[] [cover image] தனி வீடு (சொற்பொழிவுகள்) கி.வா.ஜகந்நாதன் FreeTamilEbooks.com CC0 தனி வீடு (சொற்பொழிவுகள்) 1. தனி வீடு (சொற்பொழிவுகள்) 1. தனி வீடு (சொற்பொழிவுகள்) 2. Acknowledgements: 3. முகவுரை 2. தனி வீடு 3. இருவகை விளையாட்டு 4. ஆறுமுக அமுதம் 5. வண்டும் மலரும் 6. தொண்டர் பெருமை தனி வீடு (சொற்பொழிவுகள்) தனி வீடு (சொற்பொழிவுகள்)   கி.வா.ஜகந்நாதன்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Thani_Veedu} தனி வீடு (சொற்பொழிவுகள்) கி. வா. ஜகந்நாதன் tani vITu (literary discourses) ki. vA. jekannAtan In tamil script, unicode/utf~8 format Acknowledgements: Our Sincere thanks go to the Tamil Virtua Academy (formerly Tamil Virtual University for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof~reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext: Anbu Jaya, S. Karthikeyan, R. Navaneethakrishnan, P. Thulasimani and V. Ramasami Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998~2012. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. தனி வீடு (சொற்பொழிவுகள்) கி. வா. ஜகந்நாதன் Source: தனி வீடு (சொற்பொழிவுகள்) கி. வா. ஜகந்நாதன் அமுத நிலையம் லிமிடெட் 46, இராயப்பேட்னை ஹைரோடு, சென்னை ~ 600 014. உரிமைப் பதிவு ~ அமுதம் ~ 157. அலங்கார மாலை ~ 9. முதற் பதிப்பு: பிப்ரவரி ~ 1958 மூன்றாம் பதிப்பு: அக்டோபர் ~ 1983. விலை; ரூ. 7.00 சாந்தி பிரிண்ட்டிங் எண்டர்பிரைஸ்ஸ் 38, இராயப்பேட்டை ஹைரோடு, சென்னை ~ 600 014. ~_(~) முகவுரை கந்தர் அலங்காரச் சொற்பொழிவு வரிசையில் ஒன்பதாவது புத்தகமாகிய இதில் ஐந்து பாடல்களுக்குரிய விளக்கங்கள் இருக்கின்றன. 45~ஆம் பாடல் முதல் 49 வரையிலுள்ள பாடல்களைப் பற்றிய சொற்பொழிவுகள் இவை. முதல் பாடலில் சிவபெருமானுக்குக் குருவாக நின்று உபதேசம் செய்தவனாகிய வேலவன் தமக்குச் செய்த உபதேசம் இன்ன தென்று அருணகிரியார் சொல்கிறார். “ஐந்து பூதங்களால் அமைந்த இந்த உடம்பாகிய குடிலில் இராமல் யாரும் அறியாத சிறப்புடைய முத்தியென்னும் வீட்டில் உரையும் உணர்வும் அற்று இரு” என்று குமர குருபரன் உபதேசம் செய்தானாம். இவ்வாறு தமக்கு முருகன் உபதேசம் செய்ததாகத் திருப்புகழிலும் ஏனை நூல்களிலும் அருணகிரியார் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு விளக்கம் கூறும்போது பூத வீடாகிய உடம்பைப் பற்றிய பல செய்திகளைச் சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இது ஐம்பூதத்தின் கலவையென்றும், நிலையாத வீடு என்றும் அடிக்கடி மாற்றும் வீடு என்றும் சொல்லிவிட்டு, நிலையான வீடு என்று ஒன்று உண்டு என்றும் அதன் இயல்பு இன்னதென்றும் சொல்லியிருக்கிறேன். அப்பால் முருகன் சிவபெருமானுக்குக் குருவாக அமைந்த வரலாற்றையும் அதனுடைய உட்கருத்தையும் திரிபுரசங்காரத்தின் உள்ளுறையையும் விளக்கிவிட்டு, முன்னே அலங்காரத்தில் வந்த, “ஓர ஒட்டார்” என்ற பாட்டுக்கும் இந்தப் பாட்டுக்கும் உள்ள பொருள் தொடர்பை எடுத்துரைத்தேன். இவ்வளவும் சேர்ந்து முதல் சொற்பொழிவாக அமைகின்றன. தனிவீடு என்னும் பெயரோடு அச்சொற்பொழிவை இப்புத்தகத்தில் முதலில் காணலாம். அடு்த்தது இருவகை விளையாட்டு என்னும் சொற் பொழிவு. ஞானவிநோதம், மாயா விநோதம் என்ற இரண்டையும் ஒரு பாட்டில் அருணகிரியார் சொல்லுகிறார். மாயா விளையாட்டு விளையாடும் ஆன்மாக்கள் எவ்வாறு மனத்திற்கு அடிமைப்படுகின்றன என்பதையும், விளையாட்டே வினையாகும் திறத்தையும், இந்த விளையாட்டை மாற்றி இறைவன் திருவருள் பெற முயல வேண்டும் என்பதையும் முதலில் விளக்கும் பகுதியை இதில் காணலாம். பின்பு காமத்தால் உண்டாகும் தீங்குகளும் ஞான விளையாட்டின் தன்மையும் வருகின்றன. ஊன நாடகம், ஞான நாடகம் என்னும் இரண்டையும் பற்றி மணிவாசகப் பெருமான் கூறியிருக்கும் பாட்டு இங்கே ஒப்புமையுடையதாக இருப்பதால் அதற்கும் ஓரளவு விளக்கம் பின்பு வருகிறது. “பத்தித் திருமுகம்” என்று தொடங்கும் அலங்காரப் பாடலின் விளக்கம் ஆறுமுக அமுதம் என்ற தலைப்போடு மூன்றாவது சொற்பொழிவாக உள்ளது. இன்பமும் துன்பமும் மனித வாழ்வில் உள்ளன என்றும், சிற்றின்பத்தை நுகர்பவர்கள் பேரின்பம் உண்டென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வின்பத்தைப் பெற்ற பெருமக்கள் தாம் பெற்ற அநுபவங்களைக் குறித்துச் சொல்லியிருக்கிறார்கள் என்றும், அவை முறையில் வேறு வேறாக இருந்தாலும் விளைவில் ஒன்றாகவே இருக்குமென்றும், அருணகிரிநாதர் தாம் பெற்ற அநுபவத்தைச் சொல்கிறாரென்றும் கூறி, அவர் எவ்வாறு சொல்கிறார் என்பதை விளக்கத் தொடங்கினேன். புத்திக்கமலம் அன்பினால் விரியும் போது ஆனந்த ஊற்றுத் தோன்றுமென்றும், அது படிப்படியாகப் பரந்து பரமானந்தக் கடலாகுமென்றும், அதில் ஆறுமுக அமுதம் தோன்றுமென்றும் புலப்படுத்தினேன். நாம் கோயிலில் காணும் காட்சி எவ்வாறு உண்முகமாகும்போது தோன்றுமென்பதையும், அநுபவ நிலையில் அது எவ்வாறு தோன்றும் என்பதையும் ஒருவாறு விளக்கியிருக்கிறேன். ஆறுமுகங்களைப் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் கூறுவனவற்றை இறுதியில் கூறி இச் சொற்பொழிவை முடித்தேன். வண்டும் மலரும் என்பது நான்காவது சொற்பொழிவு. முதலில் மனத்தை வண்டாகச் சொல்லும் மரபையும் இறைவனுடைய திருவடியாகிய தாமரையில் அவ்வண்டு சென்று ஊத வேண்டும் என்பதையும் எடுத்துரைத்து, மணிவாசகர் திருப்பாட்டு ஒன்றை மேற்கோள் காட்டி விளக்கினேன். பின்பு இறைவன் திருவடியில் நாட்டம் உள்ளவர்கள் அடியார் என்றும், திருக்குறளில் வள்ளுவர் யாவர்க்கும் பொதுவான முறையில் கடவுளின் அடியையே சொல்லியிருக்கிறார் என்றும், அவருக்கு உருவ வழிபாடு உடம்பாடே என்றும் சொல்லியுள்ளேன். இறைவன் திருவடியிலே உள்ளத்தைச் செலுத்துவதால் பெரும்பயன் உண்டென்பதற்கு எடுத்துக் காட்டாகச் சகாதேவன் வரலாற்றைக் கூறினேன். பின்பு அருணகிரியார் நமக்காகத் தாம் குறைபாடுடையவரைப் போலச் சொல்லிக் கொள்வதையும் முருகனை வேண்டிக் கொள்வதையும் விளக்கினேன். அடுத்தது தொண்டர் பெருமை என்னும் சொற் பொழிவு. உலகில் செல்வத்துக்கு உள்ள மதிப்பையும், அச் செல்வம் அமைதி தர மாட்டாமையையும், விரைவில் அழிவதையும் எடுத்துரைத்து, இறைவன் அருட் செல்வம் ஒன்றே அமைதி தரும் என்பதையும் அதனைப் பெற்ற தொண்டர்கள் மிகப் பெரியவர்கள் என்பதையும் விளக்கினேன். தொண்டர் பெருமையை ஔவையார் திருப்பாடலைக் கொண்டும் பெரிய புராணத்தைக் கொண்டும் ஒருவாறு காட்டியிருக்கிறேன். தொண்டர் குழாத்தைச் சார்வதனால் குருவின் அருளும் இறைவன் திருவருளும் கிடைக்கும் என்ற கருத்தைப் பின்பு சொன்னேன். பதவி, பணம் என்னும் இரண்டினிடமும் ஆசை கொண்டவர்களுக்கு இன்பம் இல்லை. அவ்விரண்டின் வடிவாக விளங்கிய சூரனும் கிரௌஞ்சாசுரனும் ஞானவேலால் அழிந்தனர். முருகனுடைய தொண்டர்கள் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்படமாட்டார்கள். அவர்களைச் சார்வதனால் நமக்குத் தகுதி ஏறும். இக்கருத்துக்களையும் விளக்கிச் சொறிபொழிவை முடித்திருக்கிறேன். முருகன் திருவருளால் கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உடனுக்குடன் புத்தக உருவமாக்க இயலாவிட்டாலும் ஸ்ரீ அனந்தனுடைய உதவியால் தடையின்றி இவ்வரிசை மலர்ந்து வருகிறது. எல்லாம் முருகன் கருணை. ‘காந்தமலை’ , சென்னை~28 அன்பன் 3₂58 கி.வா. ஜகந்நாதன் ~ தனி வீடு பேய் பிடித்த வீடு சில காலத்திற்கு முன்னால் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. ஒரு வீட்டில் கொடியில் உலர்த்தி இருந்த ஆடைகள் திடீரென்று எரிவதாகவும், கொடி மட்டும் எரியாமல் இருப்பதாகவும், யாரோ சூன்யம் வைத்தமையினால் அப்படி நடக்கிறதாகவும் அந்தச் செய்தி சொல்லியது. பேய், பிசாசு, பூதம் ஆகியவை ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் உற்பாதங்கள் நிகழும் என்று சொல்வார்கள். ஒருவனைப் பேய் பிடித்தால் அவன் எத்தனை சாப்பிட்டாலும் அவ்வளவும் ஒரு நொடியில் பஸ்மீகரம் ஆகிவிடும். வீட்டிலானாலும் உடம்பிலானாலும் பேயோ, பூதமோ புகுந்து கொண்டால் அங்கே நிகழ்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் அவற்றை உடையவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இராது. அங்கே நிகழும் நிகழ்ச்சிகள் துன்பத்தைத் தருமே அல்லாமல் இன்பத்தைத் தருவது இல்லை. இப்படி எங்கோ அருமையாக நடக்கும் நிகழ்ச்சியைக் காண்கிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் இத்தகைய நிகழ்ச்சி எல்லோரிடத்திலும் நடக்கிறது. அதை நாம் தெரிந்துகொள்வது இல்லை. எங்கேனும் அருமையாக ஒன்று நடந்தால் அதுதான் கண்ணில் படுகிறது, காதில் விழுகிறது. எங்கும் ஒரே மாதிரி இருந்தால் அதைப்பற்றி நாம் நினைக்கமாட்டோம். எல்லோரும் காலால் நடக்கும்போது யாரும் காலால் நடக்கிறார்களே என்று வியப்போடு பார்ப்பது இல்லை. ஆனால் நடக்கும்போது ஒருவன் கீழே விழுந்துவிட்டாலும் ஒருவன் கால் இல்லாமல் நொண்டியாக இருந்தாலும் அவர்களை நாம் கவனிக்கிறோம்; கண்டு எள்ளி நகையாடுகிறோம்; அவர்களைப் பற்றிப் பேசுகின்றோம். அந்தச் செயல்கள் அருமையாக இருப்பதனால்தான் நம் கவனம் அந்தத் திசையில் செல்கிறது. அப்படியே எங்கேனும் அருமையாக ஒரு வீட்டில் பேய் இருந்தாலும் ஒருவனைப் பேய் பிடித்தாலும் அதனை நினைக்கிறோம். வேறு ஒரு வகையில் எல்லோருமே பூதம் பிடித்த வீட்டில் இருக்கிறார்கள். ஒரு பூதம், இரண்டு பூதம் அல்ல; ஐந்து பூதங்கள் தங்கி இருக்கிற வீட்டில்தான் யாவரும் குடி இருக்கிறார்கள். அதனால் அதைப்பற்றி நினைக்கிறதில்லை. பூத வீடு உலகத்திலுள்ள மக்கள் எல்லோருமே உடம்போடு பொருந்திய உயிர்கள். உடம்புகள் மக்கள் ஆவதில்லை. அவை உயிர்கள் குடி இருக்கும் வீடுகள். உடம்பு என்பது ஐந்து பூதங்களால் ஆனது. அதனால் இதனைப் பௌதீக சரீரம் என்று சொல்வார்கள்; பூத வீடு. இந்தப் பூத வீட்டில் நாம் செய்கிற காரியங்கள் எல்லாம் அந்தப் பூதங்களைச் சார்ந்துவிடுகின்றன. ஆத்மாவுக்கு இன்பத்தைத் தரும் செயலாக இராமல் இந்திரியங்களுக்கு இன்பத்தைத் தரும் செயல்கள் யாவுமே பூதங்களைத் திருப்திப்படுத்துபவை என்று சொல்லலாம். பேய் பிடித்தவன் உண்ணுகின்ற உணவைப் பேய் உண்டுவிடுகிறதென்று சொல்வதுண்டு. அது போலவே இந்த உடம்பை வளர்ப்பதற்கே, இந்த உடம்பாக நிற்கின்ற ஐந்து பூதங்கள் வளம்பெறு வதற்கே, நாம் அநேகமாக எல்லாச் செயல்களையும் செய்கிறோம். அந்தக் காரணத்தால் நாம் உண்ணுகிற உணவு, பேசுகின்ற பேச்சு ஆகிய எல்லாவற்றையுமே பூதங்கள் தம்முடையன ஆக்கிக் கொள்கின்றன என்று சொன்னால் தவறு இல்லை. நிலையாத வீடு இந்தப் பூத வீட்டிற்குள் புகுந்துகொண்டு, பூதங்களின் செயலுக்கு அகப்படாமல் நின்று போரிட்டு, இந்த வீட்டை விட்டு நல்ல இடம் போக வேண்டும் என்ற உறுதியோடு, அதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்கிற மக்கள் சுதந்தரமான வீட்டைப் பெறுவார்கள்.பெரும் பாலோருக்கு இந்த வீட்டில் பூதங்கள் இருக்கின்றன என்பதே தெரியாது. இயல்பாகவே நமக்கு அமைந்த வீடு இது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி நினைத்தாலும் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த வீட்டை விட்டுப் போகவேண்டியதுதான். இந்த வீடு நமக்குச் சொந்தம் என்ற நினைப்பு மக்களுக்கு இருந்தாலும் இது நமக்குச் சொந்தம் ஆகிவிடாது என்பது தெரியும். தினந் தோறும் மனிதர்கள் மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இறந்துபோனவனைப் பார்க்கும் போதும், நமக்குத் தெரிந்தவர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்கும் போதும் இந்த வீடு நெடுங்காலம் நிலைத்து இராது என்ற நினைவு தோன்றுகிறது. ஆனால் அந்த நினைவு உடனே மறைந்துவிடுகிறது. இதைத்தான் மயான வைராக்கியம் என்று சொல்வார்கள். இந்தப் பூத வீட்டில் இருப்பதால் துன்பமே அன்றி இன்பம் இல்லை. துன்பம் தருகின்ற வீட்டில் இருக்க வேண்டாம் என்று சொல்வது எளிது. ஆனால் குடியிருக்க வேறு வீடு வேண்டுமே! மாற்றும் வீடு எப்போதும் வாடகை கொடுத்துக்கொண்டு ஒரு வீட்டில் ஒருவன் இருக்கிறான். அது அவனுக்குப் பிடிக்கவில்லை என்றோ, வீட்டுக்காரனுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்றோ வேறு வீடு மாற்றுகிறான். இப்படி வீடுகளை மாற்றிக் கொண்டிருப்பதனால் அவனுக்கு நிலையான வாழ்க்கை இருப்பது இல்லை. ஒரு வீட்டில் சற்று விரிந்த கொல்லைப்புறம் இருக்கும். அங்கே நல்ல செடிகொடிகளைப் போடலாம் என்று சிறு தோட்டத்தை அமைப்பான். ஓர் ஆண்டு ஆன பிறகு அந்தச் செடிகொடிகள் நல்ல பயன் தரும்போது வீட்டுக்காரன் ‘நோட்டீஸ்’ கொடுத்து விடுவான். அந்தக் கொடிகளையும், செடிகளையும் அப்படியே பிடுங்கிக் கொண்டு போக முடியுமா? அந்த மாதிரியே எவ்வளவோ பேர்கள் தம்முடைய வாழ்க்கையில் பல பல கோட்டைகளைக் கட்டுகிறார்கள். அவர்களுடைய முயற்சிகள் பயன் தரும்போது இறந்து போகிறார்கள். நல்ல புதல்வனைப் பெற்று அவனுக்குக் கல்வி கற்பித்து அவன் உத்தியோகம் பண்ணும்போதுதான் சுகமாக ஓய்வு பெற்று இருக்கவேண்டுமென்று கருதுகிறான் ஒருவன். குழந்தை பிறந்து தளர் நடை இடும்போதே அவன் இறந்து விடுகிறான். ஒருவன் ஒரு பெரிய வியாபாரத்தைத் தொடங்கி, முதல் போட்டுச் செலவு செய்ய வேண்டிய வகை எல்லாம் நன்றாகச் செய்து ஒழுங்கு பண்ணுகிறான். அந்த வியாபாரத்தில் லாபம் எடுக்கிற தருணத்தில் அவன் திடீரென்று இறந்து போகிறான். இத்தகைய காட்சிகளை நாள்தோறும் உலகத்தில் பார்க்கிறோம். இதற்கும் செடிகொடி போட்டவன் கதைக்கும் வேறுபாடு அதிகம் இல்லை. நிலையான வீடு எப்போதுமே நிலையாக ஒரு வீட்டில் இருக்கும் வாழ்வு வருமானால் அவன் சுதந்தரமாக எந்தக் காரியமும் செய்து கொள்ளலாம். ஆனால் அத்தகைய வாழ்வு வாழும் வீடு இன்னது என்று மக்கள் தெரிந்து கொள்ளவில்லை. பெரியவர்கள் அப்படி ஒரு வீடு உண்டென்று சொல்கிறார்கள். அதற்குத்தான் வீடு என்றே பெயர் கொடுத்திருக்கிறார்கள். வீடு ~ முத்தி. நிலை இல்லாத குடிசையாக இருக்கும் இந்த உடம்பை விட்டு உயிர் நீங்கினால் மறுபடியும் வேறு ஒரு குடிசைக்குத் தாவுகிறது. பிறவிதோறும் உயிர் விலாசம் மாறிக்கொண்டிருக்கிறது. எப்போதும் ஒரே விலாசம் போட்டுக் கொண்டு வாழ்வதற்கு வகை இல்லாமல் திண்டாடுகிறது. ஒரே விலாசமாக இருக்க வேண்டுமானால் நிலையான வீட்டைத் தேடிக்கொள்ள வேண்டும். அப்படித் தேடுகின்ற முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாரோ அவர்களையே பக்தர்கள் என்றும், ஞானிகள் என்றும் சொல்கிறார்கள். நாம் தேடிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. அந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் அதை நமக்குக் கொடுக்க வேண்டும். அப்படி ஒருவன் இருக்கிறான். அவன்தான் ஆண்டவன். அந்த வீட்டைத் தான் இருந்து வாழ்வதற்காக அவன் வைத்திருக்கவில்லை. தன்னுடைய குழந்தைகள் துன்புறாமல் சுதந்தரமாக வாழவேண்டும் என்பதற்காகவே வைத்திருக்கிறான். இருந்தாலும் நல்ல குணம் இல்லாத பிள்ளைகளாக இருந்தால் அவர்களைக் கொஞ்சம் துன்பம் அநுபவிக்கச் செய்துவிட்டு, ஓட்டைக் குடிசையில் இருக்கச் செய்து, அடிக்கடி கட்டிடங்களை மாற்றித் தந்து தண்டனை கொடுக்கிறான். “இப்படி வாழ்கின்ற நிலை போதும், அப்பா. இனிமேல் இத்தகைய வீடுகளில் நான் இருக்கமாட்டேன். நல்ல வீடாகத் தா” என்று சொல்கின்ற நிலையைப் பெற்றால், “உனக்குத்தான் நல்ல வீடு கட்டி வைத்திருக்கிறேன். அதைப்பற்றி நீ சிந்திக்காமல் பூதம் தங்கிய வீட்டில் மகிழ்ச்சி அடைந்து இருந்தாயே! வா அப்பா, சுகமாக இரு” என்று அருள் கூர்ந்து அவன் வரவேற்கிறான். நம்முடைய நாட்டு நாடோடிப் பாடலில்கூட இந்த உடம்பை வெறுத்து நித்திய ஆனந்தத்தைத் தருகின்ற வீட்டைத் தேட வேண்டுமென்பதை அறிவுறுத்தும் பாடல்கள் உண்டு. “எட்டடிக் குச்சுக்குள்ளே ~ முருகா எத்தனை நாள்இருப்பேன் ~ ஒரு மச்சுவீடு கட்டித்தாரும் ~ திருத்தணி மலையில் வேலவனே!” என்பது ஒரு பரதேசி பாட்டு. எண்சாண் உடம்பு என்பதை எட்டடிக் குச்சு என்றும், இறைவன் திருவருள் இன்பத்தை அடையும் முத்தியை மச்சு வீடு என்றும் பரதேசி சொல்கிறான். அருணகிரிநாதப் பெருமாள் நாம் இப்போது இருக்கிற குடிசையைப் பற்றி நன்றாக உணர்ந்தவர், என்றும் மங்காத இன்பம் தருகின்ற மெய்யான வீட்டைப் பற்றியும் உணர்ந்தவர். ஐந்து பகைவர் நாம் பெற்ற உடம்பாகிய இந்த வீட்டில் நாம் மாத்திரம் குடி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதில் ஐந்து இந்திரியங்கள் ஆகிய பேய்களும் வாழ்கின்றன. அவற்றுடனே ’வாழ்கின்ற நமக்கு ஒரு கணமாவது அமைதி இருப்பதில்லை. நம்முடைய ஆத்மாவுக்குப் பயன் தருகின்ற செயலைச் செய்யப் புகுந்தால் இந்திரியங்கள் அந்தச் செயல்களை மாற்றுகின்றன. தங்களுக்கு ஆக்கிக் கொள்கின்றன. இதனை அருணகிரிநாதர் முன் ஒரு பாட்டில் சொன்னார். “ஓர ஒட்டார் ஒன்றை உன்ன ஒட்டார் மலர் இட்டு உனதாள் சேர ஒட்டார் ஐவர்; செய்வதென் யான்?” என்ற பாட்டில் நாம் செய்கின்ற செயல்களுக்குக் குறுக்கே நின்று ஐந்து பேர்கள் தடுக்கிறார்களே என்று புலம்பி இருக்கிறார். வேறு ஒரு பாட்டில், ’இந்த வீட்டைக் கட்டி நான் குடியிருப்பதற்காக நீ கொடுத்திருந்தாலும் இந்த வீடு எனக்குச் சொந்தமாகாமல் ஐந்து இந்திரியங்கள் ஆகிய பகைவர்களுக்குச் சொந்தமாக இருக்கிறதே!" என்பதைத் தெரிவித்திருக்கிறார். “ஐவர்க்கு இடம்பெறக் கால்இரண்டு ஒட்டி, அதில் இரண்டு, கைவைத்த வீடு” என்று சொல்கிறார். இப்படி ஐந்து பொறிகளின் வயப்பட்டு மனம் செல்ல, அதன் வழிப்பட்டு நம்முடைய வாழ்வு அமைகிறது. ஐந்து பேர்களுக்கு நடுவில் வாழ்கின்ற வாழ்வு எப்போதும் துன்பந்தான். ‘எலிவளையானாலும் தனி வளை வேண்டும்’ என்பது ஒரு பழமொழி. தனியாக ஒரு வீடு கட்டிக் கொள்ள வேண்டுமென்ற தாபம் எந்தக் குழந்தைக்கு இருக்கிறதோ அந்தக் குழந்தையின் ஆவலைப் போக்குவதற்கு எப்பெருமான் கருணை புரிவான். இந்தச் செய்திகளை எல்லாம் நினைந்து தம்முடைய அநுபவத்தை அருணகிரியார் சொல்கிறார். அந்த வீடு “எங்கள் பெருமானாகிய முருகன் நான் பூதம் தங்கிய வீட்டில் குடியிருப்பதை அறிந்து கருணை செய்தான். இந்த வீட்டில் நான் இருக்கிறேனே என்று பல காலம் வருந்தினேன். இந்த வாழ்க்கையில் பெறுகின்ற துன்பம் மேன் மேலும் என்னை உறுத்தியது. அதனால் நைந்து இந்த வாழ்க்கையை மாற்றுவதற்கு எண்ணினேன். எம்பெருமானும், என்னுடைய கருணைத் தந்தையும் ஆகிய ஆண்டவனிடத்தில் முறையிட்டுக் கொண்டேன். அந்தப் பெருமான் என்னுடைய வேண்டுகோளைச் செவிமடுத்து, ‘நீ இந்தப் பூதவீட்டில் இருக்கவேண்டாம். ஒருவரும் அறியாத தனிவீட்டில் இருப்பாயாக. அங்கே சுகமாகத் தங்குவாயாக. எப்போதும் சளசள வென்று பேசுகின்ற இந்த வாழ்வைப்போல இராமல் ஒரு பேச்சும் இன்றி ஒரு சிந்தனையும் இன்றிச் சுகமாகத் தூங்கு’ என்று சொன்னான்.” ~ இப்படி அருணகிரியார் தெரிவிக்கிறார். ஒரு பூதரும் அறியாத் தனி வீட்டில் உரை உணர்வு அற்று இரு, பூத வீட்டில் இராமல் என்றான். “ஒரு பூதரும் அறியா வீடு, தனி வீடு அது. அந்த வீட்டில் ஒரு பூதரும் அறியாமல் தனியாக நான் இருக்கும்படி, உரை அற்று, உணர்வு அற்று இருக்கும்படியாகச் செய்தான். இழிந்த வீட்டை மாற்றி உயர்ந்த திருமாளிகையில் என்னை வைத்தான்’ என்று அலங்காரமாக அருணகிரியார் சொல்கிறார். அதன் கருத்து, பௌதிகமான சரீரத்தை விட்டு என்றும் மாறாத இன்பத்தைத் தருகின்ற முத்தி வீட்டை எனக்குக் கொடுத்தான் என்பதே. இந்த உடம்பைப் பூத வீடு என்று சுட்டினார். ஐந்து பூதங்களால் அமைந்தது. ஆகையால் இது பூத வீடு ஆயிற்று. இனி முத்தியைப் பற்றி, ‘ஒரு பூதரும் அறியா வீடு; தனி வீடு; உரையற்ற வீடு; உணர்வற்ற வீடு’ என்று தெரிந்து கொள்ளும்படி பாட்டில் சொல்கிறார். பூதர் என்பது மனிதருக்குப் பெயர். உலகிலுள்ள மக்கள் யாரும் முத்தி இன்பத்தை உணர இயலாது. அவ்வின்பத்தில் கூட்டம் இல்லை. எல்லாம் ஒன்றாக இணைந்து இருக்கிற இடம் அது. இறைவன், ஆத்மா என்ற பிரிவு கூட தோற்றாமல் அத்துவித நிலையில், “நீ வேறு எனாது இருக்க, நான் வேறு எனாது இருக்க” என்றபடி இணைந்து குலவும் வீடு அது. உடல், உரை, மனம் ஆகிய மூன்று கரணங்களையும் தாண்டி அமைந்த இடம் அது. இந்த வீடு உடம்பு. இதனை விட்டு விடுகிறோம். அந்த வீட்டிலோ உரையும் நினைவும் இல்லை. மனத்திற்கும் வாக்குக்கும் அப்பாற்பட்ட இடம் ஆகையால் அது உரையும் உணர்வும் அற்ற இடம். பல பேச்சுகளைப் பேசுவதனால் துன்புற்றுப் பல வகையான கவலைகளினால் வாடி வதங்கி இன்னல் உறுகின்ற ஒருவரைப் பேச்சு இல்லாது, கவலைக்கு இடம் இல்லாது, கூட்டமே இல்லாது, யாரும் வர முடியாத தனியான சுதந்தர வீட்டில் வைத்துக் காப்பாற்றியது போன்ற ஒரு சித்திரத்தை அருணகிரியார் தீட்டுகிறார். 2 இனி இப்படித் தந்த பெருமான் யார் என்பதை விரிவாகச் சொல்கிறார். முருகப் பெருமானுடைய புகழ் அங்கே வருகிறது. “அவன் சிவபெருமானுடைய குருநாதன்; வேலாயுதன்; சூரனை அழித்தவன்’ என்று மூன்று நிலையைச் சொல்கிறார். குமர குருபரன் உலகத்திலுள்ள மக்களுக்கு எல்லாம் சாதுக்களாக இருக்கிறவர்கள் குருவாக அமைவார்கள். அவர்களுக்குத் துறவிகள் ஆசிரியர்களாக இருப்பார்கள். துறவிகளுடைய பரம்பரையைப் பார்த்தால் அவர்களுடைய மூல ஆசிரியர்கள் முனிபுங்கவர்களாக இருப்பார்கள். அந்த முனிபுங்கவர்களுள் சிறந்தவர்கள் சனகர் முதலிய நான்கு பேர்கள். அந்த நால்வருக்கும் குருவாக இருந்தவன் தென்முகக் கடவுளாகிய தட்னிணாமூர்த்தி. குரு என்று சொன்னால் அந்தச் சொல் சிறப்பாகத் தட்சிணாமூர்த்தியைக் குறிக்கும். எல்லோருக்கும் ஆதி குருவாக இருக்கின்ற தட்சிணா மூர்த்தியும் ஒரு சமயம் மாணாக்கனாக இருந்தான். குருவாக இருக்கிறவன் மாணாக்கனாகவும் இருப்பான். அவன், நன்கு கல்வி பயின்றவனாகையால் தன் குருவை நோக்க மாணாக்கனாகவும், பிறருக்குக் கல்வி பயிற்றுவிப்பவன் ஆகையால் மாணாக்கனை நோக்கக் குருவாகவும் இருப்பது இயல்பு. இந்த வகையில் பார்த்தால் உலகிலுள்ள அத்தனை குரு மூர்த்திகளும் மாணாக்கர்களாகவும் இருப்பார்கள். இந்த நிலை தட்சிணாமூர்த்திக்கும் உண்டு. தென்முகக் கடவுள் ஆகிய சிவபெருமானுக்கும் ஒரு குரு அமைந்தான் அந்தக் குருவே முருகப் பெருமான். குருவுக்குள் சிறந்த குரு ஆகையால் அவனைக் குமரகுரபரன் என்றும், சிவகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் பெரியவர்கள் கூறுவார்கள். பிறரிடமிருந்து உபதேசம் பெறாமல் குருவாகவே நிற்கிறவன் முருகப் பெருமான். இப்படியே குரு சிஷ்ய பரம்பரையில் தனக்குப் பின்னாலே மாணாக்கன் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் மாணாக்கனாக மட்டும் நிற்கும் நிலை உடையவன். குருவாகவே நிற்கும் பெருமை உடைய பெருமான் ஞானபண்டித சாமியாகிய முருகன். முருகனுடைய பெருமைகள் பல. வள்ளி மணவாளன் என்று அவனைச் சிந்திக்கும்போது பக்தர்களுடைய மனம் உருகுகிறது. சூரனைச் சங்காரம் செய்தவன் என்று நினைக்கும்போது அடியார்களுக்குத் துணிவு பிறக்கிறது. சின்னஞ்சிறு குழந்தை என்று சொல்லும்போது யாரும் பயம் இல்லாமல் அணுகுகின்ற அன்பு பிறக்கிறது. இப்படி அவன் பல வகையில் திருவிளையாடலைச் செய்தாலும் அவனுடைய சிறப்பு, குமர குருபரன் ஆக இருப்பதில் விளங்குகிறது; அவன் தலைமை விளங்குகிறது. வள்ளி மணவாளனாக இருப்பதில் அவன் கருணை விளங்குகிறது. முதல் திருப்புகழ். அருணகிரிநாதப் பெருமான் குமரகுருபரனித்தில் ஈடுபாடு உடையவர். அவர் பதினாயிரம் திருப்புகழ் பாடினார். முதன் முதலாக அதனைப் பாடத் தொடங்கிய போது முருகப் பெருமானுடைய திருவிளையாட்டில் பல திறங்கள் நினைவுக்கு வந்தன. அவற்றுள் முதலில் எதை வைப்பது என்று யோசித்தார். எந்தக் கோலத்தில் முருகனை முதலில் வைத்துச் சொல்வது என்ற ஆராய்ச்சி அவருக்குப் பிறந்தது. அவருடைய உள்ளத்தில் குமர குருபரனாகத் தோற்றம் அளித்தான் ஆண்டவன். அழகிய பீடத்தில் அவன் அமர்ந்து இருக்கச் சிவபெருமான் அவனுக்கு முன் நின்று அவன் புகழ் பேச, உபதேசம் செய்வதாக ஒரு காட்சி அவருக்குத் தோன்றியது. உடனே பாடத் தொடங்கினார். “முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்தித்கொரு வித்துக் குருபர, எனஓதும் முக்கட்பர மர்க்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து.” அந்த அலங்காரப் பாடலில் முருகனைப் பற்றிச் சொல்லும்போது, அவன் சிவபெருமானுக்குக் குருவாக இருந்தவன் என்று சொல்ல வருகிறார். சிவபெருமான் புகழ். சிவபெருமான் எத்தகையவன்? யானையை உரித்துப் போர்த்தவன்; மூன்று புரங்களை எரித்தவன். இரு கோட்டு ஒரு கைப்பொரு பூதரம் உரித்து, ஏகாசம் இட்ட புராந்தகற்குக் குருபூத வேலவன் நிட்டூர சூர குலாந்தகனே. இரண்டு கொம்புகளும் ஒரு கையும் உடைய, போர் செய்கின்ற மலை போன்ற யானையின் தோலை உரித்து, அந்தத் தோலையே மேலே போர்வையாகப் போர்த்துக் கொண்டவன் அவன்; திரிபுரத்தை அழித்தவன். சிவபெருமான் செய்த பல வீரச் செயல்களுக்குள் முக்கியமானவை எட்டு. அந்த எட்டு வீரச் செயல்களையும் அவன் செய்ததை நினைப்பதற்குத் தமிழ்நாட்டில் எட்டுத் தலங்கள் இருக்கின்றன. வீரத்தைப் புலப்படுத்தும் அத் தலங்களுக்கு வீர ஸ்தானம் என்று பெயர். அதுவே பின்பு வீரட்டானம் என்றும் வீரட்டம் என்றும் மாறி வந்தது. ஒவ்வொரு வீரட்டத்திலும் சிவபெருமான செய்த ஒவ் வொரு வீரச்செயலின் நினைப்பை உண்டாக்கும் அடையாளங்கள் இருக்கின்றன. அந்த எட்டு வீரட்டானங்கள் ஆவன; 1. திருக்கண்டியூர்: பிரமன் சிரம் கொய்தது. 2. திருக்கோவலூர்: அந்தகாசுரனைச் சங்கரித்தது. 3. திருஅதிகை: திரிபுரத்தை எரித்தது. 4. திருப்பறிய லூர்: தக்கன் சிரம் கொய்தது. 5. திருவிற்குடி: சலந்தரா சுரனைச் சங்கரித்தது. 6. வழுவூர்: யானையை உரித்தது. 7. திருக்குறுக்கை: காமனை எரித்தது. 