[]   தன்னம்பிக்கை தமிழர்கள்  "என்.சி.மோகன்தாஸ்"      மின்னூல் வெளியீடு : http://www.freetamilebooks.com      மூலங்கள் பெற்றது : GNUஅன்வர் gnuanwar@gmail.com     அட்டைப்படம் : manoj kumar  socrates1857@gmail.com     மின்னூலாக்கம் :பிரசன்னா   udpmprasanna@gmail.com     உரிமை : Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.   மூலம் : http://www.lakshmansruthi.com/cineprofiles/ncmohandas1.asp       பொருளடக்கம் தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:1 4  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:2 6  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:3 7  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:4 9  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:5 11  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:6 13  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:7 15  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:8 17  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:9 19  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:10 21  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:11 23  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:12 26  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:13 28  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:14 29  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:15 31  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:16 34  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:17 37  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:18 39  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:19 41  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:20 43  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:21 45  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:22 48  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:23 51  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:24 54  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:25 57  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:26 60  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:27 63  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:28 66  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:29 69  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:30 72  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:31 75  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:32 78  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:33 81  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:34 84  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:35 88  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:36 92  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:37 96  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:38 100  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:39 103  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:40 107  Free Tamil Ebooks.com - எங்களைப் பற்றி 110  உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 115  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:1       தினமலர் -இரா.கிருஷ்ணமூர்த்தி   சமுதாய நோக்கோடு-நேர்மையாகவும்-அதே சமயத்தில் மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தி அவற்றிற்கு ஆட்சியாளர் மூலம் தீர்வு காணும் வகையில் வெற்றிகரமாகவும் பத்திரிகை நடத்தி வருவதற்கிடையில்-     வெறும் பொழுதுபோக்கு அல்லது  ஃபேஷன் என்கிற அளவில் இல்லாமல் தமிழ்மேல் பற்றுக் கொண்டு ஆத்மார்த்தமாய் சங்க நாணயங்களின் ஆராய்ச்சியை செய்து விருதுகள் பல பெற்று தமிழக சரித்திரத்திலும் இடம் பிடித்திருக்கிறார் தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.     தமிழ் செம்மொழியாவதற்கு இலக்கியப் பூர்வமான ஆதாரங்கள் மட்டும் போதாது என்று கருதப்பட்டது. அதன் காரணமாக இவர் ஆராய்ச்சி செய்து சமர்ப்பித்துள்ள இந்த நாணய விஷயங்கள், தொல்பொருள் சான்றாகவும் அமைந்திருப்பது உண்மை. நமக்கும் பெருமை.     எளிமை- வயதை மீறிய இளம்தோற்றம்- தமிழ்ப்பற்று- விஷய ஞானம்- சமூக அக்கறை- தளரா உழைப்பு-வேகம்- விவேகம் என இவரிடம் ஏராளமான சிறப்புகள்.     அந்த நாட்களில் வடிவீஸ்வரம் கிராமத்தில் திண்ணை பள்ளிக்கூடத்தில் இவரது படிப்பு ஆரம்பமாயிற்று.ஆசிரியர் மணலில் எழுதித்தான் சொல்லித் தருவார்!     ஒருவருடம் கான்வென்ட்! பிறகு எஸ்.எல்.பி. இங்கிலீஷ் பள்ளி! எஸ்.எஸ்.எல்.சி. வரை படிப்பில் ஆர்வமில்லாமல் சுமாரான மாணவராக இருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இண்டர்மீடியெட்  சேர்ந்ததும் வியக்கத்தக்க மாற்றம்!     இயல்பிலேயே கணக்கின்மேல் பிணக்கு என்பதால் இரண்டாம் குரூப் எடுத்து மெடிக்கல் சேரும் லட்சியத்தில் இவரது படிப்பு ஆர்வம் அதிகமாயிற்று.      அதன் பலன் - முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இருவரில் ஒருவர் எனும் பெருமை இவருக்கு! இருந்தும் கூட மெடிக்கல் சீட் கிடைக்காமல் அழகப்பா கல்லூரியில் பி.எஸ்.ஸி (ஜியாலஜி) சேர்ந்து தமிழ் மாநிலத்திலேயே முதல் மாணவராக வெளியே வந்தார்.       இதற்கிடையில் இளம் வயதிலேயே  1953ல் இவருக்கு திருமணம்! திருமணத்தை தன் படிப்புக்கு  தடைக்கல்லாக ஆக்கிவிடாமல் கிருஷ்ணமூர்த்தி எம்.ஏ.(ஜியாலஜி) பிரசிடென்ஸி கல்லூரியில் முடித்தார். அப்போது மெரிட் அடிப்படையில் அவருக்கு அரசாங்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது.     ஆனால் அதை மேல்படிப்புக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை. வேகமாய் வளர்ந்து வந்த தினமலர் பத்திரிகையை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு!     ``ஜியலாஜி பட்டதாரியாக அரசாங்க வேலை பார்த்து சாதிப்பதை விட பத்திரிகை துறையில் நிறைய சாதிக்கலாம். நம் மக்களுக்கும் தொண்டு செய்யலாம்’’ என்று தந்தை திரு. இராமசுப்பைய்யர் சொன்ன வாக்குகளில் இருந்த உண்மை இவரை பத்திரிகை துறை பக்கம் திருப்பிற்று.     உப்பு உற்பத்தி தொழில் செய்து வந்த மறைந்த திரு.ராமசுப்பைய்யர் 1951ல் தினமலர் நாளிதழை ஆரம்பித்தார். முதலில் திருவனந்தபுரத்திலிருந்து அச்சான பத்திரிகை தமிழ்நாடு தனி மாநிலமான பிறகு 1957 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது.     தச்சாநல்லூரில் இயங்கிய அந்த நாட்களில் இன்றுபோல வசதிகள் இல்லை. கையால் அச்சு கோர்ப்பு - சிலிண்டர் மெஷின்! மின்சார தட்டுப்பாடு! ஜெனரேட்டர்களும் கிடையாது!     திருநெல்வேலியில் வேறு தமிழ் நாளிதழ்கள் இல்லாததாலும் மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தியதாலும் 3 ஆயிரம் பிரதிகளில் ஆரம்பித்த பத்திரிகை வேகமாய் உயர ஆரம்பித்தது.     டெலிபோன், ரேடியோ மூலம் செய்திகள் சேகரித்த அந்தக் காலத்தில் நெல்லையில் முதன் முதலில் டெலிபிரிண்டரை பயன்படுத்தியது இவர்கள் தான்.      1962 ல் மேல்நாட்டு மிஷின்கள் வரவழைத்து அலுவலகம் சென்னையில் உள்ள வண்ணாரபேட்டைக்கு மாறி- மதுரை வரை விற்பனையாயிற்று.       இன்று என்றில்லை - கட்சிக்காரர்களின் மிரட்டல் அந்த நாட்களிலும் இருக்கவே செய்தது. அரசியல்வாதிகளின் மக்கள் விரோத செயல்களை வெளிப்படுத்தும் போது ரெளடிகளை அனுப்பி `பதம்’ பார்க்கிற கலாச்சாரத்தையும் எதிர்கொண்டு- தினமலர் வளர்ந்திருக்கிறது. எதிர்நீச்சல் தினமலருக்கு புதிய விஷயமல்ல!      தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:2     திருச்சி பதிப்பு 1966ல்!         தினமலர் தி.மு.கவுக்கு எதிரானது என கலைஞரிடம் ஒரு தவறான தகவல் தந்து - 1969 அவரது ஆட்சியில் அரசாங்க விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன.       ஏகப்பட்ட நிதி நெருக்கடிக்கிடையில் சின்னச் சின்ன கோர்ட் விளம்பரங்களை போட்டு சமாளித்ததை கிருஷ்ணமூர்த்தி இன்றும் நினைவு கூர்கிறார்.       1972ல் எம்.ஜி.ஆர் தனியாய் கட்சி ஆரம்பித்த போது தினமலருக்கும் ஒரு  திருப்புமுனை! பரபரப்பாய் விற்பனை! அது வளர்ந்து வளர்ந்து சென்னை, மதுரை, ஈரோடு... என பரவி இன்று 10 பதிப்புகள்!     படித்தது ஜியாலஜி என்றாலும் கூட கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ்மேல் ஆர்வம் அதிகம். தமிழ் எழுத்துகளை கம்போஸ் செய்வதில் ஏன் இத்தனை சிரமம் என இவர் ஆராய்ச்சியில் இறங்கினார். அதற்கு தமிழாசிரியர் ராமமூர்த்தி இவருக்கு உதவி செய்தார்.      கல்வெட்டு, வட்டெழுத்து பற்றி இவர் படித்து, நேரில் போய் பார்த்து ஆராய்ச்சி செய்து வட்டெழுத்து பற்றி மூன்று புத்தகங்களுக்கு எழுதியிருக்கிறார்.      இந்த ஆர்வமே இவர் பின்னாளில் நாணயங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்க காரணமாய் அமைந்தது.       கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ் எழுத்து சீர்திருத்த இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டு 1978ல் ஏகப்பட்ட எதிரிப்புக்கிடையே பெரியாரின் எழுத்தை தினமலரில் புகுத்தினார்.       1987ல் கம்ப்யூட்டர் வந்த பின்பு- தமிழ் எழுத்து கம்போஸிங்கிற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்த நிலைமை.        கிருஷ்ணமூர்த்தி பூனா கம்பெனியுடன் சேர்ந்து சாஃப்ட்வேர் உருவாக்கி, அவர்களுக்கு இலவசமாய் ஐந்து  ஃபான்ட்கள் தயார் செய்து கொடுத்தார். பூனா கம்பெனி அவற்றை வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்திருக்கிறது.        ஆர்.கே.தயாரித்துத் தந்த பிரபலமான ஸ்ரீலிபி எழுத்தும், இவரது தயாரிப்பான கீபோர்டும்தான் இன்னமும் தினமலர் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.         ``அப்பா ராமசுப்பைய்யர் போட்ட அஸ்திவாரம் எங்களுக்கு பலமாய் இருக்கிறது. அப்பா, தமிழ் அபிமானி, மனிதாபிமானியும் கூட அடித்தள மக்களின் தேவைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.          இப்போது என்றில்லை, அந்த நாட்களிலும், தினமலர் சுட்டிக்காட்டியுள்ள மக்கள் பிரச்னைகளைப் படித்து ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது- சந்தோஷமான வெற்றி.  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:3                அத்துடன் தமிழகத்தில் வளர்ச்சியிலும் மேம்பாட்டுக்கும் கூட தினமலரின் பங்கு பெருமளவில் இருக்கிறது என்பது உண்மை. அதற்கு சமீபத்திய உதாரணம்-தெலுங்கு கங்கை கால்வாயில் உள்ள சீர்கேடுகளை தினமலர் படம் பிடித்துக்காட்டி சரிசெய்ய வைத்திருப்பது.          ராஜீவ்காந்தி கொலை- புகைப்படங்கள் தினமலரிலிருந்து தான் மற்ற மீடியாக்களுக்கு விநியோகமானது குறிப்பிட வேண்டிய ஒன்று.          தினசரியில் முதன் முதலில் ஆஃப்செட் கொண்டு வந்தது: நஷ்டம் என்றாலும் கூட, இலவச இணைப்பு இதழ்கள் தர ஆரம்பித்தது என்று இவர்களது `முதல்’ சாதனைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.          பத்திரிகை துறைக்கும் அப்பால் சங்ககால நாணய சேகரிப்பிலும் இவரது சாதனை சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.          1984ல் கோடையில் ஓய்விற்காக கொடைக்கானல் சென்றபோது பஸ் ஸ்டாண்டு அருகே கடை ஒன்றில் ஓலைச் சுவடிகளுக்கிடையே கண்ட செப்பு நாணயம் இவரை ஈர்த்தது.          அதை வாங்கி, அதை விநியோகித்த, மதுரை சையத் இஸ்மாயிலை சந்தித்து அவர் மூலம் குதிரை படத்துடன் -`பெருவழுதி’ என எழுதப்பட்டிருந்த நாணயம் இவரது ஆராய்ச்சிக்கு திருப்பு முனையாயிற்று. அது சங்ககாலப் பாண்டியர் வெளியிட்ட  நாணயம்.“பெருவழுதி” என்ற மன்னரின் பெயர் சங்க இலக்கியத்திலும் உள்ளது.        சங்ககால மன்னர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை, வடநாட்டில் மவுரியர்கள் வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்களைத்தான்  அக்காலத்தில் மக்கள் பயன்படுத்தினர் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வந்ததை தன் கண்டுபிடிப்பால்,அவர்கள் கூறியது தவறு என்று நிரூபித்தார்.        வாரணாசி அகில இந்திய நாணயவியல் சங்க மாநாட்டில் 1984ல் ஆர்.கே. இது குறித்து கட்டுரை வாசிக்க, அதற்கும் அங்கீகாரம் கிடைத்தது.         பிறகு சங்ககால சோழர், பாண்டிய நாணயங்கள் பற்றி புத்தகங்கள் எழுதி தமிழக அரசின் விருதும் பெற்றுள்ளார்.         1986 வரை சங்ககாலச் சேர நாணயங்கள் கிடைக்காமலிருந்து, அந்த ஆண்டு அவருக்கு கிடைத்த நாணயங்களின் பின்புறத்தில் வில்-அம்பு இருப்பதைக் கண்டு சேரர் நாணயங்களைத் தேடத் துவங்கினார்.         கரூர் அமராவதி ஆற்றில் கிடைத்த சங்ககால சேர நாணயங்கள் குறித்து ஆய்வு செய்தார். மாக்கோதை, குட்டுவன் கோதை வெள்ளிக் காசுகளைக் கண்டுபிடித்தார்.         ஆர்.கே லண்டன் போனபோது ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி புரொஃபசர் ஒருவர் பிரிட்ட்டிஷ் மியூசியத்திலிருந்து எடுத்துக் கொடுத்த புத்தகம் இவருக்கு  லேட் ரோமன் காப்பர் காயின்ஸ் ஃப்ரம் கரூர்  மதுரை  நூல் உருவாக்க உதவிற்று .         இதை பார்த்துவிட்டு ராயல் நியூமிஸ்மேடிக்  சொஸைட்டி இவரை அவர்கள் அமைப்பில் ஒரு உறுப்பினராகத் தேர்வு செய்தது. கடந்த நூறு வருடங்களில் எந்த தமிழருக்கும் கிடைக்காத அங்கீகாரம் இது.         தமிழகத்திற்கு வாணிபம் செய்ய உரோமானியர்கள் வரும். முன்னே கிரேக்கர்கள் சேர நாட்டுடன் கி.மு., மூன்றாம் நூற்றாண்டிலே வந்தனர் என்பதை நாணயங்கள் மூலம் நிரூபணம் செய்திருப்பதும் முக்கியமான ஒன்று.        சங்க கால நாணயங்களின் மேல் இவருக்குள்ள பற்றும் ஆர்வமும் அலாதியானது. இதன் மூலம் தமிழ்நாட்டு வரலாற்றுக்கு ஏதோ ஒரு வகையில் தன் பங்களிப்பு இருப்பதில் இவருக்கு ஆத்மதிருப்தி.        ஆர்.கே. தமிழ்நாடு நியூமிஸ்மேடிக்    சொசைட்டி  ஆரம்பித்து இங்கும் வெற்றிகரமாய் கான்ஃபரன்ஸ்கள் நடத்தி வருகிறார்.        ஆரம்ப நாட்களில் இவர் இத்துறையில் இறங்கிய போது கேலி- கிண்டல் பேசி தளர வைத்தவர்களும் உண்டு.        கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நினைத்திருந்தால் தன் பத்திரிகை பலத்தை வைத்து வேறு எந்தெந்த துறைகளிலோ கவனம் செலுத்தி ஆதாயங்கள் தேடியிருக்கலாம்.        கிளப்கள்- அமைப்புகள்- பொழுதுபோக்கு அம்சங்கள் என்று ஓய்வு நேரத்தை செலவிட்டிருக்கலாம்.         ஆனால் தன் பொன்னான நேரத்தை, தமிழர்கள்- தமிழர் வரலாறு- தமிழ்மொழி என அர்ப்பணித்திருப்பது போற்றுதலுக்குரியது.   நல்லி            டாக்டர் நல்லி அவர்களை தள்ளியிருந்து பிரமிப்போடு பார்த்து வந்த எனக்கு அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது - முன்னாள் தொலைக்காட்சி இயக்குனர் திரு.ஏ.நடராஜனும் வண்ணப்பட யோகவும் தான்.            2003 அகில இந்திய அளவில் சிறந்த தொழிலபதிராக - பத்மஸ்ரீ விருது பெற்ற நல்லிக்கு குவைத் ஃப்ரண்ட்லைனர்ஸ் அமைப்பின் மூலம் பாராட்டுவிழா எடுக்க, அணுக ஒப்புக் கொண்டார். குவைத்தில் மேனகா காந்தி தலைமையில் நல்லிக்கு பாராட்டு விழா எடுத்து ஃப்ரண்ட்லைனர்ஸ் பெருமை தேடிக் கொண்டது! அன்று முதல் அவரிடம் அன்பும் பண்புமான நட்பு தொடர்கிறது.             65-ஐ கடந்த நல்லி செட்டியார் என்று தொழில்-வர்த்தக வட்டாரங்களிலும் பொதுவாழ்வு அமைப்புகளிலும் அறிமுகமாகியுள்ள டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் காஞ்சிபுரத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். உத்தரவாதமுள்ள உயர் ரக தரமான பட்டுத் துணிகளுக்கு `நல்லி’ என கூறும் அளவிற்கு, பலரின் தேர்விற்கும் பாராட்டுக்கும் உரிய பெருமையைத் தம் கடின உழைப்பால் தேடிக்கொடுத்தவர்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:4             ’நல்லி’ என்பது இவரது குடும்பப் பெயர். “மார்க்கண்டேய மகிரிஷி” கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா `நல்லி’சின்னசாமி செட்டியார் பட்டுச் சேலை வியாபாரத்திற்காக காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தார். காஞ்சியிலிருந்து ஜவுளி வியாபாரத்தை சென்னையில்  1928ல் முதலில் மயிலையிலும் பிறகு பனகல் பார்க்கிலும் துவங்கினார்.         1953ல் நல்லி சின்னசாமி செட்டியாரின் மகனும், குப்புசாமி செட்டியாரின் தந்தையுமான நல்லி நாரயணசாமி செட்டியார் அவர்கள் தனது 42வது வயதில் புகழுடம்பை எய்திய போது குப்புசாமி செட்டியாருக்கு வயது 12 தான். தாயார் கண்ணம்மா,இரண்டு சகோதரிகள் ஆகியோரை ஆதரிக்கும் பொறுப்பு ஒரு புறம், வியாபாரத்தை கவனிக்க வேண்டிய கட்டாயம் மறுபுறம், இதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி முடித்தவுடன் கல்லூரி செல்லும் வாய்ப்பை இழந்து கடை நிர்வாகத்தை சுமக்க வேண்டிய கட்டாயம். தந்தையார் விட்டுச் சென்ற பணியை, அவரது ஆசியைத் துணையாகக் கொண்டு தொடர்ந்தார். வாடிக்கையாளர்களின் அன்புக்கும்,பண்புக்கும் பாத்திரரானார். ஜவுளி வியாபாரத்தில் இவரை வளர்த்து ஆளாக்கியது இவரது சித்தப்பா திரு. நல்லி ரெங்கசாமி செட்டியார்.          கடின உழைப்பு, நேர்மை, ஊக்கம், தளராத உறுதி,  “செய்யும் தொழிலே தெய்வம்” என்று போற்றுகின்ற தன்மை, நன்னடகம் போன்ற உயர்ந்த குணங்களால் ஆரம்பத்தில் 200 சதுர அடியில் அமைந்திருந்த கடையை நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் இன்று 20,000 சதுர அடிக்கு ஒரு தெருவிலிருந்து மறு தெருவிற்கு எட்டும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கிக் காட்டியுள்ளார்.         கல்லூரிக்குப் போக முடியாமல் போனதே என்ற ஏக்கத்தை தணித்துக் கொள்ளும் விதமாக, தனிப்பட்ட முறையில் நிறைய நூல்கள் வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். இப்படியாகத் தனக்கென தனியாக வீட்டில் ஒரு வளமான நூலகத்தையே அமைத்துக் கொண்டுள்ளார்.          இவரது தொழிலுக்கு உதவிய உபயோகமான சிந்தனைகளைத் தந்தது ஹென்றி ஃபோர்டின் சுயசரிதை, தொழிலில் போட்டிகளை,சிக்கல்களை எவ்விதம் சமாளிப்பதற்கென்ற அறிவை இவருக்கு ஊட்டியது அந்த நூல், தொழிலில் இன்று இவர் தர்மத்தையும்,சத்தியத்தையும் கடைப்பிடிப்பதற்குக் காரணம் காந்தியடிகளின் ``சத்திய சோதனை’’ ஏற்படுத்திய பாதிப்பு, அதே போல இராமகிருஷ்ண பரமஹம்சரின் மொழி அமுதம் இவர் கலைப் பணி மற்றும் கடவுள் பணிகள் செய்வதற்குக் காரணமாக அமைந்தது.          ``நடந்து வந்த பாதையை நன்றியுணர்வோடு எப்போதும் நான் திரும்பிப் பார்த்து, எங்கள் பெரியவர்களை நெஞ்சுருகிக் கண் பனித்துக் கை கூப்புவேன்’’ என நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்கிறார் நல்லி.           இந்தியாவின் பிரபல நகரங்கள் மட்டுமின்றி, கனடா, சிங்கப்பூர், அமெரிக்காவிலும்  `நல்லி’ கிளை விட்டிருக்கின்றது.“கலைமாமணி”  “பத்மஸ்ரீ” “டாக்டர்” முதற்கொண்டு பலவித விருதுகளும் பெற்று அந்த விருதுகளுக்கும் பெருமை சேர்த்து வரும் நல்லியின் எளிமையும்,  குழந்தை போல பழகும் விதமும் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று.           வர்த்தகத்திற்கிடையிலும் கலை, இலக்கிப் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் செய்யும் தொழில் பட்டு என்றாலும் பட்டை விட அழகிய, மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிற பாட்டு இவருக்கு மிகவும் பிடிக்கும். இசையில் பரம ரஸிகர் இவர். ஸ்ரீ கிருஷ்ணகான சபா, நுங்கம்பாக்கம் கல்ச்சுரல் அகாடமி, ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா பிரம்மகான சபா போன்ற இசை அமைப்புகளின் தலைவர்.           சென்னை கன்னிமாரா நூலகத்தின் புரவலர், புத்தகக்கடைகளுக்கும், புத்தகக் கண்காட்சிகளுக்கும் தவறாமல் சென்று வருபவர். புத்தக வெளியீட்டு விழாக்களில் முக்கிய விருந்தினராக எப்பொழுதும் அழைக்கப்படுபவர். பல நூலாசிரியர்களுக்கும் பதிப்பாசிரிகளுக்கும் பொருளுதவி செய்திருக்கிறார். இவரே பல நூல்கள் எழுதியுமிருக்கிறார். அவை பெரும்பாலும் வணிகம்,நிர்வாகம்,வாழ்வியல்  சார்ந்தவை. இவற்றில் சில மராத்தி இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு மாநில அரசின் தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசு பெற்றவை.          இவர் கல்வி கற்றது இராமகிருஷ்ண மடத்துப் பள்ளியில் அங்கே அவர்கள் போதித்த நீதிநெறி, அற வழிச் சிந்தனைகள் இவர் வாழ்க்கைக்கு வழிகாட்டின. அதன்படி இராமகிருஷ்ண மிஷன் பள்ளி நடத்தும் எந்த நல்ல காரியத்திலும் இவரது பங்கு கண்டிப்பாக இருக்கும் கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தா நினைவு மண்டபக் குழுவிலும், கல்வி அறக்கட்டளையிலும் இவர் பங்கேற்று அலை சீராக நடைபெற வழிவகை செய்துள்ளார்.         பழகுவதில் இனிமை, எதிலும்,தெளிவு,எண்ணத்தில் தூய்மை என நற்பெயர் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்.  யாரும் செய்யாததைச் செய்ய வேண்டும், எவரும் நினையாததை நடத்தித் தீர வேண்டும் என்கிற தொலை நோக்கும், திண்மையும் இவரது அரும்பெரும் குணநலன்கள். தொழில் அதிபராக, எழுத்தாளராக,பேச்சாளராக், கலை ரசிகராக, பண்பட்ட நண்பராகப் பல பரிமாணங்கள் கொண்டவர். தன் அனுபவங்களை எளிமையான தமிழில் பகிர்ந்து கொள்ளும் நூலாசிரியர், தெலுங்கு, இந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகள் அறிந்தவர். பல வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு உலகப் பார்வையை வளர்த்துக் கொண்டவர்.           பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஒப்பற்ற மனிதர். வாடிக்கைக்காரர்களை வெறும் வேடிக்கைப் பொருளாகப் பாவிக்காமல், அவர்களை மிகச் சிறந்த நண்பர்களாக சுவீகரித்துக் கொண்டு, தேவையானவற்றைப் பூர்த்தி செய்து மக்களின் நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் பெறுதலே இன்பம் எனும் எண்ணம் கொண்டவர். வியாபாரத்தையும் ஒரு கலையாகக் கண்ணுற்று போற்றி வளர்க்கும் தன்மை இவரது சிறப்பம்சம்.         1928ல் சென்னையில் துவங்கி 72 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் `நல்லி’ யின் நல்ல பட்டாடைகள் நானிலம் முழுவதும் இன்றளவும் மிகவும் சிறப்பாகப் பேசப்படும் பேறு பெற்றுள்ளது என்றால் அது அந்த இறைவனின் பரிபூரண கடாட்சத்தினால்தான் என்றால் மிகையாகாது. பட்டுக்கொரு நல்லி என்ற பெருமைக்குரியவர். அன்பையும், அபிமானத்தையும் அபரிமிதமான மதிப்பையும் பிறர்க்குக் கொடுத்துத்தான் அவற்றைப் பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய பண்பாளர்.            முதலாளி- தொழிலாளி சிறந்த நல்லுறவிற்காத சென்னை ரோட்டரி சங்கம் (2005,2006) இவருக்கு விருதளித்து கெளரவித்துள்ளது.             நல்லி அவர்களின் ஆத்ம  நண்பரும், எழுத்தாளரும் அறிஞருமான சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனரான திரு.ஏ.நடராஜன் நல்லி பற்றி எழுதியுள்ளதில் இங்கு கொஞ்சம்:             பல ஆண்டுகளில் எங்கள் நட்பு வேகமாக இறங்கி இனிமையான நெருங்கிய நட்பாக இன்று முகிழ்த்திருக்கிறது.`அருணோதயம்’ பதிப்பகத்தின் முப்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு அருணன் அவர்கள் முப்பது புதிய நூல்களை வெளியிட்டார். அவற்றில் என் சிறுகதைத் தொகுப்பும், செட்டியார் எழுதிய `வெற்றியின் வரலாறு’ நூலும் இடம் பெற்றிருந்தன. செட்டியாரின் நூல் உருவானதில் எனது அணில் பங்கும் இருந்தது.            செட்டியார் அவர்களை ஒரு வெற்றிகரமான வர்த்தகராக, பெரும் தனவந்தராக நான் பார்த்த தருணங்களை விட, கலைகளின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட ரசிகராக, மனித நேயமிக்க மகத்தான பண்பாளராக அவரைப் பார்த்த தருணங்களே அதிகம். எதிலும் ஒரு பொறுப்பு வேண்டும் என்பன போன்ற சில வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளைத் தனக்குத்தானே வகுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்து வரும் ஒரு இலக்கண புருஷராக நான் அவரைப் பார்த்து தினம் தினம் வியக்கிறேன்’’  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:5             தனக்குக கலைகளில் நாட்டம் வந்தது எப்படி? என்று ஆசிரியர் திரு.சாவி அவர்கள் முன்பு நடத்திய ``சுஜாதா’’ என்ற பத்திரிகையில் செட்டியார் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ``திருப்பதி பிரம்மோத்சவத்துக்குப் போயிருந்த போதுதான் தனக்கு இசை மற்றும் நுண்கலைகள் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டதாகவும், கலைகளைக் கற்க தனக்கு வாய்ப்பின்றி போனாலும் தன் குழந்தைகள் அவற்றைக் கற்க ஏற்பாடு செய்திருப்பதாகவும்’’ அவர் அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அவரது மகனுக்குத் திருமணம் நடைபெற்ற போது அந்த விழாவில் என் மாமனார் திரு.நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள்தான் வாசித்தார். செட்டியாரின் கலையார்வத்துக்கு அந்தக் கச்சேரியே சான்று!.          நூறாண்டு புகழ்பெற்ற ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி சபா, நுங்கம்பாக்கம் கல்ச்சுரல் அகாடமி, கிருஷ்ண கான சபா போன்ற பிரபல கலை அமைப்புகளின் தலைவராக இருந்து கொண்டு செட்டியார் ஆற்றிவரும் கலைப் பணிகள் பற்றி நான் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.          குறிப்பாக டிசம்பர் இசை விழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் செட்டியார் ஆற்றிவரும் ஒரு வித்தியாசமான பணி பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.          ஒவ்வொரு சபாவிலும், எந்தெந்தத் தேதியில், எந்தெந்த நேரத்தில், யார் யார் கச்சேரி செய்கிறார்கள் என்பதைத் துல்லியமாகத் தொகுத்து அதை ஒரு அழகிய கையேடாக அச்சிட்டு இலவசமாக வினியோகிக்கிறார். இந்தக் கையேடு இசை ரசிகர்களுக்கு அளிக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. ஆரம்பத்தில் சில ஆண்டுகள் இந்தக் கையேட்டை வெளியிட்டு வந்த செட்டியார் பின்னர் அதனோடு இன்னொரு பயனுள்ள காரியத்தையும் செய்தார். இசை விழா நிகழ்ச்சிகளின் போது தவறாமல் பாடப்படும் சில முக்கியமான பாடல்கள், கீர்த்தனைகளையும், அவை அமைந்துள்ள ராகத்தையும் குறிப்பிட்டு இன்னொரு கையேட்டையும் தயாரித்து வழங்கினார்; வழங்கி வருகிறார்.          மூத்த இசைக் கலைஞர்களுக்கு அவர் காட்டும் மரியாதை அலாதியானது. குறிப்பாக எம்.எஸ்., செம்மங்குடி போன்றோர் மீது அளவு கடந்த மதிப்பு. ஒருவகையான பக்தியையே அவர் கொண்டிருக்கிறார். அவர்களை சந்திக்கும் போதெல்லாம் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்து அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதில் பெருமைப்படுவார். அவரோடு செல்லும்போது இத்தகைய மேதைகளின் ஆசீர்வாதங்கள் எனக்கும் பல முறை கிடைத்திருக்கிறது. என் வாழ்க்கையின் பெருமைக்குரிய தருணங்கள் அவை.           இயல்-இசை-நாடகம் என முத்தமிழ் மீது ஆர்வம் கொண்டு கலை, பண்பாட்டு ஈடுபாடுகளை ஊக்குவிப்பவர், செட்டியார்.           திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையின் மீது தணியாத ஆர்வம் கொண்டு அவரது ஒலி நாடாக்கள் வெளிவர உதவி செய்திருக்கிறார் பிள்ளையவர்களின் நினைவாக மாபெரும் விழாக்களை சென்னை, கும்பகோணம், டில்லி ஆகிய நகரங்களில் முன்னின்று நடத்தியுள்ளார்.           பட்டுநூலை நேசிக்கும் அளவுக்கு செட்டியார் அவர்கள் நல்ல தமிழ் நூல்களையும் நேசிப்பவர். புத்தங்களின் மீது அவர் கொண்டிருக்கும் காதல் இணையற்றது. உண்மையானது.   தகவல் உதவி `ஸரிகமபதநி’   ஏ. நடராஜன்.           ``தன்னம்பிக்கையும் பெரியார், அண்ணா, காமராஜ், மு.வ.போன்றவர்களின் வாழ்வை படித்து அறிந்து பக்குவப்படுத்திக் கொண்டதும் எனது பலம் என நினைக்கிறேன். எந்தப் பிரச்சினையையும் வெற்றியுடன் அணுகலாம். என்பதற்கு கல்லூரியில் படித்த`குளிர்காலம் வந்தால் வசந்தகாலம் வராமல் போகாது’ என்கிற வரி எனக்கு உதவிகரமாயிருக்கிறது’’ என்று மனம் திறக்கிறார் எழுத்தாளரும், முன்னாள் தொலைக்காட்சி இயக்குநருமான திரு.ஏ.நடராஜன்.            முசிறி தாலுகாவில் திருஈங்கோய்மலை எனும் ஊரில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் 1955 வரை வசதியில்லாமல் முசிறிக்கு நடந்து போய் படித்தவர்.            மணமேடு எனும் ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் நடராஜனுக்கு அப்போது சைக்கிளில் லிஃப்ட் கொடுப்பாராம். இருவரும் திருக்குறள் அனைத்தையும் மனப்பாடமாக சொல்லிக் கொள்வார்கள். 40 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் அந்த பால்ய சினேகிதனை பொதுபணித்துறை பொறியாளராக சந்தித்தேன் என்று மகிழ்கிறார் நடராஜன்.            1955-ல் திருச்சி நேஷனல் கல்லூரியில்  பி.ஏ. பொருளாதாரம் சேர்ந்து, வீட்டு பொருளாதார பிரச்சினையில் ஹாஸ்டலில் சேர முடியாமல் பெரியார் மாளிகை அம்பேத்கார் இல்லத்தில் வீராசாமி எம்.பி. இடம் கொடுத்து படித்தார்.            அந்த நாட்களில் பெரியார் அங்கு வந்து தங்கும்போது. அவரை கவனித்து , அவருடன் பேசும் வாய்ப்பு பெற்று அவரிடமிருந்து தன்மானம்,பணிவு, பிறருக்கு மரியாதை செலுத்துவதையெல்லாம் கற்றுக் கொண்டார்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:6            படிக்கும் போது பல்வேறு துறைகளைப் பற்றி அறிவும் ஆர்வம் இவருக்கு இருந்தது. ஷேக்ஸ்பியர், மில்டன், சிலப்பதிகாரம், இலக்கியம் எல்லாம் இவரை கவர்ந்தாலும் கூட படிப்பில் கோல்ட் மெடல் வாங்கினார்.            இறைவன் அருளாலும், சொந்த முயற்சியாலும் கட்டுரை-பேச்சு-பாட்டு போட்டிகளில் கல்லூரியில் நிறைய பரிசுகளை வென்றிருக்கிறார்.             1959-ல் லக்ஷ்மி விலாஸ் பேங்கில் இவருக்கு வேலை கிடைத்தது. நண்பர் ஒருவர் ரஷ்யன் நாவல்,பிரெஞ்சு,யூரோப்பியன் நாவல்கள் வாங்கிப் படித்து இவருக்கும் கொடுக்க, நடராஜனுக்கு ஆங்கில இலக்கியங்கள் மேலும் ஆர்வம் திரும்பிற்று.            அண்ணா,கலைஞர், மு.வ.,ஜெயகாந்தன், சுஜாதா எழுத்துக்களுக்கு இவர் ரசிகர். 1960-ல் சென்னைக்கு மாற்றலாகி அங்கு திருவல்லிக்கேணி உடுப்பி கிருஷ்ண மந்திரத்தில் செய்தித்தாள் எழுத்தாளர் கா.நா.சு.,வுடன் படித்து, பின்னால் 1984-ல் இருவரும் சேர்ந்து விருது பெற்றதை நினைவு கூர்கிறார்.            அந்த கால கட்டத்தில் கர்னாடக இசைக் கச்சேரி, பொதுக்கூட்டங்கள், கன்னிமரா லைப்ரரி என்று பல விஷயங்கள் இவரது மூளையில் பதிவாயிற்று. சம்பள பணத்தை வீட்டில் கொடுத்து விட்டு தன் அதிகப்படி செலவுக்காக நடராஜன் துணுக்குகள் எழுத ஆரம்பித்தார்.            பிறகு திருச்சி வானொலி நிலையத்தில் வேலை கிடைத்து, துறைவன்,சுகி சுப்ரமண்யம், மீ.ப, சோமு போன்ற ஜாம்பவன்களுக்கு மத்தியில் மிரண்டு, பிறகு சிறுகதைகள். நாடகங்கள் எழுதி திறமையை வெளிப்படுத்தி எல்லாரிடமும் மதிப்பை வளர்த்துக் கொண்டார்.            மும்பை,கோவை, பெங்களூர், சென்னை வானொலிகளில் பணி புரிந்து பிறகு தொலைக்காட்சியிலும் பத்து வருடங்கள் சாதனை! ரிடையரான பிறகும் கூட நடராஜன் எப்போதும் பிஸி!            கலை,இலக்கியம் இசை,நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு இவரது பங்களிப்பு உண்டு. திருப்பணி,திருமணம், புத்தக வெளியீடு என்று இந்தியா முழுக்க பயணித்துக் கொண்டிருப்பவர். தற்போது ஹியூமன் ரிசோர்ஸஸ் மற்றும் ஹெல்த்-ஃபேமிலி வெல்ஃபேர் மத்திய அரசு கமிட்டிகளில் உறுப்பினராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.           நடராஜன் ஒரு விஷயத்தை செய்ய தீர்மானித்து விட்டால், அதில் தீவிரமாய் இறங்கி விடுவார்.           `பாதங்கள் நடக்கத் தொடங்கி விட்டால் பாதை மறுப்பு சொல்வதில்லை’ என்பது இவருக்கு வேதவாக்கு. வேகம்,விவேகம், நேர்மை,இவரது விசேஷ குணம்.           பதவியில் இருந்தபோது சரி,பிறகும் சரி பிறரிடமிருந்து இவர் காபி,டீ கூட வாங்கிக் குடித்ததில்லை. கொடுத்து மகிழும் குணம்!           திருச்சி வானொலியில் பல புதுமைகள் செய்து மக்களை கவரச் செய்தது போல சென்னை வானொலியில் பிரச்சினைகளைச் சொல்லி பத்திரிகையாளர்கள் மூலம் தீர்வு கண்ட நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றது.           ஏற்ற காரியத்தை செயல்படுத்தும் முயற்சி ஆத்மார்த்தம்,உத்வேகம்,கெளரவம் பார்க்காமல் மீடியாவிற்காக பலரையும் சந்தித்து திறமையானவர்களை தேடிப்பிடித்து வாய்ப்பு கொடுத்து சாதனை பல செய்திருக்கிறார்.        பெங்களூரில் கன்னடம் பயின்று அங்குள்ளவர்களை கவர்ந்து, அங்கு வானொலியில் முதன் முதல் வர்த்தகச் ஒலிபரப்பு ஆரம்பித்தது இவர்தான்.         தனிப்பட்ட நபரை, மொழியை, நிறுவனத்தை வெறுப்பதோ,துவேசம் கொள்வதோ இவருக்கு பிடிக்காது `எதிலும் நல்லதைப் பார்ப்பவருக்கு சலிப்புமில்லை-சங்கடமுமில்லை’ என்கிற கீதை வாசகம் இவருக்கு பாதை.         தனக்குக் கீழ் உள்ளவர்களையும் அலட்சியப்படுத்தாமல் அவரது திறமையை மதித்து, ஊக்கப்படுத்தி அவர்களின் தவறுகளை மன்னித்து, கண்டிப்போ-பாராட்டோ-தனியாக அழைத்துச் சொல்வது இவரது இயல்பு.        படிப்பதும் எழுதுவதும் இவரது பொழுது போக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், தமிழகத்தின் அனைத்து பகுதிகள் என பயணித்துள்ள நடராஜன் உலகத்தின் 75 சதவிகிதத்தை சுற்றிப் பார்த்திருக்கிறார்.        கலைக்கும் கல்விக்கும் உதவியதும், வாய்ப்பு கொடுத்தாலும் இவருக்கு திருப்தி தரும் விஷயங்கள். திருக்குறள் மேல் உள்ள பற்றில் நடராஜன் தன் சொந்த ஊரில் திருவள்ளுவருக்கு ஆலயம் கட்டி சிறப்பித்திருக்கிறார்.          ``தீதும் நன்றும் பிறதர வாரா           நோதலும் தணிதலும் அதனிலும் இலமே           ஆதலால் பெரியோரை வியத்தலும் இலமே           சிறியோரை இகழ்தலும் இலமே’’  என்பதை வேதவாக்காக எடுத்து, சக்திவாய்ந்த மீடியாவில் பெரிய பொறுப்புகளில் இருந்தும் கூட யாரும் எந்த குற்றமோ பழியோ சொல்லி விடாத அளவிற்கு நியாயமாய்- நேர்மையாய் செயல்பட்டு-முடிந்த அளவிற்கு இன்றும் சமூகத்திற்கு உதவிகரமாய் இருக்கும் இந்த முசிறி நடராசர் ஓர் ஆச்சரியம்.         இரட்டையர்களோ என்று வியக்கும் வண்ணம் கலை,இலக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொள்ளும் நடராஜனும், நல்லியும் நட்புக்கு மிக சிறந்த உதாரணம்.         2003இல் நல்லி பத்மஸ்ரீ பெற, அகில இந்திய அளவில் பத்மஸ்ரீ பெற்ற ஒரே ஒரு தொழிலதிபரான நல்லியை குவைத் அழைத்து Fronliners        அமைப்புமூலம் பாராட்ட விரும்பினோம். உடனே நடராஜன் அதற்கு ஏற்பாடு செய்து குவைத்தில் மேனகா காந்தி நிகழ்ச்சியில் நல்லிக்கு பாராட்டுவிழா நடத்தியதில் குவைத் தமிழர்களுக்கெல்லாம் பெருமையாயிற்று.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:7         காலைக்கதிர் வாரக்கதிர்,டிசம்பர் 2003      கருமுத்து தி.கண்ணன்;        ``உயிரோடு இருப்பவர்கள் எல்லாம் வாழ்கிறவர்கள் அல்லர். உயிரோடு பலர் இருக்கிறார்கள்.சிலர் மட்டுமே வாழ்கிறார்கள்.`வாழ்வாங்கு வாழ்தல்’ என்ற வள்ளுவர் வாக்கிற்கு `வாழவேண்டிய முறைப்படி வாழ்தல்’ என்பது பொருள்.        இது –டாக்டர் ராதா தியாகராசன் அவர்களின் `ஆலை அரசர் கருமுத்து தியாகராசர்’ புத்தகத்திற்கு திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கொடுத்த அணிந்துரை வாக்கு.          சென்றநாள் மனதில் வைத்து          சேர்த்ததையெல்லாம் கல்விக்காக          செலவிட்டானே – நாம் இனி          காண்பதென்னாள்       இது கலை தந்தை திரு.கருமுத்து தியாகராசர் அவர்கள் மறைந்த போது உதிரம் சொட்ட கவியரசு கண்ணதாசன் பாடினது.         மதுரையில் கல்வி, தொழில், இறைபற்று, நாட்டுப்பற்று போன்ற உன்னத வழிகளை தேர்வுசெய்து அந்த பாரம்பர்யத்தை தெளிவோடு காத்துவரும் திரு.கருமுத்து தி.கண்ணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு தினமலர் மூலம் கிடைத்தது.         இவர், நிறைகுடம் என்பதிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்-எல்லா வளமும்  பெற்றிருந்தும் கூட- அமைதி அடக்கம்!சிந்தையிலும் செயலிலும் ஒரு தெளிவு! வலியோர்-எளியோர் என பாராமல் அனைவரையும் மதிக்கும் பண்பு!         ஆழமாய்- அதே சமயம் அளந்து அளந்து-அனாயசமாய் அதேசமயம் அனாவசியமாய் வார்த்தைகளை விடாத பக்குவம்! விஷயங்களை சுவையாய்-கோர்வையாய் அதே சமயம் கொஞ்சமும் செருக்கில்லாமல் வெளிப்படுத்தும் மாண்பு! மனிதாபிமானம்! ஈகை குணம்! நாட்டுப்பற்று! தமிழ்பற்று!        இந்த நிறை குடத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம் என்கிற தாழ்வு மனப்பான்மை எழுந்தது நிஜம்.        ``நான் புதுசாய் எதுவும் பண்ணிடலை. எங்கள் தந்தையார் ஆலை அரசர் திரு.கருமுத்து தியாகராசர் அமைத்துத் தந்த கொள்கை-குறிக்கோள்-அடித்தளத்தில் அவர் விட்டுப்போன பணியின் தொடர்ச்சிதான் எங்கள் செயல்பாடு’’ என்று தன்னடக்கத்தோடு தன் தந்தையின் நினைவுகளை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.        செட்டிநாட்டில் திருப்பட்டூர் அருகே ஆ.தெக்கூரை சேர்ந்த திரு. தியாகராசர் அந்த நாளில் பத்தாம் வகுப்பு வரைத்தான் படிக்க முடிந்தது. சின்னச்சின்ன வியாபாரங்கள் செய்து கொண்டிருக்கிறார்.       இலங்கை சென்று மார்னிங் லீடர் எனும் பத்திரிகையில் அசிஸ்டென்ட்  எடிட்டராக பணியை துவங்கினார்.        அந்த நாட்களில் பிரிட்டீஷ் காலனியில் தமிழ் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்னைகளை பத்திரிகையில் இவர் வெளியிடவே-        உண்மை நிலையை அறிய கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சமர்ப்பித்த ரிப்போர்ட்டில் தமிழர்களுக்கு எந்தப் பிரச்னையுமில்லை என இருக்கவே-தியாகராசர் துணிச்சலுடன் அதை விமர்சித்து எழுதினார்.       அதன்மூலம் இவருக்கு பலதரப்பினரிடையேயும் நல்ல மதிப்பும் செல்வாக்கும் வளர ஆரம்பித்தது.       1923இல் அவர் மதுரை வந்து மதுரா கோட்ஸில் (அந்த நாளில் ஆர்.வி.மில்) சேர்ந்தார். பிரிட்டீஷ் நிர்வாகத்தின் சீர்கேடுகளை பொறுக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்களை நிர்வாகம் வெளியேற்ற-       ஏழை-எளியோர் –கஷ்டப்படுபவர்கள்-தொழிலாளர்கள் மேல் பற்றும் பாசமும் கொண்ட தியாகராசர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவவேண்டி மீனாட்சி மில்ஸ்-ஐ துவக்கினார்.       பல சிரமங்களை சந்தித்த அந்த மில்-பிறகு பல கிளைகளாக வளர்ச்சி பெற்றது என்றால் அதற்கு காரணம் அவரது நேர்மை- நாணயம்-கடுமையான உழைப்பு.      நாட்டுப்பற்றுடன் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து அவரது வீட்டில் காந்திஜி மண்டப யாத்திரைக்கு வந்தபோது தங்கியிருக்கிறார்.      தொழில்,வியாபாரம் செய்தாலும் கூட-வெறும் சம்பாத்யத்தை மட்டுமே நோக்கமாய் கொண்டிராமல்-தன்னால் படிக்க முடியாமல் போனதே என்கிற ஆதங்கத்துடன் –மக்களுக்கு கல்விக்கண் தரவேண்டும் என்று வருமானத்தில் பெரும்பகுதியை கல்விப் பணிகளில் செலவழித்தார்.       1994இல் தியாகராயர் கல்லூரி ஆரம்பித்தார். பிறகு பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, மேனேஜ்மெண்ட் கல்வி என முழுமூச்சில் பலதும் உருவாக்கினார்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:8           1957இல் அவர் தியாகராஜர் மில்ஸ் ஆரம்பித்தார்.       திரு.கருமுத்து கண்ணன் தங்கள் கல்லூரியில் பி.பி.ஏ.முடித்து தொழிலை கவனிக்க களத்தில் இறங்கினார். அப்பா ஆரம்பித்த மில்லை நவீனப்படுத்தி-ஏற்றுமதியில் கவனம் செலுத்தினார். இதன் நிர்வாக இயக்குனரான இவர்,காலத்திற்கேற்ப மாற்றங்கள் இல்லையென்றால் முன்னேற்றமில்லை என்பதால் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப டெக்னாலஜியில் கவனம் செலுத்தியது தொழிலை வளர்க்க இவருக்கு பலமாக அமைந்தது.      