[]     தன்னம்பிக்கை துளிகள்  கவிதைகள்    இனிய தமிழ் செல்வா      அட்டைப்படம் : Gnu Anwar - gnuanwar@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                பொருளடக்கம் நூல் அறிமுகம் 5  ஆசிரியர் அறிமுகம் 6  சமர்ப்பணம் 7  1. மகிழ்ச்சித் தத்துவம்! 11  2. வார்த்தையின் வல்லமை! 12  3. எண்ணம் போல் வாழ்வு! 13  4.மிதவை! 14  5. பக்குவம்! 15  6. வாழ்க்கையே அனுபவம்! 16  7. தன்னம்பிக்கை! 17  8. கண்னே துயில் எழு! 18  9. திங்கள் கிழமை அது வரம்! 20  10.வெளிநாட்டு வாழ்க்கை! 21  11. இன்றுடன் வாழ்வோம்! 22  12. வாழ்க்கை வாழ்ந்து பார்! 23  13. இலட்சியம்! 24  14. தளர்ந்துவிடாதே! துளிர்விடு! 25  15. ஆண்மை தவரேல்! 26  16. புதிய யுகம்! 27  17. தேங்கிவிடாதே! 28  18. இந்த நொடியில் வாழ்வோம்! 29  19.போட்டி உன்னுடனே! 30  20. வெற்றியின் வாசற்படி! 31  21.வாழ்க்கை! 32  22. பண்பின் உன்னதம்! 33  23. நடுத்தர வர்க்கம்! 34  24. நிஜம்! 36  25. நகரத்துவாழ்க்கை! 37  26. மாற்றம்! 38  27. நல்லகாலம்! 39  28. தனித்துவம்! 40  29. முடியும்! 41  30. வாழ்க்கைப்பயணம்! 42  31. நெருக்கடி நிலை! 43  32. ஆணிற்கு வேண்டிய மனம்! 44  33. குறையில்லா மனிதன்! 45  34. விசித்திர மனிதர்கள்! 46  35. இடைவெளி! 47  36. தேடல்!!! 48  37. எதிர்பார்ப்பு! 49  38. நெருக்கடியின் நெருடல்! 50  39. வாலிபம்! 51  40. சொற்கள்! 52                                                          நூல் அறிமுகம்   வாழ்வில் அன்றாடம் நாம் பல பிரச்சனைகளையும், இடர்களையும் சந்திக்கின்றோம் அவற்றை சவாலாக எடுத்து அதில் வெற்றி பெற ஊக்குவிக்கும் கவிதை துளிகளே இவைகள். முடியும் என்ற எண்ணம் விதையாக மனதில் விதைக்கப்பட்டு பழச்சுளையாக வெற்றி இனிக்க வேண்டும் என்பதே வாழ்வில் அனைவரின் ஆசைகள். அதற்கான ஒரு முயற்சி தான் இப்புத்தகம். என்னை ஊக்குவித்த வரிகள் இப்பொழுது உங்கள் கைகளில். சரியான நேரத்தில் சரியாக சொல்லப்படும் வார்த்தை வெல்லும். அஃதே இம்முயற்சி. நீங்கள் வாசித்து அது ஏதேனும் ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு உதவிபுரின் இக்கவிதைகள் அதன் பலனை அடைந்துவிடும்.   விழி.எழு.விருட்சமாகுக!   நன்றிகள், செல்வா ஆசிரியர் அறிமுகம்   பெயர் - செ.செல்வசங்கர் ஊர் - நெல்லை, இருப்பது - சோகார், ஓமன், படிப்பு - பொறியியல் (இயந்திரவியல்) இணையம் - iniyatamilselva.blogspot.com மின்னஞ்சல் - selvasankarc@gmail.com காப்புரிமை விருப்பம் - Attribution-NonCommercial-ShareAlike 4.0 international உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது! தமிழ் கடலில் இன்றைய தலைமுறையினர் ஒவ்வொரு வரும் முத்தெடுக்காவிடினும் பரவாயில்லை, அதில் கால் நனைத்தாலே போதும் அச்சுகம் அலாதி இன்பம் தரும். இதை ஒவ்வொரு இளைஞரும் கடமையாக உணர்ந்து மொழியை வளப்படுத்த வேண்டும் என்பதே என் அவா! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!!                               சமர்ப்பணம்   இப்புத்தகத்தை என்னை உயிர்பித்த கடவுளும், என் தந்தை ச.செல்லமுத்து, தாய் - மகேஸ்வரி அவர்களுக்கும் சமர்பிக்கிறேன். அதுமட்டுமல்லாது என்னை மிகுந்த ஊக்குவித்து எனது படைப்புகளை சரிபார்த்து பிழைதிருத்தும் எனது அக்கா - ராஜீ, தங்கை - கோமதி & தம்பி - பிருத்திவிராஜ்க்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேலும் எனது படைப்புகளுக்கு இணையவடிவம் தந்த தோழன் நடராஜ்க்கும் இன்ன பிற தோழர்களுக்கும் எனது பணிவான வணக்கம். எல்லாவற்றிர்க்கும் மேல் எனது படைப்பை மின்னனு புத்தகவடிவில் வெளியிட உதவிய Freetamilebooks.com & Creative commons குழுவிற்கும் மற்ற உதவி புரிந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றிகளும் வணக்கமும். இங்ஙனம் இனிய தமிழ் செல்வா   1. மகிழ்ச்சித் தத்துவம்! வாழ்வின் அதீத நேரங்களில் நமது சந்தோஷங்களை பணத்திற்காக துறக்கின்றோம்! அனுபவிக்காத சின்ன சின்ன சந்தோஷங்களை விலைகொடுத்து,  வாங்கிவிடலாம் எனநினைத்து விடுகின்றோம்! இந்த உலகமும் அப்படியே வெற்றி பெற்றவனுக்கே மகுடம் சூட்டுகிறது, வெற்றி பெற்றவனை கேட்டுப்பாருங்கள் அவன் பெற்றதைவிட இழந்ததே அதிகம்! முடிந்தவரை மிடுக்காய் திரியாமல்,   கடுக்காய் அளவு மகிழ்ச்சியானாலும் மனம்குளிர மகிழ்வோம்! சின்ன சின்ன மகிழ்ச்சிகளே நம்வாழ்வின் உயிர்ப்புகள்! புன்னகைப்போம் புத்துயிர் பெறுவோம்!                                             