8. திருக்கடவூர்: யமனை உதைத்தது. இவற்றை அட்ட வீரட்டம் என்பர். “பூமன் சிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர், காமன் குறுக்கை, யமன்கடவூர், இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே” என்பது அட்ட வீரட்டம் இன்னவை என்பதைச் சொல்கிறது. சிவபெருமான் புரிந்தருளிய எட்டு வீரச் செயல்களுக்குள் இரண்டு செயல்களை அருணகிரியார் இந்தப் பாட்டில் சொல்கிறார். கஜாசுர சங்காரம், திரிபுர சங்காரம் என்னும் இரண்டையும் நினைப்பூட்டுகிறார். இரு கோட்டு ஒரு கைப் பொரு பூதரம் உரித்து, ஏகாசம் இட்ட புராந்தகன். கஜாசுர சங்காரம். ஏகாசம் ~ போர்வை. கஜாசுரனை உரித்து, மேலே போர்வையாகப் போர்த்துக் கொண்ட வீரச் செயலை முதலில் சொன்னார். இதனால் சிவபெருமானுக்குக் கிருத்திவாசன் என்ற பெயர் உண்டாயிற்று. இந்த வீரச் செயலை நினைப்பூட்டும் இடம் வழுவூர். வழுவையூர் என்பதே அப்படித் திரிந்துவிட்டது என்று எங்கள் ஆசிரியப் பெருமான் சொல்வார். வழுவை ~ யானை. யானை என்ற அறிகுறி நல்ல பொருளையும், கெட்ட பொருளையும் குறிக்கும். ஞானத்தை யானையாக உருவகிப்பது உண்டு. இது நல்ல பொருள். அகங்காரத்திற்கும் யானை அறிகுறி. இது கெட்ட பொருள். “ஆங்காரம் என்னும் மதயானை” என்பது தாயுமானவர் பாடல். இறைவன் ஆணவம் இல்லாமல் இருப்பவன். “ஆணவம் அகன்ற சுத்த அறிவல்லால் உருவம் இல்லாத் தாணு” என்பது சாத்திரம். அவன் இருக்கும் இடத்தில் ஆணவத்திற்கு வேலை இல்லை. அவன் திருவருளினால் ஆணவம் ஒழியும். யானையை அவன் அழித்தான் என்பதன் உட்கருத்து. எம்பெருமான் ஆணவத்தை நீக்கி ஞானத்தைத் தருவான் என்பதே. யானையை வென்றதோடு நில்லாமல் அதன் தோலை எம்பெருமான் போர்த்துக் கொண்டிருக்கிறான். மான், புலி, சிங்கம் முதலியவற்றை வேட்டை ஆடுகிறவர்கள் அந்த அந்த விலங்கின் உறுப்புக்களைத் தம்முடைய வீட்டில் வைத்திருப்பது உலக வழக்கம். அவர்கள் வீட்டுக்குப் போனாலேயே அவர்கள் அந்த விலங்குகளை வேட்டையாடின வீரர்கள் என்பது புலப்படும். அவ்வண்ணமே எம்பெருமான் ஆனைத் தோல் ஆடையை மேலே போட்டுக் கொண்டிருக்கிறான். தான் செய்த வீரச் செயலை எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று அதனைச் செய்யவில்லை. ஆணவத்தால் துன்புறுகின்ற ஆருயிர்களுக்கு அந்த ஆணவத்தைப் போக்குவதற்குரிய திருவருள் இந்தப் பெருமானிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்குவற்காகவே அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டிருக்கிறான். எங்கேனும் விழா நடந்தாலும் வேறு வகையான கூட்டங்கள் நடந்தாலும் அங்கே தொண்டர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அந்தத் தொண்டர்களுக்குத் தலைவராக இருப்பவர் அவர்களை இயக்குவிப்பார். அவர்களுக்கெல்லாம் தம்முடைய சட்டையில் போட்டுக்கொள்வதற்குச் சில வகையான அடையாளச் சின்னங்களைத் தருவார்கள். அந்தச் சின்னங்களைக் கொண்டு, இவர்களால் இன்ன காரியத்தைச் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் மக்களுக்கு வரும். அந்தத் தொண்டர்களை அழைத்துத் தமக்கு உதவி செய்யும்படி வேண்டிக் கொள்வார்கள். அந்த அடையாளச் சின்னங்கள், மற்றவர்கள் அவர்களை அணுகி உதவி கேட்பதற்குத் துணையாக இருப்பது போல, எம்பெருமான் போர்த்துக் கொண்ட யானைத் தோல் ஆணவம் நீங்குவதற்கு வேண்டிய திருவருளை இவன் வழங்குவான் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. புராந்தகன். அடுத்தபடியாகப் புராந்தகன் என்று சொல்கிறார். புரத்திற்கு அந்தகன் சிவபெருமான்; மூன்று புரங்களை அழித்தவன். மூன்று புரங்கள் என்பவை மூன்று மலங்களுக்கு அடையாளம். மூன்று மலங்களால் ஆன கோட்டைக்குள் அகப்பட்டு, கட்டுப்பட்டு, ஆன்மா வீடு அடையாமல் இருக்கிறது. வீட்டைப் பெற வேண்டுமானால் மூன்று மலங்களையும் போக்க வேண்டும். இறைவன் மூன்று மலங்களையும் தன்னுடைய திருவருளால் அழித்து உயிர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்வான். இந்த அரிய கருத்தைத்தான் அவன் மூன்று புரங்களை அழித்த கதை தெரிவிக்கிறது. மூன்று புரங்கள், மூன்று மலங்கள். அவற்றில் இருந்த அசுர்ர்கள் ஆன்மாக்கள். இறைவன் மூன்று புரங்களை மாத்திரம் அழித்தானே அன்றி, புரங்களில் இருந்த அசுரர்களை அழிக்கவில்லை. புரங்களைச் சுட்டு எரித்த பிறகு அந்த மூவரையும் தன்னுடைய அணுக்கத் தொண்டர்களாக ஆக்கிக் கொண்டான். ஒருவனை மத்தளம் வாசிக்கும் தொண்டனாகவும், மற்ற இருவரையும் வாயில் காவலராகவும் அமைத்துக் கொண்டான் என்று புராணம் சொல்கிறது. ஆன்மாக்களுக்குரிய மூன்று மலங்களையும் அழித்து ஒழித்து அவ் வான்மாக்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் பேரருளாளன் என்பதைத் திரிபுராந்தகனாக இருந்து எம்பெருமான் காட்டுகிறான். “அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்; முப்புர மாவது மும்மல காரியம்; அப்புரம் எய்தமை யாரறி வாரே”. என்று புரம் எரித்த செயலுக்கு உள்ளுரை கூறுவர் திருமூலர். எனவே, “இருகோட்டு ஒரு கைப் பொரு பூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகன்” என்று சிவபெருமானைச் சொன்னமையினால் அவன் ஆணவத்தை அழிக்கும் திறல் பெற்றவன், மும்மலத்தைப் போக்கும் மூர்த்தி என்று சொன்னதாக முடியும். அத்தகைய பெருமானுக்குக் குருமூர்த்தியாக வந்தவன் முருகப் பெருமான். வேலவன் குரு உருவத்தில் வந்தவன் வேலாயுதம் படைத்த பெருமான். இருகோட்டு ஒரு கைப்பொரு பூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகற்குக் குருபூத வேலவன். ஆணவத்தை ஒழித்து, மலத்தை நீக்கும் எம்பெருமானுக்கு ஞானம் வரும்படியாகச் செய்தவன் முருகன் என்பது உயர்வு நவிற்சியாகத் தோற்றலாம். உலகுக்குத் தன் தகுதியைக் காட்டுவதற்காகச் செய்கின்ற திருவிளையாடல்கள் அவை. திரிபுராந்தகனுக்குக் குரு உருவில் வந்தவன் வடிவேற் பெருமான் என்று சொன்னார் அருணகிரிநாதர். சிவ பெருமானைப் பல வகையில் புகழ்ந்துவிட்டு அவனுக்குக் குருவாக இருக்கும் தகுதி முருகப் பெருமானுக்கு உண்டு என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார். முருகன் ஞான குருவாக வந்தவன். அதற்கு அடையாளமாகத் திருக்கரத்தில் வேலை வைத்திருக்கிறான். அது ஞான சொரூபம். அவன் ஞான உபதேசம் செய்கின்ற தேசிகன் என்பதைக் காட்டுகின்றது. ஆகையால் குருபூத வேலவன் என்று அடையாளம் சொன்னார். சூர குலாந்தகன். ஞான உபதேசம் செய்பவனாகிய அவன் அஞ்ஞானம் முழுவதையும் அழிப்பான். அந்த ஆற்றலும் முருகப் பெருமானிடத்தில் இருக்கிறதென்பதைப் புராணத்தைக் காட்டியே சொல்கிறார் அருணகிரிநாதர். குரு பூத வேலவன் நிட்டூர சூர குலாந்தகனே. நிட்டூரம் ~ கொடுமை. நல்லவர்களுக்குக் கொடுமை செய்வதையே தன்னுடைய தொழிலாகப் படைத்த சூரன் என்னும் தலைவனையும், அவனுடன் சேர்ந்த சுற்றத்தார்களையும் அடியோடு அழித்தவன் முருகன்; சூர குலத்திற்கு அந்தகன் ஆக நின்றவன். சிவபெருமான் புராந்தகன்; இவன் சூர குலாந்தகன். முன்னாலே ஐந்து பேர்களாலே நான் வாடுகிறேன், என்று சொன்ன இடத்தும் எப்பெருமான் நிட்டூர சூரனுக்கு அழிவு செய்தவன் என்று சொன்னார். “ஓரஒட் டார்ஒன்றை உன்னஒட் டார்மலர் இட்டுஉனதாள் சேரஒட் டார் ஐவர்; செய்வதென் யான்? சென்று தேவர் உய்யச் சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக் கூரகட் டாரியிட்டு ஓர்இமைப் போதினில் கொன்றவனே” சூரனும் அவன் சுற்றத்தார்களும் அகங்காரத்திற்கும் மமகாரத்திற்கும் அறிகுறிகள். அசுரர்கள் அஞ்ஞானத்தின் வகையாகிய பல குணங்களுக்கு அடையாளம். அத்தகைய இழி குணங்களை அசுர சம்பத்து என்று கூறுவார்கள். அவற்றை எல்லாம் முருகப் பெருமான் அழித்தான்; ஞானத்தினால் அழித்தான். அவன் ஞான ஆக்கத்தையும் அஞ்ஞான நீக்கத்தையும் தருகிறவன் என்பதை வேலவன், நிட்டூர சூர குலாந்தகன் என்ற இரண்டு பெயர்களால் தெரிவித்தார். “முருகப் பெருமான் சிறந்த ஞானாசிரியன்; அஞ்ஞானத்தைப் போக்குபவன். அவனிடத்தில் வந்து உபதேசம் பெற்ற மாணக்கனோ ஆணவத்தை நீக்குபவன்; மும் மலத்தை அழிப்பவன். இப்படிப் பெரிய மாணாக்கனைப் பெற்ற பெரிய குரு என்னிடத்தில் பெருங் கருணை உடையவனாக வந்து, ‘பூதம் நிரம்பிய வீட்டில் நீ இராமல் தனி வீட்டில் சுகமாக இரு’ என்று சொன்னான்” என்று தாம் பெற்ற பேற்றை வியப்புணர்ச்சியுடன் பேசுகின்றார் அருணகிரியார். ஒருபூ தரும்அறி யாத்தனி வீட்டில் உரைஉணர்வற்று இருபூத வீட்டில் இராமல்என் றான்இரு கோட்டுஒருகைப் பொருபூ தரம்உரித்து, ஏகாசம் இட்ட புராந்தகற்குக் குருபூத வேலவன், நிட்டூர சூர குலாந்தகனே. [இரண்டு கொம்புகளையும் ஒரு துதிக்கையையும் உடைய போரிடும் மலைபோன்ற கயாசுரனாகிய யானையை உரித்து அதன் தோலை மேற்போர்வையாக அணிந்து கொண்டவனும் திரிபுரத்தை அழித்தவனுமாகிய சிவபெருமானும், கொடுமை புரியும் சூரனது குலமுழுவதற்கும் காலனாக நின்று அழித்தவனுமாகிய முருகன், “நீ இந்த ஐம் பூதங்களால் அமைந்த வீட்டில் இராமல், ஒரு மனிதரும் அறியாத தனி வீட்டில் வாக்கின் செயலாகிய உரையும் மனத்தின் செயலாகிய உணர்வும் அற்று இருப்பாயாக” என்று அருள் செய்தான். பூதர் ~ மனிதர். தனி வீடு ~ தனக்கு இணையற்ற முத்தி. பூத வீட்டில் ~ ஐம்பூதங்களின் பரிணாமமாக உள்ள உடம்பில். கோடு ~ கொம்பு. பூதரம் ~ மலை; இங்கே முன் உள்ள அடையாளங்களால் யானையைக் குறித்தது. ஏகாசம் ~ போர்வை. புராந்தகன் ~ புரத்துக்கு யமனைப் போன்றவன். குருபூதம் ~ குருவடிவை யுடைய. நிட்டூரம் ~ கொடுமை புரியும்.] ~~ இருவகை விளையாட்டு 1 பிரபஞ்சம் என்பது ஒரு விளையாட்டு மேடை. இந்த மேடையில் விளையாடும் உயிர்க்கூட்டங்கள் குழந்தைகள். குழந்தைகளுக்குத் தலைவனாக இருக்கும் குமர குருபரனும் குழந்தையே. குழந்தைகளுக்கு விளையாடுவது இயல்பு. நாம் செய்கின்ற விளையாட்டு வேறு வகை. விளையாட்டு வகை உடம்பென்னும் ஊனக் குடிசையில் புகுந்து நாம் செய்யும் செயல்கள் மேன்மேலும் உடம்பை அடையும்படி செய்கின்றன. மனத்தினாலே நினைப்பது, வாயினாலே பேசுவது, உடம்பினால் செயல் செய்வது ஆகிய எல்லாச் செயல்களும் மீட்டும் பிறவி விளைவதற்கு விதைகள் ஆக இருக்கின்றன. இப்படி இருக்கும் விளையாட்டு ஒரு விதம். ஆண்டவனோ மாயா விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கு நடுவில் ஞான விளையாட்டு விளையாடுகிறான். அவன் ஞான விளையாடல் புரிவதால் ஊன விளையாடல் புரியும் சிலராவது அவன் திருவருளைப் பெறுகிறார்கள். சிலர், “பெறவில்லையே!” என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர், “பெறலாம்” என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள். சிறந்த சான்றோர்கள் ஊன நாடகம் ஆடும் உலகத்தவருக்கு ஞான நாடகம் ஆடுகின்ற நாயகன் இருக்கிறான் என்ற நினைப்பை ஊட்டுகிறார்கள். இவ்வாறு உலகமாகிய விளையாட்டு மேடையில் ஞான விளையாடல், ஊன விளையாடல் ஆகிய இரண்டும் நிகழ்கின்றன. ஊனம் என்றால் உடம்பு. இந்த உடம்பு நாம் செய்த புண்ணிய பாவ வினைகளால் வந்தது. மாயா விளையாடல் காரணமாக வினைகள் உயிர்களைச் சாருகின்றன. உலகத்தில் நடைபெறும் ஊன விளையாட்டு அத்தனைக்கும் மாயை காரணம். அது உலகத்திலுள்ள மக்களை எல்லாம் இயக்குகிறது. இறைவன் திருவருள் அன்பர்களை இயக்குகிறது. அவன் திருவருளால் உண்டாகும் விளையாட்டு ஞானத் திருவிளையாட்டு. மாயையினுடைய ஆற்றலால் விளைவது மாயை விளையாட்டு; அல்லது ஊன விளையாட்டு. மாயையும் மனமும் மாயை அகண்டமாக இருப்பது. வினைக்குக் காரணம் செயல்; செயல்களுக்கு மூலம் மனம். மனத்தின் செயலே பிறவியாக விளைகிறது. அந்த மனத்தைக் கண்டமான மாயை என்று சொல்லலாம். மாயை என்ற தாய்க்கு மனம் என்பது ஒரு குழந்தை. கந்த புராணம், மாயைக்குச் சூரன் பிள்ளையாகப் பிறந்தான் என்று கூறுகிறது. இந்த மனமும் சூரனைப் போன்றதே. பிழம்பாக இருப்பது, தனியாக இருப்பது என்று இரண்டு வகை உண்டு. பிழம்பைச் சமஷ்டி என்றும், தனியை வியஷ்டி என்றும் சொல்வார்கள். தோப்பு என்பது சமஷ்டி; மரம் என்பது வியஷ்டி. தோப்பு என்பது முழுமையைக் குறிப்பது. தொகுதியாக உள்ள பிழம்பில் மரம் ஓர் உறுப்பு. மக்கள் என்பது சமஷ்டி; மனிதன் என்பது வியஷ்டி. அவ்வாறு மாயை என்பது பிழம்பு அல்லது சமஷ்டி; மனம் தனி அல்லது வியஷ்டி. மாயையின் குஞ்சு மனம், மனம் எங்கே இருக்கிறதோ அங்கே மாயையின் விலாசம் இருக்கும். மனம் மனமாக இருக்கும் வரையில் மாயையின் விலாசம் அங்கே இருக்கும். ‘மனம் மனமாக இல்லாமல் வேறு எப்படி இருக்கும்?’ என்ற கேள்வி இங்கே எழலாம். சில பசுமாடுகள் உண்டு. “அந்த வீட்டுக்குப் போனால் ஜாக்கிரதையாகப் போக வேண்டும். அங்கே இருப்பது பசு அல்ல; புலி; பக்கத்தில் போகாதீர்கள்” என்று சொல்வார்கள். உண்மையில் அங்கே இருப்பது பசுமாடுதான். பசுத்தோல் போர்த்த புலியும் அன்று. ஆனால் அருகில் போனால் துன்புறுத்தும். ஆகையால் பசுவாக அது தோற்றம் கொண்டிருந்தாலும் அதைப் புலி என்று சொல்கிறார்கள். ஒரு வீட்டில் நாய் இருக்கிறது. அதன் பக்கத்தில் போக அஞ்சுகிறோம். அந்த வீட்டுக்காரர் அதைப் பசு என்று சொல்கிறார். நாயின் உருவம் இருந்தாலும் கடிக்கும் என்று அஞ்சுகிற மனிதனுக்கு அது பசுமாட்டைப் போலச் சாதுவாக இருக்கும் என்று காட்டவே அதனைப் பசு என்று சொல்கிறார். அது போலவே மனம் மனமாக இருக்கும் நிலை ஒன்று; திருவருள் இனமாக இருக்கும் நிலை ஒன்று. மனம் மாயையின் குஞ்சாக, மனமாக இருந்தால் நம்மை மீட்டும் பிறவிக்கு ஆளாக்கும். அது திருவருள் இனமாக இருந்து இறைவனை எழுந்தருளச் செய்யும் பீடமாக அமைந்தால் நம்முடைய பிறவியைப் போக்கத் துணையாக நிற்கும். ஐந்து தலை நாகம் நஞ்சைக் கக்குவதாக இருந்தால் துன்பத்தைத் தரும். அப்படிக் கக்காமல் இறுகிய மாணிக்கம் உடையதாய் இருந்தால் அதன்மேல் ரங்கநாதனைப் போலப் படுக்கலாம். மனம் ஞானத்திற்குரிய ஏணியாக இருக்குமானால் அத்தகைய மனம் வேண்டும். அத்தகைய மனம் கிடைப்பது அரிது. மாயை உலகம் எங்கும் பரவி இருப்பினும் நம்மிடத்தில் மனத்தின் உருவமாக இருக்கிறது. ஒரு பெண் தன் கணவனைத் தன் பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு அவள் செய்யும் அதிகாரத்தைக் கேட்க வேண்டாம். அவளுடைய பிறந்தகம் பணக்கார வீடாக இருந்து விட்டால் அவளுக்குத் தலைகால் தெரியாது. அவளுடைய கணவன் மாமியாருக்கு அடிமை; மாமனாருக்கு அடிமை; அந்த வீட்டிலுள்ள எல்லோருக்கும் அடிமையாகி விடுகிறான். அங்கே வேலைக்காரனாக வாழ்கிறான். இதற்கெல்லாம் காரணம் என்ன? மாமியாருக்கும் மாமனாருக்கும் அவன் அடிமையாக இருப்பதற்கு அவர்களிடத்தில் உண்டான நேர்த் தொடர்பு காரணம் அன்று. அவன் மனைவிக்கு முதலில் அடிமையாக இருக்கிறான். அதனால் மாமனார் மாமியாருக்கு அடிமை ஆகிறான். அப்படியே மனத்திற்கு நாம் அடிமை ஆகிற போது மாயைக்கும் அடிமையாகி விடுகிறோம். மாயை என்ற பெரிய ஆற்றிலிருந்து வரும் கால்வாய் மனம். மனம் மூலமாக இருக்க நாம் விளையாடும் விளையாட்டை மன விளையாட்டு அல்லது மாயை விளையாட்டு என்று சொல்லலாம். மாயை விளையாட்டு மாற வேண்டுமானால் மனத்தின் விளையாட்டு மாற வேண்டும். விளையாட்டும் வினையும் நாம் இறைவனுடைய குழந்தைகளாக இருக்கிறோம். ஆனால் நம்மிடத்தில் குழந்தைத் தன்மை இல்லை. குழந்தைகள் செய்வது விளையாட்டு என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால் பொல்லாத குழந்தைகள் விளையாட்டை வினையாக்கி விடுகின்றன. தீபாவளியில் குழந்தைகள் வாணம் விட்டு விளையாடுகிறார்கள்; பட்டாசு வெடிக்கிறார்கள்; அது விளையாட்டு. ஆனால் அந்த வாணத்தைக் கூரைக் குடிசையில் ஒரு குழந்தை செருகி விட்டால் அது விளையாட்டு ஆகுமா? அதனால் பெரிய வினை உண்டாகிவிடுகிறது. இதற்குக்காரணம், அந்தக் குழந்தை யிடத்தில் குழந்தைத்தன்மை இல்லாமல் பொல்லாங்கு இருப்பதே. அத்தகைய குழந்தைகளைப் பெற்ற தாய் தந்தையர்கள் அவர்களை வெளியில் விடுவதற்கே அஞ்சுவார்கள். பைத்தியம் பிடித்த குழந்தை ஒன்று இருக்கிறது. அது செய்கிற காரியங்களை விளையாட்டு என்று சொல்லலாமா? கையில் எதை எடுத்தாலும் வீசுகிறது; அடித்துக் கொள்கிறது. அதனால் அதற்கும் தீங்கு உண்டாகிறது; மற்றர்களுக்கும் உண்டாகிறது. மனம் என்னும் குழந்தையும் நல்ல இயல்போடு இருந்தால் அது செய்வன விளையாட்டாக இருக்கும்; அதனால் நமக்குத் துன்பம் வராது. ஆனால், பெரும்பாலான மனக்குழந்தைகள் பொல்லாத குழந்தைகள்; பைத்தியம் பிடித்த குழந்தைகளாக இருக்கின்றன. அந்தக் குழந்தையின் கையில் ஐந்து கத்திகளைக் கொடுத்திருக்கிறான் ஆண்டவன். ஐந்து இந்திரியங்களான கத்திகளை வைத்துக் கொண்டு இந்த மனம் என்னும் குழந்தை பிரபஞ்ச மேடையில் விளையாடத் தொடங்கினால் அது எத்தனை பேரைக் கொலை செய்யும் என்று கணக்குச் சொல்ல முடியாது. எவ்வளவோ பேருக்குக் காயத்தை உண்டாக்கும். எத்தனையோ பேர்களிடத்தில் அடி வாங்கும். ஆகவே, விளையாட்டாக இருந்தாலும் வினையாக முடிபவை சில. குழந்தை செய்வதால் விளையாட்டு என்று சொல்லவேண்டுமே யொழிய, அந்தச் செயலால் நிகழும் துன்பங்களை எண்ணினால் அது விளையாட்டு ஆகாது. குழந்தை குரங்காகிவிட்டால் விளையாட்டு வினையாகிவிடும். மாயை விளையாட்டு பிரபஞ்ச நாடகம் ஆடும் உயிர்களுக்கு மனம் பொல்லாத குழந்தையாக இருக்கிறது. ஐந்து இந்திரியங்கள் என்னும் கத்திகளை வீசி விளையாடுகிற பொல்லாத குழந்தை அது விளையாடுகிற விளையாட்டு வினை விளையாட்டு அல்லது மாயை விளையாட்டு. தீய விளையாட்டை விளையாடும் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு உலகத்தார் அபவாதம் உண்டாகிறது; அரசாங்கத்தில் தண்டனை கிடைக்கிறது. இந்த மாயை விளையாட்டு விளையாடும் மனத்தைப் பெற்ற உயிர்களுக்கு மேன்மேலும் துன்பங்கள் விளைகின்றன. பிறவியாகிய தண்டனை கிடைக்கிறது. அதனால் அந்தக் குழந்தையே வேண்டாமென்று சொல்வது போலப் பெரியவர்கள் மனமே வேண்டாமென்று சொன்னார்கள்; மனம் இல்லாத நிலை வேண்டுமென்றும், மனம் செத்துப் போக வேண்டுமென்றும் வேண்டினார்கள். மனம் மாறுபட்ட விளையாட்டைச் செய்வதற்குக் காரணம் அதனிடத்தில் ஏதோ நோய் இருக்கிறது. அந்த நோய்க்கு அஞ்ஞானம் அல்லது அறியாமை என்று பெயர். பித்தம் ஏறி இருப்பதனால் குழந்தை பொல்லாங்கான செயல்களைச் செய்கிறது என்று சொல்வது வழக்கம். அப்படியே இந்த மனமும் அஞ்ஞானம் என்ற நோயைப் பெற்று மாயை விளையாட்டை விளையாடுகிறது. அதற்கு ஏதேனும் பரிகாரம் செய்தால் நல்ல விளையாட்டை விளையாடும். அஞ்ஞானம் என்ற நோய்க்குப் பரிகாரம் ஞானம் அல்லது நல்ல அறிவு. ஆண்டவனைப்பற்றி அறிந்து அவன் திருவருள் பெறும் ஆர்வத்தால் நல்ல முறையில் முயற்சி செய்வது பேரின்பத்தை அடைய வேண்டுமென்ற அறிவை மனம் கொள்ள வேண்டும். அதற்கு வழி செய்வது ஞானம். அஞ்ஞானத்தைப் போக்கும் முயற்சி தொடங்கும்போது ஞான நாடகம் தொடங்குகிறது. மனிதக் குழந்தைகள் உலகில் வாழும்போது விளையாடும் விளையாட்டு, ஒன்று ஊன நாடகமாக இருக்கும்; அல்லது ஞான நாடகமாக இருக்கும். ஊன நாடகத்தை மாயை நாடகம் அல்லது அஞ்ஞான நாடகம் என்று சொல்லலாம். இந்த நாடகம் அல்லது விளையாட்டு மேன் மேலும் வினைகளை விளை*த்துத் திரும்பத் திரும்பப் பிறந்து இறந்து துன்புறும்படி செய்கிறது. சேறும் கரையும் இந்த மாயை விளையாட்டுப் போக வேண்டுமானால் அதற்கு மாறாக ஞான விளையாட்டு விளையாட வேண்டும். அதற்குத் துணை இல்லாமல் நம்மால் முடியாது. சேற்றில் இருப்பவன் ஒருவன் அதிலிருந்து எழ வேண்டுமானால் சேற்றுக்கு அப்பால் இருக்கும் ஒருவனது துணைவேண்டும். கால் புதைந்துவிட்டது என்று, அதனை விடுவிக்கக் கைகளையும் சேற்றில் புதைத்தால் கால் வெளியில் வராது; கையும் சேர்ந்து புதைந்துவிடும். சேற்றில் இருக்கும் வேறு ஒருவனது உதவியை நாடினால் அவனாலும் நம்மை மீட்க முடியாது. தண்ணீருக்குள் மூழ்குகின்றவனைக் காப்பாற்றுவதற்காகக் கரையிலிருந்து தண்ணீரில் குதித்து விட்டால் இரண்டு பேரும் நீரில் மூழ்கி இறந்துவிடுவதைப் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். அது போலவே சேற்றில் விழுந்தவனைக் கரையேற்றுவதற்குச் சேற்றில் விழுந்த வேறு ஒருவனால் முடியாது. அப்படியின்றிச் சேற்றுக்கு அப்பால் கரையில் ஒருவன் இருந்தால் அவன் கரையேற்ற முடியும்; கரையில் உள்ளவன் கை கொடுத்தாலும் சரி, சேற்றில் இருப்பவன் கையை நீட்டிப் பற்றிக் கொண்டாலும் சரி, கரையேறி விடலாம். அஞ்ஞான நாடகம் ஆடும் மனம் ஞான நாடகம் ஆடும் கரைக்குப் போக வேண்டும். அந்தக் கரையில் இருக்கின்றவன் எம்பெருமான். அவனுடைய திருவருள் கிடைத்தால் நன்மை உண்டாகும். முயற்சியும் இறைவன் கருணையும் இறைவன் ஞானமே வடிவமாக உடையவன்; ஞானத்தற்கு இருப்பிடம். அவன் தன்னுடைய குழந்தைகளாகிய மக்களுக்கு ஞானம் தருவதற்கு எப்போதும் சித்தமாக இருக்கிறான். ஆனால் முயற்சி இல்லாதவனுக்கு எத்தனை கொடுத்தாலும் அது பயன் அற்றதாகப் போய்விடும். அதன் பெருமை அவனுக்குத் தெரியாது. சீரணம் பண்ணிக்கொள்ள முடியாத ஒரு பொருளைக் குழந்தைக்குக் கொடுத்து, அதனை உண்டால் அது குழந்தையின் வயிற்றை நாசம் ஆக்கிவிடும். அப்படியின்றிச் சீரணிக்கும் ஆற்றல் உடைய குழந்தையானால் அந்தப் பொருளால் இன்பத்தைப் பெறலாம். அப்படியே முயற்சி செய்யும் மனிதனுக்கு ஆண்டவன் தன்னுடைய அருளைக் கொடுத்தால் அது பயனை உண்டாக்கும். இப்படிச் சொல்வதனால் இறைவன் நம்முடைய முயற்சியின் அளவைக் கொண்டு அதற்கு ஏற்றபடி அருள்கிறான் என்று கொள்ளக்கூடாது. முயற்சி எதுவும் இன்றிச் சும்மா இருந்தால் அவன் அருள் கிடைக்காது. நல்ல முயற்சி பண்ணத் தொடங்கினால் அவன் நம்மிடத்தில் பெருங் கருணை கொண்டு பெரிய பயனைத் தருவான். தாயின் கருணை. தாயினுடைய பெருமை அத்தகையது. குழந்தை ஏதேனும் ஒரு சிறிய முயற்சி செய்தால் அதனைப் பெரிதாகப் பாராட்டுகிறவள் அவள். அதுவும் செயல் செய்ய முயல்கிறதே என்பதனால் மிக்கமகிழ்ச்சி அடைகிறாள். சப்பாணியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் குழந்தை தளர்நடை பழகும்போது அதனுடைய தாய் அந்த நடையைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறாள். அதற்குக் காரணம் தளர்நடை அழகு என்பது அன்று; இனி நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை அதனால் உண்டாகிறது. தளர் நடை நடக்கும் காலுக்குத் தண்டை அணிகிறாள். அவளுடைய வீட்டுக்கு ஒருவன் ஒரு மூட்டை அரிசி கொண்டு வருகிறான். அதை உள்ளே கொண்டுபோக வேண்டும். தாய் அதை எடுத்து உள்ளே போடுவதற்கு முயலும்போது சின்னஞ்சிறு குழந்தை, “நானும் தூக்குகிறேன்” என்று சேர்ந்து கொள்கிறது. குழந்தையினுடைய முயற்சியால் மூட்டை உள்ளே வந்துவிடவில்லை என்று தாய்க்குத் தெரியும். ஆனால், “என் குழந்தை இந்த மூட்டையை உள்ளே போட்டது” என்று சொல்லிக் கிளுகிளுப்பை அடைகிறாள். அந்த மூட்டையை அது தூக்கவில்லையானாலும் தூக்குவதற்கு முயன்றதே, அதைக்கண்டு அவளுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. அப்படியே இறைவனிடத்தில் நமக்கு அன்பு உதய மானால் போதும்; அதற்கு மகிழ்ந்து அவன் அருளை நமக்கு வழங்கத் தொடங்குகிறான். தன்னை நினைப்பதற்கு வேண்டிய கருவிகளை எல்லாம் மக்களுக்குக் கொடுத்திருக்கிறான். தனு கரண புவன போகங்களைக் கொடுத்து, அவற்றைக் கருவியாக வைத்துக்கொண்டு தன் பேரருளைப் பெறுவதற்கு முயல்வார்கள் என்று அவன் எதிர்பார்க்கிறான். முயற்சி இல்லாமல் கொடுத்தால் கொடுக்கும் பொருளுக்கும் பயன் இராது; மதிப்பும் இராது. முயற்சி செய்வதனால் பெறுகின்ற பொருளுக்குப் பயன் உண்டு என்பதை அறிந்தே அவன் மக்களின் முயற்சியை எதிர்பார்க்கிறான். அந்த முயற்சியும் அவன் அருளுகுற பயனும் அளவினால் ஒத்திருக்கும் என்று சொல்ல இயலாது. அவன் சிறு முயற்சிக்குப் பன்மடங்கு நன்மையை அருளுகிறான். இறைவன் பெருங்கருணை. ‘நாம் இறைவனைப் பூசை செய்கிறோம்; சகசிரநாம அருச்சனை செய்கிறோம். அதனால்தான் இத்தனை நன்மை கொடுத்திருக்கிறான்’ என்று எண்ணுவது தவறு. “ஒரு ரூபாய் கொடுத்தோம்; ஒரு வீசை மாவு தந்தார்” என்று செட்டியாரைப் பற்றிச் சொல்வது போன்றது அது. நாம் செய்த காரியத்திற்கு ஏற்ற கூலிதான் கிடைக்கிறது என்றால், நாம் செய்யும் தப்பான காரியங்களுக்கும் உரிய கூலியை எதிர்பார்க்கவேண்டும். நாம் செய்த நன்மை களைக் காட்டிலும் தீமைகளே அதிகம். நாம் எத்தனையோ பேரை உதைத்திருப்போம். எத்தனையோ அன்பர்களை வைதிருப்போம். எத்த்னையோ பெரியவர்களுக்குத் தவறு நினைத்திருப்போம். அப்படிச் செய்த தீங்குக்கு இறைவன் கூலி கொடுக்க வேண்டுமானால் உதைத்த கால் முடமாக வேண்டும்; வைத வாய் ஊமையாக வேண்டும்; பல விதமாகப் பெரியவர்களை எண்ணிய மனம் பைத்தியமாகி இருக்க வேண்டும். ஆனால் இறைவன் அப்படிப் பண்ணவில்லை. அவனுக்கு நம்மிடத்தில் உள்ள பெருங்கருணை அத்தகையது. அவனைச் சிறிதளவு நினைத்தால் போதும்; நம்மை நினைத்தானே என்று மகிழ்ச்சி அடைவான். நாம் அவனுடைய அருளைப் பெற வேண்டுமென்று ஓர் அடி நடந்தால் அவன் பத்து அடி எதிர்கொண்டு அழைக்க வருகிறான். ‘திருச்செந்தூரை நினைத்து வணங்கினால் புண்ணியம்’ அந்தத் திசையில் திரும்பினால் புண்ணியம்’ என்று புராணங்கள் சொல்கின்றன. ஆண்டவனுடைய பெருங் கருணையைப் புலப்படுத்துவதற்கு அப்படிச் சொல்வது ஒரு முறை. “என் பெயரைச் சொன்னால் போதும்; உடனே எல்லாம் செய்து கொடுப்பான்” என்று நாம் சொல்வதில்லையா? நக்கீரர் சொல்வது. கருணை உள்ளவர்கள் முயற்சியின் தொடக்கத்திலேயே அதைப் பாராட்டுவார்கள். மிக்க முயற்சி செய்த பிறகு அவனுக்கு ஊக்கம் அளிக்கலாம் என்று காத்திருக்க மாட்டார்கள். திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் ஒரு புலவனுக்கு முருகனை அடைய வழி காட்டுவதுபோலப் பாடி இருக்கிறார். முருகன் எங்கே இருக்கிறான் என்று புலவன் கேட்ட கேள்விக்கு விடை சொல்லும் முறையில் பாட்டு அமைந்து இருக்கிறது. “நான் முருகனைப் பார்க்க வேண்டும்” என்று சொன்ன மாத்திரத்தில் வழிகாட்டும் புலவருக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. “அப்பா, நீ உடனே அவனைக் காண்பாய், ஊரை விட்டு, வீட்டை விட்டு அவனைக் காணவேண்டும் என்று நீ புறப்பட்டுவிட்டாயே! அதுவே பெரிய காரியம். எதை எதையோ ஆதாரமாகக் கருதி ஊன விளையாட்டை ஆடிக்கொண்டிருந்த நீ இறைவனைக் காண வேண்டுமென்று நேர் எதிர்த்திசையில் திரும்பினாயே; பெரிய காரியம். ஆண்டவன் திருவருள் உனக்குக் கிடைக்கும். இன்று கிடைக்கும் என்பது மாத்திரம் அல்ல; இப்பொழுதே கிடைக்கும்” என்கிறார். “சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவுநீ நயந்தனை ஆயின், பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதிநி முன்னிய வினையே.” “நீ தீட்சை பெறவில்லையே! மந்திர ஜபம் பண்ணவில்லையே! தலங்களைத் தரிசிக்கவில்லையே!” என்று சொல்லிப் பயமுறுத்தவில்லை. இறைவனைக் காணவேண்டுமென்ற எண்ணத்தோடு முயற்சியைத் தொடங்கியதே பாராட்டுக்குரிய செயல் என்பது அவர் எண்ணம், இறைவனும் அன்பர்களிடம் முயற்சியை எதிர்பார்க்கிறான். முயற்சி வேண்டும் நல்ல முயற்சியில் முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால் இறைவனுடைய திருவருள் நமக்குத் துணை நிற்கும். அவனுடைய அருளைப் பெறவேண்டுமென்று ஞான நாடகத்தைத் தொடங்கிவிட்டால் அது நிறைவேறும் வரையில் நில்லாது, வேகமாக ஓடுகின்ற நதியில் ஒன்றைப் போட்டால் இடையில் சிறிது தடை இருந்தாலும் ஆற்றின் வேகத்தால் உந்தப்பட்டு எப்படியும் கடலில் போய்ச் சேர்ந்துவிடும். அப்படியே இறைவனுடைய திருவருளைப் பெறும் முயற்சியைப் பண்ணினால் என்றேனும் ஒரு நாள் போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவோம். எப் படியாவது முயற்சியைத் தொடங்கிவிட வேண்டும். சிறிய முயற்சியானாலும் முயற்சி செய்கின்றதே என்ற எண்ணத்தால் குழந்தைகளைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டுகின்ற தாய்க்கு உள்ள அருட்பண்பு எம்பெருமானுக்கு இராதா? விளையாட்டை மாற்றுதல் நாம் இப்போது விளையாடிக் கொண்டிருக்கிறோம். இந்த விளையாட்டுக் கருவியாக உடம்பும் உள்ளமும் உரையும் அமைந்திருக்கின்றன. இந்த விளையாட்டுக்கு இடமாக, விரிந்த பிரபஞ்சம் இருக்கிறது. துணையாகப் பல மக்கள் இருக்கிறார்கள். நாம் புதிய இடம் தேடவேண்டாம். புதிய கருவிகளைத் தேடவேண்டாம். இது வரையில் ஆடிய மாயை விளையாட்டை மாற்றி, தீய விளையாட்டாகிய அஞ்ஞான விளையாட்டை மாற்றி, தூய விளையாட்டாகிய ஞான விளையாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படித் தொடங்கினால் மெல்ல மெல்ல முடிவான இன்பத்தை அடையலாம். அன்பு நெறியில் நடக்கத் தொடங்கினால் அது முதலில் வழியாக இருந்து பின்பு அதுவே இன்பமயமாக முடியும். “அன்பே சிவமாய் அமர்ந்திருப் பாரே” என்பது திருமூலர் வாக்கு. ஓர் ஏணி இருக்கிறது. அதையே மடித்துக் கட்டில் ஆக்கிவிடலாம் என்றால் அதைக்கொண்டு மாடியின்மீது ஏறலாம். ஏறி,அந்த ஏணியையே எடுத்துக் கட்டிலாகவும் மடித்துப் போட்டுக் கொண்டு படுக்கலாம். அத்தகையது அன்பு நெறி. 2. அருணகிரிநாதப் பெருமான் இந்த இரண்டு வகை விளையாட்டையும் சொல்கிறார். ஒன்றை மாயை விளையாட்டு என்றும், மற்றொன்றை ஞானவிளையாட்டு என்றும் சொல்கிறார். விநோதம் என்ற சொல் விளையாட்டைக் குறிப்பது. ஞான விநோதம், மாயா விநோதம் என்று இரண்டையும் அவர் அலங்காரமாகப் பாட்டில் சொல்கிறார்.நாம் இப்போது மாயா விநோதத்தில் ஈடுபட்டிருக்கிறோம். ஞான விநோதத்தில் ஈடுபட வேண்டும். மாயா விநோதம் மாயா விநோதத்திற்குக் காரணமாக இருப்பது மனம். அதனால் வருகின்ற விளைவு துக்கம். உலகத்தில் நமக்குத் துயரங்கள் பல காரணங்களால் வருகின்றன. அவற்றுள் தலைமையாய் உள்ளவை மூன்று என்று சொல்லலாம். நாம் நம்முடைய உறவினர் எவரையேனும் இழந்துவிட்டால் துயர் அடைகிறோம். நமக்குரிய பொருளை இழந்துவிட்டால் துன்புறுகிறோம். நோய் வந்தால் இன்னல் அடைகிறோம். உலக வாழ்க்கையில் இந்த மூன்று வகையாலும் துக்கம் உண்டாகிறது. ஆனால் இந்த மூன்றைப் போலவே வேறு வகையான மூன்றை நினைத்துப் பார்த்தால் அவை பற்றிய துக்கந்தான் பெரிதாக இருக்க வேண்டும். எல்லா உறவினர்களையும் விடப் பெரிய உறவினனாகிய பரமேசுவரனை நாம் பிரிந்திருக்கிறோம்; அது எவ்வளவு பெரிய துயர‌த்தை உண்டாக்க வேண்டும்? நமக்கே உரிமையான முத்தி என்னும் செல்வம் நமக்குக் கிடைக்காமல் இருக்கிறது; அதனால் எத்தனை துக்கம் உண்டாக வேண்டும்? எல்லா நோய்களையும் விடக் கடுமையானது உடம்பு வரும் நோய் ஆகிய பிறவி. பல காலமாக அந்தப் பிணி நம்மைப் பற்றிக் கொண்டிருக்கிறது; அந்தப் பிணியை நினைத்துப் பார்த்தால் எல்லாவற்றையும்விடப் பெரிய துயரம் உண்டாகும். பிறவியாகிய பெரும் பிணியைப் பெற்றும் அதைப் பற்றி நாம் நினைப்பது இல்லை. இறைவனாகிய பெரிய உறவைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இழந்து நின்றும் துன்புறுவது இல்லை. முத்திச் செல்வத்தைப் பெறாமல் உண்மையான வறுமையை அடைந்தும் நாம் புலம்புவது இல்லை. இதற்குக் காரணம் நாம் மாயா விநோதத்தில் ஈடுபட்டிருப்பதுதான். ‘நூறு ரூபாய் போய்விட்டதே!’ என்று துக்கப்படத் தெரிகிறது. ‘நமக்குரிய வீடு போய்விட்டதே!’ என்று துன்புறத் தெரிகிறது, ‘ஒரு பூதரும் அறியாத் தனி வீட்டில் இருக்கவில்லையே’ என்று துன்புற வகை இல்லை. நம்மை வளர்த்து எடுத்துப் பாலூட்டிய தாய் மறைந்து போனால் புலம்புகிறோம்; வாடுகிறோம். ஆனால் இந்த உயிருக்குத் தாயாகிய ஆண்டவனைச் சிறிதேனும் நினைப்பது இல்லை; அவனைப் பிரிந்து வாழ்கிறோமே என்று வருத்தம் அடைவது இல்லை. இப்படியெல்லாம் உண்மையான துக்கம் இல்லாமல் பொய்யான துக்கங்களை ஏற்றுக் கொண்டு வாழ்வற்குக் காரணம் இந்த மனமே; துக்கப்படுவதும் இதுதான். இந்த மனோ துக்கத்தில் நம் வாழ்நாளே கரைந்து போகிறது. இதுவே மாயா விநோதத்தின் பயன். மாயா விநோத மனோ துக்கத்தில் ஈடுபட்டு நம்முடைய வாழ்க்கை வீணாகிறது. மாயையோடு சேர்ந்த இருளில் உழல்கின்ற நமக்கு ஆண்டவன் அருள் கிட்டுவது இல்லை. இந்த நிலை மாறவேண்டுமானால் இருள் இல்லாத, மனத்தின் குறும்பு இல்லாத, ஓர் இடத்தில் விளையாடவேண்டும். அது ஞான விளையாடல் புரியும் இடம். அந்த விளையாட்டை மனம் விளையாடத் தொடங்கினால் இறைவனுடைய திருவருள் பெறும் நிலை வந்துவிடும். அந்த நிலை இரண்டறக் கலக்கும் அத்துவித நிலை. அருணகிரியார் வேண்டுகோள் “முருகா, நான் ஞான விளையாட்டு விளையாட வேண்டுமே! மாயா விநோத மனோ துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறேனே! இந்த மாயை விளையாட்டிலே இருக்கும் எனக்கு ஞான விளையாட்டை விளையாடும் நெறியை நீதான் காட்ட வேண்டும். ஏனென்றால் நீயே ஞான உருவம் ஆக இருக்கின்றவன்” என்று விண்ணப்பித்துக் கொள்கிறார் அருணகிரிநாதர். நீயான ஞான விநோதந்தனை என்று நீ அருள்வாய்! “இப்போது ஞான விளையாட்டு என்னிடம் இல்லை. ஞானம் உன்னுடைய திருவருளால் வரவேண்டும். நீ அந்த ஞானத்தை ஊட்டினால் அன்றி என்பால் ஞான விளையாட்டு வராது. இப்போது அந்த விளையாட்டு இல்லை என்பது என்னுடைய அவல நிலையால் நன்கு தெரிகிறது. அந்த விளையாட்டு நிலை உன்னால்தான் வர வேண்டும். ஆகவே அதனை நீ அருள் புரிவாயாக” என்று வேண்டுகிறார். இன்று நாம் இருக்கின்ற நிலை மாயா விநோத மனோதுக்க நிலை. இது மாய்ந்து போனால் நமக்கு இன்பம் உண்டாகும். இது மாய்வதற்கு ஞான விநோதமாகிய மருந்து வேண்டும். காமமும் துவட்சியும் ஒருவனுக்கு நோய் வருகிறது. நோய் உடையவன் டாக்டரிடத்தில் போனால் அவர், “என்ன செய்கிறது?” என்று கேட்கிறார். அவனுக்கு எத்தனையோ நோய்கள் இருந்தாலும் எது மிகுதியாக இருக்கிறதோ அதைத்தான் சொல்வான். ஒருவனுக்கு வயிற்றுவலி. அதோடு கண் எரிகிறது. கால் குடைச்சல் ஏற்படுகிறது. இவ்வளவு இருந்தும் வயிற்றுவலிதான் பொறுக்க முடியாமல் மிகுதியாக இருக்கிறது. டாக்டர் என்ன பண்ணுகிறது என்று கேட்டவுடன், “ஐயோ! வயிற்றுவலி தாங்க முடியவில்லை!” என்று முதலில் சொல்வான். டாக்டர் விசாரித்தால் ஒவ்வொன்றாக மற்றச் சிறு வியாதிகளைச் சொல்வான். டாக்டர் கேளாமலே முதலில் அவன் சொல்வது வயிற்றுவலியைத்தான். காரணம்: அவனிடத்தில் உள்ள நோய்களுக்குள் அதுதான் மிக்க துன்பத்தைத் தருவது. “மாயா விநோத மனோ துக்கம் என்று சொல்கிறாயே! அந்த நோய் உனக்கு என்ன துன்பத்தைத் தருகிறது?” என்று முருகன் கேட்கிறான். அருணகிரிநாதர் ஆகிய நோயாளி பல நோய்களை உடையவரேனும் அவற்றுள் மிக்க துன்பத்தைத் தரும் ஒன்றை எடுத்துச் சொல்கிறார். சித்ர மாதர் அல்குல் தோயா உருகிப் பருகிப் பெருகித் துவளும் இந்த, மாயா விநோத மனோதுக்கம். “மாதருடைய மயலில் நான் உருகுகிறேன். அந்த மயலைப் பருகுகிறேன். அது மேன்மேலும் பெருகுகிறது. அதனால் துவண்டு போகிறேன். ஏதேனும் நல்லது செய்யலாம் என்று நினைத்தால் எனக்கு உறுதி இருப்பது இல்லை. அந்த மயல் எனக்குத் துயரத்தைத் தந்து நேர்மையாக வாழவும், உறுதியோடு நிற்கவும் வலு இல்லாமல் செய்து விடுகிறது; துவட்சியைத் தருகிறது. நான் என்ன செய் வேன்!” என்று புலம்புகிறார். காமத்தால் பற்றப்பட்டவர்கள் துவண்டு வீழ்கிறார்கள். துவளுவதுபோல அறிவு மாறி வீழ்கிறார்கள். நல்லது செய்ய வேண்டுமென்ற நினைப்பு இருந்தாலும் அதனைச் செய்வதற்கு உடம்பு இடம் கொடுப்பது இல்லை. நல்லதைப் பேச முடிவது இல்லை. காமத்தின் வலிமை மனிதனுக்கு உண்டாகின்ற நோய்களுக்குள் மிகவும் கொடியது காமநோய். அதனை மாய்ப்பதற்கு மன வலிமை அதிகமாக வேண்டும். காமம் என்ற சொல்லுக்கு ஆசை என்பதுதான் பொருள். மற்ற ஆசைகள் எல்லாவற்றையும்விட வலியதாகப் பெண் ஆசை இருப்பதனால் காமம் என்றவுடன் பெண் ஆசை என்ற நினைவே உண்டாகிறது. சில பொதுப் பெயர்கள் சிறப்பாக உள்ள பொருள்களைக் குறிப்பது உண்டு. ஈசுவரன் என்பது பொதுவான பேரானாலும் சிவபெருமானைக் குறிக்க வழங்குகிறோம். பூ என்று தாமரைப்பூவைக் குறிப்பது உண்டு. இத்தகைய சொற்கள் பல பொருளுக்குப் பொதுவான பெயராக இருந்தாலும் அந்தப் பொருள்களுக்குள் சிறப்பானவற்றைக் குறிப்பிடுவது மரபு. அதுபோல் காமம் என்ற சொல் எல்லா ஆசைகளுக்கும் பொதுவான பெயராக இருந்தாலும் அவைகளுக்குள் மிகவும் வலிய பெண்ணாசையைச் சிறப்பாகக் குறிக்கும். அப்படிக் குறிக்கும் வழக்கத்தினாலேயே காமத்தின் கடுமையும் வலிமையும் நன்கு விளங்கும். ஆகையால் அருணகிரியார் மாயா விநோத மனோ துக்கத்தின் விளைவாகப் பல இருந்தாலும் மங்கையர் ஆசையை எடுத்துச் சொன்னார். அப்படிச் சொன்னாலும் மற்ற ஆசைகளையும் நாம் கொள்ள வேண்டும். தலைமையாக உள்ள ஒன்றைச் சொல்லி அதனால் மற்றவற்றைப் பெறுவதற்கு இலக்கணத்தில் ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். அதை உபலட்சணம் என்று சொல்வார்கள். உபலட்சணத்தால், சித்ர மாதர் ஆசையைச் சொன்னாலும் மற்ற ஆசைகளையும் கொள்ள வேண்டும். சித்ர மாதர் இங்கே அருணகிரியார் குறிக்கும் மாதர்கள் இல்லறத்திற்குத் துணையாக இருக்கும் தர்ம பத்தினிகள் அல்ல. சித்திரம் ~ அலங்காரம். பிறர் உள்ளத்தைக் கவர்வதற்கு விளம்பரம் செய்து கொள்வது போலத் தம்மை நாலு பேர் பார்க்கும்படியாக அலங்காரம் செய்து கொள்ளும் தீய மாதரைத்தான் சித்ர மாதர் என்று குறித்தார். அவர் காலத்தில் அத்தகையோர்கள் மிகுதியாக இருந்தார்கள் போலும்! அத்தகைய தீய மாதர்களுடைய வலையிலே பட்டு உருகிப் பெருகித் துவளும் மனோ துக்கத்தை அருணகிரியார் குறிப்பிடுகிறார். “எனக்கு என்று செயல் ஒன்றும் இல்லாமல் நான் துவண்டு போகிறேன். அதற்குக் காரணம் என் தலைக்கு ஏறிய பித்தம். அந்தப் பித்தம் மேன்மேலும் பெருகிக் கொண்டு வருகிறது. சித்திர மாதரால் வந்த பித்தம் அது. இப்படி எனக்குப் பித்தம் பிடிப்பதற்கு மூல காரணமாக இருப்பது மனத்தினால் உண்டாகின்ற துக்கம். மனத்தின் போக்கில் சென்று மயலில் மூழ்கித் துவண்டு செயல் மறந்து இருப்பதற்கு அடிப்படையாக இருப்பது மாயா விளையாட்டு. இந்த மாயா விநோதத்தினால் வந்த துக்கம் மாய வேண்டும். மாயை விளையாட்டு மாய்வதற்கு ஞான விளையாட்டுத்தான் மருந்து. அதற்கு உன்னுடைய திருவருள் வேண்டும்” என்பது அருணகிரியார் பிரார்த்தனை. ஞானம் நீயான ஞான விநோதந்தனை என்று நீ அருள்வாய்? ‘நீயான ஞான விநோதம்’ என்றார். முருகப் பெருமான் ஞானமே திருவுருவாக இருப்பவன். “ப்ரக்ஞானம் ப்ரம்மம்” என்பது மகாவாக்கியம். கடவுளை அறிவது என்றாலும் ஞானத்தை அறிவது என்றாலும் ஒன்றுதான். “அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே” என்று திருப்புகழில் அருணகிரியார் அருளியிருக்கிறார். “நீயே அந்த ஞான மயமாக இருக்கிறாய். நீ என் உள்ளத்தில் வந்துவிட்டால் என் மனம் ஞான வாசனை வீசும். அதிலிருந்து விளையும் விளையாட்டு ஞான விளையாட்டு ஆகிவிடும். அதனை நீ அருள் செய்யவேண்டும். நீ எப்போது அப்பா அருள்வதற்கு நினைத்திருக்கிறாய்?” என்று அருணகிரியார் முருகப்பெருமானைப் பார்த்துக் கேட்கிறார். ஞானக் குழந்தை சேயான வேல் கந்தனே! என்று முருகனை விளிக்கிறார். சேய் என்பதற்குச் சிவந்த நிறம் உடைய முருகன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இங்கே குழந்தை என்று பொருள் கொள்வது சிறப்பாகும். விளையாட்டைச் சொல்லும்போது குழந்தை என்று சொல்வதுதான் பொருத்தம். ஞான விளையாடல் செய்கின்ற எம்பெருமான் நம்மையும் அந்த விளையாட்டில் குழந்தையாகக் கூட்டிக் கொள்வான். ஆகவே சேயான என்பதற்குக் குழந்தைத் தெய்வமாக நிலவுகின்ற என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். ஞான விளையாடலைச் செய்யும் அன்பர்களுக்கு எல்லாம் தலைவனாகிய ஞானக் குழந்தை தன்னுடைய கையிலே அந்த விளையாட்டுக்குரிய கருவியை வைத்திருக்கிறான். பொல்லாத குழந்தை கையில் கத்தியையும் கோலையும் வைத்திருக்கும். நல்ல குழந்தைகள் பந்தும் பொம்மையும் வைத்திருக்கும். கல்லையும் கத்தியையும் கொண்ட அந்தக் குழந்தை தீங்கு செய்யுமே என்று பெரியவர்கள் அஞ்சுவார்கள். பந்தையும், பொம்மையையும் உடைய குழந்தையைக் கண்டால் பிற குழந்தைகள் நாடி ஓடி விளையாட வருவார்கள். ஞான விநோதம் நடத்தும் பெருமானாகிய முருகன் தன்னுடைய அன்பர்களையும் ஞானத் திருவிளையாட்டில் பயிலும்படி அருள் பாலிப்பான். அவன் தன்னுடைய கையில் ஞானத்தையே வேலாக வைத்துக் கொண்டிருக்கிறான். ஆறு முகமும் பன்னிரண்டு கரங்களும் உடைய இளங் குழந்தையாகப் பார்வதி தேவியால் ஒன்றுபட்டபோது அவனுக்குக் கந்தன் என்ற திருநாமம் வந்தது. ஆகவே கந்தன் என்ற பெயரும் அவனுடைய குழந்தைப் பிராயத்தை நினைப்பூட்டுகிறது. அவன் குழந்தை; ஞான விளையாட்டுக் குழந்தை; அதற்கு ஏற்ற ஞான வேலைத்திருக்கரத்தில் கொண்டிருக்கிறான்; சரவணப் பூம்பொய் கையில் விளையாடும் குழந்தை என்ற கருத்துக்கள் நினைவுக்கு வரும்படியாக. சேயான வேல் கந்தனே! என்று பாடினார். அத்தகைய குழந்தை திருச்செந்தூரில் இருக்கிறானாம். உயிர்கள் விளையாடும் இடத்திற்கு வந்து விளையாடுகின்ற குழந்தை அவன். ஏதோ கந்த லோகத்திலும், சரவணப்பூம் பொய்கையிலும் மாத்திரம் விளையாடிக் கொண்டிருந்தால் நாம் அவனோடு சேர்ந்து விளையாட இயலாது. அவனோ மிகவும் கருணை உடைய குழந்தையாதலின் நாம் மாயா விளையாட்டு விளையாடுகிற உலகத்திற்கே வந்து திருச்செந்தூரில் இருக்கிறான். சேயான வேல் கந்தனே! செந்திலாய்! இந்தப் பாட்டில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. ஒன்று, “நீ எனக்கு இதனை அருள வேண்டும்” என்று கேட்பது. இரண்டு, முருகப் பெருமானின் பெருமையைச் சொல்வது. மூன்று, “நான் இந்த நிலையில் இருக்கிறேன்” என்று சொல்வது. முதலில் எது வேண்டுமோ அதைச் சொன்னார். பசியினால் துடிக்கிறவன் சோறு சோறு என்று கத்துவான். தீப் பற்றினால் தண்ணீர் தண்ணீர் என்று கத்துவான். அப்படி முதலில், நீயான ஞான விநோதந்தனை என்று நீ அருள்வாய்! என்று கதறுகிறார். பின்பு, “நீ நல்ல மருத்துவன் ஆயிற்றே! உன்னால் என்னுடைய வியாதி தீருமே. நீ விளையாடல் புரியும் சின்னஞ் சிறு குழந்தை அல்லவா?” என்று சொல்வது போவ, “சேயான வேல் கந்தனே!” என்றார். அதன் பிறகு தமக்கு வந்த வியாதியைச் சொல்லுகிறார். டாக்டர் வேறு, மருந்து வேறு என்பது உலகியல் மருத்துவம்; இங்கே மருந்தான ஞானமும், அதைத் தருபவனாகிய ஆண்டவனும் ஒன்றாக இருப்பதைக் காண்கிறோம். “நீயான ஞானம்” என்று பேசுகின்றார். அதில் கலந்துகொண்ட ஆத்மாவும் ஒன்றாகி விடுகிறது. இதுதான் அத்துவித நிலை. அவனை அணுகி அணுகி அவனோடு ஒன்றுபடும் முடிவான இன்பத்தைத் தருகின்ற விளையாட்டு, ஞான விளையாட்டு. விளையாட்டின் இயல்பு விளையாட்டு என்பதற்கும் வினை என்பதற்கும் வேறுபாடு உண்டு. வினையில் ஒரு கட்சி இன்னொரு கட்சிக்குப் பகையாக இருக்கும். விளையாட்டில் இரு வேறு கட்சி இருந்தாலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் பகை நட்பு இல்லாமல் விளையாட்டு நடக்கும். விளையாட்டு முடிந்தவுடன் இரண்டு கட்சிகளும் சேர்ந்து மகிழ்ச்சி அடையும். ஒரு கட்சி வெற்றி, மற்றொரு கட்சி தோல்வி என்பது விளையாடும்போது இருந்தாலும் இன்பம் அனுபவிக்கும் போது இல்லை. அதுதான் விளையாட்டின் பெருமை. விளையாட்டின் முடிவு இன்பந்தான். மாய விளையாட்டைக் குழந்தை செய்வதனால் விளையாட்டு என்று சொல்கிறோமே யொழிய அதன் பயன் வினையாக ஏற்படுகிறது. ஆகவே அதன் விளைவு துன்பந்தான். இன்பம் நல்குகின்ற விளையாட்டை நாம் விளையாடாமல் துன்பம் நல்குகின்ற மாயா விளையாட்டை, வினை விளையாட்டை, மேற்கொண்டு வாழ்கிறோம். நாம் இதை நினைந்து வருந்துவதற்கு இந்தப் பாட்டினால் கற்பிக்கிறார் அருணகிரியார். மணிவாசகர் வாக்கு மணிவாசகப் பெருமானும் ஞான நாடகம், ஊன நாடகம் என்ற இரண்டையும் சொல்கிறார். “வான நாடரும் அறியொ ணாதநீ மறையில் ஈறும்முன் தொடரொ ணாதநீ ஏனை நாடரும் தெரியொ ணாதநீ என்னை இன்னிதா ஆண்டு கொண்டவா! ஊனை நாடகம் ஆடு வித்தவா! உருகி நான்உனைப் பருக வைத்தவா! ஞான நாடகம் ஆடு வித்தவா, நைய வையகத் துடைய இச்சையே!” அமரலோகத்தில் இருக்கும் தேவர்களும் இந்த உலகத்தில் அங்கங்கே இருக்கும் மக்களும் இன்னார் என்று தெரிவிக்க முடியாத பெரிய கடவுள் இறைவன்; வான நாடரும் அறியொணாதவன், அவனை வேதமே இன்னும் தெரிந்து உணரவில்லை. அத்தகைய பெருமான் மாணிக்க வாசகருக்கு ஓடிவந்து அருள் செய்தான். முதலில் தன்னுடைய திருவருளைப் பெறாமல் உலகத்தில் அலைய வைத்தவன் அவன் தான். உலகத்தில் ஆசையைப் பெருக்கி ஊனைக் கொண்டு நாடகம் ஆடும்படி அவரைச் செய்தவன் அவனே. பின்பு அந்த ஆசை மாய, ஞான நாடகம் ஆடச் செய்தவனும் அவனே. “ஊனை நாடகம் ஆடுவித்தவா! உருகி நான்உனைப் பருகவைத்தவா!” “இதற்கு முன்னால் இந்த ஊனாகிய உடம்பை நீ விளையாடச் செய்தாய்; நாடகம் ஆடுவித்தாய். நான் அப்போது ஆடினேன். புண்ணிய பாவங்களைக் காரணமாக வைத்து அவற்றிற்குரிய பிறவியை எனக்குக் கொடுத்து இன்ப துன்பங்களை அடையும்படியாக நீ செய்தாய். அந்த ஆட்டத்ட்திலேயே நான் பற்றுக் கொண்டிருந்தேன். இப் போது திருவருளால் அந்த நாடகத்தை மாற்றினாய். உன்னை நினைக்கச் செய்து உன்னையே நான் பருகும்படியாகத் திருவருள் பாலித்தாய். இது என்ன வியப்பு! நீ ஆனந்த மயமானவன். நான் உருகி அந்த ஆனந்தத்தைப் பருகினேன். அதற்குக் காரணமாக ஞான நாடகத்தை ஆடும்படியாகச் செய்தாய். ஊன நாடகம் ஆடும்போது வளர்ந்து வந்த வைய ஆசை, ஞான நாடகம் ஆடும்போது நைந்து போயிற்று” என்கிறார். மாயா விநோத மனோதுக்கத்தில் துன்புற்ற அருணகிரிநாதரும் சித்ர மாதரிடத்தில் ஆசை வளர்ந்து உருகினார். சிற்றின்பம் பருகினார். அந்த ஆசை பெருகியது. மணிவாசகர் சொல்லும் ஞான நாடகமாகிய இன்ப விளையாட்டிலும் உருக்கம் இருக்கிறது; பெருக்கம் இருக்கிறது. மணிவாசகர் சொல்கிற ஊன நாடகமே, மாயா விநோதமாகிய மாயை விளையாட்டு. அவர் சொல்கிற ஞான நாடகமே ஞான விநோதமாகிய ஞான விளையாட்டு. “ஊன நாடகம் ஆடிக்கொண்டிருக்கும்போதே ஆண்டவனுடைய நினைப்பைப் பெற்று, அவனுடைய அருளைப்பெற வேண்டுமென்று உருகி, அந்த உருக்கத்தின் மிகுதியாலே அவனுடைய வடிவாகிய ஞானத்தோடு தொடர்பு பெற்று, அதனையே பெருக்கி ஞான விளையாடல் புரியும் நிலை வந்தால், என்றும் மாறாத இன்ப வாழ்வைப் பெறலாம்” என்பதை மணிவாசகர் ஒரு வகையில் சொன்னார்; அது எனக்குக் கிடைத்தது என்றார். அருணகிரியார் வேறு வகையில், அது கிடைக்கவேண்டும் என்று கேட்கிறார். ------------------------------------------------------------------------ நீயான ஞான விநோதந் தனைஎன்று நீஅருள்வாய் சேயான வேல்கந்த னே!செந்தி லாய்! சித்ர மாதர்அல்குல் தோயா உருகிப் பருகிப் பெருகித் துவளும்இந்த மாயா விநோத மனோதுக்க மானது மாய்வதற்கே? [குழந்தைத் திருக்கோலம் கொண்டவனாகிய வேலாயுதத்தைப் பிடித்த கந்தவேளே! திருச்செந்தூரில் எழுந் தருளியிருப்பவனே! தம்மைப் பிறர் காணும் பொருட்டு அலங்காரம் பண்ணிக்கொள்ளும் ஒழுக்கம் கெட்ட மாதர்களுடைய உறுப்பில் தோய்ந்து உருகிச் சிற்றின்பத்தைப் பருகி அதனால் மயல் பெருகிச் செயலற்று வாட்டம் அடையும் இந்த மாயை விளையாட்டில்வரும் மனத்துயரம் மாயும் பொருட்டு, நீயன்றி வேறு அல்லாத ஞான விளையாட்டை எப்போது நீ அடியேனுக்கு அருள் செய்வாய்? விநோதம் ~ விளையாட்டு. சேய் ~ குழந்தை. சித்ரம் ~ அலங்காரம்; வியப்பை ஊட்டும் என்றும் சொல்லலாம். அல்குல் ~ பெண் அடையாளம். துவளும் ~ வாடும்.] ~~ ஆறுமுக அமுதம் 1 மாயா விளையாட்டாகிய நம்முடைய வாழ்க்கையில் மயல் அடைந்து உருகிப் பருகிப் பெருகும் நிலையைப் போன பாட்டிலே பார்த்தோம். மணிவாசகப் பெருமான் உருகிப் பெருகும் இன்ப நிலையைச் சொன்னதையும் பார்த்தோம். உருகிப் பருகிப் பெருகும் இந்த மாயா விநோத மனோ துக்கம் மாய வேண்டுமென்று முருகனிடத்தில் விண்ணப்பம் செய்து கொண்ட அருணகிரிநாதர் அடுத்த பாட்டிலே தம்முடைய உண்மை நிலையை வெளிப்படுத்தி விடுகிறார். “மாயா விநோத மனோ துக்கம் மாய்வதற்கு நின் அருளை எப்போது தருவாய்?” என்று கேட்ட கையோடு இந்தப் பாட்டைப் பாடுகிறார். மாதர் மயலில் உருகிப் பருகித் துக்கம் பெருகியதே என்று அங்கே சொன்னார். இங்கே அவர் பெற்ற ஆனந்த நிலையைச் சொல்லும்போது உருகிப் பெருகும் மற்றொரு நிலையைச் சொல்கிறார். இதுதான் அவருக்குரிய இயல்பான நிலை. ’புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றும் பரமானந்த சாகரத்’தைப் பற்றி இப்போது சொல்ல வருகிறார். இன்பமும் துன்பமும் மனிதன் உலகத்தில் வாழும்போது இன்பத்தை வேண்டுகிறான்; துன்பத்தை வேண்டுவது இல்லை. ஆனால் எல்லோரும் இன்பம் அடைகிறார்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை. சின்னஞ்சிறு குழந்தை கண்ணுக்கு அழகாக இருக்கிறதென்று எண்ணிக் கண்ணாடியை எடுத்து விளையாடுகிறது. கையிலே கீறிக்கொண்டு இரத்தம் வந்து கத்துகிறது, அதனை முதலில் எடுக்கும்போது அதனால் துன்பம் உண்டாகுமென்று தெரிந்து கொள்வதில்லை. முன் அநுபவமும் அறிவும் இல்லாமையினால் உடைந்த கண்ணாடியை எடுத்துக் கீறிக்கொண்டு துன்பம் அடைகிறது. துன்பம் அடையவேண்டும் என்பது அதன் நோக்கம் அன்று. துன்பம் அடையும் வரையில் அதன் அறியாமை அதைச் செலுத்துகிறது. அது போலவே மனிதன் துன்பத்தை அடைய வேண்டுமென்று விரும்புவது இல்லை; அவன் எப்போதும் இன்பமே வேண்டுமென்று விரும்புகிறான். ஆனால் அது எங்கே கிடைக்குமென்று அறியாமையினால் துன்புறுகின்றான். இன்பம் கிடைக்குமென்று எதை எதையோ நினைந்து எண்ணி ஏமாந்துதான் நினைத்தபடி முடியாமல் துன்பம் உண்டாவதைக் காண்கின்றான். அவன் செய்கிற முயற்சிகள் எல்லாம் பெரும்பாலும் துன்பமாகவே முடிகின்றன. உண்ணும்போது சில பண்டங்கள் இனிப்பாக இருக்கும்; ஆனால் உடம்புக்கு ஆவதில்லை. நாக்குக்கு இன்பமாக இருந்தது உடம்புக்குக் கோளாறு தரும். ஐந்து இந்திரியங்களால் உண்டாகின்ற இன்பம் எல்லாம் அப்போதைக்கு இன்பம் என்று தோன்றினாலும் அவற்றால் விளைகின்ற துன்பம் மிகப்பெரிது. மனிதன் இந்திரியங்களால் உண்டாகின்ற இன்பத்தை உண்மை இன்பம் என்று கருதி ஏமாந்து போகிறான். அதனால் அந்த இந்திரியங்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்கே உலக வாழ்க்கை முழுவதையும் வீணடிக்கிறான். அது அப்போதைக்குப் போலி இன்பமாகத் தோன்றி, பின்பு அடுத்தடுத்து வருகின்ற பிறவிப் பெருந் துன்பத்தைக் கொடுக்கிறது. சிற்றின்பமும் பேரின்பமும் அப்போதைக்கு இன்பமாகத் தோன்றுவனவற்றைச் சிற்றின்பம் என்று சொல்வார்கள். ஐந்து பொறிகளின் வாயிலாகக் கிடைக்கின்ற எல்லா இன்பங்களுமே சிற்றின் பந்தான். சிற்றின்பம் என்று பெயர் இருந்தாலும் அதனை இன்பம் என்று சொல்வதற்கு இல்லை. ஏதோ விவகாரத்திற்காகச் சிற்றின்பம் என்று சொல்கிறார்கள். சிற்றின்பம் என்ற பெயரே பேரின்பம் என்று மற்றொன்று இருப்பதை உணர்த்தும். ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு பிள்ளை பள்ளிக்கூடம் போயிருக்கிறான். மற்றொருவன் விளையாடுகிறான். விளையாடிக் கொண்டிருக்கிற பிள்ளை சிறிய பையன் என்றால் பெரிய பையன் ஒருவன் இருக்கிறான் என்று தெரிகிறது. அதுபோல, சிற்றின்பம் என்ற தொடர் பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறதை உணர்த்துகிறது. அறிவினாலும் ஆற்றலினாலும் சிறியவர்களாக இருக்கும் நாம் சிற்றின்பத்தை நாடிச் செல்கிறோம். பெரியவர்கள் பேரின்பத்தை நாடுகிறார்கள். நாம் செய்கிற முயற்சிகள் யாவுமே சிறிய முயற்சிகளே. ’நெடுங்காலம் செலவிட்டும் பெரிய முயற்சிகளைச் செய்து இந்த இன்பத்தை அடைகிறோமே; இது எப்படிச் சிறிய இன்பம் ஆகும்? என்று தோன்றும். நெடு நாளைக்கு இந்த இன்பம் நில்லாமல் பின்னாலே துன்பம் தரும் வகையில் அமைந்திருப்பதனால் இது சிற்றின்பம் ஆகிறது. இந்த இன்பம் பொய்யான இன்பம்; போலி இன்பம். மெய்யான இன்பம் என்பது மாறாமல், குறையாமல், நிறைவாக இருக்கிற பேரின்பமே. உண்மையில் அதுதான் இன்பம் என்று சொல்ல வேண்டும். நம்பிக்கை இல்லை அத்தகைய இன்பத்தை அடைவது எப்படி என்பதுதான் மனிதனுடைய வாழ்க்கையில் பெரிய கேள்வி. பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறது என்று யாரேனும் சொன்னால் அதைக் காதாலே மாத்திரம் கேட்கிறோம். மனம் நம்புவது இல்லை. நமக்கு உறுதிப்பாடு இல்லாமல் ஐயம் பிறக்கிறது. “இறைவன் இருக்கிறான். அவன் திருவருள் செய்வான். அந்தத் திருவருளால் பேரின்பம் பெறலாம்” என்ற கருத்தை ஒருவர் அல்ல, இருவர் அல்ல, ஆயிரக்கணக்கான பேர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஒரு சமயம் அல்ல, இரண்டு சமயம் அல்ல, எல்லாச் சமயங்களும் அதை வற்புறுத்திக் கூறுகின்றன. ஏதோ ஒரு காலத்தில் சொன்னார்கள் என்பதும் இல்லை. பல காலமாக இந்தக் கருத்தைப் பெரியவர்கள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இப்போது உள்ளவர்களும் சொல்வதை நாம் நேரில் கேட்கிறோம். முன்னாலே இருந்த பெரியவர்கள் தாம் இயற்றிய நூல்களில் சொல்லி இருக்கிறார்கள். உலகத்திலுள்ள எல்லாப் பகுதிகளிலும் இறைவனுடைய திருவருளில் ஈடுபட்டு, அதனால் கிடைத்த இன்பத்தை நுகர்ந்து, நீங்களும் இத்தகைய இன்பத்தைப் பெறலாம் என்று சொன்ன பெரியவர்கள் பலர். இன்ன சாதி, இன்ன சமயம், இன்ன மொழி, இன்ன நாடு என்ற வரையறை இல்லாமல் எல்லா இடத்தும் அத்தகைய பெரியவர்கள் தோன்றியிருக்கிறார்கள்; இன்னும் தோன்றுவார்கள். இப்படிப் பலகாலமாகப் பல பெருமக்கள், பேரின்பத்தைப்பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தாலும் நமக்கு நம்பிக்கை உண்டாவது இல்லை. மதிப்பைக் கருதிப் பேச்சளவில் நாம் நம்புவதாகக் காட்டுகிறோம். “அப்படி ஒன்று இருக்குமா? நமக்குக் கிடைக்குமா?” என்ற ஐயமே நம்முடைய உள்ளத்தில் அலை வீசுகிறது. இதற்கு முக்கியமான காரணம் என்ன? அதைத்தான் மாயை என்றும் திரோதம் என்றும் சொல்வார்கள். நாம் நுகர்கின்ற சிற்றின்பம் கை கண்டதாகத் தோற்றுகிறது. அந்த இன்பத்திற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யும்போதே பல சமயங்களில் அது கை கூடுவது இல்லை. அதனால் ஏமாற்றம் அடைகிறோம். இந்த ஏமாற்றத்தால், ‘பேரின்பம் என்ற ஒன்று நம் முயற்சியினால் கிடைப்பது சந்தேகம்’ என்ற நினைவு தோன்றிவிடுகிறது. மிகவும் படித்தவர்கள் கூடப் பேரின்பம் என்பது வெறும் கற்பனை என்று தம்முடைய மனத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பேரின்பத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பிறருக்கு விரிவாக எடுத்துறைக்கும் பலர் தம்முடைய சொந்த வாழ்க்கையில் அவற்றில் நம்பிக்கை வைத்திருப்பவர்களாகத் தோன்றுவது இல்லை. சொல்வது ஒன்று, அநுபவிப்பது ஒன்றாக அவர்களுடைய வாழ்க்கை நடைபெறுகிறது. ஏட்டுச் சுரைக்காய் போலப் பிறருக்கு உபதேசம் செய்யும் வகையில் அவர்கள் பெரியவர்கள் எழுதிய நூலை எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களுடைய உள்ளத்தில் அவற்றில் சிறிதும் நம்பிக்கை இருப்பதில்லை. மெத்தப் படித்தவர்களே நம்பிக்கை கொள்ளாமல் இருப்பார்களானால், அவர்களை அப்படி ஆக்கும் மாயா சக்திக்கு எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டுமெனபதை நினைந்து பாருங்கள். அவர்களுக்கு நம்பிக்கை வராததற்குக் காரணம் இறைவனுடைய திருவருள் கிடையாமையே. ‘கண்டறியாதன கண்டேன்’ பல பல முயற்சி செய்து இறைவனுடைய திரு வருளைப் பெற வேண்டுமென்று வருந்திய பலர் இந்த நாட்டில் இருந்திருக்கிறார்கள். தம்முடைய முயற்சியினாலே பேரின்பத்தைப் பெற்றதாகச் சொல்லாமல், “அவனுடைய திருவருளால் பெற்றேன்” என்று சொன்ன பெரு மக்களே பலர். நம்மைப் போல வாழும் காலத்தில் அவர்கள் கண்டு அறியாத தனி இன்பத்தை இறைவன் திருவருளைப் பெற்ற பிறகு அடைகிறார்கள். அப்போது அவர்களுக்கு உண்டாகும் வியப்பு அளவிட முடியாதது. “கண்டறியாதன கண்டேன்” என்று அப்பர் சுவாமிகள் சொல்கிறார்; “தேடிக் கண்டுகொண்டேன்” என்று பெரு மகிழ்ச்சியோடு கூறுகிறார். காணுதலாவது அநுபவித்தல், கண் முதலிய ஐந்து புலங்களாலும் அநுபவிக்கின்ற அநுபவங்களைக் காணுதல் என்று சொல்வது வழக்கம். இந்திரியங்களின் நுகர்ச்சிக்கு உட்பட்ட அநுபவத்தைப் பிரத்தியட்சப் பிரமாணம் என்று சாஸ்திரம் கூறும். அதையே கண்கூடு என்று தமிழில் சொல்வார்கள். “காற்றுக் குளிர்ச்சியாக இருப்பதைக் கண்டேன்” என்று குளிர்ச்சியாக வீசும் போது நுகர்ந்த நுகர்ச்சியைச் சொல்வதுண்டு. அப்படி நாவுக்கரசர், “கண்டு கொண்டேன்” என்று வீறுடன் பேசுகின்றார். இறைவனை அவர் அநுபவித்தாராம். “எப்படிக் கண்டார்?” என்ற கேள்வி எழும். அந்தக் கேள்விக்கு அவர் விடை சொல்லவில்லை. ஆனால் பல இடங்களில் அவர் கூறி இருக்கும் அநுபவச் செய்திகளை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். நமக்குக் கேள்வி கேட்கத் தெரிகிறதே யொழிய அதற்கு விடை எங்கே இருக்கிறதென்று கண்டுபிடிக்கும் ஆர்வம் இல்லை. அந்த ஆர்வம் இருந்து, நாமும் அந்த இன்பத்தைப் பெற வேண்டுமென்ற பசியும் இருந்தால், நிச்சயமாக ஆண்டவன் அருள்பெற்ற பெரியவர்களுடைய திருவாக்கிலே நம்முடைய கேள்விகளுக்கும் ஐயத்திற்கும் உரிய விடைகளைக் காணலாம். முறைகள் பல இறைவனுடைய திருவருள் பெற்ற பெருமக்கள் பலரும் தாம் பெற்ற அநுபவத்தை விம்மிதத்தோடு பேசி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சொல்லி இருக்கிறார்கள். இப்படி வெவ்வேறு வகையில் சொல்வதனால் அது உண்மையா என்ற ஐயம் நமக்கு உண்டாகி விடுகிறது. எல்லோரும் ஒன்றே சொன்னால் அது நிச்சயம் என்று தெரிந்து கொள்ளலாம். ஒருவன் ஒரு பொருளைத் திருடிக்கொண்டு ஓடுகிறான். அவனை ஆயிரம் பேர் பார்த்தார்கள். அவ்வளவு பேரும், “இவன்தான் திருடினான்” என்று ஒருவனைச் சுட்டிக் காட்டுவார்கள். அப்போது அவன் திருடியது உண்மை என்று தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லாமல் பொய்ச் சாட்சி சொல்வதாக இருந்தால் ஆயிரம் பேரும் ஆயிரம் விதமாகச் சொல்வார்கள். இந்தச் சாட்சி மாறுபாட்டினால் அவர்கள் சொல்வன எல்லாம் பொய் என்று தெரிந்து கொள்ளலாம். அத்தனை பேரும் சொல்கிற சாட்சியில் எது உண்மை என்று தெரிந்து கொள்ள முடியாது. அப்படி, இறைவனுடைய திருவருளினால் நான் பெற்ற இன்பம் இத்தகையது என்று ஒவ்வொருவரும் சொல்லும்போது இறைவனைப் பற்றி வெவ்வேறு வகையில் பேசுகிறார்கள். ஒருவர், “நான் ஜடாதரனாகக் கண்டேன்; சந்திர சேகரனாகக் கண்டேன்” என்று சொல்கிறார். மற்றொருவர், “ஆறுமுக நாதனாகக் கண்டேன்” என்று சொல்கிறார். வேறு ஒருவர், “ஆனை முகம் கொண்டவனாக இறைவன் எனக்குக் காட்சி அளித்தான்” என்றும், மற்றொருவர், “கையில் கோதண்டத்தை ஏந்தியவனாக, சீதா லக்ஷ்மண பரத சத்ருக்னரோடு எழுந்தருளினான்” என்றும் சொல்கிறார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தத்தமக்குத் தோற்றிய அநுபவங்களை, கண்ட காட்சிகளைச் சொல்லி இருக்கிறார்கள். “இவ்வளவும் உண்மை ஆகுமா? உண்மை பல வகையாக இருக்க முடியுமா? எல்லாமே பொய்யா? அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றுதான் உண்மையா? இவ்வளவு பேர் சொல்கின்ற வகையில் நாம் எந்த முறையைப் பின்பற்றுவது?” ~ இத்தகைய சந்தேகங்கள் பல எழுவது இயல்பே. அநுபவம் ஒன்றே அவர்கள் வெவேறு வகையில் இறைவனுடைய திருவருளைப் பெற்றாலும் அவர்கள் பெற்ற இன்ப உணர்ச்சி பொதுவானது; அது ஒன்றே. இதற்கு ஓர் உதாரணம் சொல்லிப் பார்க்கலாம். நம்முடைய வீட்டில் தித்திப்பான பண்டத்தைப் பலகாரத்திற்குப் பண்ணியிருக்கிறார்கள். “இன்றைக்கு முருகனுடைய விரதம்; சஷ்டி. எல்லோரும் பலகாரம் பண்ண வேண்டும்” என்று சொல்லி ஏதோ இனிப்பான பண்டத்தைச் செய்திருக்கிறார்கள். முருகனுடைய அடியார்கள் வீட்டில் அன்று பலர் இனித்த பலகாரத்தைச் செய்கிறார்கள். நூறு வீட்டில் நூறு விதமாகச் செய்கிறார்கள்.ஒரு வீட்டில் செய்த பலகாரம் மற்றவர் வீட்டில் இல்லை.ஒரு வீட்டில் ஜிலேபி, மற்றொருவர் வீட்டில் ஹல்வா, பின் ஒரு வீட்டில் லட்டு என்று பல வகையாகச் செய்தார்கள் என்று வைத்துக் கொள்வோம்.