அதன் பலனாய் அகில இந்திய அளவில் ஏற்றுமதிக்காக முதன்மை விருது இந்த மில் பெற்றிருக்கிறது.தொழில்நுட்பம் மூலம் இயந்திரங்களை ஏற்றுமதி தரத்திற்கு மாற்றி 90 சதவிகித உற்பத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த மில்லின் கிளைகள் கோவை, நிலைக்கோட்டை,விருதுநகரில் சுமார் 2000 தொழிலாளர்களின் ஆத்மார்த்த உழைப்பில் செயல்பட்டு வருகிறது.       அடுத்து சுமார் 100 கோடி முதலீட்டில் கடலூரிலும் துவங்கப்படவுள்ளது.       தொழில் வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் வாங்குவதும்,தொழிலாளர்களின் சந்தோஷமும் திருப்தியும் மிகமிகத் தேவை. இவ்விரண்டிலும் இவர் கவனமாயிருக்கிறார்.       இவரது இன்னொரு சிறப்பு-வெகுஜன தொடர்ந்து கஷ்டப்படுபவர்களின் மேல் காட்டும் பரிவு! தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து மனமுவந்து உதவுவதால் இங்கே பிரச்னைகளே வருவதில்லை.       2001 இல் சில காரணங்களால் பல மில்கள் நடத்த முடியாமல் மூடப்பட்ட போதும்-இவர் கலங்கவில்லை சிரமத்தையும் பார்க்காமல் நடத்தினார்.       புதிய சிந்தனைகளை, செயல்பாடுகளை வரவேற்பது இவரது சிறப்பு. பிரச்னைகள் வரும்போது நேர்மையுடனும் நடுநிலையுடனும் அணுகுவது இவரது வழக்கம்.       மனைவி திருமதி உமா குடும்பத்துடன், கல்லூரி ஹாஸ்டலையும் நிர்வகித்து வருகிறார். நகரத்தார் சமூகம் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அவர் இவருக்கு பக்கபலம்.       இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் மூத்த மகள் அமெரிக்காவில் மற்ற இருவரும் மேற்படிப்பில்.       இவர்களது கல்லூரிகளில் டொனேஷன் பெறுவதில்லை. கேபிடேஷன் கட்டணம் கிடையாது மிக குறைந்த கட்டணத்தில் ஏறக்குறைய தர்ம ஸ்தாபனம் போல் இயங்கி வருகின்றன. தமிழக அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் இக்கல்லூரி இடம் பிடித்திருக்கின்றது.       தியாகராஜர் கல்லூரி தமிழுக்கு எப்போதும் முக்கியவத்துவம் கொடுத்து வருகிறது. பல தேசிய தலைவர்கள் இங்கிருந்து உருவாகியுள்ளனர். இங்கு மிகப்பெரிய தமிழ் நூலகம் உள்ளது.       பொறியியல் கல்லூரியில் 90 சதவிகித மாணவர்களுக்கு படிப்பு முடிக்கும் முன்பே பெரிய பெரிய கம்பெனிகளில் வேலை வாய்ப்பும் கிடைத்து விடுவது இன்னொரு சிறப்பு.       ஹனிவெல் கம்பெனியுடன் கூடிய கூட்டு ஒப்பந்தம்,  TIFAC மூலம் வயர்லெஸில் ஸ்பெஷல் ரிசர்ச் சென்டர் என இவர்களின் செயல்பாடுகள் விரிவடைந்துள்ளன.       இக்கல்லூரி பேராசிரியர் ஒருவர், வீணாகும் பிளாஸ்டிக்கை வைத்து தார் ரோடு போட்டால், சுற்றுப்புற சூழலும் காக்கப்படுவதுடன் ரோடும் நல்ல பலம் பெறுகிறது என கண்டுபிடித்து-செயல்படுத்தி-காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.      கருமுத்து கண்ணன் அவர்கள் மீனாட்சி கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக இருந்த சமயத்தில்-      கோயிலின் பாரம்பர்யம் –பழைய சடங்குகள்-கோட்பாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். பக்தர்களுக்கு திருப்தி தரும் வகையில் சுத்தம் சுகாதாரம்!       நடராஜர் சன்னதியின் வெள்ளி பழுதடைந்திருந்ததை முழுமைப்படுத்தினார். அதற்கு முன்பு வரை காண்ட்ராக்ட் விடுபட்டு தரமில்லாமலிருந்த பிரசாத கடைகளை கோயில் நிர்வாகமே ஏற்று நடத்த ஏற்பாடு செய்து –தரத்துடன் கோயிலுக்கு வருவாயும் ஈட்டிதர வைத்தது விசேஷமான செய்தி.       கண்ணன் இந்திய தொழில் கூட்டமைப்பின்  (CII) தென் மண்டல தலைவராக இருந்திருக்கிறார். தென் மாவட்டங்களில் ஏற்படும் சாதி கலவரங்களுக்கு காரணம் வேலையின்மையே என்றும், இளைஞர்களுக்கு எந்தெந்த பகுதிகளில் எப்படி வேலைவாய்ப்பு அமைத்து தரலாம் என்றும் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:9          நம்நாடு- நம் கலாச்சாரம் உலகில் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று. நம் தொன்மையான கோயில்களை இன்று-வல்லரசுகள் ஒன்று சேர்ந்தாலும் கூட கட்ட முடியாது.       இளைஞர்கள் அதிகம் கொண்ட நம் நாட்டில் இளைய சமுதாயம் நம் கலாச்சாரம்-பாரம்பர்ய பலத்தை உணரவில்லை. அவற்றை அவர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.       நம் நாட்டில் எல்லா வளமும் உண்டு. பல துறைகளிலும் நம்மவர்கள் சாதனை படைத்திருப்பதற்காக பெருமைப்படணும். கடமை-கட்டுப்பாடு-நேர்மை-ஒழுக்கமான பழக்க வழக்கங்களுடன் இளைஞர்கள் வளர வேண்டும்.      இவற்றை கல்வி நிலையங்கள் பாதியும் மீதியை குடும்பங்களும் அவர்களுக்கு ஊட்ட வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டும்-என்று திரு.கண்ணன் விருப்பப்படுகிறார்.      கலைத் தந்தையின் பேர் சொல்லும் பிள்ளை!         வீகேஎன்;       ``தொழிற்சாலை தான் எனக்குக் கோயில் இயந்திரங்கள்தான் மூலஸ்தானம். தொழிலாளர்கள் தான் இதன் உற்சவமூர்த்திகளான கடவுள்கள்” என்று மனம் உருகுகிறார் திரு, வி.கே.என்.கண்ணப்பன்.       திருச்சி   BHEL    நிறுவனத்தில் 35 வருடங்களாக ஃபேப்ரிகேஷன் கான்ட்ராக் எடுத்து நடத்தி வரும் வீகேஎன் குரூப்பில் 300 பேர் பணிபுரிகிறார்கள்.திருச்சியில் மட்டுமின்றி தென் மாவட்டங்கள் எல்லா இடங்களிலும் வி.கே.என் பெயர் பிரபலமாகவும் ஆத்மார்த்தமாகவும் உச்சரிக்கப்பட்டு வருகிறது.       வீகேஎன், சிவகங்கை மாவட்டத்தில் கண்டராமணிக்கம் எனும் சிற்றூரைச் சேர்ந்தவர், விவசாயக் குடும்பம். அப்பா பைனான்ஸ் தொழில் பார்த்தவர்.       வீகேஎன் 1970-ல் அண்ணாமலை யுனிவர்சிடியில் சிவில் என்ஜினியரிங் முடித்தார். படிக்கும்போது `நாடு உனக்கு என்ன செய்தது என்று பார்க்காதே, நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று யோசி’ என்கிற ஜான் கென்னடியின் வார்த்தைகள் இவரது மனதில் ஆழமாய் பதிந்தன.       படித்ததுமே ஏதாவது தொழில் ஆரம்பித்து பலருக்கும் வேலை கொடுக்க வேண்டும். என்கிற கனவு இருந்தது. படிக்கும் நாட்களில் திருச்சி பெல் கம்பெனி வழியாய் பயணிக்கும் போது அந்த கம்பெனியின் கட்டுப்பாடு, உழைப்பு, வெற்றி, தொழிலாளர்களுக்கு அவர்கள் மூலம் கிடைக்கும் பலன்களை அறிந்து அவர்களிடம் தொழில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற தாக்கம் ஏற்பட்டது.      ஆரம்ப நாட்களில் தொழில் தொடங்க வள்ளியப்பன் என்பவரிடம் பண உதவி பெற்று சின்னதாய் ஒரு ஒர்க்‌ஷாப் –எட்டு பேருடன் சேர்ந்து ஆரம்பித்தார்.      அது வளர்ந்து வளர்ந்து பெல் கம்பெனிக்கு ஏ.இஸ்ட்ஃபேப்ரிகேஷன் வேலைகளை செய்து தரும் முதன்மை கம்பெனியாக பெயரெடுத்திருக்கிறது.      கான்ட்ராக்டில் போட்டியிருந்தாலும்கூட,`வேறு எவரும் செய்ய முடியாத கடினமான வேலைகளை எங்களுக்குத் தாருங்கள்’ என்று கேட்டு வாங்குவது இவரது இயல்பு.       நேரடி வேலை மட்டுமின்றி சுற்றுப்பக்கம் 200 கம்பெனிகளுக்கு மெஷினரி ஆன்சலரீஸ் சப்ளை பண்ணுகிறார்.      வீகேஎன் –  நின் பலம், எதையும் சாதிக்க முடியும் என்கிற அவரது தன்னம்பிகை, சவாலாக எடுத்து செயலாற்றும் துணிவு, கம்பெனியின் முன்னேற்றத்திற்காக யார் நல்லது சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்.      வீகேஎன் தனக்கு கீழ் இருப்பவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்திருக்கிறார்.`` ஏதாவது தேவை என்றால் நீயே ஓனர் என நினைத்து முடிவெடு, நீ எடுக்கிற முடிவு ஒரு வேளை தவறு என்றாலும்கூட –அதை ஒரே மாதத்தில் சரி பண்ணிவிடலாம். அதனால் துணிச்சலுடன் செயல்படுங்கள். சந்தோஷத்தை அனுபவியுங்கள்.       காசு மட்டுமே உலகமல்ல, மனிதாபிமானத்துடன் செயல்படு, முயற்சியில் ஆத்மார்த்தமும் இருந்தால் இங்கே தீர்த்து வைக்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே கிடையாது.       வீகேஎன் எந்த விஷயத்தையும் மறைத்து வைப்பதில்லை. தனது கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் தொழிலதிபர்களாக வேண்டும். தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பதற்காக 72 பேர்களுக்கு தலா லட்ச ரூபாய் வீதம் வழங்கியிருக்கிறார்.       இது மாதிரி 100 பேர்களுக்கு உதவ வேண்டும் என்பது அவரது நோக்கம். தொழிலாளர்களுக்கு இலவச வீடு, சாப்பாடு என்பது இவரது லட்சியம். இவர் இதுவரை 300 கிராமங்களுக்கு போர்வெல் போட்டு குடிநீர் பிரச்சினையை தீர்த்திருக்கிறார். குடங்கள். வேட்டி சேலை என பல ஆயிரம் பேர்களுக்கு உதவியுள்ளார்.  2000 நலிந்தோர் குடும்பங்களுக்கு திருமண உதவி பள்ளி, கல்லூரிகளுக்கு உதவி! மத வித்தியாசம் பார்க்காமல் ஆலய திருப்பணிகள்!       மதுரை, கன்னியாகுமரி, திருச்செந்தூர்,திருச்சி போன்று 7 இடங்களில் வீகேஎன் கெஸ்ட் ஹவுஸ்கள் கட்டி, தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி முன்பதிவு செய்யும் பொதுமக்களுக்கும் இலவசமாய் தங்க அனுமதி தருகிறார்.       ``நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் எவ்வளவு  Turn over செய்கிறேன் என்பதை விட எவ்வளவு உதவிகள் செய்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிறார் வீகேஎன் ஹானரரி டாக்டர் பட்டம் பெற்றுள்ள இவரின் எளிமையும் மனிதாபிமானமும் வியக்க வைக்கிறது.       இவருக்கு பிடித்த கலர் நீளம். ஒரு ஐடண்டிஃபிகேஷனுக்காக இவரது கம்பெனி, கட்டிடங்கள் எம்பளம், கார், போடும் சட்டை எல்லாமே நீலம்தான் அதில் உதயசூரியன் சின்னமும் பொருத்தியிருப்பார்.       திமுக மற்றும் கலைஞரின் மேல் பற்றுள்ள வீகேஎன் கட்சியிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத சீரிய தொண்டர் தனது நிகழ்வு, நிகழ்ச்சி படங்களை பாதுகாத்து எக்ஸிபிஷனாக வைத்துப் பார்த்து மகிழ்கிறார்.       வீகேஎன் –னின் மனைவி திருமதி கண்ணாத்தா குடும்பத்தை திறம்பட நிர்வகிப்பதுடன் பக்க பலமாகவும் இருக்கிறார். இவர்களின் மூத்த மகன் வீகேஎன் ராஜா.பி.இ யுனிவர்சிடியில் ராங்க் பெற்று ரிலைன்ஸ் புராஜக்ட்களை நிர்வகிக்கிறார். அடுத்த மகன் வீகேஎன் கல்யாண சுந்தரம் பி.இ முடித்து அப்பாவுக்கு துணை. மூன்றாவது மகன் நாராயணன் பி.இ., சிவில்.      ``மின்சாரம் இருக்கும் வரை பெல் கம்பெனி இருக்கும். பெல் இருக்கும் வரை இந்த வீகேஎன் கம்பெனியும் சமூகப் பணிகளும் இருக்கும்” என்று பூரிக்கிறார் வீகேஎன்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:10        காலைக்கதி வாரக்கதிர் மே- 2003   வி.என்.சிதம்பரம்;        `நான் எதுவும் பெரிதாய் சம்பாதித்து விடவில்லை. தாத்தா; அப்பா சம்பாதித்ததை சிதைக்காமல் காப்பாற்றி வருகிறேன். எனக்கு வழிகாட்டி-ரோல் மாடல் எல்லாம் தாத்தா திரு. வள்ளியப்ப செட்டியார் அவர்கள்தான்!” என்று தன்னடக்கத்தோடும் புன்னகையோடும் பேச ஆரம்பிக்கிறார் சென்னை கமலா தியேட்டர் அதிபரான தி.வி.என். சிதம்பரம்.        செட்டிநாட்டு வட்டத்தில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராங்கியம் கிராமம் இவரது பூர்வீகம், அந்த நாட்களில் தாத்தாவின் இளம் வயதிலேயே அவரது தந்தையார் இறந்து விட குடும்பத்தை வறுமை சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலைமை.        தாத்தா பிழைப்பு தேடி மலேசியா போய் அங்கு பார்ட்னர்ஷிப்பில் வட்டி வியாபாரம் தொடங்கினார். அயராத-தளராத உழைப்பில் அதில் அவருக்கு வெற்றி கிடைத்தது. பிறகு ரப்பர் தோட்டம்!       அந்த வருமானத்தில் பர்மாவில் நெல் வயல்கள் வாங்கினார்-மலேசியாவில் பத்து ஊர்களில் கடை எஸ்டேட் என வளர்ந்து, கோடீஸ்வரர் ஆன தாத்தாவின் தாரகமந்திரம்-நேர்மை-உண்மை-உழைப்பு!   அது இவர்களது பலமும் கூட.       இரண்டாம் உலக போர் சமயம் தாத்தாவின் பெரும்பகுதி சம்பாத்தியங்கள் அழிந்துபோக-அப்பா-மனம் தளராமல் அவற்றை திரும்ப நிலை நிறுத்தினார்.       வி.என் . சிதம்பரம் புதுக்கோட்டையில் இன்டர்மீடியட் முடித்ததும் மலேசியாவுக்குப் போய் ரப்பர் தோட்டங்களை கவனிக்க ஆரம்பித்தார்.அவர்களுக்கு அப்போது ஸ்ரீலங்காவிலும் தேயிலை தோட்டங்கள் இருந்தன.       ஒரு கால கட்டத்தில் அயல்நாட்டு முதலீடுகள், சொத்துக்களை தொடருவதில் சிக்கல்களும் நம்பிக்கையின்மையும் ஏற்பட –சிதம்பரம் எல்லாவற்றையும் காலி பண்ணி தமிழகம் திரும்பினார்.       முதலில் சென்னையில் 1963ல் கிருஷ்ணவேணி தியேட்டரை வாங்கி –சில காரணங்களால் அதை விற்க வேண்டி வந்தது. சினிமா தியேட்டரில் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்கிற நம்பிக்கை வரவே 1970ல் இப்போது உள்ள கமலா தியேட்டர் இடத்தை வாங்கி 1972ல் ஆரம்பித்தார்.       வி.என்.சியிடம் உள்ள சிறப்பு குணம் தோல்வி கண்டு தளராமை, வியாபாரத்தில் வெற்றித் தோல்விகள் சகஜம். ஒன்றை சரியாய் ஆரம்பிக்கவில்லை அல்லது சூழ்நிலையாய் சரியாய் நடத்தவில்லை என்றால் தோல்வி வரத்தான் செய்யும். அதற்காக துவண்டுவிடக் கூடாது.      ஒன்று அதை சரிபண்ண வேண்டும் அல்லது ஒத்துவராத்தை கெளரவத்திற்காக பிடித்துக் கொண்டிருக்காமல் விட்டுவிட்டு வேறு தொழில் பக்கம் போய்விட வேண்டும். இவருக்கு இப்படி பல அனுபவங்கள்!      1970-ல் கும்பகோணத்தில் டயர் ரீடிரேடிங் ஆரம்பித்து –அது சரிவராது என தெரிந்ததும் மூடிவிட்டு மதுரையில் ரியல் எஸ்டேட் ஆரம்பித்தார். அதில் வெற்றி! அடுத்து ஷேர் பிசினஸ்!      இடையில் சில காலம் மோட்டார் உதிரி பாகங்கள் மற்றும் ஃபேன்பெல்ட்கள் தயாரிப்பில் இறங்கினார். அதிலும் தோல்வி ஏற்படவே கலங்கி விடவில்லை. மூடிவிட்டார்.      மைசூரில் காபி எஸ்டேட் நல்ல லாபம் ஈட்டித் தந்தாலும் கூட அங்கு போய் கவனிக்க முடியாததால் விற்பனை செய்து விட்டார். இங்கே வெற்றி தோல்வி என்பதெல்லாம் நம் கையில்தான் உள்ளது.      சிதம்பரத்திடம் இன்னொரு விஷேச குணம்-போதும் என்கிற மனம். உள்ளதை வைத்து திருப்திப்படுவது! அவரவர்கள் சினிமா தியேட்டரை இடித்து ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களாக மாற்றிக் கொண்டிருக்க.... ``எனக்கு இதில் லாபம் வருகிறது. திருப்தியோடு இருக்கிறேன்!” என்று மனம் மகிழ்கிறார்.      எந்த மாதிரியான தொழிலாக இருந்தாலும் சரி, அதன் பெறுமானத்தில் 25%க்கு மேல் கடன் வாங்கக்கூடாது; உண்மை-நேர்மையாய் தொழில் செய்யணும்; பிறரை ஏமாத்தக்கூடாது; நம்பிக்கை துரோகம் கூடாது; அப்போது தான் நாமும் நிம்மதியாய் இருக்க முடியும் குடும்பமும் தழைக்கும் என்பது இவரது ஆழமான அபிப்ராயம்.       அதே மாதிரி சம்பாத்தியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவரவர்களின் வசதிக்கேற்ப காளி இடங்களை வாங்கிப்போட்டு வைத்தால் அது பிற்காலத்தில் கை கொடுக்கும் என்கிறார்.       தொழிலை நாமே நேரடியாக கவனிக்க வேண்டும் என்பதில்லை; நம்பிக்கையான நேர்மையான –திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பொறுப்பும் முழு சுதந்திரமும் கொடுத்து செயல்பட வைப்பது இவரது பலம். அதே மாதிரி நல்ல, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்வது இவரது பழக்கம். அங்கே கெளரவம் பார்ப்பதில்லை.       மனைவி திருமதி கமலா குடும்பத்தை நிம்மதியாக பார்த்துக் கொள்வது இவருக்கு வெளியே செயல்பட உதவியாயிருக்கிறது. (இவரது மனைவியின் பெயரில் தான் தியேட்டர்! வெளியே –பரவலாய் அபிப்ராயம் இருப்பது போல சிவாஜியின் மனைவி –திருமதி கமலாவுக்கு சொந்தமான தியேட்டர் அல்ல இது!)   இவர்களுக்கு மூன்று மகன்கள்.       மூத்தவர் திரு. வள்ளியப்பன் அமெரிக்காவில், படித்து, தியேட்டர் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிறார். அடுத்தவர் திரு. நாகப்பன் போரூரில் ஆட்டோமொபைல் ஏற்றுமதி தொழில்! மீடியம் ஸ்கேல் தொழிலில் சிறப்பாக செயல்படுவதற்காக இவர் ஜனாதிபதி விருது, பெற்றியிருக்கிறார்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:11          மூன்றாவது மகன் திரு.கணேசன் ரெடிமேட் கார்மென்ட்கள் தயாரித்து விற்பனை செய்கிறார்.       பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து பொறுப்புகளை பிரித்து கொடுத்துவிட வேண்டும் என்பது இவரது கொள்கை. அப்போதுதான் அவர்களுக்கு பொறுப்பு வரும். தன்னம்பிக்கை! அவர்களின் போக்கிலோ செயலிலோ தவறு தோன்றினாலும் திருத்தவும் உதவியாக இருக்கும்!       வி.என்.சி. தனது வளர்ச்சிக்கு அடித்தளமாய் நினைப்பது இறைபக்தி. இயல்பிலேயே தன் தாத்தா மூலம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார். தாத்தா கட்டின பிள்ளையார் கோயிலில் ஆரம்பித்த இவரது பக்தி- சமய வேதங்களுக்கு அப்பால் எல்லா கடவுள்களையும் நேசிக்கிறது.       இவரது கடைசி மகனின் 3 மாத பருவத்தில் குழந்தையின் கண்களில் தொடர்ந்து கண்ணீர் வடிய அந்த சின்ன வயதில் ஆபரேஷன் செய்ய முடியாது என்று டாக்டர்கள் கை விரித்துவிட-       மனைவி கமலாவுக்கு கலக்கம். அந்த நேரம் தங்கள் தியேட்டரில் அன்னை வேளாங்கன்னி படம் பார்த்தவர் –வேளாங்கன்னியின் மகிமைகளை கண்டு- தன் குழந்தைக்காக வேண்டிக்கொண்டு வேளாங்கன்னிக்கு போய் அவர்கள் செய்த பிரார்த்தனைக்கு உடனடி பலன்! இன்று வரை எந்த வித ஆபரேஷனும் தேவைப்படவில்லை என்பதை வி.என்.சி. உருக்கத்துடன் நினைவு கூர்கிறார்.       பொதுவாழ்வில் பல பிரபலங்களுடனும் நல்ல நட்பும் தொடர்பும் கொண்டிருக்கிற வி.என்.சி.எம்.ஜிஆர், சிவாஜி,பெரியார் ஸ்வாமிகளுடன் நெருக்கமாய் பழகி அவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்றவர்.              எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அறங்காவலர் குழு தலைவராக எட்டு வருடங்கள் இருந்த போது இவர் பக்தர்களுக்கு வேண்டி பல செளகர்யங்களையும் –செய்து கொடுத்திருக்கிறார்.        அதில் முக்கியமான ஒன்று.        அதுவரை குறுகிய பிரதேசத்தின் மேல் மட்டங்கள் வெறும் 2000 பேர்கள் மட்டுமே பார்த்து வந்த மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை ஆடி வீதிக்கு மாற்றி அம்பதாயிரம் பக்தர்களுக்கு மேல் கண்டு களிக்க வைத்தது! அன்று ஏகப்பட்ட எதிர்ப்புக்கிடையே இவர் செயல்படுத்தியது இன்று வரை சாதாரண பக்தனுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது!.       தொண்டுள்ளம் என்பது பாரம்பர்யமாய் இவர்கள் குடும்பத்தில் தொடர்ந்து வருகிறது. தாத்தா –சொத்து கிராமத்தின் கோயில் கட்டினார் அப்பா-தர்மாஸ்பத்திரி கட்டி-அரசாங்கத்திடம் கொடுத்து –அது சிறப்பாக இயங்கி வருகிறது.      முதியோர் இல்லம், ஏழைகளின் படிப்பு என்று ரோட்டரி மூலம் உதவி வருகிற இவர்-ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டி பள்ளிக்கூடம் கட்டும் லட்சியத்தில் இருக்கிறார்.      தமிழ் மற்றும் இலக்கியப் பற்றுள்ள இவர் `தனவணிகம்’ எனும் பத்திரிகை நடத்தி வருகிறார். பல்வேறு தலைப்புக்களில் எட்டு நூல்களும் எழுதியுள்ளார்.      சஞ்சய்காந்தி இறந்த சோகத்துடன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த இந்திராகாந்தி-தரிசனத்துக்குப்பின் மகிழ்ச்சியாக திரும்பிச் சென்றதை- செல்ல வைத்ததை வி.என்.சி பூரிப்புடன் நினைவு கூர்கிறார்.       ஆத்ம நண்பர் சிவாஜிக்கு சிலை வடித்து- மதுரையில் நிறுவப் போகிறார் இவர்.       புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோலக்குடி மலைமேல் அமைந்துள்ள 3 பாறைகற்களை –சிற்பிகளை கொண்டு பிள்ளையார், சிவன், யானை உருவமாக உருவாக்கும் முயற்சியில் இவர் இறங்கியுள்ளார். பிரம்மாண்டமான இந்த சிலைகளை 7 கி.மீ. தள்ளியிருந்தும் கூட பார்க்க முடியுமாம்.               டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா       கலாஞ்சலி அமைப்பு வழங்கிய `வாழ்நாள் சாதனை விருதை’ ஏற்கவும், கச்சேரி செய்யவும் டாக்டர் பாலமுரளி முதன் முதலாக குவைத் வந்திருந்தார்.      பாலைவனத்திலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் 76 வயதிலும் கூட பாலமுரளியின் குரலில் மட்டுமில்லை பேச்சிலும் இளமை! வளமை!      சங்கீதக்காரர்கள் அதிலும் மூத்தவர்களெல்லாம் கோபக்காரர்களாக இருப்பார்கள் என்கிற மாதிரி ஒரு பெயர் உண்டு. இவர் ரொம்ப சகஜம், யதார்த்தம் நகைச்சுவை கலந்த உரையாடல்! புன்னகை மாறா முகம்.      விஜயவாடாவை சேர்ந்த இவர் 1964க்குப் பிறகு சென்னைவாசம்!இளம்வயதிலேயே பாலமுரளியின் தாய் தவறிவிட, பெரியம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர் சங்கீதக்காரரான அப்பா மூலம் இருவருக்கும் அதன்மேல் இளம்வயதிலேயே ஆர்வம் ஏற்பட்டது.      பாலமுரளிக்கு இசைமேல் காதல்! இசைக்கும் இவர்மேல்! எட்டு வயது முதல் பாட ஆரம்பித்தவர் 25,000 கச்சேரிகளுக்கு மேல் சீனா, ஜப்பான் தவிர்த்து உலகம் முழுக்க நடத்தி இருக்கிறார்.      பதினாறு வயது முதல் கீர்த்தனைகள், ராகங்கள் என பண்பட்டிருக்கிறார். சங்கீதத்தைப் பொறுத்தவரை தென் இந்தியாதான்`ஸ்ட்ராங்’ என்பது இவரது அனுபவம்.      சங்கீதம் மட்டுமன்றி 19 வருடங்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதற்கொண்டு ஏழு மொழிகளில் புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்.      பாலமுரளியின் குறுகிய கால குவைத் பயணத்திற்கிடையே நேர நெருக்கடிக்கிடையில் காலை சிற்றுண்டிக்கிடையில் அவரை சந்திக்க-கலாஞ்சலியின் தலைவர் முரளிமனோகர் எனக்கு நேரம் ஒதுக்கியிருந்தார்.      சாப்பிட விடாமல் எப்படி பேசுவது என்கிற தயக்கத்தை பாலமுரளி போக்கி ``எது வேணாலும் கேளுங்க! என்று முன் வந்தார்.      சினிமாக்காரர்கள் என்றால் ஏதாவது கேட்டுவிடலாம். சாஸ்திரிய சங்கீதம் கர்னாடகம்! ராகம்-தாளம்-பல்லவி என்னை மிரட்டிற்று.      சங்கீத ஞானமில்லாமல் ஏதாவது கேட்டுவிட்டால் அவர் நமக்கு `குட்டு’ வைத்து விடக்கூடாதே என்கிற பயம். நண்பர் லட்சுமிநாராயணனும் திருமதி.பிரேமாவும் அவருடன் சங்கீதத்தை அலச எனக்கு வசதியாயிற்று.      எந்தப் பாடல் என்றாலும் அனுபவித்து பாடுவார், என்றாலும் கூட அவர் ராமதாசா கீர்த்தனையில் ரொம்பக்கூட லயித்து விடுகிறார். அது கஷ்டத்தில் வந்த சங்கீதமாம்! கஷ்டத்தில் வருவது எப்போதும் நன்றாக இருக்கும் என்று சிரிக்கிறார்.      பாலமுரளி தமிழ் நன்றாக பேசினால் கூட இன்னமும் தெலுங்கில் எழுதி வைத்துத்தான் பாடுகிறார்.      முன்பெல்லாம் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லி கொடுத்திருக்கிறார். டி.வி.டைரக்டர்களின் பிள்ளைகளும், கமலும் இதில் அடக்கம் சினிமா இவர் விரும்பி போன துறையில்லை.      1954-ல் சென்னையில் லைட் மியூசிக் பிராக்டீஸ் செய்த சமயத்தில் இவரது மாணவியான எஸ்.வரலட்சுமியின் விருப்பத்தின் பேரில் சினிமாவுக்கு பாட சம்மதித்தார்.      `சங்கீதம் எனக்கு வருகிறதோ இல்லையோ...ஈகோ வராமல் பார்த்துக் கொள்கிறேன்!’ என்கிறார் பாலமுரளி.      தான் பெரிய அளவில் படிக்க முடியாமல் போயிற்றே-பெயருக்குப் பின்னால் பட்டங்கள் போட முடியவில்லையே என்று அவர் முன்பு வருந்தியதுண்டு, ஆனால் தற்போது ஆறு டாக்டர் பட்டங்கள் பெற்று-போட இடமில்லாத நிலைமை!    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:12               இத்தனை வளமாகவும் ஈர்ப்பாகவும் பாடும் பாலமுரளி குரல் வளத்திற்காக சாதகம் பண்ணுவதில்லையாம். ஆச்சர்யம் கச்சேரிக்காக பயிற்சியும் செய்வதில்லை என்கிறார். எங்கு எந்த மேடை என்றாலும் நேராகப் போய் அமர்ந்து கச்சேரி! அங்கு அந்த நேரத்தில் என்ன வருகிறதோ அதுதான் பாடல்!      அவை நன்றாகவே வருகின்றன! குவைத்திலும் கூட இவருக்கு பக்க வாத்தியமாக உள்ளூர் கலைஞர்கள்தான் அமர்ந்தனர். அவர்களுக்குக்கூட பாலமுரளி பயிற்சி எதுவும் தராமலே நேராக மேடை ஏற்றி பாராட்டுப் பெற்றார்.     பாலமுரளியின் குரலில் எந்த பிரச்னையுமில்லை-ஜஸ்கிரீம்கள் விரும்பி சாப்பிட்டும் கூட அதே மாதிரி இவருக்கு கிடைத்துள்ள இன்னொரு வரம்-நோயின்மை!      சுகர் கிடையாது! இதுவரை ஒரு தலைவலிகூட வந்ததில்லை என்று இறைவனுக்கு நன்றி சொல்கிறார்.     மியூசிக் தெரபி மூலம் நோய்களை குணப்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருந்தாலும்கூட இன்னும் அதை இவர் செயல்படுத்தி பார்க்கவில்லை.          கர்னாடக சங்கீதம் என்பது காலத்தால் அழியாதது. இளைஞர்கள் இன்று புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும் புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள். நம் கலாச்சாரத்தின் மேல் பற்றும் பெற்றிருக்கிறார்கள். சங்கீதம் நம் கலாச்சாரத்தை பறைசாற்றுகிறது. காப்பாற்றுகிறது.      யுனிவர்சிடி அங்கீகாரம் பெற்றுள்ள பாலமுரளிகிருஷ்ணா பைன் ஆர்ட்ஸ் அகடமி உலகம் முழுவதும் சென்று குழந்தைகளுக்கு தேர்வு வைத்து சான்றிதழ் வழங்குகிறது.      கர்னாடக சங்கீதத்தை இளைஞர்களும் ரசிக்கும் வண்ணம் காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் வழங்குவது இவரது சிறப்பு.      பாலமுரளி உணவில் எந்த கட்டுப்பாடும் வைத்துக் கொள்வதில்லை ரசித்து சாப்பிடுவார்.      `சாப்பாட்டுக்காகத் தானே –சா-பாடுகிறோம்! சாப்பிடறமாதிரி அமர்ந்துதானே பாடறோம்! பாட அமரும்போது இலை போடுவாளா.... எனக்கூட தோன்றுவதுண்டு’ என்கிறார் நகைக்சுவையுடன்.      ஓய்வு நேரத்தில் பாலமுரளி என்ன செய்கிறார்-பாடல்கள் பயிற்சி செய்வாரா...?      ``இல்லை எப்போதும் டி.வி.தான்! அதிலும் கூட விரும்பி பார்ப்பது ஆக்‌ஷன் மூவிகள்!”      ஆச்சர்யப்படுத்துகிறார் சங்கீத வித்வான்.          எம்.எஸ்.விஸ்வநாதன்;        கம்ப்யூட்டர் யுகத்தில் புதிய இசையமைப்பாளர்கள் என்னதான் அட்டகாசமும் ஆர்ப்பாட்டமும் பண்ணினாலும் பழைய பாடல்களில் உள்ள இனிமையே தனி.       அந்த மாதிரி காலத்தால் அழியாத பாடல்களை படைத்த எம்.எஸ்.விஸ்வநாதனை தற்போது சினிமா உலகம் மறந்துவிட்டாலும் கூட அவரது சாதனைகள் மறையவில்லை.       குவைத் ஃப்ரண்ட்லைனர்ஸ் அமைப்பு மூலம் அவரது 50 வருட கலைச்சேவைக்கு பாராட்டுவிழா எடுக்க வண்ணப்பட யோகா மூலம் அணுகிய போது எம்.எஸ்.வி உடனே ஒப்புக் கொண்டார்.       சிலபேர் நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டாலும் கூட எனக்கு அது வேணும்-இது வேணும்-பேச மாட்டேன் –பாட மாட்டேன் –என்று அடத்தில் ஆரம்பித்து-வேறு யார் யாரை அழைக்கப் போகிறீர்கள் என ஒவ்வொரு காரியத்திலும் தலையிட்டு படுத்தி எடுத்து விடுவதுண்டு       இவர் மிகுந்த ஒத்தழைப்பு.       பேச்சு- நடத்தை எல்லாவற்றிலும் எளிமை, பண்பான பழக்கம்- தலைகனமில்லாமல் எல்லோரையும் மதிக்கும் பாங்கு.       பாராட்டு விழாவில்- குவைத்தில் திறமையான பாடகர்களுக்கு போட்டி வைத்து –எம்.எஸ்.வி. விருது தரணும் என்றதும் சம்மதித்தார். ஆர்கெஸ்ட்ரா மற்றும் பாடகர்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ள அனுமதித்தார்.       ``நிகழ்ச்சியில் நான் பாட வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் பாடுகிறேன்’’ என்றதுடன் ``என் நிகழ்ச்சி என்பதால் நான் இசையமைத்த பாடல்களைத்தான் பாடவேண்டும் என்றில்லை. இன்றைய பிரபல பாடல்களையும் சேருங்கள். அப்போதுதான் நிகழ்ச்சிகளை கட்டும்’’ என்று ஒப்புதல் தந்தார். என்ன ஒரு பெருந்தன்மை!       எம்.எஸ்.வி.குவைத் வந்தபின் கூட அத்தனை ஒத்தழைப்பு! எங்கே போகணும்- யாரை சந்திக்கணும் என்று கேட்டு அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்கிறார்.       `குவைத்திற்கு வருபவர்கள் –தங்கள் கைவசம் எப்போதும் பாஸ்போர்ட் மற்றும் விசா வைத்திருக்க வேண்டும்-இல்லாவிட்டால் போலீஸ் பிடிப்பார்கள்’ என்று அவரிடம் சொல்லலாம் என்று வாயெடுக்கும் போதே-      ``இதோ எல்லாம் இதில் இருக்கு. மறக்க மாட்டேன்’’ என்று ஹேண்ட பேகை உஷாராக காட்டுகிறார். எம்.எஸ்.வி எல்லா காரியத்திலுமே உஷார்.      சொன்னபடி சொன்ன நேரத்தில் செல்ல வேண்டும் என்பதில் உறுதி.      அவரது கையில் ஹேண்டபேக்,மூக்கு கண்ணாடி எப்போதும் இருந்தாகணும். ``கொடுங்கள். நான் எடுத்து வரேன்’’ என்றாலும் கேட்கமாட்டார். ``வேணாம் –எனக்கு `கன்டினியுடி’ போயிரும். அப்புறம் மறந்திருவேன்!”  என்று சிரிப்பு.      மேடையிலும் சரி, வெளியேயும் சரி, நாற்காலி கொடுத்து உட்காரச் சொன்னால், ``நான் நிற்கணும், நிற்கவே விரும்புகிறேன்’’என்கிற பிடிவாதம்.      பேச்சில் இயல்பான நகைச்சுவை இழையோடுவது இவரிடம் விசேஷம்! ``எனக்கு உழைக்கத் தெரியும்-பிழைக்கத் தெரியாது! எனக்கு சங்கீதத்தை விட இங்கிதம் அதிகம் தெரியும்! எனக்கு எலக்ட்ரிசிட்டியைவிட பப்ளிசிட்டியில் அதிக பயம்!” என்று பஞ்ச்கள்!      குவைத் இந்திய தூதுவர் திரு. கணபதியுடன் –பழைய பாடல் நினைவுகளை எம்.எஸ்.வி, மணிக்கணக்காக பகிர்ந்து கொண்டார். எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன் பற்றி பேசும்போது எம்.எஸ்.வி. உற்சாகமாகிவிடுவதை அறிந்து இங்குள்ள பண எக்ஸேஞ்ச்சின் நிர்வாகி திரு.என்.ஆர்.சம்பத் அவருக்கு உற்சாகம் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.      இசைக்குழு இருந்தாலும் கூட- ஆர்மோனியம் கையிலிருந்தால் தான் தனக்கு பாட முடியும் என்று வரவழைத்து மேடையில் எம்.எஸ்.வி.பாடி அசத்தினார்.      `நான் செத்துப் போனாலும் கூட என் ஞாபகமாய் இந்தப் பாடலை நீ மேடைகளில் பாட வேண்டும்’ என்று கண்ணதாசன் கேட்டுக் கொண்டாராம். அதன்படி குவைத்திலும் `புல்லாங்குழல் இசைத்த மூங்கில்’ பாடலுடன் ஆரம்பித்து எம்.எஸ்.வி. உருகினார்.       ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அந்தந்த பாடல்கள் உருவான சூழ்நிலைகளை அவர் விவரித்த விதம் நிகழ்ச்சிக்கு சுவை சேர்த்தது.  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:13           ``கண்ணதாசனுக்கு ஒரு சமயம் புதிதாய் அப்போது விற்பனைக்கு வந்திருந்த பிரெஞ்சு மதுவை அருந்தி பார்க்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால் கையில் காசில்லை, சொந்த அண்ணனிடம் கேட்டும் கிடைக்காத போது உருவானது தான் பழநி படத்தின் `அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகினிலே, பாடல்!”      `ஒரு சமயம் கண்ணதாசன் பாடல் எழுதாமல் தாமதிக்க- ரிகார்டிங்கில் ஓடிக்கொண்டிருந்த எம்.எஸ்.வி. அயர்வில் தூங்கி-சற்று தாமதமாய் வர-      `அதிசயமாய் சொன்ன நேரத்திற்கு முன்பு வந்து எம்.எஸ்.வி.வரவில்லை என்கிற ஆதங்கத்தில் கவிஞர் எழுதிக் கொடுத்த பாடல் அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவோ!’      ``சிவாஜிக்காக சாந்தி படத்தில் யாரந்த நிலவு பாடலை கண்ணதாசன் எழுத, எம்.எஸ்.வி.இசையில் டி.எம்.எஸ்.பாடிவிட்டார். ஆனால் அதன் படப்பிடிப்பிற்கு செல்லாமல் சிவாஜி இழுத்தடித்துக் கொண்டுபோக தயாரிப்பாளருக்கு சங்கடம். சிவாஜியிடம் கேட்க,      ``கவிஞர் சிறப்பாக எழுதி-டி.எம்.எஸ்.சிறப்பாக பாடி-எம்.எஸ்.வி.பிரமாதமாய் இசையமைத்துள்ளார்.அவர்களின் எதிர்பார்ப்புக்கு மேலாக நான் நடிக்க வேண்டுமே-அவர்களையும் நான் மிஞ்சியாக வேண்டுமே அதற்காக தயார் பண்ணிக் கொள்ள எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது!’’ என்றாராம்.      எம்.எஸ்.வி.பாராட்டுவிழாவில்-`மன்மதராசா’ மாலதி- இசைக்கச்சேரி நிகழ்த்தி ரசிகர்களை ஆட வைத்தார். வயது காரணமாகவும்,உடல்நிலை காரணமாகவும், நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாமல் எம்.எஸ்.வி அரங்கத்தைவிட்டு கிளம்ப வேண்டி வந்தது.      உடன் என்னை அழைத்து ``கோபமில்லையே’’ என்னால முடியலை- வருத்தப்படாதீங்க மோகன்தாஸ் அவர்களே....’’ என்று கன்னத்தை வருடினார். மெய் சிலிர்த்துப் போயிற்று.      எம்.எஸ்.வி. நேரிலும் கூட வயது வித்யாசமில்லாமல் எல்லோரையுமே பெயரைக் குறிப்பிட்டு.... அவர்களே நலமா? என்று தான் பேச்சை ஆரம்பிக்கிறார்.      இன்று நாடு முழுவதும் இருக்கும் இசைக்குழுக்களுக்கு எம்.எஸ்.வி.தான் முன்னோடி! சபாக்களில் மட்டும் மேல்தட்டு மக்களுக்கு மட்டும் என்றிருந்த இசைக்கச்சேரியை -1958ல் எல்லோரும் ரசிக்கும்படி இசைக்குழு ஆரம்பித்த நண்பர்கள் வட்டத்தில் இவரும் உண்டு.      `இன்று அது வளர்ந்து இசைக்குழுக்களுடன் புழுக்களும் புகுந்துவிட்டன’ என்று மெல்லிசை மன்னர் வருந்துகிறார்.     இன்று தனக்கு ஆதரவில்லை என எம்.எஸ்.வி. வருத்தவில்லை. ``மாற்றங்கள் எப்போதும் தேவை. அதுதான் இயற்கை யதார்த்தம். புதியவர்களுக்கு வரவேற்பு கொடுக்க வேண்டியது நம் பொறுப்பு. அந்த நாட்களில் எனக்கு முன்னோடிகள் வழிவிட்டிருக்காவிட்டால் நானும் வளர்ந்திருக்க முடியாதே! அதனால் திறமை எங்கிருந்தாலும்- எப்படி வெளிப்பட்டாலும்- அதற்கு நான் அடிமை!      கண்ணதாசன், பட்டுக்கோட்டை போல உழைத்து- ரசித்து-அனுபவித்து பாடல்கள் படைத்து `இறக்கும் மனிதர்கள்-இறவா பாடல்கள்’ வரிசையில் எல்லோரும் இடம் பெற வேண்டும்’’ என்று மனம் நெகிழ்கிறார் மெல்லிசை மன்னர். தனக்கு எடுத்த விழா மூலம் ஃப்ரண்ட்லைனர்ஸ் அமைப்பு அறக்கட்டளைகளுக்கு 21/2 லட்ச ரூபாய் உதவுவதில் அவரது நெகிழ்ச்சி அதிகமாயிற்று.   தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:14        ஜெயகாந்தன்;       படைப்பாளிகளை தள்ளியிருந்து பார்க்கும்போது நம் மனதில் உருவகப்பட்டிருக்கும் கம்பீரமும், மதிப்பும், எதிர்பார்ப்பும் நேரில் சந்திக்கும்போது சாதாரணமாய் ஆகிவிடக்கூடிய அபாயம் உண்டு என்று எழுத்தாளர் சுஜாதா குறிப்பிடுவதுண்டு.       அது அவர் விஷயத்தில் மட்டுமில்லை, இன்னும் சிலரிடமும் அனுபவபூர்வமாய் உணர்ந்திருக்கிறேன். படைப்பு கற்பனை. அந்த பாத்திர படைப்புக்கு ஏற்றபடி பேனா விளையாடலாம். அதே மாதிரி குணாதிசயங்களை நேரிலும் படைப்பாளியிடம் எதிர்பார்க்க முடியுமா?       சுஜாதாவின் எழுத்திலுள்ள இளமையையும் துள்ளலையும் எழுச்சியையும் அவரிடம் எதிர்பார்ப்பது அபத்தம். சுஜாதாவின் எழுத்திற்கு பித்தனாகி அவரை மானசீகமாய் குருவாய் ஏற்றிருந்த சமயத்தில் 25 வருடம் முன்பு நான் கொச்சியில் அவரை சந்தித்தபோது-       அட இவரா.... என்று ஏமாற்றம் அடைந்தது உண்மை இந்த ஒல்லியும், தளர்ந்த தேகமுமா இந்தப் போடு போடுகிறது என்கிற ஆச்சர்யம். ஆனால் பார்வைக்குதான் தளர்ச்சி. பேச்சில் அதே வீர்யம்! நகைச்சுவை!       அதே போல முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனும்! அவருடைய நடவடிக்கைகள், உருவம், கறார்தன்மை பற்றி தெரிந்திருந்ததால் ஒரு பயம் கலந்த மரியாதை!       குவைத்திற்கு ஃப்ரண்ட்லைனர்ஸ் நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டபோது அதே பாவத்துடனும் பயத்துடனும்தான் அணுகினேன்.       ஆனால் பழகும்போது தான் தெரிந்தது- அவர் எத்தனை மென்மை- சகஜம் என்பது! குழந்தை போன்ற அணுகுமுறை!       ஞானபீடம் விருது பெற்ற ஜெயகாந்தனின் எழுத்துகள், பேச்சுகள், எப்போதும் ஏதாவது சர்ச்சையில் மாட்டிக் கொள்ளும்- அல்லது கிளப்பிவிடும். அவரது விமர்சனங்களை வைத்து-அவர் மேல் பிரம்மாண்டமாய் ஒரு இமேஜ் இருந்து வந்துள்ளது இப்போதும்,      சென்ற வருடம் அவருக்கு ஞானபீட விருது கிடைத்த பின்பு-``ஜெயகாந்தனை வாழ்த்துவதற்காக (அக்டோபர் 2005) முன்னாள் தொலைக்காட்சி இயக்குநர் திரு.ஏ.நடராஜன் கவிதா பதிப்பக அதிபருடன் நானும் செல்கிறேன். நீங்களும் வருகிறீர்களா” என்று அப்போது விடுமுறையிலிருந்த என்னையும் வண்ணப்பட யோகா அழைத்தார்.      யோகா இனிய நண்பர் மட்டுமில்லை-எழுத்தின் ஆரம்பகட்டத்திலிருந்த போதே என்னை மதித்து, நட்பு பாராட்டி நன்றாக வருவீர்கள் என உற்சாகம் தந்து, சென்னையில் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் பலரையும் அறிமுகப்படுத்தி தந்திருக்கிற வழித்துணையும் கூட     ஜெயகாந்தன் என்றால் அவருக்கு உயிர். கல்லூரி நாள் முதல் அவரது தீவிர வாசகனான அவர் கொடுத்த வாய்ப்பை நானும் பயன்படுத்திக் கொண்டேன்.      வீட்டில் ஜெயகாந்தன், மாடியில் இருக்கிறார் என்றார்கள். பெரும்பாலும் அவர் அங்குதானாம். மாடியில் ஓலைவேயப்பட்டு, கிராமத்து குடிசை போன்ற தோற்றம் எளிமை, முழுமையான காற்றோட்டம், சட்டையில்லா வெற்றுடம்புடனும், வேட்டியுடனும் வரவேற்ற ஜெ.கே.வை பார்த்ததும் இவரா.... என்று மனதிற்குள் கேள்வி எழாமலில்லை. புகைப்படத்தில் பார்த்துப் பார்த்து பழகிப் போன அந்த மீசையும், கம்பீரமும் நேரில் தெரியவில்லை.      அவர் `சண்டைகோழி’ என்கிற இமேஜ் அந்தக் கணத்திலேயே உடைந்து போயிற்று. சர்வ சகஜமான பேச்சு புன்னகை கொஞ்சங்கூட அலட்டவில்லை. மேதை என்கிற மனோபாவம் இல்லை.      உண்மையைச் சொல்லப் போனால் ஜெயகாந்தன் என்று சொல்லி வேறு யாரிடமோ அழைத்து வந்துவிட்டார்களோ என்கிற சந்தேகம் எனக்குள்.      அவர் சால்வையை ஏற்றுக் கொண்டார் (வெற்று மார்பில்). சலிக்காமல் படமெடுக்கவும் அனுமதித்தார்.      ஏ.நடராஜனும் ஜெயகாந்தனும் பழைய தமிழ் இலக்கியம் பற்றி நினைவுகூர, எனக்கு அது அரிய வாய்ப்பாக தெரிந்தது.      தொழில்நுட்பம், மீடியாக்களில் தமிழின் தேவைபற்றி ஜெ.கே.வலியுறுத்தினார். இலக்கியம் சாதி பார்ப்பதில்லை. சாதி பார்த்து வளரவில்லை. உ.வே சாமிநாத ஐயர், சிதம்பரம்பிள்ளை,திரிலோக சீதாராம்,அ.வே.ரா.கிருஷ்ணசாமி ரெட்டியார் பற்றியும், அகில இந்திய வானொலியில் பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகள் கொடுத்ததையும் நடராஜன் பகிர்ந்து கொண்டார்.   தொடர்ந்து சமூகம் பற்றி பேச்சு திரும்பிற்று.     மிரட்டல்களுக்கு நாம் பயப்படக்கூடாது. நமது தனித்துவத்துவத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது     தொலைக்காட்சி பற்றி பேச்சு திரும்பும்போது-தனியார் தொலைக்காட்சிகளின் வளர்ச்சி பற்றி-``அது வாஸ்தவம் தான். ஒரே துறையில் தனியாரும் அரசாங்கமும் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அரசாங்கம் தனியாரிடம் போட்டி போட முடியாமல் போகக்கூடும் என்பதற்கு தொலைக்காட்சி சேனல் ஒரு உதாரணம். அரசாங்க அமைப்பில் பல முட்டுக்கட்டைகள் உள்ளன.’’     ஏதோ ஒரு பேச்சு வந்தபோது நடராஜன், ``நான் கடவுளை நம்புகிறேன்’’ என்றதற்கு ஜெ.கே.``நம்பிக்கைதான் கடவுள்!” என்று சிரித்தார்.     உரையாடல் கலைஞர், ரஜினி, குஷ்பு என எல்லா பக்கமும் சுற்றி வந்தது. மூத்த- அனுபவஸ்தர்களின் விமர்சனங்கள் எனக்கு சுவையாயும் சுவாரஸ்யமாயும் இருந்தது.(ஆனால் அவையெல்லாம் பர்சனல் கருத்துகள் என்பதால் வெளியே எழுதுவது நாகரிகமில்லை)     அந்த சமயம் பிரபல நடிகை சொன்ன கருத்து பிரச்னையை கிளப்பிவிட்டிருக்க, ஒருவரின் சொந்த கருத்தை பொதுப்படையாக்கக்கூடாது. அதற்கு ரொம்ப முக்கியத்துவம் தந்து பெரிதாக்கிவிடக் கூடாது. ஊரில் நமக்கு அன்றாடம் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அத்யாவசிய விஷயங்களை விட்டுவிட்டு இதுமாதிரியானவற்றில் கவனத்தை திருப்பி நம் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்றார் அழுத்தமாய் ஜெ.கே!   அங்கே அந்தக் கம்பீரம் தெரிந்தது.     ஞானபீடம் விருது வாங்கப் போனபோது –ஜெயகாந்தன் உடல் நல குறைவால் இருமவே –ஜனாதிபதி அப்துல்கலாம் மிக்க அன்போடு, உடனே டாக்டரை பாருங்க என்று வலியுறுத்தியதை ஜெயகாந்தன் உருக்கத்தோடு சொல்ல, அங்கே அவரது கனிவும்-நெகிழ்ச்சியும் வெளிப்பட்டது.   ஜெயகாந்தன் என்றால் கம்பீரம் மட்டுமில்லை – கனிவும் கூடதான்!    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:15        சாலமன் பாப்பையா;          சினிமா பிரபலங்களையும் மிஞ்சும் வண்ணம் பட்டிமன்றம் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிற திரு.சாலமன் பாப்பையாவின் வெற்றி திடீரென வந்ததல்ல.      இந்த நிலையை அடைய அவர் பட்ட கஷ்டங்கள் முயற்சிகள் எல்லாம் பிறருக்கு ஊக்கம் தரும் விஷயங்கள்.      இவரது பூர்வீகம் தென்காசி பக்கம் கிராமம். பெற்றோர் பஞ்சம் பிழைக்க வேண்டி திருமங்கலம் அருகே சாத்தங்குடி எனும் கிராமத்திற்கு வந்து நெசவு தொழில் பார்த்தனர்.   பிறகு மதுரைக்கு இடப்பெயர்ச்சி!      அந்த தொழிலில் வெற்றி கிடைக்காததால் இவரது தந்தை மதுரை ஆர்வி மில்லில் வேலைக்குச் சேர்ந்தார். குடும்பத்தில் சாலமன் ஒன்பதாவது பிள்ளை. மூத்த உடன் பிறப்புகள் திருமணமாகி சென்று விட, சகோதரிகளின் திருமணத்திற்கு, இவர்களது ஒரே சொத்தான (ஒரு செனட் பரப்பளவில்) வீடு எப்போதும் ஒத்தியில் இருக்கும் அம்மாவுக்கும் உடல் நல குறைவு!      