2. வார்த்தையின் வல்லமை!   வார்த்தைகளுக்கு வலிமை உள்ளது,  அதன் வல்லமை சொல்பவரை விட கேட்பவரை ஆட்டுவிக்கிறது! அதனால் வார்த்தைகளில் வஞ்சனை தவிருங்கள், வார்த்தைகளில் வசைபாடாதீர்கள், வார்த்தைகளால் வாழ்த்துங்கள், வார்த்தைகளில் புன்னகை வாசம் செய்யுங்கள், முடியும் என்று ஊக்குவித்துப்பாருங்கள்,  அந்த பகைவனுக்கும் பிடித்துவிடும் உன்னிடம் தோல்விபெற!!!!                                                3. எண்ணம் போல் வாழ்வு!   ஒருவருக்கு எண்ணம் திடமெனில், அந்தியும் தலை சாய்க்கும், ஆகாயமும் நீர் சுரக்கும், இமயமும் ஏற இடம் தரும், ஈர மண் சிற்பமாய் மாறும், உலகில் முன்னேற்றம் வரும், ஊழ் முயற்சி வெற்றி பெரும், எண்ணம் போல் நிறைவேறும், ஏணி போல் வாழ்வு உயரும், ஐயமின்றி வாழ்வு மிளிரும், ஒன்று பட்ட முயற்சி கைகூடும், ஓடி உழைத்த பலன் கிடைக்கும், ஔவை கூற வில்லை, இது வாழ்வின் அனுபவம், அஃதே எண்ணம் இருப்பின் வாழ்வு வளமே!                                    4.மிதவை!   வாழ்க்கையில் தண்ணீரில் மிதக்கும் மிதவையாய் இருப்பாயாக!  மற்றவரால் வீழ்த்த நினைத்து அமுக்கினும் முழ்காமல் மிதப்பாயாக!  எத்துன்பம் வரினும் அசைந்து கொடுத்து கடந்து செல்ல வழிகொடுத்து மீண்டும் தன்நிலையில் தன்நிறைவடைவாயாக!  எத்தனைமுறை அலை அலைகழிப்பினும்,   கனமில்லா கர்வத்துடன், தாளாமல் தளராமல்,  உள்ளுவதேல்லாம் உயர்உள்ளமாய்   நாட்களுடன் நடைபயில்வாயாக!                                            5. பக்குவம்! இருப்பதில் திருப்தி கொண்டு மகிழ்ச்சியாய் இருப்போம்!  இல்லாததை எண்ணி எண்ணி ஒருபோதும் புலம்போம்! இன்னல்கள் பல வரினும்! இடும்பைகள் பல தொடரினும்! தாளாமல், தளராமல், தள்ளாடாமல், நிலையாக இருப்போமாக!  தாழ்வதோ தங்கிவிட அல்ல கடல் நீருக்கு! பேரலையாய் பொங்கிடவே! பின்சென்றது நின்று விடுவதற்கல்ல அம்பிற்கு! சீரிப்பாய்ந்து இலக்கை துளைப்பதற்கே!  பச்சை மண்ணிற்கு பக்குவமில்லை!  மழையில் கரைந்துவிடும்! சுடு மண்ணிற்கோ பக்குவமதிகம்! மழை என்ன? மண்ணில் புதைத்தாலும் மங்காது!  வாழ்வை ஓர் வைரத்தைப்போல் சந்திப்போம் நாளும்!  ஒவ்வொரு சூழ்நிலைகளையும் உட்கொண்டு கடினமாவோம்! அனுபவத்தில் ஊறி பலநாள் கெடாத பண்டமாவோம்! நம்மிடம் உள்ளதை கொண்டாடுவோம்! இல்லாதவைக்கு பயிற்சி செய்வோம்!  வாழ்க்கை நம்மை பலமுறை புரட்டிப்போடும்! பனியாரத்தைப்போல் நன்றாக உப்பி தின்ன தின்ன தித்திப்போம்! பண்பிலே சிறந்த பண்பு பக்குவம்! ஆசிரியரிலே சிறந்த ஆசிரியர் அனுபவம்! நாளும் பயில்வோம்!  அனுதினமும் உயர்வோம்! விழு! எழு! விருட்சமாகுக!   6. வாழ்க்கையே அனுபவம்!   விழுவதும் எழுவதும் வாழ்வின் பரிணாமமே,  பகல் முடிந்து இரவைப் போல...  கடிவதும் கட்டி அணைப்பதும் அன்பின் குணமே,  நல்மனிதனாய் உலகத்தில் உருவெடுக்க...  இன்பமும் துன்பமும் ஒழுக்கத்தின் சன்மானமே, ஒன்றை அனுபவித்தால் தான் மற்றதன் உண்ணதம் உணர...  ஏற்றத்தாழ்வுதனை புன்னகையுடன் ஏற்றுக்கொள், ஏற்றத்தில் உயரத்தையும் இறக்கத்தில் ஆழத்தையும் அளந்தேன் என பெருமை கொள்...  வாழ்க்கையை புன்னகையால் அளவளாவு, அழுதவுடன் மறந்து சிரிக்கும் குழந்தைப்போல!!!                                            7. தன்னம்பிக்கை!   வாழ்க்கையில் நம்மை உயர்த்துவது தன்னம்பிக்கையே,  எண்ணம் செயலாக வந்து நற்பழக்கமாக உருவம் பெற்றால்  வெற்றி நம்மிடம் அகப்படும்.                                                                8. கண்னே துயில் எழு! கண்னே துயில் எழு!  புதுவிடியல் பிறந்தது!  கண்னே துயில் எழு!   உனக்கான பொன்நாள் உதயமானது!  கனவில் காணும் ஓவியத்திற்கு,  உழைப்பால் உயிர்கொடு ஆகவே துயில் எழு!  வாழ்கை முடிசூட்டுகிறது,   எவன்  புதுமை படைத்து அதற்கு அர்த்தம் அளிக்கிறானோ!   ஆகவே துயில் எழு!  துயில் எழு!  என்றும் உன்னை உலகம் போற்ற,  உன்காலம் பொற்காலமாக விளங்க துயில் எழு!  இலக்கு ஒன்றே உனது உயிர்துடிப்பாய் ஓயாமல் ஒலிக்க!  காலம்பாராமல் காரியம் செய்! அண்டசராசரமும் உதவி பயக்கும்! அகிலம் போற்றும் ஒருநாளுக்கான முதல்நாள் இன்று!!!    விழித்திடு!   விளைபடு!   விண்முட்டும்    விருட்சமாய் வளர்ந்திடு!!!                      9. திங்கள் கிழமை அது வரம்!   