அவர்கள் ஒவ்வொருவரும் வெவ் வேறு உருவத்தில் இனிப்புப் பண்டத்தை உண்டாலும் அவர்கள் அறிந்த சுவை இனிமை என்பதுதான். அது போல, இறைவனுடைய திருவருளைப் பெறும் வழி வெவ் வேறாக இருந்தாலும், அவர்கள் திருவருளை உணர்ந்து பெற்ற இன்பம் ஒன்றுதான். அவரவர்களுடைய உபாசனை முறைக்கும், குருவின் உபதேச வகைக்கும், சாதனத்தின் தன்மைக்கும் ஏற்ப அவர்களுக்கு அநுபவம் வருகிறது; வழி அமைகிறது. வெவ்வேறு உருவங்களை வழிபட்டாலும் முடிந்த முடிவான அநுபவம் எல்லாருக்கும் ஒன்றுதான். எத்தைகைய உணவை உண்டாலும் பசி தீருகிற அநுபவம் எப்படி ஒன்றோ, அதுபோலவே எந்த வகையில் உபாசனை செய்தாலும் தியானம் பண்ணினாலும் இறைவன் திருவருளால் பெறுகின்ற‌ இன்பம் ஒன்றுதான். இத்தகைய இன்பத்தைத்தான் பேரின்பம் என்று பொதுவாக யாவரும் குறித்தார்கள். அந்தப் பேரின்பம் நமக்குக் கிடைக்க வேண்டுமானால் அதைப் பெற்றவர்கள் சொன்ன செய்திகள் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். உலகத்திலுள்ள ஆணும் பெண்ணும் பல உருவமாகப் பலவகை வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தியை மனைவியாகப் பெற்று வாழ்ந்தாலும், எல்லோரும் பெறுகின்ற சிற்றின்பம் பொது வகையில் ஒன்று தான். அவர்களுடைய மனைவிகள் வெவ் வேறு உருவமும் வெவ்வேறு எழிலும் உடையவர்கள். ஆனால் ஆண் பெண் உறவில் உண்டாகின்ற இன்பத்தில் வேறுபாடு இல்லை; ஒன்றே. வெவ்வேறு மந்திரங்களை ஜபம் செய்து வெவ்வேறு இடத்தில் உபாசனை செய்தவர்கள் வெவ்வேறு காலத்தில் இன்பத்தை அடைந்தாலும் எல்லா இன்பமும் ஒன்றே. அந்த இன்பத்தைப் பிறர் பெறவேண்டுமானால், முன்னாலே பெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அறிந்துகொண்டு அந்த வழியில் நடக்கவேண்டும். சம்பிரதாயம் எந்த வழியானாலும் முன்னாலே ஒருவர் சென்று பயன் பெற்ற வழியாக இருக்கவேண்டும். இதைத்தான் சம்பிரதாயம் என்றும், பத்ததி என்றும், மரபு என்றும், சமயம் என்றும், மார்க்கம் என்றும் பெரியவர்கள் வெவ் வேறு பெயராலே சொல்கிறார்கள். எந்த வழியில் சென்றாலும் இறைவனுடைய திருவருளைப் பெறலாம். முருகனை ஒருவன் கும்பிடுகிறான். கும்பிடுகிற முறையைப் பெரியவர்களிடத்தில் கற்றுக் கொள்கிறான். அவனுடைய திருவுருவத்தைக் கண்டு வழிபடுகிறான். அவனுக்கு ஆண்டவன் உருவோடு தோன்றினால், மயில் வாகனப் பெருமானாகத் தோன்றுவான். அவனிடத்தில் வேல் தோன்றும். கோழி தோன்றும். விநாயகரை உபாசனை பண்ணுகிறவர்களுக்கு ஆனைமுகப் பெருமானாக ஆண்டவன் தோன்றுவான். அம்பிகையைப் பூஜை செய்பவனுக்குத் திரிபுரசுந்தரியாக எம்பெருமாட்டி தோன்றுவாள். நம்முடைய உள்ளத்தில் எந்த மூர்த்தியாகிய விதையைப் புதைக்கிறோமோ அதுவே பின்னால் விளைகிறது. வித்து என்பது மரம் தோன்றாத நிலையில் இருப்பது. விக்கிரகத்தை வைத்து உபாசனை பண்ணுவது வித்தைப் புதைக்கிற மாதிரி. ஆனால் வித்தைப் புதைத்தவன் சும்மா இருந்தால் அது விளையாது. அதற்கு நீர் விட்டு, உரமிட்டு, பலகாலம் பாதுகாத்து வந்தால் அந்த வித்துப் பெரியதாக விளைந்து மரமாவதைக் காணலாம். அப்படியே கோயில்களில் உள்ள மூர்த்தியைப் பார்த்து, பார்த்தபடியே நின்று விட்டால் ஒன்றும் பயன் இல்லை. அந்த மூர்த்தியை நம்முடைய உள்ளத்தில் புதைத்துத் தியானம் பண்ணி, அன்பு நீர் வார்த்து, வைராக்கியம் என்ற உரம் இட வேண்டும். அப்போது கோயிலில் கண்ட மூர்த்தி, இன்பம் மிக்க பெரிய உருவம் எடுத்துச் சோதி வடிவமாகத் தோன்றுவார். விதையும் விளைவும் பெரியவர்கள் நமக்கு அளித்துள்ள உபதேச முறைப்படி நாம் வழிபடும்போது வழிகாட்டியாக விக்கிரகத்தை அல்லது படத்தை நாம் வைத்துக்கொண்டு உபாசனை செய்கிறோம். அவர்கள் சொல்லித் தந்த தோத்திரங்களைப் பாடுகிறோம். இவை யாவும் வித்துப் போன்றவை. அவர்களிடமிருந்து நாம் பெற்றுக் கொண்டவுடனே பயன் உண்டாகுமென்று எதிர்பார்க்க முடியாது. வித்துக்கள் தாமே விளைவதில்லை. கடலை விதையை நமக்கு ஒருவர் கொடுத்தால் அதை நட்டுப் பயிர் செய்யவும் செய்யலாம். மாவாக அரைத்துப் பலகாரமும் செய்யலாம். சுண்டலாகவும் செய்து சாப்பிடலாம். அது போலவே கடவுளுடைய படங்களை அழகுக்காக மாட்டி வைக்கலாம். எத்தனையோ பேர் இப்போது நடராஜ விக்கிரகங்களைக் கொண்டு வந்து தம்முடைய அறையில் வைத்திருக்கிறார்கள்; நாய்ப் பொம்மை, புலியின் பொம்மை, மனிதன் பொம்மை முதலியவற்றைப் போலவே அதையும் வைத்திருக்கிறார்கள். கடலை விதையைச் சுண்டலாகச் சாப்பிடுவது போன்ற செயல் அது. அப்படி இல்லாமல் கடலையை நட்டு வளர்த்தால் ஒன்றுக்கு பத்து மடங்கு விளையும். நெல்லில் கூடச் சாப்பாட்டு நெல் என்றும், விதைநெல் என்றும் வேறு பிரித்து வைக்கிறார்கள். விதைநெல் என்று சேமித்து வைத்திருந்தால் அதற்கு மதிப்பு அதிகம். குடியானவனுக்கு அந்த நெல்லினிடத்தில் அதிக அன்பு இருக்கும். பஞ்சம் வந்தாலும் விதை நெல்லைச் சமையல் செய்து சாப்பிட மாட்டான். விதையைச் சமையல் செய்ய முடியாது என்பது அல்ல; அதனால் விளைகின்ற பெரும் பயன் ஒன்று இருக்கவும், அதை விட்டு விட்டுச் சிறு பயனுக்காக அதனை உபயோகப்படுத்தக் கூடாது என்ற கருத்து வேளாளனுக்கு இருக்கிறது. விதையை நல்லபடி பயன்படுத்திக் கொள்ளாதவன் அறிவிலி. இறைவனுடைய திருக்கோயிலுக்குச் சென்று நாம் காணுகின்ற திருவுருவம் கண்ணுக்கு அழகாக இருக்கிற தென்றும், அதுபோல நம் வீட்டில் ஒன்று வைத்துக் கொள்ளலாம் என்றும் நினைத்து அந்த அளவில் நிற்கிற வர்களைச் சிறந்த அறிவுடையவர்கள் என்று சொல்ல முடியாது. அந்தத் திருவுருவத்தை வித்தாகக் கொண்டு அன்பு நீர் பாய்ச்சிப் பல சாதனைகளால் உரமிட்டு இறைவனுடைய திருவருட் கனி பழுக்கும்படி செய்வதுதான் நல்ல பயனைப் பெறும் வழி. இவ்வாறு பெற்றவர்கள் பலர் தமக்குத் தாம் பெற்ற இன்பத்தைச் சொல்கிறார்கள். “நான் கோயில் சென்று இறைவனைக் கண்டேன். திருச்செந்தூர் போய் முருகப் பெருமானை வழிபட்டேன். அவன் இத்தகைய இன்பம் தந்தான்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். எந்த விதையானாலும் மரம் முளைக்கும். எந்த மரம் ஆனாலும் நிழல் உண்டாகும். அந்த அந்த மரத்திற்கு ஏற்ற நிழலாக அமையும். ஆனால் எல்லாம் நிழல்கள். பெரியவர்களுடைய தொடர்பினால் நல்ல உபதேசம் பெற்று எந்த மூர்த்தியை உபாசனை பண்ணினாலும் அந்த உபாசனையின் பயன் நமக்கு நிழல் போன்ற அருளைக் கிடைக்கும்படி செய்யும். திருநாவுக்கரசர் அநுபவம் திருநாவுக்கரசர் கண்ட இன்பமும், அருணகிரிநாதர் கண்ட இன்பமும், நம்மாழ்வார், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கண்ட இன்பமும் இன்பந்தான். அப்பர் சுவாமிகள், “தேடிக் கண்டு கொண்டேன்” என்று சொல்லும்போது அவருடைய உள்ளத்தில் எதை நினைக்கிறார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் தாம் பெற்ற பேரின்பத்தை நினைத்துக்கொண்டுதான் அவர் அப்படிப் பேசி இருக்கவேண்டும். “குற்றாலப் பெருமானைக் கண்டு ஆனந்தம் அடைந்தேன்” என்று அவர் பாடுகிறார். “அவனை என் உள்ளத்தில் கண்டுகொண்டேன்” என்கிறார். “தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்” என்பது அவர் பாட்டு. “இதுவரைக்கும் நான் இந்த அநுபவத்தைப் பெற்றது இல்லை. பெறவில்லையே என்று வேதனைப்பட்டுக் கிடந்தேன். நான் மாத்திரமா அப்படி இருந்தேன்? இந்த இன்பத்திற்கு உறைவிடமாகிய இறைவனை மிகப் பெரியவர்களாகிய திருமாலும், நான்முகனும் தேடிக் காணவில்லை, அவர்கள் காணவேண்டுமென்ற ஆசை உடையவர்களாக இருக்கிறார்கள். அதனால் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படித் தேடியுந் தேடொணாத பெருமான் அவன், அவனை நானும் சில காலம் தேடினேன். கடைசியில் என்னுடைய உள்ளத்திற்குள் கண்டுகொண்டேன்” என்கிறார். “மற்றவர்கள் எல்லாம் வெளியில் தேட நான் அப்படித் தேடும்போது அவனைக் காணவில்லை. பின்பு என்னுடைய நோக்கத்தை உள் முகமாக்கி என் உள்ளே தேடினேன். நான் எனக்கு மிகவும் நெருக்கமாக, என்னைக் காட்டிலும் எனக்கு இனியன் ஆக இருக்கிறான் என்று அப்போது கண்டேன்” என்று நினைக்கும்படியாக அந்தப் பாட்டு அமைந்திருக்கிறது. 2. தித்தித்திருக்கும் அமுது அருணகிரிநாத சுவாமிகள் தாம் தேடிக் கண்டு கொண்டதை இந்தப் பாட்டில் சொல்கிறார். “பேரின்பத்தைக் கண்டுகொண்டேன்; இதுவரைக்கும் நான் அநுபவித்து அறியாத பரமானந்த சாகரத்தைக் கண்டு கொண்டேன்” என்று துள்ளிக் குதிக்கிறார். எதைக் கண்டுகொண்டார் என்பதை அடையாளம் காட்டிச் சொல்கிறார். ஆறுமுகம் படைத்த ஒரு பெரிய அமுதை, தித்தித்திருக்கும் அமுதை, கண்டு இன்புற்றேன் என்று அவர் சொல்கிறார். பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது கண்டேன். அமுதம் எளிதில் விளைவது அன்று என்பது நமக்குத் தெரியும். முப்பத்து முக்கோடி தேவர்களும், பல கோடி அசுரர்களும் சேர்ந்து கடைந்தார்கள். திருமால் மிகவும் உதவி செய்தார். இவ்வளவு பெரிய முயற்சியின் பயனாகவே தேவாமுதம் கிடைத்தது. அது கிடைப்பதற்கு முன்னாலே எத்தனையோ தடைகள் உண்டாயின. பெரிய தடையாக ஆலகால விடம் தோன்றியது. அப்படிக் கடைந்த தேவாமுதமும் மிகச் சிறந்தது என்று சொல்வதற்கு இல்லை. அதனை உண்டவர்கள் நெடுங்காலம் வாழ்கிறார்களே அன்றிச் சிரஞ்சீவியாக இருக்கவில்லை. அது மாத்திரம் அன்று; தமக்கு அமுதம் கிடைத்து விட்டது என்ற அகங்காரம் வேறு அவர்களுக்கு உண்டாகி விட்டது. அத்தகைய அமுதத்தையா அருணகிரிநாதர் கண்டார்? அவர் கண்டது பிறவியை மாய்க்கின்ற பேரமுதம். பேரின்பம், சிற்றின்பம் என்று வகை பிரித்துச் சொல்வது போலத் தேவாமுதத்தைச் சிறிய அமுதம் என்றும், ஆண்டவன் அருளால் வருகின்ற இன்ப அமுதத்தைப் பெரிய அமுதம் என்றும் சொல்லலாம். சிறிய அமுதத்திற்கு அவர்கள் அத்தனை முயற்சி செய்தார்கள் என்றால் பெரிய அமுதத்திற்கு எவ்வளவு முயற்சி செய்யவேண்டும்! தாம் நுகர்ந்த அமுதம் ஒரு பெரிய கடலிலே உண்டாயிற்று என்று சொல்ல வருகிறார் அருணகிரியார். அந்தக் கடல் இன்பமயமான கடல்; ஆனந்த சாகரம்; தனக்கு மிஞ்சி எதுவும் இல்லாத மிகச் சிறந்த பரமானந்தக் கடல் அது. அப்பர் சுவாமிகள், “என் உள்ளே தேடிக் கண்டு கொண்டேன்” என்று சொன்னது போலவே இவரும் சொல்கிறார். இத்தகைய வாசகங்கள் இரண்டு பேரும் பெற்ற இன்பம் ஒன்றே என்பதைத் தெளியச் செய்யும் அடையாளங்கள். இனி அருணகிரியார் சொல்வதைப் பார்க்கலாம். அந்தப் பரமானந்த சாகரம் எங்கே இருக்கிறது என்பதைச் சொல்கிறார். புத்திக் கமலம் செயல் மாண்டு அடங்கப் புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம்எற்றித் தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே. அருணகிரியார் சொல்லும் பரமானந்தக் கடல் மிக்க வியப்பானது. அது ஊற்றாகத் தோன்றிக் கடலாக விரிந்ததாம். மலையிலிருந்து உண்டாகும் ஊற்று வரவர ஆறாக மாறுவதைக் காண்கிறோம். ஆனால் கடலிலே ஊற்று இருக்கிறதா என்பதை நாம் அறிய முடியாது. கடலிலே தண்ணீர் இருப்பதனால்தான் மற்ற இடங்களிலும் ஊற்றுப் புறப்படுகிறது என்று நிலநூல் வல்லார்கள் சொல்கிறார்கள். ’எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருக்கிற கடலுக்கு ஊற்று இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அருணகிரியார் சொல்லுகிற பரமானந்தக் கடல் முதலில் ஒரு சிறிய ஊற்றாகப் புறப்பட்டது. மலையிலிருந்து ஓர் ஊற்றுக் கிளம்பிப் பின்பு சற்றே பெரிதாகிக் கால்வாய் ஆகி, அது பின்பு ஆறு ஆகி, அதுவே ஓர் இடத்தில் தங்கிப் பெரிய கடலாகிவிடுகிறதென்று வைத்துக் கொள்ளலாம். அந்தக் கடலைப்போல அது இருக்கிறது. ஊற்றும் கடலும் பரமானந்தக் கடலில் மூல ஊற்று எங்கே புறப்பட்டது என்பதை அருணகிரிநாதர் சொல்கிறார். புந்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம்எற்றித் தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே. புத்தியாகிய தாமரையிலிருந்து உருகிப் பெருகி இந்தக் கடல் விரிந்து நிற்கிறதாம்; உள்ளக் கமலத்தில் ஊற்று எடுக்கும் என்றால், நமக்கும் உள்ளக் கமலம் இல்லையா? நம்முடைய உள்ளத்தில் அந்த ஊற்றுப் புறப்படக் கூடாதா? உள்ளக் கமலத்தில் ஊற்றுப் புறப்பட வேண்டுமானால் அதற்குமுன் ஒன்று நிகழவேண்டும். நம்முடைய உள்ளக் கமலம் குவிந்திருக்கிறது. குவிந்த கமலத்தில் மணமும் இராது; தேனும் தோன்றாது. தாமரை எப்போது குவிந்திருக்கும்? சூரியன் இல்லாத போது, இரவு நேரத்தில், இருட்டில் குவிந்திருக்கும். நாம் அஞ்ஞான அந்தகாரத்தில் வாழ்கிறோம். இந்த இருளில், நம்முடைய புத்தியாகிய கமலம் குவிந்திருக்கிறது. இது முதலில் திறக்க வேண்டும். பின்பு உள்ளே இருந்து தேன் ஊற்றுக் கிளம்பும். கமலம் விரிய வேண்டுமானால் கதிரவன் வானத்தில் தோன்ற வேண்டும். கதிரவன் ஒளி பட்டாலன்றித் தாமரை மலராது. நம்முடைய உள்ள மாகிய கமலம், ஞான சூரியனாகிய முருகப் பெருமானுடைய அருள் பட்டால்தான் விரியும். பிரபஞ்சத்தின் நிழல் பட்டுப் பட்டுக் குவிந்திருக்கின்ற கமலம் ஆண்டவன் அருள் பட்டுப் பட்டு விரியும். அக இருள் நாம் இருட்டில் விவகாரம் நடத்துகிறோம் கண்ணுக்குத் தோன்றுகின்ற இருட்டுத்தான் இருட்டு என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. அகக் கண் தெரியாமல் செய்கிற அஞ்ஞானத்தைப் போன்ற பேரிருள் வேறு இல்லை. நாமும் ஒரு வகையில் குருடர்களே. உலகம் முழுவதும் இருள் நிரம்பி இருக்கிறது. அதனால் “மா இருள் ஞாலம்” என்று பெரியவர்கள் சொல்வார்கள். நாம் வாழ்கிற வாழ்க்கை இருட்டு வாழ்க்கை. இருட்டுக் காரியம் திருட்டுக் காரியம். நாம் செய்கின்ற காரியம் அத்தனையும் திருட்டுக் காரியங்களே. இறைவனுடைய திருவருளாகிய செல்வத்தைப் பெறுவற்குரிய முயற்சிகள் நேர்மையான காரியங்கள். அப்படி அல்லாதன யாவும் அஞ்ஞான இருளில் செய்கிற திருட்டுக் காரியங்களே. கமல‌ம் விரிதல் இருட்டிலும் ஒளி இருக்குமானால் பல காரியங்களைச் செய்யலாம்.ஆனால் தாமரை மலராது. இரவு நேரத்தில் மின்சார விளக்குப் போட்டுக் கொண்டு வேலை செய்கிறோம். நிலா,அக்கினி முதலியவை வந்து ஒளி வீசினாலும் தாமரை மலராது.அது போலவே சூரியன் முதலிய பெரிய ஒளிகள் ஒளியை வீசினாலும் நமக்கு, அக இருட்டுப் போகாது. அந்த இருட்டைப் போக்குவதற்கு ஞான‌ பானுவாகிய முருகப் பெருமானுடைய திருவருட் கதிர் வீச வேண்டும். இறைவன் திருவருள் ஒளியிலே அடியார்களின் உள்ளக் கமலங்கள் மலரும்; உள்ளத்தில் இருக்கிற கட்டுப் போய்விடும். இப்போது சில சமயங்களில் நமக்கு இறைவனுடைய நினைவு மின்னல் போலவருகிறது.அவன் திருவருளைச் சில சம‌யம் நினைக்கிறோம். மின்னல் கீற்றைச் சூரிய ஒளி ஆக்கிக் கொள்ள முடியுமா? சில சமயம் எம்பெருமானை நினைத்து ஒரு துளி கண்ணீர் விடுகிறோம்.கொஞ்சம் மனத்தில் அமைதி பெறுகிறோம்.இந்த அமைதிதான் அருணகிரியார் சொல்கிற இன்பம் என்று நினைத்து ஏமாந்து போகக் கூடாது. இறைவனுடைய திருவருள் ஒளி உள்ளக் கமலத்தில் படவேண்டுமானால் நாம் அந்தப் பெருமானை நினைத்து ந‌ம்முடைய செயல் ஒன்றும் இல்லை என்று இருக்க வேண்டும். “நான், எனது’ என்ற கட்டை விட்டுவிட்டு, ‘நான் செய்கிறேன்’ என்று நினைப்பதை விட்டுவிட்டால் இறைவனுடைய அருள் ஒளி பாயும். செயல் மாண்டு அடங்கத் தொடங்கினால் உள்ளக் கமலம் மலர்ந்து அதிலிருந்து இன்ப ஊற்றுப் புறப்படும். சுகத்துக்குக் காரணம் செயல் இல்லாமல் இருப்பது சுகத்தைத் தரும். நன்றாகத் தூங்குபவர்கள், “நான் சுகமாகத் தூங்கினேன்” என்று சொல்வார்கள். கையும் காலும் அசையாமல் தூங்கினாலும் தூக்கத்தில் சொப்பனம் கண்டால் அது நல்ல தூக்கம் ஆகாது. தூக்கத்தில் பிதற்றுபவர்கள் இருக்கிறார்கள். சிலர் சொற்பொழிவு கூடச் செய்வார்கள். தூக்கத்தில் எழுந்து நடமாடுகிற வியாதி ஒன்று உண்டு. அதை ‘ஸோம்னாம்பாலிஸம்’ (Somnombolism) என்று சொல்வார்கள். கையும் காலும் அசையாமல் படுத்துக் கொண்டுவிட்டால், “செயல் அடங்கிப் படுத்திருக்கிறான்” என்று சொல்வதற்கு இல்லை. மனம் வேலை செய்யாமல் அடங்கி நின்றால் அப்போது ஒரு வகையான சுகம் உண்டாகிறது. நாம் தூக்கத்தில் செயல் இழந்திருக்கும்போது இந்த இன்பம் உண்டாகிறது என்பதைப் பிரத்தியட்சத்தில் பார்க்கிறோம். அது போலவே உண்மையாக எல்லாச் செயல்களும் அடங்கி மனம் அலையாமல் இருந்தால் அவனுக்கு இன்பம் தோன்றுகிறது. நாம் இப்போது இருக்கிற விழிப்பு நிலைக்குச் சாக்கிராவஸ்தை என்று பெயர். படுத்துக் கொண்டு தூங்கும் போது கனவு காண்கிறோம். இது சொப்பனாவஸ்தை. கனவு காணாமல் இருக்கும் நிலை சுழுத்தி அவஸ்தை. அந்தச் சுழுத்திதான் இன்பத்தைத் தருவது. கையையும் காலையும் அசைத்து வெளியில் நடமாடுவதைவிடப் படுத்துக் கொண்டிருப்பது கொஞ்சம் சுகத்தைத் தரும். படுத்துக் கொண்டிருப்பதிலும் கொஞ்சம் கண்ணை மூடிக் கொண்டு தூங்கினால் அப்போது உண்டாகும் சுகம் அதிகம். அதிலும் கனவு இல்லாமல் தூங்கினால் அந்தச் சுகம் மிகவும் அதிகம். இளைப்பாறுதல் என்று சொல்வதற்கே செயல் இல்லாமல் இருத்தல் என்று பொருள். தினந்தோறும் காரியாலயம் சென்று உத்தியோகம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தச் செயலை விட்டுவிட்டு ஓய்வு பெற வேண்டுமென்பது நம்முடைய ஆசை. மற்றவர்களைவிடத் தொழிலாளர்கள் தாம் எப்போது வீட்டுக்குப் போவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் காரியாலயம் விடுகிற நேரத்தையே தொழிலாளி எதிர்பார்க்கிறான். நாமும் எதிர்பார்க்கிறோம். ஒரு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை எப்போது வருகிறதென்று பார்க்கிறோம். இவ்வாறு எதிர்பார்ப்பதற்குக் காரணம் அந்த வேளைகளிலும், அந்த நாட்களிலும் சும்மா இருக்கலாம் என்பதுதான். தினந்தோறும் செய்கின்ற காரியத்தை விட்டுவிட்டு ஓய்வாக இருப்பதை நாம் சும்மா இருப்பது என்று சொல்கிறோம். ஒரு நாளைக்குச் சும்மா இருக்க நமக்கு இரவு கிடைத்திருக்கிறது. ஒரு வாரத்திற்குச் சும்மா இருக்க ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு வருஷத்தின் முடிவில் கோடை விடுமுறை கிடைக்கிறது. இடையிலும் சில விடுமுறைகள் உண்டு. அப்பொழுதெல்லாம் வழக்கமாகச் செய்கிற வேலைகள் விட்டுவிட்டுச் சும்மா இருக்கிறார்கள். அப்படி இருபதால் ஏதோ சுகம் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். மனிதனுக்கு இரவில் தூக்கத்தைக் கொடுத்திருப்பது உடம்பின் அலுப்பைப் போக்கிக் கொள்வதற்காக. மனம்கூட அப்போது தூங்குகிறது. எதைஎதையோ நினைந்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பவனும், யார் யாரிடமோ பகை உணர்ச்சி கொண்டவனும் தூங்கும்போது அந்த நிலை மாறி ஓய்வு எடுத்துக்கொள்கிறான். அமைதியையும் இன்பத்தையும் அவன் அப்போது அநுபவிக்கிறான். உடம்பு மாத்திரம் கட்டைமாதிரி இருந்தால் போதாது. மனம் தூங்க வேண்டும். அதுதான் செயல் அற்ற நிலை என்பது. யாருக்கு மனத்தில் கவலை இல்லையோ, யார் நல்ல முறையில் உள்ளவர்களோ அவர்கள் உடம்பு தூங்கும்; உள்ளமும் தூங்கும். குழந்தை நன்றாகத் தூங்குகிறது. அதனுடைய உள்ளத்தில் மாசு இல்லை. மற்ற எல்லோரையும்விடக் குழந்தைக்கு அதிக நேரம் தூக்கம் கிடைக்கிறது. அப்படித் தூங்குவதற்கு உரிமையும் ஆற்றலும் அதற்கு உண்டு. தூங்கி எழுந்தவுடன் அது மிக்க மலர்ச்சியோடு இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் இருந்த தொல்லை எல்லாம் நீங்கி ஓய்வு பெற்றுத் தூங்கும்போது அது வளர்கிறது. அதனால்தான் தமிழில் தூங்குதல் என்ற பொருளில் வளருதல் என்ற சொல் வழங்குகிறது. நாமும் குழந்தைபோல இருந்தால் தூக்கத்தை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது கூட முதல்நாள் உழைத்துவிட்டு இரவு தூங்கினோமானால் மறு நாள் எழும்போது சுறுசுறுப்பாய் இருக்கிறது. முதல் நாள் நினைத்த நினைப்புக்களை மாற்றிக்கொண்டு, கவலைப் படாமல் தூங்கிவிட்டால், மறுநாள் ஒரு பங்குக்கு இரு பங்கு வேலை செய்ய முடிகிறது. இப்படிச் சாதாரண வாழ்க்கையில் இருக்கிறவன் ஒழுங்காக வேலை செய்து ஓய்வு எடுத்துக் கொண்டு சும்மா இருந்தாலும் தூங்கினாலும் அதற்குப் பிறகு நல்ல சுறுசுறுப்பும் இன்பமும் உண்டாகின்றன என்பதைப் பார்க்கிறோம். உண்மை யாகவே, எல்லாச் செயலும் ஒழிந்து, நினைவு ஒழிந்திருந்தால் அப்போது எத்தனை சுகம் உண்டாகும்! அப்படி இருக்கின்ற நிலைதான் மிகச் சிறந்த நிலை. சுத்தாவஸ்தையில் அதைச் சுஷுப்தி என்று சொல்வார்கள்.அத்தகைய இன்பத்தை அடைந்தவர்கள் விழித்திருந்தாலும் அவர்கள் தூங்குபவர்கள் போன்றவர்கள். அவர்கள் மனம் வேலை செய்யாமல் இருக்கும். குருடர்கள் விழித்துக் கொண்டே தூங்குபவர்களைச் சகஜநிலை உடையவர்கள் என்று சொல்வார்கள். அது ஒருவகைச் சமாதி; சகஜ ச‌மாதி என்று பெயர். அத்தகையவர்களை, “விழித்த கண்குரு டாத்திரி வீரர்” என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது. கண்ணை விழித்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் குருடர்களாக இருக்கிறார்களாம். நாம் கண்ணை விழித்துக் கொண்டு பார்க்கிற பொருளை அவர்களும் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் காணுகின்ற காட்சி வேறு; நாம் காணுகின்ற காட்சி வேறு. நமக்கு அவர்கள் குருடர்கள்; நாம் காண்பது போலக் கண்டுகொள்வது இல்லை. அவர்களுக்கு நாம் குருடர்கள். நாம் இருட்டில் உலவுகிறோம். அவர்கள் ஒளியில் உலாவுகிறார்கள். தமக்கு என்று செயல் இல்லாமல் இருக்கின்ற அவர்களைச் செயல் மாண்ட பெரியவர்கள் என்று சொல்வார்கள். கர்த்திருத்துவம், பேரக்திருத்துவமாகிய, செய்யும் தன்மை, நுகரும் தன்மை என்னும் இரண்டும் அவர்களுக்கு இல்லை. துன்பம் இல்லாத பயணம் அவர்கள் செய்கிற வினை ஒன்றும் இல்லை. அதனால் புதிதாக வருகின்ற புண்ணிய பாவங்களும் இல்லை. இறைவனுடைய திருவருளாகிய வண்டியில் ஏறிக்கொண்டு அவர்கள் பிரயாணம் செய்கிறார்கள். வண்டியில் ஒருவன் போகிறான். காலால் நடக்கிறவனும் பிரயாணம் செய்கிறான். இரண்டு பேரும் குறிப்பிட்ட ஒரே ஊருக்குப் போகிறார்கள். ஆனால் நடந்தவனுக்குப் பயணத்திலே உண்டான அலுப்பு இருக்கும். வண்டியிலே உட்கார்ந்தவனுக்கு அந்தத் துன்பம் இல்லை. அவன் எத்தனை தூரத்தைக் கடந்து சென்றாலும் தன்னுடைய செயலால் கடக்கவில்லை. ஆகவே அவனுக்குப் பயணத்தினால் உண்டாகிற துன்பம் இராது. இறைவனுடைய திருவருளை ஆதாரமாகக் கொண்டு தம்முடைய செயலை இழந்தவர்கள் தோற்றத்தில் பல காரியங்களைச் செய்கிறவர்களைப் போல இருந்தாலும் அவர்கள் செய்யாதவர்களே. அவர்கள் அடைவதும் இன்பந்தான். கட்டை வண்டியிலும் குதிரை வண்டியிலும் செல்கிறவர்கள் நடந்து செல்கிறவர்களைப் போல நெடுந் தூரம் சென்றாலும் துன்பம் இராது. ரெயிலில் போகிறவர்களிலும் மூன்றாம் வகுப்பில் போகிறவர்கள் தூங்குவது இல்லை. ஒருகால் தூங்க முயன்றாலும் நன்றாகத் தூங்க முடியாது. முதல் வகுப்பில் போனவர்களோ ஏறினவுடன் படுத்துக் கொள்கிறார்கள். இறங்குகிற இடம் வந்தால் விழித்துக் கொள்கிறார்கள். தம்முடைய வீட்டிலே மெத்தையில் படுத்துத் தூங்குவதுபோல அவர்கள் வண்டியிலும் தூங்குகிறார்கள். அப்படியே இந்த உலகப் பிரயாணத்தில் எம்பெருமானுடைய திருவருளில் ஈடுபட்டுப் பசு கரணங்கள் எல்லாம் மாறிப் பதிகரணங்களாகப் பெற்றவர்கள் ஜீவயாத்திரையில் மற்றவர்களைப் போலவே தோற்றினாலும் அவர்கள் மோட்ச வீட்டில் இருந்து இன்பத்தைப் பெறுபவர்களாகவே நிற்கிறார்கள். ஆனால் அதற்கும் இதற்கும் ஒரே ஒரு வேறுபாடு. இங்கே சரீரம் இருக்கிறது; அங்கே சரீரம் இல்லை. அதனால் இந்த நிலைக்கு ஜீவன் முக்தி நிலை என்று பெயர் தந்திருக்கிறார்கள். ஜீவன் முக்தன் பரமானந்தக் கடலிலே துளையம் ஆடுவான். அவனுக்கு அப்போது செயல் என்பது ஒன்றும் இல்லை; செயல்கள் குறைந்து கொண்டு வரவர உள்ளக் கமலம் விரிந்துவரும். இறைவனுடைய திருவருள் இன்பம் மெல்ல மெல்லத் தலைப்படும்; புத்திக் கமலத்தில் உருக்கம் உண்டாகி ஆனந்த ஊற்று எழும் என்று அருணகிரி நாதர் சொல்கிறார். அறிவும் அருளும் பொதுவாக மனம் என்பது அந்தக்கரணம் என்ற பெயரால் குறிக்கப்படும். அந்தக்கரணம் நான்கு பகுதியாக அமைந்தது. முன்பும் இது பற்றிச் சொல்லியிருக்கிறேன். மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்பனவே அவை. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி ஆசைப்படுவது மனம். எப்போதும் நம்முடைய உணர்வோடு இருப்பது அகங்காரம். ஒன்றைக் கடைப்பிடித்துத் திண்ணமாக இருப்பது சித்தம். இது இத்தகையது என்று வேறு பிரித்துப் பார்ப்பது புத்தி. மனம் நல்லதாக இருந்தால் சித்தப் பகுதி வன்மை பெறும். அதைதான் “Will power” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நல்லது இன்னது என்று புத்தியினால் தெரிந்துகொண்டு அதனிடத்தில் நிலைத்து நிற்கச் சித்தம் உதவும். அறிவு விகாசம் அடைவதைப் புத்திக் கமலம் விரிவதாகச் சொல்லலாம். அறியாமை என்னும் இருள் போனால் அறிவு மலரும்; அறிவு மலர்ந்தால் ஆனந்த ஊற்று அங்கிருந்து எழும். இங்கே அறிவு என்று சொல்வது, வெறும் பொருளை உணர்கிற அறிவு அன்று. ஞானம் என்ற பெயரால் நம்முடைய பெரியோர்கள் குறிப்பிட்டது இறைவனுடைய திருவருள் இன்ப அநுபவத்தைப் பெறுவதற்குக் காரணமான ஞானத்தையே. அந்த ஞானத்தோடு அருள் கலந்து வரும். அந்த ஞானத்தோடு பக்தியும் கலந்திருக்கும். இறைவனுடைய திருவருள் நினைவின்றி வருகிற அறிவு பயன் இல்லாத அறிவு; மணம் இல்லாத மலர்; ஈரம் இல்லாத வறண்ட பொருள். மனம் விரிந்தால் உள்ளத்தில் இருக்கிற பொருள் வெளிப்படுகிறது. புத்திக் கமலம் விரியும்போது அங்கே எம்பெருமான் இருப்பது புலனாகிறது. புத்தியாகிய கமலத்தில் தேன் உருகிப் பெருகவேண்டும். அந்த உருக்கத்திற்கு மூலமானது அன்பு. இறைவனுடைய திருவருளைப் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டு, எம்பெருமானிடத்தில் இடையீடில்லாத அன்பு வைத்து, அந்த அன்பின் பயனாக அவனுடைய அருள் ஒளி கிடைக்குமானால், அப்போது உள்ளக் கமலம் விரிகிறது; விரியும்போது அவன் தன்னுடைய காட்சியைக் காட்டுகிறான். அப்போது மெல்ல மெல்ல நம்முடைய செயல் மாண்டு வருகிறது. அதற்குப் பயனாக இன்ப ஊற்று மெல்ல மெல்லப் பெருகுகிறது. ஊற்றும் மறைதல் இன்பம் ஊற்றாக எழுந்தது. எப்போதும் ஊற்றாக ஓடிக்கொண்டிருக்கவில்லை. அது பெரிய கடல் ஆயிற்றாம். சிறிய விதை ஒன்றை நடுகிறோம். அந்த விதை இரண்டு இலை விடுகிறது. அதோடு நிற்பது இல்லை. அது மரமாகிறது. அது இலை விடும்போது தன்னை மாய்த்துக் கொள்கிறது. வித்து மாய்ந்து மரம் ஆகிறது. ஒரு தேங்காய் நடுகிறோம். நட்ட பிறகு நாம் தேங்காயை எடுக்கலாம். ஆனால் நட்ட தேங்காயை எடுக்க இயலாது. ஒரு தேங்காய் நட்டால் ஆயிரம் தேங்காய் வரும்; நட்ட தேங்காய் வராது. அது தன்னை மாய்த்துக் கொண்டு பல தேங்காயைத் தருகிறது. அப்படியே இங்கே புத்திக் கமலம் விரிகிறது. அதிலிருந்து ஊற்று ஊறுகிறது; புறப்பட்டு வெள்ளமாகப் பெருகுகிறது; நான்கு புறமும் பெருகிக் கரை காணாமல் நிற்கிறது. வெள்ளம் பெருகப் பெருக அது செல்லும் இடங்களில் உள்ள பொருள்கள் மறையத் தொடங்குகின்றன. புறப்பட்ட இடமே மறைந்து போகிறது. புறப்பட்ட ஊற்றுக் கண்ணை மறைத்து, கரைகளை எல்லாம் மறைத்து, கரைகளுக்கு அப்பாலுள்ள மேடுகளை மறைத்து, மேடுபள்ளம் என்ற வேறுபாடு தெரியாமல் செய்து, எங்கும் ஒரே வெள்ள மயமாக நிற்கிறது. வெறும் ஊற்றாக இருக்கும்போது ஊற்றுக் கண் தெரிந்தன; மேடு பள்ளம் எல்லாம் தெரிந்தன; ஆனால் ஊற்று, கடலான பிறகு ஒன்றுமே தெரியவில்லை. அப்படியே ஆனந்தத் தேன் ஊற்று எடுக்கும்போது மேடுபள்ளம் என்ற வேறுபாடு சற்றே தோற்றலாம். ஆனந்தம் வெள்ளமாகப் பெருகிப் பரமானந்தக் கடலான பிறகு முன்னாலே கண்ட கரை மேடு பள்ளங்களில் ஒன்றும் தெரியாது. வர வரப் பெருகுதல் இறைவனுடைய திருவருளால் அவனுடைய திருவுருவத்தை உள்ளத்தில் பதித்து அறிவுப் பக்குவம் பெற்று அன்போடு கலந்து சாதனை செய்வோமானால் ஆனந்த ஊற்றுத் தோன்றும்; மேலும் மேலும் பெருகும். அப்படிப் பெருகி வரும்போது மெல்ல மெல்லப் பேத புத்தி மாய்ந்து வரும். அருகில் இருக்கிற கரைகள் உடைந்துபோகும்; பள்ளமும் போய்விடும். முன்பு என் மனைவி மக்கள், என் சொத்து என்று சொல்லிக் கொண்டிருந்தவன் ‘என்’ என்பதை மறந்துவிடுவான். ‘என்’ என்பது ‘எம்’ ஆகிவிடும். வீட்டை நினைப்பதை மாற்றி ஊரை நினைப்பான். பின்பு ஊரையும் மறந்து நாட்டை நினைப்பான். அதனையும் மறந்து உலகத்தையே நினைப்பான். அதற்குப் பிறகு உலகம் என்ற நினைவு போய்விடும்; அண்டத்தை நினைப்பான். அண்டத்தையும் விட்ட பிறகு உயிர்க் கூட்டத்தை நினைப்பான். எல்லாவற்றையும் கடந்த ஒன்றைக் கடைசியில் நினைப்பான். பின்பு அந்த நினைப்பும் தானே மறைந்துவிடும். எப்போதும் எல்லாமாய் இருக்கின்ற ஒன்றை நினைப்பதுதான் ஒன்றையும் நினைக்காத நினைப்பு; நினைப்பிலா நினைப்பு. ஆனந்தவெள்ளம் பெருகி நிற்கும்போது எல்லை எல்லாம் உடைந்துவிடுகிறது. ‘நான், எனது’ என்ற இரண்டும் இருக்கிறவரைக்கும் எல்லை உண்டு. அவை போய்ச் செயல் மாண்டு ஒழிந்தால் எல்லை இல்லாத நிலை வந்துவிடும். அகண்ட பாவனை. எல்லாமாய் அல்லதுமாய் இருக்கும் பரம்பொருளின் நினைவினால் அகண்ட பாவனை வரும்போது நாம் வேறு என்ற நினைவே எழாது. பரமானந்த வெள்ளம் படர்ந் திருக்கும்போது அந்த அகண்ட பாவனை உண்டாகும். ஆற்றில் தண்ணீர் இல்லாதபோது நடந்தால் மிகவும் விழிப்புடன் நடக்கவேண்டும். முள் இருக்கிறதா என்றும் அசுத்தப் பொருள் இருக்கிறதா என்றும் பள்ளம் இருக்கிறதா என்றும் பார்த்து நடக்கவேண்டும். வெள்ளம் வந்து விடுகிறது. அந்த வெள்ளத்தின் மீது மிதக்கும் ஓடத்தில் ஏறிக்கொள்கின்றோம். அப்போது எந்த இடத்தில் முள் இருக்குமோ என்று அஞ்ச வேண்டியது இல்லை. எங்கே கல் இருக்குமோ, பள்ளம் இருக்குமோ என்று பார்க்க வேண்டியது இல்லை. எந்த இடத்திலே கண்ணாடித் துண்டு காலில் குத்துமே என்ற பயம் வேண்டியதில்லை. தண்ணீர் இல்லாதபோது ஒவ்வோர் இடத்திலும் யோசனை பண்ணி அஞ்சி நடந்து கொண்டிருந்த நாம் வெள்ளம் வந்த பிறகு அதே இடத்தின்மேல் போகையில் அந்தக் கவலைகளுக்கு இடமே இல்லாமல் சுகமாகப் போகிறோம். காரணம், அப்போது மேடுபள்ளமற்ற சமமான வெள்ளம் பரந்ததுதான். உள்ளக் கமலம் விரிந்து அதனூடே ஆனந்தத் தேன் ஊற்றாகத் தோன்றி மேலே பெருகிப் பரவும்போது அதற்கு முன்னாலே வெவ்வேறாகக் கண்ட நிறங்களும், உருவங்களும் ஒன்றாகி விடும். புலன் நுகர்ச்சி எல்லாம் மேடு பள்ளம் இல்லாமல் மட்டமாகிவிடும். அவன் எல்லா வற்றுக்கும் மேலே மிதப்பான். அந்த இடத்தை விட்டுப் போய்விடுவான் என்பது அல்ல. சரீரம் இருக்கும் மட்டும் இந்த உலகத்தில் இருக்கத்தான் வேண்டும். கரைக்குச் சென்றவனும் ஆற்றுப்படுகையில் இருக்கிற கண்ணாடி, முள் முதலியவற்றுக்கு அஞ்சமாட்டான். ஆற்றில் வெள்ளத்தின்மேல் இருக்கிறவனும் அஞ்சமாட்டான். அப்படியே பிரபஞ்சத்தில் இருந்தாலும் செயல் மாண்டு ஒழிந்து காணும் இன்பதுன்ப வேறுபாடுகள் இருப்பது இல்லை. அந்த ஆனந்த வெள்ளம் புவனத்தை ஏற்றி விடுகிறது. பிரபஞ்ச வாசனை அத்தனையும் அற்று நிற்கிற நிலை அது. புவனம் ஏற்றுதல் புவனம் ஏற்றித் தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே. சாலைகளில் நிழலுக்குச் செடி நடுவதை நாம் பார்த்திருக்கிறோம். செடி நடும்போது ஆடுகள் கடிக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காகச் சுற்றிலும் இரும்பினாலேயோ, முள்ளாலேயோ வேலி அமைப்பார்கள். நட்ட செடி பெரிய மரமாகி வளர்ந்து விடுகிறது. அப்போது அங்கே வேலி இருக்குமா? அதுஅற்றுப்போய்விடும். அது போலவே இந்த உள்ளக் கமலத்தில் தோன்றிய ஊற்று உள்ளத்தை அழித்து விடுகிறது; அல்லது உள்ளமே அதில் கரைந்து இல்லாமல் போய்விடுகிறது. புவனம் ஏற்றுதலாவது, அவனளவிலே புவனத்தின் நினைப்பே இல்லாமல் போய்விடுகிறது. அவன் அடைகிற ஆனந்தம் இட எல்லைக்கு அப்பாற்பட்டது. புவனங்களை எற்றிப் பரந்து நிற்பது. பிரபஞ்சத்தில் வாழ்ந்தாலும் அதனைக் கடந்து நிற்கிறான். இதைத்தான், ‘புவனம் எற்றி’ என்று சொல்கிறார். 