வசதியில்லாத சூழலில் மாதம் 21/2 ரூபாய் படிப்புக்கு செலவு செய்ய முடியாத அளவிற்கு வீட்டில் வறுமை. அதையும் மீறி –முன்னேற வேண்டும் எனும் உத்வேகத்துடன் ஸ்காலர்ஷிப்பிலும் நண்பர்களின் உதவியுடன் அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ.முடித்தார். (1957)      சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கும்போது மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ் எம்.ஏ.துவக்கப்பட அதில் சேர்ந்து முதல் அணியாக 1960 இல் வெளியே வந்தார்.      வேலூர் ஊரில் கல்லூரியில் சிலகாலம் வேலை பார்த்தபோது அமெரிக்கன் கல்லூரியிலிருந்து அழைப்புவர 1961 இல் டியூட்டராக சேர்ந்தவர் 1994 இல் துறைத் தலைவராக வெளியே வந்தார்.      தமிழ்ப்பற்றும் இறைபக்தியும் (எம்மதமும் சம்மதம்) இவரது பலம். டாக்டரேட் பெற வேண்டும் என சாலமன் எடுத்துக் கொண்ட ஆய்வு முயற்சிகள் பலன் தராததால்- பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று- பேச்சுக்கலை மூலம் பொதுமக்களை சந்திக்க கிளம்பினார்.       ஆரம்ப காலங்களில் இலக்கணம்-இலக்கிய வெறியோடு அமைந்த இவரது பேச்சுக்கள் ஜனங்களுக்கு புரியாததால் –அவர்களிடம் போய் சேரவில்லை.       பாப்பையாவின் முதல் பட்டிமன்றம் 1962 இல் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தலைமையில் அரங்கேறிற்று. பட்டிமன்றம் தமிழகத்தில் இருவருக்கு கடமைப்பட்டிருக்கிறது என்று நினைவு கூர்கிறார் இவர்.      முதலாவது, பட்டிமன்றத்தை கம்பன் கழகம் மூலம் தோற்றுவித்த கம்பன் அடிபொடி சா.கணேசன் அவர்கள். அடுத்தது அவற்றை பொதுமக்களிடம் கொண்டு சென்று அங்கீகாரம் பெற்று  தந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.      அடிகளார் எப்போதும் சமூக தலைப்புகளே கொடுப்பார். இலக்கிய தமிழைவிட நடைமுறை தமிழுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகம் இருக்கவே பாப்பையா மெல்ல மெல்ல அதற்கு தன்னை மாற்றிக் கொண்டார்.   எழுபதுகளில் பட்டிமன்றங்களுக்கு பல விதங்களில் சோதனைகள்!      இலக்கிய தலைப்புகளால் நெருக்கடி பட்டிமன்றத்தை விரட்ட வேண்டி-கடவுள் பற்றி எப்படி பேசலாம் என்றும் அதிலும் வேற்று மதத்தினர் எப்படி இந்து கடவுள்களை விமர்சிக்கலாம் என்றும் போர்க்கொடி தூக்கினர்.     இளைஞரான சாலமனுக்கு முக்கியத்துவம் கிடைப்பதை பொறுக்கமாட்டாத மூத்த புலவர்களும் வாய்ப்புக் கிடைக்காத அறிஞர்களும் எதிர்ப்பு தெரிவிக்க பட்டிமன்றங்களுக்கு ஆள் வரவு குறைந்தது. அதிலும் குறிப்பாக பெண்கள்!      இங்கே பெண்கள் இல்லாமல் எந்தக் கலையும் வெற்றி பெறாது என்பதை உணர்ந்த சாலமன் யோசித்து- `கணவன் –மனைவியா’போன்ற தலைப்புகளை வைக்க, குடும்பம் குடும்பமாய் மக்கள் வந்து ரசிக்கவே பட்டிமன்றங்கள் பிரபலமடைய ஆரம்பித்தன.      எத்தனையோ மேடைகள் கண்டிருந்தாலும்கூட – 1988 இல் முதன் முதலில் தொலைக்காட்சியில் தன் பட்டிமன்றத்திற்கு வாய்ப்பளித்த முன்னாள் தொலைக்காட்சியின் இயக்குனர் திரு.ஏ.நடராஜனை நன்றியோடு நினைவு கூர்கிறார். அதன்பிறகு இவருக்கு வேகமான வளர்ச்சி!      ``பண்டிகை என்றால் பட்டாசு,புத்தாடைபோல இன்று பட்டிமன்றமும் ஆயிற்று!” என்று சிரிக்கிறார்.       எளிமையும், யதார்த்த –அப்பாவித்தனமான-நகைச்சுவை பேச்சும் இவரது சிறப்பு. அதிலும் கூட சன் டி.வி. மூலம் மலையாளம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடர்கள் கூட மொழி புரியாவிட்டாலும் கூட இவரது பட்டிமன்றத்தை பார்த்து ரசிப்பது இன்னும் கூட விசேஷம்.       டீச்சர் வேலைக்கு படித்திருந்தாலும் கூட –குடும்பத்தை கவனித்துக் கொண்டு வெளியே சுதந்திரமாய் இயங்கவிட்டிருக்கும் திருமதி ஜெயபாய் இவரது வெற்றிக்கு ஊன்றுகோல்.      இவர்களது மூத்த மகன் எம்.ஏ.(ஜப்பான் இலக்கியம்) படித்து அதே துறையில் படிப்பித்து வருகிறார். மகன் என்ஜினியரிங் முடித்து கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் செய்து வருகிறார்.      ``எந்த தொழிலும் போட்டிகள் வர வேண்டும் அப்போதுதான் நாமும் ஆணவமில்லாமல் இருப்போம் போட்டியை சமாளிக்க புதுப்புது யுத்திகளை தேடிப் போவோம். எத்தனை போட்டிகள் வந்தாலும் நமக்கு எது கிடைக்கணுமோ அது கிடைக்கும். எனக்கு இந்த 70 வயதில் பேராசைகள் எதுவுமில்லை. இறைவனருளால் திருப்தியாய் இருக்கிறேன்” என்று மகிழ்கிறார் பாப்பையா.     ஏற்கனவே திருக்குறளை குடும்பம், சமூகம் அரசியல், நிர்வாகம், பண்பாடு, மெய்ப்பொருள் என வகைப்படுத்தி நூல் வெளியிட்டுள்ள இவர்- சங்க இலக்கியங்களைப் பற்றி எழுதும் விருப்பத்தில் இருக்கிறார்.     தன் சம்பாத்தியத்தில் ஒரு தொகையை ஏழை மாணவர்கள் –குறிப்பாய் பெண்களின் படிப்புக்கான சாலமன் உதவி வருகிறார். பேரன் பேத்திகள் – இளைஞர்கள் என்று இளைய வட்டத்துடன் நெருக்கமாய் இருப்பதால் அவர்களையும் கவரும் வண்ணம் நிகழ்ச்சிகள் தரமுடிகிறது என மகிழ்கிறார் இந்த இளைஞர்.    `மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம்`    எளிமை; நகைச்சுவை உணர்வு; பண்பான பழக்க வழக்கங்கள்; குற்றங் குறைகளை கண்டு நமக்கென்ன என்று ஒதுங்கிவிடாமல் அவற்றை நாகரிகமாய் சுட்டிக்காட்டி திருத்தும் துணிச்சல்; எல்லோரும் நல்லவரே- எல்லோரும் வல்லவரே என்று ஊக்கப்படுத்தும் மனப்பக்குவம்;     மனிதாபிமானம்; அடிமட்டத்திலிருப்பவர்களுக்கும் உதவி,அவர்களையும் உயர்த்தும் உதவி குணம். செருக்கின்மை; கல்லூரியில் கால் பதிக்காவிட்டாலும் கூட இன்று உயர்கல்வியாளர்கள் அத்தனை பேருடனும் உள்ள நெருக்கம்; உயர்ந்த சிந்தனை; தன்னம்பிக்கை; தமிழ்ப்பற்று; நல்லதை போற்றி அல்லவை அகற்றும் சுவையான சொற்பொழிவு; நாட்டுப்பற்று;     இப்படி நிறைய நிறைய நற்பண்புகளைக் கொண்டிருக்கிற மனிதத் தேனீ என்று அனைவராலும் பிரியமாய் அழைக்கப்படுகிற மதுரை திரு.ரா.சொக்கலிங்கம் அவர்களை சந்தித்தது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.     காரைக்குடி அருகே பள்ளத்தூரை பூர்வீகமாய் கொண்ட இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை.     இவரது தாத்தா திரு.காசிநாதன் செட்டியார் அந்த நாட்களில் காங்கிரஸ் இயக்கம் காலூன்ற வலுவாக உழைத்தவர். ஹிந்தி மொழியின் அவசியத்தை எடுத்துரைத்து ஹிந்தி புத்தகங்களை விற்பனை செய்தவர்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:16                ராஜாஜியைப் போன்ற தோற்றமிருந்ததால் டூப்ளிகேட் ராஜாஜி என போற்றப்பட்ட அவர், காந்திஜியை அழைத்து வந்து கூட்டம் நடத்தியிருக்கிறார்.     அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த சொக்கலிங்கம் அவர்களின் தந்தை திரு.ராமன் செட்டியார் கால் ஊனம் என்றாலும் கூட தளராமல் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்ட வீரர். மன உறுதி மிக்க தீரர். 1942 இல் அமெரிக்கன் கல்லூரியில்  பி.ஏ.படித்திருந்த அப்பா குடும்பத்தை காக்க வேண்டி விறகு கடை, மண்ணெண்ணெய் கடை, கதர் கடை என பலதும் முயன்று கடைசியாய் 1947 இல் விஜயா அச்சகத்தை ஆரம்பித்தார்.     ஏழு வாரிசுகளில் கடைசியான சொக்கலிங்கம்- மதுரை ரோஸரி பள்ளி, திருநகர் ஜோசப் பள்ளி, முமு.உயர்நிலைப்பள்ளி, வசந்த நகர் தியாகராசர் பள்ளி என 1975 இல் எஸ்.எஸ்.எல்.சி. வரை மட்டுமே படிக்க முடிந்தது.     அச்சக தொழில் மேல் இருந்த நாட்டத்தால் அதற்குமேல் இவருக்கு படிப்பின் மேல் கவனமில்லாமல் போயிற்று.      அன்று தந்தை துவங்கி வைத்த அச்சகத்தை தேவையான டெக்னாலஜி மாற்றங்களுடன் இன்றும் சிறப்பாக சொக்கலிங்கம் நடத்தி வருகிறார்.      இவர் விரும்பியிருந்தால் அச்சகத்தை பெரிய அளவில் கொண்டுவந்து சம்பாதித்திருக்கலாம்.      ஆனால் குடும்ப பொருளாதார தேவைக்கு போதுமான அளவில் வருமானம் போதும் என்று மிதமாகவே நடத்தி வருகிற இவர் விரும்பி ஏற்றுக்கொண்டது பொது வாழ்க்கை.      பணம் கொடுக்காத – கொடுக்க முடியாத திருப்தியையும் சந்தோஷத்தையும் பொதுச் சேவை தந்திருக்கிறது என்று இந்த மனிதத்தேனீ மகிழ்கிறது.      1984இல் ஜேஸீஸ் அமைப்பில் உறுப்பினரான பின்பு இவரிடம் பெரிய மாற்றம்! இவருக்குள் தன்னம்பிக்கை விதைத்து-சுய கட்டுப்பாடு –ஒழுக்கம்-நேர்மை முறையாய் திட்டமிடல்-பேச்சுக்கலை என பல விஷயங்களையும் அடிகோலிற்று.      இவர் நடத்தும் அல்லது பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளை குறித்த நேரத்தில் ஆரம்பித்து முடிப்பதை கறாராக கடைபிடிக்கிறார்.      தன்னம்பிக்கையுடன் இளைஞர்களை உருவாக்கும் சீரிய பணியில் இவர் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார். பேச்சுக்கலை பற்றி சுமார் 300 கூட்டங்கள்! சமுதாய நோக்குடன் 14,000க்கு மேல் நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார். சுற்று பக்கங்களில் இவரது சொற்பொழிவை கேட்காதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம்.     அந்த அளவிற்கு உற்சாகமாய் செயல்படுகிறார். பிறருக்கும் உற்சாகம் தருகிறார். அநேகமாய் அனைத்து கல்லூரி-பல்கலைக் கழகங்களிலும் சொற்பொழிவாற்றி இருக்கிற இவருக்கு நாட்டுப்பற்று, மொழிப்பற்று அதிகம்.     எந்த மொழியைச் சேர்ந்தவராயினும் –அந்தந்த மொழிகளில் கலப்பில்லாமல் பேச வேண்டும் என்பது இவர் அறிவுறுத்தும் கருத்து.     சாதி மதங்களை கடந்து –மறந்து ஏற்றத்தாழ்வில்லா சமுதாயம் உருவாக வேண்டும் என்பது இவரது விருப்பம். தினமலர் நிறுவனர் திரு.டி.வி.ஆர் உயர்சாதியை சேர்ந்தவர் என்றாலும் கூட ``தாழ்த்தப்பட்டவர்கள் எல்லா துறைகளிலும் முன்னுக்கு வந்தால்தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும்’’ என்பார். அந்த நோக்கத்தில் இவரது செயல்பாடு உள்ளது.     காங்கிரஸை சேர்ந்தவர் என்றாலும் கூட பிற கட்சியினரையும் மதிப்பவர். எல்லோருக்கும் நல்லவர்! சமூக சீர்திருத்தத்துடன்- அந்தந்த சமூகத்தினரிடம் பேசும்போது அவர்களிடமுள்ள குறைபாடுகள் – பலவீனங்களை சுட்டிக்காட்டி உணர வைப்பார்.     அவையோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப-சிந்தனை-சுவாரஸ்யம் – நகைச்சுவை-சமூக கருத்துகள் என சுவையாய் பேச்சை அமைப்பது இவரது வெற்றி. இதற்காக நிறைய புத்தகங்களையும் படிக்கிறார். மனிதர்களையும்!      ராஜீவ்காந்தி காலகட்டம் முதல் கட்சிக்காக கடுமையாய் உழைத்திருந்தாலும் கூட கட்சி மூலம் பலன் கிடைக்காத சூழ்நிலைகளிலும் கூட –கட்சி கட்டுப்பாட்டை மீறாத விசுவாசி. அகில இந்திய அளவில் அதிக அளவில் கட்சி கூட்டங்களில் பேசினது இவராகத்தானிருக்கும்.      இவரது துணைவி திருமதி அலமேலு, கணவரின் சமூக சேவையுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் .மகன் ராம்குமார் பள்ளி படிப்பில்!      என்னதான் பொது வாழ்க்கையிலிருந்தாலும் ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்திற்காக ஒதுக்கி அவர்களுடன் செலவிட்டு –ஒன்றாய் பயணித்து-அந்தப் பக்கமும் குறையில்லாமல் பார்த்துக் கொள்பவர்.      குடும்பத்தை பாதுகாத்து –தனிமனித ஒழுக்கம் பேணி, நன்றாக தொழிலை கவனித்து வருபவர்களால்தான் பொதுவாழ்வில் தூய்மையாக செயல்பட முடியும் –தொடர முடியும் என்பதற்கு சொக்கலிங்கம் ஒரு முன் உதாரணம்.      முன்னோர்களை மதிக்கணும்; கூட்டுக் குடும்பம் இந்திய பண்பாடு காக்கணும்; குடும்பத்தினரின் உணர்வுகளை அறிந்து கலந்து பேசணும்; கடிதங்கள் எழுதி மனம் திறக்கணும்; தீவிரவாதமில்லா உலகம் உருவாகணும் என்பதெல்லாம் இவர் வலியுறுத்தும் விஷயங்கள்.     ஆன்மீகம் கலந்த கல்வியும் நகைச்சுவை உணர்வு இருந்தால் துவேசம், ஆவேசம் குறைந்து தீவிரவாதம் குறையும் என இவர் நம்புகிறார்.     சொக்கலிங்கம் கவியரசர் கண்ணதாசன் நற்பணிமன்ற தலைவராகவும், மதுரை கம்பன் கழக செயலாளராகவும், மகிழ்வோர் மன்ற செயலாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.     `மனிதத் தேனீ’ பட்டம் இவருக்கு 1992 இல் மதுரை நற்கூடல் இலக்கிய கழகத்தில் சாலமன் பாப்பையா இளம்பிறை மணிமாறன் மூலம் வழங்கப்பட்டது. 1993இல் ஜேஸீஸ் அமைப்பில் 22 மாநில போட்டிக்கிடையே மிகச் சிறந்த தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.     சர்வதேச, இந்திய மற்றும் மாநில அளவில் 46க்கும் மேற்பட்ட விருதுகள்- அங்கீகாரங்களை பெற்றுள்ள இவர் 1993க்குப் பிறகு விருதுகளை தவிர்த்து வருகிறார். இவரது பலம்-மன உறுதியும் தன்னம்பிக்கையும் அடுத்தது, பெரிய எதிர்ப்பார்ப்பில்லா மனப்பக்குவம். யாரிடமும் தன் தேவைக்காக எதிர்பார்க்காத பண்பு.     தனது வளர்ச்சி –செயல்பாடுகளுக்கு உதவிய பத்திரிகையாளர் திரு ப.திருமலை, பேராசிரியர் சக்திவேலன், திருவாளர்கள் ராஜா கோவிந்தசாமி, எம்.எஸ்.முத்துராமன் போன்றோரை நன்றியோடு நினைவு கூறுகிறது. இந்த மனிதத்தேனீ.      +----------------------------------------------------------------------+ |   | | | | --------------------------------------- | | மாவட்ட ஆட்சி தலைவருக்கு வாழ்த்துகள்!  | |   | | --------------------------------------- | | | |             | | | |     மதுரையின் தற்போதை மாவட்ட ஆட்சியாளர் திரு.க.உதயச்சந்திரன் இ.ஆ.ப. | | அவர்கள் பல சமூகப் பணிகளுக்கு ஒத்துழைப்பு, உதவியும் செய்து வருகிறார். | | இது ஊக்கமாகவும், உந்துதலாகவும் இருக்கிறது.அவருக்கு இந்நேரத்தில் | | மனமுவந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  | +----------------------------------------------------------------------+ |   | +----------------------------------------------------------------------+     தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:17       அக்ரினி எஸ்.சீதாராமன்;     `பணம் எவ்ளோ சம்பாதித்தாலும் அவற்றை யாரும் தன்னுடன் கொண்டுபோய் போவதில்லை அதனால் கடவுளே வந்தாலும் மயங்காமல், கையளவேயானாலும் கலங்காமல் –மாநிலம் பயனுற வாழவேண்டும்’ என்கிற சீரிய கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் அருட்செல்வர் அக்ரினி திரு.ச.சீதாராமன்      பூர்வீகம் திருநெல்வேலி என்றாலும்கூட சென்ட்ரல் பேங்க் ஊழியரான தந்தையின் பணி காரணமாய் ராஜபாளையம், திண்டுக்கல்லில் பள்ளி படிப்பும் பி.ஏ.(இளங்கலை) மதுரையிலும் சீதாராமன் 1978இல்      படித்த பின்பு சரியான வேலை கிடைக்காததால் இவர் தேர்ந்தெடுத்தது வீடு-மனை-நிலம்-தரகுதொழில் அதில் 1989இல் மனை வாங்கி பிரித்து விற்கிற அளவிற்கு வளர்ந்தார்.      1993இல் சாஸ்வத் கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனராக வீடுகள் கட்டிக் கொடுக்க ஆரம்பித்தார்.      1999 இல் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் ஆரம்பித்து 1000 வீடுகளுக்கு மேல் கட்டிக் கொடுத்து முன்னணியில் இருக்கிறது இவரது அக்ரினி ஃபிளாட்ஸ்!      அக்ரினி என்றால் சமஸ்கிருதத்தில் முன்னிலை வகிப்பது என அர்த்தம். பெயருக்கேற்றபடி இவரும் முன்னிலையில்!      வீடு வாங்குபவர்கள் ஒன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாய் குடியிருக்க வாங்குகிறார்கள். அல்லது உள்ள பணத்தை உரிய முறையில் முதலீடு செய்து விற்கும்போது நல்ல விலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.      இந்த இரண்டு தரப்பினரையும் நிறைவு செய்வது இவரது வெற்றியின் ரகசியம்.      குடியிருப்போரின் பாதுகாப்பு-மரங்கள்-பசுமை-நீர்வளங்கள்-சுற்றுச்சூழல்-வாகனங்கள் நிறுத்துமிடம்-விளையாட –பூங்கா-சரியான ஆவணங்கள் –ஏமாற்றாத அங்கீகாரம் – தரமான பொருட்களை வைத்து கட்டுமானம்- இவற்றுடன் நியாயமான விலை போன்றவை மக்கள் இவரை நாடிவர காரணமாய் அமைந்திருக்கின்றன.      போட்டிக்கிடையில் எப்படி இத்தனை விஷயங்களையும் இவரால் சரியாய் கவனிக்க முடிகிறது?       ``ஏன் முடியாது?” சீதாராமன் சிரிக்கிறார். ``என்னிடம் நேர்மையும் உண்மையுமிருக்கிறது. வாடிக்கையாளர்களை மதிப்பவன் நான். அவர்களது தேவைதான் எனது சேவை. சரியாய் திட்டமிட்டு பெரிய அளவில் கட்டுமானம் செய்வதால் குறைந்த தொகையில் வீடுகளை என்னால் தரமுடிகிறது.      அதே மாதிரி எனக்கு பெரிய எதிர்பார்ப்புகள், ஆசைகள் இல்லாததால் குறைந்த லாபத்தில் நிறைவு காண முடிகிறது. கட்டுமானத்திலும் அகச்சிக்கனம்,(வாங்கும் பொருட்களை வீணடிக்காமல் உபயோகிப்பது. புறச்சிக்கனம் (மொத்தமாய் பொருட்கள் வாங்குவதால் குறைந்த விலைக்கு கொள்முதல்) இரண்டும் காப்பதால் எல்லாம் திட்டப்படி நடக்கிறது.      கடின உழைப்பும் எப்போதும் தளராத உற்சாகமும் இவரது பலம். இவரிடம் சற்று பேசினாலே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது! எளிமை! எதற்கும் கலங்காமை, நகைச்சுவைப் பேச்சு, பிறர் திறமையை மதித்தல், கஷ்ட நஷ்டங்கள் அறிந்து உதவுதல், ஆன்மீக ஈடுபாடு, தமிழ் இலக்கியப் பற்று இவரது சிறப்பம்சங்கள்.     கணினித் துறையால் நல்ல வேலைவாய்ப்பு உள்ளவர்கள், வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் என வருவாய் பெருக்கத்தால் நல்ல வீடு தேடி வருபவர்களும் அதிகமாகியுள்ளது அவர்களின் திருப்தியை சீதாராமன் தனது மூலதனமாய் நினைக்கிறார்.      சீதாராமனுக்கு பள்ளிப் பருவத்திலேயே இலக்கிய ஆர்வம் உண்டு. பிறகு காரைக்குடி மற்றும் சென்னை கம்பன் கழக செயல்பாடுகளை பார்த்துப் பார்த்து மதுரையிலும் கம்பன் கழகம் ஆரம்பிக்கப்பட்டு அதன் துணைத் தலைவராகவும் தூணாகவும் இருந்து வருகிறார்.      அன்றன்றைய லாபங்களை பார்க்காமல் தொலைநோக்கில் தொடர்புகளை வளர்ப்பதும். வாடிக்கையாளர்களை தக்கவைத்து மென்மேலும் பெருக்குவதும் இவரது சிறப்பு.     சீதாராமன் பிரச்சனைகளையே சந்திக்க வழியில்லாமல் செயல்படுபவர். இவரிடம் அடாவடி கிடையாது. செருக்கு இல்லை சமாதான சாத்வீக முறையை பின்பற்றுபவர். பாதிக்கப்பட்டவர் அல்லது எதிராளியின் இடத்தில் நம்மை வைத்து பார்த்தால் நல்ல தீர்வு கிடைத்து விடும்.     இலக்கியமும் இவருக்குத் தெரியும். உலகியலும் அத்துபடி. அதனால் எல்லாம் சுமுகமாய் போகிறது. அக்ரினி வீடுகள் வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடத்த அரங்கம் அமைத்து அரசியல் அல்லாதவற்றிற்கு இலவசமாய் இடம் தருகிறார். அத்துடன் அவையோருக்கு அறுசுவை உணவும் வருடம் முழுக்க இந்த அரங்கில் இலக்கிய –சமூக-சமய சீர்திருத்த நிகழ்ச்சிகள் நடந்து வருவது பெருமைப்படும் விஷயம்.     மனைவி, 2 வாரிசுகள் என சந்தோஷமாய் வாழும் சீதாராமன் விஸ்வாஸ் கல்ச்சுரல் அறக்கட்டளை ஏற்படுத்தி அதன் மூலம் பல நல்ல காரியங்களும் செய்து வருகிறார்.      தன் தொழிலுக்கு 35 கோடிகள் கடனுதவி அளித்து வளர காரணமாய் இருந்த – இருக்கும் யூனியன் வங்கிக்கு நன்றியோடு இருக்கிறார் இந்த அருட்செல்வர்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:18       மணவை முஸ்தபா;       அறிவியல் தமிழ்ப் பணியை வாழ்நாள் பணியாக மேற்கொண்டுள்ள மணவை முஸ்தபா, சென்னை,அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டங்கள் பெற்றவர். தென்மொழிகள் புத்தக நிறுவன நிர்வாகப் பதிப்பாசிரியர். சர்வ தேச திங்களிதழ்`யுனெஸ்கோ கூரியர்’ ஆசிரியராகப் பணியாற்றி, 30 உலக மொழி ஆசிரியர்களில் `பணி மூப்பு ஆசிரியர்’ எனும் தகுதிக்காக யுனெஸ்கோவால் சிறப்பிக்கப்பட்டவர்.       இவரது 40-க்கு மேற்பட்ட நூல்களில் 8 கலைச்சொற் களஞ்சிய அகராதிகளாகும். இவை இந்திய மொழிகளில் முதலாவதாகும். பல இலட்சம் கலைச் சொற்களை உருவாக்கிய இவரை உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகள் விருதளித்துப் பாராட்டிப் பரிசளித்துள்ளன். தமிழ்நாடு அரசின் ஐந்து விருதுகள் உட்பட 30 –க்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்ற ஒரே தமிழறிஞர் எனும் சிறப்புப் பெற்றவர்.     எட்டு ஆண்டுகள் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சிப் பேரவை இணைச் செயலர், தொலைக்காட்சி, வானொலி, ஆலோசனைக் குழு உறுப்பினர். ஞானபீடத் தேர்வுக்குழு உறுப்பினர். முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழ் வளர்ச்சி மேல்மட்டக் குழு உறுப்பினர், சுதந்திர பொன்விழாக் குழு உறுப்பினராகப் பணியாற்றியவர். அண்ணா பல்கலைக்கழக தமிழ்வளர்ச்சிக் குழு உறுப்பினர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக, கலைச் சொல்லாக்க குழு உறுப்பினர், முன்னாள் கெளரவ மாகாண மாஜிஸ்திரேட்.      இதழ்கள், தொலைக்காட்சி, வானொலிகளின் நூறுக்கு மேற்பட்ட படைப்புகளை வெளிப்படுத்தியவர். பன்னிரெண்டு மொழி பெயர்ப்பு உத்திகளை வகுத்தவர். இவரது அறிவியல் நுல்கள் தமிழ் நாடு அரசு,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகளின் பரிசுகளைப் பெற்றுள்ளன.      மலையாள-தமிழ்ப் பணிக்காக கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை பொன்விழாவில் சிறப்பிக்கப்பட்டவர்.      இவரது வாழ்க்கையும் சாதனைகளும் மத்திய அரசால் 7 மணி 20 நிமிடம் பதிவு செய்யப்பட்டு புது தில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.      மணவையார் அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட இவர் மூன்று முறை உலகை வலம் வந்துள்ளார்.      திண்டுக்கல் அருகே விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் மணப்பாறையில் பள்ளி வாழ்க்கை, பல்வேறு வகைகளில் எழுத்து, பேச்சு, மற்றும் இலக்கிய திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பாசறையாக அவ்வூர் இருந்ததால் அதற்கு நன்றிகாட்டும் விதமாக அவ்வூரின் பெயரை சேர்த்து மணவை முஸ்தபாவாக மாறினவர்.   தமிழறிஞர் தெ.பெ.மீனாட்சி சுந்தரம் அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டவர்.      குவைத்திற்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக வந்தபோது சாதனைகள் நிகழ்த்தி வரும் இவரது அமைதித் தோற்றம் வியப்பளித்தது.     மனிதரின் தமிழ் பற்று அலாதியானது. இவரது உடல் ரத்தம்- மூச்சு எல்லாவற்றிலும் தமிழ்!      பட்டபடிப்பு தேர்வு முடிவு வந்த ஒரே வாரத்தில் சேலம் அரசினர் கல்லூரியில் வேலை வாய்ப்பு கிடைக்க இவர் குருநாதர் தொ.பொ. மீயிடம் ஆசீரிவாதம் வாங்கப் போனார்.      அப்போது அங்கு நடந்த பயிற்சிமொழி கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு அவர் அழைக்க சென்றார்.      அங்கு பேசியவர்கள் பயிற்சி மொழியாக ஆங்கிலயே தொடர வேண்டும்-தமிழில் போதிய அறிவியல் நூல்களும் சொற்களும் இல்லை. அதனால் தமிழில் அறிவியல் தேவையில்லை என்கிற மாதிரி பேச-   மணவைக்கு ஆவேசமாயிற்று.      உடன் மேடை ஏறி- ``தமிழில் எந்தத் துறைக் கல்வியையும் கற்பிக்க முடியும். அறிவியலையும் சொற்சொட்டோடும்  பொருட்செறிவோடும்  சொல்ல முடியும். அதற்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போகிறேன். அதை உறுதிபடுத்தும் வகையில் எனக்கு கிடைத்திருக்கும் இந்த வேலையை உதறி தள்ளுகிறேன். என்று மேடையிலேயே அந்தப் பணி ஆணையை கிழித்தெறிய அனைவரும் ஆர்ப்பரித்தனர்.       அந்த வயதில் இவர் கொண்ட ஆவேசத்தின் வெளிப்பாடு இன்றும் தொடர்கிறது. அறிவியல் துறை மட்டுமின்றி சட்டத்துறையிலும் இவரது கவனம் திரும்பிற்று. சட்டப்படிப்பும் படித்து அதன் நுணுக்கங்கள் அறிந்தார்.      சட்டத்தை தமிழில் கொண்டு வர முடியாது என்றதை சவாலாக ஏற்று இவர் காரியத்தில் இறங்கினார். மலேசிய பயணத்தின் போது டத்தோ சாமிவேலுவின் ஊக்கத்தில் சட்டத்தை தமிழ்ப்படுத்தி நான்கு மாதத்தில் செய்து முடித்தார்.      மணவைக்கு ஆங்கிலம், தமிழ் மட்டுமின்றி சமஸ்கிருதம், மலையாளத்திலும் நல்ல புலமையுண்டு. செம்மொழி தமிழின் பலன் முழுதாகக் கிடைக்க இவர் அரும்பாடுபட்டு வருகிறார்.      சேவரத்னா, கலைமாமணி , திரு.வி.க. விருது, போன்றவற்றுடன் அறிவியல் தமிழ் தந்தை, தமிழ் தூதுவர் வளர்தமிழ் செல்வர், அறிவியல் தமிழ் சிற்பி, அறிவியல் தமிழ் வித்தகர் என புகழப்படுபவர்.   இவரது அறிவியல் தமிழ் நுல் பள்ளிகளில் பாடமாக்கப்பட்டுள்ளது.  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:19       அன்பு சிதம்பரம்;     சம்பாதிப்பதிற்காக வேலையோ, தொழிலையோ செய்பவர்கள் உண்டு. ஆத்மதிருப்திக்காக இயங்குபவர்களும் உண்டு. தொழிலையே ஆத்மதிருப்தி தருவதாக அமைத்துக் கொள்பவர்கள் வெகு சிலரே.     அந்த வகையில் மகிழ்ச்சி-திருப்தி-மனநிறைவோடு செயல்பட்டு வருகிறார் மதுரை திரு. அன்பு சிதம்பரம்.     இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் கண்டனூர் (திருவாளர்கள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,குழந்தைக் கவிஞர் செல்வ கணபதி, திருமதி உமையாள் ராமனாதன் (அழகப்பா கல்லூரி ) போன்றோர் அதே ஊர்).     இவரது தந்தை திரு. அன்பு நாச்சியப்பன் காங்கிரஸ்காரர். சுதந்திர போராட்ட தியாகி. அவர் காமராஜ். சா.கணேசனுடன் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் அலிப்பூர் சிறையில் ஒன்றரை வருடம் ஒன்றாக இருந்திருக்கிறார்.(ஆர்டர் ஆகி 6 மாதம் மட்டும்).      அதன் பிறகு அப்பா மலேசியாவில் ரப்பர் எஸ்டேட்டில் நிர்வாகியாக இருந்தவர். சிதம்பரம் எஸ்.எஸ்.எல்.சி வரை சொந்த ஊரிலும் 1958 இல் மலேசியா சென்ரு சீனியர் கேம்ப்ரிஜ்ட் வரை படித்தார். மலேசியாவில் அடையாள அட்டை அவசியமான ஒன்று. அதற்கான புகைப்படங்களை பார்த்து –பொழுதுபோக்காக சிதம்பரம் புகைப்படக் கலையை கற்றுக் கொண்டது. பின்னாளில் தொழில் தொடங்க அடிப்படையாக அமைந்துவிட்டது.      1975 இல் மதுரைக்கு வந்து கால் பதித்த அன்பு கார், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை தவணைமுறையில் விற்பனை செய்ய ஆரம்பித்தார். அந்தத் தொழிலில் நல்ல வருவாய் இருந்தாலும் கூட இவருக்கு புகைப்பட கலை மீது ஆர்வம் இருந்து கொண்டேயிருந்தது.       அந்த நாட்களில் ஓட்டுனர் லைசென்ஸ்கள் பெரிய பெரிய புத்தக அளவில் தரப்பட்டு அவற்றை எடுத்துச் செல்வது சிரமமாய் இருந்தது. அவற்றை மலேசியா அடையாள அட்டை போல எளிதாய் எடுத்துச் செல்வது போல ஏன் அமைக்கக் கூடாது என்று இவருக்கு தோன்றிற்று.      அதற்காக சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களை புகைப்படம் எடுக்கும்போது –முதலில் மங்களகரமாய் இருக்கட்டுமே என்று பிள்ளையார்பட்டி விநாயகரை படம் எடுத்தார்.      அது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி ஆன்மீகப் பக்கம் இவரை மாற்றிற்று. அந்த ஈடுபாடு கோயில் கோயிலாக சென்று மூலஸ்தான விக்ரகங்களை படமெடுக்க வைத்தது.      அந்தப் படங்களை இவர் பிரிண்ட் போட்டு சம்மந்தப்பட்ட கோயில்களில் அன்பளிப்பாக தர-விற்பனைக்கே கொடுங்கள் என்று அவர்கள் வலியுறுத்தவே இவருக்கு இதுவே தொழிலாகவும் மாறிவிட்டிருக்கிறது.      புகைப்படக்கலையை  வியாபார ரீதியிலோ-விளம்பரம் எளிதில் கிடைக்கும் வழியிலோ- அரசியல்-சினிமா-பத்திரிகை துறை என திசை திரும்பாமல் முழுக்க முழுக்க –ஆன்மீகம் –கடவுள் என அமைத்துக் கொண்டது இவரது சிறப்பு.      என்னவோ எடுத்தோம்-விற்றோம் என்றில்லாமல் ஆத்மார்த்தத்துடனும், நேர்த்தியுடனும் படங்களை அப்படியே ஒரிஜினலாக பிரதிபலிப்பது இவரது சாதனை.      ``படங்களை பார்க்கும்போது, வணங்கும்போது மக்களுக்கு பக்தி உணர்வும் திருப்தியும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் வணங்குபவர்களுக்கும் பலன்! அதன்மூலம் எனக்கும் பலன் கிடைக்கும் –கிடைக்கிறது. எங்கள் வம்சமும் விருத்தியடைகிறது” என்று பூரிக்கிறார்.      படங்களை, பெரிய அளவிலிருந்து- கையடக்க அளவு வரை விதம் விதமாய் பிரிண்ட் செய்து –லேமினேட் செய்து வெளியிடுவதுடன் –ஆன்மீக புத்தகங்களும் அன்பு வெளியிட்டு வருகிறார். அதிலும்கூட இவருக்கு திருப்தி!      ஆன்மீகம் என்றாலும் கூட நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கும், மக்களின் ரசனைக்கும் ஏற்ப படங்களை கம்ப்யூட்டரில் சரி பண்ணி –பிரிண்ட் செய்து வெளியிடுகிறார்.      ஆண்டவனின் அருள்தான் இவரது பலம் என நம்புகிறார். மழை –மாங்கல்யம் –மழலை போல- ஆத்மதிருப்திக்குக்கூட ஆண்டவனின் அருளாலேயே சிறக்க முடியும் என்கிறார் அன்பு.       பிள்ளையார்பட்டி படங்களால் பிள்ளையாரும் பிரபலமடைந்திருக்கிறார். அவரால் இவரும்!   உண்மை –உழைப்பு-நேர்மை இவரது தாரக மந்திரம்.              ஏதாவது காரணத்தால் படம் சரியாய் அமையவில்லை என்றால்,முதலீட்டிற்கு நஷ்டம் வருமே என்று அவற்றை இவர் வெளியே அனுப்பி காசு பார்க்க நினைப்பத்தில்லை, தரம் இவரது முதல் மூலதனம் தரமில்லாத படங்களை பத்திரப்படுத்தி வருடந்தோறும் ராமேஸ்வரம் செல்லும்போது அங்கு கடலில் கொட்டிவிடுகிறார். அதற்காக கவலைப்படுவதில்லை, தரம்தான் முக்கியம்.      அன்பு சிதம்பரத்தின் கைவண்ணம் பிரபலம் என்றாலும்கூட இவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. எளிமை! பரோபகார குணம்! இவ்வுலகில் பிறருக்கு கொடுத்துப் பார்க்கிற சந்தோஷத்திற்கு ஈடினை எதுவுமில்லை என்று உணர்ந்து அன்பளிப்புகளை ஏராளமாய் தாராளமாய் வழங்கி வருகிறார்.      அன்பு இந்தியா முழுக்க அநேகமாய் எல்லா கோயில்களுக்கும் சென்று படமெடுத்து படமாக்கியிருக்கிறார்.      மதுரை மடப்புரம் பிரபல கோயிலை படம் பிடிக்கச் சென்றபோது லாரி இடித்து விபத்தில் எந்த தேசமுமில்லாமல் தப்பித்ததையும் –சக்கரத்தாழ்வார் கோயிலில் கேமிரா ஃப்ளாஷ் உடைந்தாலும் கூட படம் நன்றாக அமைந்ததையும் காசியில் ஹிந்தி தெரியாமலிருந்தாலும் கூட –அங்கு அனுமதிபெற்று படம் எடுத்ததை நினைவு கூர்கிறார்.      வாழ்வில் தன் மன நிறைவுக்கு ஏற்றமாதிரி அமைந்த துணைவி கண்ணம்மைக்காக பெருமைப்படுகிறார். இவர்களது மூன்று மகள்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது. மகன் திரு. சிவக்குமார் பி.எஸ்.ஸி. கம்யூட்டர் சயின்ஸ் படித்து அன்பு சிஸ்டம்ஸ் எனும் பெயரில் கம்ப்யூட்டர் சேல்ஸ்&சர்வீஸ் சிறப்பாக செய்து வருகிறார்.       அன்பு, காசி நாட்டுக்கோட்டை சத்திரம் துணை தலைவராக இருக்கிறார். (காசி-கல்கத்தா-கயா போன்ற கோயில்களில் நடந்துவரும் நான்கு கால பூஜையில் மூன்று கால பூஜை நகரத்தார் மூலம் நடப்பது விசேஷ செய்தி.)      இவர் சார்ந்த நகரத்தார் அமைப்பு, காசி, திருச்செந்தூர் போன்ற இடங்களில் காட்டேஜ்கள் கட்டிவிட்டு, அந்தந்த கோயில்களுக்கு வருமானம் ஈட்டித் தருகிறது.       பழமுதிர்ச்சோலை பாதயாத்திரை குழுவின் தலைவரான இவர் வருடந்தோறும் அன்னதானம் செய்து வருகிறார்.       `ஆன்மீகப் பதிப்புச் செம்மல்’ முதற்கொண்டு பல பட்டங்களும் கெளரவங்களும் பெற்றிருக்கிற இவர்-        பெரிதாய் மதிப்பது நிறைவான- மகிழ்வான- திருப்தியான-அமைதியான-குறைவில்லா வாழ்வை தந்துள்ள ஆண்டவனின் அருளை, கருணையை.  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:20        ஆர். நடராஜன்;       ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக எழுதும், சொற்பொழிவாற்றும் திரு.ஆர்.நடராஜன் இருமொழி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் நிர்வாகவியல் ஆலோசகர்.      ஒரு மொழிபெயர்ப்பு நூல் மூலம் 1967-ல் தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர் பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில்`நிர்வாகவியல் வரலாறு’ `பொருளியல் வரலாறு’ என்ற இரண்டு நூல்களும் அடுத்தடுத்த வருடங்களில் தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசுகளைப் பெற்றன. தினமணி சுடரில் வெளிவந்த அவரது கட்டுரைகளின் தொகுப்பு பாரத ஸ்டேட் வங்கியின் பரிசைப் பெற்றுள்ளது.       நடராஜன் ஸ்ரீ பழனி ஆண்டவர் ஓரியண்டல் கல்ச்சர் கல்லூரியில் 1965ல் பி.ஏ. (ஓரியண்டல் கல்ச்சர்) சென்னை பல்கலைக்கழக முதல் மாணவனாக பிறகு அண்ணாமலை யுனிவர்சிடியில் எம்.ஏ. (ஆங்கிலம்) இரண்டாம் மாணவனாகவும் தேர்வானார்.      இவர் தன் 20ஆம் வயதில் வெளியிட்ட முதல் நூலை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களும், இவரது `தொழில் மேதை விஸ்வநாதன்’ என்ற தமிழ் நூலையும் `எஸ்.வி.-த மாஸ்டர்மைண்ட்’ என்ற ஆங்கில நூலையும் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கட்ராமனும் பாராட்டியிருக்கிறார்கள். இவரது மொழிபெயர்ப்பு நூல்களில் குறிப்பிடத்தக்கவை நா.பா.எழுதிய `சமுதாய வீதி’யின் ஆங்கில வடிவம். கே மோகன்தாஸ் எழுதிய `எம்.ஜி.யார், த மேன் அண்ட் த மித்’ நூலின் தமிழாக்கம்.      ஆர். நடராஜன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதன்மை மாணவராக 19 வயதில் கல்லூரி ஆசிரியர் பணியைத் தொடங்கி, தன் 29 ஆம் வயதில் ஆங்கில பேராசிரியராகவும் கலைக்கல்லூரி ராமேஸ்வரம் முதல்வராகவும் பொறுப்பேற்றார். பின்னர் `இந்து’நாளிதழின் தென்னாற்காடு மாவட்ட நிருபராகவும் பத்து வருடகாலம் அமெரிக்கத் தூதரகத்தில் தமிழ் பதிப்பாசிரியராகவும் பின்னர் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றினார். அமெரிக்க வெளி உறவுத்துறை இவரது பணியைப் பாராட்டி பரிசளித்துள்ளது.      அடுத்து ஒரு நிறுவனத்தில் பொது மேலாளராகப் பொறுப்பேற்றது தன் எழுத்துப் பணிக்கு இடையூறாக இருந்தது என்பதனால் சேர்ந்த வேகத்தில் அதை விட்டு விலகி மறுபடியும் `இந்து நாளிதழில் உதவியாசிரிராகச் சேர்ந்தார். `இந்து’வில் நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆங்கிலப் பத்திரிகைத் துறைப் பணிக்காக காஸா சுப்பாராவ் விருதினையும், தமிழ்ப் பத்திரிகைப் பணிக்காக அறவாணன் ஆராய்ச்சிக் கட்டளை விருதினையும் பெற்றுள்ளார். தமிழ்மொழி, இலக்கியம் பண்பாடு இவை மீது பெரிதும் ஈடுபாடு கொண்டுள்ள இவர் அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியிருக்கிறார்.       தமிழ்நாட்டிலும், புதுவையிலும், ஆந்திரப் பிரதேசத்திலும் உள்ள கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நிர்வாகவியல் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். தமிழக அரசின் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்காகத் தமிழிலும் தென்னக ரயில்வே அதிகாரிகளுக்காக ஆங்கிலத்திலும் நிர்வாகத் துறைப் பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறார்.      அமெரிக்க தூதரகத்தின் முழுநேரப் பணியில் இருந்த போதே இவர் இலக்கியப் பணி புரியவும், நிர்வாகவியல் ஆலோசகராக இருக்கவும் தூதரகம் அனுமதித்தது. `இந்து’ நாளிதழும் இதே பணிகளைத் தொடர அனுமதித்தது.      தினமணி, தினமலர் நாளிதழ்களில் வணிகவியல்,பொருளியல் கட்டுரைகளை எழுதிவருகிறார். உள்நாட்டு,அயல்நாட்டு, அரசியல் போக்குகள் பற்றி `துக்ளக்’இதழில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆனந்தவிகடன், குங்குமம், புதிய பார்வை,அஞ்சல் ஆகிய இதழ்களில் இவரது கதைகளையும், தமிழ் அரசு, சாவி, தமிழன் பத்திரிகைகள் இவரது கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன.      இவரது எழுத்துகள் பற்றிப் பேராசிரியர் ச.மெய்யப்பன், ``பேராசிரியராக விளங்கியமையால் செய்திகளைச் சுவையாகச் சொல்லி விடுகிறார். இதழாசிரியராகத் திகழ்வதால் எதனை, எங்கே, எப்படிச் சொல்ல வேண்டும் என்பதில் வல்லவராக இருக்கிறார். இவருக்கென்று ஒரு சமூகப் பார்வை உண்டு. அதனை அழகாகவும், அங்கதமாகவும் சொல்கிறார். எதனையும் சுற்றி வளைத்துச் சொல்லாமல் நேரடியாகச் சொல்வதில் வல்லவர். அகிலத்து அறிவையெல்லாம் உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல் மிக்க இவர் எதனையும் மிக லாவகமாக விளக்கிவிடுகிறார். எதிலும் நிறை குறைகளைச் சொல்லும்போது இவர் எழுத்தின் அழுத்தம் பளிச்சிடுகிறது’’, என்று புகழ்ந்திருக்கிறார்.      துக்ளக் ஆசிரியர்  சோ. ராமஸ்வாமி, ``ஒரு மனிதர் கெட்டிக்காராக இருந்து அவர் கடுமையாகவும் முயற்சித்தால் ஏதாவது ஒரு துறைப் பற்றி அவருடைய அறிவு பாராட்டத்தக்கதாக அமையும். ஆனால் ஒரே மனிதரிடம் அரசியல், பொருளாதாரம் , அயல்நாட்டு நிலவரங்கள், சரித்திரம், இலக்கியம், கல்வி அமைப்பு, பண்பாடு, வணிகம், பத்திரிகை உலகம்... என்று பல துறைகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவு கொட்டிக் கிடந்தால், அந்த சாதனையை என்னவென்று வர்ணிப்பது? திரு. நடராஜன் அவர்களின் பலதுறை அறிவைக் கண்டு நான் வியக்கிறேன்.பிரமிக்கிறேன். தான் கண்ட காட்சிகளை அவர் விளக்கும் விதமோ மிகவும் எளிமையானது. சரளமான நடை அவர் எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் சில கடினமாக இருந்தாலும் கூட அவர் அதை விளக்கும் விதத்தினால், அவ்விஷயம் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியதாகி விடுகிறது’’ என்கிறார்.      நகைச்சுவை அவருக்கு இயல்பாகவே வருகிறது. அதனால் தவறுக்குக் காரணமானவர்களை அவர் ஒரு அடி அடிக்கும்பொழுது. காயம் ஏற்படுவதில்லை. மாறாக, தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்புவதற்காகச் செய்யப்படுகிற முயற்சியாகவே அது இருக்கிறது.`ஸடையர்’ என்பதன் லட்சணங்களைப் புரியவைக்கிற பாணி, நடராஜனின் பாணி.      அவர் எழுத்தில் கோபம் இருக்கிறது; ஆனால் அது வெறியாக மாறுவதில்லை. நகைச்சுவை இருக்கிறது. ஆனால் அது வெறும் கேலியாக உருவெடுப்பதில்லை. ஆழம் இருக்கிறது. ஆனால் அது சுய அறிவின் தம்பட்டமாகத் தாழ்ந்து விடுவதில்லை. பிரச்சினைக்குத் தீர்வு சொல்லப்படுகிறது. ஆனால் அது உபதேசமாகப் பொழியப் படுவதில்லை. சுவை பெரிதும் இருக்கிறது. ஆனால் அது வெற்றுப் பொழுதுபோக்காக அமைந்து விடவில்லை. இப்படி எழுதுவது என்பது ஒரு சாதனை. அதை சர்வ சாதாரணமாகச் செய்து காட்டியிருக்கிறார் நடராஜன்.      அதில் வியப்பில்லை, நிறையப் படிப்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் படிப்பைத் தன் பணிக்குப் பயன்படுத்திப் பழக்கப்பட்டவர் அவர். இயல்பாகவே சமூகத்தின் பால் பெரிதும் நேசம் கொண்ட இவர். மற்றவர்களின் கருத்துகளை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் உடையவர். பல பெரிய மனிதர்களை, அதிகாரத்தில் இருப்பவர்களை,நெருக்கமாக அறிந்திருந்தும், அந்த உறவை வைத்து, தனக்கு லாபம் தேடாத நெருப்பு போன்ற நேர்மை அவரிடம் முழுமையாகக் குடிகொண்டிருக்கிறது. அதனால் தான் பல பிரச்சினைகளைப் பற்றி விருப்பு வெறுப்பு இன்றி ஒரு நீதிபதி போல் அவரால் எழுத முடிந்திருக்கிறது.       `சொல்ல வந்ததை தயை தாட்சண்யமின்றிச் சொல்லும் துணிவு, அதைச் சொல்லும்போது மனதிலும் சொல்லிலும் தேவைப்படுகின்ற தெளிவு; சொல் யாரைக் குறி வைக்கிறதோ அவர்களைக் காயப்படுத்தாமல், உணர்வு பெற செய்கிற கனிவு- இவை ஒரு விமர்சக எழுத்தாளனுக்கு வேண்டும்’ என்று முன்னாள் முதல்வர் அறிஞர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் கூறினார். அவர் இன்று உயிருடன் இருந்து நடராஜனின் எழுத்தைப் படித்திருந்தால் தான் கூறிய முக்குணங்கள் கொண்டவரின் எழுத்தைப் படித்த திருப்தி அவருக்கு ஏற்பட்டு இருக்கும்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:21            தன் எழுத்துகள் வாசகர்களை ஈர்த்து, சிந்திக்க வைத்து அவர்களது எண்ணங்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆர். நடராஜன் உழைப்பில் உயர்ந்த தொழிலதிபர்கள் பற்றி ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதுபவர். பொருளியல், நிர்வாகவியல் பற்றித் தமிழில் அதிகம் எழுதுபவர். எழுத்துப் பணி மனித குல மேம்பாட்டிற்காகவே என்று நினைக்கும் இருமொழி எழுத்தாளர் இவர்.   எம்.பி.வாசிமலை:      மதுரையில் கிராமப்புற மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் வைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. DHAN Foundation (Development of Human Action). இதன் எக்ஸிகியூடிவ் டைரக்டர் திரு.எம்.பி. வாசிமலை முழுக்க முழுக்க தன்னை சமூக சேவைக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.       உசிலம்பட்டி அருகே எழுமலை எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கூட்டுக் குடும்ப அன்பில் பண்போடு வளர்க்கப்பட்டவர்.       இவர் பாளைங்கோட்டையில் பியூசியும், பி.எஸ்.ஸி. மற்றும் எம்.எஸ்.