வாரத்தின் முதல் நாள் அது வரம்!!! தன் கனவுகளை செதுக்கி சிலை செய்பவனுக்கு!!! உளியும், சிலையும் போல் நம் நினைவும்,காரியமும்…    நிலைத்த இலக்கும் அதற்கான நித்திய சிந்தனையும் உடையவன் வெற்றியடைகிறான். மற்றவன் மனதை அலைபாயவிட்டு வெற்றிடமாகிறான்!!!    யாருடைய எண்ணம் செயலாகி,  செயல் பழக்கமாகி, பழக்கம் குணமாகி தொடருகிறதோ  வெற்றியும் வாகையும் அவனிடமே அகப்படுகிறது!!!    கனவு நினைவாக எழுச்சி கொள்க! இந்த நிமிடம் நமதே!!! தேனின் சுவை எத்துளியிலும் மாறாததுபோல்,  நமது எண்ணங்களும் வண்ணங்களாக அமைந்து வாழ்க்கை மிளிரட்டும்!!!    விழி!எழு!விருட்சமாகுக!!!                          10.வெளிநாட்டு வாழ்க்கை!   மண்ணையும், மக்களையும் ஓய்வெடுத்த திண்ணையையும் மறந்திங்கு வந்தோம் எங்களுக்கு பெயர் வெளிநாட்டு வாழ்இந்தியர்!!!  பிழைப்புதான் தேடி வந்தோம் பின்புதான் புரிந்தது உடல் மட்டுமிங்கே உள்ளமனைத்தும் அங்கேயே நிற்கிறது என்று!!!  இங்கு உழைப்பே முதலீடு, கைகளே மூலதனம், ஊரில் பலர் கூறுவார் பாக்கியவானப்பா, வெளிநாட்டில் வாழ்கிறானப்பா!!!  இங்கு பண்டிகைகள் ஏதுமில்லை, பகட்டான ஆடையுண்டு,  பங்காளிகள் யாருமில்லை பலம் சேர்க்க!!!  மகிழ்சியான நாட்கள் மனதிலே கறைகிறது!!!    காணி நிலம் கொள்ள,உற்றதை கரை சேர்க்க,   கடன் தீர்க்க இங்கு வந்தோம் இதில் பகட்டில்லை,   பசி உண்டு, பந்தா இல்லை, பாசமுண்டு!!!  பணயக் குதிரை நாங்கள், கைகள் கட்டுண்டு நீந்துகிறோம்   கரைசேர்வோம் எனும் நம்பிக்கையில்!!!    இறைவா நான் உன்னை வேண்டுகிறேன் இவ்வாழ்கை   என் குடும்பத்தில் பிறர்கிளைக்காதே என்று!!!   நான் கண்ட சொப்பனங்கள் என்னோடு முடியட்டும்!!!                     11. இன்றுடன் வாழ்வோம்!   மாற்றம் ஒன்றே மாறாதது இவ்வுலகில்,   மாற்றம் நல்லவை நோக்கி அமைய பெற வேண்டும் அவ்வளவு தான்!!!    நாளையை நினைத்து இன்று குழம்பினால்,   இன்றைய நாளை நாம் கோட்டை விட்டு விடுவோம்!!!  மகிழ்ச்சியான நினைவுகளை மட்டும் மீண்டும், மீண்டும் நினைவில் கொள்வோம், அது நம்வாழ்வை என்றென்றும் புதுபித்து உயிர்பிக்கும்!!    எங்கு சென்றாலும் உன் தனித்தன்மையை விட்டுவிடாதே!  அது மட்டுமே மற்றவர்கள் மனதில் உன்னை பதியவைக்கும்!!!   வாழ்த்துக்கள்!!!                                      12. வாழ்க்கை வாழ்ந்து பார்!   வாழ்க்கை மிகதுரிதமான பயிற்சி, அதில் நம்முயற்சியின் விளைவே வெற்றி, பல சோதனைகளை புன்னகையுடன் கடந்து,   வழிவிட்டு,பொறுமை தவராமல் சகித்துகொண்டு, வளைந்து, நெளிந்து, முன்,பின், சென்றடைவதே இலக்கு, சோதனைகள் பலவழிகளில் வரினும் அசராதே! மனம் திடமேனின் மாசு ஏதுமில்லை!!! எழுந்திரு,கடமை செய், ஏழ்மை எட்டா தூரம் செல்லும்... துரத்திவிட்டு இளைப்பாருவோம்,   அதுவரை என் நினைவும்,கனவும்,ஊக்கமும் நீயே!!!                                      13. இலட்சியம்!   எரிவாயு எந்த நிலையிலும் தனது எரியும் தன்மையை இழப்பதில்லை,     நாமும் கொண்ட லட்சியத்தில் துளி கூட பிசகாமல் இருப்பின் வெற்றியே!!!                                                          14. தளர்ந்துவிடாதே! துளிர்விடு!   வாழ்க்கையில் எதற்கும் தளர்ந்துவிடாதே!!! கட்டித்தங்கத்திற்கு மதிப்பு அதிகம், மற்றவைக்கோ கழிவு அதிகம்! தடைகள் மலையென இருந்தாலும், அவற்றை தாங்கிக்கொள்ளும் பூமி நாமாக இருப்போம்! இறைவன் கொடுத்த கொடை நல்அறிவிருக்க! நல்ல அங்கமிருக்க! ஊனம் நம் எண்ணத்தில் எதற்கு?  பொறாமை நம் குணத்தில் எதற்கு? சோம்பல் நம் செயலில் எதற்கு? களைப்படைந்தால் இளைப்பாறு, இலக்கை விடாதே! நோக்கம் நல்வாழ்வு! அதை நோக்கியே நம்பயணம் நடைபோடட்டும்! விழி.எழு.விருட்சமாகு!!!                                  15. ஆண்மை தவரேல்!   அல்லலின் ஆதிக்கம் அதிகமானாலும் கலங்காதே, தன்நம்பிக்கையில் உன்தலை உயரே நோக்கட்டும், பிரச்சனைகளை ஒரு தாமரை போல் கையாளுக! எத்தனை முறை கனமாக நீர் வந்து அமர்ந்தாலும்,   இலை நனைவதில்லை!!!  அல்லலின் ஆற்றலைவிட உன்மனவலிமை ஒருபோதும் குன்றா, விதையாக விளைபடு சூழ்நிலை கடினமோ,   அதனை உன்நம்பிக்கையால் பிளர்த்தெறி, உன் நினைவில் வழி இருப்பின், அது நிஜத்தில் விழிக்கு எட்டும், விழிபிடித்த வழியில் தடம் பதித்து நடைகொள்க,   தூரம் சிறிதே!!!  விழி.எழு.விருட்சமாகு!!!                                    16. புதிய யுகம்!   புதியயுகம் தான் இது, ஆனால் மிகவும் புதிதல்ல!  