐந்திணைக் கவிதைகள் இவை தமிழுக்கே உரியவை” (ப.39) என்று கூறுகிறார். எனவே, சீனக் கவிதையில், தமிழ்க்கவிதையைப் போன்று விரிவான திணைக்கவிதைகள் இல்லை என்பது தெளிவாகிறது. சமற்கிருத மொழி: சமஸ்கிருத மொழியைப் பற்றிக் குறிப்பிடும் போது, மக்கள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அன்றாடப் பேச்சு மொழியாக என்றும் இருந்ததில்லை என்பதோடு சமஸ்கிருத மொழியில் முருகியல் இன்பம் தரும் கவிதைகளைப் படைக்க இயலாது என்றும் கூறுகிறார் மருதநாயகம். இதனை ச.அகத்தியலிங்கம் “பழமையான பண்பாட்டின் சின்னமாகவும் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகவும் விளங்குவது சமஸ்கிருதம் எனினும் தமிழ்மொழியைப் போல் அன்றாடப் பேச்சு மொழியாகவோ இடையறாது மக்கள் நாவிலே தவழ்ந்து அவர்கள் மத்தியில் வாழும் ஒரு வளர்மொழியாகவோ அது இருக்கவில்லை” (மேற்படி,ப.59) என்கிறார். மேலும் இம்மொழி குறித்து இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி கூறுவதை இங்குச்சுட்டுவது தகும்: “கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு முன் சமற்கிருத மொழிக்கு எழுத்து இல்லை என்றும், கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இந்தியாவில் உள்ள கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள் இன்ன பிற எழுத்துச் சான்றுகள் ஆகிய அனைத்திலும் சமற்கிருதம் இல்லை என்பதும் தான் வரலாற்று ஆய்வு முடிவு ஆகும். இந்தியாவெங்கும் தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளே அரசு மொழிகளாக, மக்கள் மொழிகளாக இருந்தன. ஆனால்சமற்கிருதம் அன்றைய காலகட்டதில் அரசு மொழியாகவோ, மக்கள் மொழியாகவோ இருக்கவில்லை. கி.பி.150இல் தான் முதன்முதலாக சமற்கிருத மொழி எழுதப்பட்ட கல்வெட்டுகள் கிடைக்கின்றன.” (பண்டைய இந்தியா,ப.350). இம்மொழிக்கு நீண்ட தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் இருந்திருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது. தமிழ் கவிதை மொழி: தமிழர்கள் பல நூற்றாண்டுகளாகக் கவிதையை படைத்ததோடல்லாமல் கவிதைக்கு வரையறைகளையும் வகுத்தனர். கவிதையில் சொற்சிக்கனத்தைக் கையாண்டனர்.மனித வாழ்வின் தன்ணுணர்ச்சிக் கவிதைகளைப் படைத்தனர். எனவே தமிழ், ‘கவிதைமொழி’ என்பதைப் பல சான்றுகளுடன் விளக்குகிறார் மருதநாயகம். மேலும் தமிழ்மொழியின் ஆழ்ந்த சொல்வளத்தையும் செழிப்பையும் எளிமையையும் உணர்ந்த மேலைநாட்டு ஆய்வு அறிஞர்கள் தம்மொழியில் சங்க இலக்கியத்தை மொழிபெயர்ப்பதன் மூலம் தமிழின் இலக்கிய வளத்தை நன்கு அறியமுடியும் என்கிறார். “திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போப் அடிகளார், தமிழ்க்கவிஞர்கள் கையாளும் சொற்சிக்கனத்தை ஆங்கில மொழியில் கையாள முடியவில்லையே” (ப.24) என்று வருந்துவதைச் சுட்டிக்காட்டுகிறார் “கிரேக்கம் தத்துவமொழியாக வளர்க்கப்பட்டது போல் இலத்தீன் சட்டமொழியாக வளர்க்கப்பட்டது போல் தமிழ் கவிதைமொழியாகவே வளர்க்கப்பட்டது” (மேலது,ப.19) என்கிறார். தமிழ், ‘கவிதைமொழி’ என்பதற்குப் புறநானூற்றிலிருந்து மேற்கோள் காட்டும் பாடல்களில் ஒன்றை இங்குக் குறிப்பிடலாம். சேரன்மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடிய பாடலின் (புறம்.53) கவித்துவம் வருமாறு, “உன்னுடைய புகழைப்பாடுதல் மயக்கம் பொருந்திய நெஞ்சுடைய எங்களுக்கு முடியாத செயலாகும் பல பெருங்கல்வியாளர்களைக் கொண்ட இவ்வுலகில் பாடாதிருத்தலும் கூடாது. வுpரைவாகப், பலபொருள்களையும் உள்ளடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும் மிக்க கேள்வியையும், விளங்கிய புகழையும் உடைய கபிலன் இன்று இருப்பானாகில் நன்று; அது பெற்றிலனேயென்று சொல்லியஉன்னுடைய வெற்றி கொண்ட சிறப்பிற்குப் பொருந்தப்பாடுவேன்” இவ்வறாகப் புறநானூற்றில் கவிதையாக்கம் குறித்தும் கவிஞர்களின் திறன் குறித்தும் பாடும் கவிஞர்களைக் காணமுடிகிறது என்கிறார். மருதநாயகம் முன்வைக்கும் தொன்மை தமிழ்க்கவிதை பற்றிய ஆய்வு தனித்ததொரு புதுமையான ஆய்வாகும். ஆங்கிலத்திலும், தமிழிலும் முதுமுனைவர் பட்டம் பெற்ற மருதநாயகம் தமிழ், ‘கவிதைமொழி’ என்று கூறுவதை ஏற்கமுடியும். சிந்துவெளி நாகரிகமும் சங்க கவிதையும்: சிந்துவெளிப் பண்பாடும் சான்றோர் கவிதையும் என்ற கட்டுரையில் மருதநாயகம் சிந்துவெளி நாகரிகத்தின் பலகூறுகள் சங்க கவிதைகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். எந்த ஓர் இனமும் தன் பழம்பெருமையை மரபை மறந்துவிட்டுப் புதிய சாதனைகளைச் செய்யமுடியாது. இம்முறையில் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை ஆய்வு செய்வதன் மூலம் தமிழினம் மீண்டும் எழுச்சிபெற இயலும். தமிழ் நாகரிகததின் தொன்மை பலரால் மறைக்கப்பட்டுள்ளது, முதலில் அதைக் கண்டறிவது தேவை, அதன் பின்னரே எழுச்சி சாத்தியம் என்று கூறும் மருதநாயகம், தொல்லியல் அறிஞர் பலரின் கருத்துக்களையும், அகழாய்வாளர்கள் தெரிவிக்கும் புறச்சான்றுகளையும் வெளிநாட்டார் குறிப்புகளையும் எடுத்துக்காட்டித் தமிழரின் தொன்மை நாகரிகச் சிறப்பைச் சுட்டிக்காட்டுகிறார். உலகநாகரிகமும் தமிழ்நாகரிகமும்: உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விவேகானந்தர் தமிழகத்தில் தமிழின் நாகரிகச் சிறப்பைக் கண்டு வியந்து கூறியதைக் குறிப்பிடுகிறார் மருதநாயகம். “சுமேரிய, அசீரிய, பாபிலோனிய, எகிப்திய நாகரிகங்களுக்கெல்லாம் அடித்தளமிட்டது தமிழர் நாகரிகமே. சுமேரிய நாகரிகத்தின் சோதிடம், தொன்மங்கள் முதலியவற்றின் வளர்ச்சிக்குத் தமிழ்நாகரிகமே ஆதாரம். தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்ட தமிழர் எகிப்து நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்” என்பதும் விவேகானந்தரின் கூற்று. (த.நே.40,ப.9). சிந்துவெளி நாகரிகம் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்ட கிராசுபாதிரியார், பழந்தமிழர் தெற்கு ஐரோப்பாவிலிருந்து வந்தவர் அல்லர். இந்தியாவிலிருந்தே தெற்கு ஐரோப்பா மற்றும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியவர் ஆவார். இந்தியாவில் நீண்ட காலமிருந்து நாகரிகம் வளர்ச்சியடைந்த பின் பழந்தமிழர் மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்தனர். மெசபடோமியா முதல் உலக நாடுகள் பலவற்றிலும் இடம்பெயர்ந்தனர். மேலும் அவர்கள் பிரிட்டிசு தீவுகள் வரையிலும் தங்கள் நாகரிகத்தைப் பரப்பினர். என்றும், சிந்துவெளி நாகரிகம் தன்னளவில் அழிந்தாலும் அதன் தொடர்ச்சியை இன்றும் தமிழகத்தின் தென்பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் காணமுடிகிறது என்பதையும் ஆய்வில் தெரிவிக்கிறார். (மேலது) மருதநாயகம் குறிப்பிடும் மிக முக்கியமான சான்று “இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வு வல்லுநரான கிரஹாம் ஹான்ராஜ் பூம்புகார்ப் பகுதியில் கடலுக்கடியில் சிறப்பான கட்டட அமைப்புக் கொண்ட நகரம் ஒன்று புதையுண்டு கிடப்பதைக் கண்டு, தாம் கண்டவற்றைக் குறும்படமாக எடுத்து இங்கிலாந்திலுள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறைப்பேராசிரியர் கிளன்மில்னே என்பாரிடம் விளக்கங்களைக் கேட்டார். இந்த நகரம் 11,500 ஆண்டுகளுக்கு முன் சிறப்புற்றிருந்த தென்றும் கடல் மட்டம் 75அடி உயர்ந்த காலத்தில் கடலுள் மூழ்கியிருக்க வேண்டுமென்றும் இது ஹரப்பா மொகஞ்சதாரோவை விடப் பெருஞ்சிறப்புடையதென்றும் அவர்கள் தெரிவித்தனர்” (ப.9). சிந்துவெளி நாகரிகத்தின் மூலம் அறியப்படும் தொன்மை, மேன்மை முதலியவற்றை மேலும் பல ஆயிரமாண்டு தள்ளிப்போட்டுக் காண்பதற்கு இச்சான்றுகள் உதவுகின்றன. உலக வரலாற்றில் தமிழ்வரலாறு மிக மிகப்பழமையானதுஎன்பதற்கு இச்சான்றுகள் உதவும். சிந்துவெளி நாகரிகம் 3500 ஆண்டுகட்கு முற்பட்டது என்றாலும் தமிழரின் பூம்புகார்நாகரிகம் அதற்கும் 8000 ஆண்டுகட்கு முற்பட்டது என்பது வியத்தகும் ஓர் உண்மை என்பதை மருதநாயகம் எடுத்துக்காட்டுகிறார். சங்கச் சான்றுகளும் சிந்துவெளி கூறுகளும்: இனி சங்கச்சான்றோர் கவிதைகளில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதைச் சுட்டுகிறார் மருதநாயகம். 1.சிந்துவெளி மக்கள் மட்பாண்டங்கள் செய்ய சக்கரங்களைப் பயன்படுத்தினர். இறந்தவர்களைப் பெரிய தாழிகளில் புதைத்தனர். இவைபோன்ற காட்சிகள் சங்க இலக்கிய பாடலான புறநானூற்றில் (312,319). கணவனை இழந்த பெண் கலம் செய்யும் குயவனை நோக்கி, வண்டிச்சக்கரத்தின் ஆரத்தைப் பொருந்தி வந்த சிறிய பல்லிபோல் கணவனோடு ஆண்டு பல கழித்த எனக்கும் அருள் செய்யும் வகையில் முதுமக்கள் தாழியைப் பெரிதாக வனைவாயாக! என்று வேண்டுகிறாள் (ப.10). சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியை சங்க காலத்திலும் காணமுடிகிறது. 2.சிந்துவெளி நகர நாகரிகமாகிய அரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் காட்டெருமையும், திமிலுடைய காளையும், திமிலுடைய எருதுகளும், தேர்களின் மாதிரி வடிவமும் சுட்ட களிமண்ணிலும் செம்பிலும் கிடைத்துள்ளன. இவற்றின் பயன்பாடுகள் குறித்த செய்தி சங்கப் பாடலாகிய புறநானூற்றுப் பாடல்களில் (69,120) தேரில் செல்லும் மன்னர்களையும், தேர்களைப் புலவர்களுக்குப் பரிசிலாக வழங்கும் வள்ளல்களையும் காணமுடிகிறது. ‘வைகல் எண்தேர் செய்யும் தச்சன்’ (புறம்.87) என்னும் பாடலில் ஒரு நாளில் எட்டுத்தேர் செய்யும் வலிமையுடைய தச்சன் சங்க காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது. தொல்காப்பிய நூற்பா, ‘தேரும் யானையும் குதிரையும் பிறவும்’ (தொல்.1158) என்று குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. செங்கோல் முறைமையில் ஆட்சி செய்யும் மன்னன் வண்டியில் ஏற்ற இறக்கங்களில் இழுத்துச் செல்லும் காளை மாட்டிற்கு ஒப்பிடப்படுகிறான் (புறம்.185) என்று மருதநாயகம் எடுத்துக்காட்டுகிறார். 3. சிந்துவெளி நாகரிகத்தில் நகரங்கள் திட்டமிட்டு அமைக்கப் பெற்றதை அகழாய்வு மூலம் அறியமுடிகிறது. தெருக்கள் நேராகவும், வளைவுகளின்றி அகலமாகவும், முக்கிய வீதிகள் முப்பது அடி அகலம் வரை காணப்படுகின்றன. சங்கப்பாடல்களில், ஓங்கி உயர்ந்த மாடங்கள் அகன்ற தெருக்களைக் கொண்ட மதுரை மாநகரின் வருணனையை “விண்ணுற ஓங்கிய பல்புடைப் புரிசைத் -. . . . . . . . . . . . . . . . . . . . - மழையாரு மலையி னிவந்த மாடமொடு” என்று மதுரைக்காஞ்சி (350,355) சிறப்பிக்கிறது. தற்பொழுது தொல்லியல் துறை மேற்கொண்டிருக்கும் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் செய்த அகழாய்வில் கிடைத்திருக்கும் சான்றுகள் மேலும் இதனை உறுதிப்படுத்துகின்றன. “கீழடியில் பத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. சங்க காலத்தில் கட்டடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது”. (வீக்கிப்பீடியா) பட்டினப்பாலையில் புகார் நகரச் சிறப்பையும் காணமுடியும். ‘பூதங்காக்கும் புகலருங் கடிநகர்த்’ (பட்,45,55) என்கிறது. 4. சிந்துவெளி மக்கள் எருதுகள் கொண்டு ஏரால் உழுது பயிர் செய்தனர் என்பதைச் சான்றுகள் நிருபிக்கின்றன. திருக்குறளில் உழவுத் தொழிலுக்கு ஏர் பயன்பட்டதை அறிகிறோம். வள்ளுவர் உழவு குறித்து ஓர் அதிகாரத்தையே ஒதுக்கி உழவை சிறப்பித்தார். சங்கப் பாடல்களிலிருந்தும் உழவின் சிறப்பை அறியமுடியும். ‘கழனி உழவர் குற்ற குவளையும்’ (அகம்.மருதம்.216) என்ற வரிகள் உழவு பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது. சிந்துவெளி நாகரிகம் கி.மு.3500ஐச் சேர்ந்தது. சங்க கால நாகரிகம் என்று கி.மு.3ஆம் நூற்றாண்டைக் குறிப்பிடுகின்றனர். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுக் கால இடைவெளி எனினும் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இந்த இரு நாகரிகங்களும் ஒத்தத்தன்மையோடு இருக்கின்றன என்பதும் புலப்படுகிறது. உலக நாகரிகம் அனைத்திற்கும் மூலமாக அமைவது தமிழ் நாகரிகம் என்பதும் மருதநாயகத்தின் கருத்து. இக்கருத்து மட்டுமல்லாமல் தன் கட்டுரையில், சிந்துவெளி நாகரிகத்தையும் அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பட்டதாகக் கருதப்படும், சங்க இலக்கியத்தையும் இணைத்துக் காண்கிறார். இந்த இரண்டாயிரமாண்டு இடைவெளி விளக்கமுடியாத ஒரு புதிர். சிந்துவெளி நாகரிகம் சிறந்திருந்த அதே காலத்தில் சங்ககால நாகரிகமும் செழித்திருக்க வேண்டுமென்ற கற்பனை செய்து பார்க்க முடியும். அப்படியானால் சங்க இலக்கிய காலம் முதலியவற்றை மேலும் ஆயிரம் ஆண்டு தள்ளிப் பார்க்க நேரிடும். இதற்கான சான்றுகள் இல்லை. சங்க இலக்கியத்தின் தொன்மை நமக்கு வியப்பைத் தருகிறது. எனினும் மருதநாயகம் இவ்வகையிலும் அதாவது சிந்து சமவெளி பண்பாட்டின் சின்னங்கள் முதலியவை சங்க இலக்கியத்திலேயே காணப்படுகின்றன என்று சொல்வதையும் ஒரு கண்டுபிடிப்புப் போல ஏற்க முடியும். க. ஜவகர்: திணைக்கோட்பாடும் படைப்பாக்கமும்: ‘திணைக்கோட்பாடு - விரிவாக்கம்’ என்ற விரிவான கட்டுரையை ஜவகர் எழுதியுள்ளார். தொல்காப்பியர் கூறிய திணைக்கோட்பாடு என்ற அடிப்படையில் விரிவாக சங்க இலக்கியத்தை ஆய்வு செய்ய இயலும். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்றும் இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைகள். முதற்பொருள்: நிலமும் பொழுதும் (வுiஅந யனெ ளுpயஉந) கருப்பொருள்: நிலத்தின் விளைபொருட்கள், தெய்வம், விலங்கு, பறவை, மரம், பூக்கள், பறை, செய்தொழில், இசைக்கருவி ஆகியனவும் பிறவுமாகும். உரிப்பொருள்: புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியனவும் இவற்றின் நிமித்தமுமாகும் என்று தொல்காப்பியர் வகுத்த திணைக்கோட்பாட்டை உரையாசிரியர்கள் மேலும் விளக்கினார்கள். இவ்வாறு தொல்காப்பியர் கூறிய இந்தத் திணைக்கோட்பாட்டு அடிப்படையில் சங்க இலக்கியம் பொருள்படுத்தப்பட்டது. இதற்குமேலும்படைப்பியக்கம் உண்டு என்பதை இலக்கண ஆசிரியர் காணவில்லை. ஆனால் கேரளாவில் ஆங்கில இலக்கிய பேராசிரியரான கே.என்.அய்யப்பப்பணிக்கர் தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டைப் பார்த்து பெரிதும் வியந்து மேலும் விரிவுப்படுத்த முடியும் என்று கருதி விரிவுப்படுத்தினார். இந்தத் திணைக்கோட்பாட்டைத் திராவிடக்கோட்பாடு என அழைத்தார். திராவிட மொழிக்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள எந்த மொழி இலக்கியத்திற்கும் பணிக்கரால் விரிவுப்படுத்தப்பட்ட திணைக்கோட்பாடு பொருந்தும். முதற்பொருள், கருப்பொருள் ஆகியவற்றைப் பணிக்கர் விரிவுப்படுத்தியதோடு, Mental Landscape என்பதையும் வடிவமைத்தார். Landscape என்பதைப் போலவே, Mental scape என்பதையும் அவர் கூறி வைத்தார். படைப்பாளியின் மனப்பதிவு என்பதைப் படைப்பாளுமை என்றும் பொருள்படுத்தலாம். அய்யப்பப் பணிக்கர் கூறியபடி நிலம் என்பது காலத்திற்கு காலம் மாறுதல் அடைகிறது. பொழுது அல்லது காலம் என்பதை வரலாற்றுக் காலம் எனப் பொருள்படுத்த முடியும். கருப்பொருள் என்பதனைச் சூழல் அதாவது இலக்கியம் படைப்பதற்கான விரிவான சமூகச்சூழல் எனப் பொருள்படுத்தலாம். உரிப்பொருள் என்பதில் தொல்காப்பியர் கூறியுள்ளதை இணைத்து காதல் எனப் பொருள்படுத்துவதோடு, அந்தந்த இலக்கியத்திற்கான உரிப்பொருளை அறம், வீரம் எனப் பொருள்படுத்தமுடியும். அற இலக்கியம் கற்கும் பொழுது அந்த இலக்கியத்திற்கான உரிப்பொருளை அறம் எனவும் பக்தி இலக்கியம் படிக்கிற பொழுது அதற்கான உரிப்பொருள் என்பதைப் பக்தி எனவும் இவை போலவே பரவலாக இலக்கியங்களைப் படிக்கின்ற போது அந்த இலக்கியத்தின் அடிக்கருத்தை வைத்துப் பொருள்படுத்தலாம். திணைக்கோட்பாட்டை மேற்கத்திய மேலாண்மைகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும் ஒரு சாதனமாகக் கொள்ள வேண்டுமென்கிறார் பணிக்கர். அய்யப்பப் பணிக்கரால் விரிவு செய்யப்பெற்ற இந்தப் படைப்பாக்க அடிப்படைக் கூறுகள், படைப்புருவாக்க மனஅமைப்புபையும் (Mental Landscape)உள்ளடக்கி முழுமை பெற்றதாக ஜவகர் எழுதியுள்ளார். முதற்பொருள், கருப்பொருள்கள் மட்டுமே படைப்பை உருவாக்குவதில்லை. படைப்பின் இயல்புதன்மை, படைப்பின் வடிவம், படைப்பாக்க உத்திகள், படைப்புருவாக்க மனஅமைப்பு, கவித்துவம் மிக்க கூறுகள் ஆகிய அனைத்தும் சேர்ந்தே கவிதையை / படைப்பை உருவாக்குகின்றன. இவ்வாறு முதல், கரு, உரிப்பொருள் பற்றிய விவரிப்போடும் உரிப்பொருளைச் சார்ந்தும் படைப்பாக்கம் குறித்தும் திணைக்கோட்பாடு பேசுகிறது. (த.நே.40, ப.87) தொல்காப்பியர் காலத்திலிருந்து நெடும்பயணம் செய்துவிட்டது சமுதாயம். தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை இலக்கிய வளர்ச்சி நிலைக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் பண்பாட்டு நிலைகளுக்கு ஏற்பவும் பொருத்திப்பார்ப்பது தேவையான ஒன்றாகும். (சிற்பி, திணைமரபும் நவீனமும், ப.100)என்று தற்கால இலக்கியத்தோடு திணைக்கோட்பாட்டை விரிவுபடுத்திபார்ப்பது காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறு தொல்காப்பியரின் பார்வையைச் சமகாலத்தில் தமிழருக்கு மட்டுமல்லாமல் பிறமொழிகளுக்குள்ளும் கொண்டு செல்ல வேண்டியதன் தேவை புலப்படுகிறது. இதனை, மேலும் உறுதிப்படுத்தும் முறையில் கீழ்க்காணும் மருதநாயகத்தின் உரை அரண்செய்கிறது. “தொல்காப்பியர் வகுத்த திணைக் கவிதை இயல் வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருக்கிற வடமொழியிலும் இக்கவிதை இயல் காணப்படவில்லை. ஆனால் அய்யப்பப் பணிக்கர் தொல்காப்பியரின் திணைக் கவிதையியலைப் பற்றிப் பேசும் பொழுது எல்லா மொழி இலக்கியங்களுக்கும், எக்கால இலக்கியங்களுக்கும், எவ்வகை இலக்கியங்களுக்கும் பொருந்தக்கூடியது இக் கவிதைஇயல்.” (புறநானூறு வாசிங்டன் youtube. com2013) (பா.நா.22.9.2015) என்கிறார் சங்க இலக்கிய ஆய்வுக்கெனப் பயன்படுத்தப்படும் தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு அய்யப்பப்பணிக்கரின் ஆய்வின் அடிப்படையில் சங்க இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் இடைக்கால இலக்கியங்களாகிய சிலப்பதிகாரம், திருவாசகம், கலிங்கத்துப்பரணி ஆகியவற்றுக்கும் நவீன கால இலக்கியமான நாவலுக்கும் பயன்படுத்த இயலும் என்பதை ஜவகர் தன் ஆய்வுநூலில் விளக்கியுள்ளார். இத்துடன் நிர்மல் செல்வமணியின் ஆய்வோடு ஒப்பிட்டுப்; பார்க்கும்போது தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு திணைநிலை சார்ந்து வரலாறு, பொருளியல், மனித வாழ்வியல் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்ள இயலும். இவ்வகையில் திணைக்கோட்பாடு உயிர்த்துடிப்புள்ள விரிந்த கோட்பாடு என்பது புலப்படுகிறது. எதற்கெடுத்தாலும் மேற்கத்திய ஆய்வுமுறையை கொண்டுவருவது வழக்கமாக இருக்கும் தமிழ்ச் சூழலில், சங்க இலக்கிய ஆய்வுக்கென உள்ள தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை சங்க இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியம் அனைத்திற்கும் பயன்படுத்த முடியும் என்பதோடு உலகின் எந்த மூலையில் இருக்கும் மொழியின் இலக்கியத்தைத் தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு கொண்டு ஆய்வு செய்ய இயலும். இம்முறையில் மேற்கத்திய ஆய்வுமுறையை இங்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக இங்குள்ள திணைக்கோட்பாட்டை மேற்கத்தியரும் தம்; தேவைக்கு ஒத்தமுறையில் பயன்படுத்திக்கொள்ள இயலும். இதுகுறித்து தமிழ்மக்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இராமமூர்த்தி மற்றும் சந்திரசேகரன்: ‘திணைநிலை ஒழுக்கமும் புலனெறி வழக்கமும்’ என்ற தலைப்பில் மற்றொரு ஆய்வை இராமமூர்த்தி மற்றும் சந்திரசேகரன் ஆகிய இருவரும் முன்வைக்கின்றனர். (த.நே.40,க.எண்.3,4) மருத நிலநாகரிகத்தில் கலை, அரசு உருவாக்கம், வர்க்க முரண்பாடுகள், சமயம் தோன்றுதல் போன்ற வளர்ச்சியை இராமமூர்த்தி சுட்டிக்காட்டுகிறார். மருதநில சமூகவளர்ச்சியின் காரணமாகப் பெண்ணுக்கு கற்புநெறி / கோட்பாடு வகுக்கப்படுதைச் சந்திரசேகரன் குறிப்பிடுகிறார். இருவரது கட்டுரைகளும் ஒத்த தன்மையோடு விளங்குவதைக் காணமுடிகிறது. திணைநிலை ஒழுக்கமும் புலனெறி வழக்கமும்: திணை என்பது முன்பு நிலம். பின்பு ஒழுக்கக் கோட்பாடு குறித்தது. புலன் - நெறி புலனெறி என்பது புலமைக் கோட்பாடு - புனைவுக்கோட்பாடு. புலனெறி வழக்கம் - உலக வழக்கும் நாடக வழக்கும் இணைந்தது. நாடக வழக்கு என்பது பல்வேறு கவிதைப் பண்புகளைத் தன்னகத்தே கொண்டது. கலையிலக்கிய கோட்பாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது. உலக வழக்கு என்பது உலக மாந்தர்களை, இவ்வுலக வாழ்க்கையை அப்படியே கூறுவது மட்டுன்று. சுவைபடும் படியாகச் சிறந்த உயர் ஆக்கங்களையும் கொண்டு விளக்குவதாகும். ‘பாடல் சான்ற புலனெறி வழக்கம்’ என்னும் தொல்காப்பிய இலக்கணம் திணைக்கோட்பாட்டைப் புலனெறி வழக்கத்தின் பாற்படுத்தி பாடல்சான்ற வழக்கம் என்கிறது. இதனை ‘புலவராற்று வழக்கம்’ என்பர் உரையாசிரியர். “கிரேக்கத்தில் ஆய்ஸ்தெடிகாஸ் (Aesthtikas) என்றும் ஆங்கிலத்தில் ஈஸ்தெடிக்ஸ் (Easthetics) என்றும் குறிக்கப்படும். புலனெறியாவது கலை இலக்கிய வளர்ச்சி விதிகள் மற்றும் கலை இலக்கியப் படைப்புத்திறன் ஆகியவற்றை இயக்கும் கலைக் கொள்கையையும் அழகியலையும் ஒருங்கிணைப்பதாகும். கலையின் அடிப்படை விதிகளின் சாரமாகவும் கலையாக்கத்திறன் விளக்கமாகவும் அமைவது” (ப.26) என்கிறார் இராமமூர்த்தி. தொல்காப்பியர் காலமும் மருதநிலச் சமூகமும்: வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து வரலாற்றுக்கு மாறிய காலத்தில் வாழ்ந்தவர் தொல்காப்பியர். தன் கால செய்யுள் மற்றும் பேச்சு மொழியை ஆராய்ந்து தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். தொல்காப்பியர் வெறும் இலக்கிய கோட்பாடு வகுத்தவர் அல்லர். தொல்காப்பியம் முதல் சமூகவியல் ஆய்வு நூல் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறுகிறபடி இந்தியச் சமூகவியல் இரண்டு முக்கியமான கூறுகளை உடையது. ஒன்று சமச்சீரற்ற பொருளாதார வளர்ச்சி, மற்றொன்று பழங்குடி எச்சம். இந்த இரண்டு அடிப்படைகளை வைத்தே வரலாறு முதலியவற்றை ஆய்வு செய்ய இயலும் (மேலது,ப.28) என்கிறார் இராமமூர்த்தி. தொல்காப்பியர் கால மருதநிலச் சமூகம் முழுமையான உழவர் சமூகமாகவும் இல்லை. இந்தச் சமூகம் பழங்குடி எச்சங்களை உள்வாங்கி, படிநிலை வளர்ச்சி அடைந்து மீயுயர்வு பெற்றது. ‘உலகம் உயர்ந்தோர் மாட்டே’ என்பதில் உலகம் என்பது வயல்நிலம் / மருத நிலம். உயர்ந்தோர், சான்றோர் என்பவர்கள் உழவர்கள். புலனெறிக் கோட்பாடென்பது இந்த அடிப்படையில் உருவானது. மருதநிலம் புதியமுறையில் நீர்ப்பாசனம் செய்து புதிய உற்பத்திக் கருவிகளைக் கொண்டு சாகுபடி செய்து மிக அதிக பயன் பெற்றுச் செல்வம் சேர்த்த நிலவுடைமைச் சமூகம் / உழவியற் சமூகம். (காமராசு, படுவழிப்படுக,ப.3)இச்சமூகம் தன்னை நிலைநிறுத்தும் நோக்கில் தன்னைச் சூழ இருந்த பிற சமூகங்களைப் போரிட்டு வெல்வது தேவையாக இருந்தது. “பாமரத் தன்மை மிக்க எயினர் சமூகங்களையும் ஏனைப் பழங்குடிச் சமூகங்களையும் தாக்கி அழிக்கக் கூடிய சூழல் யதார்த்தமாக இருந்தமையால் அவற்றை அழித்தல் என்பது உழவியற் சமூகத்தின் நிலைபேற்று அறமாக ஆகியிருந்தது” (ப.32) மருதநிலமாகிய உயர்சமூகத்தைச் சுற்றிலும் இருந்த பழங்குடிச்சமூகம் வலிமையுடையதாக இருந்தது என்பதற்கு மகட்பாற்காஞ்சி சான்று. நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்.(1025) என்கிறது தொல்காப்பியம். மருதநிலம் தன்னை விரிவுப்படுத்திக் கொண்டதோடு செல்வத்திலும் மேன்மை அடைந்தது. பிறமக்களிடம் திரை பெறலும், கொள்ளையிடலும் செல்வப் பெருக்கத்திற்குக் காரணம். உழவியற் சமூகத்தை நிலைப்படுத்துவது வாகைத்திணை. வலிமையான அரசு அமைய உழவு, வாணிபம், சடங்கு, தத்துவம், புகழ் ஆகியவை வேண்டும். அரசர் பக்கம், ஏனோர் பக்கம், பார்ப்பனர் பக்கம், அறிவன் பக்கம், தாபதபக்கம், பொருநர்பக்கம், இவை அனைத்தும் உழவர் சமூக அரசு நிலைபெறுவதற்கான ஆதாரங்கள். உழவியற் சமூகம் தன்னை நிலைநிறுத்த ஒரு பக்கம் போர். இன்னொரு பக்கத்தில் பண்பாடு ஆகியவற்றால் வலிமை பெறும் என்கிறார் சந்திரசேகரன். (ப.33) உழவியற் சமூகத்தைக் கோட்பாட்டு அடிப்படையில் நிலைநிறுத்துவது காஞ்சித்திணை. உலகில் துன்பங்கள் நிலையானவை அல்ல. மறுமைக்கு இவ்வகையில் மக்களைப் பண்படுத்தல் காஞ்சித்திணை என்பதையும் விளக்குகிறார். மருதநில நாகரிகம் வளர்ந்து மேலோங்கி வரும்போது, பிற நில நாகரிகங்களை இது பாதிக்கவே செய்துள்ளது. மருதநில நாகரிகம் தன் எல்லையை விரிவாக்க சில சமயங்களில் வஞ்சிப்போரினையும் மேற்கொண்டுள்ளது. (ஞானி, மார்க்சியமும் தமிழிலக்கயமும், ப.4) முரண்பாடுகளும் சமயம் உருவாதலும்: மருதநிலத்தில் ஒன்றுக்கொன்று முரண்பாடான பலவகைப் போக்குகள் நிலவுகின்றன. வேளாண்மை x வணிகம், நகரவாழ்க்கை x கிராமவாழ்க்கை, வேந்தர் x குடிமக்கள், தலைவி x பரத்தையர் என்ற சூழலில் இவை ஒன்றோடொன்று முரண்படுவது தவிர்க்க இயலாதது. மருதநிலத்தில் தலைவன் தன் காமம் காரணமாகப் பரத்தையரிடம் செல்கிறான். இதன் காரணமாகக் குடும்பத்தில் நிகழும் இரங்கல் குறிப்பிடத்தக்கது. குடும்பத்தில் தலைவனின் மூர்க்கம் போலவே நாட்டில் வேந்தனின் மூர்க்கமும் வெளிப்படுகிறது. முரண்பாடுகள் காரணமாக வாழ்க்கையை பற்றிக் கேள்விகள் எழும். முன்னைய சமூகத்தில் நிலவிய அமைதி இந்தச் சமூகத்தில் இல்லை. ஏற்றத்தாழ்வுகள் இங்கு இயல்பாகி வருகின்றன. வேந்தன் சார்பில் ஒருவகை அறம் உருவாகிறது. வேந்தனுக்கு அடிமைப்பட்ட மக்கள் சார்பில் இன்னொரு வகை அறம் உருவாகிறது. இரண்டு முரண்பட்ட அறங்கள், இந்தச் சூழலில்தான் சமயம் தோன்றுகிறது. குறிஞ்சி நாகரிகம் முதலியவற்றை மருதநிலம் உள்வாங்கிக் கொள்ளும் பொழுதே, குறிஞ்சி நிலக் கடவுளரும் மருதநில எல்லைக்குள் வந்து விடுகின்றனர். நாளடைவில் தொடக்கத்தில் பல கடவுளர் என்ற போக்கு. இறுதியில் ஒரு கடவுள் கோட்பாட்டிற்கு இடம்தரும். சமயம் இந்த வகையில்தான் ஒரு கடவுளைப் பற்றிப் பேசும் நிலை உருவாகும். கடவுளை விளக்கும் முறையில் சாத்திரங்களும் சடங்குகளும் தோன்றும். இவ்வகையில் மருதநில நாகரிகம் தனக்கான சமுதாய வாழ்வையும் தனக்கான சமயத்தையும் படைத்துக் கொள்கிறது. மருதநிலச்சமூகமும் மீயுயர்வும்: மருதநிலம் சமயத்தைப் படைத்துக் கொண்டதோடு, பண்பாட்டிலும் உயர்ந்து, வன்முறையையும் செயல்படுத்தியது. ‘அரசியல் நிலை, பண்பாட்டு நிலை’ என்பது இருகளங்கள் என்றார் கிராம்சி. இவையே அகம், புறம் என்பதாயிற்று. அகம் என்பது - பண்பாடு, புறம் என்பது - வன்முறை. தொல்காப்பியர் நெறியில் இவற்றை அகத்திணை, புறத்திணை எனலாம் என்கிறார் இராமமூர்த்தி. மேலும் அவர் “தனது கோட்டைக் கொத்தளங்களால், படைவலிமையால், வாணிபத்தால், வீரர்களுக்கு அளிக்கும் மாராயத்தால், அரசு அமைப்பால், நிலைத்த குடிகளால், உபரி உற்பத்தியால் குடியமர்த்தும் ஆற்றலால், உழவியற் சமூகம் மீயுயர்வு தோற்றுவித்தல் புறம். தனது வாழ்வியலால், குடும்பமெனும் அமைப்பால், கலையிலக்கியத்தால், தத்துவ நெறியால், மீயுயர்வுச் சுட்டல் அகம், இவ்விரண்டையும் இணைப்பது புலனெறி” (ப.30) என்கிறார். அகத்திணை, புறத்திணை ஆகிய இரண்டும் இணைந்ததே புலனெறிக் கோட்பாடு. இக்கோட்பாடு அடுத்து வந்த பக்தி காலத்திற்குப் பெருங்கோட்பாடாகவும் பின்னர் சன்மார்க்கக் கோட்பாடாகவும் வளர்ச்சி பெற்றது. திணைக்போட்பாட்டைப் போன்றே புலனெறிக் கோட்பாட்டைபும் இலக்கியத்தில் புகுத்திப் பார்க்க முடியும் என்ற கருத்தும் பெறப்படுகிறது. புலனெறிக்கோட்பாடும் பெண்ணியமும்: திணைக்கோட்பாட்டில் புலனெறி வழக்கம் அகப்படுத்தும் பெண்மையை சந்திரசேகரன் எடுத்துரைக்கிறார். நால்வகை நிலமும் மருத நிலத்திற்குள் வந்ததன் காரணமாக, ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமூக வளர்ச்சி காணப்படுகிறது. இத்தகைய வளர்ச்சிப் போக்கு களவு, கற்பு என்ற வரையறைக்குள் பெண்ணடிமைத்தனம் சுட்டுபவை என்கிறார் சந்திரசேகரன். தற்காலத்தில் பேசப்படும் பெண்ணியம் என்பது, ஆணுக்கு நிகராக பெண்ணும் அதிகாரத்திலும், சொத்திலும், வேலைவாய்ப்பிலும் பங்குபெறுவதிலும் ஆணைப்போல பெண்ணும் சுதந்திரமாக வாழும் கொள்கை பெண்ணியமாகும். தொல்காப்பியத்தில் பெண்ணியக் கோட்பாட்டைக் காண்பது தவறு என்பதை சந்திரசேகரன் கூறுகிறார். தொல்காப்பியர் காலத்தில் ஆணாதிக்கம் நிலவுகிறது. பெண்ணுக்கு கற்பு வற்புறுத்தப்படுகிறது. “கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்து புறந் தருதலும் சுற்றம் ஒம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”- (தொல்.1098) இவ்வாறாகத் தொல்காப்பியர் பெண்ணுக்கு நெறிகளை வகுத்துள்ளார். ஆணுக்குள்ள சலுகை பெண்ணுக்கு இல்லை. குடும்ப வாழ்க்கைக்குள் பெண் கட்டுப்பட்டவள். இதனாலேயே பெண்ணுக்கு மரியாதை கிடைக்கிறது. இதுவே தொல்காப்பியம் கூறும் பெண்மை என்று சந்திரசேகரன் குறிப்பிடுகிறார். சந்திரசேகரின் கருத்திற்கு மாறாக,வ.சுப.மாணிக்கனார், “தொல்காப்பியர் காலத்தில் ஆண் பெண் சமனியம்இத்தமிழ் மண்ணில் நீரோட்டம் போல் படிந்து பதிந்து கிடந்தது.” என்கிறார். மேலும் பெண்ணைக் கல்வியறிவில்லதவள் எனவும், பிறரிடம் கேட்டுத்தான் அறிவு பெறுபவள் எனவும், பெற்றோரும் கணவனும் கற்பித்தபடி நடக்கும் கற்புடையவள் எனவும், சில நாடுகளில் உரிமையல்லாத குடிகள்இருப்பது போலப் பெண்ணினத்தைச் சமுதாயத்தில் கடைத்தரமாக இழித்துக் கூறியது இடைக்காலம். இக்கொள்கைத் தொல்காப்பியர் காலத்தில் சிறிதும் இல்லை. பெண்மைக்கு முதன்மையளிப்பது, இல்லாட்சிக்குப் பொறுப்பாக்குவது, காப்பது, பெண்மையை வணங்குவது என்பவை தொல்காப்பியம் புலப்படுத்தும் தமிழ் நெறிகள்" (தொல்காப்பியக் கடல், ப.70). மருதநில நாகரிகம் பிற நிலங்களின் நாகரிகத்தை உள்வாங்கிக் கொண்டதன் மூலம் செழுமையடைந்தது என்பதோடு மருதநில நாகரிகத்தில் நிலவிய உள்முரண்கள் காரணமாகவே சமயம் தோன்றியது. தொல்காப்பியர் காலத்தில் அல்லது சங்க இலக்கியத்தில் முழு அளவில் சமயம் எனச் சொல்லத்தக்க ஆக்கம் எதுவுமில்லை. கடவுள், வழிபாடு என்று சிலவற்றைச் சொல்லமுடியுமே அல்லாமல் சமயம் என்ற தொகுப்பைக் காணமுடியாது. சமணம், பவுத்தம், இவை போலவே சைவம், வைணவம் ஆகியவை பிற்காலத்தில் சமயங்கள் எனச் சரியாகவே பேசப்பட்டன. வர்க்க முரண்பாடுகள், போர், பெண்ணடிமைத்தனம், பரத்தமை போன்றவையும் ஆதிக்கம் பெற்றதைதை அறியமுடிகிறது. துரைசீனிச்சாமி: தொல்காப்பியரின் உளவியல் கோட்பாடு: சங்க இலக்கியம் குறித்து நவீனமுறை ஆய்வில் துரைசீனிச்சாமியின் ‘உளவியல் நோக்கில் தொல்காப்பியம்’ என்ற கட்டுரையைக் குறிப்பிடலாம். (த.நே.40, ப.37) சென்ற நூற்றாண்டில் உலகளவில் பேசப்பட்ட உளவியல் அறிஞர் சிக்மண்ட் ப்ராய்டு. இவருடைய பிராய்டிய ஆய்வு முறையை தமிழகத்தில் பலர் ஏற்கின்றனர். அவர்களில் ஒருவர் துரைசீனிச்சாமி. உளவியல் - விளக்கம்: “மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் மனநிலையையும் நடத்தையையும் ஆராயும் அறிவியல் துறை, மனத்தின் ஆய்வு என்ற பொருளைத்தரும் உளவியல். தனிமனித மற்றும் குழுநடத்தை ஆகிய இரண்டையும் மையமாகக் கொண்டுள்ளது. உணர்ச்சி, புலனறிவு, ஆளுமை என்று பலவகைப்பட்ட தன்மைகளும் உளவியலில் ஆராயப்படுகின்றன” (பிரிட்டானிகா, தொகுதி.1, ப.412) மனித உயிர்கள் கூடி வாழும் பண்பிற்கு அடித்தளம் அமைக்க உதவுவது பாலியல் உறவு. ‘ஊடுதல் காமத்திற்கு இன்பம்’ (1330) என்றார் வள்ளுவர். இன்பம் அனைத்து உயிர்களுக்கும் பொது (தொல்.பொரு.29) என்கிறார் தொல்காப்பியர். காமம் பொதுவானது என்ற கூற்றில் உள் முரண் உள்ளதென்பதாலேயே அறிஞர், பகுத்தறிவின் துணைக்கொண்டுப் பாலுறவிற்குச் சில எல்லைகளை வகுத்துள்ளனர். தலைவன், தலைவியின் காமமும் ஒன்றே. எனவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுங்கு நெறிப்படுத்தப்பட்டது. ஆண் - பெண் பாலியல் உறவு கட்டுப்பாடற்றதாக இருந்தால் அது எல்லாச்சமூகத்தையும் பாதிக்கும். பெண்களின் பாலியல் உணர்வுகள் சமூகநிறுவனம் கற்பித்து வைத்திருக்கும் பாலியல் தளத்தைமீறிவிடவில்லை. ஆணாதிக்கச் சமூகத்தில், ஆண் பாலியல் சுதந்திரம் உள்ளவனாக இருக்கிறான். தலைவனின் காமம் மூர்க்கத்தனமான நிலையில் தலைவன் பரத்தையிடம் இன்பம் காணுகிறான். இதன்காரணமாக தலைவன் காமச்சுதந்திரம் உள்ளவனாகவும், தலைவியின் காமம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் உள்ளது. இவ்விருவரின் மனநிலை உள்ளத்து உணர்வின் / உணர்ச்சியின் வெளிப்பாட்டையும் ப்ராய்டின் கோட்பாட்டோடு பொருத்திக் காட்டுகிறார் துரைசீனிச்சாமி. “ஓர் உணர்ச்சி தலைமை வகிப்பதற்கு (instinct to master) மூர்க்கத்தின் ஆதரவு (சேர்க்கை) தேவைப்படுகிறது. மேலும் இருவகைப்பாட்டு உணர்ச்சிகளுள் பாலுணர்ச்சியும் மூர்க்கமும் முதன்மை உணர்ச்சிகளாக விளங்க இவற்றின் கலப்பிற்கு ப்ராய்டு சிறப்பிடம் தருகிறார்” (இரவிச்சந்திரன், சிக்மண்ட்ஃ.ப்ராய்டு, உளப்பகுப்பாய்வு அறிவியல், ப.234). தலைவியின் கட்டுப்பாடுடையக் காமமும் தலைவனின் சுதந்திரக் காதலும் மருதத்திணையில் வெளிப்படுகின்றன. ‘நாணமும் மடமும் பெண்மைய’ என்ற எல்லைக்குள் பரத்தையர் இடம்பெற முடியாது. எனவே தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையரிடம் சென்று வந்தாலும் அவனை அவள் ஏற்கிறாள். இவ்வகையில் தலைவி தன் காமத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுப்பாடு தலைவனுக்கு இல்லை. மேலும் “பெண்ணின் பாலியல் அமுக்கப்பட்ட தன்மை கொண்டதாகவும் வன்முறைக்கு ஆட்படும் உடலாகவும் பெரும்பாலும் இருக்கின்றது. பாலியல் ஆணின் அலட்சியப் போக்கால் பெண்மனமும் உடலும் புறந்தள்ளப்படுகின்றன.” (காவ்யா தமிழ் - அக்.டிச.2014, ப.37) என்று மரகதமணி பெண்களின் உடல் ஒடுக்கப்படுவதையும், வன்முறைக்குள்ளாவதையும் சுட்டிக்காட்டுகிறார். பெண்கள் சுதந்திரம் மருதநில காலத்திலேயே தடைசெய்யப்பட்டுள்ளது “காமத்தின் ஆதிக்கத்தில் ஆணுக்குள்ள சுதந்திரம் கட்டுப்பாடற்றதாகவும் பெண் இல்லோம்பும் பண்புடையவள் என்ற கட்டுக்குள் பூட்டி வைக்கும் நிலையை அடைவதையும் காணமுடிகிறது. உடல் துய்ப்புக்கான ஒரு களமாகப் பெண்ணைக் கருதும் மருதத்திணைப் பண்பாட்டில் பெண் உடல் காமத்தின் அடையாளமாக்கப்பட்டு அவளுக்கான சுதந்திரம் பறிக்கப்படுகின்றது” (மோ.செந்தில் குமார்,பெருவெள்ளமும் நீர்த்திவலைகளும், ப.60) இவ்வாறாக இன்பம், காமம் எல்லை வரையறைக்குள் அடங்குவதில்லை. எனினும் களவுக்காலத்தில் தலைவன் காமத்தை வெளிப்படுத்துவதால் தலைவி மறுத்து தன் காமத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள் என்றாலும் தன்வேட்கையைச் சொல்லாத தலைவியின் கண்களில் காமம் இருந்தே தீரும் என்பதைத் தொல்காப்பியம் கூறுகிறது. “காமம் சொல்லா நாட்டம் இன்மையான் ஏமுறு இரண்டும் உளவென மொழிப” - (1055) என்று விளக்குகிறது. கற்புக் காலத்தில் தலைவி உயர்ந்த நிலையைப் பெற்றுவிடுகிறாள். அதாவது, தலைவனது காமத்தைத் தீர்ப்பவளாகவும் சமூகப் பொறுப்பில் அக்கறை உள்ளவளாகவும் மாறுகிறாள். மேலும் தாய்மை என்ற உணர்வைப் பெறுவதன் மூலம் குடும்ப நிறுவனத்தைத் தாங்குகிறாள். விருந்தினரையும் விருந்துக்கு வருபவரையும் நன்முறையில் போற்றுகிறாள். ‘கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்’ என்று தொல்காப்பியர் வகுத்த, பெண்ணின் மாண்புகளைத் துரைசீனிச்சாமி சுட்டிக்காட்டுகிறார். தலைவனது காமம் சில நேரங்களில் மூர்க்கத் தன்மையோடு வெளிப்படும். தலைவிக்கு இத்தகைய காமம் ஏற்படும் என்றாலும் தலைவி தாய் என்ற நிலையில் செயலடங்கியவளாகிறாள். தலைவன் செயலூக்கம் உள்ளவனாகவும் காணப்படுகிறான். (ஆண்மையின்) செயலூக்கத்தின் உள்ளடக்கம் காமம் என்றால் வெளி நடத்தை மறம் / வீரம் மூர்க்கம் இயல்பூக்க உணர்வாக வெளிப்படுவதைப் (போர், படையெடுப்பு) புறத்திணைகள் வழியே அறிகிறோம். காமம் என்பது வாழ்வூக்க உணர்வின் வெளிப்பாடு. மூர்க்கம் சாவியக்க உணர்வின் வெளிப்பாடு என்பதை, ப்ராய்டின் இருமைவாத உள்ளுணர்ச்சிக் கோட்பாட்டின்படி “வாழ்வு - சாவு,காமம் - மூர்க்கம், ஆக்கம் - அழிப்பு ஆகிய இருநிலை வேற்றுமை (binary opposition) உள்ளுணர்ச்சிகள் நனவலிக்குள் அமைந்திருக்கின்றன” (மேற்படி,ப.228) மனித வாழ்வில் இருவகையான இயல்பூக்கங்கள் செயல்படுகின்றன. ஒன்று வாழ்தல் இயல்பூக்கம், மற்றொன்று சாதல் இயல்பூக்கம், பசி, தாகம், இனப்பெருக்கம், பாலியல்பு இவை அனைத்திலும் வாழ்தலுக்கானவையாகும். போர், பேரழிவுகள், ஆக்கிரமிப்பு, கற்பழிப்பு (காமவெறி) இவையாவும் சாதலுக்கான இயல்பூக்கமாகவும் அமைகின்றன" (மரகதமணி, மேற்படி, ப.38) வாழ்வூக்கமும் சாவூக்கமும் எதிரிடைகள் என்றாலும் இவற்றில் எது வலிமை பெறுகின்றதோ அதுவே உள இயக்கத்தின் பெரும் பகுதியை ஆளுகை செய்யும். இதனால் தற்காலத்தில் நாசங்களும் அழிவுகளும் ஏராளமாக ஏற்படுகின்றன. “வாழ்வுணர்ச்சிகள் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்;காகவும் மற்றவரோடு இயைந்து செயல்படுவதற்கு உந்துபவையாகும். சாவுணர்ச்சிகள் அழிப்புச் செயலை மேற்கொள்வதற்காக உந்துபவையாகும்” (சிக்மண்ட்ஃப்ராய்டு உளப்பகுப்பாய்வு அறிவியல், ப.231) அதாவது, வாழ்வூக்க உணர்வுக்கும் சாவூக்க உணர்வுக்கும் இடையிலான போராட்டமே வாழ்க்கை என்பதைப் ப்ராய்டு விளக்குவதை துரை சீனிச்சாமி சுட்டிக்காட்டுகிறார். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் வாழ்க்கை நிலையாமை காரணமாக, தலைவனுடைய காமமும் மூர்க்கமும் மடைமாற்றம் செய்யப்படுகின்றன. தலைவனும் தலைவியும் சமூக நனவலியை உள்வாங்கிக் கொண்டதன் காரணமாகக் குடும்ப உறவுகள் மேன்மையடைகின்றன. இதனை, தொல்காப்பியர் உலகத் தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக பொருளதிகாரத்தில் (1138) கூறுகிறார். இருவரது காமமும் அடங்கிய நிலையில் சிறந்தது பயில வேண்டும் என்கிறார். வாழ்க்கையின் தத்துவத்திற்குத் தலைவன் தலைவியின் காமம், அக இலக்கணமாக்கப்படுகிறது. வாழ்க்கை முடிந்து துறந்து அறம் செய்து வாழ்கின்ற பெருவாழ்வு போன்ற பெருந்தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.மேலும், குடும்பம் என்ற நிறுவனத்திற்கு தேவையான அளவில் கட்டுப்படுத்தப்பட்ட பெண்ணின் காமம் மற்றும் பிறசெயல்பாடுகள் உயர்ந்த ஒரு வாழ்க்கைத் தத்துவம் போன்ற கட்டமைவைத் தொல்காப்பியம் காட்டுகிறது (ப.39) என்கிறார். இவ்வாறாக ப்ராய்டின் உளவியல் ஆய்வின் மூலம் குடும்பத்திற்குள் எல்லாக் காலங்களிலும் நிலவும் வன்முறையை புரிந்து கொள்ளமுடியும். தலைவனின் மூர்க்கத்தனமாகிய வன்முறையை, தாய்மை உணர்வும் கற்பு மேம்பாடும் உடைய தலைவி பொறுத்துக் கொள்வதன் மூலம் குடும்பத்திற்குள் ‘அமைதி’ நிலவச் செய்கிறாள். அதாவது குடும்பம் சிதையாமல் காப்பாற்றுகிறாள். தாய்வழிச் சமூகமுறை மாறி ஆணாதிக்கச் சமூகமாகிய தந்தைவழிச் சமூகம் நிலவும் காலம் முழுவதும் பெண் ஆணுக்கு அடிமைப்பட்டே வாழ நேர்ந்திருக்கிறது. பஞ்சாங்கம்: ‘நிலமும் பொழுதும் மனிதவயப்படுதலும் திணைக்கோட்பாடும்’ என்ற தன் கட்டுரையில் பஞ்சாங்கம், பகுத்தறிவு வாய்ந்த மனிதனுக்கு முன்னால் இயற்கை, ஆற்றலால் விரிந்து கிடக்கிறது. இயற்கையைத் தன் ஆளுகைக்குள் மனிதன் கொண்டு வருகிறபோது இயற்கை மனிதவயப்படுகிறது. மனிதனும் இயற்கை வயப்படுகிறான். இயற்கையை விட்டு விலகி வாழ்கிற போது மனிதன் அந்நியப்பட நேர்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனிதவாழ்வு வளம் பெறும் என்கிறார். (த.நே.40,ப.99) இயற்கை மனித வயப்படுதல்: மனிதன் முதலில் தன் ஆளுகையை நிலத்தின் மீதே தொடங்குகின்றான். நிலம் எந்த வரையறைக்குள்ளும் இல்லாமல் விரிந்து பரந்து கிடக்கும்போது அதனைத் தனக்கானதாக மாற்றிக் கொள்கிறான். மலைசார்ந்த பகுதியை குறிஞ்சி என்றும், காடு சார்ந்த பகுதியை முல்லை என்றும், வயல் சார்ந்த பகுதியை மருதம் என்றும், கடல் சார்;ந்த பகுதிகளை நெய்தல் என்றும் வறட்சி நிலவும் பகுதிகளை பாலை என்றும் பெயரிட்டு நிலத்தை மனிதன் தன் புரிதலுக்குள் அடக்கிக் கொள்கிறான். இதனை, “தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்திற்கும், பெயரிட்டு, மனித மூளைக்குள் ‘தகவல் மையமாகச்’ சேகரித்து வைத்துக் கொள்ளும் போதுதான் சூழல் மனிதர்களின் ஆளுகைக்குள் ஆட்படத் தொடங்குகிறது” (மேலது,ப.100) என்கிறார் பஞ்சாங்கம். இப்படிச் செய்வதன் மூலமே நிலத்தின் மேல் மனிதன் தன் ஆளுகையைச் செயல்படுத்த முடியும். ஐந்திணைகளாகிய நிலங்களின் மீது மனிதன் தன் ஆளுகையைப் பதிக்கும் போதே மனிதனும் நிலவயப்படுகிறான். திணைகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவுகள் இத்தகையவை. நிலத்தைப் பாகுபடுத்திப் புரிந்துகொள்வது போலவே, பொழுதையும் பெரும்பொழுது, சிறுபொழுது எனப் பிரித்திருந்தான். ஒவ்வொரு திணைக்கும் முக்கியப் பொருளாகக் காலத்தை வகுத்தான்;. கருப்பொருளையும் நிலத்திற்கு ஏற்பப் பெயரிடுவதன் மூலம் மனிதன் நினைவு மண்டலத்திற்குள் ஆழமாகப் பதிந்து வைத்துக்கொள்கிறான். நிலமும் பொழுதும் மட்டுமல்லாது ஆண், பெண் உறவில் சமூகவாழ்வில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் நிலத்தோடும் அதன் பொருட்களோடும் இணைத்து ஒரு காட்சிப் படிமத்தை ஏற்படுத்திக் கொண்டான். மனித வாழ்வில் ஏற்படும் சோகம், துயரம், போன்ற காட்சிகளைப் பாலை நிலத்தோடும் கொடிய விலங்குகளோடும் ஒப்புமைப்படுத்தி உள்ளான். இன்பமான வாழ்வுக்கு வளமான மருதநிலத்தையும் அங்கு நடைபெறும் பொழுது மற்றும் கருப்பொருளையும் இணைத்துக் கொண்டான். இவ்வாறாக நிலப் பொருட்கள் அனைத்தின் மீதும் மனித உணர்ச்சிகளை ஏற்றி மனித வயப்படுத்தியுள்ளான் என்கிறார் பஞ்சாங்கம். மனிதன் இயற்கைவயப்படுதல்: ஓவ்வொரு நிலத்திற்கும் ஒரு குணம் உண்டு. அந்த நிலத்தின் குணத்திற்கு ஏற்பவே திணைக்கோட்பாட்டை வகுத்தனர். எனவே, நிலம் சார்ந்துதான் மனிதனின் குணமும் அமைகிறது. மனிதர்களையும் தெய்வங்ளையும் இந்நிலம் சார்ந்தே வகுத்துள்ளனர். குறிஞ்சி நிலத்தை சேர்ந்தவர்கள் குலத்தால் குறவன், குறத்தி என்றும் தலைமக்கள் வெற்பன், சிலம்பன் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். முல்லை நிலமக்கள் ஆயர், வேட்டுவர் என்றும் தலைமக்கள்நாடன் என்றும் மருதநில மனிதர்கள் உழவர், உழத்தியர் என்றும் தலைமக்கள் ஊரன், மகிழ்நன் என்றும் நெய்தல் நிலத்தில் நுளையர், நுளைச்சியர் என்றும் தலைமக்கள் சேர்ப்பன், துறைவன் என்றும் பெயர் பெற்றதன் மூலமும் நிலத்தைச் சார்ந்த மனிதர்களாக தம்மை அடையாளப்படுத்துவதன் காரணமாக நிலம் மனித வயப்படுகின்றது இதனை, “நிலத்தை மனிதமயப்படுத்த முயன்ற மனிதர்கள் தாங்களும் நிலவயப்படுத்தப்பட்டனர். மனிதர்களைக் கூட இவ்வாறு நிலவயப்படுத்தி நிலத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் மனிதர்கள் மாபெரும் நிலப்பரப்பைத் தனது அதிகாரத்திற்குள் தமது ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர்” (ப.102) என்கிறார் பஞ்சாங்கம். இன்றைக்கு ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகள் நிலம் சார்ந்ததே. மனிதர்கள் தங்கள் நிலம் சார்ந்து வாழ முடியாதவர்களாக வேர்களை இழந்தவர்களாக பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மனிதன் மீண்டும் இயற்கைக்குத் திரும்புவதன் மூலமே தனக்கு வளமான வாழ்வைப் பெறமுடியும் என்கிறார் பஞ்சாங்கம். மனிதன் நிலத்திலிருந்து விலகி நகரவாசியாகிறான் நாட்டை விட்டும் வெளியே செல்கிறான். நிலத்தோடு, இயற்கையோடு, சொந்த உறவோடு அவன் இல்லை. எல்லாவற்றிலிருந்தும் இவன் அந்நியப்படுகிறான். தனக்குள் சுருங்கியுள்ளான். இது இன்றைய அவலத்திற்குக் காரணம்.இதிலிருந்து விடுபட வேண்டுமானால் இவன் இயற்கைக்குத் திரும்ப வேண்டும். இவனால் திரும்ப இயலுமா? என்பதும் கேள்வி. திரும்ப வேண்டுமென்று நினைத்து திரும்ப இயலாத நிலையில் மேலும் இவன் அவலத்திற்குள்ளாகிறான். இது இன்றைய மனிதனின் நிலை. மனிதர்கள் தாம் சார்ந்த நெடுங்கால வரலாற்றினுள் இயற்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அதைப் பயன்படுத்தும் திறன் பெறுகின்றனர். அதேசமயம் இயற்கை வயப்படுத்துவதும் நேர்கிறது. இயற்கை மனிதவயப்படுவதும் நேர்கிறது.இயற்கையும் மனிதனும் இவ்வாறு ஓர் ஊடாட்டத்தில் இருக்கின்றனர். மனிதனுக்குள் இயற்கை செல்கிறது. இயற்கைக்குள் மனிதன் செல்கிறான். இந்த ஊடாட்டம் எக்காலத்திலும் இயல்பாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையானால் மனிதன் தன் வேர்களை இழக்க நேரிடும். இயற்கையைப் பாதுகாப்பதாகச் சொல்லி இயற்கையை நாசமாக்கி, தன்னையும் அழித்துக் கொள்;கிறான். தத்துவார்த்தமான இந்த உண்மையை பஞ்சாங்கம் தன் கட்டுரையில் வெளிப்படுத்துகிறார். சங்க இலக்கிய ஆய்வுகள் என்னும் இந்த ஆய்வுக் கட்டுரைக்குப் புறனடையாக இரண்டு கருத்துகளைச் சுட்டுவது பொருத்தமாகும். நேரிடையாக இவை சங்க இலக்கியம் பற்றிய ஆய்வாக இல்லை. ஆனால் சங்க இலக்கிய ஆய்வுக்கு ஒரளவு தேவையான கருத்தாகவும் இவற்றைக் கொள்ளலாம். நா. நளினிதேவி: களையப்பட வேண்டிய மாயைகள்: தமிழியல் ஆய்வுகளை அறிவியல் அடிப்படையில் செய்வதன் மூலம் தான் உண்மையான தமிழ்ப் பெருமைக்கு இடம் ஏற்படும். நெடுங்காலமாகத் தொடர்ந்து வந்த புனைவுகளின்; அடிப்படையில் ஆய்வுகள் அமைய முடியாது. இறையனார் களவியல் உரை கூறும் முச்சங்கங்கள் உண்மை இல்லை. குமரிக்கண்டத்தில் மக்கள் வாழ்ந்தனர் என்பதும் அறிவியல் ஆய்வுக்கு ஒத்த முடிவன்று. இவையெல்லாம் ‘அகற்றப்பட வேண்டிய ஆரிய மாயைகள்’ (த.நே.37,ப.52.) என்று தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்;. மேலும் அவர் “இலக்கியங்கள், இலக்கிய ஆய்வுகளின் அடிப்படையில், நாம் இதுகாறும் கொண்டிருந்த தமிழின் தொன்மை, அண்மைக்கால அகழ்வியல், நிலவியல், மனிதஇயல் முதலியவற்றின் அடிப்படையில் இன்னும் தொன்மை வாய்ந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் துணைக்கொண்டு, நாம் பழைய ஆய்வுகளை மீளாய்வு செய்தோமாயின் தமிழின் உண்மையான தொன்மை நடுவணரசுக்கு மட்டுமன்றி உலக மேடையிலும் அறியப்படும்” என்கிறார். முன்னைய ஆய்வுகள் அவ்வக்காலச் சமுதாயப் பின்னணி, அரசியற் பின்புலம் போன்றவை சார்ந்ததாக அமைந்திருக்கின்றன. இவற்றைக் களைந்து தற்கால வளர்ச்சிக்கு ஏற்றாற் போல ஆய்வியல் அணுகுமுறைகள் அறிவியல் வளர்ச்சி மற்றும் ஒப்பியல் ஆய்வு போன்ற மாற்றத்தின் மூலம் மறுஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்பதை முன்வைக்கிறார். வடமேற்கு ஐரோப்பாவிலிருந்து வந்தவர் ஆரியர். வரும் வழியில் இந்த இனம் கலப்புற்ற இனமாகவே வந்தது. சமற்கிருத மொழியில் உள்ள நூல்களை மொழிபெயர்த்தவர் மார்க்சுமுல்லர். இவர், ‘ஆரியர் ஒரு தனி இனம் என்றும் அறிவு முதலிய துறைகளில் மேம்பட்டவர்’ என்றும்; கற்பனைகளைப் புகுத்தினார். ஆரியர் பற்றிய புகழுரைகள் தென் இந்தியாவில் எதிர்வினை என்ற முறையில் திராவிட பெருமைக்குக் காரணமாயிற்று. “கார்டுவெல்லும் மார்க்சுமுல்லரும் தொடங்கி வைத்த ஆரியர், திராவிடர் வேறுபாடு தமிழகத்தில் இன்றளவும் தீர்க்க இயலாத சிக்கல்” (ப.55), என்று கூறும் ஆசிரியர் இவ்வாறு ஆரிய மாயைகளைப் போலவே தமிழ் மாயைகளைக் களைவதன் மூலமே சரியான தமிழ் வரலாறு எழுதமுடியும் என்கிறார். அரசர்களின் வரலாறு தமிழ் வரலாறாக முடியாது. உண்மையான மக்களின் வரலாறுதான் இன்று தேவை. செம்மொழி இலக்கியங்கள் என வரையறை செய்யப்பட்ட நாற்பத்தியொரு இலக்கியங்கள் மறுஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். இவைகளினுள்ளும் கால இடைவெளி அதிகம். சங்க இலக்கியத்தினுள்ளும் அசலான செவ்வியல் இலக்கியம் குறித்து ஆய்வுத்தேவை என்று கூறும் நளினிதேவி “தமிழ் இலக்கிய உலகு தொல்லியல் மற்றும் அகழாய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகளையும் உளம் கொண்டு தமிழின் தொன்மை முதலான கூறுகளை உறுதிப்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சிகளைத் தொடரவேண்டும்” (ப.57) என்பதை வலியுறுத்துகிறார். செம்மொழியின் காலம் 1500 ஆண்டுகள் என்பதும் உண்மையில்லை. தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் தமிழின் தொன்மை அறியப்படவேண்டும். இத்தகைய ஆய்வுகளால் தமிழின் தொன்மை மேலும் பல நூற்றாண்டுகள் தள்ளிப்போகும் என்பதும் உறுதிப்படுகிறது. மாயைகளைப் போலவே தமிழ் மாயைகளும் தமிழ் வளர்ச்சிக்கு உதவா என்பது இவரது உறுதியான கருத்து. இவர் கருத்தை ஏற்பதில் தடையாக இருக்க முடியாது. உலக நாகரிகத்திற்கு மூலம் தமிழ் நாகரிகம் தானா? என்ற ஆய்வும் தேவைப்படுகிறது. பொ.வேல்சாமி: வேதகாலம் - மார்க்சுமுல்லரின் தவறான மதிப்பீடு!: நளினிதேவி ஆய்வைப்போலவே வேலுசாமியின் சில ஆய்வுகளும் அறிவியல் அடிப்படையைக் கோரும் ஆய்வுகளாக அமைந்தவை. ‘தத்துவம்’ (த.நே.40.ப.17) என்ற இவரது கட்டுரையில் மார்க்சுமுல்லர் வேதகாலம் என்பது கி.மு.1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார். இதன் உண்மைத் தன்மையைக் கேள்விக்குட்படுத்துகிறார் வேலுச்சாமி. கௌதம புத்தரது காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டு. கௌதம புத்தரின் கருத்துரைகள் எனப் பிற்காலத்தில் தொகுத்த அவருடைய சீடர்களின் நூல்களில் வேதங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றைப் புத்தரே தம் கருத்துரைகளில் கூறினார் என்ற அடிப்படையில் மார்க்சுமுல்லர் வேதகாலத்தை கி.