ஸி அக்ரி மதுரையிலும் முடித்து பவானி சாகர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் நீர் வேளாண்மை சம்மந்தமாய் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.       பிறகு அகமதாபாத் IIMA யில் எம்.பி.ஏ படித்தபோது அவரது மனதில் ஒரு பளிச்! தங்களது படிப்பு கிராம மக்களுக்கு பயன்பட வேண்டும். இந்தியாவின் நாடித்துடிப்பான கிராமங்களை முன்னேற்ற வேண்டும் என்று நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து  PRADAN(1983) (professional Assistance for Development Action) எனும் அமைப்பை ஏற்படுத்தினார்கள்.       படித்த இளைஞர்கள்-இவர்கள் மூலம் இப்போது ஏழாயிரத்துக்கும் மேல் கிராமங்களில் பணிபுரிகின்றனர். பிற தொண்டு நிறுவனங்களுக்கும் தொழில் நுட்பங்கள் கொடுத்து செயல்பட வைக்கின்றனர்.       வாசிமலை மதுரை காந்திய நிறுவனத்தில் 6 வருடங்கள் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். 70 கூட்டுப் பண்ணைகளை நிர்வகித்திருக்கிறார்.       1987 இல் தனியாய் மத்தியபிரதேசம் கிராமம் ஒன்றை தத்தெடுத்து கோழி, காளான் வளர்ப்பை ஊக்கப்படுத்தினார். ராஞ்சி, லக்னோவிலும் இதை விரிவுபடுத்தினார்.        1990 இல் “களஞ்சியம்” எனும் பெண்கள் சுய உதவி குழுக்கள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கிராமியம், நகரசேரிகள், மீனவர்கள், பழங்குடியினர் என்று 4 சூழலில் செயல்பட்டு அவர்களை வறுமையிலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் விடுவிக்கிறார்கள்.       சின்னப்பிள்ளை போன்ற தலைவர்களை உருவாக்கி மக்கள் கல்வி நிலையம் மற்றும் சுகாதார பயிற்சிகள் தருகிறார்கள். நேரடி ஜனநாயகத்தை வளர்த்தல், சாதி மத, அரசியலுக்கு அப்பாற்பட்ட தொண்டு, சமூக சிந்தனையுடன் கூடிய குறும்படங்களுக்கு விருது போன்றவை இதன் செயல்பாடுகளில் சில.      1992இல் “வயலகம்” திட்டம் அறிமுகமாயிற்று. இதன் மூலம் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது. உழவர் ஒருங்கிணைப்பு, ஏரி-குளம்-கண்மாய் போன்ற நீர் ஆதாரங்களை சரி பண்ணி மழை நீர் சேமிப்பு, பால்வளம் பெருக்கல் செய்து வருகிறார்கள்.      கிராமங்களிலும் இன்டர்நெட் மையங்கள் உருவாகி, இலவச இமெயில், சான்றிதழ் பெற உதவி, அப்பல்லோ-அரவிந்தர் மருத்துவமனையுடன் தொடர்பு, தொலைபேசி வசதி எல்லாம் செய்து தருகிறார்கள்.      இவர்களின் செயல்பாடுகளுக்கு  Ford Foundation,TATA மற்றும் நெதர்லாந்து   Oxfamnovio உதவி வருகின்றன.      1992-97 வரை பிரதான தலைமை அலுவலகம் மதுரைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டது. 98-ல் தானம் அறக்கட்டளை தென் இந்தியாவில் தனியாக ஆரம்பிக்கப்பட்டு ஏழாயிரம் கிராமங்களில் 4.5 லட்சம் குடும்பங்கள் பலனடைந்துள்ளனர்.      650 முழுநேர சேவை பணியாளர்களை கொண்ட இதில் 400 பேர் தொழில்நுட்ப வல்லுனர்கள். இவர்கள் ENDP-ADP,RB,நபார்டு போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.       1995-ல் ஆரம்பிக்கப்பட்டு 70 நாடுகளில் செயல்பட்டுவரும்  INAFI  (அகில உலக மாற்று நிதி நிறுவனங்கள்) செகரட்டரியாய் இருக்கிறார் வாசிமலை.        சுனாமி போன்ற பேரிழப்பிற்கும் உதவுகிறார்கள். டாடா DHAN அகாடமி இலவச கல்லூரி நடத்தி PMD (Program Management development) பட்டம் வழங்கி கிராமங்களுக்கு அனுப்புகிறார்கள்.        மனைவி வாசுகி இவரது செயல்பாடுகளுக்கு ஊக்கமளித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள்.        விரைவில் அகில உலக அளவில் இந்த அமைப்பு விரிவாக்கப்பட்டு ஒரு மில்லியன் குடும்பங்களை இணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.     டாக்டர் த.ரவிச்சந்திரன்       சங்க தமிழ் முதற்கொண்டு மதுரைக்கென்று எத்தனையோ பெருமைகள் உண்டு. அத்துடன் இன்னொன்று கூட;       மகாத்மா காந்தி தனது கோட் –சூட் உடையை துறந்து எளிமை-ஏழை உடைக்கு மாறினது. (1921 –செப் -22) மதுரையில் வைத்துதானாம். அத்துடன் அவர் பயன்படுத்திய 14 பொருட்களை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் பாதுகாத்து வருகிறது.       தென் இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு காந்தி நினைவு அருங்காட்சியகமான இதன் பொறுப்பாளராகவும் திட்ட அலுவலராகவும் இருக்கும் திரு.த.ரவிச்சந்திரன் மிக எளிமையானவர். சமூகம்-இளைஞர் மேம்பாட்டுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்.       இவரது தாத்தா திரு. பஞ்சரத்னம் சுதந்திர போராட்ட வீரராக இருந்தாலும்கூட ஆரம்ப நாட்களில் ரவிச்சந்திரனுக்கு காந்தி கொள்கைகளில் பிடிப்பில்லாமல் இருந்தது. ஆனால் பின்னாளில் அவரைப் பற்றி படித்த பின்பு மாற்றம்!      ரவிச்சந்திரன் அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.(ஆங்கிலம்); இதே கல்லூரியில் காந்திய சிந்தை –அமைதி கல்வியில் எம்.ஏ, எம்ஃபில்லும் 1989 இல் முடித்தவர்.      1986 இல் ஆர்வமுடன் பிறருடனும் சேர்ந்து ஆரம்பித்த அமைதி விஞ்ஞான கழகம் தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் போனதில் இவருக்கு வருத்தம் உண்டு. அப்போது, சுயமுன்னேற்றம்-சமாதான- சாத்வீக பயிற்சிகளை இளைஞர்களுக்கு காந்தி மியூசியத்தில் வைத்து கொடுத்திருக்கிறார்கள்.      குடும்பத்தினர் நடத்திய ஹோட்டல் தொழிலிலோ, வாய்ப்புகள் வந்த அரசாங்க உத்தியோகத்திலோ இவருக்கு ஈடுபாடு வரவில்லை.      ஜப்பானியர்களுடன் சேர்ந்து இவர் புதுக்கோட்டை மாவட்ட அம்மன் கோயில்களை பற்றின ஆய்வு செய்திருக்கிறார், நகரத்தாரின் சிவாலயங்கள் பற்றியும் ஆய்வு பணி!       ரவிச்சந்திரன் 13 வருடங்கள் `தமிழகத்தில் சாதி சமய கலவரங்களும் அதற்கான தீர்வு முறைகளும்’ எனும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டரேட் பெற்றுள்ளார்.       பொது வாழ்வின் தூய்மை –இயக்க பணிகள், சைக்கிள் யாத்திரை, மதுரை-ஸ்ரீலங்கா பாதயாத்திரை (1998) அகிம்சை கோட்பாடு, தனிமனித மேம்பாடு என்று இவரது கவனம் முழுக்க சேவை பணிகளிலேயே இருக்கிறது.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:22             இந்த காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கடந்த 20 வருடங்களாக வெள்ளிக்கிழமை மாலைகளில் சர்வசமய வழிபாடு நடந்து வருகிறது.      தமிழ் ஆர்வலரான டாக்டர் மு.அரம் அவர்கள் எம்.பி.யாக இருந்தபோது அவரது உதவியாளராக ரவிச்சந்திரன் டெல்லியில் இருந்தபோது- இந்தியா முழுக்க கல்வி பணிகள் செய்ய முடிந்ததற்காக மகிழ்ச்சியடைகிறார்.     அந்த சமயம் அங்கு சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருந்தபோதும் நேர்மையாக செயல்பட்டதற்காக பெருமைப்படுகிறார்.      ரவிச்சந்திரன் ஊதியத்தை பெரிதாய் நினைப்பதில்லை. தொண்டு செய்யும்போது கிடைக்கும் மனநிறைவு போதும் என்கிறார்.       இந்த அருங்காட்சியகத்தில் குறைந்த கட்டணத்தில் தினம் நான்கு வகுப்புகள்- யோகா, பிராணாயாமம், தியானம், மன அழுத்த மேலாண்மை, சமச்சீர் உணவு பயிற்சி நடக்கின்றது.      உடல்வளம் நமக்கு முக்கியம். அவசர உலகத்தில் இளைஞர்கள் உடல் நலத்தைப்பற்றி கவலைப்படாமல் ஓடிக் கொண்டிருப்பதாலும், தவறான உணவு பழக்கத்தாலும், பி.பீ., சர்க்கரை  என இளம் பருவத்திலேயே அவதிப்படுகின்றனர்.      பள்ளி கல்லூரிகளில், சமூகத்தில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை பல்லாயிரக் கணக்கானோர் இந்த பயிற்சிக்கு வந்து பயனடைந்திருக்கிறார்கள். யோகா பயிற்சியை வியாபாரமாக்காமல் மாணவர் குழுக்களை உருவாக்கி இது கற்றுத் தரப்படுகிறது.      அப்துல் கலாம்களை நம்மால் உருவாக்க முடிகிறதோ இல்லையோ சந்தன வீரப்பன்கள் உருவாகி விடக்கூடாது என்பது இவர்களது லட்சியம்.      ரவிச்சந்திரன் தென்கொரியா, ஹாங்காங் இந்தோனேஷியா, ஹாலந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கும் அமைதி- தீர்வு கான்பரன்ஸ்களுக்காக பயணித்திருக்கிறார்.      ஸ்பெயினுக்கு இளைஞர் மேம்பாட்டு குழுத் தலைவராக சென்றிருக்கிறார். 125 நாடுகள் கலந்து கொண்ட இதில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரே தமிழர் எனும் பெருமை இவருக்குண்டு.      இத்தாலியில் போப்பாண்டவரை சந்தித்த அனுபவமும், டென்மார்க்  ஆர் எஸ் பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புற பாடல்களை மொழிபெயர்த்து டிஜிட்டலைஸ் செய்ததும் இவருக்கு மறக்க முடியாத விஷயங்கள்.       இவர்கள் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு, இந்திய விடுதலை போராட்ட வரலாறு, ஹிரோஷிமா நாகசாஹி புகைப்பட கண்காட்சிகள் நடத்தி வருகிறார்கள்.       தீவிரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகள், படிப்புகள், பொதுமக்களுக்கு இங்கு நடத்தப்படுகின்றன.       மத்திய அமெரிக்காவில் உள்ளதுபோல், மதுரையில் அமைதி பல்கலைக் கழகம் உருவாக்கி அதை சர்வதேச மையமாக செயல்பட வைத்து, உலகம் முழுவதும் அமைதியை தோற்றுவிக்க வேண்டும் என்பது இவரது எதிர்கால லட்சியம்.     கு.ஞானசம்பந்தம்;      ``சின்னச் சின்ன தோல்விக்கெல்லாம் சிலர் கலங்கி தளர்ந்து போகிறார்கள். சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும். எதிர்நீச்சல் போட கற்றுக்கொள்ள வேண்டும் அதே மாதிரி வெறும் பாராட்டும் –புகழ்ச்சியுமே நம்மை உயர்த்திவிட முடியாது.      மாற்று கருத்துகள் கொண்ட விமர்சனங்களை கண்டு அஞ்சக்கூடாது. நம்மை ஆவேசமாய் செயல்பட வைக்க எதிரிகளும் தேவை. அவர்களுக்கு முன்னில் எழுத்து நிற்க வேண்டும் எனும் உந்துதல் சக்தி தர அவர்கள் நமக்கு முக்கியம். நானும் என்னதான் நகைச்சுவையாய் பேசினாலும் வாழ்வில் பல கஷ்டங்களையும் கடந்து வந்தவன்தான்.       மதுரையில் தன் வீட்டில் சாந்தமும் புன்னகையுமாய் பேச ஆரம்பித்தார் பேராசிரியர், டாக்டர் திரு.கு.ஞானசம்பந்தம்.       மனிதரிடம் இயல்பாகவே நகைச்சுவை பொங்குகிறது. சரளமான பேச்சு. தமிழ்! கோர்வையாய் சம்பவங்களை விவரிக்கும் பாங்கு.       விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அப்பா திரு.குருநாதன், செந்தமிழ் கல்லூரியில் நான்காம் தமிழ்ச் சங்கத்தில் படித்து தமிழாசிரியரானவர். குடும்பத்தில் முதல் படிப்பாளி! சொந்த ஊர் சோழவந்தானிலேயே பணிபுரிந்து, பொதுப்பணிகள், ஆன்மீக பணிகளுடன், படிப்பின் அவசியத்தை ஊட்டிய அப்பாதான் ஞானசம்பந்தத்தின் ரோல்மாடல்! இவரின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்பா தந்த ஊக்கம்தான் இன்று வரை தூக்கி நிறுத்தியிருக்கிறது.       ஞானசம்பந்தத்தின் மூலப்பெயர் அங்குசாமி. நாகர்கோயில் சைவ மடாதிபதி ஆறுமுகநாவலர் –இவரது அப்பாவின் திருமுறை கழகத்தில் பேச வந்தபோது –அந்த நிகழ்ச்சியில் 3 வயதேயுள்ள இவர் இறைவணக்கம் பாட- அதில் மெய்மறந்த அவர், இவரது பெயரை ஞானசம்பந்தமாக மாற்றினார். (ஒரே பாடலில் பெயர் பெற்றவர்களில் கு.ஞாவும் உண்டு. அதற்கு பிறகு பாடலை!)      கு.ஞா. முள்ளிப்பாளையத்தில் பள்ளி முடித்து- மதுரை தியாகராஜரில் பியூசி சேர்ந்தபோது ஆங்கில மீடியம்- கல்லூரி ஸ்டிரைக் போன்றவற்றால் படிப்பை கோட்டைவிட்டு நான்கு முறை தளரா முயற்சிக்குப் பின் அஞ்சல் கல்விமூலம் வென்றார். (``பியுசியில் என் மாதிரி தோல்வி அடைந்தவர்கள் இந்தியாவிலேயே இருக்க முடியாது!”)            அதுவும்கூட –பரீட்சை தினம் தாயார் திடீர் மரணம்! அவரது காரியத்தை முடித்துவிட்டு-சில தினங்கள் வெளியே செல்லக் கூடாது என்கிற கட்டுப்பாட்டையும் மீறி எழுதின பரீட்சை அது!       அதன்பிறகு தந்தை கொடுத்த ஊக்கத்தில் இவரது கல்வி ஏறுமுகம்! பி.ஏ., எம்.ஏ. தமிழ் படித்து –படித்த கல்லூரியிலேயே பேராசிரியர் வேலை! (1985). தமிழ்பற்று காரணமாய் கவிதை, கட்டுரை, நாடகங்கள் எழுதுவார். நடிப்பார்! சிறு பத்திரிகை நடத்துவார். பேச்சுப் போட்டியில் கலந்துகொள்வார். கு.ஞா.விவசாயத்திலும் தேர்ச்சி பெற்றவர். சளைக்காமல் அனைத்து வேலைகளும் பார்ப்பார்.         அப்பா செய்துவந்த மார்கழி மாத கோயில் பிரசங்கத்தை விடியற்காலை நான்கு மணி-அவருக்கு முடியாமல் போனதால் ஞானசம்பந்தம் ஆரம்பித்து 14 வருடங்கள் தொடர்ந்திருக்கிறார்.        படிக்கும் காலத்திலிருந்தே ரயிலில் பாட்டு –பேச்சு என்று நண்பர்களுடன் அடித்த கூத்துகள் இன்று நகைச்சுவைக்கு உரமாய் அமைந்திருக்கின்றன. தன்னைவிட நன்றாய் படித்த மாணவர்கள் ஏதோ வேலை பெற்று –இன்னமும் அதேமாதிரி ரயில் பயணத்திலும் –ஒரே மாதிரி வாழ்வு சூழலில் இருப்பதையும் வியப்போடு தெரிவிக்கிறார் கு.ஞா.       இவர் ``சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் வேண்டுதலும் வழிபாடுகளும்’’ பற்றி ஆராய்ச்சி நடத்தி எம்.ஃபில் பெற்றுள்ளார்.             வ.உ.சி.க்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்த அரசன் சண்முகனார் (1868 -1915) பற்றி ஆராய்ந்து ``டாக்டரேட்” பெற்றுள்ளார்.       இவருக்கு திருமணம் நிச்சயித்த பின்பு அப்பா உடல் நிலை மோசமாகி, ``நான் இறந்தாலும் கூட உன் திருமணம் நிற்கக் கூடாது. குறித்தபடி நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நிச்ச்யித்த பெண்ணிற்கு பாதகமாய் அமைந்து விடும்” என்று வலியுறுத்தியிருந்தார். சொன்னபடியே அப்பா திருமணத்திற்கு முன்பே இயற்கை எய்தியது இவருக்கு பேரிழப்பு.       திருமணத்திற்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே படித்திருந்த திருமதி அமுதா சம்பந்தனை அதன்பிறகு எம்.ஏ. பி.எட்., எம்.ஃபில்  வரை படிக்க வைத்தார் இவர். மனைவியின் ஒத்துழைப்பு இவருக்கு பெரிய பலம். இவர்களின் வாரிசுகள் அர்ச்சனா மற்றும் குரு இருவருமே கம்ப்யூட்டர்  என்ஜினியரிங் படிக்கிறார்கள்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:23             1985 முதல் பட்டிமன்ற நடுவராயிருக்கும் ஞானசம்பந்தன், இதுவரை 5000க்கு மேல் மேடை ஏறியிருக்கிறார்.      1991 இல் ``ஹியூமர் கிளப் ” ஆரம்பித்து பிரதி மாதம் முதல் ஞாயிறுகளில் நடந்துவரும் இது 15 மாவட்டங்களில் கிளைவிட்டிருக்கிறது. அமங்கலம், ஆபாசம், அரசியல், பிறரை தாக்குதலில்லாமல் நகைச்சுவை அமைப்பது இவரது சிறப்பு.         வானொலி, தொலைகாட்சி சொற்பொழிவுகள் 2000 முதல் ஜெயா டி.வி.யில் தினந்தோறும் இன்றைய சிந்தனை என நிகழ்ச்சிகளுக்காக இவர் நிறைய படித்துக் கொண்டேயிருக்கிறார்.       சமூக மேம்பாடு இவரது கொள்கை. பெற்றோர் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து ஏழைகளின் கல்விக்கு இவர் உதவி வருகிறார்.       சென்னையில் கலைஞருடன் சேர்ந்து முதன் முதலில் ஞானசம்பந்தன் பேசியதை கேட்ட அவர் மனம் மகிழ்ந்து `தமிழ் இயக்கத்தின் சிற்றரசு!’ என்கிற பட்டத்தை அளித்தார் (கோகலே அரங்கு 1985).       இளம்பருவத்தில் மல்லிகை மன்றம் மூலம் கதை வசனம் எழுதி டைரக்ட் செய்து நடித்த அனுபவம் இவருக்கு இன்று சினிமாவிலும் காலூன்ற உதவியிருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா மூலம் கமல் அறிமுகமாகி, அவருடன் விருமாண்டி படம் சேர்ந்து பணியாற்றினதை கு.ஞா. பெருமையாய் நினைக்கிறார். அதன் பிறகு பல படங்கள்! கமலுடன் நெருக்கம்!      வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகள் தரும் இவரது பலம்-படிப்பு! அறிவு தேடல்! பலவீனம், கறாராய்- கடுமையாய் நடந்து கொள்ள முடியாததால் ஏற்படும் நேர விரயம்! பண இழப்பு!      டாக்டர் அக்பர் கவுசர்:       டாக்டர் அக்பர் கவுசர் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாராயணகுப்பம் எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். வறட்சி காரணமாய் 1950-ல் பிழைப்புக்காக குடும்பம் வாணியம்பாடிக்கு மாறிற்று.      கவுசர் 1976 –ல் வாணியம்பாடியில் பி.காம் முடிந்திருந்தாலும் கூட அவரது ஆர்வமெல்லாம் (அம்மாவழி) தாத்தாவின் நாட்டுவைத்தியத்தின் மேலேயேயிருந்தது.அதன் பலனாக பேரணாம்பட்டில் அரசு பதிவுபெற்ற வைத்தியசாலையில் முறைப்படி``யுனானி”  மருத்துவம் படித்து அம்பலூர் கிராமத்தில் வாடகை கட்டிடத்தில் மருத்துவமனை தொடங்கினார்.       40 கிராமங்களை உள்ளடக்கிய அம்பலூர் வட்டத்தில் இவர் மட்டும்தான் இஸ்லாமியர். தாய்மொழியாக உருதில் படித்திருந்த அக்பர் கவுசர். அதன் பிறகு தான் தமிழ் படித்தார்.கவுசரின் திறமையை உலகுக்கு உணர்த்த அவருக்கு பல சந்தர்ப்பங்கள் வாய்ந்தன.       அந்தநாளில்- பெரிய கவுண்டர் எனும் முன்னாள் எம்.எல்.ஏ.வின் குடும்பத்தில் ஒருவருக்கு இருந்த கேன்சர் நோய் இவரது மூலிகை வைத்தியத்தால் சரியாயிற்று குழந்தை இல்லாத தம்பதிக்கு இந்த வைத்தியம் மூலம் குழந்தை பாக்யம்! இதன் காரணமாய் கைராசி டாக்டர் என வேகமாய் இவரது புகழ் பரவ ஆரம்பித்தது.       இவரது மனைவி திருமதி. அப்சர் சைதா கர்னாடகத்தில் உள்ள கோலார் நகரத்தை சேர்ந்தவர். அக்பரின் மாமனார் அட்வகேட் – மேயராகவும் இருந்தவர்.       அக்பரின் வளர்ச்சி சொந்தமாய் வாணியம்பாடியில் மருத்துவமனை கட்டுகிற அளவிற்கு உயர்ந்தது. குடிப்பழக்கத்தை விரட்டவும், அவர்களை திருத்தவும் அக்பர் கவுசர், `மது அடிமை மறுவாழ்வு மையம்’ ஒன்றை நிறுவினார். 1989-ல் வி.பி.சிங் பிரதமராகவும் ராம்விலாஸ் பஸ்வான் மருத்துவ துறை மந்திரியாகவும் இருந்த சமயம் –      பீகாரில் குடியால் பாமரர்கள் அதிகம் அழிந்துபோகும் சம்பவங்கள் நடக்க –குடிக்காமல் இருப்பதற்கு சிகிச்சை ஏதும் உண்டா என அலசப்பட்ட போது தமிழக அரசு இவரை சிபாரிசு செய்ய, அக்பர் கவுசர், யுனானி மருத்துவத்தை பரிந்துரை செய்ய தேசிய அளவில் இவரது பெயர் பரவ ஆரம்பித்தது.      இவரது பரிந்துரைப்படி, வேலையில்லா பட்டதாரிகளை மது அடிமை மீட்பு பணிக்கு அரசு அனுப்ப ஆரம்பித்தது. தமிழக அரசும் இதற்காக சுமார் 6000 பேரை இவரது மருத்துவமனைக்கு பயிற்சிக்கு அனுப்ப –இவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.       அக்பர் கவுசரின் மருத்துவத்துறை தேடலும், ஆர்வமும் எந்த தருணத்திலும் குறைவதில்லை. இவர் இலங்கை பல்கலைகழக வைஸ் சான்ஸ்லர் ஆண்டன் ஜெய்சூர்யாவிடம்  அக்குபஞ்சர் பயிற்சி பெற்று –அந்த அடிப்படையில் மூலிகை மூலம் போதை மருந்துக்கு முறிவு வைத்தியம் கண்டு பிடித்தார்.   அந்த சமயம் `தேவி’ வார இதழ்      காஷ்மீர் போலீஸ் கமிஷனரின் மனைவி அஸ்மா என்பவர் போதைக்கு அடிமையாகி –சீரழிந்து, உலகம் முழுவதும் வைத்தியம் பார்த்தும் பிரயோஜனமில்லாமல் சென்னை உதவும் கரங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக கட்டுரை வெளியாகி இருந்தது.      கவுசர் `தேவி’ ஆசிரியர் மூலம் அந்த பெண்ணை போய் சந்தித்து சிகிச்சையளித்து ஒரே வாரத்தில் அவர் குணமானார். அன்று முதல் ``தேவி’’ இதழ் இவருக்கும் இவரது கட்டுரைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறது.      கவுசர், தனது மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைக்காக 1991 –ல் நடந்த உலக மருத்துவ மாநாட்டில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.      1992 –ல் கவுசர் பான்மசாலாவை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அதே போல வாணியம்பாடியில் குடிகாரர்கள் மாநாடு!      அன்றைய கலெக்டர் திரு.ராமசுந்தரம் கிராமத்துக்கு இருவர் என அழைத்துப் போய் அதில் கலந்துகொள்ள உத்தரவிட்டார்.       1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகம் – சிறுநீரகம் , கல்லீரல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளித்து குணம் பெறச் செய்ததாக செய்தி கிடைக்க –அது என்ன மருந்தாக இருக்கும் என்று கவுசர் ஆராயும்போது காசினி கீரை கிடைத்தது.       அந்த சமயம் சிறுநீரக மாற்று செய்ய முடியாத ஒருவர் வர- கவுசர் நபி மருத்துவம் மூலம் முயற்சி செய்ய, அவர் குணம் பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்தார்.     1995 –ல் கவுசர், இந்த காசினி கீரை நல்ல மருந்து என சிபாரிசு செய்ய 5 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின் இவருக்கு சாதகமான பதில் கிடைத்தது.      கோவை அவினாசிலிங்கம் பல்கழகவேந்தர் டாக்டர்.ராஜம்மாள் தேவதாஸின் எம்.எஸ். டாக்டர் மகளுக்கு இருதய வால்வு அடைப்புடன் சிறுநீரகமும் வேலை செய்யவில்லை. கவுசர், காசினி கீரை மூலம் அவரை குணப்படுத்த –அதன் பிறகு அந்த மருந்துகள் கோவை பல்கலைகழக நோயாளிகளுக்கு நேராக கொடுக்கப்பட்டது.     காசினி கீரை –சர்க்கரை, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதன் மகிமைகளை அறிந்த அன்றைய கலைஞர் அரசு காசினி கீரை மருந்துக்கு வரிவிலக்கு அளித்தார்.     கவுசர், காசினி பவுடர் கேப்சூல் கம்பெனியும், மூலிகை பண்ணையும் உருவாக்க இது பெரிதும் உதவிற்று.      அக்பர் கவுசர் தான் கற்ற- கண்டறிந்த யுனானி மருத்துவ விஷயங்களை வெளிப்படுத்த 200 நோய்கள் யுனானி வைத்யம் என்கிற நூலை சாந்தி பதிப்பகம் மூலம் வெளியிட்டார். பிறகு “மூலிகை மருத்துவம் ” என்கிற பெயரில் மாத இதழும் வெளியிட்டார்.      பிறகு அல்கவுசர் பப்ளிகேஷன் மூலம் கவுசர் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உருது, ஆங்கிலத்தில் 100 புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டுள்ளார். மணிமேகலை பிரசுரமும் இவரது மூலிகை வைத்தியம் என்ற நூலை வெளியிட்டுள்ளது.       அக்பர் கவுசர் வாணியம்பாடியில் கட்டடம் கட்டி பளிங்கு கற்களில் தான் கற்றதை கல்வெட்டுகளாக சுவர்களில் பதிந்து வைத்திருக்கிறார்.       இந்து மதத்திலும் 1000 வருடங்கள் முன்பிருந்தே ஸ்தலவிருட்சம் மரங்களை கோயில்களில் வைத்து வணங்கும் வழக்கம் இருந்து வருகிறது. அக்பர் அதுபற்றி ஆய்வு செய்து `கோயில் மரங்கள்’, எனும் பெயரில் 15 பாகங்களாக நூல் வெளியிட்டுள்ளார்.       அத்துடன் தன் பண்ணையிலும் கோயில் மரங்கள், தோட்டம் என்று தனியாகவும் அமைத்துள்ளார்.       இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் என ஆறு வாரிசுகள். இவருக்கு சென்னை மற்றும் பெங்களூரில் சொந்தமாய் மருத்துவமனை உள்ளது. அங்கு நோயாளிகள் தங்குவதற்கு இலவசமாய் அறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.       தமிழகத்தில் சித்தவைத்தியம் திராவிடர் மூலமும், ஆயுர்வேதம் ஆரியர் மூலமும், யுனானி இஸ்லாமியர் மூலமும் வெளிக் கொணரப்பட்டுள்ளது.       யுனானி அரபு நாட்டு கலாச்சாரம் என்பதால் உருது, அரபியில் உள்ளதால் தமிழக மக்களிடம் முழுமையாய் போய்ச் சேரவில்லை என்று கவுசர் அவற்றை தமிழாக்கம் செய்துள்ளார்.       கர்னாடகா சுகாதார மந்திரி, டாக்டர் மகாதேவப்பா, டாக்டர் அக்பர் கவுசருக்கு `தெய்வீக மருத்துவர்’ பட்டம் கொடுத்து கெளரவித்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படும் விஷயம்.   அறிவொளி:       ``ஒரு பிரச்சினை அல்லது சிக்கல் என்றால் அவற்றிலிருந்து விலகுவது கூடாது. விலகினால் அது திரும்பவரும். அதை எதிர்கொள்ளும் எதிர்ப்புசக்தியை வளர்த்துக் கொண்டோமானால் வந்த பிரச்சினை தானே ஓடிப்போய்விடும்!       பன்றி மூலம் காய்ச்சல் பரவுகிறது என்கிறார்கள். ஆனால் பன்றியோடு வாழும் மனிதனுக்கு எதுவும் வருவதில்லையே!    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:24             காலில் செருப்பு அணியாவிட்டால் கிருமிகள் தொற்றும் –நோய் தாக்கும் என்பார்கள். நான் செருப்பில்லாமல் தான் நடக்கிறேன். பொது கழிப்பிடம் கூட போகிறேன். என்னை எந்த நோயும் தாக்குவதில்லை. மாறாக அதற்கு முன்புவரை இருந்த பித்தவெடிப்பு மறைந்துள்ளது! நாம் இயற்கையோடு  ஒன்றி வாழ வேண்டும். செயற்கை தடுப்புகளை நம்பி இருக்காமல் இயற்கை மூலமே எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.   பளிச்பளிச்சென விஷயங்களை எடுத்துரைக்கிறார். திரு.அறிவொளி!      காவி உடை, தாடி, அமைதியான அதே சமயம் ஆழமான தோற்றம். குவைத் தமிழ் பொறியாளர் அமைப்பின் நிகழ்ச்சிக்கு வழக்காடுமன்றம் நடத்த வந்தவரை சந்தித்த போது வியப்பு தோன்றிற்று. இவர் ஒரு களஞ்சியப் புதையல்!       இவரிடம் எவ்வளவோ விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. சாமியார் போன்ற தோற்றம். ஆனால் சாமியாரில்லை. குடும்பஸ்தர், ஆனால் போலியில்லை. குடும்ப சம்பிரதாயம் இது என விளக்குகிறார்.   சொந்த ஊர் சிக்கல். ஆனால் கடந்த 20 வருடங்களாய் திருச்சியில் ஐக்கியம்.      பி.ஏ., எம்.ஏ., வித்வான் படிப்பு அண்ணாமலை யுனிவர்சிடியில் படிக்கும்போதே இவருக்கு பேச்சு கலையில் ஆர்வமும் திறமையும் வந்திருக்கிறது. அதை தூண்டி வளர்ந்தது அரசியல்! குறிப்பாக தி.மு.க      1958-ல் கல்லூரியில் படிக்கும்போதே இண்டர்-காலேஜ் பேச்சு போட்டியில் –ஒரே தலைப்பில் ஒட்டியும் வெட்டியும் பேசி பெயர் பெற்றிருக்கிறார்.      1960 வரை அரசியல் கட்சிக்காக பிரச்சாரம் செய்திருக்கிறார். சினிமா வசனங்களும், இலக்கிய படிப்பும் இவரது பேச்சுத் திறமைக்கு உரமாக அமைந்தன.      அந்த நாட்களில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாய் பங்கு கொண்டவர்- இப்போது ``ஹிந்தியை நாம் அனைவரும் கற்க வேண்டும் ‘’ என்று வலியுறுத்துகிறார்.       ``ஹிந்தி நுழைந்துவிட்டால் தமிழ் அழிந்துவிடும் என்று அப்போது சொல்லிச் சொல்லி ஹிந்தியின் மேல் வெறுப்பை வரவழைத்தனர். ஆயிரம் வருடங்கள் மன்னர்கள் ஆட்சி, 200 வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ் அழியலை. பிறமொழிமேல் வெறுப்பை வளர்ப்பதிற்கு பதில், நம் தமிழ் மேல் பற்றை உருவாக்கணும். எந்த ஒரு மொழியையும் ஆதிக்கத்தால் வளர்த்துவிட முடியாது.      சமஸ்கிருதம் அதற்கு ஒரு உதாரணம். மத அடிப்படைக்கு அப்பாற்பட்டு சமஸ்கிருதம் வளர முடியவில்லையே! இன்று ஹிந்தி நமக்கு தேவை. வேலை வாய்ப்புக்கு–இந்தியா முழுக்க தொடர்புக்கு ரொம்ப பயனாய் இருக்கும் ஹிந்தியை இளைஞர்கள் கற்க வேண்டும்”       1960 –களில் பட்டிமன்றம், ஆன்மீகம் பக்கம் கவனம் திரும்பியதும் அறிவொளி அரசியலை விட்டுவிட்டார். அரசியல் சேவையைவிட காழ்ப்புணர்வு அதிகமாகிவிடுகிறது. ஆன்மீகம் நல்ல கருத்துகளை பரப்ப உதவுவதால் இதில் ஒரு மனதிருப்தி கிடைக்கிறது.    அறிவொளி தமிழாசிரியராக அண்ணாமலை முதல் பல கல்லூரிகளில் பணியாற்றி 1982–ல் வேலையை விட்டுவிட்டு மருத்துவ துறைக்குள் கால் பதித்தார்.      அக்குபஞ்சர் , சித்தா, ஹோமியோ, நேச்சுரபதி, யோகா போன்றவற்றில் தேர்ச்சி பெற –பின்னணியில் இவரது வைத்ய குடும்பம் அடிப்படையாய் அமைந்தது. ``ஆல்டர்நேடிவ் மெடிசினில்’’ டென்மார்க், கோபன் ஹேகன் யுனிவர்சிடி மூலம் டாக்டரேட்டும் பெற்றுள்ளார்.      1971 –ல் இவரது குருநாதர் சிவராஜ யோகமடம் மாணிக்கவாசக தம்புரானுக்கு பிறகு இவருக்கு `சாக்த தீட்சை’ கிடைத்தது.      சமஸ்கிருதம், வேதம் படித்துள்ள அறிவொளி, யோகா குறித்து சமஸ்கிருதத்தில் 820 பக்கத்தில் புத்தகம் எழுதியுள்ளார். சித்தர் பாடல் கருத்துரை முதல் பல தலைப்புகளில் 86 புத்தகங்கள் இவர் வெளியிட்டுள்ளார்.     சாதி- மதம் பார்க்காத அவரது நிகழ்ச்சிகளை அனைவரும் ரசிக்கின்றனர். இவர் 12 வருடங்களாய் செருப்பு அணிவதில்லை சிங்கப்பூரில் செருப்பில்லாமல் நடக்கக் கூடாதாம். ஆனால் இவரை யாரும் எதுவும் கேட்கவில்லை.      ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை சுவையாகவும் சுவாரஸ்யமாவும் –நல்ல கருத்துகளை பரப்பும் விதம் நடத்தி தொடர்ந்து வெற்றி நடை போடுகிறார் இந்த மேதை.   பேராசிரியர் பெரியார்தாசன்;     பேராசிரியர் பெரியார்தாசன் தமிழ்நாடு பொறியாளர்கள் அமைப்பின் நிகழ்ச்சிக்கு தலைமைதாங்க வேண்டி குவைத்திற்கு வந்திருந்தார்.          மெத்த படித்திருந்தாலும் கூட எளிமை, படு சகஜம் யதார்த்தமான பேச்சு, பேசும்போதே நளினம், உவமை-உவமானம் –அபிநயம் என்று கண் முன் ஒரு லைவ் ஷோ கொடுத்து விடுகிறார்.      மேடையிலும் இடைவிடாமல் சிரிப்பு மழை பொழிகிறார். அத்துடன் சொல்ல வந்த கருத்துகளை அழகாக ஆழமாக பதித்து விடுகிறார்.   பேச்சுக்கிடையில் ``கைத்தட்டுங்க, சொல்றதை கவனிங்க” என்பார். அது ஏன் அப்படி?      ``நான் மனோதத்துவம் படித்தவன். ஜனங்களின் மனநிலையை அறிந்தவன். ஒரு சொற்பொழிவின் போது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல- பார்வையாளர்களுக்கும் அதில் முழு கவனமிருந்தால்தான் சுவைபடும்.       கல்யாண வீட்டில் கூட்டமிருக்கும், ஆனால் யாருக்கும் எதிலும் கவனம் இருக்காது. வந்தோமா-மொய் வைத்தோமா, சாப்பிட்டோமா-போனோமா என்றிருப்பார்கள். என் நிகழ்ச்சி அப்படி ஆகி விடக்கூடாது. அப்புறம் எனது உழைப்புக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.       அதனால் பேச்சுக்கிடையே கையை உயர்த்துவேன். கை தட்டுங்க என்று சொன்னால்-அதில் ஏதோ விஷயம் இருக்கு என்கிற எதிர்பார்ப்பு ஏற்படும், விழிப்பு வரும்.       கழைக் கூத்தாடி-ரோடுல ``ஜோரா கைத்தட்டுங்க’’ என்பான் பாருங்க-அதையேதான் நான் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடிக்கு போய் மனோதத்துவம் படித்துவந்து பயன்படுத்துகிறேன்.       நகைச்சுவையாய் பேசும்போது எல்லோருமே கேட்பார்கள்,  விரும்புவார்கள், ஆனால் அதே வேகத்துல மறந்துடுவாங்க.       கண் பார்ப்பதில்லை; காது கேட்பதில்லை; கண் வழி மனம் பார்க்கிறது! காதுவழி மனம் கேட்கிறது! நாசிவழி மனம் நுகர்கிறது! அதுதான் உண்மை.   ஆக எல்லா செயல்களுக்கும் மனதை இயக்க வேண்டும்!       நகைச்சுவையாய் பேசும்போது அவையினரின் மனம் மலர்கிறது. உடனே அந்த சமயத்துல கருத்தை விதைச்சுடறேன்.”       தமிழ்நாடு பொறியாளர் குழுமத்தின் தலைவர் திரு செந்தமிழ் அரசு, பெரியார்தாசனிடம் கலந்து பேசும்போது அவர் பல விஷயங்கள் கொட்டினார். அதுவும் சுவையாயிருந்தது.       ``32 வருடமாய் நான் ஆசிரியராக இருந்தாலும் கூட இன்னும் கூட மாணவன்தான். (பேராசிரியர்- பேருக்குத்தான் ஆசிரியர்!) எனக்கு மனோதத்துவத்தை தவிர வெளியே பெரிதாய் எதுவும் தெரியாது. இன்னும் கற்றுக் கொண்டுதானிருக்கிறேன்.        பெரியார்தாசன், குடும்பம், தொழில், சமூகம் என மூன்று வகையிலும் தன் சொற்பொழிவை அமைக்கிறார்.        அவர் தங்கியிருந்த நண்பர் முத்துக்குமார் வீட்டில் சிற்றுண்டியின்போது, ``வீட்டிலதான் கட்டுப்பாடு, இங்கே ஏன்?’’ என்று இனிப்பு வகைகளை சுவைக்க ஆரம்பித்தார்-குழந்தைபோல, வினோதமாய் இருந்தது.       ``குடும்பத்தில் கணவன் மனைவி- ஒன்றாகத்தானிருப்பார்கள், நன்றாய் பேசுவார்கள். சிந்திப்பார்கள், ஆனால் எந்த நேரத்தில் முரண்பாடு வரும் ``முறுக்கி கொள்வார்கள் என தெரியாது. குற்றம் குறைகள்! குழந்தை படிக்கலை! முயற்சி செய்யலை! சோம்பல்! வேலை செய்ய முடியலை! பேயடிச்ச மாதிரி இருக்கு!       இதெல்லாம் மனச்சிதைவால் ஏற்படுவது. இவற்றையெல்லாம் என்னால் எளிதாய் சரிபண்ண முடியும். குடும்ப வாழ்வில் ஒப்பீடு கூடாது. ஒவ்வொருக்கொருவர் பொறாமை கூடாது, கோபம் கூடாது.       இந்தக் கோபம் என்பது சந்தர்ப்பவாதம் தான்! மேலதிகாரி தனக்கு கீழ் உள்ளவரிடம் கோபப்படுவார். மேலே உள்ளவர்களிடம் பணிந்து போவார். அப்போ அந்த கோபம் என்பது நிஜமில்லை, பொய், கட்டுப்படுத்தக் கூடியதே என்பது புரியும். முயன்றால் நிச்சயம் கட்டுப்படுத்தலாம்”.   பெரியார்தாசனுக்கு நாட்டுப்பற்றுடன் கூடிய சமூக அக்கறை எப்போதுமே உண்டு.        ``ஐயாயிரம் ஆண்டுகள் பண்பாட்டில் நமக்கு அறிவு. தெளிவு-ஆற்றல் எல்லாம் இருக்கிறது. ஆனாலும்கூட வறுமைதான் உதைக்கிறது. இந்தியாவில் வறுமை இருக்க காரணமேயில்லை.        சோற்றுக்கூடை சுமப்பவர் பசியோடு இருப்பது பரிதாபம்! நம்மைப் பொறுத்தவரை நமது முழுசக்தியையும் பயன்படுத்துவதில்லை-முழுமையாய் –ஆத்மார்த்தத்துடன் உழைப்பதில்லை என்கிற முடிவோடுதான் வேலைக்குச் செல்கிறோம்!        ஜப்பான்காரன் உழைக்கிறான் அமெரிக்ககாரன் உழைக்கிறான் என்று பேசுவோம்-வாய் கிழிய ஆனால் செயல்பட மாட்டோம்!    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:25             ஜம்பது படங்களுக்கு மேல் சினிமாவில் நடித்துள்ள பெரியார்தாசன் எப்படி சினிமாவில் தாக்குப்பிடிக்க முடிகிறது?        அவர் சிரிக்கிறார், ``வாஸ்தவத்தில் எனக்கு சினிமாபத்தி எதுவும் தெரியாது. லைட், கேமிரா அறிவெல்லாம் சுத்தம் எனது சொற்பொழிவுக்கு வந்திருந்த பாரதிராஜா `நாம் கஷ்டப்பட்டு படமெடுத்தாலும் இரண்டரை மணி நேரம் ஜனங்களை பிடிச்சு வைக்க முடியலை. இடையில் எழுந்து போகிறான். இவர் பேச்சை 4 மணி நேரம் என்றாலும் அமர்ந்து கேட்கிறானே’’ இவரிடம் என்னவோ இருக்கு’ என்று சொல்லி என்னை நடிக்க வைத்தார்.       உண்மையாய்ச் சொல்லப் போனால் புலிமார்க் சிகைக்காயில் புலிக்கும்-அந்த சிகைக்காய்க்கும் உள்ள சம்பந்தம் எனக்கும் நடிப்புக்கும்!       கருத்தம்மாவின் கதாபாத்திரமும் சரி மற்றவைகளும் சரி, எல்லா புகழுமே டைரக்டர் பாரதிராஜாவுக்கே சொந்தம்!        யோசித்துப் பார்த்தால் இங்கு எல்லோருமேதான் நடிக்கிறோம். நானும்கூட பாடம் நடத்தும்போது ஷேக்ஸ்பியர், அரிஸ்டாடில் போலவே மாறிவிடுவேன். அந்தந்த கதாபாத்திரத்திற்கான முகபாவங்கள்! ஆகையால் நடிப்பு என்பது எனக்கு இயல்பு என்றே நினைக்கிறேன்.   இங்கே யார் நடிக்கவில்லை சொல்லுங்கள்?        கணவன் –மனைவியிடையே புழங்காத நடிப்பா – பொய்களா? ஒரே நபர் –அவர் கடன் வாங்கினவரிடமும், கடன் கொடுத்தவரிடமும் எப்படி வித்யாசமாய் பேசுகிறார், பழகுகிறார்!        பெரியார்தாசன் – நகைச்சுவையாய்- இயல்பாய்- பேச்சில் தோளில் கைப்போட்டு அழைத்துப் போய்க் கொண்டே நல்ல கருத்தை விதைத்துவிடும் விவசாயி!   இலக்கியவீதி இனியவன்:        பல வருடங்களாக திரு.இனியவன் அவர்களின் செயல்பாடுகளை அறிந்திருந்தாலும் கூட அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த பத்து வருடங்களாகத்தான்!     வயது, அனுபவம், அறிவு, திறமை இவற்றிற்கும் அப்பாற்பட்ட எளிமையும், இனிமையும் இவரிடம் ஆச்சர்யப்படுத்தும் விஷயங்கள்.     தமிழ்மேல் உள்ள பற்று! இலக்கியம் மட்டுமின்றி சமூகத்தின் மேல் உள்ள அக்கறை! கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாத சாதுத்தனம்!     முளைக்கும்போதே- பிறரின் திறமையை படைப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் விதண்டாவாதம் பண்ணுபவர்களுக்கிடையே-     திறமைகள் எங்கிருந்தாலும் –எந்த விதத்தில் வெளிப்பட்டாலும் அவற்றிற்கு ஆதரவும், ஊக்கமும் தருவது இவரது பெருந்தன்மை!     நான் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் சளைக்காமல், அலுக்காமல் என்னுடன் சேர்ந்து சுற்றுகிற சுறுசுறுப்பு! அப்படி அவருடன் இருக்கும்போது-     `நிறைகுடமாய், எந்தவித ஆர்ப்பரிப்புமில்லாமல் பண்போடு பழகுகிறாரே-நம்மிடம் மட்டும் ஏன் இத்தனை படபடப்பு?’ என்று என் மேலேயே எனக்குக் கோபம் எழுவதுண்டு. (ஆனாலும் மாற்றம் எதுவுமில்லை!)  யாரையும் புண்படுத்தாத, அதே நேரத்தில் விமர்சிக்கவும் தயங்காத பக்குவம் இவரிடம்!     கடந்த 29 ஆண்டுகளில் இலக்கியவீதியின் செயல்பாடுகள் காரணமாய் இனியவனுக்குப் பல துறைகளிலும் உள்ள பிரபலங்கள், செல்வந்தர்கள் தொழிலதிபர்கள் நல்ல பழக்கமிருந்தும் கூட அவர்களிடம் எந்த ஆதாயத்திற்கும் போய் நிற்காத கைச்சுத்தம்!      குவைத்தில் வெற்றிகரமாய்ச் செயல்பட்டு வரும் சேவை அமைப்பான ஃப்ரன்ட்லைனர்ஸ்ஐ நான் உருவாக்க, இவரே காரணம்.      `தொழில் முதலீடு’ ஆசிரியர் திரு.அரிதாசனை இவர் எனக்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் குவைத்திலுள்ள இந்திய சாதனையாளர்களை எழுதவைத்து உருவானதுதான் ஃப்ரண்ட்லைன்ர்ஸ்!        அதன் சேவைக்காக – `வி ஹெல்பு எனும் அறக்கட்டளையை தோற்றுவிக்கக் காரணமாக இருந்தவரும் கூட திரு. இனியவன்தான். இந்த இளைஞர் பற்றி, அமுரசுரபி இதழில் நண்பர் `கிளிக்’ ரவி எழுதியுள்ளதிலிருந்து இங்கே கொஞ்சம் தருவதில் மகிழ்கிறேன்.       ``பள்ளியில் 9ம் வகுப்பில் படிக்கும்போதே இனியவன், மாணவர் குரல் என்ற இதழில் முதல் சிறுகதை எழுதினார். அது பரிசும் பெற்றது. தொடர்ந்து 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 15க்கும் மேற்பட்ட குறுநாவல்கள் என்று எழுதி இரண்டு பயண இலக்கியங்களையும் படைத்துள்ளார்.       கல்வி இதழில் வெளியான நா.பார்த்தசாரதியின் `பச்சைக் குழந்தைகள்’ சிறுகதையைத் தொடர்ந்து இவர் `வாழ்வே வேறுதான்’என்று ஒரு சிறுகதை எழுதி நா.பா.வுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவர் அதைப் படித்துவிட்டு, அவராகவே கல்கியில் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்! கூடவே சிறுகதையைப் பற்றிய பாராட்டையும் கடிதம் வழியே இனியவனுக்குத் தெரிவித்திருக்கிறார்.      ``நா.பா.விக்குத்தான் எத்தனை பெரிய மனது! வளரும் எழுத்தாளனை, இதைவிடச் சிறந்த முறையில் பாராட்ட முடியுமோ!’’ என்று வியக்கிறார் இனியவன்.       இவர் எழுதிய முதல் கதையே விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ``கண்ணன்’’ சிறுவர், இதழ் நடத்திய நாவல் போட்டியில் இவரது பொன்மனம் முதல் பரிசு பெற்றது. கல்கி நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய `வீதியின் கை’முதல் பரிசு பெற்றது. இவரது சொந்த ஊரான விநாயக நல்லூருக்கு அருகாமையில் அமைந்திருக்கும் வேடந்தாங்கலைப் பற்றியும் அங்கு வரும் பறவைகள் பற்றியும் இவர் எழுதிய `வேடந்தாங்கள்’ நூல் சுற்றுலாப் பயணியருக்கு வழிகாட்டி.      ஊர்ப் பயணங்களில் இன்பம் காணும் இவர் அதையும் பயனுள்ள வகையில் செய்திருக்கிறார். `உத்திரமேரூர் உலா’ என்ற இவரது பயண நூல் குறிப்பிடத்தக்கது. இனியவன் ஒரு கால கட்டத்தில், தான் எழுதுவதை நிறுத்திக் கொண்டு இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி விழாக்கள் எடுக்கவும் துவங்கினார்.      இலக்கியவீதி தொடங்கப்பட்ட நாளிலிருந்து மாதக் கூட்டங்களும் ஆண்டுக் கூட்டங்களும் நடத்தப்பட்டு அறிமுக எழுத்தாளர் முதல் மூத்த எழுத்தாளர்கள் வரை அனைவரையும் பாராட்டுவதால் இவ்வமைப்பு இரண்டு தலைமுறை எழுத்தாளர்களுக்கும் இடையில் பாலமாக விளங்குகிறது.      மூத்த தலைமுறை எழுத்தாளர்களான தி.ஜா., ஜெயகாந்தன், அசோகமித்திரன், லா.சரா., இந்திரா பார்த்தசாரதி படைப்புகள் அன்றைய அறிமுக எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியதில் நிறைய புதிய இளம் எழுத்தாளர்கள் தோன்றினார்கள். அவர்கள் அனைவருக்கும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இலக்கியவீதி மேடை அமைத்துத் தந்திருக்கிறது. ஜனரஞ்சக எழுத்தாளர்கள், ஆழ்ந்த இலக்கிய படைப்பாளர்கள் என அனைத்து இலக்கிய ஆர்வலர்களின் ரசனைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டன.      இலக்கியவீதி துவக்கப்பட்ட அடுத்த ஆண்டு தி.ஜா., ஆதவன், க.நா.க., இ.பா., கி.கஸ்தூரி ரங்கன் இப்படி தில்லியில் வசித்துவந்த அனைத்து எழுத்தாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டம் என்றென்றும் மனதில் நிற்கும் வண்ணம் அமைந்தது.      மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அந்தமான் பகுதியில் உள்ள குறிப்பிடத்தகுந்த பதினோரு தீவுகளிலும் மாநாடுகள் போன்ற இலக்கிய உலாக்கள் நடத்திய ஒரே அமைப்பு இலக்கியவீதி மட்டுமே!      ஓவியக்கலை, சிற்பக்கலைக் கல்லூரிகளிலிருந்தும் கலைப் படைப்பாளர்கள் கலந்து கொண்ட பல நிகழ்ச்சிகளை இவ்வமைப்பு நடத்தியுள்ளது. வானொலி நிலையங்களுடனும், தொலைக்காட்சியுடனும், இதழ்களுடனும் மாணவர்களுக்காக அறிவியல் திறனை வளர்க்கும் விதத்தில் பல போட்டிகளை நடத்தியுள்ளது.      இலக்கியவீதியின் வழியாகப் பல எழுத்தாளர்களும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றனர். இருந்தாலும் இனியவனின் நினைவில் நிலைத்து நிற்பவர்களாக அவர் கருதும் இரண்டு பேர்களில் ஒருவர் தாராபாரதி. இன்றைய இளைஞர்கள் மனம் சோர்ந்து மடிந்து உட்காரும்போதெல்லாம் `வெறும் கை என்பது மூடத்தனம். விரல்கள் பத்தும் மூலதனம்’ என்ற எழுச்சி வரிகளைத் தனக்குத்தானே ஒரு முறை சொல்லிக்கொண்டால் துள்ளி எழுந்து சோம்பலைப் புறம் தள்ளி வெற்றி நடைபோடலாம். இந்த வைர வரிகளை எழுதி வாழ்வியலுக்கு வளம் சேர்ந்தவர் தாரா பாரதிதான்! இளம் வயதிலேயே அவர் அகால மறைவெய்தியது இனியவனை மிகவும் பாதித்திருக்கிறது.      