போராடும் குணம் இயல்பிலே தென்பட்டாதாலோ என்னவோ! இன்றுவரை இடைவிடாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்!  அடிப்படை நலனை உருவிக்கொண்டு, வல்லரசுக்கான வளர்ச்சி பிம்பம் ஏன்? இயற்கைக்கு முரணாக, அதன் அமைப்பை உருகுலைத்து, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, மற்றும் ஸ்டெர்லைட் ஏன்?   இவை அனைத்தும் ஒற்றை நேரத்தில் கற்றை கட்டி முடிக்க முனைப்பது ஏன்?  மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு மமதையில் இருக்காது!  மக்களின் ஐயத்தை போக்கும்! மக்களின் விடயத்தை தீர்க்கும்!  அடுத்த தலைமுறைக்கு சுவாசிக்க நல்ல காற்றையும்,   உண்ண விசமற்ற உணவையும்,   குடிக்க நஞ்சற்ற நீரையும் கொடுப்பது நமது தலையாய கடமை!   கடமை மறவீர்! காலம் கனியும்!  வாய்மையும், உண்மையும் நம்வாஞ்சியால் வெல்லும்!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!  வாழிய வாழியவே!!!                           17. தேங்கிவிடாதே!   ஓடுகின்ற நதியிலிருந்து பிரிந்து சென்று தேங்கிய குட்டை, நதியை பார்த்து ஏளனமாக கேட்டது, ஓடுவதில் என்ன சுகம் என்று? அப்பொழுது அலட்டாமல் நதி கூறியது. நாம் ஓடாமல் என்று தேங்குகிறோமோ, அன்றே அழுக்கடைய துவங்குகிறோம், ஓடினால் ஓடுகின்ற பாதை நம்மை செம்மைபடுத்தி தூய்மையாக்கிவிடும். அதுபோலவே வாழ்க்கையும். உழைப்பவனுக்கே மதிப்பு அதிகம்!!!  சோம்பித்திரிபவன் சமுதாயத்தில் சங்கடப்படுகிறான், கடமையை செய்பவன் களிப்படைகிறான்...  வாழும் வரை ஓயாதே, அப்பொழுதுதான் வளர முடியும்!!! விழி.எழு.விருட்சமாகு!                                    18. இந்த நொடியில் வாழ்வோம்! வாழ்வும் அப்படித்தான், இந்த மனித மனமும் அப்படித்தான்!!!  இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை எண்ணி நினைத்துருகும்! நினைத்தது கிடைத்தால் அதன் நிலையாமையை கண்டு கவலை கொள்ளும்!!! கடந்தவை கசப்பு எனில் அவை நல்அனுபவமாகும், அல்லாமல் இனிப்பு எனில் அவை நல்நினைவுகளாகும்! கடந்தவை நம்மை ஒருபோதும் கட்டுப்படுத்தா! அஃதே வருபவை நம்மை ஒருபோதும் பயமுறுத்தா! அவ்விதமே ஏதிர்கொள்ள மனதை பயிற்றுவிப்பாயாக!!! இருக்கும் ஒவ்வொரு  நொடியையும் முழுமையாக உணர்க!!! இந்த நொடி வாழ விளைவோம்!!! விழி.எழு.விருட்சமாகுக!!!                                19. போட்டி உன்னுடனே!   வாழ்வில் யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்,  அதற்கு பதிலாக அவர்களின் குறைகளை களைய முற்படுங்கள்!!! சில நேரம் தவறுகள் சுட்டிக்காட்ட இடம் கொடுக்கலாம், ஆனால் இங்கு யாரும் பூரண சரியானவரில்லை!!!  காலம் கனியும் காத்திருப்போம் நாமாக!!! வாழ்க்கையும் இப்படித்தான். ஓவ்வொருவரும் தான் சிறந்தவன், தேர்ந்தவன், சுத்தமானவன் என்பதை நிரூபிக்காமல். மற்றவரை அடையாளமிட்டு அவர்களை விட சிறந்தவன், என நிருபம் செய்கிறார்கள்!!!! மொத்தத்தில் தன்னிகரற்ற தனித்தன்மையை யாரும் நிரூபிக்கவில்லை! அவ்வாறு  ஒவ்வொருவரும் நிரூபிக்க புறப்பட்டால் அனைவரும் சாதித்தவர்களே!!! தன்னை தன்முயற்சியால் முந்துகிறவனும், அதை நிரூபிப்பவனுமே தன்னிகர் அற்றவன்!!! நீயும் ஆயத்தாமாகு, நானும் ஆகிறேன்! ஆனால் போட்டி உனக்கு நீயும், எனக்கு நானுமே!!! வாழ்த்துக்கள்...                          20. வெற்றியின் வாசற்படி!   தோல்வி எனக்கு கிட்டிய முதல் பரிசு! என்னை அள்ளியனைத்த முதல் வெற்றி! பிறரும் என்மீது அக்கறை கொண்டார் என்றுணர்த்திய தருணம்!  வாழ்வில் நாம் நகர்கின்றோம் என்பதை உணர்த்தும் கருவி! மனிதன் லட்சியப்பாதையில் கால் ஊன்றி நடக்க உதவும் லாடம்!    செழித்து வளர வித்திட்ட தழை உரம்! உழைப்பிற்கு கிடைத்த உண்ணத உத்திரவாதம்! திறம் மேம்பட பயன்படும்  ஊற்றுநீர்!  நீண்டு வளர்வதற்காக ஒடிக்கப்படும் கிளைகள்!    தடுக்கி விழுந்தவர் எல்லாம் தோற்றவரில்லை!   தம்முயற்சியில்லாதவரே தோற்றார்! தடைகள் பலவரினும் அதை தகர்ப்பவர்,  இதிகாசத்தில் அழியா இடம் பெறுகிறார்!  முயற்சி செய் முடியாதது ஏதுமில்லை!   விழி.எழு.விருட்சமாகுக!!!                            21.வாழ்க்கை!   வாழ்க்கை ஓர் அரிய பொக்கிஷம்! அதன் ஒவ்வொரு நாளும் நம்வசம்! வாழ்க்கையில் தென்றல் காற்றாக இருப்போமாக! மற்றவர் இதமாக உணர்ந்துகொள்ள! வாழ்க்கையில் தீபமாக இருப்போமாக! பாதைக்கு வெளிச்சமாய் பிறர் பயணிக்க! வாழ்க்கையில் நீராக இருப்போமாக! பிறபொருள் விளைந்து, தானும் ஓர் உணவாக பயன்தர! வாழ்க்கையில் மரமாக இருப்போமாக! நல்ல காய், கனி, நிழல் மற்றும் பல்பொருளாய் பயன்தர! வாழ்க்கையில் ஒரு புத்தகமாக இருப்போமாக! பிறர் பயின்று அவர்கள் வாழ்வு சிறப்புற!!!  