3. அடையாளம் இனிமேல் சொல்வதுதான் சற்று விசித்திர‌மாகத் தோற்றும். எல்லாம் போய்ப் பிரபஞ்சத்தை எற்றிவிட்ட பிற்பாடு அந்தப் பரமானந்த வெள்ளத்தின்மேல் ஓர் அமுதம் தோன்றியது என்று சொல்ல வருகிறார். பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கும் அமுது கண்டேன். “கோயிலில் நான் ஆறுமுகம், பன்னிரண்டு தோள்களும் உடைய பெருமானாகக் கண்டேனே! அந்தப் பெருமானை அங்கே கண்டேன்” என்கிறார். இது வியப்பதற்குரிய செய்தி. கோயிலில் கண்ட அந்தத் திருவுருவத்தையே அங்கே காணவில்லை. அது போன்ற ஒன்றைக் கண்டார். ஒருவன் விதை விதைத்து ஆலமரத்தைக் கண்டான். அந்த ஆலமரத்தில் மீட்டும் விதையைக் கண்டான் என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. நமக்கு விளங்குகிறது. பூமியில் விதைத்த விதை வேறு. அதிலிருந்து வளர்ந்த விதை வேறு. இரண்டும் ஆலம் விதைதான். ஆனால் அது இது ஆகாது. ஆறு முகமும், பன்னிரண்டு தோள்களுமுடைய ஆண்டவனை ஒவ்வொரு நாளும் திருக் கோயிலில் தரிசனம் செய்து உள்ளத்தில் பதித்துக் கொண்டார். பின்பு செயல் மாண்டது. ஆனந்த ஊற்றுப் பெருகியது; பரமானந்தக் கடலாகப் பெருகிவிட்டது. பெருகினபோது மறுபடியும் அங்கே ஆறுமுகத்தைக் கண்டார். சிறிய விதையிலிருந்து மிகப்படர்ந்து சென்ற மரத்தில் மறுபடியும் விதையைக் கண்டேன் என்று சொல்வது போல இருக்கிறது இது. இரண்டு விதைகளும் ஒன்று ஆகா. இந்த விதையினுடைய விளைவு அது. இந்த விதையைப் பார்க்கிறவன் மரமாகி வளர்ந்த பிற்பாடு வரும் விதையை ஒரு விதமாக ஊகிக்கலாமே தவிர நேரே பார்க்க இயலாது. பார்க்க வேண்டுமானால் அவ்வளவு காலம் காத்து நின்று வளர்கிற வரைக்கும் முயற்சியைச் செய்து வரவேண்டும். அப்படி, “பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது கண்டேன்” என்று அருணகிரியார் சொல்வதை நாம் இப்போது திருக்கோயிலில் பார்க்கிற உருவத்தைச் சொல்வதாக எண்ணக் கூடாது. அது எப்படி இருந்தது என்று அடையாளம் சொல்வதற்காக நமக்கு அருணகிரிநாதர் இந்த வகையில் சொன்னார். அவர் கண்டபடி நாம் காணவேண்டுமானால் அவரைப்போல் நாமும் செயல் மாண்டு அடங்கி நிற்க வேண்டும். இங்கே அருணகிரிநாதப் பெருமான் நமக்குப் பயன்படுகிற ஒரு செய்தியைச் சொல்கிறார், கோயிலுக்குள் நாம் காண்கிற உருவமே வித்தாக நின்று பின்னாலே வேறு வகையில் அநுபவ நி்லையில் தோன்றும் என்பதை அவர் புலப்படுத்துகிறார். புவனத்திற்கு நாம் அடங்கி நிற்கும் போது ஆறுமுக நாதனைப் பார்க்கிறோம். அருணகிரியாரும் அவனைப் பார்த்தார். புவனத்தை அடக்கி நிற்கின்ற அந்தச் சமயத்திலும் ஆறுமுக நாதனை நாம் காணலாம். இங்கே கண்ட ஆறுமுகநாதன் அங்கேயும் வந்து நிற்கிறான், வேறு வகையில். படமும் ஆளும் இன்னும் இதைச் சற்றுத் தெளிவாகப் பார்க்கலாம். நம்முடைய வீட்டில் ஒரு படம் மாட்டி இருக்கிறார்கள். நம்முடைய உறவினர் அவர். மிகவும் நல்லவர; என்று தாய் தந்தையர்கள் சொல்கிறார்கள். நாம் அவரைப் பார்த்ததில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறோம். “அவர் எங்கோ பம்பாய்க்குப் போனார். அங்கே தங்கிவிட்டார். அவரை நான் கண்டு பல காலம் ஆயிற்று” என்று தந்தையார் சொல்கிறார். நாம் தினந்தோறும் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சமயத்தில் பம்பாய்க்குப் போகிறோம். போகிறபோது அந்தப் படத்திலுள்ள மனிதரைக் காண்கிற வாய்ப்புக் கிடைக்கிறது. கண்டவுடன் நம்முடைய வீட்டுப் படம் நினைவுக்கு வருகிறது. அடையாளம் கண்டு கொள்கிறோம். உடனே அவரோடு கலந்து பேசி அவருடைய அன்புக்குப் பாத்திரமாகிறோம். ஊருக்கு வந்தவுடன் நம்முடைய தாய் தந்தையர்களிடம், “இதோ இந்த அறையில் இருக்கிறாரே, அவரை நான் பம்பாயில் பார்த்தேன்”,என்று சொல்கிறோம். “இந்தப் படத்தில் உள்ளவரை நான் பார்த்தேன்” என்று சொன்னால் இந்தப் படத்திலேயே கை காலுடன் இருக்கிறார் என்று பொருள் அல்ல. இங்கே வெறும் அடையாள மாத்திரமாகக் கண்ட திருவுருவத்தை அங்கே அநுபவிக்கும் வண்ணம் பார்த்ததாகக் கொள்ள வேண்டும். அதுபோலவே நாம் நாள்தோறும் கோயிலில் காண்கின்ற விக்கிரகம்; பின்னாலே நாம் அநுபவிக்கின்ற அநுபவத்திற்கு அடையாளம். இந்த அடையாளத்தை உள்ளத்தடத்தில் நட்பு அன்புநீர் பாய்ச்சி வளர்க்கின்ற அடியார்கள் அந்தப் பெருமானை நேரில்கண்டு இன்பத்தை நுகரலாம். ‘இப்போது அறிகுறியாகக் காணும் ஒன்று அப்போது அநுபவப் பொருளாக நிற்கும். இப்போது சர்க்கரை என்று எழுதி வைக்கிற பெயர் அப்போது நாவினாலே சுவைப்பதாக இருக்கும். இப்போது பொம்மையாகப் பார்க்கிற ஒன்று அப்போது உயிருள்ள உருவமாக இருக்கும். இப்போது வெறும் கட்டையாக இருக்கிறது அப்போது ஒளி வடிவமாகத் தோன்றும்’ என்று எம்பெருமானுடைய ஆறுமுகத் திருக்கோலம் நாம் வழிபடத் தொடங்கும்போது நம் கண் முன்னால் திருக்கோயிலில் வடிவமாக நிற்கிறது. செயல் இழந்த அநுபவ நிலையில் நிற்கும்போது வேறு ஒரு வகையில் அமுதமாக நிற்கிறது. ஆதியிலே தோன்றிய ஆறுமுகம் அந்தத்திலும் தோற்றும். இதனை அருணகிரியார் திருப்புகழில், " ஆதியொடும் அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம்என்று தெளியேனே" என்று சொல்லியிருக்கிறார், விளக்கும் சோதியும் ஒரு சிறிய விளக்கை வீட்டில் வைத்திருக்கிறோம். அந்த விளக்கு ஓர் எல்லைக்குள் ஒளியைப் பரப்பிச் சில பொருள்களை விளக்குகிறது. சூரியன் தோன்றினால் எல்லா வீடுகளும் நமக்குத் தெரிகின்றன; கண்ணுக்கு எட்டும் தூரம் வரைக்கும் நம்முடைய பார்வை விரிகிறது. அப் போதும் நமக்குப் பல பொருள்கள் தெரிவது இல்லை. சுவருக்கு அந்தப் பக்கம் உள்ள பொருள்கள் தெரிவது இல்லை. அந்தப் பேரொளியினால் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இருந்தாலும், அடுத்து நின்ற சுவர்களும், மறைப்புகளும் அப்பாலுள்ளதை நம் கண்ணுக்குப் புலப்படாமல் செய்கின்றன. சிறிய விளக்கின் ஒலியில் எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் நெடுந்தூரத்திலுள்ள பொருள் தெரிவது இல்லை. பெரிய சோதிப் பிழம்பாகிய கதிரவன் ஒளிக்கு எல்லாப் பொருளையும் விளக்கும் ஆற்றல் இருந்தாலும் தடுத்து நிற்கிற மறைப்புகளினால் நமக்குப் பொருள் புலப்படுவது இல்லை. அப்படியே மனம், உணர்வு ஆகிய தடை இருக்கும்போது இறைவனுடைய பேரருள் நமக்குப் பயன்படுவது இல்லை. சிறிய விளக்கை ஏற்றிப் பின்பு அந்த விளக்கே சோதியானால் நம் பார்வை விரியும். அதோடு அடைபட்ட மறைப்புகள் எல்லாம் அழிந்து ஒழியுமானால் மிக விரிந்த பரப்பில் நம்முடைய பார்வை போகும். சிறிய விளக்கு வைத்து வீட்டிலேயே வளைய வருவதுபோல நாம் திருக் கோயிலில் எம்பெருமான் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பார்க்கிறோம். அந்தச் சிறிய விளக்கே அநுபவத்தில் எல்லை இல்லாத சோதிப்பிழம்பாகத் தோன்றுகிறது. கண்டத்திற்குள் காணுகின்ற ஆறுமுகநாதனைக் கோயிலில் காண்கிறோம். அகண்ட பரமானந்த வெள்ளத்தில் அண்டமாக இருக்கிற ஆறுமுகநாதனைக் காணலாம். இப்போது நம்முடைய கண்ணுக்கு இனிமையாக இருக்கிற உருவம் அப்போது நம்முடைய உயிருக்கு இனிமையாக இருக்கும். இந்த ஆறுமுகமும் பன்னிரண்டு தோளும் உடைய எம்பெருமானுடைய தரிசனத்தில் நாம் உள்ளக் கிளுகிளுப்பு அடைகிறோம். ஆனால் அகண்டக் காட்சியிலே அருணகிரிநாதர் கண்ட ஆறுமுகநாதன் உயிருக்குள்ளே இன்பம் பாய்ச்சினான். சாவாத நிலை தந்தான். அதனால் அந்தத் திருவுருவத்தை அமுதம் என்று சொன்னார். தித்தித்திருக்கும் அமுது கண்டேன். அமுதம் என்பது மரணத்தை ஒழிப்பது. முன்னாலே சொன்னதுபோல தேவர்கள் உண்ட அமுதம் போன்றது அன்று இது. எந்தக் காலத்திலும் மாறாத இன்பத்தைத் தந்து, இனிப் பிறவி, மரணம் ஆகிய இரண்டும் வராமல் செய்கின்ற அரு மருந்து, இனிய மருந்து இது. தேனும் அமுதமும். தேன் ஊற்றாகத் தோன்றிபு பின்பு கடலாக மாறி அந்தத் தேன் கடலில் அமுதம் எழுந்ததாய்ச் சொல்கிறார். இனியது என்று சொல்லவேண்டுமானால் அதனைத் தேன் என்று சொல்வது ஒரு வாய்ப்பாடு. பாட்டு இனிமையாக இருந்தது என்பதை உணர்த்த, தேன்போல இருந்தது என்று சொல்வது வழக்கம். மருந்துக்குத் தேன் இல்லை என்று யாராவது சொன்னால் அந்தப் பாட்டைக் கொண்டு வந்து இழையுங்கள் என்றா சொல்வது? அமுதம் என்பதும் அப்படித்தான். தேனைவிடச் சிறந்தது அமுதம். புத்திக் கமலத்தில் உருகி ஊற்றானபோது தேனாக இருந்தது. அந்த ஊற்றுக் கடலானபோது அதில் அமுது விளைந்தது. அநுபவ நிலையிலிருந்து இறங்கி வந்துள்ள அருணகிரிநாதர் சொல் இறந்த இன்பத்தைச் சொல்லுக்குள்ளாக்கிச் சொல்கிறார். அப்படிச் சொல்கிறவர் கேட்கிறவர்களுக்கு விளங்கும் வண்ணம் சொல்ல வேண்டும். விளக்க முடியாததை விளங்கும் வண்ணம் சொல்ல வேண்டுமானால் அதற்குச் சில உத்திகள் உண்டு. அமுதம் என்று சொல்வது அத்தகையது; உயிருக்கு இனிமை தருகின்ற, மரணத்தை மாற்றுகின்ற பொருள் அது என்று சொல் வதற்குப் பதிலாக அது தித்திக்கின்ற அமுதம் என்று சொன்னார். தித்திப்பு என்பது நாவின் சுவை. இங்கே மனம் கடந்த நிலையில் உள்ள இன்ப நிலையைச் சொல்லும் போது அப்படிச் சொல்லலாமா என்று கேட்கக்கூடாது. அப்படிச் சொல்வதானால் சொன்னவர் கருத்தை நாம் ஒருவாறு உணர்ந்து கொள்கிறோம். நம்முடைய மொழியில் சொன்னால்தான் விளங்கும் என்பதற்காக அப்படிச் சொல்கிறார். எம்பெருமானுடைய உருவத்தைக் கண்டு கண்டு தியானம்பண்ணி அன்பினால் உருகி நின்றால் சோதி மயமான திருவுருவக் காட்சி கிடைக்கும். கண்டமாய் இருக்கிற இந்த உருவமே எல்லை இல்லாத சோதிப் பிழம்பாகக் காண்பதற்கு மூலமாக இருக்கும். இத்தகைய அநுபவத்தை ராமகிருஷ்ணபரமஹம்சர் முதலியவர்கள் கண்டிருக்கிறார்கள். அருணகிரிநாத சுவாமிகள் சொல்கிறது ஏதோ கற்பனை என்று நினைக்கக் கூடாது. வளர்ச்சி முறை செயல் மாண்டு அடங்குதலும் புத்திக் கமலத்தில் உருகிப்பெருகுவதும் சிறிது சிறிதாக நிகழ்கின்ற செயல்கள்; செயல் முழுவதும் அடங்கின பிறகு புத்திக்கமலத்தில் ஊற்று எடுக்கிறதென்று கொள்ளக்கூடாது. செயல் அடங்கிக்கொண்டு வரவர, புத்திக் கமலத்தில் இன்ப ஊற்று எழும். செயல் முற்றும் மாளும்போது, பேரமுதக் காட்சி கிடைக்கிறது. செயல் சிறிது சிறிதாக அடங்கி வரும்போது இன்பம் சிறிது சிறிதாக ஏறிக்கொண்டு வரும். அப்போது முன்னாலே எந்தப் பொருளில் இன்பம் இருக்கிறதென்றும், எந்த எந்த முயற்சி சிறப்பு உடையதென்றும் நினைத்தோமோ அவற்றில் கண்ட சுவை எல்லாம் மாறிவிடும். முன் நிலைக்கும் பின் நிலைக்கும் உள்ள வேறுபாடு நன்கு தெரியும். பிறர் நம்முடைய பக்குவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்பது இல்லை. நம்மிடத்தில் முன்னாலே இருந்த அழுக்கு, சிறிது சிறிதாகக் குறைந்து வருவதும் மெல்ல மெல்ல வெள்ளம் ஏறுவதும் நமக்கே தெரியும். அறிவு இல்லாத காலத்தில் சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும்போது மண்ணையும் மலத்தையும் அப்பிக் கொண்டிருக்கிறோம். எறிய வேண்டிய பொருளை வாயில் போட்டுக் கொண்டோம். குழந்தைப் பருவம் மாறியபிறகு முன்னாலே செய்தது இயற்கை என்று நினைக்கமாட்டோம். குழந்தையாக இருக்கையில் செய்யும் செயல்கள் தவறு என்று நினைவு அப்போது வருவது இல்லை. அந்தப் பருவம் மாறின பிறகு, இப்படியெல்லாம் பைத்தியக்காரத்தனமாகச் செய்தோமே என்ற நினைவினால் நாமே சிரித்துக் கொள்கிறோம். அந்த வகையில், செயல் மாண்டு அடங்கி வர வர, இன்ப ஊற்றுப் பெருகி வர வர, முன்னை இருள் நிலையை எண்ணி எண்ணி நாம் உள்ளே நகைத்துக் கொண்டிருப்போம். அநுபவம் ஏறுதல் ஆகையால் இப்போதுள்ள நிலையே இயற்கை என்று நினைக்கக் கூடாது. நாம் இப்போது காணுகின்ற திரு உருவங்கள் இப்படித்தான் இருக்கும் என்றும் எண்ணக் கூடாது. அநுபவம் ஏற ஏற இப்போது காணுகின்ற உருவங்கள் எல்லாம் எந்த வகையில் பயன் தருகின்றன என்பது அப்போது விளங்கும். இப்போது சொன்னாலும் விளங்காது. அறிவுக்கு அகப்படுகிறதாய் இருந்தால் காரண காரியங்களைக் கொண்டும் ஊகத்தைக் கொண்டும் நிரூபித்துவிடலாம். இதுவோ அறிவுக்கும் எட்டாததாக இருக்கிறது. அதனால் அறிவுக்குத் தெளியும்படியாக எந்த வகையான பிரமாணத்தைக் காட்டியும் நிரூபிக்க முடியாது. “அவ்வா றறிவார் அறிகின் றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே” என்று அருணகிரியார் அநுபூதியில் சொல்கிறார். முன்னாலே நாம் செய்த செயல்களை அப்போது நன்மை என்றே செய்திருக்கிறோம். இப்போது நாம் செய்கின்ற செயல்கள் இப்போது நன்மையாகத் தோன்றுகின்றன. முன் நாம் செய்த செயல் இழுக்கு என்று இப்போது தெளிவாகிறது. இழுக்கான செயல்களை நாம் செய்யலாகாது என்று நமக்கு அப்போது தெளிவு பிறந்திருகுமானால் அவற்றைச் செய்திருக்க மாட்டோம். படிப்படியாக இந்தத் தெளிவு உண்டாகிறது. படிப்படியாக நம் உள்ளத்தில் வாசனைப் படலம் ஏறிக்கொண்டு வந்திருக்கிறது. வினைகளும் மெல்ல மெல்ல நம்மிடத்தில் குவிந்திருக்கின்றன. அவற்றைப் போக்க வேண்டுமானால் மெல்ல மெல்லத்தான் போக்க வேண்டும். செயல்கள் மெல்ல மெல்ல அடங்கி வரும்போது அதன் பயனாக இன்பம் மெல்ல மெல்ல ஊறிப் பின்பு பரமானந்த சாகரமாக மாறும். அருணகிரிநாதப் பெருமான், செயல்கள் எல்லாம் அடங்கி நிற்க ஜீவபோதம் அற்று இறைவனோடு ஒன்றுபடுகின்ற ஆனந்த நிலையை இந்தப் பாட்டில் சொல்கிறார். நமக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்றும், எட்டாத இடத்தில் இருக்கிற ஒன்றை நாம் பார்த்துக் கொட்டாவி விடுகிறோம் என்றும் நினைக்கக் கூடாது. நாம் அநுபவிப்பதற்கு ஒத்து வருகின்ற பழக்கத்தையும் இந்தப் பாட்டில் சொல்கிறார். ‘செயல் மாண்டு அடங்க’ என்பதற்கு அடங்கி வர என்று பொருள் கொள்ளவேண்டும். முற்றும் அடங்கிய நிலையில் ஊற்றுத் தோன்றிய புத்திக் கமலம் மறைந்து எல்லாவற்றையும் ஒன்றாக்கிக் கொண்டு பரமானந்த வெள்ளம் தோற்றும். செயல் ஒவ்வொன்றாக மாளத் தொடங்கவே, இன்ப ஊற்றுப் பெருகி வரும். ஒன்று தேய்ந்து கொண்டு வருவதும், ஒன்று ஓங்கிக் கொண்டு வருவதும் சேர்ந்தே நிகழும். நாம் தொடக்க நிலையில் இருக்கிறோம். நம்முடைய செயல் தேய்ந்து வரவேண்டும். செயல் தேய்வது செயலைச் செய்யாமல் இருப்பது அன்று. பிறவிப்பிணிக்குக் காரணமான செயல்கள் அடங்க வேண்டுமானால் அதற்கு மாறான செயலைச் செய்யவேண்டும். நல்ல செயல்களைச் செய்யத் தொடங்கிப் பின்பு மெல்ல மெல்லச் செயல்களை ஒழிக்கவேண்டும். அப்போது இறைவனுடைய திருவருளால் புத்திக் கமலம் விரிந்து அங்கிருந்து இன்ப ஊற்றுப் புறப்பட்டுப் பெருகும் கடலாகும். அந்தக் கடலில் ஆறுமுக அமுது தோன்றும். இப்போது நாம காணும் ஆறுமுகம் புத்திக் கமலத்தில் இன்ப ஊற்றுத் தோன்றச் செய்யும். அப்போது காணும் ஆறுமுகம் பரமானந்தப் பெரும் கடலில் அமுதமாகத் தோற்றும். அதற்கு இது வாயில். 4. ஆறுமுகம். ஆறுமுகமும் பன்னிரண்டு தோள்களும் உடைய பெருமானைக் கோயிலில் பார்க்கிறோம். பூவாலும் அணியாலும் அலங்காரம் செய்து நம் உள்ளம் கவரும்படி செய்கிறார்கள். அந்த அலங்காரங்கள் திருமுகங்களையும், திருத் தோள்களையும் நம்முடைய கண்ணுக்கு அழகாகக் காட்டுகின்றன. இறைவனுடைய திருவருளில் ஈடுபட்ட பெரு மக்கள் இந்த ஆறுமுகத்தைப் பற்றியும், பன்னிரண்டு திருத்தோள்களைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். முருகப் பெருமான் ஆறுமுகத்தையும் பன்னிரண்டு திருத்தோளையும் கொண்டு செய்கின்ற பல திருவிளையாடல்களை விரிவாகத் திருமுருகாற்றுப் படையில் நக்கீரரும், திருவகுப்பில் அருணகிரியாரும் சொல்கிறார்கள். வரிசையான ஆறுமுகத்தை நாம் கண்ணாலே கண்டு பின்பு கருத்தாலும் காணவேண்டும். கண்ணாலே காண்பதற்குக் கோயில்கள் பயன்படுகின்றன; கருத்தாலே காண்பதற்குச் சொற்கோயில் பயன்படும். ஆறுமுக நாதனின் எல்லா அலங்காரங்களையும் பார்த்தால்தான் நம் மனம் அந்தத் திருவுருவத்தில் கவியும். அப்படியே ஆறு முகத்தைப் பற்றிச் சொல்கிற பாடல்களையும், புகழ்களையும் தெரிந்து கொண்டால் பின்னும் நன்றாக்க் கவிந்து அந்தத் திருவுருவத்தைப் பதித்துக் கொள்ளும் நிலை வரும். நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் எம்பெருமானுடைய ஆறுமுகங்களும் இன்ன இன்ன செயல்களைச் செய் கின்றன் என்று தெரிவிக்கிறார். கதிர் விரிக்கும் முகம். முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களும் ஆறு வேறு காரியங்களைச் செய்கின்றன. ஒரு முகம் உலகம் எங்கும் பரந்திருக்கின்ற இருளை எல்லாம் போக்கி ஒளி தருகிறது . கதிரவன், திங்கள், தீ என்னும் மூன்றும் உலகிலுள்ள இருளைப் போக்கும் மூன்று சுடர்கள். அந்துச் சுடர்களுக்கும் ஒளி உதவி இருளைப் போக்க உதவும் முகம் ஒன்று. “மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்.” வரம் கொடுக்கும் முகம். அடுத்த முகம் தன்பால் அன்பு செய்பவருடைய வருப்பத்தை நிறைவேற்றுகின்றது. “ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்துஇனிது ஒழுகிக் காதலின் உவந்து வரங்கொடுக்த் தன்றே.” {ஆர்வலர் ~ பக்தர்கள்} வேள்வி காக்கும் முகம். மறை வழியே நின்று வேள்விகளைச் செய்யும் அந்தணர்கள் உலகத்திற்கு வரும் தீங்குகளைத் தமுமுடைய செயலால் ஒழிக்கின்றார்கள். ஆதலின் உலகம் நன்றாக நடைபெற வேண்டி அவர்களுடைய வேள்விக்கு ஆக்கம் தேடுவது ஒரு முகம். “ஒருமுகம் மந்திரவிதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்விஓர்க் கும்மே.” மயக்கம் நீக்கும் முகம் எம்பெருமான் ஞானபண்டித சாமி. உலகில் பலர் அறிவு பெற்றிருந்தாலும் அவர்களுடைய அறிவு எல்லாம் ஒருவகையில் குறைவு உடையனவே. ஒருவரை நோக்க மற்றவருடைய அறிவு சிறந்திருந்தாலும் அவர் பின்னும் ஒருவருடைய அறிவை எதிர்பார்க்கும் குறைவு உடையவர் ஆவார். அறியாமை குறைந்து வரவர, அறிவு மிகுந்து வரும். அறியாமை சிறிதும் இல்லாமல் அறிவே தன்னுடைய உருவமாக இருக்கிற எம்பெருமான் மிகச் சிறந்தவர்களுக்குத் தோன்றுகின்ற ஐயங்களைப் போக்கித் தெளிவிப்பான். அப்படித் தெளிவாக்கும் செயலைச் செய்கின்றது ஒரு முகம். “ஒருமுகம் எஞ்சிய பொருளை ஏழுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே” வெல்லும் முகம் இன்பத்தைச் செய்கின்ற முருகப்பெருமான் நல்லவர்களுக்கு வரும் துன்பத்தையும் போக்குகிறான். தேவர்களுக்குப் பகைவர்களாகிய அசுரர்கள் தேவர்களை மாத்திரம் துன்புறுத்துவது இல்லை; உலகத்திலுள்ள நல்லவர்களுக்கும் துன்பத்தைத் தருகிறார்கள் அவர்களை அடியோடு அழித்துப் போர்க்களத்தில் வெற்றி கொள்ளும் திறல் உடையவன் முருகன். இந்த வீரச் செயலை ஒருதிருமுகம் செய்கின்றது. “ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே” மகிழும் முகம் இனி ஆறாவது முகம் இன்பத்தை வழங்குகின்றது. ஆன்மாக்களுடைய பிரதிநிதியாக இருக்கின்ற வள்ளி யெம்பெருமாட்டிக்கு எம்பெருமான் இன்பம் வழங்குகிறான். அந்தச் செயலைச் செய்வது ஒரு முகம். “ஒரு முகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகைஅமர்ந் தஎன்றே.” முருகன் இருளைப் போக்கி ஒளிகாட்டுவான் என்றும உலகத்திற்குப் பொதுவாக ஒளி கொடுத்தாலும் சிறப்பாகத் தன்னை அண்டி அன்பு செய்வோருக்கு இன்பம் தருவான் என்றும் தீங்கு விளைவிப்பவர்களை அடக்குவான் என்றும், ஆன்மாக்களுக்கு இன்பம் தருவான் என்றும் கொள்ளும்படியாக இந்த முகங்களின் செயல்கள் அமைந்திருக்கின்றன. ஒளி படைத்த உலகத்தில் அன்பர்கள் வந்து அவனை வழிபட்டுத் தமக்கு வேண்டிய வரங்களைப் பெற, ஒருபால் அந்தணர்கள் வேள்வியைச் செய்ய பின்னும் ஒருபால் ஞானிகள் உபதேசம்பெற, வேறு ஒருபால் அசுரர்கள் ஒழிய, பின்னும் ஒருபால் வள்ளி யெம்பெருமாட்டி இன்பத்தைப் பெறுகிறாள். இந்த ஆறு முகங்களையும் வரிசையாகப் பெற்றிருக்கிறான் முருகன். நக்கீரர் சொல்கின்ற முறையில் அழகான வரிசை அமைந்திருக்கிறது. சூரியன் உதயம் ஆகி எல்லோருக்கும் இன்பத்தைத் தருவதைப் போல இங்கே முதல் முகம் உதயமாகி இருளைப் போக்குகிறது. கடைசி முகம் வள்ளி யெம்பெருமாட்டிக்கு இன்பம் தருகிறது. மூன்று நிலை. இப்படி அழகாக அமைந்த ஆறு முகங்களையும் திரு முருகாற்றுப்படையில் பார்க்கிறோம். அதைப் படித்து நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டால், கோயிலில் உள்ள முருகப் பெருமானுடைய திருவுருவைத்தைக் காணும்போது அந்தச் செய்திகள் நம்முடைய நினைவுக்கு வரும். அந்தத் திருமுகங்களின் மூலமாக இந்த உயர்ந்த கருத்துக்கள் நம் உள்ளத்தில் படம்போலத் தோன்றும். தோன்றாவிட்டாலும் தோன்றும்படியாக நினைத்துப் பார்க்கவேண்டும். பக்தர்களுக்குக் கோயிலில் காணும் முகங்கள் மலராலும், அணியாலும் அலங்காரம் பண்ணப் பெற்றவனாக இருக்கும். திருமுருகாற்றுப்படையைப் படித்த பிறகு அந்த அலங்காரங்களைக் கண்ணாலே காணுவதோடு நில்லாமல் அவற்றின் செயல்களையும் நினைத்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இது இரண்டாவது நிலை. அது போல் மூன்றாவது நிலை ஒன்று உண்டு. அதுதான் பரமானந்த சாகரத்தில் அமுத மயமாக இந்த ஆறு முகங்களையும் காணும் நிலை. இதனை அருணகிரிநாதப் பெருமான் அநுபவத்தில் உணர்ந்தார். இந்தப் பாட்டில் அதைச் சொல்கிறார். பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கும் அமுதுகண் டேன்செயல் மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனம்எ ற்றித் தத்திக் கரைபுர ளும்பர மானந்த சாகரத்தே. [செயல்கள் ஒடுங்கிக் கரணங்கள் அடங்கிக்கொண்டு வரப் புத்தியாகிய கமலத்தில் உருகிப் பெருக்கெடுத்துப் புவனங்களைத் தகர்த்தெறிந்து மேலே பொங்கிக் கரை புரளும் பரமானந்தக் கடலில் வரிசையாகிய திருமுகம் ஆறுடனும் பன்னிரு தோள்களுமாக இனித்திருக்கும் அமுதத்தைக் கண்டேன். பத்தி ~ வரிசை. எற்றி ~ தகர்த்து] வண்டும் மலரும் 1 நாம் திருக்கோயிலில் காணும் இறைவனுடைய அற்புதமான விக்கிரகத்தை வித்தாக மனத்தில் பதித்துத் தியானம் செய்து, பக்தி ஏற ஏற அந்தத் திருவுருவமே ஆனந்தக் கடலில் அமுதம் போலத் தோற்றும் என்பதைப் போன பாட்டில் அருணகிரிநாதர் சொன்னார். மறுபடியும் அடுத்த பாட்டில் எம்பெருமான் திருவருளைப் பெறுவதற்கு எளிய வழி ஒன்றைச் சொல்கிறார். நல்ல மலர்களில் மணமும் தேனும் இருக்கும்; மென்மையும் இருக்கும். அந்த மலர் வாடி வதங்கி மாய்ந்து போனாலும், மணம் அதனோடு போய்விட்டாலும் அதில் உள்ள தேனை நாம் பெறலாம், அந்தத் தேனை நமக்காக சேமித்து வைக்கிறது வண்டு. வண்டு மலர்களில் உள்ள தேனைச் சேமித்துத் தானும் உண்டு, பிறருக்கும் பயன் படச் செய்யும் இயல்பு உடையது. வண்டுகளின் வகை வண்டுகள் என்று சொன்னவுடன் நமக்குத் தேனைத் தொகுக்கும் வண்டு நினைவுக்கு வருகிறது. உலகில் பலவகையான வண்டுகள் உண்டு. இழி பொருள்களை உருட்டுகிற வண்டுகளையும் நாம் பார்த்திருக்கிறோம். தேனை உண்ண்டும் வண்டுகளிலும் பலவகை உண்டு. சிறு சிறு மலர்களிலிருந்து தேனைச் சேகரித்து மிகத் தாழ்ந்த இடத்தில் கூடு கட்டி வைக்கும் வண்டுகள் ஒரு வகை. தாமரை முதலிய மலர்களிலிருந்து தேனைத் தொகுத்து மிக உயர்ந்த மரங்களில் மலையின்மேல் தேன்கூடு கட்டும் வண்டுகள் இருக்கின்றன. பிறருடைய கையும் கண்ணும் படாமல் தேனை வைக்கவேண்டுமென்பது அந்த வண்டுகளின் நோக்கம் போலும். நாம் உண்ணுகிற பொருள் பிறருடைய கையும் கண்ணும் படாமல் இருந்தால் நல்லது என்று பெரியவர்கள சொல்வார்கள். பிறர் காணாமல் உண்ணுவதும், பிறர் கை படாமல் உண்ணுவதும் தூய்மைக்கு அடையாளம் என்று பழைய காலத்து ஆசார சீலர்கள் கருதினார்கள். இப்போது கண்படாமல் உண்ணுவதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் நம்முடைய கை படாமலேயே சாப்பிட வேண்டுமென்று கரண்டி முதலியவைகளை நாகரிக மக்கள் பயன்படுத்துகிறார்கள். உயர்ந்த வகையிலுள்ள வண்டும் பிறருடைய கைக்கு எட்டாதபடி, பிறருடைய கண் படாதபடி, மலையின் உச்சியின்மேல் இருக்கும் மரக் கொம்புகளில் தேனைச் சேகரித்து வைக்கின்றது. அத்தகைய வண்டுக்குத் தும்பி என்று பெயர். தும்பிகளுக்குள் சிறந்த தும்பியைக் கோத்தும்பி என்று சொல்வார்கள். மரத்தின் உயர்ந்த கொம்பில் தேனை வைப்பதால் கோல்தும்பி என்று சொல்வதும் உண்டு. தாமரையில் உள்ள தாதை ஊதி அதிலுள்ள தேனைக் கொண்டுபோய் மலையின்மேல் இருக்கும் சந்தன மரத்தில் அடை வைக்கும் வண்டு ஒன்றைப்பற்றி நற்றிணை என்ற சங்ககாலத்து நூல் பேசுகிறது. “தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச் சாந்தில் தொடுத்த தீந்தேன் போல.” இவ்வாறு வண்டுகளில் அழுக்கை உருட்டும் வண்டு, மலரில் உள்ள சிறு தேனைத் தொகுத்துக் கீழே அடைவைக்கும் வண்டு, உயர்ந்த மரத்தில் தேன் கூடு கட்டும் வண்டு, மலையின் மேலே அடை வைக்கும் வண்டு என்று பல வகைகளைப் பார்த்திருக்கிறோம். மனிதர்களுடைய மனம் வண்டு போன்றது. வண்டுகளில் சில சாதி உண்டு. மனங்களிலோ பல பல சாதி உண்டு. இந்த மனம் அழுக்கை உருட்டும்; அழகுப் பொருள்களை உருட்டும். எங்கெங்கே தேன் உண்டோ அங்கெல்லாம் நாடிச் சென்று மலர்களைக் கண்டு தேனைத் தொகுப்பதே வண்டினுடைய வாழ்வு. சோமசுந்தரக் கடவுள் பாடியதாக உள்ள ஒரு பாட்டில், “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” என்று வருகிறது. கொங்கு ~ தேன். அழகிய சிறகைப் பெற்ற வண்டு எங்கே தேன் உள்ளது என்று தேடிப் பறந்து திரியும் இயல்பு உடையது. அப்படித் தேடித் தொகுத்த தேனைத் தான் உண்பதோடு அன்றி உலகமே உண்ணும்படி கொடுக்கிறது. இறைவனுக்கும் அபிஷேகம் செய்ய அத்தேன் உதவுகிறது. மனமும் வண்டும் தேனைத் தொகுக்கும் வண்டைப்போல நல்ல எண்ணங்களைத் தொகுத்து வைத்திருக்கும் மனம் சிலருக்கு உண்டு. ஆனால் பெரும்பாலாருடைய மனம் உயர்ந்த தேனை நாடாமல் பிறரால் கழிக்கப்படும் பொருள்களை உருட்டுகின்ற வண்டைப்போல இருக்கின்றன. தாமரையில் உள்ள தேனைத் தொகுக்கும் வண்டைச் சிறந்த வண்டாகக் கொள்வது இயல்பு. மிகச் சிறந்தவர்களுடைய மனம் தண்டாமரைத் தேனைத் தொகுக்கும் வண்டைப் போன்றது. மனத்திற்கு வண்டை உவமையாக்கச் சொல்வது மரபு. மனம் வண்டானால் அது சென்று தேனைச் சேகரிக்கும் தாமரை ஒன்று இருக்க வேண்டும். அந்தத் தாமரையைத்தான் அருணகிர்நாதர் இந்தப் பாட்டில் சொல்கிறார். திருவடித்தாமரை இறைவனுடைய திருவடியைத் தாமரை போன்றது என்று சொல்வார்கள். பாதாம்புயம், பாதபத்மம் என்று பெரியவர்கள் தம்முடைய துதியில் சொல்வது வழக்கம். இந்தப் பாட்டில் அருணகிரியார் பாதாம்புயம் என்று சொல்கிறார். இறைவனுடைய திருவடி தாமரையைப் போல இருக்கிறது. இரண்டுக்கும் உள்ள பொதுத் தன்மைகள் பல. தாமரை மெத்தென்று இருப்பதுபோல இறைவனுடைய திருவடியும் மெத்தென்று இருக்கிறது. இறைவனுடைய திருவடி தாமரையைப் போலச் சிவப்பாய் இருக்கிறது. அருணதள பாதபத்மத்தைத் திருப்புகழில் அருணகிரியார் சொல்கிறார். தாமரை மலர் தூயது; இறைவன் அடியும் தூயது. தாமரை மலர் மங்களம் பொருந்தியது; இறைவன் திருவடியும் அத்தகையதே. தாமரை மலர் குளிர்ச்சியாக இருக்கும் நீரில் முளைப்பது; அப்படியே இறைவனுடைய திருவடி அன்பு நிறைந்த பெரியவர்கள் உள்ளத்தில் முளைப்பது. தாமரை விரிவாக இருப்பது; இறைவன் திருவடியும் விரிந்திருப்பது. தாமரை மலர் பொய்கையில் எவ்வளவு நீர் இருக்கிறதோ அதற்குத் தக்கபடி உயர்ந்துகொண்டே வரும்; அப்படியே அடியார்களுடைய உள்ளம் எவ்வளவுக்கு எவ்வளவு அன்பு நிறைந்து இருக்கிறதோ, அதற்கு ஏற்றபடி இறைவன் திருவடி உயர்ந்து பயனைத் தந்து கொண்டே வரும். இவ் வாறு தாமரைக்கும் இறைவன் திருத்தாளுக்கும் உள்ள ஒப்புமையை எடுத்துச் சொல்லலாம். இவற்றுக்கு மேலே மற்றொன்று சொல்லவேண்டும். இறைவனுடைய தாளையே முத்தி என்று முன்பு சொன்னேன். பேரின்பத் தேன் இறைவன் தாளில் இருக்கிறது. அந்தத் தேனை உண்ணுகின்ற வண்டுகள் பெரியவர்களுடைய உள்ளங்கள். திருக்கோத்தும்பி புத்தியை வண்டாகவும், இறைவனுடைய திருத்தாளைத் தேன் சொரியும் தாமரையாகவும் சொல்வது பல பெரியோர்களுக்கு இயல்பு. மணிவாசகப் பெருமான் திருக்கோத்தும்பி என்று ஒரு பதிகம் பாடி இருக்கிறார். “கோத் தும்பியே, நீ இறைவனுடைய திருவடிக் கமலத்தில் போய் ஊது” என்று சொல்வதாக அமைந்த பாடல்கள் அப்பதிகத்தில் இருக்கும். அங்கே தும்பி என்று விளித்தது மனத்தையே. உலகத்தில் உள்ள மயக்கம் தரும் பொருளாகிய மலத்தில் மொய்த்து விழுவதை விட்டுவிட்டு இறைவனுடைய மலர் அடியில் மொய்த்து இன்பம் பெற வேண்டு மென்ற கருத்தை அப்பாடல்களில் சொல்கிறார். “தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறும், காண்தொறும், பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உன்நெக, ஆனந்தத் தேன்சொரியும் குளிப்புடை யானுக்கே சென்றூதாய், கோத்தும்பி.” சிறிய தேனும் பெரிய தேனும் வண்டு உலகிலுள்ள பூக்களில் இருக்கும் தேனை உண்ணுகிறது. அது மிகச் சிறிய அளவில் உள்ள தேன். அதனை உண்பதற்கு நாள்தோறும் பறந்து சென்று அலைகிறது வண்டு. அப்படி அலைந்தாலும் தான் சென்று சேருகிற மலரில் தேன் குலைந்து இருக்கலாம்; பிற வண்டு உண்டதால் கலைந்தும் இருக்கலாம்; அவ்வாறின்றி அங்கே தேன் இருந்தாலும் அந்த மலரில் உள்ள தேன் மாத்திரம் அதற்குப் போதாது. பல பல மலர்களிடம் சென்று சிறிய சிறிய அளவில் தேனைத் தொகுத்து அடையில் கொண்டுபோய் வைக்கிறது. அப்படி வைத்தாலும் அந்தத் தேனைப் பிறர் கொண்டுபோய் விடுகிறார்கள். ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வோர் இந்திரியத்திற்கு இன்பத்தைத் தேடி அதனால் நிறைவு பெறாமல் மேலும் தேடிக்கொண்டிருக்கிறது மனம். அப்படித் தேடுகின்ற இன்பமும் அடுத்த நாள் வரைக்கும்கூட இருப்பது இல்லை. ஒரு கணத்தில் மாயும் இன்பத்திற்கு வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவழிக்கும் இயல்பு அந்த மனத்திற்கு இருக்கிறது. சின்னப் பூவில் உள்ள சிறிய தேனை உண்ணுகின்ற வண்டை நோக்கி, “நான் ஆனந்தமாகிய தேனைச் சொரியும் ஒரு மலரைச் சொல்கிறேன். அங்கே போய் நீ ஊது வாயாக” என்று மணிவாசகர் சொல்கிறார். “சிறகை அடித்துப் பறந்துபோய்க் கொஞ்சம் கொஞ்சம் தேன் தரும் பூவை நாடுவதை விட்டு அந்தத் தேனை நாடினால் அதைக் காணும்போது இன்பம் கிடைக்கும். அதைப் பற்றிப் பேசும்போது இன்பம் கிடைக்கும். நினைக்கும் போதே இன்பம் கிடைக்கும். எப்போதுமே அந்தத் தேனின் இன்பத்தைப் பெறலாம்” என்று சொல்கிறார். மலரில் உள்ள தேன், உடம்புக்குள் மிக மெல்லிதாக இருக்கும் நாவின் நுனியை மாத்திரம் சுவைக்கச் செய்யும். ஆனால் அம்பலத்தில் ஆடுகிற ஆண்டவனின் திருவடியாகிய மலரில் உள்ள தேன் உடம்புக்குள் மிக்க வலியனவாகிய எலும்புகள் முழுவதும் உள் நெகிழும்படி செய்யும், எலும்பை உருக்குகின்ற நோய் அன்று; புறத்தே தோன்றாத வகையில் உள்ளுக்குள்ளே உருகி இன்ப உணர்ச்சி பெறும்படியாக அந்தத் தேன் செய்யுமாம். மனத்தை வண்டாக வைத்து மணிவாசகர் பேசுகிறார். ஆனந்தத் தேன் சொரியும் குனிப்பு உடையான் என்று நடராஜப் பெருமானைச் சொல்கிறார். மலரில் உள்ள தேனை வண்டுகள் போய்க் கிண்டி உண்ணவேண்டும். இங்கேயோ தேன் உள்ள பூ ஆடிக்கொண்டிருக்கிறது. அதனால் ஆனந்தத் தேன் சொரிந்துகொண்டே இருக்கிறதாம். ஏதேனும் வண்டு வந்தால் இங்கே தேன் உண்டோ இல்லையோ என்ற ஐயம் அடையாமல் வருவதற்கு முன்னாலேயே தேன் தாரை ஒழுக வேண்டுமென்று கருதி மலர் ஆடிக்கொண்டிருப்பது போல, ஆண்டவன் தன் திருவடியை அசைத்து ஆடிக் கொண்டிருக்கிறான். உலகில் உள்ள சிற்றின்பத்தை நினைந்து தன் வாழ்க்கைத் தொழில் முழுவதையும் அதற்காக அமைத்துக் கொண்டு வாழும் இயல்புள்ள மக்களின் மனத்தை வண்டாக வைத்து, இறைவனுடைய திருவடியைத் தியானம் செய்து இன்பத்தைப் பெறவேண்டும் என்று சொல்லும் உபதேசமே மணிவாசகர் பாட்டு. 2 அருணகிரி நாதரும் தம்முடைய புத்தியாகிய வண்டு இறைவனுடைய பாதாம்புயத்தில் சென்று சேரவேண்டுமென்று நினைக்கிறார். புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்தில் புகட்டி, அன்பாய் முத்தியை வாங்க அறிகின்றிலேன். வேற்றுமையில் ஒற்றுமை நம்முடைய மனத்தில் இறைவனுடைய பாதாம் புயத்தை வைத்துத் தியானம் பண்ண வேண்டும் என்பதையே அப்படிச் சொன்னார். எம்பெருமான் பல பல திருவுருவங்களிலே மக்களுக்கு அருள் செய்கிறான். அந்தத் திருவுருவங்களின் ஒற்றுமை வேற்றுமையையும், உயர்வு தாழ்வையும் அறியப் புகுந்து, இது உயர்ந்தது இது தாழ்ந்தது என்று முடிவுகட்டும் அறிவு நமக்கு இல்லை. தோற்றத்தில் பல பல வேற்றுமைகள் இருந்தாலும் அத்தனை வேற்றுமைகளுக்குமிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. திருவடிகளைப் பற்றும் இயல்பு வந்தால் அந்த ஒற்றுமை தெளிவாகும். பல உருவம் நம் நாட்டில் உள்ளவர்கள் ஓர் உருவத்தை மட்டும் கொண்டாடுவது இல்லை. பல பல மூர்த்திகளை வழிபடுகிறார்கள். அந்தக் கடவுளுக்குப் பல விதமான உருவங்களை அமைத்திருக்கிறார்கள். எதைப் பார்த்தாலும் வேறுபாடு. முருகன் என்று சொன்னால் அவனுக்குப் பல பல உருவங்கள். மொட்டை அடித்த தலையும், இரண்டு கையும், ஒரு முகமும், கையில் தண்டமும் கொண்ட தண்டபாணியைப் பழனியில் கொண்டாடுகிறார்கள். இன்னும் சில இடங்களில் வள்ளி தேவசேனை சமேதனாக மயில் வாகனத்தில் அமர்ந்து அருள் வழங்கும் உருவத்தில் வழிபடுகிறார்கள். பின்னும் சில இடங்களில் ஆறுமுகமும் பன்னிரண்டு கரங்களும் உடையவனாக வைத்து வழிபடுகிறார்கள். இப்படி ஒரே தெய்வத்திற்குப் பல உருவங்களும், அவற்றுக்குப் பல மந்திர தந்திரங்களுமாக வைத்துக்கொண்டு வழிபடும் முறையைக் காண்கிறோம். திருவள்ளுவர் கருத்து இவற்றில் பொதுவான பகுதி ஒன்றுமே இல்லையா என்று சிலர் கேட்பது உண்டு. இந்தக் கேள்வி மிகப் பழங்காலத்தில் திருவள்ளுவருக்கு எழுந்தது. அவர் உலகத்தில் பல பல வகையான வாழ்க்கை முறை இருந்தாலும், பலவகை இயல்புள்ள மக்கள் இருந்தாலும், எல்லோருக்கும் பொதுவாக ஒரு நூல் இயற்ற வேண்டுமென்று விரும்பினார். எல்லாக் காலத்துக்கும், எல்லாச் சாதியினருக்கும், எல்லா நாட்டவருக்கும் பொதுவான அந்த நூலின் தொடக்கத்தில், கடவுளை வழிபடவேண்டும் என்பதை வற்புறுத்தப் புகுந்தார். “அகரம் முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு” என்று தொடங்கினார். இறைவனை வணங்க வேண்டுமென்று சொல்ல வந்தவர் அந்த இறைவனைப்பற்றியும் தெரிவிக்க வேண்டும் அல்லவா? மனத்தாலும், வாக்காலும், உடம்பாலும் வழிபாடு செய்ய வேண்டுமென்பதைக் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் சொல்கிறார். உடம்பினாலே வணங்குவதற்குத் திருவுருவம் வேண்டும். மனத்தினாலே நினைப்பதற்கும் வேண்டும். ஆகையால் இறைவனுடைய திருவுருவம் இப்படி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் நேர்ந்தது. அவனுடைய திருவுருவத்தை எப்படிச் சொல்வது? இறைவனை வழிபடும் நிலைக்கு ஏற்ற உருவங்கள் இல்லை என்ற சங்கடம் இல்லை. பல உருவங்கள் இருப்பதனால் எதைச் சொல்வது என்ற சங்கடந்தான் எழுந்தது. சிங்கமுகம் உடையவன் என்று சொன்னால் திருமாலைக் குறிக்கும். கொன்றையும் பிறையும் சூடிய கோலத்தைச் சொன்னால் சிவனைக் குறிக்கும். வேலையும் சேவலையும் சொன்னால் முருகனைக் குறிக்கும். ஆனை முகன் என்றால் விநாயகனைக் குறிக்கும். நான்கு முகம், ஐந்து முகம் என்று சொல்லிக் கொண்டு போனால் வெவ்வேறு கடவுள் என்பார்கள். இப்படிப் பலவகை உருவங்கள் இறைவனுக்கு இருப்பதாக அன்பர்கள் போற்றி வணங்கும்போது, இவற்றினிடையே பொதுவாக உள்ளதைச் சொன்னால் எல்லாவற்றையும் சொன்னதாக ஆகிவிடும். பொதுமையில் அமைந்தது எது என்று வள்ளுவர் ஆராய்ந்தார். இந்தச் சங்கடத்தில் கடவுளுக்கு உருவமே இல்லை என்று சொல்லி விடலாம் என்று தோன்றி இருக்கலாம். கண்ணும் மனமும் படைத்த மனிதன் வணங்குவதற்குப் பெயரும் உருவமும் அவசியம் வேண்டுமென்ற தத்துவம் தெரிந்தவர் அவர். கடவுளுக்கு உருவம் உண்டு என்றும், அந்த உருவத்தை வணங்கவேண்டும் என்றும் சொல்ல எண்ணினார். எந்த உருவத்தைச் சொல்வது என்பதில்தான் சங்கடம் உண்டாயிற்று. பொதுவான அடிகள் முகமும் வடிவும் வெவ்வேறாக இருந்தாலும் எல்லா உருவங்களுக்கும் பொதுவான இரண்டு அடிகள் இருக்கின்றன. முகம் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி கரங்கள் இருக்கும். நான்கு முகத்திற்கு எட்டுக் கரங்கள், ஆறு முகத்திற்குப் பன்னிரண்டு கரங்கள், ஐந்து முகத்திற்குப் பத்துக் கரங்கள் என்ற வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடு அடிகளைப் பொறுத்த வரையில் இல்லை. முகமும், உடம்பும், திருத் தோள்களும் வெவ்வேறாக இருந்தாலும் இறைவனுடைய வடிவங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவாக அமைந்தவை இரண்டு திருவடிகள். வேடிக்கையாக்க் குழந்தைகளுக்குச் சில கணக்குக் கேள்விகளைப் போடுவது பெரியவர்கள் வழக்கம். அப்படி ஒரு குழந்தையிடம் போய், “ஒரு முகத்திற்கு இரண்டு கை, இரண்டு கால்; ஆறு முகத்திற்கு எத்தனை கைகள், எத்தனை கால்கள்?” என்று கேட்க, அந்தக் குழந்தை யோசிக்காமல் விடை சொன்னால், “பன்னிரண்டு கைகள், பன்னிரண்டு கால்கள்” என்று சொல்லும். யோசித்துச் சொன்னால், “பன்னிரண்டு கைகள், இரண்டு கால்கள்” என்று சொல்லும். இங்கே பெருக்கல் வாய்ப்பாட்டுக்கு வேலை இல்லை. எத்தனை முகங்களானாலும், எத்தனை கரங்களானாலும் அடிகள் மாத்திரம் இரண்டே. திருவிடைக்கழிப் பிள்ளைத்தமிழ். இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் ஆசிரியருக்கு ஆசிரியராகிய மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் திருவிடைக்கழிப் பிள்ளைத்தமிழில் பாடி இருக்கும் ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது. திருவிடைக்கழி என்பது சோழநாட்டில் முருகன் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களில் ஒன்று. திருவிடைக்கழி முருகன்மேல் மகாவித்துவான் அவர்கள் ஒரு பிள்ளைத்தமிழ் பாடினார். அதில் சிற்றில் பருவத்தில் ஒரு பாட்டு வருகிறது. சின்னஞ் சிறு குழந்தையாகிய எம்பெருமான், பெண் பிள்ளைகள் கட்டிய வீடுகளைக் காலால் சிதைக்கிறான். அதைக் கண்டு அந்தக் குழந்தையாகிய எம்பெருமானிடம், “எங்கள் சிற்றிலைச் சிதைக்கவேண்டாம்” என்று சொல்கிறார்கள். “சிறியேம் சிற்றில் சிதையேலே” என்று முடியும் பாடல்கள் அந்தப் பருவத்தில் உள்ளன. அந்தக் குழந்தைகள் சொல்வதாக ஓர் கற்பனையைப் பிள்ளையவர்கள் அமைத்திருக்கிறார்கள். முருகனைப் பார்த்து அந்தக் குழந்தைகள் சொல்கிறார்கள்: “எம்பெருமானே, உன்னுடைய தாயாகிய பார்வதி தேவி எங்களைப் போன்ற பெண். ஆகையால் முன் காலத்தில் எங்களுக்கு ஒரு நன்மையைச் செய்திருக்கிறாள். சரவணப்பூம் பொய்கையில் முதல் முதலாக உன்னைக் காணும் பொருட்டு சிவபெருமான பார்வதியுடன் வந்தான். அம்மை உன்னைக் கண்டவுடன் அன்பு மிகுந்து ஆறு குழந்தைகளாக இருந்த உன்னை அப்படியே எடுத்து அணைத்தாள். தாமரைப் பூக்களில் தனித்தனிக் குழந்தையாக ஆறு உருவம் எடுத்து நீ விளையாடிக்கொண்டிருந்தாய். அந்தப் பெருமாட்டி சேர்த்து ஓர் உருவாக்கியதால் கந்தன் என்ற திருநாமத்தை நீ பெற்றாய். அப்போது ஆறு குழந்தைகளுக்கும் ஒன்றாகிய திரு உருவத்தில் நீ காட்சி அளித்தாய். அந்தக் கோலத்தில் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் அமைந்தன. எம்பெருமாட்டி முகம் ஆறினுக்கு ஏற்பக் கை ஆறிரண்டு செய்துத போலக் கால் ஆறிரண்டையும் அப்படியே வைக்கவில்லை. இரண்டு கால்களே இருக்கும்படி அருள் பாலித்தாள். இப்படிப் பார்வதிதேவி செய்ததற்குக் காரணம், நாங்கள் சிற்றில் இழைத்தால் பன்னிரண்டு கால்களும் துன்புறுத்தும் என்பதை எண்ணித்தான் இருக்கவேண்டும். உண்மையில் இப்போது இரண்டு கால்கள் இருந்துங்கூட அவை பண்ணுகின்ற குறும்பு பொறுக்க முடியாமல் இருக்கிறதே!” என்று அவர்கள் சொல்வதாக அந்தப் பெரும் புலவர் பாடியிருக்கிறார். “நையா நின்ற சிறுமருங்கும் நங்கை உமையாள் பரமனொடும் நறுநீர்ப் பொய்கைத் தடங்கரைவாய் நண்ணி முகமா றினுக்கேற்பக் கையா றிரண்டு செய்ததுபோல் காலா றிரண்டு புரியாமல் கருதி இரண்டே புரிந்தனன் முற் கடையேம் செய்த நல்வினையால் மெய்யா யிரண்டா யிருந்துமவை விளைக்கும் குறும்பு பொறுக்கரிதா விளைந்த தினியாம் செயலென்னே? வீதி தோறும் விடாதமர்ந்து செய்யாள் மகிழும் இடைக்கழிவாழ் செல்வா! சிற்றில் சிதையேலே சிந்திப்பவர் உள் ளூறமுதத் தெளிவே! சிற்றில் சிதையேலே!” இந்தப் பாட்டில் முருகப் பெருமானுக்கு ஆறுமுகங்களும் அந்த முகங்களுக்கு ஏற்பப் பன்னிரண்டு திருக்கரங்களும் இருந்தாலும், பெருக்கல் வாய்பாட்டு முறையில் பன்னிரண்டு கால்கள் அமையவில்லை. இரண்டு கால்களே உள்ளன என்ற கருத்து அமைந்திருக்கிறது. “முகமா றினுக்கேற்பக் கையா றிரண்டு செய்ததுபோல் காலா றிரண்டு புரியாமல் கருதி இரண்டே புரிந்தனன்.” இப்படித்தான், முகம் எப்படி இருந்தாலும், கைகள் எப்படி இருந்தாலும், இறைவனுடைய திருவுருவங்களில் கால்கள் எப்போதும் இரண்டாகவே அமைந்திருக்கின்றன. முகம் முதலியவற்றில் வேறுபாடு இருந்தாலும் திருத்தாள் தாமரை போல ஒரே மாதிரி இருக்கிறது. வள்ளுவர் கண்ட வழி இந்த உண்மையை வள்ளுவர் உணர்ந்தார். ‘நாம் கடவுளுடைய உருவத்தைப் பற்றிச் சொல்லவேண்டும். ஆனால் வேறுபாடுள்ள உருவங்களைச் சொல்லக்கூடாது. எல்லாவற்றுக்கும் பொதுவாக இருக்கும் பகுதியைச் சொன்னால் போதும்’ என்று எண்ணினார். அடியார்களுக்குப் புகல் இடமாக நிற்பது திருவடியே. திருவடியைச் சொன்னாலே ஆண்டவனின் உருவம் முழுவதையும் சொன்னதாக ஆகும். “கோள்இல் பொறியிற் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.” என்றார். அந்தத் திருவடியைச் சேர்ந்தவர்கள் பிறவிப் பெருங்கடலிலே நீந்துவர் என்றும் சொன்னார். அன்பர்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பவை ஆண்டவனுடைய திருவடிகள். எம்பெருமான் திருவருள் நெறியில் செல்பவரைத் தோளார், கையார் என்று சொல்லாமல் அடியார் என்று சொல்வதற்குக் காரணமே அவர்களுக்கு மற்றப் பகுதியைக் காட்டிலும் திருவடியில் நோக்கம் அதிகம் என்று காட்டுவதுதான். இறைவனுடைய பாதாம் புயத்தில் அடியார்களுடைய உள்ளமாகிய வண்டுகள் உலவும். அடியார்களுடைய உள்ளம் இறைவனுடைய திருவடியைப் பற்றிக்கொண்டால் அவர்களுக்கு வேண்டியன எல்லாம் கிடைக்கும். இந்த நுட்பத்தைத் தெரிந்து கொள்ளாமல் பலர் திண்டாடுகிறார்கள். இதனைப் பாரதத்தில் வருகின்ற வரலாறு ஒன்று தெரிவிக்கிறது. பாரத நிகழ்ச்சி பஞ்ச பாண்டவர்கள் காட்டு வாழக்கையை முடித்துக் கொண்டு ஓர் ஆண்டு தலைமறைவாக இருந்துவிட்டு வெளி வந்தார்கள். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு உரிய நாட்டை மீட்டும் தங்களுக்குக் கொடுக்கும்படியாகக் கேட்டு வரும்படி தரும்புத்திரர் ஒரு முனிவரைத் துரியோதனனிடம் தூது அனுப்பினார். அப்போது துரியோதனன் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. திருதராஷ்டிரன் அந்த முனிவரைப் பார்த்து, “என் பிள்ளைகள் பொல்லாதவர்கள். தருமன் நல்லவன் ஆயிற்றே! அவன் எங்கே வாழ்ந்தாலும் அதுதான் அஸ்தினாபுரம். இத்தனை ஆண்டுகளாக்க் காட்டில் வாழ்ந்துப் பழகினவர்களுக்கு, அங்கேயே இருப்பதில் துன்பம் ஒன்றம் இல்லை. எதற்காக மறுபடியும் இந்தப் பொல்லாத பிள்ளைகளோடு சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்?” என்று சொல்லி அனுப்பினான். அதனைக் கேட்ட தரும்புத்திரர், “பெரியப்பா சொல்வது நியாயந்தானே? நாம் உறவினர்களோடு சண்டை போட்டுக் கொண்டு அவர்களை அழித்துவிட்டு ஏன் நாட்டில் வாழவேண்டும்? காட்டில் வாழ்ந்தால் நல்லதுதான்” என்று கூறினார். கண்ணபிரான் அவருடைய பேச்சைக் கேட்டான். “நீ சொல்வது சரிதான். ஆனால் உன்னுடைய தம்பிமார்கள் என்ன சொல்வார்களோ? அன்று திரௌபதியின் துகிலைச் துச்சாதனன் உரிந்தபோது அவர்கள் ஒவ்வெரு வரும் ஒவ்வொரு சபதம் செய்திருக்கிறார்கள். அவைகள் எல்லாம் முற்றுப் பெறவேண்டும். திரௌபதி தன் கூந்தலை விரித்துக்கொண்டு நிற்கிறாள். அந்தக் கூந்தலை அவள் முடித்துக்கொள்ள வேண்டும். இவற்றைச் செய்யாமல் நீங்கள் மீண்டும் காட்டுக்குப் போய்விட்டால் உலகத்தில் உள்ளவர்கள் ஏசமாட்டார்களா?” என்று கேட்டான். தருமபுத்திரர் யோசித்து, “அப்படியானால் நீ ஒரு முறை தூது போய்விட்டுவா. அவர்கள் பாதி நாடு தரட்டும். இல்லாவிட்டால் ஐந்து ஊர் தரட்டும். அவையும் இல்லா விட்டால் ஐந்து வீடுகள் தரட்டும். ஒன்றும் இல்லை என்று மறுத்தால் போர் செய்வோம் என்று சொல்லிவிட்டு வா” என்றார். கண்ணன் தருமபுத்திரனுடைய தம்பிகளின் கருத்தைக் கேட்கத் தொடங்கினான். வீமனைக் கோட்டபோது அவன் மிகவும் சினந்து, “என்னைத் தூது அனுப்புங்கள். எல்லோரையும் என் கதைக்கு இரையாக்கி வருகிறேன்.” என்று கோபத்தோடு சொன்னான். அருச்சுனனும் மிக்க வீறுடன் பேசினான். நகுலனும் சினந்து அப்படியே சொன்னான். பிறகு சகாதேவனிடம் வந்து, “உன் கருத்து என்ன அப்பா” என்று கேட்டான் கண்ணன். சகாதேவன் கூற்று. சகாதேவன் சிறந்த ஆத்ம ஞானி. மற்றவர்கள் , “நம்முடைய ராஜ்யம்; அவர்களுடைய ராஜ்யம்” என்று வேறுபடுத்திப் பார்க்கின்ற அறிவும், அதனால் கோபமும், பகையும் கொண்டிருந்தார்கள். சகாதேவன் சத்தியத்தை உணர்ந்தவன்; அவன் சொன்னான், “கோபாலா, இனி என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாதா? உன் எண்ணம் எதுவோ அதுதான் என்னுடைய எண்ணம்” என்று சொன்னான். இதைக் கேட்ட கண்ணன், “எல்லாரையும் போல இவன் பேசவில்லையே! இவனிடம் ஏதோ நுட்பமான கருத்து இருக்கிறது. அதை இரகசியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்” என்று எண்ணி அவனைத் தனியே அழைத்துச் சென்றான். சென்று அவன் கருத்தைக் கேட்டபோது, “கண்ணா, உன்னுடைய கருத்து எனக்குத் தெரியும். துரியோதனனுக்கு வெற்றி வருவதோ, பாண்டவர்களுக்கு வெற்றிவருவதோ உன்னுடைய நோக்கம் அன்று. பல காலத்திற்கு முன்னாலேயே நிலமகள் உன்னிடம் வந்து அழுதாள். சுமை தாங்கவில்லை என்று அவள் முறையிட்டதைக் கேட்டு நீ பூபாரம் தீர்க்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறாய். அந்த உண்மை எனக்குத் தெரியும்” என்றான். “நீபா ரதஅமரில் யாவரையும் நீறாக்கிப் பூபாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா!” இதனைக் கண்ணன் கேட்டவுடன், “பாரதப்போர் வராமல் ஏதாவது வழி இருந்தால் சொல்” என்று கேட்டான். அதற்குச் சகாதேவன் சொன்னான்: “பாராளக் கன்னன்இகற் பார்த்தனைமுன் கொன்றணங்கின் காரார் குழல்களைந்து காலில் தனைபூட்டி நேராகக் கைப்பிடித்து நின்னையும்யான் கட்டுவனேல் வாராமல் காக்கலாம் மாபா ரதமென்றான். “துரியோதனனோ, தருமனோ அரசாள்வது என்று இல்லாமல் கர்ணன் அரசாள வேண்டும். அதற்கு முன்பு, அவன் அருச்சுனனைக் கொல்லவேண்டும். திரௌபதியின் கூந்தலை முடிப்பதா, விரிப்பதா என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் அவளது குழலைக் களையவேண்டும். பின்பு நான் உன்னைக் கட்டவேண்டும். இவை நடைபெற்றால் பாரதப்போர் வராமல் காக்கலாம்” என்றான். இப்படி வேறு யாராவது சொல்லி இருந்தால், நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறானே என்று தோன்றும். தமையன், மனைவி என்ற பற்றுக்களை விட்ட ஞானி சகாதேவன் ஒருவனால்தான் இப்படிப் பேசமுடியும். அவனுடைய உயர்ந்த நிலையைக் கண்ணபிரான் தெரிந்து கொண்டுதானே அவனைத் தனியே அழைத்துக் கேட்டான்? சகாதேவன் சொன்னதைக் கேட்ட கண்ணன் சிரித்துக் கொண்டான். “சரி நீ சொன்னது எல்லாம் சரி. ஒருகால் முன் சொன்ன எல்லாம் நடந்தாலும் நடக்கலாம். என்னை நீ எப்படிக் கட்டுவாய்?” என்று கேட்டான். சகாதேவன் உடனே விடை சொன்னான். “மற்ற எல்லாம் தெரிந்து கொண்ட மாதிரி உன்னை நீ தெரிந்து கொள்ளவில்லையே, கண்ணா! யசோதையால் உன்னைக் கட்டமுடியாமல் போயிற்று என்பதை யோசித்து இப்படிப் பேசுகின்றாய் போலும்! நீ கண்ணனாக எழுந்தருளி இருக்கும் இந்த உருவம் மாத்திரம் அன்று. உன்னுடைய இயல்பான உருவத்தையும் எனக்குக் காட்டு. நான் கட்டிவிடுகிறேன்” என்றான். கண்ணன் சகாதேவனுடைய மனவலிமையைத் தெரிந்து கொள்ளும் பொருட்டுப் பல பல வடிவங்களைக் கொண்டு நின்றான். “மாயவனும் அன்பன் மனமறிவான் கட்டுகஎன் றாய வடிவுபதி னாறா யிரங்கொண்டான்.” கண்ணபிரான் பல பல உருவங்களிலும் தோற்றம் அளித்தான். சகாதேவன் அந்த வடிவங்களை எல்லாம் கண்டு, “நாம் தெரியாமல் சொல்லிவிட்டோமே! எப்படிக் கட்டுவது?” என்று மயங்கவில்லை. சகாதேவன் செயல் ஆலமரம் நெடுந்தூரம் தழைத்துப் பரவிக் கிளை விட்டிருந்தாலும் அதன் அடிமரத்தில் கோடரியால் போட்டால் மரமே பட்டுவிடும். அப்படி அத்தனை உருவங்களுக்கும் மூலமாக உள்ள தோற்றம் எது என்பதைச் சகாதேவன் நன்கு உணர்ந்தவன். அதுமாத்திரம் அன்று; எங்கே கட்டவேண்டுமென்பதையும் தெரிந்துவைத்திருந்தான். மூலமாகிய தோற்றத்தை உள்ளத்தில் வைத்து அந்தப் பெருமானுடைய திருவடிகளைத் தன்னுடைய கருத்தினால் பிணைத்து விட்டான். “தூயவனும் மூலமாம் தோற்றமுணர்ந் தெவ்வுலகும் தாய அடியிணைகள் தன்கருத்தி னாற்பிணித்தான்.” இப்போது கண்ணன் கட்டுண்டு கிடந்தான். மற்றப் பெரியவர்களுடைய தந்திரத்தினாலே கட்டுப் படாத ஆண்டவன், யசோதை கட்டிய கயிற்றுக்கு அகப்படாத ஆயன், வேதங்களினாலும் சாஸ்திரங்களினாலும் காணமுடியாத கண்ணன், இப்போது மிக எளிதில் சகாதேவனால் கட்டுண்டான். கண்ணனுக்கே வியப்பு உண்டாகிவிட்டது. நெடுநாள் காணமுடியாமல் கண்ட ஒருவர் தம்முடைய அன்பனை இறுக்கிப் பிணிந்து அணைத்துக் கொண்டால் அந்த அணைப்பு ஒரு வகையில் இன்பமாக இருக்கும்; மற்றொரு வகையில் மூச்சுத் திணற அடிக்கும். இந்த நிலையில் கண்ணபிரான் இருந்தான். “சகாதேவா, என்னை அன்பினாலே நன்கு அறிந்து எப்படிக் கட்டவேண்டுமென்ற உண்மையைத் தெரிந்து என்னுடைய காலைக் கட்டி விட்டாயே! நீ கட்டினது மிகவும் நல்லது. நீ நல்லவன். நான் இப்போது அஸ்தினாபுரத்திற்குத் தூது போக வேண்டும். கட்டின காலை விடு அப்பா” என்று கெஞ்சினான். “அன்பாலின் றென்னை அறிந்தே பிணித்தமைநன்று என்பாதந் தன்னை இனிவிடுக என்று உரைப்ப.” அவன் பெற்ற வரம் சகாதேவன் மிகச் சிறந்த தந்திரசாலி. கையிலே அகப்பட்டுக்கொண்ட பொருளைப் பயன்படுத்தாமல் விடுவானா? “கண்ணா, இப்போது நீ எனக்கு ஒரு வரம் தர வேண்டும். பாரதப் போரில் எல்லோரையும் அழித்துப் பூபாரம் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். இப்போது நான் கேட்கும் வரம் ஒன்று உண்டு. உன் திருவுள்ளக் கருத்தில் சற்றே நெகிழ்ச்சி கொள்ள வேண்டும். உன்னையே சரண் அடைந்திருக்கிற எங்கள் ஐந்து பேரை மாத்திரம் உன்னுடைய கடைக்கண்ணால் காப்பாற்றி அருளவேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். “வன்பா ரதப்போரில் வந்தடைந்தோம் ஐவரையும் நின்பார்வை யால்காக்க வேண்டும் நெடுமாலே!” யாருக்கும் கட்டுப்படாத கண்ணபிரானை உள்ளத்தில் தோன்றிய மெய்யன்பினாலே பிணைத்து அவன் திருவடியைக் கட்டி, அந்தச் சமயத்தில் வரம் கேட்டு வாங்கிக் கொண்டான் சகாதேவன். பின்னால் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பதினெட்டு நாள் பெரிய போர் நடந்தது. மிகக் கடுமையாக நடந்த அந்தப் போரில் ஒவ்வொருவருடைய வீரமும் வெளியாயிற்று. போர் நடந்து அதில் அருச்சுனன் முதலியவர்கள் தம்முடைய வீரத்தை வெளிப்படுத்த, அதனால் பஞ்சபாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்றுதான் பாரதத்தைப் படிக்கையில் தோன்றுகிறது. ஆனால் அந்தப் போர் நடப்பதற்கு முன்னாலேயே பாரதப் போரின் முடிவு ஒரு சிறிய அறையில் தீர்மானம் ஆயிற்று. கண்ணபிரானுடைய இரண்டு திருவடிகளைத் தன் கருத்தினால் பிணைத்த சகாதேவன் அந்தப் பெருமானிடம் கேட்டுக்கொண்ட வரந்தான் பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களுக்கு வெற்றியை வாங்கித் தந்தது. அவன் அப்போது விண்ணப்பித்த விண்ணப்பமே பிறகு போர்க்களத்தில் அருச்சுனனின் காண்டீபத்திற்கும், தருமனின் அறத்திற்கும் வலிமை தந்தது. திரைக்கு மறைவில் பச்சைப் பசுங்கொண்டலைச் சகாதேவன் பிணித்து அவன் திருவடியைப் பற்றிக் கொண்டு அன்பின் வலிமையைக் காட்டிய செயல்தான் அந்த வெற்றிக்கு மூலம். தூயவனாகிய சகாதேவனுக்குத்தான் அந்தப் பெருமானுடைய மூலம் எங்கே இருக்கிறதென்று தெரிந்தது. எத்தனை ஆயிரம் திருவுருவங்கள் எடுத்தாலும் அவை எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பன இரண்டு திருவடிகள் என்பதை ஞானியும், அன்பனுமான சகாதேவன் நன்கு உணர்ந்து தன் கருத்தைச் செலுத்திக் கட்டினான். புத்தியை வாங்கி இறைவனுடைய பாதாம் புயத்தில் புகட்டி அன்பால் கட்டும் ஆற்றல் சகாதேவனைப் போன்ற பெரியவர்களுக்கு உண்டு. வள்ளுவர்க்கும் உடன்பாடு. ஆகவே கடவுள் பல பல உருவங்களில் இருந்தாலும் அந்த உருவங்களில் பல பல வேறுபாடுகள் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மூலமாகவும், பொதுவாகவும் இருப்பவை அவனுடைய திருவடி மலர்கள். அதனால் மற்றவற்றைச் சொல்லாமல் திருவள்ளுவரைப் போல இந்தப் பாட்டில் அருணகிரியார், “பாதாம்புயத்தில் புகட்டி” என்று சொன்னார். திருவள்ளுவர் அடியைச் சொன்னதனால் அவருக்கு உருவம் உடம்பாடு என்று தெரிகிறது. திரைக்குப்பின் இரண்டு அடிகள் தெரிகின்றன என்றால் முன்னால் இருப்பவர்களுக்கு அந்த அடிகளைக் கண்ட மாத்திரத்தில் யாரோ உள்ளே இருக்கிறார் என்பது தெரியும். மற்ற அங்கங்கள் தெரியவில்லையே என்று சந்தேகப்படமாட்டார்கள் அப்படியே திருவள்ளுவர் தம்முடைய கடவுள் வாழ்த்தில் இறைவனுடைய இரண்டு அடிகளைச் சொன்னாலும் மற்ற உறுப்புகளுக்கும் உண்டென்பது அவருக்கு உடம்பாடு என்று தெரிந்திகொள்ள வேண்டும். மனம் தூங்கும் இடம் மனம் இப்போது உலகத்தில் ஈடுபட்டுக் கிடக்கிறது. துன்பத்திற்குக் காரணமாகிய சிற்றின்பத்தைத் தரும் பொருள்களில் தூங்கி அவற்றில் கிடைக்கும் துளித்துளி இன்பத்தைப் பெற்று அதில் மயங்கி மீட்டும் பிறவிக்கு ஆதாரமாகிய செயல்களைச் செய்ய முயல்கிறது. அப்படியின்றி இறைவனுடைய திருவடித் தாமரையில் புகுந்து அங்கே தூங்கவேண்டும். அப்போது அதற்கு வேலை இல்லாமல் போய்விடும். நிறைந்த தேனை உண்ட வண்டு அந்தச் சுவையினால் மயங்கிப் போய், பறப்பதும் ஊதுவதும் இல்லாமல், அப்படியே தூங்குவது போல, மனம் இறைவனுடைய பாதாம்புயத்தில் தூங்கவேண்டும். அப்படித் தூங்கினால் செயல் மாண்டு அடங்கிவிடும். செயல் மாண்டு அடங்குவதில் உண்டாகிற இன்பம் பேரின்பம். அதுதான் முத்தி. புத்தியை வாங்கிநின் பாதாம்புயத்தில் புகட்டி அன்பாய் முத்தியை வாங்க அறிகின்றிலேன். இறைவனுடைய திருவடிகளைப் பாதாம்புயம் என்று சொன்னமையினால் அதன்கண்ணே புகுத்தும் புத்தியை வண்டு என்று கொள்ளவேண்டும். இப்படிக் கொள்வதை ஏகதேச உருவகம் என்று இலக்கணத்தில் சொல்வார்கள். புத்தியாகிய வண்டை முருகனுடைய பாதமாகிய தாமரையில் புகும்படி செய்ய வேண்டுமென்பதே அருணகிரிநாதருடைய கருத்து. 3. முத்தி நிலை முத்தி அல்லது மோட்சம் என்பது சீட்டு வாங்கிக் கொண்டு பிரயாணம் செய்கிற இடம் என்று நினைக்கக் கூடாது. அது ஒருவகைநிலை. மாயாவிநோத மனோ துக்க வாழ்வில் சிக்கித் திணறும் மனிதன் அஞ்ஞானத்தின் விளைவாகிய செயல்களை விடுத்து, ஞான நெறியில் நிற்கவேண்டும். அந்த நெறியில் நன்றாக நடந்து சென்று இந்திரியங்களை அடக்க வேண்டும். இந்திரியங்களுக்குத் தான் அடிமையாகிவிடாமல் அவற்றைத் தனக்கு அடிமையாகக் கொண்டு ஒருமுகப்பட்டு நிற்கவேண்டும். இன்ப துன்பங்கள் என்ற வேறுபாடின்றி, மேடுபள்ளம் என்ற வேற்றுமை அல்லாத நிலையை அடையவேண்டும். அத்தகைய நிலையில் அவன் நின்றால், பசை யாவும் அற்று நின்றால், அப்போதே அவனுக்கு முத்தி சித்திக்கும். அந்த இடத்தில் வீடு கிடைக்கும். அந்த நிலையை, “நன்றாய் ஞானம் கடந்துபோய் நல்லிந் திரிய மெல்லாமீர்த்து ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பில் அதனை உணர்ந்துணர்ந்து சென்றாங் கின்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால் அன்றே அப்போ தேவீடு; அதுவே வீடு வீடாமே” என்று நம்மாழ்வார் சொல்கிறார். “அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்றும் சொல்கிறார். முத்தி என்பது ஒரு நிலையேயொழிய இடவகை அன்று. மனம் அழுக்கெல்லாம் போய்த் தானே முதலில் தூயதாகி அப்பால் தானே அழிகின்ற சமயத்தில் கிடைக்கின்ற இன்பநிலையே முத்தி. இந்தப் பாட்டில், ஒரு பொருளைக் கொடுத்துவிட்டு ஒரு பொருளை வாங்கவேண்டுமென்று சொல்வது போல அருணகிரியார் முருகனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார். ‘இன்ன கடையில் இவ்வளவு பணத்தைக் கொடுத்து விட்டு இன்ன சரக்கை வாங்கிக்கொள்ளும் சக்தி எனக்கு இல்லையே!’ என்று கூறுவது போலச் சொல்லியிருக்கிறார். அன்பும் அறிவும் “உன்னுடைய பாதாம்புயத்திற்கு என்னுடைய மனத்தை அனுப்பி அங்கே அன்பைக் கொடுத்து முத்தி என்ற பொருளை வாங்குவதற்கு நான் தெரிந்துகொள்ளவில்லையே!” என்பது அவர் கூறுவது. அன்பினால்தான் இறைவனுடைய திருவருளை வாங்கிக்கொள்ளலாம். “அருள் என்னும் அன்பீன் குழவி” என உலக இயலை நினைந்து வள்ளுவர் சொல்கிறார். இறைவனுடைய அருளைப் பெறுவதற்கும் அது பொருந்தும். நம்மிடத்தில் அன்பு உண்டானால் இறைவன் நமக்கு அருளைப் பாலிப்பான். நம் அறிவு வெறும் அறிவாக நில்லாமல் அன்பு மயமாக மாறவேண்டும். அதனை எண்ணியே புத்தி இறைவனுடைய திருவடியைச் சார்ந்து அன்பு மயமாக வேண்டுமென்று இந்தப் பாட்டில் சொல்கிறார். புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்தில் புகட்டி அன்பாய் முத்தியை வாங்க அறிகின்றிலேன். வெறும் அறிவினாலே இன்பத்தைப் பெற இயலாது. அதற்கு எல்லை உண்டு. இறைவனுடைய திருவடி ஒன்றுதான் நமக்குப் புகல் இடம் என்று அறிவினால் தெரிந்து, அதனைச் சார்ந்து பின்பு அங்கே ஒட்டிக்கொள்ள வேண்டும். சாரும் மட்டும் அறிவுக்கு வேலை உண்டு. ஒட்டிக்கொள்வதற்கு அன்பினால்தான் முடியும். இப்போது நம்முடைய அறிவு உலகிலுள்ள பொருள்களை ஆராய்ந்து அவற்றைச் சிறந்தனவாகக் கருதுகின்றது; பின்பு அவற்றோடு ஒட்டிக்கொள்கிறது. இது பற்றிய அறிவும் பற்றும் மேன்மேலும் பிறவியை எடுப்பதற்குக் காரணம் ஆகின்றன. அப்படியின்றி அந்த அறிவு வேறு எங்கெங்கோ போகும் போக்கை மாற்றி அதனை நம்முடைய கையில் வாங்கிக்கொண்டு இறைவனுடைய பாதாரவிந்தத்திலே செலுத்த வேண்டும். வேலின் பெருமை “நான் புத்தியை அது போகும் போக்கிலிருந்தும் இழுத்து வாங்குவதற்குரிய வழியைத் தெரிந்து கொள்ளாமல் திண்டாடுகிறேன். தவறான காரியத்தைச் செய்கிறேன். இதனை மாற்றவேண்டும். என்னால் மாற்ற முடியவில்லை. என்னைத் தண்டித்து ஆட்கொள்ள மாட்டாயா?” என்று முறையிடத் தொடங்கினார் அருணகிரிநாதர். “தண்டிப்பதற்குரிய அருமையான வேல் உன் திருக்கரத்தில் இருக்கிறதே! அதைக் கொண்டு தண்டித்து என்னைத் திருத்த வேண்டும்” என்று முதலில் சொல்ல எண்ணினார். ஆனால் பிறகு அப்படிச் சொல்வது தவறு என்று தோன்றியது. “உன்னுடைய வேல் மிகப் பெரிய தடையை நீக்குவதற்கு வேண்டும். அதைப் பிரயோகம் பண்ணுவதற்கு ஏற்ற தகுதி மிகப் பெரிய அசுரர்களுக்குத்தான் உண்டு. என் புத்தியைத் திருத்துவதென்று நீ நினைத்தால் மிக எளிதில் ஆகிவிடும். இதற்கு உன்னுடைய வேலைப் பிரயோகம் செய்யவேண்டுமென்று கேட்பது தகுதியன்று. மிக்க பழைய சூரன் நடுங்கும்படியாக நீ வைத்திருக்கும் அந்த வேலை வாங்குவதற்கு என் புத்தி தகுதி உடையதா?” என்று கேட்கிறார். முது சூர் நடுங்க அச் சத்தியை வாங்கத் தரமோ? “என் புத்தியை வசப்படுத்தி உன் பாத தாமரையிலே புகட்டி அன்பாய் முத்தியை வாங்கத் தெரியாத என் நிலையை மாற்றி ஒறுத்து ஆட்கொள்வதற்காக, உன் கையிலுள்ள சத்தியாகிய வேலை விடு அப்பா என்று நான் சொல்வேன். நீயும் என்னுடைய விண்ணப்பத்திற்காக வேலை விடுக்கத் தயங்கமாட்டாய். ஆனால் அது நியாயமான காரியம் ஆகுமா? சிறு முள்ளால் களைவதைக் கோடாரியைக் கொண்டு களைவது முறையாகாது. அதனால் எனக்கு நன்மை உண்டானாலும் வேலுக்குப் பெருமை குறைந்துவிடும். அது சாமானிய வேலாயுதமா? அதன் பெயரைக் கேட்டாலே சூரபன்மன் நடுங்கினான். அதனுடையபெருமையைக் கந்த புராணம் முதலிய நூல்கள் எவ்வளவு சிறப்பாகக் கூறுகின்றன! அத்தகைய பெரிய படையை எனக்கு உதவியாக விடவேன்டுமென்று கேட்பது முறை அன்று” என்கிறார். அவன் திருவுள்ளம். ஆனால் திருந்த வேண்டுமே; என்ன செய்வது? மலை தவிடு படும்படியாகத் குத்தியவன் முருகன்; சூரனைக் குத்தவும் கிரௌஞ்ச மலையைக் குத்தவும் பயன்படுத்திய வேலை உடையவன்; அதற்கு இப்போது வேலை வைக்கக் கூடாது. பின்னே என்ன செய்வது என்ற எண்ணம் அருணகிரிநாதருக்குத் தோன்றியது. “எம்பெருமான் என்னை ஆட்கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. திருந்த வேண்டும் என்று எனக்கு உள்ள ஆவலைக் காட்டிலும் அவனுக்குள்ள ஆவல் மிகுதியானது. என்னைத் திருத்து என்று நான் விண்ணப்பித்துக் கொண்டாலே போதும். இப்படித் திருத்து என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி எனக்கு இன்ன மருந்து கொடு என்று கேட்பது நியாயம் ஆகாது. இவனுக்கு இன்ன மருந்து கொடுக்கவேண்டுமென்பது மருத்துவனுக்குத் தெரியும். அது போல் ஆண்டவன் என்னைத் திருத்துவதற்கு ஒரு வழி வைத்திருப்பான். அதை அவனுடைய திருவுள்ளத்திற்கு விட்டுவிட வேண்டும்’ என்ற நினைவு பிறகு வந்தது.”