அடுத்ததாக இரு கண்களை இழ்ந்த நிலையிலும் தன்னம்பிக்கையை விடாமல் சாதனை செய்துகாட்டிய `தசாவதானி’ கோவில்பட்டி இராமையா!      ``அவரை உலகுக்கு அடையாளம் காட்டி அரசுக் கலைஞராகவும் அளவு உயர்த்தியதில் இலக்கியவீதிக்கு பெரும் பங்கு உண்டு என்கிறார் இனியவன். இராமையாவின் மறைவுக்குப் பின் அவரது புதல்வர் கனக சுப்புரத்தினத்தையும் இதே துறையில் இலக்கியவீதி அறிமுகப்படுத்தியிருக்கிறது.       நூலாசிரியர் முன்னிலையில் அவரது நூல் ஒன்று திறனாய்வு செய்யப்பட்டு படைப்பாளர் பதில் கூறுவார். ஒவ்வொரு மாத உலாவின் போதும் சிறுகதைப் போட்டி வைக்கப்பட்டு, பரிசு பெற்ற கதை பார்வையாளர்கள் மத்தியிலேயே படித்துக் காட்டப்படும். ஆண்டு முடிவில் இவை தொகுக்கப்பட்டு நூல்களாகவும் இலக்கிய வீதிலே வெளியிட்டிருக்கிறது.       இலக்கியவீதி பதிப்புத்துறையிலும் பங்காற்றியுள்ளது. 7 சிறுகதைத் தொகுதிகள், 10 கவிதைத் தொகுப்புகள் இரண்டு நாவல்கள் மற்றும் நாடகம், ஆய்வுக்கட்டுரைகள் என்று பல்வேறு நூல்களையும் வெளியிட்டிருக்கிறது.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:26             இந்த நூல்களை பல்வேறு பல்கலைக் கழக மாணவர்கள் முனைவர் பட்டத்துக்காக ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். இலக்கிய வீதியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை மதுரைப் பல்கலைக் கழகம் முதுகலைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது.      இலக்கியவீதியின் 30ஆம் ஆண்டினைக் கொண்டாடும் விதமாக 30 கூட்டங்களை நடத்த இனியவன் தீர்மானித்திருக்கிறார். அதிலும் தேசிய அளவிலான எழுத்தாளர்களை அழைத்து கெளரவிக்கும் விதமாக நான்கு கூட்டங்கள்! குழந்தை எழுத்தாளர்களுக்காகவே ஒரு கூட்டம்! ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் பெறப்படும் சிறுகதைகளில் சிறந்தவற்றைக் தேர்ந்தெடுத்து அவற்றைத் தொகுத்து ஆண்டு விழாவில் நூலாக வெளியிடும் திட்டமும் உண்டு. இவை தவிர, பல்வேறு போட்டிகளை நடத்தும் திட்டங்களும் உள்ளன.      சென்டினேரியன் ட்ரஸ்ட் இவருக்கு வழங்கிய `சேவாரத்னா’விருதும், அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் வழங்கிய `மாட்சிமை விருது’ (FelloWship) விருதும், சென்னைக் கம்பன் கழக விருதும் குறிப்பிடத்தக்கவை.       மேலும், உலகம் சுற்றிய தமிழர் சோமலெ பெயரால் அமைக்கப்பட்ட அறக்கட்டளையினர் இந்த ஆண்டு இனியவனுக்கு `சோமலே விருது’ அளித்து கெளரவித்துள்ளனர். சென்னை கம்பன் கழக செயலாளராக இனியவன் நியமனம் செய்யப்பட்டு, தற்போது பணியாற்றி வருகிறார்.     தி. தமிழ்ச் செல்வன்:          ஒரு தொழிலை துவக்கவும் அதை நடத்திச் செல்லவும் பாரம்பர்ய தொழில் அறிவு வேண்டும். பெரிய முதலீடு வேண்டும்-செல்வாக்கு வேண்டும் இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது என்கிற நடைமுறை கோட்பாடுகளுக்கு விதிவிலக்காக இருக்கிறார் திருச்சி `சூப்பர் குவாலிடி சர்வீஸஸ்’ கம்பெனியின் உரிமையாளரான திரு.தி.தமிழ்ச் செல்வன்.      திருச்சி மாவட்டத்தில் `பெல்’ மற்றும் அது சம்மந்தப்பட்ட கம்பெனிகள் தவிர  பெரிய அளவில் தொழில்கள் கிடையாது. விவசாயம் தான் பிரதானம் தமிழ்ச் செல்வனும்கூட திருச்சி மாவட்டம் எதுமலை கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.      இளம் வயதிலிருந்தே இவருக்கு சொந்தமான தொழில் தொடங்க வேண்டும் எனும் ஆர்வம். திருச்சி கவர்மென்ட் பாலிடெக்னிக்கில் சேர்ந்தபோது இவர் விரும்பின மெக்கானிக்கல் துறையில் சீட் முதலில் மறுக்கப்பட்டது.      தமிழ்ச்செல்வன் விடவில்லை,``எனக்கு சீட் தாருங்கள். இந்த துறையில் படித்து தொழில் தொடங்கி பலருக்கும் வேலை வாய்ப்பு தரவேண்டும் என்பது என் லட்சியம். தொழில்களை ஊக்கப்படுத்தி வரும் அரசாங்கத்தின் கொள்கையை செயல்படுத்த எனக்கு வாய்ப்புத் தாருங்கள்’’ என்று இவர் எழுதின கடிதம் கல்வியாளர்களை கவர்ந்தது-அனுமதி கிடைத்தது.      படிக்கும்போது லேத்-மெக்கானிக்கல் ஒர்க்‌ஷாப்பில் பிறருக்காக பணியும் செய்து தன் படிப்பு செலவிற்கும் மேல் சம்பாத்யம் பெற்றதை தமிழ்ச்செல்வன் நினைவு கூர்கிறார்.      1978 இல் டி.எம்.இ முடித்தவர் `பெல்’ கம்பெனியில் பயிற்சி பெற்றார். அங்கேயே வேலை கிடைக்கும் சூழ்நிலை இருந்தாலும்கூட –அரசாங்க கம்பெனியில் சொகுசு அனுபவித்து விட்டால் பிறகு சொந்த தொழிலில் கவனம் திரும்பாது என்று வெளியேறி காவிரி என்ஜினியரிங்கில் சேர்ந்து 10 வருடங்கள் பணியாற்றினர்.      அங்கு பல பிரிவுகளிலும் உழைத்து கற்றுக் கொண்ட விஷய ஞானம் இவருக்கு நல்ல அஸ்திவாரம் அமைந்தது. அதன் பலனாய்-      1986 இல் இக்கம்பெனி பார்ன்ர்ட்ஷிப்பில் உதயமாயிற்று. பிறகு இவரே தன் கடுமையான உழைப்பு-முயற்சி –திறமையால் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.      திருச்சி மட்டுமன்றி மாத்தூர்,விராலிமலை கோவை என கிளைகள் உள்ள இக்கம்பெனியில் 150க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களின் பணி பெரும்பாலும் `பெல்’ கம்பெனிக்கு நடக்கிறது. அதிக காற்றழுத்தமுள்ள கலங்கள், வால்வுகள் போன்ற உலோக உறுப்புகளின் தர- பரிசோதனை இவர்களது பணி.      இவர்கள்- எக்ஸ்ரே ரேடியோலஜி, அல்ட்ராசோனிக் (Flow detection and thicknes gauging Magnetic particle testing and Dye Penetrant testing, Stress relieving            போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.      ஊழியர்களின் ஆத்மார்த்த உழைப்பும், கூட்டு முயற்சியும், தரமான தொழில் உபகரணங்களும், கற்று- பயிற்சி பெற்ற தொழில் அறிவும் தன் பலம் என்கிறார் தமிழ்ச்செல்வன்.      கம்பெனியில் ஒவ்வொரு தொழில் செயல்பாட்டிலும் ஆழ்ந்த அறிவு கொண்டிருப்பதால் சரியாய் திட்டமிட முடிகிறது இவரால்.       கடின உழைப்பும் –எந்த வேலையானாலும்- இரண்டு வருடங்கள் முன்பே திட்டமிட்டு அதற்கு வேண்டிய உபகரணங்களை வரவழைத்து தன்னை தயார்படுத்திக் கொள்வது இவரது சிறப்பு. கம்பெனிக்கு இவர் செலவை பார்க்காமல் வெளிநாடுகளிலிருந்து தரமான  equipment  களை வரவழைத்து விடுகிறார்.   அதனால் Quality  சர்வீஸ் தரமுடிகிறது என்பார்.       மனைவி லதாவும், கம்பெனியின் இதர கிளைகளை கவனித்து வரும் சகோதர்களும் இவருக்கு பக்கபலம். எம்.பி.ஏ. படித்துள்ள மகள் லட்சுமி பிரபாவும் இதே கம்பெனியில் பணியாற்றி தந்தைக்கு உதவியாயிருக்கிறார்.      பொது காரியங்கள், சேவைகளில் நேரடியாய் ஈடுபட அவகாசமில்லாவிட்டாலும் கூட-தமிழ்ச்செல்வன் சேவை அமைப்புகளுக்கு முடிந்த அளவில் உதவி வருகிறார்.      தற்போது பெரும்பாலான மருத்துவமனைகள் வியாபார ரீதியில் போய் கொண்டிருப்பதால் சாதாரண மனிதர்களுக்கு நல்ல சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ளது.      ஏழை எளியோரும் பயன்படும் வகையில் திருச்சியில் தரமான எல்லா வசதிகளும் கொண்ட மருத்துவமனை நிறுவ வேண்டும் என்பது இவரது லட்சியம்.    ஆனந்தி நடராஜன்      பெண்களின் சக்தி அபாரமானது. அவர்களது திறமை, பலம், சாமர்த்தியம், துணிச்சல் போன்றவற்றை ஆண்கள் என்றில்லை, பெரும்பாலான பெண்களும் அறிவதில்லை என்பதுதான் உண்மை.      குடும்பம், குழந்தைகளை கவனித்து கொள்வதற்குமப்பால் கலை, இலக்கியம், விளையாட்டு இவற்றுடன் வியாபாரத்திலும் முன்னணி வகிக்கும் பெண்களில் திருமதி. ஆனந்தி நடராஜனும் ஒருவர்.      இவரது கணவர் திரு.நடராஜன் ஸ்பிக்கில் தூத்துக்குடியிலும் பிறகு குவைத்திலும் பணிபுரியும் போது ஆனந்தி அந்தப் பகுதிகளில் சமூக அமைப்புகளில் தன்னை ஐக்கியப்படுத்தி சிறப்பாக செயல்பட்டவர்.     குவைத்தின் பாரம்பர்யமிக்க தமிழ் அமைப்பான பாரதி கலை மன்றத்தில் துணைத் தலைவியாக இருந்து ஆற்றிய பணிகள் ஆனந்தியை வியந்து பார்க்க வைத்தன.     வேகம்-விவேகம்-அஞ்சாமை –ஒரு காரியத்தை தொட்டுவிட்டால் அது வெற்றிபெறும் வரை ஓயாமை-குழுவினரை அரவணைத்து செயல்பட வைக்கும் பக்குவம்-சாமர்த்தியம்-எந்த பிரச்னை என்றாலும் அதை நேரிடும் ஆற்றல்-மேடைபேச்சு-கலைகளின் மேலுள்ள ஆர்வம்- அவற்றை வளர்க்க உதவும் பாங்கு. இவற்றுடன் விருந்தோம்பல்-எப்போதும் கலகல பேச்சு-என ஆனந்தி பற்றி நிறையச் சொல்லலாம்.      குவைத்தில் இருக்கும்போது ஃப்ரண்ட்லைனர்ஸ் அமைப்பிற்காக திரு.ப.சிதம்பரம், திரு.டி.என்.சேஷன் வந்தபோது- குவைத்திற்கு வரும் அவர்களை தமிழ் அமைப்பான பாரதி கலை மன்றம் வரவேற்க வேண்டும்- கெளரவிக்க வேண்டும் என்று இணைந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது இவரது தமிழார்வத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.      பின்னர் மகளின் படிப்பிற்காக சென்னையில் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது-எப்போதும் ஆக்கப்பூர்வமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த அவரது செயல்பாடுகளில் ஒரு தேக்கம்.      சென்னையில் எதுவுமே செய்யாமல் சும்மா அடங்கிக் கிடப்பதில் அவருக்கு விருப்பமில்லை. கணவர் நடராஜனின் தூண்டுதலில் நண்பர்களின் ஆலோசனையில் ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்கிற முடிவிற்கு வந்தார்.   வியாபாரம் என்றால் எந்த மாதிரி?     ஒரு பெண் தனியாக வியாபாரத்தில் ஈடுபட முடியுமா என்று பலரும் மிரட்டினர். ``வேண்டாத தலைவலி! நிம்மதி போகும்!”     ஆனந்தி ஒரு மாதம் தீவிர `சர்வே’யில் இறங்கினார். எது சரியாக வரும்? பெண்கள் கவனித்துக் கொள்கிற மாதிரி எளிமையான தொழிலாக பார்க்கலாம் என்றனர். பியூட்டிபார்லர் வைக்கலாம் என்று சிலர்.      ஆனந்திக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை. சவாலான துறையாக தேர்வு செய்தார். அதன் செயல்வடிவம் தான்  Magna Shopee.      இதெல்லாம் பெரிய தலைவலி பிடித்த வேலை, கஸ்டமர்கள், கடன்காரர்கள், சப்ளையர்கள் என அல்லாடணும். ஆரம்பிக்காதே. ஆரம்பித்தாலும் மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது என்று பலரும் மிரட்டினர்.      கணவர் நடராஜன் கொடுத்த தெம்பில் ஆனந்தி-வந்தது வரட்டும் என்று இந்த பல்பொருள் அங்காடியை துவங்கி அது இன்று 4 வருடங்களாக வெற்றிகரமாய் நடந்து கொண்டிருக்கிறது.           ஆனந்திக்கு அவரது தாயும், சகோதரி நிர்மலாவும் உதவுகிறார்கள். 14 பெண் ஊழியர்களைக் கொண்ட இக்கடையின் பர்ச்சேஸ் முதல் அனைத்தும் ஆனந்தியே கவனிக்கிறார்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:27            பெண் தானே என்று ஆரம்பத்தில் இளப்பமாய் அணுகின சப்ளையர்கள் கூட இவரது கறார் நிர்வாகத் திறமையை கண்டு மதிக்கின்றனர்.      வீட்டுச் சாமான்கள் அனைத்தும் சுத்தமான பேக்கிங்கில் –சுத்தம் சுகாதாரத்துடன் வீட்டுக்கும் சப்ளை செய்கிறார்கள். இட்லி மாவு, தோசைமாவு முதற்கொண்டு எல்லாம் இங்கு கிடைக்கிறது.      வியாபாரத்தில் நாளொரு தலைவலி சகஜம்தான். தனது துணிவான முடிவால் அவற்றை ஆனந்தி சமாளிக்கிறார். ஒரு சமயம் பெரிய தொகைக்கு நம்பிக்கையின் பேரில் கடன் வைத்துப் போன நபர்-      பணம் கேட்டதால் –கடைக்கு ரவுடிகளை அழைத்து வந்து மிரட்ட அந்த நிமிடமே- இவர் போலீஸ் கண்ட்ரோல் ரூமை போனில் அழைக்க-அவர்கள் திரும்பி ஓடிவிட்டதை ஆனந்தி நினைவு கூர்கிறார்.      குடும்ப நண்பரான கேப்டன் விஜயகாந்தும் அவரது மனைவியும் இக்கடையை திறந்து வைத்ததை ஆனந்தி பெருமையாய் நினைக்கிறார்.      கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் அருகில் ஆரம்பிக்கப்பட்ட இதை சென்னை முழுக்க விரிவாக்கும் திட்டத்தில் இருக்கிறார் இந்த சாதனை ஆனந்தி.   தீபாவளி மலர்;  லேடீஸ் ஸ்பெஷல், நவம்பர் – 2006    பூரம் எஸ்.சத்தியமூர்த்தி;      தமிழகத்தின் பல பகுதிகளில், புதுக்கோட்டையில் பிறந்தவர்கள், புகழ்கொடி நாட்டிக் கொண்டுள்ளனர். உலகளவிய அளவில், அறிவில் சிறந்து, ஆற்றலில் பெருகி, பிறந்த மண்ணுக்குப் பெருமை தேடித் தந்து கொண்டுள்ளதால் புதுக்கோட்டை என்றால் புகழ்க்கோட்டை என்று குறிப்பிடலாம் போலிருக்கிறது.      அந்த வகையில், எழுத்துலக இமயமாய் எழுந்து நிற்கும், புதுக்கோட்டை பூரம், எஸ்.சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை ஐயர் குளத் தென்கரையில், ஒரு சிறிய ஓட்டுவீட்டில் பிறந்தவர் (1937ல்).  இவரது தந்தை திரு.டி.சீனிவாச ஐயங்கார் வக்கீல் குமாஸ்தாவாக இருந்தார்.      திரு.சத்தியமூர்த்தி, ஸ்ரீ குலபதி பாலையாப் பள்ளியிலும், ஸ்ரீ பிரஹதாம்பாள் மேல்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பை மாமன்னர் கல்லூரியிலும் முடித்தார்.      திரு.சத்தியமூர்த்திக்கு எஸ்.ரங்கநாதன் என்று ஒரு சகோதரர், அவரது மனைவி திருமதி. பத்மா ஹைதராபாத்தில் வசிக்கின்றனர்.      திரு. சத்தியமூர்த்தியின் தாயார் திருமதி.சீதா வாரப் பத்திரிகைகளைப் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அந்தத் தாய்ப்பால் அருந்திய சத்தியமூர்த்திக்கு, எழுத்தார்வம் உதிரத்தோடு கலந்துவிட்டது எனலாம். இவரது தாய், தான் படித்த கதைகளை, அழகாக``பைண்ட்’’ செய்து வைத்து, சத்தியமூர்த்தியின் அண்ணனைப் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். அப்போது, அதைக் கேட்ட நான்கு வயதுச் சிறுவனாக இருந்த சத்தியமூர்த்திக்கு, கதை படிக்கும் ஆர்வம் உருவாயிற்று.     இவர் கல்லூரியில் படிக்கும் போதே சிறுவர்களுக்கான கதைகள் எழுதத் தொடங்கினார். இவரது முதல்-சிறுகதை, புதுக்கோட்டையிலிருந்து வெளியான டிங்-டாங் பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து, சென்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர்களுக்கான நாடகம், சிறுகதைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றார். தங்கப் பதக்கமும் பெற்றார். கண்ணன் பத்திரிகை நடத்திய தொடர்கதைப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றார்.     இவருக்குச் சென்னை துறைமுக அலுவலகத்தில் வேலை கிடைக்கவே புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்குச் சென்று வசிக்கத் தொடங்கினார். சென்னை வந்த பிறகு, பெரியோர்களுக்கான இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின. அமரர் கி.வ.ஜ அவர்கள் ஆசிரியராக இருந்த கலைமகள் வண்ணக் கதைச் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு `கருவளை” என்ற தலைப்பில் கதையெழுதி முதல் பரிசு பெற்றார். மிகத் தரமான இதழான கலைமகளில் இவரது சிறுகதை வெளிவந்து, முதல் பரிசும் பெற்றது.     தொடர்ந்து கல்கி வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி, பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியிலும் இவரது படைப்புகள் பரிசுகளைப் பெற்றன. 1990 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி நடத்திய வானொலிப் போட்டியில், இவரது நாடகம் ஒலிபரப்பப்பட்டது.     இவர் சிறுவர்களுக்காக எழுதிய 35 சிறுகதைகள் ``அறிவூட்டும் கதைகள்’’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப் பெற்றது. இந்த நூல் சிறுவர்களுக்கான நூலாக அந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப் பெற்று, திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும் ``ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா”விருதும் பெற்றது.      திரு.சத்தியமூர்த்திக்கு முப்பத்தி இரண்டு வயது நடக்கும்போது ஒரு வேத விற்பன்னரிடம் ஐந்து ஆண்டுகள் காலங்களில் இசைக்கப்பட வேண்டிய அவ்வேத மந்திரங்களை, இவரும் இசைபாடி வந்தார். அவ்வப்போது, வேத ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு, ``````சப்தகிரி’’ என்ற இதழில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். பிரதிபலன் பாராமல், திருவல்லிக்கேணிப் பாடசாலை மாணவர்கள் பலருக்கு வேதங்களை தினமும் காலையும் மாலையும் கற்றுக் கொடுத்து வருகிறார். இவரிடம் வேதம் பயின்ற மாணவர்கள் பலர், பல திருக்கோவில்களில் ஆன்மீகப் பணிகளை ஆற்றி வருகின்றனர்.     பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இவர் கண்பார்வையை இழந்துவிட்டார். கண்பார்வை இழந்ததை ஒரு ஊனமாகக் கருதாமல், தளர்ந்து போகாமல்,ஆன்மீகப் பணியும், இலக்கியப்பணியும் தொடர்ந்து செய்து வருகிறார். இறைவன் அளிக்கும் எச்சோதனையையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று எண்ணுபவர் இவர்.     அன்று, நாட்டின் விடுதலை வேண்டிப் போராடிய நாவன்மை மிக்கவர் புதுக்கோட்டைத் தீரர் சத்தியமூர்த்தி, இன்று, சீரிய எழுத்துக்களால், இலக்கியம் படைக்கும் இமயமாய் விளங்குபவர் பூரம் சத்தியமூர்த்தி. இலக்கிய உலகில், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிச்சம் கொடுத்த இவர், இன்று விழி ஒளியிழந்து இருட்டில் இருக்கிறார். ஆனால் இன்னும் இலக்கிய ஒளியேற்றி வருகிறார். இறைவன் பார்வையைப் பறித்தானே என்று எண்ணாமல், இன்னும் இறைப்பணி ஆற்றி வருகிறார். வேதம் கற்பித்து வருகிறார்.     இலக்கியத்தையும், ஆன்மீகத்தையும் இரண்டு கண்களாகக் கொண்ட இவரது சேவையைப் பாராட்டி ``வித்யா சேவா ரத்னா’’ விருது வழங்கப்பட்டது.     இவரது தரமான எழுத்தைப் பாராட்டிப் போற்றிய பல எழுத்தாளர்களில் அமரர். கே.ஆர்.வாசுதேவன் (ரத்னமாலா), கவிஞர் பீஷ்மன் வாசவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.     பிரபல எழுத்தாளர் கே.ஜி. ஜவகர் இவரைப் பற்றி குறிப்பிடுகையில் ``பல்விழுந்த பெரியவர்கள் முதல் பல் முளைக்காத பாலகர் வரை அத்தனை பேரையும் தம் எழுத்தால் கட்டிப் போட்டவர் பூரம் சத்தியமூர்த்தி. `என் கதைகளை கரையான் சாப்பிட விடமாட்டேன்’ என்று உறுதியுடன் செயல்பட்டு, கண்பார்வை பறிபோன பிறகும், கதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுச் சாதனை படைத்த சாதனையாளர், தலைவலித்தாலே தளர்ந்து விடும் நபர்கள், பூரத்தைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். எழுத்தில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு `பூரம்’ ஒரு துருவ நட்சத்திரம்’’ என்கிறார்.     வெவ்வேறு இதழ்களில் எழுதிய இவரது சிறப்புக் கதைகளைத் தொகுத்து. பூரம் பரிசுக் கதைகள் எனும் புத்தகத்தைப் பிரபல பதிப்பகம் ``சாந்தி நூலகம்’’ வெளியிட்டுள்ளது.      சிறுகதை படிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னை பூரம் சிறுகதை ரசிகர் மன்றத்தில் வாரந்தோறும் கூட்டங்கள் நடத்துகிறார். பிரபல எழுத்தாளர்கள், இந்திரா பார்த்தசாரதி, சாருகேசி, பாக்கியம் ராமசாமி, ராணிமைந்தன், மதிஒளி சரஸ்வதி, கூத்தபிரான், இளையவன் ஆகியோர் இவரது அமைப்புக்கு வந்து வாழ்த்தியுள்ளனர்.     நாம் தியானம் செய்யும்போது கண் மூடித் தியானம் செய்கிறோம். விழி மூடிய இருளில், ஆன்ம ஒளியில் இறைவனைக் காண்கிறோம். ஆனால், விழி ஒளி இழந்தவர்கள், எல்லா நேரமும் பார்வையின்றி இருளில் உள்ளனர்.     எப்போதும் கண்மூடி இருக்கும் அவர்கள், இறைவனின் அருகிலேயே உள்ள கடவுளின் பிள்ளைகள் எனலாம்.     51 சிறுவர் சிறுகதைகளும், 54 பொதுச் சிறுகதைகளும், நாடகங்களும் எழுதியுள்ள இவர், ஆன்மீகம் குறித்து ஒன்பது கட்டுரைகளும் எழுதியுள்ளார். ``The Musical Instruments of India”       என்ற ஆங்கிலப் புத்தகமும் எழுதி வெளியிட்டுள்ளார். எகிப்து நாட்டு பிரமிடுகள், ஓடு மனச்சக்தி, சோதிடக்கலையைப் புரிந்து கொள்ளச் சில எளிய வழிகள், கைரேகை சோதிடம் –புரிந்து கொள்ளச் சில எளிய வழிகள், பாரத நாட்டு இசைக்கருவிகள் ஆகிய தனி நூல்களும், இவரது கை வண்ணத்தில் வெளியாகி உள்ளன.     திரு.பூரம் சத்தியமூர்த்திக்கு திரு. அமுதன் சீனிவாசன். திரு.ராமானுஜன் என்று இரண்டு குமாரர்கள் உள்ளனர். அமுதன் சீனிவாசன் எம்.எஸ்.சி., படித்து, ஹைதராபாத் அரிசி ஆராய்ச்சி இயக்குநரகத்தில் இணை விஞ்ஞானியாக உள்ளார். இரண்டாவது மகன் திரு. ராமானுஜன், இளங்கலைப் பட்டம் பெற்று, சென்னை அஞ்சல் துறையில் உதவியாளராக உள்ளார்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:28            திரு. பூரம் சத்தியமூர்த்தி அவர்களுக்கு திருமதி அனுருயா, வேதவல்லி என இரண்டு மகள்கள். இருவருமே எம்.ஃபில் பட்டம் பெற்றவர்கள்.     இளம் வயதில் ஏழ்மை விரட்டினாலும், எழுத்தை மறக்காமல், இலட்சிய வேட்கையில் இமயமாய் எழுந்து நின்று, இலக்கியம், ஆன்மீகம், சோதிடம் எனப் பன்முகம் காட்டி, விழி இழந்த போதும் வழி அடைபடவில்லை என்று விஸ்வரூபமெடுத்து, வேதங்கள் கற்ற வித்தகராய், ஓதி உணர்ந்த உத்தமராய், எழுபதைத் தாண்டியும், இன்னும் இலக்கியம் படைக்கும் எழுத்தாளராய்த் திகழுகிறார் திரு. பூரம்.   தகவல் நன்றி:  சொல்லருவி மு. முத்துசீனிவாசன்.     மு.தேசிங்குராஜன்:    மார்க்குகள், ரேங்குகள் என்று மாணவர்களை மூச்சுவிடாமல் துன்புறுத்தி ரேஸ் விட்டு அதன் மூலம் வியாபார ஸ்தாபனங்களாக பள்ளி-கல்லூரிகள் மாறிவிட்டன என்கிற பரவலான புகார்களுக்கு மத்தியில்.     வெறும் படிப்பு மட்டுமின்றி மாணவ –மாணவிகளை ஒரு சிறந்த மனிதனாக –தன்னம்பிக்கையுடன் வாழ்வில் எந்த சூழலிலும் சமாளித்து –எதிர் நீச்சலடித்து முன்னேற்றும் பயிற்சி பட்டறையாகவும் நடத்தப்படும் பள்ளிகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக-சேலம் மாவட்ட ஆத்தூரில் உள்ள தனது கிரீன்பார்க் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியை இயக்கி வருகிறார். அதன் பிரின்ஸிபலும், சேர்மனுமான திரு.மு.தேசிங்குராஜன்.     இப்பள்ளியின் சிறப்பை கேள்விப்பட்டு பார்க்கப் போனபோது எனக்கு இன்ப அதிர்ச்சி. காரணம் தேசிங்குராஜன் எனது பள்ளி கிளாஸ்மேட்! (30 வருடங்களுக்கு பின் உணர்வுபூர்வ சந்திப்பு!) பள்ளியின் வளர்ச்சியும், பெயருக்கேற்றபடி உருவாக்கியிருக்கிற பசுமையும் பிரம்மாண்டம்! இவரது உழைப்பு –முயற்சியும் மாணவ சமுதாயத்தின் மேல் கொண்டிருக்கிற பற்றும் பெருமைப்படும் விஷயம்.      நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளாலப்பட்டியை சேர்ந்த இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம் சிறுமலர் உயர்நிலை பள்ளியில் அடித்தளம் அமைக்கப்பட்டவர்.     பிறகு திருச்சி பிஷப் ஹீபரில் பி.ஏ. ஆங்கிலம்; திருச்சி P.G.Extension  Research Centre of Madras University  மூலம்  M.A.      (இலக்கியம்:நியூடெல்லி  IIMC மூலம் P.G டிப்ளமா மாஸ் கம்யூனிகேஷன்; Central Institute of English and Foreign Language, Hyderabad  மூலம் P.G Couse ofTeaching  English ;அண்ணாமலை யுனிவர்சிடி மூலம் B.Ed மற்றும்M.Ed.,     தேசிங்குவின் கல்வித் தகுதி மலைக்க வைக்கிறது. இவரது கல்வித் தேடல் முடியவில்லை, இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.      குடும்ப பொருளாதாரம் காரணமாய் பி.யு.சி. வரை மட்டுமே பெற்றோர்களை சார்ந்திருந்த இவர் அதன்பிறகு தன் தேவைகளுக்காக பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தும் கல்லூரி அலுவலகங்களில் பகுதி நேர கிளார்க்காகவும் பணிபுரிந்து படித்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.       ஹரியானா   Gurgaon பள்ளி மற்றும் டெல்லி பால்பவன்  பள்ளியில் பணியாற்றினவர். தலைமையாசிரியராக ராசிபுரம் ஸ்ரீவாணி மெட்ரிகுலேஷனிலும், பெரம்பலூர் மாவட்ட உடும்பியம் எடென்கார்டன்ஸ் மெட்ரிகுலேஷனிலும் பணியாற்றி, 1999 முதல் இப்பள்ளியை சிறப்புற நடத்தி வருகிறார்.      பள்ளி நண்பர்களான ஆடிட்டர் நடராஜன், வக்கீல் ராஜேந்திரன் (MLA ) வாத்தியார் பன்னீர் செல்வம், அட்வகேட் முருகனுடன் என்னையும் பெருமையுடன் நினைவுகூரும் பெருந்தன்மை இவருக்கு.     தேசிங்கு அதிகம் ஆசைப்படுவதில்லை. ஒரு வேள்விபோல் இப்பள்ளியை நடத்தி வருபவர்–இதை இப்படியே காப்பாற்றி வந்தால் போதும் என்கிறார்.     பிள்ளைகளிடம் டொனேஷன் பெறுவதில்லை; தவறு செய்தாலும், படிக்காவிட்டாலும் கூட தண்டிப்பதில்லை, அடிப்பதில்லை; அன்பாலும் கலந்து பேசி அவர்களை புரிய வைத்தும் திருத்துவது இவர்களது சிறப்பு.     1200 மாணவ–மாணவிகள்! ஹாஸ்டலில் 150 பேர்கள் என வரையறுத்திருக்கிறார்கள். 55 ஆசிரியர்கள்!     மனைவி திருமதி கண்மணி இவருக்கு பக்கபலம் சரித்திரம் மற்றும் ஜாக்கிரபியில் முதுகலை பட்டமும்  B.Ed ம் பெற்றுள்ள இவர் தேசிங்கு ஆக்கபூர்வமாய் செயல் பட ஊக்கமும் உற்சாகமும் தந்து வருபவர்.     இந்த காம்பஸிற்குள்ளே இவர்களின் வீடு இருந்தாலும்கூட காலையில் வீட்டைவிட்டு இறங்கினால் பிள்ளைகளுடன் தங்கள் நேரத்தை செலவிட்டு இரவுதான் திரும்புகிறார்கள். அந்த அளவிற்கு ஆத்மார்த்தம்!      நேர்மை –ஒழுக்கம்-அறிவு –ஆற்றலுக்கு பிள்ளைகளுக்கு முன் உதாரணமாய் இருக்கிறார்கள் பள்ளி முழுக்க இருக்கும் செடி-கொடி மரங்களின் பசுமை- பிள்ளைகளின் எதிர்காலத்திலும் இருக்க வேண்டும் என்கிற ஆர்வம்.     படிப்போடு, மனிதாபிமானம், தன்னம்பிக்கை, முயற்சி, தலைமை ஏற்கும் பயிற்சி, உயரிய பண்புகள் என பல்துறைகளிலும் இங்கு பயிற்சியளிக்கின்றனர்.      English Structure,Perfect your English Speech, Developing leadership among school children     போன்ற புத்தகங்களை தேசிங்கு எழுதியிருக்கிறார்.      பள்ளி கல்லூரி மாணவர்கள் பெங்களூர் இன்டர்நேஷனல் ஸ்கூல் டீச்சர்கள், B.Ed.,  கல்லூரி என இவர் பயிற்சிகளும் கொடுத்து வருகிறார்.      இவர்களது மகன் திவ்யா கண்ணன் பெங்களூர் Indian Institute of Planning Management  .ல்  M.B.A .,  படித்து வருகிறார்.      ஒரு கனவு பள்ளியை நனவாக்கி சிறப்பாக்கி செயல்பட்டு வரும் தேசிங்கு –இது மாதிரி தரமான தன்னம்பிக்கை ஊட்டும் பள்ளிகளை தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் உருவாக வேண்டும் என விரும்புகிறார்.     பிள்ளைகளின் மற்ற திறமைகளை வளர்க்க பள்ளியில் நீச்சல், ஸ்கேடிங், செஸ்,நாடகம் மற்றும் தபால்தலை சேகரிப்பு, இசை நாட்டியம், நாடகம் பேச்சுக்கலை, ஸ்போர்ட்ஸ், கேம்ஸ் கலந்துரையாடல்கள், பேச்சு போட்டிகள் என நடத்திவருகிறார்கள்.      இப்பள்ளியின் வெற்றியை தனக்கு வழிகாட்டின மாடலாக அமைந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு தேசிங்கு நன்றியோடு காணிக்கையாக்குகிறார்.   குவைத் இந்திய தூதுவர் திரு. கணபதி    குவைத்தில் இந்திய தூதுவராக பொறுப்பேற்றிருக்கும் திரு. கணபதி தமிழ்நாட்டை சேர்ந்தவர்-அதுவும் இப்பதவி வகிக்கும் முதல் தமிழர் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.     எளிமையும், கனிவும், நாட்டுப்பற்றும் மிக்க இவரது செயல்பாடுகள் குவைத் வாழ் இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன.     நம் நாட்டின் வளத்தையும் வலிமையையும் வெளிப்படுத்தி குவைத் –இந்திய உறவை வலுப்படுத்தும் விதத்தில் இவரது பணி தொடர்ந்து வருகிறது.    சென்னைவாசியான இவரின் தந்தை ஜபல்பூரில் டெலிபோன் துறையில் என்ஜினியராக பணிபுரிய, அங்கேயே பள்ளி படிப்பு; பிறகு கோவை அரசாங்க கலை கல்லூரியில் பி.எஸ்ஸி (இரசாயனம்); அடுத்து சென்னை மாநில கல்லூரியில் எம்.எஸ்ஸி (இரசாயனம்), 1974 –ல் முடித்து வெளியே வந்தார்.     முதலில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையில் பணிக்கு சேர்ந்தவர், ஐஎப்எஸ் எழுதி பாஸ் செய்து, 1975 –ல் மினிஸ்ட்ரி ஆஃப் ஃபாரின் அஃபயர்ஸில் இரண்டு வருடங்கள் பயிற்சிபெற்று, 1977-ல் மாஸ்கோவில் மூன்றாம் செயலாளராக பொறுப்பேற்றார்.     பிறகு பல பொறுப்புகளில் பல்கேரிய, சிங்கப்பூர்,லண்டன், யுகோஸ்லேவியா-பெல்கிரேட் என்று பல நாடுகளிலும் பணியாற்றினார்.    குவைத்திற்கு 2006 ஜனவரியில் வரும் முன்பு சிட்னில் சுமார் 5 வருடங்கள் கவுன்சிலர் ஜெனரலாக இருந்தார்.    ஆத்மார்த்தம், ஒழுக்கம், நேர்மை, மலர்ந்த முகம், பிரச்சினை என்று வருபவர்களை அரவணைத்து உதவுவது, ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு உண்மையாகவும் வேகமாகவும் செயல்படுவதெல்லாம் இவரது பலம்.   இரசாயனம் படித்தவருக்கு இந்த துறையில் ஆர்வம் வந்தது எப்படி?    ``இரசாயனம் இரண்டு கெமிக்கலுக்கிடையே ஈக்குவேஷனை பேலன்ஸ் செய்கிறது. டிப்ளமஸி இரு நாடுகளுக்கும் –ஜனங்களுக்குமிடையே ஈக்குவேஷனை பேலன்ஸ் செய்கிறது! இரண்டுக்குமிடையே பெரிய வித்யாசமில்லை! என்று சிரிக்கிறார்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:29           வெளிநாட்டு பொறுப்புகள், நட்பு வட்டம் மற்றும் பிள்ளைகளின் படிப்பில் –கொஞ்சம் பிரச்சினை என்றாலும் கூட புதுப்புது ஜனங்கள் –பலவித கலாச்சாரங்களுடன் பழகும்போது எந்த சூழலிலும் வாழலாம் என்கிற தன்னம்பிக்கை பிள்ளைகளுக்கு வளர்த்திருக்கிறது என்று மகிழ்கிறார்.    திரு. கணபதி பிரச்சினைகளையோ, சிக்கல்களையோ கண்டு பயப்படுவதில்லை, தளர்ந்து விடுவதில்லை. ``பிரச்சினைகள் வரதான் செய்யும். அவற்றை சுமுகமாய் தீர்க்கதானே எங்களை அமர்த்தியிருக்கிறார்கள்!” என்று புன்னகைக்கிறார்.    ``பிரச்சினைகள் வரும்போது அதற்கான அடிப்படையான காரணத்தை ஆய்ந்தறிந்து அகற்ற வேண்டும். இங்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட முடியாது, கூடாது.     நம் நாட்டின் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் வந்துவிடாமல் அதே நேரம் நம் நாட்டின் பலத்தையும் விட்டுக் கொடுக்காமல் பணியாற்ற வேண்டும்.     இந்த பதவியில் சேவைக்கு அளவு கிடையாது எந்த நேரத்திலும் எந்த ரூபத்திலும் பிரச்சனைகள் வரலாம். என்பதற்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.”     ``எப்படி இத்தனை எளிமையாய் உங்களால் இருக்க முடிகிறது?”      ``எளிமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக நான் இப்படி இல்லை. என் இயல்பே அதுதான். பெற்றோர்களிடமிருந்து கற்றுக் கொண்ட பண்பு இது என நினைக்கிறேன்!”      குவைத்துடனான கலை –கலாச்சார-வியாபார தொடர்புகளை வலுப்படுத்தும் சீரிய குறிக்கோளில் இவரது பயணம் தொடர்கிறது.     குவைத்திலிருக்கிற லேபர் பிரச்சினைகளை தீர்க்கும் முனைப்பிலும் இந்தியர்களுக்கு எம்பஸி மூலம் சிறந்த சேவை செய்ய வேண்டும் என்கிற தீவிரத்திலும் திரு.கணபதி வெற்றி கண்டு வருகிறார்.     திருமதி உமா கணபதி இவருக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் துணையாக நின்று நம் சமுதாயத்திற்கும் உதவுவதில் பக்கபலமாயிருந்து வருகிறார்.    இவர்களது மகள்கள் அபர்ணா, ஆர்த்தி இருவரும் சிட்னியில் தங்களது மேல்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.    என்.ஆர்.சம்பத் (வளைகுடா நாடுகள்)     `இந்தியா ஏழைநாடு, ஏழைகள் நிறைந்த நாடு’ என்கிற மாதிரியான அபிப்ராயம் உலக அளவில் பரவியிருப்பது மறுக்கமுடியாத உண்மை.     ஆனால் உலகின் பல பாகங்களிலும் இந்தியர்கள் பெருமளவில் தொழிலிலும், பிசினஸிலும், பெரிய பதவியிலும் கொடிகட்டி பறக்கின்றனர். குவைத்தை எடுத்துக் கொண்டால் எழுபது சதவிகித தொழில்கள் இந்தியர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.     இதில் தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பவர்கள் பலருமுண்டு. அந்த மாதிரி பெருமை சேர்ப்பவர்களில் திரு. என்.ஆர்.சம்பத்தும் ஒருவர்.     இவர் குவைத் இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் கம்பெனியின் ஜெனரல் மானேஜர் குவைத்திலிருந்து ஆயிரம் கோடிக்கு மேல் இந்தியாவிற்கு அந்நிய செலாவணி கிடைக்கிறது. அதில் பெரும்பகுதி இவர்களின் மூலமே அனுப்பப்படுகிறது.     யாராக இருந்தாலும், எந்த ஒரு பெரிய பதவிக்கும் எளிதாய் வந்துவிடுவதில்லை. ஒவ்வொருவருடைய வெற்றிக்குப் பின்னாலும் கடுமையான உழைப்பும், திறமையும் நிச்சயம் இருக்கும். இருவரும் அதற்கு விதிவிலக்கல்ல.     சென்னையைச் சேர்ந்த இவர் இந்து தியோலோஜிகல் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். கடுமையான சட்டதிட்டம், நெறிமுறைகள், ஒற்றுமை, நேர்மை, நாட்டுப்பற்று, இறைபற்று, தியாக மனப்பான்மை, பிறரிடம் அன்பு செலுத்துதல், கடின உழைப்பு, சமூதாய சேவை போன்ற விஷயங்களை பள்ளி தனக்கு கற்றுத் தந்தது என்று பெருமைப்படுகிறார் திரு.சம்பத்.    பத்து வயதிலேயே தந்தையை இழந்த இவரை, இவரது தாத்தாவும் பிரபல வக்கீலுமான என்.சி.விஜயராகவாச்சாரியார் எடுத்து வளர்த்திருக்கிறார்.    தாத்தாவின் பராமரிப்பில் சம்பத் சிறந்த மாணவனாக மட்டுமின்றி, கொள்கை வீரனாகவும் வளர முடிந்தது. ``எனது வெற்றிக்கு, சாதனைகள் எல்லாமே எனது தாத்தாவால் கிடைத்தவையே” என்று சம்பத் உருகுகிறார்.     சம்பத் வாழ்க்கையில் முன்னேற அவருடைய தாயின் தியாகமும், அன்பும், வழிகாட்டுதலும் முக்கிய காரணங்கள் என்று நினைவுகூர்கிறார். தந்தையில்லா குறை தெரியாமல் சம்பத்திற்கு அன்பும், பண்பும், கடமையும், கண்டிப்பும் ஊட்டி வாழும் கலைக்கு அடித்தளம் அமைத்துத் தந்ததது.    லயோலாவில் எம்.காம். முடித்து அங்கேயே லெக்சரராக பணியில் சேர்ந்தார். அந்த சமயம் வங்கி தேர்வு எழுதி ப்ரபேஷனரி ஆபீசராக ஸ்டேட் பாங்கில் சேர்ந்தார். 37 வருடம் எஸ்.பீ.ஐயில் சர்வீஸ் பார்த்திருக்கிற சம்பத்தின் விருப்பமான சப்ஜெக்ட் –என்.ஆர்.ஐ பற்றியது. இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் பணிபுரிந்திருக்கிற சம்பத் –உலகின் பல பாகங்களுக்கும் பயணம் செய்து என்.ஆர்.ஐ பத்திரங்களை மார்க்கெட் பண்ணியிருக்கிறார்.    என்.ஆர்.ஐ சர்வீஸ் அவரது நட்பான அணுகுமுறையும், பிரச்னைகளை சுமுகமாய் தீர்த்து வைக்கும் திறமையும் வங்கிக்கு பலவிதங்களில் உதவியிருக்கின்றன.    சம்பத், இந்தியாவில் பலவித பயிற்சிகளும் பெற்றதுடன், ஜெர்மனி பிஎச்எப் பேங்கில் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார்.     இவர் கடைசியாக பேங்க் ஆபீசர்களுக்கு முக்கியமான பயிற்சி ஸ்தாபனமாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஸ்டாஃப் காலேஜில் பிரின்ஸிபாலாக இருந்திருக்கிறார்.     ``ஸ்டேட் பாங்கில் எனது பயிற்சியும், பெற்ற அனுபவமும் என்னை தொழில் ரீதியாக சிறந்த ஒரு பேங்கராக ஆக்கியிருக்கிறது. ஸ்டேட் பாங்க் மூலம் கடின உழைப்பு, நேர்மை, நாணயம், டீம் ஓர்க் போன்றவற்றை கற்றுக்கொண்டிருக்கிறேன்.’’ என்கிறார் சம்பத் பெருமையுடன்.     குவைத்தில் 1982 முதல் 5 வருடங்கள் இதே கம்பெனியில் பணிபுரிந்திருக்கிற சம்பத் இப்போது குவைத் இந்தியா எக்ஸ்சேஞ்சின் தலைமைப் பொறுப்பை ஏற்று- இந்தியர்களுக்கு சிறந்த சர்வீஸ் கொடுப்பதற்கு பலவித திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.    எந்த ஒரு வெற்றிக்கும் டீம் ஓர்க் தேவை. எனது சக ஊழியர்களும் எனக்கும் பெருமளவில் ஒத்துழைப்பு தருகின்றனர்.     சம்பத்தின் மனைவி திருமதி. மாலினியும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்கில் 15 வருடங்கள் ஆபீசராக பணிபுரிந்து குடும்பத்தை கவனிக்க வேண்டி விடுப்பு பெற்றவர். மகன் அரவிந்த் கம்யூனிகேஷன் படித்து அந்த துறையில் பணிபுரிந்து வருகிறார்.     சம்பத்திற்கு பக்க பலமாயிருக்கும் மாலினி இசையில் அதிக நாட்டமுள்ளவர்.     சம்பத்தின் பொழுதுபோக்கு, இந்தியன் மற்றும் வெஸ்டர்ன் மியூசிக், சுற்றலா செல்லுதல், மேனேஜ்மெண்ட் சம்பந்தமான புத்தகங்கள் படித்தல்.     சொந்த திறமையுடன், மனிதநேயம் வளர்த்து இந்திய சமுதாயத்திற்கு உதவி செய்து, அதன்மூலம் நம்பிக்கை ஏற்படுத்தி, கம்பெனியை என்றும் முதல் இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது இவரது ஆசை.   குவைத் இந்தியா எக்ஸ்சேஞ்ச்     குவைத் வாழ் இந்தியர்களுக்கு நம்பகமான பொறுப்பான, பணிவான சேவை செய்யும் நிறுவனங்களில் ஒரு தலைசிறந்த, புகழ்பெற்ற நிறுவனமாக குவைத் இந்தியா இண்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் கம்பெனி விளங்கி வருகிறது. 22 ஆண்டுகளாக இந்தியாவின் மிகச் சிறந்த ஊர்களுக்குக் கூட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெயப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதரபாத் கிளைகள் மூலமாக இந்தியர்கள் சேமிக்க குவைத் இந்தியா உறுதுணையாக இருந்து வருகிறது.     இந்தியர்கள் தங்கள் சேமிப்பைத் தங்கள் தாய்நாட்டுக்கு அனுப்ப ஒரு நம்பகமான நிறுவனம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த போது, குவைத் இந்தியா 1979ல் தன் சேவையைத் தொடங்கியது. இந்தியாவுக்கு மட்டுமின்றி, அமெரிக்க, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா, ஜக்கிய அரபுக் குடியரசு, பஹ்ரைன், போன்ற நாடுகளுக்கும் டிராப்ட் மற்றும் டெலக்ஸ் மூலமாகப் பணம் அனுப்பும் பணியில் இன்று இந்தியர்களுக்குச் சிறந்த முறையில் குவைத் இந்தியா பணியாற்றி வருகிறது.    1990ல் ஈராக் படையெடுப்பைத் தொடர்ந்து இந்தியர்கள் இந்தியா திரும்பிச் சென்றபோது. அவர்களிடம் டிராப்ட் வாங்கிய அத்தாட்சி இல்லாத போதிலும், அவர்கள் யாவரும் இந்தியாவில் டிராப்ட் பணத்தை வாங்கிக் கொள்ள உதவி செய்த ஒரே நிறுவனம் குவைத் இந்தியர்கள் குவைத் இந்தியாவின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள். டிராப்ட், டெலக்ஸ் பணமாற்றல் தவிர, டாலர், இந்திய ரூபாய் பயணக் காசோலைகளும் இந்த நிறுவனத்தில் விற்கப்படுகின்றன.     இங்கு பணிபுரியும் யாவரும் இந்தியர்களாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடன் அவர்கள் மொழியிலேயே பேசி அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்ய முடிகிறது. முகமலர்ச்சியுடன், சேவை மனப்பான்மையுடன் சிறந்த முறையில் பணியாற்றும் குவைத் இந்தியாவின் பணியாளர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் போற்றத்தக்க வண்ணம் பாடுபடுகிறார்கள்.    இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் அனைவரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 20 முதல் 30 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குவைத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் அன்னியச் செலாவணியில் மிகப் பெரும் பங்கு குவைத் இந்தியாவின் கிளைகள் மூலமாகத்தான் அனுப்பப்படுகிறது.    இந்தியர்களின் பேராதரவைப் பெற்ற இந்த நிறுவனம் இந்தியக் கலைநிகழ்ச்சிகள், விழாக் கொண்டாட்டங்கள் முதலிவற்றிற்கும் நிதி உதவி செய்து இந்திய ஒற்றுமைக்கும், கலை வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கிறது.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:30        லக்கி சுலைமான்:   இளமையில் கல் என்பது பழமொழி.    படிப்பு, அறிவை வளர்க்கவும் ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கவும் அளவுகோலாக இருப்பது வாஸ்தவம் தான். ஆனால், வெறும் படிப்பும் மட்டும் திறமையையும் வெற்றியையும் தந்துவிடுமா?    அடிப்படை கல்வி ஒவ்வொருவருக்கும் தேவை. பட்டம் பெற்று மேலே படிக்க முடியாதவர்களும், வசதி வாய்ப்பு கிடைக்காதவர்களும் அதற்காக சோர்ந்து போக தேவையில்லை.     படிக்காத மேதைகள் பலரையும் இந்த நாடு பார்த்திருக்கிறது. காந்தி, நேரு, அண்ணா போன்றோர் படித்த மேதைகள் என்றால் கக்கன், காமராஜ் கருணாநிதி முதல் கமல் வரை படிக்காத சாதனையாளர்களையும் உதாரணமாகக் காட்டலாம்.     ஒரு தொழில் தொடங்கவும் அதை நடத்தவும் படிப்பு தேவைதான். அதைவிட அதிகமாய் தேவைப்படுவது அனுபவம்! முயற்சி! கடுமையான உழைப்பு! திறமை தோல்வி கண்டு தளராமை! ஊக்கம்! நேர்மை! நாணயம்! அத்துடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும் கூட.    இவை எல்லாம் இருந்தால் ஒரு நாள் உலகையே ஆளலாம் என்பதிற்கு முன் உதாரணமாய் இருப்பவர்களில் குவைத் லக்கி பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் திரு.ஏ.சுலைமான் பாட்ஷாவும் ஒருவர் என்றால் அது மிகையாகாது.     தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த இவரது மூதாதையர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரு காலகட்டத்தில் விவசாயம் நலிவடையவே இவருடைய தகப்பனார். திரு.ஏ.அப்துல் கபூர் அவர்கள் இலங்கைக்குச் சென்று அங்கு ஒரு ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்தார்.    பிறகு இனப்பிரச்னை வந்த தமிழர்கள் வெளியேற்றப்பட்டபோது திரு.ஏ.