உன்னால் முடியும் என்று ஒருவர் கூறினால்,  அனைவருக்கும் புது உலகம் படைக்கும் துணிவு வரும்! தினம் தினம் புதுமை படைத்திடுவோம், நமது சிந்தனையால், பேச்சால், செயலால்! நாளை நமது கையில் தான்,  இன்று நம்சிந்தனை இலக்கை நோக்கி இருக்கப்பெறின்!!! விழி.எழு.விருட்சமாகுக!                      22. பண்பின் உன்னதம்!   வாழ்வில் நன்றாக பயணிக்க பல்லக்கு தேவையில்லை! நம் இன்பத்தை இரட்டிப்பாக்கவும், துன்பத்தை பங்கிடவும், உற்றவர்கள் இருந்தால் போதுமடா... சிறிய வீட்டில் வசித்த மகிழ்ச்சியை பளிங்கு மாளிகை தருவதில்லை! அறைகள் அதிகமாவதால் மனதின் தூரமும் அதிகமாகிவிடுகிறது! பழைய சோற்றின் சுவை மற்றும் சத்தை, பிட்சா ஒருபோதும் தரமுடியாது! அப்பா, அம்மாவின் உழைப்பையும், கஷ்டத்தையும், பார்த்து வளர்பவர்களுக்கு செலவு கம்மிதான்! அத்தியாவசியத்திற்கும், அனாவசியத்திற்கும் இடையில் இருக்கிறது சேமிப்பு! சேமிப்பு என்பது எதிர்காலத்தை நோக்கிய அச்சமில்லை, உபாயம்! அது ஓட்டத்தின் இடையில் களைப்பை போக்க உதவும் தெம்பு பானம்! பூச்சியத்திலிருந்து ஒன்றாய் உருவாகிவிட்டால், பத்து, நூறு, ஆயிரம், இலட்சம், கோடியாய் பெருகும் காலம் தூரமில்லை! எல்லோருக்கும், எல்லோரின் உயர்விற்கும் ஒன்றே, முழுமூலக்காரணம் அது உழைப்பே!  உறுதியாய் உழைப்போம்! வானம் தூரமில்லை!  விழி! எழு! விருட்சமாகுக!!!                      23. நடுத்தர வர்க்கம்!   நடுத்தர வர்க்கம், மேலும் இல்லை, கீழும் இல்லை! நடுவில் தொங்கும்! விழவும்,ஏறவும், முடியாமல் தவிக்கும், சராசரி மக்களின், தாகக் குரலின், சத்தம் நிசப்தம்! கணக்கு பார்த்து, பகுத்து, வகுத்து, பார்த்து பார்த்து, செலவு செய்து, காத்து சேமித்து, மிச்சம் பிடித்து, நாட்களை நடத்து! கைக்கும் வாய்க்கும், மட்டும் கிட்டும், சம்பளமும் வருவாயும், அவசர செலவும், திடீர் வரவும், அவ்வப்போது வரும்! வசதி வாய்ப்பும், வாழ்வும் சுகமும், மலையென உயரம், ஏறும் வேகம், எறும்பின் வேகம், நம்பிக்கை மட்டும், நாட்களை நகர்த்தும்! கனவு வாழ்வும், செழித்த நாளும், படித்தால் வரும், என்பதே நிஜம், நாடும் வீடும், படித்தால் முன்னேறும்! உழைத்தால் முன்னேறும்! சிறப்பாக படித்து, நம்வீடும், நம்நாடும், முன்னேற முற்படுவோம்! இல்லையெனில் அறிந்ததை, சிறப்பாக செயல்படுத்தி, சீராக முன்னேறுவோம்!   எல்லா வழிகளும், இலக்கை நோக்கி, இருக்கட்டும்!  நெறி தவறிய வழி, படு குழியாகும்! அதுதவிர அத்தனையும், நல்வழியே!!! நடையெடுப்போம்! படையெடுப்போம்! நாளை நமதே!                    24. நிஜம்! நிழலும் நிஜம் தான், சூரியன் மேலிருக்கும் வரை! நினைவுகள் நிஜம் தான், உடலில் உயிர் இருக்கும் வரை! வாய்ப்புகள் நிஜம் தான், தேடல் உள்ளவரை! வெற்றி நிஜம் தான், மனதில் உறுதி உள்ள வரை! வார்த்தை நிஜம் தான், நோக்கம் நல்லதாக உள்ளவரை! அன்பு நிஜம் தான், இரு மனம் இணைந்து இருக்கும் வரை! வாழ்வு நிஜம் தான், நாம் மண்ணில் உள்ளவரை! வாழும் வாழ்வை அன்பினால் ஆள்வோம்! இணக்கம் கொள்வோம்! இன்புற்றிருப்போம்!                                            25. நகரத்துவாழ்க்கை! நகரத்து வாழ்க்கையை நவநாகரிக வாழ்க்கை என்பார் பலர்,  இங்கு வந்தடைபவர்கள் இருவரே,   ஒருவர் கனவுகளையும், மற்றொருவர்   கடன்களையும் சுமந்து வருபவர்களே!!!   எல்லாம் இங்கு காசே!!! காலை முதல் மாலை வரை,   மல்லிகை முதல் மனிதம் வரை.   ஓடு,ஓடு இடைவிடாமல் ஓடு   லட்சியம் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் வழி ஒன்றே!!!   இங்கு காலம் பாராத உழைப்பிற்கே ஊதியம் அதில் பகலுமில்லை, இரவுமில்லை,   பனியுமில்லை, மழையுமில்லை, எந்நிலை உயரும் என்ற நம்பிக்கை மட்டுமே!!!    தன்னை நம்பி! தன் உழைப்பை நம்பி! கனவுகளையும் கடன்களையும் பூர்த்தி செய்ய ஓடுபவர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை இந்நகரம்!!! மொத்தத்தில் அனைவரின் கனவுகளினால் தூங்காமல் விழித்திருக்கிறது இந்நகரம் இப்பொழுதும் எப்பொழுதும்!!!           26. மாற்றம்!   மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை, ஒவ்வொரு மாற்றமும் தீர்க்கமாக சொல்லுகின்றன! குழந்தையில் மழலை மொழியாய் மாறின! பள்ளி சென்றதில் கிறுக்கல்கள் எழுத்தாய் மாறின! ஓடித்திரிந்ததில் நாட்கள் வேகமாய் மாறின! சற்று வளர்ந்ததில் எல்லாமும் கண்ணெதிரே மாறின! வளர்ச்சியடைந்தேன் தேகம் மாறின! பருவமடைந்தேன் தோற்றம் மாறின! படித்து பகுத்தேன் அறியாதவை மாறின! காதல் கொண்டேன் பார்வை மாறின! பணியில் அமர்ந்தேன்  வருமானம் மாறின! உறவுகள் கண்டேன் பொறுப்புகள் மாறின! காலம் மாற, மாற! ஆண்டுகள் ஏற ஏற! எல்லாமே மாறிக்கொண்டே செல்கின்றன! மாற்றம் தொடர்வதால் பூமியும் இடைவிடாமல் சுழல்கிறது போலும்! இரவு,பகலாய் பருவ காலங்களாய் மாறி மாறி துரத்துகிறது! ஓட்டம் நின்றபாடில்லை!   பூமிக்கே இந்த நிலை எனில், நமக்கு என்ன விதி விலக்கா? மாற்றத்தில் பங்கு கொள்வோம்! மாற்றம் நல்லன விளைவிக்கும்! நம்புவோம்! நம்நிலை உயர மாற்றம் வழிபயக்கும்! மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் இன்றும் என்றும்!              27. நல்லகாலம்! இனி நல்லகாலம்... இனிப்பான காலம்... இளமையான காலம்... களிப்பான காலம்... நமக்கான காலம்... உழைப்பவர்க்கான காலம்... உன்னதமான காலம்... உற்சாகமான காலம்... உலகம் போற்றும் காலம்... ஊக்கமான காலம்... நமது எண்ணம்போல் வாழ்வு செழிக்கும் காலம்... கனவுகள் நிறைவேறி வண்ணம் கொழிக்கும் காலம்! வாழ்வில் தென்றல் சுழன்றடிக்கும் காலம்! தனங்கள் பூத்துக்குலுங்கும் முன்பனிக்காலம்!  காலம் நமது எண்ணங்கள் போலே ஒளிரும்! எண்ணங்களை செதுக்குவோம் ஒளிமயமாக்குவோம் எதிர்காலத்தை!!! வாழ்க வளமுடன்…                                  28. தனித்துவம்!   இயல்பாய் இருப்பதும் விசித்திரம்! இயல்பாய் நடப்பதும் விசித்திரம்! தனித்துவம் இழப்பதே, ஓடும் காலத்தின் விசித்திரம்! நம் நல்எண்ணங்களை மழுங்கடித்து! நம் சிறப்புகளை அபகரித்து! நம் வளங்களை சுவிகரித்து! நம் அடையாளம் அழிக்கப்பட்டால், கூட்டத்தில் ஒருவரே நாம்! அதற்கே இவ்வுலகமும், ஆதாயக்காரர்களும் துடிக்கிறார்கள்! தன் பலமும், தனித்துவமும் விட்டுக்கொடுக்காத மனிதன்! ஓர்இளவரசனாக இருக்கிறான்! இளவரசனை இரவல் காரனாக, மாற்றத்துடிக்கிறது இவ்வுலகம்! இனம் கண்டுகொள், உன் பாதையில் நீ செழித்து வளர்க! முடிந்தவரை கரம் கொடுத்து உதவுக! நமது தனித்துவம் அடம்பிடிப்பது என்றால், நினைப்பது கிடைக்கும் வரை தீரா உழைப்பு வேண்டும்! நமது தனித்துவம் ஓவியம் வரைவதென்றால், மனதில் நீங்காத கற்பனை உணர்வு வேண்டும்! தனித்துவம் பிரிந்து நிற்பதற்கில்லை,  சிறந்து விளங்குவதற்கு!  நவரத்தினத்தில் ஓர் வைரம் போல்! ஒன்பதையும் சேர்த்து பார்ப்பின் வைரமும் ரத்தினமே, ஆனால் தனித்து பார்பின் அதன் மதிப்பும் விலையும் அதிகம்!  அதுவே! தனித்துவம்! முயற்சி இல்லா வித்து உரமாகும்! முயற்சியுடைய வித்தோ மரமாகும்! மரமா? உரமா?    29. முடியும்!   முடியும் என்பதற்கு உதாரணமாய் இரு! இயலும் வரை முயன்று கொண்டிரு! தவழும் குழந்தைக்கு நடை வெற்றி! துவழும் மானிற்க்கு ஓட்டம் வெற்றி! பயிலும் வித்தைக்கு போட்டி வெற்றி! முதல்முறை ஜனித்தோம் இப்புவியில் வெற்றி! ஒவ்வொரு முறையும் முயன்றோம் இவ்வாழ்விற்கு வெற்றி! நம் பிறப்பிற்கான பலனே யாரும் நம்மை, நம்பாத வேளையில் நம்கால்களில் தானே நிற்பதே! இருக்கும் நாட்களில் உதாரணமாய் வாழ்வோம்! நம்புவோம் இவ்உலகம் நம்வசம்! முடியும் என்றால் இன்றும், என்றும் நமதே!                                         30. வாழ்க்கைப்பயணம்!   வாழ்க்கை பயணம் தொடங்கிய இடத்தில் முடிகிறது சற்று அனுபவங்களுடன்! வாழ்வில் நாம் நாமாக இருப்போம், பிடித்தவர்கள் உடன் பயணிப்பார்கள், பிடிக்காதவர்கள் வழியில் இறங்கிவிடுவார்கள்... இறங்கியவர் இடத்தை இன்னொருவர் நிரப்புவார், இல்லையேல் சில நேரம் காலியான இருக்கையுடனே பயணங்கள் தொடரலாம். துணைக்கு ஆள் இல்லாத பயணம் எல்லாம் வீண் இல்லை! பல நேரங்களில் தனியாக நடப்பவர்கள் வெகுதூரம் பயணிக்கிறார்கள்! தூரம் சிறிதாக தோன்றும் துணை இருப்பின்! கற்றுக்கொண்டே இருந்தால் வாழ்க்கை எளிதே! செல்லும் வழி முழுவதும் நோக்கிச்சென்றால் தொல்லையில்லை! நோக்காவிடின் மேடும், பள்ளமும் புரட்டி புரட்டி போடும்! காலம் என்னும் கருவியில் நாம் செய்யும் பயணம் பதிவாகிறது! பதியும் படி வழி நெடுக நடந்தால் அது காலத்திற்கு சன்மானமே! வேகம் அறிந்து, இளைப்பாறி, களைப்பாறி, பதற்றப்படாமல் பயணிப்போம் வாழ்க்கை பயணம் இனிதே!                          