முருகா என்னைத் திருத்துவதற்கு என்ன வழி நீ நினைத்திருக்கிறாய்?" என்று கேட்கிறார். குவடு தவிடுபடக் குத்திய காங்கேயனே! வினையேற்கு என் குறித்தனையே? இறைவனிடம் இன்னது வேண்டுமென்று அறிவிக்கும் இயல்பு பக்தர்களுக்கு இல்லை. “எனக்கு இன்னது வேண்டுமென்பது உனக்கே தெரியும்” நீ என்ன செய்கிறாயோ அதுவே எனக்கு இன்பம்" என்பது அவர்களது மனோபாவம். “வேண்டத் தக்கது அறிவாய் நீ” என்று மணிவாசகப் பெருமான் பேசுகின்றார். ‘கேளாமல் கொடுக்கின்ற பெரும் கொடையாளன் முருகன். அத்தகைய பெருமானிடம் நீ இது செய் என்று நான் சொல்வது மிகை. அவனுடைய திருவுள்ளம் ஏதோ?’ என்று அருணகிரிநாதர் எண்ணுகிறார். “முருகா, நீ மலை தவிடு படும்படிக் குத்திய பெரிய வீரன். கங்கையின் மகன். அடியார்களை இன்னபடி ஆட்கொள்ளவேண்டும் என்று நீ திருவுள்ளத்தில் கொண்டிருப்பாய். அந்த வகையில் அடியேனுக்கும் ஒரு வழி வைத்திருப்பாய். உன் திருவுள்ளம் யாதென்று அறியேன். நீ என்ன எண்ணி இருக்கிறாய்? நான் என்னுடைய முயற்சியினால் நன்மை பெறவேண்டுமென்பது தெரியாமல் அலைகிறேன். என்னுடைய அறிவை அது போகிற போக்கில் விடாமல் மாற்றி, உன்னுடைய திருவடி மலரில் புகுத்தி அன்பு மயமாக்கி அதனால் முத்தியைப் பெறுவதற்கு உரிய வழியை நான் தெரிந்துகொள்ளவில்லை. நான் செய்கிற பிழைக்குத் தண்டனையாக உன்னுடைய வேலை நீ பிரயோகம் பண்ணவேண்டுமென்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் அது முறை அன்று. பழைய சூரன் நடுங்கும்படியாக விட்ட வேல் அது. அத்தகைய வேலுக்குத் தக்க இலக்கு அன்று இது. அதனை வாங்க இது தகுதி ஆகுமா? உன் திருவுள்ளம் யாதோ அதன்படி நடக்கட்டும்” என்று அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் விண்ணப்பித்துக் கொள்கிறார். ~ ~ ~ புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்தில் புகட்டி அன்பாய் முத்தியை வாங்க அறிகின்றி லேன்; முது சூர்நடுங்கச் சத்தியை வாங்கத் தரமோ? குவடு தவிடுபடக் குத்திய காங்கேய னே!வினை யேற்கென் குறித்தனையே? (கிரௌஞ்சமலை தவிடு போலப் பொடியாகும்படி வேலால் தூளைத்த காங்கேயனே! என் புத்தியை அது போகும் போக்கில் விடாமல் மாற்றி உன்னுடைய திருவடிகளாகிய தாமரையிலே செலுத்தி அன்புமயமாகிய முத்தியை உன்னிடமிருந்து பெற நான் அறிகிலேன். பழைய சூரன் நடுங்குவதற்குக் காரணமான அந்த வேற்படையை நீ விடுவத்ற்கு என் புத்தி தகுதி உடையதோ? பாவம் உள்ளவனாகிய என்னைத் திருத்த நீ என்ன வழியைத் திருவுள்ளத்தில் கொண்டிருக்கிறாய்? வாங்குதல்~கைப்பற்றுதல்: போக்கை மாற்றி வளைத்தல். பாதாம்புயம் என்றதனால் புத்தியை வண்டாகக் கொள்ள வேண்டும். அன்பாய்~அன்பு மயமாகி. பழைய காலத்தில் இருந்தவனாதலின் முது சூர் என்றார். நடுங்கு அச்சத்தியை என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும் சக்தி~வேல். வாங்க~விட; பிரயோகச் செய்ய. தரமோ~ புத்தி தகுதியுடையதா? குவடு ~ மலை; இங்கே கிரௌஞ்சகிரி. காங்கேயன் ~ கங்கையின் மகன்; முருகனைக் கங்கை தாங்கி வந்தமையின் இப்பெயர் உண்டாயிற்று; “ஆயிர முகத்துந்தி பாலனும்” என்பது திருவகுப்பு. வினை என்பது இரண்டு வினைகளையும் குறித்ததாயினும் இங்கே வினையேன் என்றது பாவி என்றபடி. வினையேற்கு ~ பாவியாகிய எனக்கு; என்னைத் திருத்துவதற்கு என்பது பொருள். என்~என்ன தந்திரத்தை. குறித்தனை – திருவுள்ளத்தில் கொண்டாய்.) ~~ தொண்டர் பெருமை 1. வேலாயுதத்தால் சூரனையும்,கிரௌஞ்சமாகிய குவட்டையும் முருகன் குத்திய திருவிளையாடல் அருணகிரி நாதருக்கு மீண்டும் நினைவு வருகிறது. சென்ற பாட்டில் அந்த விளையாட்டை நினைந்தவர் அடுத்த பாட்டிலும் அதனைப் பாடுகிறார். “சூரனையும் கிரௌஞ்ச மலையையும் வேலினால் அழித்த முருகப்பெருமானுடைய தொண்டர்களைச் சார்ந்தால்தான் நமக்கு கதி உண்டு* என்ற கருத்தை வைத்துப்பாடுகிறார். தம்முடைய நெஞ்சைப் பார்த்து,”பாவி நெடு நெஞ்சமே!" என்று விளிக்கிறார். அவர் சொன்னதை நாம் ஒவ்வொருவரும் சொல்லி நம்முடைய நெஞ்சுக்கு அறிவுறுத்தவேண்டும். செல்வமும் வாழ்வும்; மனிதன் எல்லாப் பொருளையும் மதிப்பது இல்லை. பெரும்பாலான மக்கள் மதிப்பது பொருட்செல்வம் ஒன்றைத்தான். ஆனால்,இறைவனுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவன் திருவருளுக்காக ஏங்கி நிற்பவர்கள் மதிப்பதோ அருட்செல்வம். நாம் நம்முடைய புறக் கண்ணைக் கொண்டு பார்த்து, அந்தக் காட்சியை மதிக்கிறவர்கள். இந்தக் கண் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கித்தான் பார்க்கும். காலத்திற்கும் இடத்திற்கும் கட்டுப்பட்டிருக்கும் நாம் அந்த எல்லைக்குள் அடங்கினவற்றையே பார்க்க முடியும். இப்போது சோறு வேண்டும்; நாளைக்குச் சோற்றுக்குப் பணம் வேண்டும்; என்று நம்மால் நினைக்கமுடிகிறது. நாள்தோறும் சோறு உண்டு நல்ல வீட்டில் வாழ்ந்து ஆடை அணிகளைப் புனைந்து கருவிப் பொருள்களைப்பெற்று வாழ வேண்டுமென்று நினைக்கிறோம். தொடர்ந்து வாழ்க்கை நடைபெறுவதற்குப் பயன்படும் கருவியாவது பொருள் என்று நமக்குத் தெரிகிறது. அதனால்பணத்தைச் சேமித்து வைக்கிறோம். பணம்படைத்த செல்வர்கள் ஒவ்வொரு வேளைக்கும் சூடாகச் சோற்றை உண்ணுகிறார்கள். முதல்நாள் ஆக்கிய சோற்றை நீரில் போட்டு வைத்திருந்து மறுநாளும் உண்பவர்கள் வறியவர்கள். அவர்களும் அந்தச் சோற்றை இரண்டு மூன்று நாளைக்கு வைத்துக் கொள்ள முடியுமேயொழிய நெடுநாள் வைத்திருக்க முடியாது.அப்படி வைத்திருந்தால் சோறு வீணாகிவிடும். ஆகவே அவர்கள் பல நாளைக்குப் பயன்படும் அரிசியை வாங்க வேண்டியிருக்கிறது. பிச்சைக்காரனோ ஒவ்வொரு நாளைக்கும் பிச்சைச்சோறு வாங்கி உண்கிறான். அவனை விட ஒரு வேளை சோறாக்கி அதனை மூன்று வேளைக்குச் சாப்பிடுகிறவன் பணக்காரன். ஒவ்வொரு வேளையும் சூடாகச் சோறாக்கி உண்ணுகிறவன் அவனையும் விடப் பணக்காரன். அந்த அந்த வேளைக்குச் சில்லறையாக அரிசி வாங்குபவனைவிட ஒரு மாசத்திற்கு மொத்தமாக மூட்டை அரிசி வாங்கிச் சாப்பிடுகிறவன் இன்னும் பணக்காரன். அதுபோலவே ஆண்டுக்கு வேண்டிய அரிசிக்கு நெல்லாகக் குதிரில் கொட்டி வைக்கிறவன் பெரிய பணக்காரன். நெல்கூடச் சில ஆண்டுகளுக்கே இருக்கும். பல காலத்திற்கும் நெல் விளைந்து பயன்படும் என்று நிலமாக வாங்கிப் போட்டிருப்பவன் எல்லோரையும்விடப் பணக்காரன். அன்றன்று உண்ண வேண்டிய சோற்றுக்கு நெல் அவசியம். ஆதலினால் அந்த நெல்லை விளைக்கின்ற நிலத்தையே பழைய காலத்தில் மக்கள் வாங்கிச் சேர்த்தார்கள். இந்த நாட்டில் பெரிய பணக்காரன் என்று பரந்த நிலத்தை உடையவனுக்குத்தான் பெயராக இருந்தது. நிலங்களைச் சேர்க்க வேண்டுமென்று நினைப்பது மண்ணாசை. அரசர்கள் தம்முடைய நாட்டைப் பெருக்க வேண்டுமென்று நினைப்பதும் மண்ணாசைதான். இந்தக் காலத்தில் அரசர்களுக்கு மாத்திரம் மண்ணாசை இருக்கிறது. மற்றவர்களுக்கு மண்ணில் அத்தனை ஆசை இல்லை. பணமாகச் சேர்த்துப் பாங்கியில் போடவேண்டுமென்ற நிலை இப்போது வந்திருக்கிறது. ஒரு வேளை சோறு உண்டவனுடைய முயற்சி நீளுமானால் மறு வேளைக்குச் சோறு கிடைக்கிறது. அந்த முயற்சி பின்னும் நீளுமாயின் மாதம் முழுவதும் தட்டு இல்லாமல் சோறு உண்ணும் வசதி கிடைக்கிறது. மனிதனுடைய முயற்சிக்கு ஏற்ற செல்வம் உண்டாகிறது. செல்வம் அதிகமாக இருந்தால் பல காலத்திற்கு நன்றாக வாழலாம் என்ற எண்ணத்தினால்தான் மனிதன் பணத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறான். உலகத்தில் நன்றாக வாழ்கிறவர்கள் என்று பணம் படைத்தவர்களைச் சொல்கிறார்கள். பணம் இல்லாதவர்களை வாழத் தெரியாதவர்கள் என்று சொல்கிறார்கள். கல்வியும் செல்வமும் பணம், கல்வி ஆகிய இரண்டிலும் கல்வியைச் சிறந்ததாகப் பெரியவர்களும் அறிவாளிகளும் சொல்கிறார்கள். ஆனாலும் உலகத்தில் பெரும்பாலான மக்களுக்குப் பணத்தினிடமே மதிப்பு உண்டாகிறது. கல்வி பெரியது என்று வாயால் சொல்வார்களே யொழியச் சரியான சந்தர்ப்பத்தில் அதற்கு மதிப்புக் கொடுக்காமல் செல்வத்திற்கே மதிப்புக் கொடுப்பார்கள். “பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே” என்ற பழமொழி பணத்திற்கு இருக்கும் மதிப்பை விளக்குகிறது. ஒரு பெரிய விருந்து நடக்கிறது. நூல் ஆயிரம் படித்த பெரியவன் ஒருவன் அந்த விருந்துக்குப் போகிறான். ஒன்றுமே படிக்காத அறிவிலி ஒருவன் வருகிறான். புலவன் சிறிய மேல் துண்டும் சாதாரண வேட்டியும் அணிந்து கொண்டு நடந்து வந்து உள்ளே நுழைகிறான். அவன் ஏழை. ஆனால் அறிவிலியாக இருப்பவன் பணம் படைத்தவன்; நல்ல ஆடை அணிகளைப் புனைந்து கொண்டு காரில் போய் இறங்குகிறான். விருந்துக்கு வருகிறவர்களை வரவேற்பதற்காக அங்கே நிற்பவர்கள் யாருக்கு அதிகமாக வரவேற்பு அளிப்பார்கள்? ‘எல்லாம் படித்த புலவனாயிற்றே; ஒழுக்கத்தில் சிறந்தவன் ஆயிற்றே’ என்று எண்ணி நல்ல மேலாடை இல்லா விட்டாலும், புலவனுக்கு மரியாதை செய்வார்களா? அப்படி இன்னும் இந்த உலகம் வளரவில்லை. கார் வந்து நின்றவுடன் அதில் வந்து இறங்கிய கற்றறியா மூடனுக்குக் கைலாகு கொடுத்து வரவேற்பார்கள். பன்னீரைத் தெளிப்பார்கள். பூச்செண்டைச் செருகி மூன்று நான்கு பேர்களாக உள்ளே அழைத்துப் போவார்கள். படிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றைவிடப் பணமே உலகில் மதிப்பைப் பெறுகிறதென்பதற்கு இது அடையாளம் அல்லவா? பணக்காரன் தன்னிடத்தில் உள்ள பணத்தை விளம்பரப்படுத்திக் கொள்வதற்குப் படாடோபமான ஆடைகளை அணிகிறான். ஒழுக்கத்தில் தளர்ந்தவனாக இருந்தாலும், அறிவிலே குறைந்தவனாக இருந்தாலும், அவன் தன்னிடத்திலுள்ள பணத்தை ஆடையாலும் அணியாலும் ஆடம்பரத்தாலும் விளம்பரம் செய்து கொள்வதைக் கண்டு உலகம் மயங்குகிறது. இதை நினைத்து ஒரு புலவர் வேடிக்கையாக ஒரு பாட்டுப் பாடுகிறார். உலகிலுள்ள மனிதர்கள் மாத்திரமா மயங்குகிறார்கள்? எங்கேயும் இத்தகைய இழிநிலை காணப் படுகிறது. பாற்கடல் இத்தகைய காரியம் ஒன்றைச் செய்தது என்று அவர் பாடுகிறார். “எவ்வளவு ஆயிரம் நூல்களைப் படித்த புலவனானாலும் இவ்வுலகம் அவனை மதிக்காது. நல்ல மேலாடை அணியாமல் வந்த புலவனை மதிப்பவர் அதிகமாக இருக்க மாட்டார்கள்” என்கிறார். பெரிய பிரசங்கிகள் கூடத் துப்பட்டா, சால்வை முதலியன போர்த்துக் கொண்டு வருவதற்குக் காரணம், சபையினர் தம்மை மதிக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் தம்முடைய மதிப்பைப் பேச்சினால் புலப்படுத்தலாம். அதற்கு முன்பு அவர்கள் சபையில் போக வேண்டும் அல்லவா? அதற்குச் சால்வை முதலியன விளம்பரமாக உதவுகின்றன. “மேலாடை இன்றிச் சபைபுகுந் தால்இந்த மேதினியோர் நாலா யிரம்படித் தாலும்எண் ணார்”. இப்படி அந்தப் புலவர் சொல்லிவிட்டு இதற்கு உதாரணம் சொல்கிறார். இது இந்த உலகத்தில் மாத்திரம் நடப்பது அல்ல. தேவலோகச் செய்தியும் அப்படித்தான். திருப் பாற்கடல் என்ன செய்தது தெரியுமா? “நுவல் பாற்கடலோ, மாலோன் அணிந்த பொன் னாடையைக் கண்டு மகளைத் தந்தே.” பட்டுப் பீதாம்பரங்களை அணிந்து கொண்டு வந்தார் திருமால். அவரது ஆடம்பரத்தைக் கண்டு மயங்கி அவருக்குத் தான் பெற்ற திருமகளைத் தந்ததாம். திருமாலைப் பாற்கடல் மருமகன் ஆக்கிக்கொண்டது. ஆனால் திருப் பாற்கடலைக் கடையும்போது சிவபெருமானும் வந்தான். அந்தப் பரமேசுவரன் எதைப் பெற்றான் தெரியுமா? பாற் கடல் தன்னிடத்தில் உண்டான ஆலகால விடத்தைக் கொடுத்தது. திருமாலுக்குத் தன் மகளையும் சிவபெருமானுக்கு நஞ்சையும் கொடுத்ததற்குக் காரணம் என்ன? சிவபெருமான் அந்தச் சபைக்கு வரும்போது பட்டுப் பீதாம்பரம் உடுத்துக்கொண்டு வரவில்லை. பொன்னாடை வேண்டாம்; சாதாரண நூல் ஆடையேனும் கட்டிக் கொண்டு வந்தானா? அதுவும் இல்லை. தோல் ஆடையைப் புனைந்திருந்தான். அதையாவது நாகரிகமாக அணிந்து கொண்டு வந்தானா? அதுவும் இல்லை. சும்மா சுற்றிக் கொண்டு வந்திருந்தான். ஆகையால் அது நஞ்சைக் கொடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. “ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன்றனக்கே” என்று புலவர் பாடுகிறார். தோல் ஆடை சுற்றி வந்த சிவபெருமானைப் பார்த்த பாற்கடல், ‘இந்தப் பைத்தியம் உலகத்தில் இருந்தால் என்ன? செத்துப் போனால் என்ன?’ என்று நினைத்ததோ என்னவோ, ஆலகால விடத்தை அளித்து விட்டதாம். செல்வத்தின் மதிப்பு நல்ல மேலாடையும், பொன்னாடையும் இல்லை என்றால் இந்த உலகத்தினர் அந்த மனிதனை மதிப்பது இல்லை. பணம் இருந்தால் போதும்; எல்லா வகையான சுகபோகங்களையும் தேடிக் கொள்ளலாம்; பதவியும், பெருமையும், மதிப்பும் அவர்களைத் தேடிக்கொண்டு வரும். இது எல்லாக் காலத்திலும் உண்டு. இப்போது மிகுதியாகிவிட்டது. அதனால் பொருட்செல்வத்தைக் குவித்துக் கொள்ளும் ஆசை இந்தக் காலத்தில் மிகவும் விரிந்திருக்கிறது. உலகமே காஞ்சனத்திற்கு அடைக்கலம் ஆகிவிட்டது. இன்று பிச்சைக்காரனுக்கு ஒரு பிடி அரிசி போட்டால் அவன் மதிப்பது இல்லை; ஓர் அணாக் கொடுத்தால் அப்படிக் கொடுத்தவனுக்கு ஒன்பது கும்பிடு போடுகிறான். ஏழைகளுக்கே பணத்தாசை இருக்கிறதென்றால் பணக்காரனைப் பற்றி என்ன சொல்வது? ஓர் எழைக்கு ஒரு ரூபாய் கிடைக்கிறது. தன் உண்டியில் 99 ரூபாய் சேர்த்து வைத்திருப்பவன் இருக்கிறான்; அவனுக்கும் ஒரு ரூபாய் கிடைக்கிறது. ஏழையோ கிடைத்த ஒரு ரூபாயை உடனே செலவழித்து விடுவான். 99 ரூபாய் சேர்த்து வைத்திருப்பவனோ இந்த ஒரு ரூபாயையும் சேர்த்து நூறு ரூபாயாகச் செய்யலாம் என்று செலவழிக்காமல் வைத்திருப்பான். இப்படியே பணம் படைத்தவனுக்குத் தன்னிடம் இருக்கும் பணம் போதும் என்ற மன நிறைவு இல்லாமல் பின்னும் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறான். தன்னிடம் உள்ள பணத்திற்கு மேற்பட்ட தொகையை மனத்தில் எண்ணி அதை ஈட்டவேண்டுமென்று ஆசைப் படுகிறான். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அதையே லட்சியமாக வைத்து அதையே சேர்த்துக் கொண்டிருக்கிறான். அரசர் செல்வம் பணம் மிகுதி ஆக ஆக ஒருவனுடைய பலமும் பதவியும் உயர்கின்றன. அவனைப் பல மக்கள் சேர்ந்து வழிபடுகிறார்கள். பழங்காலத்தில் மிகுதியான செல்வத்தை வைத்திருப்பவர்கள் அரசர்கள். மண், பெண், பொன் ஆகிய மூன்று ஆசைகளிலும் அவர்கள் எல்லோரையும் மிஞ்சி இருந்தார்கள். அதனால்தான், ராஜபோகம் என்று சொல்லும் பழமொழி வந்தது. அரசர்கள் இல்லாத இந்தக் காலத்திலும் கூட, “அவனுக்கு என்ன பெரிய ராஜா; சுகமாக இருக்கிறான்!” என்று சொல்லும் வழக்கம் மாத்திரம் போகவில்லை. அரசரகள் காலாலே நடக்க மாட்டார்கள். பணம் படைத்தவர்கள் இப்போதுகூடத் தம் காலை அதிகமாகப் பயன்படுத்துவது இல்லையே! வாகன வசதி செய்து கொள்வது பணத்திற்கு ஓர் அடையாளம். இந்தக் காலத்தில் ஒருவனுடைய செல்வத்தை அவனிடத்திலுள்ள காரினால் அளக்கலாம். பெரிய பணக்காரன் தனக்கு ஒன்று, தன் மனைவிக்கு ஒன்று, தன் பிள்ளைகளுக்குச் சில என்று கார் வசதிகளை அதிகமாக்கிக் கொள்கிறான். பழங்காலத்தில் கார் என்ற வாகனம் இல்லாவிட்டாலும் தேர் இருந்தது; யானை இருந்தது; குதிரை இருந்தது. குதிரையில் செல்பவன் சிறிய பணக்காரன். யானையில் செல்கிறவன் பெரிய பணக்காரன். தேர், யானை, குதிரை என்ற மூன்று வாகனங்களையும் பழங்காலத்தில் சிறந்தனவாகப் போற்றினார்கள். அரசர்களிடம் இந்த வாகனங்கள் இருந்தன. இந்த வாகனங்களைச் சுகமாக வாழ்வதற்கு வைத்திருந்ததோடு பிறருடைய நாட்டைப் பற்றிக் கொள்வதற்கும், தம்மேல் பகைவர்கள் படை எடுத்தால் எதிர்ப்பதற்கும் உரிய படைகளாகவும் வைத்திருந்தார்கள். தேர், குதிரை, யானை, காலாட்படை என்னும் நான்கையும் சதுரங்க சேனை என்பார்கள். யானை முதலிய படைகள் யாரிடம் மிகுதியாக இருக்கின்றனவோ அவர்களைப் பெரிய அரசர்கள் என்று மக்கள் மதித்தார்கள். இன்று பணம் படைத்த மேலை நாடுகள் பணத்தைக் கொண்டு பலத்தை அதிகப்படுத்திக் கொள்வதைப் பார்க்கிறோம். பலபல புதிய படைக்கருவிகளைப் பெருக்கிக் கொள்கின்றனர். அந்தக் காலத்தில் தேர் முதலியவற்றைப் பெருக்கிக் கொண்டார்கள். இந்தக் காலத்தில் அணுக்குண்டு, ஹைட்ரஜன் குண்டு முதலியவற்றைப் பெருக்கிக் கொள்கிறார்கள். தம்மிடத்தில் உள்ள செல்வம் போதாது என்று பிறருடைய செல்வத்தை அடித்துக்கொள்ளும் பொருட்டுப் படைகளை மிகுதியாக்குவது ஆசை உடையவர்களுடைய செயல். பிற நாடுகளையும் வென்று அவற்றுக்கும் தாம் தலைவராக வேண்டுமென்று மன்னர்கள் நினைத்தார்கள். படை பெருகுவதற்குக் காரணம் இந்தப் பேராசையே. வேறு ஒருவன் தன் நாட்டைக் கைக்கொள்வான் என்ற பயத்திலும் படையைப் பெருக்கிக் கொள்வது உண்டு. இவ்வாறு இரு திறத்தாலும் படைகள் மிகுதியாயின. படையைப் பெருக்குதல் உலகைத் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப் பெரிய வல்லரசுகள் போட்டி போட்டுக்கொண்டு அணுக் குண்டுகளையும், பிற விஞ்ஞான அற்புத விளைவான படைக்கலன்களையும் உற்பத்தி செய்கின்றன. அந்தப் பழங்காலத்தில் தேர், கரி, பரி ஆகியவற்றை மிகுதியாகச் சேர்த்துக் கொண்டார்கள். சேர்த்துக் கொண்டு வாழ்ந்தார்கள் என்று சொல்லலாமா? அவர்கள் மனத்தில் அமைதி இராமல் இருந்தது. இன்று அமெரிக்காவும், ரஷ்யாவும் படைக்கலங்களைப் பெருக்கிக் கொண்டதனால் ஒரு கணமும் அமைதியில்லாமல் வாழ்கின்றன. அவர்களுடைய உள்ளத்தில் மனக்கலக்கம் எழுந்திருக்கிறது. இதைத்தான் ‘கெடுபிடி யுத்தம்’ (Cold War) என்று சொல்கிறார்கள். தேரையும் கரியையும் பரியையும் சேர்த்துப் படையைப் பெருக்கியவன் சும்மா இருக்கமாட்டான். இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இரா என்பார்கள். இரும்பு என்பது படைக்கலத்தைக் குறிப்பது. படையை வைத்துக் கொண்டிருக்கிறவன் அமைதியாக வீட்டில் இருக்கமாட்டான். ஊரைச் சுற்றி வீட்டைச் சுற்றியுள்ள எல்லோரையும் அடிமைப்படுத்த வேண்டுமென்று திரிவான். அவனை யார் எதிர்ப்பட்டாலும் அவருக்குத் தீங்கு உண்டாகும். பிறருக்குத் தீங்கைவிளைவிக்கும் மனிதன் தனக்கும் தீங்கை விளைவித்துக் கொள்கிறான். 2. “இத்தகைய அரச பதவியையும், செல்வத்தையும் நிலையாதன என்று அறியாமல் நீளும் பணத்தாசை பிடித்து அலைகிறாயே, பாவி நெடுநெஞ்சமே!” என்று அருணகிரியார் சொல்கிறார். தண்டு தாவடி போய்த், தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம், நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே! நெடுநெஞ்சம் நாம் செய்கிற காரியங்கள் எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பது நெஞ்சு. நாம் செய்வன யாருக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நெஞ்சுக்குத் தெரியாமல் இராது. " தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" என்பார் திருவள்ளுவர். அதனால் வேறு ஒன்றைப் பார்த்துச் சொல்வதை விட மூலக்கருவியாகிய நெஞ்சையே பார்த்து அருணகிரியார் சொல்கிறார். நெடு நெஞ்சமே! “நெஞ்சமே, நீ என்னுடன் நீண்டகாலமாக வாழ்கிறாய். இந்த உடம்போடு வந்தாய் என்பது மட்டுமன்று. நான் எடுக்கும் பிறவிகள் எல்லாம் துணையாகவும், சாட்சியாகவும் தொடர்ந்து வருகிறாய். இந்த நீண்ட நட்பு எனக்கும் உனக்கும் இருக்கிறது” என்று எண்ணியே நெடு நெஞ்சமே என்றார். இதற்கு மற்றொரு பொருளும் சொல்லலாம். நமக்கு உடம்பு, வாக்கு, நெஞ்சு ஆகி மூன்று கரணங்கள் இருக்கின்றன. இந்த மூன்றில் நம்முடைய உடம்பு ஓர் எல்லைக்குள் இயங்கும். நம்முடைய கை ஓர் எல்லைவரை தான் எட்டும். நான் இந்த இடத்தில் இருந்து பேசுகின்றேன். இதே சமயத்தில் என் வீட்டில் இருக்க முடியாது. இந்த உடம்பு ஓர் எல்லைக்குள் கட்டுப் பட்டிருக்கிறது. ஆனால் உடமபினால் எட்ட முடாயாத எல்லையை வாக்கினால் எட்ட முடியும். அதற்கும் ஓர் எல்லை உண்டு. ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். " என் நெஞ்சில் இருக்கிறது: சொல்ல வரமாட்டேன் என்கிறதே" என்று சில சமயங்களில் சொல்கிறோம். அப்போது வாக்குக்கு எட்டாத ஒன்று உண்டென்று தெரிகிறது. தித்திப்பு என்பது என்ன என்று கேட்டால் சர்க்கரை மாதிரி இருக்கும் என்று சொல்லலாம். தித்திப்பு என்பது இதுதான் என்று வாக்கினாலே சுட்டிக்காட்ட முடியாது. வாக்குக்கு எட்டாத எல்லையில் அநுபவம் இருக்கிறது. வாக்கினது எல்லையையும் கடந்து நெஞ்சு செல்லும். இங்கிருந்தபடியே நெடுந்தூரத்தில் இருக்கிற ஒரு பொருளை நெஞ்சு நினைக்கும். உடம்பு நீளுவதைவிட வாக்கு நீளும்; வாக்கு நீளுவதைவிட மிக அதிகமாக நெஞ்சு நீளும். அதனாலே “நெடு நெஞ்சமே” என்று சொன்னார் என்றும் கொள்ளலாம். வாமனராகக் குறுகிய உருவம் தாங்கி வந்த திருமால் மூன்று உலகங்களையும் பெறவேண்டுமென்று ஆசைப் பட்டார். அவர் திரிவிக்கிரம அவதாரம் எடுத்துக் கொண்டு தம்முடைய இரண்டு அடியினால் மூன்று உலகங்களையும் அளந்தார். அதைக் கேட்டு நாம் வியக்கிறோம். ஆனால் நம்முடைய நெஞ்சமோ இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. ஆயினும் ஒரே விநாடியில் மூன்று உலகங்களையும் அளந்துவிடும் வகையில் அது நீளுகிறது. அதன்பால் உண்டாகிற ஆசை எல்லை இல்லாமல் விரிகிறது. ஆசை என்னும் காலால் மூன்று உலகத்திற்கும் மேலேகூட அளக்கும் ஆற்றல் நம் நெஞ்சுக்கு இருக்கிறது. எல்லையற்று விரிந்துகொண்டு போகும் ஆசையை அழித்து பற்றை அழித்து, திருவருளை அளக்கிற நெஞ்சங்களே நல்ல நெஞ்சங்கள். நம்முடைய நெஞ்சமோ உலகத்திலுள்ள சொத்துக்களை நாம் பெறவேண்டுமென்று அளந்துகொண்டிருக்கிறது. தேரும், கரியும், பரியும் கொண்டு போருக்குச் சென்று செல்வத்தைப் பலவகையிலும் சேர்த்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து, அவர்களுடைய செல்வம் நீரில் எழுத்துப் போல அழிந்துவிடும் என்று அறியாமல், நாம் அவர்களைப் போல ஆகவேண்டும் என்று நீண்டு கொண்டிருக்கிறது. இது புண்ணியமான காரியமா? இந்த நெஞ்சம் நெடு நெஞ்சம்; பாவி நெடு நெஞ்சம். ஆதலால் இதைப் பார்த்து, பாவி நெடு நெஞ்சமே! என்று அருணகிரியார் சொல்கிறார். அறியாத நெஞ்சம் நாம் சொல்ல வேண்டியதை அவர் சொல்கிறார். பொருட் செல்வத்தை ஈட்டிக் கொள்வதில் நோக்கம் வைத்து நாள்தோறும் எட்ட முடியாததை எட்டிப் பிடிக்கத் தாவுகிறது இந்த நெஞ்சம். எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதைத் தெரிந்து கொள்வது இல்லை. நமக்கு வேண்டாதவற்றை எல்லாம், நம்முடைய துன்பத்தை மிகுதியாக்கக் காரணமானவற்றை எல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது. ‘எது உயிருக்கு இன்பத்தை அளிக்கிறது? அமைதியைத் தருகிறது?’ என்று தெரிந்து கொள்வது இல்லை. அமைதியைக் குலைப்பதற்குக் காரண மான பொருள் முதலியவற்றையே நாடி நாடி அலைந்து ஏங்கி நிற்கிறது. தண்டு தாவடி போய்த், தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம், நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே! தண்டு என்பது சேனை. தாவடி போதல் ~ காலை வீசி நடத்தல்; தாவித் தாவிச் செல்லுதல். வீரர்கள் போர்க்களத்தில் நடக்கும் நடையைத் தாவடி போதல் என்று சொல்வார்கள். அடி வைத்துத் தாவிச் செல்பவர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். நீரில் பொறி – நீரில் எழுதும் எழுத்து. தேர், யானை, குதிரை ஆகிய படைகளோடு சண்டைக்குப் போய்த் திரிகின்ற அரசர்களுடைய செல்வம் எல்லாம் நீரில் எழுதிய எழுத்துப் போன்றவை என்பதை அறியாத பாவி நெடு நெஞ்சம் நம் நெஞ்சம். அமைதி தரும் செல்வம் அவை உண்மையான செல்வமாக இருந்தால் மனத்திற்கு அமைதியும், மகிழ்ச்சியும் கொடுக்கவேண்டும். நன்றாக வாழ்வதற்குச் செல்வம் வேண்டுமென்ற நினைப்பிலே அதனை நிறையச் சேமித்துக் கொண்டிருக்கிறவர்கள் நன்றாக வாழ்கிறார்களா என்று சற்று ஆராய்ச்சி செய்தால் உண்மை விளங்கும். செல்வத்தைப் பெற்றவர்களுக்குத் திருப்தி உண்டாவதில்லை என்று முன்னரே சொன்னேன். அதனால் குமரகுருபர முனிவர், “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்றும், “அல்கா நல்குரவு அவா எனப் படுமே” என்றும் கூறினார். மனத்தில் உண்டாகிற திருப்திதான் செல்வம். மேலும் மேலும் வேண்டுமென்ற ஆசையே வறுமை என்று அவர் சொல்கிறார். எத்தனை செல்வம் இருந்தாலும் அவன் செல்வனாக வாழாமல், “இன்னும் நமக்குப் போத வில்லையே!” என்று ஏழையாகவே வாழ்கிறான். உலகம் ஏழை என்று நினைத்திருந்தாலும், “நமக்குக் கிடைத்தது போதும். இறைவன் இந்த அளவுக்கு நம்மை வைத்திருக்கிறானே” என்று திருப்தியாக வாழ்கிறவர்களே மனத்தில் செல்வர்களாக இருக்கிறார்கள். செல்வம் சேரச் சேர அவர்களுக்குக் கவலைகளும் சேர்ந்து விடுகின்றன. மனத்தில் அமைதியைத் தராது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்ட பெரியவர்கள் அதைத் தருகின்ற வேறு செல்வம் எது என்று ஆராய்ந்தார்கள். இறைவனது திருவருட் செல்வம் உலக வாழ்க்கையிலும் சிறந்த இன்பத்தைத் தரும் என்று கண்டு கொண்டார்கள். அதனைக் கண்டு கொண்டவரிலே அருணகிரியாரும் ஒருவர். எது மன அமைதியைத் தரும் என்பதை இந்தப் பாட்டில் சொல்கிறார். 