அப்துல் கபூர் வெறும் கையுடன் ஊர் திரும்ப வேண்டியதாயிற்று. என்னதான் தஞ்சை –புஞ்சை என நிலங்கள் இருந்தாலும் அவற்றிலிருந்து சரியான வருமானம் இல்லாததால் அவர் சென்னைக்கு வந்து பிரபல லெதர் கம்பெனியில் கொள்முதல் பொறுப்பாளர்  Purchase Incharge  பதவியில் வேலைக்கு சேர்ந்தார்.     மேற்படி கம்பெனியில் வேலையில் இருந்தபோது சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து செய்ய வேண்டும் என்ற மனத்தாக்கத்தால், பகுதிநேரமாய் பார்ட்னர்ஷிப்பில் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அது நன்றாக வளர்ந்த போது பார்ட்னரின் நம்பிக்கை துரோகத்தால் அந்த பார்ட்னர்ஷிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்.        அன்று அவர் பட்ட அனுபவம் –இனி எந்த தொழில் செய்வது என்றாலும்-சிறியதோ அல்லது பெரியதோ- சொந்தமாய் செய்யவேண்டுமே தவிர பார்ட்னர்களுடன் சேர்ந்துள்ள எந்த ஒரு வியாபாரமோ, தொழிலோ வேண்டாம் என்கிற தீர்க்கமான முடிவுக்கு வரவைத்தது. அதையே தாரக மந்திரமாக தன் பிள்ளைகளுக்கும் சொல்லித் தந்திருக்கிறார்.     திரு. ஏ.அப்துல் கபூர் அந்த ஏமாற்றத்தினால் சோர்ந்துவிடவில்லை. தான் நன்கு அறிந்த ஹார்டுவேர் தொழிலையே செய்யலாம் என்று சென்னையிலேயே முயற்சி செய்துபார்த்து-போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் சொந்த ஊர் திரும்பினார்.     பிறகு 1968-ல் சொந்த ஊரிலேயே (அய்யம்பேட்டையில்) அவர் ஆரம்பித்த லக்கி ஹார்டுவேர்ஸ் இன்று அந்த பகுதி முழுவதும் மிகவும் பிரபலமான நிறுவனம். கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் அவர்கள், ஊருக்கும் அந்த பகுதிக்கும் பல வகைகளிலும் உதவி வருகின்றனர்.     அவரின் மூத்த மகன்தான் திரு.ஏ.சுலைமான் பாட்ஷா, அடுத்த இரண்டு மகன்களான திரு.ஷேக் அலாவுதீனும் (சாப்ஜி), திரு.முகமது இலியாஸீம் ஊரில் வியாபாரத்தை கவனிக்க- சுலைமான் பாட்ஷா குவைத்தில் சொந்த தொழில் ஆரம்பித்து நம்மவர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.     பள்ளியில் படிக்கும் போதே சுலைமானின் உள்ளத்தில் வியாபார சிந்தனை ஊறிப் போயிருந்தது.பெரியவர்கள் கஷ்டப்படுகிறார்களே என்று அன்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடையில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால்-மேல் படிப்பில் கவனம் இல்லாமல் போயிற்று.     இடையில் தொழிலில் தொய்வு ஏற்பட அதை சரிகட்ட என்ன செய்யலாம் என்கிற யோசனை எழுந்தது. அந்த காலகட்டத்தில் ஊர் இளைஞர்கள் வெளிநாடு செல்லும் மோகத்தில் அதுவும் குறிப்பாய் குவைத் சென்று வேலை பார்க்க சென்று கொண்டிருந்தனர்.     1976 –ல் சுலைமான் பாட்ஷா தன் மாமா மூலம் விட்டு வேலை விஸாவில், சரக்கு கப்பலில் குவைத் வந்தார். முதலில் ஆபீஸ் பையனாக ஒன்றரை வருடங்கள் ஓரிடத்தில் வேலை பார்த்தார். பிறகு பிரிண்டிங் பிரஸ்ஸில் லேபராக சேர்ந்தார். அங்கு லேபர் என்றாலும்கூட பிரஸின் நுணுக்கங்களை – அதன் பல பிரிவுகளிலும் வேலை பார்த்து-கற்று-படிப்படியாய் வளர்ச்சி பெற்றார். பின்பு குவைத் டைம்ஸ் பத்திரிகை பிரஸ்ஸில் வேலைக்கு சேர்ந்தார்.     அந்த சமயத்தில் அங்கு அதிக அளவில் இருந்த பாகிஸ்தானியர்கள் பொறாமையில் சுலைமான் பாட்ஷா வளர்ந்துவிடக்கூடாது என்று கொடுத்த சிரமங்களும், இடைஞ்சல்களும் அதிகம். அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ``செய்யும் தொழிலே தெய்வம்’’ என்று கடுமையாய் உழைத்ததன் பலனாய் அங்கு  அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. இறுதியில் அவருக்கு இடைஞ்சல் செய்து அவரை அங்கிருந்து விரட்ட முயற்சித்தவர்கள் எல்லோரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.     ``நம்மிடம் உழைப்பும்,நேர்மையும், நாணயமும் தளரா மனமும் இருந்தால் நம் வளர்ச்சியை யாராலும் தடுத்துவிட முடியாது’’என்கிறார் சுலைமான்.     குவைத் டைம்ஸ் பத்திரிகையில் பணிபுரியும் போதே அல்ராய் அல் ஆம் அரபி பத்திரிகையிலும் வாய்ப்பு வர- அனுமதி பெற்று –காலையில் குவைத் டைம்ஸ், மாலையில் அரபி பத்திரிகை என சளைக்காமல் 1979 முதல் 1998 வரை சுமார் இருபது வருட காலங்கள் சுலைமான் உழைத்து சம்பாதித்தது. இன்று சொந்த பிரஸிற்கு மூலதனமாகியிருக்கிறது.     இரண்டு கம்பெனியின் மட்டுமின்றி சுலைமான் தனியாகவும் சில சிறிய தொழில்களில் கவனம் செலுத்தினார். பெரிதாக படிக்காமல் வந்தாயிற்று. முன்னேற்றத்திற்கு அது தடையாக இருந்துவிடக் கூடாது. ஜெயித்துக் காட்டவேண்டும் என்கிற உத்வேகம், லட்சியமாயிற்று. மனதை ஒருநிலைப்படுத்தி –வேறு எந்த கேளிக்கை பொழுதுபோக்கிலும் திசை திருப்பாமல்- எப்போதும் உழைப்பும், உழைப்பு, என உழைப்பு ஒன்றே தாரகமந்திரமாய் உழைத்தார். அதன் மூலம் கிடைத்த சம்பாத்யம் சொந்த ஊரில் பொருளாதார பற்றாக்குறையால் தொய்வடைந்திருந்த ஹார்டுவேர் தொழிலை வளர்க்கவும் உதவிற்று. அந்த உதவியினால் லக்கி ஹார்ட்வேர்ஸீம் வேகமாய் வளர ஆரம்பித்தது.     ஊரில் ஹார்டுவேர் தொழில் நல்லமுறையில் வளர்ச்சியடைந்து நடந்துவர ``நீ தனியாய் குவைத்தில் கஷ்டப்பட்டது போதும், இங்கு வந்து இந்த தொழிலை ஏற்று நடத்து’’ என்று வீட்டினர் அழைத்தனர். ஆனால் சுலைமானின் சிந்தனை, செயல் எல்லாம் தான் வளர்ந்து, கற்று, அனுபவப்பட்ட பிரிண்டிங் துறையிலேயே இருந்தது. வேலை பார்த்த இடத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் மற்றும் தொடர்புகளை வைத்துக்கொண்டு  நாமே சொந்தமாய் ஏன் பிரஸ் ஆரம்பித்து நடத்தக்கூடாது என்ற தாக்கத்தை மனதில் ஏற்படுத்தியது.     சுலைமான் யதார்த்தவாதி, பேராசைப்படுவதில்லை, பணத்தை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. லாபம் வந்த போதும் சரி, நஷ்டம் கண்ட போதும் சரி ஒரே மாதிரி அணுகுமுறை, எளிமை, பேச்சைவிட செயலில் அதிக தீவிரம் , வீம்பு பொய பித்தலாட்டத்தை அருகில் அணுகவிட்டதில்லை. ஒருவரை பார்த்தவுடனே இவர் நல்லவர், கெட்டவர், வெத்துவேட்டு-பொய் பேர்வழி, கதை அளப்பார் என்று கணித்துவிடும் சாதுர்யம் இவரிடம் இயற்கையிலேயே கடவுள் தந்த வரமாய் அமைந்திருப்பது ஆச்சர்யமான உண்மை.     பிரிண்டிங்தான் தன் துறை என முடிவெடுத்த பின்பு சொந்த தொழிலுக்காக அவர் அவசரப்படவில்லை. அகலக் கால் வைக்கவில்லை. ஆற அமர சிந்தித்து-அந்த தொழில் பற்றி பல வெளிநாடுகளுக்கு சென்று கற்று-பல கண்காட்சிகளில் பார்வையிட்டு-பல நவீன இயந்திரங்களை வரவழைத்து-சொந்தமாய் முதலீடு செய்து -2004 –ல் ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே இன்று 100 க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு –குறிப்பாய் தமிழர்களுக்கு வேலை தந்துகொண்டிருக்கிறார்.    பல கோடி ரூபாய்கள் Turn Over செய்து –குவைத்தில் பத்திரிகை அல்லாமல் தனியார் இயக்கும்  பிரஸ்களில் இரணடாம் இடத்தை லக்கி பிரிண்டிங் பிரஸ் பிடித்திருப்பது இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் பெருமை தேடித்தந்திருக்கும் விஷயமாகும்.    மேலும்,மேலும் விரிவாக்கப்பட்டு வரும் இந்த பிரஸ்ஸை அரட்டை அரங்க விசு நடிகர் விக்ரம்,எம்.எஸ்.விசுவநாதன் போன்ற நம் ஊர் பிரபலங்களும் விஜயம் செய்து பாராட்டியிருக்கின்றனர். சிறந்த தரம், நியாயமான கட்டணம், தாமதமில்லா விநியோகம்-இதுவே இவரது கொள்கை.    எத்தனை வளர்ந்தாலும் கூட சுலைமான் கடந்துவந்த பாதையை மறப்பதில்லை. இந்த வசதி வாய்ப்புகள் திடீரென வந்துவிடவில்லை எத்தனை எத்தனை கஷ்டங்கள் தோல்விகளில் துவண்டுவிடாமல், தடை கற்களை படிகற்களாக்கி கடந்த வந்த சுவடுகளை எப்போதும் மனதில் பதித்து வைத்துள்ளார்.     தான் அடிமட்டத்திலிருந்து பட்ட கஷ்டங்களை உணர்ந்திருப்பதால் தன்னிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் கஷ்டங்களையும் உணர்ந்து அதற்கேற்றபடி சம்பளமும் சலுகையும் அளித்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இவரிடம் முதலாளி தொழிலாளி என்ற பேதமில்லை. எல்லோரையும் வித்தியாசமில்லாமல் அரவணைத்து, நிறைவான தடையில்லா சம்பளம் வழங்குவதால் அவர்களும் ஆத்மார்த்தமாய் பங்களிப்பை செய்துவருகிறார்கள்.      ``இந்த வெற்றி அலுவலர்களின் ஆத்மார்த்தத்தாலும், கடின உழைப்பினாலும் கிடைத்திருக்கிற கூட்டு முயற்சி” என்று பெருமைப்படும் சுலைமான் –அத்துடன் ``வீட்டையே கவனிக்காமல் சதா உழைப்பு உழைப்பு என்றிருந்தாலும் கூட முகம் கோணாமல் ஊக்கமும், உற்சாகமும் தந்துவருகிற மனைவி திருமதி ரஜியாவுக்கும் இந்த வளர்ச்சியில் பெரும் பங்குண்டு’’ என்று பூரிக்கின்றார். இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு என்று அளவான குடும்பம்.     பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள்! எவ்வளவோ சம்பாதிக்கிறார்கள். சம்பாதித்ததை தனக்கு, தன் குடும்பத்தார்க்கு மட்டுமே என்று சுயநல வட்டத்திற்குள் இருப்பவர்களே அதிகம்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:31         தனது சம்பாத்தியம் சமூகத்திற்கும், நலிந்தோருக்கும் பயன்பட வேண்டும் என்று செயல்படுகின்ற வெகு சிலரில் நம் லக்கி சுலைமானும் ஒருவர். குவைத்தில் நடக்கிற இந்திய, குறிப்பாக தமிழக கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் லக்கி பிரிண்டிங் பிரஸ்ஸின் ஆதரவு பெருமளவில் உள்ளது நிஜம்.     சாதி, மத மொழி,இன வேறுபாடின்றி எல்லோருக்கும் உதவிக்கரம் நீட்டிவரும் சுலைமானின் பங்கு ஃப்ரண்ட்லைனர்ஸ் சேவை அமைப்பின் செயல்பாடுகளிலும் பெருமளவில் உள்ளது என்பது இவரது தொண்டுள்ளத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.   கே.சோமசுந்தரம்    ``என்ஜினியரிங் படிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பும், அதன் மூலம் கற்றறிந்த தொழில் அறிவும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற உத்வேகமும் அதற்கான கடுமையான முயற்சியுமே என்னுடைய இந்த உயர்வுக்கு காரணம்!”     குவைத்தின் பிரபல அல்குனைமான் ஜெனரல் டிரேடிங்&காடிராக்டிங் கம்பெனியின் நிறுவனங்களில் ஒருவரும் சீனியர் மேனேஜரும்- சீனியர் எலக்ட்ரிகல் என்ஜினியருமான திரு.கே.சோமசுந்தரம் தன் அனுபவங்களை அசைபோடுகிறார்.   குவைத்தில் 36 வருடங்கள் அனுபவமுள்ள சீனியர்.     மயிலாடுதுறையை சேர்ந்த இவர் அங்கே பள்ளி படிப்பு முடித்து, லயோலாவில் இடைநிலையும்-பிறகு கோவை பிஎஸ்பியில்  1958-ல் எலக்ட்ரிகல் என்ஜினியரிங்கும் முடித்து அங்கேயே லெக்சரராக சில மாதங்கள் வேலையும் பார்த்தவர்.     அந்த நாட்களில் தமிழகத்தில் ஐந்து பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. அவற்றில் இடம் கிடைப்பது என்பது அத்தனை சாதாரண விஷயமல்ல.     ``எனது தந்தை அட்வகேட் திரு.குஞ்சிதபாதம்பிள்ளை மற்றும் தாயார் செளந்திரம் அம்மாள் இருவரும் கொடுத்த ஊக்கம்-உற்சாகத்தினாலேயே – நன்றாக படித்து அங்கு இடம் பெற முடிந்தது’’ என்று சோமு தன் பெற்றோரை நினைவு கூர்கிறார்.     1959-ல் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பயிற்சியில் சேர்ந்தவர் இரண்டே வருடத்தில் அசிஸ்டெண்ட் எக்ஸிகியூவ் என்ஜினியராக பதவி உயர்வு பெற்றார்.     நெய்வேலியில் இவருக்கு கிடைத்த அனுபவம் நல்ல அடித்தளமாக அமைந்தது. அங்கு UNESCO Fellowship  க்குகாக இவர் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் –டர்போ ஜெனரேட்டர்கள் பற்றிய பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்.      நெய்வேலியிலிருந்து வட இந்தியா-குறிப்பாக உத்திரபிரதேச பவர் ஸ்டேஷன் ப்ராஜக்ட்டுகளுக்கு சோமு அனுப்பப்படிருக்கிறார்.      நெய்வேலியில் மேற்கொண்டு வளர வாய்ப்பில்லை என்கிற நிலைமையில் அந்த வேலையை விட்டுவிட்டு 1970 –ல் குவைத் –மினிஸ்ட்ரி ஆஃப் எலக்ட்ரிசிட்டி & வாட்டர் புராஜக்ட்டுக்கு புராஜக்ட் என்ஜினியராக சோமு தேர்வு செய்யப்பட்டர்.    இவருடன் இன்னும் மூன்று தமிழ்நாட்டு என்ஜினியர்களும் சேர்ந்து SHUAIBA    புராஜக்டை வெற்றிகரமாய் முடித்து பாராட்டு பெற்றனர். அதன் காரணமாய் அந்த எலக்ட்ரிகல் ஸ்டேஷனுக்கு செக்‌ஷன் ஹெட் ஆக பொறுப்பேற்று 18 வருடங்கள் பணியாற்றினார்.    பிறகு AL.ZOUR South  பவர் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு அங்கு தன் திறமையை நிரூபித்தார்.    1990 –ல் ஈராக் ஆக்ரமிப்புக்கு பின், திரும்பி வந்தபோது அதே மாதிரி வேலையில் தொடர்வதில் சலிப்பு ஏற்பட்டது. ஏதாவது புதிதாய் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எழ தனது குவைத் பார்ட்னர் திரு Khalid Al ghunaiman  மற்றும் ஜப்பான் என்ஜினியர் திரு Hideaki Wajanabe - இருவருடனும் சேர்ந்து இக்கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு 70 பேர்களின் உழைப்பில் இது வெற்றிகரமாய் செயல்பட்டு வருகிறது.    மின்சாரம் சம்மந்தமான கட்டுமானம் பழுதுபார்த்தல், விரிவாக்கம், இயந்திரம் நிறுவுதல் இவற்றுடன் ஜப்பான் JOSHIBA கார்ப்பரேஷனில் ஏஜண்ட்டாகவும் இக்கம்பெனி  செயல்பட்டு வருகிறது.    கம்பெனியில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வெற்றி காண்பதில் மனைவி திருமதி நீலாவின் பங்கு அதிகம் என்றும், வீட்டுகாரியங்களை திறம்பட அவர் நிர்வகித்து அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தியிருந்ததாலேயே தன்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது என்று சோமு பெருமைப்படுகிறார்.    இவரது மகன் திரு. சிவக்குமார் கம்பெனியின் நிர்வாகத்தை கவனிப்பதுடன் திருச்சியில் பிரபலமான `பணாணா லீவ்ஸ் ரெஸ்டாரென்ட்’ குவைத் கிளையையும் நடத்தி வருகிறார். திருமதி கார்கி சிவக்குமார் இந்திய பள்ளியில் ஆசிரியை !     இவரது மூத்த மகள் திருமதி ராதிகா சுவாமிநாதன் இந்தியன் கம்யுனிடி ஸ்கூலில் வைஸ் பிரின்சிபாலாக இருப்பதுடன் கலை மற்றும் தொண்டு காரியங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகிறார். இவரது கணவர் திரு. சுவாமிநாதன் SHUAIBA  South பவர் ஸ்டேஷனில் சீனியர் மெக்கானிகல் என்ஜினியராயிருக்கிறார்.     சோமுவின் இளை மகன் செளந்தர்யாவும், அவரது கணவர் கிருஷ்ணராய காமத்தும் டாக்டர்கள், எடின்பர்கில் இருவரும் பணிபுரிகின்றனர்.    குவைத்தில் முதன் முதல் தமிழ் அமைப்பு ஆரம்பித்து நடத்தியதில் சோமுவுக்கு முக்கிய பங்கு உண்டு.    மகன் மற்றும் மகளுக்கு,சாதி-மதம்-மொழி பாகுபாடில்லாமல் அவர் விரும்பியபடி வாழ்க்கை அமைத்து கொடுத்தது. இவரது விசால மனதிற்கு ஒரு எடுத்துக்காட்டு.    சட் சட்டென வரும் கோபம் இவருக்கு ஒரு பலவீனம் என்றாலும்கூட வந்த சுவடிலேயே அது காணாமல் போய் இயல்பாகி விடுவார்.    மனிதாபிமானம், உதவும் குணம் தேசப்பற்று, தாய்மொழிப்பற்றும் கொண்டு –அலட்டலில்லா – ஆர்பாட்டமில்லா அறிவு களஞ்சியமான திரு.சோமசுந்தரம் ஒரு நிறைகுடம்.   இராமசாமி ரெட்டியார்;    படிக்காத மேதை என பாராட்டப்படுபவர் ராமசாமி ரெட்டியார். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லை, குவைத் நாட்டிலும் செல்வாக்கு.    குவைத்தில் பல கோடி ரூபாய்கள் Turn over  ல் கான்ட்ராக்ட் எடுத்து, 50க்கும் அதிகமான தமிழர்களுக்கு வேலை கொடுத்து வருகிறார்.    ராமசாமியின் சொந்த ஊர் கோவில்பட்டி அருகே எம்.துரைசாமிபுரம் கிராமம்! இரண்டு சகோதரர்கள். இரண்டு சகோதரிகளுடன் இவர் கடைக்குட்டி, சிரமமான குடும்பச்சூழல்,    1952 –ல் பிழைப்புக்காக தன் 17 வயதில் பர்மாவுக்கு பயணமானார். அங்கு, கிராம்ப்டன் கம்பெனியில் தன் சகோதரருடன் சேர்ந்து டவர்லைனில் வேலை! ஆரம்பத்தில் லேபர்! பிறகு படிப்படியாய் ஃபோர்மேனாக முன்னேற்றம்!    1950 –ல் குவைத் நாட்டில் –ஓவர்  ஹெட் டிரான்ஸ்மிஷன் வேலையை மேற்கொண்டிருந்த ஏதோ ஒரு வெளிநாட்டு கம்பெனி, அதை பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட, இவர் அதை எடுத்து வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கவே , அரசாங்கத்திற்கு சந்தோஷம்!   புதுப்புது கான்ட்ராக்ட்கள் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன.     `ALKULAB & ramasamy’  என்கிற கம்பெனி ஆரம்பித்து இன்று குவைத்தில் எலக்ட்ரிக் மற்றும் டெலிபோன் வேலைகளுக்கு இவர்கள் தான் கான்ட்ராக்ட்.      TCIL எனப்படும் டெலிகம்யூனிகேஷன் இந்தியா லிமிடெட்டுடன் சேர்ந்து ஆசியாவிலேயே மிகப்பெரிய டவர் ஒன்றை இவர்கள் குவைத்தில் நிறுவியிருக்கிறார்கள்.     சதாம் சண்டைக்கு பிறகு குவைத்தில் மின்சாரம் மற்றும் தொலைபேசி மங்கிப் போயிருக்க, மிக விரைவாய் சரிபண்ணி பெயர் எடுத்து இந்தியாவிற்கு மட்டுமில்லை தமிழகத்திற்கும் பெயர் வாங்கி தந்திருக்கிறார் இந்த ராமசாமி.     குவைத் மட்டுமின்றி செளதி, ஈராக்கிலும் நிறைய ப்ராஜக்ட்டுகளை செய்து முடித்திருக்கிறார். மின்சார வேலை மட்டுமின்றி பல அணைக்கட்டுகள், எட்டயபுரம் அருகிலுள்ள பிரபலமான ``எப்போதும் வென்றான்’’ டேம் இவரது கைவண்ணம் தான்.    நாகலாந்து, மேற்கு வங்காளத்திலும் இவரது பணி தொடர்கிறது. உலகம் முழுவதும் போய் கால்பதித்தாலும் கூட இவர் தான் பிறந்த ஊரையும், மாவட்டத்தையும் மறப்பதில்லை.    இந்தியாவில் கோவில்பட்டியில் விஸ்வநாத ஜின்னர்ஸ் காட்டன் மில்ஸ், லக்ஷ்மி அம்மாள் பாலிடெக்னிக் நேஷனல் என்ஜினியரிங் காலேஜ். சாரதா ஹையர் செகன்டரி, இலவச மருத்துவமனை, ஜின்னிங் பேக்டரி, கொடைக்கானலில் ஹோட்டல்கள், ரகு இண்டர்நேஷனல் டெல்லியில் ரியல் எஸ்டேட் பிசினஸ்.    ராமசாமி ரெட்டியாருக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் கிருஷ்ணமூர்த்தி அமெரிக்காவில் BBA படித்துவிட்டு Indo Kuwait General Trading and Contracting’     கம்பெனியை நிர்வகித்து வருகிறார்.    இளையவரான அருணாச்சலம், கோவில் பட்டியிலுள்ள நிறுவனங்களை பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.    இத்தனை வளர்ந்தாலும், ராமசாமி அவர்கள் ரொம்பவும் எளிமை! பகட்டு கிடையாது. அதிர்ந்து பேசுவதில்லை. இனிமையான சுபாவம். பிறருக்கு உதவும் தயாள குணம்!    வாழ்க்கையில் பணம் பிரதானமாக இருந்தாலும் அது மட்டும் போதாதே ! காலாகாலத்திற்கும் பெயர் சொல்லும்படி ஏதாவது செய்தாக வேண்டுமே!   ராமசாமி ரெட்டியார் நிறைவே செய்திருக்கிறார்.    கோவில்பட்டிக்கருகே இலவச மருத்துவமனை, இந்துக் கோவில்களுக்கு மட்டுமின்றி கிறிஸ்தவ மாதா கோயில், மசூதி என்று ஏழைகளுக்கு உதவல் என்று அரசியல் சார்பில்லாமல் சமூக சேவையும் செய்து வருகிறார். ஆன்மீக ரத்னா- திருப்பணிச் செல்வர் என்கிற பட்டங்கள் இவருக்குண்டு.   டிசம்பர் 97, தொழில் முதலீடு இதழிலிருந்து.  தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:32        ஆர்.சி.சுரேஷ்    1990 வரை இந்தியாவிலிருந்து கோழி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகாமல் தானிருந்தன. அதை முதலில் ஆரம்பித்து வைத்தது. ஆ.சி.சுரேஷ் எனும் கன்னியாகுமரிகாரர்.    குவைத்தில் சப்ளையாகும் உணவு பொருட்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கோடி கணக்கில் பிசினஸ் பண்ணி முன்னணியில் இருப்பவர் இவர்.    பொதுவாய் நமது வீடுகளில்,  சின்ன வயதிலேயிருந்து பசங்களை, ``ஒழுங்காய் படி அப்போதான் வேலைக்கு போக முடியும் –வேலை கிடைக்கும்’’ என்று அடித்து வேலை தான் பிரதானம் என்பதை மனதில் பதிய வைத்து விடுகின்றனர்.    இதனால் நமது நோக்கமும் வேலைதான் என்ற அளவில் அழுக்கப்பட்டு விடுகிறது. அதற்கப்பால்  எந்த முயற்சியும் இளைஞர்களுக்கு எடுக்க முடியாமல் போய்விடுகிறது.    வேலை என்பது சராசரியாயும் பாதுகாப்பாயும் ஒரு சம்பளத்தை தரக்கூடியது என்கிற அளவில்லை.   ஆனால் மாதசம்பளம் இன்றைய தினம் எந்த அளவிற்கு போதுமானதாக இருக்கிறது?    ``வேலை என்பதையே குறிக்கோளாகக் கொள்ளாமல் சொந்தமாய் பிசினஸ் ஆரம்பித்தால் நிறைய சம்பாதிக்கலாம். நம்மூரில் அதற்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம்’’ என்கிறார்.    பட்டதாரியான இவர் இதுவரை தன் பயோடேட்டாவே தயாரித்ததில்லை. வேலைக்காக எங்கும் போய் நின்றதில்லை என்கிறார்.    இவரது தந்தை ஆர்.சி.தம்பி அம்புலிமாமாவின் மலையாள பதிப்பான `சந்தமாமா’’ மற்றும் அதன் ஆங்கில பதிப்பிற்கும் ஆசிரியராயிருந்தவர்.   அவர் சற்று வித்தியாசமானவர்.    சின்ன வயதிலிருந்தே மகனிடம் அவர் ``நீ முடிகின்றவரை படி. ஆனால் யாருக்கு கீழேயும் வேலை செய்யாமல் சொந்த காலில் நிற்கணும். சொந்தமாய் தொழில் செய்யணும்’’ என்று போதித்து அது சுரேஷின் அடி மனதில் ஆழமாய் பதித்து விட்டதாம்.    படிப்பு முடிந்ததும் தொழில் கற்றுக் கொள்ள வேண்டி ஊட்டியில் ``டிம்பர்’’ பிசினஸ் ஆரம்பித்திருக்கிறார். இளமையிலிருந்தே சுரேஷிற்கு இசை என்றால் உயிர். இவரது தாய், தங்கை அம்புலி எல்லோருமே இசைஞானம் உள்ளவர்கள். சுரேஷ் ஊட்டியில் ஓய்வு கிடைக்கும்போது அங்கே மியூசிக் ட்ரூப்பில் பாடுவதுண்டாம்.    1977 –ல் குவைத்திற்கு 14 பேர் அடங்கிய இசைக்குழு ஒன்று நிகழ்ச்சி நடத்த கிளம்பிற்று. அதில் ஒருவர் எதிர்பாராத விதமாய் பயணிக்க முடியாமல் போக, கடைசி நேரத்தில் அந்த சான்ஸ் இவருக்கு அடித்தது.    குவைத்தில் நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது ஏர்இந்தியா விமானம் கோளாறு காரணமாய் 24 மணி நேரம் தாமதம்.    அந்த இடைவேளையில் –நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த திரு.கேடிபி மேனன் இவரது மனதை கலைந்து, நீ ஏன் ஊருக்கு திரும்பிப் போகணும், இங்கேயே ஏதாவது வேலை பாரேன்!” என்றிருக்கிறார்.     ``இல்லை. இங்கு வேலை பார்க்கும் எண்ணத்தில் நான் வரவில்லை!”     ``பரவாயில்லை. அந்த எண்ணத்தை இனி வளர்த்துக்கொள். உனக்கு நான் வேலை வாங்கித் தரேன்!” என்று மேனன் தங்க வைத்துவிட்டாராம்.     குவைத் இந்தியர்களுக்கு இந்த மேனன்தான் முன்னோடி அவர் பல்லாயிரக் கணக்கில் இந்தியர்களை குவைத்திற்கு வரவழைத்து வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.    சுரேஷிற்கு வேலை பார்க்க வேண்டும் என்கிற அபிப்ராயம் இல்லாவிட்டால் கூட ``வேலை பார்ப்பதென்றால் எனக்கு பாங்கில்தான் வேண்டும்’’ என்றிருக்கிறார்.    மூன்று மாதங்களில் அவருக்கு குவைத் நேஷனல் பேங்கில் வேலை ஏற்பாடாயிற்று. அதுவும் லெட்டர் ஆஃப் கிரடிட் எனப்படும் எல்.சி.செக்‌ஷனில்.    அரபு நாடுகளில் எண்ணெய் மட்டும்தான் ஏற்றுமதி. மற்றபடி ஜனங்கள் உபயோகிக்கும் அத்தனை பொருட்களும் இறக்குமதிதான். இந்த இறக்குமதி சமாசாரங்களை கவனிக்கும் செக்‌ஷனில் சுரேஷ் வேலை பார்த்ததால் அதன் நுணுக்கங்களும் கஷ்டங்களும் அவருக்கு அத்துபடியாயிற்று.   1980 சமயத்தில் இவருக்கு பயங்கர பண நெருக்கடி    அதை எப்படி சமாளிப்பது என்று யோசித்த தருணத்தில் ஏதாவது பிஸினஸை செய்தால் என்ன என்று தோன்றிற்று.    எதேச்சையாக ரெஸ்டாரெண்ட் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது சிக்கனுக்கு அப்போது பயங்கர டிமாண்ட் என்பதும், அது கிடைப்பதேயில்லை என்பதும் சுரேஷிற்கு தெரியவந்தது. அதை அவரது மனது ஆராய ஆரம்பித்தது.    ஹோட்டல்காரர் விளையாட்டாய் ``எனக்கு ஆயிரம் கிலோ சிக்கன் வேணும் . உன்னால் சப்ளை பண்ண முடியுமா?’’ என்று கேட்க, சுரேஷ் சற்றும் யோசிக்கவில்லை ``யெஸ்’’ என்று கிளம்பினார்.    அது அவரது அப்பாவின் பாலிஸி. வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்கும் நோ சொல்லக்கூடாது. லாபமோ-நஷ்டமோ ஒரு மோது மோதி பார்த்துவிட வேண்டும்-முயற்சிக்கு தடைகூடாது, தயக்கம் கூடாது.    ஏதோ ஒரு வேகத்தில் ஒப்புக் கொண்டுவிட்டு சுரேஷ் சிக்கனுக்காக குவைத் முழுக்க அலைய ஆரம்பித்தார். ஓரிடத்தில் ஆயிரம் என்ன, ஐயாயிரம் கிலோ தருகிறேன் என்றதும், உடனே, வண்டி ஏற்பாடு செய்து ராத்திரியோடு ராத்திரியாக கிலோவுக்கு பத்து ரூபாய் லாபம் வைத்து அந்த ஹோட்டலில் கொண்டுபோய் இறக்கினார்.   ஒரே நாளில் பத்தாயிரம் லாபம்!    இது அவரது முயற்சியின் வெற்றி, சமயோசிதம், சுறுசுறுப்பு, புத்திசாலித்தனம் இதெல்லாம் அவரை அன்று வேகமாய் செயல்பட வைத்தன.    அன்று இரவு அவருக்கு தூக்கமில்லை. ஞானோதயம் தோன்றிற்று. ஏன் குவைத் முழுக்க நான் ஆர்டர் பிடிக்கக் கூடாது?     எல்லா ஹோட்டல்களிலும் அவருக்கு ஏக வரவேற்பு. ``விலை குறைவாயும் தரமாயும் சப்ளை பண்ணுவதானால் உங்களுக்கு ஆர்டர் தருகிறோம்’’.   அதை அவர் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டார்.    அதன்பிறகு பார்டனருடன் கம்பெனி ஆரம்பித்து இருநூறுக்கும் அதிகமான உணவு பொருட்களை குவைத்தில் சப்ளை செய்து வருகிறார்.    1982 –ல் இவருக்கு திருமணம், மனைவி நளினி இவருக்கு பக்கபலம், சோர்வடையும் போதெல்லாம் மனைவி உற்சாகம் தந்து தூக்கிவிட்டிருக்கிறார்.   இவரது வேகமான வளர்ச்சிக்கு என்ன காரணம்?      ``ஒரு பொருளை ஒரு ஹோட்டலுக்கு சப்ளை பண்ணும்போது அதனுடன் சம்பந்தப்பட்ட ஸ்பூன், டிஷ்யூ பல்குத்தும் குச்சி, ஷாஷே, மில்க் பவுடர் இப்படி எல்லாவற்றையும் தேவை அறிந்து சப்ளை பண்ணினேன் இதனால் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு இடத்தில் ஹோட்டல்காரர்கள் அலைவது மிச்சப்பட்டது. என்னிடம் வந்தனர். அப்புறம் தரம்! சப்ளை!   அடுத்த காரணம் – எனது வேகம்     பிறரிடம் ஆர்டர் பண்ணினால் பத்துமணி நேரத்தில் கிடைக்கும் என்றால் நான் அதே பொருளை இரண்டு மணி நேரத்தில் சப்ளை செய்வேன்!” ஆரம்பத்தில் சிங்கப்பூர் ஹாங்காங், நியூசிலாந்து, அமெரிக்கா என்று பொருட்களை இறக்குமதி செய்தவருக்கு `ஏன் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யக்கூடாது?’ என்று தோன்றிற்று.    வெளிநாட்டினருக்கு கிடைக்கும் பலன் நம் நாட்டிற்கும் கிடைக்கட்டுமே என்கிற நாட்டுப்பற்று!.    அப்படித்தான் முட்டையை இந்தியாவிலிருந்து முதன் முதலில் ஏற்றுமதி செய்ய வைத்தார். 1990 ஆரம்பித்த முட்டை ஏற்றுமதி-இன்று உலகத்திலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.   குவைத்தில் இவரது கம்பெனியில் 300 பேர்களுக்கு மேல் வேலை செய்கின்றனர்.    சுரேஷ் தன் லாபத்தில் ஐம்பது சதவிகிதத்தை நம்மூரில் கஷ்டப் படுபவர்களுக்கு உதவுவதற்கும், படிப்பு வசதி, கோயில், திருமண உதவிக்கும் செலவிட்டு வருகிறார்.     இந்த உலகத்திலேயே பெரிய சந்தோஷம், பிறகுக்கு உதவி செய்து அவர்களின் குறை போக்கி பார்ப்பதுதான்.   சுரேஷின் ஹாபி-போட்டோ எடுப்பது. மியூசிக் இவரது வீக்னஸ் என்கிறார்.     சுரேஷ் கோயமுத்தூர் காரமடையில் Golden Frice எனும் உருளைக்கிழங்கு சிப்ஸ் கம்பெனி பெரும் முயற்சியில் ஆரம்பித்து இன்று அது வெற்றிகரமாய் இயங்கி வருகிறது. இதன் காரணமாய் உருளைகிழங்கு சாகுபாடியாளர்களுக்கு நல்ல லாபம்.    நாட்டுப்பற்று, முயற்சி, செயல்திறம், உழைப்பு, பிறருக்கு உதவுதல், துணிச்சலான அணுகுமுறை, எளிமை எல்லாமே சுரேஷ் அவர்களின் வெற்றி ரகசியமாய் பளிச்சிடுகின்றன.   தொழில் வணிக முதலீடு, 1998 ஜனவரி.     சிரிஸ்:    `ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னும் ஒரி பெண் இருக்கிறாள்' என்கிற மொழி என் அளவிலும் உண்மை என்பேன். அதுவும் ஒரு பெண் மட்டுமல்ல அம்மா, மாமியார், மனைவி என்று மூவர். கஷ்டமான நிலைமையில் இருந்தபோது உறவுகளும், நட்புகளும் கைகொடுத்தது எனது வெற்றிக்கு படிகளாக அமைந்தது.        தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:33        `குவைத்தில் அல் கபாண்டி இண்டர்நேஷனல் குரூப்பின் பார்ட்னரும் நிர்வாக இயக்குனருமான திரு.சிரிஸ் தன் அனுபவங்களை அசைபோடுகிறார்.    `மர்ச்சேன்ட் நேவி ஷிப்பில்’ பணிபுரிந்த அப்பா சிரிஸின் இரண்டாம் வயதிலேயே இறந்துவிட, அதன்பின் இவரை படிக்க வைத்து ஆளாக்கினது. தபால் தந்தி துறையில் பணியாற்றிய அம்மாவும் தாத்தா பாட்டியும்.    வியாபார சிந்தனை பள்ளி பருவத்திலேயே சிரிஸின் உள்ளத்தில் ஊறியிருந்தது. தன் செலவுக்காக தாயை அதிகம் தொந்தரவு செய்யக் கூடாது என்று ஆறாம் வகுப்பு முதலே தீபாவளி சமயத்தில் பட்டாசுகள் விற்பனை செய்து பணம் சம்பாதித்திருக்கிறார்.    சென்னை செயின் பாட்ரிக்ஸ்ஸில் ஸ்கூல் முடித்தவருக்கு மேலே படிக்க விருப்பமில்லை. எண்ணமெல்லாம் வியாபாரத்திலேயே இருந்தது. வீட்டினரின் நிர்ப்பந்தத்தால் டி.பி.ஜெயின் கல்லூரியில் பி.எஸ்ஸி.(கணிதம்) சேர்ந்தவர், முதல் வருடத்தோடு வெளியே வந்து விளம்பர கம்பெனி ஒன்றில் சேர்ந்து பனியாற்ற ஆரம்பித்தார்.    சின்ன வயது முதலே நட்பாக இருந்த இவரது மனைவி ஷாலினியை திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது-    ``குறைந்தபட்சம் பட்டபடிப்பு முடித்தால்தான் எங்கள் பெண்ணை தருவோம்’’ என்று அவர்கள் தரப்பில் கறாராய்  தெரிவிக்க-     சிரிஸீக்கு அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்து அதன் மூலம் கிடைத்த தொடர்புகளை வைத்து நண்பர்களுடன் சேர்ந்து 1994 –ல் TAURUS கம்யூனிகேஷன்ஸ் எனும் விளம்பர கம்பெனியை ஆரம்பித்தார். விளம்பரப் படங்கள், விளையாட்டு மற்றும் சில நட்சத்திர நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனிலும், சன் டி.வி.யிலும் கொடுத்ததில் இவருக்கு நல்ல பெயர் . சம்பாத்யமும், சிறந்த தயாரிப்பாளர் என்கிற விருது பிரசிடென்ஸி கல்லூரி மூலமும் கிடைத்தது.    சிரிஸின் பிசினஸ் வாழ்வில் ஒரு சீரான நிலைமை என்றுமே இருந்ததில்லை. முன்னேற்றம், பின்னடைவு, லாபம் –நஷ்டம் என்று மாற்றி மாற்றி தாக்கும் போதெல்லாம் சிரிஸ் தன்னம்பிக்கையை மட்டும் இழப்பதில்லை. தொடர்ந்து போராடிக் கொண்டேயிருப்பார்.    எல்லாம் சுமூகமாய் போய்க் கொண்டிருக்கும்போது சில பைனான்ஸ் கம்பெனிகளின் வீழ்ச்சியால் இவரது தொழிலுக்கு பெரிய அடி! முதலீடு, வரவேண்டிய பணமெல்லாம் முடங்கிவிட, 20 ஊழியர்களைக் கொண்ட இவரது கம்பெனியை மூடவேண்டி வந்தது.    என்ன செய்வது என்று புரியாமல் தவிப்பிலிருந்த போது, இவரது மாமியார், ``எக்காரணம் கொண்டும் தளர்ந்து விடாதீர்கள். உங்களுக்கென்று நிச்சயம் ஒரு உன்னத இடம் இருக்கிறது’’ என்று ஆறுதல் படுத்தினார். ``சென்னையிலேயே இருந்தால் உங்கள் மனது தளர்ந்து போகும். பேசாமல் எங்களுடன் குவைத்திற்கு வந்துவிடுங்கள். இங்கு ஏதாவது வேலை தேடிக் கொள்ளலாம்’’ என்று அழைப்பு விடுத்தார்.    இப்ராஹிம், எஸ்.அகமதி எனும் நல்ல உள்ளம் கொண்டவர் தனக்கு விசா கொடுத்ததோடு இல்லாமல்- தனது டிரேடிங் கம்பெனியில் குறைந்த சம்பளம் என்றாலும்கூட வேலையும் தந்ததை சிரிஸ் நன்றியோடு நினைவு கூர்கிறார்.    சிரிஸ் தனக்கு அனுபமுள்ள விளம்பரத் துறையில் குவைத்தில் வேலை தேட –இவர்   Over qualified என ஒதுக்கப்பட்டார். இருந்தாலும் நல்ல வேலைக்காக அலைந்து வெறுத்துப்போய் ஊர் திரும்பிவிடலாம் என்று முடிவு எடுக்கும்படி ஆயிற்று.    அந்தச் சமயம் இவருக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கவே (குவைத்தில் லைசென்ஸ் கிடைப்பது அத்தனை எளிதல்ல) கார் எடுத்துக்கொண்டு பொருட்களை வாங்கி கம்பெனி கம்பெனியாக ஏறி விற்கலாம் என்கிற தெம்பு வந்தது.    ``நடப்பதெல்லாம் நன்மைக்கே’’ என்று மனைவி கொடுத்த நம்பிக்கையும் அவருக்கு பலமாக இருந்தது.    ஏறக்குறைய இவரைப் போலவே மனமுடைந்து தன் நாட்டுக்குத் திரும்பிப்போகும் எண்ணத்திலிருந்த  FADI  னும் ஜோர்டானியரின் சந்திப்பும் நட்பும் இவருக்கு கிடைத்தது மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.    இருவரும் சேர்ந்து  AL QABANDI group மூலம் தனி பிரிவு ஆரம்பித்து குவைத்திலுள்ள அமெரிக்கன் ஏர்போர்ஸுக்கு வேண்டிய பொருட்களை விநியோகிக்க ஆரம்பித்து இன்று அது மிக பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கிறது.    எம்.பி.ஏ.படித்த மனைவி ஷாலினி கம்பெனியின் நிதி நிலைமைய பார்த்துக் கொள்ள, மைத்துனர் இக்கம்பெனியின் ஓமன், கத்தார், துபாய், ஈராக் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள பிரிவுகளை கவனித்துக் கொள்ள – கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறது இந்த நிறுவனம்.   உணவு பொருட்கள் விநியோகத்திலும் இக்கம்பெனி கால் பதிக்க இருக்கிறது.   சிரிஸ் தம்பதியர்களுக்கு இரண்டு மகன்கள் அளவான- வளமான குடும்பம்!    ``யாருமே தனி ஒருவராய் இருந்து வெற்றி பெற்றுவிட முடியாது. பலரின் ஒத்துழைப்பு தேவை. எனக்கு வழிகாட்டியாக இருந்தது ராஜூவ்காந்தி எனும் இளைஞர். மல்டி மில்லியனரான அவரிடமிருந்து நிறைய பிசினஸ் விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். எந்தத் தருணத்திலும் தலைக்கனமில்லாமல் எளிமையாக, மற்றவர்களையும் மதித்து, நடக்க வேண்டும் என்பது அவரிடமிருந்து நான் கற்று கடைபிடிக்கும் விஷயம்.     தன் தொழிலில் உறுதுணையாக இருக்கும் திருவாளர்கள் சுனில்மேனன், மேத்யூதாமஸ், மனீஷ்ஜோசப் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மைல்ஸ் ரோகர்ஸ் போன்றோருக்கு சிரிஸ் நன்றி நவில்கிறார்.     எளிமை, எளிதில் பிறரை கவரும் பேச்சு, பழக்கவழக்கம், கடின உழைப்பு, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிவு என்று இவரிடம் உள்ள சிறப்பு பண்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.    சினிமா நாயகன் போன்ற கவர்ச்சியான உடல்வாகு கொண்ட இவருக்கு நடிகர்கள் விஜய், சூர்யா எல்லாம் கல்லூரி நண்பர்கள்.    கஷ்டம் அனுபவித்து –உணர்ந்து வளர்ந்து வந்துள்ள சிரிஸ் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் ஏழை எளியவர்களுக்கு நேராகவும் Frontliners அமைப்பு மூலமும் உதவி வருகிறார்.      எம்.நாகபூஷணம்:    எந்த ஒரு பிரச்சனை என்றாலும் பயந்து ஒதுங்கி விடாமல் அல்லது தள்ளி வைக்காமல் துணிச்சலுடன் நேரிட வேண்டும். ஒரு சிக்கல் ஏற்படும்போது பதற்றமில்லாமல் –ஆர்பரிப்பில்லாமல் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து அலசி ஆராய்ந்து- பேசி சுமூகமாய் முடிவு எடுப்பது குவைத்தில் ரேங்க் ஜெனரல் டிரேடிங் –காண்டிராக்டிங் கம்பெனியின் நிறுவனரும் –மேனேஜிங் டைரக்டருமான திரு.நாகபூஷணம் அவர்களின் சிறப்பு.    சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த நாகா பிரெசிடென்ஸி கல்லூரியில் பி.எஸ்ஸி, இயற்பியலும் பிறகு எம்.ஐ.டி.யில் என்ஜினியரிங்கும் முடித்து 1975 –ல் நெய்வேலி என்.எல்.சி.யில் சேர்ந்தார்.    இங்கு எக்ஸிகியூட்டிவ் என்ஜினியராக பணியாற்றிய சமயம் 1982 –ல் குவைத் வந்து முதலில் பாப்-காக் எனும் ஜெர்மன் கம்பெனியில் சேர்ந்தார்.    பிறகு 1984 –ல் ISCO  அப்போது இந்த கம்பெனி புதிதாய் காண்டராக்டிங் டிவிஷன் ஆரம்பித்திருக்க அதன் வளர்ச்சிக்கு கடுமையாய் உழைத்து தனது திறமையை நிரூபித்தார். 1500 பேர்களுக்குமேல் பணிபுரிந்த அக்கம்பெனியில் எந்த தொழிலாளர் பிரச்சினை என்றாலும் இவரை அனுப்பி தீர்த்து வைக்கிற அளவிற்கு இவருக்கு நல்ல பெயர். நாகாவும் நடுநிலைமையுடன் செயல்பட்டு பிரச்சினைகளை முடித்து வைப்பார்.    குவைத்தில் ஸ்பிக் கம்பெனி காலூன்றுவதிற்கு நாகா தன் கம்பெனி மூலம் பாலமாயிருந்திருக்கிறார்.    சதாம் சண்டை சமயம் தனக்கு கீழ் பணியாற்றியவர்களுக்கு உதவவும்- பாதுகாப்பாய் அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கவும் தனது உடமைகளை விற்று பணம் கொடுத்தது. இவரது தொண்டுள்ளத்திற்கு சான்று.    தன் திறமை, உழைப்பு இவற்றை பிறருக்காகவே கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற கேள்வி எழ நாகா தன் அனுபவம் –தொடர்புகளை வைத்து இந்த ரேங்க் கம்பெனியை ஆரம்பித்து தற்போது இது 200 பேர்களுக்குமேல் வேலை கொடுத்து சிறப்பாக இயங்கி வருகிறது.    திருமதி ரஞ்சிதம் நாகா குடும்பத்தை நிர்வகித்து, இவர் முழுநேரம் தொழிலை கவனிக்க பக்கபலமாய் இருப்பதை பெருமையுடன் நினைவுகூர்கிறார். இவர்களது மகள் லண்டனில் மருத்துவராயிருக்கிறார். மகன் பொறியாளர்! தன் வருமானத்தில் கணிசமான பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு அளித்துவரும் நாகா, குவைத்தில் பலவித கலைநிகழ்ச்சிகளுக்கும் துணையாயிருக்கிறார், பாரதி கலை மன்றம், தமிழ்நாடு பொறியாளர் சங்கம் போன்றவற்றின் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். ஃப்ரண்ட்லைனர்ஸ் சேவை அமைப்பின் ஆலோசகரும் கூட.      திருமதி-திரு.முத்துக்கிருஷ்ணன்:    ``இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வு கிடையாது. எல்லோரையும் சமமாக பார்க்கணும் படிப்பு- பணம்-பதவியைவிட மனிதாபிமானம் முக்கியம் கடவுள் எங்களுக்கு எல்லா வசதிகளும் கொடுத்திருக்கிறார். அவருக்கு நாம் திருப்பி எதுவும் செய்வதில்லை. செய்யவும் முடியாது. நமக்கு சுற்றிலும் கஷ்டப்படுபவர்களுக்கு செய்யும் சேவைதான் கடவுளுக்கு நாம் காட்டும் நன்றி’’ என்கிற சீரிய கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார்கள் திரு.முத்துக்கிருஷ்ணன் திருமதி. ரமா தம்பதியினர்.    India International School ல் தலைமை ஆசிரியையான இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உமையாள்புரத்தை சேர்ந்தவர். இசை  வளர்ப்பில் முக்கிய பங்கு பெற்றுள்ள தியாகராஜரின் சிஷ்யர்கள் வாழ்ந்த ஊர் அது.    ரமா சகோதரருடன் பிறந்த இரட்டையர். அப்பா விவசாயம் பார்த்தாலும் கூட அம்மா இசையில் நாட்டம் கொண்டு கற்று- கச்சேரிகல் பல செய்து பாகவத திலகம் என்கிற பட்டம் பெற்றவர். தாயின் இசைஞானம் ரமாவிடமும் சிறுவயதிலிருந்தே தொற்றிக் கொண்டிருந்தது.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:34         ரமா பி.ஏ.ம் பி.எட்ம் முடித்ததும் திருமணமாகி 1975ல் குவைத் வந்தார். கணவர் திரு.முத்துக்கிருஷ்ணன் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த எம்.ஐ.டியில் என்ஜினியரிங் படித்து KNPC   யில்  Lead Engineer ஆக பணிபுரிபவர்.    சிறந்த மனிதாபிமானி எளிமையும் உதவும் குணமும் கொண்டவர். கீழ்மட்டம் –மேல்மட்டம் என பார்க்காமல் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் உதவி வருபவர். ஒவ்வொரு உயிரிலும் கடவுள் இருக்கிறார் என நம்புவர். பிறரின் திறமைகளை மதிப்பவர். ரமா போலவே இவரிடமும் போலித்தன்மை கிடையாது.    எவரைப் பற்றியும் தப்பாய் பேசுவதில்லை பொய்புறங்கூறுதல் கிடையாது. பிறர் நலத்திற்கு முன்னுரிமை கொடுத்து-அதன் பிறகே தனது தேவைகளைப் பற்றி சிந்திக்கும் முத்துவை கணவராக பெற்றது தனது பாக்கியம் என்று ரமா பெருமைப்படுகிறார்.    மகன் திலீப்பும் மகள் காயத்ரியும் கொஞ்சம் வளரும் வரை அவர்களது பராமரிப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ரமா 1984 Indian school ல் பணிக்கு சேர்ந்தார்.   2002 முதல் மங்காஃப் பள்ளி!   தேவையானவர்களுக்கு    பணம் –பொருள் கொடுத்து விட்டு ஒதுங்கிவிடுபவர்கள் உண்டு. பணம் –பொருளுடன் நேராக பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று சேவை செய்வது இவரது பழக்கம். குவைத்தில் ஊனமுற்றவர்கள் பள்ளிக்கு சென்று அங்கு செயல்பட முடியாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேண்டிய ஒத்தாசை செய்து, பாட்டுப்பாடி அவர்களை மகிழ்விப்பதில் தனக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது என்கிறார். அது மாதிரி பாட்டுப்பாடுவதில் அவர்களுக்கும் குணம் கிடைப்பதாய் பள்ளியினர் தெரிவிக்கின்றனர்.    இசை, பாட்டு, நடனம், நாடக நடிப்பு பேச்சுதிறமை இவற்றுடன் ரமா வீணையும் வாசிப்பார். சேலை டிசைனும் செய்கிறார்.    வேலை- பிசினஸ்-பொதுவாழ்வில் கவனம் செலுத்துபவர்களுக்கு குடும்ப வாழ்வில் அமைதியும் சந்தோஷமும் கிடைக்காமல் போவதுண்டு இவர்கள் அதற்கு விதிவிலக்கு.    இருவருமே ஒரே மாதிரியான சிந்தனையிலும் செயலிலும் இருப்பதால் மனத்தாங்கல்களோ பிரச்சனைகளோ வருவதில்லை என்று மகிழ்கிறார்கள்.    முத்து தனது குரு போன்ற தாசரி அங்கிள் கூற்றுப்படி மனைவிக்கும் 50-50 பொறுப்புகள் –சுதந்திரம் பிரித்து கொடுத்திருப்பதால் குடும்பத்தில் பிரச்சனை வர பணம் தான் முக்கிய காரணமாக இருக்கும். பணத்திற்கு முக்கியவத்துவம் தராமல்-பரஸ்பர நம்பிக்கையுடன் –வேறுபாடில்லாமல் பழகும்போது மனஸ்தாபமே வருவதில்லை’’.    மகன் திலீப் தற்போது USA  யில் M.S (Engineer) காயத்ரி  Bio Engineering +P.hd USA வில் செய்துவருகிறார். சுமுகமாய் குடும்பம் போகிறது.     