31. நெருக்கடி நிலை!   வாழ்க்கை நெரிசலில் நெருங்கும் பொழுது, நமக்கானவர்களின் தேடல் மிகஅதிகமாவது இயல்பே! துணையில்லா கன்றிற்கு துணையாக யார் வருவார்! இணையில்லா இளைஞர்க்கு இணையாக யார் வருவார்! இணையும் துணையும் பிறப்பதில்லை மனதில் உடன் இருப்பதே! நம்பிக்கை என்னும் உறுதுணையே! சுழலின் மத்தியில் சிக்கியவன் போல் எவ்வளவு எழினும் உதவிக்கு ஓர் கரம் வேண்டும்! அந்த கரம் நம்பிக்கையாய் எல்லோருக்கும் அமைய வேண்டும் தன்னம்பிக்கையாய்! தேனீயைவிட நாம் கூடுதலாக முயற்சி செய்ய வேண்டும்! எறும்பை விட சுறுசுறுப்பாக ஓர் வழி அடைபடின் மற்றோர் வழி தேட வேண்டும்! காற்றைவிட வேகமாக வீசி நல்ல எண்ணம் மனதில் பரப்ப வேண்டும்! நதியின் பாய்சல் கடலை நோக்கியே அதுபோல் உனது பாய்ச்சல் இலக்கை நோக்க வேண்டும் நாம் காணும் இடரான வழியை சீராக்கினால் பயணம் துரிதப்படும்! விவேகமாய் விரைவாய் பயணிப்போம், சீரான வேகம் கொள்வோம் இலக்கு ஒன்றே குறியாகும் தடைகளல்ல!                            32. ஆணிற்கு வேண்டிய மனம்!   களம் புக காத்திருக்கும் தோள்! கயவர்களை வீழ்த்த இருக்கும் தோள்! ஒரு போதும் பாரத்தினால் ஓயாத தோள்! இடுக்கன் தாங்கி நிற்கும் தோள்! சினம் கொண்டவன் சீரி வந்திடினும், பகை கொண்டவன் கடலாய் வந்திடினும், தகர்க்க முடியாத பாறை இவன்! அடக்க முடியாத காளை இவன்! எதிர்க்க முடியா வீரன் இவன்! எவன் அவன் தன்னை அறிந்தவன்! உனது சக்தி நீ அறிந்திருந்தால்! அது பல்கி பெருக பயின்றிருந்தால்! எதிரில் பார் வரின் அஞ்ச வேண்டாம்! உனது பலம் நீ அறிந்திருந்தால்! எதிரில் புயலே வரினும் அச்சம் வேண்டாம்! நிலம் தன்னில் கால் ஊன்றி நில்! மனம் தன்னில் நம்பிக்கையுடன் நில்! களம் தன்னில் உயரிய யுக்தியுடன் நில்! முடிவினில் வெற்றியுடன் நில்!                        33. குறையில்லா மனிதன்!   குறையில்லா மனிதன் உண்டா இவ்வுலகில்? நம் எதிரில் உள்ளவர் குறையில்லாதவரே நமக்கு! நாம் அடுத்தவர் தட்டையே எப்பொழுதும் நோக்குகிறோம்! நமது தட்டை நாம் எப்போது பார்க்கின்றோமோ, அன்றிலிருந்து குறையில்லை, ஏனென்றால் நம்முடையதோ அக்ஷயபாத்திரம்! எதுவாகினும் அது நம்மிலிருந்து துவங்குகிறது! நமது எண்ணம் எப்படியோ அதுவே நமது சூழ்நிலை! நமது சூழ்நிலை எப்படியோ அதுவே நமது செயல்! நமது செயல் எப்படியோ அதுவே நமது வெற்றி! தடைகள் தடையாகவும் இருக்கலாம்! தடைகள் சவால்களாகவும் பார்க்கலாம்! தடையாக தோன்றின் சோகyம், தோல்வியாய் முடியும்! சவாலாக தோன்றின் உற்சாகம், வெற்றியாய் முடியும்! விழி திறப்பின்,வழி பிறக்கும்!  விழி திறப்பின்,ஒளி பிறக்கும்!  வாகை சூடுவோம் மனக்கண் மார்க்கமாக!                            34. விசித்திர மனிதர்கள்! இவ்வளவு சுயநலமாகியதா மனிதவாழ்வு? இரக்கம் கொண்ட மனிதர்கள் அற்ப சொற்பம் தானா? இன்றளவில் இரக்கம் குடும்பத்தினர் மத்தியிலே கூட இல்லை என்றாகின! அக்கறை கொண்ட பால்ய உறவுகள் கூட பணத்தின் பெயரால் பகைத்து நிற்கின்றன! பகைவன் கூட நம் வளர்ச்சியில் ஆர்வப்படுவார் ஆனால் பக்கத்து வீட்டுகாரரிடம் அதுஇல்லை! நான் எனது என்ற குறுகிய வட்டத்தில் சுழலும் இயந்திரமாகின மனித வாழ்வு! ஓடும் ஓட்டத்தில் வழியில் காணும் வித்தைகளில் சற்று இளைப்பாறி இதுதான் வாழ்வாகின! பொருட்களை சேர்க்கின்ற வேகத்தில் சில மனிதனை கூட சம்பாதிக்க முடியாமல் போகின்றன! உலகமயமாதலினால் ஒருவன் வைத்திருக்கும் பொருளே அவனது மதிப்பு என்றாகின! ஒரு வெள்ளத்தில் பொருட்கள் அடித்துச்சென்றால் எல்லோரும் சமமே! சேர்ப்பதை இதயமாகவும், சேமிப்பை முதலிடாகவும் செய்யின் எதிர்காலம் இரக்கமான காலமாக தோன்றும்... நாளும் சிந்திப்போம் நல்மனிதனாக இருப்போம்...                              35. இடைவெளி! பிறப்பிற்கும் இறப்பிற்கும்மான இடைவெளி வாழ்க்கை! இருப்பதோ எண்ணிவிடும் நாட்கள் இவ்வுலகில்! இதில் எத்தனை சண்டைகள் எத்தனை வேற்றுமைகள்! மனிதன் பறந்து திரியவே பெரிய உலகம் வைத்தான் இறைவன்! மனிதனோ தனக்கொரு சாதி, மதம் என கூட்டம் கண்டு தேங்கலானான்! அதில் அவன் பெருமை இருப்பதாய் உணர்ந்தும் கொள்கிறான்! சாதிகளை சாலையிலே விட்டு விடவும்,  மதங்களை வீட்டின் மதில் சுவரில் விட்டு விடவும், சற்று எட்டிப்பாருங்கள் மனித நேயத்துடன், பிறர் போற்றும் படி வாழ்வு வாழ வேண்டும், வாழையடி வாழையாய் நம்மை யாவரும் வாழ்த்த வேண்டும்! இப்படி ஓர் வாழ்வை ஓவ்வொருவரும் வாழத்துடித்தால்! அந்த இறையும் இறங்கி வந்து வேடிக்கைபார்ப்பார்! வா தோழா வா, நாளை நமதே!                                  