3. உலகத்துப் பொருட் செல்வத்தை மதிக்காத அருட் செல்வர்கள் தாம் அமைதியைப் பெறுவதோடு பிறருக்கும் அமைதியைத் தருகின்ற ஆற்றல் படைத்தவர்கள். அமைதி இல்லாத மக்கள் அமைதியைப் பெற வேண்டுமானால் தாமாகப் பெற்றுக்கொள்ள முடியாது. அமைதியைப் பெற்ற தொண்டர்களுடைய கூட்டத்தில் சேருவதால் பெறமுடியும். அருட்செல்வம் பெற்ற தொண்டர்களைச் சார்ந்தால்தான் கதி உண்டு என்பதை அருணகிரியார் வற்புறுத்துகிறார். தொண்டர் குழாம், சாரில் கதியன்றி வேறு இலை காண். தொண்டர்களின் நிலை தொண்டர்களுக்கு முத்தியைப் பெற்ற பிறகுதான் இன்பம் என்பது இல்லை. அவர்கள் இந்த உலகததிலேயே இன்பத்தைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு கணமும் அமைதியோடு வாழ்கிறார்கள். வறுமை, நோய், கவலை என்பவற்றைக் கண்டு பயப்படுவது இல்லை. அவர்கள் உள்ளம் எப்போதும் நோய் அற்றதாக, வறுமை அற்றதாக, கவலை அற்றதாக விளங்குகிறது. இறைவனுடைய திருவருள் நிச்சயமாகத் துணை இருக்கிறதென்ற நினைவு எப்போதும் சுருதி போடுவதால் அவர்களிடம் பயம் என்பதே தலைகாட்டுவது இல்லை. " அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை" என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். அவர்களைப் பார்த்தால் ஏழை போல இருப்பார்கள். இடையில் கந்தையும், கோவணமும் இருப்பினும் அவர்கள் உள்ளத்தில் உறுதி வைரம் போலப் பாய்ந்திருக்கிறது. அவர்களைப் போன்ற வீரர்கள் யாரும் இல்லை. “ஆரம் கண்டிகை; ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணிஅல தொன்றிலார். ஈர அன்பினர்; யாதும் குறைவிலார்; வீரம் என்னால் விளம்பும் தகையதோ!” தொண்டர் பெருமை ஆண்டவனைச் சார்ந்து அவனுடைய அருட் செல்வத்தைப் பெறுவது நல்லது என்று சொல்வதை விட்டு, தொண்டர் குழாத்தைச் சாருவதுதான் கதி என்று அருணகிரியார் சொல்கிறாரே என்ற கேள்வி எழலாம். இறைவன் திருவருளை நேரே பெறுவது என்பது அரிய காரியம். அந்த அருளைப் பெறுவதற்கு எத்தனையோ தகுதி வேண்டும். செல்வத்தையும், செல்வம் படைத்தவர்களையும் கண்டு மயங்கி அவர்களைப் போல நாமும் இருக்க வேண்டுமென்று ஒவ்வொரு கணமும் கவலைப்பட்டு, முயற்சி பண்ணி, அது பலித்தால் மேலும் செல்வத்தை ஈட்ட வேண்டுமென்று நினைத்து, ‘ஐயோ! ஆசை நிறை வேறவில்லையே’ என்று துன்புற்று வாழ்கிற வாழ்க்கையைப் போன்ற அவலம் வேறு இல்லை. இந்த அவல வாழ்க்கையில் பற்றுக் கொண்டவர்களுக்குத் திடீரென்று இறைவன் சார்பு கிடைத்துவிடாது. ஆனால் தொண்டர்களுடைய குழாத்தில் சேர்ந்து கொண்டார்களானால் அவர்களுடைய சேர்க்கைச் சிறப்பால் தெளிவு பெறுவார்கள். மெல்ல மெல்லச் செல்வத்தின்பாலும், செல்வர்களின்பாலும் உள்ள பற்று நழுவிவிடும். இறைவன் திரு வருள் இன்பம் ஏறும். இறைவன் நமக்கு நேரே இன்பத்தைத் தருவதைக் காட்டிலும் தன் தொண்டர்கள் மூலமாகத் தருகிற இன்பம் பெரிது. காவேரி நீர் நேரே பாயாது; கால்வாய் மூலமாகவும், மடையின் மூலமாகவும் பாய்ந்தால்தான் வயல்களுக்குப் பயன் உண்டே அன்றி நேரே பாய்ந்தால் தாங்குவதற்கு ஆற்றல் இல்லை. அப்படி, தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறும்படியாகச் செய்கிறவர்கள் தொண்டர்கள். இறைவனைக் காட்டிலும் தொண்டர்கள் மிக்க பயனைத் தருவார்கள். அவனைவிடத் தொண்டர்கள் பெரியவர்கள். இதனை ஔவைப் பிராட்டி சொல்கிறாள். ஔவை வாக்கு நாம் வாழ்கிற இந்த உலகம் மிகப் பெரியது. பெரிய பொருளுக்கு உவமை சொல்ல வேண்டுமானால் இந்த நிலத் தைச் சொல்வார்கள். “நிலத்தினும் பெரிதே” என்பது குறுந்தொகைப் பாட்டு. இவ்வளவு பரப்பும் விரிவும் உடைய இந்த நிலம் நாம் கண்ட பொருள்களுக்குள் பெரியது. ஆனால் இதனைப் படைத்த நான்முகன் இதைவிடப் பெரியவனாக இருக்கவேண்டும். புவனம் பெரிதானால் இதைப் படைத்த பிரமன் இதைவிடப் பெரியவன். அந்த நான்முகனும் வேறு ஒருவனுடைய படைப்பு. கரிய திருமாலின் உந்திப் பூவிலே தோன்றியவன் அவன். ஆகவே அந்த நான்முகனைக் காட்டிலும் கரிய திருமால் பெரியவன். அவ்வளவு பெரியவனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறான். ஆகையால் அவனைக் காட்டிலும் பாற்கடல் பெரியது. கடல் பெரிதாக இருந்தாலும் அகத்திய முனிவர் அந்தக் கடலைத் தம்முடைய கையில் எடுத்து ஆசமனீயம் பண்ணிவிட்டார். எனவே கடலைவிடக் குறுமுனி பெரியவர். அவர் கலசத்தில் பிறந்தவர். அதனால் குடமுனி என்ற பெயரைப் பெற்றார். ஆகையால் குறுமுனியைவிடக் குடம் பெரியது என்று சொல்ல வேண்டும். அந்தக் கலசமோ மண்ணால் ஆனது. கலசத்தின் தாயாகிய மண் மிகப் பெரியது. அந்த மண்ணோ ஆதிசேடனுக்கு ஒரு தலைச்சுமையாக இருக்கிறது. ஆகவே மண்ணைச் சுமக்கும் ஆதிசேடன் பின்னும் பெரியவன். அந்த ஆதிசேடனை எம்பெருமாட்டி உமாதேவி தன் சிறுவிரல் மோதிரமாகப் பூட்டிக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெருமாட்டி பின்னும் பெரியவள். அந்தப் பெருமாட்டியைத் தன்னுடைய ஒரு பாகத்தில் அடக்கிக் கொண்டிருக்கிற பரமேசுவரன் எல்லோரையும் விடப் பெரியவன். அவ்வளவு பெரியவனைத் தொண்டர்கள் தம்முடைய உள்ளக் கமலத்திற்குள் அடக்கி வைத்திருக்கிறார்கள். ஆகையால் தொண்டர்களுடைய பெருமை மிக மிகப் பெரியது. அது சொல்வதற்கு அரிது. இந்தக் கருத்தை ஔவை சொல்கிறாள். முருகப் பெருமான் எது பெரியது என்று கேட்டபோது, ‘தொண்டர்களுடைய பெருமை பெரிது’ என்பதை அந்தப் பாட்டி சொல்லப் புகுந்தாள். சும்மா பெரியது என்று சொன்னால் அதன் அளவு புலப்படாது என்று கருதி, புவனத்திலிருந்து தொடங்கி மெல்ல மெல்லப் படியேறிக் கோபுரத்தின் உச்சியில் நின்று தொண்டர்களுடைய பெருமை மிகப் பெரிது என்று சொல்பவளைப் போல அடுக்கிக்கொண்டு போகிறாள். “பெரியது கேட்கின் எரிதவழ் வேலாய்! பெரிது பெரிது புவனம் பெரிது; புவனமோ நான்முகன் படைப்பு; நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்; கரிய மாலோ அலைகடல் துயின்றோன்; அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்; குறுமுனி யோகல சத்திற் பிறந்தோன்; கலசமோ புவியிற் சிறுமண்; புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்; அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்; உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்; இறைவரோ தொண்ட ருள்ளத் தொடுக்கம்; தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!” ஔவையாருடைய கருத்தைக் கொண்டு பார்த்தால் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கிற பரமேசுவரனைத் தம்முடைய உள்ளத் தாமரையில் அடக்கிக் கொண்டமையினால் தொண்டர்கள் பெரியவர்கள் என்று தெரிகிறது. ஒரு பெட்டிக்குள் ஏதேனும் ஒரு பொருள் அடங்கியிருந்தால் அந்தப் பொருளைக் காட்டிலும் பெட்டி பெரிது என்று சொல்ல வேண்டியது இல்லை. அப்படியே இறைவனைத் தம் உள்ளே அடக்கிக்கொண்ட பெரிய பெட்டியாகிய தொண்டர்கள் பெரியவர்கள் என்று சொல்வது ஒரு வகையில் பொருத்தமாக இருக்கிறது. இனி வேறு ஒரு வகையில் தொண்டர்களின் பெருமையை நாம் உணரலாம். பெரிய புராணம் புராணங்கள் பதினெட்டு என்று சொல்வார்கள். அவற்றை மகாபுராணங்கள் என்பது வழக்கம். அவை அல்லாமல் உப புராணங்கள் பல உண்டு. புராணங்கள் யாவுமே இறைவனுடைய திருவிளையாடல்களையும், அடியார்களுக்கு அருள் செய்த திறத்தையும் பல படியாக, வரலாறுகளாக எடுத்துச் சொல்வன அவை. இந்தப் புராணங்களையும், உப புராணங்களையும் அன்றி அந்த அந்தத் தலங்களுக்குத் தனித்தனியே புராணங்கள் உண்டு. அவை தல புராணங்கள். தமிழ் நாட்டில் தலங்கள் மிகுதி. ஆகையால் தமிழிலுள்ள தல புராணங்களுக்குக் கணக்கு வழக்கே இல்லை. சில தலங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புராணங்கள் உண்டு. கோயில் என்று சிறப்பித்துச் சொல்லப்பெறும் சிதம்பரத்திற்கு நான்கைந்து புராணங்கள் இருக்கின்றன என்று எனக்கு நினைவு. இப்படிப் புராணம் என்ற பெயரிலே மூன்று வகையாக அமைந்த நூல்கள் யாவும் இறைவனுடைய பெரும் புகழை விரிவாகச் சொல்கின்றன. இந்தப் புராணப் பெருங்கூட்டத்திற்கு நடுவிலே புதிதாக ஒரு புராணம் தோன்றியது. அந்தப் புராணம் தோன்று வதற்கு முன்னாலே மற்றப் புராணங்கள் எல்லாம் சிறந்தனவாக, பெரிய புராணங்களாக இருந்தன. இந்தப் புதிய புராணம் தோன்றிய பிறகு அவைகள் எல்லாம் சிறியவை ஆகிவிட்டன. ஏன் புதிதாக வந்த புராணம் பெரிய புராணம் என்ற பெருங்கீர்த்தியைப் பெற்றது? ஒன்று பெரியதானால் அது அல்லாத மற்றவை சிறியனவாகத்தான் இருக்கவேண்டும். “ஒரு வெளியில் பையன்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெரிய பையன் வந்தான்” என்று சொன்னால் புதிதாக வந்து சேர்ந்த பெரிய பையன் மற்ற எல்லாப் பையன்களையும் சிறியவர்களாக்கி விட்டான் என்பது விளங்குகிறது அல்லவா? அப்படியே முன்னால் இறைவனைப் பற்றிய புராணங்கள் பெரியனவாக இருந்தன. பெரிய புராணம் வந்த பிறகு அவை சிறிய புராணங்கள் ஆயின. பெரிய புராணம் யாரைப் பற்றிச் சொல்வது? அது தொண்டர்களைப் பற்றிச் சொல்கிற புராணம். அதற்கு அதனுடைய ஆசிரியராகிய சேக்கிழார் சுவாமிகள் வைத்த பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதுதான். தொண்டர்களுடைய பெருமையைச் சொல்கிற அந்தப் புராணம் பெரிய புராணம் ஆகிவிட்டது. காரணம்: அந்தப் புராணத்தில் வருகிறவர்கள் யாவரும் இறைவனைக் காட்டிலும் பெரியவர்கள். அடியார்க்கு எளியன் இறைவனைக் காட்டிலும் அடியார்கள் பெரியவர்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. தொண்டர்களால் சிறியவன் ஆகிவிட்ட ஆண்டவனே தான் அடியார்களினும் எளியவன் என்று சொல்லிக் கொள்கிறான். பெற்றான் சாம்பான் என்ற ஹரிஜன் ஒருவன் இறைவனிடத்தில் மிக்க பக்தி செய்து வாழ்ந்து வந்தான். அவனுக்குத் திருவருள் செய்யவேண்டுமென்று இறைவன் நினைத்தான். எதையும் மரபோடு செய்ய வேண்டும். நல்ல குருநாதன் மூலமாக அவனுக்கு நற்கதி கொடுக்கவேண்டும் என்று இறைவன் நினைத்தான். சிவ தீட்சை பெற்றுக்கொண்ட பிறகு அவனை ஆட்கொள்ள வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம். உமாபதி சிவாசாரியார் என்று ஒருவர் இருந்தார். அந்தப் பெரியவரிடத்தில் பெற்றான் சாம்பான் தீட்சை பெற்றுக்கொள்வது நல்லது என்று இறைவன் எண்ணினான். அதனால் இவனுக்கு தீட்சை செய்யவேண்டுமென்று அந்தச் சிவாசாரியாருக்கு ஒரு வேண்டுகோளை இறைவனே விடுத்தான். அது ஒரு பாட்டாக இருக்கிறது. “அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங் குடியார்க் கெழுதியகைச் சீட்டு ~ படியின்மிசைப் பெற்றான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து முத்தி கொடுக்க முறை” என்ற பாடலை எழுதிய ஓலையைப் பெற்றான் சாம்பான் மூலமாக அனுப்பினான். உமாபதி சிவாசாரியார் அவனுக்குத் தீட்சை செய்தார் என்பது வரலாறு. நாம் யாருக்கேனும் கடிதம் எழுதினால் இன்னார் எழுதுவது என்று சொல்லிக்கொள்கிறோம். கடிதத்தின் தலைப்பில் நம்முடைய பட்டங்களை எல்லாம் போட்டு நம் விலாசத்தை அச்சிட்டு வைத்துக் கொள்கிறோம். அப்படி இறைவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். இறைவனுக்கு எத்தனையோ விலாசங்கள் உண்டு. அவன் பெருமைகள் அளவிடற்கரியன. அவற்றுள் அவனாக விரும்புவது எது என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாது. அந்தப் பெருமானே தன்னுடைய கடிதத்தில் தான் விரும்பிய ஒரு விலாசத்தைப் போட்டுக் கொண்டான். இந்தப் பாட்டில் அது தெளிவாகிறது. அவன் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட பட்டம், “அடியார்க்கு எளியன்” என்பது. இறைவனே அடியார்க்கு எளியன என்றால் அடியார் அவனிலும் பெரியவர்கள் என்றுதானே கொள்ளவேண்டும்? பெரிய புராணத்தில் வரும் தொண்டர்கள் பெரியவர்கள். இறைவனைக் காட்டிலும் அவர்கள் பெரியவர்கள் என்பதைத் திருக்கூட்டச் சிறப்பு என்னும் பகுதியில் குறிப்பாகச் சேக்கிழார் புலப்படுத்துகிறார். அதை இங்கே சற்று ஆராய்வது உபயோகமாக இருக்கும். பெரியோர் சின்னக் குழந்தைக்கு ஒழுக்கத்தை ஊட்ட வந்த ஔவை சிறியவர் யார், பெரியவர் யார் என்பதைச் சொல்கிறார். மேல்சாதி, கீழ்சாதி என்று வேறு பிரிப்பதை அவள் சொல்லவில்லை. ஆயினும் இரண்டு சாதிகளைச் சொல்கிறாள். ஆண் சாதி, பெண் சாதி என்பதையும் அவர் சொல்லவில்லை. “சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் ~ மேதினியில் இட்டார் பெரியோர், இடாதோர் இழி குலத்தோர்; பட்டாங்கில் உள்ள படி.” இந்த உலகத்தில் தம்மிடம் உள்ள பொருளை யார் பிறருக்குக் கொடுக்கிறார்களோ அவர்களே பெரியவர்கள்; அப்படிக் கொடுக்காமல் இறக்கிறவர்கள் சிறியவர்கள் என்று அந்தப் பாட்டி சொல்கிறாள். தமிழ் நாட்டில் ஈகையின் பெருமையைப் பல புலவர்கள் மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். திருவள்ளுவர் அதை மிகச் சிறப்பித்துப் பேசுகின்றார்.ஈபவனுக்கு வாங்குகிறவன் இருந்தால்தான் பெருமை. ஈதலினால் ஒருவனுக்கு இன்பம் வர வேண்டுமானால் அவனிடத்தில் ஏற்றுக்கொள்வான் ஒருவன் இருக்க வேண்டும்.ஆகையால் ஒரு வகையில் பார்த்தால் ஈதலும் ஏற்றலும் ஒன்றாகவே நிகழ்வன என்று தெரியும். ஈதலும் இரத்தலும் புறநானூற்றில் ஓர் இடத்தில ஈதலையும் இரத்தலையும் பற்றி ஒரு புலவர் பேசுகிறார். இழிந்ததிலும் இழிந்தது இன்னது, உயர்ந்ததிலும் உயர்ந்தது இன்னது என்கிறார். நமக்கு இறைவன் உடம்பையும் அறிவையும் பிற வசதியையும் கொடுத்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி முயற்சி செய்து நல்ல வகையில் வாழவேண்டும். அப்படியின்றி முயற்சி செய்யாமல் சோம்பேறியாகத் திரிந்து, பொருள் ஈட்டாமல் பிறரிடத்தில் சென்று பல்லைக் காட்டிக்கொண்டு ஈ என்று சொல்லுதல் மிகவும் இழிந்த செயல். “ஈயென இரத்தல் இழிந்தன்று” அப்படி ஒருவன் மானத்தை விட்டுப் பிறர் இழிவுபடுத்துவதற்குரிய நிலையில் பல்லைக் காட்டி இரக்கும்போது செல்வம் உள்ளவன் ஈதலே முறை. அப்படியின்றி இல்லை என்று சொல்கிறானே அவன் மிகவும் இழிந்தவன். அவனுடைய குணம் இழிந்த குணம். “ஈயென இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று” இப்படி இழிவையும் அதனினும் இழிவையும் சொன்ன புலவர்,உயர்வையும் அதனினும் உயர்வையும் சொல்ல வருகிறார். பிறருடைய குறைபாட்டைக் குறிப்பினால் தெரிந்து கொண்டு தமக்கு இறைவன் அருளிய செல்வம் பிறருடைய வறுமையை நீக்குவதற்கு என்று அறிந்து தாமே வலிந்து சென்று, “இந்தா,இதைப் பெற்றுக் கொள்” என்று கொடுப்பது மிக உயர்ந்த இயல்பு. “கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று” இனி இந்த உயர்ந்த இயல்புக்கு மேல் மற்றோர் இயல்பைப் புலவர் பேசுகின்றார். கொள் என ஒருவன் கொடுக்கும் போது, “நான் இதனைப் பெற்றுக்கொள்ள மாட்டேன்” என்று மறுக்கிறானே, அவன் கொடுக்கும் உயர்ந்த குணம் படைத்தவனை விடச் சிறந்தவன். “கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று” என்கிறார் அந்தப் புலவர். கொள் என்று கொடுப்பவனுக்கு முன்னாலே நின்று, கொள்ளமாட்டேன் என்று சொல்வதற்கு மனத்திண்மை வேண்டும். நம்பிக்கை வேண்டும். இறைவன் திருவருள் நமக்கும் ஒரு வழி காட்டும் என்ற உறுதி வேண்டும். “வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை; யாண்டும் அஃதொப்பது இல்” என்று வள்ளுவர் சொல்கிறார். கொடுப்பதை வேண்டாம் என்று சொல்கிறவன் ஒரு வகையில் செல்வனாக விளங்குகிறான். நம்மிடம் பணம் இருந்தாலும் மேலும் ஒருவன் கொடுத்தால் பணத்தின்மேல் பணத்தைச் சேர்த்துக் கொள்வதற்காக வாங்குகிறோம். அப்படி இருக்க, நம்முடைய வறுமை தெரிந்து ஒருவன் கொடுக்கிறான் என்றால் அதனை மறுப்பது சாமானிய மனம் படைத்தவனாலே இயலாது. அதற்கு ஒரு தனி மனத் துணிவு வேண்டும். ஆகையால் கொள் என்பதற்கு எதிரே கொள்ளேன் என்று சொல்வது மிகச் சிறந்த பண்பு என்று புலவர் சொன்னார். தொண்டர் பெரியர் இனித் தொண்டர்களைக் கவனிக்கலாம். அவர்களுக்கு அருட் செல்வம் நிரம்பியிருக்கிறது. பொருட் செல்வத்தை உடையவர்கள் பிறருக்கு ஈந்தாலும் தமக்கே செலவழித்துக் கொண்டாலும் அந்தச் செல்வம் குறைந்து விடும். மேலும் ஈட்டி நிரப்பிக் கொள்வார்கள். லாப நஷ்டக் கணக்குப் பார்ப்பதற்குரியது அவர்களிடத்திலுள்ள செல்வம். தொண்ட‌ர்களுடைய அருட் செல்வத்திற்குக் கேடு இல்லை; ஆக்கம் ஆகிய வருமானமும் இல்லை. அவர்கள் லாப நஷ்டம் இல்லாத செல்வர்கள். “கேடும் ஆக்கமும் கெட்ட‌ திருவினார்.” அருட் செல்வத்தினால் வரும் பாக்கியம் அது. அதனைப் பெற்ற‌ தொண்டர்களிடத்தில் ஒரு பெரிய சக்கரவர்த்தி நேரில் நின்று,“உமக்கு வேண்டுவனவற்றைக் கேளும். தருகிறேன். பொன் வேண்டுமா? அரசு வேண்டுமா?” என்று சொன்னால் அவர்கள் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். திருநாவுக்கரசர் உழவாரத் திருப்பணி செய்யும்போது பொன்னும் மணியும் அங்கே கிடந்தன.அவற்றை யெல்லாம் கல்லையும் மண்ணையும் போல அவர் ஒதுக்கி விட்டார். இந்த உலகச் செல்வம் தொண்டர்களுக்குக் கவர்ச்சியைத் தருவது இல்லை. அதனால் பொருளாளன் ஒருவன் எத்தனை மிகுதியான பொருளை அவர்களுக்குக் கொடுக்க முற்பட்டாலும் அவர்கள் சற்றும் ஆசைப்பட மாட்டார்கள். இது கிடக்கட்டும். அவர்கள் பிறவாமை யில்லா முத்தியை அடைய வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபடுகிறவர்கள் ஆயிற்றே; அந்தத் தொண்டர்களிடத்தில் பரமேசுவரனே எதிரில் வந்து, “இந்தா, மோட்சத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த உலகத்தில் ஏன் இருக்கிறீர்கள்?” என்று சொன்னால், மிகவும் அரிதிற் பெறுவதற்குரிய அந்த மோட்சமாகிய செல்வமும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களாம்.“நாங்கள் எப்போதும் உன்னுடைய திருவடியைக் கும்பிட்டுக் கொண்டு அதனால் வருகின்ற இன்பத்தை இப்பொழுதே அடைந்து கொண்டிருக்கிறோமே! இதைவிடப் பெரிய இன்பம் மோட்சத்தில் உண்டா? அது எங்களுக்கு வேண்டியதில்லை.” என்று சொல்கிற விறல் அவர்களுக்கு உண்டாம். “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” என்று தொண்டர்களின் பெருமையைச் சேக்கிழார் சொல்கிறார். வீட்டைக் கொடுக்கிறவன் பரம தாதாவாகிய இறைவன். அவன் கொள் எனக் கொடுக்கிறபோது, கொள்ளேன் என்று சொல்கிற மன இயல்பு உடையவர்கள் கொடுக்கிறவனையும் விடப் பெரியவர்கள் அல்லவா? “கொள்ளெனக் கொடுத்தல் உய‌ர்ந்தன்று; அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று” என்ற புலவருடைய வாக்கைக் கொண்டு பார்த்தால் இறைவன் பெரியவன் என்று புலப்படும், வீட்டை யாவருக்கும் கொடுப்பதனாலே. ஆனால் அந்த வீட்டையும் கொள்ளேன் என்று சொல்கிற தொண்டர்கள் அவனைவிடப் பெரியவர்கள் என்றுதானே சொல்லவேண்டும்? அடியார்களுக்குத் த‌ங்கள் அன்பையும் நெஞ்சையும் ஆண்டவனுக்குக் கொடுக்கத் தெரியும். அவனிடத்திலிருந்து இது தா என்று கேட்டு வாங்கத் தெரியாது. உண்மையில் இறைவன் அவர்களுக்கு ஏதேனும் அநுபவம் வழங்குகிறான் என்றால் அவர்களை அறியாமல் அவர்களிடத்தில் அது சேருகிறது. அவர்கள் நினைப்பின்றி அந்த இன்ப அநுபவம் நிகழ்கிறது. அநுபவத்தைத் தருகிறவன்,அநுபவிக்கிறன்வன், அநுபவம் என்ற மூன்றையும் கடந்த நிலையில் அந்த அநுபவம் நேருகிறது. ஆகையால் அந்த அநுபவ நிலையில் கொடுப்பார்; வாங்குவார் ஆகிய வேற்றுமை இல்லை. திரிபுடியற்ற நிலை என்று சாஸ்திரம் இதனைக் கூறும். இத்தகைய தொண்டர்களிடையே சார்ந்தால் நாம் பெற வேண்டிய கதி கிடைக்கும் என்று அருணகிரியார் சொல்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தம்மிடம் இருப்பது போதாமல், வேண்டும் வேண்டும் என்று மேலும் பிறரிடம் உள்ள செல்வத்தை இரந்து ஈட்டியும், தம்மிடத்துள்ள பொருளைக் கரந்து வைத்துக் கொடுக்காமல் பாதுகாத்தும் சுற்றித் திரியும் மனிதர்களுடைய இயல்பைப் பார்த்து ஏமாந்து போகிற நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறார். நிறைவு பெறாச் செல்வம் ஆசை உண்டாகிவிட்டால் எவ்வளவு செல்வத்தைக் குவித்தாலும் திருப்தி உண்டாகாது. திருப்தி உண்டாகி விட்டால் எவ்வளவு சிறிய அளவில் பெற்றாலும் அதுவே போதும் என்ற மன அமைதி உண்டாகிவிடும். அந்த அமைதியை உண்டாக்கிக் கொள்வதற்குச் செல்வம் காரணம் ஆகமாட்டாது. அவ்வமைதியைக் குலைப்பதற்கு வறுமையும் காரணம் ஆகமாட்டாது. இறைவன் திருவருள் பெற்றவர்களுக்கு வறுமை,செல்வம் ஆகிய இரண்டிலும் மன அமைதி இருக்கும். ஆகவே, “தேர், கரி, பரி ஆகிய செலவத்தைக் கண்டு ஏமாந்து போகிற நெஞ்சமே! அவைகள் எல்லாம் நீரில் எழுத்துப் போல மாய்ந்து விடுமே! இதனை நீ உணர்ந்திலையே! உண்மையான அருட் செல்வத்தைப் பெற்ற‌வர்கள் கூட்டமாகக் கூடுவார்கள். அவர்களைச் சார்ந்தால் மன நிறைவு பெறலாம். வேறு யாரைச் சார்ந்தாலும் அந்த நிறைவு கிடைக்காது. தொண்டர் குழாத்தைச் சாரின் அன்றி வேறு கதியே இல்லை” என்று அருணகிரியார் உபதேசம் செய்கிறார். சார்பினால் வரும் சிறப்பு ஒரு மனிதனுடைய குணத்தை அவனுடைய சார்பை உணர்ந்து தெரிந்து கொள்ளலாம். “உன்னுடைய‌ நண்பர் இன்னார் என்று சொல். உன் இயல்பைச் சொல்கிறேன்” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நாமாக முயற்சி செய்து நன்மை பெறாவிட்டாலும் சார்பின்; வலிமையினால் பெறலாம். அதுபோல் நல்ல குடியில் பிறந்து, நல்ல பழக்கம் உள்ள மக்களோடு வாழ்பவன் மாறிப்போய்த் தீயவர்களோடு பழகினால் தீமையும் அவர் விரும்பாமல் அவனைச் சார்ந்து விடுகிறது. தேரும், கரியும்,பரியும் கொண்டு நாட்டை விரிக்க வேண்டுமென்றும், பொருளை விரித்துக்கொள்ள வேண்டுமென்றும் எப்போதும் திரிந்து கொண்டிருக்கிற அரசர்களைச் சார்ந்தால் நமக்கும் நம்முடைய பதவியையும், செல்வத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டுமென்ற நினைவே உண்டாகிறது. அரசன் வேறுஓர் அரசனோடு பகை கொண்டால் நாம் நம்மைப் போன்ற வேறு ஒரு மனிதனோடு பகை கொள்ள வேண்டுமென்ற நினைவு உண்டாகிவிடுகிறது. அவன் ஒரு நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்று நினைத்தால் நாம் ஒரு வீட்டைக் கைப்பற்ற வேண்டுமென்று நினைக்கிறோம். அவனும் தம் எண்ணம் கைகூடவில்லையே என்ற கவலையினால் தூங்காமல் இருக்கிறான்; நாமும் அப்படியே இருந்துவிடுகிறோம். கடைசியில் அவன் ஈட்டுகின்ற செல்வம் நீரில் எழுதிய எழுத்துப் போல மறைந்துவிடுகிறது. நாம் ஈட்டிய செல்வமும் அப்படியே மறைந்துவிடுகிறது. நீரில் பெரிதாக எழுதலாம். சிறிதாக எழுதலாம். இரண்டும் அழிந்து போகின்றன. அரசன் ரதகஜதுரகபதாதிகளைக் கொண்டு பெரும் போர்செய்து சேர்த்துக்கொள்கிற செல்வம் ஒருகணத்தில் தன்னுடையது என்று சிறிதும் இல்லாமல் அவன் வறியவன் ஆகிவிடுகிறான். “குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்” என்பது அறிய உண்மை. அப்படியே செல்வத்தைச் சேர்த்து வாழ்ந்தாலும் அந்தச் செல்வத்தை நுகர்கின்ற நாம் இந்த உடம்போடு இருக்கப் போவதில்லை. செல்வம் நிலையாதது என்பது மட்டும் அன்று. இந்த வாழ்க்கை நிலைக்குமா? அதுவும் நிலையாமல் இருப்பதே. செல்வம் எல்லாமே நிலையாதன; செல்லும் தன்மை உடையன. ஒருகால் நம்மை விட்டு நீங்காமல் இருப்பதாக இருந்தாலும் நாம் அந்தச் செல்வத்தை விட்டு போகின்ற நிலை வந்து விடும். இறந்து பட்டால் நம் வீடு, நம்முடைய நாடு, நம்முடைய செல்வம் எல்லாம் பிறருடையவை ஆகிவிடுகின்றன. விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைவிட்டு நாம் செல்லத்தான் வேண்டும். அருட் செல்வம் ஆதலின் எல்லாக் காலத்தும் உதவுகின்ற, உயிரோடு ஒட்டி வருகின்ற, செல்வமாகிய அருட்செல்வத்தைச் சேர்த்துக்கொண்டால் எல்லாக் காலத்தும் குறைவின்றி நிறைவான இன்பத்தைத் தரும். அந்தச் செல்வத்தைத் தம்முடைய காணிக்கையாக்கிக் கொண்டவர்கள் தொண்டர்கள். அவர்களைச் சார்ந்தால் எல்லா இடத்திலும் எந்தப் பிறவியிலும் கவலையில்லாமல் வாழ இயலும். இதனை எண்ணியே ,தொண்டர் குழாம் சாரில் கதியன்றி வேறிலை காண்’ என்று அருணகிரியார் சொன்னார். 4. இனி, யாருடைய தொண்டர் என்ற வினாவுக்கு விடை சொல்கிறார். சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம் சாரில் கதிஅன்றி வேறு இலை காண். பதவியும் பணமும் ’சூரபன்மன் மேலும் கிரௌஞ்ச மலையின் மேலும் ஒளி விடுகின்ற வேலை எறிந்தவன்’என்று முருகப் பெருமானை அடையாளம் காட்டுகிறார். நோயாளியினுடைய நோயை நன்கு அறிந்து, " உனக்கு இதுதான் மருந்து, இதைத் தவிர வேறு பரிகாரம் இல்லை" என்று சொல்லும் மருத்துவரைப் போல, இந்தத் தொண்டர் குழாத்தைச் சாரில் கதியன்றி வேறு இல்லை" என்று அடித்துப் பேசுகிறார். நம்முடைய பாவி நெடு நெஞ்சத்திற்கு வந்த நோய் என்ன? பதவி ஆசையும், பணத்தாசையும் கொண்டு தேரிலும், கரியிலும், பரியிலும் தண்டு தாவடி போய்த் திரிகின்றவர்களுடைய செல்வம் சிறந்தது என்று நினைந்து ஏமாந்து போகிறது இது. அவை நீரில் பொறி என்று அறிவதில்லை; பதவியையும் பணத்தையும் பெரியன என்று கருதுகிறது. இந்த நோய்க்கு மருந்து, வேண்டாமை என்பதுதான். அந்த மருந்தை வைத்திருக்கிறவர்கள் தொண்டர்கள். அது எப்படித் தெரிகிறது? அந்தத் தொண்டர் குழாம் போற்றுகின்ற மருத்துவத் தலைவன் இந்த நோயைத் தீர்ப்பதில் மிகவும் வல்லவன். சூரனையும் கிரௌஞ்ச மலையையும் தன்னுடைய கதிர் வேலால் எறிந்தவன் ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆண்டு கொண்டிருந்தான் சூரன். அத்தனை அண்டங்களுக்கும் ஏகபோக சக்ரவர்த்தியாக வாழ்வதில் அவனுக்கு ஒரு பெருமை இருந்தது. அந்த நிலை போதாது என்று கருதி அமராவதியையும் ஆளவேண்டும் இந்திர பதவியையும் தான் பெற வேண்டும் என்று விரும்பினான். அதனால் தேவலோகத்தின்மேல் படையெடுத்து, அமராவதியைத் தன் கீழ் அடக்கிக் கொண்டு, இந்திரனையும் அவன் பதவியிலிருந்து விலக்கி விட்டான். சுரேந்திரனை வென்று தான் அசுரேந்திரனாக வேண்டும் என்று விரும்பினான்,. அவனிடம் எல்லாவிதமான பொருள்களும் குவிந்திருந்தன. நாம் பணத்தை மலைபோலக் குவிக்க வேண்டுமென்று சொல்கிறோம். சிறந்த செல்வர்களைப் பற்றிப் பேசும்போது மலைமலையாய் ரூபாயைக் குவித்து வைத்திருக்கிறார் என்று சொல்வது உண்டு. அப்படி ஒரு செல்வன் எத்தனை சேர்த்துக் கொண்டாலும் சூரனைப் போல யரும் சேர்த்துக் கொள்ள முடியாது.அவன் ஒரு மலையையே துணையாக வைத்திருந்தான். அந்த மலைதான் கிரௌஞ்சாசுரன். சூரனுடைய பதவியும், மலையும் நல்லவர்களுக்கு மாறாக இருந்தன. அந்த இரண்டிலும் அசுரலோகம் இன்பத்தை அடைந்தது. தேவலோகம் துன்பத்தை அடைந்தது.பதவி ஆசையே உருவாகிய சூரனும், பணத்தாசையே உருவமாகிய கிரௌஞ்சனும் ஞானமே உருவாகிய வேலினால் பொடிபட்டுப் போயினர். சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் முருகன். அருணகிரியார் இங்கே கதிர்வேலை எறிந்து பொடியாக்கினான் என்று சொல்லவில்லை. அப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவன் எறிந்தால் அவை நிச்சயமாக அழியும் என்பது தெளிந்த உண்மை. முருகன் வேலை எறிந்தான் என்றால் வேறு எது நிகழ முடியும்? மூன்றுவகைப் பக்தி பக்தியில் மூன்று வகை உண்டு. குரு பக்தி, லிங்க பக்தி, சங்கம பக்தி என்று சொல்வார்கள். ஞானாசிரியனை அடுத்துப் பக்தி செய்வது குரு பக்தி. இறைவனிடத்தில் அன்பு செய்வது லிங்க பக்தி அல்லது சிவ பக்தி. அடியார்களிடத்தில் அன்பு வைத்து ஒழுகுவது சங்கம பக்தி என்று சொல்வார்கள். சங்கமர்கள் ~ தொண்டர்கள். அடியார்களுடைய கூட்டத்தில் வாழ்வதில் நமக்கு ஒரு லாபம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் வாழ்ந்தால் நமக்கு ஒரு குரு கிடைப்பான். குருவின் திருவருள் கிடைத்தால் இறைவன் திருவருள் பின்பு கிடைக்கும். எடுத்தவுடன் குரு நமக்குக் கிடைப்பதில்லை. குருவை அடைய வேண்டுமானால் அதற்குச் சில பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் நம்மிடத்தில் உண்டாவதற்கு அடியார்கள் கூட்டத்தில் பழகவேண்டும். அதனால் நல்ல காரியம் செய்வதற்குரிய நிலை நம்மிடம் உண்டாகிறது. பிறருக்கு அந்த நிலை உண்டாவது இல்லை. கோபத்தினால் வீதியில் நின்று நூறு பேர் கேட்க யாரோ ஒருவரைத் திட்டுகிறோம். ஆனால் இறைவன் திருநாமத்தைப் பிறர் காது கேட்கும்படி சொல்வதற்கு நாணமாக இருக்கிறது. பழங்காலத்தில் நாணம் இருந்ததோ இல்லையோ இப்போது நிச்சயமாக இருக்கிறது. நெற்றியில் திருநீறு அணிவதற்கு நாணம், ருத்திராட்சம் அணிந்து கொள்வதற்கு நாணம், கை தட்டிப் பஜனை செய்வதில் நாணம். இப்படியுள்ள நம்முடைய நாணம் போக வேண்டுமானால் அடியார்களுடைய கூட்டத்தில் பழக வேண்டும். அப்படிப் பழகினால் அவர்களுடைய கூட்டுறவால் நாணம் கழன்று போய் நாமும் அவர்களைப் போல இறைவனைத் துதிக்கத் தொடங்குவோம். நம்முடைய குரல் நன்றாக இல்லையே என்று நாணம் உண்டாவது இயற்கை. தனியே பாடினால் நம்முடைய குரலின் குறைபாட்டைத் தெரிந்து கொள்கிறார்களே என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் இருபது பேர் சேர்ந்து பாடினால் நம் குரலை யாரும் அறியமாட்டார்கள். தொண்டர் கூட்டத்தில் கலந்துகொண்டு பஜனை செய்யும் போது நம்மை அறியாமல் வாய் முணு முணுக்கிறது; பாடுகிறது; அதனால்தான், “கூட்டத்தில் கோவிந்தா போடுவது” என்கிற பழமொழி வந்தது. நாணத்தைப் போக்குவதற்கும், சோம்பலைப் போக்குவதற்கும் அடியார்களுடைய தொடர்பு மிக அவசியம். அந்தத் தொடர்பு முறுக முறுகக் குருநாதனைத் தேடுகின்ற ஆர்வம் உண்டாகும். குருவினுடைய திருவருள் கிடைத்தால் ஆண்டவனது பேரருள் கிடைக்கும். கோயிலும் கும்பமும். கோயில் கோபுரத்தின்மேல் ஒரு கும்பம் உச்சியில் இருக்கிறது. வெறும் கும்பத்தைத் தனியே நிறுத்த முடியாது. கும்பத்தைத் தாங்கக் கோபுரம் இருக்கிறது. அந்தக் கோபுரத்தைத் தாங்குகிற கட்டிடத்தைக் கட்டுவதற்கு அஸ்திவாரம் அவசியம். கும்பத்தைவிட அகன்றது கோபுரம். கோபுரத்தைவிட அகன்றது கட்டிடம். கட்டிடத்தைவிட அகன்றது அஸ்திவாரம். அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடம் எழும்பாது. கட்டிடம் இன்றிக் கும்பமும் இல்லை. கும்பத்தைப் போல இருப்பது லிங்க பக்தி. கோபுரத்தைப் போல இருப்பது குருபக்தி. அஸ்திவாரத்தைப் போல இருப்பது தொண்டர்களுடைய பக்தி. தொண்டரிடத்தில் பக்தியாகிய அஸ்திவாரம் நன்றாக அமையுமானால் குரு பக்தி, லிங்க பக்தியாகிய கட்டிடமும், கும்பமும் நன்றாக அமையும். முந்திய இரண்டும் நல்ல வகையில் அமைந்துவிட்டால் நிச்சயமாக இறைவனுடைய பக்தியாகிய கும்பம் பிரகாசிக்கும். “அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே” என்று தாயுமானவர் பாடுகின்றார். கங்கை இமாசலத்தில் தொடங்குகிறது. கடலில் போய்ச் சேருகிறது. கங்கையிலே போட்ட பொருள் கடலில் போய்ச் சேருவது போலத் தொண்டர் குழாத்துடன் சேர்ந்தால் மெல்லமெல்லக் குருவின் திருவடியை அண்டி, இறைவன் அடியைச் சாரலாம். எப்படியாவது கங்கையில் சார்ந்துவிட வேண்டும். “எங்கெங்கோ மயங்கிப் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அவற்றின் நிலையாமையை உணராத பாவி நெஞ்சமே! பல காலமாக எனக்கு அருகில் நின்று நெடுந் தூரம் ஆசை என்னும் கையை நீட்டிவிடுகின்ற நெடு நெஞ்சமே! பணமும் பதவியும் நீரில் எழுத்துக்கு நிகராகும். அவற்றைப் பெரியனவாக மதித்த அசுரர்களை ஞானவேலால் அழித்த எம்பெருமானுடைய தொண்டர்களைச் சார்ந்தாலன்றி உனக்கு ஒரு கதியும் இல்லை. ஆகவே அவர்களைச் சார்வதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்வாயாக” என்று அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் அறிவுறுத்துகிறார். சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம் சாரில் கதியன்றி வேறிலை காண்; தண்டு தாவடிபோய்த் தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம்எ ல்லாம் நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே! [சேனைகளோடு தாவி நடைபோட்டுச் சென்று தேரிலும் யானையிலும் குதிரையிலும் திரிபவர் செல்வம் யாவும் நீரில் எழுதும் எழுத்துப் போன்றன என்று அறியாத பாவியாகிய நீண்ட நெஞ்சமே! சூரன் மேலும் கிரௌஞ்ச மலையின் மேலும் சுடர்விடும் வேலை வீசியவனாகிய முருகனுடைய தொண்டர் கூட்டத்தைச் சார்ந்தால் நல்ல கதி உண்டாகுமேயன்றி, வேறு சார்பு இல்லை. சூர் ~ சூரன். கிரி ~ மலை; கிரௌஞ்சாசுரன். வேறு ~வேறு புகலிடம். தண்டு ~ படை. தாவடி போதல் – தாவி அடியிட்டு நடத்தல். பொறி ~ எழுத்து.] ~_(~) This file was last updated on 18 December 2012. Feel free to send corrections to the Webmaster.