சொந்த ஊரில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக இலவசமாய் ஓர் இல்லம் ஆரம்பித்து –அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனபது இவர்களது எதிர்கால திட்டம்.   என்.லட்சுமி நாராயணன்;    இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் NRI Welfare Society     வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியர்களை ஊக்கப்படுத்த வேண்டி கடந்த சில வருடங்களாக HIND RATTAN விருது வழங்கி கெளரவித்து வருகிறது.     குவைத்தில் இவ்விருது பெற்ற முதல் தமிழர் என்கிற பெருமை சென்னைக்காரரான திரு.என்.லட்சுமி நாராயணணுக்கு உண்டு.     பொதுவாக விருதுகள் வழங்கப்படும்போது விமர்சனங்கள் எழுதுவதுண்டு. ``இந்த விருது எந்த அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்டது. என்று தெரியவில்லை!” என்று தன்னடக்கத்துடன் இவர் குறிப்பிட்டாலும்கூட-     பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது மிக பொருத்தம்.     சாதாரணமாக, சிந்தையை பிசகவிடாமல் ஒரே துறையில் கவனம் செலுத்தினால்தான் வெற்றி பெற இயலும் என்பார்கள். ஆனால் இவர் விதிவிலக்கு.     அறிவு சார்ந்த விஷயங்கள்! விளையாட்டு! கிரிக்கெட் வீரர்! தொழில் ரீதியில் சிறந்த பொறியாளர்! இசை, கலை, சமூக தொண்டு, இவற்றுடன் –வலியோர் –எளியோர் என்கிற பாரபட்சம் பார்க்காமல் உதவி என்று அணுகிவிட்டால் மனம் கோணாமல் உடனே ஆவன செய்துதரும் மனிதாபிமானம்.     வேலையாகட்டும், இன்ன பிற காரியங்களாகட்டும், இவரால் பலன் பெற்றவர்கள் குவைத்தில் ஏராளம், தாராள மனது.     ஆச்சரியப்பட வைக்கும் சுறுசுறுப்பு!எப்போதும் உற்சாக பேச்சு! மலர்ந்த முகம்! ஒன்றை ஏற்றுக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு முடித்துவிடும் பண்பு.     முடியும் –முடியாது –சரி-தவறு என்று ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படுத்திவிடும் துணிச்சல்! `நம்மால் முடியாதது உண்டா –வாங்க ஒரு கை பார்த்திடலாம்’ என்று நல்ல காரியங்களுக்கு தரும் ஊக்கம்! அப்படியே வெறுமனே சொல்லிவிட்டு போய்விடாமல் கைகோர்த்து களத்தில் இறங்கும் பக்குவம்! கடின உழைப்பு! தளர்ந்து போகாத வேகம்! விவேகம்!    இவையெல்லாம் எப்படி இவருக்கு சாத்தியப்படுகிறது என்று கேட்டால், ``பெரியவர்களின் ஆசிர்வாதமும், இறையருளும் குடும்ப பாரம்பர்யமும் அண்ணா யுனிவர்சிட்டி தந்த மெக்கானிக்கல் என்ஜினியரிங் அறிவும்தான் காரணம்!” என்பார் புன்னகையுடன்.     நான் சோர்வாய் உணரும்போது `பேட்டரியை’ சார்ஜ்’ பண்ணிக்கொள்ள வேறு எதுவும் செய்வதில்லை இந்த `லட்சுமி’ க்கு போன பண்ணினால் போதும். உற்சாகத்தை அள்ளி தந்து விடுவார்!.   இது மிகைப்படுத்தல் அல்ல, உண்மை.    இவரது தாத்தா 1900 –ல் பிரசிடென்ஸி கல்லூரியின் பட்டதாரி! பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தஞ்சாவூர் கோர்ட்டில் கெளரவ மாஜிஸ்டிரேட்டாக இருந்தவர்.     அப்பா திரு. டி.ஆர் .நடராஜன் சுதந்திரத்திற்கு முன்பு `கெஸ்ட்டர்டு’ ஆபிசராக பணியை தொடங்கி தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறையில் இணை இயக்குனராக 1974 –ல் ரிடையரானவர். உடல் ஊனமுற்றோர்க்கு முதன்முதலில் தனி வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்த பெருமை இவருக்கு உண்டு.     அப்பாவின் நேர்மை-நாணயம்-திறமை- அலுவலகம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் அணுகும் விதம் எல்லாவற்றையும் பார்த்து –கற்றுக் கொண்டது லட்சுமியின் ரத்தத்தில் ஆழமாய் ஊறிப் போயிற்று.     அதுவே இன்று இவரது நிர்வாக திறமைக்கு பலமாகவும், அடிப்படையாகவும் அமைந்துள்ளது. குடும்பத்தில் ஆறு சகோதரிகளுக்கு பிறகு பிறந்த ஒரே பையனான இவருக்கு அன்பு மழை! குடும்ப பாரம்பர்ய ஒழுக்கம், வரைமுறை மாறாத வாழ்க்கை, நேர்மையான அணுகுமுறை எல்லாம் இவரை உயர்த்திப் பிடித்திருக்கின்றன.     மெக்கானிக்கல் என்ஜினியராக பல சாதனைகள் செய்த மூத்த சகோதரியின் கணவர் –இவரையும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்க தூண்டுகோலாக இருந்தவர்.     கிண்டி என்ஜினியரிங் கல்லூரியிலும் ஸ்போர்ட்ஸ் மற்றும் யூனியன் செயல்பாடுகள் மூலம் அன்றே லட்சுமி பிரபலம்.     படிப்பு முடிந்ததும் ஸ்பிக் கம்பெனியின் துத்துக்குடி உரத் தொழிற்சாலையில் பெற்ற அனுபவம் இவருக்கு நல்ல பலமான அஸ்திவாரமாக அமைந்தது.     டெக்னிகலாக தன் துறையில் இவர் தயாரித்து அனுப்பின பேப்பர்களுக்கு 1994-ல் டெல்லி FAI  இரண்டாம் பரிசு கொடுத்து கெளரவித்திருக்கிறது. அடுத்து இவரின் கட்டுரைக்கு கோலாலம்பூர், லண்டன் போன்ற இடங்களிலிருந்தும் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.   1994 –ல் குவைத் நேஷனல் பெட்ரோலியம் கம்பெனியில்  Rotating Equipment            என்ஜினியராக சேர்ந்தவர் –இங்கும் தன் திறமையாலும் கடின உழைப்பாலும் `சிறந்த அலுவலர்’ விருதை பெற்றிருக்கிறார்.     லட்சுமி எந்த தருணத்திலும் தன் பொறுப்புகளை தட்டிக் கழிப்பதில்லை. எடுத்த காரியத்தை வெற்றிகரமாய் முடிக்கும் வரை ஓய்வதில்லை.      அன்பை ஊட்டி வளர்த்த தாய் திருமதி பத்மலோசனியும், கெமிஸ்ட்ரி பட்டதாரியும் –இல்லற பங்காளியுமான மனைவி சத்யாவின் ஒத்துழைப்பும் –முகம் கோணா பண்பும் வாழ்வில் தனக்கு கிடைத்த பொக்கிஷங்கள் என்று லட்சுமி பெருமைப்படுகிறார்.    இவர்களுக்கு வருண் சந்த், ஸ்வேதா என இரண்டு செல்வங்கள்.      குவைத் தமிழ்நாடு பொறியாளர் சங்கத்தின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்து லட்சுமி-      குவைத் ஃப்ரண்ட்லைனர்ஸ் சேவை அமைப்பின் ஆலோசராகவும் பக்க பலமாகவும் இருந்து தொண்டாற்றி வருகிறார்.      நாட்டுப் பற்றுமிக்க இவர் –வெளிநாட்டு இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் நாட்டிற்கு பெரிய அளவில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருக்கிறார்.      வெளிநாட்டில் பொருளீட்டும் இந்தியர்கள் முயற்சித்தால் முடிவு காணப்படாமல் இருக்கும் `நதிகளின் ஒருங்கிணைப்பு திட்டம்’எளிதாய் முடிந்துவிடும்- அதன்மூலம் இந்திய நாடு சுபிட்சம் பெறும் என்பது இவரது நம்பிக்கை விருப்பமும் கூட.   வீ.கே.பெரியசாமி:    ``உன் வாழ்க்கையில், நீ எதிர்பார்த்தது கிடைக்கவில்லையென்றால் அதற்காக இடிந்து போய் உட்கார்ந்துவிடாமல், கையில் இருப்பதை இறுகப்பிடித்து அதையே ஏணியாக்கி, உயரத்தை எட்டி விடு’’ என்கிறார் திரு.பெரியசாமி.   இவர் குவைத்தின் ஒரு பெரிய நிறுவனத்தில் நிதி கட்டுப்பாட்டாளராக பணியாற்றுகிறவர்.      இலங்கையில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மலைநாட்டில் பசுமலை என்ற சிறியதொரு ஊரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை, இந்தியா சுதந்திரம் பெறும் முன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்று அங்கு குடியேறியவர்.     பெரியசாமி தனது பள்ளிப்படிப்பை அட்டன் சென் ஜோன் பொஸ்கோ கல்லூரியில் முடித்ததும், ஒரு தேயிலை தோட்டத்தில் கிளார்க்காக  வேலைக்கு சேர்த்து விட்டபோது, அதை விட்டு விலகி மேல் படிப்பு. படிப்பதற்காக இந்தியா சென்று திருச்சியில் கல்லூரியில் சேர்ந்தார். பி.யூ.சி முடித்ததும், மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். அங்கு இடம் கிடைத்த போதும், அவர்கள் கேட்ட `டொனேஷன்’ கொடுக்க முடியாததால் டாக்டராக வேண்டும் என்ற கனவு, காற்றோடு கரைந்துவிட்டது. இனி என்ன செய்வது? அவரின் தந்தை கூறியபடி வணிகவியல் படிப்பை திருச்சி தேசிய கல்லூரியில் முடித்துவிட்டு, உடன் இலங்கை சென்று அங்கு``சார்ட்டட் அகெளண்ட்டன்ட்ஸ்’’ படிப்பை முடித்து ஆடிட்டர் பட்டத்தோடு வெளிவந்தார்.     அங்கு ஒரு பிரசித்தி பெற்ற ஆடை தையல் நிறுவனத்தில் சீப் அக்கெளண்டன்ட் ஆக வேலைக்கு சேர்ந்து சில வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தினால் குடும்பத்துடன் இந்தியா செல்லவேண்டிய நிலை. 1983-ல் ஏற்பட்ட அந்த கலவரத்தில் அவர் வேலை செய்த தொழிற்சாலை முழுவதும் எரிக்கப்பட்டு விட்டது.     எதிர்காலம் தெளிவற்ற நிலையில், இந்தியாவில் போய் என்ன செய்வது என்ற யோசனை. அங்கிருந்த கல்லூரி நண்பர்கள், பேராசிரியர்களின் கருத்துப்படி இந்தியாவிலும் சார்ட்டட் அக்கெளண்ட்டன்ட்ஸ் தேர்வு எழுதி குறுகிய காலத்தில் இந்தியாவிலும் ஆடிட்டருக்கான பட்டம் பெற்றார்.     அடுத்த வருடமே மத்திய ஆப்பிரிக்க நாடான சாம்பியா நாட்டிற்கு ஒர் மிகப் பெரிய நிறுவனத்தின் கணக்காளராக சேரும் சந்தர்ப்பம் கிடைத்து அங்கு சென்றார். ஐந்து வருடங்கள் அங்கு வேலை செய்து, அவரின் நண்பர் திரு.நடராஜன் உதவியால் குவைத் நாட்டிற்கு வந்து ஒரு பெரிய கம்பெனியின் நிதி கட்டுப்பாளராக சேர்ந்த நிகழ்வை நெகிழ்ச்சியோடு நினைவு கூறுகிறார். International Trade Holding Company  என்ற இந்த கம்பெனிக்குச் சொந்தமாக வியாபாரக் கம்பெனிகள் இருக்கின்றன. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கட்டிட கான்ட்ராக்ட் கம்பெனி, ஆடை நிறுவனங்கள் என்று பத்துக்கு அதிகமான கம்பெனிகள் குவைத், லெபனான், துபாய், இங்கிலாந்து என்று பல நாடுகளில் இருக்கும் இந்த எல்லா கம்பெனிகளுக்கும் நிதிக் கட்டுப்பாட்டாளராக இருக்கும் இவர் தனது முயற்சியாலும், நிர்வாகத் திறமையினாலும் கம்பெனியை வளர்த்திருக்கிறார். இந்த கம்பெனிகளின் உரிமையாளரும் பிரசிடன்ட்டுமான டாக்டர். ஹாமட் அல் துவைய்ஜிரி அரசியலில் டாக்டர் பட்டம் பெற்று பாராளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதியாக (எம்.பி) தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு பெரியசாமியின் திறமை மீது ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதால், இவரால் திறம்பட செயல்பட முடிகிறது என்கின்றார். இரண்டாயிரம் பேருக்கு அதிகமாக வேலை செய்யும் இந்த நிறுவனத்தின் மிகப்பொறுப்பான பதவியில் இருக்கும் இவரால் இங்கு வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தனி கெளரவம் கிடைத்திருப்பது.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:35          சில வருடங்களுக்கு முன் கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் ஒரு கவிஞரும் கூட, கவிதைகள் எழுதுவதை பொழுதுபோக்காகக் கொண்ட இவர் மூன்று கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். சமூக சிந்தனைமிக்க இவர் குவைத்தின் ஃப்ரண்ட்லைனர்ஸ் சேவை அமைப்பின் தலைவராக இருந்து பல சமூக சேவைகளுக்கு உதவி வருகிறார்.    பள்ளி நாட்களில் தினம் ஆறு மைல் நடந்து போய் படித்த நாட்களை நினைவு கூறும் இவரின் உதவியால் இப்போது படித்துக் கொண்டிருப்பவர்கள் பலர். இரண்டு நாடுகளில் சார்ட்டட் அகெளண்ட்டன்ட் (சிஏ) பட்டம், எம்பிஏ பட்டம், நிதித்துறையில் முனைவர் பட்டம் (பி.எச்டி), எம்ஐஎம்ஐஎஸ், ஹோட்டல் நிர்வாகத்தில் டிப்ளமா படிப்பு, இன்னும் பல பட்டங்கள் பெற்றுள்ள இவரிடம்``இவ்வளவு வேலைகளுக்கும் பொறுப்புகளுக்கும் இடையில் எப்படி உங்களுக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறது’’ என்று கேட்டால் சிரித்துக் கொண்டே ``மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’’ என்கிறார்.    வைத்திய கல்லூரியில் சேர முடியாமல் போனதை ஒரு தோல்வியாகக் கருதி மனம் சோர்ந்து விடாமல், வைத்தியப் படிப்பிற்கு சிறிதுமே சம்பந்தமில்லாத அக்கெளண்டன்சி படிப்பை முழு மனத்தோடு ஏற்று அதில் வெற்றி பெற்று தன் குடும்பத்திற்கும், தனது சமுதாயத்திற்கும் உதவியாக இருக்கும் பெரியசாமி ஒரு வெற்றி பெற்ற தமிழர் என்று சொல்வது மிகவும் பொருந்தும்.    எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கவேண்டும், என்ற மனத்திடமும் ஓயாத உழைப்பும், அந்த உழைப்பில் நேர்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று சொல்லும் இவர், தான் ஏறி செல்லவேண்டிய படிகள் இன்னும் பல உண்டு’’ என்று கூறும் இந்த தன்னடக்கம் கூட இவரின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.      செந்தமிழ் அரசு:    ``உயர் கல்வியுடன், கலை கலாச்சாரம் இலக்கியம் –பேச்சு-பாட்டு என்று பிற துறைகளிலும் ஈடுபட்டு, கற்று, பயிற்சிபெற்று நான் பெயர் பெறுவதற்கு மூலகாரணம்-மறைந்த எனது தந்தை திரு.எம்.பி.ராமனாதன் அவர்கள்தான். என் வெற்றி முழுக்க அவருக்கே அர்ப்பணித்திருக்கிறேன்’’ என்று மனம் உருகுகிறார் திரு.செந்தமிழ் அரசு.    அலுவலக வேலைக்கு அப்பாற்பட்டு கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல், சமூகப் பணியுடன் குவைத்தில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு இவர் பல வழிகளிலும் தன் பங்களிப்பை செலுத்தி வருகிறார்.    நடிக்கிறார், தூர்தர்ஷனில் 1980 முதல் செய்தி படிக்கிறார். இசைக் கச்சேரிகளில் பாடுகிறார். குவைத் பாரதிக் கலை மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்றவர் இப்போது தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கத்தின் தலைமை ஏற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார், அத்துடன் ஃப்ரண்டலைனர்ஸ் நிகழ்ச்சிகள் மற்றும் தொண்டில் இவருக்கு கணிசமான பங்கு உண்டு.    சென்னைவாசியான அரசு பி.எஸ்ஸி, கணிதம் தியாகராயர் கல்லூரியிலும் பிறகு DMiT (இன்ஸ்ட்ரும்மென்டேசன்) MIT யிலும், முடித்து 1971-ல் பணியை பெல்ஸ் கன்ட்ரோல்ஸ் கம்பெனியின் சேல்ஸ் என்ஜினியராக ஆரம்பித்தார்.    படிப்படியாக ரீஜினல் மானேஜர் வரை உயர்ந்து 1992 -94 இல் குவைத் FOXBORO வில் பணிபுரிந்து –திரும்ப சென்னை திரும்பி அதே பெல்ஸ் கன்ட்ரோல்! பிறகு FOXBORO , யோகோகாவா கம்பெனிகளில் பெரிய பதவிகள் வகித்து 1999 இல் திரும்ப குவைத்! அதே FOXBORO வில் சேல்ஸ் மானேஜர்!    ஐந்து வருடங்களில் இந்தியா –திரும்பி –குவைத்திற்கு 2006 –ல் மறுபடியும் வந்து பிரபல ATSCO வில் சேல்ஸ் –மார்க்கட்டிங்கின் எக்ஸிகியூடிவ் மானேஜராக பொறுப்பேறு சிறப்பாக செயலாற்றி வருகிறார்.    சுறுசுறுப்பு, நேரந்தவறாமை, தொடர்புகளை வலுப்படுத்துதல், அனைவருடனும் நட்போடு கூடிய அணுகுமுறை, சிறியவர்-பெரியவர் என பார்க்காமல் எல்லோருடனும் காட்டும் அன்யோன்யம் –இவரது வெற்றிக்கு அடிப்படையாய் அமைந்திருக்கின்றன.    ஒளிவு மறைவின்மை, எந்த பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வது, கஸ்டமர்களின் தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்வது என இவரிடம் பல திறமைகள் புதைந்து கிடக்கின்றன.    மனைவி திருமதி ஷீலா இவரது அலுவலகம் மற்றும் சமுதாய பணிகளுக்கு பக்கபலமாய் இருந்து வருகிறார்.    மகள் வனிதா மருத்துவர், மகன் திரு.பழனியப்பனும் மருத்துவர் –லண்டனில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.   இவரது சேவை:   கல்லூரியிலேயே, மாணவ யூனியன் செயலாளராகவும் NCC யிலும் ஆரம்பமாயிற்று.    பள்ளி, கல்லூரி வாழ்வில் பேச்சு மற்றும் பாடல் போட்டிகளில் பல பரிசுகளும் பெற்றிருக்கிற அரசு- 1960 முதல் மெல்லிசை கச்சேரிகளில் பாடி வருகிறார்.    சீனா சண்டை சமயத்தில் –அந்த நாட்களில் நல்லதொரு தொகை-இசை நிகழ்ச்சி நடத்தி நிதி சேகரித்து வழங்கியதை இப்போதும் பெருமையுடன் நினைவு கூர்கிறார் அரசு.    அந்த தொண்டுள்ளம் இப்போதும் குவைத்திலும்  Frontliners நிகழ்ச்சி மூலம் கார்கில் நிவாரண நிதி, குஜராத் பூகம்ப நிதி, சுனாமி நிதி என தொடர்ந்து கொண்டிருக்கிறது இவரிடம்.     கிங்ஸ்லி, காமேஷ், ராஜாமணி, வில்லியம்ஸ் போன்றோரின் இசைக்குழுவில் பாடியிருக்கிற அரசுக்கு இளையராஜா, கங்கை அமரன், எஸ்.பி.பி., தேவா, எம்.எஸ்.விஸ்வநாதன் என பிரபல இசை வித்தகர்களுடன் நல்ல நட்பு உண்டு.    வயதும் உடலும் ஒத்துழைக்கும் வரை சம்பாதித்து –ஊர் திரும்பினதும் –சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்பது இவரது லட்சியம்.     டாக்டர் உஷா ராஜாராம்:    பெரும் செல்வில் சீட்டு வாங்கி, படித்து டாக்டர்களாக வெளியே வருபவர்களில் பலர் மருத்துவத்தை வியாபாரமாக நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். போட்ட பணத்தை எடுக்க வேண்டிய நோயாளிகளை கசக்கிப் பிழியும் நிலமையும் இல்லாமலில்லை.   ஆனால் டாக்டர் உஷா ராஜாராம் ரொம்ப ரொம்ப வித்தியாசம்.    25 வருடங்களாய் குவைத்தில் தன் மருத்துவ சேவையாலும், மனிதாபிமானத்தோடு கூடிய பொதுச் சேவையாலும் மிகவும் போற்றுதலுக்குரியவராய் இருந்து வருகிறார்.    குவைத் சட்டதிட்டப்படி அரசாங்க மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் சொந்தமாய் பிராக்டீஸ் செய்யக்கூடாது என்பதால் ஓய்வுநேரத்தை தங்கள் சுய தேவைக்காக மட்டுமே செலவிடும் டாக்டர்களே அதிகம்.    ஆனால் உஷா ராஜாராம் பதிப்புக்குள்ளாகும் ஏழை – எளிய –படிப்பறிவில்லாத உழைப்பாளிகள், பணிப்பெண்கள் என எல்லோருக்கும், தனியாகவும், சேவை அமைப்புகள் மூலமாகவும் பெருமளவில் உதவிவருகிறார்.    இவரிடம் ஈகோ கிடையாது. செல்வாக்கு என எல்லாமிருந்தும் கர்வத்தையும் சுயநலத்தையும் கிட்டே சேர்க்காதவர்.    சென்னையைச் சேர்ந்த திருமதி உஷா ராஜாராம் தான் படித்த ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட் நேர்மையாகவும் உண்மையாகவும் உதவும் குணத்துடன் செயல்பட வேண்டும் என்கிற லட்சியத்தை தன்னுள் பலமாக விதைக்க உதவிற்று என்று பெருமைப்படுகிறார்.    ஸ்டான்லியில் மருத்துவ பட்டமும் அதன்பிறகு அமெரிக்காவின் டெட்ராய்ட்டில் உள்ள மிட்ஷிகன் யினிவர்சிடி மூலம் குழந்தைகள் மருத்துவம் மற்றும் Neonatology  யில் முதுநிலை பட்டமும் பெற்றவர் இவர்.    1982 இல் குவைத்தில் –அல் ஜஹரா அரசு மருத்துவமனையில் சேர்ந்து அங்கு பிறக்கும் குழந்தைகள் மற்றும் Preterm குழந்தை கவனிப்பில் இவருக்கும் இவருடன் உள்ள குழுவினருக்கும் நல்ல பெயர்.    உஷா, 4 வருடங்கள் அங்கு  Paediatric  டிபார்ட்மெண்ட் சேர்மனாகவும் பொறுப்பு ஏற்றிருந்தார். இவரது சிறப்பான சேவையை பாராட்டி ஜஹரா ஏரியா கவர்னர் 1998 –ல் உஷாவுக்கு சிறப்பு விருது வழங்கி கெளரவித்திருக்கிறார்.    மெக்கானிக்கல் என்ஜினியரான இவரது கணவர் திரு.ராஜாராம் நேஷனல் இன்டஸ்ட்ரீஸ் குரூப்பில் –கான்கிரீட் பிரிக்ஸ் தயாரிப்பின் தலைமை பொறுப்பேற்று வெற்றிகரமாய் செயல்பட்டு வருபவர்.    திருமதி உஷாவின் சேவைக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்துவரும் இவரும் பலவித ஆன்மீக மற்றும் சேவை அமைப்புகளில் தன்னை அர்ப்பணித்துள்ளார்.    சின்ன குழந்தைகளுக்கு நம் பாரம்பர்யம், கலாசாரம் வாழ்வியல், சுய முன்னேற்றம் போன்றவற்றை ஆர்வமுடன் இருவரும் கற்றுத் தருகின்றனர்.     டாக்டர் உஷா ராஜாராமின் தரமான கவிதைகளும் கொள்கை கோட்பாடுகளை வலியுறுத்தும் கட்டுரைகளும் பல புத்தகங்களிலும் வெளியாகி பாராட்டுப் பெற்றுள்ளன.     இவர்களது மகன் டாக்டர் மகாதேவன், மணிப்பால் யுனிவர்சிடியில் மருத்துவ பட்டமும், கனடா மனிடோபாவில் கார்டியாலஜியும் முடித்தவர்.   ஆடிட்டர் சந்திரசேகர்:    ``நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லி வளர்த்து ஆளாக்கின என் தாயும், ஆர்மியிலிருந்த எனது தந்தையும் அவர் கற்றுத்தந்த வாழ்வு நெறி விஷயங்களும்தான் எனக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது’’ என்று பெருமைப்படுகிறார். குவைத்  Albazie co வின்Director Assurance  திரு.சந்திரசேகரன்.    திருச்சியில் உத்தமர்கோயில் –பிச்சாண்டார் கோயிலை சேர்ந்த அப்பா, பிள்ளைகளின் படிப்புக்கு இடைஞ்சல் ஏற்பட்டுவிடக் கூடாது என்று குடும்பத்தை அங்கேயே வைத்துவிட்டு அவர் ஆர்மியில் தனியாக இருந்தவர்.    ஆர்மியின் ஒழுக்கம், நீதி, நேர்மை, நேரந்தவறாமை போன்றவற்றை குழந்தைகளிடம் வலியுறுத்தும் அதே சமயத்தில் பிள்ளைகளின் படிப்பு-பொழுதுபோக்கு விஷயங்கள் கட்டுப்பாடு விதிக்காமல் முழு சுதந்திரம் கொடுப்பார்.    திறமை மற்றும் முயற்சி எடுப்பதற்கு அவர் உற்சாகம் தருவார். வாழ்வில் கஷ்ட நஷ்டங்களை உணர வைத்து பிள்ளைகளை வளர்த்திருந்தார்.    ``அப்பா எங்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி ஊட்டி வளர்த்தார். பிறரை எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பார். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்; இல்லாததை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் இருப்பதை வைத்து திருப்திப்பட வேண்டும்;    நம்மைவிட மேலே இருப்பவர்களை பார்த்து ஏங்காமல், நமக்கும் கீழே உள்ளவர்களை ஒப்பிட்டு அவர்களுக்கு கிடைக்காத பலதும் நம்மிடம் உள்ளதே என்று மகிழவேண்டும்; கஷ்டபடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கடைபிடித்த விஷயங்கள் எங்களுக்கு நல்ல அடிப்படையாய் அமைந்தன’’ என்று சந்திரசேகர் விளக்குகிறார்.    இவர் திருச்சி ஈ.ஆர்.ஸ்கூல்; செயின்ட்ஜோசப்பில் பி.யு.சி., சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பி.காம்.என 1980 –ல் வெளியே வந்து சென்னையில் சி.ஏ. 1984 –ல் முடித்தார்.    ஆடிட்டர்களுக்கு நம்மூரை விட பாம்பேயில் வாய்ப்புகள் அதிகம் என்று, அங்கு தொலை தொடர்பு துறையில் பணிபுரிந்த மூத்த சகோதரர் மூலம் அங்கே சென்றார்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:36          பாம்பேயில்  Price water house  கம்பெனியில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தபோது, அங்கு பணிபுரிந்த நண்பர் குவைத்தில் இக்கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, சந்திரசேகரையும் அழைத்துக் கொண்டார்.    1990 வரை இக்கம்பெனியில் சீனியர் ஆடிட்டர் இன்சார்ஜாக சந்திரா பணியாற்றி –ஈராக் சண்டை காரணமாய் பாம்பே திரும்பிWockhaddt  மெடிக்கல் கம்பெனியில் ஒரு வருடம் வேலை பார்த்தார்.     1991 –ல் திருமணம் செய்து –அந்த நேரம் இக்கம்பெனியின் அழைப்பின் பேரில் மறுபடியும் குவைத்! ஈராக் யுத்தத்தின் காரணமாய் குவைத் முழுவதுமாய் இயல்புக்கு திரும்பாத நிலையில், வேலைபளு மற்றும் குடும்பத்தை அழைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை இவருக்கு விரக்தியை ஏற்படுத்திற்று.     `எவ்ளோ நாளுக்குத்தான் இப்படி அந்நியருக்கே உழைத்துக் கொண்டிருப்பது. சொந்தமாய் பிராக்டீஸ் செய்து முன்னேற வேண்டும்’என்று ஊருக்கு திரும்பி-     சென்னையில் 1992 -96களில் சொந்தமாய் ஆடிட்டிங் செய்ய ஆரம்பித்தார். இந்த துறைக்கு தொடர்புகள் ரொம்ப முக்கியம், கம்பெனிகளிடம் தன் திறமையை வெளிப்படுத்தி நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.    இடையில் குவைத்தில் இளமைப் பருவத்தை செலவிட்டு தாமதமாய் அங்கு ஆரம்பித்ததால் எதிர்ப்பார்த்த அளவிற்கு செயல்பட முடியாமல் போனது. சந்திரசேகர் அதற்காக தளர்ந்து விடவில்லை.    குவைத்திலிருந்த இந்த கம்பெனிக்கு வந்து சேரும்படி அழைப்புவர 1996 டிசம்பரில் மறுபடியும் குவைத்.    குவைத்தில் இந்த துறையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இக்கம்பெனியின் உரிமையாளர் திரு.Mr. Badar AL –Bazie  நிரம்ப படித்தவர். பண்பாடும், கடின உழைப்பும் ஊழியர்பால் அன்புகாட்டி, அவர்களுக்கு முழுசுதந்திரமும் கொடுத்து செயல்பட வைப்பவர்.    அதனால் சந்திராவுக்கு இங்கு பரிபூரண திருப்தி தன் பணியில் ஓனருக்கு நம்பிக்கை ஏற்படுத்தி நல் உறவுடனும் வெற்றிகரமாகவும் செயல்பட்டு வருகிறார்.    கடின உழைப்புடன் –தன்னுடன் பணிபுரிபவர்களையும் ஒரு குழுவாக அரவணைத்துச் செல்வது இவரது பலம். அத்துடன் தந்தையிடம் கற்றுக்கொண்ட பண்பாடுகள் மிகவும் உதவியாக உள்ளன.    கும்பகோணத்தை சேர்ந்த திருமதி மங்களா சந்திரசேகர் திருமணத்துக்கு முன்பே நன்கு அறிமுகம் என்பதால் நல்ல ஐக்கியத்துடன் குடும்பம் செல்கிறது. கணவரின் நெருக்கடியான அலுவல் சூழலை உணர்ந்து மங்களா முழு ஒத்துழைப்பும் தருவது இவருக்கு ஊட்டச்சத்தாக உள்ளது.    இவர்களது மூத்த மகள் செளந்தர்யா கோவை சின்மயாவிலும், இளைய மகள் சுபிக்‌ஷா குவைத்திலும் படிக்கிறார்கள்.    தமிழில் பற்றும் ஆர்வமும் உள்ள இத்தம்பதிகள் பாரதி கலைமன்றம் மற்றும் குவைத் தமிழ் சங்கம் மூலம் கலை மற்றும் கலாச்சார பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.     கோவையில் அமெரிக்க தரத்திற்கு  C.A  கோச்சிங் தர கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்பது சந்திராவின் எதிர்கால லட்சியம்.       ஜி.ராஜசேகர்:    நம்பிக்கை வாழ்க்கையின் அச்சு, அதிலும் தனது திறமையின் மேல் நம்பிக்கை மிக முக்கியம். இத்துடன் உண்மையான உழைப்பும், ஈடுபாடும் இருந்துவிட்டால் வெற்றி நம் பக்கம்தான் என்பதில் தளராத நம்பிக்கையுடையவர் திரு.ராஜசேகர், Assistant General Manager ஆக Warba Insurance Co., Kuwait  ல் பணியாற்றுபவர்.     B.Com ல் மாநிலத்தில் இரண்டாவது இடத்தையும் C.A ல் அகில இந்திய அளவில் 19வது இடத்தையும் இன்சூரன்ஸ் தேர்வின் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்சியில் தென்னகத்தில் முதல் இடத்தையும் எட்டிப் பிடித்ததற்கு இவர் கூறும் காரணம் புதிய பரிமாணத்தில் உள்ளது. படிப்பை ஒரு கடமையாக (நிர்ப்பந்தமாக) நினையாமல் அதை நேசித்தால் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எளிது. மேலும் எந்தப் படிப்பையும் ஆழமாக படிப்பதுதான் சிறந்தது என்கின்றனர்.     ``படிப்பும் அறிவும் மட்டும் போதாது. அதை எப்படி எங்கு எப்பொழுது பயன்படுத்துவது (Application ) என்பதில்தான் வெற்றியின் ரகசியம் உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக Warba வின் பொது மேலாளர் திரு. Tawfik Al Bahar அவர்களைக் குறிப்பிடுகின்றார். சாதாரண கம்பெனியான Warba  வை 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள கம்பெனியாக வளர்வதற்கு முக்கிய காரணம் புதிய முயற்சிகள் மற்றும் வெவ்வேறு MNC உடன் கம்பெனிகளுடன் ஒப்பந்தங்கள். இதில் ராஜசேகர் பங்கும் அதிகம் என்றால் மிகையாகாது. உழைப்பும், நேர்மையும் இருந்தால் மட்டும் போதாது. கடவுளின் அருளும் முக்கியம் என்பதில் நம்பிக்கை அதிகம் உடையவர். தேவாரம், திருவாசகம் பாடல்களில் ஈடுபாடு அதிகம்.    மனைவி உஷாராணி புதுக்கோட்டையை சேர்ந்தவர். கணவர் அலுவலக வேலைகளுக்கு அதிக நேரம் செலவிட வேண்டிய கட்டாயம். எனவே மனைவிதான் வீடு மற்றும் குழந்தைகள் நிர்வாகம். திருமதி உஷாவின் தாத்தா தெய்வத்திரு தர்மராஜாபிள்ளை புதுக்கோட்டை சேர்மனாகவும் மேலும் சொந்தப் பணம் பல லட்சங்களை பள்ளிக்கூடம் மற்றும் பொதுப் பணிகளுக்கு தானங்கள் வழங்கியவர்.    மகள் சுபாஷிணி  M.Com மற்றும் இன்சூரன்ஸ் தேர்வுகள் முடித்துள்ளார். கணவருடன் சிங்கப்பூரில் வாழ்கின்றார். மகன் கார்த்திக்USA ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துள்ளார்.    தஞ்சையில் பிறந்த இவர் கம்பெனி அலுவல் காரணமாக உலகின் பல பாகங்களுக்கு சென்று வந்துள்ளார். புதிய இடம் புதிய மக்களை சந்திப்பதில் ஈடுபாடு அதிகம். பயணங்கள் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பயமும் தயக்கமும் அதிகம். துணிந்து செயல்படுவதில்லை என்பது இவரது குறை. இவற்றை ஒழித்தால் தமிழர்கள் நிச்சயம் மேலும் பல வெற்றிகளை பெற இயலும்.    இந்தியாவின் வளர்ச்சி படிப்பாலும், பண்பாலும் வளர்ந்தது. எனவே படிப்பு சம்பந்தமான உதவிகளில் ராஜசேகருக்கு ஈடுபாடு.    கடந்த காலம் முடிந்த ஒன்று. எதிர்காலம் நம் கையில் இல்லை. நிகழ்காலத்தை இனிதாக வாழ வேண்டும் என்னும் கருத்துக் கொண்டவர். பிறருக்கு உதவினால் அதனுடைய நற்பயனை இப்பிறவியிலேயே அனுப்பவிக்கலாம் என்பது இவரது அனுபவம். இவ்விஷயத்தில் Frontliners group ல் பணிபுரிவதை பெருமையாகக் கருதுகின்றார்.    குவைத் இந்தியர்களுக்கு நம்மூரிலும் மருத்துவசேவை கிடைக்க ஆவன செய்யும் முயற்சியில் ராஜசேகர் தற்போது இறங்கியுள்ளார்.      ஸ்ரீ ராம்    ``தன்னம்பிக்கைதான் எனது பலம். எப்போதும் ஆக்கப்பூர்வமாய் ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும். சும்மாவே இருக்க முடியாத சுபாவம் எனக்கு. எந்த காரியத்தையும் ஒத்தி வைக்காமல் உடனுக்குடன் செய்து முடிப்பது கூட எனது வளர்ச்சிக்கு உதவிவருகிறது’’ என்கிறார் குவைத் Wataniya  டெலிகாமின் Chief Financial  திரு.ஸ்ரீராமசந்திரன்.     குவைத்தின் மொபைல் போன் தொடர்புகள் MTC மற்றும் Wataniya  இரண்டு நிறுவனங்கள் மட்டுமே பெரும் போட்டிபோட்டு செயல்பட்டு வருகின்றன.     திருநெல்வேலியை சேர்ந்த ஸ்ரீராமின் தந்தை பெங்களூர் Rajdoot லும் அம்மா Ponds கம்பெனியிலும் பணிபுரிந்தவர்கள். ஸ்ரீராமின் எட்டு வயதிலேயே தந்தை தவறிவிட இவரையும் உடன்பிறப்புகளையும் ஆளாக்கினது தாய்தான்.     அந்தக் கஷ்ட நஷ்டங்கள் அறிந்து உணர்ந்து வளர்ந்ததாலோ என்னவோ ஸ்ரீராமிடம் ஆச்சர்யப்படும்படி எளிமை. பிறருக்கு உதவும் குணமும் இயல்பாகவே அமைந்திருக்கிறது.      ஸ்ரீராம் பி.எஸ்ஸி கணிதம் முடித்து, C.A., I.C.W.A., 1990ல் முடித்து கல்கத்தா யூனியன் கார்பைடு, இங்கிலீஷ் எலக்ட்ரிக் பிறகு சென்னை 3M India என பணிபுரிந்து 1998ல் குவைத் Algannim இன்டஸ்ட்ரீஸில் சேர்ந்தார்.     மறுவருடத்தில்,  Chief  அக்கவுண்டன்ட்டாக இக்கம்பெனியில் சேர்ந்தவர் படிப்படியாக பைனான்ஸ் டைரக்டராகி வளர்ந்து இன்று இந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.      பல நாட்டினரும் பணிபுரியும் இக்கம்பெனியில் ஒரு இந்தியர் –அதுவும் தமிழர் –இந்த இளம் வயதில் பெரிய பதவியில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம்.      Kipco குரூப்பை சேர்ந்த இக்கம்பெனி நன்கு படித்த அனுபவமுள்ளவர்களை வைத்து நிர்வகிப்பதால் உழைப்புக்கும் தகுதிக்கும் இங்கு நல்ல மரியாதை கிடைக்கிறது என்கிறார். ஸ்ரீராம்,    ``முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால் ஆத்மார்த்தமாய் இங்கு செயல்பட முடிகிறது. பல நாட்டு கலாச்சாரங்கள் கொண்டவர்களுடன் இனைந்து பணிபுரிவது சந்தோஷம் தருகிறது.     1999ல் ஆரம்பிக்கப்பட்ட இக்கம்பெனி குறுகிய காலத்திலேயே மாபெரும் வளர்ச்சி அடைந்திருப்பதற்கு காரணம் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும்  Team work  ம் என்கிறார்.   ஸ்ரீராமின் கவனம் அலுவலகத்தில் முழுநேரம் இருந்தாலும் கூட     மேல்படிப்புகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். படிப்பிற்கும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் எல்லையில்லை எனும் இவர் குவைத் வந்த பின்பு C.P.A., C.I.S.A., C.F.A  எல்லாம் முடித்திருக்கிறார்.     `படிப்பு எப்போதும் நம்மை ஃப்ரெஷாகவும் இளமையாகவும் மாணவ பருவ உற்சாகத்துடனும் வைத்திருக்கிறது!     ``குறைகள், தவறுகள் எங்கும் எதிலும் சகஜம். அவற்றை தள்ளிப் போடாமல், தவிர்க்காமல் உடனே சரிபண்ணிவிட்டால் பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்’’ என்கிறார்.     ஸ்ரீராம் இயல்பில் மென்மையானவர் என்றாலும் கூட பணவிஷயத்தில் கடுமை எனலாம். உயரமான இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி பயணித்து குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்க வேண்டி முயற்சி எடுத்து வெற்றி பெறுவது இவரது சாதனை! கம்பெனிக்கு வேண்டி யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல புராஜக்ட்டுகளை நிர்ணயித்து அவற்றை வெற்றிகரமாய் செய்து காட்டியிருப்பதால் இவருக்கு நிர்வாகத்தில் உயர்ந்த இடம்!    திருமதி சாந்தி ஸ்ரீராம், சாஃப்ட்வேர் துறையை சேர்ந்தவர் என்றாலும் கூட- குடும்பத்தை கவனிக்க வேண்டி –அதைவிட்டுக் கொடுத்து இவருக்கு பக்கபலமாய் இருந்து வருகிறார்.    பள்ளி-கல்லூரி நாட்களில் விளையாட்டு வீரராக ஹாக்கி, கிரிக்கெட்டில் இருந்தவருக்கு அந்த ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் பணியிலும் தொடர்கிறது.   இக்கம்பெனியின் CEO ஆக வளர வேண்டும் என்பது ஸ்ரீராமின் தற்போதைய லட்சியமுகமது நாசர் இம்ரன்    பொதுவாக தமிழ்நாட்டு தமிழர்களை விட ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் உணர்வும் பற்றும் அதிகம் என்பார்கள். அதற்கு திரு.முகமது நாசர் இம்ரனும் விதிவிலக்கல்ல.    குவைத்தில் முன்னிணியிலிருக்கிற பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனியான Verminex ல் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் மேனேஜரான இவர் ஸ்ரீலங்காவில் நிகாம்பேர் பகுதியை சேர்ந்தவர்.    அப்பா திரு.ஹீசைன் சரூக் செளதியில் வேலை பார்த்து சம்பாதித்ததாலும்-இறை அருளாலும் கஷ்டப்படாமல் வளர முடிந்தது என்கிறார் இம்ரன்.    இம்ரன் அல் ஹிலால் சென்ட்ரல் கல்லூரியில் பி.எஸ்ஸி (இரசாயனம்) முடித்து 1990ல் செளதி-பின்லாடன் குரூப்பில் பெஸ்ட் கண்ட்ரோல் ஆபரேஷன் மானேஜராக சேர்ந்து 4 வருடங்கள் பணியாற்றினார்.    பிறகு ஸ்ரீலங்கா திரும்பி –கொழும்புவில் Lawson  கண்ட்ரோல் கம்பெனியில் ஆபரேஷன் மேனேஜராக பணிபுரிந்து நல்ல அனுபவம் பெற்று 1997 ல் குவைத் வந்து இக்கம்பெனியில் சேர்ந்து குறுகிய காலத்திலேயே பெயரும் புகழும் பெற்றிருக்கிறார்.    இதன் உரிமையாளர் திரு.ஷேக் ஃபஹத் யூசுஃப் செளத் அல் சபா தனக்கு முழுசுதந்திரம் கொடுத்து இயங்க வைத்திருப்பதாக மகிழ்கிறார்.    இந்த கம்பெனி-வீடுகள், ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட்கள், பேக்கரி, உணவு உற்பத்தி கம்பெனிகள் உணவு குடவுன்கள், பயிர்கள், அலுவலகங்கள், ஏர்போர்ட் துறைமுகம், கப்பல்கள், விமானங்கள் என குவைத் முழுக்க சர்வீஸ் தந்து வருகின்றது.   சமீபத்தில் கைப்பிடித்த மனைவி ஃபாத்திமா இவருக்கு பலமாய் இருக்கிறார்.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:37          வேகம், சுறுசுறுப்பு, எளிமை, சிறந்த கஸ்டம் சர்வீஸ் இவரது வெற்றிக்குக் காரணங்கள் வாழ்க்கையில் கஷ்டபடாமல் வளர்ந்திருந்தாலும் கூட பிறர் கஷ்டம் உணர்ந்திருப்பதால் சம்பாத்தியத்தில் 25 சதவிகிதம் நலிந்தோருக்காக உதவி வருகிறார்.     அலைச்சலும், டென்ஷனும் நிரம்பிய துறை இது என்றாலும் கூட இம்ரன் இதை விரும்பி ஏற்றுக் கொண்டிருப்பதுடன், நிறைந்த லாபம் தரும் இத்தொழிலை ஊரிலும் சொந்தமாய் ஆரம்பித்து நடத்துவதை லட்சியமாய் கொண்டிருக்கிறார் இவர் கிரிக்கெட் வீரரும் கூட.     நம்பிக்கை தான் வாழ்க்கை என நம்பும் இவர் தனது வெற்றிக்கு நம்பிக்கையும் முயற்சியும் தான் மூலதனம் என்கிறார்.      சீனா-தனா  (சையத் அப்துல்காதர்)    ``இந்த உலகில் தீர்க்க முடியாத பிரச்னைகள் என்று எதுவுமில்லை.     எதற்கும் ஒரு முயற்சி வேண்டும். தளரா மனம்! கடுமையான உழைப்பு! ஒரு சிக்கல் வந்துவிட்டால் `ஐயோ... எனக்கு மட்டும் ஏனிப்படி வருகிறது!’ என்று கலங்கி அமர்ந்துவிடக் கூடாது.    இன்று வெற்றி பெற்றவர்களின் சரித்திரத்தை அலசி ஆராய்ந்தோமானால் கஷ்டப்படாமல் –தோல்விகளை சந்திக்காமல் எவருமே முன்னுக்கு வந்ததில்லை என்பது புரியும் ஆப்ரஹாம் லிங்கன் பலமுறை தோற்று இறுதியில் ஜனாபதி ஆனார்.’’     சீனா தானா என பிரியமாய் அழைக்கப்படுகிற துபாய் இந்திய தொழிலதிபர்களில் குறிப்பிடத் தகுந்தவரான திரு.சையத் அப்துல்காதர் தெளிவுடன் பேச ஆரம்பித்தார்.     பெரிய பெரிய கம்பெனிகளின் அதிபர் என்கிற மமதை இல்லாத தன்மை! நகைச்சுவை ததும்பும் பேச்சு! இலக்கியத்தின் மேலுள்ள ஆர்வம்! பொதுக் காரியங்களுக்கும் மத நல்லிணக்கத்திற்கும் பாடுபடும் பாங்கு! ஈகைக் குணம்!     இவை எல்லாவற்றையும் விட நாட்டுப்பற்று! மொழிப்பற்று! துபாயில் காலூன்றியிருந்தாலும் கூட நம் நாடு-நம் மக்களின் முன்னேற்றம் எனச் சிந்தித்து செயல்படும் பேருள்ளம்!     மணிமேகலைப் பிரசுரத்தின் அதிபர் திரு. ரவி தமிழ்வாணந்``குவைத்தில் வெற்றிகரமாய் செயல்பட்டு வரும் இந்தியர்களை உள்ளடக்கி FRONTLINERS  எனும் புத்தகம் 10 பகுதிகள் எழுதி –அதன் மூலம் 60 லட்ச ரூபாய்க்கு மேல் இந்தியாவில் பல அறக்கட்டளைகளுக்கும் நண்பர்களுடன் சேர்ந்து உதவி வருகிறீர்களே!     அது மாதிரி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்ப் பண்பாளர்களையும் சந்தித்து எழுதித் தாருங்கள்’’என்று துபாய்க்கு என்னை அழைத்திருந்தார்.     அன்று திரு.சீனா தானாவின் வீட்டில் அவரது உபசரிப்பில் நெகிழ்ந்து போனோம். எழுத்தாள நண்பர் கஸாலி முதற்கொண்டு உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள், வெளியூர் விருந்தினர் என்று பலரும் அவரது உபசரிப்பில் திளைத்துப் போனார்கள்.      சீனா தானா கோர்வையாய் –அதே சமயம் அழுத்தம் திருத்தமாய் சொல்ல வந்த விஷயங்களை தெளிவுபடுத்துகிறார். மேடையிலும் கூட இவருக்கு பேச்சு `வாய்’ வந்த கலை!     சுமார் 30 ஆயிரம் அலுவலர்களுக்கு மேல் அரபு நாடுகளில் மிக அதிக எண்ணிக்கையில் ஆட்களுக்கு வேலை தருகிற கம்பெனி என்கிற சிறப்புப் பெற்றுள்ள ETA  அஸ்கான் கம்பெனியின் துணை நிறுவனமான SKY Group of   கம்பெனியின் டைரக்டரும்CEO  வுமான திரு சையத் அப்துல்காதரின் எளிமை நம்மை ஈர்க்கிறது.     கீழ்க்கரையைச் சேர்ந்த இவரது தந்தை திரு.முகமது அப்துல்ஹமீது மிகவும் கண்டிப்பானவர் . நீதி, நேர்மை என்று எப்போதும் அவர் அறிவுறுத்துவார். அறிவுக்கு அப்பா –வழிகாட்டுதலுக்கு அம்மா என்று இவருக்கும் இவரது அண்ணன் திரு. சையது சலாஹீதீனுக்கும் அடித்தளம் சிறப்பாக அமைந்தது. இவர் சின்ன தம்பி என்பதால் சி.த.சீனா தானா.     அம்மா வாழ்வின் நெறிமுறைகளையும் நல்ல விஷயங்களையும் சொல்லி தன்னம்பிக்கை ஊட்டுவார். ``வாயிருந்தால் வங்காளமும் போகலாம்’’ என்கிற தாயின் தாரக மந்திரம் இவருக்கு டானிக்காக அமைந்தது.     சங்கோஜமில்லாமல், தாழ்வு மனப்பான்மையில்லாமல் இளம் பருவம் முதலே வெளியே எல்லோருடனும் பழகிய அனுபவம் வளர்ச்சிக்கு அவருக்குப் பெரிதும் உதவிற்று.     `சி.த’- 1966ல் லயோலாவில் –பி.காம் முடித்து அப்பாவின் சிங்கப்பூர், மலேசியா,கொழும்பு நவரதன வியாபாரத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.     வியாபாரத்தில் லாப-நஷ்டங்கள் சகஜம் லாப நஷ்டங்களை சகித்துக் கொள்ளலாம். சமாளித்து விடலாம். ஆனால் நம்பிக்கைத் துரோகத்தை?     ஹாங்காங்கில் வியாபாரம் செழிப்பாக இருந்த சமயத்தில் சீனர் ஒருவர் கோடிக்கணக்கில் ஏமாற்றிவிட இவர் கடனாளியாக வேண்டி வந்தது. எதிர்பாராத அதிர்ச்சி, ஏமாற்றம், அதிலிருந்து மீள முடியுமா என்கிற பயமும் ஏற்பட்டது.     இருந்தாலும்கூட –பெற்றோர்களின், உறவினர்களின் அறிவுரை மனம் தளராமல் இருக்க உதவிற்று. அந்த நேரத்தில் கடன் கொடுத்த குஜராத்திகள் நெருக்கடி தராமல் ஆறுதல்படுத்தினது மறக்க முடியாத விஷயம்.     வியாபாரத்திற்கு அப்பாற்பட்டு குஜராத்திகளுடன் இவருக்கு நல்ல உறவு இருந்து வந்தது. அவர்களுக்குள் ஒரு பிரச்சினை என்றால் முஸ்ஸீம்களைப் பஞ்சாயத்துக்கு அழைக்கிற அளவிற்கு அவர்களிடம் நட்பு!     இறைநம்பிக்கையும், தைரியமாயிரு எல்லாம் சரியாயிடும் என்று பெரியவர் திரு.பி.எஸ்.அப்துல்ரஹ்மான் அவர்கள் கொடுத்த ஊக்கமும், உதவியும் இவரை அந்தக் கடனிலிருந்து படிப்படியாக மீள வைத்தது.     1980ல் துபாயில் ETA வின் ஒத்துழைப்புடன் ALHASEENA நகைக்கடையை பார்ட்னராக ஆரம்பித்து ஐந்து வருடங்கள் நடத்தினார்.     பிறகு இந்தியா திரும்பி ரியல் எஸ்டேட் தொழிலில் தனியாய் இறங்கினார். ஆரம்பகாலம் சி.த.மிகவும் கஷ்டப்படவேண்டி வந்தது. ரயில் பயணம், சாதா ஹோட்டல் வாசம் என தன் தேவைகளை சுருக்கிக் கொண்டார்.     அந்த நேரம் சகோதரர்  சலாஹீதீன் வசதியாக இருந்தார். அவரிடம் உதவி கேட்டால் மகிழ்ச்சியாகச் செய்வார். அவரும் உதவி வேண்டுமா என்று கேட்கவும் செய்தார்.     ஆனால் சி.த.வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சமாளித்தார். அது அவரது உள் மனதில் இருந்த தன்னம்பிக்கையின் வெளிப்பாடு!      கஷ்டமான நேரத்தில் பிறரை எதிர்ப்பார்க்கக்கூடாது. உதவி செய்ய ஆள் இருப்பதை ஒரு தெம்பாக வைத்துக் கொண்டோமானால் பயம் தோன்றாது. உதவ முன் வருகிறார்கள் என்று உடனே கை நீட்டிவிட்டோமென்றால் அப்புறம் முயற்சி எடுக்கத் தோன்றாது. நமது உழைப்பில் தீவிரம் இல்லாமல் போய்விடும்.     சொந்த முயற்சியிலேயே ரியல் எஸ்டேட்டில் வளர்ந்து பிறகு 2000 ஆண்டு முதல் சகோதரருடன் சேர்ந்து பல தொழில்களிலும் இறங்க ஆரம்பித்தார்.     அதில் ஒன்றுதான் ஸ்கை குரூப் கம்பெனிகள், கேட்டரிங், கூரியர், அட்வர்டைசிங், ஜெனரல்டிரேடிங்,பில்டிங் மெட்டீரியல் விநியோகம் போன்று பத்துவிதமான பிரிவுகளை இது உள்ளடக்கி -200 பேர்களுக்கு மேல் இங்கு வேலை பார்க்கிறார்கள்.     சி.த. பதற்றப்படுவதில்லை. பிரச்னைகளை சர்வசாதாரணமாய் அணுகி அனுபவஸ்தர்களில் ஆலோசனையைப் பெற்று சுமூகமாய் முடிவெடுப்பது இவரது சிறப்பு.     எஜமான் பாவத்துடன் நிர்வாகம் செய்யாமல் அலுவலர்களை அரவணைத்துப் போகும் அதே நேரத்தில் தவறு கண்டால் கடுமையாய்க் கண்டிப்பார்.     அதனால் நிர்வாகம் சீர்கெடாமல் இருப்பதுடன் அலுவலர்களும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர்.     மனைவி திருமதி ஒளிமுத்து இவருக்குப் பக்கபலமாக இவர்களின் 4 மகள்களும் சிறப்பாய் செட்டிலாகியுள்ளனர். மகன் திரு.முகமது அலி ETA ல் Properties develop ல் மேனேஜ்மென்ட் எக்ஸிக்யூட்டிவாயிருக்கிறார்.    இந்தியாவில் ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவுவதுடன் வேலை வாய்ப்பு தரக்கூடிய கல்லூரி படிப்பை உருவாக்குவதும், இவரது நோக்கம்,மேற்படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார். இதற்காக ஊரில் Industrial Technical Institute ஆரம்பிக்கவிருக்கிறார். இதைப் பார்த்துக் கொள்ள தகுதியான நபர்கள் முன் வந்தால் அனைத்து உதவிகளும் செய்ய சி.த. தயாராக இருக்கிறார்.     சி.த. மத நல்லிணக்கம் வளர்க்க புத்தகங்கள் வெளியிடுகிறார். திருச்சூர் ஆனின் உள்ளர்த்தங்களை ஆராய்ச்சி செய்து வருகிறார். துபாயிலிருந்து சமூகக் கண்ணோட்டத்துடனும், நல்ல கருத்துகளுடன் கூடிய பொழுது போக்கு அம்ச தொலைக்காட்சிக்கு உதவிகரமாய் இருக்கிறார்.     இலக்கியம்-மற்றும்-சமூக நோக்குடன் கூடிய நிகழ்ச்சிக்குச் சென்று சொற்பொழிவாற்றுகிறார்.      ``உண்ண உணவும், உடுக்க உடையும், உறைய உறைவிடமும் தந்த ஏக இறைவனே புகழுக்குரியவன்; அவனே நம்மை நேர்வழி செலுத்துகிறான். பகைவனையும் மரியாதை செய்- அகிம்ச வழியைப் பின்பற்று’’.                                            - நபிகளின் வாக்கு  தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.                                             -திருக்குறள்  எந்நாட்டார் போற்றும் இறைவா போற்றி தென்நாடு போற்றும் சிவனே போற்றி.                                              -மாணிக்கவாசகர்  நன்றியுடன் இந்த மூன்று விஷயங்களையும் மேற்கோள் காட்டி மேடையில் பேசுவது இந்த சீனா-தானாவின் சிறப்பு.    தனது இந்த நிலைமைக்கு காரணமாக உள்ள சகோதரர் சலாஹீதீனை இவர் நினைவு கூருகிறார்.     திரு.சையது எம்.சலாஹீதீன்;    திரு.சீனா தானா வளர்ச்சிக்கு பெ.த.என்று அழைக்கப்படும் அவரது சகோதரர் -`பெரிய தம்பி’ திரு.சையது எம்.சலாஹீதீனை நன்றியுடன் நினைவு கூருகிறார். இவர் ETA அஸ்கான் குரூப்பின் நிர்வாக இயக்குனர். சி.த.வுக்கு 4 வயது மூத்தவரான இவர் வியாபாரத்தில் ஈடுபட வேண்டி கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல் போயிற்று.    அனைவருடனும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.     அப்பாவின் நவரத்தின வியாபாரத்தில் பிறகு திரு.பி.எஸ். அப்துல்ரஹ்மானுடன் சலாஹீதீன் துபாய் வந்தவர்.    B.S.A அந்த நாட்களில் ALGHURAIR  உடன் சேர்ந்து ASCOn கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி துபாயில் ஆரம்பிக்க –அதை சலாஹீதீன் நிர்வகித்தார்.பிறகு கட்டுமானத்திற்குத் தேவையான எலக்ட்ரிகல், A/C  போன்ற துணை உபகரணங்களுக்காக எமிரேட்ஸ் டிரேடிங் ஏஜென்ஸி கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது.      பிறகு ஷிப்பிங், விமானம், லிஃப்ட், மெக்கானிக், எலக்ட்ரிகல் என 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் பெற்று இக்கம்பெனி இன்று வளைகுடா நாடுகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் பெரும்பாலும் –இந்தியா அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு தரப்படுகிறது.      திரு.சலாஹீதீனின் (ETA)  கருணை உள்ளத்தால் துபாயில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வதுடன் இந்தியாவிற்கும் பல வகைகளில் பொருளாதார வளர்ச்சி கிடைத்து வருவது உண்மை.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:38        பி.ஜெ.வில்லியம்:    மருத்துவர்கள் கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் ஆரம்பித்து நடத்துவது என்பது இயல்பான ஒன்று. மருத்துவத்துறைக்கு சம்பந்தப்படாத ஒருவர் அதுவும் வெளிநாட்டில் சிறப்பான மருத்துவ சேவை செய்து வருகிறார் என்பது ஆச்சர்யமான செய்தி.     துபாயில் கராமா மெடிக்கல் சென்டரின் டைரக்டரான திரு.பி.ஜே.வில்லியம் தான் அந்த பெருமைக்குரியவர்.     மதுரை –சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர்கள் இருவருமே ஆசிரியர் தொழில் பார்த்தவர்கள். பயிற்றுவித்தலை வெறும் தொழிலாக மட்டும் செய்யாமல் ஆத்மார்த்தமாய் இலவசமாய் கிராமத்து மக்களுக்கு படிப்பறிவு ஊட்ட வேண்டும் என்று 1932 ல் திண்ணை பள்ளியாக ஆரம்பித்து வளர்ந்து இன்றும் அது நடந்து வருகிறது.     வசதியில்லா பிள்ளைகளை பெரிய அளவில் படிக்க வைத்து உருவாக்கிய இவரது தந்தை திரு.எஸ்.டபிள்யு.பொன்னைய்யா `கண் திறந்த கல்வித் தந்தை’ எனும் பெயர் பெற்றிருக்கிறார்.     இப்போது அப்பள்ளியையும் தந்தையின் நோக்கத்தையும் நிறைவேற்றும் வண்ணம் வில்லியமும் அவரது சகோதரியும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.     பள்ளியை நடத்த வேண்டி –ஆசிரியருக்கு படித்த வில்லியம் பொருளாதாரத்தை வலுபடுத்த வேண்டி 1978 –ல் துபாய் வந்து வேறு துறையை தேர்வு செய்தார்.     கிளார்க்காக பணியை ஆரம்பித்த வில்லியம் SULTAN Co  வில் சேல்ஸ் மானேஜராக ரிடையரானார்.      கடந்த 20 வருடங்களாய் ஒய்வு நேரத்தை வீணடிக்க விரும்பாமல் மெடிக்கல் சர்வீஸ் மற்றும் உணவு தொழிலில் கவனம் செலுத்தி பெற்ற அனுபவம் இப்போது இத்துறைகளை முழு நேர தொழிலாக்க உதவியிருக்கிறது.     கராமா கிளினிக்கில் 15 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். கடலின் மொத்த மருத்துவ பிரச்னைகளையும் சரி பண்ணும் விதமாக எட்டு பிரிவுகளுடன் குழந்தைகள், கைனா, பொது, டென்ட்டல், எலும்பு, கார்டியாலஜி, நியூராலஜி, கண் என இயங்கி வருகின்றது.     சர்வதேசத் தரத்தில் தமிழர்களுக்கு சேவை செய்யும் சென்னை மருத்துவமனை என நம்மவர்களால் பிரியமாய் அழைக்கப்படுகிற அளவிற்கு இதன் சேவையும் வளர்ச்சியும் அபரிமிதமாயிருக்கிறது.     பணம் ஒன்றையே குறிக்கோளாக கொள்ளாமல் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்ப்பது இதன் சிறப்பு.   துபாயில் ஏறக்குறைய 2000 குடும்பங்கள் இவர்களது வாடிக்கையாளர்கள்!     இனிய பண்பும், எளிமையும், இளகிய குணமும், மனிதாபிமான அடிப்படையில் அணுகும் முறையும், ஆத்மார்த்தமும் வில்லியம் அவர்களின் வெற்றிப் படிகள் என்று சொல்லலாம்.     மதுரையை சேர்ந்த டாக்டர் அவெந்திகாபாய் அவர்களை அறிமுகப்படுத்தி கிளினிக்கின் மெடிக்கல் டைரக்டராக செயல்படுவது இதன் வெற்றிக்கு பக்கபலம் என வில்லியம் மகிழ்கிறார்.     இங்கு இலவசமாய் மெடிக்கல் கவுன்சிலிங் செய்கிறார்கள்.சாதாரணமாய் வெளிநாடுகளில் –தனியார் மருத்துவமனைகளில் நோயை கண்டறிவதற்கே பெரும் தொகை செலவிட வேண்டிவரும் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.   வில்லியத்தின் மகன் நியூயார்க்கில்  MBBS ம், மகள் டென்டிஸ்டாகவும் இருக்கிறார்கள்.     பர்துபாயில் இவருக்கு சொந்தமான `மதுரா ஸ்வீட் மீல்ஸ்’ பெயர் பெற்ற தென் இந்திய சைவ உணவகம்! இதன் மதுரை மணம்-குறைந்த விலை, வேகமான சேவையில் ஈர்க்கப்பட்டு வட இந்தியர்களும் விரும்பி சாப்பிட வருவது இதன் சிறப்பு.     என்னதான் துபாயில் கிளினிக் நடத்தினாலும் சம்பாதித்தாலும், வில்லியத்தின் சிந்தையும் செயலும் நம் ஊரை நோக்கியே இருக்கின்றது.       இலவசமாய் சேவை செய்யக்கூடிய மெஷினரி மருத்துவமனையை நம்மூரில் ஆரம்பிக்க வேண்டும் என்பது இவரது லட்சியம்.    வாழ்த்துகிறோம்!.        டாக்டர் காந்தி முருகன்;     துபாயில் இந்திய டாக்டர்களுக்கு நல்ல பெயரும் புகழும் உள்ளது. அதுபோலவே தமிழ்நாட்டு மருத்துவர்களும் பெருமளவில் சிறப்பாக இயங்கி வருகின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் டாக்டர்கள் சேர்ந்து ஆரம்பித்துள்ள அமைப்பின் கமிட்டியில் இடம்பெற்றுள்ள டாக்டர் ஜி.காந்தி முருகன் M.D  சிராஜீதீன் மெடிக்கல் சென்டரில் பொது மருத்துவராக இருக்கிறார்.   மதுரை போடிநாயக்கனூரைச் சேர்ந்த இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.     1985ல் மதுரை மெடிக்கல் கல்லூரியில் MBBS  முடித்ததும் 2 வருடங்கள் கேரளம் –திருவல்லா –புஷ்பகிரி மருத்துவமனையில் பணிபுரிந்தார்.     பிறகு சென்னை விஜயா மருத்துவமனையில் மறைந்த டாக்டர் T.G  செரியனுக்கு கீழ் எமர்ஜென்ஸி மெடிக்கல் ரூம் இன்சார்ஜாக ஒரு வருடம் அடுத்து சிவகங்கை பிரைமரி ஹெல்த் சென்டரில் பணிபுரிந்து மதுரை மெடிக்கல் கல்லூரியில் ஜெனரல் மெடிசினில்  M.D முடித்தார்.    கோவை ESI  மெடிசின் டிபார்ட்மென்ட்டில் சிவில் அசிஸ்டென்ட் சர்ஜனாக பொறுப்பேற்று, 1998ல் துபாய் வந்து ஹெல்த் கிளினிக்கில் பணியாற்றி இப்போது இந்த மருத்துவமனை.     உலகத்திலேயே அதிக அளவில் சர்க்கரை நோய் உள்ளது UAF  ல்தான் என்கிறார் டாக்டர் காந்தி. அதற்கு காரணம் பரம்பரை, தட்பவெப்பநிலை, சாப்பாட்டு பழக்கங்கள், ஏஸி, உடல், பருமன் என பல காரணங்கள் உண்டு. அதே மாதிரி அல்சர், அலர்ஜி, சிறுநீரக கல் போன்றவையும் அதிகம் வர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்.   திருமதி காந்தீ ஜெயமீனாட்சி இவருக்கு பக்கபலம்.     நமது கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தன் பங்களிப்பை தரும் காந்தி முருகன் இலவச மருத்துவ முகாம்களிலும் கலந்து கொண்டு சேவையாற்றி வருகிறார்.     UK யில் MRCP  எழுதுவதும், கோவையில் சொந்தமாய் மருத்துவமனை ஆரம்பித்து சேவை செய்ய வேண்டும் என்பதும் இவரது தற்போதைய லட்சியம்.      TKC சேகரன்:        செளதி, சுந்தார்,சென்னை, சூடான் பஹரினில் கிளைகள் பெற்றுள்ள Adroit Systens சாஃப்ட்வேர் கம்பெனியின் பிரிசிடென்ட்டான திரு.டி.கே.சி சேகரன் கம்ப்யூட்டர்துறை தான் எதிர்பார்க்காத ஒன்று என்கிறார்.    சென்னையைச் சேர்ந்த இவர் 1971இல் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் B.E(எலக்ட்ரிகல்& எலக்ட்ரானிக்ஸ்) முடித்து டெல்லிDRDO (Defence Research Development Organisation ) இரசாயனக் கூடத்தில் பணிக்கு சேர்ந்தார்.     அங்கிருந்து ஹைதராபாத்திற்கு எலக்ட்ரானிக்ஸ் மைக்ரோ-வேல்ஸ் ஸ்பெஷ்லைஸ் செய்ய- அனுப்பி-கம்ப்யூட்டர் டிவிஷனில் நியமித்தார்கள். டெல்லியிலிருந்து ஹைதராபாத் மாற்றத்திற்கு சந்தோஷப்பட்டவருக்கு கம்ப்யூட்டர் டிவிஷனை ஏற்க தயக்கமிருந்தது.     ஆனால் நிர்வாகமோ ``கம்ப்யூட்டர் என்றால் இங்கிரு- இல்லாவிட்டால் டெல்லி!’’ என்று பிடிவாதமாய் சொல்லிவிட டிகேசிக்கு அது ஒரு திருப்புமுனையாக டிகேசி சோர்ந்து விடாமல் கம்ப்யூட்டர் துறையில் முழுகவனம் செலுத்தி அந்த அனுபவத்தில் 1979-ல் பாம்பே Hinditron தனியார் கம்பெனியில் சேர்ந்தார்.     அங்கிருந்து யு.எஸ்., மற்றும் நைஜிரியாவிற்கு பொறுப்புகள் கொடுத்து அனுப்பப்ட்டது அவரது கணினி அறிவை வளர்க்க பெரிதும் உதவிற்று.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:39       பிறகு 1984-ல் லண்டனில் Steiger Software;Glaxco Digital Equipment Corporation;        அதன் பிறகு 1985-ல் செளதியில்  Consulting Centre for Finance &Investment இல் சேர்ந்தார். ஒரே ஒரு நபரில் ஆரம்பித்த அக்கம்பெனி-செளதியில் ஹாஸ்பிட்டல்கள், அலுவலகங்கள்,தொழிற்கூடங்களுக்கு Software  செய்து கொடுத்து இவர் 1999 இல் வெளியே வரும்போது 100 பேர் வேலை செய்கிற அளவிற்கு வளர்ந்திருந்தது அந்த வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை உணர்ந்த டிகேசிக்கு கற்ற கல்வி-பெற்ற அனுபவத்தை வைத்து நாமே ஏன் சொந்த கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது என்று தோன்றிற்று.     அதன் விளைவுதான் 2001இல் செளதியில் இந்த Adriot Systems  உருவாயிற்று. பஹரினில் இதன் கிளை TEK Soft! சென்னையிலுள்ள Zeetaa Software ம் இந்த குரூப்பில் அடங்கினதே.     ஐந்து மில்லியன் டாலர் வர்த்தகம் செய்யும் இம்கம்பெனி-வளைகுடா நாடுகள் முழுக்க காலூன்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக குவைத் வந்தபோதுதான் டிகேசியை சந்தித்தேன்.    35 வருட அனுபவம், கம்பெனி தலைவர், என்ஜினியர் என்கிற மமதை இல்லாத எளிமை இவரிடம் விஷயங்கள் பல உள்ளடக்கியிருந்தாலும் கொஞ்டம்கூட அலட்டலில்லா அமைதி.     டிகேசியிடம் அலங்கார பேச்சு கிடையாது சொன்னதை செய்யும் தீவிரம், நேர்மை, நா நயம்! ஊழியர்களிடம் நட்பு பாராட்டி வேலை வாங்குவது இவரது பலம். ஒரு பிரச்னை என்று வந்துவிட்டால் ஊழியர்களுக்கு பாதிப்பு வராமல் அவர்கள் பக்கமிருந்தும், அதே சமயம் நிர்வாகத்திற்கும் இழப்பு ஏற்படாமல் முடிவெடுப்பது இவரது சிறப்பு.     டிகேசி என பிரியமாய் அழைக்கப்படும் இவர் சுமார் 400 பேர்களுக்கு மேல் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.     தொழில் காரணமான அலைச்சல்-அதன் வளர்ச்சிக்கான முயற்சிக்கிடையே குடும்பத்திற்கு போதுமான நேரம் ஒதுக்கித் தரமுடியாத வருத்தம் இவருக்குண்டு.         திருமதி வள்ளி சந்திரசேகரன் (எம்.எஸ்ஸி, கணிதம்) தொலைபேசி துறையில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு கணவருக்கு பக்கபலமாய் இருந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்!   கே.காமேஸ்வரன்:      இந்த குரூப்பை சேர்ந்த சென்னை Zeetaa Software கன்சல்டன்ட் கம்பெனியின் CEO  திரு.கே.காமேஸ்வரன் கும்பகோணத்தை சேர்ந்தவர். பி.எஸ்ஸி பட்தாரியான இவர் ஒரு ஜீனியஸ் என்று டிகேசியே புகழ்கிறார்.     காமேஸ்வரன் I.T மானேஜராக 20 வருடங்கள் கனரா பாங்கிலும், 10 வருடங்கள்  I.T  ப்ராஜக்ட் மானேஜராக செளதி பிரெஞ்சு பேங்கிலும் அனுபவம் பெற்றவர்.     இந்த Zeetaa கம்பெனி ஆரெக்கிள், ERP ஜாவா, ஹோட்டல்களுக்கு இன்ஷிரன்ஸ் கம்பெனிகளுக்கு, சிறு தொழில்களுக்குSoftware புராஜக்ட்கள் செய்து தருகின்றது.     காமேஸ்வரன் 2000 இல் அமெரிக்காவின் Computer Quality Assurance தேர்வில் (உலக அளவில்) கோல்ட் மெடல் பெற்றிருக்கிறார். ஆன்மீகம், எதையும் அலசி ஆராயும் குணமும், கடின உழைப்பும் இவரது பலம்.      டாக்டர் M.K.S. சம்சுதீன் (ஹாங்காங்);     முயற்சி திருவினையாகும் என்பதற்கும் தளரா மனதுடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதற்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். ஹாங்காங் எஸ்ஸெம் பார்மசூடிக் டிரேடிங் கம்பெனியின் பார்ட்னரான டாக்டர்.M.K.S  சம்சுதீன்.     ராமனாதபுரம் –பழைய புகழ் பெற்ற துறைமுகப்பட்டினமான தொண்டியைச் சேர்ந்த இவரது முன்னோர்கள் பெரிய நிலசுவான்தார்களாக இருந்தனர். பர்மாவிலிருந்து தேக்கும் ஒத்தையானை ஓடும் வரவழைத்து வியாபாரம் செய்தவர்கள்.   இவரது தந்தையும் அந்த வழியில் விவசாயமும் வியாபாரமும் பார்த்தவர்.   சம்சுதீன் 1956 -57 மதுரை தியாகராயர் கல்லூரியில் PUC (PUC யின் முதல் செட்) படித்து-     தந்தை நோய் வாய்பட்டு விட –அந்த இளம்பருவத்திலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டார். மதுரை மெடிக்கல் கல்லூரியில்MBBS  முடித்து சம்சுதீன் மெட்ராஸ் மெடிக்கல் சர்வீஸில் அசிஸ்டென்ட் சர்ஜனாகவும் பிறகு சர்ஜரியில் டியூடராக செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டலில் முதல் போஸ்டிங்கும் பெற்றார்.     பிறகு தஞ்சாவூர் அருகே திருவங்காடு பிரைமரி ஹெல்த் சென்டருக்கு மாற்றப்பட்டர். அப்போது வெறும் MBBS  உடன் நிறுத்தாமல் சர்ஜரியும் படிக்க இவருக்கு விருப்பம். அதற்காக MS க்கு அப்ளை பண்ணினார்.     ஆனால் இவரது துரதிர்ஷ்டம் அப்ளிகேஷன் மிஸ்ஸாகி இன்டர்வியூவே வரவில்லை. மனமுடைந்திருத சமயத்தில் நீடுரைச் சேர்ந்த –ஹாங்காங் நவரத்தின வியாபாரி திரு.A.S  தீனின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. அவர் சம்சுதீன் ஆறுதல்படுத்தி ஹாங்காங் வாங்க அங்கு FRCS  எழுதலாம் என்று உற்சாகம் தந்தார்.     அந்த நாட்களில் வெளிநாட்டு விசா கிடைப்பது ரொம்ப சிரமம். மலேசியா போய் அங்கிருந்து தீன் மூலம் ஹாங்காங் கஷ்டப்பட்டு போனவருக்கு ஏமாற்றம்.     எமிகிரேஷனில் –பாஸ்போர்டில் –வேலையில் சேரக்கூடாது என சீல் வைக்கப்பட்டிருக்க-அதை கேன்சல் செய்து வாருங்கள் பிறகு படிப்பை பற்றி பேசலாம் என்றனர்.     அதை கேன்சல் பண்ண ஹாங்காங் மெடிக்கல் கவுன்சிலில் ரெஜிஸ்தர் பண்ண வேண்டும். ஆனால் இந்தியன் MBBS க்கு அங்கு அங்கீகாரம் இல்லாததால் லண்டன்-ஜெனரல் மெடிக்கல் கவுன்சிலில் பதிவு பண்ணுங்கள் என்றனர்.      இதற்கு வேண்டிய வழிமுறைகளை செய்து கொடுக்க ஆறுமாதம் ஓடிப்போயிற்று. சம்சுதீன் கொஞ்சமும் சளைக்கவில்லை. அந்த இடைவேளையில் தெரிந்த நம் மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தார்.     அந்த சமயம் –ஹாங்காங்கில் இருந்த திரு.B.S.A  ரஹ்மான தன் PTC  கம்பெனி மூலம் நவரத்னம் சம்சுதீனுக்கும் சப்ளை பண்ணி பிசினஸில் ஈடுபட வைத்தார்.     இதற்கிடையில் ஹாங்காங் மெடிக்கலில் இவருக்கு பதிவாகி நியூரோ சர்ஜரியில் போஸ்டிங் கிடைத்தது. பிறகு FRCS  க்காக UK போக அப்ளை பண்ண Middlesix Hospital –ல் Attachment  place  கிடைத்தது.    UK போக வேண்டி இந்தியா வந்தபோது குடும்பத்தினர் உடனே செல்ல தடை விதித்தனர்.லண்டனுக்கு எக்ஸ்டென்ஷன் விண்ணப்பிக்க அவர்கள் தராததால் பிரைவேட்டாய் பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தார்.     ஊரிலேயே M.S  செய்யலாம் என முயற்சிக்க தனியாய் பிராக்டீஸ் செய்பவர்களுக்கு M.S  சேர முடியாது என்றனர். சரியென்று சர்வீஸ் கமிஷன் எழுதி 1972 –ல் ராமனாதபுரம் ஹெட் குவார்டர்ஸில் வேலை பெற்றார்.     மதுரைக்கு செல்ல சம்சுதீனுக்கு விருப்பம். ஆனால்  P.G அப்ளை பண்ணினால்தான் செல்ல முடியும் என்கிற நிலைமை. அந்த நேரம் அனஸ்தீஷியாவிற்கு நல்ல மவுசு இருக்க சம்சுதீன் P.G  அனஸ்தீஷியா முடித்தார்.     பிறகு காஞ்சிபுரம் தலைமையகத்தில் 5 வருடம் அடுத்து காரபேட்டை கேன்சர் இன்ஸ்டிடியூட் , மதுரை மெடிக்கல் கல்லூரியில் பார்மகாலஜி டியூடர்; டி.பி.ஆஸ்பத்ரியில் பல டிபார்ட்மென்ட்களிலும் தனியாகவும் பிராக்டீஸ்சும் செய்தார்.     1990 ஹாங்காங் சென்று CARITIS  மெடிக்கல் சென்டர், பிறகு அரசாங்க பெரிய மருத்துவமனையான TUENMUM  -ல் அனஸ்தீஷியனாக 9 வருடங்கள் பணியாற்றினார்.     அங்கு பள்ளிவாசல் மூலம் இலவச கிளினிக் சேவை செய்திருக்கிறார். ஹாங்காங்கில் குடியுரிமை பெற்றுள்ள சம்சுதீன், ரிடையர்மென்டிற்கு பிறகு துபாய் நண்பர் சம்சுதீன் S.S  டிரேடிங் மூலம் சீனப் பொருட்களை அனுப்ப ஆரம்பித்தார்.      சம்சுதீன், ஒரு ஸ்போர்ட்ஸ்மேனும் கூட, PUC  படிக்கும்போது, தமிழுக்கு பெயர் பெற்ற தியாகராயர் கல்லூரியில் சீவக சிந்தாமணியை எடுத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார். மதுரை தமிழ்சங்கத்திலிருந்து வரும் செந்தமிழ் பத்திரிகையில் அவ்வை துரைசாமி, டாக்டர் மு.வ. போன்றோரின் கட்டுரைகளுடன் –மாணவனாகிய இவரது கட்டுரைகளும் இடம் பெற்றதை பெருமையுடன் நினைவு கூர்கிறார்.     மனைவி திருமதி.பார்த்திமா சம்சுதீனுக்கு பலம் சேர்ப்பவர். இவர்களது ஆறு மகள்கள், இரண்டு மகன்களும் சீரும் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.     சமீபத்தில் இவரது `அல்குரான் ஒரு அறிவியல் பூங்கா’ நூல் மணிமேகலைப் பிரசுரம் மூலம் துபாயில் வெளியிடப்பட்டது.     எவ்வளவோ படித்திருந்தாலும், வியாபாரத்தின் மூலம் பொருள் ஈட்டியிருந்தாலும் கூட –இலக்கியத்தின்பால் இவருக்குள்ள் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.     வ.மா.குலேந்திரன் (லண்டன்)     லண்டனில் வாழ்ந்து வருகின்ற வ.மா.குலேந்திரன் சாதாரண ஒரு குடும்பத்தில் இலங்கையில் திருநெல்வேலி எனும் கிராமத்தில் பிறந்தவர்..   இவர் குடும்பத்தின் மூத்த புதல்வர். இவருக்கு மூன்று சகோதரிகள்.      இவர் சத்திரசிச்சை மூலம் பிறந்த காரணமாக இவரின் தாய் மீது டாக்டர்கள் கவனம் செலுத்தினார்களே தவிர இவரை தண்ணீரில் விட்டு விட்டதை மறந்து விட்டார்கள். மூன்று மணி நேரத்தின் பின்னர் இவரது தந்தை போய் பிள்ளை எங்கே என்று கேட்ட போது தான் அவர்கள் விழித்துக் கொண்டு இவரை தூக்கி சுத்தம் செய்திருக்கிறார்கள். அதே நாள் இரவு இவரை தொட்டிலில் தாதிகள் உறங்க வைத்து வெளிச்சத்திற்காக அரிக்கேன் விளக்கை அதில் ஏற்றி விட்டிருந்தனர். நள்ளிரவு அந்த புதிய விளக்கின் பெயின்ட் (Paint) சூட்டில் உருகி தொட்டிலில் போடப்பட்டிருந்த கொசுவலை எரியத் தொடங்கியது. கட்டிலில் படுத்திருந்த இவரது தாயார் தையல் போடப்பட்ட நிலையில் எழும்ப முடியாமல், துணைக்காக நல்ல உறக்கத்தில் இருந்த அவரது தாயாரை எழுப்பியதால் பிறந்த அன்றே நீரிலும், நெருப்பிலும் இருந்து தப்பியவர் தான் இந்த குலேந்திரன்.     இவரது தந்தையார் ஒரு கணக்காளராக நீர்ப்பாசன இலாகாவில் பணிபுரிந்தார். அன்னையார் அன்னலட்சுமி இல்லத்தரசி. கொழும்புவில் இவர்கள் வசித்து வந்ததாக யாழ்ப்பாணத்தில் இருந்து அலுவல் நிமித்தமாக அல்லது கதிர்காம யாத்திரைக்காக மொழும்பு வருவோர் இவர்களின் இல்லத்திலேயே தங்குவது வழக்கம். குறைந்தது 10 பேராவது தினமும் இவர்கள் இல்லத்தில் தங்குவர். இவர்கள் அனைவருக்கும் இவரின் பெற்றோர் உணவளித்து, வேண்டிய உதவிகளைச் செய்து வந்தனர்.   இவரின் தந்தையார் வல்லிபுரம் மாணிக்கம் சிறந்த சமூக வையாளராவர்.  திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில், தலைவராக செயற்பட்டவர். நெசவு நிலைய கட்டிடத்தை அரசுடன் போராடி பெற்றுக் கொடுத்தவர். இரவுப் பாடசாலை ஆரம்பித்து ஏழைச் சிறார்களுக்கு கல்வியை இலவசமாக போதித்தவர் திருநெல்வேலி அநாதைச் சிறுவர்கள் இல்லத்தை சிறப்பாக நடைபெற உதவியுதுடன் ஆங்கில பாடத்தையும் போதித்து வந்தார். யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் மின்சாரத்தில் இயங்கும் சுடுகாட்டை ஏற்படுத்த முயற்சி எடுத்தார். ஆனாலும் இலங்கை போர் காரணமாக அம்முயற்சி கை கூடவில்லை. திருநெல்வேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தை திறம்பட இயங்க வைத்தவர். ஓய்வூதியம் பெறும் தமிழர்களுக்காக ஓய்வூதியர் சங்கத்தை நிறுவி செயற்பட்டவர் இவர்.     குலேந்திரன் தனது கல்வியை யாழ், சென் பேட்றிக்ஸ் கல்லூரியிலும் (St.Patricks College)  பின்னர் கொழும்பு இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.     இவர் பொதுப் பரீட்சை எழுதும் வேளை இலங்கை அரசு பரீட்சைகள் தமிழில் அல்லது சிங்களத்தில் எழுத வேண்டும் என்ற சட்டத்தை அமலாக்கியதால் இவர் தமிழிலேயே பரீட்சை எழுதிய முதலாவது பகுதி (Group)  மாணவர்களில் ஒருவரானார்.    பல்கலைக் கழக அனுமதி இவருக்கு B.A  பயில கிடைத்தபோது சட்டம் பயில்வதை குறிக்கோளாகக் கொண்டு அதனை உதறிவிட்டு வெளிவாரி மாணவராக (External Student)  சட்டம் பயின்றார்.     சட்ட பட்டதாரி இறுதிப் பரீட்சையில் எட்டுப் பாடங்களிலும் சித்தி பெற்ற இவருக்கு சிங்கள அரசின் தரப்படுதல்(Standardisation)  கொள்கை காரணமாக பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படவில்லை. வழங்க வேண்டும் என்று இவரின் போராட்டங்கள் அரசின் செவியில் செவிடன் காது சங்கானது.      இலங்கை அரசு அமுலாக்கிய தரப்படுதல் கொள்கை (Standardisation Policy )  தமிழ் மாணவர்கள் அதிகளவில் பல்கலைக் கழகம் நுழைவதை தடைசெய்தது.    தன்னம்பிக்கை தமிழர்கள் - பகுதி:40         மாற்றுவழி தெரியாமல் தமிழ் மாணவர்கள் திகைத்து நின்ற வேளையில் அவர்களுக்கு அபயம் அளிக்க குலேந்திரன் முன் வந்தார். வெளிவாரிப் பட்டப்படிப்புகள் நிறுவனம் (External Studies Organisation ) ஸ்தாபித்து வார இறுதி நாட்களில் பல்கலைக் கழக விரிவுரையாளர்களை பகுதி நேர விரிவுரையாற்ற அழைத்து அவர்களை பல்கலைக் கழக பட்டம் பெற வைத்து சாதனை புரிந்தார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் பயன்பெற்று பட்டதாரிகள் ஆகினர்.     1972 –ல் இலங்கை அரசு இந்தியாவில் இருந்து வாராந்திர சஞ்சிகைகள் இறக்குமதியாவதை தடை செய்தது.      அப்போது இவர் `விகடன்’ என்ற சஞ்சிகையை ஆனந்த விகடன் பாணியில் வெளியிட்டார். இவர் ஒரு இதழில் எழுதிய ஆசிரியத் தலையங்கம் அரசு அந்த சஞ்சிகையை தடை செய்ய காரணமாயிற்று.       இலங்கை இலக்கிய பேரவை அமைத்து அதன் தலைவராக விளங்கிய இவர் இலங்கையில் வழக்காடு மன்றம் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினார். இலங்கையில் `பரதநாட்டியப் போட்டி’ 1974-ல் இவரால் நடத்தப்பட்டது. இதற்கு முன்போ அல்லது பின்போ இவ்வகையான போட்டிகள் இன்னமும் நடத்தப்படவில்லை.      1966 –ல் இவரது சிறுகதை `ஜோதி’ வார இதழில் பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என நிறைய எழுதி வருகிறார். ஐரோப்பா நகரில் செய்திமுரசு எனும் தமிழ் பத்திரிகையை முதலில் வெளியிட்டவர் இவரே. எந்தவித கணினி வசதிகளும் அற்ற அந்த நேரத்தில் பத்திரிகைகளில் வருகின்ற எழுத்துகளை வெட்டி ஒட்டியே இந்தப் பத்திரிகை வெளியிடப்பட்டது. இதே போல `லண்டன் மாலை’ என்ற முதல் மாலைத் தினசரியும் இவர் வெளியிட்டார்.     இலங்கையில் உள்ள வசதியற்ற எழுத்தாளர்கள் 13 பேரின் நூல்களை இலவசமாக இவர் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.     சுனாமி பற்றிய தகவல்கள் முதல் நூலாக வெளியிட்ட இவர், இலங்கை தமிழ் முஸ்லீம் அறிஞர்கள் நூலை இலவசமாக இலங்கையில் உள்ள பாடசாலைகள், பல்கலைக் கழகங்களுக்கு வழங்கியுள்ளார்.     அண்மையில் தமிழகத்தில் கண் பார்வையற்ற ஒரு மாணவனுக்கும், மூன்று வசதியற்ற மாணவிகளுக்கும் கல்விக்காக பணம் வழங்கியுள்ளார். பாலம் நிறுவனருடன் இணைந்து தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கான உதவிகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.     லண்டனில் சர்வதேச அகதிகள் சம்மேளம் என்ற தனியார் நிறுவனத்தை ஸ்தாபித்து உலகளவிலான அகதிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றார்.     `தமிழினி மஞ்சரி’ , `தமிழினி’ ஆகியவற்றின் ஆசிரியரான இவர் உலகத் தமிழர் பேரமைப்பின் உறுப்பினராவார். இவரது மனைவி சரோஜினி தேவி பக்கபலம். இவருக்கு ஒரே ஒரு மகள் தமிழினி M.SC  படிக்கிறார்.     U.S.A வி.பாலசந்திரன்;    புத்தி வடிகால் (Brain drain) இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு இருப்பினும் அயல்நாடுகளில் ஒளிவீசும் இந்திய ரத்தின்ங்களில் ஒரு சிலர் இந்தியாவிலும் தம் அறிவொளியைப் பாய்ச்சி வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ என்.ஆர்.ஐ.களில் ஒருவர்தான் பாலா.வி.பாலசந்திரன்.      புதுக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட பாலா தற்போது அமெரிக்காவின் இல்லினாய்ஸில் எள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜே.எல்.கெல்லோக் நிர்வாகவியல் கல்லூரியின் பேராசிரியர். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களின் ஆலோகர். கணக்கியல் (Accounting) துறையில் உலகப்புகழ் பெற்ற நிபுணர். முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.கே.ஆர்.நாராயணனிடமிருந்து `பத்மஸ்ரீ’ விருது பெற்ற 30 பேரில் ஒருவர்.     செலவின நிர்வாகம் (Cost Management)  குறித்துப் பன்னாட்டு நிறுவனங்கள் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் லாபத்திறன் நிர்வாகம் (Profitability Management)  என்ற புதிய பொருளாதார உத்தியை உபதேசித்தவர் பாலா உற்பத்திச் செலவைச் சுருக்குவது என்ற கொள்கையுடன் நிறுவனங்கள் சுருங்கிக் கொள்வதில் என்ன பயன் என்ற இவரது அடிப்படைக் கேள்வியில் அதுவரை இருந்த நிறுவன நிர்வாக கணக்கியல் சூத்திரங்கள் ஆட்டம் கண்டன.    நேர்முகச் செலவான உற்பத்திச் செலவைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதைப் போலவே, விளம்பரம் வாடிக்கையாளர் சேவை போன்ற மறைமுகச் செலவுகளைக் குறைப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இவர் வலியுறுத்தினார்.     இந்தப் புதிய கோட்பாடு குறித்த இவரது ஆய்வுக் கட்டுரை, Business week  என்ற அமெரிக்க இதழில் 1994-ல் வெளியானது. இந்தக் கட்டுரையே பாலாவுக்கு சர்வதேசப் புகழைப் பெற்றுத் தந்துள்ளது. தற்போது பல்வேறு நிறுவனங்களும் இவரது அணுகுமுறையை அனுசரிக்கின்றன.      இந்தியாவில் கணக்கியல் தகவல் தொழில்நுட்பங்கள்( Accounting Informarion Systems ) மேம்படவும், கல்வித்துறை வளர்ச்சிக்காகவும் ஆலோசனைகளை அளிப்பதுடன் நிதியுதவிகளையும் செய்து வருகிறார். மற்றொரு பிரபல என்.ஆர்.ஐ.யான சாம் பிட்ரோடோவுடன் இணைந்து `இந்திய நடவடிக்கை இயக்கம்’ (Action India movement) என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார் பாலா. இசை மற்றும் நடனங்கள் மூலம் பல்வேறு பாடங்களையும் கற்பிக்கும் நவீன முறையை குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சோதனை ரீதியில் இந்த அமைப்பு தொடங்கியுள்ளது. பின்னர் பல்வேறு மாநிலங்களுக்கும் இதை விரிவுப்படுத்த உள்ளது. அத்துடன், செயற்கைக் கோள் உதவி மூலம், தொலைக்காட்சிகளில் இந்தக் கல்வி முறையை ஒளிபரப்பவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவும் சுமார் 250 என்.ஆர்.ஐ.களைச் சேர்த்துள்ளார் பாலா. சுமார் 700 கோடி ரூபாய் செலவில், பெரிய அளவில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.     இந்தியாவில் இத்தகு சேவைகளை ஆற்றி வருவதால் தான் , பாலாவுக்கு `பத்மஸ்ரீ விருது கொடுத்து மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவரையுமே சமமாக  பாவிக்கக்கூடாது; வாடிக்கையாளர்களைப் பாகுபடுத்தி உணர்ந்து, அதிக வர்த்தக வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பாலாவின் லாபத்திறன் நிர்வாக உத்திகளில் ஒன்று. என்னதான் வெளிநாட்டில் பெயர்- புகழ்-பணம் சம்பாதித்தாலும், நாம் பிறந்து –வளர்ந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தாக்கம் இவரிடம் எப்போதும் உண்டு. அதன் ஆக்கம்தான் பாலா இப்போது சென்னையில் ஆரம்பித்திருக்கும் சைதாப்பேட்டை GLIM  பயிற்சிக்கூடம்.    Great Lakes Institute of Manaagement (GLIM) பிசினஸ் மனேஜ்மென்ட்டில், 12 மாத பயிற்சி தந்து இளைஞர்களுக்கு முன்னே வழிகாட்டி வருகிறது.     ``சின்ன வயசுலே எங்கப்பா விளையாட்டா வெச்ச போட்டி தான் நான் வாழ்க்கையிலே ஜெயிக்கக் காரணம். நான் நான்காவது ஐந்தாவது படிக்கிறபோது கிளாஸ்ல முதலாவதா வந்தா, நாலணா பரிசு தர்றேன். என்பார் நாலணா மதிப்பை விட அப்பா தருகிற பரிசு என்கிற விஷயம் தான் எனக்கு பெரிதாய் தோன்று, அந்தக் காசை வாங்காம நான் ஓய்ந்ததில்லை. அங்கீகாரம் என்ற வார்த்தை தான் என்னை உந்தித் தள்ளியது. அமெரிக்கப் படிப்பிலே அத்தனை வகுப்பிலும் நான் முதல் மாணவனாக வந்ததற்காக என்னை ஊக்குவித்து, உதவிதொகையை அதிகப்படுத்தி என்னைப் பெருமைப்படுத்தினாங்க’’ என்று தனது தந்தை தந்த ஊக்கத்தையும், அவர் ஊட்டிய ஜெயிக்க வேண்டும் என்ற உணர்வையும் எண்ணி எண்ணி மகிழ்கிறார், திரு.பாலா.     1994 ஆம் ஆண்டில் இந்தியாவில் துவங்கிய பொருளாதார விரிவுபடுத்தல் நான் இவருக்கும் இந்தியாவுக்கும் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இவரது கவனமெல்லாம் மேலாண்மையியல் (மேனேஜ்மெண்ட்) கல்வி முறையில் இருந்தது.     அதனால் இந்திய அரசுடன் பேசி டெல்லியை அடுத்துள்ள குர்ஹாம் பகுதியிலுள்ள ``மானேஜ்மென்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூஷன்’’ நிறுவனத்திலுள்ள பேராசிரியர்களுக்குப் பாடங்கள் நடத்த வந்தார். இந்தியாவிலிருந்து இருபத்தி இரண்டு பேராசிரியர்களை அமெரிக்கா வரவழைத்து, அவர்களுக்குத் தொழில் அதிபர்களை எப்படி அதிக அளவில் உருவாக்குவது என்பதில் பயிற்சி அளித்தார். இப்போது தென்னிந்தியர்களுக்குத் தான் அமெரிக்காவில் பெரிய மரியாதை. நமது இளைஞர்களை அங்கே அறிவின் முதலீடாகவே காண்கிறார்கள்.     புள்ளியியலிலும், கணிதத்திலும் தனது இளங்கலை அறிவியல் தேர்வுத் தேர்ச்சி பெற்றார். அதே போல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1961 ஆம் ஆண்டு புள்ளியியல், மற்றும் கணக்கியல், முதுகலைப் பட்டமும் 1963 ஆம் ஆண்டு புள்ளியிலில் எம்.எஸ்.சி., பட்டமும் பெற்றார். ``System effectiveness alias sure Reach ‘’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை அளித்து அமெரிக்க, டேய்டன் பல்கலைக்கழகத்தில் 1969 ஆம் ஆண்டு எம்.எஸ்.சி., (பொறியியல்) பட்டம் பெற்றார். தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு அதே பல்கலைக் கழகத்தில் (Carnagie –Mellon University)  தொழிற்சாலை நிர்வாகம் குறித்து``Major, Operation Research Minor –Systems’’  என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை அளித்து முனைவர் பட்டம் பெற்றார் தொழில் ரீதியாக அமெரிக்காவில் உள்ள் இல்லினாய்ஸ் மாநிலத்தில் தன்னை ஒரு சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கராகப் பதிவு செய்து கொண்டுள்ளார்.     அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தின் சி.பி.ஏ. சான்றும் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் அக்கெளண்டிங் அமைப்பின் சி.எம்.ஏ.சான்றும் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டர்னல் ஆடிட்டர்ஸ் நிறுவனத்தின் சி.ஐ.ஏ. சான்றும் பெற்றுள்ளார், தமிழகத்தில் தனது முதுகலைப்படிப்பு முடித்தவுடன் திரு. பாலா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் மற்றும் கணக்கு உதவிப்பேராசிரியராகப் பணிப்புரிந்தார்.     அதன் பின்னர் அமெரிக்கா சென்று டேய்ட்டன் பல்கலைக்கழகத்தில் 1969 ஆம் ஆண்டு தொழிற்சாலைப் பொறியியல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்! அத்துடன் பிட்ஸ்பர்க் கார்னஜிக் மெல்லன் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையியல் பாடங்கள் நடத்தினார். நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து, பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்று, அதே பல்கலைக்கழகத்தின் Accounting Information systems and decision Sciences J.L.Kellog Graduate school of Management   என்ற துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் 1984 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார். இப்போது அதே இடத்தில் கணக்கியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.    தகவல்கள் நன்றி; திரு.பி.வெங்கட்ராமன் (முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி –டிவி.எஸ்) மற்றும் முத்து யூனிவாசன்.    Free Tamil Ebooks.com - எங்களைப் பற்றி         மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:   மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.   ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:   ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.   தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:   தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.   சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.   எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.   சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.   அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.   எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது.   ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.   அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.   வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.   பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்   வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.   FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT , இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.   இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?   நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.   அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:    - ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் - தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் - சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்   விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com  எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.   இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை.   இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.     இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?    ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை.   ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது.   பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.   1. www.vinavu.com   2. www.badriseshadri.in   3. http://maattru.com   4. kaniyam.com   5. blog.ravidreams.net   and more - http://freetamilebooks.com/cc-blogs/   எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?   இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.   <துவக்கம்>   உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.    இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.   எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/     நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.     e-mail : freetamilebooksteam@gmail.com   FB : https://www.facebook.com/FreeTamilEbooks     G +: https://plus.google.com/communities/108817760492177970948           நன்றி.   உங்கள் படைப்புகளை வெளியிடலாமே         உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம்.   1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/  தமிழில் காணொளி .     2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –   கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்   http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101   https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses     உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/     3.   மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.       நூலின் பெயர்     நூல் அறிமுக உரை     நூல் ஆசிரியர் அறிமுக உரை     உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்     நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)   இவற்றை freetamilebooksteam@gmail.com  க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.    விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.     நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்   மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –   தமிழில் காணொளி offline method  – https://youtu.be/0CGGtgoiH-0   press  book  online  method   - https://youtu.be/bXNBwGUDhRs     A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/     எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum         நன்றி !