36. தேடல்!!! தேடு தேடு இடைவிடாமல் தேடு! நீ எதைத்தேடுகிறாயோ அதுவும் உன்னையே தேடுகிறது! நாம் தேடியது சீக்கிரம் கிடைக்கவில்லை எனில், நாம் தயார் இல்லை என்று அர்த்தம்! தேடிய பொருளை பேண வழி காணவில்லை எனில்!  அது நமது தகுதியின்னைமை ஆகிவிடும் அல்லவா! தகுந்த நேரத்தில் நம் தகுதி பார்த்து, நம்மிடம் வந்துவிடும்! நாம் தேடும் பொருள்! தேடித் தொலைந்திடுவோம்! தொலை தூரமில்லை! தொட்டுவிடும் தூரம்தான்! கண்ணில் பட்டுவிடு! உன்னை இமைகளில் வைத்து காத்திடுவேன்!                               37. எதிர்பார்ப்பு! வாழ்க்கை முன்னேறும் என்பதே நாளும் உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு! கல்வி வாழ்க்கையில் உயர்த்தும் என்பதே ஏழை குடிமக்களின் எதிர்பார்ப்பு! வெளிநாட்டில் வேலை செய்து விரைவில் கடன், கடமைகளை அடைப்பதே பரதேசியின் எதிர்பார்ப்பு! ஆசை பட்ட எல்லாவற்றையும் அழுது வாங்கிவிடலாம் என்பதே குழந்தையின் எதிர்பார்ப்பு! எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்வில்லை யாருக்கும்! எதிர்பார்ப்பு பலிக்க செய்யும் முதலீடு தெரியவில்லை பலருக்கும்! உழைக்காமல் இருந்தால் முன்னேற்றமில்லை! கற்காமல் இருந்தால் உயர்வில்லை! துயில் எழாமல் இருந்தால் எழுச்சியில்லை! சேமிக்காமல் இருந்தால் செல்வமில்லை! எதிர்பார்ப்பு பலிப்பது நம் கையிலே! அதை சிலர் உழைப்பு என்பர், சிலர் புண்ணியம் என்பர், இன்னும் பலர் அதிர்ஷ்டம் என்பர்! எது எப்படியாகினும் உனது முயற்சியே உனது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கருவியாகும்! விழி.எழு.விருட்சமாகுக!                          38. நெருக்கடியின் நெருடல்!   நெருக்கடிகளின் மத்தியில் சிக்கித் தவிக்கும் சராசரி இளைஞன் நான்! நெருக்கடியின் நெருடல் மிகவும் அடர்த்தியாய் அழுத்துகிறது என்னை! நெருடல்களினால் ஈரப்பதம் இழந்து காய்ந்த சருகானேன்! ஆனால்!!! உரச! உரச! பற்றும் என்று ஒருபோதும் அறியேன்! தன்னை தற்காக்க ஈரப்பசை ஒன்றே வழி அதனால் தான் ஏனோ விடாமல் கசிகிறது வியர்வை! வழிகின்ற வியர்வை எல்லாம் விசும்பின் துளியே பக்குவமேனும் மரத்திற்கு நீராய்!!! உளியின் அடியில் பாறை சிலையாகிறது! நெருக்கடியில் மனிதன் மாமனிதனாகிறான்!!! நெருக்கடியுடன் நேரடியாக மோதுபவன் துணிந்தவன்!!! துணிந்தவனுக்கே இவ்வுலகம் வசப்படும்!!! விழித்திரு! விழைபடு!விண் முட்டும் விருட்சமாய் வளர்திடு!!!                                    39. வாலிபம்!   வாலிபம் மரணம் வரை மனிதன் வாழ விரும்பும் பருவமது! மது தரும் போதையும், மதி கெடும் பேதையும் விலக்கி வைத்திருப்பவர்கள் சிலரே! அவ்வாறு இலரே மாதுவின் மயக்கமாய்! காமத்தில் கலக்கமாயிருப்பர்! இப்படியுமிலரேல் சூதிர்க்கு அடிமையாய், நேரவிரயமாக்கும் வீரராய் வீற்றிருப்பர்! இம்மூன்றிலிருந்து தப்பியவன்! வாலறிவன்! ஐம்புலத்தை அடக்கி ஆள்பவன்! பாரதி கூறினான் இளமையில் வறுமை கொடியது என்று! ஆனால் இக்காலம் அதற்கு நேர்மாறானது! இளமையில் வறுமை ஆகச்சிறந்தது! வறுமை மது, மாது, சூது இம்மூன்றிலிருந்தும், வாலிபனை விலக்கி வைக்கும்! இம்மூன்றிலிருந்து மீண்டவன்! இன்னொரு விவேகா ஆவான்! ஆற்றல் மிகுந்த வாலிபத்தை அடக்கி ஆளும், வல்லமை ஒவ்வொரு இளைஞருக்கும் வேண்டும்!  சோம்பித் திரியாமல்! கற்பவைகளை கற்று! திறமைகளை வெளிக்கொணர்ந்து! அறிவான சமுதாயத்திற்கு வித்தாய்! முளைவிட்டு வேர்பிடித்து! மரமாய் வளர்ந்து பயன்தருக! இந்த உலகம் நமக்கு அளித்த வாழ்விற்க்கு! இரட்டிப்பு பலன்தருக! விழு! எழு! விருட்சமாகுக!    40. சொற்கள்! சொற்கள் குலைவாய் இருப்பின் அன்பை கூட்டும்! சொற்கள் நெகிழ்வாய் இருப்பின் மதிப்பை பெருக்கும்! சொற்கள் கனிவாய் இருப்பின் உள்ளத்தினை சேரும்! சொற்கள் கடினமாக இருப்பின் உறவை உடைக்கும்! சொற்கள் கோபமாக இருப்பின் நட்பை சிதைக்கும்! சொற்கள் சாந்தமாக இருப்பின் அமைதியை தரும்! சொற்கள் இதமாக இருப்பின் ஆறுதல் தரும்! சொற்கள் இனிமையாய் இருப்பின் வெற்றி வரும்! சொற்கள் தமிழாக இருப்பின் தமிழுக்கு அணிசேரும்! நாளும் உதடு உதிர்க்கும் சொல்லே, நமது எதிரியையும், நண்பரையும் தேடித்தரும்! எதற்கும் சல்லடை இல்லை எனில் தொல்லையில்லை! சொற்களை சல்லடையில் சலித்து பேசுக! வாய்மொழி சிறப்பின் வையகம் நமதே!  -செல்வா