மு.1500 என்று வரையறை செய்தார். இதை ஏற்பதற்கில்லை. என்கிறார் வேலுச்சாமி. வேதங்களின் பகுதிகளாகிய சங்கிதை, பிரமாணங்கள், உபநிடதங்கள் இவை ஒவ்வொன்றின் வளர்ச்சிக்கு இடையிலும் இருநூறு ஆண்டுகள் நடந்திருக்க வேண்டும் என்று மார்க்சுமுல்லர் கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கருதுகிறார் வேல்சாமி. மார்க்சுமுல்லர் கருத்தையே பிறகு வந்த ஆய்வாளர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர் என்பது வியப்புக்குரியதாகத் தோன்றுகிறது. மார்க்சுமுல்லரின் கருத்தை மறுப்பவர்களைக் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகிறார் வேலுச்சாமி. “1893 ஆம் ஆண்டில் ஜகோபி என்ற ஜெர்மானியரும், பாலகங்காதர திலகரும் வேதகாலம் கி.மு.4500 - கி.மு.6000 என்று கூறுகின்றனர்” இக்காலப்பகுதிகளையும் ஏற்றுக்கொள்ளாத ஹெர்டஸ் என்ற அறிஞர் “வேதகாலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு என்று கூறுவதையும்” (ப.23) எடுத்துக்காட்டுகிறார். வடமொழியில் வேதங்களில் இருபதிற்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் இருப்பதைக் கால்டுவெல் கண்டுபிடித்துக் கூறினார். இதிலிருந்து வடமொழிக்கு முன்பே, தமிழ் இருந்தது எனலாம். (செவ்வியல்மொழி தமிழ், ப.111) இன்னொரு கருத்தையும் வேலுச்சாமி உறுதியாக முன்வைக்கிறார். கி.பி.1835க்கு முன்னரே வடமொழியிலுள்ள பெரும்பாலான நூல்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இத்தகைய வாய்ப்பு தமிழுக்குக் கிட்டவில்லை. இதன் காரணமாக ஆரியரது செல்வாக்கு மேலோங்கியது. ஆங்கிலேயரும் ஆரிய இனத்தவரோடு தம்மை இனங்கண்டனர். மார்க்சுமுல்லர்தன் இறுதிக்காலத்தில் ‘தென் இந்தியாவில் வழங்கிய தமிழைத் தன் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லையே’ என்று வருந்தியதாகக் கூறப்படுவதை வேலுச்சாமியின் கருத்தோடு சேர்த்துக்கொள்ளலாம். சமற்கிருதத்திற்குக் கிடைத்த வாய்ப்பு தமிழுக்குக் கிடைக்கவில்லை. எனவே, “இந்திய வரலாறு பற்றிய நூல்கள் எழுதிய அறிஞர்கள் நம்முடைய தமிழ் நூல்களில் உள்ள செய்திகளைத் தங்களுடைய ஆய்வுக்கான தரவுகளாகக் கைக்கொள்ளவே இல்லை”என்று கூறும் வேல்சாமி மேலும் “ஏ.எல்.பாசாம், கவிரா ஜெய்ஸ்வால், ஆர்.எஸ்.சர்மா போன்றவர்கள் தமிழ்ப் பகுதிகளில் ஆர்வங்காட்டினர். எனினும் அவர்களுக்குத் தமிழ்மொழியில் பயிற்சி இன்மையாலும் தமிழ் நூல்களில் பொதிந்துள்ள இத்தகைய பகுதிகள் அவர்களுக்குப் புரியும்படியான மொழிபெயர்ப்புகளில் தரப்படாமையாலும் இந்தியாவைப் பற்றிய ஆய்வுகளில் தமிழ்மொழித் தனக்கான இடத்தைப் பெறமுடியவில்லை” (ப.25) என்பதை எடுத்துக்காட்டுகிறார். மார்க்சுமுல்லர் வேத காலம் பற்றிச் சொன்ன கருத்து ஒருவகையில் ஆரிய மாயை இதை வேலுச்சாமி சுட்டிக்காட்டுகிறார். மார்க்சு முல்லரே தமிழ் பண்பட்ட மொழி என்று கூறுவதையும் நினைவுகூரலாம். தொகுப்புரை: - உலகமயமாதல் காரணமாக ஐந்திணை நிலங்கள் பாழ்பட்டன. மனித வாழ்வு அன்பையும் அறத்தையும் இழக்க நேரிட்டது. மனித வாழ்வு தன்னை மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்ள சங்க இலக்கியக் கல்வி இன்றியமையாத ஒன்றாகும். - சங்க இலக்கியம் மக்கள் வாழ்வின் உயிர்நாடியான உழவை முன்னிறுத்தியதால் மக்கள் இலக்கியம் ஆயிற்று. சங்கச்சான்றோர் வறுமை நிலையிலும் செம்மையாக வாழ்ந்தனர். - சங்கஇலக்கியத்தில் யானை, மான், குரங்கு, போன்ற விலங்குகளின் வாழ்விலும் அன்பு தழைத்திருப்பதைச் சுட்டிக்காட்டும் பொழுதே இவ்வகைஇலக்கியங்களைக்கற்பதால் மக்கள் வாழ்விலும் அன்பு தழைக்கும். - இயற்கையோடு தமிழன் நெருக்கமாக இருந்த காலத்தில் தோன்றியது தமிழ். சங்கச் சான்றோரின் உளநலத்தால் அழகுபடுத்தப்பட்டது சங்க இலக்கியம். இவ்வகை இலக்கியம் மீண்டும் தமிழனை உயிர்ப்பிக்கும். மனித வாழ்வின்அவலத்திலிருந்து விடுவிக்கும் என்ற கருத்துப்பெறப்பட்டது. - சங்க இலக்கியக் கல்வியின் தேவை வேறொரு வகையில் விளக்கப்பட்டது. பொதுவாகஇலக்கியம் கற்பதனால் மனித ஆளுமை மேம்படும். வாழ்க்கை வளமாகும் என்ற பொதுஉண்மை, சங்க இலக்கியக் கல்விக்கும் பொருந்தும். - சங்க இலக்கிய ஆய்வுக்கு இக்காலத்தில் புதிய அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. மரபு முறையிலிருந்து பெரும்பாலும் மாறுபட்ட நோக்கில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. - கிரேக்கம், இலத்தீன், சீனம், சமஸ்கிருதம் ஆகிய செவ்வியல் மொழிகளிலிருந்து தமிழ் எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் பிற செவ்வியல் மொழிகளைப் போலன்றி, தமிழ்மக்கள் வாழ்வோடும் இயற்கையோடும் இணைந்த மொழியாக, தமிழ், கவிதை மொழியாக விளங்குகிறது. - சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் சில கூறுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பட்ட சங்க இலக்கியத்தினுள்ளும் காணப்படுகின்றன. - தொல்காப்பியர் கூறும் திணைக்கோட்பாடு பற்றிய ஆய்வை மரபுமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையில் முன்வைக்கப்பட்டது. அய்யப்பப் பணிக்கர், தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை சங்க இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உலகில் எவ்வகை இலக்கியத்திற்கும் பயன்படுத்த இயலும் என்ற முறையில் திணைக்கோட்பாட்டின் மூன்று முக்கிய உறுப்புகளாகிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை விரித்துரைக்கமுடியும். ஆநவெயட டுயனௌஉயிந என்று அய்யப்பப் பணிக்கர் குறிப்பாகச் சுட்டியதைப் படைப்பாக்க நெறி எனக் கொள்ளலாம். - மருதத்திணை, குறிஞ்சி, முல்லை, நெய்தல், ஆகிய திணைகளைத் தனக்குள் உள்வாங்கிக் கொள்வதன் மூலம் திணை மயக்கமாவதோடு வளர்ச்சி பெறுகிறது. பிறதிணைகளின் எச்சங்களை உள்வாங்கியதோடு நாளடைவில் முரண்பாடுகளின் அடிப்படையில் சமயம் தோற்றம் பெறுகிறது. தொல்காப்பியத்தில்; இடம்பெறும் பெண்மை என்பது ஆணாதிக்கத்திற்கு உட்பட்ட பெண்ணின் இயல்பை சுட்டும் நவீன ஆய்வியல் நோக்கில் பெண்ணியம் பேசப்படுவதிலிருந்து வேறுபட்டது என்பதையும் காணமுடிகிறது. - காமம் என்பதில் ஏற்படும் முரண், தலைவனுக்கு காமச் சுதந்திரமும், தலைவிக்கு கட்டுப்பாடும் இருப்பதையும் காணமுடிகிறது. தலைவனிடம் வெளிப்படுவது மூர்க்கத்தனம் தலைவியைப் பொருத்தவரை தாய்மை என்ற உயர்ந்த பண்பு காணப்படுகிறது. வாழ்வூக்கம், சாவூக்கம் என்ற ப்ராய்டின் கோட்பாட்டை முன் வைத்து, காமம் வாழ்வூக்கம், மூர்க்கத்தனம் சாவூக்கம் என்றும் விளக்கப்படுகிறது. இத்தகைய ஆய்வுத்தமிழுக்குப் புதியது. - ஐந்திணைகள் என இயற்கையை பிரித்தவன் மனிதன். நிலத்தைப் பிரித்து பெயரிடுவதன் மூலமே மனிதனின் ஆளுகைக்குள் நிலம் வசப்படும். அதேசமயம் நிலம் மனிதவயப்படும். மனிதனும் நிலவயப்படுவான். இதன் மூலம் ப்ரபஞ்சத்தில் அறிவார்ந்தவனாக வளர்ந்திருக்கிறான். - தமிழியல் ஆய்வுகள் அறிவியல் அடிப்படையில் நடைபெற வேண்டும்குமரிக்கண்டம், முச்சங்கள் முதலியவை தமிழ் மாயைகள் என்பதும், செம்மொழி ஆய்வுகள் இம்மாயைகளிலிருந்து விடுபடுவதன் மூலமே சிறப்படையும். வேதத்தின் காலம் கி.மு.1500க்கு முற்பட்டது. அத்துடன் வடமொழி நூல்கள் கி.பி.1835க்கு முன்னரே ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றதையும், இது போன்ற வாய்ப்பு தமிழுக்குக் கிட்டவில்லை. இவ்வகை ஆய்வுகளும் நவீன காலத்தில் நடைபெறும் புதுவகையான ஆய்வுகள். - நிகழ் காலத் தேவைகளை ஒட்டிப் புதிய பார்வைகளை முன்வைத்துச் செய்யப்படும் சங்க இலக்கிய ஆய்வுகள் தமிழ் வாழ்வை மேம்படுத்தும். சங்க இலக்கிய ஆய்வுகள் காலந்தோறும் தமிழியல் ஆய்வுகள் வெவ்வேறு அடிப்படைகளில் பல்வேறு கூறுகளை முன்னிறுத்தி ஆய்வு செய்யப்பட்டன. முதல் ஆய்வைச் செய்தவர்கள் உரையாசிரியர்கள். அவர்களைத் தொடர்ந்து புதிய இலக்கணம் வகுத்தவர்களும் இலக்கியப் படைப்பை உருவாக்கியவர்களும் தமிழியல் ஆய்வை முன்னெடுத்துச் சென்றவர்கள் என்றும் கூறமுடியும். இடைக்காலத்தில் சங்க இலக்கியம் மக்கள் கவனத்திலிருந்தும் அறிஞர் தம் பார்வையிலிருந்தும் மங்கி மறைந்தபோதிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் சங்க இலக்கியம் முதலிய இலக்கியங்கள் தமிழ்மக்களின் பார்வைக்கு வந்து, தமிழ்மக்களின் உள்ளத்தைப் பெருமளவு ஈர்த்தன. தமிழறிஞர் பலர் சங்கத்தமிழ் நூல்களின் சிறப்பையும் இதன் ஆழத்தையும் கண்டு வியந்தனர். அவற்றைத் தேடிப் பதிப்பித்தனர். இத்தகைய பணிகள் மேலும் விரிவடைந்தன. தமிழ் இயக்கங்களும், தமிழை அடிப்படையாகக் கொண்டு எழுந்த அரசியல் இயக்கங்களும், இலக்கிய ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்றன. இவ்வாறு தோன்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து தற்காலத்தில் பல்வேறு அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்ட இலக்கிய, இலக்கண ஆய்வுகளும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு மேலும் வளம் சேர்த்தன. தற்காலத்தில் தமிழுக்குச் செம்மொழித்தகுதி கிடைத்த நிலையில் ‘சங்க இலக்கிய ஆய்வுகளைச்’ செழுமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு தமிழறிஞர்களின் புதிய பரிமாணங்கள் அடங்கிய நுட்பமான கட்டுரைகளைச் செம்மொழி ஆய்வுச் சிறப்பிதழாகத் தமிழ்நேயம் வெளியிட்டது. - இதழ்-37 (ஏப்ரல்2009), இதழ்-40 (சனவரி.2010) ஆகிய இரு இதழ்களில் முப்பது கட்டுரையாளர்கள் எழுதிய முப்பத்து இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றன. இக்கட்டுரைகள் கீழ்க்கண்ட பொருண்மைகளில் இங்கு ஆராயப்படுகின்றன. 1.தமிழின் தொன்மையும் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்ததன் பின்னணியும்,முதல் பகுதியில் ஆராயப்படுகின்றது. 2.தமிழுக்கு நெருக்கடிகள் நேர்ந்துள்ள இன்றைய உலகச் சூழலில் ‘சங்கஇலக்கியக் கல்வியின் தேவை’ என்ற பொருண்மை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 3.சங்க இலக்கிய ஆய்வுகள் புதிய சில பொருண்மைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இவை பற்றி இங்கு ஆய்வு செய்யப்படுகின்றது. 1.தமிழின் தொன்மையும் தமிழுக்குச் செம்மொழித்தகுதி கிடைத்ததன் பின்னணியும்: செம்மொழி - செவ்வியல் விளக்கம்: செம்மொழி என்பது மிகத் தொன்மையும், நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியும், உயர்ந்த கலைப் படைப்புகளையும் கொண்ட மொழியாகும். இதனைப் “பழமையானதும் இலக்கிய இலக்கண வளம் உள்ளதும் தொடர்ச்சியான மரபை உடையதுமான மொழி.” (ப.626) என்கிறது க்ரியா தமிழ் அகராதி. Classical என்ற சொல் செவ்வியல் தன்மை என்று பொருள்படும். இச்சொல் ‘Classicus’ என்ற இலத்தீன் சொல்லிலிருந்து உருவானது. “எந்த ஒருமொழி சீரும் சிறப்பும் கொண்ட செவ்வியல் இலக்கியங்களைப் பெற்றெடுத்து நிற்கின்றதோ அந்த மொழி செவ்வியல் மொழியாகும்”. (ச.அகத்தியலிங்கம், சங்கஇலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே, ப.30) செம்மொழி என்று பொதுவாகச் சொல்லப்பட்ட போதிலும் செவ்வியல் மொழி என்பதே பொருத்தமான பெயர் என அறிஞர் வா.செ.குழந்தைசாமி குறிப்பிடுகின்றார் (த.நே.37, ப.4). செம்மொழிக்கு நீண்டமரபும் இலக்கிய வளமும் முதன்மை என்பது மட்டுமன்றிப் பிற எந்த மொழியின் சார்பின்றி இயங்கக் கூடியதாகவும், தன்னிலிருந்து வேறு சில மொழிகள் தோன்றுவதற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய மொழியாகவும் இருத்தல் வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழின் தொன்மைக்குச் சான்றாக அதன் இலக்கிய, இலக்கண வளம் தொடர்ச்சியாகப் பெருகி வந்தது முதற்காரணமாகும். இலக்கணங்களை எடுத்துக்கொண்டால் தொல்காப்பியத்தையடுத்து வீரசோழியம், நேமிநாதம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம் முதலிய இலக்கணங்கள் தமிழில் அதுதோன்றிய காலத்தின் இலக்கணக்கூறுகளை உள்வாங்கியதாக அமைகின்றன. அதேபோல சங்க இலக்கியத்தைத் தொடர்ந்து அற இலக்கியம், காப்பியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் என்ற முறையில் காலந்தோறும் பற்பல புதிய கூறுகளை உள்வாங்கியதாய், இலக்கியம் வளம் பெறுகிறது. இத்தகைய வளமான தமிழ்மொழியைத் தமிழ்மக்கள் செந்தமிழ், முத்தமிழ், வண்டமிழ், நற்றமிழ், தென்தமிழ் போன்ற வகையில் சிறப்பித்தனர். இத்தகைய சிறப்புகளில் முதன்மையானது செம்மொழித்தமிழ். செம்மொழிக்கான தகுதிகள்: செம்மொழிக்கான தகுதிகள் குறித்துச் சில வரையறைகள் முன்வைக்கப்படுகின்றன. அவை “தொன்மை (Antiquity), ஒத்திசைவு (Harmony), தெளிவு (Clarity), தன்னடக்கம் (Restraint), கண்ணியம் (Serenity),இலட்சியம் (Idealism), பொதுமை (Universality), பகுத்தறிவு (Reason), ஒழுங்கு (Order), கண்ணோட்டம் (Humanism)” போன்ற கூறுபாடுகளின் தொகுப்பாகக் கருதப்படுகிறது (த.நே.37,ப.102) என்பதை வா.செ.குழந்தைசாமி சுட்டிக்காட்டுகிறார். ஐராவதம் மகாதேவன், செம்மொழித் தகுதிகள் குறித்து விளக்கும்போது, இரண்டு பண்புகள் மட்டுமே கட்டாயமாக இருக்கவேண்டும் என்கிறார். 1.இலக்கியவளம் 2.மொழியின் தொன்மை (உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுமலர், ப.47) என்று குறிப்பிடும் அவர் இரண்டு தகுதிகளையும் சான்றுடன் விளக்குகிறார். 1. “இந்தியாவில் வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் பேசிவரும் முண்டா மொழிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. ஆயினும் இந்த மொழிகளுக்கு இலக்கியவளம் கிடையாது ஆகையால் முண்டா மொழிகள் செம்மொழி என்ற தகுதியைப் பெறவில்லை” என்கிறார். 2. “ஆங்கிலமொழி நிரம்ப இலக்கிய வளம் பெற்ற மொழியாகத் திகழ்கின்றது. ஆயினும் இம்மொழியின் தொன்மை ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேல் இல்லை. ஆகவேதான் ஆங்கிலேயரும் தம் மொழியைச் செம்மொழி எனக் கூறிக்கொள்வதில்லை” (மேற்படி) என்று விளக்குகிறார். இந்தியச் செம்மொழிக்கான தகுதிகள் என்று சில பண்புகள் மைய அரசால் முன்வைக்கப்படுகின்றன. 1. “ஒரு மொழியானது 1500 முதல் 2000 ஆண்டுகள் வரையிலான வரலாறும் மற்றும் பழமையான இலக்கியங்கள் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். அல்லது அம்மொழியின் தொடக்கக் கால இலக்கியங்கள் உயர்தரத்தில் இருத்தல் வேண்டும். 2. அந்த மொழியின் இலக்கிய மரபு தொடக்கத்திலிருந்தே அம்மொழிக்கு உரிமையானதாக இருக்க வேண்டும். 3. மற்ற மொழிகளின் இலக்கிய மரபிலிருந்து பெறப்பட்டதாக இருக்கக்கூடாது“. இந்த அடிப்படையிலேயே ஒருமொழிக்கு செம்மொழித்தகுதியை இந்திய அரசுவழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. (http://tawikipedia.org/S/imi.) சிறந்த இலக்கிய வளம், செம்மாந்த இலக்கண அரண், மரபுகள், மாண்பு, பாரம்பரியம், சாகாவரம் பெற்று நிற்கும் சாசுவதப் பண்பு, இளமைத்திறம் போன்ற இன்னோரன்ன பண்புகளைக் கொண்டு கால வெள்ளத்தாலும் பிறமொழித் தாக்கங்களாலும் அழியாத, அழிக்கமுடியாத துடிதுடிப்பு இவற்றையெல்லாம் தன்னகத்தே கொண்டு வாழ்வது தமிழ்மொழி. (ச.அகத்தியலிங்கம், மேற்படி,ப.299) மேற்கண்ட செவ்வியல் பண்புகள் அனைத்தையும் தன்னகத்தே பெற்றுள்ள ஒரே மொழி தமிழ் என்பதற்கு இக் கூற்று சான்றாக அமைகின்றது இவ்வாறாகப் பல்வேறு தகுதிப்பாடுகளை ஒருசேரப் பெற்ற மொழியாக தமிழ்மொழி விளங்குகிறது என்பதைத் தமிழியல் ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்கள் மட்டுமன்றித் தமிழ் அறிந்த பலரும் ஒப்புக்கொள்வர் என்பதும் தெளிவாகிறது. தமிழ் செம்மொழி - அறிஞர்களின் கருத்து: ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட அளவில் தமிழின் சிறப்பை அறிந்த மேலைமொழியியல் அறிஞர்களும், தமிழறிஞர் மற்றும் தமிழ் ஆர்வலர் பலரும் தமிழ் செம்மொழி, செவ்வியல் தன்மையுடையது என்பது குறித்து குரல் எழுப்பி வந்தனர். இவ்வகையில் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் அதன் இலக்கியச் செழுமை குறித்து ஆராய்ந்து முதன் முதலில் குரல் கொடுத்தவரான மேலைநாட்டு கல்வியியல் அறிஞரான பிரான்சிசு வைட் எல்லிசு என்பார் 1816இல் ‘தமிழ் தொன்மையான மொழி’ என்பதை உணர்த்தினார். (தொன்மைச் செம்மொழித் தமிழ், ப.1) 1851இல் இந்திய மொழிகளின் தொகுதி, திராவிட மற்றும் முண்டாமொழி நூல் தொகுப்பாளர்களான மேலை மொழியியல் அறிஞர்கள், சர்ஜார்ஜ் ஆபிரகாம் மற்றும் ஸ்டென்கோனோவ் இருவரும் திராவிட மொழிகளில் தமிழ்மொழி செம்மொழி என்பதும், சொல்வளம் மிகுந்ததும், இம்;மொழி பண்டைக்காலம் முதல் பயின்று வருவதும், வகையும் தொகையுமாய்ப் பல்வகை இலக்கியங்கள் செந்தமிழ் நடையில் ஆனவை என்றும் குறிப்பிடுகின்றனர். (தமிழ்நாடன் கட்டுரைகள், ப.112) 1856இல் கிறித்துவ பாதிரியாரான கால்டுவெல் ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற தன் நூலில், “திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிக மிகத் தொன்மை வாய்ந்ததும் பெருவளம் பொருந்தியதும் மிகவும் சீர்திருத்தமானதுமான உயர்தனிச் செம்மொழி” (மேற்படி) என்கின்றார். 1887இல் பரிதிமாற்கலைஞர், திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூயமொழி புகல் செம்மொழியாம். இம்மொழி நூலிலக்கணம் தமிழ்மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம்… அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழியேயாம் (தமிழ் மொழியின் வரலாறு, பக்.95,96) என்று குறிப்பிடுகிறார். இவர்களை அன்றியும்பாவாணர் தன் தமிழ்மொழி பற்றிய மிக விரிவான ஆய்வில் ‘தமிழ் மொழி செம்மொழியே’ என்பதை நிறுவியுள்ளார். மேலும் உலக அறிஞர்கள் ஏற்றுப் போற்றும் வகையில் சான்றுகளுடன் ‘The primary classical language of the world’ என்ற நூலில் விளக்கியுள்ளார். (உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுமலர், ப.26). பழந்தமிழ் இலக்கியம் செவ்விலக்கியம் என்பதையும் உலக அறிஞர் பலரும் தமிழறிஞர்களும் அறுதியிட்டு கூறியுள்ளனர்.இந்திய அளவில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைக்க தமிழ்ப் பல்கலைக்கழகங்களும் தமிழறிஞர்களும் கடந்த ஒருநூற்றாண்டளவில் கோரிக்கைகளையும் தீர்மானங்களையும் தொடர்ந்து முன்வைத்தனர். பழந்தமிழிலக்கியத்தின் செவ்வியல் தன்மை குறித்து தமிழறிஞர் மட்டுமன்றி, தமிழை விரும்பி கற்ற உலக அறிஞர்களும் ஒப்புக்கொண்ட போதிலும் தமிழுக்குச் செம்மொழித் தகுதி என்;பது காலந்தாழ்த்தியே கிடைத்திருக்கிறது. சமற்கிருதம், பிராகிருதம், பாலி போன்ற தொன்மை மொழிகளில் தேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கிய மைய அரசு, தமிழ் என வரும்போது இவ்விருதுகள் மறுக்கப்பட்டன. இதனை, “திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் இந்தியாவின் மிகத்தொன்மையான முதல்மொழி. தமிழ் செம்மொழி, இலக்கிய சிறப்புகளை உடையது என்ற உரிமை நிலைநாட்ட இதுபோல் உரை எழுத வேண்டும் என்பது விந்தையாகத் தோன்றுகிறது. செம்மொழித் தகுதியை ஏற்க மறுப்பது இந்திய நாகரிகத்தின் பெருமைக்குக் கருவான மையப்பகுதியைக் காண மறுப்பதாகும்” (த.நே.11,ப.34) என்பதை, உலக செவ்வியல் இலக்கியங்களில் ஆழ்ந்த தேர்ச்சியும் இந்திய மொழியின் சிறப்பை அறிந்தவருமான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ், சமற்கிருத துறைகளின் பேராசிரியருமான ஜார்ஜ் எல்.ஹார்ட் கூறியுள்ளார். இவரது கூற்றிற்கு வலுசேர்க்கும் முறையில் மறைமலை இலக்குவனார் கூற்று அமைகிறது, “மலைகளில் மாணப்பெரியது இமயமலை என்பது போன்றும் இந்து சமயம் இந்தியாவின் மிகப்பெரும் சமயம் என்பது போன்றும் ஷதமிழ்செம்மொழி’ என்பது வெளிப்படையாக உண்மை” (இலக்குவம், ப.62) என்கிறார். அன்றியும் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் 26360 வரிகளும் உலகின் மிகப்பெரிய செவ்வியல் மொழிகளுள் தமிழும் ஒன்று என்பதை நிலைநாட்டுவதற்குப் போதுமான சான்றாகும் எனச் செக்நாட்டுத் தமிழறிஞரான கமில் சுவலபில் கருத்துரைக்கின்றார். மேலும் செனேகல் நாட்டின் தாக்கர் (Taker university) பல்கலைக்கழகம். தமிழ், அரபி, பார்சி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைச் செவ்வியல் மொழிகளாகவே ஏற்றுக்கொண்டு கற்றுத் தருகின்றன. (தமிழ்மறை திருக்குறள், பக்.924,925) கடந்த பல ஆண்டுகளாக உலகெங்கிலும் தமிழாய்வு வளர்ச்சி பெற்றதன் விளைவாகத் தமிழ் பற்றி ஆய்வு செய்யும் சர்வதேச அறிஞர்கள் பலரும் தமிழைச் செவ்வியல் மொழியாகவே ஏற்றுப் போற்றியுள்ளனர். செம்மொழிஇலக்கியமும் நடுவண் அரசு ஏற்பும்: 2004 அக்டோபர் 12ஆம் நாள் தமிழுக்குச் செம்மொழித் தகுதியை மைய அரசு வழங்கியது. தொன்மை என வரும்போது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையுடையதாக இருக்கவேண்டும் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் தமிழைப் பொருத்தவரை இந்திய அரசு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் காலத்தால் முற்பட்டது என மதிப்பிட்டது. (த.நே.37,ப.7) இக்கால எல்லைக்குள் அடங்கும் இலக்கிய / இலக்கணங்களை நாற்பத்தொன்று எனச் செம்மொழி ஆய்வு நிறுவனம் வரையறை செய்தது. மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்ற வகைப்படுத்தப்பட்ட சங்க இலக்கியத் தொகை முப்பத்து ஆறு. இவற்றோடு தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் உரை ஆகியவற்றையும் சேர்த்து நாற்பத்தொரு இலக்கிய / இலக்கணங்களாகும். இவை தமிழின் தனித்துவச்செல்வங்கள். செம்மொழித் தமிழ் என்பது தமிழுக்கு மேலும் ஒரு தனித்துவம் என்ற போதிலும் தமிழ் செம்மொழியின் சிறப்பு, அதைப்போற்றிப் புகழ்வதில் இல்லை. அந்த மொழி இன்றைய தமிழ்மொழிக்கும் தமிழரின் சிந்தனைக்கும் பயன்படும் விதத்திலும் தரத்திலும் இருக்க வேண்டும். (இ.அண்ணாமலை, மணற்கேணி, ஜனவரி 2012, ப.34). 2.சங்க இலக்கியக் கல்வியின் இன்றைய தேவை: இன்று ஏன் சங்க இலக்கியக் கல்வி பயிலவேண்டும் என்று ஆராயும்போது சங்க இலக்கியம் மனித உணர்வுகளோடு தொடர்புடைய மக்களின் அறிவு வளர்ச்சியையும் அழகுணர்வையும் வெளிப்படுத்தும் வரலாற்று ஆவணம். சங்க இலக்கியம் மனித வாழ்வின் மேன்மையைச் சொல்கிறது. அன்பும் அறமும் இயைந்த வாழ்க்கைதான் உன்னதமான வாழ்க்கை என்பதை எடுத்துக்காட்டுகிறது. தற்காலத்தில்தான் சங்க இலக்கியத்தை இலக்கியமாகப் பயிலும் நிலை நேர்ந்துள்ளது. இடைக்காலத்தில் சங்க இலக்கியம் தொடர்ச்சியாகப் பயிலப்பட்டதாகத் தெரியவில்லை. சமய உணர்வு மேலோங்கிய காலத்தில் சங்க இலக்கியத்தைப் பயில்வதற்கான தேவை இருக்கவில்லை. தற்கால சூழலில் சாதி, மதம் ஆகியவற்றின் மனநிலையிலிருந்து விடுபட்டு இலக்கியத்தை இலக்கியமாகப் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சங்க இலக்கியத்தில் சாதி, மத ஆதிக்கத்திற்கு இடமில்லை. இதன் காரணமாகத்தான் இன்று சங்க இலக்கியத்தைப் பெரு விருப்புடன் கற்கிறோம். சங்க இலக்கியம் கவித்துவ ஆற்றலிலும், சிந்தனைச் செறிவிலும் கற்பனைப் பொலிவிலும் உயர்ந்து, தமிழுக்கு அழியாப் பெருமையை அளிக்கக்கூடிய நிலைமையில் போதிய அளவு இருக்கிறது. அதில் சுவை பொருந்திய சிறந்த கவிதை பொதிந்து, தமிழ் இலக்கியத்தின் ஆணிவேர்கள் போல் படர்ந்திருக்கின்றது. பத்துப்பாட்டு மூவாயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட அடிகளை உடையது. எட்டுத் தொகையிலுள்ள சுமார் இரண்டாயிரத்து நானூறு பாடல்கள் கிட்டத்தட்ட நானூற்று எழுபத்தைந்து புலவரால் எழுதப்பெற்று ஏறக்குறைய முப்பதினாயிரத்திற்கு மேலுள்ள வரிகளை உடையன. (சுப்பிரமணிய அய்யர்.ஏ.வி, தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, ப.19). இன்று ஏன் சங்க இலக்கியக் கல்வி தேவை என்பதற்கு இதுவும் ஒரு காரணம். இன்றைய உலகமயமாதல் சூழலில் மனித வாழ்க்கை, நகர நாகரிகம் எல்லாமே வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வறட்சி தென்படுவதைக் காணமுடிகிறது. நுகர்வுக் கலாச்சாரம் மனிதனை அடிமைப்படுத்துகிறது. எல்லாமே விலைப்பொருட்களாகி, பணம் மட்டுமேமக்கள் வாழ்வின் குறிக்கோளாகி விட்டது. இயற்கையை அழித்து செயற்கைக்குள் இன்பம் காண்கிறோம். இந்நிலையில் இயற்கையை இழந்தால் மனித வாழ்க்கை கேள்விக்குறியாகும். இன்று நீராதாரங்கள் உலக முதலாளிகளின் கொள்ளைப் பொருளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இயற்கையை வாழ்வித்தால் மட்டுமே மனித வாழ்வுக்குள் பசுமைக்கு இடம் உண்டு. இயற்கைச் சூழலை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளைச் சங்க இலக்கியக் கல்வியால் மட்டுமே தரமுடியும் என்ற புரிதலோடு செந்தில்குமார், பிலிப்சுதாகர், செந்தமிழ்த்தேனீ, மோகனராசு, பூரணச்சந்திரன் ஆகியோர் கட்டுரைகள் ஆராயப்படுகின்றன. செந்தில்குமார்: சங்க இலக்கியக் கல்வியினால் மனிதவாழ்வுக்குள் ஏற்படும் செழுமையை அறிந்து கொள்ள முடியும் என்பதற்கான விளக்கங்களை முன்வைக்கிறார். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என மாறிவரும் தற்காலச் சூழலில் இலக்கியங்களில் காணப்பட்ட ஐந்திணை நிலங்கள் இன்று எந்தந்த வகையில் சிதைவுகளுக்கு உட்பட்டிருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். ஐந்திணை நிலங்களும் இன்றைய நிலைமையும்: இன்று குறிஞ்சியும் முல்லையும் மருதமும் தன் நிலையிழந்தும், பிறழ்ந்தும் காட்சியளிக்கின்றன. குறிஞ்சி தன் மடியில் வைத்து காத்த முல்லை நிலம் வறட்சி மிகுந்து வாழ்வுக்கான தகுதியை இழந்திருக்கிறது. குறிஞ்சியில் தொடங்கி முல்லை வழியாகச் சென்ற காட்டாறுகள் இன்று வறண்டு போயின. மருதநிலத்தில் பாரம்பரியமான வேளாண்மை கைவிடப்படுகிறது. எங்கும் பணப்பயிர்களே காணப்படுகின்றன. நகரவாழ்க்கையை மையப்படுத்தி இயந்திர தொழில் நாகரிகம் விரைவில் மனிதவாழ்க்கையை தன் ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்த நிலையில் அறம் கைவிடப்படுகிறது. பணம் இன்று முதன்மையாகிவிட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களின் மாசுகளை நெய்தல் நிலம் தனக்குள் தாங்கித் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறது. கடலும் (நெய்தல்) தன் வளங்குன்றியே காணப்படுகிறது. “எல்லா நிலத்திலும் திணை மயக்கம் வேர்கொண்டுவிட்டது. ‘பிரிவு’ என்ற சொல் உரத்து ஒலிக்கின்றது. களவு, கற்பு ஆகிய இருநிலைகளிலும் பிரிவின் அலைகள் பரவிக்கிடக்கின்றன. சங்கக் கவிதைகளில் சிறிதளவே ஒட்டிக்கொண்டிருந்த கைக்கிளையும் பெருந்திணையும் இன்று மேலாதிக்கம் செலுத்துகின்றன. மக்கள் வாழ்க்கையில் நிச்சயமற்றதன்மை நிரந்தரமாகக் குடியேறி விட்டது” என்கிறார் செந்தில்குமார். (த.நே.37,ப.78) மேற்கத்திய வாழ்க்கையின் தாக்கம் இங்கு மனிதவாழ்வை ஊடறுத்து வாழ்வின் மேன்மையை தகர்த்து விட்டது. வெறுமை, அச்சம், நோய்கள், விபத்து, மனப்பிறழ்வு, கவலை, அதிர்ச்சி, தனிமை என்று மனிதனுக்குள் நிலைபெறத் தொடங்கிவிட்டன. மனநோய் மருத்துவ நிலையங்களும் முதியோர் இல்லங்களும் தேவையாகிவிட்டன. வணிக உலகம் பெருகி நுகர்வு வெறியைத் தூண்டுகிறது. வாழ்க்கையில் விரக்தியும் வெறுமையும் இயல்பாகி விட்டன. மனிதன் தன்னைத்தானே இழந்த நிலையில் வாழ்க்கை என்ற பெரும் துயரத்திற்கு உள்ளாகி விட்டான். வாழ்க்கை ஏன் இப்படி அர்த்தமற்றதாகி விட்டது என்பதை உணர்கிறான். வரலாற்றில் தான் கடந்து வந்த பாதை சரிதானா? என்று கேட்டுக் கொள்கிறான். இயற்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்லமுடியுமா? என்று எண்ணுகிறான். திரும்பிச் செல்வதைத் தவிர தனக்கு வேறு எதுவும் சாத்தியமில்லை. இன்றைய நிலையில் இலக்கியம் இவனுக்குத் தேவைப்படுகிறது. இந்நிலையில் சங்கஇலக்கியக் கல்வி மனிதனுக்கு நிறைவைத் தரும் என்பதை, “உள்ளும் புறமும் அழிந்து கிடக்கும் மனிதன் நிறைவான வாழ்வை இயற்கையோடு இணைந்து கலந்துதான் பெறமுடியும்” (ப.81) என்று விளக்குகிறார் செந்தில்குமார். “இலக்கியங்கள் எப்பொழுதுமே மனிதர்களின் (தனிப்பட்ட (அ) சமூகமயப்பட்ட) வாழ்க்கைப் போராட்டப் பின்னணியிலிருந்தே தமக்கான தோற்றத்தையும் இருப்பையும் தக்கவைத்துக் கொள்கின்றன. சங்க இலக்கியத்தை மாபெரும் இயற்கைக்கும் மனிதர்களுக்குமான போராட்டத்தின் விளைச்சல்” (புதிய தமிழ் இலக்கிய வரலாறு, தொகுதி.2. ப.97) என்ற பஞ்சாங்கத்தின் கூற்று மனித வாழ்க்கைக்கு சங்க இலக்கியக் கல்வியும் இயற்கையும் இன்றியமையாதவை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இலக்கியம் காலத்துக்கேற்றவாறு பொருள் தரும் இயல்புடையது என்ற வகையில் சங்க இலக்கியக் கவிதைகளில் இயற்கையோடு இயைந்த மக்கள் வாழ்க்கையைப்புரிந்து கொள்ளமுடியும். இன்றைய சூழலில் சங்க இலக்கியக் கல்வி தற்கால வாழ்க்கைக்கு மட்டுமல்ல, எதிர்கால வாழ்க்கைக்கும் விடை அளிக்கும் திறவுகோலாகும் என்பது புலப்படுகின்றது. பிலிப்சுதாகர்: சங்க இலக்கியம் மக்கள் இலக்கியம்: சங்க இலக்கியத்தைக் கற்பதன் மூலம் வாசகனுக்குள் எத்தகைய மாற்றத்தைப் பெறமுடியும் என்பதை விவரிக்கிறார். சங்க இலக்கியம் அறிவுறுத்தும் கவிதைகளும் கதைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. சங்ககாலச் சமூகம் எவ்வகை ஆதிக்கத்தையும் ஏற்கவில்லை. ஆதிக்கத்தில் இருப்பவரையும் அணைத்துக் கொள்ளவில்லை. மனித விடுதலையை உள்ளார்ந்த பண்பாகக் கொண்டவை சங்க இலக்கியங்கள். சங்கச் சான்றோர் உடைமையாளர்க்கு வெண்சாமரம் வீசவில்லை. சமூகத்தின் ஆணிவேறாக விளங்கிய உழவர்களைப் போற்றியது. அன்பைப் பண்பைக் கொண்டாடியது. கீழை இலக்கியப் பண்பாட்டிற்கு ஆதரவாக இருந்தது. மேற்கத்தியர் அறிவைக் கொண்டாடி ஆதிக்கம் செய்தது போலச் சங்ககாலச் சமூகம் செய்யவில்லை. சங்க இலக்கியம் இயற்கையை, உழவை மையப்படுத்தி மக்கள் இலக்கியம் ஆயிற்று. (த.நே.37, ப.64). “தமிழ்ச் சங்க இலக்கியத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அஃது ஒன்றே உலகின் உயர் இலக்கியங்களுள் ஒரு மக்கள் இலக்கியம் உலகின் மக்கள் இலக்கியங்களுள் ஓர் உயிர் இலக்கியம்!” (தென்மொழி.ப.46) என்ற கா. அப்பாதுரையாரின் கருத்தும் இங்குச்சுட்டுவதுதகும். இன்றைய நவீன நாகரிகம் உழவை மதிக்கவில்லை. உலகமயம், சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு இடம் கொடுத்து உழவை கைவிட வேண்டிய நிலைக்கு ஆளாக்கியுள்ளது. காடுகள், மலைகள், வயல்கள்என்று நம்முன்னோர்கள் வாழ்ந்த நிலங்கள்இன்று இல்லை. தொழில் நாகரிகத்தை இன்று முதன்மைப்படுத்தி, பொருளியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது. உலகமயத்தின் கையில் சிக்குண்டு கிடக்கும் இன்றைய வாழ்வை சுதாகர், “உலகம் உங்கள் கையில் என்று கூறி உலகமயம் நம்மிடம் திணித்துள்ளது, நமது உலகம் அல்ல ஆதிக்க உலகம். அடக்குமுறை உலகம். அடியோடு நம்மை ஒழித்துக் கட்டும் போர்வெறி உலகம். ஆள்வோருக்கு நம்மை நாமே அடிமைப்படுத்திக் கொள்ள முடியாது. உலகமயத்திற்காக நாம் அறிவுக்கண்களைக் குருடாக்கிக் கொள்ள முடியாது” (மேலது) என்பதை வலியுறுத்துகிறார். சங்க காலச் சமூகநிலை: சங்க காலச் சமூகத்தில் சிறியோரை இகழ்தலும் இல்லை. பெரியோர் என்பதற்காகப் போற்றுதலும் இல்லை. புலவர்களும், பாணர், விறலியர், பொருநர் போன்றோரும், மன்னர்களுடன் இயல்பான இணக்கம் கொண்டிருந்தனர். இதனை, கா.மீனாட்சி சுந்தரம் சங்ககால பாணர் நிலை குறித்து கூறுவது ஈண்டு எண்ணத்தக்கது. “உயர் குடியோடு பாணர் குடியும் ஒரு குடியாக வைத்து பார்க்கப்பட்டது. அக்குடியினர் எத்தகைய குறையுமில்லாமல் சமுதாயத்தில் வளர்ந்து வந்திருக்கின்றனர். இசைப்புலமை இவர்களின் அறிவுத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிற்று. மன்னரும் வேளிரும் இவர்களது இசைப்புலமையைப் பேணிப்போற்றினர்.” (தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும், ப.22) பாணர்களுக்கு மன்னர்கள் கள் விருந்து அளித்தது பற்றிப் புறம் 361 ஆவது பாடல் கூறுகிறது. பின்னர் வந்த சமூகம் பாணர்களை இழிவுக்குள்ளாக்கியது. பாணர்கள், சங்கப்பாடல்களில் சமூகத்தில் போதிய ஆதரவின்றி பசியோடு போராடுபவர்களாகவே காணப்படுகின்றார்கள். பாண் உவப்பப் பசி தீர்த்தனன் (புறம்.299), பாண் பசிப்பகைஞன் (புறம்.180) ஆகிய தொடர்களும், பாணர்களை ஆதரிப்பவன் ‘பசிப்பிணி மருத்துவர்’ (புறம்.173) எனப்பாராட்டுவதும், பாணனேஉனக்குச்சுட்ட முயலையாவது தருவோம் (புறம்.319) என்னுஞ் செய்திகளும், இறந்தார் கடன் கழிக்கும் போது பாணன் சாப்பண் (சாறப்பண்) (புறம்.260,283,284,311) பாடுவது பாண் நாகரிகத்தின் வீழ்ச்சியைக் காட்டும் பாடல்களாகும் (தொ.பரமசிவன், வழித்தடங்கள், ப.12) அதியன் இறந்த போது ஒளவை, இனி பாடுநரும் இல்லை. பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை’ என்று பாடுகிறார். தமிழ்ப்பாணர்கள், அரசர்களால் போற்றி மதிக்கப்படும் உயர்ந்த நிலையிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.எனவே பாணர், பாடினி, கூத்தர், பொருநர், விறலியர் மரபின் வழியாக வந்த தமிழ்க்கலை வீழ்ச்சி பெற்றது என்பதையும் அறியமுடிகிறது. சங்க இலக்கியங்கள் மாந்தர் வாழ்வை அதன் சிறப்புகளைக் காட்சிப் படுத்துவதிலும், கவித்துவப்படுத்துவதிலும் வெற்றி பெற்றது. இன்றைய உடனடித் தேவையாகிய பல்லுயிர் காப்பதும், இயற்கையை காப்பதும், மாசுகளுக்கு எதிரான போராட்டமும், இயற்கை வேளாண்மை எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டாலொழிய சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்கிறார் சுதாகர் (ப.75). ‘சோசலிசம் அது இல்லாவிட்டால் காட்டுமிராண்டித்தனம் தான்’ என்ற ரோசாலக்சம்பர்க்கின் கூற்று சுதாகரின் கூற்றிற்குப் பொருந்தி வருகிறது. செந்தமிழ்த்தேனீ: சங்க இலக்கியங்கள் இயற்கைக் காட்சிகளை மானுட இயல்யோடு இயைபுப்படுத்திப் பாடுவதில் தனித்தன்மையுடையன. இயற்கையைப் பாடும் இலக்கியங்களில் அகநானூறு முதன்மைபெறுகிறது. இதில் பல உயிரினங்களின் இயல்புகள் பேசப்படுகின்றன. பாலைக்கலி, குறுந்தொகை போன்ற இலக்கியங்களும் விலங்குகளைப்பற்றி வெகுவாக எடுத்துரைக்கின்றன. யானை, (களிறு, பிடி) மான், குரங்கு, புலி, குதிரை போன்ற விலங்குகளின் உணர்வினை சங்கப்பாடல்கள்கள் வெகு நுட்பமாக உணர்த்துகின்றன. சங்க இலக்கியம் அன்பின் இயல்பையும் அதன் வெளிப்பாடுகளையும் வெகுநுட்பமாகவும் விரிவாகவும் பேசுவதால் அதன் பசுமை மாறாமல் இன்றும் தொடர்கிறது. சங்க இலக்கியத்தில் இயற்கைக்காட்சி, மானிட உணர்வுகளை கூர்ந்து கணித்து இயற்கைப் பொருட்களின் தன்மைகளுள் பொருத்திக் காட்டி, அறிவுறுத்துவதாகப் பாடல்கள் அமைகின்றன, இப்பாடல்கள் வாசகர் நெஞ்சில் அன்பை வெளிப்படுத்துவதோடு மனிதவாழ்வை மேம்படுத்தும் என்கிறார்.(த.நே.37, ப.92). விலங்குகள் வாழ்வில் அன்பு: பிடியின் தாகம் தீர்ப்பதற்காகக் களிறு தன் பசியினை மறந்து ‘யா’ மரத்தின் பட்டைகளை உரிக்கும் என்பது ஒரு குறுந்தொகை (37) பாட்டு. அதேபோல பாலை நிலத்தில் கடுமையான வெப்பம் - பெண்மானின் (மடப்பிணை) துயர் தீர்க்க, ஆண் மான் (கலைமான்) தன் நிழலைக் கொடுத்துக் காக்கும் என்ற பாலைக்கலி (11) பாடலை மேற்கோள் காட்டுகிறார். குரங்குகளுக்கிடையில் உள்ள பேரன்பை மாசு அற்ற தூய அன்பைக் காட்டும் குறுந்தொகை (69) பாடலானது ஆண்குரங்கு இறந்து விட்டது. அதன் துயரைப் பொறுக்காத பெண் குரங்கு மலை உச்சிக்கு சென்று கீழே இருந்த பள்ளத்தில் விழுந்து உயிர் நீத்தது என்கிறது. இத்தகைய உணர்வுமிக்க பாடல்களைப் படிக்கின்றபோது படிப்பவர் நெஞ்சில் அன்பு சுரக்கும் என்கிறார். சங்கத் தமிழர் வாழ்வியலில் இயற்கையும் விலங்குகளும் இரண்டறக் கலந்திருந்தன என்பதையும், இயற்கையோடு மக்களை இணங்கவைக்க முடியும் என்ற நம்பிக்கையும் துளிர்க்கிறது. மோகனராசு: தொன்மைக்காலத்தில் இயற்கையின் கருவாக தோன்றியது தொன்மைத்தமிழ். அந்தத் தமிழ் வாழ்வு தொல்காப்பியம் மூலம் தமிழ் இலக்கணமாகப் பதிந்தது. இடைக்காலத்தில் எத்தனையோ அனுபவங்கள். இவற்றோடு தமிழன் எழுச்சியும் தாழ்ச்சியுமாக தமிழோடு வாழ்ந்தான் என்று தொடங்கி கவிநயத்துடன் மோகனராசு தமிழ் வரலாற்றை எடுத்துரைக்கிறார். தமிழை இழக்க முடியாது: இயற்கையோடு மனிதன் நெருக்கமாக இருந்தபோது தோன்றிய மொழி தமிழ். சங்கச் சான்றோரின் உளநலத்தால் அழகுபடுத்தப்பட்டது தமிழ். நகர நாகரிகம் தோன்றிய போது இத்தகைய மொழிக்கு நெருக்கடி ஏற்பட்டது. சங்கச் சான்றோருக்குப் பிறகு சங்கத் தமிழின் சாரத்தை வள்ளுவர் தன்நூலில் தொகுத்தளித்தார். இடையில் சமயங்கள் வந்து தமிழைச் சூழ்ந்து கொண்டன என்றாலும் தமிழ் மீண்டும் சித்தர்கள் மூலம் உதித்தது என்கிறார். (த.நே.37 ப.92). உலகியல் நாகரிகங்களுக்கும், நவீன வாழ்க்கைக்கும் மனிதன் இரையாகி வருகிறான். இதன் காரணமாக இவனிடம் தமிழ் கேள்விக்குள்ளானது. தமிழ் இல்லாவிட்டாலும் இவன் வாழ்ந்துவிட முடியும் எனத் தமிழன் கருதுகிறான். பழந்தமிழின் அருமை இவனுக்குத் தெரியவில்லை. தமிழனுக்கென்று நாடும்,முகமும் இல்லை என்று கூறும் மோகனராசு, மேலும் கூறுகிறார். “தமிழரின் மொழி ஒலிக்கும் பரப்பெல்லைகளும் பண்பாட்டு எல்லைகளும் மிகவும் சுருங்கிவிட்டன. அவனது ஆலயங்களும் கடவுள்களும் அவனைப் போலவே, அவனது மொழியை விரும்புவதாயில்லை. அவனது இன்றைய தலைமுறையும், சமூகமும், கல்வியும் அவனுக்கானதாகவுமில்லை” (ப.96) என்கிறார். இத்தகைய சூழலில் தமிழனுக்கென்றொரு நாடு, அரசதிகாரம், ஆட்சி முறைமை இருந்தாலொழிய தமிழனை வரும் நூற்றாண்டு நினைவில் நிறுத்தாது. செம்மொழியானத் தமிழைக் கற்பதன் மூலமே தமிழின் வேர்களை அதன் தொன்மையைக் காப்பாற்ற முடியும். க. பூரணச்சந்திரன்: மனித ஆளுமை வளர்ச்சிக்குத் தேவை சங்கஇலக்கியம்: சங்க இலக்கியத்தை ஏன் பயிலவேண்டும் என்பதற்கு பூரணச்சந்திரன் வேறு ஒரு வகையில் விளக்கம் தருகிறார். பொதுவாக இலக்கியத்தை ஏன் பயில வேண்டும் என்பதற்கு என்ன காரணங்கள் உண்டோ அவையே சங்க இலக்கிய வாசிப்பிற்கும் பொருந்தும் என்கிறார். இலக்கியத்தை எந்த அளவுக்கு சிரத்தை எடுத்துப் படிக்கிறோமோ அந்த அளவுக்கு வாசகனின் வாழ்வில் இலக்கியம் தங்கிவிடுகின்றது. வாசகனின் ஆளுமையின் ஒரு பகுதியாகி விடுகிறது என்றும் கூறுகிறார். (த.நே.37,ப.38) சங்க இலக்கியத்தின் மொழி வளம், மொழியின் நுட்பங்கள் முதலியவை பற்றி விவரிக்க வேண்டியதில்லை. இதுபற்றிப் பூரணச்சந்திரன் குறிப்பிடுவதாவது: “மொழி வளத்தை நாம் மேம்படுத்திக் கொள்ளவும் இலக்கியம் படிக்கலாம். சம்மட்டிகள் கற்களை உடைக்கலாம். ஆனால் வார்த்தைகள் தான் தேசங்களைக் கட்டுகின்றன, அழிக்கின்றன. இலக்கியப் படிப்பு நமது மொழித்திறனை வளர்க்கிறது” (ப.39) என்கிறார். மேலும் இவர், மொழித்திறனை வளர்த்துக் கொள்ளும் போதே மூளையின் திறனும் வளர்கிறது. ‘உடலுக்கு பயிற்சிப் போல மூளைக்கும் பயிற்சி தேவை’ இத்தகைய திறனை வளர்த்துக் கொள்ளும்போதே அறிவுத்திறனும் கலைத்திறனும் மேம்படுகின்றன. இதன் மூலம் வாழ்க்கை வளமாகும் என்பதும் தெளிவாகிறது. ‘வாளைவிடக் கூர்மையானது பேனா முனை’ என்பர். ஒரு நாட்டின் சர்வாதிகாரி எழுத்தாளர்களையும் தத்துவவாதிகளையும் ஏன் சிறையிலிடுகிறான் என்பதற்கு இதுதான் காரணம் என்று குறிப்பிடும் போது சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் (குறுந்.292 பரணர் பாடல்) பெண் கொலை புரிந்த நன்னனை நினைவு கூரலாம். அவன் வழியில் வந்த எவரையும் புலவர்கள் பாடுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டனர். தன்னைக் காண வந்த புலவன் பாடாமைக்கு அரசன் வருந்துகிறான். (புறம்.151). அன்றியும் மாங்குடிமருதன் போன்ற புலவர்கள் தன்னைப் பாடுவதால் தனக்கு ஏற்படும் தகுதி குறித்து தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பெருமைப்படுகிறான் (புறம்.72). கபிலருக்கும் பரணருக்கும் சங்ககாலத்தில் ஏற்பட்ட பெருமைக்கும் இதுவே காரணமாகும். எந்த இலக்கியமும் தன்னை மட்டும் காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய தளத்தையும் தனதான உலகத்தையும் சேர்த்தே காட்டும் (தி.சு.நடராசன், மேற்படி, ப.33) இவ்வகையில் கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தொடங்கும் பாடல் அவரது பேராளுமையை வெளிப்படுத்துவதோடு வாசகரின் ஆளுமையைக் கேள்விக்குட்படுத்தும். கோப்பெருஞ்சோழன், குமணன், பாரி, ஓரி என்றெல்லாம் படிக்கிறபொழுது சங்கச் சான்றோரின் அரிய பல ஆளுமைகளை அறிகிறோம். சங்க இலக்கியத்தின் தரம், அழகு, மொழிநடை, வாழ்க்கையோடு சேர்ந்திருக்கிற போக்கு இவை வேறு எந்த இலக்கியத்திலும் இல்லை. அது தமிழ்மொழியில் மட்டுமே உள்ளது. இதனை, வாழ்வில் கிடைக்கக்கூடிய மகிழ்வுகள் அனைத்திலும் நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு மகிழ்வு இலக்கியம் தரும் மகிழ்வு இதுவே உயர்ந்த மகிழ்வாகும். ஏனெனில் உயர்தரச் செயலில் அமைந்த மகிழ்வாகும். அதாவது தேடாது கிடைத்த சிந்தனைச்செல்வம் இலக்கியத்தின் பயன் அதாவது அதன் முக்கியத்துவம் அறிவூட்டும் நிலையும் மகிழ்வூட்டும் நிலையில் அமையும் (இலக்கியக் கொள்கை, ப.2930) என்;ற ரெனிவெல்லாக் மற்றும் ஆஸ்டின் வாரன் கூற்று இலக்கியம் பயிலுவதனால் மட்டுமே வாழ்க்கை செம்மையாகும்ஃ உயர்நிலைபெறும் என்பதாக அமைகிறது. 3.சங்கஇலக்கிய ஆய்வுக்கு இன்று முன்வைக்கப்படும் புதிய அணுகுமுறைகள்:- சங்க இலக்கியங்கள் அனைத்தும் பதிப்பில் வந்த பிறகு இவை பற்றிய ஆய்வுகள் தொடர்ந்தன. பெரும்பாலான ஆய்வுகள் சங்க இலக்கியத்தின் உள்ளீடுகள் பற்றிய ஆய்வுகளாகவே அமைந்தன. ‘சங்க இலக்கியத்தில் காதல்’, ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’, ‘சங்க இலக்கியத்தில் கூற்று’, ‘சங்க இலக்கியத்தில் கபிலர்’, ‘சங்க இலக்கியத்தில் பரணர்’, ‘புறநானூற்றில் அறம்’, ‘பாணர்கள் வாழ்வு’, ‘இசை’ போன்ற மரபான ஆய்வுகள் தொடர்ந்து வந்தன. மரபுமுறையில் சங்க இலக்கிய ஆய்வை மேற்கொள்ளும் பொழுதே இன்றைய வாழ்வுக்குச் சங்க இலக்கியக் கல்வி ஏன் தேவை என்பதையும் புரிந்து கொள்ளமுடியும். இன்றைய நவீன உலகச் சூழலில் சங்க இலக்கியத்தை புதிய அணுகுமுறைகளில் கற்கும் தேவையும் ஆராயும் போக்கும் ஏற்பட்டது. ஒப்பீட்டு அடிப்படையிலும், திணைக்கோட்பாடு, கலைக் கோட்பாடு மற்றும் உளவியல் நோக்கிலும் சமூகவியல் மற்றும் பண்பாட்டு அடிப்படையிலும் ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. மருதநாயகம்: உலக செம்மொழியும் சங்க இலக்கியமும்: உலக செவ்விலக்கியங்களான கிரேக்கம், இலத்தீன், சீனம், எபிரேயம், அரேபியம், வடமொழி ஆகியவற்றோடு சங்க இலக்கியத்தை ஒப்பிட்டுப் பேசுகிறார் மருதநாயகம். இம்மொழிகளுள் தமிழின் தனித்தன்மையை எடுத்துக்காட்டி, உலகச்செம்மொழிகளில் தமிழ், கவிதையின் மொழியாக இருப்பதை விளக்குகிறார். சமசுகிருதமொழி பற்றிய ஆய்வினைக் கடந்த இருநூற்றாண்டுகளில் மேலைநாட்டு அறிஞர்களும் கீழைநாட்டு அறிஞர்களும் சிறப்பாக மேற்கொண்டனர். இந்தக் காலகட்டத்தில் தமிழ்மொழி பற்றிய ஆய்வில் உலக அறிஞர்கள் அக்கறை காட்டவில்லை ஒரளவு புறக்கணித்தே வந்திருக்கின்றனர். தற்காலத்தில் மருதநாயகம் மட்டுமே முதலில் உலகசெவ்வியல் மொழிகளோடு தமிழை ஒப்பிட்டு தமிழின் தனிச்சிறப்பை உலக அரங்கிற்கு எடுத்துச்சென்றுள்ளார். கிரேக்க மொழி: மேற்குலகில் செம்மொழியென முதன் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது கிரேக்க மொழி. ஹோமரின், இலியட், ஒடிசி ஆகிய இரண்டு காப்பியங்களுக்காகவும், அஸ்கிலஸ், யூரிபைட்ஸ், சாஃபக்ளிஸ் ஆகிய மூவரின் துன்பியல் நாடகங்களுக்காகவும் செம்மொழித் தகுதியைப் பெற்றது. கிரேக்க இலக்கியத்தில் இத்தகைய காவியங்களும் துன்பியல் நாடகமும் இருப்பது போல தமிழில் இத்தகையவை இல்லை என்பதை மறுக்காத அவர், கிரேக்க இலக்கியங்களில் தன்ணுணர்ச்சிப்பா பற்றிப் பேசுவதற்கோ, கவிதை என்பதை வரையறுத்துச் சொல்வதற்கோ வாய்ப்பில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். சங்க இலக்கியம் முழுவதும் கூற்று என்ற முறையில் அமைகிறது. கூற்று ஒருவகையில் தன்ணுணர்ச்சிப் பாடல்கள் என்பதை ஒப்புக்கொள்ள இயலும். கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ (கி.மு.428-348) கவிஞர்களை மதிக்கவில்லை. கவிதையினால் சமுதாயத்திற்கு எந்த நன்மையுமில்லை. கவிதை என்பது வாழ்க்கையின் குறையுடைய நகல். மேலுலகில் உள்ள பொருள்களே உண்மையானவை. குறையற்றவை. அவற்றின் நகலாகிய உலகியற் பொருளின் இன்னொரு நகல் கவிதை. ஆகவே ‘கவிஞர்களுக்குத் தன் இலட்சிய உலகில் இடமில்லை’ என்று கூறியதை மருதநாயகம் குறிப்பிடுகிறார். பிளேட்டோவின் கருத்தை மறுக்கும் இவர் “தொல்காப்பியத்தை ஒத்த ஓர் அறிவுசார்ந்த இலக்கியத்தை மேலை அறிஞர்கள் படைக்கவில்லை. இதுவே வரலாற்று உண்மை” (த.நே.37,ப.14.) என்கிறார். கிரேக்கச் சிந்தனையாளரான அரிஸ்டாட்டில் (கி.மு.384-கி.மு.322)கவிதையியலில் துன்பியல் நாடகவியலைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். காப்பியங்களை விட துன்பியல் நாடகங்களின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறார். இவற்றை மறுக்காத மருதநாயகம், தொல்காப்பியர் குறிப்பிடும் விரிவான தமிழ்க்கவிதை இயலையும் தமிழின் தனிச்சிறப்பான தன்ணுணர்ச்சிபாவையும் அரிஸ்டாட்டில் அறிந்திருக்கவில்லை என்றும் கூறுகிறார். இலத்தீன் மொழி செம்மொழி என்ற தகுதிக்கு ஒரு மொழியில் பேரிலக்கியங்கள் இருக்கவேண்டும். இத்தகைய பேரிலக்கியங்கள் இலத்தீனில் இல்லை. அன்றியும் கிரேக்க மொழியின் நகலாகவே இலத்தீன் இருக்கிறது என்று அறிஞர் குறிப்பிடுகின்றனர். “கிரேக்கத்தோடு ஒப்பிடும் அளவுக்கு இலத்தீன் மொழியின் இலக்கிய வளம் உயர்ந்ததன்று என்று வரலாற்றுத் திறனாய்வாளர்களின் உண்மையான கணிப்பு” என்பதை ஜி.ஜான் சாமுவேல் பதிவு செய்துள்ளார். (உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுமலர்,ப.66). சீனமொழி: பழஞ்சீனக் கவிதையில் மாந்தர் வாழ்வை இயற்கையோடு இணைத்து கவிதைகள் பாடப்பட்டன. மேற்கத்திய கவிதைகள், இயற்கையை இயற்கைக்காகவே பாடுவதாக அமைந்துள்ளன என்று குறிப்பிடும் மருதநாயகம். தமிழ்கவிதைகள் “மாந்தர் வாழ்வையும் இயற்கையையும் இறுகப் பிணைந்த ஐந்திணைக் கவிதைகள் இவை தமிழுக்கே உரியவை” (ப.39) என்று கூறுகிறார். எனவே, சீனக் கவிதையில், தமிழ்க்கவிதையைப் போன்று விரிவான திணைக்கவிதைகள் இல்லை என்பது தெளிவாகிறது. சமற்கிருத மொழி சமஸ்கிருத மொழியைப் பற்றிக் குறிப்பிடும் போது, மக்கள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அன்றாடப் பேச்சு மொழியாக என்றும் இருந்ததில்லை என்பதோடு சமஸ்கிருத மொழியில் முருகியல் இன்பம் தரும் கவிதைகளைப் படைக்க இயலாது என்றும் கூறுகிறார் மருதநாயகம். இதனை ச.அகத்தியலிங்கம் “பழமையான பண்பாட்டின் சின்னமாகவும் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகவும் விளங்குவது சமஸ்கிருதம் எனினும் தமிழ்மொழியைப் போல் அன்றாடப் பேச்சு மொழியாகவோ இடையறாது மக்கள் நாவிலே தவழ்ந்து அவர்கள் மத்தியில் வாழும் ஒரு வளர்மொழியாகவோ அது இருக்கவில்லை” (மேற்படி,ப.59) என்கிறார். மேலும் இம்மொழி குறித்து இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி கூறுவதை இங்குச்சுட்டுவது தகும்: “கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு முன் சமற்கிருத மொழிக்கு எழுத்து இல்லை என்றும், கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இந்தியாவில் உள்ள கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள் இன்ன பிற எழுத்துச் சான்றுகள் ஆகிய அனைத்திலும் சமற்கிருதம் இல்லை என்பதும் தான் வரலாற்று ஆய்வு முடிவு ஆகும். இந்தியாவெங்கும் தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளே அரசு மொழிகளாக, மக்கள் மொழிகளாக இருந்தன. ஆனால்சமற்கிருதம் அன்றைய காலகட்டதில் அரசு மொழியாகவோ, மக்கள் மொழியாகவோ இருக்கவில்லை. கி.பி.150இல் தான் முதன்முதலாக சமற்கிருத மொழி எழுதப்பட்ட கல்வெட்டுகள் கிடைக்கின்றன.” (பண்டைய இந்தியா,ப.350). இம்மொழிக்கு நீண்ட தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் இருந்திருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது. தமிழ் கவிதை மொழி தமிழர்கள் பல நூற்றாண்டுகளாகக் கவிதையை படைத்ததோடல்லாமல் கவிதைக்கு வரையறைகளையும் வகுத்தனர். கவிதையில் சொற்சிக்கனத்தைக் கையாண்டனர்.மனித வாழ்வின் தன்ணுணர்ச்சிக் கவிதைகளைப் படைத்தனர். எனவே தமிழ், ‘கவிதைமொழி’ என்பதைப் பல சான்றுகளுடன் விளக்குகிறார் மருதநாயகம். மேலும் தமிழ்மொழியின் ஆழ்ந்த சொல்வளத்தையும் செழிப்பையும் எளிமையையும் உணர்ந்த மேலைநாட்டு ஆய்வு அறிஞர்கள் தம்மொழியில் சங்க இலக்கியத்தை மொழிபெயர்ப்பதன் மூலம் தமிழின் இலக்கிய வளத்தை நன்கு அறியமுடியும் என்கிறார். “திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போப் அடிகளார், தமிழ்க்கவிஞர்கள் கையாளும் சொற்சிக்கனத்தை ஆங்கில மொழியில் கையாள முடியவில்லையே” (ப.24) என்று வருந்துவதைச் சுட்டிக்காட்டுகிறார் “கிரேக்கம் தத்துவமொழியாக வளர்க்கப்பட்டது போல் இலத்தீன் சட்டமொழியாக வளர்க்கப்பட்டது போல் தமிழ் கவிதைமொழியாகவே வளர்க்கப்பட்டது” (மேலது,ப.19) என்கிறார். தமிழ், ‘கவிதைமொழி’ என்பதற்குப் புறநானூற்றிலிருந்து மேற்கோள் காட்டும் பாடல்களில் ஒன்றை இங்குக் குறிப்பிடலாம். சேரன்மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடிய பாடலின் (புறம்.53) கவித்துவம் வருமாறு, “உன்னுடைய புகழைப்பாடுதல் மயக்கம் பொருந்திய நெஞ்சுடைய எங்களுக்கு முடியாத செயலாகும் பல பெருங்கல்வியாளர்களைக் கொண்ட இவ்வுலகில் பாடாதிருத்தலும் கூடாது. வுpரைவாகப், பலபொருள்களையும் உள்ளடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும் மிக்க கேள்வியையும், விளங்கிய புகழையும் உடைய கபிலன் இன்று இருப்பானாகில் நன்று; அது பெற்றிலனேயென்று சொல்லியஉன்னுடைய வெற்றி கொண்ட சிறப்பிற்குப் பொருந்தப்பாடுவேன்” இவ்வறாகப் புறநானூற்றில் கவிதையாக்கம் குறித்தும் கவிஞர்களின் திறன் குறித்தும் பாடும் கவிஞர்களைக் காணமுடிகிறது என்கிறார். மருதநாயகம் முன்வைக்கும் தொன்மை தமிழ்க்கவிதை பற்றிய ஆய்வு தனித்ததொரு புதுமையான ஆய்வாகும். ஆங்கிலத்திலும், தமிழிலும் முதுமுனைவர் பட்டம் பெற்ற மருதநாயகம் தமிழ், ‘கவிதைமொழி’ என்று கூறுவதை ஏற்கமுடியும். சிந்துவெளி நாகரிகமும் சங்க கவிதையும்: சிந்துவெளிப் பண்பாடும் சான்றோர் கவிதையும் என்ற கட்டுரையில் மருதநாயகம் சிந்துவெளி நாகரிகத்தின் பலகூறுகள் சங்க கவிதைகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். எந்த ஓர் இனமும் தன் பழம்பெருமையை மரபை மறந்துவிட்டுப் புதிய சாதனைகளைச் செய்யமுடியாது. இம்முறையில் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை ஆய்வு செய்வதன் மூலம் தமிழினம் மீண்டும் எழுச்சிபெற இயலும். தமிழ் நாகரிகததின் தொன்மை பலரால் மறைக்கப்பட்டுள்ளது, முதலில் அதைக் கண்டறிவது தேவை, அதன் பின்னரே எழுச்சி சாத்தியம் என்று கூறும் மருதநாயகம், தொல்லியல் அறிஞர் பலரின் கருத்துக்களையும், அகழாய்வாளர்கள் தெரிவிக்கும் புறச்சான்றுகளையும் வெளிநாட்டார் குறிப்புகளையும் எடுத்துக்காட்டித் தமிழரின் தொன்மை நாகரிகச் சிறப்பைச் சுட்டிக்காட்டுகிறார். உலகநாகரிகமும் தமிழ்நாகரிகமும்: உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விவேகானந்தர் தமிழகத்தில் தமிழின் நாகரிகச் சிறப்பைக் கண்டு வியந்து கூறியதைக் குறிப்பிடுகிறார் மருதநாயகம். “சுமேரிய, அசீரிய, பாபிலோனிய, எகிப்திய நாகரிகங்களுக்கெல்லாம் அடித்தளமிட்டது தமிழர் நாகரிகமே. சுமேரிய நாகரிகத்தின் சோதிடம், தொன்மங்கள் முதலியவற்றின் வளர்ச்சிக்குத் தமிழ்நாகரிகமே ஆதாரம். தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்ட தமிழர் எகிப்து நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்” என்பதும் விவேகானந்தரின் கூற்று. (த.நே.40,ப.9). சிந்துவெளி நாகரிகம் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்ட கிராசுபாதிரியார், பழந்தமிழர் தெற்கு ஐரோப்பாவிலிருந்து வந்தவர் அல்லர். இந்தியாவிலிருந்தே தெற்கு ஐரோப்பா மற்றும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியவர் ஆவார். இந்தியாவில் நீண்ட காலமிருந்து நாகரிகம் வளர்ச்சியடைந்த பின் பழந்தமிழர் மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்தனர். மெசபடோமியா முதல் உலக நாடுகள் பலவற்றிலும் இடம்பெயர்ந்தனர். மேலும் அவர்கள் பிரிட்டிசு தீவுகள் வரையிலும் தங்கள் நாகரிகத்தைப் பரப்பினர். என்றும், சிந்துவெளி நாகரிகம் தன்னளவில் அழிந்தாலும் அதன் தொடர்ச்சியை இன்றும் தமிழகத்தின் தென்பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் காணமுடிகிறது என்பதையும் ஆய்வில் தெரிவிக்கிறார். (மேலது) மருதநாயகம் குறிப்பிடும் மிக முக்கியமான சான்று “இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வு வல்லுநரான கிரஹாம் ஹான்ராஜ் பூம்புகார்ப் பகுதியில் கடலுக்கடியில் சிறப்பான கட்டட அமைப்புக் கொண்ட நகரம் ஒன்று புதையுண்டு கிடப்பதைக் கண்டு, தாம் கண்டவற்றைக் குறும்படமாக எடுத்து இங்கிலாந்திலுள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறைப்பேராசிரியர் கிளன்மில்னே என்பாரிடம் விளக்கங்களைக் கேட்டார். இந்த நகரம் 11,500 ஆண்டுகளுக்கு முன் சிறப்புற்றிருந்த தென்றும் கடல் மட்டம் 75அடி உயர்ந்த காலத்தில் கடலுள் மூழ்கியிருக்க வேண்டுமென்றும் இது ஹரப்பா மொகஞ்சதாரோவை விடப் பெருஞ்சிறப்புடையதென்றும் அவர்கள் தெரிவித்தனர்” (ப.9). சிந்துவெளி நாகரிகத்தின் மூலம் அறியப்படும் தொன்மை, மேன்மை முதலியவற்றை மேலும் பல ஆயிரமாண்டு தள்ளிப்போட்டுக் காண்பதற்கு இச்சான்றுகள் உதவுகின்றன. உலக வரலாற்றில் தமிழ்வரலாறு மிக மிகப்பழமையானதுஎன்பதற்கு இச்சான்றுகள் உதவும். சிந்துவெளி நாகரிகம் 3500 ஆண்டுகட்கு முற்பட்டது என்றாலும் தமிழரின் பூம்புகார்நாகரிகம் அதற்கும் 8000 ஆண்டுகட்கு முற்பட்டது என்பது வியத்தகும் ஓர் உண்மை என்பதை மருதநாயகம் எடுத்துக்காட்டுகிறார். சங்கச் சான்றுகளும் சிந்துவெளி கூறுகளும்: இனி சங்கச்சான்றோர் கவிதைகளில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதைச் சுட்டுகிறார் மருதநாயகம். 1.சிந்துவெளி மக்கள் மட்பாண்டங்கள் செய்ய சக்கரங்களைப் பயன்படுத்தினர். இறந்தவர்களைப் பெரிய தாழிகளில் புதைத்தனர். இவைபோன்ற காட்சிகள் சங்க இலக்கிய பாடலான புறநானூற்றில் (312,319). கணவனை இழந்த பெண் கலம் செய்யும் குயவனை நோக்கி, வண்டிச்சக்கரத்தின் ஆரத்தைப் பொருந்தி வந்த சிறிய பல்லிபோல் கணவனோடு ஆண்டு பல கழித்த எனக்கும் அருள் செய்யும் வகையில் முதுமக்கள் தாழியைப் பெரிதாக வனைவாயாக! என்று வேண்டுகிறாள் (ப.10). சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியை சங்க காலத்திலும் காணமுடிகிறது. 2.சிந்துவெளி நகர நாகரிகமாகிய அரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் காட்டெருமையும், திமிலுடைய காளையும், திமிலுடைய எருதுகளும், தேர்களின் மாதிரி வடிவமும் சுட்ட களிமண்ணிலும் செம்பிலும் கிடைத்துள்ளன. இவற்றின் பயன்பாடுகள் குறித்த செய்தி சங்கப் பாடலாகிய புறநானூற்றுப் பாடல்களில் (69,120) தேரில் செல்லும் மன்னர்களையும், தேர்களைப் புலவர்களுக்குப் பரிசிலாக வழங்கும் வள்ளல்களையும் காணமுடிகிறது. ‘வைகல் எண்தேர் செய்யும் தச்சன்’ (புறம்.87) என்னும் பாடலில் ஒரு நாளில் எட்டுத்தேர் செய்யும் வலிமையுடைய தச்சன் சங்க காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது. தொல்காப்பிய நூற்பா, ‘தேரும் யானையும் குதிரையும் பிறவும்’ (தொல்.1158) என்று குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. செங்கோல் முறைமையில் ஆட்சி செய்யும் மன்னன் வண்டியில் ஏற்ற இறக்கங்களில் இழுத்துச் செல்லும் காளை மாட்டிற்கு ஒப்பிடப்படுகிறான் (புறம்.185) என்று மருதநாயகம் எடுத்துக்காட்டுகிறார். 3. சிந்துவெளி நாகரிகத்தில் நகரங்கள் திட்டமிட்டு அமைக்கப் பெற்றதை அகழாய்வு மூலம் அறியமுடிகிறது. தெருக்கள் நேராகவும், வளைவுகளின்றி அகலமாகவும், முக்கிய வீதிகள் முப்பது அடி அகலம் வரை காணப்படுகின்றன. சங்கப்பாடல்களில், ஓங்கி உயர்ந்த மாடங்கள் அகன்ற தெருக்களைக் கொண்ட மதுரை மாநகரின் வருணனையை “விண்ணுற ஓங்கிய பல்புடைப் புரிசைத் -. . . . . . . . . . . . . . . . . . . . - மழையாரு மலையி னிவந்த மாடமொடு” என்று மதுரைக்காஞ்சி (350,355) சிறப்பிக்கிறது. தற்பொழுது தொல்லியல் துறை மேற்கொண்டிருக்கும் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் செய்த அகழாய்வில் கிடைத்திருக்கும் சான்றுகள் மேலும் இதனை உறுதிப்படுத்துகின்றன. “கீழடியில் பத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. சங்க காலத்தில் கட்டடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது”. (வீக்கிப்பீடியா) பட்டினப்பாலையில் புகார் நகரச் சிறப்பையும் காணமுடியும். ‘பூதங்காக்கும் புகலருங் கடிநகர்த்’ (பட்,45,55) என்கிறது. 4. சிந்துவெளி மக்கள் எருதுகள் கொண்டு ஏரால் உழுது பயிர் செய்தனர் என்பதைச் சான்றுகள் நிருபிக்கின்றன. திருக்குறளில் உழவுத் தொழிலுக்கு ஏர் பயன்பட்டதை அறிகிறோம். வள்ளுவர் உழவு குறித்து ஓர் அதிகாரத்தையே ஒதுக்கி உழவை சிறப்பித்தார். சங்கப் பாடல்களிலிருந்தும் உழவின் சிறப்பை அறியமுடியும். ‘கழனி உழவர் குற்ற குவளையும்’ (அகம்.மருதம்.216) என்ற வரிகள் உழவு பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது. சிந்துவெளி நாகரிகம் கி.மு.3500ஐச் சேர்ந்தது. சங்க கால நாகரிகம் என்று கி.மு.3ஆம் நூற்றாண்டைக் குறிப்பிடுகின்றனர். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுக் கால இடைவெளி எனினும் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இந்த இரு நாகரிகங்களும் ஒத்தத்தன்மையோடு இருக்கின்றன என்பதும் புலப்படுகிறது. உலக நாகரிகம் அனைத்திற்கும் மூலமாக அமைவது தமிழ் நாகரிகம் என்பதும் மருதநாயகத்தின் கருத்து. இக்கருத்து மட்டுமல்லாமல் தன் கட்டுரையில், சிந்துவெளி நாகரிகத்தையும் அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பட்டதாகக் கருதப்படும், சங்க இலக்கியத்தையும் இணைத்துக் காண்கிறார். இந்த இரண்டாயிரமாண்டு இடைவெளி விளக்கமுடியாத ஒரு புதிர். சிந்துவெளி நாகரிகம் சிறந்திருந்த அதே காலத்தில் சங்ககால நாகரிகமும் செழித்திருக்க வேண்டுமென்ற கற்பனை செய்து பார்க்க முடியும். அப்படியானால் சங்க இலக்கிய காலம் முதலியவற்றை மேலும் ஆயிரம் ஆண்டு தள்ளிப் பார்க்க நேரிடும். இதற்கான சான்றுகள் இல்லை. சங்க இலக்கியத்தின் தொன்மை நமக்கு வியப்பைத் தருகிறது. எனினும் மருதநாயகம் இவ்வகையிலும் அதாவது சிந்து சமவெளி பண்பாட்டின் சின்னங்கள் முதலியவை சங்க இலக்கியத்திலேயே காணப்படுகின்றன என்று சொல்வதையும் ஒரு கண்டுபிடிப்புப் போல ஏற்க முடியும். க. ஜவகர்: திணைக்கோட்பாடும் படைப்பாக்கமும்: ‘திணைக்கோட்பாடு - விரிவாக்கம்’ என்ற விரிவான கட்டுரையை ஜவகர் எழுதியுள்ளார். தொல்காப்பியர் கூறிய திணைக்கோட்பாடு என்ற அடிப்படையில் விரிவாக சங்க இலக்கியத்தை ஆய்வு செய்ய இயலும். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்றும் இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைகள். முதற்பொருள்: நிலமும் பொழுதும் (வுiஅந யனெ ளுpயஉந) கருப்பொருள்: நிலத்தின் விளைபொருட்கள், தெய்வம், விலங்கு, பறவை, மரம், பூக்கள், பறை, செய்தொழில், இசைக்கருவி ஆகியனவும் பிறவுமாகும். உரிப்பொருள்: புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியனவும் இவற்றின் நிமித்தமுமாகும் என்று தொல்காப்பியர் வகுத்த திணைக்கோட்பாட்டை உரையாசிரியர்கள் மேலும் விளக்கினார்கள். இவ்வாறு தொல்காப்பியர் கூறிய இந்தத் திணைக்கோட்பாட்டு அடிப்படையில் சங்க இலக்கியம் பொருள்படுத்தப்பட்டது. இதற்குமேலும்படைப்பியக்கம் உண்டு என்பதை இலக்கண ஆசிரியர் காணவில்லை. ஆனால் கேரளாவில் ஆங்கில இலக்கிய பேராசிரியரான கே.என்.அய்யப்பப்பணிக்கர் தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டைப் பார்த்து பெரிதும் வியந்து மேலும் விரிவுப்படுத்த முடியும் என்று கருதி விரிவுப்படுத்தினார். இந்தத் திணைக்கோட்பாட்டைத் திராவிடக்கோட்பாடு என அழைத்தார். திராவிட மொழிக்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள எந்த மொழி இலக்கியத்திற்கும் பணிக்கரால் விரிவுப்படுத்தப்பட்ட திணைக்கோட்பாடு பொருந்தும். முதற்பொருள், கருப்பொருள் ஆகியவற்றைப் பணிக்கர் விரிவுப்படுத்தியதோடு, Mental Landscape என்பதையும் வடிவமைத்தார். Landscape என்பதைப் போலவே, Mental scape என்பதையும் அவர் கூறி வைத்தார். படைப்பாளியின் மனப்பதிவு என்பதைப் படைப்பாளுமை என்றும் பொருள்படுத்தலாம். அய்யப்பப் பணிக்கர் கூறியபடி நிலம் என்பது காலத்திற்கு காலம் மாறுதல் அடைகிறது. பொழுது அல்லது காலம் என்பதை வரலாற்றுக் காலம் எனப் பொருள்படுத்த முடியும். கருப்பொருள் என்பதனைச் சூழல் அதாவது இலக்கியம் படைப்பதற்கான விரிவான சமூகச்சூழல் எனப் பொருள்படுத்தலாம். உரிப்பொருள் என்பதில் தொல்காப்பியர் கூறியுள்ளதை இணைத்து காதல் எனப் பொருள்படுத்துவதோடு, அந்தந்த இலக்கியத்திற்கான உரிப்பொருளை அறம், வீரம் எனப் பொருள்படுத்தமுடியும். அற இலக்கியம் கற்கும் பொழுது அந்த இலக்கியத்திற்கான உரிப்பொருளை அறம் எனவும் பக்தி இலக்கியம் படிக்கிற பொழுது அதற்கான உரிப்பொருள் என்பதைப் பக்தி எனவும் இவை போலவே பரவலாக இலக்கியங்களைப் படிக்கின்ற போது அந்த இலக்கியத்தின் அடிக்கருத்தை வைத்துப் பொருள்படுத்தலாம். திணைக்கோட்பாட்டை மேற்கத்திய மேலாண்மைகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும் ஒரு சாதனமாகக் கொள்ள வேண்டுமென்கிறார் பணிக்கர். அய்யப்பப் பணிக்கரால் விரிவு செய்யப்பெற்ற இந்தப் படைப்பாக்க அடிப்படைக் கூறுகள், படைப்புருவாக்க மனஅமைப்புபையும் (Mental Landscape)உள்ளடக்கி முழுமை பெற்றதாக ஜவகர் எழுதியுள்ளார். முதற்பொருள், கருப்பொருள்கள் மட்டுமே படைப்பை உருவாக்குவதில்லை. படைப்பின் இயல்புதன்மை, படைப்பின் வடிவம், படைப்பாக்க உத்திகள், படைப்புருவாக்க மனஅமைப்பு, கவித்துவம் மிக்க கூறுகள் ஆகிய அனைத்தும் சேர்ந்தே கவிதையை / படைப்பை உருவாக்குகின்றன. இவ்வாறு முதல், கரு, உரிப்பொருள் பற்றிய விவரிப்போடும் உரிப்பொருளைச் சார்ந்தும் படைப்பாக்கம் குறித்தும் திணைக்கோட்பாடு பேசுகிறது. (த.நே.40, ப.87) தொல்காப்பியர் காலத்திலிருந்து நெடும்பயணம் செய்துவிட்டது சமுதாயம். தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை இலக்கிய வளர்ச்சி நிலைக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் பண்பாட்டு நிலைகளுக்கு ஏற்பவும் பொருத்திப்பார்ப்பது தேவையான ஒன்றாகும். (சிற்பி, திணைமரபும் நவீனமும், ப.100)என்று தற்கால இலக்கியத்தோடு திணைக்கோட்பாட்டை விரிவுபடுத்திபார்ப்பது காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறு தொல்காப்பியரின் பார்வையைச் சமகாலத்தில் தமிழருக்கு மட்டுமல்லாமல் பிறமொழிகளுக்குள்ளும் கொண்டு செல்ல வேண்டியதன் தேவை புலப்படுகிறது. இதனை, மேலும் உறுதிப்படுத்தும் முறையில் கீழ்க்காணும் மருதநாயகத்தின் உரை அரண்செய்கிறது. “தொல்காப்பியர் வகுத்த திணைக் கவிதை இயல் வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருக்கிற வடமொழியிலும் இக்கவிதை இயல் காணப்படவில்லை. ஆனால் அய்யப்பப் பணிக்கர் தொல்காப்பியரின் திணைக் கவிதையியலைப் பற்றிப் பேசும் பொழுது எல்லா மொழி இலக்கியங்களுக்கும், எக்கால இலக்கியங்களுக்கும், எவ்வகை இலக்கியங்களுக்கும் பொருந்தக்கூடியது இக் கவிதைஇயல்.” (புறநானூறு வாசிங்டன் youtube. com2013) (பா.நா.22.9.2015) என்கிறார் சங்க இலக்கிய ஆய்வுக்கெனப் பயன்படுத்தப்படும் தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு அய்யப்பப்பணிக்கரின் ஆய்வின் அடிப்படையில் சங்க இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் இடைக்கால இலக்கியங்களாகிய சிலப்பதிகாரம், திருவாசகம், கலிங்கத்துப்பரணி ஆகியவற்றுக்கும் நவீன கால இலக்கியமான நாவலுக்கும் பயன்படுத்த இயலும் என்பதை ஜவகர் தன் ஆய்வுநூலில் விளக்கியுள்ளார். இத்துடன் நிர்மல் செல்வமணியின் ஆய்வோடு ஒப்பிட்டுப்; பார்க்கும்போது தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு திணைநிலை சார்ந்து வரலாறு, பொருளியல், மனித வாழ்வியல் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்ள இயலும். இவ்வகையில் திணைக்கோட்பாடு உயிர்த்துடிப்புள்ள விரிந்த கோட்பாடு என்பது புலப்படுகிறது. எதற்கெடுத்தாலும் மேற்கத்திய ஆய்வுமுறையை கொண்டுவருவது வழக்கமாக இருக்கும் தமிழ்ச் சூழலில், சங்க இலக்கிய ஆய்வுக்கென உள்ள தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை சங்க இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியம் அனைத்திற்கும் பயன்படுத்த முடியும் என்பதோடு உலகின் எந்த மூலையில் இருக்கும் மொழியின் இலக்கியத்தைத் தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு கொண்டு ஆய்வு செய்ய இயலும். இம்முறையில் மேற்கத்திய ஆய்வுமுறையை இங்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக இங்குள்ள திணைக்கோட்பாட்டை மேற்கத்தியரும் தம்; தேவைக்கு ஒத்தமுறையில் பயன்படுத்திக்கொள்ள இயலும். இதுகுறித்து தமிழ்மக்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இராமமூர்த்தி மற்றும் சந்திரசேகரன்: ‘திணைநிலை ஒழுக்கமும் புலனெறி வழக்கமும்’ என்ற தலைப்பில் மற்றொரு ஆய்வை இராமமூர்த்தி மற்றும் சந்திரசேகரன் ஆகிய இருவரும் முன்வைக்கின்றனர். (த.நே.40,க.எண்.3,4) மருத நிலநாகரிகத்தில் கலை, அரசு உருவாக்கம், வர்க்க முரண்பாடுகள், சமயம் தோன்றுதல் போன்ற வளர்ச்சியை இராமமூர்த்தி சுட்டிக்காட்டுகிறார். மருதநில சமூகவளர்ச்சியின் காரணமாகப் பெண்ணுக்கு கற்புநெறி / கோட்பாடு வகுக்கப்படுதைச் சந்திரசேகரன் குறிப்பிடுகிறார். இருவரது கட்டுரைகளும் ஒத்த தன்மையோடு விளங்குவதைக் காணமுடிகிறது. திணைநிலை ஒழுக்கமும் புலனெறி வழக்கமும்: திணை என்பது முன்பு நிலம். பின்பு ஒழுக்கக் கோட்பாடு குறித்தது. புலன் - நெறி புலனெறி என்பது புலமைக் கோட்பாடு - புனைவுக்கோட்பாடு. புலனெறி வழக்கம் - உலக வழக்கும் நாடக வழக்கும் இணைந்தது. நாடக வழக்கு என்பது பல்வேறு கவிதைப் பண்புகளைத் தன்னகத்தே கொண்டது. கலையிலக்கிய கோட்பாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது. உலக வழக்கு என்பது உலக மாந்தர்களை, இவ்வுலக வாழ்க்கையை அப்படியே கூறுவது மட்டுன்று. சுவைபடும் படியாகச் சிறந்த உயர் ஆக்கங்களையும் கொண்டு விளக்குவதாகும். ‘பாடல் சான்ற புலனெறி வழக்கம்’ என்னும் தொல்காப்பிய இலக்கணம் திணைக்கோட்பாட்டைப் புலனெறி வழக்கத்தின் பாற்படுத்தி பாடல்சான்ற வழக்கம் என்கிறது. இதனை ‘புலவராற்று வழக்கம்’ என்பர் உரையாசிரியர். “கிரேக்கத்தில் ஆய்ஸ்தெடிகாஸ் (Aesthtikas) என்றும் ஆங்கிலத்தில் ஈஸ்தெடிக்ஸ் (Easthetics) என்றும் குறிக்கப்படும். புலனெறியாவது கலை இலக்கிய வளர்ச்சி விதிகள் மற்றும் கலை இலக்கியப் படைப்புத்திறன் ஆகியவற்றை இயக்கும் கலைக் கொள்கையையும் அழகியலையும் ஒருங்கிணைப்பதாகும். கலையின் அடிப்படை விதிகளின் சாரமாகவும் கலையாக்கத்திறன் விளக்கமாகவும் அமைவது” (ப.26) என்கிறார் இராமமூர்த்தி. தொல்காப்பியர் காலமும் மருதநிலச் சமூகமும்: வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து வரலாற்றுக்கு மாறிய காலத்தில் வாழ்ந்தவர் தொல்காப்பியர். தன் கால செய்யுள் மற்றும் பேச்சு மொழியை ஆராய்ந்து தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். தொல்காப்பியர் வெறும் இலக்கிய கோட்பாடு வகுத்தவர் அல்லர். தொல்காப்பியம் முதல் சமூகவியல் ஆய்வு நூல் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறுகிறபடி இந்தியச் சமூகவியல் இரண்டு முக்கியமான கூறுகளை உடையது. ஒன்று சமச்சீரற்ற பொருளாதார வளர்ச்சி, மற்றொன்று பழங்குடி எச்சம். இந்த இரண்டு அடிப்படைகளை வைத்தே வரலாறு முதலியவற்றை ஆய்வு செய்ய இயலும் (மேலது,ப.28) என்கிறார் இராமமூர்த்தி. தொல்காப்பியர் கால மருதநிலச் சமூகம் முழுமையான உழவர் சமூகமாகவும் இல்லை. இந்தச் சமூகம் பழங்குடி எச்சங்களை உள்வாங்கி, படிநிலை வளர்ச்சி அடைந்து மீயுயர்வு பெற்றது. ‘உலகம் உயர்ந்தோர் மாட்டே’ என்பதில் உலகம் என்பது வயல்நிலம் / மருத நிலம். உயர்ந்தோர், சான்றோர் என்பவர்கள் உழவர்கள். புலனெறிக் கோட்பாடென்பது இந்த அடிப்படையில் உருவானது. மருதநிலம் புதியமுறையில் நீர்ப்பாசனம் செய்து புதிய உற்பத்திக் கருவிகளைக் கொண்டு சாகுபடி செய்து மிக அதிக பயன் பெற்றுச் செல்வம் சேர்த்த நிலவுடைமைச் சமூகம் / உழவியற் சமூகம். (காமராசு, படுவழிப்படுக,ப.3)இச்சமூகம் தன்னை நிலைநிறுத்தும் நோக்கில் தன்னைச் சூழ இருந்த பிற சமூகங்களைப் போரிட்டு வெல்வது தேவையாக இருந்தது. “பாமரத் தன்மை மிக்க எயினர் சமூகங்களையும் ஏனைப் பழங்குடிச் சமூகங்களையும் தாக்கி அழிக்கக் கூடிய சூழல் யதார்த்தமாக இருந்தமையால் அவற்றை அழித்தல் என்பது உழவியற் சமூகத்தின் நிலைபேற்று அறமாக ஆகியிருந்தது” (ப.32) மருதநிலமாகிய உயர்சமூகத்தைச் சுற்றிலும் இருந்த பழங்குடிச்சமூகம் வலிமையுடையதாக இருந்தது என்பதற்கு மகட்பாற்காஞ்சி சான்று. நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்.(1025) என்கிறது தொல்காப்பியம். மருதநிலம் தன்னை விரிவுப்படுத்திக் கொண்டதோடு செல்வத்திலும் மேன்மை அடைந்தது. பிறமக்களிடம் திரை பெறலும், கொள்ளையிடலும் செல்வப் பெருக்கத்திற்குக் காரணம். உழவியற் சமூகத்தை நிலைப்படுத்துவது வாகைத்திணை. வலிமையான அரசு அமைய உழவு, வாணிபம், சடங்கு, தத்துவம், புகழ் ஆகியவை வேண்டும். அரசர் பக்கம், ஏனோர் பக்கம், பார்ப்பனர் பக்கம், அறிவன் பக்கம், தாபதபக்கம், பொருநர்பக்கம், இவை அனைத்தும் உழவர் சமூக அரசு நிலைபெறுவதற்கான ஆதாரங்கள். உழவியற் சமூகம் தன்னை நிலைநிறுத்த ஒரு பக்கம் போர். இன்னொரு பக்கத்தில் பண்பாடு ஆகியவற்றால் வலிமை பெறும் என்கிறார் சந்திரசேகரன். (ப.33) உழவியற் சமூகத்தைக் கோட்பாட்டு அடிப்படையில் நிலைநிறுத்துவது காஞ்சித்திணை. உலகில் துன்பங்கள் நிலையானவை அல்ல. மறுமைக்கு இவ்வகையில் மக்களைப் பண்படுத்தல் காஞ்சித்திணை என்பதையும் விளக்குகிறார். மருதநில நாகரிகம் வளர்ந்து மேலோங்கி வரும்போது, பிற நில நாகரிகங்களை இது பாதிக்கவே செய்துள்ளது. மருதநில நாகரிகம் தன் எல்லையை விரிவாக்க சில சமயங்களில் வஞ்சிப்போரினையும் மேற்கொண்டுள்ளது. (ஞானி, மார்க்சியமும் தமிழிலக்கயமும், ப.4) முரண்பாடுகளும் சமயம் உருவாதலும்: மருதநிலத்தில் ஒன்றுக்கொன்று முரண்பாடான பலவகைப் போக்குகள் நிலவுகின்றன. வேளாண்மை x வணிகம், நகரவாழ்க்கை x கிராமவாழ்க்கை, வேந்தர் x குடிமக்கள், தலைவி x பரத்தையர் என்ற சூழலில் இவை ஒன்றோடொன்று முரண்படுவது தவிர்க்க இயலாதது. மருதநிலத்தில் தலைவன் தன் காமம் காரணமாகப் பரத்தையரிடம் செல்கிறான். இதன் காரணமாகக் குடும்பத்தில் நிகழும் இரங்கல் குறிப்பிடத்தக்கது. குடும்பத்தில் தலைவனின் மூர்க்கம் போலவே நாட்டில் வேந்தனின் மூர்க்கமும் வெளிப்படுகிறது. முரண்பாடுகள் காரணமாக வாழ்க்கையை பற்றிக் கேள்விகள் எழும். முன்னைய சமூகத்தில் நிலவிய அமைதி இந்தச் சமூகத்தில் இல்லை. ஏற்றத்தாழ்வுகள் இங்கு இயல்பாகி வருகின்றன. வேந்தன் சார்பில் ஒருவகை அறம் உருவாகிறது. வேந்தனுக்கு அடிமைப்பட்ட மக்கள் சார்பில் இன்னொரு வகை அறம் உருவாகிறது. இரண்டு முரண்பட்ட அறங்கள், இந்தச் சூழலில்தான் சமயம் தோன்றுகிறது. குறிஞ்சி நாகரிகம் முதலியவற்றை மருதநிலம் உள்வாங்கிக் கொள்ளும் பொழுதே, குறிஞ்சி நிலக் கடவுளரும் மருதநில எல்லைக்குள் வந்து விடுகின்றனர். நாளடைவில் தொடக்கத்தில் பல கடவுளர் என்ற போக்கு. இறுதியில் ஒரு கடவுள் கோட்பாட்டிற்கு இடம்தரும். சமயம் இந்த வகையில்தான் ஒரு கடவுளைப் பற்றிப் பேசும் நிலை உருவாகும். கடவுளை விளக்கும் முறையில் சாத்திரங்களும் சடங்குகளும் தோன்றும். இவ்வகையில் மருதநில நாகரிகம் தனக்கான சமுதாய வாழ்வையும் தனக்கான சமயத்தையும் படைத்துக் கொள்கிறது. மருதநிலச்சமூகமும் மீயுயர்வும்: மருதநிலம் சமயத்தைப் படைத்துக் கொண்டதோடு, பண்பாட்டிலும் உயர்ந்து, வன்முறையையும் செயல்படுத்தியது. ‘அரசியல் நிலை, பண்பாட்டு நிலை’ என்பது இருகளங்கள் என்றார் கிராம்சி. இவையே அகம், புறம் என்பதாயிற்று. அகம் என்பது - பண்பாடு, புறம் என்பது - வன்முறை. தொல்காப்பியர் நெறியில் இவற்றை அகத்திணை, புறத்திணை எனலாம் என்கிறார் இராமமூர்த்தி. மேலும் அவர் “தனது கோட்டைக் கொத்தளங்களால், படைவலிமையால், வாணிபத்தால், வீரர்களுக்கு அளிக்கும் மாராயத்தால், அரசு அமைப்பால், நிலைத்த குடிகளால், உபரி உற்பத்தியால் குடியமர்த்தும் ஆற்றலால், உழவியற் சமூகம் மீயுயர்வு தோற்றுவித்தல் புறம். தனது வாழ்வியலால், குடும்பமெனும் அமைப்பால், கலையிலக்கியத்தால், தத்துவ நெறியால், மீயுயர்வுச் சுட்டல் அகம், இவ்விரண்டையும் இணைப்பது புலனெறி” (ப.30) என்கிறார். அகத்திணை, புறத்திணை ஆகிய இரண்டும் இணைந்ததே புலனெறிக் கோட்பாடு. இக்கோட்பாடு அடுத்து வந்த பக்தி காலத்திற்குப் பெருங்கோட்பாடாகவும் பின்னர் சன்மார்க்கக் கோட்பாடாகவும் வளர்ச்சி பெற்றது. திணைக்போட்பாட்டைப் போன்றே புலனெறிக் கோட்பாட்டைபும் இலக்கியத்தில் புகுத்திப் பார்க்க முடியும் என்ற கருத்தும் பெறப்படுகிறது. புலனெறிக்கோட்பாடும் பெண்ணியமும்: திணைக்கோட்பாட்டில் புலனெறி வழக்கம் அகப்படுத்தும் பெண்மையை சந்திரசேகரன் எடுத்துரைக்கிறார். நால்வகை நிலமும் மருத நிலத்திற்குள் வந்ததன் காரணமாக, ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமூக வளர்ச்சி காணப்படுகிறது. இத்தகைய வளர்ச்சிப் போக்கு களவு, கற்பு என்ற வரையறைக்குள் பெண்ணடிமைத்தனம் சுட்டுபவை என்கிறார் சந்திரசேகரன். தற்காலத்தில் பேசப்படும் பெண்ணியம் என்பது, ஆணுக்கு நிகராக பெண்ணும் அதிகாரத்திலும், சொத்திலும், வேலைவாய்ப்பிலும் பங்குபெறுவதிலும் ஆணைப்போல பெண்ணும் சுதந்திரமாக வாழும் கொள்கை பெண்ணியமாகும். தொல்காப்பியத்தில் பெண்ணியக் கோட்பாட்டைக் காண்பது தவறு என்பதை சந்திரசேகரன் கூறுகிறார். தொல்காப்பியர் காலத்தில் ஆணாதிக்கம் நிலவுகிறது. பெண்ணுக்கு கற்பு வற்புறுத்தப்படுகிறது. “கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்து புறந் தருதலும் சுற்றம் ஒம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”- (தொல்.1098) இவ்வாறாகத் தொல்காப்பியர் பெண்ணுக்கு நெறிகளை வகுத்துள்ளார். ஆணுக்குள்ள சலுகை பெண்ணுக்கு இல்லை. குடும்ப வாழ்க்கைக்குள் பெண் கட்டுப்பட்டவள். இதனாலேயே பெண்ணுக்கு மரியாதை கிடைக்கிறது. இதுவே தொல்காப்பியம் கூறும் பெண்மை என்று சந்திரசேகரன் குறிப்பிடுகிறார். சந்திரசேகரின் கருத்திற்கு மாறாக,வ.சுப.மாணிக்கனார், “தொல்காப்பியர் காலத்தில் ஆண் பெண் சமனியம்இத்தமிழ் மண்ணில் நீரோட்டம் போல் படிந்து பதிந்து கிடந்தது.” என்கிறார். மேலும் பெண்ணைக் கல்வியறிவில்லதவள் எனவும், பிறரிடம் கேட்டுத்தான் அறிவு பெறுபவள் எனவும், பெற்றோரும் கணவனும் கற்பித்தபடி நடக்கும் கற்புடையவள் எனவும், சில நாடுகளில் உரிமையல்லாத குடிகள்இருப்பது போலப் பெண்ணினத்தைச் சமுதாயத்தில் கடைத்தரமாக இழித்துக் கூறியது இடைக்காலம். இக்கொள்கைத் தொல்காப்பியர் காலத்தில் சிறிதும் இல்லை. பெண்மைக்கு முதன்மையளிப்பது, இல்லாட்சிக்குப் பொறுப்பாக்குவது, காப்பது, பெண்மையை வணங்குவது என்பவை தொல்காப்பியம் புலப்படுத்தும் தமிழ் நெறிகள்" (தொல்காப்பியக் கடல், ப.70). மருதநில நாகரிகம் பிற நிலங்களின் நாகரிகத்தை உள்வாங்கிக் கொண்டதன் மூலம் செழுமையடைந்தது என்பதோடு மருதநில நாகரிகத்தில் நிலவிய உள்முரண்கள் காரணமாகவே சமயம் தோன்றியது. தொல்காப்பியர் காலத்தில் அல்லது சங்க இலக்கியத்தில் முழு அளவில் சமயம் எனச் சொல்லத்தக்க ஆக்கம் எதுவுமில்லை. கடவுள், வழிபாடு என்று சிலவற்றைச் சொல்லமுடியுமே அல்லாமல் சமயம் என்ற தொகுப்பைக் காணமுடியாது. சமணம், பவுத்தம், இவை போலவே சைவம், வைணவம் ஆகியவை பிற்காலத்தில் சமயங்கள் எனச் சரியாகவே பேசப்பட்டன. வர்க்க முரண்பாடுகள், போர், பெண்ணடிமைத்தனம், பரத்தமை போன்றவையும் ஆதிக்கம் பெற்றதைதை அறியமுடிகிறது. துரைசீனிச்சாமி: தொல்காப்பியரின் உளவியல் கோட்பாடு: சங்க இலக்கியம் குறித்து நவீனமுறை ஆய்வில் துரைசீனிச்சாமியின் ‘உளவியல் நோக்கில் தொல்காப்பியம்’ என்ற கட்டுரையைக் குறிப்பிடலாம். (த.நே.40, ப.37) சென்ற நூற்றாண்டில் உலகளவில் பேசப்பட்ட உளவியல் அறிஞர் சிக்மண்ட் ப்ராய்டு. இவருடைய பிராய்டிய ஆய்வு முறையை தமிழகத்தில் பலர் ஏற்கின்றனர். அவர்களில் ஒருவர் துரைசீனிச்சாமி. உளவியல் - விளக்கம்: “மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் மனநிலையையும் நடத்தையையும் ஆராயும் அறிவியல் துறை, மனத்தின் ஆய்வு என்ற பொருளைத்தரும் உளவியல். தனிமனித மற்றும் குழுநடத்தை ஆகிய இரண்டையும் மையமாகக் கொண்டுள்ளது. உணர்ச்சி, புலனறிவு, ஆளுமை என்று பலவகைப்பட்ட தன்மைகளும் உளவியலில் ஆராயப்படுகின்றன” (பிரிட்டானிகா, தொகுதி.1, ப.412) மனித உயிர்கள் கூடி வாழும் பண்பிற்கு அடித்தளம் அமைக்க உதவுவது பாலியல் உறவு. ‘ஊடுதல் காமத்திற்கு இன்பம்’ (1330) என்றார் வள்ளுவர். இன்பம் அனைத்து உயிர்களுக்கும் பொது (தொல்.பொரு.29) என்கிறார் தொல்காப்பியர். காமம் பொதுவானது என்ற கூற்றில் உள் முரண் உள்ளதென்பதாலேயே அறிஞர், பகுத்தறிவின் துணைக்கொண்டுப் பாலுறவிற்குச் சில எல்லைகளை வகுத்துள்ளனர். தலைவன், தலைவியின் காமமும் ஒன்றே. எனவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுங்கு நெறிப்படுத்தப்பட்டது. ஆண் - பெண் பாலியல் உறவு கட்டுப்பாடற்றதாக இருந்தால் அது எல்லாச்சமூகத்தையும் பாதிக்கும். பெண்களின் பாலியல் உணர்வுகள் சமூகநிறுவனம் கற்பித்து வைத்திருக்கும் பாலியல் தளத்தைமீறிவிடவில்லை. ஆணாதிக்கச் சமூகத்தில், ஆண் பாலியல் சுதந்திரம் உள்ளவனாக இருக்கிறான். தலைவனின் காமம் மூர்க்கத்தனமான நிலையில் தலைவன் பரத்தையிடம் இன்பம் காணுகிறான். இதன்காரணமாக தலைவன் காமச்சுதந்திரம் உள்ளவனாகவும், தலைவியின் காமம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் உள்ளது. இவ்விருவரின் மனநிலை உள்ளத்து உணர்வின் / உணர்ச்சியின் வெளிப்பாட்டையும் ப்ராய்டின் கோட்பாட்டோடு பொருத்திக் காட்டுகிறார் துரைசீனிச்சாமி. “ஓர் உணர்ச்சி தலைமை வகிப்பதற்கு (instinct to master) மூர்க்கத்தின் ஆதரவு (சேர்க்கை) தேவைப்படுகிறது. மேலும் இருவகைப்பாட்டு உணர்ச்சிகளுள் பாலுணர்ச்சியும் மூர்க்கமும் முதன்மை உணர்ச்சிகளாக விளங்க இவற்றின் கலப்பிற்கு ப்ராய்டு சிறப்பிடம் தருகிறார்” (இரவிச்சந்திரன், சிக்மண்ட்ஃ.ப்ராய்டு, உளப்பகுப்பாய்வு அறிவியல், ப.234). தலைவியின் கட்டுப்பாடுடையக் காமமும் தலைவனின் சுதந்திரக் காதலும் மருதத்திணையில் வெளிப்படுகின்றன. ‘நாணமும் மடமும் பெண்மைய’ என்ற எல்லைக்குள் பரத்தையர் இடம்பெற முடியாது. எனவே தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையரிடம் சென்று வந்தாலும் அவனை அவள் ஏற்கிறாள். இவ்வகையில் தலைவி தன் காமத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுப்பாடு தலைவனுக்கு இல்லை. மேலும் “பெண்ணின் பாலியல் அமுக்கப்பட்ட தன்மை கொண்டதாகவும் வன்முறைக்கு ஆட்படும் உடலாகவும் பெரும்பாலும் இருக்கின்றது. பாலியல் ஆணின் அலட்சியப் போக்கால் பெண்மனமும் உடலும் புறந்தள்ளப்படுகின்றன.” (காவ்யா தமிழ் - அக்.டிச.2014, ப.37) என்று மரகதமணி பெண்களின் உடல் ஒடுக்கப்படுவதையும், வன்முறைக்குள்ளாவதையும் சுட்டிக்காட்டுகிறார். பெண்கள் சுதந்திரம் மருதநில காலத்திலேயே தடைசெய்யப்பட்டுள்ளது “காமத்தின் ஆதிக்கத்தில் ஆணுக்குள்ள சுதந்திரம் கட்டுப்பாடற்றதாகவும் பெண் இல்லோம்பும் பண்புடையவள் என்ற கட்டுக்குள் பூட்டி வைக்கும் நிலையை அடைவதையும் காணமுடிகிறது. உடல் துய்ப்புக்கான ஒரு களமாகப் பெண்ணைக் கருதும் மருதத்திணைப் பண்பாட்டில் பெண் உடல் காமத்தின் அடையாளமாக்கப்பட்டு அவளுக்கான சுதந்திரம் பறிக்கப்படுகின்றது” (மோ.செந்தில் குமார்,பெருவெள்ளமும் நீர்த்திவலைகளும், ப.60) இவ்வாறாக இன்பம், காமம் எல்லை வரையறைக்குள் அடங்குவதில்லை. எனினும் களவுக்காலத்தில் தலைவன் காமத்தை வெளிப்படுத்துவதால் தலைவி மறுத்து தன் காமத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள் என்றாலும் தன்வேட்கையைச் சொல்லாத தலைவியின் கண்களில் காமம் இருந்தே தீரும் என்பதைத் தொல்காப்பியம் கூறுகிறது. “காமம் சொல்லா நாட்டம் இன்மையான் ஏமுறு இரண்டும் உளவென மொழிப” - (1055) என்று விளக்குகிறது. கற்புக் காலத்தில் தலைவி உயர்ந்த நிலையைப் பெற்றுவிடுகிறாள். அதாவது, தலைவனது காமத்தைத் தீர்ப்பவளாகவும் சமூகப் பொறுப்பில் அக்கறை உள்ளவளாகவும் மாறுகிறாள். மேலும் தாய்மை என்ற உணர்வைப் பெறுவதன் மூலம் குடும்ப நிறுவனத்தைத் தாங்குகிறாள். விருந்தினரையும் விருந்துக்கு வருபவரையும் நன்முறையில் போற்றுகிறாள். ‘கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்’ என்று தொல்காப்பியர் வகுத்த, பெண்ணின் மாண்புகளைத் துரைசீனிச்சாமி சுட்டிக்காட்டுகிறார். தலைவனது காமம் சில நேரங்களில் மூர்க்கத் தன்மையோடு வெளிப்படும். தலைவிக்கு இத்தகைய காமம் ஏற்படும் என்றாலும் தலைவி தாய் என்ற நிலையில் செயலடங்கியவளாகிறாள். தலைவன் செயலூக்கம் உள்ளவனாகவும் காணப்படுகிறான். (ஆண்மையின்) செயலூக்கத்தின் உள்ளடக்கம் காமம் என்றால் வெளி நடத்தை மறம் / வீரம் மூர்க்கம் இயல்பூக்க உணர்வாக வெளிப்படுவதைப் (போர், படையெடுப்பு) புறத்திணைகள் வழியே அறிகிறோம். காமம் என்பது வாழ்வூக்க உணர்வின் வெளிப்பாடு. மூர்க்கம் சாவியக்க உணர்வின் வெளிப்பாடு என்பதை, ப்ராய்டின் இருமைவாத உள்ளுணர்ச்சிக் கோட்பாட்டின்படி “வாழ்வு - சாவு,காமம் - மூர்க்கம், ஆக்கம் - அழிப்பு ஆகிய இருநிலை வேற்றுமை (binary opposition) உள்ளுணர்ச்சிகள் நனவலிக்குள் அமைந்திருக்கின்றன” (மேற்படி,ப.228) மனித வாழ்வில் இருவகையான இயல்பூக்கங்கள் செயல்படுகின்றன. ஒன்று வாழ்தல் இயல்பூக்கம், மற்றொன்று சாதல் இயல்பூக்கம், பசி, தாகம், இனப்பெருக்கம், பாலியல்பு இவை அனைத்திலும் வாழ்தலுக்கானவையாகும். போர், பேரழிவுகள், ஆக்கிரமிப்பு, கற்பழிப்பு (காமவெறி) இவையாவும் சாதலுக்கான இயல்பூக்கமாகவும் அமைகின்றன" (மரகதமணி, மேற்படி, ப.38) வாழ்வூக்கமும் சாவூக்கமும் எதிரிடைகள் என்றாலும் இவற்றில் எது வலிமை பெறுகின்றதோ அதுவே உள இயக்கத்தின் பெரும் பகுதியை ஆளுகை செய்யும். இதனால் தற்காலத்தில் நாசங்களும் அழிவுகளும் ஏராளமாக ஏற்படுகின்றன. “வாழ்வுணர்ச்சிகள் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்;காகவும் மற்றவரோடு இயைந்து செயல்படுவதற்கு உந்துபவையாகும். சாவுணர்ச்சிகள் அழிப்புச் செயலை மேற்கொள்வதற்காக உந்துபவையாகும்” (சிக்மண்ட்ஃப்ராய்டு உளப்பகுப்பாய்வு அறிவியல், ப.231) அதாவது, வாழ்வூக்க உணர்வுக்கும் சாவூக்க உணர்வுக்கும் இடையிலான போராட்டமே வாழ்க்கை என்பதைப் ப்ராய்டு விளக்குவதை துரை சீனிச்சாமி சுட்டிக்காட்டுகிறார். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் வாழ்க்கை நிலையாமை காரணமாக, தலைவனுடைய காமமும் மூர்க்கமும் மடைமாற்றம் செய்யப்படுகின்றன. தலைவனும் தலைவியும் சமூக நனவலியை உள்வாங்கிக் கொண்டதன் காரணமாகக் குடும்ப உறவுகள் மேன்மையடைகின்றன. இதனை, தொல்காப்பியர் உலகத் தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக பொருளதிகாரத்தில் (1138) கூறுகிறார். இருவரது காமமும் அடங்கிய நிலையில் சிறந்தது பயில வேண்டும் என்கிறார். வாழ்க்கையின் தத்துவத்திற்குத் தலைவன் தலைவியின் காமம், அக இலக்கணமாக்கப்படுகிறது. வாழ்க்கை முடிந்து துறந்து அறம் செய்து வாழ்கின்ற பெருவாழ்வு போன்ற பெருந்தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.மேலும், குடும்பம் என்ற நிறுவனத்திற்கு தேவையான அளவில் கட்டுப்படுத்தப்பட்ட பெண்ணின் காமம் மற்றும் பிறசெயல்பாடுகள் உயர்ந்த ஒரு வாழ்க்கைத் தத்துவம் போன்ற கட்டமைவைத் தொல்காப்பியம் காட்டுகிறது (ப.39) என்கிறார். இவ்வாறாக ப்ராய்டின் உளவியல் ஆய்வின் மூலம் குடும்பத்திற்குள் எல்லாக் காலங்களிலும் நிலவும் வன்முறையை புரிந்து கொள்ளமுடியும். தலைவனின் மூர்க்கத்தனமாகிய வன்முறையை, தாய்மை உணர்வும் கற்பு மேம்பாடும் உடைய தலைவி பொறுத்துக் கொள்வதன் மூலம் குடும்பத்திற்குள் ‘அமைதி’ நிலவச் செய்கிறாள். அதாவது குடும்பம் சிதையாமல் காப்பாற்றுகிறாள். தாய்வழிச் சமூகமுறை மாறி ஆணாதிக்கச் சமூகமாகிய தந்தைவழிச் சமூகம் நிலவும் காலம் முழுவதும் பெண் ஆணுக்கு அடிமைப்பட்டே வாழ நேர்ந்திருக்கிறது. பஞ்சாங்கம்: ‘நிலமும் பொழுதும் மனிதவயப்படுதலும் திணைக்கோட்பாடும்’ என்ற தன் கட்டுரையில் பஞ்சாங்கம், பகுத்தறிவு வாய்ந்த மனிதனுக்கு முன்னால் இயற்கை, ஆற்றலால் விரிந்து கிடக்கிறது. இயற்கையைத் தன் ஆளுகைக்குள் மனிதன் கொண்டு வருகிறபோது இயற்கை மனிதவயப்படுகிறது. மனிதனும் இயற்கை வயப்படுகிறான். இயற்கையை விட்டு விலகி வாழ்கிற போது மனிதன் அந்நியப்பட நேர்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனிதவாழ்வு வளம் பெறும் என்கிறார். (த.நே.40,ப.99) இயற்கை மனித வயப்படுதல்: மனிதன் முதலில் தன் ஆளுகையை நிலத்தின் மீதே தொடங்குகின்றான். நிலம் எந்த வரையறைக்குள்ளும் இல்லாமல் விரிந்து பரந்து கிடக்கும்போது அதனைத் தனக்கானதாக மாற்றிக் கொள்கிறான். மலைசார்ந்த பகுதியை குறிஞ்சி என்றும், காடு சார்ந்த பகுதியை முல்லை என்றும், வயல் சார்ந்த பகுதியை மருதம் என்றும், கடல் சார்;ந்த பகுதிகளை நெய்தல் என்றும் வறட்சி நிலவும் பகுதிகளை பாலை என்றும் பெயரிட்டு நிலத்தை மனிதன் தன் புரிதலுக்குள் அடக்கிக் கொள்கிறான். இதனை, “தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்திற்கும், பெயரிட்டு, மனித மூளைக்குள் ‘தகவல் மையமாகச்’ சேகரித்து வைத்துக் கொள்ளும் போதுதான் சூழல் மனிதர்களின் ஆளுகைக்குள் ஆட்படத் தொடங்குகிறது” (மேலது,ப.100) என்கிறார் பஞ்சாங்கம். இப்படிச் செய்வதன் மூலமே நிலத்தின் மேல் மனிதன் தன் ஆளுகையைச் செயல்படுத்த முடியும். ஐந்திணைகளாகிய நிலங்களின் மீது மனிதன் தன் ஆளுகையைப் பதிக்கும் போதே மனிதனும் நிலவயப்படுகிறான். திணைகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவுகள் இத்தகையவை. நிலத்தைப் பாகுபடுத்திப் புரிந்துகொள்வது போலவே, பொழுதையும் பெரும்பொழுது, சிறுபொழுது எனப் பிரித்திருந்தான். ஒவ்வொரு திணைக்கும் முக்கியப் பொருளாகக் காலத்தை வகுத்தான்;. கருப்பொருளையும் நிலத்திற்கு ஏற்பப் பெயரிடுவதன் மூலம் மனிதன் நினைவு மண்டலத்திற்குள் ஆழமாகப் பதிந்து வைத்துக்கொள்கிறான். நிலமும் பொழுதும் மட்டுமல்லாது ஆண், பெண் உறவில் சமூகவாழ்வில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் நிலத்தோடும் அதன் பொருட்களோடும் இணைத்து ஒரு காட்சிப் படிமத்தை ஏற்படுத்திக் கொண்டான். மனித வாழ்வில் ஏற்படும் சோகம், துயரம், போன்ற காட்சிகளைப் பாலை நிலத்தோடும் கொடிய விலங்குகளோடும் ஒப்புமைப்படுத்தி உள்ளான். இன்பமான வாழ்வுக்கு வளமான மருதநிலத்தையும் அங்கு நடைபெறும் பொழுது மற்றும் கருப்பொருளையும் இணைத்துக் கொண்டான். இவ்வாறாக நிலப் பொருட்கள் அனைத்தின் மீதும் மனித உணர்ச்சிகளை ஏற்றி மனித வயப்படுத்தியுள்ளான் என்கிறார் பஞ்சாங்கம். மனிதன் இயற்கைவயப்படுதல்: ஓவ்வொரு நிலத்திற்கும் ஒரு குணம் உண்டு. அந்த நிலத்தின் குணத்திற்கு ஏற்பவே திணைக்கோட்பாட்டை வகுத்தனர். எனவே, நிலம் சார்ந்துதான் மனிதனின் குணமும் அமைகிறது. மனிதர்களையும் தெய்வங்ளையும் இந்நிலம் சார்ந்தே வகுத்துள்ளனர். குறிஞ்சி நிலத்தை சேர்ந்தவர்கள் குலத்தால் குறவன், குறத்தி என்றும் தலைமக்கள் வெற்பன், சிலம்பன் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். முல்லை நிலமக்கள் ஆயர், வேட்டுவர் என்றும் தலைமக்கள்நாடன் என்றும் மருதநில மனிதர்கள் உழவர், உழத்தியர் என்றும் தலைமக்கள் ஊரன், மகிழ்நன் என்றும் நெய்தல் நிலத்தில் நுளையர், நுளைச்சியர் என்றும் தலைமக்கள் சேர்ப்பன், துறைவன் என்றும் பெயர் பெற்றதன் மூலமும் நிலத்தைச் சார்ந்த மனிதர்களாக தம்மை அடையாளப்படுத்துவதன் காரணமாக நிலம் மனித வயப்படுகின்றது இதனை, “நிலத்தை மனிதமயப்படுத்த முயன்ற மனிதர்கள் தாங்களும் நிலவயப்படுத்தப்பட்டனர். மனிதர்களைக் கூட இவ்வாறு நிலவயப்படுத்தி நிலத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் மனிதர்கள் மாபெரும் நிலப்பரப்பைத் தனது அதிகாரத்திற்குள் தமது ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர்” (ப.102) என்கிறார் பஞ்சாங்கம். இன்றைக்கு ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகள் நிலம் சார்ந்ததே. மனிதர்கள் தங்கள் நிலம் சார்ந்து வாழ முடியாதவர்களாக வேர்களை இழந்தவர்களாக பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மனிதன் மீண்டும் இயற்கைக்குத் திரும்புவதன் மூலமே தனக்கு வளமான வாழ்வைப் பெறமுடியும் என்கிறார் பஞ்சாங்கம். மனிதன் நிலத்திலிருந்து விலகி நகரவாசியாகிறான் நாட்டை விட்டும் வெளியே செல்கிறான். நிலத்தோடு, இயற்கையோடு, சொந்த உறவோடு அவன் இல்லை. எல்லாவற்றிலிருந்தும் இவன் அந்நியப்படுகிறான். தனக்குள் சுருங்கியுள்ளான். இது இன்றைய அவலத்திற்குக் காரணம்.இதிலிருந்து விடுபட வேண்டுமானால் இவன் இயற்கைக்குத் திரும்ப வேண்டும். இவனால் திரும்ப இயலுமா? என்பதும் கேள்வி. திரும்ப வேண்டுமென்று நினைத்து திரும்ப இயலாத நிலையில் மேலும் இவன் அவலத்திற்குள்ளாகிறான். இது இன்றைய மனிதனின் நிலை. மனிதர்கள் தாம் சார்ந்த நெடுங்கால வரலாற்றினுள் இயற்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அதைப் பயன்படுத்தும் திறன் பெறுகின்றனர். அதேசமயம் இயற்கை வயப்படுத்துவதும் நேர்கிறது. இயற்கை மனிதவயப்படுவதும் நேர்கிறது.இயற்கையும் மனிதனும் இவ்வாறு ஓர் ஊடாட்டத்தில் இருக்கின்றனர். மனிதனுக்குள் இயற்கை செல்கிறது. இயற்கைக்குள் மனிதன் செல்கிறான். இந்த ஊடாட்டம் எக்காலத்திலும் இயல்பாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையானால் மனிதன் தன் வேர்களை இழக்க நேரிடும். இயற்கையைப் பாதுகாப்பதாகச் சொல்லி இயற்கையை நாசமாக்கி, தன்னையும் அழித்துக் கொள்;கிறான். தத்துவார்த்தமான இந்த உண்மையை பஞ்சாங்கம் தன் கட்டுரையில் வெளிப்படுத்துகிறார். சங்க இலக்கிய ஆய்வுகள் என்னும் இந்த ஆய்வுக் கட்டுரைக்குப் புறனடையாக இரண்டு கருத்துகளைச் சுட்டுவது பொருத்தமாகும். நேரிடையாக இவை சங்க இலக்கியம் பற்றிய ஆய்வாக இல்லை. ஆனால் சங்க இலக்கிய ஆய்வுக்கு ஒரளவு தேவையான கருத்தாகவும் இவற்றைக் கொள்ளலாம். நா. நளினிதேவி: களையப்பட வேண்டிய மாயைகள்: தமிழியல் ஆய்வுகளை அறிவியல் அடிப்படையில் செய்வதன் மூலம் தான் உண்மையான தமிழ்ப் பெருமைக்கு இடம் ஏற்படும். நெடுங்காலமாகத் தொடர்ந்து வந்த புனைவுகளின்; அடிப்படையில் ஆய்வுகள் அமைய முடியாது. இறையனார் களவியல் உரை கூறும் முச்சங்கங்கள் உண்மை இல்லை. குமரிக்கண்டத்தில் மக்கள் வாழ்ந்தனர் என்பதும் அறிவியல் ஆய்வுக்கு ஒத்த முடிவன்று. இவையெல்லாம் ‘அகற்றப்பட வேண்டிய ஆரிய மாயைகள்’ (த.நே.37,ப.52.) என்று தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்;. மேலும் அவர் “இலக்கியங்கள், இலக்கிய ஆய்வுகளின் அடிப்படையில், நாம் இதுகாறும் கொண்டிருந்த தமிழின் தொன்மை, அண்மைக்கால அகழ்வியல், நிலவியல், மனிதஇயல் முதலியவற்றின் அடிப்படையில் இன்னும் தொன்மை வாய்ந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் துணைக்கொண்டு, நாம் பழைய ஆய்வுகளை மீளாய்வு செய்தோமாயின் தமிழின் உண்மையான தொன்மை நடுவணரசுக்கு மட்டுமன்றி உலக மேடையிலும் அறியப்படும்” என்கிறார். முன்னைய ஆய்வுகள் அவ்வக்காலச் சமுதாயப் பின்னணி, அரசியற் பின்புலம் போன்றவை சார்ந்ததாக அமைந்திருக்கின்றன. இவற்றைக் களைந்து தற்கால வளர்ச்சிக்கு ஏற்றாற் போல ஆய்வியல் அணுகுமுறைகள் அறிவியல் வளர்ச்சி மற்றும் ஒப்பியல் ஆய்வு போன்ற மாற்றத்தின் மூலம் மறுஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்பதை முன்வைக்கிறார். வடமேற்கு ஐரோப்பாவிலிருந்து வந்தவர் ஆரியர். வரும் வழியில் இந்த இனம் கலப்புற்ற இனமாகவே வந்தது. சமற்கிருத மொழியில் உள்ள நூல்களை மொழிபெயர்த்தவர் மார்க்சுமுல்லர். இவர், ‘ஆரியர் ஒரு தனி இனம் என்றும் அறிவு முதலிய துறைகளில் மேம்பட்டவர்’ என்றும்; கற்பனைகளைப் புகுத்தினார். ஆரியர் பற்றிய புகழுரைகள் தென் இந்தியாவில் எதிர்வினை என்ற முறையில் திராவிட பெருமைக்குக் காரணமாயிற்று. “கார்டுவெல்லும் மார்க்சுமுல்லரும் தொடங்கி வைத்த ஆரியர், திராவிடர் வேறுபாடு தமிழகத்தில் இன்றளவும் தீர்க்க இயலாத சிக்கல்” (ப.55), என்று கூறும் ஆசிரியர் இவ்வாறு ஆரிய மாயைகளைப் போலவே தமிழ் மாயைகளைக் களைவதன் மூலமே சரியான தமிழ் வரலாறு எழுதமுடியும் என்கிறார். அரசர்களின் வரலாறு தமிழ் வரலாறாக முடியாது. உண்மையான மக்களின் வரலாறுதான் இன்று தேவை. செம்மொழி இலக்கியங்கள் என வரையறை செய்யப்பட்ட நாற்பத்தியொரு இலக்கியங்கள் மறுஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். இவைகளினுள்ளும் கால இடைவெளி அதிகம். சங்க இலக்கியத்தினுள்ளும் அசலான செவ்வியல் இலக்கியம் குறித்து ஆய்வுத்தேவை என்று கூறும் நளினிதேவி “தமிழ் இலக்கிய உலகு தொல்லியல் மற்றும் அகழாய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகளையும் உளம் கொண்டு தமிழின் தொன்மை முதலான கூறுகளை உறுதிப்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சிகளைத் தொடரவேண்டும்” (ப.57) என்பதை வலியுறுத்துகிறார். செம்மொழியின் காலம் 1500 ஆண்டுகள் என்பதும் உண்மையில்லை. தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் தமிழின் தொன்மை அறியப்படவேண்டும். இத்தகைய ஆய்வுகளால் தமிழின் தொன்மை மேலும் பல நூற்றாண்டுகள் தள்ளிப்போகும் என்பதும் உறுதிப்படுகிறது. மாயைகளைப் போலவே தமிழ் மாயைகளும் தமிழ் வளர்ச்சிக்கு உதவா என்பது இவரது உறுதியான கருத்து. இவர் கருத்தை ஏற்பதில் தடையாக இருக்க முடியாது. உலக நாகரிகத்திற்கு மூலம் தமிழ் நாகரிகம் தானா? என்ற ஆய்வும் தேவைப்படுகிறது. பொ.வேல்சாமி: வேதகாலம் - மார்க்சுமுல்லரின் தவறான மதிப்பீடு!: நளினிதேவி ஆய்வைப்போலவே வேலுசாமியின் சில ஆய்வுகளும் அறிவியல் அடிப்படையைக் கோரும் ஆய்வுகளாக அமைந்தவை. ‘தத்துவம்’ (த.நே.40.ப.17) என்ற இவரது கட்டுரையில் மார்க்சுமுல்லர் வேதகாலம் என்பது கி.மு.1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார். இதன் உண்மைத் தன்மையைக் கேள்விக்குட்படுத்துகிறார் வேலுச்சாமி. கௌதம புத்தரது காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டு. கௌதம புத்தரின் கருத்துரைகள் எனப் பிற்காலத்தில் தொகுத்த அவருடைய சீடர்களின் நூல்களில் வேதங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றைப் புத்தரே தம் கருத்துரைகளில் கூறினார் என்ற அடிப்படையில் மார்க்சுமுல்லர் வேதகாலத்தை கி.மு.1500 என்று வரையறை செய்தார். இதை ஏற்பதற்கில்லை. என்கிறார் வேலுச்சாமி. வேதங்களின் பகுதிகளாகிய சங்கிதை, பிரமாணங்கள், உபநிடதங்கள் இவை ஒவ்வொன்றின் வளர்ச்சிக்கு இடையிலும் இருநூறு ஆண்டுகள் நடந்திருக்க வேண்டும் என்று மார்க்சுமுல்லர் கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கருதுகிறார் வேல்சாமி. மார்க்சுமுல்லர் கருத்தையே பிறகு வந்த ஆய்வாளர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர் என்பது வியப்புக்குரியதாகத் தோன்றுகிறது. மார்க்சுமுல்லரின் கருத்தை மறுப்பவர்களைக் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகிறார் வேலுச்சாமி. “1893 ஆம் ஆண்டில் ஜகோபி என்ற ஜெர்மானியரும், பாலகங்காதர திலகரும் வேதகாலம் கி.மு.4500 - கி.மு.6000 என்று கூறுகின்றனர்” இக்காலப்பகுதிகளையும் ஏற்றுக்கொள்ளாத ஹெர்டஸ் என்ற அறிஞர் “வேதகாலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு என்று கூறுவதையும்” (ப.23) எடுத்துக்காட்டுகிறார். வடமொழியில் வேதங்களில் இருபதிற்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் இருப்பதைக் கால்டுவெல் கண்டுபிடித்துக் கூறினார். இதிலிருந்து வடமொழிக்கு முன்பே, தமிழ் இருந்தது எனலாம். (செவ்வியல்மொழி தமிழ், ப.111) இன்னொரு கருத்தையும் வேலுச்சாமி உறுதியாக முன்வைக்கிறார். கி.பி.1835க்கு முன்னரே வடமொழியிலுள்ள பெரும்பாலான நூல்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இத்தகைய வாய்ப்பு தமிழுக்குக் கிட்டவில்லை. இதன் காரணமாக ஆரியரது செல்வாக்கு மேலோங்கியது. ஆங்கிலேயரும் ஆரிய இனத்தவரோடு தம்மை இனங்கண்டனர். மார்க்சுமுல்லர்தன் இறுதிக்காலத்தில் ‘தென் இந்தியாவில் வழங்கிய தமிழைத் தன் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லையே’ என்று வருந்தியதாகக் கூறப்படுவதை வேலுச்சாமியின் கருத்தோடு சேர்த்துக்கொள்ளலாம். சமற்கிருதத்திற்குக் கிடைத்த வாய்ப்பு தமிழுக்குக் கிடைக்கவில்லை. எனவே, “இந்திய வரலாறு பற்றிய நூல்கள் எழுதிய அறிஞர்கள் நம்முடைய தமிழ் நூல்களில் உள்ள செய்திகளைத் தங்களுடைய ஆய்வுக்கான தரவுகளாகக் கைக்கொள்ளவே இல்லை”என்று கூறும் வேல்சாமி மேலும் “ஏ.எல்.பாசாம், கவிரா ஜெய்ஸ்வால், ஆர்.எஸ்.சர்மா போன்றவர்கள் தமிழ்ப் பகுதிகளில் ஆர்வங்காட்டினர். எனினும் அவர்களுக்குத் தமிழ்மொழியில் பயிற்சி இன்மையாலும் தமிழ் நூல்களில் பொதிந்துள்ள இத்தகைய பகுதிகள் அவர்களுக்குப் புரியும்படியான மொழிபெயர்ப்புகளில் தரப்படாமையாலும் இந்தியாவைப் பற்றிய ஆய்வுகளில் தமிழ்மொழித் தனக்கான இடத்தைப் பெறமுடியவில்லை” (ப.25) என்பதை எடுத்துக்காட்டுகிறார். மார்க்சுமுல்லர் வேத காலம் பற்றிச் சொன்ன கருத்து ஒருவகையில் ஆரிய மாயை இதை வேலுச்சாமி சுட்டிக்காட்டுகிறார். மார்க்சு முல்லரே தமிழ் பண்பட்ட மொழி என்று கூறுவதையும் நினைவுகூரலாம். தொகுப்புரை: - உலகமயமாதல் காரணமாக ஐந்திணை நிலங்கள் பாழ்பட்டன. மனித வாழ்வு அன்பையும் அறத்தையும் இழக்க நேரிட்டது. மனித வாழ்வு தன்னை மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்ள சங்க இலக்கியக் கல்வி இன்றியமையாத ஒன்றாகும். - சங்க இலக்கியம் மக்கள் வாழ்வின் உயிர்நாடியான உழவை முன்னிறுத்தியதால் மக்கள் இலக்கியம் ஆயிற்று. சங்கச்சான்றோர் வறுமை நிலையிலும் செம்மையாக வாழ்ந்தனர். - சங்கஇலக்கியத்தில் யானை, மான், குரங்கு, போன்ற விலங்குகளின் வாழ்விலும் அன்பு தழைத்திருப்பதைச் சுட்டிக்காட்டும் பொழுதே இவ்வகைஇலக்கியங்களைக்கற்பதால் மக்கள் வாழ்விலும் அன்பு தழைக்கும். - இயற்கையோடு தமிழன் நெருக்கமாக இருந்த காலத்தில் தோன்றியது தமிழ். சங்கச் சான்றோரின் உளநலத்தால் அழகுபடுத்தப்பட்டது சங்க இலக்கியம். இவ்வகை இலக்கியம் மீண்டும் தமிழனை உயிர்ப்பிக்கும். மனித வாழ்வின்அவலத்திலிருந்து விடுவிக்கும் என்ற கருத்துப்பெறப்பட்டது. - சங்க இலக்கியக் கல்வியின் தேவை வேறொரு வகையில் விளக்கப்பட்டது. பொதுவாகஇலக்கியம் கற்பதனால் மனித ஆளுமை மேம்படும். வாழ்க்கை வளமாகும் என்ற பொதுஉண்மை, சங்க இலக்கியக் கல்விக்கும் பொருந்தும். - சங்க இலக்கிய ஆய்வுக்கு இக்காலத்தில் புதிய அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. மரபு முறையிலிருந்து பெரும்பாலும் மாறுபட்ட நோக்கில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. - கிரேக்கம், இலத்தீன், சீனம், சமஸ்கிருதம் ஆகிய செவ்வியல் மொழிகளிலிருந்து தமிழ் எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் பிற செவ்வியல் மொழிகளைப் போலன்றி, தமிழ்மக்கள் வாழ்வோடும் இயற்கையோடும் இணைந்த மொழியாக, தமிழ், கவிதை மொழியாக விளங்குகிறது. - சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் சில கூறுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பட்ட சங்க இலக்கியத்தினுள்ளும் காணப்படுகின்றன. - தொல்காப்பியர் கூறும் திணைக்கோட்பாடு பற்றிய ஆய்வை மரபுமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையில் முன்வைக்கப்பட்டது. அய்யப்பப் பணிக்கர், தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை சங்க இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உலகில் எவ்வகை இலக்கியத்திற்கும் பயன்படுத்த இயலும் என்ற முறையில் திணைக்கோட்பாட்டின் மூன்று முக்கிய உறுப்புகளாகிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை விரித்துரைக்கமுடியும். ஆநவெயட டுயனௌஉயிந என்று அய்யப்பப் பணிக்கர் குறிப்பாகச் சுட்டியதைப் படைப்பாக்க நெறி எனக் கொள்ளலாம். - மருதத்திணை, குறிஞ்சி, முல்லை, நெய்தல், ஆகிய திணைகளைத் தனக்குள் உள்வாங்கிக் கொள்வதன் மூலம் திணை மயக்கமாவதோடு வளர்ச்சி பெறுகிறது. பிறதிணைகளின் எச்சங்களை உள்வாங்கியதோடு நாளடைவில் முரண்பாடுகளின் அடிப்படையில் சமயம் தோற்றம் பெறுகிறது. தொல்காப்பியத்தில்; இடம்பெறும் பெண்மை என்பது ஆணாதிக்கத்திற்கு உட்பட்ட பெண்ணின் இயல்பை சுட்டும் நவீன ஆய்வியல் நோக்கில் பெண்ணியம் பேசப்படுவதிலிருந்து வேறுபட்டது என்பதையும் காணமுடிகிறது. - காமம் என்பதில் ஏற்படும் முரண், தலைவனுக்கு காமச் சுதந்திரமும், தலைவிக்கு கட்டுப்பாடும் இருப்பதையும் காணமுடிகிறது. தலைவனிடம் வெளிப்படுவது மூர்க்கத்தனம் தலைவியைப் பொருத்தவரை தாய்மை என்ற உயர்ந்த பண்பு காணப்படுகிறது. வாழ்வூக்கம், சாவூக்கம் என்ற ப்ராய்டின் கோட்பாட்டை முன் வைத்து, காமம் வாழ்வூக்கம், மூர்க்கத்தனம் சாவூக்கம் என்றும் விளக்கப்படுகிறது. இத்தகைய ஆய்வுத்தமிழுக்குப் புதியது. - ஐந்திணைகள் என இயற்கையை பிரித்தவன் மனிதன். நிலத்தைப் பிரித்து பெயரிடுவதன் மூலமே மனிதனின் ஆளுகைக்குள் நிலம் வசப்படும். அதேசமயம் நிலம் மனிதவயப்படும். மனிதனும் நிலவயப்படுவான். இதன் மூலம் ப்ரபஞ்சத்தில் அறிவார்ந்தவனாக வளர்ந்திருக்கிறான். - தமிழியல் ஆய்வுகள் அறிவியல் அடிப்படையில் நடைபெற வேண்டும்குமரிக்கண்டம், முச்சங்கள் முதலியவை தமிழ் மாயைகள் என்பதும், செம்மொழி ஆய்வுகள் இம்மாயைகளிலிருந்து விடுபடுவதன் மூலமே சிறப்படையும். வேதத்தின் காலம் கி.மு.1500க்கு முற்பட்டது. அத்துடன் வடமொழி நூல்கள் கி.பி.1835க்கு முன்னரே ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றதையும், இது போன்ற வாய்ப்பு தமிழுக்குக் கிட்டவில்லை. இவ்வகை ஆய்வுகளும் நவீன காலத்தில் நடைபெறும் புதுவகையான ஆய்வுகள். - நிகழ் காலத் தேவைகளை ஒட்டிப் புதிய பார்வைகளை முன்வைத்துச் செய்யப்படும் சங்க இலக்கிய ஆய்வுகள் தமிழ் வாழ்வை மேம்படுத்தும். தமிழறிஞர் வாழ்வும் பணியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலமும் இடைக்காலமும் தமிழின் எழுச்சிக்காலம் என்று சொல்லும் சிறப்பை உடையது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை எனத் தொடங்கி இவர்களுக்கு முன்னும் பின்னும் எத்தனையோ தமிழறிஞர்கள்தமிழின் வளத்தையும், தமிழியல் ஆய்வையும் மேம்படுத்தினர். மனோன்மணியம் சுந்தரனார், இராகவையங்கார், வையாபுரியார், தெ.பொ.மீ., அப்பாத்துரையார் போன்றவர்கள் இவ்வகை ஆக்கத்தில் முன்நின்றவர்கள் என்று குறிப்பிடலாம். மறைமலைஅடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் வழியில் தோன்றிய தனித்தமிழ் இயக்கம் குறிப்பிடத்தக்கது. சி.பா.ஆதித்தனார், ம.பொ.சிவஞானம் ஆகியவர்களின் வழியில் தமிழ்அரசியல் இயக்கம் தோன்றியது. வ.சுப.மாணிக்கம், மு.வ., அ.ச.ஞா., வ.அய்.சுப்பிரமணியம் போன்றோர்களும் சிறந்த ஆய்வாளர்களாகத் திகழ்ந்தனர். நா.வானமாமலை, க.கைலாசபதி, க.சிவத்தம்பி ஆகியவர்கள் தமிழியல் ஆய்வில் மார்க்சியப் பார்வையைப் புகுத்தி தமிழியல் ஆய்வை விரிவுசெய்தனர். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை மெய்யாக்கிப் பிறநாட்டு இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்து வழங்கியவர்களும், இறவாத புகழுடைய புதிய நூல்களைத் தமிழில் வழங்கிய தமிழறிஞர்களும் வணக்கத்திற்கு உரியவர்கள். அனைத்திற்கும் மேலாக தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகையில் தமிழின் பெருமையை உலகெங்கும் பரப்பியவர்களும் போற்றத்தக்கவர்களாவர். இவ்வாறாக, தமிழ்மொழியின் ஆழம் அறிந்து, தம்புலமையால் சிறப்பாகப் பணியாற்றி, தம்புகழ் நிறுவிச் சென்றவர்கள் தமிழறிஞர்கள். இக்காலத் தமிழறிஞர்கள் என்று க.ப.அறவாணன், தமிழண்ணல், பாண்டுரங்கன், மாதையன், பஞ்சாங்கம், நெடுஞ்;செழியன் எனப் பலரைக் குறிப்பிட முடியும்;. தமிழ்நேயத்தில், தமிழியல் ஆய்வில் ஈடுபட்ட தமிழறிஞர்களின் ஆய்வுப்பணி, களப்பணி குறிப்பிடத்தக்கது. ஐம்பதிற்குப் பிறகு தமிழியல் ஆய்வுத்துறையில் ஈடுபட்டு, செயலாற்றிய, தற்காலத்தில் வாழும் தமிழறிஞர்கள் தம் பணிகளைத் தாமே தொகுத்து வழங்கிய கட்டுரைகள் ‘நானும் என் தமிழும்’ என்னும் தலைப்பில் தனித்தனிச் சிறப்பிதழாக வெளிவந்தது. இவ்விதழ்களில் இடம்பெற்றவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள், போராளிகள் எனப் பல நிலைகளில் பரிணமித்தவர்கள். 1.தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரியும் அதே சமயத்தில் ஆய்வுப் பணியை மேற்கொண்ட தமிழறிஞர்கள் பிற படைப்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். (ம.இலெ.தங்கப்பா, நா.நளினிதேவி, இரா.செல்வி) 2.பிற மொழியில் உள்ள உயர்ந்த இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்ப்பவர்களும், தமிழ்த்திறனாய்வுக்குப் புதுவளம் சேர்ப்பவர்களும், தமிழ் இலக்கியங்களை மேலை இலக்கியங்களோடு ஒப்பிட்டு தமிழின் தனித்தன்மையைக் கோடிட்டு உலகறியச் செய்தவர்களும் அடங்குவர். (க.பூரணச்சந்திரன், ப.மருதநாயகம்). 3.தமிழின் ஆக்கம் என்ற முறையில் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிறமொழிகளுக்கும் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர்களும் (க.பூரணச்சந்திரன், ம.இலெ.தங்கப்பா) உண்டு. 4.தமிழ்ப்பேராசிரியர் என்ற முறையில் ஆற்றும் தமிழ்ப்பணிக்கு அப்பால் சென்று தமிழோடு தொடர்பற்ற பறவைகள் பற்றிய ஆய்வுப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். (க.இரத்தினம்). 5.தமிழிலக்கியப் பணிகளோடு ஆசிரியர்களாகவும் தமிழ்ப் பேராளிகளாகவும் விளங்கிய காலஞ்சென்ற திருமுருகனார், இலக்குவனார் பற்றிய கட்டுரைகளும் இந்த இயலில் இடம் பெறுகின்றன. ம.இலெ.தங்கப்பா: தமிழகம் நன்கறிந்த பாவலராகவும் தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபடுபவராகவும் இன்று நம்மிடையே வாழ்ந்து வருபவர் ம.இலெனின் தங்கப்பா (08.03.1934). பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், பாவலர், படைப்பாளர், தமிழ்ப்போராளி எனப் பல தளங்களில் பயணிப்பவர். பன்மொழி அறிஞர். இளமையிலேயே தன் தந்தையாரிடம் தமிழ்க்கவிதை பற்றியும், பகுத்தறிவுப் பார்வை பற்றியும் அறிந்து கொண்ட இவர் இன்றுவரை அவற்றைக் கடைப்பிடித்து வருகிறார். உயர்நிலைப்பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் வரலாறும், ஆங்கிலமும் பயிற்றுவித்த இவர், கல்லூரியில் இருபது ஆண்டுகள் தமிழ்இலக்கியம் கற்பித்தார். இளமைக்காலத்தில் ஆங்கிலத்தை விரும்பிக்கற்றார். இயல்பாகவே இயற்கை எழிலில் மிகுந்த நாட்டம் கொண்டவராதலால் செல்லி, கீட்ஸ், வோர்ட்ஸ்வொர்த் ஆகியவர்களின் பாடல்கள் இவரை ஈர்த்தன. (த.நே.45,பக்.4,5) இயற்கை நலம்: தங்கப்பாவின் பாடல்களில் இயற்கை, தமிழர்நலம், சுற்றுச்சூழல், வாழ்வுநலம், விழிப்புணர்வு, மாந்தரிடையே நல்லுறவு பேணுதல் போன்ற சிந்தனைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இவரது இயற்கை ஈடுபாட்டிற்குச் சான்றாக ஒரு பாடல், எளிமையும், இனிமையும் இயற்கையழகும் பயின்று வருவதைக் காணலாம். ’விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில் விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில் பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில் புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில் தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில் தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே, அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள் அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே. (மேலது, ப.66) இயற்கையோடு இயைந்த வாழ்வே உயரியவாழ்வு என்பது இவர் கருத்து. மாணவர்களுக்கு இயற்கை அழகையும், சுற்றுச்சூழலைப் பற்றிய புரிதலையும் உணர்த்தும் முறையில் விடுமுறை நாட்களில் மிதிவண்டியில் மாணவர்களோடு பயணம் மேற்கொண்டார். இது குறித்து இவருடைய மாணவரும் எழுத்தாளருமான பாவண்ணன் கூறுவதாவது:‘மாணவர்கள் வெறுமனே கல்வி கற்கும் எந்திரங்களாக இருக்கக்கூடாது என்பது அவர் எண்ணம். இயற்கையைப் பற்றி நிறைய சொல்வார். ஞாயிறுகளில் பல ஆர்வமுள்ள மாணவர்களை அழைத்துக்கொண்டு சைக்கிளிலேயே புதுச்சேரிக்கு அருகில் இருக்கிற இயற்கை வளம் உள்ள இடங்களுக்கு அழைத்துக் செல்வார்’ (த.நே.2, ப.21) என்கிறார். ஆந்தைப்பாட்டு: தொடக்கக்காலத்தில் பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு இல்லை எனினும் பாரதியின் குயில்பாட்டைப் படித்த போது அதன் அழகில் மயங்கினார். அவ்வாறு தானும் ஒரு பாட்டைப் பாடவேண்டுமென்று விரும்பி ஆந்தைப்பாட்டை இயற்றினார். குயிலின் குரல் இனிமையானது. ஆந்தையின் குரல் இனியதன்று. அதன் தோற்றமும் அழகன்று என்பதற்காக ஆந்தையை வெறுக்க முடியாது. அன்போடும் நுண்ணுணர்வோடும் இயற்கை மீது ஈடுபாட்டோடும் நோக்கினால் அதனையும் சுவைக்கலாம். சுடுகாடுகளும், இடுகாடுகளும் நமக்கு எத்தனையோ மெய்ம்மைகளை உணர்த்துகின்றன. இத்தகைய உணர்வுடையது ஆந்தைப்பாட்டு என்கிறார். ‘மன்னும் உயிர் வகையுள் மாந்தர் சிறப்பென்பார்: பன்னுமுயிர் நாகரிகப்பாங்கில் உயர்வென்பார்: ஆயினுமென் பட்டறிவால் ஆய்ந்தபடி நான் சொல்வேன் தீயவர்காண் மாந்தர்: செயலால் மிக இழிந்தோர். கூனல் நிமிர்ந்து குரங்குநிலை போனாலும் மானிடரின் கீழ்மை மறைக்குந் தரமாமோ? காட்டு விலங்கினிலும் கானகத்துப் புள்ளினும் மேட்டுக் குடிமாந்தன் மிக்க இழிஞனடா’ (உயிர்ப்பின் அதிர்வுகள், ப.56) புயற்பாட்டு: பரமக்குடியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பெரும்புயல்காற்று அடித்தது. பள்ளியில் உடன் இருந்த ஆசிரியர் ஒருவர் புயல் பற்றிப்பாட இப்பொழுது ஆசிரியர் அம்பிகாபதி இல்லையே என்று கூறியதைக் கேட்டு நான் இருக்கிறேன் என்பது போலக் கலிங்கத்துப்பரணியின் பாணியில் புயற்பாட்டைப் பாடினார். (புயற்பாட்டு – கடைதிறப்பு) ‘வங்கக் கடலின் மிசை எழுந்து வளரும் அலையில் நடைபயின்று பொங்கி எழுந்து, தனைவளர்த்த புரையில் கடல்தனை யும் பகைத்துப் பாறை உருவித்திசை உருவிப் பாயும் உரம்சேர் கால் வீசிப் போரை நாடித் துடிப்பார் தம் புயம் கொண்டது அப்புயல் அன்றே’ (மேலது, ப.88) இவற்றோடு தொடக்கத்தில் சிறுகதை, புதினம் என்று எழுதிய இவர் படைப்பிலக்கியத்தைத் தன் வாழ்வின் பணி என வரித்துக்கொண்டார். தங்கப்பாவைப் பொருத்தவரை அன்பு, எளிமை, மாந்தநேயம் என்று வாழ்பவர். வாழ்க்கை: கொடுத்தலே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டவர். ‘வாழ்ககை மீது காதல் கொள்வோம்’ என்று பாடும் இவருக்குள் இருக்கும் காதலைப் புரிந்து கொள்ள முடியும். தமது வாழ்க்கையை காதலித்து மணந்து கொண்டார். இவரது துணைவியார் தடங்கண்ணி அம்மையார். பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். பள்ளி நிர்வாகத்தில் தேர்ந்தவர். ஆகவே புதிய பள்ளிகளைப் புதுவை அரசு ஏற்படுத்தும் பொழுது அப்புதிய பள்ளியின் நிர்வாகத்தைச் செப்பம் செய்யும் முறையில் அரசு இவரை விரும்பி அனுப்பியது. அந்த அளவுக்கு ஆளுமை திறம்மிக்கவராக விளங்கினார். நல்லாசிரியர் விருதும் இவரைத் தேடிவந்தது. பணி ஒய்விற்குப் பின் புதுவை தாய்த்தமிழ்ப்பள்ளியில் ஊதியம் பெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். தங்கப்பாவோடு ஒத்த இயல்புடையவராக விளங்கினார். இருவரும் சமூகப் பற்றாளர்கள். இவர்களது மக்களும் நல்ல தமிழ்ப்பற்றுடையவர்கள். (மேலது,ப.10) மொழிபெயர்ப்புப் பணி: பள்ளியில் பணியாற்றிய போது தன் நண்பர் கோவேந்தன் மூலம் தென்மொழியோடு தொடர்பு கொண்டார். தென்மொழியில் பாடல்களும் கட்டுரைகளும் எழுதினார். தென்மொழியில் பாக்கள் புனைந்த காலம் முதற்கொண்டே ஆங்கிலத்திலும் பாடல்கள் எழுதினார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் அதிகமான மொழிபெயர்ப்புகளைச் செய்தார். பாரதி, பாரதிதாசன் பாடல்களைச் சிறப்பான முறையில் மொழிபெயர்த்தார். இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவிலிருந்து அறுபதிற்கும் மேற்பட்ட பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சங்கஇலக்கியத்தில் ஒன்றான குறுந்தொகையில் பல பாடல்களைத் தெரிவு செய்து ‘’Love stands Alone’, என்னும் பெயரில் மொழிபெயர்த்தார். இந்நூலைப் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டது. முத்தொள்ளாயிரத்திலிருந்து பல பாடல்களைத் தெரிவு செய்து கொண்டு ‘Red Lily and frightened Birds’ என்னும் தலைப்பில் எழுதிய நூலையும் பெங்குவின் வெளியிட்டது. இம்முறையில் படித்த கவிதையை உலகறியச் செய்தவர். நாலடியார் முதலிய நீதிநூல்களிலிருந்து தெரிவு செய்த பாடல்களை’ Tamil Thoughts’ என்னும் பெயரில் வெளியிட்டார். தங்கப்பாவின் மொழிபெயர்ப்பு குறித்து இலக்குவனார் திருவள்ளுவன் கூறுவது: ’பாட்டின் பொருண்மை குன்றாமல், அதேபொழுது பாட்டின் கட்டமைப்பின் ஒழுங்கு குறையாமல் இதை மொழிபெயர்ப்பது மெத்தவும் கடினம். ஆயினும் தங்கப்பாவின் மொழிப்பெயர்ப்பில் இது சாத்தியமாகிறது என்கிறார். (www.akaramuthala.in/modernliterature/katturai/ nkhopg;ngah;g;gwpQh;. ம.இலெ.தங்கப்பா) இவரது பத்து நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்தப் பாடல்களைத் ‘தங்கப்பா பாடல்கள்’ ‘உயிர்ப்பின் அதிர்வுகள்’ என்னும் பெயரில் தமிழினி வெளியிட்டது. இதுவரை இவர் எழுதிய பாடல் நூல்கள் 13, குழந்தைகளுக்கான பாடல் நூல்கள் 3, கட்டுரை நூல்கள் 8, தமிழில் மொழிபெயர்த்த நூல்கள் 3, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்கள் 4, இவர் எழுதிய ‘சோலைக் கொல்லைப் பொம்மை’ என்ற சிறுவர் இலக்கியநூலுக்காக குழந்தை இலக்கியத்திற்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. தமிழ்த்தேசியம்: தமிழர் இன நலனில் பெரிதும் ஈடுபாடும் அக்கறையும் கொண்ட இவர் தமிழ்மக்களின் விடுதலைக்கான தமிழ்த்தேசியத்தை வற்புறுத்துகிறார். தமிழர் ஒருங்கு கூடித் தமிழ்பண்பாட்டைப் பாதுகாத்துப் போரிட வேண்டுமென்றும், தமிழர்களுக்கு இன உணர்வு தேவை என்றும் வலியுறுத்துகிறார். இந்திய தேசியம் தமிழன் உரிமைகளை, தமிழர் நலன்களைக் காப்பதில்லை. எனவே இழிந்த தேசியம் எனச் சாடுகிறார். ஈழத்தில் விடுதலைக்காகத் தமிழ்மக்கள் போராடிய பொழுது அந்தப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு நிறைய பாடல்கள் எழுதினார். போராட்டத்தை இவர் ஏற்றுக்கொண்டவர் எனினும் அது மக்கள் போராட்டமாக இல்லையே என்று வருந்துகிறார். ‘தமிழுக்கொரு தீங்கெனின் புடைத்தெழும் எம் தோள்! தமிழ்நலங் காக்கத் தாவும் எம் கால்கள்! தமிழ்க்குடி புரக்கத் தணலும் எம் நரம்பே ஊறுங் குருதியும் தமிழெனின் மிகுமே காதல் எந்தமிழ்க்குச் சாதலெங்கடனே’ (மேலது, ப.1) தமிழ்ப்பணி: புதுவையில் திருமுருகனாரோடு இணைந்து தமிழ்ப்பணி என்ற முறையில் ஊர்கள் தோறும் நடைப்பயணம் மேற்கொண்டார். புதுவை அரசு தங்கப்பாவுக்கு ‘தமிழ்மாமணி’ விருது அளித்தது. ஆட்சிமொழி தமிழ் என்று சட்டம் இயற்றிய புதுவை அரசு அதைக் கடைப்பிடிக்கவில்லை. குறைந்த அளவுக்கு அரசு ஊழியர்கள் தம் கையெழுத்தைத் தமிழில் இடுவது பற்றிக்கூட அரசுக்குக் கவலை இல்லை. இந்நிலையில் தமிழ்மாமணி என்ற பட்டத்தை அரசுக்கே திருப்பித் தருவதென்று திருமுருகனாரோடு இணைந்து, ஊர்வலமாகச் சென்று விருதைத் திருப்பியளித்தார். தமிழ்வளர்ச்சி நடவடிக்கை குழுவில் இணைந்து புதுவையில் வணிகநிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ‘தெளிதமிழ்’ இதழில் துணையாசிரியராகச் செயல்பட்ட இவர் திருமுருகனார் மறைவிற்குப் பின்னர் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தங்கப்பா தன்னை எவ்வகையிலும் முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை. தன்னை ஆய்வாளர் என்று இவர் கருதிக் கொள்ளவுமில்லை. மாந்தநேயமிக்க மாந்தராயிருப்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர். ‘யான் ஒர் எளியேன் எனக்கேன் இந்த நாகரிகமும் நகைதரும் உடைகளும்? அறிவு, கல்வி, அலுவல் எனும் இவை ஒரு வகையில் எனை உயர்த்திக் காட்டினும் அடியேன் அவற்றால் மகிழ்வதே இல்லை. மேல்தோல் நீக்கிப் பார்ப்பின் ஒர் ஏழை நாட்டுப்புறத்தான் மனமே என்மனம். நாகரிகமாம் நடையும் தோற்றமும் எனக்குப் பொருந்துமா?’(மேலது, ப.51) என்கிறார். தமிழ்ச்சான்றோராய் புதுவையில் வாழ்ந்து வரும் ம.இலெ தங்கப்பா இயற்கை பற்றியும் மனிதவாழ்வில் அன்பு பற்றியும் நூற்றுக்கணக்கான பாடலை எழுதினார். இவரைத் தற்காலத்தில் ஒரு ‘தமிழ் முனிவர்’ எனப் பாராட்டுவது தகும். சங்கப் பாடல்களை உலகறியச் செய்யும் முறையில் சிறப்பாக இவர் மொழிப்பெயர்த்தார். இவர் மரபுப் பாடல்களை எழுதுவதில் வெற்றி கண்டவர். தமிழில் பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த ஒர் அற்புதமான கவிஞர்.ம.இலெ.தங்கப்பா. தமிழில் இவருக்கு இணையாகச் சொல்வதற்கு இன்னொரு கவிஞர் இல்லை. பேராசிரியர் மருதநாயகம் தங்கப்பாவின் பாக்கள் குறித்து மதிப்பீடு இங்கு எண்ணத்தக்கது: ‘அகவல் பாவிலும் விருத்தப்பாவிலும் தேவைப்பட்டபொழுது குறட்பா, வெண்பாக்களிலும் தம் கருத்துகளை அழுத்தமாகவும் தெளிவாகவும் முருகியல் இன்பம் தரும் வகையில் வெளியிடுவதில் வல்லவர். இது பாரதிதாசனுக்கு விருப்பமான பாடுபொருளானாலும் அவரால் பல முறைகளில் கையாளப் பட்டதாயினும் தங்கப்பா அவற்றின் அடிமைத்தனமான தழுவல்களைத் தாராது தம்முடைய தனிமுத்திரை பதித்த பாடல்களையே தொடர்ந்து எழுதிவருகிறார். அத்துறையில் அவர் பெற்றுள்ள முதலிடத்திற்கு முற்றுமான தகுதி அவருக்குண்டு.’(வள்ளலார் முதல் சிற்பி வரை, ப.188) என்று குறிப்பிடுகிறார். நா.நளினிதேவி: சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்கு உரிய மதுரையில் பிறந்த இவர், இளம் வயது முதற்கொண்டே தன்னுடைய தாத்தா, தந்தையார் வழியில் தமிழ்ப்பற்றை வரித்துக் கொண்டார். பாத்திமா கல்லூரியில் சிறப்பு தமிழ்ப்பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை போன்றோரிடமும், மதுரைப் பல்கலைக்கழகத்;தில் தெ.பொ.மீ., மொ.துரையரங்கனார், விஜய வேணுகோபால் முதலான தமிழ் அறிஞரிடம் தமிழ் பயின்றதால் தமிழுணர்வும், தனித் தமிழ்ப்பற்றும் இவருக்குள் ஆழமாக ஏற்பட்டன. அரசுக்கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், சாதி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கு பெற்றார். ஈழத்தமிழர்கள் பால் அன்பு கொண்ட இவர் 1980இல் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மிகச் சிறந்த படைப்பிலக்கியவாதியான இவரது சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை போன்றவை பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. ஆசிரியர்ப்பணி: தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளை நிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்குத் தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ் உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதைப் புரிய வைத்துச் செயல்படுத்தினார் (த.நே.41, ப.26) மாணவர்கள் புதியவற்றைப் படிக்கும் வகையில் ஆண்டுக்கொருமுறைபாடத்திட்டத்தை மாற்றியமைத்தார். இதழியல், இலக்கியத் திறனாய்வு, படைப்பிலக்கியம் போன்ற பாடப்பகுதிகளைக் கற்பித்ததோடு செய்முறைப் பயிற்சியும் கொடுத்து மாணவியர்களை ஊக்குவித்தார். இதனால் மாணவியர் படைப்பாக்கத்தில் திறன்பெற்ற, மாணவர்களைக் கொண்டு சிற்றிதழ் நடத்தினார். தாழ்த்தப்பட்ட மாணவியருக்காகவே பெரிதும் செயலாற்றினார். முத்தமிழ் விழாவை அனைத்துத்துறையினரும் பங்கேற்கும் பொதுவிழாவாக்கினார். கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் இவரது தமிழ்ப்பணியைப் போற்றினர். புதுக்கோட்டை தமிழ் இலக்கியப் பேரவை இவரைப் ‘புதுக்கோட்டையின் புகழ்மாமணி’களுள் ஒருவர் எனச் சிறப்பித்துத் ’தமிழ்த்தென்றல்’ எனும் விருதளித்து மரியாதை செய்தது. (மேலது, ப.35) ஆய்வுப்பணி: கல்லூரியில் பணிபுரியும் காலத்திலேயே ‘இராஜம் கிருட்டிணனின் புதினங்களில் சமுதாய மாற்றம்’ (1991) பற்றியும், சு.சமுத்திரத்தின் ‘சிறுகதை இயக்கம்’ (1998) பற்றியும் ஆய்வுநூல் வெளியிட்டார். இவர் காலத்தில் இவர்கள் புகழ்மிக்க எழுத்தாளர்களாக இருந்தனர் என்பது மட்டுமல்லாமல் பிற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டும், முற்போக்குச் சிந்தனையும் கொண்டிருந்தனர் என்பதன் காரணமாக அவர்களைத் தெரிவு செய்து எழுதினார். பெண்ணிய விடுதலையே சமன்மைச் சமுதாயத்துக்கு வழிவகுக்கும் என்பதை இராஜம் கிருட்டிணன் புதினங்கள் தெளிவாக்கியுள்ளது. ஒரு கருத்தைச் சொல்வதற்காகத்தான் கதை எழுதுகிறேன் என்ற சு.சமுத்திரத்தின் படைப்பு, சமுதாயச்சிந்தனையுடன், சிக்கல்களையும், தீர்வுகளையும் வெளிபடுத்தும் முறையில் அமைந்துள்ளன. இவரது ஆய்வு குறித்து சு.சமுத்திரம் கூறுவதாவது: ‘என் படைப்புகள்குறித்து, இவர் (நளினிதேவி) எழுதிய இந்த நூலைஎனக்குக் கிடைத்த பெரும் இலக்கிய மரியாதையாகக் கருதுகிறேன்’ (சு.சமுத்திரதின் சிறுகதை இயக்கம், என்னுரை) என்கிறார். பணிநிறைவிற்குப் பின்பு வெளிவந்துள்ள ‘தமிழ்இலக்கியம் மரபும் புதுமையும்’, படைப்பிலக்கியப் பார்வையில் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூல்கள் தமிழ்இலக்கிய ஆய்வுலகில் குறிப்பிடத்தக்கவை. ‘மரபும் புதுமையும்’ (2008) என்பது இவரது சிறந்த ஆய்வுநூல். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘உண்டாலம்ம இவ்வுலகம்’, ‘உண்பது நாழி’, ‘உடுப்பவை இரண்டே’ முதலிய பேரறங்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றன. இத்தகைய அறஉணர்வு காலந்தோறும் எல்லாத் தமிழிலக்கியங்களிலும் நீரோட்டாமாய் நிலவுகின்றது. “இந்தத் தமிழ் மரபு, புதுமைகளையும் பெற்றுத் திகழ்கிறது. இத்தகைய ஆய்வுக் கருத்தை முன்வைத்து எழுதப்பட்ட இந்த நூல் ‘மரபும் புதுமையும்’. இன்றைய சூழலில் தமிழைக்காத்து வளர்க்கும் பொறுப்பில் தமிழியல் ஆய்வாளர்களுக்கு இந்த நூல் ஒரு கைவிளக்காகப் பயன்படும் என்பதில் அய்யமில்லை” (மரபும் புதுமையும், அணிந்துரை) என்கிறார் கோவை ஞானி. ‘படைப்பியல் நோக்கில் தமிழிலக்கிய வரலாறு’ (2012) என்பது இவரது தலைசிறந்த ஆய்வுநூல். வழக்கமான தமிழிலக்கிய வரலாறு போல் அல்லாமல் தமிழ்ப்படைப்பிலக்கிய வரலாறாக இந்தநூல் திகழ்கிறது. தமிழகத்தில் மூன்று சங்கங்கள் இருந்தன என்ற கருத்தில் இவருக்கு உடன்பாடில்லை. ஆகவே சங்கஇலக்கியம் என்பதை இயற்கைநெறி இலக்கியம் என்று குறிப்பிடுகிறார். அதுபோலவே, பக்திஇலக்கியம் என்பதைத் தனித்தமிழில், இறைநெறி இலக்கியம் என்று கூறுகிறார் இயற்கைநெறி இலக்கியம் போலவே இறைநெறி இலக்கியமும் தமிழுக்கு வளம் சேர்ப்பவை. படைப்பிலக்கியத்தை முன்வைத்து எழுதப்பட்ட தலைசிறந்த நூலாக இந்த நூல் திகழ்கிறது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் மருதநாயகம் இந்த நூல் ஆங்கிலத்தில் வரும் தகுதியுடையது என்று எழுதியுள்ளார். இருபதாம் நூற்றாணடில் புதுமைகள் எனக் கொள்ளப்படும் தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், இருத்தலியம் போன்றவை பழந்தமிழ் இடைக்கால இலக்கியங்களில் காணப்படுவதை இந்த நூல் சுட்டிக்காட்டியுள்ளது. ‘பெண்ணியப் பார்வையாகவும், விளிம்பு நிலை மக்கள் பார்வையாகவும், படைப்பிலக்கியப் பார்வையாகவும் விரிகின்ற நா.நளினிதேவியின் தமிழ் இலக்கிய வரலாறு இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாறுகளிலிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்பதோடு, இனி இலக்கிய வரலாறுகள் தமிழில் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்பதற்கு முன் மாதிரியாகவும் திகழ்கிறது’ (படைப்பியல் நோக்கில் தமிழிலக்கிய வரலாறு, அணிந்துரை) என்கிறார் மருதநாயகம். தனி ஓர் இலக்கிய போராளியாய் எழுத்தில் நெஞ்சுரம் காட்டிய ஈழத்தமிழ் எழுத்தாளரும் இலக்கியப் போராளியுமான எஸ்.பொ. (எஸ்.பொன்னுத்துரை). இவரது அனைத்துப் படைப்புகளையும் உள்ளடக்கி நளினிதேவி எழுதிய ஆய்வுநூல் - ‘இலக்கியப் போராளி எஸ்.பொ – படைப்பும் பன்முகப் பார்வையும்’ (2016) என்பதாகும். தாய்த் தமிழையும் தாயகத்தையும் இழந்து புலம்பெயர்ந்து வாழ்ந்தஅவலச்சூழலிலும் எஸ்.பொவின் படைப்புகள் இலக்கிய ஆய்வுலகில் தனி ஈர்ப்பைப் பெற்றுள்ளன. அவரது இலக்கிய உணர்வு என்பது தமிழ் உணர்வாகவே இருந்ததன் காரணமாக தமிழைத் தவமாகக் கருதிய எஸ்.பொ.வின் படைப்புகள் தமிழுக்கு ஆக்கம் சார்ந்த பயன்களை நல்கியுள்ளது என்கிறார். எஸ்.பொ படைப்புகளில் ஈழமும், ஈழத்தமிழர் வாழ்க்கையுமே அடங்கியுள்ளன என்றாலும் அவை மனிதம் பற்றியவை என்ற வகையில் தமிழ் மண்ணின் பொதுச்சொத்துஎன்கிறார் நளினிதேவி.எஸ்.பொ., என்ற மனிதனின் ‘வரலாற்றில் வாழ்தல்’ நூல் வழியே வரலாற்றில் வாழும் மாமனிதராய் எஸ்.பொ இமாலய வெற்றியைப் பெற்றுவிட்டார் என்பதாக இவரது ஆய்வு அமைகிறது.திறனாய்வு நோக்கில் அமைந்துள்ள இந்த நூல் தமிழுக்கு ஒரு புது வரவாக அமையும். மேற்கண்ட மூன்று நூல்களும் காவ்யா வெளியீடாகும். இதே போல இன்னொரு நூல் ‘நெஞ்சக்கதவை மெல்லத் திறந்து’ - ஒரு பேராசிரியரின் தன் வரலாறு (2016) - நளினிதேவியின் தமிழுணர்வும் வாழ்வியல் சிக்கலும் குறித்த ஒரு புதினம் இந்த நூல். தமிழ்ப் பேராசிரியர் என்ற முறையில் தமிழோடு வாழ்ந்தவர். சுமார் 500பக்க அளவில் அமைந்த இப்புதினம்தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையும் அதை எதிர்கொள்வதற்கான போராட்டங்களும் எத்தகையவை என்பதை  அழுத்தமாக உணர்த்துகிறது. இன்னும் ஒரு நூல் ‘ஞானியின் கவிதைக்கொள்கை’ (2016) பற்றியது. ஞானியின் கவிதை இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலிருந்து ஞானியின் கவிதைக்கோட்பாட்டின் விழுமியங்களை எடுத்து விளக்கும் நூல். ‘புறநானூறு – தமிழரின் பேரிலக்கியம்’(2017) என்ற நூலில் புறநானூறு பண்டைய தமிழரின் வாழ்வியல் நெறிகளை மட்டும் விளக்குவதன்று இக்காலத்திற்கும் வரும்காலத்திற்கும் மட்டுமன்று எக்காலத்திலும் வாழும் மக்களின் வாழ்க்கைக்குப் பொருந்தக் கூடிய மக்கள் இலக்கியமாகும். புறநானூற்றில் தமிழ்ச்சிந்தனை, பொதுமைப் பண்பு, வாழ்க்கை நிலையாமை, கற்பனை கலவாத மனிதத்தன்மை போன்ற சிறப்புகள் பிற இலக்கியங்களில் காணமுடியாதவை. எனவேபுறநானூறே தமிழரின் மூலப் பேரிலக்கியம் என்பதைவிளக்கியுள்ளார். தமிழில் பேரிலக்கியங்களாகப் பல நூல்கள் கருதப்பட்டாலும் இவை தமிழின் மூலநூல் அன்று. இலக்கியச்சுவையும் கற்பனைவளமும் நிறைந்தவை. மக்களுக்கான வாழ்வியற் சிந்தனைகள் அரிதாகவே இதில் காணப்படுகின்றன. மக்களின் அடிப்படைச் சிக்கல்களுக்குத் தீர்வு தரக்கூடியதாகவும் உலகப் பொதுமையைப் போற்றும் மக்கள் இலக்கியமாகவும் இவ்வகை இலக்கியங்கள் இல்லை. புறநானூறு பிற இலக்கியங்களிலிருந்து பேரிலக்கிய தகுதி எவ்வாறு பெறுகிறது? அரசுடைமைகாலத்தில் நிலவிய சிக்கல்கள், இன்றைய நவீன உலகிலும் தொடர்கின்றன. பழைமைச் சமுதாயத்தில் தோன்றிய சிக்கல்கள் மட்டுமன்றி புதிய உலகின் சிக்கல்களிலிருந்தும் நம்மை மீட்டுக்கொள்வதற்கான வழிகளும், மனிதநலம் சார்ந்த உலகப் பொதுமையும், இயற்கையுடன் இயைந்த வாழ்வும், போரில்லா உலகின் சிறப்பும், அறத்தால் வரும் பொருளும் இன்பமும் மட்டுமே நிலையானவை எனப் புறநானூறு வலியுறுத்தும் செய்திகள் ஏராளம். அறிவியல் வளர்ச்சி மிகுந்த இக்காலத்தில், மனிதன் உலகியல் நெருக்கடிக்களையும் வாழ்வியல் சிக்கல்களையும் சந்திப்பதோடு இயற்கையிலிருந்தும் விலகி அந்நியப்பட்டு வாழ்கிறான். இதனால் பல்வேறு துன்பங்கள் மனிதனை வந்து சேர்கின்றன. மனிதத் துன்பத்திற்கு மனிதன்மட்டுமே காரணம். மனிதன் தன்னம்பிக்கையோடு தன் ஆற்றலைப் புரிந்து, நற்சிந்தனையை மேற்கொண்டால் இத்துன்பத்திலிருந்து விடுபடமுடியும். மனித துன்பத்திற்குக் கடவுள் தான் காரணம் என்று பகுத்தறியும் திறன் அற்ற சமுதாயமாக புறநானூற்றுச் சமூகம் இல்லை. மக்கள் துயரங்கள் தீர்க்கும் வழியாக ‘கடவுளை’ எந்த வகையிலும் முன்னிறுத்தாத இலக்கியம் புறநானூறு. இவ் உலகம் இன்பம் துன்பம் நிறைந்தது. இதுவே உலக இயல்பு. துன்பங்கண்டு துவளாமல் இன்பங்களை நினைத்து பெரு மகிழ்வு கொள்ளாமலும், இன்னாத இவ்வுலகில் இனிமை கண்டு அதன் இயல்வு அறிந்து வாழ்வதே சிறந்த அறம் என்ற உயர்ந்த மெய்யியற் சிந்தனையை உலகிற்கு வழங்கிய, தமிழரின் மூலநூலான புறநானூறே தமிழின் பேரிலக்கியம் என்றால் மிகையில்லை என்கிறார். மேற்கண்ட மூன்று நூல்களும் புதுப்புனல் வெளியிடாகும். வள்ளுவரின் காமத்துப்பாலை கதைவடிவில் உருவாக்கி ‘காதல் வள்ளுவன்’ (2018) என்ற நாடக இலக்கியம் படைத்துள்ளார். மனித இனத்தின் உயிர்ப்பாகவும் உவப்பாகவும்உலவும் இன்பமே காதல். அன்பு / காதல் அறத்தை அழுகுபட, கவித்துவநனிச் சொட்டச் சொட்ட அழகு தமிழில் யாத்துள்ளார். இன்பத்துப்பால் அதிகாரங்களை காட்சியியலாக உரைவடிவில் இவர் தீட்டியிருக்கும் இந்தக் ‘காதல் வள்ளுவன்’ நூலை வெளியிட்டுபேசிய கவிஞர் ஈரோடு தமிழன்பன், வள்ளுவனின் கற்பனை நுட்பத்தையும் கவிதைத் திட்பத்தையும் முழுமையாக எடுத்துகாட்டும் நூல் இது என்று பாராட்டியதோடு ‘நவீன ஒளவை’ என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்.   கருத்துச் சுதந்திரம் கழுத்தறுக்கப்படுகிற இக்காலத்தில் எழுந்திருக்கிற எரிதழல் போன்ற கவிதைகள் அடங்கிய தொகுப்பு ‘என் விளக்கில் உன் இருள்’ (2018) தமிழியமும், பெண்ணியமும், சமூக அக்கறையும் இவரது கவிதைகளில் ஆழமாக வெளிப்படுகின்றன. ‘பெண்ணுக்கு இல்லை சமநிலை எனில் அது மண்ணுக்கும் இல்லை’ என்கிறார் எழுத்தாளர்கள்தாக்கப்படுகின்ற இக்காலத்தில் அவர்கள் மறைந்தாலும்எழுத்துகளின் வழியே மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்சு பறவைகள் என்கிறார். கல்வி பெற்றால் பெண் விடுதலை பெற முடியும் என்று கருதப்பட்டது. ஆனால்,  கல்வியே பெண்களை விட்டுத், தொலைவில் நின்றுகொண்டிருக்கிறது. காரணம், கல்வி வாழ்க்கைக்குப் பயன்படாத கல்வியாக உள்ளதே காரணம். பெண் விடுதலைச் சிக்கல் என்பது அவளை மட்டும் சார்ந்தது அன்று, சமுதாயத்தின் அனைத்துக் கூறுகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. சிலருக்குக் கேள்வி எழலாம். கல்வி பெண்களுக்கு விடுதலை தரவில்லையா? கல்விக்கூடங்களில், வேலை வாய்ப்பில் அவர்களும் இடம்பிடிக்கிறார்களே. வேலை வாய்ப்பால் பொருளியல் விடுதலையும் பெற்றுள்ளனரே! இன்று.  இவை உண்மையான உரிமையையும் விடுதலையையும் பெண்களுக்குத் தந்திருக்கிறதா? என்று எண்ணிப் பார்க்கவேண்டும். கல்விக்கூடங்களிலும் வேலைவாய்ப்பிலும் கூட ஆணுக்குச் சமமான எண்ணிக்கையில் இன்னும் பெண்கள் இடம்பெறவில்லை. அப்படியே இடம் பெற்றாலும் ஆண்களைப் போல் அவர்கள் அச்சமின்றித் தயக்கமின்றி அங்கெல்லாம் இயங்கமுடிகிறதா?வேலைவாய்ப்பால் பொருளைத் தேடினாலும், பெண்களால்  விரும்பம் போல் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவாவது முடிகிறதா? இயற்கையான பாலியல் விடுதலையே பெண் விடுதலைக்குச் சரியான தீர்வு என்ற பெண்ணிய நோக்கிலான நூல் அண்மையில் வெளிவரும். மேலும் சில நூல்கள் வெளிவரலாம். ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். தமிழால் இணைவோம் என்று முகநூல் பகுதியில் தமிழின் தொன்மை, மேன்மை, தமிழ்வரலாறு குறித்துக் கவிதை வடிவில் மிக சிறப்பாக எளிய முறையில் எழுதிவருகிறார். தமிழால் மட்டுமே தமிழர்களையும் இவ்வுலகத்தையும் இணைக்கமுடியும் என்பது இவரது எண்ணம். இவரோடுநாமும் இணைந்து தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிட வழிசெய்வோம். பெண்ணியச் சிந்தனை:- இவரது பெண்ணியப் பார்வை தனிச்சிறப்பானது. பெண்கள் அழகு பதுமைகள் அல்ல. ஆணின் காம உணர்வுக்குப் பலியாகும் பேதைகளும் அல்ல. ஆணைப் போலப் பெண்ணும் ஒரு மனிதன் / மனுசி. காதல் உணர்வு ஆணுக்கு மட்டும் உரியதன்று. பெண்ணுக்கும் உரியது. அதைச் சுதந்திரமாக வெளியிடும் உரிமையும் பெண்ணுக்கு உண்டு. சங்க இலக்கியங்களில் கூறப்படும் பரத்தையர் இத்தகைய சுதந்திரம் உடையவர் . காரைக்கால் அம்மையார், அவ்வையார், மணிமேகலை போன்ற மகளிர் தமிழ்வரலாற்றைச் செழுமைப்படுத்தியவர்கள். இலக்கிய படைப்புகளினுள் மறையுண்ட இவர்களது வாழ்க்கையை வெளிப்படுத்தும் முயற்சி தேவை என்கிறார். “பெண்கள் தம் அடிமை நிலையை உணர்ந்து தம் அளப்பரிய ஆற்றலைப் பயன்படுத்தினால் மட்டுமே சமநிலை பெற இயலும். பெண்நோக்கு, பெண்மொழி, தற்சிந்தனை, தெளிவு, துணிவு, உறுதி ஆகிய கருவிகளுடன் பெண்கள் களத்தில் இறங்கவேண்டும்” என்கிறார். (www.penniyam.com/2010/02/blog-post-21.lit.பா.நாள். 23.02.2016). இவர் எழுதிப் பல்வேறு இதழ்களில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகள் சில தனித் தொகுதிகளாக வெளிவரும் தகுதியுடையவை. மேலும் இவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள் முதலியனவும் விரைவில் நூலாக்கம் பெறலாம். தமிழறிஞர் ஞானி நா.நளினிதேவியின் ’தமிழ்நடை எளிமையும் செறிவும் மிக்கது. அன்றியும் முழுமையும் தனித்தமிழ்நடை அவருக்கு மட்டுமே வாய்ந்த தமிழ்நடை" என குறிப்பிடுகிறார். (தமிழிலக்கிய மரபும் புதுமையும், அணிந்துரை) முத்து சீனிவாசன், இவர் பேசும் தமிழ் குறித்து குறிப்பிடுவதை இங்குச் சுட்டுவது தகும்: “இவர் மேடையில் பேசும்போது தமிழ் கொஞ்சி விளையாடும். அவரது தமிழ் வர்ணனைகள் மாணவியரை வசப்படுத்தும். பெண்ணியம் காக்கப்பட எண்ணயபடியே இருக்கும். இக்கண்ணியம் மிக்க பேராசிரியையின் தமிழ்ப்பணி தொடரட்டும் அவரது தமிழ் இலக்கியப்படைப்புகள் தமிழுக்குப் பெருமை சேர்க்கட்டும்.” (மேலது, v,xi). தனித்தமிழ்க் கொள்கை இன்று குறைந்து வருவதைக் கண்டு அய்யம் கொள்ளும் இவர் தமிழில் வேற்றுமொழி கலப்பதால் தமிழின் இயல்பான ஆற்றல் குறைந்து விடுகிறது. வேற்றுச்சொற்கள் கலந்த தமிழைக் கேட்கும் படிக்கும், இளைய சமுதாயம் தமிழின் சிறப்பை அறிய முடியாமல் போய்விடும். புதிய தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து வேற்றுச் சொல்லுக்கு இணையான சொல்லைப் பயன்படுத்தி தனித்தமிழை உருவாக்கவேண்டும் என்பதே இவரது எண்ணமாகும். (தமிழறிஞர்.நா.நளினிதேவி, ப.99) பன்முகத் திறன் மிக்கவர். தனித்தமிழில் இவரது படைப்புகள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. பாராட்டுகள், விருதுகள் என்பனவற்றை இவர் விரும்புவதில்லை. இவரது தமிழ் வாழ்வும், படைப்பிலக்கியங்கள் பால் கொண்டஅக்கறையும் பிற தமிழ்ப்பேராசிரியமிருந்து இவரைப் பிரித்துக் காணும் தன்மையுடையவை. தமிழ் வாழ்வாகவே தன் வாழ்வை அமைத்துக் கொண்ட திறம் பாராட்டிற்க்குரியது. அறுவைச் சிகிச்சை ஒன்றில் செவித்திறனை இழந்த போதிலும் அதைப்பொருட்படுத்தாமல் தனி ஓர் இயக்கமாகச் இயங்குவதை மறைந்த பெரியரியலாளர் சங்கமித்ரா உட்பட பலரும் பாராட்டுகின்றனர்.தொடர்ந்து எழுதுவதிலும் படிப்பதிலும் மிகுந்த ஈடுபாட்டோடு ஒயாது இயங்கி வருகிறார். தமிழுக்குப் பல்வேறு ஆக்கங்களைத் தந்துள்ள இவரது தமிழ்ப்பணி போற்றுதற்குரியது. ப.மருதநாயகம்: (1935) ப.மருதநாயகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் என்பது அவரது சிறப்புத்தகுதியாகும். அமெரிக்க இலக்கியத்தை ஹவாய் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பேராசிரியர், கல்வியாளர், நூலாசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், ஒப்பிலக்கிய திறனாய்வாளர் எனப் பல தளங்களில் பரிணமிப்பவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில போராசிரியராகக் கல்லூரியிலும் பல்கலைகழகங்களிலும் பணியாற்றியவர். தற்போது எண்பது வயதிலும் விடாப்படியாக மிகுந்த அக்கறையோடு உலக அரங்கில் தமிழில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கி தமிழின் பெருமையை உயர்த்தி வருகிறார். ஆங்கிலத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும், தமிழில் பதினைந்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் எழுதியுள்ளார். தொல்காப்பியம், சங்கஇலக்கியம், திருக்குறள் குறித்தும் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் தமிழுக்கு வளம் சேர்ப்பவை. புறநானூறு குறித்த மிக விரிவான இவரது ஆய்வு போற்றத்தக்கது. ஏனைய வடமொழி இலக்கியத்திற்கெல்லாம் மூலம் புறநானூறு தான் என்றும் சிற்றிக்கியங்களின் தோற்றத்திற்கும் புறநானூறு அடிப்டையாக அமைவதையும் வெளிப்படுத்தியுள்ளார். சம காலத்து இலக்கியவாணார்களான வள்ளலார், அயோத்திதாசர், பாராதி, பாவாணர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், குலோத்துங்கன், ஜெயகாந்தன், ம.இலெ.தங்கப்பா, சிற்பி போன்றோர்களின் படைப்புகளையும் ஆய்வுக்குட்படுத்தி அவர்களின் தனிச்சிறப்பை விளக்கியுள்ளார். ஆங்கிலப் போராசிரியர்கள் தமிழ் மீது அக்கறை கொள்வதில்லை அல்லது ஆங்கில இலக்கியம் முதலியவற்றைக் கற்றவர் தமிழின் மீது அக்கறை கொண்டதே இல்லை. அதேபோல் தமிழ்இலக்கியம் கற்றவர்கள் ஆங்கில இலக்கியத்தைக் கற்பதும் இல்லை. இவ்வகை தமிழ் அறிஞர்கள் இடையில் மருதநாயகம் ‘தமிழுக்கு ஒரு கலங்கரை விளக்கமெனத்’ திகழ்கிறார் (த.நே.43, ப.4) என்கிறார் ஞானி. ஆங்கில இலக்கியம் கற்றவர் எனினும் தாய்மொழிக்கு வளம் சேர்க்கும் ஒரு சிலரில் பேராசிரியர் மருதநாயகம் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில இலக்கியத்தின் மேன்மை குறித்துப் பேசுபவர்களை மறுக்கும் முறையில் ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்தேடல் என்னும் தலைப்பில் 96 பக்க அளவிலான கட்டுரையை தமிழ்நேயம் - 43ஆவது மே 2011 சிறப்பிதழில் எழுதியுள்ளார். இக்கட்டுரையிலிருந்து மருதநாயகத்தின் ஆய்வுகள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன. ஆய்வுப்பணி: 1991இல் மருதநாயகம் வெளியிட்ட முதல் நூலாகிய ‘கிழக்கும் மேற்கும்’ என்பதனுள் மேற்கத்திய ஆங்கிலமொழி இலக்கியத்தோடு தமிழிலக்கியத்தையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். கடந்த முன்னூறு ஆண்டுகளுக்குள் அரசியல் காரணமாக ஆங்கில மொழி செல்வாக்குப் பெற்றது. சேக்ஸ்பியர், மில்டன் போன்றவர்கள் உலக கவிஞர்களாகச் சிறப்பு பெற்றனர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், ஆழ்வார் பாடல்கள் போன்றவை தக்கமுறையில் மேற்கத்தியருக்கு அறிமுகமாகி இருப்பின் தமிழ்க்கவிதையின் மேன்மையை உலகம் அறிந்திருக்கக்கூடும். தொல்காப்பியரின் கவிதையியலையும் இதேபோல அறிமுகப்படுத்தியிருக்க முடியுமானால் அரிஸட்ட்டில் முதலியவர்களின் கவிதையியல் போலப் போற்றப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில்சாமுவேல் பீப்ஸ் என்பவர் எழுதிய நாட்குறிப்புகள் சிறந்த இலக்கியமாகப் போற்றப்படுகிறது. தமிழில் ஆனந்தரங்கனின் நாட்குறிப்புகள் எவ்வகையிலும் பீப்ஸின் நாட்குறிப்புகளுக்கு குறைந்தவையில்லை. ஆங்கிலத்தில் பெரும் புகழ்பெற்ற ஜேம்ஸ் ஜாய்க்கு நிகரானவர் புதுமைப்பித்தன். இவ்வகையில் நல்ல தரமான மொழிபெயர்ப்பின் மூலம் தமிழிலக்கியம் மேற்கத்தியத்திற்கு அறிமுகமாகும் தன்மையுடையவை. இவ்வாறு தன் முதல் நூலிலே மருதநாயகம் பின்னால் அவர் எழுதும் பல நூல்களுக்கும் ஒரு முன்னுரை போல ‘கிழக்கும் மேற்கும்’ என்ற நூல் அமைத்திருக்கிறது (ப.19) என்கிறார். தமிழ்ப்புதுகவிதை வரலாறு பற்றிய ஆய்வுக்கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி, கு.பா.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க.நா.சுப்பரமணியம் முதலியவர்கள், டி.எஸ்.எலியட், எஸ்ராபவுண்டு ஆகியோர்களை அறிந்துள்ளார்கள் என்ற போதிலும் அவர்களை ஆழமாகப் பயின்றவர்களாக இல்லை. அவ்வாறு பயின்று இருந்தால் இவர்களது புதுக்கவிதையின் தரம் மேம்பட்டிருக்கும் என்கிறார் (ப.19) மருதநாயகம். இங்கும் அவரது மதீப்பீட்டின் திறனை அறியமுடிகிறது. ஓப்பாய்வு: மருதநாயகம் எழுதி வெளியிட்டத் ‘தமிழ் செவ்விலக்கியங்கள்’ (1998) என்னும் ஒப்பாய்வு நூலில் மேற்கத்திய இலக்கியத்தையும்தமிழிலக்கியத்தையும் ஒப்பிட்டு ஆராய்கிறார். கிரேக்க இலக்கியமாகிய (சாஃபக்ளிஸின்) ஆந்திகொனியிலும், தமிழிலக்கியமாகிய (இளங்கோவின்) சிலப்பதிகாரத்திலும் ஊழின் வலிமை பேசப்படுகிறது. ஆந்திகொனி நாடகத்தின் இறுதியில் கிரையோன் என்னும் மன்னன் ஊழின் வலிமையை தன்னால் மீறமுடியாது என்றும், ஊழ் தனது வாழ்க்கையை மண்ணாக்கிவிட்டது என்றும் புலம்புகிறான். சிலப்பதிகாரத்தின் இறுதியிலும் ஊழே வெற்றியடைகிறது. இவ்விரு இலக்கியங்களிலும் ஒத்தன்மை இருப்பதை எடுத்துக்காட்டும் மருதநாயகம் பெரும்பாலும் பழங்காலச்சூழலில் கிரேக்கத்திற்கும் தமிழகத்திற்கும் இருந்த வணிகத் தொடர்பைச் சுட்டிக்காட்டத் தெளிவான சான்று இல்லை எனினும் கிரேக்கத்திற்கும் தமிழகத்திற்கும் வணிகர் மூலம் இலக்கியத் தொடர்பு இருந்திருக்கக்கூடும் என்கிறார். “அதேபோல் சாஃபக்ளிஸின் ஈடிப்பஸ் நாடகங்கள் மனிதம் விதியோடு மோதுவதைக் காட்டுகின்றன. ஆனால் ஈடிப்பஸ் கண்ணகியளவுக்கு விதியை வென்று உயரவில்லை”. (கா.செல்லப்பன், தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும், ப.56) அதாவது கண்ணகி விதியை எதிர்த்துப் பேராடி வென்றாள். மருதநாயகம் பல நூல்களிலும் ஒப்பியல் ஆய்வுமுறையை பயன்படுத்துகிறார். இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும் போது புதிய உள்ளொளியைக் காணமுடியும் என்கிறார். சான்றாக சல்மான் ருசுடியின் ‘நள்ளிரவுக் குழந்தைகள்’ நாவலையும் தோப்பில் முகமது மீரானின் ‘சாய்வு நாற்காலி’ என்ற நாவலையும் ஒப்பிடுகிறார். காசுமீரில் வாழ்ந்த இசுலாமிய குடும்பம் ஒன்று அடுத்தடுத்து வந்த மூன்று தலைமுறைகளிலும் சிதைந்ததை ‘நள்ளிவுக் குழந்தைகள்’ நாவல் வெளிப்படுத்துகிறது. தோப்பில் முகமது மீரானின் நாவலும் இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஒரு இசுலாமிய குடும்பம் மூன்று தலைமுறைகளில் சிதைந்ததை எடுத்துரைக்கிறது. ருசுடி, மிக விரிந்த உலகனுபவம் பெற்றவர். இத்தகைய வாய்ப்பு மீரானுக்கு இல்லை என்றாலும் ருசுயின் படைப்புக்கு ஈடு கொடுக்கக்கூடிய இயல்பான படைப்பாற்றலை மீரான் வெளிப்படுத்துகிறார் (ப.39). சல்மான் ருசுடி இஸ்லாம் பற்றிய திறனாய்வு கருத்துகளையும் கொண்டவர். இஸ்லாம் பற்றி இத்தகைய திறனாய்வு கருத்து தனக்கு இல்லை என்று சொல்லிக்கொள்கிறார் மீரான். “பொருளாதார பலம்கொண்ட ஆதிக்கக்காரர்களையும் அவர்களின் அதிகாரங்களுக்கு ஆட்பட்டு அவ்வதிகாரமே தனக்கான நீதி என்று ஆழமாக நம்பிக்கை கொள்கிற மக்களையும் மற்றும் அதற்கெதிரான கலகக்குரல் எழுப்பும் கதாபாத்திரங்களையும் இஸ்லாமியச் சமூகத்தில் நிலவிய பழமைவாத அடிப்படையிலான மூடநம்பிக்கைகளையும் அதற்கு எதிர்ப்பாக வந்த அடிப்படைவாதத்தின் விரைப்புத் தன்மையையும் வட்டாரமொழிச் சொற்களோடும் மீன்வாடையோடும் எடுத்துரைக்கின்றன மீரானின் புதினங்கள்” (பெயல் அக்’15 - மார்’16, ப.44) என்ற நசீமாவின் கூற்றில் மீரானின் இசுலாமிய திறனாய்வு பார்வையைப் புரிந்து கொள்ளமுடியும். மேலும் ஒரு சான்று அமெரிக்க நாவலாசிரியராகிய சால்பெல்லோ எழுதிய ‘ஹெர்ஸாக்’ நாவலையும் நீலபத்மநாபன் எழுதிய பள்ளிகொண்டபுரம் நாவலையும் ஒரு கட்டுரையில் ஒப்பிடுகிறார். கணவனை ஏமாற்றியதோடு, குழந்தைகளைத் தவிக்கவிட்டு ஒரு பணக்காரனைத் தேடி மணந்து கொள்கிற பெண்ணைப்பற்றியது இவ்விரண்டு நாவல்களும். சால்பெல்போ ஒரு பெரிய படிப்பாளி. அவருக்கு நிகரான கல்வித்தகுதி இல்லாதவர் நீலபத்மநாபன் என்றாலும் மனித வாழ்வின் அவலங்களை ஆராய்ந்து வெளிப்படுத்துவதில் இருவரும் ஒத்ததன்மையுடையவர்கள் (ப.27) என்கிறார் மருதநாயகம். வெகுநுட்பமாக எழுதிய அமெரிக்க நாவலோடு ஒப்பிடும் போது தமிழ் நாவல்களின் தரத்தைக்குறைத்து மதிப்பீடுவதற்கில்லை என்ற கருத்தே மேலோங்குகிறது. திறனாய்வுப்பணி: ஜெயகாந்தன் எழுதிய ‘பாரிசுக்குப் போ’ நாவலை இதே நூலில் திறனாய்வு செய்கிறார் மருதநாயகம். புகழ்பெற்ற பாரிசின் கலை உலகத்தோடு பத்தாண்டுகள் தொடர்பு கொண்ட சாரங்கன் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறான். வயலின் வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற இவன் மேற்கத்திய இசையைப் பெரிதும் மதிக்கிறான். அவனது தந்தையார் கர்நாடக சங்கீதத்தில் வல்லவர், வீணை வாசிப்பவர். இருவருக்கும் இடையில் நிறைய உரையாடல்கள். மேற்கத்திய இசையைக் கர்நாடக சங்கீதத்தோடு இணைத்து இசையை மேம்படுத்த வேண்டும் என்று கருதுபவன் சாரங்கன். கர்நாடக சங்கீதம் பக்தி உணர்வாகிய ஒன்றில் மட்டும் ஆழ்ந்துள்ளது. மனிதவாழ்வின் பல்வேறு அனுபவங்களோடு, மேற்கத்திய இசையைப் போல கர்நாடக சங்கீதத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறான் சாரங்கன். இரண்டு இசையையும் இணைப்பதில் அவன் வெற்றியடைந்தானா? அல்லது தோல்வியுற்றானா? என்ற பாணியில் நாவல் தொடர்ந்து இயங்கியிருக்க வேண்டும். இப்படி இயங்கியிருந்தால் நாவலின் கலைத்திறன் மேம்;பட்டிருக்கும். இதற்கு மாறாக, ஒரு நாட்டியக்காரியின் காதலுக்கு வசப்படுகிறான். கதையின் கலை தர்க்கம் சிதைகிறது. இறுதியில் வேறு வழியில்லாமல் சாரங்கன் கல்கத்தாவுக்கு மேலை இசை கற்றுக்கொடுக்கச் செல்கிறான். இவ்வாறு ‘பாரிசுக்குப் போ’ நாவல் சிறப்பாகத் தொடங்கினாலும் இறுதியில் சிதைவதை மருதநாயகம் எடுத்துக்காட்டுகிறார். திறனாய்வாளர் தெ.பொ.மீ: மேலைநாட்டு இலக்கியவாதிகளும், திறனாய்வாளர்களும் தமிழ்ப்படைப்பாளிகள் மற்றும் திறனாய்வாளர்களைக் காட்டிலும் அறிவிலும் படைப்புத்திறனிலும் மேம்பட்டவராக இருப்பதை மருதநாயகம் சுட்டிக்காட்டாமல் இல்லை. இவ்வாறு சுட்டிக்காட்டும் மருதநாயகம் தெபொ.மீயை மேற்கத்திய திறனாய்வாளருக்கு நிகரானவர் என்று தன்முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூலில் (திறனாய்வாளர் தெ.பா.மீ) எடுத்துரைக்கிறார். டி.எஸ்.எலியட்டைப் போல தெ.பொ.மீயும் படைப்புகளை மதிப்பிடும் பொழுது இலக்கியத் தன்மைக்கு முதன்மை தரும் போக்கைப் பின்பற்றுவதைச் சுட்டிக்காட்டுகிறார். அரவிந்தர் படைப்புகளில் ஆன்மீகம் கலந்திருப்பதைப் போலத் தெ.பொ.மீயின் கட்டுரைகளிலும் அவரது ஆன்மீகப் பண்பு ஒளிறுகிறது என்பதை மருதநாயகம் தெளிவுபடுத்துகிறார். வடமொழியும் தமிழும் ஒன்றுக்கொன்று கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட மொழிகள். இந்தியாவில் வழங்கும் பல்வேறு மொழி இலக்கியங்களிலிருந்து இந்திய இலக்கியம் என ஒன்றை வகுத்துக் கொள்ள முடியும் என்பதும் தெ.பொ.மீயின் கருத்து. தமிழறிஞர் பாவாணர்: மருதநாயகத்தின் கட்டுரைகளில் பெரிதும் வித்தியாசமான சில கட்டுரைகளை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். மேலை மொழியியலாளர்களின் ஆய்வுகள் அறிவியல் தன்மையோடு இருப்பதாகவும் பாவாணரின் ஆய்வுகள் அறிவியலுக்கு ஒத்ததாக இல்லை என்றும் தமிழர் பண்பாடு பற்றிய அவரது கருத்துக்கள் வெற்றுக் கற்பனை என்றும் மேலை இலக்கியத் திறனாய்வாளர்களைப் பின்பற்றும் தமிழ்மொழியிலாளர்கள் கருதினர். மேலைமொழியியலும் கீழைமொழியியலும் வெவ்வேறு சார்புடையவை. இரண்டையும் ஒப்பிடுவதற்கில்லை. கீழை மொழியியலுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. இவ்வகையில் பாவாணரின் ஆய்வுகள் அமைந்திருக்கின்றன என்கிறார் மருதநாயகம். பாவலர் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டு தமிழ்க்கவிதை வரலாற்றில் பெருஞ்சித்திரனாருக்குரிய இடத்தைத் தமிழ்த் திறனாய்வாளர்கள் தர மறுக்கின்றனர். தமிழ்மொழி, தமிழினம், தமிழ்ப் பண்பாடு ஆகிய மூன்று கருத்துக்களை முதன்மைப்படுத்தி கவிதை எழுதினார் பெருஞ்சித்திரனார். நூற்றுக்கணக்கான அவரது கவிதைகளில் ஒன்று மற்றதைப் போல இல்லை. பல்வேறு யாப்புகளில் பல்வேறு சுவை நயங்களில் பல்வேறு உத்திகளையும் வைத்துப் பாடியவர் பெருஞ்சித்திரனார். மருதநாயகம் இவரது கவிதைகளைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “தமிழின் பெருமையும், தொன்மையும் இவர் சொல்லும் போது பேருவகையும், தமிழின் நிலை இவ்வாறு உள்ளது என்று இவர் உரைக்கும் போது அவலமும் ஆறாத்துயரமும், தமிழின் புறப்பகைவரை இவர் சாடும்போது அறச்சினமும், உட்பகைவரைச் சுட்டும்போது நகையும் எள்ளலும், தமிழுக்கு உழைப்போரைப் போற்றும் போது பெருமிதமும், தமிழைக் காட்டிக் கொடுத்தோரை ஏசும் போது இளிவரலும் அருவருப்பும் தூண்டப்படும்” (ப.86). இவ்வாறு தம் கவிதைகளை அழகுறயாத்தவர் பெருஞ்சித்திரனார் என்கிறார் மருதநாயகம். புதுக்கவிதையாளர் பலரும் பெருஞ்சித்திரனார் முதலியவர்களைப் பாராட்டுவதில்லை. அவர் கவிதைகளை மிகை உணர்வு என்று ஒதுக்கினார். இவர்களுக்கு மாறாக, கவிதை பற்றிய இலக்கண அறிவும் தமிழ் உணர்வும் மிகுந்த மருதநாயகம் பெருஞ்சித்திரனாரை இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர் என்று பாராட்டுகிறார். இவ்வாறே ம.இலெ.தங்கப்பாவின் கவிதைகளையும் விரித்துரைக்கிறார் மருதநாயகம். தனித்தமிழ் அறிஞர்களையும், கவிஞர்களையும் இவர்கள் நம் காலத்திற்குரியவர்கள், தமிழிலக்கிய வரலாற்றில் இவர்களுக்குச் சிறப்பான இடம் உண்டு என்ற முறையில் எழுதியுள்ளார். மருதநாயகம் பழந்தமிழின் பெருமையை உயர்த்திப்பிடிக்கும் அதேவேளையில் இக்கால இலக்கியவாதிகளின் நிறைகளையும், குறைகளையும் சுட்டிக்காட்டுவதில் தவறவில்லை. இக்காலச்சூழலில் தமிழில் பேசுவதும், படிப்பதும் பெரும்பாலாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பிற துறையினரும் ஆங்கில இலக்கியம் படித்தவர்களும் ஆங்கிலம் பேசுவதையே பெருமையாக நினைப்பவர்களுக்கு மத்தியில் பதிலடி கொடுப்பது போல் மருதநாயகம்; திகழ்ந்து வருகிறார். ஆங்கிலப்பேராசிரியராகப் பணிபுரிந்து அதே சமயத்தில் பழந்தமிழிலக்கியத்தை மேலைநாட்டினர் கவனத்திற்குக் கொண்டு சென்றதோடு மேற்கத்திய இலக்கியங்களுக்கு நிகரான இலக்கியங்கள் தமிழிலும் இருக்கின்றன என்பதை நிறுவியும் உள்ளார்; மருதநாயகம் குறித்து ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் கூறுவதாவது: “மருதநாயகம் போல் ஒவ்வொரு பேராசியரும் தம் ஆற்றலை, அறிவை, புலமைக்கொண்டு, தாய்மொழிக்கு வளம் சேர்க்கப் புறப்படும் நாளே பாவேந்தர் சொல்வது போல உலகின் பல்துறை அறிவு நலமும் செந்தமிழைச் சேர்ந்து, செந்தமிழைச் செழுந்தமிழாக்கும் நன்னாளாகும்” (பாரதி ஆறு பாரதிதாசன் பத்து, பதிப்புரை) என்கிறார். தமிழகம் உட்பட இந்திய / உலக அளவில் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர். 2018ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘தமிழின் செவ்வியல் தகுதி’ என்ற இவர் எழுதிய நூல், தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதினை 2014 இல் பெற்றது.தமிழ்ப் பற்றும் தமிழுணர்வும் மிக்க இவர், வயது முதிர்ந்த நிலையிலும் செம்மொழி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தும் கருத்தரங்குகளிலும் ஆய்வரங்குகளிலும் கலந்து கொண்டு, தமிழின் தனித்தன்மை குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாற்றி வருகின்றார் மருதநாயகம். உலகளவில் நடைபெற்ற இருபத்து இரண்டிற்கும் மேற்பட்ட தமிழிலக்கிய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியுள்ளார்.எத்தகையை ஆரவாரமும் இன்றி உலகை வளம் வரும் இவர் பல்வேறு நாட்டில் வாழும் உலகத் தமிழறிஞர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். தற்காலத்தில தமிழின் பெருமையை உலகறிய பறைசாற்றுவதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. மருதநாயகத்தின் பல்வேறு பணிகளைப்பற்றி ஆராயும்பொழுது ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். இவரைப் போல இன்னொரு ஆங்கிலப்பேராசிரியரும் இல்லை. அதே சமயம் இன்னொரு தமிழ்பேராசிரியரும் இல்லை. இரா.திருமுருகன் (1929 - 2009) இசைத்தமிழறிஞராகிய இரா.திருமுருகனார் குரலிசையிலும் குழலிசையிலும் வல்லவர். இவர் தமிழிசைக்கும் இசைத்தமிழுக்கும் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. ‘என் தமிழ் இயக்கம்’ என்னும் தலைப்பில் தமிழுணர்வோடு தமிழுக்காகப் பல்வேறு மடல்களும் அறிக்கைகளும் எழுதியவர். தனது வாழ்க்கையை இடைவிடாதப் போராட்ட இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். இசைத்தமிழுக்கு இலக்கணம் தேவை என்பதை உணர்ந்து இசைத்தமிழையும் இலக்கண மரபையும் போற்றியவர். தமிழுக்கு இழுக்கு நேரும்படி யார் பேசினாலும், எழுதினாலும் முறையான ஆதாரங்களோடு அவர்களைச் சாடுவதிலும் தயங்காதவர். இதழ்ப்பணியிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. புதுவை மண்ணிற்குப் பெருமை சேர்த்தவர். புதுச்சேரியில் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை நடைமுறைப்படுத்த பல்வேறு முயற்சிகளை முன்னின்று நடத்தியவர். இத்தகைய ஒருவரை இழந்துவிட்டோம் எனினும் இசைத்தழிழறிஞரை தமிழ் உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக தமிழ்நேயம் இவர் பெயரில் ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. அந்த இதழில் திருமுருகனாரின் பல்வேறு நூல்களிலிருந்து அவரின் ஆக்கங்களைத் தெரிவுசெய்து தமிழ்நேயம் -39ஆவது இதழில் (அக்.2009)வெளியிட்டது. இத்தொகுப்பின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகிறது. தமிழ் இயக்கப்பணிகள்: ஆண்டுதோறும் இவர் ஆற்றிய தமிழ் இயக்கப்பணிகள் குறித்து ‘என் தமிழ் இயக்கம்’ என்ற நூலை வெளியிட்டார். எட்டாண்டுகளுக்கு மேல் இப்பணி தொடர்ந்தது. இந்த நூலில் தொகுக்கப்பட்டவை பெரும் பகுதி அவர் பலருக்கு எழுதிய மடல்கள். தமிழுக்கு இன்னல் நேரும் முறையில் எழுதியவர், பேசியவர் எவராயினும் அவரை, அவர் எத்தகைய பதவி வகித்த போதிலும் அதுபற்றிக் கலக்கமுறாமல் அவருக்கு மடல் எழுதிக் கண்டித்தார். சான்றாக அகநானூற்றையும், புறநானூற்றையும் படித்தால் ஆடு, மாடு மேய்க்கத்தான் போகவேண்டும் என்று சட்டசபை அவைத்தலைவர் பேசியபோது அவரைக் கண்டிக்கும் முறையில் திருமுருகன் மடல் எழுதினார். அவைத்தலைவரான பேராயக்கட்;சியை சார்ந்தவர், ஒருசமயம் காந்தியடிகள் மயிலாடுதுறை வந்தபோது ஆங்கிலத்தில் வரவேற்புரை எழுதி வாசித்ததைக் காந்தியடிகள் ஏற்கவில்லை. தனக்குப் புரியாது என்ற போதிலும் அவர்கள் தம் தாய்மொழியாகிய தமிழில்தான் வரவேற்புரை எழுதியிருக்கவேண்டும் என்று காந்தியடிகள் கூறினார். காந்தியைத் தலைவராகக் கொண்ட அவைத்தலைவர் இப்படிப் பேசலாமா? என்று திருமுருகனார் கண்டித்தார். அவைத்தலைவர் என்றும் பாராமல் விமர்சித்து மடல் எழுதியதோடு தமிழில் எழுதுமாறு வற்புறுத்தினார். எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் திருச்சி வந்த கார்த்திக்கேசு சிவத்தம்பி திருப்பியனுப்பப்பட்டார். மாநாட்டில் கலந்து கொள்ள வில்லை. இது பற்றி அறிவிப்பு எதுவும் மாநாட்டில் தரப்படவில்லை. இந்நிலையில் சிவத்தம்பி கட்டுரைப் படிப்பதாக கருத்தரங்க அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பற்றி அரங்கமே அமைதியாக இருந்த போது திருமுருகன் உரத்த குரலில் சிவத்தம்பி எங்கே? என்று கேட்டார். தலைவர் நொபுருகசிரமா முன்வந்து எங்களுக்கும் அது தெரியாது என்று கூறினார். கருத்தரங்கு முடிந்து வந்தபிறகு வெளியில் வந்த அனைவரும் திருமுருகனாரைப் பாராட்டினர் (மேலது, ப.27). பலரும் அரசின் கருத்து என்னவாக இருக்குமோ என்று அமைதியாக இருந்தாலும் திருமுருகனார் மட்டும் வெளிப்படையாகக் கேள்வி எழுப்பினார். (சிவத்தம்பி, விடுதலைப் புலிகளின் சார்பாளராக இருந்தார் என்பதற்காக அரசு அவரைத் திருப்பியனுப்பியது. இதன் காரணமாக எவரும் குரல் எழுப்பாத போது திருமுருகனார் மட்டுமே குரல் எழுப்பினார்). தினமணியில் கட்டுரை ஒன்று எழுதிய புதுவை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கி.வேங்கிடசுப்பிரமணியம் அவர்கள் ‘உதட்டில் தமிழ், உள்ளத்தில் ஆங்கிலமே?’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் பாரதி கூறியது போல ‘மெல்லத்தமிழ் இனிச்சாகுமா?’ என்று கேட்டிருக்கிறார்? துணைவேந்தராகப் பணியாற்றிய காலத்தில் அரசின் கட்டுப்பாடு காரணமாக தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை என்று எழுதியதோடு இனி பட்டித் தொட்டியனைத்தையும் இணைக்கும் தமிழியக்கம் தேவை என்று முடித்திருந்தார். அவருக்கு மடல் எழுதிய திருமுருகன் ‘மெல்லத் தமிழ் இனிச்சாகும்’ என்ற கூற்று பாரதியாரின் கூற்றல்ல வேறொரு பேதையின் கூற்று. அன்றியும் புதுவையில் தமிழியக்கம் கண்ட திருமுருகன், ம.இலெ.தங்கப்பா முதலியவர்கள் நடைப்பயணமாக மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டி கி.வேங்கடசுப்பிரமணியம் அவர்களுக்கு இப்பொழுது பதவி இல்லை. இனி எங்களோடு இணைந்து நடைப்பயணம் மேற்கொள்வாரா? என்ற நோக்கில் எழுதினார் (மேலது ப.31). இவ்வாறு துணைவேந்தர் எனினும் தயங்காமல் எதிர்மடல் எழுதும் திறனாய்வாளர் திருமுருகன். மேலும் திருமுருகனார் “தமிழ்ப்பணிகள் பொருட்டுப் பிரான்சு, செருமனி, உரோம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்த பெருமைக்கு உரியவர். என் தமிழியக்கம் என்னும் பெயரில் ஐயா உருவாக்கியுள்ள நூல்களில் இவர் தம் நாற்பதாண்டுக்காலப் பணிகள் பதிவாகியுள்ளன” என்கிறார் மு.இளங்கோவன். (muelangovan.blogspot.in/ 2008/09/ blog-post-2-tml) எட்டரை இலட்சம் அறிவியல் கலைச் சொற்களைத் தொகுத்த அறிஞர் மணவை முத்தபா 35 அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழில் அறிவியல் கற்பிக்கப்பட்டால் மட்டுமே முத்தபாவின் முயற்சிகள் தமிழ் மக்களுக்குப் பயன்படும் என்கிறார் திருமுருகன். முத்தபா கூறியபடி அறிவியல் துணையில்லாமல் வாழ்க்கை ஒர் அங்குலம் கூட நகர முடியாது என்பதைத் திருமுருகன் ஒப்புக்கொள்கிறார். இந்தி எதிர்ப்பு: 1965இல் இந்திமொழிக்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டம் திருமுருகனாருக்கு உடன்பாடில்லை. இந்தியை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆங்கிலத்தைத் தட்டிக்கொடுத்து வளர்க்கும் அவலம் குறித்து முன்கூட்டியே உணர்ந்து வருந்தினார் (மேலது ப.47). தமிழுக்கு ஆக்கம் தராத ஒரு போராட்டத்தை இவரால் எப்படி ஏற்க முடியும்? சிந்துப்பாவியல்: தமிழிசை என்பதும் இசைத்தமிழ் என்பதும் ஒன்றல்ல. இரண்டும் வேறுபட்டவை என்கிறார். கர்நாடக சங்கீதம் என்பது உண்மையில் தமிழிசைதான். இதற்கு ஆதாரமாக குறிஞ்சி, பள்ளு, தேவாரம் முதலிய இசைத்தமிழ் நூல்களை எடுத்துக்காட்டினார். அன்றியும் நெடுங்காலமாக நிலவிவந்த தமிழப்பண்கள் தான் தற்பொழுது கர்நாடக சங்கீதத்தில் இராகங்கள் என்று எடுத்துக்காட்டினார். தமிழிசை என்பது இயல்தமிழ். இசைத்தமிழ் என்பது தேவாரம் முதலியவற்றைக் குறிப்பிடுவது. தமிழிசைக்குப் பயன்படுத்தும் யாப்பமைதி இசைத்தமிழுக்கு ஒத்துவராது. இசைத்தமிழ் என்பது சந்தம் முதலியவற்றோடு இயங்கும். இதற்கு எடுத்துக்காட்டு சிந்துப்பாடல்கள். சிந்துப்பாடல்களுக்கு உரிய இலக்கணத்தை முதன்முறையாக வரையறை செய்தார் திருமுருகனார். இதற்காக அவர் முனைவர் பட்டம் பெற்றார். இந்நூல் குறித்துஅவர்; தரும் விளக்கம் வருமாறு: “தாளமுடைய இசைத்தமிழ்ப் பாடல்களைச் சந்தப்பா, வண்ணப்பா, சிந்துப்பா, உருப்படி என வகைப்படுத்தலாம். அவற்றில் சந்தப்பாவிலக்கணமாக விருத்தப்பாவியலும் வண்ணப்பாவிலக்கணமாக வண்ணத்தியல்பும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் சிந்துப்பாவுக்கும் உருப்படிக்கும் இலக்கணம் இல்லை. சிந்துப்பாவுக்கு இலக்கணம் எழுதும் முயற்சியே என் முனைவர் பட்ட ஆய்வு.” (சிந்துப்பாவியல், நூலாசிரியர் உரை) திருமுருகன் சிந்துப்பாடல்களுக்கு இலக்கணம் வகுத்தளித்திருப்பதன் இன்றியமையாமை குறித்து ம.இலெ.தங்கப்பா பின்வருமாறு கூறுகிறார். “சிந்துப்பாடல்கள் பல்லாண்டாகத் தமிழில் எழுதப்பட்டும் பாடப்பட்டும் வந்திருக்கும் ஒர் இலக்கிய வகை. எந்த யாப்பிலக்கண நூலிலும், சிந்துப்பாடல்களின் இலக்கணம் முழுமையாகக் கூறப்படவில்லை. தொல்காப்பியம் இசையிலக்கண நூலன்று இக்குறையுணர்ந்து அதனை நிறைவு செய்தவர். தமிழில் வழங்கிவரும் நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து, கும்மி, இலாவணி, கிளிக்கண்ணி, தென்மாங்கு முதலிய கிளிச்சிந்துப் பாவினங்களை வகைப்படுத்தி, அவற்றின் இசை நுட்பங்கள், தாள அமைதி யாவும் உட்பட முறையான யாப்பிலக்கணத்தை இந்நூல் தமிழுக்கும் தமிழர்க்கும் வழங்கியுள்ளது” (பக்.75,76). விருதை திருப்பித் தந்தமை: தமிழ் அறிஞர்களுக்கு தமிழ்மாமணி விருது அறிவிப்பு (1998) தெரிவித்த புதுவை அரசு, செயல்பாடதிருந்த தமிழ் வளர்ச்சி சிறகம் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிப்பது பற்றி எந்தத் தகவலும் அறிவிப்பில் வெளியிடாதது குறித்து கல்வி அமைச்சருக்கு திருமுருகன் கோரிக்கை விடுத்தார். புதுவையில் ‘தமிழ் வளர்ச்சி சிறகம்’ செயல்படவில்லை. இது குறித்து கல்வி அமைச்சருக்கு அவர் மடல் எழுதினார். சிறகம் செயல்படாமலிருக்கும் போது தமிழ்ப் புலவர்களுக்கு அரசு விருது வழங்குவது ஏன் என்று கேட்டிருந்தார் (ப.43) அமைச்சர் என்றும் பாராமல் திருமுருகன் தட்டிக்கேட்டார் பயனில்லை. திருமுருகனாரும் தங்கப்பாவும் புதுவை அரசு தங்களுக்கு வழங்கிய தமிழ்மாமணி விருதை ஏற்கும் பொழுதே சில நிபந்தனைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறித்தான் விருதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஓராண்டாகியும் புதுவை அரசு தமிழை ஆட்சி மொழியாக்கும் சட்டத்தை நிறைவேற்றவில்லை. குறைந்த அளவு அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பதைக்கூட அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில் தமிழ் மாமணி விருதை அரசிடமே திருப்பி அளிப்பதென முடிவு செய்து தமிழ் அன்பர்களைத் திரட்டி ஊர்வலமாகச் சென்று விருதை திருப்பியளித்தனர். அரசு என்ன பதில் சொல்ல முடியும்! இதழ்ப்பணி: ‘தெளிதமிழ்’ என்னும் இதழைத் தோற்றுவித்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வந்தார். இவ்விதழின் மூலம் தமிழின் தனிச்சிறப்பாகிய யாப்பிலக்கண அமைதியை இளைஞர்களுக்கு கற்பித்தார். இவ்விதழ் குறித்து, ய.மணிகண்டன் கூறுவதாவது: “தமிழ்ப்புலமை தோய்ந்துபோய் இருக்கும் சமகாலத்தில் புதிய எழுச்சியை ஊட்டும் வண்ணம் மரபிலக்கணப்பரப்பில் அரும்பணிகளை ஆற்றி வந்தது தெளிதமிழ்” (www.kalachuvadu.com/ issue-115/ page 48-asp) என்கிறார். மாறுபட்ட கோணங்களில் தமிழ் இலக்கணம் பற்றிப் போட்டிகளும், விவாதங்களும் இதழில் வெளிவந்தன. இவ்வகை நோக்கத்தோடு தமிழில் தெளிதமிழ் மட்டுமே செயல்பட்டது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் இவ்விதழ் செல்வாக்கு பெறவில்லை என்றாலும் தெளிதமிழின் பணி தமிழுக்குப் பெரிதும் தேவை. இன்றும் இவ்விதழ் புதுவை அன்பர்களின் ஒத்துழைப்போடு வெளிவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக திருமுருகனார் தாமே ஒரு தமிழியக்கமாகச் செயல்பட்டார். ஒரு பள்ளியில் தமிழாசிரியராக பல ஆண்டுகளுக்கு மேல் இருந்து கொண்டே ஆட்சியாளருக்கு எதிராக தமிழியக்கத்தைச் செயல்படுத்திய இவருடைய துணிவும், துணிச்சலும் பாராட்டத்தக்கது. தமிழுக்கு ஆக்கமில்லை எனில் அரசு தரும் விருதைக்கூட திருப்பித்தரக்கூடிய நெஞ்சுரம் மிக்கவர். இவரை ஒரு தமிழ்ப்போராளி என உரத்துச் சொல்லலாம். திருமுருகன் குறித்து ஞானி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “திருமுருகன் அவர்கள் நம் காலத்தில் மிகச்சிறந்த தமிழ்ப்போராளியாய் விளங்கினார். தமிழுக்கு நம் காலத்தில் நெருக்கடிகளும் கூடுதலாகி வருகின்றன. இந்நிலையில் நிறுவனங்களோடு போராடாமல் தமிழைக் காக்கவும் முடியாது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மேன்மையை அழிப்பதில் முனைந்து செயல்படுவதை நாம் அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கவும் முடியாது. தமிழியக்கங்கள் இவ்வகையில் தமிழ் உணர்வாளர்களைத் திரட்டி தமிழ்க்காப்பில் முனைந்து நிற்கத்தான் வேண்டும். திருமுருகன் இவ்வகையில் தனித் தமிழ்ப்போராளி” (நமக்கான தமிழிலக்கிய கொள்கை, ப.106) என்கிறார். சி.இலக்குவனார் (1909 - 1973) தமிழ்ப்போராளியாக தன் காலமெல்லாம் வாழ்ந்த இலக்குவனார் இளமை முதற்கொண்டே தமிழுணர்வும் பகுத்தறிவு பார்வையும் உடையவராகத் திகழ்ந்தார். படிக்கும் காலத்திலும் கல்லூரியில் பயிலும் காலத்திலும், கல்லூரிப் பணியின்போதும் ஊர்ப்புறங்களில் நடைப்பயணம் மேற்கொண்டு தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் பொதுமக்களுக்குக் கற்பித்தார். தமிழாசிரியர்களுக்கிடையில் ஒரு விதிவிலக்காகத் திகழ்ந்தார். இவரைச் சிறப்பிக்கும் முறையில் தமிழ்நேயம் இதழ்-49இல் வெளிவந்தது. ஆசிரியர் பணியும் போராட்டமும்: திருவையாறு அரசர் கல்லூரியில் (1942-44) தமிழ்த்துறை விரிவுரையாளராகத் தன் பணியைத் தொடங்கினார். கல்லூரியில் பணியாற்றும் பொழுதே, வெளியில் பொது மக்களுக்காகவும் தமிழ் அமைப்புகள் ஏற்படுத்தினார். தமிழ் வகுப்புகள் நடத்தினார். தமிழுக்கு விழா எடுத்தார். மாணவர்களிடையேயும் பொது மக்களிடையேயும் தமிழ்ப்பற்றையும் தன்மான உணர்வையும் வளர்த்தார். இதன் காரணமாக தமிழ்ப் பகைவர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். பின்னர் திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் (1944 - 47) பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார். அக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பொறுப்பேற்ற பின்புதான் தமிழ்த் துறைக்கு மட்டுமல்ல கல்லூரியையே தமிழ் மணத்தில் ஆழ்த்தினார். ஆங்கில மயமாக இருந்த கல்லூரிச் சூழலில் ‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே’ என்பதை மாணவர்களுக்கு உணர்த்தினார். இவர் ஆங்கிலத்தை வெறுக்கவில்லை எனினும் தமிழை முதன்மையாகக் காக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். தமிழ்ச்;சொல் இருக்கும் போது ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துவது கொலைக்குச் சமம் என்றார். இதனால் சக ஆசிரியர்களும் இவருக்கு பகைவர்களாகினர். தூயத்தமிழ்ப் பற்றையும் வளர்த்தார். வேற்றுமொழிச் சொற்களைக் களைந்தார். இதன் காரணமாக ஆரிய மாணவர்களின் வெறுப்புக்குள்ளானார். (த.நே.49, ப.31) தமிழ்ப் பகைவர்கள் எதிர்ப்பின் காரணமாக கல்லூரியிலிருந்து வெளியேற நேர்ந்தது. இதன்பிறகு விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியில் (1947-52) தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்தார். இவரது தமிழ்ப்பணிகளும் செவ்வனே நடந்தன. 1952 தேர்தலின் போது சாதித் தலைவரை ஆதரிக்கவில்லை என்பதற்காக அக்கல்லூரியிலிருந்து நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார். (ப.42) நாகர்கோவிலில் உள்ள தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் (1958-61) தமிழ்துறைத் தலைவராக தம் தொண்டினைத் தொடர்ந்தார். திருவள்ளுவருக்குப் பெரிய அளவில் விழா எடுத்தார். கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்குஉரிய காலத்தில் உதவித் தொகையை தராமல்ஆண்டு இறுதியில் தருவதை எதிர்த்தார். கல்லூரி நிர்வாகத்தோடு உதவித்தொகை பிரச்சனையில் ஒத்துழைக்காததால் கல்லூரியை விட்டு விலக்கப்பட்டார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் (1961-65) தமிழ்த்துறைத் தலைவர் பொறுப்பேற்றார். அக்கல்லூரியில் தொல்காப்பியர், திருவள்ளுவர், பாரதிதாசன் ஆகியவர்களுக்கு விழா எடுத்துச் சிறப்பித்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் இங்குப் பணியாற்றினார். இக்கல்லூரியில் பணியாற்றியபோது 1965இல் ‘குறள் நெறி’ இதழ் தொடங்கினார். மத்திய அரசு இந்தியை தமிழர் மீது திணிப்பதைக் கடுமையாகச் சாடி, குறள் நெறியில் எழுதினார். இவரால் எழுச்சிப் பெற்ற மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போரை மதுரையில் தொடங்கினர். பின்னர் இப்போர் தமிழகம் முழுவதும் தீயாகப் பரவியது. இதற்காக இவர் சிறைச் செல்லவும் நேர்ந்தது. விடுதலை பெற்றபிறகும் இந்தி எதிர்ப்புப் பணியிலும் தமிழ்காப்புப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டார். இந்தி எதிர்ப்புப்போர் வெற்றிப் பெற்றது. இதற்காக அறிஞர் அண்ணாவின் பாராட்டைப் பெற்றார். முதலமைச்சர் அண்ணாவின் அறிவுரையின் பேரில் சென்னை மாநிலக் கல்லூரியில் (1967) இணைப்பேராசிரியராகப் பணியேற்றார். இக்கல்லூரியில் இளங்கலை தமிழ் சிறப்பு வகுப்பைக் கொண்டு வந்தார். இளங்கலை, முதுகலை மாணாக்கர் தமிழுணர்வும் தமிழ்ப்புலமையும் சிறக்க ஆய்வுக்கட்டுரை, ஏடுகள் உருவாக்கும் திட்டத்தை ஏற்படுத்தினார். முதன்முதலில் அஞ்சல் வழிக்கல்வியை அறிமுகப்படுத்தியவரும் இவரே. இக்கல்லூரியில் ஓராண்டு பணிக்குப்பிறகு தமிழ்நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தது. அறிஞர் அண்ணாவின்கருத்திற்கு மாறாக தமிழ்த்துறைத் தலைவர் பதவி இலக்குவனாருக்கு வாய்க்கவில்லை. இணைப்பேராசிரியர் பதவியே கிட்டியது. ஓவ்வோர் ஆண்டும் பதவி புதுப்பிக்கப்பட்டது. இவை யெல்லாம் அண்ணாவின் பார்வையில் படவில்லை. இதன்காரணமாக பேராசிரியர் உசுமானியா பல்பலைக்கழகத்திற்குப் போக நேர்ந்தது. தன்னை நாடு கடத்தியதைப் போல பேராசிரியர் உணர்ந்தார். உசுமானிய பல்கலையில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றும் தகுதி தமிழகத்தில் எவருக்கும் இல்லை என்று ஆந்திர அரசு கூறியதை மறுக்கும் முறையில் உசுமானியா பல்கலைகழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றும் தகுதி தனக்கு உண்டு என்று அதை மெய்ப்பிக்கும் முறையில் தமிழ்த்துறைத் தலைவர் பணியேற்றார். இங்குப் பணியாற்றும் காலத்தில் ஆந்திராவில் வாழும் தமிழர்கள் தமிழுணர்வு பெறுவதற்காகவும் தமிழ்க்கல்வி பெறுவதற்காகவும் பாடுபட்டார். மேலும் தெலுங்குப் பேராசிரியர் மத்தியில் தமிழ் மொழியே தெலுங்கு மொழிக்கு, மூலமொழி என்பதை எடுத்துரைத்தார். (ப.84) இவ்வாறாக கல்லூரிப் பணியில் எங்கு பணிபுரிந்த போதிலும் தமிழுக்கும் நேர்மைக்கும் இழுக்கு நேர்ந்தால் தடுத்து எதிர்த்துப் போராடுபவராகவும், இவரது போர் முழக்கம் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான போக்காகவும் இருந்தது. இதன்காரணமாக கல்லூரியிலிருந்து இவர்விலக நேரிடுகிறது. என்ற போதிலும் இவரது தமிழ்ப்பணியும் போராடும் குணமும்சிறிதளவும் குறையவில்லை. இதழ்ப்பணி: பேராசிரியராகப் பல்வேறு ஊர்களில் பணியாற்றிய காலங்களில் இதழ்ப்பணியிலும் ஈடுபட்டிருந்தார். நெல்லையில் இருந்த போது ‘சங்க இலக்கியம்’ (1944) என்ற இதழைத் தொடங்கினார். சங்க இலக்கியத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். புலவர்களுக்கு மட்டும் உரியதாக திகழ்ந்த சங்க இலக்கியத்தைப் பொதுமக்களுக்கு உரியதாக எளிமைப்படுத்திப் பரவச்செய்தார் (சி.இலக்குவனார், ப.85). விருதுநகரில் பணியாற்றிய காலத்தில் ‘இலக்கியம்’ என்ற இதழை நடத்தினார். ‘கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க’ என்று பாரதிதாசன் கூறியவாறு இதழ்ப்பணியை மேற்கொண்டார். ‘இலக்கியம்’ இதழின் விடுதலைநாள் மலரில் ’தமிழுக்கு விடுதலை, கல்விக்கு விடுதலை, மக்களுக்கு விடுதலை, கலைக்கு விடுதலை தேவை என்றெல்லாம் கட்டுரைகள் வெளியிட்டார். அரைகுறை அரசியல் விடுதலையால் பயனில்லை. தமிழ் முழு விடுதலை பெற்றால் மட்டுமே தமிழர்க்குப் பயன் உண்டு என்பதை உணர்த்தினார். (ப.39) தஞ்சையிலிருந்த போது ‘திராவிட கூட்டரசு’ (1952) எனும் பெயரில் தமிழிலும் ‘Dravidian Federation’ எனும் பெயரில் ஆங்கிலத்திலும் இதழ் நடத்தினார். இவ்விதழில் இந்தியாவில் கூட்டாட்சி ஏற்பட வேண்டும். கூட்டாட்சியில் தான் மாநிலங்கள் உரிமையோடு வாழமுடியும் என்று எழுதினார்.தமிழர்களே தமிழர்களை ஆளவேண்டும் என்றும், மொழிவழித் தேசிய கூட்டரசு தேவை என்றும் இதழில் எழுதினார். தமிழ்நாட்டுப் பிரிவினை தேவை என்று எழுதிய பெரியார் 1952 தேர்தலில் காங்கிரசு கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதைக் கண்டித்தார். ஒரே இந்தியா என்று பேசும் காங்கிரசு ஒழிந்தாலன்றி மாநிலங்கள் தன்னாட்சி பெறமுடியாது என்றும் எழுதினார். மொழிவழி மாநிலங்கள் அமைய வேண்டும் என்றும் மாநிலங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூட்டரசு அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவ்வகையில் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய முன்னோடிப் போராளியாகத் திகழ்ந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றியபோது ‘குறள் நெறி’ (1963) இதழைத் தொடங்கினார். சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றைப் பரப்புவதுடன் “குறள்நெறியில் மக்கள் வாழ்ந்தால், அரசியல் நடந்தால், ஆட்சி செய்தால், மக்களின் அனைத்துத் துன்பங்களும் அகன்றுவிடும்” (ப.87) என்று எழுதினார். நூலாக்கப்பணி: தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதினார். மொழியியல், இலக்கணம், வரலாறு, தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு வகையான நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். வடமொழியில் எழுதப்பட்ட பாணினி இலக்கண நூலைப் பின்பற்றித் தொல்காப்பியம் எழுதப்பட்டது என்பதை அறவே மறுத்தார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலநூல்களைத் தமிழுக்கும் மொழிப்பெயர்த்துத் தமிழுக்குப் பல்வேறு வகையில் ஆக்கம் சேர்த்துள்ளார். இலக்குவனாரும் அண்ணாவும்: பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர் இலக்குவனார். ‘Tholkappiyam in English Critical Studies’ என்ற முனைவர் பட்ட ஆய்வு நூலுக்கு அண்ணா அணிந்துரை வழங்கினார். மேலும் இந்நூலினைச் சிறப்பிக்கும் முறையில் மதுரையில் நடைபெற்ற மாபெரும் விழாவைப் போல இன்னொரு விழா இல்லை என்று சொல்லுமளவிற்கு இந்நூல் வெளியீட்டு விழாவெகு சிறப்பாக நடைப்பெற்றது. அறிஞர் அண்ணா மருத்துவத்திற்காக அமெரிக்கா செல்லும் வழியில் போப் ஆண்டவரைச் சந்தித்தபோது தமிழ்நாகரிகத்தின் பெட்டகமாகத் திகழும் இலக்குவனாரின் தொல்காப்பிய நூலை அவருக்குப் பரிசளித்தார். அமெரிக்க யேல் பல்கலைக் கழகத்தின் மாணவர்களுக்கு இந்நூலை அறிமுகப்படுத்தினார். அமெரிக்க நூலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் இந்நூலை வழங்கினார். (ப.85) ஐம்பது ஆண்டுகளுக்கிடையில் ஒரு விதிவிலக்கான பேராசிரியராக இருந்து தமிழ்காப்புப் போரில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதுடன் இந்தி எதிர்ப்புப் போரையும் சாதி எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவுக்கான போரையும் திறம்பட நடத்தினார். இறுதி வரை தமிழ்ப்போராளியாக இருந்தார். எந்த ஒரு கல்லூரியிலும் நிலையாக இவரை இருக்க விடாமல் நிர்வாகத்தினர் செயல்பட்டனர். எனினும் தமிழ்ப்போரை இவர் தளர்த்திக் கொள்ளவே இல்லை. இவரைப் போல இன்னொரு தமிழ்ப் பேராசிரியர் இல்லை என்னும் முறையில் இவர் தமிழ்ப்பேராளியாக வாழ்ந்தார். இவரை கி.ஆ.பெ.விசுவநாதம் பின்வருமாறு வியந்துரைக்கிறார். “தமிழாசிரியர்களில் அவர் தப்பிப் பிறந்தவர் எனலாம். காரணம், அவர் தமிழால் வாழாமல் தமிழுக்காகவே வாழ்ந்து தமிழுக்காகவே சிறையும் சென்றவர் என்பதே” (சி.இலக்குவனார், முன்னுரை). இவரது வாழ்க்கையே ஒரு போராட்ட வாழ்க்கையாகும். பல்வேறு சிறப்புப் பட்டங்களும் புகழ்மொழிகளும் பெற்ற இவர் 1973இல் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்ப் பேராசிரியர்களுக்கிடையில் ஓர் ஒளி விளக்காகவும் தமிழ்ப்போராளியாகவும் தம் காலம் முழுவதும் திகழ்ந்தார். தமிழருக்கு நெருக்கடி மிகுந்து வரும் இக்காலத்தில் இவரைப் போன்ற பேராசிரியர்கள் செயல்பட்டால் மட்டுமே தமிழைக் காக்க முடியும். க.பூரணச்சந்திரன்: திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத்தலைவராகப் பணி புரிந்தவர். எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், திறனாய்வாளர், ஆய்வாளர் என இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் கற்றதோடு, ஆங்கில இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்தி, வடமொழி, பிராகிருதம், ஜெர்மன் எனப் பல மொழிகளை விரும்பிக் கற்றவர். பன்மொழிகளில் பயிற்சி பெற்றதால் இவரது மொழிப்பெயர்ப்பும் திறனாய்வு பார்வையும் விரிவும் வளமும் கொண்டதாக அமைகிறது. மேலும் இவர் இலக்கியம், அரசியல், அறிவியல், வரலாறு, கவிதையியல், கதையியல், மொழியியல், சமூகம், இதழியல், சினிமா, சிறுவர்களுக்கான இலக்கியம், பயணஇலக்கியம் என்று தன் எழுத்து தளத்தை விரிவாக்கி ஒரு நீண்ட நெடும் பயணத்தில் தன்னை இயக்கிக்கொண்டிருக்கிறார். மார்க்சிய பார்வையை விட்டு விடாமலேயே நவீனத்துவம், அமைப்பியம், பின்நவீனத்துவம் ஆகிய பார்வைகளையும் தழுவிக் கொண்டவர். திருச்சியில் பாதல் சர்க்கார் நாடக முறையை கற்பிக்கும் முறையில் நாடகப்பட்டறை நடத்தியவர். கர்நாடக இசையையும் மேற்கத்திய இசையையும் கற்றவர். ஓய்வுப் பெற்றபின் தலைசிறந்த ஆங்கில நூல்களை மொழிப்பெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை மொழிப்பெயர்த்துள்ளார். இப்பணிக்காகப் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். (த.நே.46,ப.5) ஆய்வு நூல்கள்: ‘தமிழிலக்கிய திறனாய்வு வரலாறு 1900 முதல் 1980 வரை’ என்ற ஆய்வுநூலை இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியத்தின் தூண்டுதல் காரணமாக ஆறு மாதத்தில் எழுதி முடித்தார். இவரது நெறியாளர் நூலின் கருத்துகளை ஏற்கவில்லை என்றாலும் நூல் எழுதி 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் மாற்றம் ஏதுமின்றி முழுமையாக தஞ்சை பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வெளிவந்தது. இந்நூல் குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியம் குறிப்பிடுவதாவது: “சுமார் எண்பது ஆண்டுகளில் தமிழில் தோன்றிய திறனாய்வளர்களை ஆய்வு செய்து, தமிழாய்வின் போக்குகளை மதிப்பீடு செய்து, நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து தமிழ் வளர்ச்சிக்கு ஏற்ற வழிமுறைகளையும் விளக்கி, நம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் ஓர் ஒளிவிளக்காக இந்நூலை உருவாக்கி வழங்கியுள்ள பேராசிரியர்.க.பூரணச்சந்திரன்” (தமிழ் இலக்கியத்திறனாய்வு வரலாறு, அணிந்துரை). பேராசியர் ந. சஞ்சீவி அவர்களின் நெறிப்படுத்தலில் ‘தமிழ்பொழில்’ பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். தமிழ்பொழிலை வரலாற்றுப் பின்னணியில் ஆய்வு செய்தார். ஆய்வுநூல் நூலாக்கம் பெறவில்லை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் ‘தொல்காப்பியப் பொருள்கோள்’ என்ற இவரது ஆய்வுநூல் தற்போது உலக தமிழாரய்ச்சி நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. இந்நூல் தமிழில் பொருள்கோள் குறித்து எழுந்;த முதல் நூலாகும். “பொருள் கோளின்கோட்பாடுகளைச் சொல்லாமல், தொல்காப்பியம்அது பற்றிக் கூறும் செய்திகளையும் இந்தச் சிறு நூல் விவாதிக்கிறது. தொல்காப்பியத்தை ஆழமாகக் கற்றால், தொல்காப்பிய முறைமைக்கான தத்துவக் கோட்பாட்டையே தனியாக உருவாக்க இயலும்.” (தொல்காப்பியப் பொருள்கோள், ஆசிரியர் உரை) எவை புனித இலக்கியம்?: தமிழறிஞர்களில் சிலருக்கு சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கம்பராமாயணம் போன்றவை புனித இலக்கியம். இவை எப்படி புனித இலக்கியம் என்பதைப் பூரணச்சந்திரன் கேள்விக்கு உட்படுத்துகிறார். சிறுவயது முதற்கொண்டே நம் மீது கருத்தினங்கள் திணிக்கப்படுகின்றன. தொல்காப்பியம், சங்க இலக்கியம், பாரதி, பாரதிதாசன் பாடல்கள் நம்மீது திணிக்கப்பட்டன. திணிக்கப்பட்டவற்றை நாம் கேள்விக்குட்படுத்துவதில்லை. இவ்வகையில் இவை நம்மை ஆழ்கின்றன. இவற்றை எதிர்த்துக் கேள்வி கேட்பதன் மூலமே நம்மைப்புதுப்பித்துக் கொள்ள முடியும். இவ்வகையான கேள்விகளை எழுப்பாதவர்களைச் சுந்தர ராமசாமி மொண்;னைகள் (ப.24) என்றார். இத்தகைய கருத்துகளை வெளியிடுவதினால் அமைப்பியல்வாதி, பின்னமைப்பியல்வாதி என்று இவரைக் கூறமுடியுமானால் அவ்வாறு தான் இல்லை என்கிறார். சில கேள்விகளை நான் எழுப்புவதினாலேயே நான் இதைச் சார்ந்தவனில்லை என்றார். முழுமை என்பது ஏதொன்றிலும் இல்லை (மேலது) என்பதை எடுத்துரைக்கிறார். ‘நான் விதியை நம்புகிறேன்’: சாதி என்பது இவ்வாறுதான் குழந்தைப்பருவம் முதலே நமக்குள் திணிக்கப்படுகிறது. அதை நாமும் ஏற்பதினால் நமக்குள் நாம் இறுகிப்போய் விடுகிறோம். சாதிக்குரிய ஆற்றல் இதுதான். நமக்குள் திணிக்கப்பட்ட ஒன்றை நாமே படைத்துக் கொண்டது போல் எண்ணுகிறோம். நமக்குள் திணிக்கப்பட்டவை நம்மை ஆள்கின்றன. பிறருடைய தேவைகளையே நாம் நிறைவேற்றுகிறோம். (ப.25) இக் காரணத்தால் தான் பூரணச்சந்திரன் விதியை நம்புகிறேன் என்கிறார். ‘வகுப்பறைக்கு வெளியே’: திருச்சியில் திரைப்பட சங்கம், நாடகச் சங்கம் முதலியவற்றில் உறுப்பினராக இருந்து தானும் பயிற்சி பெற்றார். ஒரு பேராசிரியர் என்ற முறையில் வகுப்பறைக்கு வெளியிலும் பல இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டார். கலை இலக்கியப் பணியிலும் இவர் தனித்துவமானவர். இவரால் கலை இலக்கியத்தில் பயிற்சி பெற்று புகழ் பெற்றவர் பலர். இசைக்கலைஞரான இவர் கர்நாடக இசையையும், இந்துஸ்தானி இசையையும் மிக அக்கறையோடு கற்றவர். கர்நாடக இசை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாமல் தேங்கிவிட்டது. இந்துஸ்தானி இசை அப்படியல்ல என்;கிறார். கட்சி மார்க்கியத்தைப் பூரணச்சந்திரன் ஒப்புக்கொள்ளவில்லை. முதலாளி என்பவன், தனிமனிதனே! அவன் முதலாளிய சமூகத்தின் ஒரு பிரதிநிதி. சமூகத்தை மாற்றாமல் முதலாளியத்தை ஒழிக்க முடியாது. அத்துடன் இவர் கட்சி மார்க்சியர் கருதுவது போல இலக்கியத்தை மேற்கட்டுமானம் என்று ஏற்கவில்லை. தமிழே தெரியாத தமிழர்கள்: மொழியை இவர் மனிதனுக்கு முக்கியமான ஒன்றாக கருதுகிறார். மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் இவருக்கு உடன்பாடில்லை. மொழியை யாராலும் அழிக்க முடியாது. மொழி எப்படியும் தன்னைத்தானே காத்துக் கொள்ளும் என்கிறார். உண்மையில் மொழி என்ற பிரவாகத்தில் நாம் அடித்துச் செல்லப்படுகிறோம். மொழிதான் ஒரு தமிழனையும் (அ) மொழி தான் ஒரு இந்தியனையும்படைக்கிறது. மொழியை தனித்தமிழ் ஆக்கும் முயற்சி இவருக்கு உடன்பாடில்லை. ஒரு சொல்லை மொழிப்பெயர்த்து முடிக்கும்முன் ஆயிரம் சொற்கள் பிற மொழிகளிலிருந்து வந்து சேர்கின்றன என்கிறார். மும்மொழிக் கொள்கை இருந்திருந்தால் ஆங்கிலத்தின் வளர்ச்சியைத் தடுத்திருக்க முடியும். தாய்மொழியாகிய தமிழைத் தமிழர் முதலில் படித்திருப்பார்கள். அதனால் தாய்மொழிப்பற்றும் தமிழ்மொழி வளர்ச்சியும் இமாலய வெற்றி அடைந்திருக்கும். இருமொழித் திட்டத்தை அமல்படுத்தியதன் விளைவாகத் தமிழோடு ஆங்கிலமும் பயில வேண்டும் என்ற நிலை உருவாயிற்று. காலப்போக்கில் ஆங்கிலத்தோடு போட்டியிட முடியாமல் தமிழ் தளர்ந்து போக, ஆங்கிலம் மட்டுமே படித்தால் போதும் என்ற நிலை உருவாகி, இன்று தமிழ்நாட்டில் தமிழே தெரியாத தமிழர்கள் உற்பத்தியாகின்றனர். (இந்திய மொழிகளில் - ஓர் அறிமுகம், ப.135). பேராசிரியரின் கடமை: மாணவர்களை ஈர்க்கக்கூடிய சக்தி தமிழ்ப் பேராசிரியருக்கு மட்டுமே உண்டு என்கிறார். இதனால் நாட்டின், மொழியின், சமூகத்தின் நிலை பற்றியெல்லாம் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வகுப்பறையில்தொடர்ந்து கேள்விகளை எழுப்புவதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனைத் தூண்ட முடியும். ஒரு பேராசிரியர் என்பவர் மாணவர்களின் தமிழ் உணர்வையும் தமிழறிவையும் மேம்படுத்துபவராக இருந்தாக வேண்டும். தனக்கென ஒரு தனித்துவ பார்வை உடையவரே சிறந்த பேராசிரியர். தமிழிலக்கிய வரலாறு பற்றியும் பேராசிரியருக்கு கவனம் தேவை. வரலாற்றில் புதுமைகளைக் காணவேண்டும். தமிழுக்கு வெளியேயும் சென்று புதுப்பார்வைகளைக் கற்கவேண்டும். நம் காலத்தில் இவ்வகையில் ஆங்கில மொழியைக் கற்பதன் மூலம் தமிழ் அறிவுலகத்தை விரிவுபடுத்த முடியும். இது போல ஆங்கிலம் கற்பதில் பலருக்குச் சிரத்தையில்லை. இதன் விளைவாக குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போலப் பலர் முடங்கிப் போகின்றனர். தமிழுக்குப் புதுப்பார்வை தேவை. அமைப்பியம், பின்னமைப்பியம் என்பவை இவ்வகை பார்வைகள். தமிழ் வகுப்புகளுக்கு வெளியே பூரணச்சந்திரன் செய்தவற்றைப் பார்க்கலாம். (1) திரைப்படச்சங்கம், நாடகச்சங்கம், முதலியவற்றைத் தோற்றுவிப்பது. (2) தோற்றுவித்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து கற்பது, பேராசிரியராகப் பணிபுரிவதும் இதற்கும் என்ன உறவு. பேராசிரியர் தன்னை எந்த அளவு விரிவுப்படுத்திக் கொள்கிறாரோ அந்த அளவுக்கு மாணவர்களுக்குப் பயன்படுவார். தனித்தமிழ் என்ற தூய தமிழ்ப்போக்கை ஏற்கலாமா? என்ற கேள்வி எழும். தனித்தமிழ் ஒன்றை வளாப்பதினாலேயே தமிழைக் காப்பாற்ற முடியும் என்பது உண்மையில்லை. தனித்தமிழ் முயற்சியையும் இகழ்ந்து விட முடியாது. மொழிப் பற்றிய பார்வை தமிழுக்குப் புதியது. தமிழ் தான் நம்மைப் படைக்கிறது. இலக்கியம் தான் நம்மைப் படைக்கிறது என்பது இவ்வகை பார்வை. மொழிக்குள் நாம் எவ்வாறு ஆழ்ந்து செல்கிறோமோ அந்த அளவுக்கு மொழியின் கட்டுக்குள் இணைகிறோம். இலக்கியத்திற்குள்ளும் நாம் ஆழ்ந்து செல்லவேண்டும். அப்படி செல்லும் பொழுதுதான் நமக்குள் படைப்பை உணரமுடியும். மொழிபெயர்ப்புப் பணி: முப்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தத்துவம், வரலாறு, இலக்கியம், அரசியல், மருத்துவம், இசை, சுற்றுச்சூழல் என இவரது மொழிபெயர்ப்பின் தளம் விரிந்து செல்கிறது. 2011இல் ஆந்திரக்கவிஞர் வரவரராவ் எழுதிய ‘சிறைப்பட்ட கற்பனை’ நூலின் மொழிபெயர்ப்பிற்கு ஆனந்த விகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது. சல்மான் ருஸ்தியின் ‘நள்ளிரவின் குழந்தைகள்’(மிட்நைட்ஸ் சில்ரன்) நூலுக்கு நாமக்கல்லில் உள்ள கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதினையும் பெற்றுள்ளார். தற்போது இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திற்காக இவர் மொழிபெயர்த்த கிஸ்பெர்ட் எழுதிய ‘சமூகவியலின் அடிப்படைகள்’ என்ற நூல் மத்திய மனித வளத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரபல நாவலாசிரியரான மனுஜோசப் எழுதிய உலகஅளவில் பலவிருதுகளைப்பெற்ற . ;பொறுப்புமிக்க மனிதர்கள்’ என்ற நாவலைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதற்காக இவருக்கு சாகித்திய அகாதமியின் பொழிபெயர்ப்பாளர்க்கான விருதை பெற்றுள்ளார். பூரணச்சந்திரன் பத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் எழுதியுள்ளார். இந்நூல்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவர் பதிப்பித்த நூல்கள் ஏழு. நூற்றுக்கும் மேற்பட்ட திறனாய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் திறனாய்வு நிறுவனங்களிலும் பல திட்டப்பணிகளை மேற்கொண்ட இவர், இன்றும் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் ஆழங்கால் பட்டவர் பூரணச்சந்திரன். பன்மொழி அறிஞர். பல்துறை வித்தகர். தமிழிலக்கிய திறனாய்வில் இவரது அணுகுமுறையைப் பாராட்டி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பர்கலைக்கழகம் ‘திறனாய்வுச் செம்மலல்’ என்ற விருதினை இவருக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது பாராட்டுக்குரியது.இத்தகைய பேராசிரியரேஇன்றும் தமிழுக்குத் தேவைப்படுகின்றனர். க.இரத்தினம்: முனைவர் க.இரத்தினம் ஒரு வித்தியாசமான பேராசிரியர் என்பதை அவரது வாழ்வு மட்டுமல்ல, படைப்புகளும் உறுதிப்படுத்துகின்றன.இலக்கியத்திற்கு அப்பால் சென்று அறிவைத் தேடியவர். படைப்பிலக்கியத்திலும், பறவைகள் பற்றிய ஆய்விலும் தீவிரமான ஈடுபாடு கொண்டவர். பேராசிரியர், படைப்பாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், பறவை இன ஆய்வாளர் எனப் பன்முகப் பார்வைகள் இவருக்கு உரியவை.சோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுடையவர். ‘சோதிடம் தனை இகழ்’ என்ற பாரதியின் கூற்று இவருக்கு நெருடலைத் தந்த போதிலும் இவரது வாழ்வு பற்றிச் சோதிடர் கூறிய பல நிகழ்வுகள் உண்மை என்று குறிப்பிடுகிறார். ‘கல்லும் மண்ணும்’ என்ற புதினம் எழுதிய தன் மூலம் நவீனத் தமிழ் இலக்கியத்தில் தன் முத்திரையைப் பதிப்பித்தவர். பல்வேறு அரசு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். படைப்புகள்: க.இரத்தினம் தன் காலம் முழுவதும் ஏதாவது ஒரு நூலைப் படைத்துக்கொள்வதில் பெரும் முனைப்புடன் செயல்படுகிறார். இவரது முதல் வசன கவிதை நூல் ‘பேதை நெஞ்சம்’ பெண்ணின் அவலம் பற்றியது. பலரது பாராட்டைப் பெற்ற ‘கல்லும் மண்ணும்’ என்ற புதினம் கொங்கு வட்டாரப் பின்புலத்தில் உருவானது. இப்புதினம் இவரது படைப்புத் திறனுக்குச் சான்றாகும். இந்நூல் கல்லூரிகளில் பாடமாக்கப்பட்டுள்ளது. ‘கனவு மாலை’, நினைவின் நிழல்’ என்ற இரு புதினங்களும் கடித வடிவில் அமைந்தவை. இவரது இம்முயற்சி படைப்பிலக்கியத்திற்குப் புதியவை. உருவகக் கதைகள் என்ற தனிநூலையும் படைத்துள்ளார். சாவு பற்றிய சிந்தனைகளைத் தொகுத்து ‘காலத் தேரொலி’ என்னும் நூலையும் வெளியிட்டார். இவரது நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இவரின் படைப்பாற்றலைப் பறைசாற்றுகின்றன. ஆய்வுப்பணி: இவரது முனைவர் பட்ட ஆய்வுநூல் ‘சங்க அகப்பாடல்களில் கூற்று’ முற்றிலும் புதிய பார்வையில்அமைந்த நூலாகும். இரத்தினத்தின் பறவைகள் பற்றிய ஆய்வு மிக விரிவானது. பணிநிமித்தமாகப் பல்வேறு இடங்களுக்கு மாற்றாலாகியதைப் பறவைகள் பற்றிய ஆராய்ச்சிக்கு இவர் பெரிதும் பயன்படுத்திக் கொண்டார். இராமநாதபுரத்தில் பணியாற்றியது தான் இவரது பறவைகள் பற்றிய பார்வையை விரிவுப்படுத்தக் காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டு அரசு கேட்டுக்கொண்டபடி, தென்னிந்திய பறவைகளில் முக்கியமான ஐந்நூறு பறவைகள் பற்றிய விளக்கங்களுடன் ‘தென்னிந்திய பறவைகள்’ என்ற நூலை உருவாக்கினார்.இந்நூல் பலரது வரவேற்பைப் பெற்றது. 2004இல் இவர் எழுதிய ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற நூல் தமிழக அரசின் முதற் பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது. ‘Birds of Tamil’ என்னும் பெயரில் இந்நூல் ஆங்கிலத்தில் வெளியாயிற்று. 1983இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் விருப்பத்திற்கிணங்க எட்கர் தட்சன் எழுதிய ‘The Castes and Tribles of South India’ என்ற நூலை 3500 பக்கங்களில் ஏழு தொகுதிகளாக மொழிபெயர்த்தார்.இந்நூல் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. சுற்றுச்சூழலில் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட இவருக்கு இயற்கை மருத்துவத்திலும் ஈடுபாடு அதிகம். தமிழ்நாட்டு மூலிகைகள் குறித்தும் அதன் சிறப்புகள் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். தற்போது எண்பது அகவை கடந்த நிலையிலும் ஓயாது வாசிப்பிலும் பறவைகள் நேசிப்பிலும் இயங்கி வருகிறார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் ஆய்வுத்திட்டத்தில் ‘சங்க இலக்கியத்தில் பறவைகள்’ என்ற நூலை எழுதியுள்ளார். வழக்கமான தமிழ்ப் பேராசிரியராக இல்லாமல் இக்காலத்தில் ஒருசிலரேனும் தமிழிலக்கியத்திற்கு வெளியே சென்று அறிவைத் திரட்டுகின்றனர். தன் மாணவர்களுக்கும் வழங்குகின்றனர். இந்த வகையில் க. இரத்தினம் அவர்களின் பணி பாராட்டுக்குரியது. இவரைப் பற்றி பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் கூறுவது இங்குக் குறிப்பிடத்தகும். “தமிழ்ப் பேராசிரியர்களில் பல்துறை அறிவு நிரம்பியவர், படைப்பாளி, மானுட இயல் ஆய்வாளர், ஆழ்ந்த கல்வியறிவும், சிந்தனைச் செழுமையும் வாய்க்கப் பெற்ற ரத்தினம் தமிழருக்கு அளித்த இரத்தினங்கள் பல. அவை துறைதோறும் ஒளி வீசுகின்றன” (எட்கர் தட்சனின் தென்னிந்திய மானிட இன இயல், பதிப்புரை). படைப்பிலக்கியவாதியும், பறவையியலாளருமான க. இரத்தினம் அவர்கள் தன்னை ஒரு ‘தமிழ்ப் பறவை’ என்று சொல்லிக் கொள்வது முற்றிலும் தகும். இரா.செல்வி தற்போது கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் செல்வி, பொறுப்புமிக்க ஒரு தமிழ்ப் பேராசிரியராகச் செயல்படும் அதே சமயத்தில் ஒரு படைப்பாளியாகவும், திறனாய்வாளராகவும், குறும்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். பெண்ணியம்: குன்னூரில் உள்ள உப தலை அரசு மேனிநிலைப் பள்ளி மற்றும் உதகை அரசு கல்லூரியில் படிப்பை முடித்தவர்.முதுகலை படிக்கும் போதே தன் பேராசிரியர் முப்பால் மணி அய்யாவின் வழிகாட்டுதலின்படி சோவியத் இலக்கியங்களைக் கற்றவர். மார்க்சிய சிந்தனைகளையும் உள்வாங்கியவர். தனது கல்லூரிப் பருவத்திலேயே ஒரு பெண்ணியப் போராளியாக இருந்துள்ளார். அனைத்திந்திய முற்போக்கு சனநாயக மாதர் சங்கத்தில் சேர்ந்து நீலகிரி மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கேனும் நடந்திருப்பின் அதனை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டு போர்க்கொடி தூக்குவதிலும் தீவிரமாகச் செயல்பட்டவர். பழமைவாதங்களை முற்றாக மறுத்துப் பேசியதோடு பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளையும் மேற்கொண்டவர். தற்காலத்தில் பலரும் போற்றும் பெண்ணியம் இவருக்கு உடன்பாடு.அதேசமயம் தலித்தியம் இவருக்கு உடன்பாடில்லை. “பெண்மொழி புனைவு என்பதை மறுத்து இவர் தமிழ்மொழியே பெண்ணிய மொழிதான். ஓர் ஆதித்தாயின் தாலாட்டில் பரிணமித்த மொழிதான் தாய்மொழி” (த.நே.46, ப.56) என்கிறார். பெண்ணியத்தில் இன்றளவும் தீராத ஆர்வங் கொண்டவராக விளங்குகிறார். ஆய்வுப்பணி: 1990இல் ‘தமிழக நாட்டுப்புற பாடல்களும் பெண்ணியமும்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார்.அக்காலத்தில் இத்துறையாகிய பெண்ணியம் சார்ந்த பாடத்திட்டம் பாரதியார் பல்கலையில் இல்லாத காரணத்தால் தனது நெறியாளர் பேராசிரியர் முப்பால் மணி அய்யாவுடன் இணைந்து பெண்ணிய துறை பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளார் (ப.57).இவரது முனைவர் பட்ட ஆய்வு ‘தமிழ்ச் சிறுகதைகளில் பெண்ணியம்’ என்பதாகும். தற்காலத்தில் பெண் படைப்பாளர்களின் சிறுகதையில் பன்னிருவரைத் தெரிவு செய்து கொண்டு ஒவ்வொருவரும் எவ்வகையில் சாதனையாளர்கள் என்பதையும் இவர்களது படைப்பில் பெண்ணியச் சிந்தனை எவ்வாறு இழையோடுகிறது என்பதையும் ஆராய்ந்துள்ளார். தீவிரவாதப் பெண்ணியவாதி என்றழைக்கப்படுகிற அம்பையின் படைப்பினுள்ளும் தாய்மைதான் பெண்ணியத்தின் மூலக்கரு என்பதைக் கண்டறிந்துள்ளார். இவ் ஆய்வு நூலாக்கம் பெற்றுள்ளது. இவரது மற்றொரு நூலான ‘பெண்ணியமும் மனிதகுல விடுதலையும்’ பல்வேறு கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பாகும். படைப்புப்பணி: செல்வியின் சிறுகதைகளும் பெண்ணின் மேன்மையைப் பேசுகின்றன.‘தப்புக்கிழங்கு’, ‘கற்பூரச் செத்தைகள்’ போன்றவை நீலகிரி வாழ் பெண்களின் அவலநிலையை மையமாகக் கொண்டவை. தமிழ்நேயம் பெண் எழுத்தாளர் சிறுகதையில் இடம்பெற்ற இக்கதைகள் முதல் தகுதியையும் பாராட்டையும் இவருக்குப் பெற்றுத் தந்தது. தமிழ்நேயம் ஆசிரியர் ஞானி இவரைப் பாராட்டுவது இங்குக் குறிப்பிடத்தகும். “செல்வி தரமான சிறுகதைகளை எழுத வல்லவர். தமிழ்நேயத்தில் பெண் எழுத்தாளர் சிறுகதைகளுள் அவரது நல்ல கதைகளும் இடம்பெற்றன” (புதுப்புனல், சூன், 2015, ப.35) என்று கூறுகிறார். தற்போது ‘கற்பூரச் செத்தைகள்’, ‘பூவாத்தாள்’ ஆகிய இரண்டு குறும்படங்களை வெளியிட்டுள்ளார். தலித்தியப் பார்வை: தலித்தியவாதிகள் தலித்தியம் என்ற கருத்தியலை ஒரு மதம் போல போற்றுவதும் தலித்தியச் சார்பு இல்லாதவர்களைக் கடுமையாகக் கண்டிப்பதுமாகிய போக்கு இவருக்கு உடன்பாடில்லை. “தலித் இலக்கியவாதிகள் தங்கள் நலனில் காட்டும் அக்கறையைத் தன் இனத்து மக்களிடம் காட்டுவதில்லை உழைக்கும் வர்க்கமாக இருக்கும் தாழ்த்தப்பட்டோரின் வாழ்வுதான் இன்னும் விடியாமல் இருக்கிறது” (ப,66) என்கிறார். மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல் மாணவர்கள், படைப்பிலக்கியம் படைப்பதற்கு தூண்டுகோலாக செயல்படுகிறார். பதினொரு ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராகப் பணியாற்றும் இவர் கல்லூரி வளாகத்திற்குள் தன்னை முடக்கிக் கொள்ளாமல் கல்லூரிக்கு வெளியில் உள்ள சமூகத்தோடும் கலை இலக்கிய அமைப்புகளோடும் தொடர்பு கொண்டு சிறுகதைப் போட்டிகள் நடத்தி பரிசும் வழங்கி வருகிறார். ஓர் இலட்சியப் பேராசிரியருக்குத் தேவையான சில குணங்கள் இவருக்குள் உயிர்த்துடிப்புடன் இயங்குகின்றன. முனைவர் செல்வி, தலித்திய பார்வை தமிழுக்குத் தேவை என்ற போதிலும் சாதிப்பார்வையாக குறுக்கி விடக்கூடாது என்னும் கருத்துடையவர். பெண்ணியப் பார்வையை முன்வைத்து தமிழ்ச் சிறுகதைகளை ஆய்வு செய்தவர். சிறுகதைப் படைப்பதோடு அதனை குறும்படமாக இயக்குவதிலும் திறன் பெற்றவர். ‘தமிழ்நேயம்’ உட்பட பல சிற்றிதழ்களில் சிறுகதை, கட்டுரை, கவிதை, நூல்மதிப்புரை எனத் தொடர்ந்து எழுதிவருகிறார். தன் தாயார் பெயரில் சரசு அறக்கட்டளை நிறுவியவர். கலை இலக்கிய பெருமன்றத்துடன் இணைந்து மாநில அளவில் சிறுகதைப்போட்டிகளை நடத்தி, தரமான சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்குவதோடு கதைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்கிறார். இவரது முதல் கதைத்தொகுப்பு ‘ஆழம்’ என்ற பெயரில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்விக்கான உதவிகளைச் செய்வதோடு, தன்னைச்சுற்றி இருக்கிற நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து, தன்னளவில் மிக எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வரும் பேராசிரியர் செல்வியின் மனிதநேயம் போற்றுதலுக்குரியது. தொகுப்புரை: - ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அறிஞர்களில் ம.இலெ.தங்கப்பா படைப்பியல் என்ற முறையில் தமிழுக்கு இன்றைய சூழலில் தேவையான பாக்களைப் புனைந்துள்ளார். இயற்கை நேயமும் அன்பும் குழந்தைகள் பால் நேயமும் இவரது கவிதையின் உட்கிடையாக அமைந்துள்ளன. குறுந்தொகை மொழிபெயர்ப்பும், முத்தொள்ளாயிர மொழிபெயர்ப்பும் தமிழ்க் கவிதையை ஆங்கிலத்தில் கொண்டு சேர்த்துள்ளன. இவ்வாறு இவர், காலத்தின் தேவை உணர்ந்து செய்த பணிகள் போற்றுதலுக்கு உரியவை. - பேராசிரியர் நளினிதேவி, இராஜம் கிருட்டிணன் நாவல் பற்றி முற்போக்கு, மற்றும் பெண்ணியப் பார்வையிலும் க.சமுத்திரம் எழுதிய சிறுகதைகளை முற்போக்கு பார்வையிலும் ஆய்வு செய்துள்ளார். பெரும்பாலும் இவர் செய்த ஆய்வுகள் தமிழில் புதுவகையான ஆய்வாக இருக்கக்கூடும். ஒய்வு பெற்ற பிறகு, சங்கத் தமிழ்ச் சான்றோரின் கவிதைகளில் சிறப்பாக பதிவு பெற்றுள்ள அன்பும், அறமும் தொடர்ந்து தமிழிலக்கியங்கள் அனைத்தினுள்ளும் இடம்பெறுவதை ‘மரபும் புதுமையும்’ என்ற நூலில் விளக்கியுள்ளார்.வணிக நோக்கில் அமையாமல் தமிழிலக்கிய வரலாற்றை படைப்பியல் நோக்கில் தமிழில் முதன்முறையாகப் படைத்துள்ளார். தமிழுக்குப் புதிய பார்வையை நல்குவதில் இவரது பணிகள் சிறப்பானவை. - ஆங்கிலத்திலும், தமிழிலும் முதுமுனைவர் பட்டம் பெற்றுள்ள மருதநாயகத்தின் ஆய்வுகள் தன்னிகரற்றவை. மேற்கத்திய இலக்கியங்களோடு ஒப்பிட்டு தமிழிலக்கியத்தின் மேன்மையை எடுத்துக்காட்டியுள்ளார். தமிழ்ப் படைப்பாளிகள் குறித்து வளமான திறனாய்வைச் செய்துள்ளார். மேற்கத்திய திறனாய்வாளரைப் போன்றவர் தெ.பொ.மீ. என்பதை மெய்ப்பிக்கிறார். அறிவியல் பார்வை அற்றவர் என்றும், வெற்று கற்பனையாளர் என்றும் சிலரால் குறை சொல்லப்;படுகின்ற பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியவர்களின் ஆய்வுகளையும் படைப்புகளையும் இவர் தமிழுக்கு வளம் சேர்க்கும் முறையில் ஆராய்ந்துள்ளார். - தற்காலத்திற்கு ஒத்த முறையில் தமிழ்ப் போராளியாகவும், ஆய்வாளராகவும் விளங்கிய இலக்குவனார் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1965 இந்தி எதிர்ப்புப் போரை முன்னின்று நடத்தியவர் என்ற முறையில் இவரைப் பாராட்ட முடியும். கூட்டாட்சி அமைப்பில்தான் தமிழ்நாடு தன்னுரிமை பெற்று வாழமுடியும் என்னும் திட்பமான கருத்துடையவர். காலத்துக் கேற்ற கடமையை தமிழுக்கு ஆற்றுவதில் முதலிடம் பெறக் கூடியவர். - புதுவையில் வாழ்ந்த திருமுருகனார் இன்னொரு வகையில் தமிழ்ப் போராளி.தமிழின் ஆக்கத்திற்காக புதுவை அரசோடு போராடியவர். தமிழிசையையும் இசைத்தமிழையும் வேறுபடுத்தியவர். சிந்துப்பாவிற்கு இலக்கணம் வகுத்தவர். இவரது ஆய்வுகள் தமிழுக்குப் புதியவை. - தமிழிலக்கியத்திலும் ஆங்கில இலக்கியத்திலும் இந்தியிலும் பெரும்புலமை பெற்ற பூரணச்சந்திரன் அமைப்புமையவாதம், பின்நவீனத்துவம் ஆகிய புதுப்பார்வைகளைத் தமிழுக்கு வழங்கியதோடு இலக்கிய ஆய்வில் மார்க்சியத்தையும் வளப்படுத்தியவர்.மொழி என்னும் பிரவாகத்தினுள் நாம் இருக்கிறோம் என்ற முறையில் மொழியின் இயக்கத்தை விளக்கியவர். ஓய்வு பெற்றபின் பல ஆங்கில நூல்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் தனது பங்களிப்பைச் செலுத்திவருகின்றார். - தமிழ்ப் பேராசிரியராக இருந்த அதேசமயத்தில் தமிழ்நாட்டுப் பறவைகள் பற்றிய ஆய்வில் தொடர்ச்சியாக ஈடுபட்டு சிறந்த நூல்கள் படைத்தவர் பேராசிரியர் க. இரத்தினம். தமிழ்நாவல், வசன கவிதையில் படைப்புகள் என்று பலவற்றில் சோதனை நடத்தியவர். ‘எட்கர் தட்சனின் தென்னிந்திய பழங்குடிகளும் குலங்களும்’ என்ற சமூகவியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர். இவரது இலக்கிய பங்களிப்பு தமிழுக்கு வளம் சேர்த்துள்ளது. - முனைவர் செல்வி, தலித்தியப் பார்வை தமிழுக்குத் தேவை என்ற போதிலும் சாதியப்பார்வையாக குறுக்கி விடக்கூடாது என்னும் கருத்துடையவர். பெண்ணியப் பார்வையை முன்வைத்து தமிழ்ச் சிறுகதைகளை ஆய்வு செய்தவர். சிறுகதைப் படைப்பதோடு அதனைக் குறும்படமாக இயக்குவதிலும் திறன் பெற்றவர். - இவ்வகையில் தமிழறிந்த பலரும் காலத்திற்கு ஒத்தவாறு தமிழியல் ஆய்வை அவரவர் பார்வையில் செய்ததுடன் தமிழுக்கு மேலும் பல வழிகளில் ஆக்கங்களையும் புதுமைகளையும் சேர்த்துள்ளனர். இருபது, இருபத்தொன்றாம்நூற்றாண்டுச் சூழலில் தமிழுக்குப் புதிய ஆக்கங்களும் பார்வைகளும் தேவைப்படுகின்றன. படைப்புகளும், திறனாய்வுகளும், மொழிபெயர்ப்புகளும் தமிழியல் ஆய்வின் எல்லையை விரிவுப்படுத்தும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலமும் இடைக்காலமும் தமிழின் எழுச்சிக்காலம் என்று சொல்லும் சிறப்பை உடையது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை எனத் தொடங்கி இவர்களுக்கு முன்னும் பின்னும் எத்தனையோ தமிழறிஞர்கள்தமிழின் வளத்தையும், தமிழியல் ஆய்வையும் மேம்படுத்தினர். மனோன்மணியம் சுந்தரனார், இராகவையங்கார், வையாபுரியார், தெ.பொ.மீ., அப்பாத்துரையார் போன்றவர்கள் இவ்வகை ஆக்கத்தில் முன்நின்றவர்கள் என்று குறிப்பிடலாம். மறைமலைஅடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் வழியில் தோன்றிய தனித்தமிழ் இயக்கம் குறிப்பிடத்தக்கது. சி.பா.ஆதித்தனார், ம.பொ.சிவஞானம் ஆகியவர்களின் வழியில் தமிழ்அரசியல் இயக்கம் தோன்றியது. வ.சுப.மாணிக்கம், மு.வ., அ.ச.ஞா., வ.அய்.சுப்பிரமணியம் போன்றோர்களும் சிறந்த ஆய்வாளர்களாகத் திகழ்ந்தனர். நா.வானமாமலை, க.கைலாசபதி, க.சிவத்தம்பி ஆகியவர்கள் தமிழியல் ஆய்வில் மார்க்சியப் பார்வையைப் புகுத்தி தமிழியல் ஆய்வை விரிவுசெய்தனர். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை மெய்யாக்கிப் பிறநாட்டு இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்து வழங்கியவர்களும், இறவாத புகழுடைய புதிய நூல்களைத் தமிழில் வழங்கிய தமிழறிஞர்களும் வணக்கத்திற்கு உரியவர்கள். அனைத்திற்கும் மேலாக தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகையில் தமிழின் பெருமையை உலகெங்கும் பரப்பியவர்களும் போற்றத்தக்கவர்களாவர். இவ்வாறாக, தமிழ்மொழியின் ஆழம் அறிந்து, தம்புலமையால் சிறப்பாகப் பணியாற்றி, தம்புகழ் நிறுவிச் சென்றவர்கள் தமிழறிஞர்கள். இக்காலத் தமிழறிஞர்கள் என்று க.ப.அறவாணன், தமிழண்ணல், பாண்டுரங்கன், மாதையன், பஞ்சாங்கம், நெடுஞ்;செழியன் எனப் பலரைக் குறிப்பிட முடியும்;. தமிழ்நேயத்தில், தமிழியல் ஆய்வில் ஈடுபட்ட தமிழறிஞர்களின் ஆய்வுப்பணி, களப்பணி குறிப்பிடத்தக்கது. ஐம்பதிற்குப் பிறகு தமிழியல் ஆய்வுத்துறையில் ஈடுபட்டு, செயலாற்றிய, தற்காலத்தில் வாழும் தமிழறிஞர்கள் தம் பணிகளைத் தாமே தொகுத்து வழங்கிய கட்டுரைகள் ‘நானும் என் தமிழும்’ என்னும் தலைப்பில் தனித்தனிச் சிறப்பிதழாக வெளிவந்தது. இவ்விதழ்களில் இடம்பெற்றவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள், போராளிகள் எனப் பல நிலைகளில் பரிணமித்தவர்கள். 1.தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரியும் அதே சமயத்தில் ஆய்வுப் பணியை மேற்கொண்ட தமிழறிஞர்கள் பிற படைப்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். (ம.இலெ.தங்கப்பா, நா.நளினிதேவி, இரா.செல்வி) 2.பிற மொழியில் உள்ள உயர்ந்த இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்ப்பவர்களும், தமிழ்த்திறனாய்வுக்குப் புதுவளம் சேர்ப்பவர்களும், தமிழ் இலக்கியங்களை மேலை இலக்கியங்களோடு ஒப்பிட்டு தமிழின் தனித்தன்மையைக் கோடிட்டு உலகறியச் செய்தவர்களும் அடங்குவர். (க.பூரணச்சந்திரன், ப.மருதநாயகம்). 3.தமிழின் ஆக்கம் என்ற முறையில் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிறமொழிகளுக்கும் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர்களும் (க.பூரணச்சந்திரன், ம.இலெ.தங்கப்பா) உண்டு. 4.தமிழ்ப்பேராசிரியர் என்ற முறையில் ஆற்றும் தமிழ்ப்பணிக்கு அப்பால் சென்று தமிழோடு தொடர்பற்ற பறவைகள் பற்றிய ஆய்வுப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். (க.இரத்தினம்). 5.தமிழிலக்கியப் பணிகளோடு ஆசிரியர்களாகவும் தமிழ்ப் பேராளிகளாகவும் விளங்கிய காலஞ்சென்ற திருமுருகனார், இலக்குவனார் பற்றிய கட்டுரைகளும் இந்த இயலில் இடம் பெறுகின்றன. ம.இலெ.தங்கப்பா: தமிழகம் நன்கறிந்த பாவலராகவும் தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபடுபவராகவும் இன்று நம்மிடையே வாழ்ந்து வருபவர் ம.இலெனின் தங்கப்பா (08.03.1934). பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், பாவலர், படைப்பாளர், தமிழ்ப்போராளி எனப் பல தளங்களில் பயணிப்பவர். பன்மொழி அறிஞர். இளமையிலேயே தன் தந்தையாரிடம் தமிழ்க்கவிதை பற்றியும், பகுத்தறிவுப் பார்வை பற்றியும் அறிந்து கொண்ட இவர் இன்றுவரை அவற்றைக் கடைப்பிடித்து வருகிறார். உயர்நிலைப்பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் வரலாறும், ஆங்கிலமும் பயிற்றுவித்த இவர், கல்லூரியில் இருபது ஆண்டுகள் தமிழ்இலக்கியம் கற்பித்தார். இளமைக்காலத்தில் ஆங்கிலத்தை விரும்பிக்கற்றார். இயல்பாகவே இயற்கை எழிலில் மிகுந்த நாட்டம் கொண்டவராதலால் செல்லி, கீட்ஸ், வோர்ட்ஸ்வொர்த் ஆகியவர்களின் பாடல்கள் இவரை ஈர்த்தன. (த.நே.45,பக்.4,5) இயற்கை நலம்: தங்கப்பாவின் பாடல்களில் இயற்கை, தமிழர்நலம், சுற்றுச்சூழல், வாழ்வுநலம், விழிப்புணர்வு, மாந்தரிடையே நல்லுறவு பேணுதல் போன்ற சிந்தனைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இவரது இயற்கை ஈடுபாட்டிற்குச் சான்றாக ஒரு பாடல், எளிமையும், இனிமையும் இயற்கையழகும் பயின்று வருவதைக் காணலாம். ’விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில் விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில் பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில் புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில் தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில் தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே, அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள் அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே. (மேலது, ப.66) இயற்கையோடு இயைந்த வாழ்வே உயரியவாழ்வு என்பது இவர் கருத்து. மாணவர்களுக்கு இயற்கை அழகையும், சுற்றுச்சூழலைப் பற்றிய புரிதலையும் உணர்த்தும் முறையில் விடுமுறை நாட்களில் மிதிவண்டியில் மாணவர்களோடு பயணம் மேற்கொண்டார். இது குறித்து இவருடைய மாணவரும் எழுத்தாளருமான பாவண்ணன் கூறுவதாவது:‘மாணவர்கள் வெறுமனே கல்வி கற்கும் எந்திரங்களாக இருக்கக்கூடாது என்பது அவர் எண்ணம். இயற்கையைப் பற்றி நிறைய சொல்வார். ஞாயிறுகளில் பல ஆர்வமுள்ள மாணவர்களை அழைத்துக்கொண்டு சைக்கிளிலேயே புதுச்சேரிக்கு அருகில் இருக்கிற இயற்கை வளம் உள்ள இடங்களுக்கு அழைத்துக் செல்வார்’ (த.நே.2, ப.21) என்கிறார். ஆந்தைப்பாட்டு: தொடக்கக்காலத்தில் பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு இல்லை எனினும் பாரதியின் குயில்பாட்டைப் படித்த போது அதன் அழகில் மயங்கினார். அவ்வாறு தானும் ஒரு பாட்டைப் பாடவேண்டுமென்று விரும்பி ஆந்தைப்பாட்டை இயற்றினார். குயிலின் குரல் இனிமையானது. ஆந்தையின் குரல் இனியதன்று. அதன் தோற்றமும் அழகன்று என்பதற்காக ஆந்தையை வெறுக்க முடியாது. அன்போடும் நுண்ணுணர்வோடும் இயற்கை மீது ஈடுபாட்டோடும் நோக்கினால் அதனையும் சுவைக்கலாம். சுடுகாடுகளும், இடுகாடுகளும் நமக்கு எத்தனையோ மெய்ம்மைகளை உணர்த்துகின்றன. இத்தகைய உணர்வுடையது ஆந்தைப்பாட்டு என்கிறார். ‘மன்னும் உயிர் வகையுள் மாந்தர் சிறப்பென்பார்: பன்னுமுயிர் நாகரிகப்பாங்கில் உயர்வென்பார்: ஆயினுமென் பட்டறிவால் ஆய்ந்தபடி நான் சொல்வேன் தீயவர்காண் மாந்தர்: செயலால் மிக இழிந்தோர். கூனல் நிமிர்ந்து குரங்குநிலை போனாலும் மானிடரின் கீழ்மை மறைக்குந் தரமாமோ? காட்டு விலங்கினிலும் கானகத்துப் புள்ளினும் மேட்டுக் குடிமாந்தன் மிக்க இழிஞனடா’ (உயிர்ப்பின் அதிர்வுகள், ப.56) புயற்பாட்டு: பரமக்குடியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பெரும்புயல்காற்று அடித்தது. பள்ளியில் உடன் இருந்த ஆசிரியர் ஒருவர் புயல் பற்றிப்பாட இப்பொழுது ஆசிரியர் அம்பிகாபதி இல்லையே என்று கூறியதைக் கேட்டு நான் இருக்கிறேன் என்பது போலக் கலிங்கத்துப்பரணியின் பாணியில் புயற்பாட்டைப் பாடினார். (புயற்பாட்டு – கடைதிறப்பு) ‘வங்கக் கடலின் மிசை எழுந்து வளரும் அலையில் நடைபயின்று பொங்கி எழுந்து, தனைவளர்த்த புரையில் கடல்தனை யும் பகைத்துப் பாறை உருவித்திசை உருவிப் பாயும் உரம்சேர் கால் வீசிப் போரை நாடித் துடிப்பார் தம் புயம் கொண்டது அப்புயல் அன்றே’ (மேலது, ப.88) இவற்றோடு தொடக்கத்தில் சிறுகதை, புதினம் என்று எழுதிய இவர் படைப்பிலக்கியத்தைத் தன் வாழ்வின் பணி என வரித்துக்கொண்டார். தங்கப்பாவைப் பொருத்தவரை அன்பு, எளிமை, மாந்தநேயம் என்று வாழ்பவர். வாழ்க்கை: கொடுத்தலே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டவர். ‘வாழ்ககை மீது காதல் கொள்வோம்’ என்று பாடும் இவருக்குள் இருக்கும் காதலைப் புரிந்து கொள்ள முடியும். தமது வாழ்க்கையை காதலித்து மணந்து கொண்டார். இவரது துணைவியார் தடங்கண்ணி அம்மையார். பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். பள்ளி நிர்வாகத்தில் தேர்ந்தவர். ஆகவே புதிய பள்ளிகளைப் புதுவை அரசு ஏற்படுத்தும் பொழுது அப்புதிய பள்ளியின் நிர்வாகத்தைச் செப்பம் செய்யும் முறையில் அரசு இவரை விரும்பி அனுப்பியது. அந்த அளவுக்கு ஆளுமை திறம்மிக்கவராக விளங்கினார். நல்லாசிரியர் விருதும் இவரைத் தேடிவந்தது. பணி ஒய்விற்குப் பின் புதுவை தாய்த்தமிழ்ப்பள்ளியில் ஊதியம் பெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். தங்கப்பாவோடு ஒத்த இயல்புடையவராக விளங்கினார். இருவரும் சமூகப் பற்றாளர்கள். இவர்களது மக்களும் நல்ல தமிழ்ப்பற்றுடையவர்கள். (மேலது,ப.10) மொழிபெயர்ப்புப் பணி: பள்ளியில் பணியாற்றிய போது தன் நண்பர் கோவேந்தன் மூலம் தென்மொழியோடு தொடர்பு கொண்டார். தென்மொழியில் பாடல்களும் கட்டுரைகளும் எழுதினார். தென்மொழியில் பாக்கள் புனைந்த காலம் முதற்கொண்டே ஆங்கிலத்திலும் பாடல்கள் எழுதினார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் அதிகமான மொழிபெயர்ப்புகளைச் செய்தார். பாரதி, பாரதிதாசன் பாடல்களைச் சிறப்பான முறையில் மொழிபெயர்த்தார். இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவிலிருந்து அறுபதிற்கும் மேற்பட்ட பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சங்கஇலக்கியத்தில் ஒன்றான குறுந்தொகையில் பல பாடல்களைத் தெரிவு செய்து ‘’Love stands Alone’, என்னும் பெயரில் மொழிபெயர்த்தார். இந்நூலைப் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டது. முத்தொள்ளாயிரத்திலிருந்து பல பாடல்களைத் தெரிவு செய்து கொண்டு ‘Red Lily and frightened Birds’ என்னும் தலைப்பில் எழுதிய நூலையும் பெங்குவின் வெளியிட்டது. இம்முறையில் படித்த கவிதையை உலகறியச் செய்தவர். நாலடியார் முதலிய நீதிநூல்களிலிருந்து தெரிவு செய்த பாடல்களை’ Tamil Thoughts’ என்னும் பெயரில் வெளியிட்டார். தங்கப்பாவின் மொழிபெயர்ப்பு குறித்து இலக்குவனார் திருவள்ளுவன் கூறுவது: ’பாட்டின் பொருண்மை குன்றாமல், அதேபொழுது பாட்டின் கட்டமைப்பின் ஒழுங்கு குறையாமல் இதை மொழிபெயர்ப்பது மெத்தவும் கடினம். ஆயினும் தங்கப்பாவின் மொழிப்பெயர்ப்பில் இது சாத்தியமாகிறது என்கிறார். (www.akaramuthala.in/modernliterature/katturai/ nkhopg;ngah;g;gwpQh;. ம.இலெ.தங்கப்பா) இவரது பத்து நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்தப் பாடல்களைத் ‘தங்கப்பா பாடல்கள்’ ‘உயிர்ப்பின் அதிர்வுகள்’ என்னும் பெயரில் தமிழினி வெளியிட்டது. இதுவரை இவர் எழுதிய பாடல் நூல்கள் 13, குழந்தைகளுக்கான பாடல் நூல்கள் 3, கட்டுரை நூல்கள் 8, தமிழில் மொழிபெயர்த்த நூல்கள் 3, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்கள் 4, இவர் எழுதிய ‘சோலைக் கொல்லைப் பொம்மை’ என்ற சிறுவர் இலக்கியநூலுக்காக குழந்தை இலக்கியத்திற்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. தமிழ்த்தேசியம்: தமிழர் இன நலனில் பெரிதும் ஈடுபாடும் அக்கறையும் கொண்ட இவர் தமிழ்மக்களின் விடுதலைக்கான தமிழ்த்தேசியத்தை வற்புறுத்துகிறார். தமிழர் ஒருங்கு கூடித் தமிழ்பண்பாட்டைப் பாதுகாத்துப் போரிட வேண்டுமென்றும், தமிழர்களுக்கு இன உணர்வு தேவை என்றும் வலியுறுத்துகிறார். இந்திய தேசியம் தமிழன் உரிமைகளை, தமிழர் நலன்களைக் காப்பதில்லை. எனவே இழிந்த தேசியம் எனச் சாடுகிறார். ஈழத்தில் விடுதலைக்காகத் தமிழ்மக்கள் போராடிய பொழுது அந்தப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு நிறைய பாடல்கள் எழுதினார். போராட்டத்தை இவர் ஏற்றுக்கொண்டவர் எனினும் அது மக்கள் போராட்டமாக இல்லையே என்று வருந்துகிறார். ‘தமிழுக்கொரு தீங்கெனின் புடைத்தெழும் எம் தோள்! தமிழ்நலங் காக்கத் தாவும் எம் கால்கள்! தமிழ்க்குடி புரக்கத் தணலும் எம் நரம்பே ஊறுங் குருதியும் தமிழெனின் மிகுமே காதல் எந்தமிழ்க்குச் சாதலெங்கடனே’ (மேலது, ப.1) தமிழ்ப்பணி: புதுவையில் திருமுருகனாரோடு இணைந்து தமிழ்ப்பணி என்ற முறையில் ஊர்கள் தோறும் நடைப்பயணம் மேற்கொண்டார். புதுவை அரசு தங்கப்பாவுக்கு ‘தமிழ்மாமணி’ விருது அளித்தது. ஆட்சிமொழி தமிழ் என்று சட்டம் இயற்றிய புதுவை அரசு அதைக் கடைப்பிடிக்கவில்லை. குறைந்த அளவுக்கு அரசு ஊழியர்கள் தம் கையெழுத்தைத் தமிழில் இடுவது பற்றிக்கூட அரசுக்குக் கவலை இல்லை. இந்நிலையில் தமிழ்மாமணி என்ற பட்டத்தை அரசுக்கே திருப்பித் தருவதென்று திருமுருகனாரோடு இணைந்து, ஊர்வலமாகச் சென்று விருதைத் திருப்பியளித்தார். தமிழ்வளர்ச்சி நடவடிக்கை குழுவில் இணைந்து புதுவையில் வணிகநிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ‘தெளிதமிழ்’ இதழில் துணையாசிரியராகச் செயல்பட்ட இவர் திருமுருகனார் மறைவிற்குப் பின்னர் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தங்கப்பா தன்னை எவ்வகையிலும் முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை. தன்னை ஆய்வாளர் என்று இவர் கருதிக் கொள்ளவுமில்லை. மாந்தநேயமிக்க மாந்தராயிருப்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர். ‘யான் ஒர் எளியேன் எனக்கேன் இந்த நாகரிகமும் நகைதரும் உடைகளும்? அறிவு, கல்வி, அலுவல் எனும் இவை ஒரு வகையில் எனை உயர்த்திக் காட்டினும் அடியேன் அவற்றால் மகிழ்வதே இல்லை. மேல்தோல் நீக்கிப் பார்ப்பின் ஒர் ஏழை நாட்டுப்புறத்தான் மனமே என்மனம். நாகரிகமாம் நடையும் தோற்றமும் எனக்குப் பொருந்துமா?’(மேலது, ப.51) என்கிறார். தமிழ்ச்சான்றோராய் புதுவையில் வாழ்ந்து வரும் ம.இலெ தங்கப்பா இயற்கை பற்றியும் மனிதவாழ்வில் அன்பு பற்றியும் நூற்றுக்கணக்கான பாடலை எழுதினார். இவரைத் தற்காலத்தில் ஒரு ‘தமிழ் முனிவர்’ எனப் பாராட்டுவது தகும். சங்கப் பாடல்களை உலகறியச் செய்யும் முறையில் சிறப்பாக இவர் மொழிப்பெயர்த்தார். இவர் மரபுப் பாடல்களை எழுதுவதில் வெற்றி கண்டவர். தமிழில் பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த ஒர் அற்புதமான கவிஞர்.ம.இலெ.தங்கப்பா. தமிழில் இவருக்கு இணையாகச் சொல்வதற்கு இன்னொரு கவிஞர் இல்லை. பேராசிரியர் மருதநாயகம் தங்கப்பாவின் பாக்கள் குறித்து மதிப்பீடு இங்கு எண்ணத்தக்கது: ‘அகவல் பாவிலும் விருத்தப்பாவிலும் தேவைப்பட்டபொழுது குறட்பா, வெண்பாக்களிலும் தம் கருத்துகளை அழுத்தமாகவும் தெளிவாகவும் முருகியல் இன்பம் தரும் வகையில் வெளியிடுவதில் வல்லவர். இது பாரதிதாசனுக்கு விருப்பமான பாடுபொருளானாலும் அவரால் பல முறைகளில் கையாளப் பட்டதாயினும் தங்கப்பா அவற்றின் அடிமைத்தனமான தழுவல்களைத் தாராது தம்முடைய தனிமுத்திரை பதித்த பாடல்களையே தொடர்ந்து எழுதிவருகிறார். அத்துறையில் அவர் பெற்றுள்ள முதலிடத்திற்கு முற்றுமான தகுதி அவருக்குண்டு.’(வள்ளலார் முதல் சிற்பி வரை, ப.188) என்று குறிப்பிடுகிறார். நா.நளினிதேவி: சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்கு உரிய மதுரையில் பிறந்த இவர், இளம் வயது முதற்கொண்டே தன்னுடைய தாத்தா, தந்தையார் வழியில் தமிழ்ப்பற்றை வரித்துக் கொண்டார். பாத்திமா கல்லூரியில் சிறப்பு தமிழ்ப்பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை போன்றோரிடமும், மதுரைப் பல்கலைக்கழகத்;தில் தெ.பொ.மீ., மொ.துரையரங்கனார், விஜய வேணுகோபால் முதலான தமிழ் அறிஞரிடம் தமிழ் பயின்றதால் தமிழுணர்வும், தனித் தமிழ்ப்பற்றும் இவருக்குள் ஆழமாக ஏற்பட்டன. அரசுக்கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், சாதி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கு பெற்றார். ஈழத்தமிழர்கள் பால் அன்பு கொண்ட இவர் 1980இல் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மிகச் சிறந்த படைப்பிலக்கியவாதியான இவரது சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை போன்றவை பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. ஆசிரியர்ப்பணி: தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளை நிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்குத் தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ் உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதைப் புரிய வைத்துச் செயல்படுத்தினார் (த.நே.41, ப.26) மாணவர்கள் புதியவற்றைப் படிக்கும் வகையில் ஆண்டுக்கொருமுறைபாடத்திட்டத்தை மாற்றியமைத்தார். இதழியல், இலக்கியத் திறனாய்வு, படைப்பிலக்கியம் போன்ற பாடப்பகுதிகளைக் கற்பித்ததோடு செய்முறைப் பயிற்சியும் கொடுத்து மாணவியர்களை ஊக்குவித்தார். இதனால் மாணவியர் படைப்பாக்கத்தில் திறன்பெற்ற, மாணவர்களைக் கொண்டு சிற்றிதழ் நடத்தினார். தாழ்த்தப்பட்ட மாணவியருக்காகவே பெரிதும் செயலாற்றினார். முத்தமிழ் விழாவை அனைத்துத்துறையினரும் பங்கேற்கும் பொதுவிழாவாக்கினார். கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் இவரது தமிழ்ப்பணியைப் போற்றினர். புதுக்கோட்டை தமிழ் இலக்கியப் பேரவை இவரைப் ‘புதுக்கோட்டையின் புகழ்மாமணி’களுள் ஒருவர் எனச் சிறப்பித்துத் ’தமிழ்த்தென்றல்’ எனும் விருதளித்து மரியாதை செய்தது. (மேலது, ப.35) ஆய்வுப்பணி: கல்லூரியில் பணிபுரியும் காலத்திலேயே ‘இராஜம் கிருட்டிணனின் புதினங்களில் சமுதாய மாற்றம்’ (1991) பற்றியும், சு.சமுத்திரத்தின் ‘சிறுகதை இயக்கம்’ (1998) பற்றியும் ஆய்வுநூல் வெளியிட்டார். இவர் காலத்தில் இவர்கள் புகழ்மிக்க எழுத்தாளர்களாக இருந்தனர் என்பது மட்டுமல்லாமல் பிற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டும், முற்போக்குச் சிந்தனையும் கொண்டிருந்தனர் என்பதன் காரணமாக அவர்களைத் தெரிவு செய்து எழுதினார். பெண்ணிய விடுதலையே சமன்மைச் சமுதாயத்துக்கு வழிவகுக்கும் என்பதை இராஜம் கிருட்டிணன் புதினங்கள் தெளிவாக்கியுள்ளது. ஒரு கருத்தைச் சொல்வதற்காகத்தான் கதை எழுதுகிறேன் என்ற சு.சமுத்திரத்தின் படைப்பு, சமுதாயச்சிந்தனையுடன், சிக்கல்களையும், தீர்வுகளையும் வெளிபடுத்தும் முறையில் அமைந்துள்ளன. இவரது ஆய்வு குறித்து சு.சமுத்திரம் கூறுவதாவது: ‘என் படைப்புகள்குறித்து, இவர் (நளினிதேவி) எழுதிய இந்த நூலைஎனக்குக் கிடைத்த பெரும் இலக்கிய மரியாதையாகக் கருதுகிறேன்’ (சு.சமுத்திரதின் சிறுகதை இயக்கம், என்னுரை) என்கிறார். பணிநிறைவிற்குப் பின்பு வெளிவந்துள்ள ‘தமிழ்இலக்கியம் மரபும் புதுமையும்’, படைப்பிலக்கியப் பார்வையில் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூல்கள் தமிழ்இலக்கிய ஆய்வுலகில் குறிப்பிடத்தக்கவை. ‘மரபும் புதுமையும்’ (2008) என்பது இவரது சிறந்த ஆய்வுநூல். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘உண்டாலம்ம இவ்வுலகம்’, ‘உண்பது நாழி’, ‘உடுப்பவை இரண்டே’ முதலிய பேரறங்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றன. இத்தகைய அறஉணர்வு காலந்தோறும் எல்லாத் தமிழிலக்கியங்களிலும் நீரோட்டாமாய் நிலவுகின்றது. “இந்தத் தமிழ் மரபு, புதுமைகளையும் பெற்றுத் திகழ்கிறது. இத்தகைய ஆய்வுக் கருத்தை முன்வைத்து எழுதப்பட்ட இந்த நூல் ‘மரபும் புதுமையும்’. இன்றைய சூழலில் தமிழைக்காத்து வளர்க்கும் பொறுப்பில் தமிழியல் ஆய்வாளர்களுக்கு இந்த நூல் ஒரு கைவிளக்காகப் பயன்படும் என்பதில் அய்யமில்லை” (மரபும் புதுமையும், அணிந்துரை) என்கிறார் கோவை ஞானி. ‘படைப்பியல் நோக்கில் தமிழிலக்கிய வரலாறு’ (2012) என்பது இவரது தலைசிறந்த ஆய்வுநூல். வழக்கமான தமிழிலக்கிய வரலாறு போல் அல்லாமல் தமிழ்ப்படைப்பிலக்கிய வரலாறாக இந்தநூல் திகழ்கிறது. தமிழகத்தில் மூன்று சங்கங்கள் இருந்தன என்ற கருத்தில் இவருக்கு உடன்பாடில்லை. ஆகவே சங்கஇலக்கியம் என்பதை இயற்கைநெறி இலக்கியம் என்று குறிப்பிடுகிறார். அதுபோலவே, பக்திஇலக்கியம் என்பதைத் தனித்தமிழில், இறைநெறி இலக்கியம் என்று கூறுகிறார் இயற்கைநெறி இலக்கியம் போலவே இறைநெறி இலக்கியமும் தமிழுக்கு வளம் சேர்ப்பவை. படைப்பிலக்கியத்தை முன்வைத்து எழுதப்பட்ட தலைசிறந்த நூலாக இந்த நூல் திகழ்கிறது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் மருதநாயகம் இந்த நூல் ஆங்கிலத்தில் வரும் தகுதியுடையது என்று எழுதியுள்ளார். இருபதாம் நூற்றாணடில் புதுமைகள் எனக் கொள்ளப்படும் தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், இருத்தலியம் போன்றவை பழந்தமிழ் இடைக்கால இலக்கியங்களில் காணப்படுவதை இந்த நூல் சுட்டிக்காட்டியுள்ளது. ‘பெண்ணியப் பார்வையாகவும், விளிம்பு நிலை மக்கள் பார்வையாகவும், படைப்பிலக்கியப் பார்வையாகவும் விரிகின்ற நா.நளினிதேவியின் தமிழ் இலக்கிய வரலாறு இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாறுகளிலிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்பதோடு, இனி இலக்கிய வரலாறுகள் தமிழில் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்பதற்கு முன் மாதிரியாகவும் திகழ்கிறது’ (படைப்பியல் நோக்கில் தமிழிலக்கிய வரலாறு, அணிந்துரை) என்கிறார் மருதநாயகம். தனி ஓர் இலக்கிய போராளியாய் எழுத்தில் நெஞ்சுரம் காட்டிய ஈழத்தமிழ் எழுத்தாளரும் இலக்கியப் போராளியுமான எஸ்.பொ. (எஸ்.பொன்னுத்துரை). இவரது அனைத்துப் படைப்புகளையும் உள்ளடக்கி நளினிதேவி எழுதிய ஆய்வுநூல் - ‘இலக்கியப் போராளி எஸ்.பொ – படைப்பும் பன்முகப் பார்வையும்’ (2016) என்பதாகும். தாய்த் தமிழையும் தாயகத்தையும் இழந்து புலம்பெயர்ந்து வாழ்ந்தஅவலச்சூழலிலும் எஸ்.பொவின் படைப்புகள் இலக்கிய ஆய்வுலகில் தனி ஈர்ப்பைப் பெற்றுள்ளன. அவரது இலக்கிய உணர்வு என்பது தமிழ் உணர்வாகவே இருந்ததன் காரணமாக தமிழைத் தவமாகக் கருதிய எஸ்.பொ.வின் படைப்புகள் தமிழுக்கு ஆக்கம் சார்ந்த பயன்களை நல்கியுள்ளது என்கிறார். எஸ்.பொ படைப்புகளில் ஈழமும், ஈழத்தமிழர் வாழ்க்கையுமே அடங்கியுள்ளன என்றாலும் அவை மனிதம் பற்றியவை என்ற வகையில் தமிழ் மண்ணின் பொதுச்சொத்துஎன்கிறார் நளினிதேவி.எஸ்.பொ., என்ற மனிதனின் ‘வரலாற்றில் வாழ்தல்’ நூல் வழியே வரலாற்றில் வாழும் மாமனிதராய் எஸ்.பொ இமாலய வெற்றியைப் பெற்றுவிட்டார் என்பதாக இவரது ஆய்வு அமைகிறது.திறனாய்வு நோக்கில் அமைந்துள்ள இந்த நூல் தமிழுக்கு ஒரு புது வரவாக அமையும். மேற்கண்ட மூன்று நூல்களும் காவ்யா வெளியீடாகும். இதே போல இன்னொரு நூல் ‘நெஞ்சக்கதவை மெல்லத் திறந்து’ - ஒரு பேராசிரியரின் தன் வரலாறு (2016) - நளினிதேவியின் தமிழுணர்வும் வாழ்வியல் சிக்கலும் குறித்த ஒரு புதினம் இந்த நூல். தமிழ்ப் பேராசிரியர் என்ற முறையில் தமிழோடு வாழ்ந்தவர். சுமார் 500பக்க அளவில் அமைந்த இப்புதினம்தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையும் அதை எதிர்கொள்வதற்கான போராட்டங்களும் எத்தகையவை என்பதை  அழுத்தமாக உணர்த்துகிறது. இன்னும் ஒரு நூல் ‘ஞானியின் கவிதைக்கொள்கை’ (2016) பற்றியது. ஞானியின் கவிதை இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலிருந்து ஞானியின் கவிதைக்கோட்பாட்டின் விழுமியங்களை எடுத்து விளக்கும் நூல். ‘புறநானூறு – தமிழரின் பேரிலக்கியம்’(2017) என்ற நூலில் புறநானூறு பண்டைய தமிழரின் வாழ்வியல் நெறிகளை மட்டும் விளக்குவதன்று இக்காலத்திற்கும் வரும்காலத்திற்கும் மட்டுமன்று எக்காலத்திலும் வாழும் மக்களின் வாழ்க்கைக்குப் பொருந்தக் கூடிய மக்கள் இலக்கியமாகும். புறநானூற்றில் தமிழ்ச்சிந்தனை, பொதுமைப் பண்பு, வாழ்க்கை நிலையாமை, கற்பனை கலவாத மனிதத்தன்மை போன்ற சிறப்புகள் பிற இலக்கியங்களில் காணமுடியாதவை. எனவேபுறநானூறே தமிழரின் மூலப் பேரிலக்கியம் என்பதைவிளக்கியுள்ளார். தமிழில் பேரிலக்கியங்களாகப் பல நூல்கள் கருதப்பட்டாலும் இவை தமிழின் மூலநூல் அன்று. இலக்கியச்சுவையும் கற்பனைவளமும் நிறைந்தவை. மக்களுக்கான வாழ்வியற் சிந்தனைகள் அரிதாகவே இதில் காணப்படுகின்றன. மக்களின் அடிப்படைச் சிக்கல்களுக்குத் தீர்வு தரக்கூடியதாகவும் உலகப் பொதுமையைப் போற்றும் மக்கள் இலக்கியமாகவும் இவ்வகை இலக்கியங்கள் இல்லை. புறநானூறு பிற இலக்கியங்களிலிருந்து பேரிலக்கிய தகுதி எவ்வாறு பெறுகிறது? அரசுடைமைகாலத்தில் நிலவிய சிக்கல்கள், இன்றைய நவீன உலகிலும் தொடர்கின்றன. பழைமைச் சமுதாயத்தில் தோன்றிய சிக்கல்கள் மட்டுமன்றி புதிய உலகின் சிக்கல்களிலிருந்தும் நம்மை மீட்டுக்கொள்வதற்கான வழிகளும், மனிதநலம் சார்ந்த உலகப் பொதுமையும், இயற்கையுடன் இயைந்த வாழ்வும், போரில்லா உலகின் சிறப்பும், அறத்தால் வரும் பொருளும் இன்பமும் மட்டுமே நிலையானவை எனப் புறநானூறு வலியுறுத்தும் செய்திகள் ஏராளம். அறிவியல் வளர்ச்சி மிகுந்த இக்காலத்தில், மனிதன் உலகியல் நெருக்கடிக்களையும் வாழ்வியல் சிக்கல்களையும் சந்திப்பதோடு இயற்கையிலிருந்தும் விலகி அந்நியப்பட்டு வாழ்கிறான். இதனால் பல்வேறு துன்பங்கள் மனிதனை வந்து சேர்கின்றன. மனிதத் துன்பத்திற்கு மனிதன்மட்டுமே காரணம். மனிதன் தன்னம்பிக்கையோடு தன் ஆற்றலைப் புரிந்து, நற்சிந்தனையை மேற்கொண்டால் இத்துன்பத்திலிருந்து விடுபடமுடியும். மனித துன்பத்திற்குக் கடவுள் தான் காரணம் என்று பகுத்தறியும் திறன் அற்ற சமுதாயமாக புறநானூற்றுச் சமூகம் இல்லை. மக்கள் துயரங்கள் தீர்க்கும் வழியாக ‘கடவுளை’ எந்த வகையிலும் முன்னிறுத்தாத இலக்கியம் புறநானூறு. இவ் உலகம் இன்பம் துன்பம் நிறைந்தது. இதுவே உலக இயல்பு. துன்பங்கண்டு துவளாமல் இன்பங்களை நினைத்து பெரு மகிழ்வு கொள்ளாமலும், இன்னாத இவ்வுலகில் இனிமை கண்டு அதன் இயல்வு அறிந்து வாழ்வதே சிறந்த அறம் என்ற உயர்ந்த மெய்யியற் சிந்தனையை உலகிற்கு வழங்கிய, தமிழரின் மூலநூலான புறநானூறே தமிழின் பேரிலக்கியம் என்றால் மிகையில்லை என்கிறார். மேற்கண்ட மூன்று நூல்களும் புதுப்புனல் வெளியிடாகும். வள்ளுவரின் காமத்துப்பாலை கதைவடிவில் உருவாக்கி ‘காதல் வள்ளுவன்’ (2018) என்ற நாடக இலக்கியம் படைத்துள்ளார். மனித இனத்தின் உயிர்ப்பாகவும் உவப்பாகவும்உலவும் இன்பமே காதல். அன்பு / காதல் அறத்தை அழுகுபட, கவித்துவநனிச் சொட்டச் சொட்ட அழகு தமிழில் யாத்துள்ளார். இன்பத்துப்பால் அதிகாரங்களை காட்சியியலாக உரைவடிவில் இவர் தீட்டியிருக்கும் இந்தக் ‘காதல் வள்ளுவன்’ நூலை வெளியிட்டுபேசிய கவிஞர் ஈரோடு தமிழன்பன், வள்ளுவனின் கற்பனை நுட்பத்தையும் கவிதைத் திட்பத்தையும் முழுமையாக எடுத்துகாட்டும் நூல் இது என்று பாராட்டியதோடு ‘நவீன ஒளவை’ என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்.   கருத்துச் சுதந்திரம் கழுத்தறுக்கப்படுகிற இக்காலத்தில் எழுந்திருக்கிற எரிதழல் போன்ற கவிதைகள் அடங்கிய தொகுப்பு ‘என் விளக்கில் உன் இருள்’ (2018) தமிழியமும், பெண்ணியமும், சமூக அக்கறையும் இவரது கவிதைகளில் ஆழமாக வெளிப்படுகின்றன. ‘பெண்ணுக்கு இல்லை சமநிலை எனில் அது மண்ணுக்கும் இல்லை’ என்கிறார் எழுத்தாளர்கள்தாக்கப்படுகின்ற இக்காலத்தில் அவர்கள் மறைந்தாலும்எழுத்துகளின் வழியே மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்சு பறவைகள் என்கிறார். கல்வி பெற்றால் பெண் விடுதலை பெற முடியும் என்று கருதப்பட்டது. ஆனால்,  கல்வியே பெண்களை விட்டுத், தொலைவில் நின்றுகொண்டிருக்கிறது. காரணம், கல்வி வாழ்க்கைக்குப் பயன்படாத கல்வியாக உள்ளதே காரணம். பெண் விடுதலைச் சிக்கல் என்பது அவளை மட்டும் சார்ந்தது அன்று, சமுதாயத்தின் அனைத்துக் கூறுகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. சிலருக்குக் கேள்வி எழலாம். கல்வி பெண்களுக்கு விடுதலை தரவில்லையா? கல்விக்கூடங்களில், வேலை வாய்ப்பில் அவர்களும் இடம்பிடிக்கிறார்களே. வேலை வாய்ப்பால் பொருளியல் விடுதலையும் பெற்றுள்ளனரே! இன்று.  இவை உண்மையான உரிமையையும் விடுதலையையும் பெண்களுக்குத் தந்திருக்கிறதா? என்று எண்ணிப் பார்க்கவேண்டும். கல்விக்கூடங்களிலும் வேலைவாய்ப்பிலும் கூட ஆணுக்குச் சமமான எண்ணிக்கையில் இன்னும் பெண்கள் இடம்பெறவில்லை. அப்படியே இடம் பெற்றாலும் ஆண்களைப் போல் அவர்கள் அச்சமின்றித் தயக்கமின்றி அங்கெல்லாம் இயங்கமுடிகிறதா?வேலைவாய்ப்பால் பொருளைத் தேடினாலும், பெண்களால்  விரும்பம் போல் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவாவது முடிகிறதா? இயற்கையான பாலியல் விடுதலையே பெண் விடுதலைக்குச் சரியான தீர்வு என்ற பெண்ணிய நோக்கிலான நூல் அண்மையில் வெளிவரும். மேலும் சில நூல்கள் வெளிவரலாம். ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். தமிழால் இணைவோம் என்று முகநூல் பகுதியில் தமிழின் தொன்மை, மேன்மை, தமிழ்வரலாறு குறித்துக் கவிதை வடிவில் மிக சிறப்பாக எளிய முறையில் எழுதிவருகிறார். தமிழால் மட்டுமே தமிழர்களையும் இவ்வுலகத்தையும் இணைக்கமுடியும் என்பது இவரது எண்ணம். இவரோடுநாமும் இணைந்து தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிட வழிசெய்வோம். பெண்ணியச் சிந்தனை:- இவரது பெண்ணியப் பார்வை தனிச்சிறப்பானது. பெண்கள் அழகு பதுமைகள் அல்ல. ஆணின் காம உணர்வுக்குப் பலியாகும் பேதைகளும் அல்ல. ஆணைப் போலப் பெண்ணும் ஒரு மனிதன் / மனுசி. காதல் உணர்வு ஆணுக்கு மட்டும் உரியதன்று. பெண்ணுக்கும் உரியது. அதைச் சுதந்திரமாக வெளியிடும் உரிமையும் பெண்ணுக்கு உண்டு. சங்க இலக்கியங்களில் கூறப்படும் பரத்தையர் இத்தகைய சுதந்திரம் உடையவர் . காரைக்கால் அம்மையார், அவ்வையார், மணிமேகலை போன்ற மகளிர் தமிழ்வரலாற்றைச் செழுமைப்படுத்தியவர்கள். இலக்கிய படைப்புகளினுள் மறையுண்ட இவர்களது வாழ்க்கையை வெளிப்படுத்தும் முயற்சி தேவை என்கிறார். “பெண்கள் தம் அடிமை நிலையை உணர்ந்து தம் அளப்பரிய ஆற்றலைப் பயன்படுத்தினால் மட்டுமே சமநிலை பெற இயலும். பெண்நோக்கு, பெண்மொழி, தற்சிந்தனை, தெளிவு, துணிவு, உறுதி ஆகிய கருவிகளுடன் பெண்கள் களத்தில் இறங்கவேண்டும்” என்கிறார். (www.penniyam.com/2010/02/blog-post-21.lit.பா.நாள். 23.02.2016). இவர் எழுதிப் பல்வேறு இதழ்களில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகள் சில தனித் தொகுதிகளாக வெளிவரும் தகுதியுடையவை. மேலும் இவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள் முதலியனவும் விரைவில் நூலாக்கம் பெறலாம். தமிழறிஞர் ஞானி நா.நளினிதேவியின் ’தமிழ்நடை எளிமையும் செறிவும் மிக்கது. அன்றியும் முழுமையும் தனித்தமிழ்நடை அவருக்கு மட்டுமே வாய்ந்த தமிழ்நடை" என குறிப்பிடுகிறார். (தமிழிலக்கிய மரபும் புதுமையும், அணிந்துரை) முத்து சீனிவாசன், இவர் பேசும் தமிழ் குறித்து குறிப்பிடுவதை இங்குச் சுட்டுவது தகும்: “இவர் மேடையில் பேசும்போது தமிழ் கொஞ்சி விளையாடும். அவரது தமிழ் வர்ணனைகள் மாணவியரை வசப்படுத்தும். பெண்ணியம் காக்கப்பட எண்ணயபடியே இருக்கும். இக்கண்ணியம் மிக்க பேராசிரியையின் தமிழ்ப்பணி தொடரட்டும் அவரது தமிழ் இலக்கியப்படைப்புகள் தமிழுக்குப் பெருமை சேர்க்கட்டும்.” (மேலது, v,xi). தனித்தமிழ்க் கொள்கை இன்று குறைந்து வருவதைக் கண்டு அய்யம் கொள்ளும் இவர் தமிழில் வேற்றுமொழி கலப்பதால் தமிழின் இயல்பான ஆற்றல் குறைந்து விடுகிறது. வேற்றுச்சொற்கள் கலந்த தமிழைக் கேட்கும் படிக்கும், இளைய சமுதாயம் தமிழின் சிறப்பை அறிய முடியாமல் போய்விடும். புதிய தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து வேற்றுச் சொல்லுக்கு இணையான சொல்லைப் பயன்படுத்தி தனித்தமிழை உருவாக்கவேண்டும் என்பதே இவரது எண்ணமாகும். (தமிழறிஞர்.நா.நளினிதேவி, ப.99) பன்முகத் திறன் மிக்கவர். தனித்தமிழில் இவரது படைப்புகள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. பாராட்டுகள், விருதுகள் என்பனவற்றை இவர் விரும்புவதில்லை. இவரது தமிழ் வாழ்வும், படைப்பிலக்கியங்கள் பால் கொண்டஅக்கறையும் பிற தமிழ்ப்பேராசிரியமிருந்து இவரைப் பிரித்துக் காணும் தன்மையுடையவை. தமிழ் வாழ்வாகவே தன் வாழ்வை அமைத்துக் கொண்ட திறம் பாராட்டிற்க்குரியது. அறுவைச் சிகிச்சை ஒன்றில் செவித்திறனை இழந்த போதிலும் அதைப்பொருட்படுத்தாமல் தனி ஓர் இயக்கமாகச் இயங்குவதை மறைந்த பெரியரியலாளர் சங்கமித்ரா உட்பட பலரும் பாராட்டுகின்றனர்.தொடர்ந்து எழுதுவதிலும் படிப்பதிலும் மிகுந்த ஈடுபாட்டோடு ஒயாது இயங்கி வருகிறார். தமிழுக்குப் பல்வேறு ஆக்கங்களைத் தந்துள்ள இவரது தமிழ்ப்பணி போற்றுதற்குரியது. ப.மருதநாயகம்: (1935) ப.மருதநாயகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் என்பது அவரது சிறப்புத்தகுதியாகும். அமெரிக்க இலக்கியத்தை ஹவாய் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பேராசிரியர், கல்வியாளர், நூலாசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், ஒப்பிலக்கிய திறனாய்வாளர் எனப் பல தளங்களில் பரிணமிப்பவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில போராசிரியராகக் கல்லூரியிலும் பல்கலைகழகங்களிலும் பணியாற்றியவர். தற்போது எண்பது வயதிலும் விடாப்படியாக மிகுந்த அக்கறையோடு உலக அரங்கில் தமிழில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கி தமிழின் பெருமையை உயர்த்தி வருகிறார். ஆங்கிலத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும், தமிழில் பதினைந்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் எழுதியுள்ளார். தொல்காப்பியம், சங்கஇலக்கியம், திருக்குறள் குறித்தும் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் தமிழுக்கு வளம் சேர்ப்பவை. புறநானூறு குறித்த மிக விரிவான இவரது ஆய்வு போற்றத்தக்கது. ஏனைய வடமொழி இலக்கியத்திற்கெல்லாம் மூலம் புறநானூறு தான் என்றும் சிற்றிக்கியங்களின் தோற்றத்திற்கும் புறநானூறு அடிப்டையாக அமைவதையும் வெளிப்படுத்தியுள்ளார். சம காலத்து இலக்கியவாணார்களான வள்ளலார், அயோத்திதாசர், பாராதி, பாவாணர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், குலோத்துங்கன், ஜெயகாந்தன், ம.இலெ.தங்கப்பா, சிற்பி போன்றோர்களின் படைப்புகளையும் ஆய்வுக்குட்படுத்தி அவர்களின் தனிச்சிறப்பை விளக்கியுள்ளார். ஆங்கிலப் போராசிரியர்கள் தமிழ் மீது அக்கறை கொள்வதில்லை அல்லது ஆங்கில இலக்கியம் முதலியவற்றைக் கற்றவர் தமிழின் மீது அக்கறை கொண்டதே இல்லை. அதேபோல் தமிழ்இலக்கியம் கற்றவர்கள் ஆங்கில இலக்கியத்தைக் கற்பதும் இல்லை. இவ்வகை தமிழ் அறிஞர்கள் இடையில் மருதநாயகம் ‘தமிழுக்கு ஒரு கலங்கரை விளக்கமெனத்’ திகழ்கிறார் (த.நே.43, ப.4) என்கிறார் ஞானி. ஆங்கில இலக்கியம் கற்றவர் எனினும் தாய்மொழிக்கு வளம் சேர்க்கும் ஒரு சிலரில் பேராசிரியர் மருதநாயகம் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில இலக்கியத்தின் மேன்மை குறித்துப் பேசுபவர்களை மறுக்கும் முறையில் ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்தேடல் என்னும் தலைப்பில் 96 பக்க அளவிலான கட்டுரையை தமிழ்நேயம் - 43ஆவது மே 2011 சிறப்பிதழில் எழுதியுள்ளார். இக்கட்டுரையிலிருந்து மருதநாயகத்தின் ஆய்வுகள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன. ஆய்வுப்பணி: 1991இல் மருதநாயகம் வெளியிட்ட முதல் நூலாகிய ‘கிழக்கும் மேற்கும்’ என்பதனுள் மேற்கத்திய ஆங்கிலமொழி இலக்கியத்தோடு தமிழிலக்கியத்தையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். கடந்த முன்னூறு ஆண்டுகளுக்குள் அரசியல் காரணமாக ஆங்கில மொழி செல்வாக்குப் பெற்றது. சேக்ஸ்பியர், மில்டன் போன்றவர்கள் உலக கவிஞர்களாகச் சிறப்பு பெற்றனர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், ஆழ்வார் பாடல்கள் போன்றவை தக்கமுறையில் மேற்கத்தியருக்கு அறிமுகமாகி இருப்பின் தமிழ்க்கவிதையின் மேன்மையை உலகம் அறிந்திருக்கக்கூடும். தொல்காப்பியரின் கவிதையியலையும் இதேபோல அறிமுகப்படுத்தியிருக்க முடியுமானால் அரிஸட்ட்டில் முதலியவர்களின் கவிதையியல் போலப் போற்றப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில்சாமுவேல் பீப்ஸ் என்பவர் எழுதிய நாட்குறிப்புகள் சிறந்த இலக்கியமாகப் போற்றப்படுகிறது. தமிழில் ஆனந்தரங்கனின் நாட்குறிப்புகள் எவ்வகையிலும் பீப்ஸின் நாட்குறிப்புகளுக்கு குறைந்தவையில்லை. ஆங்கிலத்தில் பெரும் புகழ்பெற்ற ஜேம்ஸ் ஜாய்க்கு நிகரானவர் புதுமைப்பித்தன். இவ்வகையில் நல்ல தரமான மொழிபெயர்ப்பின் மூலம் தமிழிலக்கியம் மேற்கத்தியத்திற்கு அறிமுகமாகும் தன்மையுடையவை. இவ்வாறு தன் முதல் நூலிலே மருதநாயகம் பின்னால் அவர் எழுதும் பல நூல்களுக்கும் ஒரு முன்னுரை போல ‘கிழக்கும் மேற்கும்’ என்ற நூல் அமைத்திருக்கிறது (ப.19) என்கிறார். தமிழ்ப்புதுகவிதை வரலாறு பற்றிய ஆய்வுக்கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி, கு.பா.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க.நா.சுப்பரமணியம் முதலியவர்கள், டி.எஸ்.எலியட், எஸ்ராபவுண்டு ஆகியோர்களை அறிந்துள்ளார்கள் என்ற போதிலும் அவர்களை ஆழமாகப் பயின்றவர்களாக இல்லை. அவ்வாறு பயின்று இருந்தால் இவர்களது புதுக்கவிதையின் தரம் மேம்பட்டிருக்கும் என்கிறார் (ப.19) மருதநாயகம். இங்கும் அவரது மதீப்பீட்டின் திறனை அறியமுடிகிறது. ஓப்பாய்வு: மருதநாயகம் எழுதி வெளியிட்டத் ‘தமிழ் செவ்விலக்கியங்கள்’ (1998) என்னும் ஒப்பாய்வு நூலில் மேற்கத்திய இலக்கியத்தையும்தமிழிலக்கியத்தையும் ஒப்பிட்டு ஆராய்கிறார். கிரேக்க இலக்கியமாகிய (சாஃபக்ளிஸின்) ஆந்திகொனியிலும், தமிழிலக்கியமாகிய (இளங்கோவின்) சிலப்பதிகாரத்திலும் ஊழின் வலிமை பேசப்படுகிறது. ஆந்திகொனி நாடகத்தின் இறுதியில் கிரையோன் என்னும் மன்னன் ஊழின் வலிமையை தன்னால் மீறமுடியாது என்றும், ஊழ் தனது வாழ்க்கையை மண்ணாக்கிவிட்டது என்றும் புலம்புகிறான். சிலப்பதிகாரத்தின் இறுதியிலும் ஊழே வெற்றியடைகிறது. இவ்விரு இலக்கியங்களிலும் ஒத்தன்மை இருப்பதை எடுத்துக்காட்டும் மருதநாயகம் பெரும்பாலும் பழங்காலச்சூழலில் கிரேக்கத்திற்கும் தமிழகத்திற்கும் இருந்த வணிகத் தொடர்பைச் சுட்டிக்காட்டத் தெளிவான சான்று இல்லை எனினும் கிரேக்கத்திற்கும் தமிழகத்திற்கும் வணிகர் மூலம் இலக்கியத் தொடர்பு இருந்திருக்கக்கூடும் என்கிறார். “அதேபோல் சாஃபக்ளிஸின் ஈடிப்பஸ் நாடகங்கள் மனிதம் விதியோடு மோதுவதைக் காட்டுகின்றன. ஆனால் ஈடிப்பஸ் கண்ணகியளவுக்கு விதியை வென்று உயரவில்லை”. (கா.செல்லப்பன், தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும், ப.56) அதாவது கண்ணகி விதியை எதிர்த்துப் பேராடி வென்றாள். மருதநாயகம் பல நூல்களிலும் ஒப்பியல் ஆய்வுமுறையை பயன்படுத்துகிறார். இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும் போது புதிய உள்ளொளியைக் காணமுடியும் என்கிறார். சான்றாக சல்மான் ருசுடியின் ‘நள்ளிரவுக் குழந்தைகள்’ நாவலையும் தோப்பில் முகமது மீரானின் ‘சாய்வு நாற்காலி’ என்ற நாவலையும் ஒப்பிடுகிறார். காசுமீரில் வாழ்ந்த இசுலாமிய குடும்பம் ஒன்று அடுத்தடுத்து வந்த மூன்று தலைமுறைகளிலும் சிதைந்ததை ‘நள்ளிவுக் குழந்தைகள்’ நாவல் வெளிப்படுத்துகிறது. தோப்பில் முகமது மீரானின் நாவலும் இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஒரு இசுலாமிய குடும்பம் மூன்று தலைமுறைகளில் சிதைந்ததை எடுத்துரைக்கிறது. ருசுடி, மிக விரிந்த உலகனுபவம் பெற்றவர். இத்தகைய வாய்ப்பு மீரானுக்கு இல்லை என்றாலும் ருசுயின் படைப்புக்கு ஈடு கொடுக்கக்கூடிய இயல்பான படைப்பாற்றலை மீரான் வெளிப்படுத்துகிறார் (ப.39). சல்மான் ருசுடி இஸ்லாம் பற்றிய திறனாய்வு கருத்துகளையும் கொண்டவர். இஸ்லாம் பற்றி இத்தகைய திறனாய்வு கருத்து தனக்கு இல்லை என்று சொல்லிக்கொள்கிறார் மீரான். “பொருளாதார பலம்கொண்ட ஆதிக்கக்காரர்களையும் அவர்களின் அதிகாரங்களுக்கு ஆட்பட்டு அவ்வதிகாரமே தனக்கான நீதி என்று ஆழமாக நம்பிக்கை கொள்கிற மக்களையும் மற்றும் அதற்கெதிரான கலகக்குரல் எழுப்பும் கதாபாத்திரங்களையும் இஸ்லாமியச் சமூகத்தில் நிலவிய பழமைவாத அடிப்படையிலான மூடநம்பிக்கைகளையும் அதற்கு எதிர்ப்பாக வந்த அடிப்படைவாதத்தின் விரைப்புத் தன்மையையும் வட்டாரமொழிச் சொற்களோடும் மீன்வாடையோடும் எடுத்துரைக்கின்றன மீரானின் புதினங்கள்” (பெயல் அக்’15 - மார்’16, ப.44) என்ற நசீமாவின் கூற்றில் மீரானின் இசுலாமிய திறனாய்வு பார்வையைப் புரிந்து கொள்ளமுடியும். மேலும் ஒரு சான்று அமெரிக்க நாவலாசிரியராகிய சால்பெல்லோ எழுதிய ‘ஹெர்ஸாக்’ நாவலையும் நீலபத்மநாபன் எழுதிய பள்ளிகொண்டபுரம் நாவலையும் ஒரு கட்டுரையில் ஒப்பிடுகிறார். கணவனை ஏமாற்றியதோடு, குழந்தைகளைத் தவிக்கவிட்டு ஒரு பணக்காரனைத் தேடி மணந்து கொள்கிற பெண்ணைப்பற்றியது இவ்விரண்டு நாவல்களும். சால்பெல்போ ஒரு பெரிய படிப்பாளி. அவருக்கு நிகரான கல்வித்தகுதி இல்லாதவர் நீலபத்மநாபன் என்றாலும் மனித வாழ்வின் அவலங்களை ஆராய்ந்து வெளிப்படுத்துவதில் இருவரும் ஒத்ததன்மையுடையவர்கள் (ப.27) என்கிறார் மருதநாயகம். வெகுநுட்பமாக எழுதிய அமெரிக்க நாவலோடு ஒப்பிடும் போது தமிழ் நாவல்களின் தரத்தைக்குறைத்து மதிப்பீடுவதற்கில்லை என்ற கருத்தே மேலோங்குகிறது. திறனாய்வுப்பணி: ஜெயகாந்தன் எழுதிய ‘பாரிசுக்குப் போ’ நாவலை இதே நூலில் திறனாய்வு செய்கிறார் மருதநாயகம். புகழ்பெற்ற பாரிசின் கலை உலகத்தோடு பத்தாண்டுகள் தொடர்பு கொண்ட சாரங்கன் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறான். வயலின் வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற இவன் மேற்கத்திய இசையைப் பெரிதும் மதிக்கிறான். அவனது தந்தையார் கர்நாடக சங்கீதத்தில் வல்லவர், வீணை வாசிப்பவர். இருவருக்கும் இடையில் நிறைய உரையாடல்கள். மேற்கத்திய இசையைக் கர்நாடக சங்கீதத்தோடு இணைத்து இசையை மேம்படுத்த வேண்டும் என்று கருதுபவன் சாரங்கன். கர்நாடக சங்கீதம் பக்தி உணர்வாகிய ஒன்றில் மட்டும் ஆழ்ந்துள்ளது. மனிதவாழ்வின் பல்வேறு அனுபவங்களோடு, மேற்கத்திய இசையைப் போல கர்நாடக சங்கீதத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறான் சாரங்கன். இரண்டு இசையையும் இணைப்பதில் அவன் வெற்றியடைந்தானா? அல்லது தோல்வியுற்றானா? என்ற பாணியில் நாவல் தொடர்ந்து இயங்கியிருக்க வேண்டும். இப்படி இயங்கியிருந்தால் நாவலின் கலைத்திறன் மேம்;பட்டிருக்கும். இதற்கு மாறாக, ஒரு நாட்டியக்காரியின் காதலுக்கு வசப்படுகிறான். கதையின் கலை தர்க்கம் சிதைகிறது. இறுதியில் வேறு வழியில்லாமல் சாரங்கன் கல்கத்தாவுக்கு மேலை இசை கற்றுக்கொடுக்கச் செல்கிறான். இவ்வாறு ‘பாரிசுக்குப் போ’ நாவல் சிறப்பாகத் தொடங்கினாலும் இறுதியில் சிதைவதை மருதநாயகம் எடுத்துக்காட்டுகிறார். திறனாய்வாளர் தெ.பொ.மீ: மேலைநாட்டு இலக்கியவாதிகளும், திறனாய்வாளர்களும் தமிழ்ப்படைப்பாளிகள் மற்றும் திறனாய்வாளர்களைக் காட்டிலும் அறிவிலும் படைப்புத்திறனிலும் மேம்பட்டவராக இருப்பதை மருதநாயகம் சுட்டிக்காட்டாமல் இல்லை. இவ்வாறு சுட்டிக்காட்டும் மருதநாயகம் தெபொ.மீயை மேற்கத்திய திறனாய்வாளருக்கு நிகரானவர் என்று தன்முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூலில் (திறனாய்வாளர் தெ.பா.மீ) எடுத்துரைக்கிறார். டி.எஸ்.எலியட்டைப் போல தெ.பொ.மீயும் படைப்புகளை மதிப்பிடும் பொழுது இலக்கியத் தன்மைக்கு முதன்மை தரும் போக்கைப் பின்பற்றுவதைச் சுட்டிக்காட்டுகிறார். அரவிந்தர் படைப்புகளில் ஆன்மீகம் கலந்திருப்பதைப் போலத் தெ.பொ.மீயின் கட்டுரைகளிலும் அவரது ஆன்மீகப் பண்பு ஒளிறுகிறது என்பதை மருதநாயகம் தெளிவுபடுத்துகிறார். வடமொழியும் தமிழும் ஒன்றுக்கொன்று கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட மொழிகள். இந்தியாவில் வழங்கும் பல்வேறு மொழி இலக்கியங்களிலிருந்து இந்திய இலக்கியம் என ஒன்றை வகுத்துக் கொள்ள முடியும் என்பதும் தெ.பொ.மீயின் கருத்து. தமிழறிஞர் பாவாணர்: மருதநாயகத்தின் கட்டுரைகளில் பெரிதும் வித்தியாசமான சில கட்டுரைகளை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். மேலை மொழியியலாளர்களின் ஆய்வுகள் அறிவியல் தன்மையோடு இருப்பதாகவும் பாவாணரின் ஆய்வுகள் அறிவியலுக்கு ஒத்ததாக இல்லை என்றும் தமிழர் பண்பாடு பற்றிய அவரது கருத்துக்கள் வெற்றுக் கற்பனை என்றும் மேலை இலக்கியத் திறனாய்வாளர்களைப் பின்பற்றும் தமிழ்மொழியிலாளர்கள் கருதினர். மேலைமொழியியலும் கீழைமொழியியலும் வெவ்வேறு சார்புடையவை. இரண்டையும் ஒப்பிடுவதற்கில்லை. கீழை மொழியியலுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. இவ்வகையில் பாவாணரின் ஆய்வுகள் அமைந்திருக்கின்றன என்கிறார் மருதநாயகம். பாவலர் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டு தமிழ்க்கவிதை வரலாற்றில் பெருஞ்சித்திரனாருக்குரிய இடத்தைத் தமிழ்த் திறனாய்வாளர்கள் தர மறுக்கின்றனர். தமிழ்மொழி, தமிழினம், தமிழ்ப் பண்பாடு ஆகிய மூன்று கருத்துக்களை முதன்மைப்படுத்தி கவிதை எழுதினார் பெருஞ்சித்திரனார். நூற்றுக்கணக்கான அவரது கவிதைகளில் ஒன்று மற்றதைப் போல இல்லை. பல்வேறு யாப்புகளில் பல்வேறு சுவை நயங்களில் பல்வேறு உத்திகளையும் வைத்துப் பாடியவர் பெருஞ்சித்திரனார். மருதநாயகம் இவரது கவிதைகளைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “தமிழின் பெருமையும், தொன்மையும் இவர் சொல்லும் போது பேருவகையும், தமிழின் நிலை இவ்வாறு உள்ளது என்று இவர் உரைக்கும் போது அவலமும் ஆறாத்துயரமும், தமிழின் புறப்பகைவரை இவர் சாடும்போது அறச்சினமும், உட்பகைவரைச் சுட்டும்போது நகையும் எள்ளலும், தமிழுக்கு உழைப்போரைப் போற்றும் போது பெருமிதமும், தமிழைக் காட்டிக் கொடுத்தோரை ஏசும் போது இளிவரலும் அருவருப்பும் தூண்டப்படும்” (ப.86). இவ்வாறு தம் கவிதைகளை அழகுறயாத்தவர் பெருஞ்சித்திரனார் என்கிறார் மருதநாயகம். புதுக்கவிதையாளர் பலரும் பெருஞ்சித்திரனார் முதலியவர்களைப் பாராட்டுவதில்லை. அவர் கவிதைகளை மிகை உணர்வு என்று ஒதுக்கினார். இவர்களுக்கு மாறாக, கவிதை பற்றிய இலக்கண அறிவும் தமிழ் உணர்வும் மிகுந்த மருதநாயகம் பெருஞ்சித்திரனாரை இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர் என்று பாராட்டுகிறார். இவ்வாறே ம.இலெ.தங்கப்பாவின் கவிதைகளையும் விரித்துரைக்கிறார் மருதநாயகம். தனித்தமிழ் அறிஞர்களையும், கவிஞர்களையும் இவர்கள் நம் காலத்திற்குரியவர்கள், தமிழிலக்கிய வரலாற்றில் இவர்களுக்குச் சிறப்பான இடம் உண்டு என்ற முறையில் எழுதியுள்ளார். மருதநாயகம் பழந்தமிழின் பெருமையை உயர்த்திப்பிடிக்கும் அதேவேளையில் இக்கால இலக்கியவாதிகளின் நிறைகளையும், குறைகளையும் சுட்டிக்காட்டுவதில் தவறவில்லை. இக்காலச்சூழலில் தமிழில் பேசுவதும், படிப்பதும் பெரும்பாலாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பிற துறையினரும் ஆங்கில இலக்கியம் படித்தவர்களும் ஆங்கிலம் பேசுவதையே பெருமையாக நினைப்பவர்களுக்கு மத்தியில் பதிலடி கொடுப்பது போல் மருதநாயகம்; திகழ்ந்து வருகிறார். ஆங்கிலப்பேராசிரியராகப் பணிபுரிந்து அதே சமயத்தில் பழந்தமிழிலக்கியத்தை மேலைநாட்டினர் கவனத்திற்குக் கொண்டு சென்றதோடு மேற்கத்திய இலக்கியங்களுக்கு நிகரான இலக்கியங்கள் தமிழிலும் இருக்கின்றன என்பதை நிறுவியும் உள்ளார்; மருதநாயகம் குறித்து ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் கூறுவதாவது: “மருதநாயகம் போல் ஒவ்வொரு பேராசியரும் தம் ஆற்றலை, அறிவை, புலமைக்கொண்டு, தாய்மொழிக்கு வளம் சேர்க்கப் புறப்படும் நாளே பாவேந்தர் சொல்வது போல உலகின் பல்துறை அறிவு நலமும் செந்தமிழைச் சேர்ந்து, செந்தமிழைச் செழுந்தமிழாக்கும் நன்னாளாகும்” (பாரதி ஆறு பாரதிதாசன் பத்து, பதிப்புரை) என்கிறார். தமிழகம் உட்பட இந்திய / உலக அளவில் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர். 2018ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘தமிழின் செவ்வியல் தகுதி’ என்ற இவர் எழுதிய நூல், தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதினை 2014 இல் பெற்றது.தமிழ்ப் பற்றும் தமிழுணர்வும் மிக்க இவர், வயது முதிர்ந்த நிலையிலும் செம்மொழி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தும் கருத்தரங்குகளிலும் ஆய்வரங்குகளிலும் கலந்து கொண்டு, தமிழின் தனித்தன்மை குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாற்றி வருகின்றார் மருதநாயகம். உலகளவில் நடைபெற்ற இருபத்து இரண்டிற்கும் மேற்பட்ட தமிழிலக்கிய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியுள்ளார்.எத்தகையை ஆரவாரமும் இன்றி உலகை வளம் வரும் இவர் பல்வேறு நாட்டில் வாழும் உலகத் தமிழறிஞர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். தற்காலத்தில தமிழின் பெருமையை உலகறிய பறைசாற்றுவதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. மருதநாயகத்தின் பல்வேறு பணிகளைப்பற்றி ஆராயும்பொழுது ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். இவரைப் போல இன்னொரு ஆங்கிலப்பேராசிரியரும் இல்லை. அதே சமயம் இன்னொரு தமிழ்பேராசிரியரும் இல்லை. இரா.திருமுருகன் (1929 - 2009) இசைத்தமிழறிஞராகிய இரா.திருமுருகனார் குரலிசையிலும் குழலிசையிலும் வல்லவர். இவர் தமிழிசைக்கும் இசைத்தமிழுக்கும் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. ‘என் தமிழ் இயக்கம்’ என்னும் தலைப்பில் தமிழுணர்வோடு தமிழுக்காகப் பல்வேறு மடல்களும் அறிக்கைகளும் எழுதியவர். தனது வாழ்க்கையை இடைவிடாதப் போராட்ட இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். இசைத்தமிழுக்கு இலக்கணம் தேவை என்பதை உணர்ந்து இசைத்தமிழையும் இலக்கண மரபையும் போற்றியவர். தமிழுக்கு இழுக்கு நேரும்படி யார் பேசினாலும், எழுதினாலும் முறையான ஆதாரங்களோடு அவர்களைச் சாடுவதிலும் தயங்காதவர். இதழ்ப்பணியிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. புதுவை மண்ணிற்குப் பெருமை சேர்த்தவர். புதுச்சேரியில் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை நடைமுறைப்படுத்த பல்வேறு முயற்சிகளை முன்னின்று நடத்தியவர். இத்தகைய ஒருவரை இழந்துவிட்டோம் எனினும் இசைத்தழிழறிஞரை தமிழ் உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக தமிழ்நேயம் இவர் பெயரில் ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. அந்த இதழில் திருமுருகனாரின் பல்வேறு நூல்களிலிருந்து அவரின் ஆக்கங்களைத் தெரிவுசெய்து தமிழ்நேயம் -39ஆவது இதழில் (அக்.2009)வெளியிட்டது. இத்தொகுப்பின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகிறது. தமிழ் இயக்கப்பணிகள்: ஆண்டுதோறும் இவர் ஆற்றிய தமிழ் இயக்கப்பணிகள் குறித்து ‘என் தமிழ் இயக்கம்’ என்ற நூலை வெளியிட்டார். எட்டாண்டுகளுக்கு மேல் இப்பணி தொடர்ந்தது. இந்த நூலில் தொகுக்கப்பட்டவை பெரும் பகுதி அவர் பலருக்கு எழுதிய மடல்கள். தமிழுக்கு இன்னல் நேரும் முறையில் எழுதியவர், பேசியவர் எவராயினும் அவரை, அவர் எத்தகைய பதவி வகித்த போதிலும் அதுபற்றிக் கலக்கமுறாமல் அவருக்கு மடல் எழுதிக் கண்டித்தார். சான்றாக அகநானூற்றையும், புறநானூற்றையும் படித்தால் ஆடு, மாடு மேய்க்கத்தான் போகவேண்டும் என்று சட்டசபை அவைத்தலைவர் பேசியபோது அவரைக் கண்டிக்கும் முறையில் திருமுருகன் மடல் எழுதினார். அவைத்தலைவரான பேராயக்கட்;சியை சார்ந்தவர், ஒருசமயம் காந்தியடிகள் மயிலாடுதுறை வந்தபோது ஆங்கிலத்தில் வரவேற்புரை எழுதி வாசித்ததைக் காந்தியடிகள் ஏற்கவில்லை. தனக்குப் புரியாது என்ற போதிலும் அவர்கள் தம் தாய்மொழியாகிய தமிழில்தான் வரவேற்புரை எழுதியிருக்கவேண்டும் என்று காந்தியடிகள் கூறினார். காந்தியைத் தலைவராகக் கொண்ட அவைத்தலைவர் இப்படிப் பேசலாமா? என்று திருமுருகனார் கண்டித்தார். அவைத்தலைவர் என்றும் பாராமல் விமர்சித்து மடல் எழுதியதோடு தமிழில் எழுதுமாறு வற்புறுத்தினார். எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் திருச்சி வந்த கார்த்திக்கேசு சிவத்தம்பி திருப்பியனுப்பப்பட்டார். மாநாட்டில் கலந்து கொள்ள வில்லை. இது பற்றி அறிவிப்பு எதுவும் மாநாட்டில் தரப்படவில்லை. இந்நிலையில் சிவத்தம்பி கட்டுரைப் படிப்பதாக கருத்தரங்க அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பற்றி அரங்கமே அமைதியாக இருந்த போது திருமுருகன் உரத்த குரலில் சிவத்தம்பி எங்கே? என்று கேட்டார். தலைவர் நொபுருகசிரமா முன்வந்து எங்களுக்கும் அது தெரியாது என்று கூறினார். கருத்தரங்கு முடிந்து வந்தபிறகு வெளியில் வந்த அனைவரும் திருமுருகனாரைப் பாராட்டினர் (மேலது, ப.27). பலரும் அரசின் கருத்து என்னவாக இருக்குமோ என்று அமைதியாக இருந்தாலும் திருமுருகனார் மட்டும் வெளிப்படையாகக் கேள்வி எழுப்பினார். (சிவத்தம்பி, விடுதலைப் புலிகளின் சார்பாளராக இருந்தார் என்பதற்காக அரசு அவரைத் திருப்பியனுப்பியது. இதன் காரணமாக எவரும் குரல் எழுப்பாத போது திருமுருகனார் மட்டுமே குரல் எழுப்பினார்). தினமணியில் கட்டுரை ஒன்று எழுதிய புதுவை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கி.வேங்கிடசுப்பிரமணியம் அவர்கள் ‘உதட்டில் தமிழ், உள்ளத்தில் ஆங்கிலமே?’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் பாரதி கூறியது போல ‘மெல்லத்தமிழ் இனிச்சாகுமா?’ என்று கேட்டிருக்கிறார்? துணைவேந்தராகப் பணியாற்றிய காலத்தில் அரசின் கட்டுப்பாடு காரணமாக தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை என்று எழுதியதோடு இனி பட்டித் தொட்டியனைத்தையும் இணைக்கும் தமிழியக்கம் தேவை என்று முடித்திருந்தார். அவருக்கு மடல் எழுதிய திருமுருகன் ‘மெல்லத் தமிழ் இனிச்சாகும்’ என்ற கூற்று பாரதியாரின் கூற்றல்ல வேறொரு பேதையின் கூற்று. அன்றியும் புதுவையில் தமிழியக்கம் கண்ட திருமுருகன், ம.இலெ.தங்கப்பா முதலியவர்கள் நடைப்பயணமாக மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டி கி.வேங்கடசுப்பிரமணியம் அவர்களுக்கு இப்பொழுது பதவி இல்லை. இனி எங்களோடு இணைந்து நடைப்பயணம் மேற்கொள்வாரா? என்ற நோக்கில் எழுதினார் (மேலது ப.31). இவ்வாறு துணைவேந்தர் எனினும் தயங்காமல் எதிர்மடல் எழுதும் திறனாய்வாளர் திருமுருகன். மேலும் திருமுருகனார் “தமிழ்ப்பணிகள் பொருட்டுப் பிரான்சு, செருமனி, உரோம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்த பெருமைக்கு உரியவர். என் தமிழியக்கம் என்னும் பெயரில் ஐயா உருவாக்கியுள்ள நூல்களில் இவர் தம் நாற்பதாண்டுக்காலப் பணிகள் பதிவாகியுள்ளன” என்கிறார் மு.இளங்கோவன். (muelangovan.blogspot.in/ 2008/09/ blog-post-2-tml) எட்டரை இலட்சம் அறிவியல் கலைச் சொற்களைத் தொகுத்த அறிஞர் மணவை முத்தபா 35 அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழில் அறிவியல் கற்பிக்கப்பட்டால் மட்டுமே முத்தபாவின் முயற்சிகள் தமிழ் மக்களுக்குப் பயன்படும் என்கிறார் திருமுருகன். முத்தபா கூறியபடி அறிவியல் துணையில்லாமல் வாழ்க்கை ஒர் அங்குலம் கூட நகர முடியாது என்பதைத் திருமுருகன் ஒப்புக்கொள்கிறார். இந்தி எதிர்ப்பு: 1965இல் இந்திமொழிக்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டம் திருமுருகனாருக்கு உடன்பாடில்லை. இந்தியை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆங்கிலத்தைத் தட்டிக்கொடுத்து வளர்க்கும் அவலம் குறித்து முன்கூட்டியே உணர்ந்து வருந்தினார் (மேலது ப.47). தமிழுக்கு ஆக்கம் தராத ஒரு போராட்டத்தை இவரால் எப்படி ஏற்க முடியும்? சிந்துப்பாவியல்: தமிழிசை என்பதும் இசைத்தமிழ் என்பதும் ஒன்றல்ல. இரண்டும் வேறுபட்டவை என்கிறார். கர்நாடக சங்கீதம் என்பது உண்மையில் தமிழிசைதான். இதற்கு ஆதாரமாக குறிஞ்சி, பள்ளு, தேவாரம் முதலிய இசைத்தமிழ் நூல்களை எடுத்துக்காட்டினார். அன்றியும் நெடுங்காலமாக நிலவிவந்த தமிழப்பண்கள் தான் தற்பொழுது கர்நாடக சங்கீதத்தில் இராகங்கள் என்று எடுத்துக்காட்டினார். தமிழிசை என்பது இயல்தமிழ். இசைத்தமிழ் என்பது தேவாரம் முதலியவற்றைக் குறிப்பிடுவது. தமிழிசைக்குப் பயன்படுத்தும் யாப்பமைதி இசைத்தமிழுக்கு ஒத்துவராது. இசைத்தமிழ் என்பது சந்தம் முதலியவற்றோடு இயங்கும். இதற்கு எடுத்துக்காட்டு சிந்துப்பாடல்கள். சிந்துப்பாடல்களுக்கு உரிய இலக்கணத்தை முதன்முறையாக வரையறை செய்தார் திருமுருகனார். இதற்காக அவர் முனைவர் பட்டம் பெற்றார். இந்நூல் குறித்துஅவர்; தரும் விளக்கம் வருமாறு: “தாளமுடைய இசைத்தமிழ்ப் பாடல்களைச் சந்தப்பா, வண்ணப்பா, சிந்துப்பா, உருப்படி என வகைப்படுத்தலாம். அவற்றில் சந்தப்பாவிலக்கணமாக விருத்தப்பாவியலும் வண்ணப்பாவிலக்கணமாக வண்ணத்தியல்பும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் சிந்துப்பாவுக்கும் உருப்படிக்கும் இலக்கணம் இல்லை. சிந்துப்பாவுக்கு இலக்கணம் எழுதும் முயற்சியே என் முனைவர் பட்ட ஆய்வு.” (சிந்துப்பாவியல், நூலாசிரியர் உரை) திருமுருகன் சிந்துப்பாடல்களுக்கு இலக்கணம் வகுத்தளித்திருப்பதன் இன்றியமையாமை குறித்து ம.இலெ.தங்கப்பா பின்வருமாறு கூறுகிறார். “சிந்துப்பாடல்கள் பல்லாண்டாகத் தமிழில் எழுதப்பட்டும் பாடப்பட்டும் வந்திருக்கும் ஒர் இலக்கிய வகை. எந்த யாப்பிலக்கண நூலிலும், சிந்துப்பாடல்களின் இலக்கணம் முழுமையாகக் கூறப்படவில்லை. தொல்காப்பியம் இசையிலக்கண நூலன்று இக்குறையுணர்ந்து அதனை நிறைவு செய்தவர். தமிழில் வழங்கிவரும் நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து, கும்மி, இலாவணி, கிளிக்கண்ணி, தென்மாங்கு முதலிய கிளிச்சிந்துப் பாவினங்களை வகைப்படுத்தி, அவற்றின் இசை நுட்பங்கள், தாள அமைதி யாவும் உட்பட முறையான யாப்பிலக்கணத்தை இந்நூல் தமிழுக்கும் தமிழர்க்கும் வழங்கியுள்ளது” (பக்.75,76). விருதை திருப்பித் தந்தமை: தமிழ் அறிஞர்களுக்கு தமிழ்மாமணி விருது அறிவிப்பு (1998) தெரிவித்த புதுவை அரசு, செயல்பாடதிருந்த தமிழ் வளர்ச்சி சிறகம் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிப்பது பற்றி எந்தத் தகவலும் அறிவிப்பில் வெளியிடாதது குறித்து கல்வி அமைச்சருக்கு திருமுருகன் கோரிக்கை விடுத்தார். புதுவையில் ‘தமிழ் வளர்ச்சி சிறகம்’ செயல்படவில்லை. இது குறித்து கல்வி அமைச்சருக்கு அவர் மடல் எழுதினார். சிறகம் செயல்படாமலிருக்கும் போது தமிழ்ப் புலவர்களுக்கு அரசு விருது வழங்குவது ஏன் என்று கேட்டிருந்தார் (ப.43) அமைச்சர் என்றும் பாராமல் திருமுருகன் தட்டிக்கேட்டார் பயனில்லை. திருமுருகனாரும் தங்கப்பாவும் புதுவை அரசு தங்களுக்கு வழங்கிய தமிழ்மாமணி விருதை ஏற்கும் பொழுதே சில நிபந்தனைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறித்தான் விருதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஓராண்டாகியும் புதுவை அரசு தமிழை ஆட்சி மொழியாக்கும் சட்டத்தை நிறைவேற்றவில்லை. குறைந்த அளவு அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பதைக்கூட அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில் தமிழ் மாமணி விருதை அரசிடமே திருப்பி அளிப்பதென முடிவு செய்து தமிழ் அன்பர்களைத் திரட்டி ஊர்வலமாகச் சென்று விருதை திருப்பியளித்தனர். அரசு என்ன பதில் சொல்ல முடியும்! இதழ்ப்பணி: ‘தெளிதமிழ்’ என்னும் இதழைத் தோற்றுவித்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வந்தார். இவ்விதழின் மூலம் தமிழின் தனிச்சிறப்பாகிய யாப்பிலக்கண அமைதியை இளைஞர்களுக்கு கற்பித்தார். இவ்விதழ் குறித்து, ய.மணிகண்டன் கூறுவதாவது: “தமிழ்ப்புலமை தோய்ந்துபோய் இருக்கும் சமகாலத்தில் புதிய எழுச்சியை ஊட்டும் வண்ணம் மரபிலக்கணப்பரப்பில் அரும்பணிகளை ஆற்றி வந்தது தெளிதமிழ்” (www.kalachuvadu.com/ issue-115/ page 48-asp) என்கிறார். மாறுபட்ட கோணங்களில் தமிழ் இலக்கணம் பற்றிப் போட்டிகளும், விவாதங்களும் இதழில் வெளிவந்தன. இவ்வகை நோக்கத்தோடு தமிழில் தெளிதமிழ் மட்டுமே செயல்பட்டது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் இவ்விதழ் செல்வாக்கு பெறவில்லை என்றாலும் தெளிதமிழின் பணி தமிழுக்குப் பெரிதும் தேவை. இன்றும் இவ்விதழ் புதுவை அன்பர்களின் ஒத்துழைப்போடு வெளிவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக திருமுருகனார் தாமே ஒரு தமிழியக்கமாகச் செயல்பட்டார். ஒரு பள்ளியில் தமிழாசிரியராக பல ஆண்டுகளுக்கு மேல் இருந்து கொண்டே ஆட்சியாளருக்கு எதிராக தமிழியக்கத்தைச் செயல்படுத்திய இவருடைய துணிவும், துணிச்சலும் பாராட்டத்தக்கது. தமிழுக்கு ஆக்கமில்லை எனில் அரசு தரும் விருதைக்கூட திருப்பித்தரக்கூடிய நெஞ்சுரம் மிக்கவர். இவரை ஒரு தமிழ்ப்போராளி என உரத்துச் சொல்லலாம். திருமுருகன் குறித்து ஞானி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “திருமுருகன் அவர்கள் நம் காலத்தில் மிகச்சிறந்த தமிழ்ப்போராளியாய் விளங்கினார். தமிழுக்கு நம் காலத்தில் நெருக்கடிகளும் கூடுதலாகி வருகின்றன. இந்நிலையில் நிறுவனங்களோடு போராடாமல் தமிழைக் காக்கவும் முடியாது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மேன்மையை அழிப்பதில் முனைந்து செயல்படுவதை நாம் அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கவும் முடியாது. தமிழியக்கங்கள் இவ்வகையில் தமிழ் உணர்வாளர்களைத் திரட்டி தமிழ்க்காப்பில் முனைந்து நிற்கத்தான் வேண்டும். திருமுருகன் இவ்வகையில் தனித் தமிழ்ப்போராளி” (நமக்கான தமிழிலக்கிய கொள்கை, ப.106) என்கிறார். சி.இலக்குவனார் (1909 - 1973) தமிழ்ப்போராளியாக தன் காலமெல்லாம் வாழ்ந்த இலக்குவனார் இளமை முதற்கொண்டே தமிழுணர்வும் பகுத்தறிவு பார்வையும் உடையவராகத் திகழ்ந்தார். படிக்கும் காலத்திலும் கல்லூரியில் பயிலும் காலத்திலும், கல்லூரிப் பணியின்போதும் ஊர்ப்புறங்களில் நடைப்பயணம் மேற்கொண்டு தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் பொதுமக்களுக்குக் கற்பித்தார். தமிழாசிரியர்களுக்கிடையில் ஒரு விதிவிலக்காகத் திகழ்ந்தார். இவரைச் சிறப்பிக்கும் முறையில் தமிழ்நேயம் இதழ்-49இல் வெளிவந்தது. ஆசிரியர் பணியும் போராட்டமும்: திருவையாறு அரசர் கல்லூரியில் (1942-44) தமிழ்த்துறை விரிவுரையாளராகத் தன் பணியைத் தொடங்கினார். கல்லூரியில் பணியாற்றும் பொழுதே, வெளியில் பொது மக்களுக்காகவும் தமிழ் அமைப்புகள் ஏற்படுத்தினார். தமிழ் வகுப்புகள் நடத்தினார். தமிழுக்கு விழா எடுத்தார். மாணவர்களிடையேயும் பொது மக்களிடையேயும் தமிழ்ப்பற்றையும் தன்மான உணர்வையும் வளர்த்தார். இதன் காரணமாக தமிழ்ப் பகைவர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். பின்னர் திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் (1944 - 47) பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார். அக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பொறுப்பேற்ற பின்புதான் தமிழ்த் துறைக்கு மட்டுமல்ல கல்லூரியையே தமிழ் மணத்தில் ஆழ்த்தினார். ஆங்கில மயமாக இருந்த கல்லூரிச் சூழலில் ‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே’ என்பதை மாணவர்களுக்கு உணர்த்தினார். இவர் ஆங்கிலத்தை வெறுக்கவில்லை எனினும் தமிழை முதன்மையாகக் காக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். தமிழ்ச்;சொல் இருக்கும் போது ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துவது கொலைக்குச் சமம் என்றார். இதனால் சக ஆசிரியர்களும் இவருக்கு பகைவர்களாகினர். தூயத்தமிழ்ப் பற்றையும் வளர்த்தார். வேற்றுமொழிச் சொற்களைக் களைந்தார். இதன் காரணமாக ஆரிய மாணவர்களின் வெறுப்புக்குள்ளானார். (த.நே.49, ப.31) தமிழ்ப் பகைவர்கள் எதிர்ப்பின் காரணமாக கல்லூரியிலிருந்து வெளியேற நேர்ந்தது. இதன்பிறகு விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியில் (1947-52) தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்தார். இவரது தமிழ்ப்பணிகளும் செவ்வனே நடந்தன. 1952 தேர்தலின் போது சாதித் தலைவரை ஆதரிக்கவில்லை என்பதற்காக அக்கல்லூரியிலிருந்து நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார். (ப.42) நாகர்கோவிலில் உள்ள தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் (1958-61) தமிழ்துறைத் தலைவராக தம் தொண்டினைத் தொடர்ந்தார். திருவள்ளுவருக்குப் பெரிய அளவில் விழா எடுத்தார். கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்குஉரிய காலத்தில் உதவித் தொகையை தராமல்ஆண்டு இறுதியில் தருவதை எதிர்த்தார். கல்லூரி நிர்வாகத்தோடு உதவித்தொகை பிரச்சனையில் ஒத்துழைக்காததால் கல்லூரியை விட்டு விலக்கப்பட்டார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் (1961-65) தமிழ்த்துறைத் தலைவர் பொறுப்பேற்றார். அக்கல்லூரியில் தொல்காப்பியர், திருவள்ளுவர், பாரதிதாசன் ஆகியவர்களுக்கு விழா எடுத்துச் சிறப்பித்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் இங்குப் பணியாற்றினார். இக்கல்லூரியில் பணியாற்றியபோது 1965இல் ‘குறள் நெறி’ இதழ் தொடங்கினார். மத்திய அரசு இந்தியை தமிழர் மீது திணிப்பதைக் கடுமையாகச் சாடி, குறள் நெறியில் எழுதினார். இவரால் எழுச்சிப் பெற்ற மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போரை மதுரையில் தொடங்கினர். பின்னர் இப்போர் தமிழகம் முழுவதும் தீயாகப் பரவியது. இதற்காக இவர் சிறைச் செல்லவும் நேர்ந்தது. விடுதலை பெற்றபிறகும் இந்தி எதிர்ப்புப் பணியிலும் தமிழ்காப்புப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டார். இந்தி எதிர்ப்புப்போர் வெற்றிப் பெற்றது. இதற்காக அறிஞர் அண்ணாவின் பாராட்டைப் பெற்றார். முதலமைச்சர் அண்ணாவின் அறிவுரையின் பேரில் சென்னை மாநிலக் கல்லூரியில் (1967) இணைப்பேராசிரியராகப் பணியேற்றார். இக்கல்லூரியில் இளங்கலை தமிழ் சிறப்பு வகுப்பைக் கொண்டு வந்தார். இளங்கலை, முதுகலை மாணாக்கர் தமிழுணர்வும் தமிழ்ப்புலமையும் சிறக்க ஆய்வுக்கட்டுரை, ஏடுகள் உருவாக்கும் திட்டத்தை ஏற்படுத்தினார். முதன்முதலில் அஞ்சல் வழிக்கல்வியை அறிமுகப்படுத்தியவரும் இவரே. இக்கல்லூரியில் ஓராண்டு பணிக்குப்பிறகு தமிழ்நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தது. அறிஞர் அண்ணாவின்கருத்திற்கு மாறாக தமிழ்த்துறைத் தலைவர் பதவி இலக்குவனாருக்கு வாய்க்கவில்லை. இணைப்பேராசிரியர் பதவியே கிட்டியது. ஓவ்வோர் ஆண்டும் பதவி புதுப்பிக்கப்பட்டது. இவை யெல்லாம் அண்ணாவின் பார்வையில் படவில்லை. இதன்காரணமாக பேராசிரியர் உசுமானியா பல்பலைக்கழகத்திற்குப் போக நேர்ந்தது. தன்னை நாடு கடத்தியதைப் போல பேராசிரியர் உணர்ந்தார். உசுமானிய பல்கலையில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றும் தகுதி தமிழகத்தில் எவருக்கும் இல்லை என்று ஆந்திர அரசு கூறியதை மறுக்கும் முறையில் உசுமானியா பல்கலைகழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றும் தகுதி தனக்கு உண்டு என்று அதை மெய்ப்பிக்கும் முறையில் தமிழ்த்துறைத் தலைவர் பணியேற்றார். இங்குப் பணியாற்றும் காலத்தில் ஆந்திராவில் வாழும் தமிழர்கள் தமிழுணர்வு பெறுவதற்காகவும் தமிழ்க்கல்வி பெறுவதற்காகவும் பாடுபட்டார். மேலும் தெலுங்குப் பேராசிரியர் மத்தியில் தமிழ் மொழியே தெலுங்கு மொழிக்கு, மூலமொழி என்பதை எடுத்துரைத்தார். (ப.84) இவ்வாறாக கல்லூரிப் பணியில் எங்கு பணிபுரிந்த போதிலும் தமிழுக்கும் நேர்மைக்கும் இழுக்கு நேர்ந்தால் தடுத்து எதிர்த்துப் போராடுபவராகவும், இவரது போர் முழக்கம் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான போக்காகவும் இருந்தது. இதன்காரணமாக கல்லூரியிலிருந்து இவர்விலக நேரிடுகிறது. என்ற போதிலும் இவரது தமிழ்ப்பணியும் போராடும் குணமும்சிறிதளவும் குறையவில்லை. இதழ்ப்பணி: பேராசிரியராகப் பல்வேறு ஊர்களில் பணியாற்றிய காலங்களில் இதழ்ப்பணியிலும் ஈடுபட்டிருந்தார். நெல்லையில் இருந்த போது ‘சங்க இலக்கியம்’ (1944) என்ற இதழைத் தொடங்கினார். சங்க இலக்கியத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். புலவர்களுக்கு மட்டும் உரியதாக திகழ்ந்த சங்க இலக்கியத்தைப் பொதுமக்களுக்கு உரியதாக எளிமைப்படுத்திப் பரவச்செய்தார் (சி.இலக்குவனார், ப.85). விருதுநகரில் பணியாற்றிய காலத்தில் ‘இலக்கியம்’ என்ற இதழை நடத்தினார். ‘கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க’ என்று பாரதிதாசன் கூறியவாறு இதழ்ப்பணியை மேற்கொண்டார். ‘இலக்கியம்’ இதழின் விடுதலைநாள் மலரில் ’தமிழுக்கு விடுதலை, கல்விக்கு விடுதலை, மக்களுக்கு விடுதலை, கலைக்கு விடுதலை தேவை என்றெல்லாம் கட்டுரைகள் வெளியிட்டார். அரைகுறை அரசியல் விடுதலையால் பயனில்லை. தமிழ் முழு விடுதலை பெற்றால் மட்டுமே தமிழர்க்குப் பயன் உண்டு என்பதை உணர்த்தினார். (ப.39) தஞ்சையிலிருந்த போது ‘திராவிட கூட்டரசு’ (1952) எனும் பெயரில் தமிழிலும் ‘Dravidian Federation’ எனும் பெயரில் ஆங்கிலத்திலும் இதழ் நடத்தினார். இவ்விதழில் இந்தியாவில் கூட்டாட்சி ஏற்பட வேண்டும். கூட்டாட்சியில் தான் மாநிலங்கள் உரிமையோடு வாழமுடியும் என்று எழுதினார்.தமிழர்களே தமிழர்களை ஆளவேண்டும் என்றும், மொழிவழித் தேசிய கூட்டரசு தேவை என்றும் இதழில் எழுதினார். தமிழ்நாட்டுப் பிரிவினை தேவை என்று எழுதிய பெரியார் 1952 தேர்தலில் காங்கிரசு கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதைக் கண்டித்தார். ஒரே இந்தியா என்று பேசும் காங்கிரசு ஒழிந்தாலன்றி மாநிலங்கள் தன்னாட்சி பெறமுடியாது என்றும் எழுதினார். மொழிவழி மாநிலங்கள் அமைய வேண்டும் என்றும் மாநிலங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூட்டரசு அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவ்வகையில் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய முன்னோடிப் போராளியாகத் திகழ்ந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றியபோது ‘குறள் நெறி’ (1963) இதழைத் தொடங்கினார். சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றைப் பரப்புவதுடன் “குறள்நெறியில் மக்கள் வாழ்ந்தால், அரசியல் நடந்தால், ஆட்சி செய்தால், மக்களின் அனைத்துத் துன்பங்களும் அகன்றுவிடும்” (ப.87) என்று எழுதினார். நூலாக்கப்பணி: தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதினார். மொழியியல், இலக்கணம், வரலாறு, தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு வகையான நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். வடமொழியில் எழுதப்பட்ட பாணினி இலக்கண நூலைப் பின்பற்றித் தொல்காப்பியம் எழுதப்பட்டது என்பதை அறவே மறுத்தார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலநூல்களைத் தமிழுக்கும் மொழிப்பெயர்த்துத் தமிழுக்குப் பல்வேறு வகையில் ஆக்கம் சேர்த்துள்ளார். இலக்குவனாரும் அண்ணாவும்: பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர் இலக்குவனார். ‘Tholkappiyam in English Critical Studies’ என்ற முனைவர் பட்ட ஆய்வு நூலுக்கு அண்ணா அணிந்துரை வழங்கினார். மேலும் இந்நூலினைச் சிறப்பிக்கும் முறையில் மதுரையில் நடைபெற்ற மாபெரும் விழாவைப் போல இன்னொரு விழா இல்லை என்று சொல்லுமளவிற்கு இந்நூல் வெளியீட்டு விழாவெகு சிறப்பாக நடைப்பெற்றது. அறிஞர் அண்ணா மருத்துவத்திற்காக அமெரிக்கா செல்லும் வழியில் போப் ஆண்டவரைச் சந்தித்தபோது தமிழ்நாகரிகத்தின் பெட்டகமாகத் திகழும் இலக்குவனாரின் தொல்காப்பிய நூலை அவருக்குப் பரிசளித்தார். அமெரிக்க யேல் பல்கலைக் கழகத்தின் மாணவர்களுக்கு இந்நூலை அறிமுகப்படுத்தினார். அமெரிக்க நூலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் இந்நூலை வழங்கினார். (ப.85) ஐம்பது ஆண்டுகளுக்கிடையில் ஒரு விதிவிலக்கான பேராசிரியராக இருந்து தமிழ்காப்புப் போரில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதுடன் இந்தி எதிர்ப்புப் போரையும் சாதி எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவுக்கான போரையும் திறம்பட நடத்தினார். இறுதி வரை தமிழ்ப்போராளியாக இருந்தார். எந்த ஒரு கல்லூரியிலும் நிலையாக இவரை இருக்க விடாமல் நிர்வாகத்தினர் செயல்பட்டனர். எனினும் தமிழ்ப்போரை இவர் தளர்த்திக் கொள்ளவே இல்லை. இவரைப் போல இன்னொரு தமிழ்ப் பேராசிரியர் இல்லை என்னும் முறையில் இவர் தமிழ்ப்பேராளியாக வாழ்ந்தார். இவரை கி.ஆ.பெ.விசுவநாதம் பின்வருமாறு வியந்துரைக்கிறார். “தமிழாசிரியர்களில் அவர் தப்பிப் பிறந்தவர் எனலாம். காரணம், அவர் தமிழால் வாழாமல் தமிழுக்காகவே வாழ்ந்து தமிழுக்காகவே சிறையும் சென்றவர் என்பதே” (சி.இலக்குவனார், முன்னுரை). இவரது வாழ்க்கையே ஒரு போராட்ட வாழ்க்கையாகும். பல்வேறு சிறப்புப் பட்டங்களும் புகழ்மொழிகளும் பெற்ற இவர் 1973இல் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்ப் பேராசிரியர்களுக்கிடையில் ஓர் ஒளி விளக்காகவும் தமிழ்ப்போராளியாகவும் தம் காலம் முழுவதும் திகழ்ந்தார். தமிழருக்கு நெருக்கடி மிகுந்து வரும் இக்காலத்தில் இவரைப் போன்ற பேராசிரியர்கள் செயல்பட்டால் மட்டுமே தமிழைக் காக்க முடியும். க.பூரணச்சந்திரன்: திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத்தலைவராகப் பணி புரிந்தவர். எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், திறனாய்வாளர், ஆய்வாளர் என இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் கற்றதோடு, ஆங்கில இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்தி, வடமொழி, பிராகிருதம், ஜெர்மன் எனப் பல மொழிகளை விரும்பிக் கற்றவர். பன்மொழிகளில் பயிற்சி பெற்றதால் இவரது மொழிப்பெயர்ப்பும் திறனாய்வு பார்வையும் விரிவும் வளமும் கொண்டதாக அமைகிறது. மேலும் இவர் இலக்கியம், அரசியல், அறிவியல், வரலாறு, கவிதையியல், கதையியல், மொழியியல், சமூகம், இதழியல், சினிமா, சிறுவர்களுக்கான இலக்கியம், பயணஇலக்கியம் என்று தன் எழுத்து தளத்தை விரிவாக்கி ஒரு நீண்ட நெடும் பயணத்தில் தன்னை இயக்கிக்கொண்டிருக்கிறார். மார்க்சிய பார்வையை விட்டு விடாமலேயே நவீனத்துவம், அமைப்பியம், பின்நவீனத்துவம் ஆகிய பார்வைகளையும் தழுவிக் கொண்டவர். திருச்சியில் பாதல் சர்க்கார் நாடக முறையை கற்பிக்கும் முறையில் நாடகப்பட்டறை நடத்தியவர். கர்நாடக இசையையும் மேற்கத்திய இசையையும் கற்றவர். ஓய்வுப் பெற்றபின் தலைசிறந்த ஆங்கில நூல்களை மொழிப்பெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை மொழிப்பெயர்த்துள்ளார். இப்பணிக்காகப் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். (த.நே.46,ப.5) ஆய்வு நூல்கள்: ‘தமிழிலக்கிய திறனாய்வு வரலாறு 1900 முதல் 1980 வரை’ என்ற ஆய்வுநூலை இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியத்தின் தூண்டுதல் காரணமாக ஆறு மாதத்தில் எழுதி முடித்தார். இவரது நெறியாளர் நூலின் கருத்துகளை ஏற்கவில்லை என்றாலும் நூல் எழுதி 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் மாற்றம் ஏதுமின்றி முழுமையாக தஞ்சை பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வெளிவந்தது. இந்நூல் குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியம் குறிப்பிடுவதாவது: “சுமார் எண்பது ஆண்டுகளில் தமிழில் தோன்றிய திறனாய்வளர்களை ஆய்வு செய்து, தமிழாய்வின் போக்குகளை மதிப்பீடு செய்து, நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து தமிழ் வளர்ச்சிக்கு ஏற்ற வழிமுறைகளையும் விளக்கி, நம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் ஓர் ஒளிவிளக்காக இந்நூலை உருவாக்கி வழங்கியுள்ள பேராசிரியர்.க.பூரணச்சந்திரன்” (தமிழ் இலக்கியத்திறனாய்வு வரலாறு, அணிந்துரை). பேராசியர் ந. சஞ்சீவி அவர்களின் நெறிப்படுத்தலில் ‘தமிழ்பொழில்’ பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். தமிழ்பொழிலை வரலாற்றுப் பின்னணியில் ஆய்வு செய்தார். ஆய்வுநூல் நூலாக்கம் பெறவில்லை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் ‘தொல்காப்பியப் பொருள்கோள்’ என்ற இவரது ஆய்வுநூல் தற்போது உலக தமிழாரய்ச்சி நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. இந்நூல் தமிழில் பொருள்கோள் குறித்து எழுந்;த முதல் நூலாகும். “பொருள் கோளின்கோட்பாடுகளைச் சொல்லாமல், தொல்காப்பியம்அது பற்றிக் கூறும் செய்திகளையும் இந்தச் சிறு நூல் விவாதிக்கிறது. தொல்காப்பியத்தை ஆழமாகக் கற்றால், தொல்காப்பிய முறைமைக்கான தத்துவக் கோட்பாட்டையே தனியாக உருவாக்க இயலும்.” (தொல்காப்பியப் பொருள்கோள், ஆசிரியர் உரை) எவை புனித இலக்கியம்?: தமிழறிஞர்களில் சிலருக்கு சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கம்பராமாயணம் போன்றவை புனித இலக்கியம். இவை எப்படி புனித இலக்கியம் என்பதைப் பூரணச்சந்திரன் கேள்விக்கு உட்படுத்துகிறார். சிறுவயது முதற்கொண்டே நம் மீது கருத்தினங்கள் திணிக்கப்படுகின்றன. தொல்காப்பியம், சங்க இலக்கியம், பாரதி, பாரதிதாசன் பாடல்கள் நம்மீது திணிக்கப்பட்டன. திணிக்கப்பட்டவற்றை நாம் கேள்விக்குட்படுத்துவதில்லை. இவ்வகையில் இவை நம்மை ஆழ்கின்றன. இவற்றை எதிர்த்துக் கேள்வி கேட்பதன் மூலமே நம்மைப்புதுப்பித்துக் கொள்ள முடியும். இவ்வகையான கேள்விகளை எழுப்பாதவர்களைச் சுந்தர ராமசாமி மொண்;னைகள் (ப.24) என்றார். இத்தகைய கருத்துகளை வெளியிடுவதினால் அமைப்பியல்வாதி, பின்னமைப்பியல்வாதி என்று இவரைக் கூறமுடியுமானால் அவ்வாறு தான் இல்லை என்கிறார். சில கேள்விகளை நான் எழுப்புவதினாலேயே நான் இதைச் சார்ந்தவனில்லை என்றார். முழுமை என்பது ஏதொன்றிலும் இல்லை (மேலது) என்பதை எடுத்துரைக்கிறார். ‘நான் விதியை நம்புகிறேன்’: சாதி என்பது இவ்வாறுதான் குழந்தைப்பருவம் முதலே நமக்குள் திணிக்கப்படுகிறது. அதை நாமும் ஏற்பதினால் நமக்குள் நாம் இறுகிப்போய் விடுகிறோம். சாதிக்குரிய ஆற்றல் இதுதான். நமக்குள் திணிக்கப்பட்ட ஒன்றை நாமே படைத்துக் கொண்டது போல் எண்ணுகிறோம். நமக்குள் திணிக்கப்பட்டவை நம்மை ஆள்கின்றன. பிறருடைய தேவைகளையே நாம் நிறைவேற்றுகிறோம். (ப.25) இக் காரணத்தால் தான் பூரணச்சந்திரன் விதியை நம்புகிறேன் என்கிறார். ‘வகுப்பறைக்கு வெளியே’: திருச்சியில் திரைப்பட சங்கம், நாடகச் சங்கம் முதலியவற்றில் உறுப்பினராக இருந்து தானும் பயிற்சி பெற்றார். ஒரு பேராசிரியர் என்ற முறையில் வகுப்பறைக்கு வெளியிலும் பல இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டார். கலை இலக்கியப் பணியிலும் இவர் தனித்துவமானவர். இவரால் கலை இலக்கியத்தில் பயிற்சி பெற்று புகழ் பெற்றவர் பலர். இசைக்கலைஞரான இவர் கர்நாடக இசையையும், இந்துஸ்தானி இசையையும் மிக அக்கறையோடு கற்றவர். கர்நாடக இசை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாமல் தேங்கிவிட்டது. இந்துஸ்தானி இசை அப்படியல்ல என்;கிறார். கட்சி மார்க்கியத்தைப் பூரணச்சந்திரன் ஒப்புக்கொள்ளவில்லை. முதலாளி என்பவன், தனிமனிதனே! அவன் முதலாளிய சமூகத்தின் ஒரு பிரதிநிதி. சமூகத்தை மாற்றாமல் முதலாளியத்தை ஒழிக்க முடியாது. அத்துடன் இவர் கட்சி மார்க்சியர் கருதுவது போல இலக்கியத்தை மேற்கட்டுமானம் என்று ஏற்கவில்லை. தமிழே தெரியாத தமிழர்கள்: மொழியை இவர் மனிதனுக்கு முக்கியமான ஒன்றாக கருதுகிறார். மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் இவருக்கு உடன்பாடில்லை. மொழியை யாராலும் அழிக்க முடியாது. மொழி எப்படியும் தன்னைத்தானே காத்துக் கொள்ளும் என்கிறார். உண்மையில் மொழி என்ற பிரவாகத்தில் நாம் அடித்துச் செல்லப்படுகிறோம். மொழிதான் ஒரு தமிழனையும் (அ) மொழி தான் ஒரு இந்தியனையும்படைக்கிறது. மொழியை தனித்தமிழ் ஆக்கும் முயற்சி இவருக்கு உடன்பாடில்லை. ஒரு சொல்லை மொழிப்பெயர்த்து முடிக்கும்முன் ஆயிரம் சொற்கள் பிற மொழிகளிலிருந்து வந்து சேர்கின்றன என்கிறார். மும்மொழிக் கொள்கை இருந்திருந்தால் ஆங்கிலத்தின் வளர்ச்சியைத் தடுத்திருக்க முடியும். தாய்மொழியாகிய தமிழைத் தமிழர் முதலில் படித்திருப்பார்கள். அதனால் தாய்மொழிப்பற்றும் தமிழ்மொழி வளர்ச்சியும் இமாலய வெற்றி அடைந்திருக்கும். இருமொழித் திட்டத்தை அமல்படுத்தியதன் விளைவாகத் தமிழோடு ஆங்கிலமும் பயில வேண்டும் என்ற நிலை உருவாயிற்று. காலப்போக்கில் ஆங்கிலத்தோடு போட்டியிட முடியாமல் தமிழ் தளர்ந்து போக, ஆங்கிலம் மட்டுமே படித்தால் போதும் என்ற நிலை உருவாகி, இன்று தமிழ்நாட்டில் தமிழே தெரியாத தமிழர்கள் உற்பத்தியாகின்றனர். (இந்திய மொழிகளில் - ஓர் அறிமுகம், ப.135). பேராசிரியரின் கடமை: மாணவர்களை ஈர்க்கக்கூடிய சக்தி தமிழ்ப் பேராசிரியருக்கு மட்டுமே உண்டு என்கிறார். இதனால் நாட்டின், மொழியின், சமூகத்தின் நிலை பற்றியெல்லாம் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வகுப்பறையில்தொடர்ந்து கேள்விகளை எழுப்புவதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனைத் தூண்ட முடியும். ஒரு பேராசிரியர் என்பவர் மாணவர்களின் தமிழ் உணர்வையும் தமிழறிவையும் மேம்படுத்துபவராக இருந்தாக வேண்டும். தனக்கென ஒரு தனித்துவ பார்வை உடையவரே சிறந்த பேராசிரியர். தமிழிலக்கிய வரலாறு பற்றியும் பேராசிரியருக்கு கவனம் தேவை. வரலாற்றில் புதுமைகளைக் காணவேண்டும். தமிழுக்கு வெளியேயும் சென்று புதுப்பார்வைகளைக் கற்கவேண்டும். நம் காலத்தில் இவ்வகையில் ஆங்கில மொழியைக் கற்பதன் மூலம் தமிழ் அறிவுலகத்தை விரிவுபடுத்த முடியும். இது போல ஆங்கிலம் கற்பதில் பலருக்குச் சிரத்தையில்லை. இதன் விளைவாக குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போலப் பலர் முடங்கிப் போகின்றனர். தமிழுக்குப் புதுப்பார்வை தேவை. அமைப்பியம், பின்னமைப்பியம் என்பவை இவ்வகை பார்வைகள். தமிழ் வகுப்புகளுக்கு வெளியே பூரணச்சந்திரன் செய்தவற்றைப் பார்க்கலாம். (1) திரைப்படச்சங்கம், நாடகச்சங்கம், முதலியவற்றைத் தோற்றுவிப்பது. (2) தோற்றுவித்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து கற்பது, பேராசிரியராகப் பணிபுரிவதும் இதற்கும் என்ன உறவு. பேராசிரியர் தன்னை எந்த அளவு விரிவுப்படுத்திக் கொள்கிறாரோ அந்த அளவுக்கு மாணவர்களுக்குப் பயன்படுவார். தனித்தமிழ் என்ற தூய தமிழ்ப்போக்கை ஏற்கலாமா? என்ற கேள்வி எழும். தனித்தமிழ் ஒன்றை வளாப்பதினாலேயே தமிழைக் காப்பாற்ற முடியும் என்பது உண்மையில்லை. தனித்தமிழ் முயற்சியையும் இகழ்ந்து விட முடியாது. மொழிப் பற்றிய பார்வை தமிழுக்குப் புதியது. தமிழ் தான் நம்மைப் படைக்கிறது. இலக்கியம் தான் நம்மைப் படைக்கிறது என்பது இவ்வகை பார்வை. மொழிக்குள் நாம் எவ்வாறு ஆழ்ந்து செல்கிறோமோ அந்த அளவுக்கு மொழியின் கட்டுக்குள் இணைகிறோம். இலக்கியத்திற்குள்ளும் நாம் ஆழ்ந்து செல்லவேண்டும். அப்படி செல்லும் பொழுதுதான் நமக்குள் படைப்பை உணரமுடியும். மொழிபெயர்ப்புப் பணி: முப்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தத்துவம், வரலாறு, இலக்கியம், அரசியல், மருத்துவம், இசை, சுற்றுச்சூழல் என இவரது மொழிபெயர்ப்பின் தளம் விரிந்து செல்கிறது. 2011இல் ஆந்திரக்கவிஞர் வரவரராவ் எழுதிய ‘சிறைப்பட்ட கற்பனை’ நூலின் மொழிபெயர்ப்பிற்கு ஆனந்த விகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது. சல்மான் ருஸ்தியின் ‘நள்ளிரவின் குழந்தைகள்’(மிட்நைட்ஸ் சில்ரன்) நூலுக்கு நாமக்கல்லில் உள்ள கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதினையும் பெற்றுள்ளார். தற்போது இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திற்காக இவர் மொழிபெயர்த்த கிஸ்பெர்ட் எழுதிய ‘சமூகவியலின் அடிப்படைகள்’ என்ற நூல் மத்திய மனித வளத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரபல நாவலாசிரியரான மனுஜோசப் எழுதிய உலகஅளவில் பலவிருதுகளைப்பெற்ற . ;பொறுப்புமிக்க மனிதர்கள்’ என்ற நாவலைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதற்காக இவருக்கு சாகித்திய அகாதமியின் பொழிபெயர்ப்பாளர்க்கான விருதை பெற்றுள்ளார். பூரணச்சந்திரன் பத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் எழுதியுள்ளார். இந்நூல்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவர் பதிப்பித்த நூல்கள் ஏழு. நூற்றுக்கும் மேற்பட்ட திறனாய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் திறனாய்வு நிறுவனங்களிலும் பல திட்டப்பணிகளை மேற்கொண்ட இவர், இன்றும் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் ஆழங்கால் பட்டவர் பூரணச்சந்திரன். பன்மொழி அறிஞர். பல்துறை வித்தகர். தமிழிலக்கிய திறனாய்வில் இவரது அணுகுமுறையைப் பாராட்டி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பர்கலைக்கழகம் ‘திறனாய்வுச் செம்மலல்’ என்ற விருதினை இவருக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது பாராட்டுக்குரியது.இத்தகைய பேராசிரியரேஇன்றும் தமிழுக்குத் தேவைப்படுகின்றனர். க.இரத்தினம்: முனைவர் க.இரத்தினம் ஒரு வித்தியாசமான பேராசிரியர் என்பதை அவரது வாழ்வு மட்டுமல்ல, படைப்புகளும் உறுதிப்படுத்துகின்றன.இலக்கியத்திற்கு அப்பால் சென்று அறிவைத் தேடியவர். படைப்பிலக்கியத்திலும், பறவைகள் பற்றிய ஆய்விலும் தீவிரமான ஈடுபாடு கொண்டவர். பேராசிரியர், படைப்பாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், பறவை இன ஆய்வாளர் எனப் பன்முகப் பார்வைகள் இவருக்கு உரியவை.சோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுடையவர். ‘சோதிடம் தனை இகழ்’ என்ற பாரதியின் கூற்று இவருக்கு நெருடலைத் தந்த போதிலும் இவரது வாழ்வு பற்றிச் சோதிடர் கூறிய பல நிகழ்வுகள் உண்மை என்று குறிப்பிடுகிறார். ‘கல்லும் மண்ணும்’ என்ற புதினம் எழுதிய தன் மூலம் நவீனத் தமிழ் இலக்கியத்தில் தன் முத்திரையைப் பதிப்பித்தவர். பல்வேறு அரசு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். படைப்புகள்: க.இரத்தினம் தன் காலம் முழுவதும் ஏதாவது ஒரு நூலைப் படைத்துக்கொள்வதில் பெரும் முனைப்புடன் செயல்படுகிறார். இவரது முதல் வசன கவிதை நூல் ‘பேதை நெஞ்சம்’ பெண்ணின் அவலம் பற்றியது. பலரது பாராட்டைப் பெற்ற ‘கல்லும் மண்ணும்’ என்ற புதினம் கொங்கு வட்டாரப் பின்புலத்தில் உருவானது. இப்புதினம் இவரது படைப்புத் திறனுக்குச் சான்றாகும். இந்நூல் கல்லூரிகளில் பாடமாக்கப்பட்டுள்ளது. ‘கனவு மாலை’, நினைவின் நிழல்’ என்ற இரு புதினங்களும் கடித வடிவில் அமைந்தவை. இவரது இம்முயற்சி படைப்பிலக்கியத்திற்குப் புதியவை. உருவகக் கதைகள் என்ற தனிநூலையும் படைத்துள்ளார். சாவு பற்றிய சிந்தனைகளைத் தொகுத்து ‘காலத் தேரொலி’ என்னும் நூலையும் வெளியிட்டார். இவரது நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இவரின் படைப்பாற்றலைப் பறைசாற்றுகின்றன. ஆய்வுப்பணி: இவரது முனைவர் பட்ட ஆய்வுநூல் ‘சங்க அகப்பாடல்களில் கூற்று’ முற்றிலும் புதிய பார்வையில்அமைந்த நூலாகும். இரத்தினத்தின் பறவைகள் பற்றிய ஆய்வு மிக விரிவானது. பணிநிமித்தமாகப் பல்வேறு இடங்களுக்கு மாற்றாலாகியதைப் பறவைகள் பற்றிய ஆராய்ச்சிக்கு இவர் பெரிதும் பயன்படுத்திக் கொண்டார். இராமநாதபுரத்தில் பணியாற்றியது தான் இவரது பறவைகள் பற்றிய பார்வையை விரிவுப்படுத்தக் காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டு அரசு கேட்டுக்கொண்டபடி, தென்னிந்திய பறவைகளில் முக்கியமான ஐந்நூறு பறவைகள் பற்றிய விளக்கங்களுடன் ‘தென்னிந்திய பறவைகள்’ என்ற நூலை உருவாக்கினார்.இந்நூல் பலரது வரவேற்பைப் பெற்றது. 2004இல் இவர் எழுதிய ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற நூல் தமிழக அரசின் முதற் பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது. ‘Birds of Tamil’ என்னும் பெயரில் இந்நூல் ஆங்கிலத்தில் வெளியாயிற்று. 1983இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் விருப்பத்திற்கிணங்க எட்கர் தட்சன் எழுதிய ‘The Castes and Tribles of South India’ என்ற நூலை 3500 பக்கங்களில் ஏழு தொகுதிகளாக மொழிபெயர்த்தார்.இந்நூல் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. சுற்றுச்சூழலில் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட இவருக்கு இயற்கை மருத்துவத்திலும் ஈடுபாடு அதிகம். தமிழ்நாட்டு மூலிகைகள் குறித்தும் அதன் சிறப்புகள் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். தற்போது எண்பது அகவை கடந்த நிலையிலும் ஓயாது வாசிப்பிலும் பறவைகள் நேசிப்பிலும் இயங்கி வருகிறார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் ஆய்வுத்திட்டத்தில் ‘சங்க இலக்கியத்தில் பறவைகள்’ என்ற நூலை எழுதியுள்ளார். வழக்கமான தமிழ்ப் பேராசிரியராக இல்லாமல் இக்காலத்தில் ஒருசிலரேனும் தமிழிலக்கியத்திற்கு வெளியே சென்று அறிவைத் திரட்டுகின்றனர். தன் மாணவர்களுக்கும் வழங்குகின்றனர். இந்த வகையில் க. இரத்தினம் அவர்களின் பணி பாராட்டுக்குரியது. இவரைப் பற்றி பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் கூறுவது இங்குக் குறிப்பிடத்தகும். “தமிழ்ப் பேராசிரியர்களில் பல்துறை அறிவு நிரம்பியவர், படைப்பாளி, மானுட இயல் ஆய்வாளர், ஆழ்ந்த கல்வியறிவும், சிந்தனைச் செழுமையும் வாய்க்கப் பெற்ற ரத்தினம் தமிழருக்கு அளித்த இரத்தினங்கள் பல. அவை துறைதோறும் ஒளி வீசுகின்றன” (எட்கர் தட்சனின் தென்னிந்திய மானிட இன இயல், பதிப்புரை). படைப்பிலக்கியவாதியும், பறவையியலாளருமான க. இரத்தினம் அவர்கள் தன்னை ஒரு ‘தமிழ்ப் பறவை’ என்று சொல்லிக் கொள்வது முற்றிலும் தகும். இரா.செல்வி தற்போது கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் செல்வி, பொறுப்புமிக்க ஒரு தமிழ்ப் பேராசிரியராகச் செயல்படும் அதே சமயத்தில் ஒரு படைப்பாளியாகவும், திறனாய்வாளராகவும், குறும்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். பெண்ணியம்: குன்னூரில் உள்ள உப தலை அரசு மேனிநிலைப் பள்ளி மற்றும் உதகை அரசு கல்லூரியில் படிப்பை முடித்தவர்.முதுகலை படிக்கும் போதே தன் பேராசிரியர் முப்பால் மணி அய்யாவின் வழிகாட்டுதலின்படி சோவியத் இலக்கியங்களைக் கற்றவர். மார்க்சிய சிந்தனைகளையும் உள்வாங்கியவர். தனது கல்லூரிப் பருவத்திலேயே ஒரு பெண்ணியப் போராளியாக இருந்துள்ளார். அனைத்திந்திய முற்போக்கு சனநாயக மாதர் சங்கத்தில் சேர்ந்து நீலகிரி மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கேனும் நடந்திருப்பின் அதனை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டு போர்க்கொடி தூக்குவதிலும் தீவிரமாகச் செயல்பட்டவர். பழமைவாதங்களை முற்றாக மறுத்துப் பேசியதோடு பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளையும் மேற்கொண்டவர். தற்காலத்தில் பலரும் போற்றும் பெண்ணியம் இவருக்கு உடன்பாடு.அதேசமயம் தலித்தியம் இவருக்கு உடன்பாடில்லை. “பெண்மொழி புனைவு என்பதை மறுத்து இவர் தமிழ்மொழியே பெண்ணிய மொழிதான். ஓர் ஆதித்தாயின் தாலாட்டில் பரிணமித்த மொழிதான் தாய்மொழி” (த.நே.46, ப.56) என்கிறார். பெண்ணியத்தில் இன்றளவும் தீராத ஆர்வங் கொண்டவராக விளங்குகிறார். ஆய்வுப்பணி: 1990இல் ‘தமிழக நாட்டுப்புற பாடல்களும் பெண்ணியமும்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார்.அக்காலத்தில் இத்துறையாகிய பெண்ணியம் சார்ந்த பாடத்திட்டம் பாரதியார் பல்கலையில் இல்லாத காரணத்தால் தனது நெறியாளர் பேராசிரியர் முப்பால் மணி அய்யாவுடன் இணைந்து பெண்ணிய துறை பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளார் (ப.57).இவரது முனைவர் பட்ட ஆய்வு ‘தமிழ்ச் சிறுகதைகளில் பெண்ணியம்’ என்பதாகும். தற்காலத்தில் பெண் படைப்பாளர்களின் சிறுகதையில் பன்னிருவரைத் தெரிவு செய்து கொண்டு ஒவ்வொருவரும் எவ்வகையில் சாதனையாளர்கள் என்பதையும் இவர்களது படைப்பில் பெண்ணியச் சிந்தனை எவ்வாறு இழையோடுகிறது என்பதையும் ஆராய்ந்துள்ளார். தீவிரவாதப் பெண்ணியவாதி என்றழைக்கப்படுகிற அம்பையின் படைப்பினுள்ளும் தாய்மைதான் பெண்ணியத்தின் மூலக்கரு என்பதைக் கண்டறிந்துள்ளார். இவ் ஆய்வு நூலாக்கம் பெற்றுள்ளது. இவரது மற்றொரு நூலான ‘பெண்ணியமும் மனிதகுல விடுதலையும்’ பல்வேறு கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பாகும். படைப்புப்பணி: செல்வியின் சிறுகதைகளும் பெண்ணின் மேன்மையைப் பேசுகின்றன.‘தப்புக்கிழங்கு’, ‘கற்பூரச் செத்தைகள்’ போன்றவை நீலகிரி வாழ் பெண்களின் அவலநிலையை மையமாகக் கொண்டவை. தமிழ்நேயம் பெண் எழுத்தாளர் சிறுகதையில் இடம்பெற்ற இக்கதைகள் முதல் தகுதியையும் பாராட்டையும் இவருக்குப் பெற்றுத் தந்தது. தமிழ்நேயம் ஆசிரியர் ஞானி இவரைப் பாராட்டுவது இங்குக் குறிப்பிடத்தகும். “செல்வி தரமான சிறுகதைகளை எழுத வல்லவர். தமிழ்நேயத்தில் பெண் எழுத்தாளர் சிறுகதைகளுள் அவரது நல்ல கதைகளும் இடம்பெற்றன” (புதுப்புனல், சூன், 2015, ப.35) என்று கூறுகிறார். தற்போது ‘கற்பூரச் செத்தைகள்’, ‘பூவாத்தாள்’ ஆகிய இரண்டு குறும்படங்களை வெளியிட்டுள்ளார். தலித்தியப் பார்வை: தலித்தியவாதிகள் தலித்தியம் என்ற கருத்தியலை ஒரு மதம் போல போற்றுவதும் தலித்தியச் சார்பு இல்லாதவர்களைக் கடுமையாகக் கண்டிப்பதுமாகிய போக்கு இவருக்கு உடன்பாடில்லை. “தலித் இலக்கியவாதிகள் தங்கள் நலனில் காட்டும் அக்கறையைத் தன் இனத்து மக்களிடம் காட்டுவதில்லை உழைக்கும் வர்க்கமாக இருக்கும் தாழ்த்தப்பட்டோரின் வாழ்வுதான் இன்னும் விடியாமல் இருக்கிறது” (ப,66) என்கிறார். மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல் மாணவர்கள், படைப்பிலக்கியம் படைப்பதற்கு தூண்டுகோலாக செயல்படுகிறார். பதினொரு ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராகப் பணியாற்றும் இவர் கல்லூரி வளாகத்திற்குள் தன்னை முடக்கிக் கொள்ளாமல் கல்லூரிக்கு வெளியில் உள்ள சமூகத்தோடும் கலை இலக்கிய அமைப்புகளோடும் தொடர்பு கொண்டு சிறுகதைப் போட்டிகள் நடத்தி பரிசும் வழங்கி வருகிறார். ஓர் இலட்சியப் பேராசிரியருக்குத் தேவையான சில குணங்கள் இவருக்குள் உயிர்த்துடிப்புடன் இயங்குகின்றன. முனைவர் செல்வி, தலித்திய பார்வை தமிழுக்குத் தேவை என்ற போதிலும் சாதிப்பார்வையாக குறுக்கி விடக்கூடாது என்னும் கருத்துடையவர். பெண்ணியப் பார்வையை முன்வைத்து தமிழ்ச் சிறுகதைகளை ஆய்வு செய்தவர். சிறுகதைப் படைப்பதோடு அதனை குறும்படமாக இயக்குவதிலும் திறன் பெற்றவர். ‘தமிழ்நேயம்’ உட்பட பல சிற்றிதழ்களில் சிறுகதை, கட்டுரை, கவிதை, நூல்மதிப்புரை எனத் தொடர்ந்து எழுதிவருகிறார். தன் தாயார் பெயரில் சரசு அறக்கட்டளை நிறுவியவர். கலை இலக்கிய பெருமன்றத்துடன் இணைந்து மாநில அளவில் சிறுகதைப்போட்டிகளை நடத்தி, தரமான சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்குவதோடு கதைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்கிறார். இவரது முதல் கதைத்தொகுப்பு ‘ஆழம்’ என்ற பெயரில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்விக்கான உதவிகளைச் செய்வதோடு, தன்னைச்சுற்றி இருக்கிற நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து, தன்னளவில் மிக எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வரும் பேராசிரியர் செல்வியின் மனிதநேயம் போற்றுதலுக்குரியது. தொகுப்புரை: - ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அறிஞர்களில் ம.இலெ.தங்கப்பா படைப்பியல் என்ற முறையில் தமிழுக்கு இன்றைய சூழலில் தேவையான பாக்களைப் புனைந்துள்ளார். இயற்கை நேயமும் அன்பும் குழந்தைகள் பால் நேயமும் இவரது கவிதையின் உட்கிடையாக அமைந்துள்ளன. குறுந்தொகை மொழிபெயர்ப்பும், முத்தொள்ளாயிர மொழிபெயர்ப்பும் தமிழ்க் கவிதையை ஆங்கிலத்தில் கொண்டு சேர்த்துள்ளன. இவ்வாறு இவர், காலத்தின் தேவை உணர்ந்து செய்த பணிகள் போற்றுதலுக்கு உரியவை. - பேராசிரியர் நளினிதேவி, இராஜம் கிருட்டிணன் நாவல் பற்றி முற்போக்கு, மற்றும் பெண்ணியப் பார்வையிலும் க.சமுத்திரம் எழுதிய சிறுகதைகளை முற்போக்கு பார்வையிலும் ஆய்வு செய்துள்ளார். பெரும்பாலும் இவர் செய்த ஆய்வுகள் தமிழில் புதுவகையான ஆய்வாக இருக்கக்கூடும். ஒய்வு பெற்ற பிறகு, சங்கத் தமிழ்ச் சான்றோரின் கவிதைகளில் சிறப்பாக பதிவு பெற்றுள்ள அன்பும், அறமும் தொடர்ந்து தமிழிலக்கியங்கள் அனைத்தினுள்ளும் இடம்பெறுவதை ‘மரபும் புதுமையும்’ என்ற நூலில் விளக்கியுள்ளார்.வணிக நோக்கில் அமையாமல் தமிழிலக்கிய வரலாற்றை படைப்பியல் நோக்கில் தமிழில் முதன்முறையாகப் படைத்துள்ளார். தமிழுக்குப் புதிய பார்வையை நல்குவதில் இவரது பணிகள் சிறப்பானவை. - ஆங்கிலத்திலும், தமிழிலும் முதுமுனைவர் பட்டம் பெற்றுள்ள மருதநாயகத்தின் ஆய்வுகள் தன்னிகரற்றவை. மேற்கத்திய இலக்கியங்களோடு ஒப்பிட்டு தமிழிலக்கியத்தின் மேன்மையை எடுத்துக்காட்டியுள்ளார். தமிழ்ப் படைப்பாளிகள் குறித்து வளமான திறனாய்வைச் செய்துள்ளார். மேற்கத்திய திறனாய்வாளரைப் போன்றவர் தெ.பொ.மீ. என்பதை மெய்ப்பிக்கிறார். அறிவியல் பார்வை அற்றவர் என்றும், வெற்று கற்பனையாளர் என்றும் சிலரால் குறை சொல்லப்;படுகின்ற பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியவர்களின் ஆய்வுகளையும் படைப்புகளையும் இவர் தமிழுக்கு வளம் சேர்க்கும் முறையில் ஆராய்ந்துள்ளார். - தற்காலத்திற்கு ஒத்த முறையில் தமிழ்ப் போராளியாகவும், ஆய்வாளராகவும் விளங்கிய இலக்குவனார் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1965 இந்தி எதிர்ப்புப் போரை முன்னின்று நடத்தியவர் என்ற முறையில் இவரைப் பாராட்ட முடியும். கூட்டாட்சி அமைப்பில்தான் தமிழ்நாடு தன்னுரிமை பெற்று வாழமுடியும் என்னும் திட்பமான கருத்துடையவர். காலத்துக் கேற்ற கடமையை தமிழுக்கு ஆற்றுவதில் முதலிடம் பெறக் கூடியவர். - புதுவையில் வாழ்ந்த திருமுருகனார் இன்னொரு வகையில் தமிழ்ப் போராளி.தமிழின் ஆக்கத்திற்காக புதுவை அரசோடு போராடியவர். தமிழிசையையும் இசைத்தமிழையும் வேறுபடுத்தியவர். சிந்துப்பாவிற்கு இலக்கணம் வகுத்தவர். இவரது ஆய்வுகள் தமிழுக்குப் புதியவை. - தமிழிலக்கியத்திலும் ஆங்கில இலக்கியத்திலும் இந்தியிலும் பெரும்புலமை பெற்ற பூரணச்சந்திரன் அமைப்புமையவாதம், பின்நவீனத்துவம் ஆகிய புதுப்பார்வைகளைத் தமிழுக்கு வழங்கியதோடு இலக்கிய ஆய்வில் மார்க்சியத்தையும் வளப்படுத்தியவர்.மொழி என்னும் பிரவாகத்தினுள் நாம் இருக்கிறோம் என்ற முறையில் மொழியின் இயக்கத்தை விளக்கியவர். ஓய்வு பெற்றபின் பல ஆங்கில நூல்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் தனது பங்களிப்பைச் செலுத்திவருகின்றார். - தமிழ்ப் பேராசிரியராக இருந்த அதேசமயத்தில் தமிழ்நாட்டுப் பறவைகள் பற்றிய ஆய்வில் தொடர்ச்சியாக ஈடுபட்டு சிறந்த நூல்கள் படைத்தவர் பேராசிரியர் க. இரத்தினம். தமிழ்நாவல், வசன கவிதையில் படைப்புகள் என்று பலவற்றில் சோதனை நடத்தியவர். ‘எட்கர் தட்சனின் தென்னிந்திய பழங்குடிகளும் குலங்களும்’ என்ற சமூகவியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர். இவரது இலக்கிய பங்களிப்பு தமிழுக்கு வளம் சேர்த்துள்ளது. - முனைவர் செல்வி, தலித்தியப் பார்வை தமிழுக்குத் தேவை என்ற போதிலும் சாதியப்பார்வையாக குறுக்கி விடக்கூடாது என்னும் கருத்துடையவர். பெண்ணியப் பார்வையை முன்வைத்து தமிழ்ச் சிறுகதைகளை ஆய்வு செய்தவர். சிறுகதைப் படைப்பதோடு அதனைக் குறும்படமாக இயக்குவதிலும் திறன் பெற்றவர். - இவ்வகையில் தமிழறிந்த பலரும் காலத்திற்கு ஒத்தவாறு தமிழியல் ஆய்வை அவரவர் பார்வையில் செய்ததுடன் தமிழுக்கு மேலும் பல வழிகளில் ஆக்கங்களையும் புதுமைகளையும் சேர்த்துள்ளனர். இருபது, இருபத்தொன்றாம்நூற்றாண்டுச் சூழலில் தமிழுக்குப் புதிய ஆக்கங்களும் பார்வைகளும் தேவைப்படுகின்றன. படைப்புகளும், திறனாய்வுகளும், மொழிபெயர்ப்புகளும் தமிழியல் ஆய்வின் எல்லையை விரிவுப்படுத்தும். நிறைவுரை ‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு’ என்று பாடியவர் நாமக்கல் கவிஞர். உண்மைதான் தமிழனுக்குத் தனிவரலாறு உண்டு. தனி நாகரிகச்சிறப்புண்டு. தமிழரின் இலக்கியம் தன்னிகரற்றது. தமிழனுக்குச் சிறப்பான மெய்யியல் உண்டு. தமிழனுக்குரிய சங்க இலக்கியம் அவனது தனிமேன்மையை சொல்லுவது. தமிழர்நாகரிகம் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றுச் சூழலில் கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது. உலகமயமாதல் என்ற சூழல் இதற்குக் காரணமாயிருக்கிறது. இந்த மாற்றத்தைத் தமிழ் மரபின் வழிவந்தவர் ஏற்கமுடியாது. அப்படி ஏற்பது வள்ளுவர், இளங்கோ, கம்பர், பாரதி, பாரதிதாசன் முதலியவர்களின் மரபில் வந்த தமிழனுக்கு இழுக்காகும். இத்தகைய நெருக்கடியிலிருந்து தமிழ்நாகரிகத்தைத் தமிழன் தன் உயிரைக் கொடுத்தேனும் காத்தாகவேண்டும். இந்திய நாகரிகத்தின் மேலடுக்கு ஆரியமாக இருந்த போதிலும் அதன் அடித்தளம் முழுவதும் தமிழர் நாகரிகம்தான். இந்த உண்மையை சுனித்குமார் சட்டர்ஜி போன்ற அறிஞர்கள் நமக்கு எடுத்து உரைத்துள்ளனர். இத்தகைய மேன்மை பொருந்திய நாகரிகம் அழிவதென்பதை உலக நாகரிகம் ஒப்புக்கொள்ளாது. கிரேக்கம், இலத்தீன் ஆகிய நாகரிகம் அழிந்ததைப் போல தமிழ் நாகரிகம் அழிந்துவிட முடியாது. எத்தனையோ சோதனைகளைத் தாங்கியும்/தாண்டியும் இருபதாம் நூற்றாண்டு வரை தமிழ்நாகரிகம் தன்னைக் காத்து வந்திருக்கிறது. அந்நிய நாகரிகத்தின் மோகத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழர், தம்நாகரிகச் சிதைவை அனுமதிக்கமுடியாது. சிந்துவெளி நாகரிகத்தின் பின்புலத்தையும் கீழடி அகழாய்வின் திறத்தையும் - இவை போலவே ஆயிரக்கணக்கான கோவில்கள், சிற்பங்கள், தமிழிசை, சித்தமருத்துவம் ஆகியவற்றின் சாரத்தையும் கொண்டுள்ள தமிழன் தன்னை அழித்துக்கொள்ள முடியாது என்ற போதிலும் தற்கால வரலாற்றுச் சூழலில் தமிழன் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளானான். இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் இடம்பெற்றிருப்பது உண்மையான கூட்டாட்சி அன்று. மையத்தில் ஒற்றையாட்சி மாநிலங்கள் அதன் உறுப்புகள். மைய அரசுக்கு மாநிலங்கள் கட்டுப்பட்டு ஆகவேண்டும். மைய அரசு விரும்பும்போது மாநில அரசுகளின் அதிகாரங்களையும் எடுத்துக் கொள்ளமுடியும். தேசிய இனங்களின் தன்னுரிமையை ஒப்புக் கொள்வதாகிய உண்மையான கூட்டாட்சியில் தான்தமிழினம் தனக்கான இறையாண்மையுடன் இருக்கமுடியும். இந்த அடிப்படையில் தான் தமிழன் தனக்கான அரசியலையும் பொருளியலையும் சமூக நீதியையும் தக்கவைத்துக் கொள்ளமுடியும். இத்தகைய உரிமை வாழ்வைப் பெற தமிழன் பேராடியாக வேண்டும். தமிழ்த்தேசிய உணர்வோடு தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ‘பேராட்டமின்றி பொருவில் தமிழுக்குத் தேரோட்டமில்லை தெளிவு’ என்று பாடினார் வ.சுப.மாணிக்கனார். தமிழிலக்கியங்களும், தமிழர்நாகரிகமும்மனிதவாழ்வை/மனிதநேயத்தையே போற்றுகின்றன. மனிதன்/இவ்வுலக உயிர்கள் அனைத்தும் இயங்குவதற்கு ஐம்பூதங்கள் மட்டுமே இன்றியமையாதது. இவற்றைத் தோற்றுவித்தவரும் இல்லை. தோற்றுவிப்பாரும் இல்லை. இவ்வகையில் உலகாய்தச்சிந்தனையே தமிழ்இலக்கியத்தில் முதன்மையானது, இச்சிந்தனையே தமிழிலக்கியத்தில் தமிழாய்வில் தெரிகிறது. பின்னுரை – ஞானி தமிழ்நேயம் இதழின் ஆசிரியர் என்ற முறையிலும் தமிழ்நேயத்தில் வெளிவந்த தமிழிலக்கிய ஆய்வுகள் என்பது பற்றி ஆய்வை, மேற்கொண்டவர் என் உதவியாளர் என்ற முறையிலும், ஆய்வின் போது ஆய்வுத் தொடர்பாக ஆய்வாளருடன் கலந்து கொண்டேன் என்ற முறையிலும் இக்கட்டுரையை எழுதுகிறேன். 1.தமிழியல் ஆய்வுகள் என்ற இந்த ஆய்வில் புதியவை என எவற்றறைக் கண்டீர்கள் என்ற கேள்விக்கு விடையாக வருவது ஒன்றை முதலில் குறிப்பிடுகிறேன். தொல்காப்பியர் நிலம், நீர், தீ, வளி, விசும்பு ஆகியவற்றின் கலந்த மயக்கம் இந்த உலகம் என்று குறிப்பிடுகிறார். இந்த உலகத்தில் ஐம்பெரும் பூதங்கள் தவிர வேறு எதுவும் இல்லை. அதாவது கடவுள் இல்லை என்பது உலகாய்தர் கருத்து. எல்லா உயிர்க்கும் இன்பமே குறிக்கோள் என்ற முறையில் இன்பம் தவிர வாழ்வுக்கு வேறு கொள்கை இல்லை. துன்பத்தையம் ஒருவகையில் இன்பமாகவே ஏற்கவேண்டும் என்பதும் உலகாய்தர் கருத்து. இவ்வாறாக, தம் கருத்தை எடுத்துரைக்கிறார் பேராசிரியர்.க.நெடுஞ்செழியன். அதாவது தொல்காப்பியர் என்பவர் உலகாய்தர் என்பதைக் கண்டுரைக்கிறார். உலகாய்தக் கருத்து தமிழிலக்கியம் முழுவதினுள்ளும் ஊடுருவி இருக்கின்றது என்பது எங்கள் கருத்து. இதுதான் இந்த ஆய்வில் நாங்கள் முன்வைக்கிற ஒரு கருத்து. இந்த அடிப்படையிலேயே திருக்குறளைப் பார்க்க முடியும். சித்தர் பாடல்களைப் பார்க்கமுடியும். இறுதியாக சைவசித்தாந்தத்திலும் பார்க்க முடியும். சைவ சித்தாந்தத்தைப் பொருத்தவரை பதி, பசு, பாசம் ஆகிய மூன்றும் அனாதி என்கின்றனர். இதைச் சற்று விளக்கலாம் பதியாகிய இறைவனும் அனாதி. உயிர்களும் அனாதி. மும்மலங்களும் அனாதி என்ற விளக்கத்தினுள் இறைவனைச் சேர்த்துக் கொள்ள இயலும் என்றாலும் பதியையம் பாசத்தையும் சேர்க்க இயலாது. இறைவன் உயிர்களைப் படைக்கவில்லை. மும்மலங்களையும் படைத்திருக்க முடியாது. நமது புரிதலின்படி வரலாற்றில் மனிதன் தோன்றிய பிறகுதான் கடவுள் சிந்தனை பற்றி எழும். ஆதியில் மனிதரிடம் மலங்கள் இல்லை. வரலாற்றுப் போக்கில் தனியுடைமை முதலியவை வளரும் காலத்தில் தான், மும்மலங்கள் வந்து சேரும். மும்மலங்களிலிருந்து மனிதன் விடுபட்டுப் பதியை அடையவேண்டும் என்ற கொள்கையில் அழுத்தம் பெறுவது, மலங்களிலிருந்து மனிதன் விடுதலை பெறுவது அதாவது, இங்கும் மனிதன், அவனது விடுதலை முக்கிய கருத்தாகிறது. அதாவது உலகாய்தக் கருத்திலிருந்து சைவசித்தாந்தம் விலகவில்லை. 2.தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது என்பதனாலேயே தமிழ் மக்களுக்குச் சில முக்கிய கடமைகள் முன்னுக்கு வருகின்றன. சங்க இலக்கிய ஆய்வையும் முன்னைப் போல மரபு முறையிலான ஆய்வைத் தொடரமுடியாது. அதாவது ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’, ‘சங்க இலக்கியத்தில் பாணர்’, ‘சங்க இலக்கியத்தில் காதல்’ என்ற முறையில் தொடரமுடியாது. முற்றிலும் புதிய முறையில் ஆய்வைத் தொடரவேண்டும். இவ்வகையில் ஓர் இயலில் கட்டுரைகள் தரப்படுகின்றன. கிரேக்கம் முதலிய செவ்வியல் இலக்கியங்களோடு தமிழை ஒப்பிடும் போதுதமிழுக்குத் தனித்தன்மை உண்டு என்கிறார் மருதநாயகம். அதாவது தமிழ் என்பது கவிதை மொழி என்கிறார். உண்மைதான் தமிழில் சங்க இலக்கியம் முதலிய தொடக்கக் காலம் முதல் இடைக்காலத்தில் வள்ளுவர், இளங்கோ எனத் தொடரும் போதும் இங்கும் கவிதை தான் இடம் பெறுகின்றது. அறஇலக்கியம் முழுவதும் கவிதை. பின்னர் காவியங்கள் வருகின்றன. பக்தி இலக்கியங்களும் கவிதை. இவற்றை அடுத்து வரும் சிற்றிலக்கியங்களும் கவிதை. இதன் பிறகு தான் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உரைநடை வருகிறது. முன்னைய காலத்திலும் உரைநடை என்பது இல்லாமல் இல்லை. விதிவிலக்காக இறையனார் களவியல் உரை, என்றாலும் கவிதைகளில் தான் தமிழன் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறான். கிரேக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அங்குக் கவிதைகளின் எண்ணிக்கை குறைவு. உரைநடை தான் கிரேக்க இலக்கியத்தில் அழுத்தம் பெறுகிறது. தத்துவம், வரலாறு, இலக்கியம் முதலியவை எழுதப்படுகின்றன. தமிழுக்கு இவ்வகை உரைநடை வரவில்லை இதனால் நாம் இழந்தவை அதிகம். தத்துவம், வரலாறு, இலக்கியம் பற்றித் தமிழனுடைய சிந்தனை இல்லாமல் இருந்திருக்க முடியாது. இவற்றையெல்லாம் கவிதை வடிவத்திலேயே எழுதுவது சாத்தியமில்லை. இது தமிழனுக்கு, தமிழுக்கு ஒரு பெருங்குறை. மருதநாயகம் மேலும் ஒரு கட்டுரையில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் சங்க கால நாகரிகத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றி ஆராய்கிறார். சிந்துவெளி நகர நாகரிகம். நகர நாகரிகத்தில் பல்வேறு பண்புகள் உள்ளன. இவற்றைச் சங்க இலக்கியங்களும் வெளிப்படுத்துகிறது. இரண்டு நாகரிகங்களுக்கு இடையில் இரண்டாயிரம் ஆண்டுகள். இப்படி ஒர் இடைவெளி இருக்க, இரண்டு நாகரிகங்களும் எப்படி ஒத்த தன்மையோடு இருந்தது என்பது ஒரு கேள்வி. பதில் இல்லை. இனித் தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு பற்றிய கட்டுரை. அய்யப்பப் பணிக்கர் மலையாள மொழி சார்ந்தவர். ஆங்கில இலக்கியம் கற்றவர். இவர் தொல்காப்பியம் பயிலும் போது திணைக்கோட்பாட்டின் தனித்தன்மை இவரைக் கவர்கிறது. உலகில் எந்த ஒரு மொழி இலக்கியத்திற்கும் தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு பொருந்தும் என ஆராய்கின்றார். உள்ளுரில் இருக்கும் வரை உள்ளுரின் மேன்மை நமக்குத் தெரிவதில்லை. வெளியில் செல்லும் பொழுது தான் உள்ளுரின் பெருமை விளங்குகிறது. அதுபோலவே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான் நம் தமிழின் தனித்தன்மை தெரிகிறது. தொல்காப்பியரின் கவிதைக்கோட்பாடு எப்படி வந்தது பற்றி ஒரு கட்டுரை. தொல்காப்பியர் வெறும் இலக்கணவாதியாக இருந்திருக்க முடியாது. இலக்கணம் பற்றி ஆழமாக ஆராயும் பொழுது இலக்கணத்தில் சமூகத்தொடர்பு, வரலாற்றுத் தொடர்பு பற்றி ஆராயமலும் இருக்கமுடியாது. மருதநில நாகரிகம் பற்றித் தொல்காப்பியர் விரிவாக எழுதுகிறார். மருதநிலநாகரிகம் பிற நாகரிகங்களை வென்று, அந்நாகரிகங்களைத் தனக்குள் உள்வாங்கிக் கொண்டது. மருதநில நாகரிகத்தினுள்ளும் முரண்பாடுகள் உண்டு. புறத்திலிருந்து வரும் நாகரிகங்கள் சேரும் பொழுதே இந்த முரண்பாடுகளின் மோதல் அதிகரிக்கும். இங்கு தான் சமயம் தேவைப்படுகிறது. தொல்காப்பியரைப் பொருத்தவரை அவர் காலத்தில் சமயம் முதன்மை பெறவில்லை. அவரை அடுத்த காலத்தில் சமயம் முதன்மை பெறுகிறது. மருதநில நாகரிகத்தில் தான் கவிதைக்கோட்பாடும் எழுகிறது. இவற்றையடுத்து, இன்னொரு கட்டுரை. ஃப்ராய்டு பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். ஆண், பெண்களின் பாலுறவு பற்றி ஆராய்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டு பாலியல் உறவுகள், இரண்டாம் நூற்றாண்டிலும் இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் ஆண், பெண் பாலியல் உறவை விரிவாகப் பார்க்கிறோம். ஆணுக்குச் சுதந்திரம் அதிகம் குடும்பத்தை விட்டு வெளியே பாலியல் உறவில் ஈடுபடுகிறான். மூர்க்கத்தனத்தோடு ஈடுபடுகிறான். குடும்பத்தினுள் தலைவி தன் பாலியல் உறவை அடக்கிக் கொண்டு வாழ்கிறாள். குழந்தைகளைப் பெறுகிறாள். தலைவன் எது செய்தாலும் தலைவி ஏற்றுக் கொள்கிறாள். தலைவியின் தாய்மை இத்தகையது. தலைவனின் மூர்க்கத்தனம் அழிவு சார்ந்தது. அதாவது சாவூக்கம். தலைவியின் தாய்மை வாழ்வூக்கம் என்று விளக்குகிறார் ஃப்ராய்டு. நெடுங்கால அளவிலும் பாலியல் உறவு மாறுவதில்லை. இன்னும் ஒரு கட்டுரை. தொடக்கக் காலத்தில் இயற்கையோடு மனிதன் ஊடாட்டம் செய்வதன் மூலமே வாழ்க்கையை பெறுகிறான். இயற்கையோடு உறவு கொள்கிறான். இயற்கைச் சார்ந்தவனாக மாறுகிறான். இவனது செயல்பாட்டின் விளைவாக இயற்கையும் மாறுகிறது. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு ஆரோக்கியமானதாக இருக்கிறது. தற்காலத்தில் இயற்கையோடு மனிதன் உறவு கொள்ளத்தான் செய்கிறான். இயற்கையை மாற்றுகிறான். இயற்கை இவனுக்குள் செல்வதில்லை. இதன்காரணமாக இவன் நோய் நிலை அடைகிறான். இந்நிலை மாறியாக வேண்டும். மீண்டும் இயற்கையோடு உறவு கொள்ளும் பொழுதே இவன் வாழ்வு மேன்மைபடும். வித்தியாசமாக இரண்டொரு கட்டுரைகள் நாம் சிலவற்றை ஆரிய மாயைகள் என்கிறோம். தமிழ் மாயைகள் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. உண்மையில் குமரிக்கண்டம் பற்றிச் சொல்கிறோம். ஆதாரங்கள் இல்லை. இவையெல்லாம் தமிழ் மாயைகள், ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே பார்க்க வேண்டும். வேதங்களின் காலம் கி.மு.1500 ஆண்டு இப்படித் தீர்மானித்தவர் மாக்சுமுல்லர். 1835ஆம் ஆண்டிலேயே வடமொழி நூல்களில் பெரும்பாலானவை மொழிபெயர்க்கப்பட்டு விட்டன. தமிழ்நூல்கள் இவ்வாறு மொழியாக்கம் பெறவில்லை. ஆகவே இந்திய வரலாறு என்பது வடஇந்திய வரலாறு ஆகிவிட்டது. மாக்சுமுல்லர் கூறியதையே பிற ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டனர். மாக்சுமுல்லரின் கூற்று கேள்விக்குள்ளாக்கப் படவில்லை. தன் இறுதிக்காலத்தில்; மாக்சுமுல்லர் தமிழைப்பற்றி ஆராயவில்லையே என்று வருந்தினாராம். இவ்வாறு தமிழியல் ஆய்வுகளைப் பொருத்தவரை நவீனத் தன்மை பெறவேண்டும். பழமைக்குள் மூழ்கி இருக்கமுடியாது. இலக்கியங்கள் இவ்வாறு ஆய்வுக்குட்படும் போதே நம் வரலாறும் தெளிவுறும். நாமும் வளம் பெறுவோம். இதற்காகத்தான் இத்தகைய ஆய்வு. இத்தகைய ஆய்வுகள் சிறக்கும் பொழுதுதான் நமக்கான மெய்யியல் பார்வையும் மேம்படும். 3.தொடக்கத்தில் நம் காலத்தில் தமிழ் ஆக்கம் பெறவில்லை. அழிவுச் சக்திகள் பல நம் காலத்தில் உள்ளன. இவை தமிழ் வாழ்வை அழிக்கின்றன என்று பார்த்தோம். இவையெல்லாம் என்றும் நிலை பெறக் கூடியவை தானா? இவற்றுக்கு முடிவில்லையா? தமிழ் மொழியும் தமிழ் நாகரிகமும் மீண்டும் புத்துயிர் பெற வழி இல்லையா? வழி உண்டு என்றும் நம் கால நிலை சொல்கின்றன. இந்தியாவில் வரலாற்றுக்குள் நாம் சிக்கிக் கொண்டு இருக்கிறோம். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் உண்மையான கூட்டாட்சி அமைப்பாக இல்லை. தேசிய இனங்களின் தன்னுரிமையை ஒப்புக்கொள்ளும் முறையிலேயே சரியான கூட்டாட்சி அமையமுடியும். இத்தகைய கூட்டாட்சியில் தான் தமிழர் தமக்கானஅரசியலையும் பொருளியலையும் சமூக நீதியையும் பெற முடியும். இத்தகைய முறையில் கூட்டாட்சியைப் பெறுவதென்றால் போராடியாக வேண்டும். போராடும் போதே சிதைவுகள் ஏற்படத்தான் செய்யும் இதைப் பொருட்படுத்தாமல் பேராடும் பொழுதே வெற்றி பெற முடியும். இத்தகைய பேராட்டம் தான் தமிழ்த்தேசிய அரசியலை உருவாக்கும் தமிழ்த்தேசிய அரசியலன்றி தமிழுக்கும் தமிழ்நாகரிகத்திற்கும் உய்தி இல்லை. இந்த ஆய்வு இதைத்தான் முதன்மைப்படுத்துகிறது. 4.தற்காலத்தில் தமிழறிஞர்கள், தமிழியல் ஆய்வு என்ற முறையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.என்பதைத் தமிழ்நேயம் இதழுக்காகத் தொகுக்க விரும்பினோம். இருபத்தைந்து பேராசிரியர்களுக்கு மடல் எழுதினோம். மிகச்சிலரே மடல் எழுதினார்கள். வேறு சிலரை நாங்களாக இணைத்துக் கொண்டோம். இவர்கள் ஏன் எழுதவில்லை என்பதற்கான காரணம் புரியவில்லை. தற்காலத்திலும் உருப்படியான தமிழியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன என்பதைப் பதிவு செய்ய வேண்டும். படைப்புகள் முதன்மையானவை. அத்துடன் தற்காலச் சூழலில் மொழிபெயர்ப்புகள் பெரிதும் தேவை. குறிப்பாக, சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் இவற்றுடன் தமிழின் எல்லை விரிவு பட வேண்டும். தமிழுக்குள் புதிய கருத்துகள் வரவேண்டும். இவற்றோடு தமிழ் வாழ்வை அழிக்கும் எதிரிகள் இன்று அதிகம். இவர்களோடு போராடியாக வேண்டும். பேராட்டம் இல்லாமல் தமிழுக்கு வளர்ச்சி இல்லை. இவ்வகையில் தமிழறிஞர்களின் படைப்புகள் கொண்டு தொகுத்துக் கொண்டோம். தமிழ்நேயம் - ஒரு பருந்து பார்வை தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நேர்ந்திருக்கிற நெருக்கடியோடு சந்தைப் பொருளாதாரத்தின் தாக்குதல் சேர்ந்து கொண்ட நிலையில் இனி நம் வரலாற்றின் திசை வழிதான் எது என்று தடுமாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மார்க்சிய இயக்கங்கள் மட்டுமல்லாமல், பெரியாரியம் முதலிய அனைத்து இயக்கங்களுக்குள்ளும் இந்த நெருக்கடி தீவிரப்பட்டுள்ளது. இவற்றோடு, இதன் காரணமாக தமிழுக்கும் தமிழர் வாழ்வியலுக்கும் நேர்ந்த நெருக்கடிகள் எண்ணற்றவை. இதன் விளைவுதான் தமிழ்த்தேசியம். மொழிப்பெருமை, இனப்பெருமை என்று பேசுவது இன்றைய நெருக்கடிகளின் ஆழம் மற்றும் அகலம் காணப் போதுமானதல்ல. இன்றைய வரலாற்றுச் சிக்கல்கள், தேவைகள் என்ற முறையில் தமிழ்/தமிழர்/தமிழ்நாட்டுவரலாறு, பொருளியல், சமூகவியல், அரசியல் என்று தொடங்கி எல்லாவற்றையும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம்தான் தமிழ்இலக்கியம், தமிழ்ப்பண்பாடு முதலியவற்றின் உள்ளிருந்து இன்று தேவையான ஆற்றல்களைப் பெறமுடியும். தமிழின் மெய்ப்பொருள், வள்ளுவர் குறிப்பிடும் ஒப்புரவு. இன்று இதற்கு மறுபெயர் சமதர்மம். இந்த உணர்வுதான் இன்று தமிழ்உணர்வாகும். இத்தகைய சமதர்ம உணர்வோடுதான், நாம் நமக்கான புதிய உலகை மாற்றியமைக்கமுடியும் என்ற ஒட்டு மொத்த நம்பிக்கையோடு தமிழ்நேயம் இதழில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1998 ஆகசுடு முதல் வெளிவந்த தமிழ்நேயம் இதழ், 1999 சூலை வரை 12 இதழ்களை நிகழ் வெளியீடாக கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2000-2001 வரை ஆறு தமிழ்நேயம் சிறு வெளியீடுகள். 1. மெட்ரிக் பள்ளியில் தமிழ் (சனவரி). 2. வாழ்வியல் வழி வள்ளுவர் (மார்ச்). 3. புதிய தமிழ் இலக்கியங்கள் (மே). 4. தண்ணிரும் கண்ணிரும் (சூன்). 5. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் (ஆகச்டு). 6. யார்அந்த அட்லாண்டிசு மனிதனும் மற்றும் சிலரும் (திசம்பர்). இவை தவிர 2001 முதல் 2012 வரை தமிழ்நேயம் என்ற பெயரில் ஐம்பத்தொரு தமிழ்நேயம் இதழ்கள். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தமிழியல் ஆய்வுகள் இதழ்களைத் தவிர்த்து பிற இதழ்களில் இடம்பெற்ற கட்டுரைகள் (தமிழியல் ஆய்வு இடம்பெற்ற இதழ்கள் 17. பிற இதழ்கள் 34.) ‘அதிர்வுகள் அசைவுகள் நெஞ்சிலும் நிலத்திலும்’ என்ற தலைப்பில் தமிழ்நேயத்தின் முதல் இதழில் ஈழத்தின் தேசிய இனச்சிக்கல் குறித்து இராவணன் கட்டுரை. சொந்த நாட்டு அந்நியர்கள் குறித்து ம.ரா.போ. குருசாமி எழுதுகிறார். மனிதனும் மொழியும் பற்றி இராசேசுவரி பாலசுப்பிரமணியம் கட்டுரை இடம்பெறுகிறது.(இதழ்.1) உலகமயமாதலும் தமிழ்இலக்கியமும் குறித்து மேதாபட்கர் எழுதிய கட்டுரை,இருபத்தொன்றைத் தமிழ்க்கவிதை எப்படி எதிர்கொள்ளும்? என்ற ஞானியின் கட்டுரை,‘தமிழ்வானின் விடிவெள்ளி’ – மயிலைசீனி.வேங்கடசாமி குறித்து இரணியன் எழுதிய கட்டுரை, பெண்ணியப் பார்வையில் விவிலியம் பற்றிச் சுதாகர் எழுதிய கட்டுரை (இதழ்.2.) இடம்பெறுகிறது. தமிழ்இலக்கியத்தில் உடையான் - உடைமைத் தத்துவம் டாக்டர். பாண்டுரங்கன் கட்டுரை, தமிழ் அரசியல் தமிழ்வழிக் கல்வி - தமிழ்இலக்கியம் குறித்து ஞானியின் கட்டுரை, மரபும் தேசி உணர்வும் பற்றி செ.பிரபாகரன்(லக்னோ) எழுதிய கட்டுரை, அசுகர் அலி எஞ்சினியர் எழுதிய உலகமயமாதலும் மதமும் என்ற கட்டுரை, ‘எழுதுகோல் என் ஆயுதம்’ - தஸ்லீமா நஸ்ரின் - நேர்காணல் டாக்டர்.ஜீவா. அறிவியலா? ஆன்மிகமா? இல்லை அதிகாரமா? ஆரூர் பட்டாபிராமன் எழுதிய கட்டுரை, திருமூலரும் ஐன்ஸ்டீனும் - ஜீவ ஒளி கட்டுரை (இதழ்.3) ’தமிழியல் ஆய்வுகள் இதுவரை-இனி" கருத்தரங்கக் கட்டுரைகள் அடங்கிய சிறப்பிதழ். ’சொந்த மக்களைச் சாகடிக்கும் உலகமயம்" குறித்து ஜீவா எழுதிய கட்டுரை, தகவல் தொழில் புரட்சி, கற்பனைகளும் உண்மைகளும் வசந்தகுமார் எழுதும் தொடர் கட்டுரை, திருக்குறள் உரையாசிரியர் திரு.செ.நாராயணசாமியுடன் நேர்காணல் ஞானி. (இதழ்.4) தமிழிலக்கிய ஆய்வுக் கருத்தரங்க உரைகள், ’பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்" - பேரா.து.மூர்த்தி எழுதும் கட்டுரை, ’பச்சைப் புரட்சியின் நாயகர்கள்" பற்றி கோ.நம்மாழ்வார் கட்டுரை (5) ’கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டவே வேண்டாம்" என்பது குறித்து கா.ஜெயராமனின் தொகுப்பு, யேன் மிர்தால் எழுதிய (INDIA WAITS) ’இந்தியா காலத்தை எதிர்நோக்கி" என்ற நூலாய்வுத் தொடர் – சுதாகர், உண்மையான இந்தியக் கூட்டாட்சி நோக்கிப் பயணம் - பேரா.க.மு.சுப்பிரமணியன், வளர்ச்சியின் அரசியலும் ’அவமதிப்பு" அநீதிகளும் - மேதாபட்கர் (இதழ்.6). தாகூரின் ’சண்டாளிகா" நாடகத்தைத் தழுவி ’தீண்டாதவள்" என்ற பெயரில் ஞானி எழுதிய கவிதை நாடகம்(இதழ்.7). கவிதை நூல்களின் மதிப்புரை குறிப்பிடத்தக்கது. ’பாரதி கைதி எண்.253" என்ற சிற்பி எழுதிய கவிதை நூலுக்கு மஞ்சுளாதேவியின் மதிப்புரை, ’தமிழ்த்தேசிய அரசியலுக்கு எது தளம்" என்ற முனைவர்.க.பஞ்சாங்கத்தின் கட்டுரை, பேராசிரியர்.க.சிவத்தம்பி ’மதமும் மார்க்சியமும்" பற்றி மிகச் சிறப்பான முறையில் விளக்குகிறார். பிரபஞ்சவியல் பற்றி ஜீவஒளியின் கட்டுரை. (இதழ்.8) விதியே விதியே தமிழச்சாதியை என் செய நினைத்தாயடா? என்ற பாரதி கொதிப்பது போல், காவிரிக்காகக் கர்நாடக அரசோடு போராட வேண்டியுள்ளது – தமிழருக்காக, தமிழ் இனத்திற்காக தமிழக அரசோடு போராடவேண்டியுள்ளது என்ற இதழாசிரியரின் முன்னுரை இடம்பெறுகிறது. இயற்கை வேளாண்மை நேரடி அனுபவம் குறித்து திரு.குமரவேலின் கட்டுரை, மார்க்சிய அறிஞர் எஸ்.என்.நாகராசன் எழுதிய ’மார்க்சியம் இன்றும் என்றும்" கட்டுரை (9). வழக்கறிஞரும் வரலாற்றிஞருமான கரூர் பி.ஆர்.குப்புசாமி எழுதும் தன்வரலாற்றுக் குறிப்புகள் குறித்த தொடர், ஈழத்தமிழர் தேவகாந்தன் எழுதிய ’கனவுச்சிறை" என்ற ஈழவரலாறு பற்றிய நாவலின் கருத்தரங்கக் கட்டுரைகள், கலாநிதி.நா.சுப்பிரமணியன், திரு.ந.இரவீந்திரன், சு.வேணுகோபால், பாரதியின் திறனாய்வுப் பார்வை பற்றிய கருத்துக் கோவை, மதமாற்றத் தடைச்சட்டம் தேவைதானா? கருத்துத் தொகுப்பு, திராவிட மாயை பற்றி இசைமணி எழுதிய கட்டுரை (10) உலகமயமாதல்: ’அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கு" - பேராசிரியர். பன்வாரிலால் சர்மா கட்டுரை ’இந்தியா சீனா ஒப்பீடு" - பற்றிய கருணாமனோகரன் கட்டுரை, தமிழ்ச்செம்மொழி பற்றி ஜார்ஜ் ஹார்ட் எழுதிய கட்டுரை, பகவத்தகீதை பற்றி பேராசிரியர். அரங்கசாமி எழுதும் தொடர் கட்டுரை- ’கீதை ஓர் இடைச்செருகல்“(11) ’திருவள்ளுவர்க்கு குடியரசும் ஏற்பில்லை முடியரசும் ஏற்பில்லை" - பேராசிரியர்.க.ப.அறபாணன், அறிஞர் ப.அருளி தொகுத்த அறிவியல் கலைச் சொல்லாக்க அகரமுதலியை அறிமுகப்படுத்துகிறார் – ஞானி, இசைமணி எழுதிய திராவிட மாயை கட்டுரைக்கு பொ.வேல்சாமி எழுதும் மறுப்புக் கட்டுரை, அறிஞர். குணாவின் ’வள்ளுவத்தின் வீழ்ச்சி" பற்றிய நூலுக்கு பொறிஞர்.அமலன் எழுதும் தொடர் கட்டுரை, ’சேது சமுத்திரத் திட்டத்தின் மறுபக்கம்" குறித்து சு.பாரதிதாசன் எழுதிய கட்டுரை, பாரதி பற்றி திராவிட இயக்கத்தாரின் விமர்சனத்திற்குப் பதில் சொல்லும் முறையில் கட்டுரை – பாரதிபுத்திரன்,’பின்நவீனத்துவப் பார்வையில் இயேசு" பற்றி ஒரு மறுவாசிப்புக் கட்டுரை அருள்திரு.சுதாகர், அருட்பா x மருட்பா நூலாய்வு - முனைவர்.சந்திராகிருட்டிணன். (12) தமிழிசைப் பேரறிஞர் வீ.பா.கா.சுந்தரம் ‘வாழ்வும் பணியும்’ நா.மம்மது எழுதிய கட்டுரை, ’உலகமயமாதல் ஓர் எச்சரிக்கை" விடுக்கிறார் – கவிஞர்.தமிழன்பன், இந்துமதம் பற்றி ’ஜெயந்திரருக்கு ஒரு திறந்த மடல்" டாக்டர்.ஜெயராமன், இந்தியா சீனா ஒப்பீடு குறித்தக் கட்டுரைக்கு மறுப்புரை வழங்குகிறார் - வசந்தகுமார்(13). பெண்எழுத்தாளர்கள் கட்டுரைத் தொகுப்பு (இதழ். 14,15) இடம்பெறுகிறது. ‘பரிமாணம் படைப்பின் நியதி" என்ற ய.சு.இராசன் கட்டுரை, ’தமிழர் அடிமை ஆனதும் ஆவது ஆகாமல் தடுப்பதும்" பற்றிய பேராசிரியர்.க.ப.அறவாணன் கட்டுரை, ’இந்திய வரலாற்றில் புனைவுகள்’ தொடர்கட்டுரை - தமிழாகரன் எழுதியது. (16) ந.இரவீந்திரனின் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’ பற்றிய ஆய்வுக்கட்டுரை - ஹரி விஜயலெட்சுமி, ஹோசிமின் ’சமுதாயப் புரட்சியும் பண்பாட்டுப் புரட்சியும்" நூலாய்வு – சுதாகர், மகளிர் கொள்கை அறிக்கை (17) இடம்பெறுகிறது. பிரேசிலில் நடைபெற்ற உலகச் சமூகநல மாமன்றத்தின் 4ஆவது மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அருந்ததிராயின் கட்டுரை, இன்றைய உலகச் சூழலில் கலை இலக்கியம் - கவிஞர்.சச்சிதானந்தனின் கட்டுரை, ’பேராசிரியர்.ஏரோணிமுசு பார்வையில் விவிலியமும் கிறித்துவ வாழ்வும்" என்ற தலைப்பில் பிலிப் சுதாகர் நேர்காணல், தமிழ்நாடன் எழுதிய ’தமிழ் உயர்தனிச் செம்மொழி" என்ற கட்டுரை, கேத்ரீன் மர்ஃபி எழுதிய ’கிராமங்களைச் சுரண்டாத நகரம்" - தமிழில் அமரந்தா, ’விவசாயக் கல்லூரிகள் யாருக்காக" - ஜே.சி.குமரப்பா கட்டுரை (இதழ்.18). ’வரலாற்றில் தமிழர் அடிமையானது ஏன்" – கருணாமனோகரன், சுதாகர் கட்டுரை, எஸ்.பொ.வின் தன்வரலாற்று நூல் ’வரலாற்றில் வாழ்தல்" பற்றி சுதாகர் (இதழ்.19). தமிழா தமிழா என் செயப் போகிறாய் - க.ப.அறவாணன் கட்டுரை, கில்காமேஷ காவியம் பற்றி - மீனாட்சி சுந்தரம் எழுதுகிறார் (20). ’காவிரி கிடைக்கவே கிடைக்காது" என்ற அறிக்கை அளிக்கிறார் பூ.அர.குப்புசாமி, ’அமைதி இழக்கிறது அமைதி பள்ளத்தாக்கு" என்கிறார் டாக்டர். ஜீவா, பெண்ணியம் பற்றி மாலதி மைத்ரி - நேர்காணல் ஜவகர், கிறிஸ்டோபர் காட்வெல் பற்றி ஜான் ஸ்ட்ரேச்சி எழுதிய நூலின் முன்னுரை - தமிழாக்கம் செய்கிறார் நா.தர்மராசன் (21). பேராசிரியர் நெடுஞ்செழியன், குணா கைது பற்றிய குறிப்புகள், செம்மொழித் தமிழ் அறிவிப்பு ஆயிரம் ஆண்டுகள் தமிழறிஞர் குமுறல் மிர்தால் குன்னர் ‘ஆசிய நாடகம்’ பற்றிய கட்டுரை சுதாகர், ‘வள்ளுவரின் கடவுள்’ மா.அர்த்தனாரி ஆய்வுரை(.22) ‘மார்க்சின் இறுதிக்காட்சி" எஸ்.என்.நாகராசன் கட்டுரை, ’ஜே.கிருட்டிணமூர்த்தியும் திருவள்ளுவமும்’ குறித்து க.சி.அகமுடைநம்பியின் கட்டுரை (23). ’பெரியாரின் நாத்திகம்" பேராசிரியர் .து.மூர்த்தியின் கட்டுரை, ’தமிழகத்தில் அந்தணர் வரலாறு" மு.தெய்வநாயகத்தின விமர்சனம் குறித்து கோவையில் நடைபெற்ற கருத்தரங்க உரைகள்(24). ’தாவின்சி கோடு" பற்றிய கட்டுரைகள் எஸ்.விஆர்., சுதாகர் எழுதியவை ஒரு தனி இதழ்.(25) ’சமசுகிருதம் ஒரு மொழி அல்ல" சாத்தூர் சேகரன் எழுதியது (29). ஜெயமோகனின் ’கொற்றவை" நாவல் குறித்துக் கட்டுரைகள், சு.வேணுகோபால், பிலிப் சுதாகர், இராமதாசு, க.அறிவன், மலர்விழிமைந்தன், நா.நளினிதேவி ஆகியோர் எழுதியவை தொடர்ந்து இரு இதழ்கள் (31,32) திரு.எஸ்.பொ.வின் ’மாயினி" நாவல் பற்றிய கட்டுரைகள் - செ.இராமதாசு, க.அறிவன், பிலிப்சுதாகர், சு.வேணுகோபால், நா.நளினிதேவி (33). அறிஞர்.அண்ணாவின் பன்முகப் பார்வை கருத்தரங்க உரைகள் (34). ’இலையுதிர்காலம்" பெண்எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு (35). மார்க்சிய அறிஞர்.எஸ்.என்.நாகராசனின் கேள்வி பதில் (36). தமிழ் ஈழம் ’தொடரும் இறுதிப்போர்" ஒரு சிறப்பிதழ் (38). இசைத்தமிழறிஞர் திருமுருகனார் நினைவாக அவரது நூல்களிலிருந்து தொகுத்தக் கட்டுரைகள் (39). எஸ்.பெர.வின் ’வரலாற்றில் வாழ்தல்" நூல் பற்றி கட்டுரைகள் ஞானி, நா.நளினிதேவி(44). சங்கமித்ரா அவரது தமிழ்ப்பணிகள் குறித்தக் கட்டுரை (51) இதழ்களில் இடம்பெற்ற கட்டுரைகளின் தலைப்பு மட்டும் இங்குக் கூறப்பட்டுள்ளது. இவற்றை விரித்துரைக்கும் முறையில் தனி நூல் வெளிவரும். 1998இல் தொடங்கப்பட்ட தமிழ்நேயம் அறுபத்து ஒன்பது இதழ்களில், இருநூறு கட்டுரையாளர்களின்ஐநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை(1998-2012) வெளியிட்டுள்ளது.பதினான்கு ஆண்டுகள் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் ஆசிரியர் இச்சிற்றிதழைச் சிறப்பாக நடத்தியிருப்பது வியப்பிற்குரியது. இதழாசிரியர் ஞானியுடன் நேர்காணல் தமிழாசிரியராக இருந்த நீங்கள் மார்க்சியராக சிற்றிதழ் ஆசிரியராகவும் பரிமாணம் பெற்றது எப்படி? இப்படி இருந்ததில் எதுவும் வியப்பாகத் தோன்றவில்லை. நான் வாழ்ந்த சிற்றூரிலேயே பஞ்சாலைகள், அரிசி ஆலைகள் இருந்தன. தொழிலாளிகள் போராட்டம் நடத்தினர். கம்யூனிசுட் கட்சிப் பரப்புரை இரவில் நெடுநேரம் கேட்கும். தொழிலாளர் போராட்டம் நியாயம் தானே என்று என் மனம் சொல்லும். கோவையில் பணியாற்றிய போதும் தொழிலாளர் இயக்கத்தோடு உறவு, மார்க்சியம் கற்ற நண்பர்களோடு உறவு, என்.சி.பி.எச் இல் குறைந்த விலையில் மார்க்சிய நூல்கள் கிடைக்கும். இந்தச்சூழலில் நான் மார்க்சியன் ஆனேன். குடும்பச் சூழலும் ஒரு காரணம் எங்கள் குடும்பம் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தது. சுல்லூரியில் படிக்கும்போது செல்லப்பா அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார். புத்தக விற்பனைக்காக அண்ணாமலை நகர் வந்திருந்த போது இரண்டு நாள் என் அறையில் தங்கியிருந்தார். புதுக்கவிதைப் பற்றியும் புதுவகை இலக்கியங்கள் குறித்தும் விடாப்பிடியாகப் பேசினோம். சிறுவயது முதற்கொண்டே நானும் தினமணி வாசித்தேன் கல்கி படித்தேன் இதன் தொடர்ச்சியில் நான் சிற்றிதழ்இலக்கியவாதி ஆனேன். ‘எழுத்து’,‘கசடதபற’, ‘பிரக்ஞை’ இவை பற்றிய வாசிப்பு மிகச் செறிவாக இருந்தது. திரும்பத் திரும்ப படித்தேன். இவர்கள் நம் காலத்து உரையாசிரியர்கள். சமயம் என்றால் நெத்தியில் பட்டைப் போட்டுக் கொள்வது அல்ல. மனத்தை அகல விரித்து உலகைக் கவனிக்க வேண்டும் இடையில் தடைகள் மாயைகள் தேவை இல்லை. இவ்வாறு தான் நான் எல்லாவற்றையும் படித்து உள்வாங்கிக் கொண்டிருந்தேன். நீங்களே பல சிற்றிதழ்கள் நடத்தியிருக்கிறீர்கள். அதில் நீங்கள் பெற்ற பயிற்சி பற்றிச் சொல்லுங்கள்? 1968-70’களில் கோவையிலிருந்து வெளிவந்த ‘புதிய தலைமுறை’ மார்க்சியதத்துவ திங்களிதழ். மார்க்சியம் பற்றி நண்பர்களோடு விரிவாக கலந்துரையாடவும், மார்க்சிய நூல்கள் படிக்கவும் நல்ல வாய்ப்பாக இது அமைந்தது. பின்னர் 1970-71 காலத்தில் வானம்பாடி இயக்கத்தில் நானும் ஒரு கவிஞன். புதுக்கவிதையைசிறப்பாகக் கற்க முயன்றோம். அகலிகை வாழ்க்கை பற்றிப்பெண்ணிய நோக்கில் யாருக்கும் ஒர் ஈடுபாடு இருக்கும். இதன் பயனாக நான் ‘கல்லிகை’ எழுதினேன். பின்னர் 1979’வாக்கில் நண்பர்களும் நானும் ‘பரிமாணம்’ என்ற இதழ் தொடங்கினோம். சோவியத் மார்க்சியம் அதைப்போல சீன மார்க்சியம் மட்டுமே மார்க்சியத்தை நிறைவு செய்வதில்லை. மேற்குலகிலும் பல வண்ணங்களில் மார்க்சியம். இந்தியாவிலும், தமிழகத்திலும் அதேபோல இம்முறையில் மார்க்சியத்திற்கு பன்முகப் பரிமாணங்கள் உண்டு. மார்க்சியத்தைச் சரியாக தெரிந்து கொள்வதென்றால் இப்படிப் பல பரிமாணங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் உதவியோடு மார்க்சியம் கற்று இதழ் நடத்தினோம். 1983இல் ‘நிகழ்;’இதழை முதலில் இலக்கிய இதழாகத்தான் நடத்தினோம். 1988’இல் நிகழ் முழுப்பொறுப்பையும் ஏற்றேன். அக்காலத்தில் மார்க்சியம் கேள்விக்குள்ளாயிருந்தது. சோவியத் ஒன்றியத்தில் சோசலிச தகர்வு இதற்கு ஒரு காரணம். உலக அளவில் மார்க்சியத்தின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. முதலாளியத்திற்குத்தான் உலகம் சொந்தம் என்று பலரும் நம்பினர். நாங்கள் நம்பவில்லை. சோவியத் ஒன்றியத்தில் சிதைந்தது, முதலாளியத்தை உள்வாங்கிய மார்க்சியம். இது சிதையத்தான் வேண்டும். அப்பொழுதுதான் அசலான மார்க்சியம் பற்றிய கேள்வி எழும். ’நிகழ்’ இந்தக் கேள்வியைத்தான் பெரிதாக எழுப்பியது.நிகழ் தொட்ட சிக்கல்கள் ஒருபாடு இருக்கும். விரிவாக எழுத இந்த இடம் போதாது. நிகழில் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மதிப்புரைகள் எனப் பலநூறு படைப்புகள் வெளிவந்தன. தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் நிகழுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இதற்குப் பிறகுதான் 1998இல் ’தமிழ்நேயம்’இதழ் தொடங்கினேன். தமிழகத்தில் எண்பதுக்குப் பிறகு ஒன்று, இரண்டு என தொடக்கத்தில் தோன்றி ஆங்கில வழிப் பள்ளிகள் நாளடைவில் ஊர்கள் தோறும், நகரங்களிலும் நிறைய தோன்றின. ஆங்கிலம் கற்றால் தான் அறிவுலகம் திறக்கும் என்ற பொய்யான நம்பிக்கை திட்டமிட்டு பரவப்பட்டது. சுயநிதிக்கல்லூரிகளும் இதே போலத்தான் தோன்றின. ஆங்கில வழி பள்ளிகளுக்கே அரசின் ஆதரவு கிட்டியது. அரசு பள்ளிகளில் மாணவர் தொகை கலகலவென சரியத் தொடங்கியது. இதே போலத்தான் ஆட்சிமொழியாகத் தமிழ் இல்லை. கோவில் வழிபாட்டு மொழியாகவும் தமிழ் இல்லை. நீதிமன்றத்தில் தமிழ் இல்லை. முதலாளிகளோடு அரசும் கைகோத்துக் கொண்டது. தமிழுக்குத் தமிழ் வாழ்வுக்கு தமிழ் வரலாற்றுக்கு நேர்ந்த நெருக்கடிக்கு யார் காரணம்? நெருக்கடி தீர வழி என்ன? என்ற சிந்தனையைப் பரப்புவதற்காகத் தமிழ்நேயத்தைத் தொடங்கினேன். சிற்றிதழ் நடத்திய பல்வேறு அனுபவங்கள் ’தமிழ்நேயம்’நடத்துவதில் எனக்குத் துணை செய்தன. தமிழ்நேயத்தில் இயற்கை வேளாண்மை பற்றிக் கட்டுரை உண்டு. அணுமின் நிலையங்கள் நமக்குத் தேவை இல்லை. அதிகார வர்க்கத்தின் ஊழலால் நாடு அழியும். அரசியல்வாதிகளை நம்பி இருந்தால் நாட்டை இழக்க நேரிடும். இப்படியெல்லாம் காரசாரமான கட்டுரைகள் இவ்விதழில் உண்டு. இவ்வகையான கட்டுரைகளுக்கு இடையில் தமிழியல் ஆய்வுக்கட்டுரைகளும் தமிழ்நேயத்தில் இடம்பெற்றன. தமிழ்நேயத்தின் பணி அரசியல் சார்ந்ததுபோலத் தோன்றுகிறது. தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளை எந்த நோக்கில் வெளியீட்டீர்கள்? தமிழ்நேயம் அதிக அளவில் சமூகம், கலாச்சாரம் சார்ந்த இதழ்தான். தவிர்க்க இயலாமல் சில சமயம் அரசியல் நிலைப்பாடு எடுப்பதில் தவறில்லை. தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. தமிழைக் காக்கக் கடமைப்பட்டவர்கள் எவரோ அவர்களே தமிழை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அழிப்பவர் இடத்தில்தான் செல்வமும் சேர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழை வைத்து அரசியல் நடத்துகிறார்கள். வணிகம் நடத்துகிறார்கள். இந்நிலையில் தமிழின் ஆக்கம் கருதுபவர் எப்படி அமைதியாக இருக்கமுடியும். ஆகவே தமிழியல் ஆய்வு குறித்தும் தமிழ்நேயம் கட்டுரைகள் வெளியிட்டது. தமிழ்ச் செம்மொழி என அறிவிக்கப்பட்டது தமிழ் வளர்ச்சிக்கான ஆக்கம் தானே? ஆக்கம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒருநூற்றாண்டுக்கு மேல் தமிழறிஞர்களும், தமிழ்ப்பல்கலைக்கழங்களும் எழுப்பிய உரத்த குரலின் விளைவாக தமிழுக்கும் செம்மொழித் தகுதி கிடைத்தது. உண்மையில் செம்மொழித் தகுதி வாய்த்திருப்பதுஒரு அலங்காரமல்ல. பொறுப்பு தமிழின் தோள்களில் அவனே எதிர் பாராத போது வந்து விழுந்திருக்கிற கனமான பொறுப்பு. கிரேக்கம், இலத்தின், சீனம், சமசுகிருதம் போன்ற மொழிகளுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இதற்குச் சற்றும் குறைவில்லாதது தமிழ் என்பது என்னவோ உண்மைதான். இத்தனைப் பெருமைக்குரிய மொழியை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்கிறோம். பட்டிமன்றம் நடத்துகிறோம். இலக்கியத்தில் அங்கங்கே நடைபெறும் கதைகளை எழுதிக் குவிக்கிறோம். மரபு முறையில் பழசாகிப் போன பொருள் பற்றி நுண்ணிய ஆய்வுநடத்துகிறோம். மொழியின் அழகு நயங்களைத் தொகுக்கிறோம். இதனால் தமிழுக்கு என்ன வலிமை ஏற்படும்? தமிழின் வாழ்வு எப்படி மேம்படும்? சமசுகிருதத்திற்கு நிகரானது தமிழ் என்று வெறும் வாய்ச்சொல்லில் பிதற்றிப் பயனில்லை. இந்தியாவின் அருங்கலைகள் அவ்வளவும் தமிழில் தான் வளர்ந்தன. இவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டது சமசுகிருதம். இந்த உண்மையை சங்க இலக்கிய கருத்தரங்குகள் இந்த உண்மையையா வெளிப்படுத்துகின்றன? இதற்கு நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டாமா? ஆரியர் வருவதற்கு முன்பே எத்தனையோ வகைகளில் நாம் சாதனை புரிந்திருந்தோம் சிந்துவெளி நாகரிகம் இதற்கு ஒரு சான்று. அறிவியல், மெய்யியல், கணிதம், கல்வி, சிற்பம், மருத்துவம் என்பதிலும் சாதனைகள் எல்லாவற்றையும் இப்பொழுது மெய்ப்பிக்க வேண்டியது செம்மொழித்தமிழ், செய்தால் நமக்கு வாழ்வு உண்டு. தமிழ் வரலாற்றில் நிலைவெற தமிழ்நேயம் முன்வைக்கும் தமிழியல் ஆய்வுகள் பற்றியும் சொல்லுங்கள்? தமிழ்நேயம் இது குறித்து நிறைய கேள்விகள் எழுப்புகிறது. முக்கியமான கேள்விகள் ஐந்து, 1.தமிழ்மொழிக்கும் தமிழ் வாழ்வுக்கும் தமிழ்வரலாற்றுக்கும் இப்பொழுது தடைகள் பல நேர்ந்துள்ளன. எவை அந்த தடைகள்? யார் இவற்றிற்குக் காரணம்? தீர்க்கும் முறை என்ன? 2.தமிழின் தொன்மை நாகரிகம் எவ்வளவோ மேன்மையானது என்று உரத்துப் பேசுகிறோம். இந்த நாகரிகத்தின்இன்றைய நிலை என்ன? புதிய உலகச் சூழலில் தமிழ் நாகரிகத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலுமா? 3.தமிழனுக்கு வரலாறு சமூகம், பொருளியல், சமயம், கல்வி இவை பற்றிய ஆழ்ந்த பார்வைகள் தேவை. இவற்றுக்கெல்லாம் ஆதாரமானது மெய்யியல் பார்வை. என் வாழ்வின் அர்த்தங்கள், அழகுகள், ஆற்றல்கள் இன்று என்னிடம் இல்லை. இவற்றை யாரோ பறித்துக் கொண்டனர். இப்பொழுது நான் வெறும் வயிற்றை நிரப்பும் கூலி ஆளாக மாறியுள்ளேன். என்னைப் படைத்தவரிடமும் கேட்கிறேன். என்னை ஏன் படைத்தாய்? என் அழகை மீண்டும் நான் எப்படிப் பெறுவேன் என்று எனக்குள் நானே கேட்டுக் கொள்கிறேன். இவ்வகை கேள்விகள் மெய்யியல் கேள்விகள் இடையில் தோன்றிய சமயங்களில் மெய்யியல் உண்டா? இப்படியும் கேள்வி. எல்லாவற்றையும் ஆதாரம் தேடி ஆராய வேண்டும். 4.செம்மொழி என்ற பெருமையை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அப்படியானால் சங்க இலக்கியம்இன்று நமக்கு ஏன் தேவை? வெறும் இலக்கியமாக அல்ல. மனப்பாடம் செய்வதற்கோ மதிப்பெண் பெறுவதற்கோ அல்ல. இன்றைய உலகச் சூழலில், உலகமயமாதல் சூழலில் எல்லாமே சரக்காகிவிட்டன. பணத்திற்கே மதிப்பு. மனிதனுக்கு மதிப்பில்லை. உழைப்பிற்கு மரியாதை இல்லை. மரபுக்கு என்ன தேவை? என்று கேட்கிறார்கள். இன்பம் தவிர வாழ்க்கையில் வேறு என்ன வேண்டியிருக்கிறது இவ்வகை கேள்விகளுக்கு இடையில் தான் சங்க இலக்கியத்திற்கு இன்று என்ன தேவை? என்ற கேள்வி எழுகிறது. அதாவது அழிவின் விளிம்பில் உலகு நிற்கிற போது இன்று சங்க இலக்கியத்திற்கு என்ன தேவை?இப்படிக் கேட்பது உயிர்த்துடிப்பான கேள்வி இதைப்போலவே மேலும் சில கேள்விகள். சங்க இலக்கியத்தைக் கூட நாம் ஆழமாகவாப் பயின்றோம்? தலைவன் தலைவியர் பற்றிக் கதைகள் சொன்னோம். தலைவன் தலைவியருக்கிடையில் ஊடல் நிகழ்வது ஒரு காரணத்திற்கு மட்டுமா? பரத்தையோடு தலைவன் வாழ்ந்து விடவில்லையா? தலைவி நிலை என்ன ஆகும் அல்லது என்ன ஆனது? இப்படிக் கேள்விகள் எழுப்பினோமா? தொல்காப்பியர் வெறும் இலக்கணக்காரர் தானா? சமூகம், வரலாறு பற்றி இவருக்குப் பார்வை உண்டா? அவர் ஒரு கலைஞர் அல்லவா? அவர் கடவுள் நம்பிக்கையாளரா? திணைப்பாடல்கள் உலகாய்த பாடல்கள் அல்லவா? இப்படியெல்லாம் புதிய கேள்விகளோடு சங்க இலக்கியம் வாசிக்கிறோம். 5.தமிழகத்தில் சங்க இலக்கிய ஆய்வில் தேர்ந்தவர்கள் என அறிஞர் பலர் 60/70 வரை வாழ்ந்தனர். அதற்குப்பின் தமிழியல் ஆய்வு என்ன ஆனது. நம் காலத்திலும் தமிழறிஞர்கள் வாழவில்லையா? இவர்கள் என்ன பணிகள் செய்தார்கள்? இவர்கள் செய்த ஆய்வு பற்றித் தொகுத்துத் தர வேண்டாமா? இதுவும் தமிழியல் ஆய்வு தானே. தமிழ்நேயத்தின் பெரும்பாலான வாசகர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? தமிழுக்கு இவ்விதழ் தந்த ஆக்கம் தங்களுக்கு மனநிறைவு ஏற்பட்டதாக உணர்கிறீர்களா? சிற்றிதழ் வட்டாரத்திற்குள் உலவியது தமிழ்நேயம். பொது வாசகர் வட்டாரத்திற்குள் தமிழ்நேயம் செல்லவில்லை. தமிழ்நேயம் வாசகர்கள் என்பவர்கள் கூட ஒரளவுக்கேனும் தமிழுணர்வுடையவர்களாக, தமிழ்ச்சிந்தனையாளராக இருந்திருக்க வேண்டும். சில வாசகர்கள் எண்ணிக்கையை தூண்டுவதற்காக வாசகர் மடல் என்று வெளியிடுவார்கள். தமிழ்நேயம் இதைச் செய்யவில்லை. நெருக்கமான நண்பர்களுக்கிடையில் மட்டுமே தமிழ்நேயம் பற்றிய கருத்துரைகள் வரும். மனத்திற்குள் இருக்கும் ஒரு உந்துதல் காரணமாக தமிழ்நேயம் வெளியிட்டேன். ஒரு கட்டதிற்கு மேல் சலிப்பு ஏற்பட, நிறுத்திக்கொண்டேன். இது வரை செய்தவை தமிழுக்காகச் செய்தவை. பொருளிழப்பு ஏற்பட்டதாக நான் கருதவில்லை. தமிழில் இப்படி ஒரு இதழைத் தொடர்ந்து காப்பாற்றியதே கூட ஒரு நல்லபணி, புனிதப்பணி என்று நம்பினேன். எனக்கு இது நிறைவாகவே இருக்கிறது. தமிழ்நேயம் ஆண்டுதோறும் பெண் எழுத்தாளர்களுக்கென சிறுகதைப்போட்டிகள் நடத்தி சிறந்த கதைகள் எழுதியவர்களுக்கென பரிசுகள் வழங்கி, தெரிவு செய்தகதைகளைப் புத்தகமாக வெளியிட்டது. இப்படி ஒரு பணியை எப்படி உங்களால் பதினொரு ஆண்டுகள் சிறப்பாக செய்யமுடிந்தது? உண்மையில் இதற்குரிய திட்டத்தை எனக்குள் புகுத்தியவர் இலண்டனில் வாழும் பெண் எழுத்தாளர் இராசேசுவரி பாலசுப்பிரமணியம். 1998இல் அவர் தமிழகத்திற்கு வந்திருந்தபோது, உலக அளவில் வாழும் தமிழ்ப்பெண்களுக்கு அவர்களின் சமூக உணர்வையும் கலை உணர்வையும் தூண்டும் முறையில் ஏதேனும் செய்ய வேண்டாமா? என்று கேட்டார். உடனே நான் புரிந்து கொண்டேன். நம் சகோதரிகளுக்கு ஏதாவது செய்யத்தான் வேண்டும். அப்படியானால் பரிசுத்தொகை நான் தருகிறேன். புத்தகம் நீங்கள் வெளியிடுங்கள் என்றார். நான் ஏற்றுக்கொண்டேன். ஒவ்வோராண்டும் அக்டோபர் இறுதியில் அறிக்கைகள் வெளியிடுவோம். கதைகள் நவம்பரில் வந்து சேரும். நடுவரில் பெண் நடுவர் இருவர். ஆண் நடுவர் ஒருவர் என மூன்று பேர் கதைகளைப் பார்வையிடுவர். பட்டியல் தயாராகிவிடும். முதல் தகுதி பெறுபவர் ஐவர்.ஒருவருக்குத் தொகை ரூ.500. இரண்டாம் தகுதி பெறுபவர் பதின்மர். ஒருவருக்கு ரூ.250. இத்தொகை பெரிதில்லை. இவர்களை மதித்து கதைகளை நூலாகவும் வெளியிட்டோம். நூல் பிரதிகளை அனுப்பியும் வைத்தோம். இவ்வாறு பதினொரு ஆண்டுகள் இந்தப்பணியைச் செய்தோம். இராசேசுவரி பாலசுப்பிரமணியம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். வருமானம் இல்லை. எனக்கும் அதுபோல.இதன் பிறகு என்ன செய்தோம் பதினொரு ஆண்டுகளில் வெளியான கதைகள் 184. சிறந்த கதைகள் என 100 கதைகளைத் தெரிவு செய்து சிறந்ததொரு அணிந்துரை வழங்கியவர் முனைவர் மஞ்சுளாதேவி ‘காற்றாய் புயலாய்’ என்னும் பெயரில் அழகான நூல் ஒன்றைக் காவ்யா வெளியிட்டுள்ளது. விலை ரூ.600 பெற்றுக் கொள்ளலாம் சிற்றிதழ் என்ற முறையில் பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக என் பணியை நான் சிறப